சுப்பிரமணியர் திருவிருத்தம்,
திருத்தணிகைத் திருவிருத்தம்.
தொட்டிக்கலை சுப்பிரமணியத்தம்பிரான்
சுவாமிகள் எழுதியது.
cupramaNiyar tiruviruttam and
tiruttaNikai tiruviruttam
of toTTikkalai cupramaNiya tampirAn
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Digital Library of India for providing a scanned image
version of this work for the etext preparation.
This etext has been produced via Distributed Proof-reading Implementation and
we thank the following volunteers for their assistance:
Anbu Jaya, V. Ramasami and R. Navaneethakrishnan.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2013.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
சுப்பிரமணியர் திருவிருத்தம், திருத்தணிகைத் திருவிருத்தம்.
தொட்டிக்கலை சுப்பிரமணியத்தம்பிரான்
சுவாமிகள் எழுதியது.
உ
கணபதி துணை
Source:
கணபதி துணை.
சுப்பிரமணியர் திருவிருத்தம், திருத்தணிகைத்திருவிருத்தம்.
இவை திருக்கைலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம்,
தொட்டிக்கலை சுப்பிரமணியத்தம்பிரான் சுவாமிகள் இயற்றியன.
இவற்றைச் சித்தாந்தசரபம்-அஷ்டாவதானம்
பூவை-கலியாணசுந்தர முதலாயாரவர்களால்
அச்சுப்பிழைபுகாவண்ணம் பரிசோதிக்கப்பெற்று,
புரசை-த- குப்புசாமி முதலியாரவர்களால்
ராமநிலைய விவேகானந்தா அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டன.
1908.
--------------------------
கணபதி துணை.
பதிப்புரை.
சுப்பிரமணியர் திருவிருத்தம் திருத்தணிகைத் திருவிருத்தம் ஆகிய இந்நூல்களைத் திருக்கைலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம் தொட்டிக்கலைச் சுப்பிரமணியத் தம்பிரான் சுவாமிகள் தம்மை அடைக்கலமெனவடைந்த குட்டரோகியும் அந்தகனுமாகிய இருவருக்கும் செய்து கொடுத்தவளவில், சுப்பிரமணியர் திருவிருத்தத்தை குட்டரோகியிம், திருத்தணிகை திருவிருத்தத்தை அந்தகனும் ஆகிய இருவரும் திருத்தணிகை முருக்க்கடவுள் சந்நிதியிற் படனஞ்செய்து தமது குட்டநோயும் குருட்டுத் தன்மையு நீங்கி உய்ந்தனர் என்பது பிரசித்தம்.
இத்தகைய மகிமை பொருந்தியதும் தோத்திரத்திற்குத் தக்கதும் ஆகிய இந்நூல்கள் தற்காலம் அச்சுப்பிழை இல்லாத சுத்தப் பிரதியாகக் கிடைப்பதருமையாக விருப்பதனால் பிழையறப் பரிசோதித்து அச்சிட வேண்டுமென்று அபேட்சையுற்றுச் சித்தாந்தசரபம் அஷ்டாவதானம் பூவை-கலியாணசுந்தரமுதலியாரவர்களால் அச்சுப்பிழையறப் பரிசோதித்து அச்சிடலானேன்.
இந்நூலைப் பதுப்பித்தற்கு வேண்டுய சகாயஞ்செய்த எனது உயிர் நண்பர்களாகிய தர்ம சீலர்களுக்குத் தணிகைப்பெருமான் அருள்புரியுமாறு அவரது திருவடிகளைப் பிரார்த்திக்கின்றனன்.
இந்நூல்களை அச்சிடக்கருதிப் பிரதி அகப்படாது கவலையுற்ற காலத்து மூலப்பிரதியுதவின சே. சோமசுந்தரம்பிள்ளை அவர்கட்கும் அச்சுப்பிழைப்-புகாவண்ணம் பரிசோதனைப் பத்திரங்களை பார்த்துக்கொடுத்த வித்வப்பிரபு அவர்களுக்கும் வந்தனம் புரிகின்றேன்.
இப்பதிப்பில் அடியேனது அஞ்ஞானத்தாலிதில் எவ்விதத்தவறுகளிருந்தபோதிலும் புலவர் சிகாமணிகள் பொறுத்தருள வேண்டுமெனப் பிரார்த்திக்கின்றேன்.
புரசை-த-குப்புசாமி முதலியார்.
-----------------------------
கணபதி துணை.
1. சுப்பிரமணியர் திருவிருத்தம்.
(தொட்டிக்கலை சுப்பிரமணியத்தம்பிரான் சுவாமிகள் இயற்றியது.)
மாமேவு நவரத்ந கேயூர மணிமகுட
மன்னிப் பொலிந்த முடியும்
வச்சிர நுதற்றிலக வெண்ணீறு மோராறு
வதனவிம் பத்தி னழகும்
பாமேவுபத்தற்கு மடைதிறந் தன்பொழுகு
பன்னிருவி ழிக்கருணையும்
பகரறிய பழமறை பழுத்தொழுகு சிறுநகைப்
பவளஞ்சி றந்தவாயும்
காமேவு கரகமலபந்தியுஞ் சேவலுங்
கனகமயிலுங் கிண்கிணிக்
காலுமுந் நூலும்வடி வேலுமென் மேலுமெக்
காலுந்துலங்க வருவாய்
தாமோதராநந்த கோவிந்த வைகுந்த
சரசகோபாலன் மருகா
சதுமறைக ளேதந்த பரமகுரு வாய்வந்த
சரவண பவானந்தனே. (1)
கண்கொண்ட பூச்சக்கர வாளகோளத்தை யொரு
கதிகொண் டெழுந்துசுற்றிக்
ககனகூடந் தடவியுக சண்டமாருதக்
காலொடு சுழன்றுபின்னி
விண்கொண்ட மேகபடலத்தைச் சினந்துதன்
மெய்யன்ப னெனவுகந்து
விடவரவின் மகுடமொடு சடசடென வுதறிநடு
மேருவொடு பாய்ந்துகொத்தித்
திண்கொண்ட வல்லசுரர் நெஞ்சுபறை கொட்டத்
திடுக்கிட விடுத்து மோதிச்
சிறைகொண் டடித்தமரர் சிறைகொண்ட ணைத்திலகு
திறைகொண்ட மயில்வாகனா
தண்கொண்ட நீபமலர்மாலையணி மார்பனே
சரசகோபாலன் மருகா
சதுமறைக ளேதந்த பரமகுரு வாய்வந்த
சரவண பவானந்தனே. (2)
துன்னு கயிலாசகிரி மேருகிரி கந்தமலை
தோகைமலை கயிலைமலைவான்
சோலைமலை மேவிய விராலிமலை மன்னிய
சுவாமிமலையுஞ் சிறந்த
சென்னிமலை வேளூர்கடம்பவன மேலவய
றிருவருணையின் கோபுரம்
திருவாவினன்குடி பரங்கிரி திருத்தணி
சிவாசலந் திருவேரகம்
இந்நில மதிக்குந் திருச்செந்தின் முதலான
வெண்ணப்படாதகோடி
எத்தலமு நீகருணை வைத்துவிளை யாடல்வித
மெத்தனையெனச் சொல்லுவேன்
தன்னைநிக ரொவ்வாத பன்னிருகை வேலனே
சரசகோபாலன் மருகா
சதுமறைக ளேதந்த பரமகுரு வாய்வந்த
சரவண பவானந்தனே. (3)
நதியெங்கு மூழ்கித் தலந்தோறுஞ் சுற்றியு
நல்லநியமங்கள் செய்தும்
நானென்ற வாணவந் தள்ளினோ மென்றுசிவ
ஞானங்கள் பலபேசியும்
கதிகொண்ட மவுனியா யட்டமா சித்தியொடு
கற்பந்தனைப் புித்தும்
கண்ணிறுகமூடிச்சிவானந்த மென்று செயல்
கண்டிருந்தோ மென்னவும்
எதிரொருவருக் கொருவர் தர்க்கித்து மற்கட்டி
யிப்படி யனந்தகோடி
இதுவல்ல வதுவல்ல வென்றுபோ ராடுவது
மென்னவகையோ வறிகிலேன்
சதமென்ன வுன்னைநா னம்பினே னம்பெனேன்
சரசகோபாலன் மருகா
சதுமறைக ளேதந்த பரமகுரு வாய்வந்த
சரவண பவானந்தனே. (4)
நாரதப்பிரமாதி யமரர்கின் னரருரகர்
நாரணன்முதற் பண்ணவர்
நடுக்கம்பொருந்திய விடுக்கண் களைந்திட
நடக்குங் குழந்தை வயதில்
சூரபத்மாசுரன் கயமுகன் றாருகன்
துன்முகன் பானுகோபன்
துட்டவஞ்சக் கிரவுஞ்சாசுரன் சிங்கனொடு
சுற்றியவரக் கரையெலாம்
கோரசங்காரரண தூளிபடலங் கொண்டு
கூறாடியுனது வெற்றிக்
கொடியேற விந்திரன்மணி முடியேற வானாடு
குடியேறவைத்த துரையே
தாரணியின் மேவுபரிபூரண வுலாசனே
சரசகோபாலன் மருகா
சதுமறைக ளேதந்த பரமகுரு வாய்வந்த
சரவண பவானந்தனே. (5)
சீலமிகு தற்பரனையுன்னித்த தேகத்
தியானத்தெழுந்து பொங்கிச்
சில்லென்று மெய்ம்மறந் தானந்த மவுனஞ்
செனிக்கக் குவிந்து கண்ணீர்
ஆலிபொழியக் கருணையுள்ளங் கனிந்துருக
வன்புருக வென்புருகவே
அங்கங்குழைந்து புளகிக்க நின்றுருகுவா
ரப்படியு மென்றறிவனோ
காலங்கழித்துண்டு வீணுக்கலைந்து பல
காலம்பிரபஞ்ச மாயக்
கடற்குட் படிந்தே கிடக்கின்ற பாசங்
கடக்கும்படிக் கருளுவாய்
தாலமுழு துண்டுநிலை கண்டகோ தண்டமால்
சரசகோபாலன் மருகா
சதுமறைக ளேதந்த பரமகுரு வாய்வந்த
சரவண பவானந்தனே. (6)
கல்லாலெறிந்துமுன் னெச்சிலைத் தந்துபின்
கண்ணைப்பறித்து வைத்தும்
கருதுவகை சொல்லியும் செய்யசிறு மைந்தனைக்
கறிசமைத் தூணமைத்தும்
வில்லாலடித்துமோர் பாயலிற்றன்னுடைய
விரதஞ்செலுத்து வித்தும்
வேலையிற்றூணொடு சுழன்றும் பிரானுக்கு
மெய்யன்ப னெனநடந்தும்
நல்லாரெனப்பேறு பெற்றார்க ளதுபண்டை
நாள்செய்த பூசையீச
னன்கிருபை யாமெனக் குன்கிருபை யல்லாது
நாடுவது வேறுமுளதோ
சல்லாபவுல்லாச வில்லேறு வல்லாள
சரசகோபாலன் மருகா
சதுமறைக ளேதந்த பரமகுரு வாய்வந்த
சரவண பவானந்தனே. (7)
அற்புதமிகப்புகழ் திருப்புகழ் விருப்பொடுசொ
லருணகிரிதனை யுகந்தாய்
அம்புயனி லின்பமுறு கும்பமுனி முன்புவர
வன்புருகு பண்புரைத்தாய்
உற்பன வரக்கனெடு சர்பன மனப்பயமு
டற்றநற் கீரனொருநாள்
உன்சலிகை தஞ்சமென நெஞ்சுருக வஞ்சகிர
வுஞ்சநேர் கிரிபிளந்தாய்
எப்படியு முற்படும் வினைப்பய னுலப்புமதை
யிப்புவியிலே மறுப்பாய்
ஈதுகலிகாலமென் றெண்ணவொண்ணாதுநா
னேழையடியே னாகையால்
தற்பர தயாபர மனோரத மகிழ்ந்துதவு
சரசகோபாலன் மருகா
சதுமறைக ளேதந்த பரமகுரு வாய்வந்த
சரவண பவானந்தனே. (8)
தீராதமாயச் சுகந்தந்த விக்கடுஞ்
செனனஞ் செழித்தபின்பு
செகதல மயக்கமதிலே யென்குடித்தனந்
தீயமருளோர் வங்கணம்
போராடு சஞ்சார பாசபந்தம் மிதிற்
போகமடவா ரிணக்கம்
பொறிவா யலைக்குமீ துள்ளபடி முன்வினைப்
போகந்தொடர்ந்த நெறியால்
ஆராலுமுடிவுறாதானா லிதற்குநல்
லறிவென்ற தீபமொன்றுண்
டவ்வழியிலே மனஞ்செல்லாம லலைகின்ற
வடியேனை யாட்கொள்ளுவாய்
தாரேறுபன்னிரு புயாசலக் கடவுளே
சரசகோபாலன் மருகா
சதுமறைக ளேதந்த பரமகுரு வாய்வந்த
சரவண பவானந்தனே. (9)
தருகாம மோகமுறு திமிதிமிங்கல மிக்க
தனலோபவன முதலையாம்
தற்கோப வனல்வடவை மூடத்துவம் பாசி
சஞ்சலமெனுந் தரங்கம்
அரியதெளி வொருகுமிழி யஞ்சான வாரிதியி
லலைகின்ற சீவராசி
அத்தனையு மீனீன மேமனொரு விசுவலை
யவ்வுயிரில் யானுமொருவன்
கருதரிய பாரப்பெருங்கடல் கடந்தே
கடைத்தேற வேண்டுமென்றால்
கைத்தவணை யில்லையினி யென்செய்குவேனுனது
காற்றவணை கைப்பற்றினேன்
சரியமரர்செய் நெடியபடை சூரகெஜ சிங்கமே
சரசகோபாலன் மருகா
சதுமறைக ளேதந்த பரமகுரு வாய்வந்த
சரவண பவானந்தனே. (10)
தூயபொறி யைந்தையு மடக்கிப் புலாதிகள்
சுழல்கின்ற வழிமறுத்துச்
சுழிமுனை திறந்து மூலாதார மேலாத்
துவாதசாந்தத்தை முட்டி
வாயுவை யிறுக்கிப் பெலத்துவரு குண்டலியை
வவ்விமேற் கொண்டெடுத்து
வாசியை நடத்தி யவ்வோசையைத் தாவென்று
வழிகொண்டு நாதவெளியில்
தோயும் பரப்பிரம பூரணவிலாசமது
சோதிப்பதென்ன வெளிதோ
தொலையாது நிலையாத தாகையா லுன்பதந்
துணையே துணைப்பற்றினேன்
தாயக மனோகர மயூரவாகன முருக
சரசகோபாலன் மருகா
சதுமறைக ளேதந்த பரமகுரு வாய்வந்த
சரவண பவானந்தனே. (11)
கண்ணேறு வாராது பிணியொன்று சேராது
கவலைப்படாது நெஞ்சம்
கலியாது சலியாது நலியாது மெலியாது
கலியென்ற பேயடாது
விண்ணேறு மணுகாது கன்மவினை தொடராது
விஷமச்சுரம் வராது
வெய்யபூ தம்பில்லி வஞ்சனைக டொடரா
விஷம்பரவு செந்துமடரா
எண்ணேறு செனனங்கள் கிடையாது காலபய
மெள்ளளவுமே யிராதிவ்
வேழைக் கிரங்கியரு டெய்வமுனை யல்லாம
லின்னமொரு தெய்வமுண்டோ
தண்ணேறு கங்கைமலை மங்கையரு டங்கமே
சரசகோபாலன் மருகா
சதுமறைக ளேதந்த பரமகுரு வாய்வந்த
சரவண பவானந்தனே. (12)
-----------------
சுப்பிரமணியர் திருவிருத்தம் முற்றிற்று.
------------------
கணபதி துணை.
2. திருத்தணிகைத் திருவிருத்தம்
(தொட்டிக்கலை சுப்பிரமணியத்தம்பிரான் சுவாமிகள் இயற்றியது.)
காப்பு.
சீரார் தொடைபுனைந்த செம்பாவை முன்புபோ
லேரார் தணிகை யிளவற்கு - நேராக்க்
கூட்டுமால் வேற்றுருவங் கொள்ளாமை யெப்பொருளுங்
காட்டுமா லைங்கைக் களிறு.
ஓங்காரவுருவசின்மயவிமலவொளியாகி
யுலகமுழுவதுநிறைந்த
உண்மைப்பராபரநிராமயநிராலம்ப
வும்பர்கள்சிகாரத்னமே
ஆங்காரநீங்காத்தீங்காணவத்தின்வரு
வலகிலாப்பிறவிதோறு
மடியேன்செய்கொடுவினையளக்கறுவரம்பினை
யளந்திடினுமளவுபடுமோ
வாங்கமலவ்வினைவருத்தலாலுன்றிருமுன்
வந்தபயம்பயமென்றே
மயிலேறிவந்துதிருமந்திரசடாக்ஷர
மருந்தருடிருந்துமடியார்
தாங்காணமுன்னின்றசண்முகத்தெய்வமே
சரவனோற்பவகுமரனே
தணிகையங்கிரிவாசவரன்விரும்புபதேச
சகலபண்டிதராசனே. (1)
பன்னரியவுன்னற்புதத்திருப்புகழைப்
பகர்ந்துகொண்டுன் றிருமலைப்
படியேறுமன்பர்வினைபொடியாகுமென்றுநிறை
மொழிமாந்தர்பகருவதுகேட்
டென்னுடையபொல்லாதசஞ்சிதப்பிணியொழித்
தெனையும்வாழ்வித்தருளுகென்
றிரவுபகலுன்னுடையசந்நிதியில்வந்துமுறை
யிடுவேற்கிரங்கியருள்வாய்
பொன்னிறக்காந்தளொடுசெங்குவளைமாலையும்
பொற்பமர்கடப்பமலரும்
பூத்தலர்குறிஞ்சியுஞ்சேத்தகூதளமும்
புனைந்ததிருமார்பழகனே
தன்னமுமனத்துயரிலாதமரரைக்காத்த
சரவணோற்பவகுமரனே
தணிகையங்கிரிவாசவரன்விரும்புபதேச
சகலபண்டிதராசனே. (2)
திருவருள்கொழிக்குமுன்சரவணப்பொய்கைத்
திருத்தந்திளைத்தாடியே
தீராதபழவினையழுக்கைக்கழீஇவருந்
திருவாளரைத்தெரிசியா
துரிமையுடனடியேனுமச்சரவணச்சரசு
வந்துவந்தாடியுட்கொண்
டுன்னடிகளேசரணமென்றோலமிடுமெனக்
குறுகுறைதவிர்த்தருளுவாய்
மருவளருமலறோன்றருக்கினைக்கண்டுகர
மலர்கொண்டுதாக்கியவனை
வன்சிறையிருத்தியுலகேழும்புடைத்தநின்
வல்லாண்மை சொல்லவசமோ
தருவளருமமராபதிக்கரசைவாழ்வித்த
சரவணோற்பவகுமரனே
தணிகையங்கிரிவாசவரன்விரும்புபதேச
சகலபண்டிதராசனே. (3)
கண்டவர்களிக்குமுருகையவுன்பெருமையைக்
கடவுட்சுனைக்குள்வளர்செங்
கல்லாரமுப்போதுமலர்தந்துகமழ்தருங்
கந்தமேதூதாயுலா
யெண்டிசையுளார்க்குந்தெரித்தலாற்கொண்டாடி
யெல்லாரும்வந்துதொழுதுன்
னின்னருளைக்கொண்டுண்ணவிந்நோயில்யானொருவ
னிடருற்றிளைப்பதழகோ
வண்டர்கணடுக்கமுறவாயிரத்தெட்டண்ட
மாண்டிடுகுரூரசூர
னாண்மைதனைநீறாக்கியவனையிருகூறாக்கி
யாட்கொண்டசெயசிங்கமே
தண்டையொடுகிண்கிணிகள்கொஞ்சுசெஞ்சரணனே
சரவணோற்பவகுமரனே
தணிகையங்கிரிவாசவரன்விரும்புபதேச
சகலபண்டிதராசனே. (4)
அத்தானவச்சிங்கன்வெருவச்சிரங்களை
யரிந்தவச்சிரமிருகக்
வக்கிரமக்கிரவுஞ்சகுவடுபொடியாக்கிவரு
மயில்வேல்வலத்திருக்கச்
சித்தானவுன்னுடையவாறக்கரங்களாந்
தெய்வமந்திரமிருக்கத்
தீண்டினும்பூசினும்பாவப்பிசாசறத்
தீர்க்கும்வெண்ணீறிருக்க
வித்தாரணிக்குளொன்றறியாக்குழந்தைபோ
லென்னளவுநீயிருந்தா
லென்னாதரத்தைத்துரத்தியெனையுய்வ்விக்க
வின்னமொருதெய்வமுளதோ
சத்தாகிமுத்திக்குவித்தாகிநின்றசிவ
சரவணோற்பவகுமரனே
தணிகையங்கிரிவாசவரன்விரும்புபதேச
சகலபண்டிதராசனே. (5)
எண்ணிலுயிர்கட்கெலாமன்றுதொட்டகலாம
லென்றுமொருதஞ்சமாயே
யிருத்தலாற்கந்தனெனவொருநாமமுற்றனை
யிருண்டமலமோககதினாற்
கண்ணிலாருக்குமெயக்கோல்கொடுத்தீர்ப்பதுன்
கருணைப்பெருக்கமன்றோ
காங்கேயவுனையன்றிமற்றொருதெய்வத்தையான்
கனவினுநினைத்தல்செய்கேன்
மண்ணிலடியாரிருவினைக்காடுவேரோடு
மடியவடிவேல்பிடித்து
மாறாதபேரின்பவாழ்வைக்கொடுத்தருள
வாய்மைக்கொடிக்கட்டியே
தண்ணருளின்வரமாரிபொழிகின்றதெய்வமே
சரவணோற்பவகுமரனே
தணிகையங்கிரிவாசவரன்விரும்புபதேச
சகலபண்டிதராசனே. (6)
அத்தகுசிறப்புடையகிர்த்திகைத்தையலா
ரறுவர்முலையமுதவாரி
யருமறைபழுத்தொழுகவாயாரமொண்டுகொண்
டானந்தமழைபொழிதரும்
வித்தகக்கருணைமாமுகிலென்றுநம்பியென்
விடாய்தீரவந்தடுத்தேன்
வேறுபுகலில்லையுன்னடைக்கலமடைக்கலம்
வெட்சிசூடியவிசாகா
சித்ரக்கலாபமரகதநிறமயூரனே
தேவகு*ஞ்சரிமணாளா
சிங்காரவள்ளியிருசிற்றடிகடமைவருடச்
சிவந்தபன்னிருகர*தலா
சகதுருக்கயமுகச்சூரசங்காரனே
சரவணோற்பவகுமரனே
தணிகையங்கிரிவாசவரன்விரும்புபதேச
சகலபண்டிதராசனே. (7)
வெங்கனலுறைப்பவருபானுகோபப்பக்*தன்*
விட்டமாயப்பகமிகான்
மிக்கமயல்புட்டிக்கருங்கடற்கொண்டுபோய்
வீழ்ததிடவமுந்திநின்ற
துங்கவொளிமணிமகுடபாச*நவவீரரொடு
சோர்வரியபுதா*களையுஞ்
சுடர்விடுங்குடுமியுடையடலுடம்பிடிகொண்டு
தூக்கியபராக்கிரமனே
பங்கமுறுகொடுவினைக்கடலிலேநெடுநாட்
படிந்துதடுமாறுமெனையும்
பயப்படேலென்றுநின்பன்னிருவிழிக்கருணை
பாலித்தெடுத்தருளுவாய்
சங்கடம்விலக்குமொருசந்திமுகவற்கிளைய
சரவணோற்பவகுமரனே
தணிகையங்கிரிவாசவரன்விரும்புபதேச
சகலபண்டிதராசனே. (8)
வாலைதிரிபுரையானசிவகாமசுந்தரிதன்
மைந்தனேநின்றுவசமாய்
மதுகையுறுகாலாயுதத்தினுக்கேனுநின்
வாகனங்கொடுநடாத்தும்
வேலைநடுவடவையழல்விழிபொழியவருமொரு
வியன்றகர்தனக்காகிலும்
விடைகொடுத்தென்னுடையபேராவினைக்குன்றை
வேரோடிடித்தருளுவாய்
கோலமலிதென்பரங்குன்றாவினன்குடி
குளிர்ந்தசெந்தூரேரகங்
கொடியாடுசோலைமலைகுன்றுதோராடலுங்
கொண்டருளிநின்றகுகனே
தாலமுழுதுண்டபைங்கொண்டன்மேனியன்மருக
சரவணோற்பவகுமரனே
தணிகையங்கிரிவாசவரன்விரும்புபதேச
சகலபண்டிதராசனே. (9)
நலமருவுமதுரைத்தமிழ்ச்சங்கமேற்புலவர்
நடுவீற்றிருந்தமுதல்வா
நக்கீரர்சொன்ன முருகாற்றுப்படைத்தமிழு
நல்லருணகிரிநாதர்சொல்
புலமையுறுசித்திரச்சந்தப்பவாகமும்
புனிதச்செவிக்குளார்த்த
புகழாள குறுமுனிக்காரணத்துட்பொருள்
புலப்படுத்தியகுரவனே
கொலைகளவுகட்காமபாதகமெனக்குவெகு
கோடிகளிருந்திடினுமுன்
கூர்மந்திரப்படையினால்வீட்டியெனதுளங்
குடிகொண்டிருந்தருளுவாய்
சலனமறுசர்வபரிபூரணதயாநிதே
சரவணோற்பவகுமரனே
தணிகையங்கிரிவாசவரன்விரும்புபதேச
சகலபண்டிதராசனே. (10)
-----------------
வெற்றிவேலுற்றதுணை
திருத்தணிகைத்திருவிருத்தம் முற்றிற்று.
*******************
This file was last updated on 12 Feb. 2013.
Feel free to send the corrections to the webmaster.