ஆராய்ச்சி நூல்கள் - பாகம் 1
நாவலர் சோமசுந்தர பாரதியார்
ArAicci nUlkaL - part 1
of nAvalar cOmacuntara pAratiyAr
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Dr. Kumar Mallikarjunan, Blacksburg, VA, USA for
providing a scanned image/PDF version of this work for the etext preparation.
This etext has been produced via Distributed Proof-reading Implementation and
we thank the following volunteers for their assistance:
Arvind Sridhar, T Chockalingam, V. Devarajan, Sakthikumaran, R. Kameswaran,
Perumal, Mithra, M. K. Saravanan, Nalini Karthikeyan, R. Navaneethakrishnan,
Vijayalakshmi Periapoilan, Sankarasadasivan and Thamizhagazhvan.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
ஆராய்ச்சி நூல்கள் - பாகம் 1
திருவள்ளுவர்
1. திருவள்ளுவர்
சங்கப் புலவர் சரிதங்களுள் ஒன்றுமே சரியாகத் தெரிந்தபாடில்லை. நீண்ட இடைக்கால இருளால் விழுங்கப்பட்ட இலக்கியங்கள் பலவாக வேண்டும். சிதிலமான பழைய சுவடிகளைத் தேடியெடுத்துச் சென்ற சில வருடங்களாக அச்சியற்றி வெளிப்படுத்திவரும் சில பேருபகாரிகளின் அரிய முயற்சியாற் கிடைத்துள்ள சில சங்க இலக்கியங்கள் தவிரப் பழம்பண்டைத் தமிழகச் செய்தி தெரிவிக்கும் தக்க சாதனங்கள் வேறு கிடையா. கிடைக்கும் சில சங்க நூல்களிலும் சங்கப் புலவர் சரிதம் பற்றிய குறிப்புக்கள் காண்பது அரிது. இந்த நிலையில், திருவள்ளுவரைப் பற்றிய சரிதக் குறிப்புக்களைத் தெளிந்து துணிதல் எளிதன்று. எனினும், சங்க நூல்களிலும் பழைய பாட்டுக்களிலும் கிடைக்கும் சில குறிப்புக்கள் வள்ளுவர் சரித முழுதையும் திரட்டித் தராவேனும், தற்காலத் தமிழுலகில் வழங்கிவரும் அவர் கதையின் உண்மையை
ஆராய்வதற்கு ஒருவாறு உதவுகின்றன. அவையிற்றை உற்றுநோக்குங்கால். பிரஸ்தாபக் கதைகளில் நம்பிக்கை நலிவடையக் காண்போம்.
வள்ளுவரின் காலம், ஊர், குடியிருப்பு, சமயம் முதலியவற்றைப் பலரும் பலபடியாகப் பேசிவருகின்றனர். இவை பற்றிய தற்காலப் பிரஸ்தாபங்களுக்கு உள்ள ஆதரவுகளைச் சிறிது விசாரிப்போம்
கடைச்சங்கத்தின் கடைக்காலத்திற் சங்கப் புலவர் இறுமாப்பை யடக்கின அவதார புருடர் வள்ளுவர் என்பார் பலர். இறவாப் புகழுடைய தம் குறணூலைக் கடைச் சங்கத்தில் அரங்கேற்றவந்த வள்ளுவரைப் புறக்கணித்து, அவர் தம் அரிய நூலையும் அவமதித்த சங்கத்தாரை வள்ளுவர், தம் தெய்விகத்தன்மையாற் பொற்றாமரைக் குளத்தில் வீழ்த்தி அலமரச் செய்ததாயும். புலவர்கள் வள்ளுவரையும் அவர்தம் குறணூலையும் புனைந்துபாடித் தம்முயிரை இரந்து பெற்றதாயும். குறட்புகழின் பிறப்பே சங்கப் புகழின் இறப்பாக முடிந்ததென்றும் கதைப்பார் பலர் கதைக்கின்றனர். சில தலைமுறையாகப் புலைமை ரத்தக் கலப்புடைய பார்ப்பான் ஒருவனுக்கும், புலைப்பிறப்பும் பார்ப்பன வளர்ப்புமுள்ள கீழ்மகள் ஒருத்திக்கும் பிறந்த சிறார் எழுவருள், கடைமகவே வள்ளுவரென்றும், குறிசொல்லுபவரும் பறையருக்குப் புரோகிதருமான் வள்ளுவ வகுப்பினரால் வளர்க்கப்பெற்றமையின் வள்ளுவரென்பது இவருக்குக் காரணப் பெயராயிற்றென்றும். இவர் மயிலாப்பூர் வணிகனான ஏலேலசிங்கனால் வறுமை வருத்தங்கள் நீக்கப்பெற்று வாசுகியென்னும் வேளாண் மகளை மணந்து வாழ்ந்து மதுரைச் சங்க வீறழித்துப் பேறுபெற்றாரென்றும் தற்காலக் கதைகள் கேட்கின்றோம். இவற்றுள் ஒன்றுக்கேனும் பழநூலாதரவு இருப்பதாகத் தெரியவில்லை. கிடைக்குஞ் சில பண்டைக் குறிப்புக்களும் இக்கதைகளின் பொய்ம்மைகுறிக்கக் காண்கின்றோம்.
முதலில், வள்ளுவர் மூன்றாஞ் சங்கத்தை முற்றுவித்த வரலாற்றின் உண்மையைச் சிறிது துருவியாராய்வோம். குறட்சுவடிகளிற் காணப்படும் திருவள்ளுவமாலை எனும் புனைந்துரைப் பாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு இக்கதை நடக்கின்றது. வள்ளுவமாலை உள்ளபடி கடைச்சங்கப் புலவராற் பாடப்பட்டதுதானா? என்ற வினா நிற்க; அப்புலவர் பாக்களே வள்ளுவமாலையெனக் கொள்ளினும், சங்கப் புலவர் வள்ளுவரை அவமதித்து அவரால் வீறடக்கப்பட்டதற்கேனும், அவர் தம் இறவாக் குறணூல் அப்புலவர்முன் அரங்கேற்றப்பட்டதற் கேனும் ஆன்ற சான்று ஏதும் அவ்வள்ளுவமாலைப் பாக்கள் சுட்டக் காண்கின்றிலம். கடைச்சங்கப் புலவராற் பாராட்டிச் சேமித்துவைக்கப்பட்ட நூற்றிரட்டுக்களுள் அப்புலவர் சிலர் புனைந்துரைத்த பாக்கள் காணப்படுகின்றன. கடைச்சங்கத்தார் நூற்றிரட்டுக்களில் திருக்குறளும் ஒன்றென்பது தமிழர் யாவருக்கும் ஒப்பமுடிவதாகும். அத்திரட்டு நூல்களுள்ளும் வள்ளுவர் நூல் தலை சிறந்ததென்பதற்கு இடை நெடுங்காலம் பிற பல நூலும் வழக்கிழந்தொழியவும், என்றும் பிரபல நூலாகக் குறள் நின்று நிலவியதே
போதிய சான்றாம். நாம் அறிந்த சங்கத்திரட்டு நூல்களாவன: பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு முதலியன ஆம். இவையனைத்தும் கடைச்சங்கப் புலவரியற்றியனவும் அவர்க்கு முற்பட்ட புலவர் இயற்றியவற்றுள், சேமித்து வைக்கத்தக்க சிறப்புடையனவாகக் கடைச் சங்கத்தாரும், பிறரும்
கண்டு திரட்டியனவுமாக முடியும். இத்திரட்டு நூல்களுள், தகவுமிகவுடைய திருக்குறளின் பெருமை நோக்கிச் சங்கப் புலவரனைவரும் இதனைப் புனைந்து பாடியிருக்கலாம். அன்றி, வேறு சில நூல்களுக்கும் இவ்வாறே அவரனைவ ரும் சிறப்புக் கவிகள் தந்திருப்பின் அந்நூல்கள் வழக் கிழந்த காலத்தே சிறப்புப்பாயிரச் செய்யுட்கள் இறப்பின் வாய்ப்பட்டும் இருக்கலாம். குன்றாவழக்குடைக்குறளொடு அதன் புகழ்மாலைப் பாக்களும் நின்று நிலவி வந்திருக்கலாம். இதனுண்மை எப்படியாயினும், திருவள்ளுவ மாலையில் வள்ளுவர் கடைச்சங்கத்தின் கடைக்காலத்திற் சங்கத்தை வீறழித்த கதை சுட்டுங்குறிப்பு ஒன்றேனும் இல்லை.
கடைச்சங்கக் கடைநாளிற் றோன்றித் தம் குறணூல் அரங்கேற்றுதலினிடையே வள்ளுவர் மதுரைச் சங்கத்தை அழித்த கதை மெய்யாமேல், புலவர் சங்கமிருந்து இயற்றிய பழம்பனுவல்களிற் குறளடிகள் குறிக்கப்படக் காரணமில்லை. மூன்றாஞ் சங்கப்புலவர் நூல்களிலேயே சுட்டப்படமுடியாத பின்வந்த திருக்குறளருந்தொடர்கள்,
அச்சங்கத்தாருக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுந்து அவராற் பாராட்டிச் சேமித்துப் பாதுகாக்கப்பட்ட பழந்தொகைப் பனுவல்களிற் சுட்டப்படுமாறில்லை-யென்பது ஒருதலை. ஆனால் மதுரைச் சங்கச் சதுரர் நூல்கள் பலவற்றுள்ளும், அவர் போற்றுதற்கான அவருக்கு முற்பட்ட மிகப்பழைய தமிழ்த் திரட்டு நூல்களுள்ளும் வள்ளுவரும் அவரற நூலும் பலவேறிடங்களிலும் பாராட்டப்பட நாம் காணுங்கால், வள்ளுவரை அப்படிப்பாராட்டியெடுத்தாளும், பாவலருக்கு அவர் சம காலத்தவராதல் வேண்டுவதொன்று; அன்றேல் முன்னோராதல் வேண்டுவதொன்று; இஃதன்றிக் காலத்தாற் பிந்தியவராகக் கருதற் கிடமில்லையன்றோ! தமக்கு முற்பட்ட இடைச்சங்கச் செய்யுளும் பிறவுஞ் சேர்த்துக் கடைச்சங்கத்தார் திரட்டிய கலித்தொகை, புறநானூறு முதலிய பழைய நூல்களிலும் குறளை மதிப்புடன் எடுத்தாளக் காண்கின்றோம். குறளடிகள் இவ்வாறு கடைச்சங்கப் புலவராலும் அவர்க்கு முற்பட்ட புலவராலும் எடுத்தாளப்பட்டதுமட் டுமில்லை: குறள் வாக்கியங்கள் அறத்தெய்வக்கூற்றாயும் வள்ளுவர் மெய்த்தெய்வப் புலவராயும் அவர் பலராலும் வாயார வாழ்த்தப்படவும் காணும் நாம், வள்ளுவர் அவர்க்குச் சமகாலத்தவரென்று கொள்ளுதலினும் அவர்க்கு முற்பட்டவராகக் கருதலே சால்புடைத்தாம். புலவரெவரும் தம் காலத்தவரால் தலைநின்ற தேவநாவலராய் மதிக்கப்படும் வழக்கம் யாண்டும் இல்லை. பெரும்பாலும் சமகாலத்தவரால் அவமதிப்பும் தாமியற்றிய நூலின் மெய்ப் பெருமைவலியாற் பிற்காலத்தவரால் மேம்பாடும் அடைவதே புலவருலகியல்பு. தெய்வப் பாவலராக வள்ளுவரைச் சங்கப் பழம்புலவர்கள் கூறுவதால். அவர் தமக்கு வள்ளுவர் நீண்டகாலத்துக்கு முற்பட்டவராகவும். அவரறநூலின் இறவாச்சிறப்பு அங்கீகரிக்கப்படுதற்குப் போதிய அவகாசம் அக்குறளுக்கும் அதனடிகளைப் பாராட்டி எடுத்தாளும் சங்கப்பனுவல்களுக்கும் இடையே ஏற்பட்டிருக்கவும் வேண்டும். இது சம்பந்தமாய்த் திருக்குறளடிகளைச் சிந்திக்கச் செய்யும் சில சங்கச் செய்யுட்டொடர்களை ஈண்டுக் குறிப்போம் :-
இன்னும் இத்தகைய மேற்கோள்வாக்கியங்கள் பல எடுத்துக் காட்டலாமாயினும் ஈங்கு இவை போதியவாம். இவ்வாறு உரையொடு பொருளும் உறழும் பலவிடங்களை யும் காட்டுமிடத்துக் குறளாசிரியரே அவற்றைப் பிறநூல்கனினின்றும் இரவல்கொண்டிருக்கலாகாதோ எனின். இவ்வாக்கியங்களின் பொருணோக்கும் நடைப்போக்கும் உற்று நோக்குவார்க்குக் குறளே பிறநூலுடையாருக்கு மேற்கோளாதல் வெள்ளிடைமலையாம். அன்றியும், சாத்தனார் மணிமேகலையிலும், ஆலத்தூர்கிழார் புறப்பாட்டிலும் குறளைப் பாராட்டிப்பாடக் கண்டுவைத்தும். குறளாசிரியர் பிறநூலினின்று இரவல்கொண்டாரெனக் கூறுதல் சிறிதும் பொருந்தாக்கூற்றாம். எனவே சங்கப்புலவர் பலராலும் எடுத்தாளப்படும் குறள் அவர் தமக்குக் காலத்தான் முந்தியதாதல் ஒருதலை. அன்றியும், கடைச் சங்கப் புலவரான சாத்தனார் ' பொய்யில் புலவன் பொருளுரை' யெனவும் ஆலந்தூர்கிழார் 'அறம்பாடிற்றே' எனவும் குறளையும் அதனாசிரியரையும் போற்றிப் பேணக்காணும் நாம், இப்பழம்புலவராற் குறள் மெய்ம்மறை யெனவும், அதனாசிரியர் பொய்யா அறக்கடவுளெனவும் பாராட்டப்படுதற்கு வள்ளுவரின் மெய்ப்பெருமை அப்புலவருக்கு வெகுநீண்ட காலத்துக்கு முன்னே நிலைபேறடைந்திருக்க வேண்டுமென்பதை எளிதிற் றெளியலாகும். நமக்குக் கிடைக்கும் சங்கநூல்களெல்லாம் கடைச்சங்கப் புலவராலேயே இயற்றப்பட்டன எனக்கொள்வதற்கும் இல்லை. சில புறப்பாட்டுக்களும் கலிகளும் இடைச்சங்கப் புலவராலேனும் எனைத்தானும் கடைச்சங்கத்துக்கு முற்பட்ட புலவராலேனும் ஆக்கப்பட்டிருக்கவேண்டுமென்று ஆராய்ச்சியாளர் கருதுகின்றனர். அவர் நூல்களிலும் குறள் எடுத்தாளப்படுதலால் வள்ளுவர் கடைச்சங்கக் கடைக்காலத்தவருமில்லை; முதலிடைக் காலத்தவருமில்லை; அச்சங்கத்துக்கு நெடும்பல்லாண்டுகட்கு முன்பிருந்தவ ராவரென்பது இனிது போதரும்.
இனித் தொல்காப்பியம் முதற்சங்க காலத்து ஆக்கப்பெற்று இடைச்சங்கத்தாருக்கு இலக்கணமாயிற்றென்பது தமிழரெல்லார்க்கும் ஒப்ப முடிந்ததொன்று. கடைச் சங்கக் காலத்தினும் தொல்காப்பியம் ஆட்சியிலிருந்ததாயினும் அதன் விதிகளுக்கு மாறுபட்ட வழக்குக்கள் அச்சங்க நூல்களிற் பயிலக் காண்கின்றோம். உதாரணமாக: மொழிக்கு முதலாகாதென்று தொல்காப்பியம் விதந்து விலக்கிய சகரத்தை முதலாகக்கொண்ட தமிழ்மொழிகள் பல கடைச்சங்க இலக்கியங்களிற் பயிலக் காண்கின்றோம். வள்ளுவர் நூலில் வடசொல்லாய்வந்து வழங்கும் சமன், சலம் என்ற இரண்டொன்று தவிரத் தனித்தமிழ்ச் சகர முதன்மொழிகள் காணல் அரிது. இதனால், தொல்காப்பிய விதிகள் சில வழக்கிழந்த கடைச்சங்கக் காலத்துக்கு முன்னரே அவ்விதிகள் பிறழாமற் பேணப்பெற்ற இடைச் சங்கப் பழங்காலத்தையடுத்தே வள்ளுவரின் குறள் எழுந்திருக்கவேண்டுமென்று ஊகிப்பதும் இழுக்காது.
சாணக்கியம் முதலிய ஆரியநீதிநூல்களினின்று அறங்களைத் திரட்டி வள்ளுவர் நூல்செய்திருக்கவேண்டுமென்றும், ஆதலால், சாணக்கியர் முதலியோருக்கு வள்ளுவர் பிற்காலத்தவராயிருக்கவேண்டுமென்றும் சிலர் கூறுகின்றனர். இதற்குப் பரிமேலழகர் 662-ஆம் குறளின் விசேடக் குறிப்பில் "வியாழ வெள்ளிகளது துணிபுதொகுத்துப் பின் நீதிநூலுடையார் கூறியவாறு கூறுகின்றமையின்" என்று எழுதியுள்ள வாக்கியத்தை ஆதாரமாக்கி, அவ்வாக்கியத்திற் கண்ட 'பின் நீதிநூலுடையார்' என்ற சொற்றொடர் சாணக்கியர் முதலாயினாரைச் சுட்டுவதாகக் கொள்கின்றனர். இதுவே பரிமேலழகர் கருத்தாயின் அவர் விசதமாக்கியிருப்பர். அன்றியும், பின் னீதிநூலுடையார் யாரேயாயினும் அவர் தம் வழி நூல்களுக்குக் குறள் சார்புநூலாகும் என்னுங் கருத்தைப் பரிமேலழகர் இவ்வாக்கியத்தாற் குறித்ததாக ஏற்படுமாறில்லை. ஆழச்சிந்தித்தால் வியாழ வெள்ளிகளின் நீதி நூல்களுங்கூடக் குறளுக்கு முதனூலெனப் பரிமேலழகர் இவ்வாக்கியத்திற் சுட்டிலரென்பது தெற்றென விளங்கும். வியாழ வெள்ளிகளின் துணிபுகளைத் தொகுத்த ஆரியநீதி வழி நூலுடையார் முறைக்கும் குறளாசிரியர் அறம்வகுத்த முறைக்கும் எடுத்துக்கொண்ட குறட் பொருள்பற்றியுள்ள ஒப்புமையை இவ்வாக்கியத்தாற் கூறியதன்றி, ஈண்டுப் பரிமேலழகர் காலமுறையால் முதல் வழி சார்புநூல்களாமாறு வகுத்துக்கூற வந்தாரில்லை. இவ்வாறே பிற இடங்களிலும் குறட்கருத்துக் களோடு வடநூலுடையார் கொள்கைகளின் ஒப்பும் மாறுபாடும் பரிமேலழகர் எடுத்துக்காட்டிச் செல்லுதலும் கவனிக்கத்தக்கது.
சங்கத்தார் பாடியதாகக்கொள்ளப்படும் திருவள்ளுவ மாலைச் செய்யுட்கள்பல குறளை ஆரியமறைகளுக்கு ஒப்பதும் மிக்கதுமாமென்று விசதமாகப் பாராட்டுகின்றன். வேதங்களுக்கு மிகப்பிந்திய மனுவாதி வடமொழி நூலொன்றுமே குறளுக்கு முதனூலாகாதென்னுங் குறிப்பும் திருவள்ளுவமாலைச் செய்யுட்களிற் காணலாம். இவ்வாறு மனுவாதி வடமொழி அறநூலுடையாரே வள்ளுவருக்கு முதனூலுடையராகாத போது, அவரைப் பின்பற்றிய மிகப் பிற்பட்ட கேவலம் நீதிநூலுடைய சாணக்கியராதியர் வள்ளுவருக்கு வழிகாட்டிகளாவது எப்படியோ?
மேலும், நீதி அறத்தில் அரசனால் வற்புறுத்தப்படும் ஒருகூறேயாமாகலின், அறநூல்களினின்று நீதிநூல்களைப் பிரித்துத் தொகுக்கலாவதன்றிக் கேவலம் நீதிநூல்களினின்று அறநூல்களியற்றப்படுமாறில்லை. பரிமேலழகரே பலவிடத்தும் நீதிநூலின் வேறாய அறநூல்களுண்மையைச் சுட்டியுள்ளார். திருக்குறள் அறநூலாகவே, அறத்தின் ஒரு பகுதியான நீதிகளைமட்டுங்கூறும் வடமொழி நூல்களின் வழிநூலாக வள்ளுவர் குறளை இயற்றினார் என்பது பொருந்தாக்கூற்றாம்.
இன்னும், ஆரிய தருமசாத்திரமுறை வேறு, தமிழற நூன்மரபு வேறாகும். இருமுறைகளையும் ஒத்துணர்ந்த வள்ளுவர் திருக்குறள், தமிழ் மரபுவழுவாது பொருளின் பகுதிகளான அகப்புறத்துறையறங்களை மக்கள் வாழ்க்கை முறைக்காமாறு ஆராய்ந்து அறுதியிட்டு வடித்தெடுத்து விளக்கும் தமிழ்நூல். தமிழ்மரபும் ஆரியர் சம்பிரதாயமும் அறிந்த பரிமேலழகர் தம் குறளுரையில் ஆங்காங்கே இவ்விருபெருவழக்குக்களின் இயையும் முரணும் எடுத் துக் காட்டிச் சொல்லுமழகு பாராட்டத்தக்கது. இதை விட்டுத் திருக்குறள், சாணக்கியராதி வடமொழி நீதி வழி நூல்களுக்குப்பின் அவறறின் சார்புநூலாக எழுந்ததென்பர் தமது ஆரியமதிப்பும் காதலும் வெளிப்படுத்துவதன்றிச் சரிதவுண்மை துலக்குபவராகார். தமிழிற் பெருமையுடைய அனைத்தும் ஆரிய நூல்களினின்று திரட்டப்பட்டிருப்பதாகக் காட்டி மகிழ்வார் சிலர்க்கன்றி, நடுநிலையாளருக்கு வள்ளுவர் குறள் தமிழில் தனி முதலற நூலேயாகுமென்பது வெள்ளிடைமலையாம்.
------------------
2. வள்ளுவர் குடிப்பிறப்பு
திருவள்ளுவர் 'ஆதி' என்னும் புலைமகளுக்கும் 'பகவன்' என்னும் பார்பனனுக்கும் பிறந்த எழுவரில் இளையவர் அன்று சில்லோர் சொல்லும் கதையினை நல்லோர் பலரும் நம்புகின்றார். இக்கதையுரைப்போர், " 'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வ' மாகையால் வள்ளுவர் தம் முதற் குறளில் '. . . . . ஆதி பகவன் முதற்றேயுலகு' எனுந் தொடராற் றம் 'தந்தை தாய்ப்பேணியுள்ளார்"என்று கூறித் தம்கோள் நிறுவிவிட்டதாக எண்ணி மகிழ்கின்றனர். இக்கதைக்கிவர்விருப்பும், இவர் விருப்புக்கிக் கதையுமே ஆதாரமாவதன்றிப் பிறிது பிரமாணம் காட்டக்காணேம். முதலில் நாயனார் கடவுள் வழிபாட்டு முதற்குறளிற் றம் பெற்றோரை உலகோற்பத்திக்கு முதற் காரணராகச் சுட்டத் துணிவாரா என்பது சிந்திக்கத்தக்கது. இனி இப்பெயருடையார் நாயானாரின் முதற் குரவரென்பதைப் பிறிது சான்று கொண்டு நிறுவியபின்னன்றே இக் குறளிலக்குரவர் பெயரைக் குறிக்க ஆசிரியர் கருதினரா எனு மாராய்ச்சி எழவேண்டும். ஐயமகற்ற ஆராயுங்கால் ஐயப்படுவதனையே ஆதரவாக்கொண்டு ஒரு சித்தாந்தம் செய்வது தருக்க முறையாமா? முதற்குறளிற் கண்ட ஆதி'-'பகவன் எனுஞ்சொற்கள் குறளாசிரியரின் பெற்றோரைக் குறிக்குமாவென்று விசாரிக்குமுன், அப்பெயருடைய பெற்றோருண்டெனக் கண்டறிய வேண்டியது முதற்கடனன்றோ? குறட் சொற்களையேகொண்டு அப்பெயரிய பெற்றோருண்டெனவும், அப்பெற்றோருண்மையைச் சங்கையற்ற பிரமாணமாகக்கொண்டு குறள் மொழிகளவரையே குறிக்குமெனவும் அநுமானிப்பது பிடிவாதிகளீன் அபிமான வாதமாகலாம்; ஆனால் உண்மை காணும் வாதமுறையாகாதென்பது வெளிப்படை.
இனிப் பகவன் என்பது இவர் தந்தையின் பெயரென்பதற்கு யாதொரு நூலாதரவுமில்லாததோடு, அதற்கு மாறாக "யாளி, கூவற் றூண்டு மாதப் புலைச்சி, காதற் காசனி யாகி மேதினி, யின்னிசையெழுவர்ப் பயந்தன ளீண்டே"எனும் ஞானாமிர்த நூலடிகளால் வள்ளுவரின் தந்தை'யாளிதத்தன்'எனும் வேதியன் என்றொரு கதையும் கேட்கின்றோம். இவ்விரு கதைகளில் விலக்குவ தெதனை? வேண்டுவதெது? இன்னும், பகவன் எனும் சொல் தமிழிலும் இருக்கு வேதத்திலும் அவ்வுருவிற் பயில்வதன்றிப் பாணினியாதி வையாகரணிகளின் விதிப்படிக்கும் வேதத்துக்குப் பிந்திய வடமொழி நூல்களிலும் 'பகவன்' எனும் பிரயோகம் காணலரிது. 'பகவான்' என்பதே சரியான ஆரியச்சொல்லாகும். இதனாற் குறளாசிரியர் பாணினிக்கு முற்பட்டவரெனத் துணிதற் கிடமாவதன்றிக் கடைச்சங்கக் கடைக்கால வேதியனொருவனுக்குப் 'பகவன்' எனும் பெயருண்மை அசம்பாவிதமாகும். எனைத்தானும் இக்கதைக்குக் கதைப்பவர் காதலன்றிப் பிறிது பிரமாணமில்லை. பேரூரில்லாத பலர் பிற்காலத்திற் பாடி வைத்த தனிப்பாடல்களையொரு பொருட்படுத்திப் பண்டைச் சரிதங்கள் துணிவது, ஏதவிளைவுக் காதாரமாகுமன்றி, உண்மை தெளிவதற்குதவு மாறில்லை. பல நூற்றாண்டுகளுக்கு முன்பின்னிருந் திறந்த நச்சினார்க்கினியார், பரிமேலழர்களைக் கூட்டிவைத்துப் போட்டி செய்வித்தும், காளிதாசன், போசராசன் பவபூதிகளைச்சேர்த்தவர் தம்முட் சல்லாபச் சண்டை யுண்டுபண்ணியும் வழங்கிவரும் பல கதைகளையும் தனிச் செய்யுட்களையும் கேட்கும் நாம், அனையதொரு பொறுப்பற்ற நாடொடிகளின் கதையை நம்பி அறத்தேவரைப் பறைப்புலையராக்கத் துணிவது எவ்வாறு கூடும்?
இன்னும், இக்கதைக்குப் பண்டைச் சங்கப்பாட்டுக்களிலேனும் பழைய பிற பனுவல்களிலேனும் ஓராதாரமும் பெறாமையோடு, குறட்பழஞ்சுவடிகளெதனிலு மிக்கதையின் சார்பான தனிச்செய்யுட்க ளெழுதப்படாமையையும் கவனிக்க வேண்டும். திருவள்ளுவ மாலை முழுதையும் தொன்று தொட்டு வரன்முதையேவந்த குறட் சுவடிகளிலெழுதி வருவானேன்? வள்ளுவரும் அவருடன் பிறந்த பிள்ளைகளும். தாதைவாகையால் வேதனைப்படும் ஆதியன்னையைத் தெருட்ட அவர் பிறந்தவுடன் சேனைப்பால் தானுமறியாச் சிறுகுதலை வாய் திறந்துபதேசித்த தெய்வக் கவிகளை அச்சுவடி பெயர்த்தெழுதிவந்தோர் புறக்கணித்துக் களைந்து கழிக்கக் காரணந்தானென்னோ? குறளுக் குரைகண்ட பண்டிதர் பதின்மரும் இவ் வரலாற்றுக் கவிகளைச் சுட்டாதொழிவானேன்? பிற்காலத்திற் பக்தி வினயத்துடன் குறணூலை ஆராய்ந்து பதிப்பித்து வெளிப்படுத்திய நல்லூர் ஆறுமுகநாவலர். திருத்தணிகைச் சரவணப் பெருமாளையரனைய அரிய தமிழ்ப் பெரியாரும் திருவள்ளுவமாலைச் செய்யுட்களை மட்டுந் தழுவிப் பிறவற்றை நழுவவிட்டிருப்பதும் சிந்திக்கத்தக்கதன்றோ? நக்கீரரையும் கம்பரையும் தமிழகத்திற் றலைநின்ற அறிஞரனைவரையுமே வேதியர்குருதி பாதி விரவப்பெற்றதாற் பெருமையுற்றரெனப் பல கதைகட்டி, அக்கலப்பற்ற தனித்தமிழருள்ளே தகவுடையரில்லையென் றொன்றைப் பொருளெச்சமாகச் சுட்டித் தம்முட்டாம் மகிழும் சில நவீனவிற்பனரின் கற்பனைத் திறத்தையன்றே ஆதிபால் எழுவரை 'வேளாவேதியன்' காதலற்றுக் கடமையிற் றந்த கதை நின்று நிதர்சனமாக்குகின்றது.
முதலில் திருக்குறளின் சிறப்புபாயிரச்செய்யுட்கள் சங்கப்புலவராற் பாடப்பெற்ற செய்தியே சங்கையறத் தெளியப்பட்டதொன்றில்லை. வள்ளுவரால் வெல்லப்பட்ட சங்கப் புலவர் நாற்பத்தொன்பதின்மர் மட்டும் தம் பிழைக்கிரங்கிக் குறளையும் அதனாசிரியரையும் புகழ்ந்து பாடி இருந்தால், ஒருவாறு அது நாம் கேட்கும் கதை வரலாற்றோடு பொருத்தங் கொள்ளும். ஆனால் சங்கப் புலவரொடு அசரீரி, சிவபிரான், கலைமகள், மூங்கையரான உருத்திரசன்மர் முதலியோரும், அச்சேறி வெளிவராத சில குறட்சுவடிகளில் இன்னும் பலரும் பாடினதாய்க் காணப்படும் பல பாக்களையும் திரட்டிக் குறட் சிறப்புப் பாயிரமாக்கி வைத்திருப்பதைச் சிந்திப்போர்க்குத் திருவள்ளுவமாலைச் செய்யுட்களை வள்ளுவராற் பொற்றாமரை யிற்றள்ளப்பட்ட சங்கப்புலவர் தம் பிழை பொறுக்கப்பாடின கதையின் உண்மை சங்கைக்கிடமாகும். அதனுடன்அச்செய்யுட்களை நிதானித்துக் கவனிக்குங்கால், தோற்ற சங்கப்புலவர் மனங் கசிந்து அத்தருணம் தத்தமுளத் துதித்த கருத்தை, அப்படியே வெளியிட்டதான கதைக்கு முரணாக, ஒருவர் அல்லது ஒருசிலரே முன் சாவதான யோசனையுடன் பாடித் தொகுத்த பான்மையினை அப்பாக்களே நிரூபிக்கின்றன. வென்றுயர்ந்த வள்ளுவரைப் புகழ வந்த சங்கப்புலவரின் பாக்கள் திருக்குறளியல்பும் பெருமையும் மட்டும் குறிக்க வேண்டுவதியல்பாகவும், திருவள்ளுவமாலைச் செய்யுட்களை யுற்றுநோக்கு வார்க்கு அவை திருத்தமாகப் பொருத்தங்காட்டுங் குறிப்புடன் எண்ணித் துணிந்து பாடிவைத்த பாட்டுக்களென விளக்கமாகும். மேலும், கதையின் படி பங்கமுற்ற சங்கப் புலவர் குறையிரந்தியற்றின தனிப்பாக்கள் குறளுக்குச் சிறப்புப் பாயிரமாமாறில்லை; சிறப்புப்பாயிரம் செய்தற்குரியர்" தன்னாசிரியர் தன்னோடு கற்றோன், தன் மாணாக்கன் தகுமுரை காரன்" என்றின்னோருள் ஒருவரே யாகலானும், சங்கத்தாரும் இன்னோர் வகையில் யாருமாகாமையானும் என்க. திருவள்ளுவமாலை குறணூலின் சிறப்புப்பாயிரமென வழங்கப்பெறுதலால் அதனைச் சங்கப் புலவர் செய்தனரெனுங் கொள்கை உறுதி பெறுமாறில்லை. இவ்வுண்மை யெதுவாயினு மாகுக. தற்காலம் அதனைச் சங்கையற்றதெனக் கொள்ளினும், அதனால் வள்ளுவர் புலையராமாறு தெளிதற்கில்லை. அவரைப் புலையராக்குவார் அதற்கு எடுத்து உரைக்கும் மேற்கொட்செய்யுள் இது:
என்னும் வெண்பா வள்ளுவரைப் புலைக்குலத்தவராக்கு வாரால் மேற்கோளாக எடுத்துக் காட்டப்படுகிறது.
இக்கவியால், அதனைச்செய்தவர் காலத்தில் வள்ளுவர் ஆதிபாற் பகவனுக்குப் பிறந்த கதை வழங்கியதென்பதும். அக்கதையை அம்முனிவர் தம் முதுமொழி வெண்பாவிற் சுட்டியுள்ளார் என்பதும்மட்டும் கிடைப்பதாகும். மற்றப்படி அக்கதைக்கு முதிய முன்னாதரவுண்டென்பதேனும், அதன் சரிதவுண்மையை அம்முனிவர் ஆராய்ந்து துணிந்த தம் முடிபாகக் காட்ட வந்தாரென்பதேனும் அவர் வெண்பாவால் தெளிதற்கில்லை. எடுத்த குறளுக்கு ஒரு கதை காட்டுமவசியத்தின் பொருட்டு அவர் காலத்திற்கேட்கப்பட்ட இக்கதையை அவர் தம் வெண்பாவில் முடைந்தாரென்பதே முறையாமன்றி, மற்றிதன் உண்மையை ஆய்ந்து தெளிந்து நிலைநிறுத்துவதே முனிவர் கருத்தெனக்கொள்ளின் அதற்குப் பல முரண்பாடு காண்கிண்றோம். சங்கத்தை வள்ளுவர் வென்றடக்கியதற்கு வேறு சான்றின்மையை முன்னரே சுட்டியுள்ளேம். அன்றியும், இம்முதுமெழி வெண்பாவிற் பின்னெடுத்துக் காட்டுங் குறளொடு இக்கதை பொதிந்த முன்னடிகள் முரணுவது வெளிப்படை. 'கீழ்ப்பிறந்தும் கல்வியுடைய சானந்றோரின் பெருமை, மேற்பிறந்தும் கல்லாத கயவர்க்கில்லை'-என்பதை வலியுறுத்தவந்த குறளை யுதகரிக்கும் கதையில் தேவரைத் தவிர யாவராலு மெதிர்க்கொணாக் கல்வி நலம் பெருகப்பெற்றுயர்ந்த சங்கத்தாரைக் கல்லாதாரெனக் ருறிப்பது பொருத்தமாமா? அக்குறிப்பு முனிவர்க்கில்லையென்பதைக் 'கல்விநலந்துய்த்த சங்கத்தார்' எனும் அவர் சொற்றொடர் விசேடமே விசதமாக்கும். இதுவுமன்றிப் பலவேறு குலமும் தொழிலுமுடைய சங்கப் புலவரனைவரும் ஒக்க மேற்குல வுயர்குடிப் பிறப்புடையரென்றாகவே, கதைகூறுமாறு வள்ளுவரால் வெல்லப்பட்ட சங்கத்தாரெல்லாரும் "மேற்பிறந்தார்" எனவும் "கல்லாதார்" எனவும் முனிவரர் கருதற்கிடனில்லை-முறையுமில்லை. அதனால் இவ்வொரு கவி கொண்டு கற்றுப்பாடுடைய குற்றமுடைமைக்காக வள்ளுவரைப் புலைக்குடிப் புகுத்துவது அவசியமும் அழகுமில்லை. சிவஞானயோகிகளே ஆராய்ச்சியின் பயனாகத் தாம் கண்ட முடிபென இக்கதையின் உண்மையை நிலைநாட்ட நினைத்தாலும் அவராய்ந்த ஆதரவுகளையும் கொண்ட முடிவுக்கு அவர்கண்ட நியாயங்களையும் நாம் விசாரிப்பது முறையாமேல், ஈண்டவர் தந்துணிவு துலக்கு நோக்கின்றிக் கேட்ட கதையைப் பாட்டில் முடைந்ததுகொண்டு அக்கதைக்கு அவரை ஆசிரியராகவும் அவர்கவிகொண்டதனை நிலைநாட்டவும் முயல்வது முறையன்றாகும்.
[பறைக்குல மறுக்குங் குறிப்புக்களாவன:]
இனி, வள்ளுவரின் குலமும் குடிப்பிறப்பும்நெட்டிடையிருளில் மறைபட்டுத் தெளிதற்கரிதாகும். பண்டைப் பெரியார் பிறப்பதனைத்தும் இவ்வாறே தேடரிய முயற்கொம்பாகத் தெரிகின்றோம். நக்கீரர் முதலிய சங்கப் புலவரும் அவர் தமக்குப் பல நூற்றாண்டுகளுக்குப் பிற்பட்ட கம்பரனைய கவிவாணரும் தத்தம் நூலளவில் தமிழகத்தே வாழ்வுபெற்றிருத்தலன்றி, மற்றப்படி அவர்களின் குலம்குடிகளை விளக்கும் குறிப்புக்களொன்றும் கிடைக்கக் காணேம். காளிதாசன் முதலிய வடமொழி மகாகவிகளும் இப்படியே அவர்தம் நூலளவிலன்றிப் பிறாண்டு நமக்கு ஏதிலராகின்றனர். சரிதவுணர்ச்சியும் பயிற்சியும் தொன்றுதொட்டு நிலவிவரும் மேனுட்டிலுங்கூட அண்ணிய நானூறாண்டுகளுக்குள்ளிருந்த நாடக மகாகவியான செகப்பியரின் (Shakespeare) சீவிதக் குறிப்புக்களைப் பற்றியும் அவர் பெயரான் வழங்கிவரும் நாடகங்களின் ஆசிரியத் துவத்தைப்பற்றியும் இன்னும் தீராதவாதப்போர் நிகழக் காணும் நாம், சரித்திரக்குறிப்புகளில் ஆர்வமும் ஆதரவும் இல்லாத நமது நாட்டில் ஞாபகத்திற் கெட்டாத நீண்ட பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுந்துலவி மறைந்த பெரும் புலமை யருஞ்சுடரார் பிறங்குமவர் நூற்கிரணவொளியால் நிலைப்பதல்லால், அவரைப் பற்றிய பிறசிறு குறிப்புக்கள் தமிழகத்திற்பேணப்படாமை கண்டு வியத்தற்கில்லை. உலகையும் அதன் நிலையற்ற வாழ்வையும் வெறுக்கும் நம்மவர், மக்களின் குலம்குடி நிலைகளை மதிப்பதில்லை. இறவா அறிவற நூல்களை மட்டும் பேணிப்போற்றுவாரன்றி, அந்நூல் செய்தார் வாழ்க்கைக் குறிப்புக்களை நம்மவர் பாராட்டும் வழக்கம் இல்லை. இதனால், குறவாசிரியன் குடிப்பிறப்பும் மற்றும் அவர் சீவிதக் குறிப்புக்களும் இன்று இனைத்தெனத் துணிந்து தெளிதற்குச் சான்று போதா.
எனினும், வள்ளுவர் புலைக்குலப் பிறப்பும் சால்புமுடையவரெனக் கதைப்பவர் கதையொடு பொருந்தாக் குறிப்புக்கள் ஈண்டுச் சில நினைக்கத்தகும். பெற்றோர்ப் பேணலும்பெருங்குடிப் பெருமையும் குறணூலிற் பெரிதும் பாராட்டப்படுகின்றன. நற்குடிப் பிறப்பும் பிறந்த குடியைப் பேணிப் பெருக்கலும் மக்கட்கு அழகும் கடனுமாமென்று புலைக்குல வள்ளுவர் வற்புறுத்துவாரா?அன்றியும் அறம் பொருளின்பங்களையும் அவற்றின் நுட்பங்களையும் திறம் பட விரிக்கும் வள்ளுவர் ஆன்ற குடிப்பிறப்பும் அரசவைப்பழக்கமும் உடையவரென்பதை அவர் குறள் பறையறைகின்றதே, இன்னும், அவரறநூல் வேதமனைய ஆரியர் பழம்பெரு நூல்களின் வடித்த சாரமென முழங்குபவர், பறைக்குல வள்ளுவர், வாலப்பருவத்தே கல்வி கேள்விகளால் நிறைந்து, இறவாக்குறள் பாடுமுன் தென்சொற் கடந்து வடசொற் கடலுக்கும் எல்லை கண்டது எப்படிக் கூடுமென்பரோ?அவர்காலப் புலையர் தமிழொடு ஆரியமும் பயின்று வருண பேதமழித்து அறவோர் அறிஞருடன் பயின்று வந்தனர் என்று கொண்டாலன்றிப் பறைக்குல வள்ளுவர் தம் திருக்குறள்காட்டும் அறிவும் கல்வியும் அடையுமாறில்லை. 'கல்லாமலும் கற்க வேண்டாமலும் அறம் பாடவந்த மனிதவுருவெடுத்த கடவுள் வள்ளுவர்' என்பார்க்கு இவ்வாராய்ச்சி அவசியமில்லை. சால்பும் தூய்மையுமான தெய்வத்தன்மை எனைத்துடையராயினும் நாயனார் மனிதவருக்கத்தினர் எனக்கொள்வோருக்கு மட்டும் இனைய அராய்ச்சிகள் பொருளொடு பயனுடைத்தாம். ஆனால், தேவரைப் பிரமனவதாரமென்பார் மாட்டு நாம் கேட்டறிய வேண்டுவதொன்றுண்டு. அறம் பாட அவதரிக்குங் கடவுள், ஓதுவிக்கும் அந்தணராகாமலும் முறைசெய்யும் அரசனாகாமலும், பறையறையும் வள்ளுவனாய்ப் பிறக்க வந்த நோக்கமென்னோ?அநாதி தர்மமெனும் சநாதனமுறைகளையும் வருண வகுப்பு வரையறைகளையும் நிலை தடுமாற அழித்தொழித்து 'எல்லாவுயிர்க்கும் பிறப்பொக்கும்'எனும் உண்மையை நிலைநிறுத்தற்கென்றே மறையவர் பிரமன் பறையனாயினனா?அன்றிப் பயன் தான் பிறிது யாதோ? நாள் வழக்கில் நம்மவருட் புலைக்குடி மக்கள் கல்விப்பயிற்சி, கேள்வியறிவு, அறவோர் கூட்டுறவுகளுக்கு இடம் பெற நாம் காண்பதில்லை. திருக்குறளியற்றற் கின்றியமையாத மதி நுட்பமும் நூலறிவும் அந்நூலாசிரியர் பறையர் குலத்திடையே பெற்றிருக்கவொண்ணாதென்பது ஒரு தலை. பழங்காலத்தே பறைச்சிறுவனைப் பார்ப்பனரெவரும் பாராட்டி வளர்த்துத் தமிழொடாரியமும் பயிற்றுவித்து அறமுதநூலாசிரிய னாக்குவதும் அசம்பாவிதம். ஆகவே வள்ளுவர் இப்பெற்றியெல்லாம் பெறற்கின்றியமையாத நற்குடிப்பிறப்பும் அறவோர் கூட்டுறவும்உடையராதல் வேண்டுவது அவசியமன்றோ.
மேலும் புலமைக்கறிகுறி இழி தகவுடைய புலால் உண்ணலும் களிமயக்குமேயாம். அக்குடிப் பிறந்த வள்ளுவர் தம்மவர்க்குக் குல தர்மமும் பார்ப்பனரனைய பிறர்க்கு ஆபத்விர்த்தியும், வேள்வி ஆராதனைகளுக் கவசியமுமான புலாலையும், கள்ளையும், விலக்கின்றி, யாவர்க்கும் விதிமுகத்தாற் கடிந்தொதுக்குவது, அவர் புலைக்குடிப் பிறப்பொடு பொருந்துவதாமா? இன்னும், கேவலம் கல்வி கேள்விகளால் மட்டும் அறியொணாதனவும், நீண்ட நெருங்கிய பழக்கத்தால் மட்டும் தெரிய வேண்டுவனவுமான அரசர் அமைச்சர் அறவோர் அறிஞர் வணிகர் வேளாளரின் குடிக்குல வழக்கங்களையும் கூட்டுறவு நலங்களையும் நுணுகி ஆய்ந்து எடுத்துத் திரட்டித் தெருட்டும் திருக்குறள் அதனை ஆக்கியவர் நற்குடிப் பிறப்பும் மேன் மக்களின் நெருக்கமுமுடையராதலைச் சுட்டாதொழியாது.
இதுவேயுமன்றி; வள்ளுவரை புலையராக்கும் கதையே அவருக்கு வேளாள மரபில் வாசுகியென்னும் ஒரு மறுவில் கற்புடை மங்கையை மணஞ்செய்வித்து
வழுத்துகின்றது. உயர்குடிப் பிறந்த வாசுகியென்பாள் வள்ளுவரின் வாழ்க்கைத்துணையாவதற்கு, அவர் புலைக் குடிப்பிறப்பு ஆசாரச் சீர்திருத்தம் அறியாத பண்டைக் காலத்தி லிடந்தருமா? வள்ளுவரும் வாசுகியும் 'காதலிருவர் கருத்தொருமித்து ஆதரவுபடினும்' அவள் பெற்றோரும் உற்றோரும் சைவவேளாளமரபொழுக்கங்களை மறந்து வள்ளுவரை மணமகனாகக்கொள்ளற் கிசைவரா? திணை மயக்கும் குலக் கலப்புமான இம்மணம் அசம்பாவிதமாமேல். அதைக் கூறுங் கதயில் வள்ளுவரின் புலைக்குலப் பிறப்பு மட்டும் அங்கீகரிக்கத் தக்கதில்லை என்று ஒருவாறு துணியலாகும்.
---------------------
3. வள்ளுவச் சொல்லின் வழக்கும் பொருளும்
இனி வள்ளுவப் பெயர் பறைக் குலத்தையே சுட்டுகின்றதா என்பதும் சிறிது ஆராயத்தக்கது. பறையரின் புரோகித வகுப்பினரே வள்ளுவராவர் - என்பதற்குச் சூடாமணி நிகண்டும் பிற்காலப் பிறநூல்களும் மேற்கோள்களாகக் காட்டப்படுகின்றன. பண்டைநூலொன்றில்லேனும் வள்ளுவப்பெயர் தீண்டாம லொதுக்கப்படும் புலையர்க்காமெனும் குறிப்பும் இல்லை. மணிமேகலையில், வள்ளுவனென்ற பெயரும் இல்லை. பெருங்கதை சிந்தாமணி முதலிய கடைச்சங்கத்துக்கு மிகப் பிற்பட்ட சில காப்பிய நூல்களுள் பெருவிழாக்களையும் மன்னர் மணமனைய நற்செய்திகளையும் பட்டத்துயானைப் பிடர்த்தலையிருந்து அகநகரில் அரசவீதிகளிற் றெரிவிப்போர் வள்ளுவரெனச் சுட்டப்படுவதுண்டு. ஆண்டும் ஆனைமேல் அணைமிசையமர்ந்து பெருவிழாக்களை அரசமுரசொலிக்க அறிவிக்கும் தொழிலுடையோரைச் சுட்டுதற்கன்றிப் புலையர்குலவகுப்பினர் யார்க்கும் வள்ளுவப்பெயர் வழங்கவில்லை. "அணைமிசை யமர்தந் தஞ்சுவரு வேழத்துப் பணையொருத் தேற்றிப் பல்லவர் சூழ" * ஊரையும் தம்மையும் உலகையும் வாழ்த்தித் தம் மணம் முதலிய மங்கலவிழாக்களை அறிவிப்பதற்கு வேந்தர் புலையரைதேடிக் கொள்ளாரன்றே? மேலும், புறநானூற்றில் "துடி பாண் இடும்பனொடு குடியாப்" பேசும் பறையரொடுவைத்துப் பிற்காலப் பெருங்கதையும் வள்ளுவமுதியரைச் சொல்லுமாறில்லை. நன்குடிமக்களின் பின்னடிக்குடியான பறையர் சாற்றும் பறையும் அதை அவரறையும் முறையும்வேறு.
"அரசுகொற்றத் தருங்கடம் பூண்ட" வள்ளுவரோ, கோற்றொழில் வேந்தர் கொற்ற முரசம். பெரும்பணைக் கொட்டிலுள் அரும்பலியோச்சி, முற்றவை காட்டிக் கொற்றவை பழிச்சித், திருநாள் படைநாள் கடிநாளென்றிப், பெருநாட் கல்லது பிறநாட்கறையார்" எனப்பெருங்கதை** பேசுகின்து.
---------------
* பெருங்கதை, காண்டம்-2 பகுதி 2, வரி 37-39.
** காண்டம் 2, பகுதி-2, வரி 29-33.
பெருங்கதையுட் போலவே சாத்தனார் தம் மணிமேகலையிலும். -
இனி, இதன் தொடர்பாகச் சேந்தனார் திவாகரத்தில் "வள்ளுவன் சாக்கையெனும்பெயர் மன்னர்க், குள்படு கருமத் தலைவர்க் கொன்றும்" என்று விசதமாக விளக்கியுள்ளமையும் ஈண்டுக் கவனிக்கற்பாற்று. இதனாலும்
மன்னர்தம் உள்படு கருமத்தலைவர்க்கு வள்ளுவரென்பது உத்தியோகப் பெயராதல் தெள்ளிதிற் றெளியக் கிடக்கின்றது. தற்காலத்திலும் அரசனனைய பெருமக்களுக்கு அன்பும் நம்பிக்கையுமுடைய ஆப்தர் உட்கருமத்தலைவர் (Private Secretaries) ஆக அமரக் காண்கிறோம். எனவே, பண்டைக்காலத்திலும் தமிழரசர் தம்மகத்தே, புறக்கருமத்தலைவரான ஏனாதியரொத்த வரிசையும் பதவியுமுடைய அகக்கருமத் தலைவரான உத்தியோகத்தர்
-----------
** பெருங்கதை காண்டம் 1. பகுதி 47. வரி 155-156.
இருந்தனரெனவும், அவர் வள்ளுவரென வழங்க்கப் பெற்றாரெனவும் தெளிகின்றோம். கடைச்சங்கத்துக்கு முற்பட்ட குறளாசிரியர் பழங்காலத்தில் வள்ளுவப்பெயர் சாதிகுறியாமல் மன்னருள் படுகருமத் தலைமைப்பதவியையே குறித்ததாக ஏற்படுகின்றது. எனவே, வள்ளுவப்பெயர் சங்ககாலத்திற் றமிழரசர் உள்படுகருமத் தலைமையுத்தி யோகப் பெயராயும் (hamberlains), பெருங்கதையும் சிந்தாமணியும் எழுந்த இடைக்காலத்தே அவ்வுத்தியோகத்தரின் தொழிலிலொன்றான அரசவிழாக்களை அறிவிப்போர் (Heralds) பெயராயும் நின்று, பிற்காலத்திற் பறையருக்குப் புரோகிதரும் நிமித்திகருமான் ஒரு புலைவகுப்பினரின் சாதிப்பெயராய் வழங்கலாயிற்றெனத் தெரிகின்றோம். இப்படியே முன் சாதிகுறியாத குறிஞ்சித்திணை மக்கள் பொதுப்பெயராய் நின்ற 'குறவர்' எனுஞ்சொல் தற்காலத்திற் குறிசொல்லும் ஒரு பஞ்சம வகுப்பினரின் சாதிப்பெயராய் வழங்குவது அறிவோம். இவ்வுண்மையறியும் நாம், இக்காலத் தொருவனை வள்ளுவனெனில் வள்ளுவச் சாதியிற் பிறந்தவனைக் குறிப்பதெனக் கொள்ளுமுறை கொண்டு, பிறப்பாற் சாதிகுறியாத முன்சங்கத்
தமிழுலகில் வள்ளுவரெனுஞ்சொல் பதவி-தொழில் குறியாது சாதிகுறிப்பதெனத் துணிதல்முறையாமா? வள்ளுவரென்று ஒரு சாதிவகுப்பே தொல்லைத்தமிழகத்திலிருந்ததாய் அறிந்தபாடில்லை. பழம் பனுவல்களில் வள்ளுவப்பெயர் அரசரகம் படுகருமத்ததிபரையே சுட்டக் காண்கின்றோம். அதனால், அப்பெரும்பழங்காலத்துக் குறளாசிரியர் வள்ளுவரென்று வழங்கப்பெறுவது கொண்டு - அவரைத் தற்கால வள்ளுவச்சாதி வகுப்பில் தள்ளிவிட யார்க்கும் உரிமையில்லை. அப்பெயரால் நாம் கொள்ளற்குரியது, அவ்வாசிரியர் அவர்காலத் தமிழரசன் ஒருவன்பால் 'உள்படுகருமத்தலைவ'ராக அமர்ந்தவராதல் வேண்டுமென்பதே, பிரித்தானியா(Britaain))வில் பேரமைச்சனாயிருந்த பேகன்(Bacon) பெருநூலெழுதிய பின்னர் அவனமைச்சனாயிருந்த வரலாறு முழுதும் மறந்து அவனை அறிஞர் கூட்டத்தில் வைத்தெண்ணப்படுவதனையே பெரும்பாலோர் அறிவர். சாணக்கியரால் அவர் பெயரால் நின்று நிலவும் நூலாசிரியரென அனைவரும், சந்திரகுப்தன் மந்திரி என்று அவரை வெகு சிலருமே கூறக்காண்பாம்.
இம்முறையில் நம் முதற் பாவலரும் அரசன் அகக்கருமத்தலைமை வைத்து வள்ளுவப்பதவியும் பட்டமும் பெற்று அவ்வுபசாரப்பெயரான் அழைக்கப்பட்டிருந்து, பின் அவர் தம் இறவாக் குறணூலை இயற்றிப் புகழ் சிறந்ததனால், கேவலம் உத்தியோகப் பதவியைப் பாராட்டி அவருக்குப் பெருமை கூறக்காரணமில்லாது, அப்பெயர்ப் பொருளை மறந்த மக்களின் நெடுவழக்கால் வள்ளுவப் பெயர் அவர்க்கு இயற்பெராக நின்று நிலவிவரவாய்த்தது போலும்.
மேலும், வள்ளுவப்பெயர் சங்ககாலத் தமிழகத்திற் பறையரினொரு வகுப்புக்கும் சாதிப்பெயராகாமல், தகவு உடைய முடிமன்னர்மகட் கொடைக்குரிய வேளிர்-குறுநில வேந்தரிடை வழங்கி வந்த செய்தியும் ஈண்டுச் சிந்திக்கத் தக்கது. கடைச்சங்க காலத்துக்கு முந்திய புலவர் சிலரின் முதுசுவைப்பாக்களையுங் கொண்டுளதாகக் கருதப்பெறும் புறப்பாட்டில், ஒரு சிறைப்பெரியனார், மருதனிளநாகனார், கருவூர்க் கதப்பிள்ளை எனும் பண்டைப் பாவாணர் பாடிய வேளிர்குலதிலகனாம் நாஞ்சிற்குரிசிலின் பெயர்"வள்ளுவன்" எனச் சுட்டப்படுகிறது. இஃதவனியற் பெயராதலொன்று; அன்றேல், அவன் சேரன்மாட்டன் புடையனாய் அவனுக்குப் படைத்துணை நின்றதாயறிகின்றோமாகையால், அக் குடச்சேர அரசன் கொற்றத் தருங்கடம் பூண்ட உள்படு கருமத்தலைவனாயிருந்த பதவியாலெய்திய பட்டப் பெயராதலொன்றாம். எதுவேயாயினும், வேளாண்மரபிற் குறுநில் வேந்தனுக்கு "வள்ளுவன்"எனும் பெயர் புறப்பாட்டில் வழங்குவதாலும், சங்கநூல்களில் அது புலைக்குலச் சாதிப் பெயராக யாண்டும் பயிலாமையானும் வள்ளுவப்பெயர் மன்னருள்படு கருமத் தலைவர்க்கொன்று மென்றே சேந்தனார் திவாகரத்திற் செப்புவதாலும், அப்பெயருடைமை கொண்டு அறப்பழங்காலக் குறளற நூலுடையாரை பறைக்குலத்தவராகக் கருதல் முறையன்றாம்.
இன்ன பலகாரணங்களாற் பொய்யில் புலவருக்கு "வள்ளுவர்" எனும் பெயர் இயற்பெயராகாமல், பதவியும் தொழிலும் உதவவந் தொன்றி நின்றதொரு சிறப்புப் பெயராகுமென்று நினைப்பது இழுக்கன்றாம். அன்றி இயற்பெயரெனவே இயம்பினும் இசையும். "சிறப்பினாகிய பெயர்நிலைக்கிளவிக்கும், இயற்பெர்க்கிளவி முற்படக்கிளவார்" எனும் தொல்காப்பியச் சூத்திரவுரையில்-யாருக்கும் காரணச்சிறப்புப்பெயரை முற்கூறி அவர் இயற்பெயரைப் பிற்படவழங்குவதே தமிழ் மரபென்பதை வலியுறுத்துவதற்குச் சேனாவரையர், நச்சினார்க்கினியர் இருவரும்"முனிவன் அகத்தியன்" "சோழன் வன்கிள்ளி" என்பவரோடு 'தெய்வப்புலவன் திருவள்ளுவன்'என்ற தனையும் உதாரணமாக உடனெடுத்துக்காட்டிய செய்தியைச் சிந்திப்பின், 'முனிவன்''சோழன்' 'தெய்வப் புலவன்'எனச் சிறப்பினாகிய பெயர் நிலைக்கிளவிகளுக்குப் பிற்படக் கிளக்கப்படும் 'அகத்தியன்' 'வன்கிள்ளி'என்பன போலவே-திருவள்ளுவனென்பதும் நாயனாருக்கு இயற்பெயராமென்பது அவ்விரு பேராசிரியருக்கும ஒப்ப முடிந்த கருத்தெனத் தெளியலாகும். இவ்வாறு இவர்க்கு இஃது இயற்பெயாரென்பாரோடு எமக்கு வாதமில்லை; ஏனெனில், இயற்பெயரென்போர் அப்பெயர்கொண்டு வள்ளுவரைப் புலைக்குலம் புகுத்திப் பிழையார். வள்ளுவப்பெயர் காரணமாகத் தெய்வப் புலவரைப் புலைகுலத்தவராக்க விரும்புபவருடன் மட்டுமே ஈண்டு வாதமாதலானும், இயற்பெயராக்கொள்ளல் அவ்விருபுடையோர் வழக்குக்கு உதவாமையானும், காரணச்சிறப்புப்பெயராய் எழுந்து பின் இயற்பெயராய் நிலைத்தெனக் கொள்வார்க்கு மட்டும் அப்பெயர் நிலைக்கிளவி சாதிகுறியாது "வேத்தக வினைமை" யே குறிப்பதெனக் காட்டி யமைவேம்.
இனி வள்ளுவப்பெயர் தொழிலையே குறிக்குமாயின், குறளாசிரியரும் குறளுமே அப்பெயரான் வழங்கப் பெறுவது வழக்காறாமா? -என்பார்க்குக்கூறுவம் சால்பும் தகவுமுடைய பெரியாரை அவரியற்பெயராலழைத்தல் தமிழகத்தில் மரபன்று- என்பது யாவரும் அறிந்த தொன்றாம். தற்காலத்திலும் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையைப் பிள்ளையவர்களென்றும், நல்லூர் ஆறுமுகநாவலரை நாவலரவர்களென்றும், இன்னும் இப்படியே அங்காங்கு அவ்விடத்துப் பெரியோர் சிலரைக் கலைக்டரவர்கள் திவானவர்களென்றுமே நம்மவர் சொல்லுவதை யாவரும் அறிவோம். பண்டைக்காலத்திலும் உவாத்திமைத் தொழிலுடைய கணக்காயர் பலரெனினும் அவருட் சிறந்த நக்கீரர் தந்தையை மதுரைக்கணக்காயரெனவும், சிந்தாமணி ஆசிரியரைத் தேவரெனவும், இளங்கோவை அடிகளெனவும் தொல்காப்பியத்திற்கு முதலுரை கண்ட பெரியாரைப் பேராசிரியர், உரையாசிரியர் எனவுமே அவரவர் தொழில் பதவிகளானும், தொல்காப்பியர் முதலிய பழம்புலவர் பலரைக் கேவலம் அவரவர் குடிப்பெயரானும் மட்டும் அழைக்கும் வழக்குண்மை அறியாதாரில்லை. கம்பர் என்பதும் அப்புலவர் பெருமானின் நாட்டினடிப் பிறந்ததொரு சிறப்புரிப் பெயராவதன்றி அவரியற்பெயராகாமை கம்பநாடர், கம்பநாட்டாழ்வார் என்ற பெருவழக்குக்களால் விசதமாகும். இப்பெரியோர் எல்லோர்க்கும் இயற்பெயரொன்றில்லையெனச் சொல்லலாமா? இப்போது அவ்வியற் பெயர்களொன்றேனும் அறியகில்லேம். பெரியார்பெயர் வழக்கின்மை மரபன்றே.
இவ்வாறு இன்னவர்தம் இயற்பெயரை மறப்பித்துப் புதுப்பெயர்கள் புனைந்து இவர்க்குச் சூட்டிற்றாகும். எனவே பெரியோர்களியற்பெயர்கள் வழங்காமையும்,
அவரை அவர்தம் சிறப்புரிமைப்பெயரானே அழைப்பதுமே தமிழகத்தில் தொன்றுதொட்டு நின்றுவரும் மரபென்றே அறியலாகும். ஆகவே, தாமே தம் தகுதியாலாவது தம் முன்னோர் வரன்முறையுரிமையாலாவது தமிழ்முடி மன்னரிடம் அவருள்படுகருமத் தலைமை வகித்து, வள்ளுவப் பதவிப்பெயர் வழங்கப்பெற்று, அக்கால வள்ளுவ உத்தியோகம் வகித்த மற்றையோரினும் அறிவு திருஆற்றல்களிற் சிறப்பெய்திய காரணத்தால், நமது நாயனார் வள்ளுவரெனும் உத்தியோக உபசாரத் தனிப்பெயராலழைக்கப்பட்டிருக்க வேண்டுமெனவும், பிறகு அவர் திருக்குறளீயற்றிப் பெரும் புகழெய்தப் பெற்று- நாளடைவில் ஆட்சியின்மையான் அவரியற்பெயர் அறவே மறக்கப்பட்டு அவருக்குத் திருவள்ளுவப் பெயர்மட்டும் நிலைநின்று வழக்காற்றில் வந்திருக்கவேண்டுமெனவும் ஈண்டு நாமறியலாகும்.
------------------
4. வள்ளுவர் வாழ்ந்த இடம்.
இனித் திருவள்ளுவர் மயிலாப்பூர்வாசியென்பதும், அவரைப் புலையராகப் பாவிக்கும் அடியற்றகதையையே ஆதாரமாகவுடைத்து. சங்க நூல்களில் மயிலாப்பூர் எனும் பெயரே எங்கும் வழங்கப்காணோம். சங்ககாலத்தில் அவ்வூரிருந்ததற்கு வேறு தக்க சான்று காணப்படவுமில்லை. பிற்காலச் சைவ சமயகுரவர் தம்தேவாரத்
திருமயிலைப் பதிகப்பாக்களில் மயிலாப்பூருக்கு வள்ளுவர் சார்புடைமை சுட்டவுமில்லை. இக்கதை அவர்காலத்து வழங்கியிருப்பின், சைவப்பெரியார் திருமயிலாப்பூரைத் திருவள்ளுவர் தொடர்பாற் சிறப்பியாது வெறுக்கவும்
மறுக்கவும் நியாயமில்லை. சங்கத்தாராற் பாடப்பெறாவிடினும் நீண்டகாலமாய் அப்பெரியார் பெயரால் வழங்கி வரும் நீட்சியான ஆட்சியுடைய திருவள்ளுவ மாலையுளட்செய்யுளொன்று, "பொய்யில் புலவரை" மயிலாப்பூருக்குரியர் ஆக்காமல் மதுரைக்குரியராகப் பேசுகின்றதும் ஈண்டுக் கவனிக்கத்தக்கது. அக்கவி வருமாறு:-
நாம் கேட்கும் கதை-'அவர் மயிலாப்பூரிலே பிறந்து அவ்வூரிலேயே வளர்ந்து மணந்து வாழ்ந்து முத்தியடைந்தவர்'-எனக் கூறுகின்றது. கடைச் சங்கத்தாரை
வென்றடக்குவதற்காக மட்டும் மதுரைக்கு ஒரு முறை வந்த தாயும் வந்து தம் இறவாக்குறணூலை அரங்கேற்றிய காலை அவமதித்த தருக்குடைய சங்கத்தார் செருக்குடையத் தாமும், சத்தியலோகத்தில் மனைவியும் தரணியில் தம் தமக்கையுமாய்த் தம்மோடு புலைச்சி ஆதியின் வயிற்றில் அவதரித்திருந்த கலைமகள் ஔவையும், தம் வைகுண்டத்தந்தை வையத்திற் புலைத்தமையனாயிருந்த இடைக்காடருமாகத் தந் தெய்விகத்தன்மையாற் றமிழ்ப் புலம் புணர் கூட்டுண்ட புலவரைக் கோயிற்குளத்திற் குப்புற வீழ்த்தி வென்ற பின்னர் மதுரை விட்டு மயிலாப்பூருக்கு இவர் மீளச் சென்றுவிட்டதாயும் இக்கதை பேசுகிறது. இஃதுண்மையாயின் வள்ளுவர் மயிலாப்பூருக்கே உரிய புலவரும், மதுரைக்கு ஒரு முறை வந்து மீண்டதன்றி மற்றைய தொடர்ச் சிறப்பற்றவருமாவார்.
இக்கதையே 'இவரால் வெல்லப்பட்ட சங்கத்தார் தாமரைக்குளத்திற்றள்ளப்பட்டுத் தத்தளித்த தறுவாயிற்பாடியது 'திருவள்ளுவமாலை' யெனவும் வற்புறுத்துகிறது. எனவே, சங்கத்தாருக்கு நாயனார் மதுரைக்குத் தம்மொடு வாதிடவந்த ஏதிலரென்பது தெரிந்திருக்கவேண்டும். அஃதறிந்த சங்கத்தார், தம் வள்ளுவமாலைச் செய்யுளிலேயே, இவரைப் "புனற்கூடற்கச்சு" என மதுரைக்கே இவர் சிறப்புரிமை கூறுவது கதைப்பவர் கற்பனைத் திறத்தை விளக்குதற்குதவும்.
கதை கிடக்க;இவ்வள்ளுவமாலைச் செய்யுள் நம் முதற்பாவலரை வளம்படு கூடலான தென் மதுரைக்கு அச்சாணி போன்றவரென விதந்து கூறுவதால், மதுரைக்கு ஒருமுறை வாதிடவந்து மீண்டாரெனுங் கதைக்கு மாறாக, நாயனார் மதுரைக்கு விசேட நெருக்கமும் தொடர்பும் உடையவராக வேண்டுமெனத் தோன்றுகிறது. சங்கத்தைத் தாழ்த்த வந்து, வென்றதும் மீண்டுசென்ற வள்ளுவரை-நல்கூர்வேள்வியார் 'மதுரைக்கச்சு' என வழுத்துவதன் நயனும் பயனும் என்னோ? இச்செய்யுளால் அஃதியற்றப்பெற்ற பழங்காலத்தில் வள்ளுவர் கூடலிற் பீடு பெற வாழ்ந்த பெரியாரெனும் வழக்குண்மை வலி பெறுகின்றது. இதனாலும் இக்கதையின் கற்பின்மை தெளியப்படும். இதனால் தமிழெழுந்தநாளெழுந்த பழம் பழையர் பாண்டியரின் மூதூரில் தமிழிசைத்துப் புகழ் சிறந்த கடைச்சங்கத்தாரும் பரசும் நெடும் பழைய முதற் பாவலராய் அறம்பாடி அளிசெய்த தெள்ளியரே வள்ளுவர்
என்றறியலாகும். எனவே, தென்மதுரைப் பெரியாரை வடமயிலைக்குரியரென வழுத்து கதைப்பொய்ம்மை யினி விரிக்கவேண்டா.
--------------------------
5. வள்ளுவப் பெரியாரின் இல்லறக்கிழவியார்.
இன்னும், இவ்வெண்பாவை உற்றுநோக்கின் இவர் மனை மாண்ட வாழ்க்கைத் துணைவியின் பெயரும் ஒருகால் ஊகித்தறிதற் கிடம்பெறலாமென்று எண்ணக் கிடக்கின்றது. முன்னிரண்டடிகளில் தமிழில் வடமதுரை என வழங்கப்பெறும் மதுராபுரிக்குக் கண்ணன் அச்சாகி நின்ற விவரம் விளக்கப்படுகிறது. சரவணப்பெருமாளையாவர்கள் இவ்வடிகளுக்குப் பார்வதியை மணந்த சிவபிரான் வடமதுரையிலிருந்து சிறந்தபடி' என்றுரைத்து இடர்ப் படுவதறிவேம். இடைக்காடர் பிணக்குத் தீர்க்கப் பெருமான் தமதாலயம் தவிர்த்து அதன் வடக்கே வைகையின் தென் கரையில் மதுரையின் வடபாக்கத்திலேயே கோயில் கொண்டிருந்ததாக மட்டும் விளையாடற் புராணம் உரைக்கின்றது. மதுரைக்கும் வையைக்கும் வடக்கே
வடமதுரை என்றதோர் பிறிதூரிற் கடவுள் சென்றிருந்த கதை யாண்டுங் கேட்டிலேம். மேலும் திருமாலுக்குக் கேசியெனும் பெயரின்மையால், உபகேசி, யென்பது உமையவள் பெயராமாறில்லை. நீலகேசி, பிங்கலகேசி என்பன போல உபகேசி எனும் பெயர் நப்பின்னையையே குறிப்பதாம். இதனை விசதமாக சேதி சமஸ்தான முதற்பாவலரான பிரும்மக்ஷ்ஸ்ரீ ரா. இராகவையங்காரவர்களும், காலஞ்சென்ற ஈழத்துப்பாண்டிதர் ஸ்ரீ. அ. குமாரசுவாமிப் புலவரவர்களும் செந்தமிழ் முதற்பகுதியில் இனிது விளக்கியுள்ளார்களாகையால் ஈண்டு விரித்தல் வேண்டா.
இனி;-
"மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்
தூய பெருநீர் யமுனைத் துறைவனை"
[திருப்பாவை-5]
என்னும் பல பழம்பிரயோகங்களாற் கண்ணன்மதுராபுரியைத் தமிழில் "மதுரை" எனவும், கூடற்றென் மதுரையினின்று பிரித்து "வடமதுரை" எனவும் வழங்குவ தறிவோம். இதனாலும், வள்ளுவமாலைச் செய்யுள்பிறவும் இப்படியே தேவரைத் திருமாலுக்கு உவமித்துச் செல்லுவதாலும், "ஏர்ப்பின்னை தோண்முன் மணந்தான்" எனக் கண்ணனைத் திருக்கோவையிற் குறிப்பதாலும். உத்தரமாமதுரைக்கு அச்சாகி உபகேசிதோண்மணந்தவன் - கண்ணனேயாமெனத் துணியப்படும். அன்றியும், இவ்வெண்பாவைச் சொல்லி "இதனுள் உபகேசியார் நப்பின்னைப்பிராட்டியார்" என நேமிநாத விருத்திகாரர் கூறிவைத்துள்னமையானும். இவ்வடிகட்கு இப்பொருளின் இயைபுடைமை வலிபெறுவதாகும். இன்னும், மேற்செய்யுளிற் "பின்னையை மணந்த கண்ணன் வடமதுரைக்கு அச்சாணியானாற்போல், வையைவளந்தரு தென்மதுரைக்குத் தமிழ்ப்பெருநாவலர் அச்சாகிநிற்பர்" என நல்கூர் வேள்வியார் பாராட்டிப்பாடியுள்ளார். இதிற் கீதைபாடிய கண்ணனால் வடமதுரை சிறந்தவாறு, குறளால் அறம்பாடிய வள்ளுவரால் தென்மதுரை சிறந்த தென. உவமான உவமேயப் பொருத்தமும் விசதமாகிறது. இவ்வளவு பொருத்தமுடனியங்கும் இப்பாவிற் குறளும் கீதையும் உறழும் நயந்தெரித்த புலவர்-வாளா "உபகேசிதோண்மணந்தான்" என உவமானத்தில் அடைகொடுத்து உவமேயத்தில் அதற்கு ஒப்புமை குறியாமல்-உவமையடை பொருளில் சொற்றொடராக நிற்க வைத்திருப்பரென்பதினும், அவ்வடைக்கேற்ப உவமேயத்திற் குறளாசிரியரும் விசேடணஞ் சொல்லியிருப்பரெனக் கொள்ளுதல் இழுக்கா தன்றே? மூன்றாமடியில் 'மறுவில்' என்பது 'மருவு' என்பதன் திரிபாடமாகக் கொள்ளிற் செய்யுளிற் சொல்லிசையும் பொருணயமும் சிறப்பதுடன், முற்றுவமை முழுநலமும் பெறுவதாகும்.
இனி 'மறுவில்' என்பதன் இரண்டாம் வல்லெழுத்தை மாற்றி மருவில் என இடையெழுத்தாக்கி நிறுத்தினும் இழுக்காது. உண்மையான பாடம் இதுவெனத் துணிதற்கில்லை. எதுவாயினும், "பின்னையை மணந்து கீதை பாடிய கண்ணன் வடமதுரைக்கு அச்சாவது போலவே மாதானுபங்கியை மருவிக் குறணூல் பாடி உலகுய்ய உதவிய பெரு நாவலர் தென் மதுரைக்கு அச்சாவார்" எனக்கொள்வது பொருத்தம் மிகவுடைத்தென்பதில் ஐயமில்லை. மாதானுபங்கியென்பதைத் தேவர் பெயராக்குவதினும் மனை மாண்ட அவர் அறமனையாளின் பெயராக்குவது மிகப்பொருந்தும். அன்னை போலொழுகுபவர் என வலிந்து பொருள்கொண்டு நாயனாருக்காக்க வேண்டு மிப்பெயரில், அப்பொருள் கொள்ளுமாறில்லையென ஸ்ரீ அ. குமாரசுவாமிப் புலவரவர்கள் முன்னமே செந்தமிழில் விளக்கியுள்ளார்கள். மாதம்=மதம்+பங்கி=கெடுத்தவன் எனப் பிரித்துச் "சுய கர்வத்தைப் பங்கஞ் செய்தடங்கியவர்" என்னும் பொருளுடையதாக்கி, வள்ளுவருக்கு இப்பெயர் கொள்ளுவதும் சிறப்பும் செவ்வியும் உடையதில்லை. வேதங்களுக்குப் பின் பாவலர் யாவருக்கும் முன் முதற் கவியாவாரான வான்மீகியாரை 'ஆதிகவி' என வடமொழியாளர் காரணச்சிறப்பியற்பெயரால் வழங்குவது போலவே, தமிழகத்திற் பழம்பண்டைப் பெருநாவலரான வள்ளுவரை "முதற்பாவலரென" வழங்கி வருதல் பொருத்தமும் சிறப்பும் உடைத்தாம்.
அத்தொல்லை நல்லாசிரியர்க்கு இடர்ப்பட்டமைவதாகும் வடமொழிப் பெயர்களைச் சூட்டுவதில் நயனும் பயனும் இல்லை. அன்றியும் பொருளொடுசிறந்த பயனுடை மொழிகளால் யாப்புறவுற்ற மேற்கவியில் திருவள்ளுவர்க்கு மட்டும் இரு வெறும்பெயர் பெய்துவைத்து, உவமான உவமேய விசேடணங்களுக்கு இயைபுகுன்றும்படி நல்கூர் வேள்வியார் செய்யுள் செய்திருக்கமாட்டார் அன்றே. 'மாதானுபங்கி' என்பது தேவர் திருத்தேவியாருக்கு இயற்பெயராயினும் - அன்றிச் சிறப்புப்பெயராயினும் ஆகுக. அத்திரி முனிவரின் மனைவி அனசூயை போல அறவோரும் அறிவருமான குறளாசிரியர்மனையறத் துணைவியாரும் அவர்காலத்தே அறந்தலைநின்று சிறந்த பெருந்தேவியாராகையால், அவ்வம்மையாரை மணந்து உயர்ந்த தேவரின்பெருமை இவ்வினிய பழைய வெண்பாவிற் பாராட்டிப் பாடப்பெற்றுள்ளது. வாசுகி யென்பது அவர் இயற்பெயர் என்பதற்கு நாம் கேட்டுவரும் அடியற்ற கதையொழியப் பிறிது பிரமாணமில்லை. ஒருகால் அதுவே அவ்வம்மையாரின் பெயராமேனும், தேவரை வள்ளுவரெனும் இயற்பெயராற் சுட்டாது செந்நாப் போதார் எனும் அவர் சிறப்புப்பெயரால் இக்கவியிற் புகழும்புலவர், இவர் தேவியாரையும் அவருக்கேற்ற சிறப்பியற்பெயர்கொண்டு 'மாதானுபங்கி'எனப் புனைந்து பாராட்டுவதும் பொருத்தமேயாம்.
-------------------------------
6. வள்ளுவர் வணிகன் வளத்துணையால் வாழ்ந்த வரலாற்றுண்மை
இனி மயிலாப்பூரில் தனவணிகர் ஏலேலசிங்கரின் வண்மைக்கு வள்ளுவர் மிகவும் கடப்பட்டவரெனவும், இளமை தொட்டு எஞ்ஞான்றும் ஏலேலசிங்கரின் நட்பு நலமும் ஈகை வளமும் துணைக்கொண்டு வள்ளுவர் தம் மனையறம் வளர்த்து வாழ்ந்தனரெனவும் நாமறியும் நாடொடிக்கதை நவில்கின்றது. இது மேற்குறித்த வள்ளுவப் பெயர் வரலாற்றுண்மை விளக்கத்தாற் பொய்படும். அன்றியும் இவ்வரலாறு வள்ளுவரை வணிகர் பாற்பெறுவிக்கும் பெருநலத்தில் ஒரு சிறிது சடையப்பரிடம் பெற்ற கம்பர் அவரையும், அவ்வாறே கூத்தர் காங்கேய முதலியாரையும், புகழேந்திப் புலவர் சந்திரன் சுவர்க்கியையும் அழிவிலா அமரராக்கித் தமது 'என்று முளதென்றமிழ்' நூல் நின்று வளர் புகழுரிமை உவந்து அவருக்கு உதவியுள்ளார். பவபூதியனைய பல பாவாணரும் வடமொழியில் இவ்வாறே வள்ளியரை வழுத்தியுள்ளார். 'உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு' எனும் அறந்தெரித்த வள்ளுவரோ அந்நன்றிகொன்று , அனவரதம் அளி செய்த தனவணிக முதலோனை மறவியெனும் மறலிக்கும்-தொல்லரும் பாவலர் நல்லறமரபிறந்து தம்மைப் பெரும்பழிக்கும்-பலியாக்கும் பான்மையுடையார்? திருமயிலைப் பெருவணிகன்றரும் உதவி ஒரு சிறிதும் பெற்றிருப்பின், வள்ளுவர் அதனைப் பாராட்டி நன்றிக்கடனாற்ற மறக்க மாட்டுவரோ? யாண்டும் எனைத்தளவும் நம்முதற் பாவலராற் சுட்டப் பெறாத ஏலேலசிங்கற்கு அவர் நெடுந்தொடர்பு சொல்லும் இக்கதையே அதன் ஒல்லாமை காட்டற்கு நல்லசான்றாம்.
இதுகாறும் எடுத்த்க் காட்டியவற்ரால், நாயனார் புலைமகளின் பழிமகவல்லரெனவும், கடைச்சங்கக் கடைக் காலத்தவரால் வறியராய் ஏலேலசிங்கரின் வண்மையால் வாழ்ந்தவரல்லரெனவும், மயிலாப்பூரில் வாழ்ந்து மதுரை வந்து சங்கபங்கஞ்செய்து மீண்ட தறுகண்ணரல்லரெனவும், மூன்றாஞ்சங்கத்தின் முற்காலத்தே மதுரைவாசியாய் மாதானு பங்கியரின் மணவாளராய்க்-குறளடிகளால் அறம்பாடி யுலகுய்யவுதவிய வள்ளன்மையுடையராய்ப்-பண்டைப் பாண்டியருக்கு அருங்கடம்பூண்டு அவருள் படுகருமத்தலைமைவகித்துயர்ந்த பெருந்தகையாய் - அருந்தமிழ் வேளிர்பெருங்குடிப்பிறந்து சிறந்த பெரியருமாவரெனவும் ஒருவாறு தெளியலாகும். தேரா ஊரார் ஒராதுரைக்குங் கதையளவிற் கூறப்படும் புலைக்குலப்பிறப்பும், மயிலாப்பூர் வணிகன்கீழ்த் "தொழுதுண்டுபின்செல்லும்" வாழ்வும், சங்கபங்கத்தருக்கும் தக்கசான்றெதுவுமின்றித் தேவர்க்கீவது உண்மையுணரும் ஒண்மையுடையோர்க்குச் சால்பன்றென்பது நடுநிலையாளருக்கு ஒப்பமுடிவதொன்றாம்.
-----------------------------------------------------------
2. கம்ப இராமாயணம்
தசரதன் குறையும் கைகேயி நிறையும்
பகுதி - 1: முன்னுரை.
ஒழிவுநேரத்தைப் பழந்தமிழ் நூல்கள் படிப்பதிலும், அவைபற்றிச் சிந்திப்பதிலும் செலவிடுவதில் மிக விருப்ப முடையேன். சில ஆண்டுகளுக்குமுன் ஒருநாள் இராமாயண கதைப்பாத்திரங்களின் இயல்பு நெறி ஒழுக்கங்களைச் சிந்திக்கையிற் சிறிது சந்தேகம் எழலாயிற்று. அது, இராமனுக்கும் பரதனுக்குஞ் சிறு பருவ முதலேயேற்றக் குறைவற்று ஒத்த மரியாதைகள் காட்ட்ப்பட்ட தான இடங்களைக் குறித்தெழுந்தது. மன்னர் மக்களுள், பட்டத்திற்குரிய மூத்த புத்திரனுக்கு விசேச மரியாதையும், மற்றச் சோதரருக்குச் சமநலங்களு மேற்படுவதே முறையு மியல்புமாகும். இவ்வாறன்றி, இருவருக்கு மேற்பட்ட பிராதாக்களுள், இருவருக்குச் சமமதிப்பும், மற்றையரனைவருக்கும் அவ்விருவருக்குக் குறையச் சம மரியாதைகளும் அமைவதற்கு வேறு தக்க காரணம் வேண்டும். கெளரவர் நூற்றுவருள், சுயோதனனுக்கே தனிமுதற் பதவியும் தம்பியர் பணிவு மேற்படுவதும், பாண்டவருள் தருமனையே தம்பிவர் நால்வருமொக்கத் தாழ்தலுந் தகவுடைத்தாம். தசரதன் மக்களுள் மட்டும், இராமனுக்குப் போலவே பரதனுக்கும் இராச மரியாதைகளேற்பட்ட தோடமையாது, மாற்றன்னை மக்களுள்ளும் இராமனுக்கும் பரதனுக்குந் தனித்தனியே ஒவ்வொருவர் பணித்துணைவராகி யேவலேற்றிருக்க நியாயமென்னை? தக்க நியாயமின்றி நிகழொணா விக்காரியத்துக்குக் காரணமாராய வேண்டுமென் றெண்ணினேன். உடனே கம்ப ராமாயணத்தைச் சிறிதாழத் துருவிப் படிக்கலானேன். என் ஆராய்ச்சியிற் கிடைத்தவற்றைச் சொல்லத் துணிகின்றேன். நான் கண்டதே துணிந்த முடிபென்னுங் கொள்கையுடையனில்லை. எனக்குத் தோற்றியதை வெளிப்படுத்துவதன் மூலம், என்னிற் றகவு மிகவுடைப் புலவர் தம்பேராராய்ச்சியின் நன்முடிகளை வெளிப்படுத்தித் தமிழுலகுக் குபகரிப்பதோடு, கற்றார் பலரையுமாழச் சிந்திக்கத் தூண்டுவதே என் முக்கிய நோக்கம். இந்நோக்கமே இத்தகைய ஆராய்ச்சிகளிலென்னை யூக்குவதோடு எனக்குத் தோற்றியதை வெளிப்படுத்தவும் தூண்டுவதாகும்.
கம்பராமாயணத்தை நான் படித்துவருங்கால், 'மந்தரை சூழ்ச்சி', 'கிளைகண்டுநீங்குபடல' ங்களிற் சில கவிகள் என் மனதை வலித்திழுத்து நிறுத்தி நிறுத்தநிதான வாராய்ச்சியிற் புகுத்தின. அக்கவிகளுக்கு நான் முன் கொண்டதும் கேட்டதுமான, பொருள் பொருந்தாமையால், துருவிச் சிந்திக்கச் சில புதைபொருளுண்மை தோன்றுவதாயிற்று. ஐயமகற்ற விரும்பி முதனூலாம் வான்மீகம், பண்டிதர் பிரம்மஸ்ரீ அநந்தாசாரியர் தமிழ் மொழிபெயர்ப்புடன் வெளிவந்ததை வாங்கி ஒத்து நோக்கினேன். அதன் பயனாய்க் கம்பர் கவிக்கருத்து, தெளிவும் வலிமையுமடைவதாயிற்று.
சதாரணமாகக் கைகேயியறக் கொடியாளென்றும், தன் கணவனிடங் காதற் கிழமையும் இராமனிடத்து இரக்கமும் இல்லாத வன்னெஞ்சுடையாளென்றும், நாம் எண்ணுகிறோம். இவ்வண்ணமேறி, நம்மபிப்பிராயங்களை நாமுணராமலே பேதிப்பதால், கைகேயியைப் பற்றிய கதையனைத்தும் இயல் நிறமாறித் தோன்றுவதாகும். வான்மீகரும், கம்பரும் ஒப்புயர்வற்ற கற்பரசியாக் காட்டவும், அப்பெரும் புலவர் கதையமைப்பும், கவிக்கருத்தும் ஓராது நாம் அவளைப்பழித்து நிந்திக்கின்றோம். இராகவனுக்குரிய அயோத்தியரசைப் பறித்துத் தன் மகன் பரதன் பாற் சேர்த்து, இராமனைத் தனிக் கொடுமை நசையால் வனம் புகுத்தித் தன் காதலன் மரணத்துக்குமே காரணமாய், அருளேயுமன்றீக் கற்புங்குன்றிய காதகியா நாங் கருதுங் கைகேயியைத் "தெய்வக் கற்பினாள்" எனக் கம்பர் பன்முறை வாயார வாழ்த்தக் காண்பாம். உண்மையில் அரசு பரதனதாயின், அவனை ஊரகற்றி அவனில்லாதபோது அவனன்புடைச் சுற்றமறியாமல் அவன் முடியை, உரிமையற்ற இராமனுக்குத் தசரதன் சூட்டச் சூழ்ச்சி செய்ததை அறிந்த கைகேயி, காதனிறை கற்புமுறையாற் கணவன் சொல்லறமிறவாது ஓம்பியவன் பழியைத் தனதாக்கிக் கொண்டிருப்பின், நிந்திக்கும் நாம் அவளைத் தூயகற்பின் துறைபோய நங்கையா வந்திப்பதே அமைவுடை அறமாம் அன்றோ?நாம் சொல் வழக்கிற் கேட்டுவைத்த கதை, பரதனுக்காகக் கைகேயி இராமனுக்குரிய அரசை வஞ்சச் சூழ்ச்சியால் வலிந்து வாங்கினதாக்கொள்ளவும், வடமொழிப் பொய்யில் புலவனும், என்றுமுள தென்தமிழ் வான்மீகியும் பரதனரசைத் தசரதன் இராமன் சார்பாக வஞ்சித்துப் பறிக்க முயன்றதாகக் கூறுவரேல் நம்மதிசய மெனைத்தா குமெனச் சிந்தியுங்கள். நாமதிசயிக்கத்தக்க விதுவே உண்மையென்பதைக் கம்பர் வான்மீகர் கவிகளா லிங்குக் காட்ட முயல்வேன்.
2. கம்பர் கவிக் கருத்து
"இராமன் கோமுடி சூடுவன் நாளை" என்று மந்தரை வாய்க் கேட்டதும், "தூயவள்" கைகேயி, இராமன்பாலுள்ள தன் "பேரன்பெனு மளக்கர் ஆர்த்தெழ", உள்ள நிகழ்ச்சி யொளியாது காட்டுந்தன் "தேய்விலாமுகமதி விளங்கித் தேசுற, மிக உவகை போய்ச் சுடர்க்கெல்லா நாயகமனையதோர் மாலை" யை மந்தரைக் க்வளுரைத்த நன் மாற்றத்திற்கு வெகுமதியா "நல்கினள்". இராமன்பாற் காழ்த்த பகையாலிதை வெறுத்து, அரசி தந்த பொன்மாலையை நிலங்குழியவெறிந்து வெகுண்ட கூனி இராமனை யுமவன் பாலன்புடைமைக்காகக் கைகேயியையும் பலவாறு சுடும் பழி சொல்லிப் பரிவாற் பரதனுக்குப் பட்டங்கேட்கும்படி "வாய்கயப்புற" வழங்கிய வெஞ்சொற் கேட்ட கைகேயி பொறாதாளாய்,
என்ப தீண்டைக் கவிக்கூற்று. எனவே, இதன் பொருள் கம்பருக்குகந்த கருத்தாதல் பெறுவாம். கம்பர் மனக்கடற் பிறந்தொளிருங் கவிமுத்துப் பொதியிற் காழ்த்து நீர்சிறந்த தலைவரிசையான சிலவற்றுளொன்றா மிக் கவியழகைக் கவனிப்போம். துதிநிந்தைச் சொற்களாலிராமனைத் தூறி, 'அவன் நாளை முடிசூடப்போகின்றான், ' என்று கூனி சொல்லவந்தாள். பாறையிற் சிதறுறுந் திவலையெனக் கூனி பழிமொழி புகாதசெவியால் இராமன் முடிசூடுநலங் குறிக்குஞ் செய்தியை ஆர்வமொடுமடுத்து உளம் பூரிக்குங் கைகேயியின் நிறைமனநிலைக் கேற்ற உவமை பிறிது காணாக் கம்பர், அப்பெருமகனடையப் போகுந் திருவினை அவனை யீன்ற கோசலை யுணர்ந்தெய்திய அறிவின்பத்தை ஒரு புடை யுவமையாகக் காட்ட விடையேற்பாராவர். கைகேயியனுபவித்த இன்பத் தியல்பு ஒன்று. அளவு ஒன்று; இவையிரண்டையு முணர்த்தவல்ல அமைவுடைய தோருவமை யில்லையெனத் தெளிந்த கம்பர், ஒப்புயர்வற்ற அவளின்ப வியல்பை உவமியாதுவிட்டு, அளவுக்குமட்டும் ஏகதேச ஒப்பாக, இராமனபிசேகத்தில் கோசலையறிவாற்றுய்த்த இன்பத் தெல்லையைக் காட்டுவதானார்.
பொதுவாக உணர்வுக்கிடம் உள்ளமும், ஓர்ப்பு சிந்தனைகளுக்கிடம் அறிவுமாம் என்பது யாவரு மறிவதேயாம். இன்பம் உணர்ச்சி வகையாகலான், அதை யனுபவிக்குமிடம் உள்ளமேயாகும். அன்பு இன்ப நுகர்ச்சிகளை நெஞ்சாலும், அரிய ஆராய்ச்சி ஆழ்ந்த சூழ்ச்சி நலங்களை யறிவாலும், அனுபவிப்ப தியல்பாகவே, ஈண்டிராமன் பெருவாழ்வு கேட்டதில் உளத்தின்பம் கைகேயிக்கு மட்டுமே நிறைந்து வழிய, கோசலை தன்னறிவளவில் மகிழ்ந்ததாகக் குறிப்பாலுணர்த்தி, அவளறிவின்பமுங் கைகேயி உளத்தின்பமும் இயல்பா லொவ்வாவேனும், அளவு மட்டிலொருவாறு ஒத்ததென்றார் கம்பர். "தன் மகனலங்கேட்டு ஈன்ற பொழுதிற் பெரிதுவக்குந் தாயின்பத்துக்கு, அம்மகனலம் பேணும் பிறிதெவரின்பமும் இணையாவதில்லை. அப்படியிருக்க, மகன் வாழ்வில் பெற்றவள் உற்ற அளவே, மாற்றன்னையும் பெரிதுவப்பள் என்பதே இயற்கையாகாது. அதற்குமேல், அளவாலொருபடி ஒத்தாலும் பெட்புநலப் பேரியல்பில், கோசலை யறிவாலனுபவித்த-தினுமியல் சிறந்த வின்பம் கைகேயி உள்ளத்தா-லனுபவித்தாளெனவுஞ் சுட்டிவைத்தது, முழுதும் அசம்பாவிதமன்றோ?" என் றெவருங் கேட்பதியல்பாகும். இவ்வியல் வினாவுக்குத் தக்க நியாயத்துடன் விடையிறுக்குங் கடனறிந்த கம்பர், மேற்கவியின் முதலிரண்டடியில் "இராமன் முடிசூடு 'மாற்றம்' கேட்டதும், கோசலை அறிவாலனுபவித்த இன்பத்தளவே கைகேயி உளத்தாற் களித்துத் திளைத்தாள்" என்று கூறி, அதற்குப் பின்னிரண்டடியாற் போதிய நியாயமுங் கூறிப்போந்தார்.
'இராமனைப் பயந்த'வள் கைகேயியாமேல், இராமன் பெருவாழ்வடைவதில் அவளே உளமுவப்ப தியல்பாமன்றோ. தான் வயிறுளைந்தீன்ற பரதனைப்போலவே, இராமனையும் தானே பயந்த மகனாக் கொள்ளுமுள மாண்புடையவள் கைகேயி என்பதை, முன் "இராமனைப் பயந்த எற்கிடருண்டோ?" என் றவளிறுமாந்துவந்த விம்மிதங் கூறுமுகத்தாற் கம்பர் நிறுவியுள்ளார். பரதனுக்கு மிராமனுக்கும் அன்னை அன்பில் இவள் 'வேற்றுமை யுற்றிலள்', இருவருமொருங்கே தன் "சிறுவ" ராகவே கருது மனக்கோளுடைய ளாகலின், பரதனுக்குப் பட்டம் வருவதிலிவலெய்து முவகை, ஈன்ற தாயின் இயலுளத்தின்பமாவது போலவே, தான் பயந்த மைந்தனாக் கருது மிராமனலத்தினும் இவள் உள்ளமள்ளு மின்பவெள்ளத்திற் றிளைப்பதாயினள். பெறாத இராமனைத் தான் பெற்றவளாகவே கருதுவதற்கும், பெற்ற தநயனுக்கும், தான் பெறா மகனுக்குங் கைகேயி வேற்றுமை காணாமைக்கும், காரணமென்னையெனின், அவளன்பு தன் தொடர்புடைய தில்லா மையேயாம். சாதாரணமாய் மனித ரன்பு தன்னிற் பிறந்து, தன் தொடர்புடையார்பாற் படர்வதியல்பு. கைகேயியன்பு மவ்வகைத்தாயின், அவள் தன் தொடர்பதிகமுடைய பரதனை, அத்தொடர்பு குறைந்த இராமனினுமதிகங் காதலிப்பதே முறையாக வேண்டும். இவ்வாறன்றி அவள் இவ்விருவர்மேற் செலுத்துங் காதல், அவள் தொடர்பு பற்றாது, பிறிதொரு சார்புடைத்தாமேல், அச்சார்பின் பொதுமையாலவளன் பிவ்விருவரிடையுஞ் சமநிலையடைதல் கூடும்.
தமிழ் வழக்கில், 'தெய்வம் தொழாது, கொழுநற்றொழுதெழுதலே' கற்பிலக்கணம். "கணவனிருக்கப் பிறிது 'கடவுட் பேணல் கடனா'க் கருதுங் காரிகையார், 'பிறர் நெஞ்சு சுடூஉம்பெற்றி'ய தாய தலைநின்ற 'நிறையுடைப் பெண்டிர்' ஆகார்":- என்பதே 'பொய்யில்பொருளுரை' யாகக்கொள்வர். பண்டைத் தமிழ்வாணர். இக்கொள்கைக்குச் சிறிதேனும் வழுவும் வான்மீக வரலாறுகளை ஆங்காங்கே திருத்தித் தமிழ்த் துறையினிறை குறையாது நிறுத்துங் குறிப்புடையராய், வாலிக்குப்பின் தாரை வாழ்க்கையை மாற்றிச் செப்பனிட்டமைத்த கம்பர், ஈண்டுக் கைகேயி கற்பழகு காட்டத் தரும் இக்கவிக்கருத்தூன்றிச் சிந்திக்கத் தக்கது. பின் பரதனுக்குப் பட்டமெனக்
கேட்ட கோசலை மனநிலை கூறுங் கம்பர், அவள் 'நால்வருக்கும், மறுவிலன்பினில் வேற்றுமை மாற்றினாள்' என்பார்; ஈண்டு இராமன் முடிசூடுமெனு 'மாற்றங்' கேட்ட கைகேயி தன்தநயனினிராமன்பால் 'வேற்றுமை யுற்றிலள்'; அதனாலவன் வாழ்வில் உளமுவந்தாள்; என்று கூறிவைத்தார். 'ஆற்றல்சால் கோசலை' யறிவால் மக்கள் பாலன்பில் வேற்றுமை மாற்றி மாண்படைவாள்; கைகேயி வேற்றுமை யறவே யுற்றிலாமையாற் 'றெய்வக் கற்பின'ளாவள்; என்று கம்பர் விதந்து கூறியுள்ளார்.
மக்கள் நால்வர்க்கும், தன் பெண்ணியல்பிற் பிறந்து மாசுபடுத்தும் 'அன்பு வேற்றுமையை', அறிவால் அறமோர்ந்து மாசிலாவாறு மாற்றவல்ல 'ஆற்றல்சால்
கோசலை' போலாது, கைகேயி யுள்ளத்தன்பில் வேற்றுமையணர்வே யுற்றிலாதாள். ஏனெனில், மக்கள்மேற்காதல் கைகேயிக்கு, தன் தொடர்பாலன்றி, தன் காதற் கிழவனாய தசரதன் காரணமாய்ப் பிறக்குமாதலின். அன்பிற்கிடனாய உள்ளமுழுதையு முன்னரே கைகேயி தன் காதலனுக்கு அர்ப்பணம்பண்ணிவிட்டவளாகையால், அவன்வழித்தன்றிப் பிறிதெத் தொடர்பு பற்றி யெழுமன்புக்கு மவள் நெஞ்சிடமில்லையாகும். பிள்ளையாசையால் அணையாடையைமோந்து மகிழ்வது. முதுமொழி கொண்ட உண்மையன்றோ? உள்ள முழுதையுந் தலைவனொருவனுக்கே தந்துவக்கும் தேவி நெஞ்சில் அவன் தொடர்பு பற்றி வருவார்க்கன்றிப் பிறிதெவர்க்கும் நுழை புலனில்லை. தலைவன் விருப்பாலன்றித் தன்னையே பேணாப் பெற்றிய ளுள்ளத்தில், தன்சே யென்றொரு தொடர் பெழாது. பரதனைக் கைகேயி காதலிப்பதுண்மை. அதன் காரணம், தன்னைப் பற்றிய தொடர்புடைமையன்று, தசரதனுக்குத் தநயனாதல் பற்றியேயாம். அனைய தொடர்பேகொண்டு, அத்தசரதன் மகனேயான இராமன்பாலு மவளன்பால் வேற்றுமையுறுமாறில்லை யன்றோ? பரதனிடத் தன்பு தன் மகனென்பதாலாயின், இராமனிடத்து அவளன்பு குறைவது முறையாம், அன்றி யவளன்புக்குத் தசரதனே தனிமுதற் காரணமாகில், இருவரும் அத்தசரதன்மக்களே யாதலின், அவரிடை யன்பில் அவள் வேற்றுமையுறினன்றோ வியப்பாக வேண்டும்: உறாமையியல் பேயாமன்றோ?
துதி நிந்தைச் சொற்களா லிராமனைச் சுட்டுஞ் சுபாவமுடைய மந்தரை, மனமார அவனை 'ஒருமகன்' எனவும், அவனெய்தப்போகும் இளவரசைப் "பேரரசு" என்றும் அவன் மக்களைக் "கோமைந்த" ரெனவுங் கூறுவளா?
ஈண் டிக் கவிமுழுதுங் கூனிவாய்க் கூற்றாகவே, அவள் குணத்தோடமைந்த சொற்பிரயோகமன்றோ கம்பரிடமெதிர்பார்க்க வேண்டும். தனை யெதிர்த்த மானவரிட மிராவணனுக்குள்ள அலட்சிய புத்திக்கேற்ப, அவ னவரைக் குறிக்குந்தோறும் 'மனிதர்' என்னாது 'மனிசர்' என் றவன் வாயிற்சொற் பெய்யுங் கம்பர், மறந்தும் தகவு தவிரார். ஆதலால், கூனிவாயிலிச் சொற்க ளிராமனைக் குறித் தெழா என்பதைக் கம்பர் மறந்து இக்கவி செயக் காரணமில்லை. மேலும், இராமனெய்து மரசினாக்கம். அவன் குலமைந்தர்க் கவன் வழித்தாவ தியல்பாகலாம்; மக்களில்வழி, இளைரில் மூத்த பரதனுக்குதவாமல், இலக்குவனுக்குமட் டாவதெப்படி? கவியிற் கூனி பேராசு-"மைந்தர் தமக்கும், " அடுத்த தம்பிக்கு மாம்' என்று விதந்து கூறுவதால், இராமனை யடுத்திருக்கு மிலக்குவனை யீண்டவள் குறிப்பதா யெண்ணில், பரதனுள்ளிட்ட பிறரனைவர்க்கும் அரசுரிமையாக்க மில்லை யென்பாளாகும். வழிமுறைவரிசையில் அரசுரிமையைக் குறியாது, இராமனரசியலில் இலக்குவனெய்தும் இராசபோகானுபவங்களையே குறிப்பதாக்கொண்டு அவ்வாக்கம் பரதன்முதலிய பிறருக்கு இல்லை என்றதாக் கொள்வோமெனில், அதுவு மமைவுடைத்தன்றாம்; ஏனெனில், அப்போ தனுபவித்தற்கிடமின்றிப் பின் பிறக்க இருக்கும் இராமன் "கோமைந்தர்" தமையு மிங்குச் சுட்டி, அவர்க்கும் அப் "பேரரசு"ஆம் என்பதாலும், அம்மைந்தர் இலக்குவனைப் போலக் கேவலம் போகானுபவங்களை மட்டு மன்றி அரசுரிமையையுமே அடைபவராதலானும், ஈண்டுப் பேரரசு இராமனும் அவனுக்குப் பின்னடையு முரிமையுடையாருமெய்தும் அரசுடைமையையே நுதலியதாக வேண்டும். இனிப் பரதனையே 'அடுத்த தம்பி 'எனக் கூனியிங்குச் சுட்டுவதாக் கொள்ளற்கு மிடமில்லை. ஏனெனில், முன் பலமுறையும், இராமனர செய்தில், இதனாற் கோசலையு மிலக்குவனுமே வீறுபெறுவ ரென்றும், பரத னவந்தனாய் வறுமையு மானக் குறைவு மெய்துவன் என்றும் வலியுறுத்துங்கூனி, இங்கு இராமனடையு மரசினாக்கம் பரதனுக்கும் பின்னாமெனப்பேசாள். அப்படிப் பேசுவதாகக் கொள்ளுவது, முன் கொண்ட பொருளொடு முரணுவதோடு, ஈண்டவள் வலியுறுத்தவந்த கருத்துக்கும் பொருந்தாதாகும். இராமன் வாழ்வு பரதன் தாழ்வேயாமெனக் காட்டிக், கைகேயியை யிணக்கப் பேசுமிடையே, இராமனிறைமையாற் பரதனுங் குறைவின்றி நன்மை பெறுவதுண்டாகக் கூனிசொல்லுவ தமைவுடைத்தன்றாம். எனைத் தானு மிச்செய்யுள் வாக்கியம் நா முதலிற் கொண்ட பொருளொடு சிறந்து பொருந்தாமை தெளிவாகின்றது.
இதுவேயுமன்றி, இராமன் ஜேஷ்டனிலையி லுரிய தன் அரசைத் தானெய்துவ தியல்பென நாங்கருதுகின்றோம். உரிமையற்ற பரதன் தசரதன் கொடுத்தாலன்றி யரசு பெறுமாறில்லை. இராமனுக்கோ அரசு பிறப்புரிமை ஆகும். கவியில் 'ஒருமகன்'என்பதிராமனைக் குறிக்குமாயின், 'உடையவன் வருமகற்கெனவே கொடுத்த பேரரசு' என்று விசேடித்திருப்பதற்கு நியாயமில்லை. பிறப்புரிமையற்றவர் அரசு பெறுவதற்குத்தான், கொடையும் கொடுப்பாற் குடைமையும் இன்றியமையாதனவா. மூத்தவனான இராமன் வரன்முரையிற் பிறப்புரிமை-யுடையனாகவே, ஈண்டுக் கூனி அவனுக் கிளவரசபிசேகம்பண்ணுவதைச் சுட்டுவதாகக் கொள்ளுங்கால், தசரதனை 'உடையவனா'கவும், அவன் கொடையா லிராமன் 'பேரரசு' பெறுவதாயுஞ் சிறப்பித்தல் பொருளும் பயனு மின்றாம். இன்னும், இராமன் தன் உரிமையை உள்ளபடி தானெய்தப் போவதிலும், உரிமையற்ற பரதனுக்கு வரவேண்டாததை அவனடையாமையிலும், பரதன் கெடுமாறில்லை-யன்றே! இப்படியிருக்க, "கெடுத்தொழிந்தனை யுனக்கரும் புதல்வனை" என்று கடுமொழி கூறிக் கூனி பழிப்பதற்குப் பொருளுண்டோ? புதையல் பெற்றான் போலத் தனக்குரித்தில்லா ஒன்றை ஒருவ னடையின், அதனால் அவனுக்கிலாப முண்டாகலாம். உரியதொன்றைக் கையறவாலோ, கவனக் குறைவாலோ, யிழக்க நேரினதனாலவன் கேடெய்தலாம். கிடைக்க வேண்டாதது கிட்டாததாற் புத்தூதியம் பெறுவதற் கில்லையாமேயன்றிக் கேடுறுவ தெப்படியாகும்? கிரமமற்ற பேரரசை வஞ்சவலியால் வாங்கித்தர விசையாமைக்காகப் பரதன் "நற்றாய் தீயளா" வதெப்படி? வரன் முறையி லிராமனுக்குரியதையவனுக் களிப்பதால், "தந்தையும் கொடயனா"வதுண்டோ? இதனாற் றசரதன் "அந்தரம் தீர்ந் துலகளிக்குநீர்"மையவனாவதுதா னெப்படி? "கோசலை மதியினால் வாழ்ந்தனளா"வதென்ன? அவள் மகன் தன்னுரிமையைத் தானடைவதில் அவளுக்குச் சிந்தனை விரிவானேன்? பாட்டனைப் பார்க்கக் கேகயத்துக்குப் பரதனை. . . அரசன் ஆணையால். . சேணிடைப்போக்கிய"தில், கூனி இன்று கண்ட புதுப் பொருள்தானென்ன? மந்தரைவாயிற் கம்பர் இத்தனையும் பொருளின்றி வீணே புகுத்தி வைப்பாரா?
இனைய பலவற்றானும் நா மறியக்கிடப்பது. இக்கவியிற்கூனிகூற்றிற்கு இத்துணை முரணுடைப்பொருள் கொள்வது பொருந்தாது: வேறு தகவு மிகவுடையதோர் செம்பொருள் காண்ப தரிவா மென்பதேயாம். அத்தகைய பொருந்தும் பொருள் வேறுளதாவென விசாரிக்கப்புகுவாம்.
"எந்தையேவ, ஆண்டு ஏழொடெழெனா
வந்த காலம்நான் வனத்துள் வைக, நீ
தந்த பாரகந் தன்னை மெய்ம்மையால்
அந்த நாளெலா மாள், என் ஆணையால். "
என்று கூறி, அதனையே வானவரும் அசரீரியா வற்புறுத்தல் காட்டி, இனி நீ மறுக்கற்பாலதன்று:யான் உனையிரந்தனன்: (வரதன் ஆணையாலன்றி) இனி என் ஆணையால் ஆனதோர் அமைதியின் அளித்திபார்"எனாத் தான் தன் துணைவன் துணைமலர்த் தடக்கை பற்றி"`வேண்டலாயினான். தன் பெருவிருப்பிற்கணங்கி இவ்வாறு தகவுரைத்த தமயன் சொற்கிசைந்து ;பசைந்த சிந்தையான் "ஆம் (அப்படியாகட்டும்). எனில், ஏழிரண்டாண்டில், ஐய, நீ. . . நகர் நண்ணி, நானிலங் கோமுறை புரிகிலையென்னில். (நான்) கூர் எரி (புகுந்து)சாம்;இது சரதம்: நின்னாணை". . . "என்பது சொல்லிப்"ப்பின், (இதுவரை) "துன்பம் ஒரு முடிவிலாதான்" யாதுமோர் துன்பிலனாய்" இராமனின் முடிவுரையை எதிர்பார்த்து நோக்கினன். "அன்பினனி'ராமன் 'உருகினனாய்', அன்னதாகெனப்' பரதனுக்குப் பதிலளித்தான். சம்மதித்த பரதன் இராமன் பாதுகையை யிரந்து பெற்றுமீண்டான்.
ஈண்டிச்சோதரர் சம்வாதத்திற் றெளியக் கிடப்பன சில குறிப்பாம். வரமிரந்த கைகேயிக்கு வாக்குத் தந்த தசரதன்"ஆணையா"ல் (அயோத்தி)அரசுக்குரிய 'வையம்
நின்னதே சரதம்'என்றிராமனாரம்பத்திற் கூறவு மதனைத் தகவிலதாய்த் தவிர்த்து மறுத்து, முதல்வனாய்ப் பிறந்ததனால் தமையனுக்குடைமையாம் அரசு தனதமாறில்லையென விலக்கிய பரதனே, பின்னிறுதியி லிராமன் "உந்தை சொல் மரபினால் தரணி நின்னது. உரனில் நீ பிறந்துரிமை யாதலால் அரசு நின்னதே ஆள்க" என்று கூறக் கேட்டதும், நாடு தனதாகக் கொண்டு, மீண்டதனைத் தமையனுக்குத் தானே தருவதாய்ச் சொல்லலுற்றான். "மூத்தவனாய்ப் பிறந்த தன்மையால், நீயுடைத் தொல்லரசை நீயே மீண்டு பெற்றாளுக" என்று மன்றாடிய பரதன் சொல்லை நிராகரித்த இராமனே, " பார் என்னதாகில், யானின்று தந்தனென், "போந்துநீ மகுடஞ்சூடு. " எனப் பரதன் சொன்னது மிசைந் தரசையேற்றுத் தான்
பதினாலாண்டு வனமிருந்து திரும்பிவரும் வரை ' தன் ஆணையால்' நாட்டைப் பரதன் பரிபாலித்து வரும்படி பணிக்கலாயினன். கைகேயி வரமிரக்கத் தசரதன் தந்த ஆணையால் அயோத்தியரசு தனதாக் கொள்ள விசையாத பரதன், ' என் ஆணையால் ஆள்க' என் றிராமனேவவு மிசைகின்றான். இவ்வா றிராமனும் பரதனும் ஒருவருக்கொருவர் முறையே முதலிற்கூறிய விவகாரங்க ளேற் கொணாதனவாய் மறுத்து விலக்கியவர்கள், இறுதியிலெடுத் துரைத்த நியாயத்தாலிணங்கி யிசைவதற்கு, இவர் பின் னையகூற்று முன்னதின் வேறுபட்டதும் வலியுங் தகவும் வாய்ந்ததுமா யிருத்த லின்றியமையாத தென்பது விசத மன்றோ? தசரதன் தன் தாய்க்கு வரமாகத் தந்ததால் தான்'தரணி' பெறுமாறில்லை யென்பதும். இராமன் பின் "உந்தைசொல் மரபினால், உரனில் நீ பிறந்துரிமையாதலால், அரசு நின்னதென்ன"ச் சுட்டிய நியாயத்தால் தந்தைநாடு தனக்காமென்பதும், பரதன் கருத்தாகக் காட்டினர் கம்பர். எனவே, முதற்பிறந்ததால் இராமனெய்த வேண்டுமரசு தாய்க்கு வரமாத் தந்தைதந்த 'ஆணையால்' தனதாகாதென்று துணிந்து நின்ற பரதன், தான் பிறந்ததா லுரிமையெய்தும்படி தந்தை சொன்னதொருசொன் மரபுண்மையை இராமன் சொல்லக்கேட்டதும், நாடு தனதாமாறுகண்டு, உடையனான தானே தமையனுக்கு அதைத் தருவதற்கு முன்வரலாயினான். தமையனுக்குத் தான்தருமுன், தனதுடைமை அறத்தாறழுங்கா நல்லுரிமை யானாலன்றித் ' தருமத்தின்தேவும், செம்மையின் ஆணியுமான பரத னிராமனுக்குத் தான் அரசு தருவதாகப் பேசத் துணியானென்ப தொருதலையன்றோ? முன் பிறந்ததால், தமையனதா மரசைத் தாய் வௌவியதாக்கருதி வெறுத்த பரதனதெண்ணம் தவறென்றும். . . . பிறந்த தன்மையாற் பரதனுக்கே அரசுரிமையமையத் தசரதன் சொல்லிய பழைய சொன்மரபுண்டென்றும் எடுத்துரைத்து அதுவரை யிணங்காப் பரதன் தூயமனதை யறத்துறைகாட்டி இராமனிணக்கியதாகக் காண்பாம். இதனாற் றசரதன் கைகேயிக்குக் கேட்கத் தந்த வரச்சொல் வேறு; பரதனுக்குப் பிறப்பா லரசுரிமையாம்படி சொன்ன
மரபுச்சொல் வேறு: என்று தெளிகின்றோம். முன்னதை அறங்கொல்லும் பழிதருவதாய் வெறுத்து மறுத்த 'தருமத்தின்தே'வான பரதனே, பின்னதை நெறிமுறை திறம்பா அறத்துறை நிற்பதா யங்கீகரிக்கின்றான். அவ்வாறு அவன்பிறந்ததனா லுரிமையெய்தும்படி தசரதன்சொன்ன மரபுடைச்சொல் யாதாயினுமாகுக; அச்சொல் பரதன் பிறக்குமுன் சொன்ன சொல்லாதல் வேண்டு மென்பதுமட்டும் வெள்ளிடை மலையாம். அன்றேல், இராமன் பிறப்பால் உரிமைபெறாது, அறத்துறையாற் பரதனுக்கரசு பிறப்பு உரிமையாமாறில்லை; ஏனெனில், இராமன் பிறந்துரிமை யெய்தியபின் தந்தை சொன்ன எச்சொல்லாலும் அரசுரிமையை இராமனுக்கு விலக்கித் தான்கொள்வது "நீதியிற்றிறம்பி அறங்கொன்று தின்பதாகு" மென்னுந் துணிவுடைய பரதன், தாதை தன் தாய்க்கு வரமாயளித்த சொற்கேட்டு மதனைக் கடக்கொணாப் பழியாக்கருதி அறவே வெறுக்கின்றான்: பின் னிராமன்வாயில் இம்மரபுடைச் சொல்லுண்மை கேட்டுப் பிறப்பாற்றனக்கு அரசுரிமையாவது கண்டு, அறத்துறையிலது தனதாகலாற்றான் ஏற்கின்றான்: ஏற்ற தன்னுடைமையை அற்புக்கையுறையாகத் தமையனுக்குத் தான் சமர்ப்பிக்கத் துணிகின்றான்.
"பிறந்து நீயுடைப் பிரிவில் தொல்பதம்" – அயோத்தி அரசு, ' என்ற பரதன் கூற்றை அறமாக்கொள்ளாத இராமனும், முன் தன் தந்தை தந்ததோர் அறம்வழா மரபாக்கச் சொல்லுண்மையும், அதனால் அரசு பரதனுக்கே பிறப்புரிமையாவதும் தம்பிக்குத் தெரிவித்து, அதன்மேல் அறமுறையா லரசனுக்குரிய பரதன் தன்பால் உழுவலன்பால் உவகையோ டுதவ மறுக்கொணாது தான் அதைப் பெறுவதற் கிசையலுற்றான். பிறப்பால், இராமனுக்கின்றிப் பரதனுக்கே அறத்தா றரசமையும் மரபு வழுவாததோர் பண்டைச் சொல்லுண்மை ஈண்டுப் பசுமரத்தாணியாக வலியுறுத்தப் படுகின்றது.
'தயாமுதலறமான' இராமன் 'நியாயமத்தனைக்குமோர் நிலையமான' பரதன் புனித மனமிசைய, இறுதியிலெடுத்துரைத் திணக்கிய மரபு வழா அறமமைந்து பொருள்பொதிந்த தசரதன் சோரொணாச் சொல்லுண்மையைத் தாசரதி வாய்க்கேட்டு, அவன் தெருட்டத் தெளிந்த பரதனுடன் நாமுஞ் சிறிது தெளிவு காணபாம். 'வரதன் வரத்தால் அரசு நினதெ'ன்ற தமையன்சொல் தகவிலதாக விலக்கி மன முளைந்த பரதன், பின்" "தந்தைமுன்சொல் மரபினால் அவனுடைத்தரணி நின்ன தென்றியைந்த தன்மை"யை இராமன் காட்டக் கண்டு, நாடுதனதாக் கொண்டான். அதுவே போல், தெய்வக் கற்பினளாய கைகேயியின் 'வரன் முறை அறத்திற்'பதிந்து சலியாது நின்ற தூயசிந்தையும் மந்தரையிறுதிக் கூற்றாம் மேற்கவிக் கருத்துணர்ந்த பிறகே திரிவதாயிற்று. அதனால், அரசு பரதனுக்கே பிறப்புரிமையென்பதையும், இராம னுள்ளிட்டார் பிறர்க்காமாறில்லை யென்பதையும் தெரிவிக்குமோர் சொன் மரபையே இக்கவியும் சுட்டினதாக வேண்டும். இல்லையாமேல், அவள் தூய சிந்தை இராமனரசைப் பரதனதாக்கும் பழிவழியிற்றிரியுமாறில்லை. இதுவரை கம்பர் கவிகளையே கொண்டு இம்முடிபு கண்ட நாம் இனி இது சம்பந்தமாய் வடமொழியில் வான்மீகர் சொல்லுமிடங்களையுஞ் சிறிது கவனிக்கப் புகுவாம்.
------------------
என்ற கிளை கண்டு நீங்குபடலக் கவிக்கு நேரான வான்மீகி, அயோத்தியா காண்டம், 107-வது சர்க்கம் 3-வது சுலோகத்தைச் சிந்திப்போம்: "உடன் பிறந்தவனே! முற்காலத்தில் உனது தாயாரை நமது பிதா விவாகம் செய்துகொள்ளும் பொழுது, உனது பாட்டனார் (கேகயா) இடம் (அவர் பெண்வயிற்றுப்பேரனுக் காமாறு) தனது ராஜ்யத்தைக் கன்யா சுல்கமாகப் பிரதிஜ்ஞை செய்து கொடுத்தார். " என்று இந்த சுலோகத்தை மொழிபெயர்த்துரைப்பவர் தமிழில் தருகின்றனர். சொற்கள் சிலவற்றை எவ்வாறு மாற்றிக் கூட்டிக் குறைப்பினும் பொருளளவில் இச்சுலோகக் கருத்திதுவாகவே அனைவர்க்கும் ஒப்பமுடியுமென்பது இதுவரை வெளிவந்த எல்லா வான்மீக மொழி பெயர்ப்புக்களாலும் விசதமாகும். கம்பரின் மேற்கவியும் இச்சுலோகமும் சந்தர்ப்பத்தாலும், இடம் துறை இயைபுகளாலும் ஒரேபொருணுதலியவென்பது தெளியக் கிடக்கின்றது. தன்னைத் தேடிக் காடுபோந்த பரதன் பரிதாப மாற்றி, நாடவனதாமென் றவனைத் தேற்றுமிடத்தி ராமன்வாயெழுந்த திவ்விருகவிக் கூற்றும், முறையே முன் இராமன் கூறிப்போந்த பல நியாயங்களையும் ஒவ்வாத பரதன், இது கேட்டதும், நாடு அறத்துறையிற் றன்ன தென்பதை மறுக்ககில்லனா யேற்பவனாகிறான். கம்பரைப் போலவே வான்மீகியும் இவ்விடத்திற் பிறப்பாற் பரதனுக்கே அரசுரிமையாக்கந் தருவதோர் தசரதன் மரபுடை முன்சொல் உண்மையை இராமன்வாய்ப் பெய்தமைத்து வைத்துள்ளார். ஆனால், புதைபொருளாக விசாரித்தாய் பவரறியும்படி கம்பர் விட்டுவைத்த அத்தொல்லறச் சொல்லின் இடம் பொருள் காலம் இயைபொடு பயன்களை
யாவருமுணரும் வண்ணம் வான்மீகி விளக்கியுள்ளார்.
இச் சுலோகக்கருத்தை ஊன்றி விசாரிக்குமுன் நாம் தெளிந்து கொள்ளவேண்டிய தொன்றுண்டு: 'கன்யா சுல்கம்' என்ற சொற்றொடரும் அதன் பொருளும் கவனிக்க வேண்டும். மனுவாதி வழக்கற நூற் பழக்கமுடைய வாதம் வல்லுநர் பலரும் இவ் *வறத் தொடர்புடைய சொற்றொட ராக்கமும் பயனும் நன்கறிவர். **வழக்கிடை வழுக்கியுமிழுக்கப்படாத் தமிழர் இச்சொற்பொருள் கேட்டிருக்கக்
காரணமில்லை. கன்னியொருத்தியை மணக்குங் காதலன், மணமகள் தன்னகம் விழைந்து வருமாறு, விரும்பித்தரும் பொருளே 'சுல்க' மெனப்படுவது. 'சீதனம்' எனும் பொதுப் பெயர்கொண்ட பெண்டிர் நிதி வகுப்பிலொன்றே 'சுல்க' மாகும். யாடக அயாடக சீதனம், சௌடயீகசீதனம், சுல்கசீதனம் எனச் சீதனம் பல திறப்படும். பெண்டிர்க்குப் பெற்றோர், அவர்சுற்றத்தார், வேட்போர், அவரொக்கல், நட்பாளர் பலரும் மணங்கருதித் தருங் கொடைப்பொருளும், மணவினை கருதாமலே தரப்பெறும் திருவும், தந்தொடர்புடைச் சுற்றத்தார் இறந்தவரிடமிருந் திறங்கப் பெண்டிர் பெறுநிதியும், தம் தாளாண்மை முதலியவற்றாற் றையலார் தாமே யீட்டுந் தேட்டும், இன்னு மெனைத்துவகையானும் அவரடையு மெப்பொருளும், வகைமுறையால் வெவ்வேறு பெயர் பெறினும், தொகை நிலையிற் 'சீதனம்' எனும் பொதுப் பெயர்க்குரிய தாகும்: எனினும் 'சிதன' ஸ்திரீதனமெல்லாம். ஒருபடித்தாம் ஆட்சி அனுபவம் வாரிசுக் கிரம வீழ்ச்சி யுரிமைகளை யுடைத்தில்லை.
--------
* அறம் - விதி (Law) சட்டம்.
** வழக்கு - இறைவரால் நிறுவப்பெறும் வழக்கறம்
(Civil Law)-நீதி.
யாடக சௌடயீக சீதனங்கள் அவையுடைய பெண்டிர்தமைக் கொண்டவர் கவர்ச்சிக்குட்படுவன. கொண்டவர் தேவைக்குட்பட்டுப் பெண்டிர்க் கவற்றிற் பராகீனபாத்தியம் வரையறுக்கப் பட்டுளது. உடைய பெண்டிர்காலத்துக்குப் பின் அவற்றையடைதற்குரியார் வரிசைமுறையும் வேறு படுவதாகும். நம தாராய்ச்சிக்கியைபுடைய 'சுல்கமோ' மகளிர்க்கு மணவாளர் மணக்குங்கால் விரும்பித்தரும் நிதியாம். இதிற் பெண்டிர் எல்லையிகந்த முற்றுரிமை யுடையராவர். வரம்பிறந்த நிறையாட்சி, கொடையுரிமை எல்லாம் இதிற் பெண்டிர்க்கு உண்டு. உடைய மடவார்க்குப்பின் அவர் மக்கள் அடைதற்கு உரியர். மக்களில் வழி அவர் கணவர் பெற்றோர்க்கின்றி, அவருடன் பிறந்த சோதரரே அவர் 'சுல்க' நிதியுடைய முதலுரிமையுடையர். இனைய ஆட்சி வீழ்ச்சி உரிமை விசேசங்களுடைய சீதனமே 'சுல்க' மாகும்.
'தசரதசக்கிரவர்த்தி கைகேயியைத் தான் விரும்பி வேட்குங்கால், தன் அயோத்தியரசாக்கத்தை அவளுக்குச் 'சுல்க'மாகத் தந்தனன்;என்று வான்மீகியின் மேற்கவிதை தெரிவிக்கின்றது. பண்டைத் தமிழர் போலாது ஆரியருள் ஆடவர் மடந்தையரை மணமாடத்தன்றி முன்காணகில்லாராகவே. மணமகளான கைகேயிக்காக அவள் தந்தையான கேகயமகாராசனிடம் தசரதன் 'சுல்க'ப் பிரதிஜ்ஞை பண்ணித் தந்ததாக வான்மீகி விசதமாகக் கூறியுள்ளார். ஆகவே, ஆரியதர்ம சாத்திரக்கிரமப்படி, அயோத்தியரசு அன்றுமுதல் கைகேயியின் 'சுல்க' சீதனச் சொத்தாகி, தன்னிலையிற்றசரதனுக்கு அவ்வரசில் எவ்வித சுவாதீனமும் ஏற்படுமாறில்லை. கொடுக்குமுன் அவனுடைமையான அயோத்தியரசு. முற்றுடைமை யாட்சி முறைக்கதிபனான தசரதனாற் கைகேயிக்கு அவளை அவன் மணக்குங்கால் 'சுல்கதிரவியமாக'ப் பிரதிஜ்ஞையுடன் பாத்தியப்படுத்திக்கொடுக்கப்பட்டுளது. அப்படிக் கொடுபட்டபின், அதிற் றசரதனுக்கு யாதொரு கொடையுரிமையுங் கிடையாது. கைகேயிவயிற்றுக்குந் தநயனுக்கும், அவன் மைந்தருக்குமே. அவள் 'சுல்க'நிதியாம் அவ்வரசு "வரன்முறை **வழக்கால் உரிமையாகும். அவட்குச் சந்ததியற்றவழி, அயோத்தியரசு அவளுடன் பிறந்த யுதாஜித்து ராஜகுமாரனுக்குரித்தாமல்லால். கைகேயியின் தொடர்பற்ற' தசரதகுலத்தாரெவருக்கும் ஆமாறில்லை.
--------------------
* வரன்முறை = பழையநெறி - (Tradition)
** வழக்கு = நீதி - சட்டம் - (Law)
---------------
** இக்கவிக் கருத்தோடொத்த பொருள், வான்மீகம், அயோத்யாகாண்டம், 8-வது சருக்கத்திலும் வற்புறுத்தப் படுகிறது. அரசுக்குரிய பரதனுரிமையைக் கேவலம் பட்சமிகையால் இராமனுக்குத் தசரதன் தர நினைப்பதாயும், அதைத்தடாமற் கைகேயியும் உண்மையுணராது மகிழ்வதாயும் மந்தரரைவாயால் வான்மீகர் தந்திருக்கன்றார்.
இனி, தசரதன் சுல்கச் சூளால் விவாக காலமுதற் கைகேயிக்கும், அவள் தநயனாய்ப் பிறந்தது முதற் பரதனுக்கும் அறமுறையால் அரசு உரியதாயிருக்கவும், அவ்வுண்மை யறிந்த கோசலை அரசாக்கம் தன் மகனை அடையப் பெரிதும் அவாவுகின்றாள், முதுமையில் முதற் பிறந்த இராமனே, பரதனைப்போற் பலகாலும் பிரியாம லிடையறாதுடனுறையத் தசரதனுக் கவன்பாற் காத லளவிறந்து வளர்வதாயிற்று. அறிவும் ஆற்றலு முடையகோசலை தன் விருப்பத்திற்கு அரசன் பெருங்காதல் அருந்துணையாவது கண்டு, அதனைப் பேணிப் பெருக்கிப் பரதனுக்குரிய பூதலமெல்லாம் தன் மகனுக்கும் தனக்கும் உடைமையாமாறு தன் 'விரியுஞ் சிந்தை'யால் விழைந்து சூழ்கின்றாள். அவள் சூழ்ச்சியும் அரசன் மகவாசையும் சேர்ந்ததன் பலனாய்ப் பரதனில்லாதபோது இராமனுக்கு முடிசூட்டுவிழாக் குறிக்கப்படுகின்றது. இவ்வாறு பரதனுரிமையான அயோத்தியரசை அவனறியாது இராமனுடைமையாக்கித் தன் சூழ்ச்சியால் வாழ்க்கை பெற்று மகிழும் கோசலையின்றிறத்தை வியந்து, "வாழ்ந்தனள் கோசலை மதியினால்" என மந்தரை வாயோடு கூறியதனோடமையாது, இராமன் கோமுடிசூடும் நன்மாற்றத்தைக் கேட்ட கோசலை மகனாக்கங் கேட்ட ஈன்றாளேபோல உளமுவப்ப தல்லாமல், அவ்வாக்கத்தைத் தன் மதியினாற் கூட்டு வித்ததன் ஆற்றலையும் நினைந்து அறிவால் இன்புற்றனள் என்பதைக் குறித்தே, கம்பர், -கூனி,
எனத் தன் கூற்றாயும், "விரியுஞ் சிந்தனைக் கோசலை" எனக் கூனி கூற்றாயும் கூறி வைத்துள்ளார். 'உன் வயிற்றுதிக்கும் ஒரு மகற்கெனவே கொடுத்த பேரரசு இராமனன்ன உன் தொடர்பற்ற பிறர்க்காவதில்லை' எனும் மந்தரை மாற்றங் குறித்த கம்பர் கவிக்கருத்தை, இதே சந்தர்ப்பத்தில் வான்மீகர் கூனி வாய்க்கொடுத்துள்ள
வாக்கியமும் வலியுறுத்துகின்றது. "இராச்யத்தில் உரிமையுள்ள பரதரைக் கண்டு, நமக்கு அது கிடைக்குமோ மாட்டாதோ என்று அஞ்சும் இராமருடைய அச்சத்துக்கு நான் அஞ்சுகின்றேன்;ஏனெனிற் பயந்தவரிடத்தினின்றே பயமுண்டாவது இயல்பன்றோ?' என்று, இவ்விடத்தில் வான்மீகர் மந்தரை வாய்ப் பெய்து வைத்துள்ளார்.
வான்மீகர் விளங்கவைத்த உண்மையை இதனினும் விசதமாக்குவது, கூனியின் இறுதிக் கூற்றாய்த் தேவி தூய சிந்தையைத் திருப்பியதான கமபர் கவி, தசரதன் பரதனுடைமையைப் பறிக்க முயலவும் தடுத்தற்குரிய நீ தடாமற் பார்த்திருப்பதால், "கெடுத்தொழிந்தனை உனக்கரும் புதல்வனை, கிளர்நீர் உடுத்த பாரகம் உடையவனா யிருந்த தசரதன், "உன் வயிற்றிற் பிறக்கும் ஒரு மகற்கெனவே, முன்'சுல்க'மாகப் பிரதிஜ்ஞையுடன் கொடுத்த அயோத்திப் பேரரசு, உன் வயிற்றுதித்த பரதனாமொரு மகனுக்கும், இருவழியும் பேரரசர் மரபின் வந்த உபய குலோத்துங்கனான அப்பரதன் குலக் கோமைந்தர் தமக்கும், அவனும் அவன் வழித்தோன்றினாரும் இல்வழிஅடுத்த 'சுல்க'க்கிரம வாரிசான உன் தம்பி யுதாஜித்துக்கும் ஆவது அறமுறையாகும்: இவரல்லாப் பிறர்க்காவது அறமில்லை"என்று முன் 'சுல்க'ப் பிரதிஜ்ஞை வரலாற்றுண்மை யெடுத்துரைத்து, அதனை மறந்து வரன் முறைக் கிரமத்தில் இராமனுக்காம் அரசை அன்று அவனுக்குத் தசரதன் தரப்போவதா யெண்ணி அன்னானாக்கத்தில் மகிழ்ந்த மங்கையை மந்தரை தெருட்டி, "பரதனுரிமையைப் பாதுகாத்து, அரசன் பிரதிஜ்ஞையையும் அறத்துறையையும் நிலை நிறுத்துங் கடன் நின்னதேயாகும்" என்று அவட்கு அறிவுறுத்துவாள் கூற்று இது:-
"கெடுத்தொ ழிந்தனை உனக்கரும் புதல்வனைக் கிளர்நீர்
உடுத்த பாரகம் உடையவன் ஒரு மகற் கெனவே
கொடுத்த பேரரசு, அவன் குலக் கோமைந்தர் தமக்கும்
அடுத்த தம்பிக்கும் ஆம்:பிறர்க்காகுமோ? என்றாள். "
இப்பொருள் தெளியுங்கால், இக்கவியிற் சொற்களினமைவும், கூனி கைகேயி சம்வாத முறை முன்பின் கதையொழுக்குக் கவிகளோடித னியைபும் விசதமாவதோடு, வரலாற்று முறையும் கைகேயி கற்புடைக் காதற்கடனாற்றுமியல்பும் இச் செம்பாகப் பொருளோடு இனிதியைவதாகும். 'இராமனுக்குத் தரும் அரசாக்கம் ரதனுக் காமாறில்லை: அதனால் அவன் முடி சூடுதலைத் தடுக்க விரைதி'என்று கூனி கூறியதா முன்கொண்ட பொருளுக்கு நாம் கண்ட இடர்ப் பாடொன்றும் ஈண்டில வதோடு, பரதன்பாற் பரிவேனும் இராமன் பாற்பட்சக் குறைவேனுமின்றி நிறை கற்பினிலைத்த காதல் காரணமாகமட்டும் மந்தரை மாற்றம் மனங்கொளற்கிசைந்த தேவியின் தூய தன்மைக்கும் அவள் தெய்வக் கற்புக்கும் இதுவே பொருந்துவதாகும். சுல்கமாகக் கொடுத்த தசரதன் சொல்லால் மட்டும், சுல்கமாகப்பெற்ற தேவியின் வயிற்றுதித்த பரதனுக்கு அரசு அமைவதாகும். இராமனுக்கோ, தசரதன் கொடாமலே மூத்தவன் நிலைமையில் உரிமை சித்திக்கத் தக்கது. ஆகவே அவனுக்குக் கொடுத்த பேரரசு என்பதிற் பொருத்தம் ஒன்றுமில்லை. பரதனுக்கு முன் 'சுல்க'க்கொடையால் மட்டுமே அரசு உரியதாகும். அஃதில்வழி இளையனான பரதனுக்கு அரசு ஆமாறில்லை. மேலும், கொடுப்பவன் உடையனாயிருந்தலன்றிக் கொடையால் உரிமையடையமுடியாது. கைகேயிக்கு விவாக காலத்தில் அயோத்தியைத் தசரதன் 'சுல்க'மாகத் தத்தஞ் செய்த போது அவனுக்கு அரசு தனி முற்றுரிமை பிந்தித் தன் முதல் மைந்தனுக்கு அதைக் கொடுக்க விரும்பினபோது தசரதனுக்கு நாட்டிற் சொந்தமெதுவுமில்லை; அதனால் அதை அவன் கொடுக்க அருகனுமல்லன். வான்மீகி விளக்கிய 'சுல்க'ப் பிரதிஜ்ஞைச் சொல்லையும் அதன் அறப்பயனீடுகளையுமே யீண்டுக் குறிப்பதானால் மட்டும், இக்கவியிற் 'கெடுத்தொழிந்தனை'-'உடையவன்' 'ஒரு மகற்கெனவே கொடுத்த'-'பேரரசு'-'அவன் குலக் கோமைந்தர் தமக்கும்'-'அடுத்த தம்பிக்குமாம்'- 'பிறர்க்காகுமோ' என்ற பல தொடர்களுக்கும் அவ்வவற்றிற்கியல்பும் இயைபுமான பொருள் கிடைக்கும்; அல்லாக்கால் இவையனைத்தும் பொருந்தா வெற்றுரைகளாய் முடியும். அதுவே போல் இவ்வுண்மை வரலற்றின் குறியீடாக் கொண்டாலன்றி, 'வாழ்ந்தனள் கோசலை மதியினால்'-'விரியுஞ் சிந்தனைக் கோசலை'-'ஆற்றல்சால் கோசலைறிவு மொத்ததால்'-'பரதனைக் கடிது போக்கிய பொருளெனக்கின்று போந்தது'-'தந்தையும் கொடியன்'-'தாயும் தீயள்' என்ற பல கவித் தொடர்களும் பொருளின்றி நின்றுவற்றும்.
------------------
4. கைகேயி கற்புக் கடனாற்றல்
தன்னல விருப்பாலேனும் தன்னொரு மகன் ஆக்கத் தாசையாலேனுமன்று, கைகேயி இராமன் முடி சூடுதலைத் தடுக்கத் துணிந்தது. இந் நலங்களைச்சுட்டிக் கூனி முன் கூறியவனைத்தையும் உளங்கொளாது சீறிய உத்தமி, தான் நினையாத தசரதன் சுல்கப் பிரதிஜ்ஞையைக் கூனி வாய்க்கேட்டதும், பிறிது பேசாது மனமழிந்து மாழ்கலாயினள். கொண்டவனன்றிக் கும்பிடத் தெய்வங்குறியாக் கோப்பெருந்தேவி, தசரதனைத் தலைநின்ற தனியறக்கடவுளாக் கொண்டொழுகுபவள். கழிபெருங்கா தற்குரிய தன் கணவன் அழிவறம் பேணிப் பழிவினை சூழ்வனெனக் கனவிலுங் கருதுகிற்றிலள், உயிரோவியமனைய இராமன் பாலளவிறந்த அன்பால் நாயகன் 'தீவினை நயந்து செய்வ துணர்ந்ததும், தெய்வக் கற்பினள் தூய சிந்தை தெருமரலுற்றது. "அறனிழுக்கா தல்லவை நீக்கி, மறனிழுக்கா மானமுடைய "பேரரசன், 'காதன்மை கந்தாக்'கொண்டு, மகவாசையால் வஞ்சிக்கப் பட்டஞ்சுவதாம் அறம் துறந்து, "செய்தக்கவல்ல செயத்" துணிந்து நின்ற நிலையுணர்ந்ததும், நெஞ்சுடைந்து நினைவழிந் தயர்ந்தாள்.
'பிறர் பழியும் தன் பழியாப்'பேணி விலக்கும்' நாணுக் குறைபதியான நங்கை, தன்னுயிர்க்குயிரான தசரதன் தன் தொல்லைச் சொல்லறம் துறந்து பாவமும் பழியுந்தருஞ் செயலை ஆவலுறுவதாக அறிந்ததும், அவலமெய்தினள். "தாய்கையில் வளர்ந்திலன்" தவத்தால் தான் வளர்த்து வந்த இராமன பிசேகத்திலழுக்காறற்றுவந்த கைகேயி, தன் தலைவன் மகன்பாற் காதலேதங்கைக் கொண்டு. அறவூதியம் போகவிட்டு. அறத்தோடு அன்புக் கிடனாய தன்னையும் வஞ்சிக்கத்துணிந்துநின்ற செயல் கேட்டுளமுளைந்து எளியளானாள். 'அரியகற் றாசற்ற' தன் கணவன் பாலும் 'வெளிறின்மை அரிதெ'னக்கருதா மனமாண்புடைய கைகேயி, அறம் பிறர்பாலு மோம்பு மரசன் தீமையைத் தானே செய்யுமாறு அவன் அறிவைச் சிதைத்துப் பேதைப்படுக்கு மிழவூழின் திறமறிந்து தியங்குவதியல்பன்றோ? தெய்வமெனத் தான் கொண்டுநின்ற கணவன் 'தீவினைநயப்பன்' எனக் கேட்டு, அவ்"வின்னல்
(தன்) உள்ளத்தின் ஊன்ற, உணர்வுற்றிலள் ஒன்றும்", தசரதனின் இப்புதுநிலை அவள் செவ்விய மனதைக் கவ்விப் புண்படுத்தியது. இதுவரை கருதிலாப் புதுநிலை தன்
கணவன்பாற் காண மாழ்கி மனமுடைந் திடைந்தாள். தன்னுள முறைந்த தலைவ னறவுருவப் படம் அவன் மருட்கைச் செயலெழுப்பிய இருட்புகையுண்டு மாசு படவும், மங்கை உயிரற்ற ஒவியம்போ லுணங்கிக் கோடிழந்த கொடியென்ன மறுகலானாள். தலைவன் தவற்றாற் றறியுண்டு தளர்ந்த உணர்வினள், பின் தன் அறவுளத்தறிவு தெருட்டத் தேர்வாள். மன்னறத்தையும் தன்னையும் வஞ்சித்து வேந்தன் மேற்கொண்டு நின்ற செயல் கண்கூடாக் கண்டபிறகு, மந்தரையை வைது பயனில்லை யென் றுணர்ந்தாள். தன் நெஞ்சிலற நிலை தலைநின்ற காதற்கணவனின் வீழ்ச்சி காணப்பொறாது நைந் துள மயர்ந்த தேவி, உற்றது முறுவது மெண்ணித் தெளிய லுற்றாள். தசரதன் தனதெண்ணமுடித்து அறங்கொல்லும் பாவமும் தரணியிற்பழியு மெய்தாமற்றடுத் தோம்பும் தன் காதற்கடனாற்று மறனும், அதுமுடிக்கும் வினையும், வினையாடல் நெறியு முறையே தன் மனத்தூன்றிவகையறச் சூழ்ந்து தெளிந்து, செயத்தக்க தேர்ந்தெண்ணித் துணியலானாள். கற்புறழ்காதல் கவினுமுளக்கைகேயி, தன் கணவன் காதல்நிலையும், அதன் விளைவும், தன் கற்பறமும் சிந்தித்து, செய்வினை தேர்ந்து, தன்னறம் தழையு மறிவாற்றளர்ச்சிநீக்கி, வாளாவருந்தும் கையறவு களைந்து, அறத்துறையிற் றாளாண்மை மேற்கொள்வாளாயினள். தன்சோர்வும், தான்வளர்த்த காதற்றிருமகன் இராமன்பாற் பரிவும், தன் கற்பறக்கடனாற்றுதற் கிடையுறச்சகியாள்; தன்காதற்கிழவன் பழியொடு பாவமெய்தி அறங்கொன்றழிவதைத் தடுப்பதே தன்னொரு கடனாக் கருதி நிற்பாள். தசரதன்பா லன்பும், அவன்பழியில் நாணும், யார்மாட்டும் ஒப்புரவும், அறத்துறையிற் கண்ணோட்டமும், எஞ்ஞான்றும் வாய்மையும் குன்றாக் குணக்குன்றான கைகேயி, "அன்பு நாணொப்புரவு கண்ணோட்டம் வாய்மையோ டைந்துசால் பூன்றிய தூண்" ஆவளன்றோ? அதனால், தான் தேர்ந்து தெளிந்த அறக்கடனாற்றத் துணிகின்றாள்.
தான் வாளாவிருப்பின், தசரதன் இராமனுக்கு முடி சூட்டி அரசு தருவன். தரின், தன்கணவன் பாவமும் பழியும் எய்துவது உறுதி. அதனாற் றாழாது பிரதிஞ் ஞாபங்க தோஷத்தினின்றும் கொழுநனைக்காத்து, அவன் முன் மரபுடைச் சொல்லையும் அறநெறியையும் ஓம்பல் அவன்பால் நிறைவளர் காதலுடைய தன்கற்பறக் கடனாக் கண்ட கைகேயி, அக்கடனாற்ற இராமாபிசேகம் நடவாது இடைநின்று தடுப்பதன்றி வேறுவழி காணாமையால், தானதனைத் தடுக்கத் துணிகின்றாள். துணிந்ததும், செயன்முறைதெளிந்து, தன்காதற்றனிக் கிழவனான தசரதன்பாற் பழிவிலக்க அவனிடம் தான் முன்பெற்று வைத்த வரங்களை முன்னிட்டு, அரசை அவன் முன்மரபுடை யறச்சொல்லால் அதற்குப் பிறந்துரிய பரதனதாக்கவும், எனைத்தானும் அதற்குப் பங்கமேற்படாது காக்கவும், ஆவன தேர்ந்து, முகுவும் ஒர்ந்து, செயல் சீர்தூக்கி, வினைமேற்கொள்கின்றாள்.
அரசன் இராகவனுக்கு முடிசூட்டுவதாக அனைவருக்கும் அறிவித்துவிட்டான். உழைஞரும் குடிகளும் விழவு காணக் குழுமியதோடு, தூய முனிவரும் நேய நிருபருமாய பலப்பலர் ஆண்டு வந்துற்றளார். குறித்தபடி இராமன் கோமுடி சூடாமல் தடுப்பதை யறனாக் கண்ட கைகேயி இந்நிலையிற் செயத்தகுவது என்னை? உண்மையை வெளிப் படுத்திக் கணவன் சொல்லறம் பேணுவதொன்று: அன்றிக் கையறவு பூண்டு தான் வாளா விருப்பதொன்று: இரண்டும் தேவி தூய சிந்தைக்கு உகந்தவன்றே. குறித்த திருநாளை வெறு நாளாக்காவிடின் தசரதன் பழியொடு பாவமேற்பது சரதமெனத் தெளிந்தபின், யாது செய்தும் அறந்திறம்பாதவனை நெறி நிறுத்தல் நிவர்த்தியற்ற முதற் கடனாக் கொண்டாள். எனினும், உண்மை வெளிப்பாட்டுக்குத் தானுடம்படுவது, காக்கக் கருதிய பழியைக் கணவனுக்குச் சேர்ப்பிக்கும் உறுதியான வழியாமெனக் கண்டாள்; என் செய்வாள்? இராமன் முடிசூடில், தசரதன் சூளறங் கொன்ற பாவத்திற்கு ஆளாவன். அதைத் தடுக்கக் கருதி அவன் மரபுடை முன் 'சுல்க'பிரதிஜ்ஞை அறச்சொல்லுண்மையை வெளிப்படுத்தின், இராமன் அபிசேக மட்டும் நடவாது நிற்கும்:ஆனால், 'தன் சொல் மறந்து நெறி துறந்து முறையிறந்தான்'என்னும் பழியினின்றும் தசரதன் தப்புமாறில்லை. தன் மகனாக்கமே இராமாபிசேகத்தை நிறுத்தத் தேவியைத் தூண்டியிருப்பின், ஒருகால்தான் முன்னைய 'சுல்க'ச்சூளும் அதனாற் பரதன் பிறப்புரிமை வரலாறும் கூறி அவனுக்கு அரசு பெற முயலக்கூடும். 'பரதன் பாற் பரிவு பற்றிக் கைகேயி அரசிரக்க நினைத்தாளல்லள்; நினைக்கவுமொல்லள்;'என்பதை மேல் அவள் குணநலங் குறித்த பல கவிகளால் ஆராய்ந்து தெளிந்துளோம். காதற் கிழவனைப் பாவமும் பழியும் அணுகாவாறு காத்தலொன்றே, அவள் கற்புறு சிந்தைக் காதற் கருத்து;
உண்மை வெளிப்படின், முன்னாளின் மன்னவன் கேகயனிடம் அறச்சூழ் செய்த தறியா மாந்தர் பலரும், 'அம்மரபுடைச் சொல்லறந் துறந்து கழிபெருங்காதன்மிகையால் தன் முதன் மகனான இராமனுக்குத் தசரதன், தனக்குரிமையில்லாது, பிறந்துரிய பரதனுக்குடைமையான தனியரசை, அவனை நாடகற்றி, அவனில்லாதபோது அளிக்க முயன்றனன்', என்று அரசனைப் பழிப்பதற்கு இடனாம். தாசரதி முடிசூடுவிழவைத் தான் தடாதவரை பாவமும், உன்மை சொல்லித் தடுப்பின் பழியும், தசரதனைச் சாருவதாகும். தன் கணவனுக்கு எவ்வகை யூறும் எவ்வவுமின்றிக் காப்பதையே காதனிறைக்கடனாக் கருதியுள்ள கைகேயி, இவ்விரண்டுக்கும் உடம்பட இசைகிலள். மன்னரும் மற்றைமக்களும் வந்து கூடியபின், என்ன சொல்லி இராமாபிசேகத்தை நிறுத்தித் தன் காதலன் புகழொடு சொல்லறமும் நிறுவலாகுமென்பதே அவள் மனங்கவர்ந்த கவற்சியாகும். தக்க நியாயங்கூறினன்றிக் குறித்து வைத்த முடிசூட்டு விழாவைத் தடுக்குமாறில்லை.
தசரதன் தவறு தக்கதோர் கழுவாய்* அல்லது பரித் தியாகம் பெறினனறித் தீருவதன்று. பாவமெனைத்தேனும் அதற்குரிய வொறுப்பின்றிக் கழிவதில்லை. முதுமையில் முதற்பெற்ற மகவாசை மயக்கத் தன் சொல்லறந் துறந்த தசரதன் பாவத்துக்குப் பழி யவனையடைய வேண்டும்; அன்றேல், அவற்கினியார் பலிபெற்று அவரையேனும் சாரவேண்டும். கணவனறத்தைப் பேணுவதிற் பழி அவனைச் சாராமல் தான் தாங்கக்கூடுமாயின், அதனினுங் கைகேயி காமுறுவ துலகில்லை. பொருகளத்தும் புரவலனைப் பிரிந்திருக்கச் சகியாது அவன் தேரிற் சாரதியா யமைந்து, தன்னுயிரு மவன் வெற்றிக்குச் சமயநேரிற் பலிகொடுக்க, மணந்த சிறுபருவத்தே துணிந்து நின்ற நிறை காதல் நிறையுடையாள்;
---------------
*கழுவாய் - பரிகாரம் அல்லது பிராயச்சித்தம்
முன்வேட்டவன் வெற்றிக்குயிர் கொடுப்பாள், இன் றவனறப்பெற்றிக் குயிரினு மோம்பத் தகுந் தன் புகழை அவனலங் கருதித் தியாகிக்கத் துணிவது அவள் அறங்காழ்த்த நல்லியல் நீர்மைய துன்றோ? "தம்மில் தமக்கினியார் 'தாம்வீழ்வார்', " எனவே தம் உண்மைக் காதலர்க் கூறு நீக்கி, அவர் நன்மை கருதி உயிரையும் உற்றவிடத் துயிரினினிய மானத்தையும் உதவுவதே நல்லறமாக் கொள்வாருயர் வுள்வார். அறமும் காதற்கிழவன்பால் அன்புமன்றிப் பிறிதறியா உள்ளமுடைய கைகேயி, தன் கணவனுக் கூறு தவிர்ப்பான், தன் புகழைப் பரித்தியாகிக்கத் துணிவதில் விந்தையில்லையே? வேந்தன் விழவுகாணவழைக்க வந்தாரனைவருக்கும், இராகவன் நட்பினர்க்கும், அவ்விழாத் தடையுறத் தக்கதோர் சமாதானம் காட்டவேண்டும். மன்னவன் முன்னற மரபுடைச் சொல்லுண்மை வரலாறு கூறுவது போதிய சமாதானமே மேனும், அஃது அவன் பழி வளர்க்குஞ் செவிலியாகும். அவன் பழியஞ்சி அவ்வுண்மையை மறைப்பின், ஒன்று இராமன் முடிசூடித் தசரதன் தவறுடையனாக வேண்டும்; அன்றேல், அவ்விழவை நிறுத்திய பழியொருவர் சுமக்கவேண்டும். பழிபரிப்பாரில்வழி மன்னவன் பாவந் தவிர்க்கும்வழி வேறில்லை. அதனால், தனக்கினிய தசரதன் புகழ் பரிக்க, அவன் படிறோம்பித் தானே பழி சுமக்கத் துணிந்தாள், அவன் கற்புறு காதன்மனையாள். சம்பரன் போரிற் புண்பட்டுக் களைத்து மயங்கிய தன் கணவனுயிரோம்பித் தன்னுயிரைப் பேணாது இரவனைத்தும் ஊக்கத்துடன் தேரில் அவன் இறவாமற் காத்தகாலைத் தசரதன் விரும்பித் தந்த வரமிரண்டையும், அவன் வழித்தன்றித் தனக்கென ஓர் நலம் அறிகிலாமையால் இதுவரை உபயோகப்படுத்திலாதாள், இன்று அவனறம் பேணுவதற்குரிய கருவிதுருவுவாள். அவ்வரங்களையே முன்னிட்டு, தன் புகழைப் பலியாக்கி, மன்னற்கறத்தொடு புகழ் நிறுத்தக் கைகேயி துணிவதானாள். தன்னெண்ணத்திற் கிடைநின்று தடை செய்வதற்குக் கைகேயியை வைது வெறுத்துறுத்த தசரதன், தன் பெருவெகுளிக்கிடையும் அவளை நோக்கி "நீ எப்பொழுதும் எனக்கு நன்மையையே
விரும்பும் சுபாவமுடையவள். ". . . "நீ இதற்கு முன் எனக்குக் கொஞ்சமாயினும் அயுக்தமாகவாவது அப்பிரியமாக வாவது செய்ததில்லை. . . . . . . . . . அப்படிச் செய்வாயென்று நான் இப்பொழுதும் நம்பவில்லை. . . . . நீ தர்மத்தை உல்லங்கனம் செய்யப் பயப்படுந் தன்மையள், " என்று பலமுறை யவளறவியல் சுட்டிப் புகழ்வதாக வான்மீகி கூறுகின்றார். அறஞ்சூழாது தன் மகவாசையால் தன்னை யொன்று பாவம் அன்றேற் பழிக்கிலக்காக்கி நின்ற மன்னனைப் பாவம் நீக்கிப் பழியும்விலக்கிப் பாதுகாக்க விரும்பிய பெருந்தேவி, அவனாற் பிழைக்கப் பட்ட அறத்துக்குத் தன் புகழையே இரையாக்கத் துணிகின்றாள். புறவினுயிரோம்பத் தன்னுடலரிந்துதவிய மானவன் வழிப்பிறந்த மன்னன் அறமனையாள், தன் புருசன் புகழோம்பத் தான்பழி சுமக்க அஞ்சுவளோ? இவ்வாறு மந்தமதிவிருப்பால் தசரதனெய்த விருக்கும் பாவமும் பழியும் நீக்கி, அதனாற்றன் கற்பும் கணவனறத்தொடு புகழுங் காத்து, அவனறஞ் சான்றமரபுடைச் சொல்லும் ஓம்பத் துணிந்தவழி, பழிக்கும் அஞ்சித் தளராது நிறைக்கடனை நெஞ்சறிகரியாய் நெறியாற்றித் தன் பெண்மையறம் பேணுங் கைகேயி,
"தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்" என்னும் பொய்யில் புலவன் பொருளுரைக்கு முற்றுமுதலிலக்காக நிற்றற் குரியள்.
--------------
* சருக்கம் 10.
இவ்வாறு மன்னவன் முன்சொல்லறம் திறம்பாமற் காத்தலை மேற்கொண்ட மங்கையர்க்கரசி, பாவமொடு பழியும் அவனையணுகாவண்ணம் வினைசூழ்ந்து துணியலானாள். தொல்லைச் 'சுல்கப் பிரதிஜ்ஞை' வரலாற்றையறவே தான் மறைக்க நினைத்தாள். தனக்கவன் முன் கொடுத்துவைத்த வரமிரந் திராமனபிசேகத்தை நிறுத்
துவதாற் கொடும்பழி தனக்கும், பெரும்புகழ் மன்னனுக்கும் வளர்வதோர்ந்தாள். "மகவாசையால், பேதை, பெற்றிருந்த வரங்கோலிப் பரதனுக் கரசிரந்தாள்; தந்த தன்சொல் மாற்றவாற்றாத் தகையாளன் தசரதனாகையால், அவள் கேட்டதை மறுக்க அஞ்சி, வண்மை எஞ்சாது வளர்த்து, வள்ளல் துஞ்சுவதானான், " என்று எவரும் அன்றுமுதற் பேசலானார், பெண்டிர் பேரரசி. பெண்ணற மோம்பித் தானே விரும்பிப் "பெரும்பழி தேடிக் கொண்டாள், " மன்னவன் புகழை மாசுபடுத்தும் இம்முன் வரலாற்றுண்மையை அவன் நலம்விரும்பி மறைக்கத் துணிந்த தேவி, தானே அவனிடம் வரமிரந்து, மகவாசையால் மதிமயங்கித் தசரதன் வரந்தரத் தாழ்த்தபோது அறங்கூறி வற்புறுத்தி வாங்கலாயினள். * "அவனுக்கு உண்மையை அறிவுறுத்தித் தன் விருப்பத்தை எளிதில் முடித்திருக்கலாமே? அதைவிடுத்து, அவனிடமும் வரத்தை வியாஜமாக்கி, வாதித்து வாதைப்படுவானேன்?" என்று ஈண்டுச் சிலர் வினவுவது இயல்பு. அவளியல்புங்கொள்கையும் அவ்வாறு அவளைச் செய்யவிடா. அனைவருக்கும், உண்மையை மறைத்து, தன் ஒரு மகன் பரதனுக்கு அரசுதர விரும்பித் தானே வரமிரந்து மன்றாடி வாங்கினதாய் அறிவிக்கத் துணிந்தாள், வேந்தன் புகழோம்ப வேறுவழி காணாக் கற்பரசி.
---------------------
* அயோத்தி-சருக்கம். 13
இப்படித் துணிந்த பிறகு தசரதனுக்கு மட்டும் அவள் உண்மையைச் சொல்லுவானேன்? சொன்னாலவன் செயலும் பின்விளைவும் என்னாமோ? தசரதன் அறப்புகழ் நலத்தையே விரும்பு மவட்கு, அவ்விருப்பம் அரிது முடிவதாயின், அதற்கு அஞ்சிச் சோர்ந்து எளிது வழி தேடிப் பெண்ணறம் பிழைப்பளோ பெருந்தேவி. 'பரிந்தோம்பிக் காக்க'த் தகும் 'மனையறஒழுக்கத்தின் ஒல்'குவளோ உரவுடைய கைகேயி, "இழுக்கத்தி னேதம்படுபாக் கறிந்து"வைத்தும், மேலும் பரதனது ஆக்கமேனும் இராமன்கேடேனும் அவள் விரும்புவதாயினன்றோ, அவள் அதை எளிதில் முடிக்க வழிதேட வேண்டும்? அதற்கு மாறாகக் கணவனைப் பிறரெவரும் சொல்லறம் பிறழ்ந்தானென வசைகூறப் பொறாது, அவன்பாற் காதலாற் பசைந்தசிந்தையள், தானே அவன்முன் அப்பழி தூறத் தருக்குவளோ? 'பிறர்தீமை சொல்லா நலத்தே சால்'பன்றோ? அச்சால்புடையாள், பிறர் அனைவருக்கும் தான் வரத்தை வற்புறுத்தி இராமா பிசேகத்திற் கிடையூறிழைப்பதாய்த் தெரிவிக்கத் துணிந்தபின்னர், தன் கணவனிடம் அதனையொழித்து, அவனுள முளைந்து நாணொடு வெகுளியால் நலிந்து மாழ்க, வேறுகூறுவளோ? கூறுவதில், யார்க்கேனும் யாதேனும் "புரை தீர்ந்த நன்மைபயக்கும்" ஆக்கமும் அறமும் உண்டா? தூய சிந்தையள், தன் கற்பறக் காதலாற் கருதியதை முட்டின்றி முடிக்க நிறைகுறையா நேசமுறையால் தக்கவினை தேர்ந்த மெல்லியலாள், அறநெறியிற் சிந்தை காழ்த்துச் சோர்விலளாய்க் காதற்கற்பறமாற்றிய செவ்வி கருதியன்றோ, கம்பர்' அவன் "தெரிந்து செயல்வகை"ச் செய்தி கூறும் பகுதிக்கு. அவன் 'சூழ்வினைப்படலம்' என்று பொருந்தப் பெயர் புனைந்துள்ளார்? செம்மாந்து செருக்கியதிமிருடைப் பெண்டிரின் தேராச் சிறுசெயலன்று, தெய்வக் கற்பினள் ஆழ்ந்து சூழ்ந்து தெளிந்து துணிந்த அறவினை கூறும் பகுதி, என்பதைத் தலைப்பெயராலேயே நம் கவியரசர் நன்கு அறிவித்துப் போந்தார்.
இனிக் கருணைக்கடலும் கற்பினுக் குறைபதியுமான கைகேயிக்குக் கணவன் புகழறமோம்புதலே கருத்தும். பரதனிடம் போலவே இராமனிடம் காதலும் உண்மையாயின், வரமென வாங்குமரசை இராமனுக்குத் தானே தந்துவக்கத் தசரதன் வேண்டியபோது விரைந்துதவ விரும்பாதிருந்ததேன்? எனில், கூறுவன். சிறந்த குணப் பரதன் பிறந்துரியனாகலான், அவனுடைமையா மயோத்தியரசில் அவனறியா தவள் கொடையுரிமை மேற்கொள்வ தறமெனக் கருதகில்லள். கைகேயி தன்னிடம் நிலைத்த அன்புடையளாகவும், தனக் கரசுதருமாசையால் வேந்தனைத் தூண்டி அவளே தன் அபிசேகத்தை விரைவு பண்ணுவதாகவும் இராமன் சீதைக் குரைத்துள்ளதை* வான்மீகர் கூற அறிந்தநாம், அவளை இராமனாக்கத்தி லழுக்காறு டையளாக் கருதற் கிடனில்லை. அறத்திலூன்றிய அவளுளத் திறத்தையும் நன்கறிவோம். 'சுல்க'க் கொடைக்குமுன் தானுடைய தனியரசைத் தசரதன் விவாக காலத்தில் விரும்பி "மரபுடைச் சொல்லுடன்" தந்ததாலும், சுல்கச் சூளற முறையாலும், பரதன் பிறந்ததும் அரசு அவனதாகிவிட்டதென்பதை, "வரனில் உந்தைசொன் மரபினாலுடைத், தரணி நின்னதென்றியைந்த தன்மையால், உரனில் நீபிறந் துரிமை யாதலால் அரசு நின்னதேயாள்க" எனக் கம்பரும், "நமது பிதா உன் மாதாமகரிடம் அவர் மகள் வயிற்றுப்பேரனுக்காமாறு அயோத்தியரசைப் பிரதிஜ்ஞையுடன் சுல்கமாகக் கொடுத்தார்: ஆனபடியால் நாடு உனதேயாகும்" என வான்மீகரும், பரதனுக்கு இராமன் வாயால் விளக்கியுள்ள விவரமு மறிவோம். .
------------------
* சருக்கம் - 16
கணவன்பாற் கழிபெறுங் காதல்காரணமாய் அவன் விருப்பமே தன் அறமாக் கொண்டொழுகிய கைகேயி, தன்னலம் வேறுணராமையால், மணந்தபின் தனக்கு அவன் தந்த வரங்களை மறந்தது போலவே அதற்கு முன்நிகழ்ந்த "சுல்க"சம்பவத்தையும் மறந்திருந்தாள். மந்தரை சொல்லக் கேட்ட பிறகே இவைகளின் உண்மையுணரலானாள். உரிய மகனை யூரகற்றி, பிரிய மகனுக் குடைமையற்ற நாடளிக்கப் பரபரக்கும் தசரதன் றவறறிந்ததனைத் தடுக்க விரும்புந் தகையணங்கு, தானுமத்தவறிழைக்க விழைவ தெங்ஙனமாகும்? அறம்புரத்தலன்றிப் பரதனே பட்ட மெய்தி யிராமனுக்கரசில்லாதிருப்ப தொன்றே அவள் விருப்பமன்று என்பதற்கு, பரதனில்லாதபோது தான் தரத் துணியாதவள் பிற கிராமனுக்குப் பரதன் தருவதைத் தடுக்காமையே தக்க சான்றாம். பரதனுக்குப் பிறப்பாற் பாத்தியமின்றித் தரணி தன் தனியுடைமையாகில் இராமனரசுபெறுவதை எனைத்தானும் தடுப்பதே அவள் திருவுளமாகில், கைகேயி பின் பரதன் இராமனுக்கு அரசு தருவதையும் தடுக்க முயன்றிருப்பாளன்றோ? இராமனை யழைத்து வந்து முடிசூட்ட விரும்பிய பரதனுளக்கோள் அறிந்த தேவி, அதைத் தடுக்காமலவனுடன் இராமனை யழைக்கச் சென்றதொன்றே அவள் மாசற்ற மனத் தூய்மையையும், இராமனாக்கத்தில் அவள் உண்மை யார்வத்தையும் இனிது விளக்குவதாகும்.
5: தசரதன் தவறு
இனித் தசரதனியலு மிது பற்றிய அவன் செயலும் சிறிது ஆராய்வாம். முன் தான் கேகயனிடம் செய்த அறச்சூளை அவன் அறவே மறந்தவனாய்ப் பின் இராமனுக்கு முடி சூட முயன்றிருக்கலாம். எனினும், அவன் தவறு கண்டபோது அவன் அறமனையாள் அவனை நெறி நிறுவுவது அவளுக்கு அறமும் அழகுமாமன்றித் தவறாமா றில்லை. ஆனால், அவன் முழுதுங் குற்றமற்ற சிந்தையனாக் கருதற் கிடந்தரா திடர்ப் படுத்துஞ் சில சான்றுகளு மீண்டுக் கருதற்பாற்றாம். முதற்கண், மக்கள் நால்வர்க்கும் வேற்றுமையுணர்வேயுற்றிலாக் கைகேயி போலாது, பெண்ணியல்பால் உளத்தரும்பும் வேற்றுமையுணர்வை அறிவாற்றலால் அறவேமாற்றிய கோசலைபோலாது, தசரதன் தன்மக்களுள் இராமனிடம் அதிகப்பற்றுடையன். இதை வான்மீகர் அயோத்யா காண்டம் 1, 2, சருக்கங்களிற் கவிக்கூற்றாயும், 8-வது சருக்கத்திற் கூனிகூற்றாயும், 11-வது சருக்கத்திற் றசரதன்வாய்க்கூற்றாயும் கூறி வற்புறுத்தியுள்ளார். மகவின்றி நெடுங்காலம்வருந்திய மன்னவன், முதுமையில் முதற்கிடைக்கப்பெற்ற மகனிடத்து விசேசப்பிரியம் பாராட்ட வேறுகாரணம் வேண்டாவே. அப்படியிருக்கப் பரதனினும் இராமனிடம் இவன் தந்தையன்பதிகரிக்கப் பிறிதொருநியாயமும் மந்தரை வாயால் வான்மீகர் தந்துள்ளார். இளமையிலேயே பர
தனை யவன்பாட்டன் கேகயனிடம் நெட்டிடைநிற்க விரும்பி விட்டுவைத்த கைகேயி செயலும், விரும்பா அதன்விளைவுஞ் சுட்டிக் கூனிகூறும் இயலழகு சிந்திக்கத்தக்கது. "தாவரங்களிற்கூட அண்மை நெருக்கத்தால் ஒன்றையொன்று தழுவிப் பற்றுடையதாகும். அப்படியிருக்க, அவ்வித நெருக்கத்தாற் சேதனங்களுக்குண்டாம் நேசத்தைச் சொல்லவும் வேண்டுமா? மன்னவன்பக்கத் திடையறாதிருக்கு மிராமன்பால் அவனுக்கு ஊறுமன்பளவு பரதனிடத் தெழாதவாறு, சிறுபருவத்தே தந்தைக் கவனைச் சேட்படுத்தி வைத்ததொன்றே செய்து முடித்தது"*, என்ற மந்தரை விநய வாக்கு மக்கள் மனப்பற்றின் பண்பும் மூலமும் பகுத்தெடுத்துரைக்குமோ ருண்மையின் நுண்மை காட்டும்.
---------------
* சருக்கம்-8
இவ்வாறு இயல்பில்முளைத்து, அண்மை நெருக்கப் பற்றால் தழையும் அரசன் பெருங்காதல், பரதன்பிரியப் பக்கமகலா இராகவனின் இளமை எழில் குணவியல்புகளால் நாளும் காழ்த்து, வயிரமேறி முதிர்வதாயிற்று. காரண மெதுவாயினும், மன்னனுக்கு மற்றை மக்களினும் இராமனிடம் அதிகநேசமும் ஆசாபாசமும் இருந்தது உண்மை.
இரண்டாவதாக, மிதிலையில் மக்கள் மணவிழாக்கண்டு மகிழ்ந்து திரும்பியவுடன், தசரதன் பரதனை வேறு விசேட காரணமின்றிக் 'கேகயத்துக்கேகென' ஏவி, விரைந்தனுப்புகின்றான். 'நாமநீ ரயோத்திமாநகர் . . . . . . . . . நண்ணின (புதுமணப்புதல்வர் நால்வ) ரின்பத்துவைகு நாளிடை, . . . . . . . . அண்ணல், அப்பரதனை நோக்கி' . . .
'நின்முதுதாதை நிற்காணிய விழைவதோர் கருத்தனாதலின், . . . . . கேகயம்புக. . . . . . நீபோதியென்றனன்', -என்ற பரசுராமப் படலக்கவிகள், தசரதன் பரதனை நாடகற்றும் பரபரப்பைக் குறிக்கும். வம்ப மண வாழ்க்கை நலந்திளைக்கும் இளம்பருவத்தே, சல்லாப மணப்பாயல் குளிராமுன் அதனைச் சுருட்டி மடக்கிச் செருகச்செய்து பரதனை மட்டும் நெட்டிடைபோக்கிப் பாட்டன் பக்கலுய்க்க மன்னன் நினைத்ததற்குக்காரணம், பண்டு பலகாலும் பழகிய கிழப்பாட்ட னவனைப் பார்க்கவிரும்பியதாக முன் மிதிலையிற் கேட்டு வைத்ததன்றி வேறில்லை. மற்றை மக்களுக்கு மாதா மகரில்லையோ? அன்றி, அவர் தம் பேரைக்காணிய விழைவாரில்லை கொல்லோ? இராமனும் இளையவனும் அருகிருக்கப் பரதனுங் கடையனும் புறம் பெயரச் சக்கிரவர்த்தி திருவுளங் கொண்ட தன்மையென்னோ? அன்றியும், சத்துருக்கனுக்குக்கேகயம் மா துலர்மனையன்றாகவே, அவனுந் தன் புதுமணப்பாயல்நலத்தை அவ்வளவு விரைவில் வெறுத் தொதுக்கப் பரபரக்கப் போதிய நியாயமில்லை. இவ்விரு மக்களையும் மணப்புதுமகிழ்ச்சிக்கிடையே தூரமான கேகயத்துக்கு விரைந்தனுப்ப மன்னவன்கொண்ட விபரீதவிருப்பத்தை வான்மீகரும், பாலகாண்டம் 77-வது சருக்கத்திற் குறித்திருக்கின்றார். "பரதர் இருந்தால் இராம பட்டாபிசேகத்திற்கு இடையூறுண்டாகுமென்று அஞ்சி, அவரை மெதுவாக மாமன்வீட்டுக்கு அனுப்பிவிட்டு, அந்தப் பயத்தை விலக்கிகொண்டு இராமனுக்குப் பட்டாபிடேகத்தைப் பண்ணிவைக்கப் போகின்றார்"*, என்று கைகேயிக்குக் கூனிவாயால் இதனையே
மீண்டும் வான்மீகர் வற்புறுத்திவைத்துள்ளார். அன்னாரை ஆங்கு அன்று கடிது "போக்கிய பொருளெனக் கின்று போந்தது" என்ற கம்பர் கூனிவாய்க் கூற்றும் இதுவே குறிக்கும்.
இனி மூன்றாவதாக, இதனோடியைந்துளதான மற்றொரு செய்தியும் மறக்கற்பாற்றில்லை, பரதன் நகர் விட்டகன்றதும், தசரதன் தன்னாட்சியில் இராமனைப்புகுத்தி இறைமைத்துறையிற் பிணைக்கின்றான்; இஃது, அவனை இளவரசாக்குந் தன்விருப்பத்தை வெளிப்படுத்துமுன் தசரதன் செய்த காரியம்** சிறிதுகாலம் அபிடேகமாவது வெளிப்படையான ஆட்சித்தொடர்பாவது இன்றி அரசியலதிகாரங்களைத் தந்தை சார்பிற் செலுத்தி, உழைஞரையும் குடிகளையும் தான் அறிந்தும் அவருக்குத் தன்னை யறிவித்தும் நெருக்கம்பற்றியெழும் நேசத்தொடர்பு
செய்து கொண்டபின்னரே, மன்னவன் அவனை முடிசூட்ட வேட்குந் தன்னுளத்துண்மையை உற்ற சுற்றத்தவருக்கும் உழைஞருக்கும் தெரிவிக்கலானான். ஆட்சிக்குரிய இராமன் ஆளுநாளெய்துமுன் ஆளப்பழகும்படி பண்ணுவதில் என்ன புதுமை யென்பார்க்கு, பரதனில்லாத காலமே அதற்குரியதாகத் தசரதன் கருதக் காரணந்தானென்னோவென்று அவரைச் சிறிது சிந்திக்கக் கேட்போம்.
--------------
* அயோத்யா காண்டம்-7 வது சருக்கம்
** சருக்கம்-77. சுலோகம்-21
இப்படித் தான் கருதியபடி இராமன் குடிகள் அரசியலதிகாரிகளின் அபிமானத்தையடையும்வரை, அவனுக்கு அரசு தருவதற்குள்ள தன் ஆசையைத் தசரதன் மறைத்து வைத்தான். பின் நாளடைவில் அந்நிலை அவனடைந்தானென்று கண்டதும், வேந்தன் தன் விருப்பை வெளிப்படுத்தி நிறைவேற்ற விரைகின்றான். இது நான்காவதாக நாம் கருதத்தக்கது.
முதலில் இராமன் அரசியற்றுறை பழகுவதற்குத் தான் பரதன் ஊர்ப்பக்கத்தும் இருக்கப்படாதாயிற்று. பிறகு இராகவனுக்கு முடிசூட்டி அரசை அவன்பாற்படுத்த விரும்புவதாக வெளிப்படுத்திய புரவலன், பட்டாபிடேகத்துக்கும் பரதனில்லாத சமயமே பொருத்த முடையதாகக் கருதுவானேன்? அதுவே தன் திருவுளமென்பதை அவனே இராமனிடம் ஏகாந்த சல்லாபத்தில் வெளிப்படுத்துவதாக வான்மீகத்தால் அறிகின்றோம். "பரதன் தேசாந்தரம் போயிருக்கின்றான் என்றைக்குப் பரதன் மாமன் விட்டுக்குப் போனானோ அன்று முதல் உன் அபிடேகத்துக்குத் தக்ககாலம் என்பது என் கருத்து. அவன் இப்பட்டணத்துக்குத் திரும்ப வரா திருக்கும்வரை தான் உன் பட்டாபிடேகத்துக்குத் தகுந்த காலம் என்று எனக்குத் தோற்றுகிறது, . . . . . . . . ஆகையால்தான் நாளையே உனக்கு இளவரசபிடேகம் செய்ய நிச்சயித்திருக்கிறேன், " என்று இதனை வான்மீகர் அவன்வாயிற் பெய்து வைத்துள்ளார்*.
----------------------------------------------------
* அயோத்தியா காண்டம் - சருக்கம் - 4, சுலோகம் - 24 - 27
முதலிற்றகவும் பதவியுமுடைய பலரையும் அழைத்து இராமனரசெய்துவதிலவர் சம்மதமும் சார்பும் அறிந்து கொண்டு, பிறகு இராமனையழைத்து அத்துணைவலார் கூட்டத்தே அவனைப் பாராட்டி அவர்க்கினியனாக்கி, பொதுமுறையிற் சில நீதிகூறி, அவனுக்கு அபிடேகம் மறுநாள் நடக்கப்போவதால் அதற்குவேண்டிய விரதாதிகளை யனுட்டிக்கத் தூண்டிவிடுத்த தசரதன், யாவரும் போயபின் மறுபடி இராமனை யழைத்து வரச்செய்து தனியிருந்து கலக்கலானான். மன்றத்திடைப் பலரறியப் பேசியனுப்பியபிறகு, திரும்பவும் இராமனை விருவிப்பானேன்? வருவித்தாலும் தனியிருந்து பேச விரும்புங் குறிப்புத்தான் எதுவோ? இவ்விரண்டாவதான தனித்த சல்லாபத்திற்றான், பரதனில்லாமையே பட்டத்துக்குப் பக்குவகாலமெனத் தசரதன் தன் அகங்கரந்த கருத்தை வெளிப்படுத்தினதும்.
இதுவுமின்றி, இராமன் முடிசூடும் விழாவைத் தன் குடிகளோடு பிறநாட்டு மன்னவருக்கும் அறிவித்து அவரனைவரையும் வருவித்து அளவளாவி ஆலோசித்த மன்னவன், கேகயனுக்கும் அவன்பாலுள்ள சிறியன் பரதனுக்கும் அறிவியாததும் சிறிது காரணங்கேட்குங் காரியமாகும். சேய்மையன் கேகயன் என்றால், இராமாபிடேக விசயமாக முதன்முதல் தன்விருப்பத்தை வெளியிடு முன்னரே பலவூர்களுக்கும் நாடுகளுக்கும் பத்திரிகைகள் விடுத்துவேற்றுவேந்தரையும் பிறரையும் வேறுவேறாக அழைத்துச் சபைகூட்டிப் பேசநினைத்த மன்னவன். கேகயனுக்கு மட்டும் தெரிவிக்கவேண்டாமை புறக்கணித் தொதுக்கத் தக்கதில்லை. இதை முதற்சருக்கத்திலேயே குறிக்கும் வான்மீகர், "கேகயனையும், சனகனையும் தூரதேசத்தரானது பற்றி வரவழைக்க அவகாசம் நேராமையால் அரசன் 'இக்காரியம் நடந்தபின் அவர்கள் பிரியமான இக்காரியத்தைக் கேட்கலாகும்' என்று நினைத்து, அவசரப்பட்டாயினும் அவர்களை வரவழைக்க முயலவில்லை', என்று சமாதானங்கருதி யமைதிகண்டதாகக் கூறிப்போவார். இச்சமாதான நிறையுரைகளைப் பின் விசாரிப்போம். இதனை ஐந்தாவதாகக் கருத வேண்டியதொன்றெனக் குறித்துக்கொள்வோம்.
இனி ஆறாவதாக, நாம் ஈண்டெண்ணத்தகுவது இதுவாம். இராமர் பட்டாபிடேகத்தைப் புறநாட்டு நட்பு வேந்தருக்கும் பிறர் பலருக்கும் அழைப்பனுப்பி வருத்தி அறிவித்து விழவயரவிரும்பும் சக்கரவர்த்தி, தன் அரண்மனையில் தனைப் பிரியாப் பிரியை கைகேயிக்கு மட்டும் அறிவியாததேனோ? இராமாபிடேகத்துக்குத் தானெண்ணியாங்கு எல்லாம் முற்றுப்பெற்று முடியும்வரை மன்னவன் கைகேயிக்கு அதனை மறைத்தானென்பதை வான்மீகர் விதந்து கூறியுள்ளார். "அபிடேகத்துக்குச் செய்யவேண்டிய எல்லா ஏற்பாடுகளும் செய்துமுடித்து, அமைச்சராதியோ-ரனைவருக்கும் விடைகொடுத்தனுப்பி, (இராமனை இரண்டாமுறை யழைத்து ஏகாந்தத்தில் எச்சரித்தனுப்பிவிட்டுத்) தன்மாடமெய்தியிருந்த தசரதன், 'இனித்தான் நமது நட்பிற்குப் பாத்திரமாய கைகேயி அறிவாள்' என்று எண்ணியவனாய், அவள் மாளிகைக்குள் முதலிற் புகுந்தான், " என வான்மீகர் விசதப்படுத்தியுள்ள இந்த வாக்கியம் அவள் அறியாதபடி வெகு சாக்கிரதையுடன் தசரதனால் வேண்டும் ஏற்பாடு செய்யப்பட்டதை வெளியாக்குகிறது. "இனித்தான் இராமாபிடேகத்தைப் பற்றிக் கைகேயி கேட்கக்கடவள் (கேட்கலாகும்)" என்று ஈண்டுத் தசரதன் வெளியிட்ட திருவுளப் பெருவிருப்பின் குறிப்பினை விரிக்கவேண்டா. 'ஸ்த்ரீகளில் உன்னிலும் அன்பிற்கிடமானவள் எனக்கு மற்றொருத்தியும் கிடையாது'*, "நீ எப்போதும் எனக்கு நன்மையையே விரும்பும் சுபாவமுடையவள்"**, "உனக்கு இராமன் மகானுபாவனாகிய பரதனோடு சமானமாயிருப்பவன், . . . . . . . . . நீ தர்மத்தை உல்லங்கனஞ் செய்யப் பயப்படுந்தன்மையள்"@, "தேவீ! நீ நல்ல சுபாவமுடையவள்"$, என்று பலமுறை பலவாறு அவள் உண்மையன்பையும் உளத்தூய்மை புனிதவியல்புகளையும் மனமாரப் பாராட்டி வியக்கும் மன்னவன்;
-----------
*சருக்கம் 1, **சருக்கம் 10, @சருக்கம் 12,
$சருக்கம் 13
'வள்ளலிராமன் உன் மைந்தன்' என்று அவள் முன் வழங்குபவன்: அவ்விராமனுக்குத் தான் முடிசூட விரும்புவதை மட்டும் அவளுக்கு உணர்த்தினானில்லை. அது மட்டோ? கைகேயியினரண்மனையில் அவளோடிருந் திராமனைப் பார்ப்பதையும் அளவளாவுவதையுமே காதலிக்கும் முன்வழக்கமுடைய மன்னவன், சபையில் இராமனுக்குத் தன்னினைப்புணர்த்தி நீதிகளும் போதித்தனுப்பிய பிறகு மீண்டும் அவனைப் பார்க்க அழைத்தபோது, தாய்கையில் வளர்ந்திலாதவனைத் தான் வளர்த்த அன்னையாம் கைகேயி அறியாமல் தான் தனியிருந்து பேச ஆசைப்படுவானேன்? கைகேயி தன் காதலுக்குரிய பிரியை; தன்னலமே காமுறுங் காதலி: கற்பினாற் றொழுதற்கொத்த தேவி; தன்முழுக்காதற்குரிய இராமனை மாற்றவள் மகனென்றுணராமல், தானே பயந்த தவப்பயனாக் கருதி மகிழும் மங்கை. இவையனைத்தும் தானே நேரில் நன்கறிந்துவைத்தும், தசரதன் இராமாபிடேகத்தைச் சபையிற் சொல்லுமுன்னும், சொல்லி மறுநாள் முகூர்த்தமென்று அனைவருக்கும் வெளியிட்ட பின்னும் கைகேயிக்கு மட்டும் மறைத்துவைக்கக் காரணமிருக்க வேண்டும்.
இன்னும் ஏழாவதாக நாம் அறிவதாவது:- கோசலைக்கும் சுமித்திரைக்கும் சீதைக்கும் முறையே இராமன் முடிசூட முகூர்த்தம் வைக்கப்பட்டது உணர்த்தப்படுகிறது. கோசலை கேட்டுத் தானங்கள் வழங்கி, மகனலம் விரும்பி அவனபிடேகம் இடையூறுபேறாது நிறைவேறுவதற்காக மௌனத்துடன் தன்னிட்ட தேவதையைத்தியானிக்கலாயினள். அவள் அரண்மனையில் அவளைச்சூழ இராமனாக்கத்தை யறிவித்தழைக்கப்பட்ட சுமித்திரை இளையவன் சீதை முதலிய பலரும் வந்து கூடிக்குலாவிக் களித்திந்தார்கள். இவர்களிடை இராமன், தந்தை தனக்குத்தனித்துச் சொன்ன இதமொழிகளைப் பருகினபின் வந்து, தனக்கினியராய் அங்குக் குழுமியுள்ளோர் யாவரொடும் சல்லாபித்து மகிழ்கின்றான்*. இவ்வாறிச் சுற்றத்தார் பலரும் ஊரில் மற்ற ஏதிலார் அனைவரும் இராமாபிடேகத்தையறிவிக்கக் கேட்டுரையாடியிருக்க, கற்பரசி கைகேயியை மட்டும் உண்மையொன்று முணராதே பொங்கணை மேற்றனியே தூங்கவைத்ததேனோ? இராமன் பேராக்கப் பெருமகிழ்ச்சி மிகுதியில் யாருமே இத்தேவியை மறந்தார் போலும்! தெருவிற் கலகலப்பையும் திருவிழாக்கோல முழக்கையுங் கண்ட கூனி, தன்னருகுற்ற கோசலை நேசமுடைய ஓர் செவிலியைக் கேட்டுணர்ந்தாள். பிறகு அவள் சொல்லவே கைகேயி முதன்முதல் அறிவதானாள். இராமாபிடேகத்தை மந்தரைக்குச் சொல்லக்கூடாத ஒன்றாயுணர்ந்த அச்செவிலி, தன் சந்தோசமிகையால் அவசமுற்றுத் தான் அதை மறைக்குங்கடனை மறந்து மந்தரைக்குரைத்ததாக வடமொழி நூலார் விசதமாக்கியுள்ளார். **
------------------
*சருக்கம் 5 **சருக்கம் 7
இறுதியாய் இதுபற்றி நாம் கவனிக்கத் தகுவது இன்னுமொன்றுளது. இராமாபிடேகத்துக்குத் தடையேற்படக்கூடுமென்று அதை விரும்புங் கொற்றவனும் கோசலையும் எதிர்பார்த்து அஞ்ச ஏதோ நியாய மிருப்பதாக வான்மீக வரலாறுகள் விசதமாக்கும். இராகவனோடு தன் இரண்டாவது ஏகாந்தசல்லாபத்திடைச் சக்கிரவர்த்தி கூறுவது இது:- "உனக்கு நாளை இளவரசபிடேகம் செய்யப் போகின்றேன். இதுமுதல் அதற்காக நீ உபவாச விரதாதிகளை அனுட்டிக்கவேண்டும். இத்தகைய காரியங்களுக்கு விக்கினங்கள் பல உண்டாம். ஆகையால் உனது நட்பிற்குரியார் ஏமாந்துவிடாமற் சோர்வின்றி ஊக்கத்துடன் உன்னைச் சூழ்ந்து நின்று இன்று எல்லாவிதத்தாலும் பாதுகாத்திருக்கட்டும்" * இவ்வளவு முன்னெச்சரிப்புக்கும் பாதுகாவலுக்கும் அவசியமிருந்தாலன்றி, மன்னவன் இவ்விதம் பயப்பட நியாயமில்லை. மறுநாள் பட்டங் கட்டப் போவதாயும் அதற்கு அன்று உபவாசம் மிருக்கும்படிக்கும் சொல்லுவதற்குத் தனியிடத் திரகசியம் வேண்டாம். இடையூறு எதிர் பார்ப்பதாயும், அது பற்றி உண்மை நட்பாளர் காவலில் தநயனை சர்வ சாக்கிரதையாயிருந்து தற்காக்கும்படிக்கும் சொல்லும்போதுதான் ஏதோ அந்தரங்கத்துக்கு இடமிருப்பதாக வெளியாகிறது. அயோத்திப்பதியில் அரசனதரண்மனையில் அபிடேகம் நடக்கப் போகிறது. அதுவரை அரண்மனையிற்றான் இராமன் இருந்து விரதாதிகளை மேற்கொள்ளப் போகிறான். இராமனுக்குற்ற சுற்றத்தாரே அவனைச் சுற்றியிருப்பர். இதற்கிடையே அவன் சரீரப் பாதுகாப்புக்கு அவனுக்கு உற்ற நண்பர்களுள்ளும் ஏமாறவொண்ணாத் திட்ப வினையாளரைத் தெரிந்து பொறுக்கி அவனுக்கணுகப் புடைசூழ நிறுத்தி எச்சரிக்கையோடிருக்குமாறேவ ஏது வென்னை? இராமனுக்கு இளவரசு தர விரும்புவபவனோ தரணிக்கு அதிபதி;பெறுபவனோ அது பெறற்குரிய அவன் திருமகன்; அதனையே அமைச்சரும் உழைஞரும் ஆமோதித்துளார். குடிகளோ அதனை அரசனும் எதிர்பாரா வண்ணம் உவந்து கொண்டாடுகின்றார். அதற்கென அழைத்து வந்தோர், வேந்தரும் பிறரும் வேறு கூறிலர். கோசலையும் மருகியும் சுமித்திரையன்ன சுற்றத்தாரெவரும் மகிழ்ந்து வாழ்த்தலாயினர். இலக்குவன் உவகையால் இறுமாந்திருப்பன். இவ்வாறு ஒருங்கே இவரெல்லோரும் உவகைக் கடலிலிருக்க, இராமன் முடிசூடலுக்கு யாரால் இடையூறு நேரலாம் என்று இறைவன் எதிர் பார்க்கலானான்.
------------------
*சருக்கம்-4
அமரனுச்யவிக்கினங்களை ஈண்டுத்தசரதன் கருதினதாயில்லை. அது கருத்தாயின், மகன் சரீரப் பாதுகாப்புக்கு இத்தனை எச்சரிக்க நியாயமில்லை. கோமைந்தன் முடிசூடலைத் தடைசெய்ய முயலுவார் சிலருளரென்று எதிர்பார்த்தா லன்றி, இத்துணை அச்ச எச்சரிப்பும் விரிவான ஏற்பாடுகளும் ஏகாந்தத்தில் அரசன் இராமனுக்குச் சொல்லுவானேன்.
இப்படியே, இராமனபிடேக நற்செய்தி கேட்ட கோசலை, அதற்குத் தடையேற்படாதிருக்கத் தெய்வங்களைத் தொழுகின்றாள்; வானுறையுந் தெய்வங்கட்குச் சிறப்பொடு பூசனைசெய்து, இராமாபிடேகம் எவ்விதப் பகைவராலும் இடையினிற் றடைபெறாமல் ஈடேறட்டு மென்று வாழ்த்தெடுக்கின்றாள். இவ்வாறு தந்தையொடு தாயும் எதிர்பார்க்கும் தடையச்சம் எதன்காரணம் எழுந்ததாகும்? தசரதன் இப்படி நட்பாளரால் இராமன் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும்படி சொல்லும்போதே அதையடுத்துத் தொடர்பாகக் கூறுவதனாலும், அவன் தன் விருப்பத்திற்கு ஊறு எதிர்பார்ப்பது பரதன்சார்பாயிருக்க வேண்டுமென்பது தொனிக்கின்றது: 'உன்னைச் சிநேகிதர் ஜாகரூகராய்ச் சூழ்ந்து சோராமல் நின்று பாதுகாக்கட்டும்' என்று கூறியதனோடமையாமல், அதன் தொடர்பாகவே "பரதன் தேசாந்தரம் போயிருக்கிறான், அவன் அயோத்திக்குத் திரும்பிவராதிருக்குமளவுதான் உனதபிடேகத்துக்குத் தகுந்த காலமென்று எனக்குத் தோன்றுகிறது"* எனத் தசரதன் இங்குக் கூட்டி முடித்திருப்பதைச் சிறிது ஆழச்சிந்திக்கின், பரதன் காரணமாக இராமாபிடேகத்துக்குப் பங்கமேற்படலாமெனப் பார்த்திவன் பயப்படுவதும், அதனால் அவ்வபிடேகம் முடியும்வரை பரதன் றொடர்புடையார் யாருமே அதை அறியாமலிருக்கத் தான்விரும்புவதும் விளக்கமாகிறது.
----------
*சருக்கம்-4
இனைய பலவா னும், வான்மீகர் விதந்தோதும் பிறவசனங்களாலும் விசதமானவற்றை யீண்டுத் தொகுத்து நோக்குவோம். இராமாபிடேகத்தைப் பரதனுக்கும் அவன் பற்றுடையாருக்குமே தெரிவியாதுமறைக்க மன்னவன் விரும்புகிறான். கோசலையாதியோர் அதனைக்கைகேயிக்கும், அவள் சீதனச்சேடியான மந்தரைக்கும் மறையாகப் பொதிந்து போற்றுகின்றார். தனதெண்ணம் ஈடேறி முடிந்தபின்னரே இராமன் முடிசூடலைக் கேகயன் கேட்பது உசிதமெனக்கருதி அவனுக்குத் தெரிவியாமலும், 'நல்ல'னாயினும் பரதனைத் தருவியாமலும், வேந்தன் அதை முடிக்க விரைகின்றான். இது கேகயன்கேட்டு மகிழ்வதொன்றாயின் அவனுக்கு அறிவிக்கப்பொறா அவசரமும், அபிடேகவிடயமாகத் தன் எண்ணத்தைத் தான் முதலில் வெளியிட்ட மறுநாளே விரைந்து அதை முடிக்கும் அரசன் வேகமும், விளங்கவில்லை. பரதனோ ஊரில் இல்லை: கேகயனும் இதைக்கேட்டு மகிழ்வன்; என்றாற் பின் யாரால் எவ்விதத் தடை இதற்கு உண்டாகக்கூடும்? அரசனும் பிறரும் இடையூறெழுமென்று அஞ்சுவானேன்? ஏதிலர் ஏனையர் யாவரும் அறிந்தபின்னும், கேகயன் மகளுக்கும் அவள் சார்பினருக்கும் மட்டும் இதை முடியும்வரை மறைத்துவைக்க இவரனைவரும் ஆவலுறுவானேன்? இராமனிடத்து இதுபற்றி மன்னவன் மீட்டும் தனித்திருந்து பேசுவானேன்? பரதனைப் போக்கிய பின்னரே இது கருதப்படுவானேன்? அவன் இது முடியமுன் வரலாகாதென்று அஞ்சி வேந்தன் விரைவானேன்?
'பரதன் அரசுவிரும்பித் துராசையால் வலிந்து அதை வௌவவருவான், அன்றி அவனையின்றாள் மகனுக்கு அரசாக்கம் அடைவிக்கு மாசையால் இராமனபிடேகத்துக்கு ஊறிழைப்பள்' என்று தசரதன் எண்ணக்கூடுமாயின், ஒருகால் அரசனாதியோரச்சத்துக்கும் அவசரத்துக்கும் சிறிது நியாயம் எழலாம். ஆனால், கைகேயி இராமனிடத்துள்ள உண்மைப்பற்றும், நிகரற்ற நிலைத்த தூய காதலும் கம்பர் கவிகளால் மேலே நிறுவப் பெற்றது. *தசரதனுமே அதைப் பாராட்டிப் பேசுவதை வான்மீகர் வற்புறுத்த மேலேகண்டோம். oe பின்னும் தசரதனே கைகேயியைப் பார்த்து, "உனக்கு உயிர் வாழ்வினும் சிறந்தவனாயிருக்கும் இராமன், " **'இராமன்தான் எனக்கு மூத்தகுமாரன்'என்று பல தடவை நீயே சொல்லுபவள்"$ எனப் பேசுகின்றான், இன்னும், இவள் தன்பால் வைத்துள்ள மெய்யன்பின் நெருக்கையும் பெருக்கத்தையும் இராமனே சீதையிடம் பாராட்டி வற்புறுத்துகிறான்
--------------------------------------------------
*மந்தரை சூழ்ச்சி-கவி. 47, 51, 52 oe சருக்கம்:7. சுலோகங்கள்31-36;சருக்கம்:8, சுலோகங்கள் 11-19; சருக்கம் 11 முதல் 13. ** 11வது சருக்கம். $ 12வது சருக்கம்.
x அயோத்தியா காண்டம்:சருக்கம்:16, சுலோகம் 15-19
. "கைகேயி எனக்கு இதத்தையே விரும்புந் தன்மையள்; என்னிடத்தில் மிகுந்த விருப்பமுடையவள். . . . உலகத்தில் மேன்மையை விரும்பி உயர்வுள்ளுவள்"x "எனக்கு நன்மை செய்யவிரும்புபவளும், சமர்த்தையும், நான் ஆக்கம் பெறுவதில் அபிலாசையுடையவளும், எனக்கு அன்னையு மாயிருக்கும் கைகேயி, தன் கணவன் கருத்தறிந்து உவகையுடன் எனக்கு அபிடேகத்தை நடத்தி வைக்க அரசனைத் தூண்டிக் கொண்டிருப்பாள்" என்று இராமன். மாற்றன்னை மனையிலிருந்து சுமந்திரனழைக்க வந்தது கண்டு சந்தேகித்த சீதை குறிப்புணர்ந்து, கைகேயி பண்பையும் தன் பால் அவளுக்குள்ள பட்சத்தையும் கணவனிடமுள்ள கற்பு மேம்படு காதலையும் இவ்வாறு விசதமாக்கினான். இன்னும், இராமாபிடேகத்திற் கைகேயிக்குள்ள உண்மை யுவகையைப் புகழ்ந்து 'தாய் கையில் வளர்ந்திலன், தவத்தால் இவனை வளர்த்தவள் கேகயன் மாது' என்று பேசிய ஊரவர் மாற்றமும், தனிச் சல்லாபத்திற் காதலன் தன்பெயர்தருமெனுங் குறிப்பால் "என்னின்னுயிர்மென்கிளிக் கியார் பெயரீகேன்மன்ன?" என்ற சீதைக்கு, "மாசறு கேகயன்மாது என் அன்னை தன்பெயராகென" - இராமன் அன்பினோடு அந்நாட்சொன்ன மெய்ம்மொழியும், இராமன் கைகேயி இவர் ஒருவர்மேல் ஒருவர் வைத்துள உண்மைக் காதலின் வண்மையைக் காட்டும் தசரதனைப்போலவே இராகவனும் இவளுக்குள்ள இராமாபிமானத்தைப் பலவாறு பாராட்டியிருப்பதோடு, கைகேயி "தர்மத்தை உல்லங்கனஞ்செய்யப் பயப்படுந் தன்மையள்" - என்ற தன்தந்தைகருத்தையே "உலகத்தி லுயர் நெறியிலேயே விருப்பமுடையவ ளிவ" ளெனத்தன்மனைவியிடம்கூறி, இவள் அறவியலை வலியுறுத்துகின்றான்' இவள் 'மாசற்ற' மனத்தூய்மையையும், நேரற்ற இராமாபிமானத்தையும் நினைத்தே, "இராமனைப்பயந்தஎற்கு இடருண்டோ?" என் றவள்வாய்ப் பெய்துவைத்ததோடமை யாது கம்பர், "வேற்றுமையுற்றிலன். . . . . " என்ற தன் னழகிய பாட்டிற் கவிக்கூற்றாயிவ ளீடிலாப்பீடுபேணி விளக்கி
வைத்துள்ளார்.
இனிப் "பங்கமில்குணத்து" ப் பரதன் பெருங்குணத்தைச் சங்கிப்பாருமுண்டோ? அரசனா லேவப்பட்டு, மாதுலன் மனைமேவிக்கேகய மன்னனாற் சகலசத்காரமும் உபசரிப்பும் விரும்பிய விரும்பியாங்கெய்தி யனுபவிக்கும்பெற்றியுமுற்றதோடு, அவன் பெருங்காதலும்பெட்பொடுபேணும் பிரியமும்பெற்று வாழும் பரதன், அப்பெருவாழ் விடையதை மகிழாமல், "தந்தை வயோதிகர். அரசியற் பாரத்தைச் சுமக்கமுடியாமற் றளர்ந்திருப்பவர். அவர்பக்கம் விட்டகலா தவருக்குப் பணிவிடைசெய்யவேண்டு மிக்கால மிங்கு வீண்கழிகின்றதே, " என்றனவரதம்தன் பரிவுடைச் சிந்தையி னினைந்து பரிதாபப்படுவதாக் வான்மீகர் கூறு கின்றார். * இதனா லிவன் பிதுர்பக்தி விகசிக்கிறது. இவனிறைகுணத்தவன் என்பதை யிருபெரும்புலவரும் தசரதன் வாயால் விளக்கியுள்ளனர். "உன் தம்பி பரதன், சான்றோர் நெறியிற் சால நிலைத்த வுள்ளத்தன்; உன்னை யநுசரித்தே நடக்கும் தன்மையன்: தருமத்திற்றானே தன்மனஞ்செலும் பெற்றியன்; அடியோடு 'ஐந்தவித்து' விளங்கும் ஜிதேந்திரியன், " என்று மன்னவ னிராமனிட மவனை வாயார வாழ்த்துகின்றான். ** பின்னுங் கைகேயிக்கவனைக் குறித்து வேந்தன் கூறுவதிது:- "நீ நினைக்கிறபடி பரதன் அரசை அங்கீகரிப்பனா? அவன் தருமத்தி லிராமனைக் காட்டிலும் மேலானவனென்று நானுணர்வேன். அறப்பெருந்தகையான பரதன், நீ யாதுசெய்தபோதிலும், இராமனை விலக்கி நாட்டைத் தா னங்கீகரிக்கமாட்டான், " என்று பரதனைப்பற்றிய தன்னுள்ளத் தூன்றிய வுணர்வை வேந்தன் வெளிப்படுத்துகின்றான், *** "கொள்ளான் நின்சேய் இவ்வரசு, "**** என்று, கம்பரு மவன்வாயாலிதே சந்தர்ப்பத்திற் பரதனுயர்குண மனத் தூய்மைகளை வலியுறுத்தியுள்ளார். இவற்றாற் றசரதன் பரதனுள்ளக்கிடை நன்கறிவானென்று புலப்படுகிறது. அப்படியிருக்க, அவனில்லாத காலமே இராமாபிடேகத்துக்கு நல்ல சமய மென்றும், அவன்வந்தா லதற்குத் தடை நேருமென்றஞ்சி வருமுன் முடித்துவிடவேண்டுமெனவும் தசரதன் அந்தரங்கத்திலிராமனிடம் பேசுவதற்கு, அறமற்றதோர் சார்பு தன்னெண்ணமாகலான் அறவள்ளலான பரதன் காரணமாக அது தடைப்படலாமென்று தன்குற்ற நெஞ்சிற்றானே யஞ்சலாயினா னென்பதன்றிப் பிறிது காரணம் காண்பதரிது.
---------------
*சருக்கம் 1. சுலோகம் 3-5. **சருக்கம் 4. சுலோகம் 26.
***சருக்கம் 12. சுலோகம் 61. ****கைகேயிசூழ்வினை கவி 26.
அன்றியும், பரதன் பாவமேறொணாப் புனிதமனப் பாங்கை மிகப்பாராட்டி, "பரதன் தருமசுபவானல்லவா? அதனாலவன் நெறிநின்று அறஞ்சொல்லித் தந்தைதாயரை யாற்றுவான்" என இராம னேகாந்த நிலையிற்றனக்குத்தானே அமைதிகாண்பதாக வான்மீகர் கூறுகின்றார். * இன்னும் காட்டிற்குவரும் பரதனைக் கருத்தறியாது சந்தேகப்பட்டு வெகுண்ட இளையவனுக்கு, இராமன் பரதனியல்புகூறி யமைதிபுகட்டு நயத்தை யுணர்வோம், "எனக்குப் பிராணனிலும் பிரியத்திற்குரிய பரதன், பிராதாக்களிடத்தில் மிகுந்த பிரியமுடையவன்: அவன் நாம் வனம்பெயர்ந்த்துகேட்டுத் தந்தைக்குப் பணியாற்றும் தருமத்தைவிரும்பி மாதுலனகர் நீங்கிஅயோத்தி வந்திருப்பான்;. . . . . . என் பிரி வாற்றாமையாற் புலன் கலங்கி நம்மைப் பார்க்க வருவதல்லால் வேறில்லை;. . . எனக் கரசுகொடுப்பதற்காகவே இங்கு அவன் வருகின்றான்; பரதன் மனத்தாலுங்கூட நமக்கு அபகாரத்தை நினைக்கில்லன்; . . . . . . உனக்கரசைக் கொடுக்கும்படி நான் மனமின்றி வாய்மாத்திரமாகச் சொன்னாலு முடனே கொடுக்க இசைவானன்றி வேறுரையான்;"** என்றவன் நல்லியல்பும் அறம்படிந்த மனப்பான்மையும் நன்கறிந்த இராமன் எடுத்துரைத்துப் பாராட்டுகின்றான்.
--------------------------
*சருக்கம் 46, சுலோகம் 7, **சருக்கம் 97.
மேலும், எனக்கபிடேகமில்லை; "நின்காதற்றிருமகன்" பரதனுக்கே பட்டமென்று வந்து சொன்னதன் மகன்மொழிகேட்ட கோசலை, அவன் "நிறைகுணத்தவன்; நின்னினுநல்லன்;"** என்றிராமனிடம் பரதனறவியல்புகூறிப் புகழ்ந்ததையும், பின் இராமன் குறித்த எல்லையிகந்து வராமைகண்டு தீப்பாயமுயலும் பரதனைத் தடுப்பவள்,
"எண்ணில் கோடி இராமர்கள் என்னினும்,
அண்ணல்! நின்னருளுக் கருகா வரோ?
'புண்ணியம்' எனும் நின்னுயிர் போயினால்,
மண்ணும் வானும் உயிர்களும் வாழுமோ?"
(மீட்சிப்படலம். செய்-232).
என்று தன்னுளங்கசிந்துருகி யாற்றியதையு மறியாதாரில்லையே! இன்னும் பரதன் பின்னொழுக்க முழுதும் அவனைச் சந்தேகிக்க நியாயமே கிடையாதென்பதைப் பறையறைகின்றதே.
இவ்வாறு வேந்தனும் கோசலையும் இராமனும் பரதனைக் கோதில் அறக்குணக்குரிசிலாப் பன்முறையுங் கொண்டாடக்காணும் நாம், பரதன் காரணமாக இராமாபிடேகத்துக்கு ஊறு நேருமென்று தசரதனஞ்சவும், அவனில்லாதபோ ததைமுடிக்க வெகுவேகப்படவும், இராமனை அபிடேகப்பேச்சு வெளியிடப்பட்டபின் அதுமுடியும்வரை சோர்வின்றித் தற்காத்துக்கொள்ளும்படி யவனிடம் தனித்துக்கூறவுங் காரணம் காண்ப தரிதன்று. மகவின்றி நெடுங்காலம் வருந்திய மன்னவன், முதுமையிற் றனக்கு முதற்கிடைத்தமகனான இராமனிடத்திலன்பு மிகுதிவைப்பதியல்பு. அடிக்கடி யகலப்போகும் பரதனைப் போலாது, அனவரதம் அருகிருந்துவளருமவனிடத் தன்பு தந்தைக்கு வளர்ந்து பெருகுவது மியல்பே. இவ்வாறுபரதனிலு மிராமனிடம் தனக்குக் காதலதிகமென்பதைத் தசரதனே கூறியுள்ளதையும் மேற்கவிகளா லறிந்தோம். இப்படி நாளடைவி லிராமன்மீ தன்புகாழ்த்த சிந்தையில், தசரதன் அவனுக் கரசியலாக்கத்தையடைவிக்க விரும்பலாவது மியல்பேயாகும். ஆனால், கைகேயி திருமணத்தி லரசுரிமையை அவளுக்கு 'சுல்க 'சீதனமாய்த்தான் முன் கேகயனிடம் அறச்சூளுடன் வழங்கியதன் உண்மையும், அதன் விளைவியல்புகளும், தசரதன் முற்றும் மறக்கற்பாற்றில்லை. தன் புது விருப்பிற்கு முரணாகத் தன் முன்மரபுடை அறச்சொல்லு மதன்பயன்முறையுமவன்மனத் திருந் தவனைச் சுடுவதால், தன்னுள்ளமுறுத்துஞ் சஞ்சலத்தைப் பிறருக் குரைக்கவும் அறத்துறை யாற் குறைக்கவு மொல்லாமல், அவன் தத்தளிக்கு நிலையை நா மெளிதிலுணரலாகும். தூரியகேகய நாட்டில் நெடும் பல்லாண்டுகளுக்குமுன் தான்செய்த 'சுல்க'ப் பிரதிஜ்ஞை' பின் தன்னாட்சியைப் பாதிக்காமல், கற்புறு சிந்தைக் கைகேயிகணவனாகவே தானேசுவாதீனன்போல் அரசுபுரிந்து, ஆக்கத்தோடாதிக்கமு மனுபவித்துள்ளான். அதுகொண்டு தன்முன் அறச்சொல்லின் விளைவாற் பின் தன் பிற விருப்பங்கள் பீடிக்கப்படாமல் முடிக்கலாகுமென் றெண்ணலானான். தன் சூளறச் சுல்கக் கொடையாற் பரதனுக்குப் பிறப்புரிமையாய்விட்ட அரசாக்கத்தை, இராமன்பாற் காதல் மிகையா லவனுக் கெய்துவிக்க விரும்பினான். மிகச் சிலரன்றித் தன் முன் சொல்லறச்சூளை யறிந்தவரில்லை யென்றுணர்வான். தன் பெருமகளுக்காகச் 'சுல்க'ச்சூள் பெற்று வைத்தவனும். அதைப் போற்றவல்லவ னுமான கேகயனோ தூரதேசத்தான். அவ்வறச்சொல்லைத் தான் துறப்பதாயறியி னொருகால் அவன் பரதனுரிமைபேண வருவனாகையா லவனுக்குத் தன்னெண்ணம் முடியும்வரை தகவலெட்டாதிருக்கத் தசரதனாத் திரப்படுகிறான். கேகயனுக்குமட்டும் அழைப்பனுப்பாதிருந்தாற் கைகேயி சந்தேகத்திற் கிடனாகும்: கேகயனும் குறைகூறுவான். அவனுக் காளனுப்பாமைக் கோர் வியாஜம்வேண்டும். அஃதவனாடு சேய்மையதாவதிற் சமைக்கப்பட்டது. மிதிலைக்கு அறிவித்துக் கேகயனுக்கு அறிவியாமை விபரீதவுணர்ச்சியை யுடனே விளைக்கும். மேலும், கைகேயிக்குச் சேய்மைபற்றிய வியாஜத்தைப் பொருந்தப் புனைவதற்கு, மிதிலையார்க் கறிவியாமை பொருந்துமோர் கருவியாகும். மிதிலையர்கோன் பின் உண்மையறியுங்கால் தாமதம் தன் மருகனபிடேகத்திற் கிடையூறாமென்பதுணர்ந்து தனக்குரை யாமையை வெறுக்காமல், தன் மருமகனாக்கத்தை முடித்துவைத்த சூழ்ச்சித்திறம்வியந்து அதன்பயன்பற்றி நயப்பதுங்கூடும் எனத் தசரதன் கருதினான். சனகனையு மழைத்திலாமை கூறிப் பின் கேகயனுக்குச் சமாதானங்காட்டவுமியையும், விளைவும் பயனுஞ் சீர்தூக்கி, சனகனுக்கும் கேகயனுக்கு மறியாமல் இளவரசபிடேகத்தை இராமனுக்கு விரைந்துசெய்வதே தனதெண்ணத்தை முட்டின்றி முடிக்கு முறுதிவழி யெனக்கருதி, தசரதன் அவ்விரு சம்பந்தியரசருக்கும் இராமாபிடேகத்தை யறிவியாமலிருக்கத் துணிந்தான்.
6. கோசலைமனக்கோள்
இனிப் பண்டறிகிழவி கைகேயிசீதனச் சேடியான கூனி கேகயத்தில் அரசன் அறச்சூளறிவளாகவே, அதை மறைக்க விரும்பும் கோசலையாதியோர் வேந்தன் தன் சுல்கச்சூளறங் கொன்று இராமனுக்கு அரசுதர முயலுவதை அவளறியாது மறைக்க அவாவுகின்றனர். கைகேயி முன் நேரில் இதையறியாள் என்பது உய்த்துணரலாகும். மணவறையில் மணச்சடங்குக்குமுன் வரனைக்காணல் ஆரியவழக்கன்மையானும் சுல்கச்சூள் கைகேயிக்காகக் கேகயனிடம் தசரதனாற் செய்யப்பட்டதாக வான்மீகர்
விசதமாக்குவதானும், கூனிவாயால் அதைக் கேட்டறியும்வரை பரதனுக்கு அரசாமாறில்லையென்று மறுத்து இராமன் அபிடேகத்தை ஆமோதித்த கோமகள் மந்தரைவாயால் முன்வரலாறு கேட்டபிறகே, அபிடேகத்தைத்தடுக்க இசைந்துள்ளதானும், ஒன்று அவள் முன் அவ்விவரம் அறிகிலள், அன்றேல் அதனை மறந்தனள், என்பது வெள்ளிடைமலையா விளங்குவதாகும். ஒருகாற் பரதன் பாற்பரிவுடைய பிறர்யாரும் அதையறிந்தவர், இராமனபிடேக முயற்சிகண்டு, பரதன் சார்பாக வரக்கூடும்; அவ்வாறு எதிர்பாராவண்ணம் யாராவது வருவரேல் அவர் முயற்சியை விலக்கி இராமனுக்கு அபிடேகபூர்த்தியாக்க விரும்பியே அவனைச் சோர்வில்தோழராற் றற்காத்துக்கொள்ளும்படி அரசன் எச்சரிக்கலாயினன்.
கோசலையும் இப்பழஞ்சரிதம் அறிந்திருக்க வேண்டு மெனவே தோன்றுகிறது. அல்லளேல், வேந்தனைப் போலவே இவளும் இராமன் அரசுசெய்துவதற்கு ஊறு நேருமென்று அஞ்சக் காரணமில்லை. இவள் சேடிமார், இராமாபிடேகத்தைச் சுமித்திரையாதியோர்க் கறிவித் தழைத்தவர், கைகேயிக்கும் மந்தரைமுதலிய அவள் சார்பினருக்கும் மட்டும் அதை மறைக்க விரும்பார். இராமனுக்கு இளவரசபிடேகம் பிறப்புரிமை; அதனால் அவனுக்கு அது திட்டமாகச் சித்திக்குமெனத் தெரிந்த கோப்பெருந்தேவி நிலைமைக்கு மாறாகக் கோசலை தன்மகனுக்கு அதைக் கூட்டுவிக்கப் பெரிதும் தான் ஆசையும் தாளாண்மையும் உடையவளாகவும், முடிவிற்றன் முயற்சி முற்றுப்பெறுங்காலம் அணுகியுணர்ந்தபோது தன் அறிவாற்றலால் ஆக்கிய ஆக்கத்துக்கு அவள் தன் அறிவளவில் திளைத்துக் களித்ததாகவும், வான்மீகர் விசதமாகவும் கம்பர் சிறிது விநயமாகவும் சுட்டியுள்ளனர்.*
இராமனுக்கு அரசில்லையெனக் கேட்டு அவள் அலக்கணுற்றரற்றியதா வடமொழிப் புலவர் அவளியல் விளங்க வழங்கிவைத்த படிற்றுரை பலவற்றைக் கம்பர் குறைத்து மறைத்தனர். பரதனுக்கு அரசுதர இசைந்த தன்தாதையைக் கொன்றேனும் சிறைசெறித்தேனும் தமயனுக்கு முடிபுனையப் போவதாய்க் கோபவெறி கொண்டு பிதற்றிய இளையவன் பீழைபடுமாற்றத்தைக் கடியாது கோசலை அதனைச் சிறிது செவியேற்குமாறு இராமனையும் தூண்டினதாயும், அதைமறுத்து இராகவன் அறமொழியெடுத்தோதி அறிவுறுத்தியபிறகே அவள் கணவனுக்குத் தான் கற்பறமாற்றுங் கடமையை நினைந்து அதற்கு இசைந்ததாயும், பின் பரதனைச் சந்தித்து நிந்தித்த தாயும் மெய்ம்மறையா வான்மீகர் கூறுகின்றார்$
-----------
*வான்மீகி – அயோத்தியா காண்டம் சருக்கம் 4-20. கம்பர் – மந்திரப்படலம் - மந்தரை சூழ்ச்சிப்படலம், $ சருக்கம் 21. சுலோகம் 4-24. சருக்கம் 75.
பரதனைப் பாராட்டிப் பேசி, அவனுக்கு ஆசி கூறி, அவன் பட்டாபிடேகத்தை வெறுக்காமல் இராகவன் வனம் போகாது தன்னோடிருக்க மட்டும் வேண்டினளாகக் கம்பர் கோசலை குணத்தைச் சிறிது மாற்றிச் செப்பனிட்டு மாற்றேற்றி வைத்துளார். கோசலை மன்னவன் சுல்க அறச்சூள் அறிந்திருக்க வேண்டுமெனச் சுட்டற்குரிய துணைச் சான்று இன்னுமொன்றுளது. இவ்வரலாற்றுண்மையை இராமனே பரதனுக்கு முதலில் வெளியிடுவதாக இரு மொழிப் பெருங்கவிகளும் முறையே வலியுறுத்தக் காண்கின்றோம். தனக்குத் தந்தையார் முடிசூட முயன்றபோது இராமன் இஃதுணரானென்பதே பொருத்தமாகும். முன்னரே பரதன் பிறப்புரிமையைத் தான் அறிந்திருப்பின், "செப்பருங்குணத் திராமன்" தந்தை விருப்பத்திற் கிணங்கி இத்துணை விபரீதவிளைவுக்கு இடந்தரா னன்றோ? அறிந்து வைத்தும் அறத்துறை திறம்பிப் பரதனுக்குரிய அரசைத் தான் அடையவிரும்பினன் என்பது "தாய்மையுமன்றித் தருமும் தழுவிநின்றா" னியல்புக்கும் பெருங்குணத்துக்கும் பொருந்தா தன்றே? பின் பரதனுக்கு இதை அவனே பகர்வதால், யார்மாட்டிதனை அவன் கேட்டறிந்தான்? தந்தையொடு தன் பட்டாபிடேக விடயமாய்ப் பேசி வந்த பின், நீங்கும் வரை தசரதனுடன் இராமன் மீண்டும் சல்லாபித்திலன் என்பர் கம்பர். இருவரையும் மூன்று முறை சந்திக்கச்செய்த வான்மீகரும், தசரதன் தநயனுக்கு இவ்விவரம் அறிவிக்க இடம் தரக் காணேம். அதனால் வேந்தன் மூலம் இதனை இராமன் அறிந்தபாடில்லை. கோவிந்தராசராதி உரைகாரர், சுமந்திரராதியரால் இராமன் இதைக் கேட்டிருக்கலாமென்று ஊகிக்கின்றனர். ஆனால், தென் மொழி வட மொழிகளில் மன்னிய இருபெருங்காவியக்கதையும் சுமந்திரராதியோர் இதனைச் சொல்லகில்லாமையைத் தெளித்து வைத்திருக்கின்றது. * ஆகவே, பழமையுணர்ந்த தன் அன்னையாலாதல் அன்றேல் அவள்சார்பினராலாதல் இவ்வுண்மையை இராகவன் கேட்டிருக்கவேண்டுமென்று அறியகிடக்கின்றது.
-----------
* அயோத்தியா காண்டம் சருக்கம் 59. கம்பர் - நகர்நீங்கு படலம்.
கோசலைக்குச் சுல்கப்பழஞ்சரிதம் தெரிந்திருக்க வேண்டுமென்பது இன்னுமொரு காரணத்தாலும் ஊகிக்கலாகும். கைகேயி வரம்கேட்டு இராமாபிடேகம் தடைப் பட்டபிறகு "முன்னவனரசைப் பின்னவனுக்கு ஆக்குவது முறையன்று" என வசிட்டமுனியும் இலக்குவனும் சித்தார்த்தராதி மந்திரிமாரெல்லவரும் முழங்கவும், குணமணப் படுத்தப்பட்ட கம்பரின் கோசலைகூட (முதல்மகனிருக்க) அரசைப் பின்னவனுக்குக் கொடுப்பது "முறைமை யன்றென்பதொன்றுண்டு" என்று இலேசாகச் சுட்டிப்போந்த தல்லாமல், அஃது அறமற்றதென்றேனும் பரதனுக்கு அது செல்லாதென்றேனும் சொன்னதில்லை. யாண்டும் தன்னியலிழவாத வான்மீகரின் கோசலையோ, கோபத்தாலும் தாபத்தாலும் அறிவுமயங்கினவிடத்தும், இறைவனைச் சீறிய இலக்குவன் "இன்னாச்சொல்லைத்" தனக்கு இதமெனிற் செவிக்கொள்ளும்படி தன் தநயனைத் தூண்டினளல்லால், இராமன் அரசை இளையபரதனுக்குத் தருவது அறமன்றென்று ஒருவார்த்தையேனும் அவள் பிதற்றற் பிரலாபப்பிரத்தாபமுழுவதிலும் பேசாமை சிறிது சிந்திக்கத்தக்கதாம். பர்த்தாவையும் பரதனையும் பிற பல தூறிநொந்து கூறுமவள் பிறர்போல இதனைத் தவறெனச் சுட்டாமையால், பரதன் அரசுபெறுவது அறமற்ற தென்றவள் கருதவில்லையென்று கொள்ளலாகும். இவ்வுண்மையறியாத இலக்குவனுக்கும் ஏனையருக்கும் பரதன் அரசு பெறுவது தவறாகவே படுவது இயல்பாகலான் அவர்தம் உள்ளக்கிடையை அவ்வாறே வெளிப்படுத்திய வான்மீகர் உண்மையுணரவல்ல அறிவுட னாற்றல்சால் கோசலை வாயில் அனையசொல் லொன்றுங் கொடுத்திலர். பழைய சுல்கவரலாறறிந்தவளுளத்திற் பரதன் அரசெய்துவது அறத் துறையன்றெனத் தோன்றாதாகலானும், முறையெனவே தெரியுமாகலானும் வான்மீகருண்மைக்கோசலை தன் கோப தாபப் பிரலாபத்திலும் அதனை முறையன் றென மொழிந்தாலில்லைபோலும்.
இவை பலவற்றானும், பண்டையறத்துறையிற் கைகேயிக்குச் சுல்கசீதனமான அயோத்தியரசு பரதனுக்கே பிறப்புரிமை; அதனை இராமன்பாலுய்க்க விரும்பிய மன்னவனும் அவன்கோப்பெருந்தேவியுமே தவறிழைக்க விரும்பினவர்; தந்தவ றுறுத்துஞ் சிந்தையராகையால், அவ்விருவருக்கும் இடையூறு எழுமென்ற அச்சமும், பரதன்சார்பின ரறியாமல் இராமாபிடேகத்தை விரைவில்முடித்துவிடவேண்டுமென்ற வேட்கை வேகமும் கரைகடந்து கைம்மிகுந்தது; எனக் காண்போம்.
----------------
7. முடிந்ததுகடியா முதுமுறைவிரகாத் தன்னவாமுடிக்கும் மன்னவன் முயற்சி
சொல்லறந்தொலைத்து மகவாசையால் ஒருகால் மன்னவன் இராமனுக்கு அரசுதர மனங்கொண்டாலும், பரதனில்லாதபோது இராமனுக்கு அபிடேகம் பண்ணிவிட நினைத்தாலும், உரிமையற்ற இராகவனுக்கு அது நிலைப்பதில்லையாகவே அவ்வீண்முயற்சியில் பிரவேசித்துத் தன்னைப் பாவம் அல்லது பழிக்கு இடமாக்கிக் கொள்வனோ வேந்தன்? என்ற வினா எழலாம். இவ்வினாவை யெழுப்பி, இவ்வளவறி-யாதானல்லாத பார்த்திவன் செயத்துணிந்த இராமாபிடேகம் செம்மையுற வுரிமை இராமன் பாலுண்மையை வலியுறுத்துமென எளிதிற்கூறி, அறத்துறைக்கு அளவாகும் பரதனும் இராமனும் விதந்துகூறி விளக்கிய வரலாற்றைப் புறக்கணிக்கவிரைவாரும் சிலர் உளர். ஆற்றலும் அறிவும் ஏற்றம்பயக்கத் தங் காதற்றிரு மகனுக்கு ஆக்கமும் புகழும் ஆக்கமுயலும் கோசலையும் கோமானும் குறுகிய நோக்குடையரல்லர். "ஆற்றல்சால் கோசலை"யோ "விரியுஞ் சிந்தனை"யுடையள். ஏந்தலும் ஏற்பனவோர்ந் தெண்ணியமுடிக்கும் விரகுடையான். இருவரும் நன்கு ஆழ்ந்து சூழ்ந்து எட்டநோக்கி ஆவனதேர்ந்து ஆற்றவல்லார். தசரதன் சுல்க அறச்சூளால் இராமன் அயோத்தியரசுக்குரியனல்லன், என்பதை நன்கறிவார். தம் கான்முளையான இராகவன்பால் அனுராகம் மிகவுடையார். அவனுக்கு அரசுரிமையாக்கி வைக்க ஆவல் அளவிறந்து வளரும் உளமுடையார்; "நடந்து முடிந்ததை நன்றெனக் கொள்ளும்" - ஆரியர் தொல்லறத்துறை யிவரறிவார். "முடிந்தபின்னதனைக் கடிந்திகப்ப தில்லை" "அறமுறை சிறிது திறம்புவதேனும்" முற்றுப் பெற்றதை முடிந்ததாக்கொள்வதே முறை, என்பது ஆரியர்அறநூல்விதியொன்றாகும். இன்றுவரை இவ்விதி இந்து சமுதாயத்தவர் *வழக்குத்துறையில் **வழக்காற்றில் இருந்துவருகிறது. இதையே ஆங்கில வழக்கறிஞர்
(Factum valet) 'முடிந்தது முறை' - எனும் பெயரால் வாதத்துறையில் வழங்கிவருகின்றனர். இவ்விதியுணர்ந்த இறையவனும் இராமாபிடேகத்தை அரசுக்குரிமையுடைய பரதன்பக்கத்தவரால் இடையூறெழுந்து தடைப்படுமுன் முடித்துவிடமுயலுகின்றான்.
----------------
* வழக்குத்துறை - வியவகாரச் சட்டமுறை(Civil Law).
** வழக்காறு - கையாட்சி.
முடிந்தபின் அதனைக் கடிந்திட லருமையென்றறிவானாகலின், "முடியுமுன்னர் அப்பரதன் பண்டையற-வுரிமையறிந்தார் வந்து ஆட்சேபித்திடில் இராமனுக்கு அரசு உதவாமலே போகும்; ஆட்சேபிக்க அவசியமும் அவாவும் உடையவர் அறிந்து வந்து தடுக்குமுன், இராமனுக்கு முடிசூடிமுடிந்து விட்டாற் பின் அதனைப் பேதிக்க யாரும் முயலார்; முடிந்த முடிசூட்டை முறையெனநாட்டி நிறுத்துவது சுலபமாகும்;" என்று தெரிந்துள்ள தசரதன் அவ்விதியை ஆதரவாக்கித் தன்விருப்பத்தை நிறைவேற்ற முயலுகின்றா னென்பதை அவன்வாய்வந்த மாற்றத்தாலேயே வான்மீகர் விளக்கியுள்ளார். *
-----------
*அயோத்தி-சருக்கம்-4.
பரதனையும் கேகயன்முதலிய பரதன்பாற் பரிவுடையாரையும் பற்றி மட்டுமில்லை தயரதனுக்குண்டானபயம்; இராமனைப்பற்றியும் உளதாகும். இவன் பெருங்குணப் பெருமிதமுடையவன். அறத்தை மறத்தலும் துறத்தலும் அறியாச்சிந்தையன். அறக்கடவுளனைய பரதனியல்பைப் பாராட்டி அவன்பால் மதிப்பும் காதலும்
மிகவுடையன். தன்பால் அன்பாலேனும் தவறு நினைத்துழித் தம்பி இலக்குவனையும் தன்தாயையுமே தடுத்து, இடித்து, அறம் அறிவுறுத்தி நெறிநிறுத்த விரும்பும் நேர்மையும் திட்பமும் நிலைத்த சிந்தையன். பரதனோ தமயனைத் தந்தையினும் அதிகம் பாராட்டி அன்புசெய்பவன். இராமனுக்குரியதன்றென்று அவனால் அறமுறையிற்றெளிவிக்கப் பட்டபிறகும், தமயனுக்குத் தருவதற்காவது பற்றியே தரணி தன்னுடைமையானதற்கு மகிழ்ந்து, அதை அவனுக்கு விரும்பிச் சமர்ப்பித்துவப்பவன். அதனால், பரதனைப்பற்றி மன்னவன் பெரிதும் அஞ்சக் காரணமில்லை. கைகேயியும் இராமனிடத்து அன்பும் தன்பாற் கற்புநிறைகாதலும் உடையாளாகவே, அவளைப்பற்றியும் அரசனுக்கு அச்சம் அதிகம்வேண்டா. அரசு பரதனுரிமையென்பதைச் சிறிதேனும் இராமன் அறிவனேல், பின் அதனை அவன் ஏற்கவொல்லான்; அவனையிணக்க யாராலும் ஆகாது. வைராக்கியமிகுந்த இராமன்குணமறிந்த தந்தை, அவனுக்குத்தன் தவறு வெளிப்பட்டுத் தனதெண்ணந் தடைப்படுமுன் அபிடேகத்தை முடித்துவிட அவாவுகின்றான். முடிந்தபின் இராமன் அதை அழிக்க முடியாமைகண்டு அடங்கியமைவன்; பரதன் அதைப் பெரிது முவப்பன். இறைமைக்கு உரிமைமேற்கொண்டிகலற்குரிய இவ்விருவரும் அமையவே, 'முடிந்ததுமுறை' யெனும் அறமறியும் பரதன் பாங்கினரும் இராமன்முடிசூட்டை வெறுப்பினும் மறுக்கமுயலார். தன்விருப்பம் இவ்வாறு நிறைவேறி, நிலையும் பெறுவதாகும். பூர்த்தியாகுமுன் பரதன்சார்பினர் அறிந்து தடுக்கநேரின், தன் முயற்சியனைத்தும் பாழாகும். உண்மை வெளிப்பட்டபின், பரதன் இசைவனேனும் இராமன் அரசேற்கச் சம்மதியான். பகிரங்கமாகத் தானும் சொல்லறந் துறக்கத் துணியுமாறில்லை. இவ்வுண்மையை ஊன்றியாராய்ந்து, விளைவும் பயனும் விரும்பிக் காலமும் இடமும் கருதி இராமாபிடேகத்தைத் தடுக்க வல்லாரறியாமல் வேகத்துடன் விரைவு பண்ணவும், சாமானியரால் ஒருகால் எனைத்தும் இடையே சிறுதடை நேரின் அதனை வலிகொண்டடக்கித் தன் விருப்பத்தைப் பூர்த்திபண்ணவும், வேந்தன் கருதிய காரியமும் அதற்குரிய கருவி கருமங்களும் எண்ணித் துணிகின்றான். தடுக்குந் தகையாளரைச் சேய்மையதாகிய கேகயத்தில் விலக்கிவைத்தும், பிறர் பரிவுடையார் இருப்பினும் அவருக்குத் துணையும் சார்பும் இல்லாதிருக்கத் தன் குடிகளொடுபழகிய இராமனுக்கு வலியும் சூழ்ச்சியும் வழங்கியும் தன்விருப்ப முட்டின்றி முடிய வழியமைத்துக் கொள்கின்றான். தன்சபைக்குத் தனக்கு வேண்டியவரையழைப்பதிற் பலநாட்கழியப் பொறுத்தவன், சபையிற்றான் தன் விருப்பத்தை வெளியிட்டு அவர் சார்பும் துணையும் அறிந்தபிறகு சிறிதும் தாழத்தரியானாய், மறுநாளே யபிடேகத்தை முடிக்கத் துணியலானான். இவை பலவாற்றானும், மன்னவனுளத்தில் தான் முற்றும் முறைசெய்யவில்லை யென்றுள துணுக்கமும், எனைத்தானும் தன்விருப்பத்தை முடிக்கக்கொண்ட துணிவும் வேகமும் ஒருங்குடைமை விசதமாமன்றோ.
----
இவையுமன்றி இராமனுக்கு அரசுதருமுயற்சியில் மன்னன் மாசற்ற மனத்தனல்லன், என்பதை இன்னும் பலசெயலும் அவன்வாய்ச்சொல்லுமே விசதமாக்கும். பரதன் வருமுன் மூத்தமகனுக்கு விரைந்து முடிசூட்டி முடிக்கும் தன் பெருமுயற்சியைத் தடுக்க முன்வந்த மனைவியை வாய்கொண்டமட்டும் வசைதூறி வைகின்றான். வெகுளியும் விசனமும் கரைகடந்தலைக்க உளமுளையும் வேந்தன், தன் அறப்பெருந் தேவியை வாய்கயப்புறவைவதோடமையாமல், புழுங்குமனப்புகைவாயாற் பழித்து வெறுத்துச் சபிக்கின்றான். இதுமட்டோ? எவ்வறங் கொன்றும் இறைமையாக்கம் இராமனை யெய்துவிக்கும் தன் துணிவொன்றே துறக்கொணாத் தன் உளக்கிடை, என்பதை வெகுளியால் வசமிழந்த வேந்தன்வாய் வெஞ்சொற்கள் வெளிப்படுத்தி நிற்கும். துணைவனதுதொல்லைச் சூளறச் சொற்சோர்வு சுட்டலாவதன்றென்று அதனை முற்றும் மறைத்து, கைகேயி தனக்கு அரசன்முன் தந்துளவரத்தை அன்று வழங்குமாறு வற்புறுத்துவதாயினள்.' தன் பெரு விருப்பத்தைப் பாழாக்கும் அவள் குறிப்புணர்ந்த மன்னவன் தன்பால் அவள் கொண்டுள "கற்புமேம்படு காதல்" மிகையை நன்கறிவனாதலான், முதலில் அவளைத்தன் அறமிறந்த ஆசைக் கிடை நில்லாது இணங்கி யொருப் படுமாறு பல நய வஞ்சநலம் பேசி அவளுறுதியழிக்க முயலுகின்றான். உண்மையிலூன்றிக் கற்பறங் காழ்த்த காதனிறையாற் கணவனை அறம்பிழையாது பேணத் துணிந்த பெருந்தகையாள் உரந்தளராவுளத்தளாவது கண்டு, கையறவால் மனமாழ்கி யுரப்புகின்றான். வாய்மை பேணி வரம்தரல் தவிரொணாக் கடனென வற்புறுத்தும் மனையாளுக்கு, "நீ நினைவுறுத்திய என் சொல்லறத்துறவைப் பொருட்படுத்தேன், எது பற்றியும் என்விருப்பத்தைக் கைவிடேன். " என மன்னவன் வரம் மறுக்கின்றான். "என் உயிரையேனும் விடுவேன். இராமனை விடுவேனோ? விடேன், " "நீ களிப்பின்றிச் சோர்ந்திருப்பையாயினும், கோபத்தால் அவிந்து போவையாயினும், விசனத்தால் நாசமுறுவையாயினும், மற்று உனக்கு எதுநேரினும், எனக்கு அப்பிரியமாக இராமாபிடேகத்தை நிறுத்த நீ சொல்லுவதை நான் நடத்தவேமாட்டேன்", என்று அவன்வாயால் அவன்மனக்கிடையை வான்மீகர் பகர்ந்து வைத்தார்*. கைகேயி கோலிய வரக்கொடையை மறுக்க விரும்பியும் வழிகாணாது உளமறுகும் மன்னவன், வசிட்ட முனிவந்தபோது தன் விருப்பமும் விசனமும் கூறி, இராமனைப் "புனைமாமகுடம் புனைவித்து, ஒன்றும் வனமென்றுன்னா வண்ணம்செய்து, என் உரையும் குன்றும் பழி பூணாமற் காவாய்"**, என்று அவனைத்தன் வேணவா முடித்துவைக்க வேண்டுகின்றான்.
----------
*சருக்கம்-12. **நகர்நீங்குபடலம்-கவி. 41.
இன்னும், கைகேயிக்குச் சம்வாதமுடிவில் தான் சம்மதித்து வரமிரண்டும் தந்தபின்னரும், இராமனைத் தான் அழைத்து வரச்செய்து அவன்வந்து விடைகேட்டவனிடம் தசரதன் கூறுவது இது:- "இராகவா! நான் கைகேயிக்கு வரம்கொடுத்து வஞ்சிக்கப்பட்டேன். அதனால் நீ என்சொல்லை மறுத்து அயோத்திக்கு அரசனாகி என்னை மகிழ்விப்பாய்"*** என்று தன் உளக்கிடையை விளக்குகின்றான். இவைகளினால் முன் இவன், "கண்ணேவேண்டுமென்னினு மீயக்கடவேன். என் உண்ணேராவி வேண்டினும் இன்றே உனதன்றோ?"$ என்று தேவிக்கு உரைத்ததெல்லாம் உளத்துறையாப் பசப்புரையென்பது தெளிவாகும். சொற்சோராது அறம்பேணும் தூய்மனத் துணிவுடையனேல் முன்சொன்ன சுல்கச்சூளைச் சூறையிடத் துணிந்து சூழான்; தன்னுயிர் காத்த தலைவிக்குத் தானே வழங்கிய வரம் தரமறுத்திடான். பின்னும் மனைவியிடம் "மண்ணே கொள்நீ", "ஈந்தேன் ஈந்தேன் இவ்வரம்" எனப் பரதனுக்கு அரசு தருவதாய் உறுதிசொன்னதையும் வெற்றுரையாக்கி, வேந்தன் இறுதியில் இராமனை முடிசூடிக் கொள்ளத்தூண்டவும், வசிட்டனிடம் இராமனுக்கு எப்படியும் முடிசூட்டுவிக்க வேண்டவும் விரும்பானன்றோ? இராமன் பாற்கழிபெருங் காதலால் எண்ணிச்சூழ்ந்த விருப்ப வினைதான் எதிர்பாராத வண்ணம் தடைப்பட வேகையறவுற்றுச் சிந்தையொடு செய்கையும் திகைத்த தசரதன் மனநிலையை, பரிவுடைய கம்பர் வான்மீகரைப்போல் வெச்சென வெளிப்படுத்தாமற் சிறிது திருத்தித் திரித்துக்கூறியுள்ளார்.
-------------
***34-வது சருக்கம். $சூழ்வினைப்படலம் - கவி-28.
பரதனுக்காக "மண்ணேகொள் நீ, மற்றைய தொன்றும் மறவென்று" அவளைத் தன்பால் ஒருவரத்தை மட்டும் கொண்டு, இராமனை வனம்போக்குவிக்கும் மற்றொரு வரத்தை வற்புறுத்தி வாங்காதிருக்கும்படி வரமிரந்த மன்னவன் முடிவில் இராமனுக்கே முடிசூட்டுவிக்க முனிவனிடம் வேண்டுவதால், அவன் வரந்துறவா வாய்மை-யின்மையையும் அறந்திறம்பு மனத் தவாவின் வன்மையையும் ஒருவாற்றியலாகும். இன்னும், இவன் விதுப்பும் வெட்கமும் மாறுகொண்டலைக்கத் தடுமாறுளத்தால் ஒன்றையொன்றொவ்வாது முன்பின் முரண்படமொழிகின்ற மாற்றங்களை வான்மீகர் மறையாமற் றருகின்றார். தன் பெருவிருப்பத்தைத் தடுக்கவந்து வரம் கேட்ட கைகேயிக்கு, முதலில் வெகுளியும் துணிவும்காட்டி வெஞ்சொல்லால் மறுப்பதானான். "என்னுயிர்விடினும் இராமனை நான் விடேன், . . . . . உன் வேண்டுகோளை நடத்த
மாட்டேன், " என்று முதலில் அறவே வரம் மறுத்தான். அவன் மறுதலை ஒருதலையன்றென மன்றாடிய மனைவியை வெகுண்டும் பயனில்லையென்றுகண்ட மன்னன், பின் அவளைப் புகழ்ந்து நயந்து நலம்பாராட்டி மனங்குழைவித்து, "உன் காதலனாகிய எனக்கும் உலகத்திற்கும் பரதனுக்குமே பிரியமாக நடக்கவிரும்புவையாகிற் பரதனுக்குப் பட்டம் வேண்டுவதை விடுவையாக; வரம் இரண்டுமே கேளாதொழிவையாக. அன்றி, வரமே வேண்டினும் உன் வரத்தின்படி நாட்டை நீ வாங்கிக்கொண்டு, அதை நீயே இராமனுக்குக்கொடுத்துக் கீர்த்தியடைவை. . . . நீ இதைச்செய்தால் எனக்கும் இராமனுக்கும் மற்றெல்லோருக்கும் பரதனுக்குமே பிரியமாயிருக்கும். ஆதலால் அப்படியே செய்வாயாக, "* என்று அவளைத் தன்விருப்பத்துக்கு இணக்க முயலுகின்றான். அதுவும் பலிக்காது
கண்டபின் அறக்கொடு மொழிகளால் அவளை யிழித்துப் பழிக்கின்றான். மறுக்கொணாமையால் இறுதியில் வரத்தை வெறுப்போடு தருபவன், வாங்குபவளை வாய் நாற வைகின்றான். அப்போதும் தன் வாய்தரும் வரத்தைத் தன்கருத்தில் மறுத்திடுங்குறிப்பு, அவளை யறியாதெழும் அவன் வாய்ச் சொற்களால் வெளிப்படுகின்றது.
--------------
*அயோத்தி-சருக்கம்-22.
"காடேக நான் சொன்னதாகக் கேட்ட மாத்திரத்தில் இராமன் மறாது உடன்படுவன். என் சொல்லை உல்லங்கனம்பண்ணி வனம் போகாதிருப்பனாகில் எனக்கு அது மிகவும் பிரியமாகும். ஆனால் அவன் அப்படிச்செய்யானே? தான் கபடமறியாதவனாகவே என்னையும் தன்னைப்போற் களங்கமற்றவனென்றே கருதுவான். அதனால் நான்சொன்னவார்த்தையே என்கருத்தைக் குறிப்பதாய் எண்ணுவான். வாய்ச்சொல்லுக்குமாறாக என் மனக்கருத்து வேறென்று தெரியமாட்டான். அவன் வனம் போகாமையே எனக்கு உட்கருத்து, அதுவே என்விருப்பம் என்பது அறிகிலான். அதனால் மனதின்றி மனைவிக்கு வரமெனத் தரும் எனது சொல்லை நிசமென்று நம்பி அவன் வனமேகுவான், "* என்று தசரதன் அன்று தன் பொய்ம்மையுள்ளம் புலப்படப் புலம்புகின்றான். மறுகுசிந்தையன் மறுபடியும் மனைவியிடம் மன்றாடி மறம்விரும்பித் திண்டாடுகிறான். தன் உறுமலும் பசப்பும் உதவாமை கண்ட வேந்தன், தன் சொல்லறம்பேண வற்புறுத்துவாளை வாதத்தால் மடக்கி வசப்படுத்தியடக்க எண்ணிச் சூழ்கின்றான். "உனக்குச் சொன்ன வரத்தை முன்னிட்டுப் பரதனுக்கு அரசு தருவதாயின், இராமாபிடேகத்துக்கு நான் அழைத்துவந்திருக்கும் மன்னரும் மற்றோரும் என்ன எண்ணுவர் என்று உன்னிப்பார். 'இராமனுக்கு நாளைப் பட்டாபிடேகம் நடத்தப்போகிறேன்' என்று நான் சபையிற் சொன்ன வார்த்தை பொய்யாகி விடுமல்லவா?"** என்று கைகேயிக்கு நியாயம் எடுத்துத் தொடுக்கின்றான். "என் சொற் சோராமலிருக்க விரும்புவையேல், இராமாபிடேகத்தைப் பூர்த்திபண்ணிவைப்பதே நல்லவழி" என்று தன் முன்னறச்சூளை அழிப்பதற்கு, தான் ஆழ்ந்து சூழ்ந்து கூட்டுவித்த அவைக்களத்தே வெளிப்படுத்திய தன் மறவிருப்பச் சொல்லை மாறுகாட்டலாயினான்.
-----------
*சருக்கம்-12. **சருக்கம்-12.
வஞ்சநெஞ்சன் ஏதவாதத்துக் கிடையாமற் பின்னைய வெறுஞ் சொல்லினும் முன்னைய அறச்சூளே பேணல் கடனும் நெறியுமாம் என்று தெளித்த தேவியை வெறுத்துப் பழித்து வெம்பிச் சபிக்கின்றான். "உன்கருத்து ஈடேறப்பெறுவாயாக; இராமன் காடேக நான் இறப்பேன்; பிறகு நீ விதவையாகி உன்மகனோடு நாடாள்வாயாக; . . . கோசலை சுமித்திரைகளோடு என்னையும் என்புதல்வரான இராமன் இலக்குவன் சத்துருக்கனாய மூவரையும் அவலத்திற் றள்ளி நீ சுகமாயிருப்பாயாக;" "பரதன் எங்களைவிட்டு உன்னுடன்கூடித் தேசத்தையும் சுற்றத்தாரையும் மற்றெல்லோரையும் கொன்று சந்தோசமாக அரசியற்றட்டும்;"* மந்திரபூர்வமாக மணவறையிற்
பிடித்த உன்கரத்தை நிராகரிக்கிறேன்; இனி எனக்கு நீ மனைவியில்லை; நான் உன்கணவனுமல்லன்; எனக்குப்பிறந்த உன்மகனையும் நிராகரிக்கிறேன்; நீயும் உன் புதல்வனும் எனக்கு ஈமக்கடனெதுவும் இறையளவும் இயற்றொணாது, "$ "வசைவெள்ளம் நீந்தாய் நீந்தாய் நின்மகனோடு நெடிதென்றான்;"**"சொன்னேன் இன்றே இவள் என் தாரமல்லள், துறந்தேன்; மன்னேயாவான் வரும் அப் பரதன்றனையும் மகனென்றுன்னேன்; முனிவா! அவனும் ஆகான் உரிமைக்கு", @என்றான். யாது செய்தும் என்ன சொல்லியும் தன்விருப்பம் ஈடேறாமற் றடைப்பட்டதறிந்த தசரதன், வெம்பிக் கனன்று அழலும் மனத்தான். இக்கடும்பழிச்
சுடுசொற்களால் தன் வெறுப்பையும் வெகுளியையும் வெளிப்படுத்தலானான். "இராமாபிடேகம் தடைப்படுமாயின் நான் பிழையேன், "# என்று அவன் வாய்விட்ட சொற்கள், இராமனிடத்து மன்னவன் வைத்துள்ள பெருங்காதலையும் அவனுக்கு முடி சூட்டுவதிலுள்ள பேராதரத்தையும் தெளிவாக்கும்.
-------------
* சருக்கம்-12. $ சருக்கம்-14. ** சூழ்வினைப்படலம்-கவி-44.
@ நகர்நீங்கு படலம்-கவி-50. # சருக்கம்-14.
தன் ஆசைக்கு இடையிட்ட மனைவியை வெறுப்பது இயல்பாமேனும் குறையா நிறையுடைக் கோப்பெருந்தேவியை மனைவியன்றென மணவறம் மறுப்பதேன்? "தருமத்தில் இராமனைவிட மேலானவன் பரதன், தரினும் அரசைத் தான்கொள்ள இசையான்" என்று தானே நன்கறிந்து புகழ்ந்த பாவமற்ற பரதனையும் மாயாப் பழிக்கு ஆட்படுத்தித் தன் மகனன்று எனும் புன்மொழிபுகல்வதேன்? குற்றமில் மனத்துக் கோதில் குணத்தவர் கோபம், என்றும் மாயா வடுத்தரும் வசைமொழிவழிப்புகாது. தவறுடைய தன் பெருவிருப்பம் தடுக்கப்படவே, தன் தவறு நினைந்து வெட்கமும் வேட்கையும் வெதுப்ப உளையும் தசரதனுள்ளக்கனல் அவனறிவைக் கருக்கிப் புன்புரைச் சொற்பொறி பொதுளிய புகைதருவதாயிற்று. தன் நெஞ்சறியச்
'சுல்கச் சூளறம்' பொய்த்தான்: பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடுவதாயிற்று. பொய்யுளம் புழுங்கத்தம் புரைபுகை வாயால் மெய் நிறுவ முயல்வாரை வைது, தங்குறை மறைக்கப் புகல்தேடுவது அறனஞ்சா வஞ்ச நெஞ்சரியல்பாம். தன் காதற்கிழவனை அறவழி நிறுத்துங் கற்புக் கடனாற்றுவதையே கருதி, எனைத்தானும் அவன் சொற்சோர்வைச் சுட்டாமற் கணவன் வாய்மையையும் காக்க விரும்பித் தனக்கு அவன் தந்துள்ள வரத்தை வியாஜமாக்கி அவன் நெஞ்சறி புரைவிருப்பை நிறைவேற்றவிடாது தடுக்கும் தெய்வக் கற்பினளான கைகேயி தூய சிந்தையின் திறத்தை மேலே விரித்துரைத்துள்ளேன். இதையே வான்மீகரும் இராமன் வாயாலினிது விளக்கியிருக்கின்றார். கைகேயின் விவாக காலத்திற்றசரதன் செய்த சுல்கப்ரதிஜ்ஞையைப் பரதனுக்குச் சொல்லிய பின், "இந்தக் காரணத்தால் நமது தகப்பனாரை மெய்யனாக்கக் கருதிய கீர்த்திவாய்ந்த உன் தாயார் இரண்டு வரங்களைக் கேட்டுக்கொண்டார், "* எனத் தன் சிற்றன்னையின் தோமில் தூமனப்பாங்கை இராமனே எடுத்துரைத்துத் தம்பியைத் தெருட்டுகின்றான்.
--------------
* சருக்கம்-107, சுலோகம்-5.
இவ்வுண்மையைத் தமயன் வாய்க் கேட்டறியுமுன் தன் தாயைத் தன்பாற் காதல் காரணமாகத் தவறு நயந்து செய்தவனாக் கருதி, அவளைப் "பழி வளர்த்த செவிலி" எனப் பலபட நொந்து, அவள் 'பழியும் போக்கி'யருளுமாறு இரந்த பரதன் உண்மையுணர்ந்த பிறகு அவளை யாண்டும் பழித்திலாமையும் உய்த்துணரற்பாற்றாம். இதுகாறும் சொல்லிப்போந்தவற்றால், "தீவினை நயப்புறுதல் செய்தவன் தசரதனேயா மென்பதும், அவன் சொற்சோர்ந்து அறம் துறவாது அவன் வாய்மையைப் பேணி நிறுத்தும் கற்பறக் காதலாற் கைகேயி மாயாப் பெரும்பழி விரும்பியேற்றுக் கணவன் புகழ் நிறுவ முன்வந்தாளென்பதும், ஐயமற விளக்கமாகுமன்றோ?
-----
9. கைகேயி இராமனைக் காடுகடத்தக் கருதக் காரணம்
இனித் தசரதன் சுல்கச்சூள் நிறுவ முன்வருபவள், பரதனுக்குப் பட்டத்தை மட்டும் கேட்டு வாங்கினாற் போதுமே? கணவன் கழிபெருங் காதலுக்குரிய எழிலுறும் இராமன் பூழிவெங்கானம் புகுமாறு விரும்புவது அவள் வெறுங்கொடுமையையன்றிப் பிறிது குறிப்பதுண்டோ? என்பார் சிந்திக்கத் தகுவனவும் சிலவுள. கைகேயி இராகவனிடத்து உண்மைக் காதல் மிகவுடையாள் என்பதைத் தசரதன் இராமன் இவர்கள் வாய்ச் சொற்களாலும், கைகேயி துளக்கமற விளக்கும் தன் உள்ளக்கிடையாலும், இருபெரும் புலவரும் தரும் கவித்துறையாலும் முன்னரே கண்டுளோம். பட்டம் இராமனுக்கு ஆவதில் எல்லையும் ஒப்பும் அற ஒல்லை மகிழ்ச்சியுற்ற தேவி, தன் மகனலவிருப்பாலேனும் இராகவன்பால் வெறுப்பாலேனுமன்று கணவன் சொல்லறம் நிறுவும்தன் காதனிறை கற்பு முறை கருதியே இராமன் அரியாசனம் ஏறுவதை நிறுத்தத் துணிந்தது என்பதையும் செவ்வனே தெரிந்துளோம். ஆகவே "தூமொழிமடமா"னான மன்னன் மனைவி, இறைமையாக்கம் ஏற்கொணாத இராமனை நாடகற்ற எண்ணி, "நல்லருள் துறக்க" ஏய்ந்த தகவுடைப்
பிறிது காரணம் இருக்க வேண்டும். அதனைப் பற்றற்ற நடுநிலைநின்று சிறிது ஆராயமுயல்வோம்.
அளியறாத தூயசிந்தையள் அன்று இராமனைச் சேய்த்தாயவனஞ் செறிக்க எண்ணிய காரணம் இருதிறப்படுமென்று உணரலாகும்:- அறத்துறை நியதியும் அரச நீதியுமே தேவியை அத்துணிவுகொள்ளத் தூண்டியிருக்க வேண்டும். இராமன்பால் வைத்த பேராதரப்பிணிப்புண்டு அறமிறந்த வேந்தன், மீண்டும் தன் கழிபெருங் காதல் காரணமாக அல்லவையாற்றாவாறு காத்து, அவன் மனதைப் புனித நிலையில் நிறுவக் கற்புயர் கைகேயி கருதுவது இயல்பாம். துணைவன் தன் சொல்லறம் வழுவித் தன்னிலை நழுவக் காரணம், அவ்ன் இராமனிடம்வைத்த அளவிகந்த அன்பு மிகையென அறிந்தாள். அமிழ்தும் அளவிறந்தால் நஞ்சாமாதலின், அரசனை அறநெகிழ்வித்தலைக்கும் அளப்பரும் மகவாசையைக் குறைத்து, மனத்தூய்மையேற்றி,
அவா அகற்றி, அறம் ஆற்றச் செய்விப்பதற்குச் சில காலமேனும் இராமனினின்றும் அவனைப் பிரித்து வைத்தல் இன்றியமையாததெனக் கண்டாள். அத் தநயன்
தன்னருகிலுள்ளவரை தசரதனுள்ள முழுதும் அவனுடைமையாகி நிற்கும். அதனால் அறநேமத் துறையமர்ந்து, அவன் மனம் தவாத்தருமத்தில் நிலைத் திறுகத் தடைப்படும். ஆகவே இராம நேசபாசத்தை நெகிழ்வித்தாலன்றி இறைவனை அறநெறியில் நிறுவ இயலாதாகும். தன் உளம் விழுங்கி, தவாநிறைக் காதல் வழிபாட்டுக்குத் தனியுரிய தசரதன் கடவுட்படிவம் தருமநிலை தவிர்ந்து மாசூரக் கண்ட மெல்லியலாள், அல்லாந்து, நெஞ்சழிந்து அவலத்தால் மாழ்கி, மனமறுகி, நைந்து நொந்ததை முன் குறித்துள்ளேன். தன்னகமகலா மன்னனை எனைத்தானும் மாசகற்றிப் புனிதனாக்குவதையே தெய்வக் கற்புடைய தேவியின் ஆவி அவாவுமென்பதில் விந்தையும் சந்தேகமும் இல்லையன்றே. அதனாற்றன் கணவன் கருத்து அறத்துறையில் நிலைப்பதற்கு இடையூறாய் நிற்கும் இராமனைத் தசரதனைப் போலவே தானும் அன்பு செய்பவளாயினும் தலைவன் நலம் விரும்பித் தணக்கத் துணிவாள். அவன் பிரிவால் அரசன் பெரிதும் பரிதாபப்படுவனென்று அறிவாள். தநயன் காதல் காரணமாகத் தவறுவந்த தலைவன் அவலப்படுவனென்று அஞ்சி வாளாவிருப்பின் வேந்தன் மிகைவிழைவின் விபரீத விளைவு முளையிற்கிள்ளா முதிர் முள்மரம்போற் 'களைகையு மயலும் காழ்த்தபின் அடர்க்கு' மாகலின், அவன் பிழைவிழைவிற் கைகேயி கண்ணோட்டம் கடியலானாள். 'மகன் பிரிவாற்றா மன்னவன் வருத்தம் தவறுடையவனிடைத் தகவுறுதவமாய், முன் துனிவிளைப்பினும் பின் பயன் பெரிதுதவும் பெற்றியை நினைந்து அதிற் றுணிவுகொண்டாள். மகனிடைக் காதல் மிகுவதன் பயனாத் தகுதி மறந்து தன் அறமிறந்த தன் தலைவன் மனத்தைச் "சென்றவிடத்தாற் செலவிடா தீதொரீஇ- நன்றின்பா லுய்ப்ப தறிவு" எனக்கண்ட கைகேயி, அவனை அறவழிப்படுத்தத் தான் செயற்பாலதோர்ந்து தேர்ந்தாள். தான் அறமாக்ககண்டதனை முட்டின்றி முடிப்பதில், "நெடுநீர், மறவி, மடி, துயில் நான்கும்" கடி நீரளாகையால், கைகேயி காண்டொறும் காதலன் கருத்தழியக் காரணமாய் நின்ற இராமனைத் தன் கணவன் காணாதகற்றத் துணிந்து நின்றாள். "ஊழிபெயரினும் தான்பெயராள்", "சான்றாண்மைக்கு ஆழியெனப்படுவாள்" ஆய பெருமகள், வேந்தன்பாற் றான்கொளற்குரிய வரமிரண்டில், ஒன்றாற் பிறந்துரிய பரதனுக்கு அரசும், மற்றதனான் மன்னனுக்கு அவன் கழிபெருங்காதற் றிருமகனின் பிரிவும் அறங்கருதி வேண்டுந் திறத்துரவு கொண்டாள்.
இராமனைப் பிரிக்கவேண்டினும், கானகமுய்க்கக் கைகேயி கருதுவானேன்? என்பார்க்கும் விடை காண்பாம். தசரதனாணை செல்லுமிடத்து எங்கு அவன் இருப்பினும், தசரதன் தானறியாமல் தநயனைத் தருவிக்கவும் தருமங் கருதாமல் அவனை அயோத்திக்கு அரசனாக்கவும் வினைபல விழைந்து சூழ்வான். தசரதன் சொல்லறச் சோர்வும் கள்ளக்கபட உள்ளக்கரவும் கண்கூடாக்கண்ட பின்னர், தலைவி அவனை நம்பாமை தவறாமா? கைகேயி தான் பயந்த மகனாக்கொண்டு தன் கையிற் றானே வளர்த்த இராமனின் குணம் நன்கறிவாள். கோதுடைய குரிசில் மனமும் வினையும் மாசுநீங்கித் தூய்மைபெற்று அறத் துறையில் நிலைத்திறுக வேண்டுவதோரவதி இராமனை விரதமேற்கொண்டு வனம் வசிக்க வகையறிந்து வழிப் படுத்திற் பின் அவனைப் பேதித்து விரதம் விடச் செய்யவல்லார் உலகில் இல்லை என்றும், இராமனைப் பிரிந்து நாளடைவிற் சபலம் நீங்கித் திருந்திய தசரதன்மனம் அறத்துறையில் நிலைப்பதாகுமென்றும் தெரிவாள். கொற்றவனை அதுபற்றி மற்றவரம் இதுவாக வழங்கக் கேட்டாள். அவ்வாறு சம்மதித்து வரங்கொடுத்த பின்னும், தசரதனும் கோசலையும் இராமனை வனம்போக வேண்டாமற்றடுத்து இருத்த முயலுவதும், அறம் துறவாப் பெருந்திறலான இராமன் அவர் விருப்பத்தை மறுத்து அறத்துறை யறிவுறுத்தித் தான்குறித்தபடி வனம் வசிக்கும் விரதமேற்கொண்டு ஒழுகுவதும் கைகேயியின் உரவுணர்ச்சியை உறுதிப்படுத்தி நிற்கும். இவ்விமரிசைகளைக் கீழே விரித்துள்ளபடியால் ஈண்டும் விரியாது விடுக்கின்றேன்.
இனி, இவ்வறத்துறை முறையையேயுமன்றி, அரசியல் அவசியமும் இராமனை வனம்போக்கக் கைகேயிக்குக் காரணம் காட்டும். இதனை முதலிற் கூனியே அவளுக்குக் குறிக்கலாயினள். "இராமன் பதினான்கு வருடம் ஆரண்யம் போய்விடுவானாகில், பிரசைகளனைவரும் பரதனிடம் பற்றுள்ளவர்களாகி-விடுவார்கள். அதன்பின் பரதனை இந்த இராச்யத்திலிருந்து ஒருவராலும் அசைக்க முடியாது"* என்று கோப்பெருந்தேவிக்குக் கூனி இவ் விறைமையியல வசியத்தை ஞாபகப்படுத்திக் கூறிவைத்ததாக வான்மீகர் விதந்தோதியுள்ளார். இவ்வரசியலறத்துறையும் ஈண்டு அதன் பயன்முறையும் சிறிது ஆராய்வோம். குறிக்கப்பட்ட இராமாபிடேகம் நிறுத்தப்படப் போகின்றது. அவ்வபிடேகம் பரதனுக்குச் செய்யத் துணியப்படுகின்றது. இவ்வாக்க மாறுபாட்டுக்கு முழு முதற்காரணமாகும் சுல்கச்சூள் வரலாறு முற்றும் மறையினும் ஓம்பி மறைக்கப்பட வேண்டுமெனத் தன் கணவன் நலங்கருதும் தெய்வக்கற்பினாள் தீர்மானித்து விடுகின்றாள். இவ்வுணமை உணராத கிளைஞரும் குடிகளும் என்ன கருதுவர்? "கேகயர்க்கிறை திருமகள்" வரன்முறை திறம்பித் தன்மகனலம்விரும்பி இறைமை யாக்கம் பரதனுக்காக்க வலிந்து அதை அபகரித்து அவனுக்கு உபகரிப்பதாகவே அனைவரும் எண்ண நேருமன்றோ? அவ்வாறு எண்ணின் விளைவு என்னாம்? தங்கள் விசேட மதிப்பிற்கும்
------------
*சருக்கம்-9
அன்பிற்கும் பாத்திரமாகாத ஒரு கோமகனுரிமையை அவனுக்கில்லாது பறித்து உரிமையற்ற மற்றோர்மகன் வலிதிற் கொண்டாலே குடிகள் அதை வெறுப்பது இயல்பாகும். நொதுமல் நிலையுடைய குடிகளே வெறுப்பராயின்,இராமனுக்கு உற்ற சுற்றத்தினரும் நண்பினரும் அவனபிடேகத்தை நிறுத்தி அதைப் பரதனுக்குப் பண்ணத் துணிந்ததை எண்ணி மனம் புண்ணாகிக் கவலாதொழிவரோ? இது நிற்க; இராமனோ இளமையும் எழிலும் இன்புறுத்தும் பிறநலம் பலவும் படைத்த பருவத்திருமகன், தசரதன் தன் காதற்சூழ்ச்சிக்குத் துணைகருதி இவனைத் தன் படைகளும் குடிகளும் பழகி நயக்கும்படி,பரதனில்லாத போது அரசியற்றுறை புகுத்தி அணிமையாலும் நெருக்கத்தாலும் யாவரும் நேசிக்கச் செய்துள்ளான். பரதனோ பாட்டனூரிற் பலகாலும் உறைவதால் அயோத்தியாரின் அன்புவளர்க்க அவகாசமில்லா தானானான். அதனோடு மூத்தவனுக்குரிய அரசாக்கததை முறைமையிகந்து பறிப்பவனாகக் கருதவும்படுவான். இயலுரிமையும் அயல் துணையும் உடையனாகக் கருதப்படும் இராமன் கைகேயி கொடுமையால் உரிமை பறிக்கப்படுவதாயும், வரன்முறை மரபழித்து உரிமையும் சார்பும் இல்லாத பரதன் அரசை வலிதிற் கொள்வதாயும் ஒக்கலும் பக்கலும் உறவினரும் ஊராரும் கருதுங்கால், இராமன் நட்பினர் மனம்புழுங்கிப் பரதனழிவு சூழாதொழியார். போதிய நியாயம் சொல்லாமல், புகையும் பகையவித்தல் ஒல்லாதாம். தந்தையைக் கொன்று பரதனுக்குப் பரிந்து வரும் பலரையும் பொருதழித்துத் தமையனுக்குத் தானே முடிசூட்டப் போவதாய்க் கூசாது பேசிய இலக்குவன் போர்முழக்கம் அறிந்தபின்னும், பரதன் முடிசூட்டு இடையூறின்றி நிறைவேறும் என்று எண்ண நியாயமுண்டோ? நட்பினர் வெகுண்டு எழுந்தால் உண்மையுணராத ஊரவர் பெருமபாலும் இராமன் சார்பினரைச் சேர்ந்து படைகோலுவது இயல்பாமன்றோ? பரதனாட்சிக்கு மாறாக அவ்வாறு ஊறும் பகைப் படைக்கு விதேகநாட்டுச் சேனையும் துணையாகும். ஏனெனில் சனகனும் கேகயனும் சன்மசத்துருக்கள். "காதலுன்பெருங் கணவனையஞ்சி, அக்கனிவாய்ச் சீதைதாதை உன்றாதையைத் தெறுகிலன், இராமன் மாதுலன் அவன்"* என்றார் கம்பரும். முன்னரே குலப்பகை பூண்டுள்ள மிதிலைமன்னன் தன் மருகனுக்கில்லாது அரசைக் கேகயன்பேரன் அடைவதாயும், அதுபற்றி இராமன்சார்பினர் மாறுகொண்டு மலையப்போவதாயும் அறிவானாயின், அவ்ர்க்கு அவன் அவசியம் படைத்துணையனுப்பத் தாழானன்றோ?
"பரதனாட்சியைக் கொள்ளாது உலகம்" என வசிட்டனும் அதனையே வலியுறுத்திநின்றான். "நின் மெய்ம்முறை" நீத்த நெஞ்சம் மையிற்கரியாளெதிர் நின்னை நன்மௌலி சூட்டல்...கருதித் தடைசெய்குநர் தேவரேனும்....... சுடுவான் துணீந்தேன்"* என்று இலக்குவன்வாயால் இராமன் நட்பினர் சீற்றமும் துணிவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. "என்னையும் இராமனையும் இலக்குவனையும் விட்டுப் பரதன் உன்னுடன் கூடி, நகரையும் நாட்டையும் பந்துக்களையும் மற்ற அனைவரையும் கொன்றுவிட்டுச் சந்தோசமாக அரசு செய்யட்டும்"*/* என்று தசரதன் வாயிலும், "வையமையல் தோன்றாநெறிவாழ் துணைத்தம்பியை (பரதனை)ப் போர்தொலைத்தோ"** என்று இராமன் வாயிலும், "இராமன் வனத்தகலப் பகையற்றதான நாட்டை நீ அடையலுற்றாய்"*** எனப் பரதனிடம் பேசும் கோசலை வாயிலும் எழும் வாக்கியங்களின் குறிப்பறிய வேண்டும்.
பரதன் முடிசூட இராமன் அண்மையிலிருப்பின் போர்விளையும் என்பது இவற்றாற் போதருமன்றோ? ஒக்கலும் பக்கலும் பரதன் முடிசூடலைப் பொறாது மலையும். அனைவரையும் பொருதழித்தாலன்றிப் பரதனுக்கு ஆட்சி அமைவதன்றாமெனவிதந்து கூறப்பட்டுள்ள உண்மையை மறக்கொணாது, இவ்வாறு தான் தடுத்து இராமாபிடேகம் நிறுத்தப்படுவதால் விளையும் கலகமும் கேடும் கைகேயி விரும்புவதன்றே, அத்தீமை விளையாது காத்துப் பரதன் பிறப்புரிமையான அரசாட்சியை நிலைபெற நிறுத்த நினைக்கும் தேவி, இவ்விபரீத விளைவனைத்தும் இராமனை நாடகற்றினன்றித் தடுப்பதரிதென நினைப்பது இயல்பாம் அன்றோ? இராமனை முன்னிட்டுப் பகையாவார் பலரும்
----------
*நகர் நீங்கு படலம் கவி 127 */*சருக்கம் 12
**நகர் நீங்கு படலம் கவி 138 ***சருக்கம் 75
இராமன் இல்வழித் தண்டெடார். அவன் அணித்திருப்பின் அவன் சார்பினர் ஊக்கத்தோடு உறுபகைக்கு இறுதி காண்பர். முளைக்கும் பகை துணைகொண்டு தழையுங்கால், கடும்போரும் கொடும்கேடும் நாட்டுக்கும் நாட்டவருக்கும் உண்டாம். அதைத் தடுப்பதற்கு ஒன்று இராமனே முடிசூட வேண்டும்; அன்றேல் உண்மையை வெளிப்படுத்தித் தீரவேண்டிவரும். இவ்விரு முடிபும் கைகேயிக்கு உகந்ததில்லை. இராமாபிடேகத்தால் இறைவன் அறம் பொய்த்து அழியநேரும்; உண்மை வெளிப் பாட்டால் அவன் புகழ் பொன்றிப் பழி தழைவதாகும். அவனறமும் புகழும் பேணிப் பாவமும் பழியும் விலக்க விரும்பியே உண்மையை அறவே மறைத்து வரத்தை வற்புறுத்தி அறம் நிறுவத் துணிந்த தூயகற்பினாளுக்கு,இவ்விரு முடிவும் பொறுமையுடன் கருதத்தகுவதாமோ? கணவன் பழியஞ்சி உண்மையை ஒளிக்கவும் தீவிளைவை வெறுத்து அஞ்சி வெம்போர் விலக்கவும் துணிந்த தேவி, இராமனைச் சிலகாலம் சேட்படுத்துவதன்றி நாதனறத்தொடு நாட்டின் நலம் ஓம்பப் பிறிதுவழி காணாமல் அதைத் துணிகின்றாள். துணிந்தபின் தன்கருமம் முடிக்க விரைகின்றாள். இராமன் ஊரகலத் தாழுமாயின் ஒரு வேளை பரதனே மீளநேரும். "பரதன் தமயனிடத்தில் பக்தியுடையவன். அவன் வரும்வரையில் இராமன் இங்கிருப்பானாயின் இவனை அவன் நாடகலவொட்டான்? அப்பொழுது எண்ணித் துணிந்த கருமம் சபலமாகாது வீண் போவதுடன் விலக்க விரும்பிய தீமைகளும் விளையலாகும்" என்று எண்ணினவளாய், இராமனை "நீ வனமேகத் தாழ்ப்பது உசிதமன்றெனத் தோன்றுவதால் உடனே போக வேண்டும்" எனத் தூண்டுவாளாயினாள்.
------------------------
*சருக்க, 19
இராமனிலும் 'நிறைகுணத்தவ'னாய பரதன் அறமனைத்தும் நிரம்பினானாகையால் இடையூறின்றி முடிகூடப் பெறுவனாகில். அவன் தண்ணளியாலும் செங்கோன் முறையாலும் அவனாட்சிநிலையினைப் பெறுவதாகும்.நிலைத்தபின் தீவிளைவு யாண்டும் யாருக்கும் இலதாகும். பரதன் அரசுக்கு இராமன் பகையாகான். "பிறர் தூண்டுதலும் வேண்டுதலுமின்றி என் தம்பியாகிய பரதனுக்கு நாட்டையேனும் சகல ஸம்பத்தையுமேனும் என் பிராணனையேனும் சீதையையேனும் சம்பூர்ண சந்தோஷத்துடன் கொடுப்பேன். அப்படியிருக்கத் தந்தையும் தாயுமே சொல்லும்போது கொடுக்கத் தாழ்ப்பேனோ?"* என்று வான்மீகர் இராமன் வாயால் அவன் சகோதர வாத்சல்யத்தையும் பெற்றோர்பால் அன்பையும் வற்புறுத்தியுள்ளார். "மன்னவன் பணியன்றாகில் நும்பணி மறுப்பனோ- என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றோ" என்று கம்பரும் இதனையே வலியுறுத்துகின்றார். ஆகவே, பரதனாட்சிக்கு இராமனால் எவ்வித இடையூறும் ஏற்படாது. இராமன் அறிந்து தடுக்குமுன் அவன் பற்றுடைச்சார்பினர் பகைத்து மலைவதையும், பரதன் பெருமை தெரியாத நாட்டினர் அப்பகை தழுவக் கேடு விளைவதையுமே கைகேயி அஞ்சுகின்றாள். அதனால், பரதனாட்சியால் ஆக்கமும் வளமும் பெருகி அனைவரும் அவனாட்சியின் நலத்தையும் அறத்தையும் கண்டு அமையும்வரை இராமன் நாடகன்றிருத்தல் அரசியன் முறையில் அவசியமாக் கொண்ட கைகேயி, இராமனை "நீபோய்த்... தாங்கருந்தவ மேற்கொண்டு... கானம் நண்ணிப் புண்ணியத்துறைகள் ஆடி ஏழிரண்டாண்டில் வா" என்று இயம்பினள். இராமனை என்றும் அயோத்தியை அணுகாது அகன்றிருக்கத் தூண்டிலள். நாடு அமைதிபெற்றுப் பரதனாட்சியின் ஆக்கத்தை அறிந்து அனுபவிக்குங் குடிகள் அவனை வாழ்த்தி யடங்கப்போதிய காலம் இராமனை நாடு கடந்திருக்கவே வேண்டுகின்றாள்.
-----------------------
சருக்கம் - 19
மிதிலையன்ன பிறமன்னர் பதியிற்போயிருப்பின், அவன் பற்றுடையார் அவனை மீட்க விரும்பிக் கலாம்விளைப்பர். அதுபற்றி அவனைச் சிலகாலம் தவமேற் கொண்டு நீர்த்துறைகளாடிக் காடுறையவும் பிறகு திரும்பவும் உரைக்கின்றாள்.
இனி வனவாசத்துக்கு ஆண்டு பதினான்கென வரையறுப்பானேன்? - எனின், இராகவன் நட்பினர் வளர்க்கும் பகை தளர்ந்து மாயப்புகை மனத்தவர் புழுக்கமாறி நாடும் 'பங்கமில் குணத்தோன்' செங்கோலாட்சியும் அமைதிபெறப் போதியதோர் காலம் வேண்டும். குறைபடின் விலக்க விரும்பும் தீவிளைவுகள் முளைக்கலாகும். அவசியத்துக்கு மேல் இராமன் நாடு தணத்தலை வீணே நெடிதுநீட்டுவதும் வேண்டிலள். எண் எதுவும் எது பற்றியும் தனிப்புனிதமும் பொருளும் உடையதில்லை. போதிய காலத்துக்குத் தக்க ஏதாவாதோரெண் குறிப்பிடப்படவேண்டும். பதினான்கன்றிப் பிரிதெண்குறிப்பினும் இவ்வினா எழக் கூடுமன்றோ? எதற்கும் உண்மைவிடையாவது, எண்ணித் துணிந்தபடி அரசன்சொல்லறம் ஓம்பற்குரிய வினையும் அதன்விளைவும் ஆய்ந்து முடிப்பதே தேவி கருத்தாகலின், அதற்கு அவள் அவசியமெனக் கருதியகாலம் பதினான் காண்டாபமென்பதேயாம். அரசியலவசியத்திற்கு வேண்டு மளவு இராமனைச் சேணிடைய கற்றிவைக்க விரும்பின தல்லால், இராமனுக்குவேறு ஏதமெதுவுங் கருதினவளில்லை. அன்றிக் கொடுமை யொன்றே கருத்தாயின், கைகேயி என்றும் இராமன் அயோத்தி நாடணுகா வண்ணம் வரம் கேட்டிருக்கலாமே? அப்படிக்கேளாமல் "நீ போய் ஏழிரண்டாண்டில் வா" எனத் தேவி விதந்து கூறுவதால் கேவலம் கொடுமைநயப்பாலேனும் இராமன் பால் வன்கண்மையாலேனும் அவனுக்கு வனவாசம் தர விரும்பினாளல்லள் என்பதும், 'சுல்க' அறத்தாற் பரதனுக்குரிய அரசு அவன்பால் ஊறின்றி நிலைத்து அது சம்பந்தமான வேந்தன் சொல்லறம் சோர்ந்தழியாது பாதுகாக்கப்பட அரசியன் முறையில் அவசியத்துறையாக மட்டுமே மன்னன் மனையாள் அவன் வனம் போவதை மனங்கொண்டாளென்பதும் பொதுநோக்குவார்க்கெல்லாம் இனிது போதரும்.
இன்னும், இராமனே இவ்வரசியற்றுறைய வசிய முறை யுணர்ந்தொழுகியனாகவும் அறியலாகும். கரவற்ற கைகேயிக்கு அரசன் வரமளித்தபடி வனமேக விடை வேண்டிய இராமனை தசரதன் "தன் வரத்தைப் பொய்யாக்கிவிட்டு அயோத்திக்கு அரசனாகி" ஆளும்படி தூண்டினான். அதற்கு இராமன் உடன்படாமையால், அவனைப்பின் ஏகாந்தத்தில் அழைத்து "அன்று ஒருநாள் அரண்மனையில்நின்று பிற்றைநாட் போகலாம்" எனக் கொற்றவன் கூறலாயினன். அதனையும் உள்ளங் கொள்ளாது அறமறிந்த பெருமகன் பேசியது இது:- "இன்றே நான் இவ்விடம்விட்டுப் போவதாலாகும் நன்மையைவிட நலம் எனக்கு நல்க யாராலாகும்? ஆகையால் இங்கு இனி இறையளவும்நில்லாது ஒல்லையே நான்வனத்துக்கு வழிக்கொள்வேன்." எனச்சொல்லி வேந்தன் விருப்பத்தை மறுப்பதானான். பின்னும் தந்தை சலனப் படுவது கண்ட பெருந்தகை,"வனவாசத்தில் நிலைத்த என்துணிவை இனிமாற்றமுடியாது. ஆகையால் தாங்கள் தந்துள்ள வரத்தைச் சலனப்படாமல் சந்தோசமாக முடித்து வைக்கத் திருவுளங்கொள்க" என எடுத்துரைத்துப் பின்னும் தன்னை எனைத்தானும் இருக்க வேண்டற்கிடமன்றி வரையறுத்து வற்புறுத்தினான்.
---------------------------
*சருக்கம்-34
தந்தையுள்ளமும் தம்பி இலக்குவனாதியரான தன் படைற்றுயோர் தம் கருத்தும் இயல்பும் நன்குணர்ந்த இராகவன், அயோத்தியில் தான் இனித் தங்குவது தரும கரும விரோத விளைவுகளுக்குக் காரணமாவதற்கு அஞ்சித் தன்பொருட்டு ஏதம் யாதும் யாராலும் எழாவாறு தடுக்கவும், தான் இனித் தாழாது விரைந்து அகன்று விலகிக் கலகமெதுவும் உண்டாகாமற் காக்கும் நலமறிந்து அதனை நாட்டுக்குக் கொடுக்கவும் நயந்து எண்ணி இது துணிந்தான் என்பதன்றி, அவனது இச்சொற்களுக்கும் துணிவுக்கும் பிறிது பொருள் காணற்கில்லை. ஒருதினம் தங்கி மறுநாட்போகும்படி தன்னைத் தனி யழைத்துவேண்டிய தசரதன் பெருவிருப்பையும் தந்தை சொற்கடவாத மைந்தன் அன்று மறுத்த தறுகண்மைக்குத் தக்க காரணம், தன் பொருட்டு எழுவதாகும் கலக விபரீத விளைவுகளை முன்னுணர்ந்து அவன் அவற்றைத் தடுக்க விரும்பியதன்றி வேறு எது வாகக்கூடும்? தாழாது உடனே தான் போவதாலாம் நன்மையாக அவன் கருதியது தன்பொருட்டாம் கலகம் தவிர்ப்பதன்றிப் பிறிதென்ன? காவலன் கரவற்ற கருத்தனாகில், கைகேயியை விலக்கி இராமனைத் தனியழைத்து இது கூறுவது ஏனோ? இனி இவ்வாறு தன் அறத் துணிவுகூறி இராமன் விடைகொண்ட பிறகும், மன்னவன் மறுபடியும் மனம்பற்றிச்சொல்லிய மாற்றமொன்றும் ஈண்டுக் கவனிக்கத்- தக்கதாகும். "இராமனுடன் செல்லச் சதுரங்கங்கள் நிறைந்த சைனியங்களைத் தயாரித்தனுப்பும்படி" தசரதன் சுமந்திரனுக்குச் சொன்னான். அரசு அகற்றப்பெற்று ஆரணியம்புகும் இராமனிலைக்கு அழுங்கிப்புழுங்கும் அவன் பற்றுடையாரைப் படைத்துணையும் உடையராக்கும் வேந்தன் விருப்பத்தைக் கேட்ட கைகேயி, விளைவஞ்சி நடுங்கி மறுத்துப்பேசினாள். அதற்கு மன்னவன், "நீ வரம் கேட்டபோது 'வனத்துக்கு இராமனுடன் பிறர் போகப்படாது' என்று கேளாத" தால் அவனுடன் படையனுப்புவதற்கு இடை நில்லாது அடங்குதி - என்று கோபித்துப் பேசித் தன் மனக்கோள் நிறுவச் சொல்லளவில் வாதம் தொடுத்து அவளை வெல்லமுயன்றான். தான் எண்ணித் தடுக்க முயன்ற விபரீதத்தை வேந்தன் விளைக்க விழைவதுகண்டு, கைகேயி உளமுளைந்து குரல்குன்றிக் குலைவதானாள். இவரிருவர் தங்குறிப்பும் அறிந்து இராமன், வனத்தில் வசிக்கும் தனக்குப் படை பரிவாரங்கள் பயன்படாமை கூறியதோடமையாது, அரசியலைப் பரதனுக்கு அளித்த பிறகு அதன் ஓர் அங்கமான சேனையையும் அவனுக்கு உதவாமற் பிரித்துத் தன்னுடன் அனுப்பவிரும்பிய தந்தையின் தகவிலெண்ணத்தைச் சுட்டி, "யானையைக் கொடுத்து அதன் கழுத்துக் கச்சையை மறுப்பது முறையும் பயனும் அற்றது"* என வினயத்துடன் எடுத்து விளக்கி விலக்கினான். இவை பலவற்றானும் இராமன் அகலச் செல்லாது அருகிருப்பின், பரதன் முடிசூடலுக்கு ஏற்படும் பகைப்பயமும் அதனை அறவே அகற்றுவதற்கு இராமனைச் சேட்படுத்தி வனஞ்செறிப்பதன் அவசியமும் கைகேயி கருதியது பிழையெனக் கொள்ளுதற்கு இடமில்லாமை தெளிவாகும்.
-------------------------------
*சருக்கம் -37.
10. குரிசிலர் நாட்டிற் கொடையுரிமை கோடல் வரன்முறை வந்த வழக்கறமாகும்.
இனி, கொடுத்துமுடிந்த அரசுரிமையைக் கொடையறங் கொன்று வாய்மையும் பொய்த்து மீண்டும் எடுத்துக்கொள்ளமுயன்ற குற்றம் வேந்தன்மேலது-எனும் உண்மை வரலாறுணர்ந்தபின்னும், 'சுல்கசீதனம்' எனும் பெண்பரிசமாக நாட்டைத் தரத் தசரதனுக்கு உரிமை கிடையாது; அதனால் முற்பிறந்த இராமனே அரசுக்கு உரியன்; 'கைகயன்மாது' பரதனுக்கு அதைக்கேட்டு வாங்கியதே தவறாகும்:- என வாதிப்பரும் சிலர் உளர். பண்டிதர் பெரும்பாலும் இவ்வழி வழக்கிட அஞ்சுவர். தொல்லைமிருதிகளும் தற்கால வழக்கறமும் எல்லை கண்டேமென்று இருமாப்பார் சில நீதிமன்ற ஏதவாதிகளே இவ்வழக்குஉரைக்கவல்லார். இவ்வழக்கிடுவார் கைகேயியைக் கொடியளாக்கும் முயற்சியின் பயனளக்க ஈண்டு இடம் வேண்டேன். தசரதன் புகழோம்பத் தக்கவழக்கு இதுவெனத் தருக்கும் இவர் தம்வழக்கால் தசரதனைத் தலை நின்ற தவறுடையனாக்கும் தம் தவறு தெரியாமை தெரிவிப்பதே என் கடமையாகும். நாடளிக்கும் உரிமை நிருபர்க்குண்மை சிறிது நிற்க. அயோத்தி நாடாண்ட தசரத சக்கிரவர்த்தி வேத்தியலறவித்தகனும் தலைநின்ற வாய்மை யாளனுமாம் என்பது இவர் கொள்கையாகும். தசரதன் மணப்பரிசமாகத் தன்நாட்டைக் கைகேயிக்குத் தந்ததாக வடமொழிப் பொய்யில்புலவரே கூறியிருக்கிறார். இனி அதை மறுக்க வழியில்லை. மனைவிக்கு மன்னவன் வளநாடு வழங்கும் போது தனக்கு அதிற் கொடையுரிமை கிடையாமை தெரிந்தே தந்தனனா? அறியாது அளித்தனனா? பராதீன பாத்தியமின்மையோராது கொடுத்திருப்பின் அரசியலறமறியா மடமைக்கு ஆளாவன், கொடையுரிமையின்மை தெளிந்துவைத்தே கொடுத்தனனேல், தெரிந்து அறந்திறம்புந் தீயவனாவதோடு,பேதைப்பெண் பரிசத்தைக் குடிலத்தால் வஞ்சித்த கள்வனும் ஆவன். வேந்தர்க்கு நாட்டில் ஆட்சியியலன்றி அளிக்கும் உரிமை யின்றேல், தசரதன் முதலில் மணப்பரிசமாகத் தந்ததோடமையாது மீட்டும் வரமாகக் கேட்ட மனைவிக்கு "மண்ணேகொள் நீ" என்றும், "ஈந்தேன் ஈந்தேன் இவ்வரம்" என்றும் தருதற்கு இசைவது அறமும் அழகும் ஆமோ? கொடையுரிமைகிடையாதபொருளை வரையாது வழங்குங் குரிசிலின் வள்ளன்மையைக் கொண்டாடுவது என்னோ?
கொற்றவர்க்குத் தம்நாட்டிற் கொடைவரை வின்மை தொன்றுதொட்டு உலகறியுமுண்மையாகும். நாடறியும் இப் பழவழக்கை இராமனுக்கு உரிமையுண்டு பண்ணக் கைகேயியை வைதுவக்கும் சில நவீன நாகரிக நீதிவாதிகள் ஆசங்கிப்பதால், அறம் அறிவு ஆட்சியாதி அடிப்பட்ட அளவைகளால் அவ்வுண்மையையும் சிறிது ஆராயப்புகுவாம். வேதமும் நீதியும் வேத்தியலுரிமையை வேலிகோலி அளவிட்டறுக்க யாண்டும் கண்டிலம். முற்றுரிய முடிமன்னராட்சிக்குத் தேவகோபமும் பகை மன்னர் பயமுமின்றி எல்லையில்லை. வரைவுரிமை அரசாட்சி நீர்மைக்கே பொருந்தாததாம். அரசனாணையால்மட்டுமே வழக்கறமனைத்தும் ஆக்கவும் அளிக்கவும் அழிக்கவும் படுவதாகும். அறங்களெல்லாம் வேந்தராட்சியின்கீழ் வரையறுக்கப்பட்டு வழங்கும். அனைத்தறமும் ஆக்கவும் அழிக்கவும் வல்ல கொற்றவர்முற்றுரிமைக்கு அளவு கட்டவல்லார் யார்? கோவேந்தர் ஆட்சியுரிமை, அதனியல்பாலும் வரைவின்மையாலும் அவர் குடியறத்திற்கு அதீதமாகும். குடி வழக்கெல்லாம் கோமகன் கோலால் நிறுவப்படும்.குரி சிலர் கொடையுரிமையை வரையறுத்து வற்புறுத்தவல்லார் யார்? நிறுவுமதிகாரியற்றவிடத்து வழக்கறமில்லையாகும். குடிவழக்குரிமை யறமெல்லாம் கோமன்னராணை தரும் எல்லைக்குட்படும். கொற்றவர் ஆட்சியறமோ எல்லையற்ற முற்றுரிமைப் பாற்றாம். மன்னறம் வகுக்கும்மனுநூல் ஏழாமதிகாரம் முழுவதிலும் வேந்தக்குக் கொடையுரிமை வரையறுக்கப்படும் குறிப்பும் இல்லை; இதுமட்டுமோ? எல்லையற்ற கொடையுரிமை சுட்டவும்படுகினறது. முற்றுரிமையற்ற ஆட்சியும் ஆதிக்கமும் கொற்றவர் கொள்வதில்லை. கொடையுரிமையே ஆட்சிக்கு அறிகுறியாகும். குறையுரிமை ஒருகாற் சிற்றரசர்க்காவதன்றி மற்றக்கொற்ற வர்க்காவதுமில்லை; அவர் கொள்வதுமில்லை.
கேவலம் குடிவழக்கிலுங்கூட நமது நாட்டின் தென் பகுதியில் மீதாட்சர நூல்விதியே முதலறமாக் கொள்வார்க்கு, தாவரங்களிற் கொடையுரிமை பொதுக் குடும்பத்தருக்கு மட்டும் சிறிது எல்லையறுக்கப்பட்டுள்ளது. இதிலும் கொடையுரிமைமுழுவதும் கடியப்படவில்லை. அறவே பராதீனபாத்திய மற்றவிடத்து ஆதிக்கமும், ஆட்சியும் இலதாகும். உடைமையாட்சிக்குக் கொடையுரிமை அடிப்படையாகும். வரம்பிகந்த கொடையுரிமை, குடிகளிற் சிலசமயம் சிலருக்குச் சில இடங்களில் மறுக்கப் படுகின்றதன்றி, மற்றையிடங் காலங்களில் வரைவின்றி வழங்கப்படும். இத்தென்னாட்டில் இடையெழுந்த மீதாட் சரநூல் கூறும் கொடைவரம்பும் கொடைப்பொருளிற் சமவுரிமையுடைய பிறர்நலம் பேணும் அளவிற்றேயாகும். பிறந்து உரிமையடையப் பிறர் இல்லாதபோது தனியுடையார் தம்பொருளைத் தாம் விரும்பியாங்குத் தரும் உரிமை முழுதுடையார் என்பதை மீதாட்சரமும் மறுக்கவில்லை.
வழக்கறம் வகுக்கவந்த மனுவாதியற நூல்களுள், யாக்ஞவல்கியர் தருமசூத்திர நூல் ஒன்றாம். முதலில் அதன் வழக்கறப்பகுதி வேத்தியலறம் விளக்கிற்றில்லை யென்பதும், அதனால் அதன் ஆணை குடிகளுக்கன்றி வேந்தர்க்கு விதியாமாறில்லையென்பதும் மறக்க பாற்றன்றாம். இனி, இத்தருமவழக்கு விதி நூலுக்கு உரைகண்டார் பலராவர். அவருள்,விக்ஞானேசுவரர் சுமார் 800ஆண்டுகளுக்கு முன் செய்த விருத்தியே மீதாட்சரமாகும். இவ்வுரைவழி நூலில்,குடிகளிற் பொதுக்குடும்பத்தாரின் கொடையுரிமையொன்றுக்கே எல்லை குறிக்கப்பட்டுள்ளது. இதன் முதனூலுக்கு உரைவகுத்த சீமூதவாகனார் முதலான பிற அறநூலுடையார், உடையவருக்கு உடைமைப்பொருள் எதிலும் எவ்விதஎல்லையுமற்ற முழுக்கொடை யுரிமையுண்மையை வற்புறுத்திவைத்துள்ளார். பாரதநாட்டின் வடபகுதிகளில் மீதாசேரம் மதிக்கப்படாமல்,சீமூதவாகனாரின் "தாயபாகம்"அன்ன பிற அறநூல்களே பேணப் படுகின்றன. அவைபேணுவோர் இன்றளவும் தம்பொருளில் வரம் பற்ற முழுக்கொடைமுற்றுரிமை கொண்டாடி வருகின்றனர். ஆகவே முதனூலாம் யாக்ஞவல்கியர் அறநூலில் ஒரு தலையாக் கொடையுரிமை குடிகளுக்குமே மறுக்கப்படவிலையென்பது தெளியக்கிடக்கின்றது. கி.பி. பதினோராம் நூற்றாண்டில் எழுந்து இன்றளவும் நாடுமுழுதும் அங்கீகரிக்கப்படாமலிருக்கும் மீதாட்சரவிதி கொண்டு எப்படி இரண்டாமூழியில் ஆண்ட கொற்றவன் தசரதன் கொடையறத்தை மதிக்கலாகும். ஏறக்குறைய எண்ணூறாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட வழியுரை நூலான மீதாட்சரமொன்றொழிய முந்திய அறநூலனைத்தும் கேவலம் குடிகளுக்குமே கொடையுரிமை குறைக்காதபோது,பலவூழிகளுக்கு முன் கொற்றஇறைமை முற்றிச் சிறந்த குரிசிலான தசரதனுக்கு,அவன் தனியுடைமைத் தன் நாட்டில் பராதீனபாத்தியம் இல்லாமை சொல்ல ஒத்தேதேனும் உண்டோ?
இனி, இடையெழுந்த மீதாட்சரக் குடிவழக்கற நூல் விதியுங்கூடத் தசரதன் சுல்கக் கொடையைக் கடியும் வழியில்லை.ஒரு பொருளிற் சரியுரிமையுடையார் பலருள ரேல்மட்டும் மீதாட்சரவிதி ஒத்தவுரிமையுடையார் பலருள் ஒருவருக்குத் தனிக்கொடை முற்றுரிமையை மறுக்கின்றது. சரியுரிமையுடைய தாயத்தார் பிறவாமுன்னும், பிறந்து இறந்த பின்னும் தனியுடையார் தம் பொருளெதனையும் யாருக்கும் தடையின்றித் தரற்குரியாரென்பதை விக்ஞானேசுவரருங்கூட மறுத்திலர். மீதாட்சர விதிப்படிக்குங்கூட, பிதிரார்சிதத்தா வரத்தானம் பெற்றவர்க் கெதிராகக் கொடைப்பொருளிற் கொடுத்த காலத்திற் கருப்பத்தும் உருப்பட்டிராத பின் பிறந்த சந்ததிக்கும் தாயத்தார்க்கும் எவ்வித உரிமையும் சிந்திப்பதில்லை. விவாக காலத்தில் வேந்தனான தசரதன் மணமகளான கைகேயிக்குத் தனியாட்சிக்குரிய தன் அயோத்தியரசைச் 'சுல்க' சீதனமாக அறமுறையிற் கொடுத்திருக்க அதற்கு நெடும்பல்லாண்டு நிறைந்து கழிந்தபிறகு பிறந்த இராமனுக்கு அவ்வரசியலிற் பிறப்புரிமையேற்பட நியாயம் உண்டோ?
மேலும்,நடுநின்று ஆராய்வார்க்குக் குடிக்குல வழக்கறம் குரிசிலார்க்காகாமை சிறிது சிந்திப்பின் இனிது விளங்கும். சாதாரணவழக்கில், தந்தை பொருளை மக்களும் சந்ததியற்றவிடத்துத் தாயத்தாரும் பகுந்தெடுப்பர். சோதரருக்குச் சொத்திற் சமபாகச் சரியுரிமை உண்டே?அரசியலில் அவ்வாறு பிரித்தாளக் கேட்க அற மேனும் ஆட்சியேனும் உண்டோ? பங்கு இல்லாது ஒருவன் ஆளும் கோவியற்றருமங்கொண்டு குடிக்குலத்து எவனும் சொத்தைத் தனிக்கொளக் கருதலாமோ? இன்னும் குடிவழக்கில் வற்புறுத்தப்பட்டு வேத்தியலுக்கொவ்வாத விதி பல காணுங்கால்,மாந்தர் தாயமுறையும் குல வழக்கறமும் மன்னவர்க்கேற்றி விபரீத வாதமெழுப்பி இடர்ப்படலாமோ? கொற்றவர்க்குத் தம்நாடு முற்றுரிமையாகிக் கொடை யுரிமையுட்பட நிறையாட்சிக்குரிய உடைமைப் பொருளாவது அறமன்றாயின், தசரதன் மனைவிக்குச் 'சுல்க'மாகக் கொடுக்கத் துணிந்திரான்; கேகய மன்னனும் அதையேற்றுப்பெறற்கு இசைந்திரானன்றோ? பின்னும், தசரதனிருக்கையில் இராமனுக்கு அதை அவன் கொடுக்க நினைத்தது என்னாம்? அரசனாவான் நாட்டை ஆண்டனுபவிப்பதன்றிக் கொடுக்க உரிமையில்லானாயின் இராமனுக்கு அதை அவன் தான் கொடுக்கத்துணிவனோ? துணிந்த தன் விருப்பத்தை மன்னரும் மாசறக்கற்றோரும் கூடிய மகாசபையில் எடுத்துக் கூறுவனோ! கூறில் அதை யாரும் தடாமல் அனைவரும் ஒருங்கே ஆமோதிப்பரா? மீட்டும் அவனே வரம் மறுக்க வழிகாணாது, பரதனுக்கு "ஈந்தேன் ஈந்தேன்" எனக் கொடுப்பனா? கொடுக்கும்படி கைகேயிதான் கேட்பாளா?
செல்லா வீண்வரம் தேவி கேட்டு" ஒல்லாக்கொடையா வேந்தனே வழங்கினும், சதுர்வேதமும் பிறவும் ஓதி நன்குணர்ந்த வசிட்ட முனிவன், கொடுத்தற்கு இரங்கி யேங்கும் மன்னனைக் கொடுக்கொணா அறஞ்சொல்லித் தேற்றாமல், வரமாக நாடுபெற்ற மாணாவுரையாள் தானேதரும்" உன் புதல்வனான இராமனுக்கு அரசு என்று மறுகுமன்னனுக்கு அமைதி சொல்லி, 'இராமனுக்கு நாடளித்து நின் கணவற்கு உதவி வசைதீர்' என்று கோப்பெருந்தேவியிடம் குறையிரக்கக் காரணமென்னோ? மன்னன் மனதாரக் கொடுப்பினும் அது செல்லாதென்பதே அறத்துறையாமேல், வேந்தனும் முனிவனும் அதைவிளக்கி இராமாபிடேகத்தை நடத்தாமல், வீணே கைகேயியைப் புகழ்ந்தும் இகழ்ந்தும் கெஞ்சியும் மிஞ்சியும் போற்றியும் தூற்றியும் பயன்காணாது அயர்ந்து மறுகி அலமருவரோ? எது கொண்டும் இராமனுக்கு மகுடம் புனைவித்து "ஒன்றும் வனமென் றுன்னாவண்ணம் செய்"வதே தன் சிந்தை கவர்ந்த கவற்சியாக் கொண்டிருந்த தசரதனுக்கு எளிதில் அறமெடுத்தோதித் தெளிக்காமல், கையறவுற்று வசிட்டனும் வீணே வருந்துவானேன்? இன்னும், வசிட்டனே* "வாள்வேந்தர், எந்தை (இராமன்) புகுதற்கிடையூறுண்டாயதோ?......தெரிவி எமக்கென்றுரைத்த"போது, "வேந்தன் (தசரதன்) பணியினால், கைகேயி மெய்ப்புதல்வன் பாந்தள் மிசைக்கிடந்த பார் (அயோத்தியரசு) அளிப்பானாயின்" என்று மட்டும் பரதனுரிமை சொல்லி, செல்லாக் கொடையால் நாடு பரதனுக்கெய்தமை கூறாதுவிடுவானேன்? கேட்ட வேந்தரும் வேதமறிந்த விப்பிரரும் வேறு பிறரும் இராமாபிமானிகளாயிருந்தும், கொற்றவனுக்கு நாட்டிற் கொடையுரிமை யின்மை நினையாதது ஏனோ? மன்னனையும் மாற்றன்னையையும் மற்றும் பரதன்பாற் பரிவுடைய பிறரனைவரையும் கொன்று, விற்றிறமும் வீரமும் காட்டி, இராமனுக்கு "நன்மௌலி சூட்டல் செய்யக் கருதி"ப் "புகைந்து கனன்று பொங்கும் ஆறாக்கனல்" அழலுமனத் திலக்குவனும், தசரதனுக்குக் கொடையுரிமையின்மை தெரிந்திலனே போலும். தெரிவனேல் அவன் பெருவிருப்பத்தைத் தாதைகாதகனாக விரும்பாமலே எளிதில் முடித்திருப்பனன்றோ? கோசலையும் இராமனும் கொடைமறாமல், தசரதன் கொடையாற் பரதனுக்கு அரசெய்தியதென்றே பேசுவானேன்? இராமனிருக்க வரமாக நாட்டைத் தனக்கு மன்னனிடம் தன் தாய் கேட்டு வாங்கியதைத்தான் ஒவ்வாத 'தருமத்தின் தேவும் செம்மையின் ஆணியும்' ஆன பரதனும், இராமன் கருத்தரிக்கு முன்னமே தந்தையின் பரிசக்கொடையால் தரணி தனதாயினதைத் தமயன் வாய்க் கேட்டபோது தந்தைக்கு கொடையுரிமையின்மை கருதி அதை மறாதிருப்பனோ?
--------------------
*நகர் நீங்கு படலம் - கவி-98
இன்னும் நாட்டில் நிருபருக்குக் கொடையுரிமையின்றாயின், இராகவன் பரதனிடம்
"அறத்துறையில் 'அரசு நின்னதே' என்னலும், "பன்னரும் பெரும்புகழ்ப் பரதன்" "அரசு என்னதாயின் யான் இன்று (நினக்குத்)தந்தனன்" என விரைந்து தந்ததும், தந்ததைப்பெற்றுக் கோசலை மைந்தன் 'கோசலநாடுடை வள்ள'லானதும் எப்படியோ? இவ்வாறு தசரதனும் கேகயனும் இராமன் பட்டாபிடேகத்துக்கு அழைக்கப்பட்டுவந்த வேற்று வேந்தரும் பிறமாந்தரும் கோசலையும் கைகேயியும் இலக்குவனும் இராமனும் பரதனும் வசிட்ட முனியும் 'பரிசுத்தர்' சித்தார்த்தரும் மற்ற மாந்தரும் வடமொழி வான்மீகரும் தெந்தமிழ்க் கம்பரும் மனுவாதி அறநூலுடையவருமே அறியாத இவ்வழக்கைத் தற்கால நாவலர் சிலர் கண்டெடுத்துக் கொண்டாடுவது புதுமையே.
இவ்வாறு அறநூலும் அறிவும் மன்னர்க்குத் தம் நாட்டில் முழுக்கொடை முற்றுரிமையுண்மையை விளக்குவதோடு, தசரதனுக்கு முன்னும்பின்னும் பாரத நாட்டில் ஆரியமன்னர் கையாண்ட ஆட்சிமுறை வரலாறு பலவும் அதனையே வலியுறுத்தக் காண்பாம். யயாதி மகாராசனுக்குப் பட்டமகிசியால் இருபெருங்குமரர் பிறந்திருக்கவும், அவர் பிறந்தபிறகு கோத்தேவியின் சேடிபாற் கந்தருவமணத்தால் தனக்குப்பிறந்த பூருவுக்கு வேத்தியற்சின்னமான *"முடியும் மாலையும் முத்த வெண்கவிகையும் முரசும் தந்து, படியும் (=நாடும்) வழங்கி"னதான பாரதக்கதையும் அறிவோம்.
"சிறையில் வைத்தவளை விட்டு இராவணன் அபயம்புகின் அவனுக்கு அளிப்பதற்குக் "கோசலநாடுடைய வள்ளல், இன்றுபோய் நாளைவா' என நல்கினன்" என்று சுட்டிய குறிப்பாலும், "உலகளிக்கும் நீரினால் தந்தையும் கொடியன்," "பாரகமுடையவன் ஒரு மகற்கெனவே கொடுத்த பேரரசு," "அரசு நின்னதே ஆள்க." "அரசுயான் இன்று (இராமனாகிய உனக்குத்) தந்தனன்," "ஈந்தேன் ஈந்தேன்," (பரதனுக்காக) "மண்ணே கொள் நீ" என்ற பல வெளிப்படைகளாலும் நாடுடைய நிருபர்க்கு அதனை நல்கும் உரிமையுண்மையைக் கம்பரும் விளக்குகின்றார். "அரசர்கள் தங்கள் நாட்டை மூத்தகுமாரனிடம் கொடுப்பதும், அல்லது அவனைவிட நல்லவனாயிருக்கும் இளைய புத்திரனுக்குக் கொடுப்பதும், ........நியாயம் கெடாது அரசியல் நிலை பெறுவதற்கே"* என்ற வான்மீகர்வாக்கியமும், பிள்ளைகளுக்கு மீதாட்சரக்குடி வழக்கிற்கண்ட பிறப்புரிமை – அரசியலில் யாதும் இன்மையையும், கொற்றவர்க்குத் தம் நாட்டில் முழுக்கொடை முற்றுரிமையுண்மையையும் விசதமாக்கும். "எனக்கு அரசு கொடுப்பதற்காகவே இங்கு அவன் வருகின்றான்......உனக்கு அரசைக் கொடுக்கும்படி சொன்னாலும் உடனே கொடுக்க இசைவானன்றி வேறுரையான்" என்று இராமன் காடு போந்த பரதனைச் சந்தேகிக்க இளையவனுக்குப் பரதனியல்புகூறும் இவ்வான்மீகர் வாக்கியங்களும் குரிசலர்க்குத் தம் நாட்டிற் கொடை முற்றுரிமை-யுடைமையைக் காட்டுமெனெக் கூறவும் வேண்டுமோ?
-------------------------------
*சருக்கம்-8
மாவலிச் சக்கிரவர்த்தியிடம் வாமனர் அவனுலகை வஞ்சித்துப் பெற்றுப் பின்பு அவனைப் புறம்போக்கிய கதை அறியாதார் இருப்பது அருமை. வாமனர்க்கு மாவலி மண்வழங்கும்போது, அவனுக்கு நமுசி யென்ற வயதுவந்த மகனொருவன் இருந்தனன் என்றும், அவன் இருந்தும் அவன் பிறப்புரிமையால் மாவலிக்கு நாட்டிற் கொடையுரிமை குறையவில்லையென்றும் பெரியாழ்வார் திருமொழியால்* விளக்கமாகிறது. அன்றியும், நீதிசாத்திர பாரங்கதரும் மாவலியின் குலகுருவுமான சுக்கிராசாரியர், வஞ்சவேடமுடைய வாமனனுக்கு மண்வழங்காமல் மறுக்கும்படி தூண்டியதன்றி, மகனிருக்கத் தந்தைக்கு நாட்டிற்கொடையுரிமை யின்றென்று எடுத்துரையாமையும் ஈண்டுக் கவனிக்கத் தக்கது. மனமுவந்து தரப்பெற்ற வருக்கே நாட்டிலுரிமை கிடையாதாயின், வஞ்சித்து வாங்கிய மாவலிதேசம் வாமனர்க்கு ஆவதுண்டோ? இறைவன் அறமறந்தேற்றான்போலும்.
மனுகுலத்தில் தசரதனுக்குமுன் ஆண்ட அரிச்சந்திரன் விசுவாமித்திரமுனி விரும்பியபடி தனது அயோத்திநாடு முழுதையுமே தத்தம் செய்தான். கொடுக்கும்போது அவனுக்கு லோகிதாசன் என்னும் கோமகனும் இருந்தான். கொடுத்தவன் குலகுருவும் முனிபுங்கவனுமான வசிட்டன் உடனிருந்தும் அக்கொடை அறத்தாறன்றெனத் தடுத்தானில்லை. கொடைவிரும்பிப் பெற்றவனும் அறமறியாக் கயவனில்லை. வேத விரதங்களில் தூயதுறை போய தவமுனியான விசுவாமித்திரன், மகன் இருக்கவும் மன்னனிடம் கொடையுரிமையின்றேல் நாட்டைக்கேட்டு வாங்குவனா? வாங்கியபின் கொடுத்தவேந்தனோடு குற்றமற்ற அவன் மகனையும் நாடகற்ற நினைப்பனா?
---------------
*முதற்பத்து 9-ம் திருமொழி. 8-ம் பாசுரம்.
இவை பலவாற்றானும் வேந்தருக்குத் தம் தேயத்தில் முற்றுரிமையுண்டென்பதும், அவர் மக்களுக்குப் பிறப்பால் தந்தையர்நாட்டில் அவர் காலத்தில் யாதோருரிமையும் ஏற்படுவதில்லையென்பதும், தம் மக்களிற் முதற்பிறந்தாரெனும் முறைகருதாமல் தாம் விரும்பும் யார்க்கேனும் புதல்வரனைவரையும் விலக்கி ஏதிலர்க்கேனும் தந்தையரசர் தம் நாட்டைத் தருவது ஆரியபூமியில் அறமும் ஆன்ற வழக்கும் உடைத்தென்பதும் விளக்கமாகும். இப்படியிருக்க, இராமன்பிறக்க நீண்ட பல ஆண்டுகளுக்கு முன்னரே மணப்பரிசமாகத் தசரதன் கைகேயிக்குக் கொடுத்தது செல்லாதென்றும், இராமனுக்குப் பிறப்பால் அரசுரிமை எய்திற்றென்றும் வாதிக்க வருபவர் மாற்றம் அவர் வாய்வன்மை குறிப்பதன்றி வழக்கறமாகாமை இனி விரிக்கவேண்டுவதன்றே.
------------
11. சில வினாவிடைகள்
இவ்வாராய்ச்சி இராமனின் தெய்வப்புனிதக் குணத்துக்குப் பழுதும் அவதார மகிமைக்குக் குறைவும் உண்டு பண்ணலாமென்றஞ்சி அகற்றுவார், இதன் உண்மைப் பயன் அறியாராவர். இராமன் மனிதவுருவெடுத்த கடவுளா? கடவுட்பண்பமைந்த மனிதனா? என்ற ஆராய்ச்சி ஈண்டு எழுதல் இல்லை.கடவுளவதாரமாக இராமனைக் காண்பார் யாவரும் இவ்வாராய்ச்சி அவன் தெய்வத்தன்மைக்கு எவ்வித பங்கமும் பண்ணகிலாததோடு அவன் குணப்பெருமையை அளக்கப் பெருந்துணையுமாகும் என்று அறியக்கடவர். பெற்றோர்சொற்போற்றல், உடன்பிறந்தோரைப் பேணல், மணந்த ஒருமனைவியையன்றி வேறு மகளிரை மணங்கொள்ளாமை, தஞ்சம் புகுந்தவரை அஞ்சலென்றளித்தல், இன்னோரன்ன தகைசான்ற நற்குணங்களைக் கண்ணனைப் போலச் சொல்லளவிற் காட்டாமல் வாழ்க்கையால் வலியுறுத்தும் பெருமைத்தாம் இராமகதை. இவற்றுள் மாற்றன்னையென்னும் வேற்றுமையுணராமல், தந்தையொடு தாய் சொற்பேணிப் பரதனைப் பாராட்டித் தழுவி மகிழ்ந்த இராமனின் "செப்பருங்குண"ச் செவ்வியையும் "பங்கமில்குணத்துப் பரதன்" பண்பையும் இவ்வாராய்ச்சியிற்கண்ட வுண்மையே இனிது விளக்குவதாகும். அரசன் பரிசக்கொடையால் அயோத்தி பரதனாயவுண்மை வெளிப்படாதவரை, பரதனும் இராமனுமாகிய இருவரின் பரஸ்பரக்காதலின் நெருக்கமும் பெருக்கமும் பாதிக்குமேல் விளக்கமற்று மங்கி மாசுபடும். பிறப்பால் முற்பிறந்தவனுக்கேயமைவது அரசெனவும், தனக்கு உரிமையில்லாததைத் தாய் தவறாகக் கவர்ந்து தருவதாகவுமே கருதும் பரதன், கொள்ளா உலகப்பழிக்கு அஞ்சி, தான் ஏற்கவொல்லாமல் தமயனுக்குத் தருவதில் அவனுக்குப் பெருமையுண்டோ? 'சுல்க' சீதனக்கொடையால் ஆன்ற அரசமுறையிற் றனதேயாம் அயோத்தி யெனப் பரதன் அறிந்தபிறகு, தாதை தந்தவரத்தை மறுத்துத் தான் அரசேற்கத் தாழ்ந்த தமையன் தடையைத் தன் காதல் வெள்ளத்தால் உடைத்துவென்று தன்னுடைமை தான்தரும் தகவுரைத்து, முதலில் வாங்கவெறுத்த தமையனை விரும்பிக் கொள்ளுமாறு இணக்கி, உரிமையற்ற இராமனை அரசனாக்கத் தன் அறத்தரசுரிமையை வலியத்தந்து, அவனுக்குப் பணிசெய்திருக்கும் வாழ்வுகந்ததன்றோ பரதன் ஆசற்ற பாசத்தை ஒளிரச்செய்யும். முன்னைய'சுல்க' வரலாறு அறியாமல் முதற்பிறந்த தனக்கே யுரியதென்று இருந்த போதும் "என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றோ" என அகமகிழ்ச்சியால் "அப்பொழுதலர்ந்த செந்தாமரையினை வென்ற" தென முகமலர்ந்து தன் உடைமையைத் தம்பிக்கு விரும்பித்தந்த இராமனுக்குத் தனதளிக்கும் தகைமையற்றுத் தமையனதைத் தான் கொள வளரும் பழியஞ்சி அவன்பாற் சேர்ப்பிக்கவிரும்பும் ஒரு பரதனையே தம்பியாக்கில், அப்பரதன் "நின்னினும் நல்லன், நிறைகுணத்தவன்" என்றும்,புண்ணியம் என்பதே அவனுயிர்' என்றும், 'அன்னான் அருளுக்குக் கோடி இராமர் அருகாவரோ' என்றும் கோசலை பரசும் பரிசுடையனாவனோ? அன்னவன், "எத்தாயர்வயிற்றினும் பின்பிறந்தார்க-ளெல்லாம் ஒத்தாற் பரதன் பெரிதுத்த மனாவதுண்டோ?" எனத்தம்முனைக் கொல்லியவந்து நின்ற சுக்ரீவன் குணத்தை நினைந்து உளம் உளையும் இளையவனுக்கு இராமன் எடுத்துக்காட்டிப் புகழும் பெருமிதம் பெறுவதெங்கே? மேலும், சகோதரவாத்சல்யப் பெருமையை விளக்குவதும் இராமாவதார நோக்கத் தொன்றெனக் கொள்வோர், 'இராமன் ஒருவனே தனதளிக்குந் தகையன், பரதன் தனதல்லாத் தமையனதைத் தான் பறிக்கவிரும்பாதவனேயாம்,' என்பரேல், அவதார நோக்கம் நன்கு நிறைவேறாமை காணக்கடவர். தமயன் தம்பிக்குக் காட்டத்தகும் தண்ணளியை, இராமன் 'சுல்க'வுண்மை யறியாமலே பரதனுக்கு அரசுதர விரும்பியதால் நிறுவலானான். இதனால், சகோதரவாத்சல்யத்தில் தமயனன்பாம் ஒருபாதியே விளக்கப்படும். தம்பி தமயனிடம் காட்டவல்ல பேராதரப்பெருமை விளங்குமாறில்லை. தன்னுடைமையான பேரரசைத் தமயனுக்குத் தான் உவந்தளித்த பரதன் மெய்க்காதற்கதையால் மட்டுமே அப்பாதியும் விசதமாகும். தனக்குரியதென நினைத்த தமயனும், பின் தன்னுடைமையென்று அறிந்த தம்பியும், முறையே ஒருவன் மற்றவனுக்கு 'ஏத்தப்படும் வேத்தியல்' வழங்க விரும்பிய மெய்தவா முழுவரலாறுங் கண்டபோதுதான். பிராதாக்கள் பரஸ்பரம் கொள்ளத்தகும் உண்மைக் காதலும், தனைமறந்து காதற் கடனாற்றும் அவர் பெருந்தகைமையும் ஒருங்கே விளங்குவதாகும். அப்பொழுதே அவதார நோக்கமும் பூர்த்தியாகும். தொல்லைச் 'சுல்க' வரலாறு தானறிந்த்தைப் பிறர்கூறா இடத்திற் றன்னலம் துறந்து மாற்றன்னைமகன் அறவுடைமையின் உண்மையை வெளிப்படுத்திப் பரதனையும் கைகேசியையும் வீணே வசைவெள்ளம் நெடிது நீந்தியுழலாமற் கைகொடுத்துதவி மெய்ம்மைக் கரையேற்றுவித்த இராமன் பெருமை இவ்வரலாற்றால் வீறுபெறுமல்லாமல் வேறு வகையுண்டோ?
இனி, 'வான்மீகர் விளக்கிய இவ்வுண்மையைக் கம்பர் விசதமாக்காமல் உய்த்துணரவைப்பானேன்' என்பார், காலதேச வர்த்தமானங்களைக் கருதி வான்மீக வரலாறு பலவற்றையும் ஆங்காங்கே மறைத்தும் குறைத்தும் விரித்தும் திரித்தும் கதைத்துச்செல்லும் கம்பர் வழக்கு அறியாராவர். புழைநுழைந்த வாலி திரும்பவருமுன்னும், அவன் படுகொலையுண்டிறந்தபின்னும், கொழுநனைக் கொல்விக்குங் கொழுந்தனோடு 'புதுமணப் புன்தேறள் ஒக்கவுண்டு' மதையினளாக வான்மீகி சொல்லும் தாரையைக் கம்பர் ஒப்பற்ற வாலியின் தப்பற்ற தாரமாகச் சித்திரித்துள்ளார். விருப்பு வெறுப்போராமல் வில்லிறுத்த ஏதிலனை வேட்ட வான்மீகர் சீதையை, 'காதலிருவர் கருத்தொருமித்து ஆதரவு' படாமன்றல் உகவாத் தமிழ் வழக்கறிந்த கம்பர், மிதிலை வரும் இராமனோடு கண்ணாற் கலந்து பருகியநோக்கின் ஒருவரையொருவர் ஈர்த்து இருவரும் மாறிப்புக்கு இதயமெய்தி உளத்தால் மணந்து மகிழச்செய்து வைத்தார். இன்னும், உடன் வனமழைத்துச்செல்ல உவந்திடாக் கணவன்றன்னைப் புடவை போக்கி வேட்டியுடுத்தியபெண் என்று அறியாமல் சனகன் தன்னை அவனுக்குத் தானம் பண்ணியதாகக் காதலாற் பரிகசித்த வான்மீகர் சீதை வாய்மாற்றத்தை அறவே மறைத்து ஒதுக்கினர். மயிர் பிடித்திழுத்து இராவணன் மடியில் வைத்து எடுத்துச்சென்ற ஆரியவேடக்கவியின் சீதைபடத்தை அழித்து, "தீண்டுவானெனில்" சீதை மாண்டுதீர்வளென்றே அவள் இருந்த மண்ணொடும் கீழ்மையான் "வன்மையால் கீண்டுகொண்டெழுந்தேகினா"னாகப் புதுக்கியுள்ளார். பரதனுக்கு அரசு தந்த 'தாதையை வாதைகொண்டு' பரதனைப் 'போர் தொலைத்து' அவன் பற்றுடையாரனைவரையும் கொன்று இராமனுக்குத் தன்வலியால் முடிசூட்டப் போவதாக நெடுமொழி கூறிய இலக்குவனைக் கடியாமல் அவன்கருத்தைப் பேணிச் செவிகொடுக்கும்படி தன்மகனை வேண்டிய மறத்தாயான கோசலையின் படத்தையும் மாற்றி,"அவனி காவல் பரதனாகுக, இவன்(இராமன்).....இருங்கானிடைத் தவனிலாவகை காப்பென், தகைவிலாப் புவனிநாத (தசரத)ற்றொழுது' எனப்போய்" அலக்கணிடைக் கலக்கமுறா மதியுடையாளாகப் பொறித்தவர், வான்மீகர் மறையாதுரைத்த தசரதன் தகவற்ற புரையுரை பலவற்றையும் போக்கினர். இப்படித் தமிழ்நாட்டிற் றங்காலத்தவர் ஒழுக்க வழக்கங்களையும் விருப்பு வெறுப்புக்களையும் ஓர்ந்து ஒப்புரவுவழுவாது உளக்கிடையுணர்ந்து தம் கவியிற் கதைகளைத் தகவுநோக்கித் துணிந்து திரிக்கும் கம்பர், தம் காவியத்தை அரங்கநாதராலத்தில் அரங்கேற்றலாயினர்.
தஞ்சையிற் கரந்தைத் தமிழ்ச்சங்கத்திற் சேதுமன்னர் தலைமையின் கீழ் இவ்வாராய்ச்சிபற்றி யான் பேசுங்கால், விஷமமாகச் சில வினாக்கள் எழுப்பி விடைபெற்று வம்புக்கு வழிகாணாத சிலர் யான் பின் தனியிருக்கையிற் செய்த வேண்டுகோளொன்றை ஈண்டுச் சுட்டவேண்டுவது அவசியமாகும். "இராமன் பாற்றவறு காட்டினும் வைணவர் அதற்கு வருந்தார். தசரதனை அவர் தம் சமய சம்பிரதாயத்தில் தலைநின்ற பரமபாகவதர் பெருந்தகையாப் பேணுவர். அதனால், தசரதன் தவறுடையனாக ஆராய்ச்சியின் பயன் முடியலாகாது. ஆதலால் யாதாமொரு யுக்திவாதத்தால் தசரதனைத் தவறற்றவன் எனத் தாங்களே காட்ட வல்லுநராகலான் அவ்விதம் செய்யவேண்டும்" என்று அவர் என்னைத் தூண்டமுயன்றனர். அறிவாற்றலை வெளிப்படுத்தவேண்டி உண்மைக்கு விலை மறுத்து எதுவும் யாண்டும் உரைத்து மகிழும் ஏதவாதிகளில் ஒருவனாக என்னைச் சேர்த்தெண்ணியவர் வஞ்சப் புகழ்ச்சி நயவாமல் உள்ளதை உள்ளபடி யுரைக்கும் என்னியல்பு சொல்லி நான் விடைபெற்று விலக நேர்ந்தது.சமயசம்பந்தமாகவும் நிசம்பேச மிகக்கூச வேண்டாத இக்காலத்தியல்பு இதுவாயின், திருவரங்கப் பெருமாள் திருக்கோயிலில் ஆயிரமாண்டுகளுக்குமுன் தம் நூல் அரங்கேற்றவந்த கம்பர் வான்மீகர் வாக்கியமனைத்தையும் மாற்றாதுரைத்துத் தசரதன் தவறு கூறித் தம் தலையிழக்கத் துணிவது கவிமரபுக்கு அத்துணை அவசியமற்றென்பது சிதிது சிந்திக்கற்பாற்று. பிற இடங்களிற் போல ஈண்டுக் கம்பர் கதை வரலாற்றை அறவே மாற்றக்கருதிலர்; மாற்றின், தூயசிந்தைக் கைகேயி தெய்வக் கற்புப் பழுதுபடுமாதலால், கற்பிறந்த தாரையையே புனிதையாக்கும் புலவர் குறையா நிறையுடைய கோப் பெருந்தேவியின் புகழ்க் கொலைக்கு இசையாரன்றே. அதனால் உண்மையை ஒளியாது உரைத்துள்ளார். உரைக்கு மிடத்து இடக்கரடக்கி, கேட்கும் வீரவைணவ தசரத பக்தர் உளம் உளையாவாறு வெச்சென்றுரையாமற் கார்ப்புச் சொல் ஓம்பி, அறியுநர் உண்மையறியுமாறு தசரதன் காதற்றவறும் கைகேயி கற்புமேம்படு காதலும் காட்டி, வான்மீகர் வாய்மையையும் போற்றிப்போந்தார்.
வான்மீகர் விசதமாக்கினும் கம்பர் விளக்காது விடுத்த வரலாற்றுண்மையை இப்போது வெளிப்படுத்துவானேன்? என்ற வினாவுக்கு விடையிறுக்குங் கடனை மறவேன். இராமனே தன் வாயால் இவ்வுண்மையைக் கூறி வைத்தான். தனியிருந்து பிறர் அறியாமற் பரதனுக்கு மட்டும் இதைச்சொன்னானில்லை.'தருமத்தின்தே'வான பரதனையும் தூயசிந்தைத் தெய்வக் கற்பினளான சிற்றன்னையையும் தகவின்றி உலகுதூறும் பழிவெள்ளக் குழி நின்றேற்றுவான் கருதிய 'நியாயமத்தனைக்கும் ஓர் நிலயமான' இராமன், தானறிந்த .உண்மையைத் தன்னைக் காணவநத "அரசவேலையும் துன்றுசெஞ்சடைத்தவரும் சுற்றமும் தன்றுணைத் தம்பிமார்களும் சென்று சூழ ஆண்டிருந்து" அறையலானான். தன்தந்தை புகழும் தன்னலமும் மறவாது பரதனைபட்டும் தெருட்டும் விருப்புடையனேல், இராமன் இதை அவனுக்குத் தனியிடத்திற் கூறி யிருக்கலாமே? அறமும் தகவும் அறியாதவனா இராமன்? "அற்றங் காணும்வரை தன் கருத்தைப் பிறர் அறியாமல் அடக்கவத்த பெருந்திலவன்" என வான்மீகர் இவன் குணம் கூறியுள்ளார்.** தகவின்றித் தந்தை கோபத்தாற்றள்ளிய வசைவெள்ளத்தினின்று இவரைக் கரையேற்றுங்கருத்தாலன்றோ செம்மல் சதசிருந்து யாவரும் அறிய இவ்வரலாறு கூறி உண்மையை உலகறிய வெளிப்படுத்தியது. அதை மறைத்துக் கைகேயி பழிவளர்க்க விரும்புபவரே மங்கையர்க்கரசியின் மாசிலா நிறையறக்கொலைஞராவதோடு இராமன் பெருவிருப்பழித்து அவனபசாரத்துக்கும் ஆளாவர். இராமன் உளக்கிடையறிந்தே கம்பரும் வான்மீகரைப்போல வெச்சென்றுரையாவிடினும், இவ்வுண்மையைக் கரவாது கூறியுள்ளார். ஆடவர் பழிசுமந்தும் மடந்தையர் புகழ்பேணுவது ஆண்மையறமாம். அப்படியிருக்கக் கைகேயி மெய்ப்புகழும் கற்பும் கொன்று தவறுடைய தசரதன் பொய்ப்புகழ் வளர்ப்பது "ஏதங்கொண்டு ஊதியம்போகவிடும் பேதைமை"ப்பால தேயாமன்றோ? கம்பர் அறவே மறைப்பினும் இவ்வுண்மை வெளிப்படுத்துங் கடமைகாண்பதன்றோ தமிழ்மரபு?
-------------------------------
*நகர்நீங்குபடலம், கவி-95, **சருக்கம்1.
கம்பரும் கரவாது உரைத்துள்ள மெய்வரலாற்றைக் காலக்கொடுமையால் மறந்ததுமன்றி, உண்மையுணர் வூட்டுவாரை வெறுத்து வைது, ஆசில் கற்பறக் கைகேயி புகழையும் மாசுபடுத்தி மகிழ்வார்க்குக் கூறவரும் மாற்றம் இல்லை. உண்மையுணர விரும்புவோர்க்கே இவ்வாராய்ச்சி உதவுமல்லால், கொண்டதுவிடாக் கொள்கையர் நீதி கருதிலராகலான் அவர்முன் வாதமெதுவும் பயன்தராது. புலவரும் இராமனும் புகன்றிலராயினும், பயன் பலர் நயவாரெனினும், உண்மையாவதை உரைப்பதே கடனெனக் கண்ணுதலார்முனும் கட்டுரைத்த தமிழ் மரபோம்பும் விருப்புடையேன், மெய்வெளிப்படுத்த வேறு துணை வேண்டேன். ஈண்டு, பொய்யாமொழி ஆரியப் புலவனோடு மெய்வழாத் தமிழ்ப் பாவலனும் உரைத்துப் போந்ததும் கற்பரசியின் மெய்ப்புகழோம்பும் நற்பயன் தருவதுமான உண்மையை வலியுறுத்த ஆற்றலும் தகவும் போதாமைக்கே கவல்வதல்லால், இயன்றவரை கண்டது உரைக்கப் பிறிது புகல் தேடுவேனல்லேன்.