கோம்பி விருத்தம் : மூலமும் உரையும்
வெ.ப. சுப்பிரமணிய முதலியார் இயற்றியது.
kOmpi viruttam
of ve.pa. cuppiramaNiya mutaliyAr
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Digital Library of India for providing a scanned image
version of this work for the etext preparation.
This etext has been produced via Distributed Proof-reading Implementation and
we thank the following volunteers for their assistance:
Anbu Jaya, Azarudeen, S. Karthikeyan, V. Ramasami,
R. Navaneethakrishnan and Thamizhagazhvan.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2013.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
கோம்பி விருத்தம் : மூலமும் உரையும்
வெ.ப. சுப்பிரமணிய முதலியார் இயற்றியது.
உ
கணபதி துணை
Source:
"KOMBI VIRUTHAM"
A TAMIL POEM ADOPTED FROM "CHAMELEON"
BY V.P. SUBRAMANIA MUDALIAR, G.B.V.C.,
(Graduate of the Bombay Veterinary College.)
கோம்பி விருத்தம் : மூலமும் உரையும்
வெ.ப. சுப்பிரமணிய முதலியார் இயற்றியது.
Madras
PRINTED BY S. J. CHOWRRYAPPAH, AT THE ALBINION PRESS.
1897.
(All rights reserved.)
-------
MRR V. Swaminatha Iyer Avergal, Tamil Pundit, Kumbakonam College, says:-- It' gave me immense pleasure to go through "kombi Viruththam" by M.R.R.Ry V.P Subramania Mudaliar Averkal. Its diction and ideas are highly praiseworthy. It is an interesting that I cannot bring myself to attend to anything else, while reading it. It evinces the profound scholarship of the Author in classical work and bids fair to be of great use to Students. (Translated from Tamil )
ம-௱-௱ஸ்ரீ வெ.ப. சுப்பிரமணிய முதலியாரவர்களியற்றிய கோம்பி விருத்தத்தைப் படித்து நிரம்பச் சந்தோஷமடைந்தேன். இதில் அமைந்துள்ள சொல் நயமும் பொருள்நயமும் மிகப் பாராட்டற்பாலன. இதைப் படிக்கும்பொழுது இடையிலே வைத்துவிட்டு வேறொன்றைச் சொய்தற்கு எனக்கு மனம் வரவில்லை. இவர்கள் சிறந்த நூல்களில் ஒழுங்கான பாண்டித்திய முள்ளவர்களென்பதை இது வெளியாக்குகின்றது. இந்நூல், வித்தியாசாலையில் படிக்கும் மாணாக்கர்களுக்கு மிகப் பயன்றருமென்று நம்புகிறேன்.
கும்பகோணம் காலேஜ்)
இங்ஙனம்,
21-12-97. ) வே. சாமிநாதையன்.
--------------
PREFACE.
This poem has been based on the story of "Chameleon." Such alterations and additions as were considered suitable for the teatment of the subject in Tamil poetry have been freely made.
A few notes have been added to enable the work to be understood by persons who have not got sufficient acquaintance with Tamil literature to understand works of the kind without help. The notes will also help purely Tamil Scholars in fully comprehending the English ideas embodied in the work. The substance of each stanza (not a verbatim paraphrase) has been given in the notes. Difficult words and phrases and allusions to English stories and ideas have also been fully explained. The notes are believed to be sufficient and not too many.
If this work meets with the same appreciation and encouragement from the scholars and the Press as my poetrical Transalation of Paradise Lost, Book I, in Tamil, has done, I shall consider that my labour has not been thrown away.
V.P.S.
----------
கோம்பிவிருத்தம் : முகவுரை.
முன்காலத்தில், சீவகசிந்தாமணி ஆசிரியர், நரியை விஷயமாகக்கொண்டு நரிவிருத்தமென்று ஒரு நூல் இயற்றியதாக அநேகர் கேட்டிருக்கலாம். அதுபோல, இது, கோம்பியைப் பற்றி கூறுவதனால், கோம்பிவிருத்தமென்று பெயரிடப் பெற்றது. கோம்பி இன்னதென்று நூலால் விளங்கும்.
இது, இங்லீஷில் உள்ள *'Chameleon' ஒரு பாடலின் கதாசாரத்தை மட்டும் கைக்கொண்டு அதனைப் பல வருணனைகள் உபகதைகள் முதலியவற்றால் மிக விரிவாக்கி "எப்பொருள் யாரயார் வாய்க் கேட்பினும் அப்பொருள் - மெய்ப்பொருள் காண்பதறிவு" என்ற நீதிக்கு இடமாக இயற்றப்பட்டிருக்கின்றது.
கற்றோரேயன்றி மற்றோரும் இந்நூற்பொருளை எளிதாக அறிந்துகொள்ளும் பொருட்டு, இலகுவானதோர் உரை எழுதப்பட்டிருக்கின்றது. இந்த உரையில், பாட்டுக்களின் முக்கியமான கருத்து விளங்குதற்கு அனாவசியகமான பதங்களின்
பொருள்கள், சுருக்கத்தையும் தெளிவையும் உத்தேசித்து, சேர்க்கப்படவில்லை; பொருள் நன்கு புலப்படுவதற்கு இன்றியமையாத இடைப்பிறவரல்கள் வேண்டுமிடத்து நிரப்பப் பட்டிருக்கின்றன. பாட்டுக்களின் முழுப்பொருளையும் தெரிந்து கொள்ள விரும்புவோர்க்கு உதவியாக அரும்பத விளக்கமும் எழுதப்பட்டுள்ளது.
ஒரு பாட்டுக்கும் அடுத்த பாட்டுக்கும் உள்ள பொருட் சம்பந்தத்தால் ஒன்றையொன்று இயல்பாகத் தொடர்ந்து வருதல் (இந்நூலில் எடுத்தாளப்பட்டுள்ள) இங்கிலீஷ் கருத்துகள் கதைகள் ஆகிய இவைகள் முதலியவற்றைத் தெரிவிக்கும் விசேஷக் குறிப்பும் சேர்க்கப்பட்டிருக்கின்றது. இவ்விசேஷக் குறிப்பில் அடங்காதனவும் உள. அவை விரிவஞ்சி விடுக்கப்பட்டன.
பாட்டொருபக்கம் உரையொருபக்கமாக இருந்தால், இரண்டையும் ஒத்துப்பார்த்துப் பொருள் தெரிந்துகொள்ளல் சிறிது பிரயாசமாக விருக்குமென்று, அவ்வப் பாட்டின் கீழே அதனதன் உரையும் அரும்பதவிளக்கமும் விசேஷக்குறிப்பும் சேர்க்கப் பட்டிருக்கின்றன.
வெ. ப. சு.
------
கோம்பி விருத்தம்.
மருதமா தியநிலம் வாழு மானிடர்
வெருவருங் குளிரினான் மெய்ந் நடுக்குறீஇத்
தெருமரு பருவத்துஞ் சேர்ந்த மாந்தரைச்
சுரமென வெதுப்பிடுஞ் சுரமொன் றுண்டரோ. (1)
(இதன் பொருள்.) குளிர்காலம் வந்தபோது, மருதம் குறிஞ்சி முல்லை நெய்தல் என்னும் நால்வகை நிலத்திலுள்ளோரும் குளிரினால் உடம்பு நடுங்கி வருந்துவது இயல்பு. அப்படிப்பட்ட காலத்திலும் தன்னை யடைந்தவர்களைச் சுரநோய்போல வெதுப்புகின்ற பாலைநிலம் ஒன்று உண்டு.
ஆதிய - முதலான; வெருவரும் - அஞ்சும்; மெய் நடுக்கு; உறீஇத் தெருமரும் - உடம்பு நடுங்குதல் உற்று வருந்தும். சுரம் என வெதுப்பிடும் சுரம், தன்னைச் சுரம் (சுரநோய்) என்று சொல்லும்படி வெப்பஞ்செய்கின்ற பாலைவன மென்றுமாம்.
தண்மையே வெம்மையாத் தரங்கக் கானலா
வொண்மணி பரல்களா வுற நெகிழ்ச்சியே
திண்மையா மீனினந் தீய மாக்களா
வண்மிய கடலென வக்ன்ற தச்சுரம். (2)
(இ-ள்.) தன் (கடலின்) குளிர்ச்சியே வெப்பமாகவும், இரத்தினங்கள் பருக்கைக் கல்லுகளாகவும், அலைகள் கானலாகவும், நெகிழ்ச்சியானதன்மை (தரைபோல இறுகிக்) கடினமாகவும், மீன் கூட்டம் செந்நாய் முதலிய மிருகங்களும் வழிப்பறிசெய்வோரும் ஆகிய) கொடிய மாக்களாகவும் மாறிய கடல்போல விசாலமாக, அந்தப் பாலைவனம் உள்ளது.
தண்மை - குளிர்ச்சி; வெம்மை - வெப்பம்; தரங்கம் - அலை; வொண்மணி - பிரகாசமுள்ள இரத்தினங்கள்; பரல் - பருக்கைக்கல்; திண்மை - இறுகியதன்மை; மீன்இனம் - மீன்கூட்டம்; மாக்கள், மனிதருக்கும் மிருகங்களுக்கும் பொதுப்பெயர்; அண்மிய - அடுத்த.
[கடலும் பாலைநிலமும் மறுதலைப் பொருள்களாயினும் பரப்பாகிய பொதுத்தன்மைபற்றி ஒன்றோடொன்று உவமிக்கப்பட்டன. அவ்வுவமைக்கியையக் குளிர்ச்சி முதலியவை அவைகளுக்கு மறுதலையாகிய வெப்பம் முதலியவைகளாக மாறியதுபோலக் கூறியது காண்க.]
சங்கரன் கண்ணெனச் சாற்றும் பானுவைத்
திங்களைப் பார்த்துளேஞ் செவ்வ ழற்கணை
யெங்கணுங் கண்டில மென் றியம்புவார்க்
கிங்குள திதுவென விறுத்த தச்சுரம். (3)
(இ-ள்.) சிவனுடைய கண்களென்று சொல்லப்பட்ட சூரிய சந்திரரைப் பார்த்திருக்கின்றோம், அச்சிவனுடைய சிவந்த அக்கினிக் கண்ணை மட்டும் எங்கும் பார்க்கவில்லை என்று சொல்லுவார்க்கு அந்தக் கண் இங்கே இருக்கின்றதென்று சொல்லும்படி (அவ்வளவு வெப்பத்தோடு கூடியதாக) அந்தப் பாலைவனம் இராநின்றது.
சாற்றும் - சொல்லப்படுகின்ற; பானு - சூரியன்; திங்கள் - சந்திரன்; செவ்வழற்கணை - சிவந்த அக்கினிக் கண்ணை; எங்கணும் - எங்கும்; கண்டிலம் - பார்க்கவில்லை; உளது - உள்ளது; இறுத்தது -தங்கியது.
[சிவந்த நிறத்தினாலும் வெப்பத்தினாலும் பாலைவனம், சிவனுடைய செந்தழற் கண்ணை ஒத்த்தென்று கூறப்பட்டது. "செந்நெருப்பினைத் தகடு செய்துபார் செய்ததொக்கும் அச் செந்தரைப் பரப்பு..." என்று கலிங்கத்துப் பரணியில் வருவதைப் பார்க்க.]
பெரியவர் கோபத்திற் பிறந்த சாபத்தீ
யரிவையர் கற்புத்தீ யன்பர் துன்புறப்
புரிபிரி வென்னுந்தீ பொறாமைத் தீயிவை
யொருவழித் தொக்கென் வுளதப் பாலையே. (4)
(இ-ள்.) பெரியோர்கள் கோபகாலத்தில் வெளிப்பட்ட சாபத்தீயும் மாதர்களுடைய கற்புத்தீயும் அன்பர்களாயினோர் துனபம் அடையும்படி அவரைப் பிரிக்கின்ற பிரிவாகிய தீயும் பொறாமை என்றதீயும் ஆகிய இவைகளெல்லாம் ஓர் இடத்திற் கூடித் திரண்டது போலவும் அந்தப் பாலைவனம் உள்ளது.
அரிவையர்-ஸ்திரீகள்; துன்பு உற- துன்பம் அடைய; புரி- செய்கின்ற; ஒருவழித்தொக்கென-ஓர் இடத்திலே திரண்டாற் போல.
நீர்நடு வடவையுண் டென நிகழ்த்துவா
ராருமே கண்டில ரதனைப் போலன்றி
பார்நடுத் தீயெனப் பார்த்த பல்லவர்
சோர்விலா துரைப்பரச் சுடு சுரத்தையே. (5)
(இ-ள்) சமுத்திரத்தின்; மத்தியிலே வடவாமுகாக்கினி (நீர்நடுத்தீயாக) இருக்கின்றதென்று சொல்வது உண்டு. ஆனால் அந்த அக்கினியைப்பார்த்தவர்கள் இல்லை. அதுபோலல்லாமல் மேற்கூறிய பாலைவனத்தைக் கண்ணாலே கண்டோர் அநேகர் அதனை நிலநடுத்தீ யென்று சொல்லுவார்கள்.
நீர்நடு வடவை உண்டு-கடல் மத்தியிலே வடவாமுகாக்கினி உண்டு; பார்-நிலம்-பூமி; பல்லவர்- பலர்; சோர்விலாது-சொற்சோர்வு படாது; உரைப்பர்-சொல்லுவார்.
மேயவவ் வடவையே வேலை நீரெலாம்
வாய்மடுக் குபுதனை வளையு நீரின்றி
யேயும்வெண் டேர்ப்புகை யியைவெஞ் செந்தரை
யாயதோ வெனவுறு மச்சு ரத்தினே. (6)
(இ-ள்) அன்றியும் அந்த வடவா முகாக்கினி தானே, தன்னைச் சூழ்ந்திருந்த கடல் முழுவதையும் உண்டு ஒழித்துவிட்டு, அதனால் தன்னைச் சூழவும் நீரில்லாததாய், கானலாகிய புகையுடன் வெம்மையும் செந்நிறமும் உள்ள தரைப் பரப்பாக ஆகியதோ என்று சொல்லும்படியாகவும் அந்தப் பாலைவனம் உள்ளது. அதிலே
மேய-பொருந்திய; வடவை-வடமுகாக்கினி; வேலை- கடல்; வாய்மடுக்குபு-உண்டு-குடித்து; ஏயும்-பொருந்திய; வெண்டேர்-கானலாகிய; புகை இயை-புகை பொருந்திய; வெஞ்செந்தரை-வெப்பமும் சிவந்த நிறமும் உள்ள தரை; ஆயதோ என-ஆகியதோ என்று சொல்லும்படி.
[பாலைவனம், தன்னிடத்துள்ள கானலானது புகையை ஒத்திருத்தலினாலும், தனக்கு இயல்பாகவுள்ள வெப்பம் செந்நிறம் இவைகளினாலும், தன்னைச்சூழ நீர் இல்லாததனாலும் கடலால் வளையப்படாத வடவா முகாக்கினி போன்றது என்றபடி]
தீயதே நிலமுமாய்த் திரவ நீருமாய்
வாயுவு மாயதிவ் வைய கத்தென
வேயுமெப் பொருள்களும் வெம்மை யெய்திட
மேயபங் குனியினோர் வெய்ய நாளினே. (7)
(இ-ள்) இந்தப் பூமியிலே தீயொன்றுதானே கடினமான மண்ணும் ஆகி,நெகிழ்ச்சியான நீரும் ஆகி,ஆவித் தன்மையுள்ள வாயுவும்
ஆகியதின்று சொல்லும்படி (கட்டிப்பொருள்கள் நெகிழ்ச்சிப் பொருள்கள் ஆவிப்பொருள்களான) எல்லாப்பொருள்களும் சூடு அடையும்படியாகப் பங்குனிமாதம் வர, அந்த மாதத்திலும் மற்ற நாள் களைக்காட்டிலும் அதிக வெப்பமாக இருந்த மரு தினத்திலே.
திரவம்-நெகிழ்ச்சி; ஆயது-ஆகியது; வையகத்து-பூமியில்;
ஏயும்-பொருந்திய; எய்திட-பொருந்த; மேய-மேவிய.
[பங்குனிமாதம் போலவே அதற்குப் பிந்திய சித்திரை வைகாசி ம, முதலிய சிலமாதங்களும் வெப்பமானவைகள். என்றாலும், "சித்திரை பத்தில் (பத்தாந்தேதியில்) சிறந்த பெருங்காற்று ஐப்பசி பத்தில் அறையில் அடைபடும்" என்ற பழமொழிப்படி அந்த வெப்பம் உள்ள மாதங்களில் வழங்கும் காற்றுப் பங்குனி மாதத்தில் இல்லாததனால்,அந்த மாதங்களிலும் இந்த மாதம் அதிக உருப்பம் உடையது. ஆனது பற்றியே, முந்திய காலத்தில் யாதாயினும் ஒன்று செய்ய உடன்பட்டோர், அது செய்யாவிடில் "பங்குனி மாதத்தில் பகல்வழிப்போவார் துன்பத்தை அடைவேனாக" என்று பிரதிக்கினை செய்யும் வழக்கமிருந்தது.]
கொடியதே ளிடத்துவெங் கொடுக்கும் பாம்பின்மாட்
டடுவிடப் பல்லும்போ லழல்ப கற்கணே
கடுமையார் வெப்பதி கரித்த நண்பக
லிடைவழிச் செல்குவா ரிருவர் போந்தனர். (8)
(இ-ள்) தேளினிடத்திலே கொடுக்கும் பாம்பினிடத்திலே விஷப்பல்லும் கொடியவைகளாக இருப்பதுபோல, பகற்காலத்தில்
கொடியதான வெப்பம் மிகுந்த மத்தியான சமயத்திலே இரண்டு வழிப்போக்ர்கள் (மேற்கூறிய சுரத்தூடு) போவாராயினார்.
வெங்கொடுக்கு - கொடுமையான கொடுக்கு; மாட்டு - இடத்தில்; அடு - கொல்லும்; அழல் - உட்டினம் செய்கின்ற; ஆர் - நிறைந்த; நண்பகல் - நடுப்பகலிலே; வழிச்செல்குவார் - பிரயாணம் செய்பவர்கள்; போந்தனர் - போனார்கள்.
[இதுகாறும் சென்ற எட்டுப் பாடல்களில், குளிர்காலத்திலுங்கூட வெப்பஞ்செய்யும் ஒரு பாலைவனத்திலே அத்தியந்த உஷ்ணமுள்ள பங்குனி மாதத்திலே மற்றத் தினங்களிலும் அதிக வெப்பமாக விருந்த ஒருதினத்திலே இரண்டு பிரயாணிகள் சென்று கொண்டிருந்தார்கள் என்பது கூறப்பட்டது.]
சந்தித்தார் சில்வழி தாஞ்செல காலையின்
முந்தித்தாம் பட்டவெல் லாமொழிந்தனர்
பிந்தித்தாந் தங்கிடம் பெறுது மோவெனச்
சிந்தைத்தா பத்தினாற் றியங்கு செவ்வியில். (9)
(இ-ள்.) அவ்வாறு வழிச்சென்றவர்கள் சந்தித்துச் சிறிது தூரம் செல்லும்போது தாங்கள் இருவரும் அந்தக் கொடிய பாலை வனத்திலே பட்ட கஷ்டங்களெல்லாவற்றையும் பற்றிப் பேசினார்கள்; (அக்கஷ்டங்களை நினைந்து அதைரியம் அடைந்து) இனிமேல் தங்குதற்குத் தக்க இடமும் கிடைக்குமோவென்று தியங்கினார்கள். அப்படித்தியங்கிய சமயத்திலே.)
சில்வழி - சிலவழி - சிறிதுதூரம்; செல்காலையில் - சென்ற போது; மொழிந்தனர் - பேசினார்கள்; தங்கிடம் - தங்கும் இடம்;
பெறுதுமோ - பெறுவோமோ; சிந்தைத் தாபம் - மனத்துன்பம்; செவ்வி - சமயம்.
தரைநடு நெருப்பெனச் சாற்று மச்சுரத்
தெரிநடு நீரெனச் சேய்த்தி னெய்துமோர்
மரமிடை வனத்தினை வறியன் கண்டவோ
ரிருநிதி யெனக்கண்டங் கெய்த வேகினார். (10)
(இ-ள்.) நிலத்தின் மத்தியிலே நெருப்பிருந்தாற்போல இருந்ததென்று சொல்லப்பட்ட சுரத்திலே, நெருப்புமத்தியில் நீர் இருந்தாற் போன்ற ஒரு சோலையை, தரித்திரன் புதையலைக்கண்டது போலக்கண்டு அதிற் சேரும்படி போகலுற்றார்கள்.
சேய்த்தின்-தூரத்தில்; எய்தும்-பொருந்தியிருந்த; மரம்- மிடைவனம்-மரங்கள் நெருங்கிய சோலை; வறியன்-தரித்திரன் இருநிதி-பெரும்புதையல்; எய்த; அடைய.
தரையிடைப் பரவலாற் றரங்க வேலையோ
விருவிசும் பெய்தலா லெழிலி யேகொலோ
சுரநெடும் பகைதெறச் சூழ்ந் திரண்டுமோ
ருருவுற்ற வோவென வுளதச் சோலையே. (11)
(இ-ள்) அந்தச்சோலை-,(காற்றினால் அலைபோல அலையும் கிளைகளும் இலைகளும் நெருங்கித்) தரைமேலே (இருண்டு) பரவியிருத்தலினால்,அலைகளையுடைய சமுத்திரந்தானோ வென்றும், ஆகாயத்தை அளாவி இருத்தலினால் மேகந்தானோவென்றும் அந்தச் சமுத்திரமும் மேகமும் அவைகளுக்கு நெடுங்காலமாகப் பகையாக உள்ள பாலைவனத்தை அழிக்க (த்தனித்தனியே சாத்தியப்படாதென்று) யோசனைசெய்து இரண்டும் சேர்ந்து ஓர் உருவெடுத்தனவோ என்று சொல்லும்படியாக இருந்தது.
தரங்கம்-அலை; வேலை-சமுத்திரம்; இருவிசும்பு-பெரிய வானம்; எய்தலால்-பொருந்துதலினால்; எழிலி ஏ கொல்-மேகந்தானோ; ஓ-அசைநிலை; சுரநெடும்பகை-சுரமாகிய நீண்டகாலப் பகையை; தெற-அழிக்க; சூழ்ந்து-ஆலோசித்து; உருவு உற்றவோ- வடிவு பொருந்தினவோ.
[குளிர்ச்சி இருண்ட நிறம் விசாலம் காற்றினால் அலைதல் என்ற இவைகள் சோலைக்கும் சமுத்திரத்துக்கும் மேகத்துக்கும் உள்ள
பொதுத்தன்மைகள்.]
விள்ளுறு புகையுண்டேல் வெய்ய தீயுண்டு
தெள்ளிய நிலவுண்டேற் றிங்க ளுண்டிளம்
பிள்ளைக ளுண்டெனிற் பெற்ற தாயுண்டீ
துள்ளதா னீருண்டென் றுள்புக் கார்சொல்வார். (12)
(இ-ள்) புகையால் நெருப்பும் நிலவால் சந்திரனும்;பிள்ளைகளால் தாயும் அனுமதி செய்யப்படுதல்போல இந்தச்சோலை இருப்பதனால் (இதன் உள்ளே) நீரும் இருக்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டு அவர்கள் அதனுள்ளே புகுந்து பின் வருவதைச் சொன்னார்கள்.
விள்ளுறு-(தீயிலிருந்து) பிரியும்; உண்டேல்-உண்டென்றால்; வெய்ய-வெப்பமான; தெள்ளிய-தெளிவான; திங்கள் - சந்திரன்; ஈது உள்ளதால்-இது இருத்தலினால்;உள் புக்கார்- உள்ளே புகுந்து. (விள்ளுதல் கூறுதல் எனினும் அமையும்)
காந்திடு வெயினிலாப் புரையிக் காவினின்
மாந்தநீ ரளித்திடு மரங்கள் பற்பல
வார்ந்திடக் கனிதருந் தரு வனந்தமெய்
வேய்ந்திடச் சிரையீ விருக்க மெண்ணில. (13)
(இ-ள்) இயல்பாக வெப்பமாக உள்ள வெயில், நிலாவை யொத்திருக்கின்ற இந்தச் சோலையிலே, குடிக்க நீர் தருகின்ற (தென்னை
முதலிய) மரங்கள் அனேகம் உண்ணப் பழங்கள் தருகின்ற மரங்கள் அனேகம்; உடுத்துக்கொள்ள (மரவுரியாகிய) உடைகளைக்
கொடுக்கும் மரங்களும் அநேகம்.
காந்திடு-முதிர்ந்த வெப்பமாக எறிக்கின்ற; நிலாப்புறை- நிலவை ஒத்திருக்கின்ற; கா-சோலை; மாந்த-குடிக்க; அளித்திடும்-
கொடுக்கும்; ஆர்ந்திட-உண்ண; கனி-பழம்; தரு-மரம்; மெய்- வேய்ந்திட- உடம்பை மூட; -உடுத்துக்கொள்ள; சீரை-, மரவுரிக்கும் சீலைக்கும் பொதுப்பெயர்; ஈ-கொடுக்கின்ற; விருக்கம் எண்
இல-மரங்கள் எண்ணில்லாதன.
தீயவெவ் வெயின்மழை சீதங் தாங்குமில்
லேய்தரு பாழிப்பொந் தியை தருப்பல
நோயினைத் தெறுமர நோவுஞ் சாவுந்தீர்
காயசித் தியைத்தருந் தருக் கணக்கில. (14)
(இ-ள்) அன்றியும் கொடிய வெயில் மழை குளிர் இவைகள் அணுகாதபடி காத்து வீடுகள் போன்றிருக்கும் பெரும் பொந்துகளையுடைய மரங்கள் அநேகம். (வேர் பட்டை இலை பூக் காய் கனி முதலியவைகளால்) நோய் தீர்க்கும் மரங்களும் (வந்த நோய்லளைத் தீர்க்குமட்டில் நில்லாமல் வரக்கூடிய) நோவையும் சாவையும் விலக்கும் காயகற்பத்தை அளித்துக் காயசித்தியை உண்டாக்கும் மரங்களும் அநேகங்களுள்ளன.
தீய வெவ்வெயில்-கொடிய வெப்பமுள்ள வெயில்; சீதம்- குளிர்; இல் ஏய்தரு- வீட்டை ஒத்த; பாழிப் பொந்து-பெரிய மரப்பொந்து; இயை-பொருந்திய; தரு-மரம்; தெறும்-அழிக்கும்; தீர்-தீர்ந்த;-நீங்கிய.
ஓவின்றிக் கண்டுகேட் டுண்டுயிர்த்துற
வேர்வண்டி னிசைகள்கொங் கெய்தி மென்மையு
மேவியைம் புலனுக்கும் விருந்து செய்திடும்
பூவையே பூவையாப் பொழிவ பன்மரம். (15)
(இ-ள்) கண்ணாற் கண்டும் காதாற் கேட்டும் வாயால் உண்டும் மூகாகால் மோந்தும் உடலாற் பரிசித்தும் அனுபவிக்கும் இன்பங்களை முறையே கொடுக்க, அழகும் வண்டின் இசையும் தேனும் வாசனையும் மென்மையும் பொருந்தி ஐம்புலன்களுக்கும் விருந்து செய்யும் பூவையே (புஷ்பங்களையே) பூவையாக (மங்கையாக)க் கொடுக்கும்
மரங்கள் அநேகங்களுள்ளன.
ஓவின்றி-நீங்காமல்; உயிர்த்து-மோந்து; உற-பரிசிக்க; ஏர் அழகு; வண்டின் இசை- வண்டின் ஒலி; கள்-தேன்; கொங்கு- வாசனை; எய்தி-பொருந்தி; மென்மை-மிருதுவான தன்மை; மேவி-பொருந்தி.
["கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும்-ஒண்டொடி கண்ணே உள" என்ற குறளில் கூறியவற்றால் கேட்டற் குரியது ஒன்று நீங்கலாக மற்ற நான்கும் பூவின்கண்ணே இயல்பாக இருக்கின்றன. பூவில் வண்டுகள் தேனுண்ண வந்து ஒலிசெய்யுங்போது, அந்தக் குறையும் நிரம்பிவிடுகின்றது.]
ஓவிய ரெழுதொணா வுருவ மேவிய
பாவைகள் பலபல பயக்கும் பன்மரம்
பூவில்யா வருமிறும் பூது கொண்டிடத்
தாவறு பலமக்க டருவ பன்மரம். (16)
(இ-ள்) சித்திரகாரர்கள் சித்திரித்தற்கரிய வடிவம் உள்ள பாவைகளை (பாவை போன்ற உருவமுடைய பூக்களாகிய பெண் மக்களை) த்தரும் (குரா) மரங்கள் அநேகங்களுள்ளன. யாவரும் அதிசயிக்கும்படி பல மக்களை (மானிட உருவமுள்ள பழங்களாகிய ஆண்மக்களைத்) தரும் (கிலுத்த) மரங்கள் அநேகங்களுள்ளன.
ஓவியர் - சித்திரமெழுதுவோர்; எழுதொணா - எழுதமுடியாத; பயக்கும் - கொடுக்கும்; பூவில் - பூமியில்; இறும்பூது - ஆச்சரியம்; தாவறு - குற்றமற்ற; பலமக்கள் என்பது, பழமாகிய ஆண்மக்கள் என்றும் அநேக ஆண்மக்கள் என்றும் பொருள்பட நிற்கின்றது.
[குரவ மலர் பெண்போல வடிவமுள்ள தென்பது தணிகைப் புராணம் நாட்டுப்படலம் 54-வது பாட்டில் "குரவலர்ப்பாவை பெற்றெடுப்ப" என்பதனாலும் கிலுத்த மரக்காய் மக்களுடைய வடிவம் உள்ளதென்பது காஞ்சிப்புராணம் நகரேற்றுப் படலம் 15-வது
பாட்டில் "....புலி...கிலுத்த நெடுந்தருத் தம்பழம்...மானிடர் போன் மென வெகுண்டு புடைத்து..." என்பதனாலும் விளங்கும்.]
விண்ணுல கெய்திட விரும்பு வீரெலா
மண்ணியெம் வழியஃ தடைமி னென்பபோற்
கண்ணுக்கெட் டாதுமீக் கதித்த தாருவிம்
மண்ணின்றும் விண்ணுற வைத்த வேணியோ. (17)
(இ-ள்.) 'மேற்கூறிய பேறுகளேயன்றி விண்ணுலகை அடையும் பேற்றையும் பெற விரும்புவோர்களெல்லாம் எம்மை வழியாகப் பற்றி (எம்மேல் ஏறிச்சென்று) அந்த மேலுலகத்தைச் சேருங்கள்' என்று சொல்வனபோலக் கண்ணுக்கெட்டாமல் மேனோக்கிக் கதித்தோங்கிவளர்ந்த இந்த மரங்கள், மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகத்துக்கு ஏறிச் செல்ல வைத்த ஏணிகளோ என்று சொல்லும்படி இருக்கின்றன.
எய்திட - சேர; அண்ணி - எம்மைச் சார்ந்து; அடைமின் - சேருங்கள்; என்பபோல் - என்று சொல்வனபோல; மீக்கதித்து - மேலே வளர்ந்தோங்கி; தாரு - மரங்கள்; மண்ணின்று - பூமியிலிருந்து.
உண்டிட வுடுத்திட வொதுங்க நோய்தெறப்
பெண்டொடு பிள்ளைகள் பெறவிண் ணெய்திட
வொண்டொரு வுதவுவ வுதவி வேறுண்டோ
விண்டரு விவையொப்ப மேன்மை மேயவோ. (18)
(இ-ள்.) இவ்வாறாக, இம்மரங்கள் (19-வது பாட்டிற் கூறியபடி) தாகத்துக்குக் குடிக்க இளநீராகிய நீரும் பசிக்குச் சாப்பிடப் பழங்களாகிய உணவும் மானங்காக்க மரவுரியாகிய உடையும் தருகின்றன; மேலும் (14வது பாட்டிற்கூறியபடி) வெயில் மழை பனி இவைகளுக்கு ஒதுங்க மரப்பொந்தாகிய வீடும் வந்தநோய் தீர்க்க மருந்தும்
வருநோய் விலக்கக் காயகற்பமும் கொடுக்கின்றன;அன்றியும் (15, 16-ம் பாட்டுகளின்படி, வண்டிசைக்கப்பெற்று ஐம்புலன்களையும் இன்பம் நுகரச்செய்யும் குணத்தினால் ஸ்திரீகளை ஒத்த புஷ்பங்களும், வடிவத்தினால் பெண்பிள்ளைகளையும் ஆண்பிள்ளைகளையும் முறையே ஒத்த குராமரப் பூக்களும் கிலுத்தமரப் பழங்களும்;
ஆகிய) பெண்டு பிள்ளைகளை அளிக்கின்றன. அல்லாமலும் (17-ம் பாட்டுப்படி) கண்ணுக்கெட்டாதபடி அதி உன்னதமான வளர்ந்து தம்மேலேறிச் செல்வோர் விண்ணை அடையவும் உதவுகின்றன. மேற்கூறிய உதவிகளிலும் அதிகமாக வேறு உதவிஉண்டோ? இல்லை. (வண்டுகள் உண்ண உதவாத பொன் மலர்களையும் யாவரும் தின்னலாகாத பொற்கனிகளையும் உடைய) கற்பக தருக்கள் இம்மரங்களோடு ஒப்பாகத்தக்க மேன்மை பொருந்தியவைகளோ? அல்ல.
தெற-கெடுக்க-தீர்க்க;விண் எய்திட-மேலுலகத்தை அடைய; ஒண்தரு-அழகிய மரங்கள்; உதவுவ-உதவுகின்றன; விண் தரு-கற்பக தருக்கள்; இவை ஒப்ப-இவைகளுக்கு உவமானமாக (த்தக்க); மேயவோ-பொருந்தியனவோ.
[தென்னையே யன்றித் தாகத்துக்கு உதவும் வேறு மரங்களும் உண்டு. *தண்ணீர் மரம் என்ற ஒருவகை வாழை, இலைக்காம்பில் தண்ணீர் சேகரித்து வைத்துப் பிரயாணிகளுக்கு உதவுகின்றது.
அதனால் அதற்குப் பிரயாணிமரம் என்றும் பேர் உண்டு. † டெமராராப் பசுமரம் ‡தென் அமரிக்காப் பசுமரம் என்ற இரண்டுசாதி மரங்கள் பசுவின் பால் போலப் போஷகமான பாலை உடையவை.]
---
*water-tree or Traveller's tree
† Cow-tree of Demarara
‡ Cow-tree of South America
பைந்தழை கிளைநிழ றந்து பட்டபின்
வெந்துவெங் குளிரொடு மிருகம் போக்கிடுஞ்
சுந்தர மரமுயிர் துறந்து மென்பினா
லிந்திரற் குதவுத் தீசி யேய்க்குமே. (19)
(இ-ள்.) இம்மரங்களின் இலைகளும் கிளைகளும் பச்சையாக உயிரோடிருக்கும்போது நிழல் கொடுத்து உதவுகின்றன, இறந்துபட்ட பின்பு குளிர்காய எரிக்கும் சருகாகவும் இரவில் மிருகங்களை வெருட்டி யோட்டும் வேலி போலப் போகட்டு எரியவிடும் விறகாகவும் உதவுகின்றன. ஆதலால், இம்மரங்கள், சீவந்தராக விருந்தபோது பலவகையில் பிறர்க்கு உபகாரப்பட்டு இறந்தபோது தமது முதுகெலும்பை இந்திரனுக்கு வச்சிராயுதமாக உதவிய த்தீசி முனிவரை ஒக்கும்.
பைந்தழை - பச்சை இலை; துறந்து - நீங்கி; என்பு - எலும்பு; உதவு - உபகாரப்பட்ட; எய்க்கும் - ஒக்கும்.
[ததீசி முனிவர் சிரித்திரம் திருவிளையாடற்புராணத்தில் கூறப்பட்டுள்ளது.}
உயிரில்பல் பொருளினு முயர்ந்து தம்மைப்போ
லுயிரன்றி யுணர்ச்சியு முள சரங்களுக்
குயிரெனு முணாமுத லளித் துவற்றினூங்
குயிர்நெடுங் காலமன் னுறுவ தாவரம். (20)
(இ-ள்.) (புல் பூண்டு கொடி செடி மரம் இவைகளை உள்ளிட்ட) தாவரங்கள், உயிருடைமையினால் உயிரில்லாத எல்லாப்பொருள்களைக் காட்டிலும் மேன்மையுள்ளவைகளாய், தம்மைப்போல உயிரேயன்றி உணர்ச்சியும் ஒருங்கே உள்ள நிலைபெயர்ந்து சரிக்கும் இயல்பை உடைய சரப்பொருள் (களாகிய பிராணி) களுக்கு உணவு முதலியவற்றை உதவி, அப்பொருள்களைக்காட்டிலும் நீண்டகாலம்
ஜீவிக்கும் பெருமையுடையவைகள்.
இல் - இல்லாத; பல் - பல; உள - உள்ள; சரங்கள் - பிராணிகள்; உணா - உணவு; முதல் - முதலானவைகள்; அளித்து - கொடுத்து; உவற்றின் ஊங்கு - அந்தப்பிராணிகளிலும் அதிகமாக; மன்னுறுவ - நிலைபெற்றிருப்பன.
[மாம்ஸத்தையே ஆகாரமாக உடைய சிங்கம் புலி முதலிய மிருகங்களும் அம்மாம்ஸத்தைத்தரும் மான் முதலிய மிருகங்களில்லாமல் உயிர்வாழ்தல் கூடாது. ஆதலால் மாம்ஸபக்ஷணஞ் செய்யுமுயிர்களும் உயிர்வாழ்வுக்குத் தாவரங்களையே மூலாதாரமாக்க் கொண்டுள்ளன. அன்றியும் பிராணிகள் சுவாசத்தால் வெளியேவிடும் வாயுவில் உள்ளதும் பிராணிகளுக்கு வேண்டாததாயிருப்பதேயன்றிக் கெடுதி செய்வதுமாகிய கரி அமில வாயுவைத் தாவரங்கள் கிரகித்து அந்தக் கலப்புப் பொருளான கரியமிலவாயுவைக் கரிச்சத்து வேறு பிராணவாயு வேறாகப் பிரித்துக் கெடுதியற்றதாக்கிக் கரிச்சத்தைத் தாம் உபயோகித்துக்கொண்டு பிராணவாயுவை வெளியே விட்டுவிடுகின்றன. பிராணிகளுக்குப் பிராணாதாரமான அந்தப் பிராணவாயுவோ, சாதாரண வாயுவோடு கலந்து, பிராணிகள் உள்வாங்கும் சுவாசத்தோடு உடம்பினுள்ளே சென்று பிரயோசனப்படுகின்றது. எகித்துதேசத்தில் அநேக ஆயிரவருஷங்களுக்கு முன் சேமஞ் செய்யப்பட்டிருந்து வெளியே எடுக்கப்பட்ட சில தானியவிதைகள் விதைக்கப் பெற்று முளைத்தன. பல்லாயிர வருடங்கண்ட மரங்கள், சில இடங்களில் உள்ளன.]
அன்றியு மெப்பெருஞ் சரமு மாகத்தி
னொன்றிய பருமையி னுயரத் தொவ்வுரு
வின்றருஞ் சீர்முற்று மிசைக்க லாவதோ
வென்றென்றவ் வனத்தினு ளேக லுற்றனர். (21)
(இ-ள்.) மேலும் யானை முதலிய நிலத்தில் வாழும் பிராணிகளாயினும் ஆகுக, திமிங்கிலம் முதலிய நீரில் வாழும் பிராணிகளாயினும் ஆகுக, எந்தப் பெரிய பிராணிகளும் பருமையிலும் உயர்ச்சியிலும் ஒப்பாகமாட்டாத மரங்களின் சிறப்புக்கள் முற்றச் சொல்ல முடியுமோ? முடியாது, என்று சொல்லி (மேற்கூறிய பிரயாணிகள்)
அச்சோலையின் உள்ளே போவாராயினர்.
ஆகம் - உடல்; ஒன்றிய - பொருந்திய; ஒவ்வுறா - ஒப்பாகாத; இன்தரு - இனியமரங்கள்; சீர் - சிறப்பு; இசைக்கலாவதோ – சொல்லமுடியுமோ; என்றென்று - என்று சொல்லிச்சொல்லி; வனம் - சோலை.
[யானைகளினும் பெரிய காத்திரம் உடைய பிராணிகள் முன் ஒருகாலத்தில் இந்தப் பூமியில் வாழ்ந்த உண்மை, மண்ணின் கீழே கண்டெடுக்கப்பட்டிருக்கிற அந்தப் பிராணிகளின் எலும்புகளினால் விளங்குகின்றது. அப்படிப்பட்ட பிராணிகளும் பெரிய மரங்களோடு ஒப்பிடத்தக்க பரிமாணம் உடையவைகளல்ல. ஏறக்குறைய (ச்சாதி அடியால்) நூறடிச் சுற்றளவுள்ள மரமும் உண்டு.]
கடலினாற் சூழ்ந்தவிக் காசி னிக்கணே
புடவியாற் சூழ்ந்தவோர் புணரி யுண்டெனத்
தடவிய வொருபெருந் தடாக மவ்வனத்
திறையுறல் கண்டுநீ ரினி தருந்தினார். (22)
(இ-ள்) கடல்சூழ்ந்த இந்தப்பூமியிலே, பூமிசூழ்ந்த கடல் ஒன்றுண்டென்று சொல்லும்படி, விசாலமான ஒருதடாகம், அச்சோலை மத்தியில் இருக்கக்கண்டு, அதிலே அவர்கள் தண்ணீர் குடித்தார்கள்.
காசினி-பூமி; புடவி-பூமி; புணரி-சமுத்திரம்; உண்டென- உண்டென்று சொல்லும்படியாக; தடவிய-விசாலமான; வனத்திடை-சோலையின் மத்தியில்; அருந்தினார்-குடித்தார்கள்.
தூரினான் மலையெனத் தோன்றிச் சாகையாற்
பாரினாற் றிசையையு மளந்து பாதலம்
வேரினா லளந்துச்சி விண் ணளக்கநீர்ச்
சாரினோங் கொருதருச் சார்ந்து வைகினார். (23)
(இ-ள்) ஒருமரம், தூர் பெரிதாய் மலைபோலத்தோன்ற, கிளைகள் நான்கு திக்குக்களையும் அளக்கச் செல்கின்றவை போல நீண்டு பரவ, வேர்கள் பாதாளத்தை அளப்பவைகள்போல ஆழமாக உற. உச்சி விண்ணை அளக்கப்போவது போல உயர்ந்தோங்கி வளர, மேற்கூறிய தடாகத்தின் நீரருகே கரையிலே நின்றது. அதன் அடியில் அவர்கள் இருந்தார்கள்.
சாகை-கிளை; பாரில்நால்திசை-பூமியில் நான்கு திக்குக்கள்; பாதலம்-பாதாளம்; விண் வானத்தை; நீர்ச் சாரின்- (தடாகத்தின்) நீர்ப்பக்கத்திலே; ஓங்கு-வளர்ந்தோங்குகின்ற;
சார்ந்து-சேர்ந்து; வைகினார்-தங்கினார்கள்.
அலையெறி துளிகளோ டவற்றின் றண்மையு
மலர்நறுந் தாதொடு மணமும் வாரிக்கொண்
டுலவுமா ருதத்தினா லுடல்வெப் பந்தவிர்ந்
தொலையயர் வுயிர்த்தலு மொருவன் கூறுவான். (24)
(இ-ள்) அத்தடாகத்தின் அலைகள் ஏறியும் சிறிய நீர்த்துளிகளோடு அந்த அலைகளின் குளிர்ச்சியையும், அத்தடாகத்து மலர்களிலுள்ள மகரந்தப்பொடியோடு வாசனையையும் வாரிக்கொண்டு உலவுகின்ற காற்றினால் அவர்கள் தேகவெப்பஞ் சீக்கிரமாகத் தீர்ந்து இளைப்பாறினார்கள். இளைப்பாறிய உடனே அவர்களுள் ஒருவன் பின் வருவதைச் சொல்வானாயினான்.
தண்மை - குளிர்ச்சி;தாது - மகரந்தப்பொடி; மாருதம் - காற்று; தவிர்ந்து - நீங்கி; ஒலை - ஒல்லை- சீக்கிரம்; அயர் வயிர்த்தலும் - வருத்தம் தீர்ந்த உடனே.
[காற்று, கண்ணுக்கு விளங்கும் நீர்த்துளியையும் மகரந்தப் பொடியையும் வாரிக்கொண்டது போலக் கட்டலனாகாத குளிர்ச்சியையும் வாசனையையும் கொண்டதென்பது கூறப்பட்டது]
நாகபா சத்தினா லிராம னற்படை
சாகுமேல வையினுயிர் தழைக்க வீசிய
மாகரு டன்சிறை வளியை யொக்கு *
சோகரித்து லவுமிச் சுகந்த மாருதம். (25)
(இ-ள்.) இராமனுடைய சேனை இந்திரஜித்து விட்ட நாகபாசத்தினால் கட்டுண்டு மாயுரு சமயத்தில் வந்துசேர்ந்த கருடனுடைய சிறகின் காற்று, அந்தச் சேனையை உயிர்பெற்று எழும்படி செய்தது. நமது சோகத்தை நீக்கிய இந்தக் காற்று, அப்படிச்செய்த கருடன் சிறைக்காற்றை ஒத்திருக்கின்றது.
சாகும் ஏலவை - சாகுந் தருணம்; மா- பெருமையுடைய சிறைவளி - சிறகின்காற்று, நீத்து - நீக்கி, மாருதம் - காற்று.
மீண்டுமப் படைமலா வேதமையினான்
மாண்டிட மறித்துயிர் மருவ வீசிய
தேண்டியெய் தரியசஞ் சீவிக் காற்றையு
மீண்டுலா மிமமருத தினிது நேருமே. (26)
(இ-ள்) திருப்பவும் அந்தப் படை பிரமாஸ்திரத்தினால் மாண்டபோது (அனுமானாற் கொண்டுவரப்பட்ட சஞ்சீவி மலையினின்றும் அந்தச்சேனைக்குத்) திரும்ப உயிர் வரும்படி வீசிய சஞ்சீவிக் காற்றையும் இங்கு உலாவும் காற்று ஒத்திருக்கின்றது.
மீண்டும் - திரும்பவும்; மலா வேதன் - பூவில் வாழும் பிரமன், மறித்து - திரும்ப; தேண்டி - தேடி; எய்தரிய - எய்த அரிய - அடைவதற்கு அருமையான; சஞ்சீவி - உயிர்தரும் மருந்து; ஈண்டு - இங்கு; உலாம் - உலாவுகின்ற; இம்மருந்து - இந்தக் காற்று; இனிது - இனிமையாக, நேரும் - ஒக்கும்.
குயில்கள்பா டிடவலைதாளங் கொட்டிட
மயினட மிடப்பல மரங்கள் பூங்கையாற்
றயைபின்வெண் டாதுசெந் தாது தானமாப்
பெயநட சாலைபோற் பிறங்கு மிப்பொழில். (27)
(இ-ள்.) குயில்கள் பாடகர் போலப் பாட, அலைகள் தாளம் தட்டுவார்போல ஓசைசெய்து தாளம்போட, மயில் கூத்தியர் போல ஆட, கூத்துக்காண்போர் சந்தோஷிக்கக் கைகளில் வெள்ளிக்காசுகளும் பொற்காசுகளும் வாரிப் பரிசாகச் சொரிவதுபோல, மரங்கள் மலர்களாகிய கைகளால் வெண்தாது செந்தாதுக்களை (வெள்ளை மகரந்தப் பொடி சிவப்பு மகரந்தப்பொடியாகிய வெள்ளியையும் பொன்னையும்) சொரிய, இந்தச் சோலை நடனசாலைபோல விளங்குகின்றது.
தயையின் - அன்பினால்; தாது, பூந்தாதுக்கும் பொன் முதலிய உலோகங்களுக்கும் பொதுப்பெயர்; தானமா - தானமாக- சன்மானமாக - பரிசாக; பெய - பெய்ய - சொரிய; பிறங்கும் - விளங்கும்.
[வெண்டாது, வெண்ணிறமுள்ள பூந்தாதுக்கும் வெள்ளிக்கும் பொதுப்பெயர்; செந்தாது, செந்நிறமுள்ள பூந்தாதுக்கும் பொன்னுக்கும் பொதுப்பெயர்.]
பொழிலெனும் பெயரிது பூண்ட காரணம்
பொழிலெனும் பெயருடைப் பூமித் தாயருள்
பொழிதந்திட் டுயிர்க்கருள் பொருள்க ளியாவுந்தான்
பொழிதந்தெவ் வுயிரும்போற் றுவது போலுமே. (28)
(இ-ள்.) மேலே (27-வது பாட்டில்) கூறியபடி இந்தச்சோலை பொழிலென்ற ஒருபெயர் பெற்றதற்குக் காரணம், இச்சோலையைப் போலவே பொழில் என்னும் பெயருடைய பூமியாகிய தாய் தான் பெற்ற சகல ஜீவகோடிகளுக்கும் உயிர் வாழ்வதற்கு உதவியாகக் கொடுக்கும் எல்லாப் பொருள்களையும் இச்சோலை (19-20-பாட்டுக்களிற் கூறியபடி) தானும் கொடுத்து எவ்வுயிர்களையும் காப்பாற்றுவது போலும்.
பொழில், சோலைக்கும் பூமிக்கும் பொதுப்பெயர்; பெயருடை- பெயரை உடைய; பூமித்தாய் - பூமியாகியதாய்; பெழி தந்திட்டு - பொழிந்து; பொழிதந்து - கொடுத்து.
கண்ணுறக் குளிர்ந்தது கணமெய் தொட்டிடத்
தண்ணுற்ற துணக்குளிர்ந் ததுசெந் தாலலை
பண்ணொலி செவியைத்தண் படுத்த தெண்ணிட
வெண்ணமுங் குளிர்வித்த திந்த வாவியே. (29)
(இ-ள்.) இந்தத் தடாகத்தைப் பார்த்த மாத்திரத்திலே கண்குளிர்ந்தது; தொடவே உடம்புமுழுதும் குளிர்ந்தது; குடிக்க நாக்குளிர்ந்தது; அலைசெய்யும் ஓசையால் காது குளிர்ந்தது; நினைக்க நெஞ்சமும் குளிர்ந்தது.
மெய் - தேகம்; தண் உற்றது - குளிர்ச்சி அடைந்தது; உண - உண்ண; தண்படுத்தது - குளிர்ச்சி அடையச்செய்தது; தால் – தாலு (வின் விகாரம்) நா; ஆவி - தடாகம்.
மேவுறு பொருள்களெவ் வெவையும் வேவுறீஇ
வீவுறச் செய்யுமிவ் வெஞ்சு ரத்திடைச்
சாவுறு நமக்குயிர் தருவ துன்னியோ
வாவியென் றறைந்தன ரிதனை யான்றவர். (30)
(இ-ள்.) தன்னிடத்திலே வந்து சேர்ந்த எல்லாப் பொருள்களையும் வெந்து நாசமடையச் செய்கின்ற இந்தக்கொடிய சுரத்திலே சாக இருந்த நமது உயிரை இது காக்கப்போகிறதென்று தெரிந்தோ, இதனை ஆவி என்று மேலோர் கூறினார்.
வேவுறீஇ - வேவுற்று - வெந்து; வீவு - சாவு - அழிவு; உன்னியோ - எண்ணியோ; ஆவி, தடாகத்துக்கும் உயிருக்கும் பொதுப் பெயர்; ஆன்றவர் - கற்றபெரியோர்.
மத்தியி லசைவின்றி வண்க ரைக்கயற்
றத்தலை புரட்டுமித் தடமொர் சற்றுமே
சித்தசஞ் சலமின்றிச் செகத்தை யாண்டருண்
மெய்த்தவச் சனகனா தியரை வீழுமே. (31)
(இ-ள்) சமுத்திரத்தினுள்ளே, கரையினின்றும் தூரமாகச் செல்லச் செல்ல, அலைகுறைந்து நெடுந்தூரஞ் சென்றபின், அலை சிறிதாயி னும் இல்லாதிருக்கும். அதுபோல,விசாலமாகிய இத்தடாகமும் மத்தியில் அசைவில்லாமல் கரை அருகே அலை வீசாநின்றது; அதனால் அகக் கரணங்கள் முற்றந் தொழிலற்று மனம் ஓய்ந்திருக்க, புறக்கரணங்களாகிய வாக்கு நோக்கு முதலியவைகளால் சகல இராச காரியங்களையும் நடத்தி உலகத்தை ஆண்ட சனகராஜன் முதலிய யோகீசுவரரை இந்தத் தடாகம் ஒத்திருக்கின்றது.
வண்கரைக்கு அயல்-வளப்பமுள்ள கரை அருகே; தத்து அலை- தத்துகின்ற அலைகளை; தடம் -தடாகம்; ஓர் சற்று-ஒரு சற்று- ஒரு சிறிது; சித்த சஞ்சலம்-சித்தத்தின் அசைவு; இன்றி- இல்லாமல்; செகம்-பூமு; வீழும்-ஒக்கும்.
இத்தடத் தம்மரை யிலைவிண் ணேய்த்தது
மத்தியிற் சங்கிள மதியை நோந்தது
நத்தினொண் முட்டையோ நகுமுத தோவென
மொய்த்தநீர்த் துளியுடு முழுது மொத்தவே. (32
(இ-ள்) இந்தத் தடாகத்திலே அதோ தோன்றுகின்ற தாமரை இலை ( இருண்ட நிறமும் வட்டவடிவமும் உள்ளதாக இருப்பதினால்) வானத்தை ஒத்திருக்கின்றது; அந்த இலையின் மத்தியிலிருக்கும் சங்கு (நிறத்தினாலும் வடிவத்தினாலும்) இளஞ் சந்திரனை ஒத்திருக்கின்றது; அந்தச் சங்கின் முட்டைகளோ அல்லது அதன் முத்துச்களோ என்று சொல்லும்படி அந்த இலையில் நெருங்கியுள்ள நீர்த்துளிகள் நக்ஷத்திரங்களை ஒத்திருக்கின்றன.
தடம்-தடாகம்; அம்மரை இலை-அந்தத் தாமரை இலை; ஏய்த்தது-ஒத்தது; மதி-சந்திரன்; நேர்ந்தது-ஒத்தது; நத்தின்-சங்கினுடைய; ஒண்முட்டை-பிரகாசமான முட்டை; நகும்-ஒளிவிடும்; மொய்த்த-நெருங்கிய; உடு-நக்ஷத்திரம்; முழுதும்-பூரணமாக.
சுற்றும்வெஞ் சுரமுறு சோலை சூழ்தடம்
வெற்றிரு விசும்பிடை மேக மத்தியி
னுற்றொளிர் மதியினை யொக்கும் பாசியின்
கற்றையம் மதியுறு களங்க மானுமே. (33)
(இ-ள்.) பாலைவனத்தினாலே சூழப்பட்ட சோலையின் மத்தியிலே இருக்கின்ற இந்தத் தடாகம், எப்பக்கங்களிலும் வெறு விசும்பு சூழ அவ்விசும்பின் மத்தியிலே உள்ள மேகத்தின் நடுவில் விளங்கும் சந்திரனை ஒத்திருக்கின்றது; அத்தடாகத்திலுள்ள பாசித்திரள், அச்சந்திரனிடத்துள்ள களங்கத்தை ஒத்திருக்கின்றது.
சுற்றும் - சூழவும்; வெஞ்சரம் - உட்டினமான பாலைவனம்; தடம் - தடாகம்; வெறு இரு விசும்பு இடை - வெறுமையான பெரிய வானத்தின் மத்தியில் உள்ள; ஒளிர் - பிரகாசிக்கின்ற; மதி - சந்திரன்; கற்றை - திரள்; மானும் - ஒக்கும்.
விண்ணமும் விண்ணிடை மேவும் யாவுந்தன்
கண்ணுற விளங்கித்தன் கண்ண தொன்றும்விண்
ணண்ணிடா நலத்தவித் தடத்து நன்கொளிர்ந்
தண்ணுமவ் விண்ணிறத் தழகை யென்சொல்கேன். (34)
(இ-ள்.) இத்தடாகம், வானமும் வானத்தில் உள்ள சூரியன், சந்திரன் முதலிய சகல பொருள்களும் தன்னிடத்திலே (பிரதி பிம்பங்களாக) விளங்கப்பெற்றிருக்கின்றது. வானத்திலே இத்தடாகமாவது இதனிலுள்ள பொருள்கள் யாதாயினு மொன்றாவது காணப்படவில்லை. இப்படிப்பட்ட மேன்மையுடைய இந்த்த் தடாகத்திலே விளங்குகின்ற அந்த வானத்தின் நீலநிறத்தின் அழகை யான் என்னென்று சொல்லுவேன்.
விண்ணம் - வானம்; தன்கண்ணது - தன்னிடத்திலுள்ளது; விண் நண்ணிடா - வானத்தில் இல்லாத; நலத்த - சிறப்பையுடைய; நன்கொளிர்ந்து - நன்றாக விளங்கி; சொல்கேன் - சொல்லுவேன்.
ஆழியு மாழியி லமரு மாயனும்
பாழிய வாழியுட் பறம்பு மத்தினைச்
சூழுறக் கடைந்தநாட் டோன்று மாலமும்
வீழுமா லீங்கொளிர் விண்ணின் வண்ணமே. (35)
(இ-ள்.) சமுத்திரத்தின் நிறத்தையும், அதிலே (துயில்கொண்டு) தங்கும் திருமாலின் நிறத்தையும், அதில் (அமிர்தம் பெறும்பொருட்டு அத்திருமால் தலைவனாகத் தேவரும் அசுர்ரும்) மத்தாக்கி அம்மலை சுழலும்படி கடைந்த காலத்திலே (அவ்வமிர்தம் உண்டாகு முன்) வெளிப்பட்ட விஷத்தின் நிறத்தையும் இத்தடாகத்தில் விளங்கும் ஆகாயத்தின் நிறம் ஒக்கும்.
ஆழி - சமுத்திரம்; மாயன் - விஷ்ணு; பாழிய – விசாலம் உள்ள; பறம்பு - மலை; ஆலம் - விஷம்; வீழும் - ஒக்கும்; ஈங்கு - இங்கே - இத்தடாகத்திலே.
[வானத்தின் நிறத்துக்குக் கடலை உவமித்த விடத்து அதனோடு சம்பந்தம் உள்ள திருமாலை உவமானமாக்கியதேயன்றி, அக்கடல் திருமால் என்னும் இருபொருளுடனும் சம்பந்தப்பட்ட விஷத்தையும் ஒப்பாகக்கொண்டது கூறப்பட்டது.]
அன்றியு மனையவிண் ணத்து வண்ணஞ்சீர்
துன்றுகா யாவுமற் கடரு நீலமுங்
கன்றணி கையினார் கண்கள் போன்று கூர்
மன்றல்கொ ணெய்தலு மானு மன்றவே. (36)
(இ-ள்.) மேலும் அந்த வானத்தின் நிறம், காயாமலர் நீலமணி நீலப்பூ இவைகளின் நிறத்தையும் நேரும்.
அனைய - அப்படிப்பட்ட; விண்ணத்து - வானத்தினுடைய; துன்று - நெருங்கிய; மற்சுடரும் - மன் (-மிகவும்) சுடரும் (- ஒளி செய்கின்ற); நீலம் - நீலரத்தினம்; கன்று - வளையல்; அணி - அணிந்த; கையினார் - கையை உடைய மாதருடைய; கூர் - மிகுந்த;
மன்றல் கொள் - வாசனை கொண்ட; நெய்தல் - நீலமலர்; மானும் - ஒக்கும்; மன்ற - நிச்சயமாக, ஏ - அசை.
இன்னும்விண் ணிறத்தினை யேய்ப்ய யாவெனிற்
கன்னிமா மஞ்ஞையின் காமர் கண்டமு
மன்னதன் பகையென வறையப் பெற்றியா
னென்னற்காண் கோம்பியி னீலமேனியும். (37)
(இ-ள்.) இன்னமும் அவ்விண்ணின் நிறத்தை ஒக்கும் பொருள்கள் யாவை யென்றால், அவை வருமாறு - மயிலின் கழுத்தும் மயிலுக்குப் பகையென்று சொல்லப்பெற்றதும் நான் நேற்றுக் கண்டதும் ஆகிய கோம்பியானது நீல நிறம் படைத்த உடம்பும்.
ஏய்ப்ப - ஒப்பவைகள்; யா - யாவை; கன்னி - இளமையுடைய; மா - பெருமையுடைய; மஞ்ஞை - மயில்; காமர் - அழகிய; கண்டம் - கழுத்து; அன்னதன் - அம்மயிலினுடைய; அறைய - சொல்ல; நென்னல் - நேற்று; காண் - கண்ட; கோம்பியின் - கோம்பியென்ற செந்துவினுடைய; மேனி - உடம்பு.
என்றுவே றுவமங்க ளெடுத் தியம்பிடு
முன்றகைந் தடுத்தவன் மொழிவன் கோம்பிநே
ரன்றுமற் றியாவுமொப் பாகு மன்னத
னின்றனி நிறம்பச்சை யென்று தேர்தியால். (38)
(இ-ள்.) என்று சொல்லி முதற் பிரயாணி வேறேயும் உவமானப் பொருள்கள் கூறத் தொடங்குகையில் இரண்டாம் பிரயாணி இடையே தடுத்துப் பின்வருவதனைச் சொல்வானாயினான் - கோம்பி ஒப்பாகாது; நீ கூறிய மற்றெல்லாப் பொருள்களும் ஒக்கும், கோம்பியின் நிறம் பச்சை; இதனைத் தெரிந்துகொள்வாயாக.
உவமம் - உவமானப்பொருள் - ஒப்பானபொருள்; இயம்பிடும்முன் - சொல்லுமுன்னாக; தகைந்து - தடுத்து; அடுத்தவன் - அடுத்த பிரயாணி; மொழிவன் - சொல்லுவான்; நேர் அன்று - ஒப்பு அல்ல; மற்று யாவும் - மற்ற எவையும்; அன்னதன் - அப்படிப்பட்டதனுடைய - அந்தக் கோம்பியினுடைய; இன் - இனிய; தனி - ஒப்பற்ற; தேர்தி - தேர்வாய்; ஆல் - அசை.
[கோம்பியின் நிறம் நீலம் என்று முதற்பியாணி கூறியதனை இரண்டாம் பிரயாணி மறுத்துத் தான் பச்சை என்றதற்குத் தக்க நியாயம் சொல்லப்புகுந்து, தான் அந்தச் செந்துவை நன்றாகத் தெரிந்திருப்பதை நிரூபித்தற்கு அந்தச் செந்துவின் வடிவ வருணனையையும் தான் அதைப் பார்த்த இடத்தையும் காலத்தையும் பின்வருமாறு விவரித்துக் கூறுகின்றான்.]
அதனினு மற்புத மான செந்துவிம்
மதிகதிர் வழங்குறும் வைய கத்திலை
சிதலைதின் பல்லியி னெடிய தேகமும்
விதிர்பணி நாவுமீற் றலையு மேயது. (39)
(இ-ள்.) சூரிய சந்திரர் வழங்கப்பெற்ற இந்தப் பூமண்டலத்திலே அந்தக் கோம்பியிலும் ஆச்சரியமான செந்து கிடையாது. பல்லியினது நீண்ட தேகம்போன்ற தேகமும் பாம்பின் நாக்குப்போலப் பிளவுபட்ட நாவும் மீனுடைய தலைபோன்ற தலையும் அதற்குண்டு.
மதிகதிர் - சந்திரன் சூரியன்; வையகம் - பூமி; இலை - இல்லை; சிதலை - கறையான்; தின் - தின்னும்; விதிர் - (கண்டோர் அஞ்சி) நடுங்குகின்ற; பணி - பாம்பு; மேயது - பொருந்தியது.
அதன்பத முக்கவ ராக மூவிர
றதைவின்றி யுளதுவால் சால நீண்டது
கதிமந்த மேயுடற் கதிர்ப்பைங் கேழினுக்
கெதிர்கண்டா ரில்லை மண்ணி னெங்குமே. (40)
(இ-ள்.) அந்தக்கோம்பியின் பாதங்கள் ஒவ்வொன்றும் மூன்று பிரிவுகள் உள்ளவைகளாய் நெருங்காத மூன்று விரல்களை உடையன்; வால் மிகவும் நீளமானது; கதி மந்தகதியே; அதன் உடம்பின் பச்சை நிறத்துக்குச் சமானத்தைக் கண்டவர்கள் இந்தப் பூமியிலே எங்கும் இல்லை.
பதம் - பாதம்; முக்கவர் - மூன்றுபிரிவு; மூவிரல் – மூன்று விரல்கள்; ததைவு இன்று - நெருக்கம் இல்லாமல்; சால - மிக; கதி - நடை; உடற் கதிர்ப் பைங்கேழுனுக்கு - உடலின் பிரகாசமான பச்சை நிறத்துக்கு; எதிர் - எதிரானபொருள்.
வாயுவை யுண்டது வாயங் காப்பொடு
தூயவெய் யவனிளஞ் சுடரிற் றோய்ந்திடு
நேயமொ டுடலைநீட் டிக்கி டத்தியே
மேயதின் றுதயத்தென் விழியி னோக்கினேன். (41)
(இ-ள்.) அது, இன்று உதயத்தில் காற்றைக் குடித்துக் கொண்டு, வாய்திறந்த வண்ணமாக உதய காலத்துச் சூரியனுடைய கிரணங்கள் தன்மேலே பட விரும்பி, உடம்பை நீட்டிக் கிடத்திக் கொண்டு படுத்திருந்தது. என் கண்ணாலே பார்த்தேன்.
வாயுவை - உண்டு அது - அது காற்றைக் குடித்து; அங்காப்பு - திறப்பு; தூய - பரிசுத்தமான; வெய்யவன் - சூரியன்; இளஞ்சுடர் - இளவெய்யில்; தோய்ந்திடு - படிந்திடும்; நேயம் - விருப்பம்; மேயது - மேவியது; விழி - கண்.
[முதற்பிரயாணி "நேற்றுப் பார்த்தேன்" என்று சொல்லியதை மனதில் வைத்து இரண்டாம் பிரயாணி "இன்று உதயத்தில் பார்த்தேன்" என்றான். முன் இவர்கள், நடுப்பகலில் வழி நடந்தார்களென்றதனால், இப்போது பிற்பகல் என்பது விளங்கும்]
என்னலு முன்னவன் யானு முன்னைப்போ
லன்னதைக் கண்டுளே னதன்வண் ணம்முனஞ்
சொன்னநீ லமேயிது துணிபொச் சோலையின்
மன்னுநீ ழலினது வைக நோக்கினேன். (42)
(இ-ள்) என்று இரண்டாம் பிரயாணி சொன்ன உடனே முதற்பிரயாணி கூறுகின்றான்:- நானும் உன்னைப்போலவே அதைப் பார்த்திருக்கிறேன். நான் முந்திச்சொல்லியபடி அதன் நிறம் நீலம்தான். இது நிச்சயம். அது ஒரு சோலையின் நிழலிலே இருந்தபோது பார்த்தேன்.
என்னலும்-என்று சொன்ன உடனே; அன்னதை-அதை; கண்டுளேன்-பார்த்திருக்கிறேன்; வண்ணம்-நிறம்; நீழல்-நிழல்; வைக-தங்க.
என்றலும் பின்னவன் பச்சை யேயென
நன்றுபச் சையோவென நகைத்து முன்னவன்
கன்றின னென்னைநீ யிரண்டு கண்களு
மின்றிய குருடனென றெணினை கொல்லென்றான். (43)
(இ-ள்) என்று முதற்பிரயாணி சொன்னவுடனே இரண்டாம் பிரயாணி, அதன் நிறம் பச்சைதான் என்று வற்புறுத்திக்கூற, முந்தியவன், நல்லது பச்சையோ என்று என்று கோபச் சிரிப்பாகச் சிரித்து, என்னை இரண்டு கண்களும் இல்லாத குருடன் என்று நினைத்தாயோ என்று கோபமாகக் கேட்டான்.
என்றலும்- என்று சொன்ன உடனே; பின்னவன்-இரண்டாம் பிரயாணி; நகைத்து-சிரித்து; முன்னவன்-முதற்பிரயாணி; கன்றினன்-கோபித்தான்; இன்றிய-இல்லாத; எணினைகொல்- எண்ணினைகொல்-எண்ணினாயா.
இப்படி யேயுன திரண்டு கண்களு
மெப்பொழு தும்முத விடுமென் றாலவை
யப்பிர யோசன மாகு மாகவே
செப்பிய படி யிழந் தவைக டிண்ணமே. (44)
(இ-ள்) உன்னுடைய கண்களிரண்டும் எப்போதும் இவ்வாறாகவே உதவும் ஆனால், அவைகள் பிரயோசனம் இல்லாதவைகளாம்; பிரயோசன மில்லாதவைகளாகவே, நீ சொல்லியபடியே இழக்கப் பட்டவைகள் என்பது நிச்சயம்.
அப்பிரயோசனம் ஆகும் பிரயோசனம் இல்லாதவைகளாகும்; செப்பிய-சொல்லிய; இழந்தவைகள்-இழக்கப்பட்டவைகள்; திண்ணம்-நிச்சயம்.
என்றுபின் னவனிசைத் தானிவ் வாறவர்
கன்றினர் கலாய்த்தனர் கலக மிஞ்சிட
வன்றுசொற் போர்கைப்போ ராகு செவ்வியிற்
சென்றனன் வேறோர்ப திகனத் தேத்தரோ. (45)
(இ-ள்) என்று பிந்தியவன் மறுமொழிகூறினான். இவ்வாறாக இருவரும் சினங்கொண்டு கலகஞ்செய்தார்கள். அந்தக் கலகம் மிகுந்து வாய்ச்சண்டை கைச்சண்டையாகப் போகுஞ் சமயத்தில், மூன்றாம் பிரயாணி யொருவன் அந்தச் சோலைவழியே போனான்.
இசைந்தான்-சொன்னான்; கன்றினர் கலாய்த்தனர்- கோபித்துக் கலகஞ் செய்தார்கள்; அன்று-அப்பொழுது; பதிகன்-பிரயாணி, அத்தேத்து-அவ்விடத்தில்; அந்தச்சோலையில்; அரோ அசை.
[* அன்று என்பதற்கு அந்தத்தினம் என்பது சாதாரணமான பொருள். ஆயினும் சீவகசிந்தாமணி கனகமாலையாரிலம்பகம் 'மந்திரமூம்று' என்ற பாட்டின் உரையிலும் இலக்கணையாரிலம்பகம் 'எய்தது நீர்' என்ற பாட்டின் உரையிலும் அன்று என்பதற்கு அப்பொழுது என்று பொருள் எழுதியிருப்பது காண்க.]
அனையனைத் தம்மரு கழைத் திருத்தின
ரினையது நீலமோ பச்சை யேகொலோ
பனுதிநீ யறிதியே லென்னப் பன்னுவான்
சொனவிரு நிறமுமன் றுண்மை சொல்லுகேன். (46)
(இ-ள்) அவர்கள், அவனை அழைத்துத் தம்பக்கத்திலே இருக்கும்படி செய்து, எங்கள் கலகத்துக்குக் காரணமாகிய இந்தச் செந்துவின் நிறம் நீலமோ பச்சையோ உனக்குத் தெரியுமானால் சொல்லென்று கேட்க, அவன், நீங்கள் சொல்லிய இரண்டு நிறமும்
அன்று; உண்மையைச் சொல்லுவேன், கேளுங்கள்.
அனையனை-அவனை; இனையது-இந்தக் கோம்பி; பனுதி- பன்னுதி-சொல்வாயாக; அறிதியேல்-அறிவாயானால்; சொன- சொன்ன; சொல்லுகேன்-சொல்லுவேன்.
இத்தகு செந்துவை நேற்றி ராவிடை
நெய்த்தனி விளக்கொளி நேரி னோக்கினேன்
மொய்த்தகார் நிறத்ததென் மொழிகம் பீரெனிற்
கைத்தலத் துளத்து காட்டு கேனென்றான். (47)
(இ-ள்) இப்படிப்பட்ட செந்துவை நேற்று இராத்திரி விளக்கெதிரிலே பார்த்தேன். அதன் நிறம் கறுப்பு. என் வார்த்தையை நீங்கள் நம்பவில்லையானால் அது என் கைவசம் இருக்கிறது, காட்டுவேன் என்று சொன்னான்.
இத்தகு-இத்தன்மையுடைய; இரா இடை-இராத்திரியிலே; நெய்தனிவிளக்கு-நெய்விட்டெரித்த ஒரு விளக்கு; மொய்த்த- நெருங்கிய; கார் -கறுப்பு; நிறத்தது-நிறத்தை உடையது; என்மொழி, என் வார்த்தையை; நம்பிர் எனில்- நீங்கள் நமபவில்லையானால்; கைத்தலத்து- கையினிடத்தில்; காட்டுகேன்-காட்டுவேன்.
காட்டுக நீலமன் றேலென் கண்ணினைத்
தோட்டொழித் திடுவலென் றொருவன் சொற்றன
னாட்டிய பச்சையன் றென்னி னானெனை
வீட்டுவ லென்றனன் வேறொ ருத்தனே. (48)
(இ-ள்) என்று சொன்ன உடனே, அதன் நிறம் நீலமாக இராவிட்டால் என்கண்களைத் துளைத்துத் தொலைத்து விடுவேனென்று முதற்பிரயாணி சொன்னான்; பச்சையாக இராவிட்டால் என் உயிரை யான் மாய்த்து விடுவேனென்று இரண்டாம் பிரயாணி கூறினான்.
காட்டுக-காட்டுவாயாக; நீலம் அன்றேல்-நீலம் அல்லாமற் போனால்; தோட்டு-துளைத்து; ஒழித்திடுவல்-தொலைத்து விடுவேன்; சொற்றனன்-சொன்னான்; நாட்டிய-(நான் சொல்லி) ஸ்தாபித்த; மீட்டுவல்-மாய்த்துக்கொள்வேன்.
இன்னணஞ் சபதமற் றிருவ ருஞ்செய
வந்நிய னையமெல் லாம கன்றிட
முன்னுய்ப்பே னதனைநீர் முறையி னோக்கிய
பின்னது கரிதெனப் பேசு வீரன்றேல். (49)
உண்ணுவ லதையிஃ துண்மை யென்றவர்
கண்ணெதிர் விடுக்கவே காம ரூபியும்
வெண்ணிற மொடுமுற வெயர்த்து மூவருந்
துண்ணுற்றார் தெளிந்திது சொல்லி னாரரோ. (50)
(இ-ள்) இவ்வாறாக அவ்விருவரும் பிரதிக்கினை செய்ய, மூன்றாம் பிரயாணி உங்கள் சந்தேகமெல்லாம் நீங்கி விடும்படி அந்தப் பிராணியை உங்கள் எதிரே விடுவேன்; அதை நீங்கள் பார்த்தபின்பு நீங்களே அது கருமையானதென்று சொல்வீர்கள்; நீங்கள் அவ்வாறு சொல்லாவிட்டால், நான் அதை உண்டு விடுகிறேன் என்று சொல்லி அதை அவர்கள் கண்முன்னே விட்டான். விடவே அது
வெண்ணிறத்தோடு வெளிப்பட்டது. அதுகண்ட மூவரும் திடுக்கிட்டார்கள் கலக்கம் தெளிந்தபின்பு அவர்கள் பின்வருவதைச் சொனனார்கள்.
இன்னணம்-இப்படி; செய-செய்ய; அந்நியன்-மூன்றாம் பிரயாணி; ஐயம் எல்லாம்-சந்தேகம் முழுவதும்; அகன்றிட- நீஙக; கரிது-கரியது; அன்றேல்-அல்லவென்றால்; உண்ணுவல்- உண்பேன்; காமரூபி-கோம்பி; வெண்ணிறம்-வெள்ளை நிறம்; வெயர்த்து-(பயத்தினால்) வேர்த்து; துண்ணுற்றார்-பயம் அடைந்தார்கள்.
[பலசமயத்தில் பலநிறங்காட்டும் கோம்பிக்குப் பச்சோந்தியென்பது சாதாரணமான பெயர். இந்நூலில் கோம்பியின் பல நிறங்கள் எடுத்துக் கூறப்படுவதனாலும், பச்சோந்தியென்பது பச்சைநிறமுள்ள ஓந்தியென்று ஒரு நிறத்தையே குறிப்பதனாலும்,
இந்நூல் 'பச்சோந்தி விருத்தம்' என்று பெயர்பெறாமல் 'கோம்பி விருத்தம்' என்னும் அபிதானம் பெற்றது.)
மன்னுமெப் பொருளெவர் வாயிற் கேட்பினு
மன்னதன் மெய்ப்பொரு ளறிதன் மெய்யறி
வென்னும்வள் ளுவர்மொழி யெண்ணி நோக்கிடா
தின்னன்மல் கிக்கல கஞ்செய் திட்டனம். (51)
(இ-ள்.) "எப்பொருள் யார்யார்வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு" என்ற திருவள்ளுவர் வாக்கியத்தை எண்ணிப் பாராததனால், துன்பு மிகுந்த இந்தக் கலகத்தை நாம் செய்யும்படி நேர்ந்தது.
கேட்பினும் - கேட்டாலும்; அன்னதன் - அதனுடைய; இன்னல் - துன்பம்; மல்கு - பெருகிய.
தலைகண்டார் மீனென்று சாற்ற வால்கண்டா
ரிலைகண்ட தரவமே யென விரண்டுமா
யலதுமா மலங்குநே ராகு மின்னத
னிலைமுழு தறிந்திலே நிகழ்த்தி னேம்பல. (52)
(இ-ள்.) தலையைப் பார்த்தவர்கள் மீனென்று சொல்ல, வாலைப் பார்த்தவர்கள், பார்த்தது மீன் அன்று, பாம்பே என்று சொல்ல, மீனின்தலையுடைமையால் மீனும் பாம்பின் வாலுடைமையால் பாம்பும் ஆக இரண்டுமாகி, முழுவதும் பாம்பாகவாவது மீனாகவாவது இல்லாததனால் இரண்டும் அல்லாததும் ஆகும் மலங்கு என்ற செந்துவை, மயக்கஞ் செய்யுந் தன்மையில், இந்தக் கோம்பி ஒக்கும். இதன் நிலைமையைப் பூரணமாக அறியாமல் பலவற்றைப் பேசினோம்.
சாற்ற - சொல்ல; இலை - இல்லை; அரவம் - பாம்பு; என - என்ன - என்றுசொல்ல, மலங்கு - மீன்தலைபோலும் தலையும் பாம்பு வால்போலும் வாலும் உடைய நீர்வாழும் செந்து; நேர் ஆகும் - ஒப்பாகும்; இன்னதன் - அந்தக் கோம்பியினுடைய; உணர்ந்திலேம் - அறிந்தோம் இல்லை; நிகழ்த்தினோம் பல - பலவற்றைப் பேசினோம்.
ஒருமுக மேயொர்திக் குற்று நோக்கிடி
னெருதின தெதிர்த்திசை யெய்திக் கண்ணுறிற்
கரியின தாகச்சித் திரத்திற் காணுருப்
பொருமிதன் புதுமையார் புகல வல்லரே. (53)
(இ-ள்) ஒரு முகமே ஒரு பக்கத்திலிருந்து பார்த்தால் எருதின் முகமாகவும் அப்பக்கத்துக்கு எதிர்ப்பக்கத்திலிருந்து பார்த்தால் யானையின் முகமாகவும் தோன்றும்படி சித்திரத்தில் எழுதப்பட்டுள்ள உருவை இது ஒக்கும். இதன் புதுமையைச் சொல்ல வல்லவர்கள் யாரிருக்கிறார்கள்.
ஓர்திக்கு - ஒரு திக்கு; நோக்கிடில் - பார்த்தால்; எருதினது - எருதினுடைய முகம்; எய்தி - அடைந்து; கண்ணுறில் - பார்த்தால்; கரியினது - யானையினுடைய முகம்; காண் உரு – காணப்படுகின்ற உருவம்; பொரும் - ஒக்கும்; புகல - சொல்ல; வல்லர் - வல்லவர்.
[ஒக்கும் என்பதன் முன் "மயக்கஞ் செய்யுந் தன்மையில்" என்று இதற்கு முந்திய பாட்டின் உரையில் வருவித்ததுபோலவே இந்தப் பாட்டுரையிலும் இனிவரும் 54 முதல் 59 இறுதியாக உள்ள பாட்டுக்களின் உரையிலும் வருவித்துக் கொள்க]
சீலமார் பசியமெய்ச் சிலையி ராமனுங்
கோலமார் கார்வணங் கொண்ட கண்ணனும்
பாலவா நிறத்தலா யுதனும் பாரிலா
நீலமாற் கடவுளை நிகரு மின்னதே. (54)
(இ-ள்) பச்சை நிறமுடைய இராமனும், கரிய நிறமுடைய கிருஷ்ணனும், வெண்ணிறமுடைய பலபத்திர ராமனும் ஆகப் பூமியில் அவதாரம் செய்த நீலநிறமுடைய திருமாலையும் இது ஒக்கும்.
சீலம் - நல்லொழுக்கம்; ஆர் - நிறைந்த; பசிய - பச்சைநிறம் உள்ள; மெய் - தேகத்தை உடைய; சிலை - வில்லை உடைய; கோலம் ஆர் - அழகு நிறைந்த; கார்வணம் - கறுத்த நிறம்; கண்ணன் - கிருஷ்ணன்; பால் அவாம் நிறத்து - பாலும் அவாவும் (- விரும்பும்) நிறத்தையுடைய - பாலினும் மிக்க வெண்மையான நிறத்தை உடைய; அலாயுதனும் - அலத்தை ( - கலப்பையை) ஆயுதமாக உடைய பலபத்திர ராமனும் (ஆக); பாரில் ஆம் - பூமியில் ஆகிய ( - அவதரித்த); நீலமாற்கடவுள் - நீல நிறமுள்ள விஷ்ணு.
பாரிலார் கவிநதி பட்ட மாதியிற்
சேருநீ ராவியாய்த் திரிந்து மேகமாய்
மாரியா யாலியாய் மற்றும் பல்லுரு
வாருமா லதனையு மன்ன தின்னதே. (55)
(இ-ள்.) கடல் ஆறு குளம் முதலியவைகளிலுள்ள நீர், சூரிய வெப்பத்தால் நீராவியாகிப் பின்பு மேகமாகி மேகத்திலிருந்து மழையாகவும் ஆலாங்கட்டியாகவும் விழுந்து இவைகளேயன்றி மூடுபனி முதலிய வேறு பல உருவங்களாகவும் மாறுகின்றது. அப்படிப்பட்ட நீரையும் இது ஒக்கும்.
பாரில் ஆர்கலி - பூமியிலே உள்ள கடல்; பட்டம் - குளம்; ஆலி - ஆலாங்கட்டி; (ஆலாங்கட்டி விழுதலைக் கல்மழை பெய்கிறதென்று சொல்வதுண்டு.) ஆரும் - பொருந்தும்; ஆல் - அசை; அன்னது - ஒத்தது; இன்னது - இது.
தோடுறு முட்டையாத் தோன்றிப் பின்றவழ்*
கீடமாய் வளர்ந்துமுன் கெழீஇய வண்டநேர்
கூடுசெய் துறைந்துநீங் குபு பறந்துலாஞ்
சேடுடைப் பட்டுப்பூச் சியையும் போலுமே. (56)
(இ-ள்.) பட்டுப்பூச்சி, முதலில் முட்டையாக இருந்து பொரிக்கப்பட்டுப் புழுவாகி அந்த வடிவத்துடன் சிலநாள் வளர்ந்து பின்பு முட்டைவடிவமான கூடுகட்டி அதன் உள்ளே சில நாள் இருந்து பூரணவளர்ச்சி அடைந்த உடனே அந்தக் கூட்டைத் துளைத்துப் புறப்பட்டு வெளியே பறந்து உலாவும். அப்படிப்பட்ட பட்டுப்பூச்சியையும் இது ஒக்கும்.
தோடு - முட்டையின் ஓடு; கீடம் - புழி; கெழீஇய - பொருந்திய; அண்டம் - முட்டை; நீங்குபு - நீங்கி; உலாம் - உலாவும்; சேடுஉடை - அழகை உடைய.
(பட்டுப்பூச்சி, முட்டைப் பருவம் முடிந்து புழுவாகி வளர்ந்து, புழுப்பருவமும் பூரணமான உடனே தன் உடம்பில் உள்ள ஒருவகைச் சத்தினால் பட்டுநூல் இழைத்து, இந்த நூலினால் தன் உடம்பைச் சூழக் கூடுசெய்து, காற்று வெயில் மழை பனி இவைகளால் பாதிக்கப்படாமல் அந்தக் கூட்டினுள்ளே சிலநாள் ஆகாரமின்றி இருந்து வளர்ந்து, கூட்டுள் வளரும் பருவம் ம்முற்றுப்பெற்ற உடனே தன் உடம்பில் ஊறும் ஒருவகை நீரினால் அந்தக் கூட்டை நனைத்து ஊறச்செய்து, ஊறிய பாகத்தை எளிதாகத் துளைத்து, வெளியே பறந்து உலாவுகின்றது. இப்படிப் பறக்கும் பூச்சிப் பருவத்திலேதான், பட்டுப்பூச்சிகள் ஆணும் பெண்ணும் சேர்கின்றன; சேர்ந்தபின் ஆண் பூச்சி இறந்துவிடுகின்றது. பெண் பூச்சியும் முட்டையிட்டபின் இறந்துவிடுகின்றது. பட்டுப்பூச்சி, புழுவாயிருந்த காலத்தில் தன் உடம்பில் சேமித்து வைத்திருந்த ஆகாரச் சத்தே அது கூட்டுள் வளரும் காலத்தில் உபயோகப்படுகின்றது. இவ்வாறே பெரிய பிராணிகளில், பூமியின் வடக்கு முடிவாகிய * துருவப் பிரதேசத்தில் வாழும் வெண்ணிற முடைய † துருவக் கரடிகள், வெப்பமுள்ள சில மாதங்களில் சேமித்து வைக்கும் ஆகாரச் சத்தினால், கொடுங்குளிர் மிகுந்த எங்கும் உறைபனி மூடிக் கவர்ந்து கொள்ளும் வேறு சில மாதங்களில் எவ்வகை ஆகாரமும் முயற்சியும் இல்லாமல் இரவும் பகலும் இடைவிடாது தூங்குகின்றவை போலிருக்கின்றன. இவைகள் ஆகாராதிகளை நிவிர்த்தி செய்து நெடுங்காலம் யோகத்திலிருக்கும் யோகிகளைப்பற்றி ஞாபகமூட்டுகின்றன.]
--------------------------
* Polar region. † Polar bears.
உரிமையி னவரவ ருள்ளத் துள்ளுபு
தெரிமல ரெதுவெது வவ்வத் தேமலர்
தருமண மவரவர் தமக்குத் தந்திடு
மொருமனோ ரஞ்சித மலரு மொக்குமே. (57)
(இ-ள்.) ஒரே மனோரஞ்சிதப் பூவானது, யார் யார் எந்த எந்தப் பூவை உத்தேசித்துக் கொள்கிறார்களோ, அந்த அந்தப் பூவின் வாசனையை அவரவர்களுக்குக் கொடுக்கின்றது. அப்படிப்பட்ட பூவையும் இது ஒக்கும்.
உரிமையின் - சுதந்தரமாக; உள்ளம் - மனம்; உள்ளுபு - சிந்தித்து; தெரிமலர் - ஆராய்ந்து தெரிந்தெடுத்தபூ; அவ்வத் தேமலர் - அந்த அந்தத் தேனையுடைய பூ.
எவ்வெவ் பறவையெவ் வெவணங் கூவிடு
மவ்வவ்வண் ணஞ்செவ்வி தவிந யித்துக்கூய்த்
தெவ்வுபுள் வலைஞருந் திகைப்பச் செய்திடு
மொவ்வலில் விகடப்புள் ளும்பொ ரூஉமரோ. (58)
(இ-ள்) விகடப்பறவை என்ற பக்ஷியானது, எந்தப் பறவை எப்படி எப்படிக் கூவுமோ, அப்படி அப்படியே கூவி, பக்ஷிகளைப்பிடித்தலே தொழிலாக உடைய வேடரும் திகைக்கும்படி செய்யும். அந்தப் பறவையையும் இது ஒக்கும்.
எவ்வெவ என்பதில் இறுதியில் உள்ள அ சாரிய=; செவ்விது-நன்றாக; கூய் -கூவி; தெவ்வுதல்-கைக்கொள்ளல்; புள் வலைஞர்-பக்ஷிபிடிக்கும் வலையை உடைய வேடர்; ஒவ்வல் இல்- (ஒன்றும்) சமமாகுதல் இல்லாத; விகடப்புள்-(மற்றைப் பறவைகள் போலக் கூவி) விகடம் செய்கின்ற ஒருவகைப் பறவை, பொரூஉம்- ஒக்கும்.
[*விகடப்பறவ= என்பது அமரிக்கா தேசத்து வனங்களில் வாழும் ஒருவகைப் பறவை. இது எந்தப் பறவையைப்போலவும் கூவ வல்லது. இது பல பறவைகளைப்போலக் கூவும்போது,பாராதே தூரத்தே நின்று கேட்போர், பல பறவைகள்கூடிக் கூவுகின்றன
வென்று நினைப்பார்கள். இந்த ஆச்சரியகரமான சக்தியையுடைய இந்தப்பறவை மிகுந்த குறும்புக்குணமும் உள்ளது. வல்லூறு போலக் கூவி மற்றைப் பறவைகள் அஞ்சி ஒளிக்கச்செய்தும் , அந்த அந்தச் சாதி ஆண் பறவை போலக் கூவி அவற்றின் பெடைகளைக் கூட்டுனின்;று வெளியே வரச்செய்தும் விளையாடும்.]
*Mocking bird.
பிரிபவர்க் கழுகணீர் பிரிந்து மீளவும்
வருபவர்க் காக்கித்தம்மாட்டு வந்தவொவ்
வொருவருந் தங்கட்கே யுரிய ரென்றெணப்
புரிபவ ரெனுமாபரத் தையரும் போலுமே. (59)
(இ-ள்) வேசையர் தம்மிடம் வந்து சேர்ந்திருந்த புருஷர் பிரியும்போது அவர்கள் பிரிவதைச் சகியாதவர்போல அழுவார். அப்புருடர் பிரிந்துபோன தற்சமயத்தில் முன் பிரிந்து போயிருந்த வேறு புருஷர் வந்து அழுகைக்கு காரணம் யாது என்று கேட்பார்க்கு உம்மிடைய பிரிவே என்று சொல்லி "போவார்க் கழுத கண்ணீர் வருவார்க்கும் பொருந்தியதே" ஆகச் செய்வார். இவ்வாறாக அவர்கள் தம்மிடத்து வரும் ஒவ்வொரு புருஷரும் அவர்களைத் தங்கள் தங்களுக்கு மாத்திரம் உரிமைப்பட்டவர்கள் என்று நம்பும்படி செய்வார்கள். இப்படிக் கூறப்பட்ட வேசையரையும் இது ஒக்கும்.
அழுகண்ணீர்-அழுத கண்ணீர்; மீளவும்-திரும்பவும்; தம்மாட்டு-தம்மிடத்தில்; புரிபவர்-செய்பவர்; பரத்தையர்-வேசையர்.
புருடர்கள் வலிந்துகைப் பொருணல் கக்கொளவ்
வெரியிழைப் பரத்தைய ரென்ன வீதெழி
லருகலின் மயிலின மரு கணைந்துதம்
மிருகணுந் தரக்கொண்டுண் டிடுமென் பார்முனோர். (60)
(இ-ள்) புருஷர்கள் தமது கையிலுள்ள பொருளை வலியக் கொடுக்கப் பெற்றுக் கொள்ளும் அந்த வேசையர்போல, இதுவும் மயில்கள் தாமாகப் பக்கத்திலே வந்து கண்ணை வலியக் கொடுக்கக் கொண்டு உண்ணும் என்று முன்னோர் சொல்வார்கள்.
நல்க-கொடுக்க; எரி இழை-பிரகாசிக்கின்ற ஆபரணம்; ஈது-இது; இந்தக்கோம்பி; எழில்-அழகு; அருகல்-அருகல் இல்;-குறைதல் இல்லாத; மயில் இனம்-மயிலின்கூட்டம்;
வெயிலின்வெள்ளொளியொன்றே விளங்கு பன்னிற
வியனெய்தா டிகளினை மேய்வெவ் வேறொளி
பயிலல்போ லிஃதுதான் சார்ந்த பல்பொரு
ளியலினுக் கிரையல நிற மியைந்ததே (61)
(இ-ள்.) வெயில் என்ற சூரிய கிரணமாகிய வெள்ளை நிறமுள்ள ஓர் ஒளிதானே, பல வெவ்வேறு நிறமுடைய கண்ணாடிகளைச் சார்ந்து பல வெவ்வேறு நிறமான ஒளியாகத் தோன்றுகின்றதன்றோ; அது போலவே, இதுவும் தான்சார்ந்த பொருள்களின் தன்மைகளுக்கு தக்கபடி பல நிறங்களை அடைந்தது.
பல்நிறவியன் எய்து-பலவகைப்பட்ட நிறங்களாகிய மிகுதியைப்பொருந்திய; ஆடி-கண்ணாடி; மேய்-மேவி-பொருந்தி; பயிலல்-பழகுதல்-கூடுதல்; சார்ந்த-சேர்ந்த; இயல்-தன்மை; இயை-இசைவான; இயைந்தது-பொருந்தியது.
இளவெயில் பொழினிழ லெரி விளக்கினிற்
றெளிவொடவ் வவர்கண்ட நிறத்தைச் செப்பினே
மிளிர்பகல் வெயிலிடை வெள்ளி தாமிது
கொளுநிறம் பலவெனக் குறித்திலேமதால், (62)
(இ.ள்.) இது, நம்முள் முதற்பிரயாணி சோலையின் நிழலிலே இருக்கப் பார்த்தபோது நீலமாக இருந்தது; இரண்டாம் பிரயாணி, சூரியோதய காலத்திலே இளவெயில் காய்ந்து கொண்டிருக்கப் பார்த்த போது பச்சையாக இருந்தது. மூன்றாம் பிரயாணி விளக்கு வெளிச்சத்திலே பார்க்கக் கறுப்பாக இருந்தது. அப்படியே நாம் ஒவ்வொருவரும் அவரவர் கண்ட நிறத்தைச் சொன்னோம். இப்போது முதிர்ந்த
வெயிலிலே நாம் மூவரும் பார்க்க வெள்ளையாக இருக்கிற இது, பல சமயத்தில் பலநிறம் கொள்ளு மென்பதை நாம் தெரியவில்லை. அதனால்
பொழில் – சோலை; மிளிர் – பிரகாசிக்கின்ற; வெள்ளிதாம் – வெண்மையாகும்; கொளும் – கொள்ளும்; அதால் – அதனால்.
யாவரும் வழுவிலம் யாவ ருமவழு
மேவின மினிக்கண்ட விளம்பு வேமெனி
லேவரு நம்மைப்போற் பார்ப்ப ரென்பதை
யோவின்றி நெஞ்சினு ளுறுத்தல் வேண்டுமால். (63)
(இ.ள்) இதனிடத்தில் அவரவர் கண்ட நிறத்தைச் சொல்லியதனால் நாமெல்லாரும் குற்றமில்லாதவர்களாக இருக்கிறோம். இது அவரவர் காணாத வேறு நிறமும் அடையுமென்று தெரியாததனால். குற்றம் உடையவர்களாகவும்இருக்கிறோம். இனிமேல் நாம் கண்டவற்றைச் சொல்லுவோமானால், மற்றவர்களும் நம்மைப்போலவே *பார்ப்பார்களேன்பதை நம்முடைய நெஞ்சில் அகலாது பதித்து
வைக்கவேண்டும்.
வழு இலம் – குற்றம் இல்லோம்; கண்ட – கண்டவைகளை; எவரும் – யாவரும்; ஒவின்றி – நீக்கம் இல்லாமல்; உறுத்தல் – உறச் செய்தல்.
நம்முடைக் கண்ணினு நம்பத் தக்கன
தம்முடைக் கண்ணெனப் பிறர்க டாமுற
லிம்மியும் வியப்பன்றா லியாநங் கண்ணினு
மெய்ம்மயிற் பிறர்கணை நம்பு வேங்கொலோ. (64)
(இ-ள்.) மற்றவர்கள் நம்முடைய கண்ணைக் காட்டிலும் தங்கள் கண்ணை நம்புவது எள்ளளவும் ஆச்சரியமானதன்று. உண்மையாக, நம்முடைய கண்ணிலும் மற்றவர்கள் கண்ணை நாம் நம்புவோமோ?
நம்முடைக்கண் - நம்முடையகண்; தம்முடைக்கண் - தம்முடையக்கண்; பிறர்கணை - மற்றவர்கள் கண்ணை.
ஒருபுறம் வெள்ளியோர் புறத்தொண் பொன்பொதி
தருபரி சையினொவ்வொர் பக்கந் தன்னையே
தெரிவுற்றஃ திரசதஞ் செம்பொ னென்றுவா
ளுருவிமுன் பொருமிரு வோரை யொத்தனம். (65)
(இ-ள்.) ஒருகேடகம், ஒருபுறம் வெள்ளித் தகட்டினாலும் மற்றொரு புறம் தங்கத் தகட்டினாலும் பொதியப்பட்டிருந்தது. அப்பக்கங்களில் ஒவ்வொன்றை மாத்திரம் பார்த்த இரண்டு வீரர்கள் அதை வெள்ளியென்றும் தங்கமென்றும் தான் தான் பார்த்த்தையே வற்புறுத்திக்கூறித் தம்முள் மாறுபட்டு வாளுருவிப் போர் செய்தார்களென்று கேட்டிருக்கின்றோமன்றோ; அந்த வீரர்களை நாம், மயங்குந் தன்மையில், ஒத்தோம்.
ஒண்பொன் - பிரகாசமான தங்கத்தினால்; பொதிதரு பரிசையின் - பொதியப்பட்ட கேடயத்தினுடைய; ஒவ்வொர் – ஒவ்வொருந இரசதம் - வெள்ளி; பொரும் - போர்செய்த.
(ஒரு வனத்திலே இருபக்கமும் மரங்கள் அடர்ந்த ஒரு பாதையிலே ஒரு நாள் உதய காலத்திலே இரண்டு வீரர்கள் எதிரெதிரான திசைகள் நோக்கிக் பிரயாணஞ் செய்துகொண்டிருந்தார்கள். அந்தப்பாதையூடு குறுக்காக ஓடிய ஒரு மரக்கிளையிலே ஒரு கேடகம் தூக்கப்பட்டிருந்தது. அதனருகே மேற்கூறிய இரண்டுவீரர்களும் சந்தித்து ஒருவனையொருவன் வந்தனோபசாரவார்த்தைகள் வழங்கி வரவேற்ற பின் ஒருவன் மற்றவனை நோக்கி "இந்தப் பொற் கேடகம் எதற்காக இங்கே தூக்கப்பட்டிருக்கின்றது, சொல்வாயாக" என்று கேட்டான். அதற்கு அவன் "இது வெள்ளிக் கேடகமாயிற்றே:
நீ ஏன் தவறாகப் பொற்கேடகமென்று சொன்னாய் என்றான்." அதேக்கேட்டு முன்னவன் "நீ தங்கத்தை வெள்ளியென்று மயங்குவதனால், உன் பார்வை மிகவும் கூர்மையற்றதாக இருக்கவேண்டும்" என்று கூற, பின்னவன் "என் பார்வை, வெள்ளியைத் தங்கமென்று மயங்கும் உன் பார்வையவ்வளவு கூர்மையற்றதன்று" என்றான்.
இவ்வாறு இருவருக்கும் நேர்ந்த விவாதம் முதிர்ந்து இறுதியில் "நீ பொய்யன், நீ பொய்யன்" என்ற வார்த்தைகள் வசமிழந்த இருவர் வாயினின்றும் ஏக காலத்தில் வெளிப்படவே, இலுவரும் கடுங்கோபங்கொண்டு ஒருவன்மேலொருவன் பாய்ந்து புலியோடு புலியும் யானையோடு யானையும் சிங்கத்தோடு சிங்கமும் எதிர்த்தாற் போல ஏற்றந் தாழ்வில்லாமல் நெடுநேரம் போர்செய்து இளைத்துச் சற்றுச் சிரம்ப்பரிகாரம் செய்துகொண்டு திரும்பப் போர் தொடங்கினார்கள்.
அந்தச் சமயத்திலே அந்த யுத்தகோஷத்தைக்கேட்டு அங்கு ஒரு சந்நியாசி வந்து இருவரையும் நோக்கி "நில்லுங்கள், நீங்கள் எதற்காகச் சண்டை செய்கிறீர்கள், சொல்லுங்கள்" என்று கேட்டார். உடனே ஒருவன் "இந்தப்பொய்யன், அதோ தொங்கும் கேடகத்தேப் பொற்கேடகமென்று வற்புறுத்துகின்றான்" என்றான். மற்றவன் "இந்தப் புரட்டன், அதை வெள்ளிக் கேடகமென்று சாதிக்கின்றான்" என்றான். இருவர் வார்த்தையுங் கேட்ட சந்நியாசி, குறஞ்சிரிப்புக் கொண்டு "சண்டையை நிறுத்தி முன் ஒருவன் நின்று பார்த்த திசையில் மற்றொருவன்போய் நின்று அந்தக் கேடகத்தைப் பாருங்கள்" என்றார். அவ்வாறே இருவரும் செய்ய, இருவர் பிழைகளும் வெளியாயின. உடனே அவர்கள் சந்நியாசிக்கு நன்றியறிவு வசனம் கூறி ஒருவனை யொருவன் மன்னிப்புக்கேட்டு நண்பராயினார்கள்.)
தயங்குமோர் நதியினைத் தாண்டித் தம்மைவிட்
டுயங்குமற் றவரையொவ் வொருவ ருமெணித்
தியங்கியா றொருவனைச் செகுத்த தென்றுமுன்
மயங்கிய நாலறு வரையும் போன்றனம். (66)
(இ-ள்.) இருபத்து நான்கு பேர் சேர்ந்த ஒரு கூட்டத்தார் ஒருநாள் ஒரு நதியைக் கடந்து போனார்கள். கடந்தவர்கள் அந்தந்தி கொடியதென்று சொல்லக் கேட்டிருந்ததனால், அவர்களுடைய தொகை சரியாக இருக்கிறதோ வென்று பார்க்க, அவர்களுள் ஒவ்வொருவரும் தம்மை விட்டுவிட்டு மற்றவர்களை எண்ணிப்பார்க்க,
ஒரு எண்ணம் குறையக்கண்டு திகைத்து அந்தக் கொடிய ந்தி ஒருவனைக் கொன்றுவிட்டதென்று (வழிப்போக்கன் ஒருவன் வந்து அவர்கள் பிசகைத் தெரிவிக்கும்வரை) மயங்கிக்கொண்டிருந்தார்கள். அவர்களையும் நாம் மயங்குந்தன்மையில் ஒத்தோம்.
தயங்கும் - பிரகாசிக்கும்; உயங்கும் - வாடும்; எணி - எண்ணி; செகுத்தது - கொன்றது; நாலறுவர் - இருபத்துநான்குபேர்.
தீதுமல கிருளினோ தெலுங்கன் செங்கையார்
காதுறு தோட்டியோர் தமிழன் காதுற
'நாதிகா' தெனப்பலகா னவின் றுடன்றுமற்
பேதுறு மவ்விரு பேரும் போன்றனம். (67)
(இ-ள்.) ஒருநாள் மிகுந்த இருட்டுவேளையிலே ஒரு தெலுங்கன் கையிலிருந்த தோட்டி ஒரு தமிழன் காதில் மாட்டிக்கொள்ள, அதைத் தமிழன் விடுவிக்கும்படி பிடித்திழுத்தான். உடனே தெலுங்கன் தன் தோட்டியைத் தமிழன் பிடுங்கிக்கொள்ள உத்தேசிக்கிறானென்று எண்ணி 'நாதி' (என்னுடைய) என்று சொல்லிக் கொண்டு அந்தத் தோட்டியைத் தானும் இழுத்தான். அதனால் தமிழன் காதில் வேதனை உண்டாக, அவன் 'காது' என்று சொல்லி அந்தத் தோட்டியை விடாமல் இழுத்தான். தெலுங்கன் தான் 'நாதி' (என்னுடையது) என்றதற்கு எதிரிடையாகத் தமிழன் 'காது'
(அல்ல) என்று சொல்லியதாகப் பாவித்து 'நாதி' என்று திரும்பவும் சொல்ல, அதன் அர்த்தத்தைத் தமிழன் அறியாமல் 'காது' என்று மறுபடிசொல்ல, இவ்வாறு 'நாதி, காது' என்று இருவரும் பலமுறை சொல்லி, (இரண்டுபாஷையுந் தெரிந்த ஒருவன் இருவர் பிசகையும் தெரிவிக்கும் வரை) மயங்கினார்கள் என்று கேட்டிருக்கின்றோ மன்றோ; அவ்விருவரையும் நாம் மயங்குந்தன்மையில் ஒத்தோம்.
தீது மல்கு அருள் - (களவு முதலிய தீய செய்கைகள் எளிதாகச் செய்ய இடங் கொடுப்பதாகிய) தீங்கு மிகுந்த இருட்டு; செங்கை ஆர் - சிவந்தகையில் தங்கிய; காதுறுதோட்டி – வருத்தஞ்செய்யிம் தோட்டி; 'நாதி' என்னுடையது என்ற அர்த்தம் உடைய ஒரு தெலுங்கு வார்த்தை; காது என்ற சப்தத்துக்குத் தெலுங்கில் அல்ல
என்பது பொருள்; மன்பேதுறு - மிக மயங்கிய; போன்றனம் - ஒத்தோம்.
பலபல வுறுப்பையும் பாகன் காட்டத்தொட்
டொலை யத்தத் தவரவ ருணர்ந்த வங்கநே
ரலகுரல் சுளகுலக் கையொப் பானையென்
றுலைவுறு பிறவியந் தகரு மொத்தனம். (68)
(இ-ள்.) சில பிறவிக்குருடருக்கு ஓர் யானைப்பாகன் அதன் பல உறுப்புகளையும் அவர்கள் கையைப்பிடித்துத் தடவச்செய்து காட்டினான். பின்பு, அவர்களுள் வாலைத்தடவிப் பார்த்தவன் யானை விளக்குமாறுபோ லிருக்கிறதென்றான், காலைத் தடவிப் பார்த்தவன் உரல்போலிருக்கிறதென்றான், காதைத் தடவிப்பார்த்தவன் முறம்
போலிருக்கிறதென்றான். இவ்வாறாக, அந்தப் பிறவிக் குருடர்கள் உண்மையறியாமல் மயங்கினார்கள். அவர்களையும் நாம் ஒத்தோம்.
ஒலை - ஒல்லை - சீக்கிரம்; அத்தத்து -கையினால்; அங்கம் - உறுப்பு; நேர் - ஒத்த; அலகு - விளக்குமாறு; சுளகு - முறம்; உலைவுறு - வருத்தம் அடைந்த.
பரம்பொரு ளொன்றையே பற்றிப் பேசுறுந்
தரந்தர மானபல் சமயத் தர்க்கர்தாந்
தெரிந்ததே மெய்யென்பர் செப்பெல் லாமது
பொருந்தலோ ராரவர் தமையும் போன்றனம். (69)
(இ-ள்.) தெய்வம் ஒன்றையே பற்றி விவகரிக்கும் பல சமயவாதிகளும் அவரவர்கள் தெரிந்ததுமட்டும் உண்மையென்று சொல்வார்கள்; அந்த ஏக வஸ்து அவர்கள் எல்லாரும் சொல்லும் எல்லாவற்றையும் பொருந்தியுள்ளதென்று தெரியார்கள். அவர்களையும் நாம் ஒத்தோம்.
தரந்தரமான - பலவகையான; செப்பு எல்லாம் – சொல்லும் எல்லாவற்றையும்; ஓரார் - உணரார்.
பொய்யென்று தோன்றிடப் புகன்ற யாவினு
மெய்யொன்று மிலாதிரா தென்னு மேலவ
ரையொன்று மொழியின தருத்த மின்றியாங்
கையொன்று நெல்லியங் கனியிற் கண்டணம். (70)
(இ-ள்.) பொய்யென்று தோன்றும்படியாகச் சொல்லப்பட்ட ஒவ்வொரு பிரஸ்தாபத்தையும் நன்றாக விசாரித்தால், அதனதன் அடிப்படையாகச் சிறிதாயினும் உண்மை யிருப்பது வெளிப்படும் என்று பெரியோர் சொல்வதன் கருத்து, இன்று உள்ளங்கை செல்லிக்கனி போல விளங்கியது.
மெய் ஒன்றும் - மெய் சிறிதாயினும்; இலாதிராது – இருக்கவே செய்யும்; ஐ ஒன்று - அழகுபொருந்திய; கை ஒன்று – கையிலே பொருந்திய; கனியில் கண்டனம் - கனியைப் போலப் பார்த்தோம்.
ஒருபொருள் பலபக்க முடைய தன்றியு
மருவுகா லம்மிட மாதி மாறலாற்
றிரிவுறு மெனுமுண்மை தேர்ந்தி டார்கடாஞ்
சரியெனக் கண்டதே சாதிப் பாரோ. (71)
(இ-ள்.) ஒரு பொருளுக்குப் பல பக்கங்கள் உண்டு; அன்றியும் அது காலபேதம் தேசபேதம் முதலிய பேதங்களினால் மாறுதல் அடையும். இந்த உண்மையை அறியாதவர்களே தாங்கள் கண்டது மாத்திரம் சரியென்று சாதிப்பார்கள்.
மருவு - பொருந்திய; ஆதி - முதலானவைகள்; திரிவு - மாறுபாடு.
என்விவா றியல்பிற்சந் தித்து மூவர்முற்
றனுபவ வறிவினா லறைந்த வாய்மையை
யுனுபவர் பிறருரை யெவற்றி னுள்ளினு
மனுமுண்மை யறிந்திட வல்ல ராவரே. (72)
(இ-ள்.) என்று இவ்வாறாகத் தற்செயலாகச் சந்தித்த மூன்று பிரயாணிகளும் பூரணமான அனுபவத்தோடு கூடிய அறிவின் உதவியினால் சொல்லிய உண்மையைச் சிந்திப்போர்கள், மற்றவர்கள் சொல்லும் எதனின் உள்ளேயும் உள்ள உண்மையை அறிய வல்லவர்களாவார்கள்.
உனுபவா - உன்னுபவர் - சிந்திப்பவர்கள்; மனும் - மன்னும் - நிலைத்த; வல்லர் - வல்லவர்கள்.
கோம்பி விருத்தம்
மூலமும் உரையும் முற்றுப்பெற்றன.
---------------------
This file was last updated on 20 Feb. 2013.
Feel free to send the corrections to the Webmaster.