இளங்கோவடிகள் இயற்றிய "சிலப்பதிகரம்"
மூலமும்
நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி
நாட்டாரவர்கள் எழுதிய உரையும்
புகார்க்காண்டம் - பாகம் 3
cilappatikAram of ilangkO aTikaL
with the commentary of vEngkaTacAmi nATTAr
pukArk kANTam, part 3
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Mr. S. Govindarajan and Mr. N.D. Logasundaram for the preparation
of the etext.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2013.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
ஆசிரியர் இளங்கோவடிகள் இயற்றிய "சிலப்பதிகரம்" மூலமும்
நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் எழுதிய உரையும் - பாகம் 3
உள்ளடக்கம்
பதிகம்
உரைபெரு கட்டுரை
புகார்க்காண்டம்.
1. மங்கல வாழ்த்துப் பாடல்
2. மனையறம்படுத்த காதை
3. அரங்கேற்று காதை
4. அந்திமாலைச் சிறப்புசெய் காதை
5. இந்திர விழவு ஊர் எடுத்த காதை
6. கடலாடு காதை
7. கானல் வரி
8. வேனில் காதை
9. கனாத்திறம் உரைத்த காதை
10. நாடுகாண் காதை
---------------
புகார்க் காண்டம்
7. கானல் வரி
[யாழினைத் தொழுது வாங்கிய மாதவி பண்ணல் முதலிய எண்வகையாலும் இசையை எழுப்பி, வார்தல் முதலிய எட்டுவகை இசைக் கரணத்தாலும் ஆராய்ந்து செவியால் ஓர்த்து, பாணியாதெனக் கூறிக்கோவலன் கையில் யாழினை நீட்ட, அவன் வாங்கி, ஆற்றுவரியும் கானல்வரியுமாகிய இசைப்பாட்டுக்கள் பலவற்றை யாழிலிட்டுப் பாடினான். அவன் பாடிய பாட்டுக்கள் அகப்பொருட்டுறை யமைந்தனவாகலின், அவற்றைக் கேட்ட மாதவி, ‘இவற்றுள் ஒரு குறிப்பு உண்டு; இவன் தன்னிலை மயங்கினான்’எனக் கருதி, யாழினை வாங்கித் தானும் ஒரு குறிப்புடையாள் போல வரிப்பாட்டுக்கள் பலவற்றைப் பாடினாள். யாழிசைமேல் வைத்து ஊழ்வினை வந்து உருத்ததாகலின், கோவலன் அவள் பாடியவற்றைக் கேட்டு, ‘யான் கானல்வரி பாட, இவள் மிக்க மாயமுடையளாகலின் வேறொன்றின்மேல் மனம் வைத்துப் பாடினாள்’ என உட்கொண்டு, அவளை அணைத்த கை நெகிழ்ந்தவனாய் எழுந்து ஏவலாளர் சூழ்தரப் போயினான்; போக,மாதவியும் கையற்ற நெஞ்சினளாய் வையத்தின் உள்ளே புக்குக் காதலனுடன்றியே தன் மனையை அடைந்தாள்.(இதிலுள்ள பாட்டுக்கள் பலவும் கற்போரை இன்பத்திலேயே திளைக்க வைக்கும் சொற்பொருள் நயங்கள் வாய்ந்தவை.)
(கட்டுரை )
சித்திரப் படத்துள்புக்குச் செழுங்கோட்டின் மலர்புனைந்து க
மைத்தடங்கண் மணமகளிர் கோலம்போல் வனப்புஎய்திப்
பத்தரும் கோடும் ஆணியும் நரம்பும்என்று
இத்திறத்துக் குற்றம்நீங்கிய யாழ்கையில் தொழுதுவாங்கி
பண்ணல் பரிவட்டணை ஆராய்தல் தைவரல்
கண்ணிய செலவு விளையாட்டுக் கையூழ்
நண்ணிய குறும்போக்கு என்று நாட்டிய
எண்வகையால் இசைஎழீஇப்
பண்வகையால் பரிவுதீர்ந்து
மரகதமணித் தாள்செறிந்த மணிக்காந்தள் மெல்விரல்கள்
பயிர்வண்டின் கிளைபோலப் பல்நரம்பின் மிசைப்படர
வார்தல் வடித்தல் உந்தல் உறழ்தல்
சீருடன் உருட்டல் தெருட்டல் அள்ளல்
ஏர்உடைப் பட்டடைஎன இசையோர் வகுத்த
எட்டு வகையின் இசைக்கர ணத்துப்
பட்டவகைதன் செவியின்ஓர்த்(து)
ஏவலன், பின் பாணி யாதுஎனக்
கோவலன் கையாழ் நீட்ட, அவனும்
காவிரியை நோக்கினவும் கடல்கானல் வரிப்பாணியும்
மாதவிதன் மனம்மகிழ வாசித்தல் தொடங்குமன்.
வேறு (ஆற்று வரி)
திங்கள் மாலை வெண்குடையான் உ.
சென்னி செங்கோல் அதுஒச்சிக்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி.
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாது ஒழிதல் கயல்கண்ணாய்.
மங்கை மாதர் பெருங்கற்புஎன்று
அறிந்தேன் வாழி காவேரி.
மன்னும் மாலை வெண்குடையான் ௩.
வளையாச் செங்கோல் அதுஓச்சிக்
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி.
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாது ஒழிதல் கயல்கண்ணாய்.
மன்னும் மாதர் பெருங்கற்புஎன்று
அறிந்தேன் வாழி காவேரி.
உழவர் ஓதை மதகுஓதை ௪
உடைநீர் ஓதை தண்பதங்கொள்
விழவர் ஓதை சிறந்துஆர்ப்ப
நடந்தாய் வாழி காவேரி.
விழவர் ஓதை சிறந்துஆர்ப்ப
நடந்த எல்லாம் வாய்காவா
மழவர் ஓதை வளவன்தன்
வளனே வாழி காவேரி.
வேறு (சார்த்து வரி - முகச்சார்த்து)
கரியமலர் நெடுங்கண் காரிகைமுன் ரு
கடல்தெய்வம் காட்டிக் காட்டி
அரியசூள் பொய்த்தார் அறன்இலர்என்று
ஏழையம்யாங்கு அறிகோம் ஐய
விரிகதிர் வெண்மதியும் மீன்கணமும்
ஆம்என்றே விளங்கும் வெள்ளைப்
புரிவளையும் முத்தும்கண்டு ஆம்பல்
பொதிஅவிழ்க்கும் புகாரே எம்மூர்.
காதலர் ஆகிக் கழிக்கானல் Ü
கையுறைகொண்டு எம்பின் வந்தார்
ஏதிலர் தாமாகி யாம்இரப்ப
நிற்பதையாங்கு அறிகோம் ஐய
மாதரார் கண்ணும் மதிநிழல்நீர்
இணைகொண்டு மலர்ந்த நீலப்
போதும் அறியாது வண்டுஊச
லாடும் புகாரே எம்மூர்.
மோது முதுதிரையால் மொத்துண்டு எ
போந்துஅசைந்த முரல்வாய்ச் சங்கம்
மாதர் வரிமணல்மேல் வண்டல்
உழுதுஅழிப்ப மாழ்கி ஐய
கோதை பரிந்துஅசைய மெல்விரலால்
கொண்டுஓச்சும் குவளை மாலைப்
போது சிறங்கணிப்பப் போவார்கண்
போகாப் புகாரே எம்மூர்.
வேறு (முகம் இல் வரி)
துறைமேய் வலம்புரி தோய்ந்து மணல்உழுத அ
தோற்றம் மாய்வான்
பொறைமலி பூம்புன்னைப் பூஉதிர்ந்து நுண்தாது
போர்க்கும் கானல்
நிறைமதி வாள்முகத்து நேர்க்கயல்கண் செய்த
உறைமலி உய்யாநோய் ஊர்சுணங்கு மென்முலையே
தீர்க்கும் போலும்.
(கானல் வரி)
நிணம்கொள் புலால்உணங்கல் நின்றுபுள் ஓப்புதல் ௯
தலைக்கீடு ஆகக்
கணம்கொள் வண்டுஆர்த்து உலாம்கன்னி நறுஞாழல்
கையில் ஏந்தி
மணம்கமழ் பூங்கானல் மன்னிமற்று ஆண்டுஓர்
அணங்குஉறையும் என்பது அறியேன் அறிவேனேல்
அடையேன் மன்னோ.
வலைவாழ்நர் சேரி வலைஉணங்கும் முன்றில் க0
மலர்கை ஏந்தி
விலைமீன் உணங்கல் பொருட்டாக வேண்டுஉருவம்
கொண்டு வேறுஓர்
கொலைவேல் நெடுங்கண் கொடுங்கூற்றம் வாழ்வது
அலைநீர்த்தண் கானல் அறியேன் அறிவேனேல்
அடையேன் மன்னோ.
வேறு (நிலைவரி)
கயல்எழுதி வில்எழுதிக் கார்எழுதிக் காமன் கக
செயல்எழுதித் தீர்ந்தமுகம் திங்களோ காணீர்.
திங்களோ காணீர் திமில்வாழ்நர் சீறூர்க்கே
அம்கண்ஏர் வானத்து அரவுஅஞ்சி வாழ்வதுவே. 11
எறிவளைகள் ஆர்ப்ப இருமருங்கும் ஓடும் கஉ
கறைகெழுவேல் கண்ணோ கடுங்கூற்றம் காணீர்.
கடுங்கூற்றம் காணீர் கடல்வாழ்நர் சீறூர்க்கே
மடம்கெழுமென் சாயல் மகளா யதுவே. 12
புலவுமீன் வெள்உணங்கல் புள்ஓப்பிக் கண்டார்க்கு க௩
அலவநோய் செய்யும் அணங்குஇதுவோ காணீர்.
அணங்குஇதுவோ காணீர் அடும்புஅமர்த்தண் கானல்
பிணங்குநேர் ஐம்பால்ஓர் பெண்கொண் டதுவே. 13
வேறு (முரிவரி)
பொழில்தரு நறுமலரே புதுமணம் விரிமணலே க௪
பழுதுஅறு திருமொழியே பணைஇள வனமுலையே
முழுமதி புரைமுகமே முரிபுரு வில்இணையே
எழுதுஅரு மின்இடையே எனைஇடர் செய்தவையே. 14
திரைவிரி தருதுறையே திருமணல் விரிஇடமே கரு
விரைவிரி நறுமலரே மிடைதரு பொழில்இடமே
மருவிரி புரிகுழலே மதிபுரை திருமுகமே
இருகயல் இணைவிழியே எனைஇடர் செய்தவையே. 15
வளைவளர் தருதுறையே மணம்விரி தருபொழிலே கÜ
தளைஅவிழ் நறுமலரே தனிஅவள் திரிஇடமே
முளைவளர் இளநகையே முழுமதி புரைமுகமே
இளையவள் இணைமுலையே எனைஇடர் செய்தவையே. 16
வேறு (திணை நிலைவரி)
கடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வர்நின் ஐயர் கஎ
உடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வைமன் நீயும்
மிடல்புக்கு அடங்காத வெம்முலையோ பாரம்
இடர்புக்கு இடுகும் இடைஇழவல் கண்டாய். 17
கொடுங்கண் வலையால் உயிர்க்கொல்வான் நுந்தை கஅ
நெடுங்கண் வலையால் உயிர்க்கொல்வை மன்நீயும்
வடம்கொள் முலையால் மழைமின்னுப் போல
நுடங்கி உகுமென் நுசுப்புஇழவல் காண்டாய். 18
ஓடும் திமில்கொண்டு உயிர்க்கொள்வர் நின்ஐயர்
கோடும் புருவத்து உயிர்க்கொல்வை மன்நீயும் க௯
பீடும் பிறர்எவ்வம் பாராய் முலைசுமந்து
வாடும் சிறுமென் மருங்குஇழவல் கண்டாய். 19
வேறு
பவள உலக்கை கையால் பற்றித் உ0
தவள முத்தம் குறுவாள் செங்கண்
தவள முத்தங் குறுவாள் செங்கண்
குவளை அல்ல கொடிய கொடிய 20
புன்னை நீழல் புலவுத் திரைவாய் உக
அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண்
அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண்
கொன்னே வெய்ய. கூற்றம் கூற்றம். 21
கள்வாய் நீலம் கையின் ஏந்திப் உஉ
புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண்
புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண்
வெள்வேல் அல்ல. வெய்ய வெய்ய. 22
வேறு
சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய் உ௩
சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்
ஊர்திரை நீர்வேலி உழக்கித் திரிவாள்பின்
சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய். 23
(கட்டுரை)
ஆங்கு, கானல்வரிப் பாடல்கேட்ட உ௪
மான்நெடுங்கண் மாதவியும்
மன்னும்ஓர் குறிப்புஉண்டுஇவன்
தன்நிலை மயங்கினான்எனக்
கலவியால் மகிழ்ந்தாள்போல்
புலவியால் யாழ்வாங்கித்
தானும்ஓர் குறிப்பினள்போல்
கானல்வரிப் பாடல்பாணி
நிலத்தெய்வம் வியப்புஎய்த
நீள்நிலத்தோர் மனம்மகிழக்
கலத்தொடு புணர்ந்துஅமைந்த
கண்டத்தால் பாடத்தொடங்கும்மன். 24
வேறு (ஆற்று வரி)
மருங்கு வண்டு சிறந்துஆர்ப்ப உரு
மணிப்பூ ஆடை அதுபோர்த்துக்
கருங்க யல்கண் விழித்துஒல்கி
நடந்தாய் வாழி காவேரி.
கருங்க யல்கண் விழித்துஒல்கி
நடந்த எல்லாம் நின்கணவன்
திருந்து செங்கோல் வளையாமை
அறிந்தேன் வாழி காவேரி. 25
பூவர் சோலை மயில்ஆலப் உÜ
புரிந்து குயில்கள் இசைபாடக்
காமர் மாலை அருகுஅசைய
நடந்தாய் வாழி காவேரி.
காமர் மாலை அருகுஅசைய
நடந்த எல்லாம் நின்கணவன்
நாம வேலின் திறம்கண்டே
அறிந்தேன் வாழி காவேரி. 26
வாழி அவன்தன் வளநாடு உஎ
மகவாய் வளர்க்கும் தாய்ஆகி
ஊழி உய்க்கும் பேர்உதவி
ஒழியாய் வாழி காவேரி.
ஊழி உய்க்கும் பேர்உதவி
ஒழியாது ஒழுகல் உயிர்ஓம்பும்
ஆழி ஆள்வான் பகல்வெய்யோன்
அருளே வாழி காவேரி. 27
வேறு (சார்த்து வரி)
தீங்கதிர் வாள்முகத்தாள் செவ்வாய் மணிமுறுவல் ஒவ்வா வேனும் உஅ
வாங்கும்நீர் முத்துஎன்று வைகலும் மால்மகன்போல் வருதிர் ஐய
வீங்குஓதம் தந்து விளங்குஒளிய வெண்முத்தம் விரைசூழ் கானல்
பூங்கோதை கொண்டு விலைஞர்போல் மீளும் புகாரே எம்மூர். 28
மறையின் மணந்தாரை வன்பரதர் பாக்கத்து மடவார் செங்கை உ௯
இறைவளைகள் தூற்றுவதை ஏழையம் எங்ஙனம்யாங்கு அறிகோம் ஐய
நிறைமதியும் மீனும் எனஅன்னம் நீள்புன்னை அரும்பிப் பூத்த
பொறைமலிபூங் கொம்புஏற வண்டுஆம்பல் ஊதும் புகாரே எம்மூர். 29
உண்டாரை வெல்நறா ஊண்ஓழியாப் பாக்கத்துள் உறைஒன்று இன்றித் ௩ 0
தண்டாநோய் மாதர் தலைத்தருதி என்பதுயாங்கு அறிகோம் ஐய
வண்டல் திரைஅழிப்பக் கையால் மணல்முகந்து மதிமேல் நீண்ட
புண்தோய்வேல் நீர்மல்க பரதர் கடல்துர்க்கும் புகாரே எம்மூர். 30
வேறு (திணை நிலைவரி)
புணர்த்துணையோடு ஆடும் பொறிஅலவன் நோக்கி ௩க
இணர்த்ததையும் பூங்கானல் என்னையும் நோக்கி
உணர்வுஒழியப் போன ஒலிதிரைநீர்ச் சேர்ப்பன்
வணர்சுரி ஐம்பாலோய் வண்ணம் உணரேனால். 31
தம்முடைய தண்ணளியும் தாமும்தம் மான்தேரும் ௩உ
எம்மை நினையாது விட்டாரோ விட்டுஅகல்க
அம்மென் இணர அடும்புகாள் அன்னங்காள்
நம்மை மறந்தாரை நாம்மறக்க மாட்டேமால். 32
புன்கண்கூர் மாலைப் புலம்பும்என் கண்ணேபோல் ௩௩
துன்பம் உழவாய் துயிலப் பெறுதியால்
இன்கள்வாய் நெய்தால்நீ எய்தும் கனவினுள்
வன்கணார் கானல் வரக்கண்டு அறிதியோ? 33
புள்இயல்மான் தேர்ஆழி போன வழிஎல்லாம் ௩௪
தெள்ளுநீர் ஓதம் சிதைத்தாய்மற்று எஞ்செய்கோ?
தெள்ளுநீர் ஓதம் சிதைத்தாய்மற்று எம்மோடுஈங்கு
உள்ளாரோடு உள்ளாய் உணராய்மற்று எஞ்செய்கோ? 34
நேர்ந்தநம் காதலர் நேமிநெடுந் திண்தேர் ௩ரு
ஊர்ந்த வழிசிதைய ஊர்க்கின்ற ஓதமே
பூந்தண் பொழிலே புணர்ந்துஆடும் அன்னமே
ஈர்ந்தண் துறையே இதுதகாது என்னீரே. 35
நேர்ந்தநம் காதலர் நேமிநெடுந் திண்தேர் ௩Ü
ஊர்ந்த வழிசிதைய ஊர்ந்தாய்வாழி கடல்ஓதம்
ஊர்ந்த வழிசிதைய ஊர்ந்தாய்மற்(று) எம்மொடு
தீர்ந்தாய்போல் தீர்ந்திலையால் வாழி கடல்ஓதம். 36
வேறு (மயங்கு திணை நிலைவரி)
நன்நித் திலத்தின் பூண்அணிந்து
நலம்சார் பவளக் கலைஉடுத்துச் ௩எ
செந்நெல் பழனக் கழனிதொறும்
திரைஉ லாவு கடல்சேர்ப்ப.
புன்னைப் பொதும்பர் மகரத்திண்
கொடியோன் எய்த புதுப்புண்கள்
என்னைக் காணா வகைமறத்தால்
அன்னை காணின் என்செய்கோ? 37
வாரித் தரள நகைசெய்து
வண்செம் பவள வாய்மலர்ந்து ௩அ
சேரிப் பரதர் வலைமுன்றில்
திரைஉ லாவு கடல்சேர்ப்ப.
மாரிப் பீரத்து அலர்வண்ணம்
மடவாள் கொள்ளக் கடவுள்வரைந்து
ஆர்இக் கொடுமை செய்தார்என்று
அன்னை அறியின் என்செய்கோ? 38
புலவுற்று இரங்கி அதுநீங்கப்
பொழில்தண் டலையில் புகுந்துஉதிர்ந்த ௩௯
கலவைச் செம்மல் மணம்கமழத்
திரைஉ லாவு கடல்சேர்ப்ப.
பலஉற்று ஒருநோய் திணியாத
படர்நோய் மடவாள் தனிஉழப்ப
அலவுற்று இரங்கி அறியாநோய்
அன்னை அறியின் என்செய்கோ? 39
வேறு
இளைஇருள் பரந்ததுவே எல்செய்வான் மறைந்தனனே ௪0
களைவுஅரும் புலம்புநீர் கண்பொழீஇ உகுத்தனவே
தளைஅவிழ் மலர்க்குழலாய் தணந்தார்நாட்டு உளதாம்கொல்
வளைநெகிழ எரிசிந்தி வந்தஇம் மருள்மாலை? 40
கதிரவன் மறைந்தனனே கார்இருள் பரந்ததுவே ௪க
எதிர்மலர் புரைஉண்கண் எவ்வநீர் உகுத்தனவே
புதுமதி புரைமுகத்தாய் போனார்நாட்டு உளதாம்கொல்
மதிஉமிழ்ந்து கதிர்விழுங்கி வந்தஇம் மருள்மாலை? 41
பறவைபாட்டு அடங்கினவே பகல்செய்வான் மறைந்தனனே ௪உ
நிறைநிலா நோய்கூர நெடுங்கண்நீர் உகுத்தனவே
துறுமலர் அவிழ்குழலாய் துறந்தார்நாட்டு உளதாம்கொல்
மறவையாய் என்உயிர்மேல் வந்தஇம் மருள்மாலை? 42
வேறு (சாயல் வரி)
கைதை வேலிக் கழிவாய் வந்துஎம் ௪௩
பொய்தல் அழித்துப் போனார் ஒருவர்
பொய்தல் அழித்துப் போனார் அவர்நம்
மையல் மனம்விட்டு அகல்வார் அல்லர். 43
கானல் வேலிக் கழிவாய் வந்து ௪௪
நீநல்கு என்றே நின்றார் ஒருவர்
நீநல்கு என்றே நின்றார் அவர்நம்
மான்நேர் நோக்கம் மறப்பார் அல்லர். 44
அன்னம் துணையோடு ஆடக் கண்டு ௪ரு
நென்னல் நோக்கி நின்றார் ஒருவர்
நென்னல் நோக்கி நின்றார் அவர்நம்
பொன்நேர் சுணங்கிற் போவார் அல்லர். 45
வேறு (முகம் இல் வரி)
அடையல் குருகே அடையல்எம் கானல் ௪ Ü
அடையல் குருகே அடையல்எம் கானல்
உடைதிரைநீர்ச் சேர்ப்பற்கு உறுநோய் உரையாய்
அடையல் குருகே அடையல்எம் கானல். 46
வேறு (காடுரை)
ஆங்கனம் பாடிய ஆயிழை பின்னரும் ௪எ
காந்தள் மெல்விரல் கைக்கிளை சேர்குரல்
தீந்தொடைச் செவ்வழிப் பாலை இசைஎழீஇப்
பாங்கினில் பாடிஓர் பண்ணும் பெயர்த்தாள். 47
வேறு (முகம் இல் வரி)
நுளையர் விளரி நொடிதரும்தீம் பாலை ௪அ
இளிகிளையில் கொள்ள இறுத்தாயால் மாலை
இளிகிளையில் கொள்ள இறுத்தாய்மன் நீயேல்
கொளைவல்லாய் என்ஆவி கொள்வாழி மாலை. 48
பிரிந்தார் பரிந்துஉரைத்த பேர்அருளின் நீழல் ௪௯
இருந்துஏங்கி வாழ்வார் உயிர்ப்புறத்தாய் மாலை
உயிர்ப்புறத்தாய் நீஆகில் உள்ஆற்றா வேந்தன்
எயில்புறத்து வேந்தனோடு என்ஆதி மாலை. 49
பையுள்நோய் கூரப் பகல்செய்வான் போய்வீழ ரு0
வையமோ கண்புதைப்ப வந்தாய் மருள்மாலை
மாலைநீ ஆயின் மணந்தார் அவர்ஆயின்
ஞாலமோ நல்கூர்ந் ததுவாழி மாலை. 50
வேறு (கட்டுரை)
தீத்துழைஇ வந்தஇச் செல்வன் மருள்மாலை ருக
தூக்காது துணிந்தஇத் துயரெஞ்ச் கிளவியால்
பூககமழ் கானலிற் பொய்ச்சூள் பொறுக்கென்று
மாக்கடற் றெய்வநின் மலரடி வணங்குதும்
எனக்கேட்டு, ருஉ
கானல்வரி யான்பாடத் தான்ஒன்றின்மேல் மனம்வைத்து
மாயப்பொய் பலகூட்டும் மாயத்தாள் பாடினாள்என
யாழ்இசைமேல் வைத்துத்தன் ஊழ்வினைவந்து உருத்ததுஆகலின்
உவவுஉற்ற திங்கள்முகத்தாளைக் கவவுக்கை ஞெகிழ்ந்தனனாய்ப்
பொழுதுஈங்குக் கழிந்ததுஆகலின் எழுதும்என்று உடன்எழாது
ஏவலாளர் உடஞ்சூழக் கோவலன்தான் போனபின்னர்,
தாதுஅவிழ் மலர்ச்சோலை ஓதைஆயத்து ஒலிஅவித்துக்
கையற்ற நெஞ்சினளாய் வையத்தி னுள்புக்குக்
காதலனுடன் அன்றியே மாதவிதன் மனைபுக்காள்
ஆங்கு,
மாயிரு ஞாலத்து அரசு தலைவணக்கும்
சூழி யானைச் சுடர்வாள் செம்பியன்
மாலை வெண்குடை கவிப்ப
ஆழி மால்வரை அகவையா எனவே. 51
நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் உரை
கட்டுரை
௧. சித்திரப் படத்துள்புக்குச் செழுங்கோட்டின் மலர்புனைந்து மைத்தடங்கண் மணமகளிர் கோலம்போல் வனப்புஎய்திப்
பத்தரும் கோடும் ஆணியும் நரம்பும்என்று இத்திறத்துக் குற்றம்நீங்கிய யாழ்கையில் தொழுதுவாங்கி
பண்ணல் பரிவட்டணை ஆராய்தல் தைவரல் கண்ணிய செலவு விளையாட்டுக் கையூழ் நண்ணிய குறும்போக்கு என்று நாட்டிய எண்வகையால் இசைஎழீஇப் பண்வகையால் பரிவுதீர்ந்து
மரகதமணித் தாள்செறிந்த மணிக்காந்தள் மெல்விரல்கள்
பயிர்வண்டின் கிளைபோலப் பல்நரம்பின் மிசைப்படர வார்தல் வடித்தல் உந்தல் உறழ்தல்
சீருடன் உருட்டல் தெருட்டல் அள்ளல் ஏர்உடைப் பட்டடைஎன இசையோர் வகுத்த
எட்டு வகையின் இசைக்கர ணத்துப் பட்டவகைதன் செவியின்ஓர்த்து
ஏவலன், பின் பாணி யாதுஎனக் கோவலன் கையாழ் நீட்ட, அவனும்
காவிரியை நோக்கினவும் கடல்கானல் வரிப்பாணியும் மாதவிதன் மனம்மகிழ வாசித்தல் தொடங்குமன்.
சித்திரப் படத்துள் புக்கு – சித்திரத் தொழிலமைந்த ஆடையுட் புகுந்து, செழுங்கோட்டில் மலர் புனைந்து-அழகிய கோட்டிலே மலர் சூடி, மைத்தடங்கண் மண மகளிர் கோலம் போல் வனப்பு எய்தி-மை தீற்றிய பெரிய கண்களையுடைய மணமகளின் ஒப்பனைக் கோலம்போல் அழகினைப் பொருந்தி, பத்தரும் கோடும் ஆணியும் நரம்பும் என்று இத்திறத்துக் குற்றம் நீங்கிய-பத்தர் கோடு ஆணி நரம்பு என்ற இவ்வகை உறுப்புக்களின் குற்றம் ஒழிந்த, யாழ்-யாழினை, கையில் தொழுது வாங்கி-கும்பிட்டுக் கையில் வாங்கி,பண்ணல் பரிவட்டணை ஆராய்தல் தைவரல் (கண்ணிய) செலவு விளையாட்டுக் கையூழ் (நண்ணிய) குறும் போக்கு என்று நாட்டிய எண் வகையால் இசை எழீஇ-பண்ணல் முதலாக நிறுத்தப்பட்ட எட்டுவகைக் கலைத் தொழிலானும் இசையை எழுப்பி, பண் வகையாற் பரிவு தீர்ந்து-பண்வகையிற் குற்றம் நீங்கி, மரகத மணித்தாள் செறிந்த மணிக்காந்தள் மெல் விரல்கள்-மரகதமணி மோதிரங்கள் செறிந்த அழகிய காந்தளிதழ் போலும் மெல்லிய விரல்கள், பயிர் வண்டின் கிளைபோலப் பல் நரம்பின் மிசைப்படா-பாடுகின்ற வண்டின் இனம்போலப் பலவாகிய நரம்பின் மீதே செல்ல, வார்தல் வடித்தல் உந்தல் உறழ்தல் (சீருடன்) உருட்டல் தெருட்டல் அள்ளல் (ஏருடைப்) பட்டடை என இசையோர் வகுத்த எட்டு வகையின் இசைக் காணத்து – வார்தல் முதலாக இசைநூலோரால் வகுக்கப் பட்ட எட்டுவகை இசைக் கரணத்தாலும், பட்டவகை தன் செவியின் ஓர்த்து-உண்டாகிய இசையின் கூறுபாட்டைத் தன் செவியாலே சீர் தூக்கி யறிந்து, ஏவலன் பின் பாணியாது எனக் கோவலன் கையாழ் நீட்ட-ஏவினபடி செய்தற்குரியேன் மேல் நுமது பணி யாதென்று கூறிக் கோவலன் கையிலே அவ்வியாழை நீட்ட, அவனும் காவிரியை நோக்கினவும் கடற் கானல் வரிப் பாணியும் மாதவி தன் மனம் மகிழ வாசித்தல் தொடங்கும் மன்-அவன் காவிரியைக் கருதியனவும் கடற் கானலைக் கருதியனவுமாகிய வரிப்பாட்டுக்களை மாதவியின் மனம் மகிழும்படி வாசிக்கத் தொடங்கினான்.
படம்-ஆடை. அதனாலாய உறை. சித்திரப் படத்துட் புக்கமையாலும் மலர் புனைந்தமையாலும் மணமகள் போன்றது. "மணங்கமழ் மாதரை மண்ணி யன்ன"என்றார் பிறரும். கோடு-யாழின் தண்டு. பத்தர் முதலிய நான்கும் யாழின் உறுப்புக்கள். இவையன்றி மாடகம் எனப்படும் முறுக்காணியும். திவவு எனப்படும் வார்க்கட்டும் யாழுறுப்புக்களாம். குற்றமற்ற மரத்தாற் செய்த பத்தர் முதலாயினவும் கொடும்புரி, மயிரி, தும்பு முறுக்கு என்பன இல்லாத நரம்பும் உடைய யாழென்பார். "இத்திறத்துக் குற்ற நீங்கிய யாழ் "என்றார். மரத்தின் குற்றமாவன வெயிலும் காற்றும் நீரும் நிழலும் மிகுதல். திருத்தக்கதேவர் "நோய் நன்கு நீங்கி" என்றருளியதும், அதற்கு நச்சினார்க்கினியர் எழுதிய உரையும் நோக்குக. மற்றும் அவர், பொருநராற்றுப்படை யுரையில் "கொன்றை கருங்காலி குமிழ் முருக்குத் தணக்கே"என்பதனால் கோட்டிற்கு மரம் கொன்றையும் கருங்காலியுமாம்; பத்தர்க்குக் குமிழும் முருக்கும் தணக்குமாம்" என்றெழுதியதும் ஈண்டு அறியற்பாலது. "கொடும்புரி மயிர் தும்பு முருக்கிவை நான்கும் நடுங்கா மரபிற் பகையென மொழிப"என்றதனால் நரம்பின் குற்றம் அறிக. யாழினிடத்தே தெய்வம் உறைதலின் அதனைத் தொழுது வாங்கினாள். "அணங்கு மெய்ந்நின்ற அமைவரு காட்சி"என்பது காண்க. "பண்ணல்- பாடநினைத்த பண்ணுக்கு இணை கிளை பகை நட்பான நரம்புகள் பெயருந்தன்மை மாத்திரை அறிந்து வீக்குதல்; பரிவட்டணை-அவ்வீக்கின நரம்பை அகவிரலாலும் புறவிரலாலும் கரணஞ் செய்து தடவிப் பார்த்தல். ஆராய்தல்-ஆரோகண அவரோகண வகையால் இசையைத் தெரிவது; அநுசுருதி யேற்றுதல், தைவரல்; ஆளத்தியிலே நிரம்பப் பாடுதல், செலவு; பாட நினைத்த வண்ணத்திற் சந்தத்தை விடுதல் விளையாட்டு. வண்ணத்திற் செய்த பாடலெல்லாம் இன்பமாகப் பாடுதல் கையூழ். சூடகச் செலவும் துள்ளற் செலவும் பாடுதல் குறும்போக்கு"என்பது சிந்தாமணி நச்சினார்க்கினியம்.இவற்றிற்கு அரும்பதவுரையாசிரியர் காட்டிய சூத்திரங்கள் பின் வருவன:
௧. "வலக்கைப் பெருவிரல் குரல்கொளச் சிறுவிரல்
விலக்கின் றிளிவழி கேட்டும்
இணைவழி யாராய்ந் திணைகொள முடிப்பது
விளைப்பரு மரபிற் பண்ண லாகும்".
௨. "பரிவட்ட ணையி னிலக்கணந் தானே
மூவகை நடையின் முடிவிற் றாகி
வலக்கை யிருவிரல் வனப்புறத் தழீஇ
இடக்கை விரலி னியைவ தாகத்
தொடையொடு தோன்றியுந் தோன்றா தாகியும்
நடையொடு தோன்றும் நயத்த தாகும்."
௩. "ஆராய்த லென்ப தமைவரக் கிளப்பிற்
குரன்முத லாக விணைவழி கேட்டும்
இணையி லாவழிப் பயனொடு கேட்டும்
தாரமு முழையுந் தம்மிற் கேட்டும்
குரலு மிளியுந் தம்மிற் கேட்டும்
துத்தமும் விளரியுந் துன்னுறக் கேட்டும்
விளரி-கைக்கிளை விதியுளிக் கேட்டும்
தளரா தாகிய தன்மைத் தாகும்."
௪. "தைவர லென்பது சாற்றுங் காலை
மையறு சிறப்பின் மனமகிழ் வெய்தித்
தொடையொடு பட்டும் படாஅ தாகியும்
நடையொடு தோன்றி யாப்புநடை யின்றி
ஓவச் செய்தியின் வட்டணை யொழுகிச்
சீரேற் றியன்று மியலா தாகியும்
நீர வாகு நிறைய தென்ப."
௫. "செலவெனப் படுவதன் செய்கை தானே
பாலை பண்ணே திறமே கூடமென
நால்வகை யிடத்து நயத்த தாகி
இயக்கமு நடையு மெய்திய வகைத்தாய்ப்
பதினோ ராடலும் பாணியு மியல்பும்
விதிநான்கு தொடர்ந்து விளங்கிச் செல்வதுவே."
௬. "விளையாட் டென்பது விரிக்குங் காலைக்
கிளவிய வகையி னெழுவகை யெழாலும்
அளவிய தகைய தாகு மென்ப."
௭. "கையூ ழென்பது கருதுங் காலை
எவ்விடத் தானு மின்பமுஞ் சுவையும்
செவ்விதிற் றோன்றிச் சிலைத்துவர லின்றி
நடைநிலை திரியாது நண்ணித் தோன்றி
நாற்பத் தொன்பது வனப்பும் வண்ணமும்
பாற்படத் தோன்றும் பகுதித் தாகும்."
௮. "துள்ளற் கண்ணுங் குடக்குத் துள்ளும்
தள்ளா தாகிய உடனிலைப் புணர்ச்சி
கொள்வன வெல்லாங் குறும்போக் காகும்."
இனி, வார்தல் முதலியவற்றிற்கும் அவரெழுதிய விளக்கங்கள் பின் வருவன: "வார்தல் சுட்டுவிரற் செய்தொழில்; வடித்தல்-சுட்டுவிரலும் பெருவிரலுங் கூட்டி நரம்பை அகமும் புறமும் ஆராய்தல்; உந்தல்- நரம்புகளை உந்தி வலிவிற்பட்டதும் மெலிவிற்பட்டதும் நிரல்பட்டதும் நிரவிழிபட்டதுமென் றறிதல்; உறழ்தல்- ஒன்றிடையிட்டும் இரண்டிடையிட்டும் ஆராய்தல்; உருட்டல்-இடக்கைச் சுட்டுவிரல்தானே யுருட்டலும் வலக்கைச் சுட்டுவிரல் தானே யுருட்டலும் சுட்டொடு பெருவிரற் கூட்டி யுருட்டலும் இரு பெரு விரலும் இயைந்துடனுருட்டலும் என வரும்."
"தெருட்ட லென்பது செப்புங் காலை
உருட்டி வருவ தொன்றே மற்றவ்
ஒன்றன் பாட்டுமடை யொன்ற நோக்கின்
வல்லோ ராய்ந்த நூலே யாயினும்
வல்லோர் பயிற்றுங் கட்டுரை யாயினும்
பாட்டொழிந் துலகினி லொழிந்த செய்கையும்
வேட்டது கொண்டு விதியுற நாடி"
எனவரும்..............இவை இசைத் தமிழ்ப் பதினாறு படலத்துட் கரணவோத்துட் காண்க."
"வாரியும் வடித்து முந்தியு முறழ்ந்தும்"
என்பது ஈண்டு அறியற்பாற்று. அள்ளல், பட்டடை என்பவற்றின் இயல்பு வந்துழிக் காண்க. கண்ணி, நண்ணிய, சீருடன், ஏருடை என்பன அடைகள். பண்வகையால், உருபு மயக்கம். பயிர்-ஒலி. இசைக்கரணம் – யாழின் பாடற்குரிய செய்கைகள் ஏவலன், தன்மையொருமை. அரும்பதவுரை யாசிரியர், ‘பாணியாதென’என்று பாடங் கொண்டு, ‘இப்பொழுது இதனை வாசியென்று விதிக்கின்றே னல்லேன்; வாசிக்குந் தாளம் யாதென்று யான் அறியலுறுகின்றேன் என்பாள் போலக் கொடுத்தாளென்க’ என்று பொருள் கூறினர். கானலை நோக்கினவும் என விரித்து, ஆற்று வரியும் கானல் வரியும் என்க. மன்- மிகுதி. அசையுமாம். (படாத்துள், கோட்டுமலர், இத்திறத்த, பாணியாதென, பாணி யாமென என்பன பாடவேற்றுமை.)’
வேறு (ஆற்று வரி)
௨. திங்கள் மாலை வெண்குடையான்
சென்னி செங்கோல் அதுஒச்சிக்
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி.
கங்கை தன்னைப் புணர்ந்தாலும்
புலவாது ஒழிதல் கயல்கண்ணாய்.
மங்கை மாதர் பெருங்கற்புஎன்று
அறிந்தேன் வாழி காவேரி.
திங்கள் மாலை வெண்குடையான் சென்னி-மாலையணிந்த நிறைமதி போலும் வெண்குடையை உடையவனாகிய சோழன், செங்கோல் அது ஓச்சிக் கங்கை தன்னைப் புணர்ந்தாலும்-செங்கோலைச் செலுத்திக் கங்கையைக் கூடினாலும், புலவாய் வாழி காவேரி-காவேரி நீ வெறுத்தல் செய்யாய் ஆதலின் வாழ்வாயாக; கங்கை தன்னைப் புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் அங்ஙனம் வெறா தொழிந்தது, கயல் கண்ணாய்-கயலாய கண்ணையுடையாய், மங்கை மாதர் பெருங் கற்பு என்று அறிந்தேன் வாழி காவேரி – காதலுடைய மங்கையின் பெரிய கற்பாகும் என்று யான் அறிந்தேன்; வாழ்வாயாக;
அது : பகுதிப்பொருள் விகுதி. தன் : அசை. வாழி- அசையுமாம் கங்கையைப் புணர்தலாவது வடக்கே கங்கையும் அகப்பட ஆணை செல்ல நிற்றல். புலத்தல் – ஊடுதல் ; வெறுத்தல். கயற்கண்-மகளிர்க்குக் கயல்போலுங் கண்; ஈண்டுக் கயலாகிய கண். மாதர்-காதல்; மங்கையாகிய மாதர் என்றுமாம். ஈண்டு முன்னிலைக்கண் வந்தது; நினது கற்பு என்றபடி. பெருங் கற்பு என்றமையால் , காவேரி பிறர் நெஞ்சு புகாதவளென்பதும் பெற்றாம் : புகுதல்-ஆளக் கருதுதல். காவேரி-கவேரன் புதல்வி என்ப;
"தவாநீர்க் காவிரிப் பாவைதன் றாதை
கவேரனாங் கிருந்த கவேர வனமும்"
என்பது காண்க.
௩. மன்னும் மாலை வெண்குடையான்
வளையாச் செங்கோல் அதுஓச்சிக்
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாய் வாழி காவேரி.
கன்னி தன்னைப் புணர்ந்தாலும்
புலவாது ஒழிதல் கயல்கண்ணாய்.
மன்னும் மாதர் பெருங்கற்புஎன்று
அறிந்தேன் வாழி காவேரி.
மன்னும் மாலை வெண்குடையான்-பெருமை பொருந்திய மாலை யணிந்த வெண்குடையை உடையவனாகிய சோழன், வளையாச் செங்கோல் அது ஓச்சிக் கன்னி தன்னைப் புணர்ந்தாலும்-என்றும் வளைதல் இல்லாத செங்கோலைச் செலுத்திக் குமரியைக் கூடினாலும், புலவாய் வாழி காவேரி-காவேரி நீ வெறுத்தல் செய்யாய் ஆதலின் வாழ்வாயாக. கன்னி தன்னைப் புணர்ந்தாலும் புலவாது ஒழிதல்-அங்ஙனம் வெறா தொழிந்தது, கயற்கண்ணாய்-கயலாகிய கண்ணையுடையாய், மன்னும் மாதர் பெருங் கற்பு என்று அறிந்தேன் வாழி காவேரி-மாதரது நிலை பெற்ற பெரிய கற்பாகும் என்று யான் அறிந்தேன்; வாழ்வாயாக;
அதிகாரத்தானும், காவேரி கூறினமையானும் வெண்குடையான் சோழனாயிற்று. வளையா என அடையடுத்தமையால் செங்கோல் கோவென்னு மாத்திரையாயிற்று எனலுமாம்; "கோடாத செங்கோல்"என்பதன் உரை நோக்குக. கன்னி-குமரியாறு. கன்னியைப் புணர்தலாவது குமரியும் உட்படத் தெற்கே தன் ஆணை செல்ல நிற்றல். மேலிற்ச் செய்யுளுரையில் உரைத்தன பிறவும் ஈண்டுத் தந்துரைக்க.
௪. உழவர் ஓதை மதகுஓதை
உடைநீர் ஓதை தண்பதங்கொள்
விழவர் ஓதை சிறந்துஆர்ப்ப
நடந்தாய் வாழி காவேரி.
விழவர் ஓதை சிறந்துஆர்ப்ப
நடந்த எல்லாம் வாய்காவா
மழவர் ஓதை வளவன்தன்
வளனே வாழி காவேரி.
உழவர் ஓதை – புதுப்புனல் வந்தமை கண்டு உழவர் மகிழ்ச்சியால் ஆர்க்கும் ஓசையும், மதகு ஓதை-நீர் மதகிலே தேங்கிச் செல்லுதலால் உண்டாகும் ஓசையும், உடைநீர் ஓதை-கரைகளையும் வரம்புகளையும் உடைத்துப் பாய்கின்ற நீரின் ஓசையும், தண்பதம் கொள் விழவர் ஓதை-புதுப்புனல் விழாக் கொண்டாடும் மைந்தர் மகளிரின் பலவகை யோசையும், சிறந்து ஆர்ப்ப நடந்தாய் வாழி காவேரி-மிக்கொலிக்கச் சென்றாய். ஆதலால், காவேரி நீ வாழ்வாயாக; விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப நடந்த எல்லாம்-நீ அங்ஙனம் நடந்த செயலெல்லாம், வாய்காவா மழவர் ஓதை வளவன்றன் வளனே வாழி காவேரி-அரணினிடத்தைக் காவாமைக்கு ஏதுவாகிய வீரரின் ஓசையையுடைய சோழனது வளனேயாகும்; வாழ்வாயாக.
வாய் – இடம். மழவரோதையாற் பகைவர் அஞ்சுந் திறத்ததாகலின் இடம் காக்க வேண்டாதாயிற்று.
"வாய்காவாது பரந்துபட்ட
வியல்பாசறைக் காப்பாள"
என்பதன் உரை நோக்குக. அன்றி, நாவினைக் காவாது வஞ்சினம் கூறும் வீரர் என்றுமாம்; என்னை?
"புட்பகைக் கேவா னாகலிற் சாவேம் யாமென
நீங்கா மறவர் வீங்குதோள் புடைப்ப"
என்றாராகலின், நடந்தவெல்லாம் வளனே என்றியையும். இவை மூன்றும் ஆற்றுவரி; கந்தருவ மார்க்கத்தால் இடைமடக்கி வந்தன. பின் இடைமடக்கி வருவனவும் இன்ன. வரிப் பாட்டுக்கள் தெய்வஞ் சுட்டுவனவும், மக்களைச் சுட்டுவனவும் என இருவகைய; அவற்றுள், இவை மக்களைச் சுட்டுவன. மற்றும் முகமுடை வரி, முகமில் வரி, படைப்பு வரி யென்னும் மூன்றனுள்ளே ‘திங்கண் மாலை’ முதலிய மூன்றும் முகமுடை வரி யென்றுங் கூறப்படும்.
வேறு (சார்த்து வரி - முகச்சார்த்து)
௫. கரியமலர் நெடுங்கண் காரிகைமுன்
கடல்தெய்வம் காட்டிக் காட்டி
அரியசூள் பொய்த்தார் அறன்இலர்என்று
ஏழையம்யாங்கு அறிகோம் ஐய
விரிகதிர் வெண்மதியும் மீன்கணமும்
ஆம்என்றே விளங்கும் வெள்ளைப்
புரிவளையும் முத்தும்கண்டு ஆம்பல்
பொதிஅவிழ்க்கும் புகாரே எம்மூர்
கரிய மலர் நெடுங்கட் காரிகை முன்-கருங்குவளை மலர் போலும் நீண்ட கண்களையுடைய தலைவியின்முன், கடற்றெய்வம் காட்டிக் காட்டி-கடலின் தெய்வமாகிய வருணனைப் பலகாலும் சுட்டிக் கூறிய, அரிய சூள் பொய்த்தார் அறன் இலர் என்று – கைவிடுதற்கரிய சூளை அறனிலராய்த் தப்பினாரென்று, ஏழையம் யாங்கு அறிகோம் ஐய-ஐயனே ஏழையேமாகிய யாம் என் வண்ணம் அறிவோம். விரிகதிர் வெண்மதியும் மீன் கணமும் ஆம் என்றே – விரிந்த கண்களையுடைய வெள்ளிய திங்களும் விண்மீன் கூட்டமும் ஆமென்று மயங்கி, விளங்கும் வெள்ளைப் புரிவளையும் முத்தும் கண்டு-விளங்குகின்ற வெண்ணிறமுடைய கரிந்த சங்கினையும் முத்தினையும் கண்டு, ஆம்பல் பொதி அவிழ்க்கும் புகாரே எம் ஊர்-ஆம்பற்போது மலராநிற்கும் காவிரிப்பூம் பட்டினமே எம்முடைய ஊராகும்;
அடுக்கு – பன்மை குறித்தது. கூறியென ஒருசொல் வருவிக்க. நின்னை வரைந்துகொண்டு இல்லறம் புரிவேம் எனக் கூறித் தெய்வஞ் சான்றாகச் சூளுரைத்தவர் என்க. சூள்-சபதம். அறனில்லாத தலைவர் பொய்த்தார் எனக் கூறினமையின் முன்னிலைக்கண் படர்க்கை வந்தது. ஏழையமாதலின் எங்ஙனம் அறிவோமென்றாள். ஏழையம்-மாதரேம்; அறிவில்லேம். தோழி தலைவியையும் உளப்படுத்தி ஏழையம் என்றால் அறிவிலேமாகிய யாம் பெரியீராகிய நும்மை அங்ஙனம் கூறுதல் தகாதென்பாள்போலத் தலைவனிழுக்கினை யெடுத்துக் காட்டிய திறம் நயப்பாடுடையது. ஐய: அண்மை விளி. இங்ஙனம் பன்மையும் ஒருமையும் விரவி வருதல் புலனெறி வழக்கிற் பலவிடத்தும் காணப்படும். பொதி யவிழ்த்தல்- மலர்தல். ஆம்பல் வளையும் முத்தும் கண்டு மதியும் மீன்கணமு மாமென்று மலரும் என்றியைக்க; நிரனிறை. புரி-இடமாகவும் வலமாகவும் வளைந்திருப்பது. நெய்தலின் வளமிகுதி கூறியபடி.
௬. காதலர் ஆகிக் கழிக்கானல்
கையுறைகொண்டு எம்பின் வந்தார்
ஏதிலர் தாமாகி யாம்இரப்ப
நிற்பதையாங்கு அறிகோம் ஐய
மாதரார் கண்ணும் மதிநிழல்நீர்
இணைகொண்டு மலர்ந்த நீலப்
போதும் அறியாது வண்டுஊச
லாடும் புகாரே எம்மூர்.
காதலர் ஆகிக் கழிக்கானற் கையுறை கொண்டு எம்பின் வந்தார் – காதலை யுடையராகிக் கடற்கரைச் சோலையிடத்தே அன்று கையுறை கொண்டு எமது பின்னே வந்தவர், ஏதிலார் தாம் ஆகியாம் இரப்ப நிற்பதை – இன்று தாம் நொதுமலராகி யாம் இரக்கும் வண்ணம் நிற்கின்றார்; அங்ஙனம் நிற்றலை, யாங்கு அறிகோம் ஐய-ஐயனே ஏழையேமாகிய யாம் எங்ஙனம் அறிவோம்; மாதரார் கண்ணும் – மகளிருடைய முகத்திலுள்ள கண்ணையும், மதிநிழல் நீர் இணைகொண்டு மலர்ந்த நீலப்போதும் – நீரிலே தோன்றும் மதியினது சாயலில் இணையாக மலர்ந்த நீல மலரையும், அறியாது வண்டு ஊசலாடும் புகாரே எம் ஊர் – அறிய மாட்டாது வண்டுகள் ஊசலாடும் காவிரிப்பூம்பட்டினமே எம்முடைய ஊராகும்;
கையுறை – காணிக்கை. பின்பு யாம் இரப்ப என்பதனால் முன்பு தாம் இரந்தவர் என்று கொள்க. நிற்கின்றார்; அங்ஙனம் நிற்றலை என அறுத்துரைக்க. அன்று காதலராகிக் கையுறை கொண்டு எமது பின்னே தொடர்ந்து வந்து இரந்தவர் இன்று யாம் இரக்கும் வண்ணம் ஏதிலராகி நிற்கின்றார். இஃதென்னே! என்றபடி. ஈண்டும் முன்னிலைப் படர்க்கை. ஏழையம் என்பதனை ஈண்டும் கூட்டுக. மதிநிழல் என்றதற் கேற்ப முகம் என்பது வருவிக்கப்பட்டது. தேன் உண்ண வந்த வண்டு இது நீலமலர், இது கண் என அறியமாட்டாதுமயங்கித் திரியும் என்றார். ஊசலாடுதல்-அங்குமிங்கும் அலைதல்; இலக்கணைப் பொருள்.
௭. மோது முதுதிரையால் மொத்துண்டு
போந்துஅசைந்த முரல்வாய்ச் சங்கம்
மாதர் வரிமணல்மேல் வண்டல்
உழுதுஅழிப்ப மாழ்கி ஐய
கோதை பரிந்து அசைய மெல்விரலால்
கொண்டுஓச்சும் குவளை மாலைப்
போது சிறங்கணிப்பப் போவார்கண்
போகாப் புகாரே எம்மூர்.
மோது முது திரையால் மொத்துண்டு போந்து அசைந்த முரல் வாய்ச் சங்கம்-மோதுகின்ற பெரிய அலையாலே தாக்குண்டு அசைந்து போந்த ஒலிக்கின்ற வாயையுடைய சங்கம், மாதர் வரி மணல்மேல் வண்டல் உழுது அழிப்ப-சிறுமியர் மணலின்மீது இயற்றிய சிற்றில் முதலியவற்றை உழுது அழித்தலால், மாழ்கி ஐய-ஐயனே அவர்கள் மயங்கி; கோதை பரிந்து-தாம் அணிந்திருந்த மாலையை அறுத்து, அசைய மெல்விரலாற் கொண்டு ஓச்சும் குவளை-அசைந்து செல்லும்படி மெல்லிய விரல்களால் வீசி யெறிந்ததிற் சிதறிய நீலமலர்கள், மாலைப்போது சிறங்கணிப்ப-மாலைப்பொழுதிலே கடைக் கணித்தாற்போற் கிடப்ப, போவார்கண் போகாப்புகாரே எம் ஊர்-ஆண்டுச் செல்வோர் கண்கள் அவற்றைக் கண்களென ஐயுற்று அப்பாற் செல்லாத காவிரிப் பூம்பட்டினமே எம்முடைய ஊராகும்;
அசைந்து போந்தவென மாறுக. முரல் வாய்-ஒலிக்கும் வாய். மாதர் ஈண்டுச் சிறுமியர் வரி- கீற்று. வண்டல் -மகளிர் விளையாட்டு; ஈண்டு ஆகு பெயரால் சிற்றில் முதலியவற்றைக் குறித்தது. உழுதல்-கீழ்ந்து செல்லுதல். சிந்திய குவளை மலர்கள் மாலைப்பொழுதில் சிறிதே குவிந்து மகளிர் கடைக்கணித்தாற்போன் றிருந்தமையின், சிறங்கணிப்ப என்றார். சிறங்கணித்தல்-கடைக்கணித்தல். இதை இங்கு வாழ்வாரைக் கடைக்கணித்த கண்களென்று தம் பேதைமையாற் பார்த்துநிற்கும் எனக்கொண்டு, ஆகலின் யாங்களும் பேதையம் எனக்குறிப்பெச்சமாக்கி உரைத்தலுமாம். இனி, கோதையைக் கூந்தலெனக் கொண்டு-கூந்தல் அவிழ்ந்தசைய விரலால் ஓச்சும் குவளை மாலையினின்றும் சிதறிய பூக்கள் என்றுரைத்தலுமாம்.
"கரியமலர்"முதலிய மூன்றும் தோழி தலைமகன் முன்னின்று வரைவுகடாயவை. கையுறைமறை எனினும் அமையுமென்றார் அரும்பதவுரையாசிரியர். இதற்கு நீர் கொண்டு வந்த பூக்கள் எம்மூரின் கண்ணும் உளவாகலின் அவை வேண்டா என மறுத்தவாறாம் என்பது கருத்தாகும். ஆயின், "கையுறை கொண்டெம்பின் வந்தார்"என்பது இன்று அவ்வாறு வந்திலரெனப் பொருள் தருதலின் அதனோடு மாறு படுவதாகும். இவை பாட்டுடைத் தலைவன் பதியொடு சார்த்திப் பாடிய வரிப்பாடாகலின் சார்த்துவரியாகும். பாட்டுடைத் தலைவன் - சோழன்; பதி-புகார். "பாட்டுடைத் தலைவர் பதியொடும் பெயரொடும் சார்த்திப் பாடலிற் சார்த்தெனப் படுமே"என்றார். அது முகச்சார்த்து, முரிச்சார்த்து, கொச்சகச் சார்த்து என மூவகைப்படும்; அவற்றுள் இம் மூன்றும் முகச்சார்த்து (இம்மூன்றும் ‘’மோதுமுதுதிரை" "காதலராகி" ‘கரியமலர்’என்ற முறையிலும் காணப்படுகின்றன.)
வேறு (முகம் இல் வரி)
௮. துறைமேய் வலம்புரி தோய்ந்து மணல்உழுத
தோற்றம் மாய்வான்
பொறைமலி பூம்புன்னைப் பூஉதிர்ந்து நுண்தாது
போர்க்கும் கானல்
நிறைமதி வாள்முகத்து நேர்க்கயல்கண் செய்த
உறைமலி உய்யாநோய் ஊர்சுணங்கு மென்முலையே
தீர்க்கும் போலும்.
துறைமேய் வலம்புரி-கடலின் துறையிலே மேய்கின்ற வலம்புரிச் சங்குகள், தோய்ந்து மணல் உழுத தோற்றம் மாய்வான்-மணலிலே தோய்ந்து உழுத வடுக்கள் மறையும்படி, பொறை மலி பூம்புன்னைப் பூ உதிர்ந்து-அழகிய புன்னை மரத்தின் நிறைந்த பாரமாகிய பூக்கள் உதிர்ந்து, நுண் தாது போர்க்குங் கானல்-அவற்றின் நுண்ணிய பூந்துகள் மறைக்கும் கானலிடத்தே, நிறைமதி வாண்முகத்து நேர் கயற்கண் செய்த – இவளது நிறைமதி போலும் ஒள்ளிய முகத்திலுள்ள கயலையொத்த கண்கள் செய்த, உறை மலி உய்யா நோய்-மருந்தாற் போக்க முடியாத நிறைந்த நோயினை, ஊர் சுணங்கு மென் முலையே தீர்க்கும் போலும்-சுணங்கு பரந்த மெல்லிய முலைகளே போக்கும் போலும்;
மாய்வான் – மறைய ; வினையெச்சம். மாய்வான் தாது போர்ககுங் கானல் என்றியையும். கயல் நேர் கண், சுணங்கு ஊர் முலை, உறை உய்யாமலி நோய் என மாறுக. உறை-மருந்து. உய்யா – போக்க முடியாத மலி உறை என்னலுமாம். போலும் - ஒப்பில் போலி.
இது, குறியிடத்துச் சென்ற பாங்கன் தலைமகளது காதன் மிகுதி குறிப்பினானறிந்து கூறியது.
(கானல் வரி)
௯. நிணம்கொள் புலால்உணங்கல் நின்றுபுள் ஓப்புதல்
தலைக்கீடு ஆகக்
கணம்கொள் வண்டுஆர்த்து உலாம்கன்னி நறுஞாழல்
கையில் ஏந்தி
மணம்கமழ் பூங்கானல் மன்னிமற்று ஆண்டுஓர்
அணங்குஉறையும் என்பது அறியேன் அறிவேனேல்
அடையேன் மன்னோ.
நிணம் கொல் புலால் உணங்கல் நின்று புள் ஒப்புதல் தலைக்கீடு ஆக - நிணம் பொருந்திய புலால் வற்றல் புலர்வதன் பாங்கர் நின்று புள்ளினை ஓட்டுதல் காரணமாக, கணம் கொள்வண்டு ஆர்த்து உலாம் கன்னி நறு ஞாழல் கையில் ஏந்தி-கூட்டமாகிய வண்டுகள் முரன்று திரியும் கன்னியாகிய நறிய ஞாழலின் பூங்கொத்தைக் கையில் ஏந்தி, மணம் கமழ் பூங்கானல் மன்னி-மணம் நாறுகின்ற பூக்களையுடைய கானலிடத்துப் பொருந்தி, ஆண்டு ஓர் அணங்கு உறையும் என்பது அறியேன்-ஓர் தெய்வம் உறையுமென்பதை அறியேன், அறிவேனேல் அடையேன் மன்னோ – அறிவேனாயின் ஆண்டுச் செல்லேன்;
புள் – உணங்கலைக் கவர வரும் பறவை. தலைக்கீடு-போலிக் காரணம் ; இதனை வியாசம் என்ப. கன்னி-இளமை ; உயர்திணைக்குரிய கன்னி யென்னுஞ்சொல் அஃறிணை யடுத்துவருவதனை ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவியும். ஒன்றனைக் கூறும் பன்மைக் கிளவியும், வழக்கி னாகிய வுயர்சொற் கிளவி இலக்கண மருங்கிற் சொல்லா றல்ல" என்னுஞ் சூத்திரத்து ஒன்றென முடித்தல் என்பதனால் அமைப்பர். ஞாழல் – புலி நகக் கொன்றை. அணங்கு - வருத்துந் தெய்வம். கானலில் உறையுமென்பதறியேன் என்றும் அறிவேனேல் ஆண்டு அடையேன் என்றும் கொண்டு கூட்டுக. மற்று, மன், ஓ - அசைகள். மன் - கழிவுமாம்.
இது கழற்றெதிர்மறை ; இயலிடங் கூறலுமாம்.
௧0. வலைவாழ்நர் சேரி வலைஉணங்கும் முன்றில்
மலர்கை ஏந்தி
விலைமீன் உணங்கல் பொருட்டாக வேண்டுஉருவம்
கொண்டு வேறுஓர்
கொலைவேல் நெடுங்கண் கொடுங்கூற்றம் வாழ்வது
அலைநீர்த்தண் கானல் அறியேன் அறிவேனேல்
அடையேன் மன்னோ.
வலை வாழ்நர் சேரி வலை உணங்கும் முன்றில் – வலை வளத்தால் வாழ்பவருடைய சேரியில் வலை உலரும் முற்றத்திலே, மலர் கை ஏந்தி-பூங்கொம்பைக் கையில் ஏந்தி, விலை மீன் உணங்கற் பொருட்டாக – விற்றற்குரிய மீன்வற்றல் புலர்வதனைக் காத்தற் பொருட்டாக, வேண்டுருவம் கொண்டு-தான் வேண்டிய வடிவங்கொண்டு, வேறு ஓர் கொலை வேல் நெடுங்கட் கொடுங்கூற்றம் வாழ்வது-கொலைத் தொழில் பொருந்திய வேல் போலும் நீண்ட கண்களையுடைய வேறொரு கொடிய கூற்றம் வாழ்வதனை, அலைநீர்த் தண் கானல் அறியேன் – அலைகின்ற நீரையுடைய குளிர்ந்த கானலிடத்தே அறியேன், அறிவேனேல் அடையேன் மன்னோ – அறிவேனாயின் ஆண்டுச் செல்லேன்;
உணங்கலைக் காத்தற் பொருட்டாக வென்க. உலகத் துயிர்களைக் கொள்ளும் கூற்றமன்றி என்னுயிரைக் கவர்தற்கு நிற்கும் வேறோர் கூற்றமென்றானென்க. வேறோர் கூற்றம் நெடுங்கண்ணையுடைய வேண்டுருவங்கொண்டு வாழ்வது என்றியைத்தலுமாம்.கூற்றம் வேண்டுருவங்கொண்டு கானலிடத்து வாழ்வதனை அறியேன். அறிவேனேல் ஆண்டு அடையேன் என்க. இதன் துறையும் மேற்கூறியதே. இம்மூன்றும் கானல்வரி.
வேறு (நிலைவரி)
௧௧. கயல்எழுதி வில்எழுதிக் கார்எழுதிக் காமன்
செயல்எழுதித் தீர்ந்தமுகம் திங்களோ காணீர்.
திங்களோ காணீர் திமில்வாழ்நர் சீறூர்க்கே
அம்கண்ஏர் வானத்து அரவுஅஞ்சி வாழ்வதுவே
கயல் எழுதி வில் எழுதிக் கார் எழுதிக் காமன் செயல் எழுதித் தீர்ந்த முகம் திங்களோ காணீர் – கண்ணெனக் கயலையும் புருவமென வில்லையும் கூந்தலெனக் கரிய மேகத்தையும் எழுதி அவற்றுடன் பிறரை வருத்துந் தொழிலையும் எழுதிப் பணிக் குறையற்ற முகம் திங்களோ காணீர், திங்களோ காணீர் திமில் வாழ்நர் சீறூர்க்கே அங்கண் ஏர் வானத்து அரவு அஞ்சி வாழ்வதுவே – அழகிய இடத்தையுடைய வானத்திருப்பின் அரவு கவருமென்று அஞ்சித் திமிலால் வாழ்பவருடைய சீறூரின்கண் வந்து உறையும் அழகிய திங்களோ காணீர்;
காமன் செயல்-பிறரை வருத்துந் தொழில். தீர்ந்த-குறையற்ற; முற்றுப் பெற்ற. திங்களோ ,ஓ - வியப்பு. திமில் –மீன் படகு. சீறூர்க்கு , வேற்றுமை மயக்கம். அரவு-இராகு கேது. திங்களோ என வியந்தவன் அது நிலத்தின்கண் வருவதற்குக் காரணங் கற்பித்து வானத்தரவஞ்சிச் சீறூரில் வாழ்வதாகிய திங்களோ என்றானென்க.
௧௨. எறிவளைகள் ஆர்ப்ப இருமருங்கும் ஓடும்
கறைகெழுவேல் கண்ணோ கடுங்கூற்றம் காணீர்.
கடுங்கூற்றம் காணீர் கடல்வாழ்நர் சீறூர்க்கே
மடம்கெழுமென் சாயல் மகளா யதுவே.
எறி வளைகள் ஆர்ப்ப இருமருங்கும் ஓடும் – கரையிலே அலைகள் எறியும் வளைகள் முழங்க அதற்கஞ்சி இரண்டு பக்கத்தும் ஓடும், கறைகெழுவேற் கண்ணோ கடுங்கூற்றம் காணீர்-குருதிக்கறை பொருந்திய வேல்போன்ற கண்ணையுடையாள் கடிய கூற்றமோ பாரீர், கடுங் கூற்றம் காணீர் கடல் வாழ்நர் சீறூர்க்கே மடம் கெழு மென் சாயல் மகளாயது – கடல் வளத்தால் வாழ்பவருடைய சிறிய ஊரிலே மடப்பம் பொருந்திய மிக்க மென்மையையுடைய மகளாகிய தான் கடிய கூற்றமோ பாரீர்;
வேற் கண் – வேற்கண்ணையுடையாள்; ஆகு பெயரென்பர் அரும்பதவுரையாசிரியர். கூற்றமோ என ஓகாரத்தைப் பிரித்துக் கூட்டுக. சாயல்-மென்மை.
௧௩. புலவுமீன் வெள்உணங்கல் புள்ஓப்பிக் கண்டார்க்கு
அலவநோய் செய்யும் அணங்குஇதுவோ காணீர்.
அணங்குஇதுவோ காணீர் அடும்புஅமர்த்தண் கானல்
பிணங்குநேர் ஐம்பால்ஓர் பெண்கொண் டதுவே.
புலவு மீன் வெள் உணங்கல் புள் ஓப்பி – புலால் நாறும் மீனின் வெளிய வற்றலைக் கவரும் பறவையை ஓட்டி, கண்டார்க்கு அலவ நோய் செய்யும் அணங்கு இதுவோ காணீர்-நோக்கினார்க்கு அலந்தலைப்பட வருத்தத்தைச் செய்யும் அணங்கோ இது காணீர், அணங்கு இதுவோ காணீர் அடும்பு அமர் தண்கானல் பிணங்கு நேர் ஐம்பால் ஓர்பெண் கொண்டதுவே-அடும்பின் மலர்கள் பொருந்திய குளிர்ந்த கானலிலே செறிந்த மெல்லிய கூந்தலையுடைய ஓர் பெண் வடிவு கொண்டதாகிய அணங்கோ இது காணீர்;
அலவ - அலந்தைலைப்பட; மனந்தடுமாற கண்டார்க்கு நோய் செய்யும் அணங்கோ இதுவென்க. அடும்பு-நெய்தற் கருப்பொருளாய பூ: இஃது அடம்பு எனவும் வழங்கும். பிணங்குதல்-செறிதல். நேர்-மென்மை. பெண் கொண்டது-பெண் வடிவு கொண்டது.
இவை மூன்றும் தமியளாக இடத்தெதிர்ப்பட்ட தலைவியை நோக்கித் தலைமகன் கூறியவை.
இவை நிலைவரி; அதன் இலக்கணத்தை "முகமு முரியுந் தன்னொடு முடியும். நிலையை யுடையது நிலையெனப்படுமே"என்னுஞ் சூத்திரத்தானறிக,
வேறு (முரிவரி)
௧௪. பொழில்தரு நறுமலரே புதுமணம் விரிமணலே
பழுதுஅறு திருமொழியே பணைஇள வனமுலையே
முழுமதி புரைமுகமே முரிபுரு வில்இணையே
எழுதுஅரு மின்இடையே எனைஇடர் செய்தவையே
பொழில் தரு நறுமலரே – பொழிலால் தரப்படும் நறியமலரும், புதுமணம் விரி மணலே-அம் மலர்களின் புதிய மணம் பரந்த மணலும், பழுதறு திரு மொழியே-அதில் நின்றவளுடைய குற்றமற்ற இனியமொழியும் : பணை இள வன முலையே-பருத்த இளமையாகிய அழகிய முலையும், முழுமதி புரை முகமே-நிறைமதி போலும் முகமும், முரி புரு வில் இணையே-வளைந்த புருவமாகிய இரண்டு வில்லும், எழுதரும் மின் இடையே-எழுதற்குரிய மின்போன்ற இடையும், எனை இடர்செய்தவையே-என்னைத் துன்புறுத்தியவையாகும்.
முரி-வளைவு. புரு-புருவம். மலர், மணல் என்பன தலைவியைக் கண்ட இடத்தையும், மொழி முதலியன தலைவியின் இயலையும் அறிவிப்பன. ஏகாரங்கள் எண்ணுப்பொருளன. பின்வருவனவும் இன்ன.
௧௫. திரைவிரி தருதுறையே திருமணல் விரிஇடமே
விரைவிரி நறுமலரே மிடைதரு பொழில்இடமே
மருவிரி புரிகுழலே மதிபுரை திருமுகமே
இருகயல் இணைவிழியே எனைஇடர் செய்தவையே
திரை விரிதரு துறையே – அலைகள் பரந்த நீர்த்துறையும், திரு மணல் விரி இடமே – அழகிய மணல் பரந்த இடமும், விரை விரி நறுமலரே-மணம் விரிந்த நறிய மலரும், மிடைதரு பொழில் இடமே-தருக்கள் நெருங்கிய சோலையினிடமும், மரு விரி புரிகுழலே-மணம் பரந்த சுருண்ட கூந்தலும், மதி புரை திருமுகமே-மதியை யொக்கும் அழகிய முகமும், இருகயல் இணை விழியே-இரண்டு கயல்போலும் இருவிழியும், எனை இடர் செய்தவையே-என்னைத் துன்புறுத்தியவையாகும்;
விரிதரு, மிடைதரு என்பவற்றில் தரு துணைவினை.
௧௬. வளைவளர் தருதுறையே மணம்விரி தருபொழிலே
தளைஅவிழ் நறுமலரே தனிஅவள் திரிஇடமே
முளைவளர் இளநகையே முழுமதி புரைமுகமே
இளையவள் இணைமுலையே எனைஇடர் செய்தவையே
வளைவளர் தரு துறையே – சங்குகள் வளரும் துறையும், மணம் விரிதரு பொழிலே – மணம் பரந்த சோலையும், தளை அவிழ் நறுமலரே-முறுக்கு விரிந்த நறிய மலரும், தனி அவள் திரி இடமே-அவள் தனியே உலாவிய இடமும், முளை வளர் இளநகையே-முளைபோல் வளரும் இளைய பல்லும், முழுமதி புரைமுகமே-நிறைமதி ஒக்கும் முகமும், இளையவள் இணை முலையே-இளமைப் பருவமுடையவளது இணைந்த முலையும்: எனை இடர் செய்தவையே, என்னைத் துன்புறுத்தியவையாகும்;
தரு என்பதற்கு மேல் உரைத்தமை கொள்க. தனியவள்-ஒப்பற்றவளுமாம். முளை-முளைத்த என்றலுமாம். இணை-ஒன்றோடொன்று நெருங்கிய; இரண்டுமாம்.
இவை மூன்றும் தலைமகன் பாங்கன் கேட்ப உற்றதுரைத்தவை.
இவை முரிவரி; அதன் இலக்கணத்தை "எடுத்த வியலு மிசையுந் தம்மின், முரித்துப் பாடுதல் முரியெனப் படுமே" என்னுஞ் சூத்திரத்தானறிக.
வேறு (திணை நிலைவரி)
௧௭. கடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வர்நின் ஐயர்
உடல்புக்கு உயிர்க்கொன்று வாழ்வைமன் நீயும்
மிடல்புக்கு அடங்காத வெம்முலையோ பாரம்
இடர்புக்கு இடுகும் இடைஇழவல் கண்டாய்.
கடல் புக்கு உயிர்கொன்று வாழ்வர் நின் ஐயர்-நின் மூத்தோர் கடலிற் புகுந்து உயிர்களைக் கொன்று வாழாநிற்பர் ; உடல் புக்கு உயிர் கொன்று வாழ்வை மன் நீயும் -நீயும் உடலிற் புகுந்து உயிரைக் கொன்று வாழ்கின்றனை ; மிடல்புக்கு அடங்காத வெம்முலையோ பாரம் – வலியிலே புகுந்து நின்று அடங்காத வெவ்விய முலைகளோ பாரமாகவுள்ளன; இடர்புக்கு இடுகும் இடை இழவல் கண்டாய் – இடரிலே கிடந்து மெலியும் இடையை இழந்துவிடாதே.
ஐயர் – மூத்தோர்; தந்தை, தமையன்மார். என்னுயிரைக் கொன்றென்க. நின்னையர் உயிர்கொன்று வாழ்வரென்றது. உயிர் கொல்வது நின் குல தருமமாக வுள்ளது என்று காட்டுதற்கு. நீ புரியும் இக்கொடு வினையால் நின் இடை முறியவுங் கூடும். அன்றியும் நின் முலைகளோ பாரமாகவுள்ளன; ஆதலின் உயிர் கொல்லுந் தீமையைக் கைவிட்டு, அப்பாரத்தை என் தோளி லேற்றி, நின் இடையைப் பாதுகாப்பாயாக என்று தலைவன் கூறினானென்க. எனது ஆற்றாமயைத் தீர் என்பது கருத்து. மன் : அசை : மிகவும் என்றுமாம். கண்டாய் , முன்னிலையசை பின்னிரண்டு கவிகட்கும் இங்ஙனமே பொருள் கொள்க. இடர்புரிக்கு மின்னிடை எனவும் பாடம்.
௧௮. கொடுங்கண் வலையால் உயிர்க்கொல்வான் நுந்தை
நெடுங்கண் வலையால் உயிர்க்கொல்வை மன்நீயும்
வடம்கொள் முலையால் மழைமின்னுப் போல
நுடங்கி உகுமென் நுசுப்புஇழவல் காண்டாய்
கொடுங்கண் வலையால் உயிர் கொல்வான் நுந்தை-வளைந்த கண்களையுடைய வலையால் உயிர்களைக் கொல்வான் நின் தந்தை ; நெடுங் கண் வலையால் உயிர் கொல்வை மன் நீயும்-நீயும் நெடிய கண்ணாகிய வலையால் உயிரைக் கொல்லா நிற்பை; வடம் கொள் முலையால் – முத்து வடத்தைத் தாங்கியுள்ள முலைகளால், மழை மின்னுப் போல் நுடங்கி உகும் மெல் நுசுப்பு இழவல் கண்டாய் - மேகத்தின் மின்னினைப்போல் அசைந்து தளரும் மெல்லிய இடையை இழந்துவிடாதே.
கொடுங்கண்-கண்போன்றிருக்கும் வலையின் இடை வெளிகள்நெடுங்கண் வலை , உருவகம்; வடமும் ஒரு பாரமென்றபடி.முலையால் இழவல் என்றியைக்க.
நுடங்குமின் மென்னுசுப்பு எனவும் பாடம்.
௧௯. ஓடும் திமில்கொண்டு உயிர்க்கொள்வர் நின்ஐயர்
கோடும் புருவத்து உயிர்க்கொல்வை மன்நீயும்
பீடும் பிறர்எவ்வம் பாராய் முலைசுமந்து
வாடும் சிறுமென் மருங்குஇழவல் கண்டாய்
ஓடும் திமில் கொண்டு உயிர் கொல்வர் நின் ஐயர்-உன்னுடைய மூத்தோர் கடலில் ஓடும் படகினைக் கொண்டு உயிர்களைக் கொல்வர்; கோடும் புருவத்து உயிர் கொல்வை மன் நீயும்-நீயும் நினது வளைந்த புருவத்தால் உயிரைக் கொல்லா நிற்பை; பீடும் பிறர் எவ்வம் பாராய் – நினது பெருமையினையும் பிறர் படுந் துன்பத்தையும் நீ பார்த்தல் செய்யாய் ; முலை சுமந்து-முலைகளைச் சுமத்தலால், வாடும் சிறு மென்மருங்கு இழவல் கண்டாய் – வாடுகின்ற சிறிய மெல்லிய இடையை இழந்து விடாதே;
எவ்வமும் என்னும் உம்மை தொக்கது. பீடும் எவ்வமும் என்னும் உம்மைகள் எண்ணும்மையும் சிறப்பும்மையுமாகும். ‘பாரா’என்னும் பாடத்திற்குத் தம் பெருமையும் பிறர் எவ்வமும் பாராத முலை என்று பொருள் கொள்க. சுமத்தலால் இழவல் என்க. இழவல்,அல் எதிர் மறை. "மகனெனல்"என்புழிப்போல.
இவை மூன்றும் புணர்ச்சி நீட இடந்தலைப்பாட்டிற் புணர்தலுறுவான் ஆற்றாமை கூறியவை. தொல்காப்பிய வுரையில் "கடல் புக்குயிர் கொன்று" என்பதனைப் பொய் பாராட்டல் என்னுந் துறைக்கு உதாரணங் காட்டினார் நச்சினார்க்கினியர்.
வேறு
௨0. பவள உலக்கை கையால் பற்றித்
தவள முத்தம் குறுவாள் செங்கண்
தவள முத்தம் குறுவாள் செங்கண்
குவளை அல்ல கொடிய கொடிய
பவள உலக்கை கையாற் பற்றி – பவளத்தாலாகிய உலக்கையைக் கையாற் பற்றி, தவள முத்தம் குறுவாள் செங்கண் – வெண்மையாகிய முத்துக்களைக் குற்றுபவளுடைய சிவந்த கண்கள், தவள முத்தம் குறுவாள் செங்கண்-, குவளை அல்ல கொடிய கொடிய – குவளை மலர்களல்ல, அவை கொடியன கொடியன.
குறுதல் – இக் காலத்தே குற்றுதல் என வழங்குகிறது. முத்தை அரிசியாகப் பெய்து பவள உலக்கையாற் குறுவரெனச் செல்வச் சிறப்புக் கூறியவாறு. நிறம்பற்றிக் குவளையென்ன வேண்டா, அவை கொடியனவென்க.
௨௧. புன்னை நீழல் புலவுத் திரைவாய்
அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண்
அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண்
கொன்னே வெய்ய. கூற்றம் கூற்றம்.
புன்னை நீழல்-புன்னை மரத்தின் நீழலில், புலவுத் திரை வாய் அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண் – புலால் நாறும் அலையின் மீதே அன்னப் பறவை நடக்கும்படி நடப்பவளுடைய சிவந்த கண்கள், அன்னம் நடப்ப நடப்பாள் செங்கண்-,கொன்னே வெய்ய கூற்றம் கூற்றம்-மிகவும் கொடியன; ஆதலால் அவை கூற்றமேயாகும்.
அன்னம் இந் நடையைப் பார்த்து நடக்கும்படி நடப்பாளென்க; அன்றி, நடைக்கு அஞ்சி யோட என்றுமாம். நிழலில் நடப்பாள் என வியையும். கொன்-மிகுதி.
௨௨. கள்வாய் நீலம் கையின் ஏந்திப்
புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண்
புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண்
வெள்வேல் அல்ல. வெய்ய வெய்ய.
கள் வாய் நீலம் கையின் ஏந்தி-தேனை வாயினிடத்துடைய நீலப் பூவைக் கையிலே ஏந்திக் கொண்டு, புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண் – உணங்கலிடத்துப் பறவையை ஓட்டுபவளுடைய சிவந்த கண்கள், புள்வாய் உணங்கல் கடிவாள் செங்கண்-, வெள் வேல் அல்ல வெய்ய வெய்ய – வெள்ளிய வேல்கள் அல்ல; மிகவும் கொடியன வேயாகும் ;
உணங்கல்வாய்ப் புள் என மாறுக. உணங்கல்-மீன் வற்றல். வெள் வேல்-மாற்றாரை யெறிந்து குருதிக் கறை பற்றாத வேல். வடிவு பற்றி வெள்வேல் என்ன வேண்டா; இவை மிகக் கொடியன என்க. இப்பாட்டுகளில் நெய்தற் கருப்பொருளே வந்திருத்தல் காண்க. இவை கந்தருவ மார்க்கத்தால் இடை மடக்கி வந்தன.
இவை மூன்றும் குறியிடத்துக் கண்ட பாங்கன் சொல்லியவை; புணர்ந்து நீங்குவான் விடுத்தலருமையால் ஆற்றானாய்த் தன் நெஞ்சிற்குச் சொல்லியவையுமாம்.
வேறு
௨௩. சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்
சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்
ஊர்திரை நீர்வேலி உழக்கித் திரிவாள்பின்
சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்.
சேரல் மட அன்னம் சேரல் நடை ஒவ்வாய் – மடப்பத்தையுடைய அன்னமே (விளையாட்டு விருப்பினால் ஓடுவாளைக் கண்டு இவள் நடை உனது நடைபோலும் என்று புலவர் சொல்வாராயினும், இவள் விளையாட்டொழிந்து இயல்பாக நடக்குமிடத்து)இவள் நடையை உனது நடை ஒவ்வாது, ஆதலால் இவள் பின்னே செல்லாதிருக்கக் கடவை; செல்லாதிருக்கக் கடவை; ஊர் திரை நீர் வேலி உழக்கித் திரிவாள்பின்-பரக்கின்ற அலைகலையுடைய கடலாற் சூழப்பட்ட உலகத்திலுள்ளாரை வென்று திரிபவள் பின்னே, சேரல் ...........ஒவ்வாய்-நடை யொவ்வாயாதலால் அன்னமே செல்லாதிருக்கக் கடவை ;
நீர்வேலி – செய்தனிலமுமாம். ஊர்திரை நீரோத முழக்கி என்பது பாடமாயின், கழியின் நீரைக் கலக்கி யென்க. இதுவும் கந்தருவ மார்க்கத்தால் அடிமடக்கி வந்தது.
இது, காமஞ் சாலா இளமையோள்வயின் ஏமஞ் சாலா இடும்பை யெய்தியோன் சொல்லியது.
"கடல்புக்குயிர் கொன்று"என்பது முதலிய ஏழும் திணை நிலைவரி.
(கட்டுரை)
௨௪. ஆங்கு, கானல்வரிப் பாடல்கேட்ட
மான்நெடுங்கண் மாதவியும்
மன்னும்ஓர் குறிப்புஉண்டுஇவன்
தன்நிலை மயங்கினான்எனக்
கலவியால் மகிழ்ந்தாள்போல்
புலவியால் யாழ்வாங்கித்
தானும்ஓர் குறிப்பினள்போல்
கானல்வரிப் பாடல்பாணி
நிலத்தெய்வம் வியப்புஎய்த
நீள்நிலத்தோர் மனம்மகிழக்
கலத்தொடு புணர்ந்துஅமைந்த
கண்டத்தால் பாடத்தொடங்கும்மன்
ஆங்கு-அவ்விடத்து, கானல் வரிப் பாடல் கேட்ட மான் நெடுங்கண் மாதவியும்-கோவலன் யாழில் வாசித்த கானல் வரிப்பாட்டுக்களைக் கேட்ட மான்போன்ற நெடிய கண்களையுடைய மாதவியும், மன்னும் ஓர் குறிப்பு உண்டு இவன் தன் நிலை மயங்கினான் என – (அப்பாட்டுக்கள் களவுப் புணர்ச்சியில் தலைமகன் கூறிய கூற்றாயிருத்தலின்)இவன் உள்ளத்து நிலைபெற்ற வேறொரு குறிப்புளது. இவன் தன்றன்மை வேறுபட்டான் எனப் புலந்து, கலவியால் மகிழ்ந்தாள் போல் புலவியால் யாழ்வாங்கி-அப்புலவியால் அவன் கையினின்றும் யாழை வாங்குபவள் அதனைப் புலப்படுத்தாமல் கலவியால் மனமகிழ்ந்தவள் போல வாங்கி, தானும் ஓர் குறிப்பினள் போல் – தான் வேறு குறிப்பு இலளாயினும் அவன் வேறு குறிப்பினனாகப் பாடினமையின் தானும் வேறு குறிப்புடையாள் போல அவனுக்குத் தோன்ற, கானல் வரிப் பாடற்பாணி-கானல்வரிப் பாடலாகிய உருக்களை, நிலத்தெய்வம் வியப்பு எய்த நீள்நிலத்தோர் மனம் மகிழ-அந்நிலத்திற்குரிய தெய்வமாகிய வருணன் வியப்புறவும் நெடிய புவியிலுள்ளோர் மனமகிழவும், கலத்தொடு புணர்ந்து அமைந்த கண்டத்தால் பாடத் தொடங்கும்-யாழின் இசையோடு கலந்து ஒன்றுபட்ட கண்டத்தினாலே பாடத் தொடங்கினாள்;
மன்னும் ஓர் குறிப்பு-வேறு மகளிர்பாற் சென்ற வேட்கை. தானும் ஓர் குறிப்பினள் போல்-தானும் வேறு ஆடவன்பால் விருப்பம் வைத்தாள்போல. மயங்கினாளெனப் புலந்து அப்புலவியால் யாழ் வாங்கியென்க. கலம்-யாழ் ; அதன் எழாலுக்காயிற்று பருந்தும் அதன் நிழலும்போல யாழ்ப்பாடலும் மிடற்றுப் பாடலும் ஒன்றுபட் டியங்க என்க. மன் , அசை.
வேறு (ஆற்று வரி)
௨௫. மருங்கு வண்டு சிறந்துஆர்ப்ப
மணிப்பூ ஆடை அதுபோர்த்துக்
கருங்க யல்கண் விழித்துஒல்கி
நடந்தாய் வாழி காவேரி.
கருங்க யல்கண் விழித்துஒல்கி
நடந்த எல்லாம் நின்கணவன்
திருந்து செங்கோல் வளையாமை
அறிந்தேன் வாழி காவேரி.
மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப – இருபக்கத்தும் வண்டுகள் மிக்கொலிக்க, மணிப் பூ ஆடை அது போர்த்து –அழகிய பூ வாடையைப் போர்த்து, கருங்கயற்கண் விழித்து ஒல்கி நடந்தாய் – கரிய கயற்கண் விழித்து அசைந்து நடந்தாயாகலால், வாழி காவேரி – காவேரி நீ வாழ்வாயாக; கருங்கயற்கண் விழித்து ஒல்கி, நடந்தவெல்லாம் – அங்ஙனம் நடந்த செயலெல்லாம், நின் கணவன் திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன்-நின் கணவனது திருந்திய செங்கோல் வளையாமையே; அதனை அறிந்தேன்; வாழ்வாயாக;
மருங்கு – ஆற்றின் இருபக்கம். இருபக்கத்தும் தொங்குகின்ற கை. வண்டு-வண்டு, வளையல். பூ ஆடை-பூவாகிய ஆடை; பூத்தொழிலமைந்த ஆடை. கயற்கண்-கயலாகிய கண்; கயல் போலுங் கண்.காவேரியை ஒரு பெண்ணாகக் கொண்டு, அதற்கேற்பச் சிலேடை வகையாற் கூறினார். கணவன் என்றது சோழனை. வளையாமையே என்னும் தேற்றேகாரம் தொக்கது. யான் அதனை அறிந்தேன் என முடிக்க.
௨௬. பூவர் சோலை மயில்ஆலப்
புரிந்து குயில்கள் இசைபாடக்
காமர் மாலை அருகுஅசைய
நடந்தாய் வாழி காவேரி.
காமர் மாலை அருகுஅசைய
நடந்த எல்லாம் நின்கணவன்
நாம வேலின் திறம்கண்டே
அறிந்தேன் வாழி காவேரி.
பூ அர் சோலை மயில் ஆல – பூக்கள் நிறைந்த சோலையில் மயில்கள் ஆடவும், புரிந்து குயில்கள் இசை பாட-குயில்கள் விரும்பி இசை பாடவும், காமர் மாலை அருகு அசைய-விருப்பம் பொருந்திய மாலைகள் அருகில் அசையவும், நடந்தாய் வாழி காவேரி-நடந்தாயாகலாற் காவேரி நீ வாழ்வாயாக; காமர் மாலை அருகு அசைய -, நடந்த எல்லாம்-நீ அங்ஙனம் நடந்த செயலெல்லாம், நின் கணவன் நாமவேலின் திறம் கண்டே – நின் கணவனது அச்சத்தைச் செய்யும் வேலின் றன்மையைக் கண்டே; அறிந்தேன் வாழி காவேரி – யான் அதனை அறிந்தேன்; வாழ்வாயாக;
பூவர் , ஆர் நெடில் குறுகியது. மாலை-புதுப்புனலாடுவார் அணிந்தவை. நாம் என்னும் உரிச்சொல் ஈறு திரிந்தது; நாமம்-புகழ் என்றுமுரைப்பர். வேலின் றிறங் கண்டே என்றது பிறரால் வருத்தமில்லை யென்றபடி.
௨௭. வாழி அவன்தன் வளநாடு
மகவாய் வளர்க்கும் தாய்ஆகி
ஊழி உய்க்கும் பேர்உதவி
ஒழியாய் வாழி காவேரி.
ஊழி உய்க்கும் பேர்உதவி
ஒழியாது ஒழுகல் உயிர்ஓம்பும்
ஆழி ஆள்வான் பகல்வெய்யோன்
அருளே வாழி காவேரி.
வாழி அவன்றன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாய் ஆகி – நின் கணவனது வளநாடு மகவாக நீ அதனை வளர்க்கும் தாயாகி, ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய் வாழி காவேரி-ஊழி தோறும் நடத்தும் பேருதவி நீங்கா யாகலால் காவேரி நீ வாழ்வாயாக; ஊழியுய்க்கும் பேருதவி-, ஒழியாது ஒழுகல் – நீ அங்ஙனம் நீங்காது ஒழுகுதல், உயிர் ஓம்பும் ஆழி ஆள்வான் பகல் வெய்யோன் அருளே வாழி காவேரி-உயிர்களைப் பாதுகாக்கும் சக்கரவர்த்தியாகிய நடுவுநிலைமை யுடையவனது அருளே; வாழ்வாயாக.
முதற்கண் வாழி- அசை. வளநாடு-சோழநாடு. மகவாக வெனத் திரிக்க. ஊழி உய்க்கும் - முறையில் நடத்தும் என்றுமாம். ஆழி ஆள்வான். ஆழியை ஆள்பவன்; ஆழியால் ஆள்பவன் என்றுமாம். ஆழி-ஆக்கினைச் சக்கரம். பகல், நடுவுநிலை. வெய்யோன்-விரும்புபவன்.
மூன்று பாட்டிலும் நடந்தாய் முதலியவற்றை ஏதுவாக்காமல் முற்றாக்கி, வாழி- அசை யென்றலுமாம். வளையாமை, அருளே என்பன காரணம் காரியமான உபசார வழக்கு. இவை மூன்றும் ஆற்றுவரி.
வேறு (சார்த்து வரி)
௨௮. தீங்கதிர் வாள்முகத்தாள் செவ்வாய் மணிமுறுவல் ஒவ்வா வேனும்
வாங்கும்நீர் முத்துஎன்று வைகலும் மால்மகன்போல் வருதிர் ஐய
வீங்குஓதம் தந்து விளங்குஒளிய வெண்முத்தம் விரைசூழ் கானல்
பூங்கோதை கொண்டு விலைஞர்போல் மீளும் புகாரே எம்மூர்
தீங்கதிர் வாள் முகத்தாள் செவ்வாய் மணி முறுவல் ஒவ்வாவேனும்-இனிய கதிர்களையுடைய திங்கள் போலும் ஒள்ளிய முகத்தினையுடையாளது சிவந்த வாயின் அழகிய பற்களை இவை ஒவ்வாவாயினும், வாங்கும் நீர் முத்து என்று வைகலும் மால்மகன் போல் வருதிர் ஐய-நீவிர் இந்த முத்துக்களை வாங்குமின் என்று கூறி, ஐயனே, நாடொறும் மயங்கிய மகன் போல வாராநிற்பீர் ; வீங்கு ஓதம் தந்து விளங்கு ஒளிய வெண் முத்தம்-ஒலி மிக்க கடலானது விளங்கும் ஒளியினையுடைய வெள்ளிய முத்துக்களைத் தந்து, விரை சூழ் கானற் பூங்கோதை கொண்டு-மணம் பொருந்திய கானலிடத்துப் பூமாலைகளைப் பெற்று, விலைஞர் போல் மீளும் புகாரே எம் ஊர்-விற்பார் போல் மீளாநிற்கும் புகாரே எம்முடைய ஊராகும்;
தீங்கதிர்-திங்கள்; ஆகுபெயர். வாங்கும் எனச் செய்யுமென்னுஞ் சொல் முன்னிலைப்பன்மை யேவலில் வந்தது. மால் மகன்-உன்மத்தன்;திருமாலின் மகனாகிய காமன் என்றுமாம். வருதிர் ஐய - பன்மை யொருமை மயக்கம். ஓதம் முத்தம் தந்து கோதை கொண்டு பண்டமாற்றுச் செய்யும் விலைஞர்போல் மீளும் புகார் என்க. கோதை-வண்டல் மகளிர் களைந்திட்டன. தலைமகன் கையுறையாக முத்துக்களை நல்கினானாக, எம் மூரின்கண் கடல்தரும் முத்துக்கள் மிகுதியாக வுள்ளன வாதலின் இவை வேண்டாவெனத் தலைவி மறுத்தாளென்க.
இது, கையுறை மறை.
௨௯. மறையின் மணந்தாரை வன்பரதர் பாக்கத்து மடவார் செங்கை
இறைவளைகள் தூற்றுவதை ஏழையம் எங்ஙனம்யாங்கு அறிகோம் ஐய
நிறைமதியும் மீனும் எனஅன்னம் நீள்புன்னை அரும்பிப் பூத்த
பொறைமலிபூங் கொம்புஏற வண்டுஆம்பல் ஊதும் புகாரே எம்மூர்
மறையின் மணந்தாரை வன்பரதர் பாக்கத்து-வன்மையுடைய பரதர்களின் பாக்கத்தில் களவிற் கூடிய மகளிரை, மடவார் செங்கை இறை வளைகள் தூற்றவதை-அம் மகளிரது சிவந்த கையின் இறையிலுள்ள வளைகள் கழன்று தூற்றுவதை, ஏழையம் எங்ஙனம் யாங்கு அறிகோம் ஐய-ஐயனே ஏழையோமாகிய யாங்கள் எங்ஙனம் அறியாநிற்பேம்; நிறை மதியும் மீனும் என அன்னம் நீள் புன்னை அரும்பிப் பூத்த பொறை மலி பூங்கொம்பு ஏற-அன்னமானது நீண்ட புன்னையினது அரும்பிப் பூத்த பூக்களின் பாரம் மிக்க கொம்பினிடத்தில் ஏறியிருப்ப அவ்வன்னத்தையும் பூக்களையும், நிறைமதியும் மீன் கணமுமெனக் கருதி, வண்டு ஆம்பல் ஊதும் புகாரே எம்மூர்-வண்டு ஆம்பல் மலரை ஊதா நிற்கும் புகாரே எம்முடைய ஊராகும்;
அம் மடவார் எனச் சுட்டு வருவிக்க. களவிற் புணர்ச்சி நிகழ்த்திப் பிரிந்து சென்ற தலைவர் வரவு நீட்டித்தலின் தலைமகள் கைவளைகள் கழன்று களவினை வெளிப்படுத்தலாயின வென்க. மணந்த தலைவரைத் தூற்றுவதை யென்றுமாம். தூற்றுதல்-பலருமறியப் பரப்புதல். யாங்கு-ஆங்கு என்பது போல அசை. அன்னம் கொம்பு ஏற அதனையும் பூக்களையும் மதியும் மீனுமாகக் கருதி என இயைக்க; நிரனிறை. வண்டூதும் என்றமையால் ஆம்பல் மலர்தல் பெற்றாம். மதியும் மீனுமென ஆம்பல் மலர அதன்கண் வண்டூதும் என்க.
௩0. உண்டாரை வெல்நறா ஊண்ஓழியாப் பாக்கத்துள் உறைஒன்று இன்றித்
தண்டாநோய் மாதர் தலைத்தருதி என்பதுயாங்கு அறிகோம் ஐய
வண்டல் திரைஅழிப்பக் கையால் மணல்முகந்து மதிமேல் நீண்ட
புண்தோய்வேல் நீர்மல்க பரதர் கடல்துர்க்கும் புகாரே எம்மூர்.
உண்டாரை வெல் நறா ஊண் ஒளியாப் பாக்கத்துள்-உண்டவர்களைத் தன் கடுமையால் வெல்லுங் கள்ளாகிய ஊண் மறையாது வெளிப்படும் பாக்கத்திலே, உறை ஒன்று இன்றி-மருந்தொன்றின்றியே, தண்டா வோய்-அமையாத காமநோயை, மாதர்தலைத் தருதி என்பது யாங்கு அறிகோம் ஐய-மாதரிடத்துத் தருகின்றாய் என்பதனை ஐயனே யாங்கள் எங்ஙனம் அறியா நிற்பேம்; வண்டால் திரை அழிப்ப-தம்முடைய வண்டலாகிய சிற்றில் முதலியவற்றைக் கடலின் அலைகள் ஊர்ந்துவந்து அழிக்க, கையால் மணல் முகந்து-கையினால் மணலை வாரி யிறைத்து, மதிமேல் நீண்ட புண் தோய் வேல் நீர் மல்க-மதி போலும் முகத்தின்மேல் நீண்ட பகைவர் புண்ணிற்றோய்ந்த வேல் போலும் கண்களில் நீர் பெருக, மாதர் கடல் தூர்க்கும் புகாரே எம்மூர்-சிறுமியர் கடலைத் தூர்க்கும் புகாரே எம்முடைய ஊராகும்;
வெல்லுதல்-தம் வயமிழப்பித்தல். கள்ளுண்டவர் அதனை மறைப்பினும் மறையாது வெளிப்படுமென்பது "களித்தறியே னென்பது கைவிடுக நெஞ்சத், தொளித்ததூஉ மாங்கே மிகும்" என்பதனானறிக. இவ்வியல்பினதாய பாக்கத்துள் என்றமையால், தமது காமநோயும் மறையாது வெளிப்படுமென்பது குறிப்பித்தவாறாயிற்று.காம நோய் வெளிப்படுதல் 2."மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க் கூற்று நீர் போல மிகும்" என்பதனானறியப்படும். பிறிதொரு மருந்தில்லாதிருக்கச் செய்தே நோயைத் தந்தொழிகின்றாய் என்க. வண்டால் : நீட்டல் விகாரம். முகத்தையும் கண்களையும் உவமப் பொருளாற் கூறினார். கண்கள் வெகுளியாற் சிவந்தமையின் புண்டோய் வேல் என்றார்-மணல் முகந்து தூர்க்கும் என்க. ஈண்டு மாதர் என்றது சிறுமியரை. "முன்னைத்தஞ் சிற்றின் முழங்கு கடலோத மூழ்கிப் போக, அன்னைக் குரைப்ப னறிவாய் கடலேயென் றலறிப் பேரும் தன்மை மடவார்" என்னுஞ் செய்யுளில் ‘அன்னைக் குரைப்பன்’
என்பது போல இச்செய்யுள் சிறுமியரது பேதைத் தன்மையைப் புலப்படுத்தி இன்பஞ் செய்கின்றது.
இவை யிரண்டும் தோழியிற் கூட்டங் கூடிப் பின்பு வாரா வரைவலென்றாற்குத் தோழி கூறியவை.
இவை மூன்றும் சார்த்துவரி.
வேறு (திணை நிலைவரி)
௩௧. புணர்த்துணையோடு ஆடும் பொறிஅலவன் நோக்கி
இணர்த்ததையும் பூங்கானல் என்னையும் நோக்கி
உணர்வுஒழியப் போன ஒலிதிரைநீர்ச் சேர்ப்பன்
வணர்சுரி ஐம்பாலோய் வண்ணம் உணரேனால்.
புணர் துணையோடு ஆடும் பொறி அலவன் நோக்கி-துணையோடு பொருந்தி விளையாடும் புள்ளிகளையுடைய ஞெண்டினை நோக்கி, இணர் ததையும் பூங்கானல் என்னையும் நோக்கி-பூங்கொத்துக்கள் செறிந்த சோலையிடத்து என்னையும் நோக்கி, உணர்வுஒழியப்போன ஒலி திரை நீர் சேர்ப்பன்-உணர்வு தன்னை நீங்கச் சென்ற ஒலிக்கும் அலையையுடைய கடற் சேர்ப்பனது, (வணர் சுரி ஐம்பாலோய் வண்ணம் உணரேனால்) வண்ணம்-இயல்பினை, வணர் சுரி ஐம்பாலோய்-வளைந்த கடைகுழன்ற கூந்தலையுடையாய், உணரேன்-அறிகின்றிலேன்.
இது தோழி கூற்று. அலவன் துணையோடு ஆடுதல் போல யானும் தலைவியோடாடி இன்புறுமாறு நீயே கூட்டுவித்தல் வேண்டும் என்னுங் குறிப்பினன் என்பாள். ‘அலவனோக்கி என்னையும் நோக்கிப் போன’ என்றாளென்க. இது குறிப்புநுட்பம் என்னும் அணியாகும். உணர்வொழியப்போன என்றமையால் அத்தகையாற்கு அருள் செய்யாதிருத்தல் தகவன்றென்பது புலப்படுத்தாளாயிற்று. சேர்ப்பன் வண்ணம் என இயையும். வண்ணம்-கருதிய தன்மை. உணரேன் என்றமையால் வலிதாகச் சொல்லினாளாம். ஆல் , அசை.
இது, தோழி வலிதாகச் சொல்லிக் குறைநயப்பித்தது.
௩௨. தம்முடைய தண்ணளியும் தாமும்தம் மான்தேரும்
எம்மை நினையாது விட்டாரோ விட்டுஅகல்க
அம்மென் இணர அடும்புகாள் அன்னங்காள்
நம்மை மறந்தாரை நாம்மறக்க மாட்டேமால்
தம்முடைய தண்ணளியும் தாமும் தம் மான் றேரும்-தம்முடைய அருளும் தாமும் தமது குதிரை பூட்டிய தேரும், எம்மை நினையாது விட்டாரோ-எம்மை நினையாமற் கைவிட்டாரோ, விட்டுஅகல்க-அவர் அங்ஙனம் விட்டொழிக; அம்மென் இணர் அடும்புகாள்-அழகிய மென்மையாகிய கொத்துக்களையுடைய அடும்புகளே, அன்னங்காள்-அன்னங்களே, நம்மை மறந்தாரை நாம் மறக்கமாட்டேம்-நம்மை அவர் மறந்தனராயினும் நாம் அவரை மறப்பேமல்லேம்;
உயர்திணையும் அஃறிணையும் விரவி உயர்திணையான் முடிந்த; "தானுந் தேரும் பாகனும் வந்தென் நலனுண்டான்" என்பதிற்போல. இதனைத், "தலைமைப் பொருளையும் தலைமையில் பொருளையும் விராயெண்ணித் தலைமைப் பொருட்கு வினை கொடுப்பவே தலைமையில் பொருளும் முடிந்தனவாவதொரு முறை பற்றி வந்தன",என்பர் சேனாவரையர். முன்பு தண்ணளியுடன் எம்மை நினைந்து தேரிற் போந்து அருள் செய்தவரென்பாள், அளியும் தாமும் தேரும் எம்மை நினையாது விட்டாரோ என்றாளென்க. ‘தண்ணளியும் தாமும் தேருமெனப் பின்பு சில சொல்லப் புக்கு அதனைக் காதன் மிகுதியாற் கலங்கி விட்டாரென்றாள்’ என நுட்பவுரை கூறுவர் அரும்பதவுரையாசிரியர். தன்னையே யன்றித் தன்னுடன் இன்பந் துய்த்த இடத்தையும், அவ் வின்பத்தை மிகுவிப்பனவாய் அங்குள்ள அடும்பு அன்னம் முதலியவற்றையும் அவர் மறந்தமை என்னோவென்பாள். அடும்பையும் அன்னத்தையும் விளித்து உளப்படுத்தி, ‘நம்மை மறந்தாரை’ என்றாள். காம மிகுதியாலாய மிக்க வருத்தத்தால் இங்ஙனம் கேளாதவற்றையும் கேட்பன போலக் கருதிக் கூறினாளென்க; "ஞாயிறு திங்க ளறிவே நாணே, கடலே கானல் விலங்கே மரனே, புலம்புறு பொழுதே புள்ளே நெஞ்சே, அவையல பிறவும் நுதலிய நெறியாற் சொல்லுந போலவுங் கேட்குந போலவும் சொல்லியாங் கமையு மென்மனார் புலவர்" என்பது தொல்காப்பியம். பின் இவ்வாறு வருவனவற்றிற்கும் இது விதியாகும். மறக்கமாட்டேம் என்றது ஒரு சொல். விட்டாரோ, ஓ - ஒழியிசை. ஆல் -அசை.
௩௩. புன்கண்கூர் மாலைப் புலம்பும்என் கண்ணேபோல்
துன்பம் உழவாய் துயிலப் பெறுதியால்
இன்கள்வாய் நெய்தால்நீ எய்தும் கனவினுள்
வன்கணார் கானல் வரக்கண்டு அறிதியோ
புன்கண் கூர் மாலை – வருத்தத்தை மிகுவிக்கும் மாலைப்பொழுதில், புலம்பும் என் கண்ணேபோல்-தனிமையால் வருந்தும் என் கண்ணினைப்போல, துன்பம் உழவாய்-துன்பத்தால் வருந்தாமல், துயிலப் பெறுதியால்-இனிது துயிலா நிற்கின்றாய், இன் கள்வாய் நெய்தால்-இனிய கள் திளைக்கும் வாயையுடைய நெய்தலே, நீ எய்தும் கனவினுள்-நீ எய்தாநிற்கும் கனவு நிலையில், வன்கணார் கானல் வரக்கண்டு அறிதியோ-கொடியராய தலைவர் கானலிடத்தே வராநிற்க நீ கண்டறிவாயோ;
நிறத்தால் என் கண்ணை யொத்திருந்தும் செய்கையால் அதனோடு மாறுபடுகின்றாய் என்றாள். துயிலல்-மொட்டித்தல். மாலைப்பொழுதில் நெய்தல் இதழ் குவியுமாதலின், அதனைத் துயிறலாகக் கருதி, என் கண் துயிலின்றி வருந்தவும் நீ துயில்கின்றாய் என்றாள்; கள்ளுண்பார்க்கு இஃது இயல்பே யென்பாள் ‘இன் கள் வாய் நெய்தால்’ என்றாளென்க. உறங்குவார்க்குக் கனவு முண்டென்று கருதி, ‘எய்துங் கனவினுள்’என்றாள். என் கண் துயிலாமையால் யான் கனவினுங் காணப் பெற்றிலேன்; நீ கனவிலே காண்டலுண்டாயிற் கூறுக என்றபடி இதனைக் காப்புச் சிறைமிக்க கையறு கிளவி என இறையனார் களவிய லுரையாசிரியரும், குறிபிழைத்துழித் தன்னுட் கையாறெய்திடு கிளவி என நச்சினார்க்கினியரும் கூறுவர்.
௩௪. புள்இயல்மான் தேர்ஆழி போன வழிஎல்லாம்
தெள்ளுநீர் ஓதம் சிதைத்தாய்மற்று எஞ்செய்கோ?
தெள்ளுநீர் ஓதம் சிதைத்தாய்மற்று எம்மோடுஈங்கு
உள்ளாரோடு உள்ளாய் உணராய்மற்று எஞ்செய்கோ?
புள் இயல் மான் தேர் ஆழி போன வழி எல்லாம்-பறவையின் இயல்பையுடைய குதிரை பூட்டிய தேரின் உருளை சென்ற வழி முழுதையும், தெள்ளுநீர் ஓதம்-தெளிந்த நீரையுடைய கடலே, சிதைத்தாய் மற்று என் செய்கோ-அழித்தாய்; யான் என் செய்வேன், தெள்ளுநீர் ஓதம் சிதைத்தாய் மற்று-அங்ஙனம் சிதைத்த நீ, எம்மொடு ஈங்கு உள்ளாரோடு உள்ளாய்-எம்மொடு இங்கிருந்து அலர் தூற்றும் அயலாரோடு உள்ளாயாதலால், உணராய்-எனது நோயினை அறியாய், மற்று என் செய்கோ-யான் என் செய்வேன்;
புள்ளினைப் போற் பறக்கு மியல்பினதென அதன் கடுமை கூறுவார். புள்ளியல்மான் என்றார்; "புள்ளியற் கலிமா வுடைமை யான" என்றார் தொல்காப்பியனாரும். தெள்ளு நீர்-கொழிக்கின்ற நீருமாம். ஓதம்-வெள்ளமும் அலையுமாம்; அண்மைவிளி. எம்மொடீங்குள்ளார்-எம் மனம் விட்டு நீங்காத தலைவரென்றுமாம். என் செய்கு-என் செய்வேன் ; தனித்தன்மை. மற்றும், ஓவும் அசைகள்.
௩௫. நேர்ந்தநம் காதலர் நேமிநெடுந் திண்தேர்
ஊர்ந்த வழிசிதைய ஊர்க்கின்ற ஓதமே
பூந்தண் பொழிலே புணர்ந்துஆடும் அன்னமே
ஈர்ந்தண் துறையே இதுதகாது என்னீரே.
நேர்ந்த நம் காதலர்-நம்மொடு பொருந்திய காதலரது, நேமி நெடுந் திண்டேர்-உருளையுடைய நெடிய திண்ணிய தேர், ஊர்ந்த வழி சிதைய ஊர்கின்ற ஓதமே-சென்ற வழி சிதையும்படி பரக்கின்ற வெள்ளமே, பூந் தண் பொழிலே-குளிர்ச்சி பொருந்திய பூக்களையுடைய சோலையே, புணர்ந்து ஆடும் அன்னமே-துணையுடன் கூடி விளையாடும் அன்னமே, ஈர்ந் தண் துறையே-ஈரமாகிய குளிர்ந்த நீர்த் துறையே, இது தகாது என்னீரே-இங்ஙனம் பிரிவது தகாது என்று தலைவர்க்குக் கூறுகின்றீ ரில்லை;
நேர்ந்த – பிரியேனென்று சூளுரைத்த எனலுமாம். பிரிவென்று சொல்லவும் அஞ்சி இதுவெனச் சுட்டியொழிந்தார். இனி, ஊர்கின்ற என்பதை முற்றாக்கி, ஓதம் ஊர்கின்றன இது தகா தென்னீர் எனப் பொழில் முதலியவற்றிற் குரைத்தூஉமாம்.
௩௬. நேர்ந்தநம் காதலர் நேமிநெடுந் திண்தேர்
ஊர்ந்த வழிசிதைய ஊர்ந்தாய்வாழி கடல்ஓதம்
ஊர்ந்த வழிசிதைய ஊர்ந்தாய்மற்(று) எம்மொடு
தீர்ந்தாய்போல் தீர்ந்திலையால் வாழி கடல்ஓதம்
நேர்ந்த நங் காதலர் நேமி நெடு திண் தேர்-நம்மோடு பொருந்தின காதலரது உருளையுடைய நெடிய திண்ணிய தேர், ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய்-சென்ற வழி மறையும்படி பரந்தாய், வாழி கடல் ஓதம்-கடலின் வெள்ளமே நீ வாழ்வாயாக, ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய் மற்று-அங்ஙனம் பரந்தாயாகலால் நீ, எம்மொடு தீர்ந்தாய்போல் தீர்ந்திலையால் – எம்முடன் உறவுபோலிருந்து உறவாயிற்றிலை, வாழி கடல் ஓதம்-கடலோதமே வாழ்வாயாக;
வாழி யென்றது குறிப்புமொழி ; அசையுமாம். தீர்ந்தவர்-தெளியப்பட்ட உறவினர்.
இவ் வைந்தும் காம மிக்க கழிபடர் கிளவி. இவை திணைநிலைவரி.
வேறு (மயங்கு திணை நிலைவரி)
௩௭. நன்நித் திலத்தின் பூண்அணிந்து
நலம்சார் பவளக் கலைஉடுத்துச்
செந்நெல் பழனக் கழனிதொறும்
திரைஉ லாவு கடல்சேர்ப்ப.
புன்னைப் பொதும்பர் மகரத்திண்
கொடியோன் எய்த புதுப்புண்கள்
என்னைக் காணா வகைமறத்தால்
அன்னை காணின் என்செய்கோ?
நல்நித்திலத்தின் பூண் அணிந்து-நல்ல முத்தாகிய பூணினை யணிந்து, நலம் சார் பவளக் கலை உடுத்து-நன்மை பொருந்திய பவளமாகிய மேகலையை உடுத்து, செந்நெற் பழனக் கழனிதொறும்-செந்நெற் பயிர்களையுடைய மருதநிலத்துக் கழனிதொறும், திரை உலாவு கடற் சேர்ப்ப-அலைகள் உலாவுகின்ற கடலின் கரையையுடைய தலைவனே, புன்னைப் பொதும்பர்-புன்னைமரம் அடர்ந்த சோலையிலே, மகரத் திண் கொடியோன் எய்த புதுப் புண்கள்-வலிய மகரக் கொடியையுடைய மன்மதன் அம்பெய்தமையாலான புதிய புண்கள், என்னைக் காணா வகை மறைத்தால்-என் னுருவினைக் காணாதபடி மறைப்பின், அன்னை காணின் என் செய்கோ-அதனைத் தாய் அறியின் என் செய்வேன்;
நித்திலத்தின் பூண், பவளக்கலை என்பன வேற்றுமைத் தொகையும் பண்புத் தொகையுமாம். பழனம்-மருதம்; நீர்நிலை. பொதும்பர்-மரச் செறிவு. புதுப்புண் என்றது தலைவி மேன்மேல் வருந்துகின்ற வருத்தத்தை. பொதும்பர் தாதினை யுதிர்த்துப் புண்களை மறைத்தால் என்றுரைப்பாருமுளர்.
௩௮. வாரித் தரள நகைசெய்து
வண்செம் பவள வாய்மலர்ந்து
சேரிப் பரதர் வலைமுன்றில்
திரைஉ லாவு கடல்சேர்ப்ப.
மாரிப் பீரத்து அலர்வண்ணம்
மடவாள் கொள்ளக் கடவுள்வரைந்து
ஆர்இக் கொடுமை செய்தார்என்று
அன்னை அறியின் என்செய்கோ ?
வாரித் தரள நகை செய்து-கடல் முத்தாகிய நகையினைத் தோற்றி, வண் செம்பவள வாய் மலர்ந்து-அழகிய சிவந்த பவளமாகிய வாய் திறந்து, சேரிப் பரதர் வலை முன்றில் திரை உலாவு கடற்சேர்ப்ப-பரதர் சேரியில் வலை உணங்கும் மனை முற்றத்தே அலைகள் உலாவும் கடலின் கரையையுடைய தலைவனே, மாரிப் பீரத்து அலர் வண்ணம் மடவாள் கொள்ள-தலைவியானவள் மாரிக்காலத்து மலரும் பீர்க்கின் மலர்போலும் நிறத்தைக் கொள்வாளாயின், கடவுள் வரைந்து-தெய்வத்தை வழிபட்டு, ஆர் இக் கொடுமை செய்தார் என்று அன்னை அறியின்-இக்கொடுமை செய்தவர் யாரென்று அன்னை ஆராய்ந்தறியின், என் செய்கே –என்ன செய்வேன் ;
பீரத்து-பீர் அத்துச் சாரியை பெற்றது; இதனை "ஆரும் வெதிரும்"என்னுஞ் சூத்திரத்து, மெய்பெற என்றதனான் முடிப்பர். வண்ணம்-பொன்னிறம் ; பசலை. வரைந்து-வழிபட்டு. அறியின்-ஆராய்ந்தறியினென்க.
௩௯. புலவுற்று இரங்கி அதுநீங்கப்
பொழில்தண் டலையில் புகுந்துஉதிர்ந்த
கலவைச் செம்மல் மணம்கமழத்
திரைஉ லாவு கடல்சேர்ப்ப.
பலஉற்று ஒருநோய் திணியாத
படர்நோய் மடவாள் தனிஉழப்ப
அலவுற்று இரங்கி அறியாநோய்
அன்னை அறியின் என்செய்கோ?
புலவற்று இரங்கி-புலால் நாற்றம் பொருந்தி முழங்கி, அது நீங்க-அப்புலால் நீங்க, பொழிற் றண்டலையில் புகுந்து-பொழிலாகிய சோலையிலே புகுந்து, உதிர்ந்த கலவைச் செம்மல் மணம் கமழ-ஆண்டு உதிர்ந்த பலவுங் கலந்த பழம் பூக்களின் மணம் கமழ, திரை உலாவு கடற் சேர்ப்ப – அலையுலாவுகின்ற கடற்கரையை யுடையவனே, பலஉற்று ஒரு நோய் துணியாத படர் நோய்-பல துன்பங்களும் உறுதலால் இன்னதொரு நோயெனத் துணியலாகாத படர் நோயை, மடவாள் தனி உழப்ப-தலைவி தானே யறிந்து அனுபவிக்க, அலவுற்று இரங்கி அறியா நோய்-மெலிதலும் இரங்கலும் புலப்படாமையின் ஒருவராலும் அறியப்படாத அந்நோயை, அன்னை அறியின் என் செய்கோ-தாய் அறிந்தால் யாது செய்வேன்;
புலவுற்றிரங்கி-புலத்தலுற்று வருந்தி என்ற பொருளும் தோன்ற நின்றது. நீங்க மணங் கமழப் புகுந்து உலாவு கடல் என்க. கலவை-பலவகையும் கலந்தது. செம்மல்-பழம்பூ.
இவை மூன்றும் அவர் அறிவுறீஇ வரைவுகடாவியவை.
வேறு
௪0. இளைஇருள் பரந்ததுவே எல்செய்வான் மறைந்தனனே
களைவுஅரும் புலம்புநீர் கண்பொழீஇ உகுத்தனவே
தளைஅவிழ் மலர்க்குழலாய் தணந்தார்நாட்டு உளதாம்கொல்
வளைநெகிழ எரிசிந்தி வந்தஇம் மருள்மாலை?
இளை இருள் பரந்ததுவே-இளைய விரிந்தது, எல் செய்வான் மறைந்தனனே-பகலினைச் செய்யும் ஆதித்தன் மறைந்தனன், களைவு அரும் புலம்பு நீர் கண்பொழீஇ உகுத்தன-களைதற்கரிய தனிமை வருத்தத்தாலாய நீரினைக் கண்கள் மிகுதியாகச் சொரிந்தன, தளை அவிழ் மலர்க் குழலாய்-முறுக்கு விரிந்த மலரணிந்த கூந்தலையுடையாய், தணந்தார் நாட்டு உளதாங் கொல்-நம்மைப் பிரிந்த தலைவர் நாட்டிலும் இருக்குமோ, வளை நெகிழ எரி சிந்திவந்த இம் மருள் மாலை-நம்முடைய வளை கழல நெருப்பினைச் சிந்தி வந்த இந்த மயக்கத்தையுடைய மாலைப் பொழுது ;
இளை-இளைய; விகாரம். ஏகாரங்கள் ஈண்டு இரங்கல் குறித்தன. புலம்பு-தனிமை; வருத்தம். மருள் மாலை-மயங்கிய மாலை ; மயக்கத்தைச் செய்யும் மாலையுமாம். மாலை உளதாங்கொல் என வியையும். கொல் : ஐயம். தலைவர் நாட்டிருக்குமாயின் அவர் இங்ஙனம் பிரிந்திரார் என்பது குறிப்பு.
௪௧. கதிரவன் மறைந்தனனே கார்இருள் பரந்ததுவே
எதிர்மலர் புரைஉண்கண் எவ்வநீர் உகுத்தனவே
புதுமதி புரைமுகத்தாய் போனார்நாட்டு உளதாம்கொல்
மதிஉமிழ்ந்து கதிர்விழுங்கி வந்தஇம் மருள்மாலை?
கதிரவன் மறைந்தனன்-சூரியன் மறைந்தான், கார் இருள் பரந்ததுவே-கரிய இருள் பரந்தது, எதிர் மலர் புரை உண்கண் எவ்வ நீர் உகுத்தனவே-செவ்வி மலரையொக்கும் மையுண்ட கண்கள் துன்பத்தாலாய நீரைச் சொரிந்தன, புதுமதி புரை முகத்தாய்-புதிய மதியை யொக்கும் முகத்தினை யுடையாய், போனார் நாட்டு உளதாங்கொல்-நம்மை விட்டுப் போன தலைவரது நாட்டிலும் உண்டாகுமோ, மதி உமிழ்ந்து கதிர் விழுங்கி வந்த இம் மருள மாலை-திங்களை உமிழ்ந்து ஞாயிற்றை விழுங்கி வந்த இந்த மயங்கிய மாலைப்பொழுது;
எதிர்மலர்-தோற்றுகின்ற மலரென்றும், எதிர்த்துப் பிணைத்த மலரென்றுமாம். புதுமதி-மாலையிற் றோற்றிய நிறைமதி. கதிர் விழுங்கி மதி யுமிழ்ந்து என மாறுதலுமாம். மாலையிலே கதிர் மறைந்ததனையும், மதி தோன்றியதனையும் இங்ஙனங் கூறினார். ஒன்றை விழுங்கி, ஒன்றை உமிழ்ந்ததென்பது ஒரு நயம்.
௪௨. பறவைபாட்டு அடங்கினவே பகல்செய்வான் மறைந்தனனே
நிறைநிலா நோய்கூர நெடுங்கண்நீர் உகுத்தனவே
துறுமலர் அவிழ்குழலாய் துறந்தார்நாட்டு உளதாம்கொல்
மறவையாய் என்உயிர்மேல் வந்தஇம் மருள்மாலை?
பறவை பாட்டு அடங்கனவே-பறவைகள் ஒலித்தலடங்கின, பகல் செய்வான் மறைந்தனனே-சூரியன் மறைந்தான், நிறை நிலா நோய் கூர நெடுங்கண்நீர் உகுத்தன-நிறுத்த நில்லாவாய் நோய்கெள் மிகா நிற்க நெடிய கண்கள் நீரைச் சொரிந்தன, துறுமலர் அவிழ் குழலாய்-அவிழ்ந்த மலர்கள் நெருங்கிய கூந்தலையுடையாய், துறந்தார் நாட்டு உளதாங்கொல்-நம்மைப் பிரிந்த தலைவரது நாட்டிலும் உண்டாகாநிற்குமோ, மறவையாய் என் உயிர்மேல் வந்த இம் மருள் மாலை –மறத்தினையுடையதாய் என் உயிரின் மேல் வந்த மயங்கிய மாலைப் பொழுது;
பாட்டு – பாடுதல் ; ஒலித்தல். நிறை – நிறுத்தல். நிலா – நில்லாவாய்; எச்சமுற்று. துறு-நெருங்கிய. மறவை – மறத்தையுடையது. உயிர்மேற் பாய்ந்து வந்த மாலையாகிய புலியென்க.
இவை மூன்றும் பொழுது கண்டு ஆற்றாளாய தலைமகள் தோழிக்குரைத்தன.
இவை ஆறும் மயங்குதிணை நிலைவரி. இவற்றுள் திணைமயங்கியுள்ளமை காண்க.
வேறு (சாயல் வரி)
௪௩. கைதை வேலிக் கழிவாய் வந்துஎம்
பொய்தல் அழித்துப் போனார் ஒருவர்
பொய்தல் அழித்துப் போனார் அவர்நம்
மையல் மனம்விட்டு அகல்வார் அல்லர்.
கைதை வேலிக் கழிவாய் வந்து – தாழையை வேலியாகவுடைய இக் கழியின்பால் வந்து, எம் பொய்தல் அழித்துப் போனார் ஒருவர்-நம்முடைய விளையாட்டை மறப்பித்துச் சென்றார் ஒருவர், பொய்தல் அழித்துப் போனார் அவர்-அங்ஙனம் விளையாட்டை மறப்பித்துச் சென்ற அவர், நம் மையல் மனம்விட்டு அகல்வார் அல்லர்-நமது மயக்கத்தையுடைய மனத்தை விட்டு நீங்குவாரல்லர்;
கழி- கடல் சார்ந்த நிலமும் நீரோடையும். பொய்தல்-மகளிர் விளையாட்டு. அழித்தல்-ஈண்டு மறப்பித்தல்: "சேர்ப்பே ரீரளையலவற் பார்க்குஞ் சிறுவிளை யாடலு மழுங்க, நினைக்குறு பெருந்துய மாகிய நோயே"என்பதிற்போல.
௪௪. கானல் வேலிக் கழிவாய் வந்து
நீநல்கு என்றே நின்றார் ஒருவர்
நீநல்கு என்றே நின்றார் அவர்நம்
மான்நேர் நோக்கம் மறப்பார் அல்லர்.
கானல் வேலிக் கழிவாய் வந்து-சோலை சூழ்ந்த கழியினிடத்து வந்து, நீ நல்கு என்றே நின்றார் ஒருவர்-நீ அருள் செய்வாய் என்று சொல்லியே நின்றார் ஒருவர், நீ நல்கென்றே, நின்றார் அவர்-அங்ஙனம் நின்ற அவர், நம் மான் நேர் நோக்கம் மறப்பார் அல்லர்-நமது மானையொத்த பார்வையை மறப்பாரல்லர்;
மான் ஏர் நோக்கம் எனப் பிரித்தலுமாம்.
௪௫. அன்னம் துணையோடு ஆடக் கண்டு
நென்னல் நோக்கி நின்றார் ஒருவர்
நென்னல் நோக்கி நின்றார் அவர்நம்
பொன்நேர் சுணங்கிற் போவார் அல்லர்.
அன்னம் துணையோடு ஆடக் கண்டு-அன்னப் பறவை தன் துணையுடன் விளையாடக் கண்டு, நென்னல் நோக்கி நின்றார் ஒருவர்-நேற்று அதனையே நோக்கி நின்றார் ஒருவர், நென்னல் நோக்கி நின்றார் அவர் – அங்ஙனம் நோக்கி நின்ற அவர்,நம் பொன் நேர் சுணங்கிற் போவார் அல்லர் – நமது பொன்னையொத்த சுணங்கு போல நம்மை விட்டு நீஙுகுவாரல்லர்;
நென்னல்-நெருநல் என்பதன் மரூஉ. நோக்கி-என்னை நோக்கி யென்றுமாம். சுணங்கு-தேமல்; அழகிய சுணங்குமாம்.
இவை மூன்றும் மெலிதாகச் சொல்லிக் குறைநயப்பித்தல்; ஆற்றுவித்தற் பொருட்டுத் தோழி இயற்பழிக்கத் தலைமகள் இயற்பட மொழிந்ததூஉமாம். இவை சாயல் வரி என்பர்.
வேறு (முகம் இல் வரி)
௪௬. அடையல் குருகே அடையல்எம் கானல்
அடையல் குருகே அடையல்எம் கானல்
உடைதிரைநீர்ச் சேர்ப்பற்கு உறுநோய் உரையாய்
அடையல் குருகே அடையல்எம் கானல்
அடையல் குருகே அடையல் எம் கானல் – குருகே எம் கானலிடத்து அடையாதே, அடையல் குருகே அடையல் எம் கானல்-, உடை திரைநீர்ச் சேர்ப்பதற்கு உறுநோய் உரையாய்-உடைகின்ற அலையையுடைய கடற்சேர்ப்பனுக்கு எமது மிக்க நோயை உரையாய்; ஆதலால் அடையல் குருகே அடையல் எம் கானல்-,
குருகு-நாரை; வேறு பறவையுமாம். உரையாய் ஆதலால் அடையாதே என்றாள். இது காம மிக்க கழிபடர் கிளவி.
வேறு (காடுரை)
௪௭. ஆங்கனம் பாடிய ஆயிழை பின்னரும்
காந்தள் மெல்விரல் கைக்கிளை சேர்குரல்
தீந்தொடைச் செவ்வழிப் பாலை இசைஎழீஇப்
பாங்கினில் பாடிஓர் பண்ணும் பெயர்த்தாள்
ஆங்ஙனம் பாடிய ஆயிழை-அங்ஙனம் கோவலன் பாடினாற் போலப் பாடிய மாதவி, பின்னரும்-பின்பும், காந்தள் மெல்விரல்-காந்தள் மலர்போலும் மெல்லிய விரலால், கைக்கிளை சேர்குரல் தீந்தொடைச் செவ்வழிப் பாலை இசை எழீஇ-கைக்கிளை குரலாகிய இன்னிசையுடைய செவ்வழிப்பாலை என்னும் இசையை யெழுப்பி, பாங்கினிற்பாடி-அதனை முறைமையிற் பாடி, ஓர் பண்ணும் பெயர்த்தாள்-பின் வேறொரு பண்ணினைப் பாடத் தொடங்கினாள்;
அங்ஙனம் என்னுஞ் சுட்டு நீண்டு ஆங்ஙனம் என்றாகி எதுகை நோக்கி ஆங்கனம் என்றாயிற்று. ஆங்ஙனமென்றே கூறினும் இழுக்கின்று. விரலால் கைக்கிளை குரலாகிய செவ்வழிப் பாலை யிசையை எழுப்பியென்க. தீந்தொடை-ஈண்டு இன்னிசை;பண்ணு – பண்ணை.
வேறு (முகம் இல் வரி)
௪௮. நுளையர் விளரி நொடிதரும்தீம் பாலை
இளிகிளையில் கொள்ள இறுத்தாயால் மாலை
இளிகிளையில் கொள்ள இறுத்தாய்மன் நீயேல்
கொளைவல்லாய் என்ஆவி கொள்வாழி மாலை
நுளையர் விளரி நொடிதரும் தீம்பாலை-நுளையாது விளரிப் பாலையாகிய பண்ணினைப் பாடுங்கால், இளி கிளையிற் கொள்ள இறுத்தாயால் மாலை-மாலைப்பொழுதே, இளி யென்னும் நரம்பு கைக்கிளை யென்னும் நரம்பிற் சென்று மயங்க வந்து தங்கினாய்; இளி கிளையிற் கொள்ள இறுத்தாய் மன், நீயேல்-அங்ஙனம் தங்கினாய் நீயாயின், கொளைவல்லாய் என் ஆவி கொள் வாழி மாலை-கொள்ளுதலில் வல்லாயாகிய மாலையே நீ என் உயிரைக் கொள்வாயாக;
விளரிப்பாலை-இரங்கற்பண் நெய்தற்குரியதாகலின் நுளையர் விளரியென்றார். நொடிதருதல்-சொல்லுதல் நின்ற நரம்பிற்கு ஆறாம் நரம்பு பகை; அது கூடம் என்னுங் குற்றம்; இளி முதலாகக் கைக்கிளை ஆறாவதாகலின் இளிக்குக் கைக்கிளை பகை. மயக்கத்தாலே பகைநரம்பிலே கை சென்று தடவவென்க. கொளை வல்லாய்-உயிரைக் கொள்ளுதலை வல்லாய். வாழியென்றது குறிப்பு.
௪௯. பிரிந்தார் பரிந்துஉரைத்த பேர்அருளின் நீழல்
இருந்துஏங்கி வாழ்வார் உயிர்ப்புறத்தாய் மாலை
உயிர்ப்புறத்தாய் நீஆகில் உள்ஆற்றா வேந்தன்
எயில்புறத்து வேந்தனோடு என்ஆதி மாலை
பிரிந்தார் பரிந்து உரைத்த பேரருளின் நீழல்-பிரிந்து சென்ற தலைவர் அன்புற்று உரைத்த பெரிய தண்ணளியாகிய நிழலிலே, இருந்து ஏங்கி வாழ்வார் உயிர்ப் புறத்தாய் மாலை-தனித்திருந்து இரங்கி வாழ்பவருடைய உயிரைச் சூழ்ந்துள்ளாய். நீயாயின், உள் ஆற்றா வேந்தன் எயிற்புறத்து வேந்தனோடு-உள்ளிருக்கும் வலியில்லாத வேந்தனது மதிலின் புறத்துள்ள வேந்தற்கு, என் ஆதி மாலை-மாலையே நீ என்ன உறவுடையை ஆவாய்;
உரைத்த உரையாகிய அருளென்க. உரை-பிரியேம் என்று கூறியது. உயிர்ப் புறத்தாய்-உயிரைக் கவர்தற்கு அதனை முற்றியுள்ளாய். உள்ளாற்றா வேந்தன்-நொச்சியான்; ஆற்றா என்றமையால் அமர் புரியும் வலியில்லாத என்றாயிற்று. எயிற் புறத்து வேந்தன்-உழிஞையான். அவனும் நீயும் புறத்தே முற்றி உயிர்கொள்வதில் ஒரு தன்மையீர் என்றபடி. வேந்தனோடு-வேந்தற்கு.
௫0. பையுள்நோய் கூரப் பகல்செய்வான் போய்வீழ
வையமோ கண்புதைப்ப வந்தாய் மருள்மாலை
மாலைநீ ஆயின் மணந்தார் அவர்ஆயின்
ஞாலமோ நல்கூர்ந் ததுவாழி மாலை.
பையுள் நோய்கூர-துன்பமாகிய நோய்மிக, பகல் செய்வான் போய் வீழ-ஆதித்தன் மேல்கடலிற்சென்று வீழ, வையமோ கண் புதைப்ப-வையத்துள்ளார் கண்ணினை மூட, வந்தாய் மருள் மாலை-மயக்கத்தையுடைய மாலையே வந்தாய், மாலை நீ ஆயின்-மாலைப் பொழுதே நீயேயாயின், மணந்தார் அவர் ஆயின்-முன் மணந்தவர் தணந்து சென்ற அவரே யாயின், ஞாலமோ நல்கூர்ந்தது வாழி மாலை-மாலையே இவ்வுலகந்தான் மிடியுற்றது, வாழ்வாயாக;
வையம் – வையத்துள்ளார்; ஆகுபெயர், நீயாயின் என்றலும் அவராயின் என்றதும் கொடுமை குறித்தென்க. ஓகாரங்கள் சிறப்பு. நல்கூர்தல் ஈண்டுத் துன்புறுதல். ஞாலம் நல்கூர்ந்ததென்றாள் தன்னோய் எல்லார்க்கு முளதெனத் தனக்குத் தோற்றுதலால்; "தான் சாவ உலகு கவிழும்"என்னும் பழமொழியுங் காண்க. வாழி- குறிப்பு.
வேறு (கட்டுரை)
௫௧. தீத்துழைஇ வந்தஇச் செல்வன் மருள்மாலை
தூக்காது துணிந்தஇத் துயரெஞ்ச் கிளவியால்
பூககமழ் கானலிற் பொய்ச்சூள் பொறுக்கென்று
மாக்கடற் றெய்வநின் மலரடி வணங்குதும்.
தீத் துழைஇ வந்தஇச் செல்லல் மருள் மாலை-தீயைப் பரப்பிவந்த வருத்தத்தைச் செய்யும் இம் மயங்கிய மாலைப் பொழுது, தூக்காது துணிந்த இத் துயர் எஞ்சு கிளவியால் - நம்மை வருத்துமென்று கருதாது நாம் துணியும்படி யுரைத்த இந் நன்மொழியோடே, பூக் கமழ் கானலிற் பொய்ச் சூள் பொறுக்கென்று-பூ நாறுஞ் சோலையிடத்தே கூறிய பொய்யாகிய சூளுரையைப் பொறுப்பாயாக வென்று, மாக் கடற் றெய்வம்-பெரிய கடற் றெய்வமே, நின் மலர் அடி வணங்குதும்-நினது மலர் போலும் அடியை வணங்குவேம்:
துயரெஞ்சு கிளவி-துயரில்லாத மொழி; நன்மொழி. ஆவது நின்னிற் பிரியேனென்றல் கிளவியோடே கானலிற் கூறிய பொய்ச் சூளென்க. பொய்ச் சூளால் அவரைத் தெய்வம் ஒறுக்குமென அஞ்சிப் பொறுக்கென்று வணங்குதும் என்றாள். பொறுக்கென்று – அகரந் தொக்கது.
இது, வரைவு நீட்டித்த விடத்துத் தலைமகன் சிறைப்புறத்தானாகக் கூறியது.
இவை முகமில் வரி என்பர்.
௫௨. எனக்கேட்டு,
கானல்வரி யான்பாடத் தான்ஒன்றின்மேல் மனம்வைத்து
மாயப்பொய் பலகூட்டும் மாயத்தாள் பாடினாள்என
யாழ்இசைமேல் வைத்துத்தன் ஊழ்வினைவந்து உருத்ததுஆகலின்
உவவுஉற்ற திங்கள்முகத்தாளைக் கவவுக்கை ஞெகிழ்ந்தனனாய்ப்
பொழுதுஈங்குக் கழிந்ததுஆகலின் எழுதும்என்று உடன்எழாது
ஏவலாளர் உடஞ்சூழக் கோவலன்தான் போனபின்னர்,
தாதுஅவிழ் மலர்ச்சோலை ஓதைஆயத்து ஒலிஅவித்துக்
கையற்ற நெஞ்சினளாய் வையத்தி னுள்புக்குக்
காதலனுடன் அன்றியே மாதவிதன் மனைபுக்காள்
ஆங்கு,
மாயிரு ஞாலத்து அரசு தலைவணக்கும்
சூழி யானைச் சுடர்வாள் செம்பியன்
மாலை வெண்குடை கவிப்ப
ஆழி மால்வரை அகவையா எனவே
எனக் கேட்டு-என்று மாதவி பாடக் கேட்டு, கானல் வரி யான் பாட – நான் கானல் வரியினைப் பாட, தான் ஒன்றின் மேல் மனம் வைத்து-அவள் அப்படிப் பாடாமல் என்னை யொழிய வேறொன்றின்மேல் மனம் வைத்து, மாயம் பொய் பல கூட்டும் மாயத்தாள் பாடினாள் என-வஞ்சனையுடன் கூடிய பொய்கள் பலவற்றைக் கூட்டும் மாயத்தாளாகப் பாடினாளென்று கோவலன் எண்ணி, யாழ்இசைமேல் வைத்துத் தன் ஊழ்வினை வந்து உருத்தது ஆதலின்-யாழ் இசைமேல்வைத்துத் தன் ஊழ்வினை வந்து கோபித்ததாகலின், உவவு உற்ற திங்கள் முகத்தாளைக் கவவுக் கை ஞெகிழ்ந்தனனாய்-உவா நாளிற் பொருந்திய திங்கள் போலும் முகத்தினை யுடைய மாதவியை அகத்திட்ட கை நெகிழ்ந்தவனாய், பொழுது ஈங்குக் கழிந்தது ஆகலின் எழுதும் என்று-பொழுது கழிந்ததாகலின் இங்கிருந்து எழுவேமென்று, உடன் எழாது ஏவலாளர் உடன் சூழ்தரக் கோவலன் தான் போன பின்னர்-அவள் உடன் எழாதிருக்க ஏவலாளர் தன்னைச் சூழ்ந்து உடன்வரக் கோவலன் போயினான்; அவ்வாறு போன பின்பு, தாது அவிழ் மலர்ச்சோலை ஓதை ஆயத்து ஒலி அவித்து-தாது விரிந்த பூக்களையுடைய சோலையில் ஆரவாரத்தையுடைய ஆயத்தின் ஒலி அடங்க, கையற்ற நெஞ்சினளாய் வையத்தின் உள் புக்கு-செயலற்ற மனத்தினளாய் வண்டியினுள்ளே அமர்ந்து, காதலனுடன் அன்றியே மாதவி தன் மனைபுக்காள்-காதலனுடன் செல்லாது மாதவி தனியே தன் மனையை அடைந்தாள்; ஆங்கு மாயிரு ஞாலத்து அரசு தலை வணக்கும் – அகற்சியுடைய பெரிய உலகிலுள்ள அரசர்களைத் தலைவணங்கச் செய்யும், சூழி யானைச் சுடர் வாட் செம்பியன்-முகபடாம் அணிந்த யானையையும் ஒளி பொருந்திய வாளையுமுடைய சோழனது, மாலை வெண்குடை-மாலை யணிந்த வெண்கொற்றக் குடையானது, கவிப்ப ஆழி மால்வரை அகவையா எனவே-பெரிய சக்கரவாளகிரி உள்ளகப் படும்படி கவிக்க என்று;
மாயத்தாளாகலின் மனம் வைத்துப் பாடினாள் என்றுமாம். யாழிசை மேல் வைத்து-யாழிசையால் நிகழ்ந்ததென்று கருதும்படி செய்து. ஓரை யாயத்து என்று பாடமிருப்பினும் பொருந்தும். காதலனுடனன்றியே என மேற்போந்த பொருளை மீட்டும் கூறியது அவள் யாண்டும் அவ்வாறு சென்றதிலள் என்பதை உணர்த்தற்கு. கவிப்பவெனக் கூறி மனை புக்காளென்க; அரசனை வாழ்த்தி முடித்தல் மரபு. ஆங்கு, அசை.
மாதவி குற்ற நீங்கிய யாழினைத் தொழுது வணங்கி இசையெழுப்பிச் செவியாலோர்த்துப் ‘பணியாது’ எனக் கோவலன் கையில் நீட்ட, அவன் அதனை வாங்கி அகப் பொருட் கருத்துக்க ளமைந்த ஆற்றுவரி முதலாய பாடல்களைப் பாடினான்; அவ்வாறு பாடக் கேட்ட மாதவி அவன் தன்னிலை மயங்கினா னெனக் கருதிப் புலவியால் யாழ் வாங்கித் தானும் வேறு குறிப்பினள் போற் பாடத் தொடங்கி, அகப்பொருட் கருத்துடைய வரிப்பாடல்களைப் பாடினாள்; அதனைக் கேட்டுக் கோவலன் இவள் என்போலன்றி வேறொன்றின் மேல் மனம் வைத்துப் பாடினாளெனத் துணிந்து. யாழிசை மேல் வைத்து ஊழ்வினை வந்துருத்ததாகலின் அவளை யணைத்த கையை நெகிழ்த்து ஏவலாளர் சூழப் புறப்ப்ட்டுச் சென்றான்; மாதவியும் கையற்ற நெஞ்சினளாய் வண்டியேறித் தனியே மனை புக்காள் என முடிக்க.
இதில் ஆற்றுவரி முதலிய பலவகைப் பாடல்கள் இருப்பினும் யாவும் கானலிடத்தனவாகலின், கானல்வரி யெனப்பட்டன. இதிலுள்ளன இசைத்தமிழ்ப் பாட்டுக்களும், கட்டுரைகளும் ஆம்.
கானல்வரி முற்றிற்று.
8. வேனிற்காதை
[இளவேனிற் பருவம் வந்ததனை இளந்தென்றலும், குயிலின் கூவுதலும் அறிவித்தன. கோவலன் ஊடிச் சென்றமையால் தனித்தேகிய மாதவியானவள் மேன் மாடத்து நிலா முற்றத்தில் ஏறியிருந்து, யாழினைக் கையிலெடுத்து, மேற்செம்பாலை யென்னும் பண்ணை முந்துறக் கண்டத்தாற் பாடி அது மயங்கினமையின், அதனையே கருவியாலும் பாடத் தொடங்கிப் பதினாற் கோவையாகிய சகோட யாழை உழை குரலாகக் கைக்கிளை தாரமாகக் கட்டி, இசை பொருந்து நிலையை நோக்கி, அகநிலை மருதம், புறநிலை மருதம், அருகியல் மருதம், பெருகியல் மருதம் என்னும் சாதிப் பெரும்பண்களை நலம்பெற நோக்கிப் பாடுமிடத்துப் புறமாகியதொரு பண்ணிலே மயங்கினள். மயங்கினவள், காமதேவனாணையால் உலகு தொழு திறைஞ்சும் திருமுகம் விடுப்பேமென்னும் எண்ணத்தாற் பிறந்த செவ்வியளாய்ச், சண்பக முதலியவற்றால் தொடுக்கப்பட்ட மாலையின் இடையேயுள்ளதொரு தாழை வெண்டோட்டில் அதற்கு அயலதாகிய பித்திகை யரும்பை எழுத்தாணியாகக் கொண்டு செம்பஞ்சியிலே தோய்த்து எழுதுகின்றவள், ‘இளவேனிலென்பான் முறைசெய்ய வறியாத இளவரசன்; திங்கட் செல்வனும் செவ்வியனல்லன்; ஆதலால் புணர்ந்தோர் பொழுதிடைப் படுப்பினும் தணந்தோர் துணையை மறப்பினும் பூவாளியால் உயிர்கொள்ளுதல் அவற்குப் புதிதன்று; இதனை அறிந்தருள்வீராக’ எனத் தன் முற்றாத மழலைமொழியாற் சொல்லிச் சொல்லி எழுதி, வசந்த மாலையை அழைத்து, ‘இதன் பொருளையெல்லாம் கோவலற்கு ஏற்பச்சொல்லி, அவனைக்கொண்டு வருக’ என விடுத்தனள். மாலைபெற்ற வசந்தமாலை கூல மறுகில் கோவலனைக் கண்டு அதனைக் கொடுப்ப, அவன் ‘நாடக மகளாதலின் பலவகையாலும் நடித்தல் அவட்கு இயல்பு’ என்று கூறி, ஓலையை மறுத்திட, அவள் சென்று அதனை மாதவிக்குரைப்ப, ‘மாலை வாராராயினும் காலை காண்குவம்’ என்று, கையற்ற நெஞ்சமுடன் மலரமளியில் கண் பொருந்தாது கிடந்தனள். (இதன்கண் சில இசை யிலக்கணங்களும் கண்கூடு வரி முதலிய எண்வகை வரிகளும் கூறப்பட்டுள்ளன.)]
(நிலைமண்டில ஆசிரியப்பா)
நெடியோன் குன்றமும் தொடியோள் பெளவமும்
தமிழ்வரம்பு அறுத்த தண்புனல் நல்நாட்டு
மாட மதுரையும் பீடுஆர் உறந்தையும்
கலிகெழு வஞ்சியும் ஒலிபுனல் புகாரும்
அரைசுவீற் றிருந்த உரைசால் சிறப்பின் 5
மன்னன் மாரன் மகிழ்துணை ஆகிய
இன்இள வேனில் வந்தனன் இவண்என
வளம்கெழு பொதியில் மாமுனி பயந்த
இளங்கால் துதன் இசைத்தனன் ஆதலின்
மகர வெல்கொடி மைந்தன் சேனை 10
புகர்அறு கோலம் கொள்ளும்என் பதுபோல்
கொடிமிடை சோலைக் குயிலோன் என்னும்
படையுள் படுவோன் பணிமொழி கூற,
மடல்அவிழ் கானல் கடல்விளை யாட்டினுள்
கோவலன் ஊடக் கூடாது ஏகிய 15
மாமலர் நெடுங்கண் மாதவி விரும்பி
வான்உற நிவந்த மேல்நிலை மருங்கின்
வேனில் பள்ளி ஏறி மாண்இழை
தென்கடல் முத்தும் தென்மலைச் சாந்தும்
தன்கடன் இறுக்கும் தன்மைய ஆதலின் 20
கொங்கை முன்றில் குங்கும வளாகத்து
மைஅறு சிறப்பின் கையுறை ஏந்தி
அதிரா மரபின் யாழ்கை வாங்கி
மதுர கீதம் பாடினள் மயங்கி,
ஒன்பான் விருத்தியுள் தலைக்கண் விருத்தி 25
நன்பால் அமைந்த இருக்கையள் ஆகி,
வலக்கைப் பதாகை கோட்டொடு சேர்த்தி
இடக்கை நால்விரல் மாடகம் தழீஇச்
செம்பகை ஆர்ப்பே கூடம் அதிர்வே
வெம்பகை நீக்கும் விரகுளி அறிந்து, 30
பிழையா மரபின் ஈர்ஏழ் கோவையை
உழைமுதல் கைக்கிளை இறுவாய் கட்டி,
இணைகிளை பகைநட்பு என்றுஇந் நான்கின்
இசைபுணர் குறிநிலை எய்த நோக்கிக்
குரல்வாய் இளிவாய்க் கேட்டனள் அன்றியும் 35
வரன்முறை மருங்கின் ஐந்தினும் ஏழினும்
உழைமுதல் ஆகவும் உழைஈறு ஆகவும்
குரல்முதல் ஆகவும் குரல்ஈறு ஆகவும்
அகநிலை மருதமும் புறநிலை மருதமும்
அருகியல் மருதமும் பெருகியல் மருதமும் 40
நால்வகைச் சாதியும் நலம்பெற நோக்கி,
மூவகை இயக்கமும் முறையுளிக் கழிப்பித்
திறத்து வழிப்படூஉம் தெள்ளிசைக் கரணத்துப்
புறத்துஒரு பாணியில் பூங்கொடி மயங்கி,
சண்பகம் மாதவி தமாலம் கருமுகை 45
வெண்பூ மல்லிகை வேரொடு மிடைந்த
அம்செங் கழுநீர் ஆய்இதழ்க் கத்திகை
எதிர்ப்பூஞ் செவ்வி இடைநிலத்து யாத்த
முதிர்பூந் தாழை முடங்கல்வெண் தோட்டு
விரைமலர் வாளியின் வியன்நிலம் ஆண்ட 50
ஒருதனிச் செங்கோல் ஒருமகன் ஆணையின்
ஒருமுகம் அன்றி உலகுதொழுது இறைஞ்சும்
திருமுகம் போக்கும் செவ்வியள் ஆகி,
அலத்தகக் கொழுஞ்சேறு அளைஇ அயலது
பித்திகைக் கொழுமுகை ஆணி கைக்கொண்டு, 55
மன்உயிர் எல்லாம் மகிழ்துணை புணர்க்கும்
இன்இள வேனில் இளவர சாளன்
அந்திப் போதகத்து அரும்பிடர்த் தோன்றிய
திங்கள் செல்வனும் செவ்வியன் அல்லன்
புணர்ந்த மாக்கள் பொழுதுஇடைப் படுப்பினும் 60
தணந்த மாக்கள் தம்துணை மறப்பினும்
நறும்பூ வாளியின் நல்உயிர் கோடல்
இறும்பூது அன்றுஅஃது அறிந்தீ மின்என
எண்எண் கலையும் இசைந்துஉடன் போக
பண்ணும் திறனும் புறங்கூறு நாவின் 65
தளைவாய் அவிழ்ந்த தனிப்படு காமத்து
விளையா மழலையின் விரித்துஉரை எழுதி,
பசந்த மேனியள் படர்உறு மாலையின்
வசந்த மாலையை வருகெனக் கூஉய்த்
தூமலர் மாலையின் துணிபொருள் எல்லாம் 70
கோவலற்கு அளித்துக் கொணர்க ஈங்குஎன
மாலை வாங்கிய வேல்அரி நெடுங்கண்
கூல மறுகிற் கோவலற்கு அளிப்ப,
திலகமும் அளகமும் சிறுகருஞ் சிலையும்
குவளையும் குமிழும் கொவ்வையும் கொண்ட 75
மாதர் வாள்முகத்து மதைஇய நோக்கமொடு
காதலின் தோன்றிய கண்கூடு வரியும்,
புயல்சுமந்து வருந்திப் பொழிகதிர் மதியத்துக்
கயல்உலாய்த் திரிதரும் காமர் செவ்வியின்
பாகுபொதி பவளம் திறந்துநிலா உதவிய 80
நாகுஇள முத்தின் நகைநிலம் காட்டி
வருகென வந்து போகெனப் போகிய
கருநெடுங் கண்ணி காண்வரிக் கோலமும்,
அந்தி மாலை வந்ததற்கு இரங்கிச்
சிந்தை நோய் கூரும்என் சிறுமை நோக்கிக் 85
கிளிபுரை கிளவியும் மடஅன நடையும்
களிமயில் சாயலும் கரந்தனள் ஆகிச்
செருவேல் நெடுங்கண் சிலதியர் கோலத்து
ஒருதனி வந்த உள்வரி ஆடலும்,
சிலம்புவாய் புலம்பவும் மேகலை ஆர்ப்பவும் 90
கலம்பெறா நுசுப்பினள் காதல் நோக்கமொடு
திறத்துவேறு ஆயஎன் சிறுமை நோக்கியும்
புறத்துநின்று ஆடிய புன்புற வரியும்,
கோதையும் குழலும் தாதுசேர் அளகமும்
ஒருகாழ் முத்தமும் திருமுலைத் தடமும் 95
மின்இடை வருத்த நன்னுதல் தோன்றிச்
சிறுகுறுந் தொழிலியர் மறுமொழி உய்ப்பப்
புணர்ச்சிஉட் பொதிந்த கலாம்தரு கிளவியின்
இருபுற மொழிப்பொருள் கேட்டனள் ஆகித்
தளர்ந்த சாயல் தகைமென் கூந்தல் 100
கிளர்ந்துவேறு ஆகிய கிளர்வரிக் கோலமும்,
பிரிந்துஉறை காலத்துப் பரிந்தனள் ஆகி
என்உறு கிளைகட்குத் தன்உறு துயரம்
தேர்ந்துதேர்ந்து உரைத்த தேர்ச்சிவரி அன்றியும்,
வண்டுஅலர் கோதை மாலையுள் மயங்கிக் 105
கண்டவர்க்கு உரைத்த காட்சி வரியும்,
அடுத்துஅடுத்து அவர்முன் மயங்கிய மயக்கமும்
எடுத்துஅவர் தீர்த்த எடுத்துக்கோள் வரியும்,
ஆடல் மகளே ஆதலின் ஆயிழை.
பாடுபெற் றனஅப் பைந்தொடி தனக்குஎன, 110
அணித்தோட்டுத் திருமுகத்து ஆயிழை எழுதிய,
மணித்தோட்டுத் திருமுகம் மறுத்ததற்கு இரங்கி
வாடிய உள்ளத்து வசந்த மாலை
தோடுஅலர் கோதைக்குத் துனைந்துசென்று உரைப்ப
மாலை வாரார் ஆயினும் மாண்இழை. 115
காலைகாண் குவம்எனக் கையறு நெஞ்சமொடு
பூமலர் அமளிமிசைப் பொருந்தாது வதிந்தனள்
மாமலர் நெடுங்கண் மாதவி தான்என்.
(வெண்பா)
செந்தா மரைவிரியத் தேமாங் கொழுந்துஒழுக
மைந்தார் அசோகம் மடல்அவிழக் - கொந்தார்
இளவேனில் வந்ததால் என்ஆம்கொல் இன்று
வளவேல்நற் கண்ணி மனம். க
ஊடினீர் எல்லாம் உருஇலான் தன்ஆணை
கூடுமின் என்று குயில்சாற்ற - நீடிய
வேனற்பா ணிக்கலந்தாள் மென்பூந் திருமுகத்தைக்
கானற்பா ணிக்குஅலந்தாய் காண். உ
--------------------
நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் உரை
௧-௨. நெடியோன் குன்றமும் தொடியோள் பெளவமும்
தமிழ்வரம்பு அறுத்த தண்புனல் நல்நாட்டு
நெடியோன் குன்றமும் தொடியோள் பௌவமும் தமிழ் வரம்பு அறுத்த தண் புனல் நல் நாட்டு – வடக்கின்கண் வேங்கட மலையும் தெற்கின்கண் குமரிக்கடலும் எல்லையாக வரையறுக்கப்பட்ட குளிர்ச்சி பொருந்திய நீரையுடைய மூவேந்தருடைய உயர்ந்த தமிழ் நாட்டிடத்தே;
நெடியோன்-திருமால். தொடியோள்-குமரி. குமரியாறென்னாது குமரிப் பௌவம் என்றது குமரியாறு முன்னிகழ்ந்ததொரு கடல் கோளால் வௌவப்பெற்று அதனுட் கரந்தமையின் என்க. கிழக்கின் கண்ணும் மேற்கின்கண்ணும் ஒழிந்த கடல்களும் எல்லையாகவென விரித்துரைக்க. ஈண்டு அடியார்க்கு நல்லார் விரித்துரைத்த வரலாறு அறியற்பாலது.
{அடி. நெடியோன் குன்றமும் தொடியோள் நதியுமென்னாது பௌவமென்றது என்னையெனில், முதலூழியிறுதிக்கண் தென்மதுரையகத்துத் தலைச்சங்கத்து அகத்தியனாரும் இறையனாரும் குமரவேளும் முரஞ்சியூர் முடிநாகராயரும் நிதியின் கிழவனும் என்றிவருள்ளிட்ட நாலாயிரத்து நானூற்று நாற்பத்தொன்பதின்மர் எண்ணிறந்த பரிபாடலும் முதுநாரையும் முதுகுருகும் களரியா விரையும் உள்ளிட்ட வற்றைப் புனைந்து தெரிந்து நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றி யாண்டு இரீஇயினார் காய்சினவழுதி முதற் கடுங்கோனீறா யுள்ளார் எண்பத்தொன்பதின்மர். அவருட் கவியரங்கேறினார் எழுவர் பாண்டியருள் ஒருவன் சயமா கீர்த்தியனாகிய நிலந்தரு திருவிற்பாண்டியன் தொல்காப்பியம் புலப்படுத்து இரீஇயினான். அக்காலத்து அவர் நாட்டுத் தென்பாலி முகத்திற்கு வடவெல்லையாகிய பஃறுளியென்னுமாற்றிற்கும் குமரியென்னு மாற்றிற்குமிடையே எழுநூற்றுக் காவதவாறும், இவற்றின் நீர்மலி வானென மலிந்த ஏழ்தெங்கநாடும் ஏழ்மதுரை நாடும் ஏழ் முன் பாலை நாடும் ஏழ் பின்பாலை நாடும் ஏழ் குன்ற நாடும் ஏழ் குணகாரை நாடும் ஏழ் குறும்பனை நாடும் என்னும் இந்த நாற்பத்தொன்பது நாடும், குமரி கொல்லம் முதலிய பன்மலை நாடும், காடும், நதியும், பதியும், தடநீர்க் குமரி வடபெருங் கோட்டின்காறும் கடல் கொண்டொழிதலாற் குமரியாகிய பௌவமென்றா ரென்றுணர்க. இஃது என்னை பெறுமாறெனின் ’வடிவே லெறிந்த வான்பகை பொறாது, பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக், குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள’என்பதனானும், கணக்காயனார் மகனார் நக்கீரனாருரைத்த இறையனார் பொருளுரையானும், உரையாசிரியராகிய இளம்பூரணவடிகள் முகவுரையானும், பிறவாற்றானும் பெறுதும். }
௩-௭. மாட மதுரையும் பீடுஆர் உறந்தையும்
கலிகெழு வஞ்சியும் ஒலிபுனல் புகாரும்
அரைசுவீற் றிருந்த உரைசால் சிறப்பின்
மன்னன் மாரன் மகிழ்துணை ஆகிய
இன்இள வேனில் வந்தனன் இவண்என
மாட மதுரையும்-சிறந்த மாடங்களையுடைய மதுரையும், பீடு ஆர் உறந்தையும்-பெருமை பொருந்திய உறையூரும், கலிகெழு வஞ்சியும்-ஆரவாரம் பொருந்திய வஞ்சி நகரும், ஒலிபுனற் புகாரும்-ஒலிக்கின்ற நீரையுடைய காவிரிப்பூம்பட்டினமும் என்னும் நான்கிடத்தும், அரசு வீற்றிருந்த புகழமைந்த சிறப்பினையுடைய மாரனாகிய மன்னனுக்கு, மகிழ் துணையாகிய-மகிழும் துணைவனாகிய , இன் இளவேனில் வந்தது இவண் என-இன்பத்தைத் தரும் இளவேனில் என்பான் இங்கே வந்து விட்டான் என்று;
இளவேனிலாகிய இளவரசன் என்க. வேனில் என்றதற்கேற்ப வந்தது என்றார். வந்தது வரும் என்னும் எதிர்காலம் இறந்த காலத்தாற் கூறப்பட்டது, விரைவு பற்றி. இவண்-இங்கே;புகாரிலே.
௮-௧௩. வளம்கெழு பொதியில் மாமுனி பயந்த
இளங்கால் தூதன் இசைத்தனன் ஆதலின்
மகர வெல்கொடி மைந்தன் சேனை
புகர்அறு கோலம் கொள்ளும்என் பதுபோல்
கொடிமிடை சோலைக் குயிலோன் என்னும்
படையுள் படுவோன் பணிமொழி கூற,
வளம்கெழு பொதியில் மாமுனிபயந்த-வளம் பொருந்திய பொதியின் மலையிடத்துச் சிறந்த முனிவன் பெற்ற, இளங்கால் தூதன் இசைத்தனன் ஆதலின்-தென்றலாகிய தூதன் குயிலோனுக்குரைத்தனன் ஆதலானே, மகரவெல் கொடி மைந்தன் சேனை-வெற்றி பொருந்திய மகரக் கொடியையுடைய காமன் சேனையாயுள்ளா ரெல்லாரும், புகர் அறு கோலம் கொள்ளும் என்பது போல்-குற்றமற்ற கோலத்தைக் கொண்மின் என்னும் பொருள் பயப்ப, கொடிமிடை சோலைக் குயிலோன் என்னும் படையுள் படுவோன்-கொடிகள் நெருங்கிய சோலையென்னும் பாசறையிலிருக்கும் அக்குயிலோன் என்னும் சின்னம் ஊதி, பணிமொழி கூற-காற்றூதன் தனக்குப் பணித்த மொழியைச் சேனைக்குக் கூற ; அந்தணன் தூதிற்குரியனாகலின் மாமுனி பயந்த என்றார். இளங் காற்றூதன்-இளங்காலாகிய தூதன், இளைய காற்றூதன் ; ஒட்டன். சேனை-மகளிர். புகரறு கோலம்-அக் காலத்துக்கேற்ப உடுத்து முடித்துப் பூசிப் பூணுதல்; போர்க்கோலமென்றுமாயிற்று. கொள்ளும்-கொண்மின். என்பதுபோல்-என்ன. படையுள் படுவோன்-படைச்சிறுக்கன்; காளமூதி.
௧௪-௮. மடல்அவிழ் கானல் கடல்விளை யாட்டினுள்
கோவலன் ஊடக் கூடாது ஏகிய
மாமலர் நெடுங்கண் மாதவி விரும்பி
வான்உற நிவந்த மேல்நிலை மருங்கின்
வேனில் பள்ளி ஏறி
மடல் அவிழ் கானற் கடல் விளையாட்டினுள்-கடல் விளையாட்டின்கண்ணே பூக்கள் இதழ் விரியுங் கானலிடத்து, கோவலன் ஊடக் கூடாது ஏகிய-கோவலன் ஊடிச் சென்றமையால் அவனுடன் கூடாது தமியளாய்த் தன் மனையிற் புக்க, மா மலர் நெடுங்கண் மாதவி-கரிய மலர் போலும் நெடிய கண்களையுடைய மாதவி, விரும்பி-அதற்கு விரும்பி, வான் உற நிவந்த மேல்நிலை மருங்கின்-வானிலே பொருந்த வுயர்ந்த மேனிலையின் ஒரு பக்கத்தே, வேனிற் பள்ளி ஏறி-இளவேனிற் குரிய நிலாமுற்றமாகிய இடத்திலே ஏறி;
ஊடல் ஈண்டு வெறுத்தல். மா-கருமை. கோலங்கொண்மினென்று படையுள் படுவோன் கூறிய அதற்கு விரும்பியென்க. பள்ளி-இடம்.
௧௮-௨௨. மாண்இழை
தென்கடல் முத்தும் தென்மலைச் சாந்தும்
தன்கடன் இறுக்கும் தன்மைய ஆதலின்
கொங்கை முன்றில் குங்கும வளாகத்து
மைஅறு சிறப்பின் கையுறை ஏந்தி
மாண் இழை-அந்த மாட்சிமைப்பட்ட இழையினை யுடையாள்; தென்கடல் முத்தும் தென்மலைச் சாந்தும்-தென் கடலின் முத்தும் பொதியின் மலைச் சந்தனமும், தன் கடன் இறுக்கும் தன்மைய ஆதலின்-அக்காலத்திற்கு எப்பொழுதும் தான் கடனாக இடக்கடவ திறையாகலான், கொங்கை முன்றிற் குங்கும வளாகத்து-பின்பனிக் காலத்திற் குங்குமத்தால் அலங்கரிக்கப்பட்ட முலைமுற்றமாகிய பரப்பிலே, மைஅறு சிறப்பிற் கையுறை ஏந்தி-குற்றமற்ற சிறப்பினையுடைய அம் முத்தையும் சந்தனத்தையும் கையுறையாக ஏந்தி:
தன் என்றது மாதவியை. வளாகம்-பரப்பு. கையுறை காணிக்கை; பாகுடம். ஏந்தி யெனவே பூண்டும் பூசியுமென்பதாயிற்று. காணிக்கை காட்டுவார் காண்பார் முன்றிலிற் கொணர்ந்து காட்டுவாராகலிற் கொங்கை முன்றலில் ஏந்தி என்றார். ஈண்டு முற்றமாவது மார்பு.
௨௩-௯. அதிரா மரபின் யாழ்கை வாங்கி
மதுர கீதம் பாடினள் மயங்கி,
ஒன்பான் விருத்தியுள் தலைக்கண் விருத்தி
நன்பால் அமைந்த இருக்கையள் ஆகி,
ஒன்பான் விருத்தியுள் தலைக்கண் விருத்தி-ஒன்பது வகைப்பட்ட இருப்பினுள் முதற்கண்ணதாகிய நன்பால் அமைந்த இருக்கையள் ஆகி-பதுமாசனம் என்னும் நன்மை யமைந்த இருப்பினையுடையளாய், அதிரா மரபின் யாழ்கை வாங்கி-கோவை கலங்காத மரபினையுடைய யாழைக் கையில் வாங்கி, மதுர கீதம் பாடினள் மயங்கி-மிடற்றாலே முற்பட மதுர கீதமாகப் பாடி அது மயங்கிக் கலத்தாற் பாடத் தொடங்கினவள்; இருக்கையளாகி வாங்கிப் பாடினள் மயங்கி என மாறுக. விருத்தி-இருப்பு. நிற்றல் இருத்தல் கிடத்தல் இயங்குதல் என்பவற்றுள் இருத்தலின் பிரிவாகிய திரிதர வில்லா விருக்கை ஒன்பது வகைப்படும். அவை : பதுமுகம், உற்கட்டிதம், ஒப்படி, இருக்கை, சம்புடம், அயமுகம், சுவத்திகம், தனிப்புடம், மண்டிலம், ஏகபாதம் என்பன. இவற்றுள் முதற்கண்ணதாகிய பதுமுகம் என்பதே தலைக்கண் விருத்தியெனப்பட்டது. பதுமுகம்-பதுமாசனம். மேல் யாழாற் பாடுதல் கூறப்படுதலின் ஈண்டுப் பாடியது கண்டத்தாலென்பது பெற்றாம்.
௨௭-௮. வலக்கைப் பதாகை கோட்டொடு சேர்த்தி
இடக்கை நால்விரல் மாடகம் தழீஇச்
வலக்கை பதாகை கோட்டொடு சேர்த்தி-வலக்கையைப் பதாகையாகக் கோட்டின் மிசையே வைத்து, இடக்கை நால்விரல் மாடகம் தழீஇ-இடக்கை நால்விரலால் மாடகத்தைத் தழுவி ;
பதாகைக் கையாவது பெருவிரல் குஞ்சித்து ஒழிந்த விரலெல்லாம் நிமிர்த்தல், மாடகம்-நரம்பினை வீக்குங் கருவி.
௨௯-௩0. செம்பகை ஆர்ப்பே கூடம் அதிர்வே
வெம்பகை நீக்கும் விரகுளி அறிந்து,
செம்பகை ஆர்ப்பே அதிர்வே கூடம் வெம்பகை நீக்கும் விரகுளி அறிந்து-செம்பகை ஆர்ப்பு அதிர்வு கூடம் என்னும் இப்பகை நரம்பு நான்கும் புகாமல் நீக்கும் விரகைக் கடைப்பிடித்தறிந்து ;
செம்பகை முதலிய குற்றங்களினியல்பை, “செம்பகை யென்பது பண்ணோ டுளரா, இன்பமி லோசை யென்மனார் புலவர்” “ஆர்ப்பெனப் படுவ தளவிறந் திசைக்கும்” “அதிர்வெனப் படுவ திழுமென லின்றிச் சிதறி யுரைக்குந ருச்சரிப் பிசையே” “கூட மென்பது குறியுற விளம்பின், வாய்வதின் வராது மழுங்கி யிசைப் பதுவே” என்பவற்றானறிக. இவை மரக்குற்றத்தாற் பிறக்கும் என்னை ? “நீரிலே நிற்ற லழுகுதல் வேத னிலமயக்குப் பாரிலே நிற்ற லிடிவீழ்த னோய்மரப் பாற்படல் கோள், நேரிலே செம்பகை யாப்பொடு கூட மதிர்வுநிற்றல், சேரினேர் பண்க ணிறமயக் குப்படுஞ் சிற்றிடையே” என்றாராகலின்.
௩௧-௨. பிழையா மரபின் ஈர்ஏழ் கோவையை
உழைமுதல் கைக்கிளை இறுவாய் கட்டி,
பிழையா மரபின் ஈரேழ் கோவையை-மயங்கா மரபினை யுடைய பதினாற்கோவையாகிய சகோட யாழை, உழை முதல் கைக்கிளை இறுவாய்க் கட்டி-உழை குரலாகக் கைக்கிளை தாரமாகக் கட்டி ;
௩௩-௪. இணைகிளை பகைநட்பு என்றுஇந் நான்கின்
இசைபுணர் குறிநிலை எய்த நோக்கிக்
இணை கிளை பகை நட்பு என்று இந்நான்கின்-இணையும் கிளையும் பகையும் நட்புமாகிய இந்நான்கினுள், இசை புணர் குறிநிலை எய்த நோக்கி-இசை புணருங் குறிநிலையைப் பொருந்த நோக்கி;
இணை-இரண்டு நரம்பு, கிளை-ஐந்து நரம்பு, என்பர். பகை ஆறும் மூன்றும். நட்பு-நாலாம் நரம்பு. ‘இணையெனப் படுவ கீழு மேலும், அணையத் தோன்று மளவின வென்ப’ ”கிளையெனப் படுவ கிளக்குங் காலைக் குரலே யிளியே துத்தம் விளரி, கைக்கிளை யெனவைந் தாகுமென்ப” “நின்ற நரம்பிற் காறு மூன்றுஞ் சென்றுபெற நிற்பது கூடமாகும்” என்பன காண்க. கிளை-ஐந்தாம் நரம்பென்றலும் இணை இரண்டாம் நரம்பும் ஏழாம் நரம்பும் என்றலும் பொருத்தமாம்.
௩௫. குரல்வாய் இளிவாய்க் கேட்டனள்
குரல்வாய் இளிவாய்க் கேட்டனள்-குரலிடத்தும் அதற்கு ஐந்தாம் நரம்பாகிய இளியிடத்தும் இசை ஒத்திருத்தலைத் தன் செவியால் அளந்தறிந்தனள் ; குரல் முதலாக எடுத்து இளி குரலாக வாசித்தாள் என்பர் பழைய உரையாள ரிருவரும். இனி வட்டப்பாலை இடமுறைத் திரிபு கூறுகின்றார் எனத் தொடங்கி, உழை குரலாய்க் கோடிப்பாலையும், குரல் குரலாய்ச் செம்பாலையும், விளரி குரலாய்ப் படுமலைப்பாலையும் துத்தம் குரலாய்ச் செவ்ழிப்பாலையும் இளி குரலாய் அரும்பாலையும், கைக்கிளை குரலாய் மேற்செம்பாலையும், தாரம் குரலாய் விளரிப்பாலையும் பிறக்குமென்றார் அடியார்க்கு நல்லார். இவ்வுழி இப் பொருள் கொள்ளுதற்குச் செய்யுளில் யாதுஞ் சொல்லவில்லை. மற்றும் குரல்முதலேழும் முறையே குரலாய் நிற்கச் செம்பாலை படுமலைப்பாலை. செவ்வழிப்பாலை. அரும்பாலை, கோடிப்பாலை, விளரிப்பாலை, மேற்செம்பாலை என்னும் ஏழ் பெரும்பாலையும் பிறக்குமென ஆய்ச்சியர் குரவையுள்ளும், திவாகரம் முதலிய நிகண்டுகளினுள்ளும் கூறப்பட்டுள்ளது. அரங்கேற்று காதையுள்ளே உழை குரலாகச் செம்பாலையும், கைக்கிளை குரலாகப் படுமலைப்பாலையும், துத்தம் குரலாகச் செவ்வழிப்பாலையும், குரல் குரலாக அரும்பாலையும், தாரம் குரலாகக் கோடிப்பாலையும், விளரி குரலாக விளரிப்பாலையும், இளி குரலாக மேற்செம்பாலையும் பிறக்குமெனக் கூறப்பட்டுளது. இவ்விருவகையினும் வேறுபடப் பாலையேழும் பிறக்குமென ஈண்டு அடியார்க்குநல்லார் கூறியுள்ளார்.
௩௫-௬. அன்றியும்
வரன்முறை மருங்கின் ஐந்தினும் ஏழினும்
அன்றியும்-அங்ஙனம் வாசித்துச் செவியால் அளந்தறிந்த தன்றியும், வான்முறை மருங்கின் ஐந்தினும் ஏழினும்-வான் முறையாலே இளி முறையாற் பாடப்படும் ஏழு நரம்புகளினுள்ளே;
௩௭-௪௧. உழைமுதல் ஆகவும் உழைஈறு ஆகவும்
குரல்முதல் ஆகவும் குரல்ஈறு ஆகவும்
அகநிலை மருதமும் புறநிலை மருதமும்
அருகியல் மருதமும் பெருகியல் மருதமும்
நால்வகைச் சாதியும் நலம்பெற நோக்கி,
உழை முதலாகவும் உழை ஈறாகவும் குரல் முதலாகவும் குரல் ஈறாகவும்-உழைமுதல் உழையீறு குரல்முதல் குரலீறு ஆகவும், அகநிலை மருதமும் புறநிலை மருதமும் அருகியல் மருதமும் பெருகியல் மருதமும்-அகநிலை புறநிலை அருகியல் பெருகியல் எனப்படும் மருதத்தின், நால்வகைச்சாதி நலம் பெற நோக்கி-நால்வகைச் சாதிப் பண்களையும் நலம்பெற நோக்கி;
ஐந்து-இளி; ஆவது சட்சம் : ச ப முறையாலென்க. உழை முதலாக அகநிலை மருதம். உழை யீறாகப் புறநிலை மருதம். குரல் முதலாக அருகியல் மருதம், குரலீறாகப் பெருகியல் மருதம் என நிரனிறையாகக் கொள்க. தமிழிலே பாலையாழ், குறிஞ்சியாழ், மருதயாழ், செவ்வழியாழ் எனப் பெரும்பண் நான்கு வகைப்படும். இவை ஒவ்வொன்றும் நந்நான்கு வகையினையுடையன. இவற்றுள் பாலை யாழுக்குத் திறன் ஐந்தும் குறிஞ்சி யாழுக்குத் திறன் எட்டும், மருதயாழுக்குத் திறன் நான்கும், செவ்வழி யாழுக்குத் திறன் நான்கும் ஆகும். மற்றும் திறத்தின் வகையாகப் பாலையாழுக்குப் பதினைந்தும், குறிஞ்சி யாழுக்கு இருபத்து நான்கும். மருதயாழக்குப் பன்னிரண்டும். செவ்வழியானுக்குப் பன்னிரண்டும் உள்ளன. இவை யாவும் அகநிலை புறநிலை, அருகியல் பெருகியல் என நான்கு சாதிகளாகப் பாகுபாடெய்தும். பெரும் பண்களில் ஒன்றாகிய மருதயாழுக்கு அகநிலை - மருதயாழ், புறநிலை - ஆகரி. அருகியல்-சாயவேளர் கொல்லி, பெருகியல்-கின்னரம் என்னும் பண்களாம். இங்கே இளங்கோவடிகள் அருளிச்செய்த அகநிலை மருதம். புறநிலை மருதம். அருகியல் மருதம். பெருகியல் மருதம் என்பன இவையே போலும் ; பெரும்பண் பதினாறும் திறன் எண்பத்து நான்கும், இவற்றுளடங்காத தாரப்பண்டிறம், பையுள் காஞ்சி, படுமலை யென்னும் மூன்றும் ஆகப் பண்கள் நூற்று மூன்றாயினவாறு காண்க.
இளி உழை குரலாய கோடிப்பாலை அகநிலை மருதமும், கைக்கிளை குரலாய மேற்செம்பாலை புறநிலை மருதமும். குரல் குரலாய செம்பாலை அருகியல் மருதமும், தாரம் குரலாய விளரிப்பாலை பெருகியன் மருதமும் ஆமென்பர் அடியார்க்குநல்லார்.
இனி, அரும்பதவுரையாசிரியர் இந்நான்கினையும் குறித்துக் கூறுவன வருமாறு;-
௧. அகநிலை மருதமாவது “ஒத்த கிழமை யுழைகுரன் மருதம், துத்தமும் விளரியும் குறைபிற நிறையே,” இதன் பாட்டு:- ‘ஊர்க திண்டேர் ஊர்தற் கின்னே, நேர்க பாக நீயா வண்ணம்,’ நரம்பு பதினாறு.
௨. “புறநிலை மருதங் குரலுழை கிழமை, துத்தங் கைக்கிளை குறையா மேனைத், தாரம் விளரி யிளிநிறை யாகும்.” இதன் பாட்டு :-“அங்கட் பொய்கை யூரன் கேண்மை, திங்க ளோர்நாளாகுந் தோழி”நரம்பு பதினாறு.
௩. “அருகியன் மருதங் குரல்கிளை கிழமை, விளரி யிளிகுறையாகு மேனைத், துத்தந் தார முழையிவை நிறையே.” இதன் பாட்டு :- “வந்தானூரன் மென்றோள் வளைய, கன்றாய் போது காணாய் தோழி.” நரம்பு பதினாறு. (கிளை-கைக்கிளை)
௪. “பெருகியன் மருதம் பேணுங் காலை, அகநிலைக் குரிய நரம்பின திரட்டி, நிறைகுறை கிழமை பெறுமென மொழிப.”இதன் பாட்டு :- “மல்லூர்...........நோவ வெம்முன், சொல்லற் பாண சொல்லுங்காலை. எல்லிவந்த நங்கைக் கெல்லாம், சொல்லுங்காலைச் சொல்லு நீயே.”நரம்பு முப்பத்திரண்டு. பரிபாடல் ௧௭-ஆம் செய்யுளில், “ஒருதிறம், பாடினி முரலும்பாலையங் குரலின், நீடுகிளர் கிழமை நிறை குறை தோன்ற” என்பதற்கு. ‘பாலையையுடைய அழகிய மிடற்றுப் பாடற்கண் நாலு தாக்குடைய கிழமையும் இரண்டு தாக்குடைய..குறையும் தோன்ற’எனப் பரிமேலழகர் உரை கூறியிருத்தலின், கிழமை நான்கு தாக்கும், நிறை இரண்டு தாக்கும், குறை ஒரு தாக்கும் பெறுமெனக் கோடல் வேண்டும். மேலே காட்டிய பாட்டுக்களில் அகநிலை முதலிய மூன்றும் ஒற்று நீக்கிப் பதினாறெழுத்துக்களும் பெருகியல் ஒன்றும் முப்பத்திரண்டெழுத்துக்களும் பெற்று வருதலின், ஓரெழுத்து ஒரு நரம்பாகவும், ஒரு மாத்திரையாகவும் கொள்ளப்பட்டதென்பது புலனாகின்றது. ஆனால், “அகநிலை மருதத்துக்கு நரம்பணியும்படி :- உழை இளி விளரி உழை கைக்கிளை குரல் உழைகுரல் தாரம் இளிதாரம் துத்தம் இளி உழை. இவை உரைப்பிற் பெருகும்.”என்றுள்ள அரும்பதவுரையிற் பதினான்கு நரம்புகளே காணப்படுதல் முரணாகின்றது. இரண்டு விடுபட்டிருக்கும் போலும்.
௪௨. மூவகை இயக்கமும் முறையுளிக் கழிப்பித்
மூவகை இயக்கமும் முறையுளிக் கழிப்பி-வலிவு மெலிவு சமம் என்னும் மூவகை யியக்கத்தாலும் முறையாலே பாடிக் கழித்து;
நால்வகைச் சாதிப் பண்களையும் மூவகை யியக்கத்தாலும் பாடிக் கழித்தென்க.
௪௩-௪. திறத்து வழிப்படூஉம் தெள்ளிசைக் கரணத்துப்
புறத்துஒரு பாணியில் பூங்கொடி மயங்கி,
திறத்து வழிபடூஉம் தெள்ளிசைக் காணத்து-அவற்றின் வழிப்படும் திறப்பண்களைப் பாடுதல் செய்யுமிடத்து, புறத்து ஒரு பாணியிற் பூங்கொடி மயங்கி-நெஞ்சு கலங்கினாளாதலின் எடுத்த பண்ணுக்குப் புறமாகியதோ ரிசையிலே அவள் மயங்கி;
வழிபடூஉந் திறத்தென மாறுக. தெள்ளிசைக் கரணம்-யாழினும் மிடற்றினும் பாடுஞ் செய்கை. புறத்தொரு பாணியில் என்பதற்குப் புறநிலை மருதப் பண்ணில் என்றும், புறநீர்மை யென்னுந் திறத்தில் என்றும் உரைப்பாருமுளர்.
௪௫-௫௫. சண்பகம் மாதவி தமாலம் கருமுகை
வெண்பூ மல்லிகை வேரொடு மிடைந்த
அம்செங் கழுநீர் ஆய்இதழ்க் கத்திகை
எதிர்ப்பூஞ் செவ்வி இடைநிலத்து யாத்த
முதிர்பூந் தாழை முடங்கல்வெண் தோட்டு
விரைமலர் வாளியின் வியன்நிலம் ஆண்ட
ஒருதனிச் செங்கோல் ஒருமகன் ஆணையின்
ஒருமுகம் அன்றி உலகுதொழுது இறைஞ்சும்
திருமுகம் போக்கும் செவ்வியள் ஆகி,
அலத்தகக் கொழுஞ்சேறு அளைஇ அயலது
பித்திகைக் கொழுமுகை ஆணி கைக்கொண்டு
விரை மலர் வாளியின் வியல் நீலம் ஆண்ட-மணம் பொருந்திய மலராகிய சிறிய வாளியாலே பெரிய நிலமுழுதையும் ஆண்ட, ஒரு தனிச்செங்கோல் ஒரு மகன் ஆணையின்-ஒப்பற்ற தனிச் செங்கோலையுடைய ஒருவனாகிய காமராசன் ஆணையாலே, ஒருமுகம் அன்றி உலகு தொழுது இறைஞ்சும் திருமுகம்-ஒரு திசை யன்றி உலகமெல்லாம் தொழுது வணங்கப்படும் அவன் றிருமுகத்தை, போக்கும் செவ்வியள் ஆகி-கோவலற்கு விடுப்பே மென்னும் நினைவாற் பிறந்த செவ்வியை யுடையளாகி, சண்பகம் மாதவி தமாலம் கருமுகை வெண்பூ மல்லிகை வேரொடு மிடைந்த அம் செங்கழுநீர் ஆயிதழ்-சம்பகம் பச்சிலை பித்திகை வெள்ளிய பூவாகிய மல்லிகை எனனும் மலர்களாலும் வெட்டிவேராலும் அழகிய செங்கழுநீரின் நெருங்கிய மெல்லிய இதழ்களாலும் தொடுக்கப் பெற்ற, கத்திகை எதிர் பூஞ்செவ்வி-பூக்களின் மணம் மாறுபடும் செவ்வியையுடைய மாலையின், இடைநிலத்து யாத்த-நடுவிடத்தே தொடுத்த, முதிர் பூந்தாழை முடங்கல் வெண்தோட்டு-முதிர்ந்த தாழம் பூவினது முடக்கத்தையுடைய வெள்ளிய தோட்டிலே, அயலது பித்திகைக் கொழுநகை ஆணி கைக்கொண்டு-அதற்கு அயலிடத்தமைந்ததாகிய பித்திகையின் கொழுவிய முகையாகிய எழுத்தாணியைக் கையிற் கொண்டு, அலத்தகர் கொழுஞ்சேறு அளைஇ-அதனைச் செம்பஞ்சின் குழம்பிற் றோய்த்து உதறி எழுதுகின்றவள் ;
செவ்வியளாகி வெண்டோட்டில் ஆணி கைக் கொண்டு அளைஇ எழுதுகின்றவள் என மாறிக் கூட்டுக. தமாலம்-பச்சிலை. கருமுகை-பீத்திகை. வேர்-குறுவேர்; வெட்டிவேர். கத்திகை-மாலை. எதிர்தல்-மாறுபடுதல். நிலம்-இடம். ஒருமுகம்-ஒரு திசை; ஓரிடம். திருமுகம்-அரசர்கள் விடுக்குஞ் செய்தி வரைந்த ஏடு; மங்கல வழக்கு. அத்திருமுகங் கண்டுழி அதற்கஞ்சித் தணந்தார் கூடுதல் ஒருதலை யென்னுங் கருத்தான் அதனைக் காமராசனது திருமுக மென்றாளென்க.
௫௬-௬௭. மன்உயிர் எல்லாம் மகிழ்துணை புணர்க்கும்
இன்இள வேனில் இளவர சாளன்
அந்திப் போதகத்து அரும்பிடர்த் தோன்றிய
திங்கள் செல்வனும் செவ்வியன் அல்லன்
புணர்ந்த மாக்கள் பொழுதுஇடைப் படுப்பினும்
தணந்த மாக்கள் தம்துணை மறப்பினும்
நறும்பூ வாளியின் நல்உயிர் கோடல்
இறும்பூது அன்றுஅஃது அறிந்தீ மின்என
எண்எண் கலையும் இசைந்துஉடன் போக
பண்ணும் திறனும் புறங்கூறு நாவின்
தளைவாய் அவிழ்ந்த தனிப்படு காமத்து
விளையா மழலையின் விரித்துஉரை எழுதி,
மன்னுயிர் எல்லாம் மகிழ்துணை புணர்க்கும்-உலகில் நிலைபெற்ற உயிர்கள் யாவற்றையும் தாம் மகிழும் துணையோடு புணர்விக்கும், இன் இளவேனில் இளவரசாளன்-இனிய இளவேனிலென்பான் இளவரசன் ஆதலின் நெறிபடச் செய்யான், அந்திப்போதகத்து அரும்பிடர்த் தோன்றிய-அந்திப் பொழுதாகிய யானையின் அரிய பிடரிலே தோன்றிய, திங்கட் செல்வனும் செவ்வியன் அல்லன்-திங்களாகிய செல்வனும் கோட்டமுடையன், ஆதலால், புணர்ந்த மாக்கள் பொழுது இடைப்படுப்பினும்-புணர்ந்தோர் சிறிது பொழுதை இடையே பயமின்றாகக் கழிப்பினும், தணந்த மாக்கள் தம் துணை மறப்பினும்-பிரிந்து சென்றோர் தம் துணையை மறந்து வாராதொழியினும், நறும்பூ வாளி நல்லுயிர் கோடல் இறும்பூது அன்று-நறிய பூவாகிய அம்பு இன்புநுகரும் உயிரைக் கொண்டு விடுதல் புதுமையன்று, இஃது அறிந்தீமின் என-இதனை அறிமின் என்று, எண்ணெண் கலையும் இசைந்து உடன்போக-அறுபத்து நால்வகைக் கலைகளும் வழிபட்டுப் புகழ்ந்தொழுக, பண்ணும் திறனும் புறங்கூறு நாவில்-அவற்றுட் பண்களும் திறங்களும் புறங்கூறும் நாவில், தளைவாய் அவிழ்ந்த தனிப்படு காமத்து-தளை கட்டவிழ்ந்து குலைந்த தனிப்பட்ட காமத்தையுடைய, விளையா மழலையின் விரித்து உரை எழுதி-முற்றாத மழலையோடே பேசிப் பேசி யெழுதி; அந்திப் போதகத்து அரும்பு இடர்த் தோன்றிய எனப் பிரித்து அந்திப்பொழுதின் கண்ணே அரும்புகின்ற விரகவிதனத்தின் மேலே வந்து தோன்றிய திங்களாகிய செல்வன் என்று பொருளுரைப்பர் அடியார்க்கு நல்லார். இவர் அந்தியாகிய யானையின் புறக்கழுத்திற் றோன்றிய திங்களெனிற் பிறையாமாதலின். அது நாடுகாண் காதையுள் “வைகறையாமத்து, மீன்றிகழ் விசும்பின் வெண்மதி நீங்கக், காரிருள் நின்ற கடைநாட் கங்குல்” என்பதனோடும், கட்டுரை காதையுள் “ஆடித் திங்கட் பேரிருட் பக்கத் தழல்சேர் குட்டத் தட்டமி ஞான்று, வெள்ளி வாரத் தொள்ளெரி யுண்ண” என்பதனோடும், பிறவற்றோடும் மாறுகொள்ளுமாதலின் அவ்வுரை பொருந்தாதென மறுப்பர். ஆயின் இவர் கருத்துப்படியும் அந்தியோடு திங்களுக்குத் தொடர்பில்லா தொழியவில்லை என்பது கருதற்பாற்று. பொழுதிடைப் படுத்தல்-ஊடல் முதலியவற்றால் விட்டிருத்தல். தணத்தல்-ஓதல் முதலிய ஏதுவாகக் காடிடையிட்டும் நாடிடையிட்டும் பிரிந்திருத்தல். துணை மறத்தல்-குறித்த பருவத்து வாராது பொய்த்தல். வாளியின் எனப் பாடங்கொண்டு, வாளியால் உயிர்கோடல் அவற்குப் புதிதன்றென வுரைப்பர் அடியார்க்கு நல்லார். புறங்கூறும் நா-புறங் கூறுதற்குக் காரணமான நா. புறங்கூற்று - நிகரல்லார் தம் பொறாமையால் அவரில்வழி இகழ்ந்துரைப்பது. பண்ணையும் திறத்தையும் பழிக்கும் நாவென் றுரைப்பாரு முளர். தனிப்படு காமம்-சிறந்தார்க்கும் உரைக்கலாவதன்றாய் அரிதாய் அகத்தே சுட்டுருக்கும் காமம்.
௬௮-௭௧. பசந்த மேனியள் படர்உறு மாலையின்
வசந்த மாலையை வருகெனக் கூஉய்த்
தூமலர் மாலையின் துணிபொருள் எல்லாம்
கோவலற்கு அளித்துக் கொணர்க ஈங்குஎன
பசந்த மேனியள்-பசப்புற்ற மேனியை யுடையளாய், படர் உறு மாலையின்-நினைவுமிகும் மாலைக்காலத்தே, வசந்த மாலையை வருகெனக் கூஉய்-வசந்த மாலையை வருகவென அழைத்து, தூமலர் மாலையில் துணி பொருள் எல்லாம்-இத்தூய மலர்மாலையில் எழுதி தீர்ந்த பொருளை எல்லாம், கோவலற்கு அளித்துக் கொணர்க ஈங்கு என-கோவலற்கு ஏற்பச் சொல்லி இப்பொழுதே இங்கே கொணர்வாயாக என்றுரைக்க;
வசந்தமாலை -மாதவியின் சேடி.மாலையினிடையதொரு,தோட்டில் எழுதப்பெற்றதாகலின்,அதனை, மாலையிற்றுணிபொருள் என்றாள்; அன்றி அம்மாலை முழுதுமே காமன் றிருமுகமென்பது கருதியுமாம். அளிக்க வென்னாது அளித்துக் கொணர்க வென்றது இது காமன் திருமுகமாதலானும், முன் இவன் பிரிந்தது அறியாமையானாதலானும் என்க. இளவேனில் வந்தது கோலங்கொண்மினென்று குயிலிசைக்க மாதவி விரும்பி ஏறிக் கையுறை யேந்தி மயங்கி இருக்கையளாகிக் கேட்டனள் ; அன்றியும் நலம்பெற நோக்கிக் கழிப்பிப் பாணியில் மயங்கிச் செவ்வியளாகிக் கைக்கொண்டு அளைஇ எழுதிக் கூய் அளித்துக் கொணர்க ஈங்கென்றாள் என வினை முடிக்க.
௭௨-௩. மாலை வாங்கிய வேல்அரி நெடுங்கண்
கூல மறுகிற் கோவலற்கு அளிப்ப,
மாலை வாங்கிய வேல் அரிநெடுங்கண்-அங்ஙனம் மாதவி ஈந்த மாலையை வாங்கிய வேல் போலும் அரி பரந்த நெடிய கண்களையுடைய வசந்தமாலை போய், கூலமறுகிற் கோவலற்கு அளிப்ப-கூலங்கள் செறிந்த மறுகினையுடைய கோவலனைக் கண்டு அவனுக்கு அம்மாலையை நல்க; போய் எனவும், கண்டு எனவும் வருவிக்க. நெடுங்கண் , ஆகுபெயர்.
இனி, அம்மாலையைப் பெற்றே கோவலன் மாதவி பண்டு ஊடியும் கூடியும் சென்ற காலத்து அவள்பால் நிகழ்ந்த செய்திகளையெல்லாம் நாடகவுறுப்புக்களாகிய எண்வகை வரிக்கூத்தாகக் கொண்டு வெறுத்துரைத்தல் கூறுகின்றார். குரவை, வரி என்னும் இரண்டனுள் வரியாவது அவரவர் பிறந்த நிலத்தன்மையும் பிறப்பிற்கேற்ற தொழிற்றன்மையும் தோன்ற நடித்தல். அவ் வரி எட்டு வகைப்படும். அவை கண்கூடுவரி, காண்வரி, உள்வரி, புறவரி, கிளர்வரி, தேர்ச்சிவரி, காட்சிவரி, எடுத்துக் கோள்வரி என்பன. இவற்றினிலக்கணங்களை, “கண்கூ டென்பது கருதுங் காலை, இசைப்ப வாராது தானே வந்து தலைப்பெய்து நிற்குந் தன்மைத் தென்ப” “காண்வரி யென்பது காணுங் காலை, வந்த பின்னர் மனமகிழ் வுறுவன, தந்து நீங்குந் தன்மைய தாகும்” “உள்வரி யென்ப துணர்த்துங் காலை, மண்டல மாக்கள் பிறிதோ ருருவங், கொண்டுங் கொள்ளாது மாடுதற் குரித்தே” “புறவரி யென்பது புணர்க்குங் காலை இசைப்ப வந்து தலைவன் முற் படாது புறத்துநின் றாடிவிடைபெறு வதுவே” “கிளர் வரி யென்பது கிளக்குங் காலை, ஒருவருய்ப்பத் தோன்றி யவர்வாய், இருபுற மொழிப்பபொருள் கேட்டுநிற் பதுவே” ”தேர்ச்சி யென்பது தெரியுங் காலைக், கெட்ட மாக்கள் கிளைகண் டவர்முன், பட்டது முற்றது நிலைஇ யிருந்து தேர்ச்சியே டுரைப்பது தேர்ச்சிவரி யாகும்” “காட்சிவரி யென்பது கருதுங் காலைக் கெட்ட மாக்கள் கிளைகண் டவர்முனர்ப் பட்டது கூறிப் பரிந்துநிற் பதுவே” “எடுத்துக் கோளை யிசைக்குங் காலை, அடுத்தடுத்தழிந்த மாழ்கி யயலவர். எடுத்துகோள் புரிந்த தெடுத்துக்கோளே” என்பவற்றான் முறையே அறிக. இனி மாதவியின் செய்கையை இவற்றொடு பொருத்திக் கூறுமாறு காண்க.
௭௪-௭. திலகமும் அளகமும் சிறுகருஞ் சிலையும்
குவளையும் குமிழும் கொவ்வையும் கொண்ட
மாதர் வாள்முகத்து மதைஇய நோக்கமொடு
காதலின் தோன்றிய கண்கூடு வரியும்,
திலகமும் அளகமும்-திலகத்தையும் கூந்தலையுமுடைய, சிறுகருஞ் சிலையும் குவளையும் குமிழும் கொவ்வையும் கொண்ட-சிறிய கரிய வில்லையும் நீலமலரையும் குமிழும் பூவையும் கொவ்வைக் கணியையும் உறுப்பாகக் கொண்ட,மாதர்வாண்முகத்தின்-காதலையுடைய ஒள்ளியமுகத்தின்,மதைஇயநோக்ககமொடு-மதர்த்த நோக்கத்தோடே, காதலிற்றோன்றிய கண்கூடு வரியும்-என்மேற் காதலுடையாள் போற்றோன்றி முதற்கண் எதிர்முகமாக நின்று நடித்த நடிப்பும் ;
புருவம் முதலியன சிலை முதலிய உவமங்களாற் குறிக்கப்பட்டன. கண்கூடு-எதிர்முகமாதல்.
௭௮-௮௩. புயல்சுமந்து வருந்திப் பொழிகதிர் மதியத்துக்
கயல்உலாய்த் திரிதரும் காமர் செவ்வியின்
பாகுபொதி பவளம் திறந்துநிலா உதவிய
நாகுஇள முத்தின் நகைநிலம் காட்டி
வருகென வந்து போகெனப் போகிய
கருநெடுங் கண்ணி காண்வரிக் கோலமும்,
புயல் சுமந்து வருந்திப் பொழி கதிர் மதியத்து-முகிலைச் சுமந்து வருந்திக் கதிரைப் பொழியும் மதியிடத்தே, கயல் உலாய்த் திரிதரும் காமர் செவ்வியின்-கயல்கள் உலாவித் திரிகின்ற விருப்பம் பொருந்திய செவ்வியோடே, பாகு பொதி பவளம் திறந்து-பாகைப் பொதிந்த பவளத்தைத் திறந்து, நிலா உதவிய நாகு இளமுகத்தின் நகை நலம் காட்டி-ஒளியைத் தருகின்ற மிக்க இளமையுடைய முத்திநன் நகை நலத்தைக் காட்டி, வருகென வந்து போகெனப் போகிய-,கருநெடுங் கண்ணி காண்வரிக் கோலமும்-கரிய நெடிய கண்ணாளுடைய காண்வரி யென்னுங் கோலமும்;
ஈண்டும் குழல் முகம் விழி வாய் பல் என்பன முறையே புயன் மதி கயல் பவளம் முத்து என்னும் உவமங்களால் கற்போர் நெஞ்சம் காமுறுமாறு எழில்பெறக் கூறப்பட்டுள்ளன. அமிழ்தும் இன்சொல்லு முடைமையால் வாயினைப் பாகு பொதி பவளம் என்றார். நாகிள : ஒரு பொருளிரு சொல். நகை நலம்-ஒளிநலமும் பல்நலமுமாம்.
௮௪-௯. அந்தி மாலை வந்ததற்கு இரங்கிச்
சிந்தை நோய் கூரும்என் சிறுமை நோக்கிக்
கிளிபுரை கிளவியும் மடஅன நடையும்
களிமயில் சாயலும் கரந்தனள் ஆகிச்
செருவேல் நெடுங்கண் சிலதியர் கோலத்து
ஒருதனி வந்த உள்வரி ஆடலும்,
அந்தி மாலை வந்ததற்கு இரங்கி-யான் ஊடிப் பிரிந்த காலத்து அந்திமாலை வந்ததாகப் பிரிவாற்றாமையால் இரங்கி, சிந்தை நோய் கூரும் என்சிறுமை நோக்கி-சிந்தையில் நோய்மிகும் என் வருத்தத்தை நோக்கி, கிளிபுரை கிளவியும்-கிள்ளையை யொத்த சொல்லையும், மடஅன நடையும்-மடப்பத்தையுடைய அன்ன மன்ன நடையினையும், களிமயிற் சாயலும்-களிப்பையுடைய மயில்போலுஞ் சாயலினையும், கரந்தனள் ஆகி-மறைத்தவளாகி, செருவேல் நெடுங்கட் சிலதியர் கோலத்து-போர் புரியும் வேல்போன்ற நெடிய கண்ணையுடைய சிலதியர் கோலத்தைக் கொண்டு, ஒரு தனி வந்த உள்வரி ஆடலும்-தான் தனியே வந்து நின்று நடித்த உள்வரி யென்னும் நடிப்பும் ;
சிலதியர்-ஏவற் பெண்டிர்; சிறு குறுந்தொழிலியர். உள்வரி - வேற்றுருக்கொள்ளுதல்.
௯0-௩. சிலம்புவாய் புலம்பவும் மேகலை ஆர்ப்பவும்
கலம்பெறா நுசுப்பினள் காதல் நோக்கமொடு
திறத்துவேறு ஆயஎன் சிறுமை நோக்கியும்
புறத்துநின்று ஆடிய புன்புற வரியும்,
சிலம்பு வாய் புலம்பவும் மேகலை ஆர்ப்பவும்-சிலம்பு வாய்விட்டு புலம்பவும் மேகலை வாய்விட்டு ஆர்ப்பவும், கலம்பெறா நுசுப்பினள்-கலங்களைப் புனையவும் பெறாத இடையினை யுடையாள்,காதல் நோக்கமொடு-காதலையுடையாள்போல் நோக்கிய நோக்கோடே, திறத்து வேறாய் என் சிறுமை நோக்கியும்-தன்னைப் பிரிதலால் இயல்பு திரிந்த என் வருத்தத்தை யறிந்தும், புறத்து நின்று ஆடிய புன் புறவரியும்-என்னுடன் அணையாது புறம்பே நின்று நடித்த புல்லிய புறநடிப்பும்;
நுசுப்பினள் புலம்பவும் ஆர்ப்பவும் நோக்கமொடு நோக்கியும் ஆடிய வரியுமென்க. கலம் பொறா என்பது பாடமாயின் கலத்தினைச் சுமக்கலாற்றாத என்க.
௯௩-௧0௧. கோதையும் குழலும் தாதுசேர் அளகமும்
ஒருகாழ் முத்தமும் திருமுலைத் தடமும்
மின்இடை வருத்த நன்னுதல் தோன்றிச்
சிறுகுறுந் தொழிலியர் மறுமொழி உய்ப்பப்
புணர்ச்சிஉட் பொதிந்த கலாம்தரு கிளவியின்
இருபுற மொழிப்பொருள் கேட்டனள் ஆகித்
தளர்ந்த சாயல் தகைமென் கூந்தல்
கிளர்ந்துவேறு ஆகிய கிளர்வரிக் கோலமும்,
கோதையும் குழலும் தாது சேர் அளகமும்-பூந்துகள் பொருந்திய மாலையும் குழலும் அளகமும், ஒரு காழ் முத்தமும் திருமுலைத் தடமும்-ஒரு வடமாகிய முத்தமும் அழகிய முலையிடமும், மின் இடை வருத்த-மின்போலும் இடையினை வருத்தும்படி, நன்னுதல் தோன்றி-நல்ல நெற்றியை யுடையாள் அணுக வாராதே புறவாயிலில் வந்து நின்று, சிறுகுறுந் தொழிலியர் மறுமொழி உய்ப்ப-சிலதியர் எனது மறு மாற்றத்தைச் சொல்ல, புணர்ச்சி உட்பொதிந்த கலாம் தரு கிளவியின்-புணர்ச்சியை உட்பொதிந்திருக்கிற எனது புலவிச் சொல்லைக் கேட்டு, இருபுற மொழிப் பொருள் கேட்டனள் ஆகி-அதனை இருபுற மொழிப்பொருளாகக் கொண்டு, தளர்ந்த சாயல் தகைமென் கூந்தல்-தளர்ந்த மேனியினையும் அழகிய மெல்லிய கூந்தலினையுமுடையாள், கிளர்ந்து வேறாகிய கிளர்வரிக் கோலமும்-புலவியால் வேறுபட்டுப் போகின்றாள்போல நடித்துப் போன நடிப்பும்
தாது சேர்கோதை யெனக் கூட்டுக. குழல், அளகம் என்பன கூந்தலின் இருவகை முடிகள். ஐம்பாலில் இரண்டு. இருபுற மொழிப்பொருள்-இரண்டு வகையாகப் பொருள் பயக்குஞ் சொல். யான் புணர்ச்சி நிமித்தமாகப் புலந்துசொல்லிவிட்ட மொழியைக் கேட்டு அவ்வாறன்றிப் புலந்து சொன்னேனாகக் கொண்டு நடந்தாள் என்றான். நன்னுதல் கூந்தல் வருத்தந் தோன்றி உய்ப்பக்கேட்டு வேறாகிய என்க.
௧0௨-௪. பிரிந்துஉறை காலத்துப் பரிந்தனள் ஆகி
என்உறு கிளைகட்குத் தன்உறு துயரம்
தேர்ந்துதேர்ந்து உரைத்த தேர்ச்சிவரி அன்றியும்,
பிரிந்து உறை காலத்துப் பரிந்தனள் ஆகி-நான் பிரிந்துறையும் பொழுதில் தான் பிரிவாற்றாது வருந்தினளாகப் பாவித்து, என் உறு கிளைகட்கு-என் மிக்க கிளைகளாயினார்க்கு, தன் உறு துயரம்-தனது மிக்க துயரத்தை, தேர்ந்து தேர்ந்து உரைத்த தேர்ச்சி வரி அன்றியும்-தேர்ந்து தேர்ந்து உரைக்கின்றாளாக நடித்த நடிப்பும், அதுவன்றியும்;
௧0௫-௬. வண்டுஅலர் கோதை மாலையுள் மயங்கிக்
கண்டவர்க்கு உரைத்த காட்சி வரியும்,
வண்டு அலர் கோதை-வண்டுகளால் அலர்த்தப்படும் பூங்கோதையினை யுடையாள், மாலையுள் மயங்கி-மாலைப் பொழுதிலே மயங்கி, கண்டவர்க்கு உரைத்த காட்சி வரியும்-காணப்பட்ட கிளைகள் யாவர்க்கும் தன் பிரிவுத் துன்பத்தைச் சொல்லி நடித்த நடிப்பும்;
௧0௭-௮. அடுத்துஅடுத்து அவர்முன் மயங்கிய மயக்கமும்
எடுத்துஅவர் தீர்த்த எடுத்துக்கோள் வரியும்,
அடுத்தடுத்து அவர் முன் மயங்கிய மயக்கம்-பல்காலும் அவர் முன்பு தான் மயங்கிய மயக்கத்தை, எடுத்து அவர் தீர்த்த எடுத்துக்கோள் வரியும்-அவர் எடுத்துத் தீர்த்த எடுத்துக்கோள்வரி யென்னும் நடிப்பும்;
௧0௯-௧0. ஆடல் மகளே ஆதலின் ஆயிழை.
பாடுபெற் றனஅப் பைந்தொடி தனக்குஎன,
ஆடல் மகளே ஆதலின் ஆயிழை-ஆயிழாய், நாடக மகளே யாதலால், பாடு பெற்றன அப் பைந்தொடி தனக்கு என – இங்ஙனம் நடித்த நடிப்புக்கள் அப்பைந்தொடிக்குப் பெருமை யாவனவே என்று கூற;
ஆயிழை - வசந்தமாலை ; விளி. பைந்தொடி ஆடன் மகளாதலின் நடிப்புக்கள் அவட்கு இல்பாவனவை என்று கூறி ஓலையை மறுத்தானென்க. மாதவியின் செய்கையில் வைத்து எண்வகை வரியையும் விளக்கிய திறப்பாடு வியத்தற்குரியது.
௧௧௧-௪. அணித்தோட்டுத் திருமுகத்து ஆயிழை எழுதிய,
மணித்தோட்டுத் திருமுகம் மறுத்ததற்கு இரங்கி
வாடிய உள்ளத்து வசந்த மாலை
தோடுஅலர் கோதைக்குத் துனைந்துசென்று உரைப்ப
அணித்தோட்டுத் திருமுகத்து ஆயிழை எழுதிய-அழகிய பொற்றோடு அணிந்த திருமுகத்தையுடைய மாதவி யெழுதிய, மணித்தோட்டுத் திருமுகம் மறுத்தற்கு இரங்கி-அழகிய தாழந்தோட்டுத் திருமுகத்தைக் கோவலன் மறுப்பத் தான் அதற்கு வருந்தி, வாடிய உள்ளத்து வசந்தமாலை-வாட்டமுற்ற உள்ளத்தையுடைய வசந்தமாலை, தோடு அலர் கோதைக்கு துனைந்து சென்று உரைப்ப-இதழ் விரிந்த மாலையையுடைய மாதவிக்கு விரைந்து சென்று உரைக்க;
அணியும் மணியும் அழகு. தோடு-பொற்றோடும் தாழந்தோடும்.
௧௧௫-௮. மாலை வாரார் ஆயினும் மாண்இழை
காலைகாண் குவம்எனக் கையறு நெஞ்சமொடு
பூமலர் அமளிமிசைப் பொருந்தாது வதிந்தனள்
மாமலர் நெடுங்கண் மாதவி தான்என்.
மாலை வாரார் ஆயினும்-இன்னும் மாலைப் பொழுதினுள் வருவார்; அங்ஙனம் வாராராயினும், மாண் இழை-மாட்சிமைப்பட்ட அணியினையுடையாய், காலை காண்குவம் என-காலைப் பொழுதில் ஈண்டு நாம் காண்போமெனச் சொல்லி, கையறு நெஞ்சமொடு-செயலற்ற மனத்தோடு, பூமலர் அமளி மிசைப் பொருந்தாது வதிந்தனள்-தானிருந்த அழகிய மலரமளியின் மீதே வீழ்ந்து இமை பொருந்தாமற் கிடந்தனள், மா மலர் நெடுங்கண் மாதவி தான் என்-கரிய மலர்போலும் நெடிய கண்ணையுடைய மாதவிதான் என்க.
வாராராயினும் என்றது வருவாரென்னும் பொருளை அடக்கிநின்றது. காலையில் ஒருதலையாக வருவாரென்பாள் காண்குவம் என்றாள். தான், என் -அசைகள்.
இது நிலைமண்டில வாசிரியப்பா.
வெண்பாவுரை
௧. செந்தா மரைவிரியத் தேமாங் கொழுந்துஒழுக
மைந்தார் அசோகம் மடல்அவிழக் - கொந்தார்
இளவேனில் வந்ததால் என்ஆம்கொல் இன்று
வளவேல்நற் கண்ணி மனம்.
செந்தாமரை விரிய-செந்தாமரை மலர் விரியவும், தேமாங் கொழுந்து ஒழுக-தேமாவின் கொழுந்து ஒழுகுவது போலும் வனப்புடன் தளிர்க்கவும், மைந்து ஆர் அசோகம் மடல் அவிழ-அழகு பொருந்திய அசோகம் இதழ் விரியவும், கொந்து ஆர்-பூங்கொத்துக்கள் நிறைதற்கேதுவாய், இளவேனல் வந்தது-இளவேனிற் பொழுது வந்தது; என்னாங்கொல் இன்று வளவேல் நற்கண்ணி மனம் – கூரிய வேல் போலும் நல்ல கண்ணினை யுடையாள் மனம் இன்று என்ன துன்பமுறுமோ !
மைந்து-அழகு. கொந்து-கொத்து; மெலித்தல். வேனல்-வேனில். வேலுக்கு வளமாவது கூர்மை. ஆல், அசை. இது வசந்தமாலையென்னும் கூனி ஓலை கொண்டு செல்கின்ற காலத்துத் தன்னுள்ளே சொல்லியது.
௨. ஊடினீர் எல்லாம் உருஇலான் தன்ஆணை
கூடுமின் என்று குயில்சாற்ற - நீடிய
வேனற்பா ணிக்கலந்தாள் மென்பூந் திருமுகத்தைக்
கானற்பா ணிக்குஅலந்தாய் காண்
ஊடினீர் எல்லாம் – உலகில் ஒருவனும் ஒருத்தியுமாயுள்ளோரின் ஊடினவர்களே நீயிரெல்லாம், உருவிலான்றன் ஆணை-அநங்கன் ஆணை, கூடுமின் என்று குயில் சாற்ற-கூடுவீராக வென்று குயிற்குலங்கள் சாற்ற, நீடிய வேனற் பாணிக் கலந்தாள்-இளவேனிற் பொழுதில் நின்னோடு என்றும் கலந்தவளுடைய, மென்பூந் திருமுகத்தை-மெல்லிய பூவிலெழுதிய திருமுகத்தை, கானற் பாணிக்கு அலந்தாய் காண்-கானலிடத்து அவள் பாடிய பாட்டிற்கு வருந்தினவனே காண்பாயாக.
நீடிய கானற்பாணி என்றுமாம். பாணி இரண்டனுள் முன்னது பொழுது, பின்னது பாட்டு. இதனைக் காணென்று ஓலையை நீட்டினாள் என்க.
வேனிற்காதை முற்றிற்று.
-------------------------
9. கனாத்திறமுரைத்த காதை
{ஞாயிறு மறைந்த மாலைப்பொழுதிலே புகார்நகரில் உள்ள பூங்கொடியனைய மகளிர்கள் முல்லைமலரும் நெல்லும் தூவி விளக்கேற்றி இல்லுறை தெய்வத்தை வழிபட்டு இரவிற்கேற்ற வேறு கோலத்தினைக் கொள்ளாநிற்க. சாத்தன் கோயிலில் நாடோறும் வழிபாடு செய்யும் நியமம் பூண்டிருந்த, கண்ணகியின் பார்ப்பனத் தோழியாகிய தேவந்தியென்பாள் கண்ணகிக்கு உற்றதொரு குறையுண்டென எண்ணிய மனத்தினளாய்க் கோயிலை யடைந்து, இவள் கணவனைப் பெறல் வேண்டுமென அறுகு முதலியவற்றைத் தூவி வழிபட்டுக்கண்ணகிபாற் போய், ‘கணவனைப் பெறுக’ என வாழ்த்தினாள். அதுகேட்ட கண்ணகி ‘நீ இங்ஙனம் கூறுதலாற் பெறுவேனாயினும் யான்கண்ட கனவினால் எனது நெஞ்சு ஐயுறா நின்றது’என்று கூறித் தான் கண்ட கனவினை எடுத்தியம்பி, அதற்கு விடையாக, “நீ நின் கணவனால் வெறுக்கப்பட்டாயல்லை; முற்பிறப்பிலே கணவன் பொருட்டுக் காக்க வேண்டியதொரு நோன்பு தப்பினாய்; அத் தீங்கு கெடுவதாக; காவிரியின் சங்கமுகத் துறையை அடுத்த கானலில் உள்ள சோமகுண்டம் சூரியகுண்டம் என்னும் பொய்கையில் நீராடிக் காமவேள் கோட்டத்தைத் தொழுத மகளிர் இம்மையிற் கணவருடன் கூடி இன்புற்று மறுமையிலும் போக பூமியிற் போய்ப் பிறந்து கணவரைப் பிரியாதிருப்பர்; ஆதலின் நாமும் ஒரு நாள் நீராடுவோமாக” என்றுரைத்த தேவந்திக்கு, ‘அங்ஙனம் துறைமூழ்கித் தெய்வந்தொழுதல் எங்கட்கு இயல்பன்று’ என்று கூறி இருந்தாள். இருந்த அப்பொழுது கோவலன் அங்கு வந்து கண்ணகியோடு பள்ளியறையில் புகுந்து, அவளது வாடிய மேனி கண்டு வருந்தி, ‘கரவொழுக்கமுடைய பரத்தையொடு மருவி என் முன்னோர் தேடித்தந்த பொருட்குவியலையெல்லாம் இழந்து வறுமையுற்றேன்; இஃது எனக்கு மிக்க நாணினைத் தருகின்றது’என்று கூறினான். கூறலும், மாதவிக்குக் கொடுக்கப் பொருளில்லாமையால் இங்ஙனம் கூறுகின்றான் எனக் கண்ணகி நினைந்து நகை முகங் காட்டி, ‘என்னிடம் இரண்டு சிலம்புகள் உள்ளன; கொண்மின்’ என எடுத்தளிப்ப, அவற்றை வாங்கிய கோவலன் ‘இச்சிலம்பினை முதலாகக் கொண்டு யான் மதுரையை அடைந்து வாணிகஞ் செய்து இழந்த பொருளை ஈட்டத் துணிந்துள்ளேன்; நீயும் என்னுடன் எழுக’ என்றுரைத்து, பழவினையானது நெஞ்சை ஒருப்படுத்தலால், ஞாயிறு தோன்றுதற்குமுன் அவ்வினையின் ஏவலைக் கொண்டான். (இக்காதையின் முதற்பகுதியில் தேவந்தியின் வரலாறு கூறுமிடத்தே புகாரில் இருந்த கோட்டங்கள் பலவற்றின் பெயரும் கூறப்பட்டுள்ளன.)}
(கலி வெண்பா )
அகநகர் எல்லாம் அரும்புஅவிழ் முல்லை
நிகர்மலர் நெல்லொடு தூஉய்ப் பகல்மாய்ந்த
மாலை மணிவிளக்கம் காட்டி இரவிற்குஓர்
கோலம் கொடிஇடையார் தாம்கொள்ள, மேல்ஓர்நாள்:
மாலதி மாற்றாள் மகவுக்குப் பால்அளிக்கப் 5
பால்விக்கிப் பாலகன் தான்சோர மாலதியும்
பார்ப்பா னொடுமனையாள் என்மேல் படாதனவிட்டு
ஏற்பன கூறார்என்று ஏங்கி மகக்கொண்டு
அமரர் தருக்கோட்டம் வெள்யானைக் கோட்டம்
புகர்வெள்ளை நாகர்தம் கோட்டம் பகல்வாயில் 10
உச்சிக் கிழான்கோட்டம் ஊர்க்கோட்டம் வேல்கோட்டம்
வச்சிரக் கோட்டம் புறம்பணையான் வாழ்கோட்டம்
நிக்கந்தக் கோட்டம் நிலாக்கோட்டம் புக்குஎங்கும்
தேவிர்காள் எம்உறுநோய் தீர்ம்அன்று மேவிஓர்
பாசண்டச் சாத்தற்குப் பாடு கிடந்தாளுக்கு, 15
ஏசும் படிஓர் இளங்கொடியாய் ஆசுஇலாய்
செய்தவம் இல்லோர்க்குத் தேவர் வரம்கொடார்
பொய்உரையே அன்று பொருள்உரையே கையிற்
படுபிணம்தா என்று பறித்துஅவள்கைக் கொண்டு
சுடுகாட்டுக் கோட்டத்துத் தூங்குஇருளில் சென்றுஆங்கு 20
இடுபிணம் தின்னும் இடாகினிப்பேய் வாங்கி
மடியகத்து இட்டாள் மகவை, இடியுண்ட
மஞ்ஞைபோல் ஏங்கி அழுதாளுக்கு அச்சாத்தன்
அஞ்ஞைநீ ஏங்கி அழல்என்று முன்னை
உயிர்க்குழவி காணாய்என்று அக்குழவி யாய்ஓர் 25
குயில்பொதும்பர் நீழல் குறுக அயிர்ப்புஇன்றி
மாயக் குழவி எடுத்து மடித்திரைத்துத்
தாய்கைக் கொடுத்தாள்அத் தையலாள், தூய
மறையோன்பின் மாணியாய் வான்பொருள் கேள்வித்
துறைபோய் அவர்முடிந்த பின்னர் இறையோனும் 30
தாயத்தா ரோடும் வழக்குஉரைத்துத் தந்தைக்கும்
தாயர்க்கும் வேண்டும் கடன்கழித்து மேயநாள்
தேவந்தி என்பாள் மனைவி அவளுக்குப்
பூவந்த உண்கண் பொறுக்கென்று மேவித்தன்
மூவா இளநலம் காட்டிஎம் கோட்டத்து 35
நீவா எனஉரைத்து நீங்குதலும், தூமொழி
ஆர்த்த கணவன் அகன்றனன் போய்எங்கும்
தீர்த்தத் துறைபடிவேன் என்றுஅவனைப் பேர்த்துஇங்ஙன்
மீட்டுத் தருவாய் எனஒன்றன் மேல்இட்டுக்
கோட்டம் வழிபாடு கொண்டிருப்பாள் வாட்டருஞ்சீர்க் 40
கண்ணகி நல்லாளுக்கு உற்ற குறைஉண்டுஎன்று
எண்ணிய நெஞ்சத்து இனையளாய் நண்ணி
அறுகு சிறுபூளை நெல்லொடு தூஉய்ச் சென்று
பெறுக கணவனோடு என்றாள், பெறுகேன்
கடுக்கும்என் நெஞ்சம் கனவினால் என்கை 45
பிடித்தனன் போய்ஓர் பெரும்பதியுள் பட்டேம்
பட்ட பதியில் படாதது ஒருவார்த்தை
இட்டனர் ஊரார் இடுதேள்இட்டு என்தன்மேல்
கோவலற்கு உற்றதுஓர் தீங்குஎன்று அதுகேட்டுக்
காவலன் முன்னர்யான் கட்டுரைத்தேன் காவலனோடு 50
ஊர்க்குஉற்ற தீங்கும்ஒன்று உண்டால் உரையாடேன்
தீக்குற்றம் போலும் செறிதொடீஇ தீக்குற்றம்
உற்றேனோடு உற்ற உறுவனொடு யான்உற்ற
நல்திறம் கேட்கின் நகைஆகும், பொற்றொடிஇ
கைத்தாயும் அல்லை கணவற்கு ஒருநோன்பு 55
பொய்த்தாய் பழம்பிறப்பில் போய்க்கெடுக உய்த்துக்
கடலொடு காவிரி சென்றுஅலைக்கும் முன்றில்
மடல்அவிழ் நெய்தல்அம் கானல் தடம்உள
சோமகுண்டம் சூரிய குண்டம் துறைமூழ்கிக்
காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடு 60
தாம்இன் புறுவர் உலகத்துத் தையலார்
போகம்செய் பூமியினும் போய்ப்பிறப்பர் யாம்ஒருநாள்
ஆடுதும் என்ற அணிஇழைக்குஅவ் ஆய்இழையாள்
பீடுஅன்று எனஇருந்த பின்னரே, நீடிய
காவலன் போலும் கடைத்தலையான் வந்துநம் 65
கோவலன் என்றாள்ஓர் குற்றிளையாள், கோவலனும்
பாடுஅமை சேக்கையுள் புக்குத்தன் பைந்தொடி
வாடிய மேனி வருத்தம்கண்டு, யாவும்
சலம்புணர் கொள்கைச் சலதியொடு ஆடிக்
குலம்தரு வான்பொருள் குன்றம் தொலைந்த 70
இலம்பாடு நாணுந் தருமெனக் கென்ன
நலங்கேழ் முறுவல் நகைமுகங் காட்டிச்
சிலம்புள கொண்மெனச் சேழியை கேளிச்
சிலம்பு முதலாகச் சென்ற நலனோ
டுவந்தபொரு ளீட்டுத லுற்றேன் மலர்ந்தசீர் 75
மாட மதுரை யகத்துச்சென்று என்னோடுஇங்கு
ஏடுஅலர் கோதாய். எழுகென்று நீடி
வினைகடைக் கூட்ட வியம்கொண்டான் கங்குல்
கனைசுடர் கால்சீயா முன்.
(வெண்பா)
காதலி கண்ட கனவு கருநெடுங்கண்
மாதவிதன் சொல்லை வறிதாக்க - மூதை
வினைகடைக் கூட்ட வியம்கொண்டான் கங்குல்
கனைசுடர் கால்சீயா முன்.
-----------------
நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் உரை
௧-௪. அகநகர் எல்லாம் அரும்புஅவிழ் முல்லை
நிகர்மலர் நெல்லொடு தூஉய்ப் பகல்மாய்ந்த
மாலை மணிவிளக்கம் காட்டி இரவிற்குஓர்
கோலம் கொடிஇடையார் தாம்கொள்ள,
அகல் நகர் எல்லாம்-அகன்ற மனையிடமெங்கும், அரும்பு அவிழ்-அரும்பு முறுக்கு நெகிழ்ந்த, முல்லை நிகர் மலர்-முல்லையின் ஒளி பொருந்திய மலரை, நெல்லொடு தூஉய்-நெல்லுடன் தூவி, பகல் மாய்ந்த மாலை-பகலவன் மறைந்த மாலைப் பொழுதிலே, மணி விளக்கம் காட்டி-அழகிய விளக்கை யேற்றி, இரவிற்கு ஓர் கோலம்-இராப்பொழுதிற்கேற்றதொரு கோலத்தை, கொடி இடையார் தாம் கொள்ள-கொடி போலும் இடையையுடைய மகளிர் கொள்ளாநிற்க;
நிகர்-ஒலி. மாய்தல்-மறைதல். தூவி இல்லுறை தெய்வத்தை வணங்கி யென விரித்துரைத்துக் கொள்க. ”நெல்லு மலருந் தூஉய்க் கைதொழுது மல்ல லாவண மாலை யயர” என்றார் நக்கீரனாரும். மணி விளக்கம் என்பதனை உம்மைத் தொகையாகக் கொண்டு மாணிக்க விளக்கை மைவிளக்கோடே யெடுத்து என்றுரைப்பாருமுளர். இரவிற் கோர் கோலம்-கொழுநர் மார்பை அணைதற்கேற்ற நொய்தானவை உடுத்தும் புனைந்தும் ஒப்பனை செய்த கோலம். கொடியிடையார் மாலையின்கண் தூவிக் காட்டிக் கோலங்கொள்ள என்றியைக்க. தாம் , அசை.
௪-௬. மேல்ஓர்நாள்,மாலதி மாற்றாள் மகவுக்குப் பால்அளிக்கப்
பால்விக்கிப் பாலகன் தான்சோர மாலதியும்
மேல் ஓர் நாள்-முன்னொரு நாளிலே, மாலதி-மாலதியென்னும் பெயருடைய ஒரு பார்ப்பனி, மாற்றாள் மகவுக்குப் பால் அளிக்க-தனது மாற்றாளின் குழவிக்குத் தன் முலை சுரந்த பாலைச் சங்கால் ஊட்ட, பால் விக்கிப் பாலகன் தான் சோர-அப்பால் விக்குதலாலே அக்குழவி மரிக்க ;
மேலோர் நாள் என்பது தொடங்கிக் கண்ணகியின் பார்ப்பனத் தோழியாகிய தேவந்தியின் வரலாறு கூறுகின்றார். மாற்றாள்-கணவனுடைய மற்றொரு மனைவி; சக்களத்தி. மாற்றாள் இல்லாத பொழுது குழவி யழுதமையாற் பாலளித்தாளென்க. பால்-ஆன்பாலுமாம். பாலகன் என்பது காலவழக்கு. சோர்தல்-ஈண்டு மரித்தல். மேலைநாள் என்றும் பாடம்.
௬-௮. பார்ப்பா னொடுமனையாள் என்மேல் படாதனவிட்டு
ஏற்பன கூறார்என்று ஏங்கி மகக்கொண்டு
மாலதியும்-, பார்ப்பானொடு மனையாள்-பார்ப்பானும் அவன் மனைவியும், என்மேல் படாதன விட்டு-என்மேல் அடாப்பழி கூறுதலொழிந்து, ஏற்பன கூறார் என்று ஏங்கி-ஏற்பன கூறாராதலால் இதற்கென் செய்கேனென்று ஏங்கி, மகக் கொண்டு-அம் மகவை யெடுத்துக் கொண்டு; பார்ப்பான் - கணவன். ஒடு - எண்ணொடு. படாதன-இல்லாதன; அடாதன. கூறுதலென ஒரு சொல் விரிக்க. படாதன இட்டு எனப் பிரித்து, அடாதவற்றைச் சுமத்தி யென்றுரைத்தலுமாம்.
௯-௧௩. அமரர் தருக்கோட்டம் வெள்யானைக் கோட்டம்
புகர்வெள்ளை நாகர்தம் கோட்டம் பகல்வாயில்
உச்சிக் கிழான்கோட்டம் ஊர்க்கோட்டம் வேல்கோட்டம்
வச்சிரக் கோட்டம் புறம்பணையான் வாழ்கோட்டம்
நிக்கந்தக் கோட்டம் நிலாக்கோட்டம் புக்குஎங்கும்
அமரர் தருக் கோட்டம்-தேவர் தருவாகிய கற்பகம் நிற்குங் கோயில், வெள் யானைக் கோட்டம்-ஐராவதம் நிற்குங்கோயில், புகர் வெள்ளை நாகர் தம் கோட்டம்-அழகினையுடைய பலதேவர் கோயில், பகல்வாயில் உச்சிக்கிழான் கோட்டம்-கீழ்த்திசையிற்றோற்றுகின்ற சூரியன் கோயில், ஊர்க்கோட்டம்-இறைவன் ஊராகிய கைலாயம் நிற்குங் கோயில், வேற்கோட்டம்-முருகவேள் கோயில், வச்சிரக் கோட்டம்-வச்சிரப்படை நிற்குங் கோயில், புறம்பணையான் வாழ் கோட்டம்-சாதவாகனன் மேவிய கோயில், நிக்கந்தன் கோட்டம்-அருகன் கோயில், நிலாக்கோட்டம்-சந்திரன் கோயில், புக்கு எங்கும்-இக்கூறிய கோயில்கள் எங்கும் புக்கு;
புகர்-அழகு. நாகர்-தேவர். பகல் வாயில்-பகற்றோற்றுகிற வாயில்; கீழ்த்திசை. உச்சிக்கிழான்-பகற்பொழுதிற் குரியோன். இனி, பகற்பொழுதிற்கு வழியான சூரியன் என்றுமாம். வேல் - ஆகுபெயர். வேற்படை நிற்குங் கோயில் என்றுமாம். புறம்பு அணைந்த விடம் புறம்பணையாயிற்று என்பர். சாதவாகனன்-ஐயனார். கோட்டம் யாவும் செவ்வெண்.
௧௪-௫. தேவிர்காள் எம்உறுநோய் தீர்ம்அன்று மேவிஓர்
பாசண்டச் சாத்தற்குப் பாடு கிடந்தாளுக்கு,
தேவிர்காள்-தெய்வங்களே, எம் உறுநோய்-எம்மையுற்ற இத்துன்பத்தை; தீர்ம் என்று-தீர்ப்பீராக வென்று கூறிக்கொண்டு சென்று, மேவிஓர் பாசண்டச் சாத்தற்கு-ஒரு பாசண்டச்சாத்தன் கோயிலை அடைந்து அவன்பால், பாடு கிடந்தாளுக்கு-வரங்கிடந்தாளுக்கு;
தேவு-தெய்வம்; இர் ; முனனிலைப்பன்மை விகுதி. உறு-மிக்க என்றுமாம். தீர்ம்-தீரும் என்பதன் ஈற்று மிசை யுகரம் கெட்டது. தீர்மினென்று இரப்பவும் ஒருவரும் தீராமையின் அவ்விடங்களினீங்கிச் சாத்தன் கோயில் மேவியென்று விரித்துரைத்தலுமாம். பாசண்டம்-தொண்ணூற்றறுவகைச் சமயசாத்திரத் தருக்கக்கோவை என்பர். “பாசண்டத்துறையு மிவற்றுட் பலவாம், பேசிற்றொண்ணூற்றறுவகைப் படுமே”என்பது திவாகரம். இவற்றிற்கு முதலாயுள்ள சாத்திரங்களைப் பயின்றவனாகலின் மகாசாத்திரன் என்பது இவற்குப் பெயராயிற்று என்பர். கிடந்தாளுக்கு-கிடந்தாளை: உருபு மயக்கம்.
௧௬-௨௨. ஏசும் படிஓர் இளங்கொடியாய் ஆசுஇலாய்
செய்தவம் இல்லோர்க்குத் தேவர் வரம்கொடார்
பொய்உரையே அன்று பொருள்உரையே கையிற்
படுபிணம்தா என்று பறித்துஅவள்கைக் கொண்டு
சுடுகாட்டுக் கோட்டத்துத் தூங்குஇருளில் சென்றுஆங்கு இடுபிணம் தின்னும் இடாகினிப்பேய் வாங்கி
மடியகத்து இட்டாள் மகவை,
ஏசும்படி ஓர் இளங் கொடியாய்-பிறரைப் பழிக்கும் வடிவையுடையதொரு பெண்வடிவாய் தோன்றிப் பாடு கிடந்தாளை நோக்கி, ஆசு இலாய்-குற்றமற்றவளே, செய்தவம் இல்லோர்க்குத் தேவர் வரம் கொடார்-செய்யப்பட்ட தவமுடையரல்லார்க்கு, பொய் உரை அன்று பொருள் உரையே-இது பொய்யுரை அன்று மெய்யுரையே எனச்சொல்லி, கையிற்படு பிணம் தர என்று-கையினுள்ள குழவி இறந்த பிணத்தைப் பார்ப்பதற்குத் தாராயென்று, பறித்து அவள் கைக்கொண்டு-அவள் கையினின்றும் பறித்து, சுடுகாட்டுக் கோட்டத்து-சக்கரவாளக் கோட்டத்தில், தூங்கு இருளிற் சென்று-செறிந்த இருளிற் போய், ஆங்கு இடு பிணம் தின்னும்-அங்கே குழியிலிடும் பிணங்களைத் தின்னும், இடாகினிப் பேய்-இடாகினிப் பேயானவள், வாங்கி மடியகத்து இட்டாள் மகவை-அக்குழவியை வாங்கி வயிற்றிலே இட்டாள்;
படி-வடிவு. இளங்கொடி-பெண். ஏசும்படி-இகழும்படி என்றுமாம். பொருள்-மெய்ம்மை. சுடுகாட்டுக் கோட்டம்-சக்கரவாளக் கோட்டம்; இதன் வரலாறு மணிமேகலையிற் சக்கரவாளக் கோட்டமுரைத்த காதையாலறியப்படும். தூங்கு இருள்-யாவரும் துயிலுமிருளுமாம். மடி-வயிறு என்னும் பொருட்டாதலை, “படியை மடியகத் திட்டான்”என்பதனாலும் அறிக. மடியகத்திட்டாள்-விழுங்கினாள் என்றபடி. கோட்டத்து இருளிற்சென்று தின்னும்பேய் இளங்கொடியாய்த் தோன்றி, வரங்கொடார் பொருளுரையே எனச் சொல்லி, தாவென்று பறித்து வாங்கி அம் மகவை மடியகத்திட்டாள் என்க. பேய் இளங் கொடியாய் இருளிற் சென்று என்றுரைத்தலுமாம். பறித்தாள் கைக்கொண்டு என்பதும் பாடம்.
௨௨-௮. இடியுண்ட
மஞ்ஞைபோல் ஏங்கி அழுதாளுக்கு அச்சாத்தன்
அஞ்ஞைநீ ஏங்கி அழல்என்று முன்னை
உயிர்க்குழவி காணாய்என்று அக்குழவி யாய்ஓர்
குயில்பொதும்பர் நீழல் குறுக அயிர்ப்புஇன்றி
மாயக் குழவி எடுத்து மடித்திரைத்துத்
தாய்கைக் கொடுத்தாள்அத் தையலாள், தூய
இடியுண்ட மஞ்ஞைபோல் ஏங்கி அழுதாளுக்கு-அப்பொழுது இடிக்குரல் கேட்ட மயில் அகவுமாறுபோல ஏங்கியழுகின்றவளை நோக்கி, அச்சாத்தன்-அந்தச் சாத்தன் என்னும் தெய்வம், அஞ்ஞை-அன்னாய், நீ ஏங்கி அழல்என்று-நீஏங்கி அழாதொழி என்று கூறி, முன்னை உயிர்க்குழவி காணாய் என்று அக்குழவியாய் ஓர் குயிற்பொதும்பர் நீழல் குறுக-நீ செல்லும்வழி முன்னர்க் குயில்களையுடைய ஒரு மரச் செறிவின் நீழலில் உயிருடன் கிடக்கும் குழவியைக் காண்பாயென்று தான் அக்குழவியாய் அவ்விடத்துச் சென்று கிடப்ப, அயிர்ப்பு இன்றி மாயக் குழவி எடுத்து மடித்திரைத்து-ஐயமின்றி அவ்வஞ்சகக் குழவியைத் தன் குழவியென்றெடுத்து வயிற்றிலணைத்துக் கொடுபோய், தாய் கைகொடுத்தாள் அத்தையலாள்-அவள் தாயின் கையிற் கொடுத்தாள்;
அஞ்ஞை-அன்னை; அண்மை விளி. அழல்-அழாதே. முன்னை-வழி முன்னர்; பழைய குழியென்றுமாம். அச்சாத்தன் அக்குழவியாய்க் குறுக அத் தையலாள் எடுத்துக் கொடுத்தாள் என்க.
௨௮-௩௨. மறையோன்பின் மாணியாய் வான்பொருள் கேள்வித்
துறைபோய் அவர்முடிந்த பின்னர் இறையோனும்
தாயத்தா ரோடும் வழக்குஉரைத்துத் தந்தைக்கும்
தாயர்க்கும் வேண்டும் கடன்கழித்து மேயநாள்
தூய மறையோன் பின் மாணியாய்-இருமரபுந் தூய மறையோனுக்குப் பின் செல்லும் பிரமசாரியாய், வான் பொருட் கேள்வித்துறை போய்-சிறந்த கல்வியிலும் கேள்வியிலும் துறை போகி, அவர் முடிந்த பின்னர்-தந்தை தாயர் இறந்த பின்பு, இறையோனும்-குழவியாய் வந்த சாத்தனும், தாயத்தாரோடும் வழக்குரைத்து-தன் ஞாதிகளோடும் வெல்வழக்குரைத்து, தந்தைக்கும் தாயர்க்கும் வேண்டும் கடன் கழித்து-தந்தை தாயர்க்குச் செய்ய வேண்டிய நீர்க்கடன் முதலியவற்றைச் செய்து முடித்து, மேய நாள்-தன் மனைவியோடே கூடி வாழ்ந்த பின் ஒரு நாளில் ;
வான்பொருள் – கல்வி. அவர் - தந்தையும் தாயரும். தாயர் என்றார் மாலதியையுங் கூட்டி. வழக்குரைத்து எனவே, தன் மனைவிக்குப் பொருட்குறைபாடில்லாமற் செய்து என்பதாயிற்று. இறையோனும் மாணியாய்த் துறைபோய் அவர் முடிந்த பின்னர்க் கடன் கழித்து வழக்குரைத்து மேவியபின் ஓர் நாள் என்க. மேவினாள் என்று பாடங் கொண்டு தன்னை மேவினவள் என்றுரைப்பர் அரும்பதவுரையாசிரியர்.
௩௩-௬. தேவந்தி என்பாள் மனைவி அவளுக்குப்
பூவந்த உண்கண் பொறுக்கென்று மேவித்தன்
மூவா இளநலம் காட்டிஎம் கோட்டத்து
நீவா எனஉரைத்து நீங்குதலும்,
தேவந்தி என்பாள் மனைவி அவளுக்கு-தன் மனைவியாகிய தேவந்தி யென்று பெயர் கூறப்படும் அவளுக்கு, பூ வந்த உண் கண் பொறுக்கென்று-பூவின்றன்மையுடைய மையுண்ட கண் இதனைப் பொறுப்பதாக என்று நிருமித்து, மேவி-பின்பு அவளைப் பொருந்தி, தன் மூவா இள நலம் காட்டி-தனது என்றும் மூத்தலில்லாத இளைய அழகினை வெளிப்படுத்தி, எம் கோட்டத்து நீ வா என உரைத்து நீங்குதலும்-நீ எமது கோட்டத்திற்கு வாவெனச் சொல்லி நீங்கினானாக;
மக்கள்கண் தெய்வ யாக்கையைக் காணப் பொறாதாகலின் இவள் கண் பொறுக்க வென்று விதித்தனன். தன் மூவா இளநலம்-தனது தெய்வ யாக்கையின் நலம்; “மணங்கமழ் தெய்வத் திளநலங் காட்டி” என்றார் திருமுருகாற்றுப் படையினும். சாத்தன் தேவந்தியுடன் எட்டி யாண்டு வாழ்ந்து, பின்பு இங்ஙனம் நீங்கினன் என மேல் வரந்தரு காதையுட் கூறப்பட்டுள்ளது.
௩௬-௪0. தூமொழி
ஆர்த்த கணவன் அகன்றனன் போய்எங்கும்
தீர்த்தத் துறைபடிவேன் என்றுஅவனைப் பேர்த்துஇங்ஙன்
மீட்டுத் தருவாய் எனஒன்றன் மேல்இட்டுக்
கோட்டம் வழிபாடு கொண்டிருப்பாள்
தூமொழி-தூய மொழியினையுடையளாய தேவந்தி, ஆர்த்த கணவன்-எனது நெஞ்சினைப் பிணித்த கணவன், அகன்றனன் போய் எங்கும் தீர்த்தத் துறை படிவேன் என்று- தீர்த்தத் துறைகளெங்கும் போய்த் தீர்த்தமாடுவேன் என்று என்னைவிட்டு நீங்கினன்; அவனைப் பேர்த்து இங்ஙன் மீட்டுத் தருவாய் என-அவனை மறித்தும் இவ்விடத்தே அழைத்துத் தருவாயென, ஒன்றன்மேல் இட்டு-ஒரு பெயரிட்டுக் கொண்டு, கோட்டம் வழிபாடு கொண்டிருப்பாள்-அவன் கோயிலை நாடோறும் வழிபடுதலைக் கடனாகக் கொண்டிருப்பவள்;
௪0-௪. வாட்டருஞ்சீர்க்
கண்ணகி நல்லாளுக்கு உற்ற குறைஉண்டுஎன்று
எண்ணிய நெஞ்சத்து இனையளாய் நண்ணி
அறுகு சிறுபூளை நெல்லொடு தூஉய்ச் சென்று
பெறுக கணவனோடு என்றாள்,
வாட்டருஞ்சீர்-குறைதலில்லாத புகழையுடைய, கண்ணகி நல்லாளுக்கு-கண்ணகியாகிய நங்கைக்கு, உற்ற குறையுண்டு என்று – கணவன் பிரிதலால் உற்றதொரு துன்பமுண்டென்று, எண்ணிய நெஞ்சத்து இளையளாய்-நினைந்த நெஞ்சின் வருத்தத்தையுடையளாய், நண்ணி-கோயிலை யடைந்து, அறுகு சிறுபூளை நெல்லொடு தூஉய்-அறுகு முதலியவற்றை இவள் கணவனைப் பெறல்வேண்டுமெனத் தூவி வழிபட்டு, சென்று-கண்ணகிபாற் போய், பெறுக கணவனோடு என்றாள் - கணவனைப் பெறுவாயாகவென வாழ்த்தினாள்;
வாடு வாட்டென விகாரமாயிற்று. வாடுதல் குறைதல்; பிறராற் கெடுத்தற்கரிய என்றுமாம். இனைதல் – வருந்துதல்; இனைதல் இனையென்றாயிற்று; விகாரம். கணவனோடு: வேற்றுமை மயக்கம். கண்ணகிபாற் சென்று நண்ணித் தூவிப் பெறுக வென்றாள் எனினுமமையும்.
௪௪-௫௪. பெறுகேன்
கடுக்கும்என் நெஞ்சம் கனவினால் என்கை
பிடித்தனன் போய்ஓர் பெரும்பதியுள் பட்டேம்
பட்ட பதியில் படாதது ஒருவார்த்தை
இட்டனர் ஊரார் இடுதேள்இட்டு என்தன்மேல்
கோவலற்கு உற்றதுஓர் தீங்குஎன்று அதுகேட்டுக்
காவலன் முன்னர்யான் கட்டுரைத்தேன் காவலனோடு ஊர்க்குஉற்ற தீங்கும்ஒன்று உண்டால் உரையாடேன்
தீக்குற்றம் போலும் செறிதொடீஇ தீக்குற்றம்
உற்றேனோடு உற்ற உறுவனொடு யான்உற்ற
நல்திறம் கேட்கின் நகைஆகும்,
பெறுகேன்-நீ இங்ஙனம் கூறுதலால் பெறுவேனாயினும், கடுக்கும் என் நெஞ்சம் கனவினால்-யான் உற்றதொரு கனவினால் என் நெஞ்சம் ஐயுறுகின்றது; அக்கனவு என்னையெனின், என் கைபிடித்தனன் போய்-என் கொழுநன் என்னைக் கையைப் பற்றி அழைத்துப் போக, ஓர் பெரும் பதியுட்பட்டேம்-யாங்கள் ஒரு பெரிய பதியின்கட்புக்கேம், பட்ட பதியில்-அங்ஙனம் புக்க பதியிலே, படாதது ஒரு வார்த்தை இட்டனர் ஊரார் இடுதேள் இட்டு என்றன்மேல்-எங்கட்கு ஏலாததொரு பழிச்சொல்லை அவ்வூரார் இடுதேளிடுமாறுபோல் என்மேல் போட்டனர்; கோவலற்கு உற்றது ஓர் தீங்கு என்று அது கேட்டு-அப் பழிமொழியால் கோவலற்கு ஒரு துன்பமுண்டாயிற்றென்று பிறர் சொல்ல அதனைக் கேட்டு, காவலன் முன்னர் யான் கட்டுரைத்தேன்-அவ்வூரரசன் முன்னர் யான் சென்று வழக்குரைத்தேன் ; காவலனொடு ஊர்க்கு உற்ற தீங்கு ஒன்றும் உண்டால்-அதனால் அவ் வரசனோடு அவ்வூர்க்கு உற்றதொரு தீங்குண்டு; உரையாடேன் – அது தீக்கனாவாதலால் நினக்கு அதனை உரையேன்; தீக்குற்றம் போலும் செறிதொடீஇ-செறிந்த தொடியினை யுடையாய், அப்பொழுது கடியதொரு குற்றம் உளதாயிற்று; தீக்குற்றம் உற்றேனொடு உற்ற உறுவனோடு யான் உற்ற-அத் தீய குற்றத்தை யுற்ற என்னோடு பொருந்திய மேலோனுடன் யான் பெற்ற, நற்றிறம் கேட்கின் நகையாகும்-நற்பேற்றினை நீ கேட்பாயாயின் அது நினக்கு நகையைத் தரும் (என-என்று சொல்ல), கடுக்கும்-ஐயுறும்; கடியென்னும் உரிச்சொல் அடியாகப் பிறந்தது. கனவில் என் கைப் பிடித்தனன் போக எனலுமாம். இடு தேளிடுதல்-தேளல்லாத தொன்றை மறைய மேலே போகட்டு அஞ்சப் பண்ணுதல். என்றன், தன் - அசை. கோவலன் சிலம்பு கவர்ந்தான் என்ற பழிச்சொல்லைத் தானே சுமப்பதாகக் கொண்டு என்றன்மேல் இட்டனர் என்றாள். என்று-என்று சொல்ல; சொல்ல என ஒரு சொல் வருவிக்க. அரசன் முன் செல்லாதேன் சென்று வழக்குரையாதேன் வழக்குரைத்தேன் என்றாளென்க. காவலனொடு, ஒடு -எண்ணொடு: வேறுவினை ஒடுவுமாம். தீங்கு-அரசன் இறத்தலும், ஊர் எரியுண்ணலும். “உரையார், இழித்தக்க காணிற் கனா” என்பாராகலின், உரையாடேன் என்றாள். தீக்குற்றம்-முலை திருகி யெறிதல். உறுவன்-மிக்கோன், கோவலன். நற்றிறம்-இருவரும் துறக்கம் புகுதல். இது கிட்டாதென்று நகையாகும் என்றாள். என வென ஒரு சொல் வருவித்து நகையாகுமென என்றுரைக்க.
௫௪-௬௪. பொற்றொடீஇ
கைத்தாயும் அல்லை கணவற்கு ஒருநோன்பு
பொய்த்தாய் பழம்பிறப்பில் போய்க்கெடுக உய்த்துக்
கடலொடு காவிரி சென்றுஅலைக்கும் முன்றில்
மடல்அவிழ் நெய்தல்அம் கானல் தடம்உள
சோமகுண்டம் சூரிய குண்டம் துறைமூழ்கிக்
காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடு
தாம்இன் புறுவர் உலகத்துத் தையலார்
போகம்செய் பூமியினும் போய்ப்பிறப்பர் யாம்ஒருநாள்
ஆடுதும் என்ற அணிஇழைக்குஅவ் ஆய்இழையாள்
பீடுஅன்று எனஇருந்த பின்னரே,
பொற்றொடீஇ-பொன்னாலாய தொடியினை யுடையாய், கைத்தாயும் அல்லை – நீ அவனால் வெறுக்கப்பட்டாயுமில்லை, கணவற்கு ஒரு நோன்பு பொய்த்தாய் பழம் பிறப்பில்-முற்பிறப்பில் நின் கணவன் பொருட்டுக் காக்க வேண்டியதொரு நோன்பு தப்பினாய், போய்க் கெடுக-அதனால் உண்டாய தீங்கு கெடுவதாக, உய்த்துக் கடலொடு காவிரி சென்று அலைக்கும் முன்றில்-காவிரிதன் நீரைக் கொண்டு சென்று கடலோடு எதிர்த்து அலைக்கும் சங்கமுகத்தயலதாகிய, மடல் அவிழ் நெய்தல் அம் கானல்-பூவின் இதழ் விரியும் நெய்தனிலத்துக் கானலிடத்தே, தடம்உள சோமகுண்டம் சூரிய குண்டம்-சோம குண்டம் சூரிய குண்டம் என்னும் பெயரையுடைய இரண்டு பொய்கைகள் உள்ளன; துறை மூழ்கி-அவற்றின் துறைகளில் மூழ்கி, காமவேள் கோட்டம் தொழுதார்-மன்மதன் கோயிலையடைந்து அவனை வணங்கினாராயின், கணவரொடு தாம் இன்புறுவர் உலகத்துத் தையலார்-மகளிர் இவ்வுலகத்திலே தம் கணவரோடும பிரியாதிருந்து இன்பமுறுவர், போகம்செய் பூமியினும் போய்ப் பிறப்பர்-மறுமையிலும் போகபூமியிற் போய்ப் பிறந்து கணவரோடும் பிரிவின்றி இன்பம் நுகர்வர், யாம் ஒரு நாள் ஆடுதும் என்ற் அணீயிழை- அவற்றுள் யாமும் ஒருநாள் ஆடக்கடவேம் என்று கூறிய தேவந்திக்கு, அவ் ஆயிழையாள் பீடு அன்று என இருந்த பின்னரே-கண்ணகி அங்ஙனம் துறை மூழ்கித் தெய்வந் தொழுதல் எங்கட்கு இயல்பன்று என்று சொல்லி இருந்தவளவிலே;
பொய்த்தாயாகலின் தீங்குமிக்கது அதுவுங் கெடுக என்றும், போய்ப் பிறந்து கணவரொடும் இன்புறுவர் ஆதலால் என்றும் விரித்துரைக்க. இவ்வுலகத்து இன்புறலையும் போகபூமியிற் போய்ப் பிறத்தலையும் குண்டமிரண்டிற்கும் நிரனிறை யாக்கலுமாம். பட்டினப்பாலையிலும் இவை “இருகாமத் திணையேரி”எனக் கூறப்பட்டன. கற்புடை மகளிர் கணவனையன்றிப் பிற தெய்வத்தை வணங்குதல் இயல்பன்றென்பது,
“தெய்வந் தொழாஅள் கொழுநற்றொழு தெழுவாள்
பெய்யெனப் பெய்யு மழை.”
“சாமெனிற் சாத னோத றன்னவன் றணந்த காலைப்
பூமனும் புனைத லின்றிப் பொற்புடன் புலம்ப வைகிக்
காமனை யென்றுஞ் சொல்லார் கணவற்கை தொழுது வாழ்வார்
தேமலர்த் திருவொடொப்பார் சேர்ந்தவன் செல்ல றீர்ப்பார்.”
என்பவற்றா னறியப்படும்.
௬௪-௬. நீடிய
காவலன் போலும் கடைத்தலையான் வந்துநம்
கோவலன் என்றாள்ஓர் குற்றிளையாள்,
நீடிய காவலன் போலும்-பெருமையுடைய நம் அரசன் போலும், கடைத்தலையான் வந்து-வந்து நம் வாயிலிடத் தானாயினான், நம் கோவலன் என்றாள் ஓர் குற்றிளையால்-அவன் நம் கோவலனே என்றாள் ஒரு குறுந்தொழில் செய்யும் இளையவள்;
தூரத்தே பார்த்துக் காவலன் போலுமென ஐயுற்று அவன் அணுகினவிடத்து ஐயம் தீர்ந்து கோவலன் என்றாள். காவலன் போலும் கோவலன் வந்து நீடிய கடைத்தலையான் என்றுரைத்தலுமாம். குற்றினையாள் என்றாளென்க.
௬௬-௭௧. கோவலனும்
பாடுஅமை சேக்கையுள் புக்குத்தன் பைந்தொடி
வாடிய மேனி வருத்தம்கண்டு, யாவும்
சலம்புணர் கொள்கைச் சலதியொடு ஆடிக்
குலம்தரு வான்பொருள் குன்றம் தொலைந்த
இலம்பாடு நாணுந் தருமெனக் கென்ன
கோவலனும்-அங்ஙனம் வாயிலிடத்தானான கோவலனும், பாடு அமை சேக்கையுட் புக்கு-பெருமையமைந்த படுக்கையிடத்தே புக்கு, தன் பைந்தொடி வாடிய மேனி வருத்தம் கண்டு-தன் காதலியின் வாட்டமுற்ற மேனியும் வருத்தமும் கண்டு, யாவும்-எல்லாம், சலம் புணர் கொள்கைச் சலதியொடு ஆடி-வஞ்சம் பொருந்திய கொள்கையையுடைய பொய்த்தியோடுங் கூடியொழுகினமையால், குலம் தருவான் பொருட் குன்றம் தொலைந்த-நம் குலத்திலுள்ளோர் தேடித் தந்த மலை போலும் பெரிய பொருட்குவையெல்லாம் கெட்டதனாலாய, இலம்பாடு – வறுமை, நாணுத்தரும் எனக்கு என்ன-எனக்கு நாணைத் தருகின்றது என்று கூற;
“மாலை மணிவிளக்கங் காட்டி இரவிற்கோர், கோலங் கொடியிடையார் தாங்கொள்ள” அக்காலத்தே வந்து சேக்கையுட் புக்கு என்றியைத் துரைக்க. சலம்-வஞ்சம், பொய். இலம்பாடு-இல்லாமை யுண்டாதல்; வறுமை. ‘கெட்டால் மதிதோன்றும்’ என்றதற்கேற்ப இன்று நாணுத்தருமென்றான்.
௭௨-௩. நலங்கேழ் முறுவல் நகைமுகங் காட்டிச்
சிலம்புள கொண்மெனச்
நலங்கேழ் முறுவல் நகைமுகம் காட்டி (அவன் இங்ஙனம் கூறியதனை மாதவிக்குக் கொடுக்கும் பொருட் குறை பாட்டால் தளர்ந்து கூறினானாகக் கருதி) ஒளி பொருந்திய முகத்தே நன்மை பொருந்திய சிறிய முறுவலைத் தோற்றுவித்து, சிலம்பு உள கொண்மென-இன்னும் சிலம்பு ஓரிணை உள்ளன, அவற்றைக் கொண்மினென்றுரைக்க;
சிலம்புள என்றாள். இவை யொழிந்த கலனெல்லாம் தொலைதலால். கொண்ம்-கொள்ளும் என்பதன் ஈற்று மிசை யுகரம் மெய்யொடுங் கெட ளகரம் திரிந்தது.
௭௩-௯. சேயிழை கேளிச்
சிலம்பு முதலாகச் சென்ற கலனோ
டுலந்தபொரு ளீட்டுத லுற்றேன் மலர்ந்தசீர்
மாட மதுரை யகத்துச்சென்று என்னோடுஇங்கு
ஏடுஅலர் கோதாய். எழுகென்று நீடி
வினைகடைக் கூட்ட வியம்கொண்டான் கங்குல்
கனைசுடர் கால்சீயா முன்.
சேயிழை கேள்-சேயிழையே இதனைக் கேள், இச் சிலம்பு முதலாக-நீ கூறிய இச் சிலம்பை நான் வாணிக முதலாகக் கொண்டு, சென்ற கலனோடு உலந்த பொருள் ஈட்டுதலுற்றேன்-முன்பு நான் வாங்கி யழித்தமையால் ஒழிந்த கலன்களையும் கெட்ட பொருளையும் தேடத் துணிந்தேன், மலர்ந்த சீர் மாட மதுரையகத்துச் சென்று-பரந்த புகழையுடைய மாடங்களையுடைய மதுரை யென்னும் பதியிடத்தே சென்று, என்னோடு இங்கு ஏடு அலர் கோதாய் எழுகென்று-இதழ்கள் விரி்ந்த கோதையையுடையாய் அதற்கு நீ இப்பொழுதே இங்கு நின்றும் என்னோடு புறப்படுவாயாக என்று கூறி, நீடி வினைகடைக் கூட்ட-முற்பிறப்பிற்றான் செய்த தீவினை நெடுங்காலம் நின்று நெஞ்சை ஒருப்படுத்த, வியம் கொண்டான் – அவ் வினையினது ஏவலைக் கொண்டான்; கங்குல்-இருளை, கனை சுடர்-ஞாயிற்றின் மிக்க ஒளி, கால் சீயாமுன்-அவ்விடத்தினின்றும் போக்குதற்கு முன் என்க.
நீடி-நெடுங்காலம் நின்று. வியம்-ஏவல். கால் இடம். சீத்தல்-போக்குதல்.மதுரையகத்துச் சென்று ஈட்டுதலுற்றேனென்றானென்க.
இது கலிவெண்பா
வெண்பாவுரை
காதலி கண்ட கனவு கருநெடுங்கண்
மாதவிதன் சொல்லை வறிதாக்க - மூதை
வினைகடைக் கூட்ட வியம்கொண்டான் கங்குல்
கனைசுடர் கால்சீயா முன்.
காதலி கண்ட கனவு-கண்ணகி கண்ட கனவு. கரு நெடுங்கண் மாதவிதன் சொல்லை வறிதாக்க-கரிய நெடிய கண்களையுடைய மாதவியின் சொல்லைப் பயனின்றாக்க. மூதை வினைகடைக் கூட்ட-பழவினை நெஞ்சை ஒருப்படுத்த. வியம் கொண்டான் கங்குற் கனை சுடர் கால் சீயாமுன்-கங்குலைச் சுடர் போக்குதற்கு முன் அவ் வினையின் ஏவலைக் கொண்டான்.
இவட்கு மேற்கூட்ட மின்மையால் கருநெடுங்கண் என்றார். சொல்லை வறிதாக்குதல்-வேனிற் காதையில், காலை காண்குவம் என்ற சொல்லைப் பயனின்றாக்குதல்.
கனாத்திறமுரைத்த காதை முற்றிற்று.
----------------------
10. நாடு காண் காதை
{கோவலனும் கண்ணகியும் வைகறை யாமத்தே பிறரறியாதபடி புறப்பட்டு நகர் வாயிலைக் கடந்து, காவிரியின் சங்கமுகத் துறையையும் கழிந்து, வடகரை வழியாகச் சோலைகளினூடே மேற்றிசை நோக்கிச் சென்று ஒருகாத தூரங் கடந்து கவுந்தியடிகளின் தவப்பள்ளியிருக்கும் சோலையை அடைந்தனர். அப்பொழுது மெல்லியலாகிய கண்ணகி இடையும் அடியும் வருந்திக் குறுக வுயிர்த்து, ‘மதுரை மூதூர் யாதோ’ என வினவ, ‘நம் நாட்டிற்கு அப்பால் ஆறைங்காதமே அணியதுதான்’என்று கூறிக் கோவலன் நகுதல் செய்து சிறையாகத்திருந்த ஆருகத சமயத் தவ முதியாளாகிய கவுந்தியைக் கண்டு அடி தொழுது, தாங்கள் மதுரைக்குச் செல்வதனைக் கூற, அவளும் ‘மதுரையிலுள்ள பெரியோர்பால் அறவுரை கேட்டற்கும் அறிவனை ஏத்தற்கும் ஒன்றிய உள்ளமுடையேன்; ஆதலின் யானும் போதுவல்’என்று கூறி உடன்வர, மூவரும் குடதிசையில் வழிக்கொண்டு பலவகை வளங்களையும் ஒலிகளையும் கண்டும் கேட்டும் அவலந் தோன்றாது ஆர்வநெஞ்சமுடன் நாடோறும் காவதமல்லது கடவாராகி இடையிடையே பலநாள் தங்கிச் செல்வுழி ஒருநாள் ஆற்றிடைக் குறையாகிய சீரங்கத்தை அடைந்தனர். அடைந்தவர், அங்குள்ளதொரு சோலைக்கண் வந்தெய்திய சாரணரைத் தொழுது, அவர் கூறிய உறுதி மொழிகளைக் கேட்டுக் கவுந்தியடிகள் அருகதேவனை ஏத்திய பின்னர், மூவரும் ஓடத்திலேறிக் காவிரியின் தென்கரையை அடைந்து ஒரு பூம்பொழிலில் இருந்துழி, அவ்வழிப் போந்த ஒரு பரத்தையும் தூர்த்தனும் கண்ணகியையும் கோவலனையும் நோக்கி அடாத சொற்கூறி இகழ்ந்தனராகலின், கவுந்தியடிகள் அவர்களை நரிகளாகுமாறு சபித்துக் கோவலனும் கண்ணகியும் அவர்கட்கிரங்கி வேண்ட, அவர்களெய்திய சாபம் ஓராண்டில் நீங்குமாறு அருள் செய்தனர். பின்பு மூவரும் உறையூரை அடைந்தனர். (இக்காதையில் கோவலன் கண்ணகியை நோக்கிக் கவுந்தியடிகள் வழி கூறும் வாயிலாகச் சோணாட்டின் மருத வள மாண்பனைத்தும் அழகுபெறக் கூறப்பட்டுள்ளன. சாரணரும் கவுந்தியடிகளும் அருகதேவனை யேத்தும் உரைகளும் அறிந்து இன்புறற்பாலன.)}
(நிலைமண்டில ஆசிரியப்பா)
வான்கண் விழியா வைகறை யாமத்து
மீன்திகழ் விசும்பின் வெண்மதி நீங்கக்
கார்இருள் நின்ற கடைநாள் கங்குல்
ஊழ்வினைக் கடைஇ உள்ளம் துரப்ப
ஏழகத் தகரும் எகினக் கவரியும் 5
தூமயிர் அன்னமும் துணைஎனத் திரியும்
தாளொடு குயின்ற தகைசால் சிறப்பின்
நீள்நெடு வாயில் நெடுங்கடை கழிந்துஆங்கு,
அணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த
மணிவண்ணன் கோட்டம் வலம்செயாக் கழிந்து, 10
பணைஐந்து ஓங்கிய பாசிலைப் போதி
அணிதிகழ் நீழல் அறவோன் திருமொழி
அந்தர சாரிகள் அறைந்தனர் சாற்றும்
இந்திர விகாரம் ஏழுடன் போகி,
புலவுஊண் துறந்து பொய்யா விரதத்து 15
அவலம் நீத்துஅறிந்து அடங்கிய கொள்கை
மெய்வகை உணர்ந்த விழுமியோர் குழீஇய
ஐவகை நின்ற அருகத் தானத்துச்
சந்தி ஐந்தும் தம்முடன் கூடி
வந்துதலை மயங்கிய வான்பெரு மன்றத்துப் 20
பொலம்பூம் பிண்டி நலம்கிளர் கொழுநிழல்
நீர்அணி விழவினும் நெடுந்தேர் விழவினும்
சாரணர் வருஉம் தகுதிஉண் டாம்என
உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட
இலகுஒளிச் சிலாதலம் தொழுதுவலம் கொண்டு, 25
மலைதலைக் கொண்ட பேர்யாறு போலும்
உலக இடைகழி ஒருங்குடன் நீங்கி,
கலையி லாளன் காமர் வேனிலொடு
மலைய மாருதம் மன்னவற்கு இறுக்கும்
பன்மலர் அடுக்கிய நன்மரப் பந்தர் 30
இலவந் திகையின் எயில்புறம் போகி,
தாழ்பொழில் உடுத்த தண்பதப் பெருவழிக்
காவிரி வாயில் கடைமுகம் கழிந்து,
குடதிசைக் கொண்டு கொழும்புனல் காவிரி
வடபெருங் கோட்டு மலர்ப்பொழில் நுழைந்து, 35
காவதம் கடந்து கவுந்திப் பள்ளிப்
பூமரப் பொதும்பர்ப் பொருந்தி ஆங்கண்
இறும்கொடி நுசுப்போடு இனைந்துஅடி வருந்தி
நறும்பல் கூந்தல் குறும்பல் உயிர்த்து
முதிராக் கிளவியின் முள்எயிறு இலங்க 40
மதுரை மூதூர் யாதுஎன வினவ,
ஆறுஐங் காதம்நம் அகல்நாட்டு உம்பர்
நாறுஐங் கூந்தல் நணித்துஎன நக்குத்,
தேமொழி தன்னொடும் சிறையகத்து இருந்த
காவுந்தி ஐயையைக் கண்டுஅடி தொழலும், 45
உருவும் குலனும் உயர்ப்பேர் ஒழுக்கமும்
பெருமகன் திருமொழி பிறழா நோன்பும்
உடையீர் என்னோ உறுக ணாளரின்
கடைகழிந்து இங்ஙனம் கருதிய வாறுஎன,
உரையாட்டு இல்லை உறுதவத் தீர்யான் 50
மதுரை மூதூர் வரைபொருள் வேட்கையேன்.
பாடகச் சீறடி பரல்பகை உழவா
காடுஇடை யிட்ட நாடுநீர் கழிதற்கு
அரிதுஇவள் செவ்வி அறிகுநர் யாரோ
உரியது அன்றுஈங்கு ஒழிகஎன ஒழியீர் 55
மறஉரை நீத்த மாசுஅறு கேள்வியர்
அறஉரை கேட்டுஆங்கு அறிவனை ஏத்தத்
தென்தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரைக்கு
ஒன்றிய உள்ளம் உடையேன் ஆகலின்
போதுவல் யானும் போதுமின் என்ற 60
காவுந்தி ஐயையைக் கைதொழுது ஏத்தி
அடிகள் நீரே அருளிதிர் ஆயின்இத்
தொடிவளைத் தோளி துயர்த்தீர்த் தேன்என,
கோவலன் காணாய் கொண்ட இந்நெறிக்கு
ஏதம் தருவன யாங்கும்பல கேண்மோ: 65
வெயில்நிறம் பொறாஅ மெல்இயல் கொண்டு
பயில்பூந் தண்டலைப் படர்குவம் எனினே,
மண்பக வீழ்ந்த கிழங்குஅகழ் குழியைச்
சண்பகம் நிறைத்த தாதுசோர் பொங்கர்
பொய்யறைப் படுத்துப் போற்றா மாக்கட்குக் 70
கையறு துன்பம் காட்டினும் காட்டும்,
உதிர்ப்பூஞ் செம்மலின் ஒதுங்கினர் கழிவோர்
முதிர்த்தேம் பழம்பகை முட்டினும் முட்டும்,
மஞ்சளும் இஞ்சியும் மயங்குஅரில் வலயத்துச்
செஞ்சுளைப் பலவின் பரல்பகை உறுக்கும். 75
கயல்நெடுங் கண்ணி காதல் கேள்வ.
வயல்உழைப் படர்க்குவம் எனினே ஆங்குப்
பூநாறு இலஞ்சிப் பொருகயல் ஓட்டி
நீர்நாய் கெளவிய நெடும்புற வாளை
மலங்குமிளிர் செறுவின் விலங்கப் பாயின் 80
கலங்கலும் உண்டுஇக் காரிகை, ஆங்கண்
கரும்பில் தொடுத்த பெருந்தேன் சிதைந்து
சுரும்புசூழ் பொய்கைத் தூநீர் கலக்கும்
அடங்கா வேட்கையின் அறிவுஅஞர் எய்திக்
குடங்கையின் கொண்டு கொள்ளவும் கூடும், 85
குறுநர் இட்ட குவளைஅம் போதொடு
பொறிவரி வண்டினம் பொருந்திய கிடக்கை
நெறிசெல் வருத்தத்து நீர்அஞர் எய்தி
அறியாது அடிஆங்கு இடுதலும் கூடும்,
எறிநீர் அடைகரை இயக்கம் தன்னில் 90
பொறிமாண் அலவனும் நந்தும் போற்றாது
ஊழ்அடி ஒதுக்கத்து உறுநோய் காணின்
தாழ்தரு துன்பம் தாங்கவும் ஒண்ணா,
வயலும் சோலையும் அல்லது யாங்கணும்
அயல்படக் கிடந்த நெறிஆங்கு இல்லை 95
நெறிஇருங் குஞ்சி நீவெய் யோளொடு
குறிஅறிந்து அவைஅவை குறுகாது ஓம்புஎன,
தோம்அறு கடிஞையும் சுவல்மேல் அறுவையும்
காவுந்தி ஐயைகைப் பீலியும் கொண்டு
மொழிப்பொருள் தெய்வம் வழித்துணை ஆகெனப் 100
பழிப்புஅருஞ் சிறப்பின் வழிப்படர் புரிந்தோர்,
கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
கால்பொரு நிவப்பின் கடுங்குரல் ஏற்றொடும்
சூல்முதிர் கொண்மூப் பெயல்வளம் சுரப்பக் 105
குடமலைப் பிறந்த கொழும்பல் தாரமொடு
கடல்வளன் எதிரக் கயவாய் நெரிக்கும்
காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை
ஓஇறந்து ஒலிக்கும் ஒலியே அல்லது
ஆம்பியும் கிழாரும் வீங்குஇசை ஏத்தமும் 110
ஓங்குநீர்ப் பிழாவும் ஒலித்தல் செல்லாக்
கழனிச் செந்நெல் கரும்புசூழ் மருங்கில்
பழனத் தாமரைப் பைம்பூங் கானத்துக்
கம்புட் கோழியும் கனைகுரல் நாரையும்
செங்கால் அன்னமும் பைங்கால் கொக்கும் 115
கானக் கோழியும் நீர்நிறக் காக்கையும்
உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும்
வெல்போர் வேந்தர் முனையிடம் போலப்
பல்வேறு குழூஉக்குரல் பரந்த ஓதையும்,
உழாஅ நுண்தொளி உள்புக்கு அழுந்திய 120
கழாஅமயிர் யாக்கைச் செங்கண் காரான்
சொரிபுறம் உரிஞ்சப் புரிஞெகிழ்பு உற்ற
குமரிக் கூட்டில் கொழும்பல் உணவு
கவரிச் செந்நெல் காய்த்தலைச் சொரியக்
கருங்கை வினைஞரும் களமருங் கூடி 125
ஒருங்குநின்று ஆர்க்கும் ஒலியே அன்றியும்,
கடிமலர் களைந்து முடிநாறு அழுத்தித்
தொடிவளைத் தோளும் ஆகமும் தோய்ந்து
சேறுஆடு கோலமொடு வீறுபெறத் தோன்றிச்
செங்கயல் நெடுங்கண் சின்மொழிக் கடைசியர் 130
வெங்கள் தொலைச்சிய விருந்திற் பாணியும்,
கொழுங்கொடி அறுகையும் குவளையும் கலந்து
விளங்குகதிர்த் தொடுத்த விரியல் சூட்டிப்
பார்உடைப் பனர்ப்போல் பழிச்சினர் கைதொழ
ஏரொடு நின்றோர் ஏர்மங் கலமும், 135
அரிந்துகால் குவித்தோர் அரிகடா வுறுத்த
பெருஞ்செய்ந் நெல்லின் முகவைப் பாட்டும்,
தெண்கிணைப் பொருநர் செருக்குடன் எடுத்த
மண்கனை முழவின் மகிழ்இசை ஓதையும்,
பேர்யாற்று அடைகரை நீரிற் கேட்டுஆங்கு 140
ஆர்வ நெஞ்சமோடு அவலம் கொள்ளார்,
உழைப்புலிக் கொடித்தேர் உரவோன் கொற்றமொடு
மழைக்கரு உயிர்க்கும் அழல்திகழ் அட்டில்
மறையோர் ஆக்கிய ஆவூதி நறும்புகை
இறைஉயர் மாடம் எங்கணும் போர்த்து 145
மஞ்சுசூழ் மலையின் மாணத் தோன்றும்
மங்கல மறையோர் இருக்கை அன்றியும்,
பரப்புநீர்க் காவிரிப் பாவைதன் புதல்வர்
இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்
உழவிடை விளைப்போர் பழவிறல் ஊர்களும், 150
பொங்கழி ஆலைப் புகையொடும் பரந்து
மங்குல் வானத்து மலையின் தோன்றும்
ஊர்இடை யிட்ட நாடுஉடன் கண்டு
காவதம் அல்லது கடவார் ஆகிப்
பன்னாள் தங்கிச் செல்நாள் ஒருநாள்: 155
ஆற்றுவீ அரங்கத்து வீற்றுவீற்று ஆகிக்
குரங்குஅமை உடுத்த மரம்பயில் அடுக்கத்து,
வானவர் உறையும் பூநாறு ஒருசிறைப்
பட்டினப் பாக்கம் விட்டனர் நீங்காப்
பெரும்பெயர் ஐயர் ஒருங்குடன் இட்ட 160
இலங்குஒளிச் சிலாதலம் மேல்இருந் தருளிப்
பெருமகன் அதிசயம் பிறழா வாய்மைத்
தருமம் சாற்றும் சாரணர் தோன்றப்,
பண்டைத் தொல்வினை பாறுக என்றே
கண்டுஅறி கவுந்தியொடு கால்உற வீழ்ந்தோர் 165
வந்த காரணம் வயங்கிய கொள்கைச்
சிந்தை விளக்கில் தெரிந்தோன் ஆயினும்
ஆர்வமும் செற்றமும் அகல நீக்கிய
வீரன் ஆகலின் விழுமம் கொள்ளான்,
கழிப்பெருஞ் சிறப்பின் கவுந்தி காணாய்: 170
ஒழிகென ஒழியாது ஊட்டும் வல்வினை
இட்ட வித்தின் எதிர்வந்து எய்தி
ஒட்டுங் காலை ஒழிக்கவும் ஒண்ணா
கடுங்கால் நெடுவெளி இடும்சுடர் என்ன
ஒருங்குடன் நில்லா உடம்பிடை உயிர்கள் 175
அறிவன் அறவோன் அறிவுவரம்பு இகந்தோன்
செறிவன் சினேந்திரன் சித்தன் பகவன்
தரும முதல்வன் தலைவன் தருமன்
பொருளன் புனிதன் புராணன் புலவன்
சினவரன் தேவன் சிவகதி நாயகன் 180
பரமன் குணவதன் பரத்தில் ஒளியோன்
தத்துவன் சாதுவன் சாரணன் காரணன்
சித்தன் பெரியவன் செம்மல் திகழ்ஒளி
இறைவன் குரவன் இயல்குணன் எம்கோன்
குறைவில் புகழோன் குணப்பெருங் கோமான் 185
சங்கரன் ஈசன் சயம்பு சதுமுகன்
அங்கம் பயந்தோன் அருகன் அருள்முனி
பண்ணவன் எண்குணன் பாத்தில் பழம்பொருள்
விண்ணவன் வேத முதல்வன் விளங்குஓளி
ஓதிய வேதத்து ஒளிஉறின் அல்லது 190
போதார் பிறவிப் பொதிஅறை யோர்எனச்
சாரணர் வாய்மொழி கேட்டுத் தவமுதல்
காவுந்தி யும்தன் கைதலை மேற்கொண்டு
ஒருமூன்று அவித்தோன் ஓதிய ஞானத்
திருமொழிக்கு அல்லதுஎன் செவியகம் திறவா, 195
காமனை வென்றோன் ஆயிரத்து எட்டு
நாமம் அல்லது நவிலாது என்நா,
ஐவரை வென்றோன் அடியிணை அல்லது
கைவரைக் காணினும் காணா என்கண்,
அருள்அறம் பூண்டோ ன் திருமெய்க்கு அல்லதுஎன் 200
பொருள்இல் யாக்கை பூமியில் பொருந்தாது,
அருகர் அறவன் அறிவோற்கு அல்லதுஎன்
இருகையும் கூடி ஒருவழிக் குவியா,
மலர்மிசை நடந்தோன் மலர்அடி அல்லதுஎன்
தலைமிசை உச்சி தான்அணிப் பொறாஅது 205
இறுதிஇல் இன்பத்து இறைமொழிக்கு அல்லது
மறுதிர ஓதிஎன் மனம்புடை பெயராது
என்றவன் இசைமொழி ஏத்தக் கேட்டுஅதற்கு
ஒன்றிய மாதவர் உயர்மிசை ஓங்கி
நிவந்துஆங்கு ஒருமுழம் நீள்நிலம் நீங்கிப் 210
பவம்தரு பாசம் கவுந்தி கெடுகென்று
அந்தரம் ஆறாப் படர்வோர்த் தொழுது
பந்தம் அறுகெனப் பணிந்தனர் போந்து,
கார்அணி பூம்பொழில் காவிரிப் பேர்யாற்று
நீர்அணி மாடத்து நெடுந்துறை போகி 215
மாதரும் கணவனும் மாதவத் தாட்டியும்
தீதுதீர் நியமத் தென்கரை எய்திப்
போதுசூழ் கிடக்கைஓர் பூம்பொழில் இருந்துழி
வம்பப் பரத்தை வறுமொழி யாளனொடு
கொங்குஅலர் பூம்பொழில் குறுகினர் சென்றோர் 220
காமனும் தேவியும் போலும் ஈங்குஇவர்
ஆர்எனக் கேட்டுஈங்கு அறிகுவம் என்றே,
நோற்றுஉணல் யாக்கை நொசிதவத் தீர்உடன்
ஆற்றுவழிப் பட்டோ ர் ஆர்என வினவ,என்
மக்கள் காணீர் மானிட யாக்கையர் 225
பக்கம் நீங்குமின் பரிபுலம் பினர்என,
உடன்வயிற் றோர்க்கள் ஒருங்குடன் வாழ்க்கை
கடவதும் உண்டோ ? கற்றறிந் தீர்எனத்,
தீமொழி கேட்டுச் செவியகம் புதைத்துக்
காதலன் முன்னர்க் கண்ணகி நடுங்க, 230
எள்ளுநர் போலும்இவர் என்பூங் கோதையை
முள்உடைக் காட்டின் முதுநரி ஆகெனக்
கவுந்தி இட்ட தவம்தரு சாபம்
கட்டியது ஆதலின், பட்டதை அறியார்
குறுநரி நெடுங்குரல் கூவிளி கேட்டு 235
நறுமலர்க் கோதையும் நம்பியும் நடுங்கி,
நெறியின் நீங்கியோர் நீர்அல கூறினும்
அறியா மைஎன்று அறியல் வேண்டும்
செய்தவத் தீர்நும் திருமுன் பிழைத்தோர்க்கு
உய்திக் காலம் உரையீ ரோஎன, 240
அறியா மையின்இன்று இழிபிறப்பு உற்றோர்
உறையூர் நொச்சி ஒருபுடை ஒதுங்கிப்
பன்னிரு மதியம் படர்நோய் உழந்தபின்
முன்னை உருவம் பெறுகஈங்கு இவர்எனச்
சாபவிடை செய்து, தவப்பெருஞ் சிறப்பின் 245
காவுந்தி ஐயையும் தேவியும் கணவனும்
முறம்செவி வாரணம் முஞ்சமம் முருக்கிய
புறஞ்சிறை வாரணம் புக்கனர் புரிந்துஎன்.
(கட்டுரை)
முடிஉடை வேந்தர் மூவ ருள்ளும்
தொடிவிளங்கு தடக்கைச் சோழர்க்குலத்து உதித்தோர்
அறனும் மறனும் ஆற்றலும் அவர்தம்
பழவிறல் மூதுர்ப் பண்புமேம் படுதலும்
விழவுமலி சிறப்பும் விண்ணவர் வரவும் 5
ஒடியா இன்பத்து அவர்உறை நாட்டுக்
குடியும் கூழின் பெருக்கமும் அவர்தம்
தெய்வக் காவிரித் தீதுதீர் சிறப்பும்
பொய்யா வானம் புதுப்புனல் பொழிதலும்
அரங்கும் ஆடலும் தூக்கும் வரியும் 10
பரந்துஇசை எய்திய பாரதி விருத்தியும்
திணைநிலை வரியும் இணைநிலை வரியும்
அணைவுறக் கிடந்த யாழின் தொகுதியும்
ஈர்ஏழ் சகோடமும் இடநிலைப் பாலையும்
தாரத்து ஆக்கமும் தான்தெரி பண்ணும் 15
ஊரகத் தேரும் ஒளியுடைப் பாணியும்
என்றுஇவை அனைத்தும் பிறபொருள் வைப்போடு
ஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும்
ஒரு பரிசா நோக்கிக் கிடந்த
புகார்க் காண்டம் முற்றிற்று. 20
(வெண்பா)
காலை அரும்பி மலரும் கதிரவனும்
மாலை மதியமும்போல் வாழியரோ - வேலை
அகழால் அமைந்த அவனிக்கு மாலைப்
புகழால் அமைந்த புகார்.
------------------------------
நாவலர் பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டாரவர்கள் உரை
௧-௩. வான்கண் விழியா வைகறை யாமத்து
மீன்திகழ் விசும்பின் வெண்மதி நீங்கக்
கார்இருள் நின்ற கடைநாள் கங்குல்
வான்கண் விழியா வைகறை யாமத்து-உலகிற்குச் சிறந்த கண்ணாகிய ஞாயிறு தோன்றாத வைகறையாகிய யாமத்தின் கண், மீன் திகழ் விசும்பின் வெண்மதி நீங்க-மீன் விளங்கும் வானத்தினின்றும் வெள்ளிய திங்கள் நீங்கிற்றாக. கார்இருள் நின்ற கடை நாட் கங்குல்-கரிய இருள் இறுதிக்கண் நின்ற இராப்பொழுதில்;
வான்கண்-சிறந்த கண் ; காண்டற்குக் கருவியாகிய கண்ணொளியினும் காணப்படும் பொருளினும் ஞாயிற்றினொளி கலப்பி னன்றி ஒன்றையும் காணலாகாமையின் அதனைச் சிறந்த கண் என்றார். இனி, வான்கண்-விசும்பின் கண்ணாகிய ஞாயிறு என்றுமாம்; “மயங்கிருங் கருவிய விசும்பு முகனாக, இயங்கிய விருசுடர் கண்ணென”என்றார் பிறரும். இறைவன் கண்ணென்பாருமுளர். தோன்றா என்பதனைக் கண் என்றதற்கேற்ப விழியா என்றார். இருள் கடைநின்ற என மாறுக. இதனால் பூருவபக்க மென்பதாயிற்று.
ஈண்டு அடியார்க்கு நல்லார் அந்தச் சித்திரைத் திங்கட் புகுதி நாள் ஞாயிற்றுக்கிழமையும், மூன்றாம் பக்கமும் சோதியுமாம் என்றும், அத்திங்கள் இருபத்தெட்டிற் சித்திரையும் பூரணையும் கூடிய சனிவாரத்திற் கொடியேற்றி இருபத்தெட்டு நாளும் விழா நடந்ததென்றும், வைகாசி இருபத்தெட்டிலே முற்பக்கத்தின் பதின்மூன்றாம் திதியும் திங்கட்கிழமையும் கூடிய அனுடத்தில் கடலாடின ரென்றும், வைகாசி இருபத்தொன்பதில் முற்பக்கத்தின் பதினாலாந் திதியில் செவ்வாய்க்கிழமையும் கேட்டையும் பெற்ற நாசயோகத்தில் வைகறைப் பொழுதினிடத்து நிலவுபட்ட அந்தரத் திருளிலே கோவலன் மதுரைக்குப் புறப்படலாயினன் என்றும் கூறுகின்றார். அவர் “சித்திரைச் சித்திரைத் திங்கள் சேர்ந்தென”என முன்னரும் “ஆடித் திங்கட் பேரிருட் பக்கத் தழல்சேர் குட்டத் தட்டமி ஞான்று வெள்ளி வாரத் தொள்ளெரியுண்ண, உரைசால் மதுரையோ டரசுகே டுறுமெனும் உரையுமுண்டே”எனப் பின்னரும் போந்த குறிப்புக்களையும், மணிமேகலையில் “மேலோர் விழைய விழாக் கோளெடுத்த, நாலேழ் நாளினும்” “தேவரு மக்களு மொத்துடன் றிரிதரும் நாலேழ் நாளினும்”எனக் கூறப்பட்டிருப்பவற்றையும் பற்றுக் கோடாகக் கொண்டும் கோவலன் புறப்பட்ட நாள் தீயதாதல் வேண்டுமென்னும் கருத்துடனும் இவ்வாறு ஊகித்தெழுதினாராவர். ஆயின் இவையெல்லாம் கணிதமுறையுடன் கூடிய உண்மைகளெனத் துணிதல் சாலாது. வைகாசித் திங்களில் முற்பக்கத்தின் பதின்மூன்றாந் திதியும் அனுடமும் கூடுதலென்பதே இயற்கையன்றாகும். இவையெல்லாம் ஆராய்ந்து துணிதற்குரியன.
௪. ஊழ்வினைக் கடைஇ உள்ளம் துரப்ப
ஊழ்வினை கடைஇ உள்ளம் துரப்ப-முன்னைத் தீவினையானது கடாவுதலால் உள்ளம் தன்னைச் செலுத்துதலான்;
௫-௮. ஏழகத் தகரும் எகினக் கவரியும்
தூமயிர் அன்னமும் துணைஎனத் திரியும்
தாளொடு குயின்ற தகைசால் சிறப்பின்
நீள்நெடு வாயில் நெடுங்கடை கழிந்துஆங்கு,
ஏழகத் தகரும்-ஆட்டுக் கிடாயும், எகினக் கவரியும்-கவரியாகிய மானும், தூமயிர் அன்னமும்-தூய சிறகினையுடைய அன்னமும் ஆகிய இவை, துணை எனத் திரியும்-தம்முள் இனமல்லவாயினும் இனம்போல ஒருங்கு கூடித் திரியும், தாழொடு குயின்ற தகைசால் சிறப்பின்-தாழொடு பண்ணப் பெற்ற பெருமை பொருந்திய சிறப்பினையுடைய, நீள் நெடுவாயில் நெடுங்கடை கழிந்து-மிகப் பெரிய கதவினையுடைய நெடிய இடை கழியைக் கடந்து, ஆங்கு-அப்பொழுதே;
ஏழகத் தகர், எகினக் கவரி யென்பன இருபெயரொட்டுப் பண்புத் தொகை. எகினம்-ஈண்டு மான். ”நெடு மயிரெகினத் தூநிற வேற்றை, குறுங்கா லன்னமொ டுகளு முன்கடை” என்றார் ஆசிரியர் நக்கீரனாரும், குயின்ற வாயில் என்க. ஈண்டு வாயில் என்றது கதவினை; ஆகுபெயர். தாழொடு குயின்ற என்றது போர்க்கதவாகலின் பின்பு நெகிழாவண்ணம், பண்ணுகின்றபோதே உடன் பண்ணிய என்றபடி.
௬-க0. அணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த
மணிவண்ணன் கோட்டம் வலம்செயாக் கழிந்து,
அணிகிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த-அழகு விளங்கும் அரவணையின் மீது அறிதுயிலைப் பொருந்திய, மணிவண்ணன் கோட்டம் வலம்செயாக் கழிந்து-நீலமணிபோலும் நிறமுடையோனாகிய திருமாலின் கோயிலை வலம் செய்து நீங்கி;
மணிவண்ணன் என்பது பெயருமாம். அறிதுயில் – யாவற்றையும் அறிந்துகொண்டே துயிலுதல்; துயிலுதல்-பதைப்பின்றி யிருத்தல் ; இதனை யோக நித்திரை யென்பர்.
௧௧-௪. பணைஐந்து ஓங்கிய பாசிலைப் போதி
அணிதிகழ் நீழல் அறவோன் திருமொழி
அந்தர சாரிகள் அறைந்தனர் சாற்றும்
இந்திர விகாரம் ஏழுடன் போகி,
பணை ஐந்து ஓங்கிய பாசிலைப் போதி-உயர்ந்த ஐந்து பரிய கிளையினையும் பசிய இலையினையு முடையமாபோதியின், அணிதிகழ் நீழல் அறவோன் திருமொழி-எழில் விளங்கும் நிழலிலெழுந்தருளிய புத்த தேவன் அருளிச் செய்த ஆகமத்தை, அந்தர சாரிகள் அறைந்தனர் சாற்றும்-விசும்பியங்குவோராகிய சாரணர் மறைய இருந்து ஓதி யாவர்க்கும் பொருள் விளங்கக் கூறப்படும், இந்திர விகாரம் ஏழ் உடன் போகி-இந்திரன் ஆக்கிய விகாரங்களேழினையும் முறையே கண்டு அவற்றைக் கழிந்து போய்;
போதி-போதத்தையுடையது; அரசு. போதம்-ஞானம் அரசு என்னும் பெயரும் அதன் தலைமையை யுணர்த்தும். புத்தன் அரசமரத்தடியில் ஞானம் பெற்றதும், “யான் தருக்களில் அரசாகின்றேன்” எனக் கண்ணன் பகவற்கீதையிற் கூறியதும், பிறவும் இதன் பெருமைக்குச் சான்றாகும். திருமொழி – ஆகமம்; ஆகுபெயர். அறைந்தனர் சாற்றுதல் - மூலங்கூறிப் பொருளுரைத்தல். அறைந்தனர்- முற்றெச்சம். விகாரம் நினைவினா னாக்குதல்.
௧௫-௨௫. புலவுஊண் துறந்து பொய்யா விரதத்து
அவலம் நீத்துஅறிந்து அடங்கிய கொள்கை
மெய்வகை உணர்ந்த விழுமியோர் குழீஇய
ஐவகை நின்ற அருகத் தானத்துச்
சந்தி ஐந்தும் தம்முடன் கூடி
வந்துதலை மயங்கிய வான்பெரு மன்றத்துப்
பொலம்பூம் பிண்டி நலம்கிளர் கொழுநிழல்
நீர்அணி விழவினும் நெடுந்தேர் விழவினும்
சாரணர் வருஉம் தகுதிஉண் டாம்என
உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட
இலகுஒளிச் சிலாதலம் தொழுதுவலம் கொண்டு,
புலவூண் துறந்து-புலாலாகிய ஊண் உண்ணுதலை விலக்கி, பொய்யாவிரதத்து-பொய் கூறாமையாகிய விரதத்தொடு பொருந்தி, அவலம்நீத்து-அழுக்காறு அவா முதலியவற்றைக் கைவிட்டு ; அறிந்து-பொருணூல்களை உணர்ந்து, அடங்கிய கொள்கை-ஐம்புலன்களும் அடங்கிய கொள்கையினை உடையராய், மெய்வகை உணர்ந்த வி்ழுமியோர் குழீஇய-உண்மைத் திறனை அறிந்த சீரியோர் கூடிய, அருகத்தானத்து-ஸ்ரீகோயிலில், ஐவகை நின்ற சந்தி ஐந்தும் தம்முடன் கூடிவந்து தலைமயங்கிய, வான்பெரு மன்றத்து-பஞ்ச பரமேட்டிகள் நிலைபெற்ற ஐந்து சந்தியும் தம்முட் கூடி வந்து கலந்த சிறந்த பெரிய மன்றத்தின் கண், பொலம்பூம் பிண்டி உலங்கிளர் கொழுநிழல்-பொற்பூவினையுடைய அசோகின் எழில் விளங்கும் கொழுவிய நிழலின்கண், நீரணி விழவினும் நெடுந்தேர் விழவினும் சாரணர் வரூஉம் தகுதி உண்டாம் என-திரு அபிடேக விழா நாளினும் தேர்த் திருநாளிலும் சாரணர் வரத் தகுமென்று, உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட இலகு ஒளிச் சிலாதலம் தொழுது வலம்கொண்டு-சாவகர் யாவரும் கூடியிடப் பெற்ற விளங்காநின்ற ஒளியினையுடைய சிலா வட்டத்தை வணங்கி வலம் செய்து;
புலவு ஊண்-புலாலோடே உண்ணும் உணவுமாம். அவலம்-அழுக்காறு அவா முதலியன. ஐவகை என்றது பஞ்ச பரமேட்டிகளை; அவர்களாவார்: அருகர், சித்தர், உபாத்தியாயர், ஆசிரியர், சாதுக்கள் என இவர். பொலம்-பொன். உலக நோன்பிகள்-உலகவழக்கொடு பொருந்தின விரதிகள். அவர் இல்லறத்தினையுடைய சாவகர். விழுமியோர் குழீஇய அருகத் தானத்து மன்று எனவும், ஐவகை நின்ற சந்தி எனவும் மாறுக. ‘நீரணி விழவு’ என்பதற்கு ‘விழு அயனாதிகள்’ என்பர் அடியார்க்கு நல்லார். மன்றிற் பிண்டி நீழலில் இட்ட சிலாதலமெனச் சேர்க்க.
௨௬-எ. மலைதலைக் கொண்ட பேர்யாறு போலும்
உலக இடைகழி ஒருங்குடன் நீங்கி,
மலை தலைக் கொண்ட பேர் யாறு போலும் உலக இடை கழி ஒருங்குடன் நீங்கி- மலையிடத்துத் தலைப்பினையுடையவொரு பெரிய யாறு போன்ற உலகின் கண்ணுள்ளோர் போக்குவரவு செய்தற்கமைந்த ஊர்வாயிலை அக்காலத்துச் செல்வாரொடு கலந்து சென்று அதனை விட்டு நீங்கி;
உலகின்கண்ணுள்ளோர் பலரும் புகார்க்கண் வாணிகத்தின் பொருட்டு வந்து சேர்வாராகலானும், எத்துணையும் பெரியதொரு நகரமாகலானும் புகார் நகரினை உலகமே போலக்கொண்டு அதன் வாயிலை உலக இடைகழி யென்பர்; இவ்வாறே அதிலுள்ள அம்பலத்தை உலக அறவியென்று கூறுவர். இனி, “மாயோன் மேய காடுறை உலகமும், சேயோன் மேய மைவரை உலகமும்”என்பதனால் உலகின் ஒரு பகுதியை உலகமென்னலும் பொருந்தும். தெருவொழுங்கிற்கு இடையே கழிதலின் இடைகழி யெனப்பட்டது. மலையும் யாறும் முறையே கோபுர வாயிலுக்கும் தெருவிற்கும் உவமங்களாம்.
௨௮-௩௧. கலையி லாளன் காமர் வேனிலொடு
மலைய மாருதம் மன்னவற்கு இறுக்கும்
பன்மலர் அடுக்கிய நன்மரப் பந்தர்
கலையிலாளன் காமர் வேனிலொடு மலயமாருதம் மன்னவற்கு இறுக்கும்-சோழ அரசனுக்குக் காமன் அழகிய வேனிலொடு பொதியிற் றென்றலையும் திறையிடுகின்ற, பன்மலர் அடுக்கிய நன்மரப் பந்தர் இலவந்திகையின் எயிற்புறம் போகி-பல மலர்களை நிரைத்த நல்ல மரநிழலையுடைய இலவந்திகையினது மதிலின் புரத்தே சென்று; கலையிலாளன்-அநங்கன்; மன்மதன். பந்தர்-நிழல். இலவந்திகை-நீராவியைச் சூழ்ந்த வயந்தச் சோலை; அஃது அரசனும் உரிமையுமாடுங் காவற்சோலை. இதனை நீராவி என்பாருமுளர். மன்னவற்கு வேனிலொடு மாருதத்தினை இறுக்கும் இலவந்திகை எனக் கூட்டுக. இனிப் பந்தர் என்பதற்குச் சோலை எனப் பொருள் கொண்டு, சோலையினையும் நீராவியினை யுமுடைய எயில் எனலுமாம்.
௩௨-௩. தாழ்பொழில் உடுத்த தண்பதப் பெருவழிக்
காவிரி வாயில் கடைமுகம் கழிந்து,
தாழ்பொழில் உடுத்த தண்பதப் பெருவழிக் காவிரி வாயிற் கடைமுகம் கழிந்து-தாழ்ந்த சோலை இருமருங்கிலும் சூழ்ந்த புனலாட்டிற்குச் செல்லும் பெரிய நெறியினையுடைய காவிரிக் கரையிடத்துச் சங்க முகத்துறை வாயிலையும் நீங்கி;
காலையில் நாணீராடுவோர் பிறர்முகம் நோக்காது போதற்கு மறைந்து செல்வர்; இவரிருவரும் அங்ஙனமே சென்றனர் என்பதற்குக் கடைமுகங் கழிந்தென்றார்.
௩௪. குடதிசைக் கொண்டு கொழும்புனல் காவிரி
குடதிசைக் கொண்டு-மேற்கு நோக்கி;
௩௪-௫. வடபெருங் கோட்டு மலர்ப்பொழில் நுழைந்து,
கொழும் புனற் காவிரி வடபெருங் கோட்டு மலர்ப்பொழில் நுழைந்து-வளவிய நீரினையுடைய காவிரியின் பெரிய வடகரைக்கணுள்ள சோலையினைக் கடந்து;
நுழைதல்-கழிதல். அன்றிச் சோலை தாழ்ந்திருத்தலின் நுழைந்து போய் எனலுமாம்.
௩௬-௪௧. காவதம் கடந்து கவுந்திப் பள்ளிப்
பூமரப் பொதும்பர்ப் பொருந்தி ஆங்கண்
இறும்கொடி நுசுப்போடு இனைந்துஅடி வருந்தி
நறும்பல் கூந்தல் குறும்பல் உயிர்த்து
முதிராக் கிளவியின் முள்எயிறு இலங்க
மதுரை மூதூர் யாதுஎன வினவ,
காவதம் கடந்து கவுந்திப் பள்ளிப் பூ மரப் பொதும்பர்ப் பொருந்தி ஆங்கண்-காதமெனப்படும் எல்லையினைக் கடந்து சென்று கவுந்தியடிகள் எழுந்தருளிய பள்ளியின் அயலதொரு பொலிவினையுடைய மரம் செறிந்த சோலைக்கண் பொருந்த அப்பொழுது, இறுங்கொடி நுசுப்போடு இனைந்து அடிவருந்தி நறும்பல் கூந்தல் குறும்பல உயிர்த்து-நறிய பலவான கூந்தலையுடைய கண்ணகி இற்று விடும் எனத்தக்க கொடி போன்ற இடையும் அடியும் மிகவருந்தி இளைப்பானே பலவாகக் குறுக மூசசெறிந்து, முதிராக்கிளவியின் முள் எயிறு இலங்க மதுரை மூதூர் யாதென வினவ-முற்றாத மழலைச் சொற்களானே கூரிய பற்கள் விளங்க மதுரை என்னும் பழையவூர் எதுவோதான் என்று கோவலனைக் கேட்ப;
பொருந்தி என்பதனைப் பொருந்த எனத் திரிக்க. நின்றாங்கே பொருள் கூறலுமாம். காவதம்-காதம்; பகுதிப்பொருள் விகுதி. கண்ணகி வெயினிறம் பொறா மெல்லியலாகலின் தான் சிறிது நெறியே சென்றிருப்பினும் பெரிது சென்றனளாக எண்ணுதலின் மதுரை மூதூர் யாதென வினவினளென்க. இராமனுடன் வனத்திற்கேகலுற்ற சீதை அயோத்தியின் மதில் வாயிலைக் கடக்குமுன் காடு எவ்விடத்தது என்று வினாவினாளாகக் கம்பர் கூறிய,
“நீண்டமுடி வேந்தனரு ளெய்திநிறை செல்வம்
பூண்டதனை நீங்கிநெறி போதலுறு நாளின்
ஆண்டநக ராரையொடு வாயிலக லாமுன்
யாண்டையது கானென விசைத்தது மிசைப்பாய்”
என்னுஞ் செய்யுள் இதனோடு ஒத்து நோக்கி இன்புறற்பாலது.
௪௨-௩. ஆறுஐங் காதம்நம் அகல்நாட்டு உம்பர்
நாறுஐங் கூந்தல் நணித்துஎன நக்குத்,
ஆறைங் காதம் நம் அகல்நாட்டும்பர் நாறு ஐங்கூந்தல் நணித்து என நக்கு – கோவலன் நீ வினவிய மதுரை நமது அகன்ற நாட்டிற்கு அப்பால் ஆறைந்து காதத்துள்ளது. இனி அண்ணிது என்று கூறி நகைத்து;
முப்பது காதமென்னும் பொருள் மறைந்து, ஆறு அல்லது ஐந்து காதம் என்னும் பொருள் தோன்ற ‘ஆறைங்காத’மென்றான். நகை-துன்ப நகை; பிறர்கட் டோன்றிய பேதைமை காரணமாகத் தோன்றிய நகையுமாம். கூந்தல்,விளி.
௪௪-௫. தேமொழி தன்னொடும் சிறையகத்து இருந்த
காவுந்தி ஐயையைக் கண்டுஅடி தொழலும்,
தே மொழி தன்னொடும் சிறையகத்து இருந்த காவுந்தி ஐயையைக் கண்டு அடி தொழலும்-தேனையொத்த மொழியினையுடைய கண்ணகியொடும் சென்று பள்ளியகத்திருந்த கவுந்தியடிகளைக் கண்டு அடிவணங்குதலும்;
சிறை-தவவேலி என்பர் அடியார்க்குநல்லார். ஐயை-ஐயன் என்பதன் பெண்பால். கழிந்து கழிந்து போகிக் கொண்டு நீங்கிப் போகிக் கழிந்து நுழைந்து நடந்து பொருந்த நறும்பல் கூந்தல் இனைந்து வருந்தி உயிர்த்து வினவ நணித்தென நக்குக் கண்டு அடி தொழலு மென்க.
௪௬-௯. உருவும் குலனும் உயர்ப்பேர் ஒழுக்கமும்
பெருமகன் திருமொழி பிறழா நோன்பும்
உடையீர் என்னோ உறுக ணாளரின்
கடைகழிந்து இங்ஙனம் கருதிய வாறுஎன,
உருவும் குலனும் உயர்பேர் ஒழுக்கமும்-அழகும் உயர்குடிப் பிறப்பும் உயர்விற்குக் காரணமாய பெருமை பொருந்திய ஒழுக்கமும், பெருமகன் திருமொழி பிறழா நோன்பும் உடையீர்-அருக தேவனின் ஆகமக் கூற்றினின்றும் தப்பாத விரதமும் ஆகிய இவற்றை உடைய நீங்கள், என்னோ உறுகணாளரிற் கடை கழிந்து இங்ஙனம் கருதியவாறு என-தீவினையாளரைப்போல நும்மிடத்தை விட்டு நீங்கி இவ்வாறு வருவதற்குக் கருதிய தென்னோ எனக் கேட்ப;
உறுகணாளர்-மிடியாளர் எனலுமாம். கடைகழிதல் இவர்க்கு முறையன்றாகலான் கடைகழிந்தென்றார். உம்மைகள் சிறப்பும்மை. உடையீர் இங்ஙனங் கருதியவாறு என்னோ என்க.
௫0-௧. உரையாட்டு இல்லை உறுதவத் தீர்யான்
மதுரை மூதூர் வரைபொருள் வேட்கையேன்.
உரையாட்டு இல்லை உறுதவத்தீர்யான் மதுரை மூதூர் வரை பொருள் வேட்கையேன்-மிக்க தவத்தினையுடையீர் இவ்வினாவிற்கு யான் சொல்லத்தக்க தொன்றில்லை ஆயினும் மதுரை மூதூரிற் சென்று பொருளீட்டும் வேட்கையை உடையேனாயினேன் என்று கூற;
“சென்ற கலனோடு உலந்த பொரு ளீட்டுத லுற்றேன்,” என இவன் முன்னர் காதையில் கூறியவதனால் ‘வரைபொருள்’ என்பதற்குத் தான் தேடுவதாக அறுதி செய்துகொண்ட பொருள் என்க என வென ஒரு சொல் வருவிக்க. இனிக் கவுந்தியடிகள் கூறுவார்.
௫௨-௪. பாடகச் சீறடி பரல்பகை உழவா
காடுஇடை யிட்ட நாடுநீர் கழிதற்கு
அரிதுஇவள் செவ்வி அறிகுநர் யாரோ
பாடகச் சீரடி பாற்பகை உழவர்-மதுரை செல்வது நும் கருத்தாயின் இவளது பாடக மணிந்த சிறிய அடிகள் பருக்கையாகிய பகையை வெல்ல மாட்டா, நாடு இடையிட்ட நாடு நீர் கழிதற்கு அரிது இவள் செவ்வி அறிகுநர் யாரோ-ஆதலால் நீர் காடும் நாடுமாகிய இவ்வழியைக் கடத்தற்கு இவள் தன்மை ஏற்றதன்று; இனி ஊழ் என்செய்யுமோ அதனை அறிவார் யார் ?
காடு இடையிட்ட நாடு – காடும் நாடும் அறிகுநர் யாரோ என்றது இரக்கம் தோற்றிநின்றது.
௫௫. உரியது அன்றுஈங்கு ஒழிகஎன ஒழியீர்
உரியதன்று ஈங்கு ஒழிகென ஒழியீர்-இவை அன்றியும் இவளை உடன்கொண்டு சேறல் ஏற்புடைத்தன்று ஆகலின் இனிச் செலவை ஒழிமின் என யான் ஒழிப்பவும் ஒழிகின்றிலீர்;
இவர்க்கு மேல் நிகழ்வதறிந்து ஒழிகெனக் கூறினாரெனின், அடைக்கலக் காதையுள் ஒரு பொழுதிற்கு ஓம்படை பல கூற வேண்டாமையின் இவர்க்குத் தவத்தினாலே சபித்தலன்றிக் காலவுணர்ச்சியின்மை உணர்கவென்பர் அடியார்க்கு நல்லார்.
௫௬-௬௩. மறஉரை நீத்த மாசுஅறு கேள்வியர்
அறஉரை கேட்டுஆங்கு அறிவனை ஏத்தத்
தென்தமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரைக்கு
ஒன்றிய உள்ளம் உடையேன் ஆகலின்
போதுவல் யானும் போதுமின் என்ற காவுந்தி
ஐயையைக் கைதொழுது ஏத்தி
அடிகள் நீரே அருளிதிர் ஆயின்இத்
தொடிவளைத் தோளி துயர்த்தீர்த் தேன்என,
மற உரை நீத்த மாசறு கேள்வியர் – மறவுரைகளை நீக்கிய குற்றமற்ற கேள்விப் பயனை உடையவர் தம், அற உரை கேட்டு ஆங்கு அறிவனை ஏத்த-அறவுரைகளைக் கேட்டு அக் கேட்டவாறே அருக தேவனை யேத்துதற்கு, தென்றமிழ் நன்னாட்டுத் தீது தீர் மதுரைக்கு-தெற்கின்கண்ணுள்ள தமிழ்நாட்டின் கண்ணதாகிய குற்றந் தீர்ந்த மதுரைக்குச் செல்வதற்கு, ஒன்றிய உள்ளமுடையேன் ஆகலின்-ஒருப்பட்ட உள்ளமுடையேனாகலின், போதுவல் யானும் போதுமின் என்ற கவுந்தி ஐயையைக் கைதொழுது ஏத்தி-யான் செல்வேன் நீவிரும் வம்மின் என்று கூறிய கவுந்தியடிகளைக் கையான் வணங்கி நாவாற் போற்றி, அடிகள் நீரே அருளுதிராயின் இத் தொடிவளைத் தோளி துயர் தீர்த்தேன் என – அடிகளே நீரே இன்னணம் அருள் செய்வீராயின் இவ் வளைந்த வளைவை அணிந்த தோளினை யுடையாளது துன்பமெல்லாம் போக்கினே னாவேனென்று சொல்ல ;
மதுரைக்குச் செல்லவென ஒருசொல் விரித்துரைக்க. தொடி-வளைவு. ”தொடிக்கட் பூவை” என்பது காண்க. தீர்த்தேனென இறந்தகாலத்தாற் கூறினான். கவுந்தியடிகளின் அருள் உண்டென்னும் தெளிவுபற்றி.
௬௪-௫. கோவலன் காணாய் கொண்ட இந்நெறிக்கு
ஏதம் தருவன யாங்கும்பல கேண்மோ;
கோவலன் காணாய்-கோவலனே நீ இதனை யறியாய், கொண்ட இந் நெறிக்கு ஏதம் தருவன யாங்கும் பல-நாம் செல்ல நினைத்த இவ்வழியின்கண் எவ்விடத்தும் துன்பம் தருவன பலவாகும், கேண்மோ-அவற்றைக் கேட்பாயாக;
காணாய் என்றது இவ்வாற்றின் ஏதந் தருவனவற்றை அறியாய் என்றவாறு. இந்நெறிக்கு என்பது உருபு மயக்கம். மோ - முன்னிலையசை.
௬௬-௭௧. வெயில்நிறம் பொறாஅ மெல்இயல் கொண்டு
பயில்பூந் தண்டலைப் படர்குவம் எனினே,
மண்பக வீழ்ந்த கிழங்குஅகழ் குழியைச்
சண்பகம் நிறைத்த தாதுசோர் பொங்கர்
பொய்யறைப் படுத்துப் போற்றா மாக்கட்குக்
கையறு துன்பம் காட்டினும் காட்டும்,
வெயில் நிறம் பொறாஅ மெல்லியற் கொண்டு-வெயிலின் தன்மையைப் பொறாத மெல்லிய இயல்பினையுடைய இவளைக் கொண்டு, பயில்பூந் தண்டலை படர்குவம் எனினே-மிக்க மலர்களையுடைய சோலையின்கண் செல்வோமாயின், மண்பக வீழ்ந்த கிழங்கு அகழ் குழியை – நிலம் பிளக்க இறங்கிய வள்ளிக் கிழங்கைத் தோண்டி எடுத்ததனாலாய குழிகளை, சண்பகம் நிறைத்த தாது சோர் பொங்கர்-சண்பக மரங்கள் நிரப்பிய பூந்துகள் சோர்ந்த பழம் பூக்கள், பொய்யறைப் படுத்து-பொய்க் குழிப் படுத்தி, போற்றா மாக்கட்கு-பாதுகாத்து் செல்லாத மக்களுக்கு, கையறு துன்பம் காட்டினும் காட்டும்-செயலறவாகிய துன்பத்தைக் காட்டுதலையும் செய்யும்;
நிறம்-தன்மை; நிறமெனவே கொண்டு அதனைக் கண்ணாற் பார்க்கவும் பொறாத எனலுமாம். பொங்கர் – பழம்பூ. கையறு துன்பம் – மீளாத் துன்பமெனலுமாம். சண்பகம் நிறைந்த பொங்கர் பொய்யறைப் படுத்துக் காட்டும் என்க.
௭௨-௩. உதிர்ப்பூஞ் செம்மலின் ஒதுங்கினர் கழிவோர்
முதிர்த்தேம் பழம்பகை முட்டினும் முட்டும்,
உதிர்பூஞ் செம்மலின் ஒதுங்கினர் கழிவோர்-உதிர்ந்த பொலிவினையுடைய பழம் பூக்களினின்றும் ஒதுங்கிச் செல்வோரை, முதிர்தேம் பழம் பகை முட்டினும் முட்டும்-முற்றிய தேனொழுகும் பலாப் பழங்கள் பகை போலாகி மோதுதலையும் செய்யும்;
தேம்பழம்-இனிய தெங்கம்பழம் எனலுமாம். முட்டினு முட்டுவர் என்பது பாடமாயின் கழிவோர் பழமாகிய பகையினால் தடைப்படினும் படுவர் என்க. இப்பொருட்குப் பழப்பகை என்பது பாடமாதல் தகும். அரும்பதவுரைகாரர் இப் பாடமே கொண்டுளார். உம்மை ஐய வும்மை. மேலே மெல்லியற் கொண்டு படர்குவம் எனினே எனக் கூறிவைத்துப் பின் போற்றா மாக்கட்கு எனவும், ஒதுங்கினர் கழிவோர் எனவும் உலகியலாற் கூறினார்.
௭௪-௫. மஞ்சளும் இஞ்சியும் மயங்குஅரில் வலயத்துச்
செஞ்சுளைப் பலவின் பரல்பகை உறுக்கும்.
மஞ்சளும் இஞ்சியும் மயங்கு அரில் வலயத்து-மஞ்சளும், இஞ்சியு முதலியன தம்முள் கலந்த பிணக்கத்தினையுடைய தோட்டங்களில், செஞ்சுளைப் பலவின் பாற்பகை யுறுக்கும்-பலாவின் செவ்விய சுளைகளிலுள்ள விதையாகிய பருக்கைகள் பகையால் உறுத்தலைச் செய்யும்;
வலயம்-பாத்தியுமாம். பலாவின் அடிக்கீழ் மஞ்சள் முதலியன பயிரிடல், ”பைங்கறி நிவந்த பலவி னீழல், மஞ்சண் மெல்லிலை” என வருதல் கொண்டுணர்க. உறுக்கும்-உறுத்தும்.
௭௬-௭. கயல்நெடுங் கண்ணி காதல் கேள்வ.
வயல்உழைப் படர்க்குவம் எனினே
கயல் நெடுங் கண்ணி காதற் கேள்வ-சேலையொத்த நீண்ட கண்களையுடைய கண்ணகிக்கு அன்பு நிறைந்த கணவனே, வயலுழைப் படர்குவம் எனினே-வயல் நெறியே செல்வோமாயின்;
முன்னர்க் கோவலன் என விளித்து மீட்டும் ஈண்டு “கயனெடுங் கண்ணி காதற் கேள்வ”என விளித்தது முன்னர்க் கூறியன நினக்கும் ஏதம் தருவன. பின்னர்க் கூறுவன நினக்கு எத்தகைய அச்சத்தையும் செய்யாவிடினும், கடைகழிந்தறியா இக் காரிகைக்கு அச்சம் விளைக்கும்; அது நினக்குப் பொறுத்தற்கரிதாகும் என்ப தறிவித்தற்கென்க.
௭௭-௮௧. ஆங்குப்
பூநாறு இலஞ்சிப் பொருகயல் ஓட்டி
நீர்நாய் கெளவிய நெடும்புற வாளை
மலங்குமிளிர் செறுவின் விலங்கப் பாயின் கலங்கலும் உண்டுஇக் காரிகை,
ஆங்கு-அவ்விடங்களில், பூ நாறு இலஞ்சி-மலர்கள் மணங்கமழும் குளங்களில், பொருகயல் ஓட்டி-தம்முட் பொருகின்ற கயல்மீன்களைத் துரந்து, நீர்நாய் கௌவிய நெடும்புற வாளை-நீர்நாய் பற்றிய நீண்ட முதுகினையுடைய வாளை, மலங்கு மிளிர் செறுவின் விலங்கப் பாயின்-மலங்குகள் பிறழ்கின்ற வயற்கண் குறுக்காகப் பாயுமாயின், கலங்கலும் உண்டு இக் காரிகை –இந் நங்கை அஞ்சுதலு முண்டாம்;
கயலோட்டுதலை வாளையின் தொழிலாகக் கொள்ளுதலு மமையும். மிளிர்தல்-பிறழ்தல்; நெளிதல்.
௮௧-௫. ஆங்கண்
கரும்பில் தொடுத்த பெருந்தேன் சிதைந்து
சுரும்புசூழ் பொய்கைத் தூநீர் கலக்கும்
அடங்கா வேட்கையின் அறிவுஅஞர் எய்திக்
குடங்கையின் கொண்டு கொள்ளவும் கூடும்,
ஆங்கண் கரும்பில் தொடுத்த பெருந்தேன் சிதைந்து-கரும்பின்கண் வைத்த மிகுந்த தேன்கூ டழியப் பெற்றொழுகி, சுரும்பு சூழ் பொய்கைத் தூநீர் கலக்கும்-வண்டுகள் சூழ்ந்த வாவிகளின் தூய நீரொடு கலந்துவிடும்; அடங்கா வேட்கையின்-தணியாத நீர் வேட்கையானே, அறிவு அஞர் எய்தி-அறிவு சோர்ந்து, குடங்கையின் நொண்டு கொள்ளவும் கூடும் – அத்தகைய நீரை இவள் தன் அங்கையான் முகந்து உட்கொள்ளவுந் தகும்; குடங்கையாவது ஐந்து விரலுங் கூட்டி உட்குழிப்பது-இதனால் நமது அற நூலிற் கடியப்பெற்ற தேனுண்டலை ஒழிக லென்றவாறாயிற்று. நொண்டு-முகந்து என்னுஞ் சொல் மொண்டெனத் திரிந்து பின் நொண்டு என்றாயிற்று; இக்காலத்தில் இஃது இழிசினர் வழக்கிலுள்ளது.
௮௬-௯. குறுநர் இட்ட குவளைஅம் போதொடு
பொறிவரி வண்டினம் பொருந்திய கிடக்கை
நெறிசெல் வருத்தத்து நீர்அஞர் எய்தி
அறியாது அடிஆங்கு இடுதலும் கூடும்,
குறுநர் இட்ட குவளையம் போதொடு-களை பறிப்பார் பறித்து வரப்புகளில் போகட்ட குவளைப் பூவுடனை, பொறிவரி வண்டினம் பொருந்திய கிடக்கை-புள்ளிகளையுங் கீற்றுக்களையுமுடைய வண்டின் கூட்டங்கள் உள்ளொடுங்கிக் கிடக்கும் இடங்களை, நெறிசெல் வருத்தத்து-வழி நடந்து துன்பத்தினால், நீர் அஞர் எய்து-நீவிர் சோர்வுற்று, அறியாது அடி ஆங்கு இடுதலும் கூடும்-உணராது அவ்விடத்து அடியிட்டு நடத்தலுங் கூடும்;
குறுதல்-பறித்தல். இதனால் உயிர்க்கொலை போற்றுக எனக் கூறியவாறாயிற்று.
௯0-௩. எறிநீர் அடைகரை இயக்கம் தன்னில்
பொறிமாண் அலவனும் நந்தும் போற்றாது
ஊழ்அடி ஒதுக்கத்து உறுநோய் காணின்
தாழ்தரு துன்பம் தாங்கவும் ஒண்ணா,
எறிநீர் அடை கரை இயக்கந்தன்னில்-எறியும் நீரையுடைய வாய்க்காலின் கரையாகிய வழிக்கண், பொறிமாண் அலவனும் நந்தும் போற்றாது-புள்ளிகளின் அழகினையுடைய நண்டினையும் நந்தினையும் பாதுகாவாது, ஊழ் அடி ஒதுக்கத்து-முறையான் அடியிட்டுச் செல்லும் செலவினால், உறுநோய் காணின்-அவற்றுக்கு மி்க்க நோயுண்டாயின், தாழ தரு துன்பம் தாங்கவும் ஒண்ணா-நமக்கு வரும் துன்பம் நம்மால் பொறுக்கவும் முடியாது; இயக்கம்-இயங்குதலையுடையது: வழி. நந்து-நத்தை. கொலையென்று வாக்காற் கூறவுமாகாமையின் நோய் என்றார். துன்பம்-கொலைப் பாவம். இம்மைக்கண் அன்றி மறுமையில் நரகத்திலுறுந் துன்பமும் தாங்கவொண்ணா எனப் பொருள் தருதலின் தாங்கவும் என்னுமும்மை எச்சவும்மை. அருக சமயத்தாரின் கள்ளுண்ணாமை, கொல்லாமையென்னும் அறங்கள் மறந்தும் வழுவலாகாவென்பதனை இங்ஙனம் அழகுறக் கூறிப்போந்தனர்.
௯௪-எ. வயலும் சோலையும் அல்லது யாங்கணும்
அயல்படக் கிடந்த நெறிஆங்கு இல்லை
நெறிஇருங் குஞ்சி நீவெய் யோளொடு
குறிஅறிந்து அவைஅவை குறுகாது ஓம்புஎன,
வயலும் சோலையும் அல்லது யாங்கணும்-எவ்விடத்தும் வயல்களுஞ் சோலைகளுமல்லது, அயல்படக் கிடந்த நெறி ஆங்கில்லை-வேறுபடக் கிடந்த வழி அவ்விடத்திலில்லை ஆகலான், நெறி இருங்குஞ்சி நீ வெய்யோளொடு-நெளிந்த கரிய குஞ்சியினையுடையாய் நீ நின்னை விரும்பிய இவளுடன், குறி அறிந்து அவையவை குறுகாது ஓம்பு என-அவ்வவ் விடங்களைக் குறிப்பானே யுணர்ந்து அவற்றைச் சாராது பாதுகாப்பாயாக வென்று சொல்லி; முன்னர். முதற்கண் சோலையையும் பின்னர் வயலையும் கூறி வைத்து, ஈண்டு வயலுஞ் சோலையுமல்லது என்றது எதிர்நிரனிறை. இத்துணையும் கவுந்தியடிகள் கூற்றில் வைத்துக் கண்ணகியின் மென்மைத் தன்மை கூறுவாராய்ச் சோணாட்டின் வளமிகுதியை எழில்பெற உடன் கூறினார்,என்க.
௯௮-௧0௧. தோம்அறு கடிஞையும் சுவல்மேல் அறுவையும்
காவுந்தி ஐயைகைப் பீலியும் கொண்டு
மொழிப்பொருள் தெய்வம் வழித்துணை ஆகெனப்
பழிப்புஅருஞ் சிறப்பின் வழிப்படர் புரிந்தோர்,
தோம் அறு கடிகையும் சுவல்மேல் அறுவையும் காவுந்தி யையை கைப் பீலியும் கொண்டு-கவுந்தியடிகள் குற்றமற்ற பிச்சைப் பாத்திரத்தையும் தோளிலிடும் உறியையும் மயிற்றோகையையும் கொண்டு, மொழிப்பொருள் தெய்வம் வழித்துணை ஆகென-பொருண் மொழியாகிய தெய்வம் யாம் செல்லும் நெறிக்கண் துணையாகவென்று, பழிப்பரும் சிறப்பின் வழிப்படர் புரிந்தோர்-பழிப்பில்லாத பெருமையினையுடைய ஒழுக்கத்தொடு வழிச்செலவைப் புரிந்தோராகிய அவர்கள்;
தோம்-குற்றம். பொருண்மொழியென மாறுக. தெய்வமாவது பஞ்சமந்திரம்; அ சி ஆ உ சா என்பன. கொண்டு என்பதனைக் கொள்ளவெனத் திரித்துத் துணையாக வென்றதனைக் கோவலன் கண்ணகி கூற்றாக்கலுமாம். படர்-செல்கை; முதனிலைத் தொழிற்பெயர். புரிந்தோர்-வினைப்பெயர்.
௧0௨-௧௧. கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்
விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
கால்பொரு நிவப்பின் கடுங்குரல் ஏற்றொடும்
சூல்முதிர் கொண்மூப் பெயல்வளம் சுரப்பக்
குடமலைப் பிறந்த கொழும்பல் தாரமொடு
கடல்வளன் எதிரக் கயவாய் நெரிக்கும்
காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை
ஓஇறந்து ஒலிக்கும் ஒலியே அல்லது
ஆம்பியும் கிழாரும் வீங்குஇசை ஏத்தமும்
ஓங்குநீர்ப் பிழாவும் ஒலித்தல் செல்லாக்
கரியவன் புகையினும்-சனி புகைந்தாலும், புகைக்கொடி தோன்றினும்-தூமகேது தோன்றினாலும், விரிகதிர் வெள்ளி தென் புலம் படரினும்-விரிந்த கதிரினையுடைய சுக்கிரன் தென்றிசைக் கண் செல்லினும், கால்பொரு நிவப்பின்-காற்று மோதும் குடகின் உச்சியின்கண்,கடுங்குரல் ஏற்றொடு சூல் முதிர்கொண்மூப் பெயல்வளம் சுரப்ப-கடிய குரலையுடைய சிறந்த இடியுடன் கரு முற்றிய கார் பெயலாகிய வளத்தைச் சுரத்தலான், குடமலைப் பிறந்த கொழும்பல் தாரமொடு கடல்வளன் எதிரக் கயவாய் நெரிக்கும் காவிரிப் புதுநீர்க் கடுவரல் வாய்த்தலை ஓ இறந்து ஒலிக்கும் ஒலியே அல்லது-அக்குடவரைக்கண் தோன்றிய கொழுவிய பல பண்டங்களோடு கடல் தன் வளங்களொடு எதிரும் வண்ணம் புகாரைக் குத்தியிடிக்கும் கடுகி வருதலையுடைய காவிரியின் புது நீர் வாய்த்தலைக்கண் கதவின்மீதெழுந்து விழும் ஒலியல்லாது, ஆம்பியும் கிழாரும் வீங்கிசை ஏத்தமும் ஓங்கு நீர்ப் பிழாவும் ஒலித்தல் செல்லா-பன்றிப்பத்தரும் பூட்டைப் பொறியும் ஒலி மிகுந்த ஏற்றமும் நீர்மிகும் இறை கூடையுமென இவை ஒலித்தல் இல்லாத;
தாரமொடு வளனெதிர நெரிக்குங் கடுவரற் காவிரிப் புதுநீர் என்க. புகைதல்-புகைவீடுகளிற் சென்று மாறுபடுதல். புகைக்கொடி-தூமகேது; வட்டம், சிலை, நுட்பம் தூமம் என்னும் கரந்துறை கோட்கள் நான்கினுள் தூமம் எனப்படுவது. ”மைம்மீன் புகையினுந் தூமந் தோன்றினும், தென்றிசை மருங்கின் வெள்ளி யோடினும்” என்றார் பிறரும். இன்னோரன்ன குறிப்புக்களினின்று பண்டைத் தமிழ் மக்கள் கோட்களின் நிலையிலிருந்து மழை முதலியவற்றை அறியும் குறிநூற் புலமை யுடையராயிருந்தன ரென்பது பெறப்படும். கோட்களின் முரணிய நிலையில் உலகின் பிற பகுதிகளில் மழையில்லையாயினும் குடக மலையில் மழைபெய்வதும் காவிரியில் நீர் பெருக்கெடுத்து வருவதும் தப்பாவெனக் காவிரியின் சிறப்புக் கூறியவாறாயிற்று. ஒலித்தல் செல்லாவென்றது பிற நாடுகளிலாயின் இவ்வொலியே மிகும் என அவற்றின் சிறுமை தோன்றநின்றது. ஓ-வாய்த்தலைக்கிட்ட கதவு; இனி ஓவிறந்து ஒழிவின்றி யென்றுமாம். உம்மைகள், சிறப்பும்மை.
௧௧௨-௩. கழனிச் செந்நெல் கரும்புசூழ் மருங்கில்
பழனத் தாமரைப் பைம்பூங் கானத்துக்
கழனிச் செந்நெல் கரும்பு சூழ் மருங்கின்-வயற்கண் செந்நெலும் கரும்புஞ் சூழ்ந்த இடத்தினையுடைய, பழனத் தாமரைப் பைம்பூங் கானத்து-நீர்நிலைச் செறுவின் கணுண்டான பசிய பொலிவினையுடைய தாமரைக் காட்டின்கண்;
௧௧௪-௯. கம்புட் கோழியும் கனைகுரல் நாரையும்
செங்கால் அன்னமும் பைங்கால் கொக்கும்
கானக் கோழியும் நீர்நிறக் காக்கையும்
உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும்
வெல்போர் வேந்தர் முனையிடம் போலப்
பல்வேறு குழூஉக்குரல் பரந்த ஓதையும்,
கம்புட் கோழியும்-சம்பங் கோழியும், கனைகுரல் நாரையும்-ஒலிக்கும் குரலினையுடைய நாரையும், செங்கால் அன்னமும்-சிவந்த காலினையுடைய அன்னப்புள்ளும், பைங்காற் கொக்கும்-பசிய காலினையுடைய கொக்கும், கானக் கோழியும்-கானாங்கோழியும், நீர்நிறக் காக்கையும்-நீரில் நீந்துமியல்புள்ள நீர்க்காக்கையும், உள்ளும்-உள்ளானும், ஊரலும்-குளுவையும், புள்ளும்-கணந்துட் பறவையும், புதாவும்-பெருநாரையும், வெல்போர் வேந்தர் முனையிடும்போல-வென்றி காணும் போரை வல்ல அரசரிருவர் பொருமிடம்போல, பல்வேறு கழூஉக்குரல் பரந்த ஓதையும்-பலவாக வேறுபட்ட திறத்தான ஒலிக்கும் மிக்க ஓசையும்;
கானக்கோழி-காட்டுக்கோழி என்பாருமுளர். நிறம்-தன்மை. ஊரல் நீர்மேலூர்வது ஆகலின் ஆகுபெயர் என்பர் அடியார்க்குநல்லார். புதா- போதா என்பதன் விகாரம். வெல்போர், முனையிடம், வினைத்தொகை. குழூஉக்குரல் பரந்த ஓசை - பல்வேறு கூட்டங்களின் குரல் பரந்து ஒன்றான ஓசையென்னலுமாம்.
௧௨0-௪. உழாஅ நுண்தொளி உள்புக்கு அழுந்திய
கழாஅமயிர் யாக்கைச் செங்கண் காரான்
சொரிபுறம் உரிஞ்சப் புரிஞெகிழ்பு உற்ற
குமரிக் கூட்டில் கொழும்பல் உணவு
கவரிச் செந்நெல் காய்த்தலைச் சொரியக்
உழாஅ நுண் தொளிஉள் புக்கு அழுந்திய-உழப்படாத நுண்ணிய சேற்றுட் புக்கு ஆழ்ந்த, கழாஅ மயிர் யாக்கைச் செங்கட் காரான-கழுவப் பெறாத மயிரினையுடைய உடலையும் சிவந்த கண்ணினையுமுடைய எருமை, சொரிபுறம் உரிஞ்ச-தினவையுடைய முதுகினை உராய்தலானே, புரிஞெகிழ்பு உற்ற குமரிக் கூட்டின்-புரிகள் அறுந்து நெகிழ்தலையுற்ற அழியாத நெற்கூட்டின்கணுள்ள, கொழும்பல் உணவு-கொழுவிய பலவாகிய பண்டங்கள், கவரிச் செந்நெற் காய்தலைச் சொரிய-கவரிபோன்ற செந்நெல்லின் கதிரினிடத்துச் சிந்த;
தொளி-சேறு. உழாஅ நுண்டொளி-தானே பட்ட சேறு; என்றது வயல் வளங் கருதிற்று. காரான்-எருமை. குமரி-அழியாமை. சோணாட்டின் விளைவு மிகுதி கூறியபடி.
௧௨௫-௬. கருங்கை வினைஞரும் களமருங் கூடி
ஒருங்குநின்று ஆர்க்கும் ஒலியே அன்றியும்,
கருங்கை வினைஞரும் களமரும்- வலிய கையினையுடைய வினையாளருங் களமர்களும், கூடி ஒருங்கு நின்றார்க்கும் ஒலியே அன்றியும்-கூடிநின்று ஒன்றுபட்டொலிக்கும் ஓதை யன்றியும்;
கருங்கை-வலிய கை. வினைஞர்-பள்ளர், பறையர், முதலாயினோர். களமர்-உழுகுடி வேளாளர். கருங்கை வினைஞர்-கருங்கைக் களமர் என்க.
௧௨௭-௩௨. கடிமலர் களைந்து முடிநாறு அழுத்தித்
தொடிவளைத் தோளும் ஆகமும் தோய்ந்து
சேறுஆடு கோலமொடு வீறுபெறத் தோன்றிச்
செங்கயல் நெடுங்கண் சின்மொழிக் கடைசியர்
வெங்கள் தொலைச்சிய விருந்திற் பாணியும்,
கொழுங்கொடி அறுகையும் குவளையும் கலந்து
கடிமமலர் களைந்து-மணமுள்ள மலர்களை யுடைய ஆம்பல் முதலியவற்றைப் பறித்தெறிந்து, முடிநாறு அழுத்தி-அங்ஙனம் பறித்தவிடத்தே முடியின் நாற்றைப் பகிர்ந்து நட்டு, தொடிவளைத் தோளும் ஆகமும் தோய்ந்து-வளைந்த வளையலணிந்த தோளின்கண்ணும் மார்பின்கண்ணும் படிந்து, சேறாடு கோலமொடு வீறுபெறத் தோன்றி-சேறாடுகின்ற கோலத்தோடு அழகு பெறத் தோன்றி, செங்கயல் நெடுங்கட் சின்மொழிக் கடைசியர்-சிவந்த கெண்டையை ஒத்த நெடிய கண்களையும் சிலவாகிய மொழியினையுமுடைய கடைசியரது, வெங்கள் தொலைச்சிய விருந்திற் பாணியும்-மிகுந்த மயக்கந் தருங் கள்ளை உண்டு தொலைத்ததனாலுண்டான இசையொடும் பழகிப் போதாத பாடலும்;
கடிமலர் களைந்து முடிநாறு அழுத்தி என்பதற்குக் காலையின் முடித்த பூக் களைந்து முடித்த முடியிலே முடியினாற்றை நறுக்கிச் சூடிக்கொண்டு எனவும், தோளும் ஆகமும் தோய்ந்து சேறாடல் என்பதற்கு ஒருவர் மேலொருவர் சேற்றை இறைத்துக் கோடல் எனவும் கூறுவார் அடியார்க்கு நல்லார். சின்மொழி-இழிந்த மொழி எனவுமாம்.
௧௩௨-௫. கொழுங்கொடி அறுகையும் குவளையும் கலந்து
விளங்குகதிர்த் தொடுத்த விரியல் சூட்டிப்
பார்உடைப் பனர்ப்போல் பழிச்சினர் கைதொழ
ஏரொடு நின்றோர் ஏர்மங் கலமும்,
கொழுங்கொடி அறுகையும் குவளையும் கலந்து-கொழுவிய கொடியாக நீண்ட அறுகையும் குவளையையும் சேர்த்து, விளங்கு கதிர்த் தொடுத்த விரியல் சூட்டி-விளங்கும் நெற்கதிரோடே தொடுத்த மாலையை ஏரிலே அணிந்து, பார் உடைப்பனர் போல்-நிலத்தைப் பிளப்பவரைப்போல, பழிச்சினர் கை தொழ – போற்றுவார் வணங்க, ஏரொடு நின்றோர் ஏர் மங்கலமும்-ஏரைப் பூட்டி நின்றோர் பாடுகின்ற ஏர் மங்கலப் பாட்டும்;
அறுகையும் குவளையும் கதிரோடு தொடுத்த விரியல் என்க. இது பொன்னேர் எனவும், சிலவிடங்களில் நல்லேர் எனவுங் கூறப்படும்.
௧௩௬-௭. அரிந்துகால் குவித்தோர் அரிகடா வுறுத்த
பெருஞ்செய்ந் நெல்லின் முகவைப் பாட்டும்,
அரிந்து கால் குவித்தோர்-நெல்லினை அரிந்து ஓரிடத்துக் குவித்தோராய நெல்லரிநர், அரி கடாவுறுத்த பெருஞ் செந்நெல்லின் முகவைப் பாட்டும்-சூட்டினைக் கடாவிடுதலா லுண்டான மிக்க செந்நெல்லினை முகந்து தரும் முகவைப் பாட்டும்;
கடாவுறுத்த செந்நெல் என்க. அரி-அரித்துப் போகட்ட நெற்சூடு. முகவை பாடுதல்-பொலி பாடுதல். நெல் முகந்து கொடுக்கப் படுதலான் முகவையாயிற்று.
௧௩௮-௯. தெண்கிணைப் பொருநர் செருக்குடன் எடுத்த
மண்கனை முழவின் மகிழ்இசை ஓதையும்,
தெண்கிணைப் பொருநர் செருக்குடன் எடுத்த-தெளிந்த ஓசையினையுடைய தடாரியினையுடைய கிணைப்பொருநர் செருக்குதலோ டெடுத்த, மண் கணை முழவின் மகிழ் இசை ஓதையும்-மார்ச்சனையையுடைய திரண்ட முழவினது மகிழ்ச்சியைத் தரும் இசையின் ஒலியும்;
இது களவழி வாழ்த்து; என்னை? ”தண்பணை வயலுழவனைத் தெண்கிணைவன் திருந்துபுகழ் கிளந்தன்று” என்றாராகலின்.
௧௪0-௧. பேர்யாற்று அடைகரை நீரிற் கேட்டுஆங்கு
ஆர்வ நெஞ்சமோடு அவலம் கொள்ளார்,
பேர் யாற்று அடைகரை நீரிற் கேட்டாங்கு-ஆகிய இவ்வோசைகளைப் பெரிய யாற்றங்கரையில் முறைமையிற் கேட்டு, ஆர்வ நெஞ்சமொடு அவலம் கொள்ளார்-விருப்பங் கொண்ட உள்ளத்தொடு வருத்தத்தினைக் கொள்ளாராய்;
பரந்த வோதையும் (௧௧௯). ஆர்க்கு மொலியும் (௧௨௬), விருந்திற் பாணியும் (௧௩௧); ஏர் மங்கலமும் (௧௩௫) முகவைப் பாட்டும் (௧௩௭) மகிழிசை ஓதையம் (௧௩௯) என்னு மிவற்றை அடைகரைக்கண் கேட்டு என்க. இவ்வியற்கை வளங்களின் காட்சி யின்பத்தால் அவலங் கொள்ளாராயின ரென்க.
௧௪௨-௭. உழைப்புலிக் கொடித்தேர் உரவோன் கொற்றமொடு
மழைக்கரு உயிர்க்கும் அழல்திகழ் அட்டில்
மறையோர் ஆக்கிய ஆவூதி நறும்புகை
இறைஉயர் மாடம் எங்கணும் போர்த்து
மஞ்சுசூழ் மலையின் மாணத் தோன்றும்
மங்கல மறையோர் இருக்கை அன்றியும்,
உழைப்புலிக் கொடித் தேர் உரவோன் கொற்றமொடு-புலியைத் தன்னிடத்துடைய கொடியை யுயர்த்தின தேரையுடைய வலியோனாகிய வளவனது வெற்றியோடு, மழைக்கரு உயிர்க்கும் அழல் திகழ் அட்டில்-மழைக்குக் கருப்பத்தினைத் தோற்றுவிக்கின்ற அழலை விளக்குகின்ற வேள்விச் சாலையின் கண், மறையோர் ஆக்கிய ஆவுதி நறும்புகை –வேதியர் ஆக்கிய ஓமத்தின்கண் நல்ல புகை, இறை உயர்மாடம் எங்கணும் போர்த்து-இறப்பினை யுடைய ஓங்கிய மாடங்களின் எவ்விடங்களிலும் போர்த்தலான், மஞ்சு சூழ் மலையின் மாணத்தோன்றும்-மேகஞ் சூழ்ந்த மலைபோல மாட்சிமைப்படக் காணப்படும், மங்கலம் மறையோர் இருக்கை அன்றியும்-மங்கலம் பொருந்திய அந்தணர்களது இருப்பிடங்களும் அவையே யன்றியும்;
அட்டில்-ஈண்டு வேள்விச்சாலை. இறை-இறப்பு. மழைக் கருப்பம் ஆவது புகை.
௧௪௮-௫௫. பரப்புநீர்க் காவிரிப் பாவைதன் புதல்வர்
இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்
உழவிடை விளைப்போர் பழவிறல் ஊர்களும்
பொங்கழி ஆலைப் புகையொடும் பரந்து
மங்குல் வானத்து மலையின் தோன்றும்
ஊர்இடை யிட்ட நாடுஉடன் கண்டு
காவதம் அல்லது கடவார் ஆகிப்
பன்னாள் தங்கிச் செல்நாள் ஒருநாள்:
பரப்பு நீர்க் காவிரிப் பாவைதன் புதல்வர்-நீர் பரந்த காவிரிப்பாவையின் புதல்வரும், இரப்போர் சுற்றமும்-இரப்போரது சுற்றத்தையும், பரப்போர் கொற்றமும்-அரசரது வெற்றியையும், உழவிடை விளைப்போர்-தம் உழுதொழிலின் கண்ணே தோற்றுவிப்போருமாகிய வேளாளருடைய, பொங்கழி ஆலைப் புகையொடு பரந்து-தூற்றாப்பொலி கரும்பாலைப் புகையினால் பரக்கப்பெற்று, மங்குல் வானத்து மலையின் தோன்றும்-இருண்ட மேகம் சூழ்ந்த உயர்ந்த மலைபோலக் காணப்பெறும், பழவிறல் ஊர்களும்-பழைய சிறப்பினையுடைய ஊர்களும் ஆகிய, ஊர் இடை இட்ட நாடு உடன் கண்டு-இவ்விருவகையூர்களும் இடையிடையேயுள்ள நாடெல்லா வற்றையும் கண்டு, காவதம் அல்லது கடவார் ஆகி-ஒரு நாளில் ஒரு காத தூரமல்லது நடக்க முடியாதவராய், பன்னாள் தங்கிச் செல்நாள் ஒருநாள்-பலநாட்கள் தங்கிச் செல்லுகின்ற நாளில் ஒருநாள்; விளைப்போருடைய மலையிற்றோன்றும் பழவிறலூர்களும் என்றியைக்க. பொங்கழி-தூற்றாத நெற்பொலி. பரந்து-பரக்க எனத்திரித்தலும் அமையும். கொற்றத்தையும் கருவையும் அட்டிலின் விளைப்போர் இருக்கையும், சுற்றமும் கொற்றமும் ஊர்களுமாகிய ஊர் என்க. காவிரிப்பாவை புதல்வர் என்றதனை. “வாழி யவன்றன் வளநாடு மகவாய் வளர்க்குந் தாயாகி, ஊழி யுய்க்கும் பேருதவி யொழியாய் வாழி காவேரி” என வருதல் கொண்டுணர்க. உடன்கழிந்தென்றார் இந்நாட்டின் சிறப்புக்களைக் கண்டு கழிதல் அருமையால். புரப்போர் கொற்றத்தை உழவிடை விளைப்போர் என்பதனை, ”பலகுடை நீழலுந் தங்குடைக்கீழ்க் காண்பர், அலகுடை நீழ லவர்” “பொருபடை தரூஉங் கொற்றமும் உழுபடை, ஊன்றுசால் மருங்கி னீன்றதன் பயனே” என்பவற்றானு மறிக.
௧௫௬-௬௩. ஆற்றுவீ அரங்கத்து வீற்றுவீற்று ஆகிக்
குரங்குஅமை உடுத்த மரம்பயில் அடுக்கத்து,
வானவர் உறையும் பூநாறு ஒருசிறைப்
பட்டினப் பாக்கம் விட்டனர் நீங்காப்
பெரும்பெயர் ஐயர் ஒருங்குடன் இட்ட இலங்குஒளிச் சிலாதலம் மேல்இருந் தருளிப்
பெருமகன் அதிசயம் பிறழா வாய்மைத்
தருமம் சாற்றும் சாரணர் தோன்றப்,
ஆற்றுவீ அரங்கத்து வீற்று வீற்றாகி-ஆற்றை மறைக்கும் அரங்கத்தின்கண் வேறிடத்தில்லாத தன்மைத்தாய், குரங்கு அமை உடுத்த மரம் பயில் அடுக்கத்து-வளைந்த மூங்கின் முள்ளால் வளைக்கப்பெற்ற வேலியையுடைய மரங்கள் நெருங்கிய சோலைக்கண், வானவர் உறையும் பூ நாறு ஒரு சிறை-விண்ணவர் உறைதற்கொத்த மலர்கள் மிக்குத் தோன்றும் ஒரு பக்கத்தே, பட்டினப்பாக்கம் விட்டனர் நீங்கா-பட்டினப்பாக்கத்தை விட்டு நீங்கி, பெரும்பெயர் ஐயர் ஒருங்குடன் இட்ட – பெரும் புகழினையுடைய உலக நோன்பிகள் ஒருங்கு கூடி அப்பட்டினப்பாக்கத்திலிட்ட, இலக்கு ஒளிச் சிலாதலம் மேல் இருந்தருளி-விளங்கும் ஒளியினையுடைய சிலாவட்டத்தின்கண் எழுந்தருளி, பெருமகன் அதிசயம் பிறழா வாய்மை தருமம் சாற்றும் சாரணர் தோன்ற-அருகதேவனாற் செய்யப்பட்ட அதிசயங்கள் மூன்றுந்தப்பாத உண்மையினையுடைய அற வொழுக்கங்களை அருளிச் செய்யும் சாரணர் வந்து தோன்ற;
வீ-மறைவு. அரங்கம்-ஆற்றிடைக்குறை. ஈண்டுச் சீரங்கம். குரங்கு-வளைவு பட்டினப்பாக்கத்திலிட்ட சிலாதலமேலிருந்து தருமஞ் சாற்றுஞ் சாரணர் அப்பட்டினப்பாக்கம் விட்டு நீங்கிப் பூ நாறொரு சிறைத் தோன்ற வென்க. பூநாறு என்பதற்கு மலர்கள் மணங் கமழும் எனலுமாம். அதிசயங்கள் மூன்றாவன; சகசாதிசயம்; கர்மக்ஷயாதிசயம். தெய்வீகாதிசயம் என்பன.
௧௬௪-௬௯. பண்டைத் தொல்வினை பாறுக என்றே
கண்டுஅறி கவுந்தியொடு கால்உற வீழ்ந்தோர்
வந்த காரணம் வயங்கிய கொள்கைச்
சிந்தை விளக்கில் தெரிந்தோன் ஆயினும்
ஆர்வமும் செற்றமும் அகல நீக்கிய
வீரன் ஆகலின் விழுமம் கொள்ளான்,
பண்டைத் தொல்வினை பாறுக என்றே-முன்செய்த பழவினைகள் யாவும் கெட்டொழிக என்றுட்கொண்டு, கண்டு அறி கவுந்தியொடு கால் உற வீழ்ந்தோர்-அச் சாரணர் வந்தமையைக் கண்டுணர்ந்த கவுந்தியடிகளுடன் அவர்கள் திருவடியிற் பொருந்த வீழாது வணங்கியோர், வந்த காரமம்-ஈண்டு வந்ததன் காரணத்தை, வயங்கிய கொள்கைச் சிந்தை விளக்கில் தெரிந்தோனாயினும்-விளங்கிய கோட்பாட்டி னையுடைய தன் உள்ளமெனும் விளக்கினான் அறிந்தோனாயினும், ஆர்வமும் செற்றமும் அகல நீங்கிய-விருப்பினையும் வெறுப்பினையும் தன்னை விட்டு அகலும்படி போக்கிய, வீரன் ஆகலின் விழுமம் கொள்ளான்-வீரனாகலாலே இவர்க்கு வருந் துன்பத்திற்கு வருத்தங் கொள்ளானாகி; தொல்வினை யென்றார்; முன்னர்த் தோற்றத்துப் பல்வகைப்பிறவியினும் தொடர்ந்து வருதல் கருதி கண்டறி கவுந்தி யென்றமையாலும் அவருக்குக் காலவுணர்ச்சியின்மை அறிக. ஒடு-ஒருவினையொடு. வீழ்ந்தோர்: வினைப்பெயர். சிந்தை விளக்கு-அவதி ஞானம்; என்றது முக்காலமு முணரும் உணர்வினை. செற்றம்-வெகுளி; ஈண்டு வெறுப்பின் மேற்று. வந்த சாரணருள் உபதேசிப்போர் மூத்தோரே யாகலின், வீரனென ஒருமையாற் கூறினார்.
௧௭0-௭௧. கழிப்பெருஞ் சிறப்பின் கவுந்தி காணாய்:
ஒழிகென ஒழியாது ஊட்டும் வல்வினை
கழி பெருஞ் சிறப்பிற் கவுந்தி காணாய் ஒழிகென ஒழியாது ஊட்டும் வல்வினை-மிக்க பெருஞ் சிறப்பினையுடைய கவுந்தி! யாவரானும் ஒழிக்க வொழியாததாய்த் துன்பம் நுகர்விக்கும் தீவினையைக் காண்பாயாக.
‘ஒழிகென வொழியாது ஊட்டும் வல்வினை’ என்பதற்கு நீ “உரியதன் றீங்கொழிக” என்று கூறவும் ஒழியாவாறு நுகர்விக்கும் தீவினையை என்றலும் பொருந்தும்.
௧௭௨-௧௭௩. இட்ட வித்தின் எதிர்வந்து எய்தி
ஒட்டுங் காலை ஒழிக்கவும் ஒண்ணா
இட்டவித்தின் எதிர்ந்து வந்தெய்தி ஒட்டுங் காலை ஒழிகக்வும் ஒண்ணா-விளை நிலத்திட்ட வித்துப்போல பயன் எதிர நல்வினை வந்தடைந்து நற்பயனை நுகர்விக்கும் காலத்து அதனை ஒழிக்கவும் கூடாது;
அதுபோல இதுவும் ஒழிக்க வொழியாதென்றார். ”உறற் பால நீக்கலுறுவர்க்கு மாகா, பெறற்பா லனையவும் அன்னவாம்” என்றாராகலான் இங்ஙனங் கூறினார். வல்வினையை ஒழித்தல் தன்றொழிலாகவும் நல்வினையை ஒழித்தல் பிறர்வினையாகவும் கொள்க.
௧௭௪-௭௫. கடுங்கால் நெடுவெளி இடும்சுடர் என்ன
ஒருங்குடன் நில்லா உடம்பிடை உயிர்கள்
கடுங்கால் நெடுவெளி இடும் சுடர் என்ன-கடிய காற்றையுடைய நெடிய வெளியிட்த்திடப்பெற்ற விளக்கென்னும்படி அழியினல்லது, ஒருங்குடன் நில்லா உடம்பிடை உயிர்கள்-உடலிடை நின்ற வுயிர்கள் அவ் வுடம்பொடு கூடி உடனில்லா;
தீவினைப் பயனாய துன்பமும், யாக்கை நிலையாமையும் இவர் பால் உறுவது கண்டு சாரணர் கவுந்தியடிகட்கு இங்ஙனங் கூறினார் என்க. விளக்கினை உவமித்தார்; சுடரொழிதற்குரிய வளிநேர்ந்த வழி அச்சுடர் ஒழிதல்போல உலத்தற்குரிய வினை நேர்ந்தவழி உயிரொழிதலும், சுடரொழிந்தவழி அச்சுடர் யாண்டுச் சென்றுற்றதென அறிதற்கியலாவாறு போல உயிரொழிந்த வழி அவ்வுயிர் யாண்டுச் சென்றுற்றதென அறிய முடியாமையுமாய இவ் வொப்புமை கருதி என்க. அழிதல் ஒருதலையென்பது புலப்படக் கடுங்கால் எனவும் நெடுவெளி யெனவும் அடை கொடுத்தார்.
௧௭௬. அறிவன் அறவோன் அறிவுவரம்பு இகந்தோன்
அறிவான்-எல்லாவற்றையும் அறியும் அறிவுடையோன், அறவோன்-அறஞ்செய்தலையே தன் தொழிலாகவுடையோன், அறிவு வரம்பு இகந்தோன்-மக்கள் அறிவின் எல்லையைக் கடந்து நின்றோன்
மக்கள் தம் அறிவினால் அறியவொண்ணாதவன் என்றபடி.
௧௭௭. செறிவன் சினேந்திரன் சித்தன் பகவன்
செறிவன்-எல்லா வுயிர்கட்கும் இதனாயுள்ளவன்; சலியாதவன் என்றுமாம். சினேந்திரன் – எண்வகை வினைகளையும் வென்றோன்.
எண்வகை வினைகளாவன: ஞானாவரணீயம். தரிசனாவரணீயம், வேதநீயம், மோகநீயம், ஆயுஷ்யம், நாமம், கோத்திரம், அந்தராயமென இவை.
சித்தன்-செயத் தருவனவற்றைச் செய்து முடித்தோன்; கன்மங்களைக் கழுவினோன் என உரைப்பாருமுளர்.
பகவன் – முக்கால வுணர்ச்சியுடையோன்.
௧௭௮. தரும முதல்வன் தலைவன்
தருமன் தருமமுதல்வன்-அறங்களுக்கு,மூலமாயுள்ளோன்; தலைவன்-எவ்வகைத் தேவர்க்கும் தலைவனாயுள்ளான்; தருமன்-தானே அறமாயவன்:
௧௭௯. பொருளன் புனிதன் புராணன் புலவன்
பொருளன்-உண்மைப் பொருளாயுள்ளவன்; புனிதன்-தூய்மையுடையோன்; புராணன்-பழைமையானவன்; புலவன்-யாவர்க்கும் அறிவாயுள்ளோன்;
௧௮0. சினவரன் தேவன் சிவகதி நாயகன்
சினவரன்-சினத்தைகி கீழ்ப்படுத்தினவன்;
என்றது சினத்தை வென்றோன் என்றபடி.
தேவன்-தேவர்க்கெல்லாம் முதல்வனாய தேவன்; சிவகதி நாயகன். வீட்டுலகிற்குத் தலைவனானோன்;
வீடு சிவகதி யென்னும் பெயரால் சமணர்களாலும் வழங்கப்பட்டிருப்பது சிந்திக்கற்பாலது.
௧௮௧. பரமன் குணவதன் பரத்தில் ஒளியோன்
பரமன்-மேலானவன்; குணவதன்-குணத்தை யுடையோன்;
குணவதன் என்பதற்குக் குணவிரதன் எனப்பொருள் கோடலுமாம்.குணவிரதம் - திக்குவிரதம், சேதவிரதம், அநர்த்த தண்டவிரதம் என மூன்று வகைப்படும்.
பரத்தில் ஒளியோன்-மேலாய உலகிற்கு விளக்க மாயுள்ளோன்;
௧௮௨. தத்துவன் சாதுவன் சாரணன் காரணன்
தத்துவன்-தத்துவங்களையுடையோன்; சாதுவன்-அடங்கியோன்; சாரணன்-விசும்பியங்குவோன்; காரணன்-எல்லாவற்றிற்கு முதலாயுள்ளோன்;
௧௮௩. சித்தன் பெரியவன் செம்மல் திகழ்ஒளி
சித்தன் – எண்வகைச் சித்திகளையு முண்டாக்கினவன்; பெரியவன்-எல்லாவற்றினும் பெரியோன்; செம்மல்-தலைமையிற் சிறந்தோன்; திகழ் ஒளி-விளங்கும் ஒளியாயுள்ளோன்;
௧௮௪. இறைவன் குரவன் இயல்குணன் எம்கோன்
இறைவன்-எல்லாவற்றினும் தங்குவோன்; குரவன்-ஆசிரியனாகவுள்ளோன்; இயல்குணன்-இயல்பாகவே தோன்றி்ன குணங்களையுடையோன்; எங்கோன்-எங்கள் தலைவன்.
௧௮௫. குறைவில் புகழோன் குணப்பெருங் கோமான் குறைவில் புகழோன்-நிறைந்த கீர்த்தியையுடையோன்;
குணப்பெருங்கோமான்-நற்குணங்கள் யாவும் நிறைந்த சிறந்த தலைவன்;
௧௮௬. சங்கரன் ஈசன் சயம்பு சதுமுகன்
சங்கரன்-நன்மை புரிவோன்; ஈசன்-எவ்வகைச் செல்வங்களையு முடையோன்; சுயம்பு-தானே தோன்றினவன்; சதுமுகன்-நான்முகன்;
௧௮௭. அங்கம் பயந்தோன் அருகன் அருள்முனி
அங்கம் பயந்தோன்-அங்காகமத்தை அருளினவன்; அருகன்-போற்றத்தக்கான்; அருள்முனி-எல்லாவுயிரிடத்தும் அருள் கொண்டொழுகும் முனிவன்;
அங்காகமம் பன்னிரண்டு வகையினை யுடைத்து எனவும். அவை ஆசாராங்கம். சூத்திரகிருதாங்கம். ஸ்தானாங்கம், சமவாயாங்கம், வியாக்கியாப் பிரஜ்ஞப்த்யங்கம், ஞாத்ருகதாங்கம் உபாஸகாத்தியயனாங்கம், அந்தக் கிருத தசாங்கம், அநுத்தரோபபாதிக தசாங்கம், பிரச்சிநவியாகரணாங்கம், விபாக சூத்திராங்கம், திருஷ்டிவாதாங்கம் என்பன வெனவும் கூறுவர்.
௧௮௮. பண்ணவன் எண்குணன் பாத்தில் பழம்பொருள்
பண்ணவன்-கடவுள்; எண்குணன்-எட்டுக் குணங்களுடையோன்; பாத்தில் பழம்பொருள்-பகுத்தற்கரிய பழம் பொருளாயுள்ளோன்;
ஒட்டற்ற பொன்னை யொப்பான் என்றுமாம்.
௧௮௯. விண்ணவன் வேத முதல்வன் விளங்குஓளி
விண்ணவன் –மேலுலகத்துள்ளான்; வேத முதல்வன்-ஆகமம் மூன்றிற்கு முதலாயுள்ளான்; விளங்கு ஒளி-அறியாமை என்னும் இருள் நீங்க விளங்கும் ஒளியாயுள்ளவன்;
௧௯0-௧. ஓதிய வேதத்து ஒளிஉறின் அல்லது
போதார் பிறவிப் பொதிஅறை யோர்எனச்
ஓதிய வேதத்து ஒளியுறின் அல்லது போதார் பிறவிப் பொதி அறையோர் என-மேற்கூறிய பெயர்களையுடைய ஆகமத்தின்கண் விளங்கும் ஒளியாகிய அருகதேவனைச் சார்ந்தாலல்லது பிறவியாகிய மூடப்பெற்ற அறையிலுள்ளார் வெளிவாரார் என்று சாரணர் தலைவன் கூற;
பொதியறையோர் ஒளியுறி னல்லது போதார் என்க. பிறவியை இருளறையாகவும் அருகதேவனை அவ் விருளறையினின்று வெளி வருதற்குத் துணையாய விளக்காகவுங் கூறினார். ஓதிய ஆகமமாகிய ஒளியைப் பெற்றாலல்லது போதாரென்றலுமாம். பொதியறை-சிறு துவாரமுமின்றி மூடப் பெற்ற கீழ் அறை ”புழுக்கரைப் பட்டோர் போன்றுளம் வருந்தாது” என்றார் பிறரும்.
ஒருநாள் ஒரு சிறைச் சாரணர் தோன்ற வீழ்ந்தோர் வந்தகாரணம் தெரிந்தோனாயினும் விழுமங் கொள்ளான் காணாய் ஊட்டும் ஒண்ணாது நில்லா ஒளியுறி னல்லது போதார் என என்று முடிக்க.
௧௯௨-௩. சாரணர் வாய்மொழி கேட்டுத் தவமுதல்
காவுந்தி யும்தன் கைதலை மேற்கொண்டு
சாரணர் வாய்மொழி கேட்டுத் தவ முதற் காவுந்தியும் தன்கை தலைமேற் கொண்டு-தவத்திற்கு முதல்வியாகிய கவுந்தியடிகளும் சாரணர் அருளிச்செய்த பொருண் மொழியைக் கேட்டுத் தம் கைகளைத் தலையின்மீது வைத்துக் கொண்டு;
௧௮௪-௫. ஒருமூன்று அவித்தோன் ஓதிய ஞானத்
திருமொழிக்கு அல்லதுஎன் செவியகம் திறவா,
ஒரு மூன்று அவித்தோன் ஓதிய ஞானத்திரு மொழிக்கு அல்லது என் செவியகம் திறவா-என்னுடைய செவிகள் காமம் வெகுளி மயக்கம் என்னும் மூன்றனையுங் கெடுத்தோனாகிய அருகதேவன் அருளிச் செய்த பேரறிவு தரும் அறவுரைக்குத் திறப்பினல்லது பிறிதொன்றற்குத் திறவா;
அவித்தல்-அடக்கலுமாம்.
௧௯௬-௭. காமனை வென்றோன் ஆயிரத்து எட்டு
நாமம் அல்லது நவிலாது என்நா,
காமனை வென்றோன் ஆயிரத்தெட்டு நாமம் அல்லது நவிலாது என் நா – எனது நாவானது காமன் செயலை வென்றோனுடைய ஆயிரத்தெட்டு நாமங்களைப் பயில்வதல்லது வேறொரு நாமத்தினைக் கூறாது;
௧௯௮-௯. ஐவரை வென்றோன் அடியிணை அல்லது
கைவரைக் காணினும் காணா என்கண்,
ஐவரை வென்றோன் அடி இணை அல்லது கைவரைக் காணினும் காணா என்கண்-என்கண்கள் ஐம்புலன்களையும் வென்றோனுடைய இரண்டு திருவடிகளைக் காண்பதல்லது மற்றைக் கடவுளர் அடிகளைக் கையகத்தே காணினும் காணா;
ஐவர் செறலின் வந்த திணைமயக்கம்.
௨00-௧. அருள்அறம் பூண்டோ ன் திருமெய்க்கு அல்லதுஎன்
பொருள்இல் யாக்கை பூமியில் பொருந்தாது,
அருள் அறம்பூண்டோன் திரு மெய்க்கு அல்லது என் பொருள் இல் யாக்கை பூமியிற் பொருந்தாது-எனது பயனில்லா இவ்வுடல் அருளையும் அறத்தினையும் மேற்கொண்டோனுடைய திருவுடலத்திற்கல்லது பிறிதொன்றற்குப் பூமியிற் பொருந்தாது;
அருளறம் பூண்டோன் என்பதற்கு அருளினால் அறம் பூண்டோன் எனலு மமையும். பூமியிற் பொருந்தலாவது நிலத்து வீழ்ந்திறைஞ்சுதல்.
௨0௨-௩. அருகர் அறவன் அறிவோற்கு அல்லதுஎன்
இருகையும் கூடி ஒருவழிக் குவியா,
அருகர் அறவன் அறிவோற்கு அல்லது என் இருகையும் கூடி ஒருவழிக் குவியா – என் இரு கைகளும் அருகர்க்கு அறங்கூறுவோனாகிய அறிவன் பொருட்டுச் சேர்ந்து குவிதலல்லது ஏனைத்தேவர் பொருட்டுக் குவியா;
அருகர் – சமண இருடிகள். குவிதல்-வணங்குதல்.
௨0௪-௫. மலர்மிசை நடந்தோன் மலர்அடி அல்லதுஎன்
தலைமிசை உச்சி தான்அணிப் பொறாஅது
மலர்மிசை நடந்த மலர் அடி அல்லது என் தலைமிசை உச்சி தான் அணிப்பொறாஅது-எனது தலையினுச்சியும் பூவின்மீது நடந்த தாமரைபோன்ற அடிகளை அணியப் பொறுக்குமல்லது பிறிதொன்றனையும் அணியப்பொறாது;
௨0௬-௭. இறுதிஇல் இன்பத்து இறைமொழிக்கு அல்லது
மறுதிர ஓதிஎன் மனம்புடை பெயராது
இறுதி இல் இன்பத்து இறை மொழிக்கு அல்லது மறுதர ஓதி என் மனம் புடைபெயராது – எனதுள்ளமும் முடிவிலா இன்பத்தினையுடைய இறைவன் அருளிச்செய்த ஆகமத்தை உருவேற் ஓதிப்புடைபெயர் தலல்லது பிறிதொரு மொழியை ஓதிப் புடைபெயராது;
மொழி-ஆகமம்; ஆகுபெயர். மறுதர ஓதுதல்-மீட்டும் மீட்டும் ஓதுதல்.
௨0௮-௧௩. என்றவன் இசைமொழி ஏத்தக் கேட்டுஅதற்கு
ஒன்றிய மாதவர் உயர்மிசை ஓங்கி
நிவந்துஆங்கு ஒருமுழம் நீள்நிலம் நீங்கிப்
பவம்தரு பாசம் கவுந்தி கெடுகென்று
அந்தரம் ஆறாப் படர்வோர்த் தொழுது
பந்தம் அறுகெனப் பணிந்தனர் போந்து,
என்று அவன் இசைமொழி ஏத்தக் கேட்டு-என்று கூறி அவ் வருகதேவனது புகழ் மொழிகளைப் போற்றல் கேட்டு, அதற்கு ஒன்றிய மாதவர்-அக்கூற்றுக்கு உளம் ஒருப்பட்ட சாரணர், உயர்மிசை ஓங்கி நிவந்து ஆங்கு ஒரு முழம் நீணிலம் நீங்கி-சிலாவட்டத்தினின்றும் எழுந்து நிலத்தை விட்டு நீங்கி அந்நிலத்தினும் ஒரு முழம் உயர்ந்து நின்று, பவந்தரு பாசம் கவுந்தி கெடுகென்று-பிறப்பினைத் தரும் பாசம் கவுந்திக்கும் கெடுவதாகவென்று கூறி, அந்தரம் ஆறுஆப் படர்வோர்த் தொழுது-விசும்பின் வழியே செல்லும் அச் சாரணரைத் தொழுது, பந்தம் அறுகெனப் பணிந்தனர் போந்து-பாசம் ஒழிகவென்று வணங்கி வந்து;
கவுந்தி கெடுக என்றது கவுந்திக்குக் கெடுக என்றவாறு. படர்வோர், வினைப்பெயர். பணிந்தனர்,முற்றெச்சம்.
௨௧௪-௮. கார்அணி பூம்பொழில் காவிரிப் பேர்யாற்று
நீர்அணி மாடத்து நெடுந்துறை போகி
மாதரும் கணவனும் மாதவத் தாட்டியும்
தீதுதீர் நியமத் தென்கரை எய்திப்
போதுசூழ் கிடக்கைஓர் பூம்பொழில் இருந்துழி
கார் அணி பூம்பொழிற் காவிரிப் பேர் யாற்று-முகிலையணிந்த மலர் நிறைந்த சோலைகளையுடைய காவிரியாகிய பெரிய யாற்றின், நீர் அணி மாடத்து நெடுந்துறை போகி-நெடுந்துறையைப் பள்ளியோடத்தானே போந்து, மாதரும் கணவனும் மாதவத்தாட்டியும் தீது தீர் நியமத் தென்கரை எய்தி-கண்ணகியும் அவள் கணவன் கோவலனும் கவுந்தியடிகளும் குற்றம் தீர்ந்த கோயிலையுடைய தென்கரையை அடைந்து, போதுசூழ் கிடக்கை ஓர் பூம்பொழில் இருந்துழி-மலர் சூழ்ந்து கிடக்கினற ஒரு பொலிவு பெற்ற சோலைக்கண் சென்றிருந்த பொழுது;
நீரணிமாடம்-பள்ளியோடம். மாதருங் கணவனும் மாதவத்தாட்டியும் போகி என்க.
௨௧௯-௨உ0. வம்பப் பரத்தை வறுமொழி யாளனொடு
கொங்குஅலர் பூம்பொழில் குறுகினர் சென்றோர்
வம்பப் பரத்தை வறுமொழியாளனொடு-புதிய பரத்தைத் தன்மை யுடையாளொருத்தியும் பயனில சொல்லும் விடனொருவனும், கொங்கலர் பூம்பொழில் குறுகினர் சென்றோர்-மணம் பரந்த பொலிவினையுடைய சோலைக்கண் அணுகினராய்ச் சென்றனர்;
வம்பு-புதுமை. வம்பப் பரத்தை என்பதற்குத் தன் மனவெழுச்சியால் தோன்றினபடி சொல்லித் திரியும் பரத்தை என்னலுமாம். வறுமொழியாளன்-விடன். சென்றோர்- வினைப்பெயர்.
௨௨௧-௨. காமனும் தேவியும் போலும் ஈங்குஇவர்
ஆர்எனக் கேட்டுஈங்கு அறிகுவம் என்றே,
காமனும் தேவியும் போலும் ஈங்கிவர்-இவ்விடத்துக் காமனும் அவன் தேவியுமாகக் காணப்படுகின்ற இவர், ஆரெனக்கேட்டு ஈங்கு அறிகுவம் என்றே-யாரென்று கேட்டு இப்பொழுது அறிவோம் என்று சொல்லி;
போலும். ஒப்பில்போலி. இனி, இப்போலும் என்பதனை உவம வுருபாக்கிப் பொருள் கூறலு மமையும்.
௨௨௩-௪. நோற்றுஉணல் யாக்கை நொசிதவத் தீர்உடன்
ஆற்றுவழிப் பட்டோர் ஆர்என வினவ,
நோற்றுணல் யாக்கை நொசி தவத்தீர்-விரதத்தினை மேற்கொண்டு பட்டினி கிடந்துண்ணுதலான் இளைத்த யாக்கையினையும் நுண்ணிய தவத்தினையுமுடையீர், உடன் ஆற்று வழிப்பட்டோர் ஆரென வினவ-நும்மொடு வழிவந்த இவர் யாரென்று வினவ;
நொசி-நுண்மை: நொசி யாக்கை யெனலுமாம். ஆற்றுவழிப்பட்டோர்-வழியிற் கூடி வந்தோர். நோற்றுணல் - பட்டினி கிடந்துண்ணல்.
௨௨௪-௬ என்
மக்கள் காணீர் மானிட யாக்கையர்
பக்கம் நீங்குமின் பரிபுலம் பினர்என,
என் மக்கள் காணீர் மானிட யாக்கையர்-இவர் என்னுடைய மக்களாவார். நீர் கூறிய காமனும் தேவியுமல்லர், மானிடயாக்கையுடையார் காணும்; பக்கம் நீங்குமின் பரிபுலம்பினர் என – வழிச்செலவின் வருத்தத்தினால் மிகவும் வருந்தினர் அவரிடைச் செல்லாதே விலகிச் செல்லுமின் என்றுரைக்க;
பரி-மிகுதி. பரி புலம்பினர் என்பதற்குச் செலவினால் வருந்தினர் எனக் கூறலுமாம். பரி-செலவு.
௨௨௭-௮. உடன்வயிற் றோர்க்கள் ஒருங்குடன் வாழ்க்கை
கடவதும் உண்டோ ? கற்றறிந் தீர்எனத்,
உடன் வயிற்றோர்கள் ஒருங்குடன் வாழ்க்கை கடவது முண்டோ கற்றறிந்தீர் என – நூல்களைக் கற்று அவற்றின் பயனையுணர்ந்த பெரியீர்; ஒரு வயிற்றிற் பிறந்தோர் கணவனும் மனைவியுமாய்க் கூடி வாழ்க்கை நடாத்தல் என்பது நீர் கற்ற நூல்களிற் கூறப்படுதலு முண்டோ எனக் கேட்ப; கற்றறிந்தீர் என்றது இகழ்ச்சி தோற்றி நின்றது.
௨௨௯-௪0. தீமொழி கேட்டுச் செவியகம் புதைத்துக்
காதலன் முன்னர்க் கண்ணகி நடுங்க,
எள்ளுநர் போலும்இவர் என்பூங் கோதையை
முள்உடைக் காட்டின் முதுநரி ஆகெனக்
கவுந்தி இட்ட தவம்தரு சாபம்
கட்டியது ஆதலின், பட்டதை அறியார்
குறுநரி நெடுங்குரல் கூவிளி கேட்டு
நறுமலர்க் கோதையும் நம்பியும் நடுங்கி,
நெறியின் நீங்கியோர் நீர்அல கூறினும்
அறியா மைஎன்று அறியல் வேண்டும்
செய்தவத் தீர்நும் திருமுன் பிழைத்தோர்க்கு
உய்திக் காலம் உரையீ ரோஎன,
தீ மொழி கேட்டுச் செவியகம் புதைத்துக் காதலன் முன்னர்க் கண்ணகி நடுங்க-இன்னணம் இவரிகழ்ந்த கொடுமொழியினைக் கேட்டு இரு செவிகளையும் பொத்தித் தன் கணவன் முன்னர்க் கண்ணகி நடுங்கி நிற்ப, எள்ளுநர் போலும் இவர் என் பூங்கோதையை – எனது பூங்கோதை போல்வாளை இவர் இகழ்ந்தனர் ஆயினார், முள்ளுடைக் காட்டின் முதுநரி ஆகென-ஆகலான், முட்கள் நிறைந்த காட்டின்கண் இவர் நரியாகவென்று உள்ளத்து எண்ணி, கவுந்தி இட்ட தவந்தரு சாபம்-கவுந்தியடிகளிட்ட தவத்தினான் விளைந்த சாபம், கட்டியது ஆதலின்-இவரைப் பூண்டதாகலான், பட்டதை அறியார் குறுநரி நெடுங்குரற் கூவிளி கேட்டு நறுமலர்க் கோதையும் நம்பியும் நடுங்கி-நறுவிய மலரணிந்த கண்ணகியும் கோவலனும் விளைந்ததனை அறியாராய்க் குறிய நரியினது நெடிய குரலாகக் கூவும் விளியைக் கேட்டு நடுங்கி, நெறியின் நீங்கியோர் நீரல கூறினும் அறியாமை என்று அறிதல் வேண்டும்-நல்லொழுக்க நெறியினின்றும் விலகிய அறிவிலார் நீர்மை அல்லாதனவற்றைச் சொல்லினும் அஃதறியாமையாற் கூறியதாகும் எனப் பெரியோர் உணர்தல் வேண்டும்; செய்தவத்தீர் நும் திருமுன் பிழைத்தோர்க்கு உய்திக்காலம் உரையீரோ என-செய்த தவத்தினையுடையீர். உம்முடைய திருமுன்பு தவறு செய்த இவர்க்கு உய்தலுடைத்தாங் காலத்தை மொழிந்தருளுவீர் என்று கூற;
போலும்; ஒப்பில் போலி. நடுங்குதல் தம் பொருட்டால் விளைந்தமையான் என்க. பரத்தையும் விடனும் கண்ணகி கோவலன் இவ்விருவரையுமே இகழ்ந்தனராகவும். “எள்ளுநர் போலுமிவ ரென்பூங்கோதையை” எனக் கண்ணகியையே இகழ்ந்ததாகக் கவுந்தியடிகள் கூறியது ஆண்மக்களை இழித்துக் கூறினும் பெண்மக்களை இகழ்தல் தகாது என்னும் உலக வழக்குப்பற்றிப் போலும். பட்டதை அறியார் ஆயினார் ‘முதுநரி யாகென’ உள்ளத்தே நினைந்து சபித்தலின், பின்னர் அறிந்த தெவ்வாறெனின்? அவர் கண்முன் நரியாயினவா ற்றானும் பொல்லாங்கு கூறினமையானும், அவ்விடத்தே இவரல்லது வேறு சாபமிட வல்லாரில்லை யாகலானும் இச் சாபம் இவரானே விளைந்ததெனக் கண்டனர் என்க. அறியல் வேண்டும் என்றது அவருட்கோள்; உடையீரோ வென்றது கவுந்தியை நோக்கிக் கூறியது. இதனானே கண்ணகியும் கோவலனும் பிழைத்தோர்ப் பொறுக்கும் பெருமையினையுடையார் என்பதும், பிறர் இன்னல் கண்டு பொறார் என்பதும் அறியக் கிடக்கின்றன.
௨௪௧-௫. அறியா மையின்இன்று இழிபிறப்பு உற்றோர்
உறையூர் நொச்சி ஒருபுடை ஒதுங்கிப்
பன்னிரு மதியம் படர்நோய் உழந்தபின்
முன்னை உருவம் பெறுகஈங்கு இவர்எனச்
சாபவிடை செய்து,
அறியாமையின் இன்று இழி பிறப்பு உற்றோர்-தமது அறியாமை காரணமாக இன்று இழி பிறவி உற்ற இவர்கள், உறையூர் நொச்சி ஒரு புடை ஒதுங்கி-உறையூர் மதிற்புறமாகிய காவற் காட்டிற் றிரிந்து, பன்னிரு மதியம் படர் நோய் உழந்தபின்-பன்னிரண்டு திங்கள் நினைந்து வருந்தத் தக்க துன்பத்தினான் வருந்திய பின்னர், முன்னை உருவம் பெறுக ஈங்கு இவர் எனச் சாபவிடை செய்து – முன்னை வடிவத்தினை இவர் பெறுவாராக என்று சாபவிடை செய்து;
நெடுங்காலம் தவஞ்செய்து பெற்ற மக்கட் பிறப்பை ஒரு மொழியான் இழந்தனர் என்பது தோன்ற இழிபிறப்பு உற்றோர் என்றார். இதனானே யா காவா ராயினும் நா காத்தல் இன்றியமையாதது என்பது பெறப்படும்.
௨௪௫-௮. தவப்பெருஞ் சிறப்பின்
காவுந்தி ஐயையும் தேவியும் கணவனும்
முறம்செவி வாரணம் முஞ்சமம் முருக்கிய
புறஞ்சிறை வாரணம் புக்கனர் புரிந்துஎன்.
தவப் பெருஞ் சிறப்பிற் காவுந்தியையையும் தேவியும் கணவனும்-தவத்தானே மிக்க சிறப்பினையுடைய கவுந்தி யடிகளும் கண்ணகியும் கோவலனும், முறம் செவி வாரமம் முன் சமம் முருக்கிய-முறம்போலுஞ் செவியினையுடைய யானையை முன்னர்ச் சமரிடத்துக் கெடுத்த, புறஞ்சிறை வாரணம் புக்கனர் புரிந்தென்-புறத்தே சிறகினையுடைய கோழி என்னும் நகரின் கண் விரும்பிப் புக்கார் என்க.
முற்காலத்து ஒரு கோழி யானையைப் போர் தொலைத்தலான் அவ்விடத்துச் செய்த நகர்க்குக் கோழி என்பது பெயராயிற்று. அந்நகர் காணும்பொழுது சிறையும் கழுத்துமாக ஆக்கியவதனால் புறஞ்சிறை வாரணம் எனப்பட்டது என்பர் அரும்பதவுரை யாசிரியர். புறஞ்சிறை வாரணம்-புறத்தே இறகினையுடைய கோழி. புறத்தே சேரிகளையுடைய கோழியூர் எனப் பொருளுரைப்பார் அடியார்க்குநல்லார்.
சென்றோர் அறிகுவமென்று வினவ புலம்பினரென கடவது முண்டோ எனக் கேட்டுப் புதைத்து நடுங்க முதுநரியாகென அறியார் கேட்டு நடுங்கி உரையீரோவென ஒதுங்கி உழந்தபின் பெறுக எனச் செய்து புரிந்து புக்கனர் என்க.
இது நிலைமண்டில வாசிரியப்பா
நாடுகாண் காதை முற்றிற்று.
-----------------------
கட்டுரை
முடிஉடை வேந்தர் மூவ ருள்ளும்
தொடிவிளங்கு தடக்கைச் சோழர்க்குலத்துஉதித்தோர்
அறனும் மறனும் ஆற்றலும் அவர்தம்
பழவிறல் மூதுர்ப் பண்புமேம் படுதலும்
விழவுமலி சிறப்பும் விண்ணவர் வரவும்
ஒடியா இன்பத்து அவர்உறை நாட்டுக்
குடியும் கூழின் பெருக்கமும் அவர்தம்
தெய்வக் காவிரித் தீதுதீர் சிறப்பும்
பொய்யா வானம் புதுப்புனல் பொழிதலும்
அரங்கும் ஆடலும் தூக்கும் வரியும்
பரந்துஇசை எய்திய பாரதி விருத்தியும்
திணைநிலை வரியும் இணைநிலை வரியும்
அணைவுறக் கிடந்த யாழின் தொகுதியும்
ஈர்ஏழ் சகோடமும் இடநிலைப் பாலையும்
தாரத்து ஆக்கமும் தான்தெரி பண்ணும்
ஊரகத் தேரும் ஒளியுடைப் பாணியும்
என்றுஇவை அனைத்தும் பிறபொருள் வைப்போடு
ஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும்
ஒரு பரிசா நோக்கிக் கிடந்த
புகார்க் காண்டம் முற்றிற்று.
முடியுடை வேந்தர் மூவருள்ளும்-முடியுடை யரசராகிய சோழர் பாண்டியர் சேரர் என்னும் மூவருள்ளும், தொடி விளங்கு தடக்கைச் சோழர் குலத்து உதித்தோர்-வீரவளை விளங்கும் பெரிய கையையுடைய சோழர் குலத்துப் பிறந்தோருடைய, அறனும்............என்றிவை அனைத்தும், பிற பொருள் வைப்போடு ஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும்-ஈண்டுச் சொல்லாத பிற பொருள்களின் கிடக்கையோடு பொருந்தித் தோன்றும் ஒப்பற்ற முறைமையின் நிலைபேறும், ஒரு பரிசா நோக்கிக் கிடந்த புகார்க் காண்டம் முற்றிற்று – ஒரு படியாக நோக்கிக் கிடந்த காண்டம் முற்றியது.
அடிகள் இக் காண்டத்துக் கூறிய பொருள்கள் இன்னின்ன வென இதன்கட் குறிப்பிடுகின்றார். அவற்றுள்.
அறன் – அறனோம்படை (௫:௧௭௬)
மறன் – இமயத்துப் புலி பொறித்தது (௫:௬௭-௮)
ஆற்றல் – அமராபதி காத்தது. (௬.௧௪)
மூதூர்ப் பண்பு மேம்படுதல்-ஒடுக்கங்
கூறாமை (௧: ௧௮)
விழவு மலி சிறப்பு-இந்திர விழவு (௫.)
விண்ணவர் வரவு. (௬: ௭௨-௩)
குடி-உழவிடை விளைப்போர். (௧0: ௧௫0)
கூழின் பெருக்கம்-செந்நெற் காய்த்தலையில் கூட்டின் நெற் சொரிதல் (௧0 : ௧௨௩-௪)
காவிரிச்சிறப்பு“கரியவன்புகையினும்............ஒலிக்கும்” (௧0:௧0௨-௬.)
பொய்யா வானம் புதுப்புனல் பொழிதல் –மழைக்கரு வுயிர்த்தல். (௧0:௧௪௩)
அரங்கும் ஆடலும் தூக்கும் (௩)
வரி – கண்கூடுவரி முதலிய எட்டுவரியும். (அ:௭௪-௧0௮.)
பாரதி விருத்தி – பதினோராடல். (௬: ௩௯-௬௩.)
திணைநிலைவரி. (எ: ௧௭-௨௩)
இணைநிலைவரி (௭)
யாழின் றொகுதி- “சித்திரப்படம்” முதல் “பட்டடை” ஈறாகவுள்ளன (௭:௧.)
‘உழைமுதற் கைக்கிளை’ முதலாயினவுமாம். (அ: ௩௨)
ஈரேழ் சோகடம் – “ஈரேழ் தொடுத்த செம்முறைக் கேள்வி”(௩:௭0)
இடநிலைப் பாலை – “கோடி விளரிமேற் செம்பாலை”முதலாயின (௩: ௮௮)
தாரத் தாக்கம். (௮: ௩௮)
தான்றெரி பண் – அகநிலை மருதம் முதலாயின. (௮: ௩௯-௪0)
ஊரகத்து ஏர்-ஊரின் வண்ணம். (௫)
ஒளியுடைப் பாணி – “வெங்கட் டொலைச்சிய விருந்திற் பாணி” முதலாயின. (க0:௧௩௧.)
வெண்பாவுரை
காலை அரும்பி மலரும் கதிரவனும்
மாலை மதியமும்போல் வாழியரோ - வேலை
அகழால் அமைந்த அவனிக்கு மாலைப்
புகழால் அமைந்த புகார்.
காலை அரும்பி மலரும் கதிரவனும்-காலையில் உதித்து ஒளி விரியும் பரிதியும், மாலை மதியமும் போல்-மாலையில் உதிக்கும் வளருமியல்புடைய திங்களும் போல, வாழியரோ-வாழ்வதாக; வேலை அகழால் அமைந்த அவனிக்கு-கடலாகிய அகழோடு அமைந்த புவனிக்கு, மாலைப் புகழால் அமைந்த புகார்-மாலை யெனப்படும் புகழோடு பொருந்திய காவிரிப்பூம்பட்டினம்.
ஆல்-ஒடு. புகார் வாழியரோ என்க.
புகார்க் காண்டம் முற்றிற்று
-----------------------
This file was last updated on 20 December 2012.
Feel free to send the corrections to the webmaster.