சாந்திக்கு மார்க்கம்
வ.உ. சிதம்பரம் பிள்ளை மொழி பெயர்ப்பு
cAntikku mArkkam
of V.O. Chidambaram Pillai
(Tamil translation of 'The way to Peace' of James Allen)
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2013.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
சாந்திக்கு மார்க்கம்
வ.உ. சிதம்பரம் பிள்ளை மொழிபெயர்ப்பு
source:
சாந்திக்கு மார்க்கம்
(ஜேம்ஸ் ஆலனின் நூல், தமிழில் மொழிபெயர்ப்பு)
வ.உ. சிதம்பரம் பிள்ளை
பாரி நிலையம், சென்னை, 1961
ஜேம்ஸ் ஆலன் எழுதிய "From Poverty to Power"என்ற நூலின் இரண்டாம் பகுதி "The way to peace" ஆகும்.
அதனை வ.உ.சி. "சாந்திக்கு மார்க்கம்" என்று மொழி பெயர்த்தார்.
--------------------------------
சாந்திக்கு மார்க்கம்
பொருளடக்கம்
(முகப்பு)
முகவுரை
1. தியான வலிமை
2. இரண்டு தலைவர்-யானும் கடவுளும்
3. ஆன்ம வலிமையை அடைதல்
4. சுயநயமற்ற அன்பை அநுபவித்தல்
5. கடவுளோடு ஐக்கியமாதல்
6. முனிவர்களும், முனிகளும், இரக்ஷகர்களும் ஊழியம் புரிதல்
7. பூரண சாந்தியை அடைதல்.
-----
முகவுரை
"சாந்திக்கு மார்க்கம்" என்னும் இந்நூல் இங்கிலாந்து தேசம், இல்பிராக் கோம்பி நகர் ஜேம்ஸ் ஆலன் என்னும் பெரியாருடைய, (From Poverty to Power) "எளிமையிலிருந்து வலிமைக்கு" என்னும் ஆங்கில நூலின் இரண்டாம் பாகமாகிய, "The Way of Peace" என்பதன் மொழிபெயர்ப்பு.
முதல் நூலின் ஆசிரியர், நமது நாட்டு நூல்களின், ஆங்கில மொழி பெயர்ப்புக்களைக் கற்று, அவற்றின் பொருள்களைக் கடைப்பிடித்தொழுகி, மெய்ஞ்ஞானியாய் வாழ்ந்து வந்தார். அக்காலத்தில், அவர், தாம் கண்ட உண்மைகளை ஏனையோர்களும் கண்டு ஒழுக்க மேம்பாடு அடைந்து, மெய்ஞ்ஞானிகளாய்ப் பேரின்பம் பெற்று வாழவேண்டுமென்ற அவாவுடையவராய், ஆங்கில மொழியில் பல நூல்கள் இயற்றி, அச்சிட்டு வெளிப்படுத்தினார். அவற்றில் பலவற்றைப் படிக்கும் பாக்கியம் எனக்கு 1905-ம் வருஷம் கிடைத்தது. அவற்றின் அருமை பெருமைகளைக் கண்டு யான் ஆச்சரியம் அடைந்து, அவற்றையெல்லாம் தமிழில் மொழி பெயர்த்துத் தமிழ் மக்கள் படிக்கும்படி செய்யவேண்டுமென்று கருதினேன். உடனே அந்நூல்களில் சிறிய அளவினவாகிய இரண்டு நூல்களை ''மனம் போல வாழ்வு'', ''அகமே புறம்'' என்னும் பெயர்களோடு மொழிபெயர்த்து அச்சிட்டு வெளிப்படுத்தினேன். அவற்றை தமிழ் மக்கள் மிக விருப்போடு வாங்கிப் படித்ததைக் கண்டு, யான் ஆலனுடைய ஏனைய நூல்களையும் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கி, இதன் முதல் நூலின் முதற்பாகமாகிய ''The Path of Prosperity'' என்பதை ''வலிமைக்கு மார்க்கம்'' எனவும், இரண்டாம் பாகத்தைச் ''சாந்திக்கு மார்க்கம்'' எனவும், வேறு இரண்டு நூல்களைப் "பேரின்ப மார்க்கம்", "ஊழை வெல்வதற்கு உபாயம்" எனவும் அரைகுறையாக மொழிபெயர்த்து வைத்தேன். பின்னர் "வலிமைக்கு மார்க்க"த்தைப் பூரணமாக்கி அச்சிட்டு வெளிப்படுத்தினேன். அதனையும் தமிழுலகம் விருப்பத்துடன் ஏற்றது.
கலாசாலைகளுக்குப் பாடப்புத்தகங்கள் விதிக்கும் (Text Book Committee) பாடப் புத்தக சபையார் யான் அச்சிட்டு வெளிப்படுத்திய மேற்கூறிய, மூன்று நூல்களையும் பாடப் புத்தகங்களாக ஏற்றுக்கொண்டனர். உடனே இந்நூலைப் பூரணமாக்கி இப்போது அச்சிட்டு வெளியிடுகிறேன்.
இந்நூல் முதல்நூலின் சரியான மொழி பெயர்ப்பு. முதல் நூலிலுள்ள பாக்களைத் தமிழ்ப் பாக்களாக்கி இந்நூலில் ஆங்காங்குச் சேர்ந்துள்ளேன். இந்நூலும், முதல் நூலாசிரியரின் ஏனைய நூல்களைப் போன்று, மிகமிக உயர்ந்த இகலோக பரலோகப் பதவிகளை அளிக்கவல்ல மான்பு வாய்ந்தது. தமிழுலகம் இதனையும் உவகையுடன் வரவேற்குமென்று நம்புகிறேன். எல்லாம் வல்ல இறைவன் துணை.
- வ.உ. சிதம்பரம் பிள்ளை
தூத்துக்குடி
17-07-1934
1. தியான வலிமை
ஆத்ம தியானம் கடவுளை அடைவதற்கு மார்க்கம். அது புவியிலிருந்து சுவர்க்கத்திற்கு, பொய்ப் பொருளிலிருந்து மெய்ப்பொருட்கு, துன்பத்திலிருந்து இன்பத்திற்குக் கொண்டுபோகும் சூட்சும ஏணி. ஒவ்வொரு சாதுவும் அவ்வேணியில் ஏறியிருக்கின்றான்; ஒவ்வொரு பாவியும் விரைவிலோ, தாழ்ப்பிலோ அவ்வேணிக்கு வரவேண்டும்; தன்னையும் இவ்வுலகையும் புறக்கணித்து, கடவுளையும் அவருலகையும் நோக்கிச் செல்கின்ற ஒவ்வொரு யாத்ரிகனும் அவ்வேணியின் பொற்படிகளில் தனது பாதங்களை வைத்து ஏற வேண்டும். அதனுடைய உதவியில்லாமல், நீங்கள் கடவுணிலையை, கடவுட்டன்மையை, கடவுளமைதியை அடைய முடியாது; மெய்ப்பொருளின் கலப்பற்ற இன்பத்தையும், மங்காத பெருமையையும் காண முடியாது.
தியானமாவது, ஒரு கொள்கையை அல்லது ஒரு விஷயத்தை முற்றிலும் அறியவேண்டுமென்ற நோக்கத்துடன் ஆழ்ந்து சிந்தித்தல். எதனை நீங்கள் அடிக்கடி தியானித்துக் கொண்டிருக்கிறீர்களோ, அதனை நீங்கள் அறிவது மாத்திரமல்லாமல்லாமல், அதன் வடிவமாக மேன் மேலும் வளர்ந்து கொண்டிருப்பீர்கள்; ஏனெனில், அஃது உங்கள் உயிரோடு கலந்து உங்கள் உயிரே ஆகிவிடும். ஆதலால், நீங்கள் சுயநயமும் கீழ்மையும் பொருந்திய ஒன்றை அடிக்கடி சிந்தித்துக் கொண்டிருப்பீர்களாயின், நீங்கள் முடிவில் சுயநயத்தர்களாகவும் கீழ்மக்களாகவும் ஆய்விடுவீர்கள். நீங்கள் பரநயமும் தூய்மையும் பொருந்திய ஒன்றை இடைவிடாது சிந்தித்துக் கொண்டிருப்பீர்களாயின், நீங்கள் நிச்சயமாகப் பரநயத்தர்களாவும் தூயர்களாகவும் ஆய்விடுவீர்கள்.
நீங்கள் எதைப்பற்றி அடிக்கடி ஆழ்ந்து நினைக்கின்றீர்களோ, வேலையற்ற நேரங்களில் எதனிடத்தில் உங்கள் ஆத்மா இயற்கையாகச் செல்கின்றதோ, அதனை எனக்குச் சொல்லுங்கள்; நீங்கள் எந்தத் துன்ப இடத்திற்கு அல்லது இன்ப இடத்திற்குச் சென்று கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் தெய்வ வடிவாகவா அல்லது மிருக வடிவாகவா வளர்ந்து கொண்டிருக்கிறீர்கள்? என்று உங்களுக்கு நான் சொல்லுகிறேன்.
ஒருவன் எந்தக் குணத்தை அடிக்கடி நினைக்கின்றானோ அந்தக் குணத்தின் எதார்த்த வடிவத்தை அவன் அடையும்படியான விலக்க முடியாத தன்மை ஏற்படுகின்றது. ஆதலால், உங்கள் தியானப் பொருளை நீங்கள் நினைக்கும் ஒவ்வொரு சமயத்திலும் உங்களை மேலே உயர்த்தும்படியான விதத்தில் உங்கள் தியானப்பொருள் மேலானதாக இருக்கட்டும்; கீழானதாக இருக்க வேண்டா; சுயநய அம்சம் எதுவும் கலக்காத தூயதாக இருக்கட்டும், அதற்குத் தக்கபடி உங்கள் ஹிருதயம் அசுத்தமாகிப் பொய்ப்பொருள்பால் இழுக்கப்படாமல், சுத்தமாகி மெய்பொருள்பால் இழுக்கப்படும்.
தியானம் ஆத்மார்த்த வாழ்விற்கும் ஞானத்திற்கும் அடிப்படை. ஒவ்வொரு தீர்க்கதரிசியும், ஞானியும், லோக ரக்ஷகனும் தியான வலிமையாலேயே அவ்வாறாயிருக்கின்றனர். ''யான் மெய்ப்பொருள்'' என்று சொல்லும் வரையில் புத்தர் பெருமான் மெய்ப்பொருளைத் தியானித்துக் கொண்டிருந்தார். ''யானும் என் தந்தையும் ஒருவனே'' என்று சொல்லும் வரையில் ஏசுநாதர் கடவுளின் அந்தரியாமித்துவத்தைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்தார்.
தெய்வ உண்மைகளை ஆதாரமாகக் கொண்ட தியானமே பிரார்த்தனையின் சாரமும் உயிருமாகும். அது கடவுளிடத்து ஆன்மா மௌனமாகச் சென்று சேர்தலாம். தியானமற்ற (எனக்கு இன்ன அருள்க என்று கேட்கும்) மனுப்பிரார்த்தனை உயிரற்ற உடம்பு: அது மனத்தையும் ஹிருதயத்தையும் பாவத்திற்கும் துன்பத்திற்கும் மேலே உயர்த்தும் வலிமையற்றது. ஞானத்திற்காகவும் மனோசாந்திக்காவும், மேலான தூய்மைக்காகவும், பூரண மெய்யுணர்வுக்காகவும், நீங்கள் நாள்தோறும் பிரார்த்தித்துக் கொண்டிருந்தும், நீங்கள் பிரார்த்திக்கும் பொருள் உங்களுக்குத் தூரத்திலே இருக்குமானால், நீங்கள் பிரார்த்திப்பது ஒன்றும், நீங்கள் நினைப்பதும் செய்வதும் வேறொன்றுமாயிருக்கிறதென்று நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும்; நீங்கள் அடைய வேண்டுமென்று பிரார்த்திக்கிற மாசற்ற உண்மைகளை நீங்கள் அடையவிடாமல் தடுக்கிற சுயநயப் பற்றுடைய பொருள்களிலிருந்து உங்கள் மனத்தை அப்புறப்படுத்தி அதன் போக்கில் விடாமல் நிறுத்துவீர்களாயின், நீங்கள் எதனைப் பெறுவதற்குத் தகுதியற்றவர்களோ அதனை உங்களுக்குக் கொடுக்கும்படியும், நீங்கள் மற்றவர்களிடத்துச் செலுத்தாத அன்பையும் கிருபையையும் செலுத்தும்படியும் கடவுளிடத்து நீங்கள் கேளாதிருப்பீர்களாயின், நீங்கள் எப்பொழுதும் மெய்ப்பொருளின் தன்மையை நினைக்கவும் அநுசரித்து நடக்கவும் தொடங்குவீர்களாயின், நீங்கள் அம்மாசற்ற உண்மைகளில் ஐக்கியமாகும்படி நாள்தோறும் வளர்ந்து கொண்டிருப்பீர்கள்.
ஏதேனும் ஒரு லௌகிக இலாபத்தை அடைய விரும்புகிறவன், அதனை அடைவதற்குச் சுறுசுறுப்பாக வேலை செய்ய விருப்பமுள்ளவனாயிருத்தல் வேண்டும். தான் விரும்பிய மாத்திரத்தில் அந்த இலாபம் தனக்கு வந்துவிடுமென்று எதிர்பார்த்துக் கைகளைக் கட்டிக்கொண்டு காத்திருக்கின்றவன் மடையனேயாவன். முயற்சியென்றும் செய்யாமல் மோக்ஷ உடைமைகளை நீங்கள் அடையக் கூடுமென்று வீணாக என்னவேண்டா, மெய்ப்பொருள் இராஜ்யத்தில் நீங்கள் உண்மையாக வேலை செய்ய ஆரம்பிக்கும்போது மாத்திரம் நீங்கள் மோக்ஷ உடைமைகளை அடைவதற்கு அநுமதிக்கப்படுவீர்கள்; நீங்கள் விரும்பும் ஆத்ம உடைமைகளை அடைவதற்கு நீங்கள் செய்ய வேண்டிய வேலைகளைப் பொறுமையோடும் முணுமுணுக்காமலும் செய்து முடித்த பொழுது, அவ்வுடைமைகள் உங்களைச் சேரவிடாமல் வைத்திருக்கப்படமாட்டா.
உங்கள் சொந்தத் திருப்தியை மாத்திரம் நாடாமல் மெய்ப்பொருளை உண்மையாக நாடுவீர்களாயின், லௌகிக சுகங்களுக்கும் இன்பங்களுக்கும் மேலாக அதனை நீங்கள் நேசிப்பீர்களாயின், ஆனந்தத்திற்கும் மேலாக அதனை நீங்கள் கோருவீர்களாயின், அதனை அடைவதற்கு ஆவசீயகமான முயற்சியைச் செய்வதற்கு நீங்கள் விருப்பமுள்ளவராயிருப்பீர்கள்.
பாவத்திலிருந்தும் துக்கத்திலிருந்தும் நீங்கள் விடுபடுதற்கு விரும்புவீர்களாயின், நீங்கள் அடையவேண்டுமென்று பெரு மூச்சுவிட்டுப் பிரார்த்திக்கும் மாசற்ற தூய்மையைக் கொள்ள விரும்புவீர்களாயின், உலக அறிவையும் ஆத்ம ஞானத்தையும் அடையவும், நிலையானதும் ஆழ்ந்ததுமான சாந்தியை அனுபவவிக்கவும் விரும்புவீர்களாயின், இப்பொழுது வந்து தியானமாகிய மார்க்கத்தில் பிரவேசியுங்கள்; உங்கள் தியானத்தின் மேலான பொகுளாக மெய்ப்பொருளைக் கொள்ளுங்கள்.
சோம்பலான வீண் எண்ணங்களுக்கும் தியானத்திற்கும் உள்ள வேற்றுமையை ஆரம்பத்தில் அறிந்து கொள்ளவேண்டும். தியானத்தில் சொப்பனமும், அநுபவத்திற்கு எட்டாததும் ஒன்றும் இல்லை. கலப்பும் களங்கமுமற்ற மெய்ப் பொருளைத் தவிர வேறு ஒன்றும் அகத்தின்கண் இருக்கவிடாமல் செய்வதாகிய தேடுதலும் ஆராய்தலுமான அப்பியாசமே தியானம். இவ்வாறு தியானம் செய்தலால் உங்கள் துர்அபிமானங்களை வளர்க்கமாட்டீர்கள்: ஆனால், நீங்கள் 'யான்' என்பதை மறந்து, மெய்ப்பொருளைத் தேடிக் கொண்டிருக்கிறதாக மாத்திரம் உணர்ந்து கொண்டிருப்பீர்கள். அவ்வாறே, சென்ற காலத்தில் நீங்கள் உங்களைச் சுற்றிக் கட்டியிருக்கின்ற தீவினை மதில்களை ஒவ்வொன்றாக இடித்து மெய்ப்பொருளைக் காண்பதற்குப் பொறுமையோடு காத்துக் கொண்டிருப்பீர்கள்; உங்கள் தீவினை மதில்கள் போதிய அளவு நீக்கப்பட்டபொழுது மெய்ப்பொருட் காட்சி உங்களுக்குக் கிடைக்கும். உங்கள் ஹிருதயம் மௌனமாக அடங்கியிருக்கும் காலையில் பின்வரும் செய்யுளின் பொருளைக் காண்பீர்கள்:
"நம்மகத் துள்ளே நடுவிடம் ஒன்றுளது;
மெய்ப்பொருள் நிறைந்தவன் விளங்கிநிற் கின்றது;
அதனைச் சுற்றி மதில் மதில் களாகத்
தூல மாமிசம் சூழ்ந்திருக் கின்றது;
அதன்தெனி வான முழுநற் காட்சியை
பொறியின்பப் போர்வை மறைத்துப் பலபல
தீமைக ளெல்லாம் செய்துநிற் கின்றது;
அதனை அறிதல் அகத்திருந் ததனொளி
வெளியே வரும்படி வழியொன்று செய்தலே;
மெய்ப்பொருள் ஒளியை வெளியிற் சென்று
பார்க்க வழிசெயல் பயனில் செயலே."
தியானம் செய்வதற்கு ஒவ்வொரு நாளிலும் ஒரு நேரத்தைக் குறித்துக் கொண்டு, அந்த நேரத்தில் தவறாது தியானம் செய்யுங்கள். ஒவ்வோருயிரும் உறங்கிக் கொண்டிருக்கும் விடியற்காலம் தியானத்திற்கு மிகமிகப் பொருத்தமான நேரம். எல்லா இயற்கை நிலைமைகளும் அப்பொழுது உங்களுக்கு அனுகூலமாயிருக்கும்: இராக்காலத்தின் நீண்ட உபவாசத்தால் காமக்குரோதாதிகள் அடங்கியிருக்கும்; முதல்நாட் கிளர்ச்சிகளும் தொந்தரவுகளும் ஒழிந்து போயிருக்கும்; மனமானது பலத்தோடும் அமைதியோடும் ஆத்மார்த்த போதனையை ஏற்றுக் கொள்ளத் தக்கதாயிருக்கும். நீங்கள் செய்ய வேண்டிய முதல் வேலைகளில் ஒன்று உங்களுடைய சோம்பலையும் உறக்கத்தையும் ஒழித்துவிடுதல்; அது செய்ய நீங்கள் மறுப்பீர்களாயின் நீங்கள் மேற்செல்ல அசத்தர்களாயிருப்பீர்கள்; ஏனெனில், ஆத்மாவின் வேண்டுதல்கள் தவறாமல் நிறைவேற்றப்படல் வேண்டும்.
ஆத்மா விழித்திருத்தற்கு மனமும் சரீரமும் விழித்திருத்தல் வேண்டும். சோம்பேறியும், சுகபோகியும் மெய்ப்பொருள் ஞானத்தை அடைய முடியாது. எவன் ஆரோக்கியமும் பலமும் உடையவனாயிருந்தும், சப்தம் இல்லாத அருமையான காலை நேரங்களைச் சோம்பலான உறக்கத்தில் கழிக்கிறானோ அவன் உயர்ந்த மோக்ஷ ஸ்தானங்களுக்கு ஏறுவதற்குச் சிறிதும் தகுதியில்லாதவன்.
எவன் தனது விழித்திருக்கிற அறிவினால் ஆகக்கூடிய உயர்ந்த காரியங்களை அறிந்திருக்கிறானோ, எவன் உலகத்தை மூடிக்கொண்டிருக்கிற அஞ்ஞானத்தைப் போக்குவதற்குத் தொடங்கியிருக்கிறானோ, அவன் நக்ஷத்திரங்களின் ஒளி மழுங்குவதற்கு முன்னே எழுந்திருந்து, விழியாத மனிதர்கள் கனாக்கண்டு கொண்டிருக்கும்போது, தன்னுடைய ஆத்மாவைச் சூழ்ந்துள்ள (அஞ்ஞானமாகிய) இருளோடு போராடி நிர்மலமான கோரிக்கையால் மெய்ப்பொருளின் ஒளியைக் காண்டதற்கு முயலுகிறான்.
''பெரியார் அடைந்துள பீடார் நிலைகள்
ஒருநாள் முயற்சியால் ஒன்றியவை யல்ல:
பலநாள் பிறர்கள் படுத்துறங் குங்கால்
இரவில் முயன்றதால் எய்திய வைகளே''
அதிகாலையில் எழுந்திராத ஒரு சாது, ஒரு பக்தன், ஒரு மெய்ப்பொருளாசிரியன் (இவ்வுலகில்) இருந்திருப்பதில்லை. தூய சிந்தனை செய்வதற்காக ஏசுநாதர் வழக்கமாக அதிகாலையில் எழுந்து, தனித்த மலைகளின்மேல் ஏறிச் சென்றார். புத்தர் பிரான் எந்நாளும் சூரிய உதயத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே எழுந்து தியானம் செய்து வந்தார்; அவருடைய சீடர்களெல்லாம் அவ்வாறே செய்யும்படி கட்டளையிடப்பட்டார்கள்.
உங்களுடைய தினசரி வேலைகளை நீங்கள் அதிகாலையில் தொடங்கவேண்டியிருப்பதால், நீங்கள் நாள்தோறும் அதிகாலையில் தியானம் செய்ய முடியாதவர்களாயிருப்பின், இராத்திரி காலத்தில் ஒரு மணி நேரம் தியானம் செய்ய முயலுங்கள். உங்கள் தினசரி வேலைகளின் நீட்சியாலும் கஷ்டத்தாலும் நீங்கள் இராத்திரி காலத்திலும் தியானம் செய்ய முடியாதவர்களாயிருப்பின், அதற்காக நீங்கள் அதைரியப்பட வேண்டா; ஏனெனில் உங்கள் வேலையில் கிடைக்கும் இடைவேளைகளிலாவது, நீங்கள் இப்பொழுது காரியமில்லாமல் கழிக்கும் சில சோம்பல் நிமிஷங்களிலாவது உங்கள் நினைப்புக்களை மேம்படுத்திப் பரிசுத்தமான தியானத்திற்குத் திருப்பலாம்; உங்கள் வேலைகள் நீண்டகாலப் பழக்கத்தால் இயற்கையாக நிகழும் தன்மையனவாயிருந்தால், நீங்கள் அந்த வேலைகளைச் செய்து கொண்டிருக்கும் நேரத்திலேயே தியானம் செய்யலாம். புகழ்பெற்ற கிறிஸ்தவ சாதுவும் தத்துவ ஞானியுமாகிய யாக்கப் போகிம் என்பவர் நெடுநேரம் செருப்புத் தைத்துக் கொண்டிருக்கும்போதே தெய்வப் பொருள்களைப் பற்றிய தமது அகன்ற ஞானத்தை அடைந்தார். ஒவ்வொரு வேலையிலும் நினைப்பதற்கு நேரமுண்டு; மிக மிக அதிகமாக வேலை செய்கிறவருக்கும் மிக மிகக் கஷ்டத்துடன் வேலை செய்கிறவருக்கும் தியானம் செய்யவும் பிரார்த்தனை செய்யவும் நேரம் இல்லாமற் போகாது.
ஆத்ம தியானமும் தன்னைத் திருத்தலும் ஒன்றினின்று ஒன்று பிரிக்கப்பட முடியாதவை; ஆதலால், உங்களை அறிவதற்காக நீங்கள் உங்களைப்பற்றி ஊக்கமாகத் தியானம் செய்யத் தொடங்குங்கள்; நீங்கள் மெய்ப்பொருளைக் காண்பதற்கு உங்களிடத்திலுள்ள குற்றங்களை எல்லாம் அடியோடு நீக்குதலே உங்களுடைய முக்கிய நோக்கமாக இருத்தல் வேண்டுமென்பதை நீங்கள் நன்றாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய நோக்கங்களையும், நினைப்புகளையும் செயல்களையும் கவனித்து அவற்றை உங்களுடைய கோட்பாட்டுன் ஒப்பிட்டு, அவை அதற்குப் பொருத்தமானவையா என்று அமைதியான பக்ஷபாதமற்ற பார்வையோடு பார்த்து ஆராயத் தொடங்குங்கள். இவ்வாறு செய்வதனால் மனச் சமாதானத்தையும் ஆத்மசமாதானத்தையும் தொடர்ச்சியாகவும், அதிகமாகவும் அடைந்து கொண்டிருப்பீர்கள். அச்சமாதானங்கள் இல்லாமல், மனிதர்கள் வாழ்க்கையாகிய சமுத்திரத்தில் உதவியற்ற துரும்புகளாயிருக்கிறார்கள். நீங்கள் வெறுப்புக்கு அல்லது வெகுளிக்கு அடிமைகளாயிருப்பின், உங்கள் குரூர நடக்கையையும் மூட நம்பிக்கையையும் நீங்கள் உணரும்படியான விதத்தில் அன்பையும் பொறுமையையும் பற்றித் தியானியுங்கள், பின்னர் நீங்கள் அன்பையும், பொறுமையையும், மனித்தலையையும் பற்றிய நினைப்புக்களில் சஞ்சரிக்கத் தொடங்குவீர்கள்; நீங்கள் உயர்ந்த குணங்களைக் கொண்டு தாழ்ந்த குணங்களை ஒழித்த காலையில், அன்பாகிய தெய்வ வட்டத்தின் ஞானம், அதற்கு உங்கள் வாழ்க்கையினுடையவும் சிக்கல்களுக்குமுள்ள சம்பந்தத்தைப் பற்றிய அறிவுடன், உங்கள் ஹிருதயத்தில் மௌனமாகப் புகுத்து, அதனை நாளடைவில் கவர்ந்துகொள்ளும். இந்த ஞானத்தை உங்களுடைய ஒவ்வொரு நினைப்பிலும், சொல்லிலும், செயலிலும் உபயோகிப்பீர்களாயின், நீங்கள் மிகமிகப் பொறுமையுள்ளவர்களாகவும், மிக மிக அன்புள்ளவர்களாகவும், மிக மிகத் தெய்வத்தன்மையுள்ளவர்களாகவும் வளர்வீர்கள். இவ்வாறாக ஒவ்வொரு குற்றத்தையும், ஒவ்வொரு சுயநய ஆசையையும், ஒவ்வொரு கெட்ட பழக்கத்தையும், தியானத்தின் வலிமையால் ஒழித்து விடலாம்; ஒவ்வொரு பாவமும், ஒவ்வொரு குற்றமும், உங்கள் அகத்தைவிட்டு வெளியேற்றப்பட்டபின், மெய்ப்பொருள் விளக்கு மிகத் தெளிவாகவும் பூரணமாகவும் யாத்திரிக ஆத்மாவைப் பிரகாசிப்பதாகும்.
இவ்வாறாகத் தியானிக்கையில், உங்களுடைய ஓரே உண்மை விரோதியாகிய உங்கள் சுயநய, அநித்திய, ஜீவனுக்கு விரோதமாக நீங்கள் இடைவிடாமல் உங்களைப் பலப்படுத்திக் கொண்டிருப்பீர்கள்; மெய்ப்பொருளினின்று பிரிக்க முடியாத, தெய்வத் தன்மையும் அழிவில்லாமையும் பொருந்திய ஆத்மாவில், உங்களை மேலும் மேலும் உறுதியாக நிலைப்படுத்திக் கொள்வீர்கள். உங்கள் தியானங்களின் நேரான பயன் ஓர் அமைதியான தெய்வ பலம்; அஃது உங்கள் வாழ்க்கைப் போராட்டத்தில் நீங்கள் நிற்பதற்கும் தங்கியிருப்பதற்கும் உரிய இடமாகும். தூய நினைப்பின் வெல்லும் வலிமை மிகப் பெரியது; மௌனமான தியானகாலத்தில் அடைந்த பலமும் ஞானமும், யுத்த காலத்திலும், துக்க காலத்திலும், துர்க்கிரியை செய்ய மனம் எழும் காலத்திலும், தப்பித்துக்கொள்ளக்கூடிய தைரியத்தையும் ஞாபகத்தையும் ஆத்மாவுக்குக் கொடுக்கும்.
தியான பலத்தால் நீங்கள் ஞானத்தில் வளரும்போது அசைவனவும், நிலையற்றனவும், துக்கத்தையும் துன்பத்தையும் தருவனவுமாகிய உங்கள் சுயநய அவாக்களை மிக அதிகமாக விட்டுவிடுவீர்கள்; என்றும் மாறுதலுறாத தத்துவங்களை ஆதாரமாகக் கொண்டு, நீங்கள் வளரும் நம்பிக்கையோடும் உறுதியோடும் மோக்ஷ அமைதியை அடைவீர்கள்.
தியானத்தின் பிரயோஜனம் நித்திய தத்துவங்களின் ஞானத்தை அடைதல்; தியானத்திலிருந்து உண்டாகும் பலம் அத்தத்துவங்களை நம்பி ஆதாரமாகக் கொள்ளும் வலிமையை அடைந்து, அவ்வாறே நித்தியப்பொருளோடு ஐக்கியமாதல். தியானத்தின் முடிவாவது மெய்ப்பொருளின், கடவுளின், நேரான ஞானத்தை அடைதலும் தெய்வ நித்திய சாந்தியை அடைதலுமாம்.
உங்களுடைய தியானங்கள் நீங்கள் இப்பொழுது கொண்டுள்ள ஒழுக்க நிலையிலிருந்து எழட்டும். உறுதியான விடாமுயற்சியால் நீங்கள் மெய்ப்பொருளாக வளரவேண்டியதிருக்கிறதென்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் வைதீகக் கிறிஸ்தவர்களாயிருந்தால், ஏசுநாதரின் மாசற்ற தூய்மையையும், அவரது ஒழுக்கத்தின் தெய்வ மேம்பாட்டையும் பற்றி இடைவிடாது தியானியுங்கள். அவருடைய பூரணத்துவத்தை மேன்மேலும் அடைவதற்காக நீங்கள் அவருடைய ஒவ்வோர் உபதேசத்தையும் உங்கள் அகவாழ்க்கையிலும் புற வாழ்க்கையிலும் உபயோகியுங்கள். மெய்ப்பொரு சட்டத்தைப்பற்றித் தியானிப்பதற்கும், தம்முடைய ஆசிரியருடைய உபதேசங்களை அப்பியாசத்தில் கொண்டு வருவதற்கும் மறுத்துக் கொண்டு, வெறுமனே தமது மதங்களைப் பற்றிக்கொண்டும், தமது மதத் தெய்வத்தைத் தொழுதுகொண்டும், இடைவிடாது பாவங்களைச் செய்து துன்பத்தை அநுபவித்துக் கொண்டும் இருக்கிற போலி மதத்தினர்களைப் போல இராதீர்கள்; அரை குறைத் தெய்வங்களையும் கக்ஷ¢ப் பிரதிகக்ஷ¢ மதங்களையும் சுயநயத்தோடு பற்றிக் கொண்டிருத்தலை விட்டு, செத்த சடங்குகளையும் உயிரற்ற அஞ்ஞானத்தையும் கடந்து, தியான பலத்தால் மேற்செல்ல முயலுங்கள். அவ்வாறாக மாசற்ற மெய்ப்பொருளிடத்து மனத்தை நிறுத்திக் கொண்டு, ஞானமாகிய உயர்ந்த வழியில் நடப்பீர்களாயின், மெயப்பொருளை அடைதலினும் தாழ்ந்த இடம் ஒன்றையும் காணமாட்டீர்கள்.
எவன் ஊக்கத்தோடு தியானம் செய்கிறானோ அவன் முதலில் ஓர் உண்மையைத் தூரத்தில் காண்கிறான்; பின்னர் தினந்தோறும் செய்யும் தியானத்தால் அதனை அடைகிறான்; மெய்ப்பொருளின் உபதேசப்படி நடக்கிறவன் மாத்திரம் மெய்ப்பொருளின் மதத்தை அறியக்கூடும்; தூய நினைப்பால் மெய்ப்பொருளைக் கண்ட போதிலும், தியான அப்பியாசத்தால் மாத்திரமே மெய்ப்பொருளாதல் கூடும்.
தெய்வத்தன்மை வாய்ந்த கௌதம புத்தர், "எவன் வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தை மறந்து, சிற்றின்பத்தில் மனத்தைச் செலுத்தி, வீண் பெருமை பாராட்டிக் கொண்டு, தியானம் செய்யாமல் இருக்கிறானோ, அவன் கால அளவில் தியானத்தில் முயன்று கொண்டிருந்த மனிதனைப் பார்த்துப் பொறாமைப்படுவான்" என்று சொன்னார். அவர் தமது சீடர்களுக்குப் பின்வரும் ஐந்து பெரிய தியனங்களையும் உபதேசித்தார்.
"முதல் தியானம் அன்பைப் பற்றிய தியானம். அஃதாவது, உங்கள் விரோதிகளுடைய §க்ஷமம் உள்பட எல்லா உயிர்களுடைய §க்ஷமத்தையும் நன்மையையும் நீங்கள் விரும்பும்படியான, விதத்தில், உங்கள் அகத்தைச் சீர்படுத்தி வைத்துக்கொள்ளுதல்.''
''இரண்டாவது தியானம் இரக்கத்தைப்பற்றிய தியானம். அஃதாவது, எல்லா உயிர்களிடத்தும் உங்களுக்கு ஆழ்ந்த இரக்கம் உண்டாகும்படியான விதத்தில், அவ்வுயிர்களெல்லாம் கஷ்டப்பட்டுக்கொண்டிருத்தலை நினைத்து, அவ்வுயிர்களுடைய கவலைகளையும் துக்கங்களையும் தெளிவாக மனோபாவனை செய்தல்.''
''மூன்றாவது தியானம் சந்தோஷத்தைப் பற்றிய தியானம்; அஃதாவது, நீங்கள் மற்றவர்களுடைய சம்பத்தை நினைத்து, அவர்கள் சந்தோஷங்களுடன் நீங்களும் சந்தோஷித்தல்.''
'' நான்காவது தியானம் அசுத்தத்தைப்பற்றிய தியானம், அஃதாவது, அயோக்கியதையின் தீய பலன்களையும், பாவத்தினுடையனவும் வியாதியினுடையனவும் பயன்களையும், நிமிஷத்தில் கழியக்கூடிய சிற்றின்பம் எவ்வளவு ஆபத்தை விளைவிக்கக் கூடியவை யென்பதையும் சிந்தித்தல்.
''ஐந்தாவது தியானம் சாந்தியைப்பற்றிய தியானம்; அஃதாவது, நீங்கள் விருப்பு வெறுப்புக்களுக்கும், வருந்துதல் வருத்துதல்களுக்கும், செல்வம் வறுமைகளுக்கும் மேற்பட்டு, உங்கள் ஊழைப் பக்ஷபாதமற்ற அமைதியோடும் பூரண சமாதானத்தோடும் ஏற்றுக்கொள்ளுதல்.''
இத் தியானங்களைச் செய்து புத்தரது சீடர்கள் மெய்ப்பொருள் ஞானத்தை அடைந்தார்கள். ஆனால், மெய்ப்பொருள் உங்களுடைய இலட்சியமாயிருக்கும் வரையில், குற்றமற்ற வாழ்க்கையும் தூயமனமுமுடைய ஒழுக்கத்திற்காக நீங்கள் தாகமும் பசியும் கொண்டிருக்கும் வரையில், இத்தியானங்களை நீங்கள் செய்தாலும் செய்யாவிட்டாலும் பெரிதன்று. ஆகையால், எங்கள் தியானங்களில் உங்கள் ஹிருதயம் சகல காமத்திலிருந்தும், குரோதத்திலிருந்தும், குற்றங் காண்டலிலிருந்தும் விடுபட்டு, அது பிரபஞ்சம் முழுவதையும் உள்ளூர்ந்த அருளோடு தழுவும் வரையில், எப்பொழுதும் அகன்று கொண்டிருக்கிற அன்போடு வளர்ந்து விரியட்டும். காலை ஒளியைப் பெறுவதற்காக அரும்பானது தனது இதழ்களைத் திறப்பது போல, மெய்ப்பொருளின் பெருமை வாய்ந்த ஒளியைப் பெறுவதற்காக உங்கள் ஆத்மாவை அதிகமாகத் திறப்பீர்களாக; கோரிக்கையாகி சிறகுகளைக் கொண்டு மேல்நோக்கிப் பறப்பீர்களாக; அச்சம் இல்லாமல் இருப்பீர்களாக; மிக மிக உயர்ந்தவற்றை அடையலாமென்று நம்புவீர்களாக; ஒரு பூரண இனிய வாழ்க்கையை அடையக்கூடுமென்று நம்புவீர்களாக; ஒரு மாசற்ற தூய வாழ்க்கையை அடையக்கூடுமென்று நம்புவீர்களாக. ஒரு பூரண பக்தி வாழ்க்கையை அடையக்கூடுமென்று நம்புவீர்களாக; மேலான மெய்ப்பொருளை அடையக்கூடுமென்று நம்புவீர்களாக. இவ்வாறு எவன் நம்புகிறானோ, அவன் மோக்ஷ மாலையின் மீது விரைவாக ஏறுகிறான்; இவ்வாறு நம்பாதவர்கள் மேக இருள் படிந்துள்ள நரகப் பள்ளத்தாக்கில் மயக்கத்தோடும் துன்பத்தோடும் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள்.
அவ்வாறு நம்புவதால், அவ்வாறு கோருவதால், அவ்வாறு தியானிப்பதால், உங்கள் ஆத்ம அநுபவங்கள் தெய்வ இனிமையும் அழகுமுள்ளனவாயிருக்கும்; உங்கள் பார்வையைப் பரவசப்படுத்தும் காட்சிகள் பெருமை வாய்ந்தனவாயிருக்கும். தெய்வ அன்பை, தெய்வ நீதியை, தெய்வப் பரிசுத்தத்தை அல்லது கடவுளை நீங்கள் அடையும் காலையில் உங்கள் இன்பம் பெரியதாகவும், உங்கள் சாந்தி ஆழ்ந்ததாகவும் இருக்கும்; பழைய பொருள்கள் நீங்கிவிடும். எல்லாம் புதியனவாய் விடும்; மெய்ப்பொருளைப் பார்க்கும் கண்ணுக்கு உரத்ததாகவும் ஊடுருவிச் செல்ல விடாததாகவும், மெய்ப்பொருளைப் பார்க்கும் கண்ணுக்கு மெல்லியதாகவும் ஊடுருவிச் செல்ல விடுவதாகவும் இருக்கிற ஸ்தூல பிரயஞ்சத்தின் திரையானது உயர்த்தப்பட்டு, சூட்சம பிரபஞ்சம் காட்டப்படும். காலத்திற்கு முடிவுண்டு, நீங்கள் முடிவில்லாமல் எஞ்ஞான்றும் வாழ்வீர்கள். மாற்றமும் மரணமும் இனிமேல் உங்களுக்குக் கவலையையும் துக்கத்தையும் கொடுக்க மாட்டா; ஏனெனில், நீங்கள் மாறுதல் இல்லாத பொருளை அடைந்து மரணம் இல்லாத பொருளின் ஹிருதயத்தில் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்.
ஞானமீன்
விஷ்ணுமூர்த்தியும், கிருஷ்ண சுவாமியும்,
புத்த தேவரும், கிறிஸ்து நாதரும்
பிறந்தநன் மீனே! பிறங்குமீன் இலாத
நடுராத் திரியின் நள்ளிருள் தன்னில்
நினதொளி காணும் மனமொடு வானை
நோக்கி யிருந்த நுண்ணறி வாளர்க்(கு)
ஒழுக்கத் தவர்வாழ் உலகத்தி னின்று
சின்மய வுருவுடை தேவ தூதனும்,
காமக் குரோதக் களத்திடை கடவுளும்
பிறக்கும் கதையைச் சிறக்கச் சொல்வோனும்
களைத்தலைத் துழன்று கவலுமாந் தர்க்கு
பரிந்திரக் கத்தினைப் பாடுபா வலனும்
வருவதை மொழிந்து மகிழ்ச்சியை நல்கினை.
ஒளிர்பல பொருள்களுள் ஒளிமிகு மீனே!
நீமறு படியும் நிசிநடு ராத்திரி
அழகுறும் படியா அலங்கரித் தருளினை;
சமயங்க ளின்புறச் சடங்குக ளோடும்,
உயிரும் பலனும் ஒன்றும் இலாத
கைசெய் விக்கிர கங்க ளோடும்,
எதிர்த்துப்போ ராடி இளைத்து மெலிந்து
மதத்தின் இருளில் வருந்திநின் றொளியை
நாடி நிற்கும் நல்லறி வாளர்க்(கு)
உற்சா கத்தினை ஊட்டி யருளினை;
நின்னை நினைந்து நிற்போர் நெஞ்சுள்
பழைய உண்மைகள் தழையச் செய்தனை;
அவரது தளர்ச்சிகள் அழிவுறச் செய்தனை;
அவரது நெறியில் அழகொளி பரப்பினை!
நின்பால் அன்பு நிகழ்த்து வோர்க்கு
துக்கத்தி னின்று தோன்றும் சுகத்தையும்
சந்தோஷத்தையும் சாந்தத் தினையும்
கொள்ளும் நெறியைக் கூறி யருளினை;
இரக்கா லத்தில் இளைக்க அலைந்து
நின்னைக் காண்போர் நிதமின் புறுவர்.
நின்னுயிர் ஒளியின் நிகரிலா வலியால்
அகத்துள் என்றும் ஆழ்ந்த அன்பு
நிலைக்கப் பொற்றோர் நிதமின் புறுவர்.
விஷ்ணு மூர்த்தியும், கிருஷ்ண சுவாமியும்,
புத்த தேவரும், கிறிஸ்து நாதரும்
பாரில் பிறந்த பழைநன் மீனே!
நினதுபா டத்தை நெஞ்சோடு கற்பேம்;
பணிவொடும் மகிழ்வொடும் பக்தியொடும் கற்பேம்;
அறிவொடும் பொறையொடும் அறிந்துநிற் பேமே.
2. இரண்டு தலைவர் - யானும் கடவுளும்
மனித ஆன்மாவின் அமர்க்களத்தில் அகத்தின் ஆள்கைக்காகவும், அரசுக்காகவும், ஆதிபத்திய கிரீடத்திற்காகவும் இரண்டு தலைவர் அமர் புரிகின்றனர். அவரில் ஒருவன் 'யான்' என்னும் தலைவன்; 'இவ்வுலக அரசன்' என்றும் சொல்லப்படுபவன்; மற்றொருவன் மெய்ப்பொருள் என்னும் தலைவன்; தந்தையாகிய கடவுள் என்றும் சொல்லப்படுவான். 'யான்' என்னும் தலைவன்; காமம், கர்வம், பேராசை, வீண் பெருமை, பிடிவாதம் என்னும் இருட் கருவிகளைக் கைக்கொண்டு கலகம் விளைப்பவன். மெய்ப்பொருள் என்னும் தலைவன் இனிமை, பொறுமை, தியாகம், பணிவு, அன்பு என்னும் ஒளிக்கருவிகளைக் கொண்டு அமைதியாகவும் அடக்கமாகவும் இருப்பவன்.
"ஒவ்வோர் ஆன்மாவிலும் அமர் செய்யப்படுகின்றது. ஒரு வீரன் ஒரு சமயத்தில் எதிரெதிரான இரண்டு படைகளில் நின்று சண்டை செய்ய முடியாததுபோல, ஒவ்வோர் அகமும் ஒருசமயத்தில் 'யான்' என்னும் தலைவனுடைய படையிலாவது, மெய்ப்பொருள் என்னும் தலைவனுடைய படையிலாவது சேர்ந்திருக்கின்றது. அவனுக்குப் பாதி, இவனுக்குப் பாதி என்பது கிடையாது. 'யான்' என்னும் தலைவனும் இருக்கிறான்; மெய்ப்பொருள் என்னும் தலைவனும் இருக்கிறான்; 'யான்' இருக்கிற இடத்தில் மெய்ப்பொருள் இல்லை, மெய்ப்பொருள் இருக்கிற இடத்தில் 'யான்' இல்லை. இவ்வாறு மெய்ப்பொருளாசிரிரியராகிய புத்தர் கூறியிருக்கின்றனர். கிறிஸ்துவின் அவதாரமாகத் தோன்றிய ஏசுநாதர், ''எந்த மனிதனும் இரண்டு தலைவரிடம் வேலை பார்க்க முடியாது; ஏனென்றால், அவன் ஒருவனை வெறுப்பான்: மற்றொருவனை நேசிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொள்வான்; மற்றொருவனை விட்டுவிடுவான். நீ கடவுளுக்கும் பிசாசுக்கும் ஊழியம் செய்ய முடியாது'' என்று கூறியிருக்கின்றனர்.
மெய்ப்பொருள் சிக்கல், மாறுதல், குறைதல் இவற்றிற்கு இடம்கொடாத எளிமையும், நேர்மையும், கண்டிப்பும் வாய்ந்தது; 'யான்' என்பவன் சாதுரியமும், கோணலும், தந்திரமும், வஞ்சகம் பொருந்திய அவாக்களும் உடையவன்; முடிவற்ற மாறுதல்களுக்கும் குறைதல்களுக்கும் இடம் கொடுக்கிறவன். 'யான்' என்பவனை மதிமயங்கி வணங்குகிறவர்கள் ஒரேசமயத்தில் ஒவ்வோர் உலக அவாவையும் திருப்தி செய்து கொள்ளலாம் என்றும், மெய்ப்பொருளை அடையலாம் என்றும் வீணாக நினைக்கின்றனர். ஆனால், மெய்ப்பொருளை நேசிக்கின்றவர்கள் 'யான்' என்பதை விடுத்து மெய்ப்பொருளை வணங்குகிறார்கள்; அவர்கள் உலக விஷயங்களினின்றும், உலக இன்பங்களினின்றும், தங்களைக் காத்துக்கொள்ளுகிறார்கள். நீங்களை மெய்ப்பொருளை அறிதற்கும் அடைதற்கும் விரும்புகின்றீர்களா? அப்படியானால் நீங்கள் தியாகம் செய்வதற்கும், முற்றத் துறந்ததற்கும் தயாராய் இருத்தல் வேண்டும். ஏனெனில் 'யான்' என்பதன் கடைசி அடையாளுமும் காணமற் போன பொழுது, மெய்ப்பொருளை அதனுடைய எல்லா மகிமையோடும் காணலாம்.
நித்திய கிறிஸ்து நாதர், தம்முடைய சீடன் ஆவதற்கு விரும்புகிறவன், "ஒவ்வொரு நாளும் 'யான்' என்பதை மறுக்க வேண்டும்" என்று சொன்னார். நீங்கள் 'யான்' என்பதை மறுப்பதற்கும், உங்களுடைய காமங்களையும், குரோதங்களையும், உங்களுடைய அபிப்பிராயங்களையும் விட்டுவிடுவதற்கும் விரும்புகிறீர்களா? அப்படியானால், நீங்கள் மெய்ப் பொருளின் சுருங்கிய வழியில் பிரவேசித்து, உலகத்தார் அடையாத சாந்தியை அடையலாம், 'யான்' என்பதை முற்றும் மறுத்தலும், முற்றும் அழித்தலும், மெய்ப்பொருளின் பூரண நிலை; சகல மதங்களும் சகல தத்துவ சாஸ்திரங்களும் இந்த மேலான நிலையை அடைவதற்குரிய பல துணைகள்.
'யான்' என்றல் மெய்ப்பொருள் இல்லை யென்றல். மெய்ப்பொருள் என்றல் 'யான் இல்லை என்றல். நீங்கள் 'யான்' என்பது இறக்கும்படி விடுங்காலையில் நீங்கள் மறுபடியும் மெய்ப்பொருளாக அவதரிக்கின்றீர்கள். நீங்கள் 'யான்' என்பதைப் பற்றிக் கொண்டிருக்கும் காலையில், உங்கிளின்று மெய்ப்பொருள் மறக்கப்பட்டிருக்கும்.
நீங்கள் 'யான்' என்பதைப் பற்றிக் கொண்டிருக்கும் காலையில், உங்கள் மார்க்கத்தில் ஓயாத கஷ்டங்கள் சேர்ந்து கொண்டிருக்கும். துன்பங்களும், துக்கங்களும், ஆசாபாசங்களும் நீங்கள் அடையும் பலன்களாயிருக்கும். மெய்ப்பொருளிடத்துக் கஷ்டங்கள் இல்லை; நீங்கள் மெய்ப்பொருளைச் சேர்ந்தால், நீங்கள் சகல துக்கத்தினின்றும் ஆசாபங்கத்தினின்றும் விடுபடுவீர்கள்.
மெய்ப்பொருள் தன் இயற்கையில் மறைபட்டிருப்பதன்று; இருளன்று. அஃது எப்பொழுதும் விளங்கிக் கொண்டும், பூரணமாக ஒளிர்ந்துகொண்டும் இருக்கிறது. ஆனால், வழிதப்பிய குருட்டு 'யான்' அதனைக் காண முடியாது பகலில் ஒளி, குருடர் தவிர மற்றவர்களுக்கு மறைக்கப்பட்டிருப்பதில்லை; மெய்ப்பொருளின் ஒளி 'யான்' என்னும் அகங்காரத்தால் குருடராய் இருக்கிறவர் தவிர, மற்றவர்களுக்கு மறைக்கப் பட்டிருக்கவில்லை.
மெய்ப்பொருள் பிரபஞ்சத்தில் ஓர் உண்மைப்பொருள். உள்ளூர்ந்த சமாதானம், பூரண நிதி, நித்திய அன்பு, எதனையும் அதனோடு சேர்க்க முடியாது; அதிலிருந்து எடுக்க முடியாது. அஃது எந்த மனிதனையும் சார்ந்திருக்கவில்லை; ஆனால், அதனை எல்லா மனிதரும் சார்ந்திருக்கின்றனர்.
நீங்கள் 'யான்' என்னும் கண்கள் மூலமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் காலத்தில், நீங்கள் மெய்ப்பொருளின் அழகைக் காண முடியாது. நீங்கள் வீண் பெருமைக்காரர்களாயிருப்பின், நீங்கள் ஒவ்வொன்றையும் உங்களுடைய சொந்த வீண்பெருமையாகி வர்ணத்தைப் பூசிக் காண்பீர்கள்; நீங்கள் காமிகளாயிருந்தால், உங்களுடைய அகமும் மனமும் காமப்புகையாலும் சுடர்களாலும் மூடப்பட்டிருக்கும்; அவற்றின் மூலமாக ஒவ்வொன்றும் விகாரப்பட்டுத் தோன்றும்; நீங்கள் கர்வம் உள்ளவர்களாகவும், உங்கள் அபிப்பிராயமே சரி என்று கொள்கிறவர்களாகவும் இருந்தால், உங்கள் அபிப்பிராயங்களின் பெருமையையும் சிறப்பையும் தவிர, வேறு ஒன்றையும் பிரபஞ்சம் முழுவதிலும் நீங்கள் பார்க்க மாட்டீர்கள்.
'யான்' என்னும் மனிதனிலிருந்து மெய்ப்பொருளின் மனிதனை வேறு பிரித்துக் காட்டுகிற குணம் ஒன்று உண்டு; அது பணிவு, வீண் பெருமையிலிருந்தும், பிடிவாதத்திலிருந்தும், அகங்காரத்திலிருந்தும் விடுபட்டிருத்தல் மாத்திரமில்லாமல், தம்முடைய அபிப்பிராயங்களை விலையற்றனவாகக் கருதலுமே உண்மையான பணிவு.
எவன் 'யான்' என்னும் அகங்காரத்தில் அமிழ்ந்திருக்கிறானோ, அவன் தனது சொந்த அபிப்பிராயங்களை மெயப்பொருள் என்றும், பிறரது அபிப்பிராயங்களை பொய்ப் பொருள் என்றும் மதிக்கிறான். ஆனால், மெய்ப்பொருளுக்கும் தனது சொந்த அபிப்பிராயத்துக்கும் உள்ள வேற்றுமையைக் காணுதற்குக் கற்றுக் கொண்டு மெய்ப்பொருளின் அன்பன், எல்லா மனிதர்களையும் தயாளம் என்னும் கண்ணால் பார்க்கிறான்; பிறருடைய அபிப்பிராயங்களுக்கு விரோதமாகத் தன்னுடைய அபிப்பிராயங்களை நிலைநாட்ட முயலமாட்டான்; தான் அதிகமாக நேசிக்கிற தன் அபிப்பிராயங்களை விட்டுக்கொடுத்து, மெய்ப்பொருளின் தன்மையைக் காட்டுவிப்பான், ஏனென்றால், மெய்ப்பொருள் இயற்கையில் இன்ன தன்மையதென்று சொல்ல முடியாததாகவும், அனுபவித்து மாத்திரம் உணரத்தக்கதாகவும் இருக்கிறது. எவன் அதிகமாகத் தயாளத்தைக் கொண்டிருக்கிறானோ, அவன் அதிகமாக மெய்ப்பொருளைக் கொண்டிருக்கிறான்.
மனிதர் சூடான தர்க்கங்களைச் செய்துகொண்டு தாம் மெய்ப்பொருளை ஸ்தாபிக்கிறது போல மூடத்தனமாக நினைக்கின்றனர்; அப்பொழுது உண்மையில் அவர் தம்முடைய சொந்த அற்ப விருப்பங்களையும், அழிந்த போகும் அபிப்பிராயங்களையும் ஸ்தாப்பிக்கின்றனர். 'யான்' என்பதைப் பின்பற்றுகிறவன் மற்றவர்களோடு சண்டை செய்வதற்காக ஆயுதங்களை எடுக்கிறான். மெய்ப்பொருளைப் பின்பற்றுகிறவன் தன்னோடு சண்டை செய்வதற்காக ஆயுதங்களை எடுக்கிறான். மெய்ப்பொருள் மாறுதல் இல்லாததாயும், அழிவு இல்லாததாயும் இருக்கிறபடியால், அஃது உங்கள் அபிப்பிராயத்துக்கும் என் அபிப்பிராயத்திற்கும் வேறாக இருக்கிறது. நாம் அதனுள் பிரவேசிக்கலாம்; அல்லது நாம் அதற்கு வெளியே இருக்கலாம்; ஆனால், நம்முடைய காப்பும் மிகை, அவை நம்மீது திருப்பி எறியப்படுகின்றன.
மாந்தர் 'யான்' என்பதால் அடிமைப்படுத்தப்பட்டுக் கோபம், வீண் பெருமை, பிறர்மீது குற்றங்சாட்டல் முதலிய துர்க்குணங்களுடையவர்களாய், தம்முடைய சொந்த மதம் மாத்திரம் உண்மை மதம் என்றும், மற்றவர்களுடைய மதங்கள் பொய் மதங்கள் என்றும் நம்புகின்றனர். அவர் மிக ஆத்திரத்தோடு ஜனங்களைத் தமது மதத்தில் சேர்க்கின்றனர். மெய்ப்பொருள் மதமாகிய ஒரே ஒர மதம்தான் உண்டு. 'யான்' என்னம் பிராந்தியாகிய ஓரே ஒரு பிராந்திதான் உண்டு. மெய்ப்பொருள் ஒரு வெறும் நம்பிக்கை அன்று; அது சுயநலமற்ற, தூய்மையான, ஆசிப்புள்ள ஓர் அகம். எவன் மெய்ப்பொருளைப் பற்றி நிற்கின்றானோ அவன் எல்லாரோடும் சமாதானமாய் வாழ்கிறான்; எல்லோரையும் அன்பு நினைப்புகளால் போக்ஷ¢க்கிறான்.
நீங்கள் உங்களுடைய மனத்தையும், அகத்தையும், நடத்தையையும் மௌனமாக ஆராய்வீர்களாயின், நீங்கள் மெய்ப்பொருளின் மக்களா, அல்லது 'யான்' என்பவனை வணங்குகிறவர்களா என்பதை நீங்கள் எளிதாகத் தெரிந்து கொள்ளலாம்; நீங்கள் ஐயம், பகைமை, பொறாமை, காமம், வீண்பெருமை முதலியவற்றின் நினைப்புக்களை ஒளித்து வைத்திருக்கின்றீர்களா? அல்லது நீங்கள் இத்தீய நினைப்புக்களுக்கு விரோதமாக ஊக்கத்தோடு போராடுகின்றீர்களா? நீங்கள் முதன் சொல்லியவர்களாயின், நீங்கள் நீச மதத்தை அநுசரிப்பவர்களாயிருப்பினும், நீங்கள் 'யான்' என்பதோடு கட்டப்பட்டிருக்கிறீர்கள்; நீங்கள் வெளிப்படையாக ஒரு மதத்தையும் அநுசரியாதவர்களாயிருப்பினும், நீங்கள் மெய்பொருளைக் கோருகிற மாணாக்கர்கள், நீங்கள் காமக்குரோதமுள்ளவர்களா, மனம் போன போக்கில் போகிறவர்களா, சுய காரியங்களையே எப்பொழுதும் நாடிக் கொண்டிருக்கிறவர்களா, பொறியின்பங்களை நுகர்கிறவர்களா, 'யான்' என்று அகங்கரிக்கின்றவர்களா? அல்லது நீங்கள் சாந்தமுள்ளவர்களா, அமரிக்கையுள்ளவர்களா, பரநயமுள்ளவர்களா, ஒவ்வொருவகைப் பொறியின்பத்தையும் நீத்தவர்களா, உங்களுக்குச் சொந்தமானதை விட்டுவிடச் சித்தமாயிருக்கிறீர்களா? நீங்கள் முந்தியவர்களாயின் உங்களுக்கு எஜமான் 'யான்'; நீங்கள் பிந்தியவர்களாயின் நீங்கள் நேசிக்கும் பொருள் மெய்ப்பொருள். நீங்கள் ஐஸ்வரியங்களை அடைய முயல்கின்றீர்களா? நீங்கள் உங்கள் கக்ஷ¢க்காரர்களுக்காக ஆத்திரத்துடன் சண்டைபோடுகின்றீர்களா? நீங்கள் செல்வாக்கும் தலைமைக்கும் அவாவுகின்றீர்களா? நீங்கள் டம்பத்திற்கு தற்புகழ்ச்சிக்கும் இடம் கொடுத்திருக்கின்றீர்களா? நீங்கள் ஐஸ்வர்யங்களின் ஆசையைத் துறந்துவிட்டீர்களா? நீங்கள் எல்லாச் சண்டைகளையும் விட்டுவிட்டீர்களா? நீங்கள் மிகமிகத் தாழ்ந்த இடத்தில் இருத்தலிலும், பிறரால் புறக்கணிக்கப்படுதலிலும் திருப்தியடைகின்றீர்களா? நீங்கள் உங்களைப்பற்றிப் பேசுதலையும் உங்களைப் பெருமை உடையவர்களாக மதித்தலையும் நிறுத்தி விட்டீர்களா? நீங்கள் முந்தியவர்களாயின், நிங்கள் கடவுளை வணங்குகிறதாக நினைத்துக் கொண்டிருந்தாலும் உங்கள் அகத்தின் கடவுள் 'யான்' தான். நீங்கள் பிந்தியவர்களாயின், நீங்கள் கடவுளைத் துதியாதவர்களாயிருப்பினும், நீங்கள் மிக மிக மேலான பொருளைடய 'கடவுளுடன்' வசித்துக் கொண்டிருக்கின்றீர்கள்.
மெய்ப்பொருளின் அன்பனைத் தெரிந்துகொள்ளுதற்குரிய அடையாளங்கள் தெளிவானவை. அவற்றை ஸ்ரீ கிருஷ்ணபகவான் ''பகவத் கீதை''யில் பின்வருமாறு கூறுகிறார்.
''அறிவினை அடைதற் கநுதினம் முயறல்,
ஒருவினை குறிக்கோள், உயிர்க்கூறு செயாமை,
அடங்கிய பசிகள், அஞ்சாமை, ஈகை,
அடக்கம், கடவுள்பால் அன்புநன் னேர்மை,
மெய்ம்மை கூறுதல், வெகுளிகொள் ளாமை,
பொறுமை, தூய்மை, உறுதி யுடைமை,
மற்றையோர் பெரிதா மதிப்பவர்க் களித்தல்,
இன்பம் துன்பம் இரண்டிலும் சமநிலை,
பிறர்குறை காணாப் பெருமை, இரக்கம்,
ஆசை களினால் அசைக்கப் படாமை,
மெல்லிய தன்மை, மேம்பா டுடைமை,
தீங்செய் தார்க்கெதிர்த் தீங்குசெய் யாமை,
இவைஅறி குறிகள் எம்இள அரசே!
மெய்ப்பொருள் வழியில் மேவிநிற் போர்க்கே"
மாந்தர் பொய்ப்பொருளாகிய 'யான்' என்பதன் தப்புவழியில் சென்று, தமது தெய்வப்பிறப்பையும், பக்தித் தன்மையையும், மெயப்பொருளையும் மறந்தபொழுது, ஒருவரை ஒருவர் மதிப்பதற்குக் கற்பனையான வகுப்புக்களை ஏற்படுத்தி, மெய்ப்பொருளை உணர்த்துவதற்குத் தமது சொந்த மதத்தை அங்கீகரித்துப் பற்றிக் கொள்ளுகின்றனர். அதனால் மாந்தர் ஒருவருக்கொருவர் விரோதமாகப் பிரிக்கப்பட்டு, இடைவிடாத பகைமையும் சண்டையும், முடிவில்லாத துன்பமும் துக்கமும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.
வாசகர்களோ! நீங்கள் மெய்ப்பொருளை அடைவதற்கு நாடுகின்றீர்களா? அதற்கு ஓரே ஒரு வழிதான் உண்டு. 'யான்' என்பது இறக்கட்டும்; நீங்கள் இதுவரையில் விடாமல் பற்றிக்கொண்டிருந்த அவர்களும், பசிகளும், விருப்பங்களும், அபிப்பிராயங்களும், சுருங்கிய எண்ணங்களும், துவேஷங்களும், உங்களிடத்திலிருந்து நீங்கட்டும்; அவை இனிமேல் ஒருபொழுதும் உங்களை அடிமைப்படுத்தாமல் இருக்கட்டும்; அப்பொழுது மெய்ப்பொருள் உங்களுடையதாயிருக்கும். உங்களுடைய மதம் மற்றைய எல்லா மதங்களிலும் மேலானதென்று கருதுவரை நிறுத்தி, தயளமாகிய மேலான பாடத்தைப் படிப்பதற்குப் பணிவோடு முயலுங்கள். சண்டையும், துக்கத்தையும் உண்டு பண்ணுவதாகிய, நீங்கள் வணங்குகிற இரக்ஷகரே உண்மையான இரக்ஷகர்; உங்களுடைய சகோதரர்கள் உங்களைப் போலவே உண்மையோடும் ஊக்கத்தோடும் வணங்ககிற இரக்ஷ்கர் பொய்யான இரக்ஷகர் என்னும் கொள்கையை உடனே விட்டுவிடுங்கள். ஆனால், நீங்கள் பக்தி நெறியை ஊக்கத்தோடு நாடுங்கள்; பின்னர், ஒவ்வொரு பக்தனும் மனித சமூகத்தின் இரக்ஷகன் என்று காண்பீர்கள்.
'யான்' என்பதை விடுதல் புறப்பொருள்களைத் துறத்தல் மாத்திரம் அன்று, அஃது அகப்பாவத்தையும், அகப் பொய்யையும் துறத்தலுமாம். வீணான உடைகளை விடுதலால், செல்வங்களைத் துறத்தலால், சில உணவுகளை மறுத்தலால், பொதுவான வார்த்தைகளைப் பேசுதலால், இத்தகைய காரியங்களைச் செய்தலால் மெய்ப்பொருளைக் காணமுடியாது. ஆனால், வீண் பெருமையை விடுதலால், செல்வங்களின் அவாவைத் துறத்தலால், பொறியின் பங்களின் ஆசையை அடக்குதலால், சகல வெறுப்புக்களையும், சண்டைகளையும், குற்றம் காண்டலையும், சுயநயத்தையும் விடுதலால், அகத்தில் சாந்தத்தையும், தூய்மையையும் கொள்வதால், இத்தகைய காரியங்களைச் செய்தலால் மெய்ப்பொருள் காணப்படுகிறது. பிந்திச் சொன்னவற்றைச் செய்யாது முந்திச் சொன்னவற்றைச் செய்தல் கள்ளத்தனமும், வெளி வேஷமுமாகும். ஏனெனில், பிந்திச் சொன்னவற்றில் முந்திச் சொல்லியவை அடங்கியிருக்கின்றன. நீங்கள் வெளி உலகத்தைத் துறந்து, ஒரு காட்டின் மத்தியில் அல்லது ஒரு குகையின் உள்ளே தனித்திருக்கலாம்; ஆனால், உங்கள் சுயநலத்தை உங்களுடன் வைத்துக் கொண்டே இருப்பீர்கள்; அதனை நீங்கள் துறந்தால் ஒழிய, உங்களுடைய துர்ப்பாக்கியம் பெரிதாகவும் உங்களுடைய பிரமை ஆழ்ந்ததாகவும் இருக்கும். நீங்கள் இப்பொழுது எந்த இடத்தில் இருக்கிறீர்களோ, அந்த இடத்திலேயே இருந்து உங்கள் கடமைகளையெல்லாம் செய்துகொண்டிருக்கலாம்; அப்படியிருந்தும், உங்கள் அகப்பகையாகி உலகப்பற்றை நீங்கள் துறக்கலாம், உலகத்தில் இருந்து கொண்டே உலகப்பற்றில்லாதிருத்தல், மிகமிக உயர்ந்த பூரணத்வம்; மிகமிக இன்பகரமான சாந்தி; மிகமிக உயர்ந்த வெற்றியை அடைவதற்கு வழி. 'யான்' என்பதைத் துறத்தல் மெய்ப்பொருளுக்கு வழி. ஆதலால்,
"அவ்வழி செல்லுக; அவாப்போல் துன்பிலை;
வெறுப்பின் துயரிலை; பொறிபோல் கரவிலை,
அவ்வழி செல்லுக; அருமிகை யொன்றை
விடுத்தோன் நடந்தான் வெகுதூரம் தானே."
'யான்' என்பதை நீங்கள் வெல்லும் காலையில், பல பொருள்களையும், அவற்றில் ஒன்றிற்கொன்றுள்ள சம்பந்தங்களையும் நீங்கள் காணத் தொடங்குவீர்கள். எவன் காமத்தால் அல்லது குரோதத்தால், விருப்பு அல்லது வெறுப்பால் ஆளப்படுகிறானோ, அவன் ஒவ்வொன்றையும் தனது அத்தன்மையோடு பொருத்திக் கொண்டு தனது சொந்தப் பிராந்திகளைப் பார்க்கிறான்; எவன் சகல காமத்தினின்றும், குரோதத்தினின்றும், பக்ஷத்தினின்றும் பூரணமாக விடுபட்டிருக்கிறானோ, அவன் தன்னைத்தான் இருக்கிறபடியே பார்க்கிறான். மற்றவர்களையும், அவர்கள் இருக்கிறபடியே பார்க்கிறான். எல்லப் பொருள்களையும், அவற்றின் சரியான அளவுகளையும், சரியான சம்பந்தா சம்பந்தங்களையும் பார்க்கிறான். தான் தாக்குவதற்கு எதுவும், காப்பதற்கு எதுவும், வேணுவதற்குரிய உரிமை எதுவும் இல்லாதபடியால், அவன் சாந்தியாய் இருக்கிறான். அவன் மெய்ப்பொருளின் பூரண சாமானியத் தன்மையை அடைந்து விட்டான்; ஏனெனில், மனத்தினுடையவும் அகத்தினுடையவும் பக்ஷபாதமற்ற அமைதியான இன்பகரமான நிலைமையே மெய்ப்பொருளின் நிலைமை. எவன் அந்த நிலைமையை அடைகிறானோ, அவன் தேவதூதர்களோடு வசிக்கிறான்; பரம்பொருளின் பாதபீடத்தில் இருக்கிறான். பெரிய சட்டத்தைத் தெரிந்து கொண்ட பின்னர், துக்கத்தின் மூலத்தைத் தெரிந்துகொண்ட பின்னர், துன்பத்தின் மர்மத்தைத் தெரிந்து கொண்ட பின்னர், மெய்ப்பொருள் வீட்டின் வழியைத் தெரிந்துகொண்ட பின்னர், ஒருவன் எவ்வாறு சண்டையில் அல்லது குற்றங்காண்டலில் ஈடுபடுவான்? குருட்டுத் தனமாக்ச் சுயநலமே நாடும் உலகமானது, தன்னுடைய சொந்தப் பிராந்திகளின் மேகங்களால் சூழப்பட்டு, பொய்யினுடையவும் 'யான்' என்பது இறந்த அல்லது இறந்துகொண்டிருக்கிற, அகத்தின் பூரண சாமானியத் தன்மையை ஒரு சிறிதும் உணர முடியாதென்பதையும் அவன் அறிவான். அப்படியிருந்தாலும், துன்பத்தைக் கொடுக்கிற காலமானது துக்க மலைகளை ஒன்றன்மீதொன்றாக அடுக்கியபொழுது, அம் மலைகளால் நசுக்கி அமிழ்த்தப்பட்ட உலக உயிரானது, அதனுடைய முடிவான அடைக்கல இடத்திற்கு ஓடும் என்பதையும், அக்காலம் முடிந்தபின் ஒவ்வொர் உயிரும் மெய்ப் பொருள்பால் வந்து சேரும் என்பதையும் அவன் அறிவான். ஆதலால், அவன் எல்லாரிடத்திலும் நல்விருப்பங்கொண்டு, நெறி தப்பிய மக்களிடத்து தந்தை காட்டும் உருக்கமான இரக்கத்தோடு எல்லாரையும் பார்க்கிறான்.
மாந்தர் மெய்ப்பொருளை உணரமுடியாது; ஏனெனில், அவர் 'யான்' என்பதைப் பற்றிகொண்டிருக்கின்றனர்; ஏனெனில், அவர் 'யான்' என்பதை உண்மை என்று நம்பி நேசிக்கின்றனர்; ஏனெனில், அவர் வெறும் பிராந்தியாகிய 'யான்' என்பதே உண்மையான பொருளென்று நம்புகின்றனர்.
'யான்' என்பதை நீங்கள் நம்புதலையும் நேசித்தலையும் நிறுத்தியபொழுது, நீங்கள் அதனைவிட்டு மெய்ப்பொருள் பால் ஓடுவீர்கள்; நித்தியமான உண்மையைக் காண்பீர்கள்.
மனிதர்கள் போகம், இன்பம், வீண் பெருமை என்னும் மதுக்களால் வெறி கொண்டிருக்கும்பொழுது, தாம் நெடுநாள் உயிர் வாழ வேண்டுமென்ற தாகம், அவர்களுக்குள் ஆழ்ந்து வளர்ந்து, தாம் ஸ்தூல சரீரங்களோடு நித்தியமாக வாழலாமென்ற கனவுகளால் தாமே தம்மை ஏமாற்றுகிறார்கள். ஆனால், அவர்கள் விதைத்த வினைகளின் விளைவுகளை அறுக்கத் தொடங்கும்போது, துன்பமும், துக்கமும் வந்து சேருகின்ற; அப்போது, அவர்கள் அவற்றால் நசுக்குண்டும் தாழ்த்தப்பட்டும், 'யான்' என்பதையும், 'யான்' என்பதன் வெறிகள் எல்லாவற்றையும் துறந்து, அவர்கள் நோகிற ஆகங்களோடு என்றும் அழியாததாகவும் இருக்கிற நித்தியமான மெய்ப்பொருள்பால் வந்து சேர்கிறார்கள்.
மாந்தர் தீமையிலிருந்து நன்மைக்கும், 'யான்' என்பதிலிருந்து மெய்ப்பொருளுக்கும், துக்கமாகிய இருட்டு வாயில் வழியாகச் செல்கின்றனர்; ஏனெனில், துக்கமும், 'யான்' என்பதும் ஒன்றில் நின்று ஒன்று பிரிக்கப்பட முடியாதவை. மெய்ப்பொருளின் அமைதியிலும் ஆனந்தத்திலும் மாத்திரம் எல்லாத் துக்கங்களும் நீங்குகின்றன. நீங்கள் நெடுங்காலமாக வளர்த்துவந்த விருப்பங்கள் நிறைவேறாமல் போன காரணத்தால், அல்லது நீங்கள் எதிர்பார்த்தபடி ஒருவர் நடந்துகொள்ளாத காரணத்தால், நீங்கள் ஆசாபங்கம் அடைவீர்களாயின், அதற்குக் காரணம் நீங்கள் 'யான்' என்பதைப் பற்றிக்கொண்டிருத்தலே. நீங்கள் உங்கள் நடத்தைக்காக இரங்குவீர்களாயின், அதற்குக் காரணம் நீங்கள் 'யான்' என்பதற்கு இடம் கொடுத்திருப்பதே. ஒருவன் உங்கள்பால் நடந்துகொள்ளும் தன்மையிலிருந்து நீங்கள் மனஸ்தாபமும் மனவருத்தமும் அடைவீர்களாயின், அதற்குக் காரணம் நீங்கள் 'யான்' என்பதை வளர்த்துக்கொண்டு வருவதே. பிறன் ஒருவன் உங்களுக்குச் செய்த செயலால், அல்லது உங்களைப்பற்றிச் சொல்லிய சொல்லால் நீங்கள் துன்புறுவீர்களாயின், அதற்குக் காரணம் நீங்கள் 'யான்' என்பதன் துன்பகரமான வழியில் நடந்து கொண்டிருத்தலே. எல்லாத் துன்பங்களும் 'யான்' என்பதற்குச் சொந்தமானவை. எல்லாத் துன்பங்களும் மெய்ப்பொருளில் முடிவு அடைகின்றன. நீங்கள் மெய்ப்பொருளில் பிரவேசித்து, மெய்ப்பொருளை அடைந்த பொழுது, ஆசாபங்கமும், அவமானமும், மன வருத்தமும் அடைய மாட்டீர்கள்; துக்கம் உங்களிடத்திலிருந்து பறந்து போய்விடும்.
'யான்' ஆன்மாவை அடைக்கும் சிறையே;
கதவைத் திறக்கும் காவலன் கடவுளே;
அவன் அழைக் கும்போழ் தவன்பின் செல்லுக;
அவன்நெறி இருளிற் செலினுமொளி சேர்க்குமே.
உலகத்தின் துக்கமானது அது தன்னாலேயே விளைவித்துக் கொள்ளப்பட்டது. துக்கம் ஆன்மாவைச் சுத்தப்படுத்தி ஆழப்படுத்துகின்றது; துக்கத்தின் ஈறு மெய்ப்பொருளின் முதல்.
நீங்கள் அதிகமாகத் துன்பப்பட்டிருக்கிறீர்களா? நீங்கள் வாழ்க்கையின் பிரச்னைகளைப்பற்றி ஆத்திரத்தோடு சிந்தித்திருக்கிறீர்களா? ஆம் என்றால், நீங்கள் 'யான்' என்பதனோடு அமர் செய்வதற்கும் மெய்பொருளின் மாணாக்கன் ஆவதற்கும் தகுதி உடையவர்கள்.
'யான் என்பதனை விடுவதற்குரிய அவசியத்தைக் காணாத அறிவிலி, பிரபஞ்சத்தைப் பற்றி முடிவில்லாத கோட்பாடுகளை உண்டாக்கி, அவற்றை மெய்ப்பொருள் என்று சொல்லுகிறான். ஆனால் நல்லொழுக்கத்தைக் கொண்டு அவ்வொழுக்க நெறியில் நேரே ஒழுகுங்கள். ஒரு நாளும் மாறாததும், கோட்பாட்டில் அடங்காததுமான மெய்ப்பொருளை நீங்கள் காண்பீர்கள். உங்கள் அகத்தில் மெய்யாகிய பயிரைச் செய்யுங்கள்; அதற்குச் சுயநயமற்ற அன்பும் ஆழ்ந்துணர்ந்த இரக்கமுமாகிய நீரை இடைவிடாது பாய்ச்சுங்கள்; அதில் அன்போடு பொருந்தாத நினைப்புகளும் உணர்ச்சிகளுமாகிய பறவைகள் விழாதபடி காத்துவாருங்கள்: உங்களுக்குத் தீமை செய்தார்க்கு நன்மை செய்யுங்கள்; உங்களை வெறுத்தார் பால் அன்பு பாராட்டுங்கள்; உங்களைக் கடினமாக நடத்துகிறவர்களை இதமாக நடத்துங்கள்; உங்களைத் தாக்கியபொழுது மௌமாக இருங்கள்; அவ்வாறே உங்கள் சுயநய விருப்பங்களை யெல்லாம் அன்பாகிய சுத்தத் தங்கமாக மாற்றுங்கள்; 'யான்' என்பது மெய்ப்பொருளில் மறைந்துபோம். பின்னர், நீங்கள் அடக்கமாகிய தெய்வ உடையால் உடுத்தப்பெற்று, பணிவாகிய ஏரில் பூட்டப்பெற்று, குற்றமற்றவர்களாய் மனிதர்களுள் நடப்பீர்கள்.
மெலிந்தசோ தரனே! மெய்ப்பொரு ளிறைபால்
முயற்சியும் சண்டையும் முடிவடைந் திடுங்காண்;
மெய்ப்பொரு ளுடைய மென்புனல் விரும்பி
'யான்' எனும் பாலையில் ஏன்செல் கின்றாய்?
மறம்புரிந் தலையுநின் வழியுள துயிரின்
இன்பநீ ரோடையோ டன்பார் பசுநிலம்;
வந்திளைப் பாறு; கண்டிடு தலைகடை;
தேடுவான் படுவோன்; காண்போன் படுவோன்.
(படுவோன்-தேடப்படுவோன்; காண்போன்-காணப்படுவோன்.)
நின்னுடை இறைவன் சொல்லொணா மலையலன்:
காற்றில் பறக்கும் கானலில் வாழ்கிலன்;
தளர்வினை யளிக்கும் மணலார் வழிகளில்
அவன் திரவுற் றறிந்திடாய் நீயே.
நின்னுடைய அரசன் பொன்னடிச் சுவட்டினை
'யான்' எனும் பாலையில் தேடுதல் விடுவாய்.
அவன்சொலின் இனிமையை அவாவுறின் கேட்க;
பிறரது வெற்றுரை செவிகொளாய் நீயே
அழியிடம் விடுவாய்; அனைத்தும் துறப்பாய்;
விரும்பிய வெல்லாம் விட்டொன்றிலாய்,
உள்ளுள கோவிலுள் பொள்ளெனச் சென்றிடு;
தூயன், பரமன், மாறிலான் அங்குளன்.
மௌன அகத்துள் வாழ்கிறான் அவன்தான்;
மறமும், துக்கமும், வருந்தி அலைதலும்
நீத்(து) அவன் ஆனந்த நீரில் மூழ்குவாய்;
உன்னுயிர் வேண்டுவ உரைப்பான் அவனே.
மெலிந்தசோ தரனே! விடுஅமர் முயற்சி;
காண்பாய் சாந்தியைக் கடவுளின் அகத்தே
'யான்' எனும் பாலையில் அலைதலை நிறுத்தி
வந்துடன் மெய்ப்பொருள் வண்புனல் பருகுவாய்.
3. ஆன்ம வலிமையை அடைதல்
இன்பத்தையும் உற்சாகத்தையும் புதுமையையும் நாடுகிற, எப்பொழுதும் நகைத்தற்கோ அழுதற்கோ நாடுகிற, பலத்தையும் நிலைப்பையும் வலிமையையும் நாடாத, ஆனால் பலஹீனத்தைப் பின்பற்றித் தம்மிடமுள்ள பலத்தைத் தொலைப்பதில் ஈடுபட்டிருக்கிற, ஆடவரும் மகளிரும் உலகத்தில் நிறைந்திருக்கின்றனர்.
உண்மையான வலிமையையும் செல்வாக்கையுமுடைய ஆடவரும் மகளிரும் சிலரே; ஏனெனில், வலிமையை அடைவதற்கு அவசியமான தியாகத்தைச் செய்தற்குச் சிலரே தயாராயிருக்கின்றனர்; பொறுமையோடு ஒழுக்கத்தை வளர்ப்பதற்குத் தயாராயிருப்பவர் அவரினும் சிலரே.
உங்களுடைய நிலையற்ற நினைப்புக்களாலும் மனோவெழுச்சிகளாலும் ஆளப்படுதல், நீங்கள் பலஹீனமாயும் வலிமையற்றும் இருத்தற்கே; அச் சக்திகளைச் சரியாக அடக்கியாள்தல் நீங்கள் பலமாயும் வலிமையுற்றும் இருத்தற்கே. பலத்த மிருகக் காமக் குரோதங்களையுடைய மனிதர் மூர்க்கத் தனத்தைக் கொண்டிருக்கின்றனர்; ஆனால், அது வலிமையன்று, அங்கு வலிமையின் தாதுக்கள் இருக்கின்றன; ஆனால், உயர்ந்த அறிவைக் கொண்டு மூர்க்கத்தைப் பழக்கிக் கீழ்ப்படுத்திய போதுதான் உண்மையான வலிமை ஆரம்பமாகின்றது; அறிவினுடையவும் ஞானத்தினுடையவும் உயர்ந்த நிலைகளைத் தாம் அடைந்தபோதுதான், மனிதர் வலிமையுடையவராகக்கூடும்.
ஒரு பலஹீனனுக்கும் ஒரு பலவானுக்குமுள்ள வித்தியாசம் அவனுடைய விருப்பத்தின் பலத்தைப் பொறுத்ததன்று; (ஏனெனில், பிடிவாதமுள்ள மனிதன் வழக்கமாகப் பலஹீனனாயும் மடையனாயும் இருக்கிறான்.) ஆனால், அவனுடைய அறிவுடைமையின் நிலைமைகளைக் காட்டும் மனச்சான்றின் கூர்மையைப் பொறுத்தது.
இன்பத்தை நாடுகின்றவர்களும், உற்சாகத்தை நேசிக்கின்றவர்களும், புதுமையின் பின்செல்கின்றவர்களும், மனோவெழுச்சிக்கும் மனோவுணர்ச்சிக்கும் ஆளாகின்றவர்களும், சமாதானத்தையும், உறுதிப்பாட்டையும், செல்வாக்கையும் கொடுக்கும் கொள்கைகளைப் பற்றிய அறிவில்லாதவர்களாயிருக்கிறார்கள்.
தன் மனோவெழுச்சிகளையும் சுயநய விருப்பங்களையும் தடுத்து, தன்னுள்ளிருக்கிற மிக உயர்ந்ததும் மிக அமைதி வாய்ந்ததுமான தன் அறிவை ஆதாரமாகக் கொண்டு, ஒரு கொள்கையை உறுதியாகக் கடைப்பிடித்து ஒழுகத் தொடங்குங்காலையில், ஒரு மனிதன் வலிமையை வளர்க்க ஆரம்பிக்கிறான்.
தன்னறிவில் மாறாத தத்துவங்களைக் காண்டல் மிகமிக உயர்ந்த வலிமையை உடனே அடைவதற்கு ஆதாரமும் மருமமும் ஆகும்.
அதிகமாகத் தேடிய பின்னும், துன்பப்பட்ட பின்னும், தியாகஞ் செய்த பின்னும், நித்தியப் பொருளின் ஒளி ஆன்மா மீது வீசும்போது, ஒரு தெய்வ அமைதி உண்டாகிறது; சொல்ல முடியாத பேரின்பம் ஹிருதயத்தை மகிழ்விக்கின்றது.
அத்தகைய நித்தியப்பொருளை எவன் கண்டானோ, அவன் அலைந்து திரிதலை விட்டுச் சமாதானமாகவும், தன்னை அடக்கி யாண்டுகொண்டும் இருக்கிறான். அவன் ''காமக் குரோதங்களுக்கு அடிமையாயிருத்தலை'' விட்டு, விதியாகிய கோயிலை எஜமானாயிருந்து காட்டுகிறான்.
ஒரு கொள்கையாலல்லாமல், தன்னால் ஆளப்படுகிற, மனிதன், தனது சுயநய சௌகரியங்களுக்கு அபாயம் வரும்போது முதுகு காட்டி ஓடுகிறான். தனது சுய நன்மைகளைக் காப்பதற்கும், அவற்றிக்குக் கேடு வராமல் தடுப்பதற்கும், ஆழ்ந்த எண்ணமுடையவனாயிருக்கிறபடியால், அவன் அதற்கு உதவும் எல்லா வழிகளையும் நியாயமான வழிகளென்று கருதிறான். தனக்குத்தானே சத்துருவென்பதைக் காணமுடியா விதத்தில், தன்னையே மிகமிகப் பற்றிக் கொண்டிருக்கிறபடியால், அவன் தனது விரோதிகளிடமிருந்து தன்னை எப்படிப் பாதுகாத்துக்கொள்ளலாமென்று இடைவிடாது சதியாலோசனை செய்துகொண்டிருக்கிறான். அத்தகைய மனிதனுடைய வேலை தூள் தூளாகப் போகின்றது; ஏனெனில், அது மெய்ப்பொருளினின் வலிமையினின்றும் பிரிக்கப்பட்டிருக்கின்றது. தன்னை அடிப்படையாகக் கொண்டிருக்கிற முயற்சிகளெல்லாம் நாசம் அடைகின்றன; அழிக்க முடியாத ஒரு கொள்கையை அடிப்படையாகக் கொண்டிருக்கின்ற வேலை மாத்திரம் நிலை நிற்கின்றது.
ஒரு கொள்கையைக் கடைப்பிடித்து ஒழுகுகின்ற மனிதன், எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அமைதியாகவும் அச்சமில்லாமலும் தன்னை அடக்கியாண்டு கொண்டிருப்பான். மெய்ப்பொருளை விடுவதா, அல்லது தனது சரீர சௌகரியங்களை விடுவதா என்ற சோதனைக் காலம் வரும் போது, அவன் தனது சரீர சௌகரியங்களை விட்டு விட்டு உறுதியாயிருக்கிறான். சித்திரவதை அல்லது மரணம் வருவதானாலும் அஃது அவனைத் தடுக்கவாவது, மாற்றவாவது முடியாது. 'யான்' என்னும் மனிதன் தனது செல்வத்தை இழத்தலையும், தனது சௌகரியங்களை இழத்தலையும், தனது உயிரை இழத்தலையும் மிகமிகப் பெரிய ஆபத்துக்களாகக் கருதுகிறான். ஒரு கொள்கையைக் கடைப்பிடித்து ஒழுகும் மனிதன் இந்தச் சம்பவங்களை மிக அற்பமானவையாகவும் மெய்ப்பொருள் இழப்போடும் ஒழுக்க இழப்போடும் ஒப்பிடத்தக்கவை யல்லவென்றும் கருதுகிறான். மெய்ப்பொருளைக் கைவிடுதலே அவனுக்கு ஓர் ஆபத்தென்று சொல்லத்தக்கது.
சங்கடகாலந்தான்; யார்யார் இருளின் அடிமைகள், யார் யார் ஒளியின் மக்கள் என்று தீர்மானிப்பது, அச்சுறுத்தும் விபத்து, அழிவு இம்சை இவை வருங்காலந்தான் செம்மறி ஆடுகளிலிருந்து வெள்ளாடுகளைப் பிரித்துக் காட்டுவது; வலிமையுள்ள ஆடவர்களையும், மகளிர்களையும் பிற்காலத்தவருடைய மதிப்புக்குப் பாத்திரராக்குவது.
ஒரு மனிதன் தனது உடைமைகளை அனுபவிக்கும்படியாக விடப்பட்டிருக்கிற காலமெல்லாம் சாந்தி, சகோதரத்வம், பேரன்பு இவற்றின் கொள்கைகளைக் கைக்கொண்டும், நம்பியும் இருக்கும்படி தன்னைச் செய்து கொள்வது அவனுக்கு எளிதாயிருக்கும். ஆனால் அவனுடைய அவ்வநுபோகங்களுக்கு ஆபத்து வரும்போது அல்லது அவ்வநுபோகங்களுக்கு ஆபத்து வருகிறதாக அவன் நினைக்கும்போது, அவன் சண்டைக்காக உரத்துச் சத்தமிடுவானாயின், அவன் சாந்தி, சகோதரத்துவம், பேரன்பு இவற்றைக் கொண்டிருக்கவில்லையென்றும், சண்டை, சுயநயம், வெறுப்பு இவற்றைக் கொண்டிருக்கிறதாகவும் காட்டுகிறான்.
தனது உலக உடைமை ஒவ்வொன்றையும் இழக்கும் படியான நிலைமை ஏற்படும்போதும், தன் மதிப்பையும் உயிரையும்கூட இழக்கும்படியான நிலைமை ஏற்படும்போதும், தனது கொள்கையைக் கைவிடாதவனே மனிதன்; தனது ஒவ்வொரு சொல்லும், செயலும் நிலைநிற்கச் செய்யும் மனிதன், பிற்காலத்தார் கனப்படுத்தி மரியாதை செய்து வணங்கும் பெருமை வாய்ந்த மனிதன். தமக்கு ஆதாரமாகக் கொண்டிருந்ததும், தாம் பூரணமாக நம்பியிருந்ததுமான தெய்வ அன்பைக் கைவிட மறுத்து, ஏசுநாதர் மிகமிகக் கொடிய துன்பத்தையும் கஷ்டத்தையும் அனுபவித்தார்; இன்று இவ்வுலகம் அவருடைய பாதார விந்தங்களில் ஆனந்த பரவசத்துடன் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரிக்கிறது.
ஆன்ம உண்மைகளைக் காணும் அக ஒளியையும் அறிவையும் தவிர, ஆன்மவலிமை அடைவதற்கு வேறு வழியில்லை; அடிக்கடி நினைப்பதாலும் அப்பியசிப்பதாலுமே அவ்வான்ம உண்மைகளைக் காணமுடியும்.
தெய்வ அன்பை எடுத்துக்கொள்ளுங்கள்; அதனைப் பூரணமாக அறிந்துகொள்ளும் நோக்கத்துடன், அதைப் பற்றி அமைதியோடும் சுறுசுறுப்போடும் தியானியுங்கள். அதனுடைய மின்சார ஒளியை உங்கள் பழக்கங்கள், உங்கள் செயல்கள், மற்றவர்களோடு நீங்கள் கொள்ளும் உறவு, பேசும் பேச்சு, உங்கள் ஒவ்வொரு நினைப்பு, விருப்பம் இவற்றில் காட்டுங்கள். இவ்வழியில் நீங்கள் முயலும் போது, தெய்வ அன்பு மேன்மேலும் நன்றாக உங்களுக்குத் தெரியும்; உங்கள் சொந்தக் குறைகள் மேன்மேலும் தெளிவாக உங்களுக்குத் தோன்றி, உங்களைப் புது முயற்சியில் ஈடுபடுத்தும்; அவ்வழியாக அன்பின் ஒப்பற்ற மகத்துவத்தை ஒரு க்ஷணம் தரிசனம் செய்துவிடின், பின்னர் ஒருபோதும் நீங்கள் உங்கள் பலஹீனத்தில், உங்கள் சுயநயத்தில், உங்கள் குறைபாட்டில் இருக்கமாட்டீர்கள்; அந்த அன்புக்குப் பொருத்தமற்ற ஒவ்வோர் அம்சத்தையும் கைவிட்டு , அதற்கு முழுப்பொருத்தமாக உங்களைச் செய்துகொள்ளும் வரையில், நீங்கள் அதனைப் பின்பற்றிச் செல்வீர்கள். அன்பிற்கு ஒற்றுமையான அகநிலைமையே ஆன்மவலிமை, தூய்மை கருணை போன்ற ஆன்ம உண்மைகளை எடுத்து அவற்றைப் பற்றியே தியானித்து அவற்றை மேன்மேலும் அப்பியசியுங்கள்; உங்கள் ஆன்மாவின் ஒவ்வொரு மாசும் நீங்கும் வரையிலும், உங்கள் ஹிருதயத்திலிருந்து கடினத் தன்மையும், குற்றங்காண்டலும், இரக்கமின்மையும் நீங்கும் வரையிலும், நிங்கள் இடைவழியில் நில்லாதவர்களாகிய மெய்ப்பொருள்பால் சேருவீர்கள்.
இந்த உண்மைகளை நீங்கள் எவ்வளவுக் கெவ்வளவு அறிநது, உணர்ந்து, நம்புகின்றிர்களோ, அவ்வளவுக் கெவ்வளவு ஆன்ம வலிமையை அடைவீர்கள்; அவ்வலிமை உங்களிடத்திலும், உங்கள் மூலமாகவும் மேன்மேலும் வளர்ந்துகொண்டிருக்கா நின்ற அமைதி, பொறுமை, சமநிலை இவற்றின் வடிவங்களாக வெளிப்படும்.
அமைதி மேலான தன்னடக்கத்தைக் காட்டுகின்றது; வாழ்க்கையின் கடமைகளுக்கும் சிதறல்களுக்கும் மத்தியில் அசைக்கப்படாத ஓர் அமைதியைக் கொண்டிருத்தல் அவ்வமைதியுடையார் ஆன்ம வலிமையுள்ள மனிதர் எனக் காட்டுகின்றது. ''உலகத்தில் உலகத்தரது அபிப்பிராயத்தைப் பின்பற்றி வாழ்தல் எளிது. தனித்த இடத்தில் தனது சொந்த அபிப்பிராயத்தைப் பின்பற்றி வாழ்தல் எளிது. ஆனால், எவன் கூட்டத்தின் மத்தியில் ஏகாந்தத்தின் பூரண இனிமையை அனுபவிக்கிறானோ, அவனே பெரிய மனிதன்.''
அமைதியின் நிறைவே அற்புதங்களைச் செய்யும் வலிமைக்கு மூலம் என்று சில யோகிகள் கூறுகின்றார்கள். உண்மையில், எவ்வளவு பெரிய இடியும் தன்னைப் பாதிக்க முடியாத விதத்தில் எவன் தனது மனோசக்திகளை அடக்கி ஆள்கிறானோ, அவன் அச் சக்திகளைச் சாமர்த்தியமாகச் செலுத்தி நடத்தும் திறமையை உடையவனாயிருப்பான்.
தன்னடக்கத்தில், சாந்தத்தில், சமாதானத்தில் வளர்தல், பலத்திலும், வலிமையிலும் வளர்தலேயாம். ஒருகொள்கையில் உங்கள் சித்தத்தை ஏகாக்கிரப்படுத்தலினாலேதான், நீங்கள் அக்கொள்கைப்படி வளர்ச்சியடையக்கூடும். ஒரு குழந்தை எவ்வித உதவியும் இல்லாமல் நடப்பதற்குப் பலமுறை எத்தனங்கள் செய்த, பலமுறை தவறி விழுந்து, கடைசியாக நடத்தல் போல, நீங்கள் முதலில் தனியாக நடப்பதற்கு எத்தனித்து வலிமை மார்க்கத்தில் பிரவேசித்தல் வேண்டும். மனிதர்களுக்குள் நீங்கள் நிமிர்ந்து தனியாக நடந்து செல்லும் திறமையை அடையும் வரையில் வழக்கம், சம்பிரதாயம், ஐதிகம் என்னும் கொடுமையை உடைத்தெறிய வேண்டும். உங்கள் சொந்த அறிவை நம்புங்கள்; உங்கள் மனச்சக்ஷ¢க்கு ஒத்து நடங்கள்; உங்கள் அக விளக்கைப் பின்பற்றிச் செல்லுங்கள்; புற விளக்குகளெல்லாம் கொள்ளிவாய்ப் பிசாசுகள். நீங்கள் அறிவற்றவர்களென்றும், உங்கள் அறிவு பிழைபட்டதென்றும், உங்கள் மனச்சாக்ஷ¢ முழுக் கோணலானதென்றும், உங்கள் அக விளக்கு இருளென்றும் சொல்பவர்கள் பலர் இருப்பார்கள்; அவர்களுடைய சொற்களைக் கவனிக்காதீர்கள். அவர்கள் சொல்வது உண்மையாயிருப்பின், நீங்கள் ஞானத்தை நாடுகிறவர்களானபடியால் நீங்கள் அவ்வுண்மையை விரைவில் தெரிந்துகொள்வது தன்மையே; உங்கள் சக்திகளை உபயோகித்து அவ்வுண்மையை நீங்கள் காணக்கூடும். ஆதலால், உங்கள் மார்க்கத்தில் நீங்கள் தைரியமாகச் செல்லுங்கள். உங்கள் மனச்சாக்ஷ¢ உங்களுக்குச் சொந்தமானது; அதனைப் பின்பற்றிச் செல்பவன் அடிமை. நீங்கள் அநேக தடவை தவறி விழலாம்; அநேக காயங்களை அடையலாம்; அநேக குத்துக்களைச் சிறிது காலம் பெறலாம்; ஆனால், உங்கள் வெற்றி வெகு சமீபத்தில் இருப்பது உண்மையென்று நம்பி, விசுவாசத்தோடு முன்செல்லுங்கள். ஒரு பாதையை, ஒரு கொள்கையைத் தேடுங்கள்; அதனைக் கண்டதும் அதனை நன்றாகப் பற்றிக் கொள்ளுங்கள்; அசையாமல் நீங்கள் அதனோடு சேர்ந்து, சுயநயத்தின் அலைகளையும் புயல்களையும் வெல்லும் வரையில், நீங்கள் அதன் மேல் அசையாமல் நில்லுங்கள்.
சுயநயம், எந்த உருவோடு கூடியதாயினும், சிதறுதலும், பலஹீனமும், மரணமும் ஆகும்; பரநயம் அதன் ஆன்மக்காட்சியில், ஒன்றுபடுதலும், பலமும், உயிரும் ஆகும். ஆன்ம வாழ்க்கையில் நீங்கள் வளர்ந்து, உண்மைக் கொள்கைகளை உறுதியாகப் பற்றிக்கொணட் காலையில், நீங்கள் அக்கொள்கைகளைப் போலவே அழகும் அசையாத்தன்மையும் உடையவர்கள் ஆவீர்கள்; அவைகளின் அழியாத சாரத்தின் இனிமையை அனுபவிப்பீர்கள்; அகக் கடவுளின் அழியாத நித்தியமான தன்மையை அடைவீர்கள்.
விதியின் நடுங்கும் அடிமைக ளாலே
சூழப் பட்டும் தாழா துள்ளம்
சாபமொடு துன்பையும் நோவையும் எதிர்த்து
வெறுப்பெனும் புயலிடை மேலே நிமிர்ந்து
நிற்கும் ஒழுக்க நிலையரைத்
துன்பம் நல்கும் அம்புகள் அணுகா.
மௌன வலிமையால் மகிமையொடு சாந்தி
அமைந்து நிற்கிறான்; அசையான்; திரும்பான்.
துயரநு பவிக்கும் இருள்நே ரத்தில்
பொறுமையோ டுறுதியாய் நிற்கிறான்; காலம்
அவனுக் கடிபணி கின்றது;
சாவையும் விதியையும் தள்கிறான் உதைத்தே.
அவனைச் சுற்றி வெகுளியின் பயங்கர
மின்னல்கள் ஓடி விளையாடு கின்றன;
அவனது தலைமேல் நரக இடிகள்
முழங்கு கின்றன; அவன் அசை கின்றிலன்;
அவனை அவைகொலல் ஆற்றா,
காலமோ டிடத்தைக் கடந்தவ ளாதலால்.
அழியா அன்பால் ஆளப் படுகிற
அவனுக் கச்சம் யாதில் உளது?
மாறா மெய்ப்பொருள் மேவி அவன்தான்
இலாபதட் டங்கள் எங்ஙனம் காண்பான்?
நித்தியத் துவத்தைப் பெற்றதால்
அசைகின் றிலன்காண் நிழல்வந் தேகுங்கால்
"அவன் இறவாதவன்; அவன் ஒளி; மெயப்பொருள்
எதிர்காலம் உணர்த்தும் இறை" எனச் சொல்மின்
அவன் அவ்வுயர்நிலை அடைந்தனன் விருப்பொரு
கடவுள் மகிமையின் உடையை உடுத்தே
இரவின் கொடிய இருளில்
கடவுட் டன்மையை இடைவிடா துன்னியே.
4. சுயநயமற்ற அன்பை அனுபவித்தல்
கரடு முரடான ஒவ்வொரு கல் துண்டிலும் ஓர் அழகிய பொருளையும், அதனைக் காக்ஷ¢க்குக்கொண்டு வருவதற்குக் கைதேர்ந்த ஒரு கல்தச்சன் வரவையும், மிக்கேல் ஆங்கிளோ என்பவர் கண்டார். அவ்வாறே, ஒவ்வொரு மனிதனுள்ளும் தெய்வச் சொரூபம் இருக்கிறது. தன்னைக் காக்ஷ¢க்குக் கொண்டு வருவதற்கு நம்பிக்கையாகிய கைதேர்ந்த கல்தச்சனையும், பொறுமையாகிய கல்லுளியையும், அஃது எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது. அத் தெய்வ சொரூபம் குற்றமற்றதும் சுயநயமற்றதுமான அன்பாக வெளிப்பட்டு அனுபவிக்கப்படுகிறது. ஒவ்வொரு மனித ஹிருதயத்திலும் தெய்வ-அன்பின் சக்தி ஆழ்ந்து மறைந்திருக்கிறது.; அஃது ஊடுருவிப் புகமுடியாத திண்ணமான பல திரைகளால் மூடப்பட்டிருக்கிறது; அதனுடைய பரிசுத்தமான, குற்றமற்ற சாராம்சம் அழியாமையும் நித்தியத்துவமும் ஆகும். அது மனிதனிடத்துள்ள மெய்ப்பொருள். அது கடவுளுடைய அம்சம்; அஃது உண்மையானது; அழிவில்லாதது. மற்றைய பொருள்களெல்லாம் மாறுதல் அடைகின்றன. அழிந்து போகின்றன; இது மாத்திரம் மாறுதல் அடையாமலும் அழியாமலும் இருக்கின்றது; மிகமிக உயர்ந்த ஒழுக்கத்தை இடைவிடாது சுறுசுறுப்போடு அப்பியசித்து, இந்த அன்பை அனுபவித்தலும், அதில் வாழ்தலும், அதனைப் பூரணமாக அறிதலும், அழியாத் தன்மையுள் பிரவேசித்தலுக்கும். மெய்ப்பொருளோடு 'ஒன்றாவதற்கும், கடவுளோடு ஐக்கியமாவதற்கும். எல்லாப்பொருள்களின் மத்திய ஹிருதயத்தோடு ஏகமாதற்கும், நம்முடைய சொந்தக் கடவுட்டன்மையையும் அழியாத் தன்மையையும் அறிவதற்கும் நெறிகளாம்.
இந்த அன்மை அடைதற்கும், அதனை அறிந்த அனுபவித்தற்கும் ஒருவன் பெரிய விடிவாதத்தோடும் சுறுசுறுப்போடும் தனது ஹிருதயத்திலும் மனத்திலும் வேலை செய்யவேண்டும். எப்பொழுதும் தனது பொறுமையைப் புதிதாக்கிக் கொண்டும், தனது நம்பிக்கையைப் பலப்படுத்திக் கொண்டும் இருக்க வேண்டும். ஏனெனில், தெய்வ சொரூபமும் தனது பூரண திவ்ய அழகுடன் வெளிப்படுவதற்கு முன்னர் நாம் விடவேண்டியவை பல உண்டு.
கடவுளைச் சேர்தற்கும் அடைதற்கும் முயற்சிக்கிற மனிதன் பூரணமாகப் பரீக்ஷ¢க்கப்படுவான்; இப்பரீ¨க்ஷ இன்றியமையாதது. ஏனெனில், மெய்ஞானத்திற்கும் கடவுட்டன்மைக்கும் ஆதாரமான உயர்ந்த பொறுமையை ஒருவன் வேறு எவ்விதமாகவும் அடைய முடியாது, அவன் அபிவிருத்தி அடையும் காலத்தில் அவனுடைய வேலைகளெல்லாம் பயனற்றவையாகத் தோன்றும்; அவனுடைய முயற்சிகளெல்லாம் பிரயோஜமற்றவையாகத் தோன்றும். அவசரமாக வேலை செய்தல் அவனுடைய சொரூபத்தைக் கெடுத்துவிடும். ஒருகால், அவன் தனது வேலை அநேகமாக முடிந்துவிட்டதென்று நினைக்கும்போது அவன் தெய்வ-அன்பின் அழகிய உருவமென்று நினைத்துக்கொண்டிருந்த பொருளானது முழுவதும் அழிக்கப்பட்டிருக்கவும் அவன் தனது வேலையைத் தனது முந்திய கஷ்டத்தோடு திரும்பி ஆரம்பிக்க வேண்டுமென்றும் காண்பான். ஆனால், எவன் மேலான பொருளை அபரோக்ஷமாக அறிவதற்கு உறுதியாக முயற்சிக்கிறானோ, அவன் தோல்வி என்னும் ஒன்று உண்டென்று அங்கீகரிக்க மாட்டான். தோல்விகளெல்லாம் வெறுந்தோற்றமே தவிர, உண்மை அல்ல. ஒவ்வொரு தவறுதலும், ஒவ்வொரு வீழ்ச்சியும், ஒவ்வொரு சுயநயச் செயலும் படித்து முடிந்த ஒரு பாடமாம்; அனுபவித்து முடிந்த ஓர் அனுபவமாம். அதிலிருந்து ஞானமாகிய தங்கத் தானியம் ஒன்று உண்டாகும்; அஃது அவனுடைய உயர்ந்த இலக்ஷயத்தை அடைவதற்கு உதவி செய்யும்.
ஒவ்வொரு பாவச் செயலையும் நம் காலால் மிதித்து ஒழித்து மேல் ஏறும் ஓர் ஏணியை நாம் செய்துகொள்ளலாமென்று தெரிதல், நம்மைக் கடவுளிடத்துக் கொண்டு போய்ச் சேர்க்கும் வழியில் புகுதலாம். இவ்வுண்மையைத் தெரிந்துள்ள ஒருவனுடைய தவறுதல்கள் செத்துப் போன சுயநயக் குப்பைகளாம்; அவற்றினின்று அவன், படிக் கற்கள் வேமல் ஏறுதல்போல, மேலான நிலைகளுக்கு ஏறுகிறான்.
உங்கள் தவறுதல்களை நீங்கள் மேல் செல்வதற்குரிய படிகளென்று அறிவீர்களானால், உங்கள் துக்கங்களும் துன்பங்களும் நீங்கள் எங்கெங்கே பலஹீனராய் இருக்கிறீர்கள் என்றும், தவறுகிறீர்கள் என்றும், நீங்கள் எங்கெங்கே மெய்ம்மைக்கும் தெய்வத்தன்மைக்கும் கீழே தாழ்கிறீர்கள் என்றும், உங்களுக்கு வெளிப்படையாகச் சொல்லுகின்ற ஆசிரியர்களாகும்; பின்னர், நீங்கள் இடைவிடாது உங்களையும், உங்கள் ஒவ்வொர் இழுக்கையும் கவனித்துக் காக்கத் தொடங்குவீர்கள்; ஒவ்வொரு துன்பத்தின் வேதனையும் பூரண அன்புக்குச் சமீபமாக உங்கள் உள்ளத்தைக் கொண்டு போவதற்கு, உங்கள் உள்ளத்திலிருந்து எவற்றை நீக்க வேண்டுமென்றும், நீங்கள் எவ்விடத்தில் வேலை செய்யத் தொடங்கவேண்டுமென்பறும் உங்களுக்குக் காட்டும். உங்கள் அகத்தின் சுயநயத்திலிருந்து மேன்மேலும் பிரிந்து, நீங்கள் ஒவ்வொரு நாளும் முற்செல்லும் காலையில் சுயநயமற்ற அன்பு நாளடைவில் வெளிப்பட்டு உங்களுக்குத் தோன்றும். நீங்கள் பொறுமையிலும், அமைதியிலும் வளரும்போதும், உங்களுடைய கோபங்களும், வெடுவெடுப்புக்களும், படபடப்புக்களும் உங்களைவிட்டு நீங்கும்போதும், மிக்க வலிமையுள்ள காமங்களும் துரபிமானங்களும் உங்களை அடிமைப்படுத்தியாளுதலை விடும்போது உங்களுள் தெய்வத்தன்மை விழிக்கிறதென்றும், நித்திய ஹிருதயத்துக்குச் சமீபிக்கிறீர்கள் என்றும், சுயநலமற்ற அன்புக்கு நீங்கள் தூரத்தில் இல்லை என்றும் காண்பீர்கள். சுயநயமற்ற அன்பைக் கொண்டிருத்தல் சாந்தியும் மரணமின்மையுமாம்.
தெய்வ-அன்புக்கும் மனித-அன்புக்கும் வேற்றுமை மிக முக்கியமான ஒரு விஷயத்தில்தான் உண்டு. அஃதாவது, தெய்வஅன்பிற்குப் பக்ஷபாதம் கிடையாது. மனித-அன்பு மற்றையப் பொருள்களையெல்லாம் விட்டுக் குறித்த ஒரு பொருளைப் பற்றிக் கொண்டிருக்கும்; அந்தப் பொருள் தன்னிடத்தினின்று நீக்கப்பட்ட பொழுது, அந்தப் பொருளிடத்து அன்பு செலுத்தியவனுக்கு உண்டாகும் துன்பம் பெரிதாயும் ஆழ்ந்ததாயும் இருக்கும். தெய்வ-அன்பு பிரபஞ்சம் மழுவதையும் தழுவுகின்றது.; இது பிரபஞ்சத்தின் எந்தப் பாகத்தையும் பற்றிக்கொண்டிருக்கிறதில்லை; அப்படியிருந்தாலும், அது பிரபஞ்ச முழுவதையும் தன்னுள் அடக்கிக்கொண்டிருக்கிறது. தனது மனித-அன்பிலுள்ள சகல சுயநல அசுத்த அம்சங்களையும் வெளிப்படுத்தி எரிக்கும் வரையில், அதனை நாளடைவில் சுத்தப்படுத்திக்கொண்டும், விசாலப்படுத்திக்கொண்டும் வந்து எவன் தெய்வ-அன்பை அடைகிறானோ, அவன் துன்பம் அடைவதேயில்லை. மனித அன்பு சுருங்கியதாயும், அளவு பட்டதாயும், சுயநயத்தோடு சம்பந்தப்பட்டதாயும் இருக்கிறபடியால் அது துன்பத்தைத் தருகின்றது. தனக்கென ஒன்றை விரும்பாததாயும், முற்றிலும் தூயதாயும் இருக்கிற அன்பிலிருந்து துன்பமே வர முடியாது. அப்படியிருந்தாலும், தெய்வ-அன்பை அடைவதற்கு மனித-அன்புகளாகிய படிகள் இன்றியாமையாதவை. எந்த உயிரும் மிகமிக ஆழ்ந்ததும், மிகமிகக் கூரியதுமான மனித-அன்பைக் கைகொள்ளாமல், தெய்வ-அன்பை அடைய முடியாது. மனித-அன்புகள் மூலமாகவும், துன்பங்கள் மூலமாகவும் சென்றால் மாத்திரம் தெய்வ-அன்பை அடையவும் அனுபவிக்கவும் முடியும்.
மனித-அன்புகளெல்லாம் அவை பற்றி நிற்கின்ற உருவங்களைப் போலவே அழியும் தன்மையன; ஆனால், உருவங்களைப் பற்றாததாயும், அழியாததாயும் இருக்கிற அன்பு ஒன்று இருக்கின்றது.
சகல மனித-அன்புகளும் மனித வெறுப்புகளால் சம நிறையாக்கப்பட்டிருக்கின்றன. தனக்கு எதிரான பொருளையோ, செயலையோ, கொள்ளாத அன்பு ஒன்று இருக்கிறது; அது தெய்வத்தன்மை வாய்ந்ததாயும், சுயநய மாசற்றதாயும் இருக்கிறது.; அது தனது நல்வாசனையைச் சகல உயிர்களிடத்தும் ஒரே தன்மையாக வீசுகிறது.
மனித-அன்புகள் தெய்வ அன்பின் பிரதிபிம்பங்கள்; அவை துக்கத்தையாவது, மாறுதலையாவது அறியாத மெய்ப்பொருளான அன்புக்குச் சமீபத்தில் ஆத்மாவை இழுக்கின்றன.
தனது தோளின்மீது படுத்திருக்கிற உதவியற்ற சிறு குழந்தையைத் தீவிரமான அன்போடு பற்றிக் கொண்டிருக்கிற தாயானவள், அந்தக் குழந்தை செத்துப் பூமியின் மீது கிடக்கிறதைப் பார்க்கிறபோது துக்கக் கண்ணீரில் ஆழ்தல் நல்லது. அவளுடைய கண்ணீர் பெருகுதலும், அவளுடைய உள்ளம் உடைதலும் நன்மை. ஏனெனின் அவள் தன் பொறிகளுக்குப் புலப்படும் பொருள்களுடைவும் இன்பங்களுடையவும் நிலையற்ற தன்மைகளை ஞாபகப்படுத்திக் கொள்ளக் கூடும். அவள் நித்தியமாயுள்ள அழிவில்லாத மெய்ப்பொருள்களுக்குச் சமீபமாக இழுக்கப்படுதல் கூடும்.
சகோதரனும், சகோதரியும், தலைவனும், தலைவியும், தங்களுடைய அன்புக்குப் பாத்திரமான பொருள் தத்தம்மினின்று பிடுங்கிக்கொள்ளப்பட்டபொழுது, ஆழ்ந்த துன்பத்தை அனுபவித்தலும் பெருந் துயருள் ஆழ்தலும் நன்மை; 'அப்போதுதான் எல்லாவற்றிற்கும் மூலமாய்க் காட்சிக்குப் புலப்படாததாயிருக்கிற மெய்ப் பொருளிடத்துத் தங்களுடைய அன்பைச் செலுத்தக் கற்றுக்கொள்வார்கள். அந்த மெய்ப்பொருளிடத்துத்தான் நிலையான திருப்தியைக் காண முடியும்.
வீண் பெருமையும், பேராசையும், சுயலாப விருப்பமும் உள்ள மனிதர்கள் தோல்வியும் அவமானமும் வறுமையும் அடைதல் நல்லது; ஏனெனில், துன்பங்களாகிய எரிக்கிற நெருப்புக்கள் மூலமாக அவர்கள் செல்ல வேண்டும்; அப்படியானால்தான் அடங்காத ஆன்மாவானது வாழ்க்கையின் சிக்கல்களைப் பற்றிச் சிந்திக்கும்படி செய்யக்கூடும்; அவ்வாறுதான் மெய்ப்பொருளை அடைவதற்குத் தக்கபடி அகத்தை மென்மைப்படுத்தவும், தயாராக்கவும் கூடும்.
துன்பத்தின் கொடுக்கு மனித-அன்பின் அகத்தில் புகும்பொழுது; வியாகூலமும் தனிமையும் பிரிவும், நட்பையும் நம்பிக்கையையுமுடைய ஆன்மாவை மறைக்கும்பொழுது, தங்குதற்கு நிழலைக் கொடுக்கும் மெய்ப்பொருளின் அன்பை நோக்கி மனம் திரும்புகின்றது. இந்த அன்பை அடையும் யாரும் சௌகரியக்குறைவை நோக்கித் திருப்பப்படுவதில்லை; துன்பத்தால் துளைக்கப்படுவதில்லை; கஷ்ட காலத்தால் விடப்படுவதில்லை. தெய்வ அன்பின் மகிமை தூக்கத்தில் சிக்ஷ¢க்கப்படுகிற அகத்தில் மாத்திரம் விளங்கக் கூடும்; அஞ்ஞானத்துடையவும் 'யான்' என்னும் அகங்காரத்துடையவும் உயிரும், உறவும் அற்ற வளர்ச்சிகள் நீக்கப்பட்டபொழுதில் மாத்திரம் , துக்கத்தால் தண்டிக்கப்பட்ட அகத்தில் தெய்வ அன்பு வெளிப்படும்; அவ்வகத்தினர் முத்தி நிலையின் உருவத்தைக் கண்டு அனுபவிக்கக்கூடும்.
சுய திருப்தியையும் பிரதி பலனையும் விரும்பாததும், வேற்றுமைகள் பாராட்டாததும், மன வருத்தத்தைத் தராததுமான அன்பு ஒன்றே தெய்வத் தன்மை வாய்ந்தது என்று சொல்லப்படத்தக்கது.
'யான்' என்பதையும், தீமையின் சௌக்கியமற்ற நிழல்களையும் பற்றிக் கொண்டிருக்கிற மனிதர்கள் தெய்வ அன்பு கடவுளுக்குச் சொந்தமான ஒரு பொருளென்றும், தங்களுக்கு வெளியிலுள்ளதும், எப்பொழுதும் தங்களுக்கு வெளியில் இருக்க வேண்டியதுமான ஒரு பொருளென்றும் நினைக்கிற பழக்கமுடையவர்களாயிருக்கிறார்கள். உண்மையில் கடவுளுடைய அன்பு எப்பொழுதும் 'யான்' என்பதற்கு எட்டாததாயிருக்கிறது. ஆனால் 'யான்' என்பது அகத்தையும் மனத்தையும் விட்டு நீங்கிய பொழுது, சுயநயமற்ற அன்பு, உயர்ந்த அன்பு, கடவுள் அல்லது நன்மை வடிவமான அன்பு, அகத்தில் நிலையாயுள்ள உண்மைப் பொருள் ஆகின்றது.
இந்தப் பரிசுத்தமான அன்பை உள்ளூர அனுபவித்தலே, மிக அதிகமாகப் பேசப்படுவதும், மிகக் கொஞ்சமாக உணரப் படுவதுமான கிறிஸ்துநாதருடைய அன்பு. அஃது ஆன்மாவைப் பாவத்தினின்று காப்பது மாத்திரமின்றி, தீமை புரிய விரும்பும் மனோ நிலைக்கு மேற்பட்டதாக உயர்த்துகின்றது.
ஆனால் ஒருவன் இந்த மேலான அநுபவத்தை அடைவது எப்படி? இந்த வினாவுக்கு மெய்ப்பொருள் எப்பொழுதும் அளித்ததும் எப்பொழுதும் அளிப்பதுமானவிடை:- ''உன் அகத்திலிருந்து உன்னை வெளியேற்று: உன் அகத்துள் நான் அமருகிறேன். 'யான்' என்பது இறக்கும் வரையில் தெய்வ அன்பைக் காண முடியாது. ஏனெனில், 'யான் என்றால் அன்பு என்ற ஒன்று இல்லையென மறுத்ததலாம். காணப்படுகிற பொருளை இல்லையென்று மறுத்தல் எப்படி? 'யான்' என்னும் மூடுகல் ஆன்மாவின் சமாதிக்குழியின் மேலிருந்து நீக்கப்படும் வரையில், சித்தரவதை செயல்பட்டும், செத்துப் புதைக்கப்பட்டும் இருந்த இறப்பற்ற கிறிஸ்து, அன்பின் பரிசுத்த ஆவி, அநியாத்தின் கட்டுகளை அவிழ்த்தெறிந்து, மறுபடி உயிர்த்தெழுந்து, பூரணமகிமையோடு வெளிவரல் முடியாது.
நாசரத்துக் கிறிஸ்துநாதர் கொல்லப்பட்டார் என்றும் மறுபடியும் அவர் உயிர்த்தெழுந்தார் என்றும் நீங்கள் நம்புகிறீர்கள். நீங்கள் அவ்வாறு நம்புதல் பிழை என்று நான் சொல்லவில்லை; ஆனால், அன்பு வடிவான மெல்லிய ஆன்மா உங்களுடைய சுயநய விருப்பங்களாகிய கொடிய சிலுவை மரத்தில் தினந்தோறும் சேர்க்கப்பட்டு ஆணி அடிக்கப்படுகிறதென்று நீங்கள் நம்புவதற்கு மறுப்பீர்களாயின், நீங்கள் அந்த அவநம்பிக்கையைக் கொள்வது பிழை என்றும், நீங்கள் கிறிஸ்து நாதரின் அன்பை மிகத் தூரத்தில்கூடப் பார்த்ததில்லையென்றும் நான் சொல்லுகிறேன்.
கிறிஸ்துநாதருடைய அன்பின் இரட்சிப்புச் சுவையை அறிந்ததாக நீங்கள் சொல்லுகிறீர்கள். உங்கள் கோபத்தினின்றும், உங்கள் வெடுவெடுப்பினின்றும், உங்கள் வீண் பெருமையினின்றும், உங்கள் சொந்த வெறுப்புகளின்றும். நீங்கள் பிறரைப்பற்றி அபிப்பிராயம் கூறுதலினின்றும், பிறரைக் குறை கூறுதலினின்றும் இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்களா? இல்லையானால், நீங்கள் எதிலிருந்து இரட்சிக்கப்பட்டிருக்கிறீர்கள்? கிறிஸ்துநாதரின் பேரன்பை எதில் அநுபவித்திருக்கிறீர்கள்?
எவன் தெய்வ?அன்பை அநுபவித்திருக்கிறானோ, அவன் ஒரு புதிய மனிதனாய்விட்டான்; சுயநயத்தின் அம்சங்களால் அசைக்கப்படுதலின்றும் ஆளப்படுதலினின்றும் நீங்கிவிட்டான். அவன் தனது பொறுமைக்கும், தனது தூய்மைக்கும், தனது அகத்தின் ஆழ்ந்த அறத்திற்கும், தனது மாறாத இன்பத்திற்கும் பெயர் பெற்றவன் ஆகிறான்.
தெய்வ அல்லது சுயநயமற்ற அன்பு, ஒரு வேறு மனோபாவனை அல்லது மனோவெழுச்சி அன்று. அது தீமையிலுள்ள நம்பிக்கையையும் தீமையின் ஆள்கையையும் ஒழித்து மேலான நன்மையைச் சந்தோஷமாக ஆன்மா அநுபவிக்கும்படி செய்யும் ஒரு ஞான நிலைமையாம். மெய்ஞ்ஞானிக்கு அறிவும் அன்பும் பிரிக்க முடியாத ஒன்றேயாம்.
இந்தத் தெய்வ அன்பைப் பூரணமாக அநுபவித்தலை நோக்கி உலக முழுவதும் சென்று கொண்டிருக்கிறது. இந்தக் காரியத்திற்காகவே பிரபஞ்சம் உண்டாயிற்று; ஒவ்வோர் இன்ப அநுபவமும், பொருள்களையும் கருத்துக்களையும் கொள்கைகளையும், பற்றும் ஆன்மாவின் ஒவ்வோர் வளர்ச்சியும், அத்தெய்வ அன்பை அடைவதற்குரிய ஒரு முயற்சியாம். ஆனால், உலகம் இந்த அன்பை இப்பொழுது அனுபவிக்கவில்லை. ஏனெனில், அது தன்னுடைய குருட்டுத் தனத்தால் அப்பொருளை விட்டுவிட்டு, அதன் ஓடுகிற நிழலைப் பிடித்துக்கொண்டிருக்கிறது. ஆதலால் துன்பமும் துக்கமும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன; உலகமானது தானே வருவித்துக்கொண்ட துன்பங்களால் கற்பிக்கப்பட்டு பூரணசாந்தியையும் அமைதியையும் அளிக்கும் ஞானத்தையும் சுயநயம் இழந்த அன்பையும் காணும் வரையில் அவை தொடர்ந்துகொண்டேயிருக்க வேண்டும். 'யான்' என்பதை விடுவதற்குச் சித்தமுடையவராகவும், விருப்பமுடையவராகவும், 'யான்' என்பதை விடுவதில் அடங்கியிருக்கிற எல்லாவற்றையும் தெரிந்துகொள்வதற்குத் தயாராகவும் இருக்கிற எல்லோரும், இந்த அன்பை, இந்த ஞானத்தை, இந்தச் சாந்தியை, இந்த மனோ அமைதியை அடையலாம்.
பிரபஞ்சத்தில் தனது இஷ்டப்படி நடக்கும் சக்தி ஒன்றும் இல்லை; மனிதரைக் கட்டுப்படுத்தியிருக்கிற விதியின் மிகமிக வலிய விலங்குகள் தத்தம்மாலேயே உண்டுபண்ணப் பட்டவை. மனிதர் துன்பத்தை உண்டு பண்ணுகிற பொருளோடு சேர்த்து விலங்கிடப்பட்டிருக்கின்றனர்; ஏனெனில், அவர் அவ்விலங்குகளை விரும்புகின்றனர்; ஏனெனில், அவர் 'யான்' என்னும் சிறிய இருட்டரை அழகாயும் இன்பகரமாயும் இருக்கிறதாக நினைக்கின்றனர். அச்சிறையை விட்டுவிட்டால் உண்மையான உடைமைகளையெல்லாம் இழந்து விடுவதாக அஞ்சுகின்றனர்.
உன்னால் நீ துன்பம் உறுகின்றாய்; வேறொருவன்
தன்னால் அஃதுன்னைச் சார்ந்ததில்லை-மன்னா! நீ
வாழ்வதும் சாவதுவும் மற்றொருவ னால்ல;
தாழ்வுயர்விங் கீவோன்நீ தான்.
விலங்குகளை உண்டுபண்ணித் தன்னைச் சுற்றிச் சிறு இருட்டறையக் கட்டியதும், அகத்துள் வசிக்காநின்றதுமாகிய சக்தியானது, தான் அவாவும் போதும் விரும்பும் போதும் அந்தச் சிறையை இடித்து எறிந்துவிடக்கூடும். ஆன்மா தனது நெடுங்காலத் துன்ப அநுபவத்தால் அகண்ட ஒளியையும் அன்பையும் பெறுவதற்குத் தகுதியுள்ளதானபொழுது, தனது சிறையை இடித்தெறிய விரும்புகின்றது.
உருவத்தை நிழல் பின்பற்றுவது போலவும், நெருப்பிலிருந்து புகை வருவது போலவும், காரணத்தைக் காரியம் பின்பற்றுகிறது; மனிதருடைய நினைப்புக்களையும் செயல்களையும் துன்பமும் இன்பமும் பின்பற்றுகின்றன; நம்மைச் சுற்றியிருக்கிற உலகத்தில் மறைத்துள்ள, அல்லது வெளிப்பட்டுள்ள, காரணம் இல்லாமல் காரியம் இல்லை; அந்தக் காரண காரியம் முற்றிலும் நியாயமாக நிகழ்கின்றது. மனிதர் துன்ப மகசூலை அறுக்கின்றனர். ஏனெனில், அவர் சமீபமான அல்லது தூரமான சென்ற காலத்தில் தீமையாகிய வித்துக்களை விதைத்திருக்கின்றனர். அவர் இன்பமாகிய மகசூலை அறுக்கின்றனர்; ஏனெனில், அவர் சென்ற காலத்தில் நன்மையாகிய வித்துக்களை விதைத்திருக்கின்றனர். இதைப்பற்றி ஒரு மனிதன் சிந்திக்கட்டும்; இதனை அறிவதற்கு அவன் முயற்சிக்கட்டும்; பின்னர் அவன் நன்மையாகிய வித்துக்களை மாத்திரம் விதைக்கத் தொடங்குவான்! தனது உள்ளமாகிய தோட்டத்தில் அவன் முன் விதைத்திருந்த களைமுளைகளைப் பிடுங்கி எரித்து விடுவான்.
உலகம் சுயநயமற்ற அன்பை அறிகிறதில்லை; ஏனெனில் அது தனது சொந்த இன்பங்களைத் தேடுவதில் ஈடுபட்டும், தனது மடமையினால் அழிந்த போகக்கூடிய இன்பங்களையும் பலன்களையும் நிலையான இன்பங்களாகவும் பலன்களாகவும் கருதி அழியும் பொருள்களைப் பற்றிக் கொண்டும் இருக்கிறது. கொழுப்பினால் உண்டாகும் காமத் தீ பிடித்து, துன்பத்தால் எரிந்த வருந்துவதால், உலகம் மெய்ப்பொருளின், தூய சாந்தியின், அழகைப் பார்க்கிறதில்லை. பிழையும் பிரமையுமாகிய பயனற்ற உமியை உண்டுகொண்டிருப்பதால், அஃது எல்லாவற்றையும் காணும்படியான அன்புமாளிகைக்குள் புகாத வண்ணம் தடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த அன்பைக் கொள்ளாமலும், அதனை அறியாமலும் மனிதர் அகத்தின் தியாகமில்லாத எண்ணிறந்த சீர்திருத்தங்களை உண்டு பண்ணுகின்றனர்;தனது அகத்தில் தீமையைத் தான் வளர்த்து விருத்தி செய்துகொண்டே, ஒவ்வொரு மனிதனும் தனது சீர்த்திருத்தமான உலகத்தை நிலையாகத் திருத்தப்போவதாக நினைக்கிறான். மனித அகத்தைச் சீர்திருத்தும் தன்மைமையுள்ள சீர்திருத்தம் எதுவோ, அதுவே சீர்திருத்தம் என்று சொல்லப்படத் தக்கது; ஏனெனில், எல்லாத் தீமைகளும் மனித அகத்திலிருந்தே உண்டாகின்றன. உலகம் தனது சுயநயத்தையும் கக்ஷ¢ச்சண்டையையும் விட்டுத் தெய்வ-அன்பின் பாடத்தைக் கற்றக்கொள்ளும் வரையில், அது சர்வ வியாபகமான பேரின்பத்தை அனுபவிக்கும் நல்ல காலத்தைக் காண முடியாது.
எளியவரை இகழ்தலை வலியவர் நிறுத்தட்டும்! வலிய வரை நிந்தித்தலை எளியவர் நிறுத்தட்டும்! பேராசைக்காரர் எப்படி ஈவது என்றும், காமிகள் எப்படித் தூயர் ஆகலாம் என்றும் அறியட்டும்! கக்ஷ¢க்காரர் சண்டையிடுவரை நிறுத்தட்டும்; கருணையில்லாதவர் மன்னிக்கத் தொடங்கட்டும்! பொறாமைக்காரர் மற்றவரோடு சேர்ந்து சந்தோஷிக்க முயற்சிக்கட்டும்! பிறரை நிந்திப்போர் தமது நடத்தையைப் பின்பற்றி நாணம் அடையட்டும்! ஆடவர்களும் மகளிர்களும் இந்த வழியைப் பற்றட்டும்! நல்ல காலம் இதோ வந்துவிட்டது. ஆதலால், எவன் தனது அகத்தைச் சுத்தப்படுத்துகிறானோ, அவனே உலக உபகாரி.
உலகமானது சுயநயமற்ற அன்பை அனுபவிக்கும் நல்ல காலத்தை இப்பொழுது அடையவில்லை; இன்னும் அனேக நூற்றாண்டுகள் வரையிலும் அடையப் போவதுமில்லை; நீங்கள் உங்கள் சுயநயத்திற்கு மேற்பட்டால், அந்த நல்ல காலத்தை இப்பொழுதே அடையலாம்; நீங்கள் பக்ஷபாதம், வெறுப்பு, நிந்தனை இவற்றைக் கடந்து, எவரையும் மன்னிக்கும் இனிய அன்புக்குச் செல்வீர்களானால், அந்த நல்ல காலத்தை அடையலாம்.
எவ்விடத்தில் துவேஷம், வெறுப்பு, நிந்தனை இருக்கின்றனவோ, அவ்விடத்தில் சுயநயமற்ற அன்பு இராது. அது சகல நிந்தனைகளையும் விட்டுவிட்ட அகத்தில் மாத்திரம் இருக்கிறது.
"நான் குடிகாரனையும், ஏமாற்றுகிறவனையும், நீசனையும், கொலைக்காரனையும் எவ்வாறு நேசிக்கக்கூடும்? நான் அத்தகைய மனிதர்களை வெறுக்கவும் நிந்திக்கவுமே முடியும்" என்று நீங்கள் சொல்லுகிறீர்கள். நீங்கள் அத்தகைய மனிதரை உற்சாகத்தோடு நேசிக்க முடியாதென்பது உண்மை; ஆனால் நீங்கள் அத்தகைய மனிதரைக் கட்டாயம் வெறுக்கவும் நிந்திக்கவும் வேண்டுமென்று சொல்லும்போது எல்லாவற்றையும் ஆள்கிற பெரிய அன்புடன் நீங்கள் பழகினதில்லை என்பதைக் காட்டுகின்றீர்கள்; ஏனெனில், அம் மனிதர் மிகுந்த துன்பங்களுள் பிரவேசித்து முடிவில் அகத் தூய்மையை அடைவது நிச்சயமென்று தெரிந்துகொள்வதற்காகவே, அவர் அவருடைய தற்கால நிலையில் இருக்கிறனரென்றும், தகுதியான காரணங்களினாலே தான் அவர் அந்நிலையில் இருக்கின்றனரென்றும் தெரிந்து கொள்ளும்படியான அகஞானத்தை நீங்கள் அடைய முடியும். அந்த அகஞானத்தை நீங்கள் அடைந்தபொழுது, அவரை வெறுக்கவாவது நிந்திக்கவாவது உங்களால் ஒருசிறிதும் முடியாது; நீங்கள் அவரைப்பற்றி எப்பொழுதும் பூரண அமைதியோடும் ஆழ்ந்த இரக்கத்தோடும் நினைப்பீர்கள்.
ஜனங்கள் உங்களுக்கு எந்த வழியிலாவது இடையூறு செய்யும் வரையில், அல்லது நீங்கள் விரும்பாத ஒன்றைச் செய்யும் வரையில், நீங்கள் அவர்களை நேசித்துக்கொண்டும் உயர்வாகப் பேசிக்கொண்டும் இருந்து, அவர்கள் அவற்றைச் செய்த பின்னர் நீங்கள் அவர்களை வெறுத்து தாழ்வாக பேசுவீர்களாயின் நீங்கள் கடவுளுடைய சொரூபமாகிய அன்பால் ஆளப்படவில்லை. உங்கள் அகத்தில், நீங்கள் பிறரை இடைவிடாது குற்றம் சாற்றிக்கொண்டும், நிந்தித்துக்கொண்டும் இருப்பீர்களாயின், சுயநயமற்ற அன்பு உங்களினின்று மறைக்கப்பட்டிருக்கிறது.
அன்பு எல்லா உயிர்களுடைய அகத்திலும் இருக்கிறதென்று எவன் தெரிகின்றானோ, எல்லா உயிர்களையும் ஆளும் அன்பின் வலிமையை எவன் உணர்கின்றானோ, அவனுடைய அகத்தில் பிறரை நிந்தித்தலுக்கு இடம் இல்லை.
மனிதர் இந்த அன்பைத் தெரிந்துகொள்ளாமல், பிறரை விசாரித்துச் சிக்ஷ¢க்கும் நித்திய நீதிபதி ஒருவன் இருக்கிறான் என்பதை மறந்து, பிறரை விசாரித்துச் சிக்ஷ¢ப்பதற்குத் தாமே நீதிபதிகள் ஆகின்றனர். மனிதர் தம்முடைய கொள்கைகளினின்றும், தம்முடைய சீர்திருத்தங்களினின்றும். வழிகளினின்றும் பிறர் விலகும்போது, அவரை மதோன்மத்தர் என்றும், சமநிலையற்றவர் என்றும், அறிவு, உண்மை யோக்கியதை இல்லாதவர் என்றும் கூறி வருந்துகின்றனர். பிறர் தம்முடைய நிலைக்குச் சற்றேறக்குறைய ஒத்திருக்கும்போது அவரை நன்கு மதித்துப் பேசி மகிழ்கின்றனர். அத்தகைய மனிதரே 'யான்' என்னும் அகங்காரத்தைக் கொண்டிருக்கிறவர். ஆனால் எவனுடைய அகத்தில் மேலான அன்பு வேர் ஊன்றியிருக்கிறதோ, அவன் பிறரை அவ்வாறு வருத்தி வகுக்கிறதில்லை; தன்னுடைய கொள்கைகளைப் பிறர் கொள்ளும்படி நாடுகிறதில்லை; தன்னுடைய வழிகளின் மேம்பாட்டைப் பிறருக்கு எடுத்துக் கூறுவதில்லை. அன்புச் சட்டத்தைத் தெரிந்து, அதனைப் பிறர்பால் செலுத்தி, எல்லாரிடத்திலும் ஒரேவித அமைதியான மனப்போக்கையும் அகப்பிரியத்தையும் கொண்டிருக்கிறான்.
தீய ஒழுங்கினரும் நல்ல ஒழுங்கினரும், மடையரும் அறிஞரும், கற்றாரும் கல்லாரும், சுயநயக்காரரும் பரநயக்காரரும் ஒரே தன்மையாக அவளுடைய அமைதியான நினைப்பின் வாழ்த்தைப் பெறுகின்றார்கள்.
நீங்கள் உங்களைச் சீர்திருத்துவதில் இடைவிடாது முயற்சிப்பதாலும், உங்கள்மீது வெற்றிமேல் வெற்றி அடைவதாலும், இந்த மேலான ஞானத்தை, இந்தத் தெய்வ அன்பை அடையக்கூடும். எவன் தூய்மையான அகத்தைக் கொண்டிருக்கிறானோ, அவன்தான் கடவுளைக் காண முடியும். உங்களுடைய அகமானது போதிய அளவு தூயதான காலையில், நீங்கள் புதிய பிறப்பை அடைவீர்கள், ஒரு போதும் அழியாததும், மாறாததும் துன்பத்தையாவது துக்கத்தையாவது தராததுமான அன்பு உங்கள் உள்ளத்தில் ஒளிரும். நீங்கள் சாந்தியாய் இருப்பீர்கள்.
எவன் தெய்வ-அன்பை அடைவதற்கு முயற்சிக்கிறானோ, அவன் பிறரைக் குறைகூறும் தன்மையை ஒழிப்பதற்கு நாடிக்கொண்டிருக்கிறான்; ஏனெனில், எவ்விடத்தில் தூய ஆன்மஞானம் இருக்கிறதோ, அவ்விடத்தில் பிறர்பால் குறைகாணும் தன்மை இருக்கமுடியாது; பிறர்மீது குற்றம் காணமுடியாத அகத்தில் மாத்திரமே அன்பு பூரணமாகி முற்றிலும் உணரப்படுகிறது.
கிறிஸ்தவர் நாஸ்திகரை நிந்திக்கின்றனர்; நாஸ்திகர் கிறிஸ்தவரைப் பரிகசிக்கின்றனர்; துவைதிகளும் அத்துவைதிகளும் இடைவிடாது வாய்ச் சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். சாந்தியும் அன்பும் தங்கியிருக்க வேண்டிய அவர்களுடைய உள்ளங்களில் பகைமையும் வெறுப்பும் தங்கியிருக்கின்றன.
''தனது சகோதரனை வெறுக்கிறவன் ஒரு கொலைஞன்; தெய்வ அன்பாகிய ஆத்மாவைச் சிலுவையில் இடுகின்றவன், நீங்கள் சகல மதத்தினர்களையும் மதமற்றவர்களையும் ஒரே பக்ஷபாதமற்ற தன்மையில் மதிக்கும் வரையில், ஒரு சிறிதும் துவேஷம் இல்லாமலும் முற்றிலும் சமத்துவமாகவும் நேசிக்கும் வரையில், தன்னைக் கொண்டிருக்கிறவனுக்கு விடுதலையையும் மோக்ஷத்தையும் கொடுக்கும் அன்பை அடைவதற்கு நீங்கள் முயற்சிக்க வேண்டியவர்களாயிருக்கிறீர்கள். தெய்வ ஞானத்தையும், சுயநயமற்ற அன்பையும் அடைந்திருந்தல் பிறர்பால் குற்றம் காணும் தன்மையை அடியோடு ஒழிக்கின்றனது; எல்லாத் தீமைகளையும் போக்குகின்றது. அஃது அன்பும், நன்மையும், நீதியுமாகவும், பிரபஞ்ச முழுவதும் வியாபித்ததாகவும், எல்லாவற்றிற்கும் மேம்பட்டதாகவும், எல்லாவற்றையும் வெல்வதாகவும், அழிக்கப்படாததாகவும் காணப்படும் தூய காட்சியின் உன்னத ஸ்தானத்திற்கு உயர்த்துகின்றது.
உங்களுடைய மனத்தை உறுதியான, பக்ஷபாதமற்ற, சாந்தமான நினைப்புக்களிற் பழக்குங்கள்; உங்களுடைய அகத்தைத் தூய்மையிலும் கருணையிலும் பழக்குங்கள்; உங்களுடைய நாவை மௌனத்திலும், உண்மையான குற்றமற்ற பேச்சிலும் பழக்குங்கள்; நீங்கள் பக்தியும் சாந்தியுமாகிய வழியில் பிரவேசித்துக் கடைசியில் அழியாத அன்பை உணர்வீர்கள். அவ்வாறு வாழுங்கால், பிறரை உங்கள் மதத்தில் சேர்க்க நாடாமல், பிறகுக்கு உங்கள் மதஉண்மையை விளக்குவீர்கள். தர்க்கம் செய்யாமல் நீங்கள் போதிப்பீர்கள். ஆசையை வளர்க்காமல் நீங்கள் ஞானிகள் ஆவீர்கள். மனிதருடைய அபிப்பிராயங்களைப் பெற முயலாமல், நீங்கள் அவர்களுடைய அகங்களை ஆள்வீர்கள். ஏனெனில், அன்பு சர்வ வல்லமை உள்ளது; எல்லாவற்றையும் வெல்லத்தக்கது. அன்பின் நினைப்புக்களும், செயல்களும், சொற்களும் ஒரு காலத்திலும் அழிய மாட்டா.
அன்பு சர்வ வியாபகமும், சர்வ மேம்பாடும், சர்வ ஆள்கையும் உள்ளதென்று தெரிந்துகொள்ளுதல், தீமையின் வலைகளிலிருந்து விடுபடுதலாம்: அகக் கலக்கத்தினின்று விடுபடுதலாம். எல்லா மனிதர்களும் தத்தம் சொந்த வழியில் மெய்ப்பொருளைக் காண்பதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர் என்று தெரிந்துகொள்ளுதல், திருப்தியையும், தூக்கமின்மையும் அமைதியையும் அடைதலாம். இதுதான் சாந்தி; இதுதான் சந்தோஷம்; இதுதான் மரணமின்மை; இதுதான் தெய்வத்தன்மை; இதுதான் சுயநயமற்ற அன்பை அனுபவித்தல்!
கடற்கரை நின்றேன்; திடக்கடல் தாக்கலை
மலைகளை எதிர்க்கும் மாட்சியைக் கண்டேன்;
எண்ணில் தாக்கற் கிடையில் எப்படி
மலைநிற் கிறதென மனத்தெண்ணுங்கால்
''மலையைக் கரைப்பதற் கலையின் இடைவிடா
முயற்சிகள் பயனில'' என மொழிந் தேன்காண்.
ஆனால் மலைகளை அலைகள் எப்படி
உடைத்ததென் றெண்ணினேன்; உடனென் தாட்கீழ்
மலையுதிர் கல்மணல் அலையுடன் ஓடலைக்
கண்டேன்; பின்னர்க் கடலலை யின்கீழ்
பழைய புவிநில அடையாளம் கண்டேன்!
அலைக்குக் கற்கள் அடிமையென் றறிந்தேன்.
பொறுமை மென்மைசார் இடைவிடாஓட்டத்தான்
நீர்செய் மாபெரும் வேலையைக் கண்டேன்;
அவை எவ்வாறு பெரியகல் மலைகளைத்
தாட்கீழ்ப் படுத்தித் தரையாக் கினவோ?
மெல்லிய துளிகள் கல்லின் மலைகளை
எப்படி வென்றவோ? எவ்வா றழித்தவோ?
மனித உயிர்களின் எதிர்க்கும் இயல்புள
துனிமிகு பாவமாம் நனிபெரு மலைகள்
சென்றுவந் துருண்டகன் றென்றும் பாயும்
அன்பின் மெல்லிய அலைநீர்க் கிடங்கொடுத்
தெதிர்ப்பின் வலியெலாம் இழந்தும் விடுத்தும்
உளம்ஒவ் வொன்றுளும் செலுமா றறிந்தேன்.
5. கடவுளோடு ஐக்கியமாதல்
ஆதிகாலம் முதற்கொண்டு மனிதன், தனது சரீரப் பசிகளுக்கும் விருப்பங்களுக்கும் இடையில், தான் லௌகிக நிலையற்ற பொருள்களைப் பற்றிக் கொண்டிருக்கிற காலத்தில். தனது சரீர வாழ்க்கையின் அளவுபட்ட, நிலையில்லாத, தோற்ற மாத்திரையான தன்மையை எப்பொழுதும் உள்ளூர உணர்ந்துகொண்டும், தனது ஞான நேரங்களில் கடவுளை அடைவதற்கு முயன்று கொண்டும், அக் கடவுளை அடைந்து அமைதியுறுவதற்குக் கண்ணீரோடு கோரிக்கொண்டும் இருக்கிறான்.
உலக இன்பங்கள் உண்மையானவையென்றும் திருப்தி தரத்தக்கவையென்றும் வீணாக நினைத்துக்கொண்டிருக்குங் காலையில், துன்பமும் துக்கமும் தமது பொய்ம்மையையும் திருப்தியற்ற தன்மையையும் அவனுக்கு இடைவிடாமல் ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கின்றன. உலகப் பொருள்களில் பூரண திருப்தியைக் காணலாமென்று நம்புவதற்கு எப்பொழுதும் முயன்று கொண்டிருக்கையில், இந்த நம்பிக்கைக்கு விரோதமாகத் தன்னுடைய அகத்தின் பிடிவாதமான எதிர்ப்பை உணர்ந்துகொண்டிருககிறான்; அவ்வெதிர்ப்பு அவனுடைய ஆவசியகமான மரணத் தன்மையை மறுப்பதாகவும், மரணமற்ற, நித்தியமாயுள்ள, அகண்டாகாரக் கடவுளிடத்தில் மாத்திரம் நிலையான திருப்தியையும், இடையறாத சாந்தியையும் அவன் காணக் கூடுமென்பதை ருஜுப்படுத்துவதாகவும் இருக்கிறது.
இவ்விடத்தில்தான் விசுவாசத்தின் அடிநிலம் இருக்கின்றது; இவ்விடத்தில்தான் சகல மதங்களுடைய மூலமும் வேரும் இருக்கின்றன; இவ்விடத்தில்தான் சகோதரத்துவ ஆத்மாவும் அன்பின் ஹிருதயமும் இருக்கின்றன. மனிதன் தெய்வத் தன்மையும் நித்தியத் தன்மையும் வாய்ந்தவன்; அவன் மரண ஞாபகத்தில் அமிழ்ந்து அமைதியின்மையால் தொந்தரிக்கப்பட்டு, அவனுடைய உண்மையான தன்மையின் உணர்ச்சியை அடைவதற்கு எப்பொழுதும் முயன்று கொண்டிருக்கிறான்.
மனிதனுடைய ஆத்மா கடவுளிடத்தினின்று பிரிக்கப்பட முடியாதது; கடவுள் தவிர வேறு எஃதாலும் திருப்தியடைய மாட்டாதது; மனிதன் இந்த ஸ்தூல உலகைப் பற்றி அலைந்து கொண்டிருத்தலை நிறுத்தி, நித்தியப் பொருளின் உண்மைத் தன்மையிலுள்ள தனது வீட்டுக்குத் திரும்பிவரும் வரையில், துன்பத்தின் சுமை அவனுடைய ஹிருதயத்தை அமுக்கிக்கொண்டேயிருக்கும்; துக்கத்தின் நிழல்கள் அவனுடைய வழியை இருட்படுத்திக் கொண்டேயிருக்கும்.
சமுத்திரத்தினின்று பிரிக்கப்பட்ட ஒரு சிறு துளி ஜலம் சமுத்திர ஜலத்தின் தன்மைகளையெல்லாம் கொண்டிருந்தல்போல, கடவிளாகிய அகண்டாகார அறிவினின்று பிரிக்கப்பட்ட மனிதன் கடவுளின் தன்மையை உடையவனாயிருகிறான்; அத் துளி ஜலம். அதன் இயற்கைச் சட்டப்படி கடைசியாகச் சமுத்திரத்திற்குச் சென்று அதன் மௌனமும் ஆழமுமான ஜலத்தோடு கலந்து தன் சொரூபத்தை இழந்து விடுதல்போல, மனிதன் அவனுடைய தவறாத இயற்கைச் சட்டப்படி, கடைசியில் அவனுடைய உற்பத்தி ஸ்தானத்திற்குச் சென்று, கடவுளாகிய பெரிய சமுத்திரத்தில் கலந்து தன் சொரூபத்தை இழந்து விடுகிறான்.
கடவுளோடு மறுபடியும் ஐக்கியமாதல் மனிதனுடைய இலக்ஷ¢யும். நித்திய சட்டமாகிய கடவுளோடு ஐக்கியமாதல் ஞானம், அன்பு, சாந்தி! இத் தெய்வத் தன்¨ம்யை சரீரத்தைப் பற்றிக்கொண்டிருக்கிற மனிதர்கள் உணர முடியாது: சரீரப் பற்று, வேற்றுமைத்தன்மை, சுயநயம் இவையெல்லாம் உண்மையில் ஒன்றே; இவை மெய்ஞ்ஞானத்திற்கும் தெய்வத் தன்மைக்கும் விரோதமானவை; சரீரப் பற்றை முற்றும் விட்டுவிட்டால், வேற்றுமைத் தன்மையும் சுயநயமும் ஒழிந்து, மனிதன் தனது அழியாத் தன்மையும், அகண்டாகாரமுமாகிய தெய்வத் தன்மை வாய்ந்த பிதிரார்ஜிதத்தை அடைகிறான்.
அவ்வாறு சரீரப்பற்றை விட்டுவிடுவதை உலகப் பற்றும் சுயநயமும் உடைய மனிதன் மிகமிகத் துன்பத்தைத் தரும் ஓர் ஆபத்தாகவும், மிகமிகப் பெரிய நஷ்டமாகவும் கருதுகிறான்; அவன் அவ்வாறு கருதினாலும் அதுதான் ஒப்புயர்வற்ற மேலான ஆசீர்வாதம்: நிலையான உண்மையான இலாபம். ஜீவ தத்துவத்தின் அகச் சட்டங்களையும், தன் உயிரின் தன்மையையும், விதியையும் அறியாத மனிதன். அநித்தியமான தோற்றங்களையும், நிலையான உண்மைத்தன்மை இல்லாத பொருள்களையும் பற்றிக்கொண்டிருக்கிறான். அவ்வாறு பற்றிக்கொண்டு அவனுடைய சொந்தம் பிரமைகளோடு அழிகின்றான்.
மனிதர் மாமிசப் பிண்டமாகிய சரீரத்தைப் பற்றிக் கொண்டும். அஃது அழியாமல் என்றும் இருப்பதாக நினைத்துக் கொண்டும், அது விரும்பியவற்றையெல்லாம் அதற்குக் கொடுக்கின்றனர்; சரீரத்திற்கு அழிவு இன்றியாமையாத தென்பதையும், அவ்வழிவு விரையில் வரக்கூடியதென்பதையும் அவர் மறந்துவிட முயற்சித்தபோதிலும். மரண பயமும், அவர் பற்றிக்கொண்டிருக்கிற எல்லாவற்றின் இழப்புப் பயமும், அவருடைய மிகமிகச் சந்தோஷமான நேரங்களைப் பழுதுபடுத்துகின்றன. அவருடைய சுயநயத்தின் வெவ்விய நிழல் ஒரு குரூரமான பேய்போல அவரைப் பின் தொடர்கின்றது.
உலக சௌகரியங்களையும் உலக இன்பங்களையும் அதிகமாகக் கொள்ளும்போது, மனிதரின் அகத்துள் இருக்கின்ற தெய்வம் மருத்தூட்டப்பட்டு, ஸ்தூல உலகத்துள்ளும், அழிதற்றன்மையுள்ள ஐம்பொறி வாழ்க்கையுள்ளும் ஆழ்ந்து ஆழ்ந்து அமிழ்கின்றது; அப்போது சரீரத்தின் அழியாமையைப் பற்றிய கற்பனைகள் தவறாத உண்மைகளென்று மதிக்கப்படுகின்றன. ஒரு மனிதனுடைய ஆத்மா எவ்விதமான சுயநயத்தாலாவது மூடப்பட்டிருக்கும்போது, அவன் தனது ஆத்ம பகுத்தறிவின் சக்தியை இழந்து. அநித்தியப் பொருள்களை நித்தியப்பொருள்களாகவும், அழிந்து போகும் பொருள்களை அழியாத பொருள்களாவும், மரண முடையவற்றை மரண மில்லாதனவாகவும், மெய்ப் பொருளைப் பொய்ப்பொருளாகவும் கருதுகிறான். இவ்வாறே உலகமானது மனித அனுபவத்தை ஆதாரமாகக் கொண்டிராத வெறுங் கற்பனைகளாலும் ஊகங்களாலும் நிறைக்கப்பட்டிருக்கின்றது. மாமிசத்தாலாய ஒவ்வொரு சரீரமும், அது பிறந்த நிமிஷ முதற் கொண்டு, அதனை அழிக்கக்கூடிய அம்சங்களைக் கொண்டிருக்கிறது; அதனுடைய மாற்றமடியாத இயற்கைச் சட்டப்படி அஃது அழிந்தே தீரும்.
பிரபஞ்சத்திலுள்ள அழியும் பொருள்கள் ஒருபோதும் அழியாப் பொருள்களாக மாட்டா; அழியாப் பொருள்கள் ஒருபோதும் அரியாமாட்டா; இறக்கும் உயிர்கள் ஒரு போதும் இறவா உயிர்களாக மாட்டா; இறவா உயிர்கள் ஒருபோதும் இறக்க மாட்டா; நிலையற்ற பொருள்கள் ஒரு போதும் நிலையுள்ள பொருள்களாக மாட்டா; நிலையுள்ள பொருள்கள் ஒருபோதும் நிலையற்ற பொருள்களாக மாட்டா; தோற்றங்கள் ஒருபோதும் உண்மைகளாக மாட்டா; உண்மைகள் ஒருபோதும் தோற்றங்களாகத் தேய மாட்டா; பொய்ப்பொருள் ஒருபோதும் மெய்ப்பொருள் ஆகமாட்டாது; மெய்ப்பொருள் ஒருபோதும் பொய்ப்பொருள் ஆகமாட்டாது; மனிதன் மாமிச உடம்பை அழியாத உடம்பாகச் செய்ய முடியாது. ஆனால், அதன் விருப்பங்களையெல்லாம் துறந்து அதனை வென்று, அவன் அழியாத தன்மையுள் புகலாம்.
"கடவுள் ஒருவரே அழியாத் தன்மை வாய்ந்தவர்." பேரறிவாகிய கடவுட்டன்மையை அடைதலால் மாத்திரம் மனிதன் அழியாத் தன்மையுள் புகுகின்றான்.
கோடிக்கணக்கான உயிர்களது உடம்புகளின் இயற்கை மாறும் தன்மையது, அழியும் தன்மையது. நிலையற்றது அவ்வியற்கையின் உண்மைத் தத்துவம் ஒன்றே நிலையுள்ளது. இயற்கை பல; அவற்றுள் ஒவ்வொன்றும் வேற்றுமையுடையது. இயற்கையின் உண்மைத் தத்துவம் ஒன்றே; அஃது ஒற்றுமையுடையது. புறப்பொறிகளையும் அகச் சுயநயத்தையும் வெல்வதானால். அஃதாவது இயற்கையை வெல்வதனால், மனிதன் தோற்ற மாத்திரையான சரீரத்திற்கு ஆதாரமான கருவிலிருந்து வெளிப்பட்டு, அழியக்கூடிய உருக்களெல்லாம் தோன்றுவதற்கு ஆதாரமான மெய்ப்பொருட் பிரதேசத்துன், ஆத்ம ஒளிக்குள் பறக்கிறான்.
ஆதலால், மனிதர்கள் தன்னை ('யான்' என்பதை) மறுத்தலை அப்பியசிக்கட்டும்; தங்களுடைய மிருக விருப்பங்களை வெல்லட்டும்; சுகத்திற்கும் இன்பத்திற்கும் தாங்கள் அடிமையாதலை மறுக்கட்டும்; அவர்கள் நல்லொழுக்கத்தை அப்பியசித்துக் கடைசியாகக் கடவுட்டன்மையை அடையும் வரையில், மேலும் மேலும் உயர்ந்து ஒழுக்கத்தில் வளரட்டும்; பணிவு, சாந்தம், மன்னித்தல், இரக்கம், அன்பு இவற்றை அறிந்து அப்பியசிக்கட்டும்; இவ்வறிவும் அப்பியாசமுமே கடவுட்டன்மையை அடைதலாம்.
அருள் அகப்பார்வையை உண்டுபண்ணுகின்றது. எவன் தனது சரீரப் பற்றை வென்று, எல்லாப் பிராணிகளிடத்தும் அருளுடையவனாயிருக்கிறனோ. அவன் தெய்வத்தன்மை வாய்ந்த அகப்பார்வையை உடையவனாய், பொய்யினின்று மெய்யைப் பிரித்து அறியும்படியான திறமையுடையவனாகின்றான். ஆதலால், மிக மேம்பாடுற்ற நல்ல மனிதன் ஞானியும், தேவனும், அறிஞனும், கடவுளை உணர்ந்தவனும் ஆகிறான். எவனிடத்தில் தாராள அமைதியையும், அசையாத பொறுமையையும், மேலான தாழ்மையையும், இனிய பேச்சையும், தன்னடக்கத்தையும், தன்னை மறத்தலையும், ஆழ்ந்து நிறைந்த அனுதாபத்தையும் காண்கிறீர்களோ, அவனிடத்தில் மிகமிக உயர்ந்த ஞானத்தை எதிர்பாருங்கள்; அவனுடைய கூட்டுறவைக் கொள்ளுங்கள்; ஏனெனில், அவன் கடவுளை உணர்ந்துவிட்டான்; கடவுளுடன் வாழ்கிறான்; கடவுளோடு ஐக்கியமாய்விட்டான். எவன் பொறுமையற்றவனாயிருக்கிறானோ, எவன் கோபிக்கிறானோ, எவன் தற்பெருமை பாராட்டுகிறானோ, எவன் இன்பத்தைப் பற்றிக்கொண்டிருக்கிறானோ, எவன் சுயநயபோகங்களை விடுவதற்கு மறுக்கிறானோ, எவன் தயையும் அகன்ற இரக்கத்தையும் அப்பியசிக்கவில்லையோ, அவனை நீங்கள் நம்பாதீர்கள்; ஏனெனில், அவனிடத்தில் ஞானம் இல்லை; அவனுடைய அறிவெல்லாம் பயனற்றது; அவனுடைய செயல்களும் சொற்களும் அழிந்துபோம்; ஏனெனில், அவை அழிந்துபோகக் கூடியதையே ஆதாரமாகக் கொண்டுள்ளன.
மனிதன் 'யான்' என்பதை விடக்கடவன்; உலகினை வெல்லக் கடவன்; சரீரப்பற்றை விடக்கடவன். இந்த வழியினால் மாத்திரமே கடவுளுடைய அகத்துட் பிரவேசிக்கக் கூடும்.
உலகமும், சரீரமும், தானும், காலமாகிய பாலைவனத்தில் தோன்றும் காணல் தோற்றங்கள்; ஆத்ம உறக்கத்தில் தோன்றும் அழிந்து போகக்கூடிய சொப்பனங்கள்; எவர்கள் அப்பாலைவனத்தைக் கடந்துவிட்டார்களோ, எவர்கள் ஆத்ம விழிப்புடையவர்களாயிருக்கிறார்களோ, அவர்கள் மாத்திரம் எல்லாத் தோற்றங்களும் நீங்கிச் சொப்பனமும் மயக்கமும் ஒழிந்து நிற்கும் சர்வவியாபக மெய்ப்பொருளை உணர்ந்தவர்கள்.
ஒரு பெரிய சட்டம் இருக்கிறது; அது நிபந்தனையற்ற கீழ்ப்படிதலை வேண்டுகிறது. ஓர் ஒற்றுமைத் தத்துவம் இருக்கிறது; அது சகல வேற்றுமைகளுக்கும் ஆதாரமானது. ஒரு நித்திய மெய்ப்பொருள் இருக்கிறது; அதில் உலகப் பிரச்னைகளெல்லாம் தீர்ந்துவிடுகின்றன. இந்தச் சட்டத்தை, இந்த ஒற்றுமையை, இந்த மெய்ப்பொருளை உணர்தல் அகண்டாகாரக் கடவுள் நிலையுள் பிரவேசித்து நித்தியமான கடவுளோடு ஐக்கியமாதல், அன்பாகிய பெரிய சட்டத்தைப் பின்பற்றி ஒருவன் வாழ்க்கையை நடத்துதல் அமைதியையும்,சமாதானத்தையும், சாந்தியையும் இடைதற்கு வழி. தீமையிலும் பகைமையிலுமுள்ள சகல சம்பந்தங்களையும் விடுதலும், நன்மையையும் நட்பையும் விடாமையும், அகத்துள் நிலவும் தூய அமைதிக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து நடத்தலும், பொருள்களின் ஹிருதயத்தின் உள்ளுள்ளே பிரவேசித்ததற்கும், வெறுமனே அறியும் அறிவுக்கு எட்டாத நித்திய அகண்ட தத்தவப் பொருளை உணர்ந்து வாழ்தற்கும் நெறிகளாம். இத்தத்துவத்தை உணரும் வரையில், ஆத்மா சாந்தி அடையமாட்டாது. எவன் இத்தத்துவத்தை உணருகின்றானோ, அவன் உண்மை ஞானி. அவனுடைய ஞானம் கற்றவர்களுடைய ஞானம் அன்று. ஆனால், ஒரு குற்றமற்ற ஹிருதயத்திற்கும் தெய்வீக மனிதத் தன்மைக்கும் சொந்தமான நேர்மையாம்.
அகண்டாகாரமாயும் நித்தியமாயும் உள்ள கடவுளை உணர்தல், இருள் இராஜ்யமாகிய காலத்திற்கும் உலகத்திற்கும் சரீரத்திற்கும் மேற்ப்பட்டு நிற்றலாம்; ஒளி இராஜ்யமாகிய அழியாமை, பரலோகம், ஆத்மா இவற்றில் தங்குதலாம். கடவுளோடு ஐக்கியமாதல் வெறும் பேச்சு அல்லது மனோபாவம் அன்று; அஃது அகத்தைத் தூய்மையாக்குவதற்காகச் சிரத்தையோடு செய்த அப்பியாசத்தின் பலனாகிய பிராணாதார அனுபவம். சரீரம் மனிதன் அன்று என நம்பப்பட்டபொழுது, சகல பசிகளும் விருப்பங்களும் முற்றிலும் கீழ்ப்பட்டுத் தூய்மையாக்கப்பட்டபொழுது, மனோவெழுச்சிகள் ஓய்ந்து அமைதியானபொழுது, புத்தியின் தடுமாற்றம் நின்று சமநிலை அடைந்தபொழுது, தன் அறிவு கடவுளோடு ஐக்கியமாகின்றது. அது வரையில் நேர்மையான ஞானமும், நிலையான சாந்தியும் சித்திப்பதில்லை.
மனிதர் வாழ்க்கையில் இருண்ட பிரச்சினைகளைப் பற்றிச் சிந்தித்துச் சிந்தித்துக் களைத்து, நரைத்து, அவற்றை ஒரு முடிவுக்குக் கொண்டு வராமலே இறந்து போகின்றனர்; ஏனெனில், அவர் தம் சரீரத்தின் சிற்றளவுள் அமிழ்த்தப்பட்டுச் சரீராபிமான இருளினின்று வெளிப்படுவதற்கு வழிகாண முடியாதவராயிருக்கின்றனர். தன் சரீர உயிரைக் காப்பதற்கு விரம்பி, மனிதன் மெயப்பொருளாகிய சரீர மற்ற உயிரை இழந்துவிடுகிறான்; அழிந்துபோகும் பொருளைப் பற்றிக் கொண்டிருப்பதால், மெய்ப்பொருளின் ஞானத்தை அடைகிறான் இல்லை.
'யான்' என்பதை விடுவதால் எல்லாக் கஷ்டங்களும் ஜெயிக்கப்படுகின்றன; அகத் தியாகத்தால் எரிக்கப்படாத பொய் எதுவும் பிரபஞ்சத்தில் இல்லை. தன்னைத் துறத்தலாகிய ஆராய்ச்சி விளக்கின்முன் தீர்ந்துபோகாத பெரிய பிரச்னை எதுவும் இல்லை. பிரச்னைகள் தன்னால் சிருஷ்டிக்கப்பட்ட தன்னுடைய சொந்தப் பிரமைகளிலே தங்குகின்றன. தன்னைத் துறந்தபோது அவை நீங்கிவிடுகின்றன. 'யான்' என்பதும் 'பொய்' என்பதும் ஒரு பொருள் குறிக்கும் சொற்கள். 'யான்' என்பது அளக்க முடியாத கோணல்களுள் சிக்கியுள்ளது. மெய்ப்பொருள் நித்திய நேர்மையாக விளங்கும் பெருமை வாய்ந்தது. தன்னை நேசிக்கும் மனிதருக்கு மெய்ப்பொருள் மறைக்கப்பட்டிருக்கிறது. தம்முடைய சொந்தச் சரீர சுகத்தை நாடுவதால், அவர் மிக ஆழ்ந்ததும், மிகச் தூயதும், மிக நீடித்து நிற்பதுமான இன்பத்தை இழக்கின்றனர். மனிதரிடத்துச் சரீரசுகத்திலும் மேம்பட்ட இன்பம் ஒன்று இருக்கிறது. சுகம் இல்லாமல் மனிதன் இருக்கக்கூடும். அதற்குப் பதிலாக இன்பத்தைக் காணக்கூடும். "சுகத்தை நேசிக்காதேயுங்கள். கடவுளை நேசியுங்கள்; கடவுள் தாம் என்றும் நிலைத்திருக்கின்ற உள்பொருள். அப்பொருளிடத்தில்தான் எல்லா வேற்றுமைகளும் ஒழிகின்றன.; எவன் வேற்றுமை காணாது செய்கின்றானோ, கிடக்கின்றானோ, அவனுக்கு எல்லாம் நன்மையாய் முடிகின்றன'' என்று கார்லைல் என்னும் பெரியார் கூறுகிறார்.
மனிதர் மிக மிக நேசிக்கிறதும், அவர் விடாப்பிடியாய்ப் பிடித்துக்கொண்டிருக்கிறதுமான 'யான்' என்பதைத் துறந்துவிட்ட மனிதன், எல்லாக் கலக்கத்தையும் கடந்து, பொய்யும் மடமையுமாகிய வலையில் சிக்கியிருக்கிற உலகம் கூட எளிதில் காணக்கூடிய நேர்மைத் தன்மையில் புகுந்து விட்டான். அப்போது அவன் மிக மிக உயர்ந்த ஞானத்தை அடைந்தவனாய், அகண்டாகாரக் கடவுளிடத்தில் அமைதியுற்றிருக்கிறான். அவன் முயற்சி செய்யாமல் காரியசித்தி அடைகிறான். ''எல்லாப் பிரச்னைகளும் அவன் முன்னிலையில் தீர்ந்து போகின்றன. ஏனெனில், அவன் உண்மைப் பிரதேசத்தில் புகுந்துவிட்டான். பொருள்களின் மாறுகிற காரியங்களோடல்லாமல், பொருள்களின் மாறாத காரணங்களுடன் பழகுகிறான். அவன் மிருகத் தன்மைக்கு மேற்பட்ட பகுத்தறிவு போன்றதும், தர்க்கத்திற்கு மேற்பட்டதுமான ஞானத்தால் அறிவூட்டப்பட்டிருக்கிறான். தனது காமங்களையும், தனது தவறுகளையும், தனது அபிப்பிரயாங்களையும், தனது துரபிமானங்களையும் விட்டுவிட்டதனால், அவன் சுவர்க்கத்தைப்பற்றிய சுயநய ஆசையையும், நரகத்தைப்பற்றிய மட அச்சத்தையும் கொன்று, கடவுள் ஞானத்தை அடைந்துவிட்டான்; உயிரின் மீதுள்ள அன்பையும்கூட விடத்து, பிறப்பையும் இறப்பையும் ஒழிப்பதும் தனது மரணமற்ற தன்மையை அறிந்துள்ளதுமான, நித்திய உயிரையும் பேரின்பத்தையும் அடைந்துவிட்டான். ஒன்றும் பாக்கியில்லாமல் எல்லாவற்றையும் துறந்துவிட்டதனால், அவன் எல்லாவற்றையும் அடைந்து, அகண்டாகாரக் கடவுளின் மார்பில் சாந்தியாய் அமர்ந்திருக்கிறான்.
தான் வாழ்வதிற்போலவே சாவதிலும், சாவதிற்போலவே வாழ்வதிலும், சமமான திருப்தியை அடையும்படியான விதத்தில், எவன் 'யான்' என்பதை அடியோடு துறந்து விட்டானோ, அவன் கடவுளோடு ஐக்கியமாவதற்குத் தகுதியுடையவன். அழியக்கூடிய தன்னை நம்புவதை விடுத்து, அழியாத மேன்மையான நன்மை வடிவமாயுள்ள பெரிய சட்டத்தை அளவுகடந்து எவன் நம்புகிறானோ, அவன் அழியாத பேரின்பத்தை அடையத் தயாராயிருக்கிறான்.
அத்தகைய மனிதனிடம் செய்தற்கு இரங்கலாவது, ஆசாபங்கமாவது, துன்பமாவது கிடையாது; ஏனெனில், சகல சுயநயமும் நீங்கின இடத்தில் இவ்வநுபவங்கள் இருக்க முடியா; அவனுக்கு என்னென்ன நேர்கின்றனவோ, அவையெல்லாம் அவனுடைய சொந்த நன்மைக்காகவே நேர்கின்றனவென்பது அவனுக்குத் தெரியும்; அவன் 'யான்' என்பதன் வேலைக்காரனாயிராமல் பரம்பொருளின் வேலைக்காரனாயிருப்பதால், அவன் எதிலும் திருப்தியாயிருக்கிறான். பூமியில் உண்டாகும் மாறுதல்களால் அவன் பாதிக்கப்படுவதில்லை. அவன் யுத்தங்களைப் பற்றியும் யுத்தப் பிரஸ்தாபங்களைப் பற்றியும் கேள்விப்படுங்காலையில், அவனுடைய சாந்திக்குக் கேடு உண்டாவதில்லை. மனிதர் வெகுளியும், கடுகடுப்பும் கலகப்பிரியமும் கொள்ளும்போது, அவன் அவர்மீது இரக்கமும் அன்பும் கொள்ளுகிறான். உலகின் நிலைமைகள் உலகாபிவிர்த்திக்கு மாறாகத் தோன்றினும், உலகம் அபிவிர்த்தி அடைந்து கொண்டிருக்கிறதென்பதும்.
''தன்சிரிப் பாலும் தன் அழுகை யாலும்,
தன்வாழ் வாலும் தன்வைப் பாலும்,
தன்பிழை யாலும் தன்செய லாலும்,
பார்வை யிடத்திலும் பார்வைக் கப்புறமும்,
தொடக்க முதலா இறுதி வரையில்:
பலவறங் களாலும், பலமறங் களாலும்,
உலக மாகிய விலையுயர் பாவில்
அபிவிர்த்தி யென்னும் கடவுள் ஓடத்தின்
ஒளிரும் பொன்னூல் ஊடாய்
ஒடலும் வருதலும் ஒருங்குகொள் கின்றான்'' என்பதும் அவனுக்குத் தெரியும்.
உக்கிரமான புயல் காற்று அடிக்கும்போது அதனை ஒருவரும் கோபிப்பதில்லை; ஏனெனில், அது விரைவில் போய்விடுமென்பது எல்லாருக்கும் தெரியும். வாதப் புயல்கள் உலகத்தை நாசமாக்கிக்கொண்டிருக்கும்போத, ஞானி மெய்ப்பொருளும் இரக்குமாகிய கண்களால் பார்த்து அவ்வாதம் நிங்கிடுமென்றும், உடைந்துபோன ஹ்ருதயங்களிலிருந்து அழியாத ஞானலயம் கட்டப்படுமென்றும் அறிந்துகொண்டிருக்கிறான்.
கம்பீரமான பொறுமையும், அளவற்ற இரக்கமும், ஆழ்ந்த யோசனையும், மௌனமும், தூய்மையும் உடைய மனிதனைப் பார்த்தாலே ஓர் ஆசிர்வாதம். அவன் பேசும் போது அவனுடைய சொற்களை மற்றைய மனிதர் தமது உள்ளத்திற்கொண்டு சிந்திக்கின்றனர்; அச் சொற்களால் அவர் உயர்ந்த பதவிகளை அடைகின்றனர். அவன்தான் கடவுளோடு ஐக்கியமானவன்; அவன்தான் மிகமிகப் பெரிய தியாகம் செய்து வாழ்க்கையின் மர்மங்களைத் தீர்த்தவன்.
சுற்றிச் சுழலும் கரியரா க்ஷசிபால்
வாழ்க்கை யோடு மாண்மெய்ப் பொருளையும்
விதியையும் பற்றி வினாவியே அடைந்தேன்;
அறைந்தனள் அவள்இவ் வதிசய மொழிகளை:
"மறைக்கப் பட்டகண் களுக்கே மறைவுள:
கடவுள் வடிவினைக் கடவுளே காண்பான்."
மறைக்கப் பட்டஇம் மர்மத்தை அறியக்
கண்கள் காண வொண்ணா வழியிலும்
மிகுதுயர் வழியிலும் வீணே சென்றேன்;
அன்பும் சாந்தியும் ஆகிய வழியை
நெருங்கினேன்; மறைவும் குருடும் நீங்கின;
கடவுட் கண்களால் கடவுளைக் கண்டேன்."
6. முனிவர்களும், முனிகளும், இரக்ஷகர்களும் ஊழியம் புரிதல்
பூரண வாழ்க்கையாக வெளிப்பட்டுள்ள அன்பின் தத்துவம், மனித உயிரின் கிரீடமும், மெய்ஞ்ஞானத்தின் அந்தமும் ஆகும்.
ஒரு மனிதனுடைய உண்மையின் அளவு, அவனுடைய அன்பின் அளவேயாகும்; எவனுடைய வாழ்க்கை அன்பினால் ஆளப்படவில்லையோ, அவனுக்கு மிகமிகத் தூரத்தில் மெய்ப்பொருள் இருக்கிறது. சகிப்புத்தன்மை இல்லாத வரும், பிறரிடம் குற்றங்காண்பவரும் மிக உயர்ந்த மதத்தினராயினும், மிகமிகச் சிறிய அளவே மெய்ப்பொருளை உடையவராய் இருக்கின்றனர்; பொறுமையுடையவரும், எல்லாக் காக்ஷகளையும் விருப்பு வெறுப்பு இல்லாமல் அமரிக்கையாகக் கேட்பவரும், எல்லாப் பிரச்சினைகளையும் விவாதம்சங்களையும் பற்றி ஆலோசித்துப் பக்ஷபாதமற்ற முடிவுசெய்பவரும், முழு அளவில்மெய்ப்பொருளை உடையவராயிருக்கின்றனர். ஞானத்திற்கு உரைகல் இதுதான்:- ஒரு மனிதன் எவ்வாறு வாழ்கிறான்? அவன் எவ்விதத் தன்மையை வெளிக்காட்டுகிறான்? ஆபத்துக்காலத்திலும் ஆசையெழும் காலத்திலும் அவன் எப்படி நடக்கிறான்? வியாகுலத்தாலும், ஆசாபங்கத்தாலும் காமக் குரோதங்களாலும் இடைவிடாது தள்ளாடிக் கொண்டும், முதலாவதாக வந்த ஒரு சிறு ஆபத்தில் அமிழ்ந்தும் போகிற அனேக மனிதர் தாம் மெய்ப் பொருளோடு வாழ்கிறதாகப் பெருமை பாராட்டுகின்றனர் என்றும் மாறுபடாததாயிருப்பதொன்றே மெய்ப்பொருள். ஒரு மனிதன் மெய்ப்பொருளைத் தனக்கு ஆதாரமாகக் கொண்ட வாழுங்காலையில், அவன் ஒழுக்கத்தில் உறுதியாய் நிற்கின்றான்; தனது மனோ விகாரங்களுக்கும், மனோவெழுச்சிகளுக்கும், அடிக்கடி மாறுதல் அடையும் சரீரத் தன்மைகளுக்கும் மேற்பட்டு நிற்கிறான்.
மனிதர் அழிந்துபோகக்கூடிய கோட்பாடுகளை விதித்து அவைகளை மெய்ப்பொருள் என்று கூறுகின்றனர். மெய்ப்பொருளைக் கோட்பாடுகளாக விதிக்க முடியாது. மெய்ப்பொருள் வாக்குக்கு எட்டாதது; புத்திக்கும் எட்டாதது. அப்பியாசத்தால் அதனை உணரலாம். அது மாசற்று ஹிருதயமாகவும், பூரண வாழ்க்கையாகவும் மாத்திரம் தோன்றக்கூடும்.
அப்படியிருக்கும்போது, யார், ஒய்வில்லாத மதங்கள், மடங்கள், கக்ஷ¢கள் இவற்றின் மத்தியில், மெய்ப்பொருளை உணர்ந்திருக்கின்றார்? மெய்ப்பொருளாக வாழ்கின்றவரே அதனை உணர்ந்தவர். மெய்ப்பொருட்டன்மையை அப்பிய சிக்கின்றவரே அதனை உணர்ந்தவர். எவர் என்னை வென்று மதங்கள் முதலியவற்றிற்கு மேற்பட்டு, அவற்றில் தலையிடாமல், சகல சண்டைகளிலும், சசல பக்ஷபாதங்களிலும், சகல குறறச்சாட்டல்களிலும் நின்று விடுபட்டு, அமைதியோடும், அடக்கத்தோடும், சாந்தத்தோடும், தைரியத்தோடும் தூர இருந்துகொண்டு, தன்னுள் இருக்கிற சுயநலமற்ற சந்தோஷகரமான தெய்வஅன்பை எல்லோரிடத்திலும் செலுத்துகிறாரோ, அவரே மெய்ப்பொருளை உணர்ந்தவர்.
எவன் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பொறுமையுடையவனாவகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறானோ, அவன்தான் மெய்ப்பொருளைக் காட்டுகிறான்; வாக்குவாதங்களாலும், உயர்ந்த நூல்களாலும் மெய்ப் பொருளைக் காட்ட முடியாது; ஏனெனில், மனிதர் அளவு கடந்த பொறுமையிலும், அழியாத மன்னிப்பிலும், எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டிருக்கிற இரக்கத்திலும் மெய்ப்பொருளைக் காணவில்லையானால், அவருக்கு அதனைச் சொற்களால் காட்ட முடியாது. கோபக்காரர் தனிமையாயிருக்கும் போதும், சாந்தத்தின் மத்தியில் இருக்கு போதும், அவர் அமைதியோடும், பொறுமையோடும் இருத்தல் எளிது. அதே மாதிரியாக இரக்கமில்லாதவர் பிறரால் அன்பாக நடத்தப்படும்போது, பிறர்பால் அன்பும் இரக்கமும் உடையவராயிருத்தல் எளிது. எவன் கோபம் மூட்டப்பட்ட சகல சமயங்களிலும் பொறுமையாகவும் அமைதியாகவும் இருக்கிறானோ, எவன் கோபம் அடையக்கூடிய சந்தர்ப்பங்களிலும், அன்பும் இரக்கமும் உடையவனாயிருக்கிறானோ, அவன் மாசற்ற மெய்ப்பொருளை உணர்ந்திருக்கிறான். இது தான் உண்மை; ஏனெனில், அத்தகைய உயர் குணங்கள் கடவுளுக்குச் சொந்தமானவை. மிகமிக உயர்ந்த ஞானத்தை அடைந்தவனும், தனது அவாவையும், சுயநயத் தன்மையையும் துறந்தவனும், மேலானதும் மாறாததுமான மெய்ப்பொருளை உணர்ந்து அதற்குச் சரியாக நடக்கிறவனும்தான் அவ்வுயர் குணங்களைக் கைக்கொண்டிருந்தல் கூடும்.
ஆதலால், மெய்ப்பொருளைப் பற்றி வீணானவையும் ஆத்திரத்தோடு கூடியவையுமான சகல விவாதங்களையும் விடக்கடவர்; அவர் ஒற்றுமையையும் சமாதானத்தையும், அன்பையும் தயையைம் உண்டு பண்ணக்கூடிய பேச்சுக்களைப் பேசக் கடவர்; செயல்களைச் செய்யக் கடவர். அவர் அகஒழுக்கத்தை அப்பியசித்து அடக்கத்தோடும் ஊக்கத்தோடும் மெய்ப்பொருளைத் தேடக் கடவர். மெய்ப்பொருள்தான் ஆத்மாவை எல்லாப் பாவங்களிலும் தீமைகளிலிருந்தும், மனித ஹிருதயத்தைக் கெடுத்து உலகத்தில் அலைந்த திரிகிற ஆத்மாக்களின் வழியை முடிவில்லாத இருளால் மறைக்கிற எல்லாவற்றிலுமிருந்தும் விடுவிக்கின்றது.
பிரபஞ்சத்திற்கு ஆதாரமும் காரணமுமான பெரிய சர்வ வியாபகச் சட்டம் ஒன்று இருக்கிறது; அதுதான் அன்பாகிய சட்டம். அது வெவ்வேறு காலங்களிலும் வெவ்வேறு தேசங்களிலும் வெவ்வேறு பெயர்களால் சொல்லப்பட்டிருக்கிறது; ஆனால் அப்பெயர்களுக்கெல்லாம் பின்பக்கத்தில் மாற்றமுடியாத அச்சட்டத்தை மெய்ப்பொருட் கண்ணால் காணலாம். பெயர்கள், மதங்கள், சரீரங்கள் மறைந்து போகின்றன. ஆனால், அன்பாகிய சட்டம் என்றும் அழியாமல் இருக்கின்றது. இச்சட்டத்தைப் பற்றிய ஞானத்தை அடைதல், அறிவோடு அதனுடன் ஒன்றாவதற்கும். மரணமின்மையையும் ஜனனமின்மையையும் அழிவின்மையையும் அடைவதற்கும் மார்க்கம்.
இச் சட்டத்தை உணர்தற்காக ஆத்மா செய்யும் முயற்சியால், மனிதர் வாழ்வதற்கும் துன்புறுவதற்கும், சாதற்கம் திரும்பி வருகின்றனர், அதனை உணர்ந்த பொழுது துன்பம் ஒழிகின்றது; மனிதத் தன்மை மறைந்து போகின்றது; மாமிசத்தோடு கூடிய ஜனனமும் மரணமும் ஒழிகின்றன; ஏனெனில் ஆத்ம அறிவு மெய்யறிவோடு ஐக்கியமாய் விடுகின்றது.
மெய்ப்பொருள் ஒரு சரீரத்தைப்பற்றிய தன்று; மெய்ப்பொருளின் மிகமிக வெளிப்பட்ட விளக்கம் உயிர்களுக்கு ஊழியம் புரிதல். தூயதான அகம் மெய்ப் பொருளை உணர்ந்தபொழுது, கடைசியான, மிகமிகப்பெரிதான, மிகமிகப் பரிசுத்தமான தியாகத்தை (அஃதாவது சரியாகத் சம்பாதித்த மெய்ப் பொருளின் அனுபவ தியாகத்தை) செய்யும்படியாகக் கேட்கப்படுகிறது. இத்தியாகத்தைச் செய்வதால் தெய்வத்தன்மையை அடைந்துள்ள ஆத்மா, மாமிசத்தாலாய உடலைத் தாங்கி, மிகமிகத் தாழ்ந்தவர்கள் மத்தியிலும், அற்பர்கள் மத்தியிலும் சஞ்சரிப்பதில் திருப்தியுடையதாய் மனித சமுகத்தின் ஊழியன் என்று மதிக்கப்படுவதாய், மனிதர்களுள் வசிப்பதற்கு வருகின்றது. உலக இரக்ஷகர்களால் காட்டப்படும் மேலான அடக்கம் கடவுட்டன்மையின் முத்திரையாகும். எவன் 'யான்' என்பதை ஒழித்து, சரீரமற்ற, நித்தியமான, அளவற்ற அன்பின் அம்சமாக விளங்குகின்றானோ, அவன் மாத்திரம் பின் சந்ததியார்களால் வணங்கப்படத் தக்கவனாகிறான். எவன் 'யான்' என்பதை ஒழித்தது மாத்திரமல்லாமல், சுயநயமற்ற அன்பை எல்லாரிடத்திலும் செலுத்துதலாகிய தெய்வப் பணிவைக் கைக்கொண்டு ஒழுகுகிறானோ, அவன் அளவுகடந்து மதிக்கப்பட்டு, மனித வர்க்கத்தாரின் அகங்களில் தெய்வமாக வசிப்பதற்கு இடம் கொடுக்கப்படுகிறான்.
பெரிய மதாச்சாரியர்களெல்லாம் சரீர சுகங்களையும், சௌக்கியங்களையும், பிரதிப் பிரயோஜனங்களையும் துறந்து, உலகச் செல்வங்களையெல்லாம் விட்டு நீங்கி, சர்வவியாபகமும் அகண்டாகாரமுமான மெய்ப்பொருளை உபதேசித்திருக்கிறார்கள். அவர்களில் ஒவ்வொருவருடைய வாழ்க்கைகளையும், உபதேசங்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள். அவர்கள் வாழ்க்கையிலும் உபதேசத்திலும் ஒரே நேர்மையை, ஒரே தன்மறுப்பை, ஒரே பணிவை, ஒரே அன்பை, ஒரே சாந்தியைக் காண்பீர்கள். அவர்களெல்லாரும் ஒரே நித்தியக் கொள்கையை உபதேசித்தார்கள்; அக் கொள்கையைக் கைக்கொண்டு ஒழுகவே எல்லாத் தீமைகளும் அழிந்துபோம். மனித சமூகத்தின் இரக்ஷகர்களாகத் துதிக்கவும் தொழவும் பெற்ற பெரியார்கள், 'யான்' என்பது இல்லாத பரம்பொருளின் அவதார புருஷர்கள், அவ்வாறு இருந்தமையால், அவர்கள் காமக் குரோதங்கள் அற்றவர்களாயும் பிறருக்கு உபதேசிப்பதற்கும், பிறரினின்று காப்பதற்கும், சொந்த அபிப்பிராயங்களும் கொள்கைகளும் இல்லாதவர்களாயும் இருந்தார்கள். அவர்கள் எவரையும் தம் மதத்தில் சேர்க்கவாவது, பிற மதத்தில் சேரும்படி செய்யவாவது நாடினதில்லை. மிகமிக உயர்ந்த நன்மையிலும் மேலான பூரணத்துவத்திலும் வாழ்ந்து வந்தமையால், அவர்களுடைய முழுநோக்கமும் அந்த நன்மையை நினைப்பிலும், சொல்லிலும், செயலிலும் பிறரும் அனுசரிக்கும்படி செய்து மனித சமூகத்தை மேற்படுத்த வேண்டும் என்பதாகவேயிருந்தது. அவர்கள் சரீரத்தையுடைய மனிதனுக்கும் சரீரமற்ற கடவுளுக்கும் மத்தியில் நின்று, 'யான்' என்பதற்கு அடிமைப்பட்ட மனித வர்க்கத்தினரை இரக்ஷ¢ப்பதற்காக உழைக்கின்ற உத்தமர்கள்.
'யான்' என்பதில் அமிழ்ந்தவராயும், சரீரமில்லாது நன்மை சொரூபமாய் விளங்குகிற கடவுளை அறிய முடியாதவராயும் இருக்கிற மனிதர், தம்முடைய இரக்ஷகர் தவிர மற்றைய இரக்ஷகர்களுக்குக்கெல்லாம் தெய்வத்தன்மை இல்லையென்று சொல்லி, மனித வெறுப்பையும், கொள்கைத் தர்க்கத்தையும் உண்டு பண்ணுகின்றனர்; தமது சொந்த அபிப்பிராயங்களைச் சரியானவையென்று அவர் வாதிக்குங் காலையில், மற்றவர்களை விக்கிரகாராதனைக்காரரென்றும், நாஸ்திகரென்றும், அவருடைய வாழ்க்கைகள் பயனற்றவையென்றும், தமது சொந்த ஆசிரியர்களுடைய வாழ்க்கைகளுடையவும் உபதேசங்களுடையவும் தூய தன்மையையும் சுயநயமற்ற அழகையும் பற்றிப் பேசுகின்றனர். மெய்ப்பொருளை அளவுபடுத்த முடியாது; அஃது எந்த மனிதனுக்கும், எந்த ஆசிரியனுக்கும், எந்த தேசத்திற்கும் விசேஷ உரிமையுள்ளதாயிருக்க முடியாது; 'யான்' என்பது பிரவேசித்தபொழுது, மெய்ப்பொருள் இழக்கப்பட்டது.
முனிவன், ஞானி, இரக்ஷகன் இவருடைய பெருமை இது:- அவன் மிகமிகத் தாழ்ந்த தாழ்மையையும், மிகமிக உயர்ந்த சுயநய மின்மையையும் அடைந்துவிட்டான்; எல்லாவற்றையும், அவனுடைய சொந்த சரீரத்தையுங் கூட, அவன் துறந்துவிட்டமையால், அவனுடைய செயல்களெல்லாம் தூயவையாயும் நிலையுள்ளனவாயும் இருக்கின்றன; ஏனெனில், அவை 'யான்' என்பதன் எவ்வகை மாசும் நீங்கினவையாயிருக்கின்றன. அவன் பிறருக்குக் கொடுக்கிறான்: அவன் பிறரிடமிருந்து கொள்வதற்கு ஒருபோதும் நினைப்பதில்லை; சென்றதற்கு இரங்காமலும், வருவதை எதிர்பாராமலும் அவன் வேலை செய்கிறான்; அவன் ஒருபோதும் பிரதிப் பிரயோஜனத்தைப் பார்ப்பதில்லை.
விவசாயம் செய்வோம் தனது நிலத்தில் உழுது, உரம் போட்டு, விதை விதைத்தபொழுது, அவன் தான் செய்யக் கூடியவற்றையெல்லாம் செய்து விட்டானென்றும், தான் பஞ்சபூதங்களை நம்பியிருக்கவேண்டுமென்றும், தான் மகசூல் வருங்காலம் வரையில் பொறுமையாயிருக்க வேண்டுமென்றும், தான் எவ்வளவு ஆத்திரப்பட்டாலும் அது விளைவை எவ்வகையிலும் பாதிக்காதென்றும் அறிவான். அதே மாதிரியாக, மெய்ப்பொருளை உணர்ந்தவன் பலன்களை எதிர்பாராமல் நன்மை, தூய்மை, அன்பு, சாந்தி, என்னும் வித்துக்களை விதைத்துக்கொண்டே போகிறான்; உரிய காலத்தில் பலனைக் கொடுப்பதும் ஆக்கத்திற்கும் கேட்டிற்கும் மூலமாகிய அடக்கியாளும் பெரிய சக்தி இருக்கிறதென்பது அவனுக்குத் தெரியும்.
மனிதர் சுயநயமற்ற ஹிருதயத்தின் தெய்வ நேர்மையை அறியாது, தமது சொந்த இராக்ஷகனை ஒரு விசேஷ அவதார புருஷனென்றும், பொருள்களின் இயற்கைக்கு முற்றிலும் வேறுபட்டவனென்றும், அவனுடைய ஒழுக்க உயர்வு காரணமாக மனித வர்க்கத்தினரால் தீண்டப்படத் தகாதவெனென்றும் கருதுகின்றனர். மனிதன் தெய்வத் தன்மையில் பூரணத்துவம் அடையக் கூடுமென்பதிலுள்ள அவநம்பிக்கை, முயற்சியைத் தடுத்து, மனிதரின் ஆத்மாக்களைப் பாவஞ் செய்யும் படிக்கும் பலத்த கயிறுகளால் கட்டுகிறது. ஏசுநாதர் ''ஞானத்தில் வளர்ந்தார்;'' ''துன்ப அனுபவத்தால் பூரணத்துவம் அடைந்தார்.'' ஏசுநாதர் எஃதாயிருந்தாரோ அஃதேயானார்; புத்தர் பெருமான் எஃதாயிருந்தாரோ அஃதேயானார்; ஒவ்வொரு பக்தனும் தன்னைத் துறத்தற்காகச் செய்த இடைவிடாத முயற்சியால் அவ்வாறானான். இவ்வுண்மையை அறிந்துகொள்ளுங்ள்; ஜாக்கிரதையான முயற்சியாலும், நம்பிக்கையோடு கூடிய உழைப்பாலும், உங்களுடைய கீழ்மையான இயற்கையை விட்டு மேல் எழலாமென்று உணர்ந்துகொள்ளுங்கள்; நீங்கள் அடையக் கூடிய பதவியின் காட்சி பெரிதாகவும் பெருமை வாய்ந்ததாயும் இருக்கும். புத்தர் பெருமான் தாம் பூரணத்தத்துவத்தை அடையும் வரையில் தமது முயற்சிகளைத் தளர்த்துவதில்லையென்று உறுதி செய்து கொண்டார்; அவர் தமது காரியசித்தியை அடைந்தார்.
முனிவரும், ஞானிகளும், இரக்ஷகர்களும் அடைந்த சித்திகளை, அவர்கள் சென்ற வழியிலே, அஃதாவது தன்னைத் துறத்தலும், தன்னலம் மறுத்து ஊழியஞ் செய்தலுமாகிய வழியிலே செல்லுவீர்களாயின், நீங்களும் அடையலாம்.
மெய்ப்பொருள் மிக நேர்மையானது. அது, ''யான் என்பதை விட்டுவிடு; என்னிடம் வா; நான் உனக்கு அமைதியைத் தருகிறேன்" என்று கூறுகின்றது. அப்பொருளின்மேல் குவிக்கப்பட்டிருக்கிற வியாக்கியான மலைகளெல்லாம் ஒழுக்கத்தை உண்மையாக நாடிக்கொண்டிருக்கிற நெஞ்சத்தினின்று அதனை மறைக்க முடியாது. அதற்குக் கல்வி அவசியம் இல்லை; கல்வி இல்லாமலே அதனை உணரலாம். தவறிழைக்கும் தன்னை-நாடுகிற மனிதன் பல உருக்களைக் கொண்டிருந்தாலும், மெய்ப்பொருளின் அழகிய நேர்மையும் தெள்ளிய பிரகாசமும் மாறுபடாமலும் மங்காமலும் இருக்கின்றன; சுயநயமற்ற நெஞ்சம் அதன் ஒளிப் பிரதேசத்தில் புகுந்து அதன் ஒளியை அடைகின்றது. சிக்கலான கோட்பாடுகளை உண்டுபண்ணுவதனால், நிச்சயமற்ற தர்க்கங்களைச் செய்வதனால், மெய்ப்பொருளை அடைய முடியாது; அகத் தூய்மையை உண்டுபண்ணுவதனால், மாசற்ற வாழ்க்கையை நடத்துவதனால், மெய்ப்பொருளை அடையக் கூடும்.
இத் தூய நெறியில் செல்லுகிற மனிதன் தனது காமக் குரோதங்களை அடக்கத் தொடங்குகிறான். இதுதான் ஒழுக்கம்; முனித்தன்மையின் தொடக்கம். முனித்தன்மை தூய்மையின் தொடக்கம்; உலக வாழ்க்கை¨யே பற்றியுள்ள மனிதன், தனது விருப்பங்களையெல்லாம் அனுபவிக்கிறான்; தான் வாழும் நாட்டின் சட்டத்திற்கு மாத்திரம் கீழ்ப்படிந்து நடக்கிறான்; ஒழுக்கமுள்ள மனிதன் தனது காமக் குரோதங்களை அடக்குகிறான்; முனிவன் தன் சொந்த அகத்துள்ளே மெய்ப்பொருளின் விரோதியாகிய 'யான்' என்பவனை அவனுடைய பலத்த அரணிலேயே தாக்கி எவன் சுயநல அசுத்த நினைப்புக்களையும் அடக்குகிறான்; எவன் காமக் குரோதங்களையும் அசுத்த நினைப்புக்களையும் விட்டு, மலரானது மணத்தையும் நிறத்தையும் தனக்கு இயற்கையாகக் கொண்டிருத்தல் போல, நன்மையையும், தூய்மையையும் தனக்கு இயற்கையாகக் கொண்டுள்ளானோ, அவனே தூய மனிதன். தூய மனிதன் தெய்வஞானத்தைக் கொண்டிருக்கிறான்; அவன் மாத்திரம் மெய்ப்பொருளைப் பூரணமாக உணர்ந்து, நிலையான அமைதியிலும் சாந்தியிலும் அமர்ந்திருக்கிறான். அவனினின்று தீமைய¦ன்பது நீங்கிவிட்டது; அது சர்வ நன்மையாகிய சர்வவியாபக ஒளியில் மறைந்துவிட்டது. தூய்மையானது ஞானத்தின் அடையாளம். அர்ஜுனனுக்குக் கிருஷ்ண பகவான் பின்வருகிறபடி உபதேசித்தார்:-
''அடக்கம், வாய்மை, அஹிம்சை, பொறுமை,
தகுதி, ஞானிகள்; தம்மை மதித்தல்.
தூய்மை, தன்னிலை மாறா திருத்தல்,
பொறியின் பத்தை அடியோ டிகழ்தல்,
தன்னை அடக்கல், தன்னைத் துறத்தல்,
ஜனனம், மரணம் முதுமை, வியாதி,
பாவம், துயர்களில் தீமையைப் பார்த்தல்,
நல்ல விதியிலும், தீய விதியிலும்
அமைதி யுடைய அகத்தோ டிருத்தல்,
பூரண ஆன்மக் காட்சியை அடைய
அசையா முயற்சிகள் அனுதினம் செய்தல்
அதனை அடைதலால் ஆம்பயன் அறிதல்,
இவையே ஞானம்: இவையில் லாமையே
அஞ்ஞனாம் என்றே அறிகஇள அரசே.''
எவன் தனது சொந்த சுயநயத்திற்கு விரோதமாக இடைவிடாது சண்டை செய்து, அதற்குப் பதிலாக எல்லாவற்றையும் தழுவும் பேரன்பை நிலைநாட்ட முயற்சிக்கிறானோ, அவன் ஒரு குடிசையில் வசித்தாலும் சரி; செல்வங்களோடும் செல்வாக்கோடும் வசித்தாலும் சரி, பிறருக்கு உபதேசித்தாலும் சரி; உண்மை முனிவனாவன்.
மேலான காரியங்களைக் கோருவதற்குத் தொடங்குகிற லௌகிகர்களுக்கு ஆஸிஸி நகரின் பிரான்ஸிஸ் என்னும் இனிய முனிவர், அல்லது அந்தோணி என்னும் வெற்றிப் பிரதாப முனிவர், மனோவுணர்ச்சியை உண்டு பண்ணுகிற ஒரு பெரியாராகத் தோன்றுகிறார். அம்முனிவருக்கு, ஆசை அணுகாதவராய், பாவத்தையும் துக்கத்தையும் வென்றவராய், சாந்தியோடும் பக்தியோடும் இருக்கிற ஞானியானவர் ஆனந்தத்தை உண்டுபண்ணும் ஒரு பெரியாராகத் தோன்றுகிறார்; தம்முடைய அறிவைச் சுயநயமற்ற வேலைகளில் ஊக்கத்தோடு உபயோகித்துக்கொண்டு, துக்கத்தால் துடித்து மேற்செல்லக் கோருகிற மனித வர்க்கத்தினர்களின் அகங்களுள் அமிழ்த்து அவர்களுக்கு நன்மை செய்வதற்காகத் தமது தெய்வத் தன்மையின் வலிமையை உபயோகிக்கிற இரக்ஷகர், ஞானியினும் அதிகப் பெருமை வாய்ந்தவராக விளங்குகிறார்.
உண்மையான உழியமாவது, எல்லாரையும் நேசிப்பதில் தன்னை-மறத்தலும், எல்லாருக்கும் வேலை செய்வதில் தன்னை-இழத்தலுமே, பொய்ப் பொருள்களைப் பற்றிக்கொண்டு உன்னைப் பற்றியும், உன் வேலையைப் பற்றியும், உனது பல தியாகங்களைப் பற்றியும், உனது சிறந்த தலைமையைப் பற்றியும் உரத்துப் பேசுகிற, உனது பல செயல்கள் உன்னைக் காப்பாற்றுமென்று நினைத்துக் கொண்டிருக்கிற வீணனே! மூடனே! இந்த விஷயத்தைத் தெரிந்து கொள்வாயாக; உனது புகழ் இவ்வுலகமெல்லாம் பரவியிருந்தாலும், உனது செயல்களனைத்தும் வெறுந்தூளாய்ப்போம், நீ மெய்ப் பொருள் இராஜ்யத்தில் அற்பனிலும் அற்பனாய்க் கருதப்படுவாய்.
'யான்' என்பது இல்லாதவனுடைய செயல்களே நிலை நிற்கும்; 'யான்' என்பவனுடைய செயல்கள் சக்தியற்றவை, அழியக்கூடியவை. கடமைகள் எவ்வளவு தாழ்ந்தவையாயிருந்தாலும், அவற்றைச் சுயநயம் இன்றியும் சந்தோஷத்தோடும் செய்தபொழுது, அஃது உண்மையான ஊழியமும் அழியாத வினையும் ஆகின்றது. செயல்கள் எவ்வளவு உயர்ந்தவையாகவும் வெற்றிகரமாகவும் தோன்றினாலும், தன்னைப்பற்றிய அன்பு காரணமாகச் செய்யப்பட்ட இடத்தில், ஊழியச் சட்டத்தின் அஞ்ஞானம் இருக்கிறது. அவ்வாறு செய்யப்பட்ட செயல்கள் அழிந்து போகின்றன.
உலகத்தாருக்கு ஒரு பெரிய தெய்வ பாடம் கொடுக்கப்பட்டிருக்கிறது; அப் பாடமாவது ஒரு சிறிதும் சுயநயம் இல்லாததன்மை. பல காலங்களில் தோன்றிய முனிவரும், ஞானிகளும், இரக்ஷகரும் இப்பாடத்தைப் படித்துக் கற்றுத் தேர்ச்சியடைந்தவர்களே. உலகத்திலுள்ள சகல மதவேதங்களும் இந்த ஒரு பாடத்தைக் கற்பிப்பதற்காகவே இயற்றப்பட்டுள்ளன; எல்லாப் பேராசிரியர்களும் இப்பாடத்தையே திருப்பித் திருப்பிச் சொல்லுகிறார்கள். இப் பாடத்தைக் கற்றுக்கொள்ளுதல் உலகத்தாருக்கு மிக மிக எளிது; அப்படியிருந்தும் உலகத்தார் இப்பாடத்தை இகழ்ந்து, சுயநயத்தின் சிக்கலான வழிகளிற் சென்று தடுமாறுகிறார்கள்.
ஒரு தூய அகம், சகல மதங்களின் முடிவும், கடவுட்டன்மையின் தொடக்கமும் ஆகும். இவ் அகத்தூய்மையாகி ஒழுக்கத்தை நாடுதல், மெய்ப்பொருட்கும் சாந்திக்கும் நெறியாகும். இந்த வழியில் செல்லுகிறவன், பிறப் பிறப்புக்களுக்கு அப்பாற்பட்ட அழியாப் பொருளை விரைவில் கண்டு, பிரபஞ்சத்தைப் பற்றிய கடவுட்கணக்கில் மிகமிகத் தாழ்ந்த முயற்சியும் விடப்பட மாட்டாதென்பதை உணர்வான்.
ஒரு கிருஷ்ண பகவானுடைய ஒரு கௌதம முனிவருடைய, அல்லது ஓர் ஏசுநாதருடைய தெய்வத்தன்மை தன்னைத் துறத்தலின் பெருமை வாய்ந்த கிரீடமும், ஸ்தூல உலகத்திலும் மரணத்திலும் ஆத்மா செய்த யாத்திரையின் முடிவும் ஆகும். ஒவ்வோர் ஆத்மாவும் அம்மூவரையும் போலாகி, தனது தெய்வத் தன்மையின் ஆனந்தத்தை அனுபவிக்கும் வரையில், உலகம் தனது நிண்ட யாத்திரையை முடித்ததாகாது.
இடைவிடா முயற்சியால் எய்திய வுணர்ந்த
நிலைகள்மேல் பெருமைகள் நிலவிநின் றிடும்காண்;
அரிய செயல்களை ஆற்றிய நரைத்த
தலையினைச் சுற்றுறும் புணிதநன் மதிப்பு;
பொன்னின் ஊதிய நன்னெறி தன்னில்
செல்வோன் தனக்குச் செல்வங்கள் வந்துறும்;
மேதைமை ஒளிரும் மூளை தன்னொடு
வினைசெய்வோனை மேவிடும் நற்புகழ்;
மிகைக்கும் தனக்கும் விரோத மாகும்
புரியும் இரத்தம் இலாத அமரில்
அன்புகர் ரணமா ஆருயிர் ஈயும்
மனிதனை மன்னும் மிகப்பெருங் கீர்த்தி;
தன்னை வணங்கும் கண்ணிலா மாந்தரின்
இகழ்ச்சிக ளூடே முட்கிரீ டத்தை
ஏற்கும் மனிதனின் எழிற்புரு வத்தை
மிகமிக ஒள்ளிய மதிப்புகள் சுற்றும்;
மனித உயிர்களுக் கினிமை நல்கிட
அன்பும் வாய்மையும் ஆகிய நெறிகளில்
நடக்க முயலும் நல்ல மனிதனை
சிறந்த தூய செல்வங்கள் நண்ணும்,
மனிதர் களுக்கு நனிநல் லூழியம்
புரிவோன் அழியும் புகழினைக் கொடுத்தே
ஒளிரும் சுவர்க்க உடையுடன் ஒளியும்,
இன்பமும், சாந்தியும் எய்துகின் றனனே.
7. பூரண சாந்தியை அடைதல்
புறப் பிரபஞ்சத்தில் இடைவிடாத குழப்பமும், மாறுதலும், அமைதியின்மையும் இருக்கின்றன; எல்லாப் பொருள்களின் அகத்திலும் கலைக்கப்படாத சாந்தி இருக்கிறன்றது; இவ்வாழ்ந்த மௌனத்தில் மெய்ப்பொருள் வசிக்கின்றது.
மனிதன் இவ்விரட்டைத் தன்மையைக் கொண்டிருக்கிறான். புற அமைதியின்மையும் ஆழ்ந்த நித்திய சாந்தியும் ஆகிய இரண்டும் மனிதனுள் இருக்கின்றன.
மிகமிகக் கொடிய புயல்காற்றும் செல்ல முடியாத மௌன ஆழங்கள் சமுத்திரத்தில் இருப்பதுபோல, பாவமும் துக்கமுமாகிய புயல் காற்றுக்கள் ஒருபோதும் கலைக்க முடியாத தூய மௌன ஆழங்கள் மனிதனுடைய அகத்தில் இருக்கின்றன; இந்த மௌனத்தை அடைந்து அதில் அறிவோடு வாழ்தலே சாந்தி.
புற உலகத்தில் வேற்றுமை நிறைந்திருக்கிறது; ஆனால், பிரபஞ்சத்தின் அகத்தில் உடைக்கப்படாத ஒற்றுமை நிறைந்திருக்கிறது. மனித ஆத்மா, வேற்றுமையான மனோவெழுச்சியாலும் துயரத்தாலும் கிழக்கப்பட்டு, பாவமற்ற நிலைமையாகிய ஒற்றுமைக்குக் குருட்டுத்தனமாகப் போய்ச் சேர்கின்றது; இந்த நிலைமையை அடைந்து, அதில் அறிவோடு வாழ்தல்தான் சாந்தி.
வெறுப்பு மனித உயிர்களைப் பிரித்து, துன்பப்படுத்தலை வளர்த்து, தேசங்களைக் கொடுமையான யுத்தத்தில் புகுத்தி விடுகின்றது. அப்படியிருந்தும், மனிதர் எல்லாவற்றையும் தழுவிக்கொண்டிருக்கிற ஒரு பூரண அன்பின் இடத்தில் ஒரு சிறிய அளவு நம்பிக்கை மாத்திரம் உடையவராயிருக்கின்றனர்; இதற்குரிய காரணம் அவருக்குத் தெரிவதில்லை, இந்த அன்பை அடைந்து, அதில் அறிவோடு வாழ்தல்தான் சாந்தி.
இந்த அகச்சாந்தி, இந்த மௌனம், இந்த ஒற்றுமை, இந்த அன்பு தேவராஜ்யம்; இந்த இராஜ்யத்தைச் சேர்தல் மிகக் கஷ்டமாயிருக்கிறது; ஏனெனில், தன்னைத் துறந்து சிறு குழந்தைகள்போல் ஆவதற்குச் சித்தமாயிருக்கிறவர் ஒருவரும் இல்லை.
மூத்தி வீட்டின் சித்திர வாயில்
மிகவொடுங் கியது; சிறியது; அதனை
உலகப் பிராந்தியால் குருடரா யுள்ள
மூட மனிதரால் காணமுடி யாது;
வாயிலைக் கண்டுளே போக நாடும்
கூரிய பார்வை யாளரும் வாயில்
கதவுதாழ் இடப்பட் டிருப்பதும், திறக்க
முடியா ததுவும் நனிகாண் கின்றனர்;
கதவினுட் புறமுள கனத்த தாழ்கள்
அவா தற் பெருமை, பேராசை, காமமே.
சாந்தி! சாந்தி! என்று மனிதர் சத்தம் இடுகின்றனர்; ஆனால், அதற்கு எதிராக வேற்றுமையையும், அமைதியின்மையையும், சச்சரவையும் காண்கின்றனர். தன்னைத் துறத்தலினின்று பிரிக்க முடியாத ஞானத்திற்கு வேறாக உண்மையானதும் நிலைநிற்கத் தக்கதுமான சாந்தி இருக்க முடியாது.
ஜன சமூக சௌகரியங்களாலும், கணத்திற் கழிந்துபோம் சிற்றின்பங்களாலும், லௌகிகக் காரியங்களின் வெற்றிகளாலும் உண்டாகும் சாந்தி அதன் இயற்கையிலேயே நிலையற்றது; ஆபத்துக் காலத்தில் அழிந்து போகின்றது. முத்தியின் சாந்தி மாத்திரம் எல்லா ஆபத்துக்களிலும் அழியாது நிலை நிற்கின்றது; சுயநயமற்ற அகம்மாத்திரம் முத்தியின் சாந்தியை அடையக்கூடும்.
தூய்மை ஒன்றே அழியாத சாந்தி; தன்னை-அடக்கல் அதற்கு வழி; மேன்மேலும் வளர்ந்துகொண்டிருக்கிற ஞான ஒளி யாத்திரிகனை அவன் வழியில் நடத்துகின்றது. ஒழுக்க நெறியில் பிரவேசித்த உடனே அவ்வொளி சிறிது அடையப்படுகின்றது; ஆனால், அது 'யான்' என்பது ஒழிந்து ஒரு மாசற்ற வாழ்க்கையிலே பூரணமாக அடையப்படுகின்றது.
தன்னைநே சிக்கும் தவறையும் வாழ்க்கையிற்
கொண்டுள ஆசைக் கூறையும் வெல்லலும்,
ஆழ்ந்தகா மத்தை அகத்தைவிட் டோட்டலும்,
அகச்சச் சாவை அகத்தினின் றகற்றலும்
உண்மைச் சாந்தியை உண்டாக் கும்மே.
வாசிப்பவர்களே! ஒருபோதும் மங்காத ஒளியையும், ஒருபோதும் முடிவுறாத ஆனந்தத்தையும், அசைக்க முடியாத சாந்தியையும் அனுபவிக்க விரும்புவீர்களாயின், உங்கள் பாவங்களையும், உங்கள் துக்கங்களையும், உங்கள் கவலைகளையும், உங்கள் குழப்பங்களையும் அடியோடு விட விரும்புவீர்களாயின், இவ்விரக்ஷ¢ப்பையும், இவ்வுயர்ந்த பெருமை பொருந்திய வாழ்க்கையையும் அடைய விரும்புவீர்களாயின், உங்களை நீங்கள் வெல்லுங்கள். ஒவ்வொரு நினைப்பும், ஒவ்வொரு மனோவெழுச்சியும், ஒவ்வொரு விருப்பமும் உங்களுள் வசிக்கின்ற தெய்வ சக்திக்குப் பூரணமாகக் கீழ்ப்படியுமாறு செய்யுங்கள். இதைத்தவிரச் சாந்திக்கு வேறு வழி இல்லை; இதன் மூலமாக நடப்பதற்கு நீங்கள் மறுப்பீர்களாயின், நீங்கள் அதிகமாகச் செய்யும் பிரார்த்தனையும், நீங்கள் மதச் சடங்குகளைச் சரியாகச் செய்தலும், பயனற்றவையும் உபயோக மற்றவையாயும் தீரும். தேவர்களாவது, தேவ தூதர்களாவது உங்களுக்கு உதவி செய்ய முடியாது. 'யான்' என்பதை வென்றவனுக்கு மட்டும்தான் அவனுடைய புதியதும் அழியாததுமான பெயர் எழுதப்பட்ட நல்ல வாழ்க்கை நல்கப்படுகின்றது.
புறப்பொருள்களிலிருந்து, பொறியின்பங்களிலிருந்து, புத்திவாதங்களிலிருந்து, உலகக் கிளர்ச்சிகளிலும் சந்தடிகளிலுமிருந்து, சிறிதுநேரத்திற்கு வெளியே வாருங்கள், உங்கள் அகங்களின் உள்ளுள்ளேயிருக்கிற அரங்குட் செல்லுங்கள்; அங்கே சகல சுயநய விருப்பங்களின் அசுத்தப் பிரதேசங்களினின்றும் விடுபட்டு ஒர் ஆழ்ந்த மௌனத்தை, ஒரு துய அமைதியை ஓர் இன்பகரமான வாழ்வைக் காண்பீர்கள்; அந்தத் தூய இடத்தில் நீங்கள் சிறிது நேரம் ஒய்வாயிருந்து தியானம் செய்வீர்களாயின், மெய்ப்பொருளின் குற்றமற்ற ஞானக்கண் உள்ளுள்ளே திறக்கும்; பொருள்களையெல்லாம் அவற்றின் உண்மையான தன்மையில் நீங்கள் பார்ப்பீர்கள். உங்கள் உள்ளேயிருக்கிற இந்தத் தூய இடம். உங்களுடைய உண்மையான அழிவில்லாத ஆத்மா. அஃது உங்கள் உள்ளே இருக்கிற தெய்வம்; நீங்கள் அதுவானபோது, "சரியான மன உடையைத் தரித்திருக்கிறீர்கள்" என்று சொல்லப்படுவீர்கள். அதுதான் சாந்தியின் வீடு; ஞானத்தின் கோவில்; மரணமின்மையின் வாசஸ்தானம். இந்த உள்நோக்கிய ஓய்விடத்திற்கு, உண்மைக்காட்சி மலைக்கு வேறாக உண்மைச் சாந்தியாவது, மெய்ஞ்ஞானமாவது இருக்க முடியாது. அந்த இடத்தில் நீங்கள் ஒரு நிமிஷம், ஒரு மணி, ஒரு நாள் தங்கமுடியுமானால், அங்கு நீங்கள் எக்காலத்திலும் தங்கியிருக்க முடியும்.
உங்களுடைய சகல பாவங்களும் துக்கங்களும், உங்களுடைய சகல அச்சங்களும் கவலைகளும் உங்களுக்கே சொந்தமானவை; அவற்றை நீங்கள் பற்றிக்கொண்டிருக்க அல்லது விட்டுவிட முடியும். உங்கள் சொந்த விருப்பப்படி உங்கள் அமைதியின்மையைப் பற்றிக் கொள்ளுங்கள்.; அல்லது உங்கள் சொந்த விருப்பப்படி நிலையான சாந்தியை அடையுங்கள். பாவத்தை உங்களுக்காக வேறொருவர் விட முடியாது; அதனை நீங்கள்தான் விடவேண்டும். மிகமிகப் பெரிய ஆசிரியரும் தமக்காக மெய்ப்பொருள் வழியில் நடப்பதையும், அவ்வழியை உங்களுக்குக் காட்டுவதையும் தவிர அதிகமாக ஒன்றும் செய்யமுடியாது; உங்களுக்காக நீங்கள்தான் அவ்வழியில் நடக்கவேண்டும். சாந்தத்தைக் கெடுப்பதும், ஆத்மாவைப் பந்தப்படுத்தி யிருப்பதுமான கட்டை உங்கள் சொந்த முயற்சிகளாலே அவிழ்த்து, நீங்கள் விடுதலையும் சாந்தியும் அடைய முடியும்.
தெய்வ சாந்தி, தெய்வ ஆனந்தம். இவற்றின் தேவ தூதர்கள் உங்கள் பக்கத்திலே எப்பொழுதும் இருக்கிறார்கள்; நீங்கள் அவர்களைக் காணாததற்கும், அவர்கள் பேச்சைக் கேளாததற்கும், அவர்களோடு வசியாததற்கும் காரணம், நீங்கள் அவர்களினின்று ஒளிந்துகொண்டு, உள்ளத்திலிருக்கிற தீய பிசாசுகளின் கூட்டுறவை விரும்புவதே.
நீங்கள் எவ்வாறிருக்க ஆசை கொண்டுள்ளீர்களோ, நீங்கள் எவ்வாறிருக்க விரும்புகிறீர்களோ, நீங்கள் எவ்வாறிருக்கக் கோருகிறீர்களோ, அவ்வாறிருக்கின்றீர்கள். உங்களைத் தூய்மைப்படுத்த நீங்கள் தொடங்கலாம்; அவ்வாறு செய்வதனால் நீங்கள் சாந்தியை அடையலாம். அல்லது உங்களைத் தூய்மைப்படுத்த நீங்கள் மறுக்கலாம்; முன்போலவே துன்பத்தை அனுபவதித்துக் கொண்டிருக்கலாம்.
நீங்கள் புறப்படுங்கள்; வாழ்க்கையின் காய்ச்சலையும் எரிச்சலையும் விட்டு வெளியே வாருங்கள்; 'யான்' என்பதன் சுடுகிற வெப்பத்தை விட்டு வெளியேறுங்கள்; உங்களை அமைதிப்படுத்தி, புதுப்பித்து, மீட்டும் சாந்தியின் காற்றுக்கள் வீசுகின்ற அகத்தின் அமைதியிடத்துள் புகுங்கள்.
பாவமும் துன்பமுமாகிய புயல்களை விட்டு வெளியே வாருங்கள். சாந்தியாகிய முத்தி வீடு அவ்வளவு சமீபத்தில் இருக்கும்போது, ஏன் தொந்தரவுப் படுகின்றீர்கள்? புயலிற் சுழலுகின்றீர்கள்?
தன்னை நாடுதலையெல்லாம் விட்டு விடுங்கள்; தன்னை விட்டு விடுங்கள், உடனே கடவுட் சாந்தி உங்களுடையதாய் விட்டது.
உங்களுள் இருக்கிற மிருகத்தைக் கீழ்ப்படுத்துங்கள்; ஒவ்வொரு சுயநய எழுச்சியையும் ஒவ்வொரு வேற்றுமைச் சொல்லையும் வெல்லுங்கள்; உங்களுடைய சுயநய சுபாவத்தின் தாழ்ந்த உலோகங்களை அன்பாகிய கலப்பற்ற தங்கமாக மாற்றுங்கள்; பூரண சாந்தி வாழ்க்கையை நீங்கள் அடைவீர்கள். வாசகர்களே! இவ்வாறு கீழ்ப்படுத்தி வென்று, மாற்றி, நீங்கள் ஸ்தூல சரீரத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் போதே மரணமாகிய கருங்கடலைக் கடந்து துக்கப் புயல்கள் ஒருபோதும் அடியாத, பாவமும், துன்பமும், சந்தேகமும் அணுகாத கரையை அடைவீர்கள். அந்தக் கரைமீது தூய்மை, இரக்கம், விழிப்பு, தன்னடக்கம், முடிவற்ற சந்தோஷம் இவற்றோடு நின்றுகொண்டு, நீங்கள்,
"என்றும் ஆத்மா பிறந்த தில்லை;
என்றும் ஆத்மா இலாதுபோ காது;
அஃதிலாக் காலம் இலதொரு போதும்;
தொடக்கமும் முடிவும் சொப்பனம் தாமே
பிறப்பும் மாற்றமும் இறப்பும் இன்றி
என்றும் ஆத்மா இருக்கின் றதுகாண்!
அஃதுறை வீடிவண் அழிந்ததாத் தோன்றிலும்
அஃதொரு போதும் அழிந்த தில்லையே''
என்று அறிவீர்கள்.
அப்போது, நீங்கள் பாவம், துக்கம், துன்பம் என்பவற்றின் அர்த்தத்தையும், அவற்றின் அந்தம் ஞானம் என்பதையும் அறிவீர்கள்! இறப்பின் காரணத்தையும் காரியத்தையும் அறிவீர்கள்.
இவ்வறிவுடன் நீங்கள் ஓய்வில் புகுவீர்கள். இதுதான் அழியாத ஆனந்தம்; இதுதான் மாறாத சந்தோஷம்: இது தான் தடையற்ற அறிவு; மாசற்ற ஞானம்; இறவாத அன்பு இது. இது மாத்திரமே, பூரண சாந்தி அனுபவம்.
மெய்ப்பொருள் உணர்ந்த மேலோர் களுக்குக்
கற்பிக்க விரும்பும் கருத்துடை யீரே!
ஐயம் என்னும் அரும்பா லையில்நீர்
நடந்து சென்று கடந்துவிட் டீரா?
துக்க நெருப்பால் தூயரா யினீரா?
அபிப்பி ராய அலகையை இரக்கம்
மனத்தி னின்று துரத்தி விட்டதா?
பொய்நினைப் புக்கள் புகுந்தொளி யாவகை
நும்முடை ஆன்மா நல்லதா யிற்றா?
அன்பைக் கொண்ட அறிவுடை யோர்க்குக்
கற்பிக்க விரும்பும் கருத்துடை யீரே!
ஏங்கி யழுதிடும் இடத்தில் நீவர்
நடந்து சென்று கடந்துவிட் டீரா?
வியாகுலம் என்னும் இருளிராத் திரியில்
அழுது நொந்துநீர் அதுகழித் தீரா?
மிகையும் வெறுப்பும் இடைவிடாப் பாரமும்
கொண்டு வருந்தும் குவலய மக்களைக்
கண்டுளம் உருகிநீர் கருணையுற் றீரா?
சாந்தி யடைந்த மாந்தர் தமக்குக்
கற்பிக்க விரும்பும் கருத்துடை யீரே!
சச்சர வென்னும் மிக்க அகன்ற
கடலினை நீவிர் கடந்துவிட் டீரா?
மோனக் கரையில் வாழ்க்கையின் கொடிய
அமைதி யின்மையை அறிந்துநீர் விடுதலை
பெற்றுவிட்டீரா? பெரியநும் அகத்தில்
வருந்துத லெல்லாம் மாய்ந்தொழிந் தனவா?
வாய்மையும் அன்பும் சாந்தியும் நிற்கவே!
சாந்திக்கு மார்க்கம் முற்றிற்று.
This file was last updated on 24 November 2013.
Feel free to send corrections to the webmaster.