தீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள் :
சமுதாய வீதி
(இந்திய அரசின் சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நாவல்)
camutAya vIti ( novel)
of nA. pArtacArati
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to Mr. G. Chandrasekaran of Chennailibrary.com and
Gowtham Pathippagam for providing us with a e-copy of this work and permission
for its inclusion as par of the Project Madurai etext collections.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2013.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
தீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள் :
சமுதாய வீதி
(இந்திய அரசின் சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நாவல்)
Source
சமுதாய வீதி
(இந்திய அரசின் சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நாவல்)
நா. பார்த்தசாரதி (மணிவண்ணன்)
தமிழ்ப் புத்தகாலயம்
தி. நகர், சென்னை 600017
பதிமூன்றாம் பதிப்பு, மார்ச் 1999
சமுதாய விதி (வரலாற்றுப் புதினம்)
நா. பார்த்தசாரதி
அத்தியாயம் - 1
பட்டினத்திற்கு வந்தபின் அவனுடைய வாழ்வு மாறித்தானாக வேண்டியிருந்தது. கந்தசாமி வாத்தியாரின் கானாமுத நடன விநோத நாடக சபாவில் பாடல்களும், வசனமும் எழுதிச் சமயா சமயங்களில் - மேடையேறி நடித்தும் வந்த காலத்தில் அவனுடைய வாழ்க்கையில் இவ்வளவு வேகமுமில்லை, பிரகாசமுமில்லை. மதுரையிலும் சென்னையிலும் வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகள் இவ்வளவு வேறுபடக் காரணம் என்னெவன்று சிந்திப்பதற்கு வேண்டுமானால் இடம் இருக்கலாம். வெளிச்சம் அதிகமாக இருக்கிற இடத்தில் சிறிய வாழ்வு கூடப் பெரியதாகத் தெரியலாம்; வெளிச்சம் குறைவாயிருக்கிற இடத்தில் பெரிய வாழ்வு கூடச் சிறிதாய் மங்கிப் போகலாம்.
"வெளிச்சம்தானா வாழ்வு?" என்று கேட்டுப் பயனில்லை. பட்டினத்தில் சூரியனின் வெளிச்சம் மட்டும் வாழப் போதாது. மனிதன் போடுகிற அல்லது மனிதைனச் சுற்றிப் போடப்படுகிற வெளிச்சேம சில சமயங்களில் சூரியனின் வெளிச்சத்தைவிடப் பெரிதாயிருக்க வேண்டிய அவசியம் இங்கு உண்டு.
மதுரை கந்தசாமி வாத்தியாரின் கானாமுத நடன விநோத நாடக சபாவில் இருந்தேபாது அவனுடைய முழுப் பெயர் முத்துக்குமாரசாமிப் பாவலர். 'நாடக சபா' கைலக்கப்பட்டுப் பட்டினத்துக் கைலயுலகத்தில் பஞ்சம் பிழைக்க வந்த ஆளாக நுழைந்தேபாது வாழ்க்கை வசதிகள் சுருங்கியது போலேவ பெயரும் சுருங்க வேண்டிய நியதிக்கு அவன் தலை வணங்கியாக வேண்டியிருந்தது.
'முத்துக்குமரன்' - என்ற பெயர் நாகரிகமாகேவ தோன்றியது அவனுக்கும் மற்றவர்களுக்கும். சேத்தூர், சிவகிரி ஜமீன்தார்களை அண்டிப் பிழைத்த அவன் முன்னோர்கள் வேண்டுமானால் 'அகடவிகட சக்ர சண்டப்பிரசண்ட ஆதிகேசவப் பாவலர்' - என்பது போன்ற நீண்ட பெயர்களை விட்டுக் கொடுக்கவும் குறைக்கவும் அஞ்சியிருக்கலாம். ஆனால், இன்று இந்த நூற்றாண்டில் அவனால் அப்படி வாழ முடியவில்லை. பாய்ஸ் கம்பெனி மூடப்பட்டுப் பத்து மாதம் மதுரையில் ஒரு பாடப் புத்தகக் கம்பெனியில் சந்தியும், குற்றியலுகரமும் திருத்தித் திருத்திப் புரூஃப் ரீடராக உழன்ற பின் நாடகத்தின் மூத்த பிள்ளையாகிய சினிமா உலகத்தைத் தேடிப் பட்டினத்துக்குத்தான் ஓடி வந்தாக வேண்டியிருந்தது அவன்.
மதுரையிலிருந்து முத்துக்குமரன் - பட்டினத்துக்கு ரயிலேறியேபாது - அவனிடம் சில அசௌகரியங்களும் இருந்தன - சில சௌகரியங்களும் இருந்தன. அசௌகரியங்களாவன;
பட்டினத்துக்கு அவன் புதிது; முகஸ்துதி செய்ய அவன் பழகியிருக்கவில்லை. அவனிடம் யாருக்கும் அறிமுகக் கடிதேமா சிபாரிசுக் கடிதேமா இல்லை. கையிலிருந்த பணம் நாற்பத்து ஏழு ரூபாய்தான். கைலயுலகத்துக்கு மிகுந்த தகுதியாகக் கருதப்பட்ட எந்தக் கட்சியிலும் அவன் உறுப்பினேரா, அநுதாபியோ இல்லை. சௌகரியங்களாவன :
ஆனால் முத்துக்குமரனுக்கோ மழையில் நனைந்த பட்டினம் மிகமிக அழகாகத் தெரிந்தது. நீராடி நனைந்த புடைவேயாடு நாணிக் கோணித் தயங்கி நிற்கும் ஒரு சுந்தரியைப் போல் அன்று சென்னை அழகாயிருப்பதாக அவனுக்குத் தோன்றியது. புகை போன்ற மேக மூட்டத்தில் கட்டிடங்களும், சாலைகளும், மரங்களும் மங்கலாகத் தெரிந்தன.
அதிகம் நனைந்து விடாமல் போய்ச் சேர வசதியாக எழும்பூர் நிலையத்துக்கு நேர் எதிரே இருந்த ஒரு லாட்ஜில் போய் இடம் பிடித்துத் தங்கினான் முத்துக்குமரன்.
முன்பு அவேனாடு நாடக சபாவில் ஸ்திரீ பார்ட் போட்ட பையன் ஒருவன் அப்போது சென்னையில் பெரிய நடிகனாக இருந்தான். கோபாலசாமி என்ற பெயருடைய அவனுக்கு இப்போது 'கோபால்' என்று பெயர் சுருங்கியிருந்தது. குளித்து உடை மாற்றிக் கொண்டு காபி குடித்த பின் கோபாலுக்கு ஃபோன் செய்ய எண்ணியிருந்தான் அவன்.
அந்த லாட்ஜில் எல்லா அறைகளிலும் டெலிபோன் கிடையாது. லாட்ஜ் ரிஸப்ஷனில் மட்டுமே ஃபோன் உண்டு. தன்னுடைய காரியங்களை எல்லாம் முடித்துக் கொண்டு அவன் ஃபோனுக்காக ரிஸப்ஷனுக்கு வந்த போது மணி காலை பதினொன்றாகியிருந்தது.
டெலிபோன் டைரக்டரியில் எவ்வளேவா தேடியும் நடிகன் கோபாலின் நம்பர் கிடைக்கவில்லை. கைடசியில் வேறு வழியில்லாமல் போகேவ ரிஸப்ஷனில் உட்கார்ந்திருந்த ஆளிடம் கோபாலின் நம்பரைப் பற்றிக் கேட்டான் முத்துக்குமரன்.
அவன் தமிழில் கேட்ட கேள்விக்கு அவர் இங்கிலீஷில் பதில் கூறினார். சென்னையில் அவன் இந்தப் புதுமையைக் கண்டான். தமிழில் கேட்பவர்களுக்கு ஆங்கிலத்தில் பதில் சொல்பவர்களும், ஆங்கிலத்தில் கேட்பவர்களுக்குத் தமிழில் மட்டுமே பதில் சொல்லத் தெரிந்தவர்களுமாகக் கிடைத்தார்கள். நடிகன் கோபாலின் நம்பர் டெலிபோன் டைரக்டரியில் 'லிஸ்ட்' செய்யப்பட்டிராது என்பது அவர் கூறிய பதிலிலிருந்து அவனுக்குத் தெரிந்தது. சில விநாடிகளுக்குப் பின் டெலிபோன் மூலேம விசாரித்து அந்த நம்பரை அவனுக்குத் தெரிவித்தார் ரிஸப்ஷனில் இருந்தவர். சென்னைக்கு வந்தவுடன் ஒவ்ெவாரு விநாடியும் அந்த விநாடியின் நிலைமைக்குத் தகுந்தாற்போல் தன்னை மாற்றிக் கொள்ள வேண்டியிருப்பைத அவன் உடனடியாக உணர்ந்தான். விநாடிகளைத் தனக்குத் தகுந்தாற்போல மாற்றிக் கொள்கிற பழக்கமான வாழ்விலிருந்து விநாடிகளுக்குத் தகுந்தாற்போலத் தானே மாறேவண்டிய வாழ்வுக்கு இறங்குவது சிறிது சிரமமாகத்தான் இருந்தது. அவன் யாருடைய ஃபோன் நம்பரை விசாரித்தானோ அந்தப் பெயரிலிருந்து பிறந்த மரியாதையும் பிரமிப்பும் உந்த, அவன் மேலும் சிறிது மரியாதையைச் செலுத்தினார் அந்த ரிஸப்ஷனிஸ்ட்.
ஃபோனில் நடிகன் கோபால் கிடைக்கவில்லை. அவன் ஏதோ ஷூட்டிங்குக்காக பெங்களூர் போயிருக்கிறானென்றும் பிற்பகல் மூன்று மணிக்கு விமானத்தில் திரும்புகிறான் என்றும் தெரிந்தது. இவன் பால்ய சிநேகிதத்தை எல்லாம் எதிர்ப்புறம் கேட்டவர் காது புளிக்க விவரித்த பின், "நாலைர மணிக்கு மேல் நேரில் வாருங்கள்! சந்திக்கலாம்" என்று வேண்டா வெறுப்பாகப் பதில் தெரிவிக்கப்பட்டது. அந்த வினாடியில் உடனே அந்தப் பதிலுக்குத் தகுந்த மாதிரி அவன் மாற வேண்டியிருந்தது. பதிலை மாற்ற அவனால் முடியாது; எங்கும் போகவும் வழியில்லை; மழை நிற்கும் என்றும் தோன்றவில்லை. பகல் சாப்பாட்டுக்குப் பின் நன்றாகத் தூங்க வேண்டுமென்று தோன்றியது. இரவு இரயில் பயணத்தில் இழந்த தூக்கத்தைப் பெற வேண்டும் போலிருந்தது அவனுக்கு. புதிய ஊரில், புதிய கட்டிடத்தில், புதிய அறையில் உடனே தூக்கம் வருமா என்று தயக்கமாகவும் இருந்தது. பெட்டியைத் திறந்து புத்தகங்களை வெளியே எடுத்தான்.
இரண்டு நிகண்டு, ஓர் எதுகை யகராதி, நாலைந்து கவிதைப் புத்தகங்கள் இைவதான் அவனுடைய தொழிலுக்கு மூலதனம். 'க'கர எதுகை, 'த'கர வருக்க எதுகை, என்று பழுப்பேறிய பக்கங்கள் புரண்டன. திறந்திருந்த அறை வாசலில் எதிர்த்த அைறையப் பூட்டிக் கொண்டு வெளியே புறப்படத் தயாராகும் ஓர் அழகிய யுவதியின் பின்புறத் தோற்றம் முத்துக்குமரனின் கண்களை வசீகரித்தது. அந்த இடையின் பொன் நிறம், முதுகின் வாளிப்பு, நீலப்புடவை எல்லாம் அழகுச் சூறையாயிருந்தன.
"மேகம் மருங்கணிந்து
மின்னல் வரக்கண்டேன்
யோகம் உருக்கனிந்து
யுவதி வரக் கண்டேன்"
என்று பாட்டுக் கட்ட வேண்டும் போலிருந்தது. நெடில் எதுகையில் யோகம் மேகம் ஆகிய சொற்களுக்குப் பின் என்ன வார்த்தைகள் இருக்கின்றன என்பைத அவன் கண்கள் புத்தகத்தில் துழாவின. நாடகக் கம்பெனியின் தேவைக்கு எந்த நிலையிலும் எந்த அவசரத்திலும் பாட்டு எழுதிப் பாட்டு எழுதி - எதற்கெடுத்தாலும் எதுகை நிகண்டைப் பார்க்கிற பழக்கம் வந்திருந்தது அவனுக்கு. எதுகைகள் கிடைத்தன. பாகம், வேகம், தோகை என்று முன் சொற்களுக்குப் பொருத்தமான எதுகைகள் கிடைத்தும் பாட்டை மேலே எழுதுவதில் மனம் செல்லவில்லை. தன் வாழ்க்கை நிலையும், தான் பட்டினத்திற்குப் பிழைப்புத் தேடி வந்திருக்கிற அவலமும் நடுவே நினைவு வரவே, பாட்டு எழுதுவதற்குரிய நிலைமைக்காக மனம் எவ்வளவு உயரம் மேலே போக வேண்டுமோ அவ்வளவு உயரம் மேலே போக மறுத்தது. ஆகேவ பாட்டில் ஈடுபாடு குன்றியது.
அந்தப் பொன் மின்னும் இடையின் ஒருவரிச் சதை, வாளிப்பான முதுகு, கழுத்துக்குக் கீழே அரை வட்டமாகத் தெரிந்த பொற்குவடுகளின் செழிப்பு, எல்லாம் அவன் மனதுக்கு உணவாயிருந்தன. இடையே இன்னொரு சிந்தைனக்கும் அவன் மனம் தாவியது. மதுரையிலோ, திண்டுக்கல்லிலோ, இத்தைன உடற்கட்டும் வாளிப்பும் உள்ள பெண்களை அவன் அதிகம் சந்திக்க நேர்ந்ததில்லை. அதற்கு என்ன காரணம் என்று அவன் மனம் தற்செயலாகச் சிந்தித்தது. உணவு, பழக்கவழக்கங்கள் ஆகியவற்றில் நகர்ப்புறத்துப் பெண்கள் துணிந்த அளவு நாட்டுப்புறத்துப் பெண்கள் துணிவதில்லை. நகர்ப்புறத்துப் பெண்களில் பெரும்பாலோருக்கு, உடை அணிவதிலும், பிறைரக் கவர்வதிலும் இருக்கிற அவ்வளவு அக்கைற நாட்டுப் புறத்துப் பெண்களுக்கு இல்லையா - அல்லது இருக்க வசதி இல்லையா என்று நினைத்தான் அவன். பட்டினத்தில் ஒரு தாய்க்குக் கூடத் தான் நாலைந்து குழந்தைகளுக்குத் தாய் என்பைதவிடப் பெண் என்பேத அதிகமாக ஞாபகம் இருக்கிறது. நாட்டுப்புறத்தில் அப்படி இல்லை. ஒரு பெண்ணைத் தாயாராக உணரும்போது - மனம் விகாரப்படுவதில்லை. பெண்ணாக உணரும்போது மனம் விகாரப்படாமலிருக்க முடிவதில்லை. கர்ப்பிணிகளை எங்கே கண்டாலும், எவ்வளவு அழகாகக் கண்டாலும், காம உணர்வு ஏற்படுவதில்லை என்பது நினைவு வந்தது முத்துக்குமரனுக்கு.
பகல் உணவுக்குப்பின் - உறங்க முயன்று உறக்கமும் வராத காரணத்தினால் லாட்ஜுக்கு மிக அருகில் இருந்த மியூஸியம், ஆர்ட் காலரி, கன்னிமரா நூல் நிலையம் ஆகியவற்றைப் பார்த்து வரலாமென்று புறப்பட்டான் அவன். மழை நின்று சிறு தூறலாகி இருந்தது. பாந்தியன் ரோடில் தென்பட்ட கர்ப்பிணிகளைக் கண்டேபாது பகலில் தான் சிந்தித்த சிந்தைன நினைவுக்கு வந்தது. அவனுக்குச் சிலருடைய முகங்களைப் பார்த்தால் பட்டினம் போக பூமியாயிருப்பதுபோல் தோன்றியது; வேறு சிலருடைய முகங்களைப் பார்த்தால் பட்டினம் சிரமப்பட்டுக் கொண்டிருப்பது போலும் இருந்தது. சில இடங்களைப் பார்த்தால் பட்டினம் அழகாகவும், ஆடம்பரமாகவும் இருப்பது போல் தோன்றியது; வேறு சில இடங்களைப் பார்த்தால் பட்டினம் ஆபாசமாகவும், அருவருப்பாகவும், வேதைனயாகவும் இருப்பதுபோல் தோன்றியது. எது உண்மை, எது பெரும்பான்மை என்று வந்தவுடன் அவனால் கண்டுபிடிக்கேவா கணிக்கேவா முடியாமல் இருந்தது.
அவனுக்கு இன்னும் திருமணமாகவில்லை. இதன் பொருள் அவன் திருமணத்ைதேயா பெண்ைணேயா வெறுத்தான் என்பதில்லை. ஒரு நாடகக் கம்பெனி ஆளுக்குப் பெண் கொடுக்கேவா, மதிக்கேவா அன்றைய சமூகத்தில் யாரும் தயாராயில்லை என்பதுதான் காரணம். பின்புறமாக அைலயைலயாய்க் கருமை மின்னும்படி சுருளச் சுருள வாரிவிட்ட அமெரிக்கன் கிராப், கிரேக்க வரீ ர்களில் சுந்தரமான தோற்றமுடைய ஒருவைனப் போன்ற எடுப்பான முகத்தில் இடையறாத புன்முறுவல், நல்ல உயரம், அளவான பருமன், இரண்டாம் முறையாகத் திரும்பிப் பார்க்க யாரும் ஆசைப்படுகிற களையான தோற்றம், கணெீரென்ற குரல் - இைவ அவனிடம் இருந்தவை.
எழும்பூர் நிலையத்தில் அவன் வந்து இறங்கிய தினத்தன்று மழை கொட்டு கொட்டென்று கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது. ஒரு தென்பாண்டிச் சீமை கவி பட்டினத்தில் வந்து இறங்குவைதக் கொண்டாடுவதற்காக மழை பெய்ததாக யாரும் அதற்குள் தப்புக் கணக்குப் போட வேண்டியதில்லை. அது டிசம்பர் மாத பிற்பகுதியாதலால் வழக்கம் போல் சென்னையில் மழை கொட்டிக் கொண்டிருந்தது. டிசம்பர் மாதத்தில் மட்டுமில்லை; எந்த ஒரு மாதத்திலுமே பட்டினத்துக்கு அப்படி ஒரு மழை தேவையில்லை. மழை பெய்தால் பட்டினத்தில் எதுவும் விற்பதில்லை. தியேட்டர்களில் கூட்டம் குறைகிறது. குடிசைப் பகுதிகளில் நீர் ஏறுகிறது. அழகிய பெண்கள் மினுமினுப்பான புடவைகளில் சேறு தெரிக்குமே என்று பயந்து கொண்டே தெருக்களில் நடக்க வேண்டியிருக்கிறது. வெற்றிலை பாக்குக் கைட முதல் புடவைக் கைட வைர வியாபாரம் மந்தமைடகிறது. குடைகள் மறதியால் தவறிப் போகின்றன. ஏைழப் பள்ளி ஆசிரியர்கள், குமாஸ்தாக்களின் செருப்புக்களில் திடீரென்று வார் அறுந்து போகிறது. டாக்ஸிக்காரர்கள் எங்கே கூப்பிட்டாலும் வரமறுக்கிறார்கள். இப்படி மழைக்குப் பயப்படுகிற பட்டினத்திற்கு எதற்காக மழை வேண்டும்?
மியூஸியம் தியேட்டரின் வட்டவடிவமான அழகிய சிறிய கட்டிடமும், ஆர்ட் காலரியின் முகலாயபாணி கலந்த கட்டிடமும் அவைன வியக்கச் செய்தன. மியூஸியத்தைச் சுற்றிப் பார்க்க ஒரு மணி நேரமாயிற்று. வந்த புதிதில் சென்னையில் பொது இடங்களில் சுபாவமாக அவன் ஒரு பிரச்சைனைய மீண்டும் மீண்டும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவன் தமிழில் கேட்ட கேள்விக்கு எல்லாம் ஆங்கிலத்தில் பதில் கிடைத்தது. தமிழிலேயே பதில் கூறியவர்கள் ரிக்ஷாக்காரர்கள், டாக்ஸி டிரைவர்கள் மட்டுமே. அந்தத் தமிழும் அவனுக்குப் புரியவில்லை. மதுரையில் மிகச்சிறிய பையனாக இருந்தாலும், நீங்க, வாங்க, போங்க என்றுதான் மரியாதையாகப் பேசுவார்கள். சென்னையிலோ பதினைந்து வயதுப் பையன் எழுபது வயதுக் கிழவைனப் பார்த்துக்கூட 'இன்னாப்பா' என்றுதான் பேசினான். ஆங்கிலம் முத்துக்குமரனுக்கு அறேவ தெரியாது. தமிழிலும் - சென்னைத் தமிழ் புரியச் சிரமமாயிருந்தது. பலெமாழிக் கலப்பில் சென்னைத் தமிழ் கதம்பமாயிருந்தது.
மழை காரணமாக மியூஸியத்திலோ, நூல்நிலையத்திலோ, ஆர்ட் காலரியிலோ கூட்டேம இல்லை. எல்லாவற்றையும் பார்த்து முடித்தபின் வெளியே வந்தேபாது மறுபடி மழை பிடித்துக் கொண்டு விட்டது. டெலிபோன் டைரக்டரியில் நடிகன் கோபாலின் முகவரி தெரியாததால் ஹோட்டல் ரிஸப்ஷனிஸ்ட் விசாரித்துக் கொடுத்த முகவரியை ஒரு துண்டுக் காகிதத்தில் குறித்துச் சட்டைப் பையில் மடித்து வைத்திருந்தான் முத்துக்குமரன்.
தற்போது எடுத்துப் பார்த்தேபாது, அது மழைச்சாரலில் சிறிது நனைந்து ஈரமாகியிருந்தது. இந்த மழையில் கோபாலின் வீட்டுக்கு எப்படிப் போவது என்று தெரியாமல் சில வினாடிகள் மனம் குழம்பினான் அவன். பக்கத்தில் நின்று கொண்டிருந்தவரிடம் மணி கேட்ட போது, அவர் கைக்கடிகாரத்தைப் பார்த்து மூன்றே முக்கால் என்று தெரிவித்தார். நாலைர மணிக்கு கோபாலின் வட்ீ டில் இருக்க வேண்டுமானால் இப்போதே புறப்படுவது தான் நல்லெதன்று தோன்றியது. பஸ்ஸில் போனால் இடம் தெரிந்து இறங்குவது சிரமமாயிருக்கும். பஸ் ஸ்டாப்பிலிருந்து கோபாலன் வீடு வைர மழையில் நனைந்து கொண்டே போகேவண்டி இருக்கலாம். பஸ் ஸ்டாப்பிங் அருகிலேயே கோபாலன் வீடு இருக்குமா அல்லது சிறிது தொலைவு தள்ளி இருக்குமா என்பெதல்லாம் அவனுக்குத் தெரியாதவை.
இப்போது டாக்ஸியில்தான் போக வேண்டுமென்று முடிவுக்கு வரவேண்டிய நிலையிலிருந்தான் அவன். கையில் மிகக் குறைந்த பணவசதியுள்ள நிலைமையில் டாக்ஸியில் போய்க் கட்டுப்படியாகுமா என்ற கவைலயும் கூடேவ எழுந்தது. 'டாக்ஸியில் போகாவிட்டால் இன்று கோபாலைப் பார்க்கேவ முடியாது' என்ற கவைலயும் சேர்ந்து உண்டாயிற்று. கோபாலைப் பார்க்காவிட்டால் வேறு பல அசௌகரியங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கும் என்பதால் அவைனப் பார்ப்பது உடனே அவசியம் என்ற முடிவுடன் டாக்ஸிக்காக பாந்தியன் ரோடு பிளாட்பாரத்துக்கு நனைந்து கொண்டே வந்தான் அவன்.
மழை நேரமாதலால் காலி டாக்ஸிகள் தென்படேவ இல்லை. பத்து நிமிஷத்திற்குப் பின் ஒரு டாக்ஸி கிடைத்தது. அவன் ஏறி உட்கார்ந்ததும் மீட்டைரப் போட்டு விட்டு டாக்ஸிக்காரன், "எங்கே?" - என்று கேட்டான். சட்டைப் பையில் மடித்து வைத்திருந்த துண்டுத்தாளை எடுத்துப் பிரித்து, "போகேராடு - மாம்பலம்" என்று முத்துக்குமரன் படித்ததும் டாக்ஸிக்காரன் திரும்பிப் பார்த்து ஒன்றும் புரியாமல் விழித்தான். உடனே முத்துக்குமரன் தன் கையிலிருந்த துண்டுத் தாளை அப்படியே டாக்ஸிக்காரனிடம் நீட்டினான்.
டாக்ஸிக்காரன் அதை வாங்கிப் படித்துவிட்டு, "போக் ரோடுன்னு சொல்லுங்க சார். மழையில் நனைஞ்சு 'க்'கன்னாவிலே மேல் புள்ளி போயிருக்கு" என்று - முகமலர்ந்து சிரித்துக் கொண்டே தாளைத் திருப்பிக் கொடுத்தான். முத்துக்குமரனும் அசடு வழியப் பதிலுக்குச் சிரித்துக் கொண்டே அதைத் திருப்பி வாங்கிப் பார்த்தேபாது 'போக்' என்பதில் மேல் புள்ளி அழிந்து 'போக' என்றாகியிருப்பது தெரிந்தது. கோபால் குடியிருக்கும் ரோடு 'போக' ரோடு ஆகத்தான் இருக்க வேண்டுமென்பதில் அவனுக்குச் சிறிதும் சந்தேகமில்லை. மீண்டும் தனக்குத் தானே ஒருமுறை அவன் சிரித்துக் கொண்டான். டாக்ஸி விரைந்தது.
"நடிகர் கோபாலை உங்களுக்குத் தெரியுங்களா...?" என்று நடுவே ஆவேலாடு ஒரு கேள்வி கேட்டான் டாக்ஸிக்காரன். 'தெரியும்' என்று ஒரு வார்த்தையில் பதிலை முடிக்கத் தெரியாமல் - பாய்ஸ் கம்பெனியில் தானும் கோபாலும் சேர்ந்ததிலிருந்து தொடங்கிக் கோபால் சென்னை வந்து சினிமா உலகில் ஐக்கியமானது வைர விவரிக்கத் தொடங்கி விட்டான் முத்துக்குமரன். 'இந்த ஆள் வெளியூர் மட்டுமில்லை; நாட்டுப் புறமும்கூட' - என்பைத அந்த விரிவான பதிலிலிருந்தே டாக்ஸி டிரைவர் அநுமானித்துக் கொள்ள முடிந்தது.
அழகிய பெரிய தோட்டத்துக்கு நடுவிலிருந்த கோபாலின் பங்களாவின் முகப்பை டாக்ஸி அைடந்த போது, 'கேட்'டிலேயே கூர்க்கா டாக்ஸியைத் தடுத்து நிறுத்தி விட்டான். கூர்க்காவிடம் என்ன சொல்லி மழையில் நனையாமல் உள்ளே போகலாம் என்ற பிரச்சைனைய முத்துக்குமரன் சிந்தித்து முடிக்குமுன் டாக்ஸிக்காரன் சாதித்து முடித்து விட்டான்.
"உங்க ஐயாவுக்கு ரொம்ப நாள் சிநேகிதரு இவரு..." என்று டாக்ஸிக்காரன் கூறியதும்,
"படா ஸாப்... பச்பன்... தோஸ்த்..." என்று ஏதோ சில இந்தி வார்த்தைகளை உதிர்த்த கூர்க்கா - விறைத்து நின்று ஒரு சலாமும் வைத்து டாக்ஸியை உள்ளே விட்டு விட்டான். புத்தியுள்ளவர்களாகத் தங்களைக் கருதிக் கொள்கிறவர்கள் சிந்தித்துக் குழம்பித் தயங்கிக் கொண்டிருக்கிற ஒரு காரியத்தைப் புத்தி குறைவாகவும் சமேயாசித ஞானம் அதிகமாகவும் உள்ளவர்கள் செய்து முடித்து விடுகிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டுப் போல் அந்த டாக்ஸி டிரைவர் நடந்து கொண்டைத முத்துக்குமரன் வெகுவாக ரசித்தான்.
போர்டிகோவில் டாக்ஸி நின்றதும் மீட்டரில் ஆகியிருந்தபடி பணத்தைக் கொடுத்து மீதி சில்லைற வாங்கிக் கொண்டு முத்துக்குமரன் தயக்கத்தோடு படி ஏறினான். முன் ஹாலில் பெரிதாக நடிகன் கோபால் ஒரு புலியை வேட்டையாடிக் கொன்று துப்பாக்கியும் கையுமாக மிதித்துக் கொண்டு நிற்கும் லைஃப் சைஸ் படம் அவைன வரவேற்றது.
பனியனும் லுங்கியும் அணிந்த ஒரு நடுத்தர வயது ஆள் வந்து முத்துக்குமரனிடம் "யாரைப் பார்க்கணும்? என்ன வேணும்?" என்று விசாரித்தான். முத்துக்குமரன் தன்னைப் பற்றிய விவரம் கூறியதும், "இங்கே உட்கார்ந்திருங்க..." என்று ரிஸப்ஷன் ஹாலில் கொண்டு போய் அவைன உட்காரச் செய்தான். அந்த ஹாலில் முத்துக்குமரன் ஹோட்டலில் பார்த்ததுபோல் ஏன் அதை விடவும், அழகான கவர்ச்சியான பல பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள். தான் உள்ளே நுழைந்ததும் - அவர்களில் பலருடைய கவனம் தன்மேல் திரும்பியைத அவனும் கண்டான். அந்த அறையில் நுழைந்ததும் - இருளிலிருந்து திடீரென்று கண்ணைக் கூச வைக்கும் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது போலிருந்தது முத்துக்குமரனுக்கு. அங்கே நடிகர் போன்ற தோற்றமுடைய சில இளம் ஆண்களும் காத்திருந்தனர். சிறிது நேரம் அவர்கள் பேசியைதக் காது கொடுத்துக் கேட்டதிலிருந்து - நடிகன் கோபால் தானே சொந்தத்தில் தொடங்க இருக்கும் ஒரு நாடகக் குழுவின் நடிகர் - நடிகையர் தேர்வுக்கான 'இண்டர்வ்யூ' அன்று மாலை ஐந்து மணிக்கு அங்கே நைடெபற இருப்பதாக அவனால் அநுமானிக்க முடிந்தது. அவர்கள் பேசிக் கொண்டதிலிருந்து கோபாலே அந்த 'இண்டர்வியூ'வை நேரில் நடத்தித் தேவையானவர்களை 'செலக்ட்' செய்யப் போகிறானென்றும் தெரிந்தது.
அங்கே வந்து அமர்ந்திருந்த பெண்கள் யாவைரயும் பகிரங்கமாகவும் இரகசியமாகவும், பலமுறை திரும்பத் திரும்பப் பார்க்க வேண்டுமென்ற ஆைசைய அவனால் அடக்கிக் கொள்ள முடியவில்லை. ஒருவேளை அவர்களில் சிலரும் அப்படியே அவைனப் பார்க்கத் தவித்திருக்கக் கூடும். அங்கிருந்த ஆடவர்களிலே தானே சுந்தரமான தோற்றமுடையவன் என்ற நம்பிக்கை மற்றவர்களைப் பார்த்ததுமே அவனுள் உறுதிப்பட்டுவிட்டது. உண்மையில் அதுவும் ஒரு நியாயமான கர்வந்தானே? முதலில் அவன் சாதாரணமாக உட்கார்ந்திருந்தான். அப்புறம் அவன் தைரியமாகக் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்தான். இைரந்து பேசிக் கொண்டிருந்த பெண்ணழகிகள் அவைனக் கண்டதும் மெதுவாகப் பேசலானார்கள். சிலர் தங்களுக்குள்ளே நாணப்படுவது போல் அவனுக்காக நாணப்பட்டார்கள்; பழங்கள் உள்ளே கனிந்தால் வெளியே நிறம் சிவக்கும். 'பெண்ணுக்குள் ஏதாவது கனியும் போது முகம் இப்படித்தான் சிவக்கும் போலும்' - என்று கற்பைன செய்யத் தோன்றியது முத்துக்குமரனுக்கு. இைரந்து சிரித்துக் கொண்டிருந்தவர்கள் அவனுடைய பிரவேசத்துக்குப்பின் மெல்லப் புன்னைக புரிந்து கொண்டு மட்டுமே பேசிக் கொள்ளலாயினர்.
பேர்பாதிச் சிரிப்பை அவனுக்காக உள்ளே ரிசர்வ் செய்து கொண்டாற் போன்ற அவர்கள் செயைல அவன் ரசித்தான். அவர்களில் சிலருக்கு உதடுகள் மிகமிக அழகாயிருந்தன. சிலருக்குக் கண்கள் மிகமிக அழகாயிருந்தன. சிலருடைய கைவிரல்கள் மிகவும் நளினமாயிருந்தன. சிலருக்கு மூக்கு அழகாயிருந்தது. சிலருக்கு எது அதிக அழகு என்று பிரித்துச் சொல்ல முடியாமல் எல்லாமே அழகாயிருந்தன. பெண்கள் யாரிடம் புன்னைக, கண்களின் பார்வை, பேச்சு எல்லாவற்றையும் நேருக்கு நேர் மைறக்க முயல்கிறார்கேளா அவனுக்குத் தனியே தர அவர்களிடம் ஏதோ இருக்கிறெதன்று தான் அர்த்தம்.
லுங்கி - பனியன் ஆள் மீண்டும் ரிஸப்ஷன் ஹாலில் பிரவேசித்தான். எல்லார் கவனமும் அவன் பக்கம் திரும்பியது.
அத்தியாயம் - 2
"மழையினாலே பெங்களூர் ப்ளேன் அரைமணி லேட்னு சொல்றாங்க... ஐயா வர அரைமணி தாமதமாகும்."
எல்லோருடைய முகமும் அந்தத் தாமைர அங்கீகரிப்பது போல் மலர்ந்தன.
அடுத்து முன்பு வந்தவைனப் போலேவ - கைலி, பனியன், மேலே சைமயல் அழுக்குப் படிந்த துண்டுடன் - கையிலிருந்த பெரிய டிரேயில் பத்துப் பன்னிரண்டு 'கப்'களில் ஆவி பறக்கும் காப்பியுடன் சைமயற்காரன் ஹாலில் நுழைந்தான். எல்லோருக்கும் காபி கிடைத்தது.
காபி முடிந்ததும் ஒரு பெண் துணிந்து எழுந்து வந்து முத்துக்குமரனின் சோபாவில் அருகே உட்கார்ந்தாள். அவள் வந்து உட்கார்ந்ததும் சந்தன அத்தர் வாசைன கமகமத்தது. "நீங்களும் 'ட்ரூப்'லே சேர அப்ளிகேஷன் போட்டிருக்கீங்களா சார்...?" என்று அவள் கேட்ட கேள்வியைக் காதில் போட்டுக் கொள்ளாமல் அவளுடைய குரலினிமையை மட்டும் காதில் ஏற்றுக் கொண்டு அயர்ந்து விட்ட முத்துக்குமரன்,
"என்ன சொன்னீங்க...?" என்று மறுபடியும் அவைளக் கேட்டான். அவள் சிரித்துக் கொண்டே மறுபடியும் தன் கேள்வியைக் கேட்டாள்.
"கோபாலை நல்லாத் தெரியும்! என்னோட அந்த நாளிலே பாய்ஸ் கம்பெனியிலே ஸ்திரீ பார்ட் போட்டவன். சும்மா பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்."
ஹாலில் இருந்த மற்ற எல்லோருடைய கவனமும் தங்கள் இருவர்மேல் மட்டுமே குவிந்திருப்பைத அவன் கவனித்தான். பெண்கள் அைனவரும் தன்னோடு வந்து பேசிக்கொண்டிருப்பவைளப் பொறாமையோடு பார்க்கிறார்கள் என்று அவனுக்குத் தோன்றியது.
பக்கத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தவள், "உங்கள் பெயைர எனக்குச் சொல்லலாமா?" என்று கேட்டாள்.
"முத்துக்குமரன்..."
"பேர் ரொம்ப பிடிச்சிருக்கு..."
"யாருக்கு...?"
அவள் முகம் சிவந்தது. உதடுகளில் புன்னைக தோன்றவும், மைறயவும் முயன்று ஒேர சமயத்தில் இரண்டையும் செய்தது. "இல்லே... நாடகத்துக்குப் பேர் பொருத்தமா இருக்கும்னேன்."
"அப்படியா? ரொம்ப சந்தோஷம். உங்க பேரை நான் தெரிஞ்சுக்கலாமா...?"
"மாதவி..."
"உங்க பேர் கூட ரொம்ப நல்லாத்தான் இருக்கு."
மறுபடியும் அவள் உதடுகளில் புன்னைக தோன்றவும் மைறயவும் முயன்றது.
முன்புறம் போர்டிகோவில் கார் சீறிப் பாய்ந்து வந்து நிற்கும் ஓைச கேட்டது. காரின் கதவு ஒன்று திறந்து மூடப்பட்டது.
அவள் அவனிடம் சொல்லிக் கைகூப்பிவிட்டுத் தன் பைழய இடத்துக்குப் போனாள். ஹாலில் அசாதாரண அைமதி நிலவியது. 'கோபால் வந்துவிட்டான் போலிருக்கிறது' என்று முத்துக்குமரனால் ஊகிக்க முடிந்தது.
விமான நிலையத்திலிருந்து வந்த கோபால் உள்ளே போய் முகம் கழுவி உடை மாற்றிக் கொண்டு ரிஸப்ஷன் ஹாலுக்கு வரப் பத்து நிமிஷம் ஆயிற்று. அந்தப் பத்து நிமிஷமும் ஹாலில் இருந்த யாரும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளவில்லை. கண்கள் யாவும் ஒேர திசையில் இருந்தன. எப்படி உட்கார வேண்டுமென்று நினைத்தபடியே திட்டமிட்டு எல்லோரும் உட்கார்ந்திருந்தனர். அசாதாரண மௌனம் நிலவியது. ஒவ்ெவாருவரும் நேர இருக்கும் விநாடிக்குத் தகுந்தவாறு தங்கள் மனம் மொழி மெய்களை மாற்றித் தயாராகிக் கொண்டிருந்தார்கள். பேசேவண்டிய வார்த்தைகளும், வாக்கியங்களும் யோசிக்கப்பட்டன. எப்படிச் சிரிப்பது, எப்படிக் கைகூப்புவது என்றெல்லாம் சிந்தித்து உள்ளேயே திட்டமிடப்பட்டன. அரசர் நுழையும் முன்புள்ள கொலு மண்டபம் போல் மரியாதை கூடிய அைமதியாயிருந்தது அந்த ஹால்.
நண்பன் கோபாலுக்காகத் தானும் அத்தைன செயற்கைகளை மேற்கொள்வதா, வேண்டாமா என்று முத்துக்குமரனின் மனத்தில் ஒரு பெரிய போராட்டேம நடந்து கொண்டிருந்தது. தானும் இத்தைன அதிகப்படி மரியாதை பதற்றங்களுடன் நண்பைன எதிர்கொள்ள வேண்டியது அவசியம்தானா என்று தயங்கினான். அவன் நண்பன் தன்னிடம் எப்படி நடந்து கொள்கிறான் என்பைதப் பொறுத்தே தான் அவனிடம் எப்படி நடந்து கொள்வது என்பைத முடிவு செய்யலாம் என்று தோன்றியது அவனுக்கு. கம்பெனியில் நாடகங்கள் நைடெபறாத காலத்தில் இரவு இரண்டாவது ஆட்டம் சினிமா பார்த்துவிட்டு வந்து மீதியிருக்கும் ஒேர பாயில் இருவராகப் படுத்துத் தானும் கோபாலும் உறங்கிய பைழய இரவுகளை நினைத்தான் முத்துக்குமரன். அந்த அந்நியோந்நியம், அந்த நெருக்கம், அந்த ஒட்டுறவு இப்போது அவனிடம் அப்படியே இருக்கும் என்று தான் எதிர்பார்க்கலாமா, கூடாதா என்பேத முத்துக்குமரனுக்குப் புரியவில்லை. பணம் மனிதர்களைத் தரம் பிரிக்கிறது. அந்தஸ்து, செல்வாக்கு, புகழ், பிராபல்யம் இைவகளும் பணத்தோடு சேர்ந்துவிட்டால் வித்தியாசங்கள் இன்னும் அதிகமாகி விடுகின்றன. வித்தியாசங்கள் சிலைர மேட்டின் மேலும் சிலைர பள்ளத்திலும் தள்ளிவிடுகின்றன. பள்ளத்தில் இருப்பவர்களை மேட்டிலிருப்பவர்கள் சமமாக நினைப்பார்களா? பூகம்பத்தில் சமதைர மேடாகவும், மேடு பள்ளமாகவும் ஆவது போல் பணவசதி என்ற பூகம்பத்தில் சில மேடுகள் உண்டாகின்றன. அந்த மேடுகள் உண்டாவதனாலேயே அதைச் சுற்றி இருந்த இடங்கள் எல்லாம் பள்ளமாகிவிட நேரிடுகிறது. பள்ளங்கள் உண்டாக்கப்படுவதில்லை. மேடுகள் உண்டாகும்போது - மேடல்லாத இடங்கள் எல்லாம் பள்ளங்களாகேவ தெரிகின்றன. மேடுகள், பள்ளங்கள் நேர்கின்றன. கவிதையின் இறுமாப்பும், தன்மானத்தின் செருக்கும் நிறைந்த அவன் மனம் கோபாலை மேடாகவும் தன்னைத்தானே பள்ளமாகவும் நினைக்கத் தயங்கியது. கவிதை விளைகிற மனத்தில் கர்வமும் விளையும். கர்வத்தில் இரண்டு வைக உண்டு. அழகிய கர்வம், அருவருப்பான கர்வம் என்று அவற்றைப் பிரிப்பதனால் ஒரு நளினமான கவியின் மனத்தில் விளைகிற கர்வங்கள் அழகியைவ. அரளிப்பூவின் சிவப்புநிறம் கண்ணைக் குத்துகிறது. ரோஜாவின் சிவப்புநிறம் கண்ணுக்குக் குளுமையாயிருக்கிறது. கவி அல்லாதவன் அல்லது ஒரு முரடனின் கர்வம் அரளியின் சிவப்பைப் போன்றது. கவியாக இருக்கும் இங்கிதமான உணர்ச்சிகளையுடைய ஒருவனின் கர்வம் ரோஜாப்பூவின் சிவப்பை போன்றது. முத்துக்குமரனின் உள்ளத்திலும் அப்படி ஒரு மெல்லிய கர்வம் அந்தரங்கமாக உண்டு. அதனால்தான் அவன் நண்பன் கோபாலை அந்நியமாகவும், தன்னைவிட உயரத்திலிருப்பவனாகவும், நினைக்கத் தயங்கினான். அவன் - தனது உயரத்தை மறக்கேவா, குறைக்கேவா தயாராக இல்லை.
தான் அமர்ந்திருந்த சோபா, அந்த ஹால், அந்த பளிங்குத் தைர, பாங்கான விரிப்புகள், அங்கே சௌந்தரிய தேவைதகளாக அமர்ந்திருந்த அந்த யுவதிகள், அவர்களுடைய விதவிதமான வடிவ வனப்புகள், மேனி வாசைனகள், எல்லாம் சேர்ந்து - எல்லோரும் சேர்ந்து - அவனுள் சுபாவமாக உைறந்து கிடந்த அந்த மெல்லிய கர்வம் பெருகேவ துணை புரிந்தார்கள். மலராத பூவுக்குள் எங்கோ இருக்கும் வாசைன போல் தேடிக் கண்டு பிடிக்க முடியாத இனிய கர்வம் அது.
கோபால் இன்னும் ஹாலில் பிரவேசிக்கேவயில்லை. அவன் எந்த விநாடியும் உள்ளே பிரவேசிக்கலாம். முத்துக்குமரனின் மனத்திலோ கோபாலைப் பற்றிய பைழய சிந்தைனகள் கிளர்ந்தன. சில நாடகங்களில் கதாநாயகன் வேஷம் போடுகிறவன் வரமுடியாத சமயங்களில் தானே கதாநாயகனாக நடித்தேபாது செயற்கையாக நாணிக்கோணி அருகில் பெண் வேஷத்தில் நின்ற கோபாலையும் இப்போது அந்த ஹாலுக்குள் பிரவேசிப்பதற்கிருந்த கோபாலையும் இைணத்துக் கற்பைன செய்ய முயன்றது அவன் மனம். அந்தப் பைழய கோபால் வேஷம் கட்டாத நேரத்திலும் அவனுக்கு முன்னால் நாணிக் கோணிக் கூச்சத்தோடுதான் நடந்து கொள்வான். ஓர் அடங்கிய சுபாவமுள்ள மைனவி கணவனுக்குக் கட்டுப்படுவது போல் முத்துக்குமரனுக்கு அந்த நாட்களில் கோபாலும் கட்டுப்படுவான்.
'நீ பெண் பிள்ளையாகப் பிறந்து தொலைத்திருந்தால் முத்துக்குமார் வாத்தியாைரேய கட்டிக்கிடலாம்டா கோபாலு' என்று சில சமயங்களில் நாடக சைபயின் உரிமையாளரான நாயுடு கிரீன் ரூமுக்குள் வந்து கோபாலைக் கேலி செய்துமிருக்கிறார். ஸ்திரீ பார்ட் வேஷத்தில் கோபால் மிகமிக அழகாக இருப்பான். வேஷம் கட்டாத நேரங்களில் கூட, 'நாதா! தங்கள் சித்தம் என் பாக்கியம்' - என்று கிண்டலாகக் கோபாலும், 'தேவி! இன்று இரண்டாவது ஆட்டம் சினிமாவுக்குச் செல்லலாமா!' - என்று கேலியாக முத்துக்குமரனும் பரஸ்பரம் பேசிக் கொள்வதுண்டு.
'பசித்தவன் பழங்கணக்குப் பார்ப்பது போல் இவற்றை எல்லாம் இப்போது நினைத்துப் பயன் என்ன?' என்று உள்மனம் முத்துக்குமரைனக் கண்டித்தது.
அபூர்வமானெதாரு 'செண்ட்'டின் வாசைன முன்னே வந்து கட்டியம் கூற ஸில்க் ஜிப்பாவும் - பைஜாமாவும் அணிந்து கொண்டிருந்த கோலத்தில் கோபால் உள்ளே நுழைந்தான். அவன் பார்வை ஒவ்ெவாருவர் மேலும் பதிந்து மீண்டது. பெண்கள் நாணினாற்போல் நெளிந்தபடி புன்முறுவல் பூத்துக் கைகூப்பினார்கள். ஆண்களும் முகம் மலரக் கைகூப்பினர். முத்துக்குமரன் ஒருவன் மட்டும் உட்கார்ந்தது உட்கார்ந்தபடியே கால்மேல் கால்போட்ட நிலையிலேயே கம்பரீ மாக வற்ீ றிருந்தான். கோபால் கை கூப்புமுன் தான் எழுந்து நின்று கைகூப்பேவா, பதறேவா அவன் தயாராயில்லை. கோபாலின் பார்வை இவன் மேல் பட்டதும் அவன் முகம் வியப்பால் மலர்ந்தது.
"யாரு! முத்துக்குமாரு வாத்தியாரா? என்ன இப்படிச் சொல்லாமக் கொள்ளாமத் திடீர்னு வந்து ஆச்சரியத்திலே மூழ்க அடிக்கிறீங்கேள?"
முத்துக்குமரன் முகம் மலர்ந்தான். கோபால் அந்நியமாக நடந்து கொள்ளவில்லை என்பது அவனுக்கு மகிழ்ச்சியை அளித்தது.
"சௌக்கியமா இருக்கியா கோபாலு? ஆேள மாறிப்பருத்துப் போயிட்டே...? இப்ப உனக்கு... ஸ்திரீ பார்ட் போட்டா அது உலகத்துல இருக்கிற ஸ்திரீ வர்க்கத்ைதேய அவமானப் படுத்தறாப்பிலே இருக்கும்..."
"வந்ததும் வராததுமாகக் கிண்டைல ஆரம்பிச்சுட்டியா வாத்தியாரே?"
"ஓேகா! கிண்டல் கூடாதோ? 'நடிக மன்னர் கோபால் அவர்கேள' - என்று மரியாதையாகக் கூப்பிடட்டுமா?"
"மரியாதையும் வாண்டாம் மண்ணாங்கட்டியும் வாண்டாம். இப்ப என்ன சொல்றே? இவங்கைளெயல்லாம் இண்டர்வியூக்கு வரச் சொன்னேன். பார்த்துப் பேசி அனுப்பிடட்டுமா? இல்லை... நாளைக்கு வரச்சொல்லட்டுமா? நீ சொல்றபடி செய்யேறன் வாத்தியாரே..."
"சே! சே! ரொம்ப நேரமாகக் காத்திருக்காங்க... பார்த்து அனுப்பிட்டு வா போதும்... எனக்கொண்ணும் இப்ப அவசரமில்லே..." என்றான் முத்துக்குமரன்.
"அது சரி! நீ எப்படி வந்தே? எங்கே தங்கியிருக்கே?"
"அதெல்லாம் அப்புறம் சொல்றேன். முதல்லே அவங்களை எல்லாம் பார்த்துப் பேசி அனுப்பு..."
முத்துக்கும்ரனின் கருணைக்கு நன்றி செலுத்துவது போல் பல ஜோடிக் கயல் விழிகள் அவன் பக்கமாகத் திரும்பி அவைன விழுங்கிடாத குறையாகப் பார்த்தன. அத்தைன யுவதிகளை ஒேர சமயத்தில் கவர்ந்ததற்காகவும் சேர்த்து அவன் நெஞ்சு கர்வப்படத் தொடங்கியது.
நாடகக் குழுவுக்கான நடிகர், நடிகையர் தேர்தல் தொடங்கியது. தூரத்தில் சோபாவில் அமர்ந்து விலகியிருந்தபடியே அந்த இண்டர்வ்யூவை வேடிக்கை பார்க்கலானான் முத்துக்குமரன். மேற்கு நாடுகளில் செய்வதுபோல் நெஞ்சளவு, இடையளவு, உயரம் என்று பெண்களை அளக்காவிட்டாலும், கோபால் கண்களால் அளக்கும் பேராைசேயாடுகூடிய அளைவேய முத்துக்குமரனால் கவனிக்க முடிந்தது. ஏதோ நடிப்புக்கு போஸ் கொடுக்கச் செய்வது போன்ற பாவைனயில் சில மிக அழகிய பெண்களை விதவிதமான கோணங்களில் நிற்கச் சொல்லிப் பார்த்து மகிழ்ந்தான் கோபால். அந்தப் பெண்களும் தட்டாமல் அவன் சொன்னபடி எல்லாம் செய்தார்கள். ஆண்களை இண்டர்வ்யூ செய்ய அவ்வளவு நேரேம ஆகவில்லை. சுருக்கமாக சில கேள்விகள் - பதில்கேளாடு ஆண்கள் இண்டர்வ்யூ முடிந்துவிட்டது. தபாலில் முடிவு தெரிவிப்பதாகச் சொல்லி எல்லோரையும் அனுப்பி வைத்தபின் - கணவனுக்கு அருகில் அடக்கமாக வந்து அமரும் மைனவியைப் போல் முத்துக்குமரனுக்கருகே பவ்யமாக வந்து உட்கார்ந்தான் கோபால்.
"ஏண்டா கோபாலு! நெஜமாகேவ நாடகக் கம்பெனி வைக்கப் போறீயா... அல்லது தினசரி குஷாலாக நாலு புதுப் பெண்களின் முகங்களையும், அழகுகளையும் பார்க்கலாம்னு இப்படி ஓர் ஏற்பாடா? ஒருவேளை, அந்தக் காலத்தில் நாடகத்திலே ஸ்திரீ பார்ட் போடப் பெண்கேள கிடைக்காம நீ ஸ்திரீ பார்ட் போட நேர்ந்ததற்காக இப்ப தினம் இத்தினி பேரை வரவைழச்சு பழி வாங்கறீயா, என்ன? இல்லே... தெரியாமத்தான் கேக்கேறன்?"
"அன்னிக்கி இருந்த அேத கிண்டல் இன்னும் உங்கிட்ட அப்படியே இருக்கு வாத்தியாரே! அது சரி...! எங்கே தங்கியிருக்கேன்னு இன்னும் நீ சொல்லேவ இல்லியே?" முத்துக்குமரன் எழும்பூரில் தான் தங்கியிருந்த லாட்ஜின் பெயைரச் சொன்னான்.
"நான் நம்ம டிரைவைரப் போய் பில் பணத்தைக் கட்டிப்பிட்டு உன் பெட்டி படுக்ைகைய எடுத்தாறச் சொல்லிடேறன். இங்கேயே ஒரு அவுட் ஹவுஸ் இருக்கு - வாத்தியார் அதிலே தங்கிக்கலாமில்லே...?"
"வாத்தியார் என்னடா வாத்தியார்? நாதா! தங்கள் சித்தம் என் பாக்கியம்னு பைழயபடி ஸ்திரீ பார்ட் குரல்லேதான் ஒரு தரம் சொல்லேன்."
கோபால் அப்படிச் சொல்ல முயன்று குரல் சரியாக வராததால் பாதியில் நிறுத்தினான். "உன் குரல் தடிச்சுப் போச்சுடா கோபால்."
"குரல் மட்டுமென்ன? ஆளுந்தான்" சொல்லிக் கொண்டே டிரைவைரக் கூப்பிட வெளியே போனான் கோபால். அவைனப் பின் தொடர்ந்து சென்ற முத்துக்குமரன், "ரூமை நல்லாப் பார்த்து என் ஐசுவரியம் எைதயும் விட்டுவிடாமே எல்லாவற்றையும் எடுத்துக்கிட்டு வரச்சொல்லு. நிகண்டு, எதுகை வரிசைப் புத்தகம் ரெண்டு மூணு இருக்கும்..." என்று எச்சரித்தான்.
"அதெல்லாம் ஒண்ணு விடாமே வந்து சேரும்; நீ கவைலப்படாதே..."
"லாட்ஜ் ரூமுக்கு வாடைகப் பணம் தரணுமே?"
"அதை நீ தான் கொடுக்கணுமோ? நான் கொடுக்கப்படாதா வாத்தியாரே?"
முத்துக்குமரன் பதில் சொல்லவில்லை. கோபாலின் டிரைவர் சிறிய கார் ஒன்றில் எழும்பூருக்குப் புறப்பட்டுப் போனான். அவைன அனுப்பி விட்டுத் திரும்பி வந்த கோபால் நண்பைன மிகவும் பிரியத்தோடு அணுகி, "ரொம்ப நாள் கழிச்சு வந்திருக்கே. நல்லாச் சேர்ந்து சாப்பிடணும். ராத்திரி என்ன சைமயல் செய்யச் சொல்லட்டும்?... சங்கோசப்படாமே சொல்லு வாத்தியாரே?..."
"பருப்புத் துவையல், வெந்தயக் குழம்பு, மாங்காய் ஊறுகாய்..."
"சே! சே! அடுத்த பிறவி எடுத்தால் கூட நீ அந்த பாய்ஸ் கம்பெனியின் நிரந்தர 'மெனு'வை மறக்க மாட்டே போலிருக்கே... மனித குணங்களாகிய காதல், சோகம், வரீ ம் எதுவுமே நமக்கு உண்டாகி விடாதபடி பத்தியச் சாப்பாடா வில்லே போட்டுக்கிட்டிருந்தான் அந்த நாயுடு!"
"அந்தச் சாப்பாட்டைச் சாப்பிட்டாலே உனக்கு 'நல்ல சாப்பாடு' போடுன்னு நாயுடுவை எதிர்த்துக் கேட்கச் சத்து இருக்காதே." "அதுக்காகத்தான் அப்படிச் சாப்பாடு போட்டானா பாவி மனுஷன்?"
"பின்னே? ேவேற எதுக்காக? சாப்பிடுகிற சாப்பாடு - நாயுடுவை எதிர்த்துப் புரட்சி செய்யிற எந்தக் கொழுப்பையும் உனக்குள்ளற உண்டாக்கிடப் பிடாதுங்கிறது தானே அவரு நோக்கம்?" "எப்படியோ அதையும் சாப்பிட்டுத்தானே காலங் கடத்தினோம். ஒரு நாளா ரெண்டு நாளா? ஒரு டஜன் வருசத்துக்கு மேலேயில்ல பருப்புத் துவையலும் வெந்தயக் குழம்பும் மாங்காய் ஊறுகாயும் வவுத்துக்குள்ளாறப் போயிருக்கு?"
"அந்த ஒரு டஜன் வருசத்தை அப்படி அங்கே கழிச்சதிலே இருந்துதானே இன்னிக்கி இங்கே இப்படி முன்னுக்கு வந்திருக்கோம்."
"அது சரிதான்! அதை நான் ஒண்ணும் மறந்துடேல; நல்லா நினைவிருக்கு..."
- என்று கோபால் கூறியேபாது அவனுடைய முகத்தைக் கூர்ந்து கவனித்தான் முத்துக்குமரன். அவன் இதைக் கூறும்போது அவனுடைய கண்கள் எந்த அளவுக்கு ஒளி நிறைந்து தெரிகின்றன என்பைதக் காண முத்துக்குமரன் விரும்பினான். நன்றியுைடைமையயும், பைழய நினைவுகளையும் பற்றிய பேச்சு எழுந்த போது மேலே பேசுவதற்கு எதுவும் விஷயமில்லாமற் போனது போலச் சிறிது நேரம் இருவருக்குமிைடேய மௌனம் நிலவியது.
அந்த மௌனத்தின் தொடர்பாகக் கோபால் எழுந்து சென்று சைமயற்காரனிடம் இரவுச் சைமயலுக்கானவற்றைச் சொல்லிவிட்டு வந்து உட்கார்ந்தான்.
ஹாலுக்கு அப்பாலுள்ள அறையில் யாரோ ரேடியோவைப் போட்டிருக்க வேண்டும். இனிய வாத்திய இைச ஒலிக்கு முன் பேரில்லாத அநாதி தத்துவத்தில் ஐக்கியமாகிவிட்டவர்களாகிய 'நிலைய வித்வான்களின்' - காரியம் இது என்று அறிவிக்கப்பட்டது. "உனக்குத் தெரியுமா வாத்தியாரே? பாய்ஸ் கம்பெனியிலே 'காயாத கானகம்' பாடி அப்ளாஸ் வாங்கிக்கிட்டிருந்த கிருஷ்ணப்ப பாகவதரு இப்ப ஏ.ஐ.ஆர்லே நிலைய வித்வான் ஆயிட்டாரு." "ஒரு காலத்திலே சமஸ்தானங்களையும், ஆதினங்களையும், நாடகக் கம்பெனிகளையும் நம்பிக்கிட்டிருந்த கைலஞர்களுக்கு இப்ப ரேடியோதான் கஷ்ட நிவாரண மடமாயிருக்கும் போலத் தெரியுது...?"
"நான் கூட ஒரு நாடகக் கம்பெனி ஸ்டார்ட் பண்ணப் போறேன். நம்மை அண்டிக்கிட்டிருக்கிறவங்களுக்குச் சோறு துணி குடுக்க ஏதாவது செய்ய வேண்டியிருக்கு..."
"இப்ப பண்ணின 'இண்டர்வ்யூ' எல்லாம் அதுக்குத்தானே!"
"
ஆமா... இந்த நல்ல சமயத்திலே 'வாத்தியார்' மெட்ராஸ் வந்தைதக் கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரின்னு தான் சொல்லணும்..."
"அது சரி! நாடகக் கம்பெனிக்கு என்ன பெயர் வைக்கப்போறே...?"
"நீதான் நல்ல பெயரா ஒண்ணு சொல்லேன்..."
"ஏன் 'ஐயா'வைக் கூப்பிட்டு ஒரு நல்ல பெயர் சூட்டச் சொல்லறதுதானே!"
"ஐையேயா! நமக்கு கட்டாது வாத்தியாரே. அவரு குழந்தைக்குப் பெயர் வைக்கிறதுக்கே 'ரேட்டை' உசத்திப்பிட்டாரு..." "சாமி பெயரு வரலாமில்ல...?"
"கூடியவைர பகுத்தறிவுக்குப் பொருந்தி வர்ராப்பில இருந்தா நல்லதுன்னு பார்த்தேன்..."
"ஏன்?... அந்த லேபிள்ளேதான் நீ மெட்ராசிலே காலந்தள்ளுறியாக்கும்..."
இந்தக் கிண்டல்தானே வேணாம்கிறது...?"
"பகுத்தறிவுச் செம்மல்னு உனக்குப் பட்டேம கொடுத்திருக்காங்கேள...?"
"வம்பளக்காதே... பெயைரக் கண்டுபிடிச்சுச் சொல்லு வாத்தியாரே...?"
"'கோபால் நாடக மன்றம்'னே வையி! இந்தக் காலத்திலே ஒவ்ெவாருத்தனும் கும்பிட ேவேற தெய்வம் இல்லே; தானே தனக்குத் தெய்வம்னு மனிதன் நினைக்கிற காலம் இது. கண்ணாடியிலே தன் உருவத்தைப் பார்த்துத் தானே கைகூப்புகிற காலம் இல்லையா?"
"'கோபால் நாடக மன்றம்'னு என் பெயைரேய வைக்கிறதிலே எனக்குச் சம்மதம்தான். ஆனா ஒரு விசயம் செக்ரட்டரியைக் கலந்துக்கிடணும். 'இன்கம்டாக்ஸ் - தொந்தரவு இல்லாமப் போக வழியுண்டான்னு தெரிய வேண்டியது முக்கியம். அந்தத் தொந்தரைவ ஓரளவு குறைக்கிறதுக்காகத்தான் இதைத் தொடங்கினதினாலே அது அதிகமாயிடப்பிடாது."
"ஓேகா! ஒரு கைலக்குப் பின்னால் கைலயல்லாத இத்தைன காரணங்களை யோசிக்கணும்... என்ன?" "கைலயாவது ஒண்ணாவது. ைகையப் பிடிக்குமா, பிடிக்காதான்னு முதல்லே பார்க்கத் தெரிஞ்சுக்கணும்?" "ஓேகா! புதுசா இப்பத்தான் நான் இதெல்லாம் கேள்விப்படேறண்டா கோபாலு."
என்னதான் சுபாவமாகவும் சகஜமாகவும் பழகினாலும் கோடீஸ்வரனாகவும், நடிகர் திலகமாகவும் ஆகிவிட்ட தன்னை முத்துக்குமரன் 'அடாபிடா' போட்டுப் பேசுவைதக் கோபால் ரசிக்கவில்லை. ஒவ்ெவாரு 'டா'வும் முள்ளாகக் குத்தியது. ஆனால், அேத சமயத்தில் முத்துக்குமரனின் கவிதைச் செருக்கும், தன்மானமும், பிடிவாதமும் அவனுக்கு நன்றாகத் தெரிந்தவை ஆகேவ, முத்துக்குமரனுக்கு அவன் பயப்படவும் செய்தான். பதிலுக்குப் பழி வாங்குவது போல் தானும் அவைன 'அடா' போட்டுப் பேசலாமா என்று ஒரு கணம் குரோதமாகத் தோன்றினாலும் அப்படிச் செய்யத் தைரியம் வரவில்லை. நீ, நான் போன்ற ஒருமைச் சொற்களும், 'வாத்தியாரே' போன்ற பெயரும்தான் தைரியமாகக் கூற வந்தன. முத்துக்குமரன் என்ற தைரியசாலியோடு ேமைடயில் ஸ்திரீ பார்ட் போட்ட காலங்களில், 'நாதா! தங்கள் சித்தம் என் பாக்கியம்' என்று நாணிக் கோணிக்கொண்டு அன்று கூறிய நிைலேய இன்னும் நீடித்தது. முத்துக்குமரைன மீறி நிற்க முடியாத மனநிலை இன்னும் அவனிடம் இருந்தது. அந்தப் பிரைமயிலிருந்து அவனால் இன்னும் விடுபட முடியவில்லை. எதிரே வந்து கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து கொண்டு எடுத்தெறிந்தாற் போன்ற கர்வத்துடனும், ஒரு கவிஞனின் செருக்குடனும் பேசும் முத்துக்குமரனின் உரிைமையேயா துணிைவேயா, அந்தக் கோடீஸ்வர நடிகனால் நிராகரிக்க முடியாமலிருந்தது. லாட்ஜிலிருந்து காலி செய்து சாமான்களை எடுத்து வந்துவிட்டதாக டிரைவர் வந்து தெரிவித்தான்.
"கொண்டு போய் அவுட் ஹவுசிலே வை. நாயர்ப் பையைனக் கூப்பிட்டுக்கிட்டுப் போய் அவுட் ஹவுஸ் பாத்ரூமிலே டவல், சோப், எல்லாம் வைக்கச் சொல்லு. 'வாத்தியாரு' சௌகரியமா இருக்கிறதுக்கு எல்லா ஏற்பாடும் செய்யச் சொல்லு."
டிரைவர் சரி என்பதற்கு அைடயாளமாகத் தைலயாட்டிவிட்டு நகர்ந்தான். மறுபடி ஏதோ நினைவு வந்தவன் போல் கோபால் அவைனக் கூப்பிட்டான்.
"இந்தா உன்னைத்தானே! அவுட் ஹவுசிலே வெந்நீருக்கு வசதியில்லைன்னா உடனே 'ஹோம் நீட்ஸ்' கம்பெனிக்கு ஃபோன் பண்ணி ஒரு 'கெய்ஸா ப்ளாண்ட்' கொண்டாந்து பிக்ஸ் பண்ணச் சொல்லு."
"இப்பேவ ஃபோன் பண்றேன் சார்."
டிரைவர் போனதும் மீண்டும் நண்பனிடம் பேச்சைத் தொடர்ந்தான் கோபால்.
"முதல் நாடகத்தை நீதான் கைத - வசனம், பாட்டு உள்படத் தயாரிச்சுக் கொடுக்கணும் வாத்தியாரே?"
"நானா? இதென்னப்பா வம்பா இருக்கு? எத்தினியோ புகழ்பெற்ற நாடகாசிரியருங்கள்ளாம் மெட்ராஸ்லே இருக்காங்க? என்னை யாருன்னே இங்கே யாருக்கும் தெரியாது. எம்பேரைப் போட்டா எந்த விளம்பரமும் ஆகாது! நான் எழுதணும்னா சொல்றே?" என்று கோபாலின் மனநிைலைய அறிய முயன்றவனாகக் கேள்வி கேட்டான் முத்துக்குமரன்.
"அதெல்லாம் நான் பார்த்துக்கேறன். நீ எைத எழுதினாலும் பேர் வர்ராப்பிலே செய்யிறது என் பொறுப்பு" என்றான் கோபால். "அப்படீன்னா?... அதுக்கு அர்த்தம்!" என்று சந்தேகத்தோடு பதிலுக்கு வினவினான் முத்துக்குமரன்.
========
அத்தியாயம் - 3
"நீ சும்மா எழுது வாத்தியாரே! அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். 'நடிகர் திலகம் கோபால் நடிக்கும் நவரச நாடகம்'னு ஒருவரி விளம்பரப்படுத்தினாப் போதும், தானா 'ஹவுஸ்புல்' - ஆயிடும்... சினிமாவிலே கிடைக்கிற புகழை நாடகத்துக்குப் பயன்படுத்தணும். அதுதான் இப்ப 'டெக்னிக்'."
"அதாவது எழுதறவன் எந்தப் பயலாயிருந்தாலும் உன்பேர்ல நாடகம் தடபுடலாகிவிடும்னு சொல்றியா?"
"பின்னென்ன? சும்மாவா?"
"அப்படியானா நான் எழுத முடியாது!"
முத்துக்குமரனின் குரலில் கடுமை நிறைந்திருந்தது. சிரிப்பு முகத்திலிருந்து மறைந்து விட்டது!
"ஏன்? என்ன?"
"உன்னுடைய லேபிளில் மட்டமான சரக்கையும் அமோகமாக விற்க முடியும் என்கிறாய் நீ! நானோ நல்ல சரக்கை மட்டமான லேபிளில் விற்க விரும்பவில்லை."
இதைக் கேட்டவுடன் கோபாலுக்கு முகத்தில் அறைந்தது போலாகிவிட்டது. வேறொருத்தன் இப்படிச் சொல்லியிருந்தால் கன்னத்தில் அறைந்து 'கெட் அவுட்' என்று கத்தியிருப்பான். ஆனால், முத்துக்குமரனிடம் ஓர் அடங்கிய மனைவி கணவனுக்குக் கட்டுப்படுவது போல் கட்டுப்பட்டான் அவன். சிறிது நேரம் நண்பனுக்கு என்ன பதில் சொல்வதென்பது தெரியாமல் திகைத்தான் அவன். கோபமாகப் பேசமுடியவில்லை. நல்லவேளையாக முத்துக்குமரனே முகம் மலர்ந்து புன்சிரிப்புடன் பேசத் தொடங்கினான்.
"கவலைப்படாதே கோபால்! உன்னுடைய அகங்காரத்தை ஆழம் பார்க்கத்தான் அப்படிப் பேசினேன். உனக்கு நான் நாடகம் எழுதுகிறேன். ஆனால், அது நீ நடிக்கிற நாடகம் என்பதை விட நான் எழுதிய நாடகம் என்பதையே நினைவு படுத்திக் கொண்டிருக்கும்."
"அதனால என்ன? நீ பெருமை அடைந்தால் அதில் எனக்கும் உரிமை உண்டு வாத்தியாரே?"
"முதல் நாடகம் - சமூகமா? சரித்திரமா?"
"சரித்திரமாகவே இருக்கட்டும்! ராஜேந்திரசோழனோ சுந்தரபாண்டியனோ எதுவேணா இருக்கட்டும். அதுலே நடுநடுவே பார்க்கிறவங்க கைதட்டறாப்பல சில டயலாக்ஸ் மட்டும் கண்டிப்பா வேணும்! நீங்க சரித்திரத்திலே எந்த ராஜாவை எழுதினாலும் இது வேணும்! எம் மன்னர் காமராஜர், கன்னியர் மனங்கவரும் அழகுக் கொண்டல், இரப்போர்க்குக் கருணாநிதி, இளைஞர்க்குப் பெரியார், தம்பியர்க்கு அண்ணா - என்பதுபோல அங்கங்கே வசனம் வரணும்."
"அது முடியாது?"
"ஏன்? ஏன் முடியாது?"
"ராஜராஜசோழன் காலத்தில் இவங்கள்ளாம் இல்லை. அதனாலே முடியாது."
"மாஸ் அப்பீலா இருக்கும்னு பார்த்தேன்."
"இப்படி எழுதினா மாஸ் அப்பீல் என்பதைத் திருத்தி 'மாசு அப்பீல்'னுதான் சொல்லணும்."
"பின்னே என்னதான் எழுதப்போறே? எப்பிடி எழுதப் போறே?"
"நாடகத்தை - நாடகமாகவே எழுதப்போறேன். அவ்வளவுதான்."
"அது எடுக்கணுமே...?"
"எடுக்கறதும் - எடுக்காததும் நாடகத்தைச் 'சிறப்பா' அமைக்கிறதுலேதான் இருக்கே ஒழிய நாடகத்துக்குச் சம்பந்தமில்லாததுலே மட்டும் இல்லே."
"எப்படியோ உன்பாடு... நீ வாத்தியார். அதனாலே நான் சொல்றதைக் கேட்கமாட்டே?"
"எந்தக் கதாபாத்திரத்தை யார் யார் நடிக்கிறதுங்கறதில இருந்து எத்தினி சீன் வரணும், எவ்வளவு பாட்டு, எல்லாத்தையும் நீ என் பொறுப்பிலே விடு. நான் வெற்றி நாடகமாக இதை ஆக்கிக் காட்டாட்டி அப்புறம் என் பெயரு முத்துக்குமார் இல்லே..."
"சரி! செய்து பாரேன்... இப்ப சாப்பிடப் போகலாமா?"
இருவரும் இரவு உணவை முடித்துக் கொண்டு அப்புறமும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். அதன் பின் கோபால் தன் அலமாரியைத் திறந்து - வண்ண வண்ணமாக அடுக்கியிருந்த பாட்டில்களில் இரண்டையும் - கிளாஸ்களையும் எடுத்தான்.
"பழக்கம் உண்டா வாத்தியாரே?"
"நாடகக்காரனுக்கும், சங்கீதக்காரனுக்கும் இந்தக் கேள்வியே வேண்டியதில்லே கோபால்."
"வா! இப்படி உட்காரு வாத்தியாரே" என்று கூறிக் கொண்டே டேபிளில் கிளாஸ்களையும், பாட்டில்களையும் 'ஓபனரை'யும் வைத்தான் நடிகன் கோபால். அதன் பின் அவர்கள் பேச்சு வேறு திசைக்குப் போயிற்று. மாலையில் இண்டர்வ்யூக்கு வந்திருந்த பெண்களைப் பற்றி அவர்கள் தங்களுக்குள் தாராளமாகவும், சுதந்திரமாகவும் விமர்சித்துக் கொண்டார்கள்; பாட்டில்கள் காலியாகக் காலியாக - அவற்றில் இருந்த அளவு குறையக் குறையப் பேச்சின் தரம் குறைந்து கொண்டே வந்தது. தனிப்பாடல், திரட்டு முதலிய பழைய நூல்களிலிருந்து சில விரசமான கவிதைகளையும், சிலேடைகளையும் கோபாலிடம் சொல்லி, விவரிக்கத் தொடங்கினான் முத்துக்குமரன். நேரம் போவதே தெரியவில்லை. இதே பாட்டுக்களையும், பேச்சுக்களையும், அவர்கள் பாய்ஸ் கம்பெனியிலிருந்த காலத்திலும் பேசிக் கொண்டது உண்டு. ஆனால், அப்போது பேசிக் கொண்டதற்கும் இப்போது பேசிக் கொள்வதற்கும் இடையில் எவ்வளவோ வேறுபாடு இருந்தது. பாய்ஸ் கம்பெனியில் மது மயக்கத்தை அடைய வசதிகள் கிடையாது. இப்படி விஷயங்களைப் பயந்து பயந்துதான் பேசிக் கொள்ள வேண்டும். பெண் வாடையே வீசாத சூனியப் பிரதேசம் போல் கம்பெனி இருக்கும். இப்போது அப்படி இல்லை.
பன்னிரண்டு மணிக்குமேல் தள்ளாடி தள்ளாடி அவுட் ஹவுஸை நோக்கி நடந்த முத்துக்குமரனைப் பாதி வழியில் விழிந்துவிடாமல் நாயர்ப் பையன் தாங்கிக் கொண்டு போய்ப் படுக்கையில் விட்டான்.
"ஞான் டெலிபோன் கீ போர்டுக்குப் பக்கத்திலே உறங்கும். ஏதாவது வேணும்னா ஃபோனில் பறயட்டும்" என்று கூறிப் படுக்கை அருகே இருந்த ஃபோன் எக்ஸ்டென்ஷனைக் காண்பித்துவிட்டுப் போனான் பையன். அவன் பேசிய குரலும், காட்டிய ஃபோனும் மங்கலாக முத்துக்குமரனுக்குக் கேட்டன; தெரிந்தன. உடலில் அங்கங்கள் வெட்டிப் போட்டது போலவோ அடித்துப் போட்டது போலவோ, சோர்ந்திருந்தன. தூக்கம் கண்களில் வந்து கொஞ்சியது. அந்த வேளை பார்த்துச் சொப்பணத்தில் கேட்பது போல் அறைக்குள் டெலிபோன் மணி கேட்டது. இருட்டில், டெலிபோனைத் தேடி எடுப்பது சிரமமாக இருந்தது. தலைப்பக்கத்தில் இருந்த ஸ்விட்சை அழுத்தி விளக்கைப் போட்டு விட்டு டெலிபோனை எடுத்தான் முத்துக்குமரன். எதிர்ப்புறம் ஓர் இனிய பெண் குரல் - பயமும், நாணமும், கலந்த தொனியில் 'ஹலோ' என்று இங்கிதமாக அழைத்து, 'என்னை நினைவிருக்கிறதா?' என்று வினாவியது. அந்தக் குரலை நினைவிருந்தாலும் அப்போதிருந்த நிலையில் யாரென்று பிரித்து நினைவு கூற முடியாமலிருந்தது. அவன் பதில் சொல்லத் தயங்கினான்.
அவளே தொடர்ந்து ஃபோனில் பேசினாள்.
"...மாதவி ... இண்டர்வ்யூக்கு முன்னால் உங்களோடு பேசிக் கொண்டிருந்தேனே; நினைவில்லையா?"
"ஓ... நீயா...?"
போதையில் ஏகவசனமாக 'நீ' என்று வந்துவிட்டது. ஓர் அழகிய சமவயதுப் பெண்ணிடம் அவள் யௌவனத்தையும், பிரியத்தையும் அவமானப்படுத்துவது போல் 'நீங்கள்', 'உங்கள்' - என்று பேச முடியாதவனாக அவன் அப்போது இருந்தான். அவன் பருகியிருந்த மதுவைக் கசப்பாக்குவது போல் டெலிபோனில் அவள் குரல் இங்கிதமாக நளினமாய்த் தேனாகப் பெருகி வழிந்தது.
"மன்னிக்கணும்... நீங்களா...?" - என்று தன்னை நிதானப்படுத்திக் கொண்டு அவன் உரையாடலை மறுபடி தொடர்ந்தபோது,
"முதல்ல கூப்பிட்டாப்பிலேயே கூப்பிடலாம்! அது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு..." என்று எதிர்ப்புறம் அவள் குரல் ஒய்யாரமாய்க் குழைந்தது. அந்தக் குழைவு, அந்த இங்கிதம், எல்லாம் சேர்ந்து முத்துக்குமரனை மேலும் மேலும் கர்வப்பட வைத்தன. வலிய அணைக்கும் சுகம் போலிருந்தது அவளுடைய பேச்சு.
"இந்த அகாலத்தில் எங்கேயிருந்து பேசறே? நான் இந்த அவுட் ஹவுஸ்லே ஃபோனில் கிடைப்பேன்னு எப்பிடி உனக்குத் தெரியும்...?"
"அங்கே கோபால் சார் வீட்டிலே டெலிபோன் போர்டிலே இருக்கிற பையனைத் தெரியும்..."
"அவனைத் தெரியும்கிறதனாலே இந்த அகாலத்திலே ஒரு பெண் இப்படி ஃபோனில் குழையலாமா? நாலு பேர் என்ன நினைப்பாங்க..."
"என்னவேணா நினைக்கட்டுமே? என்னாலே பொறுத்துக்க முடியலே. கூப்பிட்டேன்... அது தப்பா?"
கடைசி வாக்கியத்தில் கேள்வியின் தொனி வெல்லமாய் இனித்தது. கேட்பவனுக்கு அந்த நயம் மதுவின் போதையைவிட அதிகமான போதையை அளித்தது. உலகின் முதல் மதுவே பெண்ணின் இதழ்களிலும், குரலிலும் தான் பிறந்து ஊற்றெடுத்திருக்க வேண்டும் போலும். முத்துக்குமரனுக்கு அவளோடு பேசி முடித்த போது மனம் நிறைந்து பொங்கி வழிகிறாற் போலிருந்தது. கொஞ்சம் சுயப்ரக்ஞையோடு அவள் எதற்காக ஃபோன் செய்தாள் என்று நினைத்தபோது நினைவில் அவள் தான் மீதமாகக் கிடைத்தாளே ஒழிய, அவள் ஃபோன் செய்த காரணம் கிடைக்கவில்லை. தனக்கு ஃபோன் செய்து தன்னுடைய அன்பையும், தயவையும், பிரியத்தையும், சம்பாதித்துக் கொண்டால் - தான் அவளை நாடகக் குழுவில் ஓர் நடிகையாகத் தேர்ந்தெடுக்கச் சொல்லி கோபாலிடம் சிபாரிசு செய்யலாமென்பதற்காக மறைமுகமாய் இப்படி ஃபோன் செய்து தூண்டுகிறாளோ என்ற சந்தேகம் ஒரு கணம் எழுந்தது. அடுத்த கணமே அப்படி இருக்காதென்றும் தோன்றியது. தனக்கு அவள் போன் செய்ததற்குத் தன்மேல் அவள் கொண்டிருக்கும் பிரியத்தைத் தவிர வேறெதுவும் காரணமாக இருக்க முடியாதென்று நினைத்த உறுதியில் முன் நினைவு அடிபட்டுப் போய்விட்டது. அன்றிரவு மிக இனிய கனவுகளுடனே உறங்கினான் அவன். விடிந்தபோது மிகவும் அவசர அவசரமாக விடிந்துவிட்டது போலிருந்தது. நாயர்ப் பையன் பெட் காபியோடு வந்து எழுப்பிய பின்புதான் அவன் எழுந்திருந்தான். வாயைக் கொப்பளித்துவிட்டுச் சூடான காபியைப் பருகினான். மனநிலை மிக மிக உற்சாகமாகவும், உல்லாசமாகவும் இருந்தது. அவுட் ஹவுஸின் வராந்தாவில் வந்து நின்று எதிரே தோட்டத்தைப் பார்த்தபோது அது மிகவும் அழகாக இருந்தது. பனியில் நனைந்த ஈரப் புல்தரை மரகத விரிப்பாகப் பசுமை மின்னிக் கொண்டிருந்தது. அந்தப் பசுமைக்குக் கரை கட்டினாற் போல் சிவப்பு ரோஜாப்பூக்கள் பூத்திருந்தன. இன்னொரு மூலையில் புல்தரையில் பூக்களை உதிர்த்துவிட்டு - அப்படி உதிர்த்த தியாகத்தோடு நின்று கொண்டிருந்தது பவழ மல்லிகை. எங்கிருந்தோ ரேடியோ கீதமாக - "நன்னு பாலிம்ப"...வில் மோகனம் காற்றின் வழியே மிதந்து வந்தது.
எதிரே தெரிந்த தோட்டமும் காலை நேரத்தின் குளுமையும் அந்தக் குரலின் மோகன மயக்கமும் சேர்ந்து முத்துக்குமரனை மனம் நெகிழச் செய்தன. அந்த நெகிழ்ச்சியின் விளைவாக மாதவியின் நினைவு வந்தது. முதல் நாளிரவு அகாலத்தில் டெலிபோனில் ஒலித்த அவள் குரலும் நினைவு வந்தது. சிலர் பாடினால் தான் சங்கீதமாகிறது. இன்னும் சிலரோ பேசினாலே சங்கீதமாயிருக்கிறது. மாதவிக்கோ வாய் திறந்து பேசினாலே சங்கீதமாயிருக்கிற குரல். குயில் ஒவ்வொரு கூவலாகக் கூவுவதற்காக அகவுவதுபோல் சொற்களை அகவி அகவிப் பேசினாள் அவள். அவளுடைய குரலைப் புகழ்ந்து ஒரு கவிதை பாடிப் பார்க்க வேண்டும்போல் தோன்றியது அவனுக்கு.
"தென்றல் வீசிடும் சுகமும் - நறுந்
தேனைக் குழைக்கும் நயமும்
ஒன்றிப் பேசிடும் குரலாயின் - அது
உரைக்கும் இன்னிசையாகாதோ?
மன்றில் பாடும் பாடல் போல் - சிலர்
மனத்திற் பாடும் பாட்டுண்டு
ஒன்றிக் கேட்கும் இசையுண்டு - இவ்
உலகிற் கேளா இசையுண்டு..."
இந்தப் பாடலை ஒவ்வோர் அடியாக வாயினாலேயே இட்டுக் கட்டிச் சேர்த்தபோது சில இடங்கள் கச்சிதமாகவும் வடிவாகவும் வரவில்லை என்பதை அவனே உணர்ந்தான். ஆனாலும் பாடிய அளவில் ஓர் ஆத்மதிருப்தியை அவன் அடைய முடிந்தது.
இப்படி முத்துக்குமரன் வராந்தாவில் நின்று தோட்டத்தையும், மனத்துள் நினைவலையாகச் சிலிர்த்த மாதவியின் குரலையும் இரசித்துக் கொண்டிருந்தபோது, கோபாலே 'நைட் கோட்' களையாத கோலத்தில், முத்துக்குமரனைப் பார்ப்பதற்காக அவுட் ஹவுசுக்குத் தேடிக் கொண்டு வந்தான்.
"நல்லாத் தூங்கினியா வாத்தியாரே?"
"தூக்கத்துக்கென்ன குறைச்சல்...?"
"அது சரி! இப்ப நான் உங்கிட்டப் பேச வந்த விஷயம் என்னன்னா...?"
"என்ன?"
"நேத்து வந்த பொண்ணுங்களிலே உனக்கு யாரை ரொம்பப் பிடித்திருந்திச்சு வாத்தியாரே?"
"ஏன்! கல்யாணம் கட்டி வைக்கலாம்னு பார்க்கிறியா?..."
"அட அதுக்கில்லேப்பா...! நம்ம நாடகக் குழுவின் தொடக்க விழாவைச் சீக்கிரமே நடத்தி முதல் நாடகத்தை அரங்கேத்திடணுங்கிறதுலே நான் ரொம்பத் தீவிரமா இறங்கியிருக்கேன். அதுக்கான 'செலக்ஷன்'லாம் பட்பட்னு முடியணும்."
"சரி முடியேன்."
"முடிக்கிறதுக்கு முன்னே உன் யோசனையையும் கேட்கலாம்னு தான் வந்தேன் வாத்தியாரே?"
"இந்த விசயத்திலே 'நடிகர் திலகத்துக்கு' நானா யோசனை சொல்லணும்...?"
"இந்தக் கிண்டல்தானே வேணாம்கிறது..."
"கிண்டலா? சே! சே! உள்ளதைத்தானே சொன்னேன்?"
"இண்டர்வ்யூவுக்கு வந்திருந்தவர்களிலே ஆம்பிளைங்க ரெண்டு பேரையும் அப்படியே எடுக்கிறதா முடிவு பண்ணிட்டேன். ஏன்னா சங்கீத நாடக அகாடெமி செக்ரட்டரி சக்ரபாணியோட ரெகமண்டேஷனோட வந்திருக்காங்க அவங்க ரெண்டு பேரும்..."
"சரி! ஜமாயி... அப்புறம்..."
"வந்திருந்த பொம்பளைகளிலே...?"
"அத்தினி பேருமே அழகுதான்..."
"அப்படிச் சொல்லிவிட முடியாது! அந்த 'மாதவி' தான் சரியான வாளிப்பு. நல்ல உயரம், சரீரக் கட்டு, களையான முகம்..."
"அப்படியா! ரொம்ப சரி..."
"அவளை பெர்மனன்ட் 'ஹீரோயினா' வச்சிக்க வேண்டியதுதான்..."
"நாடகத்துக்குத் தானே..."
"வாத்தியாரே! உன் கிண்டலை நான் தாங்க மாட்டேன்... இத்தோடு விட்டுடு."
"சரி பிழைத்துப்போ?... மேலே சொல்லு..." என்று நண்பனை மேலே பேசுமாறு வேண்டினான் முத்துக்குமரன். கோபால் மேலே கூறத் தொடங்கினான்.
"வந்திருந்த மத்தப் பொண்ணுங்களிலே சிலரை நாடகங்களிலே வர்ர உப பாத்திரங்களுக்காக எடுத்துக்கலாம்னு பார்க்கிறேன்..."
"அதாவது சரித்திரக் கதையானால் தோழி - சேடி. சமூகக் கதையானால் கல்லூரி சிநேகிதி... பக்கத்துவீட்டுப் பெண் இப்படி எல்லாம் வேண்டியிருக்கும்... சமயத்திலே அந்த உப பாத்திரங்கள் வாழ்க்கைக்குக்கூடத் தேவைப்படலாம்..."
கிண்டல் பொறுக்க முடியாமல் பேசுவதை நிறுத்திவிட்டு முத்துக்குமரனின் முகத்தை உற்றுப் பார்த்தான் கோபால். உடனே பேச்சை மாற்றக் கருதிய முத்துக்குமரன் சிரித்துக் கொண்டே, "அதென்னமோ, கோபால் நாடக மன்றம்னு பெயர் வைக்கிறதுக்கு முன்னே, உன்னோட செக்ரட்டரியை இன்கம்டாக்ஸ் விஷயமாகக் கலந்து பேசணும்னியே? பேசியாச்சா?" என்று வினவினான். அதற்குக் கோபாலிடமிருந்து பதில் கிடைத்தது.
"அதெல்லாம் செக்ரட்டரிக்குக் காலையிலே ஃபோன் செய்து தெரிஞ்சுக்கிட்டேன். 'கோபால் நாடக மன்றம்'னே பெயர் வைக்கலாம். அதைத் தெரிஞ்சுக்கிட்டுத்தான் உன்னைப் பார்க்க வந்தேன்..."
"சரி! மேலே என்ன செய்யணும்?"
"இந்த அவுட ஹவுஸிலே உட்கார்ந்து எவ்வளவு சீக்கிரமா முடியுமோ, அவ்வளவு சீக்கிரமா வாத்தியார் நாடகத்தை எழுதி முடிக்க வேண்டியதுதான் பாக்கி. இங்கே எல்லாம் வசதியா இருக்கும். எது வேணும்னாலும் உடனே அந்த நாயர்ப் பையனிட்ட ஒரு வார்த்தை சொன்னாப் போதும். இந்த அவுட் ஹவுஸ் வடநாட்டு நடிகர் திலகம் 'பிலிப்குமார்' இங்க வந்தப்ப அவர் தங்கறத்துக்காகக் கட்டினதாக்கும். அவருக்கப்புறம் இதுலே தங்கற முதல் ஆள் நம்ம வாத்தியார் தான்..."
"வாத்தியாரை இதைவிட அதிகமா அவமானப்படுத்த வேறே எந்த வாக்கியத்துனாலேயும் முடியாதுன்னு பார்க்கிறயா?"
"ஏன், இதுலே என்ன அவமானம்?"
"இல்லே பிலிப்குமார் ஒரு நடிகன். நானோ ஒரு கர்வக்காரக் கவிஞன்!... அவன் தங்கிய இடத்தை ஒரு க்ஷேத்திரமாக நான் நினைக்க முடியாது. நீ அப்படி நினைக்கலாம். நானோ நான் தங்கிய இடத்தை மற்றவர்கள் க்ஷேத்திரமாக நினைக்க வேண்டும் என்று எண்ணுகிறவன்."
"எப்படி வேணுமானால் எண்ணிக்கோ வாத்தியாரே! நாடகத்தைச் சீக்கிரமா எழுதி முடி..."
"எழுதிப்போடற ஸ்கிரிப்டை நீட்டா தமிழிலே டைப் பண்ண - ஓர் ஆள் வேணும்டா கோபால்!"
"எனக்கு ஒரு ஐடியா தோணுது! மாதவிக்கு நல்லா 'டைப் ரைட்டிங்' தெரியும்னு நேத்தி இண்டர்வ்யூவிலே சொன்னா. அவளையே டைப் பண்ணச் சொல்றேன். டைப் செய்யறப்பவே வசனம் அவளுக்கு மனப்பாடம் ஆயிடும்..."
"நல்ல ஐடியா தான்... இப்படிக் 'கதாநாயகியே' கூட இருந்து 'ஹெல்ப்' பண்ணினா எனக்குக்கூட நாடகத்தை வேகமா எழுத வரும்..."
"நாளைக்கே புதுத் தமிழ் டைப்ரைட்டிங் மெஷினுக்கு ஆர்டர் கொடுத்துடறேன்..."
"நீ ஒவ்வொண்ணா ஆர்டர் கொடுத்து வரவழைக்கப் போற மாதிரி நான் கற்பனைக்கு ஆர்டர் கொடுத்து வரவழைக்க முடியாது! அது மெல்ல மெல்லத்தான் வரும்."
"நான் ஒண்ணும் அவசரப்படுத்தலே. முடிஞ்சவரை சீக்கிரமா எழுதினா நல்லதுன்னுதான் சொன்னேன்... குடிக்கிறதுக்கு காபியோ, டீயோ, ஓவலோ எது வேணும்னாலும் ஃபோன்லே சொன்னா உடனே இங்கே தேடி வரும்..."
"காபியோ, டீயோ, ஓவலோ... தான் குடிக்கறதுக்குத் தேடி வருமா அல்லது குடிக்கிறதுக்கு வேறே 'அயிட்டங்களும்' கேட்டாத் தேடி வருமா?"
"கண்டிப்பா! உடனே தேடி வரும்..."
"என்னை ஏறக்குறைய உமர்கையாமாகவே ஆக்கறே...? இல்லையா...?"
"சரி! சரி! எதையாவது சொல்லிக்கிட்டிரு... நான் போகணும்... பத்து மணிக்கு 'கால்ஷீட்' இருக்கு. வரட்டுமா!" என்று கேட்டுக் கொண்டே எழுந்து புறப்பட்டு விட்டான் கோபால். முத்துக்குமரன் இன்னும் அவுட் ஹவுஸின் வராந்தாவிலேயே நின்று கொண்டிருந்தான். புற்களில் பனியால் விளைந்திருந்த புகை நிறம் மாறி வெயிலால் மேலும் பசுமை அதிகமாகியது. ரோஜாப் பூக்களின் சிவப்பைப் பார்த்த போது மாதவியின் உதடுகளை நினைவு கூர்ந்தான் முத்துக்குமரன். உள்ளே ஃபோன் மணியடிப்பது கேட்டது. விரைந்து சென்று எடுத்தான்.
"நான் தான் மாதவி பேசறேன்."
"சொல்லு! என்ன சங்கதி!"
"இப்பதான் 'சார்' ஃபோன் பண்ணிச் சொன்னாரு. உடனே உங்களைக் கூப்பிட்டேன்..."
"சார்னா யாரு?"
"அவர்தான் நடிகர் திலகம் சார். ஃபோன் பண்ணிச் சொன்னாரு. நாளையிலிருந்து 'ஸ்கிரிப்ட்' டைப் பண்ண வந்திடுவேன். நான் வருவேன்னு தெரிஞ்சதும் உங்களுக்குச் சந்தோஷமா இல்லையா, சார்?"
"வந்தப்புறம் தானே சந்தோஷம்."
எதிர்ப்புறம் சிரிப்பொலி கேட்டது.
"இந்தா... மாதவி! உன்னையெத்தானே? டைப் பண்றதுக்கு நீதான் வருவேன்னு கோபால் சொன்னப்ப நான் அவன்கிட்டே பதிலுக்கு என்ன சொன்னேன் தெரியுமா?"
"என்ன சொன்னீங்க?"
"கேட்டா நீ ரொம்ப சந்தோஷப்படுவே, 'கதாநாயகியே கூட இருந்து ஹெல்ப் பண்ணினா நாடகத்தை வேகமா எழுதிடலாம்னேன்'..."
"கேக்கிறப்பவே எனக்கு என்னவோ செய்யுது..."
"என்ன செய்யிதுன்னு சொல்ல வரலியாக்கும்...?"
"நாளைக்கு நேரே வாரப்ப சொல்றேன்..." - என்று இனிய குரலில் கலக்கும் இன்பக் குறும்பின் விஷமத்தோடு பதில் சொல்லி ஃபோனை வைத்தாள் அவள். முத்துக்குமரனும் ஃபோனை வைத்துவிட்டு நிமிர்ந்தபோது அறை வாயிலில் நாயர்ப் பையன் காத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அவன் கையில் ஒரு சிறிய கவர் இருந்ததைக் கண்டதும் - "என்னது? கொடுத்திட்டுப் போயேன்" - என்று அவனைக் கூப்பிட்டான் முத்துக்குமரன்.
பையன் கவரைக் கொண்டு வந்து கொடுத்தான். கவர் கனமாக இருந்தது. மேற்புறம் ஒட்டியிருந்ததோடு முத்துக்குமரனின் பெயரும் எழுதியிருந்தது. பையன் கவரைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டான். அவசர அவசரமாக முத்துக்குமரன் அதைப் பிரித்த போது உள்ளே புத்தம் புதிய பத்துரூபாய் நோட்டுக்கள் நூறும், மேலாக ஒரு துண்டுக் கடிதமும் இருந்தன. கடிதத்தைப் படிப்பதற்காகப் பிரித்தான் முத்துக்குமரன். கடிதத்தில் இரண்டே இரண்டு வரிகள் தான் எழுதப்பட்டிருந்தன. கீழே கோபாலின் கையெழுத்தும் இருந்தது. இரண்டாவது முறையாகவும், மூன்றாவது முறையாகவும், திரும்பத் திரும்ப அதைப் படித்தான் முத்துக்குமரன். அவன் மனத்தில் பலவிதமான உணர்வுகள் அலை மோதின. நண்பன் கோபால் தன்னை நண்பனாக நினைத்து அன்புரிமையோடு பழகுகிறானா அல்லது பட்டினத்துக்குப் பிழைக்க வந்திருக்கும் ஒருவனிடம் அவனுடைய எஜமான் பழகுவது போல் பழகுகிறானா என்பதைக் கண்டுபிடிக்க முயன்றான் முத்துக்குமரன்.
கோபால் அந்தத் தொகையுடன் தன் பெயருக்கு வைத்திருந்த கடிதத்தைப் படித்து அதிலிருந்து கோபாலின் மனத்தை நிறுத்திப் பார்த்துவிட முடியும் என்று தோன்றியது முத்துக்குமரனுக்கு. கடிதம் என்னவோ மிகமிக அன்போடும் பாசத்தோடும் எழுதப்பட்டிருந்தது போலத் தென்பட்டது.
----------
அத்தியாயம் - 4
"அன்புள்ள முத்துக்குமார் என்னுடைய செயலைத் தவறாக நினைக்காமல் - இதனுடனிருக்கும் ஆயிரம் ரூபாயைக் கைச்செலவுக்கு வைத்துக் கொள். சமயத்தில் நான் ஊரிலிருந்தாலும் இல்லாவிட்டாலும், யாரிடம் கேட்பது, எப்படிக் கேட்பது, என்று புதிய ஊரில் புதிய இடத்தில் நீ செலவுக்குத் திண்டாடக் கூடாது என்ற நல்லெண்ணத்துடனேயே இதை உனக்குக் கொடுத்தனுப்புகிறேன்" என்றெழுதிக் கீழே கோபால் கையொப்பம் இட்டிருந்தான்.
- இந்தச் சிறிய கடிதத்தைப் படித்துவிட்டு - உடனிருந்த ரூபாய் நோட்டுக்களையும் பார்த்தபோது நண்பனின் செய்கைக்கு ஆத்திரப்படுவதா அன்பு கூறுவதா என்று புரியாமல் மீண்டும் குழம்பினான் முத்துக்குமரன். 'தன்னிடம் பணம் இருக்கிறதென்ற திமிரில் தானே இப்படிக் கொடுத்தனுப்புகிறான்' ...என்பதாக நினைத்தபோது கோபமும்... 'பாவம்! நான் சிரமப்படப் போகிறேனே என்ற எச்சரிக்கையுணர்வோடு குறிப்புணர்ந்து கொடுத்தனுப்பி இருக்கிறான்'...என்பதாக நினைத்த போது வியப்பும் அன்பும் மாறி மாறி உண்டாயின. தங்க இடம், உண்ண உணவு, நாடகம் எழுத வசதிகள், எல்லாம் செய்து கொடுக்கப்பட்டு விட்ட பின் தனக்குப் பணம் தேவை இல்லை என்றாலும்... திருப்பிக் கொடுத்தனுப்பினால் நண்பனுடைய மனம் புண்படுமே என்ற தயக்கம் முத்துக்குமரனுக்கு ஏற்பட்டது. உடனடியாக தேவை இல்லாத ஒரு காகிதக் கற்றையை டிராயருக்குள் திணிப்பது போல் மேஜை டிராயரில் அந்த உரையையும் கடிதத்தையும் பணத்தோடு எடுத்துப் போட்டு வைத்தான் அவன். மனமோ நண்பனுக்கு எழுதிக் கொடுக்க வேண்டிய நாடகத்தைப்பற்றிச் சிந்திக்கத் தொடங்கியது. சென்னையைப் போன்ற ஒரு பெரிய கஸ்மாபாலிடன் நகரத்தில் - கோபாலைப் போன்ற புகழ்பெற்ற நடிகன் ஒருவன் தயாரித்து அளிக்கிற தான் எழுதும் நாடகம் எத்தனை பெருமைக்குரியதாக அமைய வேண்டுமோ அத்தனை பெருமைக்குரியதாக அதை அமைக்க வேண்டுமென்ற தீர்மானம் முதலில் அவனுக்குள் ஏற்பட்டது. மதுரை கந்தசாமி நாயுடுகாருவின் சபைக்கு எழுதிக் கொடுத்த பழைய பாலவிநோத நாடகங்களுக்கும், இப்போது எழுதப்போகிற இந்த நாடகத்துக்கும் என்னெண்ண வித்தியாசங்கள் இருக்க வேண்டும் என்பதை முதலில் அவன் சிந்தித்தான். உத்தி, அமைப்பு, உரையாடல், சம்பவக் கோவை, நகைச்சுவை எல்லாவற்றிலுமே பட்டினத்திற்கும் காலத்திற்கும் ஏற்ற முறையில் இந்த நாடகம் அட்வான்ஸாக இருக்க வேண்டுமென்று அவனுக்கே தோன்றியது. அதனால்தான் அவன் திரும்பத் திரும்ப அந்த நாடகத்தைப் பற்றிச் சிந்தித்தான். நாடகமோ, வசனமோ, பாடல்களோ எழுதுவது அவனுக்குக் கைவந்த பழக்கம்தான் என்றாலும் அந்தப் பழக்கத்தை ஒரு புதிய உலகுக்குப் பயன்படுத்திக் காண்பித்து வெற்றிபெற வேண்டியவனாகத் தான் இருப்பதை இப்போது அவன் உணர்ந்திருந்தான். சிந்தனைக்கும் தயக்கத்துக்கும் அதுதான் காரணமாக இருந்தது. பட்டினத்துக்கு வந்ததும் வராததுமாக நண்பன் மூலம் இப்படி ஒரு வாய்ப்புக் கிடைக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லையாயினும் - கிடைத்த வாய்ப்பை வெற்றிகரமாகச் செய்ய வேண்டும் என்பதில் இப்போது அக்கறை பிறந்தது. அது சம்பந்தமான திட்டங்களை மனத்தில் போடத் தொடங்கினான் அவன்.
காலை ஒன்பதரை மணிக்கு நாயர்ப் பையன் - இட்டிலியும் காபியும் கொண்டு வந்து வைத்துவிட்டு "சார்! உங்க 'ப்ரேக்ஃபாஸ்ட்' ரெடி" - என்றான்.
"ஐயா இருக்காரா! ஸ்டூடியோவுக்குப் புறப்பட்டுப் போயிட்டாரா?" - என்று அவனிடம் விசாரித்தான் முத்துக்குமரன்.
"இன்னும் புறப்படலே! பத்து நிமிசத்திலே புறப்பட்டிடுவாரு" - என்று பதில் கிடைத்தது. "சாருக்கு எது வேணும்னாலும் உடனே செய்யச் சொல்லி ஐயா உத்திரவு போட்டிருக்கு" - என்று முத்துக்குமரன் கேட்காத ஒன்றையும் சேர்த்துத் தன் மறுமொழியில் கூறினான் பையன்.
முத்துக்குமரன் சிற்றுண்டியை முடித்துவிட்டு காபி அருந்திக் கொண்டிருக்கும்போது ஃபோன் மணி அடித்தது. பங்களாவிலிருந்து கோபால்தான் கூப்பிட்டுப் பேசினான்.
"நான் ஸ்டூடியோவுக்குப் புறப்படறேன் வாத்தியாரே! எது வேணும்னாலும் பையனிட்டக் கூச்சமில்லாமக் கேட்டுக்கலாம். ஸ்டூடியோவிலிருந்து அப்புறம் ஃபோன் பண்றேன்...நாடகம்...ஜல்தி தயாராகட்டும்..."
"அது சரி! இதென்னமோ கவர்லே போட்டு அனுப்பிச்சிருக்கியே, இதுக்கென்ன அர்த்தம்னு புரியலியே! உங்கிட்ட நிறைய இருக்குங்கறதை எனக்குக் காமிக்கிறியா?"
"சே; சே! எதையாவது உளறாதே வாத்தியாரே...சும்மா கைச் செலவுக்கு இருக்கட்டும் வச்சுக்க..."
"வெள்ளைத் தாளா இருந்தாலும் கவிதை எழுதலாம். ரூபாய் நோட்டாவில்ல இருக்குது இது?" என்று முத்துக்குமரன் பதில் கூறியதைக் கேட்டு எதிர்ப்புறம் கோபால் கலகலவென்று வாய்விட்டுச் சிரித்தான். உரையாடல் முடிந்தது. கோபால் படப்பிடிப்புக்குப் புறப்பட்டு விட்டான். முத்துக்குமரனுடைய மனநிலை, அகம்பாவம் எல்லாம் கோபாலுக்கு நன்றாகத் தெரியுமாதலால் "படப்பிடிப்புப் பார்க்க வா - ஸ்டூடியோவைச் சுற்றிப் பார்க்க என் கூட வா" - என்றெல்லாம் உபசாரத்துக்காகக் கூட அவனைக் கூப்பிடவில்லை. சாதாரணமாக வெளியூரிலிருந்து முதல் தடவையாகப் பட்டினத்துக்கு வருகிறவன் ஒரு சினிமா ஸ்டூடியோவைப் பார்க்க வேண்டுமென்பதை எவ்வளவு பெரிய ஆர்வமாகக் கொண்டிருப்பானோ அவ்வளவு பெரிய ஆர்வமாக முத்துக்குமரன் அதைக் கொண்டிருக்க மாட்டான் என்பது கோபாலுக்குத் தெரியும்.
- பகல் பன்னிரண்டு மணிக்குள் பேசுவதற்கு விஷயத்துடனோ, விஷயமின்றியோ, மாதவி நான்கைந்து முறை முத்துக்குமரனுக்கு ஃபோன் செய்துவிட்டாள்...
- மதுரையில் இருந்தவரை டெலிஃபோன் என்ற கருவியை இப்படி இத்தனை விதமாக இத்தனை அவசியமாகப் பயன்படுத்துகிற வாய்ப்பையோ, வசதியையோ முத்துக்குமரன் அறிந்ததில்லை. நவீன வாழ்க்கையில் சென்னையைப் போன்ற ஒரு நகரத்தில் அதன் அவசியத்தை இப்போது அவன் நன்றாக உணர முடிந்தது. வாழ்க்கையின் வேகமே மதுரைக்கும் சென்னைக்குமிடையே வேறுபட்டது. ஒற்றையடிப்பாதையில் நடந்து கொண்டிருந்தவன், திடீரென்று கார்களும் லாரிகளும் சீறிப் பாய்கிற ரோட்டிற்கு வந்தால் தடுமாற நேரிடுகிற மாதிரி சென்னையின் பரபரப்பிற்கும் வேகத்திற்கும் அவன் சுறுசுறுப்பாகத் தயாராக வேண்டியிருந்தது. டெலிஃபோனில் ஒருவரிடம் நேரில் பேசுகிற மாதிரியே சிரித்தும் மலர்ந்தும் கோபித்தும் குலாவியும், சுபாவமாகப் பேசுவதற்கு அவனுக்கு வரவில்லை. போட்டோவுக்கு நிற்கிற மாதிரி ஒரு செயற்கை உணர்வுடனேயே பேச வந்தது அவனுக்கு. கோபாலோ, மாதவியோ ஃபோனில் பேசும் போது அப்படிச் செயற்கை எதுவுமில்லாமல சுபாவமாயிருப்பதையும் அவன் கவனித்தான். தானும் அப்படி ஃபோனில் பேசிப் பழகிவிட அவனுக்கும் ஆசையாகத் தான் இருந்தது. பல விஷயங்களில் அவனுக்குள் அகம்பாவம் நிரம்பியிருந்தாலும் சில விஷயங்களில் அவன் சென்னையின் சூழ்நிலையில் அகம்பாவப்பட முடியாமலும் இருந்தது.
நீண்ட நேரச் சிந்தனைக்குப் பின்னும் எதை எழுதுவது என்பது பிடிபடவில்லை. குளித்து உடை மாற்றிக் கொண்டு பகல் உணவையும் முடித்தாயிற்று. கோபால் ஸ்டூடியோவிலிருந்து ஃபோன் செய்தான்.
"மூணு மணிக்கு நீ தயாராய் இருக்கணும் வாத்தியாரே! நம்ம புது நாடகத்தைப்பத்தி பேசறத்துக்காகச் சாயங்காலம் நாலு நாலரை மணி சுமாருக்கு எல்லா ப்ரஸ் ரிப்போட்டர்ஸையும் வரச்சொல்லியிருக்கேன். ஒரு சின்ன டீ பார்ட்டி. அப்புறம் எல்லாரும் புது நாடகத்தைப் பத்தி இன்ஃபார்மலா உன்னிடம் பேசுவாங்க...கேள்விகள் கேட்பாங்க... கேள்விக்கெல்லாம் நீதான் கோபப்படாமல் பதில் சொல்லணும். என்ன சரிதானா?"
"நாடகமே இன்னும் தயாராகலே; அதுக்குள்ளே...இதெல்லாம் வேற எதுக்கு?"
"இந்த ஊர்ல இதெல்லாம் ஒரு முறை. முன்கூட்டியே ஒரு பப்ளிஸிடிதான். வேறென்ன? திட்டினாலும் டிபன், காபி, பீடா எல்லாம் குடுத்திட்டு அப்புறம் திட்டினாத்தான் இங்கே கேட்பாங்க..."
"கொஞ்சம் கொஞ்சமா என்னை மெட்ராசுக்குத் தயாராக்கப் பார்க்கறே! இல்லியா?"
"தயாராக வேண்டியதுதானே?"
"இதெல்லாமே ஒரு நாடகமாவில்லே இருக்கு?"
"அப்படித்தானே இருக்கணும்!"
"யாராரு வருவாங்க?"
"சினிமா நிருபர்கள், பிரபல கதை வசன கர்த்தாக்கள், டைரக்டர்கள். நம்ம குழுவுக்குத் தேர்ந்தெடுத்திருக்கிற ஆளுங்க...மற்ற நடிக நடிகையர்களிலே சில பேரு...எல்லாரும்...வருவாங்க..."
"என்னை என்னவோ கேட்பாங்கன்னியே; என்ன என்ன கேட்பாங்க்...?"
"தப்பா ஒண்ணும் கேட்க மாட்டாங்க? 'நீங்க எழுதப் போகிற நாடகம் எதைப் பற்றி? எப்படி எப்ப தயாராகும்?'னு கேட்பாங்க 'தமிழகத்தின் மகோன்னதமான பொற்காலத்தைச் சித்தரிக்கும் மகோன்னதமான வரலாற்று நாடகமாக இது அமையும். இதுவரை யாரும் இப்படி ஒரு நாடகத்தைத் தமிழகத்துலே மட்டுமில்லே; இந்தியாவிலேயே தயாரித்திருக்க முடியாதுன்னு' பதில் சொல்லிவிடேன்."
"கேள்வியையும் சொல்லிப் பதிலையும் நீயே சொல்லிக் கொடுத்துப்புட்டே...அப்படித்தானே?"
"ஆமாம்! நீ என்ன பதிலைச் சொன்னாலும் 'மகோன்னதமான'ன்னு ஒரு வார்த்தை சேர்த்துக்க, அது போதும்..."
"மகோன்னதமான கோபால் குழுவினரின் மகோன்னதமான வரலாற்று நாடகம் மகோன்னதமாக வர இருக்கிறாக்கும்...?"
"கிண்டல் வேண்டாம்; ஸீரியஸ்ஸாகவே சொல்றேன் நான்..."
"ரெண்டுக்கும் வித்தியாசம் இங்கே எப்பவும் புரிய மாட்டேங்குது? எது ஸீரியஸ்? எது கிண்டல்னே தெரியலே கிண்டலானதையும் ஸீரியஸ்ஸாகச் சொல்றாங்க இங்கே?"
"அது இருக்கட்டும்! நீ தயாராயிரு. நானும் மூணு மணிக்கு வந்திடுவேன். மாதவியைக் கூடக் கொஞ்சம் முன்னாடியே வரச்சொல்லி ஃபோன் பண்ணியிருக்கேன்" - என்று கூறிப் பேச்சை முடித்தான் கோபால்; முத்துக்குமரனோ மனத்தில் கோபாலை வியக்கத் தொடங்கினான்.
சென்னைக்கு வந்து சேர்ந்தபின் இந்தக் கோபால் தான் வாழ்க்கையை எவ்வளவு வேகமாகப் படித்திருக்கிறான்! இத்தனை உலகியலை இவன் எப்போது கற்றான்? இவ்வளவு சமயோசிதத்தை இவன் எப்படிப் படித்தான்? யாரிடம் படித்தான்? சமயத்திற்குத் தகுந்த ஏற்பாடுகளைச் செய்து கொள்ளும் இந்த அரசியல் சாணாக்கியம் கலை வாழ்விலேயே இவனுக்குக் கிடைத்திருப்பது பெரிய ஆச்சரியம்தான்! - என்பதாகத் தோன்றியது முத்துக்குமரனுக்கு.
காலையில் நாடகம் எழுதச் சொல்லிவிட்டுப் பகலில் பத்திரிகைக்காரர்களைக் கூப்பிட்டு விளம்பரம் செய்யும் இந்தச் சாமார்த்தியமும், வேகமும்தான் பட்டினத்தில் வெற்றி பெற வழிகள் போலும் என்று ஒரு கணம் அவனுக்குள்ளேயே ஒரு மலைப்பு உண்டாயிற்று. ஒரு திறமையான காரியத்தைச் செய்வதோடு ஒடுங்கிவிடாமல் 'நான் செய்வதுதான் திறமையான காரியம்' - என பத்துப் பேரைக் கூப்பிட்டு வைத்து விருந்துபசாரத்தோடு அழுத்திக் கூறி அனுப்பும் சாமர்த்தியமும் இந்த நகரில் வேண்டும் போலும் என்று நினைத்துக் கொண்டான் அவன். பகல் இரண்டு மணியிலிருந்து ஒரு முக்கால் மணி நேரம் படுக்கையில் படுத்துப் புரள்வதில் கழிந்தது. தூக்கமும் வரவில்லை. நாயர்ப்பையன் கொண்டு வந்து போட்டிருந்த தமிழ் காலைத் தினசரியைப் படிப்பதில் அந்த நேரம் போயிற்று.
இரண்டே முக்கால் மணிக்கு எழுந்து முகம்கழுவி உடை மாற்றிக்கொண்டு தயாரானான் அவன். அறைக் கதவை யாரோ மெல்லத் தட்டினார்கள்.
முத்துக்குமரன் கதவைத் திறந்தான். மல்லிகைப் பூ வாசனை குப்பென்று வந்து தாக்கியது. பிரமாதமாக அலங்கரித்துக் கொண்டு வந்திருந்தாள் மாதவி. இதழ்களில் 'லிப்ஸ்டிக்'கைப் பூசி அழித்தது போலிருந்தது. முத்துக்குமரன் முகம் மலர்ந்து அவளை வரவேற்றான்.
"நீயாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்..."
"எப்படி?"
"கதவைத் தட்டிய விதம் மிக நளினமாக மிருதங்கம் வாசிப்பது போல் இருந்தது."
"வளை ஒலி கூடக் கேட்டிருக்கலாமே?"
- கேட்டது என்று பதில் சொல்லலாமா, கேட்கவில்லை என்று சொல்லலாமா என ஒரு கணம் தயங்கி அவளுக்கு ஏமாற்றமளிக்க விரும்பாமல்,
"கேட்டதே!" என்றான் முத்துக்குமரன்.
"பெண்களின் கை வளைகள் ஒலிக்கும்போது கவிஞர்களுக்குக் கற்பனை பெருகுமென்கிறார்களே? உங்களுக்கு ஒன்றும் கற்பனை தோன்றவில்லையா?"
- இந்தக் கேள்வியின் துணிவிலும் துடுக்குத்தனத்திலும் அயர்ந்துவிட்ட முத்துக்குமரன் தன்னைச் சமாளித்துக் கொண்டு மறுமொழி கூறச் சிறிது நேரமாயிற்று.
"பிரத்யட்சமே நேரில் வந்து விட்டபின் கற்பனை எதற்கு மாதவி?"
அவள் அவன் முகத்தை நேருக்கு நேர் பார்த்துப் புன்முறுவல் பூத்தாள். அந்த அலங்காரத்தில் ஒரு வனதேவதைபோல் அவள் அவனை மயக்கிக்கொண்டிருந்தாள். அவன் அவளைப் பருகிவிடுவதுபோல் பார்த்தான்.
"என்ன பார்க்கிறீர்கள்...?"
"ஒன்றுமில்லை. கதாநாயகி எப்படி இருக்கிறாள் என்று பார்த்தேன்?"
அவள் முகம் சிவந்தது.
வாயிற் பக்கம் யாரோ மெல்லக் கனைத்துச் செருமும் ஒலி கேட்டது. இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். கோபால் சிரித்தபடி நின்று கொண்டிருந்தான்.
"உள்ளே வரலாமா?"
"இதென்னடா கேள்வி? வாயேன்."
"அதுக்கில்லே! ரெண்டு பேரும் ஏதோ குஷாலாப் பேசிக்கிட்டிருக்கீங்க. மூணாவது ஆளும் கலந்துக்க முடிஞ்ச பேச்சா அல்லது ரெண்டு பேர் மட்டுமே பேசற பேச்சான்னு தெரியலியே?"
"எந்த ரெண்டு பேர் பேச்சிலும் மூணாவது ஆள் கலந்துக்கலாம்..."
"ஒண்ணுலே மட்டும் முடியாது."
"எதுலே?"
"காதலர்கள் பேச்சிலே...!"
கோபால் இப்படிக் கூறியதை மாதவி தவறாக எடுத்துக் கொள்ளப்போகிறாளே என்ற தயக்கத்தோடும், பயத்தோடும் அவள் முகத்தைப் பார்த்தான் முத்துக்குமரன். அவள் குறும்புச் சிரிப்புச் சிரித்துக் கொண்டிருந்தாள். கோபால் அப்படிச் சொல்லியதிலே அவளுக்கும் உள்ளூற மகிழ்ச்சிதான் என்று தெரிந்தது.
கோபாலும் திருமணமாகாதவன். மாதவியும் திருமணமாகாதவள்; தானும் திருமணமாகாதவன் - என்றெண்ணி மூவரும் இப்படி வெளிப்டையாகத் துணிந்து காதலைப் பற்றிச் சிரித்துப் பேசவும், உறவு கொண்டாடவும் முடிவதையும் எண்ணியபோது பட்டினத்துக் கலையுலகம் மிக மிகத் துணிந்து முன்னேறியிருப்பதாகத் தோன்றியது முத்துக்குமரனுக்கு. அந்தத் துணிவுக்கும், வேகத்துக்கும் ஏற்ப உடனே தயாராக முடியாமல் திணறினான் அவன். எல்லாம் கனவு போலிருந்தது அவனுக்கு. மூன்றரை மணிக்கு அவனும், கோபாலும், மாதவியும் தோட்டத்துக்கு வந்தார்கள். தோட்டத்தில் விருந்துபசாரத்துக்கு வெள்ளை விரிப்புடன் கூடிய மேஜை நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. மேஜைகளில் பூக்கள் சொருகிய ஜாடிகளும், கிளாஸ்களும் வரிசை பிடித்ததுபோல் அழகாக அளவாக வைக்கப்பட்டிருந்தன.
ஒவ்வொருவராக வரவர அவர்களை முத்துக்குமரனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான் கோபால். மாதவி சுற்றிச் சுற்றி முத்துக்குமரனுக்குப் பக்கத்திலேயே சிரித்துக் கொண்டு நின்றாள். பெண் விருந்தினர்களை எதிர் கொண்டு அழைத்து வந்து அவள் அவனுக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள். விருந்துக்கு வந்திருந்த வசனகர்த்தாக்களிலே ஒருவன் முத்துக்குமரனை ஏதோ மட்டந்தட்ட விரும்புகிற பாணியில் கேட்பவன் போல்,
"இது தான் உங்க முதல் நாடகமா? இல்லே...முன்னே ஏதாவது எழுதியிருக்கீங்களா..." - என்பது போல் கேட்டான். முதலில் கேள்வியைக் காதில் வாங்காதது போலவே கோபத்தோடு சும்மா இருந்தான் முத்துக்குமரன்.
மறுபடியும் அதே அலட்சியத்தோடு அதே கேள்வியைக் கேட்டான் வசனகர்த்தா. முத்துக்குமரன் அவனை மடக்க விரும்பினான்.
"உங்க பேரென்னன்னு சொன்னீங்க?...
"வசனப்பித்தன்."
"இதுவரை எத்தினி படத்துக்கு வசனம் எழுதியிருக்கீங்க...?"
"நாற்பதுக்கு மேலிருக்கும்..."
"அதுதான் இப்படிக் கேக்கறீங்களோ?" - என்று அந்த ஆளைப் பதிலுக்கு மடக்கியதும் அவன் மிரண்டு போனான். திமிரோடு கேள்வி கேட்ட அவனை முத்துக்குமரன் பதிலுக்கு மடக்கிக் கேட்ட போது, ஓர் ஆசிரியருக்கு மறுமொழி கூறும் மாணவனைப் போல் அவன் பயந்து பயந்து பதில் கூறியதை மாதவி அருகிலிருந்து இரசித்தாள். முத்துக்குமரனின் அகம்பாவத்தையும், கர்வத்தையுமே அவள் காதலித்தாள். அந்த அகம்பாவமும், கர்வமுமே அவளை அவனுக்காக நெகிழச் செய்தன. காபி, சிற்றுண்டி முடிந்ததும் கோபால் எழுந்து முத்துக்குமரனை விருந்தினர்களுக்கு அறிமுகப்படுத்துகிற விதத்தில் சில வார்த்தைகள் பேசினான்.
"முத்துக்குமரனும் நானும் பாய்ஸ் கம்பெனிக் காலத்திலிருந்தே இணை பிரியாத நண்பர்கள். எனக்குத் தெரிந்த முதல் தமிழ்க் கவிஞன் முத்துக்குமரன்தான். அவனும் நானும் அந்த நாளில் பாய்ஸ் கம்பெனி வீட்டில் ஒரு பாயில் படுத்து உறங்கியிருக்கிறோம். அவனை நான் 'வாத்தியார்' என்று செல்லமாக அழைப்பது வழக்கம். அப்படிப்பட்ட வாத்தியார் அன்றும் சரி, இன்றும் சரி, பல விஷயங்களில் எனக்கு ஆசிரியனாகவே இருந்து வருகிறான். அவனைத் துணைக் கொண்டு நான் தொடங்கும் இந்த நாடக மன்றம் வெற்றிகரமான பல நாடகங்களைத் தயாரித்து அளிக்கும் என்று உங்களுக்கு உறுதி கூறுகிறேன். உங்கள் அன்பும் ஒத்துழைப்பும் எங்களுக்கு எப்போதும் தேவை" - என்று கோபால் பேசியதும் அவனையும் முத்துக்குமரனையும் அருகருகே நிற்கச் சொல்லி 'பளிச்' 'பளிச்' என்று சில பத்திரகைக்காரர்கள் படம் பிடித்துக் கொண்டனர். அந்தப் படங்களை எடுக்கும் போது அருகில் சிறிது தள்ளி நின்ற மாதவியைக் கூப்பிட்டு, 'என்னையும் உன்னையும் சேர்த்து ஒருத்தனும் படம் எடுக்க மாட்டான் போலிருக்கே' - என்று சிரித்துக் கொண்டே அவள் காதருகில் மெல்லக் கூறினான் முத்துக்குமரன். 'நாமே எடுத்துக்கிட்டாப் போச்சு' - என்று அவள் அவனிடம் பதிலுக்குக் கூறி நகைத்தாள். அவள் அப்படிப் பதில் கூறியது அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. விருந்தினர்களுக்கு அவனும் சில வார்த்தைகள் பேச வேண்டுமென்று கோபால் கேட்டுக் கொண்டான். முத்துக்குமரன் பேசினான். சிரிக்கச் சிரிக்கப் பேசினான். இரண்டு மூன்று நிமிடத்திலேயே விருந்தினர்களைத் தன் பேச்சினால் வசியப்படுத்தி விட்டான் அவன். அவனுடைய பேச்சிலிருந்த நகைச்சுவையும், குத்தலும் கூட்டத்திற்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு மிகவும் பிடித்திருந்தன.
"நான் மெட்ராசுக்குப் புதுசு" என்ற கொச்சை வாக்கியத்துடன் தொடங்கிய அந்தப் பேச்சு அரைமணி நேரம் நீண்டது. அந்த அரைமணி நேரத்தில் எல்லாரையுமே தன் பேச்சினால் கொள்ளை கொண்டு விட்டான் அவன். விருந்தின் முடிவில் மாதவி ஒரு பாட்டுப் பாடினாள்.
"ஒளி படைத்த கண்ணினாய் வா வா..."
தன்னை வரவேற்பது போலவே அவள் அந்தப் பாட்டைப் பாடுகிறாள் என்று அவனுக்குப் புரிந்தது. அவளுக்குச் சங்கீதமும் நன்றாகத் தெரியும் என்று அவன் உணர முடிந்தது. மிகவும் சுகமான குரலில் உருக உருகப் பாடினாள் அவள். அந்தக் குரலும் அவள்மேல் அவனை அதிகப் பிரியம் கொள்ளச் செய்தன.
விருந்து முடிந்து விடை பெற்றுப் போகும் போது எல்லாரும் முதலில் கோபாலிடமும், பின்பு முத்துக்குமரனிடமும் கைகுலுக்கிச் சொல்லிக்கொண்டு போனார்கள். முத்துக்குமரனிடம் விடை பெற்றவர்களில் அவன் பேச்சைப் பாராட்ட மறந்தவர்கள் ஒருவர்கூட இல்லை எனலாம். மிக விரைவிலேயே வாத்தியார் எல்லாரையும் கவர்ந்துவிட்டதைக் கண்டு கோபால் பெருமிதப்பட்டான். விருந்தினர்கள் யாவரும் விடைபெற்றுச் சென்றபின்,
"பிரமாதமாப் பாடறியே நீ! அப்பிடியே சொக்கிப் போயிட்டேன்...போ" என்று மாதவியைப் பாராட்டினான் முத்துக்குமரன்.
"பாட்டு மட்டும்தானா? அதுக்குப் பரத நாட்டியம் கூட நல்லாத் தெரியும்..." என்று கூறினான் கோபால்.
- தனக்குத் தெரிந்ததை எல்லாம் அவனறியச் சொல்வதற்குக் கூசியவள் போல் மாதவி நாணி நின்றாள். முத்துக்குமரன் அவளது ஒவ்வோர் உணர்விலும் ஓர் அழகைக் கண்டு மனம் மயங்கினான். அவள் துணிவாக வெடுக்கென்று பேசும்போது அழகாயிருந்தாள். நாணித் தலைகுனியும் போதும் அழகாயிருந்தாள். பாடும்போதும் அழகாயிருந்தாள். மௌனமாயிருக்கும் போதும் அழகாயிருந்தாள்.
'இன்னிக்கு நீங்க ரொம்ப நல்லாப் பேசினீங்க' - என்று அவளும் அவனைப் புகழத் தொடங்கியபோது, 'என்னிக்குமே நான் பேசறது நல்லாத்தான் இருக்கும்' - என்று அகங்காரத்தோடு பதில் சொன்னான். அவள் குறுக்கிட்டாள்:
"நான் கேக்கறது இன்னிக்குத்தானே?"
"வேணும்னா இனிமே - நீ கேக்கறப்பல்லாம் பேசறேன் போதுமா?"
அவள் சிரித்தாள். மின்னும் அந்தப் பல் வரிசையின் நிறத்திலும், மெருகிலும் அவன் வசமிழந்து கிறங்கினான். இப்படிப்பட்ட பெண்ணழகை இதற்குமுன் காவியங்களின் வர்ணனைகளில்தான் அவன் கண்டிருக்கிறான். கோபால் அவனருகே வந்தான்.
"நாடகம் இனிமே நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றிதான்..."
"ஏன்? அதெப்படி இப்பவே நீ சொல்ல முடியும்...?"
"வந்தவங்க சொல்றாங்க. நானா சொல்றேன்?"
"அதெப்படி?"
ஆளைப் பிடிச்சுப் போயிட்டா...அப்புறம் எல்லாமே நல்லாருக்கும்பாங்க. ஆளைப் பிடிக்கலியோ நல்லாயிருக்கிறதைக்கூட மோசம்பாங்க...அதுதான் இந்த ஊர் வழக்கம் வாத்தியாரே..." என்றான் கோபால். முத்துக்குமரனுக்கு அந்த வழக்கம் வேடிக்கையாகவும், விநோதமாகவும் தோன்றியது. ஆனாலும் அவன் அது விஷயமாகக் கோபாலிடம் எதிர் வாதிடுவதற்கு விரும்பவில்லை. அன்று மாலையில் ஆறரை மணிக்குக் கோபால் முத்துக்குமரனையும் மாதவியையும் உடனழைத்துக்கொண்டு ஓர் ஆங்கிலத் திரைப்படம் பார்க்கப் போனான். தியேட்டர்காரருக்கு முன்னாலேயே ஃபோன் பண்ணி - நியூஸ் ரீல் போட்டதும் உள்ளே நுழைந்து ஏற்பாடு செய்திருந்த 'பாக்ஸில்' போய்ப் படம் பார்த்துவிட்டுப் படத்தின் கடைசிக்காட்சி முடியுமுன்பே எழுந்துவர வேண்டியிருந்தது. இல்லையானால் கூட்டம் கூடிக் கோபாலைப் படம் பார்க்க விடமாட்டார்களென்று தோன்றியது. கோபாலின் இந்த நிலைமை முத்துக்குமரனுக்கு வியப்பை அளித்தது. பொது இடங்களில் சுதந்திரமாக நடக்க முடியாத அந்தப் புகழ் மனிதனைச் சிறைப்படுத்துவதை அவன் விரும்பவில்லை. கோபாலோ அதற்காகவே பெருமைப்படுவதாகத் தெரிந்தது.
"ஆளைத் தன்னிச்சையாக நடக்க விடாத புகழ் என்னாத்துக்குப் பிரயோசனம்?" - என்று கோபமாகக் கேட்டான் முத்துக்குமரன். கோபால் அதற்குப் பதில் சொல்லுமுன் கார் பங்களாவை அடைந்து விட்டது. மூவருமே இறங்கினர். இரவுச் சாப்பாட்டை மூவரும் அங்கேயே முடித்துக் கொண்டபின் முத்துக்குமரன் தன் அவுட்ஹவுஸுக்கு வந்தான்.
"சாரிட்ட ஒரு நிமிஷம் பேசிட்டு வரேன்" - என்று கோபாலிடம் கூறிவிட்டு மாதவியும் முத்துக்குமரனோடு வந்தாள். அந்தக் குளிர்ந்த இரவில் அவள் உடன் நடந்து வர அவுட்ஹவுஸுக்குச் செல்லும்போது அவன் மனம் உற்சாகமாயிருந்தது. அவள் கை வளைகள் ஒலிக்கும் போது அதன் எதிரொலி அவன் மனத்தில் கேட்டது. அவள் சிரிக்கும்போது அதன் நாதம் அவன் இதயத்தில் புகுந்து கிறங்கச் செய்தது. இதமான குளிர் நிலவும் தோட்டத்தில் அந்த முன்னிரவு வேளையில் 'நைட்குவின்' செடி ஒன்று நட்சத்திரங்களை அள்ளிக் கொட்டியது போல் பூத்து வாசனை பரப்பிக் கொண்டிருந்தது. அந்த வாசனையும் குளிரும் அவன் மனத்தில் அநுராக கீதம் இசைத்தன.
--------------
அத்தியாயம் -5
நடந்து வரும்போதே அவளிடம் நிறையப் பேசவேண்டும் போலிருந்தது அவனுக்கு. அவுட்ஹவுஸ் படியேறி அறைக்குள் வந்ததும்... தயங்கி நின்றாள் மாதவி. அவளுடைய மிருதுவான சரீரம் அடுத்த கணம் முத்துக்குமரனுடைய அணைப்பில் சிக்கியது.
"என்னை விடுங்க. நான் சொல்லிக்கொண்டு போவதற்குத்தான் வந்தேனாக்கும்..."
"இப்படியும் சொல்லிக்கொண்டு போகலாமில்லையா?"
-அவள் தன்னை அவனுடைய பிடியிலிருந்து மெல்ல விடுவித்துக் கொண்டாள். ஆயினும் அவள் உடனே அங்கிருந்து போக அவசரப்படவில்லை. மேலும் ஏதோ ஒப்புக்குச் சிரித்துப் பேசிக் கொண்டு நின்றாள்.
"உனக்கும் போக மனசு இல்லே! எனக்கும் உன்னை விட மனசு இல்லை. இப்படித்தான் உட்காரேன்..."
"ஐயையோ மாட்டவே மாட்டேன். ஒரு நிமிஷத்திலே வரேன்னு சாரிட்டச் சொல்லிட்டு வந்தேன். சந்தேகப்படப் போறாரு; நான் உடனே வீட்டுக்குப் போகணும்."
முத்துக்குமரன் மறுபடியும் வளை குலுங்கும் அவளுடைய ரோஜாப்பூக் கைகளைப் பற்றினான். கடைந்து திரட்டிய பசுவெண்ணெய் போல் அந்தக் கைகள் மிக மென்மையாகவும் குளுமையாகவும் இருந்தன.
"உன்னை விடவே மனசு வரவில்லை மாதவி"-
"எனக்கும் கூடத்தான்...ஆனால்" இப்படி மெல்லிய குரலில் அவன் காதருகே கிளுகிளுத்த போது அவள் குரலில் சங்கீத நயத்துக்கும் அப்பாற்பட்டதோர் இனிமை நிலவியதை அவன் உணர்ந்தான்.
அவனிடமிருந்து பிரிய மனமில்லாமல் பிரிந்து விடைபெற்றுச் சென்றாள் அவள். இரவு அவனும் தனியாக விடப்பட்டான். அவள் நின்ற இடத்து மல்லிகைப்பூ வாசனையும் சிறிது நிலவியது. அவளை அவன் அணைத்த போது உதிர்ந்த இரண்டொரு பூக்கள் தரையில் இருந்தன. அதைத் திரட்டி எடுத்து மறுபடியும் அந்த வாசனையை நினைவிற் பதிக்க முயன்றான் முத்துக்குமரன். திறந்திருந்த ஜன்னல் வழியாக வாடைக் காற்று சில்லென்று வீசியது. அவன் ஜன்னலை அடைத்துத் திரையை இழுத்து விட்டான்.
டெலிபோன் மணி கிணுகிணுத்தது. சென்று எடுத்தான்.
"நான்தான் மாதவி, இப்பத்தான் வீட்டுக்கு வந்தேன்..."
"அதைச் சொல்றதுக்கு ஒரு ஃபோனா?"
"ஏன்? நான் அடிக்கடி ஃபோன் பேசறது பிடிக்கலையா உங்களுக்கு?"
"அப்படி யார் சொன்னா? நீயா ஏன் சண்டைக்கு இழுக்கறே?"
"வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தேனோ இல்லையோன்னு கவலைப்பட்டுக்கிட்டிருக்கப் போறீங்களேன்னு ஃபோன் பண்ணினாச் சண்டைக்கு இழுக்கறேங்கிறீங்க...?"
"எனக்கே உன்கிட்டச் சண்டை போடணும்னு ஆசையாயிருக்குன்னு வச்சுக்கயேன். ஆனா இப்படி ஃபோனிலே...இல்லை."
"பின்னே எப்படி?"
"நேரிலே சண்டை போடணும். 'சொல்றபடி கேட்டுக்கிட்டு ஒழுங்கா இருன்னு' உன் கன்னத்திலே ஒண்ணு வைக்கணும்..."
"செய்யுங்களேன். எனக்குக்கூட உங்ககிட்ட அப்படி ஓர் அறை வாங்கணும்னு ஆசையாயிருக்கு..."
- இப்படி வெகு நேரம் நீண்டது அவர்களுடைய உரையாடல். இருவரும் பேச்சை முடிக்க விருப்பமில்லாமலே முடித்துக் கொண்டார்கள். அவளிடம் பேசுவதற்கு இன்னும் நிறைய மீதமிருப்பதாக உணர்ந்தபடியே அவனும், அவனிடம் பேசுவதற்கு நியை மீதமிருப்பதாக உணர்ந்தபடியே அவளும் மனமில்லாமலே ஃபோனை வைத்தார்கள்.
மனம் களிப்பினால் பொங்கி வழிந்த அந்த வேளையில் - நாடகத்துக்குப் பிள்ளையார் சுழிபோட்டு எழுதத் தொடங்கினான் முத்துக்குமரன். பாண்டிய மன்னன் மேல் காதல் கொண்ட ஒரு கழைக் கூத்தியைப் பற்றிய கதையை மனத்தில் அமைத்துக் கொண்டு எடுப்பாகவும் - பிரமாதமாகவும் அமைய வேண்டிய முதற் காட்சியை உருவாக்குவதில் அவன் ஈடுபட்டான். பாண்டிய மன்னன் தன் அமைச்சர், புலவர், பரிவாரங்களுடன் கழைக் கூத்தைப் பார்க்கும் காட்சி. அதில் கழைக் கூத்தாடுகிறவள் பாடுவதாக ஒரு பாடலையும் எழுத வேண்டியிருந்தது. கழைக் கூத்தியான அந்தக் கதாநாயகியைக் கற்பனை செய்ய நேர்ந்த போதெல்லாம் அவன் மனக் கண்ணில் மாதவி சிரித்துக் கொண்டு நின்றாள். கதாநாயகனையோ அவன் கற்பனையே செய்யவில்லை. தன்னையே பாவித்துக் கொள்வதை அவனால் தவிர்க்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். நடு இரவுக்கு மேல் நேரம் சரியாகத் தெரியாத வேளையில் பங்களாவிலிருந்து கோபால் ஃபோன் செய்து முத்துக்குமரனை அழைத்தான்.
"என்ன வாத்தியாரே! இங்கே வர்ரியா! 'சோம பானம்'லாம் ரெடியாயிருக்கு. ஒரு கை பார்க்கலாம்..."
"வேண்டாம்பா...நான் எழுதிக்கிட்டிருக்கேன். நல்லா எழுத வர்ரப்ப பாதியிலே விட்டுட்டு வரவேண்டான்னு பார்க்கிறேன்."
"அங்கேயே கொடுத்தனுப்பட்டுமா?"
"வேண்டாம்; சொன்னாக் கேளு..."
"சரி! அப்புறம் உன் இஷ்டம்" - என்று கூறி ஃபோனை வைத்துவிட்டான் கோபால்.
- முத்துக்குமரனின் மனத்திலோ மாதவியே பெரிய போதையை உண்டாக்கி அப்போது அவனை எழுதுவித்துக் கொண்டிருந்தாள். அவனுடைய நாசியில் இன்னும் அவள் மேனியின் நறுமணம் நினைவு இருந்தது. அநுபவம் நிறைந்திருந்தது. அவளுடைய பொன் மேனியின் மென்மை இன்னும் அவனுடைய கைகளில் நிறைந்திருந்தது. அவற்றை விட அதிகமான எந்தச் செயற்கை மதுமயக்கமும் அப்போது அவனுக்குத் தேவையாயிருக்கவில்லை. அவளே அவனுடைய இதயத்தின் எல்லாப் பகுதிகளையும் நிறைத்துக் கொண்டு ஒரு பெரிய மது மயக்கமாக உள்ளே உறைந்து போயிருந்தாள். அவளை அற்புதமாக அலங்கரித்துப் பாண்டியப் பேரரசனுடைய திருக்கொலுவில் கழைக் கூத்தாட வைத்து இரசித்துக் கொண்டிருந்தான் அவன். கழைக் கூத்தின் போது, கழைக்கூத்தி பாண்டியனை நோக்கிப் பாட வேண்டிய பாடலும்கூட நன்றாக வந்து விட்டது.
"நெஞ்சின் எல்லையில் நீயாட நீள் கழையினில் நானாடுவேன்"
- என்ற பல்லவியோடு மிக இனிய இராகமொன்றில் மெட்டமைத்து அந்தப் பாடலை அவன் இயற்றியிருந்தான். அன்றிரவு அவன் படுக்கப் போகும் போது ஏறக்குறைய விடிகாலை மூன்று மணிக்கு மேலாகி விட்டது.
படுக்கையில் களைப்போடு விழுந்தபோது அவுட்ஹவுஸுக்கு அருகில் தோட்டத்திலிருந்து பவழ மல்லிகைப் பூக்களின் ஈர வாசனை குளிர்ந்த காற்றுடன் கலந்து வந்தது. அந்த வாசனையை உள்வாங்கி மனத்திலிருந்த மாதவியைப் பற்றிய நினைவுகளுக்குச் சூட்டிக்கொண்டு உறங்கினான் அவன்.
மறுநாள் காலையில் விடிந்ததே அவனுக்குத் தெரியாது. அவன் எழுந்திருக்கும் போது ஏறக்குறைய மணி ஒன்பதாகிவிட்டது. அப்போது அவுட்ஹவுஸின் வராந்தாவில் - மாதவியின் குரலும், கோபாலின் குரலும் கலந்து கேட்டது. மாதவி வந்திருக்க வேண்டுமென்ற அநுமானத்துடன் குளியலறைக்குள் நுழைந்தான் முத்துக்குமரன். பதினைந்து இருபது நிமிஷங்களுக்குப் பின் அவன் மறுபடி வெளியே வந்தபோது - நாயர்ப் பையன் காபி சிற்றுண்டியைத் தயாராக வைத்துக் கொண்டு காத்திருந்தான்.
சிற்றுண்டியை முடித்துக் கைகழுவிக் கொண்டு வந்து அவன் காபியை பிளாஸ்கிலிருந்து டம்ளரில் ஊற்றிப் பருகிக் கொண்டிருந்த போது, மாதவி உள்ளே வந்தாள்.
"எனக்குக் கிடையாதா?"
அவளுடைய குரல் அவனைக் கெஞ்சியது; கொஞ்சியது. முத்துக்குமரன் பிளாஸ்கைக் கவிழ்த்துப் பார்த்தான். அதில் காபி இல்லை. அவன் கையிலிருந்த டம்ளரில் முக்கால் வாசி பருகியது போக மீதமிருந்தது.
"இந்தா, குடி..." - என்று குறும்புத்தனமாகச் சிரித்துக் கொண்டே அதையே அவளிடம் நீட்டினான் அவன்.
"நான் கேட்டதும் இதைத்தான்" - என்று புன்முறுவலோடு அதை அவனிடமிருந்து வாங்கிப் பருகினாள் அவள். அவள் அப்படிப் பிரியத்தோடும், பாசத்தோடும் தன்னை நெருங்குவதும் பழகுவதும் அவன் மனத்தில் கர்வத்தை வளர்த்தன. அவளுடைய மனத்தை வென்று தன் பக்கமாகச் சேர்த்துக் கொண்டதற்காக அவன் உண்மையிலேயே கர்வப்படத் தகுந்தவனாகத்தான் இருந்தான். பத்தேகால் மணிக்கு நாயர்ப்பையன் முன்னால் வழி காட்டி அழைத்துக் கொண்டு வர, காக்கி உடையணிந்த - டைப்ரைட்டிங் மெஷின் கம்பெனியின் ஆள் ஒருவன் - புதிய தமிழ்த் தட்டெழுத்து மெஷினைக் கொண்டு வந்து வைத்து விட்டுச் சென்றான்.
"ஸ்கிரிப்ட்டைத் தர்ரீங்களா? டைப் செய்யத் தொடங்கலாம்னு பார்க்கிறேன்..." என்று மாதவி மெஷினைத் திறந்து புது ரிப்பனை மாட்டிக் கொண்டே அவனைக் கேட்டாள்.
அப்போது ஸ்டூடியோவுக்குப் புறப்படத் தயாராகி விட்டக் கோலத்தில் கோபால் வந்தான்.
"டைப்ரைட்டர் ரெடி! உன் கதாநாயகியும் ரெடி...! இனிமேலாவது நீ வேகமாக நாடகத்தை எழுதணும் வாத்தியாரே."
"முதல் காட்சி ரொம்ப நல்லா வந்திருக்குடா கோபால். நாடகம் நல்லபடி முடியும்கிறதுக்கு இதுவே நல்ல அடையாளம்."
"சபாஷ்! வேகமா எழுது! இப்ப நான் ஸ்டூடியோவுக்குப் புறப்படறேன். சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன். சாயங்காலம் பார்க்கிறேன் வாத்தியாரே?" - என்று கூறிவிட்டு மாதவியின் பக்கம் திரும்பி,
"ஒன் பிளஸ் டூ அல்லது வந்தால் ஒன் பிளஸ் திரீ எடு. மேலே தேவையானா அப்புறம் எடுக்கலாம்! நீ உற்சாகப்படுத்தற 'ஜோர்'ல தான் வாத்தியார் நாடகத்தை முடிக்கணுமாக்கும்..." - என்று சொல்லிச் சென்றான் கோபால்.
"அப்படியே கவனித்துக் கொள்கிறேன்"- என்ற பாவனையில் தலையை ஆட்டிச் சிரித்தாள் மாதவி.
- எழுதி முடித்திருந்தவரை தன் கையெழுத்துப் பிரதிகளை அவளிடம் கொடுத்து - டைப் செய்யச் சொன்னான் முத்துக்குமரன். அவள் அதை வாங்கிப் பார்த்ததுமே முதலில் அவன் கையெழுத்தைப் புகழத் தொடங்கினாள்;
"உங்க கையெழுத்தே முத்து முத்தா ரொம்ப நல்லாயிருக்குதே!'
"அந்தக் காலத்திலே ஏட்டிலே எழுத்தாணியாலே எழுதிப் பழகின கையாச்சே? நல்லா இருக்காமே பின்னே வேற எப்படியிருக்கும்?" என்று அவனும் தற்பெருமையாகச் சொல்லிக்கொண்டான். அவள் மேலும் அவனைப் புகழ்ந்தாள்.
"உங்க தற்பெருமைதான் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு."
"உலகத்திலே கஷ்டப்படறதுக்குன்னே பிறக்கப்போற கடைசிக் கலைஞன் வரை சொந்தம் கொண்டாடறத்துக்கு அவனோட செருக்கு ஒண்ணுதான் அவனுக்குன்னு மீதமிருக்கு."
"எத்தனையோ பேரிடம் செருக்கு இருந்தாலும் சில பேருக்குத்தான் அதுவே ஒரு வீரமாகவும் கம்பீரமாகவும் இருக்கும்..."
"'புகழாபரணன்'னு பழைய தமிழில் ஒரு தொடரே உண்டு மாதவி!"
"சொல்றதுக்கு ரொம்ப நல்லாயிருக்கு. புகழைத் தனக்கு ஆபரணமாக அணிஞ்சிக்கிறவங்கன்னு தானே இதுக்கு அர்த்தம்?"
"ஆமா! 'புகழே இன்னார் கழுத்திலே நாம் ஆபரணமாக அணி செய்யணும்னு ஆசைப்படற ஆள்'னும் அர்த்தம் சொல்லலாம்" - என்று அதற்கு விளக்கம் கூறினான் முத்துக்குமரன். டைப் செய்வதற்கு முன் அவன் தன்னிடம் கொடுத்த கையெழுத்துப் பிரதியை நிதானமாக ஒரு முறை படிக்கலானாள் மாதவி. படித்து முடிந்ததும் முத்துக்குமரனை அவள் பாராட்டினாள்:
"நல்லா வந்திருக்குங்க! கழைக்கூத்தாடிப் பெண் பாடறதாக ஒரு பாட்டு எழுதியிருக்கீங்களே! அது ரொம்பப் பிரமாதம்..."
"அந்தப் பாட்டைத்தான் உன் குரலிலே ஒரு தடவை பாடேன்; மனசு குளிரக் கேட்கிறேன்?"
"இப்ப நான் பாடினா அதுனாலே ஒரு அரைமணி நேரத்துக்கு வீணா உங்க வேலை கெடுமே...?"
"உன் பாட்டை கேட்கிறதைவிட வேற வேலைகூட இருக்கா எனக்கு?"
- அவள் பாடத் தொடங்கினாள். தொண்டையைக் கனைத்துக் குரலைச் சரி செய்து கொண்டு,
"நெஞ்சின் எல்லையில் நீயாட
நீள் கழையினில் நானாடுவேன்"
என்று அவள் பல்லவியை எடுத்தபோது தேன் வெள்ளம் மடை திறந்தது. அவளே கதாநாயகியாகவும், அவனே கதாநாயகனாகவும் மாறி விட்டாற் போன்ற ஒரு சூழ்நிலையை அந்தப் பாடல் அங்கே உருவாக்கிவிட்டது. தன்னுடைய சொற்கள் அவளுடைய குரல் என்ற இங்கிதத்தில் அமுதமாகப் பெருகி வருவதைக் கண்டு கட்டுண்டு போய் வீற்றிருந்தான் முத்துக்குமரன். அவள் பாடி முடித்த போது அமுதமழை பொழிந்து நின்ற மாதிரி இருந்தது.
-பாடி முடிந்ததும் ஓடிச் சென்று ஒரு பூச்செண்டைத் தூக்குவது போல் அவளைக் கட்டித் தூக்கினான் அவன், அவள் அவனைத் தடுக்கவில்லை. அவனுடைய பிடியில் சுகம் கண்டவள் போல் இருந்தாள் அவள்.
பகல் உணவை அங்கேயே அவுட் ஹவுஸுக்குக் கொண்டுவரச் சொல்லி இருவரும் சாப்பிட்டார்கள். அவனுக்கு டேபிளில் இலை போட்டு அவள் பரிமாறினாள்.
"இப்படி எனக்கு நீ இலை போட்டுப் பரிமாறும் காட்சியைத் திடீர்னு யாராச்சும் பார்த்தா என்ன நினைச்சுப்பாங்க..."
"ஏன்? எதுக்காக இப்படிக் கேட்கிறீங்க?"-
"ஒண்ணுமில்லே! இந்த ரெண்டு பேரும் எப்படி இவ்வளவு சீக்கிரம் ஒண்ணுபட்டாங்கன்னு பார்க்கிறவங்களுக்குப் பிரமிப்பாகவும் பொறாமையாகவும் இருக்காதான்னு கேட்டேன்..."
"இப்படித் திடீர்னு சந்திக்கறதுக்காகவும் - ஒண்ணு சேர்றதுக்காகவும் உலகத்தின் எந்த இரண்டு மூலையிலோ எந்த இரண்டு ஆண் பெண்களோ எந்தக் காலத்திலும் மீதமிருக்கிறார்கள்னு தான் சொல்லத் தோன்றுகிறது."
"அது சரி! என்னைப் பார்த்ததுமே உனக்கு ஏன் என் மேலே இவ்வளவு பிரியம் விழுந்திச்சு..."
"இந்தக் கேள்வி ரொம்ப அக்கிரமமானது; அகங்காரமானது. எப்படியோ வந்து ராஜா மாதிரி கால்மேலே கால் போட்டு உட்கார்ந்து கொண்டு என்னை மயக்கினதுமில்லாமே இப்ப ஒண்ணுமே தெரியாத அப்பாவி மாதிரிக் கேள்வி கேட்கறதைப் பாரு...?"
"அப்படியா? நான் உன்னை மயக்கிப்பிட்டேனின்னா குற்றஞ் சாட்டறே?"
"என்னை மட்டுமில்லே! உள்ளே கம்பீரமா நுழைஞ்சு கால்மேல் கால் போட்டு ராஜாவாட்டமா உட்கார்ந்தப்ப அங்கே இருந்த அத்தினி பேரையும் தான் மயக்கினீங்க. ஆனால் என்னைத்தவிர மத்தவங்களுக்குத் தைரியமில்லே. உங்ககிட்டே வந்து பக்கத்திலே நெருங்கிப் பேசறதுக்குப் பயப்பட்டாங்க. நான் ஒருத்திதான் தைரியமாகத் தேடிப் பக்கத்திலே வந்து அந்த மயக்கத்தை உங்ககிட்டவே ஒப்புக் கொண்டேன்..."
"அடடே அப்படியா சங்கதி! இது தெரிஞ்சிருந்தா கொஞ்சம் அப்பவே பிகுவா, டெஸ்ட் பண்ணியிருப்பேனே? அத்தினி பெரிய தைரியசாலியா நீ?"
"இல்லையா பின்னே? உங்களைப் போல இருக்கிற மாபெரும் தைரியசாலியையே அடையணும்னாக் கொஞ்சமாவது தைரியம் எனக்கு இருந்தாத்தானே முடியும்?"
"சரி, அது போகட்டும்! பையன் ஒரு இலைதானே கொண்டாந்திருக்கான். இப்ப நீ எப்படிச் சாப்பிடுவே? இன்னொரு இலை கொண்டாரச் சொல்லட்டுமா? அல்லது டிபன் கேரியர்லியே சாப்பிடறியா?"
"நீங்களே வேணும்னு ஒரு இலை கொண்டாரச் சொல்லியிருப்பீங்க..?"
"சே! சே! நான் ஒண்ணும் சொல்லலே."
"என்ன பண்ணித் தொலைக்கிறது! இந்த இலையிலேயே சாப்பிட வேண்டியதுதான். காலையிலே காப்பி குடிக்கிறப்பவே அப்படித்தானே செஞ்சிங்க...? மனுஷாளை உங்களுக்கு அடிமையாக்கிறதிலே அத்தனை அகங்காரம் உங்களுக்கு, இல்லையா?"
"அப்படிச் சொல்லாதே மாதவி! உன்னை என் மனத்தின் சௌந்தரிய ராணியாகக் கொலு வைத்திருக்கிறேன் நான். நீயாகவே ஏன் உன்னை அடிமையென்று சொல்லிக் கொள்ளுகிறாய்? அடிமை எங்காவது ராணியாகப் பதவி பெற முடியுமா?"
"நீங்கள் எனக்கு ராணிப்பட்டம் கொடுத்திருக்கிறீர்களே...? அடிமைகளும் ராணியாக முடியுமென்பதைத்தானே இது காட்டுகிறது?"
- ஆதரவுடன் அவன் அருகில் உட்கார்ந்து பரிமாற அவன் சாப்பிட்டு மீதமிருந்த இலையிலேயே அவள் அன்று பகலில் சாப்பிட்டாள். அப்படி உண்ணும்போது அவளுடைய நாணத்தையும், அன்பையும், வசப்படும் ஓர் அடிமை போன்ற பிரியத்தையும் - தாங்கமுடியாத அளவு அவன் மனம் திடீரென்று சிறியதாகிவிட்டது போல உணர்ந்தான் அவன். அவ்வளவு மகிழ்ச்சிகளை, அவ்வளவு இனிய அநுபவங்களைச் சேர்த்து வைத்துக்கொண்டு தாங்க மனத்தில் இடம் குறைந்துவிட்டது போல் மகிழ்ச்சிகளும் இனிமைகளும் பெரிதாகத் தோன்றின அவனுக்கு.
சாப்பாடு முடிந்ததும் நாயர்ப்பையன் வந்து பாத்திரங்களை எடுத்துக்கொண்டு போனான். அவள் டைப் செய்வதற்காக உட்கார்ந்தாள்.
"இந்த விரல்களால் வீணையின் நரம்புகளில் இடைவிடாமல் எந்த இனிய பண்ணையாவது நீ வருடிக் கொண்டே இருந்தால் நான் கேட்டுக்கொண்டே இருப்பேன். வீணை வாசிக்கவேண்டிய உன்னுடைய நளினமும், சாதுரியமும் நிறைந்த விரல்கள் டைப் அடிப்பதால் இந்த மிஷின் பாக்கியம் செய்ததாகிறது, மாதவி!"
"நீங்கள் என்ன சொல்கிறீர்கள் இப்போது? என்னைப் புகழ்கிறீர்களா? அல்லது கேலி செய்கிறீர்களா? நான் வீணை வாசித்தாலும் டைப் அடிக்கிறது மாதிரிதான் இருக்கும் என்பதைச் சொல்லிக் கிண்டல் செய்கிறீர்களா? டைப் அடிக்கிற மாதிரி வீணை வாசித்தால் நரம்புகள் அறுந்து போகும். வீணை வாசிக்கிற மாதிரி டைப் அடித்தால் எழுத்துக்களே காகிதத்தில் பதியாது."
"உனக்குத்தான் இரண்டு காரியத்தையுமே நல்லாச் செய்யத் தெரியுமே?" என்றான் முத்துக்குமரன். மாலையில் அவளையும் அழைத்துக் கொண்டு எங்காவது கடற்கரைக்கோ கடை வீதிக்கோ போக வேண்டுமென்று ஆசையாயிருந்தது அவனுக்கு. அவளுடைய அன்பு என்ற இங்கிதத்தில் மூழ்கிக்கொண்டே உருவாக்கினால் அந்த நாடகம் மிகச் சிறப்பாக வாய்க்குமென்று தோன்றியது அவனுக்கு. முதற்காட்சி முழுமையையும் இரண்டாங் காட்சியில் சில பகுதிகளையும் அவன் எழுதி முடித்திருந்தான். பிற பகுதிகளை இரவில் தொடர்ந்து எழுதினால் காலையில் அவள் வந்து 'டைப்' செய்ய வசதியாயிருக்கும் என்று எண்ணினான் முத்துக்குமரன் - மூன்று மணியானதும் நாயர்ப்பையன் அவர்கள் இருவருக்கும் மாலைக் காபி சிற்றுண்டி கொண்டு வந்து கொடுத்தான்.
"இப்படி எங்கேயாவது வெளியிலே போய்ச் சுற்றிவிட்டு வரலாம்னு பார்க்கிறேன். நீயும் வர்றியா மாதவி?"
"ஒரு நிபந்தனைக்கு ஒப்புக்கிட்டீங்கனா வரேன்"
"என்ன நிபந்தனைன்னு சொன்னா ஒப்புக்கொள்ள முடியுமா இல்லையான்னு பார்க்கலாம்..."
"பீச்சுக்குப் போய் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருப்போம் - அப்புறம் வர்ர வழியிலே ராத்திரிச் சாப்பாடு எங்க வீட்டில... இப்பவே அம்மைக்கு ஃபோன் பண்ணிச் சொல்லிடப் போறேன்..."
"உங்க வீடு எங்க இருக்கு?"
"சொந்த வீடு இல்லே; வாடகை வீடு தான். லாயிட்ஸ் ரோடிலே ஒரு பங்களா 'அவுட்ஹவுஸ்'லே நானும் அம்மையும் இருக்கோம்..."
"கோபாலைக் கூப்பிடலையா?"
"அவரு வரமாட்டாரு..."
"ஏன்?"
"எங்க வீடு ரொம்பச் சின்னது. இன்னொருத்தரோட பங்களாவின் 'அவுட்ஹவுஸ்.' தவிர, நான் அவர் நாடகக் கம்பெனியில் மாசச் சம்பளத்துக்கு 'ஆர்ட்டிஸ்டா' ஒப்பந்தம் பண்ணிக் கையெழுத்துப் போட்டவ. 'ஸ்டேட்டஸ்' பிரச்னையெல்லாம் வேற இருக்கு. அவருக்குத் தெரிஞ்சா உங்களையேகூடப் 'போக வேண்டாம்' பாரு."
"அதுக்கு வேறே ஆள் பார்க்கணும். ஒருத்தன் சொல்லித் தலைவணங்கற ஆளு இல்லே நான். இந்த போக்ரோடு கோடீயிலே இருக்கே டீக்கடை; அதுக்கு வான்னு நீ என்னையெக் கூப்பிட்டினாக்கூட உங்கூட குசாலாக் கை கோத்துக்கிட்டு வர நான் தயாராயிருக்கேன் மாதவி."
அவள் முகத்தில் நன்றியும் அன்பும் கனிவும் புன்முறுவல் தோன்றியது.
"நான் கண்டிப்பாச் சாப்பிட வரேன். உன் நிபந்தனையை ஏதுக்கறேன். இப்பவே உங்க அம்மைக்கு ஃபோன் பண்ணிச் சொல்லு..."
"இருங்க! முதல்லே நாயர்ப் பையனைக் கூப்பிட்டு வெளியே புறப்படறதுக்குக் காரை எடுக்கச் சொல்றேன்..."
"வேண்டாம் மாதவி! கோபாலோட கார்ல போக வேண்டாம்! டாக்ஸியிலே போவோம். அல்லது பஸ்லே போவோம்..."
"சே! சே! அவ்வளவு வித்தியாசமாகப் போனா அப்புறம் அவருக்குக் கோபம் வரும். கார் எடுத்துக்கிட்டுப் போறதை அவர் தப்பா நினைக்க மாட்டாரு. 'எங்க போகணும்னாலும் டிரைவரிட்டச் சொல்லி சின்ன வண்டியிலே அழைச்சிட்டுப் போ'ன்னு போறப்பக்கூட அவரு என்கிட்டச் சொன்னாரு..."
"ஒருவேளை அவனோட கார் உன் வீட்டு வாசல்லே நிற்கிறதுகூட ஸ்டேட்டஸ் குறைவாயிருக்குமோ என்னவோ?"
"அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை" - என்று முத்துக்குமரனுக்குப் பதில் கூறிவிட்டு ஃபோனில் நாயர்ப்பையனைக் கூப்பிட்டு மலையாளத்தில் பேசினாள் மாதவி. சில விநாடிகளில் அவுட்ஹவுஸின் முன் சிறிய 'பியட்' ஒன்று வந்து நின்றது. புறப்பட்டுக் கொண்டே அவளிடம் முத்துக்குமரன் ஒரு கேள்வி கேட்டான்: "மாதவி உனக்கு மலையாளத்தில் எந்த ஊரு?"
"மாவேலிக்கரை..." - என்று பதில் கூறினாள் அவள். கார் புறப்பட்டது. முதலில் தன்வீட்டில் போய்ச் சாப்பிட வருவது பற்றிச் சொல்லிவிட்டு அப்புறம் கடற்கரை செல்லலாமென்றாள் அவள். பிறப்பினால் மலையாளியாயிருந்தும் அதிக வித்தியாசம் தெரியாமல் அவள் தமிழ் பேசியதும் டைப் செய்ததும் அவனுக்கு ஆச்சரியத்தை அளித்தன. தமிழ் வசனத்தையே மலையாள வசனம் போலவும், தெலுங்கு வசனம் போலவும் மாற்றி உச்சரிக்கும் சில நடிகைகளை அவனறிவான். அப்படிப்பட்டவர்களிடையே மாதவி புதுமையாகத் தோன்றினாள் அவனுக்கு.
--------------
அத்தியாயம் -6
ஒரு பெரிய பங்களாவின் தோட்டத்தில் வலது ஓரமாக இருந்த சிறிய அவுட்ஹவுஸுக்கு மாதவி அவனை அழைத்துச் சென்றாள். வீட்டின் வரவேற்பு அறை, கூடம், சமையலறை யாவும் கச்சிதமாகவும் நவீனமாகவும் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. வரவேற்பு அறையில் ஒரு மூலையில் டெலிபோன் இருந்தது. வீட்டில் மாதவியின் தாயையும் ஒரு வேலைக்காரியையும் தவிர வேறெவரும் இல்லை. மாதவி தன் தாயை முத்துக்குமரனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள். அந்த வயதான அம்மாள் மலையாள பாணியில் காதில் ஓலையணிந்து பட்டையாகச் சரிகைக் கரையிட்ட பாலராமபுரம் நேரியல் - முண்டு தரித்துக் கொண்டிருந்தாள். எவ்வளவோ சொல்லியும் காபி குடிக்காமல் அங்கிருந்து தப்ப முடியவில்லை.
"கடற்கரைக்குப் போய்விட்டு மறுபடி இரவு சாப்பாட்டுக்கு இங்கேதான் திரும்ப வரப்போகிறோம் இப்போதே காபியைக் கொடுத்து அனுப்பி விடலாமென்று பார்க்காதீர்கள்" - என்று முத்துக்குமரன் கேலியாகக் கூறியும் அந்த அம்மாள் கேட்கவில்லை. அவனுக்கும், மாதவிக்கும் சக்கை வறுவல், காபி கொடுத்த பின்பே கடற்கரைக்குப் போக விட்டாள். அவர்கள் கடற்கரைக்குப் புறப்படும் போதே "எட்டு எட்டரை மணிக்குள் சாப்பாட்டுக்கு வந்துவிட வேண்டும்" - என்பதையும் வற்புறுத்திச் சொல்லியனுப்பினாள். கூட்டம் குறைவாக இருக்கும் என்ற காரணத்தினால் 'எலியட்ஸ்' கடற்கரைக்குப் போகலாம் என்றாள் அவள். அவனோ அதற்கு நேர்மாறாக முரண்டு பிடித்தான்.
"கூட்டத்துக்குப் பயப்படறதுக்கும், அதைக் கண்டு விலகி ஓடறதுக்கும் நம்ம ரெண்டு பேரும் கோபாலைப் போல அவ்வளவு பிரபலமாயிடலையே?"
"அதுக்குச் சொல்லலே... உட்கார்ந்து பேசறதுக்கு வசதியா இருக்கும்னுதான் பார்த்தேன்."
"எந்த இடத்திற்குப் போனாலும் வசதியாகத்தானிருக்கும். இந்தக் குளிர் காலத்திலே எவன் கடற்கரைக்கு வரப்போறான்?" - என்றான் முத்துக்குமரன். சாலையிலேயே காரை நிறுத்திக் கொள்ளுமாறு கூறிவிட்டுக் கடற்கரை மணலிலே நடந்தார்கள் அவர்கள். எலியட்ஸ் பீச்சில் அந்தக் குளிர் மிகுந்த டிசம்பர் மாத முன்னிரவில் கூட்டமே இல்லை. ஒரு மூலையில் வெள்ளைக்காரக் குடும்பமொன்று அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தது. அந்த வெள்ளைக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் பல வண்ணப் பந்துக்களை (பீச் பால்) வீசி எறிந்தும் பிடித்தும், விளையாடிக் கொண்டிருந்தார்கள். முத்துக்குமரனும் மாதவியும் மணல் சுத்தமாக இருந்த ஒரு பகுதியாகத் தேடிப் பிடித்து அமர்ந்து கொண்டார்கள். கடலும் வானமும், சூழ்நிலையும் அப்போது அங்கே மிக மிக அழகாயிருப்பதாக இருவருக்குமே தோன்றியது. திடீரென்று முத்துக்குமரன் மாதவியை ஒரு கேள்வி கேட்டான்.
"மாவேலிக்கரையிலிருந்து மெட்ராசுக்கு வந்து இந்தக் கலையிலே ஈடுபட வேண்டிய நிலை உனக்கு எப்போ ஏற்பட்டது?" திடீரென்று ஏன் அவன் இப்படித் தன்னைக் கேட்கிறான் என்று அறிய விரும்பியோ அல்லது இயல்பான தயக்கத்துடனோ - அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள் அவள்.
"சும்மா தெரிந்து கொள்ளலாம்னுதான் கேட்டேன். உனக்கு விருப்பமில்லைன்னாச் சொல்ல வேண்டாம்" - என்றான் அவன்.
"சேட்டன் - நல்ல வாலிபத்தில் இறந்து போனப்புறம் - அம்மையும் நானும் மெட்ராஸ் வந்தோம். சினிமாவுக்கு 'எக்ஸ்ட்ராக்கள்' சேர்த்துவிடும் ஆள் ஒருவன் எங்களை ஸ்டுடியோக்களில் நுழைத்துவிட்டான். அங்கே கோபால் சாரோடு பழக்கம் ஏற்பட்டது..."
"பழக்கம்னா...?"
- அவள் பதில் சொல்லவில்லை. அவள் முகம் கலவரமான மனநிலையைப் பிரதிபலித்தது. அவனும் மேலே அழுத்திக் கேட்கத் தைரியமற்றவனாக இருந்தான். சிறிது நேரம் இருவருக்குமிடையே மௌனம் நிலவியது. பின்பு அவளே மேலும் தொடர்ந்தாள்:
"நான் இந்த லயன்லே ஓரளவு முன்னுக்கு வந்து வசதியாயிருக்கேன்னா அதுக்கு அவர்தான் காரணம்."
"ஊரிலே வேறே யாரும் இல்லையா?"
"அச்சனைப் பறிகொடுத்தப்புறம், சேட்டனும் போனபின் - அம்மையும் நானும் தான் எல்லாம்" என்றாள் அவள். குரல் கம்மியது.
அவளுடைய தமையன் ஒருவன் குடும்பத்துக்குச் சம்பாதித்துப் போடும் பருவத்தில் நல்ல வாலிப வயதிலே காலமாகி விட்ட செய்தியை முத்துக்குமரன் அறிந்தான். அழகும், உடற்கட்டும், குரலும் மலையாளமாயிருந்தும் வித்தியாசம் தெரியாமல் இயல்பாகத் தமிழ் பேசும் திறமையும் சேர்ந்தே அவளுக்குத் தமிழகத்துக் கலையுலகில் இடம் தேடிக் கொடுத்திருக்க வேண்டும் என்பதையும் அவனால் அநுமானிக்க முடிந்தது. சராசரியாக ஒரு நடிகைக்கு இருக்க வேண்டியதைவிட அதிகமான இயற்கையழகு அவளிடம் இருந்தது. சென்னைக்கு வந்தவுடன் இருந்த நிலைக்கும், படிப்படியாக சினிமா எக்ஸ்ட்ராவாக மாறிய நிலைக்கும் நடுவே அவளுடைய வாழ்க்கை எப்படி எப்படிக் கழிந்திருக்கும் என்பதை அவளிடமிருந்தே அறியவோ, தூண்டித் துளைத்துக் கேட்கவோ அவன் விரும்பவில்லை. அப்படிக் கேட்பதால் ஒருவேளை அவளுடைய முகத்தில் புன்முறுவல் மறைய நேரிடுமோ என்று அவனுக்குத் தயக்கமாயிருந்தது. அவளுடைய மனத்தைப் புண்படுத்தும் அல்லது அவளைத் தர்ம சங்கடமான நிலையில் வைக்கும் எந்தக் கேள்வியையும் அவன் கேட்கத் தயங்கினான். எனவே பேச்சை வேறு திசைக்குத் திருப்பக் கருதித் தயாராகிக் கொண்டிருக்கும் நாடகத்தைப் பற்றிச் சொல்லத் தொடங்கினான். அவள் ஆவலோடு கேட்கலானாள். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, "இந்த நாடகத்தில் நீங்களே என்னோடு கதாநாயகனாக நடித்தீர்களானால் நன்றாக இருக்கும்" - என்று சிரித்துக் கொண்டே அவனிடம் கூறினாள் அவள்.
அவன் சிரித்தபடியே பதில் கூறலானான்:
"நாடகமே கோபால் கதாநாயகனாக நடிப்பதற்காகத்தானே தயாராகிறது! அடிப்படையிலே கைவைத்தால் அப்புறம் ஒன்றுமே நடக்காது..."
"இருக்கலாம். எனக்கென்னமோ நீங்கள் என்னோடு நடிக்க வேண்டும் போல ஆசையாயிருக்கிறது."
"நீ இப்படிக் கூறுவதையே நான் இன்னும் ஆழமாகவும் அழுத்தமாகவும் கூற நினைக்கிறேன். நீ என்னோடு நடிக்க வேண்டுமென்றுதான் ஆசைப்படுகிறாய்... நானோ உன்னோடு வாழ வேண்டுமென்றே ஆசைப்படுகிறேன்."
- இப்படிக் கூறும்போது அவன் உணர்ச்சி வசமாகி நெகிழ்ந்திருந்தான். பூப்போன்ற அவள் வலக்கையைத் தன் கையோடு பிணைத்துக் கொண்டு பேசினான் அவன். வாழ வேண்டுமென்ற அவன் விருப்பத்துக்கு அப்படியே அப்போதே இணங்கித் தன் மனத்தையும் உடலையும் அளிப்பவள் போல் அந்த விநாடியில் இசைந்து இருந்தாள் அவள். அவளுடைய மௌனமும், இசைவும், இணக்கமும், நாணமும், புன்னகையும் அவனுக்கு மிகமிக அழகாயிருந்தன.
இருட்டி வெகுநேரமான பின்பும் அவர்கள் கடற்கரையிலிருந்து எழுந்திருக்கவே இல்லை.
"சாப்பாடு ஆறிப்போகுமே! புறப்படலாமா?"என்று அவள் தான் முதலில் நினைவூட்டினாள். அவன் குறும்புத்தனமாக சிரித்துக் கொண்டே அவளுக்கு மறுமொழி கூறினான்.
"சில விருந்துகள் மிக அருகிலிருக்கும் போதே வெகு தொலைவிலிருக்கும் வேறு சில விருந்துகளை மறந்துவிடத்தான் முடிகிறது..."
"நீங்கள் எழுதும் வசனங்களைவிடப் பேசும் வசனங்கள் மிகவும் நன்றாகயிருக்கின்றன..."
"அது கலை! இது வாழ்க்கை! கலையைவிட வாழ்க்கை அழகாகவும், சுபாவமாகவும் இருப்பது இயல்புதானே?"
பேசிக்கொண்டே இருவரும் புறப்பட்டார்கள். மாதவியின் வீட்டில் இரவு விருந்திற்கு மலையாளச் சமையல் பிரமாதமாகத் தயாரிக்கப்பட்டிருந்தது. தேங்காய் எண்ணெய் மணம் கமகமத்தது. நடுக்கூடத்தில் பொருத்தி வைத்திருந்த சந்தன வத்தியின் நறுமணமும், மாதவியின் கூந்தலில் சூடியிருந்த மல்லிகைப் பூ மணமும், சமையலின் வாசனையுமாகச் சேர்ந்து அந்த சிறிய வீட்டிற்குத் திருமண வீட்டின் சூழ்நிலையை உண்டாக்கியிருந்தன.
டைனிங் டேபிள் எளிமையாகவும் அழகாகவும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தான் பரிமாறுவதாகக் கூறி அவர்கள் இருவரையுமே சாப்பிட உட்கார வைத்து விட்டாள் மாதவியின் தாய்.
டைனிங் டேபிளில் மாதவியின் தாய் பறிமாறிக் கொண்டிருந்த போது - ஹாலின் சுவரில் மாட்டியிருந்த படங்களை நோட்டம் விட்டான் முத்துக்குமரன்.எல்லாப் படங்களையும் விட ஒரு படம் அவன் அமர்ந்திருந்த இடத்திற்கு நேர் எதிரே நிமிர்ந்தால் உடனே பார்வையிற்படுகிற விதத்தில் இருந்தது. அந்தப் படத்தில் நடிகன் கோபாலும் மாதவியும் சிரித்துக் கொண்டிருப்பது போல் ஏதோ ஒரு திரைப்பட 'ஸ்டில்' பிரேம் போட்டு மாட்டப்பட்டிருந்தது. முத்துக்குமரனின் பார்வை அடிக்கடி அந்தப் படத்தின் மேலேயே செல்வதைக் கண்டு மாதவிக்குத் தர்மசங்கடமாக இருந்தது. அவன் மனத்தில் அநாவசியமாக ஏதேனும் சந்தேகம் எழக்கூடாது என்று விளக்கக் கருதியவளாக, "மணப்பெண் என்ற சமூகப் படத்தில் கதாநாயகிக்குத் தோழியாக நான் உபபாத்திரத்தில் நடித்தேன். அப்போது கோபால் சார் என்னைச் சந்தித்துப் பேசுவதாக வந்த காட்சி இது" எனக் கூறினாள் மாதவி.
"அப்படியா? அன்று முதன் முதலாக உன்னை 'இண்டர்வ்யூ'வில் பார்த்தபோது, உனக்கும் கோபாலுக்கும் அதற்குமுன் அறிமுகமே கிடையாது; எல்லாரையும் போல் நீயும் புதிதாகத்தான் வந்திருக்கிறாய் என்றல்லவா நான் நினைத்தேன்? நீயோ மெட்ராசுக்கு நீ வந்த நாளிலிருந்து உன் முன்னேற்றத்திற்குக் கோபால் தான் எல்லா உதவியும் செய்ததாகக் கூறுகிறாய்?..."
"நாடகக் குழுவுக்கான நடிகைகள் பகுதியில் என்னைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர் முன்னாலேயே முடிவு செய்துவிட்டாலும் - ஒரு முறைக்காக எல்லாரோடும் சேர்ந்து என்னையும் அங்கே 'இண்டர்வ்யூக்கு' வரச் சொல்லியிருந்தார். அவர் அப்படிச் சொல்லியிருந்ததனால் நானும் நாடகக் குழுவுக்கான இண்டர்வ்யூவின் போது முற்றிலும் புதியவளைப் போல அங்கு வந்து உட்கார்ந்திருந்தேன்."
"ஆனால் திடீரென்று என்னிடம் மட்டும் தேடி வந்து ரொம்ப நாள் பழகியவளைப் போல சுபாவமாகப் பேசிவிட்டாய்."
அவள் பதில் பேசாமல் புன்னகை பூத்தாள். விருந்து மிகவும் ருசியாகவும் வாசனையாகவும் இருந்தது. புளிச்சேரி, எறிசேரி, சக்கைப் பிரதமன், அவியல் என்று மலையாளப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன. நடுநடுவே மாதவி ஏதாவது சொல்லிய போதெல்லாம் அவளுக்குப் பதில் சொல்லத் தலை நிமிர்ந்த முத்துக்குமரனின் கண்களில் அந்தப் படமே தென்பட்டது. மாதவியும் அதைக் கவனிக்கத் தவறவில்லை.
இந்த ஒரு படத்தைத் தவிர அங்கே மாட்டப்பட்டிருந்த மற்றப் படங்கள் எல்லாம் சாமி படங்களாயிருந்தன. குருவாயூரப்பன் படம், பழனி முருகன், வேங்கடாசலபதி படங்கள் மாட்டப்பட்டிருந்தன. அவற்றினிடையே தென்பட்ட இந்த ஒரு படம் மட்டும் அவன் கண்களை உறுத்தியது. மாதவி அவன் சாப்பிட்டு முடிப்பதற்கு இரண்டு மூன்று நிமிஷங்களுக்கு முன்பே முடித்திருந்ததனால் அவன் அனுமதியுடன் எழுந்து போய்க் கைகழுவி விட்டு வந்தாள். பின்னால் சிறிது தாமதமாகப் போய்க் கைகழுவிவிட்டு வந்த முத்துக்குமரனுக்கு அந்த ஹாலில் இப்போது ஓர் ஆச்சரியம் காத்திருந்தது. மாதவியும் கோபாலும் சிரித்துக்கொண்டு நின்ற புகைப்படத்தை அங்கே காணவில்லை. படத்தை மாதவி கழற்றியிருக்க வேண்டுமென்று அவனால் அநுமானிக்க முடிந்தது. அவளோ ஒன்றும் வாய் திறந்து கூறாமல் அதைக் கழற்றி விட்ட திருப்தியோடு சிரித்துக்கொண்டு நின்றாள். அவன் கேட்டான்: "ஏன் படத்தைக் கழற்றி விட்டாய்?"
"உங்களுக்குப் பிடிக்கவில்லை என்று தோன்றியது. கழற்றிவிட்டேன்..."
"எனக்குப் பிடிக்காத எல்லாவற்றையும் நீ விட்டு விடுவதென்பது சாத்தியமா மாதவி?"
"சாத்திய அசாத்தியங்களைப் பற்றிக் கேட்காதீர்கள். உங்களுக்குப் பிடிக்காததை நான் விட்டுவிட ஆசைப்படுகிறேன்."
பழங்கள் நிறைந்த தட்டையும், வெற்றிலைப் பாக்குத் தட்டையும் அவன் முன்னே வைத்தபடியே பேசினாள் அவள். மாதவியின் பிரியமனைத்தையும் உடனுக்குடனே தாங்கிக் கொள்ள இடம் போதாமல் தன் மனம் சிறிதாயிருப்பது போன்ற உணர்ச்சியை மீண்டும் அவன் அடைந்தான். அவள் ஒவ்வொரு விநாடியும் தனக்காகவே உருகிக்கொண்டிருப்பதை அவன் உணர்ந்தான். புறப்படும்போது அவளும் மாம்பலம் வரை கூட வந்துவிட்டுத் திரும்புவதாகக் கூறினாள். அவன்தான் பிடிவாதமாக அவள் வரவேண்டாமென்று மறுத்தான்:
"வந்தால் நீ மறுபடியும் கோபாலுடைய காரிலேயே திரும்ப வேண்டியிருக்கும்; டிரைவருக்கு அநாவசியமா ரெண்டு அலைச்சல் ஆகும்."
"உங்களோடு வந்துவிட்டுத் திரும்பினோம்னு என் மனசுக்கு ஒரு திருப்தியிருக்கும்னு பார்த்தேன். அவ்வளவு தான்..."
"ராத்திரியிலே வீணா அலைய வேண்டாம். காலை தான் பார்க்கப் போகிறோமே?"
"சரி! உங்க இஷ்டப்படியே நான் அங்கே வரலே."
முத்துக்குமரன் மாதவியின் தாயிடம் சொல்லி விடைபெற்றுக் கொண்டான். அந்த மூதாட்டி அன்புமயமாயிருந்தாள். மாதவி வாயில் வரை வந்து அவனை வழியனுப்பினாள். மணி இரவு ஒன்பதரைக்குமேல் ஆகியிருந்தது. கார் புறப்படுவதற்கு முன் கதவருகே குனிந்து அவனுக்கு மட்டுமே கேட்கிற மெதுவான குரலில், "நாம் கடற்கரைக்குப் போனது வந்தது எல்லாம் அங்கே ஒண்ணும் ரொம்பச் சொல்லவேண்டாம்" என்றாள் மாதவி. புரிந்தும் புரியாததுபோல், "அங்கேன்னா எங்கே?" என்று சிரித்துக்கொண்டே அவளைக் கேட்டான் அவன். அதற்கு அவள் பதில் சொல்வதற்குள் கார் நகர்ந்துவிட்டது. அவள் அப்படிக் கூறியதை அவன் அவ்வளவாக இரசிக்கவில்லை. தானும் அவளும் கடற்கரைக்குச் சென்றது, பேசியது, திரிந்தது எதுவுமே கோபாலுக்குத் தெரிய வேண்டாம் என்று அவள் பயந்தாற் போலக் கூறியது அவனுக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும் இவ்வளவு முன்னெச்சரிக்கையோடு அவள் அதைப் பற்றிக் கூறியதன் உட்கருத்து என்னவாக இருக்குமென்று அவன் சிந்திக்கத் தொடங்கினான். அவள் வாழ்வதற்கு வழி செய்து கொடுத்திருப்பவன் கோபால். அவனிடம் அவளுக்கு மரியாதையும், பயமும் இருப்பதை தப்பாக நினைக்க முடியாது. ஆயினும், மெதுவான குரலில் புறப்படுவதற்கு முன் பதற்றத்தோடு அவள் கூறிய அந்தச் சொற்களை அவனால் மறக்கவே முடியவில்லை.
அவன் பங்களாவுக்குத் திரும்பியபோது கோபால் வீட்டிலில்லை. ஏதோ அல்ஜீரியக் கலைக்குழுவின் நடன நிகழ்ச்சி ஒன்றைக் காண்பதற்காக அண்ணாமலை மன்றத்திற்குப் போயிருப்பதாகத் தெரிந்தது. திரும்பி வந்தவுடன் முத்துக்குமரனுக்கு உறக்கம் வரவில்லை. ஒரு மணி நேரம் எழுதிவிட்டு அப்புறம் உறங்கப் போகலாம் என்று தோன்றியது. ஏற்கனவே, எழுதி முடித்தவரை நாடகப் பகுதியை ஒரு முறை படித்துப் பார்த்துக்கொண்டு மேலே எழுதத் தொடங்கினான். எழுதினவரை ஸ்கிரிப்டை மாதவி தெளிவாகத் தமிழ்த் தட்டெழுத்துப் பிரதி எடுத்து வைத்துவிட்டுப் போயிருந்ததனால் படிக்க வசதியாயிருந்தது. எழுதி முடித்த பகுதிகளைப் பலமுறை திரும்பத் திரும்பப் படித்த பின்பே மேலே எழுத வேண்டிய பகுதிகளை எழுதத் தொடங்குவது அவன் வழக்கம். எழுதிக் கொண்டிருந்தே போதே கோபால் அண்ணாமலை மன்றத்திலிருந்து திரும்பியதும் தன்னை ஃபோனில் கூப்பிட்டாலும் கூப்பிடுவான் என்று நினைத்துக்கொண்டே எழுதினான். ஆனால் அவன் எழுத முடிந்தவரை எழுதிவிட்டுத் தூங்கப் போகிறவரை கோபால் திரும்பி வந்தானா வரவில்லையா என்பதைப் பற்றி ஒரு தகவலும் தெரியவில்லை.
காலையில் முத்துக்குமரன் எழுந்து காபி குடித்துக் கொண்டிருந்தபோது கோபால் அங்கே வந்தான்.
"என்ன? வாத்தியாருக்கு நேத்து ரொம்ப அலைச்சல் போலேருக்கு. எலியட்ஸ் பீச், விருந்துச் சாப்பாடுன்னு ஒரே 'பிஸி'ன்னு கேள்விப்பட்டேன்..."
- இப்படிக் கோபால் கேட்ட தொனியும் - சிரித்த சிரிப்பும் விஷமமாகத் தென்படவே - முத்துக்குமரன் ஓரிரு விநாடிகள் பதில் சொல்லாமலே மௌனம் சாதித்தான்.
"உன்னைத்தான் கேட்கிறேன் வாத்தியாரே? மாதவிகிட்ட மணிக்கணக்கா உட்கார்ந்து பேசினப்புறம் எங்கிட்டப் பேசறதுக்குப் பிடிக்கலியா? பதில் சொல்ல மாட்டேங்கறியே?"
- இந்த இரண்டாவது கேள்வி இன்னும் விஷமமாகத் தோன்றியது. கேள்வியில், 'என்னிடம் சொல்லிக் கொள்ளாமலும், கேட்காமலுமே நீங்களாக வெளியில் சுற்றுகிற அளவு வந்துவிட்டீர்களே' என்று வினாவுகிற தொனியும் இருந்ததை முத்துக்குமரன் கண்டான். மேலும் தொடர்ந்து மௌனம் சாதிப்பது நன்றாக இராது என்ற முடிவுடன்,
"யார் சொன்னாங்க? சும்மா வெளியிலே போய்ச் சுற்றி விட்டு வராலாம்னு தோணிச்சு போயிட்டு வந்தோம்" - என்றான் முத்துக்குமரன். பேச்சு இவ்வளவோடு நிற்கவில்லை; தொடர்ந்தது.
"அது சரி நீயோ, மாதவியோ எங்கிட்டச் சொல்லாட்டியும் எனக்குத் தெரியாமப் போயிடும்னு பார்த்தியா வாத்தியாரே!"
"தெரிஞ்சதுக்காக இப்ப என்ன செய்யணும்கிறேடா கோபாலு? ஏதாவது சிரசாக்கினையா என்ன?"
"சிரசாக்கினைக்கு எல்லாம் கட்டுப்படற ஆளா நீ?"
ஒருவருக்கொருவர் வேடிக்கையாகப் பேசிக்கொள்வது போலவே பேச்சுத் தொடர்ந்தாலும் - இரண்டு பேருடைய பேச்சுக்கு நடுவே வேடிக்கையல்லாத ஏதோ ஒன்று நிச்சயமாக இடறுவது தெரிந்தது. பேசிக்கொண்டிருந்த இருவருமே அப்படி ஒன்று நடுவே இடறுவதை உணர்ந்தார்கள். ஆனாலும் வெளியே காண்பித்துக் கொள்ளாமல் பரஸ்பரம் நாசூக்காகவும் சுமுகமாகவும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள். கோபாலே இரவு அண்ணாமலை மன்றத்தில் அல்ஜீரியா நடனம் முடிந்து திரும்பியவுடனேயோ, காலையிலேயோ டிரைவரிடம் அதைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டிருக்கக் கூடும் என்பது முத்துக்குமரனுக்குப் புரிந்தது. ஆனாலும், 'யாரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டாய்' என்பதைக் கோபாலிடம் வினாவவில்லை அவன்; பத்துப் பதினைந்த நிமிஷ அமைதிக்குப் பின் கோபாலே மீண்டும் பேசினான்:
"நாடகம் எந்த நிலையிலிருக்கிறது? எத்தனை பக்கங்கள் எழுதியிருக்கிறாய்?"
பதில் சொல்லாமல் கையெழுத்துப் பிரதியும், டைப் செய்யப்பட்ட பகுதிகளுமாக இருந்த மேஜையை நண்பனுக்குச் சுட்டிக் காண்பித்தான் முத்துக்குமரன். கோபால் அந்தப் பிரதிகளை எடுத்து அங்கும் இங்குமாகப் படிக்கத் தொடங்கினான். படித்துக் கொண்டிருக்கும் போதே நடு நடுவே சில அபிப்பிராயங்களையும் கூறலானான்.
"செலவு நெறைய ஆகும்னு தெரியுது. தர்பார் ஸீன், அது இதுன்னு ஏராளமான ஸீன்ஸ் எழுதிக்கணும், இப்பவே தொடங்கினாத்தான் முடியும். 'காஸ்ட்யூம்ஸ்' வேறே செலவாகும்..."
இந்த அபிப்பிராயங்களை விமர்சிக்கும் ரீதியிலோ, இவற்றிற்குப் பதிலுரைக்கும் ரீதியிலோ முத்துக்குமரன் வாய் திறக்கவே இல்லை.
- சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டுக் கோபால் போய்விட்டான். நாடகம் எடுப்பாகவும் நன்றாகவும் வாய்த்திருப்பதாக அவன் பாராட்டிவிட்டுப் போன வார்த்தைகளைக் கூட அவ்வளவு ஆழமானவைகளாக முத்துக்குமரன் எடுத்துக் கொள்ளவில்லை, அப்போது அவன் மனத்தை அரித்துக்கொண்டிருந்த விஷயம் வேறாக இருந்தது. தன் வீட்டில் வந்து தங்கியிருக்கும் விருந்தினர் ஒருவர் எங்கே போகிறார் வருகிறார், யாரோடு பேசுகிறார் என்றெல்லாம் - தன்னிடம் வேலை பார்க்கும் டிரைவரிடம் விசாரிப்பவன் எவ்வளவிற்குப் பண்புள்ளவனாக இருக்க முடியும்? அப்படி விசாரிக்கப்படும் நிலைமைக்கு ஆளான விருந்தினனைப் பற்றி அந்த டிரைவர் தான் எவ்வளவு மதிப்பாகவும் மரியாதையாகவும் நினைப்பான் என்றெல்லாம் சிந்தனை ஓடியது முத்துக்குமரனுக்கு. ஒருவேளை கோபால் இரவிலேயாவது, காலையிலாவது மாதவிக்கே ஃபோன் செய்து விசாரித்திருப்பானோ என்று அவன் நினைத்தான்; அந்த நினைப்பு சாத்தியமில்லை என்பதும் உடனே அவனுக்கே தோன்றியது. மாதவிக்குக் கோபாலே ஃபோன் செய்து விசாரித்திருந்தாலும் கூட அவள் தன்னையே எச்சரித்து அனுப்பியிருந்த நிலையில் கோபாலுக்கு ஒன்றும் பிடி கொடுத்துப் பதில் சொல்லியிருக்க மாட்டாள் என்று நம்ப முடிந்தது. திடீரென்று கோபால் புரியாத புதிராகியிருப்பது போல் முத்துக்குமரனுக்குத் தோன்றியது.
'என்னுடைய செலவுகளுக்கு நான் திண்டாடக் கூடாது என்று குறிப்பறிந்து ஆயிரம் ரூபாய் பணத்தை உரையிலிட்டுக் கொடுத்தனுப்புகிற இந்த நண்பன் ஒரு சின்ன விஷயத்திற்காக ஏன் இப்படிக் கீழ்த்தரமாக இறங்கிப் போகிறான்; நான் வெளியே உலாவப் போகவோ, மாதவி தன் வீட்டுக்கு என்னைச் சாப்பிட அழைக்கவோ உரிமையில்லையா என்ன? இதற்காக ஏன் இவன் இவ்வளவு தூரம் அலட்டிக் கொள்கிறான்? இது ஒரு பெரிய விஷயமாக ஏன் இவனுக்குத் தோன்றுகிறது. ஒரு வேளை இவனைப் பற்றி இவனே இரகசியம் என்று நினைத்துக் கொள்கிற எந்த விஷயங்களையாவது மாதவி என்னிடம் கூறியிருப்பாளென்று சந்தேகப்படுகிறானா? அந்தச் சந்தேகத்தை நேரடியாகக் கேட்டுத் தீர்த்துக் கொள்ள முடியாமல் தான் சுற்றி வளைத்து இப்படியெல்லாம் கேட்கிறானோ?'-
என்றெல்லாம் முத்துக்குமரனின் மனத்தில் சிந்தனைகள் ஓடின. காலைச் சிற்றுண்டியை பையன் கொண்டு வருவதற்குள் குளித்து உடை மாற்றிக் கொண்டு வந்துவிடலாம் என்று 'பாத்' ரூமுக்குள் நுழைந்தான் அவன். பல் துலக்கும் போதும், நீராடும் போதும், உடம்பைத் தேய்த்துக் கொள்ளும் போதும் நண்பனைப் பற்றிய அதே சிந்தனை தொடர்ந்தது.
'ஷவரை' மூடிவிட்டுத் துடைத்துக் கொண்டு, பாத்ரூமை அடுத்த பகுதியில் உள்ளே இருந்த டிரெஸ்ஸிங் டேபிளுக்கு முன் அவன் வந்தபோது அறைக்கு வெளியில் மேஜையில் 'டைப்' அடிக்கும் ஒலியும், வளைகள் குலுங்கும் நாதமும் கேட்டன. மாதவி வந்திருக்க வேண்டும் என்று உணர்ந்து கொண்டான். தனக்குக் காத்திராமலும், தன்னை எதிர் பார்க்காமலும் வந்தவுடனே அவளாக டைப் செய்யத் தொடங்கியது என்னவோ விட்டுத் தெரிவது போல் தோன்றியது அவனுக்கு.
உடைமாற்றிக் கொண்டு வெளியே வந்தவன் மாதவி அமைதியாக இருந்ததைக் கண்டான். தான் வெளியே வந்ததும் அவள் டைப் செய்வதை நிறுத்திவிட்டுத் தன்னிடம் பேசாமல் - தொடர்ந்து அமைதியாக டைப் செய்து கொண்டே இருந்ததைக் கண்டதும் நிலைமையை அவனால் உய்த்துணர முடிந்தது. கோபால் அவளிடம் ஏதோ பேசியிருக்கக் கூடுமென்றும் அவனுக்குப் புரிந்தது. கோபால் பேசியிராத பட்சத்தில் திடீரென்று அவள் அவ்வளவு செயற்கையாக மாற வழியில்லை என்பதும் அவனுக்குப் புரிந்தது. அருகே சென்று அவள் டைப் செய்து போட்டிருந்த தாள்களைத் கையிலெடுத்தான் முத்துக்குமரன். அப்போதும் அவள் அவனிடம் பேசவில்லை; தொடர்ந்து டைப் செய்து கொண்டிருந்தாள்.
"என்ன மாதவி! எதுவும் பேசக்கூடாதென்று கோபமா! அல்லது இன்றைக்கு மட்டும் மௌன விரதமா?" - என்று அவனே முதலில் பேச்சைத் தொடங்கினான்.
அவள் டைப் செய்வதை நிறுத்திவிட்டு அவன் பக்கமாகத் திரும்பினாள். அவள் குரல் சீறினாற் போல ஒலித்தது.
"நான் அவ்வளவு தூரம் சொல்லியனுப்பியிருந்தும் கோபால் சாரிடம் போய் நீங்கள் இதையெல்லாம் சொல்லியிருப்பது எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை."
அவளுடைய சந்தேகத்துக்கும் கோபத்திற்கும் காரணம் இப்போது அவனுக்கு மெல்ல மெல்லப் புரியத் தொடங்கியது. அவள் தன்னைப் பற்றி அத்தனை அவசரமாக ஒரு முடிவுக்கு வந்து கோபித்துப் பேசியதைக் கண்டு அவனுள்ளும் ஆத்திரம் கிளர்ந்தது. அவனுடைய புருவங்களும் வளைந்து கண்கள் சினத்தால் சிவந்தன.
----------
அத்தியாயம் - 7
"பெண்புத்தி பின்புத்திதான்" - என்பதை அப்போது முத்துக்குமரன் நன்றாக உணர்ந்திருந்தான். தன்னைப்பற்றி ஏன் அவள் சந்தேகப்பட நேர்ந்திருக்கிறது என்ற காரணத்தை அப்போது அவனால் அநுமானிக்க முடிந்தது. காரமாகவும் சுருக்கென்று உடனே அவள் மனத்தில் தைப்பது போலவும் ஏதாவது பதில் சொல்ல வேண்டுமென்று தோன்றியது அவனுக்கு.
"உன்னைப் போல் பயந்து சாகிறவள் வேண்டுமானால் அப்படிச் செய்யலாம். நான் ஏன் அப்படிச் செய்கிறேன்?"
அவள் பதில் சொல்லவில்லை. அவளுடைய கைவிரல்கள் டைப் செய்வதை நிறுத்தி விட்டன. மௌனமாகத் தலை குனிந்தபடி, நின்று கொண்டிருந்த அவனையும் பாராமல் இருந்தாள் அவள். அவளை அப்படி மௌனமாக ஆக்கியதை அவனாலும் தொடர்ந்து விரும்ப முடியவில்லை.
"என்ன நடந்ததென்றுதான் சொல்லேன்?" - என்று மறுபடியும் கேள்வியில் கோபத்தைக் குறைத்துப் பேச்சைச் சுமுகமாகத் தொடர்ந்தான் முத்துக்குமரன். அவள் கேட்கத் தொடங்கினாள்.
"ஏதோ, சொன்னீர்களே; அதை மறுபடி சொல்லுங்களேன் பார்க்கலாம்!"
"எதைச் சொல்கிறாய் மாதவி? நான் தப்பாக ஒன்றும் சொல்லவில்லையே?"
"ஏன் சொன்ன வார்த்தைகளை மறைக்கிறீர்கள்? 'உன்னைப்போல் பயந்து சாகிறவள்' - என்று சற்றுமுன் ஏதோ கூறினீர்களே?"
"ஆமாம், நேற்றிரவு நான் உன் வீட்டிலிருந்து புறப்படும்போது நீ காரில் என்னருகே வந்துசொன்ன வார்த்தைகள் எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கவில்லை."
"அப்படி நான் என்ன சொல்லி விட்டேன்?"
"நாம் கடற்கரைக்குப் போனது வந்தது எல்லாம் 'அங்கே ஒண்ணும் ரொம்ப சொல்ல வேண்டாம்'னு நடுங்கினியே; அதைத்தான் சொன்னேன்..."
"நடுக்கம் வேறே, முன்னெச்சரிக்கை வேறே..."
"ரெண்டுக்கும் வித்தியாசம் நீ சொல்லித்தான் எனக்குத் தெரியணும் போலேயிருக்கு..."
"அவசரப் படறவங்களுக்கும், ஆத்திரப்படறவங்களுக்கும் எப்படிச் சொன்னாலும் எதுவும் புரியப் போறதில்லை..."
- திடீரென்று இரண்டு பேருமே இந்த விதமாகக் கடுமையுடன் உரையாடலைத் தொடர்வதை விரும்பாமல் சலிப்படைந்தான் முத்துக்குமரன்.
"சண்டை போட்டுக்கற கிழட்டுப் புருசன் பெண்சாதி மாதிரி எவ்வளவு நேரம்தான் ரெண்டு பேரும் இப்படிப் பேசிக்கணும்னு நீ நினைக்கிறே?"
- இந்த உதாரணத்தைக் கேட்டு மாதவி கோபம் கலைந்து கலீரென்று சிரித்துவிட்டாள். நாற்காலியில் உட்கார்ந்திருந்த அவள் தோள்பட்டைகளில் கைகளை ஊன்றி அழுத்தினான் முத்துக்குமரன்.
"சும்மா விடுங்க...வேலை செய்யிறவங்களைத் தொந்தரவு படுத்தப்படாது..."
"இதுவும் ஒரு வேலைதானே?"
"ஆனால் கோபால் சார் இந்த வேலைக்காக நம்மை இங்கே உட்கார்த்தலியே...? விறுவிறுன்னு எழுதுங்க... நாடகம் முடியணும். அவரு அரங்கேற்றத்துக்கு தலைமை வகிக்க மினிஸ்டரிட்டே டேட் வாங்கியிருக்காரு..."
"அதுக்காக நான் என்ன செய்ய முடியும்?"
"வேகமா எழுதணும்...அப்புறம் அரங்கேற்றத்துக்குத் தலைமை வகிக்க மினிஸ்டர் கிடைக்கமாட்டாரு..."
"அவ்வளவு அவசரம்னா மினிஸ்டரையே ஒரு நாடகம் எழுதச் சொல்லியிருக்கணும்..."
"இல்லே இன்னிக்கிக் காலையிலே நான் வந்ததும் 'சும்மா பீச், அங்கே, இங்கேன்னு சுத்தாதே...நாடகத்தைச் சீக்கிரமா முடிச்சு வாங்கு. மினிஸ்டர் ப்ரிஸைட் பண்ணத் தேதி முடிவு பண்ணியிருக்கேன்'னு சொன்னாரு."
"ஓகோ...அதனாலேதான் பீச்சுக்குப் போனது வந்தது எல்லாத்தையும் கோபால்கிட்டே நானே சொல்லியிருப்பேனின்னு உனக்கு என் மேலே கோபம் வந்ததா? இன்னிக்கு காலையிலே எழுந்திரிச்சதுமே அவன் எங்கிட்ட வந்து 'என்ன வாத்தியாரே? 'பீச்'லே சுத்தினியாமே?ன்னு ஒரு தினுசாக் கேட்டான். அப்ப நான் என்ன நெனைச்சு சந்தேகப்பட்டேன் தெரியுமா? நீதான் கோபாலுக்கு ஃபோன் பண்ணியிருப்பியோன்னு நினைச்சேன். உண்மை என்னன்னா அவனே டிரைவரைக் கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டிருக்கான்."
"அது எப்படியாவது போகட்டும், இப்பக் காரியத்தைக் கவனியுங்க..."
"எப்படி அவ்வளவு சுலபமா விட்டுடமுடியும்? இத்தினி பேச்சும் அதனாலே தான் வந்தது!"
"இருக்கட்டுமே; அப்புறம் தனியா நாம ரெண்டு பேரும் பேசிக்கலாம். இப்ப - "ஜில் ஜில்" ஆசிரியர் கனியழகனோட கோபால் இங்கே வருவாரு. எல்லாருமா நாடக சீன்கள் பார்க்கறத்துக்காக ஆர்ட்டிஸ்ட் அங்கப்பனோட எடத்துக்குப் போறோம்."
"கோபால் உங்கிட்டச் சொல்லிட்டுப் போனானா!"
"ஆமாம். இப்பக் கொஞ்ச நேரத்திலே ஜில்ஜில்லோட வந்துடுவாரு..."
"அது யாரு ஜில்ஜில்? எதாவது ஐஸ்ஃபேக்டரி வச்சிருக்கானா என்ன?"
"இல்லே! 'ஜில் ஜில்' லுங்கறது அவரு நடத்துற சினிமாப் பத்திரிக்கை. 'ஆர்ட்டிஸ்ட்' அங்கப்பனுக்கு அவரு பெஸ்ட் ஃபிரெண்ட்."
"ரெண்டு பேருக்கும் நம்ம கோபால் ஃபிரண்டாக்கும்."
"ஆமாம்! இவரு ஒரு வார்த்தை நாக்கு அசைச்சார்னா எத்தனையோ ஸ்டூடியோக்கராங்க பிரமாதமான ஸீன்ஸ் - ஸெட்டிங்ஸ் எல்லாம் தயார் பண்ணிக் கொடுப்பாங்க...அதை விட்டுட்டு ஆர்ட்டிஸ்ட் அங்கப்பனிட்டப் போயித் தலையைக் கொடுக்கிறாரு. அவன் சரியான இழுபறிப் பேர்வழி. 'ஸீன்ஸ்' எழுதி வாங்கறத்துக்குள்ளே திண்டாடப் போறாரு..."
"அது சரி! அங்கப்பன் வீட்டுக்கு அவன் போறது சரிதான். நாமும் போகணுமா என்ன?"
"கோபால் சார் விடமாட்டாரு, வற்புறுத்திக் கூப்பிடுவாரு..."
"நீ என்ன நினைக்கிறே? எனக்கு நாம ரெண்டு பேருமே போக வேண்டாம்னு தோணுது."
"அது நல்லாருக்காது. ஏற்கெனவே நேத்து விஷயத்திலே அவர் மனசுக்கு எரிச்சலாகி இருக்கு. இன்னிக்கு வேற ரெண்டு பேருமாச் சேர்ந்து வரமாட்டோம்னா ஒரு மாதிரி விட்டுத் தெரியும். நீங்களும் வரத்தான் வேணும். ஒரு வேளை நீங்க வரமாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சாலும் நான் அவசியம் போகத்தான் போவேன். இல்லாட்டி வீண் மனஸ்தாபம் வரும்..."
"நீ போகக்கூடாதுன்னு நான் தடுத்தால், அப்ப என்ன செய்வே?..."
"இங்கிதம் தெரிஞ்சவராயிருந்தா நீங்களே என்னை அப்படித் தடுக்க மாட்டீங்க."
"நான் இங்கிதம் தெரியாத ஆளுன்னு சொல்லவர்றியா நீ?"
"அப்பிடி நான் சொல்லமாட்டேன். நீங்க சொல்றதை எல்லாம் நான் செய்யக் காத்திருக்கேன். நான் செய்ய முடியாததை நீங்க சொல்லி அன்பை உறைச்சுப் பார்க்க மாட்டீங்கன்னு நான் நம்பலாமில்லையா?"
"சரி! நானும் வந்து தொலைக்கிறேன். 'ஜில் ஜில்'லையும் அங்கப்பனையும் நானும்தான் பார்க்க வேண் டாமா?" - என்று அவளை வேதனைக்கு ஆளாக்காமல் முத்துக்குமரனும் வருவதாக அவளிடம் சம்மதித்தான். தெய்வத்தின் வரத்தைத் தனக்குச் சாதகமாகப் பெற்றுவிட்ட ஒரு பக்தையின் களிப்போடு அவள் அவன் வர இணங்கியதற்காக அவனைப் பாராட்டலானாள்.
"உங்களிடம் ரொம்பப் பெருந்தன்மை இருக்கிறது. அதுக்காக நான் சந்தோஷப்படுகிறேன்."
"யாருக்காகவும் செலவிடாத பெருந்தன்மையை உனக்காக நான் செலவிடுகின்றேன் என்பதை நீ புரிந்து கொண்டால் சரி"- என்று சிரித்துக் கொண்டே அவளிடம் கூறினான் அவன். இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருந்த போதே, கோபாலும், ஜில் ஜில் - கனியழகனும் வந்து சேர்ந்தார்கள்.
"இவர்தான் 'ஜில் ஜில்' எடிட்டர் கனியழகு. இவர் முத்துக்குமார். நம்ப நண்பர். இப்ப புது நாடகம் நமக்காக எழுதறாரு" என்று பரஸ்பரம் இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தான் கோபால்.
"ஏற்கனவே டிசம்பர் மாதம் ஒரே குளிர். நீங்க வேற 'ஜில் ஜில்'னு வந்து நிற்கிறீங்க. இன்னும் ரொம்பக் குளிருது..." என்று முத்துக்குமரன் வந்த ஆளை வம்புக்கு இழுத்தபோது மாதவி வாயைப் பொத்திக்கொண்டு தனக்குள்ளேயே அடக்க முடியாமல் சிரிக்கத் தொடங்கினாள்.
"சார் ரொம்ப ஹாஸ்யமாவில்ல பேசறாரு...பிரமாதம் - பிரமாதம்" - என்று ஹாஸ்யம் தடை விதிக்கப்பட்ட தீவிலிருந்து வந்தவன் போல் ஆச்சரியப்படத் தொடங்கினான் ஜில் ஜில். அவனுடைய உருவத்தில் - வேஸ்டி ஜிப்பாவைத் தொங்கப் போட்டிருந்தது என்று தான் சொல்லலாமே ஒழிய அவன் உடுத்திக் கொண்டிருந்தான் என்று சொல்ல முடியாதபடி அத்தனை ஒல்லியாக இருந்தான். ஜில் ஜில் வாயில் வெற்றிலைச் சிவப்பு, கைவிரல்களிடையே புகையும் சிகரெட், அவனைவிடச் சற்றுப் பருமனாகக் கையில் ஒரு லெதர் பாக். இந்தக் கோலத்தில் 'ஜில் ஜில்' ஒரு கேள்விக் குறிபோல் முதுகு கூனி நின்றான்.
"இவன் சட்டை போட்டுக் கொள்ளவில்லை. இவன் முதுகில் யாரோ சட்டையைத் தொங்கவிட்டு அனுப்பியிருக்கிறார்கள்"...என்று மாதவியின் காதருகே போய் முணுமுணுத்தான் முத்துக்குமரன். அவள் மேலும் அடக்க முடியாமல் சிரிப்பதைக் கண்டு,
"வாத்தியார் என்ன 'ஜோக்' சொல்றாரு?"...என்று அவளை வினவினான் கோபால்.
"ஒண்ணுமில்லே! ஏதோ நாடகத்திலே வந்த ஹாஸ்யம்..." - என்று மாதவி மழுப்பினாள்.
"நாளைக்கு உங்களை ஒரு பேட்டி கண்டு 'ஜில் ஜில்'லிலே போடணும்னு இருக்கேன். நீங்க பெரிய ஜீனியஸ்னு நடிகர் திலகம் சொன்னாரு" - என்று ஜில் ஜில் முத்துக்குமரனை முகஸ்துதி செய்யத் தொடங்கினான். சிறிது நேரத்தில் அவர்கள் நால்வரும் ஆர்ட்டிஸ்ட் அங்கப்பனைப் பார்க்கச் சென்றார்கள். ஆர்ட்டிஸ்ட் அங்கப்பனுடைய ஓவியக்கூடம் சிந்தாதிரிப்பேட்டையில் ஒரு பழைய கால பாணி வீட்டில் இருந்தது. தலைமை ஓவியனான அங்கப்பனுக்குக் கீழே ஐந்தாறு குட்டி ஓவியர்கள் வேலை செய்து கொண்டிருந்தார்கள். வர்ணக் கறை படியாத சுவர்களே அந்த மாளிகையில் இல்லை. கூட்டம் கூடி விடாதபடி கவனமாக அந்த மாளிகை ஓரமாகத் தெருவில் காரை நிறுத்திவிட்டு அவர்கள் இறங்கி உள்ளே போயிருந்தார்கள்.
ஜில் ஜில் கனியழகன் அங்கப்பனை நீ, நான் என்று உரிமையோடு பேசினான்.
"பார்த்தியா அங்கப்பன்? எத்தினி பெரிய நடிகரை உன்னைத் தேடிக் கூட்டியாந்திருக்கேன்? மாமண்டூர்ச்சிங்கன் உலைக்களத்தைத் தேடி மும்மூர்த்திகளே வருவார்கள் என்று கம்பர் பாடி வச்சமாதிரி உன்னைப் பத்தியும் பாடலாம். அப்படிப்பட்டவங்கல்லாம் உங்கிட்ட வந்திருக்காங்க இன்னிக்கி."
காதில் சொருகியிருந்த பென்சிலை விஷமம் செய்து கொண்டே அங்கப்பன் அவர்களை வரவேற்றான். அந்தக் காலத்திலே கன்னையா கம்பெனி ஸீன்ஸ் எப்படி இருக்கும் என்பது தொடங்கி, சிந்தாதிரிப்பேட்டையிலே முக்கால் கப் காப்பி என்ற 'எகானமி டிரிங்க்' வசதி இருந்த பொற்காலம் வரை அங்கப்பனின் வரவேற்புரையில அடங்கியிருந்தன. நடுவில்,
"அந்த நாளிலே ராமானுஜுலு நாயுடு கம்பெனியிலே பலராம ஐயர்னு ஒருத்தர் ஸ்திரீ பார்ட் கட்டுவாரு, இந்த அம்மா மாதிரியே, பார்த்தாலோ பேசினாலோ கிளி கொஞ்சும். சிரிச்சா முத்து உதிரும் போங்க" - என்று மாதவியைச் சுட்டிக் காட்டிச் சம்பந்தமில்லாமல் மாதவியைப் புகழ்ந்து வைத்தான் அங்கப்பன்.
"நம்ம சார்கூட மதுரையிலே ஒரு பிரமாதமான பாய்ஸ் கம்பெனியிலே 'ஸ்திரீ பார்ட்' தான் போட்டுக்கிட்டு இருந்தாரு" - என்று அப்போது ஜில் ஜில் குறுக்கிட்டுக் கூறியதைக் கோபால் அவ்வளவாக ரசிக்கவில்லை.
"எதை மறந்தாலும் நான் 'ஸ்திரீபார்ட்' போட்டதை மறக்க மாட்டீரு போலிருக்கு உனக்கு ஏன்யா எப்பப் பார்த்தாலும் ஸ்திரீகளைப் பத்தியே நினைப்பு?" என்று தன் கோபத்தை ஹாஸ்யம் போன்ற சொற்களின் வடிவிலே மாற்றி வெளியிட்டான் கோபால்; அப்போது மாதவியும் முத்துக்குமரனும் ஒருவரையொருவர் குறிப்பாகப் பார்த்து நகைத்துக் கொண்டனர்.
"சார் பெரிய கவி. ரொம்பப் பிரமாதமான கவிராயர் பரம்பரையிலே வந்தவரு. இப்ப நம்ம கோபால் சாரோட கம்பெனிக்கு நாடகம் எழுதறாரு. பாட்டுக் கட்டறதிலயும் கெட்டிக்காரரு" என்று ஜில் ஜில் முத்துக்குமரன் மேல் தன் கருணையைப் பெருக விட்டபோது,
"ஆகா! அந்தக் காலம் இனிமே வருமா? கிட்டப்பா மேடைக்கு வந்து 'காயாத கானகம்'னு ஒரு பிடி பிடிச்சார்னா அந்தக்குரல் சபையையே நிறைக்குமே; ஐயோ! என்ன காலம் அது?" - என்று ஆரம்பித்து விட்டான் அங்கப்பன். தன்னைப்பற்றி ஜில் ஜில் கூறியதைத் தவறாகக் காதில் வாங்கிக்கொண்டு 'பாட்டுக் கட்டறதிலே கெட்டிக்காரரு' - என்பது போல் நினைத்து அங்கப்பன் கிட்டப்பாவைப் பற்றிப் பேசியதை முத்துக்குமரன் கேட்டுக் கொள்ள வேண்டியதாயிற்று. தனக்கு வேண்டிய தர்பார் ஸீன், நந்தவன ஸீன், ராஜ வீதி, அரண்மனை முற்றம் போன்ற சில ஸீன்களைக் கோபால் விவரித்த பின் தன்னிடம் புதிதாகவே இருந்த சில ஸீன்களை விரித்துக் காண்பித்தான் அங்கப்பன். என்னென்ன மாதிரியான ஸீன்கள் தேவைப்படும் என்பதை முத்துக்குமரனிடம் அங்கே வைத்தே கேட்டான் கோபால். கேட்டுவிட்டுப் பதிலை எதிர்பாராமல் முத்துக்குமரன் பதில் சொல்வதற்குள் தானாகவே, 'இன்னின்ன ஸீன்கள் அவசியம் தேவையாயிருக்கும்' - என்று ஜில் ஜில்லையும் அங்கப்பனையும் நோக்கி விவரிக்க ஆரம்பித்து விட்டான். முத்துக்குமரனுக்கு இது பிடிக்கவில்லை. ஆயினும் சும்மா இருந்தான். அடுத்து பத்து நிமிஷத்தில் மறுபடியும் கோபால் முத்துக்குமரன் பக்கமாகத் திரும்பி ஸீன்களைப் பற்றி ஏதோ யோசனை கேட்ட போது, "என்னென்ன ஸீன்கள் வாங்குகிறாயோ அதற்குத் தகுந்த மாதிரிக் கதையை எழுதிட்டா நல்லாயிருக்கும்" - என்று சிரித்துக்கொண்டே பதில் சொன்னான் அவன். கோபாலோ இந்த வார்த்தைகளில் இருந்த தாக்குதலைப் புரிந்து கொள்ளாமல், "சில சமயங்களில் அப்பிடிக்கூடச் செய்ய வேண்டியதாகத்தான் இருக்கும்" - என்று பதில் கூறினான். முத்துக்குமரனுக்கு அது கோபமூட்டினாலும் அவன் பேசுவதை நிறுத்திக் கொண்டான். ஜில் ஜில் அங்கப்பனிடம் கோபாலைப் பற்றி அளக்கத் தொடங்கினான்:
"இந்தா அங்கப்பன்! நம்ப சார் ஒரு வார்த்தை சொல்லி அனுப்பிச்சார்னா ஆயிரம் ஸ்டூடியோக்காரனுக ஸீன்ஸ், ஸெட்டிங்ஸ்லாம் தயார் பண்ணி வீடு தேடிக் கொடுத்து அனுப்புவான்கள். ஆனால், சாரே பாய்ஸ் கம்பெனியிலே இருந்தவரானபடியாலே உன்னை மாதிரி முறையா நாடக ஸீன்ஸ் எழுதறதுலே ரொம்ப வருஷமாப் பழகின ஒருத்தரிட்டவே வாங்கணும்னு ஆசைப்படராரு."
"பேஷா வாங்கட்டும்! எனக்கும் பெருமைதான். அம்மா மகாலட்சுமி மாதிரி வந்திருக்காங்க... அவர்களைப் பார்க்கறப்பவே லட்சுமி கடாட்சம் பொங்குது..." - என்று சம்பந்தமில்லாமல் மறுபடியும் மாதவியைப் பற்றிப் புகழத் தொடங்கினான் அங்கப்பன்.
"இவனுக்கு உன்னைத் தவிர இங்கே வந்திருக்கிற யாருமே கண்ணுலே படலே!"- என்று மாதவியின் காதருகிலே முணுமுணுத்தான் முத்துக்குமரன். சிறிது நேரத்தில் அங்கப்பனிடம் இருந்த புதிய, பழைய ஸீன்களை எல்லாம் பார்த்து முடித்தாயிற்று. விலைக்கு வாங்குவது பற்றிய பேரம் தொடங்கியது. வந்திருக்கிற நடிகர் திலகத்தின் பணச்செழிப்புக்கும், கௌரவத்திற்கும் ஊறு நேராமல் விலை சொல்ல வேண்டுமென்று நினைத்தோ என்னவோ, அரண்மனை விலையைவிட அதிக விலையை அரண்மனை ஸினுக்கும், மற்றவற்றிற்கும் கூறினான் அங்கப்பன். விலைகளைக் கேட்டதும் கோபால் தயங்கினான்.
"இந்த விலைக்குப் புதுசாவே எழுதச் சொல்லி ஆர்டர் கொடுக்கலாம் போலிருக்கே?"-
"பேஷாக் கொடுங்க... எழுதித் தர்றேன்"- என்று அந்த யோசனையையும் விடாமல் ஏற்றுக் கொண்டான் அங்கப்பன்.
- மறுபடியும் புதிய ஸீன்கள் எழுதுவதற்கான பேரம் தொடங்கியது. ஸீன்களை முடித்துத் தருவதற்குரிய காலம் பற்றி அங்கப்பன் கூறியதை கோபால் ஏற்றுக் கொள்ளவில்லை. மறுபடியும் ஏற்கனவே எழுதி வைத்திருந்த ஸீன்களைப் பற்றிய பேரம் திரும்பி ஒருவிதமாக நிறைவேறியது. ஜில் ஜில் இரண்டு பக்கமும் மாறி மாறிப் பேசி ஒரு வழியாகப் பேரத்தை முடித்து வைத்தான். அவர்கள் அங்கிருந்து புறப்படும்போது பகல் ஒரு மணிக்கு மேலாகிவிட்டது.
"ஜில் ஜில்" அன்று பகலில் கோபாலுடன் சாப்பிட்டான். 'டைனிங்' டேபிளில் கோபால், ஜில் ஜில், முத்துக்குமரன் மூவரும் அமர்ந்தவுடன் பரிமாற வந்த சமையற்காரனைத் தடுத்துவிட்டு, 'நீ பரிமாறேன் மாதவி!' என்று திடீரென்று மாதவிக்குக் கட்டளையிட்டான் கோபால். முத்துக்குமரனுக்கு அது மிகவும் 'சீப்' ஆகத் தோன்றியது. மாதவி அதற்கு இணங்கக் கூடாது என்று அவன் எதிர்ப்பார்த்தான். கதாநாயகியாக நடிப்பது, பாட்டுப் பாடுவது, டைப் செய்வது, டைனிங் டேபிளில் பரிமாறுவது ஆகிய எல்லாக் காரியங்களையும் ஒருத்தியையே செய்யச் சொல்லி அடக்கி ஆளும் தன்மை தனக்கு இருப்பதாகக் கோபால் மற்றவர்களுக்குக் காட்ட விரும்புவதை முத்துக்குமரன் கண்டான். முத்துக்குமரன் நினைத்ததைப் போல் மாதவி அந்தக் காரியத்துக்கு இணங்க மறுக்கவில்லை. உற்சாகமாகப் பரிமாறத் தொடங்கினாள். அவள் அப்படிச் செய்தது முத்துக்குமரனுக்குப் பிடிக்கவில்லை. அவன் முகத்தில் மலர்ச்சி குன்றியது. சிரிப்பு அறவே மறைந்து விட்டது. பரிமாறிக் கொண்டிருந்த மாதவியும் முத்துக்குமரனின் மாறுதலையும் புரிந்து கொண்டாள். ஜில் ஜில்லும் கோபாலும் அட்டகாசமாகச் சிரித்துப் பேசிக் கொண்டே சாப்பிட்டார்கள். முத்துக்குமரனோ சாப்பிட்டு முடிக்கிறவரை மௌனத்தைக் கலைக்கவே இல்லை. முத்துக்குமரனின் மௌனத்தைக் குறிப்பிட்டு ஜில் ஜில் கோபாலைக் கேட்டான்: "என்ன, சார் ஒண்ணும் பேசவே மாட்டேங்கிறாரு..."
"அவரு ஏதாவது யோசனை பண்ணிக்கிட்டிருப்பாரு" என்றான் கோபால். அப்படி அவர்கள் இருவரும் தன்னைப் பற்றிப் பேசிய போதுகூட முத்துக்குமரன் வாய் திறக்கவில்லை.
வாஷ்பேஸின் வரை எழுந்திருந்து போய்க் கை கழுவி வரச் சோம்பல்பட்டவனாகக் "கை கழுவுவதற்கு ஒரு கும்பாவில் தண்ணீர் கொண்டு வா" என்று குரல் கொடுத்தான் கோபால். கைகழுவுவதற்கு நாயர்ப் பையன்தான் தண்ணீர் கொண்டு வருவான் என்று எதிர் பார்த்தான் முத்துக்குமரன். ஆனால் அப்படி நடக்கவில்லை. ஒரு சிவப்புநிற பிளாஸ்டிக் கும்பாவில் மாதவி தான் கைகழுவுவதற்குத் தண்ணீர் கொண்டு வந்தாள். அவள் டைனிங் டேபிள் அருகே வந்து அந்தக் கும்பாவைக் கையில் ஏந்திக் கொண்டு நின்றதும் - கோபால் உட்கார்ந்தபடியே அதற்குள் கைகளை விட்டுக் கழுவினான். முத்துக்குமரனுக்கு மனம் குமுறியது. அந்த உபசாரம் தன்னோடு போகாமல்,
"சும்மா நீங்களும் இப்படியே கழுவிவிடுங்க" என்று ஜில் ஜில்லையும் முத்துக்குமரனையும் வேறு வேண்டினான் கோபால். ஜில் ஜில் மறுத்து விட்டான். முத்துக்குமரன் "என்னாலே வாஷ்பேஸின் வரை நடந்து போக முடியும்னு நினைக்கிறேன்" என்று பதிலும் சொல்லி விட்டுத்தான் எழுந்திருந்தான். கோபாலின் திமிரைக் கண்டு அவன் மனம் கோபமும் கொதிப்பும் அடைந்திருந்தது. சாப்பாடு முடிந்த சிறிது நேரத்திற்கெல்லாம் கோபாலும் ஜில் ஜில்லும் புறப்பட்டுப் போய் விட்டார்கள். போகும் போது ஜில் ஜில் கூறிவிட்டுப் போனான். "சார்! உங்களை ஒரு நாள் இண்டர்வ்யூ பண்றத்துக்கு வரணும்."
பதில் சொல்லாமல் ஜில் ஜில்லை நோக்கித் தலையை அசைத்தான் முத்துக்குமரன். அவர்கள் போனதுமே அவன் அவுட்ஹவுஸுக்கு வந்து தன் வேலையைக் கவனிக்கத் தொடங்கினான். மாதவி இன்னும் வரவில்லை. அவள் சாப்பிட்டுவிட்டு வர அரைமணி நேரம் ஆகுமென்று தோன்றியது. அவள் வரவை எதிர்பார்த்து அவன் மனம் இருந்ததனால் - எழுத்தில் கவனமே செல்லவில்லை. இத்தனை அடிமைப்புத்தி அவளுக்கு எப்படிப் பழகியதென்று சிந்திக்கும் போதே அவனால் பொறுமையாக இருக்க முடியவில்லை. தன்னுடைய அன்பிற்கும், பிரியத்துக்கும் உரியவள் இன்னொருவனுக்கு முன் அடிமை போல சேவை செய்து நிற்பதை அவனால் சகித்துக் கொள்ள முடியவில்லை. உடன் உட்கார்ந்து சாப்பிடும்படி கேட்கப்பட வேண்டியவளை - உத்தரவிட்டு வேலை வாங்கும் கொழுப்பை அவன் வெறுத்தான். 'கோபால் இத்தனை பெரிய கிராதகனாக மாறியிருப்பான்' என்பதை அவனால் நம்பவே முடியவில்லை. இப்படி அவன் யோசித்துக் கொண்டிருந்த போது மாதவியே கையில் வெற்றிலை - பாக்குப் பழங்கள் அடங்கிய வெள்ளித் தட்டுடன் வந்து சேர்ந்தாள்.
"உங்களுக்காக வெற்றிலை பாக்கு எடுத்துக் கொண்டு வந்தேன். நீங்கள் அவசரமாக வந்து விட்டீர்கள் போலிருக்கிறது."
"எச்சில் கிண்ணம் ஏந்துகிற கைகளால் - வெற்றிலைத் தட்டும் ஏந்திவர முடியுமானால் நான் எப்படி அதைப் போட்டுக் கொள்வது?"
"உங்களுக்கு என்மேல் ரொம்பக் கோபம் போலிருக்கிறது. சாப்பிடும் போதே கவனித்தேன்."
"கோபம் வராமல் பின் என்ன செய்யும்? நீ ரொம்பதான் கோபாலுக்குப் பயந்து சாகிறாய்!"
"என் நிலைமையில் இருந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள் என்பதைத் தயவு செய்து சிந்தித்து விட்டு அப்புறம் பேசுங்கள்."
"அவன்தான் கம்பீர ஜன்னியில் திமிர் பிடித்துப்போய் அலைகிறான். உனக்கும் ஏன் அதுக்கெல்லாம் தலையாட்டணும்னு தோணுது? சாப்பாட்டைத்தான் பரிமாறினே? எச்சிக் கிண்ணத்தைக் கூடவா ஏந்திக்கிட்டு நிக்கணும்?"
"என் நிலைமையிலே நான் வேற என்ன செய்ய முடியும்?"
"ஒண்ணும் செய்ய முடியாதுன்னா - எக்கேடும் கெட்டுத் தொலை - அடிமைகள்தான் பூமியிலேயே நரகத்தைப் படைக்கிறார்கள்."
"உண்மையைச் சொல்லப் போனால் என் மனத்தை நான் ஒரே ஒருத்தருக்குத்தான் அடிமைப்பட விட்டிருக்கேன். அந்த ஒரே ஒருத்தரும் இப்படிக் கோபிச்சுக்கிட்டா என்ன செய்யறது?"
"நீ யாரிட்ட மனசைப் பறிகொடுத்திட்டதாகச் சொல்றியோ அந்த ஒருத்தன் உன் செயல்களாலே பெருமைப்படறாப்பலவும் கர்வப்படறாப்பலவும் இருக்கணும். அந்த ஒருத்தன் நீ செய்யற காரியங்களாலே தலைகுனியறாப்பல இருக்கப்படாது."
அவளிடமிருந்து இதற்குப் பதில் இல்லை. முத்துக்குமரன் தலைநிமிர்ந்து அவளைப் பார்த்தான்.
அவளுடைய வசீகரமான விழிகளில் ஈரம் பளபளத்தது. நீர் கலங்கிக் கொண்டிருந்தது.
"உன்னைச் சொல்லியும் குத்தமில்லை. அந்த ராஸ்கலையே கேக்கணும். நடிப்பும், பாட்டும், அழகும், லட்சுமிகரமான கலைகள். அந்தக் கலைகளை ஆளும் கைகளை எச்சில் தூக்கும்படி விட்டாயே, நீ நாசமாய்ப் போயிடுவேடான்னு கோபால் கிட்டவே சொல்றேனா இல்லையா பாரேன்..."
- என்று முத்துக்குமரன் ஆவேசமாகக் கத்துவதற்குத் தொடங்கிய போது, அவளுடைய மெல்லிய பொன் விரல் அவன் வாயைப் பொத்தின.
"தயவு செய்து வேண்டாம்! எனக்குப் பெருமை தேடித்தர முயன்று, அந்த முயற்சியால் நீங்கள் உங்கள் பெருமையை இழந்துவிடக் கூடாது."
இலேசாக அழுகை விசும்பும் குரலில் இவ்வாறு வேண்டினாள் அவள். மீண்டும் கண்கலங்கி நிற்கும் அவளுடைய எழில் முகத்தை நிமிர்ந்து பார்த்தான்.
--------------
அத்தியாயம் - 8
மாதவியின் வேண்டுகோளுக்கிணங்கி அவளைப்பற்றிக் கோபாலிடம் விசாரிக்காமலே விட்டு விட்டான் முத்துக்குமரன்.
'மாதவியை நீ சாப்பாடு பரிமாறக் கட்டளையிடுவது, எச்சிற்கையைக் கழுவுவதற்குத் தண்ணீர் ஏந்தி வரச் செய்வது போன்ற காரியங்கள் எனக்குப் பிடிக்கவில்லை. அவை உன் திமிரைக் காட்டுகின்றன' என்று கோபாலிடம் கண்டித்துப் பேச வேண்டும் என்று நினைத்திருந்த முத்துக்குமரன் - மாதவியின் வேண்டுகோளுக்காகவே அந்த நினைவைக் கைவிட வேண்டியதாயிற்று.
'அவரோட ரொம்ப நாளாகப் பழகிக் கொண்டிருக்கிற என்னிடம் அவர் மரியாதையாக நடந்து கொள்ள வேண்டுமென்று திடீரென்று இப்போதுதான் நீங்கள் கண்டிக்கப் புறப்படுவது என்னவோ போலிருக்கும். அது வேண்டாம்' - என்றாள் மாதவி. அவளைப் பரிமாறச் சொல்லியது, கைகழுவத் தண்ணீர் கொண்டுவரச் சொல்லியது ஆகியவற்றைப் பற்றி நண்பன் கோபாலிடம் தான் கண்டிப்பதோ, விசாரித்துப் பேசுவதோ மாதவியைப் பாதிக்கும் என்பது அவனுக்குப் புரிந்தது. கோபாலையும் நாளாக நாளாகத்தான் முத்துக்குமரனால் கணித்துப் புரிந்து கொள்ள முடிந்தது. வந்த முதல் தினத்தன்று சந்தித்த கோபாலிடம் எவ்வளவு பெருந்தன்மை இருந்ததாக அவனுக்குத் தோன்றியதோ அந்தப் பெருந்தன்மை அவ்வளவும் தவறான கணிப்பு என்று இப்போது தோன்றியது. வெளியில் பெருந்தன்மை உடையவனைப் போல தோன்றினானே ஒழியக் கோபாலனிடம் உள்ளூற வஞ்சகமும், சிறுமையும், தற்பெருமையுமே நிரம்பியிருப்பதையே கண்டான் முத்துக்குமரன். சென்னையைப் போன்ற பெரிய நகரங்களில் மனிதர்களின் பெருந்தன்மையைப் பற்றிச் சராசரி வெளியூர்க்காரனுக்கு ஏற்படுகிற ஆரம்பகால அநுமானம் நாட்பட நாட்படப் பொய்யாகி விடுகிறது என்பதை முத்துக்குமரன் இப்போது புரிந்துகொண்டிருந்தான். பெருந்தன்மையும், கருணையும், அன்புமே முதலில் தெரிந்து அவற்றின் காரணங்கள் பின்னால் போகப் போகத் தெரியும்போது முதலில் ஏற்பட்ட அநுமானமும், கணிப்பும் தவறோ என்று தயங்க வேண்டியிருக்கிறது. கோபாலைப் பொறுத்த அளவில் இப்போது அதே தயக்கம்தான் முடிவாக முத்துக்குமரனுக்கு ஏற்பட்டிருந்தது.
சமூகத்தில் நாகரீகமடைந்த வீதிகள் எல்லாம் அழகாகவும் அலங்காரமாகவும் பட்டினத்தில் தோன்றினாலும் - அந்த வீதிகளில் - வீடுகளில் ஆற்றல் நிறைந்த சந்தர்ப்பவாதிகளும், கொடியவர்களும், ஆதரவற்ற நியாய வாதிகளும்; நல்லவர்களும் முறைமாறிய சரிசமமற்ற பலத்தோடு நிரந்தரமாகப் போராடிக் கொண்டிருக்கிறார்களென்றே தோன்றியது.
சிந்தாதிரிப்பேட்டை அங்கப்பனின் ஓவியக் கூடத்திற்கு எல்லோருமாகப் போய்ப் பார்த்து 'ஸீன்கள்' தேர்ந்தெடுத்து விட்டு வந்த தினத்திற்குப் பின் ஓர் இரண்டு வாரங்கள் கோபாலோடு நெருக்கமாகவோ, அடிக்கடி சந்தித்துப் பழகவோ வாய்ப்பின்றிப் போகும்படி தானாகவே ஒரு வசதி நேர்ந்தது முத்துக்குமரனுக்கு.
அடுத்த நாளே, ஏதோ ஒரு படத்தின் வெளிப்புறக் காட்சிப் படப்பிடிப்பிற்காகக் கோபால் விமானம் மூலம் குழுவினருடன் காஷ்மீருக்குப் புறப்பட்டு விட்டான். தான் திரும்ப இரண்டு வாரமாகுமென்றும் - அதற்குள் நாடகத்தை எழுதி முடித்து ரிஹர்ஸலைத் தொடங்குவதற்கு ஏற்ற முறையில் வைத்திருக்க வேண்டுமென்றும் முத்துக்குமரனிடமும், மாதவியிடமும் கோபால் திரும்பத் திரும்பச் சொல்லிவிட்டுப் போயிருந்தான். அதனால் முத்துக்குமரன் கடற்கரைக்கோ, வேறு வெளியிடங்களுக்கோ செல்வதைக் குறைத்துக் கொண்டு நாடகத்தை தீவிரமாக எழுதி முடிப்பதில் ஈடுபட்டான். மாதவியும் அவன் எழுதிய கையெழுத்துப் பிரதியை டைப் செய்வதில் தீவிரமாகக் கவனம் செலுத்தினாள். அந்த வேகமான நாட்களில் முத்துக்குமரன் இரவிலும் கண்விழித்து எழுதினான். இரவில் அவன் எழுதிக் குவித்தவற்றையும் சேர்த்துப் பகலில் பிரதி எடுக்க வேண்டிய கடுமையான வேலை மாதவியின் தலையில் சுமந்தது. இதனால் ஒரு பத்துப் பன்னிரண்டு நாட்கள் எப்படி கழிந்தனவென்றே தெரியாமல் வேகத்தில் போய்விட்டது.
கோபால் வெளிப்புறக் காட்சிப் படப்பிடிப்பிற்காகக் காஷ்மீர் புறப்பட்டுச் சென்ற பன்னிரண்டாவது நாள் அவனிடமிருந்து, 'நாடகம் எந்த நிலையில் இருக்கிற தென்று விசாரித்து முத்துக்குமரனுக்கு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதம் தன் கைக்குக் கிடைத்த சமயத்தில் முத்துக்குமரன் நாடகத்தின் கடைசிக் காட்சியில் எல்லாருமாகச் சேர்ந்து பாட வேண்டிய பாடலையும் எழுதிக் கொண்டிருந்தான். அடுத்த நாள் காலையில் முத்துக்குமரன் வரையில் நாடகம் எழுதப் பெற்று முடிந்துவிட்டது. மாதவி தான் டைப் செய்து முடிக்க வேண்டியிருந்தது, அவளும் காலையிலிருந்து நண்பகல் வரை டைப் செய்வதற்கான வேலைதான் மீதமிருந்தது. அவள் காலையில் டைப் செய்ய வந்தபோது 'ஹேர் கட்டிங்குக்காக' முத்துக்குமரன் ஸலூனுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தான். சென்னை வந்ததிலிருந்து முடிவெட்டிக் கொள்ளாததாலும். அதற்கு முந்தியும் ஒரு மாத காலமாக முடி வளர்ந்து காடாகியிருந்ததாலும் அவன் அன்று கண்டிப்பாக அந்தக் காரியத்தை முடித்துக்கொண்டு வந்து விடுவதென்று கிளம்பியிருந்தான். போகும்போது, "நான் திரும்பி வருகிறவரை டைப் செய்யப்போதுமான வேலை உனக்கு இருக்கிறது. நீ டைப் செய்து முடிப்பதற்குள் நான் ஸலூனிலிருந்து அநேகமாகத் திரும்பி வந்துவிடுவேன்" என்று மாதவியிடம் அவன் சொல்லிவிட்டுத்தான் போனான்.
கோபாலின் டிரைவர் பாண்டி பஜாரில் ஓர் ஏர்க்கண்டிஷன் செய்த நவநாகரிக ஸலூனின் முன்னால் கொண்டுபோய் முத்துக்குமரனை இறக்கிவிட்டான். முத்துக்குமரன் உள்ளே நுழைந்ததுமே - முன் பகுதியில் சிறிது நேரம் காத்திருக்க வேண்டியிருந்தது அந்தக் காத்திருக்கும் இடத்தில் தமிழ்த் தினசரிகள், வார, மாத சினிமா இதழ்கள், ஆங்கில இதழ்கள் எல்லாமாக ஒரு குட்டி லைப்ரரியே இருந்தது. மேலே சுவரின் நாற்புறமும் குளிக்கிற பெண்களின் காலண்டர்களும் - குளிக்காவிட்டாலும் - குளிப்பதைவிடக் குறைவாக உடையணிந்த பெண்களின் ஓவியங்களும் மாட்டப்பட்டிருந்தன. ஒரே சமயத்தில் உலகத்திலுள்ள அத்தனை பெண்களும் குளித்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறே எதையும் செய்ய முடியாதென்றோ, குளித்துக்கொண்டிருப்பதே ஒரு 'யுனிவர்ஸல் பெண்மை இலட்சியம்' என்றோ காலண்டர்காரர்கள் கருதியது மிகவும் வேடிக்கையாகத் தோன்றியது முத்துக்குமரனுக்கு, சுவரையும், படங்களையும் பார்ப்பதில் அலுத்தவனாக அங்கே கிடந்த பளபளப்பான அட்டையுள்ள தமிழ் வாரப் பத்திரகை ஒன்றை எடுத்துப் புரட்டலானான் அவன். அதிலும் அட்டையிலிருந்து உள்ளே தொடர் கதைகள், சிறுகதைகள் வரை எல்லாவற்றிலும் பெண்கள் இன்னும் குளித்துக் கொண்டுதான் இருந்தார்கள். நல்ல வேளையாக மேலும் அவனுடைய பொறுமையைச் சோதிக்காமல் உள்ளே முடிவெட்டிக்கொள்ள வருமாறு ஸலூனின் வரவேற்பு ஆள் வந்து கூப்பிட்டு விடவே அவன் உள்ளே போய் உட்கார்ந்தான். முன்னாலும், பின்னாலும் பக்க வாட்டிலுமாக அவனுடைய முகங்கள் பத்திருபது கண்ணாடிகளில் தெரியலாயின. திடீரென்று கர்வப்படலாம் போல அத்தனை சுகமாயிருந்தது அவனுக்கு. இரண்டு கண்ணாடிகளுக்கு இடையே ஓர் இடைவெளியில் பெரிதாக பிரேம் செய்யப்பட்டுக் கோபாலின் படமும் அந்த ஸலூனில் மாட்டப்பட்டிருந்தது. ஆள் தலையில் கத்தரிக்கோலால் முடிவெட்டிக் கொண்டிருக்கும் சுகத்தில் தூக்கம் சொக்கும் கண்களால் கோபாலின் அந்தப் படத்தை பார்த்தான் முத்துக்குமரன். படத்தைப் பார்த்ததை ஒட்டிக் கோபாலைப் பற்றிய ஒரு சிந்தனையும் அவன் மனத்தில் ஓடியது.
'கோபால் சாரை எனக்கு ரொம்ப நாளாய்ப் பழக்கம், பேருக்குத்தான் அவரு என்னை இண்டர்வ்யூவுக்கு வரச் சொல்லிப் புதிதாக அப்போதுதான் சந்திப்பவர் போல் கேள்விகளைக் கேட்டார்! சும்மா அது ஒரு கண் துடைப்பு' - என்று மாதவி தன்னிடம் உண்மையை ஒப்புக்கொண்டதும், கோபால் இதுவரை அப்படி ஒப்புக்கொள்ளாமல் மறைப்பதையும் இணைத்து நினைக்கலானான் முத்துக்குமரன். கோபாலோ - இண்டர்வ்யூவின்போது தான் முதன் முதலாக மாதவியையே தான் சந்திப்பது போல் தன்னையே நம்ப வைத்துப் பேசிக் கொண்டிருப்பதை முத்துக்குமரன் உணர்ந்தான். மாதவிக்குத் தமிழ் டைப்ரைட்டிங் தெரியும் என்று சொல்ல வந்தபோது கூட,
"மாதவிக்கு நல்லா டைப்ரைட்டிங் தெரியும்னு இண்டர்வ்யூவிலே சொன்னா, அவளையே டைப் பண்ணச் சொல்றேனே?" - என்றுதான் சொல்லி ஏமாற்றியிருந்தானே ஒழிய அவளைத் தனக்கு ரொம்ப நாளாகத் தெரியும் என்பதைக் கோபால் தன்னிடம் மறைக்கிறான் என்பதாகவே முத்துக்குமரனுக்குப் புரிந்தது.
ஸலூனிலிருந்து திரும்பி வந்தபோது காலை பதினோரு மணிக்கு மேலாகிவிட்டது. அப்போது மாதவி டைப் செய்ய வேண்டிய வேலையை முடித்து முதலிலிருந்து டைப் செய்த தாள்களில் பிழையாக டைப் ஆனவற்றைத் தேடிப் பார்த்துத் திருத்திக் கொண்டிருந்தாள். முத்துக்குமரன் உள்ளே போய்க் குளித்து உடைமாற்றிக் கொண்டு வந்தான். மாதவி அவனை உற்றுப் பார்த்துவிட்டுக் கூறினாள்:
"திடீர்னு இளைச்சுப்போன மாதிரித் தெரியறீங்க...முடியை ரொம்பக் குறைச்சு வெட்டிட்டாங்க போலிருக்கு."
"கவனிக்கலே! முடி வெட்டறப்ப நல்லா உறக்கம் வந்திச்சு...உறங்கிட்டேன்..."
"நாடகம் நல்லா முடிஞ்சிருக்கு. தலைப்பு இன்னும் எழுதலியே? என்ன பேர் வைக்கப் போறீங்க இந்த நாடகத்துக்கு?"
"கழைக் கூத்தியின் காதல்'னு வைக்கலாம்னு பார்க்கிறேன். நீ என்ன நினைக்கிறே?..."
"எனக்கும் அது சரின்னுதான் தோணுது..."
"கோபால் என்ன சொல்வான்னு தெரியலே..."
"அதான் நாளைக் கழிச்சு மறுநா வந்துடுவாரே? அப்பத்தானே தெரியுது?"
"ஒரு வேளை அவன் இன்னும் புதுமையான பேரா வைக்கணும்னு ஆசைப்பட்டாலும் படுவான்..."
"இப்போதைக்கு நான் இந்த ஸ்கிரிப்ட்லேயும், டைப் அடிச்சதிலேயும், 'கழைக் கூத்தியின் காதல்'னே எழுதி வைக்கிறேன்."
அவனும் அதற்குச் சம்மதித்தான். பகல் உணவுக்குப் பின் அவளோடு அரட்டையடித்துக் கொண்டிருந்த போது "இன்னிக்கு நாடகம் முடிஞ்சிருக்கு...அதைக் கொண்டாடணும்; நாம ரெண்டு பேருமா ஒரு சினிமாவுக்குப் போனா என்ன?" என்று அவளைக் கேட்டான் முத்துக்குமரன்.
"மாட்னி ஷோவுக்கானா நான் வர்ரேன்..." என்றாள் அவள். அவனும் அதை ஏற்றான். இருவருமாகப் புதிதாய் அப்போதுதான் ரிலீஸாகியிருந்த ஒரு தமிழ்ப் படத்திற்குப் போனார்கள். அது ஒரு சமூகப் படம். வங்காளிக் கதையின் தழுவல் என்று வெளிப்படையாக டைட்டில் காட்டும் போதே பாவமன்னிப்புக் கேட்டுவிட்டுத் தொடங்கியது படம். வசனத்தையும் பாடல்களையும் திரைக்கதையையும் டைரக்ஷனையும் ஒருவரே செய்திருந்தார். கோபாலைப் போல் வேறொரு பிரபல நடிகர் அதில் ஹீரோவாக வந்து - பழைய வள்ளி திருமண நாடகத்தில் வேலன், வேடன், விருத்தன் வேடங்களை ஒருவரே போடுவது போல் - இந்தப் புதிய சமூகப் படத்தில் பஞ்சாபி பட்டாணி, வட்டி வாங்கும் மார்வாரி ஆகிய பல வேடங்களில் தோன்றினார். முத்துக்குமரன் படம் பார்த்துக் கொண்டிருக்கும் போதே மாதவியை ஒரு கேள்வி கேட்டான்:
"எல்லாப் படத்திலேயும் ஏன் ஒருத்தரே பல துறையிலும் திறமைசாலின்னு காமிக்க முயற்சி பண்ணி எல்லாத் துறையிலும் தான் அரைகுறைதான்னு நிரூபிக்கிறாங்க?"
"தமிழ்ப்படத் தயாரிப்பிலே - யாராலேயும் போக்க முடியாத குறை அது! இங்கே டைரக்டரே திடீர்னு ஒரு படத்துக்கு கதை எழுதுவாரு. அவரு நோக்கம் தனக்குக் கதை எழுதவும் தெரியறதை நிரூபிக்கணும்கிறதுதான். புகழுறவங்களும் அதை உபசாரத்துக்குப் புகழுவாங்க. பார்க்கிறவங்களும் அதை உபசாரத்துக்குப் பார்ப்பாங்க. எழுதறவங்களும் அதை உபசாரத்துக்குப் புகழ்ந்து எழுதுவாங்க."
"ஏன் நிறுத்திட்டே? மேலே சொல்லேன்! டைரக்டர் கதை எழுதறப்ப நாம் ஏன் எழுதக் கூடாதுன்னு நடிகருக்குத் தோணும். உடனே நடிகரும் ஒரு கதை எழுதுவாரு, அதை உபசாரத்துக்குப் புகழுவாங்க..."
"ஆமாம்! அப்புறம் திடீர்னு ஸ்டூடியோ லைட்பாய் ஒரு நாள் ஒரு லவ் ஸ்டோரி எழுதுவான். ஜனநாயகத்திலேதான் யாரும் எதையும் செய்யலாமே? அதுவும் படமாகும். ஒருவேளை அது டைரக்டர், நடிகரெல்லாம் எழுதினதைவிட ரியலாகவும் பிராக்டிகலாகவும் இருந்தாலும் இருக்கும்."
பின் ஸீட்டில் இருந்த பரம ரசிகர் ஒருவர் படத்தில் கவனத்தைச் செலுத்தாமல் முத்துக்குமரனும் மாதவியும் பேசிக் கொள்வதைப் பற்றிச் சூள்கொட்டி முணுமுணுக்கத் தொடங்கவே மாதவியும் முத்துக்குமரனும் பேசுவதை நிறுத்தினார்கள். படத்தில் கதாநாயகியின் கனவு ஸீன் ஓடிக்கொண்டிருந்தது. ஜிகினா மரங்கள் ஒவ்வொன்றிலும் வெள்ளிக் கனிகள், கதாநாயகி ஒவ்வொரு மரத்திலும் ஏறி ஊஞ்சலாடியும் - ஒரு மரம்கூட முறியவில்லை. அவ்வளவு கனமான அவள், ஒரு பெரிய பாட்டும் பாடுகிறாள்; அவள் எல்லா மரங்களிலும் ஏறி ஊஞ்சலாடி முடிகிறவரை முடியாதபடி அத்தனை நீளமாக அந்தப் பாடல் இயற்றப்பட்டிருக்கிறது. 'டங்கரி டுங்காலே டுங்கிரி டங்காலே' என்ற பாடலில் வந்த சில வரிகள் எந்த மொழியைச் சேர்ந்தவை என்று புரியாமல் மாதவியைக் கேட்டான் முத்துக்குமரன்.
"சினிமா மொழி - அல்லது காதலர் மொழியைச் சேர்ந்தவையாயிருக்கும்" - என்று அவன் காதருகே முணுமுணுத்தாள் மாதவி.
"சும்மாப் பேசிக்கிட்டேயிருந்தீங்கன்னாப் படத்தைப் பார்க்க முடியலே. வேணும்னா வெளியிலே போய்ப் பேசுங்க சார்?" - என்று பின் ஸீட்காரர் மறுபடி உரிமைப் பிரச்னையைக் கிளப்பினார். மறுபடியும் அவர்கள் மௌனமானார்கள்.
படம் முடிகிறவரை அவர்களால் இருக்க முடியவில்லை. பாதியிலே புறப்பட வேண்டியதாயிற்று. மவுண்ட்ரோடில் ஒரு மேற்கத்திய பாணி ஏர்க்கண்டிஷன் ஹோட்டலுக்குச் சிற்றுண்டி சாப்பிடச் சென்றார்கள் அவர்கள். டிபனுக்கு ஆர்டர் கொடுத்துவிட்டு அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். முத்துக்குமரன் அவளைக் கேட்டான்.
"ஆமாம்! நான் வெறுக்கிற மாதிரியே இந்த அரை வேக்காட்டுப் படங்களை நீயும் வெறுக்கிறியே? அப்பிடி இருந்தும் எப்பிடி இந்தத் துறையிலேயே தொடர்ந்து உன்னாலே காலந்தள்ள முடியுது?"
"வேறே பிழைப்பு ஏது? கொஞ்சம் படிச்சிருக்கிற காரணத்துனாலே - இது மோசம்னு தெரியுது. ஆனா வேற யாரிட்டவும் மோசம்னு ஒத்தருக்கொருத்தர் சொல்லிக்கவும் மாட்டமே? இங்கே முகமன் வார்தைக்கும் - புகழ்ச்சிக்கும் ஆழமான வித்தியாசம் ஒண்ணும் கிடையாது. அதனாலே கவலைப்பட வேண்டியதில்லை. தன்னாலே நல்லாச் செய்ய முடியற ஒரு காரியத்தை மட்டும் கருத்தூன்றிச் செய்துவிட்டு மற்றதை மற்றவங்ககிட்டே விடணும்கிற பெருந்தன்மையெல்லாம் இங்கே கிடையாது. எல்லாரும் எல்லாத்தையுமே செய்யலாம்கிற ஒரு மனப்பான்மை இங்கே உண்டு. அந்த மனப்பான்மையை யாரும் அத்தனை சுலபமாகப் போக்கிட முடியாது..."
"கோபால் எப்படி இதிலே?"
"நீங்க கேட்கிறதினாலே இப்ப நான் உபசாரப் புகழ்ச்சி செய்யக் கூடாது..."
"உள்ளதைச் சொல்லேன்."
"ஃபீல்டுக்கு வந்தப்ப ஸின்ஸியரா உழைச்சாருங்கறாங்க...இப்ப அவரும் எல்லாரையும் போலத்தான் ஆயிட்டாரு..."
"கலையிலே ஆத்ம வேதனைப் படணும்..."
"அப்படீன்னா?"
அசல் சிரத்தை வேணும்னு சொல்றேன்..."
"ரொம்பப் பேரு இங்கே உடம்பு வேதனைப்பட்டே உழைக்கிறதில்லே. நீங்க என்னடான்னா ஒரு படி மேலே போய் ஆத்ம வேதனைப்படணும்னே சொல்றீங்க..."
"உள்ளதைச் சொல்றேன்! ஆத்ம வேதனைப்படாம என்னாலே ஒரு வரி பாட்டு எழுத முடியலே. ஆத்ம வேதனைப்படாம என்னாலே ஒரு வரி கதை எழுத முடியலே. ஆத்ம வேதனைப்படாம என்னாலே ஒரு வரி நல்ல வசனம் எழுத முடியலே..."
"இருக்கலாம்! உங்களுக்கு உங்க கலை மேலே அத்தனை சிரத்தை இருக்கிறதுனாலே அப்படித் தவிக் கிறீங்க! ஆனா இங்கே பல பேருக்கு 'ஆத்ம வேதனை'ன்னாலே என்னான்னு தெரியாது! 'கிலோ' என்ன விலையின்னு கேட்பாங்க..."
"பரிதாபம்தான்! இத்தனை போலிகள் சேர்ந்து எப்படி லட்ச லட்சமாப்பணம் பண்றாங்கங்கறது பெரிய ஆச்சரியமாகத்தான் இருக்கும்..."
- டிபன் வந்தது, இருவரும் பேசிக் கொள்ளாமல் சாப்பிட்டு முடித்தார்கள். காபி வர சிறிது தாமதமாயிற்று. மெதுவாகவும், நிதானமாகவும், கேட்டு - ஆர்டர் எடுத்துக் கொண்டு, பின் ஒவ்வொன்றாகக் கொண்டு வந்து வைத்ததன் காரணமாக அங்கே சிற்றுண்டி - காபி சாப்பிட்டு முடிக்கவே ஒரு மணி நேரத்திற்கு மேலே ஆகியிருந்தது. திரும்பும் போது மாதவியை அவள் வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டுத் திரும்பினான் முத்துக்குமரன்.
மறுநாள் காலை யாரும் எதிர்பாராமல் ஒருநாள் முன்னதாகவே திரும்பி வந்து விட்டான் கோபால். வந்தவுடனேயே நாடகத்தைப் பற்றிய வேகத்தையும், அவசரத்தையும் அவன் தன் பேச்சில் காண்பித்தான். காஷ்மீரிலிருந்து திரும்பிய தினத்தன்று கோபால் எங்கும் வெளியே போகவில்லை. நாடகப் பிரதியை வாங்கிக்கொண்டு போய்த் தன் அறையில் வைத்துப் படித்துவிட்டு மறுபடியும் மாலை ஆறு மணிக்கு முத்துக்குமரனைத் தேடி அவுட்ஹவுஸுக்கு வந்தான். அப்போது முத்துக்குமரனோடு மாதவியும் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தாள். கோபால் திடீரென்று உள்ளே பிரவேசித்தவுடன் மாதவி பயபக்தியுடனே எழுந்து நின்றாள். அவள் அப்படி எழுந்து நின்றதை முத்துக்குமரன் ரசிக்கவில்லை.
"நாடகத்தைப் படிச்சாச்சு..."
"........."
"தலைப்பு வேற மாத்தணும். பேர் புதுமையா இருந்தா நல்லா இருக்கும். ஹாஸ்யத்துக்கு ஒண்ணும் ஸ்கோப் இல்லை. அதையும் உண்டாக்கணும்."
"........"
"என்ன வாத்தியாரே! நான் சொல்லிக்கிட்டே இருக்கேன். நீ ஒண்ணும் பதில் பேச மாட்டேங்கிறீயே?"
"பதில் பேசறதுக்கு என்ன இருக்கு? அதான் உனக்கே எல்லாம் தெரியுதே?"
"நீ குத்தலாக பதில் சொல்ற மாதிரியல்ல இதுக்கு?"
"........"
"கவர்ச்சியா ஒரு பேரு வைக்கிறதிலியும் நடுநடுவே ஹாஸ்யம் வருகிறாப்பிலே செய்யறதிலியும் நம்ம ஜில்ஜில் எமகாதகன்! அவன்கிட்ட இந்த ஸ்கிரிப்டைக் கொடுத்து சரி பண்ணி வாங்கலாம்னு பார்க்கிறேன்..."
"சே! சே! அவன் எதுக்கு? ஜில் ஜில்லைவிட - இந்த மாதிரி வேலைகளுக்கு உன்னோட பாண்டிபஜார் - ஏர்க்கண்டிஷன் ஸலூன்காரன்தான் ரொம்பப் பொருத்தமானவன்..."
"நீ கேலி பண்றே?"
"டேய்; கோபால் - நீ என்னன்னு நினைச்சிட்டிருக்கேடா? இதென்ன நாடகமா, அல்லது புரோ நோட்டா?"
முத்துக்குமரன் இந்தத் திடீர் சிம்ம கர்ஜனையில் கோபால் அப்படியே ஒடுங்கிப்போனான். முத்துக்குமரனை எதிர்த்துப் பேச அவனுக்கு வாய் வரவில்லை. அதிக நேரம் பதிலே சொல்லாமல் ஆத்திரமானதொரு மௌனத்தைச் சாதித்த முத்துக்குமரன் திடீரென்று வாய் திறந்து சீறியபோது கோபாலுக்கு வாயடைத்துப் போயிற்று. முத்துக்குமரனின் கோபம் திடீரென்று புயலாக வந்த வேகத்தைப் பார்த்து மாதவியே அதிர்ந்து போனாள்.
"ஜில் ஜில்லைவிட உன்னுடைய பாண்டிபஜார் ஆள்" - முத்துக்குமரன் கொடுத்த பதில் கோபாலைச் சவுக்கடியாக விளாசி விட்டிருந்தது. சிறிது நேரத்துக்குப் பின் சுபாவமாக ஒன்றுமே நடைபெறாதது போலக் கோபாலைப் பார்த்து, "நாளையிலிருந்து நாடகத்துக்கு ரிஹர்சல் இங்கே இந்த அவுட் ஹவுசிலே நடக்கும்...நீயும் வந்து சேர்" - என்று கட்டளையிட்டான் முத்துக்குமரன். அதையும் கோபால் மறுத்துச் சொல்ல முடியவில்லை.
-------------
அத்தியாயம் - 9
"இன்னிக்கு உனக்குப் பணம், பவிஷு எல்லாம் வந்திட்டதுனாலே நாடகம்னா என்னன்னு நீ கரைகண்டு விட்டதாக நான் ஒப்புக்கொண்டு விடமாட்டேன். நாடகம்னா என்னன்னு எனக்குத் தெரியும். அதைக் கேட்டு அதன்படி நடக்கிறதைவிட வேறே எதையும் நீ செய்ய வேண்டியதில்லை. திடீர்னு உன்னை நீ ரொம்பப் பெரிய புத்திசாலியா நினைச்சுக்க வேண்டிய அவசியமில்லே" - என்றெல்லாம் கோபாலைக் கண்டிக்க நினைத்திருந்தும் மாதவியின் முன் அதைச் செய்து கோபாலின் மானத்தை வாங்க விரும்பவில்லை அவன்,
- வெளியேறும்போது நாடகப் பிரதி ஒன்றையும் கையிலெடுத்துக்கொண்டு வெளியேறிய கோபாலை "இந்தா அதை எங்கே நீ கொண்டு போறே? இப்படிக் கொடுத்திட்டுப் போ" - என்று உரத்த குரலில் அதட்டி வாங்கி வைத்துக் கொண்டான் முத்துக்குமரன். அந்த அதட்டலையும் மீற முடியாமல் கோபால் கட்டுப்பட்டான்.
இருவருடைய இந்த நிலைகளுக்கு நடுவே தான் நின்று காண விரும்பாமல் மாதவி வீட்டுக்குப் போய் விட்டாள். அவள் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் கோபாலும் பங்காளாவுக்குப் போய்விட்டான். போகும் போது முத்துக்குமரனிடம் சொல்லிக் கொண்டு போகவில்லை, அது முத்துக்குமரனுக்கு ஒரு மாதிரி விட்டுத் தெரிந்தது. ஆனாலும் சுபாவமான அகங்காரத்தினால் அவன் அதைப் பொருட்படுத்தவில்லை. இரவு ஏழு மணிக்குச் சாப்பாடு கொண்டு வந்த நாயர்ப் பையன், "ஐயா உங்ககிட்டக் கொடுக்கச் சொல்லிச்சு." - என்று ஓர் உறையிலிட்டு ஒட்டிய கடிதத்தையும் சேர்த்துக் கொண்டு வந்திருந்தான். முத்துக்குமரன் ஆவலோடு அந்தக் கடிதத்தை வாங்கிப் பிரிக்கத் தொடங்கினான். பையன் சாப்பாட்டை மேஜை மேல் வைத்து விட்டுக் கிளாஸில் தண்ணீரும் ஊற்றியபின் பதிலைக்கூட எதிர்பாராமல் பங்களாவுக்குப் போய்விட்டான்.
*****
"அன்பிற்குரிய முத்துக்குமரனுக்குக் கோபால் எழுதியது. நீ மாதவியின் முன்னிலையில் என்னை எடுத்தெறிந்து பேசுவதும், கேலி செய்வதும், கண்டிப்பதும் உனக்கே நன்றாக இருந்தால் சரி. என்னிடம் அடங்கி வேலை செய்ய வேண்டியவர்களுக்கு முன்னால் நீ என்னை அவமானப்படுத்துவதை நான் விரும்ப முடியாது. அதை உன்னிடம் நேருக்கு நேர் சொல்ல நினைத்தும் தயக்கத்தினால் எழுதி அனுப்ப நேரிடுகிறது. இதை நீ புரிந்து கொண்டால் நல்லது. நாடகத்தை எழுதியிருப்பது நீ என்றாலும் அதை நடத்தவும் நடிக்கவும் போகிறவன் நான்தான் என்பது நினைவிருக்க வேண்டும்.
இப்படிக்கு,
கோபால்"
என்று எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதத்தைக் கோபத்தோடு கசக்கி மூலையில் எறிந்தான் முத்துக்குமரன். கோபாலின் சுயரூபம் மெல்ல மெல்ல அவனுக்குப் புரிய ஆரம்பித்தது. தனக்கு முன்னால் கோழையைப் போலப் பயந்து சாகும் அவன் - பின்னால் போய் என்னென்ன நினைக்கிறான் என்பதைக் கடிதம் சுட்டிக் காட்டுவது போல் இருந்தது. கோபாலின் மேல் ஏற்பட்ட கொதிப்பில் சாப்பிடக்கூடத் தோன்றாமல் சிறிது நேரம் கடந்தது. அப்புறம் பேருக்கு ஏதோ சாப்பிட்டுக் கடனை கழித்த பிறகு சிறிது நேரத்தில் படுக்கையில் போய் சாய்ந்தான். மாதவி தன்னிடம் நெருங்குவதோ, ஒட்டிக் கொண்டாற் போலப் பழகுவதோ கோபாலுக்குப் பிடிக்கவில்லை என்பதையும் இப்போது அவனால் புரிந்து கொள்ள முடிந்தது.
இரவு நெடுநேரம் உறக்கம் வராமல் தன்னைப் பற்றியும் மாதவியைப் பற்றியும் கோபாலைப் பற்றியும் அரங்கேற வேண்டிய புதிய நாடகத்தைப் பற்றியுமே சிந்தித்தபடி படுக்கையில் புரண்டு கொண்டிருந்தான் அவன். 'மறுநாள் ரிஹர்ஸலுக்காகத் தான் குறிப்பிட்டுச் சொல்லியனுப்பிய நேரத்தில் கோபால் அங்கே வருகிறானா இல்லையா?' என்பதை அறிவதில் அவன் ஆவலாயிருந்தான். அப்படி ஒரு வேளை தான் சொல்லியனுப்பியிருந்தபடி ரிஹர்ஸலுக்குத் தன்னைத் தேடி வராமல் கோபால் புறக்கணிப்பானானால் எழுதிய நாடகத்தோடு அந்த வீட்டை விட்டே சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறிவிட வேண்டும் என்ற குரூரமான பழிவாங்கும் ஆசையும் அவனுள் கிளர்ந்தது அப்போது.
ஆனால் மறுநாள் காலையில் அப்படி எல்லாம் நேரவில்லை. ரிஹர்ஸலுக்கென்று அவன் குறிப்பிட்டுச் சொல்லியிருந்த நேரத்திற்கு அரைமணி முன்னதாகவே கோபால் அவுட்ஹவுஸிற்குத் தேடி வந்து விட்டான். மாதவியும் சரியான நேரத்திற்கு அங்கே வந்து விட்டாள். கோபால் அவ்வளவு தூரம் விட்டுக் கொடுத்துக் கட்டுப்பட்டது முத்துக்குமரனுக்கு ஓரளவு வியப்பை அளித்தாலும் அவன் அதை வெளியே காண்பித்துக் கொள்ளவில்லை. சுபாவமாக தான் செய்ய வேண்டிய காரியங்களைச் செய்யத் தொடங்கினான் அவன். நாடகக் கம்பெனி நடைமுறைப்படியே எல்லாம் நிகழ்ந்தன. பூஜை போட்டு நாடகத்தின் ஒத்திகையைத் தொடங்குவதற்கு முன் கதையின் இயல்பு - கதாபாத்திரங்களின் இயல்பு பற்றிக் கோபாலுக்கும் மாதவிக்கும், விளக்கிச் சொல்லத் தொடங்கினான் முத்துக்குமரன். அதைச் சொல்லி விளக்கி விட்டுக் கதாபாத்திரங்களின் பெயர்களுக்கு நேரே நடிப்பவர்களின் பெயர்களை நிரப்பிக் கொடுக்குமாறு கோபாலிடம் தாள்களைக் கொடுத்தான் அவன்.
கழைக்கூத்தி - மாதவி
பாண்டியன் - கோபால்
புலவர்கள் - சடகோபன், ஜயராம் என்று தொடங்கி மொத்தம் பதினெட்டு கதாபாத்திரங்களிலும் நடிப்பவர்களின் பெயர்களைப் பூர்த்தி செய்து முத்துக்குமரனிடம் கொடுத்தான் கோபால்.
"இந்தப் பதினெட்டுப் பேர்லே நாம டைப் செய்திருக்கிற பிரதி மூணு பேருக்குத்தான் வரும். பாக்கி ஆளுங்க வசனம் மனப்பாடம் பண்ண இதைப் பார்த்துப் பிரதி எடுத்துக்கிட்டுப் போகணும்" என்றான் முத்துக்குமரன். கோபாலும் உடனே "ஆமாம்! அப்படித்தான் செய்யணும். அவங்க பிரதி எடுத்துக்கிட்டுப் போக நான் ஏற்பாடு செய்யிறேன்" - என்று அதற்கு ஒப்புக்கொண்டான். கோபாலுக்கும், மாதவிக்கும் காலை நேரத்தில் ஒத்திகை என்றும், மற்ற எல்லாக் கதாபாத்திரங்களுக்கும் மாலை நேரத்தில் ஒத்திகை என்றும் ஏற்பாடு செய்து கொள்ளலாமென்று முத்துக்குமரன் தெரிவித்த கருத்து ஒப்புக் கொள்ளப்பட்டது. கோபால் ஒத்திகையின் போது திடீரென்று நாடக வசனத்தில் ஒரு பகுதியைத் திருத்த வேண்டுமென்று அபிப்பிராயம் தெரிவிக்க முற்பட்டான்.
"கதாநாயகியாயிருக்கிற கழைக்கூத்திக்கு "கமலவல்லி"ன்னு பேர் வச்சிருக்கே; கதாநாயகன் கதாநாயகியைக் கூப்பிடற எல்லாக் கட்டத்திலியும் "கமலவல்லி!" "கமலவல்லி"ன்னு முழுப்பெயரையும் நீட்டி இழுத்துக் சொல்லிக் கூப்பிடறதாகவே வருது. "கமலா"ன்னு கூப்பிடறதா மாத்தினா நல்லது. கூப்பிடறதுக்கு அழகாகவும் சுருக்கமாவும் வாய் நெறையவும் இருக்கும்."
"கூடாது! கமலவல்லீன்னுதான் கூப்பிடணும்.
"ஏன்? 'கமலா'ன்னுன்னு கூப்பிட்டா என்ன?"
"இது சரித்திர நாடகம்! "கமலவல்லீ"ங்கிற பெயரைக் "கமலா"ன்னு சுருக்கிக் கூப்பிடறப்பவே ஒரு சமூக நாடகத் தன்மை வந்துடும்."
"உனக்கு ஏன் புரியப் போகுது?" என்று முத்துக்குமரன் பதிலுக்கு வினவியபோது கோபால் முகம் சிவந்தான். தான் எதிர்த்துப் பேசுவதை அவனுடைய ஆணவம் அனுமதிக்க மறுக்கிறது என்பதை முத்துக்குமரன் உணர்ந்தான். ஆயினும் ஒத்திகை தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. முத்துக்குமரன் கோபாலுக்காக எதையும் மாற்றவோ விட்டுக் கொடுக்கவோ இல்லை. வசனத்திலும், நடிப்பிலும், ஒத்திகையிலும், தான் கூறுவதைக் கண்டிப்பாக வற்புறுத்தினான் அவன். முதல் நாள் ஒத்திகையில் வேறு அதிகமான தகராறுகள் எவையும் கோபாலுடன் முத்துக்குமரனுக்கு ஏற்படவில்லை. மாதவியோ கோபாலுக்கு முன் புலியைக் கண்ட மான் போல் பயந்து நடுங்கினாள். அவளையும் வைத்துக்கொண்டே கோபாலிடம் கடுமையாகவோ அளவு மீறியோ பேசுவதற்கு முத்துக்குமரன் தயங்கினான். முந்திய தினத்தன்று இரவு கோபால் பையனிடம் எழுதிக் கொடுத்தனுப்பியிருந்த கடிதம் நினைவு வந்து அவனை ஓரளவு தயங்கச் செய்தது. கோபால் அசம்பாவிதமானவையும் அபத்தமானவையுமான கேள்விகளைக் கேட்கும்போதெல்லாம் அவனைக் கடுமையாகத் திட்ட வேண்டுமென்று கோபம் வந்து கூடப் பொறுமையாகப் போய்விட முயன்றான் அவன்.
அன்று பகல் இரண்டு மணிக்கு முன்பே தனக்கு வேறு "கால் ஷீட்" இருப்பதாகக் கூறி கோபால் புறப்பட்டுப் போய் விட்டான். மாதவி மட்டும் இருந்தாள். அவள் அவனைக் கடிந்து கூறினாள்.
"உங்களுக்கு ஏன் இந்த வம்பெல்லாம்? நாடகத்தை எழுதிக் கொடுத்தால் அவர்கள் இஷ்டப்படி, போட்டுக் கொண்டு போகிறார்கள்?"
"நாடகத்தை எழுதியிருப்பவன் நான் என்பதை நானே அத்தனை சுலபமாக மறந்துவிட முடியுமா என்ன?"
"மறந்திட சொல்லலை, ஓரேயடியா மன்றாடுவானேன்?"
"அப்படியில்லே, பிடிவாதத்தினாலேதான் சில நல்லதையாவது இந்த நாளிலே காப்பாத்திக்க முடியுது."
"நல்லதைக் காப்பாத்த யார் ஆசைப்படறாங்க? பணத்தைக் காப்பாத்திக்கத்தான் இப்ப எல்லாருமே ஆசைப்படறாங்க."
"நீ ரெண்டாவதாகச் சொன்னது கோபாலுக்குப் பொருத்தம்தான்! அது சரி. சாயங்காலம் மத்தவங்களுக்கு ரிஹர்சல்னு சொல்லிட்டுப் போனானே; மத்தவங்க யாராரு? எப்ப வருவாங்க? எப்பிடி வருவாங்க? ஒண்ணுமே தெரியலியே?"
"சொல்லியனுப்பிச்சிருப்பாரு. 'வேன்' போய்க் கூட்டிக்கிட்டு வரும். நாடகங்களிலே ஸைட் ரோல் நடிப்புக்குன்னே பல குடும்பங்கள் இங்கே கஷ்ட ஜீவனம் நடத்துது. ஆளுக்கென்ன பஞ்சம்?"
"அது சரி? ஆனா பஞ்சத்துக்கு வந்த ஆளுங்கள்ளாம் கலையுணர்ச்சியைக் காப்பாத்திட முடியாதே?"
"கலையைக் காப்பத்தறதுக்காக யாருமே பட்டணத்துக்கு வர மாட்டாங்க. வயித்தைக் காப்பாத்திக்கிறதுக்காகத்தான் வருவாங்க...வந்திருக்காங்க."
"அதுதான் பட்டணத்துலே "கலை'ங்கள்ளாம் இப்படி இருக்குப் போலிருக்கு."
இதற்கு மாதவி பதில் சொல்லவில்லை. சிறிது நேரத்தில அவள் கூறியது போலவே ஒரு 'வேன்' நிறைய ஆண்களும் பெண்களுமாகப் பத்துப் பதினைந்து பேர் வந்து இறங்கினார்கள். ஏதோ களையெடுக்க வந்தவர்கள் மாதிரிக் கூப்பாட்டுடன் வந்தவர்கள் 'வேன்' அருகே வந்த முத்துக்குமரனையும் மாதவியையும் பார்த்ததும் அவர்களாகவே அடங்கிக் கட்டுப்பட்டு நின்றனர். அவர்களை அவுட் ஹவுஸ் வராந்தாவுக்கு அழைத்துப் போய் யார் யாருக்கு எந்தப் பாத்திரம் தரலாம் என்று தீர்மானம் செய்ய அரைமணி நேரத்துக்கு மேலாயிற்று.
"எமது மாமன்னரின் வாளைச் சுழற்றினால் இப்பூமண்டலமே சுழலுமென்பதை நீ அறிய வேண்டும்?" என்ற வசனத்தைப் படைத் தூதன் வேடமிட இருந்த ஒர் இளைஞனைப் படிக்கச் சொல்லிக் கேட்டான் முத்துக்குமரன்.
"எமது மாமன்னரின் வாலைச் சுலற்றினால் இப்பூமண்டலமே சுளலும்" என்று படித்த அந்த இளைஞனை நோக்கி, "ஏன்? உமது மாமன்னரின் வால் அத்தனை நீளமோ?" என்று முத்துக்குமரன் கிண்டல் செய்து பதிலுக்குக் கேட்டபோது அந்தக் கிண்டல் கூடப் புரியாமல் மருண்டு நின்றான் அந்த இளைஞன். "கிரகசாரமே" என்று தலையில் அடித்துக் கொள்வதைத் தவிர முத்துக்குமரனால் வேறெதுவும் செய்ய முடியவில்லை. அவர்களில் பலர் தெளிவாக வசனங்களை உச்சரித்துப் பேசுவதற்கோ முகபாவங்களைக் காட்டியும், மாற்றியும் நடிப்பதற்கோ தகுதி அற்றவர்களாக இருந்தார்கள். நாடக உப பாத்திரங்களில் நடிப்பதற்கு நாட் கூலிகளைப் போல இப்படிப் பலர் சென்னையில் மலிந்திருக்கிறார்கள் என்பதை முத்துக்குமரனால் புரிந்துகொள்ள முடிந்தது. அவரவர்கள் பகுதியை அங்கேயே உட்கார்ந்து பிரதி எடுத்துக் கொள்ளுமாறு கூறித் தாளும் பென்சிலும் கொடுத்தாள் மாதவி. அதில் சிலருக்குப் பிழை இல்லாமல் தமிழில் எழுதும் பழக்கம்கூட இல்லை என்பது தெரிய வந்தது.
"பாய்ஸ் கம்பெனியில்கூட வயிற்றுக்கு வறுமை உண்டு. ஆனால் கலை வறுமையையோ தொழில் சூன்யங்களையோ அந்தக் காலத்தில் பார்க்க முடியாது. இங்கே இருக்கிற நெலமையைப் பார்த்தால் அந்தக் காலமே நல்லாயிருந்திருக்குன்னுதான் தோணுது..." என்று மாதவியைத் தனியே உள்ளே அழைத்து ஏக்கத்தோடு அவளிடம் கூறினான் முத்துக்குமரன்.
"என்ன செய்யிறது? இங்கே அப்பிடித்தான் இருக்கு. கஷ்டப்படறவங்கதான் இப்படி வேலையைத் தேடி வர்ராங்க. இதைத் கலைன்னு நெனச்சுத் தேடி வர்ரவங்களைவிட பிழைப்புன்னு நெனைச்சுத் தேடி வர்ரவங்க தான் அதிகமா இருக்காங்க" என்றாள் மாதவி. ஒத்திகையின் போது அந்த நடிகர்களிடம் இன்னொருவிதமான தொத்து நோயும் பரவி இருப்பதை முத்துக்குமரன் கண்டான். திரைப்படத் துறையில் பிரபலமாக இருக்கிற ஏதாவதொரு நடிகனின் குரல், பேசும் முறை, முகபாவம் அத்தனையையும் இமிடேட் செய்வதே தொழில் இலட்சியமாகவும், திறமையாகவும் அவர்களால் கருதப்பட்டது. கலையிலும், கலையைப் பற்றிய எதிர்கால நோக்கத்திலும் பக்குவமடையாத தன்மைகள் அதிகமாக இருந்தன. இரண்டு மூன்று மணி நேரம் அவர்களுக்குப் பயற்சியளிப்பதில் செலவழித்தான் அவன். ஒவ்வொரு உப நடிகனுக்கும் ஒரு நிமிஷம் மேடையில் தோன்றினாலும், தான் தோன்றுகிற ஒரு நிமிஷத்தில் கதாநாயகனைவிட அதிக முக்கியத்துவத்தோடு தோன்றிப் பேசி அட்டகாசம் செய்துவிட்டுப் போய்விட வேண்டுமென்ற ஆசை இருப்பதை முத்துக்குமரன் கண்டான். கலையில் எந்தத் துறையிலும் குறைவான ஆத்ம வேதனையும், அதிகமான ஆசையும் உடையவர்களே நிறைந்து தென்படுவதைச் சென்னையில் கண்டான் அவன். ஏதாவதொரு முன்னணி நடிகனுடைய பணமும், புகழும், கார்களும், பங்களாக்களுமே முன்னணிக்கு வராத ஏழை உபநடிகனின் கனவில் இருந்து கொண்டு தூண்டினவே தவிர, உழைப்பின் முனைப்போ, திறமை அடைய வேண்டுமே என்ற ஆர்வமோ தூண்டவில்லை. கலைத்துறைக்கு இப்படிப்பட்ட தூண்டுதல் பெருங் கெடுதல் என்பதை முத்துக்குமரன் உணர்ந்தான். ஆனாலும் எதுவும் செய்ய முடியாத நிலையில் அவன் இருந்தான். மறுநாளும் ஒத்திகைக்காக அவர்களை வரச்சொல்லி விடை கொடுத்து அனுப்பும்போது மாலை ஆறுமணிக்கு மேல் ஆகிவிட்டது. உப நடிகர்களை கூட்டமாக ஏற்றிக் கொண்டு வந்த 'வேன்' மறுபடியும் ஒரு மந்தையை உள்ளே அடைப்பதுபோல் திருப்பி ஏற்றிக்கொண்டு பெருத்த ஓசையுடன் பங்களாவிலிருந்து வெளியேறியது. புறப்பட்டுப் போகிற வேனைப் பார்த்தபடி மாதவியிடம் முத்துக்குமரன் கூறினான்:
"ஒவ்வொரு நடிகரும் தன்னைச் சேர்ந்த பத்துப்பேருக்கு வேலை கொடுக்கலாம்னுதான் இப்படி ஒரு நாடகக் குழுவே ஏற்படுத்திக்கிறாங்கண்ணு தெரியுது."
"உண்மை அதுதான்! ஆனா - அப்படி நினைக்காமே நல்ல கலை நோக்கத்தை வைத்துத் தொடங்கறவங்ககூட நாளடையில் நீங்க சொன்ன மாதிரி ஆயிடறாங்க..."
"உப நடிகர்களுக்கு மாதச் சம்பளமா? அல்லது நாள் கூலியா? எப்படி இங்கே நடை முறை?"
"வேண்டியவங்களா இருந்திட்டாங்கன்னா - ஒரு வேலையும் செய்யாட்டிக்கூட மாதச் சம்பளம் கொடுத்துடுவாங்க, மத்தவங்களுக்கு நாடகம் நடக்கிற தினத்தன்னிக்கு மட்டும் சம்பளம் இருக்கும். அது பத்து ரூபாயிலேயிருந்து ஐம்பது ரூபா வரை இருக்கும். ஆளைப் பொறுத்து, வேஷத்தைப் பொறுத்து, பிரியத்தைப் பொறுத்து - எல்லாம் வித்தியாசப்படும்..."
"நாடகங்கள் பெரும்பாலும் எப்படி நடக்கும்? யார் அடிக்கடி கூப்பிடறாங்க? எதிலே நல்ல வசூல்?"
"மெட்ராசிலே சபாக்களை விட்டால் வேற வழி இல்லை. இங்கே அநேகமா ஒவ்வொரு ஏரியாவிலேயும் ஒரு சபா இருக்கு. வெளியூர்லேயும் பம்பாய், கல்கத்தா, டில்லியிலே நம்ம ஆளுங்களுக்கு சபாக்கள் இருக்கு. மத்தபடி முனிசிபல் பொருட்காட்சி, மாரியம்மன் கோயில் பொருட்காட்சி. கட்சி மாநாட்டு அரங்கம்னு விதம் விதமா - நடக்கறது உண்டு. வெளியூர் நாடகம்னா ஸீன்களையும் ஆட்களையும் கொண்டு போய் திரும்பறதுக்குள்ள உயிர் போயிடும்..."
"நடத்துகிற சபாக்கள், பொருட்காட்சிகள், அரங்கங்கள் எல்லாம் பெருகியிருந்தாலும் - அன்னிக்கு இந்தக் கலையிலே ஈடுபடறவனுக்கு இருந்த ஆத்ம வேதனை இன்னிக்கி இல்லே. இன்னிக்கு வயிற்றுப் பசி மட்டுமே இருக்கு. கலைப்பசி கொஞ்ச நஞ்சமிருந்தாலும் அதை மிஞ்சற அளவுக்கு வயிற்றுப் பசிதான் எங்கேயும் தெரியுது."
"நீங்க சொல்றது உண்மைதான்." - மாதவி பெருமூச்சு விட்டாள். சிறிது நேரத்துக்குப் பின்பு அவளே மேலும் கூறலானாள்.
"கல்கத்தாவிலே தினசரி ரெகுலரா நாடகமே நடத்தற தியேட்டர்கள் இருக்கு, நாடகங்களிலேயும் நீங்க சொல்ற ஆத்ம வேதனை இருக்கு. நான் ஒரு தடவை கோபால் சாரோட கல்கத்தாவுக்குப் போயிருக்கிறப்ப 'பசி'ன்னு ஒரு வங்காளி நாடகம் பார்த்தோம். ரொம்ப நல்லா இருந்தது! 'டயலாக்' ரொம்பக் கொஞ்சம், "ஃபேஸ் எக்ஸ்பிரஷன்ஸ்'தான் அதிகம். நாடகம் கச்சிதமா பட்டுக் கத்தரிச்ச மாதிரி இருந்திச்சு..."
"கோபால் சாரோட எதற்காகக் கல்கத்தா போயிருந்தாய் நீ" - என்று கேட்க நினைத்து வாய் நுனி வரை வந்துவிட்ட அந்தக் கேள்வியை அப்போது நாசூக்காக அடக்கிக் கொண்டு விட்டான் முத்துக்குமரன்.
சிறிது நேரம் இருவருக்குமிடையே உரையாடல் தொடராமல் மௌனம் நிலவியது. தான் கோபாலுடன் கல்கத்தா போயிருந்ததை அவனிடம் சொல்லியிருக்கக் கூடாதென்று உணர்ந்து அடங்கினாற்போல் தலைகுனிந்து சில விநாடிகள் மௌனமாயிருந்தாள் அவள். கை தவறி வாசித்துவிட்ட அபஸ்வரத்திற்காக உள்ளூற வருந்தும் நல்ல வாத்தியத்தின் சொந்தக்காரனைப் போன்ற நிலையில் அப்போது இருந்தாள் அவள். அபஸ்வரத்தைக் கேட்டுவிட்டு உட்கார்ந்திருந்தவனுக்கோ இன்னும் சிரமமாக இருந்தது. மௌனத்தை நீடிக்க விரும்பாமல் பேச்சை வேறு திசைக்குத் திருப்ப முயன்றாள் அவள்.
"நாளைக்கு எங்க ரெண்டு பேரோட ரிஹர்ஸலும் காலையிலே வழக்கம் போலத்தானே? நாள் ரொம்பக் குறைச்சலா இருக்கே?"-
"எதுக்கு நாள் குறைச்சலா இருக்கு?"-
"நாடக அரங்கேற்றத்துக்குத்தான், மந்திரி "டேட்" கொடுத்திருக்காரே?"
"நாடகம் அரங்கேறப் போகுதுங்கறதைவிட மந்திரி தேதி கொடுத்திருக்காருங்கறது தானே எல்லாருக்கும் ஞாபகமிருக்கு..."
"தப்பாயிருந்தா மன்னிச்சுக்குங்க. நான் அந்த அர்த்தத்திலே சொல்லலே."
"எந்த அர்த்தத்திலே சொன்னா என்ன? இன்னிக்கி எந்தக் கலையும் அந்தக் கலைக்காகவே இருக்கிறதாகத் தெரியலை. மந்திரி தலைமை வகிக்கிறதுக்காகவும் பேப்பர்லே நியூஸ் வர்றதுக்காகவும்தான் எல்லாமே இருக்கிறதாகத் தோணுது..."
"இன்னொரு விஷயம்... உங்ககிட்ட ரொம்பப் பணிவாகக் கேட்டுக்கிறேன். நீங்க தப்பா நெனைக்க மாட்டீங்கன்னாத்தான் அதை நான் உங்களிடம் சொல்லலாம்."
"விஷயத்தையே சொல்லாம இப்படிக் கேட்டா உனக்கு நான் எப்படிப் பதில் சொல்ல முடியும்?"
"நீங்க கோபப்படாமல் பொறுமையாகக் கேட்கணும். அதை எப்படி உங்ககிட்டச் சொல்ல ஆரம்பிக்கிறதுன்னே எனக்குத் தயக்கமா இருக்கு. நல்ல வேளையா இன்னிக்கு முதல் நாள் ரிஹர்ஸல்லே அப்படி எதுவும் நடக்கலை..."
"எது நடக்கலை?"
"ஒண்ணுமில்லே! ரிஹர்ஸலின்போது கோபால் சார் என்னைத் தொட்டு நடிக்கிறதையோ, நெருக்கமாகப் பழகறதையோ, திடீர்னு நான் எதிர்க்கவோ, கடுமையாக உணர்ந்து முகத்தைச் சுளிக்கவோ முடியாது. அதையெல்லாம் நீங்க தப்பா எடுத்துக்கக் கூடாது. நான் அபலை, என்னைத் தொடறவங்களை எல்லாமே நானும் தொட விரும்பறதா நீங்க நினைச்சுக்கக் கூடாது."
இப்படிக் கூறியபோது ஏறக்குறைய அழுது விடுவது போன்ற நிலைக்கு அவள் குரல் பலவீனமடைந்து விட்டது. கண்களின் பார்வை அழாத குறையாக அவனை இறைஞ்சியது. அவன் அவளைக் கூர்ந்து கவனித்தான். அவளுடைய வேண்டுகோளில் நிறைந்திருக்கும் முன்னெச்சரிக்கையும் தற்காப்பும் அவனுக்குப் புரிந்தன. அவளுடைய அந்த முன்னெச்சரிக்கையே அவள் உண்மையில் தனக்குக் கட்டுப்பட்டிருக்கிறாள் என்பதைப் புரிய வைத்தாலும், குழந்தைத்தனமான மழலைத் தன்மையுடனும் பெண்மைக்கே உரிய பேதமையுடனும் அவள் அதைத் தன்னிடம் வேண்டியதையும் அவன் உணர்ந்தான். அவனுக்குப் பெருமையாகவும் இருந்தது; அவளை எதிர்க்க வேண்டும் போலவும் இருந்தது; அவளைக் கோபித்துக் கொள்ள வேண்டும் போலவும் இருந்தது; அவளுக்கு அபயமளித்துத் தழுவிக்கொள்ள வேண்டும் போலவும் இருந்தது. அவன் மறுபடியும் அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். அவள் கண்கள் இன்னும் அவனை இறைஞ்சிக் கொண்டுதான் இருந்தன.
------
அத்தியாயம் - 10
அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்தபடியே முத்துக்குமரன் கூறலானான்:
"என்ன காரணமோ தெரியவில்லை, ஒரு பெரிய சக்கரவர்த்திக்கு நடுங்குகிற மாதிரி நீங்களெல்லாம் கோபாலுக்கு நடுங்குகிறீர்கள் -"
"சமூகத்தின் மேற்படிகளில் பணம் படைத்தவர்களும் புகழ் படைத்தவர்களும் தான் சக்கரவர்த்திகளாக இன்னும் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள் போலிருக்கிறது!"
"எந்தச் சக்கரவர்த்திகளுக்கும் எங்கேயும் நடுங்கிப் பழக்கமில்லை எனக்கு. ஏனென்றால் நானே என்னை ஒரு சக்கரவர்த்தியாக நினைத்துக் கொண்டிருப்பவன்."
"அதனால்தானோ என்னவோ இப்போதெல்லாம் நான் உங்களை நினைத்தும் நடுங்க வேண்டியிருக்கிறது."
"கோபாலைக் கண்டு நடுங்கும் நடுக்கத்திற்கும் இந்த நடுக்கதிற்கும் ஏதாவது வித்தியாசம் உண்டானால்தான் நான் பெருமைப்படலாம்..."
-இப்படிக் கூறியவுடன் அவள் அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள், புன்னகை பூத்தாள்.
"நீங்கள் ரொம்பப் பொல்லாதவர்..."
"ஆனாலும் என்னைவிட பொல்லாதவர்களுக்குத்தான் நீ பயப்படுவாய் என்று தெரிகிறது."
"அன்புக்குப் கட்டுப்பட்டுப் பயப்படுவதற்கும் ஆட்சிக்குக் கட்டுப்பட்டு பயப்படுவதற்கும் வித்தியாசமிருக்கிறது." அவள் பேச்சு உண்மைப் பிரியத்துடனும் மனப்பூர்வமாகவும் ஒலிப்பதை அவன் புரிந்து கொள்ள முடிந்தது.
மறுநாள் காலையிலிருந்து ஒத்திகைகள் வேகமாகவும் தீவிரமாகவும் நடைபெறத் தொடங்கின. மந்திரி கொடுத்திருந்த தேதியில் அவருடைய தலைமையிலேயே நாடகத்தை அரங்கேற்றிவிட வேண்டும் என்பதில் கோபால் அதிக அக்கறை காட்டினான். குறிப்பிட்டிருந்த நாட்களுக்கு முன்பாகவே ஒத்திகைகளை முடித்து நாடகத்தைத் தயாராக்கிவிட ஏற்பாடுகள் நடந்தன. பாடல்களை எல்லாம் பின்னணிப் பாடகர் - பாடகிகளைக் கொண்டு ப்ரீ ரிக்கார்ட் செய்து விட்டான் கோபால். சினிமாத்துறையிலிருந்த மியூஸிக் டைரக்டர் ஒருவர் தான் பாடல்களுக்கு இசையமைத்துக் கவர்ச்சியான ட்யூன்கள் போட்டிருந்தார். நாடகம் - மொத்தம் எவ்வளவு நேரம் வரும் என்பதைத் திட்டமாக அறிந்து கொள்ளுவதற்கும்; ஒரு ஃபைனல் ஸ்டேஜ் ரிஹர்சலுக்கும் பக்கா அரங்கத்திலேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரஸ் ப்ரிவ்யூவையும் அன்றே வைத்துக் கொள்ளலாமென்று கோபால் முடிவு செய்திருந்தான். நாடக அரங்கேற்றத்தன்றும், அதைத் தொடர்ந்து பல காட்சிகளுக்கும் - ஹவுஸ்ஃபுல் ஆவதற்கேற்றபடி அத்தனை சிறப்பாக எல்லோரும் பத்திரிக்கைகளில் புகழ்ந்து எழுதி விடுவதற்கான சூழ்நிலையையும் கோபாலே உருவாக்கி இருந்தான். அதோடு இந்த நாடகத்தை அரங்கேற்றுவதில் வேறு ஒரு திட்டமும் கோபாலின் மனத்தில் இருந்தது. மலாயாவிலுள்ள பினாங்கிலிருந்து அப்துல்லா என்கிற பணக்கார இரசிகர் ஒருவர் சென்னைக்கு வந்திருந்தார். மலாயாவிலிருக்கும் பிரபல வியாபாரிகளில் ஒருவரான அப்துல்லா இந்திய நாடகக் குழுவினரின் கலை நிகழ்ச்சிகளை - மலாயாவில் ‘காண்ட்ராக்ட்’ எடுத்து ஊர் ஊராக ஏற்பாடு செய்யும் பொறுப்பை நடத்துவதில் சாமர்த்தியசாலி. கோபால் நாடக மன்றத்தின் முதல் நாடகமான ‘கழைக்கூத்தியின் காதலை’ மந்திரி தலைமை வகித்து அரங்கேற்றும் முதல் தினமே பினாங்கு அப்துல்லாவும் அதைப் பார்ப்பதாக இருந்தது. பார்த்தபின் கோபாலையும், நாடகக் குழுவினரையும் மலாயா, சிங்கப்பூரில் - நாடகங்கள் நடத்த ஒரு மாதச் சுற்றுப்பயணத்திற்கு ‘காண்ட்ராக்ட்’ பேசி அப்துல்லா அழைப்பாரென்று எதிர்ப்பார்க்கப்பட்டது. அப்துல்லா உடனே ஆர்வத்தோடு விரும்பி முன் வந்து - ‘கழைக்கூத்தியின் காதலை’ - ஒரு மாத காலம் மலாயாவில் நடத்துவதற்கு உடன்பட வேண்டுமென்று கோபாலைக் கேட்கத் தூண்டுகிற அளவிற்கு முதல் நாள் நாடகமே அமைய வேண்டுமென்று விரும்பினார்கள் குழுவினர்.
அந்த நாடகத்திற்காக நாடகம் வெற்றி பெறாமல் - வேறு பல காரணங்களுக்காக நாடகம் வெற்றி பெற வேண்டுமென்று கோபால் முனைந்திருப்பதை முத்துக்குமரன் அவ்வளவாக விரும்பவில்லை. அரங்கேற்றத்திற்கு முந்திய தினம் ‘ஜில் ஜில்’ முத்துக்குமரனைப் பேட்டி காண வேறு வந்து விட்டான். அந்தப் பேட்டி அப்போது வெளிவருவது பொருத்தமாயிருக்கும் என்று கோபால் வேறு சிபாரிசுக்கு வந்தான். ஆனால் ‘ஜில் ஜில்’ கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் முத்துக்குமரன் இடக்காகவே பதில் கூறினான். எவ்வளவோ முயன்றும் ‘ஜில் ஜில்’ முத்துக்குமரனிடமிருந்து மரியாதையை எதிர்பார்க்க முடியவில்லை. முத்துக்குமரன் ‘ஜில் ஜில்’லை மிகவும் அலட்சியமாகவும் அநாயாசமாகவுமே எதிர் கொண்டான்.
"நான் எத்தினியோ பெரிய பெரிய ஆளுங்களை எல்லாம் பேட்டி கண்டிருக்கேன். தியாகராஜ பாகவதரு, பி. யு. சின்னப்பா - டி. ஆர். ராஜகுமாரி - எல்லாரையுமே எனக்கு நல்லாத் தெரியும்..."
"நான் அத்தனை பெரியவன் இல்லே."
"எங்க ‘ஜில் ஜில்’லிலே ஒரு பேட்டி வந்திட்டா அப்புறம் தானே பெரிய ஆளாயிடறீங்க."
"அப்ப பெரிய ஆளுங்களைத் தயார் பண்ற காரியத்தை ரொம்ப நாளாக செஞ்சுகிட்டிருக்கீங்கன்னு சொல்லுங்க..."
"நம்ம ‘ஜில் ஜில்’ பத்திரிக்கைக்கே அப்படி ஒரு ராசி உண்டுங்க."
"அப்படியா? இருக்காதா பின்னே?"
"சரி! எதையோ பேசிக்கிட்டிருக்கோமே? நம்ம பேட்டியைக் கவனிக்கலாமா இப்ப?"
"பேஷாக் கவனிக்கலாமே! என்ன வேணும்? சொல்லுங்க?"
"உங்க கலையுலக வாழ்க்கையை எப்பத் தொடங்கினீங்க?"
"கலையுலகம்னா என்னான்னு முதல்லே சொல்லுங்க. அப்புறம் நான் பதில் சொல்லுகிறேன். எனக்குத் தெரிஞ்சது ஒரே உலகம்தான். பசி, தாகம், வறுமை, நிறைவு, ஏக்கம் எல்லாம் அந்த உலகத்திலேதான் இருக்கும் - நீங்க வேறே ஏதோ உலகத்தைப் பத்திச் சொல்லுறீங்க..."
"என்னங்க இப்படிச் சொல்றீங்க? கலை உலகத்திலே தானே நீங்க, நான் கோபால் சார் எல்லாருமே இருக்கோம்".
"அதெப்படி? நீங்களும், நானும் சேர்ந்து ஒரே உலகத்திலே இருக்க முடியுமானா அப்படி ஒரு உலகம் நிச்சயமா இருக்கவே முடியாது?"
"என்ன சார் இது? ரெண்டு பேரும் இப்படியே பேசிக்கிட்டிருந்தோம்னாக் கடைசி வரை பேட்டி ஒரு வரி கூட எழுதிக்க முடியாது."
"வருத்தப்படாதீங்க. உங்களுக்குத் தேவையானதைச் சொல்லிடறேன். என்ன வேணும்னு கேளுங்க இப்போ?"
"அதுதான் அப்பவே கேட்டுப்புட்டேனே? நீங்கதான் இன்னும் பதிலே சொல்லலை. இல்லாட்டி இன்னொன்னு செய்யலாம் நீங்க பதில் சொல்ற மாதிரியும் - நான் கேள்வி கேக்கற மாதிரியும் நானே ஒரு பேட்டிக் கட்டுரை எழுதிக்கிட்டு வர்றேன். அதிலே...நீங்க ஒரு கையெழுத்துப் போட்டுக் குடுத்திடுங்க...போதும்."
"படிச்சுப் பாத்திட்டா இல்லே படிக்காமலேயா?"
"ஏன்? படிச்சிட்டே வேணாக் கையெழுத்துப் போடுங்களேன்..."
முத்துக்குமரனுக்கு இதைக் கேட்டு அடக்கமுடியாமல் கோபம் வந்தது. ஆனால் ஜில் ஜில்லை ஓர் ஆளாகப் பொருட்படுத்தி அவன்மேல் கோபப்படவேண்டுமென்று நினைக்கிற நினைப்பைக்கூட அலட்சியப்படுத்த வேண்டுமென்று அவனுக்குத் தோன்றியது. கொஞ்ச நேரம் ஜில் ஜில்லின் வாயைக் கிளறி வம்பு செய்ய வேண்டுமென்று அவனுக்கும் ஆசையாகவே இருந்தது. முதல் கேள்விக்குப் பதிலாகப் பிறந்த தேதி, குடும்பப் பெருமை, மதுரையில் பாய்ஸ் கம்பெனியில் வேலை பார்த்தது - ஆகிய விவரங்களைக் கூறிவிட்டு அடுத்த கேள்வியை ஜில் ஜில்லிடமிருந்து எதிர்பார்த்தான் முத்துக்குமரன். இரண்டாவது கேள்வியைத் தொடங்குவதற்குள்ளேயே ரொம்பவும் சோர்ந்து விட்டவனைப்போல ஜில் ஜில் பாக்கெட்டிலிருந்து ஒரு சிகரெட்டை உருவிக் கொண்டு முத்துக்குமரனிடமும் ஒன்றை நீட்டினான். முத்துக்குமரன் மறுத்து விட்டான். "வேண்டாம், தேங்க்ஸ்....ரொம்ப நாளைக்கு முன்னாடிப் பழக்கம் உண்டு. இப்பக் கொஞ்ச நாளா விட்டுட்டேன்."
"அடேடே? கலையுலகுக்கு வேண்டிய தகுதி ஒண்ணு கூட உங்ககிட்டே இல்லையே."
"இப்படிச் சொன்னீங்களே மிஸ்டர் ஜில் ஜில்! இதுக்கென்னா அர்த்தம்?"
"பொடி, புகையிலை, வெத்திலை பாக்கு, சிகரெட், மது, மாது ஒண்ணுமே இல்லாமே ஒருத்தரு எப்படிக் கலைஞராயிருக்க முடியும்?"
"இருந்தா ஒத்துக்க மாட்டீங்களோ?"
"சே! சே! அப்படிச் சொல்லிவிட முடியுங்களா?"- என்று சொல்லியபடியே சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டான் ஜில் ஜில்.
அவனுடைய கொக்கி போன்ற உருவம் புகையை இழுத்து உள்ளேயும் வெளியேயுமாக விடுவதை முத்துக்குமரன் வேடிக்கை பார்த்தான். அதற்குள் ஜில் ஜில் தன்னுடைய இரண்டாவது கேள்வியைத் தொடங்கிவிட்டான்.
"நீங்கள் எழுதிய அல்லது நடித்த முதல் நாடகம் எது?"
"ஏதோ ஒரு நாடகத்தை நான் எழுதியிருக்கணும் அல்லது நடிச்சிருக்கணும்கிறது மட்டும் நிச்சயம் ஞாபக மிருக்கு. ஆனா அது என்னன்னு மட்டும் ஞாபகம் இல்லே."
"சார்! சார் இப்படிப் பதில் சொன்னா எப்படி சார்? எல்லாப் பதிலுமே ஒரு மாதிரியாகத் தெரியுதுங்களே! படிக்கிறவங்களுக்கு நல்லாயிருக்க வேண்டாமா?"
"நிச்சயமா இந்த மாதிரிப் பதில்கள் புதுமையாகத் தான் இருக்க முடியும் மிஸ்டர் ஜில் ஜில்! ஏன்னா இதுவரைக்கும் எல்லாப் பேட்டிகளிலேயும் வாசகருங்க ஒரே தினுசான பதிலைப் படிச்சுப் படிச்சி அலுத்துப் போயிருப்பாங்க (சிறிது தணிந்த குரலில்) பதிலு - கேள்வி எல்லாமே இதுவரை நீரு எழுதினதுதானே?"
"வாஸ்தவம்தாங்க..."
சிறிது நேரம் ஏதோ எழுதிக் கொண்டபின் ஜில் ஜில் தன்னுடைய அடுத்த கேள்வியைக் கேட்டான்.
"உங்களுக்கு ரொம்ப ரொம்பப் பிடித்தமான வசனகர்த்தா யாரு?"
"நான் தான்..."
"அப்படிச் சொல்லிட்டா எப்படி? கொஞ்சம் பணிவா இருந்தா நல்லது..."
"எனக்கே என்னைப் பிடிக்கலேன்னா? அப்புறம் வேறே யாருக்குப் பிடிக்கப் போகுது?"
"சரி, போகட்டும்! இப்ப அடுத்த கேள்வியைக் கேட்கிறேன். கலை உலகில் உங்கள் இலட்சியம் என்ன என்பதைக்கூற முன் வருவீர்களா?"
"இலட்சியம் என்ற வார்த்தை ரொம்பப் பெரிசு! அதை நீங்க சுலபமாகவும், துணிச்சலாகவும் உபயோகப் படுத்துகிறதைப் பார்த்து எனக்குப் பயமாயிருக்கு மிஸ்டர் ஜில் ஜில்! இந்த வார்த்தையை உச்சரிப்பதற்கு யோக்கியதை உள்ளவர்கள்கூட இன்றைக்கு இந்தக் கலையுலகில் இருப்பார்களா என்பது சந்தேகமே..."
-இப்படி முத்துக்குமரனும் ஜில் ஜில்லும் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டுக் கொண்டே மாதவி அந்தப் பக்கமாக வந்து நின்றாள்.
"அம்மா வரப்பவே தென்றல் வீசுதே" - என்று ஜில் ஜில் பல்லை இளித்தான். முகத்தில் புண்திறந்து மூடியது போன்ற அவனுடைய மாமிசப் புன்னகை முத்துக்குமரனுக்கு அருவருப்பை அளித்தது.
"சரி, இப்ப அடுத்த கேள்விக்கு வர்ரேன். நீங்க ஏன் இன்னும் கலியாணம் செய்துக்கலை?"
"ஓர் ஆண் பிள்ளையைப் பார்த்துக் கேட்கப்படுகிற இப்படிப்பட்ட கேள்வியினால் உங்கள் வாசகர்களை நீங்கள் எந்த விதத்திலும் கவரமுடியாது, மிஸ்டர் ஜில் ஜில்."
"பரவாயில்லை! நீங்க சொல்லுங்க."
"சொல்லத்தான் வேணுமா?"
"சும்மா சொல்லுங்க சார்!"
"இவளைப் போல (மாதவியைச் சுட்டிக் காட்டி) ஒரு தென்றல் வீசினால் கட்டிக்கிடலாம்னு பார்க்கிறேன்"-
"அப்படியே எழுதிக்கிடட்டுமா சார்?"
"அப்படியே என்றால் எப்படி?"
"மாதவியைப் போல் மங்கை நல்லாள் கிடைத்தால் மணப்பேன் - வசனகர்த்தா முத்துக்குமரனின் சபதம்னு எழுதிக்கிறேன்."
"இது ஆசைதான்! ஆசை வேறே, சபதம் வேறே, சபதம்னு இதைச் சொல்றது தப்பு."
"பத்திரிகை நடைமுறையிலே நாங்க அப்படித்தான் சொல்லுவோம்..."
"உங்க பத்திரிகை நடைமுறையைக் கொண்டுபோய் உடைப்பிலே போடுங்க..."
"கோபிச்சுக்காதிங்க சார்..."
"சே! சே! இதெல்லாம் ஒரு கோபமா? நான் நிசமாகவே கோபிச்சுக்கிட்டா நீரு கிடுகிடுத்துப் போயிடுவீரு..."
"பெரிய மனசு பண்ணிக் கோபமில்லாமே அடுத்த கேள்விக்குப் பதில் சொல்லுங்க. உங்க எதிர்காலத்திட்டம் என்ன?"
"அது என் எதிர்காலத்துக்குத்தான் தெரியும், எனக்குத் தெரியாது..."
"ரொம்ப ஹாஷ்யமாப் பேசறீங்க சார்!"
"ஹாஷ்யமில்லே...ஹாஸ்யம்..."
"ஹாஷ்யம்னுதான் சொன்னேன்..."
முத்துக்குமரன் மாதவியின் பக்கமாகத் திரும்பிப் புன்னகை புரிந்தான். ஜில்ஜில் குனிந்து ஏதோ எழுதத் தொடங்கினான்.
"ஒரு நிமிஷம் இப்படி உள்ளே வாங்களேன்" என்று அவனை அவுட்ஹவுஸ் வராந்தாவிலிருந்து உள்பக்கமாகக் கூப்பிட்டாள் மாதவி. அவன் அவளைப் பின் தொடர்ந்தான்.
"அது ஏன் அந்த ஆளுகிட்டப் போயி அப்படிச் சொன்னீங்க?"
"எப்படிச் சொன்னேன்?"
"இவளைப்போல ஒரு தென்றல் வீசினால் கலியாணங் கட்டிப்பேன்...னு சொன்னீங்களே?"
"ஏன் இவளையே கட்டிப்பேன்னு உறுதியா அடிச்சிச் சொல்லியிருக்கணும்கிறியா? அப்படிச் சொல்லாதது என் தப்புத்தான் மாதவி."
"நான் அதைச் சொல்லலே -"
"பின்னே எதைச் சொல்றே?"
"மாதவியைப் போல் மங்கை நல்லாள் கிடைத்தால் மணப்பேன் - வசனகர்த்தா முத்துக்குமரனின் சபதம்னு எழுதிக்கிட்டிருக்காரே அந்த ஆளு? இதைக் கோபால் சார் பார்த்தா என்ன நெனைப்பாரு?"
"ஓகோ! நீ கோபால் சாருக்கு நடுங்க ஆரம்பிச்சாச்சா. உருப்பட்டாப்லதான் போ..."
"நடுங்கலே, சும்மா ஒரு ‘இது’க்குச் சொன்னாலே இப்படிக் குத்திக் காட்டறீங்களே?"
"புலிகளுக்கு நடுங்கும் மான்களை எனக்குப் பிடிப்பதில்லை..."
"அப்படியானால் நான் நடுங்கற அந்தப் புலி இங்கே தான் இருக்காக்கும்..." என்று அவனுடைய நெஞ்சைத் தொட்டுக் காண்பித்து விட்டுச் சிரித்தாள் மாதவி. முத்துக்குமரனும் பதிலுக்குச் சிரித்தான். ஆனாலும் அவன் மனத்தின் அந்தரங்கத்தில் அவள் நடிகன் கோபாலுக்காகப் பயந்து சாகிறாள் என்பது புரிந்துதான் இருந்தது. அவளுடைய பேதமையை அளவுக்கு மீறிச் சோதித்துப் பயமுறுத்த அஞ்சியே இவன் அப்போது சிரித்துவிட்டுச் சும்மா இருந்தான் என்று சொல்ல வேண்டும். அவளோ அவனுடைய கம்பீரத்துக்கு முன் தன்னுடைய பயம் என்ற சிறுமையை வைப்பதற்கு அஞ்சித் தயங்கி நின்று விட்டாள். ஜில்ஜில் மேலும் சில உப்புச்சப்பில்லாத கேள்விகளைக் கேட்டுப் பதில்களையும் வாங்கிக் கட்டிக்கொண்டு போய்விட்டான்.
அன்றிரவு ஸ்டேஜ் ரிஹர்சல் நாரத கான சபா கீத்துக் கொட்டகையில் நடந்தது. ரிஹர்சல் அபார வெற்றிதான். முடியும்போது இரவு பதினோரு மணி. எட்டு மணிக்குத் தொடங்கிப் பதினோரு மணிக்குக் கச்சிதமாக நாடகம் முடிந்தது. மூன்று மணி நேரமே இருக்கலாமா, இரண்டரை மணி நேரமாகக் குறைத்துவிடலாமா என்று முத்துக்குமரன், மாதவி, வேறு சில நண்பர்கள் ஆகியவர்களோடு கலந்து பேசினான் கோபால்.
"சினிமாவை மூணு மூணரை மணிநேரம் உட்கார்ந்து பார்க்கிறவங்க - சுவை குன்றாத நல்ல நாடகத்தை மூன்று மணி நேரம் நல்லாப் பார்க்கலாம். எந்தக் காட்சியையும் குறைக்கப்படாது. நாடகம் இப்படியே இருக்கட்டும். ஏதாவது கைவச்சா இப்ப இதிலே இருக்கிற உருக்கமும் கட்டுக்கோப்பும் கெட்டுப்போயிடும்" - என்று முத்துக்குமரன் அடித்துச் சொல்லி விடவே கோபால் பேசாமல் இருக்க வேண்டியதாயிற்று.
மறுநாள் மாலையில் மந்திரி தலைமையில் நாடக அரங்கேற்றம். ஆகையினால் அன்றிரவு எல்லாருமே நன்கு உறங்கி ஓய்வு கொள்ள வேண்டியிருந்தது. அடுத்த நாள் மாலை ஐந்து மணிக்கே எல்லாரும் அண்ணாமலை மன்றத்தில் இருக்க வேண்டும். ஆறு மணிக்கு நாடக ஆரம்பம். கடைசிக் காட்சிக்கு முன்பாக மந்திரி தலைமை வகித்து நாடகத்தைப் பாராட்டிப் பேசுவதாக ஏற்பாடு. எல்லா நிகழ்ச்சிகளும் சேர்ந்து நாடகம் முடிய இரவு பத்து மணி ஆகிவிடும் என்று தெரிந்தது. நாடகத்தைக் காணப் பிரமுகர்களும், வேறு நாடகக் குழுவினரும், பினாங்கு அப்துல்லாவும் சிறப்பாக அழைக்கப்பட்டிருந்தார்கள். அதனால் ஸ்டேஜ் ரிஹர்சல் முடிந்த இரவிலோ அடுத்த நாள் காலையிலோ ஒருவருக்கும் நாடகத்தின் நேர அளவைக் குறைப்பது பற்றியோ, வேறு திருத்தங்கள் செய்வது பற்றியோ - யோசிக்கவோ நேரம் இல்லை. ஸ்டேஜ் ரிஹர்ஸலைப் பார்த்தவர்களில் ஜில்ஜில் மட்டும் போகும் போது எல்லாரிடமும், "நாடகத்தில் ஹாஷ்யம் குறைவு...கொஞ்சம் கூட இருந்தால் நல்லது" - என்றான்.
"ஹாஸ்யம் போதுமானது இருக்கு? ஹாஷ்யம்தான் இல்லே. பேசாமல் போயிட்டு வாரும்" - என்று முத்துக் குமரன் பதில் கூறி ஜில்ஜில்லின் வாயை அடைத்தான்.
மறுநாள் மாலை அண்ணாமலை மன்றத்தில் ஹவுஸ்புல். பெருங்கூட்டம் டிக்கட் பெற முடியாமலே திரும்பியது. நாடகம் சரியாக ஆறு மணிக்குத் தொடங்கியது. மந்திரியும், பினாங்கு வியாபாரி அப்துல்லாவும் ஐந்தே முக்கால் மணிக்கே வந்து விட்டார்கள். ஒவ்வொரு காட்சியிலும் வசனத்துக்கும், நடிப்புக்கும், பாடலுக்கும் மாறி மாறி கரகோஷம் எழுந்தது. நாடக இடைவேளையின் போதே பினாங்கு வியாபாரி அப்துல்லா கிரீன் ரூமுக்கு வந்து, கோபாலிடம் "ஜனவரி மாதம் தமிழர் திருநாள் பொங்கல் முதல் ஒரு மாதம் மலாயாவுக்கு வந்து இதே நாடகத்தை ஊரூராப் போடுங்க. ரெண்டு லட்ச ரூபாய் காண்ட்ராக்ட். பிரயாணச் செலவு, தங்க ஏற்பாடு எல்லாம் எங்கள் பொறுப்பு. இதுக்கு அவசியம் நீங்க ஒப்புக் கொள்ளணும்" - என்று வேண்டுகோள் விட்டார். கோபாலுக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை. தன் நோக்கம் நிறைவேறி விட்டது என்ற பெருமிதமும் வந்தது. இடைவேளைக்குப் பிறகு நாடகம் திருப்புமுனைச் சம்பவங்களால் மெருகேறிப் பிரகாசித்தது. மாதவியின் நடனமும், நடிப்பும், பாடலும் கைதட்டலால் தியேட்டரையே அதிரச் செய்தன. கடைசிக் காட்சிக்கு முந்திய காட்சியில் மந்திரியும், அப்துல்லாவும் மேடையேறினர். மந்திரிக்கு முன் மைக் வைக்கப்பட்டது. மாலை போடப்பட்டது. அவர், பேசினார்:
"தமிழர்களின் பொற்காலத்தை இந்த நாடகம் நிரூபிப்பது போல் இதுவரை வேறெந்த நாடகமும் நிரூபிக்கவில்லை. இனியும் இப்படி ஒரு நாடகம் வரப்போவதில்லை. இது வீரமும் காதலும் நிறைந்த தமிழ்க் காவியம். இதைப் படைத்தவரைப் பாராட்டுகிறேன். நடித்தவர்களைக் கொண்டாடுகிறேன். பார்த்தவர்கள் பாக்கியசாலிகள். இனிமேல் பார்க்கப் போகிறவர்களும் பாக்கியசாலிகள்" - என்று மந்திரி புகழ்மாலை சூட்டினார். உடனே முத்துக்குமரன் தப்பாக நினைக்கக் கூடாதே என்று உள்ளூறப் பயந்த கோபால் கீழே முன் வரிசையில் நேர் எதிரே அமர்ந்திருந்த அவனை மேடைக்கு அழைத்துப் பினாங்கு அப்துல்லாவிடம் ஒரு மாலையைக் கொடுத்து அதை முத்துக்குமரனுக்கு அணிவிக்கும் படி வேண்டினான். முத்துக்குமரனும் மேடைக்கு வந்து அப்துல்லா அணிவித்த மாலையை பலத்த கரகோஷத்தினிடையே ஏற்றான். அதோடு அடுத்த காட்சிக்குப் போயிருந்தால் வம்பில்லாமல் முடிந்திருக்கும். "நீ இரண்டு வார்த்தை பேசேன் வாத்தியாரே" - என்று முத்துக்குமரனுக்கு முன்னால் மைக்கை நகர்த்தினான் கோபால். முத்துக்குமரனோ அப்போது நிகரற்ற அகங்காரத்தில் திளைத்திருந்தான். அவன் பேச்சு அதை முழுமையாகப் பிரதிபலித்து விட்டது. "இப்போது இந்த மாலையை எனக்குக் சூட்டினார்கள். எப்போதுமே மாலை சூட்டுவதை வெறுப்பவன் நான். ஏனென்றால் ஒரு மாலையை ஏற்பதற்காக அதை அணிவிப்பவருக்கு முன் நான் ஒரு விநாடி தலைகுனிய நேரிடுகிறது. என்னைத் தலைகுனிய வைத்து எனக்கு அளிக்கும் எந்த மரியாதையையும் நான் விரும்புவதில்லை. நான் தலை நிமிர்ந்து நிற்கவே ஆசைப்படுகிறேன். ஒரு மாலையை என் கழுத்தில் சூட்டுவதின் மூலம் சாதாரணமானவர்கள் கூட ஒரு விநாடி என்னைத் தங்களுக்கு முன் தலைகுனிய வைத்துவிட முடிகிறதே என்பதை நினைக்கும்போது வருத்தம்."-
பேச்சு முடிந்து விட்டது. பினாங்கு அப்துல்லாவுக்கு முகம் சிறுத்துப் போய்விட்டது. கோபால் பதறிப் போனான். முத்துக்குமரன் எதைப் பற்றியும் கவலைப்படாமல் சிங்கநடை நடந்து தன் இருக்கைக்காக கீழே இறங்கிப் போய்க் கொண்டிருந்தான்.
-----------------
அத்தியாயம் - 11
முத்துக்குமரன் மேடையில் அப்படி நடந்து கொண்டதைக் கோபால் ஒரு சிறிதும் விரும்பவில்லை. பினாங்கு அப்துல்லாவின் மனம் புண்படும்படி நேர்வதனால் மலேயாப் பயணமும் நாடக ஏற்பாடுகளும் வீணாகி விடுமோ என்று அவன் பயந்தான். நாடகத்தின் இறுதிக் காட்சியில் நடிக்கிறபோதுகூட இந்த எண்ணமும் பயமுமே அவன் மனத்தில் இருந்தன.
நாடக முடிவுக் காட்சியில் கூட்டம் மெய்மறந்து உருகியது. திரை விழுந்த பின்பும் நெடுநேரம் கைதட்டல் ஓயவே இல்லை. மந்திரி போகும்போது முத்துக்குமரனிடமும் கோபாலிடமும் சொல்லிப் பாராட்டி விட்டுப்போனார். அப்துல்லாவும் பாராட்டிவிட்டுப் போனார். அப்படிப் போகும்போது அவரை மறுநாள் இரவு தன் வீட்டில் விருந்துக்கு அழைத்தான் கோபால்.
மேடையில் போட்ட ரோஜாப் பூ மாலை உதிர்ந்தது போலக் கூட்டமும் சிறிது சிறிதாக உதிர்ந்து கொண்டிருந்தது.
நிகழ்ச்சி எல்லாம் முடிந்து தேடி வந்து பாராட்டிய ஒவ்வொருவருடைய பாராட்டுக்கும் முகம் மலர்ந்த பின் அண்ணாமலை மன்றத்திலிருந்து வீடு திரும்பும்போது காரில் மாதவியிடமும் முத்துக்குமரனிடமும் குறைபட்டுக் கொண்டான் கோபால்.
"அடுத்தவங்க மனசு சங்கடப் படறாப்பிலே பேசறது எப்பவுமே நல்லதில்லை. அப்துல்லா கிட்ட ஒரு பெரிய காரியத்தை எதிர்பார்த்து நாம் அவரை இங்கே அழைச்சிருக்கோம். அவரு மனம் சங்கடப்பட்டா நம்ம காரியம் கெட்டுப் போயிடுமோன்னுதான் பயப்பட வேண்டியிருக்கு- "
இதற்கு மற்ற இருவருமே பதில் சொல்லவில்லை. மீண்டும் கோபாலே தொடர்ந்து பேசலானான்:
"மேடையிலே கொஞ்சம் பணிந்தோ பயந்தோ பேசறதிலே தப்பு ஒண்ணுமில்லே..." என்று கோபால் கூறியதும் அதுவரை பொறுமையாயிருந்த முத்துக்குமரன் பொறுமையிழந்து,
"ஆம்! அச்சமே கீழ்களது ஆசாரம்" - என்று வெடுக்கென மறுமொழி கூறிவிட்டான்.
கோபாலுக்கு முகத்தில் அறைந்தது போலாகிவிட்டது. இரண்டு பேரில் யாருக்குப் பரிந்து பேசினாலும் மற்றொருவருடைய கோபத்துக்கு ஆளாக நேரிடும் என்று அஞ்சி மாதவி மௌனமாயிருக்க வேண்டியதாயிற்று. கோபாலோ கார் பங்களாவை அடைகிறவரை கடுங்கோபத்தோடு வஞ்சகமானதொரு மௌனத்தைச் சாதித்தான். முத்துக்குமரனோ அதைப் பொருட்படுத்தவே இல்லை.
இரவு சாப்பிடும்போது ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. சாப்பிட்டு முடிந்ததும் மாதவி வீட்டுக்குப் புறப்பட்டு விட்டாள். முத்துக்குமரன் அவுட்ஹவுஸுக்கு வந்து விளக்கை அணைத்துவிட்டுப் படுத்துக் கொண்டான். பத்து நிமிஷங்களுக்குள் ஃபோன் மணி அடித்தது. பங்களாவிலிருந்து நாயர்ப் பையன் பேசினான்:
"கொஞ்சம் இங்கே வந்து போக முடியுமான்னு ஐயா கேக்கறாரு."
"இப்ப தூங்கியாச்சு, காலையிலே பார்க்கலாமின்னு சொல்லு" என்று பதில் கூறி ஃபோனை வைத்தான் முத்துக்குமரன். சிறிது நேரம் கழித்து மறுபடி ஃபோன் மணி அடித்தது. மாதவி பேசினாள்:
"அப்படியெல்லாம் எடுத்தெறிஞ்சு பேசுறதிலே உங்களுக்கு என்னதான் சந்தோஷமோ தெரியலை. வீணா அடுத்தவங்க மனசைச் சங்கடப்படுத்தறதிலே என்ன பிரயோசனம்?"
"நீ எனக்குப் புத்திமதி சொல்லிக் கொடுக்கிறியாக்கும்..."
"சே! சே! அப்படியொண்ணுமில்லை. அந்த மாதிரி நினைச்சீங்கன்னா நான் ரொம்ப வருத்தப்படுவேன்."
"வருத்தப்படேன். அதனாலே என்ன?"
"என்னை வருத்தப்படச் செய்யறதிலே உங்களுக்கு என்ன அத்தினி சந்தோஷம்!"
"பேச்சை வளத்தாதே, எனக்குத் தூக்கம் வருது..."
"நான் பேசத் தொடங்கினாலே தூக்கம் வந்துவிடும் போலிருக்கு."
"காலையில் இந்தப் பக்கம் வாயேன்."
"சரி! வரேன்..."
-அவன் ஃபோனை வைத்தான். முதல் நாள் ஸ்டேஜ் ரிஹர்ஸலின் போது வேறு தூக்கம் விழித்திருந்த காரணத்தினால் முத்துக்குமரனுக்குத் தூக்கம் கண்ணைச் சொருகியது. நன்றாகத் தூங்கிவிட்டான். சொப்பனம் கூடக் குறுக்கிட முடியாதபடி அத்தனை அயர்ந்த தூக்கம். காலையில் எழுந்ததுமே கோபாலின் முகத்தில் தான் அவன் விழிக்க நேர்ந்தது. முதல் நாள் ஒன்றுமே நடைபெறாதது போல் சுபாவமாகச் சிரித்துக் கொண்டே வந்தான் கோபால்.
"காலையில் எழுந்திருக்கிறதுக்குள்ளாகவே அஞ்சாறு சபா செகரெட்ரீஸ் ஃபோன் பண்ணிட்டாங்க, நம்ம நாடகத்துக்கு அதுக்குள்ளேயே ஏகப்பட்ட 'டிமாண்ட்' வந்திருக்கு."
"அப்படியா?" - என்பதற்கு மேல் முத்துக்குமரன் அதிகமாக எதுவும் பதில் சொல்லவில்லை. தன்னைக் கோபித்துக் கொள்ள முயல்வதும் முயற்சி தோல்வியடைந்து, தன்னிடமே சரணடைய வருவதுமாகக் கோபால் இரண்டுங்கெட்ட நிலையிலிருப்பதை முத்துக்குமரன் உணர்ந்தான்.
"இன்னும் ரெண்டு வாரத்திலே மலேயா புறப்படணும். ஒரு மாசம் நாடகக் குழுவோட அங்கே போகணும்னா அதுக்கு எவ்வளவோ ஏற்பாடு செய்யணும், இப்பவே பிடிச்சுத் தொடங்கினால்தான் முடியும்" - என்று மறபடியும் கோபாலே பேச்சைத் தொடங்கினான்.
"அதற்கென்ன? கூப்பிட்டால் போக வேண்டியது தானே?"- என்று இதற்கும் முத்துக்குமரனிடமிருந்து மிகச் சிக்கனமான பதிலே கிடைத்தது. இப்படி அவன் கூறிய ஒவ்வொரு சிக்கனமான பதிலும் கோபாலை என்னவோ செய்தது.
"நீ பேசின பேச்சாலே அப்துல்லா மனசு சங்கடப்பட்டிருக்குமோன்னுதான் நான் பயந்தேன். நல்ல வேளையா அவரு அப்பிடி எதுவும் காண்பிச்சுக்கலே. ஆனா இப்பப் பார்க்கறப்ப நான் பேசின பேச்சாலே உன் மனசு சங்கடப்பட்டிருக்கும் போலத் தெரியுது."
"........."
"நான் ஒண்ணும் தப்பாச் சொல்லிடலை."
"நான்தான் நேத்தே சொன்னேனே, அச்சமே கீழ்களது ஆசாரம்னு"-
"அதைப் பத்திப் பரவாயில்லை. நான் பயந்தாங்கொள்ளீன்னு நீயே திட்டினா அதை நான் ஒப்புத்துக்க வேண்டியதுதானே?"
"நான் உன்னையோ இன்னொருத்தரையோ குறை சொல்லலியே? 'அச்சமே கீழ்களது ஆசாரம்'னு ஒரு பழைய பாட்டுச் சொன்னேன், அவ்வளவுதான்."
"இருக்கட்டுமே! இப்ப அதைப்பத்தி என்ன? மலேயாவுக்கு நீயும் வரணும். மாதவி, நீ, நான் மூணு பேரும் பளேன்ல போயிடலாம். மத்தவங்க கப்பல்லே முன்னாலேயே பொறப்பட்டுடுவாங்க. ஸீன்ஸ்யெல்லாம்கூட முன்னாடியே கப்பல்லே அனுப்பிச்சிடணும்."
"நான் மலேயாவுக்கு வந்து என்ன செய்யப் போறேன் இப்ப? நீங்கள்ளாம் நடிக்கிறவங்க, நீங்க போகாட்டி நாடகமே நடக்காது; நான் வந்து எதைச் சாதிக்கப் போகிறேன்?"- என்றான் முத்துக்குமரன்.
"அப்படிச் சொல்லப்படாது. நீயும் வரணும், நாளைக்கே பாஸ்போர்ட்டுக்கு அப்ளை பண்ண ஏற்பாடு செஞ்சிக்கிட்டிருக்கேன். இன்னிக்கு ராத்திரி அப்துல்லாவை இங்கே நம்ம பங்களாவுக்கு டின்னருக்கு அழைச்சிருக்கேன். அவரிட்ட ரெண்டொரு விஷயம் பேசிக்கிட்டா எல்லா ஏற்பாடும் முடிஞ்ச மாதிரிதான்."
"அதுக்கென்ன? செய்ய வேண்டியதுதானே?"
"இப்படி யாருக்கு வந்த விருந்தோன்னு பட்டும் படாமலும் பதில் சொன்னா பிரயோசனமில்லை, எல்லாம் நீயும் சேர்ந்துதான்!"
திடீரென்று கோபாலிடம் தன்னைச் சரிக்கட்டிக் கொள்ள வேண்டும் என்ற உணர்வு வளர்ந்திருப்பதை முத்துக்குமரன் கண்டான். காரியத்தை எதிர்பாத்துச் செய்யப்படும் இத்தகைய செயற்கையான விருந்துகளை முத்துக்குமரன் எப்போதுமே வெறுத்தான். முத்துக்குமரனின் மனநிலைகள் இது மாதிரி விஷயத்தில் எப்படி இருக்கு என்பதெல்லாம் கோபாலுக்கு நன்றாகத் தெரியும் என்றாலும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டுப் போய்ச் சேர்ந்தான் கோபால். அவன் சென்ற சிறிது நேரத்திற்கெல்லாம் மாதவி வந்து சேர்ந்தாள். அவளும் அன்றிரவு பினாங்கு அப்துல்லாவை விருந்துக்கு அழைத்திருப்பதைப் பற்றியே பேசினாள். பினாங்கு அப்துல்லா எவ்வளவு பெரிய கோடீசுவரர் என்பதைப் பற்றியும் விவரித்தாள்.
"பத்துப் பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னாலே ரெண்டு சங்கீத வித்வானோ, ரெண்டு நாடகக்காரனோ சந்திச்சுக்கிட்டாங்கன்னா - தங்கள் தங்கள் கலைகளைப் பத்தி அக்கறையாப் பேசிக்குவாங்க. இப்ப என்னடான்னா 'யாருக்கு விருந்து போடலாம்! - யாருக்கு எது செய்து என்ன காரியத்தைச் சாதிக்கலாம்'னு தான் பேசிக்கிறாங்க. கலைத்துறை அழுகிப் போயிருக்கறதுக்கு இதைவிட வேறென்ன நிதர்சனமான சாட்சி வேண்டும்?"
"அப்படியே அழுகிப் போயிருந்தாலும் அதை நீங்க ஒருத்தரே சீர்திருத்திப்பிட முடியும்னு நினைக்கிறீர்களா?"
"நிச்சயமா இல்லே! உலகத்தைச் சீர்த்திருத்தறதுக்காக நான் அவதாரமும் எடுக்கலை. ஆனா இரண்டு தலை முறைகளை நெனைச்சுப் பார்க்கிறேன். ராஜாதி ராஜன்லாம் தன்னோட வீட்டைத் தேடிவரச் செய்த கம்பீரமான பழைய கலைஞர்களையும், மந்திரிகளையும் பிரமுகர்களையும் வீடு தேடி ஓடும் கூன் விழுந்த முதுகுடன் கூடிய இன்றையக் கலைஞர்களையும் சேர்த்து நினைக்கறப்ப எனக்கு வேதனையாயிருக்கு மாதவி.”
-அவன் இந்த வாக்கியங்களைச் சொல்லிய உருக்கமான குரலுக்குக் கட்டுப்பட்டு என்ன பதில் சொல்லதென்றே தெரியாமல் அமர்ந்திருந்தாள் மாதவி. சிறிது நேர மௌனத்திற்குப்பின் பேச்சை வேறு திசைக்கு மாற்றினாள் அவள்.
"நாடகத்தைப்பத்தி ஜனங்க ரொம்ப நல்லாப் பேசிக்கத் தொடங்கிட்டாங்க. எனக்கு, ஒனக்குன்னு சபாக்காரங்க இப்பவே 'டேட்' கேக்கிறாங்க! நல்ல கட்டுக் கோப்போட கதையை எழுதியிருக்கீங்க, அதுதான் காரணம்..."
"நீ கூட ரொம்ப நல்லா நடிச்ச மாதவீ. இப்படி வாய் விட்டுப் புகழறது எனக்கு அவ்வளவாப் பிடிக்காது. நீ அதைச் செய்யத் தொடங்கிவிட்டதுனாலே நானும் செய்ய வேண்டியிருக்கு..."
"நல்லா இருக்கிறதை நல்லா இருக்குன்னு சொல்றது கூடத் தப்பா என்ன?"
"இந்தக் காலத்திலே ரொம்ப மோசமா இருக்கிறதைத்தான் ரொம்ப ரொம்ப நல்லா இருக்குன்னு அழுத்தி அழுத்திச் சொல்றாங்க. அதனாலே நிஜமாகவே நல்லாயிருக்கிற ஒண்ணைப்பத்தி நாம எதுவுமே சொல்லாம இருக்க வேண்டியிருக்கு."
"இருக்கலாம்! ஆனா எனக்கு, உங்களை எல்லாரும் புகழறதைக் கேட்டாலே சந்தோஷமா இருக்கு. இருபத்தி நாலு மணி நேரமும் உங்களை யாராவது புகழமாட்டாங்களான்னு நான் கேக்கறதுக்கு ஏங்கிட்டிருக்கேன்."
-இப்படிக் கூறியபோது அவள் குரலில் தாபமும் தாகமும் நிறைந்திருந்தது. அவள் ஜீவகளை ததும்புகிற வாலிபப் பருவத்துக் கவிதையாய் அவனருகே நின்று கொண்டிருந்தாள். அவளுடைய கண்களின் வசீகரமான ஒளி, இதழ்களின் கனிவு, எல்லாம் தோன்றித் தோன்றி அவனை மயக்கின. அருகே நெருங்கி நின்ற அவள் மேனியின் நறுமணம் அவனுடைய நாசியை நிறைத்துக் கிறுகிறுக்கச் செய்தது. கூந்தல் தைலத்தின் வாசனையும், சாதிப்பூவின் மணமும், பவுடர் கமகமப்பும் பரப்பிய விறுவிறுப்பில் அவன் கிறங்கினான். நெகிழ்ந்து வரும் ஓர் இனிய சங்கீதத்தைப் போல் அவள் அழகுகள் அவனை வசப்படுத்தின. அவளைத் தாவி இழுத்து இறுக அணைத்துக் கொண்டான் அவன். கொய்து சூடிக்கொள்ள முடிந்தவளின் கைகளுக்குள் இலகுவாக நெகிழ்ந்து போய் விழும் ஒரு குழைந்த பூவைப்போல் அவனுடைய தழுவலில் இருந்தாள் அவள். அவன் காதில் பூ உதிர்வதுபோல் அவள் குரல் ஒலித்தது.
"இப்படியே இருந்துடணும் போல இருக்கு - "
"இப்பிடியே இருந்துவிட ஆசைப்பட்ட முதல் - ஆணுக்கும் பெண்ணுக்கும் நடுவேதான் உலகமே படைக்கப்பட்டது..."
"அவள் கைகள் அவன் முதுகில் மாலைகளாய் இறுகித் தோளின் செழிப்பான பகுதியில் பிடியை அழுத்தின.
சிறிது தொலைவில் பங்களாவிலிருந்து அவுட்ஹவுஸுக்கு வரும் பாதையில் யாரோ நடந்து வரும் செருப்பு ஓசை நெருங்கிக் கேட்கலாயிற்று.
"ஐயோ! கோபால் சார் வர்ராரு போலிருக்கு...விடுங்க... விட்டுடுங்க..." என்று மாதவி பதறிப் பரபரப்படைந்து அவன் பிடியிலிருந்து திமிறி விலகிக் கொண்டாள். முத்துக்குமரன் இதை வெறுப்பவன்போல் அவளை உறுத்துப் பார்த்தான். அவன் கண்கள் சிவந்தன, கோபமான குரலில் அவன் சொற்களை உதிர்த்தான்.
"நேற்று ராத்திரி நாடகம் முடிஞ்சு திரும்பி வர்ரப்ப கோபால் கிட்ட அவனுக்காகச் சொன்னதையே இப்ப உனக்காகவும் உங்கிட்டத் திரும்பச் சொல்லவேண்டியிருக்கு. 'அச்சமே கீழ்களது ஆசாரம்!'"
அந்தச் சமயத்தில், "என்ன நேத்து ராத்திரியிலிருந்து வாத்தியாரு எல்லாரையும் கவிதையிலேயே திட்டிக்கிட்டிருக்காரு?" என்று வினவிக் கொண்டே கோபால் உள்ளே நுழைந்தான். மாதவி முகத்தில் சிரிப்பை வரவழைத்துக் கொண்டு சுபாவமாகக் கோபாலை எதிர்கொண்டாள்.
"மாதவி! உன் போட்டோ காப்பி ரெண்டு வேணும். பாஸ்போர்ட் அப்ளிகேஷனுக்குத் தேவை. நாளைக்குள்ளே அத்தனை அப்ளிகேஷனையும் அனுப்பிடணும்னு பார்க்கிறேன். அதோட நம்ம சாரையும் (முத்துக்குமரனைச் சுட்டிக்காட்டி) ஸ்டூடியோவுக்கு அழைச்சிட்டுப் போயி - பாஸ்போர்ட்சைஸ் படம் எடுத்துடணும். மத்தியானத்துக்குள்ளார நீயே அழைச்சிட்டுப் போயிட்டு வந்துடணும். நாள் ரொம்பக் குறைச்சலாயிருக்கு,"
"எங்கே? நம்ப பாண்டிபஜார் ஸன்லைட் ஸ்டூடியோவுக்கே அழைச்சிட்டுப் போகட்டுமா?"
"ஆமாம். அங்கேயே அழைச்சிட்டுப்போ. அவன் தான் சீக்கிரம் எடுத்துக் கொடுப்பான்..."
உரையாடல் மாதவிக்கும் கோபாலுக்கும் இடையே தொடர்ந்ததே ஒழிய முத்துக்குமரன் அதில் கலந்து கொள்ளவே இல்லை.
சிறிது நேரத்திற்குப் பின் கோபால் அங்கிருந்து புறப்பட்டபோது, வாசற்படி வரை போய்த் திரும்பி, "மாதவீ! இதோ ஒரு நிமிஷம்..." - என்று கண்ணடிப்பது போல் ஒரு கண்ணைச் சிறக்கணித்து அவளைக் கூப்பிட்டான் கோபால். அவன் அப்படி மாதவியைக் கண்ணடித்துக் கூப்பிட்டதை முத்துக்குமரன் மிகவும் அருவருப்போடு கவனித்தான். அவனுள்ளம் குமுறியது. மாதவியும் போவதா, வேண்டாமா என்று தயங்கியவளாக முத்துக்குமரன் பக்கமும் கோபால் பக்கமுமாக மாறி மாறிப் பார்த்தாள். அதற்குள் மறுபடியும் கோபால் தெளிவாக அவளை இரைந்து பெயர் சொல்லியே கூப்பிட்டு விட்டான். போவதைத் தவிர வேறு வழி அவளுக்குத் தோன்றவே இல்லை. அவள் வெறுப்பு உமிழும் முத்துக்குமரனின் முகத்தை ஏறிட்டுப் பார்க்கப் பயந்தபடியே அறை வாசலில் நின்ற கோபாலைப் பார்த்து வரச் சென்றாள். கோபாலோ அவளை அங்கேயே நிறுத்திப் பேசி அனுப்பாமல் கூடவே அழைத்துக் கொண்டு பங்களா முகப்புவரை வந்து விட்டான். அவளுக்கோ உள்ளூற ஒரே பதற்றம்.
கோபால் கண்ணசைத்துக் கூப்பிட்டதும், தான் அவனோடு கூடவே புறப்பட்டு பங்களா வரை வந்து விட்டதும் முத்துக்குமரனின் மனதில் என்னென்ன எண்ணங்களை உண்டாக்கும் என்று நினைத்து அஞ்சியபடியே கோபால் கூறியவற்றை மனமில்லாமல் காதில் வாங்கிக் கொண்டு நின்றாள் அவள்.
"பினாங்கு அப்துல்லா ஒரு தினுசான பேர்வழி. நீதான் கவனிச்சுக்கணும். அவரை 'ஓஷியானிக்'லேருந்து கூட்டியாரதுக்கே உன்னைத்தான் அனுப்பப்போறேன்."
"........"
"என்னது! நான் பாட்டுக்குச் சொல்லிக்கிட்டே இருக்கேன், நீ எங்கேயோ பராக்குப் பார்த்துக்கிட்டு நிக்கறே?"
"இல்லே; நீங்க சொல்றதைக் கேட்டுக்கிட்டுத்தான் நிக்கிறேன். 'ஓஷியானிக்' ஹோட்டலிலே போயி அப்துல்லாவைக் கூட்டியாரணும். அப்புறம்?"
"அப்புறம் என்ன? அவரு மனசு சந்தோஷப்படறாப்பல பார்த்துக்கணும். உனக்கு நான் படிச்சுப் படிச்சுச் சொல்லணும்கிற அவசியமில்லே? நீயே எல்லாம் பார்த்துக் குறிப்பறிஞ்சு செய்யக்கூடியவ..."
"........"
"விருந்துக்கு யார் யாரை அழைச்சிருக்கேன்கிற லிஸ்டு விவரம்லாம் செகரெட்டரிகிட்ட இருக்கும். அதை வாங்கித் திரும்பப் பார்த்து உன் குரலாலே ஒரு தடவை 'ரிமைண்ட்' பண்ணினயின்னா பிரமாதமா இருக்கும்" - என்று சொல்லி விட்டு மறுபடியும் கண்களைச் சிமிட்டிக் கொண்டே செழிப்பான அவள் முதுகில் சுபாவமாகத் தட்டிக் கொடுத்தான் கோபால். வாழ்வில் இதுவரை இப்படி ஓர் ஆடவன் தட்டிக் கொடுப்பதில் பயிர்ப்போ, நாணமோ, கூச்சமோ அடைந்திராத அவள் இன்று அவற்றை அடைந்தாள். கோபாலின் கைபட்ட இடம் இன்று அவளுக்கு அருவருப்பை அளித்தது. முத்துக்குமரன் அவளை அந்த அளவு மாற்றியிருந்தான்.
தான் முதுகில் தட்டிக் கொடுக்கும் போதோ கண்களை அசைக்கும் போதோ அந்த உற்சாக குறுகுறுப்பின் எதிர் விளைவோ, வரவேற்போ அவள் முகத்தில் இல்லாததைக் கோபால்கூட அன்று கவனித்தான். கேட்கவும் செய்தான்.
"ஏன் என்னவோ போல இருக்கே?" -
"ஒண்ணுமில்லே. எப்பவும் போலத்தானே இருக்கேன்?" - என்று சிரிக்க முயன்றாள் மாதவி.
"ரைட்டோ! அப்ப நான் ஸ்டூடியோவுக்குப் புறப்படறேன். சொன்னதையெல்லாம் நீ கவனிச்சுக்க" -
அவன் புறப்பட்டுப் போய் விட்டான். அவள் மனத்திலே ஒரு சிறிய போராட்டமே நடந்து கொண்டிருந்தது. பினாங்கு அப்துல்லாவைக் கோபால் இரவு டின்னருக்குத் தான் அழைத்திருந்தான். இரவு டின்னருக்கு அழைத்து வரவேண்டுமானால் அவரை மாலை ஏழு மணிக்கு மேல் அழைக்கப் போனால் போதும். ஆனால் கோபாலோ - 'முன்னாலேயே போய் அவரிடம் உல்லாசமாகக் கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, - அழைத்துக் கொண்டுவா' என்கிற தொனி இருந்தது.
பெரும்பாலும் கோபால் தன்னை, 'ஒரு நிமிஷம் இப்படி வந்துட்டுப் போயேன்' - என்று கண்ணைச் சிமிட்டி அழைத்துக் கூப்பிட்டுச் சொல்லி விட்டுப் போன சமயங்களில் தான் எங்கெங்கே போய் என்னென்ன செய்திருக்கிறோம் என்பதை எல்லாம் இந்த விநாடியில் நினைவு கூர்ந்தாள் அவள். அவற்றை இரண்டாவது முறையாக நினைப்பதற்கு இன்று அவளே அருவருப்பும் கூச்சமும் அடைந்தாள். முத்துக்குமரன் என்கிற கலைக் கர்வம் மிகுந்த கம்பீர நாயகனை அவள் சந்தித்துப் பழக நேரவில்லை என்றால் இன்றுகூட அந்தக் கூச்சமும் கர்வமும் அவளுக்குப் புரிந்திருக்கப் போவதில்லை. சிலரை நினைத்து வாழத் தொடங்கிவிட்டபின், அதற்கு முன்னால் வாழ்ந்த விதங்களை இரண்டாம் முறையாக நினைவுக் கூரவும் தயங்கும்படி அவர்கள் செய்து விடுகிறார்கள். மாதவியும் முத்துக்குமரனுடன் பழகியபின் அப்படித்தான் இருந்தாள்.
கோபால் சொல்லிவிட்டுப் போயிருந்த வார்த்தைகளிலிருந்து தொனித்த அர்த்தத்தின்படி செய்வதாயிருந்தால் மாதவி அப்போதே ஹோட்டலுக்குப் புறப்பட்டுப் போய் அப்துல்லாவைச் சந்தித்திருக்க வேண்டும். பின்பு அப்படியே அங்கிருந்து மாலை ஏழு மணிக்கு மேல் அப்துல்லாவை அழைத்துக் கொண்டு வரவேண்டும். ஆனால் அவள் அன்று இப்படிச் செய்யவில்லை. நேரே முத்துக்குமரனுக்கு எதிரே போய் நின்றாள். அவன் கண்கள் அவளை நோக்கி நெருப்புக் கங்குகளாகக் கனன்றன. குரல் இடியாக அதிர்ந்தது.
"என்ன, போயிட்டு வந்தாச்சா? துரை மகன் மைனர் கணக்கா கண்ணடிச்சுக் கூப்பிட்டானே!"
"நான் செய்த பாவம், உங்களுக்குக்கூட என்மேல் கோபம் வருகிறது.
"அவன் கண்ணைச் சாய்ச்சுக் கூப்பிட்டவிதம் எனக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கவில்லை.
"நான் என்ன செய்யட்டும் அதற்கு?"
"என்ன செய்யட்டும்னா கேட்கிறே. அதான் நாய்க்குட்டி மாதிரி பின்னாடியே சிரிச்சுக்கிட்டு ஓடிப்போனியே! அதைவிட மோசமா இன்னும் வேறே ஏதாவது செய்யணுமா என்ன?"
"திட்டுங்க, நல்லாத் திட்டுங்க...நீங்க எதை திட்டினாலும் எப்படித் திட்டினாலும் எனக்குப் பிடிக்கும்? நாய்க்குட்டி பேய்க்குட்டின்னு என்ன வேண்டும்னாலும் சொல்லுங்க...கேட்டுக்கறேன்..."
"மானமில்லாட்டி எதை வேணாக் கேட்டுக்கலாம், உறைக்கவே உறைக்காது."
"உங்ககிட்டப் பழகிப் பழகித்தான் எவ்வளவோ மாறிக்கிட்டிருக்கேன். நீங்களே இப்படிப் பழி சொன்னா எப்படி?"
"தொலையட்டும்! இப்பக் கேக்கறதுக்குப் பதில் சொல்லு. அந்த 'அயோக்கியன்' எதுக்காகக் கூப்பிட்டான் உன்னை?"
"ஒண்ணுமில்லை, அப்துல்லாவை விருந்துக்கு அழைச்சிட்டு வர்றதுக்குப் போகணுமாம்..."
"யாரு?"
"வேற யாரு? நான் தான்,"
"நீ எதுக்குப் போகணும்? அவன் போகட்டுமே? அவனுக்கும் போக முடியாட்டி செகரெட்டரி எவனாவது போய்க் கூட்டிக்கிட்டு வரட்டுமே?"
"எங்கிட்டக் கூப்பிட்டுச் சொல்றாரு...நான் எப்படி மாட்டேங்கறது?"
"முடியுமா? அதான் நேத்திலிருந்தே சொல்லிக்கிட்டிருக்கேனே 'அச்சமே கீழ்களது ஆசாரம்னு'."
"........"
"கலையினோட எல்லாப் பிரிவிலேயும் இன்னிக்கு வியாபாரம் கலந்துரிச்சி. இனிமே இதைத் திருத்தவே முடியாது. விற்கக் கூடாததை எல்லாம் விற்றுச் சாப்பிடத் துணியும் பஞ்சப்பட்ட குடும்பம் போல இழக்கக்கூடாததை எல்லாம் இழந்து கலைஞர்கள் கூன் விழுந்த முதுகுகளுடன் பணத்தைத் தேடி இன்று அலைந்து கொண்டிருக்கிறார்கள். கர்வப்பட வேண்டிய அளவு மனோதிடத்தைத் தன்னிடம் மீதம் வைத்துக்கொள்ளாத கலைஞர்களையே இங்கே பட்டிணத்தில் நான் அதிகமாகப் பார்க்கிறேன். இது இந்தக் காலத்தைப் பிடிச்சிருக்கிற நோய் போலிருக்கு."
"நீங்கள் பேசுவதை எல்லாம் கேட்கப் பத்து வருசத்துக்கு முன்னாடியே நான் உங்களைச் சந்திச்சிருக்கணும்னு தோணுது."
- அவள் குரல் கம்மிப் போய் வந்தது. அதிலிருந்த கழிவிரக்கத்தை அவனும் உணர்ந்தான். அவளுடைய நெகிழ்ந்த குரல் அவன் உள்ளத்தை உருக்கியது. அவன் அவள் முகத்தைப் பார்த்தபடி சில விநாடிகள் ஒன்றும் பேசத் தோன்றாமல் இருந்து விட்டான். அவள் அவனைக் கேட்டாள்:
"இப்ப, நான் என்ன செய்யணும்னு சொல்லுங்க..."
"எங்கிட்ட ஏன் கேட்கிறே?"
"உங்ககிட்டத்தான் கேட்கணும். அவரு சொன்னபடி நான் இப்பவே அப்துல்லாவைப் பார்க்கப் போறதில்லை. வேணுமானா சாயங்காலம் கூப்பிடப் போகலாம்னு இருக்கேன். அதுவும் நான் தனியாப் போகப் போறதில்லே. உங்களையும் கூட்டிக்கிட்டுப் போகப் போறேன்."
"நானா? நான் எதுக்கு?"
"எங்கூட நீங்க வராமே வேறே யார் வருவாங்க?" - இந்த வாக்கியத்தைக் கேட்டு முத்துக்குமரனுக்கு மெய் சிலிர்த்தது.
------------
அத்தியாயம் - 12
ஒரு பெண்ணின் நளினம் என்பதே தன் அன்பை அவள் அழகாகவும், சாதுரியமாகவும் வெளியிடுவதில்தான் இருக்கிறதோ என்று தோன்றியது முத்துக்குமரனுக்கு. அவள் கூறிய அந்த வாக்கியம் அவனை முற்றிலும் நெகிழச் செய்துவிட்டது.
'எங்கூட நீங்க வராம வேறே யார் வருவாங்க?' - இந்த வாக்கியத்தில் இழைந்து ஒலித்த ஏக்கமும், தாபமும் அவன் உள்ளத்தை உருக்கின. அவள் தன்னோடு என்றும் துணையாகக் கூடவருவதற்கு அவனைத் தவிர வேறெவருமே இல்லையென்று நம்பிக்கையோடு நினைப்பதை அந்தக் குரலில் தெரிந்து கொள்ள முடிந்தது. அவளிடம் அவ்வளவு உரிமையோடு கோபப்படுவதற்கும் தாபப்படுவதற்கும் தான் யார் என்றும் எவ்வளவு காலமாகத் தான் அவளோடு பழகுகிறவன் என்றும் நினைத்துப் பார்த்த போது அது அவனுக்கு வேடிக்கையாகவே இருந்தது. அவளுடைய உரிமைகளைக் கட்டுப்படுத்தவும், தளர்த்தவும் செய்கிற அளவிற்குத் தான் அவள்மேல் அத்தனை பிடிப்பையும், பற்றையும் எப்போது கொண்டோம், எப்படிக் கொண்டோம் என்றெல்லாம் எண்ணியபோது, அந்த மாறுதல் அவனையே அயரச்செய்தது. பிரியத்தையும், ஆசையையும் விடமுடியாத அளவுக்கு அவள் தன் மனத்தில் இணைபிரியாத பொருளாகியிருப்பதை அவனே புதிதாக அப்போதுதான் புரிந்து கொள்வதுபோல் உணரத் தலைப்பட்டான்.
மாலையில் அப்துல்லாவை அழைத்துவரச் செல்வதற்கு முன்னால் முத்துக்குமரனை போட்டோ ஸ்டூடியோவுக்கு அழைத்தாள் அவள்.
"நான் மலேயாவுக்கு வரலை. இப்ப படம் ஒண்ணும் எடுக்க வேண்டாம்" என்றான் முத்துக்குமரன்.
"நீங்க வரலையின்னா நானும் போகப் போறதில்லே" என்றாள் அவள்.
அவள் சொல்லியதை அவன் சிரித்துக்கொண்டே மறுத்தான்:
"நீ நாடகத்துக்குக் கதாநாயகி, நீ போகாட்டி நாடகமே நடக்காது. அதனாலே நீ போய்த்தான் ஆகணும்."
"கதாநாயகரே வராட்டாக் கதாநாயகி போய் என்ன பிரயோசனம்?"
"கோபால்தான் வர்ரானே."
"நான் கோபாலைப் பத்திப் பேசலை, இப்ப என்னோட கதாநாயகரைப் பத்திப் பேசறேன்.
"அது யாரு?"
"தெரிஞ்சு உணர்ந்து வேணும்னே கேட்கறீங்க இதை, அப்பிடித்தானே?"
அவள் தன்னையே ஆத்மார்ததமான கதாநாயகனாக வரித்துப் பேசும் அந்தப் பேச்சைக் கேட்டு உள்ளம் பூரித்துப் பேசத் தோன்றாமல் மௌனமாயிருந்தான் அவன். அதன்பின் சிறிது நேரத்தில் அவள் கூப்பிட்டதற்கு மறுப்பு எதுவும் சொல்லாமல் அவளோடு போட்டோ ஸ்டூடியோவிற்குச் சென்றான் அவன். போட்டோ ஸ்டூடியோவில் பாஸ்போர்ட்டுக்காக படம் எடுத்து முடிந்ததும், அவள் விரும்பியபடியே அவளும் அவனும் சேர்ந்து ஒரு படம் எடுத்துக் கொண்டார்கள்.
மாலையில் அப்துல்லாவை அழைத்துவர ஓஷியானிக் ஹோட்டலுக்குப் புறப்பட்டபோது அவன் மனநிலையை அறிந்து அவள் - தனியே செல்லவில்லை. காரில் அவனையும் உடனழைத்துக் கொண்டே புறப்பட்டாள். அவனும் அவளும் புறப்பட்ட கார் பங்களா காம்பவுண்டைத் தாண்டி வெளியேறுவதற்குள்ளேயே கோபால் இன்னொரு காரில் எதிரே வந்து விட்டான். அவள் அப்போதுதான் அப்துல்லாவை அழைத்துவரப் போகிறாள் என்று புரிந்து கொண்ட கோபமும், தான் ஏற்கெனவே சொல்லியிருந்தபடி தனியே போகாமல் மாதவி முத்துக்குமரனையும் உடன் அழைத்துக் கொண்டு போகிறாள் என்பதைக் கண்டு எரிச்சலுமாகக் கடுகடுப்பான முகத்தோடு அவளை எதிர்கொண்டான் அவன்.
"அப்பவே போகச் சொல்லியிருந்தேனே உன்னை? நீ இப்பத்தான் போறியா?"
"முடியலை. இவரை போட்டோ ஸ்டூடியோவுக்கு அழைச்சிட்டுப் போனேன். நேரமாயிடுச்சு. இப்பத்தான் புறப்பட முடிஞ்சிது."
"அது சரி! சாரை ஏன் வீணா சிரமப்படுத்தறே? நீ மட்டும் அப்துல்லாவைக் கூப்பிடப் போயிட்டு வந்தாப் போதாது?" என்று நாசூக்காக முத்துக்குமரனைக் கத்திரித்துவிட முயன்றான் கோபால்.
அந்த நிலையில் முத்துக்குமரனே முன் வந்து கோபாலுக்குப் பதில் சொல்லி மாதவியைத் தர்மசங்கடமான நிலையிலிருந்து தப்புவித்தான்.
"இல்லே! நானேதான் 'ஓஷியானிக்' - எப்படி இருக்கும்னு பார்க்கலாம்னு புறப்பட்டேன். நானும் இப்படிக் காத்தாடப் போயிட்டு வரேனே..."
கோபாலுக்கு மேற்கொண்டு எப்படி முத்துக்குமரனைச் சமாளித்துக் கீழே இறக்குவது என்று தெரியவில்லை.
"சரி! ரெண்டு பேருமே போய் அவரை அழைச்சிட்டு வாங்க. வண்டியிலே வர்றப்ப அவருட்ட விவாதம் ஒண்ணும் வச்சுக்க வேண்டாம். நமக்கு அவரிட்டக் காரியம் ஆகணும். வீணா அவர் மனசு புண்படக் கூடாது" என்று பொதுவாக எச்சரித்து விட்டு உள்ளே போனான் கோபால். ஆனால் உள்ளூற மாதவியின் மேல்தான் கடுங்கோபத்தோடு போனான் அவன். மாதவிக்கு அது ஓரளவு புரிந்து விட்டிருந்தாலும் முத்துக்குமரனிடம் அவள் அதைக் காண்பித்துக் கொள்ளவில்லை.
"பயலுக்கு என்னைக் கையைப் பிடிச்சு இழுத்துக் காரிலிருந்து இறக்கி விட்டுடணும்னு ஆசை. முடியல்லே..." கோபத்தோட சிரித்துக் கொண்டே சொன்னான் முத்துக்குமரன்.
நல்ல வேளையாக அப்போது மாதவியே காரை ஓட்டிக் கொண்டு வந்ததனால் அவர்கள் இருவரும் சுதந்திரமாகப் பேசிக் கொண்டு போக முடிந்தது.
பினாங்கு அப்துல்லாவின் அறையில் இவர்கள் போகிற போது நாலைந்து விசிட்டர்கள் இருந்தார்கள். இவர்களையும் வரவேற்று உள்ளே அமரச் செய்து கொண்டார் அவர்.
"கோபால் என்னை நைட் டின்னருக்குத்தானே 'இன்வைட்' பண்ணினாரு! எட்டரை மணிக்கு வந்தாப் போதாது? இப்ப ஆறரை மணிதானே ஆகுது?" என்று கடிகாரத்தைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே பேச்சை இழுத்தார் அப்துல்லா.
மாதவி அவருக்கு மறுமொழி கூறினாள்:
"இப்பவே வந்திட்டீங்கன்னாக் கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருந்திட்டு அப்புறம் சாப்பிடலாம்னு பார்க்கிறார். பேசிக்கிட்டிருந்தா நேரம் போறதே தெரியாது. நிமிஷமா மணி எட்டரை ஆயிடும்."
"ரியலி அன்னிக்கி உங்க நடிப்பு பிரமாதமா இருந்திச்சு. மலேயாவிலே உங்களுக்கு ரொம்ப நல்ல பேரு கிடைக்கும்" என்று மாதவியை அவள் வெட்கப்படுகிற அளவுக்கு நேரே முகத்துக்கு எதிரே புகழத் தொடங்கினார் அப்துல்லா. ஏற்கனவே இருந்த விசிட்டர்கள் ஒவ்வொருவராக விடை பெற்றுச் சென்றனர்.
முத்துக்குமரனை அருகில் வைத்துக் கொண்டே தன்னை மட்டும் அவர் புகழ்வதை விரும்பாமல் கூச்சமடைந்த மாதவி,
"எல்லாம் சாரோட பெருமைதான். நாடகத்தை அவ்வளவு நல்லா எழுதியிருக்கிறதினாலேதான் நாங்க - நடிச்சிப் பேர் வாங்க முடியுது..." என்றாள்.
"இருந்தாலும் நடிக்கிறவங்க திறமைதானே எழுதறவங்களுக்குப் பெருமையைத் தேடித்தரும், என்ன நான் சொல்றது. புரியுதில்லே?" என்று அப்துல்லா தான் சொல்லியதையே மேலும் வற்புறுத்தினார்.
முத்துக்குமரன் விவாதத்தில் கலந்து கொள்ள விரும்பவில்லை. ஆணி அடித்தாலும் இறங்காமல் காய்ந்த மரம் போலாகிவிட்ட சில வியாபார ஆசாமிகளிடம் கூடியவரை கலையைப் பற்றிப் பேசுவதையே தவிர்க்க விரும்பினான் அவன். அப்துல்லாவைப் பொருட்படுத்தி அவரோடு கலையைப் பற்றி விவாதிப்பதே கலைக்குக் செய்கிற துரோகம் அல்லது பாவம் என்று கருதியவனாகக் கால்மேல் கால் போட்டபடி அவன் சும்மா உட்கார்ந்திருந்தான். அவன் அப்படி மனோபாவத்தில் இருப்பதை மாதவியும் புரிந்து கொண்டாள். அப்துல்லாவின் பேச்சை வேறு திசைக்குத் திருப்ப முயன்றாள் அவள்.
"போன மாதம் 'கங்கா நாடகக்குழு' மலேயாவுக்கு வந்திருந்தாங்களே? அவங்ககூட உங்க 'காண்ட்ராக்ட்லே' தான் வந்தாங்க போலிருக்கு? அவங்களுக்கு அங்கே நல்ல பேர்தானுங்களா?"
"அப்துல்லா 'காண்ட்ராக்ட்'னாலே பேரு தானே வராது! எங்க கம்பெனி இருபத்தஞ்சு வருசமா தமிழ் நாட்டு நாட்டியக்காரங்க. நாடகக் கலைஞர்களை மலேயா வரவழைக்க ஏற்பாடு பண்ணிக்கிட்டிருக்கு. இதுவரை நாங்க ஏற்பாடு பண்ணி மலேயாவிலே எதுவும் சோடை போனதில்லை. சும்மா பெருமைக்கு சொல்றதா நீங்க நினைக்கப்பிடாது, நம்ம பேருக்கே அப்பிடி ஒரு ராசி உண்டு."
"அதெல்லாம் நெறையக் கேள்விப்பட்டிருக்கோம்."
"நமக்கு வியாபாரம் டயமெண்ட் மெர்ச்சண்டுங்க, ஒரு பொழுது போக்குக்காகத்தான் இந்தக் கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு பண்றோம்."
முத்துக்குமரனுக்கு அந்தப் பேச்சு அலுப்புத் தட்டியது, மாதவிக்கு ஜாடை காண்பித்தான்.
"புறப்படறலாங்களா? நீங்க தயாராகுங்க. கோபால் சார் உங்களுக்காகக் காத்துக்கிட்டிருப்பாரு. சீக்கிரமாப் போனோம்னா நல்லது" என்று அப்துல்லாவை மெல்ல அவசரப்படுத்தினாள் அவள். அப்துல்லா உடை மாற்றிக் கொள்ள உள்ளே போனார்.
அறையில் டிரஸ்ஸிங் டேபிள் கண்ணாடியருகே பெரிதும் சிறிதுமாகப் பலவகை 'செண்ட்' பாட்டில்கள் அடுக்கப்பட்டிருந்தன. அப்துல்லா உடை மாற்றிக் கொண்டு வந்து அந்தக் கண்ணாடியருகே நின்று பூசிக்கொண்ட ஒரு 'செண்ட்'டின் மணம் மின்சாரம் போல வேகமாக அறை முழுவதும் பரவியது. பாட்டிலோடு இணைக்கப்பட்டிருந்த ஸ்பிரே செய்யும் குமிழால் அவர் அந்த வாசனைப் பொருளைக் கழுத்திலும், சட்டை மேலும் பலமுறை அழுத்தி அழுத்தி ஸ்பிரே செய்து கொண்டார். உடை மாற்றுவதிலும், தயாராவதிலும் ஒரு ஜேம்ஸ்பாண்ட் வேகம், ஃபேன்ஸி எல்லாம் நிரம்பியவராக இருந்தார் அப்துல்லா.
அவர் ஹோட்டல் பையனைக் கூப்பிட்டு அவர்கள் பருகுவதற்கு டீ வரவழைத்தார். அவர்கள் எவ்வளவோ மறுத்தும் கேட்கவில்லை. அவரே டீயை 'மிக்ஸ்' செய்து மூன்று கோப்பைகளிலும் நிரப்பத் தொடங்கிய போது மாதவியும் அவருக்கு உதவி செய்தாள். டீயை 'மிக்ஸ்' செய்வதில் அவள் தனக்கு உதவ முன் வந்ததில் அப்துல்லாவுக்கு மகிழ்ச்சி.
முத்துக்குமரன் பொறுமையாக உட்கார்ந்திருந்தான். டீயைப் பருகியதும் அவர்கள் மூவருமாகப் புறப்பட்டு விட்டார்கள். புறப்படுவதற்கு முன் அந்த வாசனை ஸ்பிரே பாட்டிலைப் பற்றி விசாரித்தாள் மாதவி. உடனே அப்துல்லா 'ஐ வில் கிவ் யூ...யூஸ் இட்..." என்று அதை அவளிடமே கொடுத்து விட்டார்.
"இல்லீங்க, நான் சும்மா விசாரிச்சேன். அவ்வளவு தான்" என்று அவள் மறுத்தும் கேட்காமல், "நோ நோ கீப் இட்...டோண்ட் ரெஃப்யூஸ்" என்று அவளிடமே அதைக் கொடுத்துவிட்டார்.
முத்துக்குமரனுக்கு மாதவிமேல் கோபம் கோபமாக வந்தது. அவள் வாயை வைத்துக்கொண்டு சும்மா இராமல் அப்துல்லாவிடம் போய் செண்ட் பற்றி விசாரித்ததனால் அவர் ஏதோ ஒரு பிச்சைக்காரிக்குத் தூக்கிக்கொடுப்பதுபோல் மாதவியிடம் பாட்டிலைத் தூக்கிக் கொடுத்ததை முத்துக்குமரன் அவ்வளவாக ரசிக்கவில்லை.
வாசனைப் பொருளுக்கும், பூவுக்கும், புடவைக்கும், பகட்டுக்கும் சபலமடையாத அழகிய பெண்களே உலகில் இருக்க முடியாது போலும் என்று நினைத்துக் கொண்டான் அவன். எப்படி ஒரு குடும்பப் பெண் வாசனைப் பொருள், பூ, புடவை போன்றவற்றைப் பற்றி அந்நிய ஆடவனிடம் விசாரிப்பது விரசமோ, அப்படியே மாதவி அப்துல்லாவிடம் விசாரித்ததும் கொஞ்சம் அடக்கக் குறைவாகவே தோன்றியது அவனுக்கு. சினிமாத் துறையில் ஊறியதனால் வந்த வினை இது என்று நினைத்து உள்ளூற அவளை அவன் மன்னிக்கவும் செய்தான். காரில் மாம்பலம் செல்லும்போது அப்துல்லா மலேயாப் பயணத்தைப்பற்றி ஒவ்வொரு கேள்வியாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.
"உங்க குழுவிலே மொத்தம் எத்தினி பேர் வருவாங்க? யார் யார் பிளேன்ல வருவாங்க? யார் யார் கப்பலிலே வருவாங்க."
மாதவி தனக்குத் தெரிந்த அளவில் அவருடைய கேள்விகளுக்குப் பதில் சொல்லிக்கொண்டு வந்தாள். முன்ஸீட்டில் அவளருகே முத்துக்குமரன் அமர்ந்திருந்தான். அப்துல்லா பின் ஸீட்டில் தனியாக உட்கார்ந்திருந்தார்.
பங்களா வாசலில் போர்டிகோவிலேயே கோபால் அப்துல்லாவை எதிர்கொண்டு வரவேற்றான். வரவேற்கும் போதே தும்பிக்கை பருமனுக்கு ஒரு பெரிய ரோஜாப்பூ மாலையையும் அப்துல்லாவுக்குச் சூட்டினான். விருந்துக்கு வந்திருந்த மற்ற நடிகர் நடிகைகளையும், தயாரிப்பாளர்களையும், சினிமாத்துறை சம்பந்தப்பட்டவர்களையும் அப்துல்லாவுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான் கோபால். விருந்துக்கு முன் எல்லோரும் உட்கார்ந்து கலகலப்பாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.
கோபாலுடைய விருந்து ஏற்பாட்டிலும், தடபுடல்களிலும் அப்துல்லா ஓரளவு நன்றாகவே மயங்கிப் போனார். என்ன காரணமோ தெரியவில்லை, முத்துக்குமரன், மாதவி இருவரிடமுமே அன்று கோபால் கடுகடுப்பாக இருந்ததுபோல் தெரிந்தது. விருந்தின்போது அப்துல்லா நடிகைகள், எக்ஸ்ட்ராக்கள் அடங்கிய கூட்டத்தினிடையே அமர்த்தப்பட்டார். ஒரு பணக்கார ஷேக் தன்னுடைய ஹோத்தில் அமர்ந்திருப்பதுபோல் அந்தச் சமயத்தில் அவர் காட்சியளித்தார். நடிகைகளின் இங்கித சிரிப்பொலிகளுக்கு நடுவே அப்துல்லாவின் வெடிச்சிரிப்பும் கலந்து ஒலித்துக்கொண்டே இருந்தது.
விருந்து முடிந்து திரும்பப்போகும்போது அப்துல்லாவை யார் ஓஷியானிக்கில் கொண்டு போய்விடுவதென்ற பிரச்னை எழுந்தது. தான் கொண்டு போய்விட வேண்டியிருக்குமோ என்ற தயக்கத்தோடு கோபாலுக்கு முன்னாலே போய் நின்றாள்.
"நீ வேண்டாம். நீ போய் உன் வேலையைப் பாரு. உனக்குக் குறிப்புத் தெரியாது. நீ ஊரை எல்லாம் துணைக்குக் கூட்டிக்கிட்டுப் போவே" என்று சிறிது கடுமையாகவே பதில் கூறிவிட்டான் கோபால். மாதவிக்கு முகத்தில் அறைந்தது போலாகிவிட்டது. ஆனால், அந்தத் தொல்லை தன்னைவிட்டுப் போனதற்காக உள்ளூர மகிழ்ச்சி அடைந்தாள் அவள். வேறு யாரோ ஒரு துணை நடிகையோடு கோபால் அப்துல்லாவை ஓட்டலுக்கு அனுப்பி வைப்பதை அவளே கண்டாள். அவள் பேசாமலிருந்து விட்டாள். அப்துல்லா எல்லாரையும் நோக்கிக் கைகூப்பிவிட்டுப் புறப்பட்டார்.
சாப்பிட்டு முடிந்ததுமே முத்துக்குமரன் அவுட்ஹவுஸுக்குப் புறப்பட்டுப் போய் விட்டான். மாதவி மட்டும் பங்களாவின் ஃபோர்டிகோவில் மற்றவர்களை வழியனுப்ப நின்று கொண்டிருந்தாள். திரும்பக் கொண்டு போய்விடுவதற்காக தான் அப்துல்லாவோடு தனியே போய் விடுகிறேனோ, இல்லையோ என்பதைச் சோதனை செய்வதற்காகவே, அவர் அவுட்ஹவுஸுக்கு அவசர அவசரமாகப் போயிருக்க வேண்டுமென்று மாதவி நினைத்துப் புரிந்து கொண்டாள். தான் தனியே அப்துல்லாவைத் திரும்பக் கொண்டு போய்விடப் போகாதது முத்துக்குமரனுக்குத் திருப்தி அளிக்கும் என்ற மகிழ்ச்சியோடுதான் அப்போது அவள் அங்கே நின்றிருந்தாள்.
ஒவ்வொருவராகக் கோபாலிடம் சொல்லி விடைபெற்றுக்கொண்டு புறப்படத் தொடங்கினர். மாதவியிடமும் சிலர் சொல்லிக் கொண்டார்கள். எல்லோரும் சொல்லிக் கொண்டு போனபின்பு வீட்டில் வேலை பார்ப்பவர்கள், கோபாலின் செகரெட்டரி, மாதவி ஆகியோர்தான் அங்கே மீதமிருந்தனர். நாயர்ப்பையன் டெலிபோன் அருகே அடக்க ஒடுக்கமாக நின்று கொண்டிருந்தான். திடீரென்று அத்தனை பேர் முன்னிலையிலுமாகக் கோபால் மாதவியிடம் சீறத் தொடங்கினான். அதுவரை அடக்கி வைத்திருந்த கோபமெல்லாம் அவனிடம் வெளிப்படத் தொடங்கியது.
"வர வரப் பெரிய பத்தினியாயிட்டே! உனக்குத் திமிர் அதிகமாயிருக்கு. ரெண்டு மூணு மணிக்கே அப்துல்லாகிட்டப் போயிட்டு அவரோட கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருந்துட்டு அப்புறம் அவரை கூட்டிக்கிட்டு வான்னு நான் படிச்சுப் படிச்சுச் சொன்னேன். நான் சொன்னதைக் காதிலேயே வாங்கிக்காமே என்னென்னமோ பண்ணியிருக்கே. இது எல்லாம் கொஞ்சங்கூட நல்லா இல்லே. வாத்தியார் இந்த வீட்டுக்கு வந்தப்புறம் உன் போக்கே மாறியிருக்கு. நானும் பார்க்கத்தான் பார்க்கிறேன்."
மாதவி பதில் சொல்லாமல் தலை குனிந்து நின்றாள். ஆனால் அவளுக்கு கண் கலங்கிவிட்டது. முன்பெல்லாம் நாலுபேர் முன்னிலையிலே கோபால் இப்படிப் பேசினாலும் அவளுக்கு உறைக்காது; உறைத்ததில்லை. துடைத்தெறிந்து விட்டு மறுபடி அவனோடு பழகத் தொடங்கி விடுவாள். இப்போது அவள் யாருக்கு ஆட்பட்டிருந்தாளோ அவனிடமிருந்த மானமும், ரோஷமும், அவளுள்ளேயும் கிளர்ந்திருந்ததனால் அப்படித் துடைத்தெறிந்து விட்டு அவளால் இருக்க முடியவில்லை. அவளுக்கு நெஞ்சுகுமுறியது. பழக்கத்தின் காரணமாக அவளால் கோபாலை எதிர்த்துப் பேச முடியவில்லை. ஆனால் அதற்கு முன்பெல்லாம் இப்படி வார்த்தைகளைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் மரமாக நின்றதுபோல் நிற்காமல் இன்று அவள் மனம் கொதித்தாள். பத்து நிமிஷத்திற்கு மேல் கோபம் தீரக் கத்தித் தீர்ந்தபின் கோபால் உள்ளே சென்றான். அவள் ஏறக்குறைய முகம் சிவந்து கோவென்று கதறியழுகிற நிலைக்கு வந்துவிட்டாள். நேரே அவுட்ஹவுஸுக்கு விரைந்தாள் அவள்; நடுவே டிரைவர் வந்து, "ஐயா உங்களை வீட்டிலே கொண்டு போயி 'டிராப்' பண்ணிட்டு வரச்சொன்னாரு..." என்றான். கோபாலிடம் காட்டத் தவறிய கோபத்தை அந்த டிரைவர் மேலே காட்டினாள் மாதவி.
"அவசியமில்லை! நீ போய் உன் வேலையைப் பாரு, எனக்கு வீட்டுக்குப் போயிக்கத் தெரியும்..."
"சரிங்க...ஐயாகிட்டச் சொல்லிடறேன்..."
அவன் போய் விட்டான். அவுட்ஹவுஸில் நுழையும் போதே அவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. முத்துக்குமரனைப் பார்த்ததும் அவள் அழுதே விட்டாள். விக்கலும், விசும்பலுமாக அழுகை வெடித்துக் கொண்டு வந்தது. அழுதுகொண்டே அவன் மார்பில் வாடிய மாலையாக சாய்ந்துவிட்டாள் அவள்.
"என்ன? என்னது? என்ன ஆச்சு? யார் என்ன சொன்னாங்க? எதுக்காக இப்படி?" - முத்துக்குமரன் பதறினான். சில நிமிஷங்கள் அவளால் பேசவே முடியவில்லை. வெளிப்படும் வார்த்தைகளை அழுகை உடைத்தது. அவளைத் தழுவிக் கொண்டு ஆதரவாக அவள் கூந்தலை நீவினான் அவன். மெல்ல மெல்லப் பேசும் நிதானத்துக்கு வந்தாள் அவள்.
"நான் வீட்டுக்குப் போகணும். பஸ் நேரம் முடிஞ்சி போச்சு. டாக்ஸிக்கு எங்கிட்டப் பணம் இல்லே. நீங்க துணைக்கு வர்ரதா இருந்தா நடந்தே போகலாம். வேற யாரும் எனக்குத் துணை இல்லை. நான் அநாதை..."
"என்ன நடந்திச்சு? ஏன் இப்படிப் பேசறே? நிதானமா நடந்ததைச் சொல்லு..."
"நான் பத்தினி வேஷம் போடறேனாம். அப்துல்லாவைக் கூட்டியாறத்துக்கு நான் தனியாப் போகலையாம். நீங்க வந்தப்புறம் என் நடத்தையே மாறிப் போச்சாம்..."
"யார் சொன்னா? கோபாலா?"
"வேறு யார் சொல்லுவாங்க இப்படி எல்லாம்?"
- முத்துக்குமரன் கண்களில் கோபம் சிவந்தது. சில விநாடிகள் அவன் பேசவே இல்லை. சிறிது நேரத்துக்குப் பின் அவன் வாய் திறந்தான்.
"சரி! புறப்படு. உன்னை வீட்டிலே கொண்டு போய் விட்டு வரேன்..."
முத்துக்குமரன் அவளை அழைத்துக் கொண்டு நடந்தே புறப்பட்டான். பங்களா காம்பவுண்டைக் கடந்து அவர்கள் இருவரும் வெளியேறுவதற்குள்ளேயே கோபால் வந்து வழி மறைத்துக் கொண்டான்.
"டிரைவர் வந்து சொன்னான். நீ ஏதோ ரொம்பக் கோபிச்சுக்கிட்டுச் சொல்லியனுப்பிச்சியாம். நான் ஒண்ணும் தப்பாப் பேசிடலை. எவ்வளவோ பேசியிருக்கோம், பழகியிருக்கோம்; இப்பல்லாம் உனக்கு உடனே ரோஷம் வந்திடுது. ரோஷத்தையும், கோபத்தையும் காட்டற அளவுக்கு என்னை அந்நியனாக்கிட்டா, நான் அப்புறம் ஒண்ணுமே சொல்லறதுக்கில்லே - "
மாதவி அவனுக்குப் பதில் சொல்லாமல் தலைகுனிந்து நின்றாள். முத்துக்குமரனும் பேசவில்லை. கோபால் கைகளைத் தட்டி யாரையோ அழைத்தான். டிரைவர் காரை எடுத்து வந்து மாதவியினருகே நிறுத்தினான். இந்த நிலையில் அவள் எப்படி நடந்து கொள்கிறாள் என்று முத்துக்குமரன் அமைதியாக நின்று கவனிக்கலானான்.
"ஏறிக்கொள். வீட்டில் போய் இறங்கிக் கொண்டு காரைத் திருப்பி அனுப்பு. என்னை மனச்சங்கடப்படச் செய்யாதே" என்று கோபால் கெஞ்சினான். மாதவி முத்துக்குமரனின் முகத்தை, 'என்ன செய்வதென்ற' பாவனையில் பார்த்தாள். முத்துக்குமரன் அதைக் கவனிக்காதது போல் வேறெங்கோ பராக்குப் பார்க்கத் தொடங்கினான்.
"நீ சொல்லு வாத்தியாரே! மாதவி எம்மேலே அநாவசியமாகக் கோவிச்சுக்கிட்டிருக்கு. சமாதானப் படுத்தி வீட்டுக்கு அனுப்பி வை" - என்று கோபால் முத்துக்குமரனையே வேண்டினான்.
முத்துக்குமரன் அந்த வேண்டுகோளுக்கும் செவிசாய்க்கவில்லை. சிரித்துவிட்டுப் பேசாமலிருந்து விட்டான். மாதவி எந்த அளவுக்கு மனத்திடமுடையவள் அல்லது இல்லாதவள் என்பதை அப்போது கவனித்துப் பார்த்து விட விரும்பியவன் போல் நின்று கொண்டிருந்தான் முத்துக்குமரன்.
திடீரென்று கோபால் ஒரு காரியம் செய்தான். சைகை செய்து டிரைவரை ஆசனத்திலிருந்து இறங்கிக் கொள்ளச் சொல்லிவிட்டு, "வா! நானே உன்னைக் கொண்டு வந்த டிராப் செய்கிறேன்" என்று மாதவியைக் கெஞ்சத் தொடங்கினான் கோபால். அவன் வார்த்தைகளை மீற முடியாமல் மெல்ல மெல்லத் தயங்கித் தயங்கி முத்துக்குமரன் நின்ற பக்கத்தைப் பார்த்தபடியே முன் ஸீட் கதவைத் திறந்து ஏறிக் காரில் அமர்ந்தாள் மாதவி. கோபால் காரைச் செலுத்தினான்.
வருகிறேன் என்பதற்கு அடையாளமாக அவள் முத்துக்குமரனை நோக்கிக் கையை உயர்த்தி ஆட்டினாள். அவன் பதிலுக்குக் கையை ஆட்டவில்லை, கார் அதற்குள் பங்களா 'கேட்'டைக் கடந்து வெளியே ரோட்டுக்கு வந்து விட்டது. தான் இப்படிச் செய்தது முத்துக்குமரனுக்குப் பிடிக்காது என்பதை அவள் புரிந்து கொண்டு விட்டாள். கார் வீடு போய்ச் சேருகிற வரை கோபாலுடன் அவள் பேசவில்லை. கோபாலும் அப்போதிருக்கும் அவள் மனநிலையை அநுமானித்தவனாக அவளோடு எதுவும் பேச முடியவில்லை. லாயிட்ஸ் ரோடு வரை வந்து அவளை அவள் வீட்டில் 'டிராப்' செய்துவிட்டுத் திரும்பிவிட்டான் அவன். இறங்கி வீட்டுக்குள்ளே சென்றதும் பதறும் மனதுடன் நெஞ்சு படக் படக்கென்று அடித்துக் கொள்ள முத்துக்குமரனுக்கு ஃபோன் செய்தாள் அவள்.
"நீங்க தப்பா நினைச்சுக்கலியே? அவரு அவ்வளவு மன்றாடினப்புறம் எப்படி நான் மாட்டேங்கறது?"
"ஆமாம்! முதல்லே கிடைச்சதைவிட நல்ல துணை அப்புறம் கிடைச்சிட்டா - அதை விட்டுடலாமா?" - என்று அழுத்தமான குரலில் எதிர்ப்புறமிருந்து பதில் கூறினான் முத்துக்குமரன். குரலில் உள் அடங்கிய சினம் ஒலித்தது.
"நீங்க சொல்றது புரியலே. நீங்களும் கோபமாகவே பேசறீங்கன்னு மட்டும் தெரியுது.
"அப்படித்தான் வச்சுக்கயேன்" - என்று கடுமையாகவே பதில் சொல்லிவிட்டு ரிஸீவரை ஓசை எழும்படி அழுத்தி வைத்தான் முத்துக்குமரன். மாதவிக்கு நெஞ்சில் ஓங்கி அறைந்தது போலிருந்தது. நடை பிணமாக அவள் சோர்ந்து போய் ஃபோனை வைக்கவும் தோன்றாமல் நின்றாள். பின்பு ஃபோனை வைத்துவிட்டு படுக்கையில் போய் விழுந்து குமுறிக் குமுறி அழுதாள். தன்னுடைய போதாத காலம்தான் முத்துக்குமரனும் தன்னைத் தவறாகப் புரிந்து கொள்ளச் செய்கிறது என்று தோன்றியது அவளுக்கு. முத்துக்குமரனிடம் போய் அழுது கெஞ்சி அவனைத் துணையாகக் கூப்பிட்டுவிட்டுப் பாதி வழியில், கோபாலோடு காரில் ஏறி வந்தது அவன் மனத்தை வேதனைப்படுத்தியிருக்கும் என்பது அவளுக்குப் புரியத்தான் செய்தது.
-----------
அத்தியாயம் - 13
அன்றிரவு அவள் உறங்கவே இல்லை. கண்ணீரால் தலையணை நனைந்தது. 'என்னை வீட்டில் கொண்டு போய்ச் சேர்க்க ஒரு துணை வேண்டும்' - என்று முத்துக்குமரனைக் கூப்பிட்டுவிட்டு அவன் நடந்தே உடன் புறப்பட்டு வந்த பின் கோபாலுடன் காரில் கிளம்புகிற அளவு தன் மனம் எப்படி எங்கே பலவீனப்பட்டது என்பதை இப்போது அவளாலேயே அநுமானிக்க முடியாமலிருந்தது. தான் செய்ததை நினைத்த போது அவளுக்கே அவமானமாயிருந்தது. மறுநாள் முத்துக்குமரனின் முகத்தில் விழிப்பதற்கே பயமாகவும், கூச்சமாகவும் இருந்தது. அவளுக்கு கோபால் தானே வீட்டில் கொண்டு போய் விடுவதாகக் கெஞ்சியபோது தான் எப்படி உடனே மனம் நெகிழ்ந்து அதற்கு இணங்கினோம் என்பதை நினைத்துப் பார்த்தபோது அவளுக்கு வியப்பாகவே இருந்தது.
காலையில் எழுந்ததும் இன்னோர் அதிர்ச்சியும் காத்திருந்தது. இந்த இரண்டாவது அதிர்ச்சிக்குப் பின் கோபாலைச் சந்திப்பதற்கும் அவள் கூசினாள்; பயப்பட்டாள் என்ன செய்வதென்றே அவளுக்குத் தெரியவில்லை.
முத்துக்குமரனைக் கனியழகன் பேட்டி கண்டு வெளியிட்டிருந்த ஜில் ஜில் இதழ் அன்று காலை முதல் தபாலில் அவளுக்குக் கிடைத்தது. ஜில் ஜில் கனியழகன் அந்தப் பேட்டியின் இடையே ஒரு புகைப் படத்தையும் பிரசுரித்திருந்தான். முத்துக்குமரனின் தனிப் படத்தையும் மாதவியின் தனிப் படத்தையும் - வெட்டி இணைத்து அருகருகே நிற்பது போல ஒரு 'பிளாக்' தயாரித்து வெளியிட்டிருந்தான். 'ஜில் ஜில்' 'மாதவியைப் போல ஒரு பெண் கிடைத்தால் மணந்து கொள்வேன்' - என்று முத்துக்குமரன் கூறியதாகவும் பேட்டியில் வெளியிட்டிருந்தது. அந்தக் கனியழகன் மேல் கோபம் கோபமாக வந்தது அவளுக்கு. கோபாலுக்கும் அதே பத்திரிகை அன்று காலைத் தபாலில் கிடைத்திருந்தால் என்ன உணர்வை அவன் அடைந்திருப்பான் என்று அநுமானிக்க முயன்றாள் அவள். ஜில் ஜில் கனியழகன் பேட்டிக்குரியவர் என்ற முறையில் முத்துக்குமரனுக்கும் அதே இதழை அனுப்பி வைத்திருப்பான் என்று அவளுக்குப் புரிந்தது.
தான் முத்துக்குமரனோடு சேர்ந்து நிற்பது போன்ற அந்தப் படமும், தன்னைப் போன்ற ஒருத்தியையே மணந்து கொள்ள விரும்புவதாகக் கூறிய முத்துக்குமரனின் பேட்டி வாக்கியமும் - கோபாலுக்கு எவ்வளவு எரிச்சலூட்டும் என்பதை உணர்ந்தாள் அவள். இருவரையுமே அன்று சந்திக்கப் பயமாகவும் கூச்சமாகவும் இருந்தது அவளுக்கு.
கோபாலையும் முத்துக்குமரனையும் சந்திக்கத் தயங்கி அன்று மாம்பலத்துக்குப் போகாமலே இருந்துவிட முடிவு செய்தாள் அவள். ஆனால் எதிர்பாராத விதமாகப் பதினோரு மணிக்குக் கோபால் அவளுக்கு ஃபோன் செய்து விட்டான்.
''பாஸ்போர்ட் அப்ளிகேஷன்லியும் வேறு ரெண்டொரு பேப்பர்லியும் கையெழுத்துப் போடணும். ஒரு நடை வந்திட்டுப்போனா நல்லது.''
''எனக்கு உடம்பு நல்லாயில்லே. அவசரம்னா யாரிட்டவாவது குடுத்தனுப்பிடுங்க, கையெழுத்துப் போட்டு அனுப்பிடறேன்'' என்று அங்கே போவதைத் தட்டிக் கழிக்க முயன்றாள் அவள். அவளுடைய முயற்சி பலித்தது. அவள் கையெழுத்துப்போட வேண்டிய பாரங்களை டிரைவரிடம் கொடுத்தனுப்ப ஒப்புக்கொண்டான் கோபால்.
முத்துக்குமரன் அவளுக்கு ஃபோன் செய்ய விரும்பவில்லை என்று தெரிந்தாலும் அவளே அவனுக்கு ஃபோன் செய்வதற்குப் பயமாகவும் தயக்கமாகவும் இருந்தது அவளுக்கு. முதல் நாளிரவு அவன் கூறிய பதில் இன்னும் அவள் மனத்தில் உறுத்திக்கொண்டே இருந்தது. அவன் கடுமையாகப் பேசிவிட்டான் என்ற உறுத்தலைவிடத் 'தான் தவறு செய்துவிட்டோம்' என்ற உறுத்தலும் பதற்றமும் தான் அவளிடம் அதிகமாக இருந்தன. அவளால் முத்துக்குமரனின் கோபத்தைக் கற்பனைசெய்து பார்க்கவும் முடியாமல் இருந்தது.
அன்று அவள் மனக்குழப்பத்துடனும் போராட்டத்துடனும் வீட்டிலேயே இருந்து விட்டாள். இரண்டு மணிக்கு மேல் கோபாலின் டிரைவர் வந்து அவளிடம் கையெழுத்து வாங்க வேண்டிய பாரங்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டு போனான். அதே போல முத்துக்குமரனிடம் பாரங்களைப் பூர்த்தி செய்து வாங்கியிருப்பார்களா இல்லையா என்பதை அறிய முடியாமல் தவித்தாள் அவள். முதல் நாளிரவு நிகழ்ச்சியால் தன் மேலும் கோபால் மேலும் ஏற்பட்டிருக்கும் கோபத்தில் முத்துக்குமரன் மலேயாவுக்கு வரமறுத்தாலும் மறுக்கலாம் என்று அவளுக்குத் தோன்றியது. ஓர் அப்பழுக்கற்ற வீரனின் தன்மானமும் கவிஞனின் செருக்குமுள்ள முத்துக்குமரனை நினைந்து நினைந்து உருகினாலும் சில சமயங்களில் அவனை அணுகுவதற்கே அவளுக்குப் பயமாக இருந்தது. அவன் மேல் அளவற்ற பிரியமும், அந்தப் பிரியம் போய் விடுமோ என்ற பயமுமாக அவள் மனம் சில வேலைகளில் இருதலைக் கொள்ளி எறும்பு போலத் தவித்தது. முத்துக்குமரன் மலேயாவுக்கு வரவில்லை என்றால் தானும் போகக்கூடாது என்று எண்ணினாள் அவள். அப்படி எண்ணுகிற அளவிற்குத்தான் அவள் மனத்தில் துணிவு இருந்தது. அந்தத் துணிவை வெளிக்காட்டிக் கொள்ளும் நெஞ்சுரம் அவளுக்கு இல்லை.
ஜனவரி முதல் வாரத்திலிருந்து மூன்று வார காலம் மலேயா - சிங்கப்பூரில் சுற்ற வேண்டுமென்று ஏற்பாடாகியிருந்தது. முத்துக்குமரன் உடன் வராமல் தான் மட்டும் தனியாக கோபாலுடன் வெளியூரில் சுற்றுவதற்குப் பயப்பட்டாள் அவள். வாழ்க்கையில் முதன் முதலாகச் சமீபகாலத்தில் தான் கோபாலிடம் இப்படிப்பட்ட வேற்றுமையும் பயமும் அவளுக்கு ஏற்பட்டிருந்தன.
கோபாலின் பங்களாவில் வேலை செய்யும் நாயர்ப்பையனை அந்தரங்கமாக ஃபோனில் கூப்பிட்டு, 'மலேயாவுக்கு வசனகர்த்தா சாரும் வருவாரில்ல? அவர் வர்ராரா இல்லியாங்கிற விவரம் உனக்குத் தெரியுமோ?' என்று செய்தி அறிய முயன்றாள் மாதவி. பையனுக்கு அந்த விவரம் அவ்வளவாகத் தெரிந்திருக்கவில்லை. அதற்குமேல் அவனை வற்புறுத்தி விசாரித்தால் 'அவரோட ஃபோன்ல பேசிக்கங்கம்மா' என்று லயனை அவுட்ஹவுஸுக்கே போட்டாலும் போட்டு விடுவான் என்று தோன்றியது. முத்துக்குமரனோடு பேசச் சொல்லி லயனை அவுட்ஹவுஸுக்குப் போட்டால் - அவனோடு என்ன பேசுவது? எப்படிப் பேசுவதென்ற பயமும் கூச்சமும் அவள் மனத்தில் அப்போதும் இருந்தன.
''என்னை வீட்டில் கொண்டு போய் விடுங்கள் என்று முத்துக்குமரனிடம் கேட்டுவிட்டு கோபாலுடன் புறப்பட்டு வந்துவிட்ட குற்றம் அவள் மனத்திலேயே குறுகுறுத்தது. அடுத்த நாளும், 'உடம்பு சௌகரியமில்லை' என்ற பெயரில் அவள் மாம்பலத்துக்குப் போகவில்லை.
''அவசரமில்லை! உடம்பு சரியானதும் வந்தால் போதும்'' என்று கோபால் ஃபோன் செய்தான். அவள் எதிர்பார்த்த ஃபோன் மட்டும் வரவேயில்லை. தானே போன் செய்து முத்துக்குமரனைக் கூப்பிடத் தவித்தாள் அவள். ஆனால் பயமாயிருந்தது. அவனோ பிடிவாதமாக அவளுக்கு ஃபோன் செய்யாமலிருந்தான். அவனோட பேசாத நிலையில் அவளுக்குப் பைத்தியமே பிடித்துவிடும் போலிருந்தது. அவுட்ஹவுஸில் அவனுடைய ஃபோனிருந்தும் அவன் தன்னோடு பேசாதது அவளை ஏங்கித் தவிக்கச் செய்தது. கோபாலிடம், 'உடம்பு சௌகரியமில்லை' என்று புளுகியதையும் மறந்து புறப்பட்டுப் போய் நேரிலேயே முத்துக்குமரனைச் சந்தித்து விடலாமா என்று கூடத் துடிதுடித்தாள் அவள். மாலை ஐந்து மணிவரை தன்னுடைய கவலையையும் மனத்தின் பரபரப்பையும் கட்டுப்படுத்த முயன்று அவள் தோற்றாள்.
மாலை ஐந்தரைமணிக்கு முகம் கழுவி உடைமாற்றிக் கொண்டு - அவள் புறப்பட்டுவிட்டாள். கோபாலிடம் கார் அனுப்பச் சொல்லிக் கேட்க அவளுக்கு விருப்பமில்லை. டாக்ஸியிலேயே போய்க் கொள்ளலாமென்று தீர்மானித்திருந்தாள் மாதவி. டாக்ஸி ஸ்டாண்டில் அவள் போன சமயத்தில் டாக்ஸி ஒன்றும் இல்லை. சோதனை போல் டாக்ஸி கிடைப்பதற்கு நேரமாயிற்று. அந்த வெறுப்பில் முத்துக்குமரன் ஒருவன் மட்டுமின்றி உலகமே தன்னிடம் முறைத்துக் கொண்டிருப்பதைப்போல் உணர்ந்தாள் அவள். எல்லாருக்கும் எல்லாவற்றுக்கும் தன் ஒருத்தி மேல் மட்டும் கோபமும் குரோதமும் ஏற்பட்டிருப்பதாகத் தோன்றியது அவளுக்கு.
வீட்டிலிருந்து 'அஜந்தா ஹோட்டல்' வரை நடந்து வருவதற்குள்ளேயே தெருவில் வருகிறவர்களும் போகிறவர்களும் முறைத்து முறைத்துப் பார்ப்பதை உணர்ந்து கூசியவள், டாக்ஸி கிடைக்காமல் தெருவில் நிற்க நேர்ந்த போது இன்னும் அதிகமாகக் கூசினாள்.
உயரமும் வாளிப்புமாக - நாலு பேர் பார்வையைக் கவருகிற விதத்தில் இருப்பவர்கள் தெருவில் நடந்தாலே உற்று உற்றுப்பார்க்கிற உலகம் அழகு, கவர்ச்சி ஆகியவை தவிர நட்சத்திரக் களையும் உள்ள ஒருத்தி தெருவில் வந்துவிட்டால் சும்மா விடுமா? பார்க்கும் ஒவ்வொரு ஜோடிக் கண்களும் அவளைக் கூச வைத்தன? தலைகுனியச் செய்தன.
அரைமணி நேரத்துக்குப் பிறகு ஒரு டாக்ஸி கிடைத்தது. நல்ல வேளையாக 'போக் ரோடு' திரும்பும் போதே எதிரே காரில் கோபால் எங்கோ வெளியே போவதை டாக்ஸியிலிருந்து அவள் பார்த்துவிட்டாள். அவள் தான் கோபாலைப் பார்த்தாள், கோபால் அவளைப் பார்க்காதது அவளுக்கு வசதியாய்ப் போயிற்று. டாக்ஸியை பங்களா முகப்புக்கு விடச் சொல்லாமல் நேரே 'அவுட்ஹவுஸ் முகப்புக்கு விடச்சொன்னாள் அவள். அவுட்ஹவுஸ் ஜன்னல்களில் விளக்கொளி பளிச்சிட்டது. முத்துக்குமரன் வெளியே எங்கும் போயிருக்கவில்லை என்பதை அவள் அநுமானித்துக் கொள்ள முடிந்தது. புறப்படும்போது பட்ட தொல்லையை மறுபடி பட நேரிட்டுவிடாமல் இருக்க - வந்த டாக்ஸியையே 'வெயிட்டிங்'கில் நிறுத்திக் கொண்டாள்.
நாயர்ப் பையன் வாசற்படி அருகே நின்றிருந்தான். ஏறக்குறைய அவுட்ஹவுஸ் வாயிற்படியை வழி மறிப்பது போலவே அவன் நின்று கொண்டிருந்தாற்போலத் தோன்றியது.
''யார் வந்தாலும் உள்ளே விட வேண்டாம்னு ஐயா சொல்லி இருக்கு...''
அவளுடைய பார்வையின் கடுமையைத் தாங்க முடியாமல் அவன் வழியைவிட்டு விலகிக் கொண்டான். உள்ளே நுழைந்ததும் அவள் தயங்கி நின்றாள்.
முத்துக்குமரனுக்கு முன்னால் டீப்பாயில் பாட்டிலும் கிளாஸ்களும் சோடாவும் 'ஓபன'ரும் வைக்கப்பட்டிருந்தன. அவன் குடிப்பதற்கு தயாராயிருப்பதுபோல் தோன்றியது. வாசலருகிலே தயங்கினாற் போல மாதவி அவனை ஒரு கேள்வி கேட்டாள்.
''ரொம்ப பெரிய காரியத்தைச் செய்யத் தொடங்கியிருக்கீங்க போலிருக்கு. உள்ளே வரலாமா, கூடாதா?... பயமாயிருக்கே.''
''அவங்க அவங்களுக்கு, அவங்க அவங்க செய்யிறது பெரிய காரியம் தான்.''
''உள்ளே வரலாமா?''
''சொல்லிட்டுப் போறவங்கதான் மறுபடி கேட்டுக்கிட்டு வரணும். சொல்லாமலே எங்ககெங்கியோ எவனெவனோடவோ போறவங்க வர்றவங்களைப் பத்தி என்ன சொல்றதுக்கு இருக்கு?''
''இன்னும் என்னை உள்ள வரச் சொல்லி நீங்க கூப்பிடலை.''
''அப்பிடிக் கூப்பிடணும்னு ஒண்ணும் கண்டிப்பு இல்லே.''
''அப்படியானா நான் போயிட்டு வரேன்.''
''அதுக்கென்ன? இஷ்டம்போலச் செய்துக்கலாம்.''
ஓர் அசட்டுத் தைரியத்தில் போய்விட்டு வருவதாகச் சொல்லி விட்டாளே ஒழிய அவளால் அங்கிருந்து ஓர் அங்குலம் கூட வெளியே நகர முடியவில்லை. அவனுடைய அலட்சியமும் கோபமும் அவளை மேலும் மேலும் ஏங்கச் செய்தன. முகம் சிவந்து கண்களில் ஈரம் பளபளக்க நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருந்தாள் அவள்.
அவன் குடிப்பதற்குத் தயாராகிக் கொண்டிருந்தான். அவன் முற்றிலும் எதிர்பாராத விதமாகத் திடீரென்று அவள் பாய்ந்து வந்து கீழே குனிந்து அவனுடைய பாதங்களைப் பற்றிக்கொண்டாள். அவளுடைய கண்களின் ஈரத்தை அவன் தன் பாதங்களில் உணர்ந்தான்.
''நான் அன்னைக்கி செஞ்சது தப்புதான்? பெரிய மனசு பண்ணி என்னை மன்னிச்சிடுங்க.''
''என்னைக்கு செஞ்சது? எதுக்கு திடீர்னு இந்த நாடகம்?''
''உங்களைத் துணைக்கு வரச்சொல்லி கூப்பிட்டப்புறம் - நான் கோபால் சாரோட காரிலே வீட்டுக்குப் போயிருக்கப்படாது. திடீர்னு அவரைப் பகைச்சுக்கவோ, முகத்தை முறிச்சுக்கவோ முடியாமப் போயிட்டது.''
''அதான் அன்னிக்கே சொன்னேனே யார் துணையாக் கெடச்சாலும் உடனே கூடப் போறவங்க யாரோட போனாத்தான் என்ன?''
''அப்பிடிச் சொல்லாதீங்க...நான் முன்னாடி அந்த மாதிரி இருந்திருக்கலாம். இப்ப அப்பிடி இல்லே? உங்களைச் சந்திச்சப்புறம் நீங்க தான் எனக்கு துணைன்னு நான் நினைச்சிட்டிருக்கேன்.''
''.........''
''ஒண்ணு என் வார்த்தையை நம்புங்க. அல்லது இப்ப விழுந்து கதறும் கண்ணீரையாவது நம்புங்க. நான் மனசறிஞ்சு உங்களுக்குத் துரோகம் செய்ய மாட்டேன்.''
மீண்டும் அவளுடைய பூப்போன்ற முகமும், இதழ்களின் ஈரமும், கண்ணீரும் தன் பாதங்களை நனைப்பதை முத்துக்குமரன் உணர்ந்தான். அவனுடைய மனம் இளகியது. அவளை மறப்பதற்காகத்தான் எதிரே இருக்கும் மதுவை அவன் நாடினான். அவளோ சில விநாடிகளுக்குள்ளே மதுவையே மறக்கச் செய்து விட்டாள். எதிரே மது இருக்கிறது என்ற நினைவே இல்லாதபடி தன்னுடைய கண்ணீரால் அவனை இளகச் செய்திருந்தாள் அவள்.
தன் காலடியில் மண்டியிட்டு அமர்ந்திருக்கும் அவளுடைய கூந்தலின் நறுமணத்திலும், மேனியின் வாசனைகளிலும் கிறங்கினான் அவன். கண்ணீர் மல்கும் அவளுடைய அழகிய விழிகள் எழுதிய சித்திரத்தைப் போல் அவனுடைய உள்ளத்திற்குள் புகுந்து பதிந்து கொண்டன.
''நடந்தாவது வீட்டுக்குப் போகலாம். ஆனா நீங்க மட்டும் துணைக்குக் கூட வரணும்னு சொன்னப்ப இருந்த ரோஷம் அப்புறம் எங்கே போச்சோ தெரியலே?''
''நல்லா யோசனை பண்ணினீங்கன்னா உங்களுக்கே தெரியும்! ஒரு மனுஷன் காரைக் கொண்டாந்து பக்கத்திலே நிறுத்திக்கிட்டு, 'புறப்படு போகலாம்'னு தார்க்குச்சி போடறப்ப எப்பிடி மாட்டேங்கறது?''
''அடிமைப்பட்டுப் போயிட்டா அப்பிடிச் சொல்ல முடியாது தான்...''
''யாரும் யாருக்கும் அடிமைப்பட்டுப் போயிடலை! அதுக்காகச் சாதாரண முகதாட்சண்யத்தைக்கூட விட்டிட முடியாது.''
- கூறிக்கொண்டே அவள் எழுந்து நின்றாள். வாசற் பக்கம் போய் கைதட்டி நாயர்ப் பையனைக் கூப்பிட்டாள். அவன் வந்தான்.
''இதெல்லாம் இங்கேருந்து எடுத்துக்கிட்டுப் போ. வேணாம்'' என்று முத்துக்குமரனைக் கேட்காமலே பாட்டிலையும் கிளாஸ்களையும் எடுத்துக் கொண்டு போகும்படி பையனுக்குக் கட்டளையிட்டாள் அவள். அவளுடைய கட்டளையை அவன் மறுக்கவில்லை.
அவன் ஒருவேளை அந்த பாட்டில்களையும் கிளாஸ்களையும் எடுத்துக் கொண்டு போகக் கூடாதென்று தடுப்பானோ என்ற தயக்கத்தில் பையன் ஓரிரு விநாடிகள் பின்வாங்கினான். எடுத்துக் கொண்டு போ' என்ற உத்தரவு முத்துக்குமரன் வாய்மொழியாக வந்தாலொழிய பையன் அவற்றை எடுத்துக் கொண்டு போகமாட்டான் போலத் தோன்றியது. முத்துக்குமரனும் வாய் திறந்து அப்படிச் சொல்லவில்லை. மௌனம் எல்லாத் தரப்பிலும் நீடிக்கவே பையனும் தயங்கி நின்றான்.
ஐந்து நிமிஷத்துப்பின், 'எடுத்துக் கொண்டு போய்த் தொலையேன், ஏன் நிக்கிறே' என்ற பாவனையில் கையால் பையனுக்கு ஜாடை காண்பித்தான் முத்துக்குமரன். பையன் உடனே டிரேயோடு கிளாஸ்களையும் பாட்டிலையும் எடுத்துக் கொண்டு போனான். அவள் பிரியத்தோடு அவனைக் கேட்டாள்:
''ஏன் இந்தக் கெட்டப் பழக்கம்? அளவுக்கு மீறினா உடம்பு கெட்டுப் போயிடுமே?''
''ஓகோ! நீ ரொம்ப ரொம்ப நல்ல பழக்கங்கள்ளாம் உள்ளவ. அதனாலே எங்கிட்ட என்னென்ன கெட்ட பழக்கம்லாம் இருக்குன்னு நீ கண்டுபிடிச்சுச் சொல்ல வேண்டியது தான்.''
''அப்பிடி நான் சொல்ல வரலே, நான் ரொம்ப ரொம்பக் கெட்டவன்னே நீங்க சொன்னாலும் நீங்க எனக்கு நல்லவர்தான்.''
அவன் கிண்டலாக ஒரு வாக்கியம் சொன்னான்;
''காக்காய் பிடிக்கவும் உனக்குத் தெரிஞ்சிருக்கே...?''
''விடலாமா பின்னே? உங்க தயவை நான் எப்படியும் அடைஞ்சாகணும்-''
''வாயரட்டையிலே ஒண்ணும் கொறைச்சல் இல்லே?''
''இவ்வளவு பயப்படறப்பவே - உங்ககிட்டக் காலந்தள்ளுறது சிரமமாயிருக்கு! வாயரட்டைன்னு வேற சொல்றீங்களே?''
இவ்வளவு நேரத்திற்குப்பின் ஒருவருக்கொருவர் தாக்குதல் இன்றி சுபாவமாகப் பேசிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. தன் மனத்தை உறுத்திக் கொண்டிருந்த சந்தேகத்தைக் கேள்வியாகவே அவனிடம் கேட்டாள் அவள்.
''மலேயா போறதுக்கான பாஸ்போர்ட் அப்ளிகேஷன்ல எல்லாம் கையெழுத்துப் போட்டுக் குடுத்திட்டிங்களா?''
''நான் அங்கெல்லாம் வராம இருந்தா உங்களுக்கெல்லாம் ரொம்ப சௌகரியமாகயிருக்குமில்லே?''
''சும்மா இப்படி எல்லாம் குத்தலாகப் பேசாதீங்க. நீங்க வந்தாத்தான் எனக்கு சௌகரியமாகும் - ''
தன் காதில் பூக்களாக உதிரும் இந்த வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டே அருகில் நின்ற அவளுடைய செழிப்பான தோள்களைப் பற்றினான் முத்துக்குமரன். அந்தப் பிடி இறுகி வலிப்பது போல் - அதன் சுகத்தில் மூழ்கிக் கொண்டே சிணுங்கினாள் அவள். பூங்குவியலாய் அவள் மேனி அவனைப் பிணைத்து இறுக்கியது. மூச்சுக்கள், பரஸ்பரம் திணறும் ஒலிகள் சுகத்தைப் பிரதிபலிப்பனவாக ஒலித்தன. இருவர் காதிலும் அந்த மூச்சுக்களே மதுர சங்கீதமாக நிறையும் நிலையில் அவர்கள் இருந்தனர். அவள் குரல் அந்த மதுர சங்கீதத்தின் அலைகளாக அவன் செவிகளில் பெருகியது.
''அந்தப் பத்திரிகையிலே நம்ம படம் போட்டிருக்கான் பார்த்தீர்களா?''
''வந்தது! படத்திலே என்னா இருக்கு?''
''நேரதான் எல்லாம் இருக்கா?''
''சந்தேகமில்லாம....''
அவன் பிடி அவளைச் சுற்றி இறுகியது.
''தோட்டத்தில் போய் புல் தரையிலே உட்கார்ந்து பேசுவமே?'' என்று மெதுவாக அவன் காதருகே வந்து முணுமுணுத்தாள்.
திடீரென்று கோபால் அங்கே வந்து விடுவானென்று அவள் பயப்படுவதாகத் தோன்றியது அவனுக்கு. ஆனாலும் அவள் கூறியதற்கு இணங்கி அவளோடு தோட்டத்திற்குச் சென்றான் அவன்.
அவர்கள் தோட்டத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது கோபால் வெளியேயிருந்து திரும்ப வந்து விட்டான், அவுட்ஹவுஸில் போய்த் தேடிவிட்டு அவனும் தோட்டத்தில் அவர்கள் உட்கார்ந்திருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தான். அவன் கையில் அந்தப் பத்திரிகை இருந்தது.
''இதைப் பாத்தியா வாத்தியாரே? உன்னைப் பத்தி ரொம்பப் பிரமாதமா ஜில் ஜில் எழுதியிருக்கானே?''
''பிரமாதமா ஒண்ணுமில்லே. நான் சொன்னதைத் தானே எழுதியிருக்கான்? பிரமாதமா இருக்கிறதைப் பிரமாதமா எழுத வேண்டியதுதானே?''
''அப்படியா? அப்ப எல்லாமே நீ சொன்னதைத்தான் எழுதியிருக்காங்கன்னு சொல்லு.''
இந்த கேள்வியைக் கோபால் குறும்புத்தனமான குரலில் வினவினான். எதற்காக அவன் இதை இவ்வளவு தூரம் வற்புறுத்திக் கேட்கிறான் என்பது அவர்கள் இரண்டு பேருக்குமே விளங்கவில்லை. சிறிது நேரமாகிய பின்பே இருவருக்கும் அவன் அப்படிக் கேட்டதன் உள்ளர்த்தம் மெல்ல மெல்லப் புரியத் தொடங்கியது. 'முத்துக்குமரன் மாதவியை மணந்து கொள்ள ஆசைப்படுகிறார்' - என்ற அர்த்தத்தில் அந்தப் பத்திரிகைப் பேட்டியில் காணப்பட்ட ஒரு பகுதிதான் கோபாலின் எல்லாக் கேள்விகளுக்கும் காரணமென்று தெரிய வந்தது.
சிறிது நேரம் மூவருக்குமிடையே மௌனம் நிலவியது.
''இந்தப் பேட்டியில் இருக்கிற படம்கூட சமீபத்திலே எடுத்ததுதான் போலிருக்கு'' - என்று அவர்கள் இருவரும் இணைந்ததாக வெளியாகியிருந்த புகைப்படத்தைக் காட்டிக் கோபாலே மீண்டும் தொடங்கினான்.
-------------
அத்தியாயம் - 14
அந்தப் பத்திரிகைப் படத்தைப் பற்றிய கவனத்தை கோபாலிடமிருந்து வேறு திசைக்குத் திருப்பிவிட முயன்றாள் மாதவி. முத்துக்குமரன் கோபாலின் கேள்விகளைப் பொருட்படுத்தாமலே இருந்து விட்டான். இப்படிப்பட்ட கேள்விகளைத் தங்களிருவரையும் தேடிவந்து அவன் கேட்பதே சிறுபிள்ளைத்தனமாகத் தோன்றியது முத்துக்குமரனுக்கு; முத்துக்குமரன் கோபால் இருவருமே கோபித்துக் கொண்டு விடாமல் நாசூக்காக நிலைமையைச் சமாளித்துவிட விரும்பினாள் மாதவி. அவளுடைய முயற்சி பயனளிக்கவில்லை.
சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தபின், "இராத்திரி பிளேன்ல அப்துல்லா ஊருக்குத் திரும்பராரு. நான் வழியனுப்ப 'ஏர்ப்போர்ட்' போறேன். நீங்க யாராச்சம் வரீங்களா?" என்று கோபால் கேட்டான்.
முத்துக்குமரன், மாதவி இருவருமே ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனரே ஒழிய அவனுக்கு மறுமொழி கூறவில்லை. அவர்கள் தயக்கத்தைப் புரிந்து கொண்ட அவன்,
"சரி நான் போயிட்டு வரேன்" - என்று விமான நிலையத்துக்குப் புறப்பட்டான். போகும் போது அந்தப் பத்திரிகையை அவன் எடுத்துச் செல்லவில்லை. அங்கேயே புல்தரையில் மறந்தார்ப் போலப் போட்டு விட்டுப் போய் விட்டான்.
"அப்துல்லாவை வழியனுப்பறத்துக்கு நீ போவியே? போகலியா?" - என்று முத்துக்குமரன் கோபால் தலைமறைந்ததும் மாதவியைக் கேலி செய்தான்.
அப்போது நாயர்ப் பையன் ஓடி வந்து, "டாக்ஸி ரொம்ப நேரமா வெயிட்டிங்கில் இருக்கு. டிரைவர் சத்தம் போடறான்" - என்று அவள் நிறுத்தி விட்டு வந்த டாக்ஸியைப் பற்றி நினைவூட்டினான். தான் ஒரு டாக்ஸியில் வந்ததையும் அது வெகு நேரமாக வெயிட்டிங்கில் நிற்பதையும் அவள் அப்போதுதான் நினைவு கூர்ந்தாள். உடனே முத்துக்குமரனின் பக்கம் திரும்பி, 'நான் புறப்படட்டுமா? இல்லை இன்னும் கொஞ்ச நேரம் இருந்திட்டுப் போகட்டுமா?' என்று கேட்பது போன்ற பாவனையில் பார்த்தாள். முத்துக்குமரன் அவளைப் போகச் சொன்னான்.
"டாக்ஸி நிற்கிறதுன்னாப் புறப்பட்டுப் போயேன். நாளைக்குப் பார்த்துக்கலாம்."
அவள் போக மனமின்றியே புறப்பட்டாள். அவனிடம் இன்னும் நிறையப் பேச வேண்டுமென்று மனத்தில் ஒரு குறையோடுதான் புறப்பட்டாள் அவள். அவன் தோட்டத்திலிருந்து எழுந்து அவுட்ஹவுஸு க்குப் போய்ச் சேர்ந்தான்.
மறுநாள் காலையில் பிரயாணத்துக்காகப் புதிய பட்டுப் புடவைகள் எடுத்துக் கொள்ளச் சொல்லி - அவளுக்கு டெலிபோன் செய்தான் கோபால். பாண்டிபஜாரில் ஏர்க்கண்டிஷன் செய்த பட்டு ஜவுளிக்கடை ஒன்றில் கோபாலுக்கு அக்கவுண்ட் உண்டு. நாடகங்களுக்கு வேண்டிய பட்டுப் புடவைகளைக்கூட அவள் அங்கே போய்த்தான் எடுத்துக் கொள்வது வழக்கம். பில் நேரே அங்கிருந்து கோபாலுக்கு அனுப்பப்பட்டுவிடும். "பதினொரு மணிக்கு நீ அங்கே வருவேயின்னு கடைக்காரர்களுக்கு ஃபோன் பண்ணிச் சொல்லிடட்டுமா?" - என்று கோபால் அவளிடம் கேட்ட போது அவள் சரி என்று சொல்லியிருந்தாள். அதனால் அவசர அவசரமாகக் குளித்து உடை மாற்றிக் கொண்டு புறப்படத் தயாரானாள் அவள்.
சிங்கப்பூருக்குப் புறப்படுவதற்கு இன்னும் சில நாட்களே இருந்தன. அதற்குள் எல்லா ஏற்பாடுகளையும் செய்தாக வேண்டும். ஸீன்கள், ஸெட்டிங் அயிட்டங்கள் ஆகியவற்றுடனும் - விமானத்தில் கொண்டு போக முடியாத வேறு கனமான நாடகப் பொருள்களுடனும் பதினைந்து இருபது பேர் இன்னும் இரண்டு நாட்களில் கப்பலில் புறப்பட இருந்தார்கள். விமானத்தில் குறைந்த கனமுள்ள பொருள்களை மட்டுமே கொண்டு போக வேண்டுமென்று திட்டமிடப்பட்டிருப்பதால் - ஒரு வேளை அதிகப்படியான புடவை துணிமணிகளைக்கூடக் கப்பலில் முன்கூட்டியே கொடுத்தனுப்பிவிட வேண்டியிருக்கும். ஆகவேதான் கோபால் சொன்னவுடன் தட்டிச் சொல்லாமல் உடனே புடவை கடைக்குப் போக ஒப்புக் கொண்டிருந்தாள் அவள். கோபாலின் குழு மலேயாவில், முத்துக்குமரனால் எழுதிப் புதிதாக அரங்கேற்றப்பட்ட சரித்திர நாடகத்தைத் தவிர வேறு இரண்டொரு சமூக நாடகங்களையும் போட வேண்டியிருந்தது. அந்த சமூக நாடகங்களை எப்போதோ தொடக்க நாட்களில் கோபாலும், மாதவியும் நடித்திருந்தார்களாயினும் மறுபடி அவற்றை நடிப்பதற்குத் தயாராக வேண்டிய நிலையில் அவர்கள் இருந்தார்கள். 'கழைக் கூத்தியின் காதல்' - என்ற சரித்திர நாடகத்தை மட்டுமே அப்துல்லா பார்த்து ஒப்பந்தம் செய்திருந்தாலும் தொடர்ந்து ஒரு மாதத்திற்கு மேல் வெளிநாட்டு நகரங்களில் அந்த ஒரே நாடகத்தை நடத்துவதிலுள்ள சிரமங்களை உணர்ந்தே வேறு நாடகங்களையும் இடையிடையே சேர்க்க வேண்டியிருந்தது. சமூக நாடகம், சரித்திர நாடகம் எல்லாவற்றிலும் மாற்றி மாற்றி மாதவிதான் கதாநாயகியாக நடிக்க வேண்டும். அதனால் அந்தப் பாத்திரங்களுக்கேற்றபடி நவநாகரிகப் பட்டுப் புடவைகள் எடுத்துக்கொள்ள வேண்டியிருந்தது. பகல் பதினொரு மணிக்குப் போனால் ஒரு மணி வரையாவது ஆகும். போக் ரோடு - பங்களாவிற்குப் போய்த் தன்னோடு முத்துக்குமரனை உடனழைத்துக் கொண்டு போக விரும்பினாள் அவள். தன்னோடு முத்துக்குமரனைப் புடவைக் கடைக்கு உடன் அழைத்துச் செல்ல எண்ணிய போதே அந்த எண்ணத்தின் மறுபுறம் தயக்கமாகவும் இருந்தது அவளுக்கு. அவன் உடன்வர மறுத்து விடுவானோ என்று பயந்தாள் அவள்.
"ஐயா உங்களைப் புடைவைக் கடைக்கு அழைச்கிட்டுப் போகச் சொன்னாரு" என்று டிரைவர் பத்தேகால் மணி சுமாருக்கே அவள் வீட்டு வாசலில் காரைக் கொண்டு வந்து நிறுத்திவிட்டான்.
அவள் காரில் ஏறி உட்கார்ந்ததும், "நேரே பாண்டி பஜாருக்குத்தானே" என்று கேட்ட டிரைவரிடம்,
"இல்லே! பங்களாவுக்கே போ. அவுட்ஹவுஸ்லேருந்து வசனகர்த்தா சாரையும் கூட்டிக்கிட்டுப் போயிடுவோம்" - என்றாள் மாதவி. கார் போக் ரோட்டை நோக்கி விரைந்தது.
- அவள் போய்ச் சேர்ந்தபோது முத்துக்குமரன் அவுட்ஹவுஸ் வராந்தாவில் உட்கார்ந்து அன்றைய காலைத் தினசரியைப் படித்துக் கொண்டிருந்தான். அவள் காரிலிருந்து இறங்கி அருகே போய் நின்றதும் அவன் பேப்பரிலிருந்து தலையை வெளியே நீட்டி எட்டிப் பார்த்தான்.
"வாசனை ஜமாய்க்குதே? அப்துல்லா கொடுத்த செண்ட் போலேருக்கு..."
"இன்னார் கொடுத்தான்னு கூட வாசனையே எடுத்துச் சொல்லுமா என்ன..."
"சொல்லுதே! சும்மாவா? கமகமனில்ல சொல்லுது - "
அவள் பதிலொன்றும் பேசாமல் புன்னகை புரிந்தாள்.
"எங்கியோ வெளியிலே கிளம்பிட்டாப்ல இருக்கு."
"ஆமாம்! உங்களையும் அழச்சிட்டுப் போகலாம்னு தான் வந்திருக்கேன்."
"நானா? நான் எதுக்கு? இப்ப என்னைக் கூப்பிட்டப்புறம் பாதி தூரம் போனதும் வேற யாரோடவாவது காரிலே ஏறிப் போயிடறதுக்கா?"
"உங்களுக்கு என் மேலே கொஞ்சம்கூட இரக்கமே கிடையாதா? இன்னும் அதையே சொல்லிக் குத்திக்காட்டிக்கிட்டிருக்கீங்களே..."
"நடக்கறதைச் சொன்னேன்."
"அப்படி அடிக்கடி சொல்லிச் சொல்லிக் காட்டறதிலே என்னதான் இருக்கோ! தெரியலே..."
"நீ செய்யலாம்? அதை நான் சொல்லிக் காட்டக் கூடாதா என்ன?"
"தப்புச் செய்யறவங்களை மன்னிக்கிறதுதான் பெருந்தன்மைம்பாங்க..."
"அந்தப் பெருந்தன்மை எனக்கு இல்லைன்னுதான் வச்சுக்கயேன்..."
"சும்மா முரண்டு பிடிக்காதீங்க...நான் ஆசையோட கூப்பிடறேன்... மாட்டேன்னு சொல்லி என் மனசைச் சங்கடப்படுத்தாமே புறப்பட்டு வாங்க..."
"அப்பப்பா...இந்தப் பொம்பளைங்களோட பழகறது எப்பவுமே..."
"பெரிய வம்புதான்னு வச்சுக்குங்களேன்" என்று அவன் தொடங்கி அரை குறையாக நிறுத்தியிருந்த வாக்கியத்தை அவள் முடித்தாள்.
சிரித்துக்கொண்டே சட்டையை எடுத்துப் போட்டுக் கொண்டு அவளோடு புறப்படத் தயாரானான் அவன்.
புறப்பட்டுப் படியிறங்குகிறபோதுதான். "எங்கே போகணும்கிறே இப்ப?-" என்று போக வேண்டிய இடத்தைப் பற்றிக் கேட்டான் அவன்.
"பேசாமே எங்கூட வந்தீங்கன்னாத் தானே தெரியுது" என்று உரிமையோடு அவனை வற்புறுத்தினாள் அவள்.
-கடை வாசலில் போய் இறங்கிய பின்புதான் அவள் தன்னைப் புடைவைக் கடைக்கு அழைத்துக் கொண்டு வந்து விட்டாள் என்பது அவனுக்குப் புரிந்தது. அவன் அவளைக் கேலி செய்யத் தொடங்கினான்.
"ஓகோ! இப்பவே வற்புறுத்திப் புடைவைக் கடைக்கு இழுத்துக்கிட்டு வர்ர அளவுக்குப் போயாச்சா? உருப்பட்டாப்லதான் போ - " அவன் இவ்வாறு கூறியது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.
"நீங்கள் பார்த்து எது எது பிடிக்கிறது என்று சொல்கிறீர்களோ, அதை மறு பேச்சுப் பேசாமல் எடுத்துக் கொள்ளப் போகிறேன்."
"புடைவைகளைக் கட்டிக் கொள்ளப் போகிறவன் நான் இல்லையே; கட்டிக்கொள்ளப் போகிறவர்கள் அல்லவா பிடித்தமானதைக் தேர்ந்தெடுக்க வேண்டும்!"
"உங்களுக்கு எது பிடிக்குமோ அதுதான் எனக்கும் பிடித்ததாயிருக்கும்."
கடைக்காரர்கள் அவர்கள் இருவரையும் அபூர்வமாக வரவேற்றனர்.
"கோபால் சார் ஃபோன் பண்ணிச் சொன்னாரும்மா. அப்பருந்து தயாரா, எப்போ வரப்போறீங்கன்னு எதிர்பார்த்துக் காத்துக்கிட்டிருக்கோம்" என்று வாயெல்லாம் பல்லாக எதிர்கொண்டார் கடை முதலாளி.
கீழே விரிக்கப்பட்டிருந்த புது ஜமுக்காளத்தில் மடிப்பு மடிப்பாகப் பட்டுப் புடைவைகள் அடுக்கப்பட்டிருந்தன. முத்துக்குமரனும் அவளும் ஜமுக்காளத்தில் அமர்ந்து கொண்டனர்.
"சார் தான் எங்க புது நாடகத்தை எழுதிய ஆசிரியர். ரொம்பப் பெரிய படிப்பாளி. பெரிய கவிஞர்" என்று மாதவி அவனை அவர்களுக்கு அறிமுகப்படுத்தத் தொடங்கியபோது, "போதும்! காரியத்தைப் பார்..." என்று அவள் காதருகே முணுமுணுத்தான் அவன்.
குளிர்ந்த ரோஸ் மில்க் இரண்டு கிளாஸ்களில் அவர்கள் எதிரே கொண்டு வந்து வைக்கப்பட்டது.
"இதெல்லாம் எதுக்குங்க...?" என்றாள் மாதவி.
"உங்களைப் போலொத்தவங்க நம்ம கடைக்கு வர்ரதே அபூர்வம்..." என்று மோதிரங்கள் அணிந்த கையைக் கூப்பி உபசாரம் செய்யலானார் கடைக்காரர்.
பட்டு வேஷ்டி, சில்க் ஜிப்பா, வெற்றிலைக் காவியேறிய புன்னகை - பட்டின் வழவழப்பைவிட அதிகம் மென்மையுள்ள முகமன் வார்த்தைகள், ஆகியவற்றோடு கடைக்காரர் அவர்களிடம் மிகவும் நாசூக்காகவும் விநயமாகவும் பழகினார்.
நிறங்களும், மினுமினுப்பும், கரைகளும், அமைப்பும் ஒன்றையொன்று விஞ்சுகிறாற் போன்ற விதத்தில் புடைவைகள் அவர்களுக்கு முன்னால் குவிக்கப்பட்டன.
"இது உங்களுக்குப் பிடிச்சிருக்கா?" என்று கிளிப்பச்சை நிறப் பட்டுப்புடைவை ஒன்றை எடுத்துக் காண்பித்தாள் அவள்.
"கிளிகளுக்கு எல்லாம் பச்சை நிறம் பிடிப்பது நியாயமானதுதானே?" என்று புன்முறுவலோடு மறுமொழி கூறினான் முத்துக்குமரன். புடைவை எடுத்துக் கொண்டிருந்தவள் அவன் முகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டே சொன்னாள்;
"இந்தக் குறும்புதானே வேண்டாம்னு சொன்னேன்."
"புடைவையைப் பத்தி ஆம்பிளைகிட்டக் கேட்டா என்ன தெரியும்?"
சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் பல கட்டுக்களை விரித்தும், உலைத்தும் பார்த்தபின் - பன்னிரண்டு புடைவைகளைத் தேர்ந்தெடுத்தாள் மாதவி.
"நீங்க ஏதாவது பட்டுவேஷ்டி எடுத்துக்கிறீங்களா?"
"வேண்டாம்."
"சரிகைக்கரை போட்ட வேஷ்டி உங்களுக்கு ரொம்ப எடுப்பா இருக்குங்க...'' இது கடைக்காரர். முத்துக்குமரன் மறுத்துவிட்டான். கடையிலிருந்து அவர்கள் திரும்பும்போது பகல் இரண்டு மணிக்கு மேல் ஆகிவிட்டது. அவர்கள் பங்களாவுக்குத் திரும்பியபோது கோபாலின் காரியதரிசி ரீஜனல் பாஸ்போர்ட் ஆபீஸிலிருந்து பாஸ்போர்ட்களை வாங்கிக் கொண்டு வந்திருந்தார். சிறிது நேரத்தில் பாஸ்போர்ட்கள் அவரவர்கள் கைவசம் ஒப்படைக்கப்பட்டன. கப்பலில் முன்கூட்டியே புறப்படுகிறவர்கள் பிரயாணத்துக்காகத் தயாராகிக் கொண்டிருந்தார்கள். ஸீன்கள், நாடகப் பொருள்கள், ஸெட்டிங்குகள் எல்லாம் கப்பலில் கொண்டு போவதற்குரிய முறையில் கட்டப்பட்டன.
நடிகர் சங்கம் ஒரு வழியனுப்பு உபசார விருந்துக்கு எற்பாடு செய்திருந்தது. கோபால் குழுவினர் மலேயா செல்வதை முன்னிட்டு நடைபெறுவதாக விளம்பரப் படுத்தப்பட்டிருந்த அந்த விழாவில் கப்பலில் போகும் கலைஞர்களுடன் கோபால், மாதவி, முத்துக்குமரன் அனைவருமே கலந்து கொண்டனர். சங்கத்தின் தலைவர், கோபால் குழுவினர் - தங்கள் கலைப் பயணத்தை வெற்றி கரமாக நடத்திக்கொண்டு வரவேண்டுமென்று வாழ்த்துக் கூறினார்.
நாள் நெருங்க நெருங்கத் தெரிந்தவர்கள் வீட்டில் விருந்து, வழியனுப்பு உபசாரம் என்று தடபுடல்கள் அதிகமாயின. சிலவற்றில் முத்துக்குமரன் கலந்துகொள்ளவில்லை. ஒருநாள் மாலை மாதவியே அவனை ஒரு விருந்துக்கு வற்புறுத்தினாள். தனக்கு மிகவும் சிநேகிதமான ஒரு நடிகை கொடுக்கிற வழியனுப்பு உபசார விருந்து அது என்று அவள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவன் போகவில்லை. விமானத்தில் பயணம் புறப்பட வேண்டிய தினத்திற்கு முந்திய நாள் இரவு - முத்துக்குமரனையும், கோபாலையும் தன் வீட்டிற்குச் சாப்பிடக் கூப்பிட்டிருந்தாள் மாதவி.
முத்துக்குமரன் விருந்துண்ண இருந்த தினத்தன்று மாலையிலேயே மாதவியின் வீட்டுக்கு வந்துவிட்டான். மாலையில் காபி சிற்றுண்டி கூட அங்கேதான் சாப்பிட்டான். அவளும் அவனும் அன்று மிகப் பிரியமாக உரையாடிக் கொண்டிருந்தாள். இடையிடையே சிறு சிறு நட்சத்திரங்களோடு கூடிய கறுப்பு நிறப் பட்டுப்புடவையை அன்று அவள் அணிந்திருந்தாள். அவளுடைய மேனியின் பொன் நிறத்தை அந்தப் புடவை நன்கு எடுத்துக் காட்டியது. பேசிக் கொண்டிருக்கும்போதே அவளுடைய கோலத்தைப் புகழ்ந்து அவன் ஒரு கவிதை வரி கூறினான்:
"இருளைப் புனைந்துடுத்தி
இளமின்னல் நடந்துவரும்-"
அந்தக் கவிதை வரி அவளை மிக மிக மகிழச் செய்தது. "ரொம்ப அழகாகப் பாடி என்னைப் பிரமாதமாய்ப் புகழ்ந்திருக்கீங்க! அட்சரலட்சம் கொடுக்கலாம் இதுக்கு."
"நிஜமாச் சொல்றீயா, அல்லது உன்னைப் புகழ்ந்ததுக்காகப் பதிலுக்கு என்னைப் புகழணும்னு புகழறியா?..."
"நீங்க அதைச் சொல்றப்ப கேக்கறதுக்கு அழகாயிருந்திச்சு, புகழ்ந்தேன்-"
அவர்கள் இருவரும் இவ்வாறு பேசிக் கொண்டிருந்த போது கோபாலிடமிருந்து ஃபோன் வந்தது. மாதவி தான் ஃபோனை எடுத்துப் பேசினாள்.
"இன்கம்டாக்ஸ் விஷயமா ஒருத்தரை அவசரமாப் பார்க்க வேண்டியிருக்கு. நான் இன்னிக்கு அங்கே வர்ரத்துக்கில்லே மன்னிச்சுக்க..."
"இப்படிச் சொன்னா எப்படி? நீங்க அவசியம் வரணுமே! நானும் வசனகர்த்தா சாரும் ரொம்ப நேரமா உங்களை எதிர்பார்த்துக் காத்துக் கிட்டிருக்கோம்."
"இல்லை! இன்னிக்கு முடியும்னு தோணலை எனக்கு, முத்துக்குமாரு வாத்தியாரிடம் சொல்லிடு."
- அவள் முகம் மெல்ல இருண்டது. ஃபோனை வைத்துவிட்டு. "அவரு வரலியாம். யாரோ இன்கம்டாக்ஸ் ஆளைப் பார்க்கப் போகணுமாம்" என்று முத்துக்குமரனை நோக்கிக் கூறினாள் மாதவி.
"அதுக்கென்ன உனக்கு இவ்வளவு சடைவு?"
"சடைவு ஒண்ணுமில்லே, வர்றேன்னு சொல்லி ஒப்புக் கொண்டப்புறம் திடீர்னு இப்படிச் சொல்வதைக் கேட்டா என்னவோ போலிருக்கு."
"நான் ஒண்ணு கேக்கறேன் மாதவி, வித்தியாசமா நினைச்சுக்க மாட்டியே?"
"என்ன?...கேளுங்களேன்..."
"இன்னிக்கு விருந்துக்கு கோபால் வந்து நான் மட்டும் வராமப் போயிருந்தேன்னா எப்படி நினைப்பே நீ? -"
"அப்படி ஒண்ணைக் கற்பனை செய்யவே என்னாலே முடியலே - "
"அப்படி நடந்திருந்தா என்ன செய்வே? அதைத்தான் நான் இப்பக் கேக்கிறேன்!"
"அப்படி நடந்திருந்தா என் முகத்திலே சிரிப்பையே பார்க்க முடியாது. நான் ஏறக்குறைய நடைப்பிணமாப் போயிருப்பேன்..."
"என்ன இருந்தாலும் இப்பக் கோபால் இங்கே வரலேங்கறதுலே உனக்கு ஏமாற்றம்தான்...."
"அப்படித்தான் வச்சுக்குங்களேன் - "
"........"
"நான் வந்திருக்கேன்ங்கிறது ஒரு பெருமையா என்ன, கோபாலைப் போல ஸ்டேட்டஸ் உள்ள பெரிய நடிகன் வந்தா உனக்கும் பெருமை, அக்கம்பக்கத்தாருக்கும் அது கம்பீரமாகத் தெரியும்..."
"நீங்க சும்ம.. இருக்காமே என் வாயைக் கிண்டறீங்க? கோபால் சார் வரலேங்கிறதிலே எனக்கு வருத்தந்தான். ஆனா அவரு வராத அந்த வருத்தம் நீங்க இப்ப இங்கே வந்திருக்கிற சந்தோஷத்துக்கு ஈடானதான்னு கேட்டீங்கன்னா இல்லைன்னுதான் சொல்வேன்."
"நீ ஒரு உபசாரத்துக்கு இப்படிச் சொல்றே. அப்படித்தானே?"
"என் பிரியத்தைச் சந்தேகிச்சா நீங்க நிச்சயமா நல்லா இருக்க மாட்டீங்க..."
"இப்படி ஒரு சாபமா எனக்கு?"
"சாபம் ஒண்ணும் இல்லே. நீங்க துணைக்கு வர்ரீங்கங்கற நம்பிக்கையில தான் நான் இந்தப் பிரயாணத்துக்கே ஒப்புத்துக்கிட்டேன்- "
"கோபிச்சுக்காதே. சும்மா உன் வாயைக் கிளறிப் பார்த்தேன் -"
முத்துக்குமரன் அவள் முகத்தையும் உயிர்க்களை திகழும் அந்த வனப்பு நிறைந்த விழிகளையுமே இமையாமல் பார்த்தான். அவற்றில் அவள் சத்தியமாகத் தனக்கு அர்ப்பணமாகியிருக்கிறாள் என்ற உணர்வின் சாயலை அவன் கண்டு கொள்ள முடிந்தது. அந்தச் சத்தியமான உணர்வைக் கண்டுபிடித்த பெருமிதத்தோடு அவள் வீட்டில் விருந்துண்ண அமர்ந்தான் அவன்.
--------------
அத்தியாயம் - 15
இன்னும் மூன்று நாள், இன்னும் இரண்டு நாள் என்று எண்ணி எண்ணிக் கடைசியில் பிரயாண தினமே வந்து விட்டது. பகல் ஒரு மணிக்கு விமானம். சிங்கப்பூர் போகிற ஏர் இந்தியா போயிங்கில் பயணத்துக்கு ஏற்பாடாகியிருந்தது. முதலில் பினாங்கில்தான் நாடகங்களை நடத்தப்பட வேண்டுமென்று அப்துல்லா கண்டிப்பாகச் சொல்லியிருந்ததனால் சிங்கப்பூரில் இறங்கியதும் உடனே வேறு விமானத்தில் மாறி அவர்கள் மூவரும் பினாங்கு போக வேண்டும். அவர்களை எதிர்கொண்டு அழைத்துச் செல்வதற்காக அப்துல்லா சிங்கப்பூர் விமான நிலையத்திற்கே வந்திருப்பார்.
பிரயாண தினத்தன்று கோபால் மிகமிக மகிழ்ச்சியாயிருந்தான். மாதவியிடமும், முத்துக்குமரனிடமும் கூட முகத்தைத் தூக்கிக் கொள்ளாமல் கலகலப்பாகப் பழகினான். பங்களாவில் வருவோரும், போவோருமாக ஒரே கூட்டம். போர்டிகோவிலும், தோட்டத்திலும் இடம் போதாமல் - தெருவிலும் 'பார்க்' செய்யப்பட்டிருக்கும் அளவுக்குச் சிறிதும் பெரிதுமாக ஏராளமான கார்கள் 'போக் ரோடே' நிறைந்து காணப்பட்டன.
'ஜில் ஜில்'லும், வேறு பத்திரிகைக்காரர்களும் புகைப்படங்களை எடுத்துத் தள்ளிய வண்ணமிருந்தனர். தேடி வந்திருக்கும் யாரையும் தன் கவனத்திலிருந்து தவறவிட்டு விடாமல் எல்லாரிடமும் சொல்லி விடைபெற்றுக் கொண்டான் கோபால். பெரிய பெரிய மாலைகளை படத் தயாரிப்பாளர்களும், சக நடிகர்களும், நண்பர்களும் கொண்டு வந்து போட்ட வண்ணமாயிருந்தனர். ஹால் முழுவதும் தரையில் ரோஜா இதழ்கள் நெற்களத்தில் நெல்லைப்போல சிதறியிருந்தன. 'பொக்கே'கள் ஒரு மூலையில் மலையைப் போல் குவிந்து விட்டன. பதினொன்றே முக்காலுக்கு விமான நிலையத்திற்குப் புறப்பட ஏற்பாடாகியிருந்தது.
விமான நிலையத்திற்குப் புறப்படும்போது கோபாலுடன் அதே காரில் சக நடிகர்களும் பட முதலாளிகளும் சேர்ந்து கொண்டதால் முத்துக்குமரனும் மாதவியும் வேறொரு காரில் தனியே சென்றனர்.
மீனம்பாக்கத்திலும் பலர் மாலையணிவிக்க வந்திருந்தனர். கூட்டமும் நிறைய இருந்தது. முத்துக்குமரனுக்கு அது முதல் விமானப் பயணம். அதனால் பயணத்தைப் பற்றிய குறுகுறுப்பு மனத்தில் இருந்தது. வழியனுப்புகிறவர்களின் கூட்டம் கோபாலை மொய்த்துக் கொண்டிருந்தது. வழியனுப்ப வந்திருந்தவர்களில் பலரை மாதவி அறிந்திருந்தாலும் அவர்களோடு பேசுவதற்காகவும் சொல்லி விடை பெறுவதற்காகவும் கோபாலருகிலே போய் நின்றால் முத்துக்குமரன் தனியே விடப்படுவான் என்பதை உணர்ந்து அவனருகிலேயே இருந்தாள் அவள். நடுநடுவே கோபால் தன் பெயரைச் சொல்லி கூப்பிட்டு ஏதேதோ கேட்ட போதும் கூட அதற்குப் பதில் சொல்லிவிட்டு மறுபடி முத்துக்குமரனின் அருகிலேயே வந்து நின்று கொண்டாள் அவள்.
ஆடம்பரமும் பரபரப்பும் நிறைந்த அந்தக் கூட்டத்தில், 'தான் தனியே விடப் பட்டிருக்கிறோம்' - என்று முத்துக்குமரன் எண்ணாதபடி அவனருகே இருக்க வேண்டிய கடமை தனக்கு இருப்பதை மாதவி உணர்ந்தாள். அவனுடைய இதயம் அவளுக்கு நன்றாகப் புரிந்திருந்தது. தான் அப்படி முத்துக்குமரனின் அருகிலேயே ஒட்டிக் கொண்டு நிற்பதைக் கோபால் வித்தியாசமாக எடுத்துக் கொள்வானோ என்ற பயம் இருந்தாலும் அவள் அதைப் பொருட்படுத்தவில்லை.
'கஸ்டம்ஸ்' சடங்குகள் முடிந்து அப்பாலிருந்த வெளிநாட்டுப் பிரயாணிகளுக்கான லவுஞ்சில் அமர்ந்திருந்த போது, ''நீ நாடகத்தின் கதாநாயகி, கோபால் நாடகத்தின் கதாநாயகன், மூன்றாவதாக நான் எதற்கு இப்போது சிங்கப்பூர் வருகிறேன் என்பதுதான் எனக்கே புரியவில்லை'' என்று மீண்டும் அவளிடம் வம்புக்கு இழுத்தான் முத்துக்குமரன்.
மாதவி முதலில் ஓரிரு விநாடிகள் இதற்கு மறுமொழி கூறவில்லை. சிரித்துவிட்டுப் பேசாமலிருந்துவிட்டாள். சில விநாடிகள் கழித்து அவன் காதருகே மெதுவான குரலில் அவள் கூறினாள்: ''கோபால் நாடகத்துக்குக் கதாநாயகர். கதாநாயகிக்குக் கதாநாயகர் நீங்கள்தான்!'' அவன் முகத்திலும் இதைக் கேட்டுச் சிரிப்பு மலர்ந்தது. கோபாலும் அருகே வந்து அதில் கலந்து கொண்டான்.
''என்ன வாத்தியாரிட்ட இரகசியமா ஜோக் அடிக்கிறே...''
''ஒண்ணுமில்லே! சாருக்கு இதுதான் முதல் விமானப் பயணமாம்...''
''மெய்டன் ஃப்ளைட் இல்லையா?'' கோபால் அளவுக்கு மீறிய பிரயாண உற்சாகத்திலிருந்தான். திடீரென்று அவர்களிடம் வந்து, ''ஜமாய்ச்சுப்பிடணும், இத்தனை பிரமாதமான நாடகம் இதுவரை பார்த்ததே இல்லேங்கிற மாதிரி மலேயா முழுவதும் பேசிக்கிறாப்பல பண்ணிட்டு வரணும்'' என்றான் அவன்.
சிங்கப்பூர் போகிற 'ஏர்- இந்தியா போயிங்' பம்பாயிலிருந்து கம்பீரமாக வந்து லாண்ட் ஆகியது. ஓசை கிறீச்சிடப் பிரம்மாண்டமான 'போயிங்' விமானம் இறங்கி வருகிற காட்சியைப் பிரமிப்போடு பார்த்தான் முத்துக்குமரன். அவனைப் போன்ற நாட்டுப்புறத்துக் கவிஞனுக்கு இவையெல்லாம் புது அநுபவங்கள். புதுமையும் கர்வமும் கலந்த உணர்வுகள் அவன் மனத்தில் நிறைந்திருந்தன. மாதவி அன்று வெளிநாட்டுப் பிரயாணத்துக்காக பிரமாதமாக அலங்கரித்துக் கொண்டிருந்தாள். யாரோ ஒரு புதிய அந்நியப் பெண்ணைப் பார்ப்பது போல் அவளைத் திரும்பத் திரும்பப் பார்த்து மகிழ்ந்தான் அவன். சிறிது நேரத்தில் விமானத்தில் வந்து அமருமாறு பிரயாணிகள் அழைக்கப்பட்டார்கள்.
மாதவி, முத்துக்குமரன், கோபால் மூவரும் விமானத்தை நோக்கி நடந்தார்கள். விமானத்துக்குள்ளே நுழைந்ததும் மிகவும் ரம்மியமான வாசனையும் மெல்லிய வாத்திய இசையும் காதில் ஒலித்தது. முத்துக்குமரன், மாதவி, கோபால் மூவரும் அடுத்தடுத்து மூன்று ஸீட்டுகளில் உட்கார ஏற்பாடாகியிருந்தது. நடுவில் மாதவியும் இந்த ஓரத்தில் முத்துக்குமரனும் அந்த ஓரத்தில் கோபாலும் அமர்ந்தார்கள். போயிங் விமானம் கம்பீரமான ஒலி முழக்கத்துடன் கிளம்பியபோது மண்ணைவிட்டு மேலே பறக்கும் உற்சாகம் மூவர் மனத்திலும் நிறைந்திருந்தது. மண்ணைவிட்டு மேலே பறப்பதுதான் எவ்வளவு உற்சாகமாக இருக்கிறது?
விமானம் மேலெழும்பியதுமே கோபால் விஸ்கி வரவழைத்துக் குடித்தான். முத்துக்குமரனும் மாதவியும் ஆரஞ்சு ஜூஸ் குடித்தார்கள். மூவருமே எகானமி கிளாஸில் பிரயாணம் செய்ததனால் ஜூஸுக்கும் விஸ்கிக்கும் பணம் கொடுத்தான் கோபால். ஒரு சிறிய உலகமே நகர்வது போல் விமானத்திற்குள்ளே யாவும் அழகாயிருப்பதை உணர்ந்தான் முத்துக்குமரன். உற்றுக் கவனிக்காத வேளையில் விமானம் விரையும் உணர்வு கூட இன்றி அப்படியே அந்தரத்தில் மிதப்பது போலிருந்தது. அந்த அநுபவத்தின் புதுமையையும் சுகத்தையும் இரசிப்பதில் ஈடுபட்ட அவன் மாதவியோடும் கோபாலோடும் அதிகம் பேசவில்லை.
விமானத்திற்குள்ளிருந்த மைக், நிகோபர் தீவுகளுக்கு மேலே பறந்து கொண்டிருப்பதாக அறிவித்தது. கீழே புள்ளிகளாகத் தென்னை மரங்களும் ஓட்டுக் கட்டிடங்களும் மங்கித் தெரிந்தன. டிஸ்எம்பார்கேஷன் கார்டுகள் கொடுக்கப்பட்டன. மூவருடைய கார்டுகளையும் மாதவியே பூர்த்தி செய்து கையெழுத்து வாங்கி ஹோஸ்டஸிடம் கொடுத்தாள். பகலுணவு விமானத்திலேயே வழங்கப்பட்டது. மறுபடியும் விஸ்கி வாங்கிக் குடித்தான் கோபால். விமானத்திலிருந்த தொண்ணூற்றுக்கு மேற்பட்ட பிரயாணிகளுக்கு ஹோஸ்டஸ் பெண்கள் வண்டுகள் போல் சுறுசுறுப்பாக அலைந்து முக்கால் மணி நேரத்திற்குள் உணவு வழங்கிய அதிசயம் முத்துக்குமரனுக்கு வேடிக்கையாயிருந்தது. இவர்களுடைய பூவை ஊதுவது போன்ற மெல்லிய குரலும், உதடுகளைக் குவித்து அழகாக அதிராமல் வினவும் அழகும் முத்துக்குமரனை வியக்கச் செய்தன.
விமானம் முழுவதும் மெல்லிய குளிரோடு ஓடிகொலோன் வாசனை நிரம்பியிருந்தது. அவன் அது பற்றிக் கேட்டபோது ''ஒவ்வொரு ஃப்ளைட்டுக்கு முன்னாலும் 'ஏர்க்கிராப்ஃட்'டினுள்ளே வாசனை ஸ்பிரே செய்வார்கள்'' என்று விளக்கினான் கோபால்.
கீழே அடுக்கடுக்காகக் கட்டிடங்களும், கடலில் கப்பல்களும் தென்பட்டன. விமானத்தில் சிங்கப்பூர் நேரம் அறிவிக்கப்பட்டது. ஏறக்குறைய இரண்டு மணி நேரத்திற்கு மேல் இந்திய நேரத்திற்கும் அதற்கும் வித்தியாசமிருந்தது. பிரயாணிகள் உடனே கைக்கடிகாரங்களைச் சரிசெய்து கொண்டார்கள்.
விமானம் சிங்கப்பூர் விமான நிலையத்தில் இறங்கியது. மீனம்பாக்கத்தில் புறப்படும்போது உதவி செய்தது போலவே முத்துக்குமரன் ஸீட் பெல்ட்டைக் கட்டிக் கொள்வதற்கு மாதவி உதவி செய்தாள்.
சிறிதும் பெரிதுமாக அந்த நிலைய ரன்வேயில் அங்கங்கே நின்ற விமானங்களைப் பார்த்தபோது ஒரே பிரமிப்பாயிருந்தது. அபிமான நட்சத்திரங்களைப் பார்க்க நிலையத்தின் உள்ளேயும் வெளியேயும் பால்கனியிலும் கூட்டம் கூடியிருந்தது. அப்துல்லா வரவேற்றார். ஏராளமான மாலைகள். விமான நிலைய லவுஞ்சிலே மாதவியும் கோபாலும் டெலிவிஷனுக்கு ஓர் இண்டர்வ்யூ கொடுத்தனர். ரசிகர்கள் ஆட்டோகிராப் வேட்டைக்கு மொய்த்தனர்.
முத்துக்குமரனுடைய பெயரோ வருகையோ அதிகமாக விளம்பரப்படுத்தப்படாததால் மாலை, வரவேற்பு, தடபுடல் கூட்டம் எல்லாம் கோபாலைச் சுற்றியும் மாதவியைச் சுற்றியுமே இருந்தன. முத்துக்குமரனும் அதைத் தவறாக நினைக்கவில்லை. தன்னை உலகுக்கு விளம்பரப்படுத்திக் கொள்ளாதவன் தடபுடலான வரவேற்பை எதிர்பார்ப்பது நியாயமில்லை தானென்று தோன்றியது அவனுக்கு. நட்சத்திர அந்தஸ்துப் பெற்றவர்களுக்கு உள்ள 'கிளாமர்' இப்போதுதான் பட்டினத்துக்கு வந்து கோபாலின் தயவில் நாடகம் எழுதத் தொடங்கியிருக்கும் தனக்கு - அதுவும் அந்நிய தேசத்தில் - இருப்பதற்குக் காரணமில்லை என்பதை அவன் உணர்ந்தான். ஆனால் தனது தோற்றப் பொலிவின் காரணமாகத் தன்னையும் ஒரு நடிகனைப் பார்ப்பதுபோல் எல்லாரும் உற்று உற்றுப் பார்ப்பது அவனுக்குப் பெருமையாயிருந்தது.
மாதவியிடமும், கோபாலிடமும் பழகியது போல் அப்துல்லா முத்துக்குமரனிடம் அத்தனை மலர்ச்சியாகப் பழகவில்லை. அதற்குக் காரணம் சென்னைக்கு அவர் வந்திருந்த போது நிகழ்ந்த சம்பவங்களாக இருக்கலாமென்று தோன்றியது. முத்துக்குமரன் மாதவியிடம் கூறினான்:
''கூட்டத்திலே நான் எங்கியாவது தவறிப் போயி நீங்களும் அதை மறந்து பேசாம இருந்திட்டா புது ஊர்ல என்ன செய்யிறதுன்னு பயமாயிருக்கு...''
''அப்படியெல்லாம் ஒண்ணும் ஆயிடாது. எங்கண்ணுதான் நேராகவும் திருட்டுத்தனமாகவும் இடைவிடாம உங்களைப் பார்த்துக்கிட்டே இருக்கே...''
''எல்லார் கண்ணும் உன்னைப் பார்க்கறப்ப நீ என்னை மட்டுமே எப்படிக் கவனிச்சுக்கிட்டிருக்க முடியும்?''
''கவனிக்கிறேனே! அதுதான் எனக்கே புரியலே. என்ன சொக்குப்படி போட்டு என்னை மயக்கினீங்களோ தெரியலியே - ''
அவள் இப்படிப் பேசியது அவனுக்குப் பெருமையாயிருந்தது. சிங்கப்பூர் விமான நிலையத்தில் லவுஞ்சிலேயே முக்கால் மணி கழித்தபின் வேறு விமானத்தில் பினாங்குக்குப் புறப்பட்டார்கள் அவர்கள். பினாங்குக்குப் புறப்பட்ட மலேஷியன் ஏர்வேஸ் விமானத்தில் அப்துல்லாவும் கோபாலும் கேபின் அருகில் முன் வரிசையில் தனியே அமர்ந்து பேசத் தொடங்கிவிட்டதால், முத்துக்குமரனும் மாதவியும் பின்னால் நாலு வரிசை தள்ளி அமர்ந்து பேச முடிந்தது. விமானத்தில் கூட்டமே இல்லை. மாதவி அவனிடம் கொஞ்சலாகப் பேசினாள்.
''எங்கே பார்த்தாலும் பச்சைப் பசேல்னு இருக்கு. இந்த ஊர் ரொம்ப நல்லா இல்லே?''
''ஊர் மட்டுமென்ன? நீ கூடத்தான் இன்னிக்கு ரொம்ப ரொம்ப நல்லா இருக்கே. உன்னைப் பார்க்கிறப்ப ஒரு வனதேவதை மாதிரியிருக்கு.''
''ஏது ரொம்பப் புகழறீங்களே?''
''ஏதாவது கிடைக்காதான்னுதான்...''
அவளுடைய வலது கை ஸீட் பின்புறமாகப் பின்னால் மாலைபோல் வளைந்து அவனுடைய வலது தோள் பட்டையைத் தடவிக் கொடுத்தது.
''ரொம்ப சுகமாயிருக்கு.''
''இது ஏரோப்ளேனாக்கும்! உங்க அவுட்ஹவுஸ் இல்லே! இஷ்டம் போலல்லாம் இருக்கிறதுக்கு - ''
''நீ பேசறதைப் பார்த்தா அவுட்ஹவுசுக்கு நீ வந்தப்ப எல்லாம் நான் ஏதோ என் இஷ்டம்போல நடந்துகிட்டதாவில்லே ஆகுது.''
''தப்பு! தப்பு! எனக்கும் இஷ்டம்தான் ராஜா'' - என்று அவன் காதருகே முணுமுணுத்தாள் மாதவி. முத்துக்குமரன் அவளை வேறொரு கேள்வி கேட்டான்:
''கப்பல்லே புறப்பட்டவங்கள்ளாம் இன்னிக்குப் பினாங்கிலே கரையிறங்கியிருக்கணுமில்லே?''
''இல்லே! நாளைக் காலையிலேதான் வந்து சேருவாங்க. அவங்களுக்கெல்லாம் நாளைக்கு முழு ரெஸ்ட். நம்ம மூணு பேருக்கும் நாளைக்கு ப்ரோக்ராம் 'ஸைட்ஸீயீங்.' நாளன்னிக்கித்தான் முதல் நாடகம்.''
''எங்கெங்கே எல்லாம் நாடகம் ஏற்பாடாகியிருக்கு?''
''முதல் நாலு நாள் பினாங்கிலே நாடகம். அடுத்த ரெண்டு நாள் ஈப்போவில் நாடகம். அதற்கடுத்த ஒரு வாரம் கோலாலும்பூர். அடுத்த மூணு நாள் மலாக்கா. மறுபடி ரெண்டு நாள் கோலாலும்பூர். அப்புறம் ஒரு ரெண்டுநாள் ஸைட்ஸீயீங், ரேடியோ டெலிவிஷன் பேட்டி. கடைசி ஒரு வாரம் சிங்கப்பூரில் நாடகம். சிங்கப்பூர்லருந்தே மறுபடி மெட்ராசுக்கு ப்ளேன் ஏறிடறோம்...'' - என்ற புரோகிராமை அவனிடம் ஒப்பித்தாள். அவளோடு உல்லாசமாகப் பேச வேண்டும் போலிருந்தது அவனுக்கு.
''இன்னிக்கு ஏன் உன் உதடு இத்தினி சிவப்பாயிருக்கு.''
''........''
''ஏன்னு சொல்லேன்...''
''உங்க மேலே ரொம்ப ஆசையினாலே...''
''கோபத்திலே கூடப் பொம்பிளைங்களுக்கு உதடு சிவக்கிறது உண்டு...''
''அப்பிடியும் இருக்கலாம்! ஏனின்னாக் கொஞ்ச நேரத்துக்கு முன்னே சிங்கப்பூர் ஏர்ப்போர்ட்லே உங்களைப் போல ஒரு மேதையை வான்னுகூடச் சொல்லாம அப்துல்லா வெறும் கூத்தாடிகளாகிய எங்களையே சுத்திச் சுத்தி வந்தாரே! அப்ப எனக்கு இந்த உலகத்து மேலேயே தாங்க முடியாத கோபம் வந்திச்சு...''
''உனக்கு வந்திருக்கலாம். ஆனா எனக்கு கோபம் வரலே. நம்ம மாதவிக்குட்டிக்கு எத்தினி கவர்ச்சி, எத்தினி வனப்பு, எவ்வளவு கூட்டம்னு நான் பெருமைப்பட்டேன். அத்தினி கூட்டத்துக்கு நடுவே அரண்மனை மாதிரிப் பெரிய ஏர்ப்போர்ட் லவுஞ்சிலே கையிலே தாங்கமுடியாம மாலைகளைத் தாங்கிக்கிட்டுப் பட்டுப்பூச்சி மாதிரி நீ நின்னது எவ்வளவு நல்லாயிருந்திச்சுத் தெரியுமா?''
''பக்கத்திலே யார் யாரோ நின்னாங்க. நீங்க நிக்கணும்னு எம் மனசு தவித்தது.''
''அது எனக்குத் தெரியும்! ரெண்டு மனசும் ஒண்ணு தானே?''
''கேக்கிறதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு - வசிஷ்டரு வாயாலேயே பிரம்ம ரிஷின்னு வந்திரிச்சு...''
''எதைச் சொல்றே?''
''உங்க வாயாலேயே நாம ரெண்டு பேரும் ஒண்ணுன்னு ஒப்புக்கிட்டதைச் சொல்றேன்...''
- வாயினால் பேசுவதை நிறுத்திவிட்டு அவளை அப்படியே ஆரத் தழுவிக்கொள்ள வேண்டும் போலிருந்தது அவனுக்கு.
அந்த நேரம் பார்த்து அப்துல்லாவும் கோபாலும் வந்து சேர்ந்தார்கள்.
''மாதவி! சார் உங்கிட்டக் கொஞ்சம் பேசணுமாம். கொஞ்சம் அப்பிடி முன்ஸீட் பக்கமா வாயேன்'' என்று அப்துல்லாவைக் காண்பித்துக் கண்களைக் குறும்புத்தனமாகச் சிமிட்டி அவளை அழைத்தான் கோபால். அவள் முத்துக்குமரனின் முகத்தைப் பார்த்தாள்.
''கொஞ்சம் மன்னிச்சுக்க வாத்தியாரே! என்று கோபால் முத்துக்குமரனையே வேண்டினான். ஏதோ அவனுடைய உடமையை ஒரு விநாடி இரவல் கேட்பதுபோல் கோபாலின் குரல் கெஞ்சியது. அவன் ஏன் தன்னை அநுமதி கேட்கிறானென்று முத்துக்குமரனுக்கும் ஆச்சரியமாயிருந்தது. அவன் கண்ணைச் சிமிட்டி அழைத்த விதம் கோப மூட்டுவதாகவும் வெறுப்பூட்டுவதாகவும்கூட இருந்தது. கோபால் கேட்டதற்கு ஏற்றாற்போல் மாதவியும் முத்துக்குமரன் வாய் திறந்து 'போயிட்டு வாயேன்' என்று சொன்னாலொழிய ஸீட்டிலிருந்து எழுந்திருக்க மறுப்பவள் போல் அவன் முகத்தையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். அப்துல்லாவின் முகம் கடுமையாகியது.
அவர் கனமான குரலில் ஆங்கிலத்தில், ''ஹு இஸ் ஹீ டு ஆர்டர் ஹெர்? வொய் ஆர் யூ அன்னெஸஸ்ஸரிலி ஆஸ்க்கிங் ஹிம்'' என்று கோபாலை இரைந்தார்.
''போயேன்! ஏதோ இங்கிலீஷ்லே கத்தறான் மனுஷன்'' என்று மாதவியின் காதருகே கூறினான் முத்துக்குமரன். அடுத்த நிமிஷம் மாதவி செய்த காரியம் முத்துக்குமரனையே திகைக்க வைப்பதாயிருந்தது.
''நீங்க போங்க, சித்தே பொறுத்து அங்கே வரேன். சாரிட்டப் பேசிக்கிட்டிருந்த பேச்சை முடிச்சிட்டு வந்திடறேன்'' என்று அப்துல்லாவுக்கே பதில் கூறினாள் அவள். கோபாலின் முகமும் கடுமையாகியது. இருவரும் கேபின் பக்கமாக நடந்தார்கள். அவர்கள் விமானத்தின் முன்வரிசை இருக்கைகளை நோக்கி நகர்ந்ததும்,
''போயிட்டுத்தான் வாயேன்...வந்த இடத்திலே எதுக்கு வம்பு!'' என்று மீண்டும் கூறினான் முத்துக்குமரன். மாதவிக்கு உதடுகள் துடித்தன.
''நான் போயிருப்பேன், ஆனா அவன் இங்கிலீஷ்ல என்ன சொன்னான் தெரியுமா?''
''என்ன சொன்னான்?''
''இவளுக்குக் கட்டளையிட அவன் யாரு? அவனை ஏன் கேக்கிறேன்னு கோபாலிட்ட உங்களைப் பத்திச் சொன்னான் அவன்.''
''அதிலே தப்பென்ன? அவன் சொன்னது வாஸ்தவம் தானே?''
அவள் இதழ்கள் இரத்தப் பூக்களாகச் சிவந்து துடித்தன, கண்களில் ஈரம் கசிந்தது. தன்னை வேற்றுமைப்படுத்தி அவன் விளையாட்டுக்காகப் பேசினாலும் அவளால் அதைத் தாங்கிக் கொள்ள முடிவதில்லை.
''நான் அப்துல்லாகிட்டப் போகப் போறது இல்லே'' என்ற உதடு துடிக்கச் சொல்லிவிட்டுக் கையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்துவிட்டாள் அவள்.
விமானம் ஏதோ ஒரு நிலையத்தில் இறங்கியது. 'கோத்தபாரு ஏர்போர்ட்' என்ற எழுத்துக்கள் தரையில் தெரிந்தன. அந்த விமானம் கோத்தபாரு, குவாந்தான், கோலாலும்பூர், ஈப்போ ஆகிய இடங்களில் எல்லாம் இறங்கிக் கடைசியாகத்தான் பினாங்கு போகுமென்று தெரிந்தது. மெல்ல இருட்டிக் கொண்டு வந்த அந்த மருள் மாலைப் பொழுதில் அந்த நிலையமும், சுற்றி மலைகளின் பசுமையும் மிக அழகாயிருந்தன.
எங்குப் பார்த்தாலும் மரகதப் பசுமை மின்னியது. மலைகளுக்குக் கர்லிங் வைத்துக் 'கிராப்' வெட்டி விட்டாற்போல் எங்கு பார்த்தாலும் ரப்பர்த் தோட்டங்கள், வாழைகள், ரம்புத்தான் மரங்கள், வானளாவிய காடுகள் நிறைந்திருந்தன. ரம்புத்தான், டொரியான் போன்ற மலேயாவின் பழங்களைப் பற்றி ஊரிலேயே ஒரு செட்டிநாட்டு நண்பனிடம் கேள்விப்பட்டிருந்தான் முத்துக்குமரன். உருவி விட்டது போல், முன் பக்கமும் பின் பக்கமும் வித்தியாசம் தெரியாத ஒரு மலாய்க்காரி - அந்த விமானத்தின் ஹோஸ்டஸ் - கேபினுக்கும் - வால் பக்கத்துக்குமாக டிரேயோடு போய் வந்து கொண்டிருந்தாள். அவளுடைய கண்கள் மட்டும் வெள்ளை வெல்வெட் துணியில் கருநாவற் பழத்தை உருட்டினாற்போல் அழகாயிருந்தன.
விமானம் அந்த நிலையத்திலிருந்து புறப்பட்டுவிட்டது. மறுபடி கோபால் மட்டும் தனியே அவர்கள் இருந்த இடத்துக்கு வந்தான்.
''நீ செய்யிறது உனக்கே நல்லாயிருந்தாச் சரி மாதவி.''
கண்களைத் துடைத்துக்கொண்டு ஸீட் பெல்ட்டை அவிழ்த்துவிட்டு எழுந்து நின்றாள் அவள். இம்முறை முத்துக்குமரனைக் கேட்காமலே, அவன் முகத்தை ஏறிட்டுப் பார்க்காமலே அப்துல்லா இருந்த ஸீட்டை நோக்கி நடந்தாள் அவள். முத்துக்குமரன் தனிமையை உணராமலிருப்பதற்காக மாதவி உட்கார்ந்திருந்த ஸீட்டில் கோபால் உட்கார்ந்து கொண்டு - அவனிடம் பேச்சுக் கொடுக்கத் தொடங்கினான்.
''அதுல பாரு வாத்தியாரே; அப்துல்லா ஒரு குஷால் பேர்வழி. நல்ல பணக்காரன், ஒரு நட்சத்திரத்தோட பக்கத்திலே உட்கார்ந்து பேசிப்பிடணும்னு உயிரை விடறான். கொஞ்சம் பொம்பளைக் கிறுக்கும் உண்டு! போய் உட்கார்ந்து பேசினாக் கொறஞ்சா போயிடும்? அவனோட காண்ட்ராக்ட்ல தானே இந்தத் தேசத்துக்கே வந்திருக்கோம்? இதெல்லாம் மாதவிக்குப் புரியமாட்டேங்கிறது! முழுக்கப் புரியலேன்னும் சொல்ல மாட்டேன். ரொம்ப சூட்டிகையான பொண்ணு அவ. புத்திசாலி, கண்ணசைச்சாலே அர்த்தம் புரிஞ்சிக்கிறவதான். வாத்தியார் இங்க வந்தப்புறம்தான் ஒரேயடியா மாறிப்போயிட்டா. முரண்டு, கோபம், உதாசீனம் எல்லாமே வந்திருக்கு...''
''அவ்வளவும் என்னாலேதான் வந்திருக்காக்கும்?''
''நான் அப்பிடிச் சொல்லலே! அப்புறம் உங்கோபத்தைத் தாங்க முடியாது.''
''பின்னே என்ன அர்த்தத்துலே அப்படிச் சொன்னே கோபாலு?''
- முத்துக்குமரனின் குரலில் சூடேறுவதைக் கண்டு கோபால் மேலே பேசுவதற்குப் பயப்பட்டான். முத்துக்குமரனோ சீறத் தொடங்கி விட்டான்.
''பொண்ணைப் பொண்ணா நடத்தணும். வியாபாரம் பண்ணப்பிடாது. யாரோ செய்யற வேலையை உன்னையைப்போல ஒரு கலைஞன் ஏன் செய்யணும்னுதான் எனக்கும் புரியலே. நீ இப்ப பழைய நாடகக் கம்பெனி கோபாலாக இல்லைங்கிறது மட்டும் எனக்குப் புரியுது. உன்னை அப்துல்லாவோ அல்லது எவனோ ஒரு தோலான் துருத்தியோ மதிக்கணும்னா, நீ ஒரு கலைஞன்கிறதுக்காக மதிக்கணுமே ஒழிய - உன்கிட்ட இருக்கிற நாலு பொம்பளைகளை அந்தத் தோலான் துருத்திக்கு முன்னாலே நிறுத்திப் பல்லிளிக்க வச்சு அதிலேருந்து நீ மதிப்பைத் தேடிக்கிட்டிருக்கே.''
அவர்கள் பேச்சினிடையே எங்கெங்கே விமானம் இறங்கி ஏறியதென்று கூடக் கவனிக்கவில்லை இருவரும்.
விமானம் கோலாலும்பூரில் சுபாங் இண்டர்நேஷனல் ஏர்ப்போர்ட்டில் இறங்கிய போது மட்டும்,
''இங்கே சிலபேர் மாலைபோட வந்திருப்பாங்க, லவுஞ்சி வரை போயிட்டுத் திரும்பிடுவம் வாங்க'' என்று அப்துல்லாவே வந்து கூப்பிட்டார். கோபால் போனான். மாதவி தயங்கி நின்றாள், முத்துக்குமரன் ஸீட்டிலிருந்தே எழுந்திருக்கவில்லை, அவன் மாதவிக்கு கூறினான்.
''நான் வரலே! எனக்கு யாரும் மாலை கொண்டாந்திருக்க மாட்டாங்க. நீ போயிட்டு வா.''
''அப்ப நானும் போகலே.''
அப்துல்லா மறுபடி விமானத்திற்குள் ஏறி, ''டோண்ட் கிரியேட் எ ஸீன் ஹியர், பளீஸ் டூ கம்'' - என்றார்.
அவள் அவரைப் பின் தொடர்ந்தாள். அவரும் மாதவியை மட்டும் கூப்பிட்டாரே ஒழிய முத்துக்குமரன் பக்கம் திரும்பிக் கூட பார்க்கவில்லை.
கோலாலும்பூர் விமான நிலையத்தில் சந்திக்க வந்திருந்தவர்கள் போட்ட மாலைகளுடனும், கொடுத்த பூச்செண்டுகளுடனும் கோபால், அப்துல்லா, மாதவி மூவரும் மீண்டும் விமானத்தில் ஏறி வந்தார்கள். கோபால் அப்போதுதான் முத்துக்குமரன் விமானத்திற்குள்ளேயே இருந்து விட்டதைக் கவனித்தவன்போல், ''அடடே! வாத்தியார் கீழே இறங்கி வரவேயில்லையா?'' - என்று போலியான அனுதாப வார்த்தைகளை உதிர்த்தான். முத்துக்குமரன் அதற்குப் பதில் சொல்லவில்லை.
விமானம் புறப்பட்டது. பழையபடி முன்வரிசை ஆசனத்தில் அப்துல்லாவும், கோபாலும் அருகருகே அமர்ந்து பேசத் தொடங்கியிருந்தார்கள். மாதவி முன்பு உட்கார்ந்திருந்ததுபோலவே முத்துக்குமரனுக்கு அருகே உட்கார்ந்து ரொம்பவும், சோர்ந்துவிட்டது போல் முகத்தைக் கைக்குட்டையால் மூடிக் கொண்டாள். சிறிது நேரம் ஒருவருக்கொருவர் பேச எதுவுமில்லை. யாரோ மெல்ல விசும்புகிறார், போலிருந்தது. பின் ஸீட்டில் பார்த்தான் முத்துக்குமரன். பின் ஸீட் பக்கத்து ஸீட் எல்லாம் காலியாயிருந்தன. ஏதோ சந்தேகம் தட்டியது மனத்தில். அவள் முகத்திலிருந்த கைக்குட்டையை எடுக்க விரைந்தது அவன் கை. அவள் அந்தக் கையைத் தடுத்தாள். மீறி அவன் அந்தக் கைக்குட்டையை அவள் முகத்திலிருந்து எடுத்தபோது அவள் கண்ணீர் வடித்து மெல்ல அழுது கொண்டிருப்பது தெரிந்தது.
''இது என்ன காரியம்? வந்த இடத்திலே ஊர் சிரிக்கணுமா?''
''எனக்கு நெஞ்சு கொதிக்குது...''
''ஏன்? என்ன வந்தது இப்ப?
''ஒரு மரியாதைக்குக் கூட அந்தத் தடியன் நீங்களும் இறங்கி வாங்க 'சார்'னு உங்களைக் கூப்பிடலியே?''
''அவன் யாரு என்னைக் கூப்பிடறதுக்கு?'' கேட்டுக் கொண்டே அந்தக் கைக்குட்டையால் அவள் கண்ணீரைத் துடைத்துக் கொடுப்பதுபோல், அவள் தலையைக் கோதிக் கொடுத்தான் முத்துக்குமரன்.
''இந்த நிமிஷமே செத்துப் போயிடணும் போலிருக்கு. ஏன்னா நீங்க இந்த விநாடி எம்மேல ரொம்பப் பிரியமாயிருக்கீங்க. அடுத்த விநாடி உங்க கோபத்தைத் தூண்டறாப்பல ஏதாவது நடக்கறதுக்குள்ளே நான் போயிட்டா நல்லது...''
''இந்தா...பைத்தியம் மாதிரி உளறாதே. வேறு விஷயம் பேசு. அப்துல்லா கிட்டப் போனியே என்ன சொன்னான்? ஏதாச்சும் உளறினானா?''
''என்னவோ பத்து நிமிஷமா உளறிக்கிட்டிருந்தான். 'ஐயம் எ மேன் ஆஃப் ஃபேஷன்ஸ் அண்ட் ஃபேன்ஸீஸ்' - னான்.
''அப்பிடீன்னா என்ன அர்த்தம்?''
அவள் அர்த்தத்தைச் சொன்னாள். அவன் பேசுவதை நிறுத்திவிட்டு ஏதோ யோசனையிலாழ்ந்தான். விமானம் ஈப்போவில் இறங்கியது. அங்கு மாலை போட ஆட்கள் வந்திருந்தார்கள். ஆனால் கோபால் மட்டுமே அப்துல்லாவோடு இறங்கிப் போனான். மாதவி தலையை வலிப்பதாகச் சொல்லித் தப்பித்துக்கொள்ள முயன்றாள்.
-------------
அத்தியாயம் -16
ஈப்போ விமானநிலையத்தில் அப்துல்லாவோடு முன்னால் இறங்கிப் போன கோபால் மறுபடி திரும்பி வந்து மாதவியையும் கூப்பிட்டான்.
"மாதவி! நீயும் ஒரு நிமிஷம் வந்து தலையைக் காட்டிப்பிட்டுப் போயிடு. இந்தக் காலத்திலே ஆம்பிளைங்க மட்டும் போனா எந்த ரசிகன் மதிக்கத் தயாராயிருக்கான்? 'உங்க குழுவிலே நடிகைகள் யாருமே வரலியா'ன்னு கேட்கிறாங்க,"
"நான் ஒண்ணும் வரலை, எனக்குத் தலைவலியாயிருக்கு..."
"ப்ளீஸ்...ரொம்பப் பேர் பாவம் - மாலையோட காத்துக்கிட்டிருக்காங்க..."
போவதா, வேண்டாமா என்று கேட்பதுபோல் முத்துக்குமரன் பக்கம் திரும்பி அவன் முகத்தைப் பார்த்தாள் அவள்.
"போயிட்டுத்தான் வாயேன். வந்து மாலை போடக் காத்திருக்கிறவங்களை ஏன் ஏமாத்தணும்?" - என்று அவளிடம் காதருகே கூறினான் முத்துக்குமரன்.
அவள் வேண்டா வெறுப்பாக மீண்டும் எழுந்து சென்றாள். விமானத்தின் கண்ணாடிப் பலகணி வழியே வெளியே இருந்த கூட்டத்தைப் பார்த்தான் முத்துக்குமரன். ஐந்தாறு நிமிஷங்களில் அவர்கள் ஒரு கத்தை மாலைகளோடு திரும்பி வந்தார்கள். விமானம் புறப்பட்டது. கண்மூடித் திறப்பதற்குள் 'பினாங்கு' வந்துவிட்ட மாதிரி இருந்தது. பினாங்கு - விமான நிலையத்திற்கும் நிறையக் கூட்டம் வந்து காத்திருந்தது. வரவேற்புக்கள் தடபுடலாயிருந்தன. மாதவியும், கோபாலும்தான் முத்துக்குமரனை யாரென்று வந்திருந்தவர்களுக்குச் சொல்லி அறிமுகம் செய்து வைத்தார்களே ஒழிய அப்துல்லா முத்துக்குமரனைப் பொருட்படுத்தவே இல்லை. முத்துக்குமரனும் அப்துல்லாவைப் பொருட்படுத்தவில்லை என்றாலும் - தங்களை அந்த நாட்டிற்கு வரவேற்றிருக்கும் 'ஹோஸ்ட்' ஆகிய அவர் அப்படித் தன்னிடம் மட்டும் பாராமுகமாக இருந்தது அவனுக்கு வருத்தத்தை அளித்தது. விமான நிலையத்திலிருந்து பினாங்கு ஊருக்குள் போகும் போது நன்றாக இருட்டிவிட்டது.
அன்றிரவு பினாங்கு ஹில்லில் உள்ள தம்முடைய பங்களாவில் அவர்கள் தங்க ஏற்பாடு செய்திருந்தார் அப்துல்லா. எனவே விமான நிலையத்திற்குள்ளிருந்து புறப்பட்ட கார்கள் நேரே பினாங்கு ஹில் ரயில் புறப்படும் இடத்திற்கு வந்து நின்றன. அந்தச் சிறிய ரயிலில் செங்குத்தாக மேலே ஏறிப் பயணம் செய்வது மிகமிக உற்சாகமளிக்கும் அநுபவமாயிருந்தது. அந்தச் சிறிய அழகிய பெட்டி இரயிலில் மாதவியும், முத்துக்குமரனும் அருகருகே அமர்ந்து கொண்டிருந்தனர். கீழே திரும்பிப் பார்த்தபோது ரயில் புறப்படுமிடத்துக் கட்டிடமும், நகரின் சில விளக்குகளும் சிறிய சிறிய புள்ளிகளாய் மங்கித் தெரிந்தன.
மலைமேல் ஏறியதும் அப்துல்லாவின் பங்களாவிற்குப் போகிற வழியிலிருந்து கீழே பள்ளத்தில் கடலும், பினாங்கு துறைமுகமும், பிறையிலிருந்து பினாங்குக்கும் பினாங்கிலிருந்து பிறைக்குமாக வந்து போகும் ஃபெரி ஸர்வீஸுகளுமாக விளக்குகள் மினுக்கின. நகரின் பல வண்ண விளக்குகளும் நியான்ஸைன் காட்சிகளும் கண்கொள்ளா வனப்பை அளிப்பனவாயிருந்தன. பினாங்கு ஹில் பார்க்கில் சிறிது நேரம் உட்கார்ந்துவிட்டு அப்துல்லாவின் பங்களாவிற்குப் போய்ச் சேர்ந்தார்கள் அவர்கள். அப்துல்லாவின் பங்களா மலையுச்சியில் அமைதியாகவும் அடர்த்தியாகவும் இருந்த பகுதி ஒன்றில் அமைந்திருந்தது. மாடியில் தங்கிக் கொள்ள ஒவ்வொருவருக்கும் சகல வசதிகளுமுள்ள தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டன.
இரவு உணவுக்குப் பிறகு ஹாலில் எல்லோரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது, "என்ன மிஸ்டர் கோபால்! 'காக்டெய்ல்' மிக்ஸ் பண்ணுவதில் இந்த மலேயா 'ஸெடெ ரெயிட்ஸி' லேயே நான் எக்ஸ்பெர்ட் என்று பெயர். பல மாநில சுல்தான்கள் தங்கள் பிறந்த தின விழாக்களைக் கொண்டாடும்போது காக்டெயில் மிக்ஸ் பண்ணுவதற்கென்றே எனக்கு விசேஷ அழைப்பு அனுப்புவார்கள்" - என்றார் அப்துல்லா.
"அந்தப் பாக்கியத்தைத் தயவு செய்து எங்களுக்கும் அளிக்கலாமல்லவா?''- என்று அவரைக் கெஞ்சத் தொடங்கினான் கோபால். மாதவியும் முத்துக்குமரனும் ஒன்றும் பேசாமல் இருந்து விடவே, "நீங்க மட்டும் தானே சொல்றீங்க மிஸ்டர் கோபால், மாதவி ஒண்ணுமே சொல்ல வில்லையே? இந்த ப்ராவின்ஸ் வெல்லெஸ்லியிலேருந்து என் கையாலே காக்டெயில் கலந்து குடிக்கணும்னு தினம் எத்தினியோ கோடீசுவரன் இங்கே தேடி வந்திட்டுப் போறான். மாதவியம்மா மட்டும் வாயைத்திறக்கவே மாட்டேங்கிறாங்க..."
"அவளுக்குப் பழக்கமில்லே. வாத்யாரு வேணா ஒருகை பாப்பாரு" - என்று முத்துக்குமரன் பக்கமாகப் பார்த்துக் கண்களைச் சிமிட்டினான் கோபால். ஆனால் அப்துல்லா சிறிதும் அயராமல் மீண்டும் மாதவியைப் பற்றியே பேசலானார்.
"அதெப்படி இத்தினி காலமா மாதவியம்மா சினிமாத் துறையிலேயே இருந்திருக்காங்க...இன்னும் இந்தப் பழக்கம் இல்லேங்கிறது வேடிக்கையாவில்ல இருக்கு?"
மாதவி இதற்கு மறுமொழி எதுவும் கூறவில்லை. அப்துல்லாவின் வேலையாள் டேபிளில் காக்டெய்ல் மிக்ஸ் பண்ணுவதற்காக பலவகை மதுப் பாட்டில்களையும் கோப்பைகளையும் கொண்டு வந்து வைத்தான். பளீரென்று பல வண்ணங்களில், பல வடிவங்களில் மின்னும் அந்த கிளாஸ்களையும், கோப்பைகளையுமே கண்களில் ஒற்றிக் கொள்ளலாம் போலிருந்தது. பொன்நிறக் கோடுகளால் சித்திர வேலைப்பாடுகள் செய்திருந்த அந்தக் கோப்பைகளையும், அவற்றின் நளினத்தையும், அழகையுமே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் முத்துக்குமரன்.
அப்துல்லா எழுந்து டேபிளருகே சென்று காக்டெய்ல் மிக்ஸ் செய்யத் தொடங்கினார். கோபால் மாதவியருகே வந்து, "ப்ளீஸ்! கீப் கம்பெனி. இன்னிக்கு மட்டும் அப்துல்லாவே ஆசைப்படறப்ப மாட்டேன்னு சொல்றது அவ்வளவா நல்லாயிருக்காது!" என்று காக்டெய்ல் பார்ட்டியில் அவளையும் கலந்து கொள்ளச் சொல்லி வற்புறுத்தத் தொடங்கினான். மாதவியோ பிடிவாதமாக மறுத்தாள். அப்துல்லாவோ எதைப்பேசினாலும், எப்போது பேசினாலும், எப்படிப் பேசினாலும் மாதவியைப் பற்றியே பேசிக்கொண்டிருந்தார். அவருடைய மனமும், விருப்பமும், நைப்பாசையும் கோபாலுக்கு நன்றாகப் புரிந்தன. ஆனால் மாதவியோ பிடிவாதமாக அதைப் புரிந்து கொள்ளாதது போலவே ஒதுங்கி இருந்தாள். அவள் பிடிவாதம் வளர வளர கோபாலுக்கு அவள் மேல் கோபம் வருவதற்குப் பதில் அவளை இவ்வளவு மான உணர்ச்சி உள்ளவளாக மாற்றிய முத்துக்குமரன் மேல் தான் கோபமும் ஆத்திரமும் வந்தது. முத்துக்குமரனைப் போல் தன்மானமும் பிடிவாதமும் நிறைந்த ஓர் ஆணழகன் வந்து அவளைக் கவர்ந்திருக்கவில்லை என்றால் மாதவி, தான் சொன்னபடியெல்லாம் கேட்டுத்தான் ஆகவேண்டும் என்பது கோபாலுக்குத் தெரியும்.
'இந்தப் படுபாவி வாத்தியார் வந்த பின்னல்லவா இவ்வளவு மானமும் ரோஷமும் இவளுக்குப் பொத்துக் கொண்டு வருகின்றன' என்று தனக்குத் தானே நினைத்துக் கொண்டான் கோபால்.
மாதவியைக் கொஞ்சம் நெருங்கிப் பழகவிட்டால் அப்துல்லா பணத்தைக் கொட்டுவான் போலத் தோன்றியது. அப்துல்லாவின் பார்வை பேச்சு எல்லாமே சபலம் நிறைந்தவையாகத் தோன்றின. எதற்கெடுத்தாலும் 'மாதவியம்மாவும் கூட வர்ராங்களில்லே?' 'மாதவியம்மாவுக்கு எப்படி இஷ்டம்?' - என்று அவளை மையமாக வைத்தே பேசினான் அப்துல்லா. மாதவியோ இன்னொருத்தர் முகத்தைப் பார்த்து ஒரு சிரிப்புச் சிரிக்க வேண்டுமென்றால் கூட இப்போதெல்லாம் அதற்கு அனுமதி கேட்பது போல் முதலில் முத்துக்குமரனின் முகத்தைத் தயக்கத்தோடு ஏறிட்டுப் பார்க்கிறாள் என்பதைக் கவனித்து வைத்திருந்தான் கோபால். சூழ்நிலை இப்படியெல்லாம் திரும்பும் என்பதை அவன் எதிர்பார்க்கவில்லை, எதிர்பார்த்திருந்தால் முத்துக்குமரனை அவன் இந்தப் பயணத்திற்குக் கூப்பிடாமலே தவிர்த்திருக்க முடியும். முன்பே திட்டமிட்டு அப்படிச் செய்யாதது தன் தவறுதான் என்று இப்போது அவனுக்குத் தோன்றியது.
'காக்டெய்ல்' மிக்ஸ் செய்து டிரேயில் நான்கு அழகிய கிளாஸ்களில் எடுத்துக்கொண்டு திரும்பிய அப்துல்லா அங்கே கோபாலைத் தவிர வேறு யாரையுமே காணாமல் திகைத்தார்.
"அவுங்க எங்கே? நாலு பேருக்குக் கலந்திட்டேனே?"
"தெரியலே? கீழே இறங்கிப் போனாங்க. உலாவப் போயிருப்பாங்கன்னு நினைக்கிறேன்..."
"இருக்கச் சொல்லி நீங்களே வற்புறுத்திச் சொல்லியிருக்கலாமே மிஸ்டர் கோபால்...? அந்த வசனக்காரன்... அதான் ஒரு திமிரு பிடிச்ச ஆளு - அவளை விடாமல் சுத்திக்கிட்டிருக்கானே; அவனுக்கு ஒரு கிளாஸைக் கொடுத்து ரெண்டு மடங்கு உள்ளே தள்ளச்சொன்னா அப்புறம் அவளும் தானா வழிக்கு வருவா..."
கோபால் இதற்கு மறுமொழி கூறவில்லை. அப்துல்லாவே மீண்டும் கூறலானார்:
"இந்த மாதிரி 'டிரிப்'லே இப்படி ஆட்கள் இருந்தாங்கன்னா 'டிரிப்பே' குட்டிச் சுவராயிடுமே; 'கம்பெனி'க்கு ஒத்துப்போற ஆளா இருக்கணும். முரண்டும் திமிரும் பிடிச்ச ஆளா இருந்தா பிரயாணமே குட்டிச் சுவராயிடும்..."
"என்ன செய்யிறது? பூனையை மடியிலே கட்டிக்கிட்டுச் சகுனம் பாத்தாப்பில அந்த ஆளையும் கூட்டிக்கிட்டு வந்தாச்சு. கூட்டிக்கிட்டு வந்த பாவத்துக்கு அனுபவிக்கிறதை அனுபவிச்சுத்தான் ஆகணும்."
இருவரும் எதிரும் புதிருமாக அமர்ந்து 'காக்டெயிலில்' முழுகினர்.
பேச்சு வேறு திசைக்குத் திரும்பியது. பினாங்கு நகரத்தின் அழகையும், சுத்தத்தையும் பற்றித் தன் வியப்பை அப்துல்லாவிடம் வெளியிட்டான் கோபால்.
"சும்மாவா? வெள்ளைக்காரன் இந்த ஊரைப் பிரமாதப்படுத்தி 'ஜார்ஜ் டவுன்'னு கொண்டாடியிருக்கானே?"
"நம்ப தமிழ் ஆளுங்களுக்கு அடுத்தபடியா இந்த ஊர்லே எந்த ஜனங்க அதிகமா இருக்காங்க?"
"சைனீஸ்தான். ஸென் யீன்னு நம்ம ஃபிரண்டு ஒருத்தர் இருக்காரு. அவர் வீட்டுக்கு நாளை லஞ்சுக்குப் போறோம். பெரிய டிம்பர் மெர்ச்சண்டு அவர். ஹாங்காங்ல கூட பிஸினஸ் இருக்கு அவருக்கு, பழகறதுக்குத் தங்கமானவரு."
"நம்ம நாடகங்களுக்குத் தமிழ் ஆளுங்க மட்டும்தான் வருவாங்களா? அல்லது சைனீசும், மலாய்க்காரங்களும் கூட வர்ரது உண்டா?"
"வர்ரது உண்டுதான்! இங்கே பொதுவா எல்லாருமே வருவாங்க. ஆனா நாடகத்துக்குத் தமிழாளுங்களைத் தான் அதிகமா எதிர்பார்க்கலாம். நாட்டியம், ஓரியண்டல் டான்ஸ், அது இதுன்னா கொஞ்சம் அதிகமாகவே சைனீஸ், மலாய்க்காரங்களை எதிர்பார்க்கலாம். உங்களுக்குச் சினிமா புகழ் இருக்கிறதினாலே வசூல் நல்லா ஆகும். பினாங்கைப் பொறுத்த வரை முதல் ரெண்டு நாடகத்துக்கும் புக்கிங் இப்பவே ஹவுஸ் ஃபுல் ஆயிடிச்சி..."
"மத்த ஊர் ஏற்பாடெல்லாம் எப்பிடியோ?"
"கோலாலும்பூர், ஈப்போ, மலாக்கா, சிங்கப்பூர், எல்லாமே புரோகிராம் ரொம்ப நல்லா இருக்கும். எல்லா ஊர்லேயும் உங்க ஃபேன்ஸ் நிறைய இருக்காங்க..."
கோபால் இன்னொரு கிளாஸ் காக்டெயிலையும் உள்ளே தள்ளினான்.
அப்துல்லா வேலைக்காரனைக் கூப்பிட்டு மாதவியும் முத்துக்குமரனும் எங்கே போனார்கள் என்பதைப் பற்றி விசாரித்தார். பினாங்கு ஹில்லின்மேல் அப்துல்லாவின் பங்களாவிற்கு அருகே ஒரு பார்க் இருக்கிறது. மாதவியும் முத்துக்குமரனும் அந்தப் பார்க்குக்குப் போயிருக்கலாம் என்று வேலைக்காரனை விசாரித்ததில் தெரிந்தது. கொஞ்சம் அதிகமாகவே சோர்ந்து போனதன் காரணமாக கோபால் தள்ளாடித் தள்ளாடி நடந்து தன் அறையில் போய்ப் படுக்கையில் விழுந்துவிட்டான். அப்துல்லா நைட்கவுன் அணிந்து 'பைப்' எடுத்துப் பற்ற வைத்துக்கொண்டு வாயிற்படியருகே உட்புறமாக சோபாவைப் போடச் செய்து அமர்ந்து கொண்டார். 'பைப்' புகை வளையம் வளையமாக மேலெழும்பி சோபாவுக்கு மேலே புகைக் கோபுரமொன்றைச் சமைப்பதும் அழிப்பதுமாக க்ஷணத்துக்கு க்ஷணம் மாறிக் கொண்டிருந்தது.
அவருடைய மனத்தில் மாதவியைப் பற்றிய நினைவுகளின் சுகமும் கிறக்கமும் தணியவில்லை. பினாங்கு ஊருக்குள் இருந்த பங்களாவில் தம்முடைய குடும்பத்தினர் எல்லாரும் இருக்கிறார்களே என்ற எண்ணத்தில்தான் - ஹில் பங்களாவுக்குத் தங்க வந்திருந்தார் அவர். அப்படி இருந்தும் மாதவியை வசப்படுத்த முடியாதது வேதனையை அளித்தது அவருக்கு. மாதவியிடம் எப்படியாவது எதையாவது பேசி வசப்படுத்த முயல வேண்டுமென்றுதான் அவள் திரும்பி வருகிற வழியில் உட்கார்ந்து காத்துக் கொண்டிருந்தார் அவர். வாசலுக்கு வெளியே பனிமூட்டம் புகைபோல் மூடியிருந்தது. குளிர் வேறு மெல்ல மெல்ல உறைக்கத் தொடங்கியிருந்தது. கீழே கடலில் அக்கரையையும் பினாங்கு தீவையும் இணைக்கும் ஃபெர்ரிபோட் வந்து போகும் ஸைரன் ஒலிகள், வேறு சப்தங்கள் யாவும் மங்கலாகக் கேட்கத் தொடங்கின. அக்கரையில் 'பிறை'யின் விளக்குகள் மங்கலாக மினுக்கின. கடல் நீரில் ஒளி கரைந்த நிழல் போல் நெளிந்தது.
நீண்ட நேரத்திற்குப் பின் மாதவியும் முத்துக்குமரனும் கைகோத்தபடி வந்து சேர்ந்தார்கள். எதிரே அப்துல்லா அமர்ந்திருப்பதைப் பார்த்ததும் அவர்கள் கைகள் விலகின. இருவரும் தங்களுடைய சுபாவமான நெருக்கத்தைச் செயற்கையாகப் பிரித்துக்கொண்டு விலகி வந்தாற் போலத் திடீரென்று அப்துல்லாவிற்கு முன் தனித்தனியே வந்தார்கள் அவர்கள். அவளுடைய கூந்தலில் பினாங்கு ஹில்பார்க்கில் பூத்திருக்கும் வெள்ளை ரோஜாப்பூ வகையில் ஒன்று இரண்டு இலைகளோடு சேர்த்துக் கொய்து சூட்டப்பட்டிருப்பதை அவர் கவனித்தார். போகும்போது அவளுடைய கூந்தலில் பூ எதுவும் இல்லையென்பதும் அவருக்கு நினைவு வந்தது. பொறாமையோடு முத்துக்குமரனை ஓரக் கண்களால் பார்த்தார் அவர். யானைப் பார்வையாகக் கீழே சாய்ந்துப் பார்க்கப்பட்ட பார்வையாய் இருந்தது அது.
"எங்கே, திடீரென்று காணவில்லை? 'காக்டெய்ல்' மிக்ஸ் செய்து வைத்துக்கொண்டு பார்த்தால் திடீரென்று நீங்கள் ரெண்டு பேரும் காணாமல் போய்விட்டீர்கள், பார்க்குக்குப் போயிருந்தீர்கள் போலிருக்கிறது..."
"ஆமாம்! காற்றாடப் போய்விட்டு வரலாம் என்று 'இவரு' கூப்பிட்டார்... போனோம்..." - என்று வேண்டுமென்றே அந்த 'இவரில்' ஓர் அழுத்தம் கொடுத்து மறுமொழி கூறினாள் மாதவி. முத்துக்குமரனோ அவரெதிரில் நிற்கவே விரும்பாதவனைப்போல் விறுவிறுவென்று முன்னால் நடந்து ஹாலுக்குள் போய்விட்டான்.
மாதவியைப் போகவிடாமல் நிற்கச் செய்து பேச்சுக் கொடுக்க விரும்பினார் அவர்.
"பார்க்குக்குப் போறதாகச் சொல்லியிருந்தீங்கன்னா நாங்ககூட வந்திருப்போமே?"
"நீங்களும் கோபால் சாரும் 'காக்டெயில்லே' தீவிரமா இருந்தீங்க... வருவீங்களோ மாட்டீங்களோன்னு தான் நாங்களே புறப்பட்டோம்..."
"சொல்லியிருந்தா துணைக்காவது யாரையும் அனுப்பியிருப்பேனே?"
"துணைக்கு எதுக்கு; அதுதான் வசனகர்த்தா சார் கூட வந்திருந்தாரே?"
"........."
"உங்களுக்கு ஏதாவது நல்ல 'ஸெண்ட்ஸ்' வேணும்னா தரேன். பிரமாதமான 'ஸெண்ட்ஸ்' எல்லாம் எங்கிட்ட இருக்கு!" - என்று பேச்சை வாசனையோடு வேறு திசைக்குத் திருப்பினார் அப்துல்லா. மாதவி பதில் ஒன்றும் சொல்லாமல் அவருடைய மனநிலையை அறிந்து சிரித்து மழுப்பினாள்.
"சானல் நம்பர் ஃவைவ், பாட்ரா, ஈவினிங் இன்பாரிஸ் எது வேணும்னாலும் இருக்கு. தரேன், உங்களுக்கு வாசனை ரொம்பப் பிடிக்கும்னு தெரிகிறது. கோபால் சார் கூடச் சொல்லியிருக்கார்."
"பரவாயில்லே? இப்ப எனக்குத் தேவை இல்லை. வேணும்னா உங்ககிட்டக் கேட்டு அவசியம் வாங்கிக்கறேன்' - என்று கத்தரித்தாற் போல அவருக்கு மறுமொழி கூறினாள் அவள். அவர் தன்னைப் பார்க்கிற பார்வையும் பேசுகிற பேச்சும் பிடிக்காமல் - அவள் விரைவில் தப்பித்துக் கொண்டு அறைக்குப் போய்த் தூங்க விரும்பினாள். அப்துல்லாவோ அவளைக் கெஞ்சாத குறையாக வேண்டினார்: "கொஞ்சம் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கலாமே மிஸ் மாதவி! அதற்குள் தூக்கம் வந்து விட்டதா என்ன?"
"காலையில் பேசிக் கொள்ளலாம் சார், குட்நைட். வருகிறேன்" - என்று அறைக்குள் போய்க் கதவைத் தாழிட்டுக் கொண்டுதான் நிம்மதியாக மூச்சுவிட்டாள் மாதவி.
காலையில் விடிந்ததும் 'பிரேக் ஃபாஸ்டை' முடித்துக் கொண்டு அவர்கள் யாவருமே பினாங்கு ஹில்லில் இருந்து கீழே இறங்கி விட்டார்கள். ஊரிலிருந்து கப்பல் மூலம் புறப்பட்டிருந்த மற்ற நடிகர்களும், ஸீன்கள் முதலிய நாடகப் பொருள்களும் அன்று கப்பலில் வருவதால் அவர்களையும், பொருள்களையும் கரை சேர்த்து அழைத்து வரச் செல்ல வேண்டியிருந்தது. பினாங்கு ஹில்லில் இருந்து திரும்பும்போதும், அதன் பின்னும் அப்துல்லா - முத்துக்குமரனிடம் மிகமிக அலட்சியமாக நடந்து கொள்ளத் தொடங்கியிருந்தார். என்ன காரணமென்று சொல்லாமலே முத்துகுமரனிடம் அவர் வெறுப்பைக் காட்டத் தலைப்பட்டார். கோபால் அப்துல்லாவைப் பகைத்துக் கொள்ளப் பயந்து அதைக் கண்டு கொள்ளாதவன் போல் இருந்துவிட்டான். மாதவிக்குத்தான் மிக மிக வேதனையாகவும் தர்மசங்கடமாகவும் இருந்தது. முத்துக்குமரன் மேல் அப்துல்லாவுக்கு அலட்சியமும் வெறுப்பும் அதிகமாவதற்கு என்ன காரணம் என்று மாதவிக்குப் புரிந்து கொள்ள முடிந்தது. முத்துக்குமரன், கோபால் எல்லாருமே அதை ஜாடையாகப் புரிந்து கொண்டுதான் இருந்தனர். கோபால் அப்துல்லாவையும் பகைத்துக்கொள்ள முடியாமல் முத்துக்குமரனையும் பகைத்துக் கொள்ள முடியாமல் - ஆனால் அதே சமயம் உள்ளூற முத்துக்குமரன் மேல் கடுங்கோபத்துடன் இருந்தான். மாதவி எல்லாரிடமும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தாலும் - உள்ளூற கோபால் மேலும் அப்துல்லா மேலும் மிகமிக கடுங்கோபத்தோடிருந்தாள். முத்துக்குமரனோ நண்பன் கூப்பிட்டான் என்பதற்காகத் தனக்குச் சம்பந்தமில்லாத இந்தப் பயணத்தில் தான் தலையிட்டிருக்கக் கூடாதென்று நினைக்கத் தொடங்கியிருந்தான். நினைப்பின் இடையே அடிக்கடி நண்பனின் வேண்டுகோளுக்காக மட்டுமின்றி மாதவியின் - அன்பான வற்புறுத்தலுக்காகவும் தான் வந்திருப்பதை அவனால் மறந்துவிட முடியவில்லை. உண்மையில் முழுக் காரணத்தைக் கூற வேண்டுமானால் புதிதாகவும் மெய்யாகவும் கிடைத்த அவள் பிரியத்தை உதற முடியாமல்தான் அவன் இந்த வெளிநாட்டுப் பயணத்துக்கு உடன் புறப்பட்டிருந்தான்.
சென்னையில் முதல் முதலாகச் சந்தித்த சந்தர்ப்பத்திலிருந்தே அப்துல்லாவைத் தனக்கும், தன்னை அப்துல்லாவுக்கும் பிடிக்காமல் போக நேர்ந்த கசப்பான சம்பவங்களை எல்லாம் இப்போது பினாங்கு மண்ணில் வந்து இறங்கிய பின் ஒவ்வொன்றாக நினைத்துப் பார்த்தான் முத்துக்குமரன். அப்போது நடந்தவற்றுக்கும் இப்போது நடப்பவற்றுக்கும் சம்பந்தமிருப்பது புரிந்தது. அந்த வெறுப்புகளிலிருந்து தான் இந்த வெறுப்புக்கள் பிறந்திருக்க வேண்டும். அந்த அலட்சியங்களிலிருந்துதான் இந்த அலட்சியங்களுக்கான தூண்டுதல்கள் கிடைத்திருக்க வேண்டும் - என்று தோன்றியது.
மற்ற நடிகர்களையும் பிறரையும் கப்பலிலிருந்து இறங்கச் செய்து அழைத்து வருவதற்காகப் புறப்பட்ட போது - அப்துல்லாவோ, கோபாலோ, முத்துக்குமரனை இலட்சியம் செய்யவுமில்லை; வரச்சொல்லிக் கூப்பிடவும் இல்லை; வர வேண்டாமென்று சொல்லவுமில்லை. மாதவியை மட்டும் 'புறப்படு- புறப்படு' - என்று அவசரப்படுத்தினார்கள்.
நிலைமை மாதவிக்குப் புரிந்தது. அப்துல்லாவும் கோபாலும் திட்டமிட்டுக் கொண்டு முத்துக்குமரனை வந்த இடத்தில் அவமானப்படுத்தவோ, அலட்சியப்படுத்தவோ முயல்வதுபோல் தோன்றியது அவளுக்கு. முத்துக்குமரனின் ரோஷமும் தன்மானமும் குமுறினால் அதற்கு மேல் மற்றவர்கள் இருவரும் தாங்கமாட்டார்கள் என்பது அவளுக்குத் தெரியும். ஆனால் முத்துக்குமரன் தன் சுபாவத்தை மீறி அதிகமான அடக்கமும் அமைதியும் காட்டுவதைக்கண்டு அவளே வியந்தாள். பேசவோ, பழகவோ யாருமில்லாத புது இடத்தில் முத்துக்குமரனைத் தனியே விட்டுவிட்டுத் தான் மட்டும் கப்பலில் வருகிறவர்களை எதிர்கொள்ளப் போக விரும்பவில்லை அவள். தலைவலி என்று சொல்லி வர மறுத்துவிட்டாள். அப்துல்லாவும் கோபாலும் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. கடைசியில் அவர்கள் மட்டுமே கப்பலுக்குப் புறப்பட வேண்டியதாயிற்று.
மாதவியும் முத்துக்குமரனும் மட்டும் வீட்டிலேயே தங்கி விட்டார்கள். அந்தத் தனிமையில் அவனிடம் எப்படி எந்த வாக்கியத்தால் பேச்சைத் தொடங்குவதென்று தெரியாமல் தவித்தாள் மாதவி. இருவருக்குமிடையே சிறிது நேரம் மௌனம் நிலவியது.
"என்னால்தான் உங்களுக்கு இவ்வளவு கஷ்டமும்! நானும் வந்திருக்கப்படாது, உங்களையும் என்னோட இங்கே வந்து இப்படிக் கஷ்டப்பட விட்டிருக்கக்கூடாது..."
- அவன் பதில் சொல்லவில்லை. தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். அவனுடைய ஒவ்வொரு விநாடி மௌனமும் அவளுக்கு வேதனையை அளித்தது. சிறிதுநேர மௌனத்திற்குப் பின், "கஷ்டம் ஒண்ணுமில்லை! என்னைக் கஷ்டப்படுத்தறதுக்கு இதுவரை மனுஷன் ஒருத்தனும் பிறந்துடலே. ஆனா உன்னைப் போல ஒருத்தி மேலே பிரியம் வச்சு அந்தப் பிரியம் எதிர்த்தரப்பிலேருந்தும் சத்தியமா எனக்குத் திருப்பிக் கிடைக்கறப்ப நான் என்னோட மானம், ரோஷம், கோபதாபம் எல்லாத்தையும் கூட அடக்கிக்க வேண்டியிருக்கு. காதலுக்காக இவ்வளவு பெரிய உரிமைகளை எல்லாம் கூடத் தியாகம் செய்ய வேண்டியிருக்குங்கறதையே இன்னிக்குத் தான் புரிஞ்சிருக்கேன் நான்! அதுதான் எனக்கு ஆச்சரியமா இருக்கு."
"இந்த விஷயத்தில் அப்துல்லா இவ்வளவு அநாகரிகமா இருப்பார்னு நான் நினைக்கவில்லை...''
"நீ நினைக்காட்டி அதுக்கு யார் என்ன செய்யிறது? அநாகரிகம்தான் இன்னைக்கு முக்கால்வாசி மனுஷனுக்குள்ள இருக்கு. நாகரிகம்தான் போர்வை. தேவைப்பட்ட போது அதை எடுத்துப் போர்த்திக்கிறான் மனுஷன்" - என்று விரக்தியோடு அவளிடம் கூறினான் முத்துக்குமரன்.
கப்பலிலிருந்து இறங்கியவர்கள் வந்து சேர்ந்ததும் நண்பகல் வரை ஓய்வுக்குப் பின் பிற்பகலுக்கு மேல் அவர்கள் எல்லாரும் தனித் தனியே கார்களில் பினாங்கு நகரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினார்கள். ஆயிரத்தாம் புத்தர் கோயில், பாம்புக் கோயில், பினாங்கு மலைப்பகுதிகள், கடற்கரை ஆகிய இடங்களுக்குப் போனார்கள். முதல் நாளிரவும் காலையிலும் நடந்தவற்றை நினைத்து முத்துக்குமரன் ஊர் சுற்றிப் பார்க்கக்கூட வரமாட்டேனென்று மறுப்பானோ என அவள் பயந்தாள். ஆனால் அவன் அப்படியெல்லாம் முரண்டு பிடிக்காமல் அமைதியாக உடன்வர இணங்கியது அவளுக்கு ஆச்சரியத்தை அளித்தது. போன இடங்களில் அங்கங்கே நடிகர்களைப் பார்க்கும் ஆர்வமும் தவிப்புமுள்ள கூட்டம் அவர்களை மொய்த்தது. கையெழுத்துக்கும் போட்டோவுக்கும் பறந்தார்கள். மலைமேல் பல அடுக்குகளைக் கொண்டதாகக் கோபுரம் போல் உயரமாக அமைந்திருந்தது ஆயிரத்தாம் பகோடா, சுற்றிச் சுற்றி அந்த மலை முழுவதும் புத்தர் கோவிலாக இருந்தது. கோயில் நிறைய ஊதுபத்தி சாம்பிராணி வாசனை கமகமத்தது. கைத்தடியின் பருமனுக்கும், உலக்கையின் பருமனுக்கும் ராட்சத ஊதுபத்திகள் அங்கே பொருத்தி வைக்கப்பட்டிருந்தன. போட்டோ - எடுத்து வேண்டியவர்களுக்கு விற்கும் சீனர்கள் சுறு சுறுப்பாக ஓடியாடிக் கிராக்கிகளைத் தேடிக் கொண்டிருந்தார்கள். மதுரை - புது மண்டபக் கடைகள் மாதிரியும், பழநி மலையேறுகிற பாதை மாதிரியும் - புத்தர் கோவிலுக்குப் படியேறும் வழியில் இருபுறமும் நெருக்கமாகச் சீனர்களின் கடைகள் இருந்தன. விளையாட்டுச் சாமான்களிலிருந்து, பிரயோசனப்படுகிற பிரயோசனப்படாத என்னென்னவோ பண்டங்களெல்லாம் அந்தக் கடைகளில் இருந்தன. சீனர்களின் உழைப்பும், தொழில் நுணுக்கமும் அந்தக் கடைகளில் தெரிந்தன.
ஆயிரத்தாம் பகோடா படிகளிலே மேலேறும்போது ஓரிடத்தில் மாதவி மூச்சுத் திணறித் தள்ளாடினாள். அவள் படிகளில் விழுந்து விடாமல் பின்னால் தொடர்ந்து படியேறிக் கொண்டிருந்த முத்துக்குமரன் தாங்கிப் பிடித்துக் கொண்டான்.
"செத்துத் தொலைக்காதே! உனக்காக நான் இவ்வளவு சிரமப்படுவது எல்லாம் என்ன ஆவது?" என்று தன் இடுப்பில் இறுகும் பிடியோடு காதருகே அவன் மெதுவாகக் கூறிய சொற்கள் - அவள் உணர்வில் தேன் பெய்தது போல் இனிமையாயிருந்தன. அவள் பதிலுக்கு அவனிடம் கேட்டாள்:
"சாவதா? அதுவும் நீங்கள் அருகிலிருக்கும்போதா?"
இப்படிக் கேட்கும்போது அவளுடைய முகத்தில் மிக நளினமாக மலர்ந்த அந்த அழகிய புன்முறுவலை அவன் மிகவும் இரசித்தான். அதே விதமாக மறுபடி அவள் முகத்தில் ஒரு நளினப் புன்னகையை காணத் தவித்தான் அவன். இப்படி ஒரு புன்னகைக்காக அப்துல்லாவின் அலட்சியம், கோபாலின் பாராமுகம் எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ளலாம் போலிருந்தது அவனுக்கு.
ஆயிரத்தாம் பகோடாவிலிருந்து நேரே பாம்புக் கோவிலுக்குச் சென்றார்கள் அவர்கள். அந்தக் கோவிலில் கதவில், வாயிற்படியில், ஜன்னல் கம்பியில் - எங்கு பார்த்தாலும் பச்சைப் பாம்புகளாக நெளிந்து கொண்டிருந்தன. வராந்தாவில் வைத்திருந்த பூந்தொட்டிகளிலும், குரோட்டன்ஸ் செடிகளிலும், மேல் விட்டத்திலிருந்தும் கூடப் பாம்புகள் தொங்கிக் கொண்டிருந்தன. பழகிய மக்கள் பயப்படாமல் போய்க் கொண்டும், வந்து கொண்டுமிருந்தார்கள். புதிதாகச் சென்றவர்களாகிய அவர்களுக்குத்தான் பயமாக இருந்தது. தைரியசாலிகளாகிய சிலர் அந்தப் பாம்புகளைக் கைகளில் தொங்கவிட்டுக் கொண்டும், கழுத்தில் மாலை போட்டுக் கொண்டும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். அப்படிப் புகைப்படங்களை எடுத்துக் கொடுப்பதற்கென்றே சில சீனர்கள் அங்கே திரிந்து கொண்டிருந்தனர். படம் பிடித்து முடிந்ததும் படம் எடுத்துக் கொண்டவர் தம்முடைய நிரந்தர விலாசத்தையும், பணத்தையும் கொடுத்து விட்டால் புகைப்படம் வீடு தேடிக்கொண்டு வரும் - என்று பாம்புக் கோவிலுக்கு வரும் ஒவ்வொரு புதிய மனிதனையும் எதிர்கொண்டு உற்சாகமாகக் கூறினார்கள் அந்தச் சீனப் புகைப்படக்காரர்கள்.
கோபால் அந்தக் கோவிலுக்குள்ளேயே வரமாட்டேனென்று பிடிவாதமாக வாசலில் நின்று கொண்டான். மாதவிக்குக்கூட உள்ளூறப் பயந்தான், ஆனால் முத்துக்குமரன் தைரியமாக உள்ளே நுழைந்தபோது அவளால் பின் தொடராமல் இருக்க முடியவில்லை.
"நம்மைச் சுற்றியுள்ள மனிதர்களிலேயே விஷப் பாம்புகளைவிடக் கொடுமையானவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கே நாம் பயப்படுவதில்லை. வீணாக இந்த வாயில்லாப் பிராணிகளுக்குப் பயப்படுவானேன்?" என்று அவள் காதருகே முத்துக்குமரன் கூறினான்.
"ஏதோ பழக்கத்தின் காரணமாக இந்தக் கோவிலுக்குத் தொடர்ந்து பாம்புகள் வந்து கொண்டிருக்க வேண்டும். அவைகளைத் துன்புறுத்தினால் ஒழிய அவை யாரையும் கடிப்பதில்லை" என்று குழுவினருக்கு வழிகாட்ட வந்திருந்த அப்துல்லாவின் ஆள் ஒருவன் விளக்கம் கூறினான். பாம்புக் கோவிலிலிருந்து பினாங்கு நகர வீதிக்குள் இருந்த புத்தர் கோவில் ஒன்றிற்கு அவர்கள் சென்றார்கள். படுத்த கோலத்தில் பிரம்மாண்டமான புத்தர் சிலை ஒன்று அந்த ஆலயத்தில் இருந்தது. மலைக்குப் போகிற வழியில் புராதனமான இந்துக் கோயில் ஒன்றையும் அவர்கள் பார்த்தார்கள். மலைமேல் ஒரிடத்தில் கார்களை நிறுத்தி டொரியான், ரம்புத்தான் பழங்களை வாங்கிக் கொடுத்தான் வழிகாட்ட வந்தவன். டொரியான் பழத்தின் நாற்றத்தை நுகர்ந்ததும், குமட்டிக் கொண்டு வந்தது மாதவிக்கு. முத்துக்குமரனோ அந்தப் பழத்தின் ஒரு சுளையைச் சாப்பிட்டு விட்டுத் தேனாக இனிப்பதாகக் கூறினான். மூக்கைப் பிடித்துக்கொண்டு 'பிசுபிசு' என்று பால் தன்மையுள்ளதாய் இருந்த ஒரு டொரியான் சுளையை மாதவியும் உள்ளே தள்ளி வைத்தாள். பலாச்சுளையைவிட வெண்மையாகவும், கடினமாகவும் இருந்த டொரியான் சுளை மிகமிக இனிப்பாக இருந்தது. அத்தனை இனிப்பும் சுவையுமுள்ள அந்தப் பழத்திற்கு ஏன் அவ்வளவு கடுமையான துர்நாற்றத்தையும் கடவுள் படைத்தார் என்பதுதான் விந்தையாக இருந்தது. மலைரோடு வழியே பினாங்குத் தீவின் எல்லாப் பக்கங்களையும் ஒரு சுற்றுச் சுற்றி வந்து விட்டார்கள் அவர்கள். கோபால் சுற்றிப் பார்க்கும் போதெல்லாம் தன்னுடைய தனி அந்தஸ்தையும், குழுவின் தலைமை நடிகன் என்ற கௌரவத்தையும் காண்பிக்க விரும்பியவனைப் போல விலகியே இருந்தான். யாரிடமும் அதிகம் ஒட்டவில்லை. அவன் மட்டும் ஏறி வருவதற்கென்று அப்துல்லா ஒரு 'காடிலாக்' ஸ்பெஷல் கஷ்டம் காரை ஏற்பாடு செய்து அனுப்பியிருந்தார். எல்லா இடங்களுக்கும் அந்தக் கார்தான் முதலில் சென்றது; மற்ற வாகனங்கள் அதையே பின் பற்றின.
-----------
அத்தியாயம் - 17
மறுநாள் மாலை அவர்கள் குழுவின் முதல் நாடகம் நடைபெறவேண்டிய தினமாகையினால் காலையில் அவர்கள் எங்குமே வெளியே செல்லவில்லை. பகலில் மேடை ஏற்பாடுகள், ஸீன்ஸ் - ஆகியவற்றைச் சரி பார்ப்பதற்காக கோபாலும் வேறு சிலரும் நாடகம் நடைபெற இருந்த இடத்தைப் போய்ப் பார்த்துவிட்டு வந்தார்கள். அன்று பகலுணவு ஸென்யீ என்ற அப்துல்லாவின் நண்பரான சீனாக்காரர் வீட்டில் நடந்தது. 'காண்ட்ராக்ட்காரர்' அப்துல்லா ஏதாவது ஒரு சாக்கு வைத்துக்கொண்டு அடை காப்பதுபோல் மாதவியையே சுற்றிச் சுற்றி வந்தார். முத்துக்குமரன் அவளோடு கூடவே இருந்தது அவருக்குப் பெரிய இடையூறாக இருந்தது. நாளுக்கு நாள் அவன் மீது அவருடைய வெறுப்பு அதிகமாகிக் கொண்டே வந்தது. தான் மாதவியோடு பேசவோ நெருங்கிப் பழகவோ முடியாமல் அவன் பெரிய போட்டியாகவே இருக்கிறானென்று அவருக்குத் தோன்றியது.
முதல் நாள் நாடகம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அன்றிரவு அப்துல்லாவுக்கும் முத்துக்குமரனுக்கும் நேரிடையாகவே ஒரு மனஸ்தாபம் நேர்ந்தது. நல்ல வசூல் ஆகியிருந்ததனாலும் நகரமண்டபம் கொள்ளாமல் கூட்டம் நிறைந்திருந்ததனாலும் அத்தனைக்கும் காரணமான அப்துல்லாவின் மேல் கோபாலுக்கு மிகுந்த பிரியம் உண்டாகியிருந்தது; நாடகம் முடியும்போது இரவு பதினொரு மணி ஆகிவிட்டது. நாடக முடிவில் எல்லாரையும் மேடைக்கு வரவழைத்து மாலை சூட்டியும், அறிமுகப்படுத்தியும் நன்றி கூறிய அப்துல்லா - முத்துக்குமரனை மட்டும் மறந்தாற்போல் விட்டுவிட்டார். அவருக்கு மறக்கவில்லை என்றாலும் பிறர் அதை மறதியாக எண்ணிக் கொள்ளட்டும் என்பதுபோல் வேண்டுமென்றே விட்டுவிட்டார். கோபாலுக்கு நினைவிருந்தது, அப்துல்லாவின் செய்கைகளில் குறுக்கிட்டுக் கூறப் பயந்தவன் போல அவனும் சும்மா இருந்துவிட்டான். மாதவி மட்டும் மனம் குமுறினாள். அவர்கள் எல்லாரும் திட்டமிட்டுக்கொண்டு சதி செய்வது போலத் தோன்றியது அவளுக்கு.
நாடகம் முடிந்தபின் பினாங்கிலுள்ள பெரிய பணக்காரர் ஒருவர் வீட்டில் அன்றிரவு அவர்கள் விருந்துண்ண ஏற்பாடு செய்திருந்தார் அப்துல்லா.
நாடகம் நடந்து முடிந்ததும் அங்கிருந்தே அவர்களை அழைத்துச் செல்ல வந்திருந்தார், விருந்துண்ண அழைத்திருந்த செல்வந்தர்.
மேடையில் நடந்ததில் மனம் குமுறியிருந்த மாதவி முத்துக்குமரனைக் கிரீன் ரூமுக்கே வரச் சொல்லித் தனக்கு மிகவும் வேண்டிய துணை நடிகை ஒருத்தியிடம் சொல்லியனுப்பியிருந்தாள். அவளுக்கும் மலையாளத்துப் பக்கம் தான்.
"மாதவி விளிச்சு" என்று மேடையருகே கீழே நின்று கொண்டிருந்த முத்துக்குமரன் காதருகே வந்து கூறினாள் அந்தத் துணை நடிகை. அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதவன் போலிருந்த முத்துக்குமரனிடம் மீண்டும் அருகில் வந்து "ஞான் வரட்டே?" என்று கேட்டாள் அந்தத் துணை நடிகை. முத்துக்குமரன் அவள் போகலாம் என்பதற்கு அடையாளமாகத் தலையை ஆட்டினான். அவள் போய்விட்டாள். சிறிதுநேர இடைவெளிக்குப்பின் அவனும் கிரீன் ரூமுக்குச் சென்றான். மாதவி அவனருகே வந்து குமுறினாள்.
"இங்கு நடந்த இந்த அக்கிரமத்தை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. நாம் விருந்துக்குப் போக வேண்டாம்."
"தன்மானம் வேறு! அற்பத்தனம் வேறு; அவர்களைப் போல் நாமும் அற்பத்தனமாக நடந்துகொள்ளக்கூடாது. மாதவி! இந்த மாதிரி விஷயங்களில் நான் ரொம்ப ரோஷக்காரன். அசல் கலைஞன் ஒவ்வொருவனுமே இப்படி ரோஷக்காரன்தான். ஆனால் அது ரோஷமாக இருக்க வேண்டுமே ஒழிய மிகவும் அற்பத்தனமான குரோதமாக இருக்கக் கூடாது. புது நாட்டில் புது ஊரில் நாம் பெருந்தன்மையோடு நடந்து கொள்ள வேண்டும்."
"அது சரி! ஆனால் மற்றவர்கள் நம்மிடம் அப்படிப் பெருந்தன்மையோடு நடந்துகொள்ளவில்லையே? அற்பத்தனமாக அல்லவா நடந்து கொள்கிறார்கள்."
"பரவாயில்லை! இன்னும் நாம் பெருந்தன்மையாக நடந்து கொள்வதற்குத்தான் அவசியமிருக்கிறது."
- இதற்குமேல் மாதவி அவனோடு வாதிடவில்லை. அன்றிரவு அவர்கள் விருந்துக்குப் போனார்கள்.
விருந்து முற்றிலும் மேனாட்டு முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இன்விடேஷன்கள் ரொம்பவும் காஸ்மாபாலிடனாகக் கொடுக்கப்பட்டிருந்தன. சில மலாய்க்காரர்கள், சீனர்கள், வெள்ளைக்காரர்கள், அமெரிக்கர்கள்கூடத் தத்தம் குடும்பத்தோடு விருந்துக்கு வந்திருந்தார்கள்.
- விருந்து முடிந்ததும் வேறொரு ஹாலில் வந்திருந்தவர்கள் ஆணும் பெண்ணுமாகக் கைகோர்த்து டான்ஸ் ஆடினார்கள். முத்துக்குமரனும் மாதவியும் ஓர் ஓரமாகப் போட்டிருந்த நாற்காலிகளில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். டான்ஸில் கலந்துகொள்ளவில்லை. கோபால் கூட ஒரு சீன யுவதியோடு - டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தான். அந்தச் சமயத்தில் அப்துல்லா வந்து தன்னோடு டான்ஸ் ஆட வருமாறு மாதவியைக் கூப்பிட்டார்.
"எக்ஸ்க்யூஸ் மீ சார்; நான் இவரோடு பேசிக் கொண்டிருக்கிறேன்'' - என்று மிகவும் மரியாதையாகப் பதில் கூறிப் பார்த்தாள் மாதவி. அப்துல்லா விடவில்லை. இந்த நைப்பாசையைத் தீர்த்துக்கொள்ளவே அந்த விருந்துக்கு அவர் ஏற்பாடு செய்திருப்பார் போலிருந்தது. அவளோடு அருகே அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் முத்துக்குமரனை ஓர் ஆளாகவே பொருட்படுத்தாதது போலத் திரும்பத் திரும்ப அப்துல்லா அவளிடமே வந்து கொஞ்சத் தொடங்கிப் பதிலளித்தார். முத்துக்குமரன் அநாவசியமாகத் தான் குறுக்கிட்டு அவருக்குப் பதில் சொல்ல வேண்டாம் என்று ஆனமட்டும் பொறுத்துப் பார்த்தான்.
ஒரு நிலைக்குமேல் அப்துல்லா வெறிகொண்டு தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் மாதவியை மெல்ல கையைப் பிடித்து இழுக்கவே ஆரம்பித்து விட்டார்.
"வரமாட்டேன்கிற பொம்பிளையைக் கையைப் பிடிச்சு இழுக்கறதுதான் உங்க ஊர் நாகரிகமோ?" - என்று அப்போதுதான் முத்துக்குமரன் முதன் முதலாக வாய்திறந்தான். அப்துல்லா கடுங்கோபத்தோடு அவனைப் பார்த்து முறைத்தார்.
"ஷட் அப் ஐயாம் நாட் டாக்கிங் வித் யூ - " அப்துல்லா முத்துக்குமரனை இப்படி இரைந்த பின் மாதவி அவரை இன்னும் அதிமாக வெறுக்கத் தொடங்கினாள். அப்புறம் கோபால் அவளைத் தேடிவந்து அப்துல்லாவுக்காக வக்காலத்து வாங்கிப் பேசினான்.
"இவ்வளவு செலவழிச்சுக் கூப்பிட்டிருக்காரு. நாம் இந்த நாட்டைவிட்டு ஊர் திரும்பறதுக்குள்ள நமக்கு இன்னும் என்னென்னவோ செய்யணும்னு இருக்காரு. அவர் பிரியத்தை ஏன் கெடுத்துக்கறே?"
"நான் முடியாது -" என்று கடுமையாக அவள் மறுத்ததற்குக் காரணமே அருகில் முத்துக்குமரன் நிற்பது தான் என்பதாக, கோபால் புரிந்து கொண்டான். முத்துக்குமரன் அருகில் இல்லாவிட்டால் அவள் தன்னிடம் இவ்வளவு கடுமையாகப் பதில் சொல்லியிருக்க மாட்டாள் என்பதையும் கோபாலால் அநுமானிக்க முடிந்தது. எனவே அடிபட்ட புலிபோல் சீறினான் கோபால்.
"நீ பயப்படறதைப் பார்த்தா வாத்தியாரை அம்மி மிதிச்சு அருந்ததி பார்த்துக் கலியாணங்கட்டிக்கிட்ட மாதிரியில்ல இருக்கு? அப்படிக் கலியாணங்கட்டிக்கிட்டவங்க கூட இந்தக் காலத்தில் புருசனுக்கு இப்பிடி இவ்வளவு நடுங்கறதில்லே."
முத்துக்குமரன் அருகில் நின்று இருவர் உரையாடலையும் கவனித்துக் கொண்டிருந்தாலும் பேச்சில் தான் குறுக்கிட விரும்பவில்லை. மாதவிக்குத்தான் கோபாலின் பேச்சு ஆத்திரமூட்டி விட்டது.
"சீ! நீங்களும் ஒரு மனுசனாட்டம்...? ஒரு பொம்பிளை கிட்ட வந்து இப்பிடிக் கேட்க வெட்கமாயில்லை உங்களுக்கு?" என்று முற்றிலும் எதிர்பாராதவிதமாக அவள் தன்னிடமே சீறியதைக் கண்டு கோபால் திகைத்தான். இதுவரை அவள் தன்னிடம் இவ்வளவு கடுமையாகவும், மரியாதைக் குறைவாகவும் பேசியதில்லை என்று கடந்த காலத்தை நினைத்து விட்டு - இன்று எவ்வளவு கடுமையாகப் பேச முடியுமோ அவ்வளவு கடுமையாகப் பேசியும் விட்டாள் என்பதை உணர்ந்தபோது கோபாலுக்குத் திகைப்பாக இருந்தது. எது செய்யச் சொன்னாலும் தான் காலால் இட்ட கட்டளையைத் தலையால் செய்து கொண்டிருந்தவள் இன்று இவ்வளவு ரோஷமும் மானமும் அடைந்து சீறுவதற்கு யார் காரணம் என்று எண்ணியபோது மீண்டும் முத்துக்குமரன் மேல் அவனுடைய அவ்வளவு கோபமும் திரும்பியது.
"வாத்தியாரே! இதெல்லாம் உன் வேலைமானம் போலேருக்கு...?"
"அதுக்குத்தான் அப்பவே சொன்னேன்; நான் உங்க கூட இங்கே வரலையின்னு..." - என்று முத்துக்குமரன் கோபாலுக்கு மறுமொழி கூறியதைக் கேட்டு மாதவிக்கு முத்துக்குமரன் மேலேயே கோபம் வந்துவிட்டது.
"இதுக்கு என்ன அர்த்தம்? நீங்க வந்ததினாலேதான் நான் மானம் - ரோஷத்தோட இருக்கேன்? நீங்க வராட்டி நான் மானங்கெட்டுப் போய்த் திரிவேன்னு அர்த்தமா?" என்று முத்துக்குமரனைப் பார்த்தே மாதவி சீறத் தொடங்கினாள். சண்டை அவர்கள் இருவருக்குள்ளேயுமே மூண்டு விடவே கோபால் மெல்ல அங்கிருந்து நழுவி விட்டான். மாதவி முத்துக்குமரனை விடவில்லை.
"நீங்களே இப்படி என்னை விட்டுக்கொடுத்துப் பேசினீங்கன்னா அப்புறம் மத்தவங்க கொண்டாட்டத்துக்குக் கேட்பானேன்?"
"என்ன விட்டுக்கொடுத்துப் பேசிப்புட்டேன் இப்ப? பெரிசாச் சத்தம் போடறியே! சும்மா 'உன்னாலேதான் எல்லாம், உன்னலேதான் எல்லாம்'னு சொல்லிக் காட்டிக்கிட்டிருக்கான் அவன். அதுதான் 'என்னை ஏண்டா கூட்டிக்கிட்டு வந்தே'ன்னு கேட்டேன். அதுக்கு நீ ஏன் என்மேலே கோபப் படணும்னுதான் எனக்குப் புரியலை."
"நீங்க வந்திருக்காட்டி நான் என் இஷ்டம் போலத் தாறுமாறாகத் திரிவேன்னு நெனைச்சுச் சொன்னது போல இருந்திச்சு, அதுதான் நான் அப்பிடிக் கேட்டேன்..."
"அப்படித் திரியறவள்னு தானே இன்னும் அவுங்க உன்னைப்பத்தி நெனைச்சுக்கிட்டிருக்கிறதாத் தெரியுது?"
"யார் என்னவேணா நினைக்கட்டும், அதைப்பத்தி எனக்குக் கவலை இல்லே. ஆனா நீங்க சரியா நினைக்கணும், நீங்களும் என்னைத் தப்பா நெனைச்சா என்னாலே அதைத் தாங்கிக்க முடியாது."
"இவ்வளவு நாள் தாங்கிக்கிட்டுத்தானே இருந்திருக்கே..."
"இப்பத் திடீர்னு இப்பிடி நடந்துக்கப் போகத்தானே அவன் திகைக்கிறான்...?" முத்துக்குமரன் இப்படிப் பேசியது பிடிக்காமல் அவள் அவனுடன் பேசுவதையும் நிறுத்திவிட்டுத் தலை குனிந்து கீழே பார்த்தபடி இருந்தாள்.
விருந்து நடந்த இடத்திலிருந்து திரும்பும்போது அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளவில்லை. கோபாலும் அப்துல்லாவும் மொத்தமாக இவர்கள் இருவரையுமே புறக்கணித்தது போல் நடந்து கொண்டார்கள். இவர்களோ தங்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் புறக்கணித்ததுபோல் நடந்து கொள்ளத் தொடங்கினர்.
அதன் பின் பினாங்கில் நாடகம் நடந்த மூன்று தினங்களும் இதே நிலையில் பரஸ்பரம் - கோபால் மாதவியோடும் மாதவி முத்துக்குமரனோடும் - சுமூகமாகப் பேசிக் கொள்ளாமலே கழிந்தன. ஆறு மணியானதும் தியேட்டருக்குக் கார்களில் கூட்டமாகப் போகவும், கிரீன் ரூமுக்குள் நுழைந்து மேக்கப் போடவும், மேடையில் நடிக்கவும் நாடகம் முடிந்ததும் திரும்பவுமாக நாட்கள் போயின.
அப்துல்லாவின் நைப்பாசையை வேறொரு வகையில் திசை திருப்பிவிட்டுச் சமாளித்துக் கொண்டிருந்தான் கோபால். தன்னுடைய குழுவிலேயே உபநடிகையாக இருந்த 'உதயரேகா' என்ற கட்டழகி ஒருத்தியை அப்துல்லாவோடு காரில் தனியே போகவும், அவருடைய அன்பைப் பெறவும் ஏவினான். உதயரேகா துணிந்த கட்டை. அவள் 'தாராளமாகவே' அப்துல்லாவைத் திருப்தி செய்து டேப்ரெகார்டர், டிரான்ஸிஸ்டர், ஜப்பான் நைலெக்ஸ் புடைவைகள், நெக்லெஸ், மோதிரம் என்று அவரிடமிருந்து பறித்துக் கொண்டிருந்தாள். முதல் நான் அநுபவத்துக்குப் பின் முத்துக்குமரன் - நாடகம் நடைபெற்ற இடத்திற்குப் போவதை நிறுத்திவிட்டு மாலையில் அறையிலேயே இருக்கத் தொடங்கினான். தனிமையில் அவனால் சில கவிதைகள் எழுத முடிந்தது. மற்ற நேரங்களில் - மலேயாவில் வெளி வரும் - இரண்டு மூன்று தமிழ்த் தினசரிகளையும் ஒரு வரி விடாமல் அவன் படித்தான். நல்ல வேளையாக - அந்த நாட்டில் வெளியாகும் ஒவ்வொரு தமிழ் தினசரியும் நாள் தவறாமல் பத்துப் பன்னிரண்டு பக்கங்களுக்குக் குறையாமல் பெரிது பெரிதாக வெளிவந்து கொண்டிருந்தது. மூன்று தினசரிகளையும் படிக்க அதிக நேரம் செலவழிக்க முடிந்தது. பகல் நேரத்தில் குழு நடிகர்கள் சிலர் அவனிடம் வந்து பேசிக் கொண்டிருப்பதும் உண்டு. இரண்டாவது நாளோ மூன்றாவது நாளோ கோபால் நாடக மன்றத்தைச் சேர்ந்த ஒரு துணை நடிகன், "ஏன் சார், நீங்க நாடகத்துக்கு வரதையே நிறுத்திட்டீங்க?... உங்களுக்கும் கோபால் அண்ணனுக்கும் எதினாச்சும் மனஸ்தாபமா?" என்று முத்துக்குமரனிடம் கேட்டே விட்டான். முத்துக்குமரன் அவனுக்குப் பூசி மெழுகினார் போல் பதில் சொன்னான்.
"ஒரு நாள் பார்த்தாப் போதாதா என்ன தினம் பார்க்கணுமா? நாம எழுதின நாடகம், நாமே சேர்ந்து நடிக்கிறோம். தினம் பார்க்கறதுக்கு என்ன அவசியம்?"
"அப்பிடிச் சொல்லிடலாமா சார்? நாடகம் சினிமா மாதிரியில்லியே! சினிமா ஒருவாட்டி காமிராவிலே புடிச்சு ஓட விட்டுப்பிட்டா அப்புறம் அப்படியே ஓடிக்கிட்டிருக்கும். நாடகம் உசிர்க் கலையாச்சே? ஒவ்வொரு நாளைக்கு நடிப்பிலே புது நயம், பாட்டுலே புது நயம்னு, நயம் நயமா வந்துகிட்டே இருக்குமே?"
"வாஸ்தவம்தான்..."
"இப்ப பாருங்க... நேத்து நீங்க வரலே. முதல் நாள் நீங்க வந்திருந்தீங்க... நீங்க வந்து பார்த்த அன்னிக்கி மாதவியம்மா நடிப்புப் பிரமாதமா இருந்திச்சு, நீங்க வராததுனாலே நேத்து ரொம்ப டல்லா இருந்தாங்க. நடிப்பிலே உற்சாகமே இல்லை..."
"நீ என்னைப் பெருமைப் படுத்தறதா நினைச்சுச் சொல்றே தம்பீ! ஆனா அப்பிடி ஒண்ணும் இருக்காது. 'மாதவி'க்கு ஒரு திறமை உண்டு. அது எப்ப நடிச்சாலும் எதிலே நடிச்சாலும் ஒரே தரமா இருக்குமே?"
"நீங்க விட்டுக் கொடுத்துப் பேசமாட்டீங்க சார்! ஆனா நான் கவனிச்சுப் பார்த்துச் சொல்றேன். நமக்குப் பிரியமுள்ளவங்க கீழே சபையில் உட்கார்ந்து பார்த்தா அது நமக்கு ஒரு 'டானிக்' மாதிரி இருந்து வேலை செய்துங்கிறது உண்மைதான். ஒரு தடவை பாருங்க... விருது நகர் மாரியம்மன் பொருட்காட்சிக்கு நான் முன்னே வேலை பார்த்த கம்பெனி ட்ரூப்போட போயிருந்தேன். அந்த ஊர் எனக்குச் சொந்த ஊரு. என் அத்தை மகள் - அதுதாங்க எனக்கு முறைப் பொண்ணு - வந்து நாடகத்தைப் பார்த்துச்சு. அன்னிக்கு நான் ரொம்ப உற்சாகமா நடிச்சேன்."
"அது சரிதான்; உனக்கு உன் அத்தைமகள் மேல் காதல் வந்திருக்கும்."
"அப்படி வாங்க வழிக்கு! அதே மாதிரிதான் மாதவிக்கும் உங்க மேலே..."
- உடனே முத்துக்குமரன் தன்னைப் பார்த்த பார்வையைத் தாங்க முடியாமல் மேலே சொல்வதைத் தயங்கி நிறுத்திவிட்டான் அந்தத் துணை நடிகன்.
அந்தத் துணை நடிகன் சொல்லியதில் உள்ள உண்மையைத் தானே உணர்ந்தாலும் அவனிடம் ஒரு சிறிதும் மாதவியின் மேல் தனக்குப் பிரியமிருப்பதைக் காண்பித்துக் கொள்ளாமலே பேசினான் முத்துக்குமரன். ஆனால் தன்னுடைய முகம் எதிரே தென்படாமல் இருப்பது அவளுடைய நடிப்பைப் பாதிக்கத்தான் செய்யும் என்று முத்துக்குமரன் நன்றாக உணர்ந்திருந்தான். உள்ளூற அந்த உணர்ச்சி இருந்தாலும் மாதவியை உற்சாகப்படுத்துவதற்காகக்கூட பினாங்கில் முகாம் இட்டிருந்தவரை நாடகங்களுக்கு அவன் போகவே இல்லை. பினாங்கில் கடைசி நாடகமும் முடிந்த பின் - பண்டங்கள் அங்கு மிகவும் மலிவு என்பதனால் குழுவில் ஒவ்வொருவரும் தனியாகவும், கூட்டமாகவும் 'ஷாப்பிங்' போனார்கள். 'ஃப்ரீபோர்ட்' ஆகையால் பினாங்குக் கடை வீதிகளில் கைக்கடிகாரங்களின் வகைகளும், நவீன டெரிலீன், ரெயான், டெரிகாட், ஸில்க் துணிகளும், ரேடியோக்களும் கொள்ளை மலிவாகக் குவிந்து கிடந்தன. அப்துல்லாவிடம் அட்வான்ஸ் வாங்கிக் குழுவைச் சேர்ந்த ஒவ்வொரு நடிகனுக்கும் நடிகைக்கும் நூறு வெள்ளி பணம் கொடுத்தான் கோபால். முத்துக்குமரனுக்கும், மாதவிக்கும் தலைக்கு இருநூற்றைம்பது வெள்ளி வீதம் ஐந்நூறு வெள்ளியையும் ஒரு கவரில் போட்டு மாதவியிடமே கொடுத்து விட்டான் அவன். முத்துக்குமரனை நேரில் எதிர்க் கொண்டு பேசி அவனிடம் பணத்தைக் கொடுப்பதற்குப் பயமாக இருந்தது கோபாலுக்கு. மாதவியிடம் கொடுத்தபோதே தயங்கித் தயங்கித்தான் அதை வாங்கிக் கொண்டாள் அவள்.
"எதுக்கும் அவரிட்டவும் ஒரு வார்த்தை சொல்லிடுங்க... நானாப் பணத்தை வாங்கிட்டேன்னு அவர் கோபிச்சாலும் கோபிப்பார்" - என்று மாதவி கோபாலிடம் சொல்லியபோது,
"அவர் அவர்னு ஏன் நடுங்கறே? முத்துக்குமார்னு பேரைத்தான் சொல்லித் தொலையேன்" என்று கடுமையாக அந்த 'அவரி'ல் குரலை ஓர் அழுத்து அழுத்தி இரைந்தான் கோபால்.
- மாதவி இதற்குப் பதில் எதுவும் சொல்லவில்லை. கோபால் அவளைக் கடுமையாக உறுத்துப் பார்த்துவிட்டுப் போய்ச் சேர்ந்தான். ஆனாலும் அவளிடம் கடுமையாகப் பேசியது போலவே முத்துக்குமரனை அவன் புறக்கணிக்கத் தயாராயில்லை. மூன்று நாட்களாகத் தனக்கும் அவனுக்கும் இடையே நிலவிய மௌனத்தையும் மனஸ்தாபத்தையும் தவிர்ப்பதுபோல், அவனிடம் போய்ப் பேச்சுக் கொடுத்தான்.
"எல்லோரும் ஷாப்பிங் போறாங்க! பினாங்கைவிட்டு இன்னிக்கி ராத்திரியே நாம் புறப்படறோம். நீயும் போய் ஏதாவது வாங்கிக்கணும்னா வாங்கிக்க. மாதவிகிட்ட உனக்காகவும் சேர்த்துப் பணம் கொடுத்திருக்கேன். கார் வேணும்னா எடுத்திட்டுப் போயிட்டு வந்திடுங்க. ரெண்டு பேரும் சேர்ந்தே போய் ஷாப்பிங் முடிச்சிக்கலாம். அப்புறம் புறப்படற வேளையிலே டயம் இருக்காது"
"......."
"என்னது? நான் வேலை மெனக்கெட்டுப் போய் உங்கிட்டச் சொல்லிக்கிட்டிருக்கேன். பதில் சொல்லாமே இருக்கியே...?"
"நீ சொல்றதைச் சொல்லியாச்சில்லே...?"
"எனக்கொண்ணுமில்லே! உனக்காகத்தான் சொன்னேன்..."
"அதாவது - என்மேலே உனக்கும் அக்கறையிருக்குன்னு காமிக்கிறே! இல்லியா - ?"
"இப்படிக் குத்தலாகப் பேசாதே வாத்தியாரே! எனக்குப் பொறுக்காது- "
"பொறுக்காட்டி என்ன செய்யிறதா உத்தேசமோ?"
"சரி! சரி! உங்கிட்டே இப்போ பேசிப் பயனில்லை. நீ ரொம்பக் கோபத்திலே இருக்கிற மாதிரித் தெரியிது" - என்று கூறிவிட்டு முத்துக்குமரனிடம் மேலே ஒன்றும் பேசாமல் நழுவி விட்டான் கோபால்.
அவன் போன சிறிது நேரத்திற்கெல்லாம் மாதவி வந்தாள். அப்படி வந்தவள் முத்துக்குமரனை நேருக்குநேர் பார்க்கப் பயந்து தயங்கியவளாக எங்கோ பார்த்துப் பேசினாள். அவள் கையில் கோபால் கொடுத்த பணம் அடங்கிய கவர் இருந்தது.
"பணம் கொடுத்திருக்காரு... ஷாப்பிங் போகணும்னா வச்சுக்கணுமாம்..."
"யாருக்குப் பணம்?"
"உங்களுக்கும் எனக்கும்..."
"உனக்காக நீ வாங்கிட்டது சரி! எனக்குன்னு நீ எப்படி வாங்கலாம்?"
"நான் வாங்கலே! அவராக் கொடுத்திட்டுப் போறாரு."
"கொடுத்திட்டுப் போனா வச்சுக்க. எனக்கு எந்தக் கடைக்கும் போகவேண்டாம். எதுவும் வாங்க வேண்டாம்..."
"அப்பிடியானா எனக்கும் போக வேண்டியதில்லை..."
"சே! சே! சும்மா நீயும் அப்பிடிச் சொல்லிக்காதே போய் வேண்டியவை வாங்கிக்க - 'உதயரேகா' வைப்பாரு, ரெண்டு நாளாப் புதுப் புது நைலான், நைலக்ஸ்லாம் கட்டிக்கிறா... அவளுக்குக் குறைவான துணியை நீ கட்டலாமா...? ஹீரோயினாச்சே நீ?"
"இந்தாங்க! நீங்க இப்பிடிப் பேசறது உங்களுக்கே நல்லா இருக்கா?... உதயரேகாவையும் என்னையும் ஒண்ணாப் பேசற அளவு உங்க மனசு என் விஷயத்திலே கெட்டுப் போயிருக்கு..."
"யார் மனசும் கெட்டுப் போகலே! அவங்க அவங்க மனசைத் தொட்டுப் பார்த்தாத் தெரியும்."
"என்ன தெரியும்?"-
"ரெண்டு மூணு நாளா எப்பிடி நடந்துகிட்டோம்னு தெரியும்."
"இதே கேள்வியை நானும் உங்ககிட்டத் திருப்பிக் கேட்க முடியும்."
"........"
அவள் அவனருகே வந்து அவனுக்கு மட்டுமே கேட்கிற மெல்லிய குரலில், கெஞ்சுவது போல் வேண்டினாள்:
"இந்தாங்க! வீணா மனசைக் கெடுத்துக்காதீங்க. நான் இனி ஒருக்காலும் உங்களுக்குத் துரோகம் பண்ணமாட்டேன். இப்ப இந்த இடத்துலே நான் அநாதை, நீங்களும் இல்லேன்னா எனக்கு யாருமே துணையில்லே."
"சக்தியில்லாதவனிடத்தில் அடைக்கலமாவதில் என்ன பயன்?"
"உங்களுக்குச் சக்தியில்லேன்னா இந்த உலகத்திலேயே அது இல்லே, வீணா அடிக்கடி என்னைச் சோதிக்காதீங்க..."
"ஏன் மூணு நாளா எங்கூடப் பேசலே?"
"நீங்க ஏன் பேசலே?"
"நான் கோபக்காரன், ஆண் பிள்ளை.."
"அது தெரிஞ்சுதான் நானே முந்திக்கொண்டு வந்து இப்பக் கெஞ்சறேன்..."
"நீ ரொம்பக் கெட்டிக்காரி..."
"அதுவும் உங்களாலேதான்..."
- கடுமை மறைந்து அவன் முகத்தில் புன்முறுவல் மலர்ந்துவிட்டது. அதற்குமேல் அவளிடம் அவனால் கடுமையைக் காட்ட முடியவில்லை.
அருகே இழுத்து அவளை நெஞ்சாரத் தழுவினான் அவன். அவள் குரல் அவன் காதருகே கிளுகிளுத்தது.
"வாசற் கதவு திறந்திருக்கிறது."
"ஆமாம்! போய் அடைத்து விட்டுவா! அப்துல்லா பார்த்துத் தொலைக்கப் போகிறான், 'பணத்தின் ராஜாவாகிய நமக்கு கிடைக்காதது இந்தப் பஞ்சைப் பயலுக்குக் கிடைக்கிறதே - என்று அப்துல்லா என்மேல் பொறாமைப்படப் போகிறான் - "
"அதொண்ணுமில்லே! எனக்கு நீங்கதான் ராஜா" -
"சொல்றதை மட்டும் இப்பிடிச் சொல்லிப்பிடு. ஆனா மேடை மேலே கதாநாயகியா வர்ரப்ப வேற எந்த ராஜாவுக்கோதான் ராணியா நீ நடிக்கிறே?"
"பார்த்தீங்களா, பார்த்தீங்களா? இதுக்குத்தான் நான் முன்னாடியே பயந்து பயந்து அப்பப்ப வேண்டிக்கிறேன். மேடை மேலே நான் யாரோட நடிக்கிறேன், எப்ப எப்ப நெருக்கமா நடிக்கிறேன்னு கவனிச்சு என்னைக் கோவிச்சுக்காதிங்கன்னு பல தடவை சொல்லியிருக்கேன். இருந்தும் நீங்க அதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் காமிக்கிறீங்க. அதுக்கு நான் என்ன பண்ணுவேன்? மேடையிலேகூட நீங்கதான் என்னோட கதாநாயகரா நடிக்கணும்னு நான் ஆசைப்படத்தான் செய்யிறேன். நீங்க கதாநாயகரா நடிக்கிறதா இருந்தா உங்க அழகு வேறெந்தக் கதாநாயகருக்கும் வராது..."
"போதும்! ரொம்ப அதிகமாகக் காக்காய் பிடிக்காதே..."
"இனிமேல் காக்காய் பிடித்து ஆகவேண்டியதில்லை. உங்களை ஏற்கெனவே நான் முழுக்க முழுக்கக் காக்காய் பிடிச்சாச்சு." -
"சரி! சரி! போதும், உன் பேச்சும் நீயும். நாம் கடைக்கு எதுக்கும் இங்கே போக வேண்டாம். எல்லா 'ஷாப்பிங்' கையும் புறப்படறப்ப சிங்கப்பூர்லே வச்சுப்போம்..." என்று அவன் கூறியதை அவள் ஒப்புக் கொண்டாள். தங்களிடம் அப்துல்லாவும் கோபாலும் எவ்வளவு வித்தியாசமாக நடந்து கொண்டாலும் தாங்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க கூடாது என்று அப்போது அவர்கள் இருவருமே பரஸ்பரம் தங்களுக்குள் பிரதிக்ஞை செய்து கொண்டார்கள். அன்று மாலையிலேயே ஈப்போவுக்குப் புறப்படும்போது ஒரு சோதனை வந்து சேர்ந்தது.
நாடகங்களின் மொத்தக் காண்ட்ராக்ட்காரரான அப்துல்லா தன்னுடன், கோபாலுக்கும் மாதவிக்கும் மட்டும் விமானத்தில் ஈப்போ செல்ல ஏற்பாடு செய்து கொண்டு மற்றவர்கள் அனைவருமே - காரில் பயணம் செய்யட்டும் என்று திட்டம் வகுத்திருந்தார். அதன்படி முத்துக்குமரனும் காரிலே போகிறவர்களோடு சேர்ந்து கொள்ள வேண்டியிருந்தது.
புறப்படுவதற்குச் சிறிது நேரத்திற்கு முன்புதான் இந்த ஏற்பாடு மாதவிக்குத் தெரிந்தது. அவள் உடனே கோபாலிடம் சென்று தைரியமாக மறுத்துவிட்டாள்.
"நானும் காரிலேயே வரேன். நீங்களும் அப்துல்லாவும் மட்டும் ப்ளேன்ல வாங்க..."
"அது முடியாது! ஈப்போக்காரர்கள் ஏர் - போர்ட்ல வரவேற்க வந்திருப்பாங்க..."
"வந்திருக்கட்டுமே, அதுனாலே என்ன? நீங்கதான் போறீங்களே..."
"அது எப்படியிருந்தாலும் நீயும் ப்ளேன்லதான் வந்தாகணும்."
"நான் கார்லதான் வருவேன்..."
"அதென்ன? அப்பிடி ஒரு பிடிவாதமா?"
"பிடிவாதம்தான்."
"வாத்தியாருக்குப் பிளேன் டிக்கட் வாங்கலேங்கிறதுக்காகத்தான் நீ இப்ப வல்வழக்காடறே?"
"அப்படித்தான் வச்சுக்குங்களேன். நான் அவரோட தான் காரிலே ஈப்போ வரப்போறேன்..."
"இந்த வாத்தியார் ஒண்ணும் ஆகாசத்திலேருந்து உனக்கு முன்னாலே திடீர்னு அபூர்வமாக வந்து குதிச்சுப்புடலே, என்னாலேதான் உனக்கும் பழக்கம்..."
"இருக்கட்டுமே, அதுக்காக..."
"நீ ரொம்ப எதிர்த்துப் பேசறே? உனக்கு வாய்க் கொழுப்பு அதிகமாயிடிச்சு."
"........"
"வந்த இடத்திலே உன்கிட்ட ஒண்ணும் பண்ண முடியலை. மெட்ராஸா இருந்தா 'தூரப்போடி கழுதைன்னு' தள்ளிப்புட்டு ஒரே நாளிலே வேறே ஹீரோயினுக்கு வசனம் மனப்பாடம் பண்ணி வச்சு உன்னை வெளியே அனுப்பிடுவேன்."
"அப்பிடிச் செய்ய வேண்டிய அவசியம் இருந்தா அதையும் செய்துக்க வேண்டியதுதானே?"
இதைக் கேட்டுக் கோபால் அதிர்ச்சியடைந்தான். இவ்வளவு துடுக்காக அவள் தன்னிடம் எதிர்த்துப் பேச நேர்ந்த அனுபவம் இதற்கு முன் அவனுக்கு ஏற்பட்டதே இல்லை. முத்துக்குமரன் என்ற கொழுகொம்பின் பற்றுதலில் மாதவி என்ற மெல்லிய கொடி எவ்வளவு இறுக்கமாகப் பற்றிப் படர்ந்திருந்தால் இந்தத் துணிவு அவளுக்கு வந்திருக்க முடியுமென்று எண்ணியபோது அவன் திகைத்தான். கடைசியில் அப்துல்லாவும், அவனும் உதயரேகாவும்தான் விமானத்தில் சென்றார்கள். மாதவி, முத்துக்குமரனோடும் மற்றக் குழுவினருடனும் காரில் தான் ஈப்போவுக்கு வந்தாள்.
மாதவிக்கு உறைக்க வேண்டுமென்பதற்காகத்தான் அவளுக்கு ரிஸர்வ் செய்திருந்த விமானப் பயணச் சீட்டை உதயரோகாவின் பெயருக்கு மாற்றி அவளை விமானத்தில் அழைத்துக்கொண்டு போனார்கள் அவர்கள். மாதவியோ அவர்கள் யாரை விமானத்தில் அழைத்துப் போகிறார்கள் என்பது பற்றிக் கவலைப்பட்டதாகவே காண்பித்துக் கொள்ளவில்லை. உதயரேகாதான் மறுநாள் காலை எல்லாரிடமும் பினாங்கிலிருந்து விமானத்தில் தான் அப்துல்லாவோடு வந்ததாகப் பறையறைந்து கொண்டிருந்தாள். தன்னுடைய அந்தஸ்து உயர்ந்திருப்பதைக் குழுவிலுள்ள மற்றவர்களுக்குத் தெரிவித்துவிட ஆசைப்பட்டாள் அவள். அப்படித் தெரிவதால் குழுவிலுள்ள மற்றவர்கள் தனக்குப் பயப்படவும் மரியாதை செய்யவும் வழி உண்டு என்று அவளுக்குத் தோன்றியது போலும்.
-------------
அத்தியாயம் - 18
ஈப்போவில் முதல் நாள் நாடகத்திற்கு நல்ல வசூல் ஆயிற்று. இரண்டாம் நாள் நாடகத்தன்றும் பரவாயில்லை. பினாங்கில் ஆன வசூல் ஈப்போவில் ஆகவில்லை என்று கோபாலிடம் குறைபட்டுக் கொண்டார் அப்துல்லா. இரண்டாம் நாள் நாடகத்தன்று மாலையில் நல்ல மழை பிடித்துக் கொண்டதுதான் வசூல் குறைவிற்குக் காரணம் என்று கருதினான் கோபால்.
ஈப்போவில் தங்கியிருந்த இரண்டு நாட்களில் பகல் நேரங்களில் சுற்றுப்புறப் பகுதிகளில் பார்க்க வேண்டிய இடங்களைப் பார்த்து விட்டார்கள் அவர்கள். அடுத்து நாடகம் நடத்த வேண்டிய ஊர் கோலாலும்பூர். இடையில் ஒரு நாள் ஓய்வு கொள்வதற்கு மீதம் இருந்தது.
அப்துல்லாவும், உதயரேகாவும், கோபாலும் 'கேமரான் ஹைலண்ட்ஸ்' - என்ற மலை வாசஸ்தலத்திற்குப் போக விரும்பினார்கள். ஆனால் அந்த ஒரு நாள் ஓய்விற்குக் குழுவினர் அனைவரையும் அழைத்துச் செல்ல அவர்கள் தயாராயில்லை.
"நீ விரும்பினால் வரலாம்" - என்று மாதவியிடம் மட்டும் தெரிவித்தான் கோபால். "நான் வரவில்லை" - என்று சுருக்கமாகப் பேச்சை முடித்து அவனை அனுப்ப முயன்றாள் மாதவி. ஆனால் கோபால் அதோடு விடாமல் மேலும் பேச்சுக் கொடுத்தான். "உதயரேகாவை அனுப்பிச்சும்... அப்துல்லா உன்னையே நெனைச்சு உருகிப் போயிட்டிருக்காரு..."
"அதுக்கு என்னை என்ன செய்யச் சொல்றீங்க? நான் கேமரான் ஹைலண்ட்ஸுக்கு வரலையின்னு சொன்னப் புறமும் நீங்க மேலே மேலே பேசிக்கிட்டிருந்தா அப்புறம் நான் பதில் சொல்றதுக்கு ஒண்ணுமில்லை."
"அதுக்கில்லே; அப்துல்லா கோடீஸ்வரன். மனசு வச்சுட்டான்னாக் கோடி கோடியாப் பணத்தைக் கால்லே கொண்டாந்து கொட்டுவான்."
"எங்கே கொட்டணுமோ கொட்டட்டுமே?"
"நீ வீணாக ரொம்ப மாறிப் போயிட்டே."
"ஆமாம் மாறித்தான் போயிட்டேன். அதை நீங்க புரிஞ்சிக்கிட்டிருந்தாச் சரிதான்.
"வாத்தியார் என்னமோ மாயமாகச் சொக்குப் பொடி போட்டு உன்னை மயக்கிப்புட்டான்..."
தன் அறையைத் தேடி வந்து தனிமையில் கோபால் நீண்ட நேரம் பேசுவதை அவள் விரும்பவில்லை. அவன் வாயிலிருந்து வீசிய நாற்றத்தில் அப்போது அவன் குடித்துவிட்டு வேறு வந்திருக்கிறான் என்று தெரிந்தது. ஆகவே நீண்ட பேச்சைத் தவிர்க்க விரும்பினாள் அவள். அவனோ என்ன சொல்லியும் போகிற வழியாயில்லை. பேசிக் கொண்டே நின்றவன் திடீரென்று ஒரு பயங்கர மிருகத்தின் வெறியோடு தாவி அவளைத் தழுவ முயன்றான். அதை முற்றிலும் எதிர்பாராத மாதவி தன் கைகளின் முழுப் பலத்தையும் பிரயோகித்து அவனைப் பிடித்துக் கீழே தள்ளிவிட்டு அறைக் கதவைத் திறந்து கொண்டு வெளியே ஓடிவிட்டாள். நேரே முத்துக்குமரனின் அறைக்குப் போய்க் கதவைத் தட்டினாள் மாதவி. முத்துக்குமரன் எழுந்து வந்து கதவைத் திறந்தவன் அவளிருந்த பதற்றமான நிலையைக் கண்டு திகைத்தான்.
"ஏன் இப்படி உடம்பு நடுங்குது? என்ன நடந்துச்சு?"
"உள்ளே வந்து சொல்றேன்" - என்று கூறிவிட்டு அவனோடு அவனறைக்குள் சென்றாள் மாதவி.
கதவைத் தாழிட்டுவிட்டு உள்ளே சென்று அவளை உட்காரச் சொன்னான் முத்துக்குமரன். குடிக்கத் தண்ணீர் கேட்டாள் அவள். அவனே எழுந்து சென்று 'ஜக்'கிலிருந்து தண்ணீர் எடுத்துக் கொடுத்தான். தண்ணீரைப் பருகிய பின் நடந்ததையெல்லாம் ஒன்றுவிடாமல் அவனிடம் சொன்னாள் அவள்.
எல்லாவற்றையும் கேட்டுப் பெருமூச்சு விட்டான் அவன். சில விநாடிகள் அவளுக்கு என்ன மறுமொழி சொல்வதென்றே அவனுக்குத் தெரியவில்லை. அவள் திடீரென்று விசும்பி விசும்பி அழத் தொடங்கினாள். வெடித்துப் பொங்கி வந்த அழுகை அவன் இதயத்தைப் பிசைந்தது. அவள் அருகே சென்று பட்டுக் கருங்கூந்தலைக் கோதியபடியே ஆறுதலாக அரவணைத்தான் அவன். அவனுடைய அரவணைப்பில் அவள் பாதுகாப்பைக் கண்டது போல் உணர்ந்தாள். நீண்ட நேரத்திற்குப்பின் அவன் அவளிடம் கூறினான்:
"சமூகத்தின் ஒவ்வொரு துறையும் இன்றைக்கு ஒரு பெரிய வீதியாக நீண்டிருக்கிறது. அவற்றில் சில வீதிகளில் நடந்து செல்கிறவர்களுக்குப் பாதுகாப்புக் குறைவு; பிரகாசம் அதிகம். சமூகத்தின் இருண்ட வீதிகளில் நடப்பதை விட அதிகமான திருட்டுக்களும் வழிப்பறிகளும் பிரகாசமான வீதியில் தான் மிகுதியாக நடைபெறுகின்றன. பிரகாசங்களின் அடியில்தான் அந்தகாரம் வசிக்கிறது. கலையுலகம் என்ற வீதி இரவும் பகலும் பிரகாசமாக மின்னுகிறது. புகழால் மின்னுகிறது. வசதிகளால் மின்னுகிறது. ஆனால் இதயங்களால் மின்னவில்லை. எண்ணங்களின் பரிசுத்தத்தால் மின்னவில்லை. அந்த வீதியின் பிரகாசத்தில் மிக வனப்புடைய பலருடைய சரீர அழகும், மன அழகும், மௌனமாகவும் இரகசியமாகவும் பலியாகிக் கொண்டே இருக்கின்றன."
"ஊருக்குப் போனதும் 'போடி கழுதைன்னு' என்னைக் கழுத்தைப் பிடிச்சு வெளியிலே தள்ளிடப் போறாராம்."
"யார்? கோபால் உங்கிட்டச் சொன்னானா?"
"ஆமாம், ஈப்போவுக்குப் பிளேன்ல வரமாட்டேன்னு சொன்னப்ப எங்கிட்டச் சத்தம் போட்டாரு!"
"கலை ஒரு பெண்ணின் வயிற்றுக்கும் வசதிகளுக்கும் பாதுகாப்பளிக்கிறதே ஒழிய உடம்பிற்கும் அதன் கற்புக்கும் பாதுகாப்பளிப்பதில்லை".
"........."
அவளால் இதற்குப் பதில் எதுவும் சொல்ல முடியவில்லை. அவன் முகத்தை நேரே பார்ப்பதற்குத் துணிவின்றிக் கீழே தரையை நோக்கிக் குனிந்தது அவள் முகம்.
உதயரேகா சகிதம் அப்துல்லாவும் கோபாலும் கேமரான் ஹைலண்ட்ஸுக்குப் போய்விட்டார்கள். அவர்கள் கேமரான் ஹைலண்ட்ஸிலிருந்து திரும்பியதும் குழுவினர் அனைவரும் ஈப்போவிலிருந்து திரும்பியதும் புறப்பட வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டிருந்தது.
அன்று பகலில் மாதவியும் முத்துக்குமரனும், குழுவைச் சேர்ந்த துணை நடிகன் ஒருவனும், ஒரு டாக்ஸி வாடகைக்குப் பிடித்துக் கொண்டு, ஈப்போவைச் சுற்றியிருந்த சுங்கை, சுங்கை சிப்புட், கம்பார் முதலிய ஊர்களுக்குப் போய்விட்டு வந்தார்கள். 'சுங்கை சிப்புட்'டில் கூட்டுறவு முறையில் நடத்தப்படும் ஒரு ரப்பர்த் தோட்டத்தையும், மகாத்மா காந்தி பெயரில் கட்டப்பட்டிருந்த காந்தி கலாசாலை என்ற பள்ளிக் கூடத்தையும் அவர்கள் பார்த்தார்கள். போகும் போதும் வரும்போதும் சாலையருகே மெழுகுவர்த்தி உருகி வருவதுபோல் கொடி கொடியாகச் சரிந்த ஒருவகை மலைகள் பார்க்க மிக அழகாக இருந்தன. எல்லா இடமும் சுற்றிப் பார்த்துவிட்டு ஏழரை மணிக்குள் அவர்கள் திரும்பி விட்டார்கள். கேமரான் ஹைலண்ட்ஸ் போயிருந்தவர்கள் திரும்ப இரவு இரண்டு மணிக்கு மேலாகி விட்டது.
மறுநாள் அதிகாலையில் கோபால், அப்துல்லா, உதயரேகா மூவரும் விமானம் மூலமும், மற்றவர்கள் கார் மூலமும் கோலாலும்பூர் புறப்பட்டனர். ஸீன்கள், ஸெட்டிங்ஸ் எல்லாம் ஓர் ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குப் பத்திரமாக வந்து சேர, அப்துல்லா லாரி ஏற்பாடு செய்திருந்தார். அதனால் அவை ஒழுங்காக உரிய காலத்திலே அந்தந்த ஊருக்கு வந்து சேர்ந்தன.
உதயரேகாவைத் தொடர்ந்து அவர்கள் விமானத்தில் அழைத்துப் போவதிலிருந்து தான் அதைப் பார்த்து ஏங்கி வழிக்குவர முடியுமென அப்துல்லா எண்ணுவதாகத் தோன்றியது மாதவிக்கு. அவள் அப்துல்லாவை நினைத்துப் பரிதாபப்பட்டாள். அவள் முத்துக்குமரனிடம் கூறினாள்:
"எங்கோ மூலையில் கிடந்த உதயரேகாவுக்கு மலேயாவிலே வந்து இப்படி ஒரு யோகம் அடிக்கணும்னு தலையிலே எழுதியிருக்குப் பாருங்க..."
"ஏன்? அவமேலே பொறாமையாயிருக்கா உனக்கு?"
"சே! என்ன பேச்சுப் பேசறீங்க நீங்க?... நான் சொல்ல வந்தது அவயோகத்தைப் பற்றியே தவிர, எனக்கு அதிலே பொறாமையின்னு அர்த்தமில்லை. அவ வரக்கண்டுதான் நான் பிழைச்சேன்..."
"இல்லேன்னா?"
"........."
அவள் பதில் சொல்லவில்லை. அவ்வளவு கடுமையாக அவளைக் கேட்டிருக்கக்கூடாதென்று அவனும் அந்தப் பேச்சை அவ்வளவிலேயே நிறுத்தினான். தான் அப்படிக் கடுமையாகப் பேசும் ஒவ்வொரு தடவையும் அவள் தனக்கு முன் மௌனம் சாதிப்பதைப் பார்த்து அவனுக்கே அவள் மேல் உள்ளூறக் கருணை சுரந்தது. நிராயுதபாணியாக எதிரே நிற்கும் பலவீனமான எதிரியை ஆயுதங் கொண்டு துன்புறுத்தியதைப் போல உணர்ந்தான் அவன்.
அவனும் மாதவியும் எதிர்பாராமலே கோலாலம்பூரில் அவர்களுக்கு ஒரு வசதி கிடைத்தது. அப்துல்லாவும் உதயரேகாவும், கோபாலும் மரீலின் ஹோட்டல் என்ற முதல் தரமான உல்லாச ஹோட்டலில் தங்கிக் கொண்டு மற்றவர்களை வேறோர் இடத்திலிருந்த சாதாரணமான 'ஸ்டிரெயிட்ஸ் ஹோட்ட'லில் தங்கச் செய்தனர். ஏற்பாடு செய்யுமுன் கோபால் மாதவியைக் கேட்டான்.
"உனக்கு ஆட்சேபணையில்லேன்னா நீயும் எங்ககூட மரீலின் ஹோட்டல்லே தங்கலாம். ஆனா வாத்தியாருக்கும் சேர்த்து இங்கே ஏற்பாடு செய்ய முடியாது."
"அவசியமில்லை! நான் இங்கே தங்கல்லே. அவர் தங்கற இடத்திலேயே நானும் தங்கிக்கிறேன்..." என்றாள் மாதவி.
உயரமான கட்டிடங்களும், சீன எழுத்திலும், மலாய் எழுத்திலும், ஆங்கிலத்திலுமாக மின்னும் நியான்ஸைன் விளக்குகளுமாகக் கோலாலும்பூர் முற்றிலும் புதியதொரு தேசத்துக்கு வந்திருக்கிறோம் என்ற உணர்வை அவர்களுக்கு அளித்தது. சாலைகள் எல்லாம் பளீரென்றும் கச்சிதமாகவும் இருந்தன. மெட்ராஸில் பார்த்திராத தினுசுகளில் சிறிதும் பெரிதுமாகப் புதிய புதிய கார்கள் நிறையத் தென்பட்டன. மலாய்க்காரர்கள் யார், சீனர்கள் யார் என்று வித்தியாசம் கண்டுபிடிப்பது ஆரம்பத்தில் கடினமாக இருந்தது.
அவர்கள் அங்கே போய்ச் சேர்ந்த தினத்தன்று மறுநாள் காலையில் உள்ளூர்க் காலைத் தமிழ்த் தினசரியில் நடிகர் கோபாலைப் பேட்டி கண்டு வெளியிட்டிருந்தார்கள். அந்தப் பேட்டியில், "இங்கே நீங்கள் நடத்த இருக்கும், 'கழைக் கூத்தியின் காதல்' என்ற நாடகத்திற்கு முன் அதை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட நேர்ந்தது பற்றி மலேயாத் தமிழர்களுக்கு எதுவும் கூறுவீர்களா?'' என்று ஒரு கேள்வி இருந்தது.
"முழுக்க முழுக்க நானே திட்டமிட்டு மலேயாத் தமிழர்களுக்காகத் தயாரித்த நாடகம் இது! இதன் வெற்றியை நான் என் வெற்றியாகவே கருதுவேன்" - என்று அந்தக் கேள்விக்கு மறுமொழி கூறியிருந்தான் கோபால். அதைப் படித்த போது மாதவிக்கும் முத்துக்குமரனுக்கும் தாங்க முடியாத ஆத்திரம் வந்தது.
"உபசாரத்துக்குக் கூட இது நீங்க எழுதின நாடகம்னு ஒரு வார்த்தை சொல்லலை, பார்த்திங்களா? அவருக்கு எத்தினி திமிரு இருந்தா இப்படிப் பதில் சொல்லியிருப்பார்."
"நீ சொல்றது தப்பு மாதவீ! அவனுக்குத் திமிரும் கிடையாது, ஒரு எழவும் கிடையாது. சுபாவத்திலே அவன் பெரிய கோழை, வெளியிலே பெரிய தீரன் மாதிரி நடிக்கிறான். இந்தப் பேட்டி விஷயம் வேறே மாதிரி நடந்திருக்கும், பத்திரிக்கைகாரங்களை அப்துல்லாதான் 'மரீலீ'னுக்குக் கூட்டிக்கிட்டு வந்திருப்பார். பேட்டி எடுக்கறப்ப அவரும்கூட இருந்திருக்கார்னு இந்தப் பேட்டியிலேயே போட்டிருக்கே படம், அதுலேருந்து தெரியுது. இதோ பாரு படத்தை. முதல்லே கோபால், நடுவிலே உதயரேகா. அப்புறம் அப்துல்லான்னு மூணு பேருமா நிக்கறாங்களே. அப்துல்லாவுக்குப் பயந்து அவன் உன் பெயரையோ என் பெயரையோ சொல்லாமல் விட்டிருப்பான். அவன் உன் பேரையும், என் பேரையும் சொல்லி அப்துல்லா அதை வேண்டாம்னுருக்கணும்."
"இருந்தாலும் இருக்கும்! ஆனா இது அடுக்கவே அடுக்காது. நாடகத்தை எழுதி முழுக்க முழுக்க 'டைரக்ட்' பண்ணின உங்களை அவர் மறந்து போன பாவம் அவரைச் சும்மா விடாது."
"பாவ புண்ணியத்தைப் பார்க்கிறவங்க இன்னிக்கி உலகத்திலே யார் இருக்காங்க?" என்ற அவளுக்கு விரக்தியான குரலில் மறுமொழி கூறினான் முத்துக்குமரன்.
அவர்கள் தங்கியிருந்த 'ஸ்டிரெயிட்ஸ் ஹோட்ட'லில் சைனீஸ் உணவும் காண்டினெண்டல் உணவு வகைகளும்தான் இருந்தன. எனவே காலைச் சிற்றுண்டியும் பகலுணவும், இரவு உணவும் அம்பாங் ஸ்டிரீட்டிலிருந்து ஒரு இந்திய ஹோட்டல்காரர் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தார். காபி, கூல்டிரிங்ஸ், ஐஸ்கிரீம் போன்றவைகளை மட்டும் அவர்கள் தங்கள் ஹோட்டலிலேயே ஏற்பாடு செய்துகொண்டார்கள்.
வந்த தினத்தன்று இரவு எங்கும் போகவில்லையாயினும் மறுநாள் காலை அவர்கள் மகாமாரியம்மன் கோவிலுக்கும், பத்து மலைக்கும் போய்விட்டு வந்தார்கள். அவர்கள் பத்து மலைக்குப் போயிருந்தபோது நீண்ட நாட்களுக்கு முன் மதுரையில் ரொட்டிக் கடை வைத்திருந்த ருத்ரபதி ரெட்டியாரைத் தற்செயலாக அங்கே சந்திக்க நேர்ந்தது. அவரும் உடனே அவனை அடையாளம் கண்டு கொண்டார். பெட்டாலிங் ஜெயாவில் ரொட்டிக்கடை வைத்திருப்பதாகவும், இரண்டு வருஷத்துக்கு ஒருதரம் ஆறுமாதம் ஊர்போய் வருவதாகவும் தெரிவித்தார் ரெட்டியார். புது தேசத்தில் எதிர்பாராத விதமாக ஒரு தெரிந்த மனிதரைச் சந்தித்தது மிகவும் இன்பமாயிருந்தது. மாதவியை அவருக்கு அறிமுகம் செய்து வைத்ததோடு தான் சென்னைக்கு வந்து கோபால் நாடகக் குழுவில் இருப்பதையும் தெரிவித்தான் முத்துக்குமரன்.
"மெல்ல சினிமாவுக்கு ஏதாவது எழுதப் பார்க்கக் கூடாதோ? சினிமாதான் இன்னிக்குக் கை நிறையக் காசு தரும்" - என்று எல்லாரும் வழக்கமாகக் கூறுவதையே ரெட்டியாரும் கூறினார், அதைக் கேட்டு முத்துக்குமரனுக்குச் சிரிப்புத்தான் வந்தது. சிரித்துக்கொண்டே அவருக்குப் பதில் கூறினான் அவன்:
"சினிமா எங்கே ஓடிப்போறது? பார்த்துக்கலாம்."
"சரி! நாளை மத்தியானம் உங்க ரெண்டு பேருக்கும் நம்ம வீட்டிலே சாப்பாடு. பெட்டாலிங்ஜெயாவுக்கு வந்துடுங்க... அது சரி; எங்கே தங்கியிருக்கீங்கன்னு சொல்லவே இல்லியே?"
"ஸ்டிரெயிட்ஸ் ஹோட்டல்லே இருக்கோம். சாப்பாடு பலகாரம்லாம் அம்பாங் ஸ்ரீட்லேருந்து கொண்டாந்து தராங்க..."
"நம்ம வீட்டிலேயே வந்து தங்கிடுங்களேன்."
"அது முடியாது! நாடகக் கம்பெனி ஆட்கள் எல்லாரோடவும் சேர்ந்து தங்கியிருக்கோம். தனியாப் போறது நல்லாயிருக்காது. விடவும் மாட்டாங்க..."
"சரி! ஸ்டிரெயிட்ஸ் ஹோட்டலுக்கு நாளை மத்தியானம் கார் அனுப்பறேன். வந்துடுங்க" - என்று கூறிவிட்டு விடை பெற்றுக்கொண்டு போய்ச் சேர்ந்தார் ருத்ரபதி ரெட்டியார். அவர் சென்ற பின்பு சிறிது நேரம் அவரைப் பற்றியும் மதுரையில் பத்து வருடங்களுக்கு முன் அவரோடு பழக நேர்ந்தது பற்றியும் அவருடைய குணாதிசயங்கள் பற்றியும் சிறிது நேரம் மாதவியிடம் வியந்து சொல்லிக் கொண்டிருந்தான் முத்துக்குமரன். பத்து மலையிலிருந்து அவர்கள் திரும்பி ஹோட்டலுக்கு வந்தபோது எதிர்பாராத விதமாகக் கோபால் அங்கே வந்திருந்தான்.
"என்ன வாத்தியாரே! இந்த ஹோட்டல்லே எல்லாம் வசதியா இருக்கா? ஏதாவது வேணும்னாச் சொல்லுங்க. நான் வேறே எடத்துலே தங்கிட்டேன்கிறதுக்காக உங்க குறைகளைச் சொல்லாம விட்டுடப்பிடாது-" என்று ஒரு டிரேட் யூனியன் லீடரிடம் அவனுடைய குறைகளைத் தொழில் நடத்துகிறவன் கேட்பது போல் கேட்டான் கோபால்.
உண்மைப் பிரியமில்லாமல் ஓர் உபசாரத்துக்காகக் கேட்கப்படும் அந்த வார்த்தைகளை முத்துக்குமரன் ஸீரியஸாக எடுத்துக்கொள்ளவுமில்லை; பதில் சொல்லவுமில்லை. அவன் போன பிறகு மாதவி முத்துக்குமரனிடம் கேட்டாள்:
"விசாரிக்கிற லட்சணத்தைப் பார்த்தீங்களா? உதட்டிலே கூட ஒட்டாமே வார்த்தைகளைப் பேசறாரு..."
"விட்டுத்தள்ளு அவன் பேச்சை, நாம எல்லாம் இங்கே அவனைப் பத்தி என்னென்ன பேசிக்கிறோமோன்னு திடீர்னு பயம் வந்திருக்கும். அந்தப் பயத்திலே பார்த்திட்டுப் போகலாம்னு வந்திருப்பான்."
"உதயரேகாதான் இந்தப் பக்கம் தலையையே காட்டலே, ஒரேயடியா அப்துல்லாகிட்டவே இருந்துட்டா..."
"அப்துல்லா விட்டால்தானே?"
மாதவி இதைக் கேட்டுச் சிரித்தாள்.
முத்துக்குமரன் மேலும் தொடர்ந்தான்:
"அப்துல்லாவும் விடமாட்டாரு. அவளுக்கும் இங்கே வந்து நம்ம முகத்தையெல்லாம் பார்க்கிறதுக்கு வெட்கமாக இருக்குமில்லே..."
"வெட்கமென்ன இதிலே? கோபால் சாரிட்ட வர்ரத்துக்கு முந்தி ஹைதராபாத்திலே அவ எப்படி இருந்தாளோ அப்பிடி இருக்கிறத்துக்கு இப்ப மட்டும் என்ன வெட்கம்?"
"வீணா ஏன் அடுத்தவங்களைக் குறை சொல்றே...? அவளைக் குறை சொல்லிப் பிரயோசனமில்லே. முதமுதல்லே யாராவது ஒரு அயோக்கியன் அவளை இந்த லயன்லே கொண்டாந்து விட்டிருப்பான். வயித்துக் கொடுமை நல்லது கெட்டது அறியாது!... இப்படிப்பட்டவங்க மேலே எனக்கு எப்பவுமே ஒரு அநுதாபம் உண்டு மாதவி."
அவள் உதயரேகாவைப் பற்றிப் பேசுவதை அவ்வளவில் விட்டு விட்டாள். இன்னும் சிறிது நேரத்துக்கு அதே பேச்சைப் பேசினால் இறுதியில் அது தன் வரை வந்து நின்று விடுமோ என்று அவளுக்கே உள்ளூர ஒரு பயம் இருந்தது.
முத்துக்குமரன் வேறு தன் பேச்சில், "முத முதலிலே யாராவது ஒரு அயோக்கியன் அவளை இந்த 'லயன்லே' கொண்டாந்து விட்டிருப்பான்" என்று அழுத்திக் கூறியிருந்தான். முன்பு எப்போதோ தான் முத்துக்குமரனிடம் பேசிக் கொண்டிருந்தபோது, "என்னை இந்த லயன்லே கொண்டாந்ததே கோபால்தான்" என்று தான் கூறியபோது 'இந்த லயன்லேன்னா என்னா அர்த்தம்?' என்ற பதிலுக்கு இவன் கோபமாகக் கேட்டிருந்தது இப்போது அவளுக்கு ஞாபகம் வந்தது. அதே மாதிரி இன்றும் 'இந்த லயன்லே' என்ற வார்த்தையை அவனே உபயோகித்து விட்டான். சாதாரணமாக அந்த வார்த்தையை அவன் உபயோகித்தானா அல்லது ஏதாவது உள்ளர்த்தத்தோடு உபயோகித்தானா என்பதைப் புரிந்துகொள்ள முடியாமல் உள்ளேயே புழுங்கினாள் அவள். இந்நிலையில் உதயரேகாவின் நடத்தையைப்பற்றி மேலே பேச்சை வளர்ப்பது இருவரும் சுமுகமாகப் பேசிக் கொண்டிருக்கும் அமைதியான சூழ்நிலையைக் கெடுப்பதாக முடியும் என்று எண்ணிப் பயத்தோடு அந்தப் பேச்சை நிறத்தினாள் அவள்.
*****
கோலாலும்பூரில் முதல் நாள் நாடகம் நல்ல வசூலைத் தந்தது. தொடர்ந்து ஒவ்வொரு நாளுக்கும் ஹெவி 'புக்கிங்' இருப்பதாக அப்துல்லா கூறிக்கொண்டிருந்தார். வந்த இரண்டாவது நாள் மத்தியானம் ருத்ரபதி ரெட்டியாரின் கார் ஸ்டிரெயிட்ஸ் ஹோட்டலுக்கு வந்து அவர்களை விருந்துக்கு அழைத்துக் கொண்டு போயிற்று. ருத்ரபதி ரெட்டியார் குடியிருந்த பெட்டாலிங்ஜெயா பகுதி புதிய புதிய நவீனக் கட்டிடங்களைக் கொண்டிருந்தது. கோலாலும்பூரில் புதிய அழகிய எக்ஸ்டென்ஷன் என்று அதைப் பற்றி ருத்ரபதி ரெட்டியாரின் டிரைவர் விவரித்துக் கூறினான். ருத்ரபதி ரெட்டியார் மலேயாவுக்கு வந்து பெரும் பணக்காரராகியிருப்பதாகத் தெரிந்தது. முதல் தரமான பாண்டிய நாட்டுச் சைவச் சமையல் விருந்தில் கிடைத்தது.
விருந்து முடிந்ததும் மாதவிக்கு ஒரு மெல்லிய தங்கச் சங்கிலியையும், முத்துக்குரனுக்கு ஓர் உயர்தரமான ஸீகோ கைக்கடிகாரத்தையும் அன்பளிப்பாக வழங்கினார் ரெட்டியார். அவர் மாதவியிடம் தங்கச் சங்கிலியை வெற்றிலை பாக்குப் பழத்தோடு வைத்துக்கொடுக்க முன் வந்தபோது அதை வாங்கிக் கொள்ளலாமா கூடாதா என்பது பற்றி முத்துக்குமரன் என்ன நினைக்கிறான் என்று அறிய விரும்பியவள்போல தயக்கத்தோடு அவன் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள் அவள். முத்துக்குமரன் அவள் பயத்தை கண்டு சிரித்தான்.
"சும்மா வாங்கிக்க. ரெட்டியார் நம்ம அண்ணன் மாதிரி. அவரிட்ட நாம வித்தியாசம் பாராட்டக்கூடாது."
அவள் வாங்கிக் கொண்டாள். கடிகாரத்தை ரெட்டியாரே முத்துக்குமரனின் கையிலே கட்டி விட்டார்.
"ஏதோ கடவுள், புண்ணியத்திலே இங்கே கடல் கடந்து வந்து நல்லா இருக்கோம். நல்லா இருக்கறப்ப நமக்கு வேண்டியவங்களை மறந்துடப்பிடாது" என்ற ரெட்டியார் கூறினார்.
"மாதவி! ரெட்டியார் இப்ப இப்பிடி இருக்காரேன்னு நினைக்காதே. மதுரையிலே இருக்கறப்ப நாங்க ரெண்டு பேரும் ரொம்ப சிநேகிதம். கவிராயர் குடும்பத்திலே பிரியம். எங்க நாடக சபா நாயுடுவுக்கு அந்தக் காலத்திலே இவருதான் வலது கை."
"அப்படின்னா இவருக்குக் கோபால் சாரையும் நல்லாத் தெரிஞ்சிருக்கணுமே?"
"தெரியும் அம்மா? ஆனா, அவரு, இப்ப உச்சாணிக் கொம்பிலே இருக்காரு. இந்த தேசத்திலேயே பெரிய வைர வியாபாரி அப்துல்லாவோட 'கஸ்ட்டா' வந்து தங்கியிருக்காரு. நம்மைப் போலொத்தவங்களை மதிப்பாரோ, மாட்டாரோ? மரீலின் ஹோட்டலுக்குப் போறதுன்னாலே பயம். அங்கே டவாலியிலிருந்து, வெயிட்டர் வரை அத்தினிபேரும் இங்கிலீஷ்லேதான் பேசுவாங்க. எனக்கோ இங்கிலீஷ்னாலே பயம். பேசவும் வராது. கேட்கவும் புரியாது..."
"என்னை மாதிரீன்னு வச்சுக்கயேன்..." என்று முத்துக்குமரன் மாதவியிடம் குறுக்கிட்டுக் கூறினான்.
"பழகினாத் தானே வந்திட்டுப் போகுது."
"அப்படியிலேலேம்மா! ஒரு தபா பாரு; என் வியாபார சம்பந்தமா ஹாங்காங் போறதுக்காக - பிளேன் டிக்கட் வாங்கறதுக்காக மரீலினுக்குப் போயிருந்தேன். பி. ஓ. ஏ. ஸி. பிளேன் கம்பெனிக்காரன் ஆபீஸ் அந்த மரீலின் ஒட்டல்லேதான் கிரவுண்ட்ப்ஃளோர்ல இருக்கு. அங்கே ரிஸப்ஷன்ல ஒரு சீனச்சி - சின்ன வயசுக் குட்டி இருந்தா! அவ கீச்மூச்னு இங்கிலீஷ்ல பேசினப்ப எனக்கு ஒண்ணுமே ஓடலே. கொஞ்சம் மலாய்மொழியும், சீனக்காரன் பாஷையும் எனக்குத் தெரியும். துணிந்து சைனீஸ் பாஷை பேசினேன். அதுக்கப்பறம் தான் அந்த சீனச்சியும் சிரிச்சுக்கிட்டே சைனீஸ் பேசினா. டிக்கட்டை வாங்கிக்கிட்டு வந்து சேர்ந்தேன். எதுக்குச் சொல்றேன்னா இங்கிலீஷ் வேண்டியது தான், தெரியாதவங்ககிட்ட அதைப் பேசிச் சங்கடப்படுத்தறாங்களேங்கிறது தான் வருத்தமாயிருக்கு?"
"மாதவிக்கு அந்தக் கஷ்டமே இல்லே ரெட்டியார் சார்! அவளுக்கு இங்கிலீஷ், மலையாளம், தமிழ் எல்லாமே நல்லாப் பேசத் தெரியும்; எழுதவும் தெரியும்..."
"ஆமாமா! மலையாளத்திலே எல்லாருமே இங்கிலீஷ் நல்லாப் படிச்சிருப்பாங்க..."
ரெட்டியாரிடமிருந்து அவர்கள் விடைபெற்றுப் புறப்படும்போது மாலை மூன்றரை மணி ஆகிவிட்டது. மாலைக் காபி சிற்றுண்டியையும் முடித்துக் கொண்டு தான் அவர்கள் பெட்டாலிங்ஜெயாவிலிருந்து புறப்பட்டார்கள். புறப்படும்போது ரெட்டியார், "இந்தா முத்துக்குமார்! இங்கே இருக்கிறவரை எது வேணும்னாலும் என்கிட்டக் கூசாமக் கேக்கலாம். வெளியிலே சுத்தறதுக்குக் கார்கீர் தேவையின்னாலும் ஃபோன் பண்ணு..." என்று பாசத்தோடு கூறினார்.
அவருடைய அன்பு முத்துக்குமரனை வியப்பிலாழ்த்தியது. மீண்டும் ஸ்டிரெயிட்ஸ் ஹோட்டலுக்குத் திரும் பியபோது அவர்களுக்கு ஓர் அதிர்ச்சி தரும் செய்தி காத்திருந்தது.
அன்று பகலில் அளவுக்கதிமாகக் குடித்ததினால் கோபால் பாத்ரூமில் வழுக்கி விழுந்து முழங்காலில் ஒரு சிறு ஃபிராக்சர் - வந்து ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் துணை நடிகர்கள் அனைவரும் கோபாலைப் பார்க்க ஆஸ்பத்திரிக்குப் போயிருப்பதாகவும் ஸ்டிரெயிட்ஸ் ஹோட்டல் ரிஸப்ஷனில் கூறினார்கள். அந்த ரிஸப்ஷனிஸ்டிடமே கோபால் சேர்க்கப்பட்டிருந்த பிரைவேட் நர்ஸிங் ஹோமின் விலாசமும் இருந்தது. அதை எழுதி வாங்கிக் கொண்டு ரெட்டியாரின் காரிலேயே அங்கே விரைந்தார்கள் அவர்கள்.
நர்ஸிங்ஹோம் மவுண்ட்பாட்டன் ரோடிலிருந்தது. அவர்கள் போனபோது துணை நடிகர்களும், குழுவைச் சேர்ந்த மற்றவர்களும் கூட்டமாகத் திரும்பிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவரும் அன்றைக்கு மாலையில் நடைபெற வேண்டிய நாடகம் உண்டா இல்லையா என்பதைப் பற்றியே குழப்பமடைந்திருப்பது தெரிந்தது. கோபாலின் காலில் ஃபிராக்சர் ஏற்பட்டு - நடிக்க முடியாமற் போனதனால் அன்றைய நாடகமும் அடுத்த நாட்களுக்கான புரோகிராமும் கான்ஸல் செய்யப்படும் என்று அவர்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். நிறைய வசூலாகி ஏராளமான டிக்கட்டுக்கள் விற்று தியேட்டரும் வாடகைக்குப் பேசியிருப்பதனால் நாடகங்கள் கான்ஸலாவதனால் தமக்குப் பெருத்த நஷ்டமேற்படும் என்று அப்துல்லா கவலையடைந்திருப்பதாகவும் அவர்கள் கூறினார்கள்.
கோபாலின் காலில் கட்டுப்போட்டுப் படுக்கையில் கிடத்தியிருந்தார்கள். தூக்க மருந்து கொடுத்திருந்ததனால் அவன் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தான்.
"ரொம்ப மைனர் ஃபிராக்சர்தான்; ஹி வில் பி ஆல் ரைட் வித் இன் ஏ வீக் டைம். டோண்ட் வொர்ரி" என்று டாக்டர் அப்துல்லாவிடம் கூறிக்கொண்டிருந்தார். அப்துல்லாவும் உதயரேகாவும் கவலையோடு நின்று கொண்டிருந்தார்கள்.
"ஹி ஹேஸ் ஸ்பாயில்ட் எவ்வரிதிங், ஈப்போவிலேயே ஹேவி லாஸ் எனக்கு. கோலாலும்பூரிலியாவது அதை 'மேக் அப்' பண்ணிடலாம்னு பார்த்தேன். ஏழு நாளைக்கும் ஹெவி புக்கிங் இருக்கு இங்கே..." என்று அப்துல்லா மாதவிடம் அழாத குறையாக ஒப்பாரி வைத்தார். அடிபட்டுக் கிடப்பவன் மேல் சிறிதும் இரக்கப்படாமல் அவர் அப்படிப் பேசியது மாதவிக்கும் முத்துக்குமரனுக்கும் கொஞ்சங்கூடப் பிடிக்கவில்லை. முத்துக்குமரனுக்குக் கோபமே வந்து விட்டது.
"இந்தாய்யா பணம் பணம்னு பறக்காதே. உனக்கு நாடகம் தானே நடக்கணும்? அது கச்சிதமா நடக்கும். ஆறு மணிக்குத் தியேட்டருக்கு வந்துசேரு" என்று தீர்க்கமான குரலில் அப்துல்லாவிடம் கூறினான் முத்துக்குமரன்.
அப்துல்லா அப்போதும் சந்தேகத்துடன், "அது எப்பிடி சாத்தியம்?..." என்று ஏதோ கேட்க ஆரம்பித்தார்.
"பேசாதே! நாடகம் நடக்கும். தியேட்டருக்கு வா. கோபாலுக்குக் கால்லே ஃபிராக்சர்ங்கற நீயூஸ் இன்னிக்குச் சாயங்காலம் மட்டும் எந்தப் பேப்பர்லியும் வராம கொஞ்சம் பார்த்துக்க" என்று முத்துக்குமரன் போட்ட சத்தத்திலே மிரண்டு பதில் பேசாமல் வாய் மூடி மௌனியானார் அப்துல்லா.
மாதவிக்கு முத்துக்குமரனின் திட்டம் புரிந்தது. அவனே கதாநாயகனாக நடிக்கப் போகிறான் என்பதில் அவளுக்குப் பெருமகிழ்ச்சி. அவனோ அவளோடு தான் நடிக்க இருப்பதற்கு மகிழ்ந்தான். சமயோசிதமாக அவனுக்கு தோன்றிய யோசனையையும் நிலைமையை அயராமல் சமாளிக்கும் அவனுடைய தீரமும் மாதவிக்கு மிகவும் பிடித்திருந்தன. அவனுடைய அந்தத் தீரம்தான் அவளை அவன்பால் ஏக்கம் கொண்டு உருகச் செய்தது. காதல் கொண்டு நெகிழ வைத்தது.
----------------
அத்தியாயம் - 19
அன்றைய நாடகத்துக்கு முன்பு அவசர அவசரமாக வசனங்களையும் காட்சிகளின் வரிசை அமைப்பையும் ஒருமுறை புரட்டிப் பார்த்தான் முத்துக்குமரன். அவனே வசனங்களை எழுதி டைரெக்ட் செய்திருந்ததனாலும் சில முறை நாடகங்களைச் சபையில் அமர்ந்து பார்த்திருந்ததனாலும் எல்லாம் நன்றாக நினைவிருந்தது. தவிர அவனே ஒரு கவியாக இருந்ததனால் மனோ தர்மத்துக்கு ஏற்ப அப்போதே வசனத்தை இடத்துக்குப் பொருத்தமாக மேடையிலேயே இயற்றிச் சொல்லிவிட முடியும் என்ற நம்பிக்கையும் இருந்தது. உடன் நடிப்பவள் மாதவியாகையினால் ஒத்துழைப்பு பரிபூரணமாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கைக்கும் குறைவில்லை.
அப்துல்லாவுக்கு மட்டும் பயம் இருந்தது. கோபால் நடிக்கவில்லை என்று தெரிந்து ஜனங்கள் எதுவும் கலாட்டா செய்து மேடை மேல் நாற்காலியைத் தூக்கி வீசுகிற நிலை ஏற்பட்டு விடக்கூடாதே என்று பயந்தார் அவர். ஆனால் கூடவே ஒரு நம்பிக்கையும் அவருக்கு இருந்தது. கோபாலை விட முத்துக்குமரன் அதிக அழகன் என்பதும் பார்க்கிறவர்கள் கவனத்தைத் தன் பக்கம் கவரும் வசீகரமான கம்பீர புருஷன் என்பதும் அவருக்குத் தைரியம் அளித்தன.
முத்துக்குமரனைப் பொறுத்தமட்டில் எந்த அவநம்பிக்கையுமின்றி இருந்ததோடு ஓரளவு அலட்சியத்தோடும் இருந்தான். கோபால் குடித்துவிட்டு மரீலின் ஹோட்டல் பாத்ரூமில் வழுக்கி விழுந்து காலில் ஃபிராக்சர் ஆகிப் படுத்த படுக்கையாயிருப்பது கூட்டத்தில் அந்த விநாடி வரை யாருக்கும் தெரியாதமையினால் கூட்டம் அமைதியாயிருந்தது. கோபாலுக்கு இருக்கிற 'ஸ்டார் வால்யூ' முத்துக்குமரனுக்கு இல்லையே என்பதுதான் அப்துல்லாவின் கொஞ்ச நஞ்சக் கவலையாயிருந்தது. கோலாலும்பூரில் முதல் நாள் நாடகத்தில் கோபால் தோன்றி ஜனங்கள் அவனையும் அவன் நடிப்பையும் நன்கு கண்டு கொள்ளும்படி செய்திருந்ததனால், கோபாலுக்கும் முத்துக்குமரனுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்து கொள்வார்களோ என்று வேறு சந்தேகமாக இருந்தது அவருக்கு. இந்தச் சந்தேகம் எல்லாம் நாடகம் தொடங்குகிற வரை தான்.
ஆனால் நாடகம் தொடங்கியதும் கூட்டத்துக்கும் - அவருக்கும் இதெல்லாம் மறந்தே போயின. மன்மதனே ராஜா வேடந்தரித்து தர்பாரில் வந்து அமர்வது போல் முத்துக்குமரன் மேடைக்கு வந்து தர்பாரில் அமர்ந்தபோது முதல் நாள் அதே காட்சியில் கோபால் பிரவேசித்த போது இருந்ததை விட அதிகமான கைதட்டல் இருந்தது. மாதவியும் அன்று மிக அழகாயிருப்பது போல் பட்டது. பளபளவென்று மேனி மின்னும் அரபிக் குதிரை பாய்ந்து வருவது போல் அன்று வாளிப்பாயிருந்தாள் அவள்.
'நெஞ்சின் எல்லையில் நீயாட நீள் கழையினில் நானாடுவேன்'... என்ற பாட்டுக்கேற்ப அவள் ஆடியபோது பிரமாதமாக இருந்தது. முத்துக்குமரன் உடன் நடிக்கிறான் என்பதால் மாதவியும், மாதவி உடன் நடிக்கிறாள் என்பதால் முத்துக்குமரனும் போட்டி போட்டுக்கொண்டு பிரமாதமாக நடித்தார்கள். கூட்டத்தில் ஒவ்வொரு காட்சி முடிவின் போதும் கைதட்டல் கட்டிடமே அதிரும்படி ஒலித்தது. அன்றைய நாடகம் பிரமாதமான வெற்றியாக அமைந்தது. சக நடிகர்களும் அப்துல்லாவும் முத்துக்குமரனை வாய் ஓயாமல் பாராட்டினார்கள்.
"இதிலே பாராட்ட என்ன இருக்கு? என் கடமையை நான் செய்தேன். பணம் செலவழித்து அழைத்திருக்கிறீர்கள். கை நஷ்டப்படுமோ என்று உங்களுக்குப் பயம் வருகிறது. உங்கள் பயத்தைப் போக்கவும், என் நண்பனைக் காப்பாற்றவும் நான் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்தேன்" என்று சுபாவமாக அப்துல்லாவுக்கு மறுமொழி கூறினான் அவன். மறுநாள் காலைத் தினசரிகளில் கோபால் குளியலறையில் வழுக்கி விழுந்து காலில் எலும்பு முறிந்து படுத்த படுக்கையாயிருக்கும் செய்தியும் முந்திய தினம் இரவு நடந்த நாடகத்தில் கோபால் நடிக்க வேண்டிய பாகத்தை அந்த நாடகத்தின் ஆசிரியராகிய முத்துக்குமரன் என்பவரே ஏற்று நடித்தார் என்ற செய்தியும் வெளியாகி விட்டன.
மறுநாள் காலை முத்துக்குமரனும், மாதவியும் கோபாலைப் பார்ப்பதற்காக ஆஸ்பத்திரிக்குப் போனார்கள்.
"சமயத்திலே கைகொடுத்து என் மானத்தைக் காப்பாத்தினத்துக்கு நன்றி வாத்தியாரே" - என்ற கை கூப்பினான் கோபால்.
"நான் உன் மானத்தைக் காப்பாத்தணும்னுதானே நீ வந்த இடத்திலே வெளிநாட்டுச் சரக்காச்சேன்னு காணாததைக் கண்டதுபோல மட்டில்லாமக் குடிச்சு மானத்தைக் கப்பலேத்திக்கிட்டிருக்கே. நல்ல வேளை பேப்பர்காரன்லாம் 'குளியலறையிலே வழுக்கி விழுந்து'ன்னு மட்டும் தான் போட்டிருக்கான். எதினாலே வழுக்கி விழுந்தான்னு சேர்த்துப் போட்டிருந்தானோ எல்லாரும் சிரிடா சிரின்னு சிரிப்பாங்க" - என்று நண்பனைக் கடிந்துகொண்டான் முத்துக்குமரன்.
"வாத்தியாரே! தப்புத்தான். புத்தியில்லாமச் செய்துட்டேன், இப்ப நினைச்சு என்ன பிரயோசனம்! குடிக்கிறதுக்கு முன்னாடி நினைச்சிருக்கணும். அப்ப எனக்குச் சுய புத்தியில்லே..."
"எப்பத்தான் உனக்குச் சுயபுத்தி இருந்திச்சி? அது போகட்டும், இப்ப எப்பிடி இருக்கு? நேத்து நல்லாத் தூங்கினியா?"
"நல்லாத் தூங்கினேன். காலையில் விடிந்ததும் நாடகம் கான்ஸலாயிடிச்சோன்னு கவலையோட இருந்தேன். நல்ல வேளையா நீ காப்பத்திட்டே, பத்திரிகையைப் பார்த்துத் தெரிஞ்சுக்கிட்டேன், அப்துல்லாவும் வந்து சொன்னாரு, என்னைவிடப் பிரமாதமா நடிச்சேன்னாரு..."
"சே! சே! அதெல்லாம் ஒண்ணும் இல்லே. தப்பு இல்லாமச் செய்தேன். அவ்வளவுதான்..."
"நீ சும்மா அடக்கமா மறைக்கப் பார்க்கிறே வாத்தியாரே! ஏகப்பட்ட கைதட்டல்னு அப்துல்லா ஒரேயடியாப் புகழ்ந்து பிரமாதமாகக் கொண்டாடறாரு. பேப்பர்க்காரனும் உன்னைப் பாராட்டி எழுதியிருக்கான்.
"ஆயிரம் இருக்கலாம்டா கோபாலு! நீ அதுக்குன்னே பிறந்தவன்; உன்னை மாதிரி ஆகுமா!"
- இவ்வளவில் 'ரொம்பப் பேச வேண்டாம்; பேஷன்டுக்கு ரெஸ்ட் வேணும்' - என்று நர்ஸ் வந்து கடிந்து கொள்ளவே அவர்கள் புறப்பட்டனர். முத்துக்குமரனும் மாதவியும் ஸ்டிரெய்ட்ஸ் ஹோட்டலுக்குச் சென்றபோது ரெட்டியாரிடமிருந்து ஃபோன் வந்தது.
"நேத்து நானும் நாடகத்துக்கு வந்திருந்தேன். நேத்து உன்னை வேஷத்திலே பார்த்தப்பவே எனக்கு சந்தேகமா இருந்தது. ஆனா நம்ப முடியலே. இன்னிக்குக் காலையிலே பேப்பரைப் பார்த்தப்பதான் என் சந்தேகம் சரிதான்னு தெரிஞ்சுது. பிரமாதமா இருந்திச்சுப்பா உன் நடிப்பு... சும்மா சொல்லப்பிடாது. ஜமாய்ச்சுப்பிட்டே. ஆமா இப்ப கோபாலுக்கு எப்படி இருக்குது? நான் போய்ப் பார்க்கலாமா?"
"இன்னிக்கி வேணாம் ரொம்ப ரெஸ்ட் தேவைங்கிறாங்க. நாளைக்கிப் போய்ப் பாருங்க. மவுண்ட்பாட்டன் ரோடிலே இருக்காரு" என்று ரெட்டியாருக்குப் பதில் கூறினான் அவன். அதன்பின் குழு கோலாலும்பூரில் முகாமிட்டிருந்த ஏழு நாளும் கோபாலின் பாத்திரங்களை எல்லாம் முத்துக்குமரனே நடித்தான். பிரமாதம் என்று பேரும் வாங்கினான். பாராட்டுகளும் பரிசுகளும் குவிந்தன. பத்திரிகைகள் பத்தி பத்தியாகப் புகழ்ந்து எழுதின. சிலர் முத்துக்குமரன், மாதவி ஜோடிப் பொருத்தத்தைப் புகழ்ந்து கொண்டாடினார்கள்.
"வசனம் மறந்து போறப்ப நீங்களே மேடையிலே வசனம் பேசிக்கிறீங்க. அது சில சமயம் ஏற்கனவே எழுதி வச்சிருந்த வசனத்தைவிட நல்லா அமைஞ்சிடுது" என்றாள் மாதவி.
"இதுலே அதிசயப்படறதுக்கு என்ன இருக்கு மாதவி? எல்லோரும் அதிசயப்படறதைப் போல நீயும் அதிசயப்படறதிலே அர்த்தமில்லே. பிறந்ததிலிருந்து இதிலேயே உழன்றுக்கிட்டிருக்கேன். பாய்ஸ் கம்பெனிக் காலத்திலிருந்து இன்று வரை பார்த்தாச்சு. என்னாலே இது கூட முடியலேன்னாத்தான் ஆச்சரியப்படணும் நீ."
"உங்களுக்கு இது சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால் எனக்கு உங்களோட ஒவ்வொரு சாதனையுமே பெருசுதான். ஒவ்வொரு திறமையுமே ஆச்சரியந்தன். நான் அதை இனிமே மாத்திக்க முடியாது" - என்றாள் மாதவி.
"சும்மாயிரு! நீ ஒரு பைத்தியம்."
"பைத்தியம்னே வச்சுக்கங்களேன். ஆனா எல்லாப் பித்தும் உங்கமேலேதான்! நீங்க சிங்கப்பூர் ஏர்ப்போர்ட்ல இறங்கினப்ப, தனியா யாருமே கவனிக்காமே அநாதை போல நின்னப்ப என் வயிறெரிஞ்சுது. அதுக்குப் பலன் இப்பத்தான் கிட்டியிருக்கு. அப்துல்லலாவும் கோபாலும் பினாங்கிலே அநாவசியமா உங்களைக் கொதிக்கக் கொதிக்கப் படுத்தினாங்க, இன்னிக்கு நீங்க தான் அவங்க மானத்தைக் காப்பாத்த வேண்டியிருக்கு."
"சரி! சரி! போதும் இதோட விடு, என் தலையை ரொம்பக் கனக்கப் பண்ணாதே. நீ புகழ்ந்தால் தலை ரொம்பக் கனமாகிவிடுகிறது மாதவி..."
"அது சரி. நேத்து அப்துல்லா ஏதோ தனியா உங்களைப் பார்க்கணும்னாரே?..."
"அதுவா? எங்கிட்ட வந்து, 'சமயத்துல கைகொடுத்துக் காப்பாத்தினீங்க! பழசு ஒண்ணையும் மனசுலே வச்சுக்காதீங்கன்'னு சொல்லி ஒரு வைர மோதிரத்தை நீட்டினார்."
"ஐயா! நான் உங்களுக்காக எதையும் செய்யலை, என் நண்பனுடைய மானத்தைக் காக்கவே என் கடமையை நான் செய்தேன். எது செய்யணும்னாலும் கோபாலுக்கு செய்யுங்க. எனக்கு உங்களோட நேரே பேச்சில்லைன்னு மறுத்திட்டேன்."
"நல்லா வேணும்? உங்களை எத்தினி பாடு படுத்தினாரு. இங்கிலீஷ் தெரியாதுன்னு உங்களைக் கிண்டல் வேறே பண்ணினாரு,"
"எது தெரிஞ்சா என்ன, தெரியாட்டி என்ன? மனிதனோட உயர்ந்த மொழி பிறரிடம் பெருந்தன்மையாக நடந்து கொள்ளும் போது தான் பேசப்படுகிறது. அது தெரிஞ்சாலே போதும். அது தெரியாதவங்களுக்கு எத்தனை மொழிகள் தெரிந்தாலும் பயனில்லை. துக்கப்படறபோது ரெண்டு சொட்டுக் கண்ணீரும் சந்தோஷப்படறபோது ஒரு புன்னகையும் பதிலாக எங்கிருந்து கிடைக்குமோ அங்கேதான் எல்லா மொழிகளும் புரியற இதயம் இருக்கு."
கோபால் மேலும் ஒரு வாரம் ஒய்வுகொள்ள வேண்டுமென்று டாக்டர் கூறிவிடவே மலாக்காவில் நடைபெற வேண்டிய நாடகங்களிலும் முத்துக்குமரனே நடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. முத்துக்குமரனும் குழுவினரும் காரிலேயே மலாக்காவுக்குப் புறப்பட்டனர். கோபாலைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு ருத்ரபதி ரெட்டியாரிடம் விடப்பட்டிருந்தது.
மலாக்காவில் தங்கியிருந்தபோது ஒரு நாள் பகலில் போர்ட் டிக்ஸன் கடற்கரைக்குப் போய் சுற்றிப் பார்த்து விட்டு வந்தார்கள் அவர்கள். மலாக்காவிலும் நாடகங்களுக்குப் பிரமாதமான வசூல் ஆயிற்று. முத்துக்குமரனின் நடிப்பு நாளுக்கு நாள் மெருகேறியது - குழுவுக்கு நல்ல பேர் கிடைக்க அவன் ஒருவனே காரணமாயிருந்தான். மலாக்காவில் நாடகங்கள் முடிந்ததும் திரும்புகிற வழியில் சிரம்பானில் ஒரு நண்பர் வீட்டில் விருந்துக்கு அழைத்திருந்தார்கள். விருந்து முடிந்ததும், அந்த விருந்தை அளித்தவர் மூலமாக அப்துல்லா தாம் முன்பு கொடுத்து மறுக்கப்பட்ட அதே வைரமோதிரத்தைத் திரும்பவும் கொடுக்கச் செய்தார். முத்துக்குமரனுக்கு அவர் ஏற்பாடு புரிந்தது. தாம் நேரே கொடுத்தால் மறுக்கிறானே என்று சிரம்பான் நண்பர் மூலம் விருந்துக்கு ஏற்பாடு செய்து அப்துல்லா சுற்றி வளைத்து அதே மோதிரத்தைக் கொடுக்க வருவதை அவன் அறிந்திருந்தும் பலருக்கு முன்னே அவரை அவமானப்படுத்த விரும்பாமல் வாங்கிக் கொண்டான்.
சிரம்பானிலிருந்து கோலாலும்பூர் திரும்பியதும் முதல் வேலையாக அதை அவரிடம் திருப்பிக் கொடுத்தான்.
"இதோ பாருங்க மிஸ்டர் அப்துல்லா! நீங்க எதைக் கொடுத்தும் என் பிரியத்தை விலைக்கு வாங்க முடியாது. நான் உங்ககிட்டே இருந்து எதையும் எதிர்பார்த்தே நடிக்கலை. எனக்கு உங்களுடைய காண்ட்ராக்ட் லாபமா, நஷ்டமாங்கிறதைப் பத்திக்கூட கவலையில்லை. என் சிநேகிதனோட நான் மலேயாவுக்கு வந்தேன். அவன் ஒரு கஷ்டத்தில் இருக்கறப்ப உதவறது என் கடமை. அதைத் தவிர வேறெந்த ஆசைக்காகவும் இதை நான் செய்யலே. நீங்க எது செய்யணும்னாலும் கோபாலுக்குத்தான் செய்யணும். சிரம்பானிலே நாலு பேர் முன்னாலே உங்களை அவமானப்படுத்தக்கூடாதுன்னு தான் இதை வாங்கிக் கொள்வதுபோல் நடித்தேன். எனக்கு இங்கிலீஷ் தெரியாது. ஆனால் பெருந்தன்மை தெரியும். நான் ரொம்ப மானஸ்தன். ஆனா அதுக்காக இன்னொருத்தனை அவமானப்படுத்த மாட்டேன். மன்னிச்சுக்குங்க. இதை நான் திருப்பிக் கொடுக்கத்தான் வேண்டியிருக்கு -"
"என்னை ரொம்பச் சங்கடப்படுத்தறிங்க, மிஸ்டர் முத்துக்குமார்!"
"சே! சே! அப்படியெல்லாம் ஒண்ணுமில்லே..."
அப்துல்லா தலையைத் தொங்கப் போட்டபடியே மோதிரத்தை வாங்கிக்கொண்டு போனார். ஆணோ பெண்ணோ விலைக்கு வாங்க முடியாத மனிதர்களைச் சந்திக்கும் போதெல்லாம் அவருடைய தலை இப்படித்தான் தொங்கிப் போயிருக்கிறது.
அன்று மாலை கோபால் முத்துக்குமரனைக் கூப்பிட்டனுப்பினான். முத்துக்குமரன் மவுண்ட்பேட்டன் ரோடுக்குப் போய் அவனைச் சந்தித்தான். "உட்கார்" என்று தன் அருகே படுக்கையை ஒட்டிப் போடப்பட்டிருந்த நாற்காலியைச் சுட்டிக்காட்டினான் கோபால். முத்துக்குமரன் உட்கார்ந்தான்.
"நீ அப்துல்லா கொடுத்த மோதிரத்தை வேண்டாம்னு திருப்பிக் கொடுத்தியா?"
"ஆமா, ஒருவாட்டி மட்டுமில்லே, ரெண்டுவாட்டி கொடுத்தாரு. ரெண்டுவாட்டியும் திருப்பிக் கொடுத்திட்டேன்."
"ஏன் அப்படிச் செய்தே?"
"அவருக்கும் எனக்கும் ஒரு சம்பந்தமும் இல்லே. நான் உன்கூட இங்கே வந்திருக்கேன். உனக்கு முடியலைங்கிறத்துக்காகத்தான் நாடகத்திலே பதிலுக்கு நடிக்கிறேன். அவர் யார் என்னைப் பாராட்டவும் பரிசு கொடுக்கவும்!"
"அப்பிடிச் சொல்லப்படாது. அன்னைக்கு அண்ணாமலை மன்றத்தில் நாடக அரங்கேற்றத்தின்போது அவர் உனக்கு மாலை போட்டார். 'ஒருவருடைய மாலையை ஏற்கும்போது அவருடைய கைகளின் கீழே என் தலை குனிய நேரிடுகிறது, அதனால் மாலைகளை நான் வெறுக்கிறேன்' - என்று சொல்லி அவர் மனம் சங்கடப்படும்படி செய்தே. இன்னிக்கி வைரமோதிரத்தைத் திருப்பிக் கொடுத்து அவரை அவமானப் படுத்தறே. இப்பிடி நடந்துக்கிறதிலே உனக்கு என்ன பெருமை? வீணா ஒரு பெரிய மனுசனை மனசு நோகப் பண்றதிலே என்ன லாபம் இருக்க முடியும்னு நினைக்கறே?"
"ஓகோ! அப்பிடியா சங்கதி! ஒரு பெரிய மனுஷன் நம்மை அவமானப்படுத்தினா மௌனமா இருக்கணும். ஒரு பெரிய மனுஷனை நாம் பகைச்சுக்கக் கூடாது. அப்பிடித்தானே?"
"அப்துல்லா உன்னை அவமானப்படுத்தியிருக்கார்னே வச்சுக்க. அப்படியிருந்தாலும்..."
"சே! சே! இன்னொருவாட்டி சொல்லாதே. என்னை அவமானப்படுத்தறதுக்கு அவன் இல்லே, அவனோட பாட்டன் வந்தாலும் முடியாது. அவமானப்படுத்தறதா நெனைச்சுக்கிட்டு ஏதேதோ சில்லறை விஷமங்கள் பண்ணினாரு; அவ்வளவுதான்."
"இருந்தாலும் இவ்வளவு ரோஷம் உனக்கு ஆகாது வாத்தியாரே!"
"அது ஒண்ணுதான் ஒரு கலைஞனுக்கு நிச்சயமா மீதமிருக்கப் போற விஷயம். அதையும் விட்டுட்டா அப்புறம் எப்பிடி?"
"அப்துல்லா எங்கிட்ட வந்து சொன்னாரு, மோதிரத்தை எப்பிடியாவது அவரை வாங்கிக்கச் செய்யணும்னாரு."
"அதுதான் நான் அவரிட்டவே சொன்னேனே. எது செய்யணும்னாலும் கோபால்கிட்டச் செய்யுங்க. எனக்கும் உங்களுக்கும் நேரே ஒரு சம்பந்தமும் இல்லேன்னேனே? சொல்லலியா உங்கிட்ட?"
"சொன்னாரு. சொல்லிட்டு மோதிரத்தையும் எங்கிட்ட கொடுத்திட்டுப் போயிருக்காரு..."
"அப்படியா?"
"அப்துல்லாகிட்ட மோதிரத்தை வாங்கிக்கக்கூடாது, ருத்ரபதி ரெட்டியாரிட்டக் கைக்கடிகாரம் வாங்கிக்கலாமா?"
"ருத்ரபதி ரெட்டியாரும், அப்துல்லாவும் ஒண்ணாயிட மாட்டாங்க. ரெட்டியாரு இன்னிக்கிக் கோடீசுவரனாகியும் எங்கிட்ட ஒரு வித்தியாசமும் இல்லாமப் பழகறாரு."
கோபாலால் இதற்குப் பதில் சொல்ல முடியவில்லை. "சரி! உங்கிட்டப் பேசிப் பிரயோசனம் இல்லே! போயிட்டு வா!" என்றான் கோபால்.
முத்துக்குமரன் கோலாலும்பூரில் மேலும் இரண்டு நாடகங்கள் நடித்தான். அதற்குள் கோபால் எழுந்து நடமாடத் தொடங்கி விட்டான். இரண்டாவது நாள் நாடகத்தை, கோபாலும் சபையில் முன்வரிசையில் அமர்ந்து பார்த்தான். அவனுக்கு ஆச்சிரியம் தாங்கவில்லை. முத்துக்குமரனின் நடிப்பைப் பார்த்து அவன் மூக்கில் விரலை வைத்தான்.
நாடகம் முடிந்ததும் முத்துக்குமரனைக் கட்டித் தழுவிப் பாராட்டினான் கோபால். மறு நாள் ரேடியோவுக்கும் டெலிவிஷனுக்கும் அவர்கள் பேட்டியளித்தார்கள். பேட்டிக்கு முத்துக்குமரன், கோபால், மாதவி மூவரும் சென்றார்கள். இன்னொரு நாள் சுற்றிப் பார்ப்பதில், வேண்டியவர்களிடம் சொல்லி விடை பெற்றுக் கொள்வதில் கழிந்தது. புறப்படுகிற தினத்தன்று மரீலின் ஹோட்டலில் கோபால் குழுவினருக்கு ஒரு ஸெண்ட் - ஆஃப் பார்ட்டி கொடுக்கப்பட்டது. அதில் எல்லாருமே முத்துக்குமரனை வாயாரப் புகழ்ந்தனர். உபசாரத்துக்கு நன்றி தெரிவித்துப் பேசும்போது கோபால் கூட முத்துக்குமரனையே பாராட்டிப் பேசினான். மாதவி விழாவில் குழுவினரின் சார்பில் ஒரு பாட்டுப் பாடினாள். 'ஒளி படைத்த கண்ணினாய் வா வா'... பாடும்போது அவள் கண்கள் எதிரே உள்ள வரிசையில் அமர்ந்திருந்த முத்துக்குமரனையே பார்த்தன.
வழக்கம்போல் சிங்கப்பூருக்கு யார் யார் விமானத்தில் போவது என்ற பிரச்னை வந்தபோது முத்துக்குமரனும், மாதவியும் மறுத்துவிட்டனர்.
"அப்படியானால் நானும் ப்ளேன்ல போகலே. உங்களோட கார்லியே வரேன்" - என்றான் கோபால். கால் சரியாகி எழுந்திருந்தும் அவன் 'வீக்' ஆக இருந்தான்.
அவன் காரில் இருநூறு மைலுக்கு மேல் பயணம் செய்வதென்பது முடியாத காரியம். எனவே முத்துக்குமரன் அவனை வற்புறுத்தி விமானத்திலேயே வரச் சொல்ல வேண்டியதாயிற்று.
"இடங்களையும், இயற்கை வளத்தையும் நல்லாப் பார்க்கலாம்னுதான் நாங்க ரெண்டு பேரும் கார்லே வரதாகச் சொல்கிறோம். அதை நீங்க யாரும் வித்தியாசமா நெனைக்கக் கூடாது. நீ இப்ப இருக்கிற நிலைமையிலே கார்லே வர லாய்க்குப்படாது. சொன்னாக் கேளு" - என்று முத்துக்குமரன் விளக்கிய பின்பு கோபால் ஒப்புக் கொண்டான். அப்துல்லாவுக்கு இன்னும் உதயரேகாவிடம் மயக்கம் தீரவில்லை. மூன்று பேரும் மலேஷியன் - ஏர்வேஸ் விமானத்தில் சிங்கப்பூர் பறந்தார்கள். முத்துக்குமரன் உட்பட மற்றவர்கள் ஜோகூர் வழியே கார்களில் சிங்கப்பூர் சென்றார்கள். ருத்ரபதி ரெட்டியார் டிபன் காரியர்களில் பகலுணவு தயாரித்துக் கட்டிக் கொடுத்திருந்தார். நடுவே ஓரிடத்தில் எல்லாரும் கார்களை நிறுத்திவிட்டுப் பகலுணவை ஓர் காட்டு ஓடைக்கரையில் முடித்துக் கொண்டார்கள். பிரயாணம் மிகமிக இன்பமாக இருந்தது. ஜோகூர் பாலம் தாண்டும்போது மாலை ஆறரை மணிக்கு மேலாகிவிட்டது. இருட்டுகிற நேரத்தில் சிங்கப்பூர் மிக அழகாயிருந்தது. குளிருக்கும் இருளுக்கும் பயந்து ஓர் அழகிய நவநாகரிக யுவதி ஒதுங்கி ஒளிவது போல் நகரம் அந்த வேளையில் மங்கலாகவும் அழகாகவும் தெரிந்தது. அவர்களுடைய கார்கள் புக்கிட்டிமா ரோட்டைக் கடந்து பென்குவின் தெருவிலுள்ள ஓர் ஹோட்டலை அடையுமுன் நன்றாக இருட்டி விட்டது. அட்டையில் அடுக்கிய மாதிரிப் பல மாடிகளைக் கொண்ட வானளாவிய ஒரே மாதிரிக் கட்டிடங்கள் எங்கும் தென்பட்டன. ஊர் கோலாலும்பூரைவிடப் பரபரப்பாகவும் வேகம் மிகுந்தும் காணப்பட்டது. கார்கள் சாலையில் எறும்பு மொய்ப்பதுபோல் மொய்த்தன. மஞ்சள் நிற மேற் பகுதியோடு டாக்ஸிகள் விரைந்து கொண்டிருந்தன. இரவு உணவுக்கு எல்லாரும் சிரங்கூன் ரோடிலிருந்த கோமளவிலாஸ் சைவக் கடைக்குப் போய்விட்டு வந்தார்கள்.
இம்முறை கோபாலும் அவர்களுடனேயே தங்கிவிட்டான். அப்துல்லாவும் உதயரேகாவும் மட்டுமே காண்டினெண்டல் ஹோட்டலில் தங்கியிருந்தார்கள். சிங்கப்பூர் நாடகங்களில் எல்லாம் கோபால்தான் நடித்தான். சிங்கப்பூர் நாடகங்களிலும் நல்ல வசூல் ஆயிற்று. கடைசி இரண்டு தினங்கள் மட்டும் வசூல் கொஞ்சம் சுமாராக இருந்தது. மழை வந்து கெடுத்துவிட்டது. ஆனாலும் நஷ்டம் எதுவுமில்லை என்றார் அப்துல்லா. சிங்கப்பூரிலும் அவர்கள் சில இடங்களைச் சுற்றிப் பார்த்தார்கள். ஜுரோங் தொழில் பேட்டை, டைகர்பாம் கார்டன்ஸ், குவின்ஸ்டவுனின் உயரமான கட்டிடங்கள் எல்லாவற்றையும் பார்த்தார்கள். டைகர்பாம் தோட்டத்தில், சீனப் புராணத்தை அடிப்படையாகக் கொண்டு உலகில் பாவம் செய்தவர்கள் எப்படி எப்படி எல்லாம் தண்டிக்கப்படுகிறார்கள் என்பது பற்றிப் பல குரூரமான காட்சிகளைச் சுதை வேலைச் சிற்பங்களால் நெடுகச் சித்தரித்திருந்தார்கள். பாவம் செய்த ஒருவனை நரகத்தில் ரம்பத்தால் அறுப்பது போலவும், தலையில் இரும்பு ஆணிகளை அறைவது போலவும், நெருப்புக் கொப்பரையில் நிர்வாணமாகத் தூக்கிப்போடுவது போலவும் சித்தரிக்கப்பட்டிருந்தன. அதைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே முத்துக்குமரன், "மெட்ராஸிலே இருக்கிற அத்தினி சினிமாக்காரங்களையும் கூட்டியாந்து இந்தக் காட்சிகளை அடிக்கடி காமிக்கணும் மாதவி?" என்றான்.
"வேண்டியதில்லை..."
"ஏன் அப்படிச் சொல்றே?"
"ஏன்னா இதெல்லாம் அங்கேயே தினம் தினம் நடந்துக்கிட்டிருக்கு!..."
அவன் வாய்விட்டுச் சிரித்தான். அந்தச் சிரிப்பில் அவளும் கலந்துகொண்டாள். ஊருக்குப் புறப்படுகிற தினத்தன்று காலையில் அவரவர்கள் 'ஷாப்பிங்' போனார்கள். ஒரு புடவைக் கடைக்குச் சென்றிருந்தபோது:
"நான்கூட ஒரு புடவை வாங்கவேண்டியிருக்கு. உனக்கு முண்டு கொடுக்கணுமே" என்றான் முத்துக்குமரன். அவள் முகம் நாணத்தில் சிவந்தது. மாலையில் சிங்கப்பூரிலும் ஒரு பிரிவுபசார விருந்து இருந்தது. அதை முடித்துக் கொண்டு குழுவினர் அனைவரும் வருவதற்கான கப்பல் பயண ஏற்பாடுகள் பற்றி அப்துல்லாவிடம் கூறிவிட்டு கோபால், முத்துக்குமரன், மாதவி மூவரும் விமான நிலையம் புறப்பட்டனர். சென்னை செல்கிற ஏர் இந்தியா விமானம் ஆஸ்திரேலியாவிலிருந்து சிங்கப்பூர் வந்து அப்புறம் அங்கிருந்து சென்னை புறப்பட வேண்டும். அன்றிரவு அது ஆஸ்திரேலியாவிலிருந்து தாமதமாகத்தான் வந்தது. அப்துல்லாவும், குழுவினரும், சிங்கப்பூர் ரசிகர்களும், அகாலத்தையும் பொருட்படுத்தாமல் விமான நிலையத்துக்கு வழியனுப்ப வந்திருந்தார்கள்.
விமானம் சிங்கப்பூரிலிருந்து புறப்படும்போதே அதிக நேரமாகிவிட்டதனால் சென்னையை அடையும்போது இந்திய நேரப்படியே இரவு பன்னிரண்டரை மணி ஆகியிருந்தது. கஸ்டம்ஸ் ஃபார்மாலிடீஸ் முடிந்து வெளிவர ஒரு மணி ஆகிவிட்டது. அந்த நேரத்திலும் கோபாலுக்கும் மாதவிக்கும் வரவேற்புக்கூற இரசிகர்களும், விசிறிகளும், மாலைகளுடன் காத்திருந்தார்கள். அதில் ஒரு அரைமணி கழிந்துவிட்டது.
கோபாலின் பங்களாவிலிருந்து கார்கள் வந்திருந்தன. ஒரு கார் நிறைய சாமான்கள் ஏறின. மறு காரில் அவர்கள் மூவரும் ஏறிக்கொண்டனர். வீடுபோய்ச் சேரும்போது ஏறக்குறைய இரண்டு மணி ஆகிவிட்டது.
"இந்நேரத்துக்குமேலே வீட்டுக்குப் போவானேன்? இங்கேயே தூங்கிட்டுக் காலையிலே போயேன் மாதவி" என்று கோபால் அவளை வேண்டினான். மாதவி தயங்கினாள்.
"நீ ஆளே மாறிப்போயிட்டே! முன்னே மாதிரி இல்லே" என்று அவளுடைய தயக்கத்தைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே சொன்னான் கோபால். அவள் அதற்கு மறுமொழி கூறவில்லை. கோபால் சிரித்துக் கொண்டே உள்ளே போய்விட்டான்.
"அவன் ஏன் சிரிக்கிறான்...?" முத்துக்குமரன் அவளைக் கேட்டான்.
"நான் ரொம்ப மாறிட்டேனாம்?"
"வீட்டுக்குப் போகணுமா? இங்கேயே தங்கறியா? ரொம்ப நேரமாச்சே?"
"தங்கலாம்! ஆனா உங்க அவுட்ஹவுசிலே ஒரு மூலையிலே இடங்கொடுத்தீங்கன்னாக்கூடப் போதும். மத்த எந்த இடத்திலியும் இந்தப் பங்களாவிலே தங்க முடியாது. இது ஒரு பிசாசு வீடு மாதிரி. சிங்கப்பூரிலே நேத்துக் காட்டினீங்களே நரகத்தில் நடக்கும் குரூரங்களை, அதை மறுபடியும் நினைச்சக்குங்க..."
"அவுட் ஹவுஸ்லே ஒரே கட்டில்தானே இருக்கு. தரை ஜில்னு இருக்குமே?"
"பரவாயில்லே! உங்க காலடிலே கீழே தரையோரமா கொஞ்சம் இடம் கொடுங்க போதும்."
அவள் பின்தொடர அவன் அவுட்ஹவுஸை நோக்கி நடந்தான். அன்று அவர்கள் எல்லாம் சிங்கப்பூரிலிருந்து திரும்புகிற செய்தியறிந்து நாயர்ப்பையன் அவுட்ஹவுஸைப் பெருக்கிச் சுத்தப்படுத்திப் பானையில் தண்ணீர் எடுத்து வைத்துப் புதிய தலையணை விரிப்புகள் எல்லாம் போட்டுப் படுக்கையையும் சுத்தமாக விரித்து வைத்துவிட்டுப் போயிருந்தான்.
அவர்களோடு வந்த சூட்கேஸ்கள் எல்லாவற்றையும் தனித்தனியே பிரித்து மாதவிக்கும் முத்துக்குமரனுக்கும் உரியவற்றை அவுட்ஹவுஸ் வராண்டாவில் டிரைவர் ஏற்கெனவே கொண்டுவந்து வைத்திருந்தான். இருவரும் அவற்றை எடுத்து உள்ளே வைத்தார்கள்.
கோபால் என்ன நினைத்துக்கொண்டாலும் நினைத்துக் கொள்ளட்டும் என்று மாதவி முத்துக்குமரனோடு அவுட்ஹவுஸிலேயே தங்கிவிட முடிவு செய்தாள்.
முத்துக்குமரன் விரிப்பையும் தலையணையையும் அவளுக்குக் கொடுத்துவிட்டுக் கட்டிலில் இருந்த வெறும் மெத்தையில் படுத்தான்.
மாதவி கீழே விரித்துப் படுத்தாள். "இந்தாங்க ஒரு தலையணைதான் இருக்கு போலிருக்கே, எனக்கு வேண்டாம், நீங்களே வச்சுக்குங்க..." என்று மாதவி சிறிது நேரம் கழித்துத் தலையணையைக் கொடுப்பதற்காக அவனருகே வந்தாள். அவன் இலேசாகத் தூங்கத் தொடங்கியிருந்தான். அப்போது டெலிபோன் மணி வேறு அடித்தது. தான் எடுக்கலாமா, கூடாதா என்று மாதவி தயங்கி நின்றாள். முத்துக்குமரன் படுக்கையில் எழுந்து உட்கார்ந்து டெலிபோனை எடுத்தான். எதிர்ப்புறம் கோபால் பேசினான்.
--------------
அத்தியாயம் - 20
குரலிலிருந்து கோபால் நன்றாகக் குடித்திருக்கிறான் என்று தெரிந்தது.
"மாதவி அங்கே இருக்காளா? வீட்டுக்குப் போய்விட்டாளா?" சொற்கள் குழறின. கோபாலுடைய கேள்விக்குப் பதில் சொல்லாமல் டெலிபோனை அப்படியே மாதவியின் காதருகே வைத்தான் முத்துக்குமரன். அதே கேள்வி குழறலாக அவள் காதிலும் ஒலித்தது. அவள் முகத்தில் பழைய பயம் இன்னும் இருக்கிறதா என்று கூர்ந்து கவனித்தான் முத்துக்குமரன். கவனித்தபடியே அவளை வினவினான்:
"என்ன பதில் சொல்லட்டும்? முன்னே நாம ரெண்டு பேரும் சேர்ந்து பீச்சுக்குப் போனன்னிக்கி, 'பீச்சுக்குப் போனதெல்லாம் அங்கே ஒண்ணும் சொல்ல வேண்டாம்'னு கோபாலுக்கு நடுங்கினியே; அப்பிடியேதான் இன்னிக்கும் இருக்கியா? அல்லது..."
"சும்மா அதையே குத்திக்காட்டிப் பேசாதீங்க. இன்னிக்கி நான் எதுக்கும் யாருக்கும் பயப்படலே, அவருக்கு நீங்க என்ன பதில் சொல்லணுமோ அதைச் சொல்லலாம்."
அவள் குரலில் தைரியம் இருந்தது. அந்தத் தைரியம் அவனுக்கும் புரிந்தது.
தொடர்ந்து போனில் ஒரே கேள்வியை மந்திரம் போல் ஜபித்துக்கொண்டிருந்த கோபாலுக்கு முத்துக்குமரன் தீர்க்கமான - தெளிவான குரலில் பதில் கூறினான்:
"ஆமா இங்கேதான் இருக்கா..."
உடனே எதிர்ப்புறம் பதில் சொல்லாமல் டெலிபோன் ரெஸ்டில் 'ணங்' என்று வைக்கப்பட்டது.
"இதுக்குத்தான் அப்பவே நான் சொன்னேன்; நீங்க இடம் கொடுத்தாத்தான் இங்கே தங்கலாம்னு!"
"நெஞ்சிலேயே இடம் கொடுத்தாச்சி! இங்கே இடம் தர்ரத்துக்கு என்ன? பிடிவாதமா நீ கேட்டு வாங்கிக்கிட்டியே."
சிங்கப்பூரில் ஷாப்பிங் போனபோது வாங்கிக் கொண்டு வந்த ஸெண்ட்டை விமானத்திற்குப் புறப்படுமுன் பூசியிருந்தாள் மாதவி. இருளில் அவள் ஒரு வனதேவதை போல் நறுமணத்தோடு எதிரே நிற்பதை அப்படியே புதிதாக அப்போதுதான் பார்ப்பதுபோல் வைத்த கண் வாங்காமல் பார்த்தான் முத்துக்குமரன்.
"இந்தாங்க தலையணை..."
"வேண்டாம்! எனக்கு ரொம்ப மெதுவான தலையணை வேண்டும்" - என்று அவளுடைய தங்க நிறத்தோளைத் தொட்டுக் காண்பித்துக் குறும்புத்தனமாகச் சிரித்தான் அவன்.
"சரிதான்! இந்த வீட்டிலே இந்த ஒரு ரூம்லியாவது பாதுகாப்புக் கிடைக்கும்னு நினைச்சேன். இதுவும் மோச மாகத்தான் இருக்கும் போலேருக்கு." அவள் பொய்க் கோபத்தோடு இப்படிக் கூறியபோது அவளுடைய உதடுகளில் புன்னகையும், முகமும் மிக மிக அழகாயிருந்தன. அவன் மகிழ்ச்சியிலே திளைத்தான்.
"தரையிலே ஜில்னு ஈரம். வீணா நாளைக்கு ஜுரம் வந்து கஷ்டப்படப் போறே..." "இப்ப நீங்க என்ன பண்ணனும்கிறீங்க - ?"
"ரொம்ப நாளா நடிச்சு நடிச்சு நடிக்கறது உனக்கும் அலுத்திருக்கு, எனக்கும் அலுத்திருக்கு. இனிமே நாம வாழணும் - "
முத்துக்குமரன் எழுந்து நின்று அவளுடைய கரங்களைப் பற்றினான். அவள் வீணையாக வளைந்து அவன் மேற் சாய்ந்தாள். அவனுடைய பரந்து விரிந்த மார்புப் பகுதியும், திரண்டு பருத்த தோள்களும் அவளுடய பூங்கைகளால் வளைக்க முடியாத அளவு பெரியவையாக இருந்தன. முத்துக்குமரன் அவள் காதருகே முணுமுணுத்தான்:
"என்ன ஒண்ணும் பேச மாட்டேங்கிறே?"
உலகத்தின் முதல் பெண் போல் அவள் அவன் முன் நாணிக் கண் புதைத்தாள்.
"ஏன் பேச மாட்டேங்கிறே?"
அவள் பெருமூச்சு விட்டாள். மூச்சு விடுவதுகூட அநுராக சப்தமாக அவன் செவியில் ஒலித்தது.
"சம்சாரிக்கும் பாடில்லா?" என்று தனக்குத் தெரிந்த கொஞ்ச மலையாளத்திலேயே அவன் கேட்டபோது, அவளுக்கு அடக்க முடியாமல் சிரிப்பு வந்துவிட்டது. அவளுடைய பூங்கைகள் அவன் தோள்களில் இருந்தன. இருவருக்குமிடையே சந்தோஷத்தின் எல்லை போன்றதொரு மௌனம் நிலவியது.
அந்த தோள்களில் ஒன்றில்தான் அன்று இரவு மாதவி பத்திரமாக உறங்கினாள்.
விடிந்ததும் அவள் அங்கே நீராடினாள். புதிய புடைவையையும் கட்டிக்கொண்டு அவள் எதிரே வந்தபோது அழகிய உஷத்காலமே சிரித்துக்கொண்டு வருவது போலிருந்தது முத்துக்குமரனுக்கு. அப்போது கோபால் நைட்கவுனோடு அவுட்ஹவுஸுக்கு வந்தான். மாதவியின் பக்கம் சென்ற அவன் பார்வை வெறுப்பை உமிழ்ந்தது. அவளோடு அவன் பேசவே இல்லை. அவன் தன்மேல் ரொம்பக் கோபம் அடைந்திருக்கிறான் என்பது அவளுக்கும் ஒருவாறு புரிந்தது. திடீரென்று கோபால் முத்துக்குமரனிடம் ரொம்பவும் பிஸினஸ்லைக்காகப் பேசலானான்.
"நீ எனக்குப் பதிலா கோலாலும்பூரில் எட்டு நாடகமும், மலாக்காவிலே மூணு நாடகமும், ஆக மொத்தம் பதினோரு நாள் வேஷங் கட்டியிருக்கே..."
"ஆமா! அதுக்கென்ன இப்ப?"
"இல்லே பண விஷயத்திலே அண்ணன் தம்பிகளுக்குள்ளே கூடச் சண்டை வரும்பாங்க..."
"திடீர்னு உனக்கு இப்ப என்ன வந்திரிச்சிடா, கோபாலு..."
"பதினொரு நாடகத்துக்காகவும் சேர்த்துப் பதினையாயிரம் ரூபாயும் சேர்த்து இருபதாயிரத்துக்கு ஒரு 'செக்' ராத்திரி எழுதி வச்சேன். இந்தா."
முத்துக்குமரன் முதலில் சிறிது தயங்கினான். அப்புறம் மனதுக்குள் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவனைப்போல் மறுக்காமல் அந்தச் 'செக்'கை உடனே கோபாலிடமிருந்து வாங்கிக் கொண்டான். அடுத்த நிமிஷம் கோபால் முற்றிலும் எதிர்பாராத இன்னொரு கேள்வியும் முத்துக்குமரனிடமிருந்து எழுந்தது:
"மாதவி கணக்கு என்னென்னு பார்த்து அதையும் இப்பவே தீர்த்துவிட முடியுமா?"
"அதைக் கேக்கிறதுக்கு நீ யாரு?"
திடீரென்று முத்துக்குமரனே எதிர்பாராத விதமாகக் கோபாலின் குரலில் சூடேறித் துடித்தது.
"நான் யாரா? நான் தான் இனிமே அவளுக்கு எல்லாம். அடுத்த வெள்ளிக்கிழமை குருவாயூர்லே எனக்கும் அவளுக்கும் கலியாணம், இனிமே அவ உங்கூட நடிக்கமாட்டா."
"அதை அவள்னா சொல்லணும் எங்கிட்ட, நீ யாரு சொல்றதுக்கு?"
"அவ உங்கிட்டப் பேச விரும்பலை. நான்தான் சொல்லுவேன்."
"உன்னை ரொம்ப நெருங்கின சிநேகிதன்னு நெனைச்சு இந்த வீட்டிலே நுழைய விட்டேன்..."
"அதுக்கு நான் எந்தத் துரோகமும் செஞ்சுடலையே?"
"சரி! சரி! அதைப்பத்தி இப்ப என்ன? ஒரே உறையிலே ரெண்டு கத்திகள் இருக்க முடியாது. அஞ்சு நிமிஷம் இரு! மாதவி கணக்கையும் தீத்துடறேன்." என்று பதில் கூறி விட்டுத் தன்னுடைய பெர்ஸனல் ஸெகரெட்டரிக்கு அங்கிருந்தே ஃபோன் செய்தான் கோபால். பத்தே நிமிஷத்தில் அவனுடைய பெர்ஸனல் ஸெகரெட்டரி இன்னொரு 'செக் லீஃப்' கொண்டு வந்தார். அவள் பெயருக்கு ஓர் இருபதாயிரம் ரூபாய்க்கு எழுதிக் கொடுத்தான்.
"பணம் கொடுத்திட்டேடா கோபால்! ஆனா மனுஷன் சில சமயங்களிலே செய்த உதவி, பணத்தால் மதிப்பிட முடியாதுங்கறதை மட்டும் நினைவு வச்சிக்க. பணத்தை உன் முகத்திலே வீசி எறியாமே நான் வாங்கிக்கிறதுக்கு ஒரே காரணம் - இன்னிக்கி இந்த உலகத்திலே பணத்தை விட உயர்ந்த விஷயங்களான மானம், மரியாதையைக் காப்பாத்திக்கிறதுக்கும் இந்தப் பாழாய்ப் போன பணம் தான் வேண்டியதாயிருக்கு. அந்த ஒரே காரணத்துக்காகத்தான் பணத்தைக் கணக்காக நானும் கேட்டு வாங்கிக்கிறேன்."
கோபால் இதைக் காதில் போட்டுக் கொள்ளமலே எழுந்து போய்விட்டான். முத்துக்குமரன் தன்னுடைய பெட்டி படுக்கைகளைக் கட்டி வைத்தான். மாதவி அவனுக்கு உதவி செய்தாள். பத்துப் பதினைந்து நிமிஷத்தில் அந்த அவுட்ஹவுஸைக் காலி செய்து சாமான்களை வராண்டாவில் கொண்டு வந்த வைத்துவிட்டார்கள் அவர்கள். மாதவி அவனிடம் கூறினாள்:
"சண்டை வந்ததே என்னாலேதான். நான் ராத்திரி வீட்டுக்கே போயிருக்கணும்."
"மறுபடியும் உன் பேச்சிலே பயம் வர்ராப்பிலே தெரியிறதே மாதவி! இப்பிடி ஒரு சண்டை வந்ததுக்காக நான் சந்தோஷப் பட்டுக்கிட்டிருக்கேன். நீ என்னடான்னா... மறுபடியும் அநாவசியமாகக் கவலைப்படறியே! இனிமே இவங்கிட்டே நாம இருக்க முடியும்னா நீ நினைக்கிறே? சும்மா நடிச்சுக்கிட்டே இருந்தா இப்படித்தான் புத்தி வக்கிரமாகப் போகும். கொஞ்சமாவது வாழணும். ஒருத்தன் வாழாமே நடிச்சா அது நல்ல கலையாகவும் இருக்கமுடியாது. கோபால் ஒழுங்கா இருக்கணும்னா கலியாணங் கட்டிக்கிட்டு ஒரு கட்டுப்பாடான வாழ்க்கையை முதல்லே அவன் பழகிக்கிணும். இல்லாட்டி அவன் இதைவிட இன்னும் மோசமாகச் சீரழிஞ்சுதான் போவான். இந்த பங்களாவைத்தான் பாரேன், பேய் வீடு மாதிரி. வாசல்லே ரெண்டு இழைக் கோலம் போட ஒரு சுமங்கலி இதிலே இல்லே. வேலையாட்களும், காரும், தோட்டமும், பணமும் இருந்து பயனென்ன? ஒரு குழந்தையின் மழலைகூட இந்தப் பங்களாவிலே இதுவரை கேட்கலே. கொஞ்சமாவது லட்சுமிக்களை இங்கே இருக்கா பாரேன்?"
அவன் கூறியவை அனைத்தையும் ஒப்புக்கொள்வது போல் மாதவி மௌனமாக இருந்தாள். அவுட்ஹவுஸ் வாசலில் நின்று அவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போதே நாயர்ப் பையன் அங்கு வந்தான். அவனை ஒரு டாக்ஸி கொண்டுவருமாறு அனுப்பினாள் மாதவி. டாக்ஸி வந்தது. பையன் மாதவியிடம் தனியே ஏதோ பேசிக் கொண்டு நின்றான். அவன் கண்கள் கலங்கியிருந்தன.
"உங்ககிட்ட ஒரு அஞ்சு ரூபா இருந்தாக் குடுங்க..."
- என்று மாதவி முத்துக்குமரனைக் கேட்டு ஓர் ஐந்து ரூபாய் வாங்கி அந்தப் பையனிடம் கொடுத்தாள். பையன் இருவருக்கும் ஒரு கும்பிடு போட்டான். அவன் கண்கள் மீண்டும் கலங்கின.
"அடுத்த வாரம் பினாங்கிலேருந்து கப்பல் வந்ததும் உதயரேகா இங்கே இந்த அவுட்ஹவுஸ்லே வந்து தங்கப்போறாளாம்...! கோபால் தன்னிடம் சொன்னதாகப் பையன் எங்கிட்டச் சொன்னான்" என்றாள் மாதவி.
"அது சரி! அப்துல்லா அவளைப் பினாங்கிலேருந்து இங்கே வரவிட்டால்தானே?" இதைக் கேட்டு அவளுக்கு சிரிப்புப் பொங்கிக் கொண்டு வந்தது.
"விடு அசிங்கத்தை! வேறே நல்ல விஷயம் ஏதாவது பேசுவோம்" என்றான் முத்துக்குமரன். இருவரும் டாக்ஸியில் ஏறி அமர்ந்தனர். பையன் முத்துக்குமரனுடைய பெட்டி படுக்கையையும், மாதவியின் சூட்கேஸ்களையும் டாக்ஸியில் எடுத்து வைத்தான். முத்துக்குமரன் அவளைக் கேட்டான்:
"எங்கே போகலாம்? உன்னை வீட்ல விட்டுட்டு நான் பழையபடி எக்மோர் லாட்ஜு க்கே போயிடட்டுமா?"
"ஹேய்... ஆளைப் பாரு! லாட்ஜுக்காவது போறதாவது? நான் விட்டாலும் உங்க மாமியார் விடமாட்டாங்க. வம்பு பண்ணாம வீட்டுக்கே வந்து சேருங்க..." இப்படி அவள் பேசியது அவனுக்கு மிகவும் பிடித்தது. டாக்ஸி விரைந்தது. டாக்ஸிக்காரனுக்கு லாயிட்ஸ் ரோட்டில் இடம் அடையாளம் சொல்லிவிட்டு முத்துக்குமரனிடம் பேசத் திரும்பினாள் மாதவி. அவன் அவளைக் கேட்டான்:
"உன்னை இன்னொரு கேள்வி கேட்கணுமே?"
"என்னது, கேளுங்களேன்?"
"வீட்டிலே எத்தனை கட்டில் இருக்கு!"
"ஏன்? ரெண்டு இருக்கு?"
"இருக்கப்பிடாதே...?"
"சீ குறும்பெல்லாம் வேணாம்" என்று உதட்டில் விரலை வைத்துக்காட்டி அவனை அதட்டுபவள் போல் அவள் பாவனை காட்டியது மிகமிக அழகாயிருந்தது. ஒவ்வொரு குறும்பிலும் அவளை ரசித்தான் அவன். நிறைய உள்ளர்த்தங்களும், வியங்கியமும், வசீகரமும், அணிகளும் நிறைந்த ஒரு கவிதையைப் போலிருந்தாள் அவள். அவள் இரண்டு உதட்டின் மேலும் விரலை வைத்துத் தன்னை அதட்டுவது போல் பாவனை காட்டிய சமயத்தில் அவள் முகத்தில் தெரிந்த குறும்பும் அழகும் கலந்த வசீகரத்தை அப்படியே ஒரு கவிதையாக எழுதவேண்டும் போலிருந்தது அவனுக்கு. மாதவியின் தாய் அவர்களை மகிழ்ச்சியோடு வரவேற்றாள். பணம் கொடுத்து அனுப்புமுன் டாக்ஸிக்காரன்,
"அவங்க சினிமாப் படத்திலே நடிச்சிருக்காங்கள்ளே சார்?'' என்று முத்துக்குமரனைக் கேட்டபோது, "ஆமா, இனிமே நடிக்கமாட்டாங்க" என்று நிர்த்தாட்சண்யமான குரலில் மறுமொழி கூறினான் முத்துக்குமரன். மாதவி முன்பே இறங்கி உள்ளே போயிருந்தாள். உள்ளே சென்றதும் முதல் வேலையாக டாக்ஸிக்காரன் கேட்டதையும், அதற்குத் தான் சொன்ன பதிலையும் அவளிடம் கூறினான் முத்துக்குமரன். மாதவி சிரித்தாள்.
"உங்களாலே நட்சத்திர உலகத்துக்கு எத்தினி பெரிய நஷ்டம்னு உங்க மேலே கோபத்தோட போயிருப்பான் அந்த டாக்ஸி டிரைவர்..."
"அப்பிடியாகிவிடாது! நஷ்டத்தை ஈடுசெய்ய எத்தனையோ உதயரேகாக்கள் வருவார்கள்."
- அவள் மீண்டும் சிரித்தாள்.
*****
அடுத்த வெள்ளிக்கிழமை குருவாயூர் கோவிலில் மாதவிக்கும், முத்துக்குமரனுக்கும் நிகழ்ந்த திருமணத்திற்கு எங்கிருந்தும் எந்த ரசிகர்களும் வாழ்த்தனுப்பவில்லை; எந்தப் படவுலகப் பிரமுகர்களும் வரவில்லை. திருமணம் முடிந்ததும் அவர்கள் வணங்கியெழ மாதவியின் தாய் மட்டுமே அவர்களோடு உடனிருந்தாள். அன்றிரவு அவர்கள் மாவேலிக்கரைக்கு ஒரு டாக்ஸியில் அங்கிருந்து சென்றார்கள். மாவேலிக்கரை மாதவியின் சொந்த ஊர் ஆயினும் அங்கே அவளுக்கு வீடு வாசல் இல்லை. சொந்தக்காரர்கள் வீட்டில் அவர்கள் அன்றிரவு தங்கினர். இரவுச் சாப்பாட்டிற்குப் பின் தனிமையில் அவள் அவனிடம் வந்தாள்.
"பார்த்தீங்களா? இங்கே எல்லாருமாகச் சேர்ந்து சதி பண்ணி இந்த அறையில் ஒரே கட்டில்தான் போட்டிருக்காங்க..."
அவன் சிரித்தான். அவள் அவனருகே வந்தாள். நறுமணம் நிறைந்த மலையாள மல்லிகை அவள் கூந்தலைச் சூழ்ந்திருந்தது. அவன் அவளைத் தன்னருகில் இழுத்து உட்கார வைத்து அந்தப் பூவின் நறுமணத்தை நாசி நிறைய நுகர்ந்தான்.
"மாதவி! சமுகத்தின் நீண்ட வீதிகளில் எங்கும் பயப்படாமல் நடக்க வேண்டுமானால், பெண் இப்படி ஒரு பாதுகாப்பான கட்டிலிலிருந்துதான் கீழே இறங்கி நடக்க முடியும் என்பது பல்லாயிரம் தலைமுறைகளுக்கு முன்பே முடிவாகிவிட்ட விஷயம். சமுதாய வீதியில் நிரந்தரமாக இராவணர்கள் இன்னும் சுற்றிக்கொண்டுதான் இருக்கிறார்கள்."
"அப்துல்லாவைச் சொல்றீங்களா?"
"அப்துல்லா, கோபால், எல்லோரும்தான்! ஒருத்தருக்கொருத்தர் போட்டி போட்டுக்கிட்டு நடிக்கிறாங்களே!"
அவள் பதில் சொல்லாமல் அவன் நெஞ்சில் சாய்ந்தாள்.
தன்னுடைய சொந்தக்கட்டிலில் உறங்குவது போன்ற சுகத்தை அந்த நெஞ்சு அவளுக்களித்தது. பெண் உறங்குவதற்கு இப்படி ஒரு கட்டிலும் இப்படி ஒரு துணையும் வேண்டுமென்பது ஆண்மக்களில் முதல் இராவணன் தோன்றியபோதே உலகில் முடிவாகிவிட்டது. இராவணன்கள் இருக்கிறவரை அவள் சமூகத்தின் புழுதி படிந்த வீதிகளில் துணையின்றித் தனியாக நடக்கவே முடியாதோ என்னவோ?
-------------
This file was last updated on 10 December 2013.
Feel free to send corrections to the webmaster,