pm logo

வஞ்சி மாநகர்
மு. இராகவயங்கார் எழுதியது.

vanjci mAnakar
of mu irAkavaiyankAr
In tamil script, unicode/utf-8 format




Acknowledgements:
Our Sincere thanks go to the Digital Library of India for providing a scanned image
version of this work for the etext preparation.
This etext has been produced via Distributed Proof-reading Implementation and
we thank the following volunteers for their assistance:
R. Arvind, V. Devarajan, S. Karthikeyan, M. Kavinaya, Nalini Karthikeyan,
R. Navaneethakrishnan, P. Thulasimani, N. Pasupathy and Thamizhagazhvan,
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.

© Project Madurai, 1998-2014.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.

வஞ்சி மாநகர்
மு. இராகவயங்கார் எழுதியது.

Source:
வஞ்சிமாநகர்
ஸேதுஸமஸ்தானவித்வான்
ரா. இராகவையங்கார் எழுதியது.
மதுரை:
தமிழ்ச்சங்கமுத்திராசாலையிற் பதிப்பிக்கப்பெற்றது.
1917.
------------


ஸ்ரீ:
முன்னுரை

அமிழ்தினுமினிய தமிழ்மொழியுணர்ந்த புத்திமான்களுக்குள், சில காலமாகச் சங்ககாலத்துச் சேரர் தலைநகராகிய வஞ்சி மாநகர் கொங்கு நாட்டுக் கருவூர்தானோ; அன்றி, மேல கடற்கரைக்கணுள்ள கொடுங்கோளூர் தானோ; என்று ஐயமுண்டாகி அதனடியாகச் சில பல ஆக்ஷேபசமாதான ரூபமான வாதங்கள் புஸ்தகவாயிலாகவும், பத்திரிகைவாயிலாகவும் நிகழ்தலைக்கண்டு செந்தமிழ்ச் செல்வவேந்தரும், மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைவரும், எம் அன்னதாதாவுமாகிய மகா-௱-௱-ஸ்ரீ மாட்சிமை தங்கிய ஸ்ரீமான் இராஜராஜேஸ்வர ஸேதுபதி மஹாராஜரவர்கள் யாம் இவ்விஷயமாக நிச்சயித்ததை எழுதியுதவும்படி பல்காலுந்தூண்ட அதனானே இந்நூலெம்-மாலெழுதப்பெற்று அவர்கள் பெருநல்லுதவியானே அச்சிட்டு நிறைவேறியதாதலின் அம்மஹா ராஜரவர்கட்குயாம் என்றும் நன்றி பாராட்டுங் கடப்பாடுடையேம். செந்தமிழ்ச்செல்வச் சேதுவேந்தரும், அவர்களாதரிக்கு நறுதமிழும் எஞ்ஞான்று மினிதோங்கிநிலவ இறைவன்றிருவருளைச் சிந்திக்கின்றேம்.
----------

உரிமையுரை.

என்போற் புலவ ரிறுமாந் தி* ண்வாழத்
தன்போற் புரக்குந் தமிழ்வள்ள—லன்போவாத்
தேனுரிமை செய்முல்லைச் சீராசராசமுகிற்
கியானுரிமை செய்வஞ்சி யீது.

ரா. இராகவையங்கார்.
ஸேதுஸமஸ்தான வித்வான்.
-----------------------------------------------------------

ஸ்ரீ:
தற்சிறப்புப்பாயிரம்.

நாமகள் வாழ்த்து,

வெண்டா மரைமேல் விளக்கை யெனதுள்ளத்
தண்டா மரைமேற் றனியேற்றிக்—கொண்டேன்யான்
காணாத பல்பொருளுங் கையகத்து நெல்லியெனக்
கோணாது காண்பான் குறித்து.

நூனுதல்பொருள்.


குடகொங்கிற் கொல்லிக்குடவரைப்பாற்சேரர்
தடமதில்சூழ் வஞ்சித் தலந்தான்--கடலிவரும்
பொன்னிசேர்தண்பொருநைப்பூந்துறைக்கணுண்மையிது
தன்னிலே தேறத் தகும்.
---


ஸ்ரீ:

வஞ்சிமாநகர்.

வடவேங்கடந் தென்குமரி யாயிடைத் தமிழ்கூறு நல்லுலகம் சேரர் பாண்டியர் சோழர் என்னும் மூவர்க்கே யுரியதென்பது தொல்காப்பியனார் "வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பி, னாற் பெய ரெல்லை யகத்தவர் வழங்கும், யாப்பின் வழிய தென்மனார் புலவர்" (பொ-செய்-79) எனச் சூத்திரத்துரைத்தவற்றானும் ஆண்டு உரையாசிரியர், பேராசிரியர் உரைத்தவாற்றானும் அறியப்படும். ஈண்டு "நாற்பெயரெல்லையகம்" என்பது வடவேங்கடந், தென்குமரி, குணகடல், குடகடல் என்னப்பட்ட நான்கெல்லையகம் எனக்கொள்வர் பேராசிரியர்: நச்சினார்க்கினியர் வேறுகூறுவர். அதைப்பற்றிப் பிற்கூறுவேன். இம் மூவேந்தரும் படைப்புக் காலந்தொட்டே மேம்பட்டு வருதலுடையாரென்பது* தமிழ் நூல்களிற்கண்டது,
------
* திருக்குறள்--பரிமேலழகருரை.

"கடலகவரைப்பினிப் பொழின்முழுதாண்ட நின்முன்றிணை முதல்வர்" (பதிற்றுப்பத்து) எனச்சேரரையும் "உலகமாண்ட வுயர்ந்தோர்" (மதுரைக்காஞ்சி) எனப் பாண்டியரையும் "சென்னிகுளிர் வெண்குடை போன்றிவ்வங் கணுலகளித்தலான்" (சிலப்பதிகாரம்) எனச் சோழரையும் கூறுதலான் இம் மூவேந்தருடைய ஆட்சித்திறனும், பெருந் தலைமையும், நன்கறியலாகும். இம்மூவரும், வேங்கடம் குமரி இடைப்பட்ட இத்தமிழுலகத்தை மேனாடு, தென்னாடு, கீழ்நாடு எனமூன்று பிரிவாக வைத்து ஆண்டாரென்பது

'குடபுலங்காவலர்மருமான்' எனச்சேரனையும்
'தென்புலங்காவலர்மருமான்' எனப் பாண்டியனையும்
'குணபுலங்காவலர்மருமான்' எனச் சோழனையும்

சிறுபாணாற்றுப்படையிற் கூறுதலானுணரப்படும். நச்சினார்க்கினியரும் குடபுலம்-மேற்றிசைக்கணுள்ள நிலம் எனவும், தென்புலம்-தெற்கின்கண்ணதாகிய நிலம் எனவும், குணபுலம்-கிழக்கின்கண்ணதாகிய நிலம் எனவும் உரைத்தார். தமிழ்முடியுடையரசர் மூவரேயாதலானும், *வேங்கடத்துக் கிற்பாற்பட்ட தமிழ்நாடு முழுதும் மேற்குறித்த திசைமுறையாற் **பிளப்புணடபடியாலும், வேங்கடத்துக் கப்பாற்பட்டது தமிழ் வழங்கா நிலமாதலானும் வடபுலம் என ஒன்று ஈண்டு வேண்டப்பட்டதின்றென நன்றுணர்க. இவ்வருமையான பகுப்புமுறையை யுற்று நோக்கின் இப்பரத கண்டத்தின் தென்பாகம் விரியாது சுருங்கிய இயற்கை யமைப்பை ஆராய்ந்து மூவேந்தர்க்குந் தகுதியான கடற்கரையும் விரிந்த அசநாடும் உளவாதல் கருதி இவ்வாறு பிரிக்கப்பட்டதென்று புலனாகும். பாண்டியர் தெற்கண் வளைந்த பெருங் கடற்கரையையும், அதனைத் தொட்டு வடக்கண் விரிந்த அசநாட்டையும் உடையராவர். சேரர் சோழரிருவரும் பாண்டியர் தென்னாட்டுக்கு வடபால் வேங்கடம் எல்லையாகவுள்ள நிலத்தைக் குடபுலம், குணபுலம் என இருபாற்படுத்துக் குட கடற்கரையும், அதனைத் தொட்டுவிரிந்த அகநாடும், குணகடற்கரையும், அதனைத் தொட்டுவிரிந்த அசநாடும் முறையே உடையராவர். இச்சேரர் பாண்டியர் சோழர் மூவரும் நிலனுரிமா கொண்டாளுந் திசைபற்றி முறையே குடக்கோ. தென்னவர், குண புலங்காவலர் எனப்பெயர் சிறப்பர்.

இனி இம்மூவர்க்குமுரிய இத்தமிழ்கூறு நல்லுலகஞ் செந்தமிழ் நாடு எனவுங், கொடுந்தமிழ்நாடு எனவும் இரண்டு பிரிவாகப் பிரித்து வழங்கப்படுமெனவுணர்க. செந்தமிழ் நிலம் ஒன்றும், கொடுந் தமிழ்நிலம் பன்னிரண்டுஞ் சேர இத்தமிழுலகம் பதின்மூன்று பகுதியுடைத்தாகும். செந்தமிழ்நிலம் என்பது வையையையாற்றின் வடக்கும், மருதயாற்றின் தெற்கும், கருவூரின் கிழக்கும், மருவூரின் மேற்கும் என்று இளம்பூரணவடிகள், சேனாவரையர், நச்சினார்க்கினியர் மூவரும் தொல்காப்பிய-வுரைக்கண் உரைத்தார். வையைக்கு வடக்கணுள்ள பாண்டி நாட்டுப்பகுதியும் இதன்கண்ணடங்குதல்காண்க. வையைக்கு வடபால் நாடுகளிலுள்ள திருப்புத்தூர், திருவாடானை, திருக்கோட்டியூர், திருமெய்யமுதலிய தலங்கள் பாண்டி நாட்டுள்ளவெனப்படுதலானும் வையைக்கு வடக்கண் நெடுந்தூரம் பாண்டி நாடுண்மை இனிதுணரப்படும். (பிற்காலத்தார் பாண்டிநாடே செந்தமிழ் நிலமென்பர்). இச்செந்தமிழ் நிலத்தைச் சூழ்ந்த கொடுந் தமிழ்நிலம் பன்னிரண்டாவன; பொங்கர்நாடு, ஒளிநாடு, தென்பாண்டிநாடு, குட்டநாடு, குடநாடு, பன்றிநாடு, கற்காநாடு, சீதநாடு, பூழிநாடு, மலைநாடு, அருவாநாடு, அருவாவடதலை என இவையென்று இளம்பூரணவடிகள், சேனாவரையர் உரைத்தார். நச்சினார்க்கினியர் இங்ஙனமேகூறி மலைநாடு என்ற விடத்து மலையமானாடு என்றுரைத்தார். "சேரலன் மலையமான் கோச்சேரன் பெயரே" என்பது திவாகரமாதலான் மலையமான் என்பது சேரன் பெயராதல் தெள்ளிது. மேற்கூறிய பன்னிருநிலமும் செந்தமிழ் நிலத்தென் றென்கீழ்பால் முதலாக வடகீழ்பாலிறுதியாக எண்ணிக்கொள்க என்று சேனாவரையரும், நச்சினார்க்கினியரும் உரைத்தார். இதனாற் குடநாடும், மலைநாடும் வேறுவேறென்று தெளிந்து கொள்ளலாம். நச்சினார்க்கினியர் இக்கொடுந் தமிழ்நிலம் பன்னிரண்டையுஞ் சூழ்ந்த பன்னிரண்டாவன சிங்களமும், பழந்தீவுங், கொல்லமுங், கூபமுங், கொங்கணமுந், துளுவுங், குடகமுங், கருநடமுங், கூடமும், வடுங்குந், தெலுங்குங், கலிங்கமுமாமெனவுரைத்தார். இதனாலிவை கொடுந் தமிழ்நாட்டுக்கும் அப்பாலுள்ள பிறநாடுகளென்று தெளியலாம். இந்நாடு பன்னிரண்டும் தமிழ்மொழி வழங்காது வேறுவேறு மொழிவழங்கு நிலங்களென்பது கொடுந் தமிழ்நாட்டுக்கு மப்பா லிவற்றை வைத்துரைத்தமையானும், தமிழ்மொழியல்லாத சிங்களம் வடுகு முதலிய மொழிப்பெயரே நிலப்பெயராகப் பெரும்பான்மை கூறியதனானும் உணரலாம். இந்நிலத்து மொழிகள் தமிழிற்புக்கு வழங்கியவிடத்து உரையாசிரியரெல்லாம் திசைச்சொல் என்று கூறுதலுங்காண்க. சங்க நூல்களிற் பல்லிடத்தும் வடுகர் நிலத்தைத் "தமிழ்பெயர்தேயம்" எனவும் மொழிபெயர்தேயம்" எனவும் உரைத்தலானும் இதனுண்மையுணரப்படும். இவற்றாற் கொல்லங், கூபங், கொங்கணந், துளு, குடக முதலியன தமிழொழிநிலங்களாக ஆதியிலெண்ணப்பட்டமை நினைக்கத்தகும்.

இனிச் சிறுபாணாற்றுப்படையில் மேற்றிசைக்கணுள்ளநிலம் என்பதுபற்றிக் "குடபுலம்" எனப்பட்ட சேரநாடு மேற்கூறிய கொடுந் தமிழ்நாடுகளுட்குட்ட நாட்டையுடைய-தென்பது சேரனைக்குட்டுவன் என்பதனானும், குடநாட்டையுடைய தென்பது குடவர்கோமான் என்பதனானும், பூழிநாட்டையுடையதென்பது பூழியர் கோமான் என்பதனானும், மலைநாட்டையுடையதென்பது மலையன், மலையமான் என்பதனானும் நன்கறியப்படும். மற்றை நாடுகளைப்பற்றி ஈண்டு ஆராய்ச்சியின்று; வேண்டுழி வேண்டுழிக் கூறிக்கொள்வல். இதனாற் குட்டமுதலாக மலை யிறுதியாக ஈண்டுச்சொல்லப்பட்ட நாடெல்லாம் சேரநாட்டகத்தன வென்று தெளியப்பட்டவாற்றான் இவையனைத்தும் 'குடபுலம்' என்று நல்லிசைப்புலவர் குறியிட்ட மேற்றிசைக்கணுள்ள நிலமாகுமென்று எளிதிலுணரப்படும். இதனாற் குடபுலம் என்பதன்கண் குடநாடும், மலைநாடுமென இரண்டுண்டென்றும், ஒன்றென்று கூறலாகாதென்றும், சேரரைக் குடதிசைபற்றிக் கூறுமிடத்தெல்லாம் குடநாடொன்றையே குறியாது அவர்க்குக் குடதிசைக்கணுள்ள குட்டமுதலாக மலைநாடி றுதியாகச் சொல்லப்பட்ட நாடுகள் எல்லாவற்றையும் குறிக்குமென்றும் ஐயமறத் துணிந்துகொள்க. இப்பகுப்புமுறையெல்லாம் ஆராயாது குடபுலம் என்பது குடநாடொன்றேயென்றும், அதுவே மலைநாடென்றும், அம்மலைநாடு கடற்கரை-யோரமாகவுள்ளதேயென்றும், தாமே நினைத்துக்கொண்டு இடர்ப்படுவாருமுளர். அவர் மலைநாட்டுக்கும், குடநாட்டுக்கும் இடையிற் பலநாடுண்மையினையும், இவையெல்லாஞ் செந்தமிழ்நாட்டைச் சுற்றியுள்ளனவென்று தொல்லாசிரியர் காட்டியதனையும் மறந்தனராவர். இப்பலநாடுந்தொக்குள்ள சேரர் குடபுலத்தை மலைமண்டலமென்று கூறுவதெல்லாம் சோழநாட்டைப் புனன்மிகுதி பற்றிப் புனனாடென்பதுபோல மலைமிகுதி பற்றியென் றெளிதிலுணரப் படும். இதனாற் குடபுலமென்றும், மலைமண்டலமென்றும் பெயருடைய சேரநாட்டுக் கொடுந் தமிழ்நாடாக வெண்ணப்பட்ட குடநாடும், மலைநா டும் வேறுவேறு உள்ளனவென்பது நன்குணரற்பாற்று. ஒருசேரனைக் "குடதிசைவாழுங்கோ" என நூல் கூறினது குடபுலங்காவலர் மருமான் என்புழிப்போல மேற்றிசைக்கணுள்ள நிலத்தில் வாழும் வேந்தன் எனப் பொருள்படுத்தலன்றி அது கடலோரமாகவுள்ளதென்று கொள்ளப் பட்ட கொடுந்தமிழ் நாடாகிய குடநாட்டிலேமட்டும் வாழுங்கோ என்று பொருள்படுத்தல் நெறியன்றென்க. கொடுந்தமிழ் நாடாகிய குடநாடு மேல்கடலோரமாக வுள்ளதென்பது 'தண்கடல்வேலி நின்குடநாடற்றே" என வருதலான் அறியலாம். சேரனாளும் குடபுல முழுதையுங்குறித்து அவனைக் குடக்கோ என்பதன்றி அவனாட்டினோர் பகுதியாகிய குட நாடுமட்டுங் குறித்து அப்பெயராளுத-லில்லை.யென்க. அடியார்க்குநல்லாரும் "குடக்கோச்சேரலிளங்கோவடிகள்" என்புழிக் குடக்கோ என்பதற்குக் குடதிசைக்கோ எனவேயுரைத்தார்.

இத்துணையும் விரித்துரைதத நாடுகளுள், தொண்டைநாடு, கொங்கு நாடு எனப்பட்ட நாட்டின் பெயர்கள் காணப்படாமை நினைக்கத்தகும். இவற்றுள் தொண்டைநாடு நாகபட்டினத்துச் சோழனொருவன் நாக கன்னியை மணந்துபெற்ற புதல்வனும், தொண்டைக் கொடியை அடையாளமாகச் சுற்றப்பட்ட காரணத்தாற், றொண்டைமான் எனப் பெயர் சிறந்தவனுமாகிய ஒருவற்குத் தன்னாட்டைப் பிரித்துக் கொடுக்கப் பின் அத்தொண்டைமான் பெயரான் விளங்கியதொன்றாதலின் இப்பழைய நாடுகளின் வேறாயெண்ணப் படலாயிற்று. கொங்கு இப்பழைய நாடுகளின் வேறாயெண்ணப் பட்டமையின் உட்பகுதியாகியதோர் நாடென்று துணியப்படும். இது தொண்டைநாடு போலப் பெரியநாடாகக் கருதப் படுமாலெனின் பழைய காலத்து ஒன்றனுட் பகுதியாய்ச் சிறுகியது பிற் காலத்துத் தன்பெயரே கொண்டு பெருகியதென்று கொள்ளப்படுமென்க. இது முற்காலத்துக் கொங்கன் என்னும் பெயரையுடைய சேரனாலாளப் பட்டதன்மையாற் கொங்க நாடென்றும், அதுவே கொங்கென்றும் வழங்கப்பட்டதென்று தெரிகின்றது. இதனைச் செந்தமிழ்க் கடனிலை கண்ட கட்டியப்ப முனிவர் பேரூர்ப்புராணத்து

"கோதைபயில்விற்கொடிகுலாவியபுயத்தன்
கோதையர்விழிக்கண்குளிக்குமருமத்தன்
கோதைகமழுங்கவிகைக்கொங்கனெனவிள்ளுங்
கோதைநனியாண்டதொருகொங்குவளநாடு"

எனப் பாடுதலானறிக. கொங்கனென விள்ளுங்கோதை--கொங்கன் என்று வழங்கப்படும் சேரன் என்றது காண்க. இங்ஙனமின்றி வேங் கடங்குமரி என்னுமிவற்றுக்கிடையே உள்ள நிலமெல்லாம் செந்தமிழ் ஒன்றும், கொடுந்தமிழ் பன்னிரண்டுமாகப் பிரிக்கப்பட்டிருக்கவும் அவற்றின் வேறாயொரு தமிழ்நாடு தனியே ஆங்குண்டென்று நினைப்பதற்கே இடனின்றாதல் காண்க. இக்கொங்குநாடு ஆதிதொட்டே பெருகியநிலை யுடையதாயின் ஈண்டு எண்ணப்பட்ட பழைய நாடுகளுடன் எண்பெறா தொழியா தென்பது தெள்ளிது: இதனாலிது நாளடைவிற்றன் பெயர் கொண்டு பெருகியதென்று துணியப்பட்டதென்க.

மண்டலம், தொண்டை மண்டலம் எனவுரைத்தார். இந்நான்குடன் கொங்கு மண்டலத்தையுஞ் சேர்த்து தமிழ்நாடு ஐந்து என்றுகொண்டாரும் உண்டு:


"நறவேந்துநங்கைநலங்கவர்ந்துநல்கா
மறவேந்தன்வஞ்சியானல்லன்--றுறையின்
விலங்காமைநின்றவியன்றமிழ்நாடைந்தின்
குலங்காவல்கொண்டொழுகுங்கோ."

என்னும் வெண்பாவில் வியன்றமிழ் நாடைந்து என்றதூஉம் இக் கருத்த பற்றிவந்தது. இவை தனியே சிறந்து பெருகிய காலத்து எண்ணப்படுதலான் முன் எண்ணப்பெறாமைக்குக் காரணம் இவை தமிழ் நாட்டினின்று பிரிந்து தனியாகாமையே யென்று துணியலாம்.

இனி ஈண்டுக்குறித்த கொங்குநாடு மூவேந்தர்க்குரிய குடபுலம், தென்புலம், குணபுலம் என்பவற்றுள் எதன்பாற்பட்டதென்று ஆராயு மிடத்து இக் கொங்கு நாட்டைப் பலவிடத்தும் 'குடகொங்கு' எனவே வழங்குதலான் இது குடபுலத்ததாமென்று புலனாகும். இதனாலிது குடதிசையாட்சியையுடைய சேரருடையதென்று துணியலாம். கலி கன்றியாழ்வாரும் சோழன் செங்கணானை அவன் வென்றுகொண்ட நாடுகளானே "தென்னாடன் குடகொங்கன் சோழன்" என வழங்கியவிடத் துக் குட்கொங்கு எனப்பணித்தல் காண்க. சேக்கிழாரும் வெள்ளானைச் சருக்கத்திற்* "குடக்கொங்கிலணைந்து" என்றார். ஆழ்வார் 'தென்னாடன் குடகொங்கன் சோழன்' என்றது குணபுலங்காவலுடைய சோழன் தென்புலத்தையும், குடபுலத்தையும் வென்றுகொண்டதனைக் குறிப்பதாகக் கொள்ளப்படும். சங்கநூல்களும் பல்லிடத்தும் சேரனையே "கொங்கர்கோ" (பதிற்-88-90) என வழங்கும். இதனாற் கொங்கு நாடு குடதிசைக் கட்பட்ட தமிழ்நிலத்துள்ள தென்றும், அதுபற்றிச் சேரராட்சியிற் பட்டதென்றும் தெளிந்துகொள்க.
--------
* மஹாமஹோபாத்யாய ஸ்ரீமான் உ.வே. சாமிநாதையரவர்களும் சிலப்பதிகார அபிதான விளக்கத்தில் கொங்கு-கொங்கு மண்டலம்-குடநாடு என்றெழுதி .

மற்று
" மாகெழுகொங்கர்நாடகப்படுத்த
வேல்கெழுதானைவெருவருதோன்றல்" (22)

எனப் பதிற்றுப்பத்துட் காணப்படுதலால் இக் கொங்குநாடு சேரர்க்கு வென்றியாற் கிடைத்ததன்றி முன்றொட்டுச் சேரர் தன்றாமெனிற் கூறுவல். வேங்கடங் குமரி யிடைப்பட்ட தமிழுலகத்து ஒரு தமிழ்ப்பகுதி மூவேந்தருளொருவர்க் குரிமையாகாதிருந்ததென்பது " வண்டமிழ் மூவர்காக்குந் தண்பொழில் வரைப்பின்" என்ற தொல்காப்பியனார் கூற்றுக்கு மாறுபாடாதலின் இது மூவருளொருவர் பகுதி யதேயாமென்று துணியப்படும்: இது சேரர் குடபுலத்த தன்றாயின் இடைநாடாகவுள்ள இக்கொங்குநாட்டைக் குடகொங்கு என வழங்குதல் பொருந்தாததேயாகும். இது "குடகொங்கு" என்பதனால் என்றுங் குடதிசையாளுங் கோவாகிய சேரனதே யென்றுகொள்க. இங்ஙனமாகவும் சேரனைக் 'கொங்கர் நாடகப்படுத்த தோன்றல்' எனக் கூறியது தன்னாட்டகத்தவராயிருந்து வைத்தே தன்கோலின் வாராது வேறுபட்டுக் குறும்பு செய்தாரையடக்கி அக்குறும்பர் நாட்டைச் சேரன் தன்னடிப்படுத்திய செய்தியைக் குறித்ததன்றி வேறன்றென்க. இங்ஙனம் முடிவேந்தர் நாடு அடிப்படுத்தல் உண்டென்பது

"நின்னொடுவாரார்தந்நிலத்தொழிந்து
கொல்களிற்றியானையெருத்தம்புல்லென
வில்குலையறுத்துக்கோலின்வாரா
வெல்போர்வேந்தர்முரசுகண்போழ்ந்து" (பதிற்-79.)

என வருவதனானும் இதன்கண் "நின்னொடுவாரார் தந்நிலத்தொழிந்து என்றது நின்னை வழிபட்டு நின்னொடு ஒழுகாதிருத்தலே யன்றித் தந்நிலத்திலே வேறுபட்டுநின்று எ-று" எனவும், வில்குலையறுத்துக் கோலின் வாரா வேந்தர் என்றது முன்பு நின் வழியொழுகாது ஒழிந்திருந்த வழிப் பின்பு தாம் களத்துநின் போர்வலிகண்டு இனி நின்வழி யொழுகுது மெனச்சொல்லித் தாமேறிய யானை யெருத்தம்புல்லென வில்லின் நாணினை யறுத்து நின்செங்கோல் வழியொழுகாத வேந்தர் எ-று எனவுங் கூறியவுரையானும் நன்குணர்ந்து கொள்க. ஈண்டு வேந்தர் என்றது முடியுடைப் பேரரசற்குத் திறையிடற்குரியராய்ப் பெருநாட்டிலொவ்வோர் பகுதியை ஆள்கின்ற சிற்றரசரை எனவறிக. சிலப்பதிகாரப் பதிகத்து உரைபெறு கட்டுரைக்கண் "கொங்கிளங்கோசர் தங்கணாட்ட கத்தே" என வருதலான் இக்கொங்குநாட்டுப் பல சிற்றரசருண்மை புலனாகும். இவர் குறும்பு செய்தவழி இவர் நாட்டைத் தன்னடிப் படுத்தினானென்றுகொள்க.

இனிக் 'குடகக்கொங்கர்' என் வுண்மங்கலத்துப்போந்து வரம் வேண்டினாரென்று கேட்கப்படுமாலெ னின் அவர் இக்கொங்குநாட்டினரன்றி வேறல்லாமை அவரையே பதிகத்துக் "கொங்கிளங்கோசர்" என்றதனானும், அதற்கு அடியார்க்கு நல்லார் கொங்குமண்டலத்து இளங்கோவாகிய கோசர் என்றுரைத்த மையானுமுணரப்படும்: மற்றுக் குடகக்கொங்கர் என்றது மேற்றிசைக் கணுள்ள கொங்கா எ-று. குடம், குடகம், குடக்கு, குடகு இவை மேற்றிசைக்குவழங்கும் பெயர்களென்றுணர்க. கொங்கை யாண்டும் குடகொங்கு என்பதுபற்றி குடகமும் மேற்றிசைக்குப்பெயராதல் கருதிக் குடகக்கொங்கு என்று வழங்கியதன்றி வேறன்றென்க. இது சோணாட்டுச் சிதம்பரத்தைக் குணசிதம்பரமெனவும், கொங்குநாட்டுச் சிதம்பரத்தை (பேரூர்த்தலம்)க் குடசிதம்பரமெனவும் கூறுதலானும் உணரப்படும். இதனை

"விழவறாவீதிக்குணசிதம்பரத்துமேவினோர்க்கரும்பயனளிப்பா
'ரழகியதிருச்சிற்றம்பலமுடையாரொருவரேகுடசிதம்பரத்துப்'
பழகுநர்க்களிப்பார்" (பேரூர்ப்புராணம்)

என வருதலானறிக. வேறாயின் அதுதோன்றப் பதிகத்துங் கூறுவ ரென்க. குடகம் தமிழ்நிலமன்மையும் உணர்ந்துகொள்க. இங்ஙனங் கொள்ளாது கொங்குநாட்டுத்தமிழரே ஒரு காரணத்தாற் குடகநாட்டுச் சென்று வதிந்தார். இவர் அவராவரென்று கூறின் அஃதொருவாறு பொருந்தும்; என்னை காரணமெனின்? பொதியின் மலைக்கணிருந்த ஆய் என்னும் அரசனொருவன் இக்கொங்கரோடு போர்புரிந்து இவரை மேல் கடலிலே ஓட்டினானென்று

"நீயளித்த, வண்ணலயானையெண்ணிற்கொங்கர்க்
குடகடலோட்டியஞான்றைத்
தலைப்பெயர்த்திட்டவேலினும்பலவே" (130)

என்னும் புறப்பாட்டானறியப்படுதலான் இவர் அக்காலத்து மேல்கடற் பக்கத்தோடி ஆண்டுள்ள மலைப்பக்கங்களில் வதிந்தாராவரென்று ஊகிக் கப்படுமாதலானென்க. எங்ஙனமாயினுங் கொங்கர் சேரனுடைய குட புலத்தவர் என்னுமிடத்தும், கொங்கு அவனுடைய குடபுலத்ததே என்னுமிடத்தும் யாதோரையமும் உண்டாகாமை யிவற்றாற்காண்க.

இஃதன்றி இக்கொங்குநாட்டு என்றுமுள்ள கொல்லிமலை சேரர்க்கே சிறந்த தலைமையான மலையென்பது "கொல்லிச் சிலம்பன்" எனச் சேரனை வழங்குமாற்றானறியப்படும்.

"வாழியர்வில்லெழுதியவிமயநெற்றியொடு
கொல்லியாண்டகுடவர்கோவே" (சிலப்-குன்றக்)

எனவருதலான் இக்கொல்லிமலை சேரர்க்கு எத்துணைச் சிறந்ததென்பது இனிதுணரலாம். இஃது அத்துணைச் சிறப்புடையதாகக் கருதப்படா தாயின் இதனை இமயத்தொடுசார்த்தி இளங்கோவடிகள் கூறாரென் றுணர்க. அகப்பாட்டிலும் "பொறையன்கொல்லி" (62) என்றார். புறப்பாட்டிலும் சேரனை

"வேந்துதந்தபணிதிறையாற்
சேர்ந்தவர்கடும்பார்த்து
மோங்குகொல்லியோரடுபொருந" (22)

எனக்கூறினார். இதன்கண் "கொல்லியோரடுபொருந" என்பதற்குக் *கொல்லிமலையிலுள்ளாருடைய அடுபொருந என்று உரைகாரர் பொருள் கூறினார். இதனாற் கொல்லி சேரன்மலையும், கொல்லியோர் சேரன் குடிகளுமாதலுணரப்படும். கொங்குநாட்டைக் குடகொங்கு என்றதுபோல அதன்கணுள்ள இக் கொல்லிமலையை "வெல்போர்வானவன் கொல்லிக்குடவரை" (அகம்-130) எனவும் "குடகொல்லி" (இறையனார் களவியலுரை மேற்கோள்) எனவும் "இமயங் குடகொல்லி" (பட்டினத்தடிகள்) எனவும் வழங்குதலான் இஃதுள்ள திசையைக் குடதிசையென்று கருதினாராதல் செவ்வனம் புலனாகும். இதனாலும் இது குடபுலத்ததாய்க் குடபுலங்காவலுருடையதாதல் தெளியலாம். பாண்டியர் பொதியத்தைத் "தென்னம்பொருப்பு", (புறம்-215) என் பதுபோல இதனையுங்கொள்க. சோழர்க்கு நேரிமலையும், பாண்டியர்க்குப் பொதியமலையும், எங்ஙனஞ் சிறந்தனவோ அங்ஙனமே சேரர்க்கு இது சிறந்ததாகும். எத்துணையோ மலைகளை யுடைமையாற் குடபுலம் மலைமண்டலமெனப்படும். அம் மலைமண்டலங் காவல்புரிகின்ற சேரர்
----
* கொல்லிமலையில் இன்றைக்கும் மலையாளரேயுள்ளனர். மலையாளர்-மலையர் என வழங்கப்படுவரென்பது "மண்ணினிற் பொலிகுலமலையர்" (திருஞான-237) எனச் சேக்கிழார் பாடுதலான் அறியப்படும்.

பெயர்சிறந்தது இக் கொல்லிமலையானே என்பது ஈண்டைக்கு நினைக் கத்தகும். இது கருவூர்க்கு அணித்தாகவுள்ளது என்பதும் மறக்கற் பாலதன்று. இக் கொல்லியைக் குடவரையெனப் பலவிடத்தும் வழங் கியவாற்றாற் குடமலைநாடன் என்று சேரனைக்கூறியவிடத்துக் குடக்க ணுள்ள கொல்லிமுதலாகிய மலைகளையுடைய நாட்டையுடையவன் என்று கருதப்படுமெனவுணர்க. இக் கொல்லிமலையைத் தலைமையாக வுடையன் என்பதனாற் சேரன் மேல்கடலோரத்துநாட்டைமட்டும் உடையனாகாது அம்மேல்கடற்குக்கிழக்கே நெடுந்தூரம்விரிந்த அகநா டுடையனென்பது அதிகமாக வலியுறுதல்காண்க. சேரன் தனக்குரிய குடகடலோரத்துப் பல வுயர்ந்தமலைகளை உடையனாயினும் அவற்றா லிவன் சிறவாமல் இக் கொல்லிமலையானே பெயர்சிறத்தலின்காரணம் ஆராயப்படும். இதுபோலவே மேல்கடற்பக்கத்துப் பேர்யாறு முதலிய பெரியயாறுகளை இவனுடையனாயினும் இவன் அவற்றாற் பெயர்சிற வாமற் பொருநைத்துறைவன் என ஆன்பொருநையானே பெயர்சிறத் தலின் காரணமும் ஆராயப்படும். இவற்றின் காரணத்தை உள்ளவாறா ராயின் சேரர் அரசிருக்கையினையுடைய தலைநகரைத் தன்பாற்கொண்ட நாட்டகத்து இவை யுளவாதற்சிறப்புப்பற்றியன்றி வேறன்றெனவுணர லாகும். இது மேல் யான்கூறும்பிரமாணங்கள் பலவானும் வலியுறும்.

மற்றுக் கொல்லிமலை ஓரியினுடையதென்றும், அவ்வோரியைக் காரியென்னும் முள்ளூர்மன்னன் சேரனுக்குத் துணையாய்நின்று கொன்று அவன் கொல்லிமலையைச் சேரனுக்குக் கொடுத்தானென் றும் அகநானூற்றின்கண்

"முள்ளூர்மன்னன்கழறொடிக்காரி
செல்லாநல்லிசைநிறுத்தவல்வில்
லோரிக்கொன்றுசேரலர்க்கீத்த
செவ்வேர்ப்பலவின்பயங்கெழுகொல்லி" (209)

என வருதலாற் பெறப்படுமாலெனிற் கூறுவல் - பாண்டியருடைய பொதியமலையில் ஆய் என்னும் ஒருவன் இருந்தரசாண்டது

"கழறொடியா அய்மழைதவம்பொதியி
லாடுமகன்குறுகினல்லது
பீடுகெழுமன்னர்குறுகலோவரிதே" (புறம் - 128)

என்பதனாலறியப்படும். இவ்வாயென்னும்வள்ளில் பீடுகெழுமன்னரும் குறுகரிய நிலையில் இப்பொதியமலையில் இடைக்கணுண்டாகி விளங்கினாலும் அப்பொதியமலையை எஞ்ஞான்றுமுடைய பாண்டியர்க்கு அதனுரிமைதப் பாதவாறுபோல ஓரியென்னும் வள்ளல் கொல்லிமலையில் வலியுடையனா யிடையிலுண்டாகிச் சேரற்கடங்காமை காட்டினானாயினும் அக்கொல்லிமலையை எஞ்ஞான்றுமுடைய சேரர்க்கும் அதனுரிமை தப்பாதென்றுணர்க. இவ்வுரிமையானேயன்றே தனக்குத் துணையாகிய காரியை ஓரிமேலேவி அவனைக் கொல்வித்துச் சேரன் அக்கொல்லிமலையைக் கொண்டானென்று தெரிக. காரிக்கும் ஓரிக்குமுள்ள பகைமை காரணமாகவே இப்போர் நிகழ்ந்ததாயின் அப்போர் வென்றியின் பயனை அக் காரியேயெய்து வானாவன். அங்ஙனமன்மையானும், கொல்லிமலை யுரிமை சேரற்கே எஞ்ஞான்று முண்மையானும் அதனைக் காரி சேரற்கீத்தா னெனத்துணிக. சேரனுரிமைக்கு இடையூறு நீக்கித்தந்த அத்துணையே யல்லது வேறன்றென்று கொள்க. இங்ஙனங் கொள்ளாக்கால் பாண்டியன் பொதியப்பொருப்பனாகான் "நீர்திகழ்சிலம்பினேரியோனே" (பதிற்--) எனச் சேரனைக் கூறுதலாற் சோழன் நேரியனாகான் என்று கொள்ளவு நேருமென்க. இதனால் இம்மலைகள் இடையிடையே போர்க்கிடனாகவும், பிறராட்சிக் கிடனாகவும், கேட்கப்படினும் இம் மூன்று மலைகளையும் என்றுமுரிமையாகவுடையாராகார் அவ்வம்மலையுடைய நாடுடைய முடி வேந்தரன்றிப் பிறரில்லையெனத் தெற்றெனவுணர்க.
---------
*குடநாடு, குட்டநாடு, பூழிநாடு, மலைநாடு என இவை குடபுல ஆட்சியையுடைய சேரரைச்சேர்ந்தனவென முன்னரே உரைத்தேன். அவற்றுள் மலைநாடு யாதாகுமென்று ஆராய்வோமாக. கொடுந்தமிழ் நாடாகிய இம்மலைநாடு செந்தமிழ் நிலத்தைச் சூழ நிறுவப் பட்டநாடுகளின் முறையிற் குடநாட்டுக்கு அப்பால் பலநாடுகளுக்குப் பின் வைக்கப்பட்டவாற்றான் இம்மலைநாடு கடலோரமாக இல்லாமல் நெடுந்தூரந் தள்ளி அகநாட்டே உளதாதல் தெளியப்பட்டது. இதனையே நச்சினார்க்க்கினியர் மலைய மாநாடு எனவுரைத்தார். தென்பாண்டி நாடு என்பது தென்றிசைக் கணுள்ள பாண்டியனாடு என மூவேந்தரு ளொருவன் பெயரேகொண்டு விளங்கியதுபோல இம்மலைநாடும் மலைய மானாகிய சேரனாடு என்பதற்கு மலையமானாடு என வழங்கப்பட்டதாகும். மலையமான் சேரனென்பது நிகண்டுகள் பலவற்றினுங்கண்டது.

நச்சினார்க்கினியர் தொல்காப்பிய வெழுத்ததிகாரத்துக் கிளந்தவல்ல செய்யுளுட்டிரிநவும் என்னும் அதிகாரப்புறனடைச் சூத்திரவுரைக் கண் தாம் செய்யுளியலுட் கூறிய நான்குமண்டலங்களையு மேகருதிச் சோழநாடு, பாண்டிநாடு, தொண்டைநாடு, மலைநாடு என முடிந்தவற்றிற்கு இலக்கணமமைக்குமிடத்துச் சோழன், பாண்டியன், தொண்டைமான், மலையமான் என நான்கு மண்டலத் தலைவர் பெயரையுங் கூறுதலானே இதனுண்மை-யுணரப்படும். மற்றுச் செய்யுளியலுள் மலைமண்டலத்தை முற்கூறினாரெனின் ஈண்டு அன்கெட்டு முடிதலும், ஈற்றெழுத்துச் சிலகெட்டு முடிதலும், முதலெழுத்தொழிந்த பலவுங்கெட்டு முடிதலும் பற்றி இவை முறையே நிறுவப்பட்டனவென்க. இப்பழமையான நாடுகள் படைப்பு காலந்தொட்டு மேம்பட்டு வருதலையுடைய வண்புகழ்மூவர் பெயராற் சிறப்பதன்றி இவராட்சிக்குரிய நாடுகளில் இடையிடையே தோன்றிமறையுஞ் சிற்றரசர் பெயராற் பண்டே சிறப்பதென்பது சிறிதும் பொருந்தாதென்க. சேரனே மலையமான், மலையன், மலைநாடன் எனப் பெயர் சிறந்தவனென்பது நன்றுணர்க. "சேரன்பொறையன் மலையன்றிறம்பாடி" எனச் சிலப்பதிகாரத்து வருதலான் மலையன் என்பதும் சேரன் பெயரேயாத்றெளிந்துகொள்க. குடநாடும், குட்டநாடும், பூழிநாடும், சேரனாகிய மலைய மானுடையனவேனும், இம் மலைநாடு மட் டும் மலையமானாடென அவனாற் பெயர் சிறந்தது. அவன் அந்நாட்டே வதிகின்ற தன்மையானென்று எளிதிலுய்த்துணரலாம். இளம்பூரணவடிகளும், சேனாவரையரும் எண்ணிய கொடுந் தமிழ்நாடுகளுள் மலை நாடு எனக்குறித்த நிலத்தையன்றே நச்சினார்க்கினியர் மலையமானாடு என்றெழுதினார்; மலைநாடன் என்பது சேரனையே குறிப்பதென்று பலருமறிவர். அங்ஙனமாயின் மலைநாடு சேரனுடையதன்றி வேறொரு வருடையதாகாது. இதனானும் இந்நாடுடைய மலையமான் சேரனே எனத்தெளிக. மற்று மேலகடற் பக்கத்துள்ள மலைகளையுடைய நிலம் என்னை காரணத்தால் இப்பெயரை அக்காலத்துப் பெற்றதில்லை யெனிற் கூறுவல்: மேல்கடலோரத்துள்ள நிலங்கள் மக்கள் குடியேறி நாடாய் தன்மையான அவை குடநாடும், குட்டநாடும் எனப்பெயர் சிறந்தன. அவற்றையடுத்துள்ள நிலங்கள் மலையடர்ந்தனவே யன்றி அவை மக்கள் குடியேறிய நாடாதற்றன்மை-யில்லாதபடியால் மலைநாடென்று அக்காலத்து வழக்குப் பெறாதாயிற்று. மலைநாடு என்பது மலைகளுடையதும், மக்கள் குடியேறிய நாடாகியதுமாய நிலனேயென்பது தெள்ளியது.

அக்காலத்து அவை வாசயோக்கியதையைப் பெறாமையால் அங்ஙனம் பெற்ற மலைநிலமே மலைநாடென வழக்குப் பெற்றதென்று தெளிந்து கொள்க. இவற்றைக் கொடுந் தமிழ்நாடுகளெனக் கூறுதலானும் அத் தமிழை வழங்கு மக்கள் நிறைந்த நாடாதல் துணியப்படும். பிற்காலத்து இப்பழைய பெயர்களெல்லாமாறி மலைகளதிகமாக விருத்தல் காரணமாக மேல் கடலோரத்து நாட்டை மலைநாடு என்று வழங்கத்தலைப்பட்டனர் என்று தெரிந்துகொள்க. இங்ஙனங் கொள்ளாற்காற் பழையோர் எத்துணையோ அறிவொடு பகுத்துக் காட்டியதற்குக் குற்றங் கூறுதலாகவே முடியுமென்க.

இனி ஈண்டுக்கூறிய மலைநாட்டை மலையமான் என்னும் பெயர் காரி என்பவனுக்கும் வழங்குதல்பற்றி அக்காரிநாடெனக் கூறலாகாதோ வெனின் அங்ஙனங்கூறலாகாதென்க. என்னையெனிற் கூறுவேன். காரி என்னும் வள்ளல் முள்ளூர்மலையில் இடையிலுண்டாகிய ஓர் சிற்றரசன். அவன் சேரற்கு உறுதுணையாய்நின்று சேரனுக்கு அடங்காத கொல்லி மலைஓரியைக்கொன்றவன். இவன்காலத்துக்கு எத்துணையோ முந்தியே பகுப்புடைய தமிழ்நாடுகளிலொன்று இவன்பெயர்கொண்டதென்பது பொருந்துவதாகாது. அன்றியும் அம் மலையமான் என்னும்பெயர் அவன் சேரனுக்குத் துணையாயகாரணத்தான் அவனுக்குப்பட்டமாகச் சேரனாற்றரப்பட்டதாமென்றுகொள்வதல்லது அவனியற்பெயரென்ற லுமாகாது. அன்றியும் இவனினுஞ்சிறந்துவிளங்கிய பாரிமுதலிய வள்ளல்கள்பெயர்களான் நாடுகளின்பெயர்கள் வழங்கப்படாமையும் ஈண்டைக்குநோக்கிக்கொள்க. இச்சிற்றரசர் இந்நாடுகளின் ஓரோர் சிறுபகுதிகளையுடையரல்லது வேறிலரெனவுங்கொள்க. இவற்றால் இம் மலைநாடு காரியாகிய மலையமானாடாகாமை தெளியப்படும். இதனை, சங்கரசோழனுலாவில்,

"பாண்டியராரத்தின்பல்கலமோ-வீண்டிப்
பொரவிட்டசேரர்மலாடுபுறந்தந்து
வரவிட்டவச்ரவடமோ"

என வருதலான் நன்கறிந்துகொள்க.

இனிக்காரியாகிய மலையமான் முள்ளூர்மலையையும், திருக்கோவலூரையும் உடையவனாவன் என்று பழைய நூல்களானறியப்படும்.

இவனுடைய திருக்கோவலூர் சேதிநாட்டதென்பது "சேதி நன்னாட்டு நீடுதிருக்கோவலூர்" எனச் சேக்கிழார் கூறுதலா லுணரலாம். இத் திருக்கோவலூர் விஷயமாக மலையமான் சம்பந்தமான பலபல கதைகள் கேட்கப்படுகின்றன. இவன் அன்னைவயிற்றிலுதியாமல் வேள்வியிலுதித்த காரணத்தாற் றெய்வீகன் எனப்படுவான் எனவும், சேரன்மகளாகிய பதுமாவதியை மணம் புரிந்தான் எனவும், கொல்லிமலையை மேற்கணுடைய திருமுனைப்பாடி நாட்டை மூவேந்தர் பாற்பெற்றானெனவும், பெரியபுராணத்திற்கண்ட நரசிங்கமுனையர்க்கும் மெய்ப் பொருணாயனார்க்கும் தந்தையாவான் எனவும், மூவர்முடியுடன் தன்முடியுஞ் சேர்த்துச்சூடிய நான்முடியுடையானெனவும், மலையரையன் அவதாரம் இவனெனவும், பாரிமகள் அங்கவை சங்கவையை மணந்தவன் எனவும், இவரல்லாமற் சதயபுரி ராஜகுமாரிகளையும் மணஞ்செய்து கொண்டானெனவும் அண்ணாமலைசதகம் என்னும் நூல் கூறும். இந்த நூற்கண் கொல்லியை எல்லையாகவுடைய திருமுனைப்பாடி நாட்டை இவன் வேந்தர்பாற் பெற்றான் என்று கூறுதலால் அதன்கண் சேரன் மலைநாட்டுப்பகுதியும் அடங்குதல் நோக்கி இவனும் மலையன் மலைய மான் எனப்பட்டானென்றும், பிற்காலத்துச் சேரன்பாற்பெற்று இவ னாள்கின்ற மலைநாட்டுப் பகுதியை மலையமானாடென்றே கொண்டா ரென்றும் கூறினுமிழுக்காகாது. எங்ஙனமாயினும் இந்நாடு இவனுக்கு என்றுமுள்ளதாகாது இடையிற்கிடைத்ததென்பதை இந்நூலும் நன் குணர்த்துதல் காண்க. இதுகொண்டுபோலும் சேக்கிழார் மெய்ப்பொரு ணாயனாரைச்

"சேதிநன்னாட்டுநீடுதிருக்கோவலூரின்மன்னி
மாதொரு பாகரன்பின்வழிவரு மலாடர்கோமான்" என்றார்

எனத் தெரிந்துகொள்ளலாம். தெய்வீகனுக்கு மலைநாட்டுப்பகுதி கிடைத்த படியால் அவன் புதல்வரென்று அண்ணாமலைச்சதகங்கூறிய மெய்ப்பொருணாயனாரை அத்தந்தை சிறப்பெல்லாம் உடையாராகக் கருதி மலாடர் கோமான் என்பது பொருத்தமுடைத்தேயாகும். தெய்வீகனுக்குரிய நாட்டின் கீழ்த்திசைப்பகுதியை மெய்ப்பொருணாயனாரும், மேற்றிசைப் பகுதியை நரசிங்கமுனையரையரும் பெற்று ஆண்டனர் என்று அண்ணாமலைச் சதகங்கூறும். இவற்றையெல்லாம் அந்நூலுட கண்டுகொள்க. இவன் தொண்டைநாட்டவனாகவிருந்து சேரனோடு சம்பந்தஞ் செய்தகாரணத்தாற் றொண்டை நாட்டார் சேரற்கு மைத்துனக் கேண்மை பாராட்டு முறைமையுடையராயினானென்று ஊகித்தற்கு மிடனுண்டு.

"சேணுலாவுசீர்ச்சேரனார்திருமலைநாட்டு
….. ….. ணவயவாசணமைத்துனக்கேண்மை
பேணநீடியமுறையதுபெருந்தொண்டைநாடு"

என்பது காண்க. அண்ணாமலைச் சதகத்தில்

வந்துலகு புகழ்கொண்ட தெய்வீக மன்னனெழின்
      மலையமான் றந்த பதுமா
வதிமா தினைப்புணர்ந் தரிதாய்ப் ப‌ய‌ந்தவொரு
      மைந்தனர சிங்க முனையற்
கிந்தநடு நாடெனுந் திருமுனைப் பாடிநாட்
      டெல்லைக்குண் மலைமன்னனா
யிருவென்று முடிசூட்டி வைத்தபடி யாலதற்
      கேய்ந்தநர சிங்க முனையர்
சந்ததியில் வந்தவர்கண் மலையமா னென்றுபெயர்
      சாற்றநெடு மேற்றிசை யெலாந்
தங்கிய பெருங்குடிக ளாய்நிறைந் துழுதுபயிர்
      தானிடுஞ் செல்வர் கண்டா
யந்தநர சிங்கமுனை யரையர்பே ரன்புநெறி
      யருள்பெறு வசந்த ராய‌
ரண்ணாவி நுற்றுதிசெய் யுண்ணாமு லைக்குரிய
      வண்ணாம லைத்தே வனே.

என்வருதலானிவற்ற‌துண்மை எளிதிலறியப்படும். பதுமாவதி சேரன் மகள் என்று இந்நூலுட் கூறுதலானும் அச்சேர வம்மிசியரேயாத‌ல் பற்றி அவர் பெயரையெல்லாம் புனைந்தாரவர். சேக்கிழார் மலாடர் கோமான் என இவ‌ர் த‌ம்பியா‌ரைக் கூறுதலான் மலாடர் என்னும் பெயர் பிற்காலத்துக் குடிப் பெயராயிற்றென்று எளிதிலூகிக்கத் தகும். இக்கதையெல்லாம் சேரனே மலையமான்என நிகண்டுகளெல்லாங் கூறிய தனையே வற்புறுத்துதல் நன்று கண்டு கொள்க.

கச்சியப்பமுனிவர் பேரூர்ப்புராணத்திற் றொண்டை நாட்டவனான காரி சேரன்பால் மலைநாட்டுப் பகுதியைப்பெற அது காரியென்னும் மலையமானாடாகிய காரணத்தான் மலாடாகிய நாட்டைத் தொண்டை நாடெனெவே கருதினார்.

"மலாடும்வளர்பாண்டியும்வழங்குபுனனாடு
…. …. ….
விலாழிமதகுஞ்சரமும்வெய்யபொருண்மற்றுங்
குலாவுசிறப்பெய்தியதுகொங்குவளநாடு"

என அவர் பேரூர்ப்புராணத்துப் பாடுதலா னறியப்படும்.முதலிற் சேரன்பகுதியிலிருந்த மலைநாடு நாளடைவிற் றொண்டைநாடாகிய தன்மையையே யிதுகாட்டும்.

இஃது இன்னும் ஒருவகையானும் ஆராயப்படும். அகப்பாட்டில்

"அருவிபாய்ந்தகருவிரன்மந்தி
செவ்வேர்ப்பலவின்பழம்புணையாகச்
சாரற்பேரூர்முன்றுரையிழிதரும்
வறனுறலறியாச்சோலை
விறன்மலைநாடன்" (382)

எனக்கூறுவதன்கண் பேரூர் முன்றுறையையுடையது மலைநாடென்று கொள்ள வைத்தார். இப்பேரூர் காஞ்சிவாய்ப்பேரூர் எனப்படுவதாகும். அது காஞ்சியாற்றின் முன்றுறையுடையதாதலுங் காண்க. இது கொங்குநாட்டுள்ள தலம். குடசிதம்பரம் எனப்படுவதுமிதுவே. இவ்வூருடைய நாடு மலைநாடெனலால் கொடுந்தமிழ் நாடாகிய மலைநாடு இப் பக்கத்ததென்று தெளிதற்கு இதுவுமோர் துணையாதல் காண்க.

இனி முருகக்கடவுள் வள்ளியெனப்பெயரிய குறவர் திருமகளைவேட்டது தொண்டை நாட்டு மேற்பாடியூர்ப் புறத்துள்ள வள்ளிமலையின்க ணென்பது கந்தபுராணத்தும், தணிகைப்புராணத்துங்கண்டது. இங்ஙனம் அப்புராணங்கள் கூறாநிற்க அருணகிரிநாதர் "சேரமலைநாட்டில் வாரமுடன் வேட்ட சீலிகுறவாட்டி மணவாளா" எனப்பாடுதலான் இவ்வள்ளியை வேட்டது சேர மலைநாட்டின் கண் எனக்கொண்டனரென்று தெரியலாம். அருணகிரிநாதர் வள்ளிமலையைச் சேரநாட்டதென்று கருதியே இங்ஙனங்கூறின‌ராவர். என்னையெனின் அவர் "வள்ளி படர்கின்ற வள்ளிமலை சென்று வள்ளியை மணந்த பெருமாளே" எனப் பாடுதலான் வள்ளிமலையிற்றான் வள்ளியிருந்தாளென்றும், அங்குச் சென்று முருகக் கடவுள் மணந்தாரென்றும் கொண்டாரென்பது அறியக்கிடத்தலாலென்க. இரு திறத்தார்க்கும் வள்ளிமலை என்ப‌து ஒத்த தென்றும், அது சேரநாட்டது தொண்டை நாட்டது என்பதே வேற்றுமையென்றும் அறியப்படும். முற்காலத்தே சேரநாட்டதாகவிருந்த வள்ளிமலை பிற்காலத்தே தொண்டை நாட்டதாக யாதாமொரு நிமித்தத் தாற் சேர்த்துக் கொள்ளலாயிற்றென்று நினைக்கத்தகும். இதனாற் றொன்டை நாட்டிலுள்ள‌ வள்ளிமலையைத் தன்னகத்துடையதாக இச்சேரன் மலைநாடிருந்தது என்பதுமட்டில் இவ்வருணகிரியார் பாடல் உணர்த்துமென்க.

இனி, இளம்பூரணவடிகளும், சேனாவரையரும் மலைநாடென வழங்கியதை நச்சினார்க்கினியர் மலையமானாடு என வழங்கிக்காட்டியது குட புலத்துக்குடநாடு, குட்டநாடு இவற்றின் பக்கத்துள்ள பெரியமலைகளை யுடையநாடு என்று மயங்காமைப் பொருட்டென்றும், சேரனாகிய மலைய மானுடையநாடு என்று தெளிதற்பொருட்டென்றும் கூறினும் அமையும்.

இனிக் குடநாடென்பது சேரர் குடபுலமுழுதையு முணர்த்தி அதன்கண் ஒரு பகுதியாகிய கொடுந்தமிழ் நாட்டையும், உணர்த்துதல் போல இம்மலைநாடு என்பதும், சேரர் குடபுலமாகிய மலைமண்டல முழுதையுமுணர்த்தி அதன்கண் ஒரு பகுதியாகிய கொடுந்தமிழ் நாட்டையு முணர்த்துதல் நூல்களிலெல்லாம் காணலாம்.

இனி இச்சேர‌ன் குட‌புல‌த்தோர் ப‌குதியாகிய இம்‌ம‌லைநாடு, மேற் கூறிய‌வ‌ற்றால் அகநா‌ட்டிட‌த்த‌து என்று தெளிய‌ப்ப‌டுமாயினும் அத‌னெல்லை உண‌ர‌ப்ப‌ட்டிலதாலெனிற் கூறுவேன். சேர‌ன் பெய‌ர் சிற‌ந் த‌து "வான‌வ‌ன் கொல்லிக்குட‌வ‌ரை" என‌ப்ப‌ட்ட‌ கொல்லிம‌லையானே யென்பது முன்னே கூறினேன். அவ‌ன் பெய‌ர் சிற‌ந்த‌ கொல்லிம‌லை ஒரு புற‌னும், மலைய‌மானாடென்று அவ‌ன் பெய‌ர் சிற‌ந்த மலைநாடு ஒருபுறனு மாமென்று சொல்லுத‌ல் பொருத்த‌முடைத்தாகாது. எங்கு அவ‌னுக்குச் சிற‌ந்த‌ ம‌லையுளது அங்குத்தான் அவ‌ன் பெய‌ர் சிற‌‌ந்த‌ ம‌லைநாடும் உளதாகும். பதிற்றுப்பத்துரைகாரரும் "கொல்லிக்கூற்றத்து நீர்கூர் மீமிசை" (89-பதி.) என்புழிக்கொல்லிமலையைச் சூழ்ந்த மலைகளையுடைய நாடு என விளங்கவுரைத்தார். அவர் கொல்லிமலையைச் சூழ்ந்தநாடு என்னாது கொல்லிமலையைச் சூழ்ந்த மலைகளையுடைய நாடு எனத் தெளி வித்தலையுங் காண்க. இதனாற் கொல்லிமலையைத் தலைமையாகக் கொண்டு அதனைச் சூழப் பலமலைகளையுடையதோர் நாடாதலின் மலை நாடெனப்பட்ட தென்றுய்த் துணரலாம். இக்கொல்லிமலை கொங்கு மண்டலத்துளதாதலின் இம்மலைநாடும் அம்மண்டலத்தினோர் பகுதியா யடங்குதலறியலாம். கொங்குநாடு இடையிற்றன் பெயர்கொண்டு பெருகியதென்று முன்னரே சொன்னேன். இது சேரனுக்குரிய நாடு கள் சிலவற்றைத் தன்னகத்துக் கொண்டதாகும். மதுரை நாட்டினுள்ள திருவாவினன்குடியைச் சேரர் கொங்குநாட்டகத்து வைத்து அருணகிரிநாதர் வழங்கிய வாற்றான் இக் கொங்குமண்டலத்தின் பெருக்கம் உணரப்படும். அவர்

"ஆதியந்தவுலாவாசுபாடிய
சேர கொங்குவைகாவூர்நன்னாடதி
லாவினன்குடிவாழ்வானதேவர்கள்பெருமாளே"

எனவுரைத்தது காண்க. அவர் இங்குக் கொடுங்கோளூரிலிருந்தர சாண்ட சேரமான் பெருமாணாயனாருக்குக் கொங்கு நாடுரியதென்று பாடுதல் காண்க. இதனாற் பண்டைச்சேரர் கொங்குநாட்டின் பரப்பு எளிதிலறியப்படும். இவ்வாவினன்குடிக்கும் கொல்லிமலைக்கு மிடையே தான் காவிரி, ஆன்பொருநை, குடவனாறு எனப் பெயரிய ஆறுகள் பலவுள்ளன என்றுணர்க. குடவனாறு என்பது மேற்றிசையுடையவன தாறு என்று பொருள்படுதல் காண்க. ஆன்பொருநை காவிரியுடன் கூடும் யாறென்று பதிற்றுப்பத்து "மாமலைமுழக்கின்" என்னும் பாட் டுரையானுணர்க. * இங்ஙனம் சேரர் குடபுலத்துள்ளதும், சேரர்க்குச் சிறந்த குடவரையாகிய கொல்லியைத் தன்கணுடையதும், சேரர் கொடுந்தமிழ் மலைநாட்டைத் தன்னுட் கொண்டதும், சேரர்க்குரிய ஆன் பொருநை, குடவனாறு முதலிய யாறுகளையுடையதும், மலைநாட்டுள்ள தெனப்பட்ட பேரூரையுடையதும், பாண்டிநாடுவரை பரந்த நிலனுடையதுமாகிய சேரர் கொங்குநாடு சோணாட்டெல்லையிலுள்ளதென்பது எல்லார்க்கு மொப்பதாகும்.
-------
*ஆன்பொருநையைப்பற்றிப் பின்னரும் விரித்துரைப்பேன். ஆண்டுக் காண்க.

சேக்கிழார்" கொங்கர் நாடு கடந்தருளிப் பொன்னாட்வருமணைந்தாடும் பொன்னிநீர் நாட்டிடைப் போவார்" எனக் கூறுதலானும் இஃதறியப்படும். இதனாற் கொங்கு நாடுஞ் சோழர்நாடும் அடுத்துள்ளவாறு புலப்படும்.

மற்றுச் சேக்கிழார் " கொங்கர்நாடு கடந்துபோய்க் குலவுமலை நாட்டெல்லையுற" எனக்கூறியதனாற் சேரர் மலைநாட்டைக் கொங்கு நாட்டுக்கு அப்பால் வைத்தாரெனிற் கூறுவேன்--சேக்கிழார் ஈண்டுக் கூறுவது சேரமான் பெருமாணாயனார் காலத்துச் சேரரிருந்த நாட்டைக் குறிப்பதன்றி வேறு கொடுந் தமிழ்நாடு என்ற மலைநாட்டைக் குறிப்பதென்று கொள்ளுதல் பொருந்தாது. அவர் மலைநாடென்று கொண்டது சேரமான் பெருமாணாயனார் அரசு புரிந்த கொடுங்கோளூர்ப் பக்கத்து நாட்டையே யென்பது அவர்பாடிய பெரிய புராணத்தா னறியப்படும். அது உரையாசிரியர் முதலிய பல்லோர் கொள்கைப்படி குட நாடு, குட்டநாடு என இரண்டிலொன்றாவதன்றி இவ்விரண்டிற்கு மப்பாற் பல கொடுந் தமிழ்நாடுகள் கடந்து நிறுவப்படும் மலை நாடாதல் கூடாதென்க. மற்று அவர் மலைநாடென்று கூறியதெல்லாம் சேரர் நாடுமுழுது மலைமண்டலமென்று வழங்குதல் பற்றி எனக்கொள்க. சேர மான் பெருமாணாயனார் காலத்துக் கொங்குநாடு சேர் ஆட்சிக்குரிய தாயினும் அவராங்கில்லாமை பற்றிக் கொங்குநாட்டைச் சேரர் மலை மண்டலத்தினின்று வேறு பிரித்தாரெனக் கொள்ளத்தகும். இப் பிற்கால நிலைமையைத் துணையாகக் கொண்டு சங்க காலத்துள்ளதொன்றைத் *(Missing Text ?)
-------
* சேரர் தங்கணாட்டகத்தேயிருந்து பிறர்க்குத் திறையளக்கின்ற சிறுமையை நினைந்து நாட்டைவிட்டார் என்று கொள்க.

இனிச் சேரமான் பெருமாணாயனார் காலத்துக்கு முன்னே சேரர் தம் வலிகுன்றிச் சோழர்க்குத் திறையளக்கின்ற சிறுநிலையை யெய்தினா ரென்பது அச் சேக்கிழார் பெரியபுராணத்துப் புகழ்ச்சோழ நாயனார் வரலாற்றான் அறியப்படுவது. வலிகுன்றிய சேரர்பின்னே* கொங்கு நாட்டுத் தலைநகரை விட்டுத் தங்கட்குரிய குடநாடு, குட்டநாடுகளிலே சென்று ஒதுங்கினாரென்று பிற்கால நிலைமைக்குத் தகத் துணியப்படும். இதனாற் சங்க காலத்துக்குப் பின்னே சோழர் வலியிலராயினாரென்றும், சங்க காலத்துக்குப் பின்னே சோழராற் சேரர் கொங்குநாட்டை விட்டுத் தங்குட நாட்டொதுங்கினராகக் கூறுதல் பொருந்தாதென்றுங் கருதிப் பிறர் கூறுவன பொருந்தாமை காண்க. சுந்தரமூர்த்தி நாயனார் காலத்தவரான சேரமான் பெருமாணாயனார்க்குச் சுந்தரமூர்த்தி நாயனாராற் பாடப்பட்ட புகழ் சோழநாயனார் முந்தியவரென்பது தெற்றென விளங்கும். அப் புகழ்ச் சோழநாயனார் கருவூர் சென்று கொங்கரொடு குடபுல மன்னர் திறைகண்ட வாற்றாற் கொங்கரொடு குடபுல மன்னர் வலிருன்றித் தளர்ந்த வாறறியப்படும் என்க. இதனானும் சங்க காலத்துச் சேரர் தலைமையும், சேரமான் பெருமாணாயனார் காலத்துக்கு முன்னே சேரர் சோழர்க்குத் திறையிடுவாராகிய நிலைமையும் எளிதிலுய்த்துணரப்படு மென்க. புகழ்ச் சோழர்க்குத் திறையுரிமை கூறியவாற்றாற் கொங்கு நாடு சேரர்க்கே அக் காலத்து முரியதாதலுணரலாம். பிற்காலத்துங் கொங்குநாடு குடபுலம் என்பது மறக்கப்பட்டிலதென்பது

"சென்றசென்றகுடபுலத்துச்சிவனாரடியார்பதிகடொறு
நன்றுமகிழ்வுற்றின்புற்றுநலஞ்சேர்தலமுங்கானகமுந்
துன்றுமணிநீர்க்கான்யாறுந்துறுகற்சுரமுங்கடந்தருளிக்
குன்றவளநாட்டகம்புகுந்தார்குலவுமடியேனகம்புகுந்தார்"

என வெள்ளானைச் சருக்கத்துச் சேக்கிழார் பாடுதலானும் அறியப்படும். இதன்கட் குடபுலத்துப் பதிகடொறு மின்புற்றுத் தலமுங் கானகமுங் கான்யாறுஞ் சுரமுங்கடந்து அப்பாற் குன்றவள நாட்டகம் புகுந்தா ரென்று கூறுதல் காண்க. கொங்குநாடு சேஅருடையதென்பது இதன் பின்னும் மறக்கப்பட்டிலாமை முன்னே காட்டப்பட்ட "சேரர்கொங்கு வைகாவூர்நன்னாடதில்" என்ற அருணகிரிநாதர் திருப்புகழானறியப் பட்டதாகும். இதனான் முற்காலத்தும் பிற்காலத்தும் கொங்குநாட்டை$ச் சேரர்க்கெயுரிமையாக வைத்துப் பாடினாருளரென்பதறியப்படும்.

இக்கொங்குநாட்டைப் பாண்டியனொருவன் வென்றுகொண்டா னென்று இறையனார் களவியலுரை மேற்கோட் பாடல்கள் பலவற்றான் அறியப்படும். சோழனொருவன் கொங்கரைப் போரிற்புறங் கண்டான் என்று

"கொங்கு புறம் பெற்ற கொற்ற வேந்தே." (3)

என அவனைப் பாடுதலானறியப்படும். ஈண்டுப் புறம் பெற்றகொற்ற மென்பது எதிர்ந்தார் புறக்கொடையைப் பெற்றதனாலாகிய வென்றி என்றவாறு. இதனை யிங்ஙனமுணராமையான் வேறுவேறு கூறுவாருமுளர். இப்பாண்டியரும் சோழரும் சேரரை வென்று கொண்ட காலத்து அவர் நாடு வென்றவர்க் குத்திறையளக்குக் குஞ்சிறுமையை எய்தியதென்று கருதுவதல்லது பழைய பகுப்புமுறையினின்றும் மாறிப் பாண்டிநாடும், சோணாடுமாக மாறிற்றென்று துணிதல் பொருந்தாது. அங்ஙனந் துணியின் 'காவிரிவைப் பிற்புகார்ச்செல்வ" எனச் சேரனைக் கூறுதலாற் சோணாடு சேர நாடாயிற்றென்றும் செங்குட்டுவன் காலத்துத் தமிழ்நாடு முழுதுஞ் சேர நாடாயிற்றென்றும், அதற்குமுன் னெல்லாம் வழங்கிய நாடுகளின் பாகுபாடு அடியோடு ஒழிந்து போயிற்றென்றும் கொள்ளநேரும். இது தமிழ்நாட்டு வழக்கன்றென்பது பண்டைச் செய்திகளை நுணுகி நோக்குவார்க்குப் புலனாகும். முற் காலத்துத் தமிழ்வேந்தர் மூவருள் ஒருவர் மற்றை இருவரை வென்ற விடத்து வென்றவர் தோற்றவர் பாற்றிறை கொண்டிருப்பர். அங்ஙனமன்றாயின், வென்றவர் வென்றுகொண்ட நாட்டின் தொன்மை முடியைத்தாம் புனைந்து அந்நாட்டு முன்னிகழ்ந்த முறையேமுறையாக அரசாள்வர். இங்ஙனமல்லது பழைய பாகுபாடனைத்தையு மாற்றிப் பாண்டிநாட்டைச் சோணாடாக்கினாரென்றும், சோணாட்டைப் பாண்டி நாடாக்கினாரென்றும், இவ்விரண்டையுஞ் சேர நாடாக்கினாரென்றுந் துணிதல் பொருந்தாது. செங்குட்டுவன் மற்றை இரு வேந்தரினும் மிக்கு விளங்கிய காலத்து மூவர் பொறியையும் அவனிட்டானென்பது சிலப்பதிகாரத்துக் காண்டலானும்; உறையூரையாண்ட சோழன் இருவரையும் வென்றபோது மூன்று முடியையும் புனைந்து மும்முடிச் சோழன் என விளங்கினானென்பது தேவாரத்தானும் அறியக் கிடத்தலானும்; வென்ற வேந்தர் வென்றுகொண்ட நாட்டின் பாகுபாடும், அரசியலும், அழியாமல் அவ்வந்நாட்டவர்க்கு அவ்வவ் வேந்தாய் விளங்கி நாடாண்டார் என்றே துணியலாம். இக்காலத்தும், ஒவ்வோர் நாட்டை வென்ற வேந்தர் அவ்வந்நாட்டின் பாகுபாட்டை அழித்தற் கியலாமல் அவ்வவ்வெல்லையிலே அவ்வந்நாட்டை வைத்து அநநாட்டு வழக்கங்கட்கியைய அரசாளுதலையுங் கண்டுகொள்க. இவ்வுண்மை யுணர்ந்தன்றே பிற்காலக் கவிகளும் பாண்டியரும், சோழரும் கொங்குவென்றதையறிந்து வைத்தும் "சேரர் கொங்கு என்றேபாடுவாராயின ரெனத்தெளிக. அவ்வக்காலத்து வென்ற அரசனைச் சிறப்பித்து மூன்று நாட்டையுமுடையவனாக ஒருவனைப் புகழ்ந்ததன்றிப் பாண்டியர் புகார் நாடு, சோழர் மதுரைநாடு, சேரர் கொற்கை எனமாறி யாண்டும் பலர்மேல் வைத்து வழங்காமையானும் இதனுண்மை நன்று தெளியப்படும். மிகவும் அழகிய இம்முறை கெட்டு நிலை தடுமாறியது இறப்பப் பிற்காலத்தின் கண்ணேயாமென்று ஆராய்ந்துகொள்க. யான் இத்துணையுங் கூறியது 'கொங்குநாடு' எஞ்ஞான்றும் சேரர் கொங்கு என வழங்கப்படுமே யன்றிப் பாண்டியர் கொங்கு சோழர் கொங்கு என எந்நூலுளும் வழக்குப் படாதென்பதை யுணர்த்தவே யெனவறிக. சேரர் கொங்கென்னும் வழக்கன்றிப் பாண்டியர் கொங்கு, சோழர் கொங்கென வழக்கின்மை பன்னூலும் வல்லார்வாய்க் கேட்டுணர்க. பாண்டியருள்ளும், சோழருள்ளும் ஒரோரு வேந்தன் வென்றதைக் குறித்தற் கண் "குனிவார்சிலை யொன்றினால் வென்ற கோன்கொங்க நாட்டகொல்லை" எனப் பாண்டியனையுங் "கொங்க" என ஒரு சோழனையுங் கூறுவதெல்லாம் சேரனைக் "காவிரி மண்டிய சேய் விரிவனப்பிற் புகார்ச்செல்வ" (பதிற்-73) என்றதனோடொக்கு மன்றிப் பிறிதாகாதென்றுய்த் துணர்ந்து கொள்க.

இத்துணையுங் கூறியவற்றாற் சங்க காலத்துக் கொங்கு சேர ருடையதன்றிப் பிறருடைய தன்மை நன்று தெரியலாம். அங்ஙனமாயின் அக்கொங்கு நாட்டூரெல்லாம் அந்நாடுடைய சேரரரையே சேர்ந்தன என்பது யான் கூறவேண்டுவதன்று: அக்கொங்கு நாட்டுப் பல்லூருட் கருவூர் எனப்ப் பெயரிய தோரூருண்மை பல நூல்களான‌றியப் படும். இக்காலத்தும் அக்கருவூர் அப்பன்னூல் வழக்கிற்குமியையக் கொங்கு நாட்டதென்றே தமிழுலகாற் கருத‌ப்படும். இவ்வூர் நூலிற் கூறியாங்கு காவிரியுடன் கலக்கும் ஆன்பொருநை நதியின்றுறையை யுடையதாகும். சங்கப் புலவரானும், ஆளுடைய பிள்ளையாரானும் பாடப்பட்ட திருக்கோயிலையுடையதாகும். கருவூர்த்தேவராற் பாடப்பட்ட திருவிசைப்பாப் பெற்றதாகும். அருணகிரிநாதராற் பாடப்பட்ட திருப்புகழுடையதாகும்: இவ்வூரை உமாபதி சிவாசாரியர் கொங்குநாட்டுத் திருப்பதிகளுளொன்றாக வுரைத்தார். இது சேரர் கொங்குநாட்டுள்ள காரணத்தாற் சேரர் கருவூரென்பது தெள்ளிது.

மற்றிக் கருவூரைச் சேக்கிழார்

"தங்கள் குலமரபின் முதற்றனி நகராங் கருகாவூர்"

எனவும்

"மன்னியவந பாயன்சீர் மரபின் மாநகரமாகுந்
தொன்னெடுங் கருவூரென் பசுடர் மணிவீதிமூதூர்"

எனவும் கூறுமாற்றாற் சோழரூரெனக் கருதினாரென்று நினைக்கப் படுமாலெனிற் கூறுவேன் சங்க நூல்களிலேனும், சேக்கிழார் பெரிய புராணத்தேனும், அதற்குப்பிந்திய நூல்களிலேனும், இரண்டு கருவூர் கூறப்படவேயில்லை. சங்கநூல் கருவூரை

"கடும்பகட்டி யானை நெடுந்தேர்க்கோதை
திருமாவியனகர்க் கருவூர்" (அகம்-93)

எனத் தெளிவாகச் சேரனுடையதென்று கூறிற்று. யாப்பருங்கலக் காரிகை வுரைகாரரும்* கருவூரைச் சோணாட்டுக்கு மேற்கே யுளதாகக் காட்டினார். தேவாரத் தலமுறை வகுத்தபெரியாரும் கருவூரைக் கொங்குநாட்டே வைத்திட்டார். சேக்கிழாரும் இக்கொங்கு நாட்டுக் கருவூரையே கருதிக் கூறுகின்றாரென்பது அவர் "கொங்க ரொடு குடபுலத்துக் கோமன்னர் திறைகாணத்........கருவூரின் வந்தணைந்தார்" எனவும் "வந்துமணிமதிற் கருவூர் மருங்கணைவார்...... திருவானிலைக் கோயின்முந்துற வந்தணைந்திறைஞ்சி" எனவுங் கூறுதலான் நன்குணரப்படும். அவர் புகழ்ச் சோழநாயனார் கருவூர்க்குப் போந்தது கொங்கரொடு குடபுலத்துக் கோமன்னர் திறை காணவேண்டியே என்று மிகவு நன்றாகத் தெளிவித்தல் காண்க. அவர் சோணாட்டூர்கள் பலவற்றைக் கூறுமிடத்தெல்லாம் அவ்வூர்கள் சோணாட்டுள் ளனவெனத் தெரியுமாறு அந்நாட்டு வருணனை கூறிச் செல்லுதலும், இக் கருவூரைச் சோணாட்டதென அங்ஙனங் கூறாமையும், நன்று நோக்கிக் கொள்க. இப்புகழ்ச் சோழநாயனார் புராணத்தே இப்புகழ்ச்சோழர் உறையூரிலரசு புரிந்திருந்தார் என்றும், அவ்வுறையூர் சோணாட்டுள்ள தென்றும் விளங்கப்பாடுதலுங் காண்க. அவர் உறையூரிலரசு புரியு நாளிற் கொங்கரொடு குடபுலத்துக் கோமன்னர் திறைகாண வெண்டிக் கருவூர் வந்தணைந்தார் எனவே கூறினார். பிறர் நினைக்குமாறு நோக்கின் குடபுலம் மேலைக் கடலோரத்து நாடாகும்: இக்கருவூர்க்கும், அக் குடபுலத்துக்கும் நெடுந்தூரமல்லாமல் நெறியருமையுமுளது.
------------
* ஒழிபியல்- 7

அக் கடலோரத்துக் குடபுலமன்னர் திறைகாண இக்கருவூர்க்குச் சேறலேனோ? பிறர் கருத்துப்படி கொங்குநாடுதான் சேரர்க் கில்லாத் தனி நாடாயிற்றே? ஆண்டுள்ல கருவூரிற் குடபுலக் கோமன்னர் திறை காண்பதென்னோ? கருவூர்க்கும் புகழ்ச் சோழர் அரசுபுரியும் உறையூர்க்கும் நாற்காத தூரந்தானே. அவ்வுறையூரிலிருந்தே சோழர் இருவர் திறையுங்காண்டலிலுற்ற தடை யாது? இவையெல்லாம் ஆராயப்புகின் அப்பிறர் கூறுவது பொருந்தாதென்றுதானே புலனாகும். சேக்கிழார் கொங்குநாட்டைக் குடபுலமென்று தொன்னூல் வழக்கிற்கியையவே கருதினாரென்பது வெள்ளானைச் சருக்கத்துச் சுந்தரமூர்த்தி நாயனார் திருப்புக்கொளியூர விநாசியினின்று புறப்பட்டுக் குடபுலத்துச் சிவனடியார் பதிகடொறும் போய் அப்பால் மலை நாட்டகம் புகுந்தாரெனக் கூறியவாற்றான் அறியப்படும். இதற்குரிய பாடலை முன்னரே காட்டினேன். கொங்குநாட்டை ஆண்டுக் குடபுலமென்று கூறியவர் ஈண்டுக் குணபுலமென நினைத்து அதற்கேற்பக் கருவூரைச் சோழரதூர் என்றார் என்று பொருள் கொள்ளுதல் அசம்பாவிதமாகும். இவ்விடர்ப்பாடெல்லாம் சேரர் குடபுலம் இஃதென்று தெரியாமையானே நேர்ந்ததாகும். இதன்கண் இவ் விரோதமொன்று முண்டாகாதபடி நோக்கிப் பொருள்கொள்ளின் உறையூர்ப்புகழ்ச் சோழர் கொங்கரொடு குடபுலத்து கோமன்னர் திறைகாண அக்கொங்கரும் குடபுல மன்னருமுள்ள குடபுலத்தூர்க் குச் சென்றணைந்தார் எனவுரைத்தலே பொருந்திற்றாதல் காண்க. குடபுலத்தவரைக் கோமன்னர் என்றதனாற் கொங்கர் அவர் கீழடங்கிய சிற்றரசரும் குடியுமாவர். புகழ்ச்சோழர் குடபுலத்தைவென்று கொண்டதனால் அங்ஙனம் வென்றநாட்டுத் தலை நகர்க்கண்ணே அவர் திறைகாணச் சென்றார் எனவறிக. பிறர் கூறுமாறு குடபுலம் மேலைக் கடலோரத்ததேயாயின் சோழர் துந்திறையைக் கருவூரிற் கொணர்ந்து இன்னநாளின் நம்முன் அளக்கவென ஓலைபோக்கி நியமிப்பரென்க. அங்ஙனமொன்றும் நியமியாமையான் குடபுல மன்னர் கருவூரகத் தேனும், தோற்ற காரணத்தான் அவ்வூரைவிட்டு அதன் பக்கத்தேனு முளராதல் பற்றியே குடபுலக் கருவூர்க்குச் சென்றாரெனப்படுமென்க.

புகழ்ச்சோழநாயனார் கருவூர்சென்று மொய்யொளி மாளிகையினத் தாணிமண்டபத் தரியாசனத்தமர்ந்து அம்முற்றத்துக் குடபுல மன்னர் கொணர்ந்த திறைகண்டார் எனக்கூறியவிடத்துக் கொங்கரையே கூறாமையானும், குடபுல மன்னரையே கூறிவிடுதலானும் கொங்கர் தனியரசராகாமை நன்குணரப்படும். குடபுல மன்னவர் வேற்று நாட்டினின்று கருவூர்க்குத் திறையளத்தற்காக வந்தாரென அங்குக் கூறாமையானும் குடபுல மன்னர் அவ்விடத்தவராத றெளியப் படும். திறைகண்ட சோழர் குடபுலமன்னரை அவர் நாட்டுக்குச்செல்ல விடைகொடுத்தாரென்று அங்குக் கூறாமையானும் யான் கூறுவதே கருத்தென்றுணர்க. சேக்கிழார் விறன்மிண்ட நாயனாருடையஊரும் கொங்குநாட்டுத் திருப்பதியுமாகிய திருச்செங்குன்றூரை மலைநாட் டுளதெனவைத்துச் "சேரர் திருநாட்டூர்களின் முன்சிறந்த மூதூர் செங்குன்றூர்" எனப்பாடுதலானும் இக்கொங்கு நாட்டைச் சேரர் நாடென்று கொண்டாரென்று துணியப்படுமென்றுணர்க. இங்ஙனங் கூறுகின்ற சேக்கிழார் இக்கொங்குநாட்டுக் கருவூரைத் "தங்கள் குலமரபின் முதற்றனிநகர்" எனவும் " அநபாயன் சீர்மரபின் மாநகரம்" எனவுங் கூறுவாராயின் அதனுணுக்கமிஃதென்று ஆராய்ந் தறிந்து முன்பின் முரணாமை உரைக்க வேண்டுவதாகும். சேக்கிழார் கருவூரைப் பற்றிக்கூறிய இவ்வீரிடத்தும் நேரே சோணாட்டூரென்றும், சோழரூரென்றுங் கூறாமல் அதன் சம்பந்தத்தை மரபின் மேலேற்றியே கூறுகின்றார். புகழ்ச்சோழர்க்கு வென்ற சம்பந்தமல்லது வேறு சம்பந்தமுள்ளதாயின் அதை விளங்கச் சொல்லுவாரென்றே கொள்க. சேரர் ஊரென்று உலகெலாந்தெரிந்த கருவூரைச் சோழரூரென்று கூறுதல் பொருந்தாதென்பதை நன்குணர்ந்தே கருவூரைப் பற்றிச் சோழர் மரபுக்கேனும் சம்பந்த முண்டாவென்று ஆராய்ந்துகண்டு அதனையே ஈண்டுக் கூறினாராவர். கருவூர் பாற்கரபுரம், பாற்கரக்ஷேத்திரம் என்னும் பெயருடையதாதலின் சோழர் தங்கள் குலமரபின் முதல்வனான சூரியனுடைய நகரமாகும் என்பது கருத்தாகக்கொள்க. மரபின் முதல்வனுடைய நகரமாதற் சிறப்பான் முதன்மையாகிய ஒப்பற்ற நகரமாயிற்று. புகழ்ச் சோழர்க்கு வென்றுகொண்ட சம்பந்தமன்றிக் குலமரபானோக்கினும் சம்பந்த முண்டெனத் தம்மரிய பெரிய புலமை யானியைத்துச் சேக்கிழார் பாடிய திஃதென்றுணர்க. முன்னரும் அனபாயன் சீர்மரபின் மாநகரமாகும் என்ற தூஉ மிக்கருத்தே பற்றி யென்றுகொள்க. இவர்க்குமுன் வகைநூல் செய்த நம்பியாண்டார் நம்பிகளும் இப்புகழ்ச்சோழரைக் " கோகனநாதன் குலமுதலோனல மன்னிய புகழ்ச்சோழன்" (திருத்தொண்டர் திருவந்தாதி-50) எனக் கூறியதனையும் ஈண்டைக்கேற்ப நோக்கிக்கொள்க. ஆண்டுத் தாமரை நாயகனான சூரியனாகிய சோழர் குலமுதல்வனுடைய நலத்தைத் தன்பானிலை பெறுவித்தவனென்று கூறுதல் காண்க. தங்குல முதல்வனான சூரியன் சேரர் கருவூரையுடையனாயினாற் போலப் புகழ்ச் சோழரும் அதனையுடையராயினாரென்பது பற்றியே இவ்வுவமை செய்யப் பட்டதாகும். இவ்வகை நூலில் இவ்வுவமை யாற்குறித்த பொரு ண்மையையே யுள்ளத்தமைத்துப் பிறிதொருவகையாற் சேக்கிழார் கூறினாரென்றே கொள்க. சோழர்க்கே என்றும் உரிமையாக்குவது அவர்க்குக் கருத்தாயின்

"மன்னிநீடியசெங்கதிரவன்வழிமரபிற்
றொன்மையாமுதற்சோழர்தந்திருக்குலத்துரிமைப்
பொன்னிநாடென்னுங்கற்பகப்பூங்கொடிமலர்போ
னன்மைசான்றதுநாகபட்டினத்திருநகரம்."

என்பதுபோல் விளங்கவுரைப்பாரென்க. கருவூரைப் பாற்கரபுர மென்பது அதன் புராணத்திற் கண்டுகொள்க. அவ்வூரை வைதிகரெல்லாம் பாஸ்கர க்ஷேத்ரமென வழங்குதலை இன்றுங் கேட்டகலாம். "கருவூரை யிலங்கி வளர்பாற்கரபுரமென்றிசைப்பர் தொன்னூலியலோரே." (தல மகிமை) என்பது கருவூர்ப் புராணம். இது பாஸ்கர க்ஷேத்ரமாயின் சோழர் தங்கண் மரபின் நகரமேயன்றோ. இவ்வாறு கவித்துவ வன்மையாற் கூறியதனை நுணுகி நோக்காது அதனையே சரித்திரமாகக் கொண்டு இடர்ப்படுவார் பிறரென்க. சோழமண்டல சதகமுடையார் சோணாட்டு நாயன்மார் பலரையுமெடுத் தோதுகின்றவர் புகழ்ச்சோழ நாயனார் உறையூரிலரசு புரிந்தவரென்று கொண்டும் அவர் சரிதம் நிகழ்ந்தது கருவூர்க்கணென்பது பற்றி அவரை எடுத்துக் கூறாமல் விடுதலானும் கருவூர் சோழ மண்டலத் தூரன்றாதல் தெளியப்படும்.

" கடல்கிழக்குத் தெற்குக் கரைபுரள்வெள் ளாறு
குடதிசையிற் கோட்டைக் கரையாம்—வடதிசையில்
ஏணாட்டு வெள்ளா றிருபத்து நாற்காதஞ்
சோணாட்டுக் கெல்லையெனச்சொல்."

என வழங்கும் வெண்பாவால் சோணாட்டெல்லை கருவூரைப் புறத் திட்டே கோட்டைக் கரையளவாய் நிற்பது காண்க. இதனுண்மை அடியிற்* குறித்திருக்குங் குறிப்பாலுமுணர்க. சங்க நூல்களும் பின்னூல்களும் ஒருபடியாகச் சேரருடையதென்று தெளிவித்த கொங்குநாட்டுச் சிறந்ததோரூரினை முன்பின் ஆராயாது சோழரதென்று கூறிப் பண்டைத்தமிழ் வரம்பழியச் செய்யுள் செய்பவர் சேக்கிழாரல்லரென்று தெளிந்து கொள்க. இத்துணையுங் கூறியன கொண்டு சேரர் கொங்குக் கருவூர் சேரர் கருவூரேயென்றுணர்க.

இனிச் சோழர் நீர்நாடும், சேரர் கொங்குநாடும் ஒன்றையொன் றடுத்துள்ளதன்மை முன்னரே விளக்கிவிட்டேன். சேரரும், சோழரும் ஒருவரோடொருவர் இகலிப் பலகாலும் போர் புரிந்தது தொன்னூல்களில் மிகுதியாகக் கேட்கப் படுதலான் சேரர் சோணாட்டையும், சோழர் கொங்குநாட்டையும் பகைப் புலமாகக் கருதினரென்றுணரத் தகும். சோழர்க்குக் கொங்கு பகைப் புலமாதல் "கொங்குபுறம் பெற்ற கொற்றவேந்தே" (373) எனச் சோழனைப் புறப்பாட்டிற் கூறியதனா லறியப்பட்டது. இதனாற் சோழர் பகைப்புலத்தூரைச் சோழரூரென்று நூல்கள் கூறாவென்று தெளிந்து கொள்க.
-----
*The last of these name (Kottakarai) means 'Fort bank' and tradition says that it refers to the great embankment of which traces still stand in the Kulitalai Taluq. The Karai Pottanar river is also supposed to have formed part of the boundary and to have obtained its name from the fact. The Karai Pottanar is a small stream rising in the Kollarmalai.
--- Page 28 Gazetter of the Trichinopoly District

The name signifies "the river which marked the boundary", and native tradition which appears to be founded on fact, says that the stream was once the boundary between the Pandya, Chola and Chera Kingdoms.
-- Page 8 Gazetter of the Trichinopoly District


இக்கருவூர் சேரர் கொங்குநாட்டதாதலாற் சேரரூரென்றுணரப் படுமாயினும் இதன்கண்னே சேரவரசர் மாளிகையுடையராய் வதிந்தாரென்பது எற்றாற்பெறுது மெனிற்கூறுவேன். புறநானூற்றில்

"இவன்யாரென்குவையாயினிவனே
புலிநிறக்கவசம்பூம்பொறிசிதைய‌
வெய்கணைகிழித்தபக‌ட்டெழின்மார்பின்
மறலியன்னகளிற்றுமிசையோனே
களிறே,முந்நீர்வழ்ங்குநாவாய்போலவும்
பனமீனாப்பட்டிங்கள்போலவுஞ்
சுற‌வினத்தன்னவாளோர்மொய்ப்ப‌
மரீஇயோரறியாதுமைந்துபட்டன்றே
நோயிலனாகிப்பெயர்கதில்லம்ம‌
பழனமஞ்சையுகுத்தபீலி
கழனியுழவர்சூட்டொடுதொகுக்குங்
கொழுமீன்விளந்தகள்ளின்
விழுநீர்வேலிநாடுகிழவோனே

இது சோழன் முடித்தலைக்கோப்பெருநற்கிள்ளி கருவூரிடஞ் செல்வானைக்கண்டு சேரமானந்துவஞ்சேரலிரும்பொறையோடு வேண்மாடத்துமேலிருந்து உறையூர் ஏணிச்சேரிமுடமோசியார் பாடியது." (13)

என இருதலைக்கற்றார் பலருமறிவர்.ஈண்டுப் புறப்பாட்டுரை காரர் "களிற்றுமிசையோனாகிய இவன்,யாரென்குவையாயின்,நாடு கிழவோன்:இவன் களிறு மதம் பட்டது:இவன் நோயின்றிப்பெயர்க எனக்கூட்டி வினைமுடிவு செய்க."என்றும்,பெருநற்கிள்ளி களிறு கை யிகந்து பகையகத்துப்புகுந்தமையான் அவற்குத்தீங்குறுமென் றஞ்சி வாழ்த்தியமையால் இது வாழ்த்தியலாயிற்று."என்றும் நன்கு விளக்கினார். இவற்றாற் சோழன்பெருநற்கிள்ளியென்பான் தன் சோணாட்டெல்லையகத்தே ஓர்காற் களிறூர்ந்து செல்லும்போது அது மதம்பட்டுக் கையிகந்து சோழனுக்குப்பகையகமாகிய கருவூரிடஞ் சென்றதென்றும்,அங்ஙனம் பகையகமாகிய கருவூரிடம் புகும் அக் களிற்றைச் சோழற்குத் துணையாய்ப்ப் போந்த வாண்மறவரும், பழகிய பாகரும் தம்வலியாற்றடுத்து வேண்டுவன செய்யவும் மதத்தால் அவற்றை மதியாது கருவூரிடஞ் செல்லத் தலைப்பட்டதென்றும், இவன் வாண்மறவருடன் களிறூர்ந்து கருவூர்மேல் வருதலைச் சேரன் அந்துவஞ் சேரலிரும்பொறையென்பான் சோழன் பகையகமாகிய கருவூரிடத்து வேண்மாடம் என்னும் மாளிகையின் உபரிகைமே லிருந்து தன்கண்ணானே கண்டு தனக்குப்பகையாகிய ஒருவன் வாண் மறவர் புடைசூழக் களிறூர்ந்து வருவானாக நினைந்து முகம்வேறு பட்டுத் தன்பக்கத்து அவ்வேண் மாடத்து பரிகையிலேயிருந்த உறையூர் ஏணிச்சேரி முடமோசியாரென்னும் புலவர் பெருமானை இவன் யாரென்றுவினாவ அதற்கு அவர் தம் நுண்ணறிவானும், சேரனினு முற்பட்டு நிகழ்ந்தவற்றையெல்லாம் ஆராய்ந்து கண்டதுணிவானும், களிறூர்ந்துவருஞ் சோழனை முன்னமே தாந்தெரிந்திருந்த தன்மை யானும் இங்குக்களிறூர்ந்து வருவோன் நீர்நாடு கிழவோனாகிய சோழன் இவன் பகையகத்துப் படையெடுத்து வருவானல்லன்; இவன் யானை மதம்பட்டது: அது வாண்மறவரையும் பாகரையு மதியாது கையிகந்து, ஈங்குவாரா நின்றது. இதனால் நீ இவனைப் போர்க்குவருவானாகக் கருதிச் சினவாதருள்க. சோழனும் நோயிலனாய்ப் பெயர்க என்று உண்மையைத் தெளிவித்துத் தம் பேருரளுக்கும் பெரும் புலமைக்கும் ஏற்பது செய்தாரென்றும் நன்றாகத் தெரிந்து கொள்ளலாம். புலவர் இருபெருவேந்தர்க்கும் போர் நிகழ்ந்து பிரமாதம் விளையாதபடி காத்தலை மேற்கொண்டு இது பகைப்புலத்துப் படையெடுத்தலன்று; யானை மருவியோரறியாது மதம்பட்டது: இக் களிற்று மிசையோன் நீர்நாடுடைய சோழனென் பதியானறிவேன். களிறு மதம்பட்டதாலும், பகைப்புலம் புகுதலாலும் உண்டாம் ஆபத்தினின்று இவன் தப்பி நீங்குவானாகுக என்று சேரன் வெகுளியை மாற்றியருளினாரென்று கொள்ளத்தகும். இதனாற் கருவூர் சோணாட்டையடுத்ததென்றும், அது சோழர்க்குப் பகையகமெனவும் சோணாட்டு மதம் பட்டகளிறு அடங்காது வெகுண்டெழுந்து கையிகந் தாற் பாணித்தலின்றிக் கருவூர்ப் புகுமளவில் அவ்வளவு அணித்தாக இக்கருவூருள்ளதென்றும் நன்குணரலாம். உறையூர் ஏணிச் சேரியிலுள்ளவராதலான் முடமோசியார் தம்மூர்ச்சோழனை முன்னரே நன்கறிந்தவராவர். உறையூரகத்ததோர் சேரியாதலின் உறை யூரேணிச்சேரி எனப்பட்டது. வேண்மாடத்து மேலிருந்து இவை யெல்லாங் கண்டவாற்றான் அம்மாடம், ஊர்சூழெயிலினும் மிகவுயர்ந் திருத்தல் பெறப்படும். இங்ஙனமின்றி எயிற்புறத்திருந்ததோர் மாடமிஃதெனினு மமையும். ஆடகமாடம், வெள்ளிமாடம் என்பன போல இஃதுமொன்றாகும். முடமோசியார் தம் உறையூரைநீங்கி இச்செய்தி நிகழ்தற்கு முன்னே சேரனை அவனது ஊர்க்கண்ணே சென்று கண்டிருந்தாரென்பதும் இதனானே கொள்ளத்தகும். இப் புறப்பாட்டில் "இவன் யாரென் குவையாயின்" என்றிருத்தலாற் சேரனும் புலவரும் கண்ணற் காணக்கூடிய அவ்வளவு அணித்தாக மதக்களிறு சோழனைத் தாங்கிக்கொண்டே கருவூர்ப் பக்கத்து வரலாயிற்றென்றுணரத்தகும். கருவூரைப் பகையகம் என்றதனாற் சோழன் களிறூர்ந்தது முதலிற்றன்னகம் என்று நன்று துணியப்படும். இச்செய்தியெல்லாம் சோணாட்டின் மேற்கெல்லையிலுள்ள தென்று யாப்பருங்கலவுரைகாரர் கூறிய கருவூர்க்கன்றி மேல்கடலோரத்துப் பெரியதோர் கொங்கு மண்டலத்துக்கப்பாலுள்ள குடநாட்டிற் கருவூர் என்ற பெயரே எந்நூலானுங் கூறப்படாத பிறர் கூறுங் கொடுங்கோளூர்க்குக் கனவினும் பொருந்தாதென்பது அறிஞராராய்ந்து கொள்வாராகுக. இதனாற் சோணாட்டையடுத்துள்ள கருவூர் சோழர்க்குப் பகையகம் என்றும், அதுவே சேரர் பெருமாளிகை களையுடையதென்றும், சேரனைப் பார்த்தற்குப் பண்டைத் தமிழ்ப்புலவர் அக் கருவூர்க்குச் செல்வதுதான் வழக்கமென்றும் நன்குணர்ந்து கொள்க. இவ்வரிய புறப்பாட்டு, கருவூர்த் திசையறியாது அலையும் நெஞ்சமாகிய மரக்கலத்தைக் கொண்டுழலும் நல்லுயிராகிய மீகானுக்கு அவியாத கலங்கரை விளக்குப்போல விளங்குவதாகும் என்று தமிழன்புடையரெல்லாம் அறிந்துகொள்க. இதிற் சேரர் கொங்குநாடு சேரர் மலையாகிய கொல்லியையும், சேரர்யாறாகிய ஆன்பொருநையையும், சேரர் கொடுந்தமிழ்நாடாகிய மலைநாட்டையும் உடையதாயினாற் போலச் சேரர் கருவூரையும் உடையதாதல் தெளியப்பட்டதாகும். இங்ஙனம் அன்றாயின் ஊரொரு புறனும், நாடொரு புறனும், மலையொரு புறனும் யாறொரு புறனுமாகி யிடர்ப்படவேண்டி வருமென்க.

இனிப் புறப்பாட்டுரையாசிரியரும், சிலப்பதிகார அரும்பத வுரையாசிரியரும் வஞ்சி - கருவூர் என்று உரையெழுதினார் என்பது அறிஞர் பலரும் அறிவர். இங்ஙனமே நிகண்டு நூலுடையாரெல்லாங் கூறினார். இவற்றால் ஒரூரிரு பெயர்களையுடையதென்பது பெறப்பட்டதாகும். இவ்விருபெயரும் இவ்வாசிரியர்களிட்ட பெயரன்று; பண்டைச் சங்க நூல்களிற் கண்டனவேயாகும், "கடும்பகட்டியானை நெடுந்தேர்க்கோதை, திருமாவியனர்க் கருவூர்" (அகம்- 91) எனவும், "ஒளிறுவேற்கோதை யோம்பிக் காக்கும்வஞ்சி" (அகம்-263) எனவும் வருதலான் அறிக. இவ்வஞ்சி பகைப்புலத்தை யடுத்துள்ள காரணம்பற்றியே சேரன் ஓம்பிக்காக்கும் வஞ்சியென்றா ரெனவறிக. இங்ஙனந் தொன்னூலுட் பயின்ற இவ்விரு பெயருள்ளும், கருவூர் வழக்கின்கண்ணும் பெயராதலானே அதனிலை எளிதிலறியப் படுமென்றுகொண்டு வஞ்சியென்று வருமிடந்தோறும் கருவூர் என்றெழுதினாரென்றுய்த்துணரப்படும். வழக்கின்கட் பிரசித்தி பெற்றுக் கருவூரென்னும் பெயருடைய ஊர்கள் பலவுளவாயின், அவற் றுட்டாம் கருதியது இஃதென்று எளிதினுலகறிந்து கொள்ளுமாறு ஏற்ற அடைகொடுத்துரைப்பர். அங்ஙனம் அடைகொடுத்துக் கூறாமை யான் நூலாசிரியரும், உரையாசிரியரும் கருவூர் என்று கூறியதெல்லாம் ஓரூரையே குறிக்குமென்று தெளியலாம். சேக்கிழார் மட்டும் பிற்காலத்துச் சேரமான் பெருமாணாயனாரிருந்த கொடுங்கோளூரை மகோதையென்னும் பெயருடன் வஞ்சியென்றும் வழங்கினார். இதனாற் பிற்காலத்துச் சேரமான் பெருமாணாயனாரிருந்தது கொடுங்கோளூராகிய வஞ்சியென்று துணியப்படும். அக்கொடுங்கோளூரை அவர் யாண்டும் கருவூரென்று வழங்காமையான் பண்டை ஆசிரியர் கூறிய பழைய சேரரிருந்த கருவூர்வஞ்சிவேறென்று எளிதிற்றுணியப்படும். வஞ்சிக்குக் கருவூரென்ற பெயரே வழக்கின்கணுள்ளதாமென்ப தியான் மேற்கூறியவாற்றா ணுணரலாம். அப்பெயர் வழக்கம் அக் கொடுங்கோளூர் வஞ்சியுடையதாயின் அதனையன்றே முற்படக்கூறுவர். செய்யுளினல்லாமல் வழக்கினும் வழங்கும் ஆற்றலுடைமையா னன்றே உரைகாரரும் நிகண்டுகாரரும் வஞ்சியைக் கருவூரென்று கூறிக்காட்டினார். அவரெல்லாம் வஞ்சியைக் கருவூரென்ற பெயரானே விளக்கியது அவ்வஞ்சியென்னும் பெயர் பிற்காலத்துச் சேரமான் பெருமாணாயனார் அரசு புரிந்த கொடுங்கோளூர்க்கும் இடப்பட்டு வழங்குதலை நன்கறிந்து, பண்டை நூலாருந் தாமுந்கருதியது அஃதன்று; இஃதென்றுணர்த்தவே யென்பது நன்குணரத்தகும். கருவூர்வஞ்சியை யாண்டும் யாரும் கொடுங்கோளூர், மகோதை, அஞ்சைக்களமென்னும் பெயர்களான் வழங்காமையானும், கொடுங்கோளூர் வஞ்சியைக் கருவூரென்று யாண்டும் யாரும் வழங்காமையானும் இவை தம்முள் 'வேறு வேறு என்பது எளிதிலுணரப்படுமன்றோ? இவ்வுண்மையினை யிங்ஙனம் ஆராயாது மயங்கினார் பலர் என்க. பிற்கால நூல்களையும், முற்கால நூல்களையும் ஒருங்குகற்றுச் செந்தமிழ்க் கடனிலை கண்ட கச்சியப்ப முனிவர் தாம் பாடிய பேரூர்ப்புராணத்து

"ஆனடுத்துயர்பூசனையாற்றியகிலமுந்
வானடுத்தெழும்வஞ்சிபசுபதியாயினார்
பானநஞ்சினர்பாழியுமானிலையாயிற்றே"
(குழகன்குளப்புச்சுவடுற்றபடலம் 120)

என ஐயந்திரிபறப்பாடுதலான் யான் கூறுவதே மெய்யென்று துணிக. இவ்வாசிரியர் சேக்கிழார் பெரியபுராணத்தை எழுத்தெண்ணியபடித் தவரே யாவரென்றியான் ஈண்டுக் கூறவும் வேண்டுவதோ? அந்நூல் கற்றதன் மேலு மிவர்க்குண்டாகிய துணிபு இஃதென்று நினைத்துக் கொள்க. இவற்றாற் பண்டைச் சங்கநூல்களிலும், அவற்றதுரை களிலுங்கண்ட கருவூர் வஞ்சிக்கும், பிற்காலத்துச் சேக்கிழார் நூலிற் கண்ட கொடுங்கோளூர் வஞ்சிக்கும் யாதோரியைபுமின்மை நன்குணர்ந்து கொள்க. இப்பாட்டானே கருவூரென்ற பெயர்க் காரணமுமறிக. இக்காரணம்பற்றி இதனை சபீஜமாநகரமெனக் கூறுவர். கொங்குநாட்டுப் பேரூர் நிர்ப்பீஜமா நகரமெனப்படும். பிறவாநெறி என்று தமிழிற் கூறப்படும்.

"ஊரெனப்படுவதுறையூர்" என்றவிடத்து யாதோரடையு மின்றேனும் உறையூர் என்னும் பெயர் சோழரது தலைநகராகிச் சிராப்பள்ளிக்குன்றைத் தன்கணுடையதாகிய நகரையே யுணர்த்து தல் வழக்கினாற்றலானே யென்பது அறிஞர்க்கெல்லாம் ஒப்பது. அது போலக் கருவூர் என்புழியெல்லாம் சேரர் தலைநகராய்த் தண்ணான் பொருநைக் கரையிலுள்ளதாய்ச் செந்தமிழ்நாட்டின் மேலதாயுள்ள மாநகரையே வழக்காற்றலாற் செவ்வனங் குறிக்குமென்று துணியாராயின் ஆசிரியர்கள் அதனை அப்பெயரான் வழங்காரென அறிந்து கொள்க. கூடன் மதுரையென்றுரைப்பது மிதுவேபோலுமென்க. கூடலென்று பெயருடைய பல்லூர்களின் விலக்கியுணரவே மதுரை யென்றெழுதப்படுவதென்க. இக்கருவூர் முற்காலத்து மிகப்பெரியதோர் மாநகரமாயிருந்த தன்மையால் அதிகப் பிரசித்திபெற்று வழங்கப் படுவதாகும். தொல்காப்பியச் சொல்லதிகார வேற்றுமை மயங்கியலிலுள்ள "இதனதிதுவிற்றென்னுங்களவியும்" என்னுஞ் சூத்திர வுரைக்கண் உரையாசிரியர் இளம்பூரணவடிகள் "உறையூரிற்பெரிது கருவூர் என்புழி உறையூர்க்குப்பெரிது கருவூர்" என்று கூறிய வாற்றான் இக்கருவூர் சோழர் உறையூரினும் பெரிதென்று தெரிந்து கொள்ளலாம். இக்கருகதானன்றே பன்னூளுள்ளும், இக்கருவூர் மாநகர் என்று வழங்குவதென்று துணியப்படுமென்க. இது சோழர் தலை நகரினுஞ் சேரா தலைநகர் பெரிதென்பதை யுணர்ததாமலிராது இஃது உறையூரை யடுத்தில்லையாயின உறையூரை எல்லைகாட்டி உறையூரிற்பெரிது கருவூர் என்று கூறாரெனவுணர்க. சங்கச் செய்யுளினும் இக்கருவூரைக் கூறியவிடத்துத் "திருமாவியனகாக் கருவூர்" (அகம் - 93) என இதன் பெருமையெல்லாந் தோன்றக்கூறியதுங் காண்க.

இதற்கேற்பவே கிறிஸ்து பிறந்தபின் நூற்றுமுப்பத்தொன்ப தாம் ஆண்டிலிருந்த தாலமி என்னும் மேற்றிசையாளர் தாமெழுதிய பூகோளநூலில் நந்தமிழ்நாட்டைக் கூறுமிடத்துத் கேரளபதிகளுடைய ராஜஸ்தானம் இருக்குமூர் கருவூர் என்று கூறி அதனைக் கடற்கரை ஊர் வரிசையின் வைக்காது உண்ணாட்டூர்களுடன வைத்தனையும் நோக்கிக் கொள்க. அவரும் கேரளபதிகளூர் கருவூர் என்று கேட்டு வரைந்தவாற்றான் அதுவே எங்கும் வழங்கிய பிரசித்தி நாமம் என்பது நண்குணரப்படும். இதனானேயன்றோ நம் உரையாளர் பலரும் வஞ்சியென்ற நூல் வழக்குப்பெயர்க்குக் கருவூரென்ற உலக வழக்குப் பெயரை உரையாக எழுதினாராவர்.

இனி இக்கருவூர் வஞ்சியென்று பெயர் பெறுதலைப்பற்றிச் சில கூறுவேன். இவ்வூருள்ளவிடம் வஞ்சிவனமெனவும், வஞ்சுளாராணிய மெனவும் வழங்கப்படும். வடமொழியுள் வஞ்சுளம் என்பதனையே தமிழில் வஞ்சியென வழங்குவர். தமிழில் வஞ்சியென்பது வடமொழி யிற்போலச் சில மரங்களின் பெயராகவும், ஓர்வகைக் கொடியின் பெயராகவும் வழங்கப்படும். இது தமிழில் மரத்துக்கும் பெயரென்பது.

"ஞாண்கொணுண்கோலின்மீன்கொள்பாண்மக
டான்புனலடைகரைப்படுத்தவராஅ
னாரரிநறவுண்டிருந்ததந்தைக்கு
தண்டுறையூரன்பெண்டிரெம்மை" (அகம்-216)

என வருதலானறியப்படும். இதனைப் பிசின்மரமென்பர் பிங்கலந்தை நூலார்; அவர் "வானீரம்பிசின் வஞ்சியாகும்" என மரவகையில் வில்வ மரத்துக்குஞ் செங்கருங்காலிக்கும் இடையே வைத்தோதுதலானிஃதறியப்படும். "வடியேர் தடங்கண்ணி வஞ்சிக்கொம்பீன்றாளிவ் வருவாள் போலும்" (யாப்பருங்கல விருத்திமேற்கோள்) என்னு மிதன்கண் வஞ்சிக் கொம்பென்பதனானும் இது மரமாதலுணரப்படும். இம்மரத்தின் கொம்பினை இளமாதர்க்குவமையாக வுரைப்பர். அதனால் "வஞ்சிக்கொம்பு" என்று உருவகப்படுத்தினார். சிந்தாமணியினும் "வஞ்சியங் கொம்பனாள்" (358) எனவருதல் காண்க. பெருங்கதை யினும்,

"இன்னொலிவீணைப்பண்ணொலிவெரீஇ
வஞ்சிக்கொம்பர்த்துஞ்சு........
ஒளிமயிற்கலாபம்பரப்பியிவ்வோர்
களிமயில்கணங்கொண்டாடுவதுகாண்மின்"

எனவருதலானும் இது மரமாதல் துணியப்படும். இதனை வன்னிமர மென்பர் கச்சியப்ப முனிவர். இது கொடிக்கும்பெயரென்பது "பூங் கொடிவஞ்சி" எனவருதலானறியப்படும். இக்கொடியினை மாதர் நுண்ணிடைக்கு உவமிப்பர்; "வஞ்சியிடையீர்" (சிலப்.) எனவும் "வஞ்சிநுண்ணிடை" (சிந்தா.) எனவும் வரும்.

வஞ்சுளம் என்பது வடமொழியில் வேதஸம், வாநீரம் என்னும் பெயர்களையும் உடையதாகும். அம்மொழியினும் அப்பெயர்கள் மரத்துக்குங்கொடிக்கும் வழங்கப்படும். இங்ஙனம் மரத்துக்குங் கொடிக்கும் வழங்குதலை (பக்கம் 47-48 டாக்டர் ஆப்பர்ட் பதிப்பு.) வைஜயந்திநிகண்டிற்கண்டுதெளிக. மஹாகவியாகிய காளிதாஸரும் ரகுவம்சகாவியத்தில்

-------------
two lines of text in Grantha charecters
--------------------

என்பதனால் வேதஸம் கொடியென்பதனை நன்குகாட்டினார். நதியின் வேகத்தினின்று வேதஸமானது எங்ஙனம்வணங்கித் தன்னைக்காத் துக்கொள்ளுமோ அங்ஙனமே அவ்வைதஸவிருத்தியை மேற்கொண்டு ஸிம்மதேசத்தாரும் வணங்காரை வேரறுக்கும் (ரகு) அவனினின்று தம்மைக் காத்துக்கொண்டார்கள் என்பது பொருள். இதன்கட் குறிக்கப்பட்ட வைதஸவிருத்தி சாணக்கிய நீதியினுங்கண்டதென்று ஈண்டு மல்லி நாதஸூரியென்னும் உரைகாரர் விளக்குகின்றார். நதிவேகத்துக்கு வணங்கி, அதன்வேகமொழிந்தவாறே நிமிர்ந்து நிற்குமியல்பினது வேதஸம் என்பது பெறப்படுதலான், இதுகொடியாதல் தெளியப்படும். இவ்வேதஸம், வஞ்சியாதலை இவ்விரகுவம்சத்தை மொழிபெயர்த்துத விய அரசகேசரியார்.

இன்னவாரிதியைநோக்கிக்களிகொண்டவிகல்வேன்மன்னன்
றன்னதாஞ்சிந்தைபோய்நெறிதொறுஞ்சாராநின்ற
மன்னர்மாமலையைவவ்வியெடுத்தெறிதரங்கவாரிக்
கன்னிமாநதியினின்றவஞ்சியேகடுத்தார்மன்னோ.

எனப்பாடுதலானறிந்து கொள்ளலாம்- இகல்வேன் மன்னன் சிந்தை போய் நெறிதொறுஞ்சாரா நின்ற மன்னர் மலைகளைப் பெயர்த்தெடுத் தெறியு மலைநீர்ப்பெருக்கையுடைய அழியாத பெரியயாற்றினின்ற வஞ்சியையே யொத்தார் என்பதாம். உத்தரராமசரித நாட்கத்தில் பவபூதியென்னும் பெருங்கவிஞர்
"*********" Grantha Text (2-36) ( எனவும் Grantha text *** (2-39)
எனவும் வழங்குதலானும் இது வடமொழியிற் கொடிக்கு மிகுதியாக வழங்கப்படுமென்றுணர்ந்து கொள்க. வீருத், லதா என்பன வடமொழியிற்கொடிக்குப் பெயர்கள். இவற்றையெல்லா மாராயாது வஞ்சுளம் என்பது வடமொழியிற் கொடிக்குப் பெயராகாதென்று துணிந்து வரைந்தாருமுளர். இவ்வஞ்சுளம் அதிகமாக அடர்ந்தவிடம் வஞ்சுளாரணியம், வஞ்சிவனம் என வழங்கப்படும். கொடியும், புல்லும், கல்லும், பூவும், மரமும், பிறவும் மிகுதியாகவுள்ள தன்மைபற்றி இவை நிறைந்த இடம் வனமென்று பெயர்பெறும். வனம் என்பது தனியே வழங்குமிடத்து மரங்களடர்ந்த விடம் என்பதைக் குறிக்குமேயன்றி புல்லங்காடு, தர்ப்பாரணியம், சரவணம், நெருஞ்சிக்காடு, விருந்தாவனம், பரற்கானம், மரற் கானம், குவளைக்காடு, பத்மவனம் என வழங்கும்போது ஆங்காங்கு தன்னை விசேடித்தபொருண் மிகுதியாக வுள்ளவிடத்தைக் குறிக்கு மென்பது ஆராய்ந்து கொள்க. இவற்றால் வஞ்சுளாரணியம் என்பது வஞ்சி மரமடர்ந்தகாடெனவும், வஞ்சிக் கொடியடர்ந்த காடெனவும் பொருள்படுமென்-றுணர்ந்துகொள்க. "மன்கருவூர் நீர்வஞ்சியும்" (வராககிரிச் சருக்கம்) என்றார் பழனித்தல புராணமுடையாரும்.

இனி வஞ்சுளா என்னும் ஆகாராந்தபதம் வடமொழியில் மிகுதி யாகப் பால்கறக்கும் பசுவுக்குப்பெயராதலின் அப்பசுக்கணிறைந்த காடு எனவும் பொருள்படும். ஓரூர் ஒரு காரணம் பற்றியே பெயர் கொள்ளுமென்னும் நியதியில்லை. காஞ்சியென்னும் நகரப்பெயர்க்குப் பலபல காரணங்கள் கூறப்படுதலைக் காஞ்சிப் புராணமுதலிய நூல்களுட்கண்டு கொள்க. காஞ்சியென்னும் மரம் பற்றியும் காஞ்சியென்ப; திசைமுகனாலஞ்சிக்கப்படுதலினாலுங் காஞ்சியென்ப; காஞ்சன நதியைக் காஞ்சி யென்பதுபோல ஏழு நாழிகையளவு வானம் காஞ்சனம் பொழிந்த ஊராதலாற் காஞ்சியெனவுங் கூறுப. "காஞ்சனம் பொழிகாஞ்சியதன் கணே" என்றார் ஜயங்கொண்டாரும். இங்ஙனங்கொள்ளுமிடத்துக் கொடி பற்றியும், மரம் பற்றியும், ஆன்பற்றியும் வஞ்சிவனம் எனப் படுமென்று கொள்க. சீத்தலைச்சாத்தனார் "பொற்கொடிப் பெயர் படூஉம் பொன்னகர்." (மணிமே. 26) எனவும், பூங்கொடிப் பெயர் படூ உந்திருந்திய நன்னகர். (௸ 28) எனவுங் கூறியவிடங்களிற் பூக்கொடியாகிய வஞ்சியின் பெயர் பெறுநகர் என்று கூறினாரல்லது வஞ்சிக் கொடியைத் தன் கண்ணுடைமையால் அதுபற்றி அப்பெயர் பெற்ற நகர் என்று கூறினாரில்லை. ஒருவர் "எண்கோவைகாஞ்சி": என்பது பற்றி எண்கோவைப் பெயர்படூஉமின்னகர் என்று கூறினால் அது காஞ்சி யென்று குறித்தாரென்பதல்லது அவ்வூர் எண்கோவையுடைய தென்றும், அதுபற்றியே காஞ்சியென்று வழங்கப்பட்ட தென்றும் காரணங் கூறத்தலைப்படின் அது எட்டுணையும் பொருந்தாதென்று துணிதல் போல ஈண்டுந்துணிக. பூவாவஞ்சி, வாடாவஞ்சி என்பனவும் இக்கருத்தே பற்றிவந்தன. ஈண்டுக்கூறிய பூவாவஞ்சியும், வாடாவஞ்சியும் அக்கருவூரிலுண்டு; அதுபற்றியேதான் அப்பெயர்களைக் கூறினார் என்று ஒருவர் வாதிப்பது எவ்வளவு பொருந்தாதென்று கொள்ளப்படுமோ அவ்வளவே வஞ்சிக் கொடியுடைமையால் கொடிப்பெயர் படூஉ மென்பதும் ஆம் எனக்கொள்க. பூங்கொடிப்பெயர் படூஉம் என்னுந் தொடர் பூங்கொடியின் பெயரைப்பெறூஉம் என்று பொருள் படுதலல்லது பூங்கொடியுடைமையால் அப்பெயர் பெறூஉம்என்று பொருள் படாமையும் நோக்கிக் கொள்க. பிற்கூறியதே கருத்தாயின் அதற்கேற்ற சொற்களால் விளங்கவைப்பரென்று கொள்க. மஹாமஹோபாத்தியாய ஶ்ரீமான் உ.வே. சாமிநாதையரவர்களும் இஃது ஒரு கொடியின் பெயரைப் பெற்றதென்பர் என்றதல்லது இஃதொரு கொடி யாற் பெயர் பெற்றதென்று கூறாமையும் கண்டுகொள்க. (மணி அபி தானவிளக்கம்). இவ்வெல்லாம் நுணுகி ஆராயாது இஃதொருகொடி யான்மட்டும் பெயர் பெற்றதென்று மயங்குவாருமுளர்.

இச்சங்க நூல் வழக்கெல்லாங் கற்றுத்தெளிந்த கச்சியப்பமுனிவர் பேரூர்ப்புராணத்து

"வன்னிநீள்வனமிருத்தலானஃதுவஞ்சியென்றுபெயர்மேவிய
தன்னமாநகரடுத்துநம்முருவினைதுபூசைபுரிகிற்றியாம்"

எனக்கொடியைக்காரணமாக்காது வன்னிமரமே வஞ்சி என்று கொண்டு வன்னிவனமிருத்தலான் வஞ்சியென்று பெயரெய் தியது என்று தெளிவித்தார். இவரிங்ஙனங்கொண்டதற்கோர்கார ணம் உய்த்துணரப்படும். கரணமமைந்தகாசறுகாட்சிப் பாணரென் னும் பாவலர்பெருந்தகையார் இவ்வஞ்சியிலரசுபுரிந்த செங்குட்டு வனைப்பாடிய ஐந்தாம்பத்தில்

"காணிலியரோநிற்புகழ்ந்தயாக்கை
..............................
துளக்குநீர்வியலகமாண்டினிதுகழிந்த
மன்னர்மறைத்ததாழி,
வன்னிமன்றத்து விளங்கியகாடே. (பதிற்-5- 4)

எனப்பாடியதன்கண் வன்னிமரத்தையுடையதோரிடம் வன்னிமன் றம் எனச் சிறப்பித்துச்சொல்லப்படுவது. இஃது இறந்தமன்னர் யாக்கையைத் தாழியிற்கவிக்கு மிடுகாட்டுப்பக்கத்ததென்று தெளி யப்படுவது. இப்பதிற்றுபத்துரைகாரரும் "வன்னிமன்றமென்றது அக்காட்டில் வன்னிமரத்தையுடைய இடத்தினை; அதுதான் பிணத் தோடுசென்றாரெல்லாருமிருந்து மன்றுபோறலின்மன்றெனப்பட் டது" எனவுரைத்தார். இவ்வன்னிமன்றத்தையுடையநாடு வன்னி வனமென்று வழங்கப்பட்டதோவென ஊகித்தற்கும் இடனுண்டு.

> இங்ஙனம் மரத்தான் வஞ்சுளாரணியம் எனப்படுதலேயன்றி, மிகுதியாகப்பால்கறக்கும் பசுவாகிய காமதேனுபோந்தவனமாதலான் அப்பெயரெய்தியதெனக் கூறினுமிழுக்காது. இப்பிற்கூறியபொருள் ஆனிலையென்பதனோடு பெரிதும்பொருந்துதல் கண்டுகொள்க. வஞ் சுளா என்பது பசுவிற்குப்பெயராம்போது ஆகாராந்தபதமென் றுணர்க. இதற்கிப்பொருளுண்மை வைஜயந்திநிகண்டிற்காண்க. இங்ஙனம் பல காரணங்களான் வஞ்சியெனப்பட்டது இக்கருவூரென வறிந்துகொள்க. இஃதிவ்விடத்து என்று பேரூர்ப்புராணத்துக் கச்சியப்பமுனிவர் நன்குதெளிவித்துள்ளார்.

தூம்புறுங்கைமதவேழமேய்ந்துபயில்சோலைசூழ்ந்தவதனுச்சியி
னாம்பரத்தினடிநின்றெழுந்தொழுகுமாம்பராவதிவடாதினிற்
றேம்பழுத்துவருகாவிரிக்குடதிசைக்கணார்த்துலவுகாஞ்சியென்
றோம்புகின்றகுடிஞைத்தெனாதொருபீசமாநகரமுண்டரோ.
சபீசமாநகரம்-கருவூர். (பேரூர்ப்-குழகன்.107)

ஆம்பராவதியின்கரையேநடந்தாங்கிடைத்
தோம்படாவகைசோமன்பணிந்தசோமேசனைக்
கூம்புறாதவன்பாற்குழைந்தேத்திக்கும்பிட்டுப்போய்
நாம்படாதருணல்கும்வஞ்சித்தலநண்ணிற்றே.

என அவார்கூறியவாற்றாலுணர்க. (௸ ௸ 117)

காமதேனுவழிபட்ட இடனாதலின் இக்கருவூர்ச்சிவபெருமான் கோயில் ஆனிலையெனப்படுமென்றுகூறுவரென்பது

..................கருவூரெனத்தக்கது,
"வானடுத்தெழும்வஞ்சிபதியாயினார்,
பானநஞ்சினர்பாழியுமானிலையாயிற்றே"

என்பதனாற் பெறப்பட்டது. இத்திருக்கோயிலுளெழுந்தருளியிருக் குஞ் சிவபெருமான் பசுபதியென்றழைக்கப்படுவர். "பசுபதிகர்ப்ப புரத்திலறுமுகப்பெருமாளே" என்பது அருணகிரிநாதர் திருப் புகழ். "கருவூர்ப்பசுபதியே" என்றார் உமாபதிசிவாசாரியரும். இபசுபதிநாமத்துக்குப் பொருள் பலவுளவேனும் சாதாரணமா யாவருங்கொள்வது ருஷபத்தையுடைய பதி என்பதேயாம். இப் பசுபதியினருளாலே உலகற்றோன்றி மாநிலம்விளக்கினவன் செங்குட் டுவன் என்னுஞ் சேரனென்பது

"ஆனேறூர்ந்தோனருளிற்றோன்றி
மாநிலம்விளக்கிய மன்னவனாதலின்
செய்தவப்பயன்களுஞ் சிறந்தோர்படிவமுங்
கையகத்தனபோற்கணடனை"

என்று இறுதிக்காதையில் இளங்கோவடிகள் கூறுதலான் உணரப் படும். வஞ்சியிலுள்ள இப்பசுபதியையே இச்செங்குட்டுவனைப்பாடிப் பரிசில்பெற்ற பரணர்

பண்ணாகப்பாடிப்பலிகொண்டாய்பாரேழும்
பண்ணாகச்செய்தபரஞ்சோதி-பண்ணா
வெருதேறியூர்வாயெழில்வஞ்சியெங்க
ளெருதேறியூர்வாயிடம்

எனச் சிவபெருமான்றிருவந்தாதியிற் பாடியவாற்றான் இக்கோயிலின் றொன்மை நன்குணரப்படும். ஈண்டும் வஞ்சியிற்சிவபெருமானை எருதேறியூர்வாயென்று முன்னிலைப்படுத்தியதனையும், அதனை அடுத்து இடம் என்றதனையும், வஞ்சி என்றதனையும் நன்கு நோக்கிக்கொள்க. இளங்கோவடிகள் 'ஆனேறூர்ந்தோன்' என்ப தும், பரணர் 'எருதேறியூர்வாய்' என்பதும் ஒரு கடவுள் வடிவையே குறிப்பதென்பது தெள்ளிது. பரணர் செங்குட்டுவனைப்பாடிப் பரிசில்பெற்றவராதலான் அச்செங்குட்டுவன் திருத்தம்பியாராகிய இளங்கோவடிகளோ டொருகாலத்தவரென்ப தியான்கூறவேண்டுவ தன்று. 'பண்ணாவெருதேறியூர் வாயெழில்வஞ்சி' என்றது பண்ணி னிமையையறியும் ஆக்கள் எருதுகளில் ஏறித்தவழ்கின்ற இடத்துள்ள அழகிய வஞ்சிஎன்னுநகரம் என்று பொருள்படும். இதனாற் சொல்லியது நிலப்பண்பு. அஃதாவது அந்நிலத்து ஆக்கள் செருக் கால் எருதேறி யூருமென்று அதன் நீர்வளமும், புல்வளமுங்குறித்த வாறாம். இதனால் வஞ்சுளாரணியம், ஆனிலை என்பவற்றிற்கேற்ப வும் பசுபதியென்பதிற்கேற்பவும் இவ்வஞ்சியைப் பசுச்செல்வத்தால் வருணித்தாரென்று கொள்ளப்படும். இவ்வூரிடத்துள்ள நதியும் ஆன்பொருந்துவது என்னும் பொருளில் ஆன்பொருத்தம் எனவழங் குதலுங்கண்டுகொள்க. இவ்வூரம்மையை அருணகிரிநாதர் "கோகு லசத்தி" எனவழங்குவர்.

அவர்

வெற்றிப்பொடியணிமேனியர்கோகுல
சத்திக்கிடமருள்தாதகிவேணியர்
வெற்புப்புரமதுநீறெழல்காணிய-ரருள்பாலா
வெற்புத்தடமுலையாள்வளிநாயகி
சித்தத்தமர்குமராவெமையாள்கொள
வெற்றிப்புகழ்கருவூர்தனின்மேவியபெருமாளே.

எனப்பாடினார். இதனானும் இவ்வூர்க்குக் கோகுலசம்பந்தமே மிகுத்துணரப்படும். இக்கருவூரைக் கோவூர் ஆனூர் எனவழங்கு தலையும் தலபுராணத்துட்காண்க. இளங்கோவடிகளும் இவ்வூரைக் 'கோநகர்' என்றார். அரும்பதவுரையாசிரியர் அதற்குத் திருநகர் எனப் பொருள்கூறினார். கோவினிடத்துத் திருமகள்வதிகின்றா ளென்பதுபற்றி அங்ஙனங்கூறினார்போலும். அருணகிரிநாதர் தந் திருப்புகழில் இவ்வூரை 'உயர்கருவைப்பதி' என்றும், 'குடகிற்கரு வூர்' என்றும் "வெற்றிப்புகழ்தருகருவூர்" என்றும் 'பசுபதிகர்ப்பபுரி' என்றும், 'வஞ்சி' என்றும் விளங்கப்பாடியுள்ளார். இதன்கட் 'குட கிற்கருவூர்' என்றது மேற்றிசையிலுள்ள கருவூர் என்றவாறு. இவ் வூரைக் குடபுலவஞ்சியென ஆன்றோர்வழங்கியதுபற்றி இவரும் இவ் வாறு கூறினார். குடம், குடகு, குடக்கு, குடகம் இவை மேற் றிசைக்குப் பெயரென்பதுணர்க. இங்ஙனமின்றிக* குடகுநாடென்று கொடுந்தமிழ்நாட்டையுஞ்சுற்றிய தமிழொழிந்தநாட்டிலுள்ளது கருவூர் என்று கொள்ள ஏலாமை நன்குணர்ந்துகொள்க. குடபுலத் தைப்பற்றி முதற்கண்விரித்தோதினேனாதலான் இக்கருவூர்வஞ்சி யுள்ளநிலம் குடபுலமென்பதுதெளியப்படும். சேக்கிழாரும் கொங்குநாட்டைக் குடபுலமென்றுவழங்கியுள்ளாரென்பதை முன் னரே காட்டினேன். இனி ஒருசாரார் கருவூர் கொங்குநாட்டுள்ளதன்றென்றும் சோணாட்டேயுள்ளதென்றும் மயங்குவர்.
----------
*குடகுநாடு தமிழ்நாடன்மை மேலே காட்டினேன்.

அவர் சேக்கிழார் திருஞானசம்பந்தநாயனார்புராணத்து

செங்கட்குறவரைத்தேவர்போற்றுந்
      திகழ்திருவீங்கோய்மலையின்மேவுங்
கங்கைச்சடையார்கழல்பணிந்து
      கலந்தவிசைப்பதிகம்புனைந்து
பொங்கர்ப்பொழில்சூழ்மலையுமற்றும்
      புறத்துள்ளதானங்களெல்லாம்போற்றிக்
கொங்கிற்குடபுலஞ்சென்றணைந்தார்
      கோதின்மெஞ்ஞானக்கொழுந்தனையார்

அப்பாலைக்குடபுலத்திலாறணிந்தாரமர்கோயி
லெப்பாலுஞ்சென்றேத்தித்திருநணாவினையிறைஞ்சிப்
பைப்பாந்தள்புனைந்தவரைப்பரவிப்பண்டமர்கின்ற
வைப்பானசெங்குன்றூர்வந்தணைந்துவைகினார்

பருவமறாப்பொன்னிப்பாண்டிக்கொடுமுடியார்தம்பாத
மருவிவணங்கிவளத்தமிழ்மாலைமகிழ்ந்துசாத்தி
விரிசுடர்மாளிகைவெஞ்சமாககூடல்விடையவர்தம்
பொருவிறானம்பலபோற்றிக்குணதிசைப்போதுகின்றார்.

செல்வக்கருவூர்த்திருவானிலைக்கோயில்சென்றிறைஞ்சி
நல்லிசைவண்டமிழ்ச்சொற்றொடைபாடியந்நாடகன்று
மல்கியமாணிக்கவெற்புமுதலாவணங்கிவந்து
பல்குதிரைப்பொன்னித்தென்கரைத்தானம்பலபணிவார்

எனக்கூறுதலை யறியாராவர். சேக்கிழார் 'கருவூர்த்திருவானிலைக் கோயில் சென்றிறைஞ்சிச் சொற்றொடைபாடி அந்நாடகன்று' என்று தெளிவுறப்பாடுதலான் அது சோணாட்டெல்லையிற் கொங்குநாட்டே யிருப்பது நன்குபுலனாகும். இங்ஙனம் அணித்தாதலானன்றே சோழன்முடித்தலைக்கோப்பெருநற்கிள்ளியூர்ந்தகளிறு மதம்பட்ட வளவில் சேரமான் அந்துவஞ்சோலிரும்பொறையிருந்த இக் கருவூ ரிடஞ்சேறலாயிற்றெனவறிக. (புறம் - 13) "சென்றசென்றகுட புலத்து" (வெள்ளானை) என்பது முதலாக இங்ஙனம் பலவிடத்துஞ் சேக்கிழார் கொங்குநாட்டையே குடபுலமென்று தெளியவழங்கியிருக்கவும் அவற்றையெல்லாம் ஆராயாது கொங்குநாடொழிந்த மேல்கடற்பக்கத்து மலைநாடே குடபுலமென்றும் அம்மலைநாட்டுக் கொடுங்கோளூரே குடபுலவஞ்சி யென்றும் தம் மனம்போனவாறு துணிந்தார் பிறரெனவறிக. சேக்கிழார் குடபுலத்துப் பதிகடொறும் இன்புற்றுத் தலமுங்கானகமுங்கான் யாறுங் கற்சுரமுங்கடந்து சுந்தர மீர்த்தி நாயனார் மலைநாட்டகம் புகுந்தார் என்று வெள்ளானைச்சருக் கத்துத் தெளியக்கூறியது கொண்டும் திருஞானசம்பந்தநாயனார் புராணத்துக் கொங்கு நாட்டையே குடபுலமென்று பல்லிடத்தும் வழங்கியதுகொண்டும் ஆராயின் சேக்கிழார்

"கொங்கரொடுகுடபுலத்துக்கோமன்னர்திறைகாண .........
கருவூரின்வந்தணைந்தார்"

என்பதற்கு யான் கூறியதே கருத்தாதலெளிதிலுணரலாம்.

இனிப் பழனிப்புராணத்தும்

செங்கதிர்மணிமுடிச்சேரலன்றிகழ்
கொங்குநன்னாட்டிடைக்கொன்றைவார்சடைப்
புங்கவன்குமரவேளுறையும்புண்ணியத்
துங்கவெற்புளசிலசொல்லுவாமரோ (கிரிச்சருக்கம்-27)

மழைதவழ்வஞ்சியாரணியத்தும்பரும்
விழைபொருடருவதுவெண்ணெய்மால்வரை
தழைதருகறைசையுட்டயங்குசங்கவெண்
குழையினனுறுவதுகொடுமுடிக்கிரி (கிரிச்சருக்கம்- 28).

என்பனவற்றாற் கொங்குநாடு சேரன்விளங்குகின்றநன்னாடென்றும் அந் நன்னாட்டு வஞ்சியாரணியம்உண்டுஎன்றும் கூறுதல்காண்க. ஈண்டுக் கூறிய வெண்ணெய்மால்வரை கருவூர்க்குஅடுத்துள்ள வெண்ணெய் மலை எனவறிக. அப்புராணத்துப்பின்னும்

நடித்தபொற்பொதுமுதலநீர்நாட்டுளநகரும்
வடித்தமுத்தமிழ்மதுரையுங்குமரியும்பிறவுங்
கொடித்தடஞ்சிலைக்கோதைநாட்டினிலெழுபதியுங்
கடித்திகழ்ந்தமென்மலரினாற்கைகுவித்திறைஞ்சி
(கௌசலன்- அருச்சனைச்சருக்கம்).

எனக்கூறுதலானும் ஏழுசிவத்தலங்களையுடைய கொங்குநாட்டையே கொடித்தடஞ்சிலைக் கோதைநாடு என்று கொண்டது தெளியப்படும். கோதைநாடு - சேரனாடு.

இக்கொங்கு நாட்டுள்ள பேரூர் என்னுந்தலங் குடபுலத்திருத் தல்பற்றி மேலைச்சிதம்பரங் குடசிதம்பரமென வழங்கப்படுதலையும் அத்தலபுராணத்தாற்றெரிக.

இங்ஙனம் வஞ்சியென்ற வழக்கும், அப்பெயர்க்காரணங்களும் முற்காலத்துப் பரணர்பாட்டும் பிற்காலத்து அருணகிரிநாதர், கச்சி யப்ப முனிவர் முதலியோர் பாடலும் எல்லாம் கருவூர்க்கேபொருந்து தலையும், பிறிதோரூர்க்குப் பொருந்தாமையையும் நன்று தெளிந்து கொள்க.
கருவூரென வுலகவழக்கினும், வஞ்சியென நூல்வழக்கி னும் உள்ள இவ்வூர், ஆன்பொருநையாற்றுக் கரையிலுள்ளதென்பது,

"கடும்பகட்டியானைநெடுந்தேர்க்கோதை
திருமாவியனகர்க்கருவூர்முன்றுறைத்
தெண்ணீருயர்கரைக்குவைஇய
தண்ணான்பொருநைமணலினும்பலவே" (அகம் - 13)

எனவும்,

"வஞ்சிப்புறமதிலலைக்குங்
கல்லென்பொருநைமணலினும்" (புறம் - 347)

எனவும் வருதலானறியப்படும்.

பதிற்றுப்பத்துரைகாரர்.

"......செங்குணக்கொழுகுங்
காவிரியன்றியும்பூவிரிபுனலொரு
மூன்றுடன்கூடியகூடலனையை" (பதிற்-50)

எனவரும் பதிற்றுப்பத்தடிகட்கு உரைகூறுமிடத்து மூன்றுடன் கூடிய கூடல் என்றது அக்காவிரிதானும் ஆன்பொருநையும், குடவல் என்றார் போல்வதோர் யாறும் என இம்மூன்றுஞ்சேரக்கூடிய * டம் எ-று. 'காவிரியனையாவதேயன்றி மூன்றுடன்கூடிய கூட் டத்தனையை யெனக்கொள்க" எனவிளக்கினார். இதன்கட் காவிரி யும், ஆன்பொருருநையும், மற்றோர்யாறும் சேரக்கூடியகூட்டம் என்று தெளிவித்தவாற்றான் ஆன்பொருநையும் காவிரியும் ஓரிடத்துக்கலப்ப தென்பது நன்கு பெறப்பட்டது. இதனால் வஞ்சியெனவும், கருவூரென வும் மேற்கண்ட ஊர் காவிரியொடும்கூடும் ஆன்பொருநையாற்றின்கரை யினதென்று தெரிவதாகும். காவிரியொடுகூடும் ஆன்பொருநையாற் றுக்கரையின்கணுள்ளது கருவூர்வஞ்சியென்பது தெரிந்தவாற்றால் கருவூர்வஞ்சி மேல்கடலோரத்தில்லையென்றும், குடபுலமாகிய சேர நாட்டில் அகநாட்டுள்ளதென்றும் நன்கு துணியலாகும்.

தொல்லாசொரியர்கள் பல்லிடத்தும் காவிரியை

"பூவிரியகன்றுறைக்கணைவிசைக்கடுநீர்க்
காவிரிப்பேர்யாறு" (அகம்-181)

எனவும்

"கடற்கரைமெலிக்குங்காவிரிப்பேர்யாறு"
(சிலப்-6 கடலாடு)

எனவும் வையையை "வையைப்பேரியாறு" (சிலப்) எனவும் பேர்யாறென வழங்குதல்போல இவ் வான் பொருநையினை ஆன்பொருநைப்பேர்யாறு, பொருநைப்பேர்யாறென வழங்கக் கண்டிலேன். இதனால் இவ்வான் பொருநையினை உபநதியென்று நான் குணர்ந்தே பேர்யாறென்று வழங்காது தொல்லோர் விட்டாரென்று துணியத்தகும். உரையாசிரியரெல்லாம் பொருநை, ஆன்பொருநை எனவருமிடங்களில் ஆன்பொருந்தமென உரையெழுதினாரெயன்றிப் பேர்யாறென்றெழுதினாரில்லை. சிலப்பதிகாரவரும் பதவுரையாசிரியர் பெருமலை விலங்கிய பேர்யாற்ற் றடைகரை" என்புழிப் பேர்யாறு ஓர் யாற்றின்பெயர் என்றெழுதினார். பேர்யாறே பொருநையாயின் இவ்விடத்துப் பேர்யாறென்பது பொருநைக்கொருபெயர் என் றன்றோ எழுதுவர். அங்ஙனம் எழுதாமையான் அவரும் இவ்வான் பொருநைவேறென்றும், பேர்யாதுவேறென்றும் நன்கு தெளிந்தாரே யாவரெனக்கொள்க.

பழனிப்புராணத்து நதியுற்பலித்தசருக்கத்து அகத்தியமுனிவர் பொதியமலையின் சிகரத்துத்தோன்றும் புனலின் ஒருபாதியைத் தாம் பிரபன்னியென விடுத்தாரெனவும் மற்றொரு பாதியை வடக்குமுக மாகச் செலச்செய்ததனால் அது பிலந்தருநெறியால் வராககிரியும், காமதேனுவும், மாமரமும் உள்ள இடங்களிலொழுகிக் கருவூர்க்கடவு ளைப்பாலுடன் ஆட்டி அம்பாநதி, ஆம்பிரவதி, ஆன்பொருநையெனப் பெயர்பெற்று மணிமுத்தாறு, காவிரி இவற்றுடன் தானுங்கூடிக் கடலிற் கலக்குமெனவும், இவையன்றி ஒருகலை சித்திராநதியென வழங்குமெனவும், மற்றுமொருகலை வையையென்று வழங்குமென வும், பின்னுமொருகலை சமுத்திரம் வடக்கெழுந்து செல்லுதல்போல ஒழுகிக் குடபாற்கடலிற் கலப்பதெனவும் விளங்கக்கூறியுள்ளது காண லாம். ஈண்டுக் குடபாற்கடலிற் கலப்பதென்றது பேர்யாறென எளிதி லறியலாம். இவற்றால் தாம்பிரபன்னி கருவூர் ஆன்பொருநை, சித் திராநதி, வையை, பேர்யாறு இவ்வைந்தும் வேறுவேறு நதிகளென் றும் இவையெல்லாம் பொதியமலைத்தொடரில் உற்பத்தியாவன என் றும் உணரலாம். இவ்வுண்மையினை அப்புராணத்து

தொலைவின் மாதவர்தொழும் பெருங்கயிலையிற்றூய
கலையிலாய மூலப்பிரகிருதி கன்னிகையாய்த்
தலைவணங்கி நீடலையெறி கடல்வலயத்தி
னிலை புரிந்த வந்தனைக்கிட நிகழ்த்துகென்றதுவே

எஞ்சுபல்லுயிருயிர்ப்பதற்கேதுவாயிருந்த
வஞ்சுளாட வியெனுங்கர்ப்பபுரியினைமருவி
விஞ்சுதேனுவினுருக்கெழீ இவிழைந்தெமைப்பூசித்
துஞ்சிடும்படியுலகெலாந்தருதியென்றுரைத்தான்.

கண்ணுதற்பெருமானருள்கடிநகர்போகி
யுண்ணிகழ்ந்தவர்புரிந்தவக்கேழலோங்கலின்மே
னண்ணிநோற்றனளாவெனமாவெனநணுகு
மெண்ணிறேவர்கோன்பிழைத்தனளிழைத்திடுநாளில்,

கொந்தார்நறவக்குளிர்பொன்னிதழிப்
பைந்தார்புனைபண்ணவனேவிலினால்
விந்தாசலம்வென்றவன்வேரிநறுஞ்
சந்தார்பொதியந்தனிலெய்தினால்

பண்பாருயிருய்ந்திடமுன்பரவை
யுண்பாவல்லொண்சிகரத்துறையு
நண்பார்பொருநாநதியின்புனலைத்
திண்பாருலகஞ்செல்வுய்த்தனனால்.

ஒருசீருணவெற்புழிநின்றுயர்பார்
வருநீர்மையுமவ்வடிவங்கொளலாற
பெருநீர்வருதாம்பிரவன்னியென
வருள்சேரொருபாதியடைந்ததுவே.

ஒருபாதியுதக்கினடந்துபிலந்
தருமோர்நெறிசார்ந்துவராககிரி
வருதேனுவுமாழையும்வைகிடமீ
தருள்கூரவெழுந்ததனக்கரினே.

விண்ணந்தருகார்வரைமீதுவிரா அய்த்
தண்ணந்துறையைந்திணையுந்தழுவி
வண்ணந்தருபல்பொருளும்வரறிக்
கண்ணன்றுயில்பைங்கடல்கண்டதுவே.

திரையிற்செறிசித்திரநன்னதியென்
றுரையிற்புகழ்கொண்டெழுமொள்ளருவி
குரையிற்பொலியுந்திரிகூடசல
வரையிற்கலையொன்றுவழங்கியதே.

கலையொன்றுகணந்தவழுஞ்சிகரத்
தலையொன்றருவித்திரடாழுமணி
மலையொன்றிவருந்திகழ்வையையென
வலையொன்றுவராழியினார்த்ததுவே.

நீராழிநிலம்புகழுங்கலையொன்
றோராழியுதக்கெழல்போலொழுகிப்
பேராழிபுனைந்துபெருங்குடபாற்
காராழிபுகுந்துகலந்ததுவே. (இது பேர்யாறு ஆகும்)

பொற்பார்பொதியம்பொருவில்குமர
வெற்பானவைமின்மிளிருஞ்சிகரத்
தற்பால்வருமந்நதிதன்பெருமை
நற்பான்மையையாவர்நவிற்றுவரே.

ஆனமாயைவெற்படைதலாலருட்பிரகிருதி
தானமெய்தலாலந்தவான்றடம்பொழிற்கருவூர்க்
கோனவற்குநல்பாலுடனூட்டலாற்கொணர்ந்து
மாநிலத்திலம்பாநதியென்பர்நூன்மரபோர்.

மாழைநீழல்போந்தாம்பிரவதியெனவழங்கி
யேழைதேனுவினுருவுகொண்டினிதுவீற்றிருக்குஞ்
சூழல்போதலிற்றுளும்புமான்பொருநையென்றொருபே
ரேழிருங்கடலுடுத்தபாரிசைப்பமேவியதே.

மணிமுத்தாறுகாவிரிவிரிவாளைபாய்பொருநை
யணிமெய்த்தோங்குமுக்கூடலினணிமணியீசன்
றிணிமெய்த்தோங்குமெண்டோட்டிரிகுலேசன்வீரேசன்
பிணிமொய்த்தேறுவந்தேறுமெம்பிரான்பிரமேசன்

தாரகேசுரன்றயங்குகொங்கணேசன்வாகீச
னாறணிந்தகாளீச்சுரனருள்விசாலேச
னேருறுங்கரசேகனோடகத்தியவீசன்
சீரிணங்கனந்தேசன்வைகிடங்கரைதிகழும்

எனவருவனவற்றாற் றெளிந்துகொள்க. இவற்றால் தாம்பிரபன்னி, சித்திராநதி, குடகடலிற்கலக்கும்யாறு, வையை, ஆன்பொருநை இவ்வைந்தும் வேறு வேறு என்றும் இவை பொதியமலைத்தொடர்க ளிற் பிறப்பன என்றும் இவற்றுள் ஆன்பொருநை கருவூரை யடுத் தொழுகுவதென்றும் நன்றுணர்ந்துகொள்க. இவையெல்லாம் ஒரு வர் படைத்துக்கொண்டனவாகாது இத் தமிழ்நாட்டுத் தொன்று தொட்டு நிலைத்தவழக்காதல் உய்த்துணர்ந்துகொள்க. இவை யொன்றும் ஆராயாது ஆன்பொருநையை ஆந்பொருநையென்று தம் மனம்போனவாறுமாற்றி அதுவே மேல்கடலிற்கலக்கும் பேர்யா றென்றும் அதுவே வானியென்னும்பெயருடையதென்றும் துணி வாருமுளர். அவர் "ஆனிவானியான் பொருத்தமாகும்" என்றதி வாகரநிகண்டினையும் "மாதவனார் வடகொங்கில்வானியாற்றின்" (பர மதபங்கம் - 53) என்ற தேசிகர் வாக்கினையும் உணராராவர். இவற் றால் ஆன்பொருத்தம் குடகடலிற்கலக்கும் யாற்றின்வேறாதலையும் அதுவே வானியெனப்படுதலையும் அது கொங்குநாட்டிலே இருத்தலை யுந் தெளிந்துகொள்க. அவர் இடபப்பாதி மழையாற்பெருகும் யாறா கக்கருதி மிதுநமாதமாகிய ஆனி தமிழ்ச்சொல்லேயென்பதறியாது

அதனை ஆநி எனமாற்றி அஃதிகரங்கெட்டு ஆந் என நின்று பின் பொருநையுடன்புணர்ந்து 'ஆந்பொருநையெனலாயிற்று என்பர். பிரயோகவிவேகநூலார், "ஆனி ஆடியையொழிந்த திங்களும் நாளிரு பத்தேழும் தற்பவமாதலின்" என்றதனால் ஆனி தமிச்சொல்லாதற் றெளியப்படும். ஆந்பொருநை என யாண்டும் வழங்காமைகண்டு கொள்க. பிறர் "காவிரியன்றியும் பூவிரிபுனலொரு மூன்றுடன்கூடிய கூடலனையை" என்னும் பதிற்றுப்பத்துள் மூன்றுடன்கூடிய கூட லென்றது தென்கடலும் மேல்கடலும் கீழ்கடலும் கூடியகூட்ட மென்று நூல்வழக்கிற்கும் உரைவழக்கிற்கும் விரோதமாகத் தாமொ ருபொருள்படைத்தார். "பூவிரிபுனலொருமூன்று" எனத் தெளிய வுரைத்ததனையுங் காணாராயினர். "பூவிரிபுதுநீர்" என யாற்றை வழங்குதலானும் பூவிரிபுனல் எனக் கடலை யாண்டும்வழங்காமையா னும் அவர் கூறுவது பொருந்தாதெனவுணர்க. கொங்குநாட்டு மணி முத்தாறு காவிரி ஆன்பொருநை மூன்றுங்கூடிய முக்கூடலொன்றும் ஆன்பொருநையும், அதுனுடன் இரண்டு நதிகள் கூடும் திரிவேணிசங் கமமொன்றும் உளவாதல் கேட்கப்படுகின்றது. பதிற்றுப்பத்துரை காரர் கூறியபடி மூன்றுடன்கூடிய கூடல் என்றது காவிரியும் ஆன் பொருநையுங் குடவனென்றார்போல்வதோர் யாறும் கூடிய கூட்டம் என்றேனும், ஆன்பொருநையும் அதனுடன் இரண்டு நதிகள் கலக்கும் திரிவேணிசங்கமம் என்றேனும் ஆகுமல்லது இம்முக்கூடல் கடலாகா தென்பது அங்ஙனம் நூல்வழக்கும் உரைவழக்கும் இன்மையானும் உணரத்தகும். கொங்குநாட்டுத்திரிவேணி சங்கமம் ஒன்றுண்டென் பது

மன்றலங்கோதையர்பொருட்டுவல்லுழிக்
குன்றினின்னதிகளோர்மூன்றுங்கூடிய
மின்றருதலந்திரிவேணிசங்கம
மென்றனருணர்வினரின்னுங்கேட்டிரால்

விளம்புமாயாபுரியதற்குமேற்றிசை
யளந்திடுமூவிருகுரோசமற்றபின்
களங்கொள்காளிந்தியுங்காமர்வாணியுங்
குளிந்தவாண்பொருநைநன்னதியுங்கூடுமே.

எனப் பழனிப்புராணத்துள்வருதலானுணர்க.

இனிச் செங்குட்டுவன் மலைகாண்குவமென்று தன்கோப்பெருநந் தேவியுடனும், இளங்கோவடிகளுடனும், தன் படைத்தலைவனான வில் லவன் கோதையுடனும், அழும்பில்வேளுடனும், படையுடனும், சேடி யர்கூட்டத்துடனும், மற்றைப்பரிவாரங்களுடனும், பெருங்கூட்டமாக எல்லா உபகரணங்களையுங்கொண்டு வஞ்சிமுற்றத்தை நீங்கிச்சென்று பெரியமலைகளுக்கிடையே ஊடறுத்துச்செல்லும் பேர்யாற்றின்கரை யின் மணலெக்கரிற்றங்கியிருந்தான் என்று சிலப்பதிகாரக் காட்சிக் காதையாற்றேரிவது. இச்செங்குட்டுவன் வாசத்தலமான வஞ்சியோ ஆன்பொருநையாற்றுக்கரைக்கட்கட்டப்பட்ட கோட்டையினை யுடையதென்பது முற்காட்டிய‌ புறப்பாட்டடிகளாற்றெரியலாம். இதனாற் செங்குட்டுவன் ஆன்பொருநைக்கரையிலுள்ளவஞ்சியைநீங்கி எல்லாருடனுஞ்சென்று பேர்யாற்றங்கரையிற்றங்கியிருந்தானென்றே தெளியப்படுவதாகும். பேர்யாற்றங்கரையிலேவஞ்சியுள்ளதென்று நூல்கள் கூறாமையானும், ஆன்பொருநைக்கரையிலே கருவூர்வஞ்சி என்ப பெயரியஊர் உள்ளதென்றே நூல்கள் கூறுதலானும் ஆன் பொருநைக்கரையிலுள்ள ஓரிடத்தைநீங்கிப் பேர்யாற்றங்கரையி லோரிடத்தே தங்கினானென்றே ஐயமறத்துணியப்படுமென்க. பேர் யாற்றங்கரையினின்று செங்குட்டுவன் தன் வஞ்சிக்குத்திரும்பிய தைக்கூறியவிடத்து "வாடாவஞ்சிமாநகர்புக்கபின்" என்பதற்கு அரும்பதவுரையாசிரியர் "பொலிவுபெற்றகருவூரிலே திரியச்சென்று அரசன் பேராற்றங்கரையினின்றும்போந்து புக்க பின்" என்ற விளங்கவுரைத்ததனையும் நோக்கிக்கொள்க. ஈண்டும் பேராற்றங்கரையினின்றுநீங்கி ஆன்பொருநைக்கரையிலுள்ள தன் னூர்க்குப்புக்கபின் என்று கொள்ளுதற்கே எல்லா நூல்களுந்துணை யாவன என்றுணர்க, எங்கேனும் ஓரிடத்துப் பேர்யாற்றங்கரையில் வஞ்சியிருப்பதாகக்கூறியிருந்தாலன்றோ, பிறவிடங்களிலெல்லாம் வஞ்சி ஆன்பொருநைக்கரையிலிருப்பதாகக்கூறுதல்பற்றி இரண்டி யாற்றுப்பெயரும் ஓர்யாற்றின்பெயரோஎன்கின்ற ஐயமேனும்உண் டாகும். அங்ஙனம் ஐயுறுதற்கும் நூலாதரவேனும், உரையாதர வேனும் இல்லாமை கண்டுகொள்க. பழனித்தலபுராணத்து மேல்கடலிற் கலக்கும்யாற்றின் வேறாக ஆன்பொருந்தம் காவிரியுடன்கலப்ப தாகக்கூறியிருத்தலுங்காண்க. வஞ்சியைக்கூறியபல்லிடத்தும் ஆன் பொருநை அதனைச்சூழ்வதாகவேகூறிப் பேர்யாற்றைக்கூறிய பல்லிடத்தும் வஞ்சியை எவ்விதத்தும்இயைத்துக்கூறாமையான் ஆன்பொருநைக்கும்பேர்யாற்றுக்கும் யாதோரியைபும் இல்லையென் றுணர்தலுடன் பேர்யாற்றுக்கும் ஆன்பொருனைக்கரைவஞ்சிக்கும் ஓரியைபும் இல்லையென்றும் உணர்ந்துகொள்க. இனி, இளங்கோ வடிகளாகியபெருங்கவியரசர், சிலப்பதிகாரமூன்றுகாண்டத்திறுதியி லும், கட்டுரைகளாற் சோழர் பாண்டியர் சேரர் மூவர்க்கும் அவ்வக காண்டம் முறையேபுரித*காமாறுகாட்டிக்காண்டத்துள்ளனதொகுத் துணர்த்திச் செல்வார். அக்கட்டுரைகளிற் சோழர்சிறப்புரைக்கு மிடத்து " அவர்தந் தெய்வக்காவிரித்தீதுதீர்சிறப்பும்" எனவும், பாண்டியர்சிறப்புரைக்குமிடத்து " அவர்தம் வையைப்பேர்யாறு வளஞ்சுரந்தூட்டலும்" எனவும் அவரவர்யாற்றைச் சிறப்பித் துரைத்தவர் சேரர்சிறப்புரைக்குமிடத்துமட்டும் அவர்யாற்றைக் கூறாமலே விடுத்தது தம் வஞ்சிப்புறம்திலலைக்கும்பொருநை உப நதியாயிருத்தல்பற்றியேயென் றுய்த்துணரப்படும். காவிரியும், வையையும் முறையே புகார்க்காண்டத்தும், மதுரைக்காண்டத்தும் கூறப்பட்டாங்கு ' வாழிவருபுன்னீர்த்தண்பொருநைசூழ்தரும்வஞ்சி யார்கோமான்" என்பதனால் வஞ்சிக்காண்டத்துங் கூறப்பட்டிருக் கவும் கட்டுரையிற்கூறாமை கண்டுகொள்க. இவ்வஞ்சிக்காண்டத்து,

"நெடியோன்மார்பிலாரம்போன்று
பெருமலைவிலங்கியபேரியாற்றடைகரை"

என்பதனாற் பேர்யாறு கூறப்பட்டிருக்கவும், அதனானும் இக்கட்டுரை யிற் சேரரைச்சிறப்பித்தாரில்லையன் றுணர்க. இவற்றிற்குக் கார ணம் ஆராயப்புகின் ஆன்பொருநை சோவர்காவிரியையும் பாண்டியர் வையையும்போலப் பேர்யாறாகாது உபநதியாதல் பற்றி யென்றும் சோழர்காவிரியையும், பாண்டியர் வையையும்போலப் பேர்யாறு அரசர் தலைநகரைத் தன்றுறைக்கணுடைத்தாகாமைபற்றியென்றும் நன்கு புலனாகும். ஆன்பொருநையேபேர்யாராயின், வையையையும் காவிரியையும் கூறினாற்போல வஞ்சிக்காண்டக்கட்டுரையிற் கூறுவ ரென்றுணர்க. பன்னூல்களும் பாண்டியன் சோழன் இருவரை யும் முறையே வையைத்துறைவன், பொன்னித்துறைவன் எனக் கூறிச் சேரனைப் பொருநைத்துறைவன் எனவே கூறுதல் காண்க

பேர்யாற்றுத்துறைக்கண் அவன் தலைநகருடையனாயின் அவனைப் பேர்யாற்றுத்துறைவனெனவே கூறுமென்க. ஆறுடைமையேயன் றித துறையுடைமையையுங்கருதியனீறே யாற்றுத்துறைவனென் பது. பேர்யாறுடையசேரனைப் பொருநைத்துறைவன் என்பது அவன் அதன்கண்வதிந்து அதன்றுறையைஅவனுடையனாயகாரணத் தாலென்றுணர்ந்துகொள்க. இதனாலும் பேர்யாற்றங்கரையிற் கருவூ ரில்லாமையையும், காவிரியுடன்கலக்கும் ஆன்பொருநைக்கரையில் அவ் வூருண்மையும் உணர்க. பிறர் இவற்றுளொன்றும் ஆராயாது பேர் யாறு, பொருநை என்று சொல்லப்பட்டிருப்பன ஒரே யாரெனக் கூறிப் போ்யாறு அயிரைமலையிற்பிறப்பதென்றும், அயிரைமலை ஸஹ்யபர்வதத்தின் ஓர்பாகம் என்றும் உரைத்தார்.

இவரிங்ஙனங் கூறியதைப்பற்றிச் சிறிதாராய்வேன். ஸஹ்ய பர்வதம் குடகமலையென்பது, ஸஹ்யஜா என்று மிகப்பிரசித்தி பெற்றகாவிரியாறு அதன்கட்பிறப்பதென்று நூல்கள்கூறலாலறியப் படும். காவிரி குடகமலையிற்பிறப்பதென்பது "குடாஅது, பொன் படுநெடுவரைப்புயலேறு சிலையிற், பூவிரிபுதுநீர்க் காவிரிபுரக்கும்" என்னும் புறப்பாட்டடிகட்கு, உரையாளர் 'மேற்றிசைக்கட பொன் படுகின்ற நெடியகுடகமலைக்கண்ணே மு லினகண இடியேறு முழக் கிறபூப்பரந்த புதுநீரையுடைய காவிரி உலகத்தைப்பாதுகாக்கும்" என உரைத்ததனாலும் "மலைத்தலைபகடறகாவிரி" என்று பட்டினப் பாலையடிக்கு நச்சினார்க்கினியர் 'குடகமலையிடத்தே தலையினை யுடைய கடலிடத்தே செல்கின்ற காவிரி" எனக்கூறியதனானும் உண ரப்படும். ஸஹ்யஜா என்பது காவிரிக்குப்பெயரென்பது வடநூல் கள்பலவற்றினுங்கண்டது. சிவரகசியம் இரண்டாம் அமிசம் 24-ஆம் அத்தியாயத்து "ஸஹ்யமலையும் அதிலிருந்துண்டாய்வருங் காவிரி நதியும்" எனவருதல்காண்க. வடநூலார் ஸஹ்யபர்வதமென்ப தனையே தமிழர் குடதிசையிருத்தல்பற்றிக் குடகமலையென்று வழங்குகின்றார் என்று தெளியலாம். இதனால் ஸஹ்யபர்வதம் யாதென்றும் யாணடையதென்றும் உணரப்படும்.

இனிப் பேர்யாறு பாண்டிநாட்டுப்பகுதியிலுள்ள பொதியச்சார் பாகிய சிவகிரிக்காடுகளிற்பிறந்து மேல்கடலில்வீழ்வதோர்யாறென் பது பலருமறிவர். இவ்வுண்மையினை அடியிற்குறிப்பானுணர்ந்து கொள்க,* பாண்டிநாட்டுப்பகுதிக்குட்பட்ட சிவகிரிகாட்டுக்கும், கொடுந்தமிழ்நாட்டுக்கு அப்பாலுள்ள குடகமலையாகியஸஹ்யபர்வதத் திற்கும் யாதோரியையுமில்லையென்பதும்,நெடுந்தூரமென்பதும் பலருமறிவர். இங்ஙனமாகவும் பேர்யாறு அயிரைமலைப்பிறப்பதென் றும், அயிரை ஸஹ்யபர்வதத்தின் ஓர்பாகமென்றும் பிறர்துணிந்தது எதுபற்றியோ அறிகிலேன். பழனித்தலபுராணத்தும் மேல்கடலிற் கலக்கும்யாறு பொதியத்திற்பிறப்பதாகவே கூறினார்.

----------------------
* The Periyaar is the finest, the largest and the most important of the rivers of Travancore. It takes its rise in the Shivagiri forests. As it first emerges from the dense forest the volume of water it contaains is 30 yards wide and 2 feet deep even in the driest weather. After a course of 10 miles northward, it is joined by the Mullayar at an elevation of 2800 feet. The Periyar then turns due west and continues so far about 10 miles over sandy bed. About 7 miles below Mullayar Tavalam there is formed a sort of gorge by the hills rising to a considerable height on either side of the river nad approaching each other very closely. It is here that a dam is thrown by the Madras Government to a height of160 feet and a width of 1200 feet to form a lake which greatly helps the irrigation of the land in the Vaigai valley. By the construction ofthe dam the river is caused to back up for aconsiderable distance as far as the Vazhukkapara Tavalam aand all the low lying land on the north band of the river is submerged, the water extending up all the side valleys and reaching to within a mile of Kamih. From here a channel is tunnelled through the hill side over a mile long, by which the water is conveyed to one of the streams that go to feed the vaigai river......
The Periyar after receiving the Muthirapuzha river flows west-North-West for about 8 miles when it pours under a large rock which probably has fallen from the hillside on account of land slip. In dry weather when the volume of water is small the whole of it flows under the Rock. This has been exaggerated into a sudden disappearance of the river under ground. The water is considered to pass into a chasm and emerge again only after avery long distance,....... Passing Malayathur and after a winding course of 14 miles, it reaches Alwaye, where it divides itself into two branches which again subdivide themselves into several small ones before reaching the sea. The chief places on its banks are Peermade, Neryaamangalam, Malayathur, Cheranallur,Vazhakulam, Alwaye, Ullinad and Veerapoly. The total length of the river is 142 miles of which for the last 35 miles only it passes through inhabited tracts. It is navigable for boats for 60 miles above its mouth. (Page 17-18 Vol I. The Travancore State Manual by Mr. V. Nagan Aiya. B.A. F.R., Hist. & Dewan Parisher, Travancore.)
---------

இனி வையைத்துறைவன் பொன்னித்துறைவன் எனப் பாண்டிய னையும் சோழனையும் நதியாற்பெயரிட்டாளுதல்போலச் சேரனைப் பொருநைத்துறைவன் என ஆளுதலா லிப்பொருநையும் மேலுள்ள வை*யை காவிரி இவற்றையொப்பதோர் பேர்யாறேயாமென்றும்,உப நதியாயின் அதனாற் பேரரசனைப் பெயரிட்டாளார் என்றும் கருதுவா ருண்டு.இதன்பொருட்டு ஈண்டுச் சில‌ கூறுவல்.ஒரு நதியால் ஓ ரரசனைப் பெயரிட்டாள்வது அந்நதியால் அவன் நாடுபயன்படுதலையும், அதனால் அவன் செல்வமெய்தலையும்,அதன்கண் அவன் ராஜகிருக முடையனாதலையும் கருதியேயாகும்.இவை ஈண்டுக் கூறிய மூன்றி யாற்றுக்கும் ஒக்கும்.இங்ஙனங்கொள்ளாது யாறுகளின் அகல நீளங்களையும்,அந்நாட்டு மலையிற்பிறந்து அந்நாட்டுக் கடலில் வீழ் தற்றன்மையினையும்பற்றி யாராயின் இம்மூன்றும் தம்முட் பெரிதும் வேற்றுமையடையும்.பாண்டியர்க்கு வையை முழுதும் உரியதாகும். சோழர்க்குக் காவிரியின் தலை இடை கடைகளிற் கடையாறே யுரிய தாகும்.சேரர்க்குப் பொருநைமுழுதும் உரியதாகும்.இங்ங‌னம் ஆராய்ந்துகொண்டு காவிரியுடையசோழரைக் குறைகூறின் அது பொருந்துமா?என்றி அறிஞ‌ரேயாராய்ந்துகொள்வாராக.நிலமெல் லாம் விளைவித்து உயிர்களனைத்தையும் வாழ்வித்தற்குக்காரணமான தன் நீர்மிகுதியை உவர்க்கடலில் வாளாஉகுக்கும் ஒருமகாநதியி னும்,தன்நீர்த்துளியையும்வீணாக்காது உலகுபயன்கொள்ள ஓர் யாற்றிலேகலக்கும் உபநதி சிறந்ததென்றுவாதித்துப் பொருநையே மற்றவேந்தர்நதிகளினுஞ்சிறந்தது என்று கூறலுமாமே.இம் மூன்றுவேந்தர்க்கும் யாறு பேர்யாறாக வேண்டும் என்று கருது வார்க்கு மூவேந்தர்க்கும் மூன்றுமலையும் தம்முள் ஒத்துப் பெரிய வாதல் வேண்டப்படுமன்றோ?அதற்கென்செய்வது;பாண்டியர் பொதியத்திற்குச் சேரர்கொல்லி தாழ்ந்ததாகும்.அக்கொல்லிமலைச் சிறப்பி னூற்றிலொருபங்கும்சிறப்புடையாதாகச் சோழர் நேரிமலை கூறப்படவில்லை.இச்சிறுமலையாற் சோழனை நேரியன் எனக் கூற லாமா என்று ஒருவர்வினாவின் அதற்குப் பிற ரென்கூறுவாரோ? அவனுக்குள்ள மலைகளிலெல்லாம் அதுவே உயர்ந்ததாத‌லின் அத னால் அவனைச் சிறப்பித்தாரெனின் ஈண்டும் சேரனுக்குள்ள யாறு களிலெல்லாம் அதிகப்பயனை அவன்நாட்டுக்குவிளைப்பதும், அவ‌னிருக்கும்வஞ்சிக்கு நீரரணாவதும்,அவனாட்டே முழுவதும் உள்ள தும்,காமதேனுவந்துநீராடுந் தீர்த்தமாயுள்ளதுமாகிய காரணங்களால் அவனாட்டுள்ளயாறுகள்பலவற்றினும் உயர்ந்ததாகிய ஆன் பொருநையானே அவனைக்கூறினாரென்க. சேரநாடுக்காவிரியும் உண்டேனும் அஃது அவனாட்டு இடையாறேயாதலான் அதனா லவ னைப்பெயரிட்டாளுத லில்லையென்க. இவனாட்டுக் காவிரியுண்மை யைப் பின்னர் விரித்துரைப்பேன் ஆண்டுக்கண்டுகொள்க.இளங் கோவடிகள் காவிரிக்கும் வையைக்கும் ஒப்பாகவைத்துக் கட்டுரை யிற்கூறினாரில்லையேனும்,நூலுள் அவ்வக்காண்டங்களில் அவ்வந் நாட்டு ஆறுகளையேகூறியாங்கு வஞ்சிக்காண்டத்து "வருபுன்னீர்த் தண்பொருநைசூழ்தரும்வஞ்சியார்கோமான்"என உள்ளதுகொண்டு கூறுதல் கண்டுகொள்க.ஒருவன் தன்மலையிற்பிறந்து தன்கடலின் மண்டும்யாறு தன் நாட்டுக்கு அதிகப்பயன்றராததாயின் அதனைப் பாராட்டாது தானும் தன்னாடும் அதிகப்பயனெய்தற்குக் காரண மானதொன்றையே பாராட்டுவன் என்பது திண்ணம்.பேர்யாறு 142-மைல் நீளம் ஓடும்யாறு.ஆமிராவதியாகிய ஆன்பொருந்தம் 140-மைல்நீளம் ஓடுவது.இவ்விரண்ட‌ற்கும் நீளம் பற்றிய வேற் றுமை மிகவுஞ்சிறியதே என்பது அறியத்தகும்.பேர்யாறு 107-மைல் நாட்டுக்குப்பெரும்பயன்விளைவியாமற் பெரியமலைக‌ட் கிடையில் ஓடுவது.இதுபற்றியே "பெருமலைவிலங்கியபேர்யாறு" என்றார் இளங்கோவடிகளும்.அது 35-மைல் தூரமே குடியுள்ள‌ நாட்டிலோடுவது.இவ்வுண்மையினை முற்காட்டிய ஆங்கிலக் குறிப்பா னுண‌ரலாம்.ஆமிராவதி பொதியமலைத்த்தொடர்களாகிய ஆனை மலையினுந் திருவிதாங்கோட்டுமலைகளினும் உண்டாஞ்சிற்றாறுகளின் றிரளாய் கொங்குநாட்டுப்பகுதியாகிய கோயமுத்தூர்ச்சில்லாவில் நெடுந்தூரம் பாசனவளம்புரிந்து திருச்சிராப்பள்ளியிலுள்ள கொங்கு நாட்டுப்ப்பகுதியிலும் அவ்வளமேசெய்து பின்னும்பெரும்பயனுறுத் தக் காவிரியைப்பெருக்குவதாகும்.இவ்வியல்புகளையுணர்ந்தே முன் னைத்தமிழ்ப்புலவர்கள் பேர்யாற்றாற் சேரனைப்பெயரிடாமற்பொருநை யாற்பெயரிட்டாரென்றுதெரியலாம்.பயன் அதிகமில்லாத பேர் யாற்றினும் பயன் அதிகமுடைய உபநதி சிறந்ததென்பது புலவர் துணிபு. காவிரியைமுழுதுமுடையனா கானாயினும், காவிரியினும் அதிகநீளந் தன்னாட்டோடும்யாறுகள் பிறவற்றையுடையனாயினும் அக்காவேரியானே சோழனைக்கூறுவதெல்லாம் அதனா லவன் அதிகப்பயனையடைதனோக்கியும், அவன் அதன்றுறையில் ராஜகிருக முடைமைநோக்கியுமேயென்று கொள்ளத்தகும். இதனோடு யான் மேற்கூறியகாரணங்களையும் சேர்த்துக்கொள்க. கோசல நாட்டிறைவரை அந்நாட்டுப்பயனுறுத்தும் உபநதியாகிய சரயு என் னும் யாற்றாற் சிறப்பித்தலையும் ஈண்டைக்கு நோக்கிக்கொள்க. பெரும்பயனுறுத்தும்பொருநையைப்பற்றிப் பேர்யாற்றுக்குள்ள குணங்களை மறந்தாரெனலாகாது. அதனைப் பெருமலைவிலங்கிய பேர்யாறெனவும், அது வறனுறுகோடையினுந் தீநீரொழுகுவதென் றும், அதனானும் கழனிவிளைவுண்டென்றும், அது இருகரையும் வழிந்துசெல்லும் பெருநீரையுடையதென்றும் வருணித்தே செல்வர். இதனாற் பண்டைப்புலவர் அதனதன்குணங்களை யுள்ளவாறுகண்டு எதனால் ஓரரசனைச்சிறப்பித்தால் எல்லாப்படியானும் பொருந்திற் றென்றுகொள்ளப்படுமோ அதனானேசிறப்பித்தாரென்றறிந்து கொள்க. இதனாற் சேரனுக்குள்ளயாறுகள் பலவற்றினும் சிறந்தது ஆன்பொருநை என்பதனை ஆராய்ந்துணர்ந்தே புலவர் அவனைப் பொருநைத்துறைவன் எனப்பெயரிட்டாண்டாரென்றுணர்க.

இனிப் பதிற்றுப்பத்திற் பேர்யாறு என ஒன்று அயிரைமலையிற் பிறப்பதாக,

"துவைத்ததும்பைநனவுற்றுவினவு
மாற்றருந்தெய்வத்துக்கூட்டமுன்னிய
புனன்மலிபேரியாறிழிதந்தாங்கு" (பதிற் - 88)

என்பதனாற் கூறப்படுவது. ஈண்டு உரையாளர் "தெய்வத்துக்* முன்னியயாறென்றது அத்தெய்வங்கூடியுறைதலையுடைய அயிரை மலையைத்தலையாகக்கொண்டு ஒழுகப்பட்டயாறென்றவாறு; தெய் வங்கூடியுறைதலையுடைய அயிரை தெய்வத்துக்கூட்டமெனப்பட் டது" என விளக்கினார். இதன்கண் உரைகாரர் பேர்யாறு என்று பெயருடையதோர் யாறாகக்கொள்ளாது யாறென்ற உரைத்ததனை யும் நினைத்துக்கொள்க. இவ்வயிரைமலை இவ்விடத்தது என்றும், இவ்யாறு இன்னதென்றும் விளக்குவல், பதிற்றுப்பத்துரையாளர்,, மூன்றாம்பத்துப்பதிகத்து "அயிரைபரைஇ" என்றது, 'தன்னாட்டு அயிரைஎன்னும் மலையில்வாழுங் கொற்றவைக் கடவுளைத் தன்குலத் தார்செய்துவரும் வழிபாடுகெடாமல் தானும்வழிபட்டு எ-று.'என வுரைத்தார்."உருகெழுமரபினயிரைமண்ணி"என்னுஞ்சிலப்பதிகார நடுகற்காதையடிக்கண் அரும்பதவுரையாசிரியர் "அயிரை-ஓர்யாறு; அதிலே குளித்து"என வுரைத்தார்.இவ்வீருரையானும் அயிரை சேரர்குலம்வழிபடும் கொற்றவைக்கடவுளையுடையதோர்மலையென வும்,அப்பெயருடையதோர்யாறெனவும் தெளியலாம். இவ்வயிரை யாறு அயிரைமலையிற்பிறத்தல்காரணமாகவே அப்பெயரெய்தியதென் றெளிதிலுணரத்தகும்.இவ்வயிரைமலை யாண்டையதென்றாரயப் புகின்,பதிற்றுப்பத்து ஒன்பதாம்பத்தில்,

"சுடர்வீவாகைநன்னற்றேய்த்துக்
குருதிவிதிர்த்தகுவவுச்சோற்றுக்குன்றோ
டுருகெழுமரபினயிரைபரைஇ
வேந்தரும்வேளிரும்பின்வந்துபணியக்
கொற்றமெய்தியபெரியோர்மருக" (பதிற்-88)

என்று கூறியிருப்பதைக் காணலாம். இதன்பொருள் - ஒளிவிடுகின்ற‌ பூக்களையுடைய வாகையைக் காவன்மரமாகவுடைய நன்னன் என்னும் வேளிர்தலைவனைத்தேய்த்து அவன் உடற்குரிதியைத்தெறித்த சோற்றுக்குவியற்குன்றாற் கண்டார்க்குஅச்சந்தருமுறைமையினை யுடைய அயிரைமலைக் கொற்ற‌வைக்கடவுளை வழிபட்டு இருபெரு வேந்தரும், வேளிராவுள்ளவரும் பணியுமாறு வெற்றியெய்திய செயற்கரியவற்றைச் செய்தோர் வழியிற்றோன்றியவனே என்பதாம். இக்கொற்றவை போரில் வெல்லப்பட்டார் நிறம்பொழிகுருதியானன்றிப் பலிகொள்ளாள் என்பது,

"துமபைசான்றமெய்தயங்குயக்கத்து
நிறம்படுகுருதிபுறம்படினல்லது
மடையெதிர்கொள்ளாவஞ்சுவ‌ருமரபிற்
கடவுளயிரை" (பதிற்-79)

என்று எட்டம்பத்திற்கூறியவாற்றானறிந்துகொள்க. இதனால் நன்னனைத்தேய்த்து அங்ஙனந்தேய்த்தலாலுண்டாகிய அவனுடற் குருதியையேதெறித்த சோற்றுக்குன்றென யான் கூறியதே பொரு ளாதலுணர்க. இதனால் நன்னனைத் தேய்த்தவிடத்துக்கு இவ்வயிரை மலை அணித்தாகுமென்று உய்த்துணரப்படும். அங்ஙனம் அணிமை யினிருந்தாலல்லது தேய்த்தகுருதியைத்தெறித்துச் சோற்றைப் படைத்த லியலாதென்றுகொள்க. இதனால் இவ்வயிரைமலை நன்னன் நாட்டை அடுத்துளது என்று கொள்ளலாம். நற்றிணையில்,

"பொன்படுகொண்கானநன்னனன்னாட்
டேழிற்குன்றம்பெறினும்பொருள்வயின்
யாரோபிரிகிற்பவரே" (391)

எனவருதலான் இந்நன்னனாடு கொண்கானம் என்பதும், இவன்மலை ஏழின்மலையென்பதும் நன்றுதெரிவன. ஏழின்மலையென்பது மேல் கடலையடுத்துள்ள கண்ணனூருக்குப் பதினெட்டுமைல் தூரத்துள் ளது. இதனா லிந்நாட்டுப்பக்கத்தே அயிரைமலையுள்ளதென்று துணி யத்தகும்.

"சீருடைத்தேஎத்தமுனைகெடவிலங்கிய
நேருயர்நெடுவரைஅயிரை" (பதிற் - 21)

எனவருவதன்கண் சீருடைய தேயத்தின்கண்ணே பகைவர் போர்கெடு தற்குக்காரணமாக்குறுக்கிட்ட நேரேயுயர்ந்த நெடியமலையாகிய அயிரை எனக் கொள்ளக்கிடத்தலானும், இம்மலை புறத்திலுள்ளபகை வர் போர்கெடுதற்குக்காரணமாகக் குறுக்கிட்டுச் சேரனாட்டுஎல்லை யகத்திருப்பதாகத்துணியப்படும். நன்னனாட்டைக் கொண்கானம் என்றலானும் அது சேரனாட்டெல்லையாகத் தட்டில்லை. இவ்வயிரை மலையைக் கபிலரென்னும் புலவர்பெருமான்,

"மாடோருறையுமுலகமுங்கேட்ப
விழுமெனவிழிதரும்பறைக்குரலருவி
முழுமுதன்மிசையகோடுதொறுந்துவன்று
மயிரைநெடுவரைபோலத் தொலையாதாகநீவாழுநாளே" (பதிற் - 70*)

என ஏழாம்பத்திற் பாடுதலான் இதன்பெருமை யுணரப்படும். இதன் கண் இம்மலையின் பலசிகரங்களிலும் பக்கத்துள்ள நாடுகளெல்லாம் கேட்கும்படி பறையின்குரலையுடைய பல அருவிகள் விளங்கித் தோன்றுமென்று வருணித்தலான் இது பெரியயாறுகள் தோன்றுதற்குக் காரணமாவதென்று புலப்படும். இவற்றான் அயிரைமலையினியல்பும், அஃதீண்டுள்ளதென்றும், அதற்கும் ஆல்வாய்ப்பேரியாற்றுக்கும் யாதோரியையுமில்லையென்றும், அதன்கண் உண்டாம் யாறு வேறென்றும், அஃது அயிரையெனப்படுமென்றும் கண்டுகொள்க.

இவ்வுண்மை இன்னும் ஒருவகையானும் ஆராய்தலினானும் புலனாகும். அகநானூற்றில்,

"நேராவன்றோள்வடுகர்பெருமகன்
பேரிசையெருமைநன்னாட்டுள்ளதை
யயிரியாறிறந்தனராயினும்" (253)

எனவருதலான் அயிரியாறு வடுகர்பெருமகனான எருமை என்பானுடைய நன்னாட்டுள்ளது எனத்தெரிலாம். "நுண்பூணெருமைகுடநாடன்னவென்னாய்நலம்" (அகம்-115) என்பதனால் இவ்வெருமையின்நாடு குடபாலுள்ளது புலனாம். மேற்கூறிய நன்னன்பாழியை வடுகர்கைப்பற்றியபோது செருப்பாழியெறிந்த இளஞ்சேட்சென்னி என்பான் நன்னனுக்குத் துணையாகச்சென்றுபாழியை நூறி வடுகரைச்சவட்டினானென்று,

"விளங்குபுகழ் நிறுத்தவிளம்பெருஞ்சென்னி
குடிக்கடனாகலிற்குறைவினைமுடிமார்
செம்புறழ்புரிசைப்பாழிநூறி
வம்படுகர்பைந்தலைசவட்டி" (அகம்-375)

எனவருதலான் அறியலாம். பாழி நன்னனுடையதென்பது "நன்னனுதியனருங்கடிப்பாழி" (அகம்-258) என்பதனா னறியப்படும். இதனான் வடுகர்க்கும் நன்னனுக்குமுள்ள பகைமை புலனாகும். அதனானே நன்னனாடும்வடுகர் நாடும் அடுத்துள்ளதன்மையும் புலனாம். வடுகர்நாட்டு ஓடுகின்ற அயிரியாறு நன்னனாட்டுக்கும் பக்கத்ததாகும். நன்னனாட்டுக்குப்பக்கத்ததாகிய அயிரைமலையில் உண்டாகும்யாறு அயிரியாறு எனவும், அதுவே அயிரை எனவும் வழங்கப்பட்டதாகுமென்றுந் துணியலாம். இவற்றான் அயிரைமலையும் அதன்கணுண்டாங்கும் அயிரை எனப்பெயரிய பேரியாறும் கொண்கானப்பக்கத்தும் எருமைநாட்டுப் பக்கத்துமுளவாதலல்லது வேறுபக்கத்தவாகா வென்று தெளிந்துகொள்க.

மற்று அயிரைமலையிற்பிறக்கும் பிறியதோர்யாற்றைப் பேர் யாறென்று பதிற்றுப்பத்திற் கூறியதென்னையின் அஃதோர் பெரிய யாறாக இருத்தல்பற்றி அங்ஙனம் கூறினாரென்க. சேரனாட் டில் உள்ள எல்லாயாற்றினும் பொன்னாணி என்னும் யாறு இன்றும் பெரிதாதல் கண்டுகொள்க. அயிரையும் அதுபோன்றதொன்றாகும். இவ்வயிரையாறு நெடுந்தூரத்ததாக இல்லையாயின் இதன்கட் சேர னொருவன்சென்றுகுளித்தலை ஒரு சிறப்பாகவைத்துப் பெருங்கவி யரசராகிய இளங்கோவடிகள் பாடாரெனவறிக. 'அயிரைமண்ணி' என்பதற்கு அயிரைமலையிலுள்ள கொற்றவையை அபிஷேகஞ்செய்து என்றாலும் பொருந்துமேனும், அங்ஙனம் அரும்பதவுரைகாரர் உரை யாமையும், அவர் அயிரையாற்றிற்குளித்து எனக்கொண்டது ஒன்றற் கும் விரோதமின்மையும் ஆராய்ந்துகொள்க.

இனி,
"நின்மலைப்பிறந்துநின்கடன்மண்டு
மலிபுனனிகழ்தருந்தீநீர்விழவிற்
பொழில்வதிவேனிற்பேரெழில்வாழ்க்கை
மேவருசுற்றமோடுண்டினிதுநுகருந்
தீம்புனலாயமாடுங்
காஞ்சியம்பெருந்துறைமணலினும்பலவே" (பதிற் - 48)

என்பதை எடுத்துக்காட்டி "நின்மலைப்பிறந்து நின்கடன்மண்டும்" என்றதையே பெருந்துணையாகப்பற்றிக் காஞ்சிபேர்யாற்றுக்குப்பெய ரென்று துணிந்தாருளர். இதுபற்றி இவ்வடிகளை ஈங்கு ஆராய் வேன். இவ்வடிகட்குப் பதிற்றுப்பத்துரையாளர் உரைகூறியவிடத்து நின்மலைப்பிறந்து நின்கடன்மண்டுமலிபுனல் என்புழி "மலிபுனலை யுடைமையான் யாறு மலிபுனலெனப்பட்டது" எனவும், "நிகழ்தருந் தீநீரென்றது அவ்யாறுகளிலே புதிதாகவருகின்ற இனியபுதுநீர் எ-று" எனவும் விளக்கினார். இதனால் நின்மலைப்பிறந்து நின்கடன் மண்டும் காஞ்சியென்றியைத்தல் கருத்தன்றென்றும், நின்மலைப் பிறந்து நின்கடன்மண்டும் மலிபுனல் (யாறு) என்றுள்ளவாறியைப்ப தே கருத்தென்றும், அங்ஙனமலைப்பிறந்து கடன்மண்டும்யாறுகள் பலவென்றும், ஓர்யாற்றின்மட்டுமன்றிப் புதுப்புனல்விழவுகொண் டாடப்படுவதுஎல்லாயாறுகளிலுமுண்டென்றும், அவ்விழாக்காலத்து நிகழுநிகழ்ச்சியை இவ்வடிகள்கூறுவனஎன்றும் நன்குணரலாம். மலிபுனல் என்பது யாறாயினபடியாற் பெருந்துறை அவ்யாறுக ளுடையவாகும். அப்பெருந்துறைகளைக் காஞ்சியம்பெருந்துறையென் றது புனலடுதற்குரியமகளிர் அணிந்து விளையாடுதற்குத் தளிரும் முறியும் தாதும் பூவும் தரவல்ல காஞ்சிமரங்களை ஆண்டுடைமையான் எனவறிக. இவ்வுண்மையினை,

"மணன்மலிபெருந்துறைத்ததைந்தகாஞ்சியொடு
முருகுத்தாழ்பெழிலியநெருப்புறழடைகரை" (பதிற்-23)

எனவருதலா லுணரப்படும். ஈண்டுரையாளர் "ததைந்தகாஞ்சியென் றது விளையாட்டுமகளிர்பலருந் தளிரும் முறியுந் தாதும் பூவுங் கோட லாற் சிதைவுபட்டுக்கிடக்கின்றகாஞ்சி எ-று" எனவுரைத்ததனையு நோக்கிக்கொள்க. ஈண்டைக்கேற்ப மணன்மலிதல்குறியதனையும் பெருந்துறைகூறியதனையும் அப்பெருந்துறைகளிற் காஞ்சி ஆயம் அணிதற்கும் விளையாடுதற்கும் பயன்பட்டுநிற்றலையும் நன்றாராய்ந்து கொள்க.

"காஞ்சிப்பனிமுறியாரங்கண்ணிக்
கணிமேவந்ததவ்வல்குலவ்வரியே" (344)

எனப் புறப்பாட்டின் வருதலான் காஞ்சியின் குளிர்ந்தமுறிகளை மகளி ரணிதலுண்டென்பது உணரப்படும். "காஞ்சியம்பெருந்துறை மணலினும்பலவே" என்புழிக் காஞ்சி மரமாகாது யாறாயின் உரையா ளர் மலிபுனலையுடைமையான் யாறு மலிபுனலெனப்பட்டது என் றுரைகூறாது மலிபுனற்காஞ்சி என இயையத்துப் பொருள்கூறுவர் என்பதும் உய்த்துணர்ந்துகொள்க. புனலாடும் ஆயம் தாம் அணிந்து விளையாடுதற்கேற்ற மரங்களுள்ளதுறைகளையே விரும்பிச்செல்லு மென்பதும் உணர்ந்துகொள்க. இவையெல்லாம் ஆராயாது ஈண்டுக் காஞ்சி யாற்றின்பெயரென்றும், அவ்யாறு மேல்கடலில் வீழ்வதென் றும், அங்ஙனம் வீழ்வதென்று கூறுதலான் அது வேறுயாறே யாகாது பேர்யாறேயாகுமென்றும் துணிவது எத்துணைவாதத்துக்கு இடமாகும் என்பது யான்கூறியறிய வேண்டுவதன்று. இதுவும் பொருநையென்பது பேர்யாற்றுக்குப் பெயரென்று துணிந்ததனோ டொக்கும்.

இனி நின்மலைப்பிறந்து நின்கடன்மண்டும் யாறுகளென்று தமிழ் நாடுமுழுதையும் குடகமுதலிய பிறநாடுகளையும் செங்குட்டுவன் தன் னடிப்படுத்தாள்கின்ற சிறப்புப்பற்றித் தமிழ்நாட்டுள்ள பல்யாறு களையுங்குறித்தாரெனினும் இழுக்காது, தமிழ்முழுதாளும் அவ்வமய மேம்பாட்டை இவ்வாறுகுறித்தாரென்பது பொருந்திற்றேயாகும். சேரமான்பெருஞ்சோற்றுதியன்சேரலாதனை முடிநாகராயர் அவ் வமயத்து அச்சேரற்குள்ள மேம்பாடறியவே,

"நின்கடற்பிறந்தஞாயிறுபெயர்த்துநின்
வெண்டலைப்புணரிக்குடகடற்குளிக்கும்
யாணர்வைப்பின்னாட்டுப்பொருந" (புறம் - 2)

எனக் கூறியது காண்க.

எவ்வாறு நோக்கினும் பிறர் நினைக்கின்றவண்ணம் பொருநை என்பது பேர்யாறு ஆகுமென்று கனவினுநினையற்க. இதனானே பொருநையின்கரையிலுள்ள சேரர்கருவூர்வஞ்சிபேர்யாற்றங்கரைக்கு எவ்வாறு முயன்றாலும் எய்தாதென்பதும் திடமாகவுணர்ந்து கொள்க. பிறர் நூலினறியும், உரையின்றியும், வழக்கின்றியும் பொருநையைப் பேர்யாறென்றுசொல்லத்துணிந்ததெல்லாம் காவிரி யுடன்கலக்கும் பொருநைக்கரையிலுள்ளதென்று பன்னூலும் உரை யும் புலப்படுத்திய கருவூர்வஞ்சியைப் பேர்யாற்றங்கரையிலுள்ளதாகக் கூறிவிடுதற்கேயாமென்பது அறிவாளரெல்லாம் அறிவர். அங்ஙனம் அவர் கூறிவிட்டாலும் வஞ்சி யங்கேயுளதாகுமோ என்று ஈண்டுச் சிறிதாராய்வேன்.

பிறர்கூறும் சேரர்தலைநகர் கொடுங்கோளூர்வஞ்சியன்றோ? அது பழைய சேரர்கருவூர்வஞ்சியாயின் கருவூர்வஞ்சியாற்றங்கரையி லுளதாகப் பன்னூல்களும் கூறியபடி கொடுங்கோளூர்வஞ்சியும் யாற்றங்கரையிலிருத்தல் வேண்டுமே. அங்ஙனம் கொடுங்கோளூர் யாற்றாங்கரையினுள்ளதென்றும், அதனைக் கரையின்கண் உடைய யாறு பேர்யாறென்றும் கூறிய நூலொன்றையுங் கண்டிலமே. தேவா ரத்துக் கொடுங்கோளூரஞ்சைக்களம் கடற்கரையிலிருப்பதாகக் கூறியதன்றி யாற்றங்கரையிலிருப்பதாகக் கூறியதில்லையே.

இனிப் பேர்யாறு கடலொடுகலக்குமிடத்துள்ளதாகப் பழைய சங்கநூல் கூறியவூர் முசிரி என்பது,

"சுள்ளியம்பேர்யாற்றுவெண்ணுரைகலங்க
யவனர்தந்தவினைமாணன்கலம்
பொன்னொடுவந்துகறியொடுபெயரும்
வளங்கெழுமுசிரி"

என்னும் அகப்பாட்டான் அறியலாவது. கொடுங்கோளூர் அஞ்சைக் களம் ஈண்டுச்சொல்லப்பட்ட அடையாளமுடையதாயின் அது முசிரியேயாமன்றிச் சேரர் கருவூர்வஞ்சியாதல் யாங்ஙனம். முசிரியும் வஞ்சியும் ஓரூராகச்சொல்லவொண்ணாதே. பிறர் சேக்கிழார் கூறிய கொடுங்கோளூர்வஞ்சியைப் பழைய சேரரதுதலைநகராக்கவேண்டுத லான் அக்கொடுங்கோளூர்வஞ்சி கடற்கரையிடத்ததென்று தேவாரத் தானும், கண்கூடானும் கண்டதுகொண்டு எந்நூலினும் யாரும் கடற்கரையிடத்ததென்று கூறாததும், சோழநாட்டுப்பக்கத்தே உள்ளதென்று தெளிந்ததும், கொங்குநாட்டு ஆன்பொருநைக்கரையி லுள்ளதுமாகிய பழையசேரர் தலைநகரைக் கடற்கரையிடத்ததென்று கற்பிக்கத்தலைப்பட்டனர். கடற்கரையைக்கற்பித்தவிடத்தும் அதுவும் போதாது ஆன்பொருநைக்கரைவேண்டுதலான் ஆன்பொருநையை மேல்கடலில்விழவிடுதற்கு இயலாமையால் ஆன்பொருநையே பேர் யாறு என்று சொல்லிவிடலாமென்று துணிந்தனர். அப்பிறர் கூறுகிற படி பேர்யாறாகிய ஆன்பொருநைக்கரையும் கடற்கரையும் ஒன்றென நினைத்துக்கொண்டவிடத்தும் ஆண்டுள்ளது சேரர்தலைநகராகிய கருவூர் வஞ்சியாகாது; சேரர்கடற்றுறைப்பட்டினமாகிய முசிரியே யாய்முடிகின்றது. இதற்கென்செய்வது. இல்லது துணியுமிடத்து உண்டாந்தடுமாற்றம் இத்துணையோ? இன்னும் எத்துணையோ பலவாதல் காட்டுவேன்.

இங்ஙனம் ஆன்பொருநைக்கரையையும், கடற்கரையையுஞ் சேர நினைப்பதன்கணுண்டாம் விபரீதங்களை இனி விளக்கிக்காட்டுவேன். சேரர்தலைநகராகிய கருவூர்வஞ்சியுள்ள இடத்தை,

"வஞ்சிப்புறமதிலலைக்குங்
கல்லென்பொருநைமணலினுமாங்கட்
பல்லூர்சுற்றியகழனி
யெல்லாம்விளையுநெல்லினும்பலவே" (புறம்-387)

என்னும் அடிகள் நன்குவிளக்குவனவேயாகும். இவ்வடிகளிற் சேரர்தலைநகரின் புறமதிலைப் பொருநையென்னும்யாறு அலைக்கும் என்றும், அப்பொருநை அங்ஙனமலைத்தல்காரணமாகக் கல்லென ஒலிக்குமென்றும், ஒருபெரியகோட்டையின்மோதுதலான் அதிக மாக மணலைக்கரையிற்குவிக்குமென்றும், இவையெல்லாம்நிகழுமவ் விடத்துப் பல ஊர்கள் சுற்றியுள்ளனவென்றும், அவ்வூர்களெல்லாம் மிகுதியாக நெல்விளைகழனியுடையன என்றும் சில அடையாளங்கள் கூறப்பட்டுள்ளன. இவ்வடையாளங்களை ஓர்கடற்கரையூர் உடைய தாகுமா அல்லது அகநாட்டூர் உடையதாகுமா என்று சிறிதாராய்வே னாக. சேரர் தலைநகர் கடற்கரையிடத்தென்பார்க்கு அஃதான்பொரு நைக்கரையிலுள்ளதென்று தெளிந்தவாற்றான் அவ்வூர் ஆன்பொருநை கடலொடுகலக்குமிடத்திருப்பதாகத்தானே துணியவேண்டும். அங்ஙனமாயின், ஆண்டுப் பெருமணலுலகமென்று கூறப்பட்ட கடற் கரைமணலே அளவின்மைக்குவிஷயமாகவும், அதனைக்கூறாது அத னினும் எத்துணையோசிறிதாகக்காணப்படும் பொருநைகுவித்த மணலை அளவின்மைக்குவிஷயமாக்குவது உசிதமாகுமா? இது காறுங்கண்ட தொன்னூல்களில் எங்கேனும் ஆறு கடலொடுகலக்கு மிடத்து அவ்யாறுதொகுப்பது பெருமணலென்றுகூறியதுண்டா. யாறுகடலொடுகலக்குமிடத்துக் கடற்கரைமணலையுங் கடலுட் கொண்டுசெல்லுதலான் கடற்கரையையுமெலியச்செய்தலன்றி அக் கடற்கரையின்கண் மணலை யாறு குவிக்குமா? காவிரி கடலொடு கலப்பதைப்பற்றிச்சொல்லுமிடத்துக் "கடற்கரைமெலிக்குங்காவிரிப் பேர்யாறு" என்றன்றோ புலவர் கூறுகின்றனர். கடலுள்ளவிடத் துக் கடற்கரைமணலையே கூறுவரென்பது,

...........................தாழ்நீர்
வெண்டலைப்புணரியலைக்குஞ்செந்தி
னெடுவேணிலை இயகாமர்வியன்றுறைக்
கடுவளிதொகுப்பவீண்டிய‌
வடுவாழெக்கர்மணலினும்பலவே"

என‌ வ‌ருத‌லான‌றிக‌.க‌ட‌லுள்ள‌விட‌த்து ஆற‌லைத‌தல*கூறாது புண‌ரி ய‌லைக்குஞ்செந்*தில் என்ற‌த‌னையும் நோக்குக‌.இஃத‌ன்றியும் க‌ல்லென‌* பொருநை என்று கூறுத‌லால் யாறுக‌ல‌*லென‌ ஒலித்த‌லைப் புல‌ப் ப‌டுத்துகின்றார்,ஆண்டுஆர‌*க‌லிய‌ன்றோ பெரிதாகும். அத‌னொலியைக் கூறாது யாற்றொலியையே மிகுத்துக் கூறுத‌ல் பொருந்துமா, இனி அலைக்குங் க‌ட‌ல‌ங்க‌ரைமேன்ம‌கோதை" என்றன்றோ சுந்த‌ர‌மூர்த்தி நாய‌னார் கொடுங்கோளூர‌ஞ்சைக்க‌ள‌த்தைப் பாடுகின்றார்.அவ‌ர் பாடிய‌வாறு க‌ட‌ல‌லைப்ப‌தைக்கூறாமல் அவ்வூரையே யாறலைப்பாதாகக் கூறியதென்னோ.இது நிற்க. "ஆங்கட்,பல்லூர்சுற்றியகழனி யெல் லாம்விளையுநெல்லினும்பலவே" என்று கூறிய அடையாளம் ஒரு கடற்கரையூர்க்குப் பொருந்துமா?கடற்கரையூரைப்பல்லூர் சுற்றுத லெப்படி? இதனாலிவ்வடிகளிற்கூறிய அடையாளங்களிலொன்றேனும் கடற்கரையூருக்குப் பொருந்தாதென்றும், எல்லாம் அகநாட்டூர்க்கே பொருந்துவன என்றுமுணருமாற்றான் ஈண்டுக்கூறியவஞ்சி கடற்கரையிலுள்ள மகோதையாகிய கொடுங்கோளூராகாமையும், கொங்குநாட்டுஆன் பொருநைக்கரையிலுள்ள கருவூரேயாதலும் தெளிந்துகொள்க. இவ்வுண்மையானன்றே சங்கரசோழனுலாவுடையார்,

..... ..... .. .. ... கோம‌க‌ன்
வ‌ஞ்சிக்குமோதைம‌கோதைக்குமாம‌துரை
யிஞ்சிக்குங்கொற்கைக்குமேறுதொறும்"

என‌ ம‌கோதையாகிய‌ கொடுங்கோளூரின்வேறாக‌ வ‌ஞ்சியைக் கூறினா ரென‌வுண‌ர்க‌.இதைப்ப‌ற்றி மேலும் விள‌க்குவ‌ல்.

இனிப் ப‌ழைய‌ சேர‌ர்த‌லைந‌க‌ராகிய‌ வ‌ஞ்சி மேல்க‌ட‌ற்ப‌க்க‌த்த‌தா மென்ற‌‌ற்கு ஆத‌ர‌வாக‌ ஒருசெய்தி கூறுவார்பிற‌ர்.அஃதாவ‌து ப‌ராச‌ர‌ னென்னும் அந்த‌ண‌ன் சோணாட்டுத்தலைச்செங்காட்டினின்று சேர‌ன் கொடைத்திற‌ங்கேட்டுப் ப‌ரிசில் பெற‌ப்போம்போது

"காடுநாடுமூரும்போகி
நீடுநிலைம‌ல‌ய‌ம்பிற‌ப‌ட‌ச்சென்றாங்கு" (சில‌ப்-க‌ட்டுரை.)

என்ப‌த‌னால் பொதிய‌ம‌லையைக்க‌ட‌ந்துசென்றானென‌வும்,ப‌ரிசில் பெற்று மீளும்போது "செங்கோற்றென்ன‌ன்ற‌ங்காலூரிற் போதி ம‌ன்ற‌த்து" த்த‌ங்கியிருந்தானென‌வும் சில‌ப்ப‌திகார‌ம் கூறுத‌லாற்
சேரன்ஊர் மேல்கடற்பக்கத்திருந்தாலல்லது சோணாட்டுப் பார்ப் பான் போம்போது பொதியத்தைக் கடந்துபோதலும், மீளும்போது பாண்டிநாட்டூராகிய திருத்தங்காலிற்றங்குதலும் நிகழாவென்பதே யாம். சிலப்பதிகாரத்து இப்பராசரன் செய்தி கூறியவிடத்து,

" வலவைப்பார்ப்பான்பராசரனென்போன்
குலவுவேற்சேரன்கொடைத்திறங்கேட்டு
வண்டமிழ்மறையோற்குவானுறைகொடுத்த

நீடுந்லைமலயம்பிற்படச்சென்று............
பார்ப்பனவாகைசூடியேற்புற"
நன்கலங்கொண்டுதன்பதிப்பெயர்வோன் ( சிலப்-கட்டுரை)

என வருதல்காணலாம். ஈண்டுக்கூறப்பட்ட சேரன் எக்காலத்தவ னென்றும், யாவன் என்றும் வினாவறியவேண்டுவ தின்றியமையா தது. இப்பார்ப்பான் சேரன்பாற்பரிசில்பெற்று மீளும்போது பாண்டி நாட்டுத் திருத்தங்காலென்னுமூரிற் போதிமன்றத்துத் தங்கியிருந் துழி அவன் ஆண்டுவந்துவிளையாடும்பார்ப்பனச்சிறாரைநோக்கி என் னுடன் வேதமோதவல்லீராயின் ஓதி என்பரிசிற்சிறுபொதியைக் கொள்ளுக என்றளவில் அவ்வூர் வார்த்திகன்புதல்வன் தனக் கொப்ப ஓதலான் அவனைவியந்து தன்பொதியின்கணுள்ள முத்தப் பூணூலத்தகுபுனைகலன் கடகந்தோட்டோடு பிறவும் அச்சிறுவற்குக் கையுறையீத்துப்போக நிகழ்ந்ததுதெரியாது கோத்தொழின்முறை யவர் பாண்டியற்குரிய படுபொருள்கவர்ந்த பார்ப்பானிவனென்று அப்புதல்வன்றந்தையாகிய வார்த்திகனைச் சிறையிலிட அவ்வார்த்தி கன்மனைவி அலந்தழுதேங்கிப் புரண்டுபுலந்துபொங்கினவளாக; அது கண்டு ஐயைகோயிற்கதவுதிறவாதாக: இதுகேட்டுப் பாண்டியன் மயங்கி கொற்றவைக்குற்றதுஅறிந்துரைமின்னென வார்த் திகனைச் சிறைசெய்தசெய்திகூறக்கேட்டு இறைமுறைபிழைத்த துணர்ந்து வார்த்திகனைப்பொறுத்தருளுமாறு இரந்து அத்திருத்தங் காலையும் வயலூரையும் அவற்கீத்து அவனை நிலந்தோயவணங்கியவள வில் அச்சிந்தாதேவிகோயிற்கதவந்திறந்தது; திறந்தவுடன் உறுபொருளேனும் படுபொருளேனும் இனி யுற்றவர்க்குறுதி பெற்றவர்க் காகுமென்று யானைமேன் முரசறைவித்தான். அங்ஙனம்,

" யானையெருத்தத்தணிமுரசிரீஇக்
கோமுறையறைந்தகொற்றவேந்தன்
றான்முறைபிழைத்ததகுதியுங்கேணீ" ;( சிலப்-கட்டுரை)

என்று கண்ணகியைநோக்கி மதுரைமாதெய்வங்கூறுதலான் இப்பரா சரனீந்த பொருள்காரணமாகச் சிறைப்பட்ட வார்த்திகனைச் சிறை வீடுசெய்து உவப்பித்துக் கலையமர்செல்விகதவந்திறப்பித்தவன் கோவலனைக்கொல்வித்து அரசுகட்டிலிற்றுஞ்சிய நெடுஞ்செழியனே யென்பது நன்றுதெளியப்படும். இப்பாண்டியன்காலத்துச்சேரன் செங்குட்டுவனென்பது சிலப்பதிகாரம் வஞ்சிக்காண்டத்தானறியப் படும். பராசரனுக்குப்பரிசினல்கியசேரன் இச்செங்குட்டுவனே யாயின், இளங்கோவடிகள் இவனை விளங்கவுரையாதிரார். மற்றிவன் காலத்தே சேரன் வேறுளனோ என ஆராய்வோம். செங்குட்டுவன், நெடுஞ்சேரலாதனுக்கும் சோழன் மணக்கிள்ளி என்பாளுக்கும் பிறந் தமகனென்பது பதிற்றுப்பத்து ஐந்தாம்பத்தாலறியப்படும். நெடுஞ் சேரலாதனுக்கும் வேளாவிக் கோமான்பதுபமன்றேவிக்கும் பிறந்த மகன் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனென்பது பதிற்றுப்பத்து ஆறாம் பத்தாலறியப்படும். இதனாற் செரன் செங்குட்டுவனும், ஆடுகோட் பாட்டுச் சேரலாதனும் ஒருதந்தையின் புதல்வராவர். இவருட் செங் குட்டுவன் வஞ்சியிலரசுசெய்தவன் என்பது சிலப்பதிகாரத்தானன்கு தெளிவது. ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் மேல்கடற்கரையை யடுத் துள்ள நறவு என்னும் ஊரின்கண் இருந்தவன் என்பது பதிற்றுப் பத்து ஆறாம்பத்தால் நன்கறியப்படுவது: இவ்வாடுகோட்பாட்டுச் சேரலாதனே இளங்கோவடிகளாற்கூறப்பட்ட வேற்சேரனென்ப தற்கும் ஆதரவாகச் சில கூறுவல்.

சிலப்பதிகாரத்து இச்சேரனைப்பற்றியவிடத்துக் ' குலவுவேற் சேரன்' எனவும், ' நெடுவேற்சேரன்' எனவும், 'வண்டமிழ்மறை யோற்கு வானுறைகொடுத்தவன்' எனவும், இவன் கொடைத்திறங் கேட்டுப் பராசரன் சென்றானெனவுங் கூறியுள்ளார். இதன்கட் கூறப்பட்ட வண்டமிழ்மறையோற்கு வானுறை கொடுத்தவன் இமய வரம்பன்றம்பியென்பது மூன்றாம்பத்தானன்கறியப்பட்டது. செங் குட்டுவற்குமுன்னே இறந்தசேரர்வரிசையில்,

" நான்மறையாளன்செய்யுட்கொண்டு
மேனிலையுலகம்விடுத்தோனாயினும்"
... .... ...
" மீக்கூற்றாளர்யாவருமின்மையின்
யாக்கைநில்லாதென்பதையுணர்ந்தோய்"

என்பதனால், இமயவரம்பன்றம்பியையுங்கூறியவாற்றான் அம்முன் னோன்செய்தியாலிவனைச் சிறப்பித்ததன்றி இவன் அவனாகானென்பது நன்குணரப்படுவதாகும். இஃதொன்றொழியவுள்ள அடையாளங்கள் வேலும், கொடைத்திறமுமேயாகும். ஆறாம்பத்து முதற்பாட்டில் இவ்வாடுகோட்பாட்டுச்சேரலாதனை,

" வென்வேலண்ணன்மெல்லியன்போன்மென
வுள்ளுவர்கொல்லோநின்னுணர்ந்தினோரே"

என்பதனால் இவ் வாடுகோட்பாட்டுச்சேரலாதனை வேலண்ணல்எனக் கூறுதல்கொண்டு இவனைக் 'குலவுவேற்சேரன்' எனவும் 'நெடுவேற் சேரலன்' எனவும் இளங்கோவடிகள் கூறினாரென்றுணரலாம். இவன் கொடைத்திறத்தைப்பற்றியாராயுமிடத்து இவனைப்பதிற்றுப்பத்துள்,
" வாராராயினுமிரவலர்வேண்டித்
தேரிற்றந்தவர்க்கார்பதனல்கு
நகைசால்வாய்மொழியிசைசாறோன்றல்"

எனச்சிறப்பித்தல் காணப்படும். இதனுரைகாரர் " ஈண்டு இரவலரை வேண்டியென்றது தன்னாட்டு இரவலரின்மையின் அவரைப்பெற விரும்பி எ - று. தேரிற்றந்து என்றது அவ் விரவலருக்கு அவருள் வழித் தேரைப்போகவிட்டு அதிலே அவர்களைவரப்பண்ணி எ - று. தேரான் என உருபுவிரிக்க; தேர் எனத் தேர்ச்சியாக்கி அவ் விர வலரை அவருள்ளவிடத்திலே தேடி அழைத்து என்றுமாம்" என விளக்கினார். இவற்றால் இவன் தன்னாட்டு இரவலரில்லையாக வழங் கினான் என்றும், அவ் விரவலரைவேண்டிப் பிறர்நாட்டுத்தேடித் தேரைப்போகவிட்டு, அவரை அதிலேவரப்பண்ணி அவர்க்குநிரம்பிய துப்புரவனைத்தும் வழங்கினானென்றும், இங்ஙனம் கொடுக்கும் ஆசை யேநிரம்பிய சத்தியகீர்த்திமானிவனென்றும் நன்கறியலாகும். வேறி யாரிடனுங்காண்டற்கரிய இவ் வரியபெரிய வள்ளன்மையினையே இளங்கோவடிகள் கொடைத்திறம் என்ற அழகியதொடரான் விளக் கினாரென்று துணியலாம். இவன் பார்ப்பார்க்குக் கோதானமும் பூதானமுஞ்செய்து குழவிகொள்வாரிற்குடிபுறந்தந்தவன் என் பது ஆறாம்பத்துப்பதிகத்தாலறியலாம். இத்தகையபெருவண்மைகரு தியே வண்டமிழ் மறையோர்க்குவானுறை கொடுத்தோனாக இவனை அடிகள் சிறப்பித்தாரென்றுணரலாம். இன்னு மிவனை, "இரவலர் புன்கணஞ்சும் புரவெதிர்கொள்வன்" எனவும், "இரவன்மாக்கள் சிறு குடிபெருக, வுலகந்தாங்கிய மேம்படுகற்பின், வில்லோர்மெய்ம்மறை" எனவும் பாடுதலல்லாமல், "வள்ளியையென்றலிற்காண்குவந்திசினே" எனச்சிறப்பித்தலையும் ஆண்டுக்காண்க. "வள்ளியையென்றலிற் காண்குவந்திசினே" என்னும் அடி குலவுவேற்சேரன் கொடைத்திறங் கேட்டுப் பராசரன்பரிசிற்குச்சென்றான் என்றதற்கு மிகவும் பொருந்த ***ல் உய்த்துணர்ந்துகொள்க. இவனே வேலண்ணல் ஆதலானும் ***னே யாரினுமிக்ககொடையாளனாதலானும் பராசரன் இவன்பாற் சென்றானென்றே ஒருதலையாகத்துணியப்படுமென்க. இவன் கடற் கரைப்பக்கத்தூர்க்கணிருந்தனன் என்பது--

"தொடைமடிகளைந்தசிலையுடைமறவர்
பொங்குபிசிர்ப்புணரிமங்குலொடுமயங்கி
வருங்கடலூதையிற்பனிக்கும்
துவ்வாநறவின்சாயினத்தானே" (பதிற்று - 60)

எனப்பதிற்றுப்பத்துள் இவனிருக்குமிடங்கூறுதலா னுணரப் படும். இதனுரைகாரர், "மறவர்கடலுதையிற்பனிக்குநறவெனக்கூட்டி ஆண்டுவாழுமறவர் கடலூதையான்மட்டும் நடுங்கும் நறவு என்க. நறவு - ஓரூர். துவ்வாநறவு வெளிப்படை" என விளக்கியதனானும் இத னுண்மை உணரலாம். கடலூதையிற்பனிக்கு நறவு என்றதனால் இந் நறவூர் கடற்கரைக்கு நெடுந்தூரமாயதென்று கருதற்கியலாமை காண்க. இவனைப்பற்றிய முதற்பாட்டில்,

"விளங்கிரும்புணரியுருமெனமுழங்குங்
கடல்சேர்கானற்குடபுலமுன்னிக்
கூவற்றுழந்ததடந்தாணாரை
குவியிணர்ஞாழன்மாச்சினைச்சேக்கும்" (பதிற்று-51)

எனக்கூறுதற்கண் "குடபுலமென்றது தன்நகரிக்கு மேல்பாலாம்" என்று உரைகாரர் கூறுதலானும், நூலுட் "கடல்சேர்கானற்குடபுலம்" என்றிருத்தலானும் இவ்வரசனகரிக்குமேற்கே கடல்சேர்ந்தகானற் புலமிருப்பதென்று புலப்படுதலான் இந் நறவூர் கடலாற்பனிக்காது கடலூதையாற்பனிக்கக்கூடிய அளவாக மேல்கடற்பக்கத்துள்ள தென்று தெளிந்துகொள்ளலாம். மேற்சொற்றபராசரன் இவ்வேற்சே ரன்கொடைத்திறங்கேட்டு இவனிருக்கும் கடல்சேர்கானற்குடபுல நறவூர்க்குச் சென்றானாதலாற் பாண்டிநாடுகடந்து மலையம்பிற்படப் போனானென்றும் மீளும்போது பாண்டிநாட்டுத்திருத்தங்காலிற் றங்கினானென்றும் உணர்ந்துகொள்க. இதனாலிப்பராசரன் செங் குட்டுவன்வஞ்சிநோக்கிவந்தவனில்லையென்பதும் தெற்றெனத் தெளிக.

சேரன்பாற்சென்றுபோந்த சோணாட்டுப்பராசரன் பாண்டிநாட் டையும் மலையத்தையும் இடைவைத்துக் கடத்தல்காரணம் இஃ தென்று ஆராயாமலே கொங்குநாட்டுள்ள பழையசேரர்தலை நகரை மேற்குத்தொடர்ச்சிமலைப்பக்கத்துள்ள கடல்நாடுகளிலுய்க்க முயன்றனர் பிறர். சேக்கிழார், கொடுங்கோளூரை இராமனிருக்குங் காடும் அயோத்திஎன்பதுபோலப் பிற்காலத்துச் சேரர்குலத்தவரிருத் தலைப்பற்றி வஞ்சியென்று வழங்கியதைத்துணையாக்கொண்டு அதனைப் பழைய சேரர்தலைநகரென்று கூறிவிடலாமென்றுதுணிந்து சேக்கிழார் வஞ்சியென்ற ஊர் ஆர்க்குங்கடலங்கரைமேலிருத்தலைநோக்கிப் பழையசேரர்வஞ்சியுங் கடலுடையதானாலல்லது கொடுங்கோளூ ரென்றுசொல்லுதல் பொருந்தாதென்றுகண்டு பழைய சேரர்வஞ்சிக் குங் கடலையுண்டுபண்ணத்தலைப்பட்டனர் பிறர். இஃதொரு ஸகர ப்ரயத்நமேயாகும்; மேல்கடலாதலின் யாராலும் ஸாதிக்கப்படாமற் போவதென்பதறிக.

தமிழ்நூல்களில் ஓரூர் கடலடுத்ததாயின் அவ்வூரைச்சொல்லு மிடத்து அது கடலுடைமைவிளங்கவே பாடப்படுமென்பது முசிரி, தொண்டி, மாந்தை, கொற்கை, மருங்கூர்ப்பட்டினம், புகார் முதலிய பழைய ஊர்களைப்ப்பற்றி ஆங்காங்குவரும் பாடலகளாற்ரெளியப்படும். நேரேகடல் கூறாதொழியினும் கடனிலத்துள்ளதென்றுபுலப்படக் "கானலந்தொண்டி","தொண்டியங்காண‌ல்" என்றாற்போலவேனும் விளங்கப்படாமை நல்லிசைப்புலவர் வழக்கன்று. இதனுண்மையைத் தமிழ்கற்றாரெல்லாம் நன்கறிப.வஞ்சியைப்பற்றிய பழையபாடல்கள் தமிழில் நூற்றுக்கணக்காகவுள்ளன; அவற்றுளொன்றேனுங் கடலு டமைபற்றி வஞ்சியைச்சிறப்பித்ததாக யான் கண்டிலேன்."வஞ்சி யங்கானல்" என யாண்டும் பயிலாமை ஈண்டைக்கு நினைக்கத்தகும். இங்ஙனம் வழங்காமை மாத்திரமன்று"வஞ்சியம்பூம்புறவின்"என இறையனார்களவியலுரைமேற்கோளில் வேறாகவும் வழ‌ங்கியுள்ளது. மணிமேகலையில் இவ் வஞ்சியைப்பற்றிய அடிகள் பலபல வுள்ளன. அவற்றுளொன்றானும் இது கடலுடைமைகாணப்படுதலில்லை.இவ் வாறுகாணப்படாமைமட்டுமன்று;கடலுடைமைக்குவிரோதமான செய்தியொன்றும் அது புலப்படுத்துகின்றது.அஃதாவது இன்ன தென்று காட்டுவல்-கடற்கரையிற் சோழர்பெருநகராகிய காவிரிப் பூம்பட்டினம் இந்திரவிழவைமறந்ததனாலுண்டாகிய தேவசாபத்தாற் கடல்கொள்ளப்பட்டதெனவும்,அக் கடல்கோளால் நெடுமுடிக்கிள்ளி யாகியசோழன் அவ்வூரைவிட்டுத் தனியேபோயினன் எனவும்,ஆங் கிருந்த அறவணவடிகளும் மணிமேகலையினுடையதாயரும் அக் கடல்கோளால் வருந்தாதுபோய் வஞ்சிமாநகரத்துப்புக்கனரெனவும் மணிமேகலை நூல் கூறுகின்றது.இதனை,

.... வொருதனிபோயினனுலகமன்னவ‌
னருந்தவன்றன்னுடனாயிழைதாயரும்
வருந்தாதேகிவஞ்சியுட்புக்கனர்"

எனவும்,

"மனங்கவல்கெடுத்துமாநகர்கடல்கொள
வறவணவடிகளுந்தாயருமாங்குவிட்
டிறவாதிப்பதிப்புகுந்ததுகேட்டதும்"

எனவும் வருவனவற்றாலுணுர்ந்துகொள்க. ஓருர் கடல்கொள்ளும் போதிலோ அன்றி அக்கடல்கோளைத் தெரிந்தபோதிலோ அவ்வூரை விட்டுஓடுவார் கடல்கோளுக்கெட்டாதென்று தாம் தெரிந்துகொண்ட அகநாட்டு ஊர்கட்கே சென்றொடுங்குவரென்பது யான்கூறியறிவிக்க வேண்டுவதன்று. புகார்ச்சோழன் உறையூர்புகுந்தானென்பது திண்ணமாகநினைக்கப்படும். அறவணவடிகள் தாயருடன் உறை யூருட்புகாமல் ஒருநான்குகாவதம் அப்பாற்போய்க் குடபுலவஞ்சி யுட் புக்கனாவர். சோழன் இந்திரவிழாவெடாத தவற்றாலன்றே அவனுள்ளபுகாரைக் கடல்கொள்வது. இக்கேட்டுக்குக்காரணனான சோழனுடையநாடே தம்போன்றமாதவர்க்குத் தங்குதற்குரியதாகா தென்றுகொண்டு சேரநாட்டுவஞ்சியுள் அறவணவடிகள் தாயருடன் புக்கிருந்தனரென்றுய்த்துணரப்படும். " வருந்தாதேகிவஞ்சியுட்புக்க னர்" எனவும், " இறவாதிப்பதிப்புகுந்தது" எனவும்கூறுதலைநோக்கிக் கொள்க. இனிப் பிறர்நினைக்கின்றபடி இவ்வஞ்சி மேல்கடற்கரைக் கண்ணதாயின் பராசரன்செல்வழியே இவ் வறவணவடிகட்கும் வழி யாதலான் இடையிற் பாண்டிநாட்டுமதுரையிற்றங்காது மற்றுமோர் கடற்கரையூர்க்கே அறவணவடிகள்சென்றாரென்றோமுடியும். அங்ஙனமாயின் மதுரையிற்றங்காமைக்கும் கடல்கோளுக்கஞ்சிப் பின்னுமோர் கடலையேயடைதற்கும் காரணங்கூறல்வேண்டும். மேல் கடற்கரையின்கண் வஞ்சியைநிறுவநினைப்பார்; இவற்றுக்கெல்லாம் பொருந்தவுரைக்கலாகுமோ என்று ஆராய்ந்துகொள்க. இஃதன்றி யும் அம் மணிமேகலையுள் காஞ்சிக்கும் வஞ்சிக்கும் போக்குவரத்துக் கூறப்படுதல் கற்றார்பலரும் அறிவர்.

" பொன்னெயிற்காஞ்சிநாடுகவினழிந்து
மன்னுயிர்மடியமழைவளங்கரத்தலி
னந்நகர்மாதவர்க்கையமிடுவோ
ரின்மையினிந்நகரெய்தினர்காணாய்"

எனவும்,

" ஆங்கவன்றானுமறத்திற்கேதுப்
பூங்கொடிகச்சிமாநகராதலின்
மற்றம்மாநகர்மாதவன்பெயர்நாட்
பொற்றொடிதாயருமப்பதிப்படர்ந்தனர்"

எனவும் வருவனவற்றாற் காஞ்சிநாடுபஞ்சம்பட்டபோது ஆங்கிருந்த மாதவர் வஞ்சிவந்தெய்தினரென்றும் பின் இவ் வஞ்சியிலிருந்த அற வணவடிகள் தாயருடன் காஞ்சிக்குப்போயினாரென்றும் அறியப்படும். காஞ்சிநாட்டையுடைய தொண்டைநாட்டையடுத்துள்ளது கொங்குநாடேயாதலான் காஞ்சி பஞ்சம்பட்டவளவில் அடுத்துள்ள கொங்குநாட்டுவஞ்சியுள் மாதவர் எய்தினரென்பதே பொருந்திற் றாகும். போக்குவரத்துக்கு எளிதாயநெறியுடையதும் மேல்கடற்கரை போல நெடுந்தூரமாகாததும் கருவூர்வஞ்சியேயென்பது எளிதிலுண ரத்தகும். அறவணவடிகள் புகார் கடல்கொள்ள வஞ்சியுட்புக்கன ரென்றதனோடு பொருந்தனோக்குமிடத்து யான்கூறுவதேபொருத்த முடைத்தாதலுணர்க.

இனிப் பதிற்றுப்பத்துள் மூன்றாம்பத்துப்பதிகத்துக்,
"கருங்களிற்றியானைப்புணர்நிரைபூட்டி யிருகடனீருமொருபகலாடி"

என்பதனால் ஒருசேரனுடைய அரியபெரியசெய்தியொன்று கூறப் பட்டுள்ளது. இச் செய்தியையே இளங்கோவடிகளும் "இருகடனீரு மாடினோனாயினும்" என்பதனாற்கூறினார். இச்செய்தி இமயவரம்பன் றம்பியுடையதாயினுமாகுக. வேறொருசேரனுடையதாயினுமாகுக. அஃதீண்டைக்கு ஆராய்ச்சியின்று. சேரவரசனொருவன் இச்செய்தி நிகழ்த்தினானென்பதுமட்டி லிஃதுணர்த்தாதிராது. பதிற்றுப்பத் துரைகாரர், "இருகடலுமென்றடு தன்னதாயமேல்கடலும்பிறநாட்ட தாய்ப் பின்புதான்பொருதுகொண்டுதன்னாடாக்கியநாட்டிற் கீழ்கட லும் எ-று. கருங்களிற்றியானைப்புணர்நிரைபூட்டி, யிருகடனீருமொரு பகலாடியென்றது அவ்விருமுந்நீரும் ஒரு பகலிலேவரும்படி யானை களைநிரைத்து அழைப்பித்து ஆடி எ-று" எனவுரைத்தார். இதன் கட் குறிக்கப்பட்டது விஜயாபிஷேகமேயாமென்பது பிறநாட்டை வென்று தன்னதாக்கினானென்பதனா லுய்த்துணரப்படும். விஜயாபி ஷேகத்துக்குரிய விஜயாஸனம் பெருவேந்தர்கோயிலகத்ததென்பது மாநஸாரநூலகத்துட்கண்டுகொள்க. அந்நூலார் பிரதமாஸனம், மங்களாஸனம், வீராஸனம், விஜயாஸனம் எனப் பலகூறுவர். அவற்றையெல்லாம் ஈண்டுரைப்பிற்பெருகும். சேரன் தன்கோயி லுள்ளதலைநகர் கீழ்கடல்மேல்கடல் இரண்டிற்கும் நெடுந்தூரமாக இருத்தல்காரணமாகவே அவ்விரும்முந்நீரையும் ஒருபகலிலே அழைப் பித்தற்குவகைதேடித் தன் பெருநகர்க்கிருபக்கத்தும் கடல்களி னெல்லைவரை யானைகளைநிரைத்து இருமுந்நீரையுந்தருவித்துக் கொண்டானென்றுணரப்படும். மேல்கடற்கரையிற்கோயிலுடைய னாயின் மேல்கடலிலேநின்றே கீழ்கடனீரையாடினான் என்றன்றோ சிறப்பித்துப்பாடுவர். இருகடலுமாடுதலையன்றோ ஈண்டுப்பெருஞ் சிறப்பாகக்கூறுகின்றார். இதனாலிருகடலும் அதிகதூரமான நிலையிற் சேரன்கோயிலிருத்தல் செவ்வனம்புலப்படும். இச் செய்தியை " அயிரைபரைஇ" என்று அயிரைமலையிற் கொற்றவைக்கடவுளைப் பரவுதலுடன்கூறினார். அதுவும் ஒரு வீர்ச்செயலாதலான்; என்னை யெனின் பகைவர் நிறம்படுகுருதியானன்றி அக் கொற்றவை பலி கொள்ளாளென்பது கேட்கப்படுதலான் அங்ஙனம் அத்தெய்வத்தை வழிபட்டதனையும் ஓர் அரிய செயலாக்கி இப் பெருஞ்செயலோடு கூறினார் எனவறிக. இவ் விருகடனீருமொருபகலாடியசெய்தி கருவூர்வஞ்சிக்கு எவ்வளவு அழகாகப்பொருந்துவதென்பது ஈண்டு யான் கூறவும் வேண்டுவதோ.

இவற்றுளொன்றையும் ஆராயாது வஞ்சி கடற்றுரைப்பட்டின மாகுமென்று தாமே நினைத்துக்கொண்டு,

" அளந்துகடையறியாவருங்கலஞ்சுமந்து
வளந்தலைமயங்கியவஞ்சிமுற்றத்
திறைமகன்செவ்வியாங்கணும்பெறாது
திறைசுமந்துநிற்குந்தெவ்வர்போல"

என்னுஞ் சிலப்பதிகாரத்துள்ள "கலம்" என்னும் சொல்லையேகண்டு வஞ்சி கடலுடையதாதற்காதாரமாக இவ்வடிகளைக்காட்டினாருமுளர். அவர்க்கு ஈண்டை அருங்கலம் அரியமரக்கலம் என்பதாம். அதனால் அவர்கொள்ளும்பொருள் பலபண்டம் நாவாய்சுமந்துவந்து தலைமயங் கிய வஞ்சிமுற்றம் என்பதாம். இவரிங்ஙனங்கூறுவதுபொருந்துமோ என்றாராய்வேன். இவ்வடிகட்குரைகூறுமிடத்து அரும்பதவுரையா சிரியர் " அளந்துகடையறியாஎன்பதுமுதல் திறையிடுவார்க்கு அடை" என்று சிறார்க்கும் உரைவிளங்க இனிதுரைத்திருக்கவும் அவ் வினிய உரைக்கு உடன்படாது வேறுகூறுவது வஞ்சிக்குக்கடலுண்டு பண்ணுதற்கேயென்று எளிதிலுணரலாம். ஈண்டு வஞ்சிமுற்றமென் றது வஞ்சியிலுள்ளமுற்றம் என்றவாறாம். அம்முற்றம் கோயின் முற்றமேயென்பது இறைமகன்செவ்வியாங்கணும்பெறாது அம்முற்றத்தே திறைசுமந்து தெவ்வர்நிற்குந்தன்மைகூறுதலா னுணரப் படும். தெவ்வர்திறைசுமந்துநிற்கும் அக்கோயின் முற்றத்துப் பலபண்டம் நாவாய்சுமந்துவந்து தலைமயங்குதல் ஏனோ? கடல்வழி யாக நாவாய்சுமந்துவந்தபலபண்டங்கள் அவ்வப்பண்டசாலைகளி லன்றோவுய்க்கப்படும் " பௌவத்துநன்கலவெறுக்கைதுஞ்சும்பந்தர்" ( பதிற்-55 ) எனப் பௌவத்திலேவந்த நன்கலமாகியசெல்வந்துஞ்சும் பண்டசாலைகள் கடற்கரையூரிற்கூறப்படுதல்காண்க. கோயின்முற் றத்துவருதற்கும், வந்துதலைமயங்கிக்கிடத்தற்கும் ஏதுவேயில்லா மையுணர்க. இனிப் பலபண்டங்களை அரிய மரக்கலங்கள் சுமந்தால் அதனால் வஞ்சிமுற்றம் தலைமயங்காதென்பது நன்றறிந்துகொள்க. சுமந்தநிலை பண்டங்கள்மரக்கலங்களிலிருக்குநிலையையன்றோ உணர்த்தும். வங்கத்திற் பலபண்டங்களிருத்தல்காரணமாக வஞ்சி முற்றம் வளந்தலைமயங்குமோ? மயங்காது. மற்றெதனாலாமெனின் அவ் வருங்கலங்கள் அப் பண்டங்களைச்சொரிந்தாலொருகாலாகும். அப் பிறர்கூறுவதே கருத்தாயின் " அருங்கலஞ்சொரிந்துவளந்தலை மயங்கிய" எனப்பாடுவாரென்க. ஈண்டுச்சுமந்துஎன்னுஞ்சொல் விரோதமாகஇருத்தலையுணர்த்தும். அதுதலைமயங்கியஎன்பதனுடன் தம் கருத்துப்படி இயையாமையைத்தெரிந்தும் வந்து என்றொரு சொல்லை அதன்பின்னேபெய்து சுமந்துவந்து எனப் பிறர்பொருள்கூறி னாரென்று உணர்ந்துகொள்க.

இவ்வாறெல்லாமிடர்ப்படாமல் இவ்வடிகளின் உண்மைப் பொருளிஃதென்று துணியுமாறு கூறுவேன். இச் சிலப்பதிகாரத்து வஞ்சியைக்கூறியாங்கு மதுரைக்காஞ்சியில் மாங்குடிமருதனார் மது ரையைக்கூறியுள்ளார். அது,

"நாடரவந்தவிழுக்கலமனையத்துங்
கங்கையம்பேரியா றுகடற்படரந்தா அங்
களந்துகடையறியாவளங்கெழுதாரமொடு
புத்தேளுலகங்கவினிக்காண்வர
மிக்குப்புகழெய்தியபெரும்பெயர்மூதூர்"

என்பது. இதனுள் விழுக்கலமனைத்தும் அளந்துகடையறியா வளங் கெழுதாரமொடு காண்வரப்புகழெய்தியமூதூர் என்று கூறியதன் கருத்தும், அள‌ந்துகடையறியாவருங்கலஞ்சுமந்து வளந்தலைமயங்கிய வஞ்சி என்றதன் கருத்தும் பெரும்பாலும் ஒத்தல்காண்க. இம் மதுரைக்காஞ்சியுரையில் நச்சினார்க்கினியர் "நாட்காலத் தேதிறையாகக்கொண்டுவரவந்த சீரியகலங்களும் அத்தன்மையனபிறவும் கங்கை யாகிய அழகிய பேரியாறு ஆயிரமுகமாகக் கடலிலேசென்றாற்போல அளந்துமுடிவறியாதமதுரை" எனப்பொருள்கூறினார்.ஈண்டு "விழுக்கலம்" திறையாகக் கொண்டுவர‌வந்த சீரியகலங்கள் எனப்பொ ருள்பண்ணப்பட்டதனை நன்றுநோக்கிக்கொள்க.இதற்கேற்பவே சிலப்பதிகாரவரும்ப‌தவுரையாசிரியர் "அளந்துகடையறியா என்பது முதல் திறையிடுவார்க்குஅடை"என்றதனையும் நோக்குக.மதுரைக் காஞ்சியில் விழுக்கலம் என்று கூறியதுதானே ஈண்டு அருங்கலமெ னக்கூறப்பட்டுள்ளது.ஆண்டுக் கலமென்பது மரக்கலமாகாது அணி முதலியபொருள்களயேயுணர்த்தல்போல ஈண்டும் உணர்த்து மென்றுகொள்க.

"அருங்கலந்தரீஇயர்நீர்மிசைநிவக்கும்
பெருங்கலிவங்கந்திரிதந்தாங்கு"

எனவரும் பதிற்றுப்பத்தில் அருங்கலம் என்பது மரக்கலத்தை யுணர்த்தாது அரியபொருள்களையுணர்த்தல் ஆராய்ந்துகொள்க. அகப்பாட்டிலும் அருங்கலந்தெறுத்தபெரும்புகல்வலத்தார்"(89) என்புழி மரக்கலங்கூறாது அரியபொருள்களேகூறுதல்காண்க.அருங் கலஞ்சுமப்பது வஞ்சிமுற்ற‌மென்க;பெரும்பொறைஎன்பதறியச் சுமந்துஎன்றார்."நிலனெடுக்கல்லாவொண்பல்வெறுக்கை"(மதுரைக் காஞ்சி)என்புழி "நிலஞ்சுமக்கமாட்டாத ஒள்ளிய பலவாகிய பொருட் டிரள்களையும் என்ற‌து பூண்களையும் பொன்னையும்"என நச்சினார்க் கினியர் கூறுதலான் ஈண்டும் அருங்கலமென்பன அவை என‌ அறிக. முன்னே திறையிட்டார் தர வந்த அரியஅணியும்பொன்னுமாகிய பொருள்களைச்சுமத்தல் காரணமாக அளந்துகடையறியா வளந்தலை மயங்கிய வஞ்சிமுற்றத்து யாங்கனும் இறைமகன்செவ்விபெறாது திறைசுமந்துநிற்குந் தெவ்வர்போல என்று பொருள்கொள்க.அருங் கலம் முன்னெ அநுகூலராகப்போந்து திறையிட்டார் தந்தனவாம். அவரே முன்னே திரையிடற்குரியராவர்.அவர்தந்ததிறை யாங்க ணும் நிரம்பியதுகாரணமாகவும்,அவ்வநுகூலர்க்குக்காட்சியளித்தல் காரணமாகவும் தெவ்வர் இடமும் செவ்வியும்பெறாதவராய்த் திறை யைச்சுமந்து நிற்பாராயினாரெனவுணர்க. பின் தெவ்வர் என்றதனால் முன்னே திறையிட்டார் அநுகூலர் எனவுணர்க. அவரே தெவ்வரின் முற்பட வேந்தன்காட்சிபெறுதற்குரியராவர். இனி அருங்கலம் சேரன்படை வஞ்சிசூடிச்சென்று பகைப்புலம்புக்கு வென்றுகொ ணர்ந்த திறையாயினுமாகும். இத்தகையதிறையே வஞ்சியுள் விளங் கிக்கொண்டிருக்குமென்பது "கூடார்வஞ்சிக்கூட்டுண்டுசிறந்த வாடா வஞ்சி" என்னும் சிலப்பதிகாரவடிகட்கு அரும்பதவுரையாசிரியர் "வஞ்சிக்கூட்டு - எடுத்துச்செலவிற்கொண்டதிறை, அதனாற்பொலிவு பெற்ற கருவூரிலே" என்று விளக்கியவாற்றானுணர்க. இங்ஙனமன்றி வளந்தலைமயங்கியவஞ்சிமுற்றத்து இறைமகன்செவ்வியாங்கணும் பெறாது அளந்துகடையறியாவருங்கலஞ்சுமந்து திறைசுமந்துநிற்குந் தெவ்வர் என அரும்பதவுரையாசிரியர்கருத்தொடுபொருந்த இயைப் பினும் அமையும், திறைதருபொருளுள் அருங்கலங்களும் உண் டென்பதை,

"ஆரமிவையிவைபொற்கலமானையிவையிவையொட்டக
மாடலயமிவைமற்றவையாதுமுடியொடு பெட்ட‌க
மீரமுடையனநித்திலமேறுநவமணிகட்டிய
வேகவடமிவைமற்றவையாதும்விலையில்பதக்கமே"

"இவையுமிவையுமணித்திரளினையவிவைகனகக்குவை
யிருளும்வெயிலுமெறித்திடவிலகுமணிமகரக்குழை"

என்னும் கலிங்கத்துப்பரணியானுமுணர்க.

இவையெல்லாம் ஆராயாது கலம் என்னும் ஒரு சொல்லே பற்றிப் பெருங்கவியரசர்பொதிந்தநயங்கள் பலவற்றையுஞ்சிதைத் துப் பழையநூல்வழக்கிற்கும் உரைவழக்கிற்குமாறாக ஒரு பெருங் கடலை ஈண்டுக்கற்பிப்பது பொருந்தாதென்றுணர்க.

வஞ்சியைக் கடற்கரைக்கண்நிறுவமுயல்வார் தங் கொள்கைக்கு ஆதரவாகக்கூறுவது இன்னும் ஒன்றுண்டு. அஃதாவது செங்குட்டு வன் வடநாட்டுக்குப்படையெடுத்துச்செல்லும்போது,

"தானவர் தம்மேற்றன்பதிநீங்கும்

தண்டத்தலைவருந்தலைத்தார்ச்சேனையும்
வெண்டலைப்புணரியின்விளிம்புசூழ்போத
மலைமுதுகுநெளியநிலைநாடதர்பட
வுலகமன்னவனொருங்குடன்சென்றாங்
காலும்புரவியணித்தேர்த்தானையொடு
நீலகிரியினெடும்புறத்திறுத்து" (சிலப் - கால்கோள்)

என்பதனால் தலைவருஞ்சேனையும் புணரியின் விளிம்புசூழ்போதச் சென்று நீலகிரிப்புறத்துத்தங்குதல் அறியப்படுதலான் இச்செங் குட்டுவனூர் மேல்கடற்பக்கத்திருப்பதென்று கருதப்படுமென்பது, அங்ஙனங்கருதற்கடனின்மை காட்டுவல் - வஞ்சி கடற்கரைக்கண்ண தாயின் வஞ்சியங்கானல் வெண்டலைப்புணரி என விளங்கவுரைப்பர். வஞ்சியின்பக்கத்துக் கடலில்லாமையானே வஞ்சிநீங்கிப் புணரியின் விளிம்புசூழ்போத என்றார் என அறிக. பிறர்கூறும்வஞ்சி "ஆர்க் குங்கடலங்கரைமேன்மகோதை" யாகியகொடுங்கோளூரன்றே? அவ் வூரைநீங்கி அதன் கடலையடைதலையோ ஈண்டுப்பெரும்படையெடுத் துச்செலவுக்கு ஒரு சிறப்பாகக் கவியரசர் எடுத்துக்காட்டினார்; அவ் வூரேகடற்கரையினிருக்க அதனைநீங்கிக் புணரியின் விளிம்புசூழ்போத என்று குறுவ தென்னோ. அவர் நினைக்கின்றபடி குடகடற்கரையி லன்றே சேரர்தலைநகருள்ளதாவது: வடநாட்டுப்படையெடுத்தற்குத் தலைநகரின்வடக்குவாயில்வழியாக வடக்குநோக்கிச்செல்லவேண் டியபடையில் தூசிப்படையும் சேனைத்தலைவரும் மட்டும் குடகடல் விளிம்புசூழ்வருவதேனோ? இவ் வினாவுக்கெல்லாம்பொருந்த விடை பகர்தல் இயலாதென்று அறிஞரே ஆராய்ந்துகொள்வாரகுக.

மற்று வடநாடுபுகநினைந்தசெங்குட்டுவன் வஞ்சிநீங்கி நேரே வடக்கட்புகாது தலைவருஞ்சேனையும் மேல்பாற்புணரியின்விளிம்பு சூழ்போதத் தானும் ஒருங்குடன் செல்லுதற்கு ஏது என்னையெனிற் கூறூவேன். செங்குட்டுவன் வடநாடுபுகுவது தமிழரசராற்றலை யிகழ்ந்துபேசிய வடவரசர்க்குத் தமிழ்வலி யிற்றென் றுணர்த்தவும் பத்தினித்தெய்வத்துக்கு இமயமலையிற்கல்கொள்ளவுமாகும். இவ்விரு பெருங்காரியங்களையுமேற்கொண்டு பெரும்படையுடன் எழுந்த செங்குட்டுவன், தன் படையினை இடஞ்சுற்றவிட்டுச்செல்லாது தமிழ் நாட்டரசர்வழக்கப்படி வலஞ்சுற்றவிட்டு வடநாடுசெல்ல நினைந்தத னாற் புணரியின்விளிம்புசூழ்போத என்றாரெனவறிக. தமிழரசர் வட நாட்டுப்படையெழுச்சிக்கண் இங்ஙனம் வலமுறைசெல்லுதலுண் டென்பது,

"குணகடலபின்னதாகக்குடகடல
வெண்டலைப்புணரிநின்மான்குளம்பலைப்ப
வலமுறைவருதலுமுண்டென்றலம்வந்து
நெஞ்சநடுங்கவலம்பாயத
துஞ்சாக்கண்ணவடபுலத்தரசே" (புறம் - 31)

எனச் சோழனலங்கிள்ளியைக் கோவூர்கிழார்பாடிய புறப்பாட்டா னறியப்படும். இவ்விடத்து உரைகாரரும் "கீழ்கடல்பின்னதாக மேல் கடலினது வெளியதலையையுடையதிரை நினதுகுதிரையினதுகுளம் பையலைப்ப வலமாகமுறையேவருதலும் உண்டாமென்று சுழன்று நெஞ்சநடுங்கும் அவலம்பரப்பத்துயிலாதகண்ணையுடையவாயின் வட நாட்டுள்ள அரசுகள்" எனக் கூறினார். வென்றியேவேண்டி வடநாடு புகுமிடத்துச் சோழன்வலமுறைசெல்வானாயின், வென்றியுடன் தெய்வமங்களத்துக்குக் கல்கோடலையுங்கருதிய சேரன் வலமுறை சென்றான் என்றுகூறுவதே பொருந்தியதாகும். மேற்கண்ட புறப் பாட்டிற் சோழனலங்கிள்ளி சேரபாண்டியருடைய இருகுடையும் பின்னாக ஓங்கிய ஒன்றாகிய வெண்கொற்றக்குடையையுடையனாயினா னென்று கேட்கப்படுதலா னிவன் தன்னால் முன்னமேவெல்லப்பட்ட சேரபாண்டியரைவெல்லவேண்டி வலமுறைவருதலுண்டென்று கரு தற்காகாது. இதனை அப் புறப்பாட்டில்,

சிறப்புடைமரபிற்பொருளுமின்பமு
மறத்துவழிப்படூஉந்தோற்றம்போல
விருகுடையின்பின்படவோங்கியவொருகுடை
யுருகெழுமதியினிவந்துசேண்விளங்க
நல்லிசைவேட்டம்வேண்டிவெல்போர்ப்
பாசறையல்லதுநீயொல்லாயே (புறம் - 31)

எனவருதலானறிக. ஈண்டு உரைகாரரும் இக்கருத்தேபடவுரைத் ததுகாண்க. உவமையாலும் சேரபாண்டியரிருவர்குடையும் இவன் ஒருகுடையின்பின்னானதன்மை நன்றுணரப்படும். இரு குடையும் பின்படவோங்கிய ஒருகுடை இன்னும் ஓங்கச் சேய்மைக் கண்ணேவிளங்கப் புகழ்வேட்கையைவிரும்பிப் பாடிவீட்டிலிருத் தலையல்லது நின்நகரிருத்தலையுடன்படாயென்று அவனைக்கூறியதுங் காண்க. சோழன் பாண்டியரைவென்று அப்பாற் சேரரை வென்று பின் வடநாடுசெல்வதை ஆசிரியர்கருதினராயின் அதற்கேற்ற சொற்பெய்து அப்பொருள்விளங்கவுரைப்பர். அவ்வாறொன்றுங் கூறாது குணதிசையாளுஞ்சோழன் குணகடல்பின்னாகக் குடகடலின் றிரை அச்சோழனது குதிரையின் குளம்பையலைப்ப வலமுறையாக வருதலுமுண்டாமென்று கூறுதலானும் அவர்க்கது கருத்தன் றென்க. இதன்கண், குணதிசைபின்னாக என்றதனால் வடதிசை நோக்கி அப்போது புறப்படுதலைக்குறித்தல்காண்க. சிலப்பதி காரத்தும் "வஞ்சிநீங்கி வெண்டலைப்புணரிவிளிம்புசூழ்போத" என்புழிச் சூழ்போதஎன்றலாற சுற்றிவருதலையேகூறினாரென்று தெளிக. புறப்பாட்டிலும் குடகடலை வெண்டலைப்புணரி என்ற* னை யும் ஈண்டைக்குநோக்கிக்கொள்க.

அரும்பதவுரையாசிரியர் கடற்கரையே யொருகைபோத என்றார். அதற்கும் இதுவே கருத்தாகும். சேனைத்தலைவரும் தூசிப்படை யும் பழையமுறைப்படி தன்னாட்டை வலஞ்சுற்றவிடுத்துத் தலை வருஞ்சேனையுஞ் சூழ்வராநிற்கையிற் றானுஞ்சென்றுகூடித் தானை யொடு நீலகிரியினெடும்புறத்துத்தங்கினான் என்றுகொள்க. நீலகிரி யிலதிகபாகம் சேரரைச்சேர்ந்ததாதலின் ஆண்டுத்தங்கினான். அக் காலத்து அதுவே படைசெல்வழியுடையதுபோலும். இக்காலத் தும் நீலகிரிப்பகுதியிற் சேரன்பாடி, சேரன்கோடு என்பன உள வாதல் கண்டுகொள்க.

இனிச் சேரர்படைப்பெருக்கத்தைப்பற்றிப் பதிற்றுப்பத்துள் "இறும்பூதாற்பெரிதே" என்னும் பாட்டா னன்குணரலாம். அத னுள் அவர் படைத்திரளை "வரம்பில்வெள்ளம்" என்றுகூறி அப் படை திரண்டாற் பகைவர் நாட்டெல்லையின் முற்பாடுசென்றுவிடும் என்னுங்கருத்தாண் "நெடுநீர்துறைகலங்கமூழ்த்திறுத்தவியன்றானையொடு" என்று சிறப்பித்தலான் ஈண்டும் அவ்வாறே செங்குட்டுவன் படைப்பெருக்கையுணர்த்தவேண்டிப் படைதிரண்ட அளவிற் றலை வருந் தூசிப்படையுங் கடலெல்லையைச்சூழ்வரச்சென்றான் என்றார் எனினுமமையும் இஃததிசயோக்தியெனக்கொள்ளினுமிழுக்காது. அதிசயோக்தியாகக்கூறுமிடத்து மேல்கடலைநினைத்தது படை வல முறைசெல்லுதலானெனவறிந்துகொள்க. இங்ஙனம் அதிசயோக்தி யாக இளங்கோவடிகள்கூறுவரோஎனிற் கூறுவரென்க. "மலை முதுகுநெளிய" என ஈண்டே இப்படைச்செலவைப்பற்றிக்குறியது கொண்டுணர்க. சகடங்களின்பாரத்தையுணர்த்தவே மலைமுதுகு நெளிய என்றாராலெனின் படையின்பெருக்கையுணர்த்தவே கடல் விளிம்புசூழ்வர என்றாரென்க. இவ்வாறெல்லாம் ஆராய்ந்துகொள் ளாது "வஞ்சிநீங்கி" எனத் தெளியக்கூறுதலையும் பொருட்படுத்தாது கடலைக் கருவூர்வஞ்சிக்கணித்ததாகக் கூறப்புக்கார் பிறர்.

மற்றுச் சிலப்பதிகாரத்து இளங்கோவடிகள் வஞ்சியையடுத்து நான்குநிலமும் அணித்தாயிருத்தலைவருணித்து நீர்ப்படைக்காதை யிறுதியிற்கூறினாராலெனிற் கூறுவேன். அவர் ஆண்டு,

குறத்தியர்பாடியகுறிஞ்சிப்பாணியும்
... ... ...
தொடுப்பேருழவரோதைப்பாணியும்
... ... ...
கோவலரூதுங்குழலின்பாணியும்

கூறி, அப்பால்

வெண்டிரைபொருதவேலைவாலுகத்துக்
குண்டுநீரடைகரைக்குவையிரும்புன்னை
வலம்புரியீன்றநலம்புரிமுத்தம்
கழங்காடுமகளிரோதையாயத்து
வழங்குதொடிமுன்கைமலரவேந்தி
வானவன்வந்தான்வளரிளவனமுலை
தோணலமுணீஇயதும்பைபோந்தையொடு வஞ்சிபாடுதுமடவீர்யாமெனு
மஞ்சொற்கிளவியரந்தீம்பாணியும்
ஓர்த்துடனிருந்தகோப்பெருந்தேவி

என்றுரைத்துள்ளார். இதன்கண் குறத்தியரெனக் குறிஞ்சிநிலத்தா ரையும், உழவரென மருதநிலத்தாரையும், கோவலரென முல்லைநிலத் தாரையும் பெயர்குறித்து விளங்கவுரைத்த இளங்கோவடிகள் இறுதி யின்மட்டும் நெய்தனிலத்துமாக்கள்பெயராற்கூறாது அஞ்சொற்கிள வியர் என நாகரிகராகவே உரைத்ததன்கருத்து ஆராயத்தகும். காவிய ரசனைக்கு எல்லாநிலங்களையும் இயைத்துக்கூறப்புக்க அடிகள் மற்றை மூன்றுநிலனும் உள்ளவாறுகூறி அந்நிலமாக்கள் பெயரெடுத் துரைத்து அவர்பாணியும்வருணித்துப்போந்தவர் நெய்தலணித் தாகாததன்மையான் அந்நெய்தற்பொருளாகியமுத்தத்தை முன்கை மலரவேந்திக் கழங்காடுமகளிரோதையாயத்து வஞ்சிபாடுதும்யா மெனும் அஞ்சொற்கிளவியர்பாணியும் என்று உண்மைபுலப்படுத்திப் போனாரென்க. இங்ஙனமன்றி நெய்தற்கடல் அணித்தாக இருக்குமா யின் ஆண்டுக்கடனிலமகளிர்பாணியைக் கடலொலியவித்தற்றன்மை யையேனும் கடலொலியையேனும் வருணித்தொழிவர் என்க. பிற விடத்தும் வஞ்சியில் ஆன்பொருநைவெண்மணலிற் குறுந்தொடிமக ளிர்கழங்காடுதலைக்கூறுதல் காண்க. அது,

"செறியரிச்சிலம்பிற்குறுந்தொடிமகளிர்
பொலஞ்செய்கழங்கிற்றெற்றியாடுந்
தண்ணான்பொருநைவெண்மணற்சிதைய" (புறம் - 36)

எனவருதலானுணரப்படும். ஆண்டுக்கடலின்மையாற் பொலஞ்செய் கழங்கு என்று கூறியது காண்க. ஈண்டுக்கழங்காடுவார் கடன்முத் தத்தையேந்தியாடுவாரென்றது அவ்வஞ்சியார்க்குக் கடற்செல்வமு முண்டு என்பதைக்குறித்ததன்றிக் கடல் ஊர்ப்புறத்திருத்தல்கருதி யன்றென்க. சோழன் குளமுற்றத்துத்துஞ்சியகிள்ளிவளவன் இவ் வஞ்சியைமுற்றியிருந்தபோது நல்லிசைப்புலவர்பலர்பாடிய பல பாடல்கள் புறப்பாட்டின்கணுள்ளன. அவற்றுளொன்றிலேனும் கடற்சம்பந்தமேகூறப்படாமை ஆராய்ந்துகொள்க. இதனால் மேற் கண்ட சிலப்பதிகாரவடிகட்கு யான் கூறுவதேகருத்தாகக்கொள்க. ஆண்டு நெய்தல் வருணனையெல்லாம் வேலைவாலுகத்துப்புன்னையடி யில் வலம்புரியீன்றமுத்தம் என முத்தத்தையே விசேடித்தனவாத லறிக. வஞ்சிகடலுடையது, கடலுடையதில்லையென்று துணிவது இஃதொன்றேகொண்டில்லையென்பது பலருமறிவர்.மற்றுக்கூறிய வற்றோடும்பொருந்தவைத்தன்றே இஃதாராயப்படுவ‌து. மற்றவற் றோடுபொருந்த நோக்குமிடத்தும் யான் கூறியதே துணிபாதலுணர்க. பேரறிவாளராகிய இளங்கோவடிகள் மூன்றுநிலங்களிலும் அவ்வந் நிலமாக்கள்பெயரைக்கூறி இந்நெய்தனிலவருணனையில் அந்நிலமாக் களைக் கூறாமல் அந்நிலப்பொருளாகிய முத்தத்தையேவிசேடித்தொ ழிந்து உண்மையைத்தப்பாதுபுலப்படுத்திய அவ‌ர்கவித்திறத்தை யானளந்துரைக்கும் வலியிலேன்.அறிவாளரே நுணுகியாரய்ந்து கொள்வாராகுக.கடற்செல்வம்பற்றிக் கடலை ஊர்க்குவிசேடித்தல் நூல்வழக்கேயென்பதும்,
"ஏந்துமுலகுறுவீரெழினீலநக்கற்குமின்பப்
பூந்தண்புகலூர்முருகற்குந்தோழனைப்போகமார்ப்பைக்
காந்துங்கனலிற்குளிர்படுத்துங்கடற்கூடலின்வாய்
வேந்தின்றுயர்தவிர்த்தானையெப்போதும்விரும்புமினே"

என நம்பியாண்டார்நம்பிகள் பாடிய பாடலிற் கடற்கூடல் என மதுரையைக்கூறுதலானுண‌ர்க.இது கூடற்குரிய கடற்செல்வத் தைக்குறிப்பதன்றிக்கூடல் கடலேயுடைத்தென்பது கருத்தாகாமை கண்டுகொள்க. எழுகடலழைத்தகதைகூறினாரெனின் அது தோன்றக் கூறுவாரென்க.கடற்செல்வமுடைமையேகருதிக் கடலுடையதாகவே வருணித்தல் கவிமரபென்பது கடலுக்குநெடுந்தூரத்துள்ள திருச்சுழியற்பதியை "கவ்வைக்கடல்கதறிக்கொணர் முத்தங்கரைக்கெற்றக், கொவ்வைத்துவர்வாயார் குடைந்தாடுந்திருச்சுழியல்" எனச் சுந்தர மூர்த்திநாயனார்பாடுதலானுணர்க.

இங்ஙனமாக‌வும் நல்லுரையாளராகிய அரும்பதவுரையாசிரியர் இச் சிலப்பதிகாரத்துரையில் "குறிஞ்சிமுதலாகநாலுநிலத்துப்பாணி யும் ஓர்த்துறங்காததேவியென்றது நாலுநிலஅணிமையுங்கூறிற்று" எனவுரைத்தார்.அவர் சிறிது நுணுகிநோக்கியிருப்பாராயின் யான் கூறியதனை அவரேகூறினவராவர்.

யான் இத்துணையுங் கூறியவற்றாற் பழைய சேரர்வஞ்சி கடற் கரைக்கண்னதாகாமை யுணர்ந்துகொள்க.

இனிச் செங்குட்டுவன் வடநாடுபுகுதற்குக் கடக்களியானைப் பிடர்த்தலையேறியவ‌ளவில் ஆடகமாடத்தறிதுயிலமர்ந்தோன் பிரசாதங்கொண்டு சிலர்வந்துபரவினரென்பது,

"குடக்கோக்குட்டுவன்கொற்றங்கொள்கென
வாடகமாடத்தறிதுயிலமர்ந்தோன்
சேடங்கொண்டுசிலர்நின்றேத்த"
(சிலப்-கால்கோள்)

என்பதனாலறியப்படுதலால் ஈண்டு ஆடகமாடம் என்றது திருவ ந‌ந்தபுரம் என்னும் ஊரையென்றுகொண்டு அதனால் சேரர் தலைநகர் திருவந‌ந்தபுரத்துக்கு அணித்தாகுமென்று கூறுவாருமுளர்.இத னுண்மையினை இங்கு ஆராய்வேன்-இவ்விடத்து அரும்பதவுரையா சிரியர் ஆடகமாடம் திருவநந்தபுரம் என்றுகூறி இரவிபுரமென்பாரு முளர் என்றுரைத்தார்.இதனா லவ்வுரையாளர்க்கு முன்னமே இம் மாடவிஷயமாக அபிப்பிராயபேதமுண்டென்று தெற்றெனவிளங்கும். இரவிபுரமென்பது கருவூர்க்கும்பெயராகுமென்பது யான் பாஸ்கர புரமென முன்னர்க்கூறியவற்றானுணரப்படும்.செங்குட்டுவன் தான் வடநாடு புகுவதைத் தன் அணிநகர்மருங்கே பறையறிவித் தறிவித்தான்.அறைபறையெழுந்தபின் ஆசான் பெருங்கணி அமைச்சர் தானைத்தலைவர்தம்மோடு வடவரசர் தமிழரசரையிகழ்ந்த செய்திகூறி இகழ்ந்தவடவரசர் தலையிற் கடவுட்பத்தினுக்குக் கல் லேற்றிவ‌ரேனாயிற் குடிநடுக்குறூஉங்கோலேனாகுக என்று வஞ்சி னங்கூற ஆங்கு ஆசான் அவன்சினந்தணியுமாறு சில சொல்லிய அளவிற் பெருங்கணி எழுந்து இருநிலமருங்கின்மன்னரெல்லாம் நின் றிருமலர்த்தாம‌ரைச்சேவடிபணியும் முழுத்தமீங்கிது முன்னிய திசைமே லெழெச்சிப்பாலையேகென்றேத்த அவ்வமயம் இராத்திரியாய் விட்டபடியால் இரவிடங்கொடுத்த நிரைமணிவிளக்கின் எல்லாருஞ் சூழப் பெருங்களிற்றெருத்தத்தில் வாளுங்குடையும் ஏற்றிவஞ்சியின் புறநிலைக்கோட்டப்புரிசையிற்புகுத்திப் படைத்தலைவர்க்குப்பெருஞ் சோறுவகுத்து அன்றிராத்திரிநீங்கிக் காலைமுரசம் ஒலியெழுந்த வாறே சிவபெருமான்சேவடிசென்னியிற்புனைந்து வடதிசையாத் திரைக்கு யானையேறியபோது "ஆடகமாடத்தறிதுயிலமர்ந்தோன் சேடங்கொண்டு சிலர் நின்றேத்த"என்று கூறப்பட்டுள்ளது. இதனாற்கணி முகூர்த்தமிஃது என்றவுடன் வாளுங்குடையும் பரஸ்தானப்படுத்தினானென்றும், மறுநாட் காலைமுரசம் ஒலியெழும்போது சிவபிரானை வணங்கி யானையேறினானென்றும், அப்போது திருமால் பிரசாதம் சிலர் கொணர்ந்தனரென்றும் உணரலாம். முதனாள் இராத்திரித்தானே முகூர்த்த நிச்சயமாகி வாளுங்குடையும் பரஸ்தானப்படுத்திக் காலையிற் பயணங்கொண்ட சேரன் முன் வந்த இத் திருமால் பிரசாதம் சேரனிருக்குந் தலைநகர்க்கண்ணேயுள்ள திருமால் கோயிலுடையதாகுமா அல்லது தூரத்துள்ள திருவநந்தபுரத் திருமால் கோயிலுடையதாகுமா என்பதே ஈண்டு ஆராயவேண்டுவது. பிறர் கூறுகிறபடி இவ்வாடகமாடத்தைத் திருவநந்தபுரமென்றுஞ் சேரனிருப்பது கொடுங்கோளூரென்றுங் கொண்டு பார்ப்போம். முதனாளிராத்திரி வாளுங்குடையும் பரஸ்தானப்படுத்தி மறுநாட்காலையிற் புறப்படும் அரசனுளனாக நினைக்குங் கொடுங்கோளூர்க்குத் திருவநந்தபுரம் பிரசாதம் வருதலியலுமா? கொடுங்கோளூர்க்குந் திருவநந்தபுரத்துக்கும் இரண்டு மூன்று நாட்பயண தூரமில்லையா? முகூர்த்த நிச்சயமான இராத்திரிச்செய்தி திருவநந்தபுரத்துக்குத் தெரிதற்கே இரண்டு மூன்று நாளாகுமே; அங்ஙனமாகவும் ஆடகமாடந் திருவநந்தபுரமாதல் எங்ஙனங் கொடுங்கோளூர் வஞ்சிக்குச் சாதகமாகுமோ யானறிகிலேன். செங்குட்டுவன் வடநாட்டுப்பயணம் இந்நாளென்று தெரியாவிடினும் பொதுவாகப் புறப்படுவானென்று நாடெங்கும் பறையறைந்த காரணமாகத் தெரிந்துக்கொண்டு திருவநந்தபுரத்தார் முன்னரே புறப்பட்டுப்போந்தார்; அவர்போந்த தருணம் செங்குட்டுவன் பயணத்துக்கு ஒத்ததாயிற்று எனக்கூறுவாராயின் அதனையே கருவூர் வஞ்சியே சேரர் தலைநகர் என்பாரும் கூறிக்கொள்ளலாகுமே. இதனால் ஆடகமாடம் திருவநந்தபுரமென்பது கொடுங்கோளூர்க்கு ஒரு அநுகூலத்தையும் கருவூர்க்கு ஒரு பிரதிகூலத்தையுஞ் செய்யாது பொதுவாக நிற்றல் நன்கறியலாம். இனி இவ் வாடகமாடந் திருவநந்தபுரந்தானோ என்பதைப்பற்றி ஆராய்வேன்.

சிலப்பதிகாரம் வரந்தருகாதையில் தெய்வமுற்றதேவந்திகை என்பாள் செங்குட்டுவன் முன்னே மாடலனை நோக்கி இக்கடவுண் மங்கலங்காண வந்த மகளிருள் அரட்டன்செட்டியின் இரட்டைப் பெண்களிருவரும், ஆடகமாடத்தரவணைத் துயின்றோன் அருச்சகனான சேடக்குடும்பியின்புதல்வியும் இங்குளர்; அவரை உன் கரகத்து நீராற்றெளிப்பையாயின் முற்பிறப்புணர்ந்தவராவர். இதைக்காண் பாயாக என்றுசொல்ல மாடலனும் அவ்வாறேதெளிக்க அம்மூவ ரும் கண்ணகிபால் அன்புடைய முதியோர்சொல்லாற்புலம்ப அப் போது மாடலன் அரசனைநோக்கி இவ்வரட்டன்செட்டியின் இரட் டைப்பெண்களிருவரும் கண்ணகிதாயும் கோவலன்றாயுமாவர் என் றும், இச்சேடக்குடும்பியின்மகள் மதுரையிற் கோவலனையும் கண் ணகியையும் அடைக்கலங்கொண்ட ஐயை தாய் மாதரியாவள் என் றும் விளக்கிக்கூறுமிடத்துக்,

" காதலிதன்மேற்காதலராதலின்
மேனிலையுலகத்தவருடன்போகுந்
தாவாநல்லறஞ்செய்திலரதனா
லஞ்செஞ்சாயலருகாதணுகும்
வஞ்சிமூதூர்மாநகர்மருங்கிற்
பொற்கொடிதன்மேற்பொருந்தியகாதலி
னற்புளஞ்சிறந்ததாங்கரட்டன்செட்டி
மடமொழிநல்லாண்மனமகிழ்சிறப்பி
னுடன்வயிற்றோராயொருங்குடன்றோன்றின
ராயர்முதுமகளாயிழைதன்மேற்
போயபிறப்பிற்பொருந்தியகாதலி
னாடியகுரவையினரவணைக்கிடந்தோன்
சேடக்குடும்பியின்சிறுமகளாயின
ணற்றிறம்புரிந்தோர்பொற்படிபெய்தலு
மற்புளஞ்சிறந்தோர்பற்றுவழிச்சேறலும்
*** *** *** *** ***
புதுவதன்றேதொன்றியல்வாழ்க்கை"

எனக்கூறப்பட்டுள்ளதனை அறிஞர் அறிவர். இதன்கண், கோவலன் றாயும் கண்ணகிதாயும் ஐயை தாய் மாதரியும் சுவர்க்கம்புகாது இவ் வுலகிற்பிறந்ததற்குக்காரணம் கண்ணகிமேல்வைத்தகாதலே என்பதும், அற்புளஞ்சிறந்தோர்பற்றுவழிச்சேறல் முறையாதலானே இவர் தம்மாற்காதல்செய்யப்பட்ட கண்ணகி அஞ்சாதணுகும் வஞ்சிமூதூரில் அரட்டன்செட்டி இரட்டைப்பெண்களாகவும், சேடக்குடும்பியின் மகளாகவும்பிறந்தனரென்று கூறியிருத்தல் எல்லாரும் அறிந்து கொள்ளலாம். அரும்பதவுரையாசிரியரும் "காதலி - கண்ணகி, என் றும் காதலராகையாலே அறஞ்செய்திலர்; அதனாற் காதலியாகிய அஞ்செஞ்சாயல் அஞ்சாதணுகும் வஞ்சிமூதூரிற்பிறந்தார்" என் றுரைத்ததையுங் கண்டுகொள்க. முன்னிருவரும் வணிககுலத்தவ ராதலிற் செட்டிமகளிராயினரென்றும், திருமால்பத்திமையாலாடிய குரவையால் ஆயர்மகள் திருமால்திருவடி பிடிப்பான்மகளாயின ளென்றும் அடிகள் தெளியவுரைத்ததுங்காண்க. இடைச்சிமகள் இடைச்சியாகப்பிறவாமற்பிறந்ததற்கு "ஆடியகுரவையின்" என்று ஏதுக்காட்டினார். இம்மூவரும் காதலராதலின் நல்லறஞ்செய்திலர். அதனால் அஞ்செஞ்சாயலருகாதணுகும் வஞ்சிமூதூர்மாநகர்மருங்கிற் பொற்கொடி தனமேற்பொருந்தியகாதலின் இருவர்தாயரும் அரட் டன் செட்டிமனைவியின் ஒருவயிற்று இரட்டைப்பெண்களாகத்தோன் றினர். ஆயர்மகள் ஆயிழைகாதலின், ஆடியகுரவையின் அரவணைக் கிடந்தோன்றிருவடிபிடிப்பானான சேடக்குடும்பியின்மகளாயினள் என்றேகொள்ளக்கிடத்தல்காண்க. ஈண்டு அரவணைக்கிடந்தோன் உள்ளஊர்வேறாயின் மேல் வஞ்சிமூதூரைக்கூறினாற்போல இவள் பிறந்தவூரையுங் கூறுவரென்க. அங்ஙனங்கூறாமைகாண்க. அஞ் செஞ்சாயலாகிய கண்ணகி அஞ்சாதணுகியது வஞ்சியேயெனவும், அவள்பாற் காதலால் அவளுள்ளவிடத்துப்பிறந்தார்கள் எனவும், அங் ஙனம் அவ்வூரிற்பிறப்பானேனோ என்னும் ஆசங்கையுண்டாகாதபடி அதனைப் பரிகரித்து "அற்புளஞ்சிறந்தோர் பற்றுவழிப்படர்தல் புது வதன்" றெனவும் அடிகள் விளக்குதல் காண்க. திருவடிபிடிப்பான்மக ளாகிய ஆயர்மகள் வஞ்சியிற்பிறவாது திருவநந்தபுரத்துப்பிறந்தா ளெனக்கொள்ளின் அவளாற்காதலிக்கப்பட்ட அஞ்செஞ்சாயலாகிய கண்ணகியணுகியது வஞ்சியாதலான் அவள்பற்று அங்கே அவளை யுய்க்குமென்னு நியதியின்மாறி வேற்றிடத்து அவள்பிறத்தற்கு இரண்டு ஏதுக்கள் கூறியுள்ளன. அவை ஆயர்முதுமகளாயிழைகா தலின், ஆடியகுரவையின் மகளாயினள் என்று கூறுதலா னறியலாம். இதன்கண் ஆயிழைகாதலினாலும், ஆடியகுரவையினாலும் மகளாயினள் என்று கூறியதற்கு ஆயிழைகாதலால், அவ் வாயிழை யணுகிய வஞ்சிமூதூரில் ஆடியகுரவையால் அருச்சகன் மகளாயின ளென்றேகொள்ளக்கிடக்கின்றது. இடைச்சி இடைக்குலத்திற் பிற வாது திருமால் அருச்சகன் மகளாயினமைக்கு ஆடியகுரவையின் என ஏதுக்கூறுகின்ற மஹாமேதாவியான பெருங்கவியரசர் ஆயிழைகாதலின் என்பதனை வாளாகூறினாரென்பது சிறிதும்பொருந்தாது. மேல் தாயரிருவரும் அரட்டன் செட்டி மகளிராயினர் என்று கூறிய விடத்தும் "பொற்கொடிதன்மேற் பொருந்தியகாதலின்" என வஞ்சி மூதூரிற்பிறத்தற்கு ஏதுக்கூறுதல் காண்க. அங்குக்கூறிய எது வையே இங்கும் "ஆயிழைகாதலின்" என ஆயர்மகள் வஞ்சிமூதூரிற் பிறத்தற்குக் கூறினாரென்பது தெள்ளிது. இதனாற் சேடக்குடும்பி என்பான் வஞ்சிமூதூரிலுள்ளவன் என்பது தெளியப்படும். இவ் வருச்சகன் வஞ்சியூரினனென்று தெளிந்தவாற்றான் இவன் அருச்சிக் கும் அரவணைத்துயின்ற திருமாலும் அவ்வஞ்சியிலே திருக்கோயில் கொண்டருளியமூர்த்தியேயாகுமென்று துணியப்படும்; மாதரி ஆயி ழைகாதலின் வஞ்சியிற்பிறந்தாள் ஆடியகுரவையின் றிருமால்பத்தி செய்தற்கேற்ற வைஷ்ணவகுலத்துப்பிறந்தாள் என்று கூறியதன் கருத்தையுற்றுநோக்கின் இவள் கண்ணகிஅணுகியவஞ்சிமூதூரிற் றிருமாலைவழிபடுவாளாய்ப்பிறந்தாள் என்று புலனாகும். இதனால் வஞ்சிமூதூர் ஒருபுறனும், இவள் வழிபடுந்திருமாலிருப்பது வேறொருபுறனுமாகாமை யுணர்ந்துகொள்க. இவற்றால், சேடக் குடும்பி அருச்சிக்கும் அரவணைத்துயின்றோன்எழுந்தருளிய ஆடக மாடம் வஞ்சியுள் ஆனிலைபோன்றதோர் ஸ்தலவிசேஷமேயென்பது தெற்றெனவுணர்க. அது பொன்னாலாகியமாடக்கோயிலாதலான் ஆடகமாடம் எனப்பட்டதாகும். நறையூர்மணிமாடம், நாங்கூர்மணி மாடம், கடந்தையுட்டூங்கானைமாடம் என்பனவெல்லாம் அவ்வவ் வூரிற் கோயிலையேகுறித்தல் கண்டுகொள்க. விஷ்ணுவுக்கு நிவே தனஞ்செய்தல்லது உண்ணலாகாதுஎன்னும் மிருதிபற்றி இக்ஷு வாகுமுதலியோர் அயோத்தியிற் றம்அரண்மனைக்கண்ணேவைத்து வழிபட்ட தேவகிருகம்போன்றதாய்ச் சேரர் அரண்மனைக்கண்ணே உள்ளது இஃதொன்று எனக்கொள்ளினு மிழுக்காது.

இவரோடொத்த பாண்டியர் கூடலிலும் ஆடகமாடமென ஒன்று இருந்தமை,

"கோநெடுமாறன்றென்கூடலின்வா
யாடகமாடங்கடந்தறியாதவென்னாரணங்கே"

என்னு மிறையனார்களவியலூரைமேற்கோளா னறியப்படும். ஈண்டுக் கூடலின்வாயாடகமாடம் என்றிருத்தலான் ஆடகமாடம் ஓரூரா காமை நன்குணரப்படும். இதுபோலவே சிலப்பதிகாரத்துக்கூறப் பட்ட ஆடகமாடமும் ஊராகாதென்றுணர்க. "வானவர்வாய்வாட் கோதை, விளங்கிலவந்திவெள்ளிமாடத்து" என்பதனால் வஞ்சியின் நீராவியையுடைய வெள்ளிமாடம் என ஒன்றிருந்தது நன்குபுல னாகும். ஆண்டு வெள்ளிமாடம் ஊராகாததுபோலவே ஆடகமாடம் என்பதனையுங்கொள்க.

இதனால் ஆடகமாடம் வஞ்சியின் கண்ணதாதலானே இராத்திரி முகூர்த்தநிச்சயித்து வாளும் குடையும் பரஸ்தானப்படுத்திக் காலை யிற்பயணப்பட்ட செங்குட்டுவற்கு அவன் பயணப்பட்டு யானைமேல் ஏறியதருணத்து அவ்வாடகமாடக்கடவுள்பிரசாதம் நல்கலாயிற் றென நன்குணர்ந்துகொள்க.

ஈண்டு "அஞ்செஞ்சாயலருகாதணுகும் வஞ்சிமூதூர்" என்ப தனாற் கண்ணகி அஞ்சாது அணுகும் கருவூர் என்றார். மலையில் வேங்கையினீழலிற் குறவரெல்லாங்காண வானவர்போற்றத் தெய் வக்கணவனுடன் விமானத்தேசென்றகண்ணகி வஞ்சியுள் அஞ் சாதுபுகுமாறு என்னையெனிற் கூறுவேன். கண்ணகி தீக்கனாக் கண்டதன்பின்னே கோவலனோடுபோய் மதுரைப்புறத்து ஒருகாற் கண்ட தீக்கனா அப்படியே பலித்துவிடுமோ என்னும் அச்சத்தோடே புக்கனள். வஞ்சியு ளங்ஙனமின்றி, கோவலனுந்தானும் தெய்வமாய்ப் புகுதலின் இனி ஏதம்வருமென்னும் அச்சமிலாது அணுகினள் என்று கூறினாரெனவறிக. செங்குட்டுவன் கண்ணகியுடன் கோவ லற்கும் கோட்டத்துப் படிமம் வகுத்தான் என்பதும், அக்கோட்டம் வஞ்சியின் புரிசைப்புறத்ததே என்பதும் மணிமேகலையுள் வஞ்சிமா நகர் புக்ககாதைக்கண்,

"தணியாக்காதற்றாய்கண்ணகியையுங்
.......... யுங்
கடவுளெழுதியபடிமங்காணிய
வேட்கைதுரப்பக்கோட்டம்புகுந்து
வணங்கிநின்றுகுணம்பலவேத்தி"

எனவரும் அடிகளாலும், மணிமேகலைக்குக் கோட்டத்துள்ளகடவுட் பத்தினி,

"நறைகமழ்கூந்தனங்கையுநீயு
முறைமையினிந்தமூதூரகத்தே"

எனக்கூறிய அடிகளானும் நன்குணர்ந்துகொள்க. கோட்டத்துள்ள கடவுட்பத்தினி இந்தமூதூரகத்து என வஞ்சியைச்சுட்டிக்கூறுதலாற் கோட்டம் வஞ்சியின்கண்ணதே என்று தெளியப்படும். மணிமேகலை கோட்டத்துக் கடவுட்பத்தினியைவழிபட்டு, அவளாற் பலவுந்தெரிந்து கொண்டு வஞ்சி எயிற்புறவிருக்கையிற்போய்ச் சமயக்கணக்கர்தந் திறங்கேட்டு அப்பாற்சென்று புறக்குடிகடந்து அகழியையும் எயிலை யுங்கடந்து நகர்க்குட்புக்கனள் என்று சாத்தனார் மணிமேகலை நூலுட் கூறலால் இப்பத்தினிகோயில் வஞ்சியின் எயிற்புறவிருக்கைக்கும் அப்பாலுள்ளதென்பது நன்குபுலனாகும். கண்ணகிக்குக் கோவல னுடன்படிமம்வகுத்தபடியாலும், இவள்படிமத்துக்கு "முற்றிழை நன்கலமுழுவதும்பூட்டி" (சிலப்-28). என்றதனாலும் செங்குட்டு வன்இவட்குவகுத்தபடிமம் சுமங்கலைவடிவமெனத்தெளிந்துகொள்க. இதைப்பற்றிப் பின்விரித்துக்கூறுவேன்.

இனிப் பிறர் செங்குட்டுவன் மலைகாண்குவமென்று வஞ்சிநீங்கிப் போய்ப் பேர்யாற்றங்கரையிற்றங்கிக் கண்ணகிவரலாறுகேட்டு அவளைத் தெய்வமாகவழிபடப் பலரோடுமாராய்ந்துதுணிந்து மீண்டுவஞ்சியுட் புக்கானென்னுஞ்செய்தியிற் செங்குட்டுவன் பேர்யாற்றங்கரைக்கு என்றுபோனானோ அன்றேமீண்டானெனக்கொண்டு அதனாற் பேர் யாற்றங்கரைக்கு அணித்தாகப் பழைய சேரர்தலைநகர்இருத்தல் வேண்டுமென்றுகூறி அங்ங்னமணித்தாகவுள்ளது கொடுங்கோளூராத லான் அதுவே பழைய சேரர்தலைநகர்என்று துணிவாராயினர். இதைப் பற்றி ஈண்டு ஆராய்வேன். செங்குட்டுவன் மலைகாண்குவமென்று பேர்யாற்றங்கரைக்குச்சென்றதைப்பற்றி இளங்கோவடிகள்,

வானவர்தோன்றல்வாய்வாட்கோதை
விளங்கிலவந்திவெள்ளிமாடத்
திளங்கோவேண்மாளுடனிருந்தருளித்
துஞ்சாமுழவினருவியொலிக்கு
மஞ்சுசூழ்சோலைமலைகாண்குவமெனப்
பைந்தொடியாயமொடுபரந்தொருங்கீண்டி
வஞ்சிமுற்றநீங்கிச்செல்வோன்
வளமலர்ப்பூம்பொழில்வானவர்மகளிரொடு
விளையாட்டுவிரும்பியவிறல்வேல்வானவன்
பொலம்பூங்காவும் புனல்யாற்றுப்பரப்பு

மருங்கும்பள்ளியுமொருங்குடன்பரப்பி
யொருநூற்றுநாற்பதியோசனைவிரிந்த
பெருமால்களிற்றுப்பெயர்வோன்போன்று
......................
பெருமலைவிலங்கியபேரியாற்றடைகரை
யிடுமணலெக்கரியைந்தொருங்கிருப்ப

எனக்கூறியுள்ளார். செங்குட்டுவன் கோப்பெருந்தேவியுடனும் இளங் கோவடிகளுடனும் வில்லவன்கோதையாகிய படைத்தலைவனும் அழும் பில்வேளும் நூலறிபுலவரும் பைந்தொடியாயமும் பரிகரமும் தானையும் முதலாயபெருந்திரளுடன் உபகரணங்களெல்லாம்அமைத்துக்கொண்டு மலைகாணச்சென்றானென்பது இக்காட்சிகாதையினைக்கற்றாரறிவது: இவன் இங்ஙனஞ்சென்றதைவருணிக்குமிடத்துள்ள அடிகள் மேற் குறித்தன. இவற்றான் ஒலியவியாதமுழவுபோல் எப்போதும் அருவி கள்ஒலித்தற்குக்காரணமான மேகங்கள்சூழ்ந்த சோலைகளையுடைய மலையினைக்காண்குவமென்று விளையாட்டுவிரும்பியஇந்திரன் வானவர் மகளிரொடு பூங்காவும் யாற்றுப்பரப்பும் நீர்த்துருத்தியும் இளமரச் சோலையும் அரங்கும் பள்ளியுமென்பனவற்றை யானைமேற்பரப்பி ஒரு நூற்றுநாற்பதியோசனைவிரிந்த தன்பெருமால்களிற்றுப்பெயர்வோனைப் போலச்சென்று பேர்யாற்றங்கரையிற்சேர்ந்திருப்பஎன்றுகூறாநின்றார். அரும்பதவுரையாசிரியரும், இவ்விடத்துப் "பூங்காமுதலானவற்றை யானைமேலுளவாகநிருமித்து" எனவும் "அரங்கு-நாடகசாலை, பள்ளி-மண்டபம். களிற்றிலே இவற்றைப்பரப்பிப்பெயர்வோனென்க" எனவும் விளக்கினார். செங்குட்டுவன் வானவன் பெயர்வோன் போன்று என்பதனால் இந்திரன் உவமையும், செங்குட்டுவனுபமேயமும் ஆதல் அறியப்படும். இதன்கண் உவமையைப் பலபடியாக விசேடித்து உவமேயத்தை அத்துணை விசேடியாது விடுத்தார். அடிகள் எடுத்துக்கொண்டது உவமேயமாகிய செங்குட்டுவன் மலை காணச்சென்ற செலவையேயென்பது பலருமறிவர். உபமானமாகிய இந்திரன் விளையாட்டு விரும்பி வானவர் மகளிருடன் சென்ற செலவை ஈண்டு எடுத்துக்கூறப் புகுந்தவர் அல்லர் என்பதும் பலருமறிவர். அங்ஙனமாகவும் இந்திரனை உவமையாக்கிப் பலபடியாக விசேடித்தது, உபமான விசேடணமெல்லாம் ஏற்ற பெற்றியான் உவமேயத்துங்கொள்ளப்படுமாதலான் செங்குட்டுவன் சென்றசெலவின்றன்மை உள்ளவாறுணரப்படுமென்று கருதியேயாகும். அங்ஙனமல்லாக்கால் உவமையை அசந்தர்ப்பமாக வாளா விசேடித்தாரெனப்பட்டு அவ்விசேடணமெல்லாம் நின்றுபயனின்மையென்னுங் குற்றத்தின்பாற்படுமென்றுணர்க. இக்கருத்துப் பிறர்க்குமுடன்பாடாகும். என்னைகாரணமெனிற் செங்குட்டுவன் விளையாட்டு விரும்பி மலை காணச்சென்றானென்று அவர் கூறுதலான் என்க. விளையாட்டு விரும்பிய என்பது செங்குட்டுவனை விசேடித்ததல்லாமை காணப்படும். அஃது இந்திரனையே விசேடித்தது என்பது "விளையாட்டுவிரும்பியவிறல்வேல்வானவன்" என்பதனானன்கறியப்படும். உவமையின்கணுள்ள விளையாட்டு விருப்பத்தைச் செங்குட்டுவனுக்கும் அமைத்துக்கொண்டது உபமாவிசேடணமெல்லாம் உவமேயத்தையும் விசேடித்தனவாகக் கருதப்படும் என்ற நியாயத்தாலேயன்றிப் பிறிதில்லை. அங்ஙனமே மற்றெல்லாவற்றையும் ஏற்றபெற்றியான் அமைத்துக்கொள்ளவே வேண்டுமென்க. இங்ஙனங்கொள்வதே கவிமரபென்க. பிறர் தமக்குவேண்டிய விளையாட்டு விருப்பமொன்றையே உபமாவிசேடணத்தினின்றுகொண்டு மற்றவற்றையெல்லாம் ஒழிப்பது உரைமுறையாகாமை எளிதிலறியப்படும். இந்திரன் றன்றெய்வத்தலைமைக்கேற்ப விளையாட்டு விரும்பி அவற்றுக்குரிய உபகரணங்களைப் பெருக யானைமேற்பரப்பிச் சென்றாற்போலச் செங்குட்டுவனும் தன் இறைமைக்கேற்ப விளையாட்டு விரும்பி மலைகாண்குவமென்று பெரிய உபகரணங்களையெல்லாம் யானைகளிற் பரப்பி நெடுந்தூரஞ் சென்றான் என்றே கொள்ளப்படுமென்க. செங்குட்டுவனும் யாத்திரைகளில் உபயோகிக்கும் நாடகசாலைகளையும், மண்டபங்களையும், தாழியிற்பூத்துப்பயன்றருவனவற்றையும்,தான்விரும்பிய யாற்றுநீரையும்,துருத்திமணலையும்,தாழியினின்று குளிர்ச்சிசெய்யும் இளமரங்களையும்,பிறவற்றையும் தன்யானைகளிற்பரப்பி நெடுந்தூரம் சென்றான்என்றேகொள்ளப்படுமென்க.செங்குட்டுவன்செலவேகூற வந்தாராதலான் இதுவே கருத்தாதறெள்ளிது.இவற்றையெல்லாம் உடன்கொண்டுசென்றான் என்று செங்குட்டுவன் இறைமையும் செல் வப்பெருக்கும் இன்பப்பெருக்கும் உணரக்காட்டினார்.சாதாரண வேந்தரான் ஆகாத காரியத்தைத் தேவர்தலைவன்போலச்செய்துகொடு போனானென்றுகூறுதலே கருத்தென்க.அருவி முழங்கும் சோலை மலை காணச்செல்வோன் நீரும் நிழலும் பிறவும் கொடுபோவானேனென் னிற் றனக்கும் கோப்பெருந்தேவிக்கும் அம்மலைபோய்வருதற்கண் இடைநெறிக்கு இன்றியமையாதன இவையாதலான் என்க.இக்காலத் துள்ள பேரரசரும் தமக்கினிய நீரும் நிழலும் உரியவற்றினேற்றியுடன் கொண்டுசேறல் கேட்கப்படுதல் காண்க.அரங்கும் கொடுபோகலான் நாடகமகளிரும் பிறரும் உடன் சென்றாராதலறியப்படும்.பள்ளிஎன்றார் வேந்தனுக்கும் கோப்பெருந்தேவிக்கும் இளங்கோவடிகட்கும் வில்ல வன்கோதைக்கும் அழும்பில்வேட்கும் புலவர்க்கும் ஆயத்திற்கும் தானைக்கும் அவரவர்தகுதிக்கேற்ற யாத்திரைமண்டபங்களை.இங் ஙனமே இந்திரன் யானையின்நீளஅகலங்களையே குறித்த ஒருநூற்று நாற்பதியோசனை என்பதும் செங்குட்டுவன்யானைகளின்பரப்புக்கும் ஏறாதுபோகதென்றுணர்ந்துகொள்க.ஈண்டுக்கூறிய தொகையளவே யளவாக்கொள்ளாவிடினும் செங்குட்டுவன்யானைப்பரப்புமிகவும்அதிக மாக இருந்ததென்பதுமட்டி லிஃதுணர்த்தாமலிராதென்க.யானைப் பரப்பு இத்துணை யோசனையென்றது இவன்செல்லப்புக்க இடத்தின் றூரத்தை அதிகமாகக்காட்டுதற்கேஎன்ப தெளிதிலுணரப்படும்.பரப்பு இத்துணையாயின் அதுசெல்வது அதினுமதிகமாகவேண்டுவதேயென்க. வானவர்மகளிருடன் என்றதற்கேற்பச் செங்குட்டுவற்கும் அழகு மிக்கஇன்பமகளிர்பலருடனெனக்கூறிக்கொள்க.இங்ஙனம் பெருங் கவியரசராகிய இளங்கோவடிகள் தாமும் செங்குட்டுவனுடன்சென்று கண்ணாரக்கண்டநுபவித்தவற்றை உலகமறிந்துகொள்ள‌வேண்டி உபமாவிசேடணமுகத்தால் உணர்த்தினாரென்பதல்லது வாளாகூறினா ரெனத்துணிதற்கு எம்மனோ ருடன்படாரென்க.இங்ஙனம் கவியிரு தயத்தைக்காணமாட்டார் வேறுவேறு கூறுவர்.அவையெல்லாம் இவ் வடிகள்கருத்தாகாமை கண்டுகொள்க.

இளங்கோவடிகளுடனும் தானைத்தலைவருடனும் நூலறிபுலவ ருடனும் மலைகாணச்சென்றானென்று இக்காதையாற்றெரிதலான் இவ ரெல்லாருடனும் செங்குட்டுவன் விளையாட்டுவிரும்பினானென்றல் பொருந்தாது. அதனால் இவன் விளையாடல்மட்டுமேவிரும்பினானாகா னென்றும், அடிகளுடனும் நூலறிபுலவருடனும் அம்மலையிலுள்ள போது பல நல்ல விஷயங்களைக்கேட்டுத்தெளியவும், மந்திரியருடன் இராச்சியகாரியங்களை ஆராய்ந்துகொள்ளவும் அவகாசமுண்டாமென்று கருதி இவரையெல்லாம் அழைத்துப்போனானென்றும் தெளியலாம். இவ்வளவாலோசனையுடையனா யித்துணைப்பெருந்திரளோடு சாதாரண அரசர்க்காகாதபடி அரியபெரிய உபகரணங்களையெல்லாம் அமைத்துக் கொண்டு நெடுந்தூரம் சென்ற செங்குட்டுவன் இரண்டொருநிமிஷங் களே நாழிகையோ அம்மலையிற்கழித்து மீண்டானெனத்துணிவது சிறிதும் பொருந்தாது. இஃது இக்காலத்துப்பேரரசர்கள் தம் குடும்ப பரிவாரங்களுடன் பன்னூறுகாவதங்கடந்து வேனிற்காலத்து மலைவளந் துய்க்கச்செல்வதோடொக்குமோ அன்றி அவரவர் ஊர்ப்புறத்து மாலை யிற் சிலநாழிகைகளே நல்லகாற்றினைத்துய்த்தற்பொருட்டு உலாப் போந்து மீளுதலையொக்குமோ என்று அறிஞரேயாராய்ந்துகொள்வா ராகுக. இஃதன்றி நூலுள் மலைகண்ட அன்றே செங்குட்டுவன் மீண் டான் என்று துணிதற்கு அடையாளம் ஒன்றுமில்லை. அக்கொள்கைக்கு விரோதங்களே பல ஆண்டுக்காணப்படுகின்றன. பிறர் விளையாட்டு விரும்பிச் செங்குட்டுவன் மலைகாணச்சென்றானென்பதற் குடன்பட் டார். அவ்விளையாடல்கள் பல திறப்படுமே. அவற்றுக்கெல்லாம் அவ காசமதிகமாகவேண்டுமே. பிறர் செங்குட்டுவன்சென்றுதங்கிய பேர் யாற்றங்கரை யாண்டையதென்றுதுணிவரோ தெரிகிலேன். அவர் கூறுமாற்றான் ஆல்வாய்ப்பக்கமென் றூகிக்கப்படுகின்றது. அது துஞ்சா முழவினருவியொலிக்கும் மஞ்சுசூழ்சோலைமலையிடந்தானோ? அஃ தன்றாயின் நெடுந்தூரம் மலைமேலேறிச்சென்றாலன்றோ அத்தகையது காணலாம். கொடுங்கோளூர்க்கும் ஆல்வாய்க்குமே இரண்டுகாவதங் கட்குவிஞ்சியதாகும். அதற்குமேலே மலைகாணச்சென்றானாயின் மலை கண்டு குளித்து உண்டு பலவகைவிளையாடலையும்விளையாடி மலையி லுள்ள வேடர்கொணர்ந்த பலவகைத்திறையையும் ஏற்று அவர்பாற் கண்ணகிசெய்திகேட்டுச் சாத்தனார்வாயால் அவள் வரலாறுதேர்ந்து நெடும்போது அவளை வழிபடற்பொருட்டு நூலறிபுலவர்முதலிய பல ருடன் ஆராய்ந்துதுணிந்து, அன்றே மீண்டானென்றன்றோகொள்ள வேண்டிவரும். இத்தனைதிரளுடன் துஞ்சாமுழவி னருவியொலிக்கு மலைப்பக்கத்துக்குக் கொடுங்கோளுரினின்றுசெல்லவே சிலநாளேனுஞ் செல்லும். அங்ஙனமாக அன்றேபோய் இத்தனைகாரியங்களையுஞ்செய்து அன்றே மீண்டானென்பது இயற்கைக்கு வெகுவிரோதமாக நினைக்கப் படும். இவன்செலவுக்கே ஒருநாட்போதாதென்று துணியப்படாநிற்க இவன் மலைகண்டு விளையாடி இத்தனையுஞ்செய்து அன்றே மீளுதலுஞ் செய்தான் என்பது பொருந்தாதென் றியார்தாந் துணியார். இவன் செய்த ஒவ்வொரு வினைக்குச் சிறிதுசிறிதுநாழிகையாகப் பகுத்தாலும் நாள்கள்பலவாகும் என்றுணர்க. அரங்குங்கொடுபோயவன் விளை யாட்டுவகையுளோன்றாக நாடகமுங்கண்டானாவன். இஃதெல்லாம் நிமிஷங்களில் நடந்தனவாகா.

மதுரைக்கூலவாணிகன் சாத்தனார் மதுரைப்பதியினரென்பது பலரு மறிவர். அவர் செங்குட்டுவனை முன்னேகாணாதவர். பரிசில்வேட்கை யால் அவனைக்காண்டற்குவந்தவர். மலைமிசைவாழ்நர் என்றைக்குச் சென்று செங்குட்டுவனைப் பேர்யாற்றங்கரையிற்கண்டாரோ அன்று தான் இப்புலவர் செங்குட்டுவனைக்கண்டு அவனைக்காண்டலானுண் டாகியகண்களிமயக்கத்துடன் இவனைக்காணப்பெறுதலா னினி விசார மில்லையென்றுதுணிந்து மகிழ்ந்தவராவர். இதனை,

"மண்களிநெடுவேன்மன்னவற்கண்டு
கண்களிமயக்கத்துக்காதலோடிருந்த
தண்டமிழாசான்சாத்தனிஃதுரைக்கும்"
>
என இக்காதையிற் கூறுமாற்றானறிக. பதிகத்தும் "அவனுழையிருந்த தண்டமிழ்ச்சாத்தன்" என்பதற்குப் பரிசில்காரணமாகவந்து அவ னுழையிருந்த சாத்தன் என்று பொருள்கூறுதல் காண்க. மன்னவற் கண்டு கண்களிமயக்கத்துக்காதலோடிருந்த என்பதனால் இப்புலவர் அப் போதுதான்வந்து கண்டவர் என்பது நன்குணரப்படும். இவர் ஒரு பெருவேந்தன் பெருந்திரளுடன் பேர்யாற்றங்கரைக்குவருதலை முன் னரே நன்குணர்ந்து மதுரையைவிட்டுப் பேர்யாற்றங்கரையையடைந்து அவனைக்கண்டாரென்பதல்லது வேறு கூறலாகாது. இவர் வேந்தன் பேர்யாற்றங்கரையிற் சிலகாலம் பெருந்திரளுடன் றங்குவான் என்பதை யுணர்ந்ததனாலன்றே அவனைக்காண ஆண்டுச்சென்றார். ஒருநாளிற் சிலபோதே பேர்யாற்றங்கரையிற்றங்குவானாயின் அது வேற்றுநாட் டுக்கு முன்னரே உணரப்படாததாகும் என்று கொள்க. அவ்வொரு நாளிற் சிலநாழிகைகளை நம்பி அப்பெருவேந்தன் விளையாடல்விரும்பிச் சென்ற அம்மலையில் அவனைக்காணலாகுமென்று ஒரு பேரறிவாளன் நினைந்து தன்னாட்டை விட்டு இத்துணைத்தூரம் செல்வானா என்று அறி ஞர் ஆராய்ந்துகொள்க. அரசன் மலைவளந்துய்தது நெடுநாட்டங்குவன் என்றுணர்ந்தாலல்லது இவர் ஆண்டுப்போய்க்காண்டற்கு ஒருப்படா ரென்க. இவர் சேரர்பரிசில்காரணமாகப் பிறர்கூறுகின்ற கொடுங் கோளூர்க்குச்சென்றவராயின் அரசன் அன்றே மீடல்தெரிந்து அவ் வூரிலேதங்குவதல்லது ஒருநாட் சிலபோது விளையாட்டுவிரும்பிப் பெண்டிருடன்சென்றமலைக்கு அவ்வரசற்குப்பின்னேபோய்க்காண் டலை நினைத்தலுஞ்செய்யாரென்றுதுணிக. இதனாற் பலபுலவர் இவன் மலையிற்றங்குவதுதெரிந்து பரிசிற்குவருதலுண்டென்பது தெரியப் படும். புதியராய்ப்புக்கபெரும்புலவர் அடிகளைக்கண்டு அளவளாவிப் பின் செங்குட்டுவனைக்கண்டு தம் புலமைத்திறங்காட்டற்கண் சிலநாள்கள் கழியுமென்றுணர்க.

இவற்றையெல்லாம் நுணுகிநோக்கின் செங்குட்டுவன் மலைகாணச் சென்ற அன்றே மீண்டானெனத்துணிதலாகாமை யுணர்க. இவன் கோப்பெருந்தேவியுடனும் அடிகளுடனும் மந்திரியுடனும் அழும்பில் வேளாகிய நண்பினனுடனும்ஆயத்துடனும் படையுடனும் மலைக்குச் சென்றது அவரவராற் பலவகைப்பயனுந்துய்க்க என்று எளிதிலறிய லாம். அங்ஙனந்துய்க்கப் போதுமான அவகாசமுடையனாய் மலைக்க ணிருந்தானென்பது உணர்ந்துகொள்க. ஈண்டுப் பேரறிவாளராகிய அடியார்க்குநல்லாரும் அன்றே மீண்டானெனத்துணிந்தது இரங்கத் தக்கது. மேற்காட்டிய சிலப்பதிகாரவடிகள் ஒருவன் சேய்மைக்கட் சேறலையுணர்த்துவதன்றி அணிமைக்கட்சேறலைச் சிறிதுங்குறிக்கா மைகண்டுகொள்க. இக்காட்சிக்காதைக்கண் "இளங்கோவேண்மா ளுடனிருந்தருளி" என்புழி வேண்மாளுடனிருந்து இளங்கோவை யருளிப்பாடிட்டு என்றுமாம் எனப் பொருள்செய்தலானும் பதிகத்து "இளங்கோவடிகட்குக் குன்றக்குறவரொருங்குடன்கூடி.... இறும் பூதுபோலுமஃதறிந்தருணீயென"க் கூறினாரெனக்கூறுதலானும் இளங்கோவடிகளும் மலைக்குச்சென்றிருந்தது துணியப்படும். அடிகளும் அங்குச்சேறலையறிந்துகொண்டேதான் சாத்தனார் மலைக்குப்போய்ச் சேரனைக் கண்டாராவர் எனவுணர்க.

இனி,

"செங்குணக்கொழுகுங்கலுழிமலிர்நிறைக்
காவிரியன்றியும்பூவிரிபுனலொரு
மூன்றுடன்கூடியகூடலனையை"

எனப் பதிற்றுப்பத்துட் செங்குட்டுவற்குக் காவிரியை உவமை குறினா ரென்பது உரையாளர் "காவிரியனையையாவதேயன்றி மூன்றுடன் கூடிய கூட்டத்தனையை யெனக்கொள்க" என்று கூறியவாற்றா னன்கறி யலாம். ஈண்டுக் காவிரியனையை என்றது சேரனுக்கு இல்லாதயாற்றை உவமைகூறியதென்று பிறர்கூறுவர். இதனுண்மையை ஈண்டு ஆராய் வேன். காவிரிமுழுதுஞ் சோழர்க்கேயுரித்தாகாதென்பதனை முன்னரே கூறினேன். காவிரி குடகமலையிற்பிறந்து குணகடலையெய்தற்குள் மூன்று மண்டலங்களிற்புகுந்து செல்கின்றது. முதற்கண் மஹிஷமண் டலத்துத் தென்கிழக்காகவும், அப்பாற் கொங்குமண்டலத்துத் தெற் காகவும், சோழமண்டலத்துக் கிழக்காகவும் அவ் யாறு ஓடுதலைப் பலரும் அறிவர். கொங்குமணடலத்திற்குக் காவிரியே கிடையாதென்று கூறுத லியலாது. சேக்கிழார் ஏயர்கோன்கலிக்காமநாயனார்புராணத்தில் "கொங்கினிற்பொன்னித்தென்கரைக்கறையூர்க்கொடுமுடிக்கோயின் முன்குறுகி" எனப்பாடுதலான் கொங்குமண்டலத்திற் காவிருயொழுகு தல் நன்குணரப்படும். கச்சியப்பமுனிவர் கொங்குநாட்டியாறுகளிற் சிறந்தவற்றைக்கூறுவாராகிப்,

பாவிரிபுலவர்சாவாப்புலவரும்பழிச்சுந்தெய்வக்
காவிரிபவானியாம்பராவதிகங்கையென்னப்
பூவிரிகாஞ்சிமற்றும்பொங்கிவெண்டிரைகள்வீசித்
தாவிரிபழனமோம்பத்தலைத்தலைபரந்தமாதோ (பேரூர்ப்-நாடு-36)

என்னும் பாடலான் அவை இன்னவென்றும் அவை கொங்குநாட்டுப் பழனங்களைப் பாதுகாத்தற்கு ஆண்டுப்பரந்தனவென்றும் நன்குவிளக்கி னார். அவர் காவிரி தெற்குமுகமாகத்திரும்பியொழுகத்தலைப்பட்டது கொங்குநாடுகாண்டற்கே என வருணிப்பர். அது:-

"மதியந்தவழுஞ்சையவரைவரைப்பிற்பிறந்தகாவிரிநன் னதியந்தனக்குநேர்கிழக்கினடத்தலொழிந்துதெனாதுதிசைக்

பதிகொண்டமர்ந்தநாட்டின்வளம்பகர்தலெளிதோபண்ணவர்க்கும்"
((பேரூர்ப்-நாடு-74)

என்பதனால் அறியப்படும். இவற்றாற் காவிரி கொங்குநாட்டுண்மையும் அக்காவிரியாற் பழனம் ஓம்பப்படுதலும் நன்குணரலாம். கொங்கு சேரர்கொங்காக அக்கொங்கிற்பொன்னி பிறருடையதாமென்பது சிறிதும்பொருந்தாது. இக் கொங்கிற்பொன்னி கொங்குநாடுடைய சேரரதேயென்பது இதனாற்றெளியப்படும். கொங்கு சேரருடையது என்பதைப்பற்றி முன்னரே பரக்கப்பேசினேன். இதனாற் சேரனாட் டில்லாத காவிரியை அவனுக்குவமைகூறினாரெனத்துணிதல் கூடாமை காண்க. இனி இவ்வுவமையை ஆராய்வேன்.

இதன்கட் செங்குணக்கொழுகுங்காவிரி என்றலால் அது நேர் கிழக்காக ஒழுகுதுலைக்கூறினாராவர். செங்குணக்குஎன்புழிச் செம்மை செங்கோல் என்புழிப்போல் வளையாதநேர்மையையுணர்த்துவது. இவ் வாறு நேர்கிழக்காக ஒழுகுதல் இஃது ஆன்பொருநையுடன் கலந்தது முதலேயாகும். இதனாற் கொங்குநாடாகிய நின்னாட்டினின்று நேர் கிழக்காகச்சென்று சோணாடுபுகுங்காவிரியனையை என்றுரைத்தா ரென்பதல்லது வேறுகூறலாகாது. இங்ஙனமில்லையாகிற் செங்குணக் கொழுகும் என்றது வாளாகூறியதாகி நின்றுபயனின்மை என்னுங் குற்றத்தின்பாற்படுமென்க. இவ்வுவமையால் என்னகருதினாரெனிற் கூறுவேன். காவிரி கொங்குநாட்டினின்று நேர்கிழக்காகச் சோணாட்டுத் தடையின்றிப்புக்கு அந்நாடெல்லாம் வளம்படுத்தி அச்சோழர் தந் தெய்வம்போற்கொண்டாடிவழிபட நிலைஇயதுபோல நீயும் கொங்கு நாட்டினின்று தடையின்றிச் சோணாடுபுக்கு அந்நாட்டு அரசுநிலையிட் டுத்திருத்தியவாற்றான் நின்னைத் தெய்வம்போற் குணநாட்டார் கொண்டாடிவழிபட நிலையினாய் என்று கூறினாரெனவுணர்க. குடக முதற் குணநாடி றுதியாகத் தொழத்தோன்றுந்தன்மையினையே யீண்டுக் கருதினாரெனினுமமையும். குடநாட்டார் குடநாட்டரசனைத்தொழுத லியல்பு. அக்குடநாட்டரசனைக் குணநாட்டார்தொழுத லரிதாதலின் அவ்வரியதன்மை செங்குட்டுவன்பாற்காண்டலான் அதைப்பாராட் டியே செங்குணக் கொழுகுங் காவிரியனையை என்றாரென்க.*கலுழி மலிர்நிறைக் காவிரியனைய யென்றது அக்காவிரியைப்போல நாளும் புதுவருவாயுடைமையும் எப்போதுந் தட்பமுடைமையும் தோற்றப் பொலிவுடைமையும் எதிர்ந்தார்க்கு அச்சந் தோற்றுதலுடைமையும் தடுத்தற்கருமையும் கடத்தற்கருமையும் நீயுடையை என்று கருதினா ராவர். இங்ஙனந் தன்னாட்டும் பிறநாட்டும் இவன் பயன்படநிலைஇய தன்மையைக் காவிரியனையை என்பதனால் நயம்படக்கூறினாரெனவு ணர்க. தன்னாட்டேயில்லாமற் பிறநாட்டே பயன்படுங்காவிரியை உவ மித்தால் அஃது அவ்வரசற்குப் புகழும்பெருமையுமாகா எனவுணர்க. இங்ஙனமன்றித் தன்னாட்டில்லாததாய்ப் பிறர்நாட்டுப்பெரும்பயன் றருவதாய்ப் பகையரசர்பெருஞ்செல்வமாயுள்ள யாற்றையே உவமித் தாரென்னின் அஃது அவனுக்கில்லாமையினையும் பகையரசர்க்கு அஃதுடைமையினையும் அறிவுறுத்துமுகத்தான் அவனை இகழ்வதாகு மல்லது புகழ்வதாகாது. இவனுக்கில்லாதகாவிரியை இங்கு உவமை கூறியது இவன் இப்போது சோணாட்டைவென்றசிறப்புப்பற்றி என் பராலெனின் இவ்வமயந்தான் காவிரிபூரணமாகச் சேரனுடையதாய காரணத்தா லதனைஉவமைகூறினாரென்று அவர்க்கு அறியக்கூறுக. குடகமுதலியநாடுகளைவென்று தலைக்காவிரியையும் கொங்குநாட்டை என்றுமுடைமையால் இடைக்காவிரியையும் உடைய செங்குட்டுவன் சோணாட்டைவென்றகாரணத்தாற் கடைக்காவிரியையும் உடையவனாயி னான் என்றுகொண்டு காவிரியைப்பூரணமாகவுடையதன்மையைத் தெரிந்து அக்காவிரிபோல எங்க்ந்தொழ நிலையினாய் என்று சிறப்பித்தா ரென்றுகூறுக. மற்றுச் சேரனைக்காவிரித்துறைவன் என்னாது பொரு நைத்துறைவன் எனவே நூல்கள் கூறும். இக்காவிரித்துறையைக் குடக நாட்டாருடையராயினும் அவரையும் அங்ஙனம் நூல்கள்கூறாமை போலக்கொள்க. அக்காவிரியாலதிகவளத்தையெய்துஞ் சோழனைக் காவிரிநாடன் எனக் கூறியவாற்றாற் பிறரையும் அப்பெயரானேகூறின் உலகமலையுமாதலின் அங்ஙன மலையாமைப்பொருட்டு ஒருவனை ஒரு பெயரான் ஆளின் அப்பெயரானே பிறனொருவனை ஆளாமை கவிமர பென்க. நூல்வழக்கிற் காவிரிநாடன் என்பது சோழனையன்றி மஹிஷ மண்டலவேந்தனைக்குறியாமை நன்குணர்ந்துகொள்க. இதுபற்றி அவ் வேந்தற்குக் காவிரியில்லையென்பது எவ்வளவு அஸமஞ்சஸமாகுமென்று அறிஞர் உணர்ந்து கொள்க. இதுபோலச்சேரற்குங் கொள்க. இவ்வெல்லாம் ஆராயாது சேரனுக்குக் காவிரியில்லையென்பார் ஈண்டுக் காவிரி யனையையென்றது ஒருவன் பகைநாட்டை வென்ற தருணத்து அப் பகைநாட்டு ஊர் ஆறுமுதலியவற்றை யுடையனாக அவ்வென்றவனை வருணித்தது போலுமெனக்கொண்டு தாங்கொண்டதற்கு தாரணமாகப் "புகார்ச்செல்வ" என்று பதிற்றுப்பத்துள் பெருஞ்சேரலிரும்பொறை யென்னுஞ்சேரனை அரிசில்கிழார் பாடியதனைக்காட்டுவர். அவர் அப் பெருஞ்சேரலிரும்பொறை "இருபெருவேந்தரையுமுடனிலைவென்று முரசுங்கலனுங் கொடையுங் கொண்டுரைசால் சிறப்பின‌டு களம்வேட்"டான் என்பது பற்றி அங்ஙனங் கருதினாராவர். இச்சேரன்வென்றது இரு பெருவேந்தரையுமாக அவருட் சோழர் புகாரைமட்டும் ஈண்டு எடுத் துக்கொண்டு "புகார்ச்செல்வ"என்றுகூறுவதேனோ?' கூடற்செல்வ' என்றும் கூறாததேனோ? என்னும் வினாக்கள் நிகழ்தற்கு அவர்கூற் றிடந்தருகின்றது. ஆண்டுத் தனியேபுகார்ச் செல்வ என்னாது "காவிரி மண்டியசேய் விரிவனப்பிற்புகா அர்ச்செல்வ" என்று கூறியிருத்தலைக் காணலாம். சோழனைவென்ற‌ காரணத்தாற் காவிரி கடலொடு கலக்கும் வரையும் அது கடலோடு கலக்குமிடத்துள்ள பட்டின‌முளப்படக் காவிரி முழுதுரிமையாகிய செல்வத்தையே ஆண்டும் பாராட்டினாரென்றே துணிந்துகொள்க. இது கருத்தில்லையாயின் காவிரிமண்டிய சேய்விரி வனப்பிற்புகார் என்று விசேடித்தது பயனின்றாதல் காண்க. பாண்டியர் கூடலுடையானாகக் கூறமையானும் யான் கூறுவதேகருத்தென்க. மற்று அவர்காட்டுங் கலிங்கத்துப்பரணியிற் பொன்னித் துறைவன்* என்று முதற்கட்சோழனை நிறுவி அவன் இதனையிதனை வென்றுடைய‌னாயி னான் என்று பொருநைக் கணவன் எனவும் கன்னிக்கொழுநன் எனவும் கங்கைமணாளன் எனவும் கூறுதலும் கண்டுகொள்க. தமிழ்நாடு வென்ற தனையும் வடநாடு வென்றதனையுமன்றோ இப்பரணி காட்டுகின்றது: அங்ஙனம் வென்ற‌தெல்லாங் கூறினாற்போல இப்பதிற்றுப்பத்துக்கூறாது காவிரிமண்டியபுகாரையே கூறியதனாற் காவிரியைக் குறையவுடைய சேரன் முழுதுமுடையனாயினான் என்பதே கருதினாரெனத் துணியப் படுமென்க. பதிற்றுப்பத்தின் ஒன்பதாம்பத்துள்,

------------------
*பொன்னித்துறைவனைவாழ்த்தினவே
------------------------------வே
கன்னிக்கொழுநனைவாழ்த்தினவே
கங்கைமணாள‌னைவாழ்த்தினவே (கலிங்கத்துப்பரணி-செய்-120)

"சாந்துவருவானிநீரினுந்
தீந்தண்சாயலன்மன்றதானே" (பதிற்-86)

எனச் சேரற்கு அவன் நாட்டுள்ள வானியாற்று நீரினையேயுவமித் தலையும் ஈண்டைக்கு நோக்கிக்கொள்க. வானி ஆன்பொருநைக் குப்பெயரென்பது "ஆனிவானியான் பொருந்தமாகும்" என்னுந்திவா கர‌த்தானுணரலாம். "வடகொங்கின் வானியாற்றின்" என வரும் தேசி கப்பிரபந்தத்தா லிது கொங்கிடத்தது புலனாம்.

இப் பிறர் காவிரியைச் சேரனாட்டிலில்லாததாகக் கூறுதலாற்பயன் காவிரி சேரற்கில்லாமைகூறின் அக்காவிரிபாயுங் கொங்குநாடு சேரற் கில்லாமை பெறப்படும். கொங்குநாடு சேரற்கில்லாமைபெறப்படின் கொங்குநாட்டுக் கருவூர் சேரர்வஞ்சியாகாமை துணியப்படுமென்பது போலும். இவர்க்கியான் கூறுவதென்னவெனின் கொங்குநாடு சேரருடையதென்பது பலபடியாலும் யான் முன்னர்த் தெளிவித்து விட்டேன். அதனால் அந்நாட்டுள்ள யாறும் மலையும் ஊரும் பிறவுமெல் லாஞ் சேரருடையனவேயாகும். கொங்குநாட்டிற் காவிரியேயில்லை யெனல் தேவர்க்குமாகாது. அந்நாட்டைச் சேரர்க்கில்லையெனல் யாவர்க்குமாகாது. இதனாற் சேரர்கொங்குநாடு காவிரியானும்வளம் பெறுதலுணரப்பட்டதாகும் என்க. இங்ஙனமாகவும் ஒருசாரார் காவிரியொழுகாத நிலமே கொங்குநாடென வரைந்து காட்டினார். அது

"பொன்னித்தென்கரையாங்கொங்கினிடை" (திருஞான-324) எனவும்

"கொங்கினிற்பொன்னித்தென்கரைக்கறையூர்க்
கொடுமுடிக்கோயின்முன்குறுகி" (ஏயர்கோன்கலிக்காமநாயனார்-87)

எனவும் வருஞ் சேக்கிழார் பெரிய‌புராணத்தொடும்,

"மதியந்தவழுஞ்சைய‌வரைவரைப்பிற்பிறந்தகாவிரிநன்
னதியந்தனக்குநேர்கிழக்கினடத்தலொழிந்துதெனாதுதிசைக்
கதிகொண்டெழுந்ததுயர்கொங்குகாணும்விழைவாலெனிலிந்தப்
பதிகொண்டமர்ந்தநாட்டின்வளம்பகர்தலெளிதோபண்ணவர்க்கும்"

பரதகண்டத்திற்பசுந்தமிழ்நாட்டினிற்சைய‌
வரைதனக்குத்தென்றிசையினில்வளம்பயில்கொங்கென்
றுரைதனோடுயரொருபெருநாளேத்தனில்"

"மதுவனத்தின்மேற்றிசைப்பொறிவண்டுபண்பாடும்
புதுமலர்த்திரள்சுழித்தெழும்பொங்குகாவேரி
நதிதன‌க்குத்தென்றிசையினாம்பராவதிவடபாற்
பதிவுகொண்டெழும்பவானியின்கீழ்த்திசையுளதால்"

எனவருங்கச்சியப்பமுனிவர் பேரூர்ப்புராணத்தொடும் முரணுமாறு கண்டுகொள்க. கொங்குநாட்டே காவிரியுளதாகவுஞ் சோழரையே அஃதுடையராகக் கூறுதல்

"மேக்குயரக்,
கொள்ளுங்குடகக்குவடூடறுத்திழியத்
தள்ளுந்திரைப்பொன்னிதந்தோனும்" (விக்கிரமசோழனுலா)

என்பதனால் ஆதியிற்காவியாற்றைத் தமிழ்நாட்டிற் கொணர்ந்தவ ரென்னும் உரிமை பற்றியாகுமென்று கொள்ளத்தகும்.

இனிக் கந்தபுராணத்துக் காவிரிநீங்கு படலத்துக் காவிரியானது முதன்முதல் அகத்தியர் கமண்டலத்தினின்று கவிழ்க்கப்ப்டொழுகி யது கொங்குநாட்டின் கண்ணேயென்று தெளிவாகக் கூறப்பட்டிருத்தல் கற்றார்பலரும் அறிவர். இதனை,

"செங்கைதூங்கியதீர்த்தநீரொடுங்
கொங்கின்பாற்செலக்குறியமாமுனி
.... .....
வங்கண்மேவினாரருந்தவர்போல்"

"ஆசில்கொங்கினுக்கணித்தினோரிடை வாசமீதென்மகிழ்ந்துவீற்றிரீஇ"

"அருந்தவமுனிவன்கொங்கினமலனையருச்சித்தங்கணிருந்திடுகின்றான்."

"அகத்தியன்கொங்கின்பால்வந்தருச்சனைபுரிந்துமேவும்"

"அன்னவன்றனதுமாட்டோரணிகமண்டலத்தினூடே
பொன்னியென்றுரைக்குந்தீர்த்தம்பொருந்தியேயிருந்ததெந்தாய்
நன்னதியதனைநீபோய்ஞாலமேற்கவிழ்த்துவிட்டா
லின்னதோர்வனத்தினண்ணுமென்குறைதீருமென்றான்"

"கொங்குறுமுனிவன்பாங்கர்க்குண்டிகைமீதிற்பொன்னி
சங்கரனருளின்வந்ததன்மையும்புணர்ப்புமுன்னி
யைங்கரன்கொடியாய்நண்ணவகத்தியனவனென்றோரா
னிங்கொருபறவைகொல்லாமெய்தியதென்றுகண்டான்"

"குண்டிகையதனைத்தள்ளிக்குளிர்புனற்கன்னியன்னான்
பண்டையிலிசைவுசெய்தான்பாரினீபடர்தியென்றான்"

"நன்னதிபோலவிண்ணுஞாலமுநடுங்கவார்த்துப்
பொன்னியாறுலகந்தன்னிற்பொள்ளெனப்பெயர்ந்ததன்றே"

"மறைகின்றவெல்லைதனிற்குறுமுனிவிம்மிதமாய்மன்னுயிர்களெங்கு முறைகின்றதனிமுதல்வன்புதல்வன்றன்கோலத்தையுணர்ந்துபோற்றி யறைகின்றகாவிரியைக்கண்ணுற்றுநகைத்துவெகுண்டருள்கைநாடி யுறைகின்றகொங்குதனையொருவித்தென்றிசைநோக்கியொல்லைசென்றான்"

என வருவனவற்றால் நன்கு தெளிந்துகொள்க. இக்கதை .. ....


இனிப் பிறர் தமிழ் மூவேந்தர்க்கும் யாறு மஹாநதியாகவே இருக்க வேண்டுமென்பதற்கு ஆதாரமாகத் திருவள்ளுவமாலையிற்கண்ட,

"மும்மலையுமுந்நாடுமுந்நதியுமுப்பதியு
மும்முரசுமுத்தமிழ்க்கொடியு-மும்மாவுந்
தாமுடையமன்னர்தடமுடிமேற்றாரன்றோ
பாமுறைதேர்வள்ளுவர்முப்பால்"

என்னும் வெண்பாவை எடுத்துக்காட்டுவர். இப்பாடல் அவர்கொள் கையை எதனாலாதரிக்கின்றதென்பதை யானறிகிலேன். மும்மலையா கிய பொதியம் கொல்லி நேரி என்பவை தம்முளொத்தனவில்லை. இவை முறையே உத்தமம் மத்திமம் அதமம் என முத்திறப்படுமென்பது பலரு மறிவர். முந்நாடும் மலைநாடும் கடனாடும், நீர்நாடுமாகக்கூறப்படும். இவை தம்முள் ஒத்தனவாகா. பாண்டிநாட்டு முத்து மிகுதியும், சோழ நாட்டு நென்மிகுதியும், சேரநாட்டுப் பொன்மிகுதியுங்கூறுப. முந்நதி பாண்டியர் வையைமுழுதுமுடையர். சேரர் பொருநைமுழுதுமுடை யர். சோழர் காவிரியிற் கடையாறேயுடையர். முப்பதி – பாண்டியர் கூடலுக்கு மற்றை இருவேந்தர் தலைநகரும் ஒவ்வா-சோழர் உறையூரி னுஞ் சேரர்கருவூர்பெரிது. மும்முரசு வீரமுரசு, நியாயமுரசு, தியாக முரசு. வீரமுரசைப் பிரதானமாகவுடையர் வில்லுடைய சேரர்; நியாய முரசைப்பிரதானமாகவுடையர் தமிழுடைப்பாண்டியர்; தியாகமுர சைப் பிரதானமாகவுடையர் நெல்லுடையசோழர். "அறந்துஞ்சுறந் தைப்பொருநனை" எனவருதலானறிக. இங்ஙனமுரசினைப் பிரித்து மூவர்க்குங்கொள்ளாக்கால் மேல் மும்மலைமுதலாகப் பிரித்தெடுத்துக் கூறிவந்தமுறையொடு முரணுமென்க. முத்தமிழும் இவ்வாறேகொள் ளப்படும். பாண்டியர்க்கு இசைத்தமிழும், சேரர்க்கு நாடகத்தமிழும், சோழர்க்கு இயற்றமிழும் பிரதானமாகக் கூறப்படுமென்க. இவற்ற துண்மையினைப் பழைய நூல்களினாய்ந்துகொள்க. ஈண்டுரைப்பிற் பெருகும். முக்கொடி வில்லும், கயலும், புலியும். இவற்றதொவ்வாமை எளிதிலறியப்படும். மும்மா, கனவட்டம், பாடலம், கோரம் என்பன. இவையுந் தம்முளொவ்வா என்பது பிற்காலத்தார் "கோரத்துக்கொப் போகனவட்டமம்மானை" எனப்படுதாலுணரப்படும். இனித் தட முடிமேற்றார்மூன்று. போந்தை, வேம்பு, ஆர். இவற்றது ஒவ்வாமை கண்கூடாகக்காணப்படும். இங்ஙனமே முப்பாலும் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால். இவற்றுள்ளும் உத்தம மத்திம அதமம் என முத்திறப்படுதல் உணர்ந்து கொள்க. வள்ளுவர் முப்பால் மூவேந்தர் முடிமேல் மூன்றுதாரன்றோ வென்பதே கருத்தாகலான் சோழர் அறத்துப்பாலையும், சேரர் பொருட்பாலையும், பாண்டியர் காமத்துப்பா லையும் தத்தம்முடிமேற் றார்போலச்சூடிக்கொள்வர் என்று கருதி யுரைத்தாரெனவறிக. இங்ஙனம் பாடன்முழுவதூ உந்தாரதம்மிய மயமாகவுள்ளது, முந்நதியும் ஒத்தனவாக வேண்டுமென்பதற்கு எத் * தாரமாகுமோ? யான் கண்டிலேன்.

இனிப் பிறர் சேரனாட்டுக்காவிரியில்லையென்பதற்கு மற்றொன்று கூறுவர். அஃதாவது-

சேரர்செங்குட்டுவன் பத்தினிக்கடவுட்குக்கற்கொள்ளவும்
அக் கல்லை நீர்ப்படைசெய்யவுந்தெளியுமிடத்துப்,

"பொதியிற்குன்றத்துக்கற்கால்கொண்டு
முதுநீர்க்காவிரிமுன்றுறைப்படுத்தன்
மறத்தகைநெடுவாளெங்குடிப்பிறந்தோர்க்குச்
சிறப்பொடுவரூஉஞ்செய்கையோவன்று (சிலப்-காட்சி)

என அவன் கூறுதலான் இக்காவிரி அவனாட்டதாகாதென்பது. செங்குட்டுவன் கண்ணகியைவழிபடவேண்டுமென்று நூலறிபுலவரைநோக் கப்புலவர் அவனுள்ளக்கருத்தைக் குறிப்பானுணர்ந்து
ஆங்கவ, ரொற்காமரபிற்பொதியிலன்றியும்
விற்றலைக்கொண்டவியன்பேரிமயத்துக்
கற்கால்கொள்ளினுங்கடவுளாகுங்
கங்கைப்பேர்யாற்றினுங்காவிரிப்புனலினுந்
தங்கியநீர்ப்படைதகவோவுடைத்தென (சிலப்-காட்சி)

எனக்கூறியதன்பின் செங்குட்டுவன் கூறியனவாகுமுற்காட்டியஅடிகள். ஈண்டுப் பிறர்கருத்து, சோழரையும் பாண்டியரையும் வென்று சேரன் தமிழ்நாட்டுத் தலைமையெய்தியிருந்தாலும், தன்னாட்டில்லாமலையிற் கற் கொண்டு தன்னாட்டில்லாக் காவிரியில் நீர்ப்படைசெய்தல் தன் வீரக் குடிக்கு இழுக்கென்று செங்குட்டுவன் சினந்து கூறினான் என்பதாம். செங்குட்டுவன் கருத்து இதுவோவேறோ என இங்கு ஆராய்வேன். பத்தினிக்கடவுளைப் பரசல் வேண்டுமெனச் செங்குட்டுவன் புலவரை நோக்கியவளவிற் புலவர் நன்றாய்ந்து எளிதாச்செய்தல், அரிதாச் செய்தல் என இருவகையினையுமுணர்ந்து நீ எளிதாச்செய்தலைக் கருதினாயாயின் இத்தென்னாட்டகத்தே தளராததன்மையினையுடைய பொதியிலிற்கற்கொண்டு இத்தென்னாட்டகத்தேயுள்ள காவிரிப்புனலி னீர்ப்படை செய்து கடவுண்மங்கலம் புரிதலாகும். அரிதாச் செய்தலைக் கருதினாயாயின் சேரர்விற்பொறியைத் தலையிற்கொண்ட சிறந்த எல்லா மலையினும்பெரிய இமயத்துக் கற்கொண்டு எல்லாயாற்றினும் பெரிய கங்கையாற்றில் நீர்ப்படைசெய்து கடவுண்மங்கலம் புரிதலாகுமென இரண்டுபடக்கூறினார். இதைக்கேட்ட செங்குட்டுவன் இமயத்திற் றாழ்ந்தபொதியக் குன்றத்துக்கற்கொண்டு கங்கையிற்றாழ்ந்த காவிரிப் புனலில் நீர்ப்படைசெய்து இங்ஙனம் எளிதாப்புரிதல் எம்வீரக்குடிக் கேற்றதன்று எனக் கூறினான். இக்கருத்தே கொள்ளுமாறு இளங்கோ வடிகள் ஏற்றசொற்பெய்து ஈண்டு விளக்கியுள்ளார். அவர் நூலறிபுல வர்கூற்றாகக் கூறியவிடத்துப் பொதியில் தளராதவியல்புடையதுதான்

ஆயினும் இமயம் சேரர்விற்பொறியை மற்றை இருவேந்தர்கயற்பொறி யினும் புலிப்பொறியினும் மேலாகத்தலையிற்கொண்டது மலையரையன் ஆகச்சிறந்தது; அங்ஙனஞ்சிறத்தற்குக் காரணமாக எல்லாமலையினும் பெரிதாகவுள்ளது; பொதியில்போல எளிதாக ஈண்டேகொள்ளத்தக்க தொன்றன்று; நெடுந்தூரம்போய்ப் பன்னாடுகடந்து அரிதாகக் கொள்வ தொன்று என்றும், அங்ஙனமே கங்கையே பேர்யாறென்றும், அதனை நோக்கக் காவிரிசிற்றாரென்றும், அக்கங்கைப்புனலே காவிரிப்புனலாத லான் அதன்புனலிலும் நீர்ப்படைசெய்தலாகும் என்றும், இவற்றின் தாரதம்மியமும் செய்யுங்காரியத்தினருமையும் எளிமையுந்தோன்றக் கூறக்கேட்டுச் செங்குட்டுவன் அவர்கூறியகருத்தைத்தெரிந்து கொண்டவனாகி மலையரையன் கணல்லாமல் பொதியிலாகிய குன்றிலே கற்கொண்டு கங்கையின் புதுப்புனலன்றிப் பழையபுனலேயுடைய காவிரி முன்றுறையிலதனைப்படுத்து இங்ஙனமெளிதாகச் செய்தல் வீரப் பெருமையினையும் அதற்கேற்றவாட் படையினையுமுடைய சேரர்குடிப் பிறந்தோர்க்குச் சிறப்போடுவருஞ் செய்கையன்று என்றான் என்று கூறிய குறிப்புக்கொண்டு ஆராய்ந்துகொள்க. வியன்பேரிமயம் என்று புலவர் கூறியது தெரிந்து அதனை நோக்கப் பொதியில் க்ன்றளவே என் னுங்கருத்தான் பொதியிற்குன்றமென்றிகழ்ந்து கூறினானென்க. கங்கைப் பேர்யாறென்றும் காவிரிப்புனல் என்றும் உயர்வுதாழ்வு தோன்றக் கூறியதனையுணர்ந்து முதுநீர்க்காவிரி என்றிகழ்ந்து கூறினானென்க. நச்சினார்க்கினியர் தொல்காப்பியப்பாயிரவுரைக்கண் அகத்தியர் கங்கை யாருழைச்சென்று காவிரியாரையும் உடன்கொண்டு தென்றிசைப் போந்தாரென்று கூறுதலான் இக்காவிரிநீர் கங்கையின் பழைய நீராதல் தெள்ளிது. இது கருத்தன்றாயின் தங்கருத்து வேறுபாடுதோன்ற அதற்கேற்ற சொற்பெய்து புலப்படுத்துவரென்க. கங்கையே மஹா நதியென்றும், அதனைநோக்கக் காவிரிபுனலளவேயென்றுங் கூறினாரென வுணர்க. பொதியிலைமுற் கூறியமுறைப்படி காவிரியைமுற் கூறாதது பொதியிற்கும் காவிரிக்கும் ஓரியைபு மின்மையுணர்த்தற்கு இமயத்தைக் கூறியதன்பின் கங்கைப்பேர்யாற்றைக் கூறியது அவ் யாறு அவ்விமயத் தேபிறப்பதென்னுமியை புணர்த்தற்கு எனஅறிக. இவ்வளவு அழகாக உயர்வுதாழ்வு புலப்படுத்திக் கூறியதுகேட்டு அரசனும் அதற்கேற்ற வாறு கூறினானெனத் தெளிந்துகொள்க. ஈண்டியான் கூறுவதுகருத்தன் றாகிப் பிறநாட்டு யாறும் மலையும்பற்றி இகழ்ந்தானெனக்கூறுவதாயின் இவன் உடன்பட்ட இமயமும் கங்கையும் இவனாட்டனவாதல்வேண் டும். அங்ஙனமில்லையாதலான் அது கருத்தன்றென்க. மற்றுச் சேரர் விற்றலைக் கொண்டது கூறினரெனின் சேரர்விற்றலைக் கொண்டதுபோலப் பாண்டியர் கயற்பொறியையும் சோழர் புலிப்பொறியையும் இமயம் சூடியுள்ளதென்பது தொன்னூல்கள் பலவற்றிலுங்கண்டது. அதனால் அது சேரர்க்கேசிறந்ததெனலாகாது. இளங்கோவடிகளே வாழ்த்துக் காதைக்கண்,

"முடிமன்னர்மூவருங்காத்தோம்புதெய்வ
வடபேரிமயமலை"

எனப்பாடுதலான் யான் கூறியதனுண்மையுணர்க. இமயம் விற்றலைக் கொண்டதுபோலக் கங்கைக்கு ஒன்று கூறலாகாமையானும் பிறர்கூறு வது கருத்தன்றாதலுணர்க. முன் பாண்டியனதாய் இப்போது வென்றி யாற் சேரனுடையதாயிருக்கும் பொதியத்திற் சேரற்குள்ளபாத்திய மும் இமயத்திற்கூறவியலாதென்பது ஈண்டைக்கு ஆராய்ந்துகொள்க. மூவருங்காத்தோம்பு வடபேரிமயமலை என்றலானும் அது சேரர்க்குத் தனியே சிறந்ததாகாது. மற்று விற்றலைக்கொண்ட என்றது சேரர் விற்பொறியைத் தலையிற்சூடியதன்மையான் சேரரைமதித்து மலை யரையன்கற்றருவான் என்பது குறித்தவாறு. அங்ஙனமென்னை மதித்து மலையரையன் ஒருகற்றாரானெனின் யானிது செய்வல் என மேற் செங்குட்டுவன் வஞ்சினங்கூறியவாற்றானும் இதுவே கருத்தாத லுணர்க. "பெருமலையரசன், கடவுளெழுதவோர் கற்றாரானெனின்" என அவன் கூறுதல்காண்க. தாரானெனின் என்றது தான் அரசனாக விருந்து தன்னோடொத்த ஓரரசனுக்குத் தெய்வகாரியத்தின்பொருட்டு ஒரு கல்லைத் தாரானெனின் எ-று. எனின் என்றது நல்குதலொருதலை எ-று. தரல்வினையான் ஒப்புக்குறித்தார். இவற்றாற் செய்யும் வினையின் உயர்வு பற்றியும் செய்யும் தன்னுயர்வுபற்றியும் தாழ்ந்தனவும் எளியன வும் நீக்கி உயர்ந்தனவும் அரியனவுஞ் செய்யப்புக்கானென்று தெளிந்து கொள்க. காவிரிமுன்றுறை என்றதனானும் தன்னூர்க்குஅணித்தா தல்குறிக்கப்படும். காவிரி கருவூர்க்கு ஐந்துமைலில் நெரூரையடுத்தோ டுவது. இஃதன்றி யான் மேற்காட்டியவாற்றாலும் இவனாட்டுக்காவிரி யுண்மை தெளியப்பட்டதாகும். அதற்கேற்ப நோக்குமிடத் தியான் கூறுவதே உண்மைக்கருத்தாதனன்றுணரப்படும். இளங்கோவடிகள் யான் கூறுங்கருத்துப் புலப்படுத்தே சொற்பெய தினிமையாகப் பாடி யிருத்தலைக் கற்றாராராய்ந்து கொள்க. இங்ஙனங் கொள்ளாக்காற் புலவர் இரண்டுபடக்கூறியதற்குப் பொருளின்றாதல் காண்க.

பொதியமலை சேரனாட்டுக்கும் பாண்டியனாட்டுக்கும் எல்லையாக வுள்ளது. அதனால்தான் ஒருபுறம் பாண்டியற்கும் மற்றப்புறன் சேரற் கும் உரியதாயினும் அதனுரிமை பாண்டியற்கு வழங்கப்பட்டதனால் சேரற்கு அது கூறப்படுதலில்லை. இதுபோலக் காவிரியின் ஒருபாகம் சேரற்கு உரியதாயினும் அதன் மறுபாகத்தையுடைய சோழற்கே அஃதுரிமையாக வழங்கப்பட்டவாற்றால் அது சேரற்குக் கூறப்படுத லில்லையென்றுணர்க. இங்ஙனமல்லாக்கால் நூல்வழக்குத்தடுமாறு மென்க. இவ்வுண்மையினை ஆராய்ந்துகொள்ளாது சேரனாட்டிற்காவிரி யேயில்லையென்று கூறினாருமுளர்.

கரணமமைந்தகாசறுகாட்சிப்பரணர் செங்குட்டுவனைக் "காவிரி யனையை" என்றுகூறியவிடத்து அவர் பெய்துள்ளசொற்கள் சிலவற்றை ஆராயினும் யான் கூறுவதேகருத்தாதறெளியப்படும். அவர்,

"மாமலைமுழக்கின்மான்கணம்பனிப்பக்
கான்மயங்குகதழுறையாலியொடுசிதறிக்
கரும்பமல்கழனியநாடுவளம்பொழிய
வளங்கெழுசிறப்பினுலகம்புரைஇச்
செங்குணக்கொழுகுங்கலுழிமலிர்நிறைக் காவிரி" (பதிற் - 50)

எனக்கூறியுள்ளார். இதன்கண் மாமலையின்கண் காற்றான் மயங்கியகத ழுறையானது மான்கணங்கள் குளிர்ச்சியானடுங்க ஆலியோடுசிதறநாடு கள் கரும்பமல்கழனியவாய் வளம்பொழிய உலகத்தை வளங்கெழுசிறப் பிற்புரந்து நேர்கிழக்காக ஒழுகுங்கலுழிமலிர் நிறைக்காவிரி என்றுய் அது செல்வுழியெல்லாம் கரும்பமல்கழனியவாக வளம்படுத்தலையும் இங்ஙனம் பலநாடுகட்கும் வளத்தையுண்டுபண்ணுஞ் சிறப்பான் உலகம்புரந்து பின் செங்குணக்கு ஒழுகுதலையுங் கூறுதலான் அது சோணாட்டை மட்டுமே புரப்பதாகக் கூறாமை காண்க. காவிரிபுரக்குநாடுடையான் எனச் சோழனைக்கூறுமிடத்துக் காவிரிபுரக்குங்குட கமுங் கொங்கும் சோணாடும் என்னும் மூன்றனுள் இறுறியதுடைமையே கருதப்படுத லுங்காண்க. இத்துணையுங் கூறியவாற்றாற் சேரனாட்டிற் காவிரியில்லை யென்றல் பொருந்தாமையுணர்க.

இனிச் சோழன் குராப்பள்ளித்துஞ்சிய கிள்ளிவளவன் கருவூ ரெறிந்தானைக் கோவூர்கிழார் பாடிய புறப்பாட்டில்

"மைந்தராடியமயங்குபெருந்தானைக்
கொங்குபுறம்பெற்றகொற்றவேந்தே

வஞ்சாமறவராட்போர்பழித்துக்
கொண்டனைபெருமகுடபுலத்ததரி"

எனக்கூறியதன்கண் சோணாட்டிலிருந்து வஞ்சியெறிவதற்காக மலை நாடு சென்றான் என்பதைக்காட்ட 'கொங்குபுறம்பெற்ற கொற்றவேந்தே' என்று சொல்லப்பட்டிருக்கிறதென்று பிறர்கொண்டார். இது புறம் பெற்ற கொற்றமென்பது இன்னதென்றும் குடபுலம் இன்னதென்றும் உணராமையானே விளைந்ததென்று தமிழறிவுடையார் எளிதினுணர்வர். குடபுலம் கொங்குநாடு முதலாகச் சேரனாடு முழுதையுங்குறிக்குமா யினும் அது கொங்குநாட்டுக்கே சிறப்பாக வழங்கப்படுதலை முன்னரே விரித்துறைத்தேனாதலான் ஈண்டுக்கூறுவது மிகையாகும். கொங்கு புறம்பெற்றகொற்றம் என்பதனையும் முன்னரே இன்னதென்றுணர்த்தி னேனாயினும் ஆண்டுச்சுருங்கவுரைத்ததனை ஈண்டு விரித்து விளக்குவல். கொங்குபுறம் பெற்ற கொற்றமாவது கொங்கிற்பொருது அந்நாட்டார் புறக்கொடையைப் பெற்றதனாலுண்டாகிய வெற்றி. அவ்வெற்றியை யுடையனாகச் சோழனை விளித்தார். இங்ஙனம் கொங்குநாடு முழுதும் புறக்கொடை கொடுத்து ஓடியதியாங்ஙனம் என்னும் ஆகாங்ஷை யுண்டாக ஒருநாடுமுழுதும்வெல்வது என்பது அந்நாட்டுத்தலை நகரை வென்று கோடலானெய்தலாவதென்று கொண்டு அக்கொங்கு நாட்டுத் தலைநகராகிய வஞ்சிமுற்றம் வயக்களனாக அஞ்சாமறவராட் போர்பழித்துக் கொண்டனை பெருமகுடபுலத்ததரி என்று கூறினார் எனவுணர்க. இங்ஙனமல்லாது கொங்குபுறம் பெற்றகொற்றம் ஏன்பது கொங்குநாட்டுகப்பாற் கடந்துபோன கொற்றம் என்றாகாமை நன் குணர்ந்துகொள்க. கொங்குநாடு புறங்கொடுத்தால் அந்நாட்டாரைப் பின்பற்றி வீரவேந்தன் அப்பாற் செல்லான் என்க. புறங்கொடுத்தால் அவர்மேற்செல்லாது மீடலே பண்டைவீரரியல்பு. வீரராயுள்ளார் தம்மொடுபொருதார் புறக்கொடைபெற்றவளவில் இம்மெல்லியாரோடு நாம்பொருதோமே என்று மிக நாணுவரென்க.
"செருவின்மறிந்தார்
புறங்கண்டுநாணியகோன்" (இறையனார்களவியலுரைமேற்கோள்)

எனவருதலானுணர்க. புறம்பெறுதல்-புறக்கொடைபெறுதல் என்பது, "துப்புறுவர் புறம்பெற்றிசினே" (புறம் -11) எனவருதலானுணர்கக் கொங்குபுறம் பெற்றகொற்றம் யாண்டு உண்டாயது என்பதனை விளக்கி 'வஞ்சிமுற்றம்வயக்களனாக' என அவ்வெற்றிக்களங்கூறுதலானு மிஃ துணரப்படும். நாட்டுத் தலைநகரைப் பகைவரினின்று காத்தற்கு நாட்டா ரனைவரும் ஒருப்படுவராதலான் அவ்வனைவரானுங் காக்கப்பட்ட தலை நகரை வெற்றிக்களனாக அஞ்சாமறவர் ஆட்போர் பழித்து அதனைக் கைக்கொண்டதன்மையால் அந்நாடுபுறங்கொடுத்த கொற்றமெய்தினா னாகும். பதிற்றுப்பத்துள் "பொருமுரணெய்தியகழுவுள் புறம்பெற்று" (88)என்புழிக், கழுவுள்என்பவனுடைய புறக்கொடையைப்பெற்று என்று பொருளாதல் காண்க. இதனா லீண்டுப் பிறர்கொண்டகருத்து புறப்பாட்டிலுள்ள சொல்லொடும் பொருளொடும் பொருந்தாதாத லெளிதினுணர்க.

இனிக்கருவூருள்ளநாடு யாதாம் என்று வினாவுவாருமுளர். பெரும் பாலுந் தலைநகருள்ளநாடு அத்தலைநகர்ப் பெயரைப் பெறுதல் வழக்கென் பது புகார்நாடு, மதுரைநாடு, காஞ்சிநாடு எனவழங்குதலான் அறிய லாம். "சிகரந்தோன்றாச் சேணுயர் நல்லிற்புகாஅர்நன்னாட்டதுவே" (181) என அகப்பாட்டினும் "பொன்னெயிற்காஞ்சி நாடுகவினழிந்து" (28) என மணிமேகலையினும் வருதலானுணர்க. அவ்வந்நாட்டுச் சிறுபகுதி கட்குத் தலைநகரானவற்றுக்கும் இஃதொக்கும். தேவாரத்துக் "கொண்டனாட்டுக் கொண்டல்" "மிழலைநாட்டுமிழலை" "குறுக்கை நாட்டுக்குறுக்கை" எனவருதலா னுணர்ந்துகொள்க. இவற்றாற் கருவூர் நாடு, வஞ்சிநாடு என வழக்குப்பெறுமென்றுய்த் துணர்ந்துகொள்க. வீரசோழியவுரைகாரர் "ஈரெட்டு மூவைந்து" என்னும் பாட்டினுரை யில் பதினாறாமுடலும் பதினைந்தா முடலுந்தெற்றக் கருநிலஞ்சுற்றின தேசத்துச் சிலர் வழங்குவர் எனவும், பதினேழாமுடலும் மூன்றாமுட லுந் தம்முட் டெற்றக் காவிரி பாய்ந்த நிலத்துச் சிலர்வழங்குவர் எனவும், நெல்லுக்காநின்றது வீட்டுக்கா நின்றதென்று பாலாறு பாய்ந்த நிலத்துச் சிலர் வழங்குவர் எனவும் கூறுகின்றார். இவர் செந்தமிழ்நாடு பாண்டி நாடு எனக்கொண்டு செந்தமிழ் வழக்கல்லாதன சிலவற்றை அப்பாண்டி மண்டலமொழிந்த மற்றை மூன்றுமண்டலங்களிலுஞ் சிற்சிலர் வழங் குவரென்று கூறுகின்றாரென எளிதிலறியலாம். காவிரி பாய்ந்தநிலம் என்பதனாற் சோணாட்டையும், பாலாறுபாய்ந்த நிலம் என்பதனாற் றொண்டைநாட்டையுங் குறித்தாராதலான், ஒழிந்த கருநிலஞ்சுற்றின தேசம் என்பதனாற் சேரனாட்டையே குறித்தாரென்பது தெள்ளிது. ஊரினைக்கருவூர் என்பதுபோல நாட்டினைக்கருநிலம் என்பதனாற் கரு நாடு என்று கருதினரோஎன ஊகிக்க இவ்வழக்கு இடந்தருகின்றது. கருநிலம்-கன்னடம் எனவும், அதுசுற்றியதேசம், சேரதேசமெனவுங் கூறினுமமையும்.

இனி "வஞ்சியர்கோன்வஞ்சிமதவேழம்" என்புழி வஞ்சியர்கோன் வஞ்சி எனவருதலான் வஞ்சியர்கோன் என்பது வஞ்சிநாட்டார்க்கு இறையெனவும், அவனுடையவஞ்சி கருவூர் எனவும் கொள்ளக்கிடத்த லான் இக்கருவூர்நாடு வஞ்சிநாடு எனப்பட்டதெனினும் பொருந்தும். இவ்வஞ்சிநாடு சேரனாகிய மலையமானாட்டு ஓர் உட்பகுதியாக்மென்று கொள்க.

இத்துணையுங்கூறியவாற்றாற் கொங்கிற் கருவூர் சேரர்தலைநக ரென்றற்கட் பிறர்கூறும் ஆ‌ஷேபணைகளி லொன்றேனு நிலைபெறாமை நன்குணரலாம்.

இனி இறையனார் களவியலுரைக்கண் மூவேந்தர் தலைநகர்களி லும் நிகழும் விழாவைக்குறித்து "மதுரை ஆவணியவிட்டமே, உறை யூர்ப்பங்குனியுத்தரமே, கருவூர் உள்ளிவிழாவே என இவைபோல்வன" (16-சூத்-உரை) எனவருதலைப் பலருமறிவர். இதன்கட்கூறப்பட்ட கருவூர் சேரர் தலைநகரேயென்பது பாண்டியர் தலைநகராகிய மதுராயுட னும் சோழர் தலைநகராகிய உறையூருடனுஞ் சேரவுரைத்ததனா லுண ரப்படும். மூன்று தலைநகர்களிலும் நிகழும்விழாக்களே ஈண்டுக்குறிக்கப் பட்டனவாதல் கண்டுகொள்க. அகப்பாட்டில் " கொங்கர், மணி யரையாத்துமறுகினாடு, முள்ளிவிழவினன்ன, வலராகின்றதுபலர்வாய்ப் பட்டே" (368) என்பதனால் இவ்வுள்ளிவிழவு கொங்கர்மணியை அரையிற்கட்டிக்கொண்டு தெருவிலாடு தலையுடையதென்று கூறப்பட் டுள்ளது. இறையனார் களவியலுரையிற் கண்ட கருவூருள்ளிவிழவு என் பதனையும், இவ்வகப்பாட்டிற் கண்டகொங்கர் மணியரையாத்து மறுகினாடு முள்ளிவிழவு என்பதனையும் சேரவைத்துஆராயுமிடத்து இவ்வீரிடத் துங்கூறப்பட்ட உள்ளிவிழவு ஒன்றேயென்றும், ஒன்று ஊர்பற்றியும்ட மற்றொன்று நாடுபற்றியும்போந்தனவல்லது வேறில்லையென்றும் புலனா கும். இவ்விரண்டானும் கொங்குநாட்டார் தந்தலைநகரான கருவூரில் உள்ளிவிழா என ஒருதிருவிழா நிகழ்தலுண்டென்றும், அதன்கண் கொங்கர் மணிகளை அரையிற் கட்டிக்கொண்டு தெருவிலாடுதலுண் டென்றும் நன்கு புலனாகும். இதனாற் கருவூரில் உள்ளிவிழா கொங்கர் நிகழ்த்து முள்ளிவிழா என்று தெளியப்பட்டதாகும். இதன்கட் கொங் கர்கருவூர், பாண்டியர்மதுரையுடனும் சோழர் உறையூருடனும் சேர வைத்து உரைக்கப்பட்டதனால் அக்கொங்கர் கருவூரே சேரர் தலைநகராதலறியத் தக்கதாகும். அகப்பாட்டில்,

"வென்றெறிமுரசின்விறற்போர்ச்சோழ ரின்கடுங்கள்ளினுறந்தையாங்கண்
வருபுன்னெரிதருமிகுகரைப்பேர்யாற் றுருவவெண்மணன்முருகுநாறுதாழ்பொழிற்
பங்குனிமுயக்கங்கழிந்தவழிநாள்
வீயிலையமன்றமாபயிலிறும்பிற்
றீயிலடுப்பினரங்கம்போலப்
பெரும்பாம்கொண்டன்றுநுதலே" (117)

என வருதலான் பங்குனிவிழா உறையூர்க்கண்ணே நிகழ்ந்தது என்பது நன்று தெளியப்படும். இதனானேயன்றே "உறையூர்ப் பங்குனியுத் த‌ரமே" என்றாரெனவறிக.

மற்றுக் "குடையொடு,கழுமல‌ந்தந்த நற்றேர்ச்செம்பியன், பங்குனி விழவின்வஞ்சியோ, டுள்ளிவிழவினுறந்தையுஞ்சிறிதே" (தொல்-களவி யல்-'நாற்றம்' என்னுஞ் சூத்திரவுரை இறையனார்களவியலுரை 'தந்தை' என்னுஞ் சூத்திரவுரை) என்று வேறுவகையாகக் கேட்கப்படுமாலெனின் அது சேரனுடைய கழுமல‌த்திற் பெரும்பூட்சென்னியென்னுஞ் சோழன் சேரன்படைத்தலைவனாகிய கணையனென்பவனைவென்று சேர நாட்டைத் தன்னடிப்படுத்தியகாலத்துத் தன் உறையூர்ப்பங்குனி விழ வைச் சேரர்வஞ்சியினும்,சேரர் வஞ்சியினிகழ்ந்த உள்ளிவிழவைத் தன் உறையூரினும் நிகழ்த்தியதனையே குறிக்குமென்று கருதுவதே பொருந் தியதாகும்.வென்ற வேந்தர் வெல்லப்பட்ட நாடுகளிற் றமக்கு விருப்ப மானவிழாக்களையே நிலைபெறுவித்து நடாத்தலுண்டென்பது "சதய நல்விழாவுதியர் மண்டிலந்தன்னில் வைத்தவன்" எனக் கலிங்கத்துப் பரணியிற் சோழனைப் பாடுதலானறியலாகும். இங்ஙனம்கொள்ளாமல் எப்போதும் வஞ்சியிற் பங்குனி உத்த‌ரவிழாவே நடந்ததாமென‌க்கொள் ளின் அது "கொங்கர்மணியரையாத்து மறுகினாடு முள்ளிவிழவு" என்ற அகநானூற்றோடும் கருவூருள்ளி விழாவே என்ற நக்கீரனாருரையோடு முரணுமென்றுணர்க‌. உள்ளிவிழவின் சிறப்புநோக்கி வெல்லப்பட்ட நாட்டாரைக் கொண்டு சோழன்தன் உறைந்தையினும் அதை நடாத்தினான் போலும்.கழுமலஞ் சேரனுடையதென்பதும் "திண்டோர்க், கணைய னகப்படக் கழுமலந்தந்த, பிணையலங்கண்ணிப் பெரும்பூட்சென்னி" (அகம்-44) என்பதனானும் "நற்றேர்க்குட்டுவன் கழுமலத்தன்ன"(யாப் பருங்கலவிருத்தி மேற்கோள் -தொடை 50) என்பதனானும் உணர்க. "கழுமலந்தந்த நற்றேர்ச்செம்பியன் உள்ளிவிழவினுறந்தை" என்றதனால் இவன் சேரன்கழுமலத்தை வென்று கொண்டகாலத்து உள்ளி விழவினை உற‌ந்தையினடத்தினானென்று துணியப்படும். இதனானும் கொங்கருள்ளிவிழவு நடக்குங் கொங்கிற்கருவூர் சேரர் தலைநகரென்று

இனி, ஒட்டக்கூத்தர் காலத்துக்குப் பின்னிட்ட குமாரகுலோத் துங்கசோழன் காலத்தும், அவன் தம்பியாகிய சங்கரசோழன் காலத்தும் கொங்குநாடும் வஞ்சியும் சோழர்க்குப் பகைநாடும் பகையூருமாகக் கருதப்பட்டனவென்பது குலோத்துங்கன் கோவையில்,

"கொங்கோடக்குத்துங்களிற்றான்குலோத்துங்கன்" (133).
"கொங்கோட்டும்வேங்கைக்கொடியோன்குலோத்துங்கன்" (82)

எனவருவனவற்றானும்; சங்கரசோழனுலாவில்,

"...................................... கோமகன்
வஞ்சிக்குமோதைமகோதைக்குமாமதுரை
யிஞ்சிக்குங்கொற்கைக்குமேறுதொறும் – வெஞ்சமத்து
முன்னின்றுகோட்டுமுனைபட்டிறந்திறந்து
கன்னின்றவர்க்குலகுகாப்பணிந்தும்"

என வருவனவற்றானும் நன்று தெளியலாம். இச்சங்கரசோழனுலாவில்,

"............................. திண்ககன
வெங்கைக்களவழிப்பாடலுக்குவில்லவனைக்
கொங்கைத்தளைகளைந்தகோமானும்"

என வருவதன்கண் வில்லவனான சேரனைச் சோழன் தளைகளைந்தது அவனுடைய கொங்கு நாட்டையுந் தளைகளைந்ததாயிற்று என்னுங்கருத்தால் 'வில்லவனைக்கொங்கைத் தளைகளைந்த கோமான்' எனக்கூறியுள்ளார். இதனானும் கொங்குநாடு சோழற்குப் பகைஞனாகிய வில்லவனாடு என்றதாயிற்றுக் காண்க. ஈண்டுச் சங்கர சோழனுலாவினின்று முதற்கட்காட்டிய கண்ணிகளில் "வஞ்சிக்குமோதைமகோதைக்கும் " என்பதனால் வஞ்சி வேறென்றும் மகோதை வேறென்றும் ஐயமறத் தெளியலாகும். மகோதையென்பது கொடுங்கோளூர்க்குப் பெயரென்பது "கோதையரசர்மகோதையெனக்குலவுபெயருமுடைத்தாமால்" எனச் சேக்கிழார் சேரமான் பெருமாணாயனார் புராணத்திற் கூறுதலானறியப்படும். இச்சங்கரசோழனுலாவுடையார் கல்வித்திறம் அவருலாவினைக் கற்கும்பேறு பெற்றாரெல்லாம் நன்கறிவர். அவர் வஞ்சிவேறு, கொடுங் கோளூர்வேறு என்பதுபட நன்குரைத்துள்ளார். அவர் இருபேரரசருடைய தலைநகர்களையும் அவருடைய க*டற்றுறையூர்களையுமே ஈண்டுக் கூறினாரென்பது பாண்டியர் மதுரையையும் அவ‌ர் கொற்கையையும் கூறுதற்போலவே சேரர்வஞ்சியையும் மகோதையையும் அம் முறையே கூறுதலான் எளிதிலறியலாம். ஓதை மகோதையென்றார் அது கடற்றுறையூரென்பதுணரற்கு. கோமகன் வஞ்சி என்றார் சேரன் ஆண்டிருத்தனோக்கி. மதுரைதலைநகர் என்றற்கு மாமதுரையிஞ்சி என்று காட்டினார். மகோதையாகிய கொடுங்கோளூர்க்கு வஞ்சி யென்ற பெயர்வழக்குளதாயின் இவர் அதனின் வேறாகியதோரூரினை அப்பெயரானே வழங்கமாட்டாரென்றே தெளிய‌லாம். கச்சியப்பமுனி வரும் பேரூர்ப்புராணத்து அஞ்சைக்களத்தை வஞ்சியெனக் கூறாமல் கொங்கிற்கருவூரையே வஞ்சியெனவுரைத்தார். இதனை அந்நூலுட் காண்க. இவற்றாற் சேக்கிழார் மகோதையாகியகொடுங்கோளூரை வஞ்சியென வழங்கியது அக்காலத்துச் சேரர் ஆண்டிருத்தல்பற்றி உபசாரமாகுமெனக் கருதப்படும். இராமனிருக்குமிடம் அயோத்தியே என்னும் வழக்குப்போல இதனையுங்கொள்க. சங்கரசோழனுலா வுடையார் அந்நூலுட்பின்னும்,

"உஞ்சைக்குமேனையுதைகைக்கும்வஞ்சிக்கும்
கொற்கைக்குங்கூடற்கும்"

எனக்கூறுதலானும் இக்கருத்து வலியுறும். ஈண்டும் உதகை,வஞ்சி என்று கூறிய முறையே கொற்கை,கூடல் எனக் கூறியதுங்காண்க. இவற்றாற் சேக்கிழார் உபசாரமாகவழங்கியதொன்றொழிய மற்றெல்லா நூலும்வஞ்சியென்றுவழங்குவது கொடுங்கோளூரின்வேறாகியதோ ரூரினையாமென்றும், பண்டுள்ள உரைகாரர் நிகண்டுகாரர் இவர் கூற்றுப்படி அவ்வஞ்சி கருவூரே என்றும் நன்குதெளிந்துகொள்க.

இனிச் சேரமான்பெருமானாயனார் கொடுங்கோளூராகிய மகோ தையின்கண் அரசுபுரிகின்ற காலத்துப் பழையசேரர்க்குரிய கொங்கு நாடு சேரர்க்கல்லாமல் பிறர்க்குரியதாயிற்றென்று கேட்கப்படுதலில்லை. அருணகிரிநாதர்,

"ஆதியந்தவுலாவாசுபாடிய சேரர் கொங்கு"

எனப்பாடுதலான் இக்கொங்குநாடு சேரமான் பெருமாணாயனார்க்குரிய தாதல் புலப்படும். கொங்குநாடு அவருடைய தென்றுணரப்படுமாயின் அக்கொங்குநாட்டு வஞ்சியும் அவருடையதாத லெளிதிலுணரலாம். இதனாலவர் காலத்தோ அதற்கு முன்னோ தலைநகரமாற்றிக்குடகடற் பக்கத்தொதுங்கினாரென்று கூறுதலல்லது வேறன்றென்றுணரலாம். சங்கரசோழனுலாவுடையார்,

"வஞ்சிக்குமோதைமகோதைக்குமாமதுரை
யிஞ்சிக்குங்கொற்கைக்குமேறுதொறும்"

எனப் பாடுதலான் வஞ்சி கொடுங்கோளூராகிய மகோதையின்வேறாத லெளிதிலுணரப்படும். இதன்கண், மதுரையும் கொற்கையும் பாண்டிய ருடையனவாதல்போல வஞ்சியும் மகோதையும் சேரருடையனவாதல் உணரலாம். இதனால் சேரர், மகோதையாகிய கொடுங்கோளூரை யுடையகாலத்து வஞ்சியையும் உடையராயினாரென்று நன்கு தெளிய லாம். சங்கநூல்களில் மகோதை கொடுங்கோளூ ரென்னுஞ் சொற்கள் காணாமையால் பழையசேரர் வஞ்சியிலரசுபுரிந்தகாலத்துக் கொடுங்கோளூர்மகோதை பெரிய நகரமாக விளங்கியதாகக் கருதப்பட வில்லை. ஆதலான் இச்சங்கரசோழனுலாவாற், சேரர் கொடுங்கோளூராகிய மகோதையையுடைய காலத்தில் அதனின் வேறாக வஞ்சியையும் உடையராயினார் என்பதுமட்டில் நன்குணரப்படும். இதனால் மகோதையரசர் வஞ்சிவேந்தர் எனவும் அழைக்கப் பெறுவரென்றும், மகோதையரசரை வஞ்சிவேந்தரென்று அழைப்பதுபற்றி மகோதையே வஞ்சியென்று கூறலாகாதென்றும் இச்சங்கரசோழனுலாவால் உணரப் படுதல் காண்க. கொற்கையரசர் மதுரைப்பாண்டியரென்றழைக்கப் படுமிடத்துக் கொற்கையும் மதுரையும் ஒன்றெனத் துணியப்படாது அவ்விரண்டூரரசரும் ஒருவரென்றே துணியப்படுதல்போல இதனையுங் கொள்க. இங்ஙனங்கொள்ளாக்கால் "வஞ்சிக்குமோதை மகோதைக்கும்" என்று சங்கரசோழனுலாவுடையார் மிகவுந் தெளியக்கூறியதோடு முர ணுதல் காண்க. இக்கருத்தானன்றே பெரும்பற்றப்புலியூர் நம்பியாரும் சேரமான் பெருமாணாயனாருடைய ஊரினைக் கொடுங்கோளூர் என்று கூறி அவ்வேந்தரைப் பின் "வஞ்சிக் கொற்றவன்" என்றாரெனவுணர்க. அருணகிரிநாதர் சேரமான் பெருமாணாயனாருக்குக் கொங்கு நாடுரிமை கூறியதனான் அவர்க்கு அக்கொங்குநாட்டுக் கருவூர் வஞ்சியுடைமையும் நன்கு புலனாகும். பெரும்பற்றப்புலியூர் நம்பிக்குக் கொடுங்கோளூரே வஞ்சியென்பது கருத்தாயின் அதனை வெளிப்படவுணர ஏற்றசொற் பெய்துரைப்பரென்க. இவற்றோடெல்லாம் பொருந்த நோக்குமிடத்தும் சேக்கிழார், கொடுங்கோளூரை வஞ்சியென வழங்கியது ஆண்டுள்ள வேந்தர் வஞ்சியரசராதல் ஒற்றுமைபற்றி உபசாரமாவதென்று தெளியலாம்.

மற்றுச் சேக்கிழார் "கொன்னாரயில்வேன் மறவர் பயில்கொங்கர் நாடுகடந்தருளி" எனக் கூறினாராலெனிற் கூறுவேன். இக்கொங்குநாடு குடபுலம் என்பது சேக்கிழார்க்கு உடன்பாடாதல் முன்னரே காட்டி னேன். குடபுலம் குடபுலங்காவலராகிய சேரருடையதாமென்பது தெள்ளிது. ஆதலான் ஈண்டு மறவர் என்றது சேரன் மறவரையேயன்றிப் பிறரையில்லை யெனவுணர்க. இந்நாட்டை அக்காலத்தும் பிறருடைய தாகச் சேக்கிழார் கூறாமையும் நோக்கிக்கொள்க.

இனிக் கருவூரின் பலபெயர்களுட் கரபுரம் என்பதும் அதற்குப் பெயராகவுண்மை அவ்வூர்த் தலபுராணத்தானுணரப்படுவது:-

"கஞ்சனெண்ணாதிபுரங்கரபுரம்பாற்
        கரபுரம்வீரசோழபுரம்
வஞ்சுளாரணியம்வஞ்சிதாயூர்சண்
        மங்கலகேத்திரங்கருவூர்
விஞ்சுறுகருப்பபுரிமுதனாமம்
        விளங்குதொல்பதியின்வீற்றிருக்குஞ்
செஞ்சுடர்ப்பொருளினிருபதமேனைத்
        தேவர்பொன்முடிக்கணிகலனே"

என அதன்கண்வருதலாற் கரபுரமென்பது கருவூர்க்குப்பெயராதலுண ரப்படும். இதன்கண் வீரசோழபுரமென்றது பிற்காலத்து வீரசோழ னென்பான் இதனைவென்று ஆண்டகாரணம் பற்றியதாகும். இவ்வீர சோழன், பொன் பெற்றிகாவலன் புத்தமித்திரன் காலத்தவனாயினுமாம். இது கரனிருந்ததனால் அப்பெயர்பெற்றதாம்போலும். பௌராணிகர் வேறு கூறுவர்: திரிசிரபுரம் என்பதுபோல இதனையுங் கொள்க. கரன், திரிசிரன் இவர் தென்னாட்டு ஒருபக்கத்தே இருந்தவரென்பதும் உணரத்தகும். கருவூர்க் குஞ்சிரபுரத்துக்கும் 48-மைல்தூரமேயாகு மென்பது பலருமறிவர். இக்கரபுரம் சேரர்தலைநகர் என்பதனை விளக்கு வல். சூளாமணியென்னும் பழையநூலுட் சுயம்வரச்சருக்கத்து,

வேலைவாய்க்கருங்கடலுள் வெண்சங்குமணிமுத்தும்
        விரவியெங்கு
மாலைவாய்க்கரும்பறாவகன்பண்ணைதழீஇயருகே
        யருவிதூங்குஞ்
சோலைவாய்மலரணிந்தசூழ்குழலார்யாழிசையாற்
........ ..... ......
        வடிவுகாணாய்.

கண்சுடர்கள்விடவனன்றுகார்மேகமெனவதிருங்
        களிநல்யானை
விண்சுடருநெடுங்குடைக்கீழ்விறல்வேந்தன்றிறமிதனை
        விளம்பக்கேளாய்
தண்சுடரோன்வழிமருகன்றென்மலைமேற்சந்தனமுஞ்
        செம்பொன்னாரத்
தொண்சுடரும்விரவியநலவரைமார்பனுலகிற்கோர்
        திலதங்கண்டாய்.

மழைக்கரும்புங்கொடிமுல்லைமருங்கேறவரம்பணைந்து
        தடாவிநீண்ட‌
கழைக்கரும்புகண்ணீனுங்கரபுரத்தார்கோமானிக்
        கதிற்வேற்காளை
யிழைக்கரும்புமிளமுலையாயெரிக்கதிரோன்வழிமருக‌
        னிவனீரீர்ந்தண்
ட‌ழைக்க‌ரும்பின்முருகுயிக்குந்தார‌க‌ல‌ஞ்சார்ந்த‌வ‌ர்க‌
        ட‌வ‌ஞ்செய்தாரே.

வண்‌ட‌றையும‌ர‌விந்த‌வ‌ன‌த்துலாய்ம‌த‌ர்த்தெழுந்த
        ம‌ழ‌லைய‌ன்ன‌ம்
உண்டுறைமுன்விளையாடியிளைய‌வ‌ர்க‌ண்டைப‌யிலு
        முறைந்தைக்கோமான்
கொண்டறையுமிடிமுரசுங்கொடிமதிலுங்குளிர்புனலும்
        பொறியும்பூவு
மொண்டுறையுமும்மூன்றுமுடையகோனிவனிவன்
        தெழிலுங்கருணாய்.

எனத் தமிழ்மூவேந்தரையுங்கூறுதலைக் கற்றாரறிவர். இவற்றுட் பாண் டியனை மதுரைசூழ்வளநாடன் என்றும், சேரனைக் கரபுரத்தார்கோமான் என்றும், சோழனை உறந்தைக்கோமான் என்றும் கூறியிருத்தலைக் காணலாம். மதுரைசூழ்வளநாடனாகிய பாண்டியற்கும், உறந்தைக் கோமானாகிய சோழற்கும் இடையே கரபுரத்தார்கோமான் எனக் கூறுதலானும் இவன் சேரனாதல் தெள்ளிது. இவன் அக்கினிவம்சத்த னாதல் "இவன் செந்தழலோன்மரபாகியீரேழுலகும்புகழ்சேரன்" எனப் பாரதத்துவருதலான் அறிக. இக்கரபுரம் என்னும் பெயர் கொங்கிற் கருவூர்க்குக் கேட்கப்படுதலன்றிக் கொடுங்கோளூர்க்குக் கேட்கப் படாமையும் ஈண்டைக்குநோக்கிக்கொள்க. இவற்றுள் மதுரையையும் உறந்தையையுங்கூறியவரிசையிற் கரபுரத்தைக்கூறுதலான் இது அவைபோலத்தலைநகராதலும், உண்ணாட்டூராதலும், எளிதிலுணரத் தகும். இப்பழமையான சைந நூலானும் சேரர்தலைநகர் கரபுரமாகிய கருவூரென்று தெளியப்படுவதாகும்.

இனிப் பாரதம் இராச சூயச்சருக்கத்துத் தமிழ்நாடுமூன்றையுங் கூறப்புக்கு வில்லிபுத்தூரர்,

"சென்னிநாடுகுடகொங்கநாடுதிறைகொண்டுதென்னனுறைசெந்தமிழ்க்
கன்னிநாடுறவுடன்புகுந்துமணிநித்திலக்குவைகள்கைக்கொளா
மன்னிநாடுகடல்கொண்டகைம்முனிவன்வைகுமாமலயநண்ணினான்
மின்னிநாடுறவிளங்குவெஞ்சமரவீரவாகைபெறுவேலினான்"

எனப்பாடுதலான் சேரநாடு குடகொங்கநாடு என்று வழங்கப்படுதலறிந்து கொள்ளலாம். இப்பாடலில் சென்னிநாட்டுக்கும் தென்னன்கன்னி நாட்டுக்கும் இடையே குடகொங்கநாடு கூறியதனானும் இது சேரநாடாத லுணரப்படும்.

*சேரமன்னரகிய குலசேகரப்பெருமாளும் தம்மைக் "கொல்லி காவலன் கூடனாயகன் கோழிக்கோன் குலசேகரன்" எனப் புலப்படுத் தல்காண்க. பாண்டிநாட்டுத்த்லைமையைக் கூடனாயகன் என்பதனானும், சோணாட்டுத் தலைமையைக் கோழிக்கோன் என்பதனானும், உணர்த்தினாற் போலச் சேரநாட்டுத் தலைமையையே 'கொல்லிகாவலன்' என்பதனால் உணர்த்தினாரென்பது எளிதிலுணரத்தகும்.

---------------------------
*"மாற்றலரை,
வீரங்கெடுத்தசெங்கோற்கொல்லிகாவலன்வில்லவர்கோன்
சேரன்குலசேகரன்முடிவேந்தர்சிகாமணியே" என்ப.

கொல்லி சேரர் கொங்குநாட்டுச் சேரர்க்குச் சிறந்தமலையென்பது முன்னரே கூறினேன். அவர் "கொங்கர் கோன்குலசேகரன்" எனப் புலப்படுத்தலையுங் காண்க. அவர் "கொல்லிநகர்க்கிறை" என்று தம்மைக் கூறுகின்றார். கொல்லி மலையையுடைய நகரம் கொங்குநாட்டுக் கருவூராதறெள்ளிது.

இனி, மாறனலங்காரத்து எச்சவியல் 314-ஆம் சூத்திரவுரைக்கண்,

"மன்றல்கமழுமலைநாட்டும் வண்டமிழ்தேர்
நன்றிபயிலபாண்டிநாட்டகத்தும்
- வென்றிபயில் சோணாட்டகத்துந்துயின்மாயனைத்துதிப்பார்

என்னும்பாடலை எடுத்தோதி "இதனுள் மலையமானாடென்பது மலை நாடென்றும், பாண்டியனாடென்பது பாண்டிநாடென்றும், சோழனாடென் பது சோணாடென்றும் மரூஉவாய் அடிப்படவந்த வழக்காற்றால் வந்து வழுவின்றாயிற்று" என வுரைகாரர் கூறியவற்றான் மலைநாடு என்பதும் மலையமானாடென்பதும் ஒன்றேயாதலும், அதுசேரமானாடேயாதலும் எளிதிலறியத்தகும். இதன்கண், தமிழ்மூவேந்தர் நாடுமே கூறியது காண்க.

இனி, நைடதத்து,

'மாழைமென்னோக்கியீங்குவைகியமானவேலான்
றாழைமுப்புடைக்காய்வீழ்ந்துதாற்றிளங்கமுகுசெற்று
வீழ்சுளைவருக்கைபோழ்ந்துவெம்புலியடியபைங்காய்க்
கோழரையாம்பைசாய்க்குங்குடகநாடாளும்வேந்தே'

எனச் சோழபாண்டியருடன் சேரனைக்கூறுதலறியலாம். இதன்கட் சேரனைக் குடகநாடாளும்வேந்தென்றது மேற்றிசைநாட்டையாளும் வேந்தனாதலானெனவறிக. குடகம் - மேற்றிசை. இக்கருத்தானே அருணகிரிநாதரும் 'குடகிற்கருவூர்' என்றரென்க. "வஞ்சிகுடக்கினிற் கோதையுமாங்கே" (அழகர்கலம்பகம்) என்பதூஉம் இக்கருத்தேபற்றி வந்தது. இங்ஙனமல்லாமற் 'குடகம்' எனப்பெயரிய தேயத்தையே கருதினாரெனின் அது தமிழ்மொழி வழங்காத தேயங்களுளொன்றாக வைத்து உரையாசிரியர்கள் எண்ணியதனோடு முரணுமென்றுணர்க. அன்றியுங் 'குடகதேசம்' குறிஞ்சியேயாக அதற்குரியவியல்பான் வருணிக்காமல் மருதமாகவே வருணித்தது குடகமலை நாட்டை விலக்கி யுணர்தற்கெனக் கொள்ளப்படும். இங்ஙனமே அரிச்சந்திர புராணமுடை யாரும்,

"அதிபாரதனபார்வதிரூபமலர்மானையனையாயிவ
னதிபாயவுயர்போதிறைபாயநிறைபாயசிறைவாவியின்
மதியாமல்வலைபீறிவெடிபோனபருவாளைவனைபூகமேற்
குதிபாயமடல்கீறிவிழுதேறல்கரைசாடுகுடநாடனே"

என மருதமாகவே கூறுதல் காண்க. ஈண்டுக் குடநாடெனப்பட்டதே நைடதத்துக் குடகநாடு எனப்பட்டதாமென்றுணர்க. சிறுபாணாற்றுப் படையிலும்,

"கொழுமீன்குறையவொதுங்கிவள்ளிதழ்க்
கழுநீர்மேய்ந்தகயவாயெருமை
பைங்கறிநிவந்தபலவினீழன்
மஞ்சண்மெல்லிலைமயிர்ப்புறந்தைவர *பயராக

குடபுலங்காவலர்மருமான்.......குட்டுவன்
வருபுனல்வாயில்வஞ்சியும்வறிதே"

என்பதனாற் பெரும்பான்மை மருதமாகவேகூறினார். பைங்கறி என் பதனாற் குறிஞ்சியையுங் குளவிப்பள்ளி என்பதனால் முல்லையையுஞ் சிறுபான்மைகுறித்தார். ஈண்டுநெய்தலேகுறித்தாரில்லை. நெய்தலே யில்லாத குடபுலம் கொங்குநாடேயென்பது கச்சியப்பமுனிவர்,

".....கடல்போக்கிநிலமூன்றிற்
குலவுசிறப்பெய்தியதுகொங்குவளநாடு" (பேரூர்ப்புராணம்)

என்று கூறியதனான் உணரப்படும். கொங்குநாட்டைக் குடபுலம் என்று வழங்குதல் சேக்கிழார் "கொங்கிற்குடபுலம்" (திருஞான - 323)

'சென்றசென்றகுடபுலத்துச்சிவனாரடியார்பதிகடொறும்' (வெள்ளானை)

"அப்பாலைக்குடபுலத்திலாறணிந்தாரமர்கோயி
லெப்பாலுஞ்சென்றேத்தித்திருநணாவினையிறைஞ்சி"
(திருஞான - 327)

கூறியவாற்றானுணரப்படும். இதன்கட் குடபுலங்காவலர்மரு மானே குட்டநாடும் உடையனாயினான் என்னுங்கருத்தால் குடபுலங் காவலர்மருமான் குட்டுவன் என்றுகூறினார். ஈண்டு நச்சினார்க்கினியர் குட்டுவன் என்பதற்குக் குட்டநாட்டையுடையோன் எனப்பொருள் கூறியதனானும் உணர்க. குட்டநாடுடைமைகூறியதனாற் குடபுலங் காவலர்க்குக் கடலுடைமையுங்குறித்ததாராவர். வருபுனல்வஞ்சி யென்றது பெருகுகின்ற நீரையுடையவஞ்சி எ-று. வருபுனல் என்பத னால் யாறு என்றுகொள்க. "வருபுனல்வையைமருதோங்குமுன்றுறை" (14-ஊர்காண்) எனச் சிலப்பதிகாரத்தும் "வருபுனற்கற்சிறை" என மதுரைக்காஞ்சியினும் வருதலானுணர்க. இவையெல்லாம் ஆராயாது இப் பத்துப்பாட்டடிகள் மேற்கரைவளமும் கழிமுகத்துறைந‌லமும் விளக்கிநிற்பன என்று மயங்கினாருமுளர். நெய்தலே சிறிதுங்கலவாது கூறப்பட்ட இவ்வடிகள் கழிமுகத்துறைநலம் விளக்கிநிற்பன என்று அவர்கொண்டது "கொழுமீன்" என்பதுபற்றியும் "வருபுனல்" என் பதுபற்றியும் ஆம் என்று கருதுகின்றேன். அவர்,

"சேற்றுநிலை முனைஇயசெங்கட்காரா
னூர்படிகங்குனோன்றளைபரிந்து
கூர்முள்வேலிகோட்டினீக்கி
நீர்முதிர்பழனத்துமீனுடனிரிய
வந்தூம்புவள்ளைமயக்கித்தாமரை
வண்டூதுபனிமலராருமூர" (அகம் - 46)

எனவரும் மருதத்திணைப் பாட்டடிகளையும், வருபுனல் என்பது கடலை யுணர்த்தாது யாற்றையேயுணர்த்துமென்பதனையும் அறியாராவர். "ஆறுமருதம்" என்பதனால் இந்நாற்பத்தாறாம் அகப்பாட்டு மருதமாத றெள்ளிது. ஈண்டு "வருபுனல்" என்பதனைக் கடலென்று மயங்கியாங்கு

"பேரிசைவஞ்சிமூதூர்ப்புறத்துத்
தாழ்நீர்வேலித்தண்மலர்ப்பூம்பொழில்"

என்னுஞ் சிலப்பதிகாரத்தும் "தாழ்நீர்வேலி" என்பது கடலென்று திசைத்தலும் அப்பிறர்கணுண்டு, தாழ்நீர்வேலியென்பது ஈண்டு எயில் சூழ்கிடங்கு என்பதனை அவரறியாரென்க. "தாழ்நீர்வேலித்தலைச்செங் கானத்து" (சிலப்-அடைக்கல) என்புழி நீர்வேலி - கிடங்குமாம். என்று

அடியார்க்குநல்லாருரைத்ததனை நோக்கிக்கொள்க. தாழ்நீர் தங்கிய நீராதலிற் பொய்கை, குளம் என்பனவுமாம். பிறர் "தாழ்நீர்முத்தும்" (சிலப் - கால்கோட்) என்புழித் தாழ்நீர் என்பதனைக் கடலென்பதற்குக் காட்டினார். ஆண்டு அரும்பதவுரையாசிரியர் தாழ்நீர் - தங்கியநீர்மை என்று பொருள் செய்ததனை அவர் கண்டிலராவர். இன்னும் அப்பிறர்,

"யாங்கணுங்,
கறைகெழுநல்லூர்க்கறைவீடுசெய்ம்மென
வழும்பில்வேளோடாயக்கணக்கரை
முழங்குநீர்வேலிமூதூரேவி"

என்புழி மூதூர் வஞ்சியெனமயங்கினார். ஆண்டு யாங்கணுங்கறைவீடு செய்ம்மென ஏவியென்று கூறியதுபற்றி அரும்பதவுரையாசிரியர் "மூதூர்களிலே இப்படிச்செய்யுமென்று ஏவி யென்க" எனவுரைத்த தனைக் காணாராவர். மற்றும், அவர் "பெருந்துறை" என்பது கடற்றுறையே யாகுமென்று மிடர்ப்படுவர். அவர் சிலப்பதிகாரத்துப் புறஞ்சேரியிறுத்த காதைக்காண்,

"வையையென்றபொய்யாக்குலக்கொடி
புனல்யாறன்றிதுபூம்புனல்யாறென
வனநடைமாதருமையனுந்தொழுது
பரிமுகவம்பியுங்கரிமுகவம்பியு
மரிமுகவம்பியுமருந்துறையியக்கும்
பெருந்துறைமருங்கிற்பெயராதாங்கண்"

என வையையாற்றுக்குப் பெருந்துறையுடைமை கூறப்படுதலையும், பெருங்கதையுட் புனற்பாற்பட்டதன்கண்,

"மணல்கெழுபெருந்துறைமயங்குபுகுழீஇ
விரிநீர்ப்பொய்கையுள்விளையாட்டுவிரும்பி"

எனப் பொய்கைக்குப் பெருந்துறைகூறப்படுதலையும் அறியாராவர். மற்றுப்பிறர் "தண்கடற்படப்பைநாடு" என்பது முதலாகக் காட்டுவன வெல்லாம் சேரர்குடநாடு, குட்டநாடுகளையுணர்த்து வனவல்லது வஞ்சி கடற்றுறைப்பட்டினமென்று அவை யுணர்த்தாவாதல் நன்குநோக்கிக் கொள்க. ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் செங்குட்டுவன் காலத்தே மேல்கடற் பக்கத்துள்ள நறவு என்னும் ஊரிலிருந்ததுபற்றி அவனூ ருள்ளநிலத்தைக் "கடல்சேர்கானற் குடபுலம்" என்று பதிற்றுப்பத்துள் ஆறாம்பத்திற் சான்றோர் கூறினார் என்று முன்னரே எடுத்துரைத்தேன். பதிற்றுப்பத்து 60-ஆம்பாட்டில், ஆடுகோட்பாட்டுச் சேரலாதனிருந்த கடற்றுறையூராகிய நறவு என்னும் ஊரே அறஅயாணர் உடைத் தென்று இடையறாத கடல்வருவாய் முதலாய செல்வங்களால் விசேடிக்கப்பட்டிருக்கவும் அதனை யாராயாது வஞ்சியென்று வேறு கூறுவாருமுளர்.

இனி அப்பிறர் கருவூர்த்தேவாரத்து ஞானசம்பந்தசுவாமிகள் ஆன்பொருநையைக் கூறாமையால் கருவூர்ப்பக்கத்து ஆன்பொருநை அக்காலத்து ஒழுகியதாகாதென்று துணிந்தார். அவர், உறையூராகிய திருமுக்கீச்சரத்தை ஞானசம்பந்த சுவாமிகள் பாடிய தேவாரத்துக் காவிரி கூறப்படாமையான் உறையூர் பக்கத்தும் காவிரி யக்காலத்து ஒழுகியதாகதென்று துணிவர்போலும். மதுரைத் தேவாரத்து வையை கூறப்படாமையான் மதுரை வையையையுடைய தாகாதென்று துணி யலுமாமேயென்று அவர் நினையார். மற்றுமவர், கருவூர்க்குச் சுந்தர மூர்த்திநாயனார் தேவாரம் இல்லாமைபற்றிக் கருவூர் தலைமையாகிய நகரமாகாதென்று துணிந்தார். அவர், பாண்டியர் தலைநகராகிய மதுரைக்கும் சோழர் தலைநகராகிய உறையூர்க்கும் அந்நாயனார் தேவாரப் பதிகமில்லாமையை அறியார். இன்னும் அவர், "திருமாவியனகர்க் கருவூர்முன்றுறை" (அகம் - 93) என்புழி முன்றுறை கடற்றுறை யென்றுகொண்டு "இத்தகையவாணிபத் துறைமுகமே முன்றுறையாகும்" என்று மனந்துணிந்துரைப்பர். அவர், சிலப்பதிகாரத்து "முது நீர்க்காவிரிமுன்றுறை" எனவருதலையும்; அகப்பாட்டின்கண்,

"துஞ்சா முழவிற்கோவற்கோமா
னெடுந்தேர்க்காரிகொடுங்கான்முன்றுறைப்
பெண்ணையம்பேரியாற்றுநுண்ணறல்கடுக்கும்" (அகம் - 35)

எனவருதலையுங்காணாராவர். பின்னும் அவர் "கலிகெழுவஞ்சி" எனச் சிலப்பதிகாரத்துவருதல்பற்றி வஞ்சி கடலுடைத்தென மயங்குவர். அவர் சிலப்பதிகார வரந்தருகாதைக்கன் மதுரையினைக் "கலிகெழு கூடல்" எனக் கூறியிருத்தலைக்காணாராவர்.

இன்னும் அப்பிறர், சிலப்பதிகார இந்திரவிழவூரெடுத்தகாதைக் கண் புகார்நகரமாகிய காவிரிப்பூம்பட்டினத்தை வருணித்தலும், மணிமேகலைக் கச்சிமாநகர் புக்ககாதைக்கண் வஞ்சியை வருணித்தலும் தம்மு ளொத்தனவாகக் கொண்டு அதுபற்றி வஞ்சியைக் கடற்றுறைப்பட்டின‌ மென்று மயங்குவர். இளங்கோவடிகள், புகார் நகரம் கடற்றுறையிடத்தது என்பது நன்கு தெளிய அத‌னைக்,

"கலந்தருதி*ருவிற்புலம்பெயர்மாக்கள்
கலந்திருந்துறையுமிலங்குநீர்வரைப்பும்

பீடுகெழுசிறப்பிற்பெரியோர்மல்கிய
பாடல்சால்சிறப்பிற்பட்டினப்பாக்கமும்"

உடையதாகக்கூறியிருத்தலையும்,சீத்தலைசாத்தனார் வஞ்சியை அங்ஙனங் கூறாதிருத்தலையும் அவர் நோக்கிலராவர். மற்று வஞ்சியை வருணித்தவிடத்துப் புகாரையொப்பப்,

"பன்மீன்விலைஞர்வெள்ளுப்புப்பகருநர்
கண்ணொடையாட்டியர்..............
விலங்காரம்பொரூஉம்வெள்வளைபோழ்நர்"

என இவரும் அவ்வஞ்சிக நகர்க்கணுளராகக் கூறினாரெனிற் கூறுவல்- ஈண்டுப் பன்மீன்விலைஞர் என்றது பல்வகைமீனும் விற்கும் வலைஞரை என அறிக. இவ்வலைஞர் மருதநிலத்து யாறுகளிலும் கழனியிலும் மடுக்களிலும் பொய்கைகளிலும் உள்ள மீன்களை முகந்துகொண்டு விலை கூறி விற்பவரெனவறிக. இவ்வுண்மையினை மதுரைக்காஞ்சியிற்,

"களிறுமாய்க்குங்கதிர்க்கழனி
யொளிறிலஞ்சியடைநிவந்த‌
முட்டாள்சுடர்த்தாமரை
கட்கமழுநறுநெய்தல்
வள்ளிதழவிழ்நீல‌
மெல்லிலையரியாம்பலோடு
வ‌ண்டிறைகொண்டகமழ்பூம்பொய்கைக்
கம்புட்சேவலின்றுயிலிரிய
வள்ளைநீக்கியவயமீன்முகந்து
கொள்ளைசாற்றியகொடுமுடிவலைஞர்

குருகுநரலமனைமரத்தான்
மீன்சீவும்பாண்சேரியோடு
மருதஞ்சான்றதண்பணைசுற்றியொருசார்"

என வருவதனானும், அதற்கு நச்சினார்க்கினியர் உரைத்ததனாலும் தெளிந்துகொள்க. இளங்கோவடிகள் புகார்வருணனையில் " மீன்விலைப் பரதவர்" என்று கூறியதுபோலப் பரதவராகியபட்டினவரைக்கூறாது சீத்தலைச்சாத்தனார் " பன்மீன்விலைஞர்" என்றொழிந்ததே மருதநிலத்து மீன்வலைஞர் என உணர்ந்ததற்கெனத்தெளிக. புகார்போல வஞ்சி கடற் றுறையிடத்ததாயின் இவரும் அடிகள்போற் பரதவர் என்றே கூறுவ ரென்க. மீனைத்தப்பாமற் பிடிக்கும் பாண்சாதியுள்ள சேரியும் மருதத்து இருப்பதுகாண்க. இனி வெள்ளுப்புப் பகருநர் என்றது கடனிலத்து விளைந்த வெள்ளியஉப்பினைச் சகடங்களிலேற்றிக்கொணர்ந்துவிற்கும் உப்புவாணிகர் என்றுகொள்க. " கழியுப்புமுகந்து கன்னாடுமடுக்கு, மாரைச் சாகாட்டாழ்ச்சி" (புறம்-60) என்பதனால் கடலிடத்துப்பை மலைநாடு களிற்கொண்டு போய்விற்ற லுணரப்படும். உப்பை உண்டுபண்ணிவிற் போர் 'அளவர்' எனப்படுவர். இக்கருத்தானன்றே அடியார்க்குநல் லார் சிலப்பதசிகாரத்து, வெள்ளுப்புப்பகருநர் என்புழி அளவருமாம் என்றுரைத்தாரெனவறிக. இவர் அவராகார். மஹாநகரங்களில் மலையவும் நிலத்தவும் நீரவும் பிறவுமாகிய பண்டங்களைவிற்கும் வணிகர் உளராதல் " மலையவுநிலத்தவு நீரவும்பிறவும், பண்ணியம் பகாநரும" (மது ரைக்காஞ்சி) உளராக மதுரையைப்பற்றிக் கூறுதலாலுணரப்படும். பண்ணியம் -பண்டம். உப்புநீர் விளைவாதல் " உப்புநீர்விளைவு" (824) எனச் சிந்தாமணியின் வருல் நன்கறியப்படும். உள்நாட்டு நகரங்களே கடல்படு பொருள்கள் பெருவிலை பெறுதற்குரிய இடங்களாதலின் ஆங்கெல்லாம் அப்பொருள்கள் விற்கும் வாணிகருமுளராவர். " கச்சிகடல்படுவதெல்லாம் படும்" என்றதூஉம் அக்கருத்தேபற்றியதாம். இனிக் " கண்ணொடை யாட்டியர்" என்றது கள்ளைவிற்ரும் வலைச்சியரை என்க. இவர் உண்ணாட்டு நகரங்களிலுமுண்மை " கள்ளின்களி நவிலகொடியொடு" மதுரை விளங்குவதாக மதபரைக்காஞ்சியின் வருதலாலுணரப்படும். இனி விலங்கரம் பொரூஉமவெள்வளை போழுநர்" உண்ணாட்டு நகரங்களிலு முண்மை "கோடுபோழகடைநரும்" மதுரையிலுளராக மதுரைக் காஞ்சியிற் கூறியதனான் நன்குணரலாம். இங்ஙனம் மதுரைக்கொப்ப வைத்து கடற்றுரைப்பட்டினத்துக்கே சிறந்த விசேடங்களை முற்றும் விலக்கிச் சீத்தலைச் சாத்தனார் வஞ்சியை வருணித்திருக்கவும் அதனை ஆராயாது பிறர் தம் மனம்போனவாறுகூறுவர். இளங்கோவடிகள் புகார்க்குக்கூறிய " கயவாய்மருங்கும்," கலந்தருதிருவிற்புலம்பெயர் மாக்கள் அலைவாய்க் கரையிருப்பும் பட்டினபாக்கமும் என்னும் இவற்றைச் சீத்தலைச் சாத்தனார் வஞ்சிக்குக் கூறாமையை அப்பிறர் தெரிந்திலராவர். இனி வஞ்சிவேந்தர் உம்பற்காடும் உடையராதலான் அவர்க்குப் புதுக்கோள்ஆனைகள் உண்டென்றும் சேரர்க்குரிய பழனி மலை "அறுகோட்டியானைப்பொதினி"(அகம்) எனக்கூறப்படுதலானும் அது கருவூர்வஞ்சிக்கு அதிக தூரமன்றாதலானும் கருவூரார்க்குப் புதுக் கோள்யானையுண்டாகத் தடையில்லையென்க. அவற்றைப்பயிற்று வோர் அவ்வேந்தர்நகரத்து உளராவரென்றும் தெரிந்து கொள்க. அரசரிருக்குந் தலைநகராதலின் அதன்கண் யானை குதிரை இவற்றைப் பயிற்றுவோரிருப்பது இயல்பு என்க. புதுக்கோள்யானையுடன் பொற் றார்ப்புரவியும் கூறியதுகாண்க. பெருங்கதையினும் "மதக்களியானை வடிக்கும்வட்டமுங், கடிசெல்புரவிமுடுகும்வீதியும்" இராசக்கிரியத்துக் கூறினார். யானைகளுள்ளகாடுகள் கொடுங்கோளூருக்கு அதிகதூரமாக வுள்ளனவாதலும் அப்பிறர் தெரிந்துகொள்வாராகுக. கொடுங்கோளூர் மலையில்லாத பெருமண லுலகத்துநகரென்பதும் அவர்தெரிக.

மற்று அடியார்க்குநல்லார் "குன்றக்குறவரொருங்குடன்கூடி" எனவருஞ் சிலப்பதிகாரத்துக்"குன்றம் கொடுங்கோளூர்க்கயல தாகியசெங்குன்றென்னும்மலை" என்றுரைத்தாராலெனிற் கூறுவேன். கண்ணகி கணவனையிழந்தபின்,

யீரேழ்நாளகத்தெல்லைநீங்கி
வானோர்தங்கள்வடிவினல்ல
தீனோர்வடிவிற்காண்டலில்லென
மதுரைமாதெய்வமாபத்தினிக்கு
விதிமுறைசொல்லியழல்வீடுகொண்டபின்
கருத்துறுகணவற்கண்டபினல்ல

கொற்றவைவரயிற்பொற்றொடிதகர்த்துக்
கீழ்த்திசைவாயிற்கணவனொடுபுகுந்தேன்
மேற்றிசைவாயில்வறியேன்பெயர்கென
விரவும்பகலுமயங்கினள்கயிற்
றுரவுநீர்வையையொருகரைக்கொண்டாங்

கவலவென்னாளவலித்திழிதலின்
மிசையவென்னாண்மைசைவைத்தேறலீற்
கடல்வயிறிகிழித்துமலைநெஞ்சுபிளந்தாங்
கவுணரைக்கடந்த சுடரிலைநெடுவே
னெடுவேள்குன்றமடிவைத்தேறிப்
…. …. …. ……
தீத்தொழிலாட்டியேன்யான்"

என‌க்கூறுத‌லான் ம‌துரைமேற்றிசைவாயில் பெய‌ர்ந்து வையையை ஒருக‌ரைக்கொண்டு ப‌ள்ள‌த்திழிந்தும் மேட்டிலி வ‌ர்ந்தும்போய் நெடு வேள்குன்ற‌த்தேறி வேங்கையின் கீழே த‌ங்கினாளென்று அறிய‌லாகும். இவ‌ள் த‌ங்கிய‌ இட‌ம்,

"த‌ன்னாட்டாங்க‌ட்ட‌னிமையிற்செல்லா
ணின்னாட்ட‌க‌வ‌யின‌ன‌டைந்த‌ன‌ண‌ங்கை"

என்று மேற் செங்குட்டுவ‌ற்குச் சாத்த‌னார்கூறுத‌லான் சேர‌னாடாத‌ ன‌ன்குண‌ர‌ப்ப‌டும். இத‌ன்க‌ண் நெடுவேள்குன்ற‌ம் என்ற‌த‌ல்லாது செங்குன்று என்று கூற‌ப்ப‌டாமை க‌ண்டுகொள்க‌.வையைந‌தி வ‌ரிசை நாட்டும‌லையிலும் ப‌ழ‌னிம‌லையாகிய‌ வ‌ராக‌ம‌லையிலும் உற்ப‌த்தியாகும் உப‌ந‌திக‌ளின் பெருக்காலொழுகின்ற‌பேராறாத‌ல் கீழ்க்குறித்த‌ குறிப்பா லுண‌ர‌லாம்.*
------
* The centre is included in the main river system-that of the Vaigai and its tributeries. These latter all raise in the Palani hills or the varushanaad and Andipaddi range, and join the Vaigai in the valley which lies between the two. Thereafter the river receives no tributeries of any importance and flows South eastwards past Madura town into the Bay of Bengal not far from Ramnad. (Madras District Gazetters,Madura volume* Page11)

க‌ண்ண‌கி வையை யொருக‌ரைக்கொண்டுபுக்காள் என்ற‌லால் அவ் வையையினொருபாக‌ம் உற்ப‌த்தியாகின்ற‌ வரிசை நாட்டு ம‌லைக்கேனும்,அன்றி அவ்வையையின்ம‌ற்றொருபாக‌ம் உற்ப‌த்தி யாகின்ற‌ பழ‌னிம‌லைக்கேனுஞ் சென்றாளென்றுதான் கொள்ள‌த்த‌கும். வ‌ரிசைநாட்டு ம‌லை நெடுவேள்
குன்ற‌மாகாமையானும், பாண்டிநாட்டு ம‌லையேயாத‌லானும் இவ‌ள் சேர‌னாட்டு நெடுவேள் குன்ற‌மேறினாள் என்ற‌த‌ற்குமாறாக‌ அத‌னைத் துணித‌ல் கூடா‌தாகும். இவ‌ள் நெடுவேள் குன்றம் ஏறுதற்குமுன் பள்ளத்திழிந்தும் மேட்டிலேறியுஞ்சென்றாள் என்றுகூறியதல்லது பெருமலையொன்றையுமேறினாள் என்றுகூறாமை யுங்காண்க. கொடுங்கோளூர்க்கு அயலதாகப் பெருமலையொன்றும் இல்லாமை நன்குகேட்டறிந்து கொள்க. கொடுங்கோளூர்க்கு நெடுந் தூரத்தே செங்குன்றூர் எனப்பெயரியதோரூருள்ளது. அதன்பக்கத்த தாகியதோர்குன்று செங்குன்றாகுமேனும்நெடுவேள்கோயில்கொண்ட குன்றாகாமைகேட்டறிந்துகொள்க. அன்றியும் அக்குன்றுக்குப் போதற்குமுன் இடையே பொதியமலைத் தொடபலவற்றையும் பேர் யாற்றையுங்கடத்தல் இன்றியமையாததாகும். வையையொருகரைக் கொண்டு என்றுகூறியதல்லது வேறுநதிகளைக் கடந்ததையேனும் பாண் டியர் பொதியத்தைக்கடந்ததையேனுங் கூறாமை நன்குணர்ந்து கொள்க. வாழ்த்துக் காதையினும் கண்ணகி உறவினர், மதுரை போழ்ந்து பூசல் கேட்டு வையையொரு வழிக்கொண்டு மாமலியின் மீமிசையேறினார் என்றே கூறியிருத்தலையுங் காண்க. மதுரையைவிட்டு வையையொரு வழிக்கொண்டால் பழனிமலைக்கேனும் ஒருவர் எய்தலாகும், வரிசைநாட்டு மலை நெடுவேள் குன்றமாகாமையாற் கண்ணகியேறியது பழனிமலை யென்றே எளிதிற்றுணியலாகும். பழனிமலை வராககிரித்தொடர் என் பதும், அது முருகக்கடவுள்வரைப்பு என்பதும் பழனித்தலபுராணத்தா னுணார்ந்துகொள்க. சிலப்பதிகாரவரும் பதவுரையாசிரியர் கண்ணகி புக்கது சேரநாட்டு நெடுவேள் குன்றமென்றுகொண்டு திருச்செங் கோட்டுமலை என்றுரைத்தார். அதுவும் வையையொரு வழிக்கொண்டாலெய்தும் மலையாகாமையும் வையைக்குநெடுந்தூரத்தாதலுங் கண்டுகொள்க. வையையின் வடகரையேபோகிப் பழனிமலயை அடைந்து அதன்மிசையேறி விற்பட்டிவழியாகப் பழனிமலைப்பகுதி யாகிய நெடுவேள்குன்றத்தைக் கண்ணகிஎய்தினாள் என்பதே நூலொடு பொருந்தக் கூறுவதாகும். மேற்பழனிமலையின்கண் கீழ்ப்பழனிசெல்லு தற்கு ஐந்துநெறிகளுள்ளனவாதல் நெல்ஸன் துரையவர்கள் எழுதிய மதுரை மான்யூலிற் காண்க. "முருகனற்போர் நெடுவேளாவிபொதினி" என அகநானூற்றினும் இம்மலையையே கூறுதல்காண்க. மற்றுச் செங்குட்டுவன் மஞ்சுசூழ்மலை காண்குவமென்று பெருந்திரளுடன் போந்து பெரியாற்றங் கரையெக்கரிற்றங்கியிருந்த அமயத்தன்றே குன்றக்குறவர் அவ்வேந்தன்பாலிக் கண்ணகிவரலாறு சொற்றது.

பழனிமலையினிகழ்ந்த கண்ணகி செய்தி பேரியாற்றங் கரைமலைப்பக்கத் துணரலாவ தெங்ஙனமெனின், பேரியாற்றங் கரைமலை முதலாகப் பழனி மலையிறுதியாகவுள்ளது ஒரேமலைத் தொடராதலான் அம்மலைவாழ் குறவர் பலரும் ஒருவரொருவர்க்குக் கூறுதல்காரணமாக இச்செய்தி மலையி னெடுந்தூரம் செல்லத்தக்கதேயா மென்றுணர்க. சிலப்பதிகாரத்தும் "குன்றக்குறவரொடுங் குடன்கூடி"ச் சொற்றார்களென்றிருத்தலான் இக்குறவர் பலமலைக் குறவர்கள் என்பதும், இவர்களெல்லாம் ஒருசேரத் திரண்டுபோய்ச் சொற்றாரென்பதும் உணரக்கிடத்தல் காண்க. அடியார்க்குநல்லார் கூறியவாறு நோக்கினும் கொடுங்கோளூர்க்கு அயலதா கிய செங்குன்றென்னும் மலையிலுள்ள குறவர் கண்ணகி செய்தியைத் தம் குன்றுக்கு அயலதாகிய கொடுங்கோளூரிலரசனுள்ள போதுசென்று கூறாது அவன் பேரியாற்றங் கரைப்பக்கத்துத் துஞ்சாமுழவினருவி யொலிக்கு மஞ்சுசூழ்சோலைமலை காணச்சென்ற சமயத்து ஆங்குத் தாமுஞ்சென்று கூறினாரென்றன்றே கொள்ள வேண்டியிருக்கிறது. கொடுங்கோளூர்க்கு அயலதாகிய குன்றக்குறவர் நெடுந்தூரஞ் சென்று பேரியாற்றங்கரை மஞ்சுசூழ்சோலை மலையிற்றங்கிய செங்குட்டுவற்குக் கண்ணகி செய்தி கூறினாரென்றுகொள்ளின் பழனிமலைக் குறவருஞ் செங்குட்டுவற்குப் பேரியாற்றங் கரையிற்சென்று கூறினாரென்று கொள்ளலாகுமென்க. கொடுங்கோளூர்க்கு மஞ்சுசூழ் சோலைமலை நெடுந்தூரத்த தேயாமென்பது நன்கறிந்து கொள்க. இனி "ஏரகம் என்பது மலை நாட்டகத்தொரு திருப்பதி" எனத் திருமுருகாற்றுப்படையில் நச்சினார்க் கினியர் கூறுதலான் அது செங்குன்றென்னும் மலையாகுமெனின், குன்றக்குரவையுள், "செங்கோடும் வெண்குன்றும் ஏரகமும்" எனச் செங்குன்றை ஏரகத்தின் வேறாக உரைத்தாராதலான் அது செங்குன் றன்மையுணர்க. நச்சினார்க்கினியர் ஏரகத்தை மலையாகவே கூறார். அவர் "ஏரகமென்கின்றஊரிலே" என்றதனாலும், 'மலைநாட்டகத்தொரு திருப்பதி' என்றதனானு மிதனையுணர்க. அடியார்க்கு நல்லார் செங்குன்றினை நெடுவேள் குன்று என விளங்கவுரையாமையுங் காண்க. இவற்றாற் கண்ணகி வானுலகெய்திய நெடுவேள் குன்றம் பழனிமலையாகத் தெளிந்து கொள்க. இவ்வுண்மை யுணராதார் வேறுவேறு கூறுவர். இனி ஒருசாரார்,

'கொற்றவேந்தன்கொடுங்கோற்றன்மை
யிற்றெனக்காட்டியிறைக்குரைப்பனள்போற்
றன்னாட்டாங்கிட்டனிமையிற்செல்லா
ணின்னாட்டகவயினடைந்தனணங்கை"

என்னுமிடத்துப் பாண்டியன் கொடுங்கோற்றன்மையினைச் செங் குட்டுவற்குரைத்தற் பொருட்டுச் சேரநாட்டைந்தாளென்று கருதினார். கண்ணகி நெடுவேள் குன்றமெய்தியது தன் கணவனைத் தேவவடிவிற் காண்டற்கென்பது கட்டுரைகாதையானன்கறிந்ததொன்று. மதுரைமா தெய்வம் சொல்லியதே கேட்டன்றோ கண்ணகி கணவனைக் காணப்புக்கது. அதனால் மதுரைமா தெய்வம் கணவனைக் காண்டற்குரிய இடத்தினையும் உரைத்ததேயாகும்; அங்ஙன மன்றாயின் இவள் சேரநாட்டு நெடுவேள் குன்றம் எய்தவேண்டிய நியதியில்லையென்க. இச்செய்தியைச் செங்குட்டுவற்குரைத்த சாத்தனார் கண்ணகி கணவனையிழந்து தனிமையிற்றன் சோணாட்டுக்குச் செல்லநாணினளாய்ப் பாண்டியன் கொடுங்கோற் றன்மையை நினை குரைப்பாளைப்போல நின்னாட்டகவ யினடைந்தனள் என்று கூறினாரல்லது வேறன்று. இதன்கண் உரைப்பனள்போல் என்று தெளிவாகக் கூறியிருப்பவும் உரைக்கவே வந்தாள் என்று அப்பிறர்கொண்டார். அவள் சேர நாடெய்தியது மதுரைமாதெய்வஞ் சொற்றது கொண்டு தன் கணவனைக் காண்டற் பொருட்டேயென்பது நன்றுணர்ந்து கொள்க. கண்ணகி தெய்வமாகி வானத்தில் ஓர் மின்வடிவாய்த் தோன்றித்,

"தென்னவன்றீதிலன்றேவர்கோன்றன்கோயி ன.

என வாழ்த்துக்காதையுட் கூறலானும், அவள் பாண்டியன் கொடுங்கோற் றன்மை கூறவந்தவளல்லளென்பதுணரப்படும். கட்டுரை காதையிலும் மதுரைமாதெய்வம் பாண்டியன் குற்றமிலனாகவே கண்ணகிக்குத் தெளிவித்தது காண்க. இதனாற் கண்ணகி கொடுங்கோளூரை நோக்கிப் பாண்டியன் கொடுங்கோற்றன்மையை இறைக்குரைப்பான் சென்றுபுக்காள் என்று பிறர்கூறுவது பொருந்தாமையுணர்க. மற்றுச் சிலப்பதிகாரத்து, "அஞ்செஞ்சாயலரு காதணுகும், வஞ்சிமூதூர் மாநகர்மருங்கின்" என்று கூறினாராலெனிற் கூறுவேன். மேற் கட்டுரைகாதையில்,

"நெடுவேள்குன்றமடிவைத்தேறிப்
பூத்தவேங்கைப்பொங்கர்க்கீழோர்
தீத்தொழிலாட்டியேன்யானென்றேங்கி
யெழுநாளிரட்டியெல்லைசென்றபின்
றொழுநாளிதுவெனத்தோன்றவாழ்த்திப்
பீடுகெழுநங்கைபெரும்பெயரேத்தி
வாடாமாமலர்மாரிபெய்தாங்
கமரர்க்கரசன்றமர்வந்தேத்தக்
கோநகர்பிழைத்தகோவலன்றன்னோடு
வானவூர்தியேறினண்மாதோ
கானமர்புரிகுழற்கண்ணகிதானென"

எனவருதலாற் கண்ணகி நெடுவேள்குன்றத்து வேங்கையின்கீழ்ப் பதினான்கு நாள் தங்கி அப்பாற் கோவலன்றன்னோடு வானவூர்தி யேறினள் என்று தெளியலாகும். இதனால் இவள் மக்கள் யாக்கையில் வஞ்சிமா நகர்க்கு வராமை நன்கறியப்படும். செங்குட்டுவன் குன்றக்குறவர் சொல்லக் கேட்டுப் பின் சாத்தனார் தம்மாற் கண்ணகி வரலாறுணர்ந்து கண்ணகியைப் பத்தினிக்கடவுளாகப் பரசல் வேண்டுமென்று துணிந்தது நோக்கிக் கண்ணகி தெய்வயாக்கையில் வஞ்சிமாநகர்க்கு எய்தினாள் என்றே கொள்ளத்தக்கதாகும்.

தாய் கண்ணகியையும் தாதை கோவலனையும் கடவுளெழுதியபடி ம*ங்காணும் வேட்கையான் மணிமேகலை "வஞ்சியுட் செல்வனென்று" மணிபல்லவத்தினின்-றெழுதலானும், பின் கண்ணகி கோட்டம்புகுந்து ஏத்திய அவட்குக் கண்ணகி,

"நறைகமழ்கூந்தனங்கையுநீயு
முறைமையினிந்தமூதூரகத்தே"

என வஞ்சியைச் சுட்டிக் கூறுதலானும் கண்ணகி கோயில் வஞ்சியின் கண்ணேயுளதாதல் தெளீயப்படும். இதைப்பற்றி முன்னரே கூறினேன். வாழ்த்துக்காதையிற் கண்ணகி தனக்குக் கோட்டம் அமைத்துவழி பட்டுச் சிறப்பயர்ந்த செங்குட்டுவற்குத் தன் கடவுணல்லணி காட்டிக் கூறியவிடத்து,

"வென்வேலான்குன்றில்விளையாட்டியானகலே
னேன்னோடுந்தோழிமீரெல்லீரும்வம்மெல்லாம்"

என்று வருதலானும் இவள்கோயில் நெடுவேள் குன்றின் கணில்லாமை நன்குணர்ந்து கொள்க. இதன்கண் நெடுவேள் குன்றில்வந்து நான் விளையாடுவேன் நீங்களும் அங்கே வாருங்கோள் என்று கண்ணகிதன் கோயிற்குமேல் விசும்பிற்றோன்றிக் கூறியதனாற் குன்றிற் றனக்குக் கோவிலில்லாமை யுணரப்படும். வென்வேலான் குன்று கண்ணகி கோவலனுடன் வானவூர்தியேறிய இடனாதலின் அதன்கண் விளையாடனீங் கேன் என்றாளென்க. அரும்பதவுரையாசிரியரும் வென்வேலான் குன்றைத்தாங் கருதிக்கொண்ட திருச்செங்கோடாகக் கூறி, நான் குன்றில் வந்து விளையாடுவேன்; நீங்களும் அங்கே வாருங்கோள் என்றாள் என்று கூறியது காண்க. மற்றிவ்வாழ்த்துக் காதைக்கண், கண்ணகியுற

"வையையொருவழிக்கொண்டு
மாமலைமீமிசையேறிக்
கோமகடன்கோயில்புக்கு
நங்கைக்குச்சிறப்பயர்ந்த
செங்குட்டுவற்கித்திறமுரைப்பர்மன்"

எனக்கூறினாராலெனின்? ஆண்டு உறவினர் வையையின் ஒருகரையே போய்க் கண்ணகி வானவூர்தியேறிய நெடுவேண்மலையேறி அவ்விடம் கண்டுகொண்டு அதன்மேற் கோமகடன் கோயிலுள்ள விடத்துப்புக்கு ஆங்கு நங்கைக்குச் சிறப்பயர்ந்த செங்குட்டுவற்கு இத்திறமுரைப்பர் என்றே பொருள்கொள்க. இங்ஙனங் கொள்ளாமல் இவ்வாழ்த்துக் காதையின் "மாமலை மீமிசையேறிக் கோமகடன் கோயில்புக்கு" என்ற தொன்றே கருதிக் கண்ணகிகோயில் நெடுவேள் குன்றத்தேயுள்ளதாகும் என்று துணியின் அது மணிமேகலை நூலோடும், இல்வாழ்த்துக் காதையிற் குன்றில் விளையாட்டியானகலேன் எல்லீரும் அங்கு வாருங்கோள் என்றதனோடும், வரந்தரு காதையில் "அஞ்செஞ்சாயலருகாதணுகும் வஞ்சிமூதூர்" என்றதனோடும் முரணுதல் காண்க. வரந்தருகாதையில்,

"மாடலம்றையோன்றன்னோடுமகிழ்ந்து
பாடல்சால்சிறப்பிற்பாண்டிநன்னாட்டுக்
கலிகெழுகூடல்கதழெரிமண்ட
முலைமுகந்திருகியமூவாமேனிப்
பத்தினிக்கோட்டப்படிப்புறம்வகுத்து
நித்தல்விழாவணிநிகழ்கென்றேவி
...............................
மாடலமறையோன்றன்னோடுங்கூடித்
தாழ்கழன்மன்னர்தன்னடிபோற்ற
வேள்விச்சாலையில்வேந்தன்பெயர்ந்தபின்
யானுஞ்சென்றேனென்னெதிரெழுந்து
வஞ்சிமூதூர்மணிமண்டபத்திடை"

என அடிகள் கூறுதலானும் கண்ணகி கோட்டம் வஞ்சிமூதூர்ப் புறத்துள தாதல் புலனாகும். இதன்கண் அரசன், வேள்வி செய்தற்குரிய இடனாகத் தான் முன்காட்டிய வஞ்சி வேளாவிக் கோமாளிகை வேள்விச்சாலைக்குக் கண்ணகி கோட்டத்தினின்று பெயர்ந்தானென்றும், அடிகள் தாமுங் கண்ணகிகோட்டம் புக்காரென்றும் அறியக்கிடத்தலல்லது ஒருமலையினின்று மீண்டதாகவும் அம்மலைக்குப் போனதாகவுங் கொள்ளக்கிடை யாமை காண்க. இத்துணையுங் கூறியவற்றாற் கண்ணகி "செங்கதிர்மணி முடிச்சேரலன்றிகழ் கொங்க நன்னாட்டிடை" யே புக்காளென்றும், அந் நாட்டு வருபுனனீர்த்தண் பொருநை சூழ்தரும் வஞ்சியிலே கோயில் கொண்டாளென்றும் கண்டுகொள்க. இவையெல்லாம் ஆராயாது கண்ணகிகோட்டம் கொடுங்கோளூர்க்கயலதாகிய செங்குன்று மலையிலுள்ளதென்று துணிந்தாருமுண்டு.

இனிக்கருவூர் வஞ்சியென்று பெயர் பெறுதலில்லையென்று மயங்கு வாருமுளர். அவர்பொருட்டுச் சிலகாட்டுவல் - சிலப்பதிகாரத்துக்

"கூடார்வஞ்சிக்கூட்டுண்டுசிறந்த
வாடாவஞ்சிமாநகர்"

என்புழி அரும்பதவுரையாசிரியர் வஞ்சிமாநகர் என்பதற்கு கருவூரிலே எனப் பொருள் கூறினார். புறப்பாட்டில்,

"விண்பொருபுகழ்விறல்வஞ்சி" (11)

என்புழிப் புறப்பாட்டுரையாசிரியர், வஞ்சி - கருவூர் என்றார். அதன்கட்

"பூவாவஞ்சியுந்தருகுவனொன்றோ" (32)

என்புழி, அவர், "பூவாவஞ்சியென்றது கருவூர்க்குவெளிப்படை யென்றார். அதன்கண்,

"மா வாடாவஞ்சிவாட்டுநின்"(36)

என்புழி அவர், "மாட்சிமைப்பட்ட தொழில்பொருந்திய நெடியதேரை யுடைய சேரனழிய அவனது அழிவில்லாத கருவூரை அழிக்குநினது" என்றார்.

திவாகரநிகண்டு நூலார், "கருவூர்வஞ்சி" என்றார்.

பிங்கலந்தை நூலார், "கருவூர்வஞ்சி" என்றார்.

கச்சியப்பமுனிவர், "கருவூரெனத்தக்கது வானடுத்தெழும்வஞ்சி" எனப் பேரூர்ப்புராணத்துட் கூறினார். இக் கருவூரென்னும் பெயரும் வஞ்சியென்னும் பெயரும் சங்கநூல் வழக்கேயாமென்பது "கோதை திருமாவியனகர்க் கருவூர்" எனவும், "ஒளிறுவேற்கோதை யோம்பிக்காக்கும்வஞ்சி" எனவும் வருதலா னுணரலாமென்று முன்னரே காட்டினேன். இவையெல்லாம் அப்பிறர் தெரியார்போலும். "வஞ்சி பசுபதியாயினார், பானநஞ்சினர் பாழியுமானிலையாயிற்றே" என்று பேரூர்ப்புராணத்து வருதலான் வஞ்சிக்கண் ஆனிலைக் கோயிலுடைமை புலனாகும்.

இனி இவ்வஞ்சி ஆன்பொருந்தத்தின்கரையிலுள்ளதென்பது,

"தண்பொருநைப்புனற்பாயும்
விண்பொருபுகழ்விறல்வஞ்சி" (புறம்-11)

என்புழிப் புறப்பாட்டுரையாசிரியர் "ஆன்பொருந்தத்தினீரின்கட் பாய்ந்து விளையாடும் வானைமுட்டிய புகழினையும் வென்றியையுமுடைய கருவூர்" எனவுரைத்ததனால் உணரலாம். ஆன்பொருநை, பொருநை என்பன ஆன்பொருந்தத்தின் பெயரென்பது மேற்காட்டிய 11-ஆம் புறப்பாட்டுரையானும், "தண்ணான் பொருநை" (புறம்-36) என்பதற்குப் புறப்பாட்டுரைகாரர் குளிர்ந்த ஆன்பொருந்தம் என்றுரைத்ததனாலும் அறியலாம். இவ்வான் பொருந்தநதிக்கு ஆனி, வானி என்பனவும் பெயரென்பது திவாகரத்து, "ஆனி வானியான் பொருந்த மாகும்" எனவும், பிங்கலந்தையில்,

"ஆனிவானியான்பொருநைபொருநை
சூதந‌தியான்பொருந்தமாகும்"

எனவும் வருதலா னறிந்தது. இவ்வான் பொருந்தமாகிய வானியாறு கொங்கு நாட்டுள்ளதென்பது "கொங்கின் வானியாற்றில்" எனத் தேசிகப் பிரபந்தத்து வருதலானறிந்தது. இக்கொங்குநாட்டிலுள்ள ஆனி, பொருநை, ஆன்பொருநை, வானி, ஆன்பொருந்தம் என்னும் யாறு காவிரியுடன் கலப்பதாகுமென்பது, பதிற்றுப்பத்துள், "காவிரியன்றியும் பூவிரிபுனலொரு, மூன்றுடன் கூடிய முக்கூடல்" என்பதற்குப் பதிற்றுப்பத்துரைகாரர், "காவிரியல்லாமலும் ஆன்பொருந்தமுங் குடவனென்றாற் போல்வதோர் யாறும் கூடியகூட்டம்" எனவுரைத்ததனாலும் பழனிப் புராணத்தாலும் அறியப்பட்டது. இவற்றாற் கொங்குநாட்டில் வானி யென்னும் பெயரையுடையதும் காவிரியுடன் கலப்பதுமாகிய ஆன் பொருந்தத்தின் கரையிலே சேரன் அழியாத கருவூருண்மை நன்குபுல னாகும்; இது பின்னுமோராற்றானுந் துணியப்படும்.

இக்கருவூர் "வஞ்சி முற்றம் வயக்களனாகக், கொண்டனை பெருமகுட புலத்ததரி" எனவரும் புறப்பாட்டாற் குடபுலத்துள தென்றுதெளியலாம். இதனால் இதனைக் குடபுலவஞ்சியென்ப. குடபுலம் கொங்கு நாடாகுமென்பது, சேக்கிழார் "சென்றசென்ற குடபுலத்து" எனவும், "கொங்கிற்குடபுலஞ் சென்றணைந்தார்" எனவும், "அப்பாலைக்குட புலத்தில்" எனவும், "செல்வக்கருவூர்த் திருவானிலைக்கோயில் சென்றிறைஞ்சி ...........அந்நாடகன்று" எனவும், "குடபுலத்துக் கோமன்னர் திறை காணக் .........கருவூர் சென்றணைந்தார்" எனவும் கூறியவாற்றான் எளிதிலறியலாம். குடபுலமும் கொங்கும் ஒன்றாதலானன்றே "குடபுலங்காவலர் மருமான்" என்றும், "கொங்கர்கோன்" என்றும், சேரன் வழங்கப்பட்டானெனவறிக. "சேரர்கொங்கு" எனவும், "கோதைநனி யாண்டதொருகொங்கு" எனவும், "செங்கதிர் மணிமுடிச்சேரலன் றிகழ்கொங்கு" எனவும், "கொடித்தடஞ்சிலைக் கோதைநாட்டினிலெழு பதியும்" எனவும் வருதலானும் இக்கொங்காகிய குடபுலம் சேரநாடாத றெளியப்படும். இவற்றாற் சேரர் குடபுலமே கொங்காத றுணியப்படும்.

இதனாற் குடபுலவஞ்சி கொங்குவஞ்சியாத லெளிதலறியலாம். கொங்கு வஞ்சி "கருவூரெனத்தக்கது வானடுத்தெழும்வஞ்சி" என்பதனாற் கொங் கிற்கருவூராதல் துணியப்படுதல் காண்க. இக்கருவூரையே "வஞ்சித்தலம்" எனவும், "வஞ்சியாரணியம்" எனவும் வழங்குதலை முன்னரே காட்டினேன். இக்கருவூர் 'குடபுலத்திருத்தல் பற்றியே "குடகிற்கருவூர்" எனக்கூறப்படும் என்பதும் முன்னருணர்த்தப்பட்டது. "குடகிற்கருவூர்" என்று வழங்கின அருணகிரிநாதர், இவ்வூரையே பசுபதிகர்ப்பபுரி என்றும் வஞ்சியென்றும் வழங்கினாரென்பது கற்றாரறிவர். "வஞ்சி குடக்கினிற் கோதையுமாங்கே" (அழகர் கலம்பகம்) என்றது மிக்கருத்தே பற்றியதாம். குடகிற்கருவூரும் குடக்கினில் வஞ்சியும் ஒன்றாதல் தெள்ளியது. சேக்கிழார் கொங்குநாட்டையே குடபுலமென்று கூறியதுபற்றிக் குடபுலவஞ்சி கொங்குவஞ்சியென்பது தெளியப்பட்டதாகும். கொடுங் கோளூர் கடன் மலைநாட்டு மூதூராதலல்லது குடபுலவஞ்சி யாகாமை யுணர்ந்துகொள்க.

இனிச்சோழன் குள‌முற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவன் சேரர் கருவூர் முற்றியிருந்தபோது அவனை ஆலத்தூர்கிழார், மாறோகத்து நப்பசலையார் முதலாய நல்லிசைப்புலவர் பலர் பாடிய பாடல்கள் புற நானூற்றிலிருத்தலைக் கற்றாரறிவர். அவையெல்லாம் யான் முற்காட்டிய "இவன்யாரென்குவையாயின்" (13) என்னும் புறப்பாட்டைப் போலச் சேரர்கருவூர் சோணாட்டையடுத்துச் சோழரால் எளிதில் முற்றலாம்படி அத்துணையணித்தாக அகநாட்டுள்ளதன்மையினை யுணர்த்துதல் நன்கறியலாம்: அப்பலபாடல்களிலொன்றேனும் அவ் வூர் கடலுடைத்ததாகக்கூறதுசேறலையும் நோக்கிக்கொள்க. சோழர், சேரர்பாற்செற்றங் கொண்டபோதெல்லாம் கருவூரை முற்றுதலையும், கருவூரிற் சேரருடையயானையை யெறிதலையும், கருவூரை யெறிதலையும் நூல்களாங்காங்குக் கூறுதலை யுற்றுநோக்கிற் சேரர்கருவூர் சோணாட்டையடுத்துள்ள தன்மையே புலனாகும். சோழன், சேரன் கருவூரைவென்று கொண்ட காலத்துச் சோழனை "கோழியெழில் வஞ்சியு மோங்கு செங்கோலினான்" (திருஞானசம்பந்த நாயனார் மூக்கீச்சரத் தேவாரம்) எனவும், "வஞ்சிமானதன்" (ஜயங்கொண்டார்பாடிய பரணி) "மாயனிகனெடுமால் வஞ்சியானீர் நாட்டார்மன்" (வீரசோழியம் மேற்கோள்) எனவும் நூல்கள் கூறுதலானும் இவ்வஞ்சியாகிய கருவூர் சோணாட்டையடுத்துள்ளதுணரலாகும். காவிரி பாயுந்தலை நீர்நாடு முதற் கடை நீர்நாடிறுதியாகச் சோழன் உடையனாய காலத்துச் சோழனைப் பற்றிய பாடல்களிற் "புனனாடன் கொல்லி" எனக்கூறுதல் போலவே, "வஞ்சியானீர் நாட்டார்மன்" எனவும், "அறத்தின், மகனை முறைசெய் தான்மாவஞ்சியாட்டி, முகனைமுறை செய்தகண்." எனவுங் கூறப்பட்டன என வுணர்க.

பிற்காலத்துச் சேரர் கொல்லிமலை சோழற்கேயுரியதாகிய தன்மை போலச் சேரர் வஞ்சியும் சோழற்குரியதாகிய தனையே இவை காட்டுதல் உணரத்தகும். மேல்கடற் பக்கத்திலுள்ள தொண்டி, முசிரி, மாந்தை என்னும் ஊர்களையேனும் அப்பக்கத்துள்ள மலைகளை யேனும் சோழற்குரிமையாக்கிக் கூறாமல் வஞ்சி நகரையும் கொல்லி மலையையுமே அவற்குரிமையாகக் கூறுதலான் அவை அவன்நாட்டுக்கு அணிமையாக இருத்தல்பற்றி அவனாலவை வென்று கொள்ளப்பட்டனவே யாகுமென்று துணியத்தகும். மேல்கடற்பக்கத்து இவ்வஞ்சி யுள்ளதாயின் அக்கடற் பக்கத்துள்ள பிறவூர்களையும் சோழற் குரிமை கூறுவரென்றுணர்க. "வஞ்சியானீர் நாட்டார்மன்" "புனனாடன் கொல்லி" எனப் பிற்காலத்து வழங்கியனகொண்டு இவ்வஞ்சியும் கொல்லியும் காவிரி பாயும் நிலத்தை அணிமையாக இருத்தல் குறித்தாரெனினும் அமையும். கொங்குநாட்டுக் காவிரிபாயும் பகுதியை அடுத்து இவையுண்மையால் பிற்காலத்துச் சோழர்க்குக் காவிரி பாயுந்தலைநீர் நாடுமுதலாக உரிமையாய் விட்டது கருதி, கொங்கிற் காவிரி பாயுநில முதலாக எல்லாம் நீர்நாடாகவே கொண்டு வஞ்சியுங் கொல்லியும் நீர் நாட்டனவாகக் கூறினாரென்பதே பொருந்தும். திருஞானசம்பந்த நாயனாரும், "கோழியெழில் வஞ்சியும்" என்றது அவை அணிமையாதல் கருதியென்று கொள்ளத்தகும். தலைநீர்நாடு என்பது பண்டை வழக்கே யாதலை, "உண்டுறை, மலையலரணியுந் தலைநீர்நாடன்" (390) எனச் சேரர்க்கு உறவினனாகிய அதியமானொடுமானஞ்சியை ஔவையார் பாடிய புறப்பாட்டானுணர்க. தலைநீர் நாடாதலால் உண்டுறை மலை யலரணிந்தது என்று கூறினாரெனவறிக. விருகாதகழகிய பெருமாள் சாஸநமொன்றில்,

வஞ்சியர்குலபதியெழினிவகுத்தவியக்கரியக்கியரோ
டெஞ்சியவழிவுதிருத்தியெண்குணவிறைவனைமலைவைத்தான்
அஞ்சிதன்வழிவருமவன்முதலிகலதிகலைகனநூல்
விஞ்சையர்தகைமையர்காவலன்விடுகாதழகியபெருமாளே"

என வருதலானும் இவ்வதியமானஞ்சி வஞ்சியர் குலத்தவனாதலுண*ரப்படும். இவற்றான் முற்காலத்தே தலை நீர்நாடும் இடை நீர்நாடும் சேரர் உறவினர்க்கும் சேரர்க்கும் உரிமையாதலுங் கடை நீர்நாடு சோழர்க்குரிமையாதலும் உய்த்துணரலாகும். பிற்காலத்து முழு நீர்நாடும் சோழர்க்குரிமையாகிய சிறப்பாற் "புனனாடன்கொல்லி" எனவும், "வஞ்சியானீர் நாட்டார்மன்" எனவும் கூறத்தலைப்பட்டனரென எளிதிலுணரத்தகும். சேரர் கொல்லியையும் வஞ்சியையுமே பிற்காலத்துச் சோழர்க்குரிமையாகப் பின்னூல்கள் கூறாமையான் அக்கடன் மலைநாட்டுத் தொண்டி, மாந்தை, முசிரி முதலியனவுள்ள பக்கத்து இக்கொல்லியும் வஞ்சியுமில்லாமை எளிதிலுய்த்துணரலாகும். இறையனார் களவியலுரை மேற்கோட்பாடல்களில் அரிகேசரி பாண்டியன் சேரர் நாட்டை வென்றுகொண்டான் என்பதையுணர்த்தி வஞ்சி, கொல்லி, முசிரி, தொண்டி, மாந்தை, விழிஞம் முதலாகப் பலவற்றையும் அவற்குரிமையாக்கிக் கூறுதல்போல ஈண்டுச் சோழர்க்குப் பல வற்றையுங் கூறாமற் கொல்லியையும் வஞ்சியையுமே யுரிமையாக்கு தலையு நோக்கிக்கொள்க.

இனிப் புறப்பொருள்வெண்பாமாலைப் பொதுவியற்படலத்துக்

"குடையலர்காந்தட்டன்கொல்லிச்சுனைவாய்த்
தொடையவிழ்தண்குவளைசூடான் - புடைதிகழுந்
தேரதிரப்பொங்குந்திருந்துவேல்வானவன்
போரெதிரிற்போந்தையாம்பூ"

என்னும் பாடலுண்மை கற்றாரறிவர். இதன்கட் சேரன், தன்கொல்லி மலைச்சுனையிடத்துக்கு வளைப்பூவைச்சூடான்; பூசல் தோற்றிற்பனந் தோடாம் அவன் சூடும்பூ என்று கூறினார். இதனாற் சேரன்தன் கொல்லிமலைச் சுனையிடத்துப் பூத்த குவளையைச் சூடுதற்குரிய நிலையில் அம்மலைக்கு அணித்தாகவதிதல் எளிதிலுணரத்தகும். கொல்லிமலைச் சுனைகளில் இவன் சூடற்காகிய குவளைகள் பலவுளவாகவும் அவற்றைச் சூடானாயினான் என்றது அச்சேரற்கு அஃதடையாளப் பூவாகாமையா னென்றுணர்க. சேரன்வதியு நகர்க்கும் கொல்லி மலைக்கும் இடமணித் தாதலில்லையாயின் இவ்வாறு பாடல் பிறவாதென்றுய்த்துணர்ந்து கொள்க. கொடுங்கோளூர்க்குக் கொல்லிக்கும் பன்னூறு நாழிகை வழித்தூரமாகுமென் றறியப்படுதலாற் சேரன் ஆண்டிருந்துசூட நினைந்தாலும் கொல்லிச்சுனைக் குவளை சூடலாகாமையு நோக்கிக் கொள்க. போரெதிரிற்கு வளைசூடான்; போந்தைசூடுவன். என்றுரைத்த வாற்றாற் போரெதிராதபோது சேரன் தன் கொல்லிச்சுனைக் குவளை சூடுவன் என்பது பெறப்படுதல் காண்க. சேரரைக் கொல்லி நகர்க்கிறைவரென்பதும் கொல்லியணித்தாகிய நகர்க்குத் தலைவராதல் கருதியென்றுணர்க. கொங்குநாட்டுத் திருப்போரூத்தலத்து இறவாப் பனை என்பதொன்றுண்மை பேரூர்ப்புராணத்தா-லறியலாம். இவ் விறவாமைச் சிறப்பானிப் பனையின் தோட்டைச் சேரர் அணியத்தலைப் பட்டனரென் றூகிக்கப்படும்.

இனிச் சோழன்செங்கணானும் சேரமான் கணைக்காலிரும் பொறையுந் திருப்பேர்ப்புறத்துப் பொருதுடைந்துழிச் சேரமான் கணைக்காலிரும்பொறையைப் பற்றிக்கொண்டு சோழன் செங்கணான் சிறைவைத்துழிப் பொய்கையார் களம்பாடி வீடுகொண்ட களவழி நாற்பதின்கண்,

"ஒண்செங்குருதியுமிழும்புனனாடன்
கொங்கரையட்டகளத்து"

எனவும்,

"புய்ந்துகால்போகிய புலான் முகந்த வெண்குடை
பஞ்சிபெய்தாலமே போன்ற புனனாடன்
வஞ்சிக்கோ வட்டகளத்து"

எனவும் வருதலைக் கற்றாரறிவர். இதன்கட் சோழன் செங்கணான் கொங்குநாட்டாரையட்டான் என்றும், வஞ்சிநகர் கரசனையட்டான் என்றும் கூறுதல்கொண்டு வஞ்சியிலுள்ள அரசனாகிய சேரன் தன் வஞ்சியுள்ள கொங்குநாட்டு மறவர்துணையாகச் சோழனொடு பொருதானென்றும், அங்ஙனம் பொருதுழி அக்கொங்குநாட்டாரையும் அக்கொங்குநாட்டுத் தலைநகராகிய வஞ்சிக்குக்கோவாகிய சேரனையும் சோழன் அட்டான் என்றும் உணரக்கிடத்தல் நன்குகாண்க. இவை நாடும் ஊரும் புலப்படுதல் தெற்றெனவிளங்கும். இவ் வுண்மையானன்றே சங்கர சோழனுலாவுடையார்,

"வெங்கைக் களவழிப்பாடலுக்கு வில்லவனைக்
கொங்கைத்தளை களைந்த கோமானும்"

எனப் பாடுவாராயினாரெனவுணர்க. சேரன் இக்கொங்கு நாட்டிருந்து அரசு புரிதலானன்றே "குடகொங்கன்" (பெரியதிருமொழி) எனச் சேரனையும், "கோதைநாடு" (பழனித்தல புராணம்) எனக் கொங்கு நாட்டையும் வழங்கினார். சேரநாட்டைச் சொல்லவேண்டியவிடத்துக் "குட கொங்கநாடு" (பாரதம்) என்று மொழிவதும் இக்கருத்தே பற்றிய தாகுமென்று கொள்க. சேரனுக்கு வானுலகு நல்கினான் என்று கூறு மிடத்துக் "கொங்கைக்கமராவதி யளித்த கோவேராச குலதிலகா" எனப் பிறரும் பாடுதல் காண்க. இக்களவழிக்கண் நாடும் ஊரும் கூறியது போலவே,

"கொங்குபுறம்பெற்றகொற்றவேந்தே
.... ..... ..... ......
வஞ்சிமுற்றம்வயக்களனாக

கொண்டனைபெருமகுடபுலத்ததரி" (புறம்-373)

என்னுமிடத்தும் நாடும் ஊரும் கூறினாரென்று தெளியப்படுதல் காண்க. குடபுலம் கொங்குநாட்டைச் சிறப்பாகவுணர்த்துமென்பதை முன்னரே தெளிவித்தேன்.

*சேரமான்குடக் கோநெடுஞ்சேரலாதனும் சோழன் வேற் பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளியும் போர்ப்புறத்துப் பொருது வீழ்ந் தாரைக் கழாத்தலையார் பாடிய புறப்பாட்டுக்களில்,

"அறத்தின்மண்டியமறப்போர்வேந்தர்
……. …… ….. ……ஈவே

"பெண்டிரும், பாசடகுமிசையார்பனிநீர்மூழ்கார்
மார்பகம்பொருந்தியாங்கமைந்தனரே" (62)

எனவும்,

"என்னாவதுகொறானேகழனி
யாம்பல்வள்ளித்தொடிக்கைமகளிர்
பாசவன்முக்கித்தண்புனற்பாயும்
யாண‌ர‌றா அவைப்பிற்
…… …….. …… றலைநாடே" (63)

எனவும் வருதலைக் கற்றாறிவர். இவற்றுட் சேரர் சோழர் இருவரும் படையுடன் பொருதபோது இருவர் படையும் பட்டபின்னும் பெயராது சென்று இருவேந்தரும் பொருது அக்களத்தே மாய்ந்தனரென்றும், அவ்வரசர் பெண்டிரும் பச்சையிலை தின்னாராய்க் குளிர்ந்த நீரின்கண் மூழ்காராய் அவர் மார்பத்தைக்கூடி அக்களத்தின் கண்ணே உடன் கிடந்தார் என்றும் கூறியிருத்தலுடன் இவ்விருவேந்தர் நாட்டினை யும் வேறுவேறு விசேடியாது ஒருபடியாகவே நீர்வளத்தான் விசேடித்து இனியிவர் நாடு என்ன வருத்தமுறுவதோதான் என்று இரங்குதலையுங் காணலாம். இப்போர்க்களத்து இருவேந்தர் பெண்டிரும் உடன்கிடந்தார் என்று கூறப்பட்டதனா லிவர் பொருது மடிந்த விடம் இவ்விருவர் பெண்டிரும் வதியும் ராஜகிருகமுள்ள தலைநகர்க்கு அணித்தாயிற்றென்று துணியப்படும். அங்ஙனமன்றாயின் இவர் மடிந்தது கேட்டுப்போந்து அவரவர் பெண்டிர் அவரவர் மார்பைத் தழீ இக்கிடத்தல் கூடாதென்க.

"குலமடமாதரொடுகலமிசைச்சேறலும்
பாசறைச்சேறலும்பழுதெனமொழிப" (இ-வி-அகத்-81)

என்பதனாற் பரத்தையரோடு பாசறைச்சேறலல்லது குலமகளிருடன் பாசறைச் சேறலில்லையென்பதும் உணர்ந்து கொள்க. அரசர் மடிந்த களத்தே அவர் மார்பைத்தழீ இத் தாரகபோஷக போக்கியங்களைவிட்டு உடன் கிடத்தல் கூறியதனால் இவர் குலமகளிராதல் பெறப்படும். இதன்கட் "பாடிவீட்டின் கட்போர்க்களம் தமதாக்கிக் கொள்ளுதற் குரியோரொருவரின்றிக் கண்டார்க்கு அச்சம்வர உடனே மடிந்தது" எனக் கூறியுள்ளவாற்றாற் பாடிவீடு பாழ்பட்டவாறு முன்னரே பெறப் பட்டதாகும். தொல்காப்பியத்தும்,

"நீத்தகணவற்றீர்த்தவேலிற்
பேஎத்தமனைவிகாஞ்சியானும்"

எனவும்,

"முலைமுகனுஞ்சேர்த்திக்கொண்டோன்
றலையொடுமுடிந்தநிலையொடுதொகைஇ"

எனவும் வருவனவற்றால் இவ்வேந்தர் கணவரும், இப்பெண்டிர் அவர் மனைவியருமாதறெள்ளிதெனவுணர்க. புறப்பொருள்வெண்பாமாலை யினும்,

"எங்கணவனெங்கணவனென்பாரிகல் வாடத்
தங்கணவன்றார் தம்முலைமுகப்ப—வெங்கணைசேர்
புண்ணுடை மார்பம் பொருகளத்துப் புல்லினார்
நுண்ணிடைப்பேரல்குலார்"

எனவருதலானும், அதற்கு மாகறலூர்க்கிழான் சாமுண்டி தேவநாயகன், " எம்முடைய கணவன் எம்முடைய கணவனென்று சொல்லும் பரத்தையர் மாறுபாடு கெடத் தமதுகொழுநன் மாலை தம்முலை முகந்து கொள்ள வெய்ய அம்புபட்ட புண்ணினையுடைய மார்பைப் போர்க் கள்த்துத் தழுவினார்; நுண்ணிய இடையினையும் பெரிய அல்குலினையு முடைய குலமகளிர்" எனவுரைத்தலானும், இவ்வேந்தர் மார்பைத் தழுவிக்கிடந்த பெண்டிர் அவர்குல மகளிர் என்பதுணர்க.

" காய்கதிர்நெடுவேற் கணவனைக்காணிய
வாயிழை சேறலுமத்துறையாகும்"

" பகையைச்சீக்கும் ஒளிநெடுவேலினையுடைய கொழுநனைக்காண வேண்டி அவன்பட்டபோர்க்களத்துள் அழகிய ஆபரணத்தையுடைய மனையாள் போயினதும் அத்துறையேயாகும்" (புறப்-வெண்) என்பதனான் மனைவியர் போர்க்களம் போய் இறந்த கணவரைக் காண்ட லுண்டென்றுணர்க. இவற்றாற் சேரர் சோழரிருவரும் பட்ட போர்க் களத்து அவர் மனைவியரே போய் அவர் மார்பைத் தழுவிக் கிடந்தார் என்று துணியப்பட்டதாகும். இச்செய்தி, சோழர் உறையூரையும் சேரர் அதனையடுத்த கருவூரையும் தலைநகராகவுடைய ரென்பதற்குப் பொருந்துவதல்லது மேல்கடற் பக்கத்துக் கொடுங்கோளூரைச் சேரர் தலை நகராவுடையர் என்பதற்குச் சிறிதும் பொருந்தாமையுய்த் துணர்ந்துகொள்க. முற்காட்டிய மேற்கோளிற் சேரர் சோழரிருவர் நாட்டையும் ஒருபடியாக வருணித்ததும் இக்ககருத்தையே வலியுறுத்தும். ஆண்டு இருவரும் ஒருநாடுடையார் போலவே கூறியிருத்தலை நன்று கண்டுகொள்க. இருவேந்தரும் காவிரிபாயு நிலவள முடையராதலால் இங்ஙனங் கூறினாரெனவுணர்க. இவ்விருவேந்தரும் பொருத போஒர் என்னும் ஊர் சோழன் மறவனாகிய பழையனுடையது. காவிரி நாட்டுள்ளது; இதனை,

" வெண்வே, விழையணியானைச் சோழன் மறவன்
கழையளந்தறியாக் காவிரிப்படப்பைப்
புனன்மாலிபுறவிற்போஒர் கிழவோன்
பழையனோக்கிய வேல்போல்" (அகம்326)

எனவருதாஅனுணர்க.

"கொற்றச்சோழர்கொங்கர்ப்பணீ இயர்
வெண்கோட்டியானைப் போஒர்கிழவோன்
பழையன்வேல்வாய்த்தன்ன" (நற்றிணை10)

என்பதனாற் சோழர், பழையன்படை முதன்மைபெற்றுக், கொங்க ரொடு பொருதமையுணரப்படும்.

இனிப் பதிற்றுப்பத்து ஒன்பதாம்பத்தினால் இளஞ்சேரலிரும் பொறையென்னுஞ் சேரனிருந்தரசாண்டவூர் வஞ்சியென்பது கற்றாரறிவர். ஒன்பதாம் பதின்பதிகத்து,

"வெருவருதானையொடுவெய்துறச்செய்துசென்
றிருஎருவேந்தரும்விச்சியும்வீழ
வருமிளைக்கல்லகத்தைந்தெயிலெறிந்து
பொத்தியாண்டபெருஞ்சோழனையும்
வித்தையாண்டவிளம்பழையன்மாறனையும்
வைத்தவஞ்சினம்வாய்பவென்று
வஞ்சிமூதூர்த்தந்துபிறர்க்குதவி
மந்திரமரபிற்றெய்வம்பேணி
... ... ... ... .... .... ....
மன்னுயிர்க்காத்தமறுவில்செங்கோ
வின்னிசைமுரசினிளஞ்சேரலிரும்பொறை"

எனவாருதலா னிஃதறியப்படும். இவனைபாடிய முதறாட்டில்

"வேறுபுலத்திறுத்தவெல்போரண்ணல் .
.. ... ... ... ... ... ... ...
காந்தளங்கண்ணிச்செழுங்குடிச்செல்வர்
கலிமகிழ்மெவலரிரவலர்க்கீயுஞ்
சுரும்பார்சோலைப்பெரும்பெயற்கொல்லிப்
பெருவாய்மலரொடுபசும்பிடிமகிழ்ந்த்
மின்னுமிழ்ந்தன்னசுடரிழையாயத்துத்

தன்னிறங்கர‌ந்தவண்டுபடுதுப்பி
னொடுங்கீரோதியொண்ணுதலணிகொளக்
கொடுங்குழைக்கமர்த்தநோக்கினயவரப்
பெருந்தகைக்கமர்ந்தமென்சொற்றிருமுகத்து
மாணிழையரிவைகாணியவொருநாட்
பூண்கமாளநின்புரவிநெடுந்தேர்
முனைகைவிட்டுமுன்னிலைச்செல்லாது
தூவெதிர்ந்துபெறாஅத்தாவின்மள்ளரொடு
தொன்மருங்கறுத்தலஞ்சியரண்கொண்டு
துஞ்சாவேந்தருந்துஞ்சுக
விருந்துமாகநின்பெருந்தோட்கே"

என வருதல் காணலாம். இது வேற்றுப்பு லத்துச் சென்று தங்கிய சேரனை அவன் மனைவி காணும்படி தேர் புரவி பூண்பதாக வேண்டுமென்று கூறியதாகும். உரைகாரரும், "அண்ணல் நின் அரிவை காணிய நின்தேர் ஒருநாட் புரவி பூண்பதாக வேண்டும்: அதுதான் நின் அரி வைக்கே உடலாக வேண்டுவதில்லை: அதனானே துஞ்சா வேந்தருந் துஞ்சுவார்களாக வேண்டும்; அதுதான் நின் பெருந்தோட்கு விருந்து மாக வேண்டும். இவ்வாறு இரண்டொரு காரியமாக இதனைச் செய்க என வினைமுடிவுசெய்க" எனவுரைத்தார். இதனா லிது வேற்றுப் புலத்துத்தங்கிய சேரனை அவன் கற்புடைய மனைவியுள்ள கோயிற்குச் செல்லுமாறு வேண்டிக் கொண்டதென்று நன்கு தெளியலாம்: இதன் கண் வேறுபுலத்திறுத்த வெல்போரண்ணால் நின் மாணிழையரிவையாகிய மனைவி கொல்லிமலையிலுள்ள இருவாட்சி மலருடன் பச்சிலையையும் விரும்பிச் சூடி அதனா லோதியும் நுதலும் அணிகொள அவள் காணுமாறு ஒருநாள் நின்புரவி நெடுந்தேர் பூண்பதாக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது: இதனாலிவன் மனைவியுள்ள அந்தப்புரத்தினை யுடைய கோயில் கொல்லிமலைக்கு அணித்தாதல் நன்கு துணியப்படும். அங்ஙனமல்லாக் காற் கொல்லிமலையிலுண்டாகும் இருவாட்சியையும் பச்சிலையையும் சேரன் மனைவி கோயிலிலிருந்து சூடியணி கொள்ளுதல் இயலாதென்று தெளிந்து கொள்க. இது வேற்றுப் புலத்திறுத்த சேரனை அவன் வஞ்சிக்குத் திரும்புமாறு வேண்டியதன்றி வேறன்று. அவ்வஞ்சியிலுள்ளார் கொல்லிமலைப் பூவையும் தழையையும் புனைந் தணிகொளல் கூறியவாற்றான் வஞ்சிக்குக் கொல்லிமலை யணித்தாதல் இன்றியமையாததாகும். கொல்லிமலைப் பூவையுந்தழையையும் புனையக் கூடிய நிலையில் அம்மலைக்கு அணித்தாகவுள வஞ்சி கொங்கிற்கருவூரே யன்றி பிஅர்கூறுங் கொடுங் கோளூரல்லாமை எல்லாரும் அறிவர். இப்பதிற்றுப்பத்து, மேல் யான்காட்டிய,

"குடையலர்காந்தட்டன்கொல்லிச்சுனைவாய்த்
தொடையவிழ்தண்குவளைசூடான்"

என்ற வெண்பாமாலைப் பாட்டொடு கருத்தொத்து வஞ்சி கொல்லிக்கு அடுத்துள்ளதென்பதனை ஐயமறத்தெளிவித்தல் நன்று கண்டுகொள்க. இச்சேரனைக் கொங்கின்கணுள்ள "வானிநீரினுந்தீந்தன் சாயலன்" என்றதனையும்," காவிரிப்படப்பை நன்னாடன்ன......ஒண்டொடி கணவ' என்றதனையும் ஈண்டைக்கேற்ப நோக்கிக் கொள்க. வானியும், அடுத்துள்ள தென்பதனை ஐயமறத் தெளிவித்தல் நன்று கண்டுகொள்க. இச்சேரனைக் கொங்கின்கணுள்ள "வானிநீரினுந் தீந்தண் சாயலன்" என்றதனையும், "காவிரிப்படப்பை நன்னாடன்ன.....ஒண்டொடி கணவ" என்றதனையும் ஈண்டைக்கேற்ப நோக்கிக்கொள்க. வானியும், காவிரியும் கொங்கு நாட்டிலுண்மை முன்னரே காட்டினேன். இவ் வஞ்சி கொல்லிசூழ் நாட்டகத்துண்மையானே "வஞ்சிபைம் புறவில்" எனவும் "வனவஞ்சி" எனவுமிறையனார் களவியலுரை மேற்கோள்களில் வந்தன என அறிந்துகொள்க. "வஞ்சிவனம்' என்பதனோடு நோக்கின் 'வனவஞ்சி' என்பது கருவூராதல் நன்கு தெளியப்படும். இனிச் சேரசோழ பாண்டியர் மூவரும் ஒருவர்க்கொருவார் மகட் கொடை நேர்ந்து ஒருவர் தந்நாட்டுக் கொண்டாடும் விழாவுக்கு மற்றவர் போய் வாருதல் நூல்களிற் கேட்கப்படுதலானும் இவர் வாழ்ந்த தலைநகர் கள் போக்குவரத்திற் கெளியவாகவும் அணிமையாகவும் இருந்தன வென்று துணியலாகும். உறையூர்க்கு மதுரை எவ்வளவு தூரமோ அவ்வளவே மதுரைக்குங் கருவூர்க்குமென்பது நன்கறிந்து கொள்க. பாண்டியர் சோழர்பாலும் சேரர்பாலும் பெண் கொண்டிருந்தன ரென்பது, நின்றசீர் நெடுமாறநாயனார் பத்தினியாரை 'வளவர்கோன் பாவை' என்பதனானும், குலசேகர பாண்டியன் வஞ்சிவேந்தன் மகளை மணந்தானென்று சவுந்தரபாண்டிய நூலுள் அந‌தாரியப்பப் புலவர் கூறுதலானும் அறியபடும். செங்குட்டுவனை "நெடுஞ்சேரலாதற்குச் சோழன் மணக்கிள்ளியீன்ற மகன்' எனப் பதிற்றுப்பத்து ஐந்தாம் பத்துப்பதிகம் கூறுதலானும்,

"மன்னன்கரிகால்வளவன்மகள்வஞ்சிக்கோன்
றன்னைப்புனல்கொள்ளத்தான்புனலின்பின்சென்று"

எனச் சிலப்பதிகாரங் கூறுதலானும் சேரர் சோழர் பாற்பெண்கோட லறியப்படும். குலோத்துங்க சோழனுலாவால் அவன் பாண்டியன் மகளை மணந்தானென்று உணரப்படும். கொங்குநாட்டவனான சேரன் தன்னையடுத்துள்ள தெய்வீகனுக்குப் பெண் கொடுத்த செய்தியை முன்னரே காட்டினேன். 'மேற்காட்டிய சிலப்பதிகாரவடிகளிற்கூறிய செய்தி அகநானூறு முதலியவற்றிற் பல்லிடத்துங் கூறிய ஆட்டனத்தி, ஆதிமந்திகதை யென்பது கற்றார் பலருமறிவர். கரிகால்வளவன் மகள் ஆதிமந்தி என்பவள். இவள் வனிசிக்கோனான அத்தி யென்பவனை மணந்தவள். இவ்விருவரும் கரிகால் வளவனாற் கழார் முன்றுறையிற் கொண்டாடப்பட்ட காவிரி புதுப்புனல் விழாவிற்குச் சென்று நீராடியபோது காவிரி ஆதிமந்தி கணவனை வௌவியதாக அவள் பதைபதைத்து எங்குந் தேடிக்காணாது பின் காவிரி ஓடுழியெ லாமோடி அலந்தழு தேங்காநிற்க, அவள் கற்புடைமைக்கும் அன்பிற்கும் இரங்கிக் கடலே அவள் கணவனை அவள் முன்னிறுத்திக்காட்ட அவனைத் தழீஇக்கொண்டு பொன்னங் கொடிபோல மீண்டாள் என்று நூல்கள் கூறும். இவ்வரிய கதையைப்பற்றி நல்லிசைப்புலமை மெல்லியலார் வரலாற்றுண் முன்னரே எழுதினேன். காவிரிப் புதுப்புனல் விழாவிற்குச் சேரநாடுள்ள மகளையும் மருமகனையும் சோழர் அழைப் பித்தல் இக்கதையானறியப்படும். கரிகாலன் புதுப்புனல் விழாகொண்டாடியவூராகிய கழார் சோணாட்டு மாயூரத்துக்கு அடுத்துள்ளது. இவ்வூரிற் புதுப்புனல் வருதலையறிந்து கொண்டாடப்படும் விழவுக்குச் சோணாட்டையடுத்த கருவூர் வஞ்சியார் வருதல் எளிதென்பது யான் கூறவேண்டுவதன்று. கொங்குநாட்டு, அத்தி என்னும் பெயர்வழக்கு இன்றுங் கேட்கபடுகின்றது. அந்நாட்டு அத்தியூர், அத்திபாளையம் என்னும் ஊர்களுமுண்டு.

இனித் தியாகராசலீலையென்னும்நூலில் மதுரை ஆலவாய்க் கட வுட்கு மிகுதியாக பசுகூட்டமிருந்ததென்றும், அப்பசுக்கூட்டத் தொருகன்று தப்பிப்போய்ச் சேரன் பசுக்கூட்டத்துக் கலந்து வளர்ந்த தென்றும், இக்கன்று கலந்ததைச் சேரன் தெரியானாயினானென்றும், பின் மதுரையின்றும் வஞ்சியர் கோன் கோயில் புக்க ஒரந்தணனுக் குப் பலபசுக்களுடன் இக்கன்றினையுஞ் சேரன் நல்கினானெறும், இக்கன்றினைப்பெற்ற அந்தணன் அதனைக் கூடலிற் கொடுபோயோர் பசுவணிகனுக்கு விற்றனனென்றும், ஆலவாய்க் கடவுட் பணிபுரிவார்

இக்கன்றினைக்கண்டு தெளிந்து வந்தவாறு வினாவியறிந்து இக்கன்றி நொடும் அவ்வாணிகனோடும் அவ்வந்தணனோடும் வஞ்சியுட்புக்குச் சேரன்பாற் சென்று இக்கன்று ஆலவாய்க் கடவுட்குரியது நீ எங்ஙனம் இவ்வந்தணற் கீந்தனையென்று சொற்றார் என்றும், சேரன் கடவுளுடைய கன்று எண்தொழுவத் துறுதல் கூடுமோ? அடையாள முண்டோ? நம்பன்பொருள் நஞ்சினுங் கொடியதாகும். யான் யாதொரு வஞ்சமும் செய்தேனல்லேன் என்று சொற்றானென்றும், பின் மதுரையார் சேரநுடனும் இக்கன்றுடனும் தம் வழக்கைத் தீர்த்தற்பொருட்டுத் திருவாரூரடைந்தன ரென்றும் கூறியிருத்தலைக் கற்றாரறிவர். இக்கதை யானும் கொங்கிற் கருவூரேசேரன் வஞ்சிமாநகராதல் எளிதிலுய்த் துணரலாகும். இரண்டு நாட்டுப் பசுக்கூட்டத்துக்கும் கலப்புக்கூறப் படுதற்கும், மதுரையார் வஞ்சிபுக்குச் சேரனுடன் திருவாரூர் சென்றார் என்று கூறியதற்கும் பொருந்த நோக்கிக்கொள்க. இன்னு மோராற்றானும் இதனை விளக்குவல்.

இனிச் சேரசோழ பாண்டியர் படைப்புக் காலந்தொட்டே மேம்பட்டு வருதலுடையரென்பது பரிமேலழகர் முதலிய நல்லாசிரியர் கொள்கையாகும். இப்போது மலையாளமென்று வழங்குகின்ற கடன்மலை நாடோ ஆதியிற் கடவுளாற் படைக்கப்படதாகாது. படைப்புக் காலத்துக்கு எத்துணையோ பிந்தி இவ்வுலகமுழுதையும் காசி பர்க்குத் தானஞ்செய்த பரசுராமன் தானிருத்தற்கு நிலன் வேண்டித் தெய்வ கிருபையாற் கடலை ஒதுங்குவித்து உண்டாக்கியதென்று புராணம் வல்லார் கூறுவர். இதனைச் சேக்கிழார் விறன்மிண்ட நாயனார் புராணத்து,

"விரைசெய்நறும்பூந்தொடையிதழிவேணியார்தங்கழல்பரவிப்
பரசுபெறுமாதவமுனிவன்பரசிராமன்பெறுநாடு
திரைசெய்கடலின்பெருவளனுந்திருந்துநிலனின்செழுவளனும்
வரையின்வளனுமுடன்பெருகிமல்குநாடுமலைநாடு"

எனக் கூறியவாற்றானு நன்று தெளியப்படும். பரசிராமன் சமதக்கினி புதவனாதலான் அச் சமதக்கினி புதவரான திரணதூமாக்கினி யென்னும் இயற்பெயருடைய தொல்காப்பியானார்க்குடன் பிறந்தவனாவன். தொல்காப்பியனார் "வண்புகழ் மூவர்காக்குந் தண்பொழில் வரைப்பு" என்று சூத்திரஞ் செய்தலானும், இம்மூவேந்தர் மாலை யினையுங் கூறுதலானும் தொல்காப்பியனார்க்கு முன்னே இம்மூவரும் இத்தமிழ்நாட்டு ஆட்சி எற்று நிலைபெறுதல் நன்குணரலாகும். வான்மீக ராமாயணத்தும் இம்மூவேந்தர் நாடு கூறப்படுதலானிக் கருத்து வலியுறுதல் காண்க. தொல்காப்பியனார்க்கு முன்னே தமிழ் மூவேந்தர் நிலைபெறுதல் தெளிந்த வாற்றா லிம்மூவேந்தர் பரசுராமனுக்கு முன்னே அவரவர் தலைநகரில் நிலைபெறுதல் நன்குணரப்படும். பரசுராமற்கு முன்னே இம்மூவேந்தர் நிலைபேறுணர்ந்தவாற்றான் இவர் நிலைபெற்ற தலைநகர் பரசுராமனா-லிடையிலுண்டாக்கப்பட்ட கடன்மலை நாட்டில் இருப்பது அசம்பாவிதமாதல் எல்லாருங் கண்டுகொள்க. மேற்கடற்பாக்கத்துத் தொண்டி, முசிரி, மாந்தை முதலிய பட்டினங்கள் சேரருடையனவாகக் கேட்கப்படுமாலெனின் அவையெல்லாம் பழைய சேரர் வஞ்சிக்குப் பின்னே உண்டாகிய பராசுராமக்ஷேத்திரத் துண்டாகிய நகரங்களென்க. இக்கருத்தானன்றே பழைய சேரர்கருவூர் வஞ்சியைப் பல்லிடத்தும் மூதூர் என்று கூறுவதூஉம், அவ்வூர்ப் புராணம் அதனை ஆதிபுரம் என்றுரைப்பதூஉம் எனக்கொள்க. இது பெளராணிக முறையான் ஆராயப்பட்டது. எஞ்ஞான்றும் சேரர்க்குரிய கருவூர் கரன்கைப்பற்றிய காலத்துக் கரபுரம் எனவும், வீரசோழன் கைப்பற்றிய காலத்து வீரசோழபுரம் எனவும் பெயர் பெற்றதுணர்க. இராவணன் இத்தென்னாட்டை ஆண்டான் என்றற் கும் திரிசிரன் உறையூர்ப் புறத்தைக் கொண்டான் என்றற்கும் இங் ஙனமே பொருந்தக்கொள்க. இராவணன் காலத்தும் இத்தமிழ்வேந்த ருண்மை இராமாயணத்தானுணர்க. இப்பரசுராமன் பெறுநாட்டுச் செங்குன்றூர் விறன்மிண்ட நாயனார் ஊர் என்று பெரியபுராணங் கூறுதலான் இது கொங்குநாட்டுச் சிவத்தலமாகிய கொடிமாடச் செங்குன்றூரின் வேறென்று கொள்ளினும் அமையும்.

இவற்றுளொன்றையும் ஆராயாது வஞ்சியே திருவஞ்சைக் களமென்றும், அஞ்சைக்களமென்று பிரித்து வழங்கியது தவறென்றும் வஞ்சைக்களமென்று வழங்க வேண்டுவதென்றும் தம்மனம் னவாறுகூறித் தெய்வப் புலவர்களான பெரியோர்கள்பால் அபசாரப் படுவாருமுளர். அஞ்சைக்களமென்றே வழங்கிய பெரியோர்கள் திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார், சேக்கிழார், கச்சியப்ப முனிவர் முதலிய பலராவர்.

இனிக் கொங்குநாடு சோணாட்டையடத்துள்ள தென்பதனை முன்னரே காட்டினேன்: சோழர்க்குச் சிறந்தமலை நேரியெனபது பலருமறிவர். அம்மலை சோணாட்டின் கண்ணதேயாகும். செங்குட்டுவன் தன் மைத்துனச் சோழனோடு பகைத்த சோழர் குடிக்குரிய ஒன்பதின்மரைச் செருவென்றது உறையூர்க்குத் தெற்கின்கண்ணதாகிய நேரி வாயில் என்னும் ஓரூர்க்கண் என்று சிலப்பதிகாரத்தாற்றெரிதலால் இம்மலையும் உறையூர்க்கு அணித்தாகுமென்று கொள்ளலாகும்.. இந் நேரிமலை களங்காய்க் கண்ணிநார்முடிச்சேரற்கும், செல்வக்கடுங்கோ வாழியாதற்கும் இடனாகப் பதிற்றுப்பத்து நூல்கூறும். இதனை நான் காம்பத்தில் " நீர்திகழ் சிலம்பினேரியோனே" (40) எனவும், " கல்லுயர் நேரிப்பொருநன்" (67) எனவும் வருதலான் அறிந்துகொள்க: இவற்றாற் சோழர்க்குரிய நேரிமலையில் இரண்டு சேரர்கள்வதிந்தமை உணரலாம்: கொங்கிற்கருவூர்ச் சேரர்கள் சோழரொடு பொருது அவர்க்குரிய நேரிமலையை வென்றியாற்கொண்டு ஆண்டு வதிந்தனரென்றே துணியலாகும். இதனாற் கொங்குடைய சேரர்கள், தங்கொங்கு நாட்டுப்பக்கத்ததாய்ச் சோணாட்டிலுள்ள மலையைக்கைப்பற்றி அதன்கண் வதிந்தார்கள் என்றெளிதிலறியலாகும். பிறர் நினைக்கின்றவாறு கடன் மலைநாட்டுச் சேரர் தமக்குரியதல்லாத கொங்குநாட்டைக் கடந்து சோணாட்டு நேரிமலையில் வதிந்தார் என்பது பொருந்தாதாதல் உய்த்துணரத்தகும். இந்நேரிமலையிற் சேரர் இருந்தனரென்பது சேரர்க்குச் சோணாட்டு மலைவரை அரசாட்சி பண்டுநிலையினதென்பதை நன்கு காட்டுமென்க.

இனிப் பழையசேரர்வதிந்த குடபுலமாகிய கொங்குநாட்டைப் பற்றிச் சிலகூறுவல். சங்ககாலத்து வள்ளல்களுள் ஒருவனாகிய வையாவிக் கோப்பெரும்பேகன் ஆவியர் பெருமகனென்பது கற்றாரரறிவர். ஆவியர் என்பார் வேள்ஆவியின் வழியினர். இவ்வேளாவியிருந்தது ஆவிநன்குடியாகும். இது கொங்குநாட்டுள்ளதென்பது, "சேரர் கொங்குவை காவூர் நனனாடதிலாவிநன்குடி" (அருணகிரிநாதர்) என வருதலானறியப்பட்டது. இவ்வேளாவியின் வழியிலே சேரர் பெண் கொண்டாரென்பது "குடக்கோ நெடுஞ்சேரலாதற்கு வேளாவிக்கோ மான் பதுமன்றேவியீன்ற மகன்" (.8.பதிகம்) எனப் பெருஞ்சேரலிரும்பொறையையும் கூறுமாற்றா னறியலாம். வஞ்சியில்

"வேளாவிக்கோமாளிகை" (சிலப்-நடுகல்-418) என்னும் பெயரான் ஓர் வாஸஸ்தானம் இருந்ததும் ஈண்டைக்கேற்ப நினைக்கத்தகும். இது சேரர் ஸம்பந்தி மாளிகை என்பது பொருந்துவதாகும். கருவூர்க்கும் ஆவிநன்குடிக்கும் அதிக தூரமல்லாமையும் நெறியெளிமையு முணர்ந்துகொள்க.

இனிச் சேர வம்மிசனான அதிகமானெடுமானஞ்சி வழியின்னாகிய அதிகனென்பவன் ஒருவன் குறும்பொறையூர் என்னும் மலையரணுடைய ஊரிலிருந்தனன் என்றும், அவன் புகழ்ச்சோழ நாயனார்க்குத் திறைகொடாத காரணத்தாலவர் படையால் வெல்லப் பட்டானென்றும் பெரியபுராணத்தா லறியலாம்.

"கொடிமாமதினீடுகுறும்பொறையூர்
முடிநேரியனார்படைமுற்றியதே"

எனவருதலானிதனையறிக. 159-ஆம் அகப்பாட்டில்,

"நறும்பூஞ்சாரற் குறும்பொறைக்குணாஅது
வில் கெழுதடக்கை வெல்போர் வானவன்
மிஞிறுமூசுகவுள சிறுகண்யானைத்
தொடியுடைத் தடமருப் பொடியநூறிக்
கொடுமுடி-காக்குங்குரூஉக்கணெடுமதிற்
சேண்விளங்கு சிறப்பினாமூர்"

எனவருதலான் இக்குறும்பொறை சேரன்பகைஞனாகிய கொடுமுடி யென்பவனுடைய ஆமூர்க்கு மேற்கணுள்ளது நன்குபுலனாகும். சேரவம்மிசியனாகிய அதிகற்கும் சேரர்க்கும் தாயபாக விஷயமாகப் பகைமை யுண்டாகிப் பெரும்போர் நிகழ்ந்தது பதிற்றுப்பத்தாலும் புறப்பாட்டாலும் அறியப்படும். ஔவையார் அதியமா-னெடுமானஞ்சியைப்பாடிய புறப்பாட்டில்,

"கோடுயர்பிறங்குமலைகெழீஇய
நாடுடன்கொடுப்பவுங்கொள்ளாதோனே" (புறம் - 232)

எனவருதலான் இவன் தாய்நாடுபற்றிச் சேரனொடு பகைமைபூண்டானென் றுய்த்துணரப்படும். இவனுக்குக் கிழக்கே ஆமூர்க்கணிருந்த கொடுமுடி என்பவனும் இவனுடன் சேர்ந்து சேரனைப் பகைத்தனன் போலும். இவ்வாமூர் கொங்குநாட்டின் கண்ணேயுள்ளது. அதியனை "உண்டுறை, மலையலரணியுந்தலை நீர்நாடன்" என்பதனால் அதியன்தலை நீர்நாடன் என்பது முன்னரே கூறினேன். கறையூரிற் பாண்டிக்கொடு முடி என்னுங் கோயிலுள்ளது தேவாரத்தாலறியப்படும். அது இக்கொடுமுடியரசன் சம்பந்த-முடையதாகும். சேரன் பகைவனாய்ப் பாண்டியற்குத் துணைவனாய காரணத்தாற் பாண்டிக்கொடுமுடி எனப் பெயர் சிறந்தான்போலும்.

இனிப் பதிற்றுப்பத்து நான்காம்பத்தில்,

"வெண்டிரைமுந்நீர்வளைஇயவுலகத்து
வண்புகழ்நிறுத்தவகைசால்செல்வத்து
வண்டனனையைமன்னீயே" (31)

என்பதனால் வண்டன் என்பானொருவன் சேரனுக்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளான்: இவன் கோச்சேரனுக்கு உவமையாகக் கூறப் பட்டவாற்றாலும், "வண்புகழ் நிறுத்தவகைசால் செல்வத்துவண்டன்" என்றதனானும் சேரரிற் சிறந்த முன்னோன் என்று ஊகித்தலாகும். இவனிருந்த மலை வண்டமலை எனப்படுவது: இது கொங்குநாட்டுக் கருவூர்க்குத் தெற்கேயுள்ளது.

இனி ஆதன் என்பது, சேரர்க்குள் அதிகமாக வழங்கும்பெயர் என்பது, சேரலாதன், நெடுஞ்சேரலாதன், ஆதனவினி, செல்வக் கடுங்கோவாழியாதன், பெருஞ்-சோற்றுதியஞ்சேரலாதன் எனவருதலான் அறியப்படும். ஈண்டுக்காட்டிய பலபெயர்க்கும் ஆதன் கூடஸ் தன் ஆவன். இவனிருந்தஊர் ஆதனூர் எனப்படும். இஃது இப்போது கொல்லிமலையையடுத்துள்ளது. 168-ன் அகப்பாட்டில்,

"பல்லான்குன்றிற்படுநிழற்சேர்ந்த
நல்லான்பரப்பிற்குழுமூராங்கட்
கொடைக்கடனேன்றகோடாநெஞ்சி
னுதியனட்டில்போலவொலியெழுந்
தருவியார்க்கும்பெருவரைச்சிலம்பின்"

எனவருதலான் உதியஞ்சேரல் குழுமூரிலிருந்து பெருஞ்சோறு பயந்தது உணரப்படும். இக்குழுமூர் கொங்குநாட்டு ஆன்பொருநைக் கரையிலுள்ள குழுமம் என்று இப்போது வழங்குவதாகும். இக்குழு மூரை, நல்லான் பரப்பிற்குழுமூர் என்றலான் இதனிடத்துப் பசுமிகுதியாக இருந்தது நன்குணரப்படும். இப்பசுமிகுதி கொங்குநாட்டுக்கே சிறந்தது. "கொங்கரா பரந்தன்ன" (77) எனப் பதிற்றுப்பத்திற் கூறுதலானுணர்ந்து கொள்க. இக்குழுமம் கொங்கு நாட்டுப் பழனி மலைக்கடுத்துள்ளதும் ஈண்டைக் கேற்ப நோக்கிக்கொள்க. வஞ்சியிலிருந்த சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்-கடுங்கோவாழி யாதன்,

"குன்றகழ்களிறென்கோ
... ... ... ...
மன்றுநிறையுநிரையென்கோ
மனைக்களமரொடுகளமென்கோ
ஆங்கவை, கனவெனமருளவல்லேநனவி
னல்கியோனேநசைசாறோன்றல்" (புறம் - 387)

என்பதனாற் பசுநிரைகளை ஊருடனுங் களிற்றுடனும் புலவர்க்கு நல்கினானென்று கூறப்படுதலையும் காண்க.

இவையெல்லாம், சேரர் கொங்குநாட்டு வதிந்திருந்தனரென்பதை நன்கு வலியுறுத்துமென்றுணர்க. இனி, மாந்தரக் கொங்கேனாதி என இலக்கணங்களில் உதாரணமாக வழங்கும் பெயரும் இக்கொங்கு, மாந்தரனெனப் பெயரிய சேரனைச் சேர்ந்தது என்பதனையே வலியுறுத் தும்.

இனி நக்கீரனார் 93-ஆம் அகப்பாட்டிற் றமிழ்மூவேந்தர் தலை நகரங்கள் மூன்றையும்,

"ஆரங்கண்ணியடுபோர்ச்சோழ
ரறங்கெழுநல்லவையுறந்தை"

எனவும்,

"அரண்பலகடந்தமுரண்கொடானை
வாடாவேம்பின்வழுதிகூடல்"

எனவும்,

"கடும்பகட்டியானைநெடுந்தேர்க்கோதை
திருமாவியனகர்க்கருவூர்"

எனவும் கூறியிருத்தலைக் கற்றாரறிவர். இதன்கட் சோழர்க்குச் சிறந்த புகாரும், பாண்டியர்க்குச் சிறந்த கொற்கையும் கடற்றுறைப் பட்டினங்களாக இருக்கவும், அவற்றைக் கூறாமல் உள்நாட்டுச் சிறந்த தலை நகரங்களாகிய உறையூரையும் கூடலையுமே தாம் எடுத்துக்கொண்ட முறைமைக் கேற்பவே சேரர்க்குஞ் சிறந்த தொண்டி, முசிரி முதலிய கடற்றுறைப் பட்டினங்கள் இருக்கவும், அவற்றைக் கூறாது உள்நாட்டுச் சிறந்த தலைநகராகிய வஞ்சியையே கூறினாரென் றெளிதிலறியப்படும்.

சிறுபாணாற்றுப் படையினும் இம்மூன்றுமே தமிழ் மூவேந்தர் தலைநகரென அறியக்கூறியது காண்க. ஆண்டு, மதுரையும் வறிதே, வஞ்சியும் வறிதே, உறந்தையும் வறிதே என்றார். சூளாமணியினும் மதுரை, கரபுரம், உறந்தை என இம்மூன்றையுமே கூறினார். யாப்பருங்கல விருத்தி மேற்கோளினும்,

"ஆடனடைப்புரவிச்செம்பூட்சேஎய்
கூடலெனக்குயின்றனதோள்"

"மறந்தருதானைச்சென்கோற்கிள்ளி
யுறந்தையிற்சிறந்தனமுலை"

"மஞ்சுவரைத்திணிதோட்பூழியர்மன்னவன்
வஞ்சியெனமலர்ந்தனகண்"

என இவ்வாறே இம்மூன்றுமே (செய்யுளீயல்-தரவேதரவினை) வருதலான் இதனுண்மை யுணரப்படும்.

இனிக் கருவூர்ச் சேரமான்சாத்தன், கருவூர்ப் பெருஞ்சதுக்கத்துப் பூதநாதன், கருவூர்க் கண்ணம்பாளனார், கருவூர் ஓதஞானி, கருவூர்க் கதப்பிள்ளை, கருவூர்க்கதப் பிள்ளைசாத்தனார், கருவூர் கிழார், கருவூர்ப் பவுத்திரன், கருவூர்க் கோசனார், கருவூர்ப்பூதன் மகனார் பெருங்கொற்றனார் என நல்லிசைப்புலவர் பலர் கருவூரினராகக் கூறப்படுதல இத்தொகை நூல்களுட் காணலாம். இப்புலவர் தொகை மதுரைப்புலவர் தொகைக்குச் சிறிதாயினும் உறையூர்ப் புலவர் தொகைக்குப் பெரிதென்பது தொகைநூல்களை நன்காராய்ந்தார் அறிவர். உறையூரின் மிக்குக் கருவூரிற் புலவர்கள் இருந்ததற்குக் காரணம் அவ்வூர் உறையூரிற் பெரிதாதலானும், அது சேரர் தலைநகராதலானும் என்று உய்த்துணரலாகும். ஈண்டுக்கூறிய கருவூர் ஒரூரேயாமென்பது வேற்றுமைப் படுத்தற்குரிய அடையொன்றுங் கொடாது வாளா கூறியவாற்றானன்கு துணியப்படும். சோழர் வஞ்சியை முற்றியவிடத்தும், அதனை எறிந்த விடத்தும் பாடிய புறப்பாட்டுக்களின் கீழ்க்குறிப்பிற் "கருவூர் முற்றியிருந்தானை" எனவும், "கருவூரெறிந்தானை" எனவும் வருதலை ஈண்டைக்கேற்ப நோக்கிக்கொள்க. பாடலுள் *வஞ்சியென்று வருதலும், அப்பாட்டின் கீழ்க்குறிப்பிற் கருவூர் என்று வருதலும்
-------------------
* புறம் - 29. ஷ 373

ஓரூரையேபற்றியதென்ப தியாவருமறிவர். ஆண்டெல்லாம் வஞ்சியை அறிவித்ததற்குக் கருவூர் என்று அடைகொடாது வாளா வழங்குதல் போலவே ஈண்டும் வழங்கப்பட்டதாகும். "கருவூர்ச்சேரமான்" என்பதனானும் இக்கருவூர் வஞ்சியாகும். "கருவூர்ப்பெருஞ்சதுக்கத்துப் பூதன்" என்பதனானும், இக்கருவூர் வஞ்சியேயாகும். "சதுக்கப்பூதரை வஞ்சியுட்டந்து, மதுக்கொள்வேள்வி வேட்டோனாயினும்" எனச் சிலப்பதிகாரத்து வருதலான் வஞ்சியாகிய கருவூரிற் சதுக்கப் பூதருண்மை நன்குணரலாகும். கருவூர்க்கதப் பிள்ளைசாத்தனார் சேரன் படைத் தலைவனாகிய பிட்டனைப் பாடுதலான் இக்கருவூர் வஞ்சியேயாகும். (புறம்-167) இவர் அகப்பாட்டில்,

"கோடியர், பெரும்படைக்குதிரைநற்றேர்வாக*
றிருந்துகழற்சேவடிநசைஇப்படர்ந்தாங்கு" (309)

எனச் சேரனைப்பாடுதலானும் இதனுண்மையுணர்க. கருவூர்க் *கண்ணம்பாளனார்:- இவர்,

"ஒளிறுவேற்கோதையோம்பிக்காக்கும்
வஞ்சியன்னவென்வளநகர்" (அகம்-263)

எனப்பாடுதலான் இக்கருவூர் வஞ்சியேயாகும். இவற்றானும் கருவூர் சேரர்கருவூரேயாதலும், அதுவே வஞ்சியாதலும், அது கொங்கு நாட்டுச் சோணாட்டையடுத்துச் சோழர்க்குப் பகைப்புலமாய்ச் சேரமான் அந்துவஞ்சேர-லிரும்பொறையிருந்த ஊராதலும் (புறம்-13) நன்குணர்ந்து கொள்க. பிற்காலத்தும் பொய்யாமொழியென்னும் புலவர் இக்கருவூரினரென்பது "பாற்கடல் போலப் பரந்தநன்னெறி" என்னும் நச்சினார்க்கினியருரைச் சிறப்புப்பாயிரத்து "வண்பெரு வஞ்சிப் பொய்யாமொழி" என வருதலானறியப்படும். இவர் கருவூரின ராதலாற்றம் மூர்க்கடுத்த சோணாட்டுக் கண்டியூரிற் சீனக்கருக்கு உயிர்த்துணையாயினரென் றுய்த்துணரலாகும். இப்புலவர்களல்லாமற் சேரர்க்குரிய கொல்லியினும் நல்லிசைப் புலவருண்மை "கொல்லிக் கண்ணன்" என்னும் பெயரானுணரலாம். இவர் "குட்டுவன்மாந்தை" (குறுந்தொகை-34) யினை எடுத்துவமிக்கின்றார். இதனானும் இவர் சேரன் புலவராதறெளியப்படும். இப்புலவரெல்லாம் கொங்குநாட்டுப் புலவரேயாவரென்ப தியான் கூறியறிவிக்க வேண்டுவதன்று. கொங்கர் என்பார் தமிழரேயென்பது "தமிழ்க்கொங்கர்கோன்" (தமிழ்நா)- என இரட்டையர் வக்க பாகைவரபதியாட்கொண்டானைப் பாடுதலானு மறியலாகும். ஈண்டுச் சேரனாட்டுப் புலவரெனத் துணியப்பட்ட பலரும் கருவூரினராக வழங்கப்படுதலல்லது வஞ்சிப் புலவரென வழங்கப் படாமையான் வஞ்சி செய்யுள் வழக்குப் பெயரென்றும் அறியத்தகும். ஈண்டுக் கருவூர் வேறு வஞ்சிவேறென்று ஒரு விதண்டை யுரைப்பின் மேற்காட்டிய நல்லிசைப் புலவரெல்லாம் கருவூரினராகவே நின்று சேரர் தலைநகராகிய வஞ்சியின்கண் நல்லிசைப் புலவரேயில்லாம லொழிய நேருமென்று கண்டுகொள்க. இதனாற் பிறர் விதண்டாவாதம் ஈண்டுப் பலியாதாத லொருதலை. இப்புலவர்களுட் கருவூர்ப்பெருஞ் சதுக்கத்துப் பூதநாதனார் என்பவர் கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்தானைப்படிய,

"உள்ளாற்றுக்கவலைப்புள்ளிநீழன்
முழூஉவள்ளுரமுணக்குமள்ள
புலபுதிமாதோநீயே
பலராலத்தைநின்குறியிருந்தோரே" (புறம் - 219)

என்னும் பாடலைக் கற்றாரறிவர். இதன்கண் இவர் "நின்கருத்திற் கேற்ப நின்னொடு வடக்கிருந்தார் பலராதலான், யானிதற்குதவாது பிற்பட வந்ததற்கு என்னை அவரோடு சொல்லிவெறுத்தி நீ" என்று கூறுதலைக் காணலாம். இதனால் இப்புலவர் கோப்பெருஞ்ச்சோழற் குயிர்த்துணைவரென்றும், அவன் இறந்ததற்குத் தாமும் இறக்குமியல் பினரென்றும், இவரினுந் தூரதேயத்துள்ள பிசிராந்தையார் சோழற் கும் அவர்க்கும் உணர்ச்சியொத்தலாலுடனேபோந்து சோழனுடன் வடக்கிருந்தாராகவும், இவர் சோழன் வடக்கிருந்த விடத்து அணித்தாக இருந்தும் முற்படவந்து உதவாம லிவன் வடக்கிருத்தல் கேட்டுப் பிற்பட வந்ததனை ஒருபெருந்தவறாகக் கருதித் தூரதேயத்துள்ளாரும் முற்படவந்து உதவாநிற்க அணிமையிலுள்ளவன் பிற்பட வந்தான் என்று அங்ஙனமுற்பட உதவினாருடன் சொல்லி என்னை வெறுத்தி யென்று தஞ்செயலை நொந்து கொள்கின்றாரென்றும் அறிஞர் நன்கறிவர். உள்ளவாறு இப்புலவர் தூரத்திலிருந்து கேட்டுவருதல் பற்றிப் பிற்பட்டவராயின் அதற்கு புலத்தல் கூடாமை நன்கறிந்துகொள்க. இவர் வஞ்சிப் புலவரென்பது முன்னரே காட்டப்பட்டது. இதுவுஞ் சோழர்க்குச் சேரர் வஞ்சியணித்தாதலையே வலியுறுத்துமென்று கண்டுகொள்க.

இனிப் பழமொழியின்கண்,

"கழுமலத்தியாத்தகளிறுங்கருவூர்
விழுமியோன்மேற்சென்றதனால்"

எனவருதலையும் அதற்கு உரைகாரர் "கழுமலம் என்னும் ஊரின் கண்ணே பிணீத்துநின்ற களிறுங் கருவூரின் கண்ணேயிருந்த கரிகால் வளவன் கடிதிளையனாயினும் அவன் சிறப்புடையனாதலான் அவன்மேற் சென்று தன்மிசையெடுத்துக்கொண்டு அரசிற்கு உரிமை செய்தது ஆதலால்" எனக் கூறுதலையுங் கற்றாரறிவர். இது சோணாட்டுக்களிறு வேற்றுநாட்டு ஊர்புக்கு ஒருவற்கரசுரிமை செய்த கதை கூறியதாம். கரிகாலன் தாயத்தார் பகைமை காரணாமாக இளமையிலே தன்னாடுவிட்டு உயிருய்ந்துபோய்க் கொங்கிற் சேரர் கருவூரின் வதிந்தனனாவன். இவ் வுண்மையினை ஈண்டு விரிப்பிற் பெருகும். சோணாட்டுக்க**** களஞ்சென்று ஒருவனை மிசையேற்றிவந்தென்று நினைத்தற் காகாமையும் அது கருவூர் எனப்பெயர்பெறாமையும் ஆராய்ந்து கொள்க. இதுவும் கருவூர் சோணாட்டுக் கணித்தாதலையே காட்டுமென்றுணர்க. கருவூர் கொங்கு நாட்டதென்பது உமாபதிசிவாசாரியார் திருப்பதிக்கோவையில், "சீலமிகுமவிநாசி திருமுருகன் பூண்டி திருநணா கொடிமாடச் செங்குன்றூர்தானே" வெஞ்சமாக்கூடல் முடிகரு வூர் கொங்கின்மெவுமேழ்" என்றதனானு நன்கறியலாம். நூல்களுளிரண்டு கருவூர் கூறப்படாமையும் அக்கருவூர் சோணாட்டுளதாக எந்நூலுங் கூறாமையும் அது கொங்குநாட்டதென்றே எந்நூலுங் கூறுதலையும் ஆராய்ந்துகொள்க. சுந்தரமூர்த்தி நாயனார் அவிநாசியை நீங்கி மலைநாட்டகம் புகுந்தார் என்னுமிடத்து " குடபுலத்துப் பதிகடொறு மின்புற்றுக்கடந்தருளிக் குன்றவளநாட்டகம் புகுந்தார்" எனவும், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் புராணத்துள், "குடபுலத்திலாறணிந்தா ரமர் கோயிலெப்பாலு மேத்தித் திருநணாவினையிறைஞ்சிக் குணதிசைப் போதுகின்றார் செல்வக்கருவூர்த் திருவானிலைக் கோயில் சென்றிறைஞ்சியந் நாடகன்று பொன்னித் தென்கரைத்தானம் பலபணிவார்" எனவும் சேக்கிழார்க் கூறியவாற்றாற் குடபுலம் அஞ்சைக்களமுடைய மலை நாட்டிற்கும் சோணாட்டிற்கும் இடையே நிலைபெறுதலினிதுணர்ந்து கொள்ளலாம். இவற்றோடு பொருந்த நோக்குமிடத்து "கொங்கரொடு குடபுலத்துக் கோமன்னர்" எனச் சேக்கிழார் வாக்கின் வந்ததற்குக் குடபுலத்துக் கொங்கரொடு குடபுலத்துக் கோமன்னர் என்பதே பொருளாகத் தெளிந்துகொள்க. "கொங்கிளங் கோசர் தங்கணாட்டகத்தே" என்னுஞ் சிலப்பதிகார உரைபெறு கட்டுரைப்பகுதிக்கும் கொங்குமண்டலத்து இளங்கோவாகிய கோசரும் தாங்கள் தாங்கள் பகுத்துக் கொண்டாளும் சிறு நாடுகளினிடத்தே என்பது பொருளாகக்கொள்க. அடியார்க்கு நல்லாரும் இளங்கோசர் என்பதற்கு இளங்கோவாகிய கோசரும் எனவுரைத்தார். இவ்விளங்கோக்கள் கொங்கு மண்டலத்தை யுடைய கோச்சேரர்க்குத் தம்பியராய்த் தாயவுரிமை யெய்தினாராவர். "மூவர்கோவையு மூவிளங்கோவையும்" எனவருத‌ல் காண்க. தங்கள் நாட்டகம் என்றதனால் இவர் பலராதலும், அவர் கோச்சேரர் கீழடங்கி யாளும் சிறுநாடுகள் பலவாதலும் உணரப்படும். சிலப்பதிகாரம் வேட்டுவரிக்கட் கண்ணகியைக்,

"கொங்கச்செல்விகுடமலையாட்டி
தென்றமிழ்ப்பாவைசெய்தவக்கொழுந்து"

என இளங்கோவடிகள் கூறியதற்கும் இவற்றோடு பொருந்தவே பொருள் கூறுக. கொங்கச்செல்வி என்று முற்படக்கூறினார்; அடிகள் தம்முடைய குடபுலமாகிய கொங்குவஞ்சியின் முதன்முதற் கோயில் கொள்ளும் சிறப்பினை நினைந்து: குடமலையாட்டி என்றார். கண்ணகி வென்வேலான் குன்றின் வினையாட்டியான- கலேன்" என்று கூறுவதை நினைந்து; தென்றமிழ்ப் பாவையென்றார்: கண்ணகி "தென்னவன்றீதி லன்றேவர் கோன்றன்வாயினல் விருந்தாயினானானவன்றன் மகள்" என்று கூறுதலையுட்கொண்டு கண்ணகி விளையாடல் கொண்டமலை சேரர் ஆட்சி யுட்பட்ட குடதிசைக் கண்ணதாகலிற் குடமலை எனப்பட்டதெனவறிக. "கொல்லிக்குடவரை" எனவும் "குடவனாறு" எனவும் வழங்குதலானு முணர்க. இங்ஙனங் கொள்ளாது "கொங்கிளங்கோசர் தங்கணாட்டகத்தே" என்று வருதல் பற்றிக் கொங்கச்செல்வி என்றாரெனக் கொள்ளின் கொங்கிளங் கோசர் தங்கணாட்டகத்தே கோயில் கொண்டதனையே முற்படச் சிறப்பித்தற்கும் அவரொடொப்ப இலங்கைக்கயவாகுவும் சோழன் பெருங்கிள்ளியும் முறையே இலங்கையினும் உறையூரினும் வகுத்த கோயிலிலிவளிருந்தருளலைக் கூறாமைக்கும் ஏது இல்லையாகு மெனவுணர்க. அடியார்க்குநல்லார் குடமலையாட்டி என்பதன்கட் குடமலையென்பது குடநாடுஎன நலிந்து பொருள்கோடலைக் காண்க.

"தென்னாடன் குடகொங்கன் சோழன்"எனச் சேரன் கூறப்படுதலை யும் "சென்னிநாடுகுடகொங்கனாடு திறைகொண்டு தென்னனுறைசெந் தமிழ்க்கன்னிநாடு" எனச் சேரநாடு கூறப்படுதலையும் ஈண்டைக்கு நோக்கிக்கொள்க. சிலப்பதிகாரத்துக் காட்சிக்காதைக்கண்,

"வில்லவன் கோதை வேந்தற்குரைக்கு
நும்போல் வேந்தர் நும்மோடிகலிக்
கொங்கர் செங்களத்துக்கொடு வரிக்கயற்கொடி
பகைப்புறத்துத் தந்தனராயினு மாங்கவை
திசைமுக வேழத்தின் செவியகம்புக்கன"

என்பதனாற் சோழர் பாண்டியரிருவரும் கொங்கர் செங்களத்துச் செங்குட்டுவனோடு இகலித்தமக்குரிய புலிக்கொடியையும் கயற்கொடியையும் பகைக்களத்தே அச் செங்குட்டுவனிடந்தந்து ஓடினர் என்பது கூறப்படுகின்றது. இதன்கட் சோழபாண்டியர் செங்குட்டுவனோடு பொருதது கொங்கர் செங்கள‌ம் என்று கூறுதலானும், செங்குட்டுவன் சோழபாண்டியர்மேற் படையெடுத்துச் சென்று பொருதான் என்று கொள்ளப்படாமல் சோழபாண்டியர் கொங்கர் செங்களத்தே செங்குட்டுவனோடு இகலினாரென்றே கொள்ளக்கிடத்தலானும் சோழ பாண்டியரிருவரும் ஒருங்கியைந்து இவனுள்ள கொங்குநாட்டே படை யெடுத்துப்போந்து இவனோடு இகலினாரென்றும் இவன் தன் கொங்கு நாட்டார் துணையாக அவரொடும் பொருத போர்க்களமாதலாலது கொங்கர் செங்களமெனப்பட்டதென்றும் அப் பகைக்களத்து அவ்விரு வேந்தரும் தங்கொடியை செங்குட்டுவற்குத் தந்தோடினரென்றும் துணியப்படுதல் காண்க. .களவழியினும்,"கொங்கரையட்டகளத்து" எனவும், "வஞ்சிக்கோவட்டகளத்து" எனவும் வருதலுட‌ன் பொருந்த நோக்கின் இதுவே பொருளாதல் தெள்ளிது. செங்குட்டுவனை மாடல மறையோன்,

"மண்ணாள்வேந்தேநின்வாணாட்க‌
…….ண்ணார்பொருநைமணலிஞ்சிறக்க" (சிலப்-நடுகல்.)

என வாழ்த்தற்கண்ணும் அவன் கொங்குநாட்டுப் பொருநைமணலினுஞ் சிறக்க எனக் கூறுதலையும் ஈண்டைக்கேற்ப நோக்கிக் கொள்க. இப்பொருநை காவிரியிற் கலத்தலை முன்னரே தெளிவித்தேன்.

இனிச் சேரன் ஆனிலையினையுடைய உலகுடையனாதலான் ஆனிலை யுலகுவானுலகு என வழங்கல்பற்றி அவன் வானவன் எனவும், கருவூர் கர்ப்பபுரியாதல் பற்றிக் கர்ப்பத்திற்குப் பொறையென்பது பெயராதலான் அவன் பொறையன் எனவும் வழங்கப்பட்டானோ என்று ஊகிக்கவும் இடனுண்டு. "மேலது ஆனிலை யுலகத்தானும்" என்பதனான் ஆனிலை யுலகுவானுலகாதலும்"; சேரன்பொறையன் மலையன்றிறம்பாடி" என்பதன்கண் மலையன்என வேறு கூறுதலான் ஈண்டுப் பொறையென்பது மலையாகாமையும் உணர்க." வானோரும் வில்லெழுதி வாழ்வர் விசும்பு" என்றலும் புலவர் புனைந்துரையேயாகும்.

இங்ஙனம் சங்ககாலத்தனவும் பிற்காலத்தனவுமாகிய இப்பன் னூற்றுணிபுக்கும் இயையவே, கொங்குநாட்டுப் பெருமக்களெல்லாம், தங்கொங்கிற்கருவூரைச் சேரராஜஷ்தானம் என்று வாயார வழங்குதலை இன்றுங் கேட்கலாம். அவர் மதுக்கரைக்காளிகோவிலைச் சேரர்க்குஞ் சோழர்க்கும் எல்லைக் கோவிலென்றும், கருவூர்ப் பக்கத்துள்ள வேட்டைமங்கலம் என்னும் ஊரைச் சேரன் வேட்டம்புரிந்த இடமென்றும் கூறுவர். இதனை அடியிற்குறித்த ஆங்கிலக்குறிப் பானுமுணர்க*
-----
** Madukkarai: Hamlet of Thirukkambiliyur 12 mils west of Kulittalai. The temple of the village goddess Sellandiyamamn is supposed to mark the spot where the Chera, Chola and Pandya Kingdoms met .............A bank runs south from the rever† at this point and is said to have been erected to mark the boundary of the Chola And Chera Kingdoms. (Page 281- Trichnopoly Gezetteer 1907.)
Vettaimangalam: stands 12 miles north-west of Karur; populaton 3, 517. The place is said to owe its origin to a Chera Raja, who, when out hunting one day saw the spot and struck by the beauty of the scenery, founded the village. It was named Vettaimangalam from this incident. There is an old Siva Temple there, page 276. Do. Do.)
-----

இத்துணையுங் கூறியவாற்றாற் தமிழ்கூறு நல்லுலகத்து மூவேந்தருட் குடதிசையாளுங் கோமக்களாகிய பழையகோச்சேரர் நாடு முழுதுங் குடபுலமாமேனும், அதன்கட் குடபுலமென்று சிறப்பித்துப் பெயர்பெறுவது கொங்குநாடேயென்றும், அது சேரரிருந்தரசாண்ட மலையமானாடாகிய கொள்ளிமலைப் பக்கத்துநாடு முதலாகப் பலநாடுகளை யுடையதென்றும், அதன்கணுள்ள ஆன்பொருநைக் கரையிலுள்ள கருவூரே *வருபுனனீர்த்தண் பொருநை சூழ்தரும் வஞ்சியென்றும் ஐயந் திரிபறத் தெளிந்துகொள்க. இன்னும் இலக்கண விளக்கமிடையிய லில் (சூத்-6) "கருவூர்க்குச் செல்வலென்றார்க்கு யானும் அவ்வூர்க்குப் போதுவல் என முழுவதுந்தழுவுவதூஉம் அவ்வாறு கூறினார்க்கு யானும் உறையூர்க்குப்போதுவல் என ஒருபுடை தழுவுவதூஉமென இருவைகைத்தாம்" என்றார்: இதன்கண் இரண்டு தலைநகரைக் குறித்தாரென்பதல்லது வேறு கூறலாகாது. இவ்வூர்கள் செல்வார்க்கு நெறி ஒருபுடையொன்றாத லிதனானுரப்படும்.
-----
*(சிலப்-வாழ்த்து)
"வாழியரோவாழிவருபுனனீர்த்தண்பொருநை,
சூழ்தரும்வஞ்சியார்கோமான்றன்றொல்குலமே."

இனிச்சேரர்கள் கடன்மலைநாட்டினின்று கொங்குநாட்டு வந்தார்கள் என,

"உற்றநாட்டையொழிந்துயர்கொங்குசேர்ந்
தெற்றுநீர்நதிக்காஞ்சியையெய்தினான்" (பேரூர்ப்-குலசே.)

என்புழிப்போலக் காணப்படின் அது சேரமான் பெருமாணாயனார் காலத்தையடுத்த‌தாகுமென்றும், அது பழையசேரர் காலத்ததாகா தென்றுந் துணிந்து கொள்க. பழையசேரர் மேல்கடற்கரை நாடுகளையும் அகநாட்டுக் கொங்குமண்டலத்தையுஞ் சேர ஆண்டனரென்றும், அவர்க்கு மேல்கடற்கரையிற் றொண்டி, முசிரி, மாந்தை முதலிய பெரிய பட்டினங்களும், அகநாட்டுக் கொங்குமண்டலத்து வஞ்சிமா நகராகிய கருவூர்த்தலைநகரும் உண்டு என்றும் தொன்னூல் பின்னூல் முதலாகப் பன்னூல்கொண்டும் உணர்ந்துகொள்க. இன்னும் விரிப் பிற் பெருகும்.

கொங்குகுடபுலமாங் கோச்சேரன் வஞ்சிநக‌
ரங்கு வியன்கருவூ ராமென்ன--விங்குணரா
மாந்த ருளத்து மயக்கறுத்தேன் சேதுபதி
வேந்தன் பணிக்க விழைந்து.

நிறைவேறியது.

-----------------------------------------------------------

12-ஆம்பக்கம் 4வது வரியில் தொண்டைநாடு என்பதனை, தொண்டைநாடு, மலைநாடு என்றும் 29-ஆம்பக்கம் 22-ஆம்வரியில் இதனாற் சோணாடு கருவூரையடுத்ததென்றும் என்றிருப்பதை இதனாற் கருவூர் சோணாட்டையடுத்த-தென்றும் 85-ஆம்பக்கம் 8-ஆவது வரியிலும் 27-ஆவது வரியிலும் ஐயைமகள் மாதரி என்றிருப்பதை ஐயை தாய் மாதரி அல்லது மாதரி என்றும் திருத்திக்கொள்க.

This file was last updated on 27 Jan. 2014.
Feel free to send corrections to the webmaster.