சைவ எல்லப்ப நாவலரால்
அருளிச் செய்யப்பட்ட
"திருவருணைக்கலம்பகம்"
tiruvaruNaik kalampakam
of caiva ellappa nAvalar
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Digital Library of India for providing online
a scanned image version of this work .
This work was prepared using the Distributed Proof-reading Implementation and
we thank the following volunteers for their help in the preparation of this etext:
R Aravind, R. Navaneethakrishnan, V. Ramasami, Thamizhagazhvan,
S Karthikeyan, Nalini Karthikeyan, P. Thulasimani, and N Pasupathy
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2014.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
சைவ எல்லப்ப நாவலரால்
அருளிச் செய்யப்பட்ட
"திருவருணைக்கலம்பகம்"
Source:
சைவ எல்லப்ப நாவலரால் அருளிச் செய்யப்பட்ட
"திருவருணைக்கலம்பகம்"
மூல பாடம்- 5-ம் பதிப்பு
இஃது ஊ - புஷ்பரத செட்டியாரால்
கலாரத்நாகரம் என்னுந் தமது அச்சுக்கூடத்திற்
பதிப்பிக்கப்பட்டது.
சென்னை: 1891
---------------
கணபதி துணை
"திருவருணைக் கலம்பகம்"
காப்பு
நேரிசை வெண்பா
அன்னவயல் சூழருணை யண்ணா மலையார்மேல்
மன்னுங் கலம்பகப்பா மாலைக்குத் - துன்னியசீர்
மெய்க்கோட்டு மேருவெனும் வெள்ளேட்டின் மீதெழுதும்
கைக்கோட்டு வாரணமே காப்பு
கட்டளைக்கலித்துறை
சைவத்தின் மேற்சமயம் வேறிலை யதிற்சார் சிவமாம்
தெய்வத்தின் மேற்றெய்வ மில்லெனு நான்மறைச் செம்பொருள்வாய்
மைவைத்த சீர்த்திருத் தேவார முந்திரு வாசகமும்
உய்வைத்த ரச்செய்த நால்வர்பொற் றாளெம் முயிர்த்துணையே.
மயங்கிசைக்கொச்சகக்கலிப்பா
இது எட்டடித்தரவு - 1
மணிகொண்ட நெடுங்கடலில் விழிவளரு மாதவனும்
அணிகொண்ட புண்டரிக மகலாத சதுமுகனும்
ஞானக்கண் ணதுகொண்டு நாடுமா றுணராதே
ஏனத்தின் வடிவாகி யெகினத்தின் வடிவாகி
அடிதேடி யறிவலென வவனியெலா முழுதிடந்தும்
முடிதேடி வருவலென மூதண்ட மிசைப்பறந்தும்
காணரிய வொருபொருளாய்க் களங்கமற விளங்குபெருஞ்
சோணகிரி யெனநிறைந்த சுடரொளியாய் நின்றருள்வோய்.
இவை ஈரடித்தாழிசை-7
மலைமிசையி லிருப்பதற்கோ மலைசிலையா வெடுப்பதற்கோ
மலையரையன் மகிழ்வதற்கோ மலையுருவ மெடுத்தனையோ
இத்தலத்தி லைந்தொழிலு மிருபிறப்போ ரறு தொழிலுந்
தத்துவமுந் திருமேனி தரித்திலையே லியலாவே.
இருக்காதி சதுர்வேத மிசைப்பதுநின் பலபேத
மொருக்காலு மொன்றுரைத்த தொன்றுரைக்க வறியா
கருமுடிவைத் தருகால கற்பமெலாங் கடக்கவுநின்
றிருமுடியிற் பிறைசிறிதுந் தேயாது வளராதே.
தானவரைக் கடிந்துமலர்ச் சதுமுகளை யொழித்துமற்றை
வானவரை யழித்துநின்கை மழுப்படைவாய் மழுங்காதே
அண்டருக்கு முனிவருக்கு மழலான கொடுவிடத்தைக்
கண்டமட்டு நுகர்ந்திடவுங் கண்டமட்டிற் கடவாதே.
மூவாமை தனக்குநின்றன் முதனடுவீ றிலாதமைக்குஞ்
சாவாமை பிறவாமை தமக்குமிவை சான்றன்றே.
இவை நாற்சீரோரடியிரண்டுகொண்ட
அம்போதரங்கம்-2.
தடவரை நடைகெழு தரமென வருமொரு
கடகரி யுரிவிரி கலையென மருவினை.
படமுடை யரவொடு பகைபடு முடுபதி
தடையற வுடனுறை சடைநெடுமுடியினை.
இவை முச்சீரோரடி அம்போதரங்கம்-4
சிலையென மலையை வளைத்தனை. (1)
திரிபுர மெரிய நகைத்தனை. (2)
கலைமறை யிவுளி படைத்தனை. (3)
கதிரவ னெயிறு புடைத்தனை. (4)
இவை இருசீரோரடி அம்போதரங்கம் - 8
விதி சிரத்தினை (1) நதி தரித்தனை (5)
அகழ் கரத்தினை (2) மதி பரித்தனை (6)
விடை நடத்தினை (3) நாள்க ளாயினை (7)
பொது நடத்தினை (4) கோள்க ளாயினை. (8)
இவைபெயர்த்தும் ஈரடித்தாழிசை - 3
பண்ணுநீ சுவையுநீ பரிதியுநீ பனிக்கதிர்நீ
பெண்ணுநீ யாணுநீ பேதமுநீ யபேதமுநீ. (1)
செங்காலிற் கருங்காலன் சிரமுருள வுதைத்தனையே
சங்காழி முகுந்தனுக்குச் சங்காழி கொடுத்தனையே. (2)
ஆராலு மளவிடுதற் கரியவுனை யொருகரத்து
நீராலு மலராலு நெஞ்சுருகப் பணலாமே. (3)
இது தனிச்சொல்.
எனவாங்கு.
இது பத்தடி நேரிசை ஆசிரியச்சுரிதகம்.
வேற்று மருந்தால் விடாதவெம் பிறவியை
மாற்று மருந்தா மலைமேன் மருந்தா
அழகிய நாயகி யருளுடை நாயகி
புழுகணி நாயகி பொருந்திய புனிதா
காசியி லிறந்துங் கமலையிற் பிறந்தும்
தேசமர் தில்லையுட் டிருநடங் கண்டும்
அரிதினிற் பெறும்பே றனைத்தையு மொருகால்
கருதினர்க் களிக்குங் கருணையை விரும்பி
அடைக்கலம் புகுந்தன னடியேன்
இடர்க்கடல் புகுதா தெடுத்தரு ளென்வே. (1)
நேரிசை வெண்பா.
வேதநுவல் சோணகிரி வித்தகர்க்கார் வேறாவார்
சோதியிய மானனிவர் சோமனிவர் - ஆதவனும்
மண்ணுங்கா லும்புனலும் வானுமழ றானுமிலர்
எண்ணுங்கா லெல்லா மிவர். (2)
கட்டளைக்கலித்துறை
எல்லா வுயிர்க்கு முயிரரு ணேச ரிவரசைவின்
அல்லா தணுவு மசையாத தென்ப தறிந்தனமே
வில்லாடன் மார னிருக்கவும் யோகம் விளைத்த வந்நாள்
புல்லா திருந்தன வெல்லா வுயிருந்தம் போகத்தையே. (3)
கலித்துறை
போகம் விடுத்தே தாக மெடுத்தே புவிமீதே
யோகம் விளைத்தே யாக மிளைத்தே யுழல் வீர்காள்
ஆகமவித்தார் மோக மவித்தா ரருணேசர்
கோக னகத்தா ளாக நினைத்தே குழைவீரே. (4)
அறுசீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்
குழையடுத்த விழியிடத்தர் மழுவலத்த
  ரருணையத்தர் குளிர்வெற் பூடே
மழையடுத்த துளிநனைக்க மடிசுருக்கி
  மயிர்பொடித்து வருந்துஞ் சேதா
தழையடுத்த விடையர்பற்று குழலிசைக்கு
  மனமுருக்கித் தளரு மாலை
பிழையடுத்த மொழியுரைத்த தலைவருக்கு
  மிகவிரக்கம் பிறப்பி யாதே. (5)
எழுசீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்
யாதவர் குலத்துநெடு மாதவன் மருப்புடைய
  வேனமிரு கத்துருவ மாய்
வேதமொழி பெற்றவய னோதிம மெனப்பறவை
  வேடமு மெடுத்த திலையோ
ஓதருணை வித்தகரை மூவரி லொருத்தரென
  வோதியிடு மற்ப மதியீர்
சீதமதி வைத்தமுடி பாதமல ரைச்சிறிது
  தேடுதனி னைத்த மரமே. (6)
எண்சீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
பரவையாடினு நதிக ளாடினும்
  படியெ லாநடந் தடிக டேயினும்
குரவ ராயினுங் கனலி னின்றதன்
  கொதிபொ றுக்கினுங் கதிகி டைக்குமோ
அரவ மாடுசெஞ் சடில ரங்கணா
  ரமுதர் தாணினைந் தடியர் தம்மொடு
விரவி நீறணிந் தருணை சேர்வரேல்
  வெற்ற ராயினு முத்த ராவரே. (7)
பதின்சீர்க்கழிநெடில் ஆசிரிய விருத்தம்.
முத்தமிழ்முறைமுறையன்பொடு
மப்பர்கவுணியர்சொல்சுந்தரர்
முப்பொழுதுமெதிர்புகழ்ந்திடு முதுநூலார்
அத்தரருணையினெடுந்திரை
தத்துதிருநதியின்மென்படை
யச்சமறவுடனணைந்துறை மடநாராய்
ஒத்தமனதொடுபுணர்ந்தவர்
சற்றுமகல்வதிலையென்றவ
ருற்றதுணையெனவிருந்த ருளம்வேறாய்
எத்தனைகபடநினைந்தவர்
கைப்பொருள்கருதிநடந்தன
ரெப்படியிறைவரைநம்புவ தினநாமே. (8)
அறுசீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.,
இனமகலு மருகர்மட மிசையிலிடு கனன்மதுரை
  யிறைவனுடல் புகமொழிவரே
கனகமுக படகவள கரடதட விகடமத
  கரியின்மத மறநினைவரே
வனமருவு மருமுதலை யொருமதலை தரவினிய
  மதுரகவி மொழிமுதல்வரே
அனகரபி னயரதுல ரமலரெம தருணைகிரி
  யடிகடம தடியவர்களே. (9)
தலைவன்வினாவுதல்.
எழுசீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
அடியவர் சிந்தையி லினிதுறை சங்கர
  ரருணைவ ளம்பதி யன்னாரே
படியினெ டுங்கரி யனையம தங்கொடு
  பதறிந டந்திடு மின்னாரே
ஒடியு மருங்கென வுணர்கிலிர் நின்றினி
  யொருவச னஞ்சொல வொண்ணாதோ
கடியச ரங்களி னிளைஞரு டன்பல
  கலகவி தம்பயில் கண்ணாரே (10)
அம்மானை - மடக்குத்தாழிசை.
நாரா யணனறியா நாதரரு ணேசருக்கு
வாரார் சிலைகலைமெய் மாதங்க மம்மானை
வாரார் சிலைகலைமெய் மாதங்க மாமாயின்
ஆராயுங் காலெடுப்ப தையமன்றோ வம்மானை
அன்னமறி யாரெடுப்ப தையமோ வம்மானை. (11)
பாங்கி தலைவிக்குரைத்தல்.
அறுசீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
மானென்பார் கலையென் பார்கைம்
  மலையென்பார் வழியெ தென்பார்
ஏனென்பா ரிலையுன் பார்யா
  னேந்துமாந் தழைநன் றென்பார்
ஊனென்பார் நிறையுந் தாரா
  ருறையுந்தென் னருணை மானே
கானென்பார் குழலை வேந்தர்
  கருத்தென்னோ கருதுங் காலே. (12)
புயவகுப்பு - ஆசிரியவண்ணவிருத்தம்.
கருணைமுக மண்டலத் தொளிர்மகர குண்டலக்
  கலன்மலிக வின்குழைக் குறவாயிசைந்தன
களபமகில் குங்குமத் தளறுகுடி கொண்டுதட்
  டியபுழுக ணைந்துமெய்ப் பனிநீர்துளைந்தன
கலைமதிம ழுங்கிநத் தினமிருள டைந்துமுத்
  தொளிகருக வெண்சுதைத் திருநீறணிந்தன
கனலிகைய ரிந்துகட் பரிதியைமு னிந்துதக்
  கனைமுடித டிந்துமைத் தலையேவழங்கின (12-1)
இரணியனு ரங்கிழித் தளவறும் தங்கொழித்
  தெழுநரம டங்கலைத் தடமார்பிடந்தன
இமயமட மங்கைபொற் புளகவிரு கொங்கையிற்
  சுவடுபட வின்பமுற் றதிலேகுழைந்தன
இரவிகிர ணங்கொழித் ததிசயமு டன்கிளைத்
  தெழுபவள வன்பொருப் பெனவேவளர்ந்தன
இதழியர விந்தமுற் பலமகிழ்செ ருந்திகட்
  குரவலரி சண்பகத் தொடையானிறைந்தன. (12-2)
தரியலர்பு ரங்கெடச் சுரர்நரர்ப யங்கெடத்
  தமனியநெ டுஞ்சிலைச் சிலைநாணெறிந்தன
தனுவலத நஞ்செயற் கமர்பொருச ரந்தரச்
  சரதமென வந்துமற் பொருபோர்புரிந்தன
சலசமலர் மண்டபச் சதுமுகவ யன்றிருத்
  தலையுடனி லங்குமுத் தலைவேலுவந்தன
தடவிகட கும்பமத் தகதவள தந்தநற்
  றறுகண்மத குஞ்சரத் துரிபோர்வை கொண்டன. (12-3)
அருணகிர ணங்களிற் பலமணிநெ ருங்கிநச்
  சரவமிளிர் கங்கணப் பணியான்மலிந்தன
அனவரத மம்பலத் தினினடமி டுந்தொழிற்
  கபினயவி தங்கள்பெற் றழகோடிருந்தன
அருமறைதெ ரிந்தசொற் புகலியிறை செந்தமிழ்க்
  கரசினொடு சுந்தரப் பெருமாள்புகழ்ந்தன
அரிபிரமர் தங்களுக் கரியபத பங்கயத்
  தருணையதி ருங்கழற் பெருமான்புயங்களே. (13)
தலைவனை வேண்டல்.
மடக்கு-எண்சீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
புயந்தழுவுங் கண்ணியுஞ்செவ் விதழியேமால்
  பூண்டகயற் கண்ணியுஞ்செவ் விதழி யேமால்
வியந்துசொலி னன்னதும்பொன் னிறமே யெங்கண்
  மின்னிறமும் பொன்னிறமே புயம்பெ றாமல்
அயர்ந்திவள்வா டத்தகுமோ வருட்கண் பாரீ
  ரருணகிரிப் பெரியீரே யமல ரேநல்
வயந்தவிழா வழகரே நினைக்க முத்தி
  வரந்தருவா ரேமலைமேன் மருந்த னாரே. (14)
இரங்கல்-எழுசீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
மலைமேன் மருந்த ரருணேச ரன்று
  வலைவீசி நின்ற வலையே,
அலைமே னிறைந்து வருமீ னருந்தி
  யருகே யிடங்கொள் குருகே,
முலைமேன் முயங்கு தலைநாளி லன்பர்
  மொழிசூண் மறந்த பிழையோ,
தலைமேல் வரைந்த படியோ விருந்து
  தமியேன் வருந்து தகவே. (15)
தலைவியைப் புகழ்தல்.
எழுசீர்க்கழிநெடில் ஆசிரிய விருத்தம்.
ந*கனமுறுவலின்மதனைமுனிபவர் சடையிலணிபலதலையினார்
அகனலடியரொடுறையுமிறையவ ரருணைவளநகரரிவையார்
நிகரிறனதடவமுதநிறைகுட நிலவுமுகபடம்விலகினால்
சகனவமரருநரருமிகல்கொடு கலகமிடுவரிவ்வுலகிலே. (16)
இதுவுமது.
மடக்கு - எண்சீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
உலககண் டகனாய் வருசலந் தரனா
  ருடறடிந் திடுவார் கடல்விடங் கொளுவார்
குலவுசங் கரனா ரருணையங் கிரிசூழ்
  குளிர்புனந் தனிலே கிளிகடிந் திடுவார்
மலர்முகஞ் சசியே வடிவமுஞ் சசியே
  மகரமென் குழையே வருணமென் குழையே
முலையுமந் தரமே யிடையுமந் தரமே
  மொழியுமா சுகமே விழியுமா சுகமே. (17)
இரங்கல்.
எண்சீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
சுகமே சுகமே யிரும்வந் துபுனஞ்
  சூழ்கின் றவுமைத் தினமித் தினையுட
புகமே யவிடா துகடிந் திடுமெம்
  பொல்லா மையுமின் றுபொறுத் திடுமின்
மகமே ருநெடுஞ் சிலையா ளரணா
  மலையா ரருணா புரிமால் வரைமேல்
அகமே செலுமா றுதுணிந் திதண்விட்
  டகறுன் பமுமன் பர்வரிற் சொலுமே. (18)
இதுவுமது - அறுசீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
சொல்லா ரணத்திற் கரிவரியார்
  சோணா சலத்திற் சுகங்கடமைக்
கல்லா லெறிந்த பகைக்குவழி
  காட்டா தொழிதல் கண்டாயே.
கொல்லா வம்புஞ் சமர்க்களத்திற்
  குனியா வில்லுங் கொண்டுநிற்கும்
புல்லா டவனே யெமக்குறுதி
  புகன்றா ரெங்கே யகன்றாரே. (19)
பிரிவு விலக்கல்
அறுசீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
ஆரும்வி ரும்பிய கல்விமே லாசையு மக்குள தாயிடின்
பாருற வென்பொரு பாவையாப் பாடிய பாவலர் போலவே
நீரும ருந்தமிழ் செப்பிடு நீர்மைய றிந்திவ ணேகுவீர்
மேருநெ டுஞ்சிலை யத்தனார் வீறரு ணாபுரி வெற்பரே. (20)
காலம்-மடக்கு
எண்சீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
வெற்றிமதன் போர்க்காயம் பிறைக்குங் காலம்
  வெங்கனலே போற்காயம் பிறைக்குங் காலம்
சற்றுமிரு கரமென்னே சங்கணியாக் காலம்
  தலைவர்துறை மறந்தென்னே சங்கணியாக் காலம்
கற்றைநெடுஞ் சடைமுடியா ரடியார்மேன் முழுதுங்
  கருணைநாட் டம்புரியு மருணைநாட் டுறையும்
பெற்றவிளந் தென்றன்மறு கிடத்தியங்குங் காலம்
  பேதையேன் சிந்தைமறு கிடத்தியங்குங் காலம். (21)
அறுசீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
காலிற் றுலங்கு நகத்தாலுங்
  கையிற் பொலிகூர் நகத்தாலும்
சீலத் தரக்க னுரங்கொண்டீர்
  திசைமா முகனைச் சிரங்கொண்டீர்
மேலைப் புரத்தை நகைத்தெரித்தீர்
  வில்வேள் புரத்தைப் பகைத்தெரித்தீர்.
சூலப்படையேன் மழுப்படையேன்
  சுமந்தீ ரருணை யமர்ந்தீரே. (22)
மாலையிரத்தல் - மடக்கு
அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.
அமர்ந்தரு ணைப்பதி வாழ்வீரே
  யன்பர்க ளன்பினி லாழ்வீரே
சுமந்தொளிர் சூலமெ டுப்பீரே
  தோளணி மாலைகொ டுப்பீரேல்
இமந்தரு வெண்மதி காயாதே
  யிருகணெ டும்புனல் பாயாதே
கமழ்ந்தகு ழற்கொடி வாடாதே
  கங்குலு மிப்படி நீடாதே. (23)
ஒன்பதின்சீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
நீடாழி ஞாலம் வானொடு தீகாலு லாவுமி யாவையு
  நீறாய காலமாய் விடுநாள்
கோடாழி மால்பி தாமக னூறான கோடி வீழ்தலை
  கோடீர பாரமீ துறவே
சூடாத மாலை சூடுவா் தோளோடு தோளை வீசுவர்
  சோணாச லேசர்சோ பனமா
ஆடாத வாட லாடுவர் பாடாத பாடல் பாடுவ
  ராராத வோகைகூ ருவரே. (24)
புன்னாகங்கண்டிரங்கல் - கலித்துறை.
கூத்தாடுமருணேசர்வரையன்பர்பொருளன்புகொண்டுன்னையும்
நீத்தார்கொனிழலாருமிலையாகிநின்றாய்நெடுங்காலமே
பார்த்தாலுமயலேகிளைத்தாய்சலித்தாய்பசுந்தென்றலால்
பூத்தாய்பொன்னிறமாகவென்னாகமேயன்னபுன்னாகமே. (25)
இரங்கல் -மடக்கு.
அறுசீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
நாகமெ டுத்தவ ரம்பானார்
  நாலும றைக்குவ ரம்பானார்
தோகையி டத்தவர் சேணாராய்
  சோணகி ரிப்பதி வாணாராய்
மாகம டுத்தவி ளங்காவே
  மன்னவ ரெண்ணம்வி ளங்காவே
கோகன கத்திமி ருந்தேனே
  கொண்கரை விட்டுமி ருந்தேனே. (26)
ஊசல் - மடக்கு
எண்சீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
இருசரணச் சிலம்பாட வாடீ ரூசல்
  லிளமுலைப்பொற் சிலம்பாட வாடீ ரூசல்
மருவுகலை மருங்கசைய வாடீ ரூசல்
  வரிவளைக்கை மருங்கசைய வாடீ ரூசல்
அருமறைக ளளவிடுதற் கரிதா மைய
  ரருணகிரிப் பரமர்புக ழடைவே பாடிப்
பொருமிருகட் கயலுலவ வாடீ ரூசல்
  புயமதனன் கயலுலவ வாடீ ரூசல். (27)
பாங்கிசொல்லுதல்.
எண்சீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்
ஊசலு கைத்திடுவார் குன்றெதிர் கூவிடுவா
  ரொண்டர ளங்கொளுவார் தண்டலை கொய்திடுவார்
ஆசில்பு னற்குடைவா ரம்மானை பந்துகழங்
  காடிம கிழ்ந்திடுவார் கோடிம டந்தையரே
ஈசர்வி டைக்கொடியார் பூசைசெ யற்கெளியா
  ரேரரு ணைப்பதிசூழ் மேருவி னிற்கவணே.
வீசுதி னைப்புனமே யாவரெ னத்தெளியேம்
  வேலர்ம னத்திடையே மாலைவி ளைத்தவரே. (28)
மடக்கு - கலிவிருத்தம்.
மாலையென்பாங் கலத்தாரு மறைநாறுங் கலத்தாரும்
கோலமன்ன கலத்தாருங் குறைவில்பரி கலத்தாரும்
மாலைவில்வேள் சலத்தாரு மதர்த்தமதா சலத்தாரும்
மேலகலரீச் சலத்தாரும் விளங்கருணா சலத்தாரே. (29)
தலைவியைப்புகழ்தல்.
அறுசீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்
அருணனொளி தனிலுமொளி ரருமலைய ருந்தாய
  வமலரதி ருங்கழலினார்
மருமலர்வி ரிந்துநதி பெருகருணை யம்பதியின்
  மருவியம டந்தையிடையாம்
ஒருகொடியி லொன்றுகமு கொருபவள மொன்றுகுமி
  ழொருமதிய மொன்றுபிறைதான்
இருசிலையி ரண்டுகணை யிருபணையி ரண்டுகுழை
  யிருமுலையி ரண்டுமலையே. (30)
எழுதரிதென்றல்.
எழுசீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
மலையாச னத்தர்மலை மயிலாச னத்தரெழு
  மலையாநி லத்து வருவார்
அலையாச னத்தரொடு மமிர்தாச னத்தர்தொழு
  மருணாச லத்தர் வரையீர்
முலையானை கட்டியிடை வெளிதேர்நி றுத்திமதி
  முகமாய மைத்தரு குலாம்.
இலைவேல்ப ரப்பியினி தெழுதோள மைப்பனினி
  யெழுதேனி ருப்பு மனமே. (31)
இரங்கல் -சிலேடை-கட்டளைக்கலித்துறை.
மேலாடை தோற்றணி சங்காழி கைவிட்டு மென்சிலம்பின்
காலால் வருந்தி நிலங்கீறுங் கோலத்தைக் கண்டிருந்தும்
ஆலால முண்டவ ரண்ணா மலையர்த மன்பர்க்கன்றி
மாலான வர்க்கிரங் காரிங்ஙனேயொரு வன்கண்ணரே. (32)
நேரிசைவெண்பா
கண்ணருக்கும் போதருக்குங் காண்பரிதாய்க் கண்பறித்த
திண்ணருக்கு நன்றாய்த் தெரிந்ததே - விண்ணருக்காப்
போற்றுவா ரண்ணார் புரமெரித்தா ரென்பிறவி
மாற்றுவா ரண்ணா மலை. (33)
இரங்கல் -கலிவிருத்தம்.
அண்ணா மலையத் தரடற் கிரிமேல்
எண்ணா மலையத் தவரெய் திலரால்
கண்ணா மலையத் தனைநீர் கலுழும்
விண்ணா மலையத் தரும்வெண் மதியே. (34)
பாங்கன் துணிவு.
எழுசீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
மதுவானி றைந்தகுழன் மடவார்நெ ருங்கருணை
  மலைமேன்ம ருந்தா வரையில்
முதுநீரில் வந்தவவ ரடையாள மென்றிறைவா
  முதலேமொ ழிந்த படியே
இதுநாக மன்றுமுலை யிதுபூக மன்றுகள
  மிதுமேக மன்ற ளகமே
அதுநீல மன்றுவிழி யதுசாப மன்றுநுத
  லதுகோப மன்ற தரமே. (35)
நாரைவிடுதூது.
எழுசீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
அருணை வெற்பின ரயனி ருக்கவு மரிபி ழைக்கவு மாகவே
திருமி உற்றொரு கருமை வைத்தவர் திருநதிக்கய றேடியே
கருது நெட்டுட லசைவ றத்துயில் கபட நித்திரை நாரைகாள்
இருக ணித்திரை யிலையெ னச்சொல விறைவர் பக்கலி லேகுமே. (36)
பாங்கிதலைவிக்குரைத்தல் - கட்டளைக்கலித்துறை.
ஏகார் புனத்துத் தழையாற் கரிபட்ட தென்பரென்றும்
போகாத வூர்க்கு வழிதேடு வார்புலிக் கான்முனியும்
நாகா திபருந் தொழுமரு ணாசலஒ நாட்டிலிளந்
தோகா யணங்கனை யாயவர்க் கேதுசொ லத்தக்கதே. (37)
எண்சீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
சொர்க்கமெனு மொருபதவி யிருக்க மாலைத்
  துளவணியு மரிபதவி யிருக்க மேலை
நற்கயிலை மலையிருக்க நினைத்தோர்க் கெல்லா
  நயந்தமுத்தி நகரமொன்றே நல்கா நிற்பீர்
பொற்கையினா லுமைவணங்கிப் பரிந்து பூசை
  புரிந்துதவந் தெரிந்துதினம் புகழ்வோர்க் கெல்லாம்
எற்குலவு புகழருணை யீச னாரே
  யினிதளிக்கும் பதவிதனக் கென்செய் வீரே. (38)
சித்து - எண்சீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
விந்தை யணிமழுவா ருமைபங் காளா
  விளங்கருணைச் சித்தர்யாம் விளம்பக் கேளா
காரத்தை யெமக்கிடுஞ் சத்தை யேகோ
  கனகமெனக் காட்டிடுவோங் கரியோ ருக்குத்
தாரத்தைப் பொன்னாக வமைத்தோந் தம்பீ
  தாம்பரமும் பொன்னாகச் சமைத்தோ மிந்தப்
பாரத்தை யாரறிவா ரயனா கத்தைப்
  பசும்பொனிற மாகவுமே பாலித் தோமே. (39)
இதுவுமது
எண்சீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
பாதமெமக் களித்தவரு ணேச னார்க்கின்
  பச்சிலைபொன் செய்திமையோர் பசிநோய் தீர
ஓதுகடை மருந்தளித்த சித்த ரேம்யா
  மொருபிடிசோ றல்லதுகூ ழுண்டோ வப்பா
மாதவாதந் திருவாணை கரிக ளெல்லா
  மாதங்க மாக்குகிற்போ மருந்தில் லாதே
ஏதமற நாகமொளித் தராவாச் செய்வோ
  மிரும்மையும்பொன் னாகவுரைத் திசைவிப் போமே. (40)
தலைவியைப்புகழ்தல்
எழுசீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
இதழி யந்தொடைய ரருணையங் கிரியி
  லிரத முந்திவிடு வலவனே
பதிய டைந்துமறு கினில்வ சந்தனதி
  படையெ ழுந்தது பகருவேன்
புதிய கொம்புசிலை வளையி ரண்டருகு
  பொழியும் வெம்பகழி போரறா
உதய தந்தமத களிறு டன்கதலி
  யுபய தண்டுவரு கின்றதே. (41)
ஒன்பதின்சீர்க் கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
வரைக்கனக சாப சோண கிரிப்புனித கால கால
  மதிக்குநெடு மாயர் போலவே
தரைக்குளினி யாரியாவ ரவர்க்குமுனி லாமனீடு
  தழற்சிகரி யாக னீதியோ
விரைக்கமல வோடை யாவர் புரத்தைமுனி பாண் மாவா
  விரித்தகொடி யாவ ரீதலால்
இரக்குமனை தோறு மேறி நடத்துமெரு தாவா மேவி
  யிடத்திலுறை தேவி யாவரே. (42)
கட்டளைக்கலித்துறை.
ஆனிட பக்கொடி சோணா சலனென்று மன்பர்மலா
தானிட முத்தி தரும்பெரு மானென்றுஞ் சம்புவென்றும்
கானிட வேடன்முன் னூனிட வுண்டது கண்டுமொரு
மானிட மானவ னைத்தேவர் செய்வதென் வந்தனையே. (43)
களி-எண்சீர்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
தனையிருக்கு மறைதுதிக்கு மருணை நாதன்
  சரணமலர் புகழ்களியேஞ்சக்ர பூசை
வினையிருக்கு மவர்க்கெளிதோ வரிதா னையோ
  விதிவசத்தால் விவரமற்ற விதஞ்சொல் வேனே
பனையிருக்க நெடியகஞ்சா விருக்க வீணே
  பச்சையா லிலைதுயின்றான் பனையன் றேளி
யனையிருக்கப் பணிதுயின்றான் மதுவாந் தெய்வ
  வாழிவிட்டுப் பாற்கடன்மீ தழுந்தி னானே. (44)
களி-நேரிசைவெண்பா.
ஆனார் கொடியா ரருணா புரிக்களியேம்
வானாட ரேனோ மதியற்றார் - மேனாளில்
சும்மாகஞ் சாவிலையே தூளிடித்துத் தின்றாலும்
தம்மாகஞ் சாவிலையே தான். (45)
பிச்சியார் - எண்சீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
தாமணிவர் திரிசூல மெதிர்கண் டார்மேற்
  சக்கரத்தை விடுவர்சிவ சமயத் தாவர்.
காமுகரை யாண்டுகொளார் சிவநூல் கேட்பர்
  கருத்தினின்மா றெரிசனமே காட்டா நிற்பர்
ஆமையர வணிதொடையார் விடையார் வாழு
  மருணகிரி வளநாட்டி லகங்க டோறும்
சேமநிதி யெனவுலவும் பிச்சி யார்தந்
  திருப்பெயரை வெளியாக்கித் திரிகின் றாரே. (46)
இதுவுமது-மடக்குக் கட்டளைக்கலிப்பா.
தில்லை மன்றுண டம்புரி பாதனார்
  தேவ ராயர் திருவரு ணைக்குளே
முல்லை மல்லிகை சண்பகம் பிச்சியார்
  மொய்த்த வார்குழன் மோகனப் பிச்சியார்
நல்ல மேனியும் பொற்றிரு வேடமே
  நாடி யிட்டதும் பொற்றிரு வேடமே
இல்லை யாயினு மிவ்விடை யையமே
  யேற்கவந்தது மிவ்விடை யையமே. (47)
கார்கண்டு பாகனோடு சொல்லல்.
கட்டளைக் கலித்துறை.
அயங்காட்டியமறையார்விடையாளரருணைவெற்பில்
புயங்காட்டியமணித்தேர்வலவாமுன்புபோனகொண்டல்
சயங்காட்டிக்கோபமுஞ்சாபமுங்காட்டித்தடித்திடித்துப்
பயங்காட்டினாலஞ்சுமேதனியேநின்றபைங்கொடியே. (48)
நேரிசைவெண்பா.
பைங்கட் புலிக்குப் பரிபவத்தைக் காட்டிநர
சிங்கத் தினையடர்த்துச் சீறியே - வெங்கைப்
புழைக்குஞ் சரமுரித்துப் போர்க்கு மருணைக்கே
தழைக்குஞ் சரபமொன்று தான். (49)
குறம் - பதினான்குசீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
ஒன்று மூன்று நாமு ரைக்க வந்து கேளு மரிவைமீ
  ருதய மான சுளகு நெல்லு மொற்றை பட்ட தாதலால்
கன்று மானு மழுவு மாக வொருவர் வந்து தோன்றினார்
  கண்ட மட்டி லேக றுப்பர் கைக்க பால ரவரையும்
சென்று நாடி லருணை மீது காண லாகு நாமமுந்
  தேவ ராய ரவர லாது தெய்வம் வேறு கண்டிலேம்
நின்று வாடு மிவட னாசை யிடர்த விர்ப்ப ராதலா
  னீறு கொண்டு மூன்றி ரேகை நெற்றி மீதி லெழுதுமே. (50)
இரங்கல் - இதுவுமது.
நெற்றி மீது கண்ப டைத்த வும்மை மார னெய்வனோ
  நீர ணிந்த வரவி ருக்க நெடிய தென்றன் முடுகுமோ
வெற்றியான தாளிருக்க மதிய மும்மை நலியுமோ
  விரவு கங்கு லுமது கண்கள் வெயிலின் முன்பு நிற்குமோ
கற்றை யான குழலி யெந்த வுதவி கொண்டு பகைவெலும்
  கருணை கூர்தெ னருணை மேவு கலியு கத்து மெய்யரே
செற்ற லார்கள் புரமெ ரித்த புழுக ணிப்ர தாபரே
  தேவ ராய ரேசு கந்த தினவ சந்த ராயரே. (51)
கார்காலம்
அறுசீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
தினைப்போது தானே நினைத்தாலு மேலோர்
  சிறப்பான பேறீகுவோர்
வனத்தாடு சோணா சலத்தூடு தீரா
  மயிற்பேடை காளோடைகாள்
வினைப்பாவி யானேன் விழிப்பாயு நீரான்
  மிகுத்தேறு கார்காலமே
தனித்தாவி சோர்வார் தமக்கால மேநீள்
  சரற்கால மேகாலமே. (52)
இளவேனில் - நேரிசை அகவற்பா.
காலையு மாலையுங் கைம்மலர் குவித்து
மாலு மயனும் வணங்குதற் கரியோன்
இமைக்குமு னுலக மியாவையும் படைத்தோன்
தனக்கொரு தாயுந் தந்தையு மில்லோன்
பழவினைக் கயிற்றிற் பல்லுயிர்ப் பாவை
அழகுற நடிக்கத் திருநடம் புரிவோன்
வினைவலை யறுக்கு மெய்த்தவ வேடன்
மனவலைப் பிணிக்கு மான்மத நாதன்
பேறா மறுபத் தாறா யிரம்பொன்
மாறாத் தியாக வசந்தவி நோதன்
அண்ணா மலைய னதிருங் கழலன்
கண்ணா ரமுதன் கைலைப் பொருப்பின்
மறலித் திசையின் மலயா சலமென
இருத்திய துருத்திகொண் டிளங்கால் பரப்பிக்
காவுலைப் பல்லவக் கனனா வசைப்பக்
குறைவறு குயில்வாய்க் குறட்டினி லடக்கிப்
பொறிதிக ழரிக்கரி யதனிடைச் சொரிந்துள்
இசைத்திடு மஞ்சரிப் பசைக்கோ லசைத்து
மதவீ ரனுக்கு வசந்தக் கருமான்
பனிமலர்ச் சாயகம் பண்ணி நீட்டினன்
இன்னமும் வந்திலர் கேள்வர்
புன்னையங் கருங்குழ லன்னமென் னடையே. (53)
மடக்கு - எண்சீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
அன்னியமா சடையாரும் பின்னியமா சடையாரு
  மடிமாற நடித்தாரு முடிமாற னடித்தாரும்
உன்னுமற மொழிந்தாரும் பின்ணுனுமற மொழிந்தாரு
  முகைத்திடுமா னேற்றாரு மிகைத்திடுமா னேற்றாரும்
என்னகத்தா முரியாருங் கொன்னகத்தா முரியாரு
  மெருக்கிதழி மணத்தாரு முருக்கிதழி மணத்தாரும்
வன்னிவடி வனத்தாருஞ் சென்னிவடி வனத்தாரும்
  வருகருணைப் பதியாரும் பெருகருணைப் பதியாரே. (54)
சம்பிரதம்.
எண்சீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
பரவைபொ ருக்கெழவுங் ககனம்வ டுப்படவும்
  பரிதிவ டக்கெழவு நிருதிகு ணக்குறவும்
இரவுப கற்படவும் பகலிர வொத்திடவு
  மெளிதினி யற்றிடுவோ மிவைசில வித்தைகளோ
அரவம ணிப்பணியா னனலகி ரிப்பெருமா
  னருணகி ரிக்கிணையா வவனித லத்திடையே
கருதிம னத்தினிலே சிறிதுநி னைத்தளவே
  கதியைய ளித்திடுமோர் பதியுமு ணர்த்துவமே. (55)
கருணைச்சிறப்பு.- நேரிசைவெண்பா
உள்ளத்தின் ஞான முயர்ந்தவிடத் தன்றியிருட்
பள்ளத்தி லென்றும் படராதே - வள்ளல்
அருணா சலப்பெருமா னம்பிகையோர் பாகன்
கருணா சலமாங் கடல். (56)
பாண் - அறுசீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
கங்கை வார்சடைப் பரமர்தென் னருணையிற்
  கடைதொறு நீபாட
அங்கை யாலிரு செவிபுதைத் தேத்துவோ
  மருச்சுனன் றிருநாமம்
எங்கை மார்செவி பொறுக்குநின் னிசையெனு
  மிடிக்குரன் மகிழ்வாரார்
மங்கை மார்செய லறிந்துகொள் பாணனே
  மயிலெனப் புகழ்வாயே. (57)
தலைவியைப்புகழ்தல்.
அறுசீர்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
புடைசெறிந் தளிபாடு மிதழியந் தொடைமார்பர்
  புலிபதஞ் சலிநாடுவார்
மடையிளங் கயறாவு மருணையங் கிரிமீது
  மலரணங் கெனமேவுவார்
நடையுமிந் திரவேழ மிருகையிந் திரதாரு
  நயனமிந் திரநீலமே
இடையுமிந் திரசால நுதலுமிந் திரசாப
  மிதழுமிந் திரகோபமே. (58)
உருவெளி - கலிவிருத்தம்.
இந்திர கோபமா மிதழி பாகனார்
செந்தமி ழருணைநந் தேருஞ் செல்லுமே
சந்திர ரேகையுஞ் சமர வாளியும்
மந்தர மேருவும் வளைந்து கொண்டவே. (59)
தலைவியைவியத்தல்.
எழுசீர்க்கழிநடில் ஆசிரியவிருத்தம்.
கொண்டலணி கண்டர்நிறை கங்கையணி செஞ்சடையர்
  கொம்பரொரு பங்கி லுறைவார்
அண்டபகி ரண்டமள வங்கியென நின்றவதி
  ருங்கழலர் தங்க ருணையீர்
கண்டுளது கொண்டன்மிசை திங்களெழு கின்றதிது
  கண்டதிலை யுங்கண் முகமா
மண்டலமெ னும்புதிய திங்கண்மிசை கொந்தளக
  மஞ்சுகுடி கொண்ட வடைவே. (60)
நேரிசைவெண்பா.
அடுத்தமதிச் சென்னியின்மே லம்பிருக்கு மற்றோர்
இடத்திலே நாரி யிருக்கும் - தடக்கையிலே
ஏந்துசிலை விட்டிருக்கு மெம்மருணை நாதனார்
போந்து புரமெரித்த போது. (61)
கார்காலம் - கலித்துறை.
போதற்குமரிதானவருணாசலத்தீசர்பொன்மேருவாய்
ஏதப்படும்பாவிமனமேபிரிந்தாரிதெண்ணார்கொலோ
ஓதத்தினீரோடுகனலுண்டுபுயன்மீளவுமிழ்தன்மைபோல்
காதற்குண்மடவார்மெய்பொன்பூசுமின்வீசுகார்காலமே. (62)
தலைவியை வேண்டல் - கொச்சகக்கலிப்பா.
கார்வந்தா லன்னகறைக் கண்டனார் செங்கதிரோன்
தேர்வந்தா லும்பொழில்சூழ் தென்னருணை நன்னாட்டில்
ஆர்வந்தா லுந்தணியா தன்னமன் னீரானாலும்
நீர்வந்தா லாசை நெருப்பவியுங் காணுமே. (63)
பனிக்காலம் - கலித்துறை.
காணம்பரந்தோலினுடையாளரருணேசர்கைலாசமேல்
நூணங்கணிகர்தோளருறைகின்றநகரூடுசொரியாதரோ
பூவணங்கைவளைசிந்தமடவார்மனத்தேறுபுகைபோலவேள்
பாணங்களுதிர்கின்றதுகள்போலவுறைகால்பனிக்காலமே. (64)
நேரிசைவெண்பா.
பண்ணிறந்த வாசவரிற் பல்கோடி மாண்டாலும்
எண்ணிறந்த வேத ரிறந்தாலும்-கண்ணற்
கமைத்தவெலா மாண்டாலு மண்ணா மலையார்க்
கிமைப்பளவுங் கால மிலை. (65)
தலைவனைவேண்டல்
ஒன்பதின்சீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
இலகொளி பரந்து மாரன் விடுகணை துரந்துநாடி
  யிடுமிரு நெடுங்கண் மாதரார்
இலகரிய கொங்கை மீது பழநழுவி வந்து பாலின்
  விழுவதென வந்து சேர்கிலீர்
மலகரி குறிஞ்சி தேசி வைரவி சுரும்பு பாடும்
  வயலருணை மங்கை பாகரே
பலமலர் கதம்ப தூளி மிருகமத சுகந்தம் வீசும்
  பரிமள வசந்த ராசரே. (66)
மதங்கு.
ஒன்பதின்சீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
வசிகரம் வயங்கு நீறு மபிநய புசங்க ராச
  வலயமு மணிந்த தோளினார்
அசலகுல மங்கை பாகர் பரிமள வசந்த ராச
  ரருணையின் வளங்கள் பாடியே
இசைபெற வரங்கி னூடு பவுரிகொண் மதங்கி யார்த
  மிலகிவளர் கொங்கை யானையே
திசைபெற விருந்த யானை பிறகிட முனிந்து போர்செய்
  திறலிப மனந்த மானவே. (67)
இதுவுமது - மடக்குக்கட்டளைக்கலிப்பா
நதியைச் சூடதி ருங்கழ னாதனார்
  நம்ப னாரரு ணாபுரி வீதிமேல்
சதியிற் பாடிந டிக்கும தங்கியார்
  தந்த வாசைத ரிக்கும தங்கியார்
வதனத் தாற்சசி மண்டல மாறுமே
  வந்தி ருந்தவிம் மண்டல மாறுமே
கதியிற் கொண்டது மந்தக் கரணமே
  கண்ட பேர்க்கிலை யந்தக் கரணமே. (68)
குறம்-எண்சீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
அருணமணி முலைக்கிரிமேற் செங்கை வைத்தா
  யாகையா லருணகிரி யன்பன் மூதூர்
வருணமுலை கண்ணாரப் பார்த்தா யுன்றன்
  மகிழ்நனுங்கண் ணாரமுதன் வந்து கேளாய்
தரணியிலுன் றனைச்சேர்வன் முருகன் போலத்
  தநயரையும் பெறுவையிவை தப்பு மாயின்
திருநிறைவண் டார்குழலாய் குறமும் பாடேன்
  சிறந்தகுறக் கூடையும்யான் றீண்டி லேனே. (69)
மறம்-எண்சீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
தீண்டரிய மடற்பனையின் சருகை வாரிச்
  சிற்றிரும்பாற் சுற்றிவரச் செருக்கிக் கூட்டி
நீண்டதுவுஞ் சுருண்டதுமா வரைந்து சுற்றி
  நிருபமெனக் கொடுத்தெதிரே நிற்குந் தூதா
தாண்டவமா டும்பரனா ரருணை நாட்டிற்
  றருமறப்பெண் டனைவேண்டிச் சமரிற் போந்து
மாண்டவரே றியகோணல் வளைக ணாங்கள்
  வருங்கல்வழி வாயினடு மரங்க டாமே. (70)
மடக்குக் கலிவிருத்தம்.
மறைக்கவனப்பரியாரும்வரைக்கவனப்பரியாரும்
எறித்தவிரும்பிறையாருமெவரும்விரும்பிறையாரும்
பொறுத்தசினவிடையாரும்பொருந்துசினவிடையாரும்
அறத்தவளம்பதியாருமருணைவளம்பதியாரே. (71)
கலித்துறை
ஆரணி துங்க னாரணி பங்கனருணேசன்
தாரணி யஞ்சுங் காரண நஞ்சந் தரியானேல்
வாரண ரெங்கே சாரண ரெங்கே மலர்மேவும்
பூரண ரெங்கே நாரண ரெங்கே போவாரே. (72)
தழை - கட்டளைக்கலிப்பா.
போந்த போதக நல்லுரி யாடையார்
  போர்வை யாளர் புகழரு ணைக்குளே
ஈந்த சூத நறுந்தழை யையனே
  யெங்கண் மாத ரெடுத்து மகிழ்ச்சியாய்
மோந்த போது துவண்டது மெய்யிலே
  மொய்த்த போது புலர்ந்தது கண்ணினீர்
பாய்ந்த போது நனைந்தது மீளவும்
  பார்த்த போது பசந்து மலர்ந்ததே. (73)
இரங்கல் மடக்கு.
எண்சீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
மலரித ழித்தொடைபான் மதியணி வித்தகனார்
  மலைமக ளற்புதனார் வயலரு ணைப்பதிசூழ்
குலவுமி டக்கழியே பலவுமி டக்கழியே
  குறவையி னக்கயலே யுறவுமெ னக்கயலே
சலமிகு முற்பலமே தளர்வது முற்பலமே
  சருவும னத்திடரே தழுவும னத்திடரே
இலைநெரி சற்பனையே யிவருரை சற்பனையே
  யினியப னித்திரையே யினியிலை நித்திரையே. (74)
சுவடுகண்டிரங்கல்
எழுசீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
நித்த னம்பனரு ணாச லத்திருவை
  நின்று தேடியுழ னெஞ்சமே
இத்த டஞ்சுரம டங்க வோவிதல
  தில்லை வேறுமர மிதனிடை
அத்தி நின்றவிட மவ்வி டஞ்சிலைகொ
  ளரசு நின்றவிட முவ்விடம்
எய்த்து ளஞ்சியிள வஞ்சி நின்றவிட
  மிவ்வி டஞ்சுவடு மேவுமே. (75)
மடல்விலக்கு - கலிவிருத்தம்.
ஏறுடை யண்ணலா ரேழை பாகனார்
ஆறணி சென்னியா ரருணை வெற்பரே
கூறொரு பெண்ணையே கூட வேண்டுவார்
வேறொரு பெண்ணையே வெட்டு வார்கொலோ. (76)
தவம்- எண்சீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
வாய்ந்தநல மருந்தருந்தி யரிய யோக
  வகைபுரிந்து வாயுவுள்ளே யடக்கினாலும்
காய்ந்தவிருப் பூசியிலே தவஞ்செய் தாலுங்
  காயம்வருந் திடுவதல்லாற் கதிவே றுண்டோ
ஆய்ந்ததிரு நீறணிந்தைந் தெழுத்தை யோதி
  யகமகிழ்ந்து சிவாகமத்தி னடைவை யோர்ந்தே
ஏய்ந்தருணா சலத்தைவலங் கொண்டா ரன்றோ
  விமைக்குமுன்னே கைலைமலை யிடங்கொண்டாரே. (77)
மாலையிரத்தல்.
அறுசீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
இலங்கியதிங்களெழுந்தாலெங்கண்மின்வெங்கதிரென்பாள்
கலங்கினளாயினுமன்னாள்கட்கமலங்குவியாவோ
துலங்கியவெங்கதிர்தானேசோணகிரிப்பெருமானே
அலங்கலையென்றுகொடுப்பாயன்றதுவெண்மதியாமே. (78)
நேரிசைவெண்பா.
ஆற்றுங்காற் கஞ்சத் தவர்தா மரைக்கண்ணர்
சாற்றுங்காற் கண்ணரவர் தந்தையார் - கீற்றுமதி
சூடும் பெருமானைச் சோணகிரி வித்தகனைத்
தேடுவதிங் கெப்படியோ சேர்ந்து. (79)
கட்டளைக்கலித்துறை.
சேணார்திருவுடைச்செல்வரைக்காணிற்சிறப்புச்செய்து
பேணாதவருமுண்டோபுவிமீதிற்பெருத்தெழுந்து
சோணாசலவடிவாய்வெளியாய்நின்றசோதிதனைக்
காணாதகண்ணனைச்சொல்வாசெந்தாமரைக்கண்ணனென்றே. (80)
தவம்-நேரிசைவெண்பா.
என்றுமதிக் கண்ணா ரிறைவரரு ணாபுரியில்
நின்றுதவம் புரியாய் நெஞ்சமே - பொன்றிரளான்
மாதரையா னாயிழைசூழ் மாதரையா னீதுவண்டு
மாதரையா னாமையென் சொல்வாய். (81)
இடைச்சியார்
எண்சீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
சொல்லாடி னுமக்கிரண்டு பசுவே யுண்டு
  சுமந்திடுபாற் கலசமுமத் துணையா மீதும்
அல்லாம லிடையின்மிக விளைத்துப் போனீ
  ராயிருந்து மிடைமதியோ வகந்தை தானோ
புல்லாரென் பணிதொடையா ரருணை நாட்டிற்
  பொதுவர்குல மங்கையரேபுவிமேற் கண்டோம்
எல்லாருந் தனித்தனியே டெடுத்தக் காலு
  மிரண்டுமுரை யாமலகன் றேகுவீரே. (82)
இதுவமது-கட்டளைக்கலித்துறை.
வீரனை நல்கி மகமூறு செய்த விடைக்கொடியார்
காரணி கண்ட ரருணா சலத்திற் கலசங்கொண்டு
மோரது கூறு மிடையின மானுக்கு முண்டகம்போல்
ஈரடி மெல்லினம் வல்லின மாகு மிருதனமே. (83)
தலைவி யிளமை யுணர்தல்.
அறுசீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
தடனாக மணிவெயிலும் பிறையுமிழு நிலவுமெதிர்
  சடில நாதன்
அடனாக நெடுஞ்சிலையா னசுரர்புர மெரித்தபிரா
  னருணை நாட்டில்
திடனாக மனையவரே தனஞ்சிறிதுங் காணாத
  சிறியார் தம்மைக்
கடனாக நீர்வினவிப் பிணைதேடி முறிதனையேன்
  கைக்கொண் டீரே. (84)
அறுசீரே்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
கையடைந்த மழுமானுஞ் செழுமானு முழைமானுங்
  கயலு மானும்
மையடைந்த விழிமானு முடனாக வருணேசா
  வருகு வாரே
மெய்யடைந்த நிறங்கருகி விழிகளும்பஞ் சடைந்துவர
  மிடற்றி னூடே
ஐயடைந்து படர்ந்துவர யமனடர்ந்து தொடர்ந்துவரு
  மன்று தானே. (85)
தலைவன்சொல்லல் - நேரிசைவெண்பா.
அண்ணா மலையா ரருணையனை யீரும்மைக்
கண்ணாலஞ் செய்தான் கமலத்தோன் - எண்ணா
திணைக்கோலஞ் செய்தமுலை யேந்திழையீ ரென்னை
மணக்கோலஞ் செய்தான் மதன். (86)
கொற்றியார்.
அறுசீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
மழலைமொழி யிசையாலுங் கொடும்பார்வை யதனாலு
  மயக்க மாகிச்
சழலும்விட ரரவமெலாம் படமெடுத்து முன்னாடத்
  தோன்றி னீரே
அழலுருவ மணிகரத்த ரருணகிரி வளநாட்டி
  லளிவந் தூதும்
குழலொருசற் றுண்டாயி னெப்படியோ வாட்டிடுவீர்
  கொற்றியாரே. (87)
இதுவமது - கொச்சகக்கலிப்பா.
ஆரிதழி சூடு மருணேசர் நன்னாட்டில்
வாரிறுகு கொங்கை மலைசுமக்குங் கொற்றீரே
பேரிருள்போய் நாமப் பிறைநிலவு கண்டொளிக்கக்
கூரியகண் ணில்லார் குழல்குறைந்தா ரென்பாரே. (88)
வஞ்சித்துறை.
பாணார் மொழிநிறை
சோணாசலரடி.
பேணா தவனுறு
மாணா நரகமே. (89)
வஞ்சி விருத்தம்.
நரக வாதையில் வன்பிறார்
தரணி மீதொரு கொன்பெறார்
சுரரு லோகமு மின்புறார்
அருணை நாயக ரன்பறார். (90)
வேற்றொலி வெண்டுறை.
அருணையதிருங்கழலராறணிசெஞ்சடையாளரரிவைபாகர்
கருணைநெடுங்கடலானபெருமானார்தாடொழுதார்கதியைநாடின்
மரணமிலாவிமையவர்தம்வானுலகமன்றே
பொருணிறையுநான்மறையோர்புகலுமத்தாட்பூவே. (91)
இரங்கல் - கலித்துறை.
பூவுண்டவிடையாளரருணாசலத்தீசர்பொன்மேருவாய்
பாவுண்டபுகழாளர்பிரியேனெனச்சொன்னபருவத்திலே
காவுண்டுகுயிலுண்டுமயிலுண்டுகிளியுண்டுகனிதூவுதே
மாவுண்டுகுருகுண்டுதிருகுண்டமனனுண்டுமறவாமலே. (92)
வெறிவிலக்கு- கலிவிருத்தம்.
வாங்குவில் லேர்நுதல் வயங்கு மாதரீர்
ஈங்கிவ ளொருவர்கை யேட்டை வாங்கினால்
ஆங்கடு வணிந்தவ ரருணை நாட்டிலே
நீங்கண்மை யழிப்பது நீதி யல்லவே. (93)
தலைவியைப்புகழ்தல் - கட்டளைக்கலித்துறை.
அள்ளற்கடல்விடநீங்காதகண்டரருணைவெற்பிற்
பிள்ளைப்பிறையுஞ்சிலையுமொப்பாநுதற்பேதைநல்லாள்
வள்ளற்குழைபொருகண்ணுக்குத்தோற்றம்பும்வாரிதியுங்
கள்ளக்கயலுமிராசியின்மீனுங்கடைப்பட்டதே. (94)
வலைச்சியார்
அறுசீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்
தேவியிட மகலாத வருணகிரி வளநாட்டிற்
  றெருக்க டோறும்
மாவிரத முனிவரெலா மயல்கூரக் கயல்கூறும்
  வலைச்சியாரே
காவிதிகழ் வாவியிலே மீன்பிடித்து வருவோரைக்
  கண்டோங் கண்டோர்
ஆவியெலாம் பிடித்திழுக்கு முமைப்போல வொருவரைக்கண்
  டறிந்திலோமே. (95)
வலைச்சியார்-நேரிசைவெண்பா
மேலா றணிசடையார் வீறருணை வீதியிலே
மாலாக வந்த வலைச்சியரே-காலா
மிருவரா லுங்காட்டும் யான்பிடிக்கக் காதல்
ஒருவரா லுந்தீரு மோ. (96)
செவிலி நற்றாயைத்தேற்றல்
எண்சீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்.
ஒருவ ராலுமணு காத நாளிலே
  வுயிரி னானவொரு கேள்வ னாசையால்
மருவி னாலுமென தாகு நாளையே
  வழிக டோறுமினி நாடி மீளவே
கருணை நீதிமனை பேணு மாதுடன்
  கடல்க ளேழுமலை யேழு மேழுமா
வருணா சூழுமுல கேழு மேழுமா
  வருணை நாதாசர பாவ தாரமே. (97)
அறுசீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்
தாரிலங்கு மறைமுடிவி னடித்தருளு மருணேசா
  தமது நாட்டில்
நாரியர்மேன் மனமகிழு மளியினங்கா ளொருவார்த்தை
  நவிலக் கேளீர்
ஏரிருக்குங் கைதையெலாஞ் சோறிருக்க நீரிருக்கு
  மிடங்கடோறும்
வேரிமலா்த் தேனிருக்க விவர்கூழை விரும்பிவந்தேன்
  விழுகின் றீரே. (98)
தலைவியவயவ வருமைசொல்லல்
அறுசீர்க்கழிநெடில் ஆசிரியவிருத்தம்
ஏமநெடுஞ் சிலைவளைத்த பெருமானா ரருணகிரி
  யிறைவர் நாட்டிற்
றாமரைமண் டபத்துறையு மடந்தையிடை யெழுதவென்
  றாற் றலைவ னாரே
மாமுயற்கொம் பினிலேறி விசும்பலரைப் பறித்துமுனம்
  வடிவி லாதோன்
ஆமைமயிர்க் கயிறுகொடு தொடுத்தணிந்த புதுமையிலு
  மருமையாமே. (99)
தலைவிகையுறை யேற்றமைசொல்லல்
கட்டளைக்கலிப்பா.
ஆர்வ லாக்கழி யாவர நல்குவா
  ரத்த னாரரு ணாபுரி வெற்பரே
பார்வி யப்புற நீர்தரு மாமணி
  பட்ட பாடு பகர்ந்திட லாகுமோ
கார்கு ழற்குமு டிமணி யாயிரு
  கண்கண் மீதுறு கண்மணி யாய்முலை
சேர்த லுற்றபொ ழுதிரு குன்றிலுஞ்
சென்று லாவுந் தினமணி யானதே. (100)
திருவருணைக்கலம்பகம் முற்றிற்று
-----------------------
This file was last updated on 5 March 2014.
Feel free to send the corrections to the Webmaster.