"இந்தி" பொது மொழியா?"
மறைமலை அடிகள்
inti potu moziyA?
of maRaimalai aTikaL
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our sincere thanks go to Mr. Murugavel of Bangalore and Mr. Anandhakumar Krishnan of Coimbatore
for their help in the preparation of this etext.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2014.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
"இந்தி" பொது மொழியா?"
மறைமலை அடிகள்
உள்ளடக்கம்
1. “இந்தி“ பொது மொழியா?
2. பழைய நாகரிக மொழிகள்
3. தமிழும் புதுமொழிகளும்
4. இந்தியர் தாய்மொழி கல்லாதவர்
5. ஆங்கிலம் போல் இந்தியும் அயல்மொழியே
6. இந்தி பொது மொழியன்று
7.இந்தி மொழி வரலாறு
8. இந்தி மொழி நூல்கள்
9. தமிழ்பை பொதுமொழியாக்குதலின் நன்மை
10. தமிழ் அல்லாத மொழிகள் வறியன புதியன
11. தமிழ் பொதுமொழியாகத காரணம்
12. ஆங்கிலமே பொதுமொழியாதற் குறித்து
1. "இந்தி" பொது மொழியா?
இவ் விந்திய நாட்டின் வடக்கே பல ஊர்களிற் பலவகை மாறுதல்களுடன் பேசப்படும் "இந்தி" மொழியை, இவ்விந்திய நாடு முழுதுமுள்ள மக்கள் எல்லாரும் பயின்று, அதனையே பொதுமொழியாக வழங்கிவர வேண்டுமென்று, இந்நாட்டின் நன்மைக்காக உழைக்கும் வட நாட்டறிஞர் பலருந் தென்னாட்டறிஞர் சிலரும் பேசியும் எழுதியும் வருவதுடன், ஆங்காங்கு இந்தி மொழிப் பள்ளிக்கூடங்களுந் திறப்பித்து நடத்தி வருகின்றார்கள். ஒரு நாட்டிலுள்ளார் நன்மைக்கென்று செய்ய எடுத்த ஒரு செயல், அந்நாட்டிலுள்ளார்க்கு நன்மை செய்யத்தக்க நலனும் ஆற்றலும் உடையதுதானா? அந் நாட்டவர் எத்தகைய நிலைமையில் இருக்கின்றனர்? அஃது அவர்க்கு எவ்வகையான நன்மையைச் செய்யும்? என முதலில் ஆராய்ந்துபார்த்துப் பின்னர் அதனைச்செய்தலே, உண்மையான அறிவும் உண்மையான தேயத்தொண்டும் வாய்ந்தார்க்கு இன்றியமையாத கடமையாகும். ஆகையால், இந்திமொழி நம் நாட்டவர்க்கு நன்மை செய்யத்தக்க நலனும் ஆற்றலும் உடையதுதானா என்பதனை முதற்கண் ஆராய்வாம்.
-----------
2. பழைய நாகரிக மொழிகள்
மக்களுள் ஒருவர் தமது கருத்தைப் பிறர் ஒருவர்க்கு இடர்ப்படாது தெரிவித்துக்கொள்ளுதற்குக் கருவியாதவுதே ஒரு மொழியின் முதற்பயனாகும். இந்நில வுலகத்தின் பல பிரிவுகளில் உள்ள பல்வகை மக்கட் பகுப்பினருந் தாந்தாங் கருதியவைகளைத் தம்மொடு தொடர்புடையார்க்கு அறிவித்தற்பொருட்டு வழங்கிவரும் மொழிகள் தொள்ளாயிரத்துத் தொண்ணுற்றொன்பஃது என்று மொழியாராய்ச்சிவல்ல அறிஞர்கள் கணக்கெடுத்திருக்கின்றார்கள். இங்ஙனம் ஒன்று குறையத் தோன்றிய ஆயிர மொழிகளிற், சிற்சிலவே பேசவும் எழுதவும் படுவன; அவற்றுள்ளும் ஒருசிலவே இலக்கண இலக்கிய நூல்கள் உடையன; அவற்றுள்ளும் மிகச்சிலவே மிகப்பழைய மொழிகளாய் உள்ளன. இம்மூவகை நலங்களும் வாய்ந்தவை: தமிழ் எகுபதியம், சாலடியம், ஈபுரு, சீனம், மெகுசிம், ஆரியம், கிரேக்கம், இலத்தீன், அராபி முதலிய சிற்சில மொழிகளேயாகும். இவை பண்டிருந்த நாகரிக மக்களாற் பேசவும் எழுதவும் பட்டதுடன், சிறந்த பல இலக்கண இலக்கிய நூல்களும் வாய்ந்தனவாய், எக்காலத்துந் தம்மைப் பயில்வார்க்கு அறிவையும் இன்பத்தையும் மேன்மேற் பெருக்கும் பெரும் பயனும் வாய்ந்த விழுமிய மொழிகளாகும். என்றாலும், இம்மிகப் பழிய மொழிகளில் தமிழ் ஒன்றைத் தவிர, மற்றைய வெல்லாம் இஞ்ஞான்றுள்ள எந்த மக்கட்குழுவினாராலும் பேசப்படாமல் இறந்தே போய்விட்டன. ஆகவே, இறந்த அப்பண்டை மொழிகளைப் பயில்வது, அவற்றின்கட் பண்மை ஆசிரியர்கள் இயற்றிவைத்த அரிய நூல்களைக் கற்றுப் பல பழம்பொருள்களையும் பல நுண் பொருள்களையும் அறிந்து அறிவுபெறுதற் குதவி செய்யுமெயல்லாமல், இஞ்ஞான்றுள்ள எந்த மக்கட் கூட்டத்துடனுங் கலந்துபேசி உறவாடி வாழ்க்கை செலுத்துதற்கு அது சிறிதும் உதவி செய்யாது.
--------
3. தமிழும் புதுமொழிகளும்
ஆனால், நமதருமைச் செந்தமிழ் மொழியோ மிகப்பழைய காலத்தேயிருந்து இன்றுகாறும் இனி வருங்காலத்தும் பலகோடி மக்களால் இந்தியா, இலங்கை, பர்மா, மலாய்நாடு, தென்னாப்பிரிக்கா முதலான பற்பல நாடுகளிலும் பேசவும் எழுதவும் பட்டு வழங்கிவருந் தனிப்பெரும் பண்டை உயிருடையமொழி ஒன்றேயாய் விளங்கி நிலவுவது; இலக்கண நூல்கள், ஒழுக்க நூல்கள், அற நூல்கள், பொருள் நூல்கள், காவிய நூல்கள், கதை நூல்கள், உரை நூல்கள், அறிவு நூல்கள், கடவுள் நூல்கள், முதலான மக்களின் இம்மை மறுமை வாழ்க்கைத்துறைகள் எல்லாவற்றையும் நன்கு விளக்கும் எல்லாவகையான நூல்களும் முன்னும் பின்னும் இருந்த சான்றோரால் நிரம்ப எழுதப்பெற்ற பெரும்வளம் வாய்ந்த்தாயும் இன்னும் வருங்காலத்தில் அவ்வளம் மேன்மேற் பெருகப் பெறுவதாயுந் துலங்குவது; இப்போது உலகம் எங்கனணும் வழங்கப் பெறும் மற்றை எல்லா மொழிகளுமோ தமிழுக்கு மிகமிகப் பிற்பட்ட காலத்தே அதாவது இற்றைக்கு நூறு அல்லது அறுநூறு ஆண்டுகளுக்குள்ளாகவே தோன்றி, அவற்றுள்ளுஞ் சிலவே இருநூறு முந்நூறு ஆண்டுகளாக இயற்றப்பட்டுவரும் இலக்கண இலக்கியக் கலைநூல்களை உடையனவாய் உலவுகின்றன. அதனால், இப்புதுமொழிகளின் புதுச் சிறப்புத் தமிழ்மொழியின் பழஞ்சிறப்புக்கு எட்டுணையும் ஒவ்வாததாயிருக்கின்றது. ஆதலால், தமது பழம்பெருஞ் சிறப்பினைச் சிறிதும் உணர்ந்து பாராது, அயலவரது புதுச்சிறப்பினைக் கண்டு மயங்கி அவர் வழிப்படுவதில் தலைகால் தெரியாமற் றடுமாறி நிற்கும் நம் இஞ்ஞான்றைத் தமிழ்மக்கள் தமது தாய்மொழியாகிய தமிழுக்குப் பண்டுதொட்டுள்ள ஏற்றத்தை ஆய்ந்தோய்ந்து பார்த்துத் தக்கதுசெய்யக் கடவராக!
-----------
4. இந்தியர் தாய்மொழி கல்லாதவர்
முன்னமே காட்டியபடி இத்தென்னாடு எங்கணுந் தமிழ்மொழி பேசும் மாந்தர்களே பெரும்பாலும் நிரம்பியிருக்கின்றனர். இவர்கள் எல்லாருந் தாம் பிறந்தநாள் தொட்டுத் தமிழைப்பேசித் தமிழிலேயே வாழ்க்கை செலுத்துகின்றவர்களாய் இருந்தாலும், தமிழைப் பிழையின்றி எழுதவோ, தமிழிலுள்ள அளவற்ற நூல்களிற் சிவற்றையாவது கற்றுத் தெளியவோ தெரியாதவர்கள்; தமது தாய்மொழியாயிற்றே என நினைந்து அதன் பொருட்டாகவாவது அதனைக் கற்கும் விருப்பமேனும் அவர்க்கு உளதோவென்றால் இதுதானுந் தினையளவும் இல்லை. கோடிக்கணக்கான இத்தமிழ் மக்களுள் ஆயிரவரில் ஒருவர்க்குக்கூடத் தமது பெயரை எழுதிக் கையெழுத்துச் செய்யத் தெரியாதென்றாற், கல்வியறிவில்லா இவ்வேழை மக்களின் இரங்கத்தக்க இன்னா நிலையைப்பற்றி வேறு சொல்ல வேண்டுவது யாது உளது?
ஆங்கில அரசு இந்நாட்டுக்கு வந்தபின், ஆங்கில மொழி கற்பிக்கும் பள்ளிக்கூடங்களுங் கல்லூரிகளும் இத்தென்னாடு வடநாடு எங்கணும் ஆயிரக்கணக்காகத் திறப்பிக்கப்பட்டு, ஆங்கிலமும் அதனுடன் சேர்த்துத் தமிழ் முதலான அவ்வத்தேய மொழிகளும் நம் இந்துமக்கட்குக் கற்பிக்கப்பட்டு வருகின்றன. ஆயினும், பொருள் வருவாய்க்குந் தற்பெருமை வாழ்க்கைக்குங் கருவியாய் இருத்தல் பற்றி, ஆங்கிலமொழியைப் பெருந்தொகை யினரான நம் மக்கள் பெரும்பொருட் செலவு செய்து விரும்பிக்க்றப்து போல, ஆங்கிலத்துடன் சேர்த்து ஒருநாளில் ஒரு சிறிது நேரமே கற்பிக்க்படுந் தமிழ் முதலான நாட்டுமொழிகளை விரும்பிக்கற்பார் ஒரு சிலரையேனும் எங்குங்காண்கிலோம். அதனால், ஆங்கிலப் பள்ளிக்கூடங்கள் கல்லூரிகளிற் கற்றுத் தேறிவரும் மாணாக்கர்கள் தமிழ் முதலான நாட்டுமொழிகளிற் பிழையின்றி எழுதவும் பேசவும் வன்மையில்லா தவர்களாகவும், நாட்டுமொழிகளில் உள்ள நூல்களிற் சிறந்த பயிற்சியில்லாதவர்களாகவும், அதனால், தாம் ஆங்கிலத்திற் கற்றறிந்த அரிய நூற்பொருள்களை ஆங்கிலந்தெரியாத தம் இனத்தார்க்குந் தம் நாட்டார்க்கும் எடுத்துச் சொல்லமாட்டாதவர்களாகவுந் தம் வயிறு கழுவும் வெற்றுயிர் வாழ்க்கையிலேயே வாணாட் கழித்து வருகின்றனர். ஆகவே, ஆங்கிலக் கல்விக்கழகங்களிற் கல்விபயின்று ஆகவே ஆங்கிலக் கல்விக்கழகங்களிற் கல்விபயின்று வெளிவரும் நம் இந்தியமக்களிற் பெரும்பாலார் பொருள் வருவாய்க்கு வேண்டுமளவு சிறிது ஆங்கிலம் பயின்றவராயும், அதனொடு சேர்த்துச் சிறிதே கற்பிக்கப்பட்ட தமிழ் முதலான மொழிகளைத் தப்புந் தவறுமாய்ப் பேச எழுதத் தெரிந்தவராயும் வெறும் போலி வாழ்க்கையிற் சில்லாண்டுகளே உயிர்வாழ்ந் தொழிதலால், இந்நாட்டின் கட்பெருந்தொகையினராய் வெற்றுயிர் வாழ்க்கை செலுத்துங் கல்லா மாந்தர்க்குந் தமிழ் முதலான நாட்டுமொழிகளை வருந்திக்கற்றும் வறியராய்க் கார்த்திகைப் பிறைபோல் ஆங்காங்குச்சிதறிச் சிற்சிலராய் காலங்கழிக்குந் தாய்மொழி கற்ற மாந்தர்க்கும் ஆங்கிலங் கற்றவரால் மிகுதியான பயன் ஏதும் விளைகின்றலது. இங்ஙனமாகத், தமிழ் முதலிய தாய்மொழிப் பயிற்சிக்கென்று தனிப்பள்ளிக்கூடங்களுந் தனிக்கல்லூரிகளும் இல்லாமையாற், பொருள்வருவாய் ஒன்றனையே கருதி நாடெங்குமுள்ள ஆங்கிலக் கல்விக் கழகங்களில் ஆங்கிலத்தையே விரும்பிக்கற்று, அதனுடன் சேர்த்துப் பயின்ற தாய்மொழிப் பயிற்சியில் விருப்பமுந் தேர்ச்சியும் இல்லாமல் அவையில்லாமையால் தம் நாட்டவரைக் கல்வியறிவில் மேலேற்றும் எண்ணமுஞ் சிறிதுமே யில்லாதார் தொகையே பெருகிவரும் இந்நாளில், இத் தமிழ்நாட்டிலும், பிறமொழி பேசும் பிறநாடுகளிலும் அயல்மொழியான இந்திமொழிப் பயிற்சியை நுழைத்தால் அதனாற் பயன் விளையுமோ என்பதனை அறிஞர்கள் ஆழ்ந்தாராய்ந்து பார்த்தல்வேண்டும்.
----------
5. ஆங்கிலம் போல் இந்தியும் அயல்மொழியே
இப்போது, அயல்மொழியான ஆங்கிலத்தைக் கற்றார் தொகை இந்நாட்டில் மிகுதியாயிருந்தும், அவரால் இந்நாட்டுக் கல்லாமாந்தர்க்குந் தாய்மொழி கற்றால் சிலர்க்கும் ஏதொரு பெரும் பயனும் விளையாதிருக்க, ஆங்கிலத்தையொப்பவே அயல் மொழியான இந்தியை மட்டும் இனி நம்மவரிற்சிலர் கற்றுவந்தாற் பெருங் கூட்டத்தினரான நம் ஏழை மக்கட்கு அவரால் நன்மை உண்டாகிவிடுமோ? ஆங்கிலங்கற்றவர் அம்மொழியைப் பேசினால் அதன் பொருளை யறியாமல் நம் ஏழை மக்கள் திகைத்து விழிப்பதுபோலவே, இந்தி மொழியைக் கற்றவர் நம் மக்களிடையே இந்தியிற் பேசினால் அவர் அதன் பொருளையறியாமல் திகைத்து விழிப்பரென்பதை நாஞ் சொல்லுதலும் வேண்டுமோ? ஆகவே, இவ்விந்திய தேயத்திற் பல நாடுகளிற் பலவேறு மொழிகளைப் பேசுவாரான பலவேறு மக்கட் குழுவினர்க்கும் உண்மையாகவே நன்மை செய்யும் எண்ணமும் நன் முயற்சியும் உடைய தொண்டர்கள் இருந்தால், அவர் அவ்வந் நாட்டினருந் தாந்தாம் பேசுந் தாய்மொழியையே நன்கு பயின்று அதன் வாயிலாக இம்மை மறுமை வாழ்க்கைக் குரிய பல துறைகளிலும் நல்லறிவு பெற்று முன்னேற்றம் அடையும்படி, உதவி செய்தல்வேண்டும். இங்ஙணஞ் செய்வதைவிட்டுத் தந் தாய்மொழியையே கல்லாத பேதைகளாய் வறுமையில் வருந்திக் காலங்கழிக்கும் நம் எளிய மக்களுக்கு, அவர் சிறிதும் அறியாத இந்தி மொழியைக் கட்டாயப் பயிற்சியாக வைக்கப் பெரிது முயல்வது, உமிக்குற்றிக் கைசலிப்பதாய் முடியுமேயல்லாது, அதனால் ஒரு சிறுபயன்றானும் விளயைமாட்டாது.
அற்றன்று, இவ்விந்தியதேயத்தின் பற்பல நாடுகளிலும் உயிர் வாழும் மாந்தர்கள் பற்பல மொழிகளைப் பேசுவாராய் இருத்தலின், இந்நாட்டவரெல்லாரும் ஒரு பொதுநன்மையின் பொருட்டு ஒருங்கு கூடிப் பேசவேண்டிய காலங்களில் இந்தியை அவரெல்லாரும் பொதுமொழியாய்க் கையாளுதலே நன்று; ஏனென்றால், இத்தென்னாட்டாரை விட வடநாட்டவர் தொகையே மிகுதியாயுள்ளது; அவ்வாறு மிகுதியாயுள்ள வட நாட்டவரிற் பெரும்பாலார் இந்தி மொழியையே பேசுதலின், அவரொடொப்பத் தென்னாட்டவரனை வரும் இந்தி மொழியைக் கற்றுப் பேசுதலே நன்மைக்கிடமாகுமென்று தேயத்தொண்டர் சிலர் கூறுகின்றனர். இவரது கூற்றுப் பொருந்தாதென்பது காட்டுவாம். ----------
6. இந்தி பொது மொழியன்று
இந்தி மொழியானது வடநாட்டவரெல்லாராலும் பொது மொழியாக வைத்துப் பேசப்படுகின்றதென்பது உண்மையாகாது. ஏனென்றால், அது வடக்கே பற்பல நாடுகளிற் பற்பல மாறுதல்களோடு பேசப்படுகின்றதே யல்லாமல், அஃதெங்கும் ஒரே வகையாகப் பேசப்படவில்லை. அங்கே ஒரு நாட்டவர் பேசும் இந்தியை, அதற்கடுத்த நாட்டிலுள்ளார் தெரிந்து கொள்ள மாட்டாதவாரயிருக்கின்றனர். இங்ஙனம் பலவகை மாறுதல்களுடன் பேசப்படும் இந்தி மொழியை ஆராய்ச்சி செய்த ஆசிரியர்கள் அதனை ‘மேல்நாட்டு இந்தி‘, ‘கீழ்நாட்டு இந்தி‘ ‘பிகாரி‘ என்னும் மூன்று பெரும் பிரிவுகளாகவும், அப்பெரும் பிரிவுகளினுள்ளே இன்னும் பல சிறு பிரிவுகளாகவும் பகுத்திருக்கின்றனர். கங்கை யாற்றுக்கு மேற்கே பஞ்சாப்பின் தென்கிழக்கில் மேட்டுப் பாங்கான ஊர்களிற் பேசப்படுவது ‘பங்காரு‘ எனவும், வட மதுரையிலும் அதனைச் சூழ்ந்த இடங்களிலும் பேசப்படுவது ‘பிரஜ் பாஷா‘ எனவும், கங்கைக்கும் யமுனை யாற்றுக்கும் இடையேயுள்ள நாடுகளின் தெற்கிற் பேசப்படுவது ‘கனோஜ்‘ எனவும், பந்தல் கண்டிலும் நருமதையாற்றையடுத்த இடங்களிலும் பேசப்படுவது ‘பந்தேலி‘ எனவும், தில்லி நகரத்திலும் அதனைச் சூழ்ந்த ஊர்களிலும் பேசப்படுவது ‘உருது‘ எனவும் வழங்கப் படுகின்றன. இவ்வாறு இந்தியாவின் வடமேற் பகுதிகளிற் பேசப்படும் இவ்வைந்து மொழிகளும் ‘மேல்நாட்டு இந்தி‘ என்னும் பெரும் பிரிவில் அடங்குவனவாகும்.
இனி, ‘கீழ்நாட்டு இந்தி‘ என்னும் பெரும் பிரிவில் அடங்குவன; ‘மைதிலி‘, போஜ்புரி‘, ‘மககி‘, என்னும் மொழிகளாகும். இம் மூன்றனுள் முதன்மை வாய்ந்தது, கங்கையாற்றின் வடக்கே மிதிலை நாட்டில் வழங்கும் ‘மைதிலி‘ என்னும் மொழியேயாகும். இப்போது இந்தி மொழி நூல்களென வழங்கப்படுவனவெல்லாம் இந்த மைதிலி மொழியிலே தான் எழுதப்பட்டிருக்கின்றன. இன்னும் இந்தி மொழியின் பிரிவுகளாக ஆங்காங்கு வடநாட்டின்கட் பேசப்படுஞ் சிறு சிறு மொழிகள் மேலும் பற்பல உள. இவ்வாறு இந்தி மொழியின் பல பிரிவுகளாக வழங்கும் பற்பல மொழிகளைப் பேசும் பற்பல நாடுகளில் உள்ளாரும், ஒரு நாட்டவர் மொழியை மற்ற நாட்டவர் அறியாராய் உயிர் வாழ்ந்து வருதலின், இந்தி அவ்ரெல்லார்க்குந் தெரிந்த பொது மொழி என்றுரைப் பாருரை எங்ஙனம் பொருந்தும்? எங்ஙனம் உண்மையாகும்? இங்ஙனம் பற்பல பற்பல நாடுகளில் பற்பல மாறுதல்களுடன் வழங்கும் பலவேறு இந்தி மொழிகளில் எதனை இத்தென்னாட்டவர் கற்றுத் தேர்வது? எதனை இவர் கற்றாலும் அதனுதவி கொண்டு இவர் வடநாட்டவரெல்லாரோடும் பேசுதல் இயலுமா? இயலாதே. மேற்குறித்த இந்தி மொழிகளேயன்றிச், ‘சிந்தி‘, ‘லந்தி‘, ‘பஞ்சாபி‘, ‘குஜராத்‘, ‘ராஜபுதானி‘, ‘குமோனி‘, ‘கடுவாலி‘, ‘நேபாலி‘, ‘உரியா‘, ‘பங்காளி‘, ‘மராட்டி‘, ‘சிணா‘, ‘காஸ்மீரி‘, ‘கவர்படி‘, முதலான இன்னும் எத்தனையோ பல மொழிகளாலும் வடக்கே பற்பல நாட்டின்கணுள்ள பற்பல மாந்தர்களாலும் பேசப்பட்டு வருகின்றன. இம் மக்கட் பெருங்கூட்டத்துடனெல்லாம், இந்தி மொழியில் ஒன்றை மட்டுந் தெரிந்த தென்னாட்டவர் உரையாடி அளவளாவுதல் கூடுமோ? சிறிதுங் கூடாதே. வடநாட்டவரிலேயே இந்தி மொழியை அறியாமற் பலதிறப்பட்ட பன்மொழிகளை வழங்கும் மக்கட் கூட்டம் பலவாயிருக்க, இத்தென்னாட்டவர் மட்டும் இந்தி மொழியைக் கற்றுப் பேசுதலால் யாது பயன் விளைந்திடக் கூடும்? இவ் வியல்புகளை யெல்லாம் நடுநின்று எண்ணிப் பார்க்கவல்ல அறிஞர்க்கு, இத் தென்னாட்டவர்கள் தமக்கு எவ்வகையிலும் பயன்படாத்துந் தெரியாததுமான இந்தி மொழிகளில் ஒன்றை வருந்திக் கற்றலால் வீண் காலக் கழிவும் வீண் உழைப்பும் வீண் செலவும் உண்டாகுமே யல்லாமல் வேறேதொரு நன்மையும் உண்டாகதென்பது நன்கு விளங்கும். இனி இத்தென்னாடு முழுதும், இலங்கை, பர்மா, மலாய்நாடு, தென்னாப்பிரிக்கா முதலான அயல் நாடுகளிலும் பெருந்தொகையினராய் இருக்குந் தமிழ் மக்கள் எல்லாரும் பேசுந் தமிழ் மொழி ஒரே தன்மையினதாய், இந்நாட்டவரெல்லாரும் ஒருவரோடொருவர் உரையாடி அளவுளாவுதற் கிசைந்த ஒரே நிலையினதாய் வழங்கா நிற்க, வடநாட்டின்கட் பேசப்படும் இந்தி, உருது முதலான மொழிகளும் அவற்றின் உட்பிரிவான பல சிறு சிறு மொழிகளும் பலப்பல மாறுதல் வாய்ந்தனவாய், ஒருவர் பேசுவது மற்றொருவர்க்குப் புலனாகதபடி திரிபுற்றுக் கிடப்பது ஏனென்றால், அவ்விருவேறியல்புகளையுஞ் சிறிது விளக்குவாம்.
தமிழ் மொழி பேசுந் தமிழ் மக்கள் விந்திய மலைக்குத் தெற்கேயுள்ள இத்தென்னாட்டில், இதற்குத் தெற்கேயிருந்து பல்லாயிர ஆண்டுகளுக்கு முன்னே கடலுள் அமிழ்ந்திப்போன குமரிநாட்டிலும் நாகரிகத்திற் சிறந்தோங்கிய வாழ்க்கையில் இருந்தவர்கள். இற்றைக்கு ஐயாயிர ஆண்டுகளுக்கு முன்னே தொட்டுத் தமிழ் மொழியை நன்கு கற்ற ஆசிரியர்கள்: முதுகுருகு, முதுநாரை, களரியாவிரை, பெரும் பரிபாடல்இ தொல்காப்பியம், பெருங்கலித் தொகை, குருகு, வெண்டாளி, வியாழமாலை, முத்தொள்ளாயிரம், நற்றிணை, நெடுந்தொகை, அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, குறுந்தொகை, சிற்றிசை, பேரிசை, பதிற்றுப்பத்து, எழுபதுபரிபாடல், குறுங்கலி, திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, திருவாசகம், திருக்கோவையார், சீவகசிந்தாமண, திருத்தொண்டர் புராணம், சிவஞானபோதம் முதலான அரும்பெருந் தமிழ் இலக்கண இலக்கிய வீட்டு நூல்களும், அவை தமக்குச் சொற்பொருள் நுட்பமுஞ் சுவையும் மலிந்த சிற்றுரை பேருரைகளும் இயற்றி, தமிழ் மாறா நாகரிக இளமை வளத்தில் இன்றுகாறும் இனிது வழங்கச் செய்து வருதலால், அதனை வழங்குந் தமிழ் மக்களெல்லாரும் ஒருவர் ஒருவர்க்கு நெடுந்தொலைவில் இருப்பினும் இதனாற் பேசியும் எழுதியும் அளவளாவி ஓரிடத்திலுள்ள ஒரே மக்களினம்போல் உயிர் வாழ்ந்து வருகின்றனர்.
-------------
7. இந்தி மொழி வரலாறு
மற்று, இந்தி, உருது முதலான வடநாட்டு மொழிகளோ தமிழைப்போற் பழமையானவைகள் அல்ல; மகமதிய மதத்தவரான மொகலாய அரசர்கள் வட நாட்டின்மேற் படையெடுத்துப் போந்து, ‘தில்லிப்‘ பட்டினத்தைத் தலைநகராகக் கைக்கொண்டு, அதன் கண், அரசு வீற்றிருக்கத் துவங்கிய பின்னரே அம்மொழிகள் தோன்றியனவாகும். ‘மகமது கோரி‘ என்னுந் துலுக்க மன்னன் வடநாட்டின் மேற் படையெடுத்துப் போந்து இந்திய அரசர்களை வென்று அதனைக் கைக்கொண்டது கி.பி. 1175 – ஆம் ஆண்டின் கண்ணதாகும்; அதாவது இற்றைக்கு773 ஆண்டுகட்கு முன்னதாகும். அதுமுதல் துலுக்க மன்னரது ஆட்சியானது நாளுக்கு நாள் வேரூன்றி வரலாயிற்று. கடைசியாக ‘மகமது பின் துக்ளக்‘ என்னும் மன்னனால் கி.பி. 1340 – ஆம் ஆண்டில் துலுக்க அரசு தில்லி நகரில் நிலைபெற்றது. அக்காலத்தில் தில்லி நகரிலும், அதனைச் சூழ்ந்த இடங்களிலும் பிராகிருதச் சிதைவான ஒரு மொழி வழங்கிக் கொண்டிருந்தது. அப்போது அது வெறும் பேச்சு வழக்கில் மட்டும் இருந்த்தல்லாமல், நூல் வழக்கிற் சிறிதும் இல்லை. ஏனென்றால், அது நாகரிமில்லா மக்களாற் பேசப்பட்டுப் பலப்பல மாறுதல்கள் அடைந்த வண்ணமாய் நடைபெற்று வந்ததனாலும், அறிவுடையோர் தோன்றி அம்மொழியைச் சீர்திருத்தி இலக்கண இலக்கிய நூல்களியற்றி எழுத்து வடிவில் அதனை நிலைப்படுத்தி வையாத்தனாலும் அதற்கு அந்நாளில் நூல்வழக்கு இலதாயிற்று. தில்லியில் துலுக்கரசு நிலைபெற்றபின், அவர் கொணர்ந்த அராபிமொழி பாரசிக மொழிச் சொற்கள் அம்மொழியின் கண் ஏராளமாய்க் கலக்கப் பெற்று, அவரால் அஃது ‘உருது‘ எனவும் பெயர் பெறலாயிற்று. ‘உருது‘ என்னுஞ் சொல்லுக்குப் பொருள் பாசறை, பாடி அல்லது படைவீடு என்பதேயாகும். எனவே, துலுக்கமன்னர் தாங்கைக் கொண்ட நகரையடுத்து முன்னமே பேசப்பட்டு வந்த பிராகிருதச் சிதைவான ஒரு மொழியில், தாங் கொணர்ந்த அராபிச் சொற்கள் பாரசிகச் சொற்களையும் மிகக் கலந்து தமது பாசறையிருப்பின்கட் பேசயி கலவை மொழியே அவரது காலநதொட்டு ‘உருது‘ மொழியெனப் பெயர் பெற்று நடைபெறலாயிற்று. இதனால் ‘உருது‘ என்பது துலுக்க மன்னரது படைவீட்டு மொழியாய் முதன் முதற் றோன்றி நடைபெற்ற வரலாறு நன்கு விளங்கா நிற்கும்.
அதன் பின், நூல் வழக்குடையதாய் இஞ்ஞான்று வழங்கும் இந்தி மொழியானது ‘ல்ல்லு ஜிலால்‘ என்பவரால் உருது மொழியினின்றும் பிரித்துச் சீர் திருத்தஞ் செய்யப்பட்டதொன்றாகும். இதற்கு முன் உள்ளதான பிராகிருதஞ் சிதைவு மொழியிற் கலந்த பாரசிக அராபிச் சொற்களை அறவேயொழித்து; சமஸ்கிருத மொழிச் சொற்களை மிகுதியாய் எடுத்துச் சேர்த்து அவர் இந்தி மொழியைப் புதிதாய் உண்டாக்கினார். இங்ஙனம் அவரால் ஆக்கப்பட்ட இந்தி மொழிக்கும், இதற்கு முன்னே தொட்டு நாகரிகமில்லா வடநாட்டு மக்களால் ஆங்காங்குப் பேசப்படும் பிராகிருதச் சிதைவான இந்தி மொழிக்கும் வேறுபாடு மிகுதியாய் இருக்கின்றது; அதற்குக் காரணம் என்னென்றால் முன்னையது வடசொற்கலப்பு நிரம்ப உடையதாயிருத்தலும், பின்னையது அஃதின்றிப் பிராகிருத மொழிகளின் சிதைவாயிருத்தலுமே யாமென்பதனை நன்கு நினைவிற் பதித்தல் வேண்டும். ஆகவே, வடசொற் கலப்பினால் ஆக்கப்பட்டுச் சிறிது காலமாக இப்போது நூல் வழக்கிற் கொணரப் பட்டிருக்கும் இந்தி மொழியை நம் தென்னாட்டவர் கற்றுத் தெரிந்து கொள்வதனால், இவர்கள் வடநாட்டவரெல்லாருடனும் பேசி அளவளாவிவிடக்கூடும் என்று சிலர் மடிகட்டி நின்று கூறுவது நம்மனோரை ஏமாற்றும் பொய்யுரையேயாம்.
----------
8. இந்தி மொழி நூல்கள்
இனி, மேற்காட்டிய கலவைப் புதுமொழியான இந்தியில் நூல்கள் உண்டான வரலாற்றைச் சிறிது விளக்குவாம். கி.பி. 1400- ஆம் ஆண்டு முதல் 1470 – ஆம் ஆண்டு வரையில், அதாவது இற்றைக்கு 478 ஆண்டுகளுக்கு முன்னிருந்த ‘இராமனந்தர்‘ எனப்பெயரிய ஒரு துறவி இராமனையே முழுமுதற் கடவுளாக வைத்து வழிபடல் வேண்டுமென வற்புறுத்திச் சொல்லி வடநாட்டின்கட் பல இடங்களிலும் இராம வணக்கத்தைப் பரவச்செய்து வந்தார். கல்வியறிவில்லா வடநாட்டுப் பொது மக்கட்கு, இராமன் தன் தந்தையின் கட்டளையால் அரசு துறந்து கானகம் ஏகி, அங்குந் தன் மனையாளைப் பறிகொடுத்து அடைந்த துயரக் கதை மிக்கதொரு மனவுருக்கத்தை யுண்டாக்கி, அவரையெல்லாம் எளிதிலே இராம வணக்கத்தின் பாற்படுப்பித்து. இராமனந்தர் இராமன் மேற் பாடிய பாடல்கள்தாம் முதன் முதல் இந்தி மொழியில் உண்டானவை; அதனால் அவருடைய பாடல்கள் அடங்கிய இந்திமொழி நூல் ‘ஆதிகிரந்தம்‘ என வழங்கப்படுகின்றது.
இனி, இராமனந்தர்க்குப்பின், அவர்தம் மாணாக்கருள் ஒருவரான ‘கபீர்தாசர்‘ என்பவர் இற்றைக்கு 441 ஆண்டுகளுக்குமுன் காசிநகரில் தோன்றினார். நெசவு தொழில் செய்யும் ஒருமகமதிய குடும்பத்தில் இவர் பிறந்தவரென ஒரு சாரரும். ஒருபார்ப்பனக் கைம் பெண்ணுக்கு இவர் பிள்ளையாய்ப் பிறந்து அவறாற் கைவிடப்பட்டுப் பிறகு ‘நீரு‘ எனப் பெயரிய ஒரு மகதிய நெசவுகாரரால் இவர் எடுத்து வளர்க்கப்பட்டனரென மற்றொரு சாரருங் கூறுகின்றனர். இவருங், கடவுளை இராமன், அரி, கோவிந்தன், அல்லா என்னும் பெயர்களாற் பாடி வழுத்தினர். ஆனாலும், கடவுள் பலபிறவிகள் (அவதாரங்கள்) எடுத்தாரெனக் கூறுவது அடாதென்றும், இறைவனைக் கல், செம்பு, கட்டைவடிவில் வைத்து வணங்குதல் பெருங்குற்றமாகுமென்றும், இந்து சமயக் கிரியைகளுஞ் சடங்குகளும் பொருளற்ற புன் செயல்களாகுமென்றும் இவர் தம்முடைய பாடல்களில் மிகவும் கடுமையாக மறுத்துப் பாடியிருக்கின்றார். இந்தி மொழியின் ஒரு பிரிவான ‘அவதி‘ மொழியில் இவருடைய பாடல்கள் பாடப்பட்டிருக்கின்றன. இந்தியின் மற்றொரு பிரிவான ‘மைதிலி‘ மொழியைக் கற்பவர்கள், ‘அவதி‘ மொழியிலிருக்குங் கபீர்தாசரின் பாடல்களை எளிதிலே அறிந்து கொள்ளல் இயலாது. தாம் இயற்றிய ‘விப்ரமதீசி‘ என்னுஞ் செய்யுள் நூலிற் கபீர்தாசர் பார்ப்பனருடைய கொள்கைகளை மிகுகடுமையுடன் தாக்கிமறுத்திருக்கின்றார். கபீர்தாசர் இந்தி மொழியில் இயற்றிய செய்யுள் நூல்கள் பற்பல. இவர் இறந்தபின், இவர்தம் மாணாக்கர் இயற்றிய நூல்களும் இவரது பெயரால் வழங்கப் படுகின்றன. கபீர்தாசருடைய பாடல்கள் இந்தி மொழியில் உண்டான பிறகுதான், அதாவது சென்ற நானூறு ஆண்டுகளாகத்தாம் இந்திமொழியின் ஒருபிரிவுக்கு ஓர் ஏற்ற முண்டாயிற்று.
இனிக், கபீர்தாசருக்குப்பின், அவர்தம் மாணாக்கரான ‘நானக்‘ என்பவர் ‘சீக்கிய மத்த்தைப்‘ பஞ்சாபு தேயத்தில் உண்டாக்கினார். இவருடைய பாடல்கள், பஞ்சாபியும் இந்தியுங் கலந்த ஒரு கலப்பு மொழியிற் பாடப்பட்டிருத்தலால், இந்தியைப் பயிலும் நம் நாட்டவர் இவருடைய பாடல்களையும் எளிதிலே அறிந்து கொள்ளல் இயலாது.
இனி, இற்றைக்கு 491 ஆண்டுகளுக்கு முன், தர்பங்கா மாகாணத்தின் கண்ணதான ‘பிசபி‘ என்னும் ஊரில், ‘வித்யாபதி தாகூர்‘ என்னும் பெயர் பூண்ட வைணவர் ஒருவர் தோன்றிக், கிருஷ்ண மத்த்தை உண்டாக்கி, அதனை வடகீழ் நாடுகளில் மிகவும் பரவச் செய்தனர். இந்தி மொழியின் மற்றொரு பிரிவான ‘மைதிலி‘ மொழியில் இவர், கண்ணனுக்கும் அவன் காதலி இராதைக்கும் இடையே நிகழ்ந்த காதல் நிகழ்ச்சிகளை விரித்துப் பல பாடல்களைப் பாடியிருக்கின்றனர். இப்பாடல்களையே பின்னர்ப் ‘பங்காளி‘ மொழியிற் ‘சைதன்யா‘ என்பார் மொழி பெயர்த்து, அவற்றை வங்காள தேயமெங்கும் பரவ்வைத்தனர். இதுகொண்டு, இந்திமொழி வங்காள தேயத்திலுள்ளார்க்குள் வழங்காமை அறியப் படுகின்றதன்றோ? வடநாட்டிற் பெரும்பரப்பினதான வங்காள தேயத்தார்க்கே தெரியாததான இந்தி மொழியைத் தென்னாட்டிலுள்ளவர்கள் பயின்றாலும், இவர்கள் வங்காள மக்களுடன் அதிற்பேசி உறவாட முடியாதன்றோ?
இன்னும் இங்ஙனமே கபீர்தாசர் காலம்முதல், அதாவது சென்ற 500 ஆண்டுகளாக வடநாட்டின் கட்டோன்றி சில மொழிகளில் உயர்த்துப்பாடி அவற்றை வடநாடுகளிற் பரவச் செய்த இந்திமொழிப் புலவர்களின் வரலாறுகளையெல்லாம் எடுத்துரைக்கப் புகுந்தால் இக்கட்டுரை மிக விரியும். ஆதலால், இதுவரையிற் கூறியது கொண்டு, இந்திமொழியானது 500 ஆண்டுகளுக்கு முன் நூல்வழக்கில்லாமற், கல்வியறிவில்லா வடநாட்டு மக்களால் அந்நாட்டின் பல பகுதிகளிலும் பலவாறு திரித்துப் பேசப்பட்டு, ஒரு பாலார் பேசும் மொழி மற்றொரு பாலர்க்குத் தெரியாத வண்ணம் வழங்கினமையால், அஃது இஞ்ஞான்றுங்கூடப் பற்பல மொழிகளாகவே பிரிந்துவழங்குகன்றதென்பதும், அதனால் இந்தியை வட நாட்டவர் எல்லார்க்கும் பொது மொழியெனக் கூறுவாருரை மெய்யாகதென்பதும், ஆகவே இத்தென்னாட்டவர் இந்தியைப் பயிலுதலால் அதனுதவி கொண்டு வடநாட்டவரெல்லாரோடும் உரையாடி உறவாடல் இயலாதென்பதும் நன்கு விளங்கா நிற்கும்.
அஃதுண்மையே யாயினுங், கபீர்தாசர் முதலான புலவர்கள் பாடியிருக்கும் பாடல்களைப் படித்து இன்புறுதற்காவது, இந்திமொழிப் பயிற்சி உதவி செய்யுமன்றோ வெனின்; தமிழ்மொழியிலுள்ள பழைய இலக்கியங்களைப் பயினறறியாதார்க்கு இந்தி மொழிப் புலவர்கள் பாடிய பாட்டுகள் இனிகுமேனுங், கலித்தொகை, திருக்குறள், சிலப்பதிகாரம், மணிமேகலை, திருவாசகம், திருக்கோவையார், தேவாரம், பெரியபுராணம், சிவஞானபோதம் முதலிய ஒப்புயர்வில்லா நூல்களைப் பயின்று அவற்றின் அமிழ்தன்ன சுவையில் ஊறப்பெற்ற மெய்யறிவினார்க்கு, அவ்விந்தி மொழிப்பாட்டுகள் இனியா. மேலும், வடநாட்டு இந்தி முதலான மொழிகளின் பாடல்களிற் பெரும்பாலன, நம் போற் பல பிறவிகள் எடுத்துழன்று இறந்து போன சிற்றரசர்களான இராமன், கிருஷ்ணன், பலராமன், வசுதேவன் முதலானவர்களைக் கடவுளாகவைத்து உயர்த்துப்பாடியிருத்தலால், அவை பிறப்பு இறப்பு இல்லா முழுமுதற் கடவுளாகிய எல்லாம் வல்ல சிவத்தை மக்கள் அறிந்து வழிபட்டுத் தமது பிறவியைத் தூய்மை செய்து உய்தற்குதவி செய்யாமையோடு, அவை உண்மைச் சிவ வழிபாட்டை அவர் அடைய வொட்டாமலுந் தடை செய்து மக்கட் பிறவியைப் பாழாக்குகின்றன. மற்று, மேற்காட்டிய தமிழ் நூல்களோ மெய்யான ஒரு தெய்வம் சிவமேயாதலை விளங்கத் தெருட்டி மக்களுக்கு மெய்யறிவையும் மெய்யன்பையும் ஊட்டி, அவர் இம்மையிலும் மறுமையிலும் அழியாப்பேரின்பத்திற் றிளைத்திருக்குமாறு செய்து, அவரது பிறவியைப் புனிதமாக்குத் திறத்தன. அதுவல்லாமலும், இந்தி முதலான வடநாட்டு மொழிகள், தமிழைப்போற் பழையன அல்லாமையாலும்; அவற்றை வழங்கும் மக்கள், பழமை தொட்டு நாகரிக வாழ்க்கையில் வாழ்ந்த தமிழ் மக்களைப்போல், நாகரிக வாழ்வு வாயாதவர்களாகையாலும்; சென்ற 400 அல்லது 500 ஆண்டுகளாகத் தோன்றிய வடநாட்டுப் புலவர்கள் பலரும், பண்டுதொட்டுத் தனித்த பேரறிவுவாய்ந்த தமிழ்ப் பெரும் புலவர் போலாது, சமஸ்கிருத புராணப் பொயக்கதைகளை நம்பி அவற்றின் வழிச்சென்ற மயக்க வறிவனராகையாலும்; உயிர்க்கொலை, ஊன் உணவு, கட்குடி, பல சிறுதெய்வ வணக்கம், பலசாதி வேற்றுமை முதலான பொல்லா ஒழுக்கங்களை அகத்தடக்கிய ஆரிய நுஹல்நெறிகளைத் தழுவிய வடவர், அவற்றை விலக்கி அருளொழுக்கத்தையும் ஒரே முழுமுதற்கடவுள் வணக்கத்தையும் வற்புறுத்தும் அருந்தமிழ் நூல்நெறிகளைத் தழுவாமையாலும்; அவருடைய மொழிகளையும் அவற்றின்கட் புதிது தோன்றிய நூல்களையும் நந்தமிழ்மக்கள் பயிலுதலால், இவர்கள் ஏதொருநலனும் எய்தார் என்பது திண்ணம்.
இனி, இந்திமொழிகள் நாலுகோடி மக்களாற் பேசப்படுதலாகிய தொகை மிகுதியை வற்புறுத்திக் காட்டுவார்க்கு வங்காள மொழி ஐந்து கோடி மக்களாலுந், தமிழுந் தமிழோடினமான மொழிகளும் ஆறுகோடி மக்களாலும், பேசப்படும் பெருந்தொகை எடுத்துக் காட்டப்படும். இந்தியைப் பொதுமொழியாக்கல் வேண்டுமென்று ஒரு சாரார் கூறுவரேல், அதனினும் பெருந்தொகையனிரான மக்களாற் பேசப்படும் ‘வங்காளமொழி‘ யைப் பொதுமொழியாக்கல் வேண்டுமென்று வங்காளரும் இவ்விந்திய நாட்டின் நால் எல்லை வரையிலும் பரவியிருக்குந் திராவிட மக்கள் எல்லோர்க்கும் முதன் மொழியாவதும், இந்தியாவில் மட்டுமேயன்றி இலங்கை, பர்மா, மலாய், தென் ஆப்பிரிக்கா முதலான நாடுகளிற் குடியேறி வாணிக வாழ்க்கையிற் சிறந்தாராயிருக்குந் தமிழ் மக்கள் அனைவராலும் வழங்கப்படுவதும் ஆன தமிழையே பொதுமொழியாகப் பயில்ல் வேண்டுமென நந்தமிழ் மக்களும் வலியுறுத்துவரல்லரோ?
---------
9. தமிழ்பை பொதுமொழியாக்குதலின் நன்மை
இனி, இவ்விந்திய நாட்டுக்கு மிகப்பழைய மொழிகளாய், அதாவது இற்றைக்கு 5000 ஆண்டுகளுக்கு முன்னே தொட்டு பயிலப்படுஞ் சிறந்த நாகரிக மொழிகளாய்த் திகழ்வன திமிழுஞ் சமஸ்கிருதம் பொது மக்களாற் பேசப்படாமற் பல்லாயிர ஆண்டுகட்கு முன்னரே இறந்துபோயிற்று. மற்றுத், தமிழ் மொழியோ ஐயாயிர ஆண்டுகளுக்கு முன்னே தொட்டு இயல் இசை நாடக இலக்கணங்களும், மக்கள் வாழ்க்கையின் பல துறைகளிலும் அறிவை விளக்கி இன்பத்தை ஊட்டும் அரியபெரியபல இயற்றமிழ் இலக்கிய நூல்களும் ஆயிரக்கணக்காக உடையதாய், இன்றுகாறும் பல கோடிமக்களாற் பேசவும் எழுதவும் பயிற்சி செய்யவும் படும் உயிருடை நன் மொழியாய் உலவிவருகின்றது. தமிழிலுள்ள பழைய நூல்களெல்லாம் அருளொழுக்கத்தையும் ஒரே முழுமுதற் கடவுள் வணக்கத்தையும் அறிவுறுத்தி உயிர்க்கொலை ஊனுணவு கட்குடி பலசிறு தெய்வ வணக்கம் பலசாதி வேற்றுமை முதலான தீயவொழுக்கங்களைக் கடிந்து விலக்குகின்றன. இத்தீய வினைகளைச் செய்யுமாறு ஏவிப் பொய்யும் புளுகும் புகலும் ஆரிய நூல்களைப்போல்வன பழந்தமிழில் ஒன்றுதானும் இல்லை; பிறந்து துன்புற்று இறந்தொழிந்த மக்களை யெல்லாங் கடவுளாக்கி, அவர் செய்யதவற்றைச் செய்தனவாகப் புனைந்து கட்டிப் பொய்யாய் உரைக்கும் வடமொழிப் புராண கதைகளைப் போல்வன பழந்தமிழில் ஒன்றுதானும் இல்லை. பழந்தமிழிலுள்ள நூல் களெல்லாம் உள்ளவற்றை உள்ளவாறே நுவல்வன; மக்கள் தம் மனமொழி மெய்களால் நினைப்பனவுஞ் சொல் வனவுஞ் செய்வனவுமெல்லாந் தூயனவாய் இருக்க வேண்டுமென்று வற்புறுத்துவன; மக்கள் வாழ்க்கையானது அன்பையும் அறத்தையும் இரண்டு கண்களாகக்கொண்டு, ஒரு தெய்வ வழிபாடாகிய உயிருடன் கூடி உலவ வேண்டுமென உயர்த்துக்கூறுவன. பிற் காலத்தில் வடசொற்கலப்பும் வடநூற் பொய் கொள்கைகளுங் கதைகளும் விரவிய மொழிபெயர்ப்பு நூல்கள் தமிழில் அளவின்றிப் பெருகித் தமிழ்மக்களை அறியாமையிலும் பொய்யிலும் பல தீவினைகளிலும் படுப்பித்திருந்தாலும், விழுமிய பண்டைத் தமிழ் நூற்பயிற்சியுஞ் சைவசித்தாந்த மெய்யுணர்வுந் திரும்பப் பரவத்துவங்கிய பின், ஆரியப் பொய்ந்நூல் வலிதேய்ந்துவருகின்றது. அதனுடன் மேல் நாட்டு வெள்ளைக்கார மெய்யறிவினரின் அரியபெரிய ஆராய்ச்சிகளும் ஆங்கில மொழிப்பயிற்சியின் வாயிலாக இவ்விந்திய நாடெங்கும் பரவிவருவதும், ஆரிய நூற்பொய்ம்மை விரைந்து தேய்தற்குப் பெரிதுந் துணை செய்து வருகின்றது. இவைகளையெல்லாம் நடுநின்று நோக்கவல்ல உண்மைத் தேயத் தொண்டர்கள் உளராயின், இவ்விந்திய நாட்டுக்கு மிகப்பழைய மொழியாய் இருப்பதுடன், இன்றுகாறும் பல கோடி மக்களாற் பேசப்பட்டுவரும் உயிருடை மொழியாயும், இவ் விந்திய மக்களை எல்லாத் துறைகளிலும் மேலேற்றத்தக்க பல சீரிய நூல்களை உடையதாயும் உள்ள தமிழ்மொழியையே இவ்விந்திய தேயம் முழுமைக்கும் பொதுமொழியாக்க அவர் முன்வந்து முயல்ல் வேண்டும். மேலும் தமிழ் மொழி வழங்குந் தமிழ்மக்கள் இத்தென்னாட்டில் மட்டுமேயன்றி நடுநாட்டின்கட் பெங்களூர், மைசூர், சிகந்தராபாக்கம் முதலியவற்றிலும், மேற்கே புனா, பம்பாய் முதலிய இடங்களிலும், வடக்கே கல்கத்தா, காசி முதலான நகர்களிலும், கிழக்கே காக்கிநாடா, நெல்லூர் முதலான ஊர்களிலும் பெருந் தொகையினராய்க் குடியேறியிருந்து வாணிவாழ்க்கையிற் சிறந்து வாழ்கின்றனர். தமிழ்மக்கள் இவ்விந்திய தேயத்தின் மட்டுமேயன்றி, இதற்கு அப்பாலுள்ள எல்லாத் தேயங்களிலும் போய் வைகி வாழ்ந்து வருவதும் முன்னமேகாட்டினாம். இங்ஙனம் எல்லாவகையாலுஞ் சிறந்த தமிழ்மொழி இவ்விந்தியநாடு முழுமைக்கும் பொதுமொழியாதற்குரிய நலங்கள் எல்லாம் வாய்ந்த தாயிருந்தும், அதனைப் பொதுமொழியாக்க முயலாமல், நானூறு ஐந்நூறு ஆண்டுகளாகவே தோன்றிப் பழைய சிறந்த நூற்செல்வமின்றி வறியனவாய்ப் பலவகைக் குறைபாடுகள் உடையனவாய்ப் பெரும்பாலும் நாகரிக மில்லா வடவர்களாற் பேசப்படும் ‘இந்தி‘ முதலான சிதைவுக் கலப்புமொழிகளை இத்தேயத்திற்குப் பொது மொழியாக்க வேண்டுமென்று கூக்குரலிட்டு முயல்வோர் உண்மையான தொண்டர்களாவரா வென்பதனை அறிவுடையோர் ஆழ்ந்து நினைத்துப் பார்த்தல் வேண்டும்.
--------
10. தமிழ் அல்லாத மொழிகள் வறியன புதியன
இனித், தமிழ் அல்லாத மற்றைமொழிகள், தமிழுக்கு மிகப் பிற்பட்ட காலத்தே தோன்றித் தமக்கென இலக்கண இலக்கிய நூல்கள் இல்லாமல், பாரசிகம், அராபி, சமஸ்கிருதம் முதலான பழைய மொழிகளிலுள்ள புராணங்கள், காவியங்கள் அவற்றின் கதைகளையே மொழி பெயர்த்துரைப்பனவுந் தழுவிவுரைப்பனவு மாதலைச் சிறிது விளக்குவாம். இந்தியின் உட்பிரிவான சிலமொழிகளிற் றோன்றிய நூல்கள் இற்றைக்கு 511 – ஆண்டுகளுக்குள் இயற்றப்பட்டனவாதலை மேலே விளக்கிக் காட்டினோம்; அந்நூற்களிற் சிற்நதனவாக வடவாற் கொள்ளப்படுவன கபீர்தாசர், இராமன் மேற்பாடிய பாடல்களும், இற்றைக்கு 325 – ஆண்டுகளுக்கு முன்னிருந்த ‘துளசிதாசர்‘ இயற்றிய ‘இராமசரிதமானசம்‘ என்பதுமாகும்.
இனி, ‘உருது‘ மொழியென்பது சமஸ்கிருதக் கலப்பின்றி, மேற்கேயுள்ள பாரசிக, அராபி மொழிச் சொற்கள் சொற்றொடர்கள் மிகுதியும் கலக்கப் பெற்றதாய், அம்மொழிப் புலவர்களின் போக்கைப் பின் பற்றி நடைபெறுவதாகும். இற்றைக்கு 168 ஆண்டுகளுக்கு முன் ‘ஔரங்கபாத்‘திலிருந்த ‘சௌதா‘ என்னும் புலவரே முதன் முதலில் உருது மொழியில் செய்யுள் நூற் இயற்றி, அதனைப் பலரும் பயிலும்படி செய்தவராவர். இவர் பாடிய செய்யுட்களிற் பல ‘நவாபு‘ ,மன்னர்களைப் புகழ்ந்து பாடுவனவாயும், வேறுபல மகம்மது முனிவரையும் அவர்தம் உறவினரையுஞ் சிறப்பித்துரைப்பனவாயும், மற்றும் பல தம்மால் உவர்க்கப்பட்டவைகளைப் பழித்துக் கூறுவனவாயும் இருக்கின்றன. இப்புலவர் காலம் முதற்கொண்டே, அதாவது இற்றைக்கு 191-ஆண்டு களாகவே உருது மொழி நுஹல்வழக்குடையதாகி நடைபெறும் வகை நினைவு கூரற்பாலதாகும்.
இனி, வடக்கே வங்காளத்திற் பெருந்தொகுதி யினரான மக்களாற் பேசப்படுவதுஞ், சமஸ்கிருதச் சிதைவுகளான சொற்கள் மிகக் கலக்கப்பெற்றதுமான ‘வங்காள‘ மொழி, நூல்வழக்குடையதாகத் துவங்கியது. இற்றைக்கு 411- ஆண்டுகளுக்கு முன்னிருந்த ‘காசீராம்‘ என்னும் புலவர் வடமொழியிலுள்ள மகாபாரதத்தை வங்காளமொழியில் மொழிபெயர்த்துச் செய்த காலந்தொட்டேயாம். அவர்க்கு நெடுங்காலம் பின்னே தோன்றிய ‘ராஜாராம் மோகன்ராய்‘ என்னும் அறிஞர் வங்காள மொழி யுரைநடையிற் பல சிறந்த ஆராய்ச்சி நூல்களுஞ் சீர்திருத்த நூல்களும் வரைந்து வெளிப்படுத்திய பின்னேதான் வங்காளமொழி பெருஞ்சிறப்படையலாயிற்று. ஆகவே, சென்ற 161 – ஆண்டுகளாகத் தாம் வங்காளமொழி சீர்திருத்தமுற்றுச் சிறக்கலாயிற் றென்பதை உணர்தல் வேண்டும்.
இன்னும் மராட்டி குஜராத்தி முதலான மொழிகள், பாதகச் சிதைவுஞ் சமஸ்கிருதச் சிதைவுமான சொற்கள், சொற்றொடர்கள் நிரம்பக் கலக்கப்பெற்றுச் சிறுதொகை யினரான மக்களாற் பேசப்பட்டு வருகின்றன. கி.பி. 13-ஆம் நூற்றாண்டிலிருந்த ‘நாமதேவ்‘ என்பவர் தாம் முதன் முதல் மராட்டி மொழியிற் சில பதிகங்கள் இயற்றினவர். அவர் காலத்தும் அவர்க்குப் பிற்காலத்தும் வந்த ‘த்ந்யநோபா‘, ‘ஏகநாத்‘, ‘ராம்தாஸ்‘, ‘மகீபதி‘ முதலிய புலவர்கள் வடமொழியிலுள்ள ‘பகவத்கீதை‘, ‘விஷ்ணப்புராணக்கதை‘, ‘இராமன் கதை‘, ‘சமயக்கிரியை‘, ‘பக்த விஜயம்‘ முதலானவைகளைத் தழுவி நூல்களும், பாட்டுகளும் மராட்டி வேந்தனான ‘சிவாஜி‘ கால முதற்கொண்டுதான், அதாவது சென்ற 300 – ஆண்டுகளாகத்தாம் மராட்டி மொழி நூல் வழக்குடையதாகி நடைபெறுகின்றதென்பது உணரற்பாற்று.
குஜராத்தி மொழியில் முதற் சில பாடல்களைப் பாடினவர் இற்றைக்கு 461- ஆண்டுகளுக்கு முன்னிருந்த ‘நரசிங்கமேதா‘ என்பவரேயாவர். ஆனாலும், கி.பி. 1681 – ஆம் ஆண்டில் அதாவது இற்றைக்கு 267 ஆண்டுகளுக்கு முன்னிருந்த ‘ப்ரேமானந்தபட்‘, என்பவரும், ‘ரேவதிசங்கர்‘, என்பவரும் ‘நரசிங்கமேகேதாநு‘ என்னும் நூலையும் ‘மகாபாரத்த்தையும் இயற்றிய பின்னர்தான் குஜராத்தி மொழி நூல்வழக்குடையதாயிற்று.
இனி, இவ்விந்திய நாட்டின் தெற்கே வழங்கும் மொழிகள் அத்தனையுந் தமிழோடு இனமுடைய வைகளாகும். அதனால், ‘திராவிடமொழிகள்‘ என்று வழங்கப்படுகின்றன. அந்த மொழிகள் எல்லாவற்றுள்ளும் நந் தமிழ் ஒன்றே சிறிதேறக்குறையப் பத்தாயிர ஆண்டுகளாகச் சீர்திருத்தமுற்று. நுண்ணறிவுமிக்க சான்றோர்களால் இயற்றப்பட்ட இயல் இசை நாடக இலக்கணங்களும் ஆயிரக்கணக்கான பல வேறு இலக்கியங்களும் உடையதாய், நூல்வழக்கும் உலக வழக்கும் வாய்ந்து நடைபெறுவதென்பதை முன்னரே விளக்கிக் காட்டினோம்.
இனி, ஏனைத் திராவிடமொழிகளுள் தமிழோடொத்த பழமையுஞ் சிறப்புந் தனித்தியங்கும் ஆற்றலும் பயை தனி இலக்கண இலக்கிய நூல்வளனும் உடையது ஏதுமேயில்லை. என்றாலுந், தமிழல்லாதமற்றைத் திராவிட மொழிகளை நோக்கக் ‘கன்னடமொழி‘ ஒன்றே சிறிதேறக் குறைய ஆயிரம் ஆண்டுகளாகச் சீர்திருத்தம் எய்தி நூல் வழக்குடையதாய் வழங்காநிற்பது. இதனை முதலிற் சீர்திருத்தி வழங்கியவர்கள் சமண சமயத்தினரும் அவரையடுத்து அதன்கண் நூல்கள் இயற்றியவர்கள் வீரசைவசமயத்தினரும் ஆவர். கன்னட மொழியில் முதன் முதல் நூல் இயற்றினவர் இற்றைக்கு 1071 – ஆண்டுகளுக்கு முன் 63 – ஆண்டுகள் அரசுபுரிந்த ‘ராஷ்ட்ரகூட்‘ மன்னனான நிருபதுங்கனது அவைக்களத்திருந்த ‘ஸ்ரீ விஜயர்‘ என்னும் புலவரேயாவர்; இவர் இயற்றியநூல் ‘கவிராஜமார்க்கம்‘ என்னும் பெயருடையது. பசவரைத் தலைவராய்க்கொண்ட வீரசைவ ஆரிசயர்களாற் ‘பசவபுராணம்‘ என்பது கி.பி. 1369-ஆம் ஆண்டிலும், ஆக்கப்பட்டன. இவ்விரு சமயத்தவர்க்கிடையே தோன்றிய வைணவசமய ஆசிரியர்களாற் ‘பாரதம்‘ ‘இராமயண, ‘பாகவதம்‘ முதலான பலநூல்கள் சமஸ்கிருதத்திலிருந்து மொழி பெயர்த்துச் செய்யப்பட்டன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே வழங்கிய கன்னட மொழி தனித்தமிழாயிருக்க, அதற்குப் பின்னே சைன வீரசைவ வைணவப்புலவர்களாற் கையாளப்பட்ட கன்னடமோ வடமொழிச் சொற்கள் கையாளப்பட்ட கன்னடமோ வடமொழிச் சொற்கள் சொற்றொடர்கள் கதைகள் நிரம்பக் கலக்கப் பெற்றுத் தனற்ன்மையிழந்து வழங்குவதாயிருக்கின்றது. ஆனால், பழைய தனிக்கன்னடத்தில் இயற்றப்பட்ட நூல் ஒன்றுதானும் இஞ்ஞான்று கிடைத்திலது.
இனி, கன்னடத்திற்கு அடுத்தபடியிற் பழமையுடையதாக்க் கருதற்குரியது தெலுங்கு மொழியேயாகும். இம்மொழியை வழங்கினவர்கள் ‘ஆந்திர்ர்‘ எனப் பழைய இந்துதேய வரலாற்றின்கட் சொல்லப்படுகின்றனர். ‘சாதவாகனர்க்‘குரிய ஆந்திரகுலமானது கி.மு. 180 – ஆண்டிலேயே, அதாவது இற்றைக்கு 2138 – ஆண்டுகளுக்கு முன்னரேயே வலிமையிற் சிறந்த அரசர்களையுடையதாயிருந்தது. அதன் அரசர்கள் ‘கிருஷ்ண‘ ஆற்றங்கரையில் உள்ள ‘தான்யகடகம்‘ அல்லது ‘அமராவதி‘ என்னும் நகரில் நிலையாயிருந்து அரசு புரிந்தனர்களென்பதும், இவர்களது அரசு கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் முடிவடைந்து போயிற்றென்பதும், இத்தேயவரலாற்று நூல்களால் அறியக் கிடக்கின்றன. அத்துணைச் சிறந்த அவ்வரசர்கள் அக் காலத்தே தெலுங்கு மொழியை வழங்கியிருந்தனராயின், அதன்கட் பல நூல்கள் எழுதப்பட்டிருக்கவேண்டும். அதன்கட் பல நூல்கள் எழுதப்பட்டிருக்கவேண்டும். ஆனால், அத்தகைய பழைய நூல்கள் எவையுந் தெலுங்கு மொழியிற் காணப்படாமையால், அவ்வாந்திர அரசர் காலத்தே தெலுங்குமொழி வழங்கவில்லையென்பதே தேற்றமாம். அப்பழைய காலத்தே அவர் வழங்கிய மொழி தமிழே என்பது பழைய தமிழ்நூல் ஆராய்ச்சியாற் புலனாகின்றது. ஆய் என்னுந் தமிழ்வள்ளல் வேளிர்குடிக்குரிய னாதல்பற்றி வேள்ஆய் எனவும், அண்டிர நாட்டின்னாதல் பற்றி "வாய்வாள் அண்டிரன்" எனவும் புறநானூற்றுச் செய்யுட்கள் )133. 134) நுவல்கின்றன. ‘அண்டிரம்‘ என்னுஞ் சொல் ’ஆந்திரம்‘, எனத் திரிந்த்தோ, அல்லது ஆந்திரமே அண்டிரம் எனத்திரிந்த்தோ, இதுதான் உண்மையென்பது இப்போது காட்டல் இயலவில்லை. அஃதெங்ஙனமாயினும் பழைய ஆந்திர அரசர்கள் வழங்கியதும் போற்றி வளர்த்த்துந் தமிழ்மொழியே யென்பது மட்டும் பழைய தமிழ் நூலாராய்ச்சியால் நன்கு புலனாகின்றது.
இனி, இத்தென்றமிழ் நாட்டிலேயே பிறந்து வளர்ந்து, நாகரிகத்தில் மிகச்சிறந்து, தமது தமிழ்மொழியை இலக்கண இலக்கிய வளன் உடையதாக்கி, அதனை நிரம்பவுந் திருத்தமாக வழங்கிய பழைய தமிழர்க்கும் இடையே போக்குவரவு நிகழாமையால் வடக்கே சென்று வைகியவர் நாகரிகம் இல்லாதவராக, அவர் வழங்கிய தமிழும் நூல் வழக்கில்லதாய்ச் சொற்றரிபு மிக வுடையதாகி, அதனாற் பிறிதொரு மொழிபோல் ‘தெலுங்கு‘ எனப் பிற்காலத்தே பிறிதொரு பெயர்பெற்ற நடைபெறலாயிற்று. இற்றைக்கு 811 ஆண்டுகளுக்குமுன், அதாவது கி.பி. பதினோராவது நூற்றாண்டுக்குமுன், இயற்றப்பட்ட ஒரு தெலுங்கு நூலாவது, ஆந்திர அரசர்களாற் பொறிப்பிக்கப்பட்ட ஒரு கல்வெட்டாவது, எவ்வளவோ நம் ஆங்கில அரசினர் தேடிப்பார்த்தும், இதுகாறும் அகப்படவில்லை. அதனால், 811 ஆண்டுகளுக்கு முன் தெலுங்குமொழி சீர்திருத்தம் எய்தி நடைபெறவில்லையென்பது திண்ணமாய்ப் பெறப்படுகின்றது. கி.பி. பதினோராம் நூற்றாண்டிற்றோன்றிய ‘நன்னய பட்டர்‘ என்பார். கி.பி. 1022 முதல் 1063 வரையில் அரசுபுரிந்த சாளுக்கிய மன்னனான ‘ராஜராஜநரேந்திரன்‘ ‘மகாபாரதத்‘தை ஆரணியபருவம் வரையிலுந் தெலுங்கில் மொழிபெயர்த்தியற்றிய காலந்தொட்டே தெலுங்குமொழி நூல் வழக்குடையாதயிற்று. நன்னயர் இயற்றிய மகாபார தெலுங்கு மொழிபெயர்ப்பில் வடசொற்கள் இரண்டு பங்குத் தெலுங்குசொற்கள் ஒரு பங்குமே காணப்படுதலால், தெலுங்குமொழி அந்நாளிலேயே வடமொழியின் உதவியின்றித் தனித்தியங்கும் ஆற்றல் இல்லாத தொன்றாய் நடைபெற்றமை தெற்றென விளங்காநிற்கும்.
இனித், தமிழ்நாட்டை யடுத்துள்ள மேல்நாடுகளில் இப்போது வழங்கும் மலையாளமொழி, இற்றைக்கு முன்னூற்றுப் பதினோறாண்டுகளுக்கு முன் முழுதுந் தமிழாகவேயிருந்தது. ஆனால், அத்தமிழ், இத்தமிழ் நாட்டில் வழங்குஞ் செந்தமிழ்மொழியின் சொற்கள் திரிந்த கொச்சைத் தமிழாகும் என்றாலும், அத்திரிபுகளை நீக்கிப் பார்த்தால் மலையாளம் முற்றுந் தமிழ்மொழியாகவே காணப்படுகின்றது. மலையாள மொழியில் முதன்முதல் இராமாயணத்தை மொழிபெயர்த்துப் பாடியவர் ‘கன்னச பணிக்கர்‘ என்பவரேயாவார்; இவர் இற்றைக்கு 598 ஆண்டுகளுக்கு முன், அதாவது கி.பி. 1350 – ஆம் ஆண்டில் இருந்தவர். இவர் இயற்றிய இராமயண மொழி பெயர்ப்பில், வடசொற்கள் சிற்சில மிக அருகி ஆங்காங்குக் காணப்படுகின்றன. இவர்க்குப்பின் மலையாள மொழியில் நூல் இயற்றியவர் கி.பி. 1550 – ஆம் ஆண்டில் இருந்த ‘செருச்சேரி நம்பூரி‘ என்பவரேயாவர். இவர் பார்ப்பனச் சாதியினராயிருந்தும், இவர் தாம் இயற்றிய ‘கிருஷ்ணகதா‘ என்னும் நூலைப் பெரும்பாலும் வடசொற் கலவாத் தனி மலையாள மொழியில் ஆக்கியிருப்பது மிகவும் பாராட்டப் பாலதாயிருக்கின்றது. இவர்க்குப்பின் கி.பி. 1650 – ஆம் ஆண்டிலிருந்த ‘எழுத்தச்சன்‘ என்பாரே வடமொழியிலிருந்து தாம் மொழிபெயர்த்தியற்றிய ‘மகாபாரதத்‘திலும் வேறு சில புராணங்களிலுந் தொகுதி தொகுதியாக வடசொற்கள் சொற்றொடர்களை அளவின்றிப் புகுத்தி மலையாள மொழியைப் பாழாக்கினவராவர். ஈண்டுகாட்டியவாற்றால். மலையாள மொழி வடமொழிக் கலப்பால் தமிழின் வேறாப்பிரிந்து வேறொரு மொழிபோல் வழங்கலானது இற்றைக்குச் சிறிதேறக்குறைய முந்நூற்றுப் பதினோறாண்டுகளாகத் தாம் என்பது தெற்றென விளங்காநிற்கும்.
என்றிதுகாறும் எடுத்து விளக்கியவற்றால், இப்போது இவ்விந்திய தேயத்தின் வடக்கே வழங்கும் ‘உருது‘, ‘இந்தி‘, ‘வங்காளி‘ முதலான மொழிகளிலும் மேற்கே வழங்கும் ‘மராட்டி‘, ‘குஜராத்தி‘ முதலான மொழிகளிலும் கிழக்கே தெற்கே நடுவே வழங்குந் ‘தெலுங்கு‘, ‘தமிழ்‘, ‘கன்னடம்‘, ‘மலையாளம்‘ முதலான மொழிகளிலும், தமிழைத்தவிர, மற்றையவெல்லாம் பழையன அல்லவாய், ஆயிர ஆண்டுகளுக்குள்ளாகவே தோன்றித் தமக்கெனச் சிறந்த இலக்கண இலக்கிய நூல்கள் இல்லாமற், சமஸ்கிருத்த்திலுள்ள மகாபாரதம், இராமயணம், பாகவதம் முதலான கட்டுக்கதை நூல்களை மொழிபெயர்த்துரைப்பனவாய்த் தாமே தனித்தியங்க மாட்டாமல் வடமொழிச்சொற்கள் சொற்றொடர்களின் உதவியையே பெரிதுவேண்டி நிற்பனவாய் உள்ள சிறுமையும் வறுமையும் வாய்ந்தனவாகும்.
மற்றுத், தமிழ்மொழியோ, மேற்காட்டிய மொழிகள் எல்லாந் தோன்றுதற்குப் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே வழங்கிய முதுமொழியாதலொடு தன்னோடொத்த பழமையுடைய ஆரியம். செண்டு, ஈபுரு, கிரேக்கம், இலத்தீன் முதலான மொழிகளெல்லாம் உலகவழக்கில் இன்றி இறந்தொழியவும், தான் இன்றுகாறும் பரவி வழங்குந் தனிப்பெருஞ்சிறப்பு உடையதாயுந் திகழா நிற்கின்றது. சென்ற அறுநூறு எழுநூறு ஆண்டுகளுக்குள்ளாக வடமொழியிலிருந்து மொழி பெயர்த்து இயற்றப்பட்ட ‘கம்பராமாயணம்‘, நளவெண்பா‘, ‘நைடதம்‘, ‘வில்லிப்புத்தூர்‘ பாரதம்‘, ‘காசிகண்டம்‘, ‘கூர்மபுராணம்‘, ‘வாயுபுராணம்‘, ‘தலபுராணங்கள்‘, முதலியன தவிர, எழுநூறாண்டுகளுக்கு முன்னிருந்த செந்நாப் புலவர்களால் ஆக்கப்பட்ட அரும்பெருந் தமிழ் நூல்களெல்லாமுந் தமிழ் மொழிக்கே உரிய சிறப்புடையனவாகும்; இன்னும் இற்றைக்கு ஆயிரத்தெழுநூறு ஆண்டுகட்கு முன் இயற்றப்பட்ட செந்தமிழ் நூல்களோ வடசொற்களும் வடநூற் பொய்களுஞ் சிறிதும் விரவாத தனிப்பெருஞ் சிறப்புடையனவாகும். மேலும், பலநூற்றாண்டுகளுக்கு முன்னர்த், தமிழ் மொழியொன்றே இவ்விந்தியதேயம் எங்கும் பேசப்பட்டு வந்த பொதுமொழியாகும். இப்போது இவ்விந்திய நடு நாடுகளிற் ‘கோண்டர்‘ எனப்படும் மாந்தர் பேசும் மொழியும், ஒரிசா நாட்டையடுத்த மலைநாடுகளிற் ‘கொண்டர்‘ எனும் மக்கள் பேசும் மொழியும், வங்காள தேயத்தின் ராஜமால் மலைகளில் உறையும் ‘மாலர்‘ என்னும் மக்கட்குழவினர் வழங்கும் மொழியும், சூடியா நாகபுரத்திலும் அதனையடுத்த நாடுகளிலும் இருக்கும் ‘ஒராஒனர்‘ என்னும் மாந்தர் கூட்டம் பசும் மொழியும், இவ்விந்திய தேயத்தின் வடமேற்கேயுள்ள பெலுசிதானத்தில் உயிர்வாழும் பிராகுவியர் என்பார் வழங்கும் மொழியும், இன்னும் இங்ஙனமே இமயமலைச் சாரலிலும் பிற வடநாடுகளிலும் வழங்கும் பலவேறு மொழிகளும் பண்டைத் தமிழ் மொழியின் திரிபுகளாய் இருத்தலை நடுநின்று நன்காராய்ந்துகண்ட கால்டுவெல் முதலான மேல் நாட்டாசிரியர்கள், மிகப் பழைய காலத்தே இவ்விந்திய தேயம் முழுதும் பரவியிருந்தவர்கள் தமிழ் மக்களே யாவரென்றும், அவர் வழங்கியவை தமிழுந் தமிழின் திரிபான மொழிகளுமேயாகுமென்று முடித்துச் சொல்லியிருக்கின்றார்கள். இஞ்ஞான்று இவ்விந்தியதேயம் எங்கணும் வைகி உயிர்வாழுந் தமிழருந் தமிழரோடு இனமான மக்களும் ஆறரைக் கோடிக்கு மேற்பட்டவராவர் என்பதும் அவராற் கணக்கிடப் பட்டிருக்கின்றது. இவ்விந்தியதேயம் முழுதுமுள்ள மக்களின் தொகை முப்பது கோடியாகும்.
--------------
11.தமிழ் பொதுமொழியாகத காரணம்
இங்ஙனந் தமிழ் மொழியானது, ஆறரைக் கோடி இந்து மக்கட்குப் பொது மொழியாயும், பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே தொட்டு இன்று காறும் வழங்குந் தனிப்பெருஞ் சிறப்பு வாய்ந்த தனித்தலைமை மொழி யாயும், வேறெந்த மொழிகளிலுங் காணப்படாத தொல்காப்பியம், திருக்குறள், திருவாசகம், சிவஞானபோதம், திருத்தொண்டர் புராணம் முதலான ஒப்புயர்வில்லா இலக்கண இலக்கிய நூற்பொருஞ் செல்வம் வாய்ந்த மொழியாயும் விளங்குவதாயிருந்தும், இஃது இவ்விந்திய தேயத்திற்குப் பொது மொழியாகாமல் நிற்பது பெரிய தொரு புதுமையாயிருக்கினற்தன்றோ? இதற்குக் காரணந்தான் என்னயென்பதைச் சிறிதாராய்ந்து பார்ப்போம்.
இப்போது உலகம் எங்கணும் பரவி வழங்கும் ஆங்கில மொழியின்றன்மையினை ஆராய்ந்து பார்மின்கள்! ஆங்கில மொழிக்கே உரிய வெள்ளைக்கார நன்மக்கள் இங்கிலாந்து, அயர்லாந்து, ஸ்காட்லாந்து என்னும் மூன்று தீவுகளில் உறைபவர் ஆவர். இவர்களின் தொகை சிறிதேறக்குறைய நாறேகாற் கோடியாகும். இங்ஙனம் நாலேகாற் கோடி மக்கட்குரிய ஆங்கிலமொழி யானது இப்போது இத் நிலவுலகமெங்கும் பதின் மூன்றரைக்கோடி மக்களாற் பேசப்பட்டு வருகின்றது. முன்னொரு காலத்தில் ஏழுகோடி மக்களாற் பேசப்பட்டு வந்த தமிழ்மொழி இப்போது இரண்டு கோடிக்குங் குறைவான மாந்தர் கூட்டத்தாற் பேசப்பட்டு வருகின்றது. இவ்வாறாகத் தமிழ்மொழி பேசுவார் தொகை பத்தாயிரம் ஆண்டுகளாக வரவரச் சுருங்கி வருதலையும், ஆங்கில மொழி பேசுவார் தொகை இருநூறாண்டுகளுக்குள்ளாக உலகம் எங்கணும் அளவின்றிப் பெருகிவருதலையும் உற்றுணர்ந்து நோக்குங்கால், தமிழ்மொழி சுருங்குதற்குக் காரணந்த தமிழரிற் கல்வியறிவுடையவருங் கல்வி முயற்சி யுடையவரும் வரவரக் குறைந்து போதலும், ஆங்கிலமொழி பெருகுதற்குக் காரணம் ஆங்கிலரிற் கல்வியறிவுடையவருங் கல்வி முயற்சியுடையவரும் நாளுக்கு நாள் மிகுந்து ஓங்குதலுமே யென்பது தெற்றென விளங்குகின்றது.
இனி, அங்ஙனந் தமிழரிற் கற்றார்தொகை அருகுதலும் ஆங்கிலரில் அவர் தொகை பெருகுதலுந்தாம் எதனாலெனின்; தமிழரிற் செல்வம் உடையவர்களெல்லாரும், இஞ்ஞான்று தமிழ்க் கல்வியறிவில்லாதவர்களாய் விட்டார்கள்; அதனால் அவர், தம்மைப் போலவே தமது நாட்டிற் பிறந்தவர்களெல்லாருஞ் செல்வ வாழ்க்கையிற் சிறந்து வாழல் வேண்டுமென்னும் உயர்ந்த நோக்கந் தினைத்தனையும் இல்லாதவராயிருக்கின்றனர்! ஏழை எளிய மக்கள் நாள் முழுவம் வெயிலிற் காய்ந்தும் மழையில் நனைந்தும் அரும் பாடுபட்டு உழவு தொழிலைச் செய்தும் பல்வகைக் கைத்தொழில்களைப் புரிந்தும் பெருவருவாயினையும் நுகர்ச்சிப் பொருள்களையும் விளைத்துக் கொடுக்கச் செல்வராகிய தாம் உடல் வருந்தாமல் மூறையுழைப்பில்லாமற் சிறந்த இல்லங்களிற் செருக்குடனிருந்து விலாப்புடைக்க உடல் கொழுக்கத்தின்று பஞ்சனைமேற் றுயின்று பல்வகைச் சிற்றின்பங்களை நுகர்ந்தும், தம்மை இங்ஙனம் இன்பவாழ்க்கையில் வைத்துள்ள அவ்வேழையெளியவர்களின் உடல்நல மனநலங்களைச் சிறிதேனும் நன்றியுடன் கருதிப்பார்க்கின்றார்களா? இல்லை, இல்லை. அவ்வேழை மக்கட்கு இப்பாழுஞ் செல்வர்கள் அரைவயிற்றுக் கஞ்சி தானும் வார்ப்பதில்லை! அரையிலுடுக்க நான்கு முழத் துண்டுதானுங் கொடுப்பதில்லை! வெயிலுக்கும் மழைக்கும் நச்சுயிர்களும் ஒதுங்கி இனிது உறைய நல்ல ஒருசிறு இல்லந்தானும் அமைத்துத் தருவதில்லை! இத்துன்பநிலையில் அவர்கள் நோய்கொண்டு வருந்தினால் அது தீர்ப்பதற்கு மருந்தினுதவியுஞ் செய்வதில்லை! அவர் இவ்விடும்பையிற் பெற்ற! ஏழைப்பிள்ளைகட்கு உணவோ கல்வியோ சிறிதும் ஈவதேயில்லை! அவர்களை அவர் கண்ணேறெடுத்துப் பார்ப்பதுமில்லை! இவைமட்டுமா! இவ்வேழைக் குடியானவர் தம்வயிற்றுக்கில்லாமை யினாலே உடல்வலி குன்றினமையினாலோ, சிற்சில நாட்களில், இச்செல்வரின் வயல்களிலும் பழக்கடைகளிலும் மாட்டுக் கொட்டில்களிலும் ஏவிய பணிசெய்யத் தவறினால், அவர்களை மரத்துடன் சேர்த்துப்பிணித்து, அவரது முதுகில் இரத்தஞ் சொட்டச் சொட்டப் புளியவளாரினாற் சிறிதும் நெஞ்சிரக்கமின்றி அடித்துக் கொல்கின்றார்கள்! இங்கனந் தமிழ்ச்செல்வர்கள் தங்கீழ் வாழ்வாரை ஓவாது துன்புறுத்தி வருகையில், நந்தமிழ் மக்கள் உடல்நல மனநலங்கள் வாய்ந்து தமிழ்க் கல்வியிற் சிறப்பதெங்ஙனம்?
இனி, தங்கீழ் வாழ்வரும் பெருந்தொகையினரான ஏழைத் தமிழ்மக்களை அங்ஙனம் மேறேவொட்டாமல் தமிழ்ச் செல்வர்கள் வன்கண்மை செய்யினுந், தம்மொடு தொடர்பின்றிவாழும் மற்றைக் குடிமக்கட்காவது எந்தவகையிலாயினும் ஏதேனும் உதவிசெய்கின்றார்களா? அதுவும் இல்லையே. இந்த நிலைமையில் தமிழ்ப்பயிற்சி பரவுவ தெங்ஙனம்!
இனி, அச்செல்வர்கள், அத்தி பூத்தாற்போல் அங்கொருவர் இங்கொருவராக அருகிக் காணப்படுந் தமிழ் கற்றார்க்காவது, அக்கற்றார் தமது தமிழறிவைப் பலர்க்கும் பயன்படுத்துவதற்காவது, அல்லது அவர் இயற்றும் நூல் கட்காவது எந்த வழியிலேனும் எட்டுணையுதவியாவது செய்கின்றார்களா? அதுவும் இல்லையே. இத்தகைய பயனில் செல்வர்கள் உள்ள இந்நாட்டில் தமிழ்க் கல்வி பரவாதது ஒரு புதுமையா?
இனி, ஆங்கிலரின் சீரியநிலையைச் சிறிது தேர்ந்து பார்மின்கள்! ஆங்கிலரிற் செல்வராயிருப்பாரெல்லாருந் தமது தாய்மொழியை நன்கு கற்றவர்கள்; அதனால் அவர்கள் கல்வியின் அருமை பெருமையும் அதனைப் பெற்றவர் பெறும் பெரும் பயனும் நன்குணர்ந்தவர்கள்.
‘பெற்றவட்கே தெரியும் அந்த வருத்தம் பிள்ளை
பெறாப் பேதை அறிவாளோ பேரானந்தம்
உற்றவர்க்கே கண்ணீர் கம்பலை உண்டாகும்
உறாதவரோ கன்னெஞ்சம் உடையரவர்".
என்று தாயுமான அடிகள் அருளிச் செய்தபடி கல்வியை வருந்திப் பெற்றோர்க்கே கல்வியின் அருமை தெரியும்; கல்வியறவுபெறாத கசடர் அதன் சிறப்பும் பயனும் யாங்ஙனம் அறிவர்? ஆங்கிலரில் அரசர்கக்கரசராய்த் திகழும் மாவேந்தர் தந் தாய் மொழியாகிய ஆங்கிலத்தில் மிகுந்த புலமையுடையராதலுடன், இலத்தீன், கீரிக்கு, பிரஞ்சு, செர்மன் முதலான அயல் மொழிகளிலும் புலமை வாய்ந்தவர். அம் மாவேந்தரின் கீழ் மன்னர்களாய் உள்ளவர்களும், அவர்க்கு அமைச்சர், படைத்தலைவர், அரசியற்பணி புரிவாராயுள்ளவர்களும், அவரது நாட்டிற் பெருஞ் செல்வர்களாய் உள்ளவர்களும், வாணிக வாழ்க்கையில் வாழ்பவர்களும், எல்லாந் தமதாங்கில மொழியைப் பயின்று தேர்ச்சி பெறற்வர்களாவர். இங்ஙனம் முடிவேந்தர் முதல் வணிகர் ஈறான பெருஞ் செல்வர்களைவருந் தந் தாய்மொழியாகிய ஆங்கிலத்தை நன்கு பயின்றவர்களாய் இருத்தலால்,
"கேடில்விழுச்செல்வங் கல்வி யொருவர்க்கு
மாமல்ல மற்றையவை"
என்னுந் தெய்வப்புலமைத் திருவள்ளுவர்தம் அருண்மொழிப்படி மக்கட்கு அழியாச்செல்வமானது கல்வியே யென்று அவர்கள் கடைப்பிடியாய் உணர்ந்து, தங்கள் செல்வத்தையெல்லாங் கல்வி விளக்கத்திற்கென்றே செலவழித்து வருகின்றார்கள். பாருங்கள்! நந் தமிழ் நாட்டில் தமிழ் கற்பித்தற்கென்று இரண்டு மூன்று உயர்ந்த காண்பது தானும் அரிதாயிருக்க, ஆங்கிலங் கற்பித்தற்கோ எத்தனை ஆயிரக்கணக்கான பள்ளிக்கூடங்களும், உயர்ந்த கல்லூரிகளும், இவைதம்மை அகத்தடக்கிய பல்கலைக்கழகங்களும் இருக்கின்றன! இவைகட்கெல்லாம் எத்தனை கோடிக்கணக்கான பொருள் ஆங்கில அரசினராலுங் கிறித்துவ குருமார்களாலும் அளவின்றிச் செலவு செய்யப்பட்டு வருகின்றன! இவ்வாறு இத்தமிழ்நாட்டிலும், இந்திய தேயத்தின் பிற நாடுகளிலும் ஆங்கில மொழிப்பெயர்ச்சிக்கென்று ஆங்கிலராற் சென்ற ஒரு நூற்றாண்டாகச் செலவு செய்யப்பட்டு வருந்தொகையை கணக்கெடுக்கப் புகுந்தால் அது கணக்கில் அடங்குவதாயில்லை. இங்ஙனமெல்லாம் ஆங்கிலர் தமது மொழிப்பயிற்சியினை இவ்விந்திய தேய மெங்கும் பரவ வைத்து வருதலைப் பார்த்தாயினும், இங்குள்ள செல்வர்களுக்குத் தமிழ்ப் பயிற்சியைப் பரவ வைக்க வேண்டுமென்னும் உணர்ச்சியும், முயற்சியும் உண்டாகின்றவா? சிறிதும் இல்லையே. எங்கோ ஒரு செல்வர், எங்கோ ஒரு குறுநில மன்னர், எங்கோ ஒரு மடத்தலைவர் பள்ளிக்கூடம் வைத்து நட்த்த எண்ணங்கொண்டால், அவரும் ஆங்கிலப் பள்ளிக்கூடம் வைத்து நடத்துகின்றனரேயன்றித், தனிப்படத் தமிழுக்கென்றொரு பள்ளிக்கூடம் வைத்து அவர் நடத்துதலை யாண்டுங் கண்டிலேம்! ஆங்கிலர் நடாத்தும் பள்ளிக்கூடங்களிலாவது தமிழாசிரியர்க்குத் தக்க சம்பளம் கிடைக்கின்றது, நன்கு மதிப்பிருக்கின்றது. தமிழ்ச்செல்வர்கள் எங்கோ அருமையாய் வைத்து நடத்தும் ஆங்கிலப் பள்ளிக்கூடங்களிலோ தமிழாசிரியர்க்கு மிகக் குறைந்த சம்பளந்தான் கிடைக்கின்றது! அதுவல்லாமலும், அப்பள்ளிகளில் தமிழ் கற்பிக்கும் ஆசிரியர்க்கு நன்கு மதிப்புமில்லை. அதனால், ஆங்கிலக் கல்விக் கழகங்களிற் பயிலும் மாணவர் தமிழை ஊன்றித் திருத்தமாகப் பயின்று புலமையடைவதுமில்லை; தாம்பயிலும் ஆங்கிலத்தையே கருத்தாய்ப் பயின்று, அதிற் பட்டம் பெறுதற்கு ஒரு சிறு துணையாகவே தமிழைத் தப்புந் தவறுமாய்ச் சேர்த்துப் பயின்று தொலைத்துவிடுகின்றார்கள்! இங்ஙனமாக இத்தமிழ்நாட்டிலும் பிற நாடுகளிலும் ஆங்கிலர் தம்முடைய பெருமுயற்சியாலும் பெரும் பொருட் செலவானும் நடாத்தி வரும் பல்லாயிரக்கணக்கான ஆங்கிலக் கல்லூரிகளிற் பயின்று பட்டம் பெற்று வரும் பல்லாயிரக்கணக்கான நம் இந்து தேய மாணவர்கள் ஆங்கில மொழியிற்றான் வல்லவர்களேயல்லாமல், தமிழ் முதலான தாய் மொழிகளிற் சிறிதும் வல்லவர்களல்லர். இத் தேயமங்கும் இவ்வாறு ஆங்கில மொழிக் கல்வி சிறந்து பரவிவருவதற்கும், தமிழ் முதலான தாய்மொழிக் கல்வி சிறந்து பரவாமைக்கும், ஆங்கிலரின் நன்முயற்சியும், இந் நாட்டவரின் முயற்சியின்மையுமே முறையே காரணமாதல் தெற்றென விளங்காநிற்கும்.
இனி, ஆங்கிலர் தாங் கைபற்றிச் செங்கோலோச்சும் இவ்விந்திய நாட்டிலேயே தமது தாய்மொழி யாகிய ஆங்கிலத்தையும், பரவ வைத்தற்கு இத்துணைப் பெருமுயற்சியும் இத்துணைப் பெரும் பொருட்செலவுஞ் செய்து வருகின்றனரென்றால், தமது தாய்நாடாகிய பிரித்தானியாவிலும், தம்மவர் குடியேறிவைகும் வட அமெரிக்கா தென்னமெரிக்கா ஆஸ்திரிலேயா தென்னாப்பிரிக்கா முதலான பெரும்பெரு நிலப் பகுதிகளிலுமெல்லாம் அவர்கள் இன்னும் எத்துணை முயற்சியும் எத்துணை கோடிக்கணக்கான பொன்னுஞ் செலவு செய்து தமது ஆங்கில மொழியைப் பரவச்செய்பவராகல் வேண்டும்! அதனாலேதான் இவ்வுலக மெங்கணும் ஆங்கிலமொழி திருத்தமாகப் பயிலவும் பேசவும் எழுதவும்பட்டு வருகின்றது. ஆங்கிலம் நன்கு பயின்று அதில் நூல் எழுதும ஆசிரியர் தொகையும் அவர் எழுதிய நூற்றொகையுமே கணக்கெடுத்தல் இயலாதென்றால், ஆங்கிலப் பயிற்சிமட்டுஞ் செய்வார் தொகையைக் கணக்கெடுத்தல் இயலுமோ! இவ்வியல் பினை உற்று நோக்குங்கால், ஆங்கிலத்தின்முன் வேறெந்த மொழியுந் தலைதூக்கி நில்லாதென்பது தேற்றமேயாம்.
-----------
12. ஆங்கிலமே பொதுமொழியாதற் குறித்து
இங்ஙனம் இவ் விந்தியதேயத்தின் மட்டுமேயன்றி இவ்வுலகம் எங்கணும் அழுந்திப் பயிலவும், பேசவும், வழங்கவும் பட்டுவரும் ஆங்கிலமொழியொன்றே உலக முழுமைக்கும் பொது மொழியாய்ப் பரவிவருதலால், அது தன்னையே நம் இந்து மக்கள் அனைவரும் பொது மொழியாய்க் கொண்டு பயிலுதலும் வழங்குதலும் அவர்கட்கு எல்லா வகையான நலங்களையும் தருவதாகும். முதலில் உலகியல் வாழ்க்கைக்கு இன்றியமையாத பொருள் கடைக்கூட்டுதற்கு எத்தொழிலைச் செய்வதாயிருந்தாலும், அத் தொழில் நுட்பங்களை நன்கறிந்து செய்தற்குதவி செய்யும் பல்லாயிரக் கணக்கான தொழிலறிவு நூல்கள் ஆங்கில மொழியிலன்றி வேறெதிலேனும் இருக்கின்றனவா? பல்வகைக் கைத் தொழில்களைப் புரியுங்கால், அவற்றிற்கு வேண்டும் பல்வகைப் பண்டங்களைப் பல நாடுகளிலிருந்து வருவித்தற்கும். அவற்றால் தாஞ் செய்துமுடித்த பண்டங்களைப் பல நாடுகளிலும் உய்த்து விலைசெய்து ஊதியம் பெறுதற்கும் ஆங்கில மொழியேயன்றி வேறேதுந் துணை செய்யுமோ? செய்யாதே. இன்னும் உலகமெங்கணும் நடைபெறும் வாணிகமெல்லாம் ஆங்கில மொழியின் உதவி கொண்டே நன்கு நடைபெறுதலை அறிந்துவைத்தும், அதனைப் பொது மொழியாக வழங்காமல், விரிந்த வாணிக வாழ்க்கைக்கு ஒருசிறிதும் பயன்படாத இந்தியைப் பொதுமொழியாக்க முயல்வோர் நம்மனோர்க்கு உண்மையில் உதவிசெய்பவர் ஆவரோ? கூர்ந்து பார்மின்கள்!
இனி, அரசியற்றுறையில் நம் இந்துக்களை முன்னேற்றி வருவதும், தம்முரிமைகளைக் கண்டு கேட்க அவர்கட்குக் கண்திறப்பித்ததும், இவ்விந்திய நாடெங்க்ணும் பெரும் பொருட்செலவாற் பல கோடிமக்களாற் பயிலப்பட்ட இயற்கையே பொது மொழியாய்ப் பரவி வருவதும், இலக்கண இலக்கியத் துறைகளிலும் நடுநிலை குன்றா உண்மைகாண் வகைகளிலும் பன்னூறாயிரக் கணக்கான நூல்கள் புதிய புதியவாய்ப் பெருகும் அறிவுப் பெருஞ்செல்வம் வளரப்பெறுவதுமான ஆங்கில மொழியை, எல்லா மொழிகளிலும் உள்ள எல்லாச் சிறந்த நூல்களையுந் தன்கண் மொழிபெயர்த்து வைத்து அவற்றின் பொருளை அவை வேண்டுவார்க்கு எளிதின் ஊட்டுந் தனிப் பெருஞ் சிறப்பு வாய்ந்த ஆங்கிலமொழியை, நம்மனோர்க்குப் பொதுமொழியாக்காமல், இந்நலங்களில் ஒரு கடுகளவுதானும் இல்லா இந்திமொழியைப் பொதுமொழியாக்க முயலல் அறிவுடையார் செயலாகுமா? ஆகாதே. ஆதலால், ந்ந்தமிழ்நாட்டவர் ஆங்கிலத்தையுந் தமிழையுமே நன்கு பயின்று நலம் பெறுவாராக!
----------------
This file was last updated on 10 March 2014.
Feel free to send corrections to the webmaster.