பதிற்றுப்பத்து /மூலமும் உரையும் - பாகம் 3
மூலமும் ஔவை துரைசாமி பிள்ளை விளக்க உரையும்
patirRRuppattu (with the commentary of
auvai turaicAmi piLLai - part 3
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Digital Library of India for providing a scanned image
version of this work for the etext preparation.
This etext has been produced via Distributed Proof-reading Implementation and
we thank the following volunteers for their assistance:
Anbu Jaya, V. Devarajan, R. Navaneethakrishnan, P. Thulasimani, V. Ramasami,
Thamizhagazhvan, S.C. Tamizharasu, V Jambulingam, G. Gopal and M.K. Saravanan.
R. Navaneethakrishnan, and S.C. Thamizharasu
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2014.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
பதிற்றுப்பத்து /மூலமும் உரையும் - பாகம் - 3
மூலமும் ஔவை துரைசாமி பிள்ளை விளக்க உரையும் .
Source:
"பதிற்றுப்பத்து : மூலமும் விளக்க உரையும்"
உரையாசிரியர்:
சித்தாந்த கலாநிதி, வித்துவான், திரு. ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள்
தமிழ் ஆராய்ச்சி விரிவுரையாளர். அண்ணாமலைப் பல்கலைக் கழகம்.
திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்,
திருநெல்வேலி :: சென்னை 1.
முதற் பதிப்பு: சனவரி, 1950
கழக வெளியீடு: 523
ஸ்ரீ பாரதி பிரஸ், சூளை, சென்னை.
ஆசிரியர் கபிலர் பாடிய ஏழாம் பத்து
பதிகம்
மடியா வுள்ளமொடு மாற்றோர்ப் பிணித்த
நெடுநுண் கேள்வி யந்துவற் கொருதந்தை
ஈன்றமகள் பொறையன் பெருந்தேவி யீன்றமகன்
நாடுபதி படுத்து நண்ணா ரோட்டி
வெருவரு தானைகொடு செருப்பல கடந்து 5
ஏத்தல் சான்ற விடனுடை வேள்வி
ஆக்கிய பொழுதி னறத்துறை போகி
மாய வண்ணனை மனனுறப் பெற்றவற்
கோத்திர நெல்லி னொகந்தூ ரீத்துப்
புரோசு மயக்கி 10
மல்ல லுள்ளமொடு மாசற விளங்கிய
செல்வக் கடுங்கோ வாழி யாதனைக்
கபிலர் பாடினார் பத்துப்பாட்டு. அவைதாம், புலாஅம் பாசறை, வரைபோலிஞ்சி, அருவி யாம்பல் உரைசால் வேள்வி, நாண்மகி ழிருக்கை புதல்சூழ் பறவை, வெண்போழ்க் கண்ணி, ஏம வாழ்க்கை, மண்கெழு ஞாலம், பறைக்குர வருவி; இவை பாட்டின் பதிகம்.
பாடிப்பெற்ற பரிசில்: சிறுபுறமென நூறாயிரங் காணங் கொடுத்து நன்றா வென்னும் குன்றேறி நின்று தன் கண்ணிற்கண்ட நாடெல்லாம் காட்டிக் கொடுத்தான் அக் கோ.
செல்வக் கடுங்கோ வாழியாதன் இருபத்தையாண்டு வீற்றிருந்தான்.
-----------------------------------------------------------
7.1. புலாஅம் பாசறை
61
பலாஅம் பழுத்த பசும்புண் ணரியல்
வாடை துரக்கு நாடுகெழு பெருவிறல்
ஓவத் தன்ன வினைபுனை நல்லிற்
பாவை யன்ன நல்லோள் கணவன்
பொன்னி னன்ன பூவிற் சிறியிலைப் 5
புன்கா லுன்னத்துப் பகைவ னெங்கோ
புலர்ந்த சாந்திற் புலரா வீகை
மலர்ந்த மார்பின் மாவண் பாரி
முழவுமண் புலர விரவல ரினைய
வாராச் சேட்புலம் படர்ந்தோ னளிக்கென 10
இரக்கு வாரே னெஞ்சிக் கூறேன்
ஈத்த திரங்கா னீத்தொறு மகிழான்
ஈத்தொறு மாவள் ளியனென நுவலுநின்
நல்லிசை தரவந் திசினே யொள்வாள்
உரவுக் களிற்றுப் புலாஅம் பாசறை 15
நிலவி னன்ன வெள்வேல் பாடினி
முழவிற் போக்கிய வெண்கை
விழவி னன்னநின் கலிமகி ழானே.
துறை : காட்சி வாழ்த்து.
வண்ணம் : ஒழுகு வண்ணம்.
தூக்கு : செந்தூக்கு.
பெயர் : புலாஅம் பாசறை.
1-8. பலாஅம்........பாரி.
உரை: பலாஅம் பழுத்த பசும்புண் அரியல் - பலா மரத்திலே பழுத்து வெடித்த பழத்தின் வெடிப்பிலிருந் தொழுகும் தேனை; வாடை துரக்கும் - வாடைக் காற்று எறியும்; நாடுகெழு பெருவிறல் - பறம்பு நாட்டிற் பொருந்திய பெரிய விறல் படைத்தவனும்; ஓவத் தன்ன வினை புனை நல்லில் - ஓவியத்தில் எழுதியது போன்ற வேலைப்பாடமைந்த நல்ல மனையின் கண்ணே இருக்கும்; பாவை யன்ன நல்லோள் கணவன் - பாவை போன்ற நல்ல அழகும் நலமும் உடையாட்குக் கணவனும்; பொன்னின் அன்ன பூவின் சிறியிலை - பொன்போலும் நிறமுடைய பூவினையும் சிறிய இலையினையும்; புன் கால் - புல்லிய அடிப் பகுதியினையுமுடைய; உன்னத்துப் பகைவன் - உன்ன மரத்துக்குப் பகைவனும்; எம் கோ - எமக்கு அரசனும்; புலர்ந்த சாந்தின் மலர்ந்த மார்பின் - பூசிப் புலர்ந்த சாந்தினையுடைய அகன்ற மார்பினையும்; புலரா ஈகை மாவண் பாரி - குன்றாத ஈகையால் பெரிய வள்ளன்மையினையு முடையானுமாகிய பாரி எ-று.
பெரு விறலும், கணவனும் , பகைவனும், கோவுமாகிய பாரி என இயையும்.பலாஅம் பழுத்த பசும் புண் என்றதனால், பலாவின் பழமும் அது முதிர்ந்து வெடித் திருத்தலும் பெற்றாம். பலாஅப் பழுத்த எனற் பாலது மெலிந்து நின்றது; பழத்தின் வெடிப்பு புண் போறலின், "பசும் புண்" என்றும், அதனினின்று அரித் தொழுகும் தேனை "அரியல்" என்றும் கூறினார். "புண்ணரிந்து, அரலை யுக்கன நெடுந்தாளாசினி" மலைபடு: 138-9) என்று பிறரும் கூறுதல் காண்க. வாடைக் காற்று வீசுங்கால் இத் தேன் சிறு சிறு துளிகளாக எறியப்படுதலின், "வாடை துரக்கும்" என்றார். நாடு, பறம்பு நாடு. "பறம்பிற் கோமான் பாரி" (சிறுபாண்.91) என்று சான்றோர் கூறுமாறு காண்க. ஓவியம், ஓவமென நின்றது. "ஓவத்தன்ன விடனுடை வரைப்பில்" (புறம் 251) என்றாற்போல. பல்வகை வேலைப்பாட்டால் அழகு செய்யப்பட்ட மனை யென்றற்கு, "வினை புனை நல்லில்" என்றும், மேனி நலத்தால் பாவை போறலின் "பாவை யன்ன" என்றும், குண நலத்தின் சிறப்பு தோன்ற, "நல்லோ" ளென்றும் கூறினார். பாவை யுவமம் மேனி நலத்தை விளக்கி நிற்றலை, "பாவை யன்ன பலராய் மாண் கவின்" (அகம். 98) என வரும் சான்றோர் உரையானு மறிக. உன்னம, ஒருவகை மரம். இதன் பூ பொன்னிறமாயும் இலை சிறிதாகவும் அடிமரம் புற்கென்றும் இருக்கு மென்பது, "பொன்னினன்ன பூவிற் சிறியிலைப் புன்கா லுன்னம்" என்பதனால் விளங்குகிறது; உன்ன மரம் போர் வீரர் நிமித்தம் காண நிற்கும் மரம். காண்பார்க்கு வெற்றி யெய்துவதாயின் தழைத்தும், தோல்வி யெய்துவதாயின், கரிந்தும் காட்டும் என்ப. அது கரிந்து காட்டிய வழியும் அஞ்சாது அறமும் வலியும் துணையாகப் பொருது வெற்றி யெய்தும் வேந்தன் என்றற்கு "உன்னத்துப் பகைவன்" என்றார். தான் எய்துவது தோல்வியென உன்ன மரம் காட்டவும் காணாது, பொருது வென்றி யெய்தி உன்னத்தின் நிமித்தத்தைக் கெடுத்தல் பற்றிப் பகைவ னென்பாராயின ரென்க.
பூசிய சாந்தின் ஈரம் புலர்ந்தாலும், ஈதற்குக் கொண்ட நெஞ்சின் ஈரம் எஞ்ஞான்றும் புலராது ஈகை வினையைப் புரிவித்தல் பற்றி, "புலர்ந்த சாந்திற் புலரா வீகை" என இயைத்துச் சொன் முரணாகிய தொடை யழகு தோன்றக் கூறினார், கூறினா ராயினும், சாந்து பூசுதற்கு இடனாவது மார்பும், ஈகை வினைக்கிடனாவது வண்மையு மாதலின், "புலர்ந்த சாந்தின் மலர்ந்த மார்பு" என்றும், "புலரா வீகை மாவண் பாரி" யென்னும் இயைத்துப் பொருள் கூறப்பட்டதென வறிக.
இனிப் பழையவுரைகாரர், "பலாஅம் பழுத்த - பலாஅப் பழுத்த வென்னும் பகர வொற்று மெலிந்தது" என்றும் "பசும் புண்ணென்றது புண்பட்ட வாய் போலப் பழுத்து வீழ்ந்த பழத்தினை" யென்றும் "அரிய லென்றது அப் பழத்தினின்றும் பிரிந்து அரித்து விழுகின்ற தேனை" யென்றும் கூறுவர்.
பலாஅம் பழத்த வென்னும் பாடத்துக்குப் பழத்தி னிடத்தவாகிய வென்று உரை கூறிக் கொள்க.
9-10 முழவு.........படர்ந்தோன்
உரை: முழவு மண்புலர - முழவினிடத்தே பூசிய மார்ச்சனை மண் புலர்ந்தொழியவும்; இரவலர் இனைய - வேண்டுவன வழங்குவோர் இல்லாமையால் இரவலர் வருந்தவும்; வாராச் சேட்புலம் படர்ந்தோன் - மீண்டு இந் நிலவுலகிற்கு வருதல் இல்லாத மேலுலகிற்குச் சென்றொழிந்தான் எ-று.
முழவு முழக்க லுறுவோர் அதன்கண் ஓசை மிகுமாறு கருமட் பொடியும் பசையும் கலந்து பிசைந்து பூசி, ஈரம் புலராவாறு அவ் வப்போது தண்ணீரைத் தடவுவர். இக் காலத்தும் தண்ணுமை முதலியன இசைப் போர்பால் இச் செயலுண்மை காணலாம். முழவு முதலியன இயக்காத வழி, மண் புலர்ந்து இறுகி முழவிற்கு இறுதி பயந்து விடுதலால், "முழவு மண் புலர" என்றார். எனவே அம் முழவினை இயக்குவோர் இலராயினர் என்பதாம் "முழவு அழிய என்று கூறல் இன்னாத தாதலின், மண் புலர எனத் தகுதிபற்றிக் கூறப்பட்டது; என்றதன் கருத்து அதனால் தொழில் கொள்வா ரின்மையின் அது பய னிழந்த தென்பது" என்பர் உ.வே. சாமிநாதையர். இரவலர் இன்மை தீர அவர் தகுதியும் குறிப்பும் அறிந்து ஆர வழங்குநர் இல்லை யென்பதுபற்றி, "இரவலர் இனைய" என்றார். பிறவா நிலையும் அதற்குரிய மேலுலகும் பெற்றா னென்பார், "வாராச் சேட்புலம் படர்ந்தோன்" என்றார். "வாரா வுலகம் புகுதல்" (புறம். 341) என்று பிறரும் கூறுதல் காண்க. "பாலறி மரபி னம்மூவீற்றும், ஆ வோ வாகும் செய்யு ளுள்ளே" (வினை:14) என்பதனால், படர்ந்தோனென நின்றது. படர்ந்தோ னென்றது வினைமுற்று.
1018. அளிக்கென.......கலி மகிழானே.
உரை: ஒள்வாள் உரவிக் களிற்றுப் புலாஅம் பாசறை - ஒள்ளிய வாட் படையையும் வன்மையுடைய களிறுகளையுமுடைய புலால் நாற்றம் பொருந்தி பாசறைக்கண்ணே; நிலவின் அன்ன வெள்வேல் பாடினி - நிலவின் ஒளியைப்போல வெள்ளொளி செய்யும் நின் வேற் படையைப் புகழ்ந்து பாடும் பாடினி; முழவின் போக்கிய வெண்கை - முழங்கும் முழவின் தாளத்திற் கேற்ப ஒத்தறுக்கும் வெறுங் கையை யசைத்துப் பாடும்; விழவின் அன்ன - விழாக்களம் போன்ற; நின் கலி மகிழான் - நின்னுடைய ஆரவார மிக்க திருவோலக்கத்தின் கண்ணே; அளிக்க என இரக்கு வாரேன் - எம்மை யிதுகாறும் புரந்த வேள் பாரி இறந்தானாதலின் எம்மை அளிப்பாயாக என்று இரந்கு வந்தேனில்லை; எஞ்சிக் கூறேன் - நின் புகழைக் குன்றவும் மிகை படவும் கூற மாட்டேன்;ஈத்தது இரங்கான் - செல்வக் கடுங்கோ வாழியாதன் ஈதலால் பொருள் செலவாவது குறித்து மனம் இரங்குவ திலன்; ஈத்தொறும் மகிழான் - இடையறாது ஈதலால் இசை மிகுவது காரணமாக மகிழ்ச்சி யெய்துவதும் இலன்; ஈத்தொறும் மா வள்ளியன் என - ஈயும் போதெல்லாம் பெரிய வள்ளன்மை யுடையன் என்று; நுவலும் நின் நல்லிசைதர வந்திசின்-உலகோர் கூறும் நினது நல்ல புகழ் எம்மை நின்பால் ஈர்ப்ப வந்தேன், காண் எ-று.
பகைவரைப் பொருது அர் குருதி படிந்து கிடக்கும் வாட்படையும், அவரைத் தம் கோட்டாற் குத்திக் குருதிக்கறை படிந்திருக்கும் களிற்றுப் படையும் சூழ்தலால் பாசறை புலால் நாறுதல்பற்றி "புலாஅம் பாசறை" யென்றார். இனிப் பழையவுரைகாரர் " புலாஅம் பாசறை யென்றது வீரரெல்லாரும் போர் செய்து புண்பட்ட மிகுதியாற் புலால் நாறுகின்ற பாசறை யென்றவா" றென்றும், "இச் சிறப்பானே யிதற்குப் புலாஅம் பாசறை யென்று பெயராயிற்" றென்றும் கூறுவர். இனி, இதற்கு "ஒள்ளிய வாளால் வெட்டப்பட்ட வன்மையை யுடைய களிறுகளை யுடைய புலால் நாற்றம் வீசும் பாசறை" யென்பர் உ.வே.சாமிநாதையர்.
வேந்தனது வேற் படை கறை போக்கி யராவி நெய் பூசப்பெற்று வெள் ளொளி திகழ விருத்தலால், "நிலவினன்ன வெள்வேல்" என்றார். அவன் வென்றி பாடுமிடத்து வேல் முதலிய படைகளைப் பாடுதலும் மரபாதலின், "வெள்வேல் பாடினி" யென்றார். "பிறர் வேல் போலாதாகி யிவ்வூர், மறவன் வேலோ பெருந்தகை யுடைத்தே" (புறம் 332) என்றற் றொடக்கத்துப் புறப்பாட்டால் வேல்பாடும் மரபுண்மை காண்க. வேல் பாடினி, வேலைப்பாடும் பாடினி யென்க; "வேலை யென இரண்டாவது விரித்துப் பாடினியிற் பாடுதலொடு முடிக்க" என்பர் பழையவுரைகாரர். முழவிற் போக்குதலாவது, முழவிசைக் கேற்பத் தாளம் அறுத் திசைத்தல். பாடியாடு மிடத்துக் கையால், பிண்டி பிணையால் தொழிற்கை முதலிய அவிநயமின்றி இசைக்குத் தாள மிடுவ தொன்றே செய்தலின், "வெண்கை" யென்றார். பழையவுரையும், "வெண்கை யென்றது பொருள்களை அவி நயிக்கும் தொழிற்கை யல்லாத வெறுமனே தாளத்திற் கிசைய விடும் எழிற் கையினை " யென்று கூறுதல் காண்க.
பாசறைக்கண் வேந்தன் வீற்றிருந்த திருவோலக்கம் விழவுக்களம் போன்றமையின், "விழவினன்ன கலி மகிழ்" என்றார். "கலி மகிழென்றது, கலி மகிழையுடைய ஓலக்கத்தை" யென்பது பழையவுரை.
மாவண் பாரி வாராச் சேட்புலம் படர்ந்தமையின் புரப்பாரை யின்றி இன்மையால் வருந்தி, "எம்மைக் காத்தளிப்பாயாக" என்று நின்னை இரக்க வந்தே னில்லை யென்பார், "அளிக்கென இரக்கு வாரேன்" என்றும் என் குறையையாதல் நின் புகழையாதல் குன்றவும் மிகை படவும் கூறே னென்பார், "எஞ்சிக் கூறேன்" என்றும் கூறினார். கற்றோரை யறிந்தேற்றுப் புரக்கும் வேந்தர் பலர் உளராயினும், அவரவர் வரிசை யறிந்து ஈவோரை நாடிச் சேறல் தமக் கியல்பாதலால், "இரக்கு வாரேன்" என்றார். "வரிசை யறிதலோ வரிதே பெரிதும், ஈத லெளிதே மாவண் டோன்றல், அது நற் கறிந்தனை யாயின், பொதுநோக் கொழிமதி புலவர் மாட்டே" (புறம் 121) என்று அவர் திருமுடிக் காரிக்குக் கூறுமாற்றால் அவரது உட்கோள் அறியப்படும். இனிப் பழையவுரைகாரர், "இரக்கென்றது தன்மைவினை" யென்றும், "எஞ்சிக் கூறே னென்றது, உண்மையின் எல்லையைக் கடந்து பொய்யே புகழ்ந்து சொல்லோ னென்றவாறு" என்றும் கூறுவர். பிறரும், "செய்யா கூறிக் கிளத்தல், எய்யாதாகின் றெஞ் சிறு செந் நாவே" (புறம் 148) என்று கூறுதல் காண்க. மேலே, தாம் கேள்வி யுற்றதை எடுத் தோதுகின்றா ராதலின், வேந்தன் இனிதேற்றுக் கோடற்பொருட்டு, "எஞ்சிக் கூறேன்" என்று முகம் புகுகின்றார். "ஈத்த திரங்கான் ஈத்தொறு மகிழான், ஈத்தொறு மாவள்ளியன்" என்பது உலகு கூறும் புகழுரை. ஈதலால் பொருள் செலவாயினும், மேன்மேலும் ஈட்டிக்கொள்ளும் வன்மையுடைய னாதலால், "ஈத்த திரங்கான்" என்றும் ஈயுந்தோறும் இன்பம் பெருகிய வழியும், அதனை நினையாது ஈதல் சான்றோர் சென்னெறி யெனக் கருதுமாறு தோன்ற, "ஈத்தொறு மகிழான்" என்றும், முற்பகல் சென்றோரே பிற்பகல் செல்லினும் "முன்னே தந்தனெ னென்னாது துன்னி, வைகலும் செலினும் பொய்யலனாகி" (புறம்171) மிக்க பொருளை வழங்குதலின், "ஈத்தொறும் மாவள்ளியன்" என்றும், உலகம் அவனைப் புகழ்ந் துரைப்பது கேட்டே னென்பார், "என நுவலும் நின் நல்லிசை" யென்றார். யான் வாரே னாயினும், நின் நல்லிசைக் கேள்வி என் உண்ணின்று துரப்ப வந்தே னென்பார் " நின் னல்லிசைதர வந்திசினே" என்றார். உலகவர் என ஒரு சொல் வருவிக்க. "ஈவோ ரரிய விவ்வுலகத்து, வாழ்வோர் வாழ" வாழும் நின் போன்றாரைக் காண்டலின் இன்பம் பிறிதில்லை யாதலின் வந்தேன் என்றாரென்றுமாம். பிறாண்டும், "நின் நோன்றாள் வாழ்த்திக், காண்கு வந்திசின் கழறொடி யண்ணல்" (பதிற் 64) என்று கூறுதல் காண்க. பழைய வுரைகாரர், "ஈத்தற்கென நான்காவது விரிக்க" என்றும், "ஈத்தொறு மகிழா னென்றது, ஈயுந்தோ றெல்லாம் தான் அயலா யிருத்த லல்லது ஈயா நின்றோமென்று ஒரு மகிழ்ச்சி யுடையனல்ல னென்றவா" றென்றும் "நுவலும் என்றதற்கு உலகம் நுவலுமென வருவிக்க" என்றும் கூறுவர். இதுகாறும் கூறிய வாற்றால், பெரு விறலும் கணவனும் உன்னத்துப் பகைவனும் எம் கோவுமாகிய மா வண் பாரி, வாராச் சேட்புலம்; படர்ந் தோன்; அளிக்கு என இரக்கு வாரேன்; எஞ்சிக் கூறேன்; நின் கலி மகிழின்கண்ணே, நின் நல்லிசை தர வந்திசின் என்று வினைமுடிபு கொள்க. பழைய வுரை, "யான் பாரி சேட்புலம் படர்ந்தோன்; நீ அளிக்கவெனச் சொல்லி இரக்கென்று வந்து சில புகழ்ந்து சொல்லுகின்றேனு மல்லேன்; அஃதன்றி, உண்மை யொழியப் புகழ்ந்து சொல்லுகின் றேனுமல்லேன்; ஈத்ததற்கு இரங்காமை முதலாகிய அப் பாரி குணங்கள் நின்பாலும் உளவாக, உலகம் சொல்லும் நின் புகழை நின்பாலே தர வந்தேன், நின் பாசறையின் கலி மகிழின்கண்ணே என வினை முடிவு செய்க" என்று கூறுவர்.
"இதனாற் சொல்லியது அவன் வென்றிச் சிறப்பொடு படுத்து அவன்
கொடைச் சிறப்புக் கூறியவா றாயிற்று"
-------
7. 2. வரைபோ லிஞ்சி.
62
இழையணிந் தெழுதரும் பல்களிற்றுத் தொழுதி யொடு
மழையென மருளு மாயிரும் பஃறோல்
எஃகுபடை யறுத்த கொய்சுவற் புரவியொடு
மைந்துடை யாரெயில் புடைபட வளைஇ
வந்துபுறத் திறுக்கும் பசும்பிசி ரொள்ளழல் 5
ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர்திகழ்
பொல்லா மயலொடு பாடிமிழ் புழிதரும்
மடங்கல் வண்ணங் கொண்ட கடுந்திறல்
துப்புத் துறைபோகிய கொற்ற வேந்தே
புனல்பொரு கிடங்கின் வரைபோ லிஞ்சி 10
அணங்குடைத் தடக்கையர் தோட்டி செப்பிப்
பணிந்துதிறை தருபநின் பகைவ ராயிற்
புல்லுடை வியன்புலம் பல்லா பரப்பி
வளனுடைச் செறுவின் விளைந்தவை யுதிர்த்த
களனறு குப்பை காஞ்சிச் சேர்த்தி 15
அரிய லார்கை வன்கை வினைஞர்
அருவி யாம்பன் மலைந்த சென்னியர்
ஆடுசிறை வரிவண் டோப்பும்
பாடல் சான்றவவ ரகன்றலை நாடே.
துறை: செந்துறைப் பாடாண் பாட்டு.
வண்ணமும் தூக்கும் அது.
பெயர்: வரைபோலிஞ்சி.
5-9 பசும் பிசிர்...........வேந்தே.
உரை: பசும் பிசிர் ஒள்ளழல் - பசிய பொறிகளை யுடைய ஒள்ளிய நெருப்பானது; ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர் திகழ்பு - ஞாயிறு பலவாய்த் தோன்றும் மாயத்தோற்றங்கொண்டு சுடர்விட்டு எங்கணும் விளங்க; ஒல்லா மயலொடு பாடு இமிழ்பு உழிதரும் மடங்கல் வண்ணம் கொண்ட - உயிர்கட்குப் பொறுக்க முடியாத மயக்கத்தைச் செய்வதுடன் முழக்கத்தைச் செய்து திியும் கூற்றினது இயல்பினைக் கொண்ட; கடுந்திறல் - மிக்க திறலோடு; துப்புத்துறை போகிய கொற்ற வேந்தே - போர்த்துறை பலவற்றிலும் சிறப்பமைந்த வெற்றியையுடைய அரசே- எ-று.
போர் மேற்கொண்டு செல்லும் பகைப் புலத்தே எடுக்கும் தீ ஈண்டுப் பசும் பிசிர் ஒள்ளழல் எனப்பட்டது. இது சேரமான் பகைப் புலத்தே எடுத்த தீயாகும். இதனை "எரிபரந் தெடுத்தல்" என்று இலக்கணம் கூறும். பகைவர் நாட்டில் பல விடங்களிலும் தீ யெழுந்து பொறி பறக்கச் சுடர்விட் டெரிவது பற்றி, "பசும் பிசிர் ஒள்ளழல்" என்றும், பலவிடத்தும் தோன்றும் தீ ஞாயிறு பல்கியது போறலின், "ஞாயிறு பல்கிய மாயமொடு" என்றும் கூறினார். மாயம் போறலின் மாயமெனப்பட்டது. திகழ வென்பது திகழ்பென நின்றது. பெரு முழக்கம் கெட்டவழி உயிர் கட்கு மயக்க முண்டாதல் இயல்பாதலால், "ஒல்லாமயலொடு பாடிமிழ்பு" என்றும், எல்லா வுயிர்களையும் ஒடுக்கும் திறல்பற்றி, கூற்றினை "மடங்க"லென்றும் கூறினார். "மடங்க லுண்மை மாயமோ வன்றே" (புறம் 363) என்பதனால், மடங்கல் இப்பொருட்டாத லறிக.
இனிப் பழைய வுரைகாரர், "ஞாயிறு பல்கிய மாயமொடு உழிதரு மடங்கல் எனக் கூட்டி, உலகம் கடல் கொண்டு கிடந்த காலத்து அக்கடல் நீரெல்லாம் வற்ற எறித்தற்குத் தோன்றும் ஆதித்தர் பலவான மாயத் தோடே கூடி அந்நீர் வற்றும்படி திரிதரு வடவைத் தீ யென்றுரைக்க" என்றும், "சுடர் திகழ்பு ஒல்லா மயலொடு பாடிமிழ்பு உழிதரு மடங்கல் என்றது சுடர் திகழ்ந்து உயிர்கட்குப் பொறுக்க முடியாத மயக்கத்தைச் செய்த லோடே ஒலித்துத் திரிதரும் மடங்கல் என்றவா" றென்றும் "ஒள்ளழல் மடங்கல் வண்ணம் கொண்ட எனக்கூட்டி ஒள்ளழலானது மடங்கலாகிய அழலின் வண்ணத்தைக் கொள்கைக்குக் காரணமாய் நின்றவென வுரைக்க" என்றும், "இனி ஞாயிறு பல வாதலை அவன் பகைவர் நாட்டில் உற்பாதமாகத் தோன்றும் ஆதித்தர் பலராக்கி, மடங்கலென்ற தனைக் கூற்றமாக்கி, "சுடர் திகழ்பு என்றதனைத் திகழ வெனத் திரித்து, ஒள்ளழலானது ஞாயிறு பல்கிய மாயமொடு சுடர் திகழ, மடங்கல் வண்ணம் கொண்ட வேந்தே யென வுரைப்பாரு முளர்" என்றும் கூறுவர்.
1-5 இழையணிந்து.............இறுக்கும்.
உரை: இழையணிந்து எழுதரும் பல்களிற்றுத் தொழுதியொடு - ஓடையும் பொன்னரி மாலையு முதலாகிய அணிகளைப் பூண்டு எழுகின்ற பலவாகிய யானைத் தொகுதியும்; மழையென மருளும் மா இரும் பல்தோல்-மழை மேகமென்று மயங்கத்தக்க கரிய பெரிய பலவாகிய கிடுகை ஏந்திய படையும்; எஃகு படை அறுத்த கொய் சுவல் புரவியொடு-வேல் வாள் முதலிய படை யேந்திய வீரர் படையினைச் செயலறப் பொகுதழித்த கொய்யப் பட்ட பிடரி மயிரை யுடைய குதிரைப் படையுமாகிய நின் தானை, மைந்துடை ஆரெயில் புரைபட வளைஇ வந்து-வலியினை யுடைய கடத்தற்கரிய பகைவரது மதிற் பக்கத்தே நெருங்க வளைத்து வந்து; புறத்து இறுக்கும்-மதிற் புறத்தே தங்கி யிருக்கின்றது எ-று.
ஒடு, எண்ணொடு, தோலென்பதனோடும் கூட்டுக. தொழுதியும் தோலும் புரவியும் ஆகிய நின் தானையென ஒரு சொல் வருவித்து எயில் புடைபட வளைஇ வந்து புறுத்திருக்கும் என இயைக்க. போர்க்கிற்றின் முதத்தே ஓடையும் எருத்ததிற் பொன்னரி மாலையும் அணிப வாதலின் "இழையணிந் தெழுதரும் பல் களிற்றுத் தொழுதி" யென்றார். இழை யணிந்து போர்க்குரிய குறிப்பினைத் தெரிவித்ததும் களிறு வீறு கொண் யெழுமாறு தோன்ற, " எழுதரும்" என்றார். தோல், கிடுகு, கரிய தோலாற் செய்தமையின், கிடுகின் தோற்றம் மழை மேகம் போறலின், "மழையென மருளும் பஃறோல்" என்றார்; "புரைதவ வுயரிய மழை மருள் பஃறோல்" (மலைபடு. 377) எனப் பிறரும் கூறுதல் காண்க. பழைய வுரை காரர், "பஃறோலொடு வென்னும் ஒடு விகாரத்தால் தொக்க தாக்கி விரிக்க" என்பர். வாளும் வேலும் ஏந்திய படை யென்றதற்கு "எஃகு படை" என்றார். படை வரிசையில் நிரை சிதைத்துக் கடந்து செல்லும் போராண்மை விளங்க, "எஃகு படை யறுத்த கொய் சுவற் புரவி" யென்றார். குதிரையின் பிடரி மயிரை அவ்வப்போது கத்தரித்து விடுபவாதலின், "கொய்சுவ" லெனப்பட்டது. உயர்வு, அகலம், திண்மை முதலிய வற்றாலும் பல் வகைப் பொறிகளை யுடைமையாலும் அருமை யுடைத்தாதல் பற்றி, "மைந்துடை ஆரெயில்" எனப்பட்டது. களிற்றுத் தொழுதி முதலாகவுள்ள படை போந்து பகைவர் மதிலை வளைத்துப் புறத்தே தங்கியிருப்பது விளங்க, " வந்து புறத்திழுக்கும்" என்றார். இனி, நின்தோற் படை களிற்றுத் தொழுதியொடும் புரவியொடும் வந்து புறத்திறுக்கும் என இயைதலும் மொன்று.
10--12. புனல் பொரு ............... பகைவராயின்
உரை: புனல் பொரு கிடங்கின்- நீர் மிக்குக் கரையை யலைக்கும் அகழியினையும்; வரைபோல் இஞ்சி-மலைபோலும் மதிலினையும் கொண்டு; அணங்குடைத் தடக்கையர்-தமக்குப் பொருந்தாதாரை வருத்துதலை யுடைய பெரிய கையினை யுடையராய்; நின் பகைவா- நினக்குப் பகைவரு மாயினார; தோட்டி செப்பி- வணங்கிய மொழிகளைச் சொல்லி; பணிந்து-நின் தாளில் வீழ்ந்து வணங்கி; திறை தருபவாயின்-திறை செலுத்துவாராயின் எ-று.
ஆழ்ந்த கிடங்கும் மலையென வுயர்ந்த மதிலும் தம்மொடு மாறுபட்டாரை வருத்தி யலைக்கும் பல்வகை வலியு முடையராயினும் நின்னொடு பொருது வேறல் முடியாதென்பது துணிபு என்பார், "கிடங்கினையும் இஞ்சியினையும் அவர்தம் கையினையும் சிறப்பித் தோதினார். நின் தானையின் பெருமையும் வன்மையும் நோக்கின், அதனால் வளைக்கப்பட்ட இவ்வகழியும் இஞ்சியும் வலியில்லனவா மென்ப துணராது "புனல்பொரு கிடங்கின் வரைபோலிஞ்சி" யெனத் தம்மரண் சிறப்பைத் தாமே வியந்திருப்பதைப் புலப்படுத்தா ரென்றும் அச்சிறப்பால் இப்பாட்டிற்கு வரைபோ லிஞ்சியெனப் பெயராயிற் றென்றும் கொள்க. "வரைபோ லிஞ்சியை அரணாக வுடையரா யிருந்தே திறை தருப எனச் சொன்ன சிறப்பானே இதற்கு வரைபோ லிஞ்சி யென்று பெயராயிற்" றென்பது பழையவுரை. அணங் குறுத்தற் கேதுவாகிய வலியினை "அணங்" கென்றார். தோட்டி போலத் தலை வணங்கி மொழிதலின், "தோட்டி செப்பி" யென்றார். உடல் நன்கு வணங்கிப் பணிதலைக் "குடந்தம்பட்டு" (முருகு 229) என்பது போல. பிறரும் "பணிந்து திறைதருப நின் பகைவராயின்" (பதிற் 59) என்பது காண்க.
13-19. புல்லுடை..............நாடே
உரை: புலலுடை வியன் புலம் - புல் நிறையவுடைய அகன்ற புலத்தின்கண்; பல் ஆ பரப்பி - பலவாகிய ஆனிரைகளைப் பரந்து மேயவிட்டு; வளன் உடைச் செறுவின் விளைந்தவை உதிர்ந்த - வளப்பத்தையுடைய வயலின்கண் விளைந்த கதிரினின்றும் உதிர்ந்த; களன் அறு குப்பை - களத்திற் சேர்த்துத் தூற்றப்படுவதில்லாத நெல் மணியின் குவியலை; காஞ்சிச் சேர்த்தி - காஞ்சி மரத்தின் அடியிலே சேரத் தொகுத்து வைத்து; அரியல் ஆர்கை வன்கை வினைஞர் - கள்ளுண்டலையும் வலிய கையினைமுடைய உழவர்; அருவி ஆம்பல் மலைந்த சென்னியர் - அரிய பூவாகிய ஆம்பலைச் சூடிய தலையினையுடையராய்; ஆடுசிறை வரிவண்டு ஓப்பும் -அசைகின்ற சிறகையும் வரிகளையுமுடைய வண்டினம் அவ்வாம்பலை மொய்க்காவாறு ஓச்சும்; அவர் அகன்றலை நாடு - அப்பகைவருடைய விரிந்த இடத்தை யுடைய நாடுகள்; பாடல் சான்ற - புலவர் பாடும் புகழ் பெற்றனவாகும் எ-று.
ஆனிரை மேய்ப்போர் அவற்றைப் புல்லுள்ள விடத்தே மேய விட்டுத் தாம் ஒரு புடையில் இருப்ப வாதலின், "புல்லுடை வியன்புலம் பல்லா பரப்பி" யென்றார். மிக்க மணிகளொடு கூடிய கதிர்களை யுடைமை தோன்ற, "வளனுடைச் செறு" என்றும், அக்கதிரி னின்றும் உதிர்ந்தவற்றை, நெல்லரியுந் தொழுவர் கொள்வதில்லை யாகலின், அறுவடை முடிந்தபின், உழவரும் ஆனிரை மேய்ப்பாரும் உதிர்ந்து கிடக்கும் அவற்றைத் துடைப்பத்தாற் கூட்டித் தொகுப்பது இயல்பாதலால், "விளைந்தவை யுதிர்ந்த குப்பை" யென்றும், இக்குப்பை களத்தில் தொகுத்துக் கடாவிற்றுத் தூற்றும் அத்துணை மிகுதியும் தகுதியு முடையவல்ல வாதலின் "களனறு குப்பை" என்றும் கூறினார். இனி, விளைந்தவை யுதிர்ந்தனவும், களத்திடத்தே ஒதுக்கப்பட்டனவு மாகிய நென் மணியின் குப்பையென வுரைபபினு மமையும். இவற்றைக் காஞ்சி மரத்தின் நிழலிலே தொகுத்தது, அம்மரங்கள் மிகுதியாக இருப்பதனால் என அறிக. இவ்வாறு தொகுத்த நென்மணிகளை, அரியல் விற்பார்க்கு கொடுத்து அரியலைப் பெற்று உண்பர் என்றற்கு "அரியலார்கை வினைஞர்" என்றார். உழவர்க்குப் பகடு வேண்டி யிருத்தலால், ஆனிரை மேய்த்தலும் ஒரோ வழித்தொறுலாத லுணர்க. அரியல், கள். இவ்வண்ணம் தமக்கு வேண்டிய அரியலுக்காக, நெல் மணிகளை அரிது முயன்று தொகுத்தமைக்கும் வன்மை தோன்ற, "வன்கை வினைஞர்" என்றார். அரு வீ ஆம்பல், என்பது அரு வி யாம்பலெனக் குறுகிற்று. நெல்லரியு மிடத்து வயிலிடத்து நீரை வடித்து விடுதலின், ஆம்பல் முதலிய நீர்ப்பூக்கள் அரியவாதலின், "அருவியாம்பல்" என ஓதுவாராயினர். இதற்குப் பிறரெல்லாம் வேறுபடக் கூறுவர். வினைஞர் சென்னியராய் வண்டோப்பும் நாடு என இயையும். பாடல் சான்ற என இறந்த காலத்தாற் கூறியது துணிவு பற்றி. திறை தருதலால் நாட்டிற் போரின்மையும், அதுவே வாயிலாக வளம் பெருகுதலும் பயனாதலின் சான்றோர் பாட்டும் உரையும் பெருகிப் புகழ்விளைக்கும் என்பது பற்றி "பாடல் சான்ற வவரகன்றலை நாடே" என்றார். வினைஞர் தாம் சென்னியிற் சூடிய ஆம்பலிடத்தே தேன் கவர வரும் வண்டினத்தை யோப்புவ ரென்றதனால், நாட்டில் வாழ்வோர் நற் குடிகளாய் அரசர்க்குப் பொருள் விளைவித்துத் தந்து வளம் கவரும் பகை முதலியன இல்லாவாறு காத்தொழுகுவ ரென்றாராயிற்று; "சீறூர்க்குடியு மன்னுந்தானே கொடி யெடுத்து, நிறை யழிந் தெழுதரு தானைக்குச், சிறை யுந்தானே தன்னிறை விழுமுறினே" (புறம். 314) எனச் சான்றோர் கூறுதல் காண்க.
பழையவுரைகாரர் "விளைந்தென்றதனை விளையவெனத் திரிக்க" வென்றும் "களனறு குப்பை யென்றது களத்திற்கடா விடுதற் றொழிலற்ற தூற்றாப் பொலியை" யென்றும் "பரப்பி யென்னும் வினை யெச்சத்தினைச் சேர்த்தி யென்னும் வினையொடு முடித்து அதனை வரிவண்டோப்பும் என்னும் வினையொடு முடிக்க" என்றும் "வண்டோப்பும் நாடென மாறிக் கூட்டுக" என்றும் கூறுவர். இதுகாறும் கூறியவற்றால், வேந்தே, நின் தானை வந்து புறத்திறுக்கும்; இனி, நின் பகைவர் பணிந்து திறை தருப வாயின், அவர் அகன்றலை நாடுகள் பாடல் சான்றவாம் என வினை முடிவு செய்க.
இனிப் பழையவுரைகாரர் "கொற்ற வேந்தே, நின் பகைவர், தோட்டி செப்பிப் பணிநது திறை தருபவாயின், அவரகன்றலை நாடு பாடல் சான்றவென மாறிக் கூட்டி வினை முடிவு செய்க" என்பர்.
"இதனாற் சொல்லிய து அவன் வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று"
----------------------------------------
7.3. அருவி யாம்பல்
63
பார்ப்பார்க் கல்லது பணிபறி யலையே
பணியா வுள்ளமொ டணிவரக் கெழீஇ
நட்டோர்க் கல்லது கண்ணஞ் சலையே
வணங்குசிலை பொருதநின் மணங்கம ழகலம்
மகளிர்க் கல்லது மலர்ப்பறி யலையே 5
நிலந்திறம் பெயருங் காலை யாயினும்
கிளந்த சொன்னீ பொய்ப்பறி யலையே
சிறியிலை யுழிஞைத் தெரியல் சூடிக்
கொண்டி மிகைபடத் தண்டமிழ் செறித்துக்
குன்றுநிலை தளர்க்கு முருமிற் சீறி 10
ஒருமுற் றிருவ ரோட்டிய வொள்வாட்
செருமிகு தானை வெல்போ ரோயே
ஆடுபெற் றழிந்த மள்ளர் மாறி
நீகண் டனையே மென்றனர் நீயும்
நுந்நுகங் கொண்டினும் வென்றோ யதனாற் 15
செல்வக் கோவே சேரலர் மருக
காறிரை யெடுத்த முழங்குகுரல் வேலி
நனந்தலை யுலகஞ் செய்தநன் றுண்டெனின்
அடையடுப் பறியா வருவி யாம்பல்
ஆயிர வெள்ள வூழி 20
வாழி யாத லாழிய பலவே.
இதுவுமது.
பெயர்: அருவி யாம்பல்.
1-7 பார்ப்பார்க்கல்லது..................பொய்ப்பறி யலையே
உரை: பார்ப்பார்க்கு அல்லது பணிபு அறியலை - பார்ப்பாரை யன்றிப் பிறரைப் பணிதல் இல்லாய்; பணியா உள்ள மொடு அணிவரக் கெழீஇ - இவ்வாறு பணியாத மன வெழுச்சியால் அழகுறப் பொருந்தியும்; நட்டர்க் கல்லது - உயிரொத்த நண்பர்க் கல்லது; கண் அஞ்சலை - பிறர்க்குக் கண்ணோடி அஞ்சுவது இல்லாய்; வணங்குசிலை பொருத நின் மணங் கமழ் அகலம்- வளைந்த இந்திர வில் போலும் மாலை கிடந்தலைக்கும் சாந்துபூசி மணங் கமழும் நின் மார்பை; மகளிர்க் கல்லது மலர்ப்பு அறியலை-உரிமை மகளிர்க்கு இன்பந் தருதற்கு விரிந்து காட்டுவ தன்றிப் பிற பகைவர்க்குக் காட்டுவதில்லாய்; நிலம் திறம் பெயரும் காலையாயினும்-நிலவகைகள் தம் இயல்பில் திரிந்து கெடுங் கால மெய்தினும்; கிளந்த சொல்-வாயாற் சொல்லிய சொல்; நீ பொய்ப்பு அறியலை-பொய் படுவதை நீ அறியாய் எ-று
பார்ப்பனராவார் ஓதல் முதலிய அறுவகை யொழுக்கங்களை யுடையோர். அவர்க்குப் பணிய வேண்டு மென்பது பண்டையோர் கொள்கை. "இறைஞ்சுக பெரும நின் சென்னி சிறந்த, நான்மறை முனிவ ரேந்துகை யெதிரே" (புறம். 6) என்று பிறரும் கூறுதல் காண்க. ஏனோர்க்குப் பணியாமை மானமாதலின், "பணியா வுள்ளமொடு" என்றார். அவ்வுள்ளம் மானமுடைய அறவேந்தர்க்கு அழகு செய்தலின், "அணிவரக் கெழீஇ" என்றார். பணியா வுள்ளமுடையார்க்கு அச்சம் பிறவாதாயினும், உயிரொத்த நண்புடையாரைக் கண்ணோட்டத்தால் அஞ்சுவரென்பது தோன்ற நிற்கும் சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. கண்ணஞ்சல், கண்ணோட்டத்தால் அஞ்சுதல்; ஒடு, ஆனுருபின் பொருட்டு. தார், வணங்கிய சிலை போறலின் "வணங்கு சிலை" யென்றும் மகளிர் முயக்கத்தால் மலைத்தவழி விரிந்து காட்டி யின்புறுத்தலின், "வணங்கு சிலை பொருத மணங் கமழகலம் மகளிர்க்கல்லது மலரப் பறியலை" யென்றும் கூறினார். "மகளிர் மலைத்த லல்லது மள்ளர், மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப" (புறம். 10) என்று பிறரும் கூறுதல் காண்க. இனி, இதற்கு வில்லை வணங்கி அம்பு தொடுக்கும் செயலால் உராய்ந்த மார்பு என்று, கூறி, "மாண்வினைச் சாப மார்புற வாங்கி, ஞாண்பொர விளங்கிய வலி கெழு தடக்கை" (பதிற். 90) என்பதனைக் காட்டுவர் உவெ சாமிநாதையர். பழையவுரைகாரரும், " அகலம் மகளிர்க் கல்லது மலர்ப்பறி யலையே என்றது நின்னொடு பொருவாரின்மையின் நின் அகலத்தை நின் மகளிர் போகத்துக்கு இடமாக வல்லது மலர்வித்தலை யறியாயென, "மகளிர் மலைத்த லல்லது மள்ளர், மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப என்றதுபோலக் கொள்க" என்று கூறுதல் காண்க. பணியாவுள்ள மென்றதற்கு, "நட்பு நின்ற நிலையின் ஒருநாளும் தாழ்வுபடாத வுள்ள மென்றவா" றென்றும், "கெழீஇ யென்னும் எச்சத்தினை நட்டலென்னும் தொழிலொடு முடிக்க" என்றும் பழையவுரை கூறும்.
நிலவகை, குறிஞ்சி முதலாகக் கூறப்படுவன. பொய்யாவழி நிலம் திறம் பெயர்த்து கெடுதற்குரிய கால மெய்துமாயினும், சொன்சொல் பொய்ப்பதிலன் எனச் சேரமானுடைய வாய்மையைச் சிறப்பிப்பார், "நிலந்திறம் பெயரும் காலையாயினும், கிளந்த சொல் நீ பொய்ப்பறியலை" என்றார். உம்மை, எதிர்மறை. "நிலம்புடை பெயர்வ தாயினும் கூறிய, சொற்புடை பெயர்தலோ விலரே" (நற்.389) என்று பிறரும் கூறுதல் காண்க.
மணங்கம ழகலம் என்புழிக் கமழ்தற் கேதுவாகிய சாந்தின் பூச்சு வருவிக்கப்பட்டது.
8-12 சிறியிலை................போரோயே
உரை: சிறியிலை உழிஞைத் தெரியல் சூடி-சிறிய இலைகளையுடைய உழிஞைப்பூ மாலையை யணிந்து; கொண்டி மிகைபட- பகைப் புலத்தே கொள்ளத்தக்க பொருள் மிக வுண்டாமாறு; தண் தமிழ் செறித்து-தண்ணிய தமிழ வீரர்களாலாகிய தன் படையை மேன்மேற் செலுத்தி; குன்று நிலை தளர்க்கும் உருமின் சீறி-மலைகள் நிலை தளர முழங்கும் இடியேறு போலச் சினந்து சென்று; ஒரு முற்று இருவரோட்டிய-ஒரு வளைப்பில் இரு பேரரசர்களை வென்று புறங்கண்ட; ஒள்வாள் செருமிகு தானை- ஒள்ளிய வாளேந்திச் செய்யும் போரில் மேம்பட்ட தானையினையும்; வெல் போரோய் -வெல்லுகின்ற போரினையுமுடையோனே எ-று
செய்வது உழிஞைப்போர் என்றற்கு "உழிஞைத் தெரியல் சூடி" யென்றார். இப் போரால் பகைவருடைய முழுமுத லரணத்தைக் கொண்டவழி, மிக்க பெருஞ் செல்வம் கொள்ளையாகப் பெறப்படுதலின், "கொண்டி மிகைபட" என்றும், முற்றவிலும் கோடலிலும் தலை சிறந்தவராதல் பற்றித் தமிழ் வீரரையே மிகுதியாகச் செலுத்தினமை தோன்ற, "தண்டமிழ் செறித்து" என்றும், சேரவேந்தன் தானும் அவ் வீரருடன் சென்று அவர்க்குத் தலைமை தாங்கிப் பொரும் திறத்தை, "குன்றுநிலை தளர்க்கும் உருமின்சீறி ஒருமுற் றிருவரோட்டிய வெல்போரோயே" என்றும் கூறினார். அவன் சீற்றத்தால் மலைபோலும் மதிலும் பிற அரண்களும் அழிவது கண்டு "குன்றுநிலை தளர்க்கும் உருமின் சீறி" என்றும் தன்னால் வளைக்கப்பட்ட பேரரசனையும் அவற்குத் துணையாகப் போந்தானொரு பேரரசனையும் முற்றிச்செய்த தன் ஒரு போர் வினையால் வென்று புறங் கண்டமை தோன்ற "ஒருமுற் றிருவ ரோட்டிய வெல்போ ரோய்" என்றும் கூறினார். "தமிழ் செறித்து" என்றதனால் இருவர் தமிழரல்ல ரென்பது பெற்றாம். ஓட்டிய வெல் போரோய், செருமிகு தானை வெல் போரோய் என இயையும். தெரியல் சூடி, தமிழ் செறித்து, சீறி, இருவரோட்டிய வெல்போரோய் என்றது சேரமானது போர்வன்மை விளக்கி நின்றது. சிறிய விலை சிறியிலை யென நின்றது. இது கடைக்குறையென்பர் பழையவுரைகாரர். தமிழ்செறித் தென்றது, "மாற்றாரது தமிழப்படை யெல்லாம் இடையறப்படுத்தி" யென்றும், "ஒருமுற்று ஒரு வளைப்பு" என்றும், "இருவர் சோழனும் பாண்டியனும்" என்றும் "இருவரை யென்னும் உருபு விகாரத்தால் தொக்கது" என்றும் பழையவுரைகாரர் கூறுவர். சேரர்படையும் தமிழ்ப்படை யாதலின், சோழ பாண்டியர் படையைமட்டில் தமிழ்ப்படையெனல் பொருந்தாமையாலும், செறித்து என்றற்கு இடையறப்படுத்தி என்பது பொருளன்றாதலானும் பழையவுரை பொருந்தாமை யுணர்க. பழையவுரைகாரர் கூறுவதே பொருளாயின், செறித்தென்பதன்றி,தமிழ்செறுத் தென்பது பாடமாதல் வேண்டும். அவ்வாறு பாடமின்று. தமிழ் வேந்தருடையே நிகழும் போரிற் செறியும் தமிழ வீரரை, "தமிழ் தலைமயங்கிய தலையாலங் கானத்து் (புறம். 19) என்று சான்றோர் கிளந்தோதுப. "அருந்தமி ழாற்ற லறிந்தில ராங்கென" (சிலப். 26: 161) என்றும், "தென்றமி ழாற்றல், அறியாது மலைந்த வாரிய வரசரை" (சிலப். 27:5-6) என்றும் சேர வேந்தர் தம்மைத் தமிழரென்றே கூறுதல் காண்க.
இனி, "ஒள்வாள் செருமிகு தானை வெல்போரோயே" என்றது, சேரமானது தானைச்சிறப்பை யுணர்த்துகின்றது விற்படை சேரர்க்கே சிறப்பாக வுரியதாயினும், ஒள்ளிய வாளேந்தித் செய்யும் போரினும் இத் தானை சிறப்புற்றுப் பல போர்களில் வென்றி மேம்பட்டதென்றற்கு, "ஒள்வாள் செருமிகுதானை" யென்றார்.
13-15. ஆடுபெற்று...........வென்றோய்
உரை: ஆடுபெற்றழிந்த மள்ளர்- பிற வேந்தர்க்குப் படை வீரரா யிருந்து பல போர்களில் வெற்றி பெற்றும் நின்னொடு பொருது வீறழிந்த வீரர்; மாறி-பகைவரிடத்தினின்றும் மாறி நின் தாணிழல் விழைந்து போந்து; நீ கண்டனையேம் என்றனர்;- நீ கருதியதனையே யாமும் கருதி யொழுகும் கருத்துடையே மாயினேம் என்று சூள் மொழிந் தமைந்தனர்; நீயும் நும் நுகம் கொண்டு இனும் வென்றோய்.- நீயும் நும் குலத்தோர்க்குச் சிறப்பாக வுரியவாகிய வன்மையும் கண்ணோட்டமும் கொண்டு மேலும் பல போர்களில் வென்றி சிறந்தாய் எ-று
பெற்று என்புழிச் சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. அழிந்த என்பதற்கு எழுவாய் வருவிக்கப்பட்டது. முன்னைப் போர்களில் ஆடுபெறுதற் கேதுவாயிருந்த தோள்வலி நின்னொடு பொரற்கு ஆற்றாமையின், மள்ளர் வீறழிந்தன ரென்பார், "ஆடுபெற்றும் அழிந்த மள்ளர்" என்றும் அழிந்த வீற்றினை மறுவலும் பெற விழைவதே வீர்க்குக் குறிக் கோளாதலாலும், அதனைப் பெறற்கு அரணும் துணையு மாகும் பெருவிறலுடையார் வழிநின்று வாழ்வதையே வாழ்க்கையாகக் கருதுபவாதலாலும் " மாறி நீ கண்டனையேம் என்றனர்" என்றும், தாம் பகையிடத் திருந்து மாறுகின்றமையின், தம் நினைவு சொல் செயல்களைத் தலைமகன் அயிராமைப் பொருட்டுச் சூளுறவு முதலியன செய்தமை தோன்ற, "நீ கண்டனையேம் என்றனர்" என அவர் கூற்றைக் கொண்டெடுத்துங் கூறினார். நீ கண்டனையேம் என்றது, "யான் கண்டனைய ரென்னிளையரும்" (புறம். 191) என்றாற்போல வந்தது. இடைக்காலத்தில் இவ்வாறே வீரர்கள் சூளுறவு செய்த செயல்களைத் திருக்கோயிலூர் வட்டத்து எலவானாசூர் முதலிய இடங்களிற் காணப்படும் கல்வெட்டுக்கள் (A.. No. 500 of 1937-8) கூறுகின்றன. அம் மன்னரது வினைத் தூய்மையும் மேலும் பல போர்களைச் செய்து அறிந்தாளும் சேரனது ஆட்சித்திறமும் தோன்ற, "நீயும் நும் நுகம் கொண்டு இனும் வின்றோ" யென்றார். இனிப் பழையவுரைகாரர், "ஆடுபெற்றழிந்த மள்ளரென்றது, முன்பு பிறரொடு பொருது, வென்றி பெற்றுப் பின் நினக்கு அழிந்த மள்ளரென்றவா" றென்றும், "மாறி யென்றது நின்னொடு பகைமாறி யென்றவா" றென்றும், "நீ கண்டனையே மென்றது இன்று முதல் நின்னாலே படைக்கப்பட்டாற் போல்வே மென்றவா" றென்றும் கூறுவர். நுகம், வன்மை மேற்றாயினும், அதற்கு அழகு தரும் கண்ணோட்டத்தையும் அகப்படுத்து நின்றது. பழைய வுரைகாரரும், "நின் பெருமையும் கண்ணோட்டமுமாகிய நும் நுகம்" என்பது காண்க. நுக மென்றற்கு வலியென்றே கொண்டு, நுங்கள் படைக்கு வலியாகக் கொண்டெனினு மமையும். நுகம் வலிமைப் பொருட்டாதலை, "வெம்போர் நுகம்படக் கடக்கும் பல்வே லெழினி" (குறுந் . 80) என ஔவையார் கூறுமாற்றாலறிக.
15-21. அதனால்...........பலவே
உரை: அதனால்- இன்ன இயல்புகளையுடையை யாதலால்; சேரலர் மருக-சேரர்குடித் தோன்றலே; செல்வக் கோவே- செல்வக் கடுங் கோவே; கால் எடுத்த திரை முழங்கு குரல வேலி நனந்தலை உலகம்-காற்றால் சுருட்டப்பட்ட அலைகள் முழங்கும் முழக்கத்தையுடைய கடலைச் சுற்றெல்லையாகவுடைய அகன்ற உலகத்தே வாழும் நன்மக்கள்; செய்த நன்று உண்டெனின்-செய்த அறம் நிலைபெறுவ தென்றால்; வாழியாத-செல்வக்கடுங்கோ வாழியாதனே; அடையடுப்பு அறியா அருவி ஆம்பல்-இலை யடுத்தலை யறியாத பூவல்லாத ஆம்ப லென்னும் எண்ணும், பல ஆயிர வெள்ள வூழி-பல ஆயிரங்களாகப் பெருகிய வெள்ளமென்னும் எண்ணும் ஆகிய ஊழிகள்; வாழிய-நீ வாழ்வாயாக எ-று
அதனால் என்பது, "சாத்தி சாந்தறைக்குமாறு வல்லன்; அதனால் கொண்டா னுவக்கும்" என்புழிப் போலும் சுட்டு முதலாகிய காரணக் கிளவி, இயல்பு பலவற்றையும் தொகுத்து "அதனால்" என்றதும், ஆசிரியர் உள்ளம் அவற்றையுடைய செல்வக் கடுங்கோவை வாழ்த்துதற்கு விழைந்தமையின், "செல்வக் கோவே சேரலர்மருக" என்று சிறப்பித்தும், உலகம் சான்றோர் செய்யும் அறத்தால் நிலைபெறுகிற தென்பது உண்மையாயின், அவர் நெறி நின்றொழுகும் நீயும் நிலைபெறுக என்பார், "நனந்தலை யுலகம் செய்தநன் றுண்டெனின்" என்றும் "அருவியாம்பல் ஆயிர வெள்ள வூழி, வாழியாத வாழிய பலவே" யென்றும் கூறினார். இவ்வாறே, "இவ்வுலகத்துச், சான்றோர் செய்த நன்றுண்டாயின் மா மழை பொழிந்த, நுண்பஃறுளியினும் வாழிய பலவே" (புறம். 34) என்று சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆசிரியர் ஆலத்தூர் கிழார் வாழ்த்துவதும் காண்க. அடை, இலை. ஆம்பலென்னும் எண்ணுப் பெயர்க்கு "அடையடுப்பறியா அருவியாம்பல்" என்பது வெளிப்படை. அரு வீ என்பது அரு வி யெனக் குறுகிற்று. இஃது "அருங் கேடன்" (குறள். 210) என்புழிப் போலப் பூவலலாத என்பது பட நின்றது. அருமை, இன்மை குறித்து நின்றது.
இனிப் பழையவுரைகாரரும், "அருவி யாம்ப லென்றது வீ அரிய எண்ணாம்ப லென்றவா" றென்றும், "வீ யென்பது குறுகிற்" றென்றும், "அருவி, பண்புத் தொகை" யென்றும், "அடையடுப்பறியா அருவி யாம்பல் எனக் கூறிய இச் சிறப்பானே இதற்கு அருவியாம்ப லென்று பெயராயிற்” றென்றும், “பல ஆம்பலென மாறிக் கூட்டுக” என்றும் கூறுவர்.
இதுகாறும் கூறியவற்றால், செல்வக் கடுங்கோ வாழியாத, நீ பார்ப்பார்க்கல்லது பணிபறியலை; நட்டோர்க்கல்லது கண்ணஞ்சலை; அகலம் மகளிர்க்கல்லது மலர்ப்பறியலை; கிளர்ந்த சொல் பொய்ப்பறியலை; வெல்போரோய்; வென்றோய்; அதனால், சேரர் மருக, செல்வக் கோவே; வாழியாத, சான்றோர் உலகத்துச் செய்த நன்றுண்டெனில், ஆம்பலும் பல வெள்ளமுமாகிய வூழிகள் வாழிய என வினை முடிவு செய்க.
இனிப் பழையவுரை, “நீ பணிபறியலை, கண்ணஞ்சலை, நின் அகலம் மலர்ப்பறியலை, பொய்ப்பறியலை; இவை நின்னியல்பு; இவையே யன்றி வெல்போரோய், முன் பிறர்பால் வெற்றி பெற்று நினக்கு அழிந்த மன்னர் நின்னொடு பகைமாறி, நீ கண்டனையே மென்று தாழ்வு கூற, அதற்கேற்ப நீயும் நின் பெருமையும் கண்ணோட்டமுமாகிய நும் நுகம் கொண்டு இன்னும் வென்றி கூர்ந்தனை; நின் குணங்கள் இவ்வாறாகிய அதனானே, செல்வக் கோவே, சேரலர் மருகனே, வாழியதனே, உலகம் செய்த நன்று உண்டெனில், பல ஆம்பலாகிய ஆயிர வெள்ள வூழி வாழ்க என மாறிக் கூட்டி வினை முடிவு செய்க” என்றும், “வாழியாத வென்னும் விளி செல்வக் கோவே என்பது முதலிய விளிகளின்பின் நிற்க வேண்டுதலின் மாறாயிற்” றென்றும் கூறுவர்.
“இதனாற் செல்லியது; அவன் பல குணங்களையும் ஒருங்கு கூறி
வாழ்த்தியவாறாயிற்று.”
-------
7.4. உரைசால் வேள்வி
64
வலம்படு முரசின் வாய்வாட் கொற்றத்துப்
பொலம்பூண் வேந்தர் பலர்தில் லம்ம
அறங்கரைந்து வயங்கிய நாவிற் பிறங்கிய
உரைசால் வேள்வி முடிந்த கேள்வி
அந்தண ரருங்கல மேற்ப நீர்பட் 5
டிருஞ்சே றாடிய மணன்மலி முற்றத்துக்
களிறுநிலை முணைஇய தாரருந் தகைப்பிற்
புறஞ்சிறை வயிரியர்க் காணின் வல்லே
எஃகுபடை யறுத்த கொய்சுவற் புரவி
அலங்கும் பாண்டி லிழையணிந் தீமென 10
ஆனாக் கொள்கையை யாதலி னவ்வயின்
மாயிரு விசும்பிற் பன்மீ னொளிகெட
ஞாயிறு தோன்றி யாங்கு மாற்றார்
உறுமுரண் சிதைத்தநின் னோன்றாள் வாழ்த்திக்
காண்கு வந்திசிற் கழறொடி யண்ணம் 15
மைபடு மலர்க்கழி மலர்ந்த நெய்தல்
இதழ்வனப் புற்ற தோற்றமொ டுயர்ந்த
மழையினும் பெரும்பயம் பொழிதி யதனால்
பசியுடை யொக்கலை யொரீஇய
இசைமேந் தோன்றனின் பாசறை யானே. 20
துறை: காட்சி வாழ்த்து
வண்ணமும் தூக்குமது
பெயர்: உரைசால் வேள்வி
1-2 வலம்படு........அம்ம.
உரை: வலம்படு முரசின்-வெற்றி யுண்டாக முழங்கும் முரசினையும்; வாய் வாள் கொற்றத்து-தப்பாத வாட்படையாற் பெறும் வெற்றியினையும்; பொலம் பூண் வேந்தர்-பொன்னாற் செய்த பூண்களையுமுடைய வேந்தர்கள்; பலர் தில்-பலர்தாம் உளர்; அம்ம-இன்னமும் கேட்பாயாக எ-று
வெற்றியும் விழவும் கொடையும் குறித்து முழங்கும் மூவகை முரசுகளுள் வேந்தரக்கு வெற்றி முரசு சிறந்தமையின் "வலம்படு முரசினை எடுத்தோதியும், கொற்றத்துக்கு வாயிலாதலால் "வாய்வாளை" விதந்தும் கூறினார்.பொலம், பொன். வேந்தர் பல ருளராயினும் அவராற் பய னில்லை யென்பது பட நிற்றலில், தில், ஒழியிசைப் பொருட்டு. பழையவுரைகாரரும் தில் ஒழியிசை யென்றே கூறுவர்.
3-11 அறங் கரைந்து........அவ்வயின்
உரை: அறம் கரைந்து வயங்கிய நாவின்-அற நூல்களை ஓதிப் பயின்று விளங்கிய நாவினையும்; பிறங்கிய உரைசால் வேள்வி முடித்த கோள்வி-உயர்ந்த புகழமைந்த வேள்விகள் பல செய்து முடித்தற் கேதுவாகிய கேள்வியினையுமுடைய; அந்தணர் அருங் கலம் ஏற்ப-அந்தணர்கள் அரிய கலன்களை நீர் வார்த்துக் கொடுக்கப் பெறுவதால்; நீர் பட்டு இருஞ் சேறாடிய- அந் நீரொழுகி மிக்க சேறாகியதால்; களிறுநிலை முணைஇய- களிறுகள் நிற்பதற்கு வெறுத்த; மணல்மலி முற்றத்து-மண் நிறைந்த முற்றத்தையும்; தார் அரும் தகைப்பின்-ஒழுங்காக அமைந்த பரிசிலரன்றிப் பிறர் செல்லுதற்குரிய காப்புமுடைய; அவ்வயின்- அவ்விடத்து நின் பெருமனைக் கண்ணே யிருந்து; வயிரியர் புறஞ்சிறைகாணின்-கூத்தர்கள் புறஞ்சிறையிடத்தே வரக் காணினும்; வல்லே-தாழ்க்காது; எஃகு படை யறுத்த கொய் சுவற் புரவி- வேல் வாள் முதலிய படைவீரரை வென்று கொணர்ந்த கொய்யப் பட்ட பிடரியினையுடைய குதிரைகளையும்; அலங்கும் பாண்டில்- அசைகின்ற தேர்களையும்; இழை யணிந்து ஈம் என-அவ்வவற்றுக் குரிய அணி யணிந்து கொடுமின் என்று ஏவி; ஆனாக் கொள்கையை யாதலின்-ஈகையில் அமையாத கொள்கையை யுடையை யாதலினாலே எ-று.
பாசறைக்கண்ணே சென்று வேந்தனைக் காண்கின்றா ராதலால், அவன் தன் அரண்மனை யிடத்தே யிருந்து செய்யும் ஈகை வினையை இப் பகுதியால் விளக்குகின்றார். பாசறையை நோக்க , அரண்மனை அவ்விட மெனச் சுட்டப்படு மாகலின், "அவ்வயின்" என்றார். அரண்மனைக்கு முன்னே மணல்மலி முற்றமும் அதன் பின் தாரருந் தகைப்பும் உண்மையின் அம்முறையே கூறுகின்றார். உவளகத்துக்கும் மணன் மலி முற்றத்துக்கும் இடையது தாரருந்தகைப் பென்பதாம். தன்பாற் போந்து ஏற்ற பார்ப்பார்க்கு அவர் வேண்டும் அருங்கலங்களை நீர் பெய்து கொடுப்பதால், அந்நீரொழுகி மணல் மலி முற்றத்தைச் சேறாக்கிவிட்டதென்பார் "அந்தணர் அருங்கல மேற்ப நீர் பட்டு இருஞ்சே றாடிய மணல் மலி முற்றத்து" என்றார். களிறு நிலை முணைஇய மணல் மலி முற்றம், இருஞ்சே றாடிய முற்றம் என இயைக்க. இருஞ்சே றாடியதனால் களிறுகள் நிற்றற்கு விரும்பா வாயின வென்பர் "களிறு நிலை முணைஇய" என்றார். பழைய வுரைகாரரும், "களிறு நிலை முணவுதற்குக் காரணம் இருஞ்சேறாடுதல்" என்பது காண்க.
இனி, ஏற்கும் பார்ப்பார்களின் தகுதி கூறுவார், அவர் அருமறைப் பொருளைக் கற்றும் கேட்டும் ஒழுகும் நல்லொழுக்க முடைய ரென்றற்கு, அவரது நாவையும் கேள்வியையும் சிறப்பித்தார். "அறங் கறைந்து வயங்கிய நாவின்" என்றது கல்விச சிறப்பையும், "பிறங்கிய உரைசால் வேள்வி முடித்த கேள்வி" யென்றது கேள்விச்சிறப்பையும் சுட்டி நின்றன,. அற நூல்களையே ஓதுதலும் ஓதுவித்தலும் செய்தலால் நன்கு பயின்றவர் என்றற்கு "அறங் கரைந்து வயங்கிய நாவின்" என்றார். பார்ப்பார்க்குப் புகழ் அவர் செய்து முடிக்கும் வேள்வி யொன்றே குறித்து நிற்றலின், "பிறங்கிய வுரைசால் வேள்வி" யென்றும், வேள்வி பலவும் செய்து முடித்தற்குக் கேள்வி எதுவும் பயனு மாதலின்,. "வேள்வி முடித்த கேள்வி" யென்றும் கூறினார்.
இனி, "உரைசால் வேள்வி யென்றது, யாகங்கள் எல்லாவற்றினும் அரியவும் பெரியவுமாக வுரை யமைந்த வேள்வி" யென்றும், வேள்வியை இவ்வாறு உரை யமைந்த வேள்வியென வுரைத்த சிறப்பினால் இப் பாட்டு "உரைசால் வேள்வி" யெனப்படுவதாயிற் றென்றும பழைவுரைகாரர் கூறுவர்.
வீரர் உள்ளும் புறமும் இருந்து ஒழுங்குறக் காப்ப வேந்திருந்து ஈகை வினை புரியு மிடமாதலின், "தாரருந் தகைப்பு" என்றார். தார், ஒழுங்கு. தகைப் பென்பதே கடிமனை யென்னும் பொருட்டாயினும், அருந்தகைப் பென்றது, ஏற்க வரும் இரவலரையும் நன்கு ஆராய்ந்து காக்கும் காப்பு மிகுதி குறித்து. இரவலரும் பரிசிலரும் வாரா தொழியாமைப் பொருட்டு ஈதற்குரியாரைப் புறஞ்சிறை யிடத்தே நிறுவி, கூத்தர் முதலிய பரிசின் மாக்கட்கு வேண்டுவ ஈயுமாறு ஏற்பாடு செய்துள்ளமை தோன்ற, "புறஞ் சிறை வயிரியர்க் காணின் வல்லே எஃகு படை யறுத்த கொய்சுவற் புரவி அலங்கும் பாண்டி லிழையணிந் தீ மென ஆனாக் கொள்கையை" என்றார். பகைப் புலத்தே கொண்ட புரவி யென்றற்கு "எஃகு படை யறுத்த கொய் சுவற் புரவி" யென்றும், அவை ஈர்த் தேகுதற்கெனத் தேரும் சிறப்ப வழங்குக என்றற்கு "அலங்கும் பாண்டில் இழையணிந் தீமென" என்றும் கூறினார். பாண்டில், தேர். இனிப் பழையவுரைகாரர், "தாரருந் தகைப் பென்றது, ஒழுங்கு பாட்டை யுடைய ஆண்டு வாழ்வார்க்கல்லது பிறர் புகுதற்கரிய மாளிகைக் கட்டண"மென்றும், "தார் ஒழுங்கு; தகைப்பு, கட்டணம்; புறஞ்சிறை, அதன் சிறைப் புறம்; எஃகு படை- கூரிய படை; பாண்டில், தேர் பூணும் எருதுகள்;" என்றும் "புறஞ்சிறை வயிரியர்க் காணின் ஈம் என்றது, நம்மை யவர்கள் காணவேண்டுவ தில்லை, நம்மாளிகையிற் புறத்து நீயிர் காணினும் கொடுமின் என்றவா" றென்றும், "ஈமென்றது அவ்வீகைத் துறைக்குக் கடவாரை" யென்றும், "அவ்வயி னென்றது நின்னூரிடத் தென்றவா" றென்றும், "ஈமென அவ்வயின் ஆனாக் கொள்கையை யாதலின் என மாறிக் கூட்டுக" என்றும் கூறுவர்.
இவ்வாறு தன் அரண்மனை யகத்தும் புறத்தும் தானும் தன் பரிசனமும் ஈகை வினைக்கண் ஊன்றி நிற்பினும், அவ்வளவில அமையாது, மேலும் அதனையே விழைந்துநிற்கும் நிலையை வியந்து, "ஆனாக் கொள்கையை" என்றார். ஆதலின் என்பதை "மழையினும் பெரும் பயம் பொழிதி (18)" என்பதனோடு இயைக்க.
12-20 மாயிரு..............பாசறையானே
உரை: மா யிரு விசும்பில்-கரிய பெரிய வானத்தே; ஞாயிறு தோன்றி-ஞாயிறு எழுந்து தோன்றி; பன்மீன் ஒளிகெட ஆங்கு-பலவாகிய விண்மீன்களின் ஒளியைக் கெடுத்தாற் போல; மாற்றார் உறு முரண் சிதைத்த-சேரர் குடியில் தோன்றிப் பகைவரது மிக்க மாறுபாட்டைக் கெடுத்த; கழல் தொடி அண்ணல்- கழலுமாறு அணிந்த தொடியுனையுடைய அண்ணலே; மை படு மலர்க்கழி மலர்ந்த நெய்தல் இதழ் வனப்புற்ற தோற்றமொடு-கரிய நிறம் பொருந்திய விரிந்த கழியிடத்தே மலர்ந்த நெய்தற் பூவின் இதழினது அழகிய நிறத்தோடு; உயர்ந்த மழையினும்-உயர்ந்தெழுந்த மழை முகிலினும்; பெரும் பயம் பொழிதி-மிக்க செல்வத்தை வழங்குகின்றாய்; அதனால்-அது காரணமாக; பசியுடை ஒக்கலை ஒரீஇய இசைமேந் தோன்றல்- பசியுடைய சுற்றத்தாரை அப் பசியின் நீக்கியதனால் புகழ் மேவிய தோன்றலே; நின் பாசறையான்-நினது பாசறைக்கண்ணே; நின் நோன் றாள் வாழ்த்தி-நின்னுடைய வலிய தாளை வாழ்த்தி; காண்கு வந்திசின்- நின்னைக் காணவேண்டி வந்தேன் எ-று.
கெடுத் தென்பது கெட வென நின்றது. விசும்பில் ஞாயிறு தோன்றிப் பன் மீன் ஒளி கெடுத்தாங்கு என இயைக்க. பொருட் கேற்ப, உவமை மாறி யியைக்கப்பட்டது ஞாயிற்றின் தோற்றமும் அதற்குரிய இடமும் கூறியதற் கேற்ப, வாழியாதன் தோற்றமும் அதற் கிடனாகிய சேரர் குடியும் வருவிக்கப் பட்டன. பன்மீ னென்றதனால், மாற்றாரது பன்மை பெற்றாம். பலரும் ஒருங்கு திரண்டு இகல் செய்தமையின், "உறு முரண்" என்றார். மாற்றாரது பன்மையும் உறு முரணும் கண்டு அஞ்சாது பொரு தழித்தமையின், நின் தாள் வாழ்த்துதற் குரித்தாயிற் றென்பார் "நின் நோன்றாள் வாழ்த்தி" யென்றார்.
மாற்றார் முரண் சிதைத்த அண்ணல், நீ பெரும் பயம் பொழிதி; அதனால், தோன்றல், நின் பாசறையானே, காண்கு வந்திசின் என இயைத்து முடிக்க.
கரிய சேறுபடிந் திருத்தல பற்றிக் கழியை "மைபடு மலர்க்கழி" யென்றார். மலர்க்கழி, விரிந்த கழி. இனி, மலர்களையுடைய கழியென்றுமாம். கழியிடத்தே மலர்ந்த நெய்தற் பூவின் இதழ் வண்ணம் கொண்டு எழுந்த முகிலெனவே, கருமுகில் என்பது பெற்றாம். "மழையினும் பெரும் பயம் பொழிதி" யெனச் சேரமானது கொடை நலத்தைச் சிறப்பித்தது , "ஆனாக்கொள்கையை" (11) என்று முற்கூறியதனை வற்புறுத்து நின்றது. இக்கொடையால் விளைந்த பயன் இது வென்பார், பசியுடை யொக்கல் இல்ராயினா ரென்றும், நல்லிசை மேவுவதாயிற் றென்றும் கூறினார். ஒரீஇய, பிறவினைப் பொருட்டு. மேவு மென்பது, ஈற்றுமிசை யுகரம் மெய்யொடும் கெட்டு நின்றது. ஞாயிற்றுவமம் வினை பற்றியும், மழையுவமம் கொடை பற்றியும் வந்தன. நெய்தலின் இதழ் மழை முகிலின் நிறத்தைச் சிறப்பிப்ப, அந்நிறத்தை யுடைய முகில, சேரனது கொடையைச் சிறப்பித்தலின், அடுத்து வரலுவமை யென்னும் குற்றமின்மை யறிக. இனிப் பழையவுரைகாரர் "நெய்தல் இதழ் வனப்புற்ற தோற்றமொடு பயம் பொழிதி யெனக்கூட்டி, இவன்றன் நிறம் கருமை யாக்கி, அந்நிறத் தோற்றத்தானும் மழையோடு உவமமாக்கி யுரைக்க" என்றும் "ஞாயிறு தோன்றியாங்கு மாற்றார் உறு முரண் சிதைத்த என முடிக்க" என்றும் கூறுவர்
"ஆதலின் என்பதனை மழையினும் பெரும் பயம் பொழிதி என்பதனோடு கூட்டி, நின்னூரிடத்து அவ்வயின் ஆனாக் கொள்கையையாய்ப் போந்தபடியாலே ஈண்டு நின் பாசறை யிடத்து மழையினும் பெரும் பயம் பொழியாநின்றாய் என வுரைக்க" என்றும், "பசியுடை யொக்கலை அப் பசியை யொருவிய எனப் பசி வருவிக்க" என்றும் கூறுவர் பழைய வுரைகாரர்.
இதுகாறும் கூறியதனால், முரசினயும் கொற்றத்தினையும் பூணினையுமுடைய வேந்தர் பலர்தாம் உளர்; அவராற் பெறும் பயன் இல்லை; அந்தணர் அருங்கலம் ஏற்ப, நீர்பட்டு இருஞ்சேறாடி களிறு நிலை முணைஇய மணல்மலி முற்றத்தை யுடைய தாரருந் தகைப்பி லிருந்துகொண்டு, வயிரியர் புறஞ்சிறை வரக்காணின் வல்லே புரவியும் பண்டிலும் இழை யணிந்தீமென ஆனாக் கொள்கையை; மேலும் ஞாயிறு தோன்றிப் பன் மீன் ஒளி கெடுத்தாங்குச் சேரர் குடியில் தோன்றி மாற்றார் உறு முரண் சிதைத்த அண்ணலே; அக்கொள்கையை யாதலால், மழையினும் பெரும் பயம் பொழிதி; அதனால் தோன்றலே, நின் பாசறைக் கண்ணே, நின் தாள் வாழ்த்திக் காண்கு வந்திசின் என வினை முடிவு செய்து கொள்க. காண்கு, தன்மை வினைமுற்று; "செய்கென் கிளவி வினையொடு முடியினும் அவ்விய றிரியா தென்மனார் புலவர்" (வினை. 7) என்பதனால், வந்திசின் என்னும் வினைகொண்டு முடிந்தது.
இனிப் பழைய வுரைகாரர், "உலகத்து வேந்தர் பலருளர்; அவராற் பெரும் பயன் என்; தகைப்பிற் புறஞ்சிறை வயிரியர்க் காணின் ஈமென அவ்வயின் ஆணாக் கொள்கையை யாதலின், மழையினும் பெரும் பயம் பொழிதி; அதனால், அண்ணல், தோன்றல், பசியுடை யொக்கல் ஒரீஇய பாசறையானே, நின் நோன்றாள் வாழ்த்திக் காண்கு வந்தசின் என மாறிக் கூட்டி வினை முடிவெ செய்க" என்றும், "அதனால் என்பதன் பின் அண்ணல் தோன்றல் என்னும் விளிகள் நிற்க வேண்டுதலின் மாறாயிற்று" என்றும் கூறுவர்.
"இதனாற் சொல்லியது; அவன் கொடைச் சிறப்பினை வென்றிச்
சிறப்பொடு படுத்துக் கூறியவாறாயிற்று."
இனி, பழையவுரைகாரர் காலத்தே ஈய என்றொரு பாட முண்டாகக் கண்டு, "ஈய வென்றது பாடமாயின், உரைசா லென்றது கூனாம்" என்றும். "உரைசால், வேள்வி முடித்த கேள்வி யந்தணர், அருங்கல மேற்ப வீய நீர்பட்டென்று பாடமாக வேண்டும்" என்றும் கூறுவர்.
-------------------
7.5. நாண்மகி ழிருக்கை
65
எறிபிண மிடரிய செம்மறுக் குளம்பின
பரியுடை நன்மா விரியுளை சூட்டி
மலைத்த தெவ்வர் மறந்தபக் கடந்த
காஞ்சி சான்ற வயவர் பெரும
வில்லோர் மெய்ம்மறை சேர்ந்தோர் செல்வ 5
பூணணிந் தெழிலிய வனைந்துவர லிளமுலை
மாண்வரி யல்குன் மலர்ந்த நோக்கின்
வேய்புரை பெழிலிய விளங்கிறைப் பணைதோட்
காமர் கடவுளு மாளுங் கற்பிற்
சேணாறு நறுநுதற் சேயிழை கணவ 10
பாணர் புரவல பரிசிலர் வெறுக்ககை
பூணணிந்து விளங்கிய புகழ்சான் மார்பநின்
நாண்மகி ழிருக்கை யினிதுகண் டிகுமே
தீந்தொடை நரம்பின் பாலை வல்லோன்
பையு ளுறுப்பிற் பண்ணுப் பெயர்த்தாங்குச் 15
சேறுசெய் மாரியி னளிக்கும்நின்
சாறுபடு திருவி னனைமகி ழானே.
துறை: பரிசிற்றுறைப் பாடாண் பாட்டு.
வண்ணமும் தூக்குமது
பெயர்: நாண்மகி ழிருக்கை.
1-5. எறி பிணம்........... செல்வ.
உரை: மலைத்த தெவ்வர் - எதிர்த்துப் பொருத பகைவருடைய; மறம் தப - வீரம் கெட; பரியுடை நன்மா - விரைந்த செலவினையுடைய நல்ல குதிரைகள்; எறி பிணம் இடறிய செம் மறுக் குளம்பின - படைகளால் எறியப்பட்டு வீழ்ந்த வீரர் பிணங்களை இடறிக்கொண்டு செல்லுதலால் சிவந்த குருதிக் கறை படிந்த குளம்பினை யுடையவாக; விரியுளை சூட்டி - அவற்றின் தலையிலே விரிந்த தலையாட்டத்தை யணிந்து செலுத்தி; கடந்து - பகைவரை வஞ்சியாது எதிர் பொருது வென்ற; காஞ்சி சான்ற வயவர் பெரும- காஞ்சித் திணைக் கமைந்த வீரர்க்குத் தலைவனே; வில்லோர் மெய்ம்மறை - வில் வீரராகிய சான்றோர்க்கு மெய் புகு கருவி போன்றவனே; சேர்ந்தோர் செல்வ - அடைந்தோர்க்குச் செல்வமாய்ப் பயன்படுபவனே எ-று.
தெவ்வர் மறத்தைத் தபுக்கவேண்டிக் குதிரைகட்கு விரியுளை சூட்டிச் செலுத்துபவாதலின், தெவ்வர் மறந்தப, செம்மறுக் குளம்பினவாக விரியுளை சூட்டிக் கடந்த என இயைக்கப்பட்டது. முன்னே செல்லும் தூசிப் படைக்கு ஆற்றாது எறியுண்டு வீழ்ந்த பகைவர் பிணத்தை, "எறிபிண"மென்றும், அப்பிணக்குவையைக் கடந்துசென்று மேல்வரும் பகைவரை யடர்க்கின்றமை தோன்ற, "இடறிய செம்மறுக் குளம்பின" என்றும் கூறினார். ஆக வென்பது வருவிக்கப்பட்டது. ஐந்து கதியும் பதி னெட்டுச் சாரியும் நன்கு கற்ற குதிரை யென்றற்கு, "பரியுடைமா" என்னாது, "பரியுடை நன்மா" என்று சிறப்பித்தார். பிணக்குவை கண்டு மருளாது அதனை யிடறிச் சேறற்கு வேண்டும் போர் வேட்கை மிகு விப்பதாகலின், உளைசூட்டின ரென்பார், "விரியுளை சூட்டி" யென்றார். குதிரைக்கு விரியுளை சூட்டியது போரில் வேட்கை பிறத்தற் பொருட் டெனப் பழைய வுரைகாரரும் கூறுவது காண்க. "பாங்கருஞ் சிறப்பின் பல்லாற்றானும் நில்லாவுலகம் புல்லிய நெறித்தே" (பொரு. புறத். 23)யென்பவாகலின், புகழொன்றே நிலைபெறுவதன்றிப் பிறவுடம்பு முதலனைத்தும் நிலை பேறுடைய வல்லவெனும் கருத்துடைய உயர்வீரர் என்றற்கு "காஞ்சி சான்ற வயவர்" என்றும், அவர்க்குத் தலைவனாதலின், "பெரும" வென்றும் கூறினார். வீரரென்னாது, வயவர் என்றமையின், முன்னே பல போர்களைத் திறம்படச் செய்து சிறப்பும் வெற்றியும் சிறக்கப் பெற்றவ ரென்று கொள்க; இவரையே பிற்காலத்துப் புராணஙகள் கூறும் மூலபல வீரர் எனவறிக. "காஞ்சி சான்ற வயவரென்றது, நிலையாமை யெப்பொழுதும் உளளத்திற் கொண்டிருத்தலமைந்த வீரரென்றவா" றென்பது பழையவுரை. செல்வமுடையார்க்கு அதனாற் பயன், சேர்ந் தோர்க் குண்டாகும் துன்பந் துடைத்த லென்ப வாகலின், "சேர்ந்தோர் செல்வ" என்றார். "செல்வ மென்பது, சேர்ந்தோர்,புன்கணஞ்சும் மென்கட் செல்வம்" (நற். 210) என்று பிறரும் கூறுதல் காண்க.
6-10. பூணணிந்து..............கணவ.
உரை: பூண் அணிந்து எழிலிய வனைந்து வரல் இளமுலை- இழை யணிந்து உயர்ந்த ஒப்பனை செய்தாற் போல் வருகின்ற இள முலையினையும்; மாண் வரி அல்குல்-மாட்சிமைப்பட்ட வரிகளையுடைய அல்குலினையும்; மலர்ந்த நோக்கின்-அகன்ற கண்ணினையும்; வேய் புரைபு எழிலிய வீங்கு இறைப் பணைத்தோள்-மூங்கிலை யொப்ப அழகிய பெரிய மூட்டுக்கள் பொருந்திய தொடி யணிந்த பருத்த தோளினையும்; காமர் கடவுளும் ஆளும் கற்பின்-அழகிய கடவுளரையும் ஏவல் கொள்ளும் கற்பினையும்; சேண் நாறு நறு நுதல்-சேய்மைக்கண்ணும் சென்று மணம் கமழும் நறிய நெறறியினையும்; சேயிழை கணவ-செவ்விய அணிகளையு முடையாட்குக் கணவனே எ-று.
எழில், உயர்ச்சி. "நுண்மா ணுழைபுல மில்லா னெழழில்நலம்" (குறள் 407) என்புழிப்போல. பூண், முத்துமாலை முதலியன. சாந்து முதலியன அணிந்து தொய்யி லெழுதி ஒப்பனை செய்யப்படுமியல்புபற்றி, "வனைந்துவர லிளமுலை" யென்றார்,. இனி, பழையவுரைகாரர், "வனைந்துவர லென்பது ஒரு வாய்பாட்டு விகற்பம்" என்பர். கண் அகன்றிருத்தல் பெண்கட்கு அழகாதலின், "மலர்ந்த நோக்கின்" என்றார் "அகலல்குல் தோள் கண்ணென மூவழிப் பெருகி" (கலி. 108) என்று சான்றோர் கூறுதல் காண்க. கற்புடை மகளிரைத் தெய்வமென்றும், அவர்க்குத் தெய்வமும் ஏவல் செய்யுமென்றும் கூறுபவாதலின், "கடவுளுமாளும் கற்பின்" என்றார். "இன்றுணை மகளிர்க் கின்றி யமையாக், கற்புக் கடம்பூண்ட வித்தெய்வ மல்லது, பொற்புடைத் தெய்வம் யாம் கண் டிலமால்" (சிலப் 15: 142-4) என்று உய்ந்தோர் ஏத்துமாறு காண்க. நெடுந் தொலைவு பரந்து மணம் கமழும் இயல்புபற்றிச் "சேணாறு நறுநுதல்" என்றார்; "தேங்கழ் திருநுதல்" என்று சான்றோர் சிறப்பித்துக் கூறுப. கற்புச் சிறப்புப்பற்றிச் "சேயிழை கணவ" என்றார்.
11-12 பாணர்...............மார்ப.
உரை; பாணர் புரவல-பாண் குடும்பங்களைப் புரப்பவனே; பரிசிலர் வெறுக்கை-பரிசிலர்க்குச் செல்வமா யிருப்பவனே; பூண் அணிந்து விளங்கும் புகழ் சால் மார்ப-பூணார மணிந்து விளங்கும் அகன்ற புகழ் நிறைந்த மார்பினை யுடையோனே எ-று
பாணரைப் புரத்தலால் இசைத்தமிழ் வளர்ச்சியும், பரிசிலரைப் புரத்தலால் புகழ் வளர்ச்சியும் பயனாதல்பற்றி "பாணர் புரவல பரிசிலர் வெறுக்கை" யென்றார்; "வயவர் வேந்தே பரிசிலர் வெறுக்கை" (பதிற். 15) என்று பிறரும் கூறுவது காண்க. விரிந்துயர்ந்திருத்தல் மார்புக்குப் புகழாதலின், "புகழ்சால் மார்ப" என்றார். அணிந்தென்னும் முதல்வினை சினைவினையாகிய விளங்கிய வென்னும் வினை கொண்டது.
12-17 நின் நாண் மகிழிருக்கை..............மகிழானே.
உரை: தீந்தொடை நரம்பின் பாலை வல்லோன்-இனிய இசை தொடுத்தலையுடைய நரம்பினா லமைந்த பாலையாழ் வல்லவனொருவன்; பையுள் உறுப்பின் பண்ணுப் பெயர்த்தாங்கு- அழுகைச் சுவைக்குரிய உறுப்பினையுடைய பாலைப் பண்கள் எல்லா வற்றையும் ஒவ்வொன்றாக மாறிமாறி யிசைத்தாற் போல; சேறு செய் மாரியின்;-சேற்றை யுண்டாக்கும் மழை போல; நனை அளிக்கும்-கள்ளை வழங்கும்; சாறுபடுதிருவின்-விழாக்களத்தின் செல்வத் தோற்றத்தையுடைய; மகிழான்-திருவோலக்கத் தின்கண்ணே; நின் நாண் மகிழ் இருக்கை இனிது கண்டிகும்- நின்னுடைய நாட்கால இன்ப விருக்கையினை நன்கு கண்டு மகிழ்வுற்றேம் எ-று.
இனிய இசை பயத்தல்பற்றி, "தீந்தொடை நரம்பு" என்றார். பாலை யாழ் வல்லவனன்றிப் பிறரால் அழுகைச் சுவைக்குரிய பாலைப் பண்களை யெல்லாம் தொகுத்து, ஒவ்வொன்றாக மாறி மாறி யிசைக்குமாற்றால் அழுகைச் சுவையை இசைத்துக் காட்டலாகாமை தோன்ற, "பாலை வல்லோன் பையுளுறுப்பின் பண்ணுப் பெயர்த்தாங்கு" என்றார். பண் ணொவ்வொன்றிலும் அழுகைச்சுவைக் குரியதாய்த் தனித்தனி சிறந்த உறுப்புக்களுண்மைபோல, களிப்பினைத் தருவதாய் வேறு வேறு சிறந்த கள்வகை யுண்மையாலும், பையுளுறுப்புக்களைப் பாலைவல்லோன் தனித் தனி யிசைத்துக் காட்டுமாறு போல, தனித்தனியே அக்கள்வகையினை நல்குகின்றானென்றும், ஒவ்வொருவகைக் கள்ளும், சேறுண்டுபண்ணும் மிகு மழைபோல மிகத்தரப் படுவதுபற்றி, "சேறுபடு மாரியின்" என்றாரென்றும் கொள்க. அழுகைச் சுவைக்குரிய பண்ணுறுப்பை, "பையுளுறுப்" பென்றார்; பையுள் அழுகையால் மெய்ப்படுதலின். இனிப் பழையவுரைகாரர், "தீந்தொடை பாலைக் கோவைகளாகிய வீக்குநிலை" யென்றும், "பையுளுறுப்பிற் பண்ணுப் பெயர்த்தாங்கு அளிக்கும் நனையெனக்கூட்டி
எல்லாப் பண்களிலும் வருத்தத்தைச் செய்யும் உறுப்பினையுடைய பாலைப் பண்கள் பலவற்றையும் ஒரோவொன்றாகப் பெயர்த்து வாசி்க்குமாறு போல ஒன்றையொன்றொவ்வாத இன்பத்தை உண்டவர்க்குக் கொடுக்கும் பல திறத்து மது வெனவுரைக்க" என்றும் "நனை யென்றது ஈண்டு மதுவிற்கெல்லாம் பொதுப் பெயராய் நின்ற" தென்றும், "மாரியினென்னும் உவமம் மதுக்களில் ஒரோவொன்றைக் கொடுக்கு மிகுதிக் குவமம்" என்றும், "சாறுபடு திருவி னென்றவுவமம் அம்மதுக்களைப் பானம் பண்ணுங் காலத்து அலங்காரமாகக் கூட்டும் பூவும் விரையு முதலாய பொருள்களுக் குவமம். சாறு என்றது விழாவின் றன்மையை" யென்றும் "மகிழ் என்றது மகிழ்ச்சியை யுடைய ஓலக்க இருப்பினை" யென்றும் கூறுவர். "இருந்த வூர்தொறு நல்யாழ்ப்பண்ணுப் பெயர்த் தன்ன காவும் பள்ளியும்" (மலைபடு. 450-1) எனப் பிறரும் கூறுவது காணத்தக்கது.
"அவன் ஓலக்க இருக்கையின் செல்வத்தை நாண்மகி ழிருக்கை யெனக் கூறிய சொற் சிறப்பானே இதற்கு நாண்மகி ழிருக்கை யென்று பெயராயிற்" றென்பர் பழையவுரைகாரர்.
இதுகாறும் கூறியது, வயவர் பெரும , வில்லோர் மெய்ம்மறை, சேர்ந்தோர் செல்வ, சேயிழை கணவ, புரவல, வெறுக்கை மார்ப, பாலை வல்லோன் பண்ணுப் பெயர்த்தாங்கு, மாரியின் அளிக்கும் நனை மகிழின் கண், நின் நாண்மகி ழிருக்கையை இனிது கண்டிகும் என வினை முடிவு செய்க. இனிப்பழையவுரைகாரர், "மார்ப, நின் நாண்மகி ழிருக்கையின் சிறப்பெல்லாம் நின் நனை மகிழின்கண்ணே இனிது கண்டேம் எனக் கூட்டி வினை முடிபு செய்க என்று கூறுவர்.
இதனாற் சொல்லியது: அவன் ஓலக்க வினோதத்தோடு படுத்து அவன் செல்வச் சிறப்புக் கூறியவாறாயிற்று.
********************
7.6. புதல சூழ் பறவை.
66
வாங்கிரு மருப்பிற் றீந்தொடை பழுனிய
இடனுடைப் பேரியாழ் பாலை பண்ணிப்
படர்ந்தனை செல்லு முதுவா யிரவல
இடியிசை முரசமொ டொன்றுமொழிந் தொன்னார்
வேலுடைக் குழூஉச்சமந் ததைய நூறிக் 5
கொன்றுபுறம்பெற்ற பிணம்பயி லழுவத்துத்
தொன்றுதிறை தந்த களிற்றொடு நெல்லின்
அம்பண வளவை விரிந்துறை போகிய
ஆர்பத நல்கு மென்ப கறுத்தோர்
உறுமுரண் டாங்கிய தாரருந் தகைப்பின் 10
நாண்மழைக் குழூஉச்சிமை கடுக்குந் தோன்றற்
றோன்மிசைத் தெழுதரும் விரிந்திலங் கெஃகிற்
றார்புரிந் தன்ன வாளுடை விழவிற்
போர்படு மள்ளர் போந்தொடு தொடுத்த
கடவுள் வாகைத் துய்வீ யேய்ப்பட் 15
பூத்த முல்லை புதல்சூழ் பறவை
கடத்திடைப் பிடவின் றொடைக்குலைச் சேக்கும்
வான்பளிங்கு விரைஇய செம்பரன் முரம்பின்
இலங்கு கதிர்த் திருமணி பெறூஉம்
அகன்கண் வைப்பி னாடுகிழ வோனே. 20
துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணமும் தூக்கும் அது.
பெயர்: புதல் சூழ் பறவை.
1-3 வாங்கு................இரவல
உரை: வாங்கு இரு மருப்பின் - வளைந்த கரிய தண்டினையுடைய; தீந்தொடை பழுனிய - இனிய இசைக்குரிய நரம்புகளால் நிறைந்த; இடன் உடைப் பேரியாழ்- இசை யின்பத்துக்கு இடமாக வுள்ள பேரியாழிடத்தே; பாலை பண்ணி - பாலைப் பண்ணை யெழுப்பி; படர்ந்தனை செல்லும் - சேரனை நினைந்து செல்லும்; முது வாய் இரவல - முதிய வாய்மையை யுடைய இரவலனே எ - று.
பேரியாழின் தண்டு நீண்டு வளைந்திருத்தலின், "வாங்கிரு மருப்பின்" என்றார். ஆயிரம் நரம்புகளை எல்லையாக வுடையதாய் இசையாற் பெறலாகும் பேரின்பத்துக்கு இடமாக இருத்தல் பற்றி "இடனுடைப் பேரியாழ்" என்றும், இன்னிசை பயக்கும் நரப்புத் தொடையால் குறைபா டின்மை தோன்ற, "தீந்தொடை பழுனிய" என்றும் கூறினார். இனி, "இடனுடைப் பேரியாழ் பாலை பண்ணி" யென்று ஈண்டு இவர் கூறியது போலவே, ஏனைச் சான்றோரும், "தொடைபடு பேரியாழ் பாலை பண்ணி" (பதிற். 46) யென்றும், "விரல்கவர் பேரியாழ் பாலை பண்ணி" (பதிற். 57) என்றும் கூறுவதை நோக்கின், இப்பேரியாழ் பாலைப் பண்ணுக்கு ஏற்ற இசைக் கருவியாதல் துணியப்படும். “படர்ந்தனை யென்றது வினையெச்சமுற்று; படர்தல்-நினைவு” என்பது பழைய வுரை. “முது வாயிரவல” யென்பதற்குப் புறநானூற் றுரைகாரரும் இவ்வாறே கூறினார். முதுமையை அறிவுடைமையாகக் கோடலு மொன்று.
9-20. கறுத்தோர்………..கிழவோனே
உரை: கறுத்தோர் உறு முரண் தாங்கிய தார் அரும் தகைப்பின் - வெகுண்டு மேல் வரும் பகைவரது மிக்க வலியைத் தடுத்தற்குரிய ஒழுங்கினால் அப் பகைவரால் அழித்தற்கரிய படை வகுப்பையும்; நாண்மழைக் குழூஉச்சிமை கடுக்கும் - நாட்காலையிலே மழைக்கூட்டந் தங்கிய மலையுச்சியை யொக்கும்; தோன்றல் தோல் மிசைத்து எழுதரும்-தோற்றத்தையுடைய பரிசையினை மேலே தாங்கி யெழுகின்ற; விரிந்து இலங்கு எஃகின் -ஒளி விரிந்து விளங்கும் வேற்படையையும்; தார் புரிந்தன்ன வாளுடை விழவின்-மாலை யுடலிற் பின்னுவதுபோல வாள் சுழற்றுகின்ற வாள் விழாவினையுமுடைய; போர் படு மள்ளர்-போர்க்கண் அன்றிப் பிறவாற்றால் இறத்தலை விரும்பாத வீரர்; போந்தொடு தொடுத்த-பனங்குருத்துடனே சேர்த்துத் தொடுத்த; கடவுள் வாகைத் துய்வீ ஏய்ப்ப-வெற்றித்திரு விரும்பும் வாகையினது துய்யினையுடைய பூப்போல; பூத்த முல்லைப் புதல் சூழ் பறவை- பூத்த பூக்களையுடைய முலலைப் புதரிடத்தே மொய்க்கும் வண்டினம்; கடத்திடை பிடவின் தொடைக்குலைச் சேக்கும் - காட்டிலே பிடவ மரத்தின் தொடுத்ததுபோலப் பூக்கும் பூக்குலையிலே தங்கும்; வான் பளிங்கு விரைஇய செம்பரல் முரம்பின்-உயரிய பளிங்குடன் விரவிய சிவந்த பரல்கள் கிடக்கின்ற முரம்பு நிலத்திலே; இலங்கு கதிர்த் திருமணி பெறூஉம்-அங்கு வாழ்வோர் விளங்குகின்ற ஒளிக்கதிரையுடைய அழகிய மணிகளைப் பெறுகின்ற; கண் அகல் வைப்பின்-இடம் அகன்ற ஊர்களையுடைய; நாடு கிழவோன்-நாட்டிற்குஉரிய தலைமகனான செல்வக் கடுங்கோ வாழியாதன் எ-று.
கறுப்பு, வெகுளி. கறுத்தோர், வெகுண்டுவரும் பகைவரென்பது பெறாறாம். வலி குறைந்தோர்க்கும் வெகுளி யுண்டாயவிடத்து அது சிறிது பெருகிக் காட்டுதலின், கறுத்து வந்தோர் வலியை "உறு முரண்" என்றார். அவரை எதிரூன்றித் தாங்கும் படையின் வலியெல்லாம் அவரது படை யொழுங்கினை அடிப்படையாகக் கொண்டிருத்தல்பற்றி, அதனைத் "தாரருந் தகைப்பு" எனச் சிறப்பித்தார்.தார், ஒழுங்கு. தாரால் அரிய தகைப்பினைச் செய்தல்பற்றி இவ்வாறு கூறினார். "தாரருந் தகைப்பு" என்றதற்கு, "ஒழுங்குடைய மாற்றாரால் குலைத்தற்கரிய படை வகுப்பு" என்று பழையவுரை கூறும். யானைமேலும் குதிரைமேலும் வரும் வீரர் பகைவர் எறியும் அம்பும் வேலும் தடுத்தற்குத் தம் பரிசையினை (கேடயத்தை) மேலே ஏந்தித் தோன்றும் தோற்றம், மலை யுச்சியில் நாட்காலையில் படிந்து தோன்றும் மேகக் கூட்டத்தின் தோற்றத்தை யொத்தல்பற்றி "நாண் மழைக் குழூஉச்சிமை கடுக்குந் தோன்றல் தோல்" என்றார். சேரனுடைய வீரரேந்திச் செல்லும் வேல் வாள் முதலியவற்றின் நலங் கூறுவார், "விரிந்திலங்கு எஃகின்" என்றார். வாள் விழவின்கண், வீரர் வாளைச் சுழற்றுமிடத்து உடலெங்கும் ஓடிச் சுழலும் வாள் உடலில் பின்னிக் கிடந்து தோன்றும் மாலையின் தோற்றத்தை நல்குவதுபற்றி "தார் புரிந்தன்ன வாளுடை விழவின்" என்றார். இதனை இக் காலத்தும் தொண்டைநாட்டில் கலைமகள் விழா நாளில் வாட் பயிற்சியுடையார் செய்து காட்டும் வாள் விழாவிற் காணலாம்.
இனிப் பழையவுரைகாரர் "நாண்மழை" யென்றது "பருவமழை" யென்றும் "தோலொடு வென ஒடு விரிக்க" என்றும் "தார் புரிந்தன்னவாள் என்றது, "பூமாலைகள் அசைந்தாற்போல நுடங்குகின்ற வாள்" என்றும் கூறுவர்.
போரில் பகைவர் எறியும் படை முதலியவற்றால் புண்பட்டிறப்பதையே விரும்புவாராதலின் "போர்படு மள்ள" ரென்றார். "நோற்றோர் மன்ற தாமே கூற்றம், கோளுற விளியார் பிறர் கொள விளிந்தோர்" (அகம். 61) என மாமூலனார் கூறுதல் காண்க. போர்ப்படு எனற்பாலது போர்படு என வந்தது. இனி, போரைவிரும்பி அதற்குரிய நினைவு செயல்களையுடைய வீரரென்றற்கு இவ்வாறு கூறினா ரென்றுமாம். தகைப்பினையும், எஃகினையும், விழவினையு முடைய மள்ளர் என்க போர்க் கேற்றுவர் பழையவுரைகாரர்.
சேரர்க்குரிய போந்தையொடு வெற்றிக்குரிய வாகைப் பூவையும் விரவித் தொடுத்த மாலை யுடைமைபற்றி "போந்தொடு. தொடுத்த கடவுள் வாகைத் துய்வீ" யென்றார்,. போந்து, பனந்தோடு. வெற்றித் திரு விரும்பும் பூவாதலின், வாகைப்பூவினைக் "கடவுள் வாகைத் துய்வீ" யென்றார். இனிப் பழையவுரைகாரர், கடவுள் வாகை யென்றற்கு, "வெற்றி மடந்தையாகிய கடவுள் வாழும் வாகை" யென்பர்.
போந்தை வெண்ணிறமாயும் வாகைப்பூ நீல நிறமாயும் இருத்தலின், போந்தொடு தொடுத்த வாகைப் பூவிற்கு முல்லைப் புதல் சூழ்ந்த வண்டினத்தை உவமம் கூறினார். வாகைப்பூ நீல நிற முடைமைபற்றியும், துய்யுடைமைபற்றியும் சான்றோர் அதனை மயிற் கொண்டைக்கு உவமித்து, "குமரி வாகைக் கோலுடை நறுவீ, மடமாத் தோகைக் குடுமியிற் றோன்றும்" (குறுந். 347) என்றும், "வாகை யொண்பூப் புரையு முச்சிய தோகை" (பரி 11: 7-8) என்றும் கூறுதல் காண்க. "மென்பூ வாகை" (அகம். 136) என்பதனால், வாகைப்பூ மெல்லிதாதலும் அறியப்படும். இனிப் பழையவுரைகாரர், "கிழித்துக் குறுக நறுக்கி வாகையோடு இடை வைத்துத் தொடுத்த பனங் குருத்து முல்லை முகைக்கு ஒப்பாகவும், வாகைவீ அம் முல்லையைச் சூழ்ந்த வண்டிற்கு ஒப்பாகவும் உவமங்கொள்ள வைத்த சிறப்பானே இரற்குப் புதல்சூழ் பறவை யென்று பெயராயிற்" றென்பர். பறவை, சேக்கும் முரம்பின் என இயையும். முரம்பிடத்தே மக்கள் "இலங்கு கதிர்த் திருமணி" பெறுவர் என்பதற்கேற்ப, அவ்விடத்தின் வளம் கூறுவார், "வான் பளிங்கு விரைஇய செம்பரல் முரம்பு" என்றார். பெறூஉம் நாடு என இயைக்க. அகன்கண் வைப்ப என்பதனைக் கண்ணகன் வைப்பு என மாறுக. நாட்டிற்கு நலம் செய்வது அதன்கண்ணுள்ள ஊர்களே யாதலின், "அகன்கண் வைப்பின் நாடு" என்றார்.
4-9. இடி யிசை .................என்ப
உரை: இடி யிசை முரசமொடு ஒன்று மொழிந்து - இடி முழக்கத்தைப்போன்ற ஓசையினைச் செய்யும் முரசுடனே தப்பாத வஞ்சினத்தைக் கூறிச் சென்று; ஒன்னார் வேலுடைக் குழூஉச் சமம் ததைய நூறி- பகைவருடைய வேலேந்திய படைக் கூட்டம் செய்யும் போர் அறக் கெடும்படி யழித்து; கொன்று - அவர்களைக் கொன்று; புறம் பெற்ற அஞ்சினோர் முதுகிட்டோடச் செய்ததனா லுண்டாகிய; பிணம் பயி லழுவத்து - பிணங்கள் நிறைந்த போர்க்களத்தே; தொன்று திறை தந்த களிற்றொடு - தோற்ற வேந்தர் பழையதாகிய திறையாகத் தந்த யானையோடு; அம்பண அளவை - நெல்லை யளக்கும் மரக்கால்; விரிந்து உறை போகிய - தன் வாய் விரிந்து அதனைச் சுற்றிலும் புறத்தே யிட்ட செப்புறை தேய்ந்து கழன்றோடுமாறு; நெல்லின் ஆர்பதம் நல்கும் என்ப - நெல்லாகிய உணவை நிறைய அளந்து கொடுப்பன் என்று அறிந்தோர் சொல்லுவாரகள் எ-று.
முரசத்தின் ஓசை இடியோசை போறலின் " இடியிசை" யென்றார். "இடிக் குரல் முரசம்" என்று சான்றோர் பயில வழங்குப. கூறிய வஞ்சினம் தப்பாமற் காக்கும் வாய்மையனாதல் பற்றி, "ஒன்று மொழிந்" தென்றார்; "நிலந் திறம் பெயருங் காலையாயினும், கிளந்த சொன்னீ பொய்ப்பறியலையே" (பதிற்.63) என்று பிறாண்டும் ஆசிரியர் சேரனது வாய்மையைக் கிளந்தோதியது காண்க. பழைய வுரைகாரர், " ஒன்று மொழிதல் வஞ்சினங் கூற" லென்றும், "ஒன்று மொழிந்து கொன்று புறம் பெற்ற எனக் கூட்டி, ஒன்று மொழிதலும் கொன்று புறம் பெறுதலும் ஒன்னாரன்றி இவன் தொழிலாக வுரைக்க" என்றும் "ஒன்னாரது குழு வெனக் கூட்டி, கொன்றதும் புறம் பெற்றதும் அக் குழுவையேயாக வுரைக்க" என்றும் கூறுவர்.
"தொன்று திறை தந்த" என்றதனால், ஈண்டுக் கூறிய வொன்னார், பண்டெல்லாம் சேரனுக்குத் திறை செலுத்திப் போந்த சிற்றரச ரென்றும், அத் திறையினைத் தாராமையால் பகைமையுற்று ஒன்னாராயின ரென்றும், அவர் வேலுடைக் குழுவினை இவன் இப்போது வென்று புறம் பெற்று, அவர் செலுத்தவேண்டிய பழந் திறையைப் பெற்றானென்றும் கொள்க. பழைய வுரைகாரர், "திறை தந்த வென்றதற்கு அவன் ஒன்னார் திறையாகத் தந்த வென வருவித் துரைக்க" என்பர்.
அம்பணம், மரக்கால். இது மூங்கிலாற் செய்யப்பட்டு வாயி கிழிந்து விரியாவண்ணம் செம்பினால் வாயின் புறத்தே பட்டையிடப்பட்டிருக்கும். இஃது இக்காலத்தும் வடார்க்காடு சில்லாவிலுள்ள சவ்வாது மலையடிவாரத்தே வாழ்வாரிடத்தே வழக்கிலுள்ளது. இதனை யம்பண மென்றும், செப்புப் பட்டையைச் செப்புறை யென்றும் கூறுப. அளக்குந்தோறும் அம்பணத்தின் நிறையப் பெய்து திணித்துத் திணித்து அளத்தலின், வாய் கிழிந்து உறை தேய்ந்து நீங்குமாறு தோன்ற, "அம்பண வளவை விரிந்துறை போகிய" என்றார். போகிய, வினையெச்சம்; கெட வென்னும் பொருட்டு. இனிப் பழையவுரைகாரர் "உறை போதல், உறையிட முடியா தொழித" லென்றும், "அளவை விரிய வெனத் திரிக்க" என்றும் கூறுவர். ஆர நிறைத்துக் கொடுக்கும் பதம் ஆர்பதம் எனப்பட்டது. "நெல்லின் ஆர்பதம் என இருபெயரொட்டு" என்பர் பழைய வுரைகாரர். அறிந்தோ ரென்பது சொல்லெச்சம்.
இதுகாறும் கூறியது, பேரியாழ் பாலைபண்ணிப் படர்ந்தனை செல்லும் முதுவாய் இரவல, திருமணி பெறூஉம் நாடு கிழவோன், ஒன்னார் சமம் ததைய நூறி, அவர் தொன்று திறை தந்த களிற்றொடு நெல்லின் ஆர்பதம் நல்லும் என்ப; அவ் வள்ளியோனைப் பாடுவோமாக என வினை முடிவு செய்க. இனிப் பழையவுரைகாரர் "அவனை நினைத்துச் செல்லும் முதுவாயிரவலனே, நின் நினைவிற் கேற்ப நாடுகிழவோன் தனக்குப் போரின்மையான் வென்று கொடுப்பதின்றி, ஒன்னார் பிணம் பயிலழுவத்துத் திறையாகத்தந்த களிற்றொடு தன்;னாட்டு விளைந்த நெல்லாகிய உணவினைக் கொடாநின்றா னென்று எல்லாரும் சொல்லுவார்களாதலால், அவன்பால் ஏகெனக் கூட்டி வினை முடிவு செய்க" என்பர். என்பவர், பாணனை அவன்பால் ஏகென்பது பாணாற்றுப்படையாம். இது பாடாண் பாட்டாதலின் ஆறறிந்து செல்லும் பாணனொடு சேரன் கொடை நலம் கூறிப் பாடுவதே ஈண்டைக்குப் பொருந்துவதென வறிக.
இதனாற் சொல்லியது,: அவன் வென்றிச் சிறப்பொடு படுத்துக் கொடைச் சிறப்புக் கூறியவாறாயிற்று.
"படர்ந்தனை செல்லும் என்று பாணன் தன்னில் நினைவன கூறினமையின், துறை பாணாற்றுப்படையன்றிச் செந்துறைப் பாடாணாயிற்று" அற்றாயின், வினைமுடுபு, "ஆதலால், நெஞ்சே, அவன்பால் செல்வாயாக" எனக் கூட்டி முடித்தல்வேண்டு மென்க.
-------
7.7. வெண்போழ்க் கண்ணி.
67
கொடுமணம் பட்ட நெடுமொழி யொக்கலொடு
பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர்க்
கடனறி மரபிற் கைவல் பாண
தென்கடன் முத்தமொடு நன்;கலம் பெறுகுவை
கொல்படை தெரிய வெல்கொடி நுடங்க 5
வயங்குகதிர் வயிரமொடு வலம்புரி யார்ப்பப்
பல்களிற் றினநிரை புலம்பெயர்ந் தியல்வர
அமர்க்க ணமைந்த வவிர்நிணப் பரப்பிற்
குழூஉச்சிறை யெருவை குருதி யாரத்
தலைதுமிந் தெஞ்சிய வாண்மலி யூபமொ 10
டுருவில் பேய்மகள் கவலை கவற்ற
நாடுட னடுங்கப் பல்செருக் கொன்று
நாறிணர்க் கொன்றை வெண்போழ்க் கண்ணியர்
வாண்முகம் பொறித்த மாண்வரி யாக்கையர்
நெறிபடு மருப்பி னிருங்கண் மூரியொடு 15
வளைதலை மாத்த தாழ்கரும் பாசவர்
எஃகாடூனங் கடுப்ப மெய் சிதைந்து
சாந்தெழின் மறைத்த சான்றோர் பெருமகன்
மலர்ந்த காந்தண் மாறா தூதிய
கடும்பறைத் தும்பி சூர்நசைத் தாஅய்ப் 20
பறைபண் ணழியும் பாடுசா னெடுவரைக்
கல்லுயர் நேரிப் பொருநன்
செல்வக் கோமாற் பாடினை செலினே.
---------
*தொல்படை.பா. வே.
துறை: பாணாற்றுப் படை
வண்ணமும் தூக்கும்: அது.
பெயர்: வெண்போழ்க் கண்ணி.
5-12 கொல்படை...கொன்று.
உரை: கொல்படை தெரிய-ஏந்திய படை யழிந்தவர் வேறு படைகளை ஆராய; வெல்கொடி நுடங்க-வென்றி குறித் துயர்த்த கொடியானது விண்ணிலே யசைய; வயங்கு கதிர் வயிரொடு வலம்புரி ஆர்ப்ப-ஒளிக் கதிர் வீசும் மணி பதித்த கொம் பென்னும் வாச்சியத்தோடு வலம்புரிச் சங்குகள் முழங்க; பல் களிற்று இனநிரை-பலவாகிய களிறுகளின் கூட்டமான வரிசை; புலம் பெயர்ந்து இயல்வர-தத்தமக் குரிய இடத்தினின்றும் பெயர்ந்து போர் நிகழும் இடம் நோக்கித் திரிய; அமர்க்கண் அமைந்த-போரிடுதற் கமைந்த; நிணம் அவிர் பரப்பில்- பொருது வீழ்ந்த மக்கள் மாக்களினுடைய நிணம் விளங்கும் பரந்த களத்திலே; குழூஉ-கூட்டமாகிய; சிறை யெருவை-பெரிய சிறகுகளையுடைய பருந்துகள்; குருதி ஆர-பிணங்களின் குரு தியை யுண்ண; தலை துமிந்து எஞ்சிய ஆண்மலி யூபமொடு-தலை வெட்டுண்டதால் எஞ்சி நிற்கும் குறையுடலாகிய ஆண்மை மலிந்தாடும் கவந்தத்தோடு; உருவில் பேய்மகள் கவலை கவற்ற-அழகிய வடிவில்லாத பேய்மகள் காண்போர் வருந்துமாறு அச்சுறுதத; நாடு உடன் நடுங்க-நாட்டிலுள்ளோர் அஞ்சி நடுங்க; பல் செருக் கொன்று-பல போர்களிலும் எதிர்த்தோரை வென்றழித்து எ-று
கொல்படை, கொல்லுதற்குரிய வேலும் வாளும் பிறவுமாம். தெரியவெனவே, ஏந்திய படை போர்த்தொழிலில் முறிந்தழிந்தமை பெற்றாம். இனிப் பழையவுரைகாரர், (1) "சொட்டையாளர் படை தெரிய வென ஒரு சொல் வருவிக்க" என்பர். செய்யும் போர்களிலெல்லாம் வென்றியே எய்துதலின், "வெல்கொடி நுடங்க" என்றார்; பழையவுரைகாரர், "வெல் கொடி நுடங்க வென்றது மாற்றாரெதிரே அவர் கண்டு நடுங்கும்படி பண்டு வென்ற கொடி நுடங்க வென்றவா" றென்பர். வயிர், கொம்பு என்னும் இசைக் கருவி. இஃது "விரிக்கும்வழி விரித்த" லென்பதனால் அம்முப் பெற்று வயிரமென நின்றது. இது வளையொடு இணைத்தே கூறப்படுதல் இயல்பாதலின், "வயங்குகதிர் வயிரமொடு வலம்புரி யார்ப்ப" என்றார். இக் கொம்பு வயிரத்தையுடைய மரத்தாற் செய்து ஒளி திகழக் கடைச்சலிடப்படுமாறு தோன்ற, "வயங்குகதிர் வயிர" மென்றார் போலும். "திண்காழ் வயிரெழுந் திசைப்ப" (முருகு.119) என்று பிறரும் கூறுதல் காண்க. இதனோசை மயிலினது அகவலோசையையும் அன்றிலின் குரலையும் ஒத்திருக்குமென்பர்.
யானைகள் இயல்பாகவே தம்மில் அணியணியாக நிரை வகுத்துச் செல்லும் சிறப்புடைய வாகலின், அவற்றின் குழுவினை நிரை யென்றே சான்றோர் வழங்குப. அவ்வழக்கே ஈண்டும் "பல்களிற் றினநிரை"யெனக் கூறப்படுகிறது. இவை போர்த்துறை பயின்றவையாதலின், போர் நிகழும் இடம் நோக்கிப் பெயர்ந்து சென்றுகொண்டிருப்பது தோன்ற, "புலம் பெயர்ந்து இயல்வர" என்றார். பழையவுரைகாரரும், " களிற்றின்நிரை களத்திலே போர்வேட்டுப் புடை பெயர்ந்து திரிய என்றவா"றென்பர்.
அமர்க்கண் அமைந்த பரப்பு; நிணம் அவிர் பரப்பு என இயையும். நான்காவதன்கண் ஏழாவது மயங்கிற்று. நிணமவிர் என மாறுக. நிண மென்றதற் கேற்ப இயைபுடைய சொற்கள் வருவிக்கப்பட்டன. பழைய வுரைகாரர், "அமர்க்கண் அமைந்த பரப்பென்றது, அமர் செய்யும் இடத்திற்கு இடம் போந்த பரப்" பென்பர். இனி, கண்ணென்பதனை இடமாக்கி, அமர்செய்யு மிடமெனக் கோடலுமொன்று. நிணம் மிக்கு மலையெனக் குவிந்து கிடக்குமாறு தோன்ற, "நிணமலிர் பரப்" பென்றார். நிணமும் ஊனும் தின்ற பருந்துகட்கு உடலினின்று சொரிந்தோடும் குருதியே உண்ணுநீ ரானமையின், "குழூஉச் சிறை யெருவை குருதி யார" என்றார்; "குருதிபடிந் துண்ட காகம்" (கள.1) என்று பிறரும் கூறுதல் காண்க. குழூஉ வாகிய எருமை யென்க. தலைவெட்டப்பட்ட வழி எஞ்சி நிற்கும் முண்டம் (கவந்தம்) துள்ளியாடுதற்கு ஏது கூறுவார் " ஆண் மலி யூப " மென்றார். யூபம், தூண். ஈண்டு அது கவந்தத்துக்காயிற்று. உடலை நெறிப்படுத்தியக்கும் தலை யொழியினும், அவ்வுடற்கண் கிளர்ந்து நின்ற ஆண்மைத் துடிப்பு உடனே ஒழியாமைபற்றி "ஆண்மலி" யென்றாரென்க. பழையவுரையும் " ஆண்மை மிக்க யூப" மென்றே கூறுகிறது.
------------------
(1) சொட்டை, ஒருவகைப் படைக்கருவி.
பேய்மகளைச் சவந் தின் பெண்டு என்றலும் வழக்கு. உலறிய தலையும் பிறழ் பல்லும், பேழ் வாயும், சுழல் விழியும், சூர்த்த நோக்கும், பிணர் வயிறும் உடையவளாதலின், "உருவில் பேய்மகள்" என்றும், அவள் தோற்றம் காண்பார்க்குப் பேரச்சம் தந்து நெஞ்சு நோவச் செய்தல்பற்றி "கவலை கவற்ற" என்றும் கூறினார். கவலை, பெயர். கவல்லித்தற் பொருட்டாய கவற்றல், வினை.
போரில் ஈடுபட்டார்க்கன்றி நாட்டிடத்தே யிருக்கும் மக்களனைவர்க்கும் பேரிழவும் பெருந் துன்பமும் உண்டாதலால், "நாடுட னடுங்க" என வேண்டாது கூறினார். உண்டாகிய போர் பலவற்றினும் மீட்டும் போருண்டாகாவாறு அதற் கேதுவாயினோரை வேரறக் கொன்று வென்றி யெய்தியது தோன்ற, ”பல் செருவென்" றென்னாது, "கொன்" றென்னாரென வறிக.
படையழிந்தவர் படை தெரிய, கொடி நுடங்க, வயிரமொடு வலம்புரி யார்ப்ப, இனநிரை இயல்வர, எருவை குருதியார, யூபமொடு பேய்மகள் கவலை கவற்ற, நாடு நடுங்க, பல்செருக் கொன்று என இயைத்து, மேல் வரும் "மெய் சிதைந்து, மறைத்த சான்றோர்" (18) என்பதனோடு கூட்டிக் கொள்க. இனிப் பழைய வுரைகாரர், "கொல்படை யென்பது முதல் இயல்வர என்பது ஈறாக நின்ற வினையெச்சம் நான்கினையும் நிகழ்காலப் பொருட்டாக்கிச் செருக்கொன்று என்னும் வினையொடு முடிக்க" என்றும் "குருதியாரப், பேய்மகள் கவலை கவற்ற, நாடுடன் நடுங்க என நின்ற வினையெச்சங்கள் மூன்றனையும், ஆகும்படி, கவலை கவற்றும்படி, நாடுடன் நடுங்கும்படி யென எதிர்காலப் பொருட்டாக்கிக் கொன்றென் னும் வினையொடு முடிக்க" என்றும், கொன்றென்னும் வினையெச்சத்தினை மெய் சிதைந்து என்னும் வினையொடு மாறிக் கூட்டுக" எனறும் கூறுவர்.
13-18. நாறிணர்... ... ... ... ...பெருமகன்
உரை: நாறு இணர்க் கொன்றைவெண்போழ் கண்ணியர் - மணம் கமழ்கின்ற கொன்றைப் பூவின் கொத்துக்களை விரவித் தொடுத்த வெள்ளிய பனந் தோட்டாலாகிய கண்ணியினை யுடையராய்; வாள் முகம் பொறித்த மாண் வரி யாக்கையர் - வாளின்வாய் உண்டுபண்ணிய மாட்சிமைப்பட்ட வடுக்களாகிய வரி பொருந்திய முகத்தை யுடையராய்; நெறிபடு மருப்பின் இருங் கண் மூரியொடு - நெறிப்புடைய கொம்பும் பெரிய கண்ணுமுடைய எருத்துக்களோடு; வளை தலை மாத்த - வளைந்த தலையை யுடைய ஏனை விலங்குகளின் இறைச்சிகளையுடைய; தாழ் கரும் பாசவர் - தாழ்ந்த இழிந்த பாசவர்; எஃகாடு ஊனம் கடுப்ப - கத்தியால் இறைச்சியை வெட்டுதற்குக்கொண்ட அடிமணை போல; மெய் சிதைந்து - மெய் வடுவும் தழும்பு முறுதலால்; சாந்து எழில் மறைத்த மெய் சான்றோர் - பூசிய சந்தனத்தின் பொலிவு தோன்றாதபடி மறைத்த மார்பினையுடைய சான்றோர்க்கு; பெரு மகன் - தலைவனும்; சேரர்க்குச் சிறப்பாக வுரித்தாகிய பனந் தோட்டுடன் உழிஞை வாகை, தும்பை முதலிய போர்ப்பூவும் பிற பூக்களும் விரவித் தொடுத் தணிவது இயல்பாதலால், கொன்றை கலந்து தொடு்த்த போந்தைக் கண்ணியை, "நாறிணர்க் கொன்றை வெண்போழ்க் கண்ணி" யென்றார். வாளால் வெட்டுண்டு வடுப்பட்டது வரிவரியாக முதுகொழிய ஏனை முகத்தினும் மார்பினும் காணப்படுவதுபற்றி, "வாண்முகம் பொறித்த மாண்வரி யாக்கையர்" என்றார். வாள் வாயால் உண்டாக்கிய புண்ணுன் வடுவினை வரி யென்றா ராதலின், அதற்கேற்பப் புண்படுத்திய வாளின் செலை, "வாள் முகம் பொறித்த" என்றும், முகத்தின்கண் உண்டாகிய புண்வடு வீரர்க்கு அழகும் மாட்சிமையும் பயத்தலின், பொறித்தல் என்ற வினைக்கேற்ற வரி யென்றே யொழியாது, "மாண்வரி" என்றும் சிறப்பித்தார். முகத்துக்கும் மார்புக்கும் பொதுவாக யாக்கை யென்றாராயினும், "மெய் சிதைந்து சாந்தெழின் மறைத்த சான்றோர்" என மார்பினைச் சிறப்பித் தோதுதலின் முகத்துக் காயிற்று. பழையவுரைகாரரும், "மெய் சிதைந்து உடலுருவப்பட்டமை கீழே சொன்னமையால், 'வாள்முகம் பொறித்த மாண்வரி யாக்கைய' ரென்பதற்கு வாள் முகத்திலே பொறித்த மாண் வரியையுடைய யாக்கையரென முகத்தில் வடுவாக்கி யுரைக்க" என்பது காண்க.
பாசவர், இறைச்சி விற்பவர். எருதுகளையும் ஏனை ஆடு மான் முதலிய விலங்குகளையும் கொன்று அவற்றின் இறைச்சிகளை விற்பது பற்றி அவரைத் "தாழ் பாசவர்" என்றும், கொலைவினை யுடைமையால், "கரும் பாசவர்" என்றும் கூறினார். எஃகு, ஈண்டு இறைச்சியைத் துண்டிக்கும் கத்தி மேற்று. இறைச்சியைத் துண்டிப்பதற்கு அடியிலே வைக்கும் மரக் கட்டையில் அக்கத்தியின் வெட்டுப்பட்டு மேடு பள்ளமுமாய் வரிபோன்று கிடப்பதுபற்றி, வீரர் மார்புக்கு அதனை உவமம் கூறுவார், "ஊனம் கடுப்ப" என்றார். "ஊனமர் குறடு போல விரும்புண்டு மிகுத்த மார்பு" (சீவக 2281) எனப் பிற்காலச் சான்றோர் கூறுவது காண்க. ஊனம், ஊன்கறி வெட்டும் மணைக்கட்டை. சிதைந்து, காரணப் பொருட்டாய வினையெச்சம். பூசிய சாந்தம் மார்பின் வடு விளையும் தழும்பினையும் மறைக்கமாட்டாமையின், தன் பொலிவு தோன்றற்கு இடம் பெறாமையால், அச் சாந்தின் பொலிவை மார்பின் சிதைவுகள் மறைத்துத் தாம் மேம்பட்டுத் தோன்ற விளங்கும் மார்பினையுடைய சான்றோர் என்றற்கு, "சாந்தெழில் மறைத்த சான்றோர்" என்றார். இதனாற் பயன், உவகைச் சுவையினும் வீரச்சுவையே மிக விரும்பும் இயல்பின ரென்றவாறு. மார்பு என ஒரு சொல் வருவித்து, சாந்தெழில் மறைத்த மார்பையுடைய சான்றோர் என இயைத்துரைத்துக்கொள்க. மெய் சிதைந்து சாந்தெழில் மறைத்த என்றதற்குப் பழையவுரைகாரர், "மெய்யானது சிதைந்து அச் சிதைந்த வடுக்களான பூசின சாந்தின் அழகை மறைத்த என்றவா" றென்பர். சான்றோர் பெருமகன், உயர் திணை ஆறாம் வேற்றுமைத் தொகை. "அதுவென் உருபு கெடக் குகரம் வருமே" (சொல். வேற். மயங். 11) என்றதனால் சான்றோர்க்கென விரிக்கப்படுவதாயிற்று. இது, கண்ணியரும் யாக்கையருமாகிய சான்றோர் பெருமகன் என இயையும்.
19-23 மலர்ந்த........................செலினே
உரை: மலர்ந்த காந்தள் -பூத்திருக்கும் காந்தட் பூ; சூர் நசைத்தா அய்-தெய்வத்தால் விரும்பப்படுவதாதலால்; மாறாது ஊதிய-நீங்காது படிந்து தாதுண்ட; கடும் பறைத் தும்பி- விரைந்து பறத்தலையுடைய தும்பியானது் பறை பண் ணழியும்- அப்பறக்கும் இயல்பு கெடும்; பாடு சால் நெடுவரை-பெருமை யமைந்த நெடிய மலையாகிய; கல் உயர் நேரிப் பொருநன்-கற்களால் உயர்ந்த நேரிமலைக்குரிய பொருநனும்; செல்வக் கோமான்- செல்வக் கோமானுமாகிய வாழியாதனை; பாடினை செலின்- பாடிச் செல்குவையாயின். எ-று.
காந்தட் பூவைத் தெய்வம் விரும்புதலின் வண்டினம் மூசுதலில்லை யென்பது, "சுரும்பு மூசாச் சுடர்ப்பூங்காந்தள்" (முருகு.43) என்பதனாலும் துணியப்படும். தும்பி மாறாது ஊதியதற்கு ஏது கடிய சிறகுகளை யுடைமைபற்றி யெழுந்த செருக்கே யென்றற்குக் "கடும்பறைத் தும்பி" யென்றார். நசைத்தாஅய், நசைத்தாதலாலே. தும்பி மாறாது ஊதியதனால் எய்திய பயன் இதுவென்பார், "பறை பண்ணழியும்" என்றார். பண், பறத்தற்குரிய இயல்பு; அஃதாவது, பறத்தற்கேற்பச் சிறகுகள் அசைந்துகொடுத்தல். இனி, காந்தள், வேங்கை, சண்பகம் (சம்பை) முதலிய பூக்களில் தும்பியினம் படிந்து தாதுண்ணா வென்றும், உண்டால் சிறகுகள் உதிர்ந்துவிடும் என்றும் நூலோர் கூறுதலின், "பறை பண்ணழியும்" என்றா ரென்றுமாம். பாடு, பெருமை.
இனிப், பழையவுரைகாரர், மாறாதூதிய வென்றது, "இது சூரினுடையதென்று அறிந்தும் நீங்காது ஊதிய வென்றவா" றென்றும், "சூர் நசைத்தா யென்றதனைச் சூர் நசைத்தாக வெனத் திரித்துக் காந்தள் சூரானது நச்சுதலையுடைத் தாகலானே யெனவுரைக்க" என்றும் கூறுவர்
மலர்ந்த காந்தளைச் சூர் நச்சுதலால் ஊதலாகாதென்று அறிந்து மாறாது தும்பி கடும்பறைச் செருக்கால் ஊதித் தன்பறை பண்ணழியும் என்றதனால், செல்வக் கடுங்கோ வாழியாதன் கண்டு விரும்பிக் காக்கப் படுதலால், நேரிமலையைப் பகைவேந்தர் வலியுடையே மென்னும் செருக் கால் கொள்ளக் கருதி முயல்வ ராயின் அவ்வலி யிழந்து கெடுவரென்பது வலியுறுத்தவாறாம்.
1-4 கொடு மணம்...........பெறுகுவை.
உரை: கடன் அறி மரபின் கைவல் பாண-இசை வல்லோர்க்குரிய கடமைகளை நன்கறி்ந்த முறைமையால் யாழ் வாசித்தலில் கைவன்மை வாய்ந்த பாணனே; நெடுமொழி ஒக்கலொடு- நெடிய புகழ்பெற்ற நின் சுற்றத்தாருடனே; கொடுமணம்- கொடுமணமென்னு மூரிடத்தும்; பந்தர்ப் பெயரிய பேரிசை மூதூர்-பந்த ரென்னும் பெயரையுடைய பெரிய புகழையுடைய பழைய வூரிடத்தும்; பட்ட-பெறப்படுவனவாகிய; தென்கடல் முத்தமொடு நன்கலம் பெறுகுவை-தென கடலில் எடுக் கப்படும் முத்துக்களோடு நல்ல அணிகலங்களையும் பெறுவாய் எ-று
யாழ் இசைத்தற்கு வேண்டும் நெறி முறைகளை நன்கறிந்து இசைப் பவனே யாழ்வல்லோ னாதலால், "கடனறி மரபின் கைவல் பாண" என்றார். "கைவல்பாண் மகன் கடனறிந் தியக்க" (சிறுபாண். 37) என்று பிறரும் கூறுதல் காண்க. தமது கைவன்மையால் அரசர் முதலாயினார்பால் மாராயம் பெற்ற புகழ்மிக்க சுற்றத்தா ரென்றற்கு, "நெடுமொழி யொக்கல்" என்றார். "மாராயம் பெற்ற நெடுமொழி" (தொல்.புறத்.8) என்று ஆசிரியர் கூறுதல் காண்க. மாராயம் பெற்றதனால் உலகவர் மீக்கூறும் புகழ் "நெடுமொழி" யெனப்பட்டது.
கொடுமணம், பந்தர் என்ற இரண்டும் அக்காலத்தே முறையே நன் கலங்கட்கும் உயரிய முத்துக்கட்கும் சீரிய இடங்களாகத் திகழ்ந்தன போலும். "கொடுமணம் பட்ட வினைமா ணருங்கலம், பந்தர்ப் பயந்த பலர் புகழ் முத்தம்" (பதிற் 74) என அரிசில் கிழாரும் ஓதுதல் காண்க. இதனால், "தென்கடல் முத்தமொடு நன்கலம் பெறுகுவை" யெனப் பொதுப்படக் கூறினாராயினும், கொடுமணம் பட்ட நன்கலமும், பந்தர்ப் பெயரிய மூதூர்ப் பட்ட தென்கடன் முத்தும் பெறுகுவையென இயைத்துக் கொள்க.
இதுகாறும் கூறியது, கொன்றை வெண்போழ்க் கண்ணியரும், யாக்கையரும், பல்செருக் கொன்று, மெய் சிதைந்து சாந்தொழில் மறைத்த சான்றோருமாகிய வீரர்க்குப் பெருமகனும், நேரிப் பொருநனும் ஆகிய செல்வக் கோமானைப் பாடினை செலின், கடனறி மரபின் கைவல் பாண, நீ நின் நெடுமொழி யொக்கலொடு கொடுமணம் பட்ட நன்கலனும் பந்தர் மூதூர்ப்பட்ட தென்கடல் முத்தும் பெறுகுவை யென்று வினைமுடிபு கொள்க. இனிப் பழையவுரைகாரர், "பந்தர்ப் பெயரிய மூதூர்த் தென் கடல் முத்தமொடு கொடுமணம் பட்ட நன்கலம் பெறுகுவை யென மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க" என்பர்.
இதனாற் சொல்லியது: அவன் கொடைச் சிறப்புக் கூறியவாறாயிற்று.
-----------------
7.8. ஏம வாழ்க்கை.
68
கால் கடிப்பாகக் கடலொலித் தாங்கு
வேறுபுலத் திறுத்த கட்டூர் நாப்பண்
கடுஞ்சிலை கடவுந் தழங்குகுரன் முரசம்
அகலிரு விசும்பி னாகத் ததிர
வெவ்வரி நிலைஇய வெயிலெறிந் தல்லது 5
உண்ணா தடுக்கிய பொழுதுபல கழிய
நெஞ்சுபக லூக்கத்தர் மெய்தயங் குயக்கத்(து)
இன்னா ருறையுட் டாம்பெறி னல்லது
வேந்தூர் யானை வெண்கோடு கொண்டு
கட்கொடி நுடங்கு மாவணம் புக்குடன் 10
அருங்க ணொடைமை தீர்ந்தபின் மகிழ் சிறந்து
நாம மறியா வேம வாழ்க்கை
வடபுல வாழ்நரிற் பெரிதமர்ந் தல்கலும்
இன்னகை மேய பல்லுறை பெறுபகொல்
பாய லின்மையிற் பாசிழை நெகிழ 15
நெடும ணிஞ்சி நீணகர் வரைப்பின்
ஓவுறழ் நெடுஞ்சுவர் நாள்பல வெழுதிச்
செவ்விரல் சிவந்த வவ்வரிக் குடைச்சூல்
அணங்கெழி லரிவையர்ப் பிணிக்கும்
மணங்கமழ் மார்பநின் றாணிழ லோரே. 20
துறை: செந்துறைப் பாடாண் பாட்டு.
வண்ணமும் தூக்கும் அது.
பெயர்: ஏம வாழ்க்கை.
15-20. பாயல்..........தாணிழலோரே.
உரை: பாயல் இன்மையின் - பிரிவாற்றாது உறக்கம் பெறாமையால்; பாசிழை நெகிழ - அணிந்துள்ள பசிய இழைகள் நெகிழ்ந்து நீங்க வுடல் மெலிந்து; நெடுமண் இஞ்சி - உயரிய மண்ணாற் செய்யப்பட்ட மதில் சூழ்ந்த; நீள் நகர் வரைப்பின் - நீண்ட பெருமனை யிடத்தே; ஓவு உறழ் நெடுஞ் சுவர் - ஓவியத்தில் தீட்டிக் காட்டப்படுவதினும் மேம்பட்ட நெடிய சுவரில்; நாள் பல எழுதி - பிரிவின்கண் மீண்டு போந்து கூடுதற்குக் குறித்த நாட்கள் பலவும் எழுதி யெழுதி; செவ்விரல் சிவந்த - இயல்பாகவே சிவந்துள்ள விரல் மிகச் சிவந்த; அவ் வரி - அழகிய வரிகளையும்; குடைச் சூல் - சிலம்பையும்; அணங்கொழில் - காண்பாரை வருத்தும் அழகையுமுடைய; அரிவையர்ப் பிணிக்கும் - மகளிர் மனத்தைப் பிணித்துநிற்கும்; மணங்கமழ் மார்ப - சாந்தின் நறிய மணம் கமழும் மார்பை யுடையோய்; நின் தாள் நிழலோர் - நின் அடிப்பணி நின்று வாழும் வீரர் எ-று.
பாயல், உறக்கம். "பாடலின் பாயல்" (ஐங். 195) என்புழிப்போல. பிரிவுத் துயரத்தை யாற்றாது காதல் மகளிர் பலரும் வருந்துமாறு தோன்ற "பாயலின்மையின்" என்றும், "பாசிழை நெகிழ" என்றும் கூறினார். இவை யிரண்டும் முறையே "கண்டுயில் மறுத்தல்" எனவும் "உடம்பு நனி சுருங்கல்" எனவும் கூறப்படும் மெய்ப்பாடுகளாகும். காதலரைப் பிரிந்த மகளிர் அவர் பிரிந்த நாட்களைச் சுவரில் கோடிட்டுக் குறித்தல் மரபாதலின், "ஓவுறழ் நெடுஞ்சுவர் நாள்பல எழுதி" என்றார்; "நாளிழை நெடுஞ்சுவர் நோக்கி நோயுழந், தாழல்வாழி தோழி" (அகம் 61) என்று பிறரும் கூறுதல் காண்க. நெடுமண் இஞ்சி யென்புழி, நெடுமை உயர்ச்சி மேற்று. ஓவு, ஓவ மென்பதன் கடைக்குறை. இயல்பாகவே சிவந்த விரல் சுவரில் பல நாளும் எழுதுவதால் மிகச் சிவந்து தோன்றுதலால், "செவ்விரல் சிவந்த" என்றார். குடைச்சூல், சிலம்பு. கண்டார் மனத்தே வேட்கை விளைவித்து வருத்தும் இயல்புபற்றி, எழிலை "அணங்கெழில்" எனச் சிறப்பித்தார். "நென்னெழில் நலம்.... நிற்கண்டார்ப் பேதுறூஉ மென்பதை யறிதியோ யறியாயோ" (கலி 56) என வருதல் காண்க. காதல் மகளிர் கிடந்துறங்கி இன்புறும் காமக்களனாய் அவரைப் பிரியாமைப் பிணிக்கும் சிறப்புடைமைபற்றி மார்பை, "அணங்கெழி லரிவையர்ப் பிணிக்கும் மணங்கமழ் மார்பு" என்றார். "வேட்டோர்க் கமிழ்தத் தன்ன கமழ்தார் மார்பு" (அகம்.332) என்றும், "காதலர் நல்கார் நயவாராயினும், பல்காற் காண்டலும் உள்ளத்துக் கினிதே" (குறுந். 60) என்றும், "ஊரன் மார்பே, பனித்துயில் செய்யு மின்சா யற்றே" (ஐங் 14) என்றும் சான்றோர் கூறுமாற்றா லறிக.
இழை நெகிழ, எழுதிச் சிவந்த அரிவைர், வரியும் குடைச்சூலும் எழிலுமுடைய அரிவையர் என்றும் இயையும். "பாசிழை நெகிழ நாள் பல எழுதி யென முடிக்க" என்பர் பழைய வுரைகாரர்.
1-4 கால் கடிப்பாக............அதிர
உரை: வேறு புலத்து இறுத்த கட்டூர் நாப்பண் - பகைவர் நாட்டிடத்தே சென்றமைத்துத் தங்கிய பாசறை நடுவில்; கால் கடிப்பாக - மோதுகின்ற காற்றாகிய குறுந்தடி அலைக்க; கடல் ஒலித்தாங்கு - கடலாகிய முரசு முழங்கியதுபோல; கடுஞ்சிலை கடவும் தழங்கு குரல் முரசம் - மிக்க முழக்கத்தைச் செய்யும் ஒலிக்கின்ற ஓசையையுடைய முரசமானது; அகல் இரு விசும்பின் ஆகத்து அதிர - விரிந்த பெரிய வானத்திடத்தே முழங்க.;
போர் குறித்துச் செல்லும் செலவினை விதந்தோதுதலின், பாசறையின் நிலைமையைக் கூறுகின்றார். பகைப்புலத்தே சென்று அமைத்த பாசறை யென்றற்கு, "வேறு புலத் திறுத்த கட்டூர்" என்றார். மோதுகின்ற காற்றைக் கடிப்பென்றாற்போலக் கடலை முரசமென்னாமையின், இஃது ஏகதேச வுருவகம். சிலை, முழக்கம்.முரசின் முழக்கம் வீரரைப் போர்க்கட் செலுத்தும் குறிப்பிற்றாதலின், அதனைக் "கடுஞ்சிலை" யென்றும் "கடவும்" என்றும் கூறினார். ஏவுதற் குறிப்பிற்றாய முழக்கம் "சிலைப்பு" எனப்படும் போலும். இனி, வில்வீரரை யேவும் முரசு முழக்கமென்றற்கு இவ்வாறு கூறினாரென்றுமாம். கடலை முரசமாகவும் காற்றை முரசு முழக்கும் குறுந்தடியாகவும் கூறுதல் சான்றோர் மரபு.; "கடுங்குரல் முரசம் காலுறு கடலிற் கடியவுரற" (பதிற்.69) "புணரி, குணில்வாய் முரசின் இரங்குந் துறைவன்" (குறுந்.328) என்று வருவன காண்க. "கால் கடிப்பாகக் கடல் ஒலித்தாங்கு முரசம் அதிரவெனக் கூட்டுக" என்பது பழையவுரை.
5-8 வெவ்வரி.............பெறி னல்லது
உரை: வெவ்வரி நிலைஇய எயில் எறிந்தல்லது-கண்டார் விரும்பத்தக்க கோலங்கள் நிலைபெற்ற பகைவர் மதிலை யழித்தன்றி.; உண்ணாது, அடுக்கிய பொழுது பல கழிய-உணவு உண்பது இல்லையென்று உண்ணாது கழித்த நாட்கள் பல கழியவும்; நெஞ்சுபுகல் ஊக்கத்தர்-தம் நெஞ்சம் போரே விரும்புதலால் எழுந்த ஊக்கத்தை யுடையராய்; மெய் தயங்கு உயக்கத்து இன்னார்-உடல்வலி குன்றி அசைவுற்று மெலியும் மெலிவினையுடைய பகைவரது; உறையுள் தாம் பெறின் அல்லது-உறைவிடத்தைத் தாம் வென்று கைக்கொண்டாலன்றி;
வெவ்வரி யென்புழி வெம்மை வேண்டற்பொருட்டு. வரிக்கப்படுவது வரியாயிற்று. வரித்தல் கோலம் செய்தல்; ஈண்டு ஓவியத்தின் மேற்று; "ஓவுறழ் நெடுஞ் சுவர்" (பதிற்.68) எனப் பின்னரும் கூறுப. நாள் பல கழியினும் பொலிவு குலையாவண்ணம் எழுதப்பட்டமை தோன்ற, நிலைஇய" என்றார். எயிலெறிந்தல்லது உணவுண்ணேம் என வஞ்சினம் மொழிந்தமையின், அம்மொழி தப்பாவண்ணம் பகைவர் மதிலை முற்றி நிற்றலின், "எயிலெறிந்தல்லது உண்ணாதடுக்கிய பொழுது பல கழிய" என்றார். பிறரும், "இன்றினிது நுகர்ந்தனமாயின் நாளை, மண்புனை யிஞ்சி மதில் கடந்தல்லது உண்குவமல்லேம் புகாவெனக் கூறிக், கண்ணி கண்ணிய வயவர்" (பதிற்.58) என்று கூறுதல் காண்க. இழைத்த வஞ்சினம் தப்பாமை முடித்தற்கு நாள் பல கழிந்தனவாயினும், தலைநாளிற் போல ஊக்கம் சிறிதும் குன்றாமை தோன்ற, "உண்ணாது அடுக்கிய பொழுது பல கழிய நெஞ்சு புகலூக்கத்தர்" என்றார். கழியவும் என்புழி உம்மை விகாரத்தால் தொக்கது. ஊக்கத்தர், முற்றெச்சம்.
இனி, பழையவுரைகாரர், "எயிலெறிந்து என்ற எச்சத்திற்கு உண்ணாது என்றது இடமாக உண்டலென வொரு தொழிற் பெயர் வருவித்து முடிக்க" என்றும், "உண்ணாது என்றதனை உண்ணாமலெனத் திரித்து, அதனை அடுக்கிய வென்றும் வினையொடு முடித்துக் கழிய வென்றதனைக் கழியாநிற்க வென்னும் பொருளதாக்கி, அதனைப் பெறினென்னும் வினை யொடு முடிக்க" என்றும் "ஊக்கத்த ரென்றது வினையெச்ச" மென்றும் கூறுவர்
தயங்குதல், அசைதல். மெய் தயங்கு உயக்கமாவது ஓய்வின்றிப் பொருதலால் மெய் வலி குன்றுதலால் உண்டாகும் அசைவுக்குக் காரணமாகிய மெலிவு நிலை. இதனை ஓய்ச்சலென்றும் கூறுப. "தும்பை சான்ற மெய் தயங் குயக்கத்து" (பதிற். 79) என்று பிறரும் கூறுதல் காண்க. இவ்வண்ணம் பெறும் உயக்கத்தை யெய்துபவர் இன்னாமை யெய்துத லியல்பாதலால், அஃதெய்திநிற்கும் பகைவரை "இன்னார்" என்றார். உயக்கத்து இன்னார் என்பதனால், உயக்கதால் இன்னாமை யடைந்திருக்கும் பகைவரென்பதும், அவரை அன்னராக்குமுகத்தால் அவர் உறையும் இடத்தை வென்றுகோடலும் பெற்றாம். பெறவே, அவ்வுறையுளைப் பெற்ற வீரர் அவ்விடத்தே இரவினும் பகலினும் எப்போழ்தினும் பகைவரது தாக்குதலை யெதிர்நோக்கியே இருக்குமாறும் பெற்றாம்.
இன்னாருறையுள் பெறினல்லது, "இன்னகை மேய பல்லுறை பெறுப கொல்" என்பதனால், பெரும்பான்மையான நாட்கள் இன்னாருறையுள் பெறுதலிலேயே வீரர் கழித்தலை யறிக.
9-14 வேந்தூர்................பெறுப கொல்
உரை: வேந்தூர் யானை வெண்கோடு கொண்டு - பகை வேந்தர் ஏறிப்போந்த களிற்றினைக் கொன்று அதன் மருப்பினைக் கைக்கொண்டு; கட்கொடி நுடங்கும் ஆவணம் உடன் புக்கு - கள்ளுக்கடையின் கொடி யசைந்து தோன்றும் கடைத்தெருவை உடனடைந்து; அருங் கள் நொடைமை தீர்ந்த பின் - அரிய கள்ளுக்கு விலையாகத் தந்து அக் கள்ளைப் பெற்றுக்கொண்ட பின்பு; மகிழ் சிறந்து - மகிழ்ச்சி மிக்கு; நாமம் அறியா ஏம வாழ்க்கை வடபுல வாழ்நரின் - அச்சத்தை யறியாத இன்பமே நுகரும் வாழ்க் கையையுடைய உத்தரகுருவில் வாழும் மக்களைப்போல; பெரிது அமர்ந்து - மிக்க விருப்பமுற்று; அல்கலும் இன்னகை மேய பல் உறை பெறுப கொல் - நாடோறும் இனிய உவகை பொருந்;தியுறையும் பொழுதுகள் பல பெறுவார்களோ; பெறுதல் அரிது போலும் எ-று.
போரில்லாக் காலத்தே சேரனுடைய வீரர் காலங் கழிக்கும் திறம் கூறுவார், நாடோறும் அவர்கள் பகைப்புலத்தே பகைவேந்தர் ஊர்ந்து வரும் களிற்றினைக் கொன்று, கொணர்ந்த அவற்றின் வெண்கோடுகளைக் கள்ளிற்கு விலையாகத் தந்து, கள்ளைப் பெற்று மகிழ்வது கூறுவார், "வெண் கோடு கொண்டு ஆவணம் புக்கு அருங்கள் நொடைமை தீர்ந்தபின் மகிழ் சிறந்து" என்றார். வெண்கோட்டுக் களிறுகளில் சிறப்புடையவற்றையே வேந்தர் ஊர்ந்து செல்பவாதலின், அச் சிறப்புடைமை தோன்ற, "வேந்தூர் யானை வெண்கோடு" என்றார்.கள்ளுக்கடையில் கொடிகட்டி வைத்தல இக்காலத்திற் போலப் பண்டைக்காலத்தும் உண்மை யறிக; "நெடுங்கொடி நுடஙகும் நறவுமலி மறுகில்" (அகம். 126) என்று பிறரும் கூறுப. உயர்ந்த கோடுகளைத் தந்தல்லது பெறலாகாமை தோன்ற, "அருங்கண் ணொடைமை" யென்றார். எனவே, கள்ளினது இனிப்பும் களிப்பும் கூறியவாறாயிற்று. கட்கடைக்கு வீரர் தம் தோழரோடன்றித் தனித்துச் செல்லா ரென்றற்கு "உடன் புக்கு" என்றார். "மதனுடை வேழத்து வெண்கோடு கொண்டு, பொன்னுடை நியமத்துப் பிழிநொடை கொடுக்கும்" (பதிற்.30) என்று பிறருங் கூறுதல் காண்க.
வடபுலம் என்றது உத்தர குரு வெனப்படும்; அங்கு வாழ்வோர் பகை முதலிய காரணமாகப் பிறக்கும் அச்சம் யாதுமின்றி இன்பமே துய்த்திருப்ப வென்பவாகலின், "நாம மறியா வேமவாழ்க்கை வடபுல வாழ்நரின்" என்றார். பழைய வுரைகாரரும், "நாமமறியா ஏம வாழ்க்கை யென்றது துன்பம் இடைவிரவின இன்பமன்றி இடையறாத இன்பமேயாய்ச் சேறலான வாழ்க்கை யென்றவா" றென்றும், "இச் சிறப்பானே இதற்கு ஏம வாழ்க்கை யென்று பெயராயிற்" றென்றும், "வடபுலம், போக பூமியாகிய உத்தரகுரு" என்றும் கூறுவர். "இதனை அருந்தவங் கொடுக் குஞ் சுருங்காச் செல்வத்து, உத்தர குருவம்" (பெருங். 2:7:140-1) என்று கொங்குவேளிர் கூறுதல் காண்க. இன்னகை, இனிய இன்பம் என்பது பழையவுரை. உறை, ஆகுபெயரால் உறையும் பொழுதின் மேலதாயிற்று. உறை பெறுதல் அரிது போலும் என்பது குறிப்பு. எனவே, வேந்தன் நாடோறும் போர்வேட்டு வினைபுரிதலையே மேற்கொண்டிருந்தமை பெற்றாம்.
இதுகாறும் கூறியது: அணங்கெழில் அரிவையர்ப் பிணிக்கும் மார்ப, நின் தாணிழல் வாழ்வோர், கட்டூர் நாப்பண், முரசம் அதிர, உண்ணா தடுக்கியபொழுது பல கழியவும், இன்னார் உறையுள் தாம் பெறினல்லது, அல்கலும் பெரிதமர்ந்து, வடபுலவாழ்நரின் இன்னகை மேய பல்லுறை பெறுப கொல்லோ; பெறுதல் அரிது போலும் என வினை முடிவு செய்க. இனிப் பழையவுரைகாரர், "அரிவையர்ப் பிணிக்கும் மணம் கமழ் மார்ப, நின் தாள்நிழலோர் உண்ணா தடுக்கிய பொழுது பல கழிய இன்னார் உறையுள் தாம் பெறினன்றி, இன்னகை அல்கலும் மேய பல்லுறை பெறுப கொல்? பெறார்; அவர் அவ்வாறு அது பெறினன்றி நின் மார்பாற் பிணிக்கப்பட்ட அரிவையரும் இன்னகை அல்கலும் மேய பல்லுறை பெறுவது ஏது எனக் கூட்டி வினைமுடிவு செய்க" என்பர்.
"இதனாற் சொல்லியது காம வேட்கையின் ஓடாத அவன் வென்றி வேட்கைச்சிறப்புக் கூறியவாறாயிற்று.”
------------
7.9 மண்கெழு ஞாலம்.
69
மலையுறழ் யானை வான்றோய் வெல்கொடி
வரைமிசை யருவியின் வயின்வயி னுடங்கக்
கடல்போ றானைக் கடுங்குரன் முரசம்
காலுறு கடலிற் கடிய வுரற
எறிந்துசிதைந்த வாள் 5
இலைதெரிந்த வேல்
பாய்ந்தாய்ந்த மா
ஆய்ந்துதெரிந்த புகன்மறவரொடு
படுபிணம் பிறங்க நூறிப் பகைவர்
கெடுகுடி பயிற்றிய கொற்ற வேந்தே 10
நின்போல், அசைவில் கொள்கைய ராகலி னசையா(து)
ஆண்டோர் மன்றவிம் மண்கெழு ஞாலம்
நிலம்பயம் பொழியச் சுடர்சினந் தணியப்
பயங்கெழு வெள்ளி யாநிய நிற்ப
விசும்புமெய் யகலப் பெயல்புர வெதிர 15
நால்வேறு நனந்தலை யோராங்கு நந்த
இலங்குகதிர்த் திகிரி முந்திசி னோரே.
துறை : வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு.
வண்ணம்: ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்.
தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்.
பெயர்: மண்கெழு ஞாலம்.
1-10 மலையுறழ்...................வேந்தே
உரை: மலை யுறழ் யானை வான் தோய் வெல்கொடி - மலை போலும் யானையின்மேல் வானளாவ எடுத்த வெற்றிக்கொடியானது; வரைமிசை யருவியின் - மலைமேலிருந்து விழும் அருவி போல; வயின் வயின் நுடங்க - இடந்தோறும் அசைந்து விளங்க; கடல் போல் தானைக் கடுங் குரல் முரசம்- கடல் போன்ற தானையின் நடுவே கடிய முழக்கத்தையுடைய முரசு; கால் உறு கடலின் கடிய உரற - காற்றால் மோதப்பட்ட கடல்போலக் கடிதாய் முழங்க; எறிந்து சிதைந்த வாள் - பகைவரை எறிதலால் சிதைவுற்ற வாள் வீரரும்; இலை தெரிந்த வேல் - இலைபோன்ற தலையையுடைய வலிய வேலேந்திய வீரரும்; பாய்ந்து ஆய்ந்த மா - பகைவர்மேற் பாய்தலால் ஓய்வுற்ற குதிரைகளும்;ஆய்ந்து தெரிந்த புகல் மறவரொடு - ஆராய்ந்து தெரிந்துகொள்ளப்பட்ட போர் வேட்கையினையுடைய வீரர்களும் கொண்ட தானையுடன் சென்று; படு பிணம் பிறங்கப் பகைவர் நூறி - போரிலே பட்டு வீழும் பிணங்கள் குவிந்து உயரப் பகைவரைக் கொன்றழித்து; கெடு குடி பயிற்றிய - அவர் நாட்டில் கெட்டோருடைய குடிகளை வாழச்செய்த; கொற்ற வேந்தே - வெற்றி வேந்தனே எ-று.
யானைக்கு மலையும் கொடிக்கு அருவியும் உவமமாயின. "பெருவரை யிழிதரும் நெடுவெள் ளருவி, ஓடை யானை யுயர்மிசை யெடுத்த, ஆடு கொடி கடுப்பத் தோன்றும்" (அகம்.358) என்று பிறரும் கூறுதல் காண்க. "உரவுக்கட லன்ன தாங்கருந் தானையோடு" (பதிற். 90) என்று பிறரும் கூறுதல் போல, ஈண்டும் ஆசிரியர், 'கடல்போல் தானை' யென்றார். கேட்ட பகைவர் உள்ளத்தே அச்சத்தைப் பயத்தல்பற்றிக் "கடுங்குரல் முரசம்" என்றார். "எறிந்து சிதைந்த வா"ளென்றும், "பாய்ந்தாய்ந்த மா" என்றும் கூறியது, முறையே வாட்படை, குதிரைப்படைகளின் போர்ப் பயிற்சியின் சிறப்புக் குறித்து நின்றன. வாள், வேல், குதிரை யென்பன, அவ்வவற்றை யாளும் தானைவீரரைச் சுட்டிநின்றன. ஒடுவினை வாள் முதலியவற்றோடும் கூட்டுக. ஆய்தல், ஓய்தல். பல போர்களிலும் அறம் பிழையாது வென்றி மேம்பட்டாரையே வீரராக ஆராய்ந்து தேர்ந்து கோடலின், "ஆய்ந்து தெரிந்த மறவ" ரென்றும், அவர்தாமும் அப் போரிடைப் பெறும் புகழே விரும்பி நிற்றல்பற்றிப் "புகல் மறவ" ரென்றும் கூறினார்.
இனிப் பழையவுரைகாரர், "நுடங்க எனவும் உரற எனவும் நின்ற வினையெச்சங்களை நூறி யென்னும் வினையொடு முடிக்க" என்றும், "புகன் மறவரொடு என்னும் ஒடுவை, வாளொடு, வேலொடு, மாவொடு என எங்கும் கூட்டுக" என்றும் வாள் வேல், மா என நின்ற மூன்றும் ஆகு பெய" ரென்றும் கூறுவர்.
இக் கூறிய தானையொடு சென்று எதிர்ந்த பகைவரைத் தாக்கி வென்றி மிகும் திறத்தை, "படுபிணம் பிறங்க நூறி" என்றார். பொடிபடுத்த லென்னும் பொருட்டாய நூறி யென்னும் சொல் ஈண்டுக் கோறற் பொருட்டு, பழையவுரையும், "நூறி யென்பது ஈண்டுக் கொன்றென்னும் பொருண்மைத்து," என்றல் காண்க.
போரில் பட்டு வீழும் பிணங்கள் பெருகி மலைபோலக் குவியப் பொருதலால் பகைவர் நாடு குடிவளம் குன்றிக் கெடுதலால், தீது கடிந்து நன்று புரக்கும் வேந்தற்கு, கெட்ட குடியை நலமுறுவித்துப் பேணுதல் கடனாதலின், அது செய்த வேந்தனை, "கெடுகுடி பயிற்றிய கொற்ற வேந்தே"யென்றார். "படுபிணம் பிறங்கப் பகைவரை நூறியபின் அப் பகைவருடைய கெட்டுப் போன குடிமக்களை அவர் நாட்டிலே பயின்று வாழ்வாராகப் பண்ணிய" வென்றும், இனிப் பகைவருடைய கெட்ட குடிகளை வேற்றுநாட்டிலே பயிலப்பண்ணின வென்றுமா" மென்றும் பழைய வுரைகாரர் கூறுவர்.
13-17. நிலம்.....................முந்திசினோரே
உரை: நிலம் பயம் பொழிய - நிலம் தன்பால் விளயும் விளைபொருள்களை மிக விளைவிக்க; சுடர் சினம் தணிய - வெயிலது வெம்மை வரம் பிகவாது தணிந்து நிலவ; பயம் கெழு வெள்ளி ஆநிய நிற்ப - உலகிற்கு நல்ல பயனைச் செய்யும் வெள்ளி யென்னும் கோள் மழைக்குக் காரணமாகிய ஏனை நாட் கோள்களுடனே சென்று நிற்ப; விசும்பு மெய்யகலப் பெயல் புரவு எதிர- வானம் மழை முகில்கள் நிரம்பப் பரவி நல்ல மழையைப் பெய்வது கரணமாக இடம் அகன்று விளங்கவே மழை தன் பெயலால் உலகு புரக்கும் செயலுற்று நிற்ப. நால்வேறு நனந்தலை-நான்காய் வேறுபட்ட அகன்ற திசையிடமெல்லாம்; ஓராங்கு நந்த- ஒன்றுபோல ஆக்க மெய்த; இலங்கு கதிர்த் திகிரி முந்திசினோர்- விளங்குகின்ற அரச வாணையாகிய திகிரியைச் செலுத்திய நின் முன்னோர் எ-று
தன்பால் விளைபொருளை மிக விளைத்து வழங்குமாறுபற்றி, "நிலம் பயம் பொழிய" என்றும், வெயிலது வெம்மையும் மழை முதலிய காலந்தோறும் பெய்தலால் வரம் பிகவாது நிலவுதலாலும், வரம் பிகந்த வெம்மையே உயிர்களால் மிகுதியாகக் கருதப்படு மாதலாலும், "சுடர் சினம் தணிய" என்றும் கூறினார். வெள்ளிக்கோள் உலகுயிர்கட்கு நலம் செய்யுமாகலின், பயங்கெழு வெள்ளி" யென்றும், அந்நலம் உண்டாதற்குத் துணையாகும் ஏனைநாளும் கோளும் இயங்கு மிடத்தே இவ் வெள்ளி நிற்க வேண்டுதலின், "ஆநியம் நிற்ப" என்றும் கூறினார். "அழல் சென்ற மருங்கின் வெள்ளியோடாது மழை வேண்டு புலத்து மாரி நிற்ப" (பதிற் 13) என்றும் "வறிது வடக்கிறைஞ்சிய சீ்சால் வெள்ளி, பயங்கெழு பொழுதோ டாநிய நிற்ப" (பதிற் 24) என்றும் சான்றோர் கூறுதல் காண்க.
இனிப் பழையவுரைகாரர் "நிலம் பயம் பொழிய வென்றது, சிலர் அரசு செய்யுங் காலங்களில் மழையும் நீரும் குறைவின்றி யிருந்தும் எவ் விளைவும் சுருங்க விளையும் காலமும் உளவாம்; அவ்வாறன்றி நிலம் பயனைப் பொழிந்தாற்போல மிக விளைய வென்றவா" றென்றும், சுடர் சினம் தணியவென்றது, "திங்கள் மும்மாரியும் பெய்து மழை இடையறாது வருகின்றமையின் சுடர் சினம் தணிந்தாற் போன்ற தோற்ற மென்றவா" றென்றும், "வெள்ளியென்றது வறிது வடக்கிறைஞ்சிய சீர்சால் வெள்ளி யென்றவா" றென்றும், "பயங்கெழு ஆநிய நிற்க வென்றது, அவ் வெள்ளி மழைக்கு உடலான மற்றைநாள் கோள்களுக்குச் செல்கின்ற நல்ல நாட்களிலே நிற்க வென்றவா" றென்றும் கூறுவர்.
ஆட்சி நலம் இல்வழி, மழை யின்மைக்குக் காரணமாகிய நாளும் கோளும் நிலைதிரிதலின், விசும்பும் இடம் சுருங்கித் தடுமாறு மென்பது பற்றி, "விசும்பு மெய்யகல" என்றும், அதனால் மழை வேண்டுங் காலத்து விளைவு மிகுதிக் கேற்பப் பெய்து உலகுயிர்கட்கு நலம் செய்தலால், "பெயல்புர வெதிர" தன்றும், கூறினார். இனிப் பழையவுரைகாரர், "விசும்பு மெய்யகல வென்றது, அம் மழை யில்லாமைக்கு உற்பாதமாகிய தூமத் தோற்ற மின்மையின், ஆகாய வெளி தன் வடிவு பண்டையில் அகன்றாற்போலத் தோன்ற வென்றவா" றென்றும், "பெயல்புர வெதிர வென்றது மழை இவ்வுலகினை யானே புரப்பேனென்று ஏறட்டுக் கொண்டாற்போல நிற்ப வென்றவா" றென்றும் கூறுவர்.
நாற்றிசையும் தனித்தனி வேறுவே றியல்பினவாதலால், "நால்வேறு நனந்தலை" யென்றும், இயல்பு வேறுபடினும் பயன் விளத்தற்கண் ஏற்றத் தாழ்வின்றி ஒன்றுபோல ஆக்கம் எய்தின என்றற்கு, "ஓராங்கு நந்த" என்றும் கூறினார். "நாலுதிசையும் ஒன்றுபோலே பகையின்றி விளங்க" வென்பது பழையவுரை.
பயம் பொழிய, சினம் தணிய, ஆநியம் நிற்ப, பெயல்புர வெதிர, ஓராங்கு நந்த, திகிரி செலுத்திய முந்திசினோர் என ஒருசொல் வருவித்து முடிக்க. பழையவுரைகாரர், பொழிய என்பது முதல் நந்த என்பது ஈறாக நின்றவற்றை "ஆண்டோர்" (வரி 12) என்பதனோடு கூட்டி முடிப்பர்.
11-12 நின்போல்............ஞாலம்
உரை: நின்போல் மன்ற அசைவில் கொள்கைய ராதலின்- நின்னைப்போல் தெளிவாக மாறாத கொள்கையை யுடையவர்களா யிருந்தமையால்; இம் மண்கெழு ஞாலம் அசையாது ஆண்டோர்- இவ்வணுச்செறிந்த நிலவுலகத்தை இனிது ஆண்டார்கள் எ-று
நின் முன்னோரினும் நீ கொள்கையால் உயர்ந்தாய் என்பார், நின் போல் என உவமைக்கண் வைத்தோதினார். அவர் வரலாற்றுக் கொள்கைகளையும் நின் கொள்கைகளையும் சீர்தூக்கிக் காணுமிடத்தே அவருடையவற்றினும் நி்ன்னுடைய கொள்கை மேம்பட்டுத் திகழ்கின்றன வென்பார், "மன்ற" என்றார். அசைவு, முதலது திரிபின்மேலும் பின்னது வருத்தத்தின்மேலும் நின்றன. மேல்வரும் பகை முதலியவற்றுக்கு எளிமையுற்று அரசுமுறை திரிதல் கூடாதென்றற்கு, "அசைவில் கொள்கை" யென்றும்,முறை கோடியவழி, வறுமை பிணி முதலியன நாட்டிற் பெருகி மக்கட்கு இடும்பை பயத்தலின், "அசையா தாண்டோர்" என்றும் கூறினார்.
மன்ற வென்பதனை "அசைவில் கொள்கையராதலின்" என்பதனோடு கூட்டியுரைக்க. இம் மண்கெழு ஞாலம் என்றதற்குப் பழையவுரைகாரர், "பொன் ஞாலமன்றி இம்மண்ஞால முழுதும் ஆண்டா ரென்பது தோன்ற, மண்கெழு ஞாலமென்ற இச்சிறப்பானே இற்கு மண்கெழுஞால மென்று பெயராயிற்" றென்பர்.
இதுகாறும் கூறியது: கொடி நுடங்க, முரசம் உரற, வாள்வீரர் முதல் மறவர் உள்ளிட்ட தானையொடு சென்று பகைவர் பிணம் பிறங்க நூறி, அவர்நாட்டுக் கெடுகுடி பயிற்றிய வேந்தே, இலங்குகதிர்த் திகிரி செலுத்திய நின் முந்திசினோர், நின்போல் அசைவில் கொள்கைய ராதலின், இம் மண்கெழு ஞாலம் அசையாது ஆண்டார்கள் எனக் கூட்டி வினை முடிபு செய்க. இனிப் பழையவுரைகாரர், "கொற்ற வேந்தே, இலங்கு கதிர்த் திகிரியினையுடைய நின் முன்னோர், நிச்சயமாக நின்னைப்போல் அசைவில்லாத மேற்கோளையுடைய ராகையாலே, இம்மண்ஞாலத்தினை நிலம் பயம் பொழிதல் முதலாக நால்வேறு நனந்தலை ஓராங்கு நந்த என்பது ஈறாக எண்ணப்பட்ட நின் புகழெல்லாம் உளவாக அசைவின்றி ஆண்டோராவர்; அவரல்லார் இம்மண்ஞாலத்தின் ஒரோ விடங்களை ஆளுவதல்லது முழுதும் ஆளுதல் கூடாதன்றே யெனக் கூட்டி வினை முடிவு செய்க" என்பர்.
"ஆண்டோ ரசையாது என்பது பாடமாக்கி அதற்கேற்ப உரைப்பாரும் உளர். இதனாற் சொல்லியது அவன் ஆள்வினைச்சிறப்பினை அவன் குடிவரலாற்றோடு படுத்துச் சொல்லியவாறாயிற்று"
"எறிந்து சிதைந்த என்பது முதலாக மறவரொடு என்பது ஈறாக நான்கடி வஞ்சி யடியாய் வந்தமையான் வஞ்சித்தூக்கு மாயிற்று. அவற்றுள் முன்னின்ற மூன்றடிகளின் ஈற்றுச்சீர்கள் அசைச்சீர்களாகவும் மற்றையடியின் ஈற்றுச்சீர் பொதுச்சீராகவும் இட்டுக் கொள்க. நின்போல் என்றது கூன்"
*********************
7.10. பறைக்குர லருவி.
70
களிறுகடைஇய தாள்
மாவுடற்றிய வடிம்பு
சமந்ததைந்த வேல்
கல்லலைத்த தோள்
வில்லலைத்த நல்வலத்து 5
வண்டிசை கடாவாத் தண்பனம் போந்தைக்
குவிமுகி ழூசி வெண்டோடு கொண்டு
தீஞ்சுனை நீர்மலர் மிலைந்துமதஞ் செருக்கி
உடைநிலை நல்லமர் கடந்து மறங்கெடுத்துக்
கடுஞ்சின வேந்தர் செம்ம றொலைத்த 10
வலம்படு வான்கழல் வயவர் பெரும
நகையினும் பொய்யா வாய்மைப் பகைவர்
புறஞ்சொற் கேளாப் புரைதீ ரொண்மைப்
பெண்மை சான்று பெருமட நிலைஇக்
கற்பிறை கொண்ட கமழுஞ் சிடர்நுதற் 15
புரையோள் கணவ பூண்கிளர் மார்ப
தொலையாக் கொள்கைச் சுற்றஞ் சுற்ற
வேள்வியிற் கடவு ளருத்தினை கேள்வி
உயர்நிலை யுலகத் தையரின் புறுத்தினை
வணங்கிய சாயல் வணங்கா வாண்மை 20
இளந்துணை புதல்வரின் முதியர்ப் பேணித்
தொல்கட னிறுத்த வெல்போ ரண்ணல்
மாடோ ருறையு முலகமுங் கேட்ப
இழுமென விழிதரும் பறைக்குர லருவி
முழுமுதன் மிசைய கோடுதோறுந் துவன்றும் 25
அயிரை நெடுவரை போலத்
தொலையா தாகநீ வாழு நாளே.
துறை: செந்துறைப் பாடாண் பாட்டு.
வண்ணம்: ஒழுகு வண்ணம்.
தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்.
பெயர்: பறைக்குர லருவி.
1-5 களிறு..............நல்வலத்து
உரை: களிறு கடைஇய தாள் - களிறுகளை நெறியறிந்து செலுத்திப் பயின்ற தாளினையும்; மா வுடற்றிய வடிம்பு - குதிரைகளைப் பொருதற்குச் செலுத்திப் பயின்ற தாள் விளிம்பினையும்; சமம் ததைந்த வேல் - பகைவர் செய்யும் போரைக் கெடுத்த வேற் படையினையும்; கல் அலைத்த தோள் - கல்லொடு பொருது பயின்ற தோளினையும்; வில் அலைத்த நல்வலத்து - வில்லேந்திப் பொருது பகைவரை வருத்திய நல்ல வெற்றினையுமுடைய (வயவர்.11) எ-று.
களிற்றின்மேலே யிருந்து செலுத்தும் வீரர் அதன் பிடரிக்கண் இருக்கும் கயிற்றிடையே தம் தாளைச் செருகி முன் தாளால் தம் குறிப்பினை யுணர்த்திச் செலுத்துப வாதலின், அச் சிறப்புக் குறித்து, அவர் தாளை, "களிறு கடைஇய தாள்" என்றார். குதிரைமேலிருந்து பொரும் குதிரை வீரர், தம் தாளின் அகவிளிம்பால், அவற்றிற்குத் தம் குறிப்பை யுணர்த்திச் செலுத்துப வாகலின், அச்சிறப்பு நோக்கி, " மா வுடற்றிய வடிம்பு" என்றார். வடிம்பு, தாளின் விளிம்பு. "வடிம்பலம்ப நின்ற பாண்டியன்" என்னும் வழக்குண்மை காண்க. வேலும் வாளும் என்றவற்றுள், வேல் சிறந்தமையின் அதனை யெடுத்தோதினா ராகலின், வாள் வன்மையையும் கூறியவாறாகக் கொள்க. இனித் தோள் வன்மைக்கு. கற்றூணோடு பொருது மற்பயிற்சி பெற்றுக் காழ்ப்புற்றிருப்பது கூறுவார், "கல்லலைத்த தோள்" என்றார். இவ்வாறு படைவீரர்க்கு வேண்டும் சிறப்பியல்களுள் களிறூர்தல், மா வூர்தல், வேல் வாட் போர், மற்பயிற்சி என்பவற்றைக் கூறி வில்வன்மை இன்றியமையாமைபற்றி. "வில்லலைத்த நல்வலத்து வயவர்" என்றார்.
இனி, சமம் ததைந்த வேல் என்றதற்கு, "மாற்றார் செய்யும் சமங்கள் சிதைதற்குக் காரணமாகிய வே லென்றவா" றென்றும், "வேலென்றது வேல் வென்றியினை" யென்றும், "கல்லலைத்த தோ ளென்றது வலியுடைமையால் கல்லை யலைத்த தோள் என்றவா" றென்றும் பழையவுரைகாரர் கூறுவர்.
இதனால், தாளினையும், வடிம்பினையும், வேற்படையினையும், தோளினையும், வில்லினையு முடைய வயவர் எனக் கூட்டி முடிக்க.
6-11. வண்டிசை.........பெரும
உரை: வண்டிசை கடவா - வண்டினம் மொய்த்துப் பாடுதல் இல்லாத; தண் பனம் போந்தை - தண்ணிய பனையினது; குவி முகிழ் ஊசி வெண் தோடு கொண்டு - குவிந்த அரும்பு போன்ற கூர்மையையுடைய வெள்ளிய பனங்குருத்தோடு; தீஞ் சுனை நீர்மலர் மிலைந்து - இனிய சுனையிடத்து மலர்ந்த குவளைப்பூ விரவிய கண்ணியைச் சூடி; மதம் செருக்கி - போர்க்கு வேண்டும் மதம் மிகுந்து; கடுஞ்சின வேந்தர் - மிக்க சினத்தையுடைய பகை மன்னர்; உடைநிலை நல் அமர் கடந்து - என்றும் தமக்கே யுடையமையாகப் பெற்ற நிலைமையினையுடைய நல்ல போர்களை வஞ்சியாது பொருதழித்து; மறம் கெடுத்து - அவருடைய போர் வன்மையைச் சிதைத்து; செம்மல் தொலைத்த - இறுதியாக அவரது தலைமையினையு மறக் கெடுத்த; வலம்படு வான்கழல் வயவர் பெரும - வெற்றி பொருந்திய பெரிய கழலணிந்த வீரர்க்குத் தலைவனே. எ-று.
வெண் தோடு கொண்டு நீர்மலர் மிலைந்து, செருக்கி, கடந்து, கெடுத்து, தொலைத்த வயவர் என்று கூட்டி, அவர்கட்குப் பெரும என இயைக்க. வயவர்பெரும என்பதனை ஒரு பெயராக்கிச் சேரமானுக்கே ஏற்றி முடிப்பினுமாம்.
பனந்தோட்டோடு குவளைப்பூவை விரவித் தொடுத்த கண்ணியை யணிவது சேரநாட்டு வீரர்க் கியல்பாதலால், ஈண்டும் அதனை யெடுத் தோதினார். பனங்குருத்தில் தேனின்மையின் வண்டினம் மொய்த்துப் பாடுதல் இல்லையாதலால், "வண்டிசை கடாவாத் தண்பனம் போந்தை" யென்றும், அதனை அழகிதாகத் தொடுத்தணிந்தவழி, பூ வென்று கருதி மூசும் வண்டினம் வறிது மீளாமைப்பொருட்டு, வேறு குவளை, வேங்கை, வாகை முதலிய பூக்களை விரவித் தொடுத்தணியும் இயல்பினால், "வெண்தோடு கொண்டு தீஞ்சுனை நீர்மலர் மிலைந்து" என்றும் கூறினார். பனங் குருத்தால் குவிந்த அரும்புபோல முடைந்தது ஊசிபோலக் கூரிதா யிருத்தல்பற்றி, "குவி முகிழ் ஊசி வெண் தோடு" என்பராயினர். "வட்கர் போகிய வளரிளம் போந்தை, உச்சிக்கொண்ட வூசி வெண்டோடு" (புறம். 100) என்று பிறரும் கூறுதல் காண்க. தீஞ்சுனை நீர்மலர் என்றற்கு நீலமலர் சிறப்புடைத்தாயினும், குவளைப்பூவே போந்தையிற் றொடுக்கும் பொற்புடைமையால், அது கொள்ளப்பட்டது. "வெண்தோட் டசைத்த வொண்பூங் குவளையர்" (பதிற். 58) என்று பிறரும் கூறுப. போருடற்றுதலும் அதன்கண் வெற்றி பெறுதலும் தமக்கு நிலையாகக் கொண்டு சிறக்கும் வேந்த ரென்பார். பகை வேந்தரை, கடுஞ்சின வேந்த ரென்றும், "உடைநிலை நல்லமர்" என்றும் சிறப்பித்தார். உடைநிலை யென்பது, "உடைப்பெருஞ் செல்வம்" (பழ. 200) என்பதுபோல நின்றது. இவ் வியல்பினரான வேந்தரையும் வென்று அடிப்படுத்திக் கொண்டமை தோன்ற, "செம்மல் தொலைத்த" என்றார். காலிற் கழல் யாப்பு வெற்றி பெறும் வீரர்க்கே பெருமை தருதலின், "வலம்படு வான்கழல் வயவர்" என்றாரென வறிக. வென்றி பெறுதற்குக் காரணமான சிறந்த கழலென் பாருமுளர்.
12-16. நகையினும்...........மார்ப
உரை: நகையினும் பொய்யா வாய்மை - விளையாட்டானும் பொய் கூறுதலை யில்லாத வாய்மையினையும்; பகைவர் புறஞ் சொல்கேளா - பகைவர்தம் புறத்தே இகழ்ந்து கூறும் சொற்களை ஏறட்டுக்கொள்ளாத; புரைதீர் ஒண்மை - குற்றம் நீங்கிய அறி வினையும்; பூண் கிளர் மார்ப - பூணார மணிந்த மார்பினையும் உடையோய்; பெண்மை சான்று - நாணம் நிறைந்து; பெரு மடம் நிலைஇ - பெரிய மடமென்னும் குணம் நிலைபெற்று; கற்பு இறைகொண்ட - கற்பு நெறிக்கண்ணே தங்கின; கமழும் சுடர் நுதல் - மணம் கமழும் ஒளி பொருந்திய நெற்றியினையுடைய; புரையோள் கணவ - உயர்ந்தவட்குக் கணவனே எ-று.
பொய்யாமை, அறம் பலவற்றுள்ளும் சிறந்தமை யுணர்ந்து அதனை விளையாட்டினும் நெகிழாது ஓம்பும் நற்பண்பினை வியந்து, "நகையினும் பொய்யா வாய்மை" என்றார். விளையாட்டாகக் கூறும் பொய் யார்க்கும் என்றும் எத்துணையும் தீமை பயவாதாயினும் கொள்ளற்பால தன்றெனத் தள்ளி யொழுகுவது வாய்மையாம் என்றற்கு நகையினும் பொய்யாமை என்னாது "பொய்யா வாய்மை" என்றாரென வறிக. நகை, விளையாட்டு. "நகையேயும் வேண்டற்பாற் றன்று" (குறள். 87) பொய்யா வாய்மை, பொய்யாமையாகிய வாய்மை; "பொச்சாவாக் கருவி" (குறள். 53) என் புழிப்போல. பகைவர் எஞ்ஞான்றும் புறத்தே குற்றங்கூறி இகழ்வது இயல்பாதலின், அதனைக் கேட்டு மனவமைதி குலைவதினும், கேளாது அவரை வேரொடு தொலைத்தற்குரிய காலமும் கருவியும் இடமும் நோக்கி யிருத்தல் அறிவுடை வேந்தற்கு ஆண்மையும் புகழும் பயத்தலின், "பகைவர் புறஞ்சொற் கேளாப் புரைதீர் ஒண்மை" யென்றார். புரைதீர் ஒண்மை யென்றதனால், பகைவர் புறத்தே இனிமை தோன்றக் கூறுவனவற்றையும் கொள்ளாமை கூறியவாறாயிற்று. "நல்ல போலவும் நயவ போலவும், தொல்லோர் சென்ற நெறிய போலவும், காத னெஞ்சினு மிடைபுகற் கலமரும், ஏதின் மாக்கள் பொதுமொழி கொள்ளாது," (புறம். 58) என்று சான்றோர் கூறுதல் காண்க. வாய்மையும் ஒண்மையும் முறையே உரை யுணர்வுகட்கு அணியாயினமையின், உடற்கு அணியாகும் பூணினை, "பூண்கிளர் மார்ப" என்றொழிந்தார்.
இனி, அரசமாதேவியின் நலம் கூறுவார், நாணமே உருவாய்க் கொண்டு விளங்கும் ஒட்பத்தை, "பெண்மை சான்று" என்றார். பெண்மை, பெண்கட்குரிய அமைதித்தன்மை யாயினும், ஈண்டுச் சிறப்புடைய நாண்மேல் நின்றது. பெண்டிரின் உருவு நாணத்தாலாய தென்பதனை, "நாண்மெய்க்கொண் டீட்டப்பட்டார்" (சீவக. 1119) என்று பின்வந்த சான்றோரும், "பெண்மை தட்ப நுண்ணிதிற் றாங்கி" (நற். 94) எனப் பண்டைநாளை இளந்திரையனாரும் கூறுதல் காண்க. இனிப் பெண்மை சான் றென்றற்கு, பெண்பாற்குரிய வெனப்பட்ட (தொல் பொ. பொ. 15) "செறிவும் , நிறையும், செம்மையும், செப்பும், அறிவும், அருமையும்" நிறையப்பெற்று என்றுமாம். மடமாவது, தான் தன் அறிகருவிகளால் ஆராய்ந்து கொண்டதனை எத்துணை இடையூறும் இடையீடும் எய்தினும் விடாமை. இஃது அறிவின் திட்பத்தால் விளையும் பயனாதலின் "பெருமடம்" என்றார். தான் தன் வாழ்க்கைக்குத் துணையாகக் கொண்ட காதலற்கு நலந் தருவனவன்றிப் பிறவற்றின்பால் மடம்பட நிற்றல்பற்றி, மடம் எனப்படுவ தாயிற்று. ஈத்துவக்கும் இன்பமும் புகழும் கருதுவோர் பிறவற்றின்பால் மடம் படுதல்பற்றி, கொடைமடம் படுதல் போல்வது; இதற்கு வேறு பிற கூறுதலுமுண்டு. கற்பாவது, தன்மென்மைத் தன்மையைப் பெற்றோராலும் சான்றோராலும் நூன்முகத்தாலும் இயற்கை யறிவாலும் அறிந்து எக்காலத்தும் தன்னைப் பாதுகாத்தொழுகும் அறிவுடைமை. நினைவு, சொல், செயல், என்ற மூன்றும் கற்பு நெறியே நிற்றலின், "கற்பிறை கொண்ட புரையோள்" என்றார்,. இனி, இதற்குக் கற்பால் இறைமைத் தன்மைபெற்ற புரையோள் என்றுரைப்பினு மமையும்.ஈண்டுக் கூறப் படாது எஞ்சிநிற்கும் நற்குண நற்செய்கைக ளெல்லாம் அகப்பட, "புரை யோள்" என்றார். சொல்லுக்கு வாய்மையும், நினைவுக்கு ஒண்மையும் போல உயிர்வாழ்க்கைக்குத் துணைமையாம் இயைபுபற்றி, "புரையோள் கணவ" என்பதை இடையே கூறினார்.
17-19 தொலையா.......இன்புறுத்தினை.
உரை: தொலையாக் கொள்கைச் சுற்றம் சுற்ற-குன்றாத கோட்பாட்டினையுடைய சான்றோராகிய சுற்றத்தார் நீங்காது சூழ; வேள்வியின் கடவுள் அருத்தினை-போர்க்களத்தே பகைவரை வென்று செய்யும் களவேள்வியால் வெற்றிக்கடவுட்குப் பலி யூட்டி அதனை மகிழ்வித்தாய்; உயர்நிலை யுலகத்து ஐயர்-வீரருல கத்து வாழும் சான்றோரை; கேள்வி இன்புறுத்தினை-அவர் செய்த வீரச்செயல்களைப் புலவர்பாட இருந்து கோட்குமாற்றால் மகிழ்வித்தாய் எ-று.
உயிர்க்கிறுதி வந்தவிடத்தும் அறத்திற் றிரியாக் கோட்பாட்டை யுடையராய் வேந்தற்கு மெய்ந்நிழல்போலப் பின்சென்று உறுதியாவன ஆற்றும் உள்ளமுடைய ராதலின், "தொலையாக் கொள்கைச் சுற்றம்" என்றார். தம்மாற் சுற்றப்பட்ட தலைவன் செல்வம் வலி முதலியன தொலைந்தவழியும், அவனை நீங்காது பழைமை பாராட்டும் பண்பினராதல் பற்றித் தொலையாக் கொள்கைச் சுற்றத்தார் எனச் சிறப்பித்தாரென வறிக. "பற்றற்ற கண்ணும் பழைமை பாராட்டுதல் சுற்றத்தார்கண்ணேயுள" (குறள். 52) என்று ஆசிரியர் கூறுதல் காண்க. வெல்போரண்ணலாதலின், வெற்றி யெய்துந்தோறும் களவேள்வி செய்து கடவுளரை மகிழ்விக்கின்றா னென்றற்கு, "வேள்வியிற் கடவுள் அருத்தினை" என்றார். "அரசுபட வமருழக்கி, முரசுகொண்டு களம் வேட்ட, அடுதிற லுயர்புகழ் வேந்தே" (மதுரை. 128-30) என்று சான்றோர் கூறுதல் காண்க. இனி, வேள்வியெனப் பொதுப்படக் கூறினமையின்,. பார்ப்பார் வே்கும் வேள்விக்கும் துணைபுரிந்து வேட்பிக்கு முதல்வனாய்க் கடவுளரை இன்புறுத்தினை யென்பாரு முளர்.
கேள்வி யென்புழி ஏதுப்பொருட்டாய இன்னுருபு விகாரத்தாற் றொக்கது. அறப்போர் புரிந்து உயிர்துறந்தோர் வீரருறையும் துறக்கம் புகுவ ராதலின், அவர்களை "உயர்நிலை யுலகத் தையர்" என்றார். அவருடைய ஒழுகலாற்றையும் போர்த்திறனையும் புலவர் பாட, பாணர் இசைக்க, கூத்தர் கூத்தியற்றக் கண்டும் கே்டும் சிறப்பித்தலால் அவர் இன்புறுவர் என்ற கருத்தால், "கேள்வியின் உயர்நிலை யுலகத்தையர் இன்புறுத்தினை" யென்றார்,. இக்கொள்கை பத்தாம் நூற்றாண்டிலும் இருந்துவந்தது என்றற்குத் திருத்தக்கதேவர் எழுதிய சீவகசிந்தாமணி சான்று பகர்கின்றது. இனி, ஈண்டுக் கூறிய ஐயரை முனிவராக்கி, அவருரைத்த மறைகளையோதுவது அவர்கட்கு இன்பம்செய்யு மென்றுகொண்டு, இது கூறினா ரென்பாரு முளர்.
20-22 வணங்கிய.....அண்ணல்
உரை: வணங்கிய சாயல்-நட்பமைந்த சான்றோர்க்குப் பணிந்தொழுகும் மென்மையினையும்; வணங்கா ஆண்மை-பகைவர்க்கு வணங்காத ஆண்மையினையு முடைய; இளந்துணைப் புதல்வரின்-இளந்துணையாகிய மக்களைக்கொண்டு; முதியர்ப் பேணி- முதியராகிய பெரியோர்க்குரிய தொண்டினைச் செய்வித்து; தொல் கடன் இறுத்த-தொன்றுதொட்ட தம் கடமையினை ஆற்றிய; வெல்போர் அண்ணல்-வெல்லுகின்ற போரையுடைய அண்ணலே;
தாம் பிறந்த குடியின் நலத்தைப் பேணும் நண்பமைந்த சான்றோர்க்கு அடங்கியொழுகும் நல்லாற்றினை, "வணங்கிய சாயல்" என்றார். அடங்கியொழுகுமிடத்து மென்மைப் பண்பல்லது பிறிதொன்றும் தோன்றாமையின் "சாயல்" என்றும், வணக்கமில்வழி, முதியோரால் தம் தொல்குடிவரவும் தொல்லோர் மேற்கொண்டு சிறந்த தொன்னெறி மாண்பும் உணர்த்தப்படாவாகலின், "வணங்கிய" என்றும் கூறினார். இளையார்பால் தோன்றும் அடக்கம் சிறப்பாதல்பற்றி, அதனை முதற்கண் வைத்தோதினார். இளமையிலே மானத்தின் நீங்கா ஆண்மை நற்குடிப் பிறந்தோர்க்குக் கருவிலே வாய்த்த திருவாதல் தோன்ற, "வணங்கா ஆண்மை" யென்றார். வணங்காமைக் கேதுவாகிய ஆண்மை "வணங்கா ஆண்மை" யெனப்பட்டது. ஆடவர் பிறதுறைக்கு வேண்டப்படுதலின், முதியர்ப்பேணும் நல்லறத்தை "இளந்துணைப் புதல்வரின்" ஆற்றினான் என்றார். முதியோர், முதுமை யெய்துமுன் நாடு காத்தற்கு "அறிவு வேண்டியவழி அறிவு உதவியும் வாள் வேண்டுவழி வாளுதவியும்" (புறம். 179) துணைபுரிந்தோர். அவரை முதுமைக்கண் பேணுதல் நன்றியறிதலாகிய பேரறமாதலின், "முதியர்ப் பேணித் தொல்கடன் இறுத்த அண்ணல்" என்றார். இனி, முதியோ ரென்றது பிதிரர்க ளென்றும், அவர்க்கு இல் வாழ்வார் செய்தற்குரிய கடன் மக்களைப் பெறுதல் என்றும் கொண்டு, இளந்துணைப் புதல்வர்ப் பேற்றால் முதியராகிய பிதிர்க்குரிய தொல்கடனை இறுத்தா யென்றும் கூறுப. வேறு சிலர் தாய்மாமன் முதலாயினார்க்குச் செய்யுங் கடன் தொல்கட னென்றும், தந்தையர்க்குச் செய்யுங் கடன் பிதிர்க்கடனென்றும் கூறுவர். முதுமையுற்ற சான்றோர்க்கும் முனிவரர்க்கும் தாம் பெற்ற இளந்துணை மக்களைத் தொண்டுசெய்ய விடுத்தலாகிய செயல் வடநாட்டினும் நிலவிற் றென்பதற்கு இராமாயணமும் பாரதமும் சான்று பகர்கின்றன. மகப்பேற்றால் பிதிரர்கடன் கழியு மென்னும் வடவர்கொள்கை தமிழ்நாட்டவர்க்கு இல்லை. திருவள்ளுவர், மகப்பேறு பிதிர்க்கடனிறுக்கும் வாயிலெனக் கூறாமையே இதற்குச் சான்ற கரியாம். தொல்லோர்க்கும் இறுத்தற்குரிய கடனாதலின் தொல் கடன் எனப்பட்டது. இக் காலத்தும் தமிழ்மக்களிடையே முதியோர், இளையோர் மணம் புணர்ந்து தம்பால் வாழ்த்துப் பெறுவான் அடிவீழ்ந்து வணங்குங்கால், "விரைய மக்களைப் பெற்றுத் தருக; அம்மக்கள் கையால் தண்ணீ ரருந்தினால் எங்கள் உயிர் சாந்திபெறும்" என்று வாழ்த்தும் வழக்கமுண்மை இக்கருத்தை வலியுறுத்தும். இவ்வழக்குச் சேரவேந்தர் பாலும் இருந்த தென்றற்கு, "கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவனைக் காசறு செய்யுட் பாடிய பரணர்க்கு, அவன்தன் மகன் குட்டுவன் சேரலைக் கொடுத்த செய்தியை இப் பதிற்றுப்பத்தின் ஐந்தாம் பதிகம் கூறுவது போதிய சான்றாகும்.
இனி, வணங்கிய சாயலையும் வணங்கா ஆண்மையினையும் சேரமானுக்கே ஏற்றி வெல்போர் அண்ண லென்பதனோடு முடிப்பாரு முளர்.
23-27. மாடோர்..........நாளே.
உரை: மாடோர் உறையும் உலகமும் கேட்ப - தேவர்கள் வாழும் பொன்னுலகத்தும் கேட்கும்படி; இழும் என இழிதரும் பறைக்குர லருவி - இழுமென்னு மனுகரணமுண்டாக வீழும் பறை போன்ற முழக்கத்தையுடைய அருவிகள்; முழுமுதல் மிசைய கோடுதொறும் துவன்றும் - மிகப் பெரியவாகிய உச்சியினையுடைய முடிகள்தோறும் நிறைந்து விளங்கும்; அயிரை நெடுவரை போல - அயிரை யென்னும் நெடிய மலையைப்போல; நீ வாழும் நாள் தொலையாதாக - நீ வாழும் வாழ்நாள் குறையாது பெருகுமாக எ-று.
மாடு, பொன். அவ்வுலகினையுடைய தேவரை "மாடோர்" என்றார், மண்ணுலகத்தே யன்றிப் பொன்னுலகத்தவரும் கேட்குமாறு முழங்குகின்ற தென்றற்கு, "உலகமும் கேட்ப" என்றார். அருவியின் நீரொழுக்கு இழுமெனும் அனுகரண வோசையும், கீழே வீழ்ந்தவழிப் பறை போன்ற முழக்கு முடைமையின், "இழுமென விழிதரும் பறைக்குர லருவி" யென்றார்; "இழுமென இழிதரும் அருவி" (முருகு. 316) என்றும், "பறையிசை யருவி" (புறம். 125) என்றும் சான்றோர் கூறுதல் காண்க. இச்சிறப்புப்பற்றி, இதற்குப் பறைக்குர லருவி யென்று பெயராயிற்றென வறிக. அயிரை, மேற்குமலைத்தொடரிலுள்ள தொரு மலை. இதிற் பிறக்கும் அயிரையாறு மேலைக்கடலில் விழுகிறது. அருவி துவன்றும் அயிரை நெடுவரை தொலையாது நிலைபெறுவதுபோல,நீ வாழும் நாள் தொலையாதாக என வாழ்த்தியவாறு. இவ்வாறே பிறரும் "கடவுள் அயிரையின் நிலைஇக், கேடிலவாக பெரும நின்புகழே" (பதிற் 79) என்று வாழ்த்துதல் காண்க.
இதுகாறும் கூறியது: "வயவர் பெரும, புரையோள் கணவ, பூண்கிளர் மார்ப, வெல்போ ரண்ணல், வேள்வியிற் கடவுள் அருத்தினை; கேள்வியின் உயர்நிலை யுலகத்து ஐயர் இன்புறுத்தினை; ஆதலின், கோடு தொறும் அருவி துவன்றும் நெடுவரைபோல, நீ வாழும் நாள் தொலையாதாக" என வினை முடிவு செய்க.
இதனாற் சொல்லியது, அவன் வென்றி கூறிய திறத்தானே அவற்குள்ள சிறப்புக்களைக் கூறிப் பின்னை வாழ்த்தியவாறாயிற்று.
ஏழாம் பத்து மூலமும் உரையும் முற்றும்
------------------------------------------
எட்டாம்பத்து
பதிகம்
பொய்யில் செல்வக் கடுங்கோ வுக்கு
வேளாவிக் கோமான் பதுமன்றேவி யீன்றமகன்
கொல்லிக் கூற்றத்து நீர்கூர் மீமிசைப்
பல்வேற் றானை யதிக மானோ
டிருபெரு வேந்தரையு முடனிலை வென்று
முரசுங் குடையுங் கலனுங் கொண்
டுரைசால் சிறப்பி னடுகளம் வேட்டுத்
துகடீர் மகளி ரிரங்கத் துப்பறுத்துத்
தகடூ ரெறிந்து நொச்சிதந் தெய்திய
அருந்திற லொள்ளிசைப் பெருஞ்சேர லிரும் பொறையை
மறுவில் வாய்மொழி அரிசில் கிழார் பாடினார் பத்துப் பாட்டு.
அவைதாம், குறுந்தாண் ஞாயில், உருத்தெழு வெள்ளம், நிறந்திகழ்
பாசிழை, நலம்பெறு திருமணி, தீஞ்சேற்றி யாணர், மாசித றிருக்கை,
வென்றாடு துணங்கை, பிறழ நோக்கியவர், நிறம்படு குருதி, புண்ணுடை
யெறுழ்த்தோள். இவை பாட்டின் பதிகம்.
பாடிப்பெற்ற பரிசில்: தானும் கோயிலாளும் புறம்போந்து நின்று கோயிலுள்ளவெல்லாம் கொண்மின் என்று காணம் ஒன்பது நூறாயிரத்தோடு அரசு கட்டிற் கொடுப்ப, அவர், யான் இரப்ப இதனை யாள்க என்று அமைச்சுப் பூண்டார்.
தகடூரெறிந்த பெருஞ்சேர லிரும்பொறை பதினேழியாண்டு வீற்றிருந்தான்.
--------------------------------
8.1. குறுந்தாண் ஞாயில்.
71
அறாஅ யாண ரகன்கட் செறுவி்ன்
அருவி யாம்ப னெய்தலொ டரிந்து
செறுவினை மகளிர் மலிந்த வெக்கைப்
பரூஉப்பக டுதிர்த்த மென்செந் நெல்லின்
அம்பண வளவை யுறைகுவித் தாங்குக் 5
கடுந்தே றுறுகிளை மொசிந்தன துஞ்சும்
செழுங்கூடு கிளைத்த விளந்துணை மகாஅரின்
அலந்தனர் பெருமநின் னுடற்றி யோரே
ஊரெரி கவர வுருத்தெழுந் துரைஇப்
போர்சுடு கமழ்பகை மாதிர மறைப்ப 10
மதில்வாய்த், தோன்ற லீயாது தம்பழி யூக்குநர்
குண்டுக ணகழிய குறுந்தாண் ஞாயில்
ஆரெயிற் றோட்டி வௌவினை யேறொடு
கன்றுடை யாயந் தரீஇப் புகல்சிறந்து
புலவுவில் லிளைய ரங்கை விடுப்ப 15
மத்துக்கயி றாடா வைகற்பொழுது நினையூஉ
ஆன்பயம் வாழ்நர் கழுவு டலைமடங்கப்
பதிபா ழாக வேறுபுலம் படர்ந்த
விருந்தின் வாழ்க்யொடு பெருந்திரு வற்றென
அருஞ்சமத் தருநிலை தாங்கிய புகர்நுதல் 20
பெருங்களிற் றியானையொ டருங்கலந் தராஅர்
மெய்பனி கூரா வணங்கெனப் பராவலிற்
பலிகொண்டு பெயரும் பாசம் போலத்
திறைகொண்டு பெயர்தி வாழ்கநின் னூழி
உரவரு மடவரு மறிவுதெரிந் தெண்ணி 25
அறிந்தனை யருளா யாயின்
யாரிவ ணெடுந்தகை வாழு மோரே.
துறை: செந்துறைப் பாடாண்பாட்டு.
வண்ணம்: ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்.
தூக்கு: செந்தூக்கு.
பெயர்: குறுந்தாண் ஞாயில்.
1-8 அறாஅ..........உடற்றியோரே
உரை: அறாஅ யாணர் அகன்கண் செறுவின்-நீங்காத புது வருவாயினையுடைய அகன்ற இடம் பொருந்திய வயலிடத்தே; அருவி ஆம்பல் நெய்தலொடு அரிந்து - நிறைந்த பூக்களாகிய ஆம்பலையும் நெய்தலையும் நெல்லுடனே அறுத்து; செறு வினை மகளிர்- தொகுப்பதாகிய அறுவடைத்தொழில் செய்யும் உழவர் மகளிர்;
மலிந்த வெக்கை - நெருங்கியுள்ள நெற்களத்தின்கண்; பரூஉப் பகடு
உதிர்த்த - பருத்த எருமைகள் கடா விடப்படுதலால் மிதித்து திர்த்த மென் செந் நெல்லின் - மெல்லிய செந்நெல்லின்கண்; அம்பண வளவை உறை குவித்தாங்கு - மரக்கால்களை அளத்தற்காக நெற்குவையில் செருகிவைத்ததுபோல; கடுந் தேறு உறுகிளை - கடிதாகக் கொட்டி வருத்தும் மிகுதியான குளவிகள்; மொசிந்தன துஞ்சும் செழுங்கூடு - தம்மில் நெருங்கிக் கூடியிருந்து உறங்கும்
செழுமையான கூட்டினை: கிளைத்த - கலைத்த; இளந்துணை மகாஅரின் - இளஞ்சிறார்கள் போல; பெரும - பெருமானே; நின் உடற்றியோர் - நென்னோடு பொரக் கருதி மாறுபட்டோர்; அலந்தனர் - அலமந்து வருந்தலுற்றனர் எ-று.
குளவியினம் தம்மிற் கூடித் தொக்கியிருக்கும் கூடு, நெற்குவைக்கும், குளவி, உறை குவித்துக்கிடந்த அம்பணவளவைக்கும், அக் கூட்டைக் கலைத்துவிட்ட இளந்துணைச் சிறார்கள் அவை கொட்டுமென்று அஞ்சி
மூலைக் கொருவராய்ச் சிதறி யோடுதல் சேரமானைப் பகைத்துப் பொருதவர் கெட்டு அலமருதற்கும் உவமமாயின.
யாணர், புதுமை; ஈண்டுப் புதுவருவாய் மேற்று. ஆர் வீ எனற் பாலது அருவி யென நின்றது; ஆர்தல், நிறைதல். ஆர்ந்தென்பது அருந்தென நிற்பது (கலி 22) போல, ஆர் வீ அரு வீ யெனத் திரிந்து பின் அருவி யெனக் குறுகிற்று. அருவி யாம்பல் என்பதற்குப் பழையவுரைகாரர், நீரின் ஆம்பல் என்று பொருள் கூறி, "என்றதனாற் பயன், நீர்க்குறைவற்ற
ஆம்பல் என்பதாம்" என்றும், "எண்ணின் ஆம்பலை நீக்குதற் கென்பது
மொன்று" என்றும் கூறுவர். ஒடு, எண்ணொடு. அரிந்தெனவே, நெல்லுடனே அரிதல் பெற்றாம். அரிந்த நெற்சூட்டைக் களத்தே சேர்த்துக் கடாவிட்டுத் தூற்றி நெற்பயன் பெறுபவாதலின், "பரூஉப்பக டுதிர்த்த மென்செந்நெல்" என்றார். வெக்கை, நெற்களம். அரிந்து மலிந்த வெக்கையென முடிக்க. செறுவினை மகளிர் என்புழி நெல்லரிந்து தொகுத்தலாகிய
வினை ஈண்டுச் செறுவினை யெனப்பட்டது. மகளிர் அரிந்து மலிந்திருக்கு மிடம் வெக்கை யாதல்பற்றி, மலிந்த வெக்கை யென்றார். பழையவுரைகாரர், "அரிந்து பகடுதிர்த்த எனக்கூட்டிப் பகட்டானென உருபு விரிக்க" என்பர். செறிவளை மகளிர் என்று பாடங்கொண்டு, "உழவர் பெண் மக்கள் விளையாடுதற்கு வயலிற் பயிர் கொள்ளாததோ ரிடமின்மையின்
ஆண்டு அவர்கள் மிக்க களம்" செறிவளை மகளிர் மலிந்த வெக்கையாயிற் றென்பர். செறுவினை மகளி ரென்றே கொண்டு, மகளிரை விளையாட்டு மகளிராகக் கொள்ளின், வினையினை ஆகுபெயரால் வினைபுரியும் உழவர்க் கேற்றுக.
பகடு கொண்டு கடாவிட்டுத் தெழித்தும் பண்டிலேற்றிப் பகட்டினால் கொணர்வித்தும் நெற்பயன் கொள்ளப் பெறுதலின், "பகடுதிர்த்த மென்செந்நெல்"எனப் பகட்டால் விசேடித்தார்.; பிறரும், "பகடுதரு செந்நெல்" (புறம்.390) என்றல் காண்க. செந்நெல், வெண்ணெல் போலும் நெல்வகை. மென்மை, "சோற்றது மென்மை" யென்பது பழையவுரை.
தூய்மை செய்த செந்நெல்லைப் பொன்மலைபோற் குவித்து, அதனை அளத்தற்கென்று அம்பண வளவையைச் செருகி வைத்திருப்பது, கூட்டிடத்தே குளவியினம் இருப்பது போறலின், "அளவை யுறைகுவித் தாங்கு" என்றார்.அளவையை நெற்குவையில் உறைவித்தலாவது,
அதன் உட்புறத்தே ஒரு பகுதி நெல்லிருப்பப் புதைத்தல். உறைவித்தல், குச் சாரியை பெற்று உறைகுவித்தல் என வந்தது. அளவை,
தொழிற் பெயர்; நான்காவது விகாரத்தால் தொக்கது. இதனை இற்றைப்
போதும் நெற்களங்களிலும் நெல் விற்கும் களரிகளிலும் காணலாம்.
பண்டை நாளைய அம்பணம் மூங்கிலாலாயது; இற்றை நாளைய அம்பணம்
இரும்பினாலாது; இதுவே வேறுபாடு. தேறு, கொட்டும் குளவி;
தான் குறித்த பொருளைக் கொடுக்கினால் தெறுவதுபற்றித் தேறு எனப்
பெயர் பெற்றது. கொட்டியவழி யுண்டாகும் துன்ப மிகுதிபற்றி, கடுந்தேறு என்றார். அது வாழும் கூட்டை யழிக்கின், அழிப்பாரைச் சூழ்ந்து தெறும் இயல்பிற்றாதல்பற்றி, முதியோர் அது செய்யாராதலின், கூட்டை
யழிப்பவர் இளஞ் சிறார் என்பதுகொண்டு, "செழுங் கூடு கிளைத்த இளந்
துணை மகாஅர்" என்றார். மொசிதல், நிறைதல். மகாஅர், இளையோர் மேற்று; "சிறு தொழில் மகாஅர்" (அகம் 206) என்புழிப் போல.
செழுங்கூடு கிளைத்த மகார் குளவியின் கடுந்தெறற் கஞ்சி யலந்து மூலைக்
கொருவராய் ஓடி யுலமருவதுபோல, "நின் உடற்றியோர் அலந்தனர்" என்றார்.
கடுந்தேற் றுறுகிளை, மகாஅர்பால் பகை நினையாது தன் செழுங்கூட்டின்கண் உறுகிளையுடன் துஞ்சும் என்றதனால், நீயும் நின் செழுமனைக்கண் கிளையுடன் இனி திருக்கின்றனையே யன்றி, பிறரைப் பகைக்கின்றா யில்லையாயினும், மகார்தம் இளமையால் கூடு கிளைந்து வருந்துவது போல, நின் உடற்றியோர் தம் அறியாமையால் போர் விளைத்துக் கெடுவாராயினர் என்றலின், "அலந்தனர் நின் உடற்றியோர்" என்றும், "பெரும"என்றும் கூறினார். இனிப் பழையவுரைகாரர், "அளவைக்கென நான்காவது விரிக்க" என்றும், "கடுந்தே றுறுகிளை, கடிதாகத் தெறுதலையுடைய மிக்க குளவியினம்" என்றும், "மொசிந்தன வென்றது, மொய்த்தனவாய் என்னும் வினையெச்சமுற்" றென்றும் கூறுவர்.
நெற் குவையும் அம்பண வளவையும் குளவியினத்தின் செழுங் கூட்டையும் குளவியையும் சிறப்பிக்கும் உவமமாயின; இவை உருவுவமம் குளவியும், அதன் கூடும், அக்கூடு கிளைக்கும் இளந்துணை மகாஅர் என்ற
மூன்றுவமைகளும் சேரமானையும் அவன் நகரையும் பகைவரையும் சுட்டித்
தொழிலுவமமாயின. ஆகவே இவை அடுத்துவர லுவமமாகாமை யறிக.
இனி, உறை குவித்தல் என்பதனை இருசொற்படப் பிரித்து, உறையாகக் குவித்தல் என்றுகொண்டு அளவையின் உரையிட்ட வாயிடத்தே குவிக்கப் படுவதுபோல நிலத்தே குவித்துவைத்தல் என்று உரைத்தலு மொன்று.
அது பொருளாயின், உறையாகக் குவித்த நெல்லினைச் செழுங் கூட்டிற்கு
உவமமாகக் கொள்க.
இதனாற் கூறியது: மகளிர் மலிந்த வெக்கைகண் தொகுத்த நெல்லினிடத்தே அம்பண வளவை உறைகுவித் தாங்கு, கடுந்தேற் றுறுகிளை துஞ்சும் கூடு கிளைத்த மகாஅரின், நின் உடற்றியோர் அலந்தனர் எனக்கூட்டி வினைமுடிவு செய்க.
9-13. ஊரெரி………….வௌவினை
உரை: போர் சுடு எரி ஊர் கவர - போரின்கண்ணே சுடுதற்காக எடுத்த தீயானது பகைவர் ஊர்களைக் கவர்ந்துண்டலால்; கமழ் புகை - சுடுநாற்றம் நாறுகின்ற புகை; உருத்தெழுந்து
உரைஇ - மிக்கெழுந்து பரந்து; மாதிரம் மறைப்ப - திசைகளை
மறைக்க: தோன்றல் ஈயாது - வெளித் தோன்றாமல்; மதில் வாய் - மதிற்குள்ளே யிருந்து; தம் பழி ஊக்குநர் - தம் குற்றத்தால் பழி செய்துகொள்ளும் பகைவருடைய; குண்டுகண் அகழிய - ஆழ்ந்த இடத்தையுடைய அகழியினையும்: குறுந்தாள் ஞாயில் - குறுகிய படிகளையுடைய ஞாயிலையுமுடைய; ஆர் எயில்
தோட்டி வௌவினை - கடத்தற்கரிய மதிற்காவலை யழித்துக் கவர்ந்துகொண்டனை, யாதலால் எ - று.
போருடற்றுவோர் பகைப்புலத்தே தீ வைத்தல் முறையாகலின்,
போர்சுடு எரி என்றார். இதனை எரிபரந்தெடுத்த லென்றும் உழபுலவஞ்சி யென்றும் ஆசிரியன்மார் கூறுப. ஊர் முழுதும் எரி பரவுவதால் புகைமிக்கெழுந்து எம்மருங்கும் சூழ்ந்துகொள்ளும் திறத்தை, “உருத்தெழுந்துரைஇப் போர்சுடு கமழ்புகை மாதிரம் மறைப்ப” என்றார். இனி, “எரி
உருத்தெழுந்துரைஇ ஊர் கவர” என்று இயைப்பினு மமையும். பழைய வுரைகாரரும், “உருத்தெழுந் துரைஇ ஊர் எரி கவர எனக் கூட்டுக”
என்றால் காண்க. பகைவர் ஊரிடத்தே நீ எடுத்த தீயானது அவ்வூர்களைக்
கவர்ந்துண்ண அதனால் எழுந்த பெரும் புகை மாதிரம் மறைக்க, நீ அப்பகைவருடைய எயிலை வௌவினை யென்பார். “ஆரெயில் தோட்டி வௌவினை” யென்றார்; “நீ யுடன்றோர் மன்னெயில் தோட்டி வையா”
(பதிற். உரு) என்ற பிறரும் கூறுதல் காண்க.
பகைவர் புறமதிலைச் சூழ்ந்துகொண்டவழி, அஞ்சாது வெளிப் போந்து அவரைப் பொருதழித்து வேறலோ, அப்போரிடைப் பட்டு வீழ்தலோ இரண்டி லொன்றைச் செய்யாது அகமதிற்கண் அடைபட்டு மடிந்திருத்தலால் பெரும் பழியே விளையுமாதலின், “மதில்வாய்த்
தோன்ற லீயாது தம்பழி யூக்குநர்” என்றார். தோன்ற லீயா தென்பது
தோன்றாம லென்னும் பொருட்டு. பழையவுரைகாரரும் “தோன்ற லீயாதென்றது தோன்றா தென்னும் வினையெச்சத் திரிசொல்” என்றும், “தோன்ற லீயாமலெனத் திரிக்க” என்றும் கூறுவர்.
ஞாயில், மதிலின் அகத்தே புறத்தோர் அறியாவகை யிருந்து அம்பு
தொடுக்கும் முக்கோண வறை. இதனை எப்புழை ஞாயிலென்பர். மதிற்றலையில் மேலிடத்தே சிறுசிறு படிகளையுடைத்தா யிருத்தல்பற்றி, இதனைக்
“குறுந்தாள் ஞாயில்” என்றார். விற்பொறி யிருந்து எந்திரத்தால் அம்பு
சொரிய அதற்கு இடனாகிய ஞாயிலைத் தாளுடையதுபோலக் கூறும் சிறப்புப்பற்றி, குறுந்தாள்ஞாயி லென்று இப் பாட்டிற்குப் பெயராயிற்று.
“குறுந்தாள் ஞாயிலென்றது இடையிடையே மதிலின் அடியிடங்களைப்
பார்க்க அவற்றிற் குறுகிக்குறுகி யிருக்கும் படியையுடைய ஞாயிலென்றவாறு” என்றும், “இவ்வாறு கூறிய சாதிப் பண்பானும், படியைத் தாளென்று கூறினபடியானும் இதற்குக் குறுந்தாண் ஞாயில் என்று பெயராயிற்” றென்றும், “வௌவினை யென்றது வினையெச்சமுற்” றென்றும் பழையவுரைகாரர் கூறுவர்.
13-24. ஏறொடு………………..ஊழி
உரை: ஆன்பயம் வாழ்நர் - ஆன்பயன் கொண்டு வாழும்
இடையர்கள்; ஏறொடு கன்றுடை ஆயம் தரீஇ - ஏறுகளுடன்
கன்றுகளையுடைய ஆனிரைகளைக் கொணர்ந்து தருதலால்; புலவுவில் இளையர் - புலால் நாறும் வில்லேந்திய வெட்சியாராகிய நின்வீரர்; புகல் சிறந்து - அவர்பால் விருப்பம் மிக்கு; அங்கை
விடுப்ப - தாம் கைப்பற்றிய ஆனிரைகளையும் விட்டொழிய;
மத்துக் கயிறு ஆடா வைகற்பொழுது - தயிர் கடையும் மத்தினிடத்தே கயிறாடாத விடியற்போதின்கண்; நினையூஉ - நின்னைப்
புகலடைய நினைந்து போந்து; கழுவுள் தலை மடங்க - கழுவுளென்னும் இடையர் தலைவன் தலைவணங்கி நின்றதனால்; பதி பாழாக
வேறு புலம் படர்ந்து - ஊர்கள் பலவும் பாழ் படும்படியாகப்
பகைவர் நாறு நோக்கிச் சென்று; விருந்தின் வாழ்க்கையொடு -
புது வருவாய்கொண்டு இனிது வாழ்தற் கேதுவாகிய செல்வத்தோடு; பெருந் திரு அற்றென - தம் முன்னோர் ஈட்டிவைத்த பெருஞ் செல்வமும் இனிக் கெட்டதென் றெண்ணி; அருஞ்சமத்து அருநிலை தாங்கிய - கடத்தற்கரிய போரின்கண் தடுத்தற்கரிய போர்நிலையைத் தடுத்துச் சிறந்த; புகர் நுதல் பெருங்களிற்று யானையொடு - புள்ளி பொருந்திய நெற்றியினையுடைய
பெரிய களிற்றியானைகளையும்; அருங்கலம் தராஅர் - அரிய அணி
கலன்களையும் திறையாகச் செலுத்தாத பகைவேந்தர்; மெய்பனி கூரா-உடல் நடுக்கம் மிகுந்து; அணங்கெனப் பராவலின்-
வருத்தக்கூடிய தெய்வமென நின்னை நினைந்து பரவுவதால்; பலி
கொண்டு பெயரும் பாசம்போல- தன்னால் தாக்குண்டார் உயிரைக் கொள்ளாது அவர் இட்ட பலியினைக் கொண்டு நீங்கும் பேய் போல; திறைகொண்டு பெயர்தி-அவர் இடும் திறைகளைக் கொண்டு அவர் உயிரை யளித்துவிட்டுத் திரும்பி ஏகுகின்றாய்;
நின் ஊழி வாழ்க-நினக்குத் தெய்வத்தால் வரையறுக்கப்பட்ட
வாழ்நாள் முழுதும் இனிது வாழ்வாயாக எ-று
கழுவுள் என்பவன் ஆயர் தலைவனாய் ஏனை வேந்தருடன் பெரும் பகை கொண்டிருந்தவன்; அதனாற் அவனைப் பிறரும் "பொரு முரணெய்திய கழுவுள்" (பதிற்.88) என்றல் காண்க. அவனிருந்த நகரை முற்றி, அவனுடைய ஆரெயில் தோட்டியை நீ வௌவிக் கொண்டமையின், அவன்
அடைமதிற்பட்டுக் கிடப்ப, அவன் கீழ் வாழ்ந்த இடையர்கள் வேறு புகல்
காணாது தம்முடைய ஆனிரைகளைத் தாமே கொணர்ந்து தந்து அருள்
வேண்டி நின்றமை தோன்ற, "ஆன்பயம் வாழ்நர் ஏறொடு கன்றுடை
ஆயம் தரீஇ" என்றார். ஆனிரையான் வரும் பாற்பயன் கொண்டு உயிர்
வாழும் இயல்பினராயினும், அவற்றைத் தந்தேனும் நின் அருணிழல் வாழ்வு
பெறுதல் வேண்டுமென நினைந்தன ரென்பார், "ஆன்பயம் வாழ்நர்"
என்றும் கூறினார். தம் உயிர் கொடுத்து அருள் வேண்டினர் என்பது
கருத்து. அதுகண்ட நின் வீரர் தாம் முன்பே போந்து வெட்சி நெறியிற்கைப்பற்றிய அவர்தம் ஆனிரைகளை அருளால் வழங்கினமையின், "புகல்
சிறந்து அங்கை விடுப்ப" என்றார். பகைவர் தாம் உயிர் வாழ்தற் கேது
வாயவற்றைத் தாமே தந்து புறங்காட்டுதலினும் சீரிய வெற்றி யின்மையின்,
"புகல் சிறந்" தென்றார். இவ்வாயர் முதற்கண் தம் ஆளும் ஆண்மையும்
உள்ளளவும் பொருதுநின்றமை தோன்ற, வில்லேந்திய வீரர் சிறப்பை,
"புலவு வில் லிளையர்" என்றார். பெருந்திரளான மக்களைக் கொன்றதனால்
வில்லேந்தி அம்பு தொடுக்கும் கைகள் குருதி தோய்ந்து புலவு நாறுதல்
ஒருதலை. அம்பு தொடுத்து ஆயர்களைக் கொல்லாது அருள் செய்யும்
சிறப்பு நோக்கி "அங்கை" யென்றார். பகைத்துப் பொருதார்மேல்
கண்ணோடாது அம்பு செலுத்தும் நெறிக்கு இளமை மேம்பட்டு நிற்பினும்,
அஃது அருளுடைமையால் சால்புற்றிருந்தமை விளங்க, "இளையர்" என்றார்.
தன் வீரராகிய ஆயர்கள் பொருவது விட்டு ஆனிரைகளைத் தந்து நின்
அருள் வாழ்வு வேண்டியதறிந்த கழுவுள், தான் அவர்கட்குத் தலைவனாகியும், தலைமைப் பணியினை யாற்றும் வலியின்மையால் நாணிப் பகற்போதிற் போந்து புகலடையாது வைகறைக்கண் வருதலை நினைந்தானென்பார், "மத்துக் கயிறாடர் வைகற் பொழுது நினையூஉ" என்றார். வைகறைப்போதில் ஆய்மகள் எழுந்து தயிர் கடைந்து கொண்டு,
ஞாயிற்றின் வெயில் மிகுமுன் மாறி வரவேண்டி யிருத்தலின், வைகறை
யாமத்தின் இறுதிக் காலத்தை," மத்துக்கயிறாடா வைகற் பொழுது"
என்றார். அக் காலத்தே இயங்குவோர் உருவம் ஓரளவு இனிது தெரியும்.
பகற்போது வரற்கு நாணமும், இருட்போது வரின் காவலர் கொல்வரென்னும் அச்சமும் வருத்துதலால், வைகறைப்பொழுது கொள்ளப்பட்டது. நினைவு பிறந்தவழி, செய்கை பயனாதல் பற்றி, "நினையூஉ" என்றார்.
கழுவுள் என்பான் தன் பெருமுரணழிந்து மானத்தால் தலை வணங்கி
நிற்பது வீரமாகாமையின், "தலை மடங்க" என்றார். வணங்கியது கண்ட
துணையே, அவன்பாற்கொண்ட பகைமை நின்னுள்ளத்தினின்றும் நீங்குதலின், வேறுபுலம் நினைந்து செல்குவையாயினை எ்பார் " வேறுபுலம்
படர்ந்து" என்றும் அச் செயலால் பகைவர் ஊர்கள் அழிவது ஒருதலையாதலின், "பதி பாழாக" என்றும் கூறினார். படர்ந்து திறைகொண்டு பெயர்தி என வினை முடிவு செய்க.
"வெளவினை யென்றது வினையெச்சமுற்று. ஆயம் தரீஇ யென்றது
ஆயங்களை நீ புலவுவில் இளையர்க்குக் கொடுப்ப எ-று. தரீஇ யென்பதனைத் தர வெனத் திரிக்க. இளையர் அங்கை விடுப்ப என்றது இளையர்
அவ்வாயத்தைத் தங்கள் அங்கையினின்றும் பிறர்க்கு விடுப்ப எ-று.
கயிறாடா வென்னும் பெயரெச்ச மறையை வைகலென்னும் தொழிற்
பெயரொடு முடிக்க. வைகல்-கழிதல். வைகற்பொழுது இருபெயரொட்டு. வாழ்நர்-வாழ்பவர், இடையர். பயத்தானென விரிக்க. கழுவுளாவான் அவ்விடையர்க்குத் தலைவனாய் அக் காலத்துக் குறும்பு செய்திருந்தா னொருவன். முன்னர் எயிலென்றது அவன் தனக்கு அரணாகக் கொண்டிருந்த மதிலினை. வேறுபுலம் பதி பாழாகப் படர்ந்தென்றது
அக்கழுவுள் தலைமடங்குகையாலே அவனை விட்டு , வேறு திறையிடாக்
குறும்பர் நாட்டிலே அந்நாட்டுப் பதி பாழாகச் சென்று எ-று. படர்ந்து
திறைகொண்டு பெயர்தி யெனக் கூட்டுக" என்று பழையவுரைகாரர் கூறுவர்.
இனி,பகைவர் களிறும் கலனும் திறையாகத் தாரா தொழிந்ததற்
கேதுவாகிய அவருடைய பெருஞ் செல்வ நிலையை "விருந்தின் வாழ்க்கை
யொடு பெருந் திரு" என்றார். விருந்து ஈண்டுப் புதிதாக ஈட்டப் பெறும்
செல்வத்தின் மேற்று; அச் செல்வத்தின் பயன் இன்ப வாழ்க்கை யென்க.
பெருந் திரு, முன்னோர் ஈட்டிவைத்துச் சென்ற பெருஞ் செல்வம்.
"பெருஞ் செல்வம்" (குறள்.1000) என்பதற்குப் பரிமேலழகரும் இவ்வாறு கூறுதல் காண்க. இனிப் பழையவுரைகாரர், விருந்தின் வாழ்க்கை யாவது "நொடுறும் புதிதாகத் தாங்கள் தேடுகின்ற பொருள்" என்றும்,"பெருந்திரு, முன்னே தேடிக் கிடந்த பொருள்" என்றும் கூறுவர்.
பதி பாழாக வேறு புலமாகிய தம் நாடு நோக்கி நீ வருவது கண்ட நின் பகைவர் தம் வாழ்க்கையையும் திருவும் அழிந்தன வென்று கருதி உளமும்
உடலும் ஒருங்கு நடுங்கின ரென்பார், "விருந்தின் வாழ்க்கையொடு பெருந்திரு அற்றன மெய்பனி கூரா" என்றார். பழையவுரைகாரர், " அற்றென
வென்றது அற்றதெனக் கருதி யென்றவாறு" என்றும் "அற்ற தென்பது
கடைக் குறைந்த" தென்றும் கூறுவர்.
அருஞ் சமத்து அருநிலை யென்றது கடும்போர் நிகழுமிடத்து வெல்லுதல் அரிதென்னுமாறு இருதிறத்து வீரரும் மண்டுப் பொரும் நிலைமையாகும்;அந் நிலைமைக்கண் அஞ்சாது நின்று பகைவர் முன்னேறாவாறு தகைந்து வெல்லும் போர்த்தகுதி பெற்ற களிறு என்றற்கு இவ்வாறு
சிறப்பித்தார் என அறிக. திறை செலுத்தும் வேந்தர் இத்தகைய களிறுகளையும் உயரிய அணிகலன்களையும் தருவரென்பதனை, "ஒளிறுவாள் வய வேந்தர், களிறொடு கலந்தந்து, தொன்று மொழிந்து தொழில் கேட்ப"
(பதிற்.90) என்று பிறரும் கூறுமாற்றா னறிக. அருங்கலந் தாராத
பகைவ ரென்னாது "தராஅர்" எனத் தொழில்மேல் வைத்தோதியது,
தாராமைக் கேதுவாய பகைமை நீங்கித் தருதற் கேதுவாகிய அச்சமுண்மை
புலப்படுத்தற்கு. பகைவர் தம்முடைய ஆண்மை, அறிவு, பொருள்,
படை முதலிய வலிவகையக் கடந்து மேம்பட்டு நெற்றல்பற்றி நின்னைத்
தாக்கி வருத்தும் அணங்கெனக் கருதினா ரென்றும், அணங்கொடு பொருது
வேறல் மக்கட் கரிதாதலின், அவர் செயற்பாலது வழிபாடு ஒன்றே யன்றிப் பிறிதில்லை யாதலின் "பராவலின்" என்றும் கூறினார்.
"பலிகொண்டு பெயரும் பாசம்" எனவே உயிர் கொள்ளாது விடுத்தேகுவது பெற்றாம். பாசம், பேய். பேயை உவமங் கூறியதுபோல, திருத்தக்க தேவரும் சீவகனை "பெண்ணலங் காதலிற் பேயு மாயினான்"
(சீவக. 2010) என்று கூறுதல் காண்க.
25-27 உரவரும்...வாழுமோரே.
உரை: உரவர் அறிவும் மடவர் அறியாமையும் தெரிந்தெண்ணி-அறிவிடையோர் அறிவு நலத்தையும் மடவோரது அறியாமையினையும் ஆராய்ந்து செய்வதும் தவிர்வதும் நினைந்து;
அறிந்தனை அருளாயாயின்-அவரவர் தகுதி யறிந்து அருளா
தொழிகுவையாயின்; நெடுந்தகை-நெடிய தகுதி யுடையோனே;
இவண் வாழுமோர் யார்-இவ்வுலகில் வாழ்வோர் இலராவர். எ-று
அறிவு தெரிந்தெனவே, அறியாமையும் தெரிந்தவாறு பெறப்படுதலின், அதனையும் பெய்துகொண்டு இருதிறத்தார்க்கு முறையே கூட்டி
உரை கூறப்பட்டது. உரம், அறிவின் திண்மை. உரவோர் அறிவுநலம்
தேர்ந்து அவரைத் தழீஇக் கோடல் வேந்தர்க்குக் கடனாதலாலும், மடவோர்
சிற்றினத்தா ராதலின், அவரோடு சேராமை வேண்டுதலாலும், இருதிறத்தார்க்கும் செய்வதும் தவிர்வதும் அறியவேண்டுவன வாயின. உரவோர்
புரியும் அறிவுடைச் செயல்கண்டு அருளலும், மடவோர் செய்யும் அறிவில்
செயல்கண்டு ஒறுத்தலும் அரசுமுறை யதலால், "அறிந்தனை அருளாய்"
என்றும், அருளாதொழியின், உரவோர் தேயச் சிற்றினம் பல்கித் துன்பமே மிகுவி்த்து உயிர்வாழ்க்கைய இன்னற்படுத்தும் என்றற்கு, "யாரிவண் வாழுமோர்" என்றும், இதனை யறிந்தாற்றும் சிறப்புக் குறித்து "நெடுந்தகை" யென்றும் கூறினார்.
சேரமானோடு பொருது உடற்றி அலந்த பகைவரை மடவரென்றும்,
அணங்கெனப் பராவித் திறை செலுத்தியோரை உரவரென்றும் குறித்துரைத்தலின், இஃது ஓராற்றால் விரிந்தது தொகுத்து அவன் வென்றிச் சிறப் புரைத்தவாறுமாயிற்று. இனிப் பழையவுரைகாரர் "உரவரையும் மடவரையும் என்னும் இரண்டாவது விகாரத்தால் தொக்கது; அறிவு, அவர்களறிவு; வாழுமோர் என்புழி, உம்மை அசைநிலை" என்பர். வாழுமோர் என்பது "உணருமோர்" என்பது போலும் தனிச் சொல்லாதலின், உம்மை எதிர்காலப் பொருட்டாயதோர் இடைச்சொல் லெனவுமாம்.
இதுகாறும் கூறியது,, பெரும, நின் உடற்றியோர், கடுந்தேறு
உறுகிளை துஞ்சும் செழுங்கூடு கிளைத்த இளந்துணை மகாஅரின் அலந்தனர்;
உருத்தெழுந்து உரைஇ எரி ஊர் கவர, புகை மாதிரம் மறைப்ப, ஆரெயில்
தோட்டி வௌவினை; அதுகண்ட ஆன்பயம் வாழ்நர் அஞ்சி ஏறொடு
கன்றுடை ஆயம் தந்தாராக, நின் இளையர் புகல் சிறந்து அங்கை விடுப்ப,
அவர் தலைவனான கழுவுள் நாணி, வைகற் பொழுதிற் போந்து தலைமடங்கி
நின்றானாக, நீ வேறு புலம் படர்ந்து சென்று, தராராய பகைவர் பராவலின், அவர் தந்த திறைகொண்டு பெயர்தி; நின்னூழி வாழ்க; இவ்வாறு உரவரு மடவரும் அறிவு தெரிந்தெண்ணி அருளாயாயின், நெடுந்தகை, இவண் வாழுமோர் யார்? ஒருவரு மிலராவர் எனக் கூட்டி வினைமுடிவு செய்க.
இனிப் பழையவுரைகாரர் " "ஆரெயில் தோட்டி வௌவி, அதனையுடைய கழுவுள் தலைமடங்குகையாலே வேறு புலம் படர்ந்து, அவ்வேறு
புலத்து நினக்கு யானையொடு அருங்கலம் திறையிடார்தம் விருந்தின்
வாழ்க்கையொடு பெருந்திரு வற்றதெனக் கருதித் தங்கள் மெய்ந் நடுங்கமிக்கு நின்னை அணங்கெனக் கருதிப் பலபடப் பரவுதலான், பேய் தான் பற்றினா ருயிரை வௌவாது தனக்கு அவர் பலியிட்டுழி, அப் பலிகொண்டு
பெயருமாறுபோல, நீயும் அவருயிரை வௌவாது திறைகொண்டு பெயரா நின்றாய்; இஃதன்றே நீ இதுபொழுது செய்கின்றது;நின்னை யுடற்றியோர் கடுந்தேறு உறுகிளை துஞ்சும் கூடு கிளைத்த இளந்துணை மகாரைப்
போல, பெருமானே, அலந்தார்கள்; இனிமேல் உள்ளத்து உரவரையும்
மடவரையும் அவரவர் அறிவினைத் தெரிந்தெண்ணி,அவர்களிடத்துச் செய்யும் அருளறிந்து அருளாயாயின், நெடுந் தகாய், இவண் வாழ்பவர் யார்? நின்னூழி வாழ்க எனக் கூட்டி வினைமுடிவு செய்க" என்றும்,
இதனாற் சொல்லியது அவன் வென்றிச்சிறப்புக்கூறி அவற்குப் பகைவர்மேல் அருள் பிறப்பித்தவாறாயிற்" றென்றும் கூறுவர்.
--------------
8.2 உருத்தெழு வெள்ளம்
72
இகல்பெரு மையிற் படைகோ ளஞ்சார்
சூழாது துணித லல்லது வறிதுடன்
காவ லெதிரார் கறுத்தோர் நாடுநின்
முன்றிணை முதல்வர்க் கோம்பின ருறைந்து
மன்பதை காப்ப வறிவு வலியுறுத்து 5
நன்றறி யுள்ளத்துச் சான்றோ ரன்னநின்
பண்புநன் கறியார் மடம்பெரு மையின்
துஞ்ச லுறூஉம் பகல்புகு மாலை
நிலம்பொறை யொராஅநீர் ஞெமரவந் தீண்டி
உரவுத்திரை கடுகிய வுருத்தெழு வெள்ளம் 10
வரையா மாதிரக் திருள்சேர்பு பரந்து
ஞாயிறு பட்ட வகன்றுவரு கூட்டத்
தஞ்சாறு புரையு நின்றொழி லொழித்துச்
செஞ்சுடர் நிகழ்விற் பொங்குபிசிர் நுடக்கிய
மடங்கற் றீயி னனை யை 15
சினங்கெழு குருசினின் னுடற்றிசி னோர்க்கே.
துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகுவண்ணம்.
தூக்கு: செந்தூக்கு.
பெயர்: உருத்தெழு வெள்ளம்.
3-7. நின்முன்றிணை.............பெருமையின்
உரை: நின் முன் திணை முதல்வர்க்கு-நின் குடியில்
நினக்கு முன்னே விளங்கிய முன்னோர்களுக்கு; ஓம்பினர்
உறைந்து-பாதுகாப்பா யிருந்து; மன்பதை காப்ப அறிவு வலியுறுத்தும்-மக்கட் கூட்டத்தைப் புரத்தற்கு வேண்டும் நெறிமுறைகளை அறிவுறுத்தும்; நன்று அறி உள்ளத்து-அறமே
காணும் உள்ளத்தையுடைய; சான்றோர் அன்ன- அமைச்சர்
போன்ற சூழ்ச்சிவன்மை படைத்த; நின்பண்பு-நினது இயல்பினை; மடம் பெருமையின்-அறியாமை மிக வுடையராதலால்;
நன்கு அறியார்-தெளிய அறியாராயினர் நின் பகைவர் எ-று.
அரசர்க்கு " உற்ற நோய் நீக்கி உறாஅமை முற்காக்கும் பெற்றியார்"
(குறள்.442) என்றற்கு, " முதல்வர்க்கு ஓம்பினருறைந்து" என்றும்,
குடி யோம்பல் இறைமாட்சி யாதலின் "மன்பதை காப்ப" என்றும்,
அதற்கு வேண்டும் நெறிமுறைகளை உறறவிடத்துக் கழறிக் கூறுதலும்
அவர்க்கியல்பாதல்பற்றி, "அறிவு வலியுறுத்தும்" என்றும், அறம் வழுவியவழி அரசியல் நன்கு நடவாதாகலின், அதனையே தேர்ந்துணரும்
அவ்வமைச்சர் மனப்பான்மையை, "நன்றறி யுள்ளத்துச் சான்றோர்" என்றும், அவரது சூழ்ச்சி முற்ரும் இச் சேரமான்பால் செறிந்திருக்குமாறு
தோன்ற அவரை உவமமாக நிறுத்தியும் கூறினார். பகைவேந்தரும்
சூழ்ச்சி யடையராயினும் அறியாமை மிகவுடைய ரென்றற்கு "மடம் பெருமையின்" என்றும் அதனால் நின் பண்பும் வலியும் அறிந்திலர்
என்றற்கு "நின் பண்பு நன்கறியார்" என்றும் கூறினார். அறிவு வலியுறுத்தும் சான்றோர், உள்ளத்துச் சான்றோர் என இயையும். பழையவுரைகாரரும், " மன்பதை மக்கட் பன்மை" யென்றும், "அறிவு வலியுறுத்தும்
சான்றோர், எனக் கூட்டுக" என்றும் "ஈண்டுச் சான்றோ ரென்றது மந்திரிகளை" யென்றும் கூறுவர். மட மென்னும் எழுவாய் பெருமையின் என்னும் பயனிலை கொண்டது.
8-16 துஞ்சல்..... உடற்றிசி னோர்க்கே.
உரை: துஞ்சல் உறூஉம் பகல் புகும் மாலை - எல்லா வுயிர்களும் ஒருங்கு அழிதற்குரிய ஊழிக் காலமானது புகுகின்ற
பொழுதில்; நிலம் பொறை ஒராஅ - நிலமகள் சுமை நீங்க; நீர்ஞெமர வந்து ஈண்டி - நீர் பரந்து வந்து பெருகுதலால்; உரவுத்திரை கடுகிய - பரந்தெழும் அலைகள் விரையும்: உருத்தெழு
வெள்ளம் - நிலத் துயிர்களைக் கோறற்குச் சினந் தெழுவது
போலும் வெள்ளம்; வரையா மாதிரத்து - எல்லை வரையறுக்கப்
படாத திசை முழுதும்; இருள் சேர்பு பரந்து - இருளொடு
சேர்ந்து பரவுவதால்; அகன்றுவரு ஞாயிறு பட்ட கூட்டத்து-
இருளைப் போக்குதற்குப் பன்னிரண்டாய் விரிந்துவரும் ஞாயிறுகள் தோன்றிய கூட்டத்தினது; செஞ்சுடர் நிகழ்வின் - சிவந்த வெயில் நிகழ்ச்சியினையும்; பொங்கு பிசி்ர் நுடங்கிய - மிகுகின்ற
பிசிரினையுடைய அவ் வெள்ளத்தை வற்றச்செய்த; மடங்கல்
தீயின்-வடவைத் தீயினையும்; சினம் கெழு குருசில் - சினம்
பொருந்திய குருசிலே; அம் சாறு புரையும் நின் தொழில் - அழகிய விழாவினைப்போல இன்பம் செய்யும் நின்னுடைய தொழிலை; ஒழித்து - விலக்கி; நின் உடற்றிசினோர்க்கு அனையை - நின்னைப்
பகைத்துப் பொருவார்க்கு ஒத்திருக்கின்றாய் எ-று.
கூட்டத்துச் செஞ்சுடர் நிகழ்வினையும் தீயினையும் அனையை என
இயையும். குருசில், நின் உடற்றிசினோர்க்கு மடங்கற்றீயின் அனையை
என இயைத்து முடிக்க. ஒராஅ என்பதனை ஒருவ வென்றும், ஞெமர
வென்பதனை ஞெமர்ந்தென்றும், ஈண்டி யென்பதனை ஈண்ட வென்றும்
பரந்தென்பதனைப் பரவவென்றும் திரித்துக்கொள்க. பழைய வுரைகாரரும் "ஒராஅ வென்றதனை ஒருவ வெனத் திரித்து ஈண்டி யென்றதனையும் ஈண்டவெனத் திரிக்க" என்றும் "வெள்ளம் பரந்தென்றதனை பரக்கவெனத் திரித்து அதனை நுடங்கியவென நின்ற செய்யிய வென்னும் வினையெச்சத்தோடு முடித்து, அதனைச் சுடர் நிகழ்வு என்னும் தொழிற்பெயரொடு முடித்து, வெள்ளம் பரக்கையாலே அவ்வெள்ளத்தை மாய்க்க வேண்டிச் சுடர் நிகழ்தலை யுடைத்தான தீயென வுரைக்க" என்றும் கூறுதல் காண்க.
எல்லா வுயிர்களும் ஒருங்கு மடியும் ஊழிக்காலத்தைத் "துஞ்சல் உறூஉம் பகல்” என்றார். இருள் படரும் முடிவுக்கால மாதலால், "மாலை" யென்றார். இத்தகையதொரு காலம் வருதல், நிலமகட்குச் சுமை நீக்கம் குறித்தென்றற்கு "நிலம் பொறை யொராஅ" என்றும், தன்னில் மூழ்கி மறையாத இடமும் பொருளும் இல்லையென்னுமாறு நீர் பரத்தலால், "நீர்ஞெமர
வந்தீண்டி" என்றும் அவ்வெள்ளம் கடுகப் பரந்தெழுதற்குச் சூறைக் காற்று மோதுதலால் பேரலைகள் தோன்றிக் கடுகிவருவது உயிர்கண்மேற்
சினம்கொண்டு பொங்கி வருவது போறலின் , உரவுத்திரை கடுகிய வுருத்தெழு வெள்ளம்" என்றும் கூறினார். "துஞ்சல் எல்லா வுயிரும் படுத" லென்றும், "பக லென்றது ஊழியை" யென்றும் "மாலை யென்றது ஊழி முடிவினை" யென்றும் "உருத்தெழு வெள்ளமென்றது பல்லுயிரையும்
ஒருங்கு தான் கொல்லும் கருத்துடையது போலக் கோபித்தெழு வெள்ளமென்றவா" றென்றும் "இச்சிறப்பானே இதற்கு உருத்தெழு வெள்ள மென்று பெயராயிற்" றென்றும் பழைய வுரைகாரர் கூறுகின்றார்.
ஞாயிறு முதலிய கோள்களும் ஏனை விண்மீன்களும் தோன்றாவாறு
திணியிருள் பரந்துவிடுதலால் திசையறிய லாகாமையின், "வரையா மாதிரத்து" என்றும், இருள் பரவும்போதே வெள்ளந்தானும் உடன் பரந்து விடுமாறு தோன்ற, "இருள் சேர்பு பரந்து" என்றும் கூறினார். இருளென்
புழி உடனிகழ்ச்சிப் பொருட்டாய ஒடு வுருபு விகரத்தாற் றொக்கது.
அகன்றுவரு ஞாயிறு பட்ட கூட்டத்து என மாறி இயைக்க. இவ்வூழியிருளைப் போக்கி நீர்ப்பெருக்கினை வற்றச்செய்தற்கு ஒரு ஞாயிறு அமையாமை பற்றிப் பன்னிரு ஞாயிறுகள் பல்வேறிடங்களில் கூட்டமாய்த் தோன்றிப் பேரொளியும் பெரு வெப்பமும் செய்தலால், "அகன்றுவரு ஞாயிறு பட்ட கூட்டத்துச் செஞ்சுடர் நிகழ்வின்" என்றார். படுதல், தோன்றுதல். அகலுதல், விரிதல்; "அஃகி யகன்ற வறிவென்னாம்" (குறள்
175) என்றாற்போல.
பொங்கு பிசிர் என வெள்ளத்தைச் சுட்டிக் கூறினார், பிசிர் வற்றுவது
போல இவ்வூழிவெள்ளம் வடவைத்தீயால் வற்றுமாறு தோன்ற. நுடக்கிய வென்பனைச் செய்யிய வென்னும் வினையெச்சமாகக் கொண்டு
"நிகழ்வின்" என்பதனோடு முடிப்பர் பழையவுரைகாரர்.
"ஞாயிறு பட்ட அகன்றுவரு கூட்டத்துச் செஞ்சுடர் நிகழ்" வினால்,
திணியிருள் கெடுவதுபோல, சேரனது கொற்ற வொளியினால், பகையிருள் கெடுதல்பற்றியும் மடங்கற் றீயால் உருத்தெழு வெள்ளம் வற்றுவது
போல, பகைவரது கடல் மருள் பெரும் படை கெட்டழிதல் பற்றியும்
"செஞ்சுடர் நிகழ்வின் மடங்கற் றீயின் அனையை" என்றார். இனி,
"பொங்கு பிசிர் நுடங்கிய செஞ்சுடர் நிகழ்வின்" என்ற பாடமே
கொண்டு, உருத்தெழு வெள்ளத்தின் பொங்குகின்ற பிசிரைக் கெடுத்த
செஞ்சுடர் நிகழ்வினையும், மடங்கற் றீயினையும் அனையை என்பதே நேரிய
முறையாத லறிக. செஞ்சுடர் நிகழ்வு பேரிருளைப் போக்கிப் பிசிர்ப் படலத்தைக் கெடுக்க, மடங்கற்றீ வெள்ளத்தைச் சுவறச்செய்யுமென வறிக.
இக் கூறியவாற்றால், சினங்கெழு குருசில், நின் உடற்றிசினோர்க்கு,
சாறுபுரையும் நின் தொழிலொழித்து, துஞ்சலுறூஉம் பகல்புகு மாலை, ஞாயிறுபட்ட அகன்றுவரு கூட்டத்துச் செஞ்சுடர் நிகழ்வினையும், பொங்கு
பிசிர் நுடங்கிய மடங்கற் றீயினையும் அனையை என முடிக். விழாக்காலம்
நணியார் சேயார், சிறியார் பெரியார், உடையார் இல்லார், இளையார் முதியார் எல்லார்க்கும் இன்பம் செய்தல் போலச் சேரமானும் எல்லார்க்கும்
தன் ஆட்சியால் இன்பம் செய்தலின், "அம்சாறு புரையும் நின் தொழில்"
என்றார். இன்பஞ் செய்வதைத் தவிர்த்துப் பகைவர்க்குத் துன்பம் செய்தல்பற்றி, "நின் தொழில் ஒழித்து...அனையை" யென்றார். ஒழித்தென்னும் வினையெச்சம் அனையை யென்னும் குறிப்புவினை கொண்டது.
ஆக்கம் வருவித்துக்கொள்க
1-3 இகல்.....நாடு.
உரை: கறுத்தோர் - நின்னைப் பகைத்தவர்; இகல் பெருமையின் படை கோள் அஞ்சார் - கருத்தில் பகைமை பெரிதாயிருத்தல்பற்றிப் படை யெடுத்தற்கு அஞ்சாராய்; சூழாது துணிதல் அல்லது - காலம் இடம் வலி முதலியவற்றை ஆராயாமல்
போர்செய்யத் துணிவதேயன்றி: நாடு - தம் நாட்டை; உடன் காவல் வறிது எதிரார் - பலராய்க் கூடிக் காத்தற்குச் சிறிதும் மாட்டாராலர்காண் எ-று.
இகல், மாறுபாடு; இஃது உள்ளத்தே மிக்க வழி, அறிவு தொழில்
செய்யாமையின், சினத்திற் கிரையாகி மேல் விளையும் பயனும் ஆராய்ந்திலர் என்பார், "இகல் பெருமையின் படைகோள் அஞ்சார்" என்றும்,
"சூழாது துணித லல்லது" என்றும் கூறினார். சூழ்ந்தவழித் தமது
சிறுமையும் நின் பெருமையும் இனிது தெளிந்து விளையக்கடவ துன்பத்துக்கும் பழிக்கும் அஞ்சுவ ரென்பார், "அஞ்சா" ரென்றும் பலராய்க் கூடிக் காக்கினும் காவல் நிரம்பாது என்றற்கு "உடன் காவலெதிரார்"
என்றும் கூறினார். ஒரு சிறிது போதும் அவரால் எதிர்த்து நிற்க முடியாது
என்பது "வறிது" என்பதனால் வற்புறுத்தப்படுகிறது. பழையவுரைகாரர்,
"இகல் பெருமையின் என்பதற்கு இகலானது பெரிதாகையானே" என்றும், "இகலென்னும் எழுவாய்க்குப் பெருமையை வினைநிலைப்பயனிலை யாகக் கொள்க" என்றும் "அஞ்சாரென்பது வினையெச்சமுற்" றென்றும், "படைகோளைத் துணிதலெனக் கூட்டுக " வென்றும், "உடன் காவ லெதிராரென்றது, பலரும் தம்முட் கூடியும் காக்கமாட்டா ரென்றவா" றென்றும் கூறுவர்
இதுகாறும் கூறியது: சினங்கெழு குரிசில், நின்னைக் கறுத்தவர்,
இகல் பெருமையின் படைகோளஞ்சாராய்ச் சூழாது துணிதலல்லது நாடு
உடன் காவல் எதிரார்; மடம் பெருமையின் நின் பண்பு நன்கறியார்;
நின் உடற்றிசினோர்க்கு, நின் தொழி லொழித்து, நீ துஞ்சலுறூஉம் பகல்
புகு மாலை, உருத்தெழு வெள்ளம் பரவுதலால், அகன்றுவரு கூட்டத்து
செஞ்சுடர் நிகழ்வினையும் மடங்கற் றீயினையும் அனையையாகின்றாய் என்று
வினைமுடிவு செய்க. பழைய வுரைகாரர் "நின்னொடு கறுத்தோர் தம்
மடம் பெருமையால் நின் முன்குடிமுதல்வர்க்கு அறிவு வலியுறுத்தும் சான்றோரை யொத்த நின் சூழ்ச்சிப் பண்புடைமை யறிகின்றிலர்; நீதான் சூழ்ச்சியுடையையே யன்றிக் குருசிலே, நின்னுடற்றிசினோர்க்குப் போர்
செய்யுமிடத்து மடங்கற் றீயின் அனையை; அதனையும் அறிகின்றில ராதலால், அவர் தம் இகல் பெருமையானே அஞ்சாராய்ப் படைகோளைத் துணிதலல்லது நாட்டைச் சிறிதும் உடன்காவ லெதிர்கொள்ளார் எனக் கூட்டி வினைமுடிவு செய்க" என முடிப்பர்
"இதனாற் சொல்லியது, அவன் சூழ்ச்சியுடைமையும் வென்றிச் சிழறப்பும் உடன் கூறியவாறாயிற்று" என்பது பழையவுரை.
----------------------
8.3. நிறந்திகழ் பாசிழை.
73
உரவோ ரெண்ணினு மடவோ ரெண்ணினும்
பிறர்க்கு நீவாயி னல்லது நினக்குப்
பிறருவம மாகா வொருபெரு வேந்தே..........
மருதஞ் சான்ற மலர்தலை விளைவயற்
செய்யு ணாரை யொய்யு மகளிர் 5
இரவும் பகலும் பாசிழை களையார்
குறும்பல் யாணர்க் குரவை யயரும்
காவிரி மண்டிய சேய்விரி வனப்பிற்
புகாஅர்ச் செல்வ பூழியர் மெய்ம்மறை
கழைவிரிந் தெழுதரு மழைதவழ் நெடுங்கோட்டுக் 10
கொல்லிப் பொருந கொடித்தேர்ப் பொறையநின்
வளனு மாண்பையுங் கைவண் மையும்
மாந்த ரளவிறந் தனவெனப் பன்னாள்
யான்சென் றுரைப்பவுந் தெளிகுவர் கொல்லென
ஆங்குமதி மருளக் காண்குவல் 15
யாங்குரைப் பேனென வருந்துவல் யானே.
இதுவு மது.
பெயர்: நிறந்திகழ் பாசிழை.
1-3 உரவோர்...வேந்தே.
உரை: உரவோர் எண்ணினும் மளவோர் எண்ணினும்-
அறிவுடையோரை யெண்ணினாலும் அஃது இல்லாத மடவோரை
யெண்ணினாலும்; பிறர்க்கு நீ உவமம் வாயினல்லது-பிறர்க்கு நீ உவமமாக வாய்ப்பதன்றி;நினக்குப் பிறர் உவமமாகா-நினக்குப் பிறர் உவமமா கலாகாத; ஒரு பெரு வேந்தே-ஒப்பற்ற பெருமையையுடைய வேந்தே எ-று.
உயர்ந்தோர் மடவோர் என்ற இருதிறத்தோர் பெருமை கூறலுறுவார்க்கு அவரின் உயர்ந்தோரை யுவமமாக வுரைத்தல்வேண்டு மென்பது
பொருளிலக்கண மாதலின், (தொல். உவம.3) உயர்வற வுயர்ந்த நின்னையே அவர்கட்கு உவமமாக வுரைத்தற் கமைந்தனை யென்பார், "பிறர்க்கு
நீ வாயினல்லது நினக்குப் பிறருவமமாகா வேந்தே" யென்றும், ஆகாமைக்கு ஏது நினது உயர்வற வுயர்ந்த பெருமை யென்பார், "ஒரு பெரு வேந்தே" என்றும் கூறினார். உரவோர்., படை மடம்படுத லறியாத
அறிவுத்திண்மை யுடையோர்; மடவோர், கொடைக்கண் மடம படுபவர்;
"கொடைமடம் படுதலல்லது, படைமடம் படான் பிறர் படைமயக்
குறினே" (புறம்.142) என்று சான்றோர் கூறுதல் காண்க. பெருமை
உயர்வு குறித்து நின்றது. இனிஉரவோர்தம் எண்ணினும் மடவோர் தாம் எண்ணினும், இருதிறத்தோரும் நின்னையே உவமமாகக் கொண்டுரைப்ப ரென்றுமாம்.
4-9 மருதம்........மெய்ம்மறை
உரை: மருதம் சான்ற-மருத வளம் அமைந்த; மலர்தலை
விளைவயற் செய்யுள்-விரிந்த இடத்தையுடைய விளை புலங்களாகிய
கழனிக்கண்ணே யுலவும்; நாரை ஒய்யும் மகளிர் - நாரைகளை யோப்பும் மகளிர்; இரவும் பகலும் பாசிழை களையார்- இரவு பக லென்ற இருபோதினும் தாமணிந்த பசிய பொன்னாற் செய்த
இழைகளைக் களையாராய்; குறும்பல் யாணர்க் குரவை யயரும்-
ஒன்றற்கொன்று அணித்தாய்ப் பலவாகிய இடங்களிலே புதிய
புதிய குரவைக்கூத்தினை யாடி மகிழும்; காவிரி மண்டிய-காவிரி
யாற்றின் நீர் மிககுள்ள; சேய்விரி வனப்பின்-நெடுந் தொலைவிலேயே விரிந்து தோன்றும் அழகினையுடைய; புகார்ச் செல்வ- புகார் நகரத்தையுடைய செல்வனே; பூழியர் மெய்ம்மறை-பூழி நாட்டார்க்கு மெய்புகுகருவி போன்றவனே எ-று
மருதத்திணைக் குரிய பொருள்பலவும் குறைவற நிறைந்திருக்குமாறு
தோன்ற, "மருதஞ் சான்ற மலர்தலை விளைவயல்" என்றும் ஆங்குறையும்
உழவர்மகளிர் வயற்கண் விளைபயிரை நாரைகள் மிதித்துச் சிதைக்காவண்ணம் ஓப்பும் செய்கையினராதலை, "செய்யுள் நாரை யொய்யும் மகளிர்", என்றும் கூறினார். வித்திய வொன்று ஆயிரமாக விளைதலின் செல்வக்
களிப்பால் இரவு பகல் எஞ்ஞான்றும் விளையாட்டினை விரும்பி யொழுகுகின்றா ரென்பார், "இரவும் பகலும் பாசிழை களையார், குறும்பல யாணர்க் குரவை யயரும்" என்றார். பழையவுரைகாரர், "இரவும் பகலும் குரவை
யயரு மெனக் கூட்டுக வென்றும், "மருத மென்றது மருதநிலத் தன்மையை" யென்றும், "குறும்பல் குரவை யென்றது ஒன்று ஆடும் இடத்திற்கு ஒன்று அணியதாய் அவைதாம் பலவா யிருக்கின்ற குரவை யென்றவாறு" என்றும், "குரவை யயரும் புகார் எனவும் காவிரி மண்டிய புகார் எனவும் கூட்டுக" என்றும் கூறுவர்.
காவிரி பாய்தலால் நீர்வளம் சிறத்தலின். வானளாவ வுயர்ந்த சோலைகளும் கொடிமாடப் பெருமனைகளும் சேய்மைக்கண்ணே காண்பார்க்கு
அழகிய தமது காட்சியினை வழங்கும் சிறப்பு விளங்க, "சேய்விரி வனப்பிற்
புகார்" என்றும், அதனாற் செல்வமுகுதி தோன்ற, "செல்வ" என்றும்
கூறினார். பூழியர், பூழி நாட்டார்; இந்நாடும் சேரர்க் குரியது; "பல்வேற் பூழியர் கோவே" (பதிற்.84) என்று பிறரும் சேரவேந்தரைக் கூறுதல் காண்க.
10-11 கழை.........பொறைய.
உரை: கழை விரிந்து எழுதரு - மூங்கில்கள் விரிந்தெழுகின்ற; மழை தவழ் நெடுங்கோட்டு -மேகங்கள் தவழும் நெடிய உச்சியையுடைய; கொல்லிப் பொருந - கொல்லிமலைக்குத் தலைவனே; கொடித்தேர்ப் பொறைய - கொடி யுயர்த்திய தேர்களையுடைய மலைநாட்டரசே எ-று.
மூங்கில்கள் விரிந்து வளரும் இயல்பினவாதலின் "விரிந்தெழுதரு"
என்றார். கொல்லி, கொல்லிமலை; இதனைச் சூழ்ந்த நாடு கொல்லிக்கூற்ற மென்றும் வழங்கும். பொறை, மலை. சேரநாடு மலைநாடாதலின், சேரர் பொறைய ரெனவும் கூறப்படுவர்.
11-17 நின் வளனும்...யானே
உரை: நின் வளனும் ஆண்மையும் கைவண்மையும் மாந்தர்
அளவிறந்தன என - நின்னுடைய செல்வமும் வீரமும் கொடையும்
மக்கள் ஆராய்ச்சி யெல்லையைக் கந்தனவாகும் என்று; யான்
பன்னாள் சென்று உரைப்பவும் தேறார் - யான் பல நாளும் சென்று
உரைத்தேனாகவும் நின் பகைவர் தெளியாராயினார்; பிறரும் சான்றோர் உரைப்பத் தெளிகுவர் கொல்லென - பிறராகிய சான்றோரைக்கொண்டு தெரிவிப்பின் அவர் தெளிவரென முயன்றவழியும்; ஆங்கும் மதிமருளக் காண்குவல் -அப்போழ்தும் அவர் அறிவு
மயங்கி யிருப்பதையே கண்டேன்; யாங்கு உரைப்பேன் என யான் வருந்துவல் - அதனால் அவர்கட்கு எவ்வாறு கூறித் தெளிவிக்கமுடியு மென்று நினைந்து வருந்துகின்றேன் எ-று.
வளம் முதலியன முறையே பொருள்வலி, தன் தோள்வலி, துணை தோதிய வாற்றை, "மாந்தர் அளவிறந்தன வெனப் பன்னாள் யான்சென் வலி படைவலி முதலியவற்றைச் சுட்டி நிற்றலால் இவற்றைத் தாம் எடுத்துறுரைப்பவும்" என்றார். ஒருநாளொழியினும் பன்னாளுரைப்பின் அறிவு
தெளிகுவ ரென்னும் துணிவால், "பன்னாள் சென்று உரைப்பவும் தேறார்"
என்றார். "உரைப்பவும் என்ற உம்மை தாமே அறியக்கடவதனை யாம்
சொல்லவும் அறிகிலரெனச் சிறப்பும்மை" என்றும், "பிறரும என்ற
வும்மை அசைநிலை" யென்றும் பழையவுரைகாரர் கூறுவர். கூறப்படும்
பொருளை நோக்காது கூறுவோர் தகுதி நோக்கும் மெல்லியர் போலும்
என்று கருதிப் பிறராகிய சான்றோரை விடுத்தவழியும், அவர்பால் மயக்கமே புலப்படுவதாயிற் றென்பார், ”ஆங்கும் மதிமருளக் காண்குவல்"
என்றும், அத்துணை மடமை நிறைந்தோரை ஒறுப்பது அறமாகாதாகலின்,
அவர் பொருட்டு இரங்குவதல்லது பிறிதொன்றும் செய்தற் கின்மையின்,
"வருந்துவல் யானே" என்றும் கூறினார். யாங்குரைப்பேனென மீட்டும்
அவர்கட்குத் தகுவன கூறித் தெருட்டற்கண் தம் விழைவிருப்பத்தைப்
புலப்படுத்துவதனால், அவர்பால் அருளலையே வேண்டினா ரென்பது கருத்தாயிற்று.
"சான்றோர் உரைப்பத் தெளிருவர் கொல்லென என்றதன்பின், கருதின் என ஒரு சொல் வருவித்து அதனைக் காண்குவ லென்னும் வினையொடு முடிக்க" என்பர் பழையவுரைகாரர்.
இதுகாறுங் கூறியது: ஒரு பெரு வேந்தே, புகார்ச் செல்வ, பூழியர்
மெய்ம்மறை, கொல்லிப் பொருந, கொடித்தேர்ப் பொறைய, நின் வளனும் ஆண்மையும் கை வண்மையும் மாந்தர் அளவிறந்தன எனப் பன்னாள் சென்று யான் உரைப்பவும், நின் பகைவர் தேறார்; பிற சான்றோருரைப்பத் தெளிகுவர் கொல்லென முயன்றவழி ஆங்கும் மதி மருளக் காண்குவல்; யாங்குரைப்பேன் என வருந்துவல்; ஆகவே அவரை அறியாமை யுடையர் என்றெண்ணி அருளுதல் வேண்டும் என்று முடிக்க; இனிப் பழையவுரை, "பெரு வேந்தே, புகார்ச் செல்வ, பூழியர் மெய்ம்மறை, கொல்லிப் பொருந, பொறைய, நின் பகைவர் நின் வளனும் ஆண்மையும் கை வண்மையும் உலகத்து மக்கள் அளவைக் கடந்தன; அவனொடு
மாறுபடுவது நுமக்கு உறுதியன்றெனப் பன்னாள் யான் சொல்லவும் தேறிற்றிலர்; தேறாராயினும் உலகத்து மதிப்புடைய சான்றோர் சொல்லத் தாம் தேறுவரோ வெனக் கருதின் அவர் சொன்னவிடத்தும் அவர்கள் மதி மருண்டதுமே காணாநின்றேன்; ஆகலான் நின் பெருமையை அவர்கட்கு யாங்குரைப்பேனென வருந்தாநின்றேன் யான்; இஃது என்னுறு குறை; இதனை யறிந்து நீ அவர்பால் அருள வேண்டுவலென வினைமுடிவு செய்க," என்று கூறும்.
"இதனாற் சொல்லியது, அவன் வென்றிக்கு அடியாகிய செல்வமும் ஆண்மையும் கை வண்மையும் உடன்கூறியவாற்றான் அவன் வென்றிச்
சிறப்புக் கூறியவாறாயிற்று"
----------
8.4. நலம் பெறு திருமணி
74.
கேள்வி கேட்டுப் படிவ மொடியாது
வேள்வி வேட்டனை யுயர்ந்தோ ருவப்பச்
சாயறல் கடுக்குந் தாழிருங் கூந்தல்
வேறுபடு திருவி னின்வழி வாழியர்
கொடுமணம் பட்ட வினைமா ணருங்கலம் 5
பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம்
வரையக நண்ணிக் குறும்பொறை நாடித்
தெரியுநர் கொண்ட சிரறுடைப் பைம்பொறிக்
கவைமரங் கடுக்குங் கவலைய மருப்பிற்
புள்ளி யிரலைத் தோலூ னுதிர்த்துத் 10
தீதுகளைந் தெஞ்சிய திகழ்விடு பாண்டிற்
பருதி போகிய புடைகிளை கட்டி
எஃகுடை யிரும்பி னுள்ளமைத்து வல்லோன்
சூடு நிலையுற்றுச் சுடர்விடு தோற்றம்
விசும்பாடு மரபிற் பருந்தூ றளப்ப 15
நலம்பெறு திருமணி கூட்டு நற்றோள்
ஒடுங்கீ ரோதி யொண்ணுதல் கருவில்
எண்ணியன் முற்றி யீரறிவு புரிந்து
சால்பும் செம்மையு முளப்படப் பிறவும்
காவற் கமைந்த வரசுதுறை போகிய 20
வீறுசால் புதல்வற் பெற்றனை யிவணர்க்
கருங்கட னிறுத்த செருப்புகன் முன்ப
அன்னவை மருண்டென னல்லே னின்வயின்
முழுதுணர்ந் தொழுக்கு நரைமூ தாளனை
வண்மையு மாண்பும் வளனு மெச்சமும் 25
தெய்வமும் யாவதுந் தவமுடை யோர்க்கென
வேறுபடு நனந்தலைப் பெயரக்
**றினை பெருமநின் படிமை யானே.
இதுவமது.
பெயர் நலம்பெறு திருமணி.
3-17. சாயறல் . . . . . . .கருவில்
உரை: சாய் அறல் கடுக்கும்-நுண்ணிய கருமணலை யொக்கும்; தாழ் இருங் கூந்தல்-தாழ்ந்த கரிய கூந்தலையும்; கொடு மணம் பட்ட வினைமாண் அருங்கலம்-கொடுமணம் என்னும் ஊரிலே உண்டாகிய அரிய கலன்களையும்; பந்தர் பயந்த பலர் புகழ் முத்தம்-பந்தர் என்னும் ஊரிடத்தே பெற்ற பலரும் புகழ்கிற முத்துக்களையும்; வரை யகம் நண்ணி-பெரு மலைகளை யடைந்து அவற்றிடத்தும் தேடி; தெரியுநர் கொண்ட- குற்றமற ஆராய்ந்துகொள்ளும் அறிவினை யுடையோர் கொண்ட; சிரறுடைப் பைம்பொறி-சிதறிக் கிடத்தலையுடைய பசிய பொறிகளையும்;கவைமரம் கடுக்கும; கவலைய மருப்பின்-கவைக்கோற் போலக் கிளைத்தலையுடைய கொம்பினையும்; புள்ளி இரலைத் தோல்-புள்ளியினையுமுடைய மான்தோலைக் கொண்டு: ஊன் உதிர்த்து-அதன் உட்புறத்துத் தசையைக் களைந்து: தீது களைந்து-ஏனை அழுக்குகளையும் போக்கி; எஞ்சிய திகழ்விடு- எஞ்சி நின்ற ஒளி வீசுகின்ற; பாண்டிற் பருதி போகிய புடை- வட்டமாக அறுத்த தோலின் விளிம்பிலே; கிளை கட்டி- இனமாகச் சேரக் கட்டி; எஃகுடை இரும்பின்-கூர்மையையுடைய வூசியால் ; வல்லோன்-தொழில் வல்லவன்; உள்ளமைத்து- உட்புறத்தே மணிகளைப் பதித்து அழகுற அணி செய்து; சூடு நிலையுற்று-சூடுதற்குரிய நிலைமையினை யுறுவித்து; சுடர்விடு தோற்றம்-ஒளி திகழ்கின்ற தோற்றத்தைப் பெறுவித்தலால்; விசும் பாடு மரபின்-விசும்பிலே பறக்கும் முறைமையினையுடைய; பருந்து ஊறு அளப்ப-பருந்தானது ஊனென்று கருதி யதனையுற்றுக் கவர்தற்கு நினையுமாறு; நலம் பெறு திருமணி-நலம் பெற்ற உயரிய அத் தோற்பணியாகிய மணியை; கூட்டும் நற்றோள்-அணிகின்ற நல்ல தோளினையும்; ஒடுங்கிரோதி-ஒடுங்கிய சுருள் என்னும் பகுதியான கூந்தலையும்; ஒண்ணுதல் ஒள்ளிய நெற்றியினையும்; வேறுபடு திருவின்-பிறப்பால் திருமகளின் வேறுபட்டா ளென்னும் சிறப்பெய்திய மாண்பினையுமுடைய நின் தேவியினுடைய; நின்வழி வாழியர்-நின் குடிவழி நீடு வாழ்வதன் பொருட்டு; கருவில்-கருவிடத்தே யமைந்து எ-று
மென்மையும் நுண்மையு முடைமைபற்றிக் கருமணலை"சாயறல்" எனல் வேண்டிற்று. தாழ் இருங் கூந்தல், முதுகிடத்தே தாழ்ந்த கரிய கூந்தல்;"புறந்தாழ் பிருளிய பிறங்குகுர லைம்பால்" (அகம் 126) என்று பிறரும் கூறுதல் காண்க. கூந்தலையும், தோளினையும் நுதலினையுமுடைய தேவியினது கருவில் எனக் கூட்டுக. தாழிருங் கூந்தலென்றவர் மறுபடியும் ஒடுங்கீரோதி யென்றது, கூந்தலின் நீட்சியும் நிறப்பொலிவும் பொதுப்படக் கூறி, அதனைச் சுருள் என்னும் பகுதியாக முடிக்கும் சிறப் பினை யுணர்த்தற்கு. திருமகட்குரிய உருவும் பிற நலங்களும் பொருந்திப் பிறப்பொன்றினால் வேறுபடுவது குறித்துத் தேவியை, "வேறுபடுதிரு" என்றார். வேறுபடு திருவின் என்பதற்குப் பழையவுரைகாரர்"வேறுபடு திருவின் என்றது இவளுக்குக் கூறிய குணங்களால் அவளின் வேறாகிய நின் தேவி என்றவா" றென்றும், "திருவின் என்னும் இன் அறைநிலை" யென்றும் கூறுவர்
கொடுமணம், பந்தர் என்பன அக்காலத்தே சிறப்புற்றிருந்த ஊர்கள். விளைமாண் அருங்கலம், தொழில் நலத்தால் மாண்புற்ற அணிகலன்கள். பலர், பலநாட்டவர். வேள்வி செய்தற்கண், அதனைச் செய்வோர் நல்லிலக்கணம் அமைந்த புள்ளிமானின் தோலைத் தூய்மை செய்து போர்த்துக்கொள்ப வாதலின், அதனை, மானிலக்கணம் தெரிந்தாரைக் கொண்டு பெறுதல் வேண்டி விடுத்தலின், அவரைத்"தெரியுநர்" என்றும், அவர்கள் அதனை நாடிப் பெறுமாறு கூறுவார், "வரையகம் நண்ணிக் குறும்பொறை நாடித் தெரியுநர்" என்றும் கூறினார். வரையகம், பெருமலைத் தொடர். குறும்பெறை, சிறு குன்றுகள் நிறைந்த மலைப்பக்கம். கொச்சிநாட்டுப் பகுதிகளை இடைக்காலக் கல் வெட்டுக்கள் நெடும்பொறை நாடென்றும் குறும் பொறை நாடென்றும் (A.R. No. 321 of 1924) கூறுகின்றன. இவ்விடத்தை நண்ணி நாடுதலின், உயரிய மான் வகைகள் அவ்விடத்தே வாழ்தல் பெற்றாம். நல்லிலக்கணம் அமைந்த மானின் நலம் கூறுவார்., கிளைத்த கொம்புடைமையும், உடலெங்கும் சிதறிய புள்ளியுடைமையும் விதந்து, "பைம்பொறிக் கவைமரம் கடுக்கும் கவலைய மருப்பிற் புள்ளியிரலை" யென்றார்."வரையென்றது பெருமலையை" யென்றும், குறும்பொறை யென்றது"அதனை யணைந்த சிறு பொற்றைகளை" யென்றும், "தெரியுநர் கோடல், இலக்கணக்குற்றமற ஆராய்ந்து கோடல்" என்றும், "பைம் பொறி யென்றது செவ்விகளையுடைய புள்ளிகளை" யென்றும்"மேற்புள்ளி யிரலை யென்றதனை அதன் சாதிப் பெயர் கூறியவாறாகக் கொள்க" என்றும் பழையவுரை கூறும்.
சிரறுதல், சிதறுதல். கவலை, கவர்த்தல் வேள்விசெய்வோன், மான் தோலைப் போர்த்துக்கொள்ள, அவன் மனைவி அத்தோலை வட்டமாக அறுத்து அதனைச் சுற்றிலும் முத்துக்களையும், பிற வுயரிய மணிகளையும் கட்டி, நடுவே உயரிய மாணிக்கமணிகளைத் தைத்துக் தோளிடத்தே அணிவள் போலும், ஈண்டு ஆசிரியர் அரசமாதேவி இவ்வாறு அணிந்தாளென்றலின், மயிர் முதலியன மூடிப் பொலிவின்றி யிருக்கும் பகுதியைத் தீது என விலக்குதலால், "தீது களைந்தெஞ்சிய திகழ் விடு பாண்டிற் பருதி" என்றும் வட்டமான தோலைப்"பாண்டிற் பருதி" யென்றும், அதன் விளிம்பிலே கொடுமணத்துக் கலத்தையும் பந்தரிடத்துப் பெற்ற முத்தினையும் இனம் சேரக் கட்டினாரென்றற்கு, "புடைகிளை கட்டி" யென்றும்,உள்ளிடத்தே தாமரை முதலிய பூவைப் போலும் அழகிய வேலைப்பாட்டினைச் சிவந்த மாணிக்கமணி கொண்டு செய்யும் தொழில் வல்லுநரை, "வல்லோன் எஃகுடை யிரும்பின் உள்ளமைத்து" என்றும் அவ்வாறு அமைத்தலால் சூடுதற்குரிய நிலையுறுவதால், "சூடுநிலையுற்று" என்றும் கூறினார்.
உறுவித்தெனப்பாலது"உற்று" என வந்தது. சிவந்த மணிகள் இடையே பதிக்கப்பெற்றுச் செவ்வொளி கான்று திகழ்தல் கண்டு, ஊனென்று கருதிப் பருந்து கவர்ந்துசெல்லக் கருதுமென்பார், "விசும்பாடு மரபிற் பருந்து றளப்ப" என்றார். ஊன் தேடி யுற்றுண்டு பயின்ற கூரிய பார்வையினை யுடைய பருந்தினை மயக்குமாறு சிவந்த ஒளிகொண்டு விளங்கும் மணியாதல்பற்றி, "நலம் பெறு திருமணி" எனப் பட்டது. பொன்னிடைப் பதித்துப் பொலிவுறுத்தப் பெறும் மாணிக்க மணி, தோலிடைப் பதித்தவழியும் தன் நல்லொளி குன்றாது திகழும் சிறப்புக் குறித்து இவ்வாறு நலம்பெறு திருமணியென்ற நலத்தால், இப் பாட்டிற்கு நலம்பெறு திருமணியென்று பெயராயிற்றென வறிக. இனிப் பழையவுரைகாரர், "நலம்பெறு திருமணி யென்றது மணியறிவாரால் இதுவே நல்லதென்று சொல்லப்படுதலையுடைய திருமணி யென்றவாறு; இச்சிறப்பானே இதற்கு நலம்பெறு திருமணி யென்று பெயராயிற்று" என்பர்.
இதன்கட் கூறியவற்றைத் தொகுத்து நோக்கின், தாழிருங் கூந்தலையும், திருமணி கூட்டும் நற்றோளையும், ஓதியையும், ஒண்ணுதலையும், வேறுபடு திருவினையையுமுடைய நின் தேவியின் கருவிலே என்பதாம். இனியிப் பகுதிக்கண் வந்தவற்றிற்கு உரைக் குறிப்புக் கூறலுற்ற பழைய வுரைகாரர், "கவலைய வென்னும் அகரம் செய்யுள் விகார" மென்றும், பாண்டி லென்றது வட்டமாக அறுத்த தோலினை யென்றும், "பருதி போகிய புடை யென்றது வட்டமாகப் போன அத்தோலது விளிம்பினை" யென்றும், எஃகுடை யிரும்பின் உள்ளமைத் தென்றது கூர்மையையுடைய கருவிகளால் அத்தோலுட் செய்யும் தொழில்களெல்லாம் செய்தமைத் தென்றவா" றென்றும், அமைத்தென்றதனை"அமைப்பவெனத் திரிக்க" வென்றும், வல்லோனால் என விரித்து வல்லோனால் நின் தேவி சூடுதல் நிலையுறுதலால் என்க" என்றும், "வல்லோன் யாகம் பண்ணுவிக்க வல்லவன்" என்றும், "தோற்றமென்றது தோற்றமுடைய அத்தோலினை" யென்றும் கூறுவர். கருவில் என்பதனோடு அமைந்தென ஒரு சொல் வருவித்து, வாழிரென்ற முற்றெச்சத்துக்கு முடிபாக்காது, "வாழியரென்னும் வினை யெச்சத்தினைச் சூடு நிலையுற்று என்னும் வினையொடு முடிக்க" என்பர் பழையவுரைகாரர்.
18-21. எண்ணியல்................பெற்றனை.
உரை: எண் இயல் முற்றி-எண்ணப்படுகின்ற திங்கள் பத்தும் நிரம்பி; ஈர் அறிவு பிரிந்து-இருவகை யறிவும் அமைந்து; சால்பும் செம்மையும் உளப்படப் பிறவும்-சால்பும் நடுவுநிலையு முள்ளிட்ட பிற நற்பண்புகளும்; காவற் கமைந்த அரசு துறை போகிய வீறுசால்-நாடுகாத்தற்கு வேண்டும் அரசிய லறிவு வகை பலவும் முற்றக் கற்றுத் துறைபோகிய சிறப்பும் நிறைந்த; புதல் வற் பெற்றனை இவணர்க்கு-நன்மகனைப் பெற்றுள்ளாய் இந்நில வுலகத்து வாழ்வார் பொருட்டு எ-று.
கருவளர்தற்குரிய காலத்தை ஒவ்வொரு திங்களாக வெண்ணுபவாதலின், "எண்ணியல் முற்றி" யென்றார். ஈரறிவு, இருவகை யறிவு; அவை இயற்கையும் செயற்கையுமாகிய இருவகை யறிவுகள். இயற்கையாய கண்ணொளி யில்லார்க்கு ஏனை ஞாயிற்றொளி முதலியன பயன் படாமைபோல, இயற்கையே உண்மையறிவில்லார்க்குக் கல்வி கேள்விகளானாம் செயற்கையறிவு பயன்படா தாகலின், "ஈரறிவு புரிந்து" என்றாரென்றுமாம். இம்மை மறுமை யறிவுகளுமாம். பெரிய அறிவெனினுமமையு மென்பர் பழையவுரைகாரர். சால்பு, நற்குணங்களின் நிறைவு. அன்பு, நாண், ஒப்புறவு, கண்ணோட்டம், வாய்மை என்ற ஐந்தின் நிறைவு. அரசாளும் திறனும் கருவிலே வாய்க்குந் திருவென்றற்கு, "காவற்கமைந்த அரசு துறை போகிய வீறு" என்றார். பிறந்த பின்பே இவை யாவும் பெறற் குரியவாயினும், இவற்றின் பேறு இனிது பொருந்துதற்குரிய நல்வாய்ப்புக் கருவிலே உண்டாவதாகலின், இவ்வாறு கூறினார் என அறிக. இக்கருத்தே, "பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த மக்கட்பே றல்ல பிற" (குறள் 61") என்புழியும் அமைந்துகிடத்தல் காண்க. பெற்றனை யென்பதைப் பழையவுரைகாரர், முற்றெச்சமாக்கி மேல் வருவனவற்றோடு முடிப்பர். அரசனது புதல்வற் பேறு அவன் கோற்கீழ் வாழ்வார்க்கு ஏமமாதல்பற்றி, "இவணர்க்" கென்றார். மக்கட் பேறு, பெற்றோர்க்கே யன்றி இப் பெருநிலத்து வாழ்வார்க்கு நலம் பயக்கும் இயல்பிற் றென்பது பண்டைத்தமிழ் நன்மக்கள் கொள்கை."தம் மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து, மன்னுயிர்க்கெல்லாம் இனிது" (குறள் 68) என்று சான்றோர் கூறுதல் காண்க.
1-2 கேள்வி...........உவப்ப
உரை: கேள்வி கேட்டு-அருமறைப் பொருளை அறிவ்ர் உரைப்பக் கேட்டு; படிவம் ஒடியாது-அவர் உரைத்த விரதங்களை மேற்கொண்டு தவிராதொழுகி; உயர்ந்தோர் உவப்ப- அறிவு ஒழுக்கங்களால் உயர்ந்த நன்மக்கள் மனமகிழும்படி; வேள்வி வேட்டனை- வேள்விகளைச் செய்து முடித்தாய் எ-று
அருமறைப்பொருளை ஒருவர் தாமே கற்றுணர்தல் கூடாமையின், "கேள்வி கேட்டு" என்றார். கேள்வி, அருமறைப்பொருள்; கேட்டற்குரியது அதுவாகலின், கேட்ட பொருளை நடைமுறையில் தெளிந்து நல்லறிவு கைவரப் பெறுதற்கு விரத வொழுக்கம் வேண்டியிருத்தலால், "படிவ மொடியாது" என்றார். கேட்டவற்றை மனத்தால் ஒன்றியிருந் துணர்தற்குத் துணைசெய்வது படிவமென வுணர்க. வேள்விப்பயன் உயர் நிலை யொழுக்கத்துச் சான்றோர்க்கு உவகை பயப்பிப்ப தாதலால், "உயர்ந் தோருவப்ப வேள்வி வேட்டனை" யென்றார்."ஆன்ற கேள்வி யடங்கிய கொள்கை, நான்மறை முதல்வர் சுற்றமாக, மன்ன ரேவல் செய்ய மன்னிய, வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே" (புறம் 26) என்று பிறரும் கூறுதல் காண்க.
இனி, பழையவுரைகாரர், "கேள்வி கேட்டல்-யாகம் பண்ணுதற் குடலான விதி கேட்டல்; படிவம்-யாகம் பண்ணுதற்கு உடலாக முன்பு செலுத்தும் விரதங்கள். ஒடியாதென்பதை ஒடியாமல் எனத் திரிக்க" என்றும், "வேட்டனை என்றதனை வினையெச்சமுற்றாக்கி அவ்வினையெச் சத்தினை அருங்கடன் இறுத்த என்னும் வினையொடு கூட்டுக" என்றும்"உயர்ந்தோர் தேவ" ரென்றும் கூறுவர்.
22-28. அருங்கடன்..............படிமையானே
உரை: அருங்கடன் இறுத்த-இந் நிலவுலகத்து வாழ்வார்க்கு அரசராயினார் செய்தற்குரிய அரிய கடன்களைச் செய்து முடித்த; செருப்புகல் முன்ப- போரை விரும்பும் வலியினை யுடையோய்; நின்வயின் அன்னவை மருண்டனென் அல்லேன்-நின்பால் கேள்வியும் வேள்வியும் புதல்வற்பேறுமாகிய அவையிற்றைக் கண்டு வியப்புற்றே னல்லேன்;முழுதுணர்ந் தொழுக்கும் நரை மூதாளனை-உணரத் தகுவனவற்றை முழுதும் உணர்ந்து பிறர்க்கும் உணர்த்தி நன்னெறி யொழுகப்பண்ணும் நரையும் முதுமையுமுடைய புரோகிதனை; நின் படிமையான்-நீ மேற்கொண்டிருக்கும் தவ வொழுக்கத்தால்; வண்மையும் மாண்பும் வளனும் எச்சமும் தெய்வமும் யாவதும் தவம் உடையோர்க்கு என-கொடையும் குணவமைதியும் செல்வமும் மகப்பேறும் தெய்வவுணர்வும் பிறவும் முன்னைத் தவமுடையார்க்கே யுளவாவன என அறிவுறுத்தி; வேறுபடு தனந்தலை பெயரக் கூறினை-நாட்டின் வேறுபட்ட அகன்ற இடமாகிய காட்டிற்குத் தவங் குறித்துச் செல்லப் பணித்தனை.; பெரும-பெருமானே; இது கண்டன்றே யான் மருட்கை யெய்துவே னாயினேன் எ-று.
அருங்கடன் இறுத்த முன்ப, செருப்புகல் முன்ப என இயையும். மகப்பேற்றால் இவணரையும், வேள்வி வேட்டலால் உயர்தோரையும், ஓம்புதல்பற்றி"அருங்கடன் இறுத்த" என்றும், செருமேம்பட்டார்க் கன்றி இவ்வருங்கடன் எளிதில் இறுக்கலாகாமை தோன்ற, "செருப்புகல் முன்ப" என்றும் கூறினார். உயர் பொருளை யோதி யுணர்ந்தும் பிறர்க் குரைத்தும் தானொழுக வல்லவன் என்றற்குப் புரோகிதனை"முழுதுணர்ந் தொழுக்கும் நரைமூதாளனை" என்றார். நரைப்பும் முதுமையுமன்றி, வண்மையும் மாண்பு முதலாயின அவன்பால் பெருக உளவாதல் வேண்டிச் சேரமான் இரக்கங்கொண்டு அவற்றைப் பெறுமாறு அறிவுக்கொடை வழங்கினான் என்பார், "வண்மையும் மாண்பும் வளனும் எச்சமும் தெய்வமும் யாவதும் தவமுடையோர்க்கு என" அறிவுறுத்தினான் என்றார். எச்சம் புகழ்க்குரித்தாயினும், வண்மையும் மாண்பும் கூறவே அப் புகழும் அவற்றின்பால் அடங்குதலால் மக்கட்பேறாயிற்று. இனிப் பழையவுரைகாரர்" நரைமூதாளனை யென்றது புரோகிதனை" யென்றும்"நரைமூதாளனைக் கூறினை யெனக் கூட்டி அவனைச் சொல்வி யேவினையென ஒரு சொல் வருவித்து முடிக்க" என்றும், "மாண்பென்றது மாட்சிமையுடைய குணங்களை" யென்றும், "எச்சமென்றது பிள்ளப்பேற்றினை" யென்றும், "தெய்வமென்றது தம்மால் வழிபடும் தெய்வத்தினை: யென்றும், "தவமுடையோர்க்கெனச் சொல்லி யென்க" என்றும்"கூறினை யென் பது வினையெச்சமுற்" றென்றும்"வேறுபடு நனந்தலை யென்றது துறந்து போயிருக்கும் காட்டினை" யென்றும்."பெயர வென்றது அந்நரை மூதாளனைக் காட்டிலே பெயர வேண்டி" யென்றும் கூறுவர்.
புரோகிதன் சென்ற காட்டினை"வேறுபடு நனந்தலை" யென்றார், மூம்பொறிகளானும் ஆர நுகரும் நுகர்ச்சிக்கிடனாகும் நாட்டினும் அவற்றை யடக்குதற்குத் துணையாகும் சிறப்புப்பற்றி வேறுபடுதலின், சேரமான், இவ்வாறு தன் படிமையான் புரோகிதனைத் துறவு மேற்கொள்ளப் பணித்தமை நோக்கின், அப் புரோகிதன் ஆன்றவிந்தடங்கும் சால்பிற்குறை பட்டமையும், அதனை நிறைத்துக்கோடற்கு வேந்தன் கண்ணோடி வேறுபடு நனந்தலைப் பெயர்த்தமையும் பெற்றாம். இது கண்டன்றே யென்பது முதலாயின குறிப்பெச்சம்.
இதுகாறும் கூறியது: செருப்புகல் முன்ப, பெரும, தாழிருங் கூந் தலையும், நற்றோளையும், ஓதியையும், நுதலையும், திருவினையு முடைய நின் தேவியின் கருவிலே, இயல் முற்றி, அறிவு புரிந்து, அரசு துறை போகிய புதல்வற் பெற்றனை இவணர் பொருட்டு; உயர்ந்தோருவப்ப வேள்வி வேட்டனை; அன்னவை கண்டு மருண்டனெனல்லேன்; நரை மூதாளனை, நின்படிமையான், வேறுபடு நனந்லைப் பெயரக் கூறினை; இதுகண்டன்றே மருட்கை யெய்துவேனாயினேன் என்பதாம். இனிப் பழையவுரை, "வேட்டனை யென்றும் பெற்றனை யென்றும் நீ செய்த யாகங்களாகிய அன்னவையிற்றிற்கு யான் மருண்டேனல்லேன், நின்னை நல்வழி யொழுகுவித்து நின்ற நரை மூதாளனை நின்படிமையானே இல்லற வொழுக்கினை யொழி்த்துத் துறவற வொழுக்கிலே செல்ல ஒழுகுவித்தனை; அவ்வாறு செய்வித்த நின் பேரொழுக்கத்தையும் பேரறிவினையும் தெரிந்து யான் மருண்டேனென வினை முடிவு செய்க" என்று கூறும்.
"இதனாற் சொல்லியது, அவன் நல்லொழுக்கமும் அதற்கேற்ற நல்லறிவுடைமையும் கூறியவாறாயிற்று.
--------------
8.5. தீஞ்சேற்றியாணர்.
75.
இரும்புலி கொன்று பெருங்களி றடூஉம்
அரும்பொறி வயமா னனையை பல்வேற்
பொலந்தார் யானை யியறேர்ப் பொறைய
வேந்தரும் வேளிரும் பிறரும் கீழ்ப்பணிந்து
5 நின்வழிப் படாஅ ராயினென்மிக்கு) 5
அறையுறு கரும்பின் தீஞ்சேற்றி யாணர்
வருநர் வரையா வளம்வீங் கிருக்கை
வன்புலந் தழீஇய மென்பா றோறும்
மருபுல வினைஞர் புலவிகல் படுத்துக்*
10 கள்ளுடை நியமத் தொள்விலை கொடுக்கும் 10
வெள்வர குழுத கொள்ளுடைக் கரம்பைச்
செந்நெல் வல்சி யறியார் தத்தம்
பாடல் சான்ற வைப்பின்
நாடுட னாடல் யாவண தவர்க்கே.
இதுவுமது
பெயர்: தீஞ்சேற்றியாணர்.
1-3. இரும்புலி.........பொறைய.
உரை: பல் வேல் பொலந்தார் யானை இயல் தேர்ப் பொறைய-பலவாகிய வேற்படையும் பொன்னரிமாலை யணிந்த யானையும் இயலுகின்ற தேரு முடைய பெருஞ் சேரலிரும் பொறையே; இரும்புலி கொன்று-பெரிய புலியைக் கொன்று; பெருங் களிறு அடுஉம்-அதனாலும் சோர்வடையாது உடன் சென்று பெரிய யானையைக் கொல்லுகின்ற; அரும் பொறி வயமான் அனையை- அரிய வரிகளையும் வலியையுமுடைய அரிமாவினை ஒப்பாய்;
பெருங் களிற்றினும் இரும்புலி வலி மிகவுடைத்தாதலின், அதனைக் கொன்றும் சோர்வடையாதே இடையறவின்றிப் பெருங் களிற்றினையும் கொல்லும் பெருவலியுடைமை தோன்ற, "இரும்புலி கொன்று பெருங் களிறு அடூஉம்" என்றார். அரிமாவிற்குப் பொறையனையும் புலிக்கு ஏனை வேந்தரையும் பெருங்களிற்றுக்கு வேளிர் முதலாயினாரையும் கொள்க. பொலந்தார், பொன்னரிமாலை.
4-7வேந்தரும்........வீங்கிருக்கை.
உரை: வேந்தரும் வேளிரும் பிறரும் கீழ்ப்பணிந்து நின் வழிப் படாஅ ராயின்-முடிவேந்தரும் குறுநில மன்னரும் பிறரும் நின்னைக் கீழ்ப்பணிந்து நின் விருப்பின்வழி ஒழுகாராயின்; நெல் மிக்கு-நெல் மிக்கு விளைய; அறையுறு கரும்பின் தீஞ்சேற்று யாணர்-அதற் கிடையூறாக வளர்ந்து முற்றியிருத்தல்பற்றி வெட்டப்பட்ட கரும்பினது தீவிய சாறாகிய புது வருவாயினை; வருநர் வரையர வளம் வீங்கு இருக்கை-அவ்விடத்தே வருவோர்க்கு வரையாது வழங்கும் செல்வம் மிகுந்த இருக்கைகள் (ஊர்கள்) என்க. நெல்மிக்கு விளைதலால் அதனையும் கரும்பின் தீஞ் சேறு மேன்
மேலும் பெருகுதலால் அதனையும் வருவோர்க்கு வரையாது வழங்குப என்பதாம். அறையுறு கரும்பு, அறுத்தலைப் பொருந்திய கரும்பு; இறுத்தல் இறையென வருதல்போல, அறுத்தல் அறையென வந்தது; நெல்லுக்கு வேலியாக நட்ட கரும்பு மிக வளர்ந்து நெல்லின் வளர்ச்சியைக் கெடுத்தலால், அறுக்கப்பட்ட கரும்பு என்றற்கு"அறையுறு கரும்பு" என்றாரென்க. பழையவுரைகாரரும், "நெல்மிக்கு அறையுறு கரும் பென்றது நெல்லின்கண்ணே அந்நெல்லை நெருக்கி மிக எழுந்தமையானே அறுக்கலுற்ற கரும்பென்றவாறு" என்றும், "இனி அந்நெற்றான் கரும்பின் மிக எழுந்து அதனை நெருக்கினமையால் அந் நெல்லிற்கு இடமுண்டாக அறுத்த கரும்பு எனினுமாம்." என்றும் உரைப்பர். வரையாது வழங்கிய வழியும் வளம் குன்றாமைபற்றி, "வரையா வளம் வீங்கிருக்கை" என்றார். மிக்கு என்பதை மிகவெனத் திரிக்க.
--------------------
*அரும்பறை வினைஞர் புல்லிநல் படுத்து-பாட வேறுபாடு.
"தீஞ்சேறு இனிய பாகு" என்றும், யாணரென்றது அத்தீஞ்சேற்றது இடையற லின்மையை" என்றும், "இச் சிறப்பானே இதற்குத் தீஞ்சேற்றியாணர் என்று பெயராயிற்" றென்றும் பழையவுரைகாரர் கூறுவர்
நெல்லுக்கு வேலியாக நட்ட கரும்பு மிக வளர்ந்து அதன் வளர்ச்சிக்கு இடையூறாவது கண்டு அதனைத் தடிந்துபெற்ற தீஞ்சேற்றியாணரை வருநர்க்கு வரையாது வழங்குவரென்றது, குடி புறந்தாராது அவர்க்கு இடையூறு விளைக்கும் கொடுங்கோலரசை வென்று, அவர்பாற் பெற்ற பொருளை வருநர்க்கு வரையாது வழங்கும் சேரமானது நற்செயல் உள்ளுறுத் துரைத்தவாறு.
8-14 வன்புலம்................தவர்க்கே
உரை: வன்புலம் தழீஇய மென்பால் தோறும்-வன்னிலங்களைச் சாரவுள்ள மருத நிலங்கள் தோறும்; மருபுல வினைஞர்- வித்தியது முளையாத களர் நிலத்தே தொழிலினைச் செய்யும் மறவர்; புலவிகல் படுத்து-அம் மருத வயல்களைக் கோடல் குறித்து நிகழ்த்தும் மாறுபாட்டைக் கெடுத்தழித்து; கள்ளுடை நியமத்து ஒள்விலை கொடுக்கும்-அவர்பாற் பெற்றுக் கள் விற்கும் கடைகளில் கள்ளிற்கு விலையாகக் கொடுக்கும்; வெள்வரகு உழுத கொள்ளுடைக் கரம்பை-உழுதுவித்திய வெள்ளை வரகும் கொள்ளும் விளையும் கரம்பையாய் விடுதலால்; செந்நெல் வல்சி அறியார்-அவ்வரகும் கொள்ளு மல்லது செந்நெற்சோறு பெறாது வருந்துப வாகலின், அவர்க்கு-அவ் வேந்தர் முதலாயினார்க்கு; தத்தம் பாடல் சான்ற வைப்பின் நாடு-தத்தம்முடைய புலவர் பாடும் புகழ் அமைந்த ஊர்களையுடைய நாட்டை; உடன் ஆடல் யாவணது -ஒருங்கு ஆளுவது எங்ஙனம் கூடும். எ-று
எளிதில் உழுது வித்துதற்காகாத வன்னிலத்தைச் சார்ந்துள்ள மருத வயல்களை, "வன்புலந் தழீஇய மென்பால்" என்றார். மென்பாலில் நலல விளைவு உண்டாதலின் அதனைக் கோடற்கு ஏனை வன்புலத்து வாழும் மருநிலத்தார் விரும்பி முயல்ப வாதலாலும், அக்காலை மென்புலத்து வாழ்நர் அவரொடு பொருப வாதலாலும், அப்போரில் தோற்கும் மருபுல வினைஞர் தம்பால் உள்ள வரகும் கொள்ளும் தண்டமாகத் தருபவாதலாலும்"மருபுல வினைஞர் புலவிகல் படுத்து" என்றும், அத் தண்டப் பொருளும் கள்விலைக்கே பயன்படுகிறதென்பார்" கள்ளுடை நியமத்து ஒள்விலை கொடுக்கும் வெள்வர குழுத கொள்" என்றும் கூறினார். மரு புலம், களர்நிலம்."மருநில முழுததில் எரு மிகப்பெய்து,வித்திட்டாங்கே வினைபயன் கொள்ளச், சித்தத்துன்னும் மத்தர்போலவும்" (திருக்கழுமல மும்மணி 22: 16-18) எனப் பட்டினத்தடிகள் கூறுவது காண்க. வன் புலந் தழீஇய மென்பாலென்றலின், வன்புலத்தார் மென்புலத்தின் மேல் வழக்குத் தொடுப்பாராதலால், அதனைப்"புலவிகல்" என்றார். மென்புல வினைஞரால் புல்லியவாகக் கருதப்படும் வரகும் கொள்ளும் வன்புலத்தார்க்கு ஒண்பொருளாதலால், கள்ளிற்கு அவற்றை உயரிய பொருளாகக் கொடுப்ப ரென்பா், "ஒள்விலை கொடுக்கும்" என்றார். அவ்வளம் வீங்கு இருக்கைகள் வெள்வரகும் கொள்ளும் வித்தும் கரம்பையாய் விடுதலால்"வெள்வர குழுத கொள்ளுடைக் கரம்பை" யென்றார். கரம்பை யென்புழி ஆதலின் என ஒரு சொல் வருவிக்க. வளம் வீங்கிருக்கை, கரம்பையாதலின், என இயையும். நன்னிலங்களை யழி்த்துக் கழுதை யேர்பூட்டி வெள்வரகும் கொள்ளும் வித்துதல் பண்டையோர் முறை;"இருங்களந்தோறும், வெள் வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டி, வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும், வைகலுழவ" (புறம் 392) என்று சான்றோர் கூறுதல் காண்க. இவ்வாறு தாம் இருக்கும் இருக்கைகள் கரம்பையாய் விடுதலால், வேந்தர் முதலாயினார் செந்நெல் லுணவின்றி வறுமையுற்று வலிகுன்றின ரென்பார்"செந்நெல் வல்சி யறியார்" என்றும், எனவே, அவர்தம் நாட்டை இனிதாளுதல் இல்லை யென்றற்கு"நாடுடனாடல் யாவணதவர்க்கே" யென்றும் கூறினார்."பாடல் சான்ற வைப்பின் நாடு" என்றது, நாட்டின் நன்மை கூறி யிரங்கியது.
இதுகாறுங் கூறியது: பொறைய, நீ அரும்பொறி வயமான் அனையை; வேந்தரும் வேளிரும் பிறரும் கீழ்ப்பணிந்து நின் வழிப்படாராயின், அவருடைய வளம் வீங்கிருக்கை, கரம்பை யாதலின், செந்நெல் வல்சி யறியாராய்த் தத்தம் நாடுடனாடல் அவர்க்கு யாவணதாம் என்பதாம். இனிப் பழையவுரைகாரர், வன்புலந்தழீஇ யென்று பாடங்கொண்டு, அதனைக் கரம்பையொடு கூட்டி, இருந்து என ஒரு சொல் வருவித்து, வன்புலம் தழீஇ யிருந்து என்றும், மென்பால்தோறும் இருந்து என்றும், இயைத்து, "பொறைய, நீ புலி கொன்று களிறடூஉம் வயமான் அனையை; அதனால் வேந்தரும் வேளிரும் பிறரும் நின்னடிக்கீழ்ப் பணிந்து, தமக்குரிய மென் பால்கடோறும் இருந்து முன் பணிந்தவாற்றிற் கேற்ப நின்வழி யொழுகாராயின், அவர்கள் வெள்வரகுழுத கொள்ளுடைக் கரம்பையாகிய வன்பாலிலே கெட்டுப்போ யிருந்து ஆண்டு விளைந்த வெள்வரகு உண்பதன்றித் தாம் பண்டுண்ணும் செந்நெல் வல்சி உண்ணக் கிடையாதபடி மிடிபடுகின்றார்; தத்தம் நாட்டினை ஒருங்கு ஆளுதல் அவர்க்கு யாவணது என வினை முடிவு செய்க" என்பர்.
"இதனாற் சொல்லியது அவன் வென்றிச்சிறப்புக் கூறியவாறாயிற்று"
----------------------------
8.6. மா சித றிருக்கை.
76
களிறுடைப் பெருஞ்சமந் ததைய வெஃகுயர்த்
தொளிறு வாண்மன்னர் துதைநிலை கொன்று
முரசு கடிப்படைய வருந்துறைப் போகிப்
பெருங்கட னீந்திய மரம்வலி யுறுக்கும்
பண்ணிய விலைஞர் போலப் புண்ணொரீஇப் 5
பெருங்கைத் தொழுதியின் வன்றுயர் கழிப்பி
இரந்தோர் வாழ நல்கி யிரப்போர்க்
கீத றண்டா மாசித றிருக்கை
கண்டனென் செல்கு வந்தனென் கால்கொண்டு
கருவிவானந் தண்டளி சொரிந்தெனப் 10
பல்விதை யுழவிற் சில்லே ராளர்
பனித்துரைப் பகன்றைப் பாங்குடைத் தெரியல்
கழுவுறு கலிங்கங் கடுப்பச் சூடி
இலங்கு கதிர்த் திருமணி பெறூஉம்
அகன்கண் வைப்பி னாடுகிழ வோயே. 15
இதுவுமது.
பெயர்: மா சித றிருக்கை.
9-15 கால் கொண்டு........நாடுகிழ வோயே.
உரை; கருவி வானம் கால் கொண்டு தண்தளி சொரிந்தென-தொகுதி கொண்ட மழை மேகம் நாற்றிசையும் காலிறங்கித் தண்ணிய மழையைப் பெய்ததாக; பல் விதை உழவின் சில் ஏராளர்-மிகுதியாக விதைத்தற் கேற்பப் பரந்த உழு நிலங்களையுடைய சிலவாகிய ஏர்களையுடைய உழவர்; பனித்துறைப் பகன்றைப் பாங்குடைத் தெரியல்-குளிர்ந்த நீர்த் துறையிடத்தே மலர்ந்துள்ள பகன்றைப் பூவாற் றொடுத்த அழகுடைய மாலையை; கழுவுறு கலிங்கம் கடுப்பச் சூடி-வெளுக்கப்பட்ட வெள்ளாடை போலத் தலையிற் சூடிக்கொண்டு; இலங்கு கதிர்த் திருமணி பெறூஉம்-உழும் படைச்சாலிடத்தே விளங்குகின்ற கதிர்களையுடைய அழகிய மணிகளைப் பெறுகின்ற; அகன்கண் வைப்பின் நாடு கிழவோய்அகன்ற இடமுடைய ஊர்கள் பொருந்திய நாட்டுக்கு உரியோனே எ-று.
இடி, மின்னல், மழை முதலியவற்றின் தொகுதியாதல்பற்றி, "கருவி வானம்" எனப்பட்டது. மழை முகில் நாற்றிசையும் பரவுமிடத்துக் கால்விட் டிறங்குதல் கண்கூடாதலின்"கால்கொண்டு" என்றார். கால் கொண்டென்பதற்குப் பெய்தலைத் தொடங்கி யென்றலுமாம். விதையின் பெருமையை நோக்க, உழுதற்குரிய ஏர்கள் சிறியவாதல்பற்றி, "பல்விதை யுழவிற் சில்லேராளர்" என்றார்."அகல வுழுவதினும் ஆழ வுழுதல் வேண்டுமாதலால் அதற்கேற்ற பெருமையுடைய வாகாது சிறுமையுடைமைபற்றியே சில்லேராளர்" என்று கூறல் வேண்டிற்று. சின்மை, சிறுமை குறித்து நின்றது. பழையவுரைகாரரும், "சின்மையைச் சின்னூ லென்றதுபோல ஈண்டுச் சிறுமையாகக்கொள்க" என்றார். சில்லேராளர் உழுத படைச்சால் மிக ஆழமுடைத்தன் றாயினும், அதன்கண்ணும் அவர்கள் மிக்க விளைபயனே யன்றி உயரிய மணிகளைப் பெறுகின்றார்க ளென்பர், "சில்லேராளர் இலங்குகதிர்த் திருமணி பெறூஉம் நாடு" என்றார்.
பகன்றைமலர்க்கு வெளுத்த ஆடையை உவமை கூறுதலும், ஆடைக்கு அம்மலரை யுவமை கூறுதலும் சான்றோர் வழக்காகும்."போது விரி பகன்றைப் புதுமல ரன்ன, அகன்றுமடி கலிங்க முடீஇச் செல்வமும், கேடின்றி நல்குமதி பெரும" (புறம் 393) என்று நல்லிறையனார் என்னும் சான்றோர் கூறுதல் காண்க. பகன்றையைக் கண்ணியாகத் தொடுத் தணிதலே பெரும்பான்மை வழக்காதலின், தெரிய லென்றது கண்ணியெனக் கொள்ளப்பட்டது;"பகன்றைக் கண்ணிப் பல்லான் கோவலர்" (ஐங் 87) என்றும், "பகன்றைக் கண்ணிப் பழையர்" (மலைபடு.459) என்றும் வருதல் காண்க. சலவை செய்யப்பட்ட ஆடை யென்றற்குக்"கழுவுறு கலிங்கம்" என்றார். உயர்ந்த மணி யென்பார்"திருமணி" யென்றார். பெரு வருவாயுடைமை தோன்ற, அகன்கண் வைப்பின் நாடு என்று சிறப்பிக்கப்பட்டது.
இனிப் பழையவுரைகாரர், "தண்டளி சொரிந்தென ஏராளர் கதிர்த் திருமணி பெறூஉம் நாடு எனக் கூட்டி, மழை பெய்தலானே ஏராளர் உழுது விளைத்துக்கோடலே யன்றி உழுத இடங்கள்தோறும் ஒளியையுடைய திருமணிகளை யெடுத்துக் கொள்ளும் நாடென வுரைக்க" என்றும்"பல்விதை யுழவின் சில்லேராள ரென்றது பல விதை யுழவாற் பெரியாராயினும் தம் குலத்தானும் ஒழுக்கத்தானும் சிறிய ஏராள ரென்றவா"றென்றும், "பகன்றைத் தெரியல் கழுவுறு கலிங்கம் கடுப்பச் சூடித் திரு மணி பெறூஉம் எனக் கூட்டி, பகன்றைமாலையைக் கழுவுறு கலிங்கம் ஒப்பச் சூடிக்கொண்டு நின்று திருமணிகளை யெடுக்குமென வுரைக்க" என்றும் கூறுவர்.
1-9 களிறுடைப் பெருஞ் சமம்........வந்தனென்
உரை: களிறு உடைப் பெருஞ்சமம் ததைய-களிறுகளைக் கொண்டு செய்யும் பெரிய போர் கெடுமாறு; எஃகு உயர்த்து- வேலும் வாளும் ஏந்திச் சென்று; ஒளிறு வாள் மன்னர் துதை நிலை கொன்று-விளங்குகின்ற வாளையுடைய பகை மன்னர் தம்மிற் கூடிநின்று பொரும் போர் நிலையைக் கொன்றழித்து; முரசு கடிப்பு அடைய-வெற்றி முரசை அதன் கடிப்பு அறைந்து முழக்க;
அருந்துறை போகி-செய்தற்கரிய போர்ச் செயற்குரிய துறை முற்றவும் தடை போகச் சென்று; பெருங்கடல் நீந்திய மரம் வலியுறுக்கும் பண்ணிய விலைஞர்போல-பெருங் கடலைக் கடந்து சென்று மீளுதலால் பழுதுற்ற மரக்கலத்தின் பழுது போக்கி்ப் பண்டுபோல வலியுடைத்தாக்கும் கடல் வாணிகர்போல; பெருங்கைத் தொழுதியின் புண்ணொஇ வன்துயர் கழிப்பி-பெரிய கையையுடைய யானைக்கூட்டம் உற்ற போர்ப்புண்களை ஆற்றி அவற்றால் அவை துன்புற்ற வலிய துயரத்தையும் போக்கி; இரந்தோர் வாழ நல்கி-முற்போதில் வந்து இரந்தவர் வறுமை நீங்கி வாழுமாறு கொடுத்து; இரப்போர்க்கு-பிற்போதில்வந்து இரப் போருக்கும்; ஈதல் தண்டாத-ஈதலின் குன்றாத; மா சிதறு இருக்கை-குதிரைகளை வரையாது வழங்கும் நின் பாசறை இருப்பினை; கண்டனென் செல்கு வந்தனென்-கண்டுபோவான் வந்தேன் எ-று.
களிறுடைமை போர்க்குப் பெருமை தருதலின், "களிறுடைப் பெருஞ் சமம்" என்றார்."யானை யுடைய படைகாண்டல் முன்னினிதே" (இனி 40. 5) என்று சான்றோர் கூறுதல் காண்க. ததைதல், கெடுதல்;"வேலுடைக் குழூஉச் சமந் ததைய நூறி" (பதிற் 66) எனப் பிறரும் கூறுதல் காண்க. துதை நிலை, கூடியிருக்கும் அணிவகுப்பு; அணி நிலையை யழித்த வழி, வீரர் படையும் பிற படைகளும் ஒழுங்கின்றித் தாறுமாறாய்ச் சிதறி எளிதில் அழிவ ராதலின், "துதை நிலை கொன்று" என்றார். சிதைத் தென்னாது"கொன்" றென்றார். மறுவலும் துதைந்து நிலைபெறா வகையில் அழித்தமை தோன்ற. முரசு கடிப்பு அடைய என்றது, முரசு முழங்க என்றவாறு. போர்முறை வெட்சி முதலாகப் பல் வகைப்படுதலின், "அருந்துறை போகி" என்றார். பெருங்கடலைப் பகைவர் படைக்கும், மரக்கலத்தைக் களிற்றுத் தொழுதிக்கும், பண்ணிய விலைஞரைச் சேரமான் வீரருக்கும் உவமமாகக் கொள்க. பெருங் காற்றும் பேரலையும் மோதுதலால் கட்டுத்தளர்ந்த கலத்தை, கரைசேர்ந்ததும் கட்டுடைத் தாக்கி வலியுறுத்தல் கலஞ் செலுத்துவோர்க்கு இன்றியமையாச் செய்தியாகும். பெருங் கடல் நீந்திய மரமென்றது மரக்கலத்தை. பல்வேறு பண்டங்களையும் கலத்திற் கொண்டு வேறு நாடு சென்று விற்றுப் பொருளீட்டுதல்பற்றிக் கலத்திற் செல்லும் கடல் வாணிகரைப்"பண்ணிய விலை ஞர்" என்றார். யானைகட்குப் போரிலுண்டாகிய புண்ணால் மிக்க துயருண்டாவதை யறிந்து புண்ணை யாறறு முகத்தால் துயர் போக்குதலால், "புண்ணொரீஇ வன்றுயர் கழிப்பி" யென்றார். வன்றுயர் என்றதனால், உற்ற புண் பெரும் புண்ணென் றறிக. இரந்தோர் இரப்போர் என இறப்பினும் எதிர்வினும் கூறியதனால் முற்பொழுது பிற்பொழுது கொள்ளப் பட்டன. முற்பொழுது வந்திரந்தோர் களிறு பெற்றுச் சென்றமையின், பிற்பொழுது வருவோர்க்குத் குதிரைகளை வழங்கலானா னென யுணர்க; எண்ணிறந்தன வாதலின், குதிரைகளைச் சிதறினான் என்றார்; இவை பகைவரிடத்தே பெற்றனவாம். இனி, பழையவுரைகாரரும், "மா சிதறிருக்கை யென்றது பகைவரிடத்துக் கொள்ளப்பட்ட மாக்களை வரையாது அளவிறக்கக் கொடுக்கும் பாசறை யிருக்கை யென்றவாறு" என்றும்"இச் சிறப்பானே இதற்கு மாசித றிருக்கை யென்று பெயராயிற்" றென்றும் கூறுவர்.
இதுகாறும் கூறியது: வானம் தளி சொரிந்தெனச் சில்லே ராளர் பகன்றைத் தெரியல் கலிங்கம் கடுப்பச் சூடித் திருமணி பெறூஉம் அகன்கண் வைப்பின் நாடு கிழவோய், பெருஞ் சமம் ததைய எஃகுயர்த்து, மன்னர் துதைநிலை கொன்று, அருந்துறை போகி, பண்ணிய விலைஞர்போலப் பெருங்கைத் தொழுதியின் புண்ணொரீஇ வன்றுயர் கழிப்பி, இரந்தோர் நல்கி, இரப்போர்க்கு ஈதல் தண்டா மாசித றிருக்கை கண்டனென் செல்கு வந்தனென் என்பதாம். பழையவுரைகாரர், "நாடு கிழவோய், மன்னர் பெருஞ் சமம் ததைய எஃகுயர்த்து அம் மன்னர் பலர் கூடிச் செறிந்த நிலைமையைக் கொன்று அருந்துறை போகிக் கடலை நீந்தின மரக்கலத்தினை அழிவு சேராது வலியுறுக்கும் பண்டவாணிகரைப் போலக் கைத்தொழுதியின் புண்ணை ஒருவுவித்து வலிய துயரைக் கழித்துப் போரிடத்து வினையிலிருத்தலே விநோதமாகக் கொண்டு இரந்தோர்வாழ நல்கிப் பின்னும் இரப்போர்க்கு ஈதலின் மாறாத மா சிதறிருக்கையைக் கண்டு போவேன் வந்தேன் எனக் கூட்டி வினை முடிவு செய்க" என்பர்.
"இதனாற் சொல்லியது அவன் வென்றிச்சிறப்பும் கொடைச் சிறப்பும் கூறியவாறாம்"
--------------------
8.7. வென்றாடு துணங்கை.
77
எனைப்பெரும் படையனோ சினப்போர்ப் பொறையன்
என்றனி ராயி னாறுசெல் வம்பலிர்
மன்பதை பெயர வரசுகளத் தொழியக்
கொன்றுதோ ளோச்சிய வென்றாடு துணங்கை
மீபிணத் துருண்ட தேயா வாழியிற் 5
பண்ணமை தேரு மாவு மாக்களும்
எண்ணற் கருமையி னெண்ணிண்றோ விலவே
கந்துகோ ளீயாது காழ்பல முருக்கி
உகககும் பருந்தி னிலத்துநிழல் சாடிச்
சேண்பரன் முரம்பி னீர்ம்படைக் கொங்கர் 10
ஆபரந் தன்னபல் செலவின்
யானைகாண் பலவன் றானை யானே.
துறை: உழிஞை யரவம்
வண்ணமும் தூக்கும் அது
பெயர்: வென்றாடு துணங்கை.
1-2. எனைப் பெரும் படையனோ................வம்பலிர்
உரை: ஆறு செல் வம்பலிர்-இவ்வழியே செல்லும் புதுவோர்களே; சினப் போர்ப் பொறைன்-சினத்துடன் போரை வெற்றியுண்டாகச் செய்யும் பெருஞ் சேரலிரும் பொறை; எனைப்பெரும் படையனோ என்றனிராயின்-எத்துணைப்பெரிய படையையுடையவனோ என்று கேட்கின்றீராயின், கூறுவல் கேண்மின் எ-று.
வம்பலர், புதுவேர்."ஆரும் அருவும் ஈரொடு சிவணும" (சொல் விளி. 21) என்றதனால், வம்பலிர் என வந்தது. இரந்தோர்க்கு எண்ணிறந்த களிறுகளையும் இரப்போர்க்கு அளவிறந்த மாக்களையும் சிதறுதலைக் காண் போர்க்கும், செல்லுமிடந்தோறும் வெற்றியே பெறக் காண்போர்க்கும் பொறையனது படைப் பெருமை யிதற்கு வேட்கை நிகழு மாதலின், "எனைப் பெரும் படையனோ என்றனிராயின்" என்றார். எனைப் பெரும் படையனோ என்றது வம்பலர் கூற்றினைக்கொண்டு கூறியது. சினத்தின் விளைவு போரும், அப் போரின் விளைவு வென்றியு மாதலின், "சினப் போர்ப் பொறையன்" என்று சிறப்பித்தார். கூறுவல் கேண்மின் என்பது எஞ்சி நின்றது.
3-7.
மன்பதை........சிலனே
உரை: மன்பதை பெயர-பகைப்படையிலுள்ள வீரர் அழிந்தோடவும்; அரசு களத் தொழிய-பகையரசர் போர்க்களத்தே பட்டு விழவும்; கொன்று-அப்பகைவரைக் கொன்று; தோளோச்சிய வென்றாடு துணங்கை-தோளை யுயர்த்திக் கைவீசியாடிய வென்றாடு துணங்கையினை யுடையராய்ப் பட்டு வீழ்ந்த; மீபிணத்து-அவர் பிணத்தின்மீது; உருண்ட தேயா ஆழியின்- உருண்டோடிய வாய் தேயாத சக்கரத்தையுடைய; பண்ணமை தேரும்-கடுகிச் செல்லுதற் கேற்பப் பண்ணுதலமைந்த தேர்களும்; மாவும் மாக்களும்-குதிரைகளும் காலாட்களும்; எண்ணற் கருமையின்-எண்ண முடியாத அளவிலமைந்திருத்தலால்; எண்ணின்றோ விலன்-எண்ணிற்றிலேன் எ-று
பகைவர் படைவீரரை மன்பதை (Mob) யென்றார்; வீரர் எனப்படற்குரிய அழியாமை அவர்பால் இன்மையின். உயிர் நீங்கியவழி அரச போகமும் பிறவும் ஒழிதலின், "அரசு களத்தொழிய" வென்றார். வீரர் போரில் பகைவரை வென்று அப்போர்க்களத்தே கையை வீசித் துணங்கையாடித் தம்வென்றி மகிழ்ச்சியால் இன்புறுப வாதலின் , அக் கூத்தினை"வென்றாடு துணங்கை" யென்றார். பழையவுரைகாரர், "வென்றாடு துணங்கைப் பிணம்" என்றது ஊர்களிலே யாடும் துணங்கை யன்றிக் களங்களிலே வென்றாடின துணங்கையையுடைய பிணம் என்றவா" றென்றும், "இச் சிறப்பானே இதற்கு வென்றாடு துணங்கை யென்று பெயராயிற்றென்றும் கூறுவர். அரசு களத்தொழிய வென்றதற்குப் பழையவுரைகாரர்"அரசைக் களத்திலே உடலொழிந்து கிடக்கக் கொன்றவா" றென்றும், "கொன்று தோளோச்;சிய பிணம் எனக் கூட்டி, முன்பு தம்முடன் பகைத்த வரைக் கொன்று தோளோச்சி யாடி இப்பொழுது இவன் களத்திற் பட்டுக் கிடக்கின்ற வீரர் பிணமென அவ் வீரர் செய்தியை அப் பிணத்தின் மேலேற்றிச் சொல்லியவாறாக வுரைக்க" என்றும், "மீ பிணத்தைப் பிணமீயெனக் கொள்க" என்றும் கூறுவர். எண்ணிற்றோ வெனற்பாலது மெலிந்து நின்றது.
8-12. கந்து..................தானையானே.
உரை: கந்;து கோளீயாது-கட்டுத் தறியோடு பிணிப்புண்டற்கு இடந்தராது; காழ்பல முருக்கி-குத்துக்கோல பலவற் றையும் சிதைத்து; உகக்கும் பருந்தின் நிலத்து நிழல் சாடி- உயர்ந்து பறக்கும் பருந்தினது நிலத்திடத்தே வீழும் நிழலைச் சினந்து பாயும்;சேண்பரல் முரம்பின்-சேணிடமெங்கும் பரந்த பருக்கைக் கற்களையுடைய முரம்பு நில்திலே; ஈர்ம்படைக் கொங்கர் ஆ பரந்தன்ன-ஈரிய படையினையுடைய கொங்கருடைய ஆனிரைகள் பரந்து செல்வதுபோன்ற; செலவின் பல்யானை-செல வினையுடைய பலவாகிய யானைகளை; அவன் தானையான்-அவனுடைய தானையிலே; காண்பல்-காண்கின்றேனேயன்றி அவை இத்துணை யென்று அறிந்திலேன் எ-று
கந்தினிடத்தே பிணித்தற்கு அடங்காது அக் கந்தினை முறித் தழித்தல் பற்றி, "கந்து கோளீயாது" என்றும் குத்தப்படும் குத்துக்கோல் அவ் யானைகளின் உடலிற் பட்டு ஊடுறுவும் வலியின்மையின் சிதைந்து போவது தோன்ற, " காழ்பல முருக்கி" யென்றும், பொருளல்லாத நிழலையும் பகைப் பொருளாகக் கருதிச் சினவுதற் கேற்ற மதக் களிப்புடைமைபற்றி"உகக்கும் பருந்தின் நிலத்து நிழல் சாடி" யென்றும் கூறினார். பிணிப் புண்ணா தென்னும் பொருட்டாய"கோளீயாது" என்னும் எதிர்மறை வினையெச் சத்திரிசொல் முருக்கி, சாடி யென்னும் எச்ச வினைகளுடன் அடுக்கி நின்று"செலவின்" என்பதைக் கொண்டு முடிந்தன. உகத்தல், உயர்தல்.
கண்ணுக் கெட்டிய வளவும் பால் நிறைந்த முரம்பு நிலமே காணப் படுதல் பற்றி, "சேண் பரல் முரம்பு" என்றும் நீர் வேண்;டிக் கூவல் முதலியன தோண்டுதற்குரிய குந்தாலி முதலிய படைகளை"ஈர்ம்படை" யென்றும் கூறினார். கொங்கர் ஆக்கள் பலவுடைய ரென்பதை"ஆ கெழு கொங்கர்" (பதிற் 22) என்று பிறரும் கூறுதல் காண்க. யானைக் கூட் டத்தின் மிகுதியினை ஆளிரைக் கூட்டத்தை யுவமங் காட்டி யுரைத்தல் மரபு;"எருமையன்ன கருங்கல் லிடைதோ, றானிற் பாக்கும் யானைய" (புறம் 5) என்று சான்றோர் உரைப்பது காண்க.
"பல் யானை காண்பல்" என்றதனால் அவற்றை இத்துணையென யெண்ணற் கருமை பெறப்பட்டது.
இதுகாறும் கூறியது: ஆறு செல் வம்பலிர், சினப் போர்ப் பொறையன் ஏனைப் பெரும் படையனோ என்றனிராயின், அவனுடைய தேரும் மாக்களும் எண்ணற் கருமையின் எண்ணின்றோ விலன்; அவன் தானையிலே கொங்கர் ஆபரநன்ன செலவின் பல் யானை காண்பல்; அவற்றையும் இத்துணைய வென்று எண்ணிற்றிலேன் என்பதாம். இனி பழையவுரைகாரர், "வம்பலிர், பொறையன் எனைப் பெரும் படையன் எ்னறனிராயின் அவன் தானையிடத்துத் தேரும் மாவும் மாக்களும் எண்ணற் கருமையின் எண்ணிற்றிலன்; ஆயின், அவன் தானையின் யானை தான் எண்ணினையோ வெனின் அதுவும் எண்ணினேனல்லேன்; கட்புலனுக்கு வரையறைப்பட்டதுபோல ஆபரந்தாலொத்த செலவிற் பல யானையை அவன் தானையானே காண்பல் எனக் கூட்டி வினை முடிவு செய்க, " என்பர்
"இதனாற் சொல்லியது அவன் படைப் பெருமைச் சிறப்புக் கூறியவாறாயிற்று"
"இப்பாட்டிற் பொதுப்படப் படையெழுச்சி கூறியதனை உழிஞையரவ மென்றது, ஆண்டு அப்படை யெழுங் காலத்து நொச்சி மீதிற் போர் குறித்தெழுந்ததை ஒரு காரணத்தால் அறிந்துபோலும், " என்று பழையவுரை கூறியது ஆராயத்தக்கது.
------------
8.8. பிறழ நோக்கியவர்.
78
வலம்படு முரசி னிலங்குவன விழூஉம்
அவ்வெள் ளருவி யுவ்வரை யதுவே
சில்வளை விறலி செல்குவை யாயின்
வள்ளளிதழ்த் தாமரை நெய்தலொ டரிந்து
மெல்லியன் மகளி ரொல்குவன ரியலிக் 5
கிளிகடி மேவலர் புறவுதொறு நுவலப்
பல்பய னிலைஇய கடறுடை வைப்பின்
வெல்போ ராடவர் மறம்புரிந்து காக்கும்
வில்பயி லிறும்பிற் றகடூர் நூறி
பேஎம மன்ற பிறழ நோக்கியவர் 10
ஓடுறு கடுமுரண் டுமியச் சென்று
வெம்முனை தபுத்த காலைத் தந்நாட்
டியாடுபரந் தன்ன மாவின்
ஆபரந் தன்ன யானையோன் குன்றே.
துறை: விறலியாற்றுப்படை
பெயர்: பிறழ நோக்கியவர்.
3 சில்வளை............யாயின்
உரை: சில்வளைவிறலி-சிலவாகிய வளைகளை யணிந்த விறலியே; செலகுவையாயின்-பெருஞ்சேரல் இரும்பொறைபால் செல்ல விரும்பினையாயின்.
விறலியைச் சேரமானிடத்தே ஆற்றுப்படுக்கின்றாராதலின், சில்வளை விறலியெனச் சிறப்பித்தார். விறல்படப் பாடியாடு மகளாதலின், ஆடுமிடத்து வளைபலவாய வழி ஒன்றினொன்று தாக்கியுடையுமாதலால் சிலவேயணிதல் அவட்கு இயல்பு என அறிக; இனி, பல்வளையிடும் பருவத்தாளல்லளென்பது தோன்ற இவ்வாறு கூறினாரென்றுமாம். சேரமான்பால் செல்லும் கருத்துடையளாதலைச் சொல்லாலும் குறிப்பாலும் தெரிவித்தாளாதலால், "செல்குவையாயின்" என்றார்.
4-14 வள்ளிதழ்..................குன்றே.
உரை: மெல்லியல் மகளிர் ஒல்குவனர் இயலி-மெல்லிய இயல்பினையுடைய மகளிர் அசைந்து நடந்து மருத வயற்குச் சென்று; வள்இதழ்த் தாமரை நெய்தலொடு அரிந்து-வளவிய இதழ்களையுடைய தாமரைப் பூவையும் நெய்தற் பூவையும் கொய்து கொண்டு; புறவுதொறும் கிளி கடி மேவலர்; நுவல-முல்லைப் புலத்துக்குச் சென்று ஆண்டுள்ள புனந்தோறும் வந்து படியும் கிளிகளை யோப்பும் விருப்புடையராய்க் கிளி கடி பாட்டைப்பாட; பல்பயன் நிலைஇய கடறுடை வைப்பின்-பல்வகைப் பயன்களும் நிலைபெற்ற காட்டிடத்து ஊர்களையும்; வெல்போர் ஆடவர் மறம் புரிந்து காக்கும் வில் பயில் இறும்பின்-வெல்லுகின்ற போரையுடைய வீரர் மறமே விரும்பிக் காத்தற் றொழிலைச் செய்யும் விற்படை நிரம்பிய காவற் காட்டையுமுடைய; தகடூர் நூறி - தகடூரை யழித்து; பேஎம் அமன்ற பிறழ நோக்கு இயவர்-கண்டார்க்கு அச்சத்தை யுண்டுபண்ணும் பகைவரைப் பிறழ்ந்து நோக்கும் பார்வையினையும் பல இயங்களையுமுடைய பகை வீரருடைய; ஓடுறு கடுமுரண் துமியச்சென்று-தம்மோடு எதிர்த்தார் தோற்றோடுதற்குக் காரணமான வலி கெடுமாறு மேற்சென்று; வெம்முனை தபுத்த காலை-அவரது கொடிய போர் முனையைப் பொருதழித்த காலத்து; தம்நாட்டு யாடு பரந்தன்னமாவின்-அப் பகைவர் நாட்டிலே ஆடுகள் பரந்தாற்போலப் பரந்து தோன்றும் குதிரைகளையும்; ஆ பரந்தன்ன யானையோன் குன்று-ஆக்கள் பரந்தாற் போலப் பரந்து தோன்றும் யானைகளையு முடையனாகிய சேரமானது குன்று;
இயல்பாகவே மென்மைத்தன்மையும் அதனால் அசைந்த நடையு முடையவராதலின் மகளிரை, "மெல்லியல் மகளிர் ஒல்குவன ரியலி" யென்றார். தாமரையும் நெய்தலும் அரிந்தமை கூறியதனால், மருதவயல் பெறப்பட்டது. ஒடு, எண்ணொடு. அண்மையிலே முல்லைப்புறவு மிருத்தலின், மருதநிலஞ் சென்ற மகளிர் உடனே முல்லைப்புறவு சேறலையும் கூறினார். புறவு சேறற்குக் காரணம் இஃதென்பார், "கிளிகடி மேவலர்" என்றார். முல்லை முதலிய நானிலப்பயனும் ஒருங்குபெறுமாறு தோன்ற, பல்பயன் நிலைஇய கடறுடை வைப்பின்" என்றார். இனிப் பழையவுரைகாரர், "மகளிர் இயலி நெய்தலொடு தாமரை யரிந்து கிளிகடி மேவலர் புறவுதொறும் நுவலப் பல்பயன் நிலைஇய கடறு எனக் கூட்டிக் கிளிகடி மகளி்ர் நிலவணுமை யானே மருதநிலத்திலே சென்று நெய்தலொடு தாமரை யரிந்து, பின் கிளிகடி தொழிலை மேவுதலையுடையராய்ப் புறவின் புனங்கடோறும் கிளிகடி பாடலை நுவலப் பல்பயங்களும் நிலைபெற்ற முல்லை நிலமென வுரைக்க" என்றார்.
வைப்பினையும் இறும்பினையுமுடைய தகடூரென இயையும்."வைப்பின் தகடூர் எனக் கூட்டுக" என்றும், "ஆடவர் காக்கும் இறுப்பெனக் கூட்டுக" வென்றும் பழையவுரைகாரர் கூறுவர். வில்பயில் இறும்பு, வில்லேந்திய வீரர்படை யிருக்கும் இறும்பு. பேஎம், அச்சம். கண்டார்க்கு அச்சத்தை யுண்டுபண்ணும் பார்வையினையுடைய வீரர். பகைவரை நேரே நோக்காது எடுத்தும் படுத்தும் கோட்டியும் பார்க்கும் இயல்புபற்றி, "பிறழ நோக்கியவ"ரென்றார் ;பழையவுரைகாரரும்"பிறழ நோக்கியவ ரென்றது, தம் சினமிகுதியானே மாற்றார் படைத் தோற்றத்தினை நெறியால் நோக்காது எடுத்தும் படுத்தும் கோட்டியும் பலபடப் பிறழ நோக்கும் பகைவராகிய பல்லிய முடையாரென்றவா, " றென்றும், "இச் சிறப்பானே இதற்குப் பிறழ நோக்கியவரென்று பெயராயிற்"றென்றும் கூறுவர். நெறியால் நோக்கிய வழி, படையிலுள்ளாரிற் பலர் இனியரும் நெருங்கிய முறையினருமாய்க் காணப்படுவரென்றும், அக்காலை யவர்பால் கண்ணோடுமாயின் மறம் வாடுமென்றும் கருதிப் பிறழ நோக்குது வீரர்க்கு இயல்பாகலினாலும் அப்பிறழ்ச்சி நோக்கிற்கு ஆண்டு இயம்பும் இயங்கள் துணையாகலினாலும் படைவீரரைப்"பிறழ நோக்கியவர்" என்றார். இச் சிறப்பாலே இத் தொடர், இப்பாட்டிற்குப் பெயராயிற்றெனக் கோடல் சீரிதென வறிக. பிறழ்ச்சி நோக்கம் கண்டார்க்கு அச்சம் பயக்கும் தன்மைகள் நிறைந்திருத்தல் பற்றிப்"பேஎம் அமன்ற" என்றாரென்க. இனி, இவ்வியவரது வலிநிலை கூறுவர்"ஓடுறு கடுமுரண்" என்றார். இவ்வியவர் தகடூரைக் காத்துநின்ற பகைவீரர். அப் பகைவர் கொங்கராதலால், அவர்பால் உள்ள யாடுகளின் பன்மையும் ஆக்களின் பன்மையும் உணர்த்துவார், "தந்நாட்டு யாடு பரந்தன்ன மாவின்" என்றும், "ஆபரந்தன்ன யானை"யென்றும் கூறினார். பழையவுரைகாரர்"மாவினொடு வென ஒடுவிரித்துமுனை தபுத்தகாலை மாவினொடு ஆ பரந்தன யானையோன் என வினைமுடிவு செய்க" என்றார்.
1-2. வவலம்படு...........யதுவே.
உரை: உவ்வரை - உவ்வெல்லையில் உள்ள; வலம்படு முரசின் - வெற்றியிடத்து முழங்கும் முரசுபோல; இலங்குவன விழூஉம் அவ் வெள்ளருவி அது - முழக்கமும் விளக்கமு முடையவாய் வீழ்கின்ற அழகிய வெள்ளிய அருவிகளையுடைய அதுவாகும் எ-று
வரை, எல்லை. தோன்றுகின்ற குன்றுகளில் உயர்ந்து அருவிகளை யுடைத்தாய்த் தோன்றும் குன்றினை"அது" எனச் சுட்டிக் காட்டுகின்றா ராதலின், "உவ்வரை அவ் வெள்ளருவி யதுவே" என்றார். பெருமுழக்கம் எழுதலின், வெற்றி முரசினை யுவமம் கூறினார்."வலம்படு முரசு" எனவே வெற்றி முரசாதல் பெற்றாம். விளக்கம் கூறவே முழக்க முண்மை பெறப்பட்டது,
இதுகாறும் கூறியவாற்றால், "சில்வளை விறலி, செல்குவையாயின் யானையோன் குன்று உவ்வெல்லையில் வெள்ளருவியையுடைய அது என மாறி்க் கூட்டி வினைமுடிவு செய்க"
இதனாற் சொல்லியது அவன் வென்றி்ச் சிறப்புக் கூறியவாறாயிற்று.
-----------------
8.9. நிறம்படு குருதி.
79
உயிர்போற் றலையே செருவத் தானே
கொடை போற் றலையே யிரவலர் நடுவண்
பெரியோர்ப் பேணிச் சிறியோரை யளித்தி
நின்வயிற் பிரிந்த நல்லிசை கனவினும்
பிறர் நசை யறியா வயங்குசெந் நாவின் 5
படியோர்த் தேய்த்த வாண்மைத் தொடியோர்
தோளிடைக் குழைந்த கோதை மார்ப
அனைய வளப்பருங் குரையை யதனால்
நின்னொடு வாரார் தந்நிலத் தொழிந்து
கொல்களிற் றியானை யெருத்தம் புல்லென 10
வில்குலை யறுத்துக் கோலின் வாரா
வெல்போர் வேந்தர் முரசுகண் போழ்ந்தவர்
அரசுவா வழைப்பக் கோடறுத் தியற்றிய
அணங்குடை மரபிற் கட்டின்மே லிருந்து
தும்பை சான்ற மெய்தயங் குயக்கத்து 15
நிறம்படு குருதி புறம்படி னல்லது
மடை யெதிர் கொள்ளா வஞ்சுவரு மரபிற்
கடவு ளயிரையி னிலைஇக்
கேடில வாக பெருமநின் புகழே.
துறை: செந்துறைப் பாடாண்பாட்டு
வண்ணமும் தூக்கும் அது.
பெயர்: நிறம்படு குருதி.
1-8. உயிர்.............குரையை
உரை: வயங்கு செந் நாவின் - மெய்ம்மை மொழியால் விளக்கம் பொருந்திய செவ்விய நாவினையும்; படியோர் தேய்த்த ஆண்மை - வணங்காதாரை வலியழித்த ஆண்மையினையும்; தொடி யோர் தோளிடைக் குழைத்த கோதை மார்ப - தொடியணிந்த மகளிர் தோளைக் கூடுதலால் குழைந்த மாலை யணிந்த மார்பையுமுடைய வேந்தே; செருவத்தான் உயிர் போற்றலை - போரிலே நீ உயிரைப் பொருளாகக் கருதிற்றிலை; இரவலர் நடுவண் கொடை போற்றலை - பரிசில் வேண்டிவரும் இரப்போர் கூட்டத்திலே கொடுக்குஞ் செயலில் எதனையும் என்றும் வரைதலை யறியாய்; பெரியோர்ப் பேணிச் சிறியோரை அளித்தி - பெரியோர்களைத் தமராகப் பேணிக்கொண்டு ஆற்றலாற் சிறியராயினாரையும் புறக் கணியாது அருள் செய்கின்றாய்; பிரிந்த நின் வயின் நல்லிசை- எல்லாத் திசையினும் சென்று பரவியிருக்கும் நின் நல்ல புகழ்கள்; கனவினும் பிறர் நசை யறியா - கனவிலும் தம்மை விரும்பும் பிறரை விரும்பிச் செல்லாவாயின; அனைய அளப்பருங் குரையை - அத் தன்மையவாகிய அளத்தற்குரிய குணஞ் செயல்களை யுடையையா யிருக்கின்றாய். எ--று.
நாவிற்கு விளக்கம், தான் வழங்கும் மெய்ம்மை மொழியாலும், செம்மை, யாதொன்றும் தீமையிலாத சொல்லுதலாலுமாதலின்"வயங்கு செந்நாவின்" என்றார். படியார், படியோரென நின்றது; படியார், வணங்காதார்;"படியோர்த் தேய்த்த பணிவிலாண்மை*" (மலைபடு. 423) என்று பிறரும் கூறுதல் காண்க. படிதல், வணங்குதல்."படியோ ரென்றது பிரதியோரென்னும் வடமொழித்திரிவு" (அகம். 22) என அக நானூற்று அரும்பதவுரைகாரர் கூறியது சொன்னிலை யுணராது கூறியதாகலின் பொருந்தாமை யறிக. மகளிர் முயக்கிடை மார்பிலணிந்த தாரு மாலையுங் குழையுமாதலின்" தொடியோர் தோளிடைக் குழைந்த கோதை மார்ப" என்றார்;"காதல் கொள்ளாப் பல்லிருங் கூந்தல் மகளிர் ஒல்லாமுயக்கிடைக் குழைக வென்தாரே" (புறம்-73) எனச் சோழன் நலங்கிள்ளி கூற்றாலும் ஈதறியப்படும்
செரு, அம்முப்பெற்றுச் செருவமென வந்தது. செருவின்கண் பிறக்கும் புகழ்மேற் சென்ற வேட்கையால் உயிரைப் பொருளாகக் கருதிற்றிலனாதலால், " உயிர் போற்றலையே செருவத்தானே" என்றார்.
-----------
* மறவேந்தர்க்குப் படிமையாவது **ஓட்டாத பகைவரை வணங்கிப் பின்னில்லாமை; அதனையுடைய வேந்தர் படியோர் எனப்பட்டனரென அறிக.
"சுழலுமிசை வேண்டி வேண்டா வுயிரார்;" (குறள் 777) எனச் சான்றோர் கூறுதல் காண்க. ஈத்துவக்கும் இன்பத்தாலும் ஈகைக்கண் இசை நிற்பதாலும் வரையாது வழங்கும் வண்மையுடையனாதல் கண்டு"கொடை போற்றலையே இரவலர் நடுவண்" என்றார். கொடை போற்றாமையாவது "இன்று செலினுந் தருமே சிறுவரை. நின்று செலினுந்தருமே பின்னும், முன்னே தந்தனெ னென்னாது துன்னி, வைகலும் செலினும் பொய்யலனாகி" (புறம்.171) இரப்போர் வேண்டிய வேண்டியாங்கு வழங்குவது. பெரியாரைப் பேணிக்கொளல் அரசர்க்குப் பெருவன்மையாதலால், "பெரியோர்ப்பணி" யென்றார்.;"தம்மிற் பெரியார் தமரா வொழுகுதல் வன்மையு ளெல்லாந் தலை" (குறள் 444) எனச் சான்றோரும் பணித்தார். சிறியோரென்றது அறிவு, ஆண்மை, பொருள், படை முதலியவற்றால் தன்னிற் சிறுமையுடையாரை. அவரை யளித்தோம்பலும் செங்கோன்மை யாதலின், "சிறியோரை யளித்தி" யென்றார்;"வல்லாராயினும் வல்லுநராயினும், வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி, அருளவல்லையாகுமதி" (புறம் 27) எனச் சான்றோர் கூறும் முதுமொழிக் காஞ்சியானு மறிக. நின்வயின் நல்லிசை, பிரிந்த நல்லிசையென இயையும். புகழ்வரும் வாயில்கள் கல்வி, ஆண்மை முதலாகப் பலவாதலின், புகழும் பலவாதல்பற்றி "நல்லிசை யறியா" எனப் பன்மையாற் கூறினார்.
ஒருவன் புகழ்க்கு அவன் காரணமாயினும், அவனைத் தனக்கு ஆதாரமாகக்கொள்ளாது அவனிற் பிரிந்துசென்று உலகத்தை ஆதாரமாகக்கொண்டு அவன் மடியினும் தான் மடியாது நின்று நிலவுவது புகழ்க் கியல்பாதலின், "நின்வயிற் பிரிந்த நல்லிசை" யென்றார். புகழ் தன்னைச் செய்தோனிற் பிரியாது அவனோடே கிடக்குமாயின், அவன் பொன்றுங்காற் றானும் பொன்று மென்பதுபட்டுக் குற்றமாய் முடிதலின், "பிரிந்த நல்லிசை" எனச் சிறப்பித்தார். இக் கருத்தேபற்றிப் பழையவுரைகாரரும்"பிரிந்த நின் வயின் நல்லிசை யெனக் கூட்டுக" என்றும்"பிரிதல் தன்னைவிட்டுத் திக்கு விதிக்குகளிலே போதல்" என்றும் கூறுதல் காண்க."நின் வயிற் பிரிந்த நல்லிசை"யெனக் கிடந்தபடியே கொண்டு, "நின்பானின்றும் பிரிந்து சென்ற நினது நல்லிசைகள்" என்பாரு முளர்; நின்பானின்றும் பிரிந்து சென்ற என்ற வழி நின்னின் நீங்கிய புகழென்றாகிப் பொருள் சிறவா தொழிதலின், அது பொருளன்மை யறிக. நீ பெற்றுள்ள புகழ்களைப் பிறர் கனவினும் பெற்றறியார் என்பார், புகழ் மேலேற்றி நின் நல்லிசை"கனவினும் பிறர் நசை யறியா" என்றார்."நசை யறியா" யென்றதனால் நின்பகைமைக்கஞ்சிப் பிறர் கனவினும் நீ பெற்ற புகழ்களைப் பெறுதற்கு விரும்புவதிலர் என்பது கூறியவாறாயிற்று.
இவ்வாறு உயிர் போற்றாமையால் ஆண்மையும்., கொடை போற்றாமையால் வண்மையும், பெரியோர்ப் பேணிச் சிறியோரை யளித்தலால் செங்கோன்மையும் பிறவும் அளத்தற்கரியவா யிருத்தலால், ஏனைய பிறவும் அத்தன்மையவே யென்பார், "அனைய வளப்பருங் குரையை" யென்றார்.
8-19. அதனால்..........நின் புகழே.
உரை: அதனால்-ஆதலால்; நின்னொடு வாரார்-நின் விருப்பப்படி யொழுகுதற் கிசையாமல்; தம் நிலத்து ஒழிந்து- நினக்கு மாறுபட்டுத் தங்கள் நாட்டிலேயே யிருந்து; கொல்களிற்று யானை எருத்தம் புல்லென வில்குலை யறுத்து-நின்னை யெதிர்த்த பிற வேந்தர் தாம் ஏறிவந்த கொல்லுகின்ற களிற்றி யானையின் பிடரி புல்லென்னுமாறு அவர் ஏற்றுப் பொருத வில்லின் நாணை யறுத்து அவரைக் கொன்று நீ வெற்றி மேம்படக் கண்டும்; கோலின் வாரா வெல் போர் வேந்தர்-நின் செங்கோற் கீழ்ப் பணிந்து வருதலைச் செய்யாது வெல்கின்ற போர் செய்தலையுடைய வேந்தரது; முரசுகண் போழ்ந்து-முழக்கும் முரசின் கண்ணைக் கிழித்து; அவர் அரசுவா அழைப்ப-அவர்களுடைய பட்டத்தி யானை கதறக் கதற; கோடுஅறுத்து இயற்றிய அணங்குடைமரபின் கட்டின்மேல் இருந்து-அதன் கோட்டினை யறுத்துச் செய்த தெய்வத்தன்மை பொருந்திய முறைமையினையுடைய கட்டிலின் மேலிருந்து, ; தும்பை சான்ற மெய் தயங்கு உயக்கத்து-தும்பை சூடிப் பொருதலில் அமைந்த மெய்யிடத்தே யுண்டாகிய அசைவுபற்றிப் பிற்ந்த ஓய்ச்சலுடன்; நிறம்படு குருதி புறம் படின் அல்லது-மார்பிற் பட்ட புண்ணிடத் தொழுகும் குருதியாற் புறத்தே தெளிக்கப் பட்டாலன்றி; மடை எதிர்கொள்ளா- கொடுக்கப்படும் படைச்சலை (பலியை) யேற்றுக் கொள்ளாத; அஞ்சு வருமரபின்-அச்சம்பொருந்திய முறைமையினையுடைய; கடவுள் அயிரையின்-கொற்றவை வீற்றிருக்கின்ற அயிரை மலைபோல; பெரும-பெருமானே; நின் புகழ்நிலைஇக் கேடிலவாக-நின் புகழ்களும் நிலைபெற்றுக் கெடாது விளங்குவனவாக எ-று.
அதனால் என்பதனை நிலைஇக் கேடிலவாக என்பதனோடு இயைக்க. தம் மனத்துள்ள மாறுபாட்டால் நின் விருப்புவழி யொழுகுதற்கு இசைந்தில ரென்பார்"வாரார்" என்றார். வாராது இருந்த நிலை இஃதென்றற்குத்"தந்நிலந் தொழிந்து" என்றார். ஒழிந்தெனவே, அவர்பால் செயலறுதி பெறப்பட்டது. இனிப் பழையவுரைகாரர்"நின்னொடு வாரார்
தந்நிலத் தொழிந்தென்றது நின்னை வழிபட்டு நின்னோடு ஒழுகா திருத்தலே யன்றித் தம் நிலத்திலே வேறுபட்டு நின்றென்றவா" றென்பர்.
நின் விருப்புவழி யொழுகுதற்கு இசைவின்றித் தம் நிலத்தே வறி திருத்தலும் மானமாதலின் போர்க்கு வரலானார்; அது செய்யாது பணிந்து நின் கோற்கீழ் வரற்பாலர் என்பார், "கோலின் வாரா" என்றார். கோலின் வருதலே செயற்பாற் றென்பதற்கு ஏது கூறுவார், இடையிலே நிகழ்ந்த நிகழ்ச்சியை யெடுத்தோதலுற்று, "கொல்களிற்று யானை யெருத் தம் புல்லென வில்குலை யறுத்து" என்றார். அறுப்ப வென்பது அறுத்தென நின்றது. கண்டும் என ஒருசொல் வருவிக்க."யானை யெருத்தம் பொலியக் குடைநிழற் கீழ்ச், சேனைத் தலைவராய்" (நாலடி 3) வந்தாராதலின், வந்த அவரை வென்று மேம்பட்ட செய்தியை, "யானை யெருத்தம் புல்லென வில்குலை யறுத்து" என்றார். கோலின் வாராத வேந்தர் போர் குறித்து வந்தமை தோன்ற"வெல் போர் வேந்தர்" என்றார். இனிப் பழையவுரைகாரர்"யானை யெருத்தம் புல்லென வில்குலை யறுத்துக் கோலின் வாரா வேந்த ரென்றது, முன்பு நின் வழி யொழுகாது ஒழிந்திருந்த வழிப் பினபு தாம் களத்து நின்போர் வலிகண்டு இனி நின் வழி யொழுகுதுமெனச் சொல்லித் தாம் ஏறிய யானை யெருத்தம் புல்லென வில்லின் நாணியை யறுத்து நின் செங்கோல்வழி யொழுகாத வேந்தரென்றவா" றென்பர்
பகை வேந்தரை"வெல் போர் வேந்தர்" என்றார். இதற்கு முன்பெல்லாம் அவர் செய்த போரனைத்தினும் வென்றியே யெய்தி வந்தமையும், அச்செருக்கே பற்றுக்கோடாக இப்போதும் வந்தாரென்பதும் உணர்த்துதற்கு. இப்போரில் தோற்றமையால் அவரது முரசும் களத்தே யொழிந்த தென்றற்கு, "அவர் முரசுகண் கிழித்து" என்றார்.
இதுகாறும் தாம் பெற்றுப்போந்த வென்றியால் தம்மையே வியந்து தம் பட்டத்தியானைமேல் வந்தவர்.* போரிற்பட்டு வீழ்ந்தமையின், அவரது அவ்யானையைப்பற்றி அஃது ஆற்றாது கதறிப் புலம்பிப் பிளிற அதன் கோட்டினை யறுத்து அதனால பலிக்கட்டில் செய்துகொண்ட செய்தியை "அரசுவா வழைப்பக் கோடறுத் தியற்றிய கட்டில்" என்றும் கொற்ற வைக்குப் பலி யிடுவது குறித்து விழுப்புண்பட்ட வீரர் அதன்மீதிருந்து தம் மார்பிற் புண்னொலொழுகும் குருதி தெளித்து மடை கொடுப்ப, தெய்வமும் அதனை விரும்பி யேற்பது குறித்து அக் கட்டிலை"அணங்குடை மரபிற் கட்டில்" என்றும் அதன்மீதிருந்து குருதி விரவிய மடை கொடுப்பினன்றி யேலாத தெய்வம் அஞ்சத்தகும் முறைமை யுடைத்தாதல் பற்றி, "அஞ்சுவரு மரபிற் கடவுள்" என்றும் கூறினார்.
தும்பை சூடிப் பொரும்வீரர் பகைவரை யெறிகையில் தாமும் முகத்தினும் மார்பினும் புண்பட்டு மெய்தளர ஓய்ச்ச லெய்தியபோதும் தம் மார்பிற் புண்ணின் குருதியைச் சிறிதும் தயங்காது அள்ளி மடையின் புறத்தே தெறிப்பவாதலின், "தும்பை சான்ற மெய் தயங்குயக்கத்து நிறம்படு குருதி" யென்றார். பழையவுரைகாரர், " தும்பை சான்ற மெய் தயங்குயக்கத்து நிறம்படு குருதி யென்றது, வீரருடைய, தும்பை சூடியதற்கேற்ப நின்று பொருதலாற்றலையுடைய உடலானது அசையும்படி வந்த ஓய்வினையுடைய நிறங்களைத் திறந்துவிட்ட குருதி யென்றவா"றென்றும், "அல்லாத இடங்ளிற் குருதி கொள்ளாமையின் நிறங்களைத் திறக்க ஆண்டுண்டான குருதி யென்பதாயிற்"றென்றும், "இச் சிறப்பானே இதற்கு நிறம்படு குருதி யென்று பெயராயிற்" றென்றும் கூறுவர்
இவ்வாறே, "கோடறுத் தியற்றிய கட்டின் மேலிருந்து நிறம்படு குருதி புறம்படி னல்லது மடை யெதிர்கொள்ளாக்; கடவுள் எனக்கூட்டி, அவ்வாறு செய்ததொரு கட்டில் கொடுவந்திட் டதன்மேலிருந்து அவ்வாறு கொடுப்பதொரு பலியுண்டாயினல்லது பலிகொள்ளாக் கடவுளென வுரைக்க" என்றும்"கட்டில்மேலிருந்தல்லது குருதி புறம்படி னல்லது என அல்ல தென்பதனை இரண்டிடத்தும் கூட்டிக்கொள்க" என்றும் கூறுவர்.
"நிறம்படு குருதி புறம்படி னல்லது மடை யெதிர்கொள்ளாக் கடவுள்" எனவே, கொற்றவை யென்பது பெற்றாம். அயிரை, சிராப் பள்ளிக்கு மேற்கில் காவிரியின் தெற்கிலுள்ளதொரு குன்று; இதனை இக்காலத்தார் ஐவர்மலை யென்று வழங்குப. பழையவுரைகாரர், "அக்கொற்றவை யுறைவ தொருமலை" யென்பர். அயிரை மலை நின்று நிலை பெறுவதுபோல நின் புகழ்களும் நிலைபெற்று விளங்குக என்பார், "அயிரையின் நிலைஇக் கேடிலவாக நின் புகழே" யென்றார்.
இதுகாறும் கூறியவாற்றால், நாவினையும் ஆண்மையினையும் மார்பினைய முடையோய் பெரும, செருவத்து உயிர் போற்றலை; இரவலர் நடுவண் கொடை போற்றலை; பெரியோர்ப் பேணிச் சிறியோரை யளித்தி; நின்வயின் நல்லிசை கனவினும் பிறர் நசை யறியா; அனைய அளப்பருங் குரையை; அதனால் நின் புகழ்கள் அயிரையின் நிலைஇக் கேடிலவாக என்பதாம். இனிப் பழையவுரைகாரர்"கோதை மார்ப, செருவத்து உயிர் போற்றலை; இரவலர் நடுவண் கொடை போற்றலை; பெரியோரைப் பேணிச் சிறியோரை யளி்த்தி; அனைய நின் குணங்கள் அளப்பரியை; நீ அவ்வா றொழுகுதலால், பிரிந்த நின்வயின் நல்லிசை இனிக் கனவிலும் பிறர் நச்சுத லறியா; அவ்வாறு அறியாமையின், பெரும, நின் புகழ் நிலைஇ நின்னிடத்துக் கேடிலவாக என மாறிக்கூட்டி வினைமுடிவு செய்க" என்றும், "அனைய வளப்பருங் குரையை யென்றது சிறியோரை யளித்தி என்றதன் பின்னே நிற்க வேண்டுதலின்மாறாயிற்" றென்றும் கூறுவர்.
இதனாற் சொல்லியது அவன் பல குணங்களும் ஒருங்கு புகழ்ந்து வாழ்த்திய-வாறாயிற்று.
-------------------------
8.10. பண்ணுடை யெறுழ்த்தோள்
80
வான் மருப்பிற் களிற்றியானை
மாமலையிற் கணங்கொண்டவர்
எடுத்தெறிந்த விறன்முரசம்
கார்மழையிற் கடிதுமுழங்கச்
சாந்துபுலர்ந்த வியன்மார்பிற் 5
றொடிசுடர்வரும் வலிமுன்கைப்
புண்ணுடை யெறுழ்த்தோட் புடையலங்கழற்காற்
பிறக்கடி யொதுங்காப் பூட்கை யொள்வாள்
ஒடிவி றெவ்வ ரெதிர்நின் றுரைஇ
இடுக திறையே புரவெதிர்ந் தோற்கென 10
அம்புடை வலத்த ருயர்ந்தோர் பரவ
அனையை யாகன் மாறே பகைவர்
கால்கிளர்ந் தன்ன கதழ்பரிப் புரவிக்
கடும்பரி நெடுந்தேர் மீமிசை நுடங்குகொடி
பிலவரைத் தோன்றல் யாவது சினப்போர் 15
நிலவரை நிறீஇய நல்லிசைத்
தொலையாக் கற்பநின் றெம்முனை யானே
துறை: வஞ்சித்துறைப் பாடாண்பாட்டு
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்
பெயர்: புண்ணுடை யெறுழ்த்தோள்.
1-4 வான் மருப்பின்........முழங்க
உரை: வால் மருப்பின் களிற்றுயானை மாமலையின் கணங் கொண்டு - வெள்ளிய மருப்பினையுடைய போர்க்களிறுகள் பெரிய மலைபோல கூடித் தொக்கு நிற்ப; அவர் எடுத்தெறிந்த விறல் முரசம் - பகைவர் மேற்கொண்டு முழக்கிய வெற்றி முரசமானது; கார் மழையின் கடிது முழங்க - கார் காலத்து முகில்போல மிக்கு முழங்கவும்; போர்க்குரிய ஆண்மை நலம் சிறந்து நிற்கும் யானெகளைக்"களிற்றி யானை" யென்றார். மலையின், இன் ஒப்புப் பொருட்டு. அவர் என்பது "ஒடிவில் தெவ்வர்" (9) என்றதனைச் சுட்டி நிற்றலின், சுட்டு; செய்யுளாதலின் முற்பட வந்தது. கொள்ள வென்பது கொண்டெனத் திரிந்து நின்றது. பழையவுரைகாரரும், "கணங் கொள்ள வெனத் திரிக்க" என்றும், "அவ ரென்றது பகைவரை" யென்றும் கூறுவர். எடுத் தெறிதல், தம் முற்றுகை தோன்ற மேற்கொண்டு முழக்குதல். வெற்றி குறித்து முழக்கும் முரசாதலின், விறல் முரசம்" என்றார்; பலி பெறும் சிறப்புப்பற்றி இங்ஙனம் கூறினா ரெனினுமாம். மிகுதிப் பொருட்டாய கடியென்னு முரிச்சொல் கடிது எனத் திரிந்து நின்றது.
5-9 சாந்து . . . . நின்று
உரை: சாந்து புலர்ந்த வியன் மார்பின் பூசிய சாந்து புலர்ந்த அகன்ற மார்பினையும்; தொடி சுடர்வரும் வலிமுன்கை- தொடி யணிந்தமையால் அதன் ஒளிதிகழும் வலிபொருந்திய முன்கையினையும்; புண்ணுடை எறுழ்த்தோள் - ஆறாத விழுப் புண்ணையுடைய வலிய தோளினையும்; புடையலங்; கழற்கால் - அத் தோளிடத்தே யணிந்த மாலையொடு வீரகண்டை யணிந்த காலினையும்; பிறக்கடி யொதுங்காப் பூட்கை - முன்வைத்தகாலைப் பின் வையாத மேற்கோளினையும்; ஒள்வாள் - ஒள்ளிய வாட்படையினையுமுடைய; ஒடிவில் தெவ்வர் எதிர்நின்று - வணங்காத பகைவர் முன்னே அஞ்சாது நின்று; எ-று.
ஆடவர்க்கு அகன்ற மார்பு சிறப்புத் தருவதாகலின், அதனை விதந்து "சாந்து புலர்ந்த வியன் மார்பின்" என்றார். தொடி, தோள்வளை. இவர்கள் ஏந்தியடும் வாட்படையை"ஒள்வாள் எனச் சிறப்பித்தலின், அதற்கேற்ப, "வலிமுன் கை" யென்றார். பல போர்களைச் செய்து வென்றி மேம்பட்டோ ரென்றற்கு, அவர் உற்ற புண்ணை விதந்து, "புண்ணுடை யெறுழ்த்தோள்" என்றும், புண்ணுடைத்தாகியும் வலி குறைந்ததின் றென்றற்குப் புண்ணுடைத்தோ ளென்னாது, "எறுழ்த்தோ" ளென்றும் கூறினார். இனிப் பழையவுரைகாரர், புண்ணுடை யெறுழ்த்தோ ளென்றது எப்பொழுதும் பொருது புண்ணாறாத வலிய தோளென்றவா" றென்றும், "இச் சிறப்பானே இதற்குப் புண்ணுடை யெறுழ்த்தோள் என்று பெயராயிற்" றென்றும் கூறுவர்.
புடையலங்கழல், உம்மைத்தொகை. புடையல் மாலை."ஈகையங் கழற்கால் இரும்பனம்புடையல்" (புறம்.99) எ்ன்றும், "மாயிரும் புடையல் மாக்கழல் புனைந்து (பதிற். 37) என்றும், "இரும்பனம் புடையலீகை வான்கழல்" (பதிற்.42) என்றும், "இரும்பனம் புடையலொடு வான்கழல் சிவப்ப" (பதிற். 57) என்றும்"புடையலங்கழற்கால் புல்லி" (அகம். 295) என்றும் இப்புடையல் கழலொடு பிணைத்தே கூறப்படுதலின், இது கழலணியும் வீரர் அடையாளமாகச் சூடும் பூமாலையாதல் துணியப்படும். இரும்பனம் புடையலெனத் தெரித்து மொழிவதும்"புடையல்" என வாளாது கூறுவதும் இக்கருத்தை வலியுறுத்துகின்றன. ஈண்டுத் தெவ்வர் சூடிய புடையலைத் தெரித்து மொழியாமையின், பனம்புடையலெனக் கோடல் பொருந்தாமை யறிக.
அடிபிறக்கிடாத மேற்கோள் வீரர்க்கு இன்றியமை யாமையின், "பிறக்கடியொதுங்காப் பூட்கை" என்றார்."அடியொதுங்கிப் பிற்பெயராப் படையோர்" (மதுரை. 37-8) என்று பிறரும் கூறுப. ஒடிதல், மறங்குன்றிப் பகைவர்க்கு வணங்குதல்; அறைபோதலுமாம்.
இத்தகைய ஒடிவில் தெவ்வர் விறல் முரசம் முழங்க முற்றுகை யிட்டு நிற்பவும், அவர்முன் சிறிதும் அச்சமிலராய் நின்று வீறு பேசும் சேரமான் வீரர் மறநிலையை"எதிர்நின்று" என்பதனால் தோற்றுவிக்கின்றார்.
9-17 உரைஇ.............தெம்முனையானே
உரை: உயர்ந்தோர் - நின்தானை வீரராகிய உயர்ந்தோர்கள்; அம்புடை வலத்தர் - இடக் கையில் வில்லும் வலக் கையில் அம்புமுடையராய்; உரைஇ - அத் தெவ்வர் முன்னே நின்று இரு மருங்கும் உலாவி; பரவு எதிர்தந்தோற்கு திறை இடுக - திறை செலுத்தித் தன் கோற்கீழ்ப் பணிந்து நிற்பார்க்குப் பாதுகாப்பினை வழங்குதற்கு ஏறட்டுக்கொண்டு நிற்கும் எங்கள் பெருஞ் சேரலிரும்பொறைக்கு நுங்கள் திறையினைச் செலுத்துவீராமின்; எனப் பரவ - என்று நின்கொடையும் அளியும் தெறலும் பிறவும் பாராட்டிக் கூற; அனையை யாகன்மாறே - நீயும் அவர் கூறும் நலமெல்லாம் உடையை யாதலினாலே; சினப் போர்-சினங் கொண்டு செய்யும் போரினையும்; நிலவரை நிறீஇய நல்லிசை-நில வுலகத்தே நிறுவப்பட்ட நல்ல இசையினையும்; தொலையாக் கற்ப- கேடில்லாத கல்வியினையுமுடையாய்; நின் தெம்முனையான்-நீ பகைகொண்டாற்றும் போர் முனையாகிய; புல வரை-தங்கள் நிலவெல்லையிற்றானும்; பகைவர்-நின் பகைவரது; கால் கிளர்ந்தன்ன கதழ் பரிப் புரவி-காற்றுக் கிளர்ந்து சென்றாற்போலும் விரைந்த செலவினையுடைய குதிரைகள் பூட்டிய; கடும்பரி நெடுந்தேர் மீமிசை-கடுஞ் செலவினையுடைய நெடிய தேர்மீது கட்டிய; நுடங்கு கொடி தோன்றுதல் யாவது-அசைகின்ற கொடி தோன்றுவது எங்ஙனமாகும; இனி அஃது எவ்வாற்றானும் தோன்றாதுகாண் எ-று
போர்வீரர்க்கு வேண்டும் உயர்குணங்க ளெல்லாம் ஒருங்குடைமை பற்றி"உயர்ந்தோர்" என்றார். பகை வீரருடைய மார்பு முதலியவற்றை விதந்து கூறிய ஆசிரியர் அவர்களை உயர்ந்தோ ரென்றது, அவர்கட்கு அக் கூறிய சிறப்பனைத்தும் ஆர வார மாத்திரையே என வற்புறுத்தியவாறு. அம்புடை வலத்தரெனவே, வில்லுடைமை தானே பெறப்படுமாகலின், அது கூறாராயினார். இனி, அம்புடை வலத்தர் என்றற்கு, அம்பினாலாகிய வெற்றியையுடைய ரென்றுமாம். தெவ்வர் முன் நின்று இவ்வுயர்ந்தோர் சேரனுடைய தலைமைப் பண்புகளையும் ஆண்மை வண்மைகளையும் பரவிக் கூறலுற்றோர், தம் கூற்று பகைவர் படைப்பரப்பு முற்றும் கேட்டல் வேண்டி இருமருங்கும் உலவிச் சென்று உரைத்தார் என்றற்கு"உரைஇ" யென்றும், படை திரண்டு போர் குறித்து வந்தீராயினும் திறையிடின் எங்கள் இறைவன் நுங்களைப் பொறுத்துப் புரவு பூண்பன் என்பார்"இடுக திறையே புரவெதிர்ந் தோற்கே" என்றார்கள் என்றும் கூறினர். அவ் வுயர்ந்தோர் நின்னைப்பற்றிக் கூறிய அனைத்தும் மெய்யே யென்பார், "அனையை யாகன்மாறே" யென்றார். மாறு, மூன்றாம் வேற்றுமைப் பொருட்டு.
பகைவரது குதிரையின் திறம் கூறுவார், "கால்கிளர்ந்தன்ன கடும் பரிப்புரவி" யென்றும் அவற்றைப் பூட்டும் தேரும் இத்தகைத் தென்றற்குக் கடும்பரி நெடுந்தேர்" என்றும்"கால்கிளர்ந்தன்ன வேழம்" (முருகு.) என்றும் சான்றோர் விரைந்த நடைக்குக் காற்றை உவமம் கூறுவது காண்க. சிறப்பும்மை விகாரத்தால் தொக்கது. நின் நல்லிசை நிலவரை முழுதும் பரவி, நிலைபெறுதலின், பகைவரது கொடி நுடங்குதற்கும் இடனில்லை என்பது கூறியவாறு. நல்லிசை நிறுவுதற்கேற்ற கல்வியும் மிக வுடையாய் என்பார்"தொலையாக் கற்ப" என்றார்.
இனி பழையவுரைகாரர், "புரவெதி்ர்ந்தோற் கென்றது கொடை யேற்றிருக்கின்ற அவனுக்கென்றவா" றென்றும், "கொடி தோன்றல் என்றதனை எழுவாயும் பயனிலையுமாகக் கொள்க" என்றும்"நின் தெம்முனைப் புலவரையான் என மாறிக் கூட்டுக" என்றும் கூறுவர்.
இதுகாறும் கூறியது, களிற்றியானை கணங்கொள்ள, அவர் எறிந்த முரசம் முழங்கவும், மார்பினையும், முன்கையினையும், தோளினையும், புடையலையும், கழற்காலையும், பூட்கையினையும், வாளினையுமுடை ஒடிவில் தெவ்வர் எதிர்நின்று, உயர்ந்தோர், அம்புடைய வலத்தராய் உரைஇ புரவெதிர்ந்தோற்கு இடுக திறையே யெனப்பரவ, அனையை யாகன்மாறே சினப்போரும் நல்லிசையும் கற்பினையு முடையாய், நின் தெம்முனையாகிய புலவரையில், பகைவர் கதழ்பரிப் புரவிக் கடுந்தேர் மீமிசை நெடுங்கொடி தோன்றல் யாவது என்பதாம். இனிப் பழையவுரைகாரர், "தொலையாக் கற்ப, நின் வீரராகிய உயர்ந்தோர் நின் தெவ்வராகிய அவருடைய களிற்றி யானை மலையிற் கணங் கொள்ளாநிற்க, முரசம் கடிது முழங்காநிற்க, அவையிற்றை ஒன்றும் மதியாதே நின்னொடு ஒடிவில் தெவ்வராகிய அவர் எதிர் நின்று பெயரா இப்புர வெதிர்ந்தோனுக்குத் திறையை யிடுக வெனச் சொல்லி நின்னைப் பரவும்படி நீ அதற்கேற்ற தன்மையை யுடையையான படியாலே நின் தெம்முனைப் புல வெல்லையில் நின் பகைவர் தேர்மிசைக் கொடி போரைக் குறித்துத் தோன்றல் யாவது எனக்கூட்டி வினை முடிவு செய்க" என்பர்.
இதனாற் சொல்லியது அவன் கொடைச்சிறப்பொடு படுத்து வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று,
"தெம்முனைப் புலவரைப் பகைவர் கொடி தோன்றல் யாவது என எதிரூன்றுவாரின்மை தோன்றக் கூறிய வதனால் வஞ்சித் துறைப் பாடாணாயிற்று.
"முன்னர் ஆறடியும் வஞ்சியடியாய் வந்தமையானே வஞ்சித்தூக்கு மாயிற்று"
இருவகைத் தூக்கும் விரவிவந்ததாயினும் ஆசிரிய நடையே பெற்று இனிய ஓசைகொண்டு வருதலின் ஒழுகு வண்ணமாயிற்று;"ஒழுகு வண்ணம் ஓசையினொழுகும்" (தொல். செய். 224) என்றாராகலின்.
எட்டாம் பத்து மூலமும் உரையும் முற்றும்.
-----------------------------------------------------------
ஒன்பதாம் பத்து
பதிகம்
குட்டுவ னிரும்பொறைக்கு மையூர் கிழான்
வேண்மா ளந்துவஞ் செள்ளை யீன்றமகன்
வெருதரு தானையொடு வெய்துறச் செய்துசென்
றிருபெரு வேந்தரும் விச்சியும் வீழ
அருமிளைக் கல்லகத் தைந்தெயி லெறிந்து 5
பொத்தி யாண்ட பெருஞ் சோழனையும்
வித்தை யாண்ட விளம்பழையன் மாறனையும்
வைத்த வஞ்சினம் வாய்ப்ப வென்று
வஞ்சி முதூர்த் தந்து பிறர்க்குதவி
மந்திர மரபிற் றெய்வம் பேணி 10
மெய்யூ ரமைச்சியன் மையூர் கிழானைப்
புரையறு கேள்விப் புரோசு மயக்கி
அருந்திறன் மரபிற் பெருஞ்சதுக் கமர்ந்த
வெந்திறற் பூதரைத் தந்திவ ணிறீஇ
ஆய்ந்த மரபிற் சாந்தி வேட்டு 15
மன்னுயிர் காத்த மறுவில் செங்கோல்
இன்னிசை முரசி னிளஞ்சேர லிரும்பொறையைப்
பெருங்குன்றூர் கிழார் பாடினார் பத்துப்பாட்டு.
அவைதாம்: நிழல் விடுகட்டி, வினைநவில் யானை, பஃறோற் றொழுதி,தொழினவில் யானை, நாடுகாண் நெடுவரை, வெந்திறற் றடக்கை, வெண்டலைச் செம்புனல், கல்கால் கவணை, துவராக் கூந்தல், வலிகெழு தடக்கை, இவை பாட்டின் பதிகம். பாடிப் பெற்ற பரிசில்: மருளில்லார்க்கு மருளக் கொடுக்கவென்று உவகையின் முப்பத்தீராயிரம் காணங் கொடுத்து, அவர் அறியாமை ஊரும் மனையும் வளமிகப் படைத்து, ஏரும் இன்பமும் இயல்வரப் பரப்பி, எண்ணற்காகா அருங்கல வெறுக்கையொடு பன்னூறாயிரம் பாற்பட வகுத்துக் காப்பு மறம் தான்விட்டான் அக் கோ.
குடக் கோ இளஞ்சேர லிரும்பொறை பதினாறாண்டு வீற்றிருந்தான்.
----------
9.1.நிழல்விடு கட்டி
81
உலகம் புரக்கு முருகெழு சிறப்பின்
வண்ணக் கருவிய வளங்கெழு கமஞ்சூல்
அகலிரு விசும்பி னதிர்சினஞ் சிறந்து
கடிஞ்சிலை கழறி விசும்படையூ நிவந்து
காலை யிசைக்கும் பொழுதொடு புலம்புகொளக் 5
களிறுபாய்ந் தியலக் கடுமா தாங்க
ஒளிறுகொடி நுடங்கத் தேர்திரிந்து கொட்ப
அரசுபுறத் திறுப்பினு மதிர்விலர் திரிந்து
வாயில் கொள்ளா மைந்தினர் வயவர்
மாயிருங் கங்குலும் விழித்தொடி சுடர்வரத் 10
தோள்பிணி மீகையர் புகல்சிறந்து நாளும்
முடிதல் வேட்கையர் நெடிய மொழியூஉக்
கெடாஅ நல்லிசைத் தங்குடி நிறுமார்
இடாஅ வேணி வியலறைக் கொட்ப
நாடடிப் படுத்தலிற் கொள்ளை மாற்றி 15
அழல்வினை யமைந்த நிழல்விடு கட்டி
கட்டளை வலிப்ப நின்தானை யுதவி
வேறுபுலத் திறுத்த வெல்போ ரண்ணல்
முழவி னமைந்த பெரும்பழ மிசைந்து
சாறயர்ந் தன்ன காரணி யாணர்த் 20
தூம்பகம் பழுனிய தீம்பிழி மாந்திக்
காந்தளங் கண்ணிச் செழுங்குடிச் செல்வர்
கலிமகிழ் மேவல ரிரவலர்க் கீயும்
சுரும்பார் சோலைப் பெரும்பெயர்க் கொல்லிப்
பெருவாய் மலரொடு பசும்பிடி மகிழ்ந்து 25
மின்னுமிழ்ந் தன்ன சுடரிழை யாயத்துத்
தன்னிறங் கரந்த வண்டுபடு கதுப்பின்
ஒடுங்கீ ரோதி யொண்ணுத லணிகொளக்
கொடுங்குழைக் கமர்த்த நோக்கி யைவரப்
பெருந்தகைக் கமர்ந்த மென்சொற் றிருமுகத் 30
மாணிழை யரிவை காணிய வொருநாட்
பூண்ம மாளநின் புரவி நெடுந்தேர்
முனைகை விட்டு முன்னிலைச் செல்லாது
தூவெதிர்ந்து பெறாஅத் தாவின் மள்ளரொடு
தொன்மருங் கறுத்த லஞ்சியரண் கொண்டு 35
துஞ்சா வேந்தருந் துஞ்சுக
விருந்து மாக நின்பெருந் தோட்கே.
துறை: முல்லை
வண்ணம்: ஒழுகுவண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: நிழல்லிடு கட்டி.
1-5 உலகம்...........புலம்புகொள
உரை: உலகம் புரக்கும்-உலகத்திலுள்ள உயிர்களைப் பாதுகாத்தலைச் செய்யும்; உருகெழு சிறப்பின்-உட்குதலைச் செய்யும் சிறப்பினையும்; வண்ணக் கருவிய-கரிய நிறத்தையுமுடைய பலவாய்த் தொகுதி கொண்டனவாகிய; வளங்கெழு கமஞ்சூல்- வளம்பொருந்திய நிறைந்த நீரையுடைய மழை மேகங்கள்; அகல் இரு விசும்பின்-அகன்ற கரிய வானத்தின்கண்; அதிர் சினம் சிறந்து-எல்லாப் பொருளும் அதிரும்படி மின்னிக் குமுறி; கடுஞ் சிலையொடு கழறி-மிக்க முழக்கத்தோடு இடித்து; விசும்பு அடையூஉ நிவந்து-வானமுழுதும் பரந்துயர்ந்து; காலை யிசைக்கும் பொழுதொடு-கார்காலத்தைத் தெரிவிக்கும் பருவத்தால்; புலம்பு கொள-உயிர்கள் வருத்த மெய்த எ-று
உலகம் புரக்கும் வளங்கெழு கமஞ்சூல் என்றும், சிறப்பினையும் வண்ணத்-தினையுமுடையவாய்க் கருவியவாகிய கமஞ்சூல் என்றும் இயையும். மழையின்றிப் பொய்ப்பின் உலகத்துள் பசிநின்று உடற்றுமாதலின், "உலகம் புரக்கும் கமஞ்சூல்" என்றும், துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் தருதலின்"வளங்கெழு கமஞ்சூல்" என்றும் இடிமின்னல் முதலியவற்றால் உயிர்கட்கு அச்சத்தை விளைத்தலின்"உருகெழு சிறப்பின் கமஞ்சூல்" என்றும், பலவாய்த்தொக்கு இருண்டு வருதலின், "வண்ணக்கருவிய கமஞ்சூல்" என்றும் கூறினார். இருவிசும்பு மிக அகன்றதாயினும், அதனிடமுழுதும் அதிரக் குமுறுதல்பற்றி, "அகலிரு விசும்பின் அதிர்சினம் சிறந்து" என்றாஇர். கமஞ்சூல், கமஞ்சூலையுடைய மேகத்துக்காயிற்று. கமம், நிறைவு."கார்கோள் முகந்த கமஞ்சூல் மாமழை" (முருகு.7) என்று பிறரும் கூறுதல் காண்க. அதிர் சினம், முகிற் கூட்டத்தின் குமுறலையும், கடுஞ்சிலை பேரிடியினையும் குறித்து நின்றன. மழை மிக்குப் பெய்தலால் மாவும் புள்ளும் குளிரால் ஒடுங்கி வருந்துதலின், "புலம்பு கொள" என்றார்.
இனிப் பழையவுரைகாரர்"கமஞ்சூல் மேகங்க ளென்றும், "நிறைந்த சூலுடைமையின் மேகங்கள் கமஞ்சூல் எனப்பட்டன" என்றும்"சிலையொடு கழறியென ஒடு விரிக்க" என்றும்"சிலை, முழங்குதல்; கழறல், இடித்தல்" என்றும், "நிவந்து விசும்படையூவென மாறிக் கூட்டுக" என்றும், "விசும்படைதல் மலையிலே படிந்தவை எழுந்து விசும்பை யடைதல்" என்றும், "காலையிசைக்கும் பொழுதொடு புலம்புகொள வென்றது மேகங்கள் கார்காலத்தை அறிவிக்கின்ற பருவத்தானே வருத்தம் கொள்ளாநிற்க வென்றவா" றென்றும் கூறுவர்.
6-14. களிறு...........கொட்ப.
உரை: களிறு பாய்ந்து இயல-களிறுகள் பாசறை யெல்லையிற் பரந்து இயங்க; கடுமாதாங்க- விரைந்து செல்லும் குதிரைகள் வீரர்களைச் சுமந்து அவர் குறிப்பு வழிச் செல்ல; ஒளிறு கொடி நுடங்கத்தேர் திரிந்து கொட்ப-விளங்குகின்ற கொடிகள் அசையத் தேர்கள் நாற்றிசையும் சுழன்று திரிய; அரசுபுறத்து இறுப்பினும்- பகையரசர் தம் நகர்ப்புறத்தே முற்றுகை யிட்டுத் தங்கினும்; அதிர்விலர்-சிறிதும் நடுக்கமிலராய்; வாயில்கொள்ளா மைந்தினர் வயவர்- தமக்குரிய இடங்கட்குக் காவல் கொள்ளாத வலிமையினை யுடையராகிய வீரர்; மாயிருங் கங்குலும்-பெரிய இருள்நிறைந்த இராக் காலத்தும்; விழுத்தொடி சுடர்வர-தம் தோளிலணிந்த வீரவளை ஒளிதிகழ; தோள் பிணி மீகையர்-தோளிடத்தே பிணிக்கப்பட்ட மீகையினையுடையராய்; நாளும் முடிதல் வேட்கையர்- போரிற் புண்பட்டு வீழ்தலைவிரும்பும் வேட்கையராய்;புகல் சிறந்து-போர் விருப்பம்மிக்கு; நெடியமொழியூஉ-வஞ்சினம் கூறி அவ்வஞ்சினம் தப்பாமல்; தம் குடி கெடாஅ நல்லிசை நிறுமார்- தாம் பிறந்த குடிக்குக் கெடாத நல்ல புகழை நிலைநிறுத்துதற்கு; இடாஅ ஏணி வியல் அறைக் கொட்ப-அளவிடப்படாத எல்லையால் அகன்ற பாசறைக்கண்ணே சுழன்று திரிய எ-று
பாய்தல், பரத்தல்; பருவுடம்பினவாதலின், களிறுகளின் இயக்கத்தைப்"பாய்ந்தியல" வென்றார். கடுமா என்புழிக் கடுமை விரைவு குறித்து நின்றது. தாங்க வென்றதனால், வீரர்களைச் சுமத்தல் பெற்றாம். வாயில் காவல். மிக்க வலியுடையராயினும் பகையரசர் புறத்திறுத்தவழி, மதிற் காவல்கொள்ளா தொழியா ரென்பது தோன்ற, "வாயில் கொள்ளா மைந்தினர்" என்றார். வாயில் கொள்ளாமைக் கேது மைந்துடைமை யென்றா ராயினும், அதனைப் புலப்படுக்கும் நடுக்கமின்மையை"அதிர்விலர்" என எடுத்தோதினார். இராக்காலத்தே போர் நிகழ்தலின்மையின், "மாயிருங் கங்குலும்" என்றார். மீகை, தோள்மேலணியும் சட்டை. சட்டையின் கை, தோளை மூடி அதன்மேலே உயர்ந்து தோன்றலின், மீகை யெனப் பட்டது. இனிப் பழையவுரைகாரர், "வாயில்கொள்ளா மைந்தினரென்றது தமக்குக் காவலடைத்த இடங்களைச் சென்று கைக்கொள்ளா வலியினை யுடையவ ரென்றவா" றென்றும், "வாயில் ஈண்டு இடம்" என்றும், தோள் பிணி மீகையரென்றது குளிராலே தோளைப் பிணித்த அத்தோள் மீது உளவாகிய கைகளை யுடையரென்றவா" றென்றும் கூறுவர்.
போரிலே புண்பட்டு வீழ்தலின்றி வறிதே மூத்து நோயுற்றுச் சாதலைக் கீழ்மையாகக் கருதி"நோற்றோர் மன்ற தாமே கூற்றம், கோளுற விளியார் பிறர்கொள விளிந்தோர்" (அகம் 61) என மேற் சேறல், பண்டைச் சான்றோர் மரபாதலின், "புகல் சிறந்து நாளும் முடிதல் வேட்கைய" ரென்றார். வேட்கை மிகுதியால் போரில் விருப்பம் சிறக்கு மாதலின், வேட்கையர் புகல் சிறந்தென இயைக்கப்பட்டது. பழையவுரைகாரர், "முடிதல் வேட்கையரென்றது தாம் எடுத்துக்கொண்ட போர் முடிதலிலே வேட்கை யுடையா ரென்றவா" றென்பர்.
நெடிய மொழிதலாவது"தலைத்தா ணெடுமொழி தன்னோடு புணர்த்தல்" (தொல். பொ. புறம். 5)"நெடிய மொழிதலும் கடிய வூர்தலும் செல்வமன்று" (நற். 210) என்று பிறரும் கூறுதல் காண்க. இனி, இந்நெடுமொழியை"மாராயம் பெற்ற நெடுமொழி" (தொல். புறத். 8) யாகக் கோடலுமொன்று. இடாஅ ஏணி யென்றது எல்லைக்கு வெளிப்படை. அறை, பாசறை."இடாஅ ஏணியியலறை (பதிற். 24) என வருதல் காண்க. களிறு இயல், மாதாங்க, தேர்திரிந்து கொட்ப, வயவர் மீகையராய், வேட்கையராய், நிறுமார், வியலறைக் கொட்ப என இயைக்க.
15-18 நாடடிப்படுத்தலிற்.........அண்ணல்
உரை: நாடு அடிப்படுத்தலின் - பகைவர் நாட்டை வென்று அடிப்படுத்தியதனால்; கொள்ளை மாற்றி - அந்நாட்டில் மேலும் கொள்ளத்தகும் பொருளைக் கொள்ளா தொழித்து; அழல்வினை யமைந்த நிழல்விடு கட்டி - கொண்டவற்றை நெருப்பிலிட்டுருக்கியதனால் ஓடுதல் இல்லாத ஒளிவிடுகின்ற பொற்கட்டிகளை; கட்டளை வலிப்ப-வீரர் தகுதிகளைச் சான்றோர் வற்புறுத்துரைப்பதால்; நின்தானை உதவி - அவ்வாறே உன் தானை வீரர்க்கு வழங்கி; வேறு புலத்திறுத்த வெல்போர் அண்ணல் - வேற்று நாடுகளில் தங்கிய வெல்லுகின்ற போரையுடைய அண்ணலே எ-று
பகைவர் நாட்டை அடிப்படுத்தற்கு முன்பு, அதனுட்புக்கு எரி பரந் தெடுத்துச் சூறையாடிக்கொண்ட கொள்ளையை, அடிப்படுத்திய பின்பு பெறுவதின்மையின், "நாடடிப்படுத்தலின் கொள்ளை மாற்றி" யென்றும் கொண்ட கொள்ளை பல்வேறுவகைப் பொற்கலன்களாதலால், அவற்றை ஓரின மாக்குதற்காகப் பொடித்துருக்கிப் பொற்கட்டிகளாக மாற்றினமை தோன்ற, "அழல்வினை யமைந்த நிழல்விடு கட்டி" யென்றும் கூறினார். பழையவுரைகாரரும், "நாடடிப்படுத்தலிற் கொள்ளை மாற்றி யென்றது நாட்டை யடிப்படுத்தினபடியாலே அடிப்படுத்தும் காலத்து உண்டாய்ச் சென்ற கொள்ளையை மாற்றி யென்றவா" றென்றும், "அழல் வினை யமைதல், ஓட்டறுதல்; இவ்வடைச் சிறப்பானே யிதற்கு நிழல்விடு கட்டி யென்று பெயராயிற்" றென்றும் கூறுவர். நிழல், ஒளி.
வீரர்க்குச் சிறப்புச் செய்யுமிடத்து அவரவர் தகுதியும், வரிசையும் தேர்ந்து அதற்குத் தக்கவாறு செய்வது ஆட்சிமுறை யாதலின்"கட்டளை வலிப்ப" என்றார்."கட்டளை வலித்தலென்பது இன்னார் இன்னதனைப் பெறுக என்று தரங்களை நிச்சயித்தல்" என்பது பழையவுரை. தானை யென்புழி நான்கனுருபு விரிக்க. வேறு புலத்திறுத்தவழி வேந்தன் செய்வன இவை யென்கின்றாராதலின், "வேறுபுலத்திறுத்த வெல்போ ரண்ணல்" என்றுரைக்கின்றார்.
19-23 முழவின்..........ஈயும்.
உரை: காந்ளங்கண்ணிச் செழுங்குடிச் செல்வர் - காந்தட் பூவால் தொடுத்த கண்ணிசூடிய செழித்த குடியினையுடைய செல்வ மக்கள்: முழவின் அமைந்த பெரும் பழம் மிசைந்து - முழவு போன்றமைந்த பெரிய பலாப்பழத்தையுண்டு; சாறயர்ந்தன்ன - விழாக் கொண்டாடினாற்போல; யாணர் கார் அணி தூம்பகம் பழுனிய தீம்பிழி மாந்தி - புதுமையினையுடைய கரிய அழகிய மூங்கிற் குழாயிடத்தே பெய்து முதிர்வித்த இனிய கள்ளை யருந்தி; கலி மகிழ் மேவலர் - ஆரவாரத்தையுடைய மகிழ்ச்சியை விரும்பி; இரவலர்க்கு ஈயும் - இரப்போர்க்கு வேண்டுவனவற்றை யீதலைச் செய்யும் கொல்லி நாட்டிலுள்ள எ-று.
கொல்லிமலையைச் சூழ்ந்தநாட்டைக் கொல்லிக்கூற்ற மென்பர். அந்நாட்டவர் குறிஞ்சி நிலத்து மக்களாதலின், அந்நாட்டுச் செல்வர் காந்தட் கண்ணி சூடுதலை விதந்து, "காந்தளங்கண்ணிச் செழுங்கொடிச் செல்வர்" என்றார். அங்கே, பலாப்பழம் மிகுதியும் கிடைப்பது இக்காலத்தும் உண்மை."கலையுணக் கிழித்த முழவுமருள் பெரும்பழம்" (புறம்.234) என்பவாகலின், ஈண்டும் பலாப்பழம், "முழவினமைந்த பெரும்பழ" மெனப்பட்டது. விழாக்காலத்துச் சுற்றமும் பிறரும் சூழ வுண்டல்போல, ஏனைக்காலத்தும் உண்டு மகிழ்தலைச், "சாறயர்ந்தன்ன தீம்பிழி மாந்தி" என்றதனாலும், இனிய கள்ளை மூங்கிற் குழாயிடத்தே பெய்து புளி்ப்பு முதிர்விக்கும் இயல்பை"நீடமை விளைந்த தேக்கட்டேறல்" (முருகு. 195) என்பதனாலு மறிக. இரவலர்க்கீயும் கொல்லியென முடிக்க. பழையவுரைகாரரும் "சாறயர்ந்தன்ன தீம்பிழியென முடித்து விழாக் கொண்டாடினா லொத்த இனிய மதுவென வுரைக்க" என்றும்"காரணியாணர்த் தூம்பு என்றது கருமையைப் பொருந்தின அழகிய மூங்கிற் குழாய் என்றவா" றென்றும் கூறுவர்.
24-32 சுரும்பு....நெடுந்தேர்
உரை: சுரும்பார் சோலைப் பெரும் பெயர்க் கொல்லி- வண்டுகள் பொருந்திய சோலை சூழ்ந்த பெரிய பெயரையுடைய கொல்லிமலையில் உண்டாகிய; பெருவாய் மலரொடு பசும்பிடி மகிழ்ந்து - இருவாட்சிப் பூக்களுடன் பச்சிலையைத் தொடுத் தணிந்து; மின் உமிழ்ந்தன்ன சுடரிழை யாயத்து – மின்னலை உமிழ்ந்தாற் போன்ற ஒளிதிகழும் அணிகளையுடைய ஆயமகளிர் புடைசூழ வுள்ள; தன் நிறங் கரந்த வண்டுபடு கதுப்பின் - தன் நிறம் மறையும்படியான வண்டுமொய்க்கும் கூந்தலும்; ஒடுங்கீரோதி யொண்ணுதல் - முன் மயிரின் சுருள் தவழும் ஒளிபொருந்திய நெற்றியும்; அணிகொள - முறையே பூவாலும் ஒளியாலும் அழகு மிகுமாறு; கொடுங்குழைக் கமர்த்த நோக்கின் - வளைந்த குழையொடு பொருத பார்வையினையும்; பெருந்தகைக்கு நயவர அமர்ந்த மென்சொல் - தன் பெருங் குணங்கட்கு ஏற்ப அமைந்த மெல்லிய சொல்லினையும்; திருமுகத்து மாணிழை யரிவை - அழகிய முகத்தையும் மாட்சிமைப்பட்ட அணிகலன்களையுமுடைய அரிவையாகிய நின் தேவியை; காணிய - காண்பதற்காக; ஒரு நாள் - ஒருநாளேனும்; நின் புரவி நெடுந்தேர் பூண்க - நின்னுடைய குதிரை பூட்டிய தேர் ஏறுவாயாக எ-று.
பெருவாய்மலர், இருவாட்சிப்பூ. இதனை இருள்வாசி யென்றும் நள்ளிருணாறி யென்றுங் கூறுப."நரந்தநாக நள்ளிரு ணாறி" என்று குறிஞ்சிப் பாட்டுக் கூறுகின்றது. பசும்பிடி, பச்சிலைப்பூ; இதனை இக்காலத்தார் மனோரஞ்சிதம் என்பர்;"பசும்பிடி, வகுளம் பல்லிணர்க் காயா" (குறிஞ்.70) என வருதல் காண்க. இருவாட்சி முதலியவற்றையும் சுடரிழையினையு முடைய ஆயமகளிர் எனச் சிறப்பித்தவர், அரசமாதேவி அத்தகைய பூ வொன்றும் அணிந்து கொள்ளாது பிரிவுத் துயருற்றிருந்தமை தோன்ற, ஒன்றும் கூறாராயினாரென வுணர்க. மகுழ்ந்தென்பதற்கு, "விரும்பிச் சூடி யென்றவா" றென்றும், "மின்னுமிழ்ந்தன்ன சுடரிழை யென்றது மீகம் மின்களை உமிழ்ந்தாற்போன்ற சுடர்களையுடைய இழையென்றவா" றென்றும் பழையவுரைகாரர் கூறுவர்.
தலைமயிரின் கருமை வண்டினம் மிக்குப்படுதலால் தெரியாதாயிற் றென்றற்கு, "தன்னிறம் கரந்த வண்டுபடு கதுப்பின்" என்றும், ஒளி திகழும் நெற்றியிடத்தே சுருண்டு தவழ்தலின், முன்மயிரை"ஒடுங்கீரோதி" யென்றும், பிரிவுத் துன்பத்தால் உளதாகிய பசலையால் ஒளிமழுங்கி யிருத்தல் பற்றி, "ஒண்ணுத" லென்றும், அரசன் எய்தித் தன்னைத் தலைக்கூடிய வழி, கூந்தல் பூவணிந்து சிறத்தலும் நுதல் நல்லொளிகொண்டு திகழ்தலும் ஒருதலையாதல்பற்றி, "தன்னிறம் கரந்த வண்டுபடு கதுப்பின் ஒடுங்கீரோதி யொண்ணுத லணிகொள" என்றும் கூறினார்.
குழையொடு பொரும் நெடுங்கண் ணென்றற்கு, "கொடுங் குழைக் கமர்த்த நோக்கின்" என்றும், பெரியாரது பெருந்தகைமை அவர் பேசும் இன்சொல்லால் விளங்குதலால், "பெருந்தகைக்கு நயவர அமர்ந்த மென்சொல்" என்றும், மங்கல நாணன்றிப் பிறிதணி பேணாமையின் அதனை "மாணிழை" யென்றும் பாராட்டினார். அணிகொள என்பதைக் கதுப்பின் என்பதனோடும் இயைக்க; இன், அல்வழிக்கண் வந்த சாரியை. நயவர அமர்ந்த என இயைத்துக் கொள்க. நாளும் போர் வேட்டெழும் இயல்பினனாதலின், "அரிவை காணிய ஒருநாள் பூண்க மாள நின்புரவி நெடுந்தேர்" என்றார். எனவே, காம வின்பத்தினும் போருடை யுண்டாகும் வெற்றி யின்பமே இச்சேரமானுக்குப் பெரிதென்றாராயிற்று.
33-37 முனை கை...............தோட்கே
உரை: முன்னிலை முனைகை விட்டு-நின் முன்னே நின்று பொரும் போரைக் கைவிடடு; செல்லாது-பிறக்கிட்டோடாது; தூ எதிர்ந்து-நின் வலியோடு பொருது; பெறாஅத் தாவில்மள்ளரொடு-வெற்றி யெய்தமாட்டாமையால் வலியில்லாத வீரருடனே: தொன்மருங்கு அறுத்தல் அஞ்சி-தொன்று தொட்டுவரும் தம் குடி வேரோடு கெடுதற்கு அஞ்சி; துஞ்சா வேந்தரும்-கண்ணுறங்காத நின் பகைவேந்தர் தாமும்; அரண் கொண்டு துஞ்சுக-ஒரு நாளைக்கு நீ போரைநிறுத்தி நின் அரிவையைக் காணச் சேறலால், தம் அரணையடைந்து சிறிது கண்ணுறங்குவராக; நின் பெருந் தோட்கு விருந்துமாக-நின்னுடைய பெரிய தோள்கட்கு விருந்தாகவும் அமைக எ-று.
முனை, போர். நின் தோள்வலியும் படைவலியும் காட்சி மாத்திரை யானே பகைவர்க்கு வெற்றியில்லை யென்பதை யறிவிப்பனவாகவும், அவர்கள் அறியாமல் எதிர்ந்தழிந்தன ரென்பார்"முனைகை விட்டு முன்னிலைச் செல்லாது, தூவெதிர்ந்து பெறாஅத் தாவில் மள்ளர்" என்றார். பெறாஅ, காரணப்பொருட்டு. பெறுதற்குரிய செயப்படுபொருள் வருவிக்கப் பட்டது. நின் வலி யறிந்து பணிந்து நில்லாமையால் அவர் வேரோடு கெடுதல் ஒருதலை யாதலை யுணர்ந்தமை தோன்ற, "தொன்மருங்கறுத்தல் அஞ்சி" யென்றார். இனிப் பழையவுரைகாரர், "முனைகை விட்டு முன்னிலைச் செல்லாது துஞ்சா என முடித்து, நின்னோடு போர் செய்கையைக் கைவிட்டு நின் முன்னே வந்து வழிபட்டு நிற்றலைச் செய்யமாட்டாமையால் துஞ்சாதவென வுரைக்க" என்றும், "தூவெதிர்ந்து பெறாஅத் தாவில் மள்ளரொடு என்றது, முன்பு நின் வலியோடு எதிர்த்துப் பின் எதிர்க்கப் பெறாத வலியில்லாத மள்ளரொடு என்றவா" றென்றும் உரைப்பர்
இதுகாறுங் கூறியது கமஞ்சூல் சினஞ் சிறந்து விசும்படையூ நிவந்து காலை யிசைக்கும் பொழுதொடு புலம்புகொள, அக்காலத்தே, களிறு இயங்க, மா தங்க, தேர் திரிந்து கொட்ப, வயவர் வியலறைக் கொட்ப, நாடடிப்படுத்தலின் கொள்ளை மாற்றி, நிழல்விடு கட்டியைத் தானைக்குதவி, வேறுபுலத் திறுத்த வேல்போ ரண்ணல், செழுங்குடிச் செல்வர் தீம்பிழி மாந்தி இரவலர்க்கு வேண்டுவன ஈயும் கொல்லிப் பெருவாய் மலரொடு பசும்பிடி மகிழ்ந்தணியும் ஆயத்தார் சூழ வுறையும் அரிவை கதுப்பும் நுதலும் அணிகொள ஒருநாட் காணிய, நின்புரவி நெடுந்தேர் பூண்க; அதனால், தொன்மருங் கறுத்தலஞ்சித் துஞ்சா வேந்தரும் மள்ளருடனே அரண் கொண்டு துஞ்சுக; நின் பெருந்தோட்கு விருந்துமாக என இயைத்து முடித்தவாறு.
பழையவுரைகாரர், "அண்ணல், நின் அரிவை காணிய நின்தேர் ஒரு நாட் புரவி பூண்பதாக வேண்டும்; அதுதான் நின் அரிவைக்கே யுடலாக வேண்டுவதில்லை; அதனானே துஞ்சா வேந்தரும் துஞ்சுவார்களாக வேண்டும்; அதுதான் நின் பெருந்தோட்கு விருந்துமாக வேண்டும்; இவ்வாறு இரண்டொரு காரியமாக இதனைச் செய்க என வினைமுடிவு செய்க" என்பர்.
"இதனாற் சொல்லியது காம வேட்கையிற் செல்லாத அவன் வென்றி வேட்கைச் சிறப்புக் கூறியவாறாயிற்று."
"இஃது அவனரிவை கற்பு முல்லையைப்பற்றி வந்தமையால் துறை முல்லையாயிற்று."
----------
9.2. வினை நவில் யானை
82
பகை பெருமையிற் றெய்வஞ் செப்ப
ஆரிறை யஞ்சா வெருவரு கட்டூர்ப்
பல்கொடி நுடங்கு முன்பிற் செறுநர்
செல்சமந் தொலைத்த வினைநவில் யானை
கடாஅம் வார்ந்து கடுஞ்சினம் பொத்தி 5
வண்டுபடு சென்னிய பிடிபுணர்ந் தியல
மறவர் மறல மாப்படை யுறுப்பத்
தேர்கொடி நுடங்கத் தோல்புடை யார்ப்பக்
காடுகை காய்த்திய நீடுநா ளிருக்கை
இன்ன வைகல் பன்னா ளாக 10
பாடிக் காண்கு வந்திசிற் பெரும
பாடுநர், கொளக்கொளக் குறையாச் செல்வத்துச் செற்றோர்
கொலக்கொலக் குறையாத் தானைச் சான்றோர்
வண்மையுஞ் செம்மையுஞ் சால்பு மறனும்
புகன்று புகழ்ந் தசையா நல்லிசை 15
நிலந்தரு திருவி னெடியோய் நின்னே.
துறை; காட்சி வாழ்த்து.
வண்ணம்: ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்.
தூக்கு: செந்தூக்கு.
பெயர்: வினை நவில் யானை.
1-10 பகை...... பன்னா ளாக
உரை: பகை பெருமையின் - நினது பகைமை பெரிதாதலால்; தெய்வம் செப்ப - பகைவர் தமக்குப் பாதுகாவலாகத் தெய்வத்தை வழிபட; ஆர் இறை அஞ்சா வெருவரு கட்டூர்- இனி திருத்தற் கரிதாகியும் வீரர்க்கு அச்சம் பயவாத பகைவர்க்கு அச்சத்தைத் தருகின்ற பாசறையிலே; பல்கொடி நுடங்குமுன்பிற் செறுநர் - பல்வகைக் கொடிகள் அசைகின்ற வலியினையுடைய பகைவரது; செல் சமம் தொலைத்த - மிக்குச் சென்று பொரும் போர்களை யழித்த; வினைநவில் யானை - போர்த்தொழிலே நன்கு பயிற்சி பெற்றுள்ள யானைகள்; கடாம் வார்ந்து - மதம் பொழிந்து; கடுஞ்சினம்பொத்தி - மிக்க சினம் கொண்டு; வண்டுபடு சென்னிய - மதநீரின் பொருட்டு வண்டு மொய்க்குந் தலையினை யுடையவாய்; பிடி புணர்ந்து இயல - மத வெறி தெளியு மாற்றால் பிடி யானைகளைப் புணர்த்தப் புணர்ந்தும் தெளியாது திரிய; மறவர் மறல - வீரர் போர் விரைய நிகழாமையின் போர் வெறி கொண்டு திரிய; மா படை உறுப்ப - குதிரைகள் பொருதல் வேண்டிக் கலனை முதலிய படை யணியப்பெற்று நிற்ப; தேர் கொடி நுடங்க - தேர்கள் பண்ணப் பெற்றுக் கொடி யசைய விளங்க; தோல்புடை யார்ப்ப - கிடுகு படைகள் ஒருபுறத்தே ஆரவாரிக்க; காடுகை காய்த்திய - காட்டிலுள்ள விறகுகளை வெட்டிக் குளிர் காய்ந்தழித்த; நீடு நாள் இருக்கை - நெடுநாட்கள் இருத்தலை யுடைய; இன்ன வைகல் பன்னளாக - இத்தன்மையான நாட்கள் பலவாகக் கழிந்ததனாலே எ-று.
தம் வலியும் படை துணை முதலியவற்றின் வலியும் சேரவைத்து நோக்கியபோதும் நின்வலி பெரிதாதல் கண்டு, அஞ்சி, தமக்கு வெற்றி வருதல் வேண்டித் தெவ்வர் தெய்வத்தைப் பரவுகின்றன ரென்பார், "பகை பெருமையின் தெய்வம் செப்ப" என்றார். எனவே, தம்மால் செய்து கொள்ளவேண்டிய வலிமுற்றும் செய்துகொண்டா ராயினும், சேரனது பகைமை பெரிதாதற் கஞ்சித் தம்மின் மேம்பட்ட தெய்வத்தைத் துணை வேண்டுவாராயின ரென்பதாம்.
எப்போதும் படையேந்திய வண்ணமாய்ப் பகைவரை எதிர்நோக்கி யிருத்தலின், பாசறை வீரர்க்கு அரிய இருக்கையாதலின், "ஆரிறை" யென்றும், அற்றாயினும் அவருள்ளத்தே அச்சம் நிலவாமையின், "அஞ்சா" என்றும், பகைவர்க்கு அச்சத்தைப் பயத்தலின், "வெருவரு கட்டூர்" என்றும் கூறினார். ஆரிறை யஞ்சாக் கட்டூர், வெருவரு கட்டூர் என இயையும். பழையவுரைகாரர்"ஆரிறை யஞ்சாக் கட்டூ ரென்றது வீரர் அரிதாக இறுத்தலை யஞ்சாத பாசறை யென்றவா" றென்பர். வேற்று நாட்டிடத்தே புதிதாக அமைக்கப் பெறுதலின், பாசறையைக்"கட்டூர்" என்ப;"வேறு புலத்திறுத்த கட்டூர்" ( பதிற். 68) என்று பிறரும் கூறினமை காண்க.
தேர், யானை முதலியவை தாங்கி வரும் கொடிகள் பலவாதலின், "பல்கொடி நுடங்கும்" என்றும், இவற்றை யுயர்த்தித் தம் வலியாற் செருக்கி வரும் பகைவரது போர்பலவும் நெறியறிந்து தாக்கி வெற்றிகொண்ட யானை யென்றற்கு, "செறுநர் செல்சமந் தொலைத்த வினைநவில் யானை" யென்றும் கூறினார். இச்சிறப்பால் இப்பாட்டிற்கும் வினைநவில் யானை யென்பது பெயராயிற்று. பழையவுரைகாரர், "பல்கொடி நுடங்கும் யானை" யென இயைத்து, "வினைநவில் யானை யென்றது முன்பே போர்செய்து பழகிய யானை யென்றவா" றென்றும், "இச் சிறப்பானும் முன்னின்ற அடைச் சிறப்பானும் இதற்கு வினைநவில் யானை யென்று பெயராயிற்" றென்றும் கூறுவர்.
களிறுகள் மதவெறி கொண்டு மிக்க சினத்துடன் பாகர்க்கும் அடங்காது மறலும் வழி, அம் மதம் தணிதற்பொருட்டுப் பிடியானைகளைக் கொணர்ந்து புணர்விப்பது இயல்பு. அங்ஙனம் களிறுகள் பிடிகளைப் புணர்ந்தும் மதம் தணியாது போர் வேட்டுத்திரிந்தன என்பார், "வினை நவில் யானை பிடி புணர்ந்தியல" என்றார். புணர்ந் தென்புழிச் சிறப்பும்மை தொக்கது. பிடி புணர்ந்தியல வென்றது அவ் வினைநவில் யானை கடாம் வார்ந்து கடுஞ் சினம் பொத்தி அச்சினத்திற் கேற்பப் போர் பெறாமையின் பாகன் அதன் சினத்தை அளவு படுத்தற்குப் பிடியைப் புணர்க்கையான் அப்பிடியொடு புணர்ந்தும் போர் வேட்டுத் திரிய வென்றவா" றென்பது பழையவுரை.
எதிர்பார்த்தவாறு போர் விரைய நிகழாமையால் வீரர் போர் வெறி கொண்டிருத்தலை, "மறவர் மறல" என்றும, போர் குறித்துக் குதிரைகள் கலனை யணிந்து செருக்கி நிற்குமியல்பை, "மரப்படை யுறுப்ப" என்றும், இவ்வாறே தேர்களும் தோற்படைகளும் போர்க்கமைந்து முறையே கொடி நுடங்க ஆரவாரித்து நிற்பதைத்"தேர்கொடி நுடங்கத் தோல்புடை யார்ப்ப" என்றும் கூறினார். பழைய வுரைகாரர்"மாப்படை யுறுப்ப வென்றது இன்னபொழுது போர் நிகழுமென்று அறியாமையின் குதிரைகள் கலனை கட்டி யென்றவா" றென்றும்"தேர்கொடி நுடங்க வென்றது தேரைப் போர் குறித்துப் பண்ணி நின்று கொடி நுடங்க வெனறவா" றென்றும், "தோல்புடை யார்ப்ப வென்றது தோல்களும் முன்சொன்னவற்றின் புடைகளிலே போர்குறித்து நாளிடத்து ஆர்ப்ப வென்றவா"றென்றும் கூறுவர்.
கூதிர்ப்பாசறையாதலின், வீரர் குளிர்காய்தற் பொருட்டுக் காட்டை வெட்டி விறகை யெரித்தல்பற்றி, "காடு கைகாய்த்திய" என்றும், ஒவ்வொரு நாளும் போர் நிகழாது நெடிது கழிதலின், "நீடுநாளிருக்கை"யென்றும்,இவ்வாறே பன்னாட்கள் போரின்றியே கழிவதுபற்றி, "இன்ன வைகல் பன்னாளாக" வென்றும் கூறினார். காடுகைகாய்த்திய வென்றற்கு, "பாசறை யிருக்கின்ற நாள் குளிர் நாளாகையால் விறகெல்லா முறித்துத் தீக்காய்ந்த" வென்றும், இன்ன வைக லென்றற்கு, "இப்பெற்றியையுடைய பாசறை யிருக்கின்ற நாட்க" ளென்றும் பழையவுரைகாரர் கூறுவர்.
யானை பிடி புணர்ந்தியல, மறவர் மறல,மா படை யுறுப்ப, தேர் கொடி நுடங்க, தோல் ஆர்ப்ப என்னும் ஐந்தினையும் பன்னாளாக என்பதனோடு முடிக்க." காட்டையென இரண்டாவது விரித்து அதனைக் காய்த்திய என்பதனுட் போந்த பொருண்மையொடு முடிக்க" என்றும், "நீடுநாளிருக்கையையுடைய இன்ன வைகலென இரண்டாவது விரிக்க" என்றும் பழையவுரைகாரர் முடிபு கூறுவர்.
11-16 பாடி.......................நின்னே
உரை: பாடுநர் கொளக் கொளக் குறையா செல்வத்து- பாடிவருவோர் நீ வரையாது வழங்குதலின் பலகாலும் கொண்ட வழியும் குறையாத செல்வத்தையும்; செற்றோர் கொலக் கொலக் குறையாத் தானை - பகைவர் பலகாலும் பொருதழித்த வழியும் குறையாத தானை வீரரையும்; சான்றோர் - அறிவாலமைந்த புலவர்; வண்மையும் செம்மையும் சால்பும் மறனும் புகன்று புகழ்ந்து அசையா நல்லிசை - கொடை செங்கோன்மை சால்பு வீரம் என்ற இவற்றால் விரும்பிப் புகழ்தலால் கெடாத நல்ல புகழையும்; நிலம் தரு திருவின் - மாற்றார் நிலத்தைப் போருடற்றிக் கைக் கொள்ளுதலால் வரும் செல்வத்தையுமுடைய; நெடியோய் - நெடிய சேரமானே; பெரும - பெருமானே; நின்னே பாடிக் காண்கு வந்திசின் - நின்னைப் பாடிக் காண்பதற்கு வந்தேன் எ-று.
செல்வமும், தானையும் மேன்மேலும் பெருகிய வண்ண மிருப்பது தோன்ற, "பாடுநர் கொளக் கொளக் குறையாச் செல்வத்து" என்றும், செற்றோர் கொலக் கொலக் குறையாத் தானை" யென்றும் கூறினார். செல்வத்துக்குப் பாடுநரும் தானைக்குச் செற்றோரும் குறைவினை யுண்டு பண்ணுபவாதலின், அவர்களை எடுத்தோதினார். செல்வச் சிறப்பு கூறு மாற்றால் சேரனது கொடை நிலையும் விளங்குதலால் வண்மையை முதற்கட் கூறினார். தானை வீரரின் தகுதியும் வரிசையு மறிந்து சிறப்புச் செய்து அவர் தொகையைப் பெருக்குதலால், "செம்மை" தெரிவதாயிற்று. சான்றோர் விரும்புதற் கேதுவாதலின், "சால்புமறனும்" இறுதிக் கண் வைத்துச் சிறப்பித்தார். வண்மை முதலிய காரணங்களைக் காணும் சான்றோர் அவற்றால் அவனைப் பெரிதும் விரும்பிப் புகழ்வது கூறுவார் "புகன்று புகழ்ந்து" என்றார். புகழ்ந்தென்னும் வினையெச்சம் காரணப் பொருட்டு. இனிப் பழைய வுரைகாரர், "புகன்று புகழ்ந்தென்பதனைப் புகன்று புகழ வெனத் திரிக்க" என்றும், "புகழ்க் காரணமாகிய வண்மை முதலிய குணங்களைச் சான்றோர் புகன்று புகழ்கையாலெ கெடாது நின்ற நல்ல புகழெனக் கொள்க" என்றும் கூறுவர்.
மாற்றார் நிலத்தை வென்று கைக்கொள்ளு மிடத்து, அவர் திறைப் பொருள் பெருகத் தந்து பணிதலால், அச்செல்வத்தை"நிலந்தரு திரு" என்றார். நிலத்திடத்தே விளைத்துக்கொள்ளும் பெருஞ் செல்வத்தை "நிலத் தருதிரு" என்றா ரென்றுமாம்.
"செற்றார் கொலக் கொலக் குறையாத் தானை யென்றது பகைவர் போருட் கொல்லக் கொல்லக் குறைபடாத தானையென்று அதன் பெருமை கூறியவாறென்பர் பழையவுரைகாரர். பெருமை, மிகுதி.
இதுகாறும் கூறியது, நெடியோய், பெரும, கட்டூரிடத்தே, யானை பிடி புணர்ந்தியல, மறவர் மறல, மா படை யுறுப்ப, தேர் கொடி நுடங்க, தோல் புடை யார்ப்ப, நீடுநா ளிருக்கையை யுடைய வைகல் பன்னாளாத லால், நின்னைப் பாடிக்காண்கு வந்திசின் என்பதாம். பழையவுரைகாரர், "நெடியோய், பெரும, கட்டூரிட்த்தே நீடுநா ளிருக்கை இன்ன வைகல்தான் பன்னா ளான படியானே நின்னைப் பாடிக் காண்கு வந்தேன் எனக் கூட்டி வினைமுடிவு செய்க" என்பர்
"இதனாற் சொல்லியது அவன் வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று"
----------------------
9.3. பஃறோற் றொழுதி
83
கார்மழை முன்பிற் கைபரிந் தெழுதரும்
வான்பறைக் குருகி னெடுவரி பொற்பக்
கொல்களிறு மிடைந்த பஃறோற் றொழுதியொடு
நெடுந்தேர் நுடங்குகொடி யவிர்வரப பொலிந்து
செலவு பெரிதினிதுநிற் காணு மோர்க்கே
இன்னா தம்மவது தானே பன்மாண்*
நாடுகெட வெருக்கி நன்கலந் தரூஉநின்
போரருங் கடுஞ்சின மெதிர்ந்து
மாறுகொள் வேந்தர் பாசறை யோர்க்கே.
துறை: தும்பை யரவம்
வண்ணம்: ஒழுகு வண்ணம்
தூக்கு: செந்தூக்கு
பெயர்: பஃறோற் றொழுதி
---------
*பன்மா என்றும் பாட வேறுபாடுண்டு.
1-5 கார்மழை.......காணுமோர்க்கே
உரை: கார் மழை முன்பின்-கரிய முகிற் கூட்டத்தின் முன்னே கை பரிந்து எழுதரும் வான் பறைக் குருகின் நெடுவரி பொற்ப-ஒழுங்கு குலைந் தெழும் வெள்ளிய சிறகுகளையுடைய கொக்குகளின் நீண்ட வரிசையைப்போல; கொல் களிறு மிடைந்த பல் தோல் தொழுதியொடு-யானைப் படையுடனே செறிந்த பலவாகிய கிடுகுப் படையுடன்; நெடுந்தேர் நுடங்கு கொடி அவிர்வரப் பொலிந்து நின் செலவு-நெடிய தேரிற் கட்டியசையும் கொடிகள் விளங்க அழகுற்றுப் பகைமேற் செல்லும் நின் செலவு; காணு மோர்க்குப் பெரிது இனிது- காண்போர்க்கு மிக்க இன்பந் தருவதாம் எ-று
முன்பின், ஈண்டு முன்னே யென்னும் பொருட்டு. கைபரிதல் என்புழி, கை, ஒழுங்கு. கைபரிதலாவது ஒழுங்கு குலைதலென்றே பழைய வுரையும் கூறுகிறது.மழை முகிலின் முன்னே கொக்குகள் ஒழுங்கு குலைந்து எழுந்து நீளப் பறக்கும் நேரிய தோற்றம், போர் யானைகளோடு மிடைந்துவரும் கிடுகுப் படையோடு தேரிற் கட்டிய கொடி யசைந்துவரும் காட்சிக்கு உவமமாயிற்று. ஒழுங்கு குலைந்து செல்லினும், அவற்றின் நேரிய தோற்றம் கருமுகிற் படலத்திட்ட வரிபோலத் தோன்றுவது பற்றி, "நெடுவரி" யென்றார். கருமுகிற் படலத்திற் றோன்றும் மேகவடுக்குப் போலக் களிறு மிடைந்த கிடுகுப் படையின் தொழுதி தோற்றுமாறு உணர்க. இம் மழைத் தோற்றம் நீண்ட தாரைகளைப் பொழிந்து நில்த்தே பெருவெள்ளம் பெருகி யோடுதற்குக் காரணமாதல் போல, நின் படையின் தோற்றம் பகைவர் மேல் அப்புமாரி பொழிந்து குருதி வெள்ளம் பெருகி யோடுதற்குக் காரண மாமெனக் காண்பாரை மகிழ்வித்தலின், "செலவு பெரிதினிது நிற்காணு மோர்க்கே" என்றார். இனிப் பழைய வுரைகாரர்"மழைக்கொப்பாகிய யானைகளோடு தோல்களையும்,ஒப்பித்துப் பெரியவாகக் கூறிய சிறப்பான் இதற்குப் பஃறோற் றொழுதி யென்று பெயராயிற்" றென்பர்
6-9 இன்னாது.............பாசறை யோர்க்கே
உரை:பன்மாண் நாடு கெட எருக்கி-பகைத்தோருடைய பலவாகிய மாட்சிமையுற்ற நாடுகள் கெட்டழியுமாறு சிதைத்து; நன்கலம் தரூஉம்-ஆங்கே பெறும் நல்ல கலன்களைக் கொணரும்; நின் போர் அருங் கடுஞ் சினம் எதிர்ந்து-நினது பொருதற்கரிய மிக்க சினத்துக்கு இலக்காகி நேர்பட்டு; மாறுகொள் வேந்தர் பாசறையோர்க்கு-மாறுகொண்ட பகைவேந்தர் தங்கிய பாசறை யிலுள்ளார்க்கு; அது இன்னாது-அச் செலவு மிகுதியும் துன்பம் தருவதாகும் எ-று.
எருக்குதல், அழித்தல். நாட்டிடத்தும் காட்டிடத்தும் அவலிடத்தும் மிசையிடத்தும் பலவகை வளங்க ளுண்டாதலின், "பன்மாணாடு" என்றார் இனி, பழையவுரைகாரர் பன்மா என்று பாடங்கொண்டு, "பன்மா வென்றது பலபடி யென்றவா" றென்பர். பலபடியாக அழித்தலாவது பகைவர் நாட்டை எரியிட்டும் சூறையாடியும் கொலைபுரிந்தும் அழித்தலென்று கொள்க. அவ்வாறு அழிக்குமிடத்து உயரிய கலன்களைக் கவர்ந்து கோடலின், " நன்கலம் தரூஉம்" என்றும் பகைத்தோர் பொருது வேறல் அரிதாதற்கேது அவனது படைப் பெருமையேயன்றி மிக்க சினமுமா மென்பார், "போரருங் கடுஞ்சினம்" என்றும் கூறினார். நின்பால் அன்புடையார்க்கு நின் படைச் செலவு பெரிதும் இனிதாமெனவே, அன்பின்றிப் பகைமை கொண்டார்க்கும் பெருந் துன்பமாம் என்பார்"இன்னா தம்மவதுதானே" என்றார். தானே என்பது கட்டுரைச் சுவைபட நின்றது. அம்ம, கேட்பித்தற் பொருட்டு.
இதுகாறும் கூறியது, களிறு மிடைந்த பஃறோல் தொழுதியொடு, நெடுந்தேர் நுடங்கு கொடி விளங்கச் செல்லும் நின்செலவு அன்போடு காணுமோர்க்குப் பெரிது இனிது; நின் கடுஞ்சினம் எதிர்ந்து மாறுகொள் வேந்தரது பாசறையி லுள்ளோர்க்குப் பெரிது இன்னாது என்பதாம் இனிப் பழையவுரைகாரர்"நின்னைக் காண்போர்க்கு நின் படை செல்கின்ற செலவு மழைக் குழாத்தின் முன்பே ஓரொருகால் ஒழுங்கு குலைந்து செல்லும் கொக்கொழுங்குபோலக் களிறு மிடைந்த பஃறோற் கிடுகின் தொகுதியொடு தேர்களின் நுடங்கு கொடி விளங்காநிற்பப் பொலிவு பெற்றுப் பெருக இனிது; அவ்வாறு அன்புறுவாரை யொழிய, அதுதான் இன்னாது; யார்க்கெனின், மாறுகொள் வேந்தர் பாசறையோர்க்கென வினைமுடிவு செய்க" என்பர்."இதனாற் சொல்லியது அவன் படைச்சிறப்புக் கூறிறவாறாயிற்று.
----------------
9.4 தொழில் நவில் யானை
84
எடுத்தே றேய கடிப்புடை யதிரும்
போர்ப்புறு முரசங் கண்ணதிர்ந் தாங்குக்
கார்மழை முழக்கினும் வெளில்பிணி நீவி
நுதலணந் தெழுதருந் தொழினவில் யானை
பார்வற் பாசறைத் தரூஉம் பல்வேற் 5
பூழியர் கோவே பொலந்தேர்ப் பொறைய
மன்பதை சவட்டுங் கூற்ற முன்ப
கொடிநுடங் காரெயி லெண்ணுவரம் பறியா
பன்மா பரந்தபுல மொன்றென் றெண்ணாது
வலியை யாதனற் கறிந்தன ராயினும் 10
வார்முகின் முழக்கின் மழகளிறு மிகீஇத்தன்
கான்முளை மூங்கிற் கவர்கிளை போல
உய்தல் யாவது நின்னுடற்றி யோரே
வணங்க லறியா ருடன்றெழுந் துரைஇப்
போர்ப்புறு தண்ணுமை யார்ப்பெழுந்து நுவல 15
நோய்த் தொழின் மலைந்த வேவீண் டழுவத்து
முனைபுகல் புகல்வின் மாறா மைந்தரொ
டுருமெறி வரையிற் களிறு நிலஞ்சேரக்
காஞ்சி சான்ற செருப்பல செய்துநின்
குவவுக்குரை யிருக்கை யினிது கண்டிகுமே 20
காலைமாரி பெய்து தொழி லாற்றி
விண்டு முன்னிய புயனெடுங் காலைக்
கல்சேர்பு மாமழை தலைஇப்
பல்குரற் புள்ளி னொலியெழுந் தாங்கே
துறை: வாகை.
வண்ணமும் தூக்கும் அது.
பெயர்: தொழி னவில் யானை.
1-7 எடுத்தேறு........முன்ப
உரை: எடுத் தேறு ஏய - படை யெடுத்து முன்னேறிச் செல்லுமாறு வீரரை யேவுகின்ற; கடிப்படை அதிரும் முரசம் கண்ணெதிர்ந்தாங்கு - குறுந்தடியால் புடைக்கப்படுவதால் முழங்கும் தோலாற் போர்த்தலுற்ற முரசமானது கண்ணிடத்தே குமுறி முழங்குவது போல; கார்மழை முழக்கினும் - கார்காலத்து முகிலானது முழங்கினாலும்; வெளில் பிணி நீவி - கட்டுத் தறியை வீழ்த்துக் கட்டறுத்துக்கொண்டு; நுதல் அணந்து எழுதரும் தொழில் நவில் யானை - நெற்றியை மேலே நிமிர்த்தெழும் போர்த் தொழிலில் நன்கு பயிற்சியுற்ற யானைப்படை; பார்வற் பாசறைத் தரூஉம் - பகைவரைப் பார்த்தற்குரிய அரணமைந்த பாசறை யிடத்தை வந்தடையும்; பல் வேற் பூழியர் கோவே - பலவேற் படையினைத் தாங்கும் பூழி நாட்டவர்க்கு அரசே; பொலந்தேர்ப் பொறைய - பொன்னானியன்ற தேரையுடைய சேரமானே; மன்பதை சவட்டும் கூற்ற முன்ப - பகைத்த மக்களைக் கொல்லும் கூற்றுவன் போலும் வலியுடையோனே எ-று.
எடுத்தேறேய முரசம், போர்ப்புறு முரசம் என இயையும். வேந்தன் எடுத்துச் செலவினைக் குறித்தவழி, வீரர்க்கு முரசு முழக்கி்த் தெரிவிக்கப் படுவதுபற்றி, "எடுத்தேறேய முரசம்" என்றும், கடிப்புகொண்டு அறைவதனால் முழங்குதலின், "கடிப்புடை யதிரும் முரசம்" என்றும், தோலாற் போர்க்கப்பட்ட தென்றற்குப்"போர்ப்புறு முரச" மென்றும் கூறினார். கடிப்பு, கடியென்றும், புடைத்தல் புடையென்றும் நின்றன. புடை, முதனிலைத் தொழிற்பெயர். புடையாலென மூன்றாவது விரித்துக் கொள்க. பழைய வுரைகாரரும்"கடிப்பென்பது கடியெனக் கடைக் குறைந்த" தென்றும், "புடையானென உருபு விரிக்க" என்றும் கூறுவர். முரசின் போர்ப் புறுவாய் கண்ணிற் கருவிழிபோல் வட்டமாகக் கரிய மைபூசப்பெற்றுக் குமுறி யதிர்வது போலும் ஓசை யெழுப்பவல்ல தாகலின், "கண்ணதிர்ந் தாங்கு" என்றார். கண்போறலின், கண்ணெனப்பட்டது; வடிவு பற்றிய உவமம். முரசம் கண்ணதிர்ந்தாங்குக் கார்மழை முழக்கினும் என்க. மழைமுழக்கங்கேட்ட துணையானே முரசு முழக்கமென நினைந்து வெளில் பிணி நீவிப் பாசறை நோக்கிச் செல்லும் யானை, முரசம் போர் குறித்து முழங்குமாயின் எத்துணை மறங்கொண்டு செல்லுமென்பது சொல்லவேண்டா வென்பது கருத்து. இனிப் பழைய வுரைகாரர், "முழக்கினு மென்ற உம்மை, முரசினது கண்ணின் அதிர்ச்சியிலேயன்றி அதனோடொத்த மழை முழக்கினும் என எச்சவும்மை" யென்பர்.
துதிக்கையை யுயர்த்து நெற்றியை மேலே நிமிர்த்துப் போர்வெறி கொண்டு மறலும் யானையின் செயலை, "நுதலணந்து எழுதரும்" என்றார். முரசு முழக்கங் கேட்டதும், வெளிலிடத்தே பிணிக்கப்பெற் றிருக்கும் பிணிப்பினை யவிழ்த்து விடுத்தற்குட் கழியும் காலத்தி னருமையையும், அதனால் விளையும் கேட்டினையும் நுனித்துணர்ந்து ஒழுங்கு குலையாது போர்க்குரிய செயல் மேற்கொண்டு பாசறை நோக்கித் தானே செல்லும் சால் புடைமையை விதந்து, "தொழில் நவில் யானை" யெனச் சிறப்பித்தமையால், இப்பாட்டு இப்பெயர் பெறுவதாயிற்று. இனிப் பழைய வுரைகாரர், தொழில் நவில் யானை யென்றது போர்க்குரிய யானை யென்று எல்லாரானும் சொல்லப்படுகின்ற யானை யென்றவா" றென்றும், "இச்சிறப்பானும் முன்னின்ற அடைச்சிறப்பானும் இதற்குத் தொழில் நவில் யானை யென்று பெயராயிற்" றென்றும் கூறுவர். முன்னே"வினை நவில் யானை" (பதிற் 82) என்றதற்குக் கூறியவுரை காண்க.
பிறர் தம்மைக் காணாது தாம் பிறரைக் காணத்தக்க வகையில் போர் வீரர் இருந்து பகைவரைப் பார்க்கும் இடம் பார்வலெனப்படும். பார்வல், பார்வை. ஆகுபெயரால் இடம் குறித்து நின்றது. பாசறைக்கட்டங்கிப் பகைவரது அணி நிலையின் மென்மையும் இடமும் காலமும் பிறவும் நோக்கிப் பொருதல் வேண்டுமாகலின், "பார்வற் பாசறை" யென்றும், கார் முழக்கினைக் கேட்டுப் போரெனக் கருதிச் செல்லும் யானைக்குப் பாசறை யின்றாயினும், பாசறை பண்டமைந்திருந்த இடத்தை யடைகின்றதென வுணர்க. இனிப் பழையவுரைகாரர், இப்பார்வற் பாசறையைப் பகைவர தாக்கி, வெளில் பிணி நீவிச் செல்லும் தொழில் நவில் யானை அப்பாசறைக்குட் சென்று, பகைவரைத் தாக்கி அவருடைய யானைகளைக் கொணரும் என்பார்"பார்வற் பாசறை யானை தரூஉம் என மாறிக் கூட்டி மாற்றாரது காவற் பாசறையிற் புக்கு அவ்யானைகளைக் கொண்டு போதுமென்றவா" றென்பர்.
பூழியர், வேலேந்திச் செய்யும் போரில் சிறந்தவ ரென்றற்கு, "பல் வேற் பூழியர் கோவே" என்றார் போலும். பூழியர்,பூழிநாட்டவர். பூழி நாடு, பாண்டிநாட்டிற்கும் சேரநாட்டிற்கும் இடைப்பட்ட நாடு. இதனால், இது பாண்டியர்க்கும் சேரர்க்கும் மாறி மாறி நின்றமை தோன்ற, இவ்விரு பெரு வேந்தரும் சான்றோரால் அவ்வக் காலங்களில்"பூழியர்கோ" எனப் படுவதுண்டு. மன்பதை, மக்கட்டொகுதி; ஈண்டுப் பகைவர் மேற்று, கூற்றுவனால் வெல்லப்படாத உயிர் நிலவுலகில் யாதும் இல்லையாதலின், பெருவலிக்குக் கூற்றுவன் எல்லையாயினான்."மருந்தில் கூற்றத் தருந் தொழில்", "கூற்று வெகுண்டன்ன முன்னு" (புறம் 342) என்று சான்றோர் கூறுப. கூற்றுவன் வெலற்கரியன் என்பதை, "கீழது நீரகம் புகினும் மேலது விசும்பின் பிடர்த்தலை யேறினும் புடையது, நேமிமால்வரைக் கப்புறம் புகினும், கோள்வாய்த்துக் கொட்குங் கூற்றத்து, மீளிக் கொடுநா விலக்குதற் கரிதே" (ஆசிரிய) என்பதனாலறிக. சவட்டுதல், உருவழித்தல்.
8-14 கொடி.........உரைஇ
உரை: கொட நுடங்கு ஆர் எயில் எண்ணு வரம்பு அறியா- கொடிகள் அசைகின்ற வெல்லுதற்கரிய மதில்களை யெண்ணின் எல்லை காணப்படாத அருமை யுடையவாயின; பல் மா பரந்த- பலவாகிய மாவும் களிறும் பரந்திருக்கின்றன; புலம் ஒன்று என்று எண்ணாது-ஆதலால் நின்னாடு கொள்ளுதற்கரிய தொன்று என எண்ணாது பொருதபடியால்; வலியையாதல் நன்கு அறிந்தனராயினும்-நீ மிக்க வலியுடையையென்பதைத் தெளிய அறிந்து வைத்தும்; வணங்கல் அறியார்-நின்னை வணங்கி வாழ்தலால் வரும் ஆக்கமறியாது மானமொன்றே கொண்டு; உடன் றெழுந் துரைஇ-மாறுபட் டெழுந்து தம் தானை வெள்ளம் பரந்து வர வந்து; நின் உடற்றியோர்-நின்னோடு பொரும் பகைவர்; வார்முகில் முழக்கின்-நீண்டமழை முகிலின் முழக்கம்போல; மழ களிறு மிகீஇ-இளங்களிறு மதஞ் செருக்கிப் பிளிறிக்கொண்டு வர; தன் கால் கவர்-அதன் காற் கீழ் அகப்பட்ட; முளை மூங்கிற் கிளை போல-புதிதாக முளைத்த இளைய மூங்கிலின் கிளையாகிய முளைபோல; உய்தல் யாவது-உயிருய்தல் ஏது; இல்லை யென்றவாறு.
எயில் எண்ணுவரம்பறியா; மா பரந்த; புலம் ஒன்றென் றெணாணாது பொருது தோற்று வலியை யாதல் நன்கு அறி்ந்தனராயினும், வணங்கல் அறியார் மானமொன்றே கொண்டு, உடன்றெழுந்துரைஇ நின் உடற்றியோர் உய்தல் யாவது என இயையும்.
கொடியென வாளாது கூறினமையின், செருப் புகன்றெடுத்த கொடியென வறிக. அதனைக் காணுந்தோறும் பகைவர்க்குச் சினத்தீ மிகுமாயினும், அது நின்ற மதிலைக் கோடற்கு எண்ணுங்கால், மதிலின் உயர்வு அகலம் திண்மை அருமை முதலிய நலங்கள் வரம்பின்றி யிருத்தல் தோன்றுதலின், "ஆரெயில் எண்ணு வரம்பறியா" என்றும், காண்பார் கட்புலன் சென்ற அளவும் மாவும் களிறும் பரந்து தோன்றுதலால், "பன்மா பரந்த" என்றும், இவ்வாற்றால் நின்னாடு பகைவர் கொளற் கரிதென்பது நன்கு அறியக் கிடப்பவும், அறியாது பொருது தோல்வி யெய்தின ரென்றற்கு, "புலம் ஒன்றென்றெண்ணா" தென்றும், தோல்விக் கண்ணும் முன்பு தாம் அறியாதிருந்த நின் வலியை, நன்கு அறியும் பேறுபெற்றென ரென்றற்கு, "வலியையாதல் நன்கறிந்தன" ரென்றும், அவ்வறிவிற்குப் பயன் நின்னை வணங்கி வாழ்தலாகவும், அதனை நினையாது மானமொன்றே கருதித் தம் படைமுழுதும் திரட்டிக்கொண்டு போந்து பொருத லெண்ணின-ரென்றற்கு"ஆயினும் வணங்கலறியார் உடன்றெழுந் துரைஇ நின் உடற்றியோர்" என்றும், மதஞ் செருக்கிப் பிளிறிவரும் இளங்களிற்றின் காற்கீழ் அகப்பட்ட மூங்கில்முனை மீளவும் தலையெடா வண்ணம் அழிவதன்றி வேறில்லை யாதல்போல, நின்னால் அழிக்கப்படும் பகை வேந்தர் குலத்தோடும் கெடுவது ஒருதலை யென்பார், "மழகளிறு மிகீஇத் தன் கால்முளை மூங்கிற் கவர்கிளைபோல உய்தல்யாவது" என்றும் கூறினார். ஏற்புடைய சொற்கள் இசை யெச்சத்தால் வருவிக்கப்பட்டன.
மழகளிற்றின் முழக்கிற்கு முகிலின் முழக்கு உவமமாயிற்று. சேரனது எடுத்துச் செலவுக்குக் களிற்றின் செலவு உவமமாயிற்று; ஆகவே, அடுத்து வர லுவமையின்மை யறிக. யானையின் காற்கீழகப்பட்ட முளை யழிவு மாற்றினை, "கழைதின் யானைக் காலகப்பட்ட, வன்றிணி நீண் முளை போலச் சென்றவண் வருந்தப் பொரேஎ னாயின்" (புறம்.73) என்பதனாலு மறிக. பழையவுரைகாரர்"முளைமூங்கிற் களிறு கால்கவர் கிளைபோல நின் உடற்றியோர் உய்தல்யாவது என மாறிக் கூட்டி முளையான மூங்கிலிற் களிறு காலால் அகப்படுத்தப்பட்ட கிளை யுய்யாதன்றே; அஃது அழிந்தாற்போல நின்னை யுடற்றியோர் உய்தல் கூடாதென வுரைக்க" என்பர். கவர்தல், அகப்படுத்தல்.
15-24. போர்ப்புறு.........தாங்கே
உரை: போர்ப்புறு தண்ணுமை ஆர்ப்பெழுந்து நுவல- தோலாற் போர்க்கப்பட்டுள்ள தண்ணுமையின் ஓசை யெழுந்து போர் செய்தல் வேண்டுமென்று வீரர்க்குத்தெரிவிப்ப; நோய்த் தொழில் மலைந்த வேல் ஈண்டு அழுவத்து உயிர்கட்குச் சாதற்றுன்பத்தைச் செய்யும் தொழிலாகிய போர் செய்தற்கமைந்த வேற்படை நெருங்கும் போர்க்களத்தே; முனை புகல் புகல்வின் மாறா மைந்தரொடு-போரை விரும்பும் விருப்பத்தால் எதிர்ந்த பகை வீரருடன்; உரும் எறிவரையின் களிறு நிலம்சேர-இடி வீழ்ந்த மலைபோலக் களிறுகள் கொலையுண்டு நிலத்தில் வீழ; காஞ்சி சான்ற செரு பல செ்ய்து-நிலையாமை யுணர்வே சிறக்க அமைந்த போர்கள் பல செய்து மேம்பட்டதனால்; மாரி காலை பெய்து தொழிலாற்றி விண்டு முன்னிய புயல்-மழையை உரிய காலத்திற் பெய்து உழவுத்தொழிலை இனிது நிகழப்பண்ணி மலையுச்சியை யடைந்த மழைமுகில்; நெடுங்காலை-நெடுங்காலம் பெய்யாதிருந்து; கல் சேர்பு மாமழை தலைஇ-மலையை யடைந்து மிக்க மழையைப் பெய்ததால்; பல் குரற் புள்ளின் ஒலி எழுந்தாங்கு-பலவேறு குரலோசையையுடைய பறவைகளின் ஒலி யெழுந்தது போல; குவவுக் குரை நின் இருக்கை-திரண்ட ஆரவாரத்தையுடைய நின் படை யிருக்கையை; இனிது கண்டிகும்-இனிது காணாநின்றேம்.
போர் நேர்ந்தகாலத்தே வீரரிடை இயம்பும் இசைக்கருவி அவரைப் போர்க்கு ஏவும் கருத்திற்றாதலின்"எடுத்தேறேய முரசம்" என்றாற்போல, "போர்ப்புறு தண்ணுமை ஆர்ப்பெழுந்து""இசைக்க" என்னாது, "நுவல" என்றார். உயிர்கட்கு இறுதியை விளைவிக்கும் செயலாதலின், போரை "நோய்த்தொழில்" என்றார். வேற்படை முதலிய படைகள் மிடைந்து கடல்போலத் தோன்றலின், போர்க்களம்"அழுவம்" எனப்பட்டது. அழுவம், ஆழ்ந்த இடம்; ஈண்டுக் கடலின் மேற்று;"போரெனிற் புகலும் புனைகழல் மறவர்" (புறம் 31) என்றாற்போல இவர்"முனைபுகல் புகல்வு" என்றார். மாறாமைக்கேது புகற்சியாதலின், "புகல்வின் மாறா மைந்தர்" என்றார். இவர் பகைப்புறத்து வீரர். வேலிற்பட்டு வீழும் களிற்றுக்கு உருமெறிவரை யுவமமாயிற்று. யாக்கை முதலியவற்றின் நிலையாமையை நன்குணர்ந்த சான்றோர் கூடிச் செய்யும் அறப்போர் என்றற்குக்"காஞ்சி சான்ற செரு" என்றார்.
பழையவுரைகாரரும், "நுவல வென்றது படையை யுற்றுப் போர் செய்க வென்று சொல்லவென்றவா" றென்றும், நோய்த் தொழில் மலைந்த வென்றது நோய்த் தொழிலாகிய போரை எறட்டுக்கொண்ட என்றவா" றென்றும், "வேலீண்டழுவ மென்றது மாற்றார் படைப்பரப் பினை" யென்றும், "காஞ்சி சான்ற வென்றது நிலையாமை யமைந்த என்றவா" றென்றும், "செருப்பல செய்து குரைத்தவென முடிக்க;" என்றும் கூறுவர். குவவென்றதை அவர் படைக்குழாம் என்பர்.
பண்டு உரிய காலத்தே பெய்து உழவு முதலிய தொழில்கள் இனிது நடை பெறுவித்த மழை அக்காலம் வருங்காறும் அமைந்திருந்து வந்ததும் மழையைத் தப்பாது பொழிதலின், அதனை யெதிர் நோக்கியிருந்த புள்ளின மனைத்தும் ஆரவாரிப்பது போலும் ஆரவாரத்தை யுடைத்து நின் படையிருப்பு என்றதனால், பண்டு எதிர்ந்த வேந்தரைப் பொருது பெற்ற வென்றிச் சிறப்பு, நெடுங்காலம் போரின்மையின் இல்லாதிருந்து இப்போது நேர்ந்ததும் அதனைப் பெற்று ஆரவாரிக்கின்ற தென்றாராயிற்று.
பழையவுரைகாரர், "காலைமாரி யென்றது மாரியிற் பெய்யும் பெயலினை" யென்றும், "தொழிலாற்றி யென்றது உழவுத் தொழில் முதலாய
தொழில்களைச் செய்வித்" தென்றும், "கல்சேர்பு மாமழை தலிஇ யென்றது, பண்டு ஒரு காலம் பெய்து ஆற்றி, வரைக்கட் போயின புயல், நெடுங் காலம் பெய்யாத நிலைமைக்கண்ணே பின்பு பெய்வதாகக் கல்லைச் சேர்ந்து மழை பெய்ய என்றவா" றென்றும்"தலைஇ யென்பதனைத் தலையவெனத் திரிக்க" என்றும் கூறுவர்.
இதுகாறுங் கூறியது, "கார்மழை முழக்கினும் வெளில் பிணி நீவி நுதலணந் தெழுதரும் யானை தரூஉம் பல்வேற் பூழியர் கோவே, பொறைய, முன்ப; எயில் எண்ணு வரம்பறியா, மாபரந்த; அதனால் புலம் அரியதொன்றென் றெண்ணாது பொருதழிந்து வலியையாதல் நன்கறிந்தன ராயினும், அறியார் உடன்றெழுந்துரைஇ நின் உடற்றியோர் உய்தல் யாவது? என்னெனில், தண்ணுமை யார்ப்பெழுந்து நுவல, மைந்தரோடு களிறு நிலம் சேரக் காஞ்சி சான்ற செருப்பல செய்து வென்றி மேம்பட்டதனால், புள்ளின் ஒலி யெழுந்தாங்குக் குவவுக் குரை யிருக்கை இனிது கண்டிகும்" என்பதாம். இனிப் பழைய வுரைகாரர்"பூழியர் கோவே, பொறைய, முன்ப, பகைப்புலத்து ஆரெயில்கள் எண்ணுவரம்பறியா; பன்மா பரந்தன; ஆகையால் பகைப்புலம் நமக்கு வெலற்கரிய தொன்றென் றெண்ணாது நீ ஆண்டு வல்லுநையான படியை முன்பு அறியாது நின்னை உடற்றியோர் இன்று போர் செய்து அதனை யறிந்தாராயினும் அவர் நின்னோடு உடன்று எழுந்து உரைஇ அதனையே பின்னும் அறிவதல்லது நின்னை வணங்கல் அறிகின்றிலர்; இனி அவர் முளை மூங்கிலிற் கால்கவர் கிளைபோல அழிவதல்லது உய்யவும் கருதுவது யாவது? நெடுங்காலம் பெய்யாத மழை பெய்தவழிப் பல குரலையுடைய புள்ளின் ஒலி யெழுந்தாற் போல நெடுங்காலம் போர் செய்யாது நின்று அவ்வுடற்றியோர் வேலீண்டழுவத்துச் சான்ற செருப்பல செய்து நின் பல படைக்குழாம் ஆரவாரிக்கின்ற இருப்பினை யாம் இனிது கண்டேம் என மாறிக் கூட்டி வினைமுடிவு செய்க" என்றும், "உடன்றெழுந்துரைஇ வணங்க லறியார் என்பது அறிந்தனராயினும் என்பதன் பின் நிற்க வேண்டுதலின் மாறாயிற்று" என்றும் கூறுவர்.
இதனாற் சொல்லியது: அவன் வென்றிச் சிறப்புக் கூறியவாறாயிற்று.
------------
9.5. நாடுகா ணெடுவரை.
85
நன்மரந் துவன்றிய நாடுபல தரீஇப்
பொன்னவிர் புனைசெய லிலங்கும் பெரும்பூண்
ஓன்னாப் பூட்கைச் சென்னியர் பெருமான்
இட்ட வெள்வேன் முத்தைத் தம்மென
முன்றிணை முதல்வர் போல நின்று 5
தீஞ்சுனை நிலைஇய திருமா மருங்கிற்
கோடுபல விரிந்த நாடுகா ணெடுவரைச்
சூடா நறவி னாண்மகி ழிருக்கை
அரசவை பணிய வறம்புரிந்து வயங்கிய
மறம்புரி கொள்கை வயங்கு செந்நாவின் 10
உவலை கூராக் கவலையி னெஞ்சின்
நனவிற் பாடிய நல்லிசைக்
கபிலன் பெற்ற வூரினும் பலவே.
துறை: செந்துறைப் பாடாண்பாட்டு.
வண்ணமும் தூக்கும் அது.
பெயர்: நாடுகா ணெடுவரை.
1-4 நன்மரம்........தம்மென
உரை: நல்மரம் துவன்றிய நாடு பல தரீஇ-நல்ல மரங்கள் செறிந்த நாடுகள் பலவற்றையும் வென்று தந்து; பொன் அவிர் புனைசெயல் இலங்கும் பெரும் பூண்-பொன்னாலியன்ற அழகிய வேலைப்பாடமைந்து விளங்கும் பேரணி கலங்களையும்;ஒன்னாப் பூட்கை-நம்மொடு பொருந்தாது பகைத்த மேற்கோளையு முடைய; சென்னியர் பெருமான்-சோழர்களுக்குத் தலைவனான வேந்தனையும் பற்றி; முத்தை தம்மென-என்முன்னே கொண்டு தருவீராக என்று நீ நின் தானை வீரர்க்குச் சொன்னது கேட்டதும்; இட்ட வெள் வேல்-சோழனுடைய படைவீரர் தோல்விக் குறியாகக் கீழே எறிந்த வேல்கள் எ-று
தத்தமக்குரிய பருவத்தே தப்பாது பழுத்து நல்ல பயன் கொடுக்கும் மரங்களென்றற்கு"நன்மரம்" என்றார். நன்மரம் துவன்றிய நாடெனவே, எல்லார்க்கும் பயன்படும் வளன்மிக வுடைமை கூறியவாறாயிற்று. சோழ வேந்தன் தன்னோடு பகைத்துக்கொண்டதனால் பொருந்தானாயினும் பொன்னானியன்ற பேரணிகலன்களை யுடையனாதலை யறிந்து கூறுவான், "பொன்னவிர் புனைசெயல் இலங்கும் பெரும்பூண்" என்றான். என்றது, இவ்வாறு அவன் பொற்பணி பூணுதற்குரியனே யன்றிப் போருடற்றி வெற்றிமாலை பெறுதற்குரிய னல்லனென இகழ்ந்தவாறு. ஒன்னார்க்குரிய பூட்கை, ஒன்னாப்பூட்கையென வந்தது. ஒன்றா என்பது ஒன்னாவென மருவிற்று என்றுமாம். பழையவுரைகாரர், "ஒன்னாப் பூட்கை யென்றது, பிறர்க்கு அப்படிச் செய்யப் பொருந்தாத மேற்கோள்" என்பர்."பொன்னவிர் புனைசெயல் இலங்கும் பெரும்பூண்" சோழ வேந்தராகிய தமக்கன்றிப் பிறர்க்குரித்தன்று என்னும் பூட்கையுடைய ரென்றும், அதனால், ஒன்னாப்பூட்கை யென்றது, "பிறர்க்கு அப்படிச் செய்யப் பொருந்தாத மேற்கோளென்றும் பழையவுரைகாரர் கருதுகின்றார் போலும்."அருங்கல முலகின் மிக்க வரசர்க்கே யுரிய வன்றிப், பெருங்கல முடைய ரேனும் பிறர்க்கவை பேண லாகா" (சூள். கல். 189) என்று சோணாட்டுத் தோலாமொழித் தேவர் கூறுவது இக் கருத்துக்குச் சான்று பகர்கின்றது. "சென்னியர் பெருமா" னென்றது சோழனை இழித்தற்கண் வந்தது.
நன்மரம் துவன்றிய நாடு பல தருவதோடமையாது, அந்நாட்டுச் சென்னியர் பெருமானையும் பற்றிப் பிணித்து என்முன்னே கொணர்ந்து நிறுத்துக என்று சேரன் தன் தானைவீரர்க்குப் பணித்தசொல் கேட்டதும், சோழர் அஞ்சி"இனி இவனொடு பொருது வேறல் இல்லை" யெனத் துணிந்து தாமேந்திய வேற்படையை நிலத்தே யெறிந்து அடிபணிந்தன ரென்றற்கு, "முத்தை தம்மென இட்ட வெள்வேல்" என்றார். அவ்வேலின் தொகை, "கபிலன்பெற்ற வூரினும் பல" (வரி. 13) என்பதனால், சென்னியர் பெருமான்பால் இருந்த வீரர் மிகப் பலரென்றும், ஆயினும் அவர் சேரமான் படையொடு பொருது வெல்லும் மதுகையிலரென்றும் கூறினாராம். முத்தை, முந்தை யென்பதன் விகாரம். பழையவுரைகாரரும்,
சென்னியர் பெருமானை யென்பதனுள் இரண்டாவது தொக்க" தென்றும், "முத்தைத் தம்மென-முன்னே தம்மினென" என்றும், "முந்தை முத்தையென வலித்த" தென்றும் கூறுவர். எண்ணுங்கால் தோற்றோர் எறிந்த படையைப் பொருளாக எடுத்துக் கூறு மிம்மரபு "இன்முகம் கரவாது வந்து நீ யளித்த அண்ணல் யானை யெண்ணில், கொங்கர்க், குடகட லோட்டிய ஞான்றைத், தலைப் பெயர்த்திட்ட வேலினும் பலவே" (புறம் 130) என்று ஏணிச்சேரிமுடமோசியார் கூறுதலானும் அறியப்படும்
5-14 முன்றிணை..பலவே
உரை: முன்திணை முதல்வர்போல நின்று-நின்குலத்து முன்னோர்களைப்போல நன்னெறிக்கண்ணே நிலைபெற நின்று; தீஞ்சுனை நிலைஇய-இனியநீர் வற்றாது நிலைபெற்ற; திருமா மருங்கின்-அழகிய பெரி பக்கத்தாலும்; பல கோடு-பல சிகரங்களாலும் சிறந்த; விரிந்த நாடுகாண் நெடுவரை-அகன்றுள்ள தன் நாடு முற்றும் தன்மேல் ஏறியிருந்து இனிது காணத்தக்க நெடிய மலையிடத்தே; சூடா நறவின் நாண்மகிழ் இருக்கை-நறவு என்னும் ஊரின்கண் இருக்கும் அம் மூன்றிணை முதல்வர் நாட்காலைத் திருவோலக்கத்தையும்; அவை அரசு பணிய-தனது அரசவைக் கண்ணே ஏனை யரசர் வந்து பணிந்து தொழில் கேட்ப; அறம் புரிந்து வயங்கிய-அறம் செய்து விளங்கிய;மறம்புரி கொள்கை-அறத்திற் கிடையூறு நேர்ந்தவழி அதனைப் போக்குதற்கண் வாடாத மறத்தை விரும்பி மேற்கொள்ளும் கோட்பாட்டையும்; நனவிற்பாடிய-மெய்யாகவே பாடிய; வயங்குசெந்நாவின்-விளங்குகின்ற செமமையான மொழியும்; உவலை கூராக் கவலையில் நெஞ்சின்-புன்மை மிகுதற் கேதுவாகிய கவலையில்லாத நெஞ்சும்; நல்லிசை-நல்ல புகழும் படைத்த; கபிலன் பெற்ற ஊரினும்-கபில ரென்னும் புலவர் பெருமான் அவருட் செல்வக் கடுங்கோ வாழியாதனால் நன்றா என்னும் குன்றின்மேலிருந்து தரப்பெற்ற ஊர்களைக் காட்டிலும்; பல -(சோழர் இட்ட வேல்கள்) பலவாகும் எ-று. "நாண்மகி ழிருக்கையும், மறம்புரி கொள்கையும் கபிலனால் பாடப் பட்டனவென்றும், அக் கபிலன் செந்நாவும் கவலையி னெஞ்சும் நல்லிசையுமுடையனென்றும் பகுத்தறிந்து கொள்க.
முதல்வர்போல நின்று நிலைஇய நெடுவரை யெனவும், சுனை நிலைஇய நெடுவரை யெனவும் இயையும். ஈண்டு முதல்வர் என்றது அவர் புகழுடம் பின் மேற்று. மாரிக்காலத்து உண்ட நீரைக் கோடைக்காலத்தே உமிழ்வதனால் நீர் இடையறாது நிலைபெற்றொழுகுதலால், மலைப்பக்க மெங்கும் வளஞ் சிறந்து கண்டாரால் விரும்பப்படும் தன்மை மிகப்பெறுதலால், "திருமா மருங்கின்" என்றார்."மருங்கினாலும் கோடுகளால் நெடிதாகிய மலை" யென்க. நாடுமிக விரிந்ததாயினும், நெடுமையால் தன் சிகரத்தின் மேலேறி நோக்குவார்க்குச் சிறிதும் ஒழிவின்றிக் காணத் தக்கதாக இருத்தலால், "நாடுகாண் நெடுவரை" யென்றார். சேரமானுடைய முன்றிணை முதல்வர் போல நின்று நிலைஇய சிறப்பினாலும் நாட்டின் நலமுற்றும் காண விழைவார்க்குத் தன் நெடுமையால் அவர் இனிது காண வுதவியும், நாட்டின் வளமறிய விரும்பினாரைத் தன் திருமாமருங்கினாலும் பலவாகிய கோடுகளாலும் சேய்மைக்கண்ணிருந்தே காண்பிக்கும் சிறப்பினாலும், "நாடுகாணெடுவரை" என்ற இத்தொடர் இப்பாட்டிற் சிறப்புற்று நிற்றலின், இதனானே இதுவும் பெயர் பெறுவதாயிற்று. இனிப் பழையவுரைகாரர், "நாடுகா ணெடுவரை யென்றது தன்மேலேறி நாட்டைக்கண்டு இன்புறுதற் கேதுவாகிய ஓக்கமுடைய மலையென்றவா" றென்றும், "இச் சிறப்பானே இதற்கு நாடுகா ணெடுவரை யென்று பெயராயிற்றென்றும் கூறுவர்.
நறவம் பூவின் வேறாக நறவு என்னும் வெளிப்படுத்தற்கு, "சூடா நறவின்" என்றும், ஞாயிறெழுங் காலைநேரத்தை நாட்கால மென்பவாகலின், அக்காலத் தரசிருக்கையை, "நாண்மகி ழிருக்கை" யென்றும் கூறினார். அறம்புரிதலும் மறம்புரிதலும் வேந்தற்கு அகத்தொழிலும் புறத் தொழிலுமாதலின், "அறம்புரிந்து வயங்கிய மறம்புரி கொள்கை" யென்றார். அறம்புரியு மிடத்தும் அதற்கெய்தும் களைகளை நீக்குதற்கு மறம் வேண்டுமென்க. இனிப் பழையவுரைகாரர், "அறம் புரிந்து வயங்கிய கொள்கொ யென்னாது மறம்புரி யென்றது அதற்கு இடையீடுபட வருவழி அதனைக் காத்தற்கு அவ்வறக் கொள்கை மறத்தொடு பொருந்து மென்றற்கு" என்பர்.
நாவிற்கு விளக்கந்தரும் செம்மை"யாதொன்றுந் தீமையிலாத சொலல்" ஆதலின், அதனைச் சொல்லும் கபிலன் நாவினை, "செந்நா" என்றும், வறுமை கூர்ந்தவழியும் மனத்தின்செம்மை மாறாது, புல்லிய நினைவுகட்கு இடந்தந்து வீணே கவலை யெய்தாது விளங்குவது பற்றி, "உவலை கூராக் கவலையில் நெஞ்சின்" என்றும் கூறினார். உவலை, புன்மை,இழிவு. கபிலன் பாட்டிற் காணப்படும் காட்சியனைத்தும் நனவினும் காணப்படுதலின், "நனவிற் பாடிய" என்றார். பிற்காலச் செய்யுள் வழக்கிற் காணப்படும் இயற்கையொடுபடாத புனைந்துரையும் புனைவுக் காட்சியும் அவன் பாடுவதிலன் என்பதாம்.
கபிலர் செல்வக் கடுங்கோவாழியாதனை இந்நூலிற் காணப்படும் ஏழாம் பத்தினைப் பாடிப்பெற்ற பரிசில், "சிறுபுறமென நூறாயிரங் காணங் கொடுத்து, நன்றா வென்னுங் குன்றேறி நின்று தன் கண்ணிற்கண்ட நாடெல்லாம் காட்டிக்கொடுத்தான் அக்கோ" என்று அவ்வேழாம் பத்தின் பதிகம் கூறுகின்றது.
இதுகாறும் கூறியவாற்றால், சேரமானே, நீ நின் தானை வீரரை நோக்கி, நாடுபல தரீஇ, பெரும் பூணும் பூட்கையு முடைய சென்னியர் பெருமானை முத்தைத்தம்" என ஏவ, சென்னியர் வீரர், அஞ்சி நிலத்தே எறிந்த வேல்கள், நாடுகாண் நெடுவரைக்கண் நாண்மகிழ் இருக்கையையும் மறம்புரி கொள்கையையும் நனவிற்பாடிய நல்லிசைக் கபிலன் பெற்றவூர்களிலும் பலவாம் என்பதாம். இனிப் பழையவுரைகாரர், "இளஞ்சேரலிரும்பொறை, சென்னியர் பெருமானுடைய நாடுகள் பலவற்றையும் எமக்குக் கொண்டு தந்து அச் சென்னியர் பெருமானை எம் முன்னே பிடித்துக் கொண்டுவந்து தம்மினெனத் தம் படைதலைவரை யேவச் சென்னியர் பெருமான் படையாளர் பொருது தோற்றுப் போகட்ட வெள்வேல், செல்வக் கடுங்கோ வாழியாத னென்பவன் நாடுகா ணெடுவரையின் நாண்மகி ழிருக்கைக் கண்ணே தன் முன்றிணை முதல்வர்போல அரசவை பணிய அறம்புரிந்து வயங்கிய மறம்புரி கொள்கையைப் பாடின கபிலன் பெற்றவூரினும் பல என மாறிக் கூட்டி வினை முடிவு செய்க." என்றும், " செம்பியர் பெருமாளைத் தம்மென மாறவேண்டுதலின் மாறாயிற்"றென்றும், "இனிப் பிறவாறு மாறிப் பொருளுரைப்பாரு முள"ரென்றும் கூறுவர்.
இதனாற் சொல்லியது அவன் முன்னோருடைய கொடைச் சிறப்பொடு படுத்து அவன் வென்றிச் சிறப்பக் கூறியவாறாயிற்று.
-----------
9.6. வெந்திறற் றடக்கை
86
உறலுறு குருதிச் செருக்களம் புலவக்
கொன்றமர்க் கடந்த வெந்திறற் றடக்கை
வென்வேற் பொறைய னென்றலின் வெருவா*
வெப்புடை யாடூஉச் செத்தனென் மன்யான்
நல்லிசை நிலைஇய நனந்தலை யுலகத் 5
தில்லோர் புன்கண் டீர நல்கும்
நாடல் சான்ற நயனுடை நெஞ்சின்
பாடுநர் புரவல னாடுநடை யண்ணல்
கழை நிலை பெறாஅக் குட்டத் தாயினும்
புனல்பாய் மகளி ராட வொழிந்த 10
பொன்செய் பூங்குழை மீமிசைத் தோன்றும்
சாந்து வருவானி நீரினும்
தீந்தண் சாயலன் மன்ற தானே.
--------
*மூலமட்டு முள்ளதில் 'வெருவா' என்ற பாடமே யுளது.
இதுவுமது
பெயர்: வெந்திறற் றடக்கை
1...4 உறலுறு ------மன்யான்
உரை: உறல் உறு குருதிச் செருக்களம் புலவ- நிலத்திலே ஊறிச் சுவறுமாறு மிக்க குருதியால் போர் நிகழ்ந்த நிலம் புலால் நாற்றம் நாற; அமர் கொன்று கடந்த - எதிர்த்த பகைவரைப் போரிலே வஞ்சியாது பொருது கொன்று வென்ற; வெந்திறல் தடக்கை - வெவ்விய திறல் பொருந்திய பெரிய கையையும்; வென்வேல் - வெற்றி பொருந்திய வேலையுமுடைய; பொறையன் என்றலின்- பொறையனென்று எல்லாருஞ் சொல்லுதலால்; வெருவா - கேட்குந்தோறும் உளம் அஞ்சி; யான் வெப்புடை ஆடூஉ செத்தனென்மன் - யான் பொறைய னென்பான் வெம்மையுடைய ஆண்மகனென்றே முன்பெல்லாம் கருதினேன்; அஃது இப்பொழுது கழிந்தது எ-று
நிலத்திலே ஊறிச் சுவுறுமாறு மிக்கு ஒழுகுதலின், "உறலுறு குருதி" யென்றும், அதனால் செருநிலம் புலால் நாறுதலின், "செருக்களம் புலவ" என்றும், இந் நிலைமைக்கு ஏதுவாக அவன் செய்த போரை, "கொன்றமர் கடந்த" என்றும் குறிப்பித்தார். குருதியூறி நிலம் புலால் நாறுமாறு செய்யும் போரில் எண்ணிறந்த உயிர்கள் கொலையுண்ணப் பொருவது மிக்க திறனுடையார்க் கல்லது கூடாமையின், "வெந்திறல் தடக்கை வென்வேற் பொறையன்" என்றார். இச்சிறப்பினால் இப்பாட்டும் வெந் திறற் றடக்கை யென்று பெயர் பெறுவதாயிற்று.
இனிப் பழைய வுரைகாரர், "உறலுறு குருதி யென்றது உறுதல் மிக்க குருதி யென்றவா"றென்றும், "உறலுறு என்பது முதலாக முன்னின்ற அடைச் சிறப்பான் இதற்கு வெந்திறற் றடக்கை யென்று பெயராயிற்"றென்றும் கூறுவர்.
இளஞ்சேர லிறும்பொறையைக் கூறுவோ ரெல்லாம் அவன் பெயரைப் பட்டாங்குக் கூறாது வெந்திறற் றடக்கை வென்வேற் பொறைய னென்றே கூறுதலின், அவன்பால் தண்ணிய மென்மை கிடையாது போலும் என்று அஞ்சினேன் என்பார், "வெருவா, வெப்புடை ஆடூஉச் செத்தனென் மன்யான்" என்றார். எனவெ னெச்சம் வருவிக்கப்பட்டது. பண்டெல்லாம் இவ்வாறு கருதினேன், இதுபோது, அஃதொழிந்த தென்பது படநிற்றலின், மன் ஒழியிசை. எல்லாரும் சொல்லுதலால், இன்னாரென்று கூறாது, "என்றலின்" எனப் பொதுப்படக் கூறினாரென வுணர்க.
5-13 நல்லிசை ........ தானே.
உரை:நனந்தலை யுலகத்து நல்லிசை நிலையைஇய - அகன்ற இடைத்தையுடைய உலகத்திலே நல்ல புகழை நிலைநிறுத்தும் பொருட்டு; இல்லோர் புன்கண் தீர - வறியவருடைய துன்பம் நீங்குமாறு; நல்கும் - வேண்டுவனவற்றை நிரம்ப வழங்கும்; நாடல் சான்ற நயனுடை நெஞ்சின் - அறத்தையே யாராய்தற் கமைந்த அன்புடைய நெஞ்சினையும்; ஆடு நடை அண்ணல் - அசைந்த நடையினையுமுடைய அண்ணலாகிய; பாடுநர் புரவலன் - புகழ்பாடும் புலவர் பாணர் முதலாயினாரை ஆதரிப்பவன்; கழை நிலைபெறாஅக் குட்டத்தாயினும் - ஓடக்கோல் நிற்கமாட்டாத ஆழமுடைத்தாயினும்; புனல்பாய் மகளிர் ஆட - ஆண்டுள்ள நீரில் விளையாட்டயரும் மகளிர் பாய்ந்தாடுதலால்; ஒழிந்த பொன்செய் பூங்குழை மீமிசைத் தோன்றும் - அவர் காதினின்றும் வீழ்ந்த பொன்னாற் செய்த அழகிய குழையானது மேலே நன்றாகத் தெரியும்; சாந்துவரு வானி நீரினும் - சந்தன மரங்கள் மிதந்துவரும் வானியாற்றின் நீரைக் காட்டிலும்; மன்ற தீந்தண் சாயலன் - தெளிவாக இனிய தண்ணிய மென்மையை யுடையனாவான் எ-று.
ஒருவன் புகழ் பெறுதற்குரிய காரணங்களுள் வறுமையான் இரப்பார்க்கு வழங்கும் கொடை சிறந்ததாகலின், "நல்லிசை நிலைஇய இல்லோர் புன்கண் தீர நல்கும்" என்றார்.நிலைஇய, செய்யிய வென்னும் வினையெச்சம்."உரைப்பா ருரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன், றீவார் மேனிற்கும் புகழ்" (குறள். 232) என்று சான்றோர் கூறுவது காண்க. "நனந்தலை யுலகத்" தென்றது இடைநிலை.
வறுமையால் வாடுவோர்க் குளதாகும் துன்பத்தை யோர்ந்து அதனை நீக்குதற் குரிய கடன்மை தன்பால் உண்மையும் தெளிந்து புன்கண் தீரும் அளவும் பொருட்கொடை வழங்குதற்கு நெஞ்சின்கண் ஆராய்ச்சியும் அதற் கேதுவாக அன்பும் வேண்டுதலின், "நாடல்சான்ற நயனுடை நெஞ்சின்" என்றார். புலவர் பாடும் புகழுடையார் வானோருலகம் இனிது எய்துவ ரென்பது பற்றிப் பாடுநரைப் புரக்கின்றா னென்பார், "பாடுநர் புரவலன்" என்றும், வெற்றியும் புகழும் வலியு முடையார்க்குப் பெருமித நடை யுளதாகலின், "ஆடுநடை யண்ணல்" என்றும் கூறினார்.
"கழை நிலைபெறாஅக் குட்ட"மெனவே, மிக்க ஆழமுடைமை பெற்றாம், ஆழமுடைய குட்டத்து நீர்நிலை மணிபோற் கருத்துத் தோன்றுமாதலின், அதனடியில் வீழ்ந்தபொருள் தோன்றுத லரிதன்றோ; இவ்வானியாற்றுநீர் அத்துணை ஆழமுடைத்தாயினும், பளிங்குபோல் தன்னகத்துப் பட்ட பொருளை இனிது புலப்படுத்து மென்பார், "பொன்செய் பூங்குழை மீமிசைத் தோன்றும்" என்றார். மகளிர் புனலிற் பாய்ந்தாடு மிடத்து அவர் காதிற் செறிக்கப்பட்டிருக்கும் குழை வீழ்தல் இயல்பு;"வண்டலாயமொ டுண்டுறைத் தலைஇப் புனலாடு மகளிரிட்ட பொலங்குழை" (பெரும்பாண். 311-2) என்று பிறரும் கூறுதல் காண்க.
வானியாறு நீலகிரியில் தோன்றிச் சந்தன மரம் செறிந்த காட்டு வழியாக வருதலின், "சாந்துவரு வானி" யென்றார். அதன் நீர் மிக்க தட்பமுடைய தென்பது அது காவிரியொடு கலக்குமிடத்தே இக்காலத்தும் இனிது காணலாம். சாயற்கு நீரை உவமம் கூறுவது, "நெடுவரைக் கோடு தோறிழிதரும், நீரினும் இனிய சாயற் பாரிவேள்" (புறம். 105) என வரும் கபிலர் பாட்டாலும் அறியலாம்.
இனிப் பழையவுரைகாரர், "வருவானி யென்றது வினைத்தொகை" யென்றும், "வானி யென்பது ஓர் யாறு" என்றும் கூறுவர்.
இதுகாறுங் கூறியவாற்றால், "இளஞ்சேர லிரும்பொறையை, யெல்லாரும் வெந்திறற் றடக்கை வென்வேற் பொறையன் என்றலின், யான் வெருவி, வெப்புடையாடூஉ என்று முன்பெல்லாம் நினைந்து அஞ்சினேன்; அஃது இப்போ தொழிந்தது; அவன் நல்லிசை நிலைஇய, இல்லோர் புன்கண் தீர நல்கும் புரவலன்; அண்ணல்; வானி நீரினும் தீந்தண் சாயலன்" என்பதாம். இனிப் பழைய வுரைகாரர், "இளஞ்சேர லிரும்பொறையை எல்லாரும் வெருவரச் செருக்களம் புலவக் கொன்றமர்க்கடந்த தடக்கைப் பொறைய னென்று சொல்லுகையாலே யான் அவனை வெப்ப முடையானொரு மகனென்று முன்பு கருதினேன்; அஃது இப்பொழுது கழிந்தது; அப்பொறையனாகிய பாடுநர் புரவலன் ஆடுநடை யண்ணல்; யான் தன்னொடு கலந்திருந்த வழித் தன்னாட்டு வானியாற்று நீரினும் சாயலனாயிருந்தான்றான் எனக் கூட்டி வினைமுடிவு செய்க" என்பர்.
இதனாற் சொல்லியது அவன் வன்மை, மென்மைச் சிறப்புக் கூறியவாறாயிற்று.
-------------
9.7. வெண்டலைச் செம்புனல்
87
சென்மோ பாடினி நன்கலம் பெறுகுவை
சந்தம் பூழிலொடு பொங்குநுரை சுமந்து
தெண்கடன் முன்னிய வெண்டலைச் செம்புனல்
ஒய்யு நீர்வழிக் கரும்பினும்
பல்வேற் பொறையன் வல்லனா லளியே. 5
துறை: விறலியாற்றுப் படை
வண்ணமும் தூக்குமது.
பெயர்: வெண்டலைச் செம்புனல்.
1-5 சென்மோ...............அளியே
உரை: சந்தம் பூழிலொடு - சந்தனக் கட்டைகளோடும்
அகிற் கட்டைகளோடும்; பொங்குநுரை சுமந்து - மிக்குவரும் நுரைகளைச் சுமந்துகொண்டு; தெண்கடல் முன்னிய - தெளிந்த கடலை நோக்கிச் செல்லும்; வெண்டலைச் செம்புனல் - நுரையால் வெளுத்த அலையுடன்கூடிய சிவந்த புதுப்புனல்பெருகிய யாற்றில்; நீர்வழி ஒய்யும் கரும்பினும் - நீரைக் கடத்தற்குப் புணையாய் உதவும் வேழக்கரும்பைக் காட்டிலும்; பல்வேற் பொறையன் அளிவல்லன் - பல வேற்படையினையுடைய இளஞ்சேர லிரும் பொறையாவான் நின்னை அளித்தல் வல்லனாதலால்; பாடினி சென்மோ - பாடினியே நீ விரைந்து அவன்பாற் செல்வாயாக; நன்கலம் பெறுகுவை - சென்றால் நீ நல்ல அணிகலன்களைப் பெறுவாய் எ-று
விறலியைப் பொறையன்பால் ஆற்றுப் படுத்துகின்றமையின், "சென் மோபாடினி" யென்றும், செல்லின் அவன்பால் அவள் பெறுவது ஈதென்பார்" நன்கலம் பெறுகுவை" யென்றும், பெறுமாறு வழங்கும் பொறையனது அருண்மிக வுடைமையினை, "ஒய்யும் நீர்வழிக் கரும்பினும் பல்வேற் பொறையன் வல்லனால் அளியே" என்றும் கூறினார். மோ, முன்னிலை யசை. பாடினி, அண்மைவிளி. ஆல், அசை.
சந்தனத்தையும் அகிலையும் சுமந்து வருதல் காட்டாற்றுக்கு இயல்பாதலின்"சந்தம் பூழிலொடு" என்றார்.;"சந்தமாரகிலொடு சாதி தேக்கம் மரம்" (ஞானசம். காளத். 1) என்பது காண்க. சீரிய விரைப்பொருளாம் இனம் பற்றி, இரண்டையும் சேரக் கூறுவார், கேட்பவள் மகளாதலின் அவள் விரும்பிக் கேட்க அவட்குப் பெரிதும் பயன்படும் இவற்றை விதந் தோதினாரென வறிக. சந்தனமும் அகிலுமாகிய கட்டைகளை யலைத்துச் சுமந்து வருங்கால் அலைகளின் அலைப்பால் நுரை மிகுதலின், "பொங்குநுரை சுமந்து" என்றும், அதனால் வெளுத்த அலையுடன் கூடிவரும் புனல் புது வெள்ளமென்பது தோன்ற", "வெண்டலைச் செம்புனல்" என்றும் யாறெல்லாம் கடல் நோக்கியே செல்லுவன வாதலால், "தெண் கடல் முன்னிய செம்புனல்" என்றும் குறினார். புதுப் பெருக்காதலில் செந்நிறம் பெற்றுப் பொங்கு நுரையால் தலை வெளுத்துக் கலக்கமுற்ற செம்புனல், தெளிவெய்தல் வேண்டித் தெண்கடல் முன்னிச் செல்லு மென்பதனால், வறுமையால் உளம் கலங்கி நன்கல மின்மையால் பொலிவிழந்து செல்லும் நீ, அவனது அளித்தல் வன்மையால் நலம் பெறுவை என்னும் குறிப்புடன் நிற்கும் சிறப்பினால், இப்பாட்டு, "வெண்டலைச் செம்புனல்" என்று பெயர் பெறுவதாயிற்று. இனி, பழையவுரைகாரர், "வெண்டலைச் செம்புனலென முரண்படக் கூறியவாற்றானும் முன்னின்ற அடைச் சிறப்பானும் இதற்கு வெண்டலைச் செம்புனலெனப் பெயராயிற்" றென்பர். "செம்புனலென்றது செம்புனலையுடைய யாற்றினை" யென்பது பழையவுரை. முன்னிய வென்ற பெயரெச்சம் புனலொடு முடிந்தது.
வேழப்புணை யாற்றுநீரைக் கடத்தற்குத் துணையாவதல்லது கடந்த பின்னும் துணையாவதில்லை. பொறையன் நினது இவ்வறுமைத் துனபத்தைக் கடத்தற்குத் துணையாம் பெருவளம் நல்குவதே யன்றி, அத்துன்பமின்றி இனிதிருக்குங் காலத்தும் வழங்கியருள்வ னென்பர், "கரும்பினும் அளித்தல் வல்லன்" என்றார். சீரிய துணையன்மைக்கு வேழப் புணையின் தொடர்பு உவமமாகச் சான்றோரால் கூறப்படுவதுபற்றி, உறழ்ந்து கூறினாரென்க."நட்பே, கொழுங்கோல் வேழத்துப் புணை துணையாகப், புனலாடு கேண்மை யனைத்தே" (அகம் 186) என்று ஆசிரியர் பரணர் கூறுதல் காண்க.
"ஒய்யும் நீர்வழிக் கரும்பினும்" என்பதை"நீர்வழி ஒய்யும் கரும்பினும்" என மாறி இயைக்க. பழையவுரைகாரர், "நீர்வழி ஒய்யும் கரும்பெனக் கூட்டி நீரிடத்துச்செலுத்தும் கரும்பென்க" என்றும், "கரும்பென்றது கருப்பந் தெப்பத்தினை" யென்றும் கூறுவர்
இதுகாறுங் கூறியவாற்றால், பாடினி, பல்வேற் பொறையன் அளித்தல் வல்லனாதலின், நீ அவன்பாற் சென்மோ, நன்கலம் பெறுகுவை என்பதாம். இனிப் பழையவுரைகாரர், "பல்வேற் பொறையன் வெண்டலைச் செம்புனலை யுடைய யாற்றிற் செலுத்தும் கருப்பம் புணையிலும் அளித்தல் வல்லன்; ஆதலால் அவன்பாலே பாடினி, செல்; செல்லின் நன்கலம் பெறுகுவை எனக் கூட்டி வினைமுடிவு செய்க" என்றும், "இதனாற் சொல்லியது அவன் அருட் சிறப்புக் கூறியா றாயிற்று" என்றும் கூறுவர்.
-----------
9.8. கல் கால் கவணை
88
வையக மலர்ந்த தொழின்முறை யொழியாது
கடவுட் பெயரிய கானமொடு கல்லுயர்ந்து
தெண்கடல் வளைஇய மலர்தலை யுலகத்துத்
தம்பெயர் போகிய வொன்னார் தேயத்
துளங்கிருங் குட்டந் துளங்க வேலிட் 5
டணங்குடைக் கடம்பின் முழுமுத றடிந்து
பொருமுர ணெய்திய கழுவுள் புறம்பெற்று
நாம மன்னர் துணிய நூறிக்
கால்வல் புரவி யண்ட ரோட்டிச்
சுடர்வீ வாகை நன்னற் றேய்த்துக் 10
குருதி விதிர்த்த குவவுச்சோற்றுக் குன்றோ
டுருகெழு மரபி னயிரை பரைஇ
வேந்தரும் வேளிரும் பின்வந்து பணியக்
கொற்ற மெய்திய பெரியோர் மருக
வியலுளை யரிமான் மறங்கெழு குரிசில் 15
விரவுப்பணை முழங்கு நிரைதோல் வரைப்பின்
உரவுக்களிற்று வெல்கொடி நுடங்கும் பாசறை
ஆரெயி லலைத்த கல்கால் கவணை
நாரரி நறவிற் கொங்கர் கோவே
உடலுநர்த் தபுத்த பொலந்தேர்க் குருசில் 20
வளைகடன் முழவிற் றொண்டியோர் பொருந
நீநீடு வாழிய பெரும நின்வயின்
துவைத்த தும்பை நனவுற்று வினவும்
மாற்றருந் தெய்வத்துக் கூட்ட முன்னிய
புனன்மலி பேரியா றிழிதந் தாங்கு 25
வருநர் வரையாச் செழும் பஃறாரம்
கொளக்கொளக் குறையாது தலைத்தலைச் சிறப்ப
ஓவத் தன்ன வுருகெழு நெடுநகர்ப்
பாவை யன்ன மகளிர் நாப்பண்
புகன்ற மாண்பொறிப் பொலிந்த சாந்தமொடு 30
தண்கமழ் கோதை சூடிப் பூண்சுமந்து
திருவிற் குலைஇத் திருமணி புரையும்
உருகெழு கருவிய பெருமழை சேர்ந்து
வேங்கை விரிந்து விசும்புறு சேட்சிமை
அருவி யருவரை யன்ன மார்பிற் 35
சேணாறு நல்லிசைச் சேயிழை கணவ
மாகஞ் சுடர மாவிசும் புகக்கும்
ஞாயிறு போல விளங்குதி பன்னாள்
ஈங்குக் காண்கு வந்தனென் யானே
உறுகா லெடுத்த வோங்குவரற் புணரி 40
நுண்மண லடைகரை யடைதரும்
தண்கடற் படப்பை நாடுகிழ வோயே.
துறை: செந்துறைப் பாடாண்பாட்டு.
வண்ணமும் தூக்குமது.
பெயர்: கல் கால் கவணை.
1--15. வையகம்.................குருசில்
உரை:கடவுட் பெயரிய கானமொடு கல் உயர்ந்து- விந்தை யென்னும் பெயரையுடைய கொற்றவையின் பெயராலாகிய விந்தாடவியொடு அப்பெயரையே யுடையதாகிய விந்தமலையினும் புகழ் மிகுந்து; தெண்கடல் வளைஇய மலர்தலை யுலகத்து-தெளிந்த கடலாற் சூழப்பட்ட அகன்ற இடத்தையுடைய நிலவுலகத்தில்; வையகம் மலர்ந்த தொழில்முறை ஒழியாது- நாடு வளம் சிறத்தற் கேதுவாகிய அரசர்க்குரிய தொழில் முறை வழுவாதொழுகி; தம் பெயர் போகிய ஒன்னார் தேய- தங்கள் சீர்த்தியை நாற்றிசையும் பரப்பிய பகைவராகிய கடம்பர்கள் குன்ற; துளங்கு இருங்குட்டம் தொலைய-அலையெழுந் தசையும் கரிய கடலிடத்தே அவர்கள் தோற் றழியுமாறு; வேலிட்டு-வேற்படையைச் செலுத்தி வென்று; அணங்குடைக் கடம்பின் முழுமுதல் தடிந்தும்- அவர்கள் தமக்குக் காவல் மரமாகப் பேணிக்காத்த தெய்வத்தன்மை பொருந்திய கடம்பு மரத்தை வேரொடு தகர்த்தழித்தும்; பொரு முரண் எய்திய கழுவுள் புறம்பெற்று-காமூரென்னும் ஊரிடத்தே யிருந்துகொண்டு சேரருடன் போருடற்றக் கூடிய மாறுபாட்டினைப் பெற்ற கழுவுள் என்பானைத் தோல்வி யெய்துவித்து; நாம மன்னர் துணிய நூறி-அவற்குத் துணையாய்ப் போந்த அச்சம் பொருந்திய மன்னர் துண்டு துண்டாய் வெட்டுண்டு வீழக்கொன்று; கால் வல் புரவி அண்டர் ஓட்டி-காலால் வலியவாகிய குதிரைகளையுடைய இடையர்களைத் துரத்தியும்; சுடர் வீ வாகை நன்னற்றேய்த்து - ஒளிர்கின்ற பூக்களையுடைய வாகை மரத்தைக் காவல் மரமாகக் கொண்டோம்பிய நன்னன் என்பானை அவ்வாகை மரத்தோடும் அழித்தும்; குருதி விதிர்த்த குவவுச் சோற்றுக் குன்றோடு -பகைவரது குருதி தெளித்துப் பிசைந்த திரண்ட சோற்றுக் குவியலாகிய குன்றைக்கொண்டு; உருகெழு மரபின் அயிரை பரைஇ-உட்குதலைப் பயக்கும் முறைமையினையுடைய அயிரை மலையிலுள்ள கொற்றவையைப் பரவி; வேந்தரும் வேளிரும் பின் வந்து பணிய-முடியரசராகிய சோழ பாண்டியரும் குறுநில மன்னரும் வணங்கி வழிபட்டு நிற்கவும்; கொற்ற மெய்திய பெரியோர் மருக-வெற்றியெய்திய பெரு மக்களின் வழி வந்தோனே; வியல் உளை அரிமான் மறம் கெழு குருசில்-அகன்ற பிடரியினையுடைய சிங்கத்தினது வலிபொருந்திய தலைவனே எ-று.
வடநாட்டில் இமயமலைக்கு அடுத்தபடியில் வைத்துச் சான்றோரால் புகழப்படும் பெருஞ் சீர்த்தி யுடையதாகலின், சேரர் புகழ்க்கு உவமையாக விந்தமலையையும் அதனைச் சூழவுள்ள கானத்தையும் எடுத்தோதினார். கல்லுயர்ந்து என்புழி உறழ்ச்சிப் பொருட்டாய ஐந்தாவது தொக்கது. பெருங் காற்று மோதியும் பேரி யாறுகள் பாய்ந்தும் கலங்காத கடல் என்றற்குத் "தெண்கடல்" என்றார். கலக்கமின்றித் தெளிந்த கடலாற் சூழப்பட்ட உலகத்தைத் தொழின்முறை யொழியாது ஆளுமுகத்தால் தம் பெயர் போகியோராயினும், சேரரோடு ஒன்றாமையின் ஒ்ன்றாராய்த் தெய்ந்தன ரென்பது கருத்தாகக் கொள்க. அரசர் தமக்குரிய ஆட்சிமுறையில் செய்தற்குரிய முறையை யொழியாது செய்யின், ஆட்சியுட்பட்ட வுலகம் எல்லா வளங்களும் நிறைந்து மேன்மையுறும் என்றற்கு, "வையகம் மலர்ந்த தொழின் முறை" யென்றார்.; மலர்ந்த என்றது நோய் தீர்ந்த மருந்தென்றாற்போலக் காரணப் பொருட்டு; விந்தமலையைச் சார்ந்துள்ள நாடு கடம்பருடைய நாடாதலின், அந்த நாட்டை விதந்தோதினார். விந்தையென்னும் கொற்றவையின் பெயர் கொண்டு நிலவுதலின், "கடவுட் பெயரிய கானமொடு கல்" என்றார். இதனால் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுடன் கடலிடத்தே போர் தொடுத்த கடம்பருடைய நாடும் அவருடைய ஆட்சியும் புகழும் கூறியவாறு. இப்பெற்றியராயினும், கடலிடத்தே செலலுங் கலங்களைத் தாக்கிக் குறும்பு செய்தொழுகினமையின், அவரை அக்கடலகத்தே சென்று எதிர்த்துத் தன் வேற்படையை யேவி வென்றாராதலின், "துளங்கிருங் குட்டம் தொலைய வேலிட்டு" என்றும், பின்பு அவர் நாட்டுட் சென்று அவருடைய கடம்பு மரத்தைத் தடிந்தா ரென்றற்கு, "கடம்பின் முழுமுதல் தடிந்து" என்றும், வெற்றித் தெய்வ முறைவதாகக் கருதி யோம்பினமை தோன்ற"அணங்குடைக் கடம்பு" என்றும் கூறினார். "இருமுந்நீர்த் துருத்தியுள், முரணியோர்த்தலைச் சென்று, கடம்பு முதல் தடிந்த கடுஞ்சின முன்பின், நெடுஞ்சேலாதன்" (பதிற். 20) என்று பிறரும் கூறி யிருத்தல் காண்க."துளங்கிருங் குட்டந் தொலைய வேலிட்" டென்றது, கடல்பிறக் கோட்டிய செங்குட்டுவன் செய்தியையும் நினைப்பிக்கின்றது."கோடுநரல் பௌவங் கலங்க வேலிட் டுடைதிரைப் பரப்பிற் படுகட லோட்டிய வெல்புகழ்க் குட்டுவன்" (பதிற். 46) என வருதல் காண்க.
தொடக்கத்தே சேரர்க்குப் பணிந்தொழுகிய கழுவுள் என்பான் பின்னர், வலிய குதிரைகளை யுடைய அண்டர்களையும் வேறு சிற்றரசர்களையும் துணையாகக்கொண்டு பெருஞ்சேர லிரும்பொறையை யெதிர்த்துப் பொரலுற்றான் என்பதை"பொருமுர ணெய்திய கழுவுள்" என்றும், அப்பொறையன் முதலில் கழுவுளை வென்று, அதுகண்டு வீற்று வீற்றஞ்சி யோடிய மன்னரைத் துணித்தும், அண்டரை வெருட்டியும் மேம்பட்டானென்றற்கு, "கழுவுள் புறம் பெற்று" என்றும், "மன்னர் துணிய நூறி" யென்றும், "அண்டரோட்டி" யென்றும் கூறினார். கழுவுள் அண்டர்கட்குத் தலைவனென்பதும், அவன் தருக்கினை யழித்ததும், "ஆன்பயம் வாழ்நர் கழுவுள் தலைமடங்க" (பதிற். 71) என்று அரிசில்கிழார் கூறி யிருப்பதனால்
அறியப்படும்.
நன்னனென்பான் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல் வாழ்ந்த காலத்தில் தன் பெருவலியால் தருக்கி அவனை யெதிர்த்தானாக, சேரமான் அவனுடைய காவல் மரமாகிய வாகையைத் தடிந்து அவனையும் வென்ற செய்தியை, "சுடர்லீ வாகை நன்னற் றேய்த்து" என்றார்,. அந்நாந்முடிச் சேரலைப் பாடிய காப்பியாற்றுக் காப்பியனார், "பொன்னங் கண்ணிப் பொலந்தேர் நன்னன், சுடர்வீ வாகைக் கடிமுதல் தடிந்த, தார்மிகு மைந்தினார் முடிச்சேரல்" (பதிற் 40) என்று கூறுதல் காண்க.
அயிரை யென்றது அயிரை மலையிலுள்ள கொற்றவையை, இக்கொற்றவையைச் சேரர் வீரரது விழுப்புண்ணிற் சொரியும் குருதி கலந்த சோற்றுத் திரளைப் படைத்து வழிபடுவது மரபாதலின், "குருதி விதிர்த்த குவவுச் சோற்றுக் குன்றா டுருகெழு மரபினயிரை பரைஇ" என்றார். பிறரும் அயிரைக் கடவுளை, "நிறம்படு குருதி புறம்படி னல்லது, மடையெதிர் கொள்ளா வஞ்சுவரு மரபிற் கடவுளயிரை" (பதிற்.79) என்று கூறுதல் காண்க. பல்யானைச் செல்கெழு குட்டுவன் அயிரைக் கடவுளைப் பரவிய செய்தியை, "இருகடல் நீரு மொருபகலாடி அயிரை பரைஇ" யென்று மூன்றாம் பத்தின் பதிகம் கூறுகிறது. பிறாண்டும் இப்பாட்டினாசிரியர், "உருகெழு மரபின் அயிரை பரவியும்" (பதிற்.90) என்று இச்செய்தியைக் குறிக்கின்றார்
இளஞ்சேர லிரும்பொறையின் முன்னோர் செய்த செயலெல்லாம் குறித்துரைத்துப் பாராட்டுகின்றா ராதலின், "பெரியோர்" என அவர்தம் பெருமையைப் புலப்படுத்தார். இக்கூறிய செயல்களால் ஏனை வேந்தரும் வேளிரும் தலை தாழ்த்துப் பணி புரிவது தோன்ற, "வேந்தரும் வேளிரும் முன்வந்து பணியக் கொற்ற மெய்திய பெரியோர் மருக" என்றார்.
இதுகாறும் கூறியதனால், உலகத்து ஒன்னார் தேய, வேலிட்டும், முழு முதல் தடிந்தும், புறம் பெற்றும், தேய்த்தும், அயிரை பரைஇயும் கொற்ற மெய்திய பெரியோர் மருக என்று கூறி, இளஞ்சேர லிரும்பொறையின் தனியாற்றலை விளக்குதற்கு"வியலுளை யரிமான் மறங்கெழு குரிசில்"
என்றார்.
இனிப் பழைய வுரைகாரர், "வையக மலர்ந்த தொழிலென்றது வையகத்திற் பரந்த அரசர் தொழிலென்றவா" றென்றும், "கடவுட் பயரிய கானமென்றது விந்தாடவியை" யென்றும், "கடவுளென்றது ஆண்டுறையும் கொற்றவையினை" யென்றும், "கடவுளினென விரிக்க" என்றும் "கல்லுயர வெனத் திரிக்க" வென்றும், "அயிரை யென்றது அயிரை மலையுறையும் கொற்றவையினை" யென்றும் கூறுவர்.
16-21 விரவுப் பணை..பொருந.
உரை: விரவுப்பணை முழங்கும்-பலவகை இசைக் கருவிகளுடன் கலந்து முரசுகள் முழங்குகின்ற; நிரை தோல் வரைப் பின்-வரிசையாகக் கிடுகுகள் பரப்பிய இடத்தினையுடைய; உரவுக் களிற்று வெல்கொடி நுடங்கும் பாசறை-உலாவுகின்ற களிறுகளின் மேல் நின்ற வெற்றிக் கொடிகள் அசையும் பாசறையில்; ஆர் எயில் அலைத்த கல் கால் கவணை-பகைவருடைய அரிய மதில்களைச் சீர்குலைத்த கற்களை யெறியும் கவணைப் பொறியையும்; நார் அரி நறவின்-நாரால் வடிக்கப்பட்ட கள்ளையுமுடைய; கொங்கர் கோவே-கொங்குநாட்டவர்க்குத் தலைவனே; உடலுநர்தபுத்த பொலம் தேர்க் குருசில்-மாறுபட்டுப் பொருபவரை யழித்த பொன்னானியன்ற தேரையுடைய குரிசிலே; வளை கடல் முழவின் தொண்டியோர் பொருந-சங்குகளையுடைய கடல் முழக்கத்தை முழவு முழக்காகக் கொண்ட தொண்டி நகரிலுள்ளார்க்குத் தலைவனே எ-று
விரவுப்பணை முழங்கும் பாசறை, வரைப்பின் பாசறை, வெல்கொடி நுடங்கும் பாசறை யென இயையும். பலவகை வாச்சியங்களின் தொகுதியை யுணர்த்தற்கு"விரவுப் பணை" யென்றும், பாசறையின் எல்லையிடத்தே வில்லும் கேடகமும் வேலியாக நிரை நிரையாக நிறுத்தப்படுவது தோன்ற, "நிரை தோல் வரைப்பிற் பாசறை" யென்றும், யானைமேற் கொடி நிறுத்தல் பண்டையோர் மர பாதலின், அசைநடை கொண்டு உலாவும் யானை நிறையையுடைய பாசறையை, "உரவுக் களிற்று வெல்கொடி நுடங்கும் பாசறை" யென்றும் கூறினார்.
பகைவர்தம் அரண்களைப் பெரிய கற் குண்டுகளை யெறிந்து தாக்குதற்குக் கல் கால் கவணைகள் பல பாசறையிடத்தே அமைக்கப் பட்டிருப்பது காண்க. மதிலிடத்தே யமைக்கப் பெறும் பல்வகைப் பொறிகளோடு, படைகொண்டு செல்லுமிடத்து உடன்கொண்டு போகப்படும் பொறிகளும் இருந்தன என்பதும், அவற்றுள் கல் கால் கவணை சிறப்புடைத்தாதல்பற்றி, அதனை எடுத்தோதினா ரென்பதும் இதனால் அறியலாம். பண்டைக் கிரேக்கரும் உரோமரும் கொண்டு பொருத கல் கால் கவணை பண்டைச் சேரரிடத்தும் இருந்தமை இதனால் விளங்கும். பெருங் கற்களை வைத்து நெடுந் துலைவில் மிக விரைய எறிந்து பகைவர் அரண்களைச் சீரழித்து வலியழிக்கும் இயல்புபற்றியும், மக்களால் எறியப்படும் கவண் போலாது பொறிதானே பெருங்கற்களை வீசி யெறிவது பற்றியும்"கல் கால் கவணை" யென்றார். இச்சிறப்பால் இஃது இப்பாட்டிற்கும் பெயராயிற்று. இன்னோரன்ன பொறிகளின் அமைப்பு, வடிவு முதலியவற்றைப்பற்றிய எழுத்தோ ஓவியமோ கிடைக்காமையால் வேறொன்றும் இதனைப்பற்றிக் கூறற்கில்லை. பழையவுரைகாரர், "கல் கால் கவணை யென்றது கற்களைக் கான்றாற்போல இடையறாமல் விடும் கவணென்றவா" றென்றும் கூறுவர்.
கவணைப் பொறிகொண்டு பகைவரை யெறியும் கொங்கர்ப் படையினர், போர் வெறி மிகுதற் பொருட்டுக் கள்ளுண்டல் தோன்ற, "நாரரி நறவிற் கொங்கர்" என்றார். உடலுநர்த் தபுத்த குருசில், பொலந் தேர்க் குருசில் என்க. தொண்டி மேலைக் கடற்கரையி லுள்ளதும் சேரர்க் குரியதுமாகிய பேரூர். அங்கே சங்கு மேயும் கடலின் முழக்கம் மிக்கிருத்தல் பற்றி, "வளைகடல் முழவிற் றொண்டியோர் பொருந" என்றார். பொருந என்பது போர் வீரனே என்னும் பொருட்டு.
21-38. நீ நீடுவாழி..........பன்னாள்
உரை: துவைத்த தும்பை நனவுற்று வினவும் மாற்றரும்* தெய்வத்துக் கூட்டம் முன்னிய - பல வாச்சியங்கள் முழங்குகின்ற தும்பைசூடிச் செய்யும் போரின்கண் மெய்ம்மையாக வெற்றியுண்டாதல் வேண்டிப் பரவப்படும் மாற்றுதற்கரிய தெய்வமாகிய கொற்றவை கூடி யிருக்கும் மலையாகிய அயிரை யிடத்தே தோன்றிய; புனல்மலி பேர் யாறு இழிதந் தாங்கு - நீர் நிறைந்த பெரிய யாறானது இறங்கி வந்தாற்போல; நின்வயின் வருநர் வரையா - நின்னை நோக்கி வரும் இரவலர்க்கு வரையாது வழங்கும்; செழும்பல் தாரம் கொளக் கொளக் குறையாது தலைத்தலைச் சிறப்ப - செழுமையாய்ப் பலவாகிய பொருள்கள் அவ் விரவலர் கொள்ளக் கொள்ளக் குறைவுபடாமல் மிக்கு விளங்க; ஓவத்தன்ன உருகெழு நெடுநகர் - ஓவியத் தெழுதினாற் போன்ற உருவமைந்த நெடிய அரண்மனைக் கண்ணே; பாவையன்ன மகளிர் நாப்பண் - கொல்லிப் பாவைபோலும் உரிமை மகளிரின் நடுவே; மாகம் சுடரமா விசும்பு உகக்கும் - திசை யெல்லாம் ஒளி விளங்கக் கரிய வானத்தே உயர்ந்து செல்லும்; ஞாயிறு போல - சூரியன் போல; பன்னாள் விளங்குதி - பலகாலம் விளங்கி வாழ்வாயாக; புகன்ற மாண்பொறி - ஆடவர்க்குச் சீர்த்த இலக்கணமாக நூல்களிற் கூறப்பட்ட மாட்சிமைப்பட்ட வரிகள் பொருந்திய; பொலிந்த சாந்தமொடு - பூசப்பட்டு விளங்கும் சந்தனத்தோடு; தண் கமழ் கோதை சூடி - தண்ணிதாய் மணங்கமழும் முத்தமாலையை யணிந்து; பூண் சுமந்து - தோள் வளை முதலிய பேரணிகளை யணிந்து; திரு வில் குலைஇ - வான வில்லை வளைத்து; திரு மணி புரையும் உருகெழு கருவிய பெருமழை சேர்ந்து - மாணிக்கமணி போலச் செந்நிறங் கொண்டு திகழும் மின்னல் முதலியவற்றின் தொகுதியவாகிய பெருமுகில் சேர்தலால்; வேங்கை விரிந்து - வேங்கை மலர்ந்து; விசும் புறு சேண் சிமை அருவி அருவரை யன்ன மார்பின் - வானளாவி மிக வுயர்ந்த சிகரத்தையும் அருவி களையுமுடைய அரிய மலைபோன்ற மார்பினை யுடையனாய்; நல்லிசை சேணாறும் சேயிழை கணவ - கற்புடைமையா லுண்டாகிய நல்ல புகழானது நெடுந் துலைவு சென்று பரவிய செவ்விய இழை யணிந்தாட்குக் கணவனானவனே; பெரும - பெருமானே; நீ நீடுவாழி - நீ நெடிது வாழ்வாயாக எ-று.
தெய்வம் கூடியிருக்கும் இடமாகிய அயிரை மலையைத்"தெய்வத்துக் கூட்டம்" என்றார். கூடுதற்கமைந்த இடம் கூட்டமென்றது ஆகுபெயர். தெய்வம், கொற்றவை. போர்க்குச் செல்லும்போது போரிலே வெற்றி யுண்டாதல் வேண்டிச் சேரர்கள் அயிரை மலைக் கொற்றவையைப் பரவுவதுபற்றி, "நனவுற்று வினவும்" என்றும், தும்பைப் போரில் பலவகை வாச்சியங்கள் முழங்குதலின்"துவைத்த தும்பை" யென்றும் கூறினார். தும்பைப் போரில் விளையும் வெற்றியாகிய பயன் குறித்தலின், தும்பை ஆகுபெயர். குருதியொடு விரவிய தல்லது பிறவகையால் தரப்படும் மடையினை யெதிர்கொள்ளா மரபிற்றாதலின், "மாற்றருந் தெய்வம்" என்றார்; எனவே இவ்வகையானன்றி வேறு வகையால் மாற்றற்கில்லாத சினத்தை யுடையள் என்பது கருத்தாயிற்று.
முன்னிய - தோன்றிய; முன்னென்னும் சொல்லடியாகப் பிறந்து முற்பட்டுத் தோன்றிய என்னும் பொருட்டாய பெயரெச்சம், பேரியாறென்னும்பெயர் கொண்டது. இனித் தெய்வத்தென்பதனால் தெய்வத்தின் இடமாகிய அயிரை மலையைக் கொண்டு, கூட்டம் முன்னிய என்றதற்குக் கடலைக் கூடுதற்குக் கருதிய என்றுரைத்தலுமொன்று. பேரியாறு இழிதந் தாங்கு நின்வயின்வருநர் என இயையும், "மலையினிழிந்து மாக்கடனோக்கி, நிலவரை யிழிதரும் பல்யாறு போலப், புலவரெல்லா நின்னோக்கினரே" (புறம். 42) எனப் பிறரும் கூறுதல் காண்க. இறைத்தோறும் கிணறூறுவது போலச் செல்வம் கொடுக்கக் குறைபடாது பெருகுதல் கண்டு, "செழும் பல்தாரம் கொளக்கொளக் குறையாது தலைத்தலைச் சிறப்ப" என்றார்.
ஓவம், ஓவியம். ஓவியத் தெழுதியதுபோலும் அழகமைந்தமையின், "ஓவத் தன்ன வுருகெழு நெடுநகர்" என்றார். அம்மனைக்கண்ணே யிருந்து அதற்கு விளக்கந்தரும் மகளிரனைவரும் கொல்லிப் பாவைபோலும் உரு நலமுடைய ரென்றற்குப்"பாவை யன்ன மகளி" ரென்றார்."ஓவத்தன்ன விடனுடை வரைப்பிற், பாவையன்ன குறுந்தொடி மகளிர்" (புறம் 251) என்று பிறரும் கூறுப. பாவையன்ன மகளிர் நாப்பண், ஞாயிறு போல விளங்குதி என இயையும்.
ஆடவர்க்கு மார்பிடத்தே பொறிகள் கிடத்தல் சீர்த்த இலக்கணமாதலின், "புகன்ற மாண் பொறி" என்றும், அம் மார்பில் சாந்தம் பூசி முத்து மாலை யணிந்திருப்பதுதோன்ற, "சாந்தமொடு தண்கமழ் கோதை சூடி" யென்றும், தோள்வளை முதலிய பேரணிகளைப்"பூண்சுமந்து" என்றும் கூறினார். இத்துணையும் மார்பினைச் சிறப்பித்தவர், அதன் பெருமையை விளக்கு மாற்றால், கார்வர விளங்கும் மலை யொன்றினை யுவமமாகக் கூறுகின்றார். மலையுச்சியில் இந்திர வில்லும் மின்னுத் தொகுதியும் கொண்ட மழை முகில் தவழ, பக்கத்தே வேங்கை மரங்கள் பூத்து நிற்க. அவற்றினிடையே மலையுச்சியினின்று அருவிகள் வீழும் காட்சியைக் காட்டி, இவ் வியல்பிற்றாய மலைபோலும் மார்பை யுடையான் என்பார், "அருவி யருவரை யன்ன மார்பின்" என்கின்றார். மாண் பொறியும் சாந்தப் பூச்சும் முத்துமாலையும் பேரணிகலன்களும் சேரன் மார்பின்கண் உளவாகக் கண்டு கூறுவார்,திருவில்லும் மின்னுத் தொழுதியும் கொண்ட மழை முகிலை யுவமம் கூறி, முத்துமாலையை யருவியாகவும் சாந்தப் பூச்சினைப் பூத்த வேங்கையாகவும் கருதிக் கூறுவது மிகப் பொருத்தமாக வுளது.
ஆடவர்க்குளவாகும் சிறப்பும் சீர்மையும் அவர்தம் மனைமாண் மகளிரின் கற்பாற் பிறக்கும் புகழாதலின், அதனையுடன் கூறுவார், "சேணாறு நல்லிசைச் சேயிழை கணவ" என்றார்.
இனிப் பழையவுரைகாரர், "துவைத்த தும்பை யென்றது எல்லாராலும் புகழ்ந்து சொல்லப்பட்ட தும்பைப்போர்" என்றும்"நனவுற்று வினவும் தெய்வமென்றது அத்தும்பைப் போரை நினக்கு வென்றி தருதற்கு மெய்ம்மையுற்று வினவும் கொற்றவை" யென்றும்"தெய்வத்துக் கூட்ட முன்னிய யாறென்றது அத்தெய்வம் கூடி யுறைதலையுடைய அயிரை மலையைத் தலையாகக்கொண்டு ஒழுகப்பட்ட யா" றென்றும்"தெய்வம் கூடியுறைதலையுடைய அயிரை தெய்வத்துக் கூட்டமென்ப்பட்ட" தென்றும், "இழிந்தாங்கென்றது அவ்யாறு மலையினின்று இழிந்தாற்போல" என்றும் "பொறியென்றது உத்தம விலக்கணங்களை" யென்றும், "பொறியொடு சாந்தமொடுவென ஒடுவை யிரண்டற்கும் கூட்டி யுரைக்க" வென்றும், "ஒடு வேறு வினையொடு" என்றும், "கோதை யென்றது முத்தாரத்தினை" யென்றும், "சூடிச் சுமந்தென்னும் வினையெச்சங்களை வரையன்ன வென் பதனுள் அன்னவென்பதனோடு முடிக்க" என்றும் கூறி, இப்பகுதிக்கு வினைமுடிபு காட்டலுற்று, "விற்குலைஇ வேங்கை விரிந்து என்னும் வினை யெச்சங்களைத் திரித்து வில் குலவ வேங்கை விரியத் திருமணி புரையும் உருகெழு கருவிய பெருமழை சேர்ந்து விசும்புறு சேட்சிமை அருவியரு வரை என மாறிக் கூட்டி, இதனைக் குறைவுநிலை யுவமையில் வழுவமைதியாக்கிப் பொறிக்கு வேங்கைப்பூ உவமமாகவும், கோதைக்குத் திருவில் உவமமாகவும் பூணிற்கு அருவி யுவமமாகவும் சாந்திற்கு உவமமில்லையாகவும் உரைக்க" என்றும் இவ்வாறு இடர்ப்படாது மலையை யுரைப்பினுமமையு" மென்றும் கூறுவர்.
மாகம், திசை. இனி, நிலத்துக்கும் விசும்புக்கும் இடையிலுள்ள வெளியிடமென்றுமாம்."உகப்பே யுயர்தல்" (தொல். உரி. 9) என்பவாக லின், நண்பகலில் நெடுந்துலையில் விசும்பி லுயரந்து விளங்குதல்பற்றி, "மாவிசும் புகக்கும்" என்றார்."வருநர் வரையாச் செழும்பல்தாரம் தலைத் தலைச் சிறப்ப", நெடுநகரிடத்தே பாவைபோலும் உரிமை மகளிரிடையே நெருஞ்சியை மலர்க்கும் ஞாயிறுபோல அவர் மனமும் முகமும் காதலன்பால் மலரநின்று விளங்குமாறு விளங்குக என்பார், குறிப்பால்"ஞாயிறு போல விளங்குதி" யென்றார். சேரனை ஞாயிறென்றாற்போல மகளிரை நெருஞ்சிப்பூ வென்னாமையின் இஃது ஏகதேச வுருவகம்,. நெருஞ்சி ஞாயிற்றை நோக்கி மலர்ந்திருப்பது போல, இம்மகளிரும் இவளை நோக்கி மலர்ந்திருப்ப ரென்பது.
"நீ நீடுவாழிய பெரும" என வாழ்த்துதலின், நெடிது வாழும் வாழ் நாட்கள் பலவினும் ஞாயிறுபோல விளங்குக என்பார், "ஞாயிறுபோல விளங்குதி பன்னாள்" என்றார்."விளங்குதி யென்பது ஈண்டு முன்னிலையேவ" லெனப் பழையவுரை கூறுகிறது.
39-42 ஈங்கு.......கிழவோயே.
உரை: உறு கால் எடுத்த ஓங்குவரற் புணரி-மிக்க காற்றால் எழுப்பப்பட்ட வுயர்ந்து வரும் அலைகள்; நுண்மணல் அடைகரை யுடைதரும்-நுண்ணிய மணல் பரந்த கரையினை யலைக்கும்; தண்கடற் படப்பை நாடு கிழவோய்-குளிரந்த கடற் பக்கத்தையுடைய நாட்டுக் குரியோனே; ஈங்கு யான் காண்கு வந்திசின்- இவ்விடத்தே யான் நின்னைக் கண்டு நின் புகழ் பரவுதற்கு வந்தேன், வறுமையுற்று நின்பால் ஒன்றை இரத்தற்கு வந்தேனில்லை எ-று
பெரியோர் மருக, மறங்கெழு குருசில், கொங்கர் கோவே, பொலந் தேர்க் குரிசில், தொண்டியோர் பொருந, பெரும, சேயிழை கணவ, நாடு கிழவோய், நீ நீடுவாழிய, வாழும் நாள் பலவும், நின்பால், வருநர் வரையாச் செழும்பல் தாரம் கொளக் கொளக் குறையாது தலைத் தலைச் சிறப்ப, நெடுநகர்க்கண் பாவையன்ன மகளிர் நாப்பண், ஞாயிறுபோல விளங்குதி யென்று கூறவே, "செழும்பல் தாரம் கொளக் கொளக் குறையாது தலைத்தலைச் சிறப்ப" என்ற குறிப்பேதுவாக, இளம்பொறை, ஆசிரியர்க்கு மிக்க பொருளை வழங்கச் சமைந்தானாதலின், அக்குறிப்பறிந் துரைப்பாராய், "ஈங்குக் காண்கு வந்தனென் யான்" என்றார்.
"ஓங்குவரற் புணரி" யென்றலின், அதற்கேதுவாக, "உறுகால் எடுத்த என்றும் , அவ்வுயரிய அலைகளைத் தடுத்தற்குரிய கல் நிறைந்த கரையில்லை யென்றற்கு, "நுண் மணலடை கரை" யென்றும், அதனால் கரை முற்றும் தெங்குங் கமுகும் வாழையும் சிறந்து படப்பை போறலின், "தண்கடற் படப்பைநாடு" என்றும் சிறப்பித்தார். படப்பை, வளவிய தோட்டம்.
செழும்பல் தாரம் வருநர் வரைவின்றிப் பெறத் தருதலால் குன்றாத செல்வம் இடந்தொறும் மிக்குறுக என்பார் "தலைத் தலைச் சிறப்ப" என்றாராகலின், அதற்குரிய ஏதுவினை, உள்ளுறுத் துரைத்திருப்பது மிக்க இன்பம் பயக்கின்றது. உறுகாலெடுத்த ஓங்குவரற் புணரி யென்றதனால், பகைவரது பகைமைச் செயல் மிகுதலால் வீரத்தால் வீறு கொண்டு செல்லும் நின் தானை யென்றும், அவ்வலைகளைத் தடுக்க இயலாத நுண்மணலடைகரை யுடைவதுபோல, நின் தானையை யெதிரேற்றுப் பொரும் வலியில்லாத மெலியோர் திரண்ட பகைவர் திரள் தோற்றோடும் என்றும் உள்ளுறுத் துரைத்திருத்தலை நுண்ணுணர்வாற் கண்டுகொள்க.
இதுகாறுங் கூறியவாற்றால், மலர்தலை யுலகத்து ஒன்னாராகிய கடம்பர்தேய வேலிட்டும், கடம்பின் முழுமுதல் தடிந்தும், கழுவுள் புறம் பெற்றும், அண்டரோட்டி நன்னற் றேய்த்தும், குருதி விதிர்த்த குலவுச் சோற்றுக் குன்றோடு அயிரை பரவியும், வேந்தரும் வேளிரும் பணியக் கொற்ற மெய்தியும் சிறந்த பெரியோர் மருக; மறங்கெழு குருசில், பாசறை யிடத்துக் கல் கால் கவணையும், நறவையு முடைய கொங்கர் கோவே, பொலந்தேர்க் குருசில், தொண்டியோர் பொருந, பெரும, நீ நீடு வாழ்வாயாக; மாண் பொறியொடு சாந்த மணிந்து கோதைசூடிப் பூண் சுமந்து அருவி யருவரை யன்ன மார்பினை யுடையையாய், நல்லிசைச் சேயிழை கணவனாகி யோனே, வருநர் வரையாச் செழும்பல் தாரம் கொளக் கொளக் குறையாது தலைத் தலைச் சிறப்ப, உருகெழு நெடுநகர்க்கண் மகளிர் நாப்பண், மாகம் சுடர மாவிசும்புகக்கும் ஞாயிறுபோலப் பன்னாள் விளங்குதி; தண் கடற் படப்பை நாடு கிழவோய், ஈங்கு யான் காண்கு வந்தனென்; வேறே இன்மை துரப்ப இரத்தற்கு வந்தேனில்லை என்பதாம். இனிப் பழையவுரைகாரரும், "பெரியோர் மருக, மறங்கெழு குருசில், கொங்கர் கோவே, பொலந்தேர்க் குருசில், தொண்டியோர் பொருந, பெரும, சேயிழைகணவ, நாடுகிழவோய், ஈங்கு நிற்காண்கு வந்தேன்; நீ நீடு வாழ்வாயாக; பலதாரம் கொளக் கொளக் குறையாமற் சிறப்ப மகளிர் நாப்பண் பன்னாள் ஞாயிறுபோல விளங்குவாய் என மாறிக் கூட்டி வினை முடிவு செய்க"
என்பர்.
இதனாற் சொல்லியது அவன் கொடைச் சிறப்பும் காமவின்பச் சிறப்பும் உடன்கூறி வாழ்த்தியவா றாயிற்றென்பது பழையவுரைக் கருத்து.
--------------
9.9. துவராக் கூந்தல்
89
வானம் பொழுதொடு சுரப்பக் கானம்
தோடுறு மடமா னேறுபுணர்ந் தியலப்
புள்ளு மிஞிறு மாச்சினை யார்ப்பப்
பழனுங் கிழங்கு மிசையற வறியாது.
பல்லா னன்னிரை புல்லருந் துகளப் 5
பயங்கடை யறியா வளங்கெழு சிறப்பிற்
பெரும்பல் யாணர்க் கூலங் கெழும
நன்பல் லூழி நடுவுநின் றொழுகப்
பல்வே லிரும்பொறை நின்கோல் செம்மையின்
நாளி னாளி னாடுதொழு தேத்த 10
உயர்நிலை யுலகத் துயர்ந்தோர் பரவ
அரசியல் பிழையாது செருமேந் தோன்றி
நோயிலை யாகியர் நீயே நின்மாட்
டடங்கிய நெஞ்சம் புகர்படு பறியாது
கனவினும் பிரியா வுறையுளொடு தண்ணெனத் 15
தகர நீவிய துவராக் கூந்தல்
வதுவை மகளிர் நோக்கினர் பெயர்ந்து
வாழ்நா ளறியும் வயங்குசுடர் நோக்கத்து
மீனோடு புரையுங் கற்பின்
வாணுத லரிவையொடு காண்வரப் பொலிந்தே 20
துறை : காவன் முல்லை
வண்ணமும் தூக்குமது.
பெயர்: துவராக் கூந்தல்.
1-8. வானம் ---- ஒழுக
உரை: வானம் பொழுதொடு சுரப்ப - மழை உரிய காலத்திலே தப்பாது பொழிய; கானம் தோடுறு மடமான் ஏறு புணர்ந்து இயல - காட்டிடத்தே தொகுதிகொண்ட மடப்பம் பொருந்திய பிணை மான்கள் தத்தம் ஆணோடுகூடி இனிது செல்ல; புள்ளும் மிஞிறும் மாச்சினை யார்ப்ப - பறவைகளும் வண்டினமும் மரக் கிளைகளிலிருந்து ஆரவாரிக்க; பழனும் கிழங்கும் மிசையறவு அறியாது - பழங்களும் கிழங்குகளும் பலரும் பலவும் உண்டலாற் குறைவுபடாவாக; பல்லான் நல் நிரை புல் அருந்து உகள - பலவாகிய நல்ல ஆனிரைகள் புல்லை மேய்ந்து களித்துலவ; பயங்கடை அறியா வளம் கெழு சிறப்பின் - வறுமை யறியாத வளம் பொருந்திய சிறப்பினால்; பெரும்பல் யாணர்க் கூலம் கெழும - பெரிய பலவாகிய புதுப் புதுக் கூலங்கள் பெருக; நல்பல் ஊழி நடுவு நின்று ஒழுக - நல்ல பலவாகிய ஊழிகள் செம்மையிற் றிறம்பாது நிலை பெற்றொழுக எ-று. பொழுதொடு உருபு மயக்கம். உரிய காலத்திற் றவறாது பொழிவது தோன்ற, "வானம் பொழுதொடு சுரப்ப" என்றார்; எது தவறினும், பொழுதுகள் தவறாது போந்து நிகழ்வன நிகழ்தற் கேதுவாதல்போல, மழையும் உரிய காலத்திற் றவறாது போந்து பொய்யாது பொழிவது தோன்ற, "பொழுதொடு சுரப்ப" என்றாரென்றும், ஒப்புப் பொருட்டாய இன்னுரு பிடத்தே ஒடுவுருவு வந்து மயங்கியதென்றும் கூறினு மமையும்.
தோடு, தொகுதி. மடமானினம், கானம் மழை பெய்து தழைத்து விளங்குதலின் வேண்டும் மேயலை நன்கு மேய்ந்து தத்தம் ஆணோடு கூடியினி திருந்தியலும் என்றது இன்பச் சிறப்பினை யுணர்த்திற்று. மானினம் துணையொடு கூடிக் காம வின்பந் துய்க்குங்காலம் கார்கால மாதலின், "மடமான் ஏறு புணர்ந்தியல" என்றார்."கார்பயம் பொழிந்த நீர் திகழ் காலை, ததர்தழை முனைஇய தெறிநடை மடப்பிணை, ஏறுபுண ருவகைய வூறில வுகள" (அகம். 234) என்றும், "வானம் வாய்ப்பக் கவினிக் கானம், கமஞ்சூழ் மாமழை கார்பயந் திறுத்தென, திரிமருப் பேற்றோடு கணைக்காலம்பிணைக் காமர் புணர்நிலை" ( அகம். 134) என்றும் சான்றோர் கூறுதல் காண்க இனி, அம்சதேவ ரென்னும் சமண் சான்றோர், தாமெழுதிய மிருக பக்ஷி சாஸ்திரத்தில், மானினம் வேனிற் காலத்திற்றான் காமவின்பந் துய்க்குமென்றும், அவற்றின் கருப்பக் காலம் ஐந்து திங்களென்றும் கூறுகின்றார்.
மழை பெய்தபின் மரந்தொறும் புள்ளினமும் வண்டினமும் பேராரவாரம் செய்வ தியல்பாதலால், "புள்ளும் மிஞிறும் மாச்சினை யார்ப்ப" என்றார்; "கல் சேர்பு மாமழை தலைஇப், பல்குரற் புள்ளி னொலியெழுந்தாங்கே" ( பதிற். 84) என்று பிறாண்டு மோதுதல் காண்க.
பழவகையும் கிழங்குவகையும் எப்போதும் இடையறவு படாது கிடைத்தலின், "பழனுங் கிழங்கு மிசையற வறியாது" என்றார். அறியா தென்பதைத் தனித்தனிக் கூட்டுக. மக்கட்கும் மாக்கட்கும் உணவாய்ப் பயன்படுவது பற்றி, "மிசை" யென்றார்.
உகளல், துள்ளி விளையாடுதல். பசும்புல் வளமுற வளர்ந்து கான முழுதும் கவினுற விருத்தலின், அதனை ஆரமேய்ந்த ஆனினம் தருக்கி விளயாடுகின்றன வென்பார், "புல்லருந் துகள" என்றார். ஆர்ந்தென்பது அருந்தென விகாரமாயிற்று. பாவத்தை அறங்கடை யென்பது போல வறுமையைப் பயங்கடை யென்றார்."அறன் கடைப்படாஅ வாழ்க்கையும்" (அகம். 155) என்று சான்றோர் கூறுதல் காண்க. இன்ன நலங்கட் கிடையே"வறுமை" என்னாது, மங்கல மரபாற்"பயங்கடை" யென்றாரென வறிக.
பலவாய் மிக்குற்ற புது வருவாயாகிய கூலங்க ளென்பது, "பெரும் பல் யாணர்க் கூலம்" எனப்பட்டது. பெருமை மிகுதி மேலும், பன்மைவகை மேலும் யாணர் புதுமை மேலும் நின்றன. கார் காலத்து விளைபயனாதலின், இவ்வாறு சிறப்பித்தாரென வறிக.
இக் கூறியவாறு வளம் பலவும் பல்லூழி காலமாகக் குறைவின்றி நிலை நின் றொழுகுதல் தோன்ற, "நன் பல்லூழி நடுவு நின் றொழுக" என்றார். நடுவு நின் றொழுகதலின்றி, சகடக்கால் போல் மிக்கும் குறைந்தும் இன்றாகியும் ஒழுகுவது இயல்பாதலின், அதனை விலக்குதற்கு, "நடுவு நின்றொழுக" என்றார். பல்லூழிதோறும் அதனோ டொட்டி நன்கொழுகிய தால், செல்வம் நிற்பதாயிற்றென் றறிக;"பருவத்தோ டொட்ட வொழுகல் திருவினைத், தீராமை யார்க்குங் கயிறு" ( குறள். 482) என்று சான்றோரும் கூறுதல் காண்க. இனி பழையவுரைகாரர், "மிசையறவு அறியாமலெனத் திரிக்க" என்றும், "நடு வென்றது நடுவு நிலைமையை" யென்றும் கூறுவர்.
9 - 11 பல் வேல் ............. பரவ
உரை: பல் வேல் இரும்பொறை - பலவாகிய வேற்படையையுடைய இரும் பொறையே; நின் கோல் செம்மையின் - நினது அரசியன் முறை செம்மையாக நடத்தலால்; நாளின் நாளின் நாடு தொழுது ஏத்த - நாடோறும் நாட்டவரெல்லாம் நின்னைத் தொழுது பரவுதலாலும்; உயர்நிலை யுலகத்து உயர்ந்தோர் பரவ - உயர்ந்த நிலைமையினை யுடைத்தாகிய தேவருலக வாழ்வுக்குரிய ஒழுக்கத்தா லுயர்ந்த சான்றோர் பரவி வாழ்த்துதலாலும்;
எல்லாப் படையினும் சிறப்புடைமை பற்றி, வேற்படையை விதந்து, "பல் வேல் இரும்பொறை" யென்றும், வானம் பொழுதொடு சுரத்தல் முதலியன வுண்டாவது அரசியலின் செம்மையா லென்பார், "நின் கோல் செம்மையின்" என்றும்; அதனால் நாட்டில் வாழும் மக்கள் விழா நாட்களிலும் பிற நாட்களிலும் எப்போதும் அரசனை வாழ்த்துதலால், "நாளின் நாளின் நாடு தொழுதேத்த" என்றும் கூறினார். விழா நாட்களில் மக்கள் வேந்தனைப் பரவி வாழ்த்துவதைச், சிலப்பதிகாரத்து விழா நிகழ் காதைகளிலும் திருமணக் காதையிலும் பிற நாட்களில் வாழ்த்துவதை, "வாழியாதன் வாழியவினி" எனத் தொடங்கும் ஐங்குறு நூற்றுப் பாட்டுக்களிலும் காணலாம். வையத்து வாழ்வாங்கு வாழும் சான்றோர் தம் நல்லொழுக்க மாட்சியால் வானுறையும் தெய்வமாத லொருதலையாதலின், அவர்களை"உயர் நிலை யுலகத் துயர்ந்தோர்" என்றும், "நாட்டில் நல்வாழ்வு நடைபெறுவதையே பெருநோக்கமாகக் கொண்டு, அதற்கு மிக்க காவலாயிருந்து அறம் வளர்க்கும் சிறப்புக் குறித்து அரசனை அவர்கள் வாழ்த்துமாறு தோன்றப்"பரவ" என்றும் கூறினார்; உயர்நிலை யுலக மிவணின்றெய்தும், அறநெறி பிழையா அன்புடை நெஞ்சிற். பெரியோர்" ( மதுரை. 471-3) என்று சான்றோர் கூறுதல் காண்க.
12 - 20. அரசியல் ..................பொலிந்தே
உரை: அரசியல் பிழையாது - நீ மேற்கொண்டு புரியும் அரசு முறை பிழையாமல்; செருமேந் தோன்றி - போரில் வெற்றியால் மேம்பட்டு; நின் மாட்டு அடங்கிய நெஞ்சம் புகர் படுபு அறியாது - நின்பால் அன்பாலொடுங்கிய மனம் குற்றப்படாது; கனவினும் பிரியா உறையுளொடு - கனவிலும் பிரிதலை யறியா துறைதலையும்; தண்ணெனத் தகர நீவிய துவராக் கூந்தல் - தண்ணிதாகவுள்ள மயிர்ச் சாந்து தடவப்பட்டு நெய்ப்புப் புலராத கூந்தலையும்; வதுவை மகளி்ர் நோக்கினர் - மணமகளிர் கற்பால் வழிபட்டு நோக்கி; பெயர்ந்து வாழ்நாள் அறியும் நோக்கத்து வயங்கு சுடர் - பின்னரும் தன்னை நோக்கித் தம் வாழ்நாளெல்லையை யறியும் நோக்கத்துக்கேற்ப விளங்கும் ஒளியையுடைய; மீனொடு புரையும் கற்பின் - அருந்ததி போலும் கற்பினையும்; வாணுத லரிவையொடு - ஒளிபொருந்தி நெற்றியினை யுமுடைய அரிவையாகிய நின் மனைவியுடன்; காண் வரப்பொலிந்து - அழகுற விளங்கி; நீ நோயிலையாகியர் - நீ நோயின்றி வாழ்வாயாக எ-று.
உறையுளையும், கூந்தலையும், கற்பினையும், நுதலையுமுடைய அரிவையொடு காண்வரப் பொலிந்து, அரசியல் பிழையாது, செருமேந் தோன்றி, நீ நோயிலையாகியர் என இயையும்.
அரசியற் பொறையால், பல்வகை யச்சத்துக் கிடமாதலின் நெஞ்சு மெலிதலாலும், செருவுடற்று மிடத்து விழுப்புண் படுதலாலும் நோயுண்டாமாதலின், "அரசியல் பிழையாது செருமேந் தோன்றி நோயிலையாகியர் நீயே" என்றார். பல்வகை யச்சமாவன"மழைவளங் கரப்பின் வான்பேரச்சம், பிழையுயி ரெய்தின் பெரும்பே ரச்சங், குடிபுர வுண்டுங் கொடுங் கோலஞ்சும்" அச்சம் என்பன. இவற்றைச் செங்குட்டுவன், "மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல், துன்பமல்லது தொழுதக வில்லை" என்பது (சிலப். வஞ்சி. காட்சி 103-4) காண்க."பிழையாமலெனத் திரிக்க" என்பது பழையவுரை.
நாடு காத்தல் குறித்து வேந்தன் பிரிந்த வழியும் வேறே அவனோடு புலத்தற்குரிய காரணங்கள் உளவாகிய வழியும், அவன்பாற் சென்றொடுங்கிய அன்பால், நெஞ்சின்கண், "அன்பிலை கொடியை" என்பன போலும் சொல் நிகழ்தற்குரிய நினைவு தோன்றுவதில்லை யென்றற்கு, "அடங்கிய நெஞ்சம் புகர்படு பறியாது" என்றும், நனவிற் பிரியினும் கனவிற் கண்டு நனவிற் கூடினா ரெய்தும் இன்பப் பயனைப் பெறுதலின் மனையின் கண்ணிருந்து நல்லறம் புரியும் கற்புச் சிறப்பினைக்"கனவினும் பிரியா வுறையு" ளென்றும் கூறினார்."நனவினா னல்காதவரைக் கனவினாற், காண்டலினுண்டென் னுயிர்" (குறள் 1213) என்றாற்போ லொழுகுவது கனவினும் பிரியா வுறையுளென வறிக. ஈண்டுப் பழையவுரைகாரர், "உறையுளொடு நெஞ்சம் புகர்படுபு அறியாது என மாறிக்கூட்டி அறியா தென்பதனை அறியாமலெனத் திரித்து அதனைப் புரையும் என்றதனோடு முடிக்க" என்று கூறுவர்.
தலைவன் பிரிந்த விடத்துக் குலமகளிர் தம்மை யொப்பனை செய்து கொள்ளாராகலின், என்றும் தான் தலைவனைப் பிரியா துறைதலால் இடையறா ஒப்பனையால் நெய்ப்புப் புலராத கூந்தலுடைய ளாயினாள் அரசமாதேவி யென்பார். "தண்ணெனத் தகரம் நீவிய துவராக் கூந்த" லென்றார். தகரம், மயிர்ச் சாந்து. இதனை நீவிக் கொள்வதால் தலையும் கண்ணும் குளிர்ச்சி பெறுமென்று மருத்துவ நூலார் கூறுப; அவர் கூற்றும் உண்மை யென்றற்குச் சான்றாமாறு, "தண்ணென" என்று ஆசிரியர் கூறுவது மிக்க நயமாக வுளது. துவர்தல், புலர்தல். பழைய வுரைகாரர், "துவராக் கூந்தலென்றது எப்பொழுதும் தகர முதலியன நீவுகையால் ஈரம் புலராத கூந்த லென்றவா" றென்றும், இச்சிறப்பானே இதற்கு "துவராக் கூந்தலென்று பெயராயிற்" றென்றும் கூறுவர்.
வதுவைக் காலத்தே, மகளிர் தாம் மணக்கும் கணவனைப் பிரியாமல் கற்புவழி யொழுகும் பொற்பு மேம்படுதற்கு அருந்ததியைக் காண்டல் மர பாதல் தோன்ற, "வதுவை மகளிர் நோக்கினர்" என்றும், பின்னர்த் தாம் வாழும் நாட்களில் வாழ்நாளெல்லையை யறிதற்கு அவ்வருந்ததி மீனைக் காண்பதும் மரபாதல்பற்றி, "பெயர்ந்து வாழ்நாளறியும் நோக்கத்து வயங்கு சுடர்" என்றும் கூறினார். "உலந்த நாளவர்க்குத் தோன்றா தொளிக்கு மீன் குளிக்குங் கற்பிற், புலந்தவே னெடுங்கட் செவ்வாய்ப் புதவி" (சீவக. 2141) என்று திருத்தக்கதேவர் கூறுதலால் இவ்வழக்குண்மை துணியப்படும். திருமணக்காலத்து நோக்கியவர் மறுபடியும் பிற் காலத்தே வேறு குறிப்பொடு நோக்குதல்பற்றி, "பெயர்ந்து" என்றும், வாழ்நா ளுலந்தவர்க்குத் தோன்றாது மறையும் என்பது அமங்கல மாதலின் "வயங்கு சுடர்" என்றும் கூறிய நாகரிகம் குறிக்கற்பாற்று. மகளிர் நோக்கினர், பெயர்ந்து, அறியும் நோக்கத்து வயங்கு சுடர் மீனொடு புரையும் கற்பின் என இயைக்க. இனி, ஆசிரியர் உ. வே. சாமிநாதையர், கூந்தலை வதுவை மகளிர்க்கு அடையாக்குவர்.
இதுகாறுங் கூறியவாற்றால், இரும்பொறை, வானம் சுரப்ப, மடமான் ஏறு புணர்ந்தியல, புள்ளும் மிஞிறும் ஆர்ப்ப, பழனுங் கிழனும் மிசையற வறியாவாக, ஆனிரை புல்லார்ந் துகள, கூலங் கெழும, பல்லூழி நடுவு நின்றெழுக, நின்கோல் செம்மையிற் றிறம்பாது நிகழ்தலின், நாடு தொழுதேத்துதலாலும், உயர்ந்தோர் பரவுவதாலும், உறையுளையும், கூந்தலையும், கற்பினையும், நுதலையுமுடைய அரிவையாகிய தேவியுடன் காண்வரப் பொலிந்து, அரசியல் பிழையாது செருமேந் தோன்றி, நீ நோயிலையாகியர் என்பதாம். இனிப் பழையவுரைகாரர், "உறையுளொடு மீனொடு என நின்ற ஒடுக்கள் வேறு வினையொடு" என்றும், "பல்வேல் இரும்பொறை, நின்கோல் செம்மையாலே வானம் சுரப்ப, கானம் ஏறு புணர்ந்தியல, சினை யிற் புள்ளும் மிஞிறும் ஆர்ப்ப, பழனும் கிழங்கும் மிசையற வறியாதொழிய, ஆனிரை புல்லருந் துகள, கூலம் கெழும, ஊழி நடுவுநின் றொழுக, நாடு தொழுதேத்த, உயர்நிலை யுலகத் துயர்ந்தோர் பரவ, அரசியல் பிழையா தொழியச் செருவில் மேம்பட்டுத் தோன்றி, நீ நின் அரிவையொடு பொலிந்து நோயிலையாகியர் எனக் கூட்டி வினைமுடிவு செய்க" என்றும், "இதனாற் சொல்லியது அவன் நாடு காவற் சிறப்புக் கூறி வாழ்த்திய*வாறாயிற்" றென்றும்"அவ்வாறு நாடு காவற் கூறினமையால் துறை *காவமுல்லையாயிற்" றென்றும் கூறுவர்.
9.10. வலிகெழு தடக்கை
90
மீன்வயி னிற்ப வானம் வாய்ப்ப
அச்சற் றேம மாகியிரு டீர்ந்
தின்பம் பெருகத் தோன்றித் தந்துணைத்
துறையி னெஞ்சாமை நிறையக் கற்றுக்
கழிந்தோ ருடற்றுங் கடுந்தூ வஞ்சா 5
ஒளிறுவாள் வயவேந்தர்
களிறொடு கலந்தந்து
தொன்று மொழிந்து தொழில் கேட்ப
அகல்வையத்துப் பகலாற்றி
மாயாப் பல்புகழ் வியல்விசும் பூர்தர 10
வாள்வலி யறுத்துச் செம்மை பூஉண்
டறன்வாழ்த்த நற்காண்ட
விறன்மாந்தரன் விறன்மருக
ஈர முடைமையி னீரோ ரனையை
அளப் பருமையி னிருவிசும் பனையை 15
கொளக்குறை படாமையின் முந்நீ ரனையை
பன்மீ னாப்பட் டிங்கள் போலப்
பூத்த சுற்றமொடு பொலிந்து தோன் றலை
உருகெழு மரபி னயிரை பரவியும்
கடலிகுப்ப வேலிட்டும் 20
உடலுநர் மிடல்சாய்த்தும்
மலையவு நிலத்தவு மருப்பம் வௌவிப்
பெற்ற பெரும்பெயர் பலர்கை யிரீஇய
கொற்றத் திருவி னுரவோ ரும்பல்
கட்டிப் புழுக்கிற் கொங்கர் கோவே 25
மட்டப் புகாவிற் குட்டுவ ரேறே
எழாஅத் துணைத்தோட் பூழியர் மெய்ம்மறை
இரங்குநீர்ப் பரப்பின் மரந்தையோர் பொருந
வெண்பூ வேளையொடு சுரைதலை மயங்கிய
விரவுமொழிக் கட்டூர் வயவர் வேந்தே 30
உரவுக் கடலன்ன தாங்கருந் தானையொடு
மாண்வினைச் சாப மார்புற வாங்கி
ஞாண்பொர விளங்கிய வலிகெழு தடக்கை
வார்ந்து புனைந்தன்ன வேந்துகுலவு மொய்ம்பின்
மீன்பூத் தன்ன விளங்குமணிப் பாண்டில் 35
ஆய்மயிர்க் கவரிப் பாய்மா மேல்கொண்டு
காழெஃகம் பிடித்தெறிந்து
விழுமத்திற் புகலும் பெயரா வாண்மைக்
காஞ்சி சான்ற வயவர் பெரும
வீங்குபெருஞ் சிறப்பி னோங்குபுக ழோயே 40
கழனி யுழவர் தண்ணுமை யிசைப்பிற்
பழன மஞ்ஞை மழைசெத் தாலும்
தண்புன லாடுந ரார்ப்பொடு மயங்கி
வெம்போர் மள்ளர் தெண்கிணை கறங்கக்
கூழுடை நல்லி லேறுமாறு சிலைப்பச் 45
செழும்பல விருந்த கொழும்பஃ றண்பணைக்
காவிரிப் படப்பை நன்னா டன்ன
வளங்கெழு குடைச்சூ லடங்கிய கொள்கை
ஆறிய கற்பிற் றேறிய நல்லிசை
வண்டார் கூந்த லொண்டொடி கணவ 50
நின்னாள், திங்க ளனைய வாக திங்கள்
யாண்டோ ரனைய வாக யாண்டே
ஊழி யனைய வாக வூழி
வெள்ள வரம்பின வாகென வுள்ளிக்
காண்கு வந்திசின் யானே செருமிக் 55
குருமென முழங்கு முரசிற்
பெருநல் யானை யிறைகிழ வோயே.
துறை: காட்சி வாழ்த்து.
வண்ணம்: ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்.
தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும்.
பெயர்: வலிகெழு தடக்கை.
1-13. மீன் வயின்.........மருக
உரை: மீன் வயின் நிற்ப - விண்மீன்களும் கோள்களும் தத்தமக்குரிய இடத்தே நிற்க; வானம் வாய்ப்ப - மழை தப் பாது பொழிய; அச்சு அற்று ஏமமாகித் தோன்றி - உயிர்கட்குத்தாம் அச்சமின்றிப் பாதுகாப்பாய்த் தோன்றி; இருள் தீர்ந்து இன்பம் பெருக - துன்பமின்றி இன்பம் நாளும் மிகுமாறு; தம் துணைத் துறையின் எஞ்சாமை நிறையக்கற்று - தமக்குரிய அளவாக வகுக்கப்பட்ட கல்வித் துறையின்கண் கற்பன குறைவு படாது நிரம்பக் கற்று; கழிந்தோர் உடற்றும் கடுந்தூ அஞ்சா - வலி மிக்கோர் செய்யும் போர்க் கேதுவாகிய மிக்க வன்மைக்கு அஞ்சுதலில்லாத; ஒளிறு வாள்வய வேந்தர் - விளங்குகின்ற வாளையுடைய வலிய அரசர்; களிறொடு கலம் தந்து - யானைகளோடு நன்கலங்கள் பலவும் செலுத்தி; தொன்று மொழிந்து தொழில் கேட்ப - தமது பழைமையைச் சொல்லிப் பணி யேற்று நடப்ப; அகல் வையத்துப் பகலாற்றி - அகன்ற உலகத்திலே நடுவு நிலைமையப் புரிந்து; மாயாப் பல் புகழ் வியல் விசும்பு ஊர்தர - அழியாத பல்லாற்றாற் பெருகிய புகழ் அகன்ற வானமெங்கும் பரவ; வாள் வலியுறுத்து - தமது வாள் வன்மையைத் தெரியாத பகைவர் தெரிய வற்புறுத்தி; செம்மை பூஉண்டு அறன் வாழ்த்த - செங்கோன்மை மேற் கொண்டதனால் அறவோர் மகிழ்ந்து வாழ்த்த; நற்காண்ட விறல் மாந்தரன் - நன்றாக ஆட்சி புரிந்த விறலையுடைய மாந்தர னென்னும் சேரமானது; விறல் மருக - மேம்பட்ட வழித் தோன்றலே;
நாளுங் கோளும் நிலைதிரியின் நாட்டில் மழை யின்மை, வறுமை, நோய் முதலிய துன்ப முண்டா மாதலின்"மீன்வயின் நிற்ப" என்றும், நிற்றலாற் பயன் மழை யுண்மையும் அச்ச மின்மையும் துன்ப மின்மையும் இன்பமும் பெருகுதலாதலால், "வானம் வாய்ப்ப" என்றும், "அச்சற்று ஏமமாகி" யென்றும், "இருள் தீர்ந்து இன்பம் பெருக" என்றும் கூறினார். "வியனாண்மீ னெறி யொழுக" (மதுரை. 6) என்று மாங்குடி மருதனார் கூறுதல் காண்க. அச்சம், அச்செனக் கடைக் குறைந்து நின்றது;"அச் சாறாக வுணரிய வருபவன்" (கலி. 75) என்றார்போல. அச்சமின்றிப் பாதுகாவலாக விளங்குதலை, "அச்சமறியா தேமமாகிய" (மதுரை. 652) என்று சான்றோர் விளக்குத லறிக. இருள், அறியாமை காரணமாக வரும் துன்பம். கற்றற்குரியவற்றை எஞ்சாமை நிறையக் கற்பதன் பயன் இருள் நீங்கலும் இன்பம் பெறுதலுமாதலின்"இருள் தீர்ந்தின்பம் பெருக" என்றார்."இருணீங்கி யின்பம் பயக்கும் மருணீங்கி மாசறு காட்சியவர்க்கு" (குறள். 352) என்று சான்றோர் கூறுப."ஐவகை மரபினரசர் பக்கமும்" (தொல். புறத். 20) என அரசர்க்கு வகுத்துள்ள கல்வி முறையை, "தந் துணைத் துறையின்" என்றும், அவற்றைக் கடைபோகக் கசடறக் கற்றது தோன்ற, "எஞ்சாமை நிறையக் கற்று" என்றும் கூறினார். ஏமமாகித் தோன்றி இருள் தீர்ந்து இன்பம் பெருக என இயைக்க. இதனித், "தந்துணைத்துறை யென்றது பார்ப்பார் முதலாயினார் தத்தமக்களவான துறை நூல்களை" யென்றும், கற்றென்பதைக் கற்கவெனத் திரிக்க வென்றும் பழையவுரை கூறுகிறது.
கழிந்தோர், பல போர்களைச் செய்து வெற்றியுற்று நிற்கும் வீரர்; இந்நிலை மிக்க வலியுடையோர்க் கல்லது கூடாமையின், "கழிந்தோர்" என்றும், பல போரினும் பயின்று மேம்பட்ட வலி யென்றற்குக்"கடுத்தூ" என்றும் கூறினார்.
பணிந்தொழுகும் சிற்றரசர் வலி கூறவே, *பேரர*********************** பெருவலி தானே விளங்குமாதலின், "தொன்று மொழிந்து தொழில் கேட்கும் வய வேந்தரை, "கடுந்தூ வஞ்சா ஒளிறு வாள் வயவேந்த" ரெனச் சிறப்பித்தார். தொன்று மொழிதலாவது, வழி வழியாக யாம் பேரரசனாகிய நினக்குத் திறை செலுத்திப் பணி புரிகின்றே மென்பது.
அகன்ற வுலகின் கண் புகழ் பெறுதற்குரிய வாயில்கள் பலவற்றினும் நடுவு நிலைமை புரிதலாற் பெறப்படும் புகழ் தலைமை யுடைத்தாதல் பற்றி, "அகல் வையத்துப் பகலாற்றி மாயாப் பல்புகழ்" என்றும், புகழ், நிலவுலகை ஆதாராமாகக் கொண்டு அகல்வான மெங்கும் பரவி நிற்ப தாகலின், "புகழ் வியல் விசும்பூர்தர" என்றும் கூறினார். நடுவுநிலை, நுகத்துப் பகலாணி போறலின், பகலெனப்பட்டது;"நெடுநுகத்துப் பகல்போல, நடுவுநின்ற நன்னெஞ்சினோர்" (பட்டி. 206-7) என வருதல் காண்க.
தமது வாள் வன்மையைப் பகைவர் போர் முகத்தே பொருது கண்டஞ்சச் செய்தமை தோன்ற, "வாள்வலி யுறுத்து" என்றும், தெவ்வரும் வாள்வன்மை தேர்ந்து பணிந்து போந்த காலை அவர்பால் அருள் செய்து நீதி வழங்குதலால் 'செம்மை பூஉண்டு' என்றும், இருதிறத்து நலந் தீங்குகளையும் உள்ளவா றுணர்ந்து அறிவுறுத்தும் சான்றோர் அறவோராதவின், வேந்தன் செற்றவர் நட்டவர் என்ற இருவர்பாலும் செம்மை பூண்டொழுகுதலால், மிக்க மகிழ்ச்சியுற்று வாழ்த்துமாறு தோன்ற, "அறன் வாழ்த்த" என்றும், "நற்காண்ட" என்றும் கூறினார். விறல், மேம்பாடு வெற்றியுமாம்.
ஏமாமாகித் தோன்றி, நிறையக் கற்று, வேந்தர் தொழில் கேட்ப, பகலாற்றி, புகழ் விசும்பூர்தர, வாள்வலி யிறுத்துச் செம்மை பூண்டு நற்காண்ட மாந்தரன் மருக என்றியைக்க; இனி, இன்பம் பெருக ஏமமாகித் தோன்றி, வேந்தர் தொழில் கேட்ப வையத்துப் பகலாற்றி, புகழ் விசும்பூர்தர வாள் வலியுறுத்து, அறன் வாழ்த்தச் செம்மை பூண்டு நற்காண்ட மாந்தரன் மருக என்றியைப்பினு மமையும். இனிப் பழையவுரைகாரர், "தந்தென்றது இடவழு வமைதி" யென்றும், "வையத்துப் பகலாற்றி யென்றது வையத்தார்கண்ணே நடுவு நிலைமையைச் செய்தென்றவா" றென்றும், "செம்மை பூண் டென்றது செவ்வையைத் தான் பூண்டென்றவா" றென்றும், "அறனென்றது அறக் கடவுளை" யென்றும், "நன்காண்ட வென்றது வலித்த" தென்றும் கூறுவர்.
14-18. ஈரம்...............தோன்றலை
உரை: ஈரமுடைமையின் நீரோர் அனையை - நெஞ்சிலே தண்ணிய அன்புடைய னாதலால் தண்ணீரை யொத்துள்ளாய்; அளப்பருமையின் இரு விசும்பு அனைய - அளத்தற்கரிய சூழ்ச்சி யுடையனாதலால் பெரிய விசும்பை யொத்துள்ளாய்; கொளக் குறைபடாமையின் முந்நீ ரனையை - இரவலர் வரைவின்றிக் கொள்ளுதலுற்ற வழியும் செல்வம் குடைபடாமையால் கடலை யொப்பாய்; பன் மீன் நாப்பண் திங்கள் போல - பலவாகிய விண் மீன்களுக்கிடையே விளங்கும் திங்களைப் போல; பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலை - எல்லா நலங்களாலும் நிறைந்து விளங்கும் சுற்றத்தாரிடையே விளக்கமுற்றுத் தோன்றுதலை யுடையாய். எ-று.
கனவிய பொருள் யாதாயினும் வந்த வழி அதனை யகத்திட்டுத் தண்ணிதாக்கும் நீர்போல, தக்கோர் யாவராயினும் வந்த வழி அவரை விரைந்து தழீஇக் கொண்டு அன்பு செய்தல் பற்றி, "நீரோ ரனையை" யென்றார். அஃகி யகன்ற சூழ்ச்சியுடைமை பற்றி, "இருவிசும் பனையை" யென்றார்; போற்றார்ப் பொறுத்தலும் சூழ்ச்சிய தகலமும் விளக்குதற்கு ஆசிரியர் முரஞ்சியூர் முடிநாகனார்"மண்டிணிந்த நிலனும் நிலனேந்திய விசும்பும்" (புறம். 2.) என்று கூறுதல் காண்க. கொள்ளக் குறைபடாத செல்வமுடைமையை, "வருநர் வரையாச் செழும்பல் தாரம், கொளக் கொளக் குறையாது தலைத்தலைச் சிறப்ப" (பதிற். 88) என்று பிறாண்டும் கூறியிருத்தலை யறிக."மழை கொளக் குறையாது புனல் புகமிகாது, கரை பொருதிரங்கும் முந்நீர்" (மதுரை. 424-5) என்பது பற்றி, "முந்நீரனையை" என்றார். சுற்றத்து நடுவே விளங்குதல் பற்றி, பன்மீன் நடுவண் விளங்கும் திங்களை யுவமை கூறினார்;"பன் மீன் நடுவன் திங்கள் போலவும் பூத்த சுற்றமொடு பொலிந்தினிது விளங்கி" (மதுரை. 769-70)எனப் பிறரும் கூறுப. தாதும் மணமும் நிறைந்த வழி மலர் பூத்தல் போல, செல்வமும் புகழும் சிறந்த சுற்ற மென்றற்கு, "பூத்த சுற்றமொடு" என்றார்; இது குறிப் புருவகம். நீரோ ரனைய யென்புழி, ஓர், அசைநிலை.
விறன் மாந்தரன் விறன் மருக என் முன்னிலைப்படுத்திய ஆசிரியர் இதனால் அவன் நலம் பலவும் எடுத்தோதிப் பாராட்டினாராயிற்று.
19-24. உருகெழு........உம்பல்.
உரை: உருகெழு மரபின் அயிரை பரவியும் - அச்சந்தரும் முறையினையுடைய அயிரை மலையிலுள்ள கொற்றவைக்குப் பரவுக் கடன் செய்தும்; கடல் இகுப்ப வேலிட்டும் - கடலிடத்தே வந்து பொருத பகைவர் கெட வேற்படையைச் செலுத்தியும்; உடலுநர் மிடல் சாய்த்தும் - நிலத்தே வந்து பொருத பகைவரது வலியை யழித்தும்; மலையவும் நிலத்தவும் அருப்பம் வௌவி-மலையிலும் நிலத்திலும் பகைவர் கொண்டிருந்த அரண்களை வென்று கைப்பற்றியும்; பெற்ற பெரும் பெயர் பலர் கை இரீஇய கொற்றத் திருவின் உரவோர் - பெற்ற பெரும் பொருளைப் பலர்க்கும் வழங்கியதனாலுண்டாகிய கொற்றமும் செல்வமுமுடைய திண்ணியோராய முன்னோருடைய; உம்பல் – வழித் தோன்றலே எ - று.
"அணங்குடை மரபிற் கட்டின்மே லிருந்து, தும்பை சான்ற மெய் தயங்குயக்கத்து நிறம்படு குருதி புறம்படினல்லது, மடை யெதிர்கொள்ளா, அஞ்சுவரு மரபிற் கடவுள் அயிரை" (பதிற். 79) என்பவாகலின், "உருகெழு மரபின் அயிரை பரவியும்" என்றார். கட லிகுப்ப வேலிட்டவன் கடல் பிறக் கோட்டிய செங்குட்டுவன். உடலுநர் மிடல் சாய்ந்து அகநாடு புக்கவர் அருப்பம் வௌவி மேம்பட்டோர் பல்யானைச் செல்கெழு குட்டுவன் முதலாயினோராவர். பெரும் பெயர் என்புழிப் பெயர் என்றது பொருளை; பொருளால் ஒருவர் பெயர் நின்று நிலவுதலின், பெயர் எனப் பட்டது. "பெயரிற் றோன்றும் பாலறி கிளவியும்" (சொல். 11) என்புழிப் "பெயரென்றது பொருளை" யெனச் சேனாவரையரும் கூறுதல் காண்க. பெற்ற பொருளைத் தனக்கென ஓம்பாது புலவர் பாணர் முதலாயினார்க்கு வழங்கிப் புகழ் பெறுவது இயல்பாதலால், "பெற்ற பெரும் பெயர் பலர்கை இரீஇய கொற்றத் திருவின் உரவோர்" என்றார்.
இனிப் பழையவுரைகாரர், "கடலி குப்ப வென்றது கடலைத் தாழ்க்க வேண்டி யென்றவா" றென்றும், "அருப்பம் வௌவி மிடல் சாய்த்தெனக் கூட்டுக" வென்றும், "பெயரென்றது பொருளை" யென்றும் கூறுவர்.
25-30. கட்டி…………...வேந்தே
உரை: கட்டிப் புழுக்கின் கொங்கர் கோவே - சர்க்கரைக் கட்டி கலந்த அவரை முதலியவற்றாலாகிய உணவினை யுண்ணும் கொங்கருக்கு அரசே; மட்டப் புகாவின் குட்டுவர் ஏறே - கள்ளொடு கூடிய உணவினையுடைய குட்ட நாட்டவர்க்குத் தலைவனே; எழாஅத் துணைக்தோள் பூழியர் மெய்ம்மறை - தம்பாற் றோற்று அழிந்தார்மேல் போர்க் கெழாத இணையான தோள்களையுடைய பூழி நாட்டவர்க்கு மெய்புகு கருவி போன்றவனே; இரங்கு நீர்ப் பரப்பின் மரந்தையோர் பொருந - ஒலிக்கின்ற கடற் பரப்பின் கரையிடத்தே யுள்ள மரந்தை நகரிலுள்ளார்க்குத் தலைவனே; வெண்பூ வேளையொடு சுரை தலைமயக்கிய - வெள்ளிய பூவையுடைய வேளைக்கொடியும் சுரைக்கொடியும் தம்மிற் கலந்து படர்ந்திருக்கும்; விரவு மொழிக் கட்டூர் - பல வேறு மொழிகளைப் பேசுவோர் கலந்திருக்கும் பாடி வீடுகளையுடைய; வயவர் வேந்தே - வீரர்க்கு அரசனே; அவரை முதலியவற்றின் விதைகளை யிடித்துப் பெற்ற மாவோடு சர்க்கரையைக் கலந்தமைத்த உணவினை, "கட்டிப் புழுக்கு" என்றும், கொங்கு நாட்டவர்க்கு ஈது உணவு என்பார், "புழுக்கிற் கொங்கர் கோவே" என்றும் கூறினார். குட்டுவர், தாம் உண்ணும் உணவோடு கள்ளினையும் சேரவுண்ணுப வென்றற்கு, "மட்டப் புகாலிற் குட்டுவ" ரென்றார். "தீஞ்சேறு விளைந்த மணிநிற மட்டம்" (பதிற். 42) என்றதனால் மட்டத்தின் இயல் புணரப்படும். இனிப் பழையவுரைகாரர், "கட்டிப் புழுக்கு என்றது கட்டியொடு கூட்டின அவரைப் பால் முதலான புழுக்கு" என்றும், "மட்டப் புகா வென்றது மதுவாகிய வுண" வென்று கூறுவர்.
அறத்திற் றிறம்பாது பொருது நிலைநாட்டும் வன்மையே சான்றோரால் பாராட்டப்படு மாதலின், போரி லழிந்து புறங் காட்டினார் மேல் எழாத பூழியரது அறப்போர் நலத்தை வியந்து, "எழாஅத் துணைத் தோட்பூழியர்" என்றார். பழையவுரைகாரரும், "எழாத் துணைத்தோ ளென்றது போரில் முதுகிட்டார் மேற் செல்லாத இணை மொய்ம்பு" என்பர்.
மரந்தை, மேலைக் கடற்கரையில் சேரர்க் குரித்தாயதோர் நகரம். கடற்கரை நகர மென்பது, "இரங்குநீர்ப் பரப்பின் மரந்தை" என்பதனால் இனிது விளங்கும். இது குட்டுவ னென்னும் சேர வேந்தனால் நிறுவப் பெற்றமை தோன்றச் சான்றோர், "குட்டுவன் மரந்தை" (குறுந். 34) என்றும், "குரங்குகளைப் புரவிக் குட்டுவன் மரந்தை" (அகம். 374) என்றும் கூறுப.
பகைவரொடு போர் செய்தல் வேண்டித் தானையொடு சென்ற வேந்தர், போரெதிர்தல் வேண்டித் தங்குதற்காகச் சமைக்கப்படும் பாடி வீடுகள் "கட்டூர்" என்றும், பல நாடுகளினின்றும் வந்த மக்களாலாகிய தானையாதலாலும், அவர் தத்தம் மொழிகளையே பேசுதலாலும், "விரவு மொழிக் கட்டூர்" என்றும் கூறினார்; "விரவு மொழிக் கட்டூர் வேண்டுவழிக் கொளீஇ" (அகம். 212) என்று பிறரும் கூறுவர். பாடி வீடுகளில் வேளைக் கொடியும் சுரைக் கொடியும் தம்மில் விரவிப் படர்ந்திருப்பது தோன்ற, "வெண்பூ வேளையொடு சுரைதலை மயக்கிய கட்டூர்" என்றார். இதனால், இச் சேரமான், கொங்குநாடு, குட்டநாடு, பூழிநாடு, குட நாடு என்பவற்றைத் தனக்குரியனாய்,அந்நாட்டவர் பரவும் நல்லரசனாய் விளங்கிய திறம் கூறினாராயிற்று.
31-40. உரவுக்கடல்…………...புகழோயே
உரை: உரவுக் கடலன்ன தாங்கருந் தானையொடு - பரப்பினையுடைய கடல் போன்ற பகைவரால் தடுத்தற்கரிய தானையையும்; மாண்வினைச் சாபம் மார்புற வாங்கி – மாட்சிமைப்பட்ட தொழிற் பாட்டையுடைய வில்லை மார்பளவும் வளைத்தலால்; ஞாண் பொர விளங்கிய வார்நது புனைந்தன்ன வலிகெழு தடக்கை - அதன் நாண் உராய்தலால் விளக்கமுற்ற நீண்டு ஒப்பனை செய்தாலொத்த வலி பொருந்திய பெரிய கைவினையும்; ஏந்து குலவு மொய்ம்பின் - உயர்ந்த திரண்ட வலியுற்ற தோளினையும்; மீன் பூத்தன்ன விளங்கு மணிப்பாண்டில் - விண்மீன் போல விளங்குகின்ற மணிகள் வைத்துத் தைக்கப்பெற்ற பக்கரையையும்; ஆய் மயிர்க் கவரிப் பாய் மா மேல்கொண்டு - அழகிய கவரி மயிராலாகிய தலையாட்டத்தையு முடைய பாய்ந்து செல்லும் குதிரையிவர்ந்து; காழ் எஃகம் பிடித்து எறிந்து - காம்பையுடைய வேற் படையைப்பற்றிப் பகைவர் மேலெறிந்து; விழுமத்திற் புகலும்- அவரெய்தும் துன்பத்தைக் கண்டு அதனையே மேன்மேலும் செய்தற்கு விரும்பும்; பெயரா ஆண்மை - நீங்காத ஆண்மையினையும்; காஞ்சி சான்ற வயவர் பெரும - நெஞ்சிலே நிலையாமை யுணர்வினையு முடைமையாற் பிறக்கும் வலிமிக்க வீரரையுமுடைய தலைவனே; வீங்கு பெருஞ் சிறப்பின் ஓங்கு புகழோயே – மிக்க பெருஞ் சிறப்பினால் உயர்ந்த புகழை யுடையோனே எ - று.
தானையும், தடக்கையும், மொய்ம்பும், வயவரு முடைய பெரும என்றும் புகழோ யென்றும் இயையும். வயவரை வேறு பிரித்துக் கூறுதலின், தானை யென்றது, களிறும் மாவும் தேரும் என்ற மூன்றையும் எனக் கொள்க. பரப்பும் பெருமையுந் தோன்ற, "உரவுக் கடலன்ன" என்றும், பகைவரால் வெலற் கருமை தோன்ற, "தாங்கரும் தானை"யென்றும் கூறினார்.
மார்புற வாங்கி அம்புகளை மழை போலச் சொரியும் தளர்ச்சியுறாத வலிய கட்டமைந்த வில்லென்பதற்கு, "மாண்வினைச் சாபம்" என்றும், பலகாலும் வாங்கி அம்பினைத் தொடுத்தலால், நாண் உராய்ந்து காழ் கொண்டு விளங்குதலின், கையினை, "ஞாண் பொர விளங்கிய வலிகெழு தடக்கை" யென்றும் கூறினார். வில்லை மார்புற வாங்குமிடத்தும், நாணைப் பற்றி அம்பு தொடுக்கு மிடத்தும், விரைவும், இலக்குத் தவறாமையும் வன்மையும் கொண்டு, விற்போ ருடற்றற்கண் கைகளே மிக்க வலியும் பெருமையு முடையவாதல் வேண்டுதலின், "வலிகெழு தடக்கை" என்று சிறப்பித்தார். இதுபற்றியே இப்பாட்டிற்கும் இது *பெயாரயிற் றென்க. பழையவுரைகாரர், "ஞாண் பொர என்றது நாண் உரிஞுதலால்" என்று பொருள் கூறி, "இவ் வடைச்சிறப்பானே இதற்கு வலிகெழு தடக்கை யென்று பெயராயிற்" றென்பர். "நிமிர் பரிய மாதாங்கவும், ஆவஞ் சேர்ந்த புறத்தை நேர்மிசைச், சாப நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும், பரிசிலர்க் கருங்கல *நல்கவும் குரிசில், வலியவாகு நின் றாடோய் தடக்கை" (புறம். 14) எனச் சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பாராட்டிக் கூறுதலும் ஈண்டுக் குறித்து நோக்கத்தக்கதாம். இவ்வாறு வலியும் பெருமையுமுடைய கைகட்கேற்ப, அமைந்த தோள்களின் சிறப்பை, "ஏந்துகுவவு மொய்ம்பின்" என்றார். மொய்ம்பு, ஈண்டு ஆகுபெயராற் றோள்களைக் குறித்து நின்றது. மொய்ம்பு, வலி. பழையவுரைகாரர், மொய்ம்பினைத் தடக்கைக் கேற்றி, "மொய்ம்பினையுடைய தடக்கையென மாறிக் கூட்டுக"
என்பர்.
சேரமான் இவர்ந்து செல்லும் குதிரைக்குப் பக்கங்களில் வ்ட்டமாகப் புனையப் பெற்றுக் கட்டியிருக்கும் பக்கரையைப்"பாண்டில்" என்றும் அதனிடத்தே கோத்துத் தைக்கப் பெற்றிருக்கும் வெண்மணிகளை, "மீன் பூத்தன்ன விளங்குமணி" யென்றும் கூறினார். அதற்குத் தலையிற் கட்டிய தலையாட்டம் கவரி மயிராலாய தென்றற்கு"ஆய் மயிர்க் கவரி" யென்றார். அம்மயிர் சிக்குறாது வார்ந்து ஒழுகுமாறு செப்பம் செய்திருப்பது தோன்ற"ஆய் மயிர்" என்றார். கவரி, ஆகுபெயர்.
ஏந்திய வேலைப் பகைவர்மே லெறிந்து தாக்கியவழி, அவர் புண்ணுற்றுப் பெருந்துன்பம் உழப்பக் கண்டும் மறம் தணியாது மேன்மேலும் மண்டிச் சென்று பகைவர்க்குப் புண் ணுண்டாக்குதலையே பெரிதும விரும்பும் இயல்பு குறித்து, "காழெஃகம் பிடித்தெறிந்து விழுமத்திற் புகலும்" என்றார். தான் புண் செய்தலே யன்றிப் , பிறரால் தான் புண்ணுறினும் அதனையே விரும்புவ னென்றற்கு "விழுமத்திற் புகலும்" எனப் பொதுப்படக் கூறினார். புகற்சிக் கேதுவாகிய ஆண்மை,பெயராமையால் விளங்குதலின், "பெயரா ஆண்மை" யென்றும், அதுதானும் நிலை பெறுதற்கு, யாக்கை நிலையாமையும் புகழின் நிலை பேறுடைமையும் நெஞ்சில் நிலவுதற்குக்"காஞ்சி சான்ற வயவர்" என்றும் கூறினார். பழைய வுரைகாரர், "காழெஃகம் பிடித்தெறிந்தும் விழுமத்திற் புகலும் என்றதற்குப் பகைவரை யென்னும் பெயரை வருவித்துக் காம்பையுடைய வேலைப் பிடித்தெறிந்து அப்பகைவர்க்கு இடும்பை செய்கையிலேயே விரும்பு மென்றவா" றென்று கூறுவர்.
இக்கூறியவற்றால் சிறப்பு மிகுதலின், "வீங்கு பெருஞ் சிறப்பி"னென்றும், இதனாலுண்டாகும் புகழ், ஏனையோ ரெய்தும் புகழினும் ஓங்கி நிற்றலின், "ஓங்கு புகழோய்" என்றும் கூறினார்.
41-50 கழனியுழவர்...........கணவ
உரை: கழனி யுழவர் தண்ணுமை இசைப்பின் - கழனியில் தொழில் புரியும் உழவர் தண்ணுமையினை முழக்குவாராயின்; பழனமஞ்ஞை மழைசெத்து ஆலும் - பழனங்களில் வாழும் மயில்கள் மழை முகிலின் முழக்கமெனக் கருதி ஆடும்; தண் புன லாடுநர் ஆர்ப்பொடு - குளிர்ந்த நீரில் மூழ்கியாடுவோர் செய்யும் ஆரவாரத்தோடு; வெம்போர் மள்ளர் தெண் கிணை மயங்கிக் கறங்க - வெவ்விய போரைச் செய்யும் வீரருடைய தெளிந்த ஓசை யமைந்த தடாரிப் பறை கலந்து முழங்க; கூழுடை நல்இல் ஏறு மாறு சிலைப்ப - செல்வமுடைய நல்ல மனைகளிலேயுள்ள ஆனேறுகள் தம்மின் மாறுபட்டு முழங்க; செழும் பல இருந்த கொழும் பல் தண் பணை - செழுமையான பல வூர்களையுடைய வளமிக்க பல குளிர்ந்த வயல்களைக் கொண்ட; காவிரிப் படப்பை நன்னா டன்ன- காவிரியாற்றால் வளமுறப் படைக்கப்பட்ட நிலப்பகுதியாகிய நல்ல நாட்டைப் போலும்; வளங்கெழு குடைச்சூல்-தொழில் வளம்பொருந்திய சிலம்பையும்; அடங்கிய கொள்கை - அடக்கத்தைப் பொருளாகக் கொண்ட கொள்கையையும்; ஆறிய கற்பின் - சினங் கொள்ளுத லில்லாத அறக் கற்பையும்; தேறிய நல்லிசை - யாவரும் தெளிய விளங்கும் நல்ல புகழையும்; வண்டார் கூந்தல் - வண்டு மொய்க்கும் கூந்தலையும்; ஒண்டொடி கணவ - ஒள்ளிய தொடியையு முடையாட்குக் கணவனே எ - று.
மஞ்சை ஆலும் நாடு, காவிரிப் படப்பை நாடு என இயையும். கழனிக் கண் தொழில் புரியும் உழவர் தாம் வித்திய நெல் விளைந்தவழி யதனை யரி யுங்கால் தண்ணுமை யிசைத்தல் மரபாதாலின், "கழனி யுழவர் தண்ணுமை" யென்றார்;"வெண்ணெ லரிநர் தண்ணுமை வெரீஇப், பழனப் பல்புள் ளிரிய" ( நற். 350) என்று பிறரும் கூறுதல் காண்க. மயில், மழைமுகி லைக் கண்டு தன் தோகையை விரித்தாடுதவது இயல்பாதலால், தண்ணுமை யின் முழக்கம் மழை முழக்கம் போல்வது கண்டு மயில் ஆலுவதாயிற் றென் றற்கு, "மழைசெத் தாலும்" என்றும், மருத நிலத்தேயுள்ள மயிலென்றற்குப், "பழனமஞ்சை" என்றும் கூறினார்.
புனலாடுவோர் பெருங் கூட்டமாகச் சென்று பல்வகை வாச்சியங்கள் இயம்ப நீர்விளையாட்டயர்தல் பண்டைநாளை மரபாதலின், "தண்புனலாடுந ரார்ப்போடு" என்றார். வெவ்விய போர்த்தொழில் பயிலும் மறவர், போர்க்குரிய தடாரிப் பறையை முழக்க, அதனிசை புனலாட்டாரவாரத் தோடு கலந்து முழங்கிற் றென்பதாம். கூழ், செல்வம்; சோறுமாம். வேளாள ரில்லங்களில் உள்ள ஆனேறுகள் அம் முழக்கங் கேட்டு, மருண்டு தம்முண் முரண்கொண்டு முழங்கின வென்பார், "ஏறு மாறு சிலைப்ப" என்றார்."ஆமாநல்லேறு சிலைப்ப" (முருகு.315) என்று பிற ரும் கூறுப."ஏறுமாறு சிலைப்ப என்றது ஏறுகள் ஒன்றற்கொன்று மாறாக முழங்க வென்றவா" றென்பது பழையவுரை. செழும்பல, கொழும்பல என்புழிப் பன்மை முறையே ஊர்கள் மேலும் வயலகள் மேலும் நின்றன. ஊர்கட்குச் செழுமையும், வயல்கட்குக் கொழுமையும் சிறப்புத் தருவன வென வுணர்க.
காவிரியாறு கடலொடு கலக்குமிடத்து அது கொணரும் வண்டல் தங்கி நாளடைவிற் பெருகிக் காவிரி பாயும் பூம்புனல் நாடு படைக்கப்பட்ட (Delta) தாகலின், "காவிரிப் படப்பை நன்னா" டெனப்பட்டது. படைப்பு எனப்படல் வேண்டுமாயினும், அச் சொல் நிலஞ் சுட்டாது பொருளையே சுட்டி நிற்றலின், நிலஞ் சுட்டும் வகையில் படைப்பையாகிப் பின்பு"படப்பை" யென வழங்குவதாயிற்றெனக் கொள்க."டெல்டா" என்ற பகுதிகளைப் பண்டையோர்"படப்பை" யென வழங்கியதுபோல், ஹார்பர் ( Harbour) எனப்படும் துறைமுகங்களைப் பண்டைத் தமிழர்"நாவாய்க் குளம்" என வழங்கினர் என ஆசிரியர். திரு. சதாசிவப் பண் டாராத்தாரவர்கள் கூறுகின்றார்கள். மகளிர் நலத்துக்குச் சிறப்புடைய நகரங்களையும் நாடுகளையும் உவமமாகக் கூறுவது பண்டையோர் மரபாத லின், "நன்னாடன்ன ஒண்டொடி" யென்றார்."குட்டுவன், மரந்தை யன்ன வென்னலம்" ( அகம். 376) என்று சான்றோர் கூறுவது காண்க.
குடைச்சூல், சிலம்பு; குடைச்சூலை யுடைமைபற்றி, இப்பெயர் பெறு வதாயிற்று."குடைச்சூற் சித்திரச் சிலம்பு" (சிலப் 16: 118-9) என்பதற்கு, "புடைபட்டு உட்கருவை யுடைய சித்திரத் தொழிலை யுடைத்தா கிய சிலம்பு" என்று உரை கூறி, "குடைச்சூல், குடைபடுத லென்பாரு முளர்" என்று கூறினர் அடியார்க்கு நல்லார்; அதன் அரும்பதவுரை காரர், "குடைச்சூல், புடை தாழ்த்தல், ; உள்ளுட் டாழ்த்தலுமாம்" என் பர். சித்திரத்தொழில் நிறைந்து விளங்குமாறு தோன்ற, "வளங்கெழு குடைச்சூல்" என்றார்.
பெருநல முடையளா யிருந்தும், அடக்கத்தையே பொருளாகக் கொண்டொழுகிய சிறப்பினால்"அடங்கிய கொள்கை" யென்றும், அக் கொள்கையின் பயன் கணவன்பால் சிவந்து துனித்தற்குரிய காரணங்கள் உளவகிய வழியும், அது செய்யாது இன்சொல்லும் பணி நடையும் கொண்டிருப்பது தோன்ற"ஆறிய கற்பு" என்றும், இன்ன நன்னடையால் மனைக்கு விளக்காய் வண்புகழ் கொண்டு யாவரும் பரவ இருக்கும் நலம் விளக்குவார்"தேறிய நல்லிசை" என்றும் கூறினார்; பிறரும், வினைமுற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குக் கூறும் கூற்றில் வைத்து"திருநக ரடங்கிய மாசில் கற்பின்....அணங்குசா லரிவை" (அகம் 114) என்பது காண்க.
இவ்வாறு தேவியின் குணநலம் கூறியவர், உருநலம் கூறலுற்று, "வண்டார் கூந்த லொண்டொடி" யென்றார்.
51-57 நின்னாள்.....கிழவோயே.
உரை: நின்நாள் திங்கள் அனையவாக - ஒரு திங்களின் கால வளவு நின் வாழ்நாளின் ஒருநாள் அளவாகுக; திங்கள் யாண் டோர் அனையவாக - நின் வாழ்நாளில் ஒரு திங்களின் அளவு ஓர் யாண்டின் கால வளவிற்றாகுக; ஆண்டு ஊழி அனையவாக - வாழ் நாளில் ஓர் யாண்டினளவு ஊழியளவிற்றாகுக; ஊழி வெள்ளவாம் பினவாக - வாழ்நாளின் ஊழிக்காலவெல்லை வெள்ள மென்னும் காலவெல்லையின் அளவிற்றாகுக; என உள்ளி - என்று *கருதி வாழ்த்திக்கொண்டு; செருமிக்கு உருமென முழங்கும் முரசின்- போரில் மேம்பட்டு இடிபோல முழங்கும் முரசினையும்; பெரு நல்யானை - பெரிய நல்ல யானைகளையுமுடைய; இறை கிழவோய்- இறைமைத் தன்மைக் குரியோனே; யான் காண்கு வந்திசின்- யான் நின்னைக் காண்பான் வந்தேன் எ-று.
உலகவர் கூறும் திங்களும், யாண்டும்,ஊழியும் வெள்ளமும் முறையே நின் வாழ்நாளின் நாளும், திங்களும், யாண்டும், ஊழியுமாக *நீடுக என்ப தாம். ஊழி, எண்பது யாண்டுகளின் கால வளவு போலும். பல வூழிக ளின் எல்லை வெள்ள வரம்ப. "வெள்ளவரம்பி னூழிபோகியும், கிள்ளை வாழிய" (ஐங் 281) எனச் சான்றோர் கூறுதலால், காலக் கணக்கின் வரம்பு வெள்ளமென்று துணியலாம்.
பிறவியிலே இறைவனாதற்குரிய நன் மாண்பனைத்தும் ஒருங்கு பெற் றுத் தோன்றினா னென்றற்கு, "இறை கிழவோய்" என்றார். இறைவ னாதற்குரிய உரிமை, இயற்கை யறிவோடு கல்வி கேள்வி முதலியவற்றா லுண்டாகும் செயற்கை யறிவும் பிறவும் பெற்றவழி யெய்துவதாக, அவை யாவும் கருவிலே யுடைய னென்றற்கு இவ்வாறு கூறினாரென வுணர்க.
இதுகாறுங் கூறியவாற்றால், "விறன் மாந்தரன் விறன் மருக, நீ நீரோரனையை,* இருவிசும்பனையை, முந்நீரனையை, பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலை; கொற்றத் திருவின் உரவோர் உம்பல், கொங்கர் கோவே, குட்டுவர் ஏறே, பூழியர் மெய்ம்மறை; மரந்தையோர் பொருந, வயவர் வேந்தே, பெரும, ஓங்கு புகழோயே, ஒண்டொடி கணவ, இறை கிழ வோய்; நின் நாள் திங்க ளனையவாக, திங்கள் யாண்டோ ரனையவாக, யாண்டே ஊழி யனையவாக, ஊழி வெள்ள வரம்பினவாக, என உள்ளி யான் காண்கு வந்திசின் என்பதாம். இனிப் பழையவுரைகாரர், "மருக உம்பல், கொங்கர் கோவே, குட்டுவரேறே, பூழியர் மெய்ம்மறை, மரந் தையர் பொருந, வயவர் வேந்தே, வயவர் பெரும, ஓங்கு புகழோய், ஒண்டொடி கணவ, இறை கிழவோய், ஈரமுடைமையின் நீரோ ரனையை; அளப் பருமையின் விசும்பனையை; கொள்ளக் குறைபடாமையின் மூந்நீ ரனையை, பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றுதலை யுடையை; ஆத லால், நினக்கு அடைத்த நாட்கள்,உலகத்தில் திங்களனையவாக வென் றும்,நின்னுடைய திங்கள் யாண்டனையவாக வென்றும், நின்னுடைய யாண்டு ஊழியானையவாக வென்றும், நின் யாண்டிற் கொப்பாகிய அப்பல் லூழி தம் மளவிற்பட்ட பலவாய் நில்லாது வெள்ள வரம்பினவாக வென் றும், நினைத்து நின்னைக் காண்பேன் வந்தேன் எனக்கூட்டி வினைமுடிவு செய்க" என்று கூறுவர்.
இதனாற் சொல்லியது அவன் தண்ணளியும் பெருமையும் கொடையும் சுற்றந் தழாலும் உடன்கூறி வாழ்த்தியவா றாயிற்று. ஒளிறு என்பது முதலாக நான்கடியும், அறன் வாழ்த்த என்பது முதலாக இரண்டடியும், கடலிகுப்ப என்பது முதலாக இரண்டடியும், காழெஃகம் பிடித்தெறிந்து என ஓரடியும் வஞ்சி யடியாக வந்தமையான் வஞ்சித்தூக்கு மாயிற்று.
நின்னா ளென்பது கூன்.
ஒன்பதாம் பத்து மூலமும் உரையும் முற்றும்.
எட்டுத் தொகையுள் ஒன்றாகிய பதிற்றுப்பத்து மூலமும் ஆசிரியர், ஔவை.சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள் விளக்க வுரையும் முடிந்தன.
-----------------------------------------------------------
பதிற்றுப்பத்துப் பதிகங்களின் பழையவுரைக் குறிப்பு
பதிற்றுப்பத்திற் காணப்படும் பதிகங்கள் இடைக்காலச் சோழ பாண்டியர் கல் வெட்டுக்களிற் காணப்படும் மெய்க் கீர்த்திகள் போல வரலாற்றுக் குறிப்புக்கொண்டு எளிய நடையில் அமைந்திருத்தலால் அவற் றிற்கு ஏனைப்பாட்டுக்கட் கெழுதியதுபோல உரையெழுதுவது வேண்டா என இந்நூலைப் பயிலும் மாணவர்களே விரும்பாராயினர். அதனால் அவற் றிற்கு இங்கே உரை யெழுதப்படவில்லை. ஆயினும், சிற்சில தொடர் கட்குப் பழையவுரைக் குறிப்பு நல்ல விளக்கந் தருகிறது. அதனால், அதுமட்டில் இங்கே ஏட்டிற் காணப்பட்டபடியே தரப்படுகின்றது.
இரண்டாம் பத்து: இதன் பதிகத்து யவனர்ப் பிணித்தென்றது யவனரைப் போருள் அகப்படுத்தி யென்றவாறு. நெய்தலைப் பெய்து கைபிற்கொளீஇ யென்பதற்கு அக்காலத்துத் தோற்றாரை நெய்யைத் தலையிற் பெய்து கையைப் பிறகு பிணித்து என்று உரைக்க. அருவிலை நன்கலம் வயிரமொடு கொண்டு என்றது அந்த யவனரிடைப் பின்தண்ட மாக அருவிலை நன்கலமும் வயிரமுங் கொண்டு எ-று.
மூன்றாம் பத்து: இதன் பதிகத்து அகப்பா எறிதலைப் பகற்றீ வேட் டற்கு அடையாக்கி யுரைக்க, முதியரை மதியுறழ் மரபின்தழீஇ மண் வகுத் தீத்தெனக் கூட்டித் தன் குலத்தில் தனக்கு முதியாரை மதியோ டொத்த தன் தண்ணளியால் தழீஇக்கொண்டு அவர்க்குத் தன் நாட்டை பகுத்துக் கொடுத்தென வுரைக்க. இருகடலு மென்றது, தன்னதாய மேல்கடலும் பிற நாட்டதாய்ப் பின்பு தான் பொருதுகொண்டு தன்னா டாக்கிய நாட்டிற் கீழ்கடலும் எ-று. கருங்களிற்றியானைப் புணர்நிரை நீட்டி இருகட னீரு மொரு பகலாடி யென்றது, அவ்விரு முந்நீரும் ஒரு பகலிலே வரும்படி யானைகளை நிரைத்து அழைப்பித்து ஆடி எ- று. அயிரை பரைஇ யென்றது தன்னாட்டு அயிரை யென்னும் மலையில் வாழும் கொற்றவைக் கடவுளைத் தன் குலத்துள்ளார் செய்துவரும் வழிபாடு கெடாமல் தானும் வழிபட்டு எ-று. ஆற்றல் சால் முன்போடு காடு போந்தவெனக் கூட்டுக. நெடும்பாரதாயனார் தனக்கு முன்னே துறந்து காடுபோக, அதுகண்டு தானும் துறவுள்ளம் பிறந்து துறந்து காட்டிலே போன எ-று.
நான்காம் பத்து: இதன் பதிகத்துக் கடம்பின் பெருவாயிலென்றது அந் நன்னனூரை. நிலைச்செரு வென்றது அந்நன்னன் நாடோறுஞ் செய்த போரினை.
ஐந்தாம் பத்து: இதன் பதிகத்துக் கடவுட் பத்தினி யென்றது கண்ணகியை. இடும்பிலென்றது இடும்பாதவனத்தை. புறம் - அவ் விடம். வாலிழை கழித்த பெண்டிர் என்றது, அப்பழையன் பெண்டிரை. கூந்தல் முரற்சி யென்றது அவர் கூந்தலை யரிந்து திரித்த கயிற்றினை. குஞ்சர வொழுகை பூட்டியது அப்பழையன் வேம்பினை ஏற்றிக்கொண்டு போதற்கு. குடிக்குரியோ ரென்றது அரசிற்குரியாரை.
ஆறாம் பத்து: இதன் பதிகத்துத் தண்டாரணிய மென்றது ஆரிய நாட்டிலே உள்ளதோர் நாடு. கபிலை யென்றது குராற்பசு.
ஏழாம் பத்து: இதன் பதிகத்து ஒருதந்தை யென்றது பொறையன் பெருந்தேவியின் பிதாவுடையது ஒரு பெயர். வேள்வி ஆக்கிய பொழுதின் அறத்துறை போகி யென்றது யாகம் பண்ணின காலத்திலே மற்றுள்ள அறத்துறைகளையும் செய்து முடித்து எ-று. மாயவண்ணனை மனனுறப் பெற்றென்றது திருமாலை வழிபட்டு அவனுடைய மனம் தன்பாலே யாம்படி பெற்று எ-று. புரோசு மயக்கி யென்றது தன் புரோகித னிலும் தான் அறநெறி யறிந்து எ-று. சிறுபுற மென்றது சிறு கொடை.
எட்டாம் பத்து : இதன் பதிகத்துக் கொல்லிக்கூற்ற மென்றது. கொல்லி மலையைச் சூழ்ந்த மலைகளையுடைய நாட்டினை. நீர் கூர் மீமிசை யென்றது, அந்நாட்டு நீர் மிக்க மலையின் உச்சியை. நொச்சிதந்தென் றது, தகடூர் மதிலைக் கைக்கொண்டு எ-று.
ஒன்பதாம் பத்து: இதன் பதிகத்து விச்சி யென்பான் ஒரு குறுநில மன்னன். வஞ்சி மூதூர்த் தந்து என்றது, அவர்களை வென்றுகொண்ட பொருள்களை. பசுவும் எருமையும் ஆடுமென்பாரு முளர். அமைச்சியல் மையூர்கிழானைப் புரோசு மயக்கி யென்றது தன் மந்திரியாகிய மையூர் கிழானைப் புரோகிதனிலும் அறநெறி யறிவானாகப் பண்ணி எ-று.
----------------------
This file was last updated on 30 March 2014
Feel free to send corrections to the webmaster.