நெடுநல்வாடை / நச்சினார்கினியர் உரை
உ.வே. சாமிநாத அய்யர் (தொகுப்பு)
neTunalvATai, with the notes of naccinArkiniyar
edited by U.vE. cAminAta aiyar
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Digital Library of India for providing a scanned image
version of this work for the etext preparation.
This etext has been produced via Distributed Proof-reading Implementation and
we thank the following volunteers for their assistance:
Anbu Jaya, R. Navaneethakrishnan, P. Thulasimani, V. Ramasami,
P. Sukumar, S. Thamizharasu & V. Jambulingam
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2014.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
பத்துப்பாட்டில் ஏழாவதான : நெடுநல்வாடை
Source:
பத்துப்பாட்டு மூலமும்
மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியருரையும்.
இவை மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி உத்தமதானபுரம்,
வே. சாமிநாதையரால் பரிசோதித்து, பலவகை ஆராய்ச்சிக் குறிப்புகளுடன்
சென்னை: கேசரி அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பெற்றன.
[மூன்றாம் பதிப்பு]
பிரஜோத்பத்தி வருடம் ஆவணி மாதம்.
Copyright Registered] 1931 [விலை ரூபா.5.
-------------
கணபதி துணை.
வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப்
பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென
வார்கலி முனைஇய கொடுங்கோற் கோவல
ரேறுடை யினநிரை வேறுபுலம் பரப்பிப்
புலம்பெயர் புலம்பொடு கலங்கிக் கோட 5
னீடிதழ்க் கண்ணி நீரலைக் கலாவ
மெய்க்கொள் பெரும்பனி நலியப் பலருடன்
கைக்கொள் கொள்ளியர் கவுள்புடையூஉ நடுங்க
மாமேயன் மரப்ப மந்தி கூரப்
பறவை படிவன வீழக் கறவை 10
கன்றுகோ ளொழியக் கடிய வீசிக்
குன்றுகுளிர்ப் பன்ன கூதிர்ப் பானாட்
புன்கொடி முசுண்டைப் பொறிப்புற வரன்பூப்
பொன்போற் பீரமொடு புதற்புதன் மலரப்
பைங்காற் கொக்கின் மென்பறைத் தொழுதி 15
யிருங்கனி பரந்த வீர வெண்மணற்
செவ்வரி நாரையோ டெவ்வாயுங் கவரக்
கயலர லெதிரக் கடும்புனற் சாஅய்ப்
பெயலுலந் தெழுந்த பொங்கல் வெண்மழை
யகலிரு விசும்பிற் றுவலை கற்ப 20
வங்க ணகல்வய லார்பெயற் கலித்த
வண்டோட்டு நெல்லின் வருகதிர் வணங்க
முழுமுதற் கமுகின் மணியுற ழெருத்திற்
கொழுமட லவிழ்ந்த குழூஉக்கொள் பெருங்குலை
நுண்ணீர் தெவிள வீங்கிப் புடைதிரண்டு 25
தெண்ணீர்ப் பசுங்காய் சேறுகொள முற்ற
நளிகொள் சிமைய விரவுமலர் வியன்காக்
குளிர்கொள் சினைய குரூஉத்துளி தூங்க
மாட மோங்கிய மல்லன் மூதூ
ராறுகிடந் தன்ன வகனெடுந் தெருவிற் 30
படலைக் கண்ணிப் பரேரெறுழ்த் திணிதோண்
முடலை யாக்கை முழுவலி மாக்கள்
வண்டுமூசு தேறல் மாந்தி மகிழ்சிறந்து
துவலைத் தண்டுளி பேணார் பகலிறந்
திருகோட்ட டறுவையர் வேண்டுவயிற் றிரிதர 35
வெள்ளி வள்ளி வீங்கிறைப் பணைத்தோண்
மெத்தென் சாயன் முத்துறழ் முறுவற்
பூங்குழைக் கமர்ந்த வேந்தெழின் மழைக்கண்
மடவரன் மகளிர் பிடகைப் பெய்த
செவ்வி யரும்பின் பைங்காற் பித்திகத் 40
தவ்வித ழவிழ்பதங் கமழப் பொழுதறிந்
திரும்புசெய் விளக்கி னீர்ந்திரிக் கொளீஇ
நெல்லு மலருந் தூஉய்க்கை தொழுது
மல்ல லாவண மாலை யயர
மனையுறை புறவின் செங்காற் சேவ 45
லின்புறு பெடையொடு மன்றுதேர்ந் துண்ணா
திரவும் பகலும் மயங்கிக் கையற்று
மதலைப் பள்ளி மாறுவன விருப்பக்
கடியுடை வியனகர்ச் சிறுகுறுந் தொழுவர்
கொள்ளுறழ் நறுங்கற் பலகூட்டு மறுக 50
வடவர் தந்த வான்கேழ் வட்டந்
தென்புல மருங்கிற் சாந்தொடு துறப்பக்
கூந்தன் மகளிர் கோதை புனையார்
பல்லிருங் கூந்தற் சின்மலர் பெய்ம்மார்
தண்ணறுந் தகர முளரி நெருப்பமைத் 55
திருங்கா ழகிலொடு வெள்ளயிர் புகைப்பக்
கைவல் கம்மியன் கவின்பெறப் புனைந்த
செங்கேழ் வட்டஞ் சுருக்கிக் கொடுந்தறிச்
சிலம்பி வானூல் வலந்தன தூங்க
வானுற நிவந்த மேனிலை மருங்கின் 60
வேனிற் பள்ளித் தென்வளி தரூஉம்
நேர்வாய்க் கட்டளை திரியாது திண்ணிலைப்
போர்வாய் கதவம் தாழொடு துறப்பக்
கல்லென் றுவலை தூவலின் யாவருந்
தொகுவாய்க் கன்னற் றண்ணீ ருண்ணார் 65
பகுவாய்த் தடவிற் செந்நெருப் பார
வாடன் மகளிர் பாடல்கொளப் புணர்மார்
தண்மையிற் றிரிந்த வின்குரற் றீந்தொடை
கொம்மை வருமுலை வெம்மையிற் றடைஇக்
கருங்கோட்டுச் சீறியாழ் பண்ணுமுறை நிறுப்பக் 70
காதலர்ப் பிரிந்தோர் புலம்பப் பெயல்களைந்து
கூதிர்நின் றன்றாற் போதே மாதிரம்
விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டில
மிருகோற் குறிநிலை வழுக்காது குடக்கேர்
பொருதிறஞ் சாரா வரைநா ளமயத்து 75
நூலறி புலவர் நுண்ணிதிற் கயிறிட்டுத்
தேஎங் கொண்டு தெய்வ நோக்கிப்
பெரும்பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்
தொருங்குடன் வனைஇ யோங்குநிலை வரைப்பிற்
பருவிரும்பு பிணித்துச் செல்வரக் குரீஇத் 80
துணைமாண் கதவம் பொருத்தி யிணைமாண்டு
நாளொடு பெயரிய கோனமை விழுமரத்துப்
போதவிழ் குவளைப் புதுப்பிடி காலமைத்துத்
தாழொடு குயின்ற போரமை புணர்ப்பிற்
கைவல் கம்மியன் முடுக்கலிற் புரைதீர்ந் 85
தையவி யப்பிய நெய்யணி நெடுநிலை
வென்றெழு கொடியோடு வேழஞ் சென்றுபுகக்
குன்றுகுயின் றன்ன வோங்குநிலை வாயிற்
றிருநிலை பெற்ற தீதுதீர் சிறப்பிற்
றருமணன் ஞெமிரிய திருநகர் முற்றத்து 90
நெடுமயி ரெகினத் தூநிற வேற்றை
குறுங்கா லன்னமோ டுகளு முன்கடைப்
பணைநிலை முனைஇய பல்லுளைப் புரவி
புல்லுணாத் தெவிட்டும் புலம்புவிடு குரலொடு
நிலவுப்பயன் கொள்ளு நெடுவெண் முற்றத்துக் 95
கிம்புரிப் பகுவா யம்பண நிறையக்
கலிழ்ந்துவீ ழருவிப் பாடுவிறந் தயல
வொலிநெடும் பீலி யொல்க மெல்லியற்
கலிமயி லகவும் வயிர்மரு ளின்னிசை
நளிமலைச் சிலம்பிற் சிலம்புங் கோயில் 100
யவன ரியற்றிய வினைமாண் பாவை
கையேந் தையக னிறையநெய் சொரிந்து
பரூஉத்திரி கொளீஇய குரூஉத்தலை நிமிரெரி
யறுவறு காலைதோ றமைவரப் பண்ணிப்
பல்வேறு பள்ளிதொறும் பாயிரு ணீங்கப் 105
பீடுகெழு சிறப்பிற் பெருந்தகை யல்ல
நாடவர் குறுகா வருங்கடி வரைப்பின்
வரைகண் டன்ன தோன்றல வரைசேர்பு
வில்கிடந் தன்ன கொடிய பல்வயின்
வெள்ளி யன்ன விளங்குஞ் சுதையுரீஇ 110
மணிகண் டன்ன மாத்திரட் டிண்காழ்ச்
செம்பியன் றன்ன செய்வுறு நெடுஞ்சுவ
ருருவப் பல்பூ வொருகொடி வளைஇக்
கருவொடு பெயரிய காண்பி னல்லிற்
றசநான் கெய்திய பணைமரு ணோன்றா 115
ளிகன்மீக் கூறு மேந்தெழில் வரிநுதற்
பொருதொழி நாக மொழியெயி றருகெறிந்து
சீருஞ் செம்மையு மொப்ப வல்லோன்
கூருளிக் குயின்ற வீரிலை யிடையிடுபு
தூங்கியன் மகளிர் வீங்குமுலை கடுப்பப் 120
புடைதிரண் டிருந்த குடத்த விடைதிரண்
டுள்ளி நோன்முதல் பொருத்தி யடியமைத்துப்
பேரள வெய்திய பெரும்பெயர்ப் பண்டில்
மடைமா ணுண்ணிழை பொலியத் தொடைமாண்டு
முத்துடைச் சாலேக நாற்றிக் குத்துறுத்துப் 125
புலிப்பொறிக் கொண்ட பூங்கேழ்த் தட்டத்துத்
தகடுகண் புதையக் கொளீஇத் துகடீர்ந்
தூட்டுறு பன்மயிர் விரைஇ வயமான்
வேட்டம் பொறித்து வியன்கட் கானத்து
முல்லைப் பல்போ துறழப் பூநிரைத்து 130
மெல்லிதின் விரிந்த சேக்கை மேம்படத்
துணைபுண ரன்னத் தூநிறத் தூவி
யிணையணை மேம்படப் பாயணை யிட்டுக்
காடி கொண்ட கழுவுறு கலிங்கத்துத்
தோடமை தூமடி விரித்த சேக்கை 135
யாரந் தாங்கிய வலர்முலை யாகத்துப்
பின்னமை நெடுவீழ் தாழத் துணைதுறந்து
நன்னுத லுலறிய சின்மெல் லோதி
நெடுநீர் வார்குழை களைந்தெனக் குறுங்கண்
வாயுறை யழுத்திய வறிதுவீழ் காதிற் 140
பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கை
வலம்புரி வளையொடு கடிகைநூல் யாத்து
வாளைப் பகுவாய் கடுப்ப வணக்குறுத்துச்
செவ்விரற் கொளீஇய செங்கேழ் விளக்கத்துப்
பூந்துகின் மரீஇய வேந்துகோட் டல்கு 145
லம்மா சூர்ந்த வவிர்நூற் கலிங்கமொடு
புனையா வோவியங் கடுப்பப் புனைவி
றளிரேர் மேனித் தாய சுணங்கி
னம்பணைத் தடைஇய மென்றோண் முகிழ்முலை
வம்புவிசித் தியாத்த வாங்குசாய் நுசுப்பின் 150
மெல்லியன் மகளிர் நல்லடி வருட
நரைவிரா வுற்ற நறுமென் கூந்தற்
செம்முகச் செவிலியர் கைம்மிகக் குழீஇக்
குறியவு நெடியவு முரைபல பயிற்றி
யின்னே வருகுவ ரின்றுணை யோரென 155
வுகத்தவை மொழியவு மொல்லாள் மிகக்கலுழ்ந்து
நுண்சேறு வழித்த நோனிலைத் திரள்கா
லூறா வறுமுலை கொளீஇய காறிருத்திப்
புதுவ தியன்ற மெழுகுசெய் படமிசைத்
திண்ணிலை மருப்பி னாடுதலை யாக 160
விண்ணூர்பு திரிதரும் வீங்குசெலன் மண்டிலத்து
முரண்மிகு சிறப்பிற் செல்வனொடு நிலைஇய
வுரோகிணி நினைவன ணோக்கி நெடிதுயிரா
மாயித ழேந்திய மலிந்துவீ ழரிப்பனி
செவ்விரல் கடைக்கண் சேர்த்திச் சிலதெறியாப் 165
புலம்பொடு வதியு நலங்கிள ரரிவைக்
கின்னா வரும்படர் தீர விறறந்
தின்னே முடிகதில் லம்ம மின்னவி
ரோடையொடு பொலிந்த வினைநவில் யானை
நீடிர டடக்கை நிலமிசைப் புரளக் 170
களிறுகளம் படுத்த பெருஞ்செய் யாடவ
ரொளிறுவாள் விழுப்புண் காணிய புறம்போந்து
வடந்தைத் தண்வளி யெறிதொறு நுடங்கித்
தெற்கேர் பிறைஞ்சிய தலைய நற்பல்
பாண்டில் விளக்கிற் பரூஉச்சுட ரழல 175
வேம்புதலை யாத்த நோன்கா ழெஃகமொடு
முன்னோன் முறைமுறை காட்டப் பின்னர்
மணிபுறத் திட்ட மாத்தாட் பிடியொடு
பருமங் களையாப் பாய்பரிக் கலிமா
லிருஞ்சேற்றுத் தெருவி னெறிதுளி விதிர்ப்பப் 180
புடைவீ ழந்துகி லிடவயிற் றழீஇ
வாடோட் கோத்த வன்கட் காளை
சுவன்மிசை யமைத்த கையன் முகனமர்ந்து
நூல்கால் யாத்த மாலை வெண்குடை
தவ்வென் றசைஇத் தாதுளி மறைப்ப 185
நள்ளென் யாமத்தும் பள்ளி கொள்ளான்
சிலரொடு திரிதரும் வேந்தன்
பலரொடு முரணிய பாசறைத் தொழிலே.
------------------
1. வலனேர்பு: முல்லை. 4-ஆம் அடியின் அடிக்குறிப்பைப் பார்க்க.
3. கொடுங்கோற் கோவலர்: முல்லை 15-ஆம் அடியையும் அதன் அடிக்குறிப்பையும் பார்க்க.
4. ஏறுடை யினநிரை: " வேறுபுலம் படர்ந்த வேறுடை யினத்த, வளையான்" (மலைபடு. 408-9); "ஏறுடை யினத்துப், புல்லூர் நல்லான்" (குறுந். 275. 3-4); "ஏறுடை யினநிரை" (அகநா. 249: 8)’ "ஏறு பொருந்திய பசுநிரை" (பு. வெ. 5, உரை); "பாலெ டுத்த
பொற் குடரிகர் மடியின பருவச், சூலெ டுத்தநல் வயிற்றின மழவிடை தொடர்வ" வி. பா. நிரைமீட்சி. 57
5. பி - ம். ‘புலம்பிற்கலங்கி’
9. "விலங்குகன் மேயாமையின், வாயிழந்தன; ‘மாமேயன் மறப்ப’ என்றார் பிறரும்" சீவக. 1158, ந.18. புன்கொடி முசுண்டை: மலைபடு, 101.
14. பீரத்திற்குப் பொன் உவமை: "பொன்புனை பீரத் தலர்", "பொன்னென, இவர் கொடிப் பீர மிரும்புதன் மலரும்" ஐங். 452: 5, 464: 1 - 2. பீரென்னுஞ் சொல் அம்முச்சாரியை பெற்றுவருதற்கு இவ்வடி மேற்கோள்; தொல்.புள்ளிமயங்.சூ.70,ந.
18. சாயென்பது நுணுக்கமாகிய குறிப்பை உணர்த்துமென்பதற்கு இவ்வடி மேற்கோள் (தொல்.உரி.சூ.34, சே.ந; இ-வி. சூ.281); இவ்வடி பெயரின்பின் உரிச்சொல் நின்றதற்குமுதாரணம்; இ-வி. சூ.280.
19. பி-ம்.'பெயலுழந்து'
பொங்கல் வெண்மழை: "பொங்க லிளமழை" (ஐங்.276:3); "பெய்து புறந்தந்து பொங்கலாடி, விண்டுச் சேர்ந்த வெண்மழை" (பதிற்.55:14-5);"பெய்து புலந்துறந்த பொங்கல் வெண்மழை" அகநா. 217:1 வெண்மழை:முல்லை.100.
20. அகலிரு விசும்பு: பெரும்பாண்.1
"மாரி கற்பான் றுவலைநாட் செய்வ தேபோல்" சீவக.2070.
26."தகைசெய் தீஞ்சேற் றின்னீர்ப் பசுங்காய். மதுரை.400
30. மதுரை.359-ஆம் அடியின் அடிக்குறிப்பைப் பார்க்க.
31. படலைக்கண்ணி: பெரும்பாண். 60-ஆம் அடியின் அடிக்குறிப்பைப் பார்க்க.
பரேரெறுழ்: பட்டினப். 294.
31-2 மு. பெரும்பாண். 60-61
36. பி-ம். 'வன்னியின்' "வெள்ளி வள்ளியின் விளங்குதோள்" சீவக. 420.
36-7. வழிமோனைக்கு இவ்வடிகள் மேற்கோள்; தொல்.செய். சூ.94.பேர்.
39. பிடகைப்பெய்த: மதுரை.397.
39-40 செந்தொடையாவதன்றி மோனைத் தொடைப்பாடு இன்றென்பதற்கு இவ்வடிகள் மேற்கோள்; தொல்.செய்.சூ.94, பேர்.
43. மலர் தூவுதல்: முல்லை. 8-10ஆம் அடிகளின் அடிக்குறிப்பைப் பார்க்க.
43-4. "அகனக ரெல்லா மரும்பவிழ் முல்லை, நிகர்மலர் நெல்லொடு தூஉய்ப் பகன்மாய்ந்த, மாலை" சிலப். 9: 1-3. சிலப்.9.1-4, அடியார். மேற்.
45-6. மனையுறை புறவு மன்று தேர்ந்துண்ணல்: "மனையுறைகுரீ, முன்றி லுணங்கன் மாந்தி மன்றத், தெரிவினுண் டாது குடைவன வாடி" குறுந். 46: 2-4.
49. "கடிதுடை வியனக ரல்வே" புறநா.65:3.
51. மு.அகநா, 340:16 சிலப். 4: 37-8; அடியார். மேற்
51-2. "வடமலைப் பிறந்த வான்கேழ் வடத்துத், தென்மலைப் பிறந்த சந்தன மறுக" சிலப். 4: 37-8.
54. பல்லிருங் கூந்தல். ஐங். 308: 1, 429:1: அகநா. 43: 11.
56. "குடதிசை மருங்கின் வெள்ளயிர் தன்னொடு, குணதிசை மருங்கிற் காரகி லுறந்து" சிலப். 4: 35-6.
அகிலென்றது ஆகுபெயராற் புகையை; 'இருங்.......புகைப்ப' என்றார் நெடுநல் வாடையினும்"
57. கைவல் கம்மியன்: நெடுநல்.85.
66. தடவு: "வடபான் முனிவன் றடவினுட் டோன்றி" (புறநா. 201: 8); "தடவளர் முழங்குஞ் செந்தீ" சீவக.2373.
68. பி-ம். 'தன்மையிற்றிரிந்த'
69."முலையேதி நொற்றி முயங்கிப் பொறவேம்" (கலி.106:35); "கொம்மை வரிமுலை வெம்மை வேதுறீஇ" ( சிலப்.28:16); "தடமுலை வேதுகொண் டொற்றியும்" கலிங்க. கடை. 13.
70. கருங்கோட்டுச்சீறியாழ்: மலைபடு. 584; புறநா. 127:1; 145:5.
72. கூதிர்நின் றன்றாற் போதே: அகநா. 264:10.
82. "நாளொடு பெயரிய நவையி லாமரம்" வாயு. பார்ப்பதி திருமணம். 9.
85. கைவல் கம்மியன்: நெடுநல். 57.
86. முருகு. 228-ஆம் அடியின் அடிக்குறிப்பைப் பார்க்க. "வாயிலில் தெய்வமுறையுமாகலின், அதற்கு அணியும் நெய்யுமாம்; "ஐயவி........நிலை' என்பதனானுணர்க. மதுரை.354,ந.
87. யானையின் மீது கொடி: "கொடிநுடங்கு நிலைய கொல் களிறு மிடைந்து", "மலையுறழ் யானை வான்றோய் வெல்கொடி, வரை மிசை யருவியின் வயின்வயி னுடங்க", "உரவுக் களிற்று வெல்கொடி நுடங்கும் பாசறை" (பதிற். 52: 1,69:1-2, 88: 17); "கொல் களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்" ( புறநா. 9:7); "இழந்தன நெடுங்கொடி......யானை" கம்ப. சம்புமாலி. 26.
89. முருகு. 70-ஆம் அடியின் அடிக்குறிப்பைப் பார்க்க.
90. பி-ம். 'ஞெமிரிய' மு.பெருங். 1.47:197.
"தருமணன் ஞெமிரிய திருநா றொருசிறை" மணி. 18: 44. "ஞெமிர்தலென்பதற்குப் பொருள் பரத்தலெனக்கூறி இவ்வடியை மேற்கோளாகக் காட்டினார்; தொல்.உரி.சூ.65, சே.ந: இ-வி. சூ.281, உரை.
93."பனைநிலை முனைஇய வினைநவில் புரவி" அகநா. 254:12.
95."வெண்ணிலாவின் பயன்றுய்த்தும்" (பட்டின.114); "நிலவுப்பயன் கொள்ளு நெடுநிலா முற்றத்து" (சிலப். 4. 31); "சுடர் வெண் ணிலவின் றொழிற்பயன் கொண்ட, மிசைநீண் முற்றத்து" பெருங். 1. 33: 61-2); "பொங்கிணர்க் காவு தோறும் புதுமணற்
குன்று தோறும், பங்கயச் செங்க ணெம்மான் பானிலாப் பயன் கொண்டு" பாகவத. 10. கோவியரை.22.
97. "அவலெறி யுலக்கைப் பாடுவிறந் தயல" பெரும்பாண்.226.
98. "மஞ்ஞை, ஒலிநெடும் பீலி" புறநா. 50: 2-3.
99. பி-ம். "கனிமயில்'
100. நனிமலைச் சிலம்பு: முருகு. 238.
101-3. முல்லை. 85-ஆம் அடியின் அடிக்குறிப்பைப் பார்க்க; "வேண்டிடந் தோறுந் தூண்டுதிரிக் கொளீஇக், கைவயிற் கொண்ட நெய்யகற் சொரியும், யவனப் பாவை யணிவிளக் கழல" பெருங். 1. 47:173-5.
107. "அரச ருரிமையி லாடவ ரணுகார்" (மணி.23:55); "அரசன் கோயிலில் ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பி னுள்ளே" என இவ்வடியை உரைநடையிலமைத்துக் கூறுவர்; சீவக. 1713, ந. "குழைமுக மகளிர் காக்கும் புரிசையெனவே அந்தப்புரமாயிற்று; 'ஆடவர்.......வரைப்பின்' என்றார் பிறரும்" சீவக.275, ந
109. பி-ம் 'விற்கிடந்தன்ன........பலவயின்'
112. மதுரை, 485-அம் அடியின் அடிக்குறிப்பைப் பார்க்க.
115. சான்றோர் செய்யுட்கண் வடசொல் திரிந்துவந்ததற்கு இவ்வடி மேற்கோள் (தொல். எச்ச.சூ.6, சே.ந; தண்டி.சூ.23,உரை; இ-வி சூ.175, 685); "தசநூறு: இது கிரந்தமுந் தமிழுங்க கூடியவாறு; 'தசநான் கெய்திய......... தாள்' இது நெடுநல்வாடை" தக்க. 685,உரை.
132-3 "இணைபட நிவந்த நீலமென் சேக்கையுட், டுணைபுணரன்னத்தின் றூவிமெல் லணையசைஇ" (கலி.72:1-2);"துணையுணரன்னத் தூவியிற் செறித்த, இணையணை", "இணைபுண ரெகினத் தினமயிர் செறித்த, துணையணைப் பள்ளி" சிலப். 4: 66-7'
27:208-9.
134. ப.422. 2- ஆம் அடிக்குறிப்பைப் பார்க்க.
140. பி-ம் .'வாயறை'
141. யார்மயிர்முன்கை: பொருந. 32-ஆம் அடியையும் அதன் அடிக்குறிப்பையும் பார்க்க.
142. கடிகைநூல் யாத்து: "கைந்நூல் யாவாம்" (குறுந்.218: 2):"காப்புநூல் யாத்து" தொல்.புறத்.சூ.5.ந.மேற்.
143-4. "வாளைப் பகுவாய் வணக்குறு மோதிரம்" சிலப்.6.95.
147. "புனையா வோவியம் போல நிற்றலும்", "புனையா வோவியம் புறம்போந் தென்ன" மணி. 16:131; 22:88.
149. அம்பனைத் தடைஇய மென்றோள்: "வீங்கிறைத் தடை இயவமைமருள் பணைத்தோள்" பதிற். 54: 8. தடைஇய மென்றோள்: கலி. 93: 5.
152. பி-ம். 'நரைவிரவுற்ற'
"நாறைங் கூந்தலு நரைவிரா வுற்றன" ( மணி.22: 130);
"நரையிடைப் படர்ந்த நறுமென் கூந்தலர்" பெருங்.1.41.99.
152-8 "நரைவிரா வுற்ற நறுமென் கூந்தற், செம்முது செவிலியர் பலபா ராட்ட" அகநா. 254: 1-2.
155. "இன்னே வருகுவர்" முல்லை. 16.
156. பி-ம். 'முகைத்தவை'
155-6. முல்லை. 20-22.
153-6. "தலைவியை வற்புறுக்கும் செவிலியர் புனைந்துரைத்து நகுவித்துப் பொழுது போக்குதற்குரியர்; இக்கருத்தானே சான்றோர்,
"செம்முகச்....ஒல்லான்' என்றார் பாட்டினுள்" தொல்.செய்.சூ.175,ந.
161. வீங்குசெலன் மண்டிலம்: "யாங்ஙன மொத்தியோ வீங்கு செலன் மண்டிலம்" புறநா. 8: 6.
164-5. கண்ணீரை விரலால் வழித்துத்தெறித்தல்: "இரும்பல் கூந்தற் சேயிழை மடந்தை, கணையிரு ணடுநா னணையொடு பொருந்தி, வெய்துற்றுப் புலக்கு நெஞ்சமொ டைதுயிரா, வாயிதழ் மழைக்கண் மல்கநோய் கூர்ந்து, பெருந்தோ ணனைக்குங் கலுழ்ந்துவா ரரிப்பனி, மெல்விர லுகிரிற் றெறியினள்" அகநா, 373. 10-15.
169. வினை நவில் யானை: "தாரொடு பொலிந்த வினைநவில் யானை" (மலைபடு.227):"செல்சமர் தொலைத்த வினைநவில் யானை" (பதிற். 82:4) "வினைநவில் யானை" புறநா. 347:11.
169-171."வேழத்துப் ............பரூஉக்கை துமிய....ஒழிந்தோர்" (முல்லை. 69-72); "அம்புசென் றிறுத்த வரும்புண் யானைத், தும்புடைத் தடக்கை வாயொடு துமிந்து, நாஞ்சி லொப்ப நிலமிசைப் புரள, எறிந்துகளம் படுத்த வேந்துவாள் உலத்தர்" புறநா. 19; 9-12.
175. "பாண்டில் விளக்குப் பரூஉச்சுட ரழல"' , "சுடரும் பான்டிற் றிருநாறு விளக்கது" (பதிற். 47: 6, 52: 13): "உள்ளிழுதுறீஇய வொன்னடர்ப் பாண்டில்" பெருங். 1. 33: 93.
183. முகனமர்ந்து: குறள். 84, 92-93.
185. பி-ம். 'பரம்புதுளி'. "ஊதையுந் தாதுளர் கானற் றவ்வென் றன்றே" (நற். 319:
1-2): "தவ்வெனக் குடித்தி" குறுந். 356: 4. தவ்வென்பது குறிப்புமொழியென்றுகூறி, இவ்வடிகளை மேற்கோளாகக்காட்டினர்; குறள்.1144, பரிமேல்.
186. பி-ம். 'யாமத்துப்பள்ளி'
186-8. தொல். கற்பு. சூ.34, ந, மேற்.
176-88. "அழிபடை தட்டோர் தழிஞ்சியொடு தொகைஇ" என்பதற்கு இவ்வடிகள் மேற்கோள்; தொல். புறத். சூ.8, ந.
----------------------------------------------------------------
இதன் பொருள்.
இப்பாட்டிற்கு நெடுநல்வாடை யென்று பெயர் கூறினார். இப்பெயர் நெடிதாகிய நல்ல வாடையென விரிதலிற் பண்புத்தொகையாயிற்று. #வாடையென வாடைக்காற்றிற் றோன்றின கூதிர்ப்பாசறையை யுணர்த்தலிற் @ பிறந்த வழிக் கூறலென்னும் ஆகுபெயராய் நின்றது. இப்பாட்டினுள், "கூதிர்நின் றன்றாற் போதே" (72) எனவும், "கூதிர்ப் பானாள்" (12) எனவுங் கூறுகின்றாராதலின், இது § "வாகை தானே பாலையது புறனே" எனப் பாலைக்குப்புறனாகாக் கூறிய வாகைத்திணையாய் அதனுள்,
$ "கூதிர் வேனி லென்றிரு பாசறைக், காதலி னொன்றிக் கண்ணிய மரபினும்" எனக் கூறிய கூதிர்ப்பாசறையேயாயிற்று. தலைவனைப் பிரிந்திருந்து வருந்துந்தலைவிக்கு £ ஒருபொழுது ஓரூழிபோல நெடிதாகிய வாடையாய்ப் பாலையாகிய உரிப்பொருளுணர்த்திற்று.
---------------------------
# "வடந்தைத் தண்வளி யெறிதொறு நுடங்கி" (நெடுநல்.173) என்று வாடை இந்நூலிற் குறிப்பிடப்பட்டது காண்க.
@. தொல். வேற்றுமைமயங்கு. சூ. 31.
§. தொல். புறத். சூ. 18.
$ தொல். புறத். சூ. 21.
£ "ஊழியிற் பெரிதா னாழிகை யென்னும்" பெரிய திருமொழி.
அகத்தொடுங்கிப் போகம் நுகர்வார்க்குச் சிறந்த காலமயினும் அரசன் # போகம்
வேண்டிப் பொதுச்சொற் பொறானாய் அப்போகத்தில் மனமற்றுப் வேற்றுப் புலத்துப் போந்திருக்கின்ற இருப்பாகலின், அவற்கு நல்லதாகிய வாடையாயிற்று. எனவே காமத்திடத்து வெற்றியெய்தலின், வாகைத் திணையாயிற்று; இப்பாட்டு @ சுட்டி ஒருவர்ப் பெயர் கொள்ளாமையின் அகப் பொருளாமேனும், "வேம்பு தலை யாத்த நோன்கா ழெஃகம்" (176) என§ அடையாளப்பூக்கூறினமையின், அகமாகாதாயிற்று.
1-2. [வையகம் பனிப்ப வலனேர்பு வளைஇப், பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென:] பொய்யா வானம் வையகம் பனிப்ப வலன் வளைஇ ஏர்பு புது பெயல் பொழிந்தென-பருவம்பொய்யாத மேகம் உலகெல்லாங்குளிரும்படியாகத் தான் கிடந்தமலையை வலமாக வளைந்து எழுந்திருந்து கார்காலத்து மழையைப் பெய்ததாக,
3. ஆர்கலி முனைஇய கொடு கோல் கோவலர்-வெள்ளத்தை வெறுத்த $கொடிய கோலினையுடைய இடையர்,
4. ஏறு உடை இனம் நிரை வேறு புலம் பரப்பி-ஏற்றையுடைய இனங்களையும் பசுக்களையும் மேட்டுநிலமாகிய முல்லைநிலத்தே மேயவிட்டு எருமையையும் ஆட்டையும் £ இனமென்றார்.
----------------
#. "போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறாஅது" (புறநா. 8:2); "பொதுமொழி பிறர்க்கின்றி முழுதாளுஞ் செல்வர்க்கு" கலி. 68:1
@. தொல்.அகத். 5.54
§. அடையாளப்பூ; ப 1.1, 3-ஆம் அடிக்குறிப்பைப் பார்க்க.
$. ப. 275, 5-ஆம் அடிக்குறிப்பை பார்க்க.
£. பசு எருமை ஆடு என்பன மூன்றும் மூவினமென்றும் முந்நிரையென்றும் வழங்கப்பெறும்; "மூவின மேய்த்தல்" (நம்பி.சூ.22:13) "இழைன்றுந் துன்றப், போற்றிக் குடிமல்கிய பொற்பின பாடியெல்லாம்" (தணிகை. நாடு.69); "சால நன்று முந்நிரையு முடையேன்" (பெரிய. சிறுத்தொண்ட.49); "நிரை வாழி- முந்நிரை வாழ்க" தக்க. 9, உரை.
5. புலம்பெயர் புலம்பொடு கலங்கி-தாம் பயின்ற நிலத்தைக் கைவிட்டுப்போம் தனிமையினாலே வருத்தமெய்தி,
ஊர்க்கு அண்ணியவிடத்தேமேய்த்து ஊரிற்றங்காமையிற் புலம் பெயர் புலம்பென்றார்.
5-6. கோடல் நீடு இதழ் கண்ணி நீர் அலை கலாவ-காந்தளினது நீண்ட இதழ்களாற் கட்டின கண்ணி நீரலைத்தலாலே கலக்கமெய்த,
7-8. மெய் கொள் பெரு பனி நலிய பலருடன் கை கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க-தம் உடம்பிடத்தேகொண்ட பெரிய குளிர்ச்சி வருத்துகையினாலே பலருங்கூடிக் கையிடத்திலே கொண்ட நெருப்பினையுடையராய்ப் # பற்பறைகொட்டி நடுங்க,
கையை நெருப்பிலே காய்த்தி அதிற்கொண்ட வெம்மையைக் கவுளிலே அடுத்தலிற் கைக்கொள் கொள்ளியரென்றார்.
கோவலர் (3) பலருடன் (7) பரப்பிக் (4) கலங்கிக் (5)கலாவக்(6)கொள்ளியராய்க் கவுள்புடையூஉ நடுங்க (8) என்க.
9. மா மேயல் மறப்ப-விலங்குகள் மேய்தற்றொழிலை மறந்தொடுங்க, மந்தி @ கூர-குரங்கு குளிர்ச்சிமிக, குன்னாக்க வெண்பருமுளர்.
-------------------
#. "முகைவெண்ப னுதிபொர முற்றிய கடும்பனி (கலி.31:20); "பன் னுனிபொரு காலம் வர" (வெங்கைக்கோவை, 413); "வாடை வந் துடற்ற.......தருமிகு நிரைப்பலுந் தானந் தகர்க்க" வாட்போக்கிக்.85:30-33.
@. "துவலையி னனைந்த புறத்த தயலது, கூர லிருக்கை யருளி" நற். 181: 6-7.
10. [பறவை படிவன வீழ:] படிவன பறவை வீழ-மரங்களிலே தங்குவனவாகிய புள்ளுக்கள் காற்று மிகுதியால் நிலத்தேவீழ,
10-11. [கறவை, கன்றுகோ ளொழியக் கடிய வீசி:] கறவை கடிய வீசி கன்று கோள் ஒழிய-பசுக்கள் குளிரின் மிகுதியாற் கடியவாய் உதைத்துக் கன்றை ஏற்றுக்கோடலைத் தவிர,
12. குன்று குளிர்ப்பன்ன கூதிர் பால் நாள் - மலையைக் குளிர்ச்சி செய்யுமாறுபோன்ற கூதிர்க்காலத்து நடுயாமத்தே புலம்பொடு வதியுமரி வைக்கு [166]என மேலே கூட்டுக.
13-4. புல் கொடி முசுண்டை பொறி வால் பூ பொன்போல் பீரமொடு புதல் புதல் மலர-புல்லிய கொடியினையுடைய முசுட்டையில் திரண்ட புறத்தையுடைய வெள்ளிய பூப் பொன்போன்ற நிறத்தையுடைய பீர்க்குடனே சிறுதூறுகடோறும் விரிய,
15-9. [பைங்காற் கொக்கின் மென்பறைத் தொழுதி, யிருங்களி பரந்த வீர வெண்ம்ணற், செவ்வரி நாரையோ டெவ்வாயுங் கவரக், கயலற வெதிரக் கடும்புனற் சாஅய்ப், பெயலுலந் தெழுந்த:]
கடு புனல் சாஅய் கயல் அறல் எதிர (18)-கடிதாயோடின நீரினின்றும் ஒருகால் பற்றிக் கயல்கள் அற்றநீர்க்கு எதிரே வருகையினாலே, பெயல் உலந்து எழுந்த (19) பைங்கால் கொக்கின் மெல் பறை தொழுதி (15)-மழையாலே வருந்தி அது சிறிது விட்டவளவிலே எழுந்த பசியகாலையுடைய கொக்கினது மெல்லிய சிறகரையுடைய திரள்,
செ வரி நாரையொடு (17) இரு களி பரந்த ஈரம் வெள் மணல் (16) எ வாயும் கவர (17) - சிவந்த வரியினையுடைய நாரைகளோடே கரிய வண்டலிட்ட சேறுபரந்த ஈரத்தினையுடைய வெள்ளிய மணலாகிய எவ்விடங்களிலுமிருந்து அக்கயலைத்தின்ன,
19-20. பொங்கல் வெள் மழை# அகல் இரு விசும்பில் துவலை கற்ப – பொங்கு-தலையுடைய வெள்ளியமேகம் அகன்ற பெரிய ஆகாயத்தே சிறுதுவலையாகத்தூவ மேற் கற்கும்படியாகக் கூதிர் ஈண்டுநின்றது (72) எனமேலே கூட்டுக.
கற்பவென்னுஞ் செயவெனெச்சம் ஈண்டு எதிர்காலமுணர்த்திற்று. துவலை கற்பவென்றார், மிகப்பெய்தலே தனக்கு இயல்பென்பது தோன்ற.
21-2. அம் கண் அகல் வயல் ஆர் பெயல் கலித்த வன் தோடு நெல்லின் வரு கதிர் வணங்க - அழகிய இடத்தையுடைய அகன்ற வயனிறைந்த நீராலே மிக்கெழுந்த வளவிய இலையினையுடைய செல்லின்றும் புறப்பட்ட கதிர் முற்றி வளைய, @ புல்லாதலின் தோடென்றார்.
---------------------------
#. "அகலிரு விசும்பில் - தன்னை யொழிந்த நான்கு பூதமும் தன்னிடத்தே அகன்று விரிதற்குக் காரணமாகிய பெரிய ஆகாயத்திடத்தே" பெரும்பாண். 1, ந.
@. "தோடே மடலே ..... புல்லொடு வருமெனச் சொல்லினர் புலவர்" தொல்.மரபு.சூ.86.
23-4. முழு முதல் கமுகின் மணி உறழ் எருத்தின் கொழு மடல் அவிழ்ந்த குழூஉ கொள் பெரு குலை - பெரிய அடியினையுடைய கமுகினது நீலமணியையொத்த கழுத்திற் கொழுவிய மடலிடத்துப் பாளை விரிந்த திரட்சியைக்கொண்ட தாறுகளில்,
25-6. {நுண்ணீர் தெவிள வீங்கிப் புடைதிரண்டு, தெண்ணீர்ப் பசுங்காய் சேறுகொள முற்ற :} தெள் நீர் பசு காய் நுண் நீர் தெவிள வீங்கி புடை திரண்டு சேறு கொள முற்ற - தெளிந்தநீரை உள்ளேயுடைய பசியகாய் நுண்ணிய நீர்தான் திரளும்படியாகவீங்கிப் பக்கந்திரண்டு இனிமைகொள்ளும்படி முற்ற,
27. {நனிகொள் சிமைய விரவுமலர் வியன்கா :} விரவு மலர் நனி கொள் சிமையம் வியல் கா - முன்பு விரவின பூக்கள்செறிதலைத் தன்னிடத்தேகொண்ட உச்சியினை-யுடையவாகிய அகன்றபொழில்கள்,
28. குளிர் கொள் சினைய குரூஉ துளி தூங்க - குளிர்ச்சியைத் தம்மிடத்தே கொண்ட கொம்புகளையுடையவாகி அவற்றில் ஏற்றுநின்ற நிறத்தையுடைய மழைத்துளி மாறாமல் வீழ,
29-30. மாடம் ஓங்கிய மல்லல் மூதூர் ஆறு கிடந்தன்ன அகல் நெடு தெருவில்-மாடங்களுயர்ந்த வளப்பத்தை யுடைய பழையவூரில் யாறு கிடந்தாற்போன்ற அகன்ற நெடிய தெருவிலே திரிதர (35) என்க
31-2. படலை கண்ணி பரு ஏர் எறுழ் திணி தோள் முடலை யாக்கை முழு வலி மாக்கள்-தழைவிரவின மாலையினையும் பருத்த அழகினையுடையவாகிய வலியினையுடைய இறுகினதோளினையும் முறுக்குண்ட உடம்பினையும் நிரம்பின மெய்வலியினை-யுமுடைய மிலேச்சர்,
33.வண்டு மூசு தேறல் மாந்தி மகிழ் சிறந்து-வண்டுகள் மொய்க்கும் கள்ளையுண்டு மகிழ்ச்சிமிக்கு,
34-5. [துவலைத் தண்டுளி பேணார் பகலிறந், திருகோட் டறுவையர் வேண்டுவயிற் றிரிதர:] துவலை தண் துளி பேணார் இரு கோடு அறுவையர் வேண்டு வயின் திரிதர -சிறுதுவலையாகிய தண்ணியதுளியை அஞ்சாராய் முன்னும் பின்னுந் தொங்கலாக நாலவிட்ட துகிலினையுடையராய்த் தமக்கு வேண்டின இடத்தே திரிதலைச்செய்ய, 'பகலிறந்து' என்பதனை மேலேகூட்டுக.
36-7. [வெள்ளி வள்ளி வீங்கிறைப் பணைத்தோண், மெத்தென்:] வெள்ளி வள்ளி வீங்கு இறை மெத்தென் பணை தோள்-வெளுக்கப்பட்டதாகிய சங்குவளை இறுகின இறையினையுடைய மெத்தென்ற பணை போலுந் தோளினையும்,
37. மெத்தென் சாயல்-மெய்ம்முழுதும் # கட்புலனாய்த் தோன்றுகின்ற மெத்தென்ற சாயலினையும், முத்து உறழ் முறுவல்-முத்தையொத்த பல்லினையும்,
38. பூ குழைக்கு அமர்ந்த ஏந்து எழில் மழை கண்- பொலிவினையுடைய மகரக்குழையிட்ட அழகிற்குப் பொருந்தின உயர்ந்து தோன்றுகின்ற அழகினையுடைய குளிர்ச்சியையுமுடைய கண்ணினையும், இனி உருபு மயக்கமாக்கிக் குழையிடத்தே சென்றமர்ந்த கண்ணென்று முரைப்ப,
39. ஏந்து (38) மடவரல் மகளிர்-உயர்ந்து தோன்றுகின்ற மடப்பத்தினையுடைய மகளிர்,
தோள் (36) முதலியவற்றையுடைய மகளிரென்க.
39-41. [பிடகைப் பெய்த, செவ்வி யரும்பின் பைங்காற் பித்திகத், தவ்வித ழவிழ்பதங் கமழ:] பிடகை பெய்த பைங்கால் பித்திகத்து செவ்வி அரும்பின் @ அ இதழ் பகல் இறந்து (34) அவிழ் பதம் கமழ- பூந்தட்டிலேயிட்டு வைத்த பசிய காலினையுடைய பிச்சியினுடைய அவ ருஞ்செவ்வியையுடைய அரும்பினது அழகிய இதழ்கள் பகற்பொழுதைக் கடந்து விரியுஞ் செவ்வி மணக்கையினாலே, செவ்வரியரும்பு பாடமாயிற சிவந்த வரியினையுடைய அரும்பென்க.
----------------
#. ப.151,முதலடிக்குறிப்பைப் பார்க்க.
@. ப.251,4-ஆம் அடிக்குறிப்பைப் பார்க்க.
41. #பொழுது அறிந்து-அந்திக்காலமென்றறிந்து, என்றதனாற் கூதிரால் - @ இரவும்பகலுந் தெரியாவென்றார்.
42. இரும்பு செய் விளக்கின் ஈர்ந்திரி கொளீஇ-இரும்பாற்செய்த § தகளியிலே நெய்தோய்ந்த் திரியைக்கொளுத்தி, விளக்கு-ஆகுபெயர்.
43. நெல்லும் மலரும் தூஉய் கைதொழுது-நெல்லையும் மலரையுஞ்சிதறி ## இல்லுறை தெய்வத்தை வணங்கி,
44. மல்லல் ஆவணம் மாலை அயர-வளப்பத்தையுடைய @@ அங்காடித் தெருவெல்லாம் மாலைக்காலத்தைக் கொண்டாட, மகளிர்(39)கமழுகையினாலே பொழுதறிந்து (41) திரிகொளீஇத்(42) தூவித்தொழுது (43) அயரவென்க.
----------------------------------
#. மலர்கள் மலர்தலாற் பொழுதை அறிதல் பண்டை வழக்க மென்று தெரிகின்றது. பொழுதினை அறிவித்தல்பற்றியே மலரும் பருவத்துப் பூவரும்பு போதெனப்பட்டதென்று தோற்றுகிறது. தக்கயாகப்பரணி உரையாசிரியர் நாளென்பதற்கு மலரென்று பொருள் கூறியிருத்தல் இக்கருத்தை தழுவிப்போலும்.
@. "இரவும் பகலு மயங்கி" நெடுநல்.47
§. ப.284, 2-ஆம் அடிக்குறிப்பைப் பார்க்க.
$. "கொடியிடையார், அகன்ற மனையிடமெங்கும் கதிரோன் மறைந்த மாலைக்காலத்தே அரும்பு புரிநெகிழ்ந்த முல்லையினது ஒளி மலரை நெல்லோடே தூவி இல்லுறை தெய்வத்தை வணங்கி" சிலப். 6:1-2, அடியார்.
##. இல்லுறை தெய்வம்: "அணங்குடை கல்லில்" மதுரை. 578.
@@. அங்காடித்தெரு-கடைத்தெரு.
45-8. [மனையுறை புறவின் செங்காற் சேவ,லின்புறு பெடையொடு மன்று தேர்ந்துண்ணா, திரவும் பகலு மயங்கிக் கையற்று, மதலைப், பள்ளி மாறுவன விருப்ப;]
இரவும் பகலும் மயங்கி (47)-இராக்காலமும் பகற்காலமும் தெரியாமல் மயங்குகையினாலே, மனைஉறை புறவின் செ கால் சேவல் (45) இன்பு உறு பெடையொடு மன்று தேர்ந்து உண்ணாது (46) மனையின் கண்ணேயிருக்கும்
புறவினுடைய சிவந்த காலினையுடைய சேவல் தான் இன்ப நுகரும் பெடையொடு மன்றிலேசென்று இரைதேடியுண்ணாமல், கை அற்று (47) மதலை பள்ளி மாறுவன இருப்ப (48) - செயலற்றுக் கொடுங்கையைத் தாங்குதலையுடைய பலகைகளிலே பறவாதிருந்து கடுத்தகால் ஆறும்படி மாறிமாறீ இருக்க, இனித் தலைமாறியிருப்ப வென்பாருமுளர். மதலைப்பள்ளி-# கபோத கத்தலை. இறையுறை புறவும் பாடம்.
49-50. கடி உடை வியல் நகர் சிறு குறு தொழுவர் கொள் உறழ் நறு கல் பல கூட்டு மறுக - காவலையுடைய அகன்ற மனைகளில் சிறியராகிய குற்றேவல் வினைஞர் @ கருங்கொள்ளின் நிறத்தையொத்த நறிய§ சாத்தம்மியிலே கத்தூரி முதலிய $ பசுங்கூட்டரைக்க,
51-2. வடவர் தந்த ##வான்கேழ் வட்டம் தென்புலம் மருங்கில் சாந்தொடு துறப்ப - வடநாட்டிலுள்ளார் கொண்டுவந்த வெள்ளிய நிறத்தையுடைய @@ சிலாவட்டம் தென்றிசையிடத்திற் சந்தனத்தோடே பயன்படாமற் கிடப்ப,
53. [கூந்தன் மகளிர் கோதை புனையார்:] மகளிர் கூந்தல் கோதை புனையார் - மகளிர் குளிர்ச்சி மிகுதியால் தம்மயிரிடத்து மாலை யிட்டு முடியாராய்,
54. பல் இரு கூந்தல் சில் மலர் பெய்மார் - தம் பலவாகிய கரிய மயிரிடத்தே $$ மங்கலமாகச் சிலமலரிட்டு முடித்தலை வேண்டி,
55-6. தண் நறு தகரம் முளரி நெருப்பு அமைத்து இரு காழ் அகிலொடு வெள் அயிர் புகைப்ப - தண்ணிய நறிய மயிர்ச்சந்தனமாகிய விறகிலே நெருப்பை யுண்டாக்கி அதிலே கரிதாகிய வயிரத்தையுடைய அகிலோடே வெள்ளிய $$ கண்ட சருக்கரையையுங் கூட்டிப் புகைப்ப,
57-8. கை வல் கம்மியன் கவின் பெற புனைந்த செ கேழ் வட்டம் சுருக்கி - கையாற் புனைதல்வல்ல உருக்குத்துகின்றவனாலே அழகு பெறப் பண்ணின சிவந்த நிறத்தையுடைய £ ஆலவட்டம் உறையிடப் பட்டு,
------------------------------
# கபோதகத்தலை - வீட்டின் ஓருறுப்பு.
@ கருங்கொள்: நாலடி. 387.
§. சாத்தம்மி = சாந்து அம்மி
$. "தண்ணறுஞ் சாந்தமும் - குளிர்ந்த நறிய பசுங்கூட்டும்" சிலப். 5:13, அடியார்.
## "வான் கேழ் வட்டம்- அழகு கெழுமிய சிலா வட்டம்" (சிலப். 4:37, அரும்பத.); "வான்கேழ் வட்டம் - மிக்க ஒளியையுடைய சிலா வட்டம்" ௸.அடியார்.
@@. சிலாவட்டம் - இங்கே சந்தனக்கல்.
§§. "மங்கலமாகி........பூவே" நன். பொது. சூ.30.
$$ பி-ம். 'கண்டு சருக்கரை'
£ ஆலவட்டம் - விசிறி.
58-9.[கொடுந்தறிச், சிலம்பி வானூல் வலந்தன தூங்க:] சிலம்பி வால் நூல் வலந்தன கொடு தறி தூங்க-சிலந்தியினது வெள்ளீய நூலாற் சூழப்பட்டனவாய் வளைந்த முளைக்கோவிலே தூங்க,
60. வான் உற நிவந்த மேல் நிலை மருங்கின்-தேவரூரைத் தீண்டும்படி உயர்ந்த மேலாம் நிலத்திடத்து,
61-2. வேனில் பள்ளி தென் வளி தரூஉம் நேர் வாய் கட்டளை திரியாது-இளவேனிற் காலத்துத் துயிலும் படுக்கைக்குத் தென்றற் காற்றைத் தரும் சாலேகத்திலே நின்று உலாவாதே, நேர் வாய்க் கட்டளையென்றது மாடத்தின்கட் சாலேகத்தை; கட்டளை தெரியாதென்று பாடமாயின், திறவாதென்க.
62-3. திண் நிலை போர் வாய் கதவம் தாழொடு துறப்ப-சிக்கென்ற நிலையினையுடைய இரண்டு கதவும் தம்முட் பொருதல் வாய்த்த கதவு தாழிட்டுக் கிடக்க,
64-6. கல்லென் துவலை தூவலின் யாவரும் தொகு வாய் கன்னல் தண்ணீர் உண்ணார் பகு வாய் தடவில் செ நெருப்பு ஆர-கல்லென்கின்ற ஓசையினையுடைய சிறுதுவலையை வாடைகாற்று எங்கும் பரப்பு கையினாலே இளையோரும் முதியோரும் குவிந்தவாயையுடைய # கரகத்திற் றண்ணீரைக் குடியாராய்ப் பகுத்தாற்போன்ற வாயையுடைய @ இந்தளத்திலிட்ட சிவந்த நெருப்பின் வெம்மையை நுகர,
----------------
#."எரிசுடர் நெருப்பைநீ ரென்ன வேட்டனர், தருகுளிர் நீரினைத் தழுலி னஞ்சினார்" சீகாளத்திப். பொன்முகரி.45
@ இந்தளம்-தூபமுட்டி; "வீதியிந்த னத்தகிலின் வீசுபுகை வாசமெழும், ஆதியிந்த ளூரான்" நூற்றெட்டுத்.22
67. ஆடல் மகளிர் பாடல் கொள புணர்மார்-ஆடற்றொழிலையுடைய மகளிர் தாம் பாடுகின்ற பாட்டினை யாழ் தன்னிடத்தே கொள்ளும்படி நரம்பைக் கூட்டுதற்கு,
68-9. தண்மையின் திரிந்த இன் குரல் தீ தொடை கொம்மை வரு முலை வெம்மையில் தடைஇ-குளிர்ச்சியாலே தன் நிலை குலைந்த இனிய குரலாகிய நரம்பைப் பெரிய எழுகின்ற முலையின் வெப்பத்தே தடவி,
தீந்தொடை:ஆகுபெயர்.
70. கரு கோடு சிறு யாழ் பண்ணு முறை நிறுப்ப-கரியதண்டினையுடைய சிறிய யாழைப் பண் நிற்கும் முறையிலே நிறுத்த,
71. காதலர் பிரிந்தோர் புலம்ப-கணவரைப் பிரிந்த மகளிர் வருந்த,
71-2. பெயல் களைந்து கூதிர் நின்றன்றால்-காலமழை செறிந்து கூதிர்க்காலமாய் நிலைபெற்றது; அவ்விடத்து,
72. போது-பின்னர் நிகழ்ந்தபொழுது வானம் கார்காலத்து மழையைப் பெய்ததாகப் (2) பின்னர் நிகழ்ந்த பொழுது (72) கோவலர் (3)நடுங்க (8)மறப்பக் கூர (9) வீழ (10)
ஒழிய (11) மலரக் (14)கவரக் (17)கற்ப (20) வணங்க (22) முற்றத்(26)தூங்கத் (28)திரிதர (35)அயர (44)இருப்ப (48) மறுகத் (50) துறப்பப் (52)புகைப்பத் (56)தூங்கத் (59)துறப்ப (63) ஆர (66) நிறுப்பப் (70) புலம்பப் பெயல் செறிந்து (71) கூதிர்க்காலமாய் நிலை பெற்றது; அவ்விடத்து (72) என முடிக்க.
72-5. [மாதிரம், விரிகதிர் பரப்பிய வியல்வாய் மண்டில, மிருகோற் குறிநிலை வழுக்காது குடக்கேர், பொருதிறஞ் சாரா வரைநாளமயத்து:] மாதிரம் விரி கதிர் பரப்பிய வியல் வாய் மண்டிலம் குடக்கு ஏர்பு- திசைகளிலே விரிந்த கிரணங்களைப் பரப்பின அகன்ற இடத்தையுடைய ஞாயிறு மேற்றிசைக்கட் சேறற்கெழுந்து, இரு கோல் குறிநிலை வழுக்காது ஒரு திறம் சாரா அமயத்து அரை நாள்-இரண்டிடத்து நாட்டின இரண்டு கோலிடத்துஞ் சாயா நிழலால் தாரைபோக ஓடுகின்ற நிலையைக் குறித்துக் கொள்ளுந் தன்மை தப்பாத படி தான் ஒரு பக்கத்தைச் சாரப்பொகாத சித்திரைத் திங்களின் நடு படி தான் ஒரு பக்கத்தைச் சாரப்போகாத சித்திரைத் திங்களின் நடு
விற்பத்தினின்ற யாதோர்நாளிற் பதினைந்தாநாழிகையிலே # அங்கு ரார்ப்பணம் பண்ணி,
-----------------
# அங்குரார்ப்பணம்-திருமுனைச்சார்த்து. ப. 414, 2-ஆம் அடிக்குறிப்பைப் பார்க்க.
76. நூல் அறி புலவர் நுண்ணிதின் கயிறு இட்டு-2 சிற்ப நூலையறிந்த தச்சர் கூரிதாக நூலை நேரே பிடித்து,
77. தேஎம் கொண்டு தெய்வம் நோக்கி-திசைகளைக் குறித்துக்கொண்டு அத்திசைகளில் நிற்குந் தெய்வங்களை குறைவறப் பார்த்து,
78-9[பெரும் பெயர் மன்னர்க் கொப்ப மனைவகுத்து,ஒருங்கு:] பெரு பெயர் மன்னர்க்கு ஒப்ப ஒருங்கு மனை வகுத்து-பெரியபெயரினை யுடைய அரசர்க்கொப்ப மனைகளையும் வாயில்களையும் மண்டபங்கள் முதலியவற்றையுங் கூறுபடுத்தி,
79. உடன் வளைஇ ஓங்கு நிலை வரைப்பின்-இவ்விடங்களை யெல்லாம் சேரவளைத்து உயர்ந்த மதிலின் வாயி (88) லென்க.
80. பரு இரும்பு பிணித்து-ஆணிகளும் பட்டங்களுமாகிய பரிய இரும்பாலே கட்டி,
செவ்வரக்கு உரீஇ-சாதிலிங்கம் வழித்து,
81-5. [துணைமாண் கதவம் பொருத்தி யிணைமாண்டு, நாளொடு பெயரிய கோளமை விழுமரத்துப், போதவிழ் குவளைப் புதுப்பிடி கால மைத்துத்,தாழொடு குயின்ற போரமை புணர்ப்பிற், கைவல் கம்மியன் முடுக்கலிற் புரைதீர்ந்து:]
தாழொடு குயின்ற (84) துணை மாண் கதவம் பொருத்தி (81)- தாழொடே சேரப் பண்ணின இரண்டாய் மாட்சிமைப்பட்ட கதவைச் சேர்த்தி, இணை மாண்டு(81) புது போது அவிழ் குவளை பிடிகால் அமைத்து (88)-இணைதல் மாட்சிமைப் பட்டுப் புதிய போதாய் அவிழ்ந்த குவளைப் பூவோடே பிடிகளையும் தன்னிடத்தே பண்ணி, என்றது, # நடுவே திருவும் இரண்டு புறத்தும் இரண்டு செங்கழு நீர்ப்பூவும் இரண்டு பிடியுமாக வகுத்த உத்தர @ கற்கவி.
நாளொடு பெயரிய விழுமரத்து கோள் அமை (82) நெடுநிலை (86)- உத்தரமென்னும் நாளின் பெயர் பெற்ற உத்தரக்கற்கவியிலே செருகுதல் பொருந்தின நெடுநிலையென்க.
அமைத்தென்னுமெச்சம் பெயரிய வென்பதனோடு முடிந்தது.
கை வல் கம்மியன் முடுக்கலின் புரை தீர்ந்து (85)போர் அமை புணர்ப்பின் (84)நெடுநிலை (86)-கைத்தொழில் வல்ல தச்சன் கடாவுகையினாலே வெளியற்றுப் பலமரங்களும் தம்மிற்கிட்டுதலமைந்த கூட்டத்தினை யுடைய நெடுநிலை யென்க.
86. ஐயவி அப்பிய நெய் அணி நெடுநிலை-வெண்சிறுகடுகு அப்பி
வைத்த நெய்யணிந்த நெடிய நிலையினையுடைய, § அதிற் றெய்வத்திற்கு, $ வெண்சிறுகடுகும் நெய்யு மணிந்தது.
--------------------------
# இரண்டு யானைகளின் இடையே திருமகள் வீற்றிருத்தல், கோயில் முதலிய இடங்களிற் காணப்படும் சிற்பங்களாலும், "வரிநுத லெழில் வேழம் பூநீர்மேற் சொரிதரப், புரிநெகிழ் தாமரை மலரங்கண் வீறெய்தித், திருநயந் திருந்தன்ன"(கலி. 44:5-7) என்பதனாலும் "இரண்டானை பக்கத்தேநின்று நீரைச் சொரிய நடுவே தாமரை பூவிலே யிருந்த திருமகள்" (சீவக.2595,ந) என்பதனாலும் அறியலாகும்.
@. கற்கவி:சிலப். 15:213, அடியார்.
§. நிலையில் தெய்வம் உறைதல்: "அணங்குடை நெடுநிலை" மதுரை. 353.
$. இவை யிரண்டும் தெய்வங்களால் விரும்பப்படுவன; முருகு. 228- ஆம் அடியும், மதுரை.354-ஆம் அடியின் விசேடவுரையும், "தெய்வங்கள் இனிதாகக் கொண்ட ஐயவி" (சீவக. 113, ந.) என்பதும் இதனை உணர்த்தும்.
87. வென்று எழு கொடியொடு வேழ்ம் சென்று புக-வென்றி கொண்டெழும் கொடிகளோடே யானைகள் சென்று புகுதும்படி யுயர்ந்த,
88. #குன்று குயின்றன்ன ஓங்கு நிலை வாயில்-மலையை நடுவே வெளியாகத் திறந்தாற் போன்ற கோபுரவாயில்களையும், ஓங்கின நிலையையுடைய கோபுரத்தை ஓங்குநிலையென்றார்; ஆகு பெயர்.
வரைப்பின்(79) வேயிலென்க.
கதவுபொருத்திக் கோளமைத்த புணர்ப்பினையுடைய நெடுநிலையினையுடைய வாயிலென்க.
89-92.[திருநிலை பெற்ற தீதுதீர் சிறப்பிற், றருமணன் ஞெமிரிய திருநகர் முற்றத்து, நெடுமயி ரெகினத் தூநிற வேற்றை, குறுங்காலன்னமோ டுகளு முன்கடை:] @ நெடு மயிர் எகினம் தூ நிறம் ஏற்றை குறு கால் அன்னமொடு உகளும் முன்கடை-நெடிய மயிரினையுடைய கவரிமாவில் தூயநிறத்தையுடைய ஏற்றை குறியாகா-வினையுடைய அன்னத்தோடே தாவித்திரியும் வாசல் முன்பினையும்,
கடைமுன் முன்கடையென மரூஉமுடிபு. அன்னமும் தாவிப்பறத்தலின், உகளுமென்று கவரிமாவோடே ஒருவினைகூறினார். §தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றத்து. திரு நிலைபெற்ற தீது தீர் சிறப்பின்-திருமகள் நிலைபெற்ற குற்றமற்ற தலைமையினையும், வாயிலினையும் (88) முன்கடையினையும் (92) முற்றத்தினையும் (90) சிறப்பினையுமுடைய (89) கோயில் (100) என முடிக்க.
93-4.பணை நிலை முனைஇய பல் உளை புரவி புல் உணா தெவிட்டும் புலம்பு விடு குரலொடு-பந்தியிலே நிற்றலை வெறுத்த பலவாகிய ## கேசாரியையுடைய குதிரைகள் புல்லாகிய உணவைக் குதட்டுந் தனிமை தோற்றுவிக்கின்ற குரலோடே,
95-7. @@ நிலவு பயன்கொள்ளும் நெடு வென் முற்றத்து கிம்புரி பகுவாய் அம்பணம் நிறைய கலிழ்ந்து வீழ் அருவி பாடு விறந்து-நிலாவின் பயனை அரசன் நுகரும் நெடிய வெள்ளிய நிலாமுற்றத்திலுள்ள நீர்வந்து
------------
# "குன்று குயின்றன்ன-மலையை உள்வெளியாக வாங்கி இருப்பிட மாக்கினாற்போன்ற" மதுரை. 474,ந.
@ "ஏழககத் தகரு மெகினக் கவரியுந், தூமயி ரன்னமுந் துணையெனத் திரியும்..........நீணெடு வாயி னெடுங்கடை" சிலப்.10:5-8.
§ இந்தப் பாகத்திற்கு உரை கிடைத்திலது*; கொண்டு வந்திட்ட மணல் பரந்த அழகிய வீட்டின்முன்னிடத்தையுமென்க.
## ப. 380, 5-ஆம் அடிக்குறிப்பைப் பார்க்க.
@@ "நிலவுப் பயன் கொள்ளுமென இடக்கரடக்கிக் கூறினார்" என்பர் அடியார்க்கு நல்லார்; சிலப்.4: 32, உரை.
வீழும் மகரவாயாகப் பகுத்த வாயினையுடைய # பந்தநிறைகையினாலே
கலங்கி விழுகின்ற அருவியினோசை செறிந்து,
97-9 அயல ஒலி நெடு பீலி ஒல்க மெல் இயல் கலி மயில் அகவும் @வயிர் மருள் இன் இசை-அதற்கு அயவிடத்தனவாகிய தழைத்த நெடிய பீலி ஒதுங்க மெல்லிய இயல்பினையுடைய செருக்கின மயில் ஆரவாரிக்கும் கொம்பென்று மருளும் இனியவோசை,
----------------------------
#. பி-ம். 'பந்தல் நிறைய'
@. வயிரிசை அன்றிலின் ஓசைக்கும் உவமை கூறப்படும்' குறிஞ்சி.219.
100. நளி மலை சிலம்பின் சிலம்பும் கோயில்-செறிந்த மலையின் ஆரவாரம் போல ஆரவாரிக்கும் கோயில், புலம்புவிடுகுரலோடே (94) அருவிப்பாடும் (97) உயிர் மருளின்னிசையும் (99)விறந்து (97) மலைச்சிலம்பிற்சிலம்புங்கோயில் (100)
என முடிக்க.
அருவியும் மயிலும் மலைக்கும் உள்ளனவாகலின், உவமைகொண்டார். புலம்புவிடுகுரல் மழை மெத்தெனமுழங்கினாற் போன்றிருத்தலின், உவமை கொண்டார். இனி அவற்றின் எதிரொலியெழுகின்ற கோயிலென்றுமாம்.
101-2. யவனர் இயற்றிய வினை மாண் பாவை கை ஏந்து ஐ அகல் நிறைய நெய் சொரிந்து-சோனகர் பண்ணின தொழில் மாட்சிமைப்பட்ட பாவை தன்கையிலே ஏந்தியிருக்கின்ற வியப்பையுடைய தகளிநிறையும்படி நெய் வார்க்கப்பட்டு,
103. பரூஉ திரி கொளீஇய குரூஉ தலை நிமிர் எரி-பருந்திரிகளைப் பந்தங்களிலே கொளுத்திவைத்த நிறத்தையுடைத்தாகிய தலையினையுடைய மேனோக்கியெரிகின்ற விளக்கை,
104. அறு அறு காலை தோறு அமைவர பண்ணி-நெய் வற்றின காலந்தோறும் ஒளிமழுங்கின காலந்தோறும் நெய்வார்த்து தூண்டி,
105. பல் வேறு பள்ளி தொறும் பாய் இருள் நீங்க-பலவாய் வேறுபட்ட இடங்கடோறும் பரந்த இருள்நீங்கும்படி,
106-7. பீடு கெழு சிறப்பின் பெருந்தகை அல்லது ஆடவர் குறுகா அரு கடி வரைப்பின்- பெருமைபொருந்தின தலைமையினையுடைய பாண்டியனல்லது சிறு குறுந்தொழில் செய்யும் ஆண்மக்களும் அணுகவாராத அரியகாவலையுடைய கட்டுக்களின்,
108. வரை கண்டன்ன தோன்றல-மலைகளைக் கண்டாற்போன்ற உயர்ச்சியை-யுடையவாய்,
108-9. வரை சேர்பு வில் கிடந்தன்ன கொடிய-மலைகளைச் சேர்ந்து இந்திரவில் கிடந்தாற்போன்ற பலநிறமாய் வீழ்ந்துகிடந்த கொடிகளையுடையவாய்,
இது மேலேகட்டின கொடி.
109.பல் வயின் - பலவிடங்கடோறும்,
110.வெள்ளி அன்ன விளங்கும் சுதை உரீஇ-வெள்ளியை யொத்த விளங்குகின்ற சாந்தை வாரி,
111.மணி கண்டன்ன மா திரள் திண் காழ் – நீலமணியைக் கண்டாற்போன்ற கருமையினையும் திரட்சியினையுமுடைய திண்ணிய தூண்களையுடையவாய்,
112.செம்பு இயன்றன்ன செய்வு உறு நெடு சுவர் – செம்பினாலே பண்ணினாலொத்த தொழிலகள் செய்தலுற்ற நெடியசுவரிலே,
113.உருவம் பல் பூ ஒரு கொடி வளைஇ - வடிவழகினையுடையவாகிய பலபூக்களையுடைய #வல்லிசாதியாகிய ஒப்பில்லாத கொடியையெழுதி,
-----
#இக்கொடிகளை வல்லிசாதியென்றே குறிப்பிடுவர் தக்கயாகப் பரணி யுரையாசிரியர். துகிற்கொடியை விலக்குவதற்காக இவ்வாறு இவர்கள் கூறுகின்றார்கள்போலும்.
114. கருவொடு பெயரிய காண்பு இன் நல் இல் – புதைத்த கருவோடே பெயர்பெற்ற காட்சிக்கினிய நன்றாகிய இல், என்றது, கருப்பக்கிருகமென்றவாறு.
திண்காழையுடையவாய்ச் (111) செய்வுறுநெடுஞ்சுவரிலே (112)
விளங்குஞ் சுதையுரீஇப் (110) பல்வயின் (109) ஒருகொடிவளைஇ (113)
வரைகண்டன்ன தோன்றலவாய்க் (108) கொடிய வாய்ப் (109) பாயிருணீங்க (105) எரி (103) அமைவரப்பண்ணிக் (104) காட்சிக்கினியவாகிய நல்லில் (114) என முடிக்க.
கோயில் (100) வரைப்பின் (107) காண்பினல்லில் (114) என முடிக்க.
115. [தசநான் கெய்திய] நான்கு தசம் எய்திய - நாற்பதிற்றியாண்டு சென்ற,
பணை மருள் நோன் தாள் - முரசென்றுமருளும் வலியகால்களையும்,
116.[இகன்மீக் கூறு மேந்தெழில் வரிநுதல்:] ஏந்து எழில் வரி நுதல் - உயர்ந்த அழகினையும் புகர்நிறைந்த மத்தகத்தினையுமுடைய நாகம் (117),
இகல் மீ கூறும் நாகம் (117) - போரில் மேலாகச்சொல்லும் நாகம்,
117.பொருது ஒழி நாகம் - பொருது பட்ட யானையினுடைய,
117-8. [ஒழியெயி றருகெறிந்து, சீருஞ் செம்மையு மொப்ப] ஒழி எயிறு சீரும் செம்மையும் ஒப்ப அருகு எறிந்து – தானேவீழ்ந்த கொம்பைக் கனமும் செம்மையுமொப்ப இரண்டு புறத்தையுஞ்செத்தி,
118-9. வல்லோன் கூர் உளி குயின்ற-தச்சன் கூரிய சிற்றுளியாலே பண்ணின,
119. ஈரிலை இடை இடுபு-பெரிய இலைத்தொழிலை இடையே இட்டு,
120-30. [தூங்கியன் மகளிர் வீங்குமுலை கடுப்பப், யுடைதிரண்டிருந்த குடத்த விடைதிரண், டுள்ளி நோன்முதல் பொருத்தி யடிமைத்துப்,பேரள வெய்திய பெரும்பெயர்ப் பாண்டின், மடைமா ணுண்ணிழை பொலியத் தொடைமாண்டு, முத்துடைச் சாலேக நாற்றிக் குத்துறுத்துப், புலிப்பொறிக் கொண்ட பூங்கேழ் தட்டத்துத், தகடுகண் புதையக் கொளீஇத் துகஉர்த், தூட்டுறு பன்மயிர் விரைஇ வயமான்,
வேட்டம் பொறித்து வியன்கட் கானத்து, முல்லைப் பல்போ துறழப் பூநிரைத்து:]
ஊட்டுறு பல் மயிர் விரைஇ (128)-பலநிறம்பிடித்த மயிர்களை உள்ளேவைத்து அதன்மேலே, வயமான் (128)வேட்டம் பொறித்து (129)-சிங்கமுதலியவற்றை வேட்டையாடுகின்ற தொழில்களைப் பொறித்த தகடுகளை வைத்து, புலி முதலியவற்றின் வரிகள்தோன்ற உள்ளே மயிர் விரவின.
வியல் கண் கானத்து (129) முல்லை போது உறழ பல்பூநிரைத்து (130)-அகற்சியை இடத்தேயுடைய காட்டிடத்து முல்லைப்போதுடனே மாறுபடும்படி ஏனைப் பல பூக்களையும் நிரைத்து, சாலேகம் தகடு குத்துறுத்து (125)-சாளரங்களாகத்திறந்த தகடு
களை ஆணிகளாலே தைத்து, மடை மாண் (124) பாண்டில் (123)-மூட்டுவாய் மாட்சிமைப் பட்ட வட்டக்கட்டில், கொம்பைச்செத்தி (117) உளியாற்குயின்ற இலையை இடையிட்டுப் (119) பொறித்து (129) நிரைத்துச் (130)சாலேகத் தகடுகளைக்குத் துறுத்து(125) மடைமாண் (124) பாண்டில்(123) என முடிக்க.
முத்து உடை (125) நுண் இழை பொலிய (124)நாற்றி (125) தொடை மாண்டு (124)பெரு அளவு எய்திய பாண்டில்(123)-முத்தைத் தன்னிடத்தேயுடைய மெல்லியநூல் அழகு பெறும்படி கட்டிலின் கீழே வீழ நாலுபுறமும்நாற்றி அதனைத் தன்னிடத்தே கட்டுதல் மாட்சிமைப்பட்டுப் பெரிய எல்லையைப்பெற்ற பாண்டிலெனக் கூட்டுக.
என்றதனால், தந்தத்தாற்ரமைத்த கட்டிலைச்சூழ முத்துவட நாற்றியென்றார்.
புலி பொறி கொண்ட பூ கேழ் தட்டத்து (126) கண் புதைய கொளீஇ துகள் திரிந்து (127)பெரு பெயர் பாண்டில்(124)-புலியினது வரியைத் தன்னிடத்தேகொண்ட, பொலிவுபெற்ற நிறத்தை யுடைய கச்சாலே நடுவுவெளியான இடமறையும்படி கோக்கப்பட்டுக் குற்றமற்றுக் கச்சுக்கட்டில்லென்னும் பெரிய பெயரையுடைய பாண்டி
லெனக்கூட்டுக.
தூங்கு இயல் மகளிர் வீங்கு முலை கடுப்ப (120) புடை திரண்டு இருந்த குடத்த (121) அடி (122) - சூல்முற்றி அசைந்த இயல்பினையுடையராகிய மகளிரது பால்கட்டி வீங்கின முலையையொப்பப் பக்க முருண்டிருந்த குடத்தையுடையவாய அடி,
இஃது உருட்சிக்கு உவமை கூறிற்று.
இடை திரண்டு (121) உள்ளிமுதல் நோன் அடி பொருத்தி அமைத்து (122) - குடத்திற்கும் கட்டிற்கும்நடுவாகியஇடம் ஒழுகமெல்லிதாய்த்திரண்டு உள்ளிமுதல்போலும் வலியினையுடையகால்களைத் தன்னிடத்தே தைத்துச்சமைத்துப் *போனவெய்திய பாண்டிலென்க.
உள்ளிப்புட்டில்போல்வதனை உள்ளிமுதலென்றார்.
131-3. [மெல்லிதின் விரிந்த சேக்கை மேம்படத், தூணை புணரன்னத் தூநிறத் தூவி, யிணையணை மேம்படப் பாயணை யிட்டு:]
மெல்லிதின் விரிந்த இணை அணை சேக்கை – மெல்லியதாக விரிந்த இணை தலணைந்த படுக்கையென்க.
மேம்பட துணை புணர் அன்னம் தூ நிறம் தூவி பாய் - அச்சேக்கைக்கு மேலாகத் தம்பேட்டைப்புணர்ந்த அன்னச்சேவலின் தூய நிறத்தை யுடைய சூட்டாகியமயிர் பரக்கப்பட்டு,
# "சிறுபூளை செம்பஞ்சு வெண்பஞ்சு சேண, முறுதூவி @சேக்கையோ ரைந்து" என்ற ஐந்திணையும்படுத்ததென்பதுதோன்ற §இணையணையென்றார். ##என்புருகி மிக்க அன்போடுபுணர்தலிற் சூட்டிற்கு மென்மை பிறக்குமென்பது தோன்றத் துணை புணரன்னத் தூநிறத் தூவி யென்றார்.
-------------
#. கலி. 72: 1-8, ந. மேற்; சீவக.888, ந.மேற்
@. பி-ம். 'தாமிவையோ ரைந்து', 'சேக்கையோடைந்து.'
§. "இணைபட நிவந்த நீலமென் சேக்கையுள்" (கலி. 72:1) என்றவிடத்து, 'ஐந்துவகைப்படப்படுதலால் உயர்ந்த நீலப்பட்டாற்செய்த மெல்லிய படுக்கையிடத்து' என்றுரையெழுதுவர் நச்சினார்க்கினியர்.
##. "துணையைப் புணர்ந்தகாலத்து மெய்யுருகி உதிர்ந்த தூவிதானும் மிக மெல்லியதாயிருக்குமென்பது உணர்த்தற்குத் துணைபுணரன்ன மென்றார்" (கலி. 72: 1-8,ந) எனவும், "புணர்ச்சியால் தூவிக்கு மென்மை பிறக்குமென்றார்" (சீவக. 189,ந) எனவும் இவ்வுரையாசிரியரும், "தன் சேவலொடு புணர்ந்த அன்னப்பேடை அப்புணர்ச்
சியான் உருகி உதிர்ந்த வயிற்றின் மயிர் எஃகிப் பெய்த பல்வகை யாணைமீதே" (சிலப். 4:58-71, அடியார்.) எனப் பிறரும் எழுதியவை இங்கே உணர்தற்குரியன.
பிறரும், இக்கருத்தேபற்றி, # "ஆதரம் பெருகு கின்ற வன்பினாலன்ன மொத்தும்" என்றார்.
134-5. [காடி கொண்ட கழுவுறு கலிங்கத்துத், தோடமை தூமடி விரித்த சேக்கை:] மேம்பட அணையிட்டு (133)காடி கொண்ட கழுவுறு கலிங்கத்து தூ மடி விரித்த தோடு அமை சேக்கை- அத்தூவிக்கு மேலாக அணைகளுமிட்டுவைத்துக் கஞ்சியைத் தன்னிடத்தே கொண்ட கழுவுதலுற்ற துகிலின் தூய மடித்ததுவிரித்த செங்கழுநீர் முதலியவற்றின் இதழ்கள்பொருந்தின படுக்கை,
இணையணை சேக்கை மேம்படத் தூவி பாய் அத்தூவிக்கு மேம்பட @அணையிட்டுத் தூமடிவிரித்த சேக்கையென்க.
138-7. ஆரம் தாங்கிய அவர் முலை ஆகத்து பின் அமை நெடு வீழ் தாழ-முன்பு முத்தாற் செய்த கச்சுச்சுமந்த பருத்த முலையினையுடைய மார்பிடத்தே இப்பொழுது குத்துதலமைந்த நெடிய தாலி நாணொன்றுமே தூங்க,
வீழ்ந்துகிடத்தலின் வீழென்றார். இனிப் பின்னுதலமைந்த நெடிய வீழ், மயிரென்பாருமுளர்.
137. துணை துறந்து-அரசன் பிரிகையினாலே,
138. நல் நுதல் §உலறிய சில்மெல் ஓதி- நன்றாகிய நுதலிடத்தே கைசெய்யாமல் உலறிக்கிடந்த சிலவாகிய மெத்தென்ற மயிரினையும்,
இனித் துணைதுறந்து உலகறிய ஓதியெனக்கூட்டிக் கூடிக்கிடந்த தன்மை நீங்கி உலகறிய ஓதியென்றுரைப்பாருமுளர்.
139-40. [நெடுநீர் வார்குழை களைந்தெனக் குறுங்கண், வாயுறையழுத்திய வறிதுவீழ் காதில்:]
நெடு நீர் வார் குழை களைந்தென வறிது வீழ் காதின்-பெரிய ஒளியொழுகின மகரக்குழயைவாங்கிற்றாகச் சிறிதேதாழ்ந்த காதினையும்,
நீர்மை-ஒளி.
குறு கண் வாயுறை அழுத்திய காது-சிறிய இடத்தையுடைய தாளுருலி அழுத்திய காது,
வாயுறவென்றுபாடமாயின், கடுக்கனை வாயுறும்படியழுத்தினகாதென்க.
------------
#. சீவக. 189.
@. "ஐவகை யமளி யணைமேற் பொங்கத், தண்மலர் கமழும் வெண்மடி விரித்து" திருவிடை.மும்.19.
§. உலகறிய: சிருபாண்.18.
141-2. பொலம் தொடி தின்ற மயிர் வார் முன்கை வலம்புரி வளையொடு கடிகைநூல் யாத்து-முன்பு பொன்னாற்செய்த தொடி கிடந்து தழும்பிருந்த மயிர் ஒழுங்குபட்டுக் கிடந்த முன்கையிலே # வலம் புரியையறுத்துப்பாண்ணின வளையை இட்டுக் காப்பு நாணைக்கட்டி,
ஒடு: வேறுவினையோடு.
143-4. வாளை பகு வாய் கடுப்ப வணக்குறுத்து செ விரல்கொளீஇய செ கேழ் @விளக்கத்து-வாளையினது பகுத்தவாயையொக்க முடக்கத்தையுண்டாக்கிச் சிவந்த விரலிடத்தேயிட்ட சிவந்த நிறத்தையுடைய §முடக்கென்னு மோதிரத்தையும்,
145-6. பூ துகில் மரீஇய ஏந்து கோடு அல்குல் அ மாசு ஊர்ந்த அவிர் நூல் கலிங்கமொடு-முன்பு பூத்தொழிலையுடைய ## துகில் கிடந்த உயர்ந்த வளைவினையுடையவல்குலில் இக்காலத்து உடுத்த அழகிய மாசேறிய விளங்குகின்ற நூலாற் செய்த புடைவையுடனே,
147. [புனையா வோவியங் கடுப்பப் புனைவில்:]
@@ புனையா ஓவியம் கடுப்ப-வண்ணங்களைக் கொண்டெழுதாத வடிவைக் கோட்டின சித்திரத்தை யொப்ப,
புனைவில் நல்லடி (151) என மேல் வருவதனைக் கூட்டி, கழுவிச் செம்பஞ்சிட்டுப் பூண்களணியாத நன்றாகிய அடியென்க.
148. தளிர் ஏர் மேனி-§§ மாந்தளிரை யொத்த நிறத்தினையும், தாய சுணங்கின்-பரந்த சுணங்கினையும்,
149. அம் பணை தடைஇய மெல் தோள்-அழகினையுடைய மூங்கில் போலத் திரண்ட மெல்லிய தோளினையும்,
149-50 [முகிழ்முலை, வம்புவிசித் தியாத்த:] வம்பு விசித்து யாத்த முகிழ் முலை-கச்சை வலித்துக் கட்டின தாமரைமுகைபோலும் முலையினையும்,
150. வாங்கு சாய் நுசப்பின்-வளையும் துடங்கு மிடையினையும்,
------------
#. " அரம்போழ்ந் தறுத்த கண்ணே ரிலங்குவளை' [மதுரை. 316] என்பதன் அடிக்குறிப்பைப் பார்க்க.
@. விளக்கம்-மோதிரம்; மதுரை.719,ந.
§ "வாளைப் பகுவாய் வணக்குறு மோதிரம்" (சிலப்.6:95) என்பதற்கு, 'முடக்கு மோதிரம்' என்று அரும்பதயுரையாசிரியரும்,நெளியென்று அடியார்க்கு நல்லாரும் எழுதுவர்.
##. துகில்-ஆடை வகையுள் ஒன்று; "புடைவீழந்துகில்"(181) என்பர் பின்னும்; "வாழ்வரே, பட்டுந் துகிலு முடுத்து" நாலடி. 264.
@@. "தேவு தெண்கட லமிழ்துகொண் டநங்கவேள் செய்த, ஓவியம் புகை யுண்டதே யொக்கின்ற வுருவாள். (கம்ப.காட்சி. 11) என்பது இதிலிருந்து எழுந்து வளர்ந்த கருதென்று தோற்றுகின்றது.
§§. "மாவின், அவிந்தளிர் புரையு மேனியர்" (முருகு. 143-4) என்பதன் அடிக்குறிப்பைப் பார்க்க.
151. மெல் இயல் மகளிர்-மெத்தென்ற தன்மையினையுமுடைய சேடியர்,
நல் அடி வருட- #துயிலுண்டாகுமோவென்று அடியைத் தடவ, மேனி (148)முதலியவற்றையுடையமகளிர் (151) புனைவில்(147) நல்லடி வருடவென்க.
152-3. நரை விராவுற்ற நறு மெல்கூந்தல் செ முக செவிலியர் கை மிக குழீஇ-நரை கலத்தலுற்ற நறிய மெல்லிய மயிரினையுடைய சிவந்த முகத்தையுடைய செவிலித்தாயார் இவளாற்றாவொழுக்க மிகுகையினாலே திரண்டு,
154. குறியவும் நெடியவும் உரை பல பயிற்றி- @பொருளொடு புணராப் பொய்ம்மொழியும் மெய்ம்மொழியுமாகிய உரைகள் பலவற்றையும் பலகாற் சொல்லி,
§ "ஒன்றே மற்றுஞ் செவிலிக் குரித்தே" என்பது இலக்கணம்.
155-6. இன்னே வருகுவர் இன் துணையோர் என உகத்தவை மொழியவும் ஒல்லாள் மிக கலுழ்ந்து-இப்பொழுதே வருகுவர் நினக்கினிய துணையாந் தன்மையை யுடையோரென்று அவள் மனத்துக்கு இனிய வார்த்தைகளைக் கூறவும் அதற்குப் பொருந்தாளாய் மிகக்கலங்கி,
--------
#. துயிலுதற்கு காலைவருடல் மரபு; இது, மழையார் சாரற் செம்புனல் வங்தங் கடிவருடக், கழையாற் கரும்பு கண்வளர் சோலைக் கலிக்காழி", "தென்றலா ரடிவருடச் செழுங்கரும்பு கண்வளருந்திருவை யாறே ' (திருஞா.தே) என்ற திருவாக்குக்களிற் குறிப்பிக்கப் பெற்றிருத்தல் காண்க.
@. "பொருளொடு புணராப் பொய்ம்மொழி யானும், பொருளொடு புணர்ந்த நகைமொழி யானும்" (தொல்.செய்.சூ.173) என்பதும், 'பொருளொடு... ......பொய்ம்மொழியானும்-பொருண்முறை யின் றிப் பொய்யாகத் தொடர்ந்து கூறுவன; அவை ஓர் யானையுங் குதிரையும் தம்முள் நட்பாடி இன்னுழிச் சென்று இன்னவாறு செய்தனவென்று
அவற்றுக் கியையாப் பொருள் பட்டதோர் தொடர் நிலையாய் ஒருவனுழை யொருவன் கற்று வரலாற்றுமுறைமையான் வருகின்றன; பொருளொடு..........நகைமொழியானும்-பொய்யெனப்படாது மெய்யெனப்பட்டும் நகுதற் கேதுவாகும் தொடர்நிலையானும்' (ந.) என்ற அதனுரையும் இத்தொடர்களின் பொருளை விளக்கும்.
§. தொல்.செய்.சூ.175.
157-8. [நுண்சேறு வழித்த நோனிலைத் திரள்கா, லூறா வறு முலை கொளீஇய:] ஊறா வறுமுலை கொளீஇய நுண் சேறு வழித்த நோன் நிலைதிரள் கால்-குடங்களைக் கடைந்து தைத்த சாதிலிங்கம் பூசின வலிய நிலையினையுடைய மேற்கட்டியிற் றிரண்ட கால்களை, ஊறாவறுமுலை : குடத்திற்கு வெளிப்படை; # முலைபோறலின்
முலையென்றார்.
158.கால் திருத்தி - கட்டிற்கால்களுக்கு அருகாக நிற்கும்படி பண்ணி அதனிடத்தேகட்டி,
159.[புதுவ தியன்ற மெழுகுசெய் படமிசை:] மெழுகு செய்படம் மிசை புதுவது இயன்ற - மெழுகு வழித்த மேற்கட்டியின் மேலே புதிதாக எழுதின,
160-61.[திண்ணிலை மருப்பி னாடுதலை யாக, விண்ணூர்பு திரி தரும்:]
விண் - ஆகாயத்திடத்தே, திண் நிலை மருப்பின் ஆடு தலையாக ஊர்பு திரிதரும் - திண்ணிய நிலையினையுடைய கொம்பினையுடைய மேடராசிமுதலாக ஏனை இராசி
களிற் சென்று திரியும்,
161-2. வீங்கு செலல் மண்டிலத்து முரண் மிகு சிறப்பின் செல்வ னொடு நிலைஇய - மிக்க செலவினையுடைய ஞாயிற்றோடே மாறுபாடு மிகுந்த தலைமையினையுடைய திங்களோடு # திரியாமனின்ற,
163.உரோகிணி நினைவனள் நோக்கி - உரோகினியைப் போல யாமும் பிரிவின்றி யிருத்தலைப் பெற்றிலமேயென்று நினைத்து அவற்றைப் பார்த்து, ஞாயிறு, ஈண்டெழுதியன்று; திங்களிற்கு அடைகூறிற்று.
நெடிது உயிரா - நெட்டுயிர்ப்புக் கொண்டு,
164-5. [மாயித ழேந்திய மலிந்துவீ ழரிப்பனி, செவ்விரல் கடைக்கண் சேர்த்திச் சிலதெறியா:] மா இதழ் வீழ் கண் கடை மலிந்து ஏந்திய அரி பனி சில செவ்§விரல் சேர்த்தித் தெறியா – நீலப்பூ விரும்பினகண் தன்கடைகண்ணிடத்தேவர மிக்குச் சுமந்த ஐதாகிய நீரிற் சிலவற்றைச் சிவந்த விரலைச் சேர்த்தித் தெறித்து, என்றது மிகவுமழாமல் மல்கினநீரைத் தெறித்தென்றார்.
166.புலம்பொடு வதியும் நலம் கிளர் அரிவைக்கு – தனிமையோடு கிடக்கும் அன்பு மிகுகின்ற அரிவைக்கு,
---------------------
#. நெடுநல். 120-21
@ பி-ம். 'தெரியாமனின்ற'
§. "உறவுகொ ளுரோகிணியோ டுடனிலை புரிந்த, மறுவுடை மண்டிலக் கடவுளை" பெருங். 2. 9: 167-8.
அரசன் பிரிகையினாலே, நெடுவீழ்தாழ (137) நூல்யாத்து (142) மாசூர்ந்த கலிஙத்தோடே (146) ஓதியினையும் (138) காதினையும் (140) விளக்கத்தினையும் உடையளாய் (141) மிகக்கலங்கி (156) உரோகினி நினைவனணோக்கி நெடிதுயிர்த்துத் (163) தெறித்து (165) மகளிர் நல்லடி வரும் (151) ஓவியங் கடுப்ப (147) வதியுமரிவைக்கு (166) என வினைமுடிக்க.
166-7, அரிவைக்கு இன்னா அரு படர் தீர- அரிவைக்குத் தீதா யிருக்கின்ற ஆற்றுதற்கரிய நினைவு தீரும்படி,
பாசறைத் தொழில் (188) விறல் தந்து (167) இன்னே முடிக தில் (168) - வேந்தன் பாசறையிடத்திருந்து பொருகின்ற போர்த்தொழில் அவனுக்கு வெற்றியைக் கொடுத்து இப்பொழுதே முடிவதாக; இஃது எனக்கு விருப்பம் எனமுடிக்க.
168. அம்ம- கேட்பாயாக;
இஃது, இவள் வருத்தமிகுதி தீரவேண்டிக் கொற்றவையை நோக்கிப் பரவுகின்றவள் கூற்றாயிற்று. கேட்பாயாக வென்றது கொற்றவையை நோக்கி. முடிகவென்ற வியங்கோள், வேண்டுகோடற் பொருண்மைக்கண் வந்தது. தில், விழைவின்கண் வந்தது.
168-171. மின் அவிர் ஓடையொடு பொலிந்த வினை நவில் யானை மின் திரள் தட கை நிலமிசை புரள களிறு களம் படுத்த பெரு செய் ஆடவர்- ஒளி விளங்குகின்ற பட்டத்தோடே பொலிவுபெற்ற போர்த் தொழிலைப் பயின்ற யானையினுடைய நீண்டதிரண்ட பெருமையினையுடைய கை அற்று நிலத்தே புரளும்படி யானையை முன்னர்க்கொன்ற பெரிய செயலையுடைய வீரருடைய, செயலென்னும் வினைப்பெயர் செய்யென முதனிலையாய் நின்றது.
172 ஒளிறு வாள் #விழு புண் காணிய புறம் போந்து- விளங்கும் வாளினாற் போழ்ந்த சீரியபுண்ணைக் கண்டு பரிகரித்தற்குத் தானிருக்கின்ற இடத்திற்குப் புறம்பேபோந்து திரிதரும்வேந்தன் (187) என்க.
#. "விழுப்புண்- முகத்ததினும் மார்பினும் பட்டபுண்" குறள் 776, பரிமேல்.
173. @வடத்தை தண் வளி- வடதிசைக் கண்ணதாகிய குளிர்ந்த காற்று, என்றது வாடையை.
@. இப்பாட்டிற்கு "வடந்தைத் தண்வளி" என்னும் இப்பகுதி உயிர்போன்றது.
173-5. [எறிதொறு நுடங்கித், தெற்கேர் பிறைஞ்சிய தலைய ஈற்பல், பாண்டில் விளக்கிற் பரூஉக்கட ரழல:] நல் பல் பாண்டில் விளக்கில் பரூஉ சுடர் எறிதொறும் நுடங்கி தெற்கு ஏர்பு இறைஞ்சிய தலைய அழல- நன்றாகிய பலகால் விளக்கிலெரிகின்ற பருத்தகொழுந்து வாடைக்காற்று அடிக்குந்தோறும் அசைந்து தெற்கு நோக்கியெழுந்து சாய்ந்த தலையினையுடையவாய் எரிய,
விளக்கு: ஆகுபெயர்.
176-7. வேம்பு தலை யாத்த நோன் காழ் எஃகமொடு முன்னோன் முறைமுறை காட்ட- வேப்பந் தாரைத் தலையிலேகட்டின வலிய காம்பினையுடைய வேலோடே முன்செல்கின்ற சேனாபதி புண்பட்ட வீரரை அடைவே அடைவேகாட்ட,
177-80. பின்னர் மணிபுறத்து இட்ட மா தான் பிடியொடு பருமம் களையா பாய் பரி கலி மா இரு சேறு தெருவின் எறி துளி விதிர்ப்ப- பின்னாக மணிகளைத் தன்னிடத்தேயிட்ட பெருமையையுடைய தாளினையுடைய குசையோடே பக்கரைவாங்காத பாய்ந்துசெல்லுஞ் செலவினையுடைய செருக்கின குதிரைகள் கரிய சேற்றையுடைய தெருவிலே தம்மேலே வீசும் துளிகளையுதற, தாளென்றது வாய்க்கருவியிற் கோத்துமுடியும் குசையிற்றலையை.
181. புடை வீழ் அம் துகில் இடவயின் தழீஇ- இடத்தோளினின்றும் நழுவிவீழ்ந்த அழகினையுடைய #ஒலியலை இடப்பக்கத்தே யணைத்துக்கொண்டு,
#- ஒலியல்-உத்தரீயம்.
182-3. வாள் தோள் கோத்த வன்கண் காளை சுவல் மிசை அமைத்த கையன்- வாளைத்தோளிலே கோத்த தறுகண்மையையுடைய வாளெடுப்பான்றோளிலே வைத்த வலக்கையையுடையனாய்,
183. முகன் அமர்ந்து- @ புண்பட்டவீரர்க்கு அகமலர்ச்சி தோன்ற முகம் பொருந்தி,
------
@. அரசன் முகம் பொருந்துவதால் வீரர் அகமலர்வாரென்ற இச்செய்தியோடு, "தழிச்சிய வாட்புண்ணோர் தம்மில்லந் தோறும், பழிச்சியசீர்ப் பாசறை வேந்தன் -விழுச்சிறப்பிற், சொல்லிய சொல்லே மருந்தாகத் தூர்ந்தன, புல்லணலார் வெய்துயிர்க்கும் புண்" (தொல். புறத். சூ. 8, ந. மேற்.) என்ற வெண்பாவின் கருத்து ஒப்புநோக்கற்குரியது.
184. நூல் கால்யாத்த மாலை வெண்குடை- நூலாலே சட்டத்தே கட்டின முத்துமாலையினையுடைய கொற்றக்குடை,
185. தவ்வென்ற அசைஇ தா துளி மறைப்ப- தவ்வென்னு மோசைபட்டு அசைந்து பரக்கின்ற துளியைக் கரக்க,
தாழ்துளியும் பாடம்.
186-7. §நள்ளென் யாமத்தும் பள்ளிகொள்ளான் சிலரொடு
----
§. "நள்ளென் மாலை" (புறநா. 149: 1-2) என்பதற்கு 'நள்ளென்னும் ஓசையையுடைய மாலைப்பொழுது' என்று அதன் உரையாசிரியரும் "நள்ளிருள் யாமத்து" (சிலப். 15: 105) என்பதன் பதவுரையில், 'செறிந்த இருளையுடைய வைகறை யாமத்தே' எனவும் அதன் விசேடவுரையில், 'நள்: நளியென்னும் உரிச்சொல் ஈறு திரிபு; செறிவின்
கண் வந்தது' எனவும் அடியார்க்கு நல்லாரும் எழுதுவர்.
திரிதரும் வேந்தன்- நள்ளென்னும் ஓசையையுடைய நடுவியாமத்தும் பள்ளி கொள்ளானாய்ச் சில வீரரோடே புண்பட்டோரைப் பரிகரித்துத் திரிதலைச் செய்யுமரசன்.
188. பலரொடு முரணிய பாசறை தொழில்- சேரன் செம்பியன் முதலிய #எழுவரோடே மாறுபட்டுப் பொருகின்ற பாசறையிடத்துப் போர்த்தொழில்,
புண்காணிய புறம்போந்து (172) சுடரழலக் (175) காட்ட (177) விதிர்ப்பத் (180) தழீஇக் (181) கையனாய் அமர்ந்து (183) மறைப்பப் (185) பள்ளிகொள்ளானாய்த் (186) திரியும்வேந்தன் (187) என்க.
அம்ம (168) வானம் கார்காலத்து மழையைப் பெய்ததாகப் (2) பின்னர் நிகழ்ந்தபொழுது கூதிர்க்காலமாய் நிலைபெற்றது (72) ; அக்கூதிர்காலத்து நடுவியாமத்தே (75) வாயிலினையும் (88) முன்கடையினையும் (92) முற்றத்தினையும் (90) சிறப்பினையுமுடைய (89) கோயில் (100) வரைப்புக்களிற் (107) காண்பினல்லில்லிற் (114) பாண்டிலிற்(123) சேக்கையிலே (135) வதியுமரிவைக்குப் (166) படர்தீரும்படி
(167) வேந்தன் (187) பலரொடுமுரணிய பாசறைத்தொழில் (188) விறறந்து (167) இன்னேமுடிவதாக; இஃது எனக்கு விருப்பம் (168) எனக் கொற்றவையைப்பரவிற்றாக வினைமுடிக்க.
இப்பாட்டுத் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் மண்ணசையாற்-சென்று பொருதலின், இப்போர் வஞ்சியாகலின், @ வஞ்சிக்குக் கொற்றவை நிலையுண்மையின், கொற்றவையை வெற்றிப் பொருட்டுப் பரவுதல் கூறினார்., அது பாலைத்திணைக்கு ஏற்றலின்.
-----
# எழுவர் பெயரையும் மதுரைக்காஞ்சி, 55-6 -ஆம் அடிகளுக்குக் காட்டிய அடிக்குறிப்புக்களாலுணரலாகும்.
@. பு. வெ. 40.
வெண்பா.
#வாடை நலிய வடிக்கண்ணா @டோணசைஇ
ஓடை மழகளிற்றா னுள்ளான்கொல்- கோடல்
முகையோ டலமர முற்றெரிபோற் பொங்கிப்
பகையோடு பாசறையு ளான்.
------------
#. இவ்வெண்பா, புறப்பொருள் வெண்பாமாலையில் வாடைப் பாசறை யென்னும் துறைக்கு (170) உதாரணமாகக் காட்டிய செய்யுள்.
@. பி-ம் 'தோணசை'
பாண்டியன் நெடுஞ்செழியனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடிய நெடுநல்வாடைக்கு மதுரை ஆசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியர் செய்த உரை முற்றிற்று.
---------