தமிழ் இன்பம்
(கட்டுரைத் தொகுப்பு)
ரா.பி.சேதுப்பிள்ளை எழுதியது.
tamiz inpam
of rA. pi. cEtu piLLai
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Tamil Virtual Academy for providing a scanned image
version of this work for the etext preparation.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2014.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
தமிழ் இன்பம் (கட்டுரைத் தொகுப்பு)
(சாகித்ய அகாதமி விருது பெற்ற கட்டுரைத் தொகுப்பு)
ரா.பி.சேதுப்பிள்ளை எழுதியது.
௨
Source:
தமிழ் இன்பம்
டாக்டர் ரா.பி. சேதுப்பிள்ளை
பேராசிரியர், சென்னைப் பல்கலைக் கழகம்
பழனியப்பா பிரதர்ஸ்
14 பீட்டர்ஸ் ரோடு, சென்னை 600 014
15ம் பதிப்பு 2007, சென்னை
பதிப்பு ஏசியன் பிரிண்டர்ஸ், சென்னை 600 004
----
பொருளடக்கம்
முதற்பதிப்பின் முன்னுரை
I. மேடைப் பேச்சு
1. தமிழாசிரியர் மகாநாடு 1
2. புறநானூறு மகாநாடு 6
3. வேளாளப் பெருமக்கள் மகாநாடு 24
4. தமிழ்த்திருநாள் 33
5. தமிழ் இசை விழா 41
II. இயற்கை இன்பம்
6. பொங்கலோ பொங்கல் 52
7. சித்திரை பிறந்தது 56
8. தமிழ்த் தென்றல் 58
9. திருக்குற்றாலம் 62
10. பழகு தமிழ் 67
III. காவிய இன்பம்
11. காதலும் கற்பும் 72
12. கண்ணகிக் கூத்து 80
13. சிலம்பின் காலம் 86
14. அமுத சுரபி 94
15. மாதரும் மலர்ப் பொய்கையும் 99
IV. கற்பனை இன்பம்
16. முருகனும் முழுமதியும் 105
17. பயிர் வண்டும் படர்கொடியும் 110
18. நல்ல மரமும் நச்சு மரமும் 115
19. சிவனடியார் முழக்கம் 122
20. சரம கவிராயர் 128
V. அறிவும் திருவும்
21. காயும் கனியும் 141
22. சேரனும் கீரனும் 146
23. பாரியும் மாரியும் 150
24. அழகும் முத்தும் 155
25. வண்மையும் வறுமையும் 163
VI. மொழியும் நெறியும்
26. தமிழும் சைவமும் 169
27. தமிழும் சாக்கியமும் 177
28. இறையவரும் இன்னுயிரும் 186
29. சோலைமலைக் கள்ளன் 191
30. தெய்வம் படும் பாடு 196
VII. இருமையில் ஒருமை
31. ஆண்மையும் அருளும் 201
32. கர்ணனும் கும்பகர்ணனும் 208
33. காளத்தி வேடனும் கங்கை வேடனும் 215
34. பாரதப் பண்பாடு 226
35. இருமலையும் தமிழ் மலையே 231
VIII. பாரதியார் பாட்டின்பம்
36. செந்தமிழ் நாடு 238
37. முப்பெரும் கவிஞர் 242
38. கலையின் விளக்கம் 246
39. பண்டாரப் பாட்டு 252
40. தமிழ்த் தாய் வாழ்த்து 257
----------
முதற்பதிப்பின் முன்னுரை
தமிழே இன்பம், இன்பமே தமிழ். கம்பன், சேக்கிழார், திருப்புகழ், அருட்பா போன்ற நூல்களைப் படித்தால் இந்த உண்மை விளங்கும். இவை செய்யுள்கள். உரைநடையில் தமிழின்பம் நுகர வேண்டுமானால் திரு.வி.க, சேதுப்பிள்ளை ஆகிய இரு புலவர்களின் செந்தமிழைச் செவிமடுக்க வேண்டும். "செந்தமிழுக்குச் சேதுப்பிள்ளை" என்றும் சொல்லலாம். அவர் பேச்சு அளந்து தெளிந்து குளிர்ந்த அருவிப் பேச்சு. அவர் எப்பொருளை எடுத்து விளக்கினாலும், அது மனத்திரையில் சொல்லோவியமாக நடமாடும். அவர் எழுதிய "வேலும் வில்லும்", "ஊரும் பேரும்" முதலிய நூல்கள் தமிழின்பத் தேன் துளிகளாகும்.
மற்றொரு நூல் இதோ இருக்கின்றது! இதன் பெயரே "தமிழின்பம்" என்றால் இதை இன்பத்துள் இன்பம் என்று சொல்ல வேண்டும். இதில் உள்ள கட்டுரைகள் தமிழுக்கும், பொருளாராய்ச்சிக்கும் பயன்படும் அரிய சொல்லணிகளாகும். மேடைப் பேச்சு எப்படியிருக்க வேண்டும்; கட்டுரைகள் எப்படி அமைய வேண்டும் என்பதை இந்நூல் மாணவர்களுக்கு நன்கு விளக்கும். புறநானூறு, சிலப்பதிகாரம், கந்த புராணம், திருக்குறள், கம்ப ராமாயணம், பெரியபுராணம் முதலிய பழைய நூல்களின் சுவை இக்கட்டுரைகளில் துளும்புகின்றது. கண்ணகிக் கூத்து, சேரனும் கீரனும், அறிவும் திருவும், தமிழும் சைவமும், ஆண்மையும் அருளும், கர்ணனும் கும்பகர்ணனும், காளத்தி வேடனும் கங்கை வேடனும் முதலிய கட்டுரைகள், படிக்கப் படிக்கத் தெவிட்டாது இனிக்கின்றன. தமிழர் படித்துப் படித்துப் பயன் பெறுக!
எண்ணுறும் போது தமிழையே யெண்ணீர்;
இசைத்துழி தமிழையே யிசைப்பீர்;
பண்ணுறும் போது தமிழ்ப்பணி தனையே
பழுதறப் பண்ணியின் புறுவீர்;
உண்ணுறும் போதும் உறங்கிடும் போதும்,
உயிருளந் துடித்திடும் போதும்,
கண்ணினு மரிய தமிழையே கருதிக்
காரிய வுறுதிகொண் டெழுவீர்!
எந்தாய் வாழ்க சுத்தானந்த பாரதி
---------
தமிழ் இன்பம்
I. மேடைப் பேச்சு
1. தமிழாசிரியர் மகாநாடு*
(* 1- 3-1946 இல் சென்னையில் நடைபெற்றது
தலைமை உரை
கல்வித்துறை அமைச்சர் அவர்களே! ஆசிரியத் தோழர்களே!
'கற்றாரைக் காண்பதுவும் நன்று; கற்றார் சொற் கேட்பதுவும் நன்று; கற்றாரோடு இணங்கி இருப்பதுவும் நன்று' என்பர் நற்றமிழ் வல்லார். அந் நலத்தை இம் மாகாணத் தமிழாசிரியர்மாநாட்டில் எனக்குச் சிறப்பாகத் தந்த அன்பர்களை மனமாரப் போற்றுகின்றேன்.
இம் மாநாட்டிலே தமிழ்த்தாயின் மணிக்கொடி ஏறக்கண்டேன்; மனம் களித்தேன். வில்லும் கயலும் வேங்கையும் தாங்கிய மணிக்கொடி, முத்தமிழ் வளர்த்த மூவேந்தரையும் நம் மனக் கண்ணெதிரே காட்டி நிற்கின்றது. அன்பர்களே! இன்று நாம் அனைவரும் கிழக்கு வெளுத்துவிட்டது. இதுவரை மேற்கு நோக்கிய முகங்களெல்லாம் இன்று கிழக்கு நோக்கி நிற்கின்றன. இன்னும் பதினைந்து திங்களில் நாமிருக்கும் நாட்டை நாமே ஆளப்போகின்றோம். இந்திய நாடு இந்தியர்களுக்குச் சொந்தமாகப் போகின்றது. அந்த முறையில் தமிழ்நாடு தமிழருக்கே ஆகும் என்பதில் தடையும் உண்டோ? தமிழ்நாடு தன்னரசு பெறும் என்று எண்ணும்பொழுது தமிழர் உள்ளம் தழைக்கின்றது; தொண்டர் உள்ளம் துள்ளுகின்றது. தமிழ்த்தாய், முன்னாளில் எய்தியிருந்த ஏற்றமும் தோற்றமும் அலை அலையாக மனத்திலே எழுகின்றன.
சேர சோழ பாண்டியர் என்னும் மூன்று குலத் தமிழ் மன்னர், நித்தம் தமிழ்வளர்த்த நீர்மை நம் நினைவிற்கு வருகின்றது. சேரநாட்டு மாளிகையில் மெல்லிய வீரமஞ்சத்தில் கண்ணுறங்கும் தமிழறிஞர் ஒருவருக்குக் கவரி வீசி நிற்கும் காவலனை மனக் கண்ணெதிரே காண்கின்றோம். சோழ நாட்டு மாநில மன்னன், தமிழ்த்தாயின் திருவடி தொழுது, 'நான் பண்டித சோழன்' என்று இறுமாந்து பேசும் இனிய வாசகத்தைக் கேட்கின்றோம். சங்கத் தமிழ் மணக்கும் மதுரையில் அரியாசனத்தில் அமர்ந்து, ஆசிரியரின் சிறப்பையும், அவர்களை ஆதரித்தற்குரிய முறையையும் அழகிய பாட்டால் எடுத்துரைக்கும் பாண்டியனைப் பார்க்கின்றோம். "உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும், பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே" என்று பாண்டியன் அன்று பிறப்பித்த ஆணை என்றென்றும் தமிழ்நாட்டில் நின்று நிலவுதல் வேண்டும் என்று ஆசைப்படுகின்றோம்.
மூவேந்தர் காலத்திற்குப் பின்பு நம் தாய் மொழிக்கு நேர்ந்த சிறுமையை நினைத்தால் நெஞ்சம் உருகும். வேற்றரசர் ஆட்சி இந்நாட்டில் வேரூன்றிற்று. அவர் மொழியாகிய ஆங்கிலம் ஆதிக்கம் பெற்றது. எல்லாப் பாடங்களும் ஆங்கிலம் ஆதிக்கம் பெற்றது. எல்லாப் பாடங்களும் ஆங்கில மொழியிலே பயிற்றப்பட்டன. ஆங்கிலமாது களிநடம் புரிந்த கல்விச் சாலைகளில் தமிழ்த்தாய் நிலையிழந்து, தலை கவிழ்ந்து, ஒடுங்கி ஒதுங்கி நிற்பாளாயினாள். தமிழ்ஆசிரியர்களின் உள்ளம் இடிந்தது ; ஊக்கம் மடிந்தது.புகைபடிந்த ஓவியம்போல் புலவர் மணிகள் பொலிவிழந்தார்கள். தமிழ் மாணவர்களும் தமிழை எள்ளி நகையாடத் தொடங்கினர் ; அல்லும் பகலும் ஆங்கிலத்தைக் கற்று , ஆங்கிலேயருடைய நடையுடைகளில் மோகமுற்று , தாய்மொழியைப் பழித்தும் இழித்தும் பேசுவாராயினர். இவ்வாறு , கட்டழிந்து பதங் குலைந்து கிடந்த தமிழ் நாட்டில் தமிழ்க்கலை விளக்கம் அவிந்து போகாமல் பாதுகாத்தவர் தமிழாசிரியர்களேயாவர். மெய் வருத்தம் பாராது , பசி நோக்காது, அருமையும் கருதாது, அவமதிப்பும் கொள்ளாது, அன்று தமிழ்த்தாயின் பொன்னடி போற்றிநின்ற தமிழாசிரியரை இன்று மறக்கலாகுமோ ?
'ஆங்கில ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட கல்வி முறை இந்நாட்டு முன்னேற்றத்திற்கு ஏற்ற தன்று; அதனை மாற்றியே தீரவேண்டும்' என்று இப்போது நல்லறிஞர் எல்லோரும் ஒன்றுபட்டுக் கூறுகின்றார்கள். இனி வருகின்ற தமிழரசில் கலைகள் எல்லாம் தமிழ் மொழியின் வாயிலாகவே பயிற்றப்படும் என்பது திண்ணம். அந்த முயற்சியில் கல்வி அமைச்சர் ஈடுபட்டிருக்கின்றார். இப்பொழுது அவர் வகுத்துள்ள திட்டம் உயர்தரப்பள்ளிகளுக்கே யாயினும் , அதனோடு நின்றுவிடப் போவதில்லை. கல்லூரியிலும் கலைகளெல்லாம் தாய்மொழியின் மூலமாகவே கற்பித்தல் வேண்டும் என்னும் ஆணையை அவர் ஒல்லையிற் பிறப்பிப்பார் என்று நம்புகின்றோம். அதற்குரிய கலைச்சொற்களை ஆக்கும் பணியில் இப்பொழுதே தமிழறிஞர் தலைப்படல் வேண்டும். கலைச்சொல்லாக்கம் வேகமாகச் செய்யக்கூடிய வேலையன்று. பல்லாற்றானும் பதைப்பற ஆராய்ந்து, தமிழின் நீர்மைக்கு ஏற்றவாறு கலைச்சொற் காணுதலே தமிழ் மொழிக்கு ஆக்கம் தருவதாகும்.
இனி, வருங்காலத்தில் தமிழ் ஆசிரியர்கள் செய்தற்குரிய சிறந்த வேலைகள் பல இருக்கின்றன. குடியரசாட்சியில் பேச்சுக்கும் எழுத்துக்கும் பெருஞ் சிறப்புண்டு. தமிழ்மேடையில் நிகழும் பேச்சுக்களைச் சுருக்கெழுத்திலே எடுக்கும் கலையைத் தமிழாசிரியர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இன்று பத்திரிகையுலகம் பெரும்பாலும் தமிழ்ப் பேச்சுக்களை மதிப்பதில்லை; பிரசுரம் செய்வதில்லை. திருவள்ளுவர் முதலிய புலவரின் நினைவு நாட்கள் பெரும் விழாவாகக் கொண்டாடப்படுகின்றன. அவ்விழாக்களிலே பெரும் புலவர்கள் பேசுகின்றார்கள் ; பல்லாயிரக் கணக்கான மக்கள் வந்து கேட்கின்றார்கள். கிளர்ச்சி பெறுகிறார்கள்; பயனடைகிறார்கள். ஆனால் , அந் நிகழ்ச்சிகளைப் பற்றித் தமிழ்நாட்டு ஆங்கிலப் பத்திரிகைகளில் விவரமாக ஒன்றும் காண முடியாது, பத்திரிகைகளிலும் சிலவற்றைத் தவிர, மற்றவை ஏனோ தானோ என்றுதான் அந்நிகழ்ச்சிகளை வெளியிட்டிருக்கும். இந்த நிலையை மாற்றவே வேண்டும். அதனை மாற்றும் ஆற்றல் தமிழறிஞரிடம் இருக்கின்றது. நாடெங்கும் தமிழார்வம் நிறைந்துவிட்டால் பத்திரிகைகள் தாமே தமிழிற் கவிந்து வரும். தமிழ்ப் பேச்சுக்களைப் பரப்புகின்ற பத்திரிகைகளைப் பெருவாரியாகத் தமிழ் மக்கள் ஆதரிக்கத் தலைப்பட்டால் இன்றுள்ள நிலை நாளையே மாறிவிடும்.
ஆதலால் , தமிழ் அறிஞர்களே ! தமிழ் நாடெங்கும் தமிழ்ச்சங்கம் நிறுவுங்கள்; தமிழ்ப்பாடம் சொல்லுங்கள்; கலைச்செல்வத்தை வாரி வழங்குங்கள்; தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்யுங்கள். இவ்விதம் ஒல்லும் வகையால் நாம் ஒவ்வொருவரும் பணி செய்வோமானால் இன்னும் பத்தாண்டுகளில் தமிழ் நாடு புத்துயிர் பெற்றுவிடும். அக் காலத்தில் நாடு முற்றும் தமிழுணர்ச்சி பொங்கித் ததும்பிப் பூரணமாய் நிற்கும். கல்லூரிகளில் நல்லாசிரியரகள் எல்லோரும் தமிழறிஞராயிருப்பர். பல்கலைக் கழகங்களில் நக்கீரர் போன்ற நற்றமிழ்ப் புலவர் தலைவராக வீற்றிருப்பர். 'எந்த மொழியும் நமது சொந்த மொழிக்கு இணையாகாது' என்று தமிழ் நாட்டு இளைஞர் செம்மாந்து பேசுவர்; 'தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்வோம்' என்று முரசு கொட்டுவர். எட்டுத் திசையிலும் தமிழ் நாடு ஏற்றமுற்று விளங்கும். அந்த நிலையினை இன்று எண்ணிப் பாரீர் ! அதனை எய்தியே தீர்வோம் ; பணிசெய்ய வாரீர் !
-----------
2. புறநானூறு மகாநாடு *
(* சென்னையில், தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழகத்தினரால் நடத்தப்பெற்றது.)
தலைமை உரை
மெய்யன்பர்களே ! செந்தமிழ்ச் செல்வர்களே !
இந் நாள் தமிழ்நாட்டுக்கு ஒரு நன்னாள் ஆகும். தமிழ்த் தாயைப் போற்றும் அன்பரும் அறிஞரும் நூற்றுக்கணக்காக இங்கே நிறைந்திருக்கின்றார்கள். தமிழ் நாடெங்கும் தமிழ் முழக்கம் செழித்து வருகின்றது. எங்கும் தமிழ்மணம் கமழ்கின்றது. சிந்தைக்கினிய செவிக்கினிய செந்தமிழைத் தமிழ்நாட்டார் சீராட்டத் தொடங்கி விட்டார்கள். பண்டைத் தமிழ் நூல்களைப் படிப்பதற்கும, பாதுகாப்பதற்கும் தொண்டர் பல்லாயிரவர் துடித்துக்கொண்டிருக்கிறார்கள். இத்தகைய உணர்ச்சியின் வடிவமே இம்மகாநாடு. தலைசிறந்த ஒரு தமிழ் நூலின் திறத்தினை எடுத்துரைப்பதே இம் மகாநாட்டின் கருத்து. புறநானூறு என்னும் பெருமை சான்ற நூலைப் பற்றிப் புலவர் பலர் இங்கே பேச இசைந்துள்ளார்கள். அவர்தம் நல்லுரைக்கு முன்னுரையும் பின்னுரையும் நிகழ்த்தும் பேறு எனக்குக் கிடைத்திருக்கின்றது. இம்மகாநாடு சிறப்புற நடைபெறுவதற்கு உங்கள் அன்பையும் ஆதரவையும் வேண்டுகின்றேன்.
பழந் தமிழ்நாட்டின் தன்மையை எடுத்துக்காட்டும் தொகை நூல்களில் தலைசிறந்த புறநானூறு என்பர். அந்நூலில் படைத்திறம் வாய்ந்த பெருவேந்தரைக் காணலாம்; கொடைத்திறம் வாய்ந்த வள்ளல்களைக் காணலாம்; கற்றறிந்து அடங்கிய சான்றோரைக் காணலாம்; பழந்தமிழ்க் குலங்களையும் குடிகளையும் காணலாம். சுருங்கச் சொல்லின , கலைமகளும் திருமகளும் களிநடம் புரிந்த பழந்தமிழ் நாட்டைப் புறநானூற்றிலே காணலாம்.
கவிதையும் காவலரும்
முற்காலத் தமிழ் மன்னரிற் பலர் பொன்மலர் , மணமும் பெற்றாற் போன்று , புவிச்செல்வத்தோடு கவிச்செல்வமும் உடையராய் விளங்கினார்கள். முத்தமிழ் நாட்டை ஆண்ட சேர சோழ பாண்டியருள் சிலர் பாடிய பாடல்கள் புறநானூற்றிலே காணப்படும். கற்பின் செல்வியாகிய கண்ணகியின் சீற்றத்தால் ஆவி துறந்து அழியாப் புகழ் பெற்ற நெடுஞ்செழியன் என்னும் பாண்டியன், கவிபாடும் திறம் பெற்ற காவலருள் ஒருவன். மக்களாகப் பிறந்தோரெல்லாம் கல்வி கற்று மேம்படல் வேண்டும் என்ற ஆசையை அம் மன்னன் ஒரு பாட்டால் அறிவிக்கின்றான்.
"உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே"
என்ற பாட்டு , அவ்வார்வத்தைக் காட்டுகின்றது.
இனி , சோழநாட்டு அரசனாகிய கோப் பெருஞ் சோழனைச் சிறிது பார்ப்போம். அவனும் கவிபாடும் திறம் பெற்றவன் ; தமிழுணர்ந்த புலவர்களைத் தக்கவாறு போற்றியவன். அச்சோழன் , செல்வத்திலே தனக்கு நிகரான ஒருவரைத் தோழராகக் கொண்டான் அல்லன்; பிசிராந்தையார் என்னும் தமிழ்ப் புலவரையே உயிர் நண்பராகக் கொண்டான். அம்மன்னன் உலக வாழ்க்கையில் வெறுப்புற்று, நாடு துறந்து, உண்ணா நோன்பை மேற்கொண்ட பொழுது அவன் மனம் பிசிராந்தையாரை நாடிற்று. தோழர் வருவார் வருவார் என்று வழிமேல் விழி வைத்து ஆவி காத்திருந்தான் அவன; எப்படியும் பிசிராந்தையார் வந்தே தீர்வாரென்று அருகே இருந்த அன்பரிடம் அகம் குழைந்து கூறினான்.
"செல்வக் காலை நிற்பினும்
அல்லற் காலை நில்லலன்"
என்பது அந் நிலையில் அவன் பாடிய பாட்டு. இங்ஙனம் ஏங்கி நின்ற நல்லுயிர் நீங்கிப் போயிற்று. பிற்பாடு, ஆந்தையார் வந்து சேர்ந்தார்; நிகழ்ந்ததை அறிந்தார்; தாமும் உண்ணா நோன்பிருந்து தம் உயிர்கொண்டு சோழன் நல்லுயிரைத் தேடச் செல்வார் போல ஆவி துறந்தார்.
சேர நாட்டை ஆண்ட மன்னருள்ளும் சிலர் செந்தமிழ்க் கவிபாடும் சிறப்பு வாய்ந்திருந்தனர். அன்னவருள் ஒருவன் சேரமான் இரும்பொறை. அம் மன்னன் செங்கண்ணன் என்ற சோழ மன்னனுடன் பெரும் போர் செய்து தோற்றான். வெற்றிபெற்ற சோழன் சேரமானைப் பிடித்துச் சிறைக் கோட்டத்தில் அடைத்தான். சிறையிடைத் தேம்பிய சேரன் , ஒரு நாள் தாகமுற்று வருந்தினான்; தண்ணீர் தரும்படி சிறை காப்பாளனை வேண்டினான். அவன் காலம் தாழ்த்து , ஒரு கலத்தில் நீர் கொண்டு வந்தான். அத் தண்ணீரைப் பருகி , உயிர் வாழ்வதற்கு அம்மானவேந்தன் மனம் இசையவில்லை, "மானம் அழிந்த பின் வாழாமை முன் இனிது" என்றெண்ணி அவன் உயிர் துறக்கத் துணிந்தான்; காவலாளன் கொடுத்த தண்ணீர்க் கலத்தைக் கையிலே வைத்துக்கொண்டு ஒரு கவி பாடினான் ; உயிர் துறந்தான்.
முற்காலப் போர்முறை
பகைமையும் போரும் எக் காலத்தும் உண்டு. முற்காலப் போர் முனைகளிற் சிலவற்றைப் புற நானூற்றிலே காணலாம். அக் காலத்தில், ஒர் அரசன் மாற்றரசனது நாட்டின்மீது படையெடுத்தால், அந்நாட்டில் வாழும் நல்லுயிர்களை நாசமாக்கக் கருதுவதில்லை. பசுக்களையும், அறவோரையும், பெண்களையும், பிணியாளரையும் , இவர் போன்ற பிறரையும் போர் நிகழும் இடத்தைவிட்டுப் புறத்தே போய்விடும்படி எச்சரித்த பின்னரே படையெடுப்பு நிகழும். இந்த அறப்போர் முறை முதுகுடுமிப் பெருவழுதியிடம் அமைந்திருந்ததாக நெட்டிமையார் என்ற புலவர் பாராட்டுகின்றார். இன்னும் , போர்களத்தில் , வீரர் அல்லாதார் மேலும் , புறங்காட்டி ஓடுவார் மேலும் , புண்பட்டார் மேலும், முதியவர் மேலும் படைக்கலம் செலுத்தலாகாது என்பது பழந்தமிழர் கொள்கை. அன்னார்மீது படைக்கலம் விடுத்த பொருநரைப் 'படை மடம் பட்டோர்' என்று தமிழர் உலகம் பழித்துரைத்தது.
கோட்டை கொத்தளங்கள்
முற்காலத்தில் தமிழரசர்கள் கட்டிய கோட்டைகளும் கொத்தளங்களும் புறநானூற்றிலே குறிக்கப் பட்டுள்ளன. பாண்டி நாட்டிலே, கானப்பேர் என்ற ஊரில் ஒரு பெரிய கோட்டை இருந்தது. ஆழ்ந்த அகழியும், உயர்ந்த மதிலும், நிறைந்த ஞாயிலும், செறிந்த காடும் அக் கோட்டையின் உறுப்புக்கள்.
"கதிர்நுழை கல்லா மரம்பயில் கடிமிளை
அருங்குறும் புடுத்த கானப் பேர்எயில்"
என்று அதன் பெருமையைப் பாடினார் ஐயூர் மூலங்கிழார். எயில் என்பது கோட்டை. கானப்பேர் எயில் , வேங்கை மார்பன் என்ற வீரனுக்குரியதாக இருந்தது. அக் கோட்டையைத் தாக்கி வேங்கையை வென்றான் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி; அவ் வெற்றியின் காரணமாகக் "கானப்பேர் எயில் கடந்த உக்கிரப் பெருவழுதி" என்று பாராட்டப்பெற்றான். இந்நாளில் கானப்பேர் என்பது காளையார் கோவில் என வழங்குகின்றது.
கானப்பேர் எயிலுக்கு அருகே ஏழெயில் என்ற கோட்டையும் இருந்ததாகத் தெரிகிறது. ஒருகால் அக்கோட்டையைக் கைப்பற்றினான் நலங்கிள்ளி என்ற சோழன்,
"தென்னம் பொருப்பன் நன்னாட் டுள்ளும்
ஏழெயிற் கதவம் எறிந்துகைக் கொண்டுநின்
பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை"
என்று கோவூர் கிழார் அவனைப் புகழ்ந்துள்ளார். இக் காலத்தில் 'ஏழு பொன் கோட்டை' என வழங்கும் ஊரே பழைய ஏழெயில் என்று கருதப்படுகின்றது.
தொண்டை நாட்டில் முற்காலத்திருந்த இருபத்து நான்கு கோட்டங்களில் ஒன்று எயிற்கோட்டம் என்று பெயர் பெற்றிருந்தது. அக் கோட்டத்தைச் சேரந்ததே காஞ்சி மாநகரம். எயிற்பதி என்று அந்நகரைச் சேக்கிழார் குறித்துப் போந்தார். இன்னும் , சோழநாட்டின் ஆதித் தலைநகராகிய திருவாரூருக்கு அருகே பேரெயில் என்ற பெயருடைய ஊர் ஒன்று உள்ளது. அது தேவாரப்பாடல் பெற்ற பழம்பதி. சோழ மன்னர்கள் அவ்விடத்தில் பெருங்கோட்டை கட்டியிருந்தார்கள் என்று தோற்றுகிறது. அவ்வூர் ஓகைப்பேரையூர் எனவும் வழங்கும்.
கோட்டையின் பல கூறுகளும் உறுப்புக்களும் புறப்பாடல்களால் புலனாகின்றன. கோட்டையின் சிறந்த அங்கம் மதில். மதிலைக் குறிக்கும் தமிழ்ச் சொற்கள் பலவாகும். அவற்றுள் ஆரை, எயில், இஞ்சி, நொச்சி, புரிசை என்பன. புறநானூற்றில் வழங்குகின்றன. மதில்களில் செப்புத் தகடுகளைச் செறித்துத் திண்மை செய்யும் முறை முற்காலத்தில் கையாளப் பட்டதாகத் தெரிகின்றது, இலங்கை மாநகரின் திண்ணிய மதில்களின் திறத்தினையும், அம் மதிலாற் சூழப்பட்ட நகரத்தின் செழுமையையும், 'செம்பிட்டுச் செய்த இஞ்சித் திருநகர்' என்று கூறிப்போந்தார் கம்பர். தென்பாண்டி நாடாகிய திருநெல்வேலியில், பாண்டிய மன்னர் கட்டியிருந்த கோட்டையின் குறிகள், பல இடங்களில் உள்ளன. அவற்றுள் ஒன்று பொருளை ஆற்றின் கரையில் அமைந்த செப்பறையாகும். செப்பறை என்பது செம்பினால் செய்த அறை என்ற பொருளைத் தரும். செப்பறை என்ற இடத்தில் இக்காலத்தில் குடிபடை ஒன்றுமில்லை. அழகிய கூத்தர் கோவில் ஒன்றே காணப்படுகின்றது. ஆயினும், அக்கோவிலைச் சுற்றிச் சிதைந்த மதில்களும், மேடுகளும் உண்டு. செப்பறைக்கு எதிரே, ஆற்றின் மறுகரையில், மணற்படை வீடு என்ற ஊர் அமைந்துள்ளது. படை வீடு என்பது அரசனது படை தங்கி இருக்கும் பாசறையாகும். பாண்டிய மன்னன் சேனை தங்கிய படைவீட்டுக்கு அண்மையில் செப்பறை அமைந்திருத்தலை நோக்கும் பொழுது, அவ்விடம் பாண்டியனார்க்குரிய கோட்டைகளுள் ஒன்றாக இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
மதிலுறுப்புகளில் ஞாயில் இன்றியமையாததொன்றென்பது தமிழ்நாட்டார் கருத்து. படையெடுத்து வரும் பகைவன்மீது, மறைந்துநின்று, அம்பு எய்வதற்குரிய நிலையங்களே ஞாயில்கள் எனப்படும். மதிலுக்கு ஞாயிலே சிறந்த உறுப்பென்பது புறநானூற்றுப் பாட்டு ஒன்றால் விளங்குகின்றது.
"மதிலும் ஞாயில் இன்றே; கிடங்கும்
நீர்இன் மையின் கன்றுமேய்ந்து உகளும்;
ஊரது நிலைமையும் இதுவே"
என்று ஒரு புலவர் கோட்டையின் நிலையைக் கூறுகின்றார். பாழாய்க் கிடந்த ஒரு பழங் கோட்டையின் தன்மையை இப் பாட்டு நன்கு எடுத்துக் காட்டுகின்றது. கோட்டையைச் சூழ்ந்த அகழியில் தண்ணீர் இன்றிப் புல்லும் புதரும் செறிந்திருக்கின்றன. மதில்கள் ஞாயில் இன்றிப் பாழ்பட்டிருக்கின்றன என்பது இப்பாட்டின் கருத்து.
அகழி சூழ்ந்த இடத்தைக் கிடங்கில் என்று கூறுவர். முற்காலத்தில், கிடங்கில் என்னும் கோட்டை, கோடன் என்ற சிற்றரசனுக்கு உரியதாக இருந்தது. பத்துப் பாட்டுள் ஒன்றாகிய சிறுபாணாற்றுப்படையில் பாராட்டப்படுகின்ற தலைவன் இவனே. இவ்வரசனை நன்னாகனார் பாடிய பாட்டுப் புறநானூற்றிலே தொகுக்கப்பட்டிருக்கின்றது. கிடங்கில் என்னும் கோட்டை, இப்பொழுது திண்டிவனத்திற்கருகே அழிந்துகிடக்கின்றது. சிதைந்த அகழியும் இடிந்த மதிலும் அதன் பழம் பெருமையை எடுத்துரைக்கின்றன. 'திண்டிவனம்' என்ற சொல் 'புளியங்காடு' என்ற பொருளைத் தரும். அவ் வனம், முற்காலத்திருந்த கிடங்கிற் கோட்டையின் காட்டரணாக இருந்தது போலும்! அக் காடு நாளடைவில் நாடாயிற்று. பழைய கோட்டையும் ஊரும் அமைந்திருந்த இடம் பாழ்பட்டது.
திண்டிவனத்திற்கு மேற்கே பதினேழு மைல் தூரத்தில் செஞ்சிக் கோட்டை அமைந்திருக்கின்றது. செஞ்சி என்ற சொல்லின் பொருள் செவ்வையாக விளங்காவிடினும் கோட்டை மதிலைக் குறிக்கும். 'இஞ்சி' என்பது அவ்வூர்ப் பெயரிலே குழைந்து கிடப்பதாகத் தோன்றுகிறது.
தரையில் அமைந்த கோட்டைகளேயன்றி, வானத்தில் ஊர்ந்து செல்லும் கோட்டைகளையும் முற்காலத் தமிழர் அறிந்திருந்தனர். ஆகாயக் கோட்டைகளை 'தூங்கு எயில்' என்று குறித்தார்கள். ஆகாய வழியாகப் போந்த மூன்று பெரிய கோட்டைகளை ஒரு சோழ மன்னன் தகர்த்தெறிந்த செய்தி, புறநானூறு முதலிய பழந் தமிழ் நூல்களால் விளங்கும். பகைவரை அழிக்கும் படைத் திறமைக்கு, அவன் செயலையே எடுத்துக்காட்டாகப் புலவர்கள் பாடினர்.
இத்தகைய அருஞ்செயல் புரிந்த சோழனது இயற்பெயர் தெரியவில்லை. அவன், எப்படையைக் கொண்டு ஆகாயக் கோட்டையைத் தகர்த்தான் என்பதும் துலங்கவில்லை. ஆயினும், அவனுக்கு அமைந்துள்ள சிறப்புப் பெயரைப் பார்க்கும்பொழுது, அவன் தோள் வலிமையை அக் காலத்தினர் பெரிதும் பாராட்டினர் என்பது புலனாகும். "தூங்கும் எயில் எறிந்த தொடித்தோட் செம்பியன்" என்பது அவனது சிறப்புப் பெயராக விளங்கிற்று.
குறுநில மன்னர்
புறநானூற்றிலே புகழப்படுகின்ற குறுநில மன்னரிற்பலர், குன்று சார்ந்த நாடுகளில் வாழ்ந்தனரெனத் தெரிகின்றது. பாண்டிநாட்டில், பழனிமலையை ஆண்ட தலைவன் பேகன்; பறம்பு மலையை ஆண்டவன் பாரி; கோடை மலையை ஆண்டவன் கடிய நெடு வேட்டுவன் ; பொதிய மலையை ஆண்டவன் ஆய் அண்டிரன். சோழ நாட்டில், வல்வில் ஓரி என்பவன் கொல்லிமலையை ஆண்டான்; அதிகமான் குதிரை மலையில் ஆட்சி புரிந்தான்; குமணன் முதிர மலையின் கொற்றவன்; பெருநள்ளி என்பவன் தோட்டிமலையின் தலைவன். இச்சிற்றரசரிற் சிலர், பேரரசரினும் சாலப் புகழ்பெற்று விளங்கினர்; வறிஞரை ஆதரித்தனர்; அறிஞரைப் போற்றினர். பாண்டி நாட்டிலுள்ள பறம்பு மலையையும், அதை அடுத்த முந்நூறு ஊர்களையும் ஆண்டு வந்தான் பாரி. அவன் மனத்தில் அமைந்த அருளுக்குக் கங்கு கரையில்லை. அவன் நாவில், இல்லை யென்ற சொல்லே இல்லை. பாரியின் பெருந்தகைமையைப் பொய்யறியாக் கபிலர் புகழ்ந்து போற்றினார்.
பொதியமலைத் தலைவனாய் விளங்கிய ஆய் என்பவன் மற்றொரு வள்ளல். வறுமையால் வாடி வந்தடைபவரைத் தாயினும் சாலப் பரிந்து ஆதரித்த ஆயின் பெருமையைப் புறநானூற்றால் அறியலாம்,
"இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்எனும்
அறவிலை வணிகன் ஆய்அலன்"
என்று அவன் மனப்பான்மையை முடமோசியார் என்னும் புலவர் விளக்கிப் போந்தார். இரப்போர்க்கு இல்லை என்னாது கொடுத்தான் அவ்வள்ளல். ஆனால், கைப்பொருளைக் கொடுத்து, அறத்தை அதற்கு ஈடாகக் பெறும் வணிக னல்லன் அவன். கொடுப்பது கடமை, முறைமை என்ற கருத்து ஒன்றே அவன் உள்ளத்தில் நின்றது. இத்தகைய செம்மனம் படைத்தவர் இவ்வுலகில் நூறாயிரவருள் ஒருவர் அல்லரோ? பாரியும் ஆயும் போன்றவர் பலர் பண்டைத் தமிழ்நாட்டில் வாழ்ந்தார்கள். கொல்லி மலையை ஆண்ட ஓரியும், மலையமான் என்னும் திருமுடிக்காரியும், மழவர் கோமனாகிய அதிகமானும், பழனிமலைத் தலைவனாகிய பேகனும், கொங்கர் கோமானாகிய குமணனும், தோட்டிமலை நாடனாகிய நள்ளியும், கொடையிற் சிறந்த குறுநில மன்னர்கள்.
பழைய குலமும் குடியும்
பழந்தமிழ் நாட்டில் விளங்கிய குலங்களையும் குடிகளையும் புறநானூற்றிலே காணலாம். மழவர் என்பவர் ஒரு குலத்தார், அவர், சிறந்த வீரராக விளங்கினர். சோழநாட்டில் கொள்ளிட நதியின் வடகரையில் உள்ள திருமழபாடி என்னும் பழம்பதி. அவர் பெயரைத் தாங்கி நிற்கின்றது. திருமழபாடி, மூவர் தமிழ் மாலையும் பெற்று மிளிரும் மூதூராகும்; 'பொன்னார் மேனியனே' என்று எடுத்து, 'மன்னே, மாமணியே, மழபாடியுள் மாணிக்கமே, அன்னே, உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே' என்று, சுந்தரமூர்த்தி புகழ்ந்து போற்றிய பெருமை சான்றது. மழவர்பாடி என்பதே மழபாடியாயிற்று. மழவர் குலத்திலே அதிகமான் என்னும் பெருமகன் தோன்றினான். அவன், சிவநெறியில் நின்ற சீலன்; பொய்யறியாப் புலவர்களால் புகழப் பெற்றவன். அவன் படைத்திறத்தைப் பாடினார் பாணர்; கொடைத்திறத்தைப் பாடினார் ஒளவையார். இக்காலத்தில் சேலம் நாட்டில் தர்மபுரி என வழங்கும் தகடூர், அவன் கடிநகராய் இருந்தது. அவ்வூருக்கு அருகே அதிகமான் ஒரு கோட்டை கட்டினான். அஃது அதிகமான் கோட்டை என்று பெயர் பெற்றது. இந்நாளில் அதமன் கோட்டை என வழங்குகின்றது, இன்னும், கெடில நதியின் வடகரையில் அமைந்த திருவதிகை என்னும் பாடல் பெற்ற பழம்பதியும் அதிகமானோடு தொடர்புடையதாகத் தோற்றுகின்றது.
மற்றொரு பழந்தமிழ் வகுப்பார் பாணர். பண்ணோடு இசைபாட வல்லவர் பாணர் எனப் பட்டார். பாணரை, அக்காலத்துப் பெருநில மன்னரும் குறுநில மன்னரும் வரிசை அறிந்து ஆதரித்தார்கள். சோழ நாட்டின் தலைநகராய் விளங்கிய காவிரிப்பூம் பட்டினத்தில் பெரும்பாணர் சிறந்து வாழ்ந்தனர் என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது. யாழில் இசைபாடும் பாணர் யாழ்ப்பாணர் என்று பெயர் பெற்றார். சிவனடியார்களுள் ஒருவராகிய திருநீலகண்ட யாழ்ப்பாணர் இக்குலத்தவரே. திருஞானசம்பந்தர் பாடிய தேவாரப் பாடல்களை யாழில் அமைத்துப் பாடி இவர் இன்புற்றார் என்று திருத்தொண்டர் புராணம் கூறுகின்றது, இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் என்ற நகரம் யாழ்ப்பாணர் பெயரைத் தாங்கியுள்ளது.
இப்பொழுது இக் குலத்தார், தமிழ்நாட்டில் இருப்பதாகத் தெரியவில்லை. ஆயினும், பழைய சேர நாடாகிய மலையாளத்தில், பாணர் குலம் இன்றும் காணப்படுகின்றது. ஓணத் திருநாளில் பாணர், தம்மனைவியருடன் சிறு பறையும் குழித்தாளமும் முழக்கிக்கொண்டு, இல்லந்தொறும் போந்து இசை பாடுவார். அன்றியும், திருச்சூர்க் கோவிலுக்கு வெளியே நின்று பாணர்கள் பாட்டிசைத்துப் பரிசு பெறும் வழக்கம் இன்றும் உண்டு என்பர்.
இனி, புறநானூற்றிலே பேசப்படுகின்ற வையாவிக்கோப் பெரும்பேகன் என்பவன் ஆவியர் குடியில் பிறந்தவன்.ஆவியர் பெருமகன் என்று சிறுபாணாற்றுப் படை அவனைப் போற்றுகின்றது. ஆவியர் குடியிலே தோன்றிய அரசர்களால் ஆளப்பட்டமையால் ஆவிநன்குடி என்பது பழநிக்குப் பெயராயிற்று. நக்கீர தேவர் அருளிய திருமுருகாற்றுப்படையில், திருஆவிநன்குடி, முருகனுக்குரிய ஆறு வீடுகளில் ஒன்றாகப் போற்றப்பட்டுள்ளது. வையாபுரி என்பது அதற்கு மற்றொரு பெயர். ஆவியர் குடியில் தோன்றிய 'வையாவிக்கோ'வால் ஆளப்பட்ட நகரம் 'வையாவிபுரி' என்று பெயர் பெற்றுப் பின்பு வையாபுரி ஆயிற்று என்பர்.
ஆவியரைப் போலவே ஓவியர்கள் என்பாரும் பழந்தமிழ் நாட்டில் இருந்தனர். ஓவியர் குடியில் பிறந்து சிறந்து வாழ்ந்த சிற்றரசன் ஒருவனை, 'ஓய்மான் நல்லியக்கோடன்' என்று புறநானூறு குறிக்கின்றது. ஓய்மான் ஆண்ட நாடு 'ஓய்மானாடு' என்று வழங்கலாயிற்று. இந்நாளில் திண்டிவனம் என வழங்கும் ஊர், ஓய்மானாட்டைச் சேர்ந்ததென்று சாசனங்களால் அறிகின்றோம்.
புலவர் வாழ்க்கை
அக் காலத்துப் புலவர்கள் தம்மை மதியாத மன்னர் அளித்த கொடையை அறவே வெறுத்தார்கள். பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர், கோடைமலைத் தலைவனாகிய கடிய நெடு வேட்டுவனைக் காணச் சென்றார். அவன், உரிய காலத்தில் பரிசில் அளியாது காலம் தாழ்த்தான். அது கண்ட சாத்தனார்.
"முற்றிய திருவின் மூவர் ஆயினும்
பெட்பின் றீதல் யாம்வேண் டலமே"
என்றார்; "கல்வியின் பெருமை யறிந்து பேணிக்கொடுக்கின்ற கொடையையே யாம் பெறுவோம். அன்பற்றவர், முடியுடை வேந்தராயினும், அவர் அளிக்கும் கொடையை ஏற்றுக்கொள்ளோம்" என்று கூறி அவனை விட்டு அகன்றார்,
பெருஞ்சித்திரனார் என்ற புலவர், ஒரு நாள் அதிகமானைக் காணச் சென்றார். அவன், புலவரை மதிக்கும் பெற்றி வாய்ந்தவனாயினும், அப்போது அரசாங்க வேலையில் ஈடுபட்டிருந்தானாதலால், புலவருக்குரிய பரிசிற் பொருளை மற்றொருவரிடம் கொடுத்தனுப்பினான், அப்பரிசைக் கண்ட சித்திரனார் சீற்றம் கொண்டார் ; என்னை யாரென்று நினைத்தான் அதிகமான்? அவனைக் கண்டு பரிசு பெற வந்தேனே அன்றிப் பாராமுகமாக அவன் கொடுக்கும் பொருளைக் கொண்டு போக வந்தவன் அல்லேன்யான். பாட்டைப் பாடிவிட்டு, அதற்கு ஈடாகப் பரிசில் பெற்றுச் செல்பவன் வாணிகப் புலவன் ஆவான். அவ்வகையாரைச் சேர்ந்தவன் அல்லன் யான். கல்வியின் சுவையறிந்து அன்புடன், அரசன் தினையளவு பொருள் தரினும் அதனைப் பெரிதாக ஏற்று மகிழ்வேன்' என்று உணரச்சி ததும்பப் பாடினார்.
இசைத் தமிழ் வளர்ச்சி
இயற்றமிழை ஆதரித்த பண்டைத் தமிழரசர்கள் இசைத் தமிழையும் நன்கு போற்றினார்கள். அக்காலத்து இசைக் கருவிகளில் சிறந்தன குழலும் யாழும். யாழ், பலதிறப்பட்டதாக அமைந்திருந்தது. பாணர் என்பவர் சீறியாழ் என்னும் சிறிய யாழைத் தாம் செல்லும் இடமெல்லாம் எடுத்துச் சென்றனர். சிறிய யாழ், எப்பொழதும் அவர் கையகத்து இருந்தமையால் அது 'கைவழி' என்னும் பெயர் பெற்றது. இசைவாணராகிய பாணரைப் பெருநள்ளி என்ற குறுநில மன்னன் அன்போடு ஆதரித்தான். அவனைப் பாடினார் வன்பரணர் என்ற புலவர்:
"நள்ளி ! வாழியோ நள்ளி ! நள்ளென்
மாலை மருதம் பண்ணிக் காலைக்
கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி
வரவுஎமர் மறந்தனர்; அதுநீ
பரவுக்கடன் பூண்ட வண்மை யானே !"
என்ற பாட்டின் நயம் அறியத் தக்கதாகும். 'அரசே ! பாணர்க்கு நீ பெருங்கொடை கொடுக்கின்றாய். உன் உணவை உண்டு மயங்கி, இசை மரபினை மறந்து விட்டனர். இசைப்பாணர்; கைவழி யாழிலே மாலைப் பொழுதிலே பாடுதற்குரிய செவ்வழிப் பண்ணைக் காலைப் பொழுதிலே பாடுகின்றார்கள்; காலையில் பாடுதற்குரிய மருதப் பண்ணை மாலையில் பாடுகின்றார்கள்; இதற்குக் காரணம் நின் கொடையே' என்று கூறினார் புலவர். இதனால், பண்டை இசைவாணர், பண்களை வகுத்திருந்ததோடு, அவற்றைப் பாடுதற்குரிய பொழுதையும் வரையறுத்திருந்தார்கள் என்பது இனிது விளங்குகின்றது, பண்ணமைந்த இசை பாடும் பாணர்க்குத் தமிழரசர் வரிசையறிந்து பரிசளித்தார்கள். வெள்ளி நாரால் தொடுத்த பொற்றாமரை மலர் பாணர்க்கு உரிய உயர்ந்த பரிசாகக் கருதப்பட்டது,
சங்ககாலப் பெண்மணிகள்
அக்காலத்தில் கலையுணர்வு பெற்ற பல பெண் மணிகள் தமிழ்நாட்டில் வாழ்ந்தார்கள், 'பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்' என்பது தமிழ்நாட்டாரது பழங்கொள்கை யன்று என்பதற்குப் புறநானூறு ஒன்றே போதிய சான்றாகும். செவ்விய கவி பாடும் திறம் பெற்ற பெண்பாலார் பாடிய அருமை சான்ற பல பாடல்கள் புறநானூற்றிலே சேர்க்கப்பட்டுள்ளன. கரிகாற் சோழன் வெண்ணிப் போரக்களத்திலே பெற்ற வெற்றியை வியந்து பாடினாள் ஒரு பெண். அவள் குயவர் குலத்திற் பிறந்தவள். 'வெண்ணிக் குயத்தியர்' என்று புறநானூற்றிலே அம்மாது போற்றப்படுகின்றாள். இன்னும், நப்பசலையார் என்ற நல்லிசைப் புலமை மெல்லியலார் மலையமான் திருமுடிக் காரியையும் பிறரையும் பாடியுள்ளார். இவர் தென்பாண்டி நாட்டிலுள்ள கொற்கை மூதூரைச் சூழ்ந்த மாறோக்கம் என்ற நாட்டிலே தோன்றியவர். இன்னும், அக்காலத்திய அரசராலும் அறிஞராலும் பெரிதும் பாராட்டப்பெற்ற ஒளவையாரை அறியாதார் யாரோ? ஆகவே, ஆண் பெண்ணாகிய இரு பாலாரும் முற்காலத்தில் கல்வியறிவால் மேம்பட்டிருந்தார்கள் என்பதில் சிறிதும் ஐயம் இல்லை.
வீரத் தாய்மார்கள்
இன்னும், வெம்மை சான்ற போர்க்களத்தில், அஞ்சாது நின்று அமர் புரியுமாறு, தாம் பெற்ற அருமை மைந்தரை ஊக்கி அனுப்பிய வீரத்தாயரும் அக்காலத்தே விளங்கினர். மாற்றார்க்குப் புறங்கொடாது, மார்பிலே புண்பட்டு இறந்த மைந்தனது மேனியைக் கண்ட நிலையில், பெற்ற போதினும் பெரியதோர் இன்பம் அடைந்தாள் ஒரு தாய். மற்றொரு வீரமாது, முதல் நாள் நடந்த போரில் தமையனை இழந்தாள் மறுநாள் நடந்த போரில் கணவனை இழந்தாள்; பின்னும் போர் ஒழிந்தபாடில்லை. அவள் குடும்பத்தில் சிறு பையன் ஒருவனே எஞ்சி நின்றான். முன்னே இறந்தபட்ட தலைவனையும் தமையனையும் நினைந்து அவள் தளர்ந்தாள் அல்லள்; அருமந்த பிள்ளையை அன்போடு அழைத்தாள்; வெள்ளிய ஆடையை உடுத்தாள்; தலையைச் சீவி முடித்தாள்; வேலைக் கையிலே கொடுத்தாள்; போர்க்களத்தை நோக்கி அவனை விடுத்தாள்; இவ்வீர மங்கையை ஒக்கூர் மாசாத்தியார் என்னும் பெண் புலவர் வியந்து பாராட்டியுள்ளார்.
மக்கள் வாழ்க்கை நலம்
இனி, அந் நாளில் தமிழ் நாட்டில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையைக் குறித்துப் புறநானூறு பல செய்திகள் கூறுகின்றது. 'மன்னன் எவ்வழி மன்னுயிர் அவ்வழி' என்றவாறு, முற்கால மக்கள் மன்னனையே பின்பற்றி நடக்க முயன்றார்கள். அரசன் கடமையை அறிவிக்கின்ற புறநானூற்றுப் பாட்டு ஒன்று இக்கருத்தைக் குறிக்கின்றது. பிள்ளையைப் பெற்று வளர்ப்பது தாயின் கடமை என்றும், அவனை அறிவுடையவன் ஆக்குவது தந்தையின் கடமை என்றும், ஒழுக்க நெறியில் நிறுத்துவது அரசன் கடமை என்றும் பொன்முடியார் என்ற புலவர் திறம்படப் பாடியுள்ளார்.
அரசன் அறநெறி தவறாதவனாய் ஆண்டு வந்தால் குடிகளுக்கு எவ்வகைக் கவலையும் இல்லை என்பதும், அவன் அறநெறி தவறினால், மழை பருவத்திற் பெய்யாது பசியும், பிணியும் குடிகளை வருத்தும் என்பதும் பழந்தமிழர் கொள்கை. இதனாலேயே 'அறநெறி முதற்றே அரசின் கொற்றம்' என்ற வாசகம் எழுந்தது.
வேளாண்மை என்னும் பயிர்த்தொழில், சிறந்த தொழிலாகக் கருதப்பட்டது. இல்லறம், துறவறம் என்னும் இருவகை அறமும் நாட்டில் நிலைபெறுவதற்கு வேளாண்மை முட்டின்றி நடைபெறல் வேண்டும் என்பது முன்னைத் தமிழ்நாட்டார் அறிந்த உண்மை. அந்நாளில் வேளாளர், சிறந்த குடிகளாகக் கருதப் பட்டார்கள். அறத்தையும் அறிவையும் வளர்ப்பதற்கு இன்றியமையாத உணவுப் பொருள் வளத்தை நாட்டிலே பெருக்கியவர் அவர்களே. இத் தகைய பெருமக்கள் இருத்தலாலேயே உலகம் நிலை பெற்றிருக்கின்றதென்று இளம்பெருவழுதி என்னும் பாண்டியன் பாடினான்.
இன்னும், வாழ்க்கைக்கு உரிய சிறந்த நெறிகளை யெல்லாம் எடுத்தோதுகின்ற புறநானூறு, எல்லோரும் கடைப்பிடிப்பதற்குரிய ஓர் அறத்தினைத் திட்டவட்டமாகக் கூறுகின்றது.
"பல்சான் றீரே ! பல்சான் றீரே !
நல்லது செய்தல் ஆற்றீ ராயினும்
அல்லது செய்தல் ஓம்புமின் !"
என்ற அறவுரையைக் கடைப்பிடித்தல் தமிழ் மக்கள் கடனாகும்.
இலக்கிய நலம்
புறநானூற்றுப் பாடல்களில் அமைந்துள்ள சொல்லையும் பொருளையும் பிற்காலப் பெருங்கவிஞர் பொன்னே போல் போற்றினர். நாட்டில் வாழும் உயிர்களுக்கு அரசனே உயிர் என்ற உண்மை,
"நெல்லும் உயிரன்றே ; நீரும் உயிரன்றே ;
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்"
என்று புறப்பாட்டிலே கூறப்படுகின்றது. இப்பாட்டின் சொல்லும் பொருளும் கம்பரால் போற்றப்பட்டுள்ளன. இராமனுடைய இனிய பண்புகளை எடுத்துரைக்கப் போந்த கம்பர்.
"கண்ணிலும் நல்லன் ; கற்றவர் கற்றிலாதவரும்
உண்ணும் நீரினும் உயிரினும் அவனையே உவப்பார்"
என்று அருளிப் போந்தார். இன்னும் புறநானூற்றுப் பாடல்களைத் தழுவி எழுந்த கவிகளும் நூல்களும் பலவாகும். தமிழறிஞரது துயரைத் தீர்ப்பதற்காகத் தன் தலையைக் கொடுக்க முன்வந்த குமண வள்ளலின் பெருமையை விளக்கிப் பாடினார் ஒப்பிலாமணிப் புலவர்:
"அந்தநாள் வந்திலை அருந்தமிழ்ப் புலவோய்
இந்தநாள் வந்துநீ நொந்தெனை அடைந்தாய்
தலைதனைக் கொடுபோய்த் தம்பிகைக் கொடுத்ததன்
விலைதனைப் பெற்றுன் வெறுமைநோய் களையே"
என்னும் பாட்டு, புறநானூற்றுப் பாடலொன்றைத் தழுவி எழுந்ததாகும். இன்னும், பாரி வள்ளலைக் குறித்துக் கபிலர் பாடிய பாடல்களையே பெரிதும் ஆதாரமாகக் கொண்டு, 'பாரி காதை' என்னும் பனுவல் இக்காலத்தில் தோன்றியுள்ளது.
ஆகவே, புறநானூறு, தமிழ்ச்சுவை, தேரும் மாணவர்க்கு ஓர் இலக்கியக் கேணியாம்; பழமையைத் துருவுவார்க்குப் பல பொருள் நிறைந்த பண்டாரமாகும்; தமிழ்நாட்டுத் தொண்டர்க்கு விழுமிய குறிக்கோள் காட்டும் மணிவிளக்காகும். இத்தகைய பெருநூலைத் தமிழ் மக்களாகிய நாம் போற்றிப் படித்து இன்பமும் பயனும் எய்துவோமாக.
----------------
3. வேளாளப் பெருமக்கள் மகாநாடு*
(* 1-6-1947 - இல் மதுரையில் நடைபெற்ற மகாநாடு இது.)
திறப்புரை
பெரியோர்களே ! தாய்மார்களே !
பழம் பெருமை வாய்ந்த மதுரையம்பதியில் வேளாளப் பெருமக்கள் மகாநாடு இன்று நடைபெறுகின்றது. வேளாண்குல மாந்தர் பல்லாயிரவர் இங்கே குழுமியிருக்கின்றார்கள். முன்னாளில், வேளாளர் குலம் இந்நாட்டில் எவருமில்லை. "மேழிச் செல்வம் கோழை படாது" என்பது இந்நாட்டார் கொள்கை. மேழியே வேளாண்மையின் சின்னம். அம்மேழிக்கொடி இந்த மகாநாட்டுக் கொட்டகையில் அழகுற மிளிர்கின்றது. அதனை 'வாழி வாழி !' என்று வாழ்த்துகின்றோம்.
முன்னொரு காலத்தில் தமிழ் நாட்டிலே ஒரு திருமணம்; மன்னரும் முனிவரும், பாவலரும் நாவலரும், குடிகளும் படைகளும் மணமாளிகையில் நிறைந்திருந்தார்கள். ஒளவையாரும் அங்கே வந்திருந்தார். மன்னன் திருமகனே மணமகன். மணம் இனிது முடிந்தது. மங்கல வாழ்த்துத் தொடங்கிற்று. முனிவர் ஒருவர் எழுந்தார் ;'மண மக்கள் பதினாறும் பெற்றுப் பெரு வாழ்வு வாழ்க ! ' என்று வாழ்த்தினார், 'இளவரசு வாழையடி வாழையென வையகத்தில் வாழ்க' என்று வாழ்த்தினார் மற்றொரு முனிவர். ஒளவையார் எழுந்தார் 'அரசே, உன் நாட்டில் வரப்பு உயர்க ! ' என்று வாழ்த்தினார். அவ் வாழ்த்துரையின் பொருத்தமும் பொருளும் அறியாத சபையார், ஒருவரை ஒருவர் வெறித்து நோக்கினார். அது கண்ட ஒளவையார், தம் வாழ்த்துரையின் கருத்தை விரித்துரைப்பாராயினர் ; "சபையோரே ! 'வரப்பு உயர்க !' என்று இளவரசை நான் வாழ்த்தினேன். விளைநிலத்தின் வரப்பு உயர, நீர் உயரும் ; நீர் உயர, நெல் உயரும்; நெல் உயர, குடி உயரும் ; குடி உயர, கோன் உயர்வான்" என்று விளக்கம் கூறினார்.
தமிழ் நாட்டாரது கொள்கையை இவ்வாறு சுருங்கச் சொல்லி விளங்க வைத்தார் ஒளவையார், 'உழவனே நாட்டின் உயிர்நாடி; அவன் ஊக்கமே அரசனது ஆக்கம்; அவன் கையால் நட்ட நாற்று முடி தழைத்தால், மன்னன் முடி தழைக்கும்' என்று புலவர்கள் பாடினார்கள். அரசனது செங்கோலை நடத்தும் கோல், 'உழவன் ஏரடிக்கும் சிறு கோல்' என்றார் கம்பர், 'உலகம் என்னும் தேருக்கு உழவனே அச்சாணி' என்றார் வள்ளுவர். இதனாலன்றோ உழவன் கையைப் புகழ்ந்தனர் கவிஞர்?
"மேழி பிடிக்கும்கை வேல்வேந்தர் நோக்கும்கை
ஆழி தரித்தே அருளும் கை - சூழ்வினையை
நீக்கும்கை என்றும் நிலைக்கும்கை நீடூழி
காக்கும்கை காராளர் கை".
என்ற பாட்டின் ஒவ்வொரு சொல்லும் உண்மை என்பது இன்று நாட்டுக்குப் படியளக்கும் அரசாங்கத்தார்க்கும் நன்கு தெரியுமன்றோ? சுருங்கச் சொல்லின் பயிர்த் தொழிலே நாட்டின் உயிர்த் தொழில். அத் தொழிலே பொல்லாப் பசியைப் போக்கும்; நல்லறத்தைக் காக்கும்.
இத்தகைய சிறந்த தொழிலைச் செய்யும் உழவன் பெருமையெல்லாம் அவன் உழைப்பின் பெருமையேயாகும். உழவன் எந்நாளும் உழைப்பவன்; நெற்றி வேர்வை நிலத்தில் விழ வஞ்சமின்றிப் பாடுபடுபவன்; விளைநிலத்தை உழுது பண்படுத்தி, பருவத்தே பயிர் செய்து, கண்ணுங் கருத்துமாய்க் களை பறித்து, நீர் பாய்ச்சி, பயன் விளைக்கும் உழவன் பணியைப் பற்றிய பழமொழிகள் தமிழ் நாட்டிலே பல உண்டு, 'உழுகின்ற காலத்தில் ஊர்வழி போனால் அறுவடைக் காலத்தில் ஆள்தேட வேண்டா' என்பது ஒரு பழமொழி. 'வயலில் மோட்டை போனால் கோட்டை போச்சு' என்பது மற்றொரு பழமொழி. கண்ணினைக் காக்கும் இமை போல் பயிரினைக் காத்துப் பயன் விளைவிப்பவன் உழவன் என்பது இப்பழமொழிகளின் கருத்து.
'உழவன் உழைப்பாளன்' என்பது அவன் தொழிலைக் குறித்து வழங்கும் ஒரு சொல்லாலே விளங்கும். இக்காலத்தில் விவசாயம் என்பது உழவுத் தொழிலைக் குறிக்கிறதல்லவா? அச்சொல் வடசொல். உழைப்பு என்பதே அச்சொல்லின் பொருள். மற்றத் தொழில்களைவிட்டுப் பயிர்த்தொழிலை மட்டும் விவசாயம் என்ற சொல் ஏன் குறிக்கின்றது? தமிழ் நாட்டார் உழவனது உழைப்பே உழைப்பு என்று கருதியதாலன்றோ உழவுத் தொழிலுக்கு விவசாயம் என்று பெயரிட்டனர்?
பயிர்த்தொழிலைக் குறிக்கும் மற்றொரு சொல் வேளாண்மை. பயிர்த்தொழில் எவ்வளவு பழமை வாய்ந்ததோ, அவ்வளவு பழமை வாய்ந்தது வேளாண்மை என்ற சொல்லும். வேளாண்மை செய்பவர் வேளாளர். இந் நாட்டிலே, அன்றும் இன்றும் வேளாளருக்குத் தனிச் சிறப்புண்டு. வேளாளர், தம் நிலத்தைப் பண்படுத்தியவாறு மனத்தையும் பண்படுத்தினார்கள்; தம் உழைப்பால் வந்த உணவுப் பொருள்களைத் தங்கு தடையின்றி எல்லோருக்கும் தந்தார்கள்; அற்றாரையும் அலந்தாரையும் ஆதரித்தார்கள்; பசித்தோர்முகம் பார்த்துப் பரிவு கூர்ந்தார்கள்; வருந்தி வந்தவர் அரும்பசி தீர்த்து, அவர் திருந்திய முகம் கண்டு மகிழ்ந்தார்கள். அதனால் வேளாண்மை என்ற சொல்லுக்கே உபகாரம் என்று பொருள் வந்தது. திருக்குறளிலே அப் பொருளைக் காணலாம்.
"இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு"
என்று திருக்குறள் பாடிற்று. இக்குறளில் வேளாண்மை என்ற சொல்லுக்குப் பரோபகாரம் என்பது பொருள். திருவள்ளுவர் காலத்திலேயே வேளாண்மை என்ற சொல் பரோபகாரம் என்னும் பொருளில் வழங்கியிருக்குமானால் அதற்கு எவ்வளவு காலத்திற்கு முன்னமே வேளாளரிடம் அப்பண்பாடு தோன்றி வளர்ந்து சிறப்பாக இருந்திருத்தல் வேண்டும் என்பது உய்த்துணரத்தக்கது. "வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்" என்று பழைய நீதி நூல் பாடியதும் இக் கருத்துப் பற்றி யன்றோ? திருஞானசம்பந்தரும் வேளாளருடைய பண்புகளைத் தேவாரத் திருப்பாட்டிலே கூறுகின்றார்:
"வேளாளர் என்றவர்கள்
வள்ளன்மையால் மிக்கிருக்கும் தாளாளர்"
என்பது அவர் தேவாரம். இப் பாட்டால் வேளாளர் சிறந்த உழைப்பாளர் என்பதும், கொடையாளர் என்பதும் நன்கு தெரிகின்றன.
பயிர்த் தொழில் செய்வதற்கு ஏர் இன்றியமையாதது. ஏரில்லாத உழவனுக்கு ஏற்றமில்லை.
"ஏரும் இரண்டுளதாய் இல்லத்தே வித்துளதாய்
நீரருகே சேர்ந்த நிலமுமாய் - ஊருக்குச்
சென்று வரஅணித்தாய் செய்வாரும் சொற்கேட்டால்
என்றும் உழவே இனிது.
என்ற பாட்டு, சிறு குடியானவனுக்கு வேண்டுவனவற்றைக் கூறுகின்றது. குடிகளுக்குச் சீரும் சிறப்பும் ஏரால் வரும் என்பது தமிழ்நாட்டார் கொள்கை. 'சீரைத் தேடின் ஏரைத் தேடு' என்று பணித்த நாடு தமிழ்நாடு. ஏரே நிலத்தைச் சீர்படுத்துவது. ஏரே பசிப்பிணியை வேரறுப்பது, ஏரே இனிமை தருவது, இன்பம் பயப்பது.
இத்தகைய ஏரை அழகிய பொருளாகக் கண்டனர் பழந்தமிழர். ஏர் என்ற சொல்லுக்கு அழகு என்னும் பொருள் பண்டைத் தமிழில் உண்டு. அழகுடைய இளங்கிளியை 'ஏர் ஆர் இளங்கிளியே' என்று அழைத்தார் மாணிக்கவாசகர். ஏரில் என்ன அழகு உண்டு? கோணல் மாணலாக, கட்டை நெட்டையாக, கரடு முரடாக இருப்பதன்றோ ஏர்? இத்தகைய கருவியால் அழகைக் கண்டதுதான் தமிழர் பெருமை ! தமிழர் பண்பாடு !
கண்ணுக்கு இன்பம் தருவது ஒன்றே அழகு என்று கொண்டாரல்லர் பண்டைத் தமிழர். கருத்துக் கினிய குணங்களின் அழகையும் அவர்கள் கொண்டாடினார்கள்; பயனுள்ள பொருள்களின் பண்பறிந்து பாராட்டினார்கள்; மழை பொழியும் மேகத்தை ஓர் அழகிய பொருளாகக் கண்டார்கள்; எழிலி என்று அதற்குப் பெயரிட்டார்கள்; எழில் என்பது அழகு. அழகுடைய பொருள் எழிலி எனப்படும். அமிர்தம் போன்ற மழையைப் பொழிந்து உலகத்தை வாழ்விக்கும் கார்மேகத்தின் கருணை அழகியதன்றோ? அவ்வாறே, உழுகின்ற ஏரின் சீரை அறிந்து, அதனால் விளையும் பயனை உணர்ந்து, ஏர் என்ற சொல்லுக்கு அழகு என்னும் பொருளைத் தந்தனர் பழந்தமிழர்.
முன்னாளில் ஏருக்கு இருந்த ஏற்றமும் எடுப்பும் வேறு எதற்கும் இருந்ததாகத் தோன்றவில்லை. படை எடுக்கும் வீரனையும், பாட்டிசைக்கும் புலவனையும் ஏரடிக்கும் உழவனாகவே கண்டது பண்டைத் தமிழ் நாடு. வில்லாளனையும் இனிய சொல்லாளனையும் ஏராளனாகத் திருவள்ளுவர் காட்டுகின்றார்,
"வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை",
என்ற திருக்குறளில் வில்லையும் சொல்லையும் ஏராக உருவகம் செய்தருளினார் திருவள்ளுவர். அப்படியே வாளேந்திய வீரனை 'வாள் உழவன்' என்றும், வேல் ஏந்திய வீரனை 'அயில் உழவன்' என்றும் தமிழ்க் கவிஞர்கள் போற்றுவாராயினர்.
ஏரால் விளையும் உணவுப் பொருள்களை யெல்லாம் ஒரு சொல்லால் உணர்த்தினர் தமிழ் நாட்டார். இக்காலத்தில் மளிகைக் கடை என்பது பலசரக்குக் கடையின் பெயராக வழங்குதல் போன்று, முற்காலத்தில் கூலக்கடை என்பது பலவகைத் தானியங்களும் விற்கும் கடைக்குப் பெயராக அமைந்தது. நெல்லும் புல்லும், வரகும் தினையும், எள்ளும் கொள்ளும், அவரையும் துவரையும், பயறும் உளுந்தும், சாமையும் பிறவும் கூலம் என்ற ஒரு சொல்லாலே குறிக்கப்பட்டன. பெரிய நகரங்களில் கூலவீதிகள் சிறந்திருந்தன. சோழநாட்டின் தலைநகராக விளங்கிய காவிரிப்பூம்பட்டினத்திலும், பாண்டி நாட்டின் தலைநகராகிய மதுரையிலும் 'கூலங்குவித்த கூல வீதிகள்' இருந்தன என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது. இன்றும் கூலவீதியைத் திருநெல்வேலியிலே காணலாம். மேலரத வீதியை அடுத்துள்ள தெரு, 'கூலக்கடைத் தெரு' என்றே இது காறும் வழங்கி வருகின்றது. மதுரை மாநகரில் கூலக் கடை வைத்திருந்த சாத்தனார் 'கூலவாணிகன் சாத்தனார்' என்று பெயர் பெற்றார். அவரே மணிமேகலைக் காவியம் இயற்றிய கவிஞர் என்பர். அந் நாளில் இசையரங்குகளிலும், நடன சாலைகளிலும் உழவரை வாழ்த்தும் வழக்கம் இருந்ததாகத் தெரிகின்றது. நாடாளும் மன்னனை வாழ்த்திய பின்பு, உணவளிக்கும் உழவனை வாழ்த்துவர் இசைவாணர். 'பதினெண் கூலமும் உழவர்க்கு மிகவே' என்னும் வாழ்த்துரை ஒரு பழைய இசை நூலிற் காணப்படுகின்றது.
உழவுத் தொழிலால் மேன்மையுற்ற நாடொன்று 'நாஞ்சில் நாடு' என்று பெயர் பெற்றது. நாஞ்சில் என்பது ஏர். மலையாள மன்னருடைய ஆட்சியில் அமைந்துள்ளது நாஞ்சில் நாடு. அந் நாட்டை ஏராலே சீராக்கி, உழைப்பாலே சிறப்பாக்கியவர் தமிழ் நாட்டு உழவரே என்பதில் சிறிதும் ஐயமில்லை.
முன்னாளில், 'சொன்ன சொல் தவறாதவர்' என்ற பெருமை வேளாளருக்கு இருந்தது. "ஊழி பேரினும் பெயரா உரையுடைய பெருக்காளர்" என்று வேளாளரைப் புகழ்ந்து பாடினார் கம்பர். அன்னார், வாய்மையை உயிரினும் அருமையாகப் போற்றி வாழ்ந்தனர். இதற்கு ஒரு சான்று கூறுவன்:
தொண்டை நாட்டுத் திருவாலங்காட்டுக்கு அருகே பழையனூர் என்ற மூதூர் உள்ளது. அங்கே எழுபது வேளாளர் முற்காலத்தில் அறநெறி வழுவாது வாழ்ந்து வந்தனர். அவர்கள், வழிப்போக்கன் ஒருவனுக்குக் கொடுத்த வாக்கை நிறைவேற்றும் வண்ணம் நெருப்பில் இறங்கி உயிர் நீத்தார்கள். அச் செய்தி தமிழக முழுவதும் பரவியிருந்தது.
"மாறுகொடு பழையனூர் நீலி செய்த
வஞ்சனையால் வணிகன் உயிரிழப்பத் தாங்கள்
கூறியசொல் பிழையாது துணிந்து செந்தீக்
குழியில்எழு பதுபேரும் முழுகிக் கங்கை
ஆறணிசெஞ் சடைத்திருஆ லங்காட் டப்பர்
அண்டமுற நிமிர்ந்தாடும் அடியின் கீழ்மெய்ப்
பேறுபெறும் வேளாளர் பெருமை எம்மால்
பிரித்தளவிட்(டு) இவளவெனப் பேச லாமோ"
என்ற ஆன்றோர் பாட்டிலே இவ் வரலாறு குறிக்கப்படுகின்றது. இவற்றையெல்லாம் இப்பொழுது நாம் மறந்து விட்டோம். தமிழ் நாட்டு மாணவன் ஒருவனை நோக்கி, "சொன்ன சொல் தவறாதவர் யார்" என்று வினவினால், 'பழையனூர் வேளாளர்' என்ற பதில் வருமா? அவர் பெருமைதான் அவனுக்குத் தெரி யாதே! அரிச்சந்திரன் பெயர் தெரியும்; அவன் கதை தெரியும். ஆதலால், தான் படித்த கதைப் பாடத்திலுள்ள அரிச்சந்திரனையே அவன் எடுத்துக் கூறுவான். அப்படியே, "வரையாது பொருள் கொடுத்த வள்ளல் யார்?" என்று கேட்டால், 'பாரி' என்று சொல்ல, நம் பள்ளி மாணவர் படித்தாரில்லையே ! கொடைக்குக் கர்ணன் என்பதுதானே அவர் படித்த பாடம் ! இந்தப் பாண்டி நாட்டிலேயுள்ள மலைக் கோமானாகப் பாரி என்ற தமிழ் வள்ளல் விளங்கினான் என்பதும், "கொடுக்கிலா தானைப் பாரியே என்று கூறினும் கொடுப்பாரிலை" என்று தேவாரமே அவன் பெருமையைப் பாடிற்று என்பதும் அறியாமல் நம் பிள்ளைகள் படிக்கும் நூல்களிலும் கேட்கும் கதைகளிலும், பழையனூர் வேளாளரும், பாரி வள்ளலும், இவர்போன்ற பெருமக்களும் இடம் பெறல் வேண்டும் என்பது என் ஆசை.
இந் நாட்டில் உழைப்பாலும், ஒழுக்கத்தாலும் ஒற்றுமையாலும் நம் முன்னோர் சிறப்புற்று வாழ்ந்தார்கள், அப் பண்புகளைப் பாதுகாத்து வளர்த்தல் வேண்டும். பல துறைகளிலும் நம் வேளாளர் முன்னேற்றறமடைவதற்குரிய முறைகளை வகுத்தல் வேண்டும். இவ்வரும்பெருஞ் செயல்களெல்லாம் நடைபெறப் போகின்ற வேளாளப் பெருமக்கள் மகாநாட்டை வாழ்த்துகின்றேன். மகாநாட்டின் தோற்றுவாயாக இது காறும் நான் பேசிய மொழிகளைக் கேட்டருளிய பெருமக்கள் அனைவரையும் மனமாரப் போற்றுகின்றேன்.
-----------
4. தமிழ்த் திருநாள் *
(* தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் சார்பாக யாழ்ப் பாணத்தில் 30-4-1951 - இல் நடைபெற்றது நான்காம் தமிழ்த் திருநாள்.)
தலைமையுரை
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் சார்பாக இன்று இலங்கையில் தமிழ்த் திருவிழா நடைபெறுகின்றது. இது நான்காம் தமிழ் விழா. முதல் ஆண்டிலே தமிழ் விழா மதுரையம்பதியில் நடைபெற்றது. மதுரை மாநகரம் பாண்டி நாட்டின் தலைநகரம்; செந்தமிழை உருவாக்கிய திருநகரம். இத்தகைய மதுரை மாநகரம் முதலாண்டு விழாவினை நடத்தியது மிகப் பொருத்த மாயிருந்தது. அடுத்த ஆண்டு விழா சோழநாட்டின் பழந் தலைநகராகிய திருவாரூரில் நிகழ்ந்தது. சோழ வளநாட்டின் செழுமைக்கு ஏற்ற முறையில் எடுப்பாக நடந்தது அம்மகாநாடு. மூன்றாம் மகாநாடு பண்டைச் சேரநாட்டின் ஓர் அங்கமாக விளங்கிய கொங்கு நாட்டிலே சீரும் சிறப்பும் உற்று விளங்கும் கோயம்புத்தூரில் நடைபெற்றது. நான்காம் மகாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெறுகின்றது. இம் மகாநாட்டின் இலக்கியப் பகுதியில் என்னையும் பங்கு பெறுமாறு பணித்த அன்பர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வணக்கம் உரியதாகும்.
அன்பர்களே! தமிழ் நாட்டுக்கும் இலங்கைக்கும் பழமையான தொடர்புண்டு. தமிழ் இலக்கியமே இதற்குச் சான்று. பண்டமாற்று முறையிலும், பண்பாட்டு முறையிலும் தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையேயிருந்த உறவு சங்கநூல்களிலும் பிற்காலத்துப் பெருநூல்களிலும் பேசப்படுகின்றது. சங்கத்தமிழில் ஈழநாடு என்பது இலங்கையின் பெயர். பட்டினப் பாலை என்னும் பழந்தமிழ்ப் பாட்டிலேயே சோழ நாட்டுக்கும் ஈழ நாட்டுக்கும் இருந்த வாணிக உறவு குறிக்கப்படுகின்றது. அந் நாளில் பட்டினம் என்றால் தமிழகத்தில் காவிரிப்பூம்பட்டினமே! சோழ நாட்டை ஊட்டி வளர்க்கின்ற காவிரியாறு கடலோடு கலக்குமிடத்தில் காவரிப்பூம்பட்டினம் என்னும் திருநகரம் அமைந்திருந்தது. அதன் செழுமையையும் அழகையும் கண்டு மகிழ்ந்த செந்தமிழ்ப் புலவர்கள் பூம்புகார் என்றும் அதனைப் போற்றுவராயினர். சிலப்பதிகாரம் பாடிய இளங்கோவடிகள், "பூம்புகார் போற்றுதும், பூம்புகார் போற்றுதும்" என்று பாடினார். அந்நகரத்தின் துறைமுகத்தில் ஏற்றுமதியும் இறக்குமதியும் இடையறாது நிகழ்ந்தன. கடல் கடந்து பிற நாடுகளிலிருந்து அங்கு வந்திறங்கிய பண்டங்களைப் பட்டினப்பாலை தொகுத்துக் கூறுகின்றது. அந்த வரிசையில் ஈழ நாட்டுப் பண்டமும் இடம் பெற்றுள்ளது. "ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும்" பட்டினத் துறைமுகத்தில் வந்து இறங்கிய பண்டங்களென்று அப்பாட்டு கூறுகின்றது. ஈழநாட்டிலிருந்து என்ன உணவுப் பொருள்கள் தமிழ்நாட்டுக்கு இறக்குமதியாயின என்று இப்போது தெளிவாகத் தெரியவில்லை. ஆயினும் பண்டமாற்றுமுறையில் சோழவள நாடு விரும்பியேற்றுக்கொண்ட உணவுப் பொருள்கள் இலங்கையிலிருந்து வந்தன என்பது ஒரு பெருஞ் சிறப்பன்றோ?
இனி, சேரநாடு என்று பழங்காலத்தில் பெயர் பெற்றிருந்த மலையாள நாட்டிற்கும், ஈழ நாட்டிற்கும், பல வகையான தொடர்பிருந்து. மலையாள நாட்டில் இன்று ஈழவர் என்று அழைக்கப்படுகின்ற வகுப்பார் இலங்கையிலிருந்து அந்நாட்டில் குடியேறியவரேயாவார். ஈழவர் என்ற சொல்லே அவர் ஈழநாட்டிலிருந்து வந்தவர் என்பதை உணர்த்துகின்றது.
செங்குட்டுவன் என்னும் சிறந்த சேரமன்னன் மலையாள நாட்டில் அரசு வீற்றிருந்த பொழுது தமிழ் நாட்டில் அரும்பெருஞ் செயலொன்று நிகழ்ந்தது. கற்பின் செல்வியாகிய கண்ணகி, பாண்டிய மன்னனைத் தன் கற்பின் திண்மையால் வென்று, சேர நாட்டையடைந்து தெய்விகமுற்றாள். இந்த நிகழச்சி மூன்று தமிழ் நாட்டையும் அதிரச் செய்தது. சேர நாட்டு அரசன் தன் நாட்டில் வந்து தெய்விகமுற்ற வீரபத்தினியாகிய கண்ணகிக்குச் சிறந்த திருக்கோயில் ஒன்று அமைத்தான். அக்காட்சியைக் காண்பதற்கு அயல்நாட்டு மன்னர் பலரைச் செங்குட்டுவன் அழைத்திருந்தான். அன்னவருள் ஒருவன் ஈழநாட்டு மன்னன், "கடல்சூழ் இலங்கைக் கயவாகு மன்னன்' என்று சிலப்பதிகாரத்தில் அவ்வரசன் குறிக்கப்படுகின்றான். இலங்கை வரலாற்றில் கஜபாகு என்ற பெயருடைய மன்னர் இருவர் இருந்தனர் என்றும், அவருள் முதல் கஜபாகு மன்னனே செங்குட்டுவன் அழைப்பை யேற்றுக் கண்ணகிவிழாவிற் கலந்துகொண்டவன் என்றும் வரலாற்று நூலோர் கூறுவர். தமிழகத்திற் கோயில் கொண்ட கண்ணகியின் பெருமையையும் கருணையையும் கண்கூடாகக் கண்ட கஜபாகு மன்னன் இலங்கையிலும் அத்தேவிக்கு ஆலயமமைத்து, சிறப்பொடு பூசனை செய்தானென்றும், அதனால் மழை தவறாமல் பெய்து, ஈழநாடு, 'வளம் பல பெருகிப் பிழையாவிளையுள் நாடாயிற்' றென்றும் சிலப்பதிகாரம் தெரிவிக்கின்றது. இன்றும் கண்டி முதலிய பல இடங்களில் கண்ணகி வழிபாடு நடைபெற்று வருவதாகத் தெரிகின்றது, முன்னமே வாணிகத்தால் இணைக்கப்பெற்றிருந்த தமிழகமும் இலங்கையும் கண்ணகி காலந்தொட்டு வழிபட்டுமுறையி்லும் இணக்கமுற்றன.
இன்னும் இலங்கைக்கும், தமிழகத்திற்கும், ஆன்மநேய ஒருமைப்பாடும் உண்டு. சிவ மணமும், தமிழ் மணமும் ஒருங்கே கமழும் தேவாரம் பாடிய பெரியோர்கள் இலங்கையில் உள்ள சிறந்த சிவஸ்தலங்களைப் பாடியுள்ளார்கள். கடலருகேயுள்ள திருக்கோண மலையைப் பாடினார் திருஞானசம்பந்தர். மாதோட்டம் என்னும் நன்னகரில் அமைந்த மாதொருபாகனைத் தொழுது பாமாலை அணிந்தனர் திருஞான சம்பந்தரும் சுந்தரரும். தமிழ்நாட்டிலுள்ள முருகனடியார்கள் இலங்கையிலுள்ள கதிர்காமத்தை நினைக்குந்தொறும் காதலாகிக் கசிந்து கண்ணீர் பெருக்குவர். அப்படியே ஈழநாட்டிலுள்ள சிவனடியார்க்குச் சிதம்பரமே சிறந்த திருக்கோயில், அன்னார் தில்லைமன்றிலே திருநடம்புரியும் 'செல்வன் கழலேத்தும் செல்வமே செல்வம்' எனச் சிந்தையாரப் போற்றுவர்; தமிழகத்தில் முருகப் பெருமானுடைய படை வீடுகளாகப் போற்றப்படும் ஆறு பதிகளையும் அகனமர்ந்து ஏத்துவர்; அவற்றுள், "உலகம் புகழ்ந்த ஓங்குயர் விழுச்சீர் அலைவாய்" என்று திருமுருகாற்றுப் படையில் புகழப்பெற்ற திருச்செந்தூரை நினைந்து நெக்கு நெக்குருகுவர்.
இன்னும், ஈழநாட்டிலே பிறந்து, தமிழ்நாட்டிலே வாழ்ந்து, தமிழ்த்தொண்டு புரிந்த பேரறிஞர் பலராவர். மெய் வருத்தம் பாராது பழைய ஏட்டுச் சுவடிகளை ஆராய்ந்து சிறந்த இலக்கண நூல்களையும் இலக்கிய நூல்களையும் முதன்முதலாக அச்சிட்டுத் தமிழகத்தார்க்கு உதவிய பெருமை யாழ்ப்பாணத்தில் தோன்றிய தாமோதரம் பிள்ளையவர்களுக்கே உரியதாகும். நற்றமிழ்ப் புலமையும் நாவன்மையும் ஒருங்கே வாய்ந்து தமிழ் மொழிக்கும் சிவநெறிக்கும் அரும்பெருந் தொண்டு செய்த ஆறுமுக நாவலரை அறியாதார் தமிழ்கூறு நல்லுகத்தில் உளரோ? இந்நாவலர் பெருமான் யாழ்ப்பாணத்து நல்லூரிலே பிறந்து தில்லையம்பதியிலே வாழ்ந்து எல்லையற்ற புகழெய்தினார். இன்னும் முத்தமிழில் நடுநாயகமாக விளங்கும் இசைத்தமிழுக்கு விழுமிய தொண்டு செய்த விபுலானந்த அடிகளும் இந்நாட்டவரேயாவர். பழந் தமிழ்நாட்டில் சிறந்த இசைக்கருவியாக விளங்கிய யாழின் திறத்தையும் தமிழிசையின் நலத்தையும் ஆராய்ந்து யாழ்நூல் என்னும் பெயரால் இசையுலகத்திற்கு அரியதொரு விருந்தளித்த அறிஞர் பெருமானை அறியாதார் அறியாதாரே.
இலங்கை நாட்டிலே, யாழ்ப்பாணம், தமிழர் வாழும் தொன்னகரம் ; தமிழ்மணங் கமழுந் திருநகரம். தமிழர் பண்பாடு யாழப்பாணம் என்ற சொல்லிலே விளங்குகின்றது. யாழ்ப்பாணர் என்பார் பழந்தமிழ் நாட்டிலே வாழ்ந்த ஒரு வகுப்பார். பண்ணோடு இசை பாட வல்லவர் பாணர் என்று முன்னாளில் அழைக்கப் பெற்றனர். அவருள் யாழிலே வல்லவர்கள் யாழ்ப் பாணர் என்று பெயர் பெற்றார்கள். சிலப்பதிகாரத்தில் இவர் பெருமை குறிக்கப்படுகின்றது. கண்ணகி வாழ்ந்த காவிரிப்பூம்பட்டினத்தில்,
"குழலினும் யாழினும் குரல்முதல் ஏழும்
வழுவின் றிசைத்து வழித்திறங் காட்டும்
அரும்பெறன் மரபின் பெரும்பாண் இருக்கையும்"
என்று அவர் இருந்த வீதி புகழப்படுகின்றது. தேவாரம் எழுந்த காலத்தில் திருநீலகண்ட யாழ்ப் பாணர் என்னும் சிவனடியார் ஒருவர் யாழிசையில் வல்லவரா யிருந்தார். அவர் திருஞான சம்பந்தரோடு பல தலங்களுக்கும் சென்று அவர் பாடிய தமிழ்ப் பாட்டை யாழிலே இசைத்துக் கேட்போர் செவிக்கும் சிந்தைக்கும் இனிய இசை விருந்து அளித்தாரென்று திருத்தொண்டர் புராணம் தெரிவிக்கின்றது. இத்தகைய சிறந்த மரபு இப்பொழுது தமிழகத்திலே தூர்ந்து போயிற்று. பாணர் என்ற இனத்தார் இன்று தமிழநாட்டில் இல்லை. அன்னார் கையாண்ட இசைக் கருவியாகிய யாழும் இப்பொழுது காணப்படவில்லை. எனவே, முன்னொரு காலத்தில் தமிழ் நாட்டிலிருந்து மறைந்து போன ஓர் இன்னிசைக் கருவியையும், அக்கருவியிலே தமிழ்ப் பாட்டிசைத்த ஒரு பழங்குலத்தின் பெயரையும் இக்காலத்தார்க்கும் பாதுகாத்து வைத்திருப்பது யாழ்ப்பாணமேயாகும்.
நமது தாய்மொழியாகிய தமிழ் இவ்வுலகிலுள்ள செம்மை சான்ற தொன்மொழிகளுள் ஒன்று. மன்னரும் முனிவரும் அம்மொழியைப் பேணிவளர்த்தார்கள். அறிவு வளர்ச்சிக்கும் ஆன்ம நலத்திற்கும் சாதனமாகிய நூல்கள் தமிழ் மொழியிலே சாலச் சிறந்து விளங்குகின்றன. இத்தகைய விழுமிய மொழியைத் தாய்மொழியாகப் பெற்றுள்ள நாம், இவ்வுலகிலுள்ள எந்நாட்டாரக்கும் எவ்வாற்றானும் குறைந்தவரல்லோம். ஆதலால், எந்நாட்டிலிருந்தாலும் எத்தொழில் செய்தாலும் தமிழ் மக்கள் நெஞ்சில் தமிழார்வம் குடிகொண்டிருத்தல் வேண்டும். இன்று தமிழினம் பல வேறு நாடுகளிற் பரவியிள்ளது. இவ்வுண்மையை யறிந்து பாடினார் பாரதியார்.
"சிங்களம் புட்பகம் சாவகம் ஆகிய
தீவு பலவினும் சென்றேறி - ஆங்குத்
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு"
என்ற பாட்டிலே விரிந்து பரந்த தமிழகம் குறிக்கப் படுகின்றது. இன்று பர்மா, மலேயா, ஆப்பிரிக்கா, அமெரிக்கா முதலிய அயல்நாடுகளிலும் தமிழர் வாணிகம் புரிந்தும் வளம் பெருக்கியும் வாழ்ந்து வருகின்றார்கள். அன்னவர் அனைவரும் தமிழ்த் தாயின் சேய்கள் என்று உணர்ந்து ஒன்றுபடல் வேண்டும்.
சுதந்திர இந்தியாவில் நாட்டு மொழிகள் தலையெடுத்து வளரத் தொடங்கியுள்ளன. நாமிருக்கும் நாடு நமது என்ற உணர்ச்சி தமிழ் மக்களிடம் பெருகி வருகின்றது, "யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவ தெங்கும் காணோம்; யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல், வள்ளுவர்போல், இளங்கோவைப்போல், பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை" என்ற பாரதியார் பாட்டின் உண்மையை உணர்ந்து பண்டைத் தமிழ்ப் பனுவல்களைத் தமிழ்நாட்டு இளைஞர்கள் பாராட்டிப் படிக்கின்றார்கள். இத்தகைய ஆர்வம் தமிழ் வழங்கும் நல்லுலகெங்கும் பரவுதல் வேண்டும். 'தமிழன் என்றொரு இனமுண்டு; தனியே அவற்கொரு குண முண்டு' என்று பாடினார் ஒரு புலவர். அவர் பாடிய தமிழ்ப் பண்பு பண்டைத் தமிழ் இலக்கியங்களில் பரக்கப் பேசப்படுகின்றது. ஆதலால், தமிழிலக்கியம் தமிழினத்தார்க்குத் தனிப் பெருஞ் செல்வம். அச்செல்வத்தை நாமும் துய்த்துப் பிறர்க்கும் வழங்குதலே இம் மாநாட்டின் நோக்கமாகும். இந்நோக்கம் நிறைவேறுமாறு தமிழ்ப் பெருந்தெய்வம் திருவருள் புரிக. 'செல்வத்துட் செல்வம் செவிச் செல்வம்' என்னும் உண்மையை உணர்ந்து, இம்மாநாட்டில் நிகழும் சொல் விருந்தை நுகர்வதற்குப் பல்லாயிரக் கணக்காகக் குழுமியுள்ள மக்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வணக்கம் உரியதாகுக.
-----------
5. தமிழ் இசை விழா*
(* தமிழ் இசைச் சங்கத்தின் பத்தாம் ஆண்டு விழா சென்னை அண்ணாமலை மன்றத்தில் 15-1-53- இல் நடைபெற்றது.)
தலைமையுரை
பெரியோர்களே ! அன்பர்களே !!
இந்நாள் தமிழ் மக்களுக்காக ஒரு நன்னாள் ஆகும். சென்னை மாநகரில் பத்தாண்டுகளாகச் சிறந்த பணியாற்றி வரும் தமிழிசைச் சங்கம், இன்று 'அண்ணாமலை மன்றம்' என்னும் அழகிய கலைக்கோவிலில் அமர்ந்து காட்சி யளிக்கின்றது. மன்றம் என்ற தமிழ்ச்சொல்லைக் கேட்பது செவிக் கின்பம்; அதன் பொருளை அறிவது சிந்தைக்கு இன்பம். பழந்தமிழ் மொழியில் மன்றம் என்பது ஊர் நடுவே யுள்ள பொதுவிடமாகும். இன்று தமிழகத்தின் தலைநகராகிய சென்னையம்பதியின் நடுவே, தமிழரின் சீர்மைக்கு ஒரு சான்றாக நிற்கும் இம் மாளிகை, தமிழ் மக்கள் அனைவருக்கும் பொதுவுடைமையாதலால் இதனை மன்றம் என்று அழைப்பது சாலவும் நன்றே. தமிழ் நாட்டில் எல்லையற்ற பெருமை வாய்ந்த தில்லையம்பதியின் அருகே பல்கலைக் கழகமொன்று நிறுவி, பாரத நாட்டுக்கலை வரலாற்றில் நிலையான ஓர் இடம் பெற்றுப் புகழுடம்பில் வாழும் ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் அவர்களின் தமிழார்வமும் தலையாய வள்ளன்மையும் இக்கலை மாளிகையாக உருவெடுத்துக் காட்சிதருகின்றன. அண்ணாமலையரசருடன் இசைவளர்க்கும் பெரும் பணியில் ஈடுபட்டுக் கண்ணினைக் காக்கும் இமைபோல் தமிழிசைக் சங்கத்தைக் காத்து வரும் பேரறிஞர் டாக்டர் ஆர்.கே. சண்முகஞ் செட்டியார் அவர்களுடைய கலை வண்ணமும் இம்மாளிகையிலே காட்சி தருகின்றது. இப்பெருந்தலைவர் இருவரும் முன்னின்று நடத்திய திருப்பணி சிறக்கும் வண்ணம் பொருளுடையார் ஆதரவு புரிந்தனர்; அருளுடையார் ஆசி கூறினார், இவ்வாறு ஒல்லும் வகையால் உதவி செய்து தமிழிசைச் கோயிலை உருவாக்கிய நல்லார் அனைவருக்கும் தமிழ் மக்களின் நன்றி என்றும் உரியதாகும்.
தமிழ்நாடு இப்பொழுது புத்துயிர் பெற்று வருகின்றது. இயல், இசை, நாடகம், என்னும் முத்தமிழும் பொது மக்களின் ஆதரவைப் பெற்று முன்னேறுகின்றன. இவ்வாண்டில், சென்னை மாநகரிலே தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் ஆதரவில் இயற்றமிழ் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. நாடகத் தமிழாசிரியர் முதுபெரும்புலவர் திரு. சம்பந்த முதலியார் அவர்களின் எண்பதாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இந்நகரில் நிகழ்ந்த நாடகத்தமிழ் விழா என்றுமில்லாததோர் இன்பக் காட்சியா யிருந்தது, இசைத் தமிழ் விழா இன்று இம்மன்றத்தில் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றது. இம் மூன்று தமிழ் விழாக்களையும் தொடங்கி வைத்து ஆசி கூறிய அண்ணல், கைராசியுள்ள ராஜாஜி என்றால், முத்தமிழின் முன்னேற்றத்திற்கு இனித் தடையும் உண்டோ?
இசைத் தமிழ் என்பது முத்தமிழின் நடுநாயகமாக விளங்குவது. இசைத் தமிழ் என்றாலும் தமிழிசை என்றாலும் பொருள் ஒன்றே. இயல், இசை, நாடகம் என்னும் மூவகைத் தமிழையும் முன்னாளில் முனிவரும் மன்னரும் முன்னின்று வளர்த்தார்கள். முத்தமிழையும் துறைபோகக் கற்ற வித்தகராகிய முனிவர் ஒருவர், பொதிய மலையில் அமர்ந்து தமிழ்ப் பணி புரிந்தார். அவரைத் திரு முனிவர் என்றும், குறு முனிவர் என்றும், முத்தமிழ் முனிவர் என்றும் கவிஞர்கள் புகழ்ந்துரைத்தார்கள்.
"முத்தமிழ் மாமுனி நீள்வரை யேநின்று
மொய்ம்புறக் காக்கும் தமிழ்நாடு"
என்று பாடினார் பாரதியார்.
இத்தகைய பெருமை வாய்ந்த முனிவர், தமிழ் நாட்டிற்கு மலைபோல் வந்த இடரை மஞ்சுபோல் இசைத் தமிழால் அகற்றிப் பாதுகாத்தார் என்று சங்க இலக்கியம் கூறுகின்றது. 'ஆசைக்கோர் அளவில்லை' என்னும் ஆன்றோர் மொழியை மெய்பித்த இலங்கை வேந்தனாகிய இராவணன் தமிழ் நாட்டிலும் ஆதிக்கம் செலுத்தத் தலைப்பட்டான். தமிழ் மலையாகிய பொதிய மலையைக் கைப்பற்றிக் கொண்டால் தமிழ் நாட்டை வளைத்து ஆட்சி புரிதல் எளிது என்று எண்ணினான் அம் மன்னன். அந்நோக்கத்தோடு பொதிய மலைக்குப் போந்தான்; அங்கே முத்தமிழ் முனிவராகிய அகத்தியர் அமர்ந்திருக்கக் கண்டான்; இராவணன் வல்லரசனாயினும் இன்னிசையில் ஈடுபட்டான். நாரத முனிவனும் நயக்கும் வண்ணம் நல்லிசை பாட வல்லவன்; பன்னருஞ் சாமகீதம் பாடி இத்துணை ஏற்றம் வாய்ந்த இராவணன் தமிழிசையிற் புகழ் பெற்ற முனிவரிடம் தன் கைவரிசையைக் காட்ட ஆசைப்பட்டான். அவன் கருத்தறிந்த தமிழ் முனிவர் தம் இசைக் கருவியாகிய யாழை மீட்டினார்.
மன்னனுக்கும் முனிவருக்கும் இசைப்போட்டி நிகழ்ந்தது. முதலில் அரக்கர்கோன் அருமையாகப் பாடினான். அதன்பின் அகத்தியர் தமிழிசையை யாழில் அமைத்துப் பாடினார். அவர் பாட்டொலி கேட்ட பறவைகளும் விலங்குகளும் பரவசமுற்றன. எதிரே நின்ற கரும்பாறை இளகிற்று. அரக்கர் கோன் உள்ளம் உருகிற்று. அந்நிலையில் அகத்தியரை நோக்கி, 'என் உயிரினும் இனிய இசை ஞானியே! உமக்கு என்ன வேண்டும்?' என்றான் இராவணன். தமிழ் நாட்டைப் பாதுகாப்பதற்கு ஏற்ற சமயம் வந்துற்றது என்று அறிந்த முனிவர், 'ஐயனே! இந்நாட்டிலுள்ளார் எவரையும் நீ துன்புறுத்தாமல் இருக்க வேண்டும்' என்றார். அதற்கிசைந்த இராவணனும் பொதியமலையை விட்டகன்றான். அன்று முதல் தமிழகத்தில் ஆட்சி செலுத்தும் கருத்தை அடியோடு விட்டொழித்தான் அரக்கர் கோமான். 'தமிழிசையின் வெற்றியால் அரக்கர்அச்சம் அகன்றது' என்று தமிழ் மக்கள் அகங்களித்தார்கள். இச்செய்தியைத்* தொல்காப்பியப் பாயிர வுரையாலும் மதுரைக்காஞ்சி யுரையாலும் அறியலாம். இவ்வரலாற்றால் தமிழ் நாட்டை முன்னாளில் அபயமளித்துக் காத்தது இசைத் தமிழே என்பது இனிது விளங்கும்.
------
* 'பொதியின்கண் இருந்து இராவணனைக் காந்தருவத்தால் பிணித்து இராக்கதரை ஆண்டு இயங்காமை விலக்கினார் தமிழ் முனிவர்'என்பது தொல்காப்பியப் பாயிர உரை.
இவ்வாறு தமிழ்நாட்டைப்பாதுகாத்த இசைத் தமிழ், கடல் கடந்து இலங்கைக்குச் சென்று வெற்றி பெற்ற செய்தியும் அறியத் தக்கதாகும். இன்று இலங்கையில் தமிழர் வாழும் நாடும் நகரமும் யாழ்ப்பாணம் என்னும் அழகிய பெயரைப் பெற்றுள்ளன. யாழ்ப்பாணர் என்பவர் இன்னிசைக் கருவியாகிய யாழைக் கையிலேந்தித் தமிழ்ப் பாட்டிசைக்கும் இசைவாணர். யாழ்ப்பாணர் என்ற குலத்தார் இப்பொழுது தமிழ்நாட்டில் இல்லையென்றாலும், முன்னாளில் அவர் சிறந்து வாழ்ந்தனர் என்பதற்கு ஒரு சான்றாக நிற்பது யாழ்ப்பாணம் என்னும் நன்னகரம்.
பழந்தமிழ்க் குடிகளாகிய பாணரைத் தமிழ் நாட்டுப் பெருநில மன்னரும் குறுநில மன்னரும் ஆதரித்தார்கள்; வரிசை அறிந்து அவர்க்குப் பரிசளித்தார்கள். சோழ நாட்டு மன்னனாகிய கரிகால் வளவனும் தொண்டை நாட்டில் ஆட்சி புரிந்த இளந்திரையனும் குறுநில மன்னனாகிய நல்லியக்கோடனும் இசைவாணர் குலத்தை ஆதரித்த செய்தி பத்துப்பாட்டிலே கூறப்படுகின்றது. சோழ நாட்டின் தலைநகராகிய காவிரிப்பூம்பட்டினத்தில் பெரும் பாணர் குலம் சிறப்புற்று வாழ்ந்ததென்பது சிலப்பதிகாரத்தால் நன்கு அறியப்படுகின்றது. எனவே, முற்காலத்தில் தமிழி சையை இசைத் தொழிலுக்காகப் பயின்றவர் பாணர் குலத்தவரே என்பதும், அவர்களை ஆதரித்த பெருமை தமிழ்நாட்டு மன்னர்க்கு உண்டு என்பதும் பண்டைத் தமிழ் நூல்களால் விளங்குவனவாகும்.
சங்க காலம் என்று சொல்லப்படுகின்ற பழங்கால நூல்களில் வரும் இசைப் பாடல்கள் இயற்கை நலங்களையும் இறைவன் பெருமையையும் அழகுற எடுத்துரைக்கின்றன. பரிபாடல் என்னும் பழைய இலக்கிய நூலில் வைகை ஆற்றைப் புகழ்ந்து பாடிய பாடல்கள் பல உண்டு. தமிழ்நாட்டின் நல்லணியாகத் திகழும் காவேரி ஆற்றை இளங்கோவடிகள் இசைப் பாட்டால் புகழ்ந்து வாழ்த்தியுள்ளார்.
"பூவார் சோலை மயிலாகப் புரிந்து குயில்கள் இசைபாடக்
காமர் மாலை அருகசைய நடந்தாய் வாழி காவேரி"
என்ற இசைப் பாட்டைக் கேட்கும் பொழுது தமிழ்ச் செவிகளில் இன்பத் தேன் வந்து பாய்கின்றதன்றோ?
இவ்வாறு பாணர்களும் புலவர்களும் வளர்த்து வந்த தமிழிசையைச் சைவ சமய நாயன்மார்களும் வைணவ சமய ஆழ்வார்களும் பக்தி நெறியைப் பரப்புவதற்குப் பயன்படுத்தினார்கள். ஈசனைப் பாடிய தேவாரத் திருப்பாசுரங்கள், இறைவன் திருவருளை இன்னிசையால் எளிதிற் பெறலாம் என்னும் உண்மையை எடுத்துரைக்கின்றன. இன்னிசை பாடுவார் பெறும் பயனைத் திருஞானசம்பந்தர் குறித்துள்ளார்.
"பண்ணொன்ற இசைபாடும் அடியார்கள் குடியாக
மண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன்"
என்பது அவர் திருவாக்கு. 'இசைத் தமிழால் வழிபடும் அடியார்க்கு ஈசன் மண்ணுலகு வாழ்வும் தருவான்; விண்ணுலகு வாழ்வும் தருவான்' என்பது இப்பாட்டின் கருத்து. திருநாவுக்கரசர் என்னும் பெரியார் கடுமையான சூலை நோயுற்றுத் துடிக்கும்பொழுது இறைவனை நினைந்து, "ஐயனே !"
"தமிழோடு இசைபாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
உன்நாமம் என்நாவில் மறந்தறியேன்"
என்று மனம் உருகிப் பாடினார், எனவே, இறைவன் அருளைப் பெறுவதற்குத் தமிழிசையே சிறந்த சாதனம் என்னும் கொள்கை தமிழ் நாட்டில் பரவிற்று. சிவனடியார்களும் திருமாலடியார்களும் அருளிய அருட்பாடல்கள் நாடெங்கும் பரவிய பான்மையால் பக்தி வெள்ளம் பொங்கித் ததும்பிப் பூரணமாய் நின்றது. இறைவனுக்குத் திருக்கோவில் கட்டும் பணியிலே ஈடுபட்டனர் தமிழ் மன்னர். தேவாரப் பாடல் பேற்ற ஸ்தலங்களும் ஆழ்வார்களின் மங்களா சாசனம் பெற்ற திருப்பதிகளும் பொதுமக்களின் மனத்தைப் பெரிதும் கவர்ந்தன. 'கோவில் இல்லா ஊரில் குடி இருத்தல் ஆகாது' என்னும் கொள்கையும் எழுந்தது, இங்ஙனம் ஊர் தோறும் எழுந்த கோவில்களில் தெய்வத் தமிழ்ப் பாடல்களை நாள்தோறும் பாடுதற்குரிய முறை வகுக்கப்பட்டது. சிவாலயங்களில் தேவாரம் முதலிய திருமுறைகளை விண்ணப்பம் செய்யும் இசைவாணர் ஓதுவார் என்று பெயர் பெற்றனர்,
"காத லாகிக் கசிந்துகண் ணீர்மல்கி
ஒது வார்தமை நல்நெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சி வாயவே"
என்று திருஞான சம்பந்தர் பாடிய தேவாரத்தில் 'ஓதுவார்' என்னும் சொல் ஈசன் புகழைப் பாடுவார் என்று பொருள் படுகின்றது. வழிபாட்டுக் காலங்களில் ஓதுவார் என்னும் தமிழிசை வாணர்கள் பக்திச் சுவை நிரம்பிய பாடல்களை பண்ணோடு பாடிய பொழுது அவற்றை அன்பர்கள் செவியாரப் பருகினர்; உள்ளம் உருகினர். எனவே, ஆதியில் அரசரால் ஆதரிக்கப் பெற்ற இசைத் தமிழ், இடைக் காலத்தில் ஆலயங்களின் ஆதரவு பெற்று வளர்ந்தது.
இயற்கையோடு இசைந்து இன்புறும் தன்மையினராகிய தமிழ் மக்களது வாழ்க்கையின் பல துறைகளிலும் கலந்து இசைப் பாட்டு வளமுற்றது, வேளாண்மை என்னும் பயிர்த் தொழில் இந்நாட்டிலே தொன்று தொட்டு நிகழும் பழுதற்ற தொழிலாகும். அத்தொழிலை மேற்கொண்ட பணியாளர் நெற்றி வேர்வை நிலத்தில் விழப் பாடுபடும்போதும் நல்ல பாட்டிசைத்தார்கள். கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்து நிலத்திலே பாய்ச்சும் பொழுது ஏற்றப் பாட்டு; நாற்று நடும்பொழுது நடுகைப் பாட்டு; அறுப்புக் களத்தில் ஏர்க்களப் பாட்டு ஆக, பயிர்த் தொழிலாளரது பாட்டு பலவாகும்; இன்னும் குறிஞ்சி நிலத்திலே குறத்திப் பாட்டு ஒலிக்கும். மருத நிலத்திலே பள்ளுப் பாட்டு முழங்கும். பெண்கள் பந்து விளையாடும் பொழுது பாட்டு; அம்மானை ஆடும் பொழுது பாட்டு; தாலாட்டும் பொழுது பாட்டு. சுருங்கச் சொல்லின் தமிழ்நாட்டில் பாட்டில்லாத பணியே இல்லை என்பது மிகையாகாது.
போர்களத்தைப் பற்றிய இசைப் பாட்டும் இந் நாட்டில் உண்டு. அவற்றுள் தலைசிறந்தது 'கலிங்கத்துப் பரணி' என்னும் தாழிசைப் பாட்டாகும். தமிழ்நாட்டுப் பெருவேந்தனாகிய குலோத்துங்க சோழன் கலிங்க நாட்டின்மேல் படையெடுத்து வாகைமாலை சூடிய வரலாற்றைப் புனைந்துரைப்பது கலிங்கத்துப்பரணி. பரணி பாடிய செயங்கொண்டான் என்னும் கவிஞனைக் குலோத்துங்க சோழன் பரிசளித்துப் பாராட்டினான். அம்மன்னன் தமிழிசையில் மிகவும் ஈடுபட்டவன்; போர் ஒழிந்த காலங்களில் தமிழ் இசைவாணரொடும் கலைவாணரொடும் பழகி இன்புற்றவன். அவனுடைய தேவியர்களில் ஒருவர் 'ஏழிசை வல்லபி' என்னும் சிறப்புப் பெயர் பெற்று விளங்கினார். இன்னிசையின் சுவையறிந்த மன்னவன் இசைக் கலையின் நயந்தெரிந்த ஒரு நங்கையை மணந்து, ஏழிசை வல்லபி என்னும் சிறப்புப் பெயரையும் அவளுக்கு அளித்தான் என்று தோன்றுகிறது.
இவ்வாறு பல துறைகளிலும் புகுந்து தமிழ் மக்களின் வாழ்க்கையை இன்புறுத்திய இசைத் தமிழ், இக்காலத்திலே நாட்டுப் பற்றை வளர்ப்பதற்கும், அரசியல் அறிவைப் பரப்புவதற்கும் பயன்படுகின்றது. இந்த வகையில் வழி காட்டியவர் 'பாட்டுக்கொரு புலவன்' என்று பாராட்டப்படுகின்ற பாரதியாரே ஆவார். இந்நாட்டில் வழங்கிய பழைய இசைப்பாட்டு வகை பாரதியார் கவிதையிலே மிளிர்கின்றது. இந்நாடு சுதந்திரம் அடைந்த பொழுது மக்கள் எல்லோரும் பாடிய பாட்டு, "ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று ஆடுவோமே" என்பது. இந்தப் பாட்டு பழங்காலப் பள்ளுப் பாட்டைத் தழுவி எழுந்தது என்பது சொல்லாமலே விளங்கும். இன்னும், "பண்டாரப் பாட்டு" என்று பாரதியார் பாடியுள்ள "அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே" என்ற வீரப்பாட்டு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே திருநாவுக்கரசர் பாடிய "அஞ்சுவது யாதொன்றும் இல்லை; அஞ்ச வருவது மில்லை" என்று வீரப்பாட்டை அடியொற்றிச் செல்வதாகும். இங்ஙனம் பழைய இசை மரபுகளைப் பின்பற்றிப் பாடிய பாரதியார், இனி வருங்காலத்தில் இசைத் தமிழ் வளர்ந்தோங்குதற்குரிய வழிகளையும் காட்டியுள்ளார், தமிழ் நாட்டில் தமிழ் மொழி தழைத்து ஓங்க வேண்டுமாயின் 'மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதில் ஓர் மகிமை இல்லை' என்பது பாரதியார் கருத்து. தமிழ் நாட்டின் பெருமையைப் புத்தம் புதிய முறையில் பாடிய பாரதியார் பாட்டு இந்நாளில் தமிழ் நாடெங்கும் பரவி இன்பம் பயக்கின்றது.
"கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு"
"வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென் றோர்மணி
ஆரம் படைத்த தமிழ்நாடு"
என்ற பாரதியார் பாட்டைக் கேட்கும் மக்களின் உள்ளத்தில் தமிழ் ஆர்வம் வளராது ஒழியுமோ? "தேமதுரத் தமிழோசை உலக மெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்" என்ற பாரதியார் பாட்டுத் தமிழ் மக்களைத் தட்டி எழுப்பும் தகைமை வாய்ந்ததன்றோ? இத்தகைய இசைப்பாட்டு ஆயிரம் ஆயிரமாக எழுந்து தமிழ்நாடு எங்கும் பரவுதல் வேண்டும். சிலப்பதிகாரக் கவிஞர் காட்டிய நெறியைக் கடைப்பிடித்துத் தமிழ் நாட்டின் இயற்கைச் செல்வங்களாகிய ஆறுகள், அருவிகள், மலைகள், கடல்கள், முதலியவற்றின் அருமை பெருமைகளை இசைப்பாட்டின் வாயிலாகப் பொது மக்களுக்கு வழங்குதல் வேண்டும். சென்னை மாநகரம் இப்பொழுது தமிழ் மக்களின் உள்ளத்தைப் பெரிதும் கவர்ந்து நிற்கின்றது. தமிழ் நாட்டின் தலைநகரமாகிய சென்னையம்பதி 'விரிநகர்' என்று புலவர் பாடும் புகழுடையதாகும். இந் நகரில் அமைந்த கடற்கரைச் சாலை இவ்வுலகிலுள்ள அருமையான காட்சிகளுள் ஒன்றென்று நாடறிந்தவர் கூறுவர். இத்தகைய சீர்மை வாய்ந்த சாலையைக் குறித்து அருமையான இசைப்பாட்டுகள் தோன்றுதல் வேண்டும். சென்னை அருகேயுள்ள மகாபலிபுரம் என்னும் மாமல்லபுரத்தில் நெய்தலும் குறிஞ்சியும் கொஞ்சி விளையாடும் காட்சி இந்நாட்டார்க்கு மட்டுமன்றி எந்நாட்டவரக்கும் இன்பமளிக்கின்றது. இன்னும் தமிழ்முனிவர் வாழும் பொதிய மலையும் மந்த மாருதம் மகிழ்ந்துலாவும் திருக்குற்றால மலையும் மாந்தர் கருத்தையும் கண்ணையும் கவரும் அழகு வாய்ந்தனவாகும். இவ்வியற்கைப் பொருள்கள் எல்லாம் இசைப்பாட்டின் வழியாகத் தமிழ் நாட்டிற்கு இன்பம் அளித்தல் வேண்டும்.
பழமையான பண்களின் வரலாற்றை ஆராய்வதும் புத்தம் புதிய இசைப்பாடல்களை இயற்றுவதும் இத்தமிழிசைச் சங்கத்தின் அடிப்படையான நோக்கமாகும். இத்தகைய பெரும்பணியை மேற்கொண்ட இச்சங்கம் பல்லாண்டு வாழ்க என மனமார வாழ்த்துகின்றேன். இசை நலம் இல்லாத என்னையும் இவ்வரும்பணியில் இசைவித்த செட்டி நாட்டரசர், ராஜாசர், முத்தையா செட்டியார் அவர்களுக்கும் தமிழிசைச் சங்கத்தார்க்கும் என் பணிவார்ந்த வணக்கம் உரியதாகும்.
------------
II. இயற்கை இன்பம்
6. பொங்கலோ பொங்கல்*
(* சென்னை, 'பாரததேவி' யின் பொங்கல் மலரில் எழுதியது.)
தமிழ் நாட்டிலே பல சாதிகள் உண்டு ; பல சமயங்கள் உண்டு. ஆயினும், தமிழர் அனைவருக்கும் பொங்கல் நாள் ஒரு புனித நாள். அந்த நாளில், வீடுதோறும் சுதையின் விளக்கம் ; வீதிதோறும் மங்கல முழக்கம் ; 'பொங்கலோ பொங்கல்' என்பதே எங்கும் பேச்சு.
பொங்கல் விழா நடைபெறும் காலமும் இனியகாலம் ; கார் உலாவும் வானமும், நீர் உலாவும் ஏரியும் கருணை காட்டும் காலம் ; இயற்கை அன்னை சுமையான புடைவை உடுத்து, பன்னிறப் பூக்களைச் சூடி, இனிய காயும், கனியும் கரும்பும் அணிந்து இன்பக் காட்சி தருங்காலம்.
பொங்கலுக்குத் தலைநாள் போகி பண்டிகை. தைக் கொண்டாடும் கருத்தென்ன? போகி என்பவன் இந்திரன். அவன் மேகங்களை இயக்கும் இறைவன். தமிழ் நாட்டார் பழங்காலத்தில் இந்திரனை விளை நிலங்களின் இறைவனாக வைத்து வணங்கினார்கள். சோழவள நாட்டில் இந்திர விழா இருபத்தெட்டு நாள் கோலாகலமாக நடைபெற்றது.
"பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்க"
வேண்டும் என்று அவ் வானவரைத் தமிழ்நாட்டார் வழிப்பட்டார்கள். பண்டைத் தமிழரசர் காலத்தில் சிறப்பாக நடந்த அத்திருநாள், இப்பொழுது குன்றிக் குறுகி ஒருநாளில் பண்டிகையாக நடைபெறுகின்றது.
போகி பண்டிகையை அடுத்து வருவது பொங்கற் புதுநாள் ; அந் நாளில் 'பழையன கழிதலும் புதியன புகுதலும்' நிகழும் ; வீட்டிலுள்ள பழம்பானைகள் விடை பெறும் ; புதுப்பானைகளில் பொங்கல் நடைபெறும். பால்பொங்கும் பொழுது, " பொங்கலோ பொங்கல்" என்னும் மங்கல ஒலி எங்கும் கிளம்பும். அப்பொழுது, பெண்கள் குரவையாடுவர் ; பிறகு "பூவும் புகையும் பொங்கலும்" கொண்டு இல்லுறை தெய்வத்தை வணங்குவர். அனைவரும் வயிறார உண்டு மகிழ்வர்.
பொங்கலுக்கு அடுத்த நாள் நிகழ்வது மாட்டுப் பொங்கல். நாட்டுப் புறங்களில் அது மிக்க ஊக்கமாக நடக்கும். முற்காலத்தில் மாடே செல்வமாக மதிக்கப் பட்டது. மாடு என்ற சொல்லுக்கே செல்வம் என்னும் பொருள் உண்டு. மன்பதைக்காக உழைக்கும் வாயில்லா உயிர்களில், மாட்டுக்கு ஒப்பாகச் சொல்லத் தக்கது மற்றொன்று இல்லை. விளை நிலத்தில் ஏர் இழுப்பது மாடு; பரம்பு அடிப்பது மாடு; அறுவடைக் காலத்தில் சூடடிப்பது மாடு ; களத்து நெல்லைக் களஞ்சியத்தில் சேர்ப்பது மாடு. ஆகவே, மாடு இல்லை யென்றால் பண்ணையும் இல்லை ; பயிர்த் தொழிலும் இல்லை.
இன்னும், பாலும் நெய்யும் தந்து மாந்தர் உடலைப் பாதுகாப்பதும் மாடல்லவா? பாலில் உயர்ந்தது பசுவின்பால். அமைதியும், அன்பும், பொறுமையும் உடையது பசு. தன் கன்றுக்கு உரிய பாலைக் கவர்ந்துகொள்ளும் கல்நெஞ்சருக்கும் கரவாது பால் கொடுக்கும் கருணை வாய்ந்தது பசு. "அறந்தரு நெஞ்சோடு அருள் சுரந்து ஊட்டும் "பசுக்களை ஆதரித்தல் வேண்டும் என்பது தமிழர் கொள்கை. கழனியிற் பணி செய்யும் காளை மாடுகளும், காலையும் மாலையும் இனிய பாலளிக்கும் கறவை மாடுகளும் நோயின்றிச் செழித்து வளர்வதற்காக நிகழ்வது மாட்டுப் பொங்கல்.
அந்த நாளில் கன்று காலிகளுக்குக் கொண்டாடட்டம். அவற்றை ஆற்றிலும் குளத்திலும் நீராட்டுவர் ; கொம்பிலே பூவும் தழையும் சூட்டுவர் ; மணிகளைக் கழுத்திலே மாட்டுவர் ; நல்ல தீனியை ஊட்டுவர் ; பொங்கல் முடிந்தவுடன் அந்தி மாலையில் வீதியிலே விரட்டுவர். அவை குதித்துப் பாய்ந்து கும்மாளம் போடுவது கண்ணுக்கு இனிய காட்சியாகும்.
சென்ற சில ஆண்டுகளில் தமிழ் நாட்டில் பொங்கல் மங்கலாக நடைபெற்றது ; இன்றும் அந்த நிலை மாறிவிடவில்லை. அரிசிப் பஞ்சமும், ஆடைப் பஞ்சமும், அகவிலைக் கொடுமையும் நாட்டை அரித்துக்கொண்டிருக்கும்பொழுது, பொங்கல் எப்படி இன்பப் பொங்கலாகும்?
"இனி வரும் பொங்கல் பெரும் பொங்கலாக வேண்டும் ; தமிழ்நாட்டில் உள்ள வெற்றிடம் எல்லாம் விளை நிலமாக மாறவேண்டும் ; உண்ண உணவும் உடுக்க உடையும் எல்லார்க்கும் கிடைக்கவேண்டும் ; சென்னை மாநகரில் 'கன்றாவி' யாகவுள்ள தோற்கன்றுகள் ஒழிந்து பாற் கன்றுகள் பெருகவேண்டும் ; தமிழ்நாடு தன்னரசு பெறுதல் வேண்டும் ; தமிழ்த் தாய் அரியாசனத்தில் அமர்ந்திருத்தல்வேண்டும்" என்று எல்லாம் வல்ல ஆண்டவனை இந்நன்னாளில் வேண்டுவோமாக !
-------------
7. சித்திரை பிறந்தது*
( * 'பாரத தேவி' யின் சித்தரை மலரில் எழுதியது.)
தமிழ்நாட்டில் கூனியாகிய பங்குனி மாதம் கழிந்தால் எங்கும் மங்கல ஒலி. "கூனி குடி போகாதே; ஆனி அடி கோலாதே" என்பது பழமொழி. இப்படிக் கூனியும் ஆனியும் கூடாவென்று கருதும் தமிழர், சித்திரையைச் சிறந்த ஆர்வத்தோடு வரவேற்கின்றார்கள் ; தமிழ் ஆண்டுப் பிறப்பை அதன் தலைநாளில் அமைத்துக்கொண்டாடுகின்றார்கள் ; அந்நாளைப் புனித நாளாகப் போற்றுகிறார்கள். அதன் காரணம் என்ன?
சித்திரை மாதத்தில் இளவேனிற் காலம் தொடங்குகின்றது. வசந்தம் என்னும் இளவேனில் இன்ப சுகம் தரும் காலம். அப்போது, பசுமையான செழுஞ்சோலை பார்க்கு மிடமெங்கும் கண்ணுக்கு விருந்தளிக்கும். மாஞ்சோலை மெல்லிய தளிராடை புனைந்து இலங்கும் ; வேம்பின் கொம்பிலே பூத்த சிறு வெண்மலர்கள் புதுமணம் கமழும்; தென்னை மரங்கள் இனிமையான இளநீரைத் தரும் ; பனை மரங்கள் சுவையான பதநீரைக் கொடுக்கும்.
வசந்தகாலம் பிறந்ததென்று மகிழ்ந்து, பசுங் கிளிகள் மொழி பேசி, மரக்கிளைகளிலே கொஞ்சிக் குலாவும் ; கருங் குயில்கள் மறைந்து நின்று கூவும் ; "மன்னன் மாரன் மகிழ்துணை யாகிய இன்இளவேனில் வந்தனன்" என்று குயில் கூவுவதாக இளங்கோவடிகள் பாடுகின்றார். எனவே, இளவேனிற் காலம் மன்மதன் மகிழ்ந்து ஆட்சி செய்யும் காலம்.
புதுமணம் புரிய விரும்புவோர் சித்திரையின் வரவை மெத்த ஆசையுடன் நோக்குவர். திருமணத்திற்குரிய சூழ்நிலை அப்போது இயல்பாக அமைந்திருக்கும் ; பகலவன் ஒளி தருவன். வீடுதோறும் நெல்லும் பிறவும் நிறைந்திருக்கும். தென்றல் என்னும் இளங்காற்று வீசிக் கொண்டிருக்கும். இனிய திருமணம் இன்பமாக நடைபெறும்.
இத்தகைய இன்பம் நிறைந்த இளவேனிலின் சுகத்தை ஈசனுடைய பேரின்பத்திற்கு நிகராகப் பாடுகின்றார் வடலூரடிகளார். இளங்கோடையிலே, இளைப்பாற்றிக் கொள்ளுதற் கேற்ற செழுஞ் சோலையாகவும், ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத் தண்ணீராகவும், மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றாகவும் ஈசனது இனிய கருணையைக் கண்டு போற்றுகின்றார் அக்கவிஞர்.
எனவே, இயற்கை அன்னை இனிய கோலத்தில் இலங்கும் காலம் இளவேனிற் காலம். மாந்தர் ஐம்பொறிகளாலும் நுகர்தற்குரிய இன்பம் பொங்குங் காலம் இளவேனிற் காலம். பனியால் நலிந்த மக்கள் பகலவன் ஒளியைக் கண்டு, "ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்" என்று இன்புற்று ஏத்தும் காலம் இளவேனிற் காலம். ஆகவே, இயற்கையோடு இசைந்து வாழ்ந்த பழந்தமிழ் மாந்தர், இன்பநெறி காட்டும் இளவேனிற் பருவத்தின் முதல் நாளைத் தமிழ் ஆண்டின் தலைநாளாகக் கொண்டது மிகப் பொருத்த முடையதன்றோ?
-----------
8. தமிழ்த் தென்றல்*
(* விருதுநகரிலே தோன்றியுள்ள 'தமிழ்த் தென்றல்' என்ற பத்திரிகையின் தலையங்கமாக எழுதப்பட்டது.)
தென்னாட்டிலே தென்றல் என்றொரு பொருள் உண்டு. தனியே அதற்கொரு சுகம் உண்டு. வசந்த காலத்தில் தெற்கேயிருந்து அசைந்து வரும் தென்றலின் சுகத்தை நன்றாக அறிந்தவர் தமிழர் ; வடக்கேயிருந்து வரும் குளிர் காற்றை வாடை என்றார்கள். தெற்கேயிருந்து வரும் இளங்காற்றைத் தென்றல் என்றார்கள். வாடை என்ற சொல்லிலே வன்மை யுண்டு ; தென்றல் என்ற சொல்லிலே மென்மை யுண்டு; தமிழகத்தார் வாடையை வெறுப்பர் ; தென்றலில் மகிழ்ந்து திளைப்பர்.
இயற்கை யன்னை இனிய கோலங்கொண்டு விளங்கும் இளவேனிற் காலத்தில், மெல்லிய தென்றலைத் தேராகவும், இனிய கரும்பை வில்லாகவும் குயிலைத் தூதாகவும் கொண்டு மன்மதன் ஆட்சி புரிகின்றான் என்று கவிஞர் பாடி மகிழ்வர்.
இத்தகைய தென்றல், பிறப்பு வகையிலும் சிறப்பு வாய்ந்தது. நறுமணங் கமழும் சந்தனச் சோலை சூழ்ந்த செந்தமிழ் மலையே அதன் பிறப்பிடம் என்பர்.
"திங்கள்முடி சூடுமலை, தென்றல்விளை யாடுமலை
தங்குமுகில் சூழுமலை, தமிழ்முனிவன் வாழுமலை"
என்று அம்மலையைப் புகழ்ந்து பாடினாள் ஒரு குறவஞ்சி. மெல்லிய முகிலைத் துகிலாக உடுத்து, வெள்ளிய மதியை முடியிலே அணிந்து விளங்கும் பொதிகைத் தாயின் மடியிலே தவழ்ந்துவிளையாடும் இளங்குழந்தையாக அவ் வஞ்சிக்குத் தென்றல் காட்சியளிக்கின்றது.
'திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி'க்குத் திருஞான சம்பந்தர் எழுந்தருளிய பொழுது, பொதிகைத் தென்றல் அவரை வரவேற்று இன்ப சுகம் தந்தது. தண்ணறுஞ் சாலைகளிலும், தாழம் பூக்களிலும் நுழைந்து, நறுமணம் கவர்ந்து வந்த பொதிகைத் தென்றலைத் தேவாரப் பாட்டில் இசைத்துப் பாராட்டினார் அவ் இளங்கவிஞர்.
"துன்றுதண் பொழில் நுழைந்து எழுவிய கேதகைப் போதளைந்து
தென்றல்வந் துலவிய திருநெல்வே லிஉறை செல்வர் தாமே"
என்பது அவர் திருப்பாட்டு. பொதிகையிலே தவழ்ந்த குழவித் தென்றல் நெல்லையம் பதியிலே நடந்து உலாவக் கண்டு இன்புற்றார் அக்கவிஞர்.
மதுரை மாநகரின் அருகே கண்ணகியும் கோவலனும் நடந்து சென்றபொழுது தென்றல் அவரை எதிர் கொண்டு அழைத்தது. அதன் பிறப்பையும் வளர்ப்பையும் எடுத்து உரைக்கின்றார் இளங்கோவடிகள்:
"மலயத்து ஓங்கி மதுரையில் வளர்ந்து
புலவர் நாவிற் பொருந்திய தென்றல்"
என்பது அவர் புகழுரை ; முத்தமிழ் முனிவன் வாழும் மலையிலே பிறந்து, சங்கத் தமிழ் வழங்கும் மதுரையிலே வளர்ந்து தென்றலைத் தமிழ்த் தென்றலாகவே கருதி இன்புறுகின்றார் கவிஞர் ; புலவர் பாடும் புகழுடைய தென்றலைப் போற்றி மகிழ்கின்றார்.
மனத்திற்கும் வாக்கிற்கும் எட்டாத பேரின்ப சுகத்தை ஒல்லும் வகையால் உணர்த்தலுற்றார் அருட்கவிஞர் ஒருவர் ; இளவேனிற் காலம் ! சித்திரை மாதம்! முழுமதி எங்கும் ஒளி வீசுகின்றது! தண்ணீர் நிறைந்த ஒரு தாமரைக் குளத்திலே அவ்வொளி தவழ்கின்றது. இவ்வியற்கைக் காட்சியைக் கண்டு இன்புற்றிருக்கின்றான் ஒருவன். அப்போது தென்றல் அசைந்து வருகின்றது. அம்மெல்லிய காற்றிலே நல்ல வீணையின் ஒலி மிதந்து வந்து செவிக்கு விருந்தளிக்கின்றது. இதனைக் கவிதையிலே காட்டுகின்றார். கவிஞர்:
"மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறைப் பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே"
என்பது திருநாவுக்கரசர் இசைத்த பாட்டு. ஈசன் அளிக்கும் இன்ப சுகம், வசந்த காலத்தில் இசைந்த இயற்கை இன்பம் போன்றது என்று அருளினார் அவ்வருட் கவிஞர்.
புகழ் பூத்த பொதிய மலையிற் பிறக்கும் தென்றலைப் போன்று, பொருள் பூத்த விருதுநகரிலே பிறக்கின்றது 'தமிழ்த்தென்றல்.' இலக்கிய மறுமலர்ச்சிச் சோலையில் புகுந்து தமிழ் மணத்தையெல்லாம் தமிழ்த் தென்றல் வாரி வழங்கும் என்று தமிழகம் எதிர் பார்க்கின்றது. தென்றல் வீசும் காலத்தில், 'பிரிந்தவர் பொருந்துவர், பிணக்கமுற்றவர் இணக்கமுறுவர்; ஊடி நின்றவர்கூடி மகிழ்வர்' என்பது தமிழர் கொள்கை.
"ஊடினீர் எல்லாம் உருவிலான் தன்ஆணை
கூடுமின் என்று குயில் சாற்றும்"
என்பதாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. எனவே, தமிழ்த் தென்றல் தமிழர் இனத்திலே, பிரிந்தவரைப் பொருத்தும்; வேறுபட்டவரை ஒன்றுபடுத்தும்; தமிழ்க் குலத்தை அரிக்கின்ற வேற்றுமைகளை ஒழிக்கும்; தமிழருக்கு இன்ப நெறி காட்டும் என்று நம்புகின்றோம்.
------------
9. திருக்குற்றாலம்
தென்றல் அசைந்து வரும் தென் தமிழ்நாட்டில் அமைந்த திருக்குற்றாலம், மலைவளம் படைத்த பழம் பதியாகும். அம்மலையிலே, கோங்கும் வேங்கையும் ஓங்கிவளரும்; குரவமும் முல்லையும் நறுமணங் கமழும்; கோல மாமயில் தோகை விரித்தாடும்; தேனுண்ட வண்டுகள் தமிழ்ப் பாட்டிசைக்கும். இத்தகைய மலையினின்று விரைந்து வழிந்து இறங்கும் வெள்ளருவி வட்டச்சுனையிலே வீழந்து பொங்கும் பொழுது சிதறும் சிறு நீர்த்திவலைகள் பாலாவிபோற் பரந்து எழுந்து மஞ்சினோடு சேர்ந்து கொஞ்சிக் குலாவும். அவ் வருவியில் நீராடி இன்புற்ற மேலைநாட்டுப் பெரியார் ஒருவர், 'இந் நானிலத்தில் உள்ள நன்னீர் அருவிகளுள் தலைசிறந்து குற்றால அருவியே என்று கூறுதல் மிகையாகாது!' என்று புகழ்ந்துரைத்தார்,*
---
* History of Tinnevelly by Bishop Caldwell.
வேனிற்காலத்தில் திருக்குற்றால மலையில் வீசும் மெல்லிய பூங்காற்று மருந்துச் செடிகொடிகளின் நலங்களைக் கவர்ந்து வருதலால் நலிந்த உடலைத் தேற்றும் நன்மருந்தாகும்; சலித்த உள்ளத்தைத் திருத்தும் சஞ்சீவியாகும். பயன் மரம் நிறைந்த திருக்குற்றாலச் சாரலில் வேரிலே பழம்பழுத்து, தூரிலே சுணை வெடிக்கும் குறும் பலா மரம் ஒன்று தொன்றுதொட்டு விளங்குகின்றது. அப்பழுமரம் திருஞான சம்பந்தர் தேவாரத்தில் அமையும் பேறுபெற்றது. குறும் பலாவின் கீழ் அமர்ந்த சிவக்கொழுந்தை அப்பெருமான் மனங்குளிர்ந்து பாடினார். திருக்குற்றால மலையிலே வாழும் களிறும் பிடியும் விரையுறு நறுமலர் கொய்து குறும்பலாவிற் கோயில் கொண்ட ஈசனைக் குழைத்து வணங்கும் கோலம்,
"பூந்தண் நறுவேங்கை கொத்திறுத்து
மத்தகத்திற் பொலிய ஏந்திக்
கூந்தற் பிடியும் களிறும் உடன்வணங்கும்
குறும் பலாவே"
என்ற தேவாரப் பாட்டில் எழுதிக் காட்டப்படுகின்றது.
நறுமணங் கமழும் பொழில்களைக் காணும் பொழுதும், அப் பொழில்களின் இடையே கிளைக்குக் கிளை தாவி விளையாடும் குரங்குகளைப் பார்க்கும் பொழுதும் பிள்ளைப் பெருமானாகிய திருஞான சம்பந்தர் உள்ளம் துள்ளி மகிழும். 'தேனருவித் திரையெழும்பி வானின் வழி யொழுகும்' திருக்குற்றால மலையில், இந்நாள் இளைஞர்கள் கண்டு இன்புறுகின்ற வானரங்களை அந்நாளில் திருஞான சம்பந்தரும் கண்டார்போலும்! அப்பொழுது அவர் அடைந்த உள்ளக்கிளர்ச்சி ஒரு தெள்ளிய பாட்டாயிற்று
"மலையார் சாரல் மகவுடன் வந்த மடமந்தி
குலையார் வாழைத் தீங்கினி மாந்தும் குற்றாலம்"
என்ற தேவாரப் பாட்டில் மந்திகள் தம் வயிற்றைக் கட்டித் தழுவிய குட்டிகளோடு வாழைக் குலைகளின் மீது அமர்ந்து வளமான கனிகளை மாந்தும் காட்சி அழகுற மிளிர்கின்றது.
திருக்குற்றாலத்தின் அருகே சிறந்த ஊர்கள் சில உண்டு. வடநாட்டுக் காசிக்கு நிகரான தென்காசியென்னும் ஊர் அதற்கு மூன்று மைல் தூரத்தில் உள்ளது. பதினைந்தாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் தென்பாண்டி நாட்டில் ஆட்சி புரிந்த பராக்கிரம பாண்டியனால் தென்காசிக் கோவில் கட்டப்பட்டதென்று சாசனம் தெரிவிக்கின்றது. அரசாளும் உரிமையும் அருந்தமிழ்ப் புலமையும் ஒருங்கே வாய்ந்த அதிவீரராம பாண்டியர் தென்காசியில் இருந்து நைடதம் முதலிய நயஞ்சான்ற தமிழ் நூல்களை இயற்றினார் என்பர்.
இன்னும் திருக்குற்றாலத்திற்கு அண்மையிலுள்ள சிற்றூர்களில் ஒன்று மேலகரம் எனப்படும். அவ்வூரில் சைவ வேளாள மரபிலே பிறந்து தெள்ளிய கவிதைபாடும் திறமை பெற்றார் திரிகூட ராசப்பர். இவர் இயற்றிய 'குற்றாலக் குறவஞ்சி' நாடகத்தை நற்றமிழுலகம் புகழ்ந்து பாராட்டுகின்றது.
மலைச்சாரலிலே, தேனும் தினைமாவும் உண்டு திளைக்கும் கானவர் வாழ்க்கையும், காதலுற்ற கடுவன் மந்திக்குக் கனி கொடுத்துக் கொஞ்சும் காட்சியும், அருள் வடிவாய அருவி, அகத்தும் புறத்தும் செறிந்த அழுக்கைப் போக்கிக் கழுநீராய் ஓடும் அழகும், பண்பாகக் குறி சொல்லிப் பட்டும் மணியும் பரிசு பெறும் குறவஞ்சியின் கோலமும் அந்நூலில் இனிமையாக எழுதிக் காட்டப்பட்டுள்ளன.
திரிகூடராசப்பர் இயற்றிய குறவஞ்சி நாடகம் மதுரை மாநகரில் அரசு வீற்றிருந்த முத்து விசயரங்க சொக்கநாத நாயக்கர் கருத்தை கவர்ந்தது. அதன் அருமை பெருமைகளைக் கற்றறிந்தார் வாயிலாகக் கேட்டு இன்புற்ற நாயக்கர் திரிகூடராசப்பரை ஆதரிக்க விரும்பினர்; குற்றாலத்தில் இன்றும் 'குறவஞ்சிமேடு' என்று வழங்குகின்ற நன்செய் நிலத்தை அவருக்கு நன்கொடையாக அளித்தார். கருப்புக்கட்டி ஊற்றின் அருகே அமைந்துள்ள அவ்வளமார்ந்த நிலம், வழி வழியாக அக்கவிராயர் குடும்பத்தினர் ஆளுகையில் இருந்து வருகின்றது. கவிப் புலமையால் திரிகூடராசப்பர் பெற்ற கவிராசர் என்ற பட்டமும் திருக்குற்றால நாதர் சந்நிதியில் வாகனக் கவி பாடும் சிறப்பும் இன்றும் அவர் குடும்பத்தார்க்கு உண்டு.
திருக்குற்றாலத்தின் அருகே அமைந்த ஊர்கள் யாவும் குறிஞ்சி வளம் வாய்ந்தனவாகும். அவற்றுள் ஒன்று பைம்பொழில் என்னும் அழகிய பெயர் பெற்றுள்ளது. பசுமையான சோலை சூழ்ந்த சிற்றூரைப் பைம்பொழில் என்றழைத்த பண்டைத் தமிழ் மக்களது மனப்பான்மை எண்ணுந்தோறும் இன்பம் பயப்பதாகும். கவிநலஞ் சான்ற அவ்வூர்ப் பெயரைச் சரியாகச் சொல்ல மாட்டாத பாமர மக்கள் 'பம்புளி' என்று சிதைத்துவிட்டார்கள். அச்சிற்றூரின் எல்லையில் திருமலையென்னும் சிறந்த குன்றம் அமைந்திருக்கின்றது. முருகப் பெருமான் எழுந்தருளிய குன்றமாதலால் அது, திருமலை என்னும் பெயர் பெற்றது.
இன்னும், குற்றாலத்தின் ஒருசார் காசிமேசபுரமும், இலஞ்சியும் அமைந்துள்ளன. காசிமேசபுரத்திற்கும் காசிக்கும் எவ்வகைத் தொடர்பும் இல்லை ஆங்கில வர்த்தக் கம்பெனியார் காலத்தில் காசாமேஜர் என்ற பெயருடைய ஆங்கிலேயர் ஒருவர் தென்னாட்டில் வர்த்தக கர்த்தராக நியமிக்கப்பட்டார். அவர் குற்றால மலையின் செழுமையைக் கண்டு அங்குத் தோட்டப்பயிர் செய்யத் தொடங்கினார். அவர் பெயரால் அமைந்த சிற்றூர் காசாமேசர்புரம் என்று பெயர் பெற்று, இப்பொழுது காசிமேசபுரம் என்று வழங்குகின்றது. 'பொன் இலஞ்சி' யென்றும், 'மீறும் இலஞ்சி' யென்றும் குறவஞ்சிக் கவிராயரால் சிறப்பிக்கப்பட்ட சிற்றூர் செல்வம் மலிந்த சீருராய்த் தென்காசியின் அருகே திகழ்கின்றது.
-------------
10. பழகு தமிழ்
தமிழகத்தில் பல நாடுகள் உண்டு; பல குலங்கள் உண்டு. ஒரு நாட்டுத் தமிழுக்கும் இன்னொரு நாட்டு தமிழுக்கும் வேற்றுமையே இல்லை என்று கூற முடியாது. ஒரு குலத்தார் பேசுந்தமிழ் மற்றொரு குலத்தார் பேசுந் தமிழை எல்லா வகையிலும் ஒத்திருக்கும் என்று சொல்ல முடியாது.
பந்தல் என்ற சொல்லின் ஆட்சியைப் பார்ப்போம்;திருமணத்திற்குப் பந்தல் போடும் வழக்கம் இந்நாட்டில் சாலப் பழமை வாய்ந்தது. காவிரிப்பூம் பட்டினத்திலே செல்வக் குடியிற் பிறந்த கண்ணகிக்கும் கோவலனுக்கும் முத்துப்பந்தலிலே திருமணம் நிகழ்ந்தது. "மாலை தாழ் சென்னிவயிரமணித் தூணகத்து நீல விதானத்து நித்திலப்பூம் பந்தர்" என்று அப்பந்தலைச் சிலம்பு பாடிற்று. கோடையிலே வழிநடந்து செல்வார்க்கு நீரும் நிழலும் தரும் பந்தலைத் தண்ணீர்ப் பந்தல் என்பர்.
இத்தகைய மேன்மையான சொல் தனவணிகர் நாடு என்னும் செட்டிநாட்டிலே அமங்கலச் சொல்லாகக் கருதப்படுகின்றது. பந்தல் என்பது அந்நாட்டிலே மணப் பந்தலைக் குறிப்பதில்லை; பிணப் பந்தலையே குறிக்கும். இழவு வீட்டில் போடுவது பந்தல்; கல்யாண வீட்டில் போடுவது காவணம் அல்லது கொட்டகை. இலக்கியத்தில் வழங்கும் காவணம என்ற அருஞ்சொல செட்டிநாட்டிலே பழகு தமிழாய்ப் பயில்கின்றது.
இனி, தொண்டு என்ற தொன்மையான சொல்லைப் பார்ப்போம்; தொண்டு என்பது சேவை. நாட்டுக்குச் செய்யும் சேவை தேசத் தொண்டு எனப்படும் இறைவனுக்குச் செய்யும் சேவை திருத்தொண்டு எனப்படும். 'தொண்டர்தம் பொருமை சொல்லவும் அரிதே' என்னும் வாய்மொழி பண்டைக் காலத்தே தமிழ்நாட்டில் எழுந்தது. இத்தகைய சொல், கொங்கு நாட்டிலே இப்பொழுது இழிந்த பொருளில் வழங்குகின்றது. ஒழுக்கம் கெட்டவரைக் குறிக்கின்றது அச்சொல்.
'பையச் சென்றால் வையந் தாங்கும்' என்பது இந்நாட்டிலே ஒரு பழமொழி. பைய என்றால் மெல்ல என்பது பொருள். 'பைய போ' என்ற சொல் பாண்டிய நாட்டிலே பெருவழக்குடையது. தேவாரத்தில் இச் சொல் ஆளப்பட்டுள்ளது. மதுரை மாநகரில் சிவனடியார் திருமடத்தில் தீயோர் வைத்த தீயை அரசனிடம் செலுத்தத் திருவுளங்கொண்ட திருஞான சம்பந்தர், "பையவே சென்று பாண்டியற்கு ஆகவே" எனப் பணித்ததாகத் தேவாரம் கூறும். இத்தகைய சிறந்த ஆட்சியுடைய சொல் இப்போது சென்னை முதலிய இடங்களில் வழங்குவதில்லை.
அங்காடி என்பது முன்னொரு காலத்தில் தமிழ் நாடெங்கும் வழங்கிய சொல்.* இக்காலத்தில் 'பசார்' என்று சொல்லப்படும் இடமே முற்காலத்தில் அங்காடி எனப்பட்டது. பெரிய நகரங்களில் அந்தியும் பகலும். அங்காடி நடைபெற்றது. அந்தியில் நடைபெற்ற அங்காடியை அல்லங்காடி என்றும், பகலில் நடை பெற்ற அங்காடியை நாளங்காடி என்றும் அழைத்தனர். பட்டினத்தடிகள் அங்காடி என்ற சொல்லை எடுத்தாள்கின்றார். "அங்காடி நாய்போல், அலைந்து திரிந்தேனே" என்பது அவர் பாட்டு. கன்னடத்திலும் தெலுங்கிலும் இன்றும் அங்கடி என்ற சொல் வழங்குகின்றது. மலையாளத்திலும் அங்காடி உண்டு. தமிழ் மொழியில் அங்காடியை மீண்டும் ஆட்சியில் அழைத்தால் எத்துணை அழகாக இருக்கும்? செந்தமிழில் ஆர்வமுடைய செட்டியார் ஒருவர் தமது காசுக்கடைக்கு 'அணிகல அங்காடி' என்று பெயரிட்டுள்ளார். சென்னையிலுள்ள மூர் மார்க்கட்டை, மூரங்காடி என்று வழங்கும் நாள் எந்நாளோ?
----
* தஞ்சை மாவட்டத்தில் அங்காடிக்காரி என்ற சொல் வழக்கில் உள்ளது. தெருவிலே கூவி விற்றுச் செல்வோரை அது குறிக்கிறது.
பைத்தியக்காரனுக்குத் தமிழ்நாட்டிலே பல பெயர்கள் உண்டு. படித்தவர்கள் அவனைப் பித்தன் என்பார்கள்; பித்துக்கொண்டவன் என்னும் பொருள் நன்றாகத் தோன்றும்படி பித்துக்கொள்ளி என்றும் சொல்லுவார்கள். கிறுக்கன் என்பதும் அவனையே குறிக்கும். திருநெல்வேலியிலே பைத்தியக்காரனைக் கோட்டிக்காரன் என்பர். கோட்டி என்பது நல்ல தமிழ்ச் சொல். கோட்டம் என்றால், வளைவு அல்லது கோணல், மனத்திலே உள்ள கோணல் மனக்கோட்டம் எனப்படும். பேச்சிலே வளைவு நெளிவு காணப்பட்டால் அதைச் சொற்கோட்டம் என்பர். இவ்விருவகைக் கோட்டத்தையும் திருவள்ளுவர் எடுத்துக் காட்டியுள்ளார்.
'சொற்கோட்ட மில்லது செப்பம்; ஒருதலையா
உட்கோட்ட மின்மை பெறின்'
என்பது திருக்குறள். எனவே, அறிவிலே கோட்டம் உடையவனைக் கோட்டி என்று சொல்வது பாண்டி நாட்டு வழக்கு.
கோட்டியைத் தீர்க்கும் குற்றால அருவியைச் சிறிது பார்ப்போம். மலையினின்று விழும் அருவியைக் காண்பது கண்ணுக்கு இன்பம்; அருவியில் நீராடுவது உடலுக்கு இன்பம். திருநெல்வேலியில் உள்ள திருக்குற்றாலத்திலே அருமையான பல அருவிகள் உள்ளன. தேனருவி என்பது ஓர் அருவியின் பெயர். 'வட அருவி என்பது மற்றோர் அருவி; ஐந்தலை அருவி என்பது இன்னோர் அருவி. அருவியை நினைக்கும் பொழுதே கவிகள் உள்ளத்தில் ஆனந்தம் பிறக்கும்; கவிதை பொங்கும். 'வீங்கு நீர் அருவி வேங்கடம்' என்று திருப்பதியைச் சிறப்பித்துப் பாடினார் சிலப்பதிகார ஆசிரியர், 'பொங்கருவி தூங்கும் மலை பொதிய மலை என் மலையே' என்று செம்மாந்து பாடினாள் பொதியமலைக் குறத்தி. 'தேனருவித் திரை எழும்பி வானின் வழி ஒழுகும்' என்று பாடினாள் திருக்குற்றாலக் குறவஞ்சி. இத்தகைய பழமையான சொல் இன்றும் திருநெல்வேலியில் வழங்குகின்றது. ஆனால், சென்னை முதலிய இடங்களில் அருவி என்றால் தெரியாது; நீர் வீழ்ச்சி என்றால் தான் தெரியும். நீர் வீழ்ச்சி என்பது water - fall என்ற ஆங்கிலப் பதத்தின் நேரான மொழி பெயர்ப்புப்போல் காணப்படுகின்றது.
மலையிலே வாழ்கின்ற ஒரு குலத்தாரை மலைப் பளிங்கர் என்பர். வேடர் வகுப்பைச் சேர்ந்தவர் அவர்; மலைநாட்டுப் பழங்குடிகள். பளிங்கன் என்ற சொல்லை ஆராய்ந்தால் அஃது ஒரு பழமையான தமிழ்ச் சொல்லின் சிதைவு என்பது புலனாகும். தமிழ் இலக்கியத்தில் மலையில் வாழும் வகுப்பார்க்குப் பல பெயர்கள் உண்டு. அவற்றுள் ஒன்று புளிஞர் என்பது. புளிஞர் என்ற சொல்லைக் கம்பர் எடுத்தாள்கின்றார். மறைந்து நின்று அம்பெய்த இராமனை நோக்கி,
'வெவ்விய புளிஞர் என்ன விலங்கியே மறைந்து
வில்லால் எவ்விய தென்னை'
என்று வாலி கேட்டான் என்பது கம்பர் பாட்டு. புளிஞன் என்ற சொல்லே பளிங்கன் என்று மருவி வழங்குகின்றது.
தமிழ்நாட்டுப் பழங்குடிகளின் மற்றொரு வகுப்பார் பரதவர். கடற்கரையூர்களில் வாழ்பவர் பரதவர் என்று தமிழ் இலக்கியம் கூறும். பழங்காலத்தில் சிறந்திருந்த காவிரிப்பூம்பட்டினம், கொற்கை முதலிய துறைமுக நகரங்களில் பரதவர் செழித்து வாழ்ந்தார்கள். காவிரிப்பூம்பட்டினம் பரதவர் மலிந்த பயன் கெழு மாநகராக விளங்கிற்று. கொற்கைக் கடலில் மூழ்கி முத்தெடுத்து, 'தென்னாடு முத்துடைத்து' என்று எந்நாட்டவர்க்கும் காட்டியவர் பரதவரே. பரதவர் என்பது பரதர் என்று குறுகி, பரவர் என்று மருவி வழங்குகின்றது. தூத்துக் குடியில் பரவர் குலத்தார் இன்றும் செழுமையுற்று வாழ்கின்றார்கள்.
-------------
II. காவிய இன்பம்
11. காதலும் கற்பும்*
(* சென்னை வானொலி நிலையத்திலே பேசியது; நிலையத்தார் இசைவு பெற்றுச் சேர்க்கப்பட்டது.)
காதல் என்பது காதுக் கினிய சொல்; கருத்துக் கினிய பொருள். காதல் உண்டாயின் இவ்வுலகில் எல்லாம் உண்டு; காதல் இல்லையேல் ஒன்றும் இல்லை. "காதல், காதல், காதல் - இன்றேல் சாதல், சாதல், சாதல்" என்று பாடினார் பாரதியார். ஆயினும், அச்சொல்லை எல்லோரும் கூசாமல் பேசுவதில்லை. சின்னஞ் சிறியவர் காதில் அது விழலாகாதாம். கன்னியர் வாயில் அது வரலாகாதாம். இப்படி ஏன் அச்சொல் ஒதுக்கப்படுகின்றது? தமிழ்க் கவிகள் காதல் என்ற சொல்லை எடுத்தாளவில்லையா? திருப்பாடல்களில் அஃது இடம் பெறவில்லையா? காவியங்களிலும், நீதி நூல்களிலும் திருப்பாசுரங்களிலும் பயின்ற அழகிய தமிழ்ச் சொல்லை ஏன் கூசிக் கூசிப் பேச வேண்டும்? தேவாரத்தில் அடியாரது காதல் பேசப்படுகின்றது.
"காதலாலே கருதும் தொண்டர்
காரணத்தர் ஆகி"
நின்ற சிவபெருமானைச் சுந்தரர் பாடுகின்றார். இன்னொரு பெரியார் - திருஞானசம்பந்தர் - இறைவன் திருநாமத்தை ஓதும் காதலடியார் பெருமையைக் கூறுகின்றார்.
"காத லாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓது வார்தமை நன்னெறிக் குய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருள் ஆவது
நாதன் நாமம் நமச்சி வாயவே"
என்பது அவர் திருப்பாட்டு. இவ்வாறு தேவாரம் முதலிய தெய்வப் பாடல்களில் பயின்ற காதல் என்ற சொல்லைக் கடி சொல்லாகக் கருதலாமோ?
காதல் என்ற சொல்லின் பொருள்தான் என்ன? அன்பு என்றாலும் காதல் என்றாலும் பொருள் ஒன்றே. பெற்றோர்க்குப் பிள்ளையிடம் உள்ள அன்பு மேல் காதல்தான். 'கடந்த பேர்களும் கடப்பரோ மக்கள் மேல் காதல்' என்று கவிஞர் பாடவில்லையா? பெற்ற பிள்ளையைக் காதலன் என்று கூறுவதுண்டு. வாலியின் மைந்தனாகிய அங்கதனை 'வாலி காதலன்' என்று குறிக்கின்றார் கம்பர். இவ்வாறே நண்பனையும் காதலன் என்று கவியரசர் கூறுவர். கங்கைக் கரையிலே இராமனுடைய நண்பனாயினான் குகன்; அவன் அன்பிற்குக் கங்கை கரையில்லை. அது கண்ட இராமன்,
"சீதையை நோக்கித் தம்பி திருமுகம் நோக்கித் தீராக்
காதல னாகும் என்று கருணையின் மலர்ந்த கண்ணன்
யாதினும் இனிய நண்ப இருத்தி ஈண்டு எம்மொடு என்றான்"
எனவே பக்தியும் காதல்; பிள்ளைப் பாசமும் காதல்; நேசமும் காதல்; சுருங்கச் சொல்லின் தலைசிறந்த அன்பே காதல்.
இவ்வளவு விரிந்த பொருளில் வழங்கிய காதல் என்ற சொல், இப்பொழுது ஆண் பெண் என்னும் இரு பாலாரிடையே உள்ள அன்பையே பெரும்பாலும் குறிக்கின்றது. காதலன் என்றால் கணவன்; காதலி என்றால் மனைவி. இவ்விருவரையும் இல்வாழ்க்கையில் இழுப்பது காதல், பின்பு இல்வாழ்க்கையை நல்வாழ்க்கையாக நடைபெறச் செய்வதும் காதல். கண்ணிரண்டும் ஒன்றையே காண்பதுபோல இல்வாழ்க்கையில் ஈடுபட்ட இருவரையும் ஒரு நெறிப்படுத்துவது காதல். "காதல் மனையாளும் காதலனும் மாறின்றித் தீதில் ஒரு கருமம் செய்பவே" என்றார் ஒரு கவிஞர்.
ஆதியில், காதல் மணமே தமிழ் நாட்டில் சிறந்து விளங்கிற்று. 'காதல் இல்லாத வாழ்க்கை உயிரில்லாத உடல் போன்றது' என்பது தமிழர் கொள்கை. காதலுற்ற கன்னியர், தம் கருத்து நிறைவேறும் வண்ணம் காமனை வேண்டிக்கொள்ளும் வழக்கமும் முற்காலத்தில் இருந்ததாகத் தெரிகின்றது. காதல் விளைக்கும் தேவனைக் 'காமன்' என்றும், 'காமவேள்' என்றும் தமிழர் அழைத்தனர். தாம் கருதிய காதலனைக் கணவனாகப் பெறுவதற்கும், பிரிந்த கணவனை மீண்டும் அடைவதற்கும், காமன் கோயிலிற் சென்று மங்கையர் வழிபடும் வழக்கம் அந் நாளில் இருந்தது. கோவலன், மாதவி என்னும் நடிகையின் மையலிலே முழ்கித் தன் மனைவியாகிய கண்ணகியைப் பிரிந்திருந்தபோது, 'காமவேள் கோயிலிற் சென்று தொழுதால் கணவன் மீண்டும் வந்து சேர்வான்' என்று அக் கற்பரசியிடம் அவள் உயிர்த்தோழி எடுத்துரைத்தாள்.
"கடலொடு காவிரி சென்றலைக்கும் முன்றில்
காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடு
தாமின் புறுவர் உலகத்துத் தையலார்"
என்று கூறினாள் தோழி. இதனால், காவிரிப்பூம்பட்டினத்தில் அந்த நாளிலே காமன் கோயில் இருந்ததென்றும், குலமாதர் அங்குச் சென்று வழிபடும் முறை இருந்ததென்றும் நன்றாக விளங்குகின்றன. இன்றும், தமிழ் நாட்டின் பல பாகங்களில் காமன் பண்டிகை கொண்டாடப்படுகின்றது. 'ஈசனுடைய நெற்றிக் கண்ணால் காமன் எரிந்துபோனான்' என்று வாதிப்பாரும், 'அப்படியில்லை' என்று சாதிப்பாரும் இக்காலத்தும் தமிழ் நாட்டிலுண்டு.
காமம் என்ற சொல்லும், காமன் என்ற பெயரும் தமிழ் நூல்களிலே எடுத்தாளப்-பட்டாலும் இன்று அவை இழிந்த பதங்களாகவே எண்ணப் படுகின்றன. காமம் என்பது வடசொல்; இன்பம் என்னும் பொருள் அதற்குண்டு. உறுதிப் பொருள்களைத் "தர்மார்த்த காம மோட்சம்" என்று வடமொழியாளர் கூறுவர். இவ் வடமொழித் தொடருக்கு நேரான தமிழ்,
"அறம் பொருள் இன்பம் வீடு" என்பது. எனவே, காமம் என்பது இன்பம் என்ற பொருளைத் தருகின்றது. திருவள்ளுவர் காலத்தில் காமம் இழிந்த சொல்லாகக் கருதப்படவில்லை என்று தெரிகின்றது. அறம் பொருள் இன்பம் என்ற முப்பாலைப் பற்றி எழுதிய திருவள்ளுவர் இன்பப் பகுதிக்குக் காமத்துப் பால் எனப் பெயரிட்டார் என்றால், அவர் காலத்தில் காமம் இழிந்த சொல்லாகக் கருதப்படவில்லை என்பது தெரிகின்றதல்லவா?
ஆயினும், கால கதியில் காமம் என்பது துன்மார்க்கத்திற் பெறும் இன்பத்தைக் குறிப்பதாயிற்று. காமி, காமுகன் முதலிய சொற்கள் தூர்த்தன் என்ற பொருளிலே வழங்குகின்றன. காமுகன், கல்வி கற்பதற்கும் தகுதியற்றவன் என்று நன்னூல் கூறுகின்றது.
இனி, காதலுக்கும் கற்புக்கும் உள்ள தொடர்பைச் சிறிது பார்ப்போம்; காதல் என்பது உணர்ச்சி; கற்பு என்பது ஒழுக்கம். உணர்ச்சியால் ஒன்றுபட்ட நம்பியும் நங்கையும் (தலைமகனும் தலைமகளும்) ஒருவரை யொருவர் தமக்கே உரியவராகக் கொண்ட நிலையிலே தோன்றும் ஒழுக்கமே கற்பு என்பர்.
சீதையின் காதலில் வைத்து இந்த உண்மையைக் காட்டுகின்றார் கம்பர். மிதிலை மாநகரத்தில் கன்னி மாடத்தின் மேடையிலே நின்ற சீதையும் விதியின் வழியாகச் சென்ற இராமனும் தற்செயலாக ஒருவரை யொருவர் நோக்கினர். இருவர் கண்ணோக்கும் ஒத்தது; காதல் பிறந்தது. காதலர் இருவரும் ஒருவர் இதயத்தில் ஒருவர் புகுந்து உறவாடினர்.
இந்த நிலையில் இராமன் தன்னுடன் வந்த தம்பியோடும் முனிவரோடும் வீதியிற் சென்று மறைந்துவிடுகின்றான். அவன் இன்னான் என்று அறியாள் சீதை. அவன் எங்கே சென்றான் என்பதும் உணராள்; ஆயினும், அவனையே கருத்தில் அமைத்துக் கரைந்து உருகுகின்றாள். அந்த வேளையில் ஓடி வருகின்றாள் அவள் தோழியாகிய நீலமாலை; ஆனந்தமுற்று ஆடுகின்றாள்; பாடுகின்றாள். "தோழீ! என்ன செய்தி?" என்று கேட்கின்றாள் சீதை. அப்போது தோழி சொல்கின்றாள்: "அயோத்தி அரசனுடைய மைந்தன்; அஞ்சன வண்ணன்; செந்தாமரைக் கண்ணன்; அவன், தம்பியோடும் முனிவரோடும் நம் மாளிகைக்கு வந்தான்; உன் திருமணத்திற்காக வைத்திருந்த வில்லைக் கண்டான்; எடுத்தான்; வளைத்தான்; ஒடித்தான்" என்று கூறி முடிக்கின்றாள்.
அப்பொழுது சீதையின் மனம் ஊசலாடத் தொடங்கிற்று; கவலையும் உண்டாயிற்று. வில்லை எடுத்து வளைத்து ஒடித்த வீரன், தான் கன்னி மாடத்திலிருந்து கண்ட ஆடவனோ? அல்லனோ? என்ற ஐயம் பிறந்தது. அவனாகத்தான் இருக்க வேண்டு மென்று ஒருவாறு மனத்தைத் தேற்றிக்கொண்டு, தோழி சொல்லிய அடையாளங்களை மீளவும் நினைத்துப் பார்த்தாள்.
"கோமுனி யுடன்வரு கொண்டல் என்றபின்
தாமரைக் கண்ணினான் என்ற தன்மையினால்
ஆம்அவ னேகொல்என்று ஐயம் நீங்கினாள்."
ஆனால், நொடிப்பொழுதில் மற்றொரு கருத்து அவள் மனத்தில் புகுந்தது. "என் தோழி சொல்லிய அடையாளங்கள் எல்லாம் உடைய மற்றொருவன் வில்லை வளைத்து ஒடித்திருந்தால் நான் என்ன செய்வேன்?" என்று அவள் எண்ணினாள்; ஏங்கினாள்.
அந்த ஏக்கத்தினிடையே ஓர் ஊக்கம் பிறந்தது; உணர்ச்சியினிடையே ஒழுக்கம் எழுந்தது. காதல் கற்பாக உருவெடுத்தது. "அவன் அல்லனேல் இறப்பேன்" என்று சீதை முடிவு செய்தாள். கண்ணாற் கண்ட காதலனும் வில்லை ஒடித்த வீரனும் ஒருவனேயாயின் அவனை மணம் புரிந்து வாழ்வேன்; இல்லாவிட்டால் இறந்து படுவேன்" என்று உறுதி கொண்டாள் சீதை. கற்பு நெறி என்பது இதுதான். காதலனையன்றி மற்றோர் ஆடவனை மனத்திலும் கருத ஒருப்படாத உறுதியே கற்பு எனப்படும். இதையே திருவள்ளுவர் வியந்து பாடினார்.
"பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்"
என்பது அவர் திருவாக்கு.
கற்புடைய மாதரிடம் மென்மையும் உண்டு; மனத்திண்மையும் உண்டு. பொறுக்கும் திறமும் உண்டு; மாறுபட்டோரை ஒறுக்கும் திறமும் உண்டு. சிலப்பதிகாரத்தின் கதாநாயகியாகிய கண்ணகியிடம் இவ்விரு தன்மைகளையும் பார்க்கின்றோம். கொண்ட கணவன் அவளுக்குக் கொடுமை செய்தான்; செல்வத்தையெல்லாம் செலவழித்தான். அல்லும் பகலும் அயலார் அறியாமல் கண்ணீர் வடித்தாள் கண்ணகி; மங்கல அணியைத் தவிர மற்றைய நகைகளை யெல்லாம் மறந்தாள்; தன்னை அழகு செய்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தை அறவே துறந்தாள்.
"அஞ்செஞ் சீறடி அணிசிலம் பொழிய
செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்ப
பவள வாள்நுதல் திலகம் இழப்ப
மையிருங் கூந்தல் நெய்யணி மறப்பக்
கையறு நெஞ்சத்துக் கண்ணகி"
என்று கூறுகின்றது சிலப்பதிகாரம். அடக்கமும் பொறுமையும், கற்பும் கண்ணீரும் கண்ணகியின் வடிவம். "கண்டார் வெறுப்பனவே காதலன்தான் செய்திடினும் கொண்டானை யல்லால் அறியாக் குலமகள்" என்று ஆழ்வார் பாடிய திருப்பாட்டுக்கு ஓர் எடுத்துக் காட்டாக அமைந்தாள் கண்ணகி.
இத்தகைய மென்மையும் பொறுமையும் வாய்ந்த கண்ணகி, மதுரை மாநகரில் தன் கணவனை இழந்த போது வன்மையின் வடிவம் கொண்டாள்; கற்பெனும் திண்மை அவ்வடிவத்திலே களிநடம் புரிந்தது. அத்திண்மையைக் கண்டு திடுக்கிட்டான் அரசன்; அப்பால் அவள் பேசிய திடமொழியைக் கேட்டபோது மயங்கிவிழுந்து மாண்டான். தவறு செய்த அரசனைக் கற்பின் திண்மையால் ஒறுத்த கண்ணகி, வீரபத்தினியாகத் தமிழ் நாட்டிலே போற்றப்பட்டாள். அன்று முதல் இன்றளவும் கண்ணகி, மாதர்குல மணி விளக்காய், வீரக்கற்பின் விழுமிய கொழுந்தாய் விளங்குகின்றாள்.
----------------
12. கண்ணகிக் கூத்து
சிலப்பதிகாரம் என்னும் நாடகக் காவியம் தமிழ் நாட்டு மூவேந்தர்க்கும் உரியதாகும். கதைத் தலைவியாகிய கண்ணகி சோழ நாட்டிலே பிறந்தாள்; பாண்டி நாட்டிலே தன் கற்பின் பெருமையை நிறுவினாள்; பின்பு சேரநாடு போந்து வானகம் எய்தினாள். ஆகவே, நூலாசிரியர், சேர சோழ பாண்டியர்கள் ஆண்டு வந்த முந்நாட்டின் பெருமையையும் முறையாக எடுத்துரைக்கின்றார். இவ்வுண்மை
"முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது
அடிகள் நீரே அருளுக".
என்று சீத்தலைச் சாத்தனார் இளங்கோவடிகளை நோக்கிக் கூறுமாற்றால் இனிது விளங்கும். இவ்வாறு, முந்நாட்டின் பெருமையையும் எழுதப் போந்த ஆசிரியர் அவற்றின் அரசியல் முறைகளையும், சமய நெறிகளையும், பிறவற்றையும் குறிப்பாகக் கூறியருளினார். ஆகவே, முந்நாட்டின் நீர்மையையும் ஒருங்கே எடுத்துரைக்கும் நூல் தமிழ்மொழியில் சிலப்பதிகாரம் ஒன்றேயாம்.
மூவேந்தர்க்கும் உரிய நூலாக விளங்கும் சிலப்பதிகாரம் முத்தமிழ் நயங்களும் அமைந்த அரிய நூலாகவும் திகழ்கின்றது. இயல், இசை, நாடகம் முத்தமிழில் இயற்றமிழ், இனிய சொற்களால் மாந்தர் அறிவினைக் கவர்ந்து உயரிய இன்பம் அளிப்பதாகும். இசைத் தமிழ், செவியின் வாயிலாக உள்ளத்தைக் கவர்ந்து உலப்பிலா இன்பம் பயப்பதாகும். நாடகத் தமிழ், இயற்றமிழின் அழகையும், இசைத் தமிழின் சுவையையும் காட்சியின் நலத்தோடு கலந்தளித்து மனத்தை மகிழ்விப்பதாகும். நாடகசாலைக்குச் செல்வோர், மணிமுடி தரித்த மன்னரும், மதிநலஞ் சான்ற அமைச்சரும், வெம்படை தாங்கிய வீரரும், நல்லணிபுனைந்த நங்கையரும், பிறரும் அரங்கத்தில் நடிக்கக் கண்டு களிப்புறுவர்; பண்ணார்ந்த பாட்டின் இசைகேட்டு இன்புறுவர்; நாடகக் கதையில் அமைந்துள்ள கருத்தினை அறிந்து நலமுறுவர். இவ்வாறு கற்றோர்க்கும் மற்றோர்க்கும் இன்பமும் பயனும் ஒருங்கே எய்துவிக்கும் தன்மையாலேயே தமிழ்நாட்டு அறிஞர் நாடகத் தமிழைப் போற்றி வளர்ப்பாராயினர்.
மாந்தரை ஓழுக்க நெறியில் நிறுத்துதற்கு நாடகம் ஒரு சிறந்த கருவியாகும் என்பர். நல்ல நாடகங்களைக் காணும் மக்கள் அறத்தாறறிந்து ஓழுகத் தலைப்படுவர். உயிர்க்கு நலம் பயக்கும் உயரிய உண்மைகளைக் கொண்ட கதைகளே முற்காலத்தில் நாடக மேடைகளில் நடிக்கப்பட்டமையால், மக்கள், பெரும்பாலும் நன்மையில் நாட்டமும், தீமையில் அச்சமும் உடையராய் வாழ்ந்தார்கள். ஆனால், இக் காலத்தில், புன்னெறிப் பட்டோரை இன்புறுத்திப் பொருள் கவரும் நோக்கமே பெரும்பாலும் நாடக சாலையை இயக்குகின்றது. அதனாலேயே, தற்காலத்தில் நாடகங்களைக் காண்பதுவும் தீதென்று தக்கோர் கருதுகின்றனர்.
தமிழ்நாட்டு நாடக மேடையில் நடைபெறும் கோவலன் என்னும் நாடகம் பழந்தமிழ்க் காவியமாகிய சிலப்பதிகாரத்திலுள்ள சிறந்த கதையைத் தழுவி எழுந்ததாகும். ஆயினும் நாடகக் கண்ணகிக்கும் காவியக் கண்ணகிக்கும் உள்ள வேற்றுமை புல்லுக்கும் நெல்லுக்கும் வேற்றுமையைப் போன்றது. கோவலனைக் 'கோவிலன்' என்றும், கண்ணகியைக் 'கர்னகி' என்றும் சிதைத்து வழங்கும் சிறுமை ஒரு புறமிருக்க, கற்பின் கொழுந்தாகிய கண்ணகி, நாடக மேடையில் ஆவேசமுற்று வெறியாட்டயர்வதும், தவறிழைத்த பாண்டியன் மார்பைப் பிளந்து அவன் குடரை மாலையாக அணிந்து குருதியிலே திளைத்து கூத்தாடுவதும் அருவருக்கத்தக்க காட்சியன்றோ? பெண்மைக்குரிய நாணமும் மேன்மையும் அமைந்த நல்லியற் கண்ணகியை அலகைபோல் அலற வைத்தல் அழகாகுமோ? காளியாட்டங்கண்டு கல்லார் உள்ளங் களிக்கும் என்னும் காரணத்தால் கண்ணகியின் மென்மையை அழித்தல் முறையாகுமோ? அன்றியும், நீதி வழுவா நெறி முறையில் நின்ற நெடுஞ்செழியனது உயிரை வலிந்து பிழிதலும் வேண்டுமோ? நீதி தவறியது என்று அறிந்த பின்னர் அவ்வரசன் உயிர் வாழ இசைவானோ?
நாடகக் கண்ணகியின் தன்மை இவ்வாறாக, காவியக் கண்ணகியின் செம்மையையும் மேன்மையையும் சிறிது காண்போம்; மதுரை மாநகரில் கோவலன் கொலையுண்டிறந்தான் என்றறிந்த கண்ணகி பாண்டிய மன்னனிடம் வழக்குரைத்து, நீதியை நிலை நிறுத்துமாறு அவன் மாளிகையினுள்ளே சென்றாள். காவி மலரனைய கண்கள் கண்ணீர் சொரிய, கருங்கூந்தல் விரிந்து கிடக்க, சிலம்பைக் கையிலேந்திக் கொற்றவன் முன்னே போந்த கண்ணகியின் கோலத்தை,
"மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்
கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும்"
என்று சிலப்பதிகாரம் உருக்கமாக உரைக்கின்றது. கண்ணீர் உகுத்துநின்ற கண்ணகியைப் பாண்டியன் குழைந்து நோக்கி, 'மனம் வருந்தி வந்த மாதே! நீ யார்?' என்று வினவினான். அதற்கு மாற்ற முரைக்க போந்த மங்கை, "அரசனே! கன்றை இழந்த பசு ஒன்று மனங்கரைந்து கண்ணீர் வடிக்கக் கண்டு, அவ் ஆன்கன்றைக் கொன்ற தன் அருமந்த மைந்தன் மீது தானே தேராழி ஊர்ந்து முறைசெய்த சோழ மன்னனது புகழமைந்த புகார் நகரமே என் பதியாகும். அந்நகரில் மாசாத்துவானுக்கு மகனாய்த் தோன்றி, ஊழ்வினைப் பயனால் உன் நகரிற் புகுந்து, என் சிலம்பை விற்கப் போந்த வீதியில் உன் ஆணையால் கொலையுண்டிறந்த கோவலன் மனைவியே யான்" என்று கொதித்துக் கூறினாள். அப்பொழுது அரசன் "மாதே! கள்வனைக் கொல்லுதல் கொடுங்கோலன்று. அது நீதியின் நெறியே யாகும்" என்று நேர்மையாய் உரைத்தான்.
கோவலன் குற்றமற்றவனென்றும், அவனைக் குற்றவாளி என்று கொன்ற கொற்றவன் தவறிழைத்தான் என்றும் ஐயந்திரிபற விளக்க வந்த கண்ணகி காவலனை நோக்கி, "அரசே! என் கணவன் கள்வனல்லன்; அவனிடம் இருந்த சிலம்பு அரண்மனைச் சிலம்பன்று. அதன் இணைச் சிலம்பு இதோ, என் கையில் உள்ளது! இதனுள்ளே அமைந்த பரல் மாணிக்கம்" என்று திறம்பட உரைத்தாள். அப்பொழுது, மன்னவன் மனம் பதைத்து, தன் காவலாளர் கோவலனிடமிருந்து கொணர்ந்த சிலப்பினை எடுத்துவந்து, கண்ணகியின் முன்னே வைத்தான். அச் சில்லரிச் சிலம்பைக் கண்ணகி தன் செங்கையால் எடுத்து நோக்கிக் காவலன் கண்ணெதிரே உடைத்தாள். சிலம்பின் உள்ளே இருந்த மாணிக்கம் விரைந்தெழுந்து அரியணை மீதமர்ந்திருந்த அரசனிடம் தானே நேராகச் சான்று பகர்வதுபோல் அவன் முகத்தில் தெறித்து விழுந்த மாணிக்கத்தைக் கண்டான் மன்னன். அந்நிலையில் அவன் வெண்குடை தாழ்ந்தது; செங்கோல் தளர்ந்தது. 'பொற் கொல்லன் சொற் கேட்டுப் பிழை செய்த யானோ அரசன்? யானே கள்வன்; இதுகாறும் என் வழிமுறையில் இத்தகைய பிழை செய்தார் எவருமிலர். இன்றே என்னுயிர் முடிவதாக' என்று அவன் மயங்கி மண்மீது விழுந்தான். விழுந்த மன்னன் எழுந்தானல்லன்.
"தாழ்ந்த குடையன் தளர்ந்தசெங் கோலன்
'பொன்செய் கொல்லன் தன்சொற் கேட்ட
யானோ அரசன்? யானே கள்வன்!
மன்பதை காக்கும் தென்புலங் காவல்
என்முதற் பிழைத்தது; கெடுகஎன் னாயுள்' என
மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே"
என்று சிலப்பதிகாரம் இரங்கிக் கூறுகின்றது. காவலன் மயங்கி விழுந்து மாண்டதைக் கண்ட கோப்பெருந்தேவி, கணவனை இழந்து நின்ற கண்ணகியின் அடி பணிந்து பிழை பொறுக்குமாறு வேண்டினாள்.
இங்ஙனம் அறநெறி பிழைத்த அரசனுக்கு அறமே கூற்றாக அமைந்தது. 'அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றமாம்' என்பது தமிழ் நாட்டு அரசியற் கொள்கையாகும். இவ்வுண்மையை உணர்த்துதல் சிலப்பதிகாரத்தின் குறிக்கோள் என்பது,
"அரைசியல் பிழைதோர்க்கு அறம் கூற் றாவதும்
உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும்
ஊழ்வினை உருத்துவந்து ஊட்டு மென்பதும்
சூழ்வினைச் சிலம்பு காரண மாகச்
சிலப்பதி காரம் என்னும் பெயரால்
நாட்டுதும் யாமோர் பாட்டுடைச் செய்யுள்".
என்ற அழகிய அடிகளால் அறியப்படும். அரசியல் பிழைத்தோரை அறமே ஒறுக்குமென்றும், கற்பமைந்த மாதரை மக்களும் தேவரும் போற்றுவரென்றும், வினையின் பயனை விலக்கலாகா தென்றும், இவ்வுலக மாந்தர் அறிந்து வாழுமாறே இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் இயற்றினார் என்பது இதனால் இனிது விளங்கும். இவ் வுண்மைக்கு முற்றும் மாறாக, அரசியல் பிழைத்த பாண்டியன் அறத்தால் ஆவி துறவாது, கண்ணகியின் மறத்தால் ஆவி துறப்பதை நாடக மேடையிலே காண்கின்றோம்! கணவனான கோவலனையன்றி ஆடவர் எவரையும் சிந்தையாலும் தொடாச் செம்மை வாய்ந்த கண்ணகி, பாண்டியன் மெய் தீண்டி, அவன் மார்பைப் பிளந்து, உயிரைப் பருகப் பார்க்கின்றோம்! இவ்வாறு, தமிழ் நாட்டு மன்னர் அறமும், மாதர் கற்பும் நிலைகுலையுமாறு நிகழ்த்தப்பெறும் கூத்தைக் கண்டு கல்லார் நெஞ்சம் களிக்குமெனினும் பழந்தமிழ் நாட்டின் பெருமை பாழ்படுவதைக் கண்டு பயனறிந்தோர் வருந்துவர்.
-------------
13. சிலம்பின் காலம்*
(* சென்னை வானொலி நிலையத்திலே பேசியது. நிலையத்தார் இசைவு பெற்றுச் சேர்க்கப்பட்டது.)
தமிழ் நாட்டார் போற்றும் ஐம்பெருங்காவியங்களுள் தலைசிறந்தது சிலப்பதிகாரம். பழந்தமிழ் நாட்டின் சீர்மைக்கும் செம்மைக்கும் சான்றாக நிற்பது அப் பெருங்காவியம். சோழ நாட்டின் செழுமையும் பாண்டிய அரசாட்சியின் சிறப்பும், சேர நாட்டரசனது வீரமும் அக் காவியத்திலே விளங்கக் காணலாம்.
இத்தகைய சிலப்பதிகாரம் எப்பொழுது தமிழ் நாட்டில் எழுந்தது? அதைப் பாடிய இளங்கோவடிகள் எப்பொழுது தமிழ் நாட்டில் வாழ்ந்தார்? அவருடன் பிறந்த செங்குட்டுவன் எப்பொழுது அரசு வீற்றிருந்தான்? இவற்றைச் சிறிது பார்ப்போம்.
சிலப்பதிகாரத்தைப் பொது நோக்காகப் பார்க்கும் பொழுது தமிழ் நாடு சிறந்த நிலையில் இருந்த காலமே சிலப்பதிகாரக் காலம் என்று தோன்றுகின்றது. சேர சோழ பாண்டியர்கள் தமிழ்நாட்டை யாண்ட காலம் அது. இயல், இசை, நாடகமென்னும் முத்தமிழும் செழித்து வளர்ந்த காலம் அது. கடல் வழியாக நிகழ்ந்த வாணிகத்தால் தமிழ் நாட்டிலே செல்வம் பெருகி நின்ற காலம் அது.
அக்காலத்தில் காவிரிப்பூம்பட்டினம் சோழ நாட்டின் சிறந்த துறைமுக நகரமாகத் திகழ்ந்தது. காவிரியாறு கடலோடு கலக்குமிடத்தில் வளமும் அழகும் வாய்ந்து விளங்கிற்று அந்நகரம். பட்டினம் என்னும் சொல், சிறப்பு வகையில் காவரிப்பூம்பட்டினத்தையே குறிப்பதாயிற்று. இக் காலத்தில் பட்டணம் என்பது சென்னைப் பட்டணத்தைக் குறிப்பது போன்று அக் காலத்தில் பட்டினம் என்னும் பெயர் காவிரிப்பூம்பட்டினத்திற்கு வழங்கிற்று. அழகு வாய்ந்த அப்பட்டினத்தைக் கவிகள் பூம்புகார் நகரம் என்றும் அழைத்தார்கள் "பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும்" என்று பட்டினத்தைப் பாடினார் சிலப்பதிகார ஆசிரியர்.
அந்நகரின் துறைமுகத்தில் ஏற்றுமதியும் இறக்குமதியும் இடையறாது நடந்தன. தமிழ் நாட்டாரோடு வாணிகம் செய்து வளம் பெற்ற யவனர் என்ற கிரீக்கர்கள் காவிரிப்பூம்பட்டினத்தின் கடற்கரையில் விண்ணளாவிய மாடங்கள் கட்டிக் குடியிருந்தார்க்ள. தெய்வமணமும் அந்நகரிலே கமழ்ந்துகொண்டிருந்தது. சிவன் கோயில், முருகன் கோயில், பெருமாள் கோயில், வாசவன் கோயில் - இன்னும் பல கோயில்கள் அங்கு நின்று அணி செய்தன. 'இந்திரன் திருநாள்' கோலாகலமாக இருபத்தெட்டு நாள் கொண்டாடப்பட்டது. இங்ஙனம் காவிரிப்பூம்பட்டினம் பொருள் வளமும் தெய்வ நலமும் பெற்று விளங்கிய காலமே சிலப்பதிகாரக் காலம்.
அக் காலத்தில் சேர நாட்டை ஆண்டவன் ஒரு சிறந்த மன்னன். செங்குட்டுவன் என்பது அவன் பெயர். கற்புத் தெய்வமாகிய கண்ணகி தன் நாட்டில் வந்து விண்ணுலகம் அடைந்தாள் என்று அறிந்த செங்குட்டுவன், அவளுக்குத் தன் தலைநகரத்தில் ஒரு கோயில் கட்டினான்; இமயமலையிலிருந்து சிலை எடுத்து வந்து, கண்ணகியின் திருவுருவம் செய்து, அக்கோயிலில் நிறுவினான்; அத்திருவிழாவைக் காண அயல் நாட்டு அரசர் சிலரை அழைத்திருந்தான்.
"அருஞ்சிறை நீங்கிய ஆரிய மன்னரும்
பெருஞ்சிறைக் கோட்டம் பிரிந்த மன்னரும்
குடகக் கொங்கரும் மாளுவ வேந்தனும்
கடல்சூழ் இலங்கைக் கயவாகு வேந்தனும்"
அங்கு வந்திருந்தார்கள் என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது.
இக் காட்சிகளை யெல்லாம் கண் களிப்பக் கண்டார் செங்குட்டுவன் தம்பியாகிய இளங்கோ. அவர் செந்தமிழ்ச் செல்வர்; இளவரசுக்குரிய பதவியை உதறியெறிந்து, முனிவராயிருந்து தவம் புரிந்தவர். அவர் அரச குலத்திற் பிறந்த பெருமையும், துறவு பூண்டு ஆற்றிய தவத்தின் அருமையும் தோன்ற அவரை 'இளங்கோ அடிகள்' என்று தமிழுலகம் பாராட்டுவதாயிற்று. சிலப்பதிகாரம் பாடியவர் அவரே. இளங்கோ அடிகள் இயற்றிய காவியத்தை, 'நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரம்' என்று போற்றினார் பாரதியார்.
"சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்
தெய்வ வள்ளுவன் வான்மறை கண்டதும்
பாரில் நல்லிசைப் பாண்டிய சோழர்கள்
பார ளித்ததும் தருமம் வளர்த்ததும்
..............................................................
அன்ன யாவும் அறிந்திலர் பாரதர்
ஆங்கி லம்பயில் பள்ளியுட் போகுநர்"
என்று பரிந்து பாடிய பாட்டில், சேரன் செங்குட்டுவன் தம்பியாகிய இளங்கோவடிகளைப் போற்றுகின்றார் பாரதியார்.
இத்தகைய சிலப்பதிகாரத்தின் காலத்தைத் தெரிந்துகொள்வதற்குச் சேரன் செங்குட்டுவன் காலத்தை ஆராய்ந்து அறிதல் வேண்டும். வீரனாகிய அச் சேரனைப் பல புலவர்கள் பாடியுள்ளார்கள். அவர்களுள் பரணர் என்பவர் ஒருவர். தமிழ்நாட்டில் சங்கப் புலவர்கள் என்று பாராட்டப்படுகின்ற புலவர்களுள் பரணருக்கும் கபிலருக்கும் ஒரு தனிப் பெருமையுண்டு. 'பொய்யறியாக் கபிலரோடு பரணர் ஆதிப் புலவோர்' என்ற வரிசையில் வைத்துப் புகழப்பட்ட பரணர், சேரன் செங்குட்டுவனைப்பற்றிப் பாடிய பாடல்களுள் பதினொன்று நமக்குக் கிடைத்துள்ளன. பரணருடைய புலமையையும் பண்பையும் பெரிதும் மதித்த சேரன், அவருக்குச் சிறந்த பரிசில் அளித்ததோடு தன் மகனையும் அவரிடம் மாணாக்கனாக ஒப்புவித்தான் என்பது பண்டை நூல்களால் விளங்குகின்றது. எனவே, சங்கப் புலவர்களாகிய பரணர் முதலிய சான்றோர் வாழ்ந்த காலமே செங்குட்டுவன் காலமாகும்.
அக் காலத்தை இன்னும் சிறிது தெளிவாகத் தெரிந்துகொள்வதற்குச் சிலப்பதிகாரமே ஒரு சிறந்த சான்று தருகின்றது. கண்ணகியின் திருவிழாவிற்குச் சேரன் செங்குட்டுவன் அனுப்பிய அழைப்புக் கிணங்கி வஞ்சி மாநகரில் வந்திருந்து, பத்தினிக் கடவுளை வணங்கிய மாநகரில் வந்திருந்து, பத்தினிக் கடவுளை வணங்கிய அரசருள் ஒருவன், 'கடல் சூழ் இலங்கைக் கயவாகு மன்னன்' என்பதை முன்னமே கண்டோம். இலங்கையரசனாகிய கயவாகுவின் காலத்தைத் தெரிந்துகொண்டால் செங்குட்டுவன் காலமும் விளங்கிவிடுமன்றோ? இந்த வகையில் சரித்திர ஆசிரியர்களாகிய கனகசபைப் பிள்ளை முதலிய அறிஞர்கள் ஆராய்ந்திருக்கிறார்கள். இலங்கையரசர் வரலாற்றைக் கூறும், 'மகாவம்சம்' என்ற நூலில் கஜபாகு என்னும் பெயருடைய மன்னர் இருவர் குறிக்கப்படுகின்றனர். முதல் கஜபாகு கி.பி. இரண்டாம் நுாற்றாண்டின் பிற்பகுதி*யில் அரசாண்டவன். அவன் காலத்துக்கு ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்பு மற்றொரு கஜபாகு அரசு புரிந்தான். இவ்விரண்டு அரசர்களில் முதல் கஜபாகுவே செங்குட்டுவன் அரசாண்ட காலம் இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதி என்பது தெளிவாகின்றது. அதுவே சிலப்பதிகாரத்தின் காலமும் ஆகும்.
-----------
* கி.பி.176-193
இன்னும், இக்கொள்கைக்கு ஆதாரமான செய்திகளிற் சிலவற்றைப் பார்ப்போம்; கரிகாற்சோழன் என்னும் திருமாவளவன் காலத்திற்குப் பின்பு சோழ நாடு உலைவுற்றுச் சீரழிந்ததது. பூம்புகார் என்ற காவிரிப்பூம்பட்டினத்தில் ஒரு சோழன் அரியணை ஏறினான். உறையூர் என்னும் உள்நாட்டுத் தலைநகரில் மற்றொரு சோழன் அரசனாயினான். புகார்ச் சோழனுக்கும் உறையூர்ச் சோழனுக்கும் போர் மூண்டது. அப்போரின் தொல்லை ஒருவாறு தீர்ந்த பின்பு, 'பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும்' என்ற பழமொழிப்படி, சோழ நாட்டிற்கு ஒருபெருந் தீங்கு நேர்ந்தது. குணகடல் கரை புரண்டு எழுந்து காவரிப் பூம்பட்டினத்தை அழித்தது. இக்கொடுமை நெடுமுடிக் கிள்ளி என்னும் சோழமன்னன் காலத்தில் நிகழ்ந்ததென்று மணிமேகலை கூறும். அப்போது அந்நகரில் இருந்த மாடங்கள், கோயில்கள், கோட்டங்கள் எல்லாம் அழிந்தொழிந்தன. மாடமாளிகையை இழந்த மன்னன் அந்நகரினின்றும் வெளியேறிய செய்தியை இரக்கத்தோடு கூறுகின்றார் மணிமேகலையாசிரியர்:
"விரிதிரை வந்து வியன்நயர் விழுங்க
ஒருதனி போயினன் உலக மன்னவன்"
என்னும் மணிமேகலை அடிகளில் சோகம் நிறைந்திருக்கிறது. 'துன்பம் வந்துற்றபோது துணையாவார் யாருமின்றித் தன்னந் தனியனாய் அந்நகரினின்றும் வெளிப்போந்தான் மன்னர் மன்னன்' என்பது அவ்வடிகளின் கருத்து.
இவ்வாறு அழிந்ததாக மணிமேகலையிற் சொல்லப்படுகின்ற காவிரிப்பூம்பட்டினம் ஏழாம் நூற்றாண்டில் எழுந்த தேவாரப் பாசுரத்தில் ஒரு சிற்றூராகக் குறிக்கப்படுகின்றது; சிலப்பதிகாரத்திற்கும் தேவாரத்திற்கும் இடைப்பட்ட ஐந்நூறு ஆண்டுகளில் சோழ மன்னர் தம் நிலையில் தாழ்ந்தனர். காஞ்சி புரத்தைத் தலைநகராகக்கொண்டு அரசாளத் தலைப்பட்ட பல்லவர்கள் சோழ நாட்டிலும் ஆணை செலுத்தினர். பழம்பெருமையெல்லாம் இழந்து நின்ற காவிரிப்பூம்பட்டினத்தில் அன்புகொண்டு ஒரு பல்லவன் அங்குச் சிவாலயம் கட்டினான்; அதற்குப் பல்லவனீச்சரம் என்று பெயரிட்டான். பல்லவன் கட்டிய ஈசன் கோயிலாதலின், அது பல்லவனீச்சரம் என்று பெயர் பெற்றது. தேவாரம் பாடிய திருஞானசம்பந்தர் காலத்தில் பல்லவனீச்சரம் அவ்வூருளே காட்சியளித்தது. "பட்டினத்துறை பல்லவனீச்சரம்" என்று அக்கோவிலைப் பாடினார் ஞானசம்பந்தர். எனவே, காவிரிப்பூம்பட்டினம் சோழர் ஆட்சியில் சிறப்புற்று விளங்கிய காலமே சிலப்பதிகாரக் காலம். அது பதங்குலைந்து பல்லவர் ஆட்சியில் அமைந்த காலம். தேவாரக் காலம் என்பது தெளிவாகின்றது,
தமிழ் நாட்டில் பல்லவர் எப்போது அரசாண்டனர்? மூன்றாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டுவரை அவர் ஆட்சி புரிந்தனர் என்று சரித்திரம் கூறும் சிவனடியார் பாடிய தேவாரத்திலும், திருமால் அடியார்களாகிய ஆழ்வார்களது திருப்பாசுரத்திலும் பல்லவர் குறிக்கப்படுகின்றனர். ஆனால், சிலப்பதிகாரத்தில் அம்மன்னரைப்பற்றிய குறிப்பு ஒன்றும் காணப்படவில்லை. ஆதலால், சிலப்பதிகாரம் எழுந்த காலம் பல்லவர் ஆட்சிக்கு முற்பட்ட காலம் என்று கொள்ளப்படுகின்றது.
தொன்று தொட்டுத் தமிழகத்தை ஆண்டுவந்த சேர சோழ பாண்டியர், பேரும் புகழும் பெருவாழ்வும் பெற்றிருந்த காலத்திலேதான் சிலப்பதிகாரம் பிறந்தது. விண்ணளாவி நிற்கும் இமயமலையில் சோழநாட்டுப் புலிக்கொடியை ஏற்றினான் கரிகால் சோழன். சேர நாட்டு அரசனாகிய நெடுஞ்சேரலாதன், 'தென்குமரி முதல் வட இமயம்வரை ஒரு மொழி வைத்து உலகாண்ட சேரலாதன்' என்று புகழப்பெற்றான். அவனுடைய ஆணை இமயமலை யளவும் சென்றமையால் அவன், 'இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்' என்று தமிழ்நாட்டில் வழங்கப்பெற்றான். அவன் மகனே சேரன் செங்குட்டுவன். தந்தையின் புகழைத் தானும் பெற ஆசைப்பட்டுக் குட்டுவனும் வடநாட்டின் மீது படையெடுத்தான்; தமிழரசைப் பழித்துப் பேசிய வடநாட்டாரைப் போர்க்களத்திலே வாட்டி வென்றான்; இருவரைச் சிறை பிடித்தான்; தன் நாட்டிற்குக் கொண்டு வந்தான். கண்ணகித் தெய்வத்திற்கு அம் மன்னன் திருவிழா எடுத்தபோது அவ்விருவரும் உடனிருந்தனர் என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது. எனவே, தமிழ்நாட்டாரின் வீரப்புகழ் வடநாட்டிலும் பரவியிருந்த காலம்; தமிழ்நாடு வாணிகத்தால் வளம்பெற்று ஓங்கி நின்ற காலம்; தமிழ்ப் புலவர் பல்லாயிரவர் தமிழ்த்தாய்க்குப் பல வகையான கவிதைக் கலன்களை அணிந்து கோலம் செய்து கொண்டிருந்த காலம்; அக்காலமே சிலப்பதிகாரத்தின் காலம்.
------------
14. அமுத சுரபி*
(* 'அமு தரபி' என்னும் தமிழ் மாதப் பத்திரிகையின் தலையங்கமாக எழுதப்பட்டது.)
இளவேனிற் காலம்; இளங்காற்று, இனிமையாக வீசுகின்றது. நீலவானத்தில் நிறைமதி எழுந்துவருகின்றது. இன்பமயமான அவ்வேளையில் மணிபல்லவம் என்ற தீவகத்தில் காட்சி தருகின்றாள் ஒரு மங்கை.
மணிமேகலை என்னும் பெயருடைய அந் நல்லாள் வெண் மணற்குன்றுகளையும், விரிபூஞ் சோலைகளையும் கண்டு வியந்து உலாவுகின்றாள். நன்மணம் கமழும் பூஞ்சோலையின் அருகே,
"மாமலர்க் குவளையும் நெய்தலும் மயங்கிய
கோமுகி என்னும் கொழுநீர் இலஞ்சி"
அவள் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றது. அத் திருக்குளத்தின் தெள்ளிய அலைகளில் வெண்ணிலாவின் ஒளி கலந்து விளையாடும் காட்சியையும், கண் போல் மலர்ந்த கருங்குவளையின் செவ்வியையும் கண்டு மனங்குளிர்ந்து நிற்கின்றாள் மணிமேகலை.
அப்போது அப் பூம்பொய்கையின் அலைகளிலே மிதந்து, கரையை நோக்கி வருகின்றது ஒரு திருவோடு. தன்னை நோக்கித் தவழ்ந்து வந்த திருவோட்டைத் தலைவணங்கி, மலர்க் கரத்தால் எடுக்கின்றாள் மணிமேகலை. அத் திருவோடுதான் அமுதசுரபி; எடுக்க எடுக்கக் குறையாமல் உணவு கொடுக்கும் உயரிய பாத்திரம். அதுவே, அறம் வளர்க்கும் அருங்கலம்; பசிப் பிணியை வேரறுக்கும் படைக்கலம்.
இத் தகைய அமுத சுரபியைக் கைக்கொண்டு அற்றார்க்கும் அலந்தார்க்கும் தொண்டு செய்ய ஆசைப்பட்டாள் மணிமேகலை; "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே" என்னும் உண்மையை உள்ளத்திற்கொண்டு அருளறம் புரியத் தொடங்கினாள்; வருந்தி வந்தவர் அரும்பசி களைந்து, அவர் திருந்திய முகங்கொண்டு திளைத்தாள். அவள் ஆற்றிய பணியால் தமிழகத்தில் பசிப்பிணி ஒழிந்தது.
இன்று தமிழகம் என்றுமில்லாத கடும்பஞ்சத்தின் வாய்ப்பட்டுப் பரிதவிக்கின்றது. "மாதம் மூன்று மழையுள்ள நாடு; வருஷம் மூன்று விளைவுள்ள நாடு" என்ற புகழப்பெற்று தமிழகத்தில் இப்போது எல்லோரும் வயிறார உண்பதற்குப் போதிய உணவில்லை. குடிகளுக்குப் படியளக்கும் பொறுப்புடைய அரசாங்கம், பொறி கலங்கி வடநாட்டையும் பிறநாட்டையும் நோக்கி வாடி நிற்கின்றது. "பசியற்ற நாடே பண்புற்ற நாடு" என்பது பழந்தமிழர் கொள்கை. அதனாலேயே முன்னாளில் இந்நாட்டையாண்ட மன்னர்கள் பயிர்த் தொழிலைக் குறிக்கொண்டு பேணினார்கள்; காடுகளை வெட்டித்திருத்தி நாடாக்கினார்கள்; ஆற்றிலே அணைகள் கட்டினார்கள்; ஒல்லும் வகையால் உழவரை ஆதரித்தார்கள்; சுருங்கச்சொல்லின், தமிழகத்தை ஓர் அமுத சுரபியாக்க ஆசைப்பட்டார்கள்.
பாரத நாடு இன்று தன்னரசுபெற்ற தனி நாடாகத் திகழ்கின்றது.வல்லரசு நீங்கிவிட்டது. நல்லரசு நிலவுகின்றது. 'நாட்டிலே உண்ண உணவில்லை' என்று ஒருவரும் வருந்தாதபடி வளம் பெருக்கிக் குடிகளைக் காப்பதன்றோ நல்லரசின் முதற் கடமை? தமிழ்நாட்டுக் கவிஞராகிய பாரதியார், வருங்காலப் பாரத அரசாங்கத்திற்கு- சுதந்தர அரசாங்கத்திற்கு - அடிப்படையான பொருளாதாரத் திட்டமொன்று வகுத்துப் போந்தார்:
"இனிஒருவிதி செய்வோம் - அதை
எந்த நாளும் காப்போம்;
தனிஒருவனுக் குணவில்லைஎனில்
சகத்தினை அழித்திடுவோம்"
என்பது அக் கவிஞரின் வாக்கு. இயற்கை வளம் நிறைந்த பாரத நாட்டில் பசிப்பிணியை ஒழித்தல் அரிதன்று. கங்கையும், கோதாவரியும், காவரியும் பாய்கின்ற வளநாட்டில் உணவுப் பஞ்சம் தலை காட்டலாகுமோ? இன்று வளர்ந்தோங்கி வருகின்ற விஞ்ஞானக் கலைகளின் உதவியால் விளைபொருள்களைப் பெருக்கி, பாழிடங்களையெல்லாம் பயிர் முகங்காட்டும் பழனங்களாக்கி, பாரத நாட்டை ஓர் அமுத சுரபியாக உருவாக்குதல் அ ரிதாகுமோ?
உடலை வளர்ப்பது உணவு; உயிரை வளர்ப்பது அறிவு.
"அறிவுடையார் எல்லாம் உடையார்; அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்"
என்பது திருவள்ளுவர் திருவாக்கு. அறிவுப் பசி இப்பொழுது தமிழ்நாட்டிலே அதிகரித்து வருகின்றது, அமிழ்தினும் இனிய தமிழ் மொழியை - அருங்கலை நிறைந்த தமிழ்மொழியைப் 'போற்றாதே ஆற்ற நாள் போக்கினோமே' என்ற உணர்ச்சி ஆங்கிலங்கற்ற அறிஞருள்ளத்தில் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றது. பாரத நாட்டின் அங்கங்களாக அமைந்த ஒவ்வொரு மாகாணத்திலும் அவரவர் தாய்மொழியின் வாயிலாகவே அறிவு ஊட்டப்படவேண்டும் என்ற கொள்கை உரம்பெற்று வருகின்றது. இவை யெல்லாம் பாரத நாட்டில் எழுந்துள்ள அறிவுப் பசியைக் காட்டும் அறிகுறிகள். இத் தகைய பசி, ஒல்லையில் வந்துவிடும் என்பதை முன்னரே அறிந்த பாரதியார், தமிழ் மக்களை நோக்கி,
"சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவும் கொணர்ந்துஇங்குச் சேர்ப்பீர்!"
என்று பணித்துப் போந்தார்.
தமிழ் மொழியிலே 'மறுமை இன்பத்தை அடைய வழிகாட்டும் மெய்ஞ்ஞான நூல்கள் மட்டும் இருந்தாற் போதாது; இம்மை யின்பம் பெறுதற் கேற்ற விஞ்ஞான நூல்களும் வேண்டும்' என்று பாரதியார் ஆசைப்பட்டார்; அப் பணியிலே தலைப்படும்படி அறிவறிந்த தமிழ் மக்களை வேண்டினார். எனவே, அறிவுப் பசியைத் தீர்க்கும் அருங்கலைச் சுரபியாகவும் விளங்குதல் வேண்டும்.
தமிழ்மொழியின் தனிப் பண்புகளைத் தமிழ் நாட்டாருக்கு அமுதசுரபி வாரி வழங்கும் என்று நம்புகின்றோம். இனிமை என்பது தமிழின் தனிப் பண்பு.
"யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்"
என்று பன்மொழி யறிந்த பாரதியார் பாடினார். அவருக்கு முன்னிருந்த அறிஞர்களும் கவிஞர்களும் மதுரம் நிறைந்த தமிழின் அருமையை மனமாரப் புகழ்ந்து வாயார வாழ்த்தி யுள்ளார்கள். 'என்று முளதென்தமிழ்' என்று தமிழின் வாசி யறிந்து ஆசி கூறினார் கம்பர்.இத் தகைய இனிமை வாய்ந்த மொழியை - மூவாச் சாவா மொழியைப் பிறப்புரிமையாகப் பெற்ற பெருமை என்றும் தமிழருக்கு உண்டு. ஆயினும், தம்பெருமை தாமுணராத் தன்மையராய்த் தமிழர் இன்று தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்களைத் தட்டி எழுப்பி, தமிழ் அமுதை ஊட்டி,
"தமிழன் என்று சொல்லடா!
தலைநிமிர்ந்து நில்லடா!"
என்று ஊக்குதலே அமுதசுரபி செய்தற்குரிய அருஞ்சேவையாகும். 'பாரகம் அடங்கலும் பசிப்பிணி அறுக' என்று மணிமேகலையின் கையில் அமைந்த அமுதசுரபியை அன்று வாழ்த்தினாள் ஆதிரை என்னும் நல்லாள். தமிழகத்தின் தலைநகரமாகிய சென்னையம்பதியிலே இன்று எழுகின்ற தமிழ் மயமான 'அமுதசுரபி' யைத் 'தேமதுரத் தமிழோசை உலக மெலாம் பரவும் வகை செய்க' என்று வாழ்த்துகின்றோம்; வரவேற்கின்றோம்.
-----------
15. மாதரும் மலர்ப் பொய்கையும்
மலர் நிறைந்த பொய்கையும் மீன் நிறைந்த வானமும் எஞ்ஞான்றும் கவிஞர் மனத்தைக் கவரும் இயற்கைக் காட்சிகளாகும். காலையிலே தோன்றும் கதிரவனொளியால் களித்து விரியும் கமல மலரைக் காணும்பொழுது கவிஞரின் உள்ளமும் மலர்வதாகும். இத் தகைய இயற்கை அழகினை மாந்தி இன்புற்ற கவிஞர் தரும் காட்சிகளைப் பார்ப்போம்.
நீலத்திரை விரித்த வானத்திலே, கதிரவன் ஒளி வீசி எழுந்தான். கண்களைக் கவரும் அழகு வாய்ந்த கமல மலர்களில் கள்ளுண்டு களிக்கப் போந்த கரு வண்டுகள் பொய்கையின்மீது சுற்றிச் சுழன்று இன்னிசை பாடின. பகலவன் ஒளியால் இதழ் விரிந்து இலங்கிய செங்கமல மலரில் வெள்ளை அன்னம் ஒன்று இனிதமர்ந்திருந்தது. காலைப் பொழுதில் வீசிய இளங்காற்றின் இனிமையை நுகர்ந்து அன்னம் தெள்ளிய திரைகள் தாலாட்டக் கமலப் பள்ளியில் இனிது துயின்றது. இவ்வாறு பூஞ்சேக்கையில் கண்வளர்ந்த அன்னத்தின் அழகினை,
"தாய்தன் கையின் மெல்லத்
தண்ணென் குறங்கி னெறிய
வாய்பொன் அமளித் துஞ்சும்
மணியார் குழவி போலத்
தோயும் திரைகள் அலைப்பத்
தோடார் கமலப் பள்ளி
மேய வகையில் துஞ்சும்
வெள்ளை அன்னம் காண்மின்".
என்று பாடினார் சிந்தாமணி ஆசிரியர்.
அன்பார்ந்த குழவியை அழகிய மஞ்சத்திலமைத்து அதன் மேனியைக் கைகளால் தடவித் துயில்விக்கும் அன்னைபோல் ஈரம் வாய்ந்த பொய்கை கமலப்பள்ளியில் அமர்ந்த அன்னத்தைத் தன் அலைக்கைகளால் தட்டித் துயில்வித்ததென்று கவி அமைத்துள்ள உவமை சால அழகியதாகும். தண்மை வாய்ந்த பொய்கை. தலையாய அன்பு வாய்ந்த அன்னையை ஒத்தது. மெல்லிய திரைகள் அன்னையின் மெல்லிய கரங்களை ஒத்தன. அத்திரைகள் தோய்தலால் அன்னம் அடைந்த இன்பம். அன்னையின் கை தோய்தலால் அருங்குழவியடையும் இன்பத்தை நிகர்த்தது. அன்னம் துயிலுதற்கமைந்த நறுமணங்கமழும் கமலப்பள்ளி மெல்லிய வெண்பட்டு விரித்த விழுமிய மஞ்சம் போன்றது என்று கவிஞர் எழுதியமைத்த ஓவியம் கற்போர் மனத்தைக் கவர்வதாகும்.
இத் தகைய பொய்கையில் நீலத் துகிலுடுத்த ஒரு மங்கை நீராடச் சென்றாள். அவ் வழகிய ஆடையில் குயிற்றிய செம்மை சான்ற மணிகளிலே கதிரவன் ஒளி வீசிய அம் மணிகளினின்று எழுந்த நிழற் சுடர்கள் பொய்கையின் மீது விழுந்து நெருங்கிப் பூத்த செந்தாமரையை நிகர்த்தன. அச்சுடர்களைச் சேய்மையிலிருந்து கண்ட மட அன்னம் ஒன்று விரைந்தோடிச் சென்று ஆர்வத்தாற் கவ்விற்று. மணிகளின் நிழலாய் சுடர்கள் வாயில் அகப்படாமையால் தன் மடமையை நினைந்து நாணிய அன்னம், வந்த வழியே வெட்கமுற்று விரைந்து சென்றது. இத் தகைய இனிய இயற்கைக் காட்சியை,
"நீலத் துகிலிற் கிடந்த நிழலார் தழலம் மணிகள்
கோலச் சுடர்விட் டுமிழக் குமரி அன்னம் குறுகிச்
சால நெருங்கிப் பூத்த தடந்தா மரைப்பூ வென்ன
வாலிச் சுடர்கள் கவ்வி அழுங்கும் வண்ணம் காண்மின்"
என்று கவிஞர் நயம்படப் பாடினார்.
நீலத் துகிலின் இடையே இலங்கிய செம்மணிகள் பசுமையான தாமரை இலைகளின் நடுவே விளங்கிய செங்கமல மலர்போல் திகழ்ந்தன. நீராடப் போந்த மங்கையின் நீலப்புடவையில் செம்மணிகள் நெருக்கமாகப் பதிந்திருந்தமையால், கதிரவன் ஒளியில் அவற்றின் நிழல்கள், நீர்ப்பரப்பில் நெருங்கி விழுந்து சால நெருங்கிப் பூத்த செந்தாமரையை நிகர்த்தன. நாள் தோறும் நற்றாமரைக் குளத்தில் வாழ்ந்து, செங்கமல மலர்களைச் செவ்வையாக அறிந்திருந்த அன்னமே, செம்மணியின் சுடர்களைச் செந்தாமரை என்று மயங்கிற்றென்றால், அம்மணிகளின் செம்மை சான்ற ஒளி, சொல்லாமலே விளங்குமன்றோ? அச்சுடர்களைத் தாமரை என்று கருதி அன்னம் விரைந்து சென்று கவ்விய ஆர்வமும், அச்சுடர்கள் வாயிலாகப்-படாமையால் அழுங்கிய தோற்றமும் நகைச்சுவை பயப்பனவாகும். ஆகவே, மங்கை புனைந்திருந்த மணியாடையின் சிறப்பையும், அம் மணிகள் கதிரவன் ஒளியால் சுடர் உமிழ்ந்த செம்மையையும் சிந்தாமணிக் கவிஞர் அழகுற உணர்த்திப் போந்தார்.
மலர்ப் பொய்கையின் அழகையும் மெல்லிய பூங்காற்றின் இனிமையையும் நுகர்ந்து, நெடுநேரம், மங்கை நீராடுவாளாயினாள்; பொய்கையிலே இயற்கை இன்பம் நுகர்ந்த நிலையில் வீட்டையும் மறந்தாள்: தன்னொடு போந்த பஞ்சரக் கிளியின் பசியையும் மறந்தாள். இவ்வாறு தன்னையும் மறந்து தாமரைத் தடாகத்தில் விளையாடிக்கொண்டிருந்த மங்கையைக் கரையேற்றுதற்கு ஒரு சூழ்ச்சி செய்தது அவ் விளங்கிளி, தன்னைக் காதலித்து வளர்த்த தலைவியை நோக்கி, 'பாம்பு பாம்பு' என்று பதறிக் குளறிக் கூறிற்று. 'பாம்பு' என்ற சொற்கேட்ட மங்கை மனம் பதைத்துக் காதில் அணிந்த தோடு கழல, விரைந்தோடிக் கரை சேர்ந்தாள். இந் நிகழ்ச்சியை ஒரு சொல்லோவியமாக எழுதி அமைத்தார் சிந்தாமணிக் கவிஞர்.
"தீம்பாற் பசியி னிருந்த செவ்வாய்ச் சிறுபைங் கிளிதன்
ஓம்பு தாய்நீர் குடைய ஒழிக்கும் வண்ணம் நாடிப்
பாம்பா மென்ன வெருவிப் பைம்பொன் தோடு கழலக்
காம்பேர் தோளி நடுங்கிக் கரைசேர் பவளைக் காண்மின்"
என்பது அவர் பாட்டு,
பால் நினைந்தூட்டி வளர்த்த பசுங்கிளியின் பசியையும் மறந்து, தலைவி நீராடத் தலைப்பட்டாள் என்று கவிஞர் கூறுமாற்றால், மாண்பமைந்த மலர்ப் பொய்கையின் பெருமை இனிது விளங்குவதாகும். அத் தலைவி, தண்ணளியோடு பாலூட்டும் தாய் ஆதலால், மதி நலம் வாய்ந்த கிளி அவள் மனத்தைத் துன்புறுத்தாது தன் பசியைத் தீர்த்துக்கொள்ள ஒரு வழியை நாடிற்று. மலர் நிறைந்த பொய்கையில் மீன் முதலாய உயிர்களும் அன்னம் முதலாய பறவைகளும் நிறைந்திருப்பினும், மங்கைக்குப் பாம்பினிடத்துள்ள பயம் மிகப் பெரிதெனக் கருதிய கிளியின் மதி நலம் அறிந்து மகிழத்தக்கதாகும். இவ்வாறு செவ்வியறிந்து பேசுதற்குரிய முறையில் அக் கிளியைப் பயிற்றியிருந்த மங்கையின் மதி நலமும் நன்கு விளங்குகின்றது. ஆகவே, குளிர்ந்த நீர் நிறைந்த பொய்கையின் பெருமையும் அந் நீரில் மகிழ்ந்து விளையாடிய மங்கையின் மதிநலமும் சிந்தாமணிக் கவிஞரால் சிறப்பாக உணர்த்தப்பட்டன.
மங்கை, அஞ்சி ஓடிக் கரையேறியபொழுது அவள் காதிலணிந்திருந்த தோடுகளில் ஒன்று கழன்று தண்ணீரில் விழுந்துவிட்டது. தோடிழந்த பாவை துடித்தாள்; கண்ணீர் வடித்தாள். 'ஐயோ! நான் என்ன? செய்வேன்? 'பொய்கைக்குப் போக வேண்டா' என்று அன்னை தடுத்தாளே! அவள் தடையை மீறி வந்தேனே! வெறுங்காதுடன் வீட்டிற்குச் சென்றால் அன்னை சீறுவாளே! திட்டிக் கொட்டுவாளே! இப்பொய்கையில் இறங்கித் தேடித் தருவார் யாரையும் காணேனே! என் கண்ணனைய தோழியரும் கைவிட்டுச் சென்றார்களே! அதோ! ஒரு மெல்லியல் அன்னம் கரையருகே நீந்தி வருகின்றது. இன்னல் உற்ற என் நிலையைக் கண்டு இரக்கமுற்றுத்தான் வருகின்றது போலும்!' என்றெண்ணிப் பேசலுற்றாள் மெல்லியல்; 'அன்னமே! உன்னை வணங்குகின்றேன். எனக்கு நீ ஒரு நன்மை செய்ய வேண்டும். நீ வாழும் பொய்கையில் என் காதணி கழன்று விழுந்துவிட்டது. அதை நினைத்தால் என் நெஞ்சம் நடுங்குகின்றது. என் தாய் பொல்லாதவள்! நீதான் என்னைக் காப்பாற்ற வேண்டும்; போக்கடித்த நகையை எடுத்துத் தரவேண்டும்' என்று கைகூப்பித் தொழுதாள்.
"மின்னொப் புடைய பைம்பூண் நீருள் வீழக் காணாள்
அன்னப் பெடையே தொழுதேன் அன்னை கொடியள் கண்டார்
என்னை அடிமை வேண்டின் நாடித் தாஎன் றிறைஞ்சிப்
பொன்னங் கொம்பின் நின்றாள் பொலிவின் வண்ணம் காண்மின்"
என்பது சிந்தாமணி.
பொய்கையிலே காதணியைப் போக்கடித்த மங்கை. ஒரு பெண் அன்னத்தை நோக்கித் தன் குறையை முறையிட்டாள் என்று பொருத்தமாகக் கூறினார் கவிஞர். 'பெண்ணுக்குப் பெண்மைதான் இரங்கும்' என்று எண்ணி, அன்னப் பெடையே!' என்று அழைத்தாள்; அதன் கருணையைப் பெறுவதற்காகக் கைகூப்பித் தொழுதாள்; மேலும், அதன் உள்ளத்திலெழுந்த இரக்கத்தைப் பெருக்கும் பொருட்டு, 'அன்னை கொடியவள்' என்று அறிவித்தாள்; காலத்திற் செய்யும் உதவிக்கு என்றென்றும் கடமைப்பட்டவள் என்று தன் நன்றியறிதலைப் புலப்படுத்தினாள் என்பது கவிஞர் கருத்து. இத்தகைய நயங்களெல்லாம் சிந்தாமணிச் சொல்லோவியங்களிற் சிறந்து விளங்கக் காணலாம்.
-----------
IV. கற்பனை இன்பம்
16. முருகனும் முழுமதியும்
அந்தி மாலையில் விண்ணிலே எழுந்த முழுமதி எங்கும் வெண்ணிலா விரித்தது. பொய்கையிலமைந்த பூங்குமுதம்முகை நெகிழ்ந்து, இளங்காற்று மெல்லெனத் தவழ்ந்து நறுமணம், கமழ்ந்தது. இத்தகைய அழகு வாய்ந்த அந்திப் பொழுதில், தென்மலைச் சாரலில் மகிழ்ந்து விளையாடிய முருகனென்னும் குமரன், விண்ணிலே ஊர்ந்த வெண் மதியின் அழகினைக் கண்டு குறுகுறு நடந்து, சிறுகை நீட்டி, முகம் மலர்ந்து அளவிலா இன்பமுற்றான். குறுநடை பயிலும் முருகனைக் கூர்ந்து நோக்கி, வெண்ணிலாவும் நகை முகம் காட்டுவதாயிற்று. தன்னை நோக்கி, முகம் மலர்ந்த தண்மதியை, அருகே போந்து விளையாட அழைத்தான் முருகன். மழலை மொழிகளால் நெடும்பொழுது வருந்தி யழைத்தும் வான்மதி வாராதிருக்கக் கண்டு முருகன் கண் பிசைந்து அழுது கரைந்தான்.
இள நலம் வாய்ந்த முருகன் விம்மித் தேம்பி அழுவதைக் கண்டு ஆற்றாத முனிவர் ஒருவர் அவ்விடம் விரைந்து போந்து, வெள்ளை மதியில் ஊன்றிய பிள்ளையின் கருத்தை மாற்றப் பலவாறு முயன்றார்; ஆயினும், அப்பிள்ளையின் கண்ணும் கருத்தும் பிற பொருளிற் செல்லாப் பெற்றி கண்டு விண்மதிக்கு நன்மதி புகட்டலுற்றார். "வெண்ணிலா வீசும் விண்மதியே! முருகனைப் போலவே நீயும் அமுதமயமாய் விளங்குகின்றாய்; கண்டோர் கண்ணையும் மனத்தையும் குளிர்விக்கின்றாய்; குமுதவாய் திறந்து குளிரொளி விரிக்கின்றாய்; உயிராகிய பயிர் தழைக்க உயரிய அருள் சுரக்கின்றாய். இவ்வாறு பல கூறுகளில் முருகனை நிகர்க்கும் நீ அவனோடு விளையாட வா" என்று முனிவர் நயந்து அழைத்தார்.
இங்ஙனம் ஒப்புமை காட்டி உவந்தழைக்கும் இரங்காத மதியின் நிலை கண்டு வருந்தினான் குமரன். அது கண்ட முனிவர், மதியின் சிறுமை காட்டி இடித்துரைக்கத் தொடங்கினார்; "மாலை மதியே! சில கூறுகளில் நீ முருகனை ஒப்பாயாயினும் பல கூறுகளில் அவனுக்கு நீ நிகராகாய்; முக்கட் பெருமானாகிய முதல்வனுக்கு நீ ஒரு கண்ணாய் அமைந்தாய்! முருகனோ கண்மணியாயமைந்தான்; கலைகள் குறைந்தும் நிறைந்தும், நீ வேறுபடுகின்றாய். முருகனோ எஞ்ஞான்றும் கலை நிறைந்த இன்னொளியாய் இலங்குகின்றான். நீ புற இருளையே போக்க வல்லாய்; முருகன் அக விருளையும் அகற்ற வல்லான். உலகில் நீ ஒருபால் ஒளிருங்கால் மற்றொருபால் ஒழிகின்றாய்; முருகனோ அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்து விளங்குகின்றான். நீரிற் பூக்கும் குமுத மலர்களை நீ மலர்விக்கின்றாய்; முருகனோ அன்பருடைய மனமலர்களைத் திறக்கின்றான். எனவே, உன்னினும் அவன் உயர்ந்தவனல்லனோ! அன்னான் 'வருக' என்றழைத்தால் நீ வாராதிருக்க வழக்குண்டோ?" என்று முனிவர் இடித்துரைத்தார்.
இவ்வாறு வேற்றுமை காட்டிக் கட்டுரை கூறியும், முருகன் பெருமையை உணராது இறுமாந்திருந்த தண்மதியைப் பிறிதோர் உபாயத்தால் முனிவர் தெருட்டக் கருதினார்; "மருவுற்ற குளிர் மதியே! உன்னை வருந்தி அழைக்கும் குமரன் திறத்தினை அறிந்தா யில்லையே! கருநோயை வேரறுக்கும் முருகன் அருள் பெற்றால், உன்னைப் பற்றியுள்ள கரு நோய் கடுகி ஓடுமே! இருள்சேர் இருவினையுந் துடைத்து, அந்தமில் இன்பத்து அழியா வீடும் தரவல்ல முருகனுக்கு உன்பால் அமைந்த மறுவினை அகற்றுதல் அரிதாமோ! கரவாது தொழும் அன்பர் கண்ணெதிரே தோன்றித் தண்ணளி சுரந்து, வரங்கொடுக்கும் கண்கண்ட தெய்வம் முருகனல்லால் உலகில் வேறுண்டோ?" என்று செம்பொருளாய குமரன் பெருமையைச் செவ்வனம் அவர் உணர்த்தினார். எனினும், முனிவர் பரிந்தரைத்த மொழிகளை வெண்மதி மனத்திற் கொள்ளவில்லை.
சாம, பேத தானங்களால் தண்மதியை வெல்ல இயலாத முனிவர் தண்டத்தைக் கையாளத் தலைப்பட்டார்; 'குறையாகிப் பிறையாகி மிளிரும் குளிர்மதியே! இக்குமரன் ஆற்றலை நீ அறியாய் போலும்! இப்பிள்ளைப் பெருமான் குன்றமெறிந்தான்; குறை கடலிற் சூர் தடிந்தான்; குலிசனைச் சிறையிலிட்டான். இவ் வேலனைப் பாலன் என்றெண்ணி இகழ்ந்த சூரன் பட்ட பாட்டை நீ அறியாயோ? இன்னும், தக்கன் வேள்வி கட்டழிந்த நாளில் நீ மானங் குலைந்ததை மறந்தனையோ? வலிமை சான்ற வேலன் மேலும் பொருமி அழுது அரற்றுவானாயின், இளையவனாகிய வீராவகு பொங்கி எழுவான். அவன் சீற்றத்தை மாற்ற எவராலும் இயலாது. ஆதலால், முருகன் வருந்தி அழைக்குங்கால் அவனுடன் வந்து விளையாடுதலே உனக்கு அழகாகும்" என்று முனிவர் அறிவுறுத்தினார்.
தாம் உரைத்த மொழிகளைச் சிறிதும் நெஞ்சிற் கொள்ளாது செருக்குற்று விண்ணிலே தவழ்ந்து சென்ற விண்மதியையும், அம்மதியை மறந்து மற்றொன்றைக் கருத மனமற்றிருந்த முருகனையும் கண்ட முனிவர் செய்வதொன்று மறியாது சிந்தனையில் ஆழ்ந்திருந்தார்.
அந் நிலையில் முருகனை வீட்டிற் காணாத அவன் தந்தை; 'முருகா, முருகா' என அழைத்துக் குன்றின் சாரலை வந்தடைந்தார்; ஆங்குக் கரும் பாறையின் மீது முனிவரும் குமரனும் அமர்ந்திருக்கக் கண்டார்; அருமந்த முருகனை விரைந்தெடுத்து ஆர்வமுற அணைத்துக் கண்ணீர் துடைத்து, அழகொழுகும் அவன் திருமுகத்தை அமர்ந்து நோக்கி, 'என் கண்ணே! கண்மணியே! நீ ஏன் அழுதாய்? தேனும் தினையும் வேண்டுமா? பாலும் பழமும் வேண்டுமா?' என்று விருப்புடன் வினவி முத்தமிட்டார். முத்தமிட்டு நிமிர்ந்த அத்தனது சடையிலமைந்த பிறை மதியை முருகன் கண்டு கொண்டான்; தன் விருப்பத்திற்கிணங்கி வந்தடைந்த தண்மதியைக் கண்டு உள்ளம் தழைத்தான்; தந்தையின் தோளில் ஏறியமர்ந்து கற்றைச் சடையின்மீது இலங்கிய குழவித் திங்களைத் தன் இளங்கரத்தால் வளைத்திழுத்தான். தண்மதியைச் சார்ந்த முருகனது இளநலம் முன்னிலும் சிறந்து இலங்கிற்று. விண்மதியின் தண்மையையும் வெண்மையையுங்கண்டு, முருகன் மனங்களித்தான்; மதியின் வட்ட வடிவத்தைத் தன் முகத்தோடு ஒட்டிப் பார்த்தான்; அதன் மேனியிலமைந்த மறுவைத் தன் மலர்க் கரத்தால் துடைத்தான். மதியுடன் விளையாடிய மைந்தனைக் கண்டு தந்தையார் மனங் குளிர்ந்தார். இறையனார் செயல் கண்டு இன்பக் கண்ணீர் சொரிந்த முனிவர், 'யாவர்க்கும் முன்னவனே முன்னின்றால் முடியாத பொருள் உளதோ?' என்று பாடிப் பரவினார்
-----------
17. பயிர் வண்டும் படர் கொடியும்
திருக்குற்றால மலையின் ஒருசார் ஓங்கி வளர்ந்த வேங்கைமரம் விண்ணளாவி நின்றது. அதன் கிளைகளில் ஒரு மெல்லிய பூங்கொடி பின்னிப் படர்ந்திருந்தது. மஞ்சு தோய நின்ற வேங்கையின்மீது அவ்விளங்கொடி வரிவரியாய்ச் சுற்றி விளங்கிய கோலம், கண்டோர் கண்ணையும் கருத்தையும் கவர்வதாயிற்று. பொன்மலர் பூத்த அவ்வேங்கையின் கொம்புகளில், குயில்கள் மணந்து மகிழ்ந்தன; வண்டினங்கள் இசைபாடி நறுமலர்களின் தேனை மாந்தித் திளைத்தன.
"தீங்கு யில்ம ணந்துதேன் துஞ்ச வண்டு
பாண்செயவேங்கை நின்று பொன்உ குக்கும்"
என்று சிந்தாமணிக் கவிஞர் வியந்துரைத்த இயற்கையழகு அங்கேகாட்சியளித்தது.
அவ் வேங்கை மரத்தின் அடிப்புறத்தில் ஆழ்ந்து அகன்ற ஓர் ஆறு அணிபெறச் சென்றது. இளங்காற்றில் வேங்கையின் பூங்கொம்புகள் அசைந்து ஆற்றிலே பொன்மலர் சொரிந்தன. சிறு திரைகள் ஆற்றில் அலைந்து இனிய காட்சியளித்தன.
அப்போது சேய்மையில் ஒல்லென ஓர் ஒலி கிளம்பியது, அதன்தன்மையை மனத்தாற் கருது முன்னமே கடுங்காற்று வேகமாய்ச் சுழன்று வீசத் தலைப்பட்டது. விண்ணுக் கடங்காமல், வெற்புக் கடங்காமல் வீசிய காற்றின் வேகத்தால் மரங்கள் எல்லாம் மயங்கிச் சுழன்றன. அக்காற்றின் கொடுமைக்கு ஆற்றாது மலையே நிலை குலைந்தது. வெறி கொண்ட சூறையில் அகப்பட்ட வேங்கை மரம் வேரோடு சாய்ந்து அருகே சென்ற ஆற்றில் விழுந்தது. வானுற ஓங்கி வளம்பெற வளர்ந்து, செழுமையுற்று விளங்கிய வேங்கை நிலை குலைந்து வீழக் கண்ட எமதுள்ளம் வெதும்பியது; உலகப் பொருள்களின் நிலையாமையை நினைந்து நெஞ்சம் உலைந்தது.
இவ்வாறு வேங்கை சாய்ந்து ஆற்றில் விழுந்த போது, அதனைச் சுற்றிப் படர்ந்திருந்த மெல்லிய கொடியும் வேரோடு பெயர்ந்து அம் மரத்துடன் மயங்கி விழுந்தது. அவ் வேங்கையில் இனிய தேனுண்டு திளைத்த வண்டுகள் மரத்தொடு பூவும் மாளக் கண்டு ஆர்ந்தெழுந்து அயல் நின்ற மற்றொரு மரத்தில் சென்று சேர்ந்தன. இதனை நோக்கிய போது மதுவுண்டு மயங்கும் வண்டின் இழிகுணம் எம் மனத்தை வாட்டி வருத்தியது,
"காலாடு போழ்தில் கழிகிளைஞர் வானத்து
மேலாடு மீனிற் பலராவர்- ஏலா
இடர் ஒருவர் உற்றக்கால், ஈர்ங்குன்ற
நாட!தொடர்புடையோம் என்பார் சிலர்"
என்ற பாட்டின் பொருள் தெளிவாக விளங்கிற்று. கெடுமிடத்துக் கைவிடும் கருவண்டு போலாது, பெருந்துயர் நேர்ந்தபோதும் பிரியாத இயலமைந்த பூங்கொடி, நல்ல குடிப்பிறந்த நங்கைபோல் இலங்கிற்று.
வேரூன்றி முளைத்த இடத்தினின்றும் படர்ந்து போந்து, வேங்கையைப்பற்றித் தளிர்த்துப் படர்ந்த கொடியின் தன்மை, மணப்பருவம் வாயந்த ஒரு மங்கை, பிறந்த மனையின்றும் போந்து, தலைமகனைச் சேர்ந்து வாழும் தன்மையில் அமைந்திருந்தது. அக் கொடி படர்வதற்கு ஏற்ற கொழுகொம்பாய் அமைந்த வேங்கையின் தோற்றம், ஆண்மையும் பெருமையும் பொருந்தித் திகழும் தலைமகனது விழுமிய நிலைபோல் விளங்கிற்று. அவ் வேங்கையிலே பின்னிப் படர்ந்து அதன் கிளைகளுக்குப் புதியதோர் அழகளித்த கொடியின் கோலம், தலைமகனுடன் ஒன்றி வாழ்ந்து இல்வாழ்க்கைக்கு அழகளிக்கும் குலமங்கையின் தன்மையை நிகர்த்தது. இன்னும், வேங்கை துயர் உற்று ஆற்றில் விழும்போது அதனோடு தானும் துயருறும் நிறையமைந்த மங்கையின் மனப் பான்மையை விளக்கி நின்றது. அந் நிலையில் இளங்கோவடிகள் எழுதிக் காட்டிய கண்ணகியின் வடிவம் எம் மனக் கண்ணெதிரே காட்சியளித்தது.
பெற்றோர் சேர்த்து வைத்த பெருங்செல்வம் எல்லாம் பொதுமாதிடம் இழந்து வறியனாய், மாட மதுரையில் மனையாளது மணிச்சிலம்பை விற்று வாணிகம் செய்யுமாறு புகார் நகரினின்றும் புறப்பட்டான் கோவலன். அப்போது மெல்லியல் வாய்ந்த கண்ணகியும் அவனுடன் சென்றாள். கதிரவன் வெம்மையால் உடல்சோர, கரடு முரடான பாதையில் வண்ணச் சீறடிகள் வருந்தக் கானகத்தில் நடந்து போந்த கண்ணகியின் பெருமையைக் கண்டு கோவலன் மனங்குழைந்தான்:
"குடிமுதற் சுற்றமும் குற்றிளை யோரும்
அடியோர் பாங்கும் ஆயமும் நீங்கி
நாணமும் மடனும் நல்லோர் ஏத்தும்
பேணிய கற்பும் பெருந்துணை யாக
என்னொடு போந்து ஈங்(கு) என்துயர் களைந்த
பொன்னே கொடியே புனைபூங் கோதாய்".
என்று கற்பின் செல்வியைப் புகழ்ந்து போற்றினான்.
இவ்வாறு கணவனைப் பிரியாது வாழ்தலே நிறை யமைந்த மாதர் நெறியாகும். கற்புடைய மாதர் கணவரோடு இன்பமும் துன்பமும் ஒருங்கே நுகர்வர்; அவர் ஆவி துறப்பின் அந் நிலையே உயிர் நீப்பர். நீரில் அமைந்து வாழும் நீலமலர் அந் நீர் வற்றும்போது அவ் விடத்தே ஒட்டி உறைந்து உலரும் தன்மைபோல், கற்பமைந்த மங்கையர் கணவன் வாழுங் காலத்து அவனுடன் இனிது வாழ்ந்து, அவன் அழியும் காலத்துத் தாமும் அகமகிழ்ந்து அழிவர். இத் தன்மை வாய்ந்த குலமாதர் நெறியைக் கொடியின் தன்மையோடு ஒப்பு நோக்கிக் கம்பர் அமைத்துள்ள கற்பனை, அழுகு வாய்ந்ததாகும்.
"நிலம ரங்கிய வேரொடு நேர்பறித்து
அலம ரும்துயர் எய்திய ஆயினும்
வலம ரங்களை வீட்டில மாசிலாக்
குலம டந்தையர் என்னக் கொடிகளே"
என்னும் கவியில் அமைந்துள்ள சொல் நயமும் பொருள் நயமும் ஆயுந்தோறும் அளவிறந்த இன்பம் பயப்பதாகும். குலமாதர் போன்ற கொடிகளின் தன்மை இவ்வாறாக, விலைமாதர் போன்ற வண்டுகளின் தன்மையையும் கவிதையிலே காணலாம். பொருளையே விரும்பும் பொது மாதர் உள்ளத்தில், அன்பெனும் பசை அணுவளவும் இராது என்று அறிஞர் கண்டு உணர்த்தியுள்ளார்கள். அத் தன்மை வாய்ந்த பெண்டிரை,
"நறுந்தா துண்டு நயனில் காலை
வறும்பூத் துறக்கும் வண்டு போல்குவர்"
என்று மணிமேகலை ஆசிரியர் குறித்துப் போந்தார். ஆகவே, இடருற்றபோது நீங்கும் இயல்புடையாரோடு உறவு கொள்ளாது, கொடுந்துயர் உற்ற போதும் விட்டு நீங்காத கொடியன்னாரைத் துணைக் கோடலே இருமையும் இன்பம் தருவதாகும்.
------------
18. நல்ல மரமும் நச்சு மரமும்
ஒரு நாள் ஓர் அரசிளங் குமரன் தன் தோழனைத் துணைக்கொண்டு கானகத்தில் வேட்டையாடச் சென்றான். அங்கு, அவன் விரும்பியவாறு வேட்டையாட வேங்கையும் வேழமும் அகப்படாமையால் எங்கும் அலைந்து திரிந்து அலக்கணுற்றான். பசியால் மெலிந்து, வெயிலால் உலர்ந்து, இருவரும் தளர்ந்து சோர்ந்தார்கள்; அப்போது, நெடுந் தூரத்தில் ஒரு சிற்றூர் தோன்றக் கண்டு, அவ்வூரை நோக்கி மெல்ல நடந்து செல்வாராயினர். கதிரவன் வெம்மையால் அரசிளங் குமரன் தலைநோயுற்றுத் தன் தோழனது தோளைப் பற்றிக்கொண்டு வழி நடந்தான், அவ்வூரின் அருகே வந்தபோது, இருவரும் மெய் சோர்ந்து, நாவறண்டு, அடிவைத்து நடப்பதற்கும் வலியற்றவராயினர். அந் நிலையில், இருவரையும் இன்முகங்கொண்டு எதிர் சென்று அழைப்பதுபோல் இளந்தென்றல் எழுந்து வந்தது. அம் மெல்லிய பூங்காற்றின் இனிமையால் புத்துயிர் பெற்ற நண்பர்கள், அகமும் முகமும் மலர்ந்து தென்றல் எழுந்து வந்த திசை நோக்கிச் சென்றார்கள். அவ்வழியில், இளந்திரைகளோடு இலங்கிய நன்னீர்ப் பொய்கை யொன்று அமைந்திருந்தது. அப்பொய்கையில் விளங்கிய செந்தாமரையில் அன்னங்கள் அமர்ந்து துயின்ற அழகு கண்ணைக் கவர்ந்தது. நற்றாமரைக்கயத்தில் துயின்ற நல்லன்னத்தைக் கண்ட இளவரசன் துணைவன் நோக்கி,
"தோயும் திரைகள் அலைப்பத்
தோடார் கமலப் பள்ளி
மேய வகையில் துஞ்சும்
வெள்ளை யன்னம் காணாய்"
என்று தான் பெற்ற இன்பத்தை இனிது எடுத்துரைத்தான். அப் பொய்கையில் இலங்கிய அழகிய மலர்கள் முகமலர்ந்து இருவரையும் அழைப்பனபோல் அசைந்தன. அவ் வாவியின் தன்மையும் செம்மையும் கண்ட இருவரும், தாய் முகம் கண்ட சேய் போல் மனம் களித்து அந் நன்னீரைப் பருகி மகிழ்ந்தார்கள். அருந் தாகத்தால் வருந்திய இருவருக்கும் தண்ணீரை எடுத்து வழங்கும் தன்மை போல் அடுக்கடுக்காக அலைகள் கரையருகே வந்து சேர்ந்தன. தாகம் தணிந்து, மனமும் மெய்யும் குளிர்ந்த பின்னர், இருவரும் அக்குளத்தின் ஈரக் கரையில் இனிதமர்ந்து, அங்கு வீசிய இளங்காற்றை நுகர்ந்து இன்புற்றார்கள்; அப்போது அவ் வாவியின் அருகே கொத்துக் கொத்தாகப் பொன்நிறக் கனிகளைத் தாங்கி, குளிர் நிழல் விரித்து நின்ற மரமொன்றைக் கண்டார்கள். அதன் நிழலிலே தங்கி இளைப்பாற எண்ணி, இருவரும் அங்குச் சென்றார்கள்.
கதிரவன் வெம்மையைத் தடுப்பதற்கு ஓங்கிய பாசிலைப் பந்தர் வேய்ந்தாற் போன்று விளங்கிய மரத்தின் நிழலில் இருவரும் அயர்ந்த உறக்கத்தில் ஆழ்ந்தார்கள். சில நாழிகை சென்ற பின்னர், தோழன் துயிலொழிந்து எழுந்தான்; எங்கும் பசுமை நிறமும், பறவையின் ஒலியும், பழத்தின் மணமும் நிறைந்திருப்பினும், பசியின் கொடுமையைப் பொறுக்கலாற்றாது வருந்தினான். கற்பகத் தருவெனக் கவின்பெற விளங்கிய மரக் கொம்புகளை நயந்து நோக்கினான்; அவற்றில் பொன்னிறமான பழங்கள் கொத்துக் கொத்தாய் எம்மருங்கும் இலங்கக் கண்டான்; அப்பொழுதே அம்மரக் கிளைகளின் வழியாக மேலே சென்று, இருவரது அரும் பசியையும் தீர்ப்பதற்குப் போதிய கனிகளைக் கொய்து வந்து, துணைவனைத் துயிலினின்றும் எழுப்பினான். கனிகளின் நிறத்தைக் கண்டும் நன் மணத்தை நுகர்ந்தும், தீஞ்சுவையைத் துய்த்தும் இருவரும் இன்புற்றார்கள். பின்னும் சிறிதுபொழுது அம் மரத்தின் நிழலில் அமர்ந்திருக்கையில், அரசகுமாரனது தலை நோய் மிகுந்தது. அதனைத் தீர்க்கும் வகையறியாது தோழன் திகைத்து, 'எவரேனும் இவ் வழி வாராரோ' என்று எதிர் நோக்கி இருந்தான்.
இவ்வாறு இருக்கையில் அவ்விடத்தை நோக்கி ஒரு முதியவன் வந்து சேர்ந்தான். "தலைக் குத்துத் தீர்க்கும் மருந்து தங்களிடம் உண்டோ?" என்று தோழன் அவனை வினவினான். அப்பொழுது முதியோன் புன்னகை பூத்து, "கையில் வெண்ணெயிருக்க நெய் தேடி அலையும் வெள்ளியரும் உண்டென்பதை இன்று நேராக அறிந்தேன்; இம் மரத்தின் பட்டையில் சிறிது செதுக்கி, அதன் சாற்றைத் தலையிற் பிழிந்தால் எவ்வகைத் தலைக்குத்தும் தீர்ந்து விடுமே" என்று சொல்லி அப்பாற் சென்றான். அதை அறிந்த தோழன் அளவிலா மகிழ்வடைந்து, அம் மரப் பட்டையின் சாற்றை மன்னன் மைந்தனது தலையிற் பிழிந்தான்; சிறிது நேரத்தில் அரசிளங் குமரனது தலைக்குத்து அறவே ஒழிந்தது.
அந் நிலையில், தோழன் தலைநோய் தீர்ந்த இளவரசனை நோக்கி, "ஐயனே! நாம் இருவரும் கானகம் சென்றது முதல் இதுவரையும் நிகழ்ந்த செயல்களைப் பார்த்தாயா? நாம் பசியாலும் வெயிலாலும் நலிந்து, மெய் தளர்ந்து, வருந்தும் நிலையில் இப் பொய்கை நம்மை அன்புடன் அழைத்து இன்முகம் காட்டித் தாகம் தணித்துத் தளர்வை மாற்றியது. அப் பால், இம் மரம் நாம் தங்கியிருக்கக் குளிர்நிழல் தந்து, பசியாறப் பழங்கள் அளித்துத் தலைநோய் தீர்க்கவும் தனி மருந்தாய் அமைந்தது. இத் தன்மையை நோக்குங்கால், நல்லார் கைப்பட்ட செல்வத்தின் தன்மை நன்கு விளங்குமன்றோ? வறுமையால் வருந்தி வந்தவரை இனிய முகத்தோடு ஏற்று, அவரது குறையை நிறை செய்வதே அறிவுடைய செல்வர் செயலாகும். ஆற்று வழியாகவும் ஊற்று வழியாகவும் நன்னீரைத் தன் அகத்தே நிரப்பிக்கொள்ளும் இப் பொய்கைபோல், அறிவுடையார், நல்வழிகளால் ஈட்டிய பொரும் பொருள் நிறைந்த பொய்கை எப்பொழுதும் தண்மை வாய்ந்து விளங்குதல்போல, அறிவுடைய செல்வரும் ஈரம் வாய்ந்த நெஞ்சினராய் இலங்குவார்கள். தாகத்தால் வருந்தி வருவோர்க்குத் தடையின்றி நீர் வழங்கும் தடாகம் போல், கல்வியும் செல்வமும் பூத்த மேலோர் வறிஞர்க்கு வரையாது பொருள் வழங்கும் வள்ளல்களாய் விளங்குவார்கள். இன்னும், தமக்கென வாழாது பிறர்க்குரியாளராய் வாழும் பெரியார்பால் அமைந்த செல்வம், ஊருணியின் நீர்போல ஊரார்க்கே முழுவதும் பயன்படுவதாகும். இதனாலேயே,
"ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு"
என்று திருவள்ளுவர் அருளிப்போந்தார். இன்னும் பழுதறு பழங்களைத் தாங்கி நிற்கும் இப் பயன்மரம் தன் இனிய பழங்களால் பசிநோய் அகற்றி, குளிர் நிழலால் களைப்பை மாற்றி, பட்டையால் பிணியைப் போக்கி, பல வகையாகப் பயன்படுதல்போல, அறிஞரிடம் அமைந்த செல்வம் வறியார்க்குப் பலவகையிற் பயன்படுதலாலேயே,
"பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கட் படின்".
"மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கட் படின்"
என்னும் நாயனார் பொருளுரை எழுந்தது. ஆகவே, "தண்மை வாய்ந்த தடாகம் போலவும், பழங்கள் நிறைந்த பயன்மரம் போலவும் வாழ்வதே பண்புடைமையாகும்." என்று இனிதாக எடுத்துரைத்தான்.அரசிளங் குமரனும் அதன் உண்மையை அறிந்து தோழன் கூறிய பொருளுரையைப் பொன்போற் போற்றினான்.
அப்பால், இருவரும் தமது ஊரை நோக்கிச் சென்றனர்; செல்லும் வழியில் ஒரு சிற்றூர் குறுக்கிட்டது. அதன் நடுவே போகும்போது இருவரும் முன் கண்டறியாத ஒரு மரத்தினைக் கண்டு வியந்து நின்றார்கள். அம்மரம் கவையாகித் கொம்பாகிக் காட்டு மரம்போல் ஓங்கி வளர்ந்திருந்தது. அதன் கொம்புகளிலும் கிளைகளிலும் கூரிய முள் நிறைந்திருந்தது. இலைகளும், தழைகளும் இல்லாமல் பட்ட மரம்போல் நின்ற அதன் கிளைகளில் செவ்வையாய்ப் பழுத்த பழங்கள் கொத்துக் கொத்தாய் அமைந்து கண்களைக் கவர்ந்தன. அம் மரத்தைக் கண்டு இருவரும் வியந்து நிற்கையில் அவ் வழியாக ஓர் இளைஞன் வந்து சேர்ந்தான்.
அவன், மரத்தருகே நின்ற இருவரையும் இனிது நோக்கி, "ஐயா! நீங்கள் இருவரும் அயலூரார் என்பதை அறிந்தேன். ஏனெனில், இவ்வூரார் எவரும் இப் பாழான பழுமரத்தைக் கண்ணெடுத்தும் பாரார்கள். இம் மரத்தில் எந்நாளும் இலைகளும் தழைகளும் இல்லாமையால் விலங்குகளும் இதனடியில் நில்லாமல் விலகிப் போகும்; கண்களைக் கவரும் வனப்பு வாய்ந்த இக் கனிகளும் நச்சுக் கனிகளாய் இருத்தலின், உண்டாரைக் கொன்றுவிடும். இம் மரத்தின் கொம்புகளை விறகாய் வெட்டி எரிப்பதற்கும் இதனிடம் அமைந்த முள் இடையூறாயிருக்கின்றது. இப்பாழ் மரம் கடுங் காற்றில் அகப்பட்டு முரிந்து வேரற்று விழவேண்டு மென்று இவ்வூரார் இறைவனை நாளும் வழிபடுகின்றார்கள். இம் மரம் என்று விழுமோ, அன்றே இவ்வூரார்க்கு நன்றாகும்" என்று அதன் தன்மையை விரிவாகக் கூறி முடித்தான்.
அதைக் கேட்ட அரசிளங்குமரன் முன்னே தங்கி இளைப்பாறிய மரத்தின் நலத்தையும், பின்னே கண்ட மரத்தின் கொடுமையையும் ஒப்புநோக்கி, நச்சு மரத்தில் அமைந்த நன்னிறக் கனிகள், பேதையர் கைப்பட்ட செல்வம்போல் பிறர்க்கு இடர் விளைப்பனவாகும் என்று எண்ணி வருந்தினான்.
"நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று"
என்னும் பொய்யா மொழியின் பொருளைத் தெளிந்தான்.
இத் தகைய செல்வம் நிறைந்த பேதையர். நிலத்துக்குச் சுமையாகவும், உலகத்திற்கு உற்ற வசையாகவும் அமைந்திருத்தலால் அன்னார் அழிந்து ஒழிவதே நாட்டுக்கு நன்மை பயப்பதாகும். அறிவுடைய செல்வரை உலகம் போற்றும்; அறிவற்ற செல்வரை உலகம் தூற்றும். அறிவுடைய செல்வனது ஆக்கம் கண்டு உலகம் களிக்கும்; அறிவிலாச் செல்வனது அழிவைக் கண்டு உலகம் மகிழும். அறிவுடைய செல்வன் தன் பொருளைத் தக்கவாறு பயன்படுத்தி, இம்மையிற் புகழும், மறுமையில் இன்பமும் எய்துவான். அறிவிலாச் செல்வன் பயன்பட வாழும் பண்பறியாப் பேதையனாய் இம்மையிற் பழியும் மறுமையில் துன்பமும் எய்துவான்.
"நல்லார்கட் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கட் பட்ட திரு"
என்பது என்றும் பொய்யா மொழியேயாகும்.
---------------
19. சிவனடியார் முழக்கம்*
(* ஆனந்த விகடன், 1946 தீபாவளி மலரில் எழுதியது.)
காலைப் பொழுது; தேர் ஓடும் திருவீதியில் பெருமுழக்கம்: "திருத்தொண்டர் சங்கம் - வாழ்க! வாழ்க!" "சிவனடியார் திருக்கூட்டம் - வெல்க! வெல்க!" "பசியின் கொடுமை- வீழ்க! வீழ்க!" என்று இரைந்து கொண்டு சென்றது ஒரு திருக்கூட்டம். இடையிடையே 'பம் பம்' என்று ஆயிரம் சங்குகள் சேர்ந்து ஒலித்தன.
அத் திருக்கூட்டத்தைச் சேர்ந்தவர் பல்லாயிரவர்; அவர்கள் கையிலே திருவோடு; மெய்யிலே திருநீறு; கழுத்திலே தாழ்வடம்; இடுப்பிலே கந்தைத் துணி; அப் பண்டாரப் படையைப் பார்ப்பதற்கு ஊரெல்லாம் திரண்டு எழுந்தது.
ஊருக்கு மேற்கே ஒரு பூந்தோட்டம்; அங்கே போய்ச் சேர்ந்தது திருக்கூட்டம். தலைவர் சுந்தரமூர்த்தி எழுந்து நின்றார். தொண்டார்கள் கைதட்டி ஆரவாரித்தனர். தலைவர் தலைவணங்கிப் பேசலுற்றார்;
"தோழர்களே! திருத்தொண்டர்களே! நெடுங்காலமாக நமது சங்கம் உறங்கிக் கிடந்தது. ஆயினும் இன்று விழித்துக்கொண்டோம்; ஒற்றுமைப் பட்டோம். திருத்தொண்டர் படை திரண்டு எழுந்துவிட்டது. இதைத் தடுக்க வல்லவர் இவ்வுலகில் உண்டோ? (ஒரு குரல்; 'இல்லை; இல்லை'. பலத்த ஆரவாரம்). 'தொண்டர் தம் பெருமை சொல்லவும் அரிதே' என்று பாடிய காலம் பழங்காலம். இன்று திருத்தொண்டர்களாகிய நாம் சோற்றுக்குத் தாளம் போடுகின்றோம். நம் திருவோடுகள் எல்லாம் வெறு ஓடுகளாய்விட்டன. அன்னத்துக்கு அலந்து போய்விட்டோம். கட்டிக் கொள்ளக் கந்தைத்துணியும் கிடைக்கவில்லை. நம் தலைவன்- பரமசிவன், நாம் படும் துயரத்தை யெல்லாம் அறிவார். அறிந்தும் ஏனோ பாராமுகமாக இருக்கின்றார்! அவர் இருக்கும் இடம் தேடி, நாம் இப்பொழுதே செல்வோம். அவரிடம் என்ன கேட்க வேண்டும் என்பது நமக்குத் தெரியும். நம் திருவோடுகள் ஒவ்வொன்றும் அமுத சுரபியாக வேண்டும். பருத்திச் செடிகள் நாம் தொடும்போதெல்லாம் நாலு முழத்தில் நல்ல ஆடை தரவேண்டும். இவ்விரண்டும் - அன்னமும் ஆடையும் - இப்பொழுதே கிடைக்க வேண்டும். இல்லாவிட்டால் தீபாவளிக்குத் தலைநாள் வேலை நிறுத்தம் செய்வோம். இது உங்கள் அனைவருக்கும் சம்மதமாயிருக்கும் என்று நம்புகின்றேன்" என்று பேசி நின்றார். அப்போது அடியார் எல்லாம் கைகொட்டி எழுப்பிய பேரோசை கைலாசத்தை எட்டியது.
திருவோடு எழுதிய கொடியைத் கையில் எடுத்து முன்னே சென்றார். சுந்தரமூர்த்தி. பரமசிவனுடைய இருப்பிடத்தை நோக்கிப் பண்டாரப் படை நடந்தது. ஒரு பழங்காட்டினுள்ளே இருந்தார், பரமசிவன். அக் காட்டைக் காத்து நின்றான் நந்தி என்ற சேவகன்.
அவனைக் கண்டு வணங்கினார். சுந்தரம்; திருத்தொண்டர் சங்கத்தின் தீர்மானங்களை அவனிடம் தெரிவித்தார். அது கேட்ட நந்தி, "அப்பா சுந்தரம்! திட்டமெல்லாம் சரியாய்ப் போட்டுவிட்டாய்! ஆனால், இப்போது பரமசிவன் படும் பாடு உனக்குத் தெரியுமா? பட்டாடை என்ற பேச்சே அவர் குடும்பத்தில் இல்லை. பார்வதியும், கங்கையும் பருத்தி நூலாடைகள்தாம் கட்டிக்கொள்கிறார்கள். பரம சிவனோ, அதுவுமின்றிப் புலித்தோலை எடுத்து உடுத்திருக்கிறார்; குளிர் தாங்கமாட்டாமல் கரித்தோலைப் போர்த்துக்கொண்டிருக்கிறார். உலகத்துக் கெல்லாம் அவர் படியளக்கிறார் என்று பெயர். இப்போது அவர் குடும்பத்திற்கே அரிசி பங்கிட்டுக் கொடுக்கப்படுகின்றது. அவரிடம் வேலை பார்க்கும் நான் வயிறாரச் சோறுண்டு அறுபது நாளாயிற்று. மூத்த பிள்ளைக்கு சாதம் போதாது; தம்பியாகிய முருகனை ஏய்த்து அவன் பங்கையும் சேர்த்துச் சாப்பிடுகிறான். முருகன் ஒருவிளையாட்டுப் பிள்ளை. சாப்பாட்டு வேளையில் ஒரு மயில் ஆடினால் அதையே பார்த்துக் கொண்டிருப்பான்; ஒரு கோழி கூவினால் அதைக் கொண்டுவர ஓடுவான் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு பேசாமல் இருப்பாள் பார்வதியம்மை. பிள்ளைகளைத் தட்டி வளர்க்கத் தெரியாத தாய் அவள். அவளுக்கும் கங்கைக்கும் எப்பொழுதும் சண்டை. இருவரும் பிரிந்து தனித்தனியே குடியிருக்க வேண்டுமென்று பரமசிவனிடம் விண்ணப்பம் செய்தார்கள். இப்பொழுது வீட்டுக்கும் பஞ்சமல்லவா? தனித்தனி வீடு தருவதற்கு வழியில்லை என்று உணர்ந்த தியாக மூர்த்தியாகிய தலைவர், தம் உடம்பில் ஒரு பாகத்தைப் பார்வதிக்குக் கொடுத்தார்; காடு போன்ற தம் சடையில் கங்கையை வைத்துக் கொண்டார். இப்படி இருக்கிறது பரமசிவன் நிலைமை. உள்ளதை சொல்லிவிட்டேன்; இனி உன் சித்தம்" என்று கூறினான்.
நந்தியின் பேச்சால் சுந்தரத்தின் மன உறுதி உலையவில்லை; பரமசிவனைப் பார்த்தே தீர வேண்டும் என்று வற்புறுத்தினார். "அப்படியானால் அதோ தெரிகிறதே, அந்த மயானத்தில் இருக்கிறார் தலைவர். போய்ப் பார்" என்று விடை கொடுத்தான் நந்தி.
சுந்தரம் சென்றார்; பரமசிவனைக் கண்டார்; கை தொழுதார்; திருத்தொண்டர் படும் பாட்டை உருக்கமாக எடுத்துரைத்தார். பரமசிவன் ஒன்றும் பேசவில்லை. அவர் முகத்தில் எவ்வித அசைவும் இல்லை. அந்நிலை கண்டு வருத்தமுற்ற சுந்தரம், "ஆண்டவனே! பெரிய இடத்திற்குப் பிச்சைக்குப் போனால், உண்டு என்பது மில்லை, இல்லை யென்பது மில்லை என்ற பழ மொழி உண்மையாயிற்றே! வல்லதெல்லாம் சொல்லி உம்மை வாழ்த்தினேன்: குறைகளையெல்லாம் சொல்லி முறையிட்டேன். வாய்திறந்து ஒரு வார்த்தை சொல்லலாகாதா?"
"வல்ல தெல்லாம் சொல்லி உம்மை
வாழ்த்தி னாலும் வாய்திறந்து
இல்லை என்னீர்! உண்டு மென்னீர்
எம்மை ஆள்வான் இருப்ப தென்னே!"
என்று கேட்டார்; அப்பொழுதும் பேச்சில்லை.
சுற்று முற்றும் பார்த்தார், சுந்தரம்; சடையின்மேல் இருந்த கங்கையை நோக்கினார்; அவள் வாய் திறக்க வில்லை. கணபதியை நோக்கினார்; அவன் இருந்த இடம் விட்டு அசையவில்லை. குழந்தை முருகன் ஒரு கோழியைப் பார்த்துக் கொட்டாவி விட்டுக்கொண்டிருந்தான். பார்வதி ஓர் அப்பாவியாகத் தோன்றினாள்.
அதைக் கண்ட திருத்தொண்டர் தலைவருக்கு ஆத்திரம் பொங்கிற்று. மீண்டும் பரமசிவனைப் பார்த்து, "ஐயனே! அடியார் படும் துயரத்தை நீர் அறிந்தும் அறியாதவர் போல் இருக்கின்றீர்! உமது திருவுள்ளத்தில் இரக்கம் பிறக்கும் என்றெண்ணி இது வரையும் பொறுத்திருந்தோம். ஈசனே! இனிப் பொறுக்க முடியாது! தீபாவளிக்குத் தலை நாளில் உம் அடியார் அனைவரும் வேலை நிறுத்தம் செய்வதாக அறுதி செய்துள்ளார்கள். இது திருத்தொண்டர் சங்கத்தின் தீர்மானம்.
"திங்கள் தங்கு சடையின் மேலோர்
திரைகள் வந்து புரள வீசும்
கங்கை யாளேல் வாய்தி றவாள்
கணப தியேல் வயிறு தாரி
அங்கை வேலோன் குமரன் பிள்ளை
தேவி யார்கோல் தட்டி யாளார்
உங்க ளுக்காட் செய்ய மாட்டோம்
ஒண காந்தன் தளியு ளீரே"*
என்று பாடி நின்றார் சுந்தரம்.
------
* சுந்தர மூர்த்தி சுவாமிகள் தேவாரம்.
அப்போது பரமசிவன் குடும்பத்தில் ஒரு பரபரப்பு உண்டாயிற்று. கணபதி எழுந்து வந்து தந்தையின் முகத்தைத் தளர்ந்து நோக்கினான். கங்கை சடையினின்றும் இழிந்து, 'தீபாவளியன்று கங்காஸ்நானம் நடை பெறவேண்டுமே! அதற்கு வழி என்ன?' என்று கேட்பவள் போலத் தலைவனை வணங்கி நின்றாள்.
இவற்றை யெல்லாம் கண்டார் பரமசிவன், இன்னும் பேசாதிருந்தால் பெருமோசம் வந்துவிடும் என்றுணர்ந்தார்; சுந்தரத்தையும், அவருக்குப் பின்னே ஐந்தைந்து பேராக அணிவகுத்து நின்ற அடியாரையும் நோக்கி, 'தோழர்களே' என்றார். அச்சொல்லைக் கேட்ட தொண்டர் குழாம் ஆனந்தவாரியில் மூழ்கிற்று. 'தொண்டர் நாதனே போற்றி! அடியார்க்கு எளியனே போற்றி!' என்ற வாழ்த்துரை எழுந்தது. ஆரவாரம் அமர்ந்தவுடன் பரமசிவன் பேசலுற்றார்:
"உங்கள் தலைவனாகிய சுந்தரன் என் தலை சிறந்த தோழன்.அவன் அடியார்க்கு அடியவன். தொண்டர் படும் துயரங்கண்டு ஆற்றாது வேகமாய்ப் பேசினான். நாடெல்லாம் பஞ்சத்தால் நலியும் பொழுது நாம் மட்டும் வாட்டமின்றி வாழ முடியுமா? எடுத்ததற்கெல்லாம் வேலைநிறுத்தம் செய்வது ஏளனமாகும். கோடிக்கணக்கான மக்கள் குடிக்கக் கஞ்சியின்றி வருந்துகின்றனரே! ஒருசிலர் பிறரை வஞ்சித்து, இருட்டுக் கடையில் திருட்டு வேலை செய்வதை நாம் அறிவோம். இன்னும் சில நாளில் நல்ல மழை பெய்து, நாடு செழிக்கும்; அறம் வளரும்; மறம் தளரும். அப்போது உமது மனக் கவலை ஒழியும்" என்று திருவாய் மலர்ந்தார்.
அடியார் முகம் மலர்ந்தது,. "ஆண்டவன் கருணை வாழ்க, வாழ்க!" என்று வாழ்த்தினார்.
"ஆழ்க தீயதெல்லாம்; அரன் நாமமே
சூழ்க; வையகமும் துயர் தீர்கவே"
என்று பாடிக்கொண்ட திரும்பினர் அடியாரெல்லாம். பரமசிவன் வீட்டில் பஞ்சத் தீபாவளி அமைதியாக நடந்தது.
--------------
20. சரம கவிராயர்
காவேரியாற்றின் கரையிலுள்ள தோணி புரியிலே பிறந்தான் பொன்னப்பன். அவன் தந்தை தமிழறிந்தவர்; தாய், பழங்கதை சொல்வதில் பேர் பெற்றவள். பொன்னப்பனை ஒரு பெரிய கவிராயனாக்கிவிட வேண்டும் என்பது தந்தையின் ஆவல். காலையில் நாலரை மணிக்கே தந்தை பையனை எழுப்பிவிடுவார்; சாலை வழியாக ஆற்றங்கரைக்கு அழைத்துச் செல்வார்; வழியெல்லாம் நிகண்டும் நன்னூலும் வாய்ப்படமாகச் சொல்லிக் கொடுப்பார். தலைகால் புரியாமல் பொன்னப்பன் கிளிப்பிள்ளை போல் தூக்க மயக்கத்திலே பாடம் சொல்லிக்கொண்டு போவான். தினந்தோறும் பாடம் ஏறிக்கொண்டே போயிற்று. பையனுக்கு வெறுப்பும் வளர்ந்து கொண்டே சென்றது.
நாள்தோறும் மாலைப்பொழுதில் பொன்னப்பனுக்கு அவன் தாய் கதை சொல்வாள். அக் கதை பேய்க் கதையாகவே இருக்கும். ஒரு நாள் முண்டாசு கட்டி வரும் சண்டிக் கறுப்பன் கதையை அவள் சொன்னாள். அந்தக் கறுப்பன் நாற்பது முழக் கறுப்புத் துணியை வால்விட்டுத் தலையிலே கட்டிக்கொண்டு, கிறுதா மீசையை முறுக்கிக் கொண்டு பையனுக்குக் கனவிலே காட்சி கொடுத்தான். மற்றொரு நாள் மாலையில் அவள் சங்கிலிப் பூதத்தான் சரித்திரத்தைச் சொன்னாள். அன்றிரவு சலசல என்ற ஓசையும், கலகல என்ற சிரிப்பும் பையன் செவியில் விழுந்துகொண்டே இருந்தன. அக் கதைகளைக் கேட்டதன் பயனாகப் பொன்னப்பன் இருட்டிவிட்டால் வீட்டை விட்டு வெளியே போகமாட்டான். அந்திசந்தியில் ஆற்றுக்குத் தனியே போக நேர்ந்தால், ஒரு வேப்பங்கொம்பைக் கையில் எடுத்துக்கொண்டு போவான். வேப்பந் தடியிருந்தால் பேய் அணுகாது என்று அவன் தாய் சொல்லி வைத்திருந்தாள்.
பள்ளிக்கூடப் படிப்பில் பொன்னப்பன் தந்தைக்குச் சிறிதும் நம்பிக்கையில்லை. 'பள்ளிக் கல்வி புள்ளிக்குதவாது' என்று அடிக்கடி அவர் சொல்வார். அந்த வசனம் தினந்தோறும் செவியில் விழும். ஆயினும், பையனுக்கு அதன் பொருள் தெரியவில்லை.
ஒரு நாள் அமாவாசைச் சாப்பாடு முடித்துத் தந்தை திண்ணையில் சாய்ந்திருக்கையில் அவரைப் பார்த்து.
பையன்:- அப்பா! "பள்ளிக் கல்வி புள்ளிக்குதவாது" என்று தினந்தோறும் சொல்கிறாயே! புள்ளி என்றால் என்ன?
தந்தை:- அப்படிக் கேளப்பா! பிழைக்கிற பிள்ளை அப்படித்தான் கேட்பான். இந்த வசனத்தை எல்லோரும் சொல்லுவார்கள். ஆனால், ஒருவருக்கும் உண்மைப் பொருள் தெரியாது.
பையன்:- அப்படியானால் உனக்கு மட்டும் எப்படித் தெரிந்தது, அப்பா? யார் சொல்லிக் கொடுத்தார்?
தந்தை:- பிள்ளாய்! கட்டிக் கொடுத்த சோறும் சொல்லிக் கொடுத்த பொருளும் கவைக்குதவுமா? நானே முயன்று கண்டுபிடித்தேன். 'வருந்தினால் வாராத தொன்றில்லை' என்பது உண்மையல்லவா?
பையன்:- நீ வருந்திக் கண்டுபிடித்த அர்த்தத்தை எனக்குச் சொல்லித் தரமாட்டாயா?
தந்தை:- உனக்கில்லாமலா! இதோ சொல்கிறேன். ஆனால், நான் சொல்லும் அர்த்தத்தை எவனிடமும் சொல்லாதே! இப் பிரபஞ்சம் படுமோசம்! பாடுபடுபவன் ஒருவன்; பலனடைபவன் மற்றொருவன், இந்தப் பழமொழியின் பொருளைச் சொல்லிவிட்டாயோ மறுநாள் "வெடிகுண்டு விகட" னில் அதைக் கேட்டவன் வெளியிட்டுப் பணமும் புகழும் பெற்றுக் கொள்வான்.
பையன்:- நான் சொல்வேனா, அப்பா! நீ உன் மூளையைக் கசக்கிப் பிழிந்து கண்டு பிடித்த கருத்தை நானா வெளியே சொல்வேன்?
தந்தை:- நீ சமர்த்தன் என்பது எனக்குத் தெரியும். ஆனால், இவ்வஞ்சக உலகத்தை நினைக்கும் பொழுது என் நெஞ்சம் நடுங்கிறது. நன்றாகக் கேள். நன்னூல்தான் உனக்குக் கனபாடமாய்த் தெரியுமே! புள்ளி என்பது ஆய்த எழுத்து. அது மூன்று புள்ளியாய் அடுப்புக்கட்டி போலிருக்கும். பள்ளிக்கூடப் படிப்பு அடுப்புக்கட்டிக்குக்கூட உதவாது என்பது அப்பழமொழியின் கருத்து. அடுப்புக் கட்டிக்கு உதவாது என்றால், அடுப்புக்கு உதவாது; ஒரு பிடி அன்னத்துக்கு உதவாது என்பதைப் படிப்படியாக உய்த்துணர வேண்டும்.
பையன் திறந்த வாய் மூடாமல் கேட்டுக்கொண்டிருந்தான்; ஒன்றும் புரியவில்லை; மூளை கிறுகிறுத்தது.
பையன் :- போதும், அப்பா! எல்லாம் விளங்கிப் போச்சு. நான் இனிப் பள்ளிக்கூடம் போகவே மாட்டேன். வீட்டிலிருந்து தமிழ்ப் பாட்டுக் கட்டுவேன். ஒழிந்த நேரத்தில் அம்மாவுடன் இருந்து அடுப்பு மூட்டுவேன்.
தந்தை :- அதுதான் சரி. 'சோறு பொங்கித் திண்ணு; சொந்தக்கவி பண்ணு' என்று அந்தகக் கவிராயர் கொச்ைசையாய்ச் சொல்லுவார். ஆயினும், அது நல்ல வசனம்.
பையன் எழுந்து போனான். பாட்டுப் பாட வேண்டும் என்னும் ஆசை அவனைப் பற்றிக் கொண்டது ஓசையே பாட்டுக்கு உயிர் என்பது அவன் கருத்து. "சீரும் தளையும் சிறியோர் பார்ப்பார்; மோனையும் எதுகையும் மூடர் விரும்புவர்" என்று சொல்லி, யாப்பிலக்கணத்தின்படி பாட்டெழுதும் பள்ளிப் பிள்ளைகளை அவன் பரிகாசம் செய்வான்.
முதலில் எல்லார்க்கும் படியளக்கும் கடவுளின் மீது பாட்டுக் கட்டுவதே முறையென்று பொன்னப்பனுக்குத் தோன்றியது. வளமாகச் சோறும் கறியும் தரும்படி அவன் சிவபெருமானைப் பாடினான்.
"கற்பனை கடந்தவன், கறிசோறு தருபவன்
வெற்பினில் உறைபவன், வெஞ்சனம் அளிப்பவன்
சற்பத்தை அணிபவன், சாப்பாடும் தருபவன்
நற்பதம் பணிவேன், நான்பசி தணிவேன்"
என்று தொடங்கி, அறுசுவை உண்டிக்குப் பத்துப் பாட்டுப் பாடி முடித்தான். அப் பாட்டுக்கு ' அகட்டுத் திருப்பதிகம்' என்று தலைப்பிட்டுத் தந்தையிடம் கொண்டு போனான். பொன்னப்பன் பாடிய முதற் பாட்டு அன்னப் பாட்டா யிருக்கக் கண்டு தந்தை ஆனந்த மடைந்தார்; "அவரை போட்டால் துவரை முளைக்குமா? துப்பாக்கி வயிற்றில் பீரங்கி பிறந்திருக்கின்றது" என்று மெச்சினார்; 'பள்ளிக்கூடத்தில் படிக்கும் பயல்கள் அசட்டுப் பிசட்டென்று பாடுகிறார்களே! என் மகன் பாடிய அகட்டுப் பாட்டின் அடித்தூசி விலை பெறுமா அவை? அகட்டுப் பாட்டு என்ற தலைப்பின் அர்த்தந்தான் அப் பயல்களுக்குத் தெரியுமா? என் பிள்ளை பொன்னப்பனுக்கு நிகண்டு தலைகீழாய்ப் பாடம். அகடும் மோடும் உதரமும் வயிறே' என்ற பண்டை நிகண்டு மனப்பாடமாயிருப்பதனால் அன்றோ, வயிற்றுப் பாட்டை அகட்டுப் பாட்டு என்று அழைத்தான் என் அப்பன்? இவன் கம்பரைபோல் ஒரு பெரிய கவிச்சக்கரவர்த்தி யாவான்' என்று எண்ணி மனங்களித்தார்; அகட்டுத் திருப்பதிகத்தை ஆறு தரம் படித்தார்; பல ராகங்களில் பாடினார். அத் திருப்பதிகத்துக்கு ஒரு சிறப்புப் பாயிரமும் கொடுத்தார்.
"அன்னக் கவிபாடி அகங்குளிரச் செய்திட்ட
பொன்னப்பா உன்தன் புலமைத் திறத்தாலே
மன்னவரும் போற்ற மணியா சனத்திருப்பாய்
என்னப்பா என்குலத்திற் கேற்ற எழிலொளியே"
என்று தந்தை பாடித் தந்த பாயிரத்தைப் பையன் பதிகத்தோடு சேர்த்துக் கட்டி வைத்துக்கொண்டான்.
அன்னப் பாட்டுப் பாடிய புகழ் பெற்ற பொன்னப்பக் கவிராயர் அன்று முதல் ஆயிரம் ஆயிரமாகப் பாடித் தள்ளினார். அவரது கவியின் பெருக்கத்தைக் கண்டவர்கள், கம்பருக்கும் காளிதாசருக்கும் அருள் செய்த காளியே அவருடைய நாவிலும் சூலத்தால் எழுதிவிட்டாள் என்று வெளிப்படையாகப் பேசினார்கள். அவர் வாக்குப் பலிக்கும் என்று நம்பித் தோணிபுரி வாசிகள் அவருக்கு வேண்டிய பொருள் கொடுத்தார்கள். பணக்காரர் வீட்டில் கல்யாணம் நடந்தால், பொன்னப்பக் கவிராயர், பட்டைத் தார்போட்டு, நெற்றியிலே திருநீற்றைப் பட்டையாக இட்டு, வெள்ளிப் பூண் பிடித்த தடிக்கொம்பைக் கையிலே பிடித்துக் கம்பீரமாக நடந்து செல்வார். கல்யாணப் பந்தலிலுள்ள மிராசுதார்கள் மரியாதையாக விலகிச் சபையின் நடுவே கவிராயருக்கு இடங் கொடுப்பார்கள். மணச்சடங்கு முடிந்தவுடனே கவிராயர் நளினமாக வெள்ளி டப்பியிலிருந்து பொடி யெடுத்து நாசியில் இழுத்துக்கொண்டு உச்சத் தொனியில் தம் வாழ்த்துப் பாட்டை எடுத்து விடுவார்.
ஒரு நாள், நந்திபுரிச் சுந்தர முதலியார் வீட்டில் விமரிசையாக நடந்த கல்யாணத்திற்குக் கவிராயர் போயிருந்தார். மணமக்கள் மணவறையைச் சுற்றி வந்து உட்கார்ந்ததும், கவிராயர் "மந்திகள் லாகை போடும்" என்று ஓர் எடுப்பு எடுத்தார்.
"மந்திகள் லாகை போடும்
நந்தியம் புரியிலே வாழும்"
என்று ஆரம்பித்தவுடன் பந்தலிலே பேச்சு அடங்கிற்று. எல்லோரும் ஒருமுகமாய்ப் பாட்டைக் கேட்டார்கள். அவ்வூரில் உள்ள மாஞ்சோலையில் மந்திகள் கிளைக்குக் கிளை தாவித் தலைகீழாக ஆடும் அழகைக் கண்டு கவிராயர் ஒரு பாட்டுக் கட்டிவிட்டாரே என்று பாட்டிகள் பாராட்டினார்கள். பந்தலுக்கு வெளியே கிளித்தட்டு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்கள் பாட்டைக் கேட்டவுடனே ஒரு லாகை போட்டுக் கவிராயர் வாக்கை மெய்ப்பித்தார்கள்.
மற்றொரு நாள் சமரபுரி முதலியார் வீட்டில் ஓர் அமரகிரியை நடந்தது. அதைக் கேள்விப்பட்ட கவிராயர் கருமாந்திரக் கூட்டத்திற் புகுந்து,
"அமரர்கள் கண்ணீர் சிந்த
அந்தரர் பொருமி யேங்கத்
தமரெலாம் தவித்து வாடத்
தங்கையர் தளர்ந்து சோர"
என்று உருக்கமாய் எடுத்த பாட்டு முடியுன்னே அங்கிருந்த மங்கையர் ஓவென்று அலறி அழத் தொடங்கினார்கள். பாட்டு, அழுகையால், அரை குறையாய் முடிந்தது. பாட்டைக் கேட்டு உருகிய சமரபுரி முதலியார் கவிராயருக்கு வெள்ளிப் பாக்குவெட்டி யொன்று பரிசளித்தார்.
இவ்வாறு நன்மை தீமைகள் நேராத காலங்களிலும் கவிராயர் சீமான்கள்மீது சித்திரக்கவி செய்வார்; சில பேர்வழிகளை நாக பந்தத்தில் அடைப்பார்; மற்றும் சில பேரைக் கமல பந்தத்தில் கட்டுவார்; பந்தங்கள் தயாரானதும் வெள்ளித்தடி பிடித்து அவர்கள் வீட்டை நோக்கிச் செல்வார். ஒரு நாள், கவிராயர், நாகபந்தத்தை எடுத்துக்கொண்டு அரசூர் ஆனையப்ப பிள்ளையைக் காணச் சென்றார். அவர், தம் பங்காளிகளின் மீது தொடுத்திருந்த வழக்கு அவருக்குப் பாதகமாகத் தீர்ப்பான செய்தி அப்பொழுதுதான் தந்தியின் மூலமாக வந்திருந்தது. சாய்வு நாற்காலியில் சோர்ந்து சாய்ந்திருந்த பிள்ளையவர்களின் முன்னே நின்று கொண்டு,
"தந்தியொன்று வந்ததென்று
நொந்திருக்கும் வேளையில்
பந்தமொன்று தந்துநான்
வந்தனைபு ரிகுவேன்"
என்று கவிராயர் போட்ட போடு அவரைத் தூக்கி வாரிப் போட்டுவிட்டது. தந்திக்காரனைத் தலைவாசலில் கண்டு செய்தி யறிந்துகொண்டு, கவிராயர் உள்ளே வந்தார் என்பதை அறியாத பிள்ளையவர்கள் ஆச்சரியப்பட்டு வணங்கி அவரை வரவேற்றார்; உபசரித்தார். காரியம் பலித்ததென் றெண்ணி, கவிராயர் பந்தத்தைக் கம்பீரமாகப் படித்துக் கொடுத்தார். பந்தப்பாட்டின் பொருளறியாத பிள்ளையவர்கள் காளியின் அருள் பெற்ற கவிராயரொடு பேசவும் அஞ்சி, ஐம்பது ரூபா சன்மானம் கொடுத்து, கோர்ட்டுச் செலவோடு செலவாய். 'பந்தச் செலவு ரூபா ஐம்பது' என்று எழுதிவிட்டார்.
காலஞ் செல்லச் செல்லக் கவிராயர் புகழ் ஏறிக் கொண்டே போயிற்று. அவருக்கு வயதும் நாற்பது நிறைந்தது. அவரது இருபத்தெட்டாம் வயதில் பிள்ளையிடம் சரமகவி பெற்றுக்கொண்டு தாயார் பரமபதம் அடைந்தாள்; பின்னும் ஐந்து ஆண்டுகளில் தந்தையும் கவிராயரிடம் விடைபெற்றுக்கொண்டார். பெற்றோர் இருவரும் போய்ச் சேர்ந்த பின்பு, கவிராயர் கல்யாணம் செய்துகொண்டு இல்லறம் நடத்த வேண்டுமென்று அவர் உற்றார் உறவினர் சொல்லத் தொடங்கினார்கள். அவர்கள் கல்யாணப் பேச்சை எடுக்கும் பொழுது, 'அந்த இழவு யாருக்கு வேணும்?' என்று கவிராயர் நறுக்கென்று பேசிவிடுவார். ஆகவே, 'கல்யாண இழவை'ப்பற்றி யாரும் அவருடன் பேசுவதில்லை.
நாளடைவில் கவிராயருக்கு, 'நாக பந்த நாயகம்', 'சரமகவிச் சிங்கம்' முதலிய பட்டங்கள் வலிய வந்து சேர்ந்தன. ஆயினும்,பெரிய ஆசை ஒன்று அவர் மனத்திலே குடிகொண்டிருந்தது. பதினாயிரம் பாட்டுப் பாடிய கம்பர், கவிச்சக்கரவர்த்திப் பட்டம் பெற்றால், அறுபதினாயிரம் கவி பாடிய பொன்னப்பர் ஏன் அப்பட்டம் பெறக்கூடாது என்பது அவர் கேள்வி. மேலும் அவர் கவிச்சக்கரவர்த்தி தான் என்று மனச்சாட்சி உள்ளிருந்து சொல்லிக்கொண்டேயிருந்தது.
கவியரசுப் பட்டம் பெறுவதற்கு மதுரையும் காஞ்சியுமே சரியான இடங்கள் என்று கவிராயர் எண்ணினார்; முதலில் மதுரைக்குத் தம் பரிவாரங்களோடு புறப்பட்டார். அங்கே கோனேரியப்பக் கவிராயர் என்பவர் முத்தமிழ்ப் புலவராக மதிக்கப் பட்டிருந்தார். அவருடைய முழக்கத்தைக் கேட்டு அஞ்சிய மதுரைச் சங்கத்தார் 'கோடையிடிக் கோனேரியப்பர்' என்று அவரை அழைத்தார்கள். அக்கோடையிடியைப் பொன்னப்பக் கவிராயர் காணச் சென்றார்; தாம் இயற்றி அச்சிட்டிருந்த நாகபந்தம், கமலபந்தம் முதலிய பந்தங்களையும், சரமகவி, சீட்டுக்கவி முதலிய பாட்டுகளையும் கோடையிடியிடம் காட்டினார். சரம கவிச் சிங்கத்தின் கர்ச்சனை கோடையிடியின் முழக்கத்திலும் அதிகமாகவே இருந்தது.
கோடையிடி; - தோணிபுரித் தோன்றலே! நாகபந்த நாயகமே! அடியேன் குடிசை தங்கள் வருகையால் புனிதமடைந்தது. எளியேன் தங்களுக்கு என்ன செய்யக்கூடும்? தங்கள் சித்தம் என் பாக்கியம்.
கவிராயர்:
"கோடை யிடிமுழக்கும் கோனேரி யப்பாகேள்
மாட மதிதவழும் மதுரைமாப் புலவரிடம்
நாடறியப் பட்டம் நயந்துபெற வேணுமென்றே
காடும் கரையும் கடந்திங்கு வந்தேன்காண்"
கோடையிடி : - கல்விக் களஞ்சியமே! கவிச் சிங்கமே! மூச்சுவிடு முன்பே முப்பது கவி பாடும் உங்களுக்கு நாங்களா பட்டமளிக்கும் தரமுடையோம்? நீங்கள் இருப்பது மலையின் முடி; நாங்கள் கிடப்பது மடுவின் அடி. மதுரையின் பெருமை யெல்லாம் பழங்கதையாய்ப் போயிற்று. கவிப்பெருஞ் சிங்கமாய்த் திருப்பதி முதல் கன்னியாகுமரிவரை திக்கு விஜயம் செய்துள்ள தங்கள் பெருமையை அறிய வல்லார் இங்கு எவரும் இல்லை. கவிச்சக்கரவர்த்திப் பட்டம் பெற்ற ஒட்டக்கூத்தர் குலத்திற் பிறந்தவர் ஒருவர் காஞ்சி மாநகரில் இருக்கிறார். 'அடுக்கு மொழி ஆனந்தக் கூத்தர்' என்று அவரை அறிந்தோர் அழைக்கிறார்கள். அவர் கொடுக்கும் பட்டம் இப்பொழுது எல்லோராலும் மதிக்கப்படுகிறது. தாங்களும் அவரைப்பற்றிக் கேள்விப் பட்டிருப்பீர்களே!
கவிராயர் : - 'இது நல்ல கருத்து. காஞ்சி மாநகரம் கல்விக்குப் பேர்போன இடம். ஆனந்தக் கூத்தர் ஒட்டக்கூத்தருடைய மகள் வழியிலே வந்தவர். ஆயினும் ஒட்டக்கூத்தர் உடம்பில் ஓடிய இரத்தத்திலே ஒரு துளியேனும் அவருடம்பில் ஒடாதிருக்குமா? இன்றே போய் அவரைப் பாரக்கிறேன்' என்று எழுந்து, கோடையிடியிடம் விடை பெற்றுக் காஞ்சி மாநகர்க்குச் சென்றார்.
அப்பொழுது அடுக்குமொழிக் கூத்தர் தம் காலிற் புண்பட்டுப் படுக்கையில் இருந்தார். சரம கவிராயர் அந்நிலையிற் காண வந்தது ஒரு துர்ச்சகுனம்போல் அவருக்குத் தோன்றியது. ஆயினும், கவிராயரை உள்ளே வரவழைத்து, "பங்கமில்லாப் பாட்டிசைக்கும் சிங்கமே வருக! சங்கமா முடியில் வைகும் தங்கமே வருக" என்று அடுக்கு மொழி கூறி அவர் வரவேற்றார்.
கவிராயர்: -
"அடுத்த மொழிவிடுக்கும் ஆனந்தக் கூத்தாகேள்
படுத்த படியறிந்தும் பாடுரைக்க வந்தோம்யாம்
எடுத்தபெருங் கவிபாடி ஏற்றமுற்ற கூத்தருடன்
தொடுத்திலங்கும் பேறெமக்குத் தோன்றால்! அருளாயே"
என்று தம் கருத்தை தெரிவித்தார்.
உடனே அடுக்குமொழி, 'சகல பந்த சரமே! இந்நிலவுலகில் நும்மொப்பர் பிறர் இன்றி நீரேயானீர்! கவிச்சக்கரவர்த்தி யென்று புவிச் சக்கரவர்த்திகள் பாராட்டிய ஒட்டக்கூத்தருக்குப் பின் அப்பட்டம் எவரையும் சென்றடைந்ததில்லை. இன்று கவியுலகத்தில் சக்கரவர்த்திப் பட்டம் பெறுவதற்குத் தங்களைத் தவிர தகுதியுடையவர் வேறு யார் உள்ளார்? தில்லைவாழ் அந்தணர் சந்நிதியில் தமிழ்ப் பெரும் புலவர்கள் முன்னிலையில் தங்களுக்கு அப்பட்டம் அளிக்கப் படல் வேண்டும். அதற்குரிய ஏற்பாடுகளைச் சிதம்பரத்தில் செய்வீர்களானால் அடியேன் கால்நோய் தீர்ந்துவந்து அக்காட்சியைக் கண்குளிரக் காண்பேன்' என்றார்.
அடுக்குமொழிக் கூத்தர் சொல்லியது கவிராயருக்கு மிக்க பொருத்தமாகவே தோன்றிற்று. 'எல்லையற்ற பெருமையுடையது தில்லையம்பதி. சபைகளிற் சிறந்தது அங்குள்ள கனகசபை; அச்சபாநாதர் நிகரற்ற தலைவர். அப்படிப்பட்ட பொன்னம்பலத்திலே தில்லை வாழ் அந்தணர் சபையிலே, நான் பெறும் பட்டம் உலகம் உள்ளவரையும் அழியாததாகும்' என்று அவர் எண்ணினார்; உடனே சிதம்பரத்தை நோக்கி எழுந்தார்.
அங்கு வேதாந்த வியாகரண தர்க்க நியாய சிரோமணியாய் விளங்கிய சபாரஞ்சித தீட்சிதரிடம் கவிராயர் சென்று தம் ஆசையை வினயமாய்த் தெரிவித்தார். அவரும் கவிச் சக்கரவர்த்திப் பட்டம் கொடுக்கும் பெருமை தமக்குக் கிடைத்ததைக் குறித்து அடங்காத மகிழ்ச்சிகொண்டார். "சிதம்பரத்தில் ஆனித் திருமஞ்சன விழாவிற்கு அடுத்த நாள், ஆயிரக்கால் மண்டபத்தில் தோணிபுரித் தோன்றல் ஸ்ரீ பொன்னப்பக் கவிராயருக்குக் கவிச் சக்கரவர்த்திப் பட்டம் கொடுக்கப்படும்" என்று சபாரஞ்சித தீட்சிதர் ஆயிரம் பேருக்கு அறிக்கையும் அழைப்பும் அனுப்பினார்.
குறிப்பிட்ட நன்னாளில் மதுரையிலிருந்து கோடையிடிக் கவிராயரும் காஞ்சியிலிருந்து அடுக்கு மொழி ஆனந்தக் கூத்தரும் சென்னை வரகவி (வறட்டுக் கவியென்று சொல்லுவார்கள்) வரதராஜ முதலியாரும் வந்திருந்தார்கள். பட்டம் பெற வந்திருந்த கவிராயரைத் தவிர, பன்னிரண்டு பெருமக்கள் ஆயிரக்கால் மண்டபத்தில் சமூகம் அளித்தார்கள். சுபமுகூர்த்தத்தில் மாட்சிமை தங்கிய தீட்சிதப் பெருந்தகை, நீண்ட கரகோஷத்தின் இடையே எழுந்து, பட்டுச் சால்வையைக் கவிராயர் தோளிலே போர்த்து; கட்டிச் சாமந்தி மாலையை அவர் கழுத்திலே அணிந்து, "வித்வ சிரோமணிகளே! சகலபந்த சரபம், சரம கவிச் சிங்கம், தோணிபுரி தழைக்க வந்த தோன்றல் ஸ்ரீ பொன்னப்பக் கவிராஜ மூர்த்திகளுக்கு நடராஜர் சந்நிதியிலே கவிச் சக்கரவர்த்தி என்ற பட்டத்தை நாம் சூட்டுகின்றோம். இன்று முதல் என்றென்றும் இவரைக் கவிச் சக்கரவர்த்தியென்று காசினி வழங்கக் கடவது" என்று ரஞ்சிதமாகப் பேசி முடித்தார். அடுக்கு மொழிக் கூத்தர் அதை ஆமோதித்தார். ஏகமனதாக அகத்தியர் மாணாக்கர் போல் சபையில் வீற்றிருந்த பன்னிருவரும் சிரக் கம்பம் செய்தார்கள். கோடையிடிப் புலவர் வந்தனம் முழக்கினார். சந்தனப்பூச்சுடனும் கொட்டு முழக்குடனும் வித்வ சபை கலைந்தது. கவிச் சக்கரவர்த்திப் பட்டம் பெற்ற சரமகவிராயர் பட்டுச் சால்வையோடு நடராஜரைத் தரிசித்துவிட்டுத் தம் இருப்பிடம் சென்றார்.
-------------
V. அறிவும் திருவும்
21. காயும் கனியும்
மலை வளமுடைய தமிழ்நாட்டில் முற்காலத்தில் அருந்தவம் முயன்ற முனிவர்கள் காய்கனிகளையே அருந்தி வந்தார்கள். நாவிற் கினிய நற்கனிகளும் காய்களும் தமிழ் நாட்டு மலைகளில் நிறைந்திருந்தமையால் ஆன்றோர் பலர் அங்கு வாழ்ந்து அருந்தவம் புரிவாராயினர். தமிழ் முனிவன் ஒருவர் கடுந்தவம் புரிந்தார். நெடுந்தவம் முடிந்த நிலையில் பசியின் கொடுமையறிந்த முனிவர், அம் மலையிலிருந்த ஒரு நாவல் மரத்தின் நற்கனியைக் கொய்து, அதைத் தேக்கிலையிற் பொதிந்து, அருகேயிருந்த ஆற்றை நோக்கிச் சென்றார். பன்னீராண்டுக்கு ஒருமறை பழுக்கும் பெருமை வாய்ந்த அக் கனியை ஆற்றங்கரையில் வைத்துவிட்டு நீராடப் போந்தார் முனிவர். அப்பொழுது அவ்வழியாகத் தன் காதலனுடன் களித்து விளையாடி வந்த ஒரு சிறுமி அக்கனியைக் காலால் மிதித்துச் சிதைத்தாள். அரும்பசி தீர்க்கும் அமுதக்கனி சிதைந்தழியக் கண்ட தவமுனிவர் சீற்றமுற்றுப் 'பன்னீராண்டு நீ கடும் பசியால் நலிந்துழல்க' என்று பிழை செய்த பேதையைச் சபித்தார். அச் சாபத்தின் வலிமையால் அன்று முதல் வயிறு காய்ந்து வருந்திய மங்கை பன்னீராண்டு பசியால் வருந்திய பின்பு அமுதசுரபியினின்று மணிமேகலை வழங்கிய அன்னத்தை உண்டு பசி தீர்ந்தாளென்று பழஞ்சரிதை கூறுகின்றது.
அமுதம் காக்கும் நெல்லிக் கனி தமிழகத்தில் உண்டு என்பதை அறிந்தான் அதிகமான் என்ற சிற்றரசன்; அதனை அருந்தி நீடு வாழ ஆசையுற்றான். மந்தியுமறியா மரங்கள் செறிந்த தென்மலையில், பளிங்கரும் அணுகுதற் கரிய விடரொன்றில் நின்றது அந் நெல்லி. அதை அறிந்த காவலன் பல்லாண்டுகளாகப் பெரிதும் முயன்று, விடரை அடைவதற்கு வழியமைத்து, மருந்து தூவி, மலை வண்டுகளை விலக்கி, மஞ்சினில் மறைந்திருந்த செழுங் கனியைச் காவலாளர் மூலமாகப் பெற்றான். பல்லாண்டுகளுக்கு ஒரு முறை பழுக்கும் பான்மை வாய்ந்த அந் நெல்லிக் கனியின் வண்ணத்தை, வள்ளல் அங்கையில் வைத்து நோக்கி அகமகிழ்ந்திருக்கையில், சொல்லின் செல்வியாகிய ஒளவையார், செந்தமிழ்க் கவி பாடி அவன் முன்னே சென்றார். அப்பாட்டின் சுவையைச் செவி வாயாகப் பருகிய அதிகமான் மது உண்டவன்போல் மகிழ்வுற்றான். அதிமதுரக் கவி பாடிய ஒளவையார்க்கு அமுதம் பொழியும் நெல்லிக் கனியே ஏற்ற பரிசென்று எண்ணி, அங்கையில் இருந்த கனியை அவரிடம் அகமலர்ந்தளித்தான். அந் நெல்லிக் கனியினை ஒளவையார் அருந்திய பொழுது அதன் தீஞ்சுவையினை அறிந்தார்; திகைப்புற்றார். அந் நிலையில் அதிகமான் அந் நெல்லிக் கனியின் அருமை பெருமைகளை எடுத்துரைத்துச் செழுந்தமிழ்க் கவி பொழியும் செந்நாப் புலவர்க்கு அமுதம் சுரக்கும் அருங்கனியே அமைந்த உணவாகும் என்று மனமகிழ்ந்துரைத்தான். பல நாள் முயன்று வருந்திப் பெற்ற அருங்கனியைத் தானருந்தி இன்புறக் கருதாது, பாடிவந்த கிழவிக்கு அதனைப் பரிசாக அளித்த அருங்குணத்தை ஒளவையார் வாயாரப் புகழ்ந்து வாழ்த்தினார்.
"நீல மணிமிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும நீயே தொன்னிலை
பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது
ஆதல் நின்னகத் தடக்கிச்
சாதல் நீங்க எமக்கீத் தனையே"
'பொன்னொளி மாலை யணிந்த வள்ளலே! அணுகுதற்கரிய மலைவிடரில் அமைந்த இனிய கனியின் அருமையையும் கருதாது, பயனையும் குறியாது, அக்கனியை என்னிடம் உவந்தளித்தனையே! உன் பெருமையை ஏழையேன் எவ்வாறு புகழ்வேன்? பாலாழியில் எழுந்த அமுதினைப் பிறர்க்களித்து, நஞ்சுண்டு கண்டம் கறுத்த செஞ்டைக் கடவுள் போல் நீயும் என்றென்றும் இவ்வுலகில் வாழ்வாயாக!' என்று நிறைந்த மொழிகளால் ஒளவையார் அருளிய வாழ்த்துரையில் கருநெல்லிக் கனியின் வரலாறும் அதனை அன்புடன் அளித்த அதிகமானது வள்ளன்மையும் ஒருங்கே விளங்கக் காணலாம்.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலே அறங்களுள் எல்லாம் தலையாய அறமென்று தமிழ் மறை கூறுகின்றது. இவ்வாறு அறநூல் விதித்ததற்கும் மேலாகத் தன்னலம் மறுத்துப் பிறர் நலம் பேணும் பெருந்தகைமை சாலச் சிறந்ததென்பது சொல்லாமலே விளங்கும். தான் அருந்திப் பயன் பெறுமாறு வருந்திப் பெற்ற அருங்கனியை ஒளவையாருடன் பகுத்துண்ணவும் எண்ணாது, முழுக்கனியையும் அக் கவிஞர்க்கு ஈந்து மகிழ்ந்து வள்ளலின் பெருமை உலக முள்ளளவும் அழியாததன்றோ? இப் பண்பினைக் கண்டு வியந்த புலவர் ஒருவர்,
"கமழ்பூஞ் சாரல் கவினிய நெல்லி
அமிழ்துவிளை தீங்கனி ஒளவைக் கீந்த
அரவக் கடற்றானை அதிகன்"
என்று புகழ்ந்துரைத்தார்.
இத்தகைய அமிழ்தூறும் அருங்கனிகள் தமிழகத்தில் முன்னாளிருந்தமையாலேயே, 'கனியிருப்பக் காய்கவர்தல் ஆகாது' என்று ஆன்றோர் கட்டுரைப்பார் ஆயினர். கனி என்னும் சொல் பொதுவாகப் பழங்களை எல்லாம் உணர்த்து மாயினும், சிறப்பு வகையில் அமிழ்தம் பொழியும் அருங் கனியையே குறிக்குமென்பது அறிஞர் கருத்து.
"இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று"
என்னும் திருக்குறளில் அமைந்த கனி யென்னும் சொல் ஒளவையுண்ட நெல்லிக்கனி போல அமிழ்தான கனிகளையே குறிக்குமென்று பரிமேலழகர் விளக்கியருளினார். இன்னும் ஆண்டவனைப் போற்றாது ஆற்ற நாள் போக்கிய புன்மையை நினைந்து வருந்திய திருநாவுக்கரசர்,
"கொய்யுலா மலர்ச்சோலைக் குயில்கூவ
மயிலாடும் ஆரூ ராரைக்
கையினால் தொழாதொழிந்து கனியிருப்பக்
காய்கவர்ந்த கள்வ னேனே"
என்று அருளிய தேவாரத் திருப்பாட்டிலும் கனி என்னுஞ்சொல் அழியாப் பெரு வாழ்வளிக்கும் அமுதக் கனியையே குறிப்பதாகும். இத்தகைய கனியினைப் பெற்றும் அதனைத் தானருந்தி நெடுங்காலம் வாழ விரும்பாது, தக்கார்க் கீந்து இன்பமுற்ற வள்ளலை ஈன்ற தமிழ்நாடு அறநெறியில் தலைசிறந்த தென்பதில் ஐயமுண்டோ?
---------
22. சேரனும் கீரனும்
தமிழ்நாடு தன்னரசு பெற்று வாழ்ந்த காலத்தில் தமிழ் மொழி தலைசிறந்து விளங்கிற்று. தமிழறிந்த மன்னர் ஆட்சியில் முத்தமிழும் முறையே வளர்ந்தோங்கித் திகழ்ந்தது. அறிவினைக் கொல்லும் வறுமை வாய்ப்பட்டு வருந்திய தமிழ்ப் புலவர்களைத் தமிழ் நயமறிந்த அரசர் ஆதரித்துப் போற்றுவாராயினர்.
சேர நாட்டை ஆண்டுவந்த பெருஞ்சேரல் என்ற அரசன் ஆண்மையிலும் வண்மையிலும் சிறந்து விளங்கினான். அம்மன்னன் சோழ நாட்டை ஆண்ட வளவனையும், பாண்டி நாட்டை ஆண்ட மாறனையும் வென்று ஒளவைக்கு நெல்லிக்கனி அளித்த அதிகமானின் வலியழித்துத் தமிழுலகம் போற்றத் தனிக் கோலோச்சி வந்தான். சேரமானது படைத்திறங்கண்டு அஞ்சி, அவனடி தொழுத முடிவேந்தர் பலராயினர்.
இத்தகைய கீர்த்தி, வாய்ந்த சேரமானது கொடைத் திறத்தினைக் கேள்வியுற்ற மோசிகீரனார் என்ற தமிழ்ப் புலவர், அம் மன்னனிடம் பரிசு பெற்றுப் பசிப்பிணி அகற்றக் கருதி, நெடுவழி நடந்து அரண்மனை வாயிலை நண்ணினார். அப்பொழுது சேரமான் ஓர் அணிவிழாக் காணுமாறு வெளியே சென்றிருந்தான். ஆயினும் அரண்மனை வாயில் அடையாதிருந்தமையால் கீரனார் இடையூறின்றி உள்ளே சென்றார். மன்னனுக்குரிய மாளிகையின் அழகையும் அமைப்பையும் கண் குளிரக் கண்டு களித்தார். மாடத்தைச் சூழ்ந்திருந்த சோலையின் வழியே தவழ்ந்து வந்த மெல்லிய தென்றல் நறுமணம் கமழ்ந்தது. நெடும் பசியால், நலிந்து, வெயிலால் உலர்ந்து, வழிநடையால் வருந்தித் தளர்வுற்ற தமிழ்ப்புலவர், அரண்மனையில் இருந்து இளைப்பாற எண்ணினார். அதற்கு ஏற்ற இடத்தை நாடுகையில், மாளிகையின் ஒருபால் அழகிய மஞ்சம் ஒன்று தோன்றிற்று. அம் மஞ்சத்தில் மெல்லிய பஞ்சு அமைந்த மெத்தையிட்டு, அதன்மீது பாவாவி போன்ற பூம்பட்டு விரித்திருந்தது. மஞ்சத்தை கண்ட புலவர் நெஞ்சம் பள்ளத்துட் பாயும் வெள்ளம் போல் அதன்மீது படர்ந்தது; வண்ணப் பூஞ்சேக்கையைக் கையினால் தொட்டு இன்புறக் கருதி, அதன் அருகே சென்றார். மருங்கு செல்லச் செல்ல அம் மஞ்சம் அவர் மனத்தை முற்றும் கவர்ந்து தன் வசமாக்கிக்கொண்டது. கையினால் அதன் மென்மையை அறிய விரும்பி அணுகிய புலவர் மெய்ம்மறந்து அதன்மீது சாய்ந்தார்; அந் நிலையில் என்றும் அறியாத பேரின்பமுற்றார்; அவ்வின்ப சுகத்தில் மற்றெல்லாம் மறந்து சற்றே கண் முகிழ்த்தார். இயற்கை நலமறிந்த புலவரை இளைப்பாற்றக் கருதிய தமிழ்த் தென்றல் இன்புறத் தவழ்ந்து போந்து அவர் கண்களை இறுக்கியது. அருந் தமிழ்ப்புலவர் இனிய உறக்கத்தில் ஆழ்ந்தார்.
கந்தை உடுத்த செந்தமிழ்ப் புலவர் இவ்வாறு கவலையற்று உறங்குகையில் சேரமான், தானைத் தலைவர் புடைசூழத் தன் மாளிகையை வந்தடைந்தான்; விழா வணி கண்டு மகிழ்ந்த அமைச்சர்க்கும் தானைத் தலைவர்க்கும் விடை கொடுத்த பின்பு, சிறிது இளைப்பாற எண்ணினான். விழாவிற்காக அணிந்திருந்த ஆடை அணிகளையும், உடைவாளையும் களைந்தான்; அரண்மனை ஒடுக்கத்திற் போந்து இளைப்பாறக் கருதி வீர முரசத்திற்குரிய மணி மஞ்ச மாடத்தின் வழியே சென்றான்; அங்கே பழுத்த மேனியும் நரைத்த முடியும் வாய்ந்த பெரியார் ஒருவர் தளர்ந்து கண்வளரக் கண்டான்; அவரது முகத்தின் விளக்கத்தால் அவர் வாக்கில் ஒளியுண்டெனத் துணிந்தான்; அவரணிந்திருந்த பழுதுற்ற உடையினைக் கண்டு பூமகளால் புறக்கணிக்கப்பட்டவர் எனத் தெளிந்தான்;
"இருவே றுலகத் தியற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு"
என்னும் பொருளுரையை நினைந்து பொருமினான்; அருந்தமிழறிந்த புலவரது மேனி தோய்ந்ததால் வீரமணி மஞ்சம் புனிதமுற்றதெனத் ருதி மன மகிழ்ந்தான்; அயர்ந்த உறக்கத்தில் ஆழ்ந்திருந்த பாவலர்க்குப் பணி செய்யக் கருதி, மஞ்சத்தின் அருகே கிடந்த பெருங் கவரியைத் தன் வலக்கையால் எடுத்து வீசிநின்றான்; செங்கோலும் வெம்படையும் பற்றிப் பழகிய கையினால் சேரமான் பணியாளர்க்குரிய கவரியைப் பற்றிக் குழைத்துக் கவிஞர்க்குப் பணி செய்வானாயினான்.
உறக்கம் தெளிந்த கீரனார் தளர்வு தீர்ந்து கண் விழித்தார்; மெல்லிய மஞ்சத்திலே தாம் படுத்திருப்பதையும் காவலன் அதனருகே நின்று கவரி வீசுவதையுங் கண்டு உளம் பதைத்தார்; தாம் கண்ட காட்சி கனவோ நனவோ என ஐயுற்று மனம் குழம்பினார். கீரனது மன நிலை அறிந்த சேரன், அவ் அறிஞரைப் பற்றி நின்ற ஐயத்தையும் அச்சத்தையும் ஒருங்கே அகற்றக் கருதி, அன்பளாவிய இன்பமொழி இயம்பினான். அம் மொழி கேட்ட கீரனார் திடுக்கிட்டெழுந்து மன்னனுக்குச் செய்த பிழையை நினைந்து மனம் பதைத்தார்; மெய் முழுதும் நடுங்க, கண்கள் அச்சத்தால் இடுங்க, மஞ்சத்தினின்றும் இறங்க முயன்றார். இங்ஙனம் பாவலர் மனமும் மெய்யும் வருந்தக் கண்ட சேரமான், அன்புடன் அமர்ந்து நோக்கி, மென் மொழி பேசி, அவர் மனத்திலிருந்து அச்சத்தை மாற்றினான்.
புலவரும் ஒருவாறு மனந்தேறி, நடுக்கம் தீர்ந்து, மன்னவன் பெருமையை மனமாரப் புகழலுற்றார். செந்தமிழ் இன்பமே சிறந்த இன்பமெனக் கருதிய சேரமான் செவி குளிர, "அரசே! மெல்லிய பூம்பட்டு விரித்த வீர மஞ்சத்தில் எளியேன் அறியாது ஏறித் துயின்றேன். அப் பிழை செய்த என்னை நீ இலங்கு வாளால் பிளந்து எறிதல் தகும். எனினும் தமிழறிந்தவன் என்று கருதி என்னை வாளா விடுத்தாய்! இஃது ஒன்றே தமிழன்னையிடம் நீ வைத்துள்ள அன்பிற்குச் சாலும். அவ்வளவில் அமையாது, படைக்கலம் எடுத்து வீசும் நின் தடக் கையினால் கடையேற்குக் கவரி வீசவும் இசைந்தனையே! நின் பெருமையை ஏழையேன் என்னென்று உரைப்பேன்!" என்று புகழ்ந்து அவனடிகளில் விழுந்து வணங்கினார். தமிழ்ச் சொல்லின் சுவையறிந்து சேரமான், அடிபணிந்த புலவரை ஆர்வமுற எடுத்தணைத்து, பல்லாண்டு அவர் பசி நோய் அகற்றப் போதிய பரிசளித்து விடை கொடுத்தனுப்பினான்.
-------------
23. பாரியும் மாரியும்
பழந்தமிழ் நாட்டில் வரையாது பொருள் வழங்கும் வள்ளலார் பலர் வாழ்ந்து வந்தனர். குறுநில மன்னராய அப் பெருந்தகையார் அறிஞரையும் வறிஞரையும் ஆதரித்து என்றும் வாடாத செஞ்சொற் பாமாலை பெற்றார். அன்னவருள் தலைசிறந்தவன் பறம்புமலைக் கோமானாகிய பாரி. இயற்கை வளஞ்சான்ற பறப்புமலை நாட்டில் நெல்லும் கனியும், தேனும் கிழங்கும் நிரம்பக் கிடைத்தமையால் குடிகள் கவலையற்று வாழ்வாராயினர்.
பசியும் பகையும் இன்றி, வசியும் வளனும் பெருகிய அம்மலையின்மீது அமைந்த அரண்மனையில் கருணையின் வடிவமாக வீற்றிருந்தான் பாரி; அற்றார்க்கும் அலந்தார்க்கும் அவன் உற்ற துணைவன்; பசிப்பிணி என்னும் பாவியின் பெரும் பகைவன். கங்கு கரையற்ற அவ் வள்ளலின் கருணை, மன்னுயிர் முதலாகப் புல்லுயிர் ஈறாக உள்ள அனைத்துயிரையும் ஆதரிப்பதாயிற்று. ஒரு நாள் பாரி, தன் அழகிய தேர்மீது ஏறி, நாட்டு வளங்காணப் புறப்பட்டான்; செல்லும் வழியில் ஒரு முல்லைக்கொடியைக் கண்டான்; குறுகிக் கிடந்த அதன் நிலை கண்டு மனம் உருகினான்; தழைத்துச் செழித்துப் படர்வதற்கு ஏற்ற கொழுகொம்பின்றிக் குழைந்து வாடிய கொடியின் துயர் கண்டு வருந்தினான்; அப் புல்லுயிரின் துன்பத்தைப் போக்கக் கருதித் தன் பெரிய தேரை அதன் அருகே கொண்டு நிறுத்தினான்; கொடியை எடுத்துத் தேர்மீது படரவிட்டு, கவலையற்ற முகத்தோடு தன் கோட்டையை நோக்கி நடந்தான்.
காட்டில் வாழ்ந்த கொடியும் ஓர் உயிர் என்றுணர்ந்து, அதற்கு உற்ற குறையைக் குறிப்பால் அறிந்து, உள்ளம் நெகிழ்ந்து உதவி புரிந்த வள்ளலின் பெருமையை,
"பூத்தலை யறாஅப் புனைகொடி முல்லை
நாத்தழும் பிருப்பப் பாடா தாயினும்
கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த
பரந்தோங்கு சிறப்பிற் பாரி"
என்று புலவர் பெருமானாகிய கபிலர் போற்றிப் புகழ்ந்தார். பாடிவந்த பாவலர்க்குப் பரிசளித்தலோடு அமையாது. வாய்விட்டு சொல்ல வகையறியாப் படர் கொடிக்கும் பெருங்கொடையளித்த பாரியின் பெருமை தமிழ்நாடு முழுவதும் பரவிற்று. "கைம்மாறு கருதாது மழை பொழிந்து உலகத்தை வாழ்விக்கும் கார்மேகம் போல், எல்லா உயிர்களையும் ஒல்லும் வகையால் ஆதரித்துப் புகழ் பெற்றான் பாரி" என்று புலவர் பலர் பாராட்டினர். அற்றார்க்குப் பொருள் பழங்கி அவர் இன்முகம் கண்டு இன்புற்ற பாரியை,
"பாரி பாரி என்றுபல ஏத்தி
ஒருவற் புகழ்வார் செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டுஈண்டு உலகுபுரப் பதுவே".
என்று பொய்யறியாக் கபிலர் போற்றிப் புகழ்ந்தார்.
"மண்ணுலகைப் பாதுகாத்தற்கு மாரியும் உண்டென்பதை மறந்து, பாரி ஒருவனையே புலவர் அனைவரும் போற்றிப் புகழ்கின்றார்களே" என்று கவிஞர் அவ் வள்ளலை இகழ்வார்போற் புகழ்ந்துள்ள நயம் அறிந்து இன்புறத்தக்கதாகும்.
இவ்வாறு பாரி ஒருவனையே பலரும் புகழக் கண்ட பாண்டியனும் மற்றைய இருபெரு வேந்தரும். பெரிதும் அழுக்காறு கொண்டு அவனது பறம்பைத் தம் படையால் முற்றுகையிட்டார்கள். பல நாள் முற்றியும் பாரியின் பறம்பைக் கவர இயலாது காவலர் மூவரும் கலக்கமுற்றனர். நால்வகைச் சேனையின் நடுவே நின்ற மன்னரை நோக்கி, "ஐயன்மீர்! பாரியின் மலையிலுள்ள ஒவ்வொரு மரத்திலும் உம்முடைய களிறுகளைக் கட்டுவீராயினும், பரந்த பறம்பெங்கும் உமது தேரை நிரப்புவீராயினும் படை வலியால் பாரியை வெல்ல இயலாது. அவனை வென்று பறம்பைக் கவரும் வகையை யான் அறிவேன். நல்ல யாழைக் கையிலேந்தி இன்னிசைப் பாட்டு இசைப்பீராயின், பாரி தன் நாட்டையும் மலையையும் ஒருங்கே தருவன். இதுவே அவனை வெல்லுதற்குரிய வழியாகும்" என்று பாரியின் வண்மையைப் புகழ்ந்தும், மூவேந்தரது வன்மையை இகழ்ந்தும் கபிலர் நயம்பட உரைத்தார்.
இங்ஙனம் இசை வழியாகப் பாரியை வெல்ல இசையாத மூவேந்தரும், வசை யாற்றால் அவனை வென்றதாக அப்பெருந்தகையின் வரலாறு கூறுகின்றது. தஞ்சம் அடைந்தோரைத் தாங்கும் தண்ணளி வாய்ந்த வள்ளலை வஞ்சனையாற் கொன்று மூவேந்தரும் அழியாப் பெரும்பழி யெய்தினர். பாரியைக் கொன்று பறம்பைக் கைப்பற்றிய பகைவேந்தர் செயல் கண்டு மனம் பதைத்த பாரி மகளிர்,
"அற்றை திங்கள் அவ்வெண் ணிலவின்
எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்
வென்றெறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்யாம் எந்தையு மிலமே"
என்று இரங்கிக் கூறும் மொழிகள் உள்ளத்தை உருக்குவனவாம். அப்பெண்மணிகள், தந்தையை இழந்து தமியராயினர்; நாட்டை யிழந்து நல்குர வெய்தினர். முல்லைக்குத் தேரீந்த வள்ளலின் மக்கள், தொல்லை வினையால் துயருழந்து அரற்றும் மொழிகள் நல்லோருளத்தைக் கரைப்பனவாகும்.
மணப் பருவமுற்ற அம் மங்கையரைப் பாரியின் தோழராகிய கபிலர், இருங்கோவேள் என்னும் குறுநில மன்னனிடம் அழைத்துச் சென்று, "ஐயனே! இவர் இருவரும் பறம்பிற் கோமானாய பாரி ஈன்ற மக்கள். யான் இவர் தந்தையின் தோழன்; அம் முறையில் இவர் என் மக்கள்; இம் மங்கையரை உனக்கு மணம் செய்யக் கருதி இங்கு அழைத்து வந்தேன்" என்று தம் கருத்தை அறிவித்தபொழுது, அக்குறுநில மன்னன், பாரி மகளிரை மணம் புரிய மறுத்துவிட்டான். அப்பால் அருங்கவிப் புலவர், வருந்திய முகத்தோடு அங்கு நின்றும் அகன்று, மற்றொரு குறிஞ்சி நிலக் கோமானிடம் சென்று, அவன் பெருமையைப் போற்றிப் புகழ்ந்து, பாரியின் மக்களை மணம்புரியுமாறு வேண்டினார். வள்ளலின் மக்களாயினும், வறுமை யெய்திய மங்கையரை மணம் புரிய இசையாது அக் குறுநில மன்னனும் மறுத்துவிட்டான். அவ்விருவரது செயல் கண்டு சிந்தை யழிந்தார் செந்தமிழ்ப் புலவர். அற்ற குளத்து அறு நீர்ப் பறவை போலாது, பாரியின் மக்கள் வறுமையெய்திய நிலைமையிலும் அவர்க்கு உற்ற துணையாய் நின்று உதவிய புலனழுக்கற்ற புலவர் பெருமை போற்றுதற்குரியதன்றோ?
பாரியின் பொன்றாப் பெருமை பார் எங்கும் பரவுதற்குரியதாகும். வில்லுக்கு விசயன் என்றும், விறலுக்கு வீமன் என்றும் உலகம் விதந்துரைத்தல் போல, பசித்தோர்க்குப் பாரி என்று பாரெல்லாம் போற்றுதற் குரிய பெருமை அவ் வள்ளலிடம் அமைந்திருந்தது.
"மிடுக்கி லாதனை வீம னேவிறல்
விசய னேவில்லுக் கிவனென்று
கொடுக்கி லாதானைப் பாரி யேயென்று
கூறினும் கொடுப் பாரிலை
பொடிக்கொள் மேனியெம் புண்ணி யன்எந்தை
புகலூர் பாடுமின் புலவீர்காள்
அடுக்கு மேல்அமரர் உலக மாள்வதற்கு
யாதும் ஐயுற வில்லையே"
என்னும் தேவாரத் திருவாக்காலும் பாரியின் பெருமை இனிது விளங்கும். இப்பொழுதும் பெருந்தன்மை வாய்ந்த குலத்திற் பிறந்த மக்களைப் "பாரிமான் மக்கள்" என்று தென்னாட்டில் வழங்கும் வாய்மொழி பாரியின் பெருமைக்கு என்றும் அழியாத சான்று பகர்வதாகும்.
------------
24. அழகும் முத்தும்
தமிழ் நாட்டிலே புலவர் பாடும் புகழுடையார் என்றும் உள்ளார். அன்னவருள் ஒருவர் ஐம்பதாண்டுக்கு முன்னே நெல்லையம் பதியில் வாழ்ந்தார். அவர், முத்தமிழ்ச் சுவை தேர்ந்த வித்தகர்; முத்துச்சாமி என்னும் பெயரினர். அந் நாளில் ஆசு கவியாய் விளங்கிய அழகிய சொக்கநாதர் அவ் வள்ளலின் ஆதரவைப் பெற்றார். ஆற்றிலே நீராடச் செல்லும் போதும், மேடையிலே நின்று மெல்லிய தென்றலைத் துய்க்கும் போதும், கோடையிலே குளிர் பூஞ்சோலையிற் சென்று உலாவும் போதும் அழகிய சொக்கர் அவ்வள்ளலின் குறிப்பறிந்து கவி பாடுவார்; அவர் இன்புறக் கண்டு தாமும் இன்புறுவார்.
ஒரு நாள், அச் செல்வர், அழகிய சொக்கருடன் உலாவி வரும்பொழுது, கரும்புத் தோட்டத்தின் அருகே கான மயில் ஒன்று ஆடக் கண்டு களிப்புற்று நின்றார். இளங் காற்றிலே ஆடிய கரும்பின் தோகையும், இன்பப் பெருக்கிலே ஆடிய மயிலின் தோகையும் அவர் கண்ணைக் கவர்ந்தன. அந் நிலையில் அழகிய சொக்கரை நோக்கிக் கரும்புக்கும் கான மயிலுக்கும் பொருந்தும் கவியொன்று பாடும்படி அவர் வேண்டினார். கவிஞரும் அக் காட்சியைக் கண்டு களிப்புற்று உடனே பாடலுற்றார்:
"மேனியெல்லாம் கண்ணுறலால் வேள்விரும்பும் தன்மையினால்
ஆனபசுந் தோகையினால் ஆடலினால் - மீனவன்நேர்
மானபரா! நெல்லைநகர் வாழுமுத்துச் சாமிமன்னா!
கானமயில் ஒப்பாம் கரும்பு"
என்ற சொக்கர் பாட்டின் சுவை யறிந்து இன்புற்றார் வள்ளல். "மயிலுக்கு மேனியெல்லாம் கண்; கரும்புக்கும் மேனியிலே கண்(கணு). மயிலைச் செவ்வேள் விரும்பி வாகனமாகக் கொண்டான்; கரும்பை மாரவேள் விரும்பி வில்லாகக் கொண்டான். இன்பவுணர்ச்சியுற்ற போது மயில், தோகையை விரித்து ஆடும்; இளங்காற்று வீசும்போது கரும்பின் தோகையும் அசைந்து ஆடும். எனவே, கானமயில் ஒப்பாகும் கரும்பு" என்ற கருத்தமைந்த கவியைக் கேட்டு வள்ளல் மனமகிழ்ந்தார்.
கரும்புத் தோட்டத்தைக் கடந்து சாலையின் வழியே நடந்தனர் இருவரும். வளமான வாழைத் தோட்டம் ஒன்று அவர் கண்களைக் கவர்ந்தது. மேல் நோக்கி விரிந்த இலைகளையும், தரை நோக்கித் தாழ்ந்த பசுங்குலைகளையும் கண்ட வள்ளல், அருகே நின்ற கவிஞரை நோக்கினார்; 'காய்' என்று தொடங்கி 'இலை' என்று முடியும்படி ஒரு கவி சொல்ல வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். உடனே வந்தது செந்தமிழ்ப் பாட்டு:
"காய்சினம்இல் லாதான் கருணைமுத்துச் சாமிவள்ளல்
வாய்மையுளான் பாடி வருவோர்க்குத் - தாய்நிகர்வான்
எல்லையில்லா மாண்பொருளை ஈவான் இவனிடத்தில்
இல்லையென்ற சொல்லே இலை"
என்று சொக்கர் சொல்லிய வெண்பா வள்ளலின் உள்ளத்தைத் தொட்டது. இலையையும் குலையையும் நோக்கி நின்ற வள்ளலைத் தலைகவிழச் செய்தது அப்பாட்டு. காய் என்றெடுத்து இலையென்று முடித்த கவியிலே அப்படி என்ன பொடியைப் போட்டு விட்டார் சொக்கர்? அவ் வள்ளலிடம் அமைந்திருந்த குணங்களையே பொருளாக வைத்து. அவர் எடுத்துக் கொடுத்த இரு சொல்லையும் ஆதியும் அந்தமுமாக அமைத்து ஆனந்தமாகப் பாடி விட்டார் முத்தமிழை ஆதரித்த முத்துச்சாமி வள்ளலை வாயாரப் புகழ்ந்து பாட எப்போது வாய்ப்பு வரும் என்று எதிர் பார்த்திருந்த கவிஞர் இப்போது தம் ஆசையை நிறைவேற்றிக்கொண்டார். அப்பாட்டின் நயத்தைச் சிறிது பார்ப்போம்:
வள்ளல், காய் சினம் அற்றவன்; கருணையுற்றவன்; வாய்மை உடையவன்; தாய்மை வாய்ந்தவன். கையால் அவன் அளிக்கும் கொடைக்கு எல்லையில்லை. அவன் நாவில் இல்லை யென்ற சொல்லே இல்லை என்பது பாட்டின் கருத்து. சேர்ந்தாரைக் கொல்லும் தன்மையுடைய தென்று திருவள்ளுவர் முதலிய சான்றோர் சொல்லிய முறையில் 'காய் சினம்' என்று கவிஞர் எடுத்த எடுப்பும், ஊழி பெயரினும் பெயரா உரையுடையார் என்று கம்பர் முதலிய கவிஞர் பாராட்டிய காராள குலத்திற் பிறந்த வள்ளலை, 'வாய்மையுளான்' என்று குறித்த வண்ணமும், பெற்ற பிள்ளைக்குப் பால் நினைந்தூட்டும் தாய் போல் பாடி வந்த பாவலர்க்குப் பரிசளித்த தலைவனைத் 'தாய் நிகர்வான்' என்று போற்றிய தன்மையும், எவர்க்கும் இல்லையென்னாது. எல்லையின்றித் கொடுத்த நல்லானிடம் 'இல்லை என்ற சொல்லே இலை' என ஏத்திய அழகும் இப் பாட்டிலே அமைந்திருக்கக் கண்டு எல்லையற்ற இன்பம் அடைவர் தமிழறிஞர். வள்ளலும் கவியின் சுவையறிந்து களிப்புற்றார்; ஆயினும் தம் பெருமையைப் பாட்டின் வாயிலாகக் கேட்டபோது நாணித் தலை கவிழ்ந்தார்.
ஒருநாள், வள்ளலின் மிதியடி காணாமற் போயிற்று. அதைக் கவர்ந்த கள்வனைக் கண்டு பிடிக்க முடியாமல் வருந்தினர் காவலாளர். அச் செய்தியை அறிந்த வள்ளல், சொக்கரைப் பார்த்துப் புன்னகை புரிந்து 'செருப்புக்கும் திருடனுக்கும்' பொருத்தமான பாட்டிசைக்கும்படி வேண்டினார். அப்போது எழுந்தது பாட்டு.
"அங்கங் களவால் அதுகண் டுதைப்புறலால்
எங்கும் மிதியடியென் றேசொல்லால் - வெங்கல்
கரடுமுட்கஞ் சாததினால் காமர்முத்துச் சாமி
திருடனைஒப் பாகும் செருப்பு"
என்ற கவியை விருப்பமாய்க் கேட்ட வள்ளல் 'செருப்புத் தொலைந்ததால் அன்றோ இச் செய்யுள் கிடைத்தது' என்று அகமகிழ்ந்தார்.
அப் பாட்டின் சிலேடை நயத்தைப் பார்ப்போம்; "கள்வனுக்கு அங்கம் களவு; செருப்புக்கு அங்கங்கு அளவு; கள்வனது களவு கண்டு உதைப்பார்கள்; செருப்பின் அளவு கண்டு தைப்பார்கள்; கள்வனை 'மிதி' 'அடி' என்பார்கள். செருப்பையும் 'மிதியடி' என்பார்கள். இன்னும் கல்லும், முள்ளும், கரடும் கண்டு அஞ்சாது செல்வான் கள்வன்; அவ்வாறே கல்லும், முள்ளும், கரடும் கண்டு செருப்பு அஞ்சாது" என்பது இப்பாட்டின் பொருள்.
முத்தமிழ் அறிந்த முத்துசாமி வள்ளல் மகிழ்ந்து அளித்த பரிசுகளைச் சொக்கர் நன்றியுடன் பெற்றுக் கொண்டாரேனும், பொருள் ஒன்றையே அவர் கருதியவரல்லர்; வருவாய் மாசம் பத்து வந்தாலும் அதனையே மா சம்பத்தாகக் கொள்ளும் மனப் பண்புடையவர். இரும்பையிழுக்கும் காந்தம்போல், வள்ளலின் இன்சொல், கவிஞரைப் பிணித்தது. அவர் சொல்லில் அமைந்த சுவை, அமுதம் போன்றிருந்தது. அம்மானைப் பாட்டிலே அதைப் புகழ்ந்து பாடியுள்ளார் கவிஞர்.
"காராள மாமரபிற் கன்னன்முத்துச் சாமியெனும்
சீராளன் வாய்ச்சொற்கள் தெள்ள முதம்அம்மானை!
சீராளன் வாய்ச்சொற்கள் தெள்ளமுதம் ஆமாயின்
ஆராய்ந்து தேவர்கள்உண் டாடுவரோ அம்மானை!
அருமைப் புலவர்கள்கொண் டாடுவா ரம்மானை!"
என்று அல்லும் பகலும் அவ்வள்ளலின் அமுத மொழிகளைப் பருகி மகிழ்ந்த அழகிய சொக்க நாதர் புகழ்ந்து போற்றுகின்றார். "திருப்பாற் கடலில் எழுந்த தெள்ளமுதைத் தேவர்கள் உண்டு ஆடினார்கள். முத்துச்சாமி மன்னன் என்னும் செந்தமிழ்க் கடலினின்றும் எழுகின்ற சொல்லமுதை அருமைப்புலவர்கள் கொண்டாடுகின்றார்கள்" என்று சொக்கர் பாடிய கவி சாலச் செம்மை வாய்ந்ததாகும். விண்ணிலே உறையும் அமரர் விரும்பி உண்ணும் அமுதம் போல், மண்ணிலே வாழும் புலவர் மகிழ்ந்து போற்றுவது அருந்தமிழ் அமுதமே யென்றும், தெள்ளமுதுண்டு திளைத்த தேவர் மாறிலா இன்பத்தில் மகிழ்தல் போலச் செந்தமிழ் அமுதம் பருகிய புலவரும் செவ்விய இன்பம் நுகர்ந்து செமமாந் திருப்பர் என்றும் கவிஞர் அமைத்த உவமை செவிச் சுவையுடைய செல்வர்க்குச் சிறந்த இன்பம் தருவதாகும்.
இன்னும், 'கற்றாரைக் கற்றாரே காமுறுவர்' என்னும் கட்டுரைக் கிணங்க, கல்வியின் அருமையறிந்து ஆதரித்த இம் மன்னனது பெருமையை,
"மாணுறஎல் லாம்படித்த மன்னன்முத்துச் சாமிவள்ளல்
ஆண்மைத் திறத்தில்மத யானைகா ணம்மானை!
ஆண்மைத் திறத்தில்மத யானையென்ப தாமாயின்
காணுமிவன் அங்கங் கருமையோ அம்மானை!
கற்றவர்க்கங் கங்கருமை காட்டுவான் அம்மானை!"
என்று அம் மன்னனது அருமைக் குரியவராய் விளங்கிய கவிஞர் ஆர்வமுற எழுதியமைத்தார். இயலிசை நாடகமென்னும் முத்தமிழையும் முறையாகக் கற்ற நற்றமிழ்ச் செல்வனை, "மாணுற எல்லாம் படித்த மன்னன்" என்று கவிஞர் மனமாரப் புகழ்ந்தார்: அறிவும் ஆண்மையும் ஒருங்கே யமைந்த வள்ளலை விழுமிய வேழத்திற்கு உவமை கூறினார். வேழத்தின் மேனி கருமை காட்டும் என்றும், வள்ளல் கற்றவர்க்கு அங்கங்கு அருமை காட்டுவான் என்றும் கவிஞர் பாராட்டினார்.
ஆண்மையும் அழகும் வாய்ந்த அவ் வள்ளலைத் தலைவனாக வைத்து ஒரு 'காதலும்' பாடினார் கவிஞர். பொதிய மலைச் சாரலில் வேட்டையாடப் போந்த முத்துசாமி மன்னர்.
"சில்லென்று பூத்த செழுமலர்ப்பூங் காவனத்தில்
வில்லொன்று செங்கையுடன் மேவி வரும்போதில்"
ஒரு கட்டழகியைக் கண்டு காதலுற்றார்; அவள் ஊரும் பேரும் கேட்டார். மாற்றம் ஒன்றும் பேசாமல் தலைகவிழ்ந்து நின்றாள் மங்கை. அது கண்ட தலைவர்,
"ஊமையோ, வாயிலையோ ஓர்வசனம் நீஉரைத்தால்
தீமையோ வாய்திறந்து செப்பினால் ஆகாதோ"
என்று பின்னும் வினவினார். அப்போது அவள் வாய்திறக்கவில்லை; 'வாய் இல்லையோ' என்று கேட்டுப் பார்த்தோம், பலிக்கவில்லை; 'மனம் காயோ' என்று கேட்டுப் பார்க்கலாம் எனக் கருதி மேலும் பேசலுற்றார்:
"வெள்ளரிக் காயா, விரும்பும்அவ ரைக்காயா
உள்ளமிள காயாஒருபேச் சுரைக்காயா"
என்று நயமுறக் கேட்ட போது, நங்கை புன்னகை புரிந்தாள் என்று காதற் பிரபந்தம் கூறிச்செல்கின்றது.
வாக்கு வளம் உடைய அழகிய சொக்கர், நெல்லையாம் பதியிலே கோயில் கொண்டுள்ள காந்திமதியம்மையின் மீது ஒரு பிள்ளைத் தமிழ் பாடினார். அதன் சுவையை ஒரு பாட்டால் அறியலாம்.
"வாரா திருந்தால் இனிநானுன்
வடிவேல் விழிக்கு மையெழுதேன்
மதிவாள் நுதற்குத் திலகமிடேன்
மணியால் இழைத்த பணிபுனையேன்
பேரா தரத்தி னொடுபழக்கம்
பேசேன் சிறிதும் முகம்பாரேன்
பிறங்கு சுவைப்பால் இனிதூட்டேன்
பிரிய முடன்ஒக் கலையில்வைத்துத்
தேரார் வீதி வளங்காட்டேன்
செய்ய கனிவாய் முத்தமிடேன்
திகழு மணித்தொட் டிலில்ஏற்றித்
திருக்கண் வளரச் சீராட்டேன்
தாரார் இமவான் தடமார்பில்
தவழும் குழந்தாய் வருகவே!
சாலிப் பதிவாழ் காந்திமதித்
தாயே வருக! வருகவே!"
என்ற சொக்கர் கவிதையைக் காதாரக் கேட்டார் வள்ளல். அதன் நயம் அவருள்ளத்தைக் கொள்ளை கொண்டது. செவிச் சுவையுடைய கவிஞரது செவிக்கு ஒரு செவ்விய பரிசளிக்க அவர் விரும்பினார். காந்திமதியம்மை முன்னிலையில் பிள்ளைத்தமிழ் அரங்கேறியவுடன் வள்ளல் தாம் அணிந்திருந்த வயிரக் கடுக்கனைக் கழற்றிக் கவிஞர் காதிலே மாட்டி மகிழ்ந்தார். "செவிச் செல்வமே செல்வத்துட் செல்வம்" என்று அக் கடுக்கனைப் புகழ்ந்து வயிரப் பரிசளித்த வள்ளலை வாயார வாழ்த்தினார் சொக்கர்.
---------------
25. வண்மையும் வறுமையும்
பழந் தமிழ்நாட்டு வள்ளல்களாய் விளங்கிய பாரியும் ஓரியும், ஆயும் அதிகனும், மலையனும் பேகனும் மாண்ட பின்னர், முதிராத வளமுடைய முதிர மலைத் தலைவனாகிய குமணன் அருஞ் சுரத்தினிடையே அமைந்த செழுஞ் சுனை போல் இலங்கினான். பழுமரம் தேரும் பறவை போன்று வறுமையால் வருந்திய மக்கள் இவ் வள்ளலை வந்தடைந்தார்கள்; தமது குறையைக் கரவாது எடுத்துரைத்தார்கள். பசி நோயால் அன்னையும் மனைவியும் மக்களும் வாடி வருந்தக் கண்ட புலவர் ஒருவர் குமணனிடம் போந்து தம் குறையை முறையிட்டார்:
'ஐயனே! ஆண்டு பல கண்ட என்னுடைய அன்னை, போகாத தன் உயிரோடு புலந்து தண்டூன்றித் தள்ளாடி முற்ற மளவும் செல்லமாட்டாத முதுமையால் வருந்துகின்றாள். வறுமையால் வாடித் தளர்ந்து, ஒருவரையும் பழியாது ஊழைப் பழிக்கும் உத்தமியாகிய என் மனையாள், குப்பைக் கீரையின் கண்ணிலே முளைத்த முதிராத இளந்தளிரைப் பறித்து, அதனை உப்பின்றி அவித்து உண்டு, உலர்ந்த மேனியோடு உயிர் வாழ்கின்றாள். பால் மணம் மாறாத பாலன், உடல் வற்றிய தாயிடம் பால் காணாது வருந்தி அடுப்பருகே யிருந்த சோற்றுப் பானையிடம் தவழ்ந்து, அதன் வெறுமை கண்டு வெதும்பி அழுகின்றான். பசியா லழும் பாலனைக் கண்டு மனம் பொறாத என் மனையாள் வானிலே விளங்கும் வளர்மதியைக் காட்டியும், புலி வருமென்று பயமுறுத்தியும் அவன் கருத்தை மாற்ற முயல்கின்றாள்; மதியையும் புலியையும் மனத்திற் கொள்ளாது ஓயாமல் அழுகின்ற மைந்தனை நோக்கி மனம் குழைகின்றாள்" என்று குமணனிடம் தன் குறையை உருக்கமாக எடுத்துரைத்தார். கவி நலம் சான்ற அறிஞரைப் பற்றிய வறுமையை அறிந்த குமணன், மனம் வருந்தி அவரது குறையை அகற்றப் போதிய பரிசளித்தான்.
வள்ளலது பரிசின் வளம் கண்ட புலவர் பெருமித முற்று மலர்ந்த முகத்தோடு தம் மனையகம் போந்து மனையாளை நோக்கி, "மாதே! இதோ குமணன் கொடுத்த கொடையைப் பார்! இப் பொருள்களெல்லாம்,
"பழந்தூங்கு முதிரத்துக் கிழவன்
திருந்துவேற் குமணன் நல்கிய வளனே"
இவற்றை வறுமையால் வருந்தும் உற்றார்க்கும் உறவினர்க்கும் எடுத்து வழங்கி இன்புறுவாயாக!" என்று புலவர் கூறும் மொழிகளில் குமணனது கொடைத்திறம் இனிது விளங்கக் காணலாம்.
இவ்வாறு இரவலர்க்கு இல்லை யென்னாது ஈந்த வள்ளலது புகழ் தமிழ்நாடெங்கும் பரவிற்று. கொடையிற் சிறந்தவன் குமணன் என்று கற்றோரும் மற்றோரும் முதிரமலை வள்ளலை மனமொழி மெய்களால் வாழ்த்திப் போற்றினார்கள்.
குமணனிடம் பரிசு பெற்ற புலவர்கள், பற்றுள்ளம் செய்யும் மற்றைய சிற்றரசர் சிறுமையை சிற்றரசர் சிறுமையை அவ்வள்ளலின் வண்மையோடு ஒப்பு நோக்கிப் பழித்துரைத்தார்கள். இளவெளிமான் என்னும் சிற்றரசனிடம் பரிசு பெறச் சென்ற புலவர் ஒருவர் அவனது எளிய கொடையை ஏற்றுக்கொள்ளாது மறுத்து, குமண வள்ளலிடம் சென்று யானைப் பரிசு பெற்று, மீண்டும் இளவெளிமானிடம் போந்து,
"இரவலர் புரவலை நீயு மல்லை
புரவலர் இரவலர்க் கில்லையு மல்லர்
இரவலர் உண்மையும் காண், இனி இரவலர்க்கு
ஈவோர் உண்மையும் காண், இனி நின்னூர்க்
கடிமரம் வருந்தத் தந்தியாம் பிணித்த
நெடுநல் யானையெம் பரிசில்
கடுமான் தோன்றல் செல்வல் யானே!"
"அரசே! இரப்போர்க் கீந்து பாதுகாப்போன் நீயுமல்லை; இரப்போரைப் புரப்போர் இவ்வுலகில் இல்லை யென்பதும் இல்லை. இரப்போரைக் காப்போர் இவ்வுலகில் உண்டென்னும் உண்மையை இப்பொழுதே காண்பாயாக. நின்னூர்க் காவல் மரம் வருந்த யாம் கட்டிப் போந்த களிறு குமண வள்ளல் கொடுத்த கொடையாகும். இனி யான் என் ஊரை நோக்கிச் செல்வேன்" என்று செம்மாந்து உரைத்த புலவர் மொழிகளில் குமணனது பரிசின் செம்மை சீர்பெற இலங்குகின்றது.
இவ்வாறு பாடி வந்த பாவலர்க்கும் பகடு பரிசளித்தும் ஆற்றாரது அரும்பசி களைந்தும், வற்றாத பெருஞ்செல்வமுற்று விளங்கிய குமணனைக் கண்டு அழுக்காறு கொண்டான் அவன் தம்பியாய இளங்குமணன்; தமையன் ஆண்ட மலையையும் நாட்டையும் கவர்ந்துகொண்டு அவனைக் காட்டிற்கு ஓட்டினான்; குமணனது தலையைக் கொய்து வருவார்க்குப் பரிசளிப்பதாகவும் பறையறைவித்தான். வள்ளலைக் காணாது காலைக் குமுதம்போல் குவிந்து வாடிய குடிகள், வன்கண்மை வாய்ந்த தம்பியின் செயல் கண்டு கண்ணீர் உகுத்தார்கள்; குமணனது குலப்பெருமையை அழித்து, அதன் மணத்தை மாற்றத் தோன்றிய இளையோனை, "அமணன்" என்று அழைத்தார்கள். அமணன் ஆண்ட நாட்டின் அருகே வந்த ஆன்றோரும் அறவோரும், புலிகிடந்த புதர் கண்டாற் போன்று புறத்தே போயினர். முதிர மலைக் குடிகள் மனம் வாடி வருந்தினார்கள்.
நாட்டைவிட்டுச் சென்ற குமணன், காட்டில் விளைந்த காயும் கனியும் அயின்று, கானப் புல்லில் துயின்று காலங் கழித்தான். இவ்வா றிருக்கையில் ஒரு புலவர்,
"ஆனினம் கலித்த அதர்பல கடந்து,
மானினம் கலித்த மலைபின் ஓழிய
மீனினம் கலித்த துறைபல நீந்தி"
குமணன் கரந்துறைந்த கானகம் போந்தார். அங்கு மரவுரி புனைந்து மாசடைந்த மேனியோடு திரிந்த வள்ளலைக் கண்டு, "ஐயனே! உண்பதற்கு ஒரு பிடி சோறு மின்றி என் மனையாள் வாடுகின்றாள். பசியால் மெலிந்த தாயிடம் பால் காணாத பாலன் தாய் முகம் நோக்கினான்; தாய் என் முகம் நோக்கினாள்; யான் உன் முகம் நோக்கி வந்தேன்" என்று குறையிரந்து கண்ணீருகுத்தார். கவிஞரது கொடிய வறுமையை அறிந்த வள்ளல் மனம் நெகிழ்ந்து, கண்களில் நீர் ததும்ப நின்று,
"அருந் தமிழ்ப் புலவரே! நான் செல்வத்தால் செழித்து வாழ்ந்திருந்த காலத்தில் நீர் வரலாகாதா? இவ் வறுமைக் காலத்தில் வந்தடைந்தீரே! இப் பொழுது உமது இன்மையை அகற்றப் பாவியேன் என் செய்வேன்?" என்று மனம் குழைந்தான். ஆயினும் இல்லையென்று உரைக்கலாற்றாத இதயம் வாய்ந்த வள்ளல், சிறிதுபொழுது சிந்தனையிலாழ்ந்து, ஈகையால் தன்னுள்ளே நினைந்து தமிழ்ப் புலவரிடம் தன் உடைவாளை உருவிக் கொடுத்து "ஐயனே! இத்
"தலைதனைக் கொடுபோய்த் தம்பிகைக் கொடுத்து
விலைதனை மீட்டுநின் வறுமைநோய் களையே"
என்று முகமலர்ந்து மொழிந்தான். தமிழ்ப் புலவனது வறுமை தீர்த்தற்காகத் தன் தலையையும் அளிக்க இசைந்த தலையாய வள்ளலது செயல் கண்டு தரியாத தமிழறிஞர் கண்ணீர் பெருக்கிக் கதறியழுது அவ்வாளை எடுத்துக் கொண்டு, அமணனிடம் ஓடிச் சென்று, "ஐயனே! தலையையும் கொடுத்துத் தமிழறிந்த தமியேனது வறுமையைக் களையப்போந்த வள்ளலாய உன் தமையனது பெருமையை என் என்பேன்?"
"பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தல்என்
நாடிழந் ததனினும் நனிஇன் னாதென
வாள்தந் தனனே! தலைஎனக் கீயத்
தன்னிற் சிறந்தது பிறிதொன் றின்மையின்"
'பாடி வந்த பரிசிலன் வாடிப் பெயர்தல் நாடிழந்ததனினும் இன்னாதென்றெண்ணி, தன் தலையைக் கொய்து உன்னிடம் கொடுக்குமாறு இவ் வாளைத் தந்தான்' என்று கவிஞர் கல்லும் கரைந்துருகும் கனிந்த மொழிகளைக் கூறிய பொழுது, அமணனது உள்ளம் நெகிழ்ந்தது; கண்கள் பாசத்தால் நேசத் தாரைகள் சொரிய நின்றான்; தலையாய வள்ளலைக் கானகத்தில் வருந்த வைத்த தன் சிறுமையை எண்ணி ஏங்கினான்; அப்பொழுது நால்வகைச் சேனையோடும் நகர மக்களோடும் தமையன் வசித்த கானகம் போந்து, அப் பெருந்தகையின் அடிபணிந்து, மீண்டும் நாட்டிற்கு அழைத்து வந்தான். குமணனும் முன்போலவே அறிஞர்க்கும் வறிஞர்க்கும் ஆதரவாய் அமைந்து என்றும் அழியாத பெரும் புகழ் எய்தினான்.
-----------
VI. மொழியும் நெறியும்
26. தமிழும் சைவமும்*
(* சென்னை வானொலி நிலையத்திற் பேசியது. அந்நிலையத்தார் இசைவு பெற்றுச் சேர்த்தது.)
பாரத நாடு, என்றும் தெய்வ மணம் கமழும் திருநாடு. தெய்வம் உண்டு என்ற கொள்கை நினைப்பிற்கும் எட்டாத நெடுங்காலமாக இந்நாட்டில் நிலவி வந்துள்ளது. 'இவ் வுலகத்தைப் படைப்பது தெய்வம்; காப்பது தெய்வம், அழிப்பது தெய்வம்' என்னும் கருத்து பாரத நாட்டு பெருஞ் சமயங்களில் எல்லாம் காணப்படும். சுருங்கச் சொல்லின், 'அவனன்றி ஓர் அணுவும் அசையாது' என்னும் உண்மையை அறிந்து போற்றும் நாடு இந் நாடு.
இத் தகைய தெய்வத்தைத் தமிழ் நாட்டார் பலவாறு போற்றினார்கள்; பல திருநாமங்களால் அழைத்தார்கள். நாளடைவில் அப் பெயர்கள் நூற்றுக் கணக்காகவும், ஆயிரக் கணக்காவும் பெருகிவிட்டன. மாணிக்கவாசகர், திருவாசகத்தில் இதனைக் குறிக்கின்றார்.
"ஒருநாமம் ஓர்உருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரம்
திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ"
என்பது அவர் திருவாக்கு. இவ் வண்ணம் பாடிய திரு நாமங்களில் சிவம் என்பது ஒன்று. அஃது ஒரு சிறந்த பெயர். சிவம் என்ற சொல்லுக்கு மங்கலம் என்னும் பொருள் கண்டார் பண்டைப் புலவர். எனவே, எல்லா மங்கலமும் தரும் பொருள் எதுவோ, அதுவே சிவம், பேரின்ப நிலையாகிய முக்தி, சிவகதியாகும். சிவகதியிற் கொண்டு சேர்க்கும் நெறியைச் சைவம் என்றார்கள். எனவே, சிவன் என்னும் மங்கலப் பொருளை வழிபட்டுச் சிவகதியை அடைவதற்கு வழிகாட்டும் சமயமே சைவ சமயமாகும்.
இத் தன்மை வாய்ந்த சைவ சமயத்தின் அடிப்படையான கொள்கைகளிற் சிலவற்றைக் காண்போம்: "அன்பே சிவம்" என்ற அருமையான வாசகமும் சைவ சமய நூல்களில் சிறப்பாக விளங்குகின்றது. எண்ணிறந்த குணம் வாய்ந்த இறைவனை அன்பு வடிவமாக எழுதிக் காட்டினார் திருமூலர் என்னும் பெரியார்.
"அன்பும் சிவமும் இரண்டென்பார் அறிவிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிகிலார்
அன்பே சிவமாவது யாரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே"
என்பது அவர் அருளிய திருமந்திரம், இதனால், அன்பு நெறியே சிவநெறி என்பது நன்கு விளங்கும்.
அன்பு வடிவாகிய சிவபெருமானை அடைவதற்கு அன்பையே சாதனமாகக் கொள்ளுதல் வேண்டும் என்று சைவ சமயம் கூறும், 'எவ் வுயிர்க்கும் அன்பாயிரு' என்றார் ஒளவையார். இவ் வுலகத்தில் அறத்தைக் காப்பது அன்பு; மறத்தை அழிப்பது அன்பு; இன்பத்தைப் பெருக்குவது அன்பு; துன்பத்தைப் போக்குவது அன்பு, அன்பினால் ஆகாத தொன்றில்லை. இத் தகைய அன்பு நெறியிலே நின்று பணி செய்தால், இன்ப நிலையாகிய சிவகதி, தானே வந்தடையும் என்பது சைவ சமயத்தின் கொள்கை.
தெய்வத் தன்மையாகிய அன்பு, இயற்கையாகவே ஒவ்வொருவரிடமும் உள்ளது. அது வளர்ந்து, விரிந்து, பரவுதல் வேண்டும். நாம் முதலில், பெற்றோரிடம் அன்பு செலுத்துகின்றோம். பின்பு, உற்றார் உறவினரிடம் அன்பு செல்கின்றது; அப்பால் ஊராரிடம், நாட்டாரிடம், உலகத்தாரிடம் படிப்படியாகப் பரந்து நிலவுகின்றது.
இங்ஙனம் மன்பதையிடம் மட்டும் அன்பு செலுத்தினாற் போதாது; எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல் கருத வேண்டும். மண்ணிலே முளைத்து வளரும் செடி கொடிகளும், ஊர்ந்து செல்லும் எறும்பு முதலியனவும், பறந்து செல்லும் பறவையினங்களும், நான்கு காலால் நடந்து திரியும் விலங்குகளும், உயிருள்ள பொருள்களாகும். நம்முயிர் நமக்கு எப்படிஇனிதோ, அப்படியே ஒவ்வொரு பிராணியும் தன்னுயிரை இனிதாகப் போற்றுகின்றது. மேலும், எல்லா உயிர்களிலும் கலந்து நிற்கின்றார் கடவுள்.
"எவ்வுயிரும் பராபரன்சந் நிதிய தாகும்
இலங்கும்உயிர் உடலனைத்தும் ஈசன் கோயில்."
ஆதலால், எவ் வுயிர்க்கும் துன்பம் செய்தல் ஆகாது; எவ் வுயிர்க்கும் கேடு விளைத்தல் ஆகாது; எவ் வுயிரையும் கொல்லலாகாது. கொல்லாமையைச் சிறந்த கொள்கையாகக் கொண்டது சைவ சமயம்.
"கொல்லா விரதம் குவலயமெ லாம்ஓங்க
எல்லார்க்கும் சொல்லுவதுஎன் இச்சை பராபரமே"
என்று பாடினார் தாயுமானவர். கொல்லா விரதத்தை மிக உறுதியாகக் கொண்டமையால், சைவம் என்ற சொல்லுக்கே புலால் உண்ணாமை என்னும் பொருள் வந்துவிட்டது.
"கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்"
என்று அறிவுறுத்தினார் திருவள்ளுவர். இதனாலேயே நாளடைவில், புலால் உண்ணாதவன் சைவன் என்றும், புலால் உண்பவன் அசைவன் என்றும் பிரித்துப் பேசும் வழக்கம் இந் நாட்டில் எழுந்தது. இது, கொல்லாமையாகிய விரதத்தால் சைவ சமயம் பெற்ற சிறப்பாகும்.
சைவம், பரந்த நோக்கமுடையது. 'இவ் வுலகில் சைவ சமயமே மெய்ச் சமயம்; மற்றைய சமயங்கள் பொய்ச் சமயம்' என்று அது சொல்லவில்லை. 'சிவன் என்னும் பெயரால் கடவுளை வழிபட்டோர்க்குத்தான் நற்கதி உண்டு; மற்றையோர்க்கு இல்லை' என்று அது கூறவில்லை; ஒவ்வொரு சமயத்திலும் அருள்புரியும் பரம்பொருள் ஒன்றே என்பது சைவத்தின் கொள்கை.
"அறிவினால் மிக்க அறுவகைச் சமயம்
அவ்வவர்க்கு ஆங்கே ஆரருள் புரிந்து"
என்னும் தேவாரம் இவ் வுண்மையை நன்குணர்த்துகின்றது. அறிவிற் குறைந்தவர்கள் புதிய சமயங்களை வகுத்து எங்கும் பரப்பினாலும் குற்றம் இல்லை.
"விரிவிலா அறிவி னார்கள் வேறொரு சமயம் செய்தே
எரிவினாற் சொன்னா ரேனும் எம்பிராற்கு ஏற்ற தாகும்"
என்று பாடினார் திருநாவுக்கரசர். ஆகவே, சமயத்தின் பேரால் நிகழும் பிணக்கங்களும் போர்களும் சைவ நெறிக்கு மாறுபட்டன என்பது தெள்ளிதின் விளங்கும்.
சைவ நெறியில் சமயப்பொறுமை சிறந்த கொள்கையாக விளங்கிற் றென்பதற்குச் சிலப்பதிகாரம் சான்று தருகின்றது. சிலப்பதிகாரத்தை இயற்றியவர் சேரநாட்டு இளவரசர். அவர் இவ்வுலக வாழ்க்கையை விரும்பாது சமண சமயத் துறவியாயினர். ஆனால், அவருடன் பிறந்த சேரன் செங்குட்டுவன் சிறந்த சைவனாய் விளங்கினான். இங்ஙனம் தமையன் சைவ சமயத்தையும், தம்பி சமண சமயத்தையும் மேற் கொண்டு ஒரு குடும்பத்தில் இணக்கமாக வாழ்ந்த நாட்டில், சமயப் பொறுமை நிலைத்திருந்த தென்பதை விரித்துரைக்கவும் வேண்டுமோ?
சைவ சமயத்தின் முடிவுகளைச் சைவ சித்தாந்தம் என்பர். அச் சித்தாந்தத்தின்படி, அநாதியாக வுள்ள பொருள் மூன்று. அவற்றைத் திரி பதார்த்தம் என்பர். பதி, பசு, பாசம் என்ற மூன்றும் திரி பதார்த்தம் எனப்படும். பதி என்பது கடவுள், பசு என்பது உயிர்; பாசம் என்பது கட்டு, உயிர், பாசத்திலிருந்து விடுபட்ட நிலையிலே பதியைச் சென்றடையும். அதுவே வீடு என்றும், மோட்சம் என்றும் சொல்லப்படும். பசுவாகிய உயிர், பாசமென்னும் கட்டறுத்துப் பதியுடன் இரண்டறக் கலந்துவிடுதலே வீடுபேறு ஆகும்.
இங்ஙனம், உயிர் வர்க்கங்களை ஈடேற்றும் பொருட்டுக் கடவுள் ஐந்து தொழில்கள் செய்கின்றார் என்று சைவ சித்தாந்தம் கூறும். படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தும் ஈசன் செயல்கள். இவ்வைந்து தொழில்களுக்குமுரிய சின்னங்களையும் நடராஜ வடிவத்தில் நன்கு காணலாகும். அவ்வடிவத்தில் உள்ள ஒரு கரம் உடுக்கையடிக்கும்; மற்றொன்று அபயமளிக்கும்; பிறிதொரு கையில் நெருப்பு எரியும்; இனி, திருவடிகளில் ஒன்று முயலகன்மீது ஊன்றி நிற்கும்; மற்றொன்று தூக்கிய திருவடி. இவ் வைந்தும் ஆண்டவன் புரியும் ஐந்து தொழில்களையும் காட்டுவனவாம். இறுதியாக உள்ள அருள் புரிதல் என்னும் தொழில், எடுத்த திருவடியால் விளங்கும். எடுத்த திருவடியே பிறவியைக் கெடுத்துப் பேரின்ப மளிப்பது. ஆதலால், தில்லைச் சிற்றம்பலத்தில் காலைத் தூக்கி நின்றாடும் கடவுளைக் கண்டு காதலால் கசிந்துருகிப் பாடினார் நாவரசர்:
"குனித்த புருவமும் கொவ்வைச்செவ் வாயில் குமின்சிரிப்பும்
பனித்த சடையும் பவளம்போல் மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்தபொற் பாதமும் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவ தேஇந்த மாநிலத்தே"
என்பது இவர் திருப்பாட்டு. ஐந்து தொழிலும் விளங்க ஆண்டவன் ஆனந்தக் கூத்தாடும் தில்லைச் சிற்றம்பலமே சைவ உலகத்தில் 'கோயில்' என்று சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. ஆகவே, அழகிய திருக் கூத்தாடி ஆன்மாக்களே ஈடேற்றும் குறிப்புடைய நடராஜ வடிவத்தை நமக்குத் தந்தது சைவ சித்தாந்தம்.
சைவ சமயத்தில் ஆலய வழிபாடு இன்றியமையாததாகக் கொள்ளப்படுகிறது. 'ஆலயந்தானும் அரன் எனத் தொழுமே' என்று சிவஞான போதம் என்னும் சித்தாந்த நூல் கூறும். கோயில் இல்லா ஊரில் குடி யிருத்தல் ஆகாது என்பது சைவர் கொள்கை. இதனால், எண்ணிறந்த சிவாலயங்கள் தமிழ்நாடெங்கும் தலையெடுத்து நிற்கின்றன. பொருள் வளம் பெற்ற அரசரும், அருள் நலம் பெற்ற முனிவரும் ஆலயப் பணியில் ஈடுபட்டார்கள்; தேவாரம் முதலிய தெய்வப் பாடல்களை ஆலயங்களில் இன்னிசையோடு பாடுவதற்கு ஏற்பாடு செய்தார்கள். பாடலோடு ஆடலும் நிகழ்வதாயிற்று. இவ் வண்ணம், பெரிய கோயில்களில் எல்லாம் இயல், இசை, நாடகம் என்னும் முத்தமிழும் செழித்தோங்கி வளர்ந்தன. கடவுளுக்குரிய கோயில் கலைக் கோயிலாகவும் காட்சியளித்தது.
இப்பொழுது தமிழ் நாட்டிலுள்ள சிவாலயங்களில் சாதி வேற்றுமை காணப்படுகின்றது. ஆண்டவன் கோயிலுக்குள்ளே சில சாதியார் செல்லலாகாது என்று சொல்லப்படுகிறது. கோயிலுக்குள்ளே சென்றாலும், இன்னார் இன்ன இடத்தில் நிற்க வேண்டும் என்ற வரையறை ஏற்பட்டிருக்கின்றது. ஆனால், சைவ சித்தாந்த முறையில் சமயத்துக்கும் சாதிக்கும் சம்பந்தமில்லை.
"சாத்தி ரம்பல பேசும்ச ழக்கர்காள்
கோத்தி ரமும்குல மும்கொண்டு என் செய்வீர்"
என்று வினவினார் ஓரு சைவப் பெரியார்.
"சாதிகுலம் பிறப்பென்னும் சுழிப்பட்டுத் தடுமாறும்
ஆதமிலி நாயேனை அல்லலறுத்து ஆட்கொண்டு"
என்று மாணிக்கவாசகர் திருவாசகத்திலே பாடினார். எனவே, கோத்திரமும் குலமும் கொண்டு, நாம் ஆண்டவன் அருளை அடைய முடியாது. எக் குலத்தவராயினும் பக்குவப்பட்ட ஆன்மாக்களே பரகதி அடைவர் என்று சைவ சித்தாந்தம் பறை யறைகின்றது. இக் காலத்தில் இழிந்த சாதிகள் என்று எண்ணப்படுகின்ற குலங்களில் பிறந்தவர்கள் பரிபக்குவத்தால் முத்தியடைந்த செய்தியைச் சிவ கதைகளால் அறியலாம். புலையர் குலத்தில் பிறந்த நந்தனார், புனிதமான தில்லையம்பதியில் சிவகதி யடைந்தார். பெத்தான் சாம்பான் பத்தி செய்து முத்தி பெற்றான். ஆதலால், 'சாதியினும் சீலமே சிறந்தது; குலத்தினும் குணமே உயர்ந்தது' என்னும் உண்மை சைவத்தில் அடிப் படையாக உண்டென்பது நன்கு விளங்குவதாகும். இதனாலன்றோ தேவாரத் திருப்பாசுரத்தில்,
"அங்கமெல்லாம் குறைந்தழுகு தொழுநோயராய்
ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்
கங்கை சடைக்கரந்தார்க்கு அன்பராயின்
அவர்கண்டீர் நாம்வணங்கும் கடவுளாரே"
என்று பாடினார் திருநாவுக்கரசர்!
-------------
27. தமிழும் சாக்கியமும்*
* சென்னை வானொலி நிலையத்திற் பேசியது. அந் நிலையத்தார் இசைவுபெற்றுச் சேர்த்தது.
பாரத நாட்டுப் பழைய மதங்களுள் ஒன்று பௌத்த மதம். ஏறக்குறைய இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னே, இந்திய நாட்டின் வட பாகத்திலுள்ள ஒரு சிறு தேசத்தில் புத்தர் பெருமான் பிறந்தார்; இளமையிலேயே, இவ்வுலக வாழ்க்கை நிலையற்றதென்று உணர்ந்தார்; தமக்குரிய பெருஞ் செல்வத்தையும், பெற்றோரையும், அழகிய மனைவியையும், அருமைக் குழந்தையையும் விட்டுத் துறவியானார்; ஓர் ஆற்றங்கரையில் நின்ற அரச மரத்தின்கீழ் அமர்ந்து, நெடுங்காலம் தவம் புரிந்து மெய்ஞ்ஞானம் பெற்றார். அவர் காட்டிய நெறி புத்தமதம் என்று பெயர் பெற்றது. புத்தர் சாக்கிய குலத்திற் பிறந்தவராதலால் அம் மதத்தைச் சாக்கியம் என்றும் சொல்வதுண்டு.
புத்தர், எண்பது வயதளவும் இவ்வுலகில் வாழ்ந்தார்; பல நாடுகளிற் சென்று தம்முடைய மதக்கொள்கைளைப் பரப்பினார். வடநாட்டு மன்னர் பலர். அச் சமயத்தை மேற்கொண்டார்கள். அவர்களில் மிகச் சிறந்தவன் அசோக மன்னன். ஆசிய கண்டத்திலுள்ள பல நாடுகளில் பௌத்த மதம் பரவிற்று. தமிழ் நாட்டிலே திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் காலத்தில் பௌத்த மதம் பரவியிருந்த பான்மை அவர் வரலாற்றால் விளங்குகின்றது. மணிமேகலை என்னும் தமிழ்க்காவியம் எழுந்த காலத்தும் பௌத்த மதம் தலையெடுத்து நின்றதாகவே தெரிகின்றது. அக் காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த புத்த சங்கத்தில் அறவணவடிகள் என்னும் பௌத்த முனிவர் விளங்கினார். அவர் சிறந்த சீலர். கோவலன் கொலையுண்டு இறந்த பின்னர் அவன் காதலியாகிய மாதவியையும், அவன் மகள் மணிமேகலையையும் பௌத்த சமயத்தில் சேர்த்தவர் அவரே. இன்றும் அவர் பெயர் காஞ்சிபுரத்தில் நிலைபெற்றிருக்கின்றது. அவர் தங்கியிருந்து தவம் புரிந்தமையால் அறவணண்சேரி என்று பெயர் பெற்ற தெரு இப்பொழுது அறப்பணஞ் சேரி என்று அந் நகரில் வழங்குகின்றது.
சாக்கிய மதம் சிறந்திருந்த காலத்தில், சிதம்பரத்தில் வாழும் தில்லை மூவாயிரவரோடு சமய வாதம் செய்வதற்காகப் பௌத்த முனிவர்கள் திரண்டு போந்தார்கள் என்றும், அப்பொழுது, அங்கிருந்த மாணிக்கவாசகர் அம் முனிவர்களுடன் வாது செய்து அன்னாரைச் சைவ சமயத்திற் சேர்த்துவிட்டார் என்றும் சரித்திரம் கூறுகின்றது. ஆகவே, மாணிக்கவாசகர் காலத்திற்குப் பின்பு பௌத்த மதம் தமிழ் நாட்டில் ஆதிக்கமிழந்துவிட்டதென்று சொல்லலாம். சுமார் ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னே சீன தேசத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்த யூன்சியாங் என்பவர், பௌத்த மதம் தளர்ச்சியுற்றுத் தாழ்வடைந்திருந்த நிலையைக் குறித்து வருந்தி எழுதியுள்ளார். எனவே, மணிமேகலை எழுந்த காலத்தில் ஓங்கி நின்ற பௌத்த மதம், ஏழாம் நூற்றாண்டில் தளர்ந்து தாழ்ந்துவிட்டதென்று தோன்றுகிறது.
ஆயினும், அம் மதத்தைச் சார்ந்தவர் ஆங்காங்கு இல்லாமற் போகவில்லை. திருஞானசம்பந்தர் காலத்தில், இப்பொழுது பாண்டிச்சேரி என்று வழங்கும் புதுச்சேரிக்கருகே போதிமங்கை என்ற ஊர் இருந்தது. அங்குப் பௌத்த சமயத்தார் பெருங்தொகையினராக வாழ்ந்தனர். சாக்கிய நூல்களையும் தருக்க நூல்களையும் நன்கு கற்று வாது புரிய வல்லார் பலர் அவ்வூரில் இருந்தனர். திருஞானசம்பந்தர் சிவனடியார்களோடு அவ்வூரைக் கடந்து செல்லும்போது சாரிபுத்தர் என்னும் சாக்கிய முனிவர் அவரை வாதுக்கு அழைத்தார். அவ்வூர்ச் சத்திரத்தில், சாரி புத்தருக்கு திருஞானசம்பந்தருக்கும் வாக்குவாதம் நிகழ்ந்தது. அவ் வாதத்தில் தோல்வியுற்ற சாரிபுத்தரும் அவரைச் சார்ந்த பௌத்தரும் சைவ சமயமே மெய்ச் சமயம் எனத் தெளிந்து, திருஞானசம்பந்தர் அடிகளில் விழுந்தெழுந்து சைவராயினர் என்று பெரிய புராணம் கூறுகின்றது.
தமிழ் நாட்டுப் பெருவேந்தருள் ஒருவனாகிய இராஜராஜ சோழன், நாகப்பட்டினத்தில் ஒரு புத்த ஆலயம் கட்டுவதற்கு அனுமதி யளித்ததோடு, அதற்கு நன்கொடையும் வழங்கினான் என்பது சரித்திரத்தால் அறியப்படுகின்றது. இன்னும், வீரசோழன் என்ற பட்டப் பெயர் பூண்ட வீர ராஜேந்திரன் அரசாண்ட காலத்தில், பௌத்த சமயத்தினாராகிய 'புத்தமித்திரன்' என்னும் புலவர் தமிழில் ஓர் இலக்கணம் செய்தார். அந்நூல் வீரசோழியம் என்று பெயர் பெற்றது.
பௌத்த சமயக் கொள்கைகள் மணிமேகலை, குண்டலகேசி முதலிய நூல்களில் விளக்கப்பட்டுள்ளன. 'பிறப்பென்பது துன்பம்; பிறவாமையே இன்பம்' என்பது அச் சமயத்தின் அடிப்படைக் கொள்கை. அப்படியாயின், பிறப்பை எப்படி ஒழிப்பது? 'அகப்பற்று, புறப்பற்று என்னும் இருவகைப் பாசமும் பிறப்பிற்கு வித்து; பற்று அற்றால் பிறப்பு ஒழியும் என்பது பௌத்த சமயத்தின் கருத்து. இவ்வுண்மையை மணிமேகலையிற் காணலாம்.
"பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்
பிறவார் உறுவது பெரும்பே ரின்பம்
பற்றின் வருவது முன்னது; பின்னது
அற்றோர் உறுவது அறிக."
என்று அறுதியிட்டுக் கூறப்படுகின்றது. எனவே, 'எல்லாவற்றையும் துறந்தவரே சிறந்தவர்; அவரே பேரின்ப மடையும் பெற்றி வாய்ந்தவர்' என்னும் கருத்து பௌத்த சமய வாதிகளால் இந் நாட்டில் நன்கு பரப்பப்பட்டது. இல்லறம், துறவறம் என்னும் இருவகை அறங்களுள் துறவறமே சாலச் சிறந்ததென்னும் கொள்கை பௌத்த மதபோதனையால் தமிழ் நாட்டில் ஊற்றம் பெற்றது. அப் போதனையாலேயே இள நங்கையாகிய மணிமேகலையும் அவள் தாயும், பிறரும் துறவு நிலை யடைந்தார்கள்.
துறவறத்தை மேற்கொண்ட புத்தர், கொல்லாமை என்னும் அறத்தின் பெருமையை எல்லார்க்கும் எடுத்துரைத்தார். அக் காலத்தில், வட நாட்டில் பல வகையான யாகங்கள் நடந்து வந்தன. அசுவ மேத யாகம், கோமேத யாகம் முதலிய வேள்விகள் செய்து, குதிரைகளையும் பசுக்களையும் அரசர்கள் பலி கொடுத்தார்கள். பிம்பசாரன் என்ற அரசன் பல பசுக்களைக் குறியிட்டுக் கோமேத யாகம் செய்யக் கருதியதைக் கேள்வியுற்று, புத்தர், அவன் அரசு புரிந்த நகரத்திற்கு விரைந்து சென்றார். கொல்லாமையாகிய அறத்தின் பெருமையை அவன் உள்ளங் கொள்ள எடுத்துரைத்தார். புத்தர் உருக்கமாகப் பேசிய வாய்மொழியைக் கேட்ட பிம்பசாரன் மனம் மாறினான்; யாகத்தை நிறுத்தினான்; அன்று முதல் கொல்லாமை என்னும் நல்லறத்தை மேற்கொண்டு வாழ்ந்தான். இவ்வாறு புத்தர் சரிதம் கூறுகின்றது.
இங்ஙனம் வடநாட்டில் புத்தர் செய்த நற்போதனையைத் தென்னாட்டில் திருவள்ளுவர் செய்தார்.
"நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கம் கடை".
என்று திருக்குறள் திருத்தமாகக் கூறுகின்றது. தமிழ் நாட்டில் நடந்த கோமேதயாகம் ஒன்று மணிமேகலையிற் குறிக்கப்படுகின்றது. அழகான ஒரு பசு; அதன் கொம்புகளில் மாலை சுற்றி அலங்கரிக்கப்பட்டிருந்தது. மறுநாள் நிகழ நின்ற தீமையையறிந்து அப் பசு அங்கமெல்லாம் பதறிற்று; வாய் விட்டுக் கதறிற்று; கண்ணீர் வடித்தது, அதனைக் கண்டான் ஆபுத்திரன் என்ற சிறுவன்; எவ்வாற்றானும் அந் நல்லுயிரைக் காப்பாற்றக் கருதினான். அன்றிரவு காரிருளில் எல்லோரும் கண்ணுறங்கும் வேளை பார்த்து, அப் பசுவைக் கட்டவிழ்த்துக் காட்டுக்குள்ளே ஓட்டிச் சென்றான். யாகப் பசுவைக் காணாத வேதியர்கள் நாற்றிசையும் விரைந்து ஓடினார்கள்; தேடினார்கள்; காட்டிலே அதைக் கடத்திச் சென்ற ஆபுத்திரன்மீது சாடினார்கள். அந் நிலையில் பசுவுக்காகப் பரிந்து பேசலுற்றான் ஆபுத்திரன். தன்னைப் பிடித்து அடித்தவரை நோக்கி, 'ஐயரே! இப் பசு உமக்கு என்ன தீங்கு செய்தது? என்ன பாவம் பண்ணிற்று? அரசன் விட்ட நிலத்தில் மழையால் முளைத்துத் தழைத்த புல்லை மேய்கின்றது. இனிய நல்ல பாலை எல்லோர்க்கும் தருகின்றது. இத்தகைய பசுவை ஏன் கொல்ல வேண்டும்?"
"விடுநில மருங்கில் படுபுல் லார்ந்து
நெடுநில மருங்கின் மக்கட் கெல்லாம்
பிறந்தநாள் தொட்டுச் சிறந்ததன் தீம்பால்
அறந்தரு நெஞ்சொடு அருள்சுரந் தூட்டும்
இதனொடு வந்த செற்றம் என்னை?"
என்று வினவினான். இவ்வாறு பசுக்கொலையை மறுத்த பாலனே மதுரையம்பதியில் சிந்தாதேவியால் அமுதசுரபி என்னும் அக்ஷய பாத்திரம் அளிக்கப் பெற்றான் என்றும், அப் பாத்திரத்தின் உதவியால் ஊர் ஊராகச் சென்று பசித்தோர்க் கெல்லாம் வயிறாரச் சோறிட்டு அறம் வளர்த்தான் என்றும் மணிமேகலை கூறுகின்றது.
பௌத்த மதம் அக் காலத்தில் பல நாடுகளில் பரவியதற்கும், இக் காலத்திலும் பெருஞ் சமயமாக நிலைத்திருப்பதற்கும் சிறந்த காரணம் அதன் சங்கமேயாகும். பௌத்த துறவிகளுடைய கூட்டத்திற்குச் சங்கம் என்பது பெயர். முதன்முதல் காசி நகரத்தில், புத்தர் ஐந்து முனிவருக்கு உபதேசம் செய்து சங்கத்தைத் தொடங்கினார். அது வளர்ந்து பல்லாயிரக் கணக்கான துறவியரையுடையதாயிற்று. பௌத்தர்கள் புத்தரையும் தருமத்தையும் சங்கத்தையும் மும்மணிகளாகப் போற்றுகின்றார்கள். தமிழ்நாட்டில் சங்கம் என்ற சொல்லுக்கு ஏற்றமளித்தவர் பௌத்தரே என்று கூறுதல் மிகையாகாது. சங்கம் நிறுவிப் பௌத்த சமயத்தை வளர்த்தார் புத்தர். அம் முறையில், பாண்டிய மன்னர்கள் தென்னாட்டில் மூன்று சங்கங்கள் நிறுவி முத்தமிழையும் வளர்த்தார்கள். பௌத்த சமயத்தில் சங்கத்திற்கு எவ்வளவு பெருமையுண்டோ, அவ்வளவு பெருமை தமிழ் நாட்டில் தமிழ்ச் சங்கத்திற்கு உண்டு.
சங்கமே பௌத்த சமயத்தின் ஆணிவேர் என்பதையறிந்த சைவ சமயத்தார் அம் முறையைத் தாமும் மேற் கொண்டார்கள். சைவம் நன்றாக நிலை பெறுதற் பொருட்டும், எங்கும் பரவுதற் பொருட்டும் திருக்கூட்டம் தமிழ் நாட்டில் ஏற்படுவதாயிற்று. திருக்கூட்டம் என்பது சிவனடியார் சங்கம். சோழ நாட்டின் பழைய தலை நகராகிய திருவாரூரில் அமைந்திருந்த திருக்கூட்டத்தின் செம்மையைப் பெரியபுராணம் எடுத்துரைக்கின்றது; இருவகைப் பாசமும் அற்றவர்கள்; ஈசன் திருவடியைப் போற்றும் செல்வமே மெய்ச் செல்வமாய்க் கொண்டவர்கள்.
"மாசி லாத மணிதிகழ் மேனிமேல்
பூசும் நீறுபோல் உள்ளும் புனிதர்கள்
தேசி னால்எத் திசையும் விளக்கினார்
பேச ஒண்ணாப் பெருமை பிறங்கினார்"
என்று அத் தொண்டர் கூட்டத்தைப் போற்றினார் சேக்கிழார். அத்திருக்கூட்டத்தைக் கண்டார் சுந்தரமூர்த்தி; ஆர்வம் கொண்டார். அன்னார்க்கு அடியவராக ஆசைப்பட்டார். அவ் ஆசையால் எழுந்ததே 'திருத்தொண்டத் தொகை' என்னும் அருமைத் திருப்பதிகம். அதன் அடியாகவே பிற்காலத்தில் 'திருத்தொண்டர் புராணம்' என்னும் பெரிய புராணம் தமிழ் நாட்டிலே பிறந்தது. ஆகவே, பௌத்த சங்கத்திற்கு நிகராகிய திருக்கூட்டத்தால் சைவ சமயம் அளவிறந்த நன்மையடைந்தது என்பதில் ஐயமில்லை.
தமிழ் நாட்டில் அரச மரத்திற்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. அரச மரமும் பிள்ளையாரும் இல்லாத ஊர் இந் நாட்டில் இல்லை என்றே சொல்லலாம். அம் மரத்தைச் சுற்றி வந்து வணங்கும் வழக்கமும் இந் நாட்டில் உள்ளது. முன்னாளில் இங்குப் பரவியிருந்த பௌத்த சமயத்தால் அம் மரத்திற்கு இத்துணைச் சிறப்பு ஏற்பட்டதாகத் தோன்றுகின்றது. 'போதி மரம்' என்று சொல்லப்படும் அரச மரத்தின் அடியிலே புத்தர் மெய்ஞ்ஞானம் பெற்றார். அதனால் 'போதி நாதர்' என்ற பெயரும் அவருக்கு அமைந்தது. இத் தகைய புத்தரை அரச மரத்தடியில் வைத்துப் பண்டைத் தமிழர் வணங்கினர். புத்தரொடு சேர்ந்த மரமும் புனித முற்றதாகப் போற்றப்பட்டது. புத்த பெருமானுடைய திருவுருவங்களும் பெயர்ந்து மறைந்தன. ஆனால், அரச மரத்தின் பெருமை குன்றவில்லை. புத்தர் வீற்றிருந்த இடத்தில் பிள்ளையார் இனிதமர்ந்தார்.
ஆகவே, புத்த மதம் ஆதிக்க மழிந்து போய் விட்டாலும், அதன் சின்னங்கள் அடியோடு இந்நாட்டில் அழிந்து போகவில்லை. பஞ்ச காவியங்களில் ஒன்றாகிய மணிமேகலை, அதன் பெருமைக்குச் சான்றாக நிற்கின்றது. வீரசோழியம் என்னும் இலக்கண நூல் அம் மதத்தைச் சார்ந்தவரது புலமைத் திறத்தை விளக்கி நிற்கின்றது, போதியின் கீழ் மாதவம் புரிந்த புத்தரின் ஞாபகச் சின்னமாக அரசமரம் சிறப்புற்று விளங்குகின்றது.
-----------
28. இறையவரும் இன்னுயிரும்
மன்னுயிர் அனைத்தையும் ஆதரித்துக் காக்கும் அருள்நெறியே நன்நெறியெனத் தமிழ்நாடு பழங்காலத்தே அறிந்துகொண்டது. பிற உயிர்க்கு நலம் புரிந்தவர் இன்புறுவரென்று, தீங்கிழைத்தவர் துன்புறுவரென்றும் அறநூல் அறிவுறுத்துகின்றது. இவ் வுலகில் வாழும் உயிர்ப்பொருள்கள் பல திறப்பட்ட அறிவு வாய்ந்தன வாயினும் அவற்றுள் ஊடுருவிச் செல்லும் உயிர்த்தன்மை ஒன்றே என்னும் உண்மையைத் தமிழ்ப் பனுவல்களிற் பரக்கக் காணலாம். அறிவாற் குறைந்த உயிர்கள் வல பிறவிகளெடுத்து மேம்பட்டு, முற்றிய அறிவுடைய உயிர்களாகுமென்று பழந்தமிழ் மக்கள் கருதினார்கள்; புல்லாகவும், பூடாகவும் நிற்கும் சிற்றுயிர்கள் அறிவு முதிர்ந்து,மக்களாகவும் தேவாரகவும் வளர்ந்து செல்லும் தன்மையையத் திருவாசகம் தெள்ளிதின் உணர்த்துகின்றது. இதனாலேயே புல்லுயிரையும் துன்புறுத்தலாகாதென்று நல்லோர் அருளிப் போந்தனர்.
மக்கள் தம் அறிவின் மதுகையால் எனைய உயிர்கள் நலியாவண்ணம் ஆன்றோர் வகுத்துள்ள செவ்விய நெறி அறியத் தக்கதாகும். எல்லாம் வல்ல இறைவனிடம் அச்சமும் அன்பும் எஞ்ஞான்றும் மக்கட்கு உண்டு என்னும் உண்மையை உணர்ந்த அறிவோர், வனவிலங்குகள் முதலிய புற்பூண்டுகள் ஈறாக உள்ள எல்லா உயிர்களையும் இறையவரோடிணைத்து அருள் நெறியை இவ் வுலகில் நிலை நிறுத்த முயன்றுள்ளனர்; காட்டில் வாழும் விலங்குகளையும், விண்ணிலே பறந்து திரியும் பறவைகளையும், மண்ணிலே ஊர்ந்து செல்லும் உயிர்களையும், நீரிலே வாழும் மீன்களையும், நிலத்திலே மருவி நிற்கும் மரஞ்செடிகளையும் இறையவரோடிணைத்து அவற்றின் உயிரைக் காக்க ஆசைப்பட்டுள்ளார்கள். காட்டில் வாழும் வேழமும் வேங்கையும், அரியும் பரியும், மானும் மற்றைய உயிர்களும் இறையவர்க்கு உகந்த பொருள்களாகும். வேழத்தின் உரியும், வேங்கையின் தோலும், ஈசன் உவந்து அணியும் உடைகள். வேங்கையின் தோலை அரையிலுடுத்து வேழத்தின் உரியால் ஆகத்தைப் போர்த்துக் கடும் பனியுறையும் கயிலை மாமலையில் சிவபெருமான் வீற்றிருக்கின்றார். இன்னும், விழுமிய வேழம் விண்ணவர் தலைவற்குரிய வாகனமாகும். அன்றியும், ஈசனுடைய தலைமகனாகிய பிள்ளையார் திருமுகம் வேழத்தின் முகமாக விளங்குகின்றது. ஆகவே, உருவத்தால் உயர்ந்த வேழம் ஈசனார்க்கும் இந்திரற்கும், பிள்ளையார்க்கும் இனிய உயிராக இலங்குகின்றது. இத் தகைய யானைக்குத் தீங்கிழைத்தோர் அம் மூவரது சீற்றத்திற்கும் ஆளாவ ரல்லரோ? இன்னும், ஈசன் தோள்களில் ஆரமாக இலங்கும் நாகம் திருமாலின் பாயலாகவும் அமைந்துள்ளது, ஆகவே, நஞ்சமைந்த நாகமும் இறையவர் இருவரைச் சார்ந்து, இனிது வாழ்கின்றது. விலங்கரசு எனப்படும் அரிமான், காளியின் ஊர்தியாகக் களித்திருக்கின்றது, பரிமான் பைரவற்கு உகந்ததாயிற்று. கலைமான் ஈசனார் கையில் இனிதமர்ந்தது.
காட்டு விலங்குகளை விடுத்து, நாட்டு விலங்குகளைக் கருதுவோமாயின், அவைகளும் இறையவரைச் சார்ந்த உயிர்களாய் இலங்கக் காணலாம். எருது ஈசனது வாகனமாம்; எருமை எமனது ஏற்றமாம். பசுவின் வயிற்றிற் பிறந்தான் சித்திரகுப்தன் என்னும் வானவன். திருமாலும் பன்றியாய்த் தோன்றினான். நன்றி மறவாத நாய் சாத்தனது நல்வாகனமாம். ஆடு அங்கியங் கடவுளுக்கு அமைந்த ஊர்தியாம், ஆகவே, எருதுக்குத் தீங்கிழைத்தால் ஈசன் முனிவான்; எருமைக்குத் தவறிழைத்தால் எமன் விடமாட்டான்; பன்றியைக் கொன்றால் மாயோன் சீறுவான்; நாயை எறிந்தால் சாத்தன் தொடர்வான்; ஆட்டை அடித்தால் அங்கி அடுவான்.
இனி, பறவை இனங்களைச் சிறிது பார்ப்போம்; அன்னமும் கிளியும், சேவலும் மயிலும், குயிலும் கொக்கும், காக்கையும் கலுழனும் ஒவ்வோர் இறைவனை ஒன்றி வாழக் காணலாம், அயன் அன்னத்தின்மீது அமர்ந்தான். மாரவேள் கிளியின்மீது ஊர்கின்றான். குமரவேள் சேவலைக் கொடியாகவும், மயிலைப் பொறியாகவும் உடையான். குயிலை மாரன் தூதனாக்கினான். கொக்கிறகை ஈசன் தன் வேணியில் அணிந்தான். காக்கையைச் சனியன் பிடித்துக்கொண்டான். கலுழனைத் திருமால் கவர்ந்துகொண்டான். ஆகவே, அன்னத்தைத் துன்புறுத்தினால் அயன் சபிப்பான். மயிலை, பேசும் கிளியைப் பிடித்தால் மாரன் அம்பு தொடுப்பான்; சேவலுக்குத் தீங்கிழைத்தால் முருகன் சீறுவான்; மயிலைப் பிடித்தால் அயில் வேலெடுப்பான்; குயிலைக் கொன்றால் மாரன் கோபிப்பான்; காக்கையை அடித்தால் சனியன் தொடர்வான்; பருந்துக்குத் தீங்கிழைப்போர் மாயோன் நேமிக்கு விருந்தாவர். எனவே, பறவை இனங்களும் பெரியாரைச் சார்ந்து அச்சமின்றி வாழ்கின்றன.
இன்னும், சிறிய உயிர்களாய அணிலும், ஆகுவும், குரங்கும், கழுதையும், பெரியார் அருளால் பெருமையுற்று விளங்கக் காணலாம். அணிற்பிற்ளை, காலத்தில் உதவி செய்து இராமனது அருளைப் பெற்றது. ஆகுவோ பிள்ளையார் வாகனமாய்ப் பெருமை யுற்றது. வானரம், இராமனுக்குத் துணை புரிந்து உயர்ந்தது. கத்தும் கழுதையோ, மூத்தாள் வாகனமாய் அமைந்தது. திருமால் மச்சாவதாரம் கொண்டமையால், மீன் இனங்களையும் ஈனமென்றெண்ணி ஊறு செய்தல் ஆகாது.
இனி, மரங்களின் உயிரை ஆன்றோர் பாதுகாத்த மாண்பும் அறிந்து மகிழத் தக்கதாகும். இனிய நிழல் தரும் மரங்களின் அடியில் இறையவரை அமைத்துப் பழந்தமிழ் நாடு வழிபட்டது. குற்றாலநாதர் குறும்பலாவின்கீழ் அமர்ந்தார். நெல்வேலியப்பர் வேணுவின் அடியில் வீற்றிருந்தார். மதுரேசர் கடம்ப வனத்தில் களித்தமர்ந்தார். தில்லைவனத்தில் அழகிய கூத்தர் திளைத்தார். மரமடர்ந்த வனங்கள் பிற்காலத்தில் நகரங்களாகச் சிறந்தபொழுது குறும்பலா வனம் திருக்குற்றாலமாகவும், வேணுவனம் திருநெல்வேலியாகவும், கடம்பவனம் மதுரையாகவும், தில்லைவனம் சிதம்பரமாகவும் திகழ்வனவாயின. முன்னாளில் கல்லாலின்கீழ் அமர்ந்து இறையனார் அறமுரைத்தார். அரசமரத்தடியில் அமர்ந்து கௌதம புத்தர் அரிய உண்மைகளை அறிந்தார். அசோக மரத்தடியில் அமர்ந்து அருகனார் அறமுணர்ந்தார். கூவிள மரம் எப்பொழுதும் ஈசனுக்கு உகந்ததாகும். இன்னும், வன்னியும் தென்னையும், மருதும் நாவலும், மற்றைய மரங்களும் இறையவர் விரும்பி உறையும் இடங்களாகும். வினை தீர்க்கும் விநாயகரை வேம்பும் அரசும் கலந்து நிற்குமிடத்தில் அமைத்து வணங்கும் பழக்கம் இன்னும் தமிழ்நாட்டில் நிலவுகின்றது.
மரங்களைப் போலவே செடிகொடிகளும், புற்பூண்டுகளும் இறையரோடு இணைந்து வாழும் தன்மை அறியத்தக்கதாகும். எப் பயனும் தராத எருக்கும் குருக்கும் ஈசனுக்கினிய வென்றால், ஏனைய செடிகளைச் சொல்லவும் வேண்டுமோ? தும்பையும் துளசியும், அறுகும் புல்லும் இறையவர்க்கு ஏற்றனவாம். மாயோன் துளசியில் மகிழ்ந்துறைகின்றான். ஆனைமுகத் திறைவனுக்கு அறுகினும் இனிய பொருளில்லை. ஆகவே, அறநெறியை அகிலமெல்லாம் பரப்பக் கருதிய தமிழ் மக்கள் உயிர்ப்பொருள் அனைத்தையும் இறையவரோடு இணைத்துத் காக்கக் கருதிய முறை நினைக்குந்தொறும் உள்ளத்தை நெகிழ்விப்பதாகும்.
-------
29. சோலைமலைக் கள்ளன்*
(* ஆனந்த விகடன் தீபாவளி மலரில் எழுதியது.)
தமிழ் நாட்டில் எத்தனையோ மலைகள் உண்டு. ஆயினும், மலையெல்லாம் சோலைமலை ஆகுமா? சோலைமலையைக் கண்டால் கண் குளிரும்; கருதினால் மனம் மகிழும்; அம்மலையிலுள்ள பெருஞ்சோலையைப் பசுஞ்சோலை என்பார்; பழம் உதிர்சோலை என்பார்; நறுஞ் சோலை என்பார். இன்னும் என்னென்னவோ சொல்லிப் புகழ்வார்
செந்தமிழ்ப் பாமாலை பெற்ற சோலை மலையிலே மஞ்சு தவழும்; மழை பொழியும்; அருவி சொரியும்; ஆறாக ஓடும். ஆற்று நீர் கல்லின் இடையே பாய்ந்து செல்லும் போது 'கலீர், கலீர்' என ஒலிக்கும். அந்த ஓசையின் இனிமையால் சிலம்பாறு வலஞ்செய்யும்; சோலைமலையில் கல்லும் மரமும் கதை சொல்லும்.
முன்னொரு காலத்தில் அருகரும் புத்தரும் அம் மலையிலே தங்கியிருந்து தவம் புரிந்தார்கள். அன்னோர் இருந்த குகை இன்றும் மலைமீது காணப்படுகின்றது. இப்பொழுது 'பஞ்ச பாண்டவர் படுக்கை' என்பது அதன் பெயர். அங்கு ஏறிச் செல்வதற்குப் படியும் இல்லை; பாதையும் இல்லை. இடுக்கு வழிகளில் நுழைந்தும், வழுக்குப் பாறையில் தவழ்ந்தும் வடுப்படாமல் பஞ்சபாண்டவர் படுக்கையை அடைந்து விட்டால், நெஞ்சம் தழைக்கும்; தமிழ்த் தென்றல், 'வருக' என்று அழைக்கும்; தெள்ளிய சுனைநீர் தாகம் தீர்க்கும்.
அச் சுனையின் அருகே ஒரு பழங் குகை அமைந்திருக்கின்றது. அந் நாளில் அறவோர் இருந்து அருந்தவம் புரிந்த பள்ளி அதுவே போலும்! பெரிய ஆலமரம் ஒன்று அக் குகையின்மேற் கவிந்து அழகு செய்கின்றது. குகையின் உள்ளே படுக்கைபோல் அமைந்த பல பாறைகள் உள்ளன. ஒல்லென ஒலிக்கும் சோலையும், சில்லெனக் குளிர்ந்த சுனையும், சீலம் வாய்ந்த குகையும், அங்கே செல்வாரைச் செந்நெறியிலே சேர்க்கும். ஒருமையுடன் இருந்து, இயற்கையோடு இசைந்து இன்புற்று வாழ விருப்புவோர்க்கு ஏற்ற இடம் அது.
தென்னாட்டில் சமண மதம் ஆதிக்கம் பெற்றிருந்த போது சமண முனிவர் பல்லாயிரவர் அந் நாட்டில் வாழ்ந்தார்கள். மதுரையைச் சூழ்ந்திருந்த எட்டு மலைகளில் மட்டும் எண்ணாயிரம் முனிவர்கள் இருந்தார்கள் என்பர். அந்த எட்டு மலைகளுள் ஒன்று சோலை மலை. அந் நாளில் 'இருங்குன்றம்' என்பது அதன் பெயராக வழங்கிற்று.
"பரங்குன்று, ஒருவகம், பப்பாரம், பள்ளி
அருங்குன்றம், பேராந்தை ஆனை- இருங்குன்றம்
என்றுஎட்டு வெற்பும் எடுத்துஇயம்ப வல்லார்க்குச்
சென்றுஒட்டு மோபிறவித் தீங்கு"
என்று பழம் பாடல் அம்மலைகளின் பெருமையை எடுத்துரைக்கின்றது. அங்கு மாதவம் புரிந்த எண்ணாயிரம் சமண முனிவர்களும் தமிழ் நாட்டார்க்குக் கையுறையாகத் தந்த பாடல்களிற் சிறந்தவற்றைத் தொகுத்து நாலடியார் என்று பெயர் கொடுத்தனர்.
இவ்வாறு அருகர் போற்றிய சோலைமலை, என்றும் முருகனுக்கு உரிய திருமலையாகும். பொதுவாக மலைகள் எல்லாம் முருகனுக்கு உரியனவேயாயினும், சிறப்பு வகையில் அப் பெருமான் சோலை மலையை ஒரு படை வீடாகக் கொண்டுள்ளார் என்று அறிந்தோர் கூறுவார். பழுமுதிர் சோலைமலையில் அமர்ந்து அருளும் குறிஞ்சிக் கிழவனாகிய குமரனை,
"சூரர் குலம்வென்று வாகை யொடுசென்று
சோலை மலைநின்ற - பெருமாளே"
என்று திருப்புகழ் பாடிற்று.
சோலைமலை பழங்காலத்தில் பாண்டியர்க்கு உரிய கோட்டையாகவும் விளங்கிற்று. பாண்டியர் அரசு வீற்றிருந்த தலைநகராகிய மதுரையின் வட கிழக்கே காதவழி தூரத்தில் உள்ளதாய், பத்து மைல் நீளமும், நாற்பது மைல் சுற்றளவும் உடையதாய்த் திகழ அம் மலையைப் பாண்டியர் தம் காவற் கோட்டையாக்கிக் கொண்டது சாலப் பொருத்த முடையதன்றோ? மலையத்துவசன் என்ற பாண்டியன் அக் கோட்டையைக் கட்டினான் என்பர். அந் நாளிலே கட்டிய உட்கோட்டை, வெளிக் கோட்டை ஆகிய இரண்டும் இன்றும் காணப்படுகின்றன. திண்ணிய மதில் அமைந்த சோலைமலையைக் கண்டு, கண்ணும் மனமும் குளிர்ந்தார் பெரியாழ்வார்; "மதில் சூழ் சோலைமலைக்கு அரசே" என்று பாடினார்.
இத் தகைய படை வீட்டையும் கோட்டையையும் காத்து நின்றான் ஒரு வீரன். முறுக்கிய மீசையும், தருக்கிய விழியும் உடைய அவ் வீரன் இப்பொழுது காவல் தெய்வமாய். பதினெட்டாம்படிக் கறுப்பன் என்ற பெயரோடு சோலைமலையிலே காட்சி யளிக்கின்றான். அவனை நினைத்தாலே குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்; படிறுடையார் உள்ளம் பறையடிக்கும். நீதி மன்றத்தில் தீராத வழக்குகளும் கறுப்பையன் படிக்கட்டில் தீர்ந்துவிடும்.
முருகனுக் குகந்த படைவீட்டிலே - கறுப்பையன் காக்கும் கோட்டை மலையிலே - ஒரு கள்ளனும் நெடுங்காலமாக உள்ளான்! அன்று இன்று எனாதபடி, என்றும் அவன் உள்ளான் என்று ஆன்றோர் கூறுவர். கள்ளனும் அவனே; காப்பானும் அவனே! ஆதியும் அந்தமும் அவனே! ஆதியும் அவனே; சோதியும் அவனே! சோலைமலை அரசனும் அவனே! அம் மாயக் கள்வனைக் கண்டு கொண்டார் ஞானக் கவிஞராகிய நம்மாழ்வார்.
"வஞ்சக் கள்வன் மாமாயன்
மாயக் கவியாய் வந்துஎன்
நெஞ்சம் உயிரும் அவையுண்டு
தானே யாகி நிறைந்தானே"
என்று பாடினார்; பரவினார்; பரவசமாயினார்; உள்ளம் கவர்ந்த கள்வனை நினைந்து உருகினார்; அவன் அழகைக் கண்ணாற் பருகினார்; இன்ப வாரியில் மூழ்கினார்.
இங்ஙனம் ஆழ்வாரது நெஞ்சிலே புகுந்து திருவாய்மொழி பாடுவித்த வஞ்சக் கள்வனே சோலை மலையில் நின்று அருளும் திருமால். அவர் பெருமையால் சோலைமலை, 'திருமால் இருஞ்சோலை' என்னும் பெயர் பெற்றது.
"திருமால் இருஞ்சோலை மலை என்றேன், என்ன,
திருமால் வந்துஎன் நெஞ்சு நிறையப் புகுந்தான்"
என்பது திருவாய்மொழி.
சோலைமலையுடைய திருமால், அழகர் அன்னும் பெயருடையார். 'அழகும் அழகுடையார்க்கு ஆகும்' என்ற முறையில் சோலைமலை அவருக்கு உரியதாயிற்று. அழகர் மலை என்ற பெயரும் பெற்றது. இதை யெல்லாம் அறிந்து,
"அருகரோடு புத்தரும் அமர்ந்தருளும் சோலை
மருகனோடு மாமனும் மகிழ்ந்துறையும் சோலை
கருமையோடு* வெள்ளையும் கலந்திலங்கும் சோலை
அருமையான சோலைஎங்கள் அழகர்பெருஞ் சோலை"
என்று ஆடிப் பாடினாள் சோலைமலைக் குறவஞ்சி. அச்சோலையிலே கள்ள அழகரைக் காண்பது ஓர் ஆனந்தம்! --- * வெள்ளை - வெள்ளை நிறமுடைய பலதேவன். அவரும் கண்ணனோடு அம் மலையில் காட்சியளித்தார் என்பது பரிபாடலால் விளங்கும்.
---------------
30. தெய்வம் படும் பாடு*
(* ஆனந்த விகடன் தீபாவளி மலரில் எழுதியது.)
தெய்வம் படும் பாடு தெய்வத்துக்குத்தான் தெரியும். அடியார் கையில் அகப்பட்டு எத்தனை அடியும் அவதியும் பட்டிருக்கிறது தெய்வம்! எத்தனை ஏச்சும் பேச்சும் கேட்டிருக்கிறது! தொண்டர் என்று பேர் படைத்த மிண்டர்களுள் ஒருவன் தெய்வத்தைக் கல்லால் எறிந்தான்; மற்றொருவன் பிரம்பால் அடித்தான்; பித்தன் என்று ஏசினான் இன்னொரு தொண்டன். "தொண்டர்தம் பெருமை சொல்லவும் அரிதே".
கும்பகோணத்திற்கு அருகே சத்தி முற்றம் என்ற சிற்றூர் உள்ளது. அங்குள்ள சிவாலயம் பாடல் பெற்றது. "சத்தி முற்றத்து உறையும் சிவக்கொழுந்தே" என்று பாடினார் திருநாவுக்கரசர். நாளடைவில் சத்தி முற்றம் என்ற பெயர் 'சத்திமுத்தம்' ஆயிற்று. அதிலிருந்து உருவெடுத்தது ஒரு காதற்கதை! சத்தியாகிய உமாதேவி ஈசனைக் காதலித்து முத்தமிட்ட இடம் அதுவே என்ற முடிவு கட்டினர் சிவனடியார். அதற்கு அடையாளமாகச் சத்தி சிவனை முத்தமிடும் கோலத்தில் அமைந்த திருவுருவமும் அவ்வாலயத்தில் நிறுவப் பெற்றது. அடியார்மீது வைத்த கருணையால் சத்தியின் முத்தத்தையும் சகித்துக்கொண்டு அந்த ஆலயத்துள் அமர்ந்திருக்கின்றார் ஈசன்.
சோழ நாட்டிலுள்ள திருநாகேச்சுரத்தில் சிறந்த திருமால் கோவில் ஒன்றுண்டு. திருவிண்ணகர் என்பது அதன் பழம்பெயர். ஆழ்வார்களுள் நால்வர் அத்திருப்பதியைப் பாடியருளினர். "திருவிண்ணகர் சேர்ந்த அப்பன், தன் ஒப்பார் இல்லப்பன்" என்று நம்மாழ்வார் பாடிப் போற்றினார். அவர் திருவாக்கின் அடியாக 'ஒப்பிலியப்பன்' என்ற திருநாமம் அப் பெருமாளுக்கு அமைந்தது. காலப் போக்கில் ஒப்பிலியப்பன் என்பது 'உப்பிலியப்பன்' என மருவிற்று. உப்பிலியப்பன் கோயில் என்ற பெயரும் அவ் விண்ணகருக்கு அமைந்தது. உப்பிலியப்பனுக்கு உப்பில்லாத நிவேதனமே உகந்தது என்ற கருத்துப் பரவலாயிற்று. அதன் விளைவாக இன்றும் உப்பில்லாத திருவமுதை அப் பெருமாளுக்கு அளிக்கின்றார்கள். ஒப்புவமையில்லாத் தலைவன், அடியார் தரும் உப்பில்லாத உணவையும் உட்கொண்டு, தியாகத்தின் திருவுருவாக அத் திருப்பதியிலே காட்சி தருகின்றார்.
வருண ஜெபம் செய்தால் பருவ மழை பெய்யும் என்பது வைதிகக் கொள்கை. ஆயினும், மழை பெய்விப்பதற்குக் குறுக்கு வழி யொன்று சில ஊர்களிலே கையாளப்படுகின்றது. ஆற்றங்கரையில் அரசமரத்தடியில் அமர்ந்துள்ள பிள்ளையாருடைய மூச்சைப் பிடித்துவிட்டால் மழை கொட்டும் என்பது கொச்சையன்பர்களின் நம்பிக்கை. அதற்காகப் பிள்ளையாரைச் சுற்றிக் களிமண்ணால் ஒரு கோட்டை கட்டுவர்; தண்ணீரைக் கொண்டுபோய் அதில் கொட்டுவர்; பிள்ளையார் கண் அளவிற்குத் தண்ணீர் நிறைந்தவுடன் மழைக் குறி ஏதேனும் தோன்றுகிறதா என்று விண்ணை நோக்குவர். கார்மேகம் ஒன்றையும் காணாவிட்டால் அவரைச் சுற்றியுள்ள தண்ணீரில் காரமான மிளகாய்ப் பொடியைக் கரைப்பர். இவ்வாறு பாமரமக்கள் எடுக்கும் 'மூச்சுப்பிடி' விழாவில் சில வேளை மழை பெய்வதும் உண்டு. இது பிள்ளையார் படும் பாடு.
தமிழ்நாட்டிலுள்ள சிறந்த திருக்கோவில்களுள் ஒன்று வைத்தீசுரன் கோவில். புள்ளிருக்கு வேளூர் என்பது அதன் பழம் பெயர். அங்குள்ள ஈசன் வைத்தியநாதன். மருத்துவருளெல்லாம் பெரிய மருத்துவன்; வன்பிணியையும் தீர்க்க வல்லவன். "பிரிவிலா அடியார்க்கு என்றம் தீரா நோய் தீர்த்தருள வல்லான்" என்று திருநாவுக்கரசர் அப் பொருமானைப் பாடினார். பிறவி யென்னும் பெரும்பிணிக்கு ஏதுவாகிய "இருள் சேர் இருவினையும்" துடைக்க வல்ல வைத்தியநாதனை 'வினை தீர்த்தான்' என்று பொது மக்கள் போற்று வாராயினர். 'வினை தீர்த்தான்' என்ற பெயரைக் கேள்வியுற்றார் வசைபாடும் திறம் வாய்ந்த ஒரு கவிஞர், உடனே புறப்பட்டது வசைப் பாட்டு.
"வாதக்கா லாம்தமக்கு மைத்துனற்கு நீரிழிவாம்
போதப் பெருவயிறாம் புத்திரற்கு - மாதரையில்
வந்தவினை தீர்க்க வகையறியான் வேளூரான்
எந்தவினை தீர்த்தான் இவன்!"
என்று கவிஞர் பாடிய பாட்டையும் வஞ்சப் புகழ்ச்சியாக நெஞ்சார ஏற்றுக்கொண்டு வைத்தீசுரன் கோவிலில் வாழ்கின்றார் செஞ்சடைக் கடவுள்.
உமாதேவி மயில் வடிவாக இறைவனைப் போற்றிய இடம் மயிலாப்பூர் என்பர். அவ் வூரிலே அம்மன் கோயில் ஒன்று உள்ளது. முண்டகக் கண்ணியம்மன் கோயில் என்பது அதன் பெயர். அன்பினால் வழிபடும் தொண்டர்களுக்கு முண்டக் கண்ணியாகவா காட்சியளிப்பாள் உமையம்மை? கண்டோர் கண்களைக் குளிர்விக்கும் கண்களல்லவோ அம்மையின் கண்கள்? கருணை பொழியும் கண்கள் முண்டக் கண்களாக இருக்க முடியுமோ? என்ற எண்ண மெல்லாம் நம் மனத்தில் எழுகின்றன. மயிலையில் வாழும் அவ் வம்மையின் உண்மையான பெயரை அறிந்தால் ஐயமும் திரிபும் அகன்றவிடும். முண்டகக்கண்ணி என்பது அவள் பெயர்; முண்டகம் என்பது தாமரை; சிறப்பு வகையில் செந்தாமரையைக் குறிக்கும். அருளுருவாகிய அம்மையின் செவ்வரி படர்ந்த அழகிய கண்களை வியந்து முண்டகக் கண்ணி என்று ஆன்றோர் பெயரிட்டனர். அதை முண்டக் கண்ணியாகச் சிதைத்து விபரீதம் விளைத்துவிட்டது நம் மக்களின் சிறுமை.
பழனிமலைக்கு அருகே அயிரை என்ற மலை ஒன்று உண்டு. அம் மலையிலே கொற்றவை கோயில் கொண்டாள். வெற்றி தரும் தெய்வமாகிய கொற்றவையை மன்னரும் வீரரும் முன்னாளில் வழிபட்ட செய்தி பதிற்றுப்பத்து முதலிய பழந்தமிழ் நூல்களிற் கூறப்படுகின்றது. நாளடைவில் அயிரை மலை என்பது ஐவர் மலையென மருவிற்று. பாண்டவர் ஐவருக்கும் உரியது அம் மலை என்ற கதை பிறந்தது. பெண் வடிவத்தில் காட்சியளித்த கொற்றவை "ஐவர்க்கும் தேவி அழியாத பத்தினி" என்று புகழப்படும் பாஞ்சாலியாயினாள். பாஞ்சாலி யானாலும் பராசக்தியின் அருள் குன்றாது அம் மலையில் நின்று நிலவுகின்றது. இத்தகைய அரும் பெருங் கருணையே அறிந்தன்றோ,
"வெறுப்பவே செய்யும் என்சிறு மையைநின்
பெருமையினால் பொறுப்பவனே"
என்று மனம் நெகிழ்ந்து பாடினார் மாணிக்க வாசகர்!
--------
VII. இருமையில் ஒருமை
31. ஆண்மையும் அருளும்
நினைப்பிற்கு எட்டாத நெடுங்காலமாக இம் மாநிலத்தில் மண்ணாலும் பெண்ணாலும் மறப் போர் நிகழ்ந்து வருகின்றது. உலகிலுள்ள மக்கள் ஒரு வயிற்றுப் பிறந்தாற்போல் ஒற்றுமையாக வாழத் தலைப்பட்டால், போர் ஒடுங்குமென்று மும்மையும் உணர்ந்த மூதறிஞர் கருதுகின்றார்கள். ஆறறிவுடைய மாந்தர் அமர்க்களம் புகுந்து, அடுபோர் புரிந்து, குருதி சொரிவதை நினைக்கும் போது அறிஞர் நெஞ்சம் குலைவது இயல்பேயன்றோ? இதனாலேயே இந் நாட்டில் முறை திறம்போது அரசாண்ட மன்னர்கள் மாறுபட்ட அரசரோடு மலைய நேர்ந்தக்கால் அறநெறி விலகாது அமர் விளைத்தார்கள்.
அருளும் ஆண்மையும் இனிதமைந்த பண்டை அரசர், மாற்றாரொடு போர் தொடங்கு முன்னே, மதிநலம் வாய்ந்த தூதுவரை அவர்பால் அனுப்பி நீதி பெற முயன்றார்கள். இவ்வாறு வெம்போர் விலக்கும் விழுமிய கருத்துடன் வேற்றரசிடம் தூது செல்லும் அறிஞரை அவமதிப்பதும் துன்புறுத்துவதும் ஆகாவென்று அரசநீதமுறையிடுகின்றது. அயோத்தி மன்னனுடைய தூதனாய் இலங்கை மாநகருக்குச் சென்ற அனுமன்மீது சீற்றமுற்று, அவனைச் சிதைக்கக் கருதிய அரக்க மன்னனை நோக்கி, அறிவு வாய்ந்த வீடணன்,
"மாதரைக் கோறலும் மறத்து நீங்கிய
ஆதரைக் கோறலும் அழிவு செய்யினும்
தூதரைக் கோறலும் தூய்தன் றாம்என
ஏதுவிற் சிறந்தன எடுத்துக் காட்டினான்"
என்று கவியரசராகிய கம்பர் கூறுமாற்றால், தூதரைக் கொல்லும் பாவம், மாதரைக் கொல்லும் மாபெரும் பாவத்தை ஒப்பதாகும் என்பது நன்கு விளங்குகின்றது. இவ்வாறு தூது போக்கியும் நேர்மை எய்தாத நிலையிலேயே, அருள் நிறைந்த அரசர், வேறு வகையின்றி வெம்போர் புரிவார்கள்.
மாற்றரசர், செந்நெறி விலகி, சீர் முறை தவறிப் புன்மையே புரியினும், அவரது அடாத செய்கையைப் பொறுத்து, இயன்ற வரையில் போரைத் தடுக்க முயல்வதே அறம் திறம்பாத அரசர் செயலாகும். இத் தகைய பெருமை, அயோத்தி அண்ணலாகிய இராமனிடமும் குருகுல முதல்வனாய தருமனிடமும் தலைசிறந்து விளங்கிற்று. தாயின் மொழியைத் தலைக்கொண்டு, நாடு துறந்து, காடு புகுந்த இராமனுடைய காதல் மனையாளை, இலங்கை வேந்தன் வஞ்சனையால் கவர்ந்து அசோக வனத்தில் வைத்தான். மங்கையைப் பிரிந்து மன்னன் மலையும் காடும் அலைந்து திரிந்து மதங்க வனத்தில் வானரத் தலைவனைத் துணைக் கொண்டு, கடல் சூழ்ந்த இலங்கையில் தன் காதலி சிறையிருந்ததை அறிந்து, கருங்கடலைக் கடப்பதற்குக் கல்லால் அணை அமைத்து, வானர சேனையோடு இலங்கையின் நகர்ப்புறம் எய்தினான். ஆயினும், தனக்குத் தவறிழைத்த இலங்கை வேந்தன் மீது போர் தொடங்கு முன்னே,அம் மன்னன், சீதையை விடுவானா என்று அறியுமாறு அங்கதனை அவனிடம் தூதனுப்பக் கருதினான். இவ்வாறே சூதினால் அரசிழந்து, பன்னீராண்டு படர்கானகத்தில் துயர் உழந்து, அப்பால் ஓராண்டு ஒருவரு மறியாது ஊர் நடுவே கரந்துறைந்து முடிந்த பின்னும், வழிக்கு வாராத வணங்காமுடி மன்னன் மீது படையெடுக்கு முன்னே குருகுல மன்னன் கண்ணனைத் தூதனுப்பிக் கடும்போர் விலக்கக் கருதினான்.
விதிக்கும் விதியாகும் வில்லைத் தாங்கிய இலக்குவனைத் துணைக்கொண்ட இணையற்ற இராம வீரன் இலங்கை நாதனுடை புயவலியும் படைவலியும் கண்டு பயந்து அவன்பால் தூதனுப்பினான் அல்லன். அவ்வாறே தண்டேந்திய வீமனையும் தனுவேந்திய விசயனையும் துணையாகக் கொண்ட தருமன், நூற்றுவராய் விளங்கிய மாற்றார் படைவலி கண்டு கலங்கிக் கண்ணனைத் தூதனுப்பினான் அல்லன். கடும்போரால் விளையும் கொடுமையையும் கொலையையும் விலக்கக் கருதிய விழுமிய அருளாலேயே இருவரும் மானமும் கருதாது தூதுபோக்கினார் என்பது இனிது விளங்கும்.
அறம் நிரம்பிய தலைவரிடம் இத் தகைய கரையிறந்த கருணையையும், வரையிறந்த பொறுமையையும் கண்ட வலிமை சான்ற தம்பியர் சில வேளைகளில் வருத்தமுற்றுக் கோபத்தாற் கொதித்தார்கள். மாற்றார் படையைக் கண்டு கலங்காத இளையோர், மூத்தோரது பண்பாட்டைக் கண்டு கலங்கினார்கள். மானத்தால் மனமிடிந்த தமிபியர், மாற்றரசரிடம் வில்லாட இசைந்தனரேயன்றிச் சொல்லாட இசைந்தாரல்லர். 'தேவியை விடுகின்றானா அன்றி ஆவியை விடுகின்றானா' என்றறிந்து வருமாறு இராமன் தூதனுப்பத் துணிந்தபோது, எவருக்கும் இளையாத இலக்குவன் தமையனை நோக்கி, "ஐயனே! இலங்கை அரக்கன் உன் தேவியைச் சிறையில் வைத்தான்; தேவரை இடுக்கண் செய்தான்; அந்தணரை அலற வைத்தான்; இந்திரனுக்கு இடர் விளைவித்தான்; மாயம் விளைவித்துச் சீதையை மயங்க வைத்தான்; சஞ்சலத்தால் நைந்த மங்கைக்கு 'அஞ்சேல்' என்று அபயமளித்த கழுகின் வேந்தனைக் கருணையின்றிக் கொன்றான். இத்தகைய பாவியின் ஆவியைப் போக்காது அருள் காட்டலாகுமோ?" என்று வெகுண்டுரைத்தான். அவ்வுரையை அமையக் கேட்ட அயோத்தி அண்ணல், புன்னகை பூத்து, "புயவலி அமைந்திருப்பினும் பொறையொடும் பொருந்தி வாழ்வதே ஏற்றதாகும். அதுவே அறமு மாகும்" என்று மாற்றம் உரைத்தான்.
இவ் வண்ணமே வம்பு செறிந்த வணங்காமுடி மன்னன்பால் கண்ணனைத் தூதனுப்பத் துணிந்தபோது தண்டேந்திய வீமன் தருமனை நோக்கி, "ஐயனே! பன்னலம் திகழும் பாஞ்சாலி, பாவியர் கைப்பட்டு,.
"ஆறாகி இருதடங்கண் அஞ்சனவெம்
புனல்சோர அளகம் சோர
வேறான துகில்தகைந்த கைசோர
மெய்சோர வேறோர் சொல்லும்
கூறாமல் கோவிந்தா கோவிந்தா
என்றுஅரற்றிக் குளிர்ந்து நாவில்
ஊறாத அமிழ்தூற உடல்புளகித்து
உள்ளமெலாம் உருகி னாளே."
அந் நிலையில் தலைகவிழ்ந்து பொறுத்திருந்த நமக்கும் நம் மரபினுக்கும் என்றும் தீராத வசை தந்தீர்; அப்பால் பதின்மூன்றாண்டு காட்டிலும் நாட்டிலும் கழித்த பின்னரும் அமர் புரிந்து, மாற்றரசர் உடலம் துணித்து உலகாளக் கருதாது, இன்னும் தூதனுப்பி பணிந்து இரந்து புவி பெற்று உண்டு இருப்பதற்குத் துணிகின்றீரே! அந்தோ! அரவுயர்த்தோன் கொடுமையினும், முரசுயர்த்தோய்! உமது அருளுக்கு அஞ்சினேன். ஐயோ! இந்தத் தமையன், வாடுகின்ற மடப்பாவை வரம் முடித்தான்; இளையவர் கூறிய வஞ்சினம் முடித்தான்;
"மலைகண்ட தெனஎன்கை மறத்தண்டின்
வலிகண்டும் மகவான் மைந்தன்
சிலைகண்டும் இருவர்பொருந் திறல்கண்டு
எமக்காகத் திருமால் நின்ற
நிலைகண்டும் இவள்விரித்த குழல்கண்டும்
இமைப்பொழுதில் நேரார் தம்மைக்
கொலைகண்டு மகிழாமல் அவன்குடைக்கீழ்
உயிர்வாழக் குறிக்கின் றாயே"
என்று கொதித்துக் கூறினான். அப்போது "அறநெறி யுணர்ந்த தருமனது உரைவழி நிற்றலே தக்கதாகும்" என்று கண்ணன் எடுத்துரைக்க, வெம்மை சான்ற வீமனும் அடங்கி நின்றான்.
அப்பால், போர் நிகழ்ந்த போது மானத்தால் மனம் கொதிக்க தம்பியைத் துணைக்கொண்டு அயோத்தி மன்னன் இலங்கை வேந்தனை வென்றான். செம்மை தவறிய சுயோதனன் செயல்கண்டு சிந்தையறிந்த தம்பியரைத் துணைக்கொண்டு, குருகுல வேந்தனும் மாற்றாரை வென்றான். அறம் திறம்பாத இவ்வரசர் இருவரும் பொறுமை யென்னும் பெருமைக்கோர் இருப்பிடமாய் இலங்கினர்; மாற்றார் சிறுமை செய்யினும் அச் சிறுமையைத் தம் பெருமையாற் பொறுத்து அற நெறியில் தலை நின்றனர்; பகைவரது மிகையால் போர் செய்ய நேர்ந்தபோதும், அறம் திறம்பாத முறையில் அமர் நிகழ்த்தினர்.
படைக்கல மிழந்து எளியராய் எதிர்ப்படும் பகைவரை, அருள் வாய்ந்த அரசர், எஞ்ஞான்றும் தமது படைக்கலத்தால் நலியச் செய்வதில்லை. வெள்ளி மாமலை யெடுத்த இராவணன் படைக்கல மிழந்து, எளியனாய்த் தனக்கு எதிரே போர்க்களத்தில் நிற்கக் கண்ட கோசல நாட்டு வள்ளல், அருள் அளாவிய ஆண்மையோடு,
"ஆளை யாஉனக் கமைந்தன
மாருத மறைந்த
பூளை யாயின கண்டனை
இன்றுபோய்ப் போர்க்கு
நாளை வாவென நல்கினன்"
என்று கவியரசர் கூறுமாறு பகையரசனுக்கு விடை கொடுத்தனுப்பினான்.
அவ்வாறே, வில்லாண்மையில் தலைசிறந்து விளங்கிய விசயன், போர்களத்தில் படைக்கலம் இழந்து எளியனாய் நின்ற கர்ணனது நிலைகண்டு தளர்ந்து, அவன்மீது அம்பெய்தலைத் தவிர்த்த ஆண்மை இராமனது உயரிய அருளை நிகர்ப்பதாகும்.
"அன்று போர்புரி சேனை யின்பதி
யான வீரனைநீ
இன்று போய்இனி நாளை வாஎன
இனிதி யம்பினனால்
வென்றி கூர்வரி வின்மை யால்அடல்
வெவ்வ ரக்கரைமுன்
கொன்ற காளையை ஒத்த பேரிசை
கொண்ட ஆண்மையினான்"
என்று வில்லி, விசயனது பெருமையைப் போற்றிப் புகழ்ந்தார்.
இங்ஙனம் இம் மாநிலத்தில் அறநெறி மறநெறியோடு மாறுபடும்பொழுது இறுதியில் அறமே வெல்லும் என்பது ஒருதலை. "பொறுத்தார் பூமி யாள்வார்" என்னும் பொய்யாமொழிக்குக் கோசல நாட்டு வீரனும் குருகுலக் குரிசிலும் இணையற்ற சான்றாவர்..
"ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றும் துணையும் புகழ்" - திருவள்ளுவர்
---------
32. கர்ணனும் கும்பகர்ணனும்
தொன்று தொட்டுச் செய்ந்நன்றி யறிந்து ஒழுகு தலைச் சிறந்த அறமெனக் கடைப்பிடித்த நாடுகளில் தலைசிறந்தது தமிழ்நாடு. நன்றி மறப்பது நன்றன்று என்றும், நன்றல்லதை அன்றே மறப்பது நன்று என்றும் தமிழ் மறையாகிய திருக்குறள் கூறுகின்றது. இன்னும், காலத்தினாற் செய்த நன்மை சிறிதாயினும் அது ஞாலத்தின் மாணப் பெரிது என்றும், ஒருவன் துணை நன்மை செய்யினும் அதைப் பனைத்துணையாய்க் கொள்ளுதலே பண்புடைமையாகும் என்றும் அறநூல்கள் நன்றியின் பெருமையை நயம்படக் கூறுகின்றன.
"எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு"
என்று நாயனார் கூறிய அறிவுரையைப் பொன்போல் போற்றினர் தமிழ் மக்கள். இக் குறளில் அடங்கிய கருத்தை விரித்துரைக்கப்போந்த கம்பர்,
"சிதைவகல் காதல் தாயைத்
தந்தையை, குருவை, தெய்வப்
பதவிஅந் தணரை, ஆவைப்
பாலரைப் பாவை மாரை
வதைபுரி குநர்க்கும் உண்டாம்
மாற்றலா மாற்றல், மாயா
உதவிகொன் றார்க்கும்என் றேனும்
ஒழிக்கலாம் உபாய முண்டோ?"
என்று நன்றியின் பெருமையை நன்கெடுத்துரைத்தார். முன்னறி தெய்வமாய தாயையும் தந்தையையும், அறியாமையை அகற்றும் ஆசானையும்,அறம் திறம்பாத அந்தணரையும், பயன் உவந்தளிக்கும் பசுவையும், பாவம் ஒன்றறியாப் பாலரையும், மெல்லியல் வாய்ந்த மாதரையும் கொலை புரியும், கொடியருக்கும் அற நூல்களில் கழுவாய் உண்டு; ஆனால், செய்ந்நன்றி சிதைத்தோர்க்கும் எஞ்ஞான்றும் உய்யும் வழியில்லை என்று கம்பர் அருளிய பொருளுரை அறிந்து போற்றுதற்குரியதாகும். முந்தித் தவங் கிடந்து, முந்நூறு நாள் சுமந்து, அந்தி பகலாய் இறைவனை வந்தித்துப் பெற்றெடுத்த அன்னையைக் கொன்ற அரும்பாவமும் அகன்று விடலாம். 'தந்தை சொல் மிக்க மந்திரமில்லை' என்று தக்கோர் போற்றும் பெருமை வாய்ந்த பிதாவைக் கொன்ற பிழையும் தீர்ந்து விடலாம். இருமுது குரவர்க்கும் அடுத்த நிலையில் அமைந்து, அஞ்ஞான இருளகற்றும் ஆசிரியரைக் கொன்ற பாவமும் ஒழிந்து விடலாம். மண்ணுலகில் வாழும் எல்லா உயிர்களிடத்தும் செந்தண்மை பூண்டு நெறிமுறையில் ஒழுகும் அந்தணரைக் கொன்ற அரும் பாவமும் நீங்கிவிடலாம். மாநிலத்தில் வாழும் மக்கட்கெல்லாம் அறந்தரு நெஞ்சோடு அருள் சுரந்து அமுதளிக்கும் ஆவைக் கொன்ற பாவமும் அழிந்து விடலாம். இறைநலம் மாறாத இளம் பாலரையும் மெல்லியல் வாய்ந்த மாதரையும் கொன்ற கொடும் பாவமும் குறைந்து ஒழிந்துவிடலாம். ஆனால், செய்ந்நன்றி மறந்தோர் எக்காலத்தும் எவ்வாற்றானும் அப்பாவத்தினின்றும் தப்பிப் பிழைத்தல் இயலாததாகும் என்று வள்ளுவர் கருத்தைக் கம்பர் விரித்துரைத்தார். 'உப்பிட்டவரை உள்ளளவும் நினை' என்றும், 'உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தல் ஆகாது' என்றும், தமிழ்நாட்டில் வழங்கிவரும் பழமொழிகளே, இந் நல்லறம் இங்கு நெடுங்காலமாகப் போற்றப்பட்டு வருவதற்குப் போதிய சான்றாகும்.
செய்ந்நன்றி அறிதலென்னும் செம்மை சான்ற தொல்லறம் அங்கநாட்டு அரசனாய கர்ணனிடமும், இலங்கை நாட்டு வீரனான கும்பகர்ணனிடமும் தலைசிறந்து விளங்கிற்று. கர்ணன், கன்னியாயிருந்த குந்திதேவியின் மைந்தனாய்த் தோன்றினான். கன்னிப் பருவத்திலே பிறந்த மைந்தனையும், அவனை உயிர்த்த அன்னையாய தன்னையும் உலகோர் பழிப்பர் என்று உன்னி, அழகிய மைந்தனை ஒரு பேழையில் அடைத்து ஆற்றில் விட்டாள் அம் மங்கை. ஆதரவற்று ஆற்றில் மிதந்து வந்த மைந்தன், ஒரு தேர்ப்பாகனின் கையிற் சேர்ந்து, அவன் மனையில் வளர்பிறை போல் வளர்ந்து வந்தான். இளமையிலேயே வீரமும் அழகும் வாய்ந்து விளங்கிய கர்ணனைக் கண்ட துரியோதனன்,
"கற்றவர்க்கும் நலனிறைந்த
கன்னியர்க்கும் வண்மைகை
உற்றவர்க்கும் வீரரென்று
உயர்ந்தவர்க்கு வாழ்வுடைக்
கொற்றவர்க்கும் உண்மையான
கோதில்ஞான சரிதராம்
நற்றவர்க்கும் ஒன்றுசாதி
நன்மைதீமை இல்லையால்"
என்றபடி அவ் வீரனை ஆதரித்து வளர்த்து, அங்க நாட்டுக்கு அரசனாக்கி, அவனுடன் தோழமை கொண்டான்; தன் தம்பியரும் சுற்றமும் அவன் அடி வணங்குதற்குரிய தோற்றமும் ஏற்றமும் அளித்தான். அநாதையாக ஆற்றில் மிதந்து வந்த தன்னை அன்போடு எடுத்து வளர்த்து, அரசுரிமையும் அளித்து, அயலார் மதிக்குமாறு அரும் பதவியும் நல்கிய துரியோதனனைக் கர்ணன் அருமையாய்ப் போற்றினான்.
பாண்டவர்க்கும் கௌரவர்க்கும் கடும்போர் நிகழும் என்றறிந்த கண்ணன், அறநெறி துறந்த துரியோதனன் படையில் ஒப்புயர்வற்ற வீரனாக விளங்கிய கர்ணனை எளிதில் வெல்ல முடியாது என்பதை உணர்ந்தான்; ஆதலால், அவனை ஐவரோடும் சேர்க்க விரும்பினான்; அதன் பொருட்டுக் குந்தி தேவியைக் கர்ணனது மாளிகைக்கு அனுப்பினான். கர்ணனும் அப் பெருமாட்டியை அன்பினால் இன்புற வணங்கி ஆசனத்தமர்த்தினான். அப்போது குந்திதேவி தன் மைந்தனைக் குழைந்து நோக்கி, "ஐயனே, யானே உன்னை ஈன்ற தாய்; கதிரவன் அருளால் என்பால் நீ பிறந்தாய்; பழியஞ்சி உன்னைப் பேழையில் விடுத்தேன்" என்றுரைத்துப் பால்சோர நின்றாள். கர்ணனும் தன் அன்னை அவளே என்று ஐயமற அறிந்தான்.அந் நிலையில், வீர மைந்தனை அன்போடு அணைத்து, பொன்முடி மோந்து, "ஐயனே! உன்னை வளர்த்தெடுக்க நல்வினை செய்திலேன்; ஆயினும்,
"வருகஎன் மதலாய், இளைஞர் ஐவரும்நின்
மலரடி அன்பினால் வணங்கும்
உரிமையால் மனம்ஒத்து ஏவலேபுரிய
ஒருதனிச் செய்யகோ லோச்சி
அரசெலாம் வந்துன் கடைத்தலை வணங்க
ஆண்மையும் செல்வமும் விளங்கக்
குருகுலா திபர்க்கும் குரிசிலாய் வாழ்வு
கூர்வதே கடனெனக் குறித்தாள்."
'வருக, என் பிள்ளாய்; உன் தம்பியர் ஐவரும் அன்பினால் வணங்கி ஆட்செய்ய, நீயே அரசனாய் அமர்ந்து ஆண்மையும் செல்வமும் விளங்கச் செங்கோல் செலுத்துவாயாக' என்று மொழிந்தாள் குந்திதேவி.
"தாயிற் சிறந்தொரு கோயிலும் இல்லை" என்னும் அமுத வாக்கைக் கர்ணன் நன்கு அறிந்தவனே யாயினும், சுயோதனன் தனக்குச் செய்த பெரு நன்றியை மறந்து அன்னையின் உரைவழி நடக்க இசையா னாயினான்;
"திடம்படுத் திடுவேல் இராசரா சனுக்குச்
செருமுனைச் சென்றுசெஞ் சோற்றுக்
கடன்கழிப் பதுவே எனக்குஇனிப் புகழும்
கருமமும் தருமமும் என்றான்,"
"எனக்கு நன்றி செய்த துரியோதன மன்னனுக்காக அமர்க் களத்திற் சென்று போர் புரிவதே அறமும் புகழும் ஆகும். அவன் உணவை யுண்டு வாழ்ந்த யான், செஞ் சோற்றுக் கடன் கழியாது என் தம்பியருடன் சேரேன்" என்று கர்ணன் எடுத்துரைத்த வீர மொழிகளில் அவனது நன்றி மறவாத நலத்தினை நன்கு காணலாம். பாண்டவர் தன் தம்பியர் என்று கருதிப் பரிவு கொள்ளாது, தாயின் மொழியைப் போற்றுதலே தக்க தென்றும் எண்ணாது, செய்ந்நன்றியறிதலே செம்மை சான்ற அறம் எனத் துணிந்து, அவ்வற நெறியில் நின்று, அமர்க்களத்தில் ஆவி துறந்த கர்ணனது அருங்குணம் போற்றுதற்குரியதன்றோ?
இவ்வாறே இலங்கை வேந்தனுடைய தம்பியாய்த் தோன்றிய கும்பகர்ணன், வரத்திலும் வலிமையிலும் சிறந்து விளங்கினான். கூற்றையும் ஆடல் கொண்ட அவ் வீரன் அறநெறியை ஆதரிக்கும் நீர்மை வாய்ந்தவன்; அயோத்தி மன்னனுடைய மனையாளாய சீதையை இலங்கை நாதன் கவர்ந்து சிறை வைத்தது அடாத செயல் என்று அவனிடம் எடுத்துரைத்தான்; பிறன்மனை நயந்த தமையனது செயல் தவறு என்று இடித்துரைத்து அவனைத் திருத்த முயன்றான்; ஆயினும், தீராத மோகம் கொண்ட தமையனைத் திருத்துதல் இயலாதென்றறிந்த போது, அவனுக்குத் துணையாக அமர்புரிந்த ஆவி துறப்பதே ஏற்றதாகும் என்றெண்ணிப் போர்க்களம் புகுந்தான். கும்பகர்ணனு டைய நீர்மையையும் திறமையையும் அறிந்த இராமன் அவ்வீரனைத் தன்பால் இழுத்துக் கொள்ளுமாறு விபீஷணனை அனுப்பினான். அவனும் கும்பகர்ணனை அடைந்து, அடிபணிந்து, "ஐயனே! எனக்கு இன்னருள் சுரந்த இராமவீரன் உனக்கும் அபயமளிப்பான்; மாயப்பிறவி நோய்க்கும் மருந்தாக அமைவான். எனக்கு அவன் தந்த இலங்கை யரசும் செல்வமும் உனக்கு யான் தருவேன்; ஆதலால், தீவினை புரியும் தமையனைத் துறந்து அற நெறியாய இராமனைச் சேர்தலே அறிவுடைய உனக்கு அழகாகும்" என்று நீதியின் நேர்மையை எடுத்துரைத்தான்.
அது கேட்ட கும்பகர்ணன் மனம் வருந்திக் தம்பியை நோக்கி, "ஐய, நீரிற்குமிழிபோல் நிலையற்றதாகிய இவ்வுலக வாழ்வை விரும்பி, இராவணன் எனக்குச் செய்த பெரு நன்றியை மறப்பேனோ? நெடு நாளாக என்னை வளர்த்துப் போர்க்கோலம் செய்து, இங்கனுப்பிய இலங்கை நாதனுக்கு உயிர் கொடாது பகைவர் பக்கம் போவேனோ? இலங்கையின் பெருநிதியை விரும்பி என் தமையனது உயிரை வாங்கும் பகைவனைப் பணிந்து இரந்து பதவி பெற்று இருத்தல் எனக்கு ஏற்றதன்று. நீ சொல்லிய நீதி முறையனைத்தும் உனக்குத் தக்கதே" என்று வீரமொழி புகன்று, தம்பிக்கு விடைகொடுத்து அனுப்பினான். தன் தலைவன் தகாத செயல் செய்து நெடும் பகை தேடினான் என்று நன்றாய் அறிந்திருந்தும், இராம வீரனது இணையற்ற கணையால்தான் ஆவி துறப்பது திண்ணம் என்று தெரிந்திருந்தும், ஆவியையும் அளவிறந்த செல்வத்தையும் வெறுத்து, தமையன் பொருட்டு உயிர் துறந்த வீரனது மனநலம் வியந்து போற்றுதற்குரியதன்றோ? ஆகவே, கர்ணனும் கும்பகர்ணனும் செய்ந்நன்றியறிதலாகிய அறத்தை ஆவியினும் அருமையாக ஆதரித்த வீரர் என்பது இனிதுணரப்படும்.
----------
33. காளத்தி வேடனும் கங்கை வேடனும்*
(* நேமத்தான்பட்டி, திருநாவுக்கரசு வித்தியாசாலையின் பதின்மூன்றாவது ஆண்டு விழாவில் நிகழ்த்திய சொற்பொழிவின் சுருக்கம்.)
தமிழ்நாட்டுக் காளத்தி மலையிலே தோன்றினான் ஒரு வேடன். வடநாட்டுக் கங்கைக் கரையிலே பிறந்தான் மற்றொரு வேடன்.அவ் விருவராலும் வேடர் குலம் பெருமையுற்றது. காளத்தி வேடனைக் கண்ணப்பன் என்றும், கங்கை வேடனைக் குகன் என்றும் இலக்கிய உலகம் போற்றும், இருவரும் உயரிய அன்பு நெறியைக் கடைப்பிடித்து அழியாப் புகழ் பெற்றனர்.
காளத்திநாதன்பால் வைத்த அன்பினால் தன் கண்ணையும் பெயர்த்தெடுத்த கண்ணப்பன் பெருமை தமிழ் நாடெங்கும் பரவி நின்றது. எல்லையற்ற அன்பிற்கு அவ்வேடர் பெருமானே எடுத்துக்காட்டாயினார்.
"கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்
என்னப்பன் என்னொப்பில் என்னையும்ஆட் கொண்டருளி
வண்ணப்ப ணித்தென்னை வாவென்ற வான்கருணைச்
கண்ணப்பொன் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ"
என்று வண்டை நோக்கிப் பாடும் பான்மையில் கண்ணப்பனது எல்லையற்ற அன்பின் திறத்தினை மாணிக்க வாசகர் நன்கு விளக்கியுள்ளார். திருவாசகத்திலும் தேவாரத் திருப்பாசுரங்களிலும் கண்ணப்பன்
பெருமை பேசப்படுதலால் சைவ சமயத்தை நிலைநிறுத்திய நால்வருக்கும் அவன் முந்தியவன் என்பது நன்கு விளங்குகின்றது. காளத்திநாதனை வணங்கிய திருஞானசம்பந்தர் கும்பிட்ட பயன் காண்பார்போல் வேடர் பெருமானாகிய கண்ணப்பனைக் கைதொழுதாரென்று சேக்கிழார் அழகாக எழுதிப் போந்தார்.
கவிக்கு நாயகராகிய கம்பர் இராம கதையை வடமொழிக் காவியத்தினின்றும் எடுத்துக்கொண்டாரேனும் அதமைத் தமிழ் நாட்டாருக்கு ஏற்ற முறையில் ஒதுக்கி இனியதொரு விருந்தாக அளித்துள்ளார். இராமனிடம் அன்பு பூண்ட கங்கை வேடனை உருவாக்கும் பொழுது, கம்பர் உள்ளத்தில் காளத்தி வேடன் வடிவம் கனிந்து இலங்கிற்று.காளத்தி வேடனைக் கருவாகக் கொண்டு கங்கை வேடனாய குகனை அவர் வார்த்து வடித்துள்ளாரென்று தோற்றுகின்றது. இதற்கு இரண்டொரு சான்றுகள் காட்டுவேன்:
கோசல நாட்டு இளவரசனாகிய இராமன், தாயின் சொல்லைத் தலைக்கொண்டு, தனக்குரிய நாடு துறந்து, கங்கைக் கரையை வந்தடைந்தான் என்று அறிந்த குகன் அக் குரிசிலைக் காணப் புறப்பட்டான். வான்மிக எழுதிய வடமொழிக் காவியத்தில் குகன் இராமனைக் காணப் புறப்படும் கோலம், ஓர் அரசன் மற்றோர் அரசனைக் காண எழுகின்ற தன்மையில் அமைந்திருக்கின்றது. ஆனால் கம்பர், ஆண்டவனைக் காணச் செல்லும் அடியவனாகக் குகன் கோலத்தைத் திருத்தியமைத்துள்ளார்.
"தேவா நின்கழல் சேவிக்க வந்தனன்
நாவாய் வேட்டுவன் நாயடியேன்"
என்று குகனே கூறுதலால் இவ்வுண்மை விளங்கும்.
காளத்தி வேடன் தனக்கினிய இறைச்சியே தன் தலைவனாகிய இறைவனுக்கு இனியதாகும் என்று எண்ணி, அதனை எடுத்து ஊட்டியவாறே, குகன் தனக்கினிய கங்கையாற்று மீனையும் கொம்புத் தேனையும் எடுத்துக்கொண்டு சென்றான். அவ் விரண்டையும் இராமன் திருமுன்பு வைத்து, "ஐயனே! தேனும் மீனும் திருத்திக் கொணர்ந்தேன். தேவரீர் திருவமுது செய்தருளல் வேண்டும்" என்று இறைஞ்சி நின்றான். அச் செயல் நிகழும்போது இராமனுடன் விருத்த மாதர் சிலர் உரையாடிக்கொண்டிருந்தனர். அவர்கள் குகனது மனப்பான்மையை அறியாதவராய், தகாத பொருள்களை வேடன் எடுத்துவந்து அபசாரம் செய்துவிட்டான் என்றெண்ணி வெறித்து நோக்கினர். அவர்கள் மனத்தில் நிகழ்ந்த கருத்தினை அறிந்த இராமன்,
"அரியதாம் உவப்ப உள்ளத்து
அன்பினால் அமைந்த காதல்
தெரிதரக் கொணர்ந்த என்றால்
அமுதினும் சீர்த்த வன்றே"
என்று விருத்த மாதரைத் தெருட்டி யருளினான். இதற்கு நேரான செயல் கண்ணப்பன் சரித்திரத்தில் உண்டு. கண்ணப்பனுக்கு இனிய காளத்தி நாதனைச் சிவ கோசரியார் என்னும் வேதியர் முறைப்படி பூசனை செய்து வந்தார்; கண்ணப்பன் இறைச்சியைக் கொண்டு திருக் கோயிலில் இட்டதைக் கண்டு செய்வ தொன்றறியாது கவலை கொண்டிருந்தார். அதை உணர்ந்த இறைவன் அவர் கனவிலே தோன்றி,
"அவனுடைய வடிவெல்லாம் நம்பக்கம் அன்பென்றும்
அவனுடைய அறிவெல்லாம் நமையறியும் அறிவென்றும்
அவனுடைய செயலெல்லாம் நமக்கினிய வாமென்றும்
அவனுடைய நிலையிவ்வா றறிநீயென் றருள்செய்வார்"
இது சேக்கிழார் பெருமான் திருவாக்கு.
காளத்திநாதன்பால் அன்பு பூண்ட கண்ணப்பனைப் போலவே குகனும் இராமனைப் பிரிந்திருக்கலாற்றாத மனப்பான்மை பெற்றான். அந்தி மாலை வந்தடைந்த பொழுது இராமன் குகனை நோக்கி, "அப்பா! இன்றிரவு உன் ஊருக்குச் சென்று, நாளைக் காலையில் கங்கையாற்றைக் கடப்பதற்குப் படகுகள் கொண்டுவருக" என்று சொல்லிய பொழுது, குகனுடைய மனம் அனலிடைப்பட்ட மெழுகு போல் உருகுவதாயிற்று. 'என் ஐயன், என் ஆண்டவன், என்னைப் போ என்றானே! அவனை விட்டு நான் எவ்வாறு போவேன்? அவனுடனிருத்தலே எனக்குப் பேரின்பம். அவனைப் பிரிந்திருத்தல் 'பெருந்துன்பம்' என்று எண்ணி, இராமனை நோக்கி, "ஐயனே! நான் போகலாற்றேன்; ஈண்டிருந்து என்னால் இயன்ற தொண்டு செய்வேன்" என்றான்.
"கார்குலாம் நிறத்தான் கூறக்
காதலன் உணர்த்து வான்இப்
பார்குலாம் செல்வ நின்னை
இங்ஙனம் பார்த்த கண்ணை
ஈர்கிலாக் கள்வ னேன்யான்
இன்னலின் இருக்கை நோக்கித்
தீர்கிலேன் ஆன தைய
செய்குவன் அடிமை என்றான்"
என்று குகன் பெருமையை அறிவிக்கும் கம்பர் பாட்டு மிக்க அழகு வாய்ந்ததாகும்.
"என் பெருமானே! அயோத்தி மாநகரில் அரியாசனத்தில் மன்னர் மன்னனாய் மணிமுடி தரித்துச் செங்கோலேந்தி அரசாளும் கோலத்தில் காண வேண்டிய உன்னைச் சடைமுடியும் மரவுரியும் தரித்துக் கானகப் புல்லில் அமர்ந்திருக்கக் கண்டேனே! என் கண் செய்த பாவம் கடலினும் பெரிதன்றோ? இந்தக் கோலத்தில் உன்னைக் கண்ட என் கண்களைப் பறித்தெறியாத பாவியேன் நான். ஆயினும், ஐயனே! உன்னை விட்டுப் போக என்னால் இயாலாது; என்னா லியன்ற சிறுதொண்டு செய்துகொண்டு ஈண்டுத்தான் இருப்பேன்" என்று மனங்கசிந்து பேசினான். கங்கை வேடன் பேசிய வாசகத்தின் சுவையை அறிந்த இராமன்,
"சீதையை நோக்கித் தம்பி
திருமுகம் நோக்கித் தீராக்
காதலன் ஆகும் என்று
கருணையின் மலர்ந்த கண்ணன்
யாதினும் இனிய நண்ப
இருத்திஈண்டு எம்மோ டென்றான்"
"யாதினும் இனிய நண்ப" என்று அழைத்தமையால், குகன் இராமனுக்குப் பொன்னினும் இனியன் ஆனான்; புகழினும் இனியன் ஆனான்; மற்றெதனினும் இனியன் ஆனான் என்பது வெளிப்படையாக விளங்குகின்றது. இங்ஙனம் ஆட்கொள்ளப்பட்ட குகன் அகமும் முகமும் மலர்ந்தான். அன்றிரவு நாணற் பாயலில் இராமனும் சீதையும் படுத்துறங்க, இலக்குவன் வில்லை யூன்றிய கையோடு அவ்விருவரையும் காத்து நிற்க, அன்பு வடிவாய குகன், முறையாக மூவரையும் காத்து நின்றான். இரவு முழுவதும் கண்ணிமையாது காவல் செய்த குகன், இன்பப் பணியிலே ஈடுபட்டான். காளத்தி நாதனை இராப்பொழுதில் கண்ணிமையாது காத்துநின்ற கண்ணப்பனைப் போலவே இராமனைக் காத்து நின்றான் குகனும்.
இன்னும் காளத்தி வேடனது அன்பிற்கும் கங்கை வேடனது அன்பிற்கும் ஒரு சிறந்த ஒற்றுமையுண்டு. இருவரும் இறைவனிடம் பயன் கருதாப் பக்தி பூண்டவர்கள்; 'கூடும் அன்பினில் கும்பிடுதல் தம் கடன்' என்று கொண்டவர்கள், இத்தகைய பக்தியே சாலச் சிறந்தது என்று சான்றோர் கூறுவர். இராமன் நாடு துறந்து காடு புகுந்த பின்னர், அவன்பால் அன்பு கொண்டவர் மூவர். கங்கைக் கரையிலே குகன் இராமனைச் சேர்ந்தான்; கிஷ்கிந்தையில் சுக்ரீவன் வந்து சேர்ந்தான்; இலங்கையில் விபீஷணன் வந்து அடைந்தான். தன்னை வந்தடைந்த மூவரையும் தன்னுடைய குடும்பத்திலே சேர்த்துக்கொண்டான் இராமன். எனினும், சுக்ரீவன் இராமனிடம் அன்பு பூண்டதற்குக் கைமாறாகக் கிஷ்கிந்தை அரசைப் பெற்றான். விபீஷணன் இராமனைச் சரணடைந்து இலங்கையரசைப் பெற்றான். குகன் ஒருவனே பக்திக்காக பக்தி செய்து கைம்மாறு கருதாத அன்பின் நீர்மையை நன்கு விளக்கிக் காட்டினான்.
இவ்வாறு கனிந்த அன்பு வாய்ந்த காளத்தி வேடனையும், கங்கை வேடனையும் குறிக்கோளாகக் கொண்டு இறைவனை நினைந்துருகிய அன்பர் நிலையும் அறியத் தக்கதாகும். அன்பைப் பெருக்கி இன்பப் பேறடையக் கருதிய ஆன்றோர் இவ்விரு அடியாரது அன்பின் பெருமையை நினைந்து, "எற்றே இவர்க்கு நாம்" என்று உள்ளம் உருகினர்.
முற்றத் துறந்த பட்டினத்தடிகள் என்று தமிழகம் போற்றிப் புகழும் பெரியார் கண்ணப்பனது அருஞ்செயலை நினைந்து கரைந்து உருகுவாராயினர். காளத்தி மலையிலமர்ந்த ஈசனுக்கு ஆளாகக் கருதிய அடிகள்,
"வாளால் மகவரிந்து ஊட்டவல் லேனல்லன் மாதுசொன்ன
சூளால் இளமை துறக்கவல் லேன்அல்லன் தொண்டுசெய்து
நாளாறில் கண்ணிடந்து அப்பவல் லேனல்லன் நான்இனிச்சென்று
ஆளாவ தெப்படி யோதிருக் காளத்தி அப்பருக்கே"
என்று அகம் குழைந்தார். "ஐயோ! பெற்ற பிள்ளையை வாளாலரிந்து இறைவனுக்கு இன்னமுதூட்ட வல்லேனா? திருநீலகண்டன் மேல் மனையாள் வைத்த ஆணை கடவாது இளமையிலேயே ஐம்பொறிகளையும் வென்று, இன்பம் துறக்க வல்லேனா? ஆறு நாள் பழகிய பான்மையில் ஆராத அன்பு வாய்ந்து, கண்ணைப் பறித்து, இறைவன் கண்களில் அப்ப வல்லேனா? இத் தகைய பொக்கனாகிய யானும், மெய்யடியார்போல் நடித்து, வீடகத்தே புகுந்திட விழைகின்றேன்" என்று உள்ளத் துறவமைந்த உயரிய அடிகள் உருகுவாராயினர். கடந்தோர்க்கும் கடத்தலரியதாய மக்கட் பாசம் நீத்த ஒரு தொண்டர். பெரிய சிறுத்தொண்டராய்ப் பேறு பெற்றார். மனையாள்மீது வைத்த பாசம் துறந்த மற்றொரு தொண்டர் இறைவனது அன்பிற்குரியராயினர். கண்ணிற் சிறந்த உறுப்பில்லை என்றறிந்தும் ஈசன்பால் வைத்த அன்பினால், இரு கண்களையும் ஈர்த்தளிக்க இசைந்த ஒரு தொண்டர் மாறிலா இன்பத்தில் மகிழ்ந்தார். இவ்வாறு அகம் புறமென்னும் இருவகைப் பற்றையும் அறவே களைந்து, இறைவன்பால் அன்பை வளர்த்த அடியாரது நிலையை நினைந்து பட்டினத்தடிகள் உருகும் பான்மை அறிந்து போற்றத் தக்கதாகும்.
காளத்தி வேடனைக் குறிக்கோளாகக் கொண்டு அடிகள் கரைந்துருகியவாறே, கங்கைவேடனை இலக்காகக் கொண்டு, வானர வேந்தனான சுக்ரீவன் வாடி வருந்தினான். இருமையும் தரும் பெருமானாகிய இராமனிடம் எப் பயனையும் கருதாது விழுமிய அன்பு பூண்ட வேடனது பெருமையையும் தனது சிறுமையையும் நினைத்துச் சுக்ரீவன் சிந்தை தளர்ந்தான். வானர சேனை இலங்கை மாநகர்ப்புறம் எய்தியபோது, அப்படையின் திறன் அறியுமாறு தன் நகரில் நின்று நோக்கிய இலங்கை வேந்தனைக் கண்டான் வானர மன்னன். அவன் உள்ளத்தில் சீற்றம் பொங்கி எழுந்தது; பஞ்சின் மெல்லடிப் பாவையாகிய சீதையை வஞ்சனையாற் கவர்ந்து, சிறை வைத்த அரக்கர் கோனைக் கொன்று பழி தீர்க்கக் கருதி, அவன்மீது பாய்ந்தான். வீரராகிய இருவரும் நெடும்பொழுது கடும்போர் விளைத்தார்கள். இலங்கைநாதனது அளவிறந்த வலிமையை அறிந்த வானரத் தலைவன் அவனை வெல்ல இயாலாது, அவன் தலை மீதிருந்த மணிமுடியைக் கவர்ந்து, மீண்டும் இராமனது பாசறையை வந்தடைந்தான். காலனுக்கும் காலனா யமைந்த அரக்கன் கையினின்றும் தப்பி வந்த வானர வீரனைக் கண்டு இராமன் களிகூர்ந்தான். அந் நிலையில் அன்பினால் அகங்குழைந்த வானர மன்னன், ஐயனை நோக்கி,
"காட்டிலே கழுகின் வேந்தன்
செய்தது காட்ட மாட்டேன்
நாட்டிலே குகனார் செய்த
நன்மையை நயக்க மாட்டேன்
கேட்டிலேன் அல்லேன் இன்று
கண்டும்அக் கிளியன் னாளை
மீட்டிலேன் தலைகள் பத்தும்
கொணர்ந்திலேன் வெறுங்கை வந்தேன்"
என்றும் மனம் வருந்தி மொழிந்தான். "அந்தோ! காட்டில் வாழும் கழுகின் வேந்தனும், நாட்டில் வாழும் நல்வேடனும் காட்டிய அன்பை நான் காட்ட இயலாதவனாயினேன். இலங்கை மாநகரில் சிறை யிருந்த சோகத்தாளாய நங்கையை இங்கே கொண்டுவர வலியற்று வெறுமையாகக் கண்டு வந்தேனே; நல்லார்க்கு இடர் விளைக்கும் அரக்கனை எதிர்த்தும், அவன் சிரங்களைக் கொய்து கொணராது வெறுங்கையனாய் வந்தேனே" என்று வானர மன்னன் வருந்தினான்.
காட்டிலே கழுகின் வேந்தன் ஆற்றிய கடமையையும் நாட்டிலே கங்கை வேடன் ஆற்றிய நன்மையையும் அறிவோமாயின், வானர வீரனது சொல்லின் பொருள் அளவிறந்த வலிமையை அறிந்த வானரத் தலைவன் அவனை வெல்ல இயாலாது, அவன் தலை மீதிருந்த மணிமுடியைக் கவர்ந்து, மீண்டும் இராமனது பாசறையை வந்தடைந்தான். காலனுக்கும் காலனா யமைந்த அரக்கன் கையினின்றும் தப்பி வந்த வானர வீரனைக் கண்டு இராமன் களிகூர்ந்தான். அந் நிலையில் அன்பினால் அகங்குழைந்த வானர மன்னன், ஐயனை நோக்கி,
"காட்டிலே கழுகின் வேந்தன்
செய்தது காட்ட மாட்டேன்
நாட்டிலே குகனார் செய்த
நன்மையை நயக்க மாட்டேன்
கேட்டிலேன் அல்லேன் இன்று
கண்டும்அக் கிளியன் னாளை
மீட்டிலேன் தலைகள் பத்தும்
கொணர்ந்திலேன் வெறுங்கை வந்தேன்"
என்றும் மனம் வருந்தி மொழிந்தான். "அந்தோ! காட்டில் வாழும் கழுகின் வேந்தனும், நாட்டில் வாழும் நல்வேடனும் காட்டிய அன்பை நான் காட்ட இயலாதவனாயினேன். இலங்கை மாநகரில் சிறை யிருந்த சோகத்தாளாய நங்கையை இங்கே கொண்டுவர வலியற்று வெறுமையாகக் கண்டு வந்தேனே; நல்லார்க்கு இடர் விளைக்கும் அரக்கனை எதிர்த்தும், அவன் சிரங்களைக் கொய்து கொணராது வெறுங்கையனாய் வந்தேனே" என்று வானர மன்னன் வருந்தினான்.
காட்டிலே கழுகின் வேந்தன் ஆற்றிய கடமையையும் நாட்டிலே கங்கை வேடன் ஆற்றிய நன்மையையும் அறிவோமாயின், வானர வீரனது சொல்லின் பொருள்
இனிது விளங்கும். கானகத்தில் தனியாளாய் இருந்த தையலை இலங்கை வேந்தன் வஞ்சனையாற் கவர்ந்த மனோ வேகமாகச் செல்லும்பொழுது, ஆதரவற்று அரற்றிய மங்கையின் அழுகுரல் கேட்டுக் கழுகின் காவலன் காற்றினுங் கடுகி வந்தான்; அறநெறி தவறிய அரக்கனுடன் நெடும் பொழுது கடும் போர் புரிந்து ஆவி துறந்தான். இவ்வாறு ஆதரவற்ற சீதைக்காக அறப்போர் புரிந்து ஆவி நீத்த கழுகின் வேந்தன், "தெய்வ மரணம்" எய்தினான் என்று இராமன் போற்றிப் புகழ்ந்தான். " தன்னுயிர் புகழ்க்கு விற்ற சடாயு" என்று சொல்லின் செல்வனாய அனுமன் புகழ்ந்துரைத்தான். அரன் அளித்த வாளுடையானை வெறும் அலகுடையான் வெல்லுதல் இயலாதென்றறிந்தும், அறநெறி திறம்பிய அரக்கனோடு பொருது ஆவி துறத்தலே தன் கடமை என்று அறிந்து, கழுகின் வேந்தன் உயிர் கொடுத்துப் புகழ் கொண்டான். இவ்வாறு இராமனது சேவையில் அமர் புரிந்து இறக்கவும் ஒருப்படாத தனது குறையை நினைந்து வானர வீரன் வருந்தினான்.
இனி கங்கைக் கரையின் காவலனாகிய குகன், பரதனது பரந்த சேனையைக் கண்டபோது, அவன் இராமனை வெல்லக் கருதி வந்தான் என்று எண்ணித் தன்னுயிரையும் ஒரு பொருளாகக் கருதாது போர்க் கோலம் புனைந்து,
"ஆழ நெடுந்திரை யாறு கடந்திவர் போவாரோ
வேழ நெடும்படை கண்டு விலங்கிடு வில்லாளோ
தோழமை என்றவர் சொல்லிய சொல்லொரு சொல்லன்றோ
ஏழமை வேடன் இறந்திலன் என்றெனை ஏசாரோ"
என்று வீரமொழி பகர்ந்து தன் தோழனுக்காக உயிரையும் கொடுக்க இசைந்து நின்றான். "என் காவலில் அமைந்த கங்கை யாற்றைக் கடந்து இவர் போவாரோ? தோழன் என்ற நாயகன் உரைத்த சொல் ஒரு சொல்லன்றோ? நன்றி மறவாத நாய்போல், தலைவனது ஆணைக்கடங்கிக் காவல் புரியும் ஏழையேன், அமர்க்களத்தில் இறந்த பின்னன்றோ, பரதன் இராமனைப் பார்க்க வேண்டும்" என்று குகன் கூறிய மொழிகளில் தலையாய அன்பு தழைத் திலங்கக் காணலாம். இவ்வாறு குகனைப் போல் உயிர் கொடுக்கத் துணியவும் இயலாத தனது சிறுமையை நினைத்துச் சுக்ரீவன் வருந்தினான்.
ஆகவே, காளத்தி வேடனும் கங்கை வேடனும் அன்பு நெறியில், ஒப்பாரின்றி உயர்வுற்று ஏனைய அன்பர்க்கு ஒரு கலங்கரை விளக்கமாக அமைந்திலங்கும் தன்மை இனிது விளங்கும்.
---------
34. பாரதப் பண்பாடு*
(* ஆனந்த விகடன் தீபாவளி மலருக்கு எழுதப்பட்டது.)
பழம் பெருமை வாய்ந்தது பாரதநாடு. வடக்கே இமயமலை முதல் தெற்கே குமரி முனை வரையுள்ள இமப் பரந்த நாட்டிலே மொழிகள் பல உண்டு. மதங்கள் பல உண்டு; இனங்கள் பல உண்டு. ஆயினும் பாரதப் பண்பாடு ஒன்றே.
இத் தகைய பண்பாட்டின் ஒருமைப்பாட்டை உணர்த்துகின்றது தமிழிலக்கியம். பாரத நாட்டிலுள்ள வடமொழிக்கும் தென்மொழிக்கும் எந்நாளும் பிணக்க மில்லை. இரு மொழிகளும் இறைவன் அருளால் தோன்றின; ஆன்றோர் சேவையால் சிறந்தன; இம்மை இன்பமும் மறுமையின்பமும் தருவன ஆதலால், "இரு மொழியும் நிகர் என்னும் இதற்கு ஐயமுளதேயோ" என்று பாடினார் வடநூற் கடலையும், தென்னூற் கடலையும் நிலைகண்டு உணர்ந்த சிவஞான முனிவர்.
வட நாட்டிலும் தென்னாட்டிலும் மதுரை என்னும் பெயருடைய திருநகரம் உண்டு. வடமதுரையில் அவதரித்தார் கண்ணபிரான்; தென் மதுரையில் புகழ் பெற்றார் திருவள்ளுவர். கண்ணன் அருளிய கீதையும், வள்ளுவர் இயற்றிய குறளும், உலகம் போற்றும் உயரிய ஞான நூல்கள். 'இவ் விரண்டையும் அச்சாக உடையது பாரத ஞானரதம்' என்னும் கருத்தை அமைத்துப் பாடினார் ஒரு பழங் கவிஞர்.
"உப்பக்கம் நோக்கி உபகேசி தோள்மணந்தான்
உத்தர மாமதுரைக்(கு) அச்சென்ப - இப்பக்கம்
மாதானு பங்கி மறுவில் புலச்செந்நாப்
போதார் புனற்கூடற்(கு) அச்சு"
என்பது நல்கூர் வேள்வியார் பகர்ந்த நல்லுரை.
முன்னாளில் பாடலிபுத்திரம் என்னும் பெயருடைய இரு நகரங்கள் பாரத நாட்டில் சிறந்து விளங்கின; அவற்றுள் ஒன்று வடக்கே கங்கைக் கரையில் இருந்தது; மற்றொன்று தெற்கே கெடில நதிக் கரையில் இருந்தது. அசோக மன்னன் காலத்திலே சிறந்து விளங்கிற்று வட நாட்டுப் பாடலிபுத்திரம். பல்லவ மன்னர் காலத்தில் புகழ் பெற்றுத் திகழ்ந்தது தென்னாட்டுப் பாடலிபுத்திரம். இப் பாடலி நகரங்கள் இரண்டும் கலைக் களஞ்சியங்களாகக் காட்சியளித்தன.
தமிழ் நாட்டுப் பாடலிபுத்திர நகரில் அமைந்த சமணக் கல்லூரியின் பெருமையைக் கேள்வியுற்றார் திருநாவுக்கரசர். கலைஞானக் கோயிலாய் விளங்கிய அக் கல்லூரியை நாடிற்று அவருள்ளம். அப்போது அவருக்குத் தந்தையுமில்லை, தாயுமில்லை; தமக்கையார் ஒருவரே இருந்தார். அவரிடம் விடைபெற்றுப் பாடலிக் கல்லூரியிற் சேர்ந்தார் திருநாவுக்கரசர். அவருடைய கலையார்வமும் மதி நுட்பமும் சமணப் பேராசிரியர்களின் உள்ளத்தைக் கவர்ந்தன. கலை பயின்ற மாணவரின் இளமையுள்ளம் சமண சமயத்தில் கவிழ்ந்தது. அது கண்டு மகிழ்ந்த சமண முனிவர்கள் அவரைச் சமண மதத்திலே சேர்த்தார்கள்; தரும சேனர் என்ற பெயரையும் சூட்டினார்கள்.
"அங்கவரும் அமண்சமயத் தருங்கலைநூ லானதெலாம்
பொங்கும்உணர் வுறப்பயின்றே அந்நெறியில் புலன்சிறப்பத்
துங்கமறும் உடற்சமணர் சூழ்ந்துமகிழ் வார்அவர்க்குத்
தங்களின்மே லாம்தரும சேனர்எனும் பெயர்கொடுத்தார்"
என்று அவர் வரலாறு கூறுகின்றது. இவ்வாறு சமண சமயத்தில் சிறப்புற்றிருந்த அறிஞர் அவருடைய தமக்கையார் அருளால் மீண்டும் சிவநெறியை மேற் கொண்டு செந்தமிழ்ப் பாட்டிசைத்துச் செம்மையான தொண்டு புரிந்த செய்தியைத் திருத்தொண்டர் புராணத்திற் காணலாம்.
இத் தகைய சீர்மை வாய்ந்த பாடலி நகரங்கள் இக் காலத்தில் வேறு பெயர் பெற்றுள்ளன. வட நாட்டுப் பாடலிபுத்திரம் பாட்னா (patna) என்றும், தென்னாட்டுப் பாடலிபுத்திரம் திருப்பாதிரிப்புலியூர் என்றும் இப்போது வழங்குகின்றன. பாடலி என்ற வடசொல்லுக்கும், பாதிரி என்ற தென் சொல்லுக்கும் பொருள் ஒன்றே. திருப்பாதிரிப்புலியூரில் கோயில் கொண்டுள்ள ஈசன் பாடலீசுரர் என்றே இன்றும் அழைக்கப பெறுகின்றார்.
பாரத நாட்டுப் புண்ணியத் தலங்களுள் காசி என்னும் வாரணாசியும், இராமேச்சுரமும் தலைசிறந்தன என்பது தக்கோர் கொள்கை. இந்திய நாட்டுத் தென்கோடியில் உள்ள இராமேச்சுரத்தை நாடி வருவர் வடநாட்டார். காசியிலுள்ள விசுவநாதரை வழிபடச் செல்வர் தென்னாட்டார். வடகாசியின் வாசியறிந்த தமிழ் மக்கள் தம் நாட்டிலும் ஒரு காசியை உண்டாக்கினர். தென்காசி என்பது அதன் பெயர். பராக்கிரம பாண்டியன் என்ற அரசன் "தென்காசி கண்ட பெருமாள்" என்று சாசனங்களிலே பேசப்படுதலால் அவனே தென்காசியை உருவாக்கி, அங்கு விசுவநாதருக்கு ஒரு திருக்கோயிலும் கட்டினான் என்று கொள்ளலாம்.
"ஓங்கு நிலைஒன்ப துற்றதிருக் கோபுரமும்
பாங்குபதி னொன்று பயிறூணும் - தேங்குபுகழ்
மன்னர் பெருமான் வழுதிகண்ட தென்காசி
தன்னிலன்றி உண்டோ தலத்து"
என்று பராக்கிரம பாண்டியன் செய்த திருப்பணியின் செம்மையைப் பாராட்டுகின்றது ஒரு சாசனப்பாட்டு.
நதிகள் ஒன்று கூடும் துறைகளைப் புனிதமான இடங்களாகக் கருதிப் போற்றுதல் பாரத நாட்டுப்பண்பு. கங்கையும் யமுனையும் சரஸ்வதியும் கூடும் இடம் திரிவேணி சங்கமம் என்று வடநாட்டில் அழைக்கப்படுகின்றது. தமிழ்நாட்டில் புண்ணிய திகள் கூடு மிடங்கள் பல உள்ளன. அத் தகைய இடங்களை முக்கூடல் என்று வழங்குவர் தமிழ் மக்கள். தென்பாண்டி நாட்டில் பொருநையாறும் சிற்றாறும் கயத்தாறும் ஒன்றுசேர்கின்ற இடம் முக்கூடல் என்னும் பெயர் கொண்டு முற்காலத்தில் சிறந்திருந்தது. இந் நாளில் அந்த இடம் சீவலப்பேரி என்று வழங்குகின்றது. காஞ்சி மாநகரத்திற்கு அருகே பாலாறும், சேயாறும், கம்பையாறும் சேர்கின்ற இடம் திருமுக்கூடல் என்னும் பெயர் பெற்றுள்ளது. திரிவேணி சங்கமம் என்றாலும் முக்கூடல் என்றாலும் பொருள் ஒன்றே.
ஐந்து ஆறுகள் பாயும் வள நாட்டிற்குப் 'பஞ்சாப்' என்று பெயரிட்டனர் வடநாட்டார். தென்னாட்டில் அத் தகைய நாடு ஐயாறு என்று அழைக்கப் பெற்றது. திருவையாறு என்பது இப்போது ஓர் ஊரின் பெயராக அமைந்துள்ளது. பஞ்சநதம் என்பதும் அதுவே.
எல்லாம் வல்ல இறைவனை வைத்தியநாதன் என்னும் பெயரால் வழிபடும் வழக்கம் வடநாட்டிலும் உண்டு; தென்னாட்டிலும் உண்டு. சிதம்பரத்திற்கு அருகே வைத்தீஸ்வரன் கோயில் என்ற சிவஸ்தலம் இருக்கின்றது. அங்குள்ள ஈசன் "மந்திரமும் தந்திரமும் மருந்துமாகித் தீராநோய் தீர்த்தருள வல்லான்" என்று பாடினார் திருநாவுக்கரசர்.
வடநாட்டிலும் வைத்தியநாதன் கோயில் ஒன்று உண்டு. அதனை இந் நாளில் உலகறியச் செய்து விட்டனர். அங்குள்ள பண்டாக்கள். சில நாட்களுக்கு முன்பு தாழ்ந்த குல மக்கள் என்று கருதப்படும் அரிஜன அடியார்களோடு வைத்திய நாதனை (பைத்திய நாதன் என்பது வடநாட்டு வழக்கு.) வழிபடச் சென்றார் விநோபா அடிகள். அடிகளையும் அடியாரையும் தடியால் அடித்துத் துன்புறுத்தினர் கோயிற் பண்டாக்கள். அவர்கள் செய்த சிறுமையால் இன்று வைத்தியநாதன் கோவிலை உலகம் அறிந்து கொண்டது.
இங்ஙனம் பல்லாற்றாலும் ஒருமையுற்று விளங்கும் பாரதப் பண்பாட்டை ஒல்லும் வகையால் பேணி வளர்த்தல் நல்லறிஞர் கடனாகும்.
----------
35. இரு மலையும் தமிழ் மலையே
தெற்குமலைச் சாரலில் வசந்த காலத் தென்றல் இனிமையாகத் தவழ்ந்தது. அவ் வின்பத்தை நுகர்ந்த குன்றக் குறவர் வேட்டையாட எழுந்தனர். குற்றாலத்திலும் பொதிய மலையிலும் வாழ்ந்த குறவஞ்சியர் இருவர் குறி சொல்லிப் பிழைப்பதற்காக மதுரையை நோக்கிப் நடந்தனர். இளங்காற்று வீசிய திருநெல்வேலிச் சாலையில் ஒருவரை ஒருவர் கண்டு மகிழ்ந்தனர் அவ் வஞ்சியர்.
'விண்ணானக் குறத்தி' என்று பெயர் பெற்றிருந்த குற்றாலக் குறவஞ்சி தன் மலையின் பெருமையை விளம்பத் தொடங்கினாள். 'ஏ! பொதிய மலையம்மே! என் மலையின் பெருமையைக் கொஞ்சம் கேள்! அழகான அருவி உடையது என் மலையே! சஞ்சீவி முதலான மூலிகை வளரும் மலை என் மலையே! சித்தரும் முனிவரும் எப்பொழுதும் வாழும் மலை என் மலையே! இதனாலேதான் 'கயிலைக்கு ஒப்பானது குற்றாலம்' என்று கவிகள் பாடியுள்ளார் என்று சொல்லிப் பாடத் தொடங்கினாள்:
"தேனருவித் திரையெழும்பி வானின்வழி ஒழுகும்
செங்கதிரோன் தேர்க்காலும் பரிக்காலும் வழுகும்
தவமுனிவர் கூட்டுறவும் அவர்இருக்கும் குகையும்
சஞ்சீவி முதலான விஞ்சைமூ லிகையும்
கவனசித்தர் ஆதியரும் மவுனயோ கியரும்
கத்திருக்கும் கயிலாயம் ஒத்திருக்கும் அம்மே"
என்று பெருமிதமாகப் பாடி முடித்தாள். அப்போது பொதியமலைக் குறவஞ்சியின் மனத்தில் புதியதொரு கிளர்ச்சிப் பிறந்தது. திருக்குற்றாலக் குறமாதை நோக்கி, "வஞ்சியே! என் மலையின் பெருமையை மறைத்து, உன் மலையின் பெருமையை உயர்த்தி ஓர வஞ்சகமாய்ப் பேசுகின்றாயே! பொதியமலையைப் பாடாத புலவர் உண்டா? அம் மலையின் முடியிலே வெண்மதி தவழும்; தமிழை வளர்க்கும் தவ முனிவன் அங்கே தங்கி வாழ்கின்றான்; அங்கயற்கண் அம்மையின் அருள் போல் அருவி நீர் பொழியும். இதனினும் சிறந்த மலை இவ் வுலகில் உண்டோ?"
"திங்கள்முடி சூடுமலை தென்றல்விளை யாடும்மலை
தங்கும்முகில் சூழுமலை தமிழ்முனிவன் வாழுமலை
அங்கயற்கண் அம்மைதிரு அருள்சுரந்து பொழிவதென
பொங்கருவி தூங்கும்மலை பொதியமலை என்மலையே"
என்று பாடினாள். தமிழ் முனிவன் வாழும் மலை என்ற சிறப்பைப் கேட்ட குற்றாலக் குறவஞ்சி சிறிது மனம் மடங்கினாள். ஆயினும் விட்டுக்கொடுக்க மனமின்றிக் குற்றாலப் பழங்களின் செழுமையையும், மலர்களின் சிறப்பையும் எடுத்துரைக்கத் தொடங்கினாள்:
"செழுங்குரங்கு தேமாவின் பழங்களைப்பந் தடிக்கும்
தேனலர்சண் பகவாசம் வானுலகில் வெடிக்கும்
வழங்குகொடை மகராசர் குறும்பலவி லீசர்
வளம்பெருகும் திரிகூட மலையெங்கள் மலையே"
"அம்மே! எனது குற்றால மலையில் கொத்துக் கொத்தாய்த் தொங்கும் மாம்பழங்களை வானரங்கள் பறித்துப் பந்து அடித்து விளையாடும்; வானுற ஓங்கிய மரங்களின் மலர்கள் விண்ணுலகில் வெடித்து மணம் கமழும்; இத்தகைய மலைக்கு உன் மலை இணை ஆகுமோ?" என்று இறுமாந்து கூறினாள். இவ்வாறு குற்றால மாது கூறிய மாற்றம் பொதியமலை மாதின் மனத்தை வெதுப்பியது. வண்ணமான சொற்களால் தன் மலைவளம் கூறத் தொடங்கினாள்:
"கொழுங்கொடியின் விழுந்தவள்ளிக்
கிழங்குவல்லி எடுப்போம்
குறிஞ்சிமலர் தெரிந்துமுல்லைக்
கொடியில்வைத்துத் தொடுப்போம்
பழும்பிழிந்த கொழுஞ்சாறுந்
தேறுலும்வாய் மடுப்போம்
பசுந்தழையும் மரவுரியும்
இசைந்திடவே யுடுப்போம்
செழுந்தினையும் நறுங்தேனும்
விருந்தருந்தக் கொடுப்போம்
சினவேங்கை புலித்தோலின்
பாயலின்கண் படுப்போம்
எழுந்துகயற் கணிகாலில்
விழுந்துவினை கெடுப்போம்
எங்கள்குறக் குடிக்கடுத்த
இயல்பிதுகாண் அம்மே"
'ஏ! வஞ்சி! மலையின் வளத்திலும் மலர்களின் சிறப்பிலும் என் மலை உன் மலைக்கு இளைத்த தென்றெண்ணாதே; எனது மலையில் கொழுங் கொடியில் செழுங் கிழங்கு வீழும். அக் கிழங்கை அகழ்ந்தெடுத்து அக மகிழ்வோம். குன்றில் நிறைந்த குறிஞ்சி மலர்களைக் கொய்து குழைந்த முல்லைக் கொடியில் வைத்துத் தொடுப்போம். பழம் பிழிந்து சாறெடுத்து அதனைத் தேனோடு கலந்து தினமும் உண்போம். செழுந்தினையும் நறுந்தேனும் விருந்தினருக்குக் கொடுப்போம். பதமிட்ட புலித்தேலைப் பாயாக விரிப்போம். காலையில் எழுந்து கருணை வடிவாய அங்கயற்கண்ணியைத் தொழுவோம். இத் தகைய மலையினும் செம்மை வாய்ந்த மலை எங்குமே யில்லை' என்று செம்மாந்து உரைத்தாள்.
அருவியிலும் மற்றைய அரும்பொருளிலும் இருமலையும் நிகரெனவே குற்றாலமாதின் மனத்தில் தோன்றியது. ஆகவே, வேறு வகையால் பொதிய மலை மாதை வெல்லக் கருதினாள். புதுப் பெருமையில்லாதவர் பழம் பெருமை கூறும் பான்மை போல் குற்றாலக் குறவஞ்சி தனது நாட்டின் தொன்மை கூறத் தொடங்கினாள்:
"தக்க பூமிக்கு முன்புள்ள நாடு
சகல தேவர்க்கும் அன்புள்ள நாடு
திக்கெல் லாம்வளர்ந் தோங்கிய நாடு
சிவத்து ரோகமும் நீங்கிய நாடு
முக்க ணான்விளை யாடிய நாடு
முதிய நான்மறை பாடிய நாடு
மைக்க ணாள்குழல் வாய்மொழி பாகர்
வசந்த ஆரியர் நாடெங்கள் நாடே"
"எனது நாடு நன்னாட்டின் முன்னாட்டும் நாடு; விண்ணோரும் விரும்பி வரும் நாடு; எத் திசையும் புகழ் மணக்க இருந்திலங்கும் நாடு; நீங்காத வல்வினையும் நீங்கிய நன்னாடு; அரனார் விளையாடிய திருநாடு; ஆரணம் பாடிய அருமை சான்ற நாடு; இத் தகைய பழம்பெருமை உனது நாட்டுக்கு உண்டோ?" என்று அளவிறந்த மகிழ்ச்சியால் ஆடிப் பாடினாள். இப்பாட்டில் அமைந்த நாட்டின் பெருமையை நன்றாகக் கேட்ட பொதிய மலை மாது, புன்முறுவல் பூத்துத் தன் மலையின் பழம் பெருமை கூறத் தொடங்கினாள்:
"மந்தமா ருதம்வளரும் மலையெங்கள் மலையே
வடகலைதென் கலைபயிலும் மலையெங்கள் மலையே
கந்தவேள் விளையாடும் மலையெங்கள் மலையே
கனகநவ மணிவிளையும் மலையெங்கள் மலையே
இந்தமா நிலம்புரக்கும் அங்கயற்கண் அம்மை
இன்பமுறும் தென்பொதிய மலையெங்கள் மலையே!
'அம்மே! மந்தமாருதம் வளரும் மலை எங்கள் மலையே, வடகலையும் தென்கலையும் வளர்ந்தோங்கு மலை எங்கள் மலையே, பொன்னும் மணியும் பொருந்திய மலை எங்கள் மலையே. அங்கயற்கண் அம்மையின் அருள் சுரந்து பொங்கும் மலை எங்கள் மலையே. இவ்வாறு இறையோரும் மறையோரும் விரும்பி உறையும் இணையற்ற நாடு எங்கள் நாடேயாகும்' என்று பொதிய நாட்டின் பழம்பெருமை கூறக் கேட்ட குற்றால வஞ்சி சிறிது தலை குனிந்தாள்.
நாட்டின் பெருமை கூறிப் பொதியமலைக் குறத்தியை வெல்ல இயலாதென்றறிந்த குற்றாலக் குறமாது ஆற்றின் பெருமையால் அம்மாதை வெல்லக் கருதினாள். ஞானிகளும் அறியாத சித்திர நதியின் பிறப்பையும் சிறப்பையும் குறவஞ்சி கூறத் தொடங்கினாள். திரிகூட மலையில் தேன் அருவித் திரை எழும்பிச் சிவகங்கை ஆறாய்ப் பரந்து, செண்பக அடவியின் வழியாய்ச் சென்று, பொங்குமா கடலில் வீழ்ந்து, சித்திர நதியாய்ப் பாயும் சிற்றாற்றின் பெருமையைக் குறவஞ்சி நிறைந்த சொற்களால் போற்றிப் புகழ்ந்தாள்.
"நவநிதியும் விளையுமிடம் அவிடமது கலந்தால்
நங்கைமார் குரவையொலிப் பொங்குமா கடலே
பொங்குகடல் திரிவேணி சங்கமெனச் செழிக்கும்
பொருந்துசித்ர நதித்துறைகள் பொன்னுமுத்துங் கொழிக்கும்"
என்று குறவஞ்சி சித்திர நதியின் பெருமையைச் சிந்தையாரப் புகழ்ந்தாள்.
இதைக் கேட்ட பொதியமலைக் குறமாது தனது மலையில் தோன்றும் பெரியாறென்னும் பொருநையாற்றின் பெருமையை அழகுற எடுத்துரைத்தாள்.
குறுமுனிவன் வாழும் இடத்திலே தோன்றி வானருவியாக வீழ்ந்து பொருநையாறாகப் பெருகிவரும் பொதிய மலையாற்றின் பெருமையைக் குறமாது கனிந்த சொற்களால் எடுத்துரைத்தாள்.
இவ்வாறு பொருநையாற்றின் பெருமையை வியந்து கூறக் கேட்ட குற்றாலக் குறவஞ்சி பொதிய மலையின் பெருமையைப் அறிந்து இரு மலையும் நிகரென்னும் இதற்கையம் உண்டோ என்னும் சமரச அறிவோடு சாந்தமாய்ப் பிரிந்து சென்றாள்.
----------
VIII. பாரதியார் பாட்டின்பம்
36. செந்தமிழ் நாடு
இவ்வுலகில் முன்னணியில் நிற்கும் நன்னாடுகளெல்லாம் தமது தாய்மொழியைத் தலைக்கொண்டு போற்றுகின்றன. தமிழ்நாட்டில் சில காலத்திற்கு முன்னர் அந்நிய மொழிகளில் பேசுவதும் எழுதுவதும் அறிவுடைமைக்கு அழகென்றும், தாய்மொழியைப் புறக்கணிப்பது தவறன்றென்றும் அறிவாளர் கருதுவாராயினார். ஆயினும், இப்பொழுது அத்தகைய கொள்கைகள் அகன்று ஒழிய, ஆர்வம் நிறைந்த தமிழ்மக்கள் தமிழத்தாயை ஆதரிக்க தலைப்பட்டுள்ளனர்.
தமிழ்மொழியின் நயமறிந்த கவிஞரும் அறிஞரும் அம் மொழி பயிலும் தமிழகத்தை அன்பு ததும்பும் இன்ப மொழிகளாற் போற்றும் அழகு எல்லை யற்ற இன்பம் தருவதாகும். தமிழ் மணங் கமழும் திருநாட்டில் அமைந்து மலையும் ஆறும் தமிழ்க் கவிகள் மனத்தில் தமிழ்மயமாகவே விளங்கித் தோன்றுகின்றன. 'என்றுமுள தென்தமிழை இயம்பி இசைகொண்ட' திருமுனிவன் வாழும் பொதியமலை தமிழ் மலையாகவே திகழ்கின்றது. வட திசையினின்றும் இலங்கையை நாடிச் சென்ற வானர வீரரை நோக்கி, "தென் தமிழ் நாட்டில் அமைந்த அகன்ற பொதியமலையில் அகத்திய முனிவன் அமர்ந்திருக்கின்றான். அம் முனிவன் அமிழ்தினு மினிய தமிழ்மொழியை ஆதரித்து வளர்க்குமிடம் அதுவாதலின், வானரங்காள்! அம் மலையை வணங்கி அப்பாற் செல்க" என்று கம்பர் கூறும் மொழிகளில் தமிழ் அன்பு கலந்து இலங்குகின்றது. இன்னும், அப் பொதிய மலையிற் பிறந்து, திருநெல்வேலி வழியாய்ச் சென்று, அந் நாட்டை ஊட்டி வளர்க்கும் பொருநை என்னும் தமிழ் ஆற்றை, "பொன்திணிந்த புனல் பெருகும் பொருநை எனும் திரு நதி" என்று கம்பர் போற்றிப் புகழ்ந்தார்.
இத் தகைய தலையாய அன்பு, பிற்காலத்துப் புலவரிடமும் பொருந்தித் திகழக் காணாலாம். செந்தமிழின் சுவை தேர்ந்து செஞ்சொற்கவி செய்த பாரதியார், தமிழ் மொழி வழங்கும் திருநாட்டைப் போற்றிப் புகழும் மொழிகள், புதியதோர் ஊக்கம் அளிப்பனவாம்.
"செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே"
என்று கவிஞர் அழகாக எடுத்துரைத்தார். செந்தமிழ் நாடு என்று சொல்லும்பொழுது தென் தமிழின் தீந்தேன் செவிகளில் விரைந்து பாய்ந்து நிரம்புகின்றது. தாயின் செவிகளில் விரைந்து பாய்ந்து நிரம்புகின்றது. தாயின் இனிமையும் அன்பும் செந்தமிழ் நாடு என்னும் பெயரில் அமைந்திருத்தலால், நம் செவியின் வாயிலாக இன்பத்தேன் வந்து பாய்வதாகும். இத் தமிழ் நாட்டில் வாழ்ந்த அறிஞர், இனிமையும் தமிழும் வேறென்று அறிந்தாரல்லர்; தமிழ் என்னும் பதத்திற்கே இனிமை என்ற பொருள் கண்டார்கள். இத் தகைய இனிமை வாய்ந்த தமிழ் ஒலி, இன்னொலியாய், இன்ப ஒலியாய், ஆனந்தத் தேன் சொரியும் அழகிய ஒலியாய் இனிமை பயப்பது இயல்பே யன்றோ? இன்னும், இந் நாட்டைத் தந்தை நாடென்று கருதும் பொழுது, அத் தந்தையின் மக்களாய்ப் பிறந்த நமது உரிமை, மனத்தில் முனைந்து தோன்றவதாகும். இவ்வுரிமைக் கருத்து உள்ளத்தைக் கவரும்பொழுது வீரம் கிளம்புகின்றது. தாயை அன்பின் உருவமாகவும், தந்தையை வீரத்தின் வடிவமாகவும் கருதிப் போற்றுதல் தமிழ் வழக்காகும். அந்த முறையில் தமிழ்நாட்டைத் தாய் நாடு என்று நினைக்கும் பொழுது அன்பினால் இன்பம் பிறக்கும்; தந்தை நாடு என்று கருதும்போது, ஆண்மையால் வீரம் பிறக்கும். இவ் வுண்மையை உணர்த்தக் கருதிய பாரதியார், முதலில் தாயன்பை அமைத்து, பின்பு தந்தையின் வீரத்தைப் பேசும் முறை, அறிந்து போற்றுதற்குரியதாகும். இறைவனைத் தாய்வடிவாகவும் கொண்டு அம்மையப்பர் என்று வணங்கும் முறைமையும் இக் கருத்தையே வலியுறுத்துகின்றது. பாசங்களினின்றும் நீங்கிப் பேரின்பம் பெற விரும்பிய பெரியார், 'அம்மையே, அப்பா ஒப்பிலா மணியே' என்று இறைவனை முதலில் அன்னையாகவே கருதி அகங்குழைவாராயினர். ஆகவே, செந்தமிழ் நாடு, முதலில் எம் தாய்நாடு; அப்பால் எம் தந்தை நாடு! இதுவே உண்மைத் தொண்டராய் உழைக்கும் உயர்ந்தோர் உளப் பான்மையாகும்; மெய்யன்பு வாய்ந்த தமிழர் உணர்ச்சியாகும்.
இத் தகைய செந்தமி ழன்னையை நாம் போற்றுவது மெய்யாயின் அத் தாயின் அருந்தவப் புதல்வரை ஆர்வத்தோடு பேணுதல் வேண்டும். காவிய நயங்களெல்லாம் கனிந்தொழுகும் நூல்செய்த கம்பரை நாம் இன்னும் உரிய முறையில் போற்றவில்லை. தன்னேரிலாத தெள்ளுதமிழ்ப் புலவராய வள்ளுவரை இன்னும் தமிழ் நாடு தக்க முறையில் தெரிந்துகொள்ளவில்லை. அருந் தமிழ்ச் செல்வமே பெரும் பொருட் செல்வத்திலும் சிறந்த தென்று தெளிந்து இளமையிலேயே துறவறம் பூண்டு சிலம்பு பாடிய இளங்கோவடிகளது பெருமையை இன்னும் உணர்ந்தோமில்லை; தமிழ்மொழிக் குற்ற குறையைத் தமக்குற்ற குறையாகக் கருதி, மனமும் மெய்யும் வருந்திய மணிமேகலை ஆசிரியரது மாண்பை அறிந்தோ மில்லை. நெற்றிக் கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே என்று முக்கணான் முன்னின்று மொழியும் கலைபயில் தெளிவும், கட்டுரை வன்மையும் வாய்ந்த பொய்யடிமை யில்லாப் புலவரைப் போற்றுகின்றோமில்லை. முத்தமிழ்த் துறையின் முறைபோகிய மற்றைய உத்தமக் கவிகளையும் நல்லிசைப் புலமை மெல்லியலாரையும் மனக் கோவிலில் அமைத்து மகிழ்கின்றோமில்லை. ஏனைய நாடுகள் தம் புலவரையும், கவிஞரையும் போற்றுகின்ற பெருமையையும், நம் தமிழ் நாடு தமிழறிஞரைப் புறக்கணிக்கின்ற சிறுமையையும் அறிவோமாயின், பிறரது ஏற்றமும் நமது இழிவும் வெள்ளிடை மலைபோல் விளங்கும். இத் தகைய பொருந் துயிலினின்றும் விழித்து அருந்தமிழைப் போற்றும் நாள் எந்நாளோ, அந்நாளே நம் நாட்டுக்கு நன்னாளாகும்.
----------
37. முப்பெரும் கவிஞர்
நல்லறிஞரது உள்ளத் தடத்தில் ஊற்றெடுத்துப் பொங்கும் ஆர்வத்திற் பிறப்பது இயற் கவிதையாகும். இத் தகைய கவி பாடும் நல்லியற் கவிஞர், உலகில் சிலரேயாவர்.அன்னார் இயற்றும் அருங்கவிதையில் மாந்தர் அறிந்து உய்தற்குரிய விழுமிய உண்மைகள் அமைந்து மிளிரும். அவர் மொழிகளில் ஒளியும் இனிமையும் நிரம்பித் ததும்பும். இத் தன்மை வாய்ந்த கவிஞருள் ஒருவராகிய பாரதியார், தமிழ்நாடு செய்த தவப்பயனாகப் பொருநை நாட்டிற் பிறந்தார்; அருந்தமிழ் மொழியுடன் ஆரியமும் ஆங்கிலமும் அளவோடு பயின்று, தம் உள்ளத்திலெழுந்த தள்ளரிய ஆர்வத்தால் இனிய தமிழ்ப்பாட்டிசைத்தார்.
பழம்பெருமை வாய்ந்த தமிழகத்தின் அறிவையும் ஆண்மையையும், வளத்தையும் வாணிபத் திறத்தையும், ஆற்றையும் அருங் காற்றையும் அக் கவிஞர் போற்றிப் புகழ்ந்துள்ளார். சோழநாட்டை வளநாடாக்கிய காவிரியும், தொண்டை நன்னாட்டின் நல்லணியாய்த திகழும் பாலாறும், புலவர் நாவிற் பொருந்திய வைகையாறும் தமிழ் நாட்டை அழகு செய்யுந் தன்மையை நினைந்து பாரதியார் நெஞ்சம் தழைக்கின்றார். ஆயினும், நல்லறிவே நாட்டின் உயிரெனக் கருதிய அக் கவிஞர் தமிழ் நாட்டிற்கு என்றும் அழியாப் பெருமையளித்த நல்லிறியற் கவிஞரை நாவார வாழ்த்துகின்றார்.
"கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு"
என்றெழுந்த பாரததியார் பாட்டின் நயம் அறியத்தக்கதாகும். கல்வி நலம் படைத்த தமிழ் நாட்டிலே கம்பர் பிறந்தார்; இறவாத பெரும் பனுவல் இயற்றினார். தமிழ் நாட்டிற்கு அழியாத பெருமையை அளித்தார்; 'கல்வியிற் பெரியவர் கம்பர்' என்ற அழியாத புகழ் மாலை பெற்றார். இத் தகைய கவிஞர் அருளிய காவியம் செந்தமிழ் நாட்டிற்குச் சிறந்ததோர் நல்லணியன்றோ? இன்னும் இம் மாநிலத்தில் வாழும் மாந்தர்க்கென்று ஒளிநெறி காட்டும் உயரிய கவிஞரைப் பிறப்பித்து நல்கிய பெருமையும் செந்தமிழ் நாட்டுக்கே உரியதாகும்.
"வள்ளுவன் தன்னை உலகினுக் கேதந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு"
என்றெழுந்த பாரதியார் வாய்மொழி தமிழ் நயமறிந்தோர்க்குத் தேனினும் இனிப்பாகும். திருவள்ளுவர் என்னும் மெய்ஞ்ஞானச் செல்வர் பன்னூற்றாண்டுகட்கு முன்பு இந் நாட்டிலே தோன்றினார். உலகெலாம் இன்புற்று வாழுமாறு ஒளி நெறி காட்டினார்; இன்று உலகறிந்த கவிஞருள் ஒரு தனிக் கவிஞராக ஒளிர்கின்றார். அக் கவிஞர் தென்னாட்டிற் பிறந்தவராயினும் எந் நாட்டிற்கும் உரியவர்; அவர் பொருளுரை தென்மொழியில் எழுந்த தெனினும் பன்மொழியாளர்க்கும் பொதுவுரையாகும். சமயக் கணக்கர் மதிவழிச் செல்லாது உலகியல் காட்டி, உறுதிப் பொருள் நாட்டிய அக் கவிஞர் நிலமிசை நீடு வாழ்கின்றார். இத் தகைய மதிநலம் வாய்ந்த கவிஞரைத் தன்னகத்தே தோற்றுவித்து வான் புகழ் கொண்ட தமிழ் நாட்டின் பெருமையைப் பாரதியார் வாயார வாழ்த்துகின்றார்.
இன்னும், சேர நாட்டின் செல்வத்தினும், செந்தமிழ்ச் செல்வமே சிறந்ததெனத் தேர்ந்து இளமையிலேயே துறவறம் ஏற்று, தமிழர் குலமணி விளக்காய் விளங்கிய இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரமென்னும் செம்மை சான்ற காவிய அமுதை அள்ளி உண்டு அளப்பரிய இன்பமுற்ற பாரதியார்
"- நெஞ்சை அள்ளும் சிலப்பதி காரமென் றோர்மணி
ஆரம் படைத்த தமிழ்நாடு"
என்று நம் தாய்நாட்டைப் புகழ்ந்து மகிழ்ந்தார். கற்போர் மனத்தைக் கவரும் திறம் வாய்ந்த நூல்களுள் சிலப்பதிகாரம் தலைசிறந்ததாகும் என்று பாரதியார் அறிந்துணர்த்தினார். இரும்பினை இழுக்கும் காந்தம் போல் கற்போர் கருத்தினைக் கவருந் திறம் சிலப்பதிகாரத்தில் அமைந்திருத்தலை உணர்ந்த கவிஞர், 'நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்' என்று அச் செஞ்சொற் காவியத்தைப் போற்றினார்; இனிய தமிழ்ப் பனுவலாய் இலங்கும் சிலப்பதிகாரத்தைத் தமிழ்த் தாயின் கழுத்தில் இலங்கும் செம்மணி மாலையாகக் கருதி உள்ளம் தழைத்தார். தமிழ் நாட்டு மூவேந்தர் தகைமையையும், முந் நாட்டின் சீர்மையையும் முத் தமிழின் நீர்மையையும் முறையாக இளங்கோ முனிவர் தொடுத்தமைத்த பாமாலை தமிழ்த்தாயின் திருமார்பின் ஆரமாக அமைந்து அழகுசெய்தற் குரியதன்றோ?
இத் தகைய பழம் பெருமை வாய்ந்த பைந்தமிழ் நாட்டிற் பிறந்தும், தமிழ்மொழியின் பெருமையையும் இனிமையையும் உணராது, வறிதே காலம் கழிக்கும் இக் காலத் தமிழ் மக்கள் நிலை கண்டு பாரதியார் இரங்குகின்றார். முன்னோர் முயன்று தேடித்தந்த முழுமணிகள் மண்ணுள் மூழ்கி மறைந்து கிடப்ப, அவர் பின்னோராய நாம் வறிஞராய் இவ்வுலகில் வாழ்கின்றோம்; பாலிருந்த பானையைப் பாற்பானை என்பது போல், தமிழறிர் மரபிற் பிறந்த நம்மையும் தமிழரெனப் பிறநாட்டார் அழைக்கின்றார்கள். இங்ஙனம் வாயிருந்தும் ஊமையராய், கண்ணிருந்தும் குருடராய், செவியிருந்தும் செவிடராய்த் திரியும் இக் காலத் தமிழ் மக்களை நோக்கி,
"நாமமது தமிழரெனத் கொண்டிங்கு
வாழ்ந்திடுதல் நன்றோ சொல்லீர்;
தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்"
என்று கவிஞர் பரிவுடன் வேண்டுகிறார். நறுஞ்சுவை நிறைந்த தமிழின் நீர்மையைத் தமிழ் மக்கள் அறிந்து மகிழ்தல் வேண்டும்; 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்னும் முன்னோர் மொழியின் வழி நின்று இனிமை வாய்ந்த தமிழ் மொழியை யாண்டும் பரப்புதல் வேண்டும். "வீடு தோறும் தமிழின் முழக்கம்; வீதி தோறும் தமிழின் விளக்கம்; நகரமெங்கும் தமிழோசை; நாடு எங்கும் தமிழோசை", இவ்வாறாக எங்கும் தமிழ் முழக்கமே பெருமுழக்கமாய்ப் பொங்கி எழுதல் வேண்டுமென்பது பாரதியாரது பெரு விருப்பமாகும்.
-----------
38. கலையின் விளக்கம்
"அழகிய பொருளால் என்றும் அடைவது ஆனந்தமே" என்று ஆங்கில கவிஞர் ஒருவர் அருளிப் போந்தார். கண்ணினைக் கவரும் அழகையும், கருத்தினைக் கவரும் அறிவையும் தெய்வ நலங்களாகக் கருதி வழிபட்ட பெருமை பாரத நாட்டினர்க்கு உரியதாகும். அழகினைத் திருமகள் என்றும், அறிவினைக் கலைமகள் என்றும் கொண்டு பாரத முன்னோர் போற்றினார்கள். வெள்ளைக் கலையுடுத்து, வெள்ளைப் பணி பூண்டு, வெள்ளைக் கமலத்தே வீற்றிருக்கும் கலைமகளைப் பாரதியார் போற்றும் முறை சாலச் சிறந்ததாகும்.
இவ் வுலகில் வழங்கும் கலைகளைக் கவின்கலையென்றும், பயன்கலை என்றும் பகுத்துக் கூறுவதுண்டு. கண்ணையும் செவியையும் கவர்ந்து, அவற்றின் வாயிலாக மனத்திற்கு இன்பம் ஊட்டும் கலைகள் கவின் கலைகளாகும். மக்கள் வாழ்க்கைக்குப் பயன்படும் பல திறப்பட்ட பொருள்களை ஆக்கிக்கொள்வதற்குச் சாதனமாகிய கலைகள் பயன்கலைகள் எனப்படும். இவ்விருவகைக் கலைகளின் வடிவமாக நாமகள் விளங்குகின்றாள் என்னும் உண்மையைப் பாரதியார் நன்கு அருளிப் போந்தார்.
செஞ்சொற் கவி இயற்றும் கலைவாணர் கருத்திலும், உள்ளொளி வாய்ந்த உரவோர் மனத்திலும், உலகினர்க்கு ஒளிநெறி காட்டும் உயரிய மறையிலும், கலைமகள் மகிழ்ந்துறைகின்றாள். இன்னும், இன்னிசை வீணையை மலர்க்கரத்தி லேந்திய கலைமகள், மக்கள் பேசும் மழலை மொழியிலும், மாதர் இசைக்கும் மதுரப் பாட்டிலும், கீதம் பாடும் குயிலின் குரலிலும், சிறை யாரும் மடக்கிளியின் செந்நாவிலும் அமர்ந்திருக்கின்றாள். அனிறியும், மாட கூடங்களை அழகு செய்யும் ஓவியங்களிலும், கோயில்களில் அமைந்த சீரிய சிற்பங்களிலும் கலைமகள் விளங்குகின்றாள். எனவே, செவியினைக் கவரும் இயற்கவியும் இன்னிசையும், கண்ணினைக் கவரும் ஓவியமும் சிற்பமும் அறிவுத் தெய்வம் உறையும் இடங்களாகும்.
இவ் வுலகில் வாழும் மக்களுக்குப் பயன்படும் பொருள்களை ஆக்கி அளிக்கும் தொழிலாளர் பலராவர். இரும்பை யுருக்கி வெம்படை வடிக்கும் கருங்கைக் கொல்லரும், திண்ணிய மரத்தைத் தரித்து முரித்துப் பணிசெய்யும் தச்சரம், குழைத்த மண்ணாற் பாண்டங்களை வனையும் குயவரும், பட்டாலும் பருத்தி நூலாலும் ஆடைகளை நெய்யும் சாலியரும் உலக வாழ்க்கைக்குப் பயன்படுங் கலைகளைப் பயின்று பணி செய்கின்றார்கள். அன்னார் பணிகளிலும் கலைமாது பண்புற்று இலங்குகின்றாள்.
இன்னும் வேதம் பயிலும் வேதியரும், வீரம் விளைக்கும் வேந்தரும், வான்பொருளீட்டும் வணிகரும், தாளாண்மையிற் சிறந்த வேளாளரும் ஒருங்கே வணங்கும் விழுமிய தெய்வம் அறிவுத்தெய்வமேயாகும். மாந்தரது உள்ளத் தாமரையில் இனிதுறைந்து, அவர் அறிவினுக்கறிவாய் நின்று, புன்னெறி விலக்கி நன்னெறி காட்டும் தெய்வம் கலைத்தெய்வமே. மேலோரென்றும் கீழோரென்றும் எண்ணாது, செல்வரென்றும் வறிஞரென்றும் கருதாது, முதியரென்றும் இளையரென்றும் பாராது, 'எக்குடிப் பிறப்பனும் யாவரே ஆயினும் அறிவினை விரும்புவோர் அனைவரும் வருக' என்று அருள் கூர்ந்து அழைத்திடுந் தெய்வம் அறிவுத் தெய்வமே யன்றோ?
இத் தகைய தெய்வத்தை நிறைமொழி மாந்தர் மறைமொழியாற் போற்றினார்கள். அறிவறிந்த மாந்தர் ஆண்டுதோறும் எண்ணும் எழுத்தும் அமைந்த ஏடுகளை வரிசையாக அடுக்கிக் கலைவிழா எடுத்தார்கள்; விரையுறு நறுமலர் தூவி வணங்கினார்கள்; வண்ணமும் சாந்தமும் வழங்கினார்கள். இவ்வாறு ஆண்டுதோறும் நிகழும் நாமகள் விழாவினைக் கண்ட பாரதியார்,
"செந்த மிழ்மணி நாட்டிடை யுள்ளீர்!
சேர்ந்தித் தேவை வணங்குவம் வாரீர்!
வந்த னம்இவட் கேசெய்வ தென்றால்
வாழி யஃதிங் கெளிதன்று கண்டீர்!
மந்தி ரத்தை முணுமுணுத் தேட்டை
வரிசை யாக அடுக்கி அதன்மேல்
சந்தனத்தை மலரை யிடுவோர்
சாத்தி ரம்இவள் பூசனை யன்றாம்"
என்று சாற்றியருளினார். ஆண்டிற்கொரு முறை கலையேடுகளை எடுத்தடுக்கி மலர்மாலை புனைவதும், சந்தனம் சாத்துவதும், மந்திரம் முரல்வதும், வந்தனை புரிவதும், உயரிய வழிபாடென்று கருதுதல் பெருந்தவறாகும். 'பொக்க மிக்கவர்' பூவையும் நீரையும் கலை மகள் பொருளாகக் கருதமாட்டாள். கலைவடிவாய நாமகள் விரும்பும் வழிபாடுதான் யாதோ என்றறிய விரும்புவோர்க்குப் பாரதியார் நல்வழி காட்டுகின்றார். தமிழ் நாட்டிலுள்ள வீடுதோறும் கலையின் ஒளி திகழ வேண்டும். வீடுதோறும் இரண்டொரு கல்லூரி இலங்க வேண்டும். நகரந்தோறும் கலாசாலைகள் ஓங்க வேண்டும். கல்வி நலம் அறியாத கசடர் வாழும் ஊர்களை எரியினுக்கு இரையாக்க வேண்டும். இவ்வாறு அறியாமையை அழித்து ஒழித்து யாண்டும் கலையின் ஒளி விளங்கச் செய்தலே நாமகளின் அருள் பெறுதற்குரிய நல்ல வழிபாடென்று பாரதியார் அறிவிக்கின்றார்.
நாட்டிலுள்ள ஏழை மாந்தர்க்கு எழுத்தறிவித்தல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலையாய அறமென்னும் உண்மையை,
"இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்
இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆல யம்பதி னாயிரம் நாட்டல்
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர்வி ளங்கி ஒளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியங் கோடி
ஆங்கோ ரேழைக் கெழுத்தறி வித்தல்"
என்று பாரதியார் அறிவித்துப் போந்தார். பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்னமே அறத்தின் பெருமையை அறிந்து, அதனை ஆர்வமுற வளர்த்த நாடு தமிழ் நாடாகும். வருந்தி வந்தவர் அரும்பசி களைந்து அவர் திருந்திய முகங்கண்டு திளைத்த நாடு இந் நாடாகும். கொழுகொம்பின்றிக் குழைந்து கிடந்த சிறு முல்லைக் கொடியின் துயர் கண்டு தரியாது, அக் கொடி படருமாறு தன் பொற்றேரை நிறுத்திச்சென்ற புரவலன் வாழ்ந்த நாடு இந் நாடாகும். வழி நடந்து செல்லும் ஏழை மக்கள் வெங்கதிரோன் கொடுமையால் வாடி வருந்தா வண்ணம் இனிய சாலைகளும் சோலைகளும் அமைத்து, அறம் வளர்த்த நாடு இந் நாடாகும். மும்மைசால் உலகுக்கெல்லாம் முதல்வனாய இறைவனுக்குச் செம்மை சான்ற கோயில்களும் கோட்டங்களும் எடுத்த நாடு இந் நாடேயாகும். இங்ஙனம் அன்னசாலைகள் அமைத்தலும், ஆலயங்கள் எடுத்தலும், சாலைகள் வகுத்தலும், சோலைகள் வளர்த்தலும் சிறந்த அறங்களே எனினும், அறிவை வளர்க்கும் கல்லூரிகள் நிறுவுதலே தலைசிறந்த அறமென்று பாரதியார் அறிவுறுத்தினார்.
'எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்' என்னும் உண்மையைப் பழந் தமிழ் மக்கள் பொன்னே போல் போற்றினர். கல்வி நலம் வாயந்தவரே மக்களாவரென்றும், அந் நலம் அமையப்பெறாத மானுடர் விலங்கனைய ரென்றும், பழுந் தமிழ்ப் பனுவல் பகுத்துரைக்கின்றது. 'கற்றல் கேட்டல் உடையார் பெரியார்' என்றார் நற்றமிழ் வல்ல ஞானசம்பந்தர். எனவே, உடம்பினை வளர்க்கும் அன்ன சாலையினும் உயிரினை வளர்க்கு அறிவுச்சாலை சிறந்ததேன்று அறைதலும் வேண்டுமோ? கற்றவர் விழுங்கும் கற்பகக் கனியாய இறைவன் 'கல்லார் நெஞ்சில் நில்லான்' என்னும் உண்மையை உணர்வோமாயின், இறைவனை வணங்குதற் குரிய ஆலயங்களை அமைப்பதற்கு முன்னே அறிவினை வளர்க்கும் கல்லூரிகளை அமைத்தல் வேண்டும் என்பது இனிது விளங்குவதாகும். இதனாலேயே கலை நலமறியாது வருந்தும் எளியவர்க்கு எழுத்தறிவிக்கும் அறம், ஏனைய அறங்களினும் நூறாயிரம் மடங்கு மேலான தென்று பாரதியார் அறிவித்தார். இத் தகைய கல்விச் சாலைகளை நாடேங்கும் நாட்டுதலே கலைமகளின் திருவுள்ளத்தை மகிழ்விக்கும் உயரிய வழிபாடாகும். கல்லூரிகளிற் போந்து எண்ணும் எழுத்தும் பயிலும் மாணவர் கண்ணெதிரே கலைமகளின் வீணையும் கையும் விரிந்த முகமலரும் விளங்கித் தோன்றும்.
-----------
39. பண்டாரப் பாட்டு
ஆன்ம வீரம், படை வீரத்தினும் பெரிதென்னும் உண்மையைப் பலநூற்றாண்டுகளுக்கு முன்னமே தமிழ் நாடு அறிந்துகொண்டது. நாடாளும் வேந்தரது மறப்படையையும் வெல்லும் ஆற்றல், அறப்படையை எடுத்து ஆளும் ஆன்ம வீரரிடம் உண்டு என்பது பண்டைத் திருத்தொண்டர் சரித்திரத்தால் நன்குணரப்படும். வைச சமயத்தைத் தமிழ்நாட்டில் நிலை நிறுத்திய மூவருள் ஒருவராய திருநாவுக்கரசரை ஒரு சிறந்த ஆன்ம வீரராகக் கருதி, அவர் வாழ்க்கையையும் வாய்மொழியையும் பாரதியார் நன்கு உணர்ந்துள்ளார். மாநில வேந்தரது மறப்படையின் வலிமையை அறப்படையால் வெல்லலாகுமென்று ஆயிரத் திருநூறு ஆண்டுகட்கு முன்னரே உலக மக்களுக்கு அறிவித்தவர் திருநாவுக்கரசர். அவரது ஆன்ம வீரம் பாரதியார் உள்ளத்தில் புகுந்து உந்துவதாயிற்று.
இவ் வுலகில் புயவலியும் படைவலியும் படைத்தோரே வீரராகக் கருதப்படுகின்றனர். மேலை நாட்டில் படைச் செருக்குற்று வாழ்ந்த அலெக்சாண்டர், நெப்போலியன் முதலியோரை வீரராகக் கொண்டு போற்றுகின்றார்கள். புயவலியினும், படைவலியினும் பெரிய ஆன்மத் திறல் படைத்த வீரராகத் திருநாவுக்கரசர் விளங்கினார். சமண சமயத்தைக் கைவிட்டு அப் பெரியார், வைச நெறியைச் சார்ந்த பொழுது, சமண மன்னன் சீற்றமுற்றான்; மதம் மாறித் தவறிழைத்த நாவுக்கரசரைக் கொணருமாறு வெம்படை தாங்கிய வீரரைப் போக்கினான். அவ் வீரர், அப்பர் இருந்த இடம் போந்து வீரமொழி பேசி ஆர வாரித்தனர். எனினும், அவரது உருண்டு திரண்ட மேனியைக் கண்டு அப்பர் சிறிதும் அஞசினாரல்லர்; அவர் கையிலமைந்த படைக்கலங்களைக் கண்டு இறையளவும் கலங்கினாரல்லர்; " நாமார்க்குங் குடியல்லோம், நமனை யஞ்சோம்" என்று தொடங்கும் வீரப்பாட்டிசைத்தார். இவ்வாறு மன்னனது பரந்த படையின் முன்னே தமியராய், அஞ்சா நெஞ்சினராய் நின்று, அவன் மறப்படையைத் தம் ஆன்மவலியால் வென்ற அப்பரது வீரப்பாட்டு, பாரதியார் உள்ளத்தைக் கவர்ந்தது.
"யார்க்குங் குடியல்லேன் யான்என்ப
தோர்ந்தனன் மாயையே - உன்தன்
போர்க்கஞ் சுவேனோ பொடியாக்கு
வேன்உன்னை மாயையே"
என்று தம்மை அச்சுறுத்திப் மாயையைப் பழித்துப் பாடியுள்ளார். இப் பாட்டில் திருநாவுக்கரசரது வீரவுள்ளம் விளங்கக் காணலாம்.
பாரதியார் பாடிய வீரப்பாடல்களுள் தலையாக நிற்கும் தகுதி வாய்ந்தது, 'அச்சமில்லை' என்று தொடங்கும் 'பண்டாரப் பாட்டே' யாகும். அப் பாட்டிலே,
"பச்சைஊன் இயைந்தவேற் படைகள்வந்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே"
என்றெழுந்த அடிகள், நாவுக்கரசரை எதிர்த்து நின்ற மன்னன் படையைப் போன்ற மறப்படையைக் குறிப்பன என்று கருதுவது பொருத்த முடையதாகும். இன்னும், திருநாவுக்கரசரைத் துன்புறுத்தக் கருதிய அரசன், அவரை நீற்றறையி லிட்டான். அந் நீற்றறையின் வெம்மையை நாவுக்கரசர் தம் மனச் செம்மையால் வென்றார்.
"மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே"
என்னும் பாட்டு அந் நிலையில் அப்பரால் பாடப் பட்டதாகும். ஏழு நாள் நீற்றறையில் ஏதமின்றி இருந்து வெளிப்பட்ட நிலையிலும் அவர் பெருமையை அரசன் அறிந்தா னல்லன்; பலநாள் உணவின்றி யிருந்த அப்பரது பசியைத் தீர்ப்பான்போல் நஞ்சு கலந்து பாற்சோற்றை அவருக்கு ஊட்டுமாறு பணித்தான். அரசனுடைய ஏவலாளர் நஞ்சு தோய்ந்த அன்னத்தை அப்பர் முன்னே படைத்து நயவஞ்சகம் பேசி நின்றார். ஆருயிர் மருந்து எனப்படும் அன்னத்தில் நஞ்சு கலந்து மாந்தரை நாவுக்கரசர் பகைவரெனக் கருதினா ரல்லர்; நண்பரெனவே கருதினார்; அவரிடம் சோற்றை உண்டு மகிழ்ந்தார். இங்ஙனம் பகைவரிட்ட நஞ்சையும் நண்பரிட்ட நல்லமுதெனக் கருதி யுண்ட நாவுக்கரசர்,
"பெயக்கண்டும் நஞ்சுண்டு அமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்"
என்னும் திருக்குறளுக்கு நனி சிறந்த சான்றாயினார். இவ்வாறு நாவுக்கரசர் ஆற்றிய அருஞ் செயலை வள்ளுவர் அருளிய கருத்தோடு கலந்து,
"நச்சைவாயி லேகொணர்ந்து நண்பர்ஊட்டு போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே"
என்று பாரதியார் நல்ல தமிழ் விருந்தளித்தார்.
நஞ்சுண்டும் சாகாதிருக்க நாவுக்கரசரை நசுக்கித் சிதைக்குமாறு கடக்களிற்றை அவர்மேல் ஏவப் பணித்தான் காவலன். கட்டவிழ்த்துவிட்ட கொலைக்களிறு கூடத்தைக் கத்தி ஒரு குன்றமெனப் புறப்பட்டது. வெஞ்சின வேழத்தைக் கண்ணுற்ற அப்பர் சிறிதும் சஞ்சலமுற்றாரல்லர்; செஞ்சடைக் கடவுளின் அடியார்க்கு,
"அஞ்சுவ தியாதொன்று மில்லை
அஞ்ச வருவதும் இல்லை"
என்று நெஞ்சுருகிப் பாடினார். தறுகண் வேழம் வெம்மை நீத்து நாவுக்கரசரை வலம் வந்து தாழ்ந்து இறைஞ்சி எழுந்து சென்றது. மதவேழத்தின் செருக்கை யடக்குமாறு திருநாவுக்கரசர் பாடிய பாட்டே, "அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பது தில்லையே" என்னும் பல்லவிக்கு அடிப்படை என்று கருதுவது தவறாகாது.
எஞ்ஞான்றும் பதவித் தருக்கும் படைச் செருக்கும் உற்ற அரசர், உலகின் அச்சாணி யன்ன ஆன்றோரையும், மக்கள் கருத்தில் உச்சமாக நின்று நிலவும் பெரியோரையும் துச்சமாகக் கருதித் தூறு செய்வதுண்டு. சைவ சமய சீலராக விளங்கிய திருநாவுக்கரசரையும் பலவாறு ஒறுக்கத் துணிந்த பல்லவ மன்னன் இவ் வுண்மைக்கு ஓர் எடுத்துக் காட்டாயினான். இத் தகைய உலகியலை நன்கறிந்த பாரதியார்,
"துச்சமாக எண்ணி நம்மைத் தூறுசெய்த போதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே"
என்று பாடினார்.
இன்னும், "ஊனம் ஒன்றில்லாத இறைவனுக்கு ஆட்பட்ட உத்தமர்" வேறொன்றையும் பொருளாகக் கருதார். மண்ணும் விண்ணும் நிலைகுலைந்தாலும் ஞாயிறும் திங்களும் திசைமாறினாலும் அன்னார் மனந் துளங்குவ தில்லை, இவ் வுண்மையை,
"வானந் துளங்கிலேன் மண்கம்ப மாகிலேன் ...............
ஊனமொன் றில்லா ஒருவனுக்கு ஆட்பட்ட உத்தமர்க்கே"
என்று அப்பர் தம் தேவாரத்தில் அருளிப் போந்தார். அவ்வான்மத் திறலின் அருமையறிந்த பாரதியார்,
"உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும் அச்சமில்லை
அச்சமில்லை அச்சமென்ப தில்லையே"
என்று கற்றாரும் கல்லாரும் அறியும் முறையில் விளக்கிப் போந்தார்.
திருநாவுக்கரசர் பெருமையை உலகறியக் காட்ட விழைந்த இறையனார் வானிள மங்கையரை அப்பர் பால் விடுத்து அவரைப் பதம் பார்க்கப் பணித்தார். அம் மங்கையர் கண்ணோளி வீசித் திருநாவுக்கரசர் உழவாரத் தொண்டாற்றிய இடந்தோறும் தோன்றி நடமாடினர். வேற்படையினும் கொடிய அன்னார் கண்களைக் கண்டு நாவரசர் சிறிதும் கலங்கினா ரல்லர்; தளர்ந்தா ரல்லர். உரன் என்னும் கருவியால் ஐம்போறிகளையும் காத்து நின்ற அப்பரை வெல்ல இயலாது வான் மங்கையர் தோற்றொழிந்தார். காதல் புரியும் மாதரார்,
"கண்கள் வீசு போதினும் அச்சமில்லை
அச்சமில்லை அச்சமென்ப தில்லையே"
என்ற பாரதியார் பாட்டு இவ் வரலாற்றை நினைவூட்டுகின்றது. ஆகவே, முற்காலக் கவிஞராகிய திருநாவுக்கரசரது வீர வாழ்க்கையும் வீரப் பாடலும் பாரதியார் உள்ளத்தைக் கவர்ந்து வீரக் கவிதையை விளைத்தன என்று கூறுதல் மிகையாகாது.
-------
40. தமிழ்த் தாய் வாழ்த்து
தமிழ்மொழி வழங்கும் தென்னாடு தெய்வத் திருநாடென்று அறிந்து வணங்கத் தக்கதாகும். 'பழமறைகள் முறையிடப் பைந்தமிழ்ப் பின்சென்ற' திருமால், வடசொற்கும் தென்சொற்கும் வரம்பாய் அமைந்த வட வேங்கட மலையில் நின்று அருந்தமிழைக் காக்கின்றான். நீலத்திரைக் கடல் ஓரத்திலே நின்று நித்தம் தவம் செய்யும் கன்னித் தெய்வம் கருங்கடலைக் கையமர்த்திக் காவல் புரிகிறாள். இன்னும், 'நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்த' முத்தமிழ் முனிவர், புகழ் பூத்த பொதிய மாமலையில் அமர்ந்து தமிழகத்தைக் கண்ணினைக் காக்கும் இமைபோல் காத்தருள்கின்றார். இங்ஙனம் வடபால் நீலமேனி நெடியோனும், தென்பால் கன்னித் தெய்வமும், குடபால் அருந்தவ முனிவரும் கருத்துற நோக்கிக் காவல் புரிதலால் செந்தமிழ்நாடு தெய்வக் காவலில் அமைந்த திருநாடாகப் பாரதியார் உள்ளத்திலே தோன்றுகின்றது.
இத் தகைய திருநாட்டில் பிறந்து வளர்ந்த தாய் மொழியின் முற்காலப் பெருமையையும், பிற்காலச் சிறுமையையும் தமிழ் மக்களுக்கு உணர்த்த ஆசையுற்ற கவிஞர், தமிழ்த் தாய் முறையிடும் பான்மையில் உருக்கமாக ஒரு பாட்டுப் பாடியுள்ளார்.
தமிழன்னை, தலையிலணிந்த சூளாமணி சரிய, இடையிலணிந்த மணிமேகலை தளர, இணையடிச் சிலம்புகள் புலம்ப, கண்கலங்கி நின்று, தன் தகை சான்ற பிள்ளைகளை நோக்கி 'என் ஆருயிர்மக்காள்! ஆதி சிவனருளால் இந் நானிலத்தில் தோன்றினேன்; முத்தமிழறிந்த முனிவரருளால் திருந்தினேன்; நற்றமிழ் மன்னரது செல்வச் சிறுமியாய்ச் செழித்து வளர்ந்தேன்; அறிவறிந்த மக்கள் ஆக்கி யளித்த காவியக் கலனணிந்து விளங்கினன்; இடைக் காலத்தில் பல நல்லணிகளைப் பறிகொடுத்தேன். இன்று பசையற்ற மாக்கள் பதறாமற் பேசும் வசைமொழி என் செவியினைச் சுடுகின்றது. உள்ளத்தை அறுக்கின்றது. புத்தம் புதிய கலைகள் மேலைநாடுகளில் மெத்த வளர்கின்றனவாம். அக் கலைகள் ஐம்பெரும் பூதங்களின் திறத்தினை அருமையாக உணர்த்துகின்றனவாம். இம் மேன்மைக் கலைகள் என்பால் இல்லையாம். மேலைநாட்டு மொழிகளே இனி மேலோங்கி வாழுமாம். யான் மெல்லத் தளர்ந்து, மேன்மையிழந்து அழிந்து ஒழிவேனாம். இவ்வாறு மதியிலார் உரைக்கும் மாற்றம் அறியீரோ? பேதையர் கூறும் புன்மொழி கேளீரோ? இவ்வசை மொழி என்பாலமைய நீர் வாளா விருத்தலாகுமோ? எட்டுத் திசையும் சென்று கிட்டிய கலைகள் யாவும் கொணர்வீர். புத்தணி புனைந்து என் நலத்தினைப் புதுக்குவீர். நல்ல கலைப்பொருள் அனைத்தையும் வாரிக்கொணர்ந்து நல்குவீர். ஆதி பகவன் அருள் வலியாலும், இன்று சார்ந்த புலவரது தவவலியாலும், அப்பேதையர் உரைத்த பெரும்பழி ஒழியும். இசையோடு இப்புவிமிசை என்றுமிருப்பேன்' என்று தமிழன்னை தன் ஆற்றாமையை அறிவித்துத் தமிழ் மக்களைத் தட்டித் தேற்றி எழுப்புகின்றாள்.
இங்ஙனம் தமிழ்த் தாயின் வாய்மொழியாகப் பாரதியார் எழுதியுள்ள பாட்டின் கருத்து அறிந்து போற்றுதற் குரியதாகும். மேலை நாடுகளில் நாள்தோறும் நலமுற்றோங்கி வளரும் நவீனக் கலைகள் தமிழ்மொழியில் இல்லை என்பது உண்மையே. அக் குறைபாடறிந்து தமிழன்னை வருத்தமுற்றாளேனும் சீற்றமுற்றாளில்லை. மேலை நாட்டுக் கலைகளிலமைந்த அரும்பொருள்களை எடுத்துரைக்கும் திறம் தமிழ மொழிக்கில்லை என்றும், அத் திறமின்மையால் இனி மெல்லத் தமிழ்மொழி இறந்துபடுமென்றும், விரிவிலா அறிவினார் கூறும் வசைமொழி கேட்டுத் தமிழ்த்தாய் சீறுகின்றாள்; அருந்தமிழின் ஆற்றலறிந்தவர் எவரும் அவ்வாறு உரை செய்யாராதலால், 'கூறத் தகாதவன் கூறினன்' என்றாள். தமிழ் மொழயின் நீர்மை உணராத முழு மகனே அவ்வாறு உரைக்கத் துணிவானாதலால், 'அந்தப் பேதை உரைத்தான்' என்று அன்னை அவனைச் சுட்டி இகழ்ந்துரைத்தாள். ஆயினும், அத்தீய வெஞ்சொல் அன்னையின் உள்ளத்தில் ஊடுருவிப் பாய்கின்றது. தகவிலார் கூறும் வசையினைத் தீர்த்து இசையினை நல்குமாறு அருந்தமிழ் மக்களை அன்னை வருந்தி அழைக்கின்றாள்.
ஆங்கிலம் முதலிய மேலை நாட்டு மொழிகளையறிந்த மாணவர் கடமையைப் பாரதியார் பண்புறக் கூறுகின்றார்; பிற நாட்டு நல்லறிஞர் இயற்றிய புத்தம் புதிய கலைநூல்களைத் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும். அக் கலைகளிலமைந்த புதிய கருத்துகளை உணர்த்தும் பெற்றி வாய்ந்த பழந்தமிழ்ச் சொற்கள் பண்டைப் பனுவலிற்பதிந்து கிடக்குமாயின் அவற்றை அகழ்ந்தெடுத்து வழக்காற்றில் உய்த்தல் வேண்டும். புதிய சொற்கள் வேண்டுமாயின், தமிழ்ச் சொல்லாக்க முறையறிந்து அவற்றைப் பிறப்பித்தல் வேண்டும். நல்ல நூல்களை மொழி பெயர்த்தும் நவீன நூல்களை மொழி பெயர்த்தும் நவீன நூல்களை இயற்றியும் மொழியின் கலைச்செல்வத்தைப் பெருக்க வேண்டும். இங்ஙனம் விரைந்து பணிசெய்ய முற்படாது, தமிழ்மொழியின் பழம்பெருமை பேசி மகிழ்வதாற் பயனில்லை. "மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமையில்லை." 'கண்ணுதற் பெருங் கடவுளும் கழகமோடமர்ந்து பண்ணுறத் தெரிந்தாய்ந்த பைந்தமிழ்' என்று பாராட்டுவதனால் தமிழ் மொழி பரவிவிட மாட்டாது. என்றுமுள தென்றமிழ்' என்று இறுமாந்து பேசுவதால் தமிழ்மொழி ஏற்றமுற மாட்டாது. 'சங்கத் திருப்பிலே யிருந்து வைகை ஏட்டிலே தவழ்ந்த பேதை' என்று வாய்ப்பறை சாற்றுவதால் தமிழ்மொழி வளர்ந்துவிட மாட்டாது. தமிழ்மொழித் தொண்டு செய்யக் கருதும் தகை சான்ற அறிஞர் பழம் பெருமை பேசும் பழக்கத்தை விட்டொழித்து, தமிழ் மொழியின் குறைகளை அறிந்து, பணி செய்ய முற்பட வேண்டும். தமிழ் நாட்டிலமைந்த பல்கலைக் கழகங்கள் மேலை நாட்டுக் கலைகளை மொழி பெயர்க்கும் விழுமிய பணியை மேற்கொள்ள வேண்டும். தமிழன்னை மீண்டும் தலைசிறந்து விளங்கும் காலம் வருமோ என்று ஏங்கித் தளர்பவர் இந் நாளில் பலராவர். இங்ஙனம் தமிழ்ச் சேய்களிற் பலர் மயங்கித் தளர்ந்தாலும் தமிழ்த் தாய் மனம் தளரவில்லை; உரனிழந்த மக்கள் மனத்தைத் தேற்றுகின்றாள்; எத்திசையும் புகழ் மணக்க மீண்டும் தான் ஏற்றமுறும் காலம் அண்மையில் வருமென்று அறிவிக்கின்றாள். ஆதிசிவன் அருளாலும் அறிவறிந்த மக்கள் ஆர்வத்தாலும் வீறுபெற்று விளங்குவேன்' என்று தமிழன்னை வாயிலாகப் பாரதியார் கூறும் வாய்மொழி கார்மேகத்தினிடையே இலங்கும் கதிரொளியாகும்.
"வாழிய செந்தமிழ் வாழ்கநற் றமிழர்
வாழிய பாரத மணித்திரு நாடு".
-----------------
This file was last updated on 20 October 2014.
Feel free to send corrections to the webmaster.