திருமுருகாற்றுப்படை / நச்சினார்கினியர் உரை
உ.வே. சாமிநாத அய்யர் (தொகுப்பு)
tirumurukARRuppaTai, with the notes of naccinArkiniyar
edited by U.vE. cAminAta aiyar
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Digital Library of India for providing a scanned image
version of this work for the etext preparation.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2015.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
" திருமுருகாற்றுப்படை- மூலமும்
மதுரையாசிரியர் பார்த்துவாசி நச்சினார்கினியருரையும்"
Source
பத்துப்பாட்டு மூலமும்
மதுரையாசிரியர் பாரத்துவாசி நச்சினார்க்கினியருரையும்.
இவை மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி உத்தமதானபுரம்,
வே. சாமிநாதையரால் பரிசோதித்து, பலவகை ஆராய்ச்சிக் குறிப்புகளுடன்
சென்னை : கேசரி அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பெற்றன.
(மூன்றாம் பதிப்பு)
பிரஜோத்பத்தி வருடம் ஆவணி மாதம்.
Copyright Registered] - 1931 [விலை ரூபா. 5
1. திருமுருகு ஆற்றுப்படை
(குமரவேளை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது)
திருப்பரங்குன்றம்
உலக முவப்ப வலனேர்பு திரிதரு(குறிப்புரை)
பலர்புகழ் ஞாயிறு கடற்கண் டாஅங்
கோவற விமைக்குஞ் சேண்விளங் கவிரொளி
யுறுநர்த் தாங்கிய மதனுடை நோன்றாட்
செறுநர்த் தேய்த்த செல்லுறழ் தடக்கை 5
மறுவில் கற்பின் வாணுதல் கணவன்
கார்கோண் முகந்த கமஞ்சூன் மாமழை
வாள்போழ் விசும்பில் வள்ளுறை சிதறித்
தலைப்பெய றலைஇய தண்ணறுங் கானத்
திருள்படப் பொதுளிய பராரை மராஅத் 10
துருள்பூந் தண்டார் புரளு மார்பினன்
மால்வரை நிவந்த சேணுயர் வெற்பிற்
கிண்கிணி கவைஇய வொண்செஞ் சீறடிக்
கணைக்கால் வாங்கிய நுசுப்பிற் பணைத்தோட்
கோபத் தன்ன தோயாப் பூந்துகிற் 15
பல்காசு நிரைத்த சில்கா ழல்குற்
கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பி
னாவலொடு பெயரிய பொலம்புனை யவிரிழைச்
சேணிகந்து விளங்குஞ் செயிர்தீர் மேனித்
துணையோ ராய்ந்த விணையீ ரோதிச் 20
செங்கால் வெட்சிச் சீறித ழிடையிடுபு
பைந்தாட் குவளைத் தூவிதழ் கிள்ளித்
தெய்வ வுத்தியொடு வலம்புரி வயின்வைத்துத்
திலகந் தைஇய தேங்கமழ் திருநுதன்
மகரப் பகுவாய் தாழமண் ணுறுத்துத் 25
துவர முடித்த துகளறு முச்சிப்
பெருந்தண் சண்பகஞ் செரீஇக் கருந்தகட்
டுளைப்பூ மருதி னொள்ளிண ரட்டிக்
கிளைக்கவின் றெழுதரு கீழ்நீர்ச் செவ்வரும்
பிணைப்புறு பிணையல் வளைஇத் துணைத்தக 30
வண்காது நிறைந்த பிண்டி யொண்டளிர்
நுண்பூ ணாகந் திளைப்பத் திண்காழ்
நறுங்குற டுரிஞ்சிய பூங்கேழ்த் தேய்வை
தேங்கமழ் மருதிணர் கடுப்பக் கோங்கின்
குவிமுகி ழிளமுலைக் கொட்டி விரிமலர் 35
வேங்கை நுண்டா தப்பிக் காண்வர
வெள்ளிற் குறுமுறி கிள்ளுபு தெரியாக்
கோழி யோங்கிய வென்றடு விறற்கொடி
வாழிய பெரிதென் றேத்திப் பலருடன்
சீர்திகழ் சிலம்பகஞ் சிலம்பப் பாடிச் 40
சூரர மகளி ராடுஞ் சோலை
மந்தியு மறியா மரன்பயி லடுக்கத்துச்
சுரும்பு மூசாச் சுடர்ப்பூங் காந்தட்
பெருந்தண் கண்ணி மிலைந்த சென்னியன்
பார்முதிர் பனிக்கடல் கலங்கவுள் புக்குச் 45
சூர்முத றடிந்த சுடரிலை நெடுவே
லுலறிய கதுப்பிற் பிறழ்பற் பேழ்வாய்ச்
சுழல்விழிப் பசுங்கட் சூர்த்த நோக்கிற்
கழல்கட் கூகையொடு கடும்பாம்பு தூங்கப்
பெருமுலை யலைக்குங் காதிற் பிணர்மோட் 50
டுருகெழு செலவி னஞ்சுவரு பேய்மகள்
குருதி யாடிய கூருகிர்க் கொடுவிரற்
கண்டொட் டுண்ட கழிமுடைக் கருந்தலை
யொண்டொடித் தடக்கையி னேந்தி வெருவர
வென்றடு விறற்களம் பாடித்தோள் பெயரா 55
நிணந்தின் வாய டுணங்கை தூங்க
விருபே ருருவி னொருபே ரியாக்கை
யறுவேறு வகையி னஞ்சுவர மண்டி
யவுணர் நல்வல மடங்கக் கவிழிணர்
மாமுத றடிந்த மறுவில் கொற்றத்; 60
தெய்யா நல்லிசைச் செவ்வேற் சேஎய்
சேவடி படருஞ் செம்ம லுள்ளமொடு
நலம்புரி கொள்கைப் புலம்பிரிந் துறையுஞ்
செலவுநீ நயந்தனை யாயிற் பலவுட
னன்னர் நெஞ்சத் தின்னசை வாய்ப்ப 65
வின்னே பெறுதிநீ முன்னிய வினையே
செருப்புகன் றெடுத்த சேணுயர் நெடுங்கொடி
வரிப்புனை பந்தொடு பாவை தூங்கப்
பொருநர்த் தேய்த்த போரரு வாயிற்
றிருவீற் றிருந்த தீதுதீர் நியமத்து 70
மாடமலி மறுகிற் கூடற் குடவயி
னிருஞ்சேற் றகல்வயல் விரிந்துவா யவிழ்ந்த
முட்டாட் டாமரைத் துஞ்சி வைகறைக்
கட்கமழ் நெய்த லூதி யெற்படக்
கண்போன் மலர்ந்த காமரு சுனைமல 75
ரஞ்சிறை வண்டி னரிக்கண மொலிக்குங்
குன்றமர்ந் துறைதலு முரிய னதா அன்று
திருச்சீரலைவாய்
வைந்நுதி பொருத வடுவாழ் வரிநுதல்
வாடா மாலை யோடையொடு துயல்வரப்
படுமணி யிரட்டு மருங்கிற் கடுநடைக் 80
கூற்றத் தன்ன மாற்றரு மொய்ம்பிற்
கால்கிளர்ந் தன்ன வேழ மேல்கொண்
டைவே றுருவிற் செய்வினை முற்றிய
முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி
மின்னுற ழிமைப்பிற் சென்னிப் பொற்ப 85
நகைதாழ்பு துயல்வரூஉம் வகையமை பொலங்குழை
சேண்விளங் கியற்கை வாண்மதி கவைஇ
யகலா மீனி னவிர்வன விமைப்பத்
தாவில் கொள்கைத் தந்தொழின் முடிமார்
மனனேர் பெழுதரு வாணிற முகனே 90
மாயிருண் ஞால மறுவின்றி விளங்கப்
பல்கதிர் விரிந்தன் றொருமுக மொருமுக
மார்வல ரேத்த வமர்ந்தினி தொழுகிக்
காதலி னுவந்து வரங்கொடுத் தன்றே யொருமுக
மந்திர விதியின் மரபுளி வழாஅ 95
வந்தணர் வேள்வியோர்க் கும்மே யொருமுக
மெஞ்சிய பொருள்களை யேமுற நாடித்
திங்கள் போலத் திசைவிளக் கும்மே யொருமுகஞ்
செறுநர்த் தேய்த்துச் செல்சம முருக்கிக்
கறுவுகொ ணெஞ்மொடு களம்வேட் டன்றே யொருமுகங் 100
குறவர் மடமகள் கொடிபோ னுசுப்பின்
மடவரல் வள்ளியொடு நகைமர்ந் தன்றே
யாங்கம், மூவிரு முகனு முறைநவின் றொழுகலி
னாரந் தாழ்ந்த வம்பகட்டு மார்பிற்
செம்பொறி வாங்கிய மொய்ம்பிற் சுடர்விடுபு 105
வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர்தோள்.
விண்செலன் மரபி னையர்க் கேந்திய
தொருகை யுக்கஞ் சேர்த்திய தொருகை
நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை யசைஇய தொருகை
யங்குசங் கடாவ வொருகை யிருகை 110
யையிரு வட்டமொ டெஃகுவலந் திரிப்ப வொருகை
மார்பொடு விளங்க வொருகை
தாரொடு பொலிய வொருகை
கீழ்வீழ் தொடியொடு மீமிசைக் கொட்ப வொருகை
பாடின் படுமணி யிரட்ட வொருகை 115
நீனிற விசும்பின் மலிதுளி பொழிய வொருகை
வானர மகளிர்க்கு வதுவை சூட்ட
வாங்கப், பன்னிரு கையும் பாற்பட வியற்றி
யந்தரப் பல்லியங் கறங்கத் திண்காழ்
வயிரெழுந் திசைப்ப வால்வளை ஞரல 120
வுரந்தலைக் கொண்ட வுருமிடி முரசமொடு
பல்பொறி மஞ்ஞை வெல்கொடி யகவ
விசும்பா றாக விரைசெலன் முன்னி
யுலகம் புகழ்ந்த வோங்குயர் விழுச்சீ
ரலைவாய்ச் சேறலு நிலைஇய பண்பே யதாஅன்று 125
திருவாவினன்குடி
சீரை தைஇய வுடுக்கையர் சீரொடு
வலம்புரி புரையும் வானரை முடியினர்
மாசற விமைக்கு முருவினர் மானி
னுரிவை தைஇய வூன்கெடு மார்பி
னென்பெழுந் தியங்கு மியாக்கையர் நன்பகற் 130
பலவுடன் கழிந்த வுண்டிய ரிகலொடு
செற்ற நீக்கிய மனத்தின ரியாவதுங்
கற்றோ ரறியா வறிவினர் கற்றோர்க்குத்
தாம்வரம் பாகிய தலைமையர் காமமொடு
கடுஞ்சினங் கடிந்த காட்சிய ரிடும்பை 135
யாவது மறியா வியல்பினர் மேவரத்
துனியில் காட்சி முனிவர் முற்புகப்
புகைமுகந் தன்ன மாசி றூவுடை
முகைவா யவிழ்ந்த தகைசூ ழாகத்துச்
செவிநேர்பு வைத்த செய்வுறு திவவி 140
னல்லியாழ் நவின்ற நயனுடை நெஞ்சின்
மென்மொழி மேவல ரின்னரம் புளர
நோயின் றியன்ற யாக்கையர் மாவி
னவிர் தளிர் புரையு மேனிய ரவிர்தொறும்
பொன்னுரை கடுக்குந் திதலைய ரின்னகைப் 145
பருமந் தாங்கிய பணிந்தேந் தல்குன்
மாசின் மகளிரொடு மறுவின்றி விளங்கக்
கடுவொ டொடுங்கிய தூம்புடை வாலெயிற்
றழலென வுயிர்க்கு மஞ்சுவரு கடுந்திறற்
பாம்புபடப் புடைக்கும் பல்வரிக் கொடுஞ்சிறைப் 150
புள்ளணி நீள்கொடிச் செல்வனும் வெள்ளேறு
வலவயி னுயரிய பலர்புகழ் திணிதோ
ளுமையமர்ந்து விளங்கு மிமையா முக்கண்
மூவெயின் முருக்கிய முரண்மிகு செல்வனு
நூற்றுப்பத் தடுக்கிய நாட்டத்து நூறுபல் 155
வேள்வி முற்றிய வென்றடு கொற்றத்
தீரிரன் டேந்திய மருப்பி னெழினடைத்
தாழ்பெருந் தடக்கை யுயர்த்த யானை
யெருத்த மேறிய திருக்கிளர் செல்வனு
நாற்பெருந் தெய்வத்து நன்னகர் நிலைஇய 160
வுலகங் காக்கு மொன்றுபுரி கொள்கைப்
பலர்புகழ் மூவருந் தலைவ ராக
வேமுறு ஞாலந் தன்னிற் றோன்றித்
தாமரை பயந்த தாவி லூழி
நான்முக வொருவற் சுட்டிக் காண்வரப் 165
பகலிற் றோன்று மிகலில் காட்சி
நால்வே றியக்கைப் பதினொரு மூவரொ
டொன்பதிற் றிரட்டி யுயர்நிலை பெறீஇயர்
மீன்பூத் தன்ன தோன்றலர் மீன்சேர்பு
வளிகிளிர்ந் தன்ன செலவினர் வளியிடைத் 170
தீயெழுந் தன்ன திறலினர் தீப்பட
வுருமிடித் தன்ன குரலினர் விழுமிய
வுறுகுறை மருங்கிற்றம் பெறுமுறை கொண்மா
ரந்தரக் கொட்பினர் வந்துடன் காணத்
தாவில் கொள்கை மடந்தையொடு சின்னா 175
ளாவி னன்குடி யசைதலு முரிய னதாஅன்
திருவேரகம்
றிருமூன் றெய்திய வியல்பினின் வழாஅ
திருவர்ச் சுட்டிய பல்வேறு தொல்குடி
யறுநான் கிரட்டி யிளமை நல்லியாண்
டாறினிற் கழிப்பிய வறனவில் கொள்கை 180
மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்
திருபிறப் பாளர் பொழுதறிந்து நுவல
வொன்பது கொண்ட மூன்றுபுரி நுண்ஞாண்
புலராக் காழகம் புலர வுடீஇ
யுச்சிக் கூப்பிய கையினர் தற்புகழ்ந் 185
தாறெழுத் தடக்கிய வருமறைக் கேள்வி
நாவியன் மருங்கி னவிலப் பாடி
விரையுறு நறுமல ரேந்திப் பெரிதுவந்
தேரகத் துறைதலு முரிய னதாஅன்று
குன்றுதொறாடல்
பைங்கொடி நறைக்கா யிடையிடுபு வேல 190
னம்பொதிப் புட்டில் விரைஇக் குளவியொடு
வெண்கூ தாளந் தொடுத்த கண்ணிய
னறுஞ்சாந் தணிந்த கேழ்கிளர் மார்பிற்
கொடுந்தொழில் வல்விற் கொலைஇய கானவர்
நீடமை விளைந்த தேக்கட் டேறற் 195
குன்றகச் சிறுகுடிக் கிளையுடன் மகிழ்ந்து
தொண்டகச் சிறுபறைக் குரவை யயர
விரலுளர்ப் பவிழ்ந்த வேறுபடு நறுங்காற்
குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணி
யிணைத்த கோதை யணைத்த கூந்தன் 200
முடித்த குல்லை யிலையுடை நறும்பூச்
செங்கான் மரா அத்த வாலிண ரிடையிடுபு
சுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்தழை
திருந்துகா ழல்கு றிளைப்ப வுடீஇ
மயில்கண் டன்ன மடநடை மகளிரொடு 205
செய்யன் சிவந்த வாடையன் செவ்வரைச்
செயலைத் தண்டளிர் துயல்வருங் காதினன்
கச்சினன் கழலினன் செச்சைக் கண்ணியன்
குழலன் கோட்டன் குறும்பல் லியத்தன்
றகரன் மஞ்ஞையன் புகரில் சேவலங் 210
கொடிய னெடியன் றொடியணி தோள
னரம்பார்த் தன்ன வின்குரற் றொகுதியொடு
குறம்பொறிக் கொண்ட நறுந்தண் சாயன்
மருங்கிற் கட்டிய நிலனேர்பு துகிலினன்
முழவுறழ் தடக்கையி னியல வேந்தி 215
மென்றோட் பல்பிணை தழீஇத் தலைத்தந்து
குன்றுதொ றாடலு நின்றதன் பண்பே யதாஅன்று
பழமுதிர்சோலை
சிறுதினை மலரொடு விரைஇ மறியறுத்து
வாரணக் கொடியொடு வயிற்பட நிறீஇ
யூரூர் கொண்ட சீர்கெழு விழவினு 220
மார்வல ரேத்த மேவரு நிலையினும்
வேலன் றைஇய வெறியயர் களனுங்
காடுங் காவுங் கவின்பெறு துருத்தியும்
யாறுங் குளனும் வேறுபல் வைப்புஞ்
சதுக்கமுஞ் சந்தியும் புதுப்பூங் கடம்பு 225
மன்றமும் பொதியிலுங் கந்துடை நிலையினு
மாண்டலைக் கொடியொடு மண்ணி யமைவர
நெய்யோ டையவி யப்பி யைதுரைத்துக்
குடந்தம் பட்டுக் கொழுமலர் சிதறி
முரண்கொ ளுருவி னிரண்டுட னுடீஇச் 230
செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி
மதவலி நிலைஇய மாத்தாட் கொழுவிடைக்
குருதியொடு விரைஇய தூவெள் ளரிசி
சில்பலிச் செய்து பல்பிரப் பிரீஇச்
சிறுபசு மஞ்சளொடு நறுவிரை தெளித்துப் 235
பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை
துணையற வறுத்துத் தூங்க நாற்றி
நளிமலைச் சிலம்பி னன்னகர் வாழ்த்தி
நறும்புகை யெடுத்துக் குறிஞ்சி பாடி
யிமிழிசை யருவியொ டின்னியங் கறங்க 240
வுருவப் பல்பூத் தூஉய் வெருவரக்
குருதிச் செந்தினை பரப்பிக் குறமகண்
முருகிய நிறுத்து முரணின ருட்க
முருகாற்றுப் படுத்த வுருகெழு வியனக
ராடுகளஞ் சிலம்பப் பாடிப் பலவுடன் 245
கோடுவாய் வைத்துக் கொடுமணி யியக்கி
யோடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி
வேண்டுநர் வேண்டியாங் கெய்தினர் வழிபட
வாண்டாண் டுறைதலு மறிந்த வாறே
யாண்டாண் டாயினு மாக காண்டக 250
முந்துநீ கண்டுழி முகனமர்ந் தேத்திக்
கைதொழூஉப் பரவிக் காலுற வணங்கி
நெடும்பெருஞ் சிமையத்து நீலப் பைஞ்சுனை
யைவரு ளொருவ னங்கை யேற்ப
வறுவர் பயந்த வாறமர் செல்வ 255
வால்கெழு கடவுட் புதல்வ மால்வரை
மலைமகண் மகனே மாற்றோர் கூற்றே
வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ
விழையணி சிறப்பிற் பழையோள் குழவி
வானோர் வணங்குவிற் றானைத் தலைவ 260
மாலை மார்ப நூலறி புலவ
செருவி லொருவ பொருவிறன் மள்ள
வந்தணர் வெறுக்கை யறிந்தோர்சொன்மலை
மங்கையர் கணவ மைந்த ரேறே
வேல்கெழு தடக்கைச் சால்பெருஞ் செல்வ 265
குன்றங் கொன்ற குன்றாக் கொற்றத்து
விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ
பலர்புகழ் நன்மொழிப் புலவ ரேறே
யரும்பெறன் மரபிற் பெரும்பெயர் முருக
நசையுநர்க் கார்த்து மிசைபே ராள 270
வலந்தோர்க் களிக்கும் பொலம்பூட் சேஎய்
மண்டமர் கடந்தநின் வென்றா டகலத்துப்
பரசிலர்த் தாங்கு முருகெழு நெடுவேஎள்
பெரியோ ரேத்தும் பெரும்பெய ரியவுள்
சூர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி 275
போர்மிகு பொருந குரிசி லெனப்பல
யானறி யளவையி னேத்தி யானாது
நின்னளந் தறிதன் மன்னுயிர்க் கருமையி
னின்னடி யுள்ளி வந்தனெ னின்னொடு
புரையுந ரில்லாப் புலமை யோயெனக் 280
குறித்தது மொழியா வளவையிற் குறித்துடன்
வேறுபல் லுருவிற் குறும்பல் கூளியர்
சாறயர் களத்து வீறுபெறத் தோன்றி
யளியன் றானே முதுவா யிரவலன்
வந்தோன் பெருமநின் வண்புகழ் நயந்தென 285
வினயவு நல்லவு நனிபல வேத்தித்
தெய்வஞ் சான்ற திறல்விளங் குருவின்
வான்றோய் நிவப்பிற் றான்வந் தெய்தி
யணங்குசா லுயர்நிலை தழீஇப் பண்டைத்தன்
மணங்கமழ் தெய்வத் திளநலங் காட்டி 290
யஞ்ச லோம்புமதி யறிவனின் வரவென
வன்புடை நன்மொழி யளைஇ விளிவின்
றிருணிற முந்நீர் வளைஇய வுலகத்
தொருநீ யாகித் தோன்ற விழுமிய
பெறலரும் பரிசி னல்குமதி பலவுடன் 295
வேறுபஃ றுகில னுடங்கி யகில்சுமந்
தார முழுமுத லுருட்டி வேரற்
பூவுடை யலங்குசினை புலம்பவேர் கீண்டு
விண்பொரு நெடுவரைப் பரிதியிற் றொடுத்த
தண்கம ழலரிறால் சிதைய நன்பல 300
வாசினி முதுசுளை கலாவ மீமிசை
நாக நறுமல ருதிர யூகமொடு
மாமுக முசுக்கலை பனிப்பப் பூநுத
லிரும்பிடி குளிர்ப்ப வீசிப் பெருங்களிற்று
முத்துடை வான்கோடு தழீஇத் தத்துற்று 305
நன்பொன் மணி நிறங் கிளரப்பொன் கொழியா
வாழை முழுமுத றுமியத் தாழை
யிளநீர் விழுக்குலை யுதிரத் தாக்கிக்
கறிக்கொடிக் கருந்துணர் சாயப் பொறிப்புற
மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக் 310
கோழி வயப்பெடை யிரியக் கேழலொ
டிரும்பனை வெளிற்றின் புன்சா யன்ன
குரூஉமயி ரியாக்கைக் குடாவடி யுளியம்
பெருங்கல் விடரளைச் செறியக் கருங்கோட்
டாமா நல்லேறு சிலைப்பச் சேணின் 315
றிழுமென விழிதரு மருவிப்
பழமுதிர் சோலை மலைகிழ வோனே.
குறிப்புரை
1. நூல்களின் முதலில் மங்கலமொழிகளுள் உலகமென்பதைத் தனித்தேனும் அடைமொழியுடன் சேர்த்தேனும் அமைத்தலும் அதன் பரியாயமொழிகளை அவ்வாறே அமைத்தலும் மரபு. அவற்றுட் சில வருமாறு:- "உலகந் திரியா" (மணி. 1:1) ; "உலகமூன்றும் " (வளையா. கட.) ; "உலகெலா முணர்ந்து " (பெரிய. கட. 1); உலகம் யாவையும்" (கம்ப. கட. 1). இவற்றில், உலகமென்பது தனித்து வந்தது.
"நனந்தலை யுலகம் " (முல்லை. 1) ; "ஆர்கலி யுலகத்து" (முது. 1 : 1); "மூவா முதலா வுலகம்" (சீவக. 1); "அலையார்ந்த கட லுலகம்" (ஆளுடைய. கலம்.1); "மலர்தலை யுலகத்து" (நாற். 1); "நீடாழி யுலகத்து" (வில்லி. கட. 1). இவற்றில், உலகமென்பது அடையடுத்து வந்தது.
"வையகம் பனிப்ப" (நெடு. 1); "பார்மண் டலத்தினில்" (ஆளுடைய. திருவந். 1). இவற்றில், உலகமென்பதன் பரியாயமொழிகள் தனித்து வந்தன.
"மணிமலைப் பணைத்தோண் மாநில மடந்தை" (சிறுபாண். 1); "மாநிலஞ் சேவடி யாக" (நற். கட. 1); " கண்ணகன் ஞாலம்"
(திரி.1); "இருநிலமடந்தை" (திருவொற்றியூரொருபா.1) இங்கே பரியாய மொழிகள் அடையடுத்துவந்தன.
வலனேர்புதிரிதரு: "நீனிற விசும்பின் வலனேர்பு திரிதரு" (பட்டினப். 67)
இந்த அடி, ஆசிரியத்துட் பிறதளை விரவிவந்ததற்கும் (தொல். செய். சூ. 28, பேர்.), தாஅ வண்ணத்திற்கும் (தொல். செய். சூ. 215, பேர்.) சீர்வகை இணைமோனைக்கும் (தொல். செய். சூ. 92, ந.) மேற்கோள்.
"அது வடமொழியன்று; ஈண்டு உலகமென்றது உயிர்க்கிழவனை; 'உலகமுவப்ப' என்றதுபோல" (சீவக. 1. ந.); ' "உலகமுவப்ப வலனேர்புதிரிதரு " .............. என்பனபோல, ' புகழ்தரு ' ஒருசொல் " (தஞ்சை. 407, உரை)
2. ஞாயிறு புகழப்படுதல்: "முந்நீர் மீமிசைப் பலர் தொழத் தோன்றி, ஏமுற விளங்கிய சுடர்"(நற். 283: 6-7), "தயங்கு திரைப் பெருங்கட லுலகுதொழத் தோன்றி, வயங்குகதிர் விரிந்த வுருவு கெழு மண்டிலம்" (அகநா. 263: 1-2), "ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும், காவிரி நாடன் றிகிரிபோற் பொற்கோட்டு, மேருவலந் திரிதலான்", "உலகுதொழு மண்டிலம்" (சிலப். 1 : 4-6, 14 : 4), "பேராழி யுலகனைத்தும் பிறந்தகலி யிருணீங்க, ஓராழி தனை நடத்து மொண்சுடரைப் பரவுதுமே" (கலிங்க. 7); "ரவிவாழி ", "அகலிடந்தொழுந் துவாதசாதித்தர்" (தக்க. 9, 354), "பலர் புகழ் ஞாயிறு படரி னல்லதை" (சிவ. போ. சிறப்பு.), "இகன் மைந்தன், றனைய ளித்திமற் றென்னினு மிருநிலந் தாடொழத் தக்கோனே" (வி. பா. சம்பவச். 35)
இவ்வடி முருகன் செந்நிற முடையோன் என்பதற்கும் (சிலப். 1: 36-9, அடியார். பக். 39), வினையுவமத்தின் கண்ணும் (தொல். உவம. சூ. 12, இளம்.), உருவுவமத்தின் கண்ணும் (தொல். உவம. சூ. 16, பேர்.) ஆங்கென்பது வருமென்பதற்கும், 'ஆங்கு' உவம உருபென்பதற்கும் (தஞ்சை. 283, உரை) மேற்கோள். 'ஆங்கு' என்பது வினையெச்சமென்று பொருள்படும்படி இவ்வடியை எடுத்துக் காட்டுவர் ; இ. கொ. சூ. 86, உரை.
1-2. சூரியன் உவமை : புறநா. 4 : 15-6. இவ்வடிகள் ஈரசைச் சீர்களுக்கு மேற்கோள்; தொல். செய். சூ. 12, பேர்.
3. சேண்விளங் கவிரொளி : முருகு. 18.
4. நோன்றாள் : "வன்றாளினிணை" (திவ்.பெருமாள். 9 : 1.)
5. செறுநர்த் தேய்த்த : "செறுநர்த் தேய்த்து" (முருகு. 99); "படியோர்த் தேய்த்த" (மலைபடு. 423 ; பதிற். 79 : 6)
செல்லுறழ் தடக்கை : "நல்லமர்க் கடந்தநின் செல்லுறழ் தடக்கை" (பதிற். 52 : 10)
இவ்வடி கட்டளைப் பொழிப்பு மோனைக்கும் (தொல். செய். சூ. 92, ந.), உறழென்பது வினையுவமத்திற்கும் (தொல்.உவம.சூ.12,இளம்.), பயனிலை யுவமத்திற்கும் (தொல்.உவம.சூ.14,பேர்.) உரிய உவமவுருபாமென்பதற்கும் மேற்கோள்.
6."செயிர்தீர் கற்பிற் சேயிழை கணவ" (புறநா.3 : 6)
மறுவில் கற்பு : "செயிர்தீர் காட்சிக் கற்பு" (தொல். கள. சூ. 22 : 2); "தீதிலா வடமீனின் றிறம்" (சிலப். 1 : 27)
5-6. "படியோர்த் தேய்த்த பல்புகழ்த் தடக்கை, நெடுவேள்" (அகநா. 22 : 5-6)
1-6. செய்யுளுறுப்பாகிய நோக்கின்வகை மூன்றனுள் இடையிட்டு நோக்கும் நோக்கிற்கு இவ்வடிகள் மேற்கோள்; 'உலகம்................ கணவனென்ற வழி, ஒளியென்பது அதன் அயற்கிடந்ததனை நோக்காது கணவனை நோக்குதலின், இடையிட்டு நோக்கிற்று'(தொல். செய். சூ. 98,இளம்.)
7. கமஞ்சூன் மாமழை : "மழங்கு கடன் முகந்த கமஞ்சூன் மாமழை" (நற். 347 : 1); "கமஞ்சூன் மாமழை கார்பயந் திறுத்தென" (அகநா. 134 : 2) ;"கமநிறைத் தியலும்" என்பதற்கு இது மேற்கோள் ;தொல். உரி. சூ. 57, இளம். சே. ந. ; இ-வி. சூ. 290, உரை.
8. வாள்போழ் விசும்பு : " வாள்போழ் வானத்து வயங்குகதிர் சிதறி" (நாற். சூ. 147, மேற்.); "விண்ணம் போழும் வாள்" (பாகவதம், 1.8 : 13)
வள்ளுறை: "மைப்பனை யனைய நுந்தம் வள்ளுறை சிதறி" (திருவால. 12 : 6)
8-9. வள்ளுறை........ தலைஇய ............ கானம் : "நுண்ணுறை யழி துளி தலைஇய" (குறுந். 35 : 4), "துளிதலைத் தலைஇய சாரல்" (அகநா. 132 : 9)
10. இருள்படப் பொதுளிய : சிலப். 26 : 108.
"பராரை - பருவரை ; செய்யுள் முடிவு 'பராரை மராஅத்து' எனவும், வழக்கு முடிவு பருவரை யெனவும் முடியும்" (தக்க. 156, உரை); பராரை, மராத்தென்பன பரியஅரை மராவத்தென்பவற்றின் திரிபுகள் ; இ. கொ. சூ. 125, உரை.
9-10. "தளிபெறு தண்புலத்துத் தலைப்பெயற் கரும்பீன்று, முளிமுதற் பொதுளிய முட்புறப் பிடவமும்" (கலித். 101: 1-2)
11. மராஅத்துருள் பூ : "உருள்பூங் கடம்பின் பெருவாயில்" (பதிற். 4-ஆம் பத்தின்பதிகம்), "உருளிணர்க் கடம்பி னொலிதாரோயே", "உருளிணர்க் கடம்பி னொன்றுபட கமழ்தார்", "உருளிணர்க் கடம்பினெடுவேட்கு" (பரி. 5: 81; 21 : 11,50), "உருளிணர்க் கடம்பினெடுந்தார்க் கண்ணியன்" (கல்.), "உருள்பசுந் தாரவன்" (காசி. 1. 25 : 10), " உருள்பசுந்தா ரிளங்குமரன்" (காசி. 32 : 1)
கார்காலத்திற்குரியது கடம்பென்பதும் அது முருகற்குரியதென்பதும்: "கார்நறுங் கடம்பின் கண்ணிசூடி.... முருகே" (நற்.34:8-11), "கார்நறுங் கடம்பின்.......தெரியற், சூர்நவை முருகன்" (புறநா. 23 :3-4) "கார்க்கடப்பந் தாரெங் கடவுள்" (மணி. 4 : 49)
13. "கிண்கிணி கவைஇய. தெய்வச் சிற்றடிக் கமலப் போது" (பாகவதம், 10. 1 : 46)
15. " வெண்டுகில்' என்றும், 'கோபத்தன்ன தேயாப்பூந்து கில்' என்றுங் கூறலின், துகில் வெண்மை செம்மை யிரண்டிற்கும் பொது"; " என்றது, அரத்தந் தோயாமல் அரத்த நிறத்தை இயல்பாகக் கொண்ட துகிலாயிற்று; 'கோபத்தன்ன தோயாப் பூந்துகில்' போல இத்துகிலும் இவர்க்குள்ள தென்றார்" (சீவக. 34, 2685, ந.) "குன்றியேய்க்குமுடுக்கை" (குறுந். 1)
16."பல்காசு நிரைத்த கோடேந் தல்குல்" (அகநா. 75 : 19), "பல்காசு நிரைஇய வல்குல்" (பெருங். 1. 40: 99)
17. வனப்பென்பது பல உறுப்புந்திரண்டவழிப் பெறுவதோர் அழகென்பர்; தொல்.செய். 235, பேர். ந.
18. பொலம்புனையவிரிழை : "பொலம்புனை யவிரிழை கலங்கலம் புனன்மணி" (பரி16 : 6)
இழை - இழைக்கப்பெற்றஅணி.தேவர்களும்செயற்கையணிகளை அணிவரென்பது இங்கே உணரற்பாலது. "பணிகள் செய்வார் மயன் முதலியோர்; 'நாவலொடு........... இழை' என்றார் பிறரும்" (சீவக. 2811, ந.)பெயரிய வென்பது பெயரடியாகப் பிறந்தவினை; இ.கொ. சூ. 68, உரை, மேற்.
21. செங்கால் வெட்சி: "செங்கால் வெட்சியு நரந்தமு நாகமும்" (மணி. 3 : 161 - 2)
23. தெய்வவுத்தி: 'தெய்வவுத்தி யென்னும் பூண்' (கலித். 96 : 13, ந.)
தெய்வவுத்தியும் வலம்புரியும் கூந்தலில் அணியப்படுதல்: "தெய்வவுத்தியொடு செழுநீர் வலம்புரி......... மையீ ரோதிக்கு மாண்புற வணிந்து" (சிலப். 6 : 106 - 8)
24. மு. "திலகந் தைஇய தேங்கமழ் திருநுதல்" "(நற். 62 : 6), "தேங்கமழ் திருநுதற் றிலகந் தைஇயும்" (அகநா. 389 : 3.) தேங்கமழ் திருநுதல்: "தேமூ ரொண்ணுதல்" (குறுந். 22 : 5)
25. மகரப்பகுவாய்: "எறிமகர வலிய மணிதிகழ் நுதலியர்" (பரி. 10:77); "பொலம்புனை மகரவாய் நுங்கிய சிகழிகை" (.கலித்54 : 6)
26. "இலக்கணமெல்லாம் முற்றச்செய்தகுழல் என்றது திருமுருகாற்றுப்படையில், 'துவரமுடித்த துகளறு முச்சி' என்பதற்கு முற்ற முடித்த வுச்சியெனப் பொருள்கொண்டவா றுணர்க" (தஞ்சை. 7, உரை)
28. மருதினொள்ளிணர்: "தேங்கமழ் மருதிணர்" (முருகு. 34)
26-8. "செருகல் - செருகுதல் ; 'துவர....................மருதின்' எனத்
திருமுருகாற்றுப்படையுட் செரீஇ யென்பதற்குச் செருகியென உரை கூறியவாறு கண்டுகொள்க" (தஞ்சை. 42, உரை.)
29. "கிளைக்கழு நீர்க்கணுஞ் சிவப்பிற் கேழ்த்தவே" (சீவக. 1016); 'கண்ணும் நீர்க்கீழ ரும்பினது சிவப்பினுஞ் சிவந்தன' (சீவக. 1016, ந.)
30. இணைப்புறு பிணையல் : " இணைத்த கோதை" (முருகு. 200)
31. காதில் அசோகந்தளிரைச் செருகல் : "செயலைத் தண்டளிர் துயல்வருங் காதினன் " (முருகு207), " சாய்குழைப் பிண்டித் தளர் காதிற் றையினாள்", "கடிமலர்ப் பிண்டிதன் காதிற் செரீஇ" (பரி. 11 : 95, 12 : 88)
வேங்கைத்தாதை அணிதல்: "புலியுரு மருளப் பூத்த பூந்துணர் வேங்கை யொள்வீப், பலபறித் துகுத்த தாது பைந்தொடி மகளிர் நீட்ட, வலர்கரத் தேந்தி யம்பொற் சுணங்கெனும் வேங்கை யோடும், குலவவெங்களபக் கொங்கைக் குவட்டின்மேற் செறியப் பெய்தும்" (காஞ்சிப். திருக்கண். 256)
34- 5. நகிலிற்குக் கோங்கரும்பு: "யாணர்க் கோங்கி னவிர்முகை யெள்ளிப், பூணகத் தொடுங்கிய வெம்முலை" (சிறுபாண். 25-6), "முலையேர் மென்முகை யவிழ்ந்த கோங்கின்" (குறுந். 254 : 2), "முதிர்கோங்கின் முகையென...... பெருத்தநின் னிளமுலை" (கலித். 56 : 23-4), "கோங்குமுகைத் தன்ன குவிமுலை" (அகநா. 240 : 11), "கோங்கின், முகைவனப் பெய்திய விளமுலை" (புறநா. 336 : 9-10)
37. தளிர்களை அப்புதல்: "பொரிப்பூம் புன்கி னெழிற்றகையொண் முறி, சுணங்கணி வனமுலை யணங்குகொளத் திமிரி" (நற்.9 : 5-6
35-7. சூளா. சுயம்வர. 79.
24-37."தேங்கமழ் திருநுதல் திலகந் தைஇயும், பல்லிதழெதிர் மலர் கிள்ளி வேறுபட, நல்லிள வனமுலை யல்லியொ டப்பியும்" (அகநா. 389 : 3-5)
38. வென்றடு விறல்: "வென்றடு விறற்களம்" (முருகு. 55) கோழிக்கொடி: முருகு. 219.
38-9. கொடியை வாழ்த்தல் : "கொடிபாடித் தேர்பாடி" (முத்.), "பாம்புண் பறவைக் கொடிபோல வோங்குக ......... கொடி" (பு. வெ. 227)
12-41. சூரரமகளிர்க்குரியவை.
43. சுடர்ப்பூங்காந்தள்: "தீயி னன்ன வொண்செங் காந்தள்" (மலைபடு. 145) என்பதன் அடிக்குறிப்பைப் பார்க்க.
இவ்வடி பெருமையிற் சிறப்பிற்றீராக் குறிப்பின் வந்த உவமத்திற்கு மேற்கோள்; தொல். உவம. சூ.10, பேர்.
42-3. மந்தியு மறியா ........... காந்தள் : "கலைகை யற்ற காண்பினெடுவரை" (மலைபடு. 315), "மந்தியு மறியா மரம்பயி லொருசிறைக், குன்றக வெற்பன்" (நற். 194 : 7), "கடுவனு மறியாக் காடிறந் தோளே" (ஐங்.374 : 4), "மந்தியு மறியா மரம்பயி லிறும்பி, னொண்செங் காந்த ளவிழ்ந்த வாங்கண்", "உயர்வரை மருங்கிற் காந்தளஞ் சோலைக், குரங்கறி வாரா மரம்பயி லிறும்பில்" (அகநா. 92 : 8-9, 368 : 8-9)
45."பாயிரும் பனிக்கடல் பார்துகள் படப்புக்கு" (பரி. 5 : 1); "பாருடைப் பனிக்கடல்" (சீவக. 274); "பார்முதிர் பனிக்கடல்" (பாகவதம், 3. கருத்தமன். 50)
46. "சூர்மருங் கறுத்த சுடரிலை நெடுவேல்" (அகநா. 59 : 10).
45-6."வெண்டிரைப் பரப்பிற் கடுஞ்சூர் கொன்ற, பைம்பூட் சேஎய்" (பெரும்பாண். 457-8)
"தடிதல்-வெட்டுதல்; 'சூர்முதல் ................ நெடுவேல்' என்பதனானுணர்க" (தஞ்சை. 405, உரை)
49. கழல்கட் கூகை: கழல்கட் கூகை குழறுகுரற் பாணி"(பதிற். 22 : 36)
49-60. போர்க்களவருணனை.
50-51. மோடேந் தரிவை ........ சார்ந்தோர் துட்கெனும் பேஎ யுருவம்(பெருங். 2. 8 : 106-10)
53. கண்டொட்டுண்ட : "கண்டொட் டுண்டு"(மணி. 6 : 125)
56. "கொள்ளிவாய்ப்பேய் சூழ்ந்து துணங்கையிட் டோடியாடித் தழலு ளெரியும் பிணத்தைவாங்கித் தான்றடிதின்று"(காரைக். திருவாலங்காட்டு. 7). துணங்கை :கலித். 70 : 14.
58.அறுவேறு வகையின்: 'அறு' என்னும் முதனிலைத்தனிவினை அற்று எனப் பொருள்பட்டு வினையெச்ச மாயிற்றென்பதற்கு மேற்கோள்; இ-கொ. சூ. 66, உரை;நன். வி. சூ. 351.
57-61. "ஈரணிக் கேற்ற வொடியாப் படிவத்துச், சூர்கொன்ற செவ்வேலான்"(கலித். 93-25 : 6), "ஈருருவத் தொருபெருஞ்சூர் மருங்கறுத்த விகல்வெய்யோய்"(தொல். செய். 152, பேர். ந. மேற். செஞ்சுடர்)
59-61. கூடார் மெலியக் கொலைவே னினைந்தான் - அவர் வருந்தும்படி வேல் நினைந்தான் என்றது முருகனை; 'அவுணர்............... சேஎய்' என்றார்"(சீவக. 2328, ந.)
45-61. மாக்கடன் முன்னி, அணங்குடை யவுண ரேமம் புணர்க்கும், சூருடை முழுமுத றடிந்த பேரிசைக், கடுஞ்சின விறல் வேள்"(பதிற். 11 : 3-6); கடுஞ்சூர் மாமுத றடிந்தறுத்தவே, லடுபோராள", "நீர்நிரந் தேற்ற நிலந்தாங் கழுவத்துச், சூர்நிரந்து சுற்றிய மாதபுத்த வேலோய்"(பரி. 9 : 70-71, 18 : 3-4); "உரவுநீர் மாகொன்ற
வென்வேலான்", "மாகடல் கலக்குற மாகொன்ற மடங்காப்போர், வேல்வல்லான்" (கலித். 27 : 15-6, 104 : 13-4); "உரவுநீர் மாகொன்ற வேல்", பாரிரும் பௌவத்தி னுள்புக்குப் பண்டொருநாட், சூர்மாத் தடிந்த சுடரிலைய வெள்வேலே" (சிலப். குன்றக். பாட்டுமடை, 'உரையினி'); "அகறிரைப் பரப்பிற் சடையசைத் தலையாது, கீழிணர் நின்ற மேற்பகை மாவின், ஓருட லிரண்டு கூறுபட விடுத்த.......... அமையாவென்றி யரத்த நெடுவேலோய்", "கட்டுடைச் சூருடல் காமங்கொண்டு, பற்றியுட்புகுந்து பசுங்கடல் கண்டு, மாவொடுங் கொன்றமணி நெடுந் திருவேல்", "கடன்மாக் கொன்ற தீப்படர் நெடுவேல்", "கருங்கடல் குடித்தலிற் பெருந்தழற் கொழுந்து, மாவுயிர் வௌவலிற் றீவிழிக் கூற்றும்......... ஆகிய மணிவேற் சேவலங் கொடியோன்", "மணி திரைக் கடலுண் மாவெனக் கவிழ்ந்த, களவுடல் பிளந்த வொளிகெழு திருவேற், பணிப்பகை யூர்தி", "மாவெனக் கவிழ்ந்த மறிகட லொன்றும், கடுங்கனற் பூழி படும்படி நோக்கிய, தாரையெட் டுடைய கூரிலை நெடுவேற், காற்படைக் கொடியினன்", "மேல்கடற் கவிழ்முகப் பொரியுடன் மாவு, நெடுங்கடற் பரப்பு மடுந்தொழி லரக்கரு, மென்னுளத் திருளு மிடைபுகுந் துடைத்த, மந்திரத் திருவேன் மறங்கெழு மயிலோன்", நீர்மாக் கொன்ற சேயோன்", "பெருங்கள விணர்தந் தவைகீழ்க் குலவிய, விடமாக் கொன்ற நெடுவேற் குளவன்" (கல்.); "கருங்கடலுண் மாத்தடிந்தான்" (பு. வெ. 103)
62. செம்மலுள்ளம்: "செம்ம லுள்ளமொடு செல்குவி ராயின்" (சிறுபாண். 145), "செய்வினை முடித்த செம்ம லுள்ளமொடு" (குறுந். 270 : 5; 275 : 5), "அருந்தொழின் முடித்த செம்ம லுள்ளமொடு" (அகநா. 184 : 5)
63. 'புலம்புரிந்துறையும்' என்பதும் பாடம்.
65.'இன்னிசை' என்பதும் பாடம்.
66.இன்னே:குறுந். 287 : 2.
67. "ஆரெயில் கொளக்கொள, நாடோ றெடுத்த நலம்பெறு புனை கொடி" (மதுரைக். 367-8); "வென்றெழு கொடியொடு" (நெடுநல். 87); "மலைநீர், வென்றெழு கொடியிற் றோன்றும்" (மலைபடு. 581-2);
"வான்றோய் வெல்கொடி" (பதிற். 69 : 1); 'வென்று வென்றெடுத்த கொடிதான் நுடங்குமதில்' (சிலப். 15 : 217, அடியார்.)
68. மதில்மேற்பந்தும் பாவையும் நாற்றல்: "பந்தும் பாவையும் பசுவரிப் புட்டிலு, மென்றிவை பலவுஞ் சென்றுசென் றெறியு, முந்தை மகளிரை யியற்றி" (தொல். புறத்திணை. சூ. 12, ந. மேற்.), "பந்தும் பாவையும் பசுவரிப் புட்டிலும் பலவுஞ்சென் றெறிகிற்கு, முந்தை மாதரை யியற்றுபு பின்றைமொய்ப் பகழிவா யிலிற்றூக்கி" (தணிகை. சீபரிபூரண. 58), "பகைவரைப் பாவை மாரெனத் தெரிப்பப் பந்தொடு பாவைக டூங்கித், தகைசிறி தறியா வாயில்சா னாஞ்சிற் றடப்பெரு நொச்சியும்" (திருநாகைக்.திருநகரப். 90)
வரிப்புனைபந்து : "வரியணி பந்தும்" (நற். 305 : 1), "வரிப்பந்து கொண்டொளித்தாய்" (பு. வெ. 238).
வரியென்னு முதனிலைத்தனிவினை வரிந்தென்று வினையெச்சப் பொருள்பட்டு வந்தது ; வரிப்புனை பந்து, வரிந்து புனைந்த பந்தென வருதல் பற்றித் தொகைவிரியென இரண்டே யென்பர்; இ. கொ. சூ. 66, 84, உரை; நன். வி. சூ. 351.
69.போரருவாயில் : " புலாஅ லம்பிற் போரருங் கடிமிளை" (புறநா. 181 : 5)
70.திருவீற்றிருந்ததீதுதீர் : "திருநிலை பெற்ற தீதுதீர் சிறப்பின்" (நெடுநல். 89); மு. "திருவீற் றிருந்த திருநகர் வரைப்பின்" (பெருங். 1. 40 : 232)
71."மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல்" (மதுரைக். 429); "மாடமலி மறுகிற் கூட லாங்கண்" (அகநா. 346 : 20); " மாட மறுகின் மருவி மறுகுறக், கூடல் விழையுந் தகைத்து", "நான்மாடக் கூடனகர்", (பரி. 20 : 25-6, "உலகமொரு"); "மதிமலி புரிசை மாடக் கூடற் பதி" (திருமுகப்பாசுரம்); கொடிமாடக்கூடல்" (சிலப். குன்றக். பாட்டுமடை: 24)
73. இது வல்லிசை வண்ணத்திற்கு மேற்கோள்;தொல், செய். சூ. 217, பேர்; யா. வி; யா. கா. ஒழிபு. சூ. 8, உரை.
71-3. "முருகாற்றுப்படையுள், 'மாடமலி...............துஞ்சி' என்ற வழி, ஒருமுகத்தாற் பாண்டியனையும் இதனுட் சார்த்தியவாறு காண்க"( தொல். புறத். சூ. 27, இளம்.)
நகரோடு திசைசுட்டிக் குன்றத்தைக் குறித்தல் : "கறங்கிசை விழவி னுறந்தைக் குணாது, நெடும்பெருங் குன்றத்து(அகநா. 4 : 14-5)
75. கண்போ னெய்தல் ;கழிசேர் மருங்கிற் கணைக்கா னீடிக், கண்போற் பூத்தமைகண்டு நுண்பல, சிறுபா சடைய நெய்தல் குறுமோ"(நற். 8 : 8, 27 : 9-12); "பாசடை நிவந்த கணைக்கா னெய்தல் ......... கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்"(குறுந். 9 : 4-6); "கண்போ னெய்தல்" (ஐங். 151 : 3); "மால்வரை மலிசுனை மலரேய்க்கு மென்பதோ ........... பல்லிதழ் மலருண்கன்"(கலித். 45 : 9-11); "நீடிதழ் தலைஇய கவின்பெறு நீலம், கண்ணென மலர்ந்த சுனையும்", "இருங்கழி மலர்ந்த கண்போ னெய்தல்"(அகநா. 38 : 10-11, 170 : 4); "கண்ணவிழ் நெய்தலும்" (சிலப். 14 : 77); "கண்ணின் மலரக் கருநீலம்", "குறுஞ்சுனை மலர்ந்தன தடம்பெருங் கண்ணே"(பு. வெ. 205, 290)
76. அஞ்சிறை வண்டி னரியின மொய்ப்ப"(ஐங். 489)
73 - 6. "முட்டாள சுடர்த்தாமரை, கட்கமழு நறுநெய்தல், வள்ளிதழவிழ் நீலம் ........... வண்டிறை கொண்ட கமழ்பூம்பொய்கை"(மதுரைக். 249-53)
77. "குன்றமர்ந்து"(பரி. 17 : 29)
71 - 7. கூடற்குடவயிற் பரங்குன்று: "சூர்மருங் கறுத்த சுடரிலை நெடுவேற், சினமிகு முருகன் றண்பரங் குன்றத்து" (அகநா. 59 : 10-11); "கொடிநுடங்கு மறுகிற் கூடற் குடாஅது, பல்பொறி மஞ்ஞை வெல்கொடி யுயரிய, ஒடியா விழவி னெடியோன் குன்றத்து, வண்டுபட நீடிய குண்டுசுனை நீலத்து"(அகநா. 149 : 14-7)
80. படுமணியிரட்டு மருங்கு: "படுமணி யிரட்டும் பாவடிப் பணைத்தா, ணெடுநல் யானை", "ஒளிதிக ழோடை பொலிய மருங்கிற், படுமணி யிரட்ட வேறி", "தாடாழ் படுமணி யிரட்டும் பூநுத, லாடியல் யானை"(புறநா. 72 : 3-4, 161 : 18-9, 165 : 6-7)
81. மு. "கூற்றத் தன்ன மாற்றரு முன்பின்"(புறநா. 362 : 7)
82. காற்று செலவுக்கு: முருகு. 170; "கால்கிளர்ந் தன்னவூர்தி" (பதிற். "இருங்கண்யானை");"வளியி னியன்மிகுந் தேருங்களிறும்" (கலித். 50 : 15); "நீலயானை ............ கால்கிளர்ந்து" (மணி. 19 : 20-22); "காலிற்கடியது" (பெருங். 1. 42 : 226); "காற்றன்றேற், கடுமை யென்னாம் ............. மத்தயானை" (கம்ப. அதிகாயன். 216)
81-2. கடுஞ்சின விறல்வேள் களிறூர்ந் தாங்கு" (பதிற். 11 :6); "ஊர்ந்ததை, எரிபுரை யோடை யிடையிமைக்குஞ் சென்னிப், பொருசமங் கடந்த புகழ்சால் வேழம்" (பரி. 21 : 1-2); "காற்றி னிமிர்ந்த செலவிற்றாய்க் - கூற்றுங், குறியெதிர்ப்பை கொள்ளுந் தகைமைத்தே ..... களிறு" (முத்.); "காற்றெனக் கடுங்கட் கூற்றென ........ தோன்றிய தடலருங் கடாக்களிறு", "காற்றெனக் கடலெனக் கருவரை யுருமெனக், கூற்றெனக் குஞ்சரங் கொண்டுபுக் கானரோ" (சீவக. 973, 1837); "பாகன், காற்றெ னத்தெறு கனலெனக் கனைகட லென்னக், கூற்ற மென்னமேற் றூண்டினன் குவலயா பீடம்" (பாகவதம், 10. 17 : 14)
83-4. ஐவகை யுருவின்முடி : "உவமை நீங்கிய வைவகைத் தாய வேற் றுருவின், மவுலி" (கந்த. முதனாட்பானு. 252)
85.உறழ்: வினைப்பா லுவமம்; தொல். உவம. சூ. 12, பேர். மேற்.
89.தாவில் கொள்கை : முருகு. 175. மு. "தவஞ்செய்வார் தங்கருமஞ் செய்வார்" (றள். 266); "என்னுயிர்க் குறுவதுஞ் செய்ய வெண்ணினேன்" (கம்ப. அயோத்தி. மந்திர. 15)
91. மாயிருண் ஞாலம் : "இருள்தருமா ஞாலம்" (திவ்.)
95. "மரபுளிவழாஅ வந்தணர் - முறைமையின் வழுவாத அந்தணரென ஐந்தாவதுவிரிதலானும்" (தொல். இடை. சூ. 2, ந.)
95-6. மந்திரவிதியின் மரபுளி வழாஅ வந்தனர்: மந்திர விதியினந்த ணாளன்" (பெருங். 3. 6 : 42)
99-100. பகைவரை வென்று களவேள்வி வேட்டல்: "அரசுபட வமருழக்கி ............... களம்வேட்ட, அடுதிறலுயர் புகழ்வேந்தே" (மதுரைக். 128-30); "அரைசுபட வமருழக்கி ........... அடுகளம் வேட்ட வடுபோர்ச் செழிய", "புலவுக்களம் பொலிய வேட்டோய்" (புறநா. 26 : 6-11, 372 : 12); "பாண்டியன் சோழற் காய்ந்து, பெருங்கள வேள்வி செய்த பீடுடைக் காட்டு நாட்டு" (திருவால. 44 : 54); களவேள்வி யென்பது வாகைத் திணையுள் ஒரு துறைக்குப் பெயர்; "அடுதிற லணங்கார, விடு திறலான் களம் வேட்டன்று" (பு. வெ. 160) என்பது அதன் இலக்கணம்.
104. மு. (புறநா. 59 : 1, 152 : 10); "தாழாரமார்பினான்" (பு. வெ. 43)
104-5. மார்பிற், செம்பொறி வாங்கிய மொய்ம்பில்: " பொறி யுடைமார்ப" (பெருங். 5.2 : 8); "பொறிகுலாய்க் கிடந்த மார்பிற் புண்ணியன்" (சீவக. 1706); "செவ்வரை யாகத்தான்" (சீகாளத்திப். நக்கீர. 33)
106 வண்புகழ் : "வந்தோன் பெருமநின் வண்புகழ் நயந்தென " (முருகு. 285) ; "வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு " (தொல். செய். சூ. 79); "வண்புகழ் பாரி காரி " (திருப்புகழ்)
104-6."மார்பிடை வரியு மூன்றுள" என்பதற்கு இவ்வடி மேற்கோள்; சீவக. 1462, ந.
வசிந்து வாங்கென்பது ஆசிரியவுரிச்சீராகிய நிரைபு நேர்புக்கு உதாரணம்; தொல். செய். சூ. 13, பேர். ந.
111. ஐயிருவட்டம்: "கையொடு வானிடைச் செல்வ கணிப்பி, லையிரு வட்டம்" (கந்த. சூரபன்மன்வதை. 123)
114. "தொடியணி தோளன்" (முருகு. 211), "கழறொடிச் சேய்" (குறுந். 1 : 3)
115. "பாடின் படுமணி யூடுறுத் திரங்க" (பெருங். 1.38 : 153); "பாடின் படுமணி யார்த்திடும்" (கந்த. திருவிளை. 12)
116. நீனிறவிசும்பு : (பெரும்பாண். 135; மதுரைக். 581: பட்டினப். 67); இருணிற விசும்பில்" (மலைபடு.1)
118. இனைத்தென அறிந்த சினைக்கிளவி வினைகொண்டு முடியுமிடத்து உம்மைபெறு மென்பதற்கு இது மேற்கொள்; தொல். கிளவி. சூ. 33, சே. ந.; பன்னிரு ............. இயற்றி யென்புழியும், தொகுதிப் பெயர் வினையோடு தொடராது கையென்பதனோடு ஒட்டி நிற்றலின், வினைப்படுதொகுதி யன்றாகலான், உம்மைவேண்டா பிறவெனின், அங்ஙனம் ஒட்டி நின்றதாயினும், நான்மறைமுதல்வர், ஐந்தலைநாக மென்பன போலாது, இருசொல்லும் ஒருபொருண்மேல் வருதலிற் கையென்பதனோடு ஒட்டி யியைந்த இயற்றியென்னும் வினை தொகுதிப் பெயரோடும் இயைந்ததாம்; அதனால் அது வினைப்படு தொகுதியாமகலின், உம்மை வேண்டு மென்க" (இ. வி. சூ, 315, உரை)
90-118. கந்தர் கலிவெண்பா, 42-53 கண்ணிகளிற் கூறப்பட்டுள்ள முருகக்கடவுளின் திருமுகங்கள் திருக்கரங்கள் இவற்றின் செயல்கள் பெரும்பாலும் இவ்வாடிகளைத் தழுவியே விளக்கப்பட்டிருக்கின்றன.
120.வயிரும்வளையும் இணைத்துச் சொல்லப்படுதல்: "வயிரும் வளையு மார்ப்ப" (முல்லை. 92); "வளைநரல வயிரார்ப்ப" (மதுரைக். 185); பயிர்வளை யரவமொடு வயிரெடுத் தூதி" (பெருங். 1. 38 : 4): "சங்குங் கருங்கோடும் ....... ஆர்ப்ப", "வளைகள் வயிரியம்பும் வாட்டானை வேந்தே" (பு. வெ. 24, 207)
121. உருமிடி முரசம்: "முரசதிர்ந் தன்ன வின்குர லேற்றொடு, நிரைசெல னிவப்பிற் கொண்மூ" (குறிஞ்சிப். 49-50); "விண்ணதி ரிமிழிசை கடுப்பப் பண்ணமைத்துத், திண்வார் விசித்த முழவு", "மழையெதிர் படுகண் முழவுகண் ணிகுப்ப" (மலைபடு. 2-3, 532); "இன்னிசை முரசினிரங்கி .......... சென்மழை தழுவ" (நற். 197 : 10-12); "கடிப்பிகு முரசின் குழங்கி" (குறுந். 270 : 3); "படுமழை முரசினிரங்கி" (புறநா. 350 : 4); "இடிமுரசியம்ப", முரசதிர்பவைபோன் முழுங்கிடி பயிற்றி"; (பா:4 : 19, 22 : 4); "இடியுமிழ் முரசம்" (அகநா. 354 : 2, சீவக. 2900); "உருமி னிடிமுர சார்ப்ப" (முத்.) "கோல மார்முர சிடி யுமிழ் தழங்கென முழுங்க்" (சீவக. 2392); "இடியார் பணைதுவைப்ப" (பு. வெ. 121;) "முழங்கின முகிலென முரசமே" (தக்க.530).
முருகனுக்கு மயிற்கொடியுமுரியது: "மணிநிற மஞ்ஞை யோங்கிய புட்கொடி" (பரி. 17 : 48), "பல்பொறி மஞ்ஞை வெல்கொடி யுயரிய" (அகநா. 149 : 15),"மணிமயி லுயரிய மாறா வென்றிப், பிணி முக வூர்தி யொண்செய் யோனும்" (புறநா.56 : 7-8).'தேவசேனாபதியுடைய கொடிகளாகியமயில்கள்', 'பிள்ளையாருடைய துவசவாகனமான தோகைமயில்கள்' (தக்க. 23, 114, உரை)
"முருகக்கடவுளின்கொடி கோழிக் கொடியின்றோ வெனின் அவர் மயிற் கொடியையு முடையார்; 'பல்பொறி ......... அகவ' திருமுருகாற்றுப்படை; மற்றும் புராணங்களிற் கண்டுகொள்க" (தக்க. 23, உரை).
124. "உலகந் திரியா வோங்குயர் விழுச்சீர்" (மணி. 1 : 1)
125. "வரைவயிறு கிழித்த நிழறிகழ் நெடுவேற், றிகழ்பூண் முருகன் றீம்புன லலைவாய்" (தொல். களவியல், சூ. 23, மேற். "பையுண்மாலை"); "திருமணி விளக்கி னலைவாய்ச், செருகு சேஎய்" (அகநா. 266 : 20-21); "வெண்டலைப் புணரி யலைக்குஞ் செந்தில்,
நெடுவே ணிலைஇய காமர் வியன்றுறை" (புறநா.55-18-9); "சீர் கெழு செந்திலுஞ் செங்கோடும் வெண்குன்று, மேரகமு நீங்கா விறைவன்"(சிலப். குன்றக்.); "நஞ்செந்தின் மேய வள்ளி மணாளற்குத் தாதை கண்டாய்"(தே. மறைக்காடு)
127.புரையென்பது மரபுபற்றி வருமென்பதற்கு இவ்வடி மேற்கோள்; தொல். உவம. சூ. 17, இளம
126-7. முனிவரியல்பு.
128. "மாசற விளங்கிய யாக்கையர்"(மதுரைக். 456)
130. "உயர்நிலைமற் றென்பியக்கங் கண்டும் புறந்தரார்"(நீதி நெறி, 87; சிதம்பரமும்மணிக்கோவை, 2 : 41)
138. "புகைவிரிந் தன்ன பொங்குதுகில்"(புறநா. 398 : 20); "ஆவி யன்ன பூந்துகில்", "ஆவியந்துகி லாரமர்ந் தார்களே". "பாலா ராவிப் பைந்துகில்"(சீவக. 67, 873, 1094); "ஆவி நுண்டுகில் யாப்புறுத் தாயினும் ", "ஆவி நுண்டுகில் யாப்புறுத்து", "ஆவிநுண்டுகிலணி நலம்"(பெருங். 1. 35 : 64, 165; 1.40 : 228); "கரியவன் வெண்டுகில் கவர்தல் காட்டுவான், விரிமலர்ப் பசுந்தொடை வேனின் மன்னவன், பொருகணை முகத்தெழு புகைமு கந்துற, நிரைவளைச் செங்கர நீட்டு வார்சிலர்"(பாகவதம், கோவியரைமணந்த. 55)
140-41. "குரலோர்த்துத் தொடுத்த சுகிர்புரி நரம்பு "(மலைபடு. 23)
143-4. "தேமா மேனிச் சில்வளை யாயம்" (சிறுபாண். 176); நறுவடிப், பைங்கண் மாஅத் தந்தளி ரன்ன, நன்மா மேனி" (குறுந். 331 : 5-7); "கழிகவி னிளமாவின் றளிரன்னாய்" (கலித். 57 : 13); "மாந்தளிரே மாமேனி" (சீவக. 652)
145. பசலைக்குப் பொன்: "பொன்னிற் பசந்து", "பொற்சுணங் கேர்வர மாமுலை" (பாண்டிக்கோவை); "நின்மேனி, பொன்னிற் பசந்து புலம்புவதென்" (கிளவித்தெளிவு)
கடுக்குமென்பது உருவுவமத்தின்கண் வருமென்பதற்கு இவ்வடி மேற்கோள்;தொல், உவம. சூ. 16, இளம். பேர்; இ. வி. சூ. 642, உரை.
148.கடுவொடுங்கிய எயிறு: புறநா. 17 : 38.
151. புள்ளணி நீள்கொடி : "புள்ளணி நீள்கொடி புணர்நிலை தோன்றும்" (சிலப். 11 : 136); "மண்ணுறு திருமணி புரையு மேனி, விண்ணுயர் புட்கொடி விறல்வெய் யோனும்" (புறநா. 56 : 5-6)
150-51. "பூவைப்பூ மேனியான், பாம்புண் பறவைக் கொடி" (பு.வெ. 227)
151-2. வெள்ளேறு வலவயினுயரிய: "ஊர்தி வால்வெள் ளேறே சிறந்த, சீர்கெழு கொடியு மவ்வே றென்ப", "ஏற்று வலனுயரிய" (புறநா. 1 : 3-4; 56 : 1); "அரசப் பெருங்கொடி யொருவலத் துயரி" (பெருங். 3. 19 : 196)
153-4. "உமையொடு புணர்ந்த விமையா நாட்டத்துக், கண்ணணங் கவிரொளிக் கடவுள்" (பெருங். 1.53 : 15-6; 5. 4 : 51-2); "எண்ணார் மும்மதி லெய்த விமையா முக்கண் ............. பிஞ்ஞகனே" (தே.திருக்கள்ளில், 3); "இமையாத முக்கண் மூவரிற் பெற்றவர்" (திருச்சிற். 14)
"'இமையா ............. செல்வனும்' திருமுருகாற்றுப்படை; இமைத்தகண விழித்ததுபோல விழிக்க வெனச் சொல்லியது : விழித்தலாவது பிரச்சுவலித்தல்" (தக்க. 334, உரை)
164-5. "நான்முக வொருவற் பயந்த பல்லிதழ்த், தாமரைப் பொகுட்டின்" (பெரும்பாண். 403-4)
167. நால்வே றியற்கைப் பதினொரு மூவர் : "நாலெண் டேவரு நயந்துநிற் பாடுவோர்" (பரி. 3 : 28)
167-8. "நால்வகைத் தேவரு மூவறு கணங்களும்" (சிலப். 5 : 176)
169. "மீன்பூத் தன்ன வான்கலம்" (பெரும்பாண். 477)
170-71. வளியிடைத் தீயெழுந்தன்ன திறல்: கான்முளை, யெரிநிகழ்ந் தன்ன நிறையருஞ் சீற்றம்" (பதிற். "இருங்கண்"); "வளித் தலைஇய தீயும்" (புறநா. 2 : 4)
173. உருமிடித்தன்ன குரலினர்: "இடியன்ன பெருங்குரலாள்" (தகடூர்.)
175. "தாவில் கொள்கைத் தந்தொழில்" (முருகு. 89)
177. "அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்" (தொல். புறத். 20); "ஓதல் வேட்ட லவைபிறர்ச் செய்தல், ஈத லேற்றலென் றாறுபுரிந் தொழுகும், அறம்புரி யந்தணர்" (பதிற். 24 : 6-8)
181-2. "அந்தண ரருங்கட னிறுக்கு, முத்தீ", "ஒன்றுபுரிந் தடங்கிய விருபிறப் பாளர், முத்தீ" (புறநா. 2 : 22-3, 367 : 12-3)
179-82. "ஒன்றுபுரி கொள்கை யிருபிறப் பாளர், முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி, யைம்பெரு வேள்வியுஞ் செய்தொழி லோம்பு, மறுதொழி லந்தணர்" (சிலப். 23 : 67-70)
183. "ஒன்பது போலவர் மார்பினி னூலிழை" (தே. திருநா.)
181-4. "புன்மயிர்ச் சடைமுடிப் புலரா வுடுக்கை, முந்நூன் மார்பின் முத்தீச் செல்வத், திருபிறப் பாளர்" (சிலப். 25: 126-8)
185. "அட்டா னானே குட்டுவன், உச்சிக் கூப்பிய கையின ரென்றாற் போல்வன கடைச் சங்கத்திற்கு ஆயின சொற்கள் இக்காலத்திற்கு ஆகாவாயின" (தொல். செய். சூ. 80, ந.) வினைக்குறிப்புமுற்று வினை யெச்சமாயிற்றென்பதற்கு இவ்வடிமேற்கோள்; நன். வி. சூ. 351.
186-7. "நாவியன் மந்திர நடுங்கா தோதி" (மணி. 23 : 52)
192. "வெண்கூ தாளத்துத் தண்பூங் கோதையர்" (பட்டினப். 85)
191-2. "குல்லை குளவி கூதளங் குவளை" (நற். 376 : 5); "கூதளங் கவினிய குளவி முன்றில்", "நாறிதழ்க் குளவியொடு கூதளங் குழைய" (புறநா 168 : 12, 380 : 7)
193. "நறுஞ்சாந் தணிந்த கேழ்கிள ரகலம்" (அகநா. 26 : 14)
195. "வேய்ப்பெயல் விளையுட் டேக்கட் டேறல்", "திருந்தமை விளைந்த தேக்கட் டேறல்" (மலைபடு. 171, 522); "தூம்பகம் பழுநிய தீம்பிழி" (பதிற். 18 : 21); "நெடுங்க ணாடமைப் பழுநிக் கடுந்திறற், பாப்புக்கடுப் பன்ன தோப்பி", "அம்பணை விளைந்த தேக்கட் டேறல்" (அகநா. 348 : 6-7, 368 : 14)
194-7. கட்குடித்துக் குரவை யயர்தல்: "அருங்குறும் பெறிந்த கானவ ருவகை, திருந்துவே லண்ணற்கு விருந்திறை சான்மென, நறவுநாட் செய்த குறவர்தம் பெண்டிரொடு, மான்றோற் சிறுபறை கறங்கக் கல்லென. வான்றோய் மீமிசை யயருங் குரவை" (மலைபடு. 318-22); "பெருமலை, வாங்கமைப் பழுநிய நறவுண்டு, வேங்கை முன்றிற் குரவையுங் கண்டே" (நற். 276 : 8-10); "குறியிறைக் குரம்பைக் குறவர் மாக்கள், வாங்கமைப் பழுநிய தேறன் மகிழ்ந்து , வேங்ைகை நீழற் குரவை யயரும்" (புறநா. 129 : 1-3)
196-7. "தொண்டகப் பறைச்சீர் பெண்டிரொடு விரைஇ, மறுகிற் றூங்குஞ் சிறுகுடிப் பாக்கத்து" (அகநா. 118 : 3-4); "தொண்டகந் தொடுமின் சிறுபறை தொடுமின்" (சிலப். 24 : 16)
197-8.பெருங்.1 : 35 : 183.
198-200. "தண்கயத் தமன்ற வொண்பூங் குவளை, யரும்பலைத் தியற்றிய சுரும்பார் கண்ணி, பின்னுப்புறந் தாழக் கென்னே சூட்டி" (அகநா.180 : 5-7); "கூருகிர் விடுத்ததோர் கோல மாலை" (சீவக. 1466)
199. "குண்டுசுனைக் குவளையொடு" (குறுந். 59 : 2)
"குண்டுசுனைபூத்த வண்டுபடு கண்ணி, நூலாக் கலிங்கம் வாலரைக் கொளீஇ யென்பன, பூத்தபூவான் இயன்ற கண்ணி, நூலாத நூலான் இயன்ற கலிங்கமென ஒற்றுமை நயம் பற்றிச் செயப்படுபொருண்மேல்நின்றன" (தொல். வினை. சூ. 37, ந.); இவ்வடி, பெயரெச்சம், செய்வதாதி அறுபொருட் பெயரன்றிப் பிற பெயர் எஞ்ச நின்றதற்கு மேற்கோள்; (நன். வி. சூ. 340), "நுண்டுகில், குண்டு ............. கண்ணி என்றாற் போல ஒற்றுமை நயம்பற்றி, நுண்ணிய நூலாற் செய்த துகிலென்று கொள்க" (தஞ்சை. 217, உரை)
200. "இணைப்புறு பிணையல்" (முருகு. 30)
202. ""செங்கான் மராஅத்து" (நற். 148 : 5, ஐங். 381 : 2) வாலிணர்: "மராத்து வாஅன் மெல்லிணர்" (அகநா. 127 : 13); "மராஅத்து ........... வலஞ்சுரி வாலிணர்" (ஐங். 383 : 2-3)
203. "சுரும்புண விரிந்த பெருந்தண்கோதை" (அகநா. 131 : 4)
201-4. "பல்பூம் பகைத்தழை நுடங்கு மல்குல்" (நற். 8 : 2); "தண்ணறும் பிடவமும் தவழ்கொடித் தளவமும், வண்ணவண் டோன்றியும் வயங்கிணர்க் கொன்றையு, மன்னவை பிறவும் பன்மலர் துதையத், தழையுங் கோதையு மிழையு மென்றிவை, தைஇனர் மகிழ்ந்து திளைஇ விளையாடு, மடமொழி யாயத்தவர்" (கலித். 102 : 2-7); "அம்பூந் தொடலை யணித்தழை யல்குற், செம்பொறிச் சிலம்பி னிளையோள்" (புறநா. 341 : 2-3); "அந்தழை யல்குலும்" (பு. வெ. 123)
205. மயில் கண்டன்ன மடநடை: "மடநடை மஞ்ஞை" (முருகு. 310); "பீலி மஞ்ஞையி னியலி" (பெரும்பாண். 331); "நன்மா மயிலின் மென்மெல வியலி" (மதுரைக். 608); "அணிமயி லன்ன வசைநடைக் கொடிச்சியை" (ஐங். 258 : 2); "மணிமயிற்றொழில்" (பரி. "வானாரெழிலி" 62); "வருநல மயிலன மடநடை மலைமகள்" (தே. இடைமருது.); "மயிலெனப் பேர்ந்து" (திருச்சிற். 224); "நடை மயிலே" (பிரயோக. 42)
"மயில் ......... மகளிர்", "கண்டன்ன" (இ. கொ. சூ. 86, 117, மேற்.)
206. "பவழத் தன்ன மேனித் திகழொளிக், குன்றி யேய்க்கு முடுக்கை ............. சேவலங் கொடியோன்" (குறுந். கடவுள். 2-5); "உடையு மொலியலுஞ் செய்யை ........... உருவு முருவத்தீ யொத்தி" (பரி. 19 : 97-9); "குன்றியுங் கோபமு மொன்றிய வுடுக்கை" (தொல். உவம. சூ. 11, பேர். மேற்.); "குன்றி கோபக் கொடிவிடு பவள, மொண்செங் காந்த ளொக்கு நின்னிறம்" (தொல். சொல். இடை. 42, சே. மேற். ); "வென்றிச் செவ்வேள்" (சிலப். 25 : 25)
207. முருகு. 31-ஆம் அடிக்குறிப்பைப் பார்க்க; "ஒண்பூம் பிண்டி யொருகாது செரீஇ" (குறிஞ்சிப். 119)
208. "கச்சினன் கழலினன் றேந்தார் மார்பினன்" (அகநா. 76 : 7)
209. "வல்லானென்னும் வினைக்குறிப்புமுற்று வினையெச்சமாய் நின்றது; என்னை? திருமுருகாற்றுப்படையுள், குழலன் கோட்டன் குறும்பல்லியத்த னென்பதற்குக் குழலை யூதிக் கோட்டைக் குறித்துப் பல்லியத்தை ஒலிப்பித்தென முற்றுவினையை எச்சமாக நச்சினார்க்கினியர் கூறியவுரையிற் கண்டு கொள்க" (தஞ்சை. 8, உரை)
211. நெடியன் : "உருகெழு நெடுவேள்" (முருகு. 273); "கடம் பமர் நெடுவேள்" (பெரும்பாண். 75); "நெடியாய்" (பரி. 19 : 84); "நெடுவேட் பேண", "வெறிகமழ் நெடுவேள்", "நெடுவேண் மார்பினாரம் போல", "காடுகெழு நெடுவேள்" (அகநா. 22 : 6, 98 : 27, 120 : 1,382. 5); "நெடுவே ணிலைஇய காமர் வியன்றுறை" (புறநா. 55 : 19). தொடியணி தோளன்: "கழறொடிச் சேஎய்" (குறுந். 1 : 3)
210-11. "சேவலங் கொடியோன் காப்ப" (குறுந். கடவுள். 5);
"சேவற் கொடியன் தொடியணி தோளன் ........... எனத் தொடர்மொழி யீற்றின் விகுதி பொருந்தியது" (இ. கொ. 117, உரை)
212. "நரம்பின் முரலு நயம்வரு முரற்சி, விறலியர்" (மதுரைக். 217-8); "நரம்புமீ திறவா துடன்புணர்ந் தொன்றிக், கடவ தறிந்த வின்குரல் விறலியர்" (மலைபடு. 535-6); "நரம்பார்த் தன்ன தீங்கிள
வியளே" (ஐங். 185 : 4); "இருங்கடற் பவளச் செவ்வாய் திறந்திவள் பாடி னாளோ, நரம்பொடு வீணை நாவி னவின்றதோ வென்று நைந்தார்" (சீவக. 658)
215. உறழென்பது மெய்யுவம வுருபாய் வருமென்பதற்கு இவ்வடி மேற்கோள்; தொல். உவம. சூ. 15, இளம். பேர்.
214-6. "மைந்த, ரெல்வளை மகளிர் தலைக்கை தரூஉந்து" (புறநா. 24 : 9)
217. "குன்றுதொறு ........ பண்பேயெனத் தொறுவென்பதுதான் சார்ந்த மொழிப்பொருட்குப் பன்மையும் இடமாதலும் உணர்த்தி நிற்கும்" (தொல். இடை சூ. 48, சே. ந. ; இ-வி. சூ. 289, உரை.) 'தொறு' என்னும் இடைச்சொல் வந்ததற்கு இவ்வடி மேற்கொள்; நன். சூ. 420, மயிலை.
208-17. "முருகாற்றுப்படையுள், கச்சினன் கழலினன் ............ பன்பே யென்புழி வந்த வினையெச்ச வினைக்குறிப்பு முற்றுக்கள் ஆக்கம் பெற்றுப் பொருளுணர்த்துங்கால், கச்சைக் கட்டிக் கழலையணிந்து கண்ணியைச் சூடிக் குழலையூதிக் கோட்டைக் குறித்துப் பல்லியங்களை யெழுப்பித் தகரைப் பின்னிட்டு மயிலையேறிக் கொடியையுயர்த்து வளர்ந்து தோளிலே தொடியையணிந்து துகிலையுடுத்து ஏந்தித் தழீஇத் தலைக்கை கொடுத்து ஆடலும் அவற்கு நிலைநின்ற பண்பெனச் செய்தெ னெச்சப் பொருளை உணர்த்தி நின்றவாறு காண்க" (தொல். எச்ச. சூ. 63, ந.)
218. "மறிக்குர லறுத்துத் தினைப்பிரப் பிரீஇ" (குறுந். 263 : 1); "உருவச் செந்தினை குருதியொடு தூஉய்" (அகநா. 22 : 10)
219. வாரணக்கொடி : முருகு. 38, 227.
கோழியை வாரணமென்றற்கு இவ்வடி மேற்கோள்:தொல். மரபு. சூ. 68, உரை.)
222. "சாறயர் களத்து வீறுபெறத் தோன்றி" (முருகு. 283); "வேலன் புனைந்த வெறியயர் களந்தொறும்" (குறுந்.53 : 3); "வேலன் வெறியயர் விளன்களம்" (அகநா. 98 : 18-9); "வெறியயர் வெங்களத்து வேன்மகன்" (நாலடி. இளமை. 6); "வேலனார் வந்து வெறியாடும் வெங்களத்து" (சிலப்.குன்றக்.)
வேலன் ஆடுதல் சிறுபான்மை புறத்திற்குங் கோடற்கு இவ்வடி மேற்கோள்; தொல். புறத். சூ. 5, ந.
224. "ஆலமுங் கடம்பு நல்யாற்று நடுவும், கால்வழக் கறுநிலைக் குன்றமும் பிறவு, மவ்வவை மேய வேறுவேறு பெயரோய், எவ்வயினோயுநீயே" (பரி. 4 : 67-70); "பெருவேண் மறைந்து பெரும்புனலாடும்" (பெருங். 1,42 : 56). "துறைமிசை-நீர்த்துறையில்; நீர்த்துறையில் நின் திருவடியைச் சூளுறு மவரென்க; யாறுங் குளனுமென்றா ராகலின்" (சிலப். குன்ற.அரும்பத.)
225. கடம்பு முருகக்கடவுளுக்கு இடம்: "கடம்பமர் நெடுவேள்" (பெரும்பாண்.75); "கடம்பமர்ந்து", "கடம்பம ரணிநிலை" (பரி.19 : 2,104); "செல்வக் கடம்பமர்ந்தான்" (ஐந். ஐம். 1); "செவ்வேள் .......... மராஅத்தண் சாயை நின்றணங்கும்" (தஞ்சை. 132);"கடம்பமர் மன்றற் றொங்கற் கந்தனைச் சிந்தை செய்வாம்" (திருவால. கடவுள். 18); "கடம்பமர் காளை" (கந்த. வள்ளியம்மை. 69)
224-5. "துறையு மாலமுந் தொல்வலி மராஅமு, முறையுளி பராஅய்ப் பாய்ந்தனர்" (கலித். 101 : 13-4)
226. மன்றமும் பொதியிலும்: "மாதவ ரிடங்களு மன்றமும் பொதியிலும்" (மணி. 20 : 30); "மன்றும் பொதியிலு மாமயில்சேர்" (தஞ்சை. 34)
225-6. "மன்றமும் பொதியிலுஞ் சந்தியுஞ் சதுக்கமும்" (மணி. 28 : 59; பதிற். 35 : 8, உரை)
228. நெய்யோ டையவி யப்பி: "ஐயவி யப்பிய நெய்யணி நெடு நிலை" (நெடுநல். 86); "நெய்யோ டிமைக்கு மையவித் திரள்காழ்" (நற். 370 : 3); "ஐயவி யப்பிய நெய்யணி முச்சி" (மணி. 3 : 134)
229. "குடந்தம் பட்டுச் சூழ்போந்து குழைந்து வழுத்தி " (கூர்ம. தக்கன்வேள்வி. 52)
232. "குருதிச் செந்தினை பரப்பி" (முருகு. 242)
232-3. "மல்லன் மன்றத்து மதவிடை கெண்டி" (பெரும்பாண். 143); "விடையும் வீழ்மின்" (புறநா. 262 : 1)
234. "பொய்வல்பெண்டிர் பிரப்புளர் பிரீஇ" "அறிதல் வேண்டு மெனப் பல்பிரப் பிரீஇ" அகநா. 98 : 9, 242 : 9) "பரந்தெலாப் பிரப்பும் வைத்து" (சீவக. 369); "அவ்வகற் கொண்ட வவியும் பிரப்பும்" (பெருங். 1. 34 : 186)
233-4. "சில்பலி யரிசியும்" (மணி. 6 : 95)
232-4. "பலிகொடுத் துருவச் செந்தினை குருதியொடு தூஉய்" (அகநா. 22 : 9-10); "கொழுவிடைக்கறை விராவிய பலிக்குறை நிரப்பி, வழுவில் பல்பிரப் பிரீஇவெறி யாட்டயர் மன்றத்து" (தணிகை. நாடு. 46)
239. நறும்புகை யெடுத்து: "நறையி னறும்புகை நனியமர்ந்தோயே" (பரி. 14 : 20). மு. "குறிஞ்சிபாடுமி னறும்புகை யெடுமின்" (சிலப். குன்றக்.); "ஐயவி சிந்தி நறைபுகைத் தாய்மலர் தூய்க், கொய்யாக் குறிஞ்சி பலபாடி" (பு. வெ. 79)
245. "வெறியயர் வியன்களம் பொலிய வேத்தி" (அகநா. 242 : 11) ஆடுகளம்: "அணங்குறு மகளி ராடுகளங் கடுப்ப" (குறுஞ்சிப்.175); "யானுமோ ராடுகள மகளே" (குறுந். 31 : 14)
236-45. "களநன் கிழைத்துக் கண்ணி சூட்டி, வளநகர் சிலம்பப் பாடிப் பலிகொடுத், துருவச் செந்தினை குருதியொடு தூஉய், முருகாற்றுப் படுத்த வுருகெழு நடுநாள்" (அகநா. 22 : 8-11)
246. "கோடுவாய் வைம்மின் கொடுமணி யியக்குமின்" (சிலப். 24 : 17)
247. ஓடாப் பூட்கை: "ஓடாப் பூட்கை யுறந்தையும் வறிதே" (சிறுபாண். 83) பிணிமுகம்-முருகக்கடவுளின் ஊர்தியாகிய யானை: "சேயுயர் பிணிமுக மூர்ந்து", "பிணிமுக மூர்ந்த வெல்போ ரிறைவ" (பரி. 5 : 2, 17 : 49); "பிணிமுக வூர்தி யொண்செய் யோனும்" (புறநா. 56 : 8); "பிணிமுக மேற்கொண்டு (சிலப். 24. "உரையினி") "பிணிமுக மஞ்ஞை செருமுகத் தேந்திய, மூவிரு திருமுகத் தொருவே லவற்கு" (கல். 7, மயிலேறும்.மேற்.) யானையை வாழ்த்துதல்: "கடம்புங்களிறும் பாடி" (தொல். பொருளியல், சூ. 16, ந. மேற்.) ஓடாப்பூட்கை: நன். சூ. 166, மயிலை. மேற்.
246-7. "ததும்புசீ ரின்னியங் கறங்கக் கைதொழு, துருகெழு சிறப்பின் முருகு மனைத்தரீஇக், கடம்புங் களிறும் பாடி" (அகநா. 138 : 9-11)
248. வேண்டுநர் வேண்டியாங் கெய்தல்: "வேண்டிய வேண்டியாங் கெய்தலால்" (குறள்,265); "வேண்டுவார் வேண்டுவதே யீவான் கண்டாய்", "மனத்திருந்த கருத்தறிந்து முடிப்பாய் நீயே" (தே. மறைசை, ஐயாறு)
249. "திசைநாறிய குன்றமர்ந் தாண்டாண்டு" (பரி. 17 : 29); "ஆண்டாண் டுறைகுவர்" (கலித். 36 : 21)
250. (பி-ம்.) 'ஆங்காங்காயினுமாக'
251. "முகனமர்ந் தின்சொல னாக" (குறள், 92) (பி-ம்.) 'முக மலர்ந்தேத்தி'
253-5. "கடவு ளொருமீன் சாலினி யொழிய, வறுவர் மற்றை யோரும் ........... நிவந்தோங் கிமயத்து நீலப் பைஞ்சுனைப், பயந்தோரென்ப பதுமத்துப் பாயல்" (பரி.5 : 44-9); "சரவணப்பூம் பள்ளியறைத் தாய்மா ரறுவர், திருமுலைப்பா லுண்டான்" (சிலப். 24 : "உரையினி")
256. ஆல்கெழு கடவுட் புதல்வ: " ஆலமர் செல்வற் கமர்ந்தனன் கொடுப்ப" (சிறுபாண். 97); "ஆலமர் செல்வ னணிசால் பெருவிறல்" "ஆலமர் செல்வ னணிசான் மகன்"; (கலித். 81 : 7, 83 : 14); "ஆலமர் கடவு ளன்னநின் செல்வம்"; (புறநா. 198 : 9); "ஆலமர் செல்வன் புதல்வன்" (சிலப். குன்றக். ); "ஆலமர் செல்வன் மகன்" (மணி. 3 : 144)
257. மலைமகண் மகனே: "மலைமகண் மகனே" (சிலப்.குன்றக்.); "மலைமகண் மகனே மாற்றோர் கூற்றே யென்றற் றொடக்கத்தன காரணக் குறியாக்கந் தொடர்ந்தன" (நன். வி. சூ. 275)
258. கொற்றவை சிறுவ : "சேய்பயந்த மாமோட்டுத் துணங்கையஞ் செல்விக்கு" (பெரும்பாண். 458-9)
259. பழையோள்: "தொல்லைநாயகி" (தக்க. 120)
261. நூலறி புலவ: "நூலறி புலவரை நோக்க" (சிலப். 25 : 116) புலவ: "பலர்புகழ் நன்மொழிப் புலவ ரேறே" "புலமையோய்" (முருகு. 268,280); "சங்கத் தமிழின் றலைமைப் புலவா" (முத்துக்குமார. தாலப்.)
262. பொருவிறல் மள்ள: "பொருமறையார் கழல்வீரர் வீரன்" (சிவஞானசித். முருகக்.)
266. "குருகு பெயர்க்குன்றங் கொன்ற நெடுவேலே", "குருகு பெயர்க்குன்றங் கொன்றான்" (சிலப். 24); "குருகுபெயர்க் குன்றங் கொன்றோன்" (மணி.5 : 13); "மலையைக் கொல்லுமென்றது, மலை பண்டு பிராணனுடையவாய்ப் பறந்து திரிந்தமையின்; 'குன்றம் ......... கொற்றத்து' இது திருமுருகாற்றுப்படை" (தக்க. 170, உரை)
267. "விண்பொரு நெடுவரைப் பரிதியின்" (முருகு. 299) "விண்குத்து நீள்வரை வெற்ப" (நாலடி. 226)
குறிஞ்சிக்கிழவ: "குறிஞ்சிக்கிழவனென் றோதுங் குவலயமே" (கந்தரலங்காரம், 5)
269. பெரும்பெயர் : "பெரும்பெய ரியவுள்" (முருகு. 274); "தண்டா வீகைநின் பெரும்பெய ரேத்தி" (பெரும்பாண். 460); "பெரும்பெயர் முருக" (பரி. 5 : 50); "செல்வன் பெரும்பெ ரேத்தி" (அகநா. 98 : 18) "பெரும்பெயர் வேந்தன்" (பு. வெ.); "பெரும்பெயர்ப் பிரமன்" (சீவக. 207); "பெரும்பெயர்க் கடவுளிற் கண்டு" (சிவஞான போதம், சிறப்பு.); "பெரும்பெயரே பெயராக வந்த, வொருவாய்மை தன்னை நினையினு முள்ள முருகுவதே" (பஞ்சாக்கர. 5)
271. அலந்து, இடுக்கண் பட்டென்பதற்கு இவ்வடி மேற்கோள்; தஞ்சை. 352, உரை.
272. "மண்டமர் பலகடந்து" (கலித். 1 : 8)
273. நெடுவேன்: 211-ஆம் அடிக் குறிப்பைப் பார்க்க.
275. "சூர்மருங் கறுத்த சுடரிலை நெடுவேற், சீர்மிகு முருகன்" (அகநா. 59 : 10-11) சூர்மருங்கறுத்த: "மன்மருங்கறுத்த மழுவா.
ணெடியோன்" (மணி. 22 : 25); "மழுவாளான் மன்னர் மருங்கறுத்த மால்போல்" (தொல். புறத். சூ. 13, ந. உரை. மேற். )
279-80. நின்னொடு புரையுந ரில்லாப் புலமையோய்: "நின்னாவார் பிறரின்றி நீயே யானாய்" (தே. தனித்திருத்தாண்டகம்);
"மற்றாருந் தன்னொப்பா ரில்லாதான் காண்" (தே. திருவாரூர்); "தனக்குவ மையில்லாதான்" (குறள், 7)
281. "நீசில மொழியா வளவை" (சிறுபாண். 235)
282. கூளியர்: புறநா. 23 : 5.
283. "சாறயர் களத்தின் வீறுபெறத் தோன்றி" (சிலப். 6 : 162) (பி-ம்.) 'வேறுபெறத் தோன்றி'
282-3. "சாறுகொண்ட களம்போல, வேறுவேறு பொலிவு தோன்ற" (புறநா. 22 : 16-7)
284. "முதுவா யிரவல" (சிறுபாண். 40); "செல்லு முதுவா யிரவல" (பதிற். 66 : 3); "முதுவா யிரவல" (புறநா. 48 : 7)
285. "வந்தேன் பெரும வாழிய நெடிதென" (பெரும்பாண். 461)
287. தே. 6563.
290. "பூவந்த வுண்கண் பொறுக்கென்று மேவித்தன், மூவா விள நலங் காட்டி" (சிலப். 9 : 34-5)
289-90. "அறுமுகமில்லை; அணிமயில் இல்லை யென்று சொல்லு வார்களென்று வேறு காட்டினாள்; தலைமகள் கடம்புசூடி உடம்பிடி யேந்தித் தன்னைக் குமரனென்று பிறர் கருத வந்த காரணம், 'பண்டை ............ காட்டி" என்றாராதலால்" (சிலப்.குன்றக். அரும்பத.)
292. அன்புடை நன்மொழி: "ஈர நன்மொழி", "ஆர்வ நன் மொழி" (சிறுபாண். 93. 99); "இன்சொலா லீர மளைஇ .............. சொல்" (குறள், 91); "அன்புட னளைஇய வருண்மொழி" (மணி. 5 : 63)
294. (பி-ம்.) 'ஒரு நீயாக'
294-5. இவ்வடிகள், "இன்மை யுரைத்தாற் கதுநிறைக்க லாற்றாக்காற், றன்மெய் துறப்பான் மலை" என்பதற்கு மேற்கோள்! கலித். 43, ந.
63-295. "முருகாற்றுப்படையுள், புலம் பிரிந்துறையும் சேவடியெனக் கந்தழிகூறி நின்னெஞ்சத்து இன்னசை வாய்ப்பப் பெறுதியெனவம் கூறி அவனுறையு மிடங்களுங்கூறி ஆண்டுச் சென்றால் அவன் விழுமிய பெறலரும் பரிசில் நல்குமெனவுங்கூறி ஆண்டுத் தான்பெற்றபெரு வளம் அவனும் பெறக் கூறியவாறு காண்க. இதனைப் புலவராற்றுப்படை யென்று உய்த்துணர்ந்து பெயர் கூறுவார்க்கு முருகாற்றுப்படை யென்னும் பெயரன்றி அப்பெயர் வழங்காமையான் மறுக்க, இனி, முருகாற்றுப்படை யென்பதற்கு முருகன்பால் வீடு பெறுதற்குச் சமைந்தானோர் இரவலனை ஆற்றுப் படுத்ததென்பது பொருளாகக் கொள்க" (தொல். புறத். சூ. 36, ந.)
296. அருவிக்குத்துகில்: "அவிர்துகில் புரையு மவ்வெள் ளருவி" (குறிஞ்சிப். 55); "அறுவைத், தூவிரி கடுப்பத் துவன்றி மீமிசைத், தண்பல விழிதரு மருவி" (புறநா. 154 : 10. 12); "மாநீல மாண்டதுகி லுமிழ்வ தொத்தருவி, மானீல மால்வரை நாடகேள்" (திணைமா. 6); "நதிதோறுந் துகில்புரை நறுநீரிற் றோய்வன" (கம்ப. வனம்புகு. 11); "பௌவநீ ராடைத் தரணிமான் மார்பிற் பயிலுமுத் தரியமும் போன்று ............... தெய்வமா நதிநீர் பரக்கும்" (வி. பா. சிறப்பு. 8)
297. ஆரமுழுமுதல்: "வாழை முழுமுதல்" (முருகு. 307)
298. "பூவுடை யலங்குசினை புலம்பத் தாக்கிக், கல்பொரு திரங்குங் கதழ்வீ ழருவி" (குறுந். 134 : 4-5)
300. அலர்தல்-பரத்தலென்பதற்கு இவ்வடி மேற்கோள்; தஞ்சை. 269, உரை.
289-300. இறாலுக்குப் பருதி: மலைபடு. 238-9.
304-5. "யானை முத்துடை மருப்பின்" (மலைபடு. 517-8)
309. "கறிக்கருந்துணருகுப்ப" (திருவிளை. நாடு. 35)
310. முருகு. 205-ஆம் அடிக்குறிப்பைப் பார்க்க.
312-3. "இரும்பனஞ் செறும்பி னன்ன பரூஉமயிர்ச். சிறுகட்பன்றி" (அகநா. 277 : 7-8); பனஞ்செறும் பன்ன பன்மயிர் முன்கை" (பெருங். 2.8 : 107); "பெண்ணைவன் செறும்பிற் பிறங்கிச் செறி, வண்ண வன்மயிர்" (கம்ப.கங்கை. 33); "இரும்பனை வெளிற்றின் புன்சா யெனமலி மயிரி னாக்கைக், கரும்பெருங் கரடி" (விநாயக. நாடு. 26)
315. சிலைத்தல் இசைப்பொருளை உணர்த்துமென்பதற்கு இவ்வடி மேற்கோள்; தொல். உரி. சூ. 62, பேர். சே. ந; இ. வி. சூ. 285, உரை.
316. "இழுமென்று வந்தீங் கிழியு மலையருவி" (சிலப். குன்றக்.); "இழுமெ னோதையி னிழிதரு மருவி" (ஆனைக்கா.நாடு. 14); "வெள்ளருவி யிழுமெ னோதையும்" (தணிகை. நாடு. 46)
292-316.தொல்.இடை. சூ. 27, ந. மேற்.
317. மலைகிழவோனே: "ஒளிறிலங் கருவிய மலைகிழ வோனே" (பெரும்பாண். 500); "நிலைபெறு தணிகை மலைகிழ வோனே" (தணிகையாறு. 417)
தொல். பெயர். சூ. 11, கல்.மேற். பெயரிடத்து னகர வீற்றயலகரம் ஒகாரமா மென்பதற்கு இவ்வடி மேற்கோள்; இ. வி. சூ. 326. உரை; நன். வி. சூ. 353.
-------------
இதன் பொருள்
திருப்பரங்குன்றம்
1. உலகமென்பதுமுதற் கணவன் (6) #என்னுந்துணையும் ஒரு தொடர்.
உலகம் உவப்ப-சீவான்மாக்கள் உவப்ப.
உலகமென்பது பலபொருளொருசொல்லாய் நிலத்தையும் உயிர்களையும் ஒழுக்கத்தையும் உணர்த்திநிற்குமேனும் ஈண்டு உவப்பவென்றதனான், மண்ணிடத்துவாழும் சீவான்மாக்களை உணர்த்திற்று.
[வலனேர்பு திரிதரு:] ஏர்பு வலன் திரிதரு-எழுந்து @மகாமேருவை வலமாகத்திரிதலைச்செய்யும்.
2. பலர் புகழ் ஞாயிறு-எல்லாச் சமயத்தாரும் புகழும் ஞாயிற்றை கடற் கண்டாங்கு-கடலிடத்தே கண்டாற்போல
இது வினையெச்சவுவமம்; §"விரவியும் வரூஉ மரபின வென்ப" என்பதனால் தொழிலுவமமும் வண்ணவுவமமும் பற்றிவந்தது; என்னை? ஞாயிறு இருளைக்கெடுக்குமாறுபோலத் தன்னை மனத்தால் நோக்குவார்க்கு மாயையைக் கெடுத்தலிற் றொழிலுவமமும், தன்னைக் கட்புலனால் நோக்குவார்க்குக் 4கடலிற் பசுமையும் ஞாயிற்றின் செம்மையும் போல மயிலிற் பசுமையும் திருமேனிச் செம்மையும் தோன்றலின் வண்ணவுவமமும் கொள்ளக்கிடந்தமை காண்க.
# ( ) இந்த நக வளைவுக்குட்பட்ட எண்ணும், இப்படியே பின்னர் ஆங்காங்குப் பதிப்பிக்கப்படும் எண்களும் தத்தம் முன்புள்ள 'மொழிகளையேனும், அம்மொழிகளைப் பொருளாகப் பெற்ற மொழிகளையேனுமுடைய மூலத்தின் வரியைப் புலப்படுத்தும்.
@ "ஞாயிறு போற்றுதும் ............. மேரு வலந்திரித லான்" (சிலப். மங்கல.)
§ தொல்காப்பியம், உவமவியல், சூ. 2.
$ "மாக்கட னிவந்தெழுதரு, செஞ்ஞா யிற்றுக் கவினை" (புறநா. 4 : 15-16); "உததியிடை கடவுமர கதவருண குலதுரக வுபலளித கனகரத சதகோடி சூரியர்கள், உதயமென வதிகவித கலபகக மயிலின்மிசை யுகமுடிவி னிருளகல வொரு சோதி வீசுவதும்" (திருவகுப்பு. ஸ்ரீபாத.)
-------------
3. [ ஓவற விமைக்குஞ் சேண்விளங் கவிரொளி:]
#ஓ அற இமைக்கும் அவிர் ஒளி - இருவகையிந்திரியங்களும் தாம் செல்லுதற்குரிய பொருள்கண்மேற் சென்று தங்குதல் இல்லையாக இமைத்துப் பார்ப்பதற்குக் காரணமாகும், விளங்குகின்ற ஒளி.
ஓ என்பது ஓரெழுத்தொருமொழியாகிய தொழிற்பெயர். இமைத்தல் - கண்களின் இதழ்களிரண்டினையும் குவித்தல்; அது@ "நுதல திமையா நாட்டம்" என்பதனாலுணர்க.
சேண் விளங்கு ஒளி - கட்புலனால் நோக்குவார் கண்ணிடங்களெல்லாவற்றினும் சென்று விளங்குகின்ற ஒளியினையும்,
உவப்ப எழுந்து திரியும் (1) ஞாயிற்றைக் கடற்கண்டாங்கு (2) அவிர்கின்ற ஒளி (3) யெனத்தொழிலுவமம் கொள்ளுங்கால் வினை முடிக்க. உவப்ப எழுந்து திரியுஞாயிற்றைக் கடற்கண்டாங்குச் சேண் விளங்கொளியென வண்ணவுவமங் கொள்ளுங்கால் வினைமுடிக்க.
4. உறுநர் தாங்கிய§ மதன் உடை நோன்றாள் - தன்னைச் சேர்ந்தவர்கள் தீவினையைப்போக்கி அவரைத் தாங்கிய, அறியாமையை உடைத்தற்குக் காரணமாகிய வலியினையுடைய தாளினையும்,
5. செறுநர் தேய்த்த $செல் உறழ் தட கை - அழித்தற்குரியாரை அழித்த இடியைமாறுபட்ட பெருமையினையுடைய கையினையும் உடைய,
6. மறு இல் கற்பின் வாள் நுதல் கணவன்- £மறக்கற்பில்லாத
# ஓவற - ஒழிவற. இமைக்கும் - விட்டுவிளங்கும். அவிர்தல் - பாடஞ் செய்தல் (வேறுரை)
@ அகநா. கடவுள். 4.
§ மதனுடை - அழகுடைய (வேறுரை)
$ செல் உறழ் - மேகத்தை ஒத்த (வேறுரை)
£ மறக்கற்பு அறக்கற்பு ; மறக்கற்பு சீறிய கற்பென்றும் கொடுங்கற்பென்றும், அறக்கற்பு ஆறிய கற்பென்றும் அருட்கற்பென்றும் வழங்கப்பெறும்; 'வருத்தமில்லாத அருட்கற்பினையுடைய தெய்வ யானையார்' (முருகு, 175, ந.); "ஆறிய கற்பிற் றேறிய நல்லிசை, வண்டார் கூந்த லொண்டொடி கணவ" (பதிற். 90 : 49-50); 'வீரபத்தினி மறக்கற்புடையாள்; கோப்பெருந்தேவி அறக்கற்புடையாள்; ஆக ஆறியகற்பும் சீறியகற்புமெனக் கற்பு இருவகை' (சிலப். பதிகம், 38-54, அடியார்.); "கொந்தளக மலர்சரியக் கூப்பிடுவாள் கொடுங்கற்பும்", (வி. பா. சூதுபோர். 253)
---------
#அறக்கற்பினையும் ஒளிபொருந்திய நுதலினையுமுடைய இந்திரன் மகள் தெய்வயானையார் கணவன்;
இப்பெயரை முற்கூறினார், படைத்தற்கும் காத்தற்கும் உரிமை தோன்ற.
2மறுவில் கற்பின்வாணுதல் கணவனென்பது ஈண்டு முருக னென்றும் துணையாய் நின்றது.
ஒளியினையும் (3) தாளினையும் (4) கையினையும் (5) உடைய கணவனென முடிக்க
7.கார்கோளென்பது முதல் மார்பினன் (11) என்னுந்துணையும் ஒரு தொடர்.
கார்கோள் முகந்த கம சூல் மா மழை - கடலிலே முகந்த தனாலுண்டாகிய நிறைவினையுடைத்தாகிய சூலினையுடைய பெருமையையுடைய - மழை,
கார் முகக்கப்படுதலிற் கடல் கார்கோளென்று பெயர் பெற்றது; ஆகுபெயர்.
8. §வாள் போழ் விசும்பில் வள் உறை சிதறி - திங்களும் ஞாயிறும் இருளை நீக்கும் ஆகாயத்தே பெருமையையுடைய துளியை முற்படச் சிதறி,
வாள் : ஆகுபெயர்.
9. தலைப்பெயல் $தலைஇய தண் நறு கானத்து - கார்காலத்து முதற்பெயலைச் சொரிந்த தண்ணிய நறிய காட்டிடத்து,
10. இருள் பட £பொதுளிய பராரை மராஅத்து - இருட்சியுண்டாகத் தழைத்த பரிய அடியினையுடைய ##செங்கடம்பினது,
பராரை: பண்புத்தொகைச் சந்திமுடிபு வேற்றுமையென்றுணர்க.
11. @@உருள் பூ தண் தார் புரளும் மார்பினன் - தேருருள் போலும் பூவாற் செய்யப்பட்ட குளிர்ந்த மாலையசையும் மார்பினையுடையவன்;
--------
# (பி-ம்.) அருட்கற்பு.
@ 'கொடியோள் கணவன் ...... இது நன்னென்னும் பொருட்டாய் நின்றது' (மலைபடு. 424, ந.) என்றது இங்கே அறியத்தக்கது.
§ வாள் போழ் - திங்களும் ஞாயிறும் அளவிடப்பட்டாற்போன்ற (வேறுரை).
$ தலைஇய - தழைத்த (வேறுரை)
£ பொதுளிய - நெருங்கிய (வேறுரை)
## (பி-ம்.) வெண்கடம்பினது.
@@ உருள்பூ - தேருருள்போன்ற வட்டப்பூ (வேறுரை)
-----------
உருள்பூ உவமத் தொகையாகலின் உருள்பூ உருட்பூவென உறழ்ச்சி முடிபெய்தும்; இனி உருண்டபூ உருளும்பூவென வினைத்தொகையுமாம்.மழை சிதறித் தலைஇய கானத்து மராஅத்துத் தார் புரளும் மார்பினனென முடிக்க.
இது #போகத்திற்குரிய தார்; இதனை முற்கூறினார், வாணுதல் கணவன் (6) என்றதனை நோக்கி.
12. மால்வரை என்பதுமுதற் சென்னியன் (44) என்னுந்துணையும் ஒரு தொடர்.
மால் வரை நிவந்த சேண் உயர்வெற்பில் - பெருமையையுடைய மூங்கில் வளர்ந்த தேவருலகளாவாகச் செல்லவுயர்ந்த மலையில், @வரை களையுடைமையின் வரையாயிற்று; இஃது ஆகுபெயர்; §"பெரிய வரைவயிரங் கொண்டு" என்றார் பிறரும்; இனித் திருமால் போலும் குவடுகளோங்கிய வெற்பென்றுமாம்; "மாயோ னன்ன மால்வரைக் கவாஅன்" (நற். 32 : 1) என்றார் பிறரும்.
13. கிண்கிணி $கவைஇய ஒள் செஞ்சீறடி - சிறு சதங்கை சூழ்ந்த ஒள்ளியதாகிய சிவந்த சிறிய அடியினையும்.
14. கணை கால் - திரண்ட காலினையும்,
வாங்கிய நுசுப்பின் - வளைந்து நுடங்கிய இடையினையும்,
பணை தோள் - பெருமையையுடைய தோளினையும்,
மூங்கில்போலும் தோளென்றுமாம்.
15. கோபத்து அன்ன தோயா £பூ துகில் - இந்திர கோபத்தை யொத்த நிறம்பிடியாத இயல்பான சிவப்பாகிய பூத்தொழிலினையுடைய துகிலினையும்,
-----------
# "மாலைமார்ப" என்றதில் மாலையென்பது இன்பத்திற்குரிய மாலையென்பர்; முருகு. 261, ந.
@ "வரை, கண்களை யுடைமையான் ஆகுபெயரான் மூங்கிற்குப் பெயராயிற்று, வரை மலையாகாதோவெனின் .......... ' மால் ............... வெற்பில்' எனக் கூறியதனான் உணர்க" (தஞ்சை. 49, உரை)
§ "அரிய வரைகீண்டு காட்டுவார் யாரே, பெரிய வரைவயிரங் கொண்டு - தெரியிற், கரிய வரைநிலையார் காய்ந்தாலென் செய்வார், பெரிய வரைவயிரங் கொண்டு" (யா. வி. சூ. 60 மேற்.)
$ கவைஇய - கட்டிய (வேறுரை)
£ இவ்வாறே பூங்கலிங்கமென்பதற்குப் பூத்தொழிலையுடைய கலிங்கமென்று பொருளெழுதுவர் (கலித். 56 : 11, ந.) பூத்தொழிலையுடைய துகில்: சிலப். 14 : 86 - 97, அடியார். "சித்திரப்படாம்" சிலப். 7 : 1.
----------------
தெய்வத்தின் ஆணையால் தானே சிவந்திருத்தலின், தோயாத்துகிலென்றார்.
16. பல் காசு நிரைத்த சில் காழ் அல்குல் - பலமணிகள் கோத்த ஏழுவடமாகிய # மேகலையையணிந்த அல்குலினையும்,
அஃது, @"எண்கோவை காஞ்சி யெழுகோவை மேகலை - பண்கொள் கலாபம் பதினாறு - கண்கொள், பருமம் பதினெட்டு முப்பத்திரண்டு, விரிசிகை யென்றுணரற் பாற்று" §என்பதனாலுணர்க.
17. கை புனைந்து இயற்றா கவின் பெறு $வனப்பின் - ஒருவர் கையாற் சிறப்பித்துப் பிறப்பியாத அழகைத் தமக்கு இயல்பாகப் பெறுகின்ற அழகினையும்,
என்றது : மானிடமகளிர்க்குத் £தாயர் பலரும் கைசெய்து பிறப்பிக்கும் அழகன்றி இவர் தெய்வத்தன்மையான் இயல்பாகப் பெற்ற அழகினையுடைய ரென்றவாறு.
18. ##நாவலொடு பெயரிய பொலம் புனை அவிர் இழை -@@சாம்பூ நதமென்று நாவலோடடுத்துப் பெயர்பெற்ற பொன்னால் நிருமித்து விளங்குகின்ற பூணினையும்,
பொலம் : "பொன்னென் கிளவி" (தொல். புள்ளி மயங்கியல், சூ. 61) என்பதனான் முடிக்க.
19. சேண் இகந்து விளங்கும் செயிர் தீர் மேனி - சேய்நிலத்தைக் கடந்து விளங்குகின்ற குற்றந்தீர்ந்த நிறத்தினையுமுடைய சூரர மகளிர் (41) என்க.
---------
# "பல்காழ்" (பொருந. 39) என்பதற்கும் மேகலையென்றே பொருளெழுதுவர்.
@ "எண்கோவை மேகலை காஞ்சி யிருகோவை, பண்கொள் கலாபமிரு பத்தொன்று - கண்கொள், பருமம் பதினான்கு முப்பத் திரண்டு, விரிசிகை யென்றுணரற் பாற்று" எனவும் பாடம்.
§ இந்தச் செய்யுளின் பொருண்முறை திவாகரம், பிங்கலம், சூடாமணி என்பவற்றிலும், இதன் பாடபேதச்செய்யுளின் பொருண் முறை "எண்ணிரண்டிரட்டி" (திருவிளை. திருமண. 158) என்னும் செய்யுளிலும் காணப்படுகின்றன.
$ வனப்பு - இளமைநிறம் (வேறுரை)
£ ஆட்டுவாள், ஊட்டுவாள், ஓலுறுத்துவாள், நொடிபயிற்றுவாள், கைத்தாயெனத் தாயர் ஐவராதலின், 'தாயர் பலரும்' என்றார் (சீவக. 363, ந.) இவரை, "அடியோர் பாங்கு" என்பர்;சிலப். 16 : 85, அடியார்.
## நாவற்பழத்துச் சாறுபட்டுப் பேதமான பொன்னால் (வேறுரை)
@@ "பொன்னுக்குச் சாம்புநதம்" (திருவள்ளுவ. 36)
--------------
20. துணையோர் ஆய்ந்த இணை ஈர் ஓதி - ஆயத்தார் நன்றென்று ஆராய்ந்த கடையொத்த நெய்ப்பினையுடைய மயிரிலே,
21-2. [செங்கால் வெட்சிச் சீறித ழிடையிடுபு, பைந்தாட் குவளைத் தூவிதழ் கிள்ளி:] செங்கால் வெட்சி சிறு இதழ் இடை பைந்தாள் குவளை தூ இதழ் கிள்ளி இடுபு - சிவந்தகாலையுடைய வெட்சியுடைய சிறிய பூக்களை #விடுபூவாகத் தூவி அதற்கு நடுவே பசுத்த தண்டினையுடைய குவளையினது தூய இதழ்களைக் கிள்ளியிட்டு,
23. தெய்வவுத்தியொடு @வலம்புரி வயின் வைத்து- §சீதேவியென்னும் தலைக்கோலத்துடனே வலம்புரிவடிவாகச் செய்த தலைக்கோலத்தையும் வைத்தற்குரிய இடத்தே வைத்து,
24-5. $திலகம் தைஇய தேம் கமழ் திரு நுதல் மகரப்பகுவாய் தாழ மண்ணுறுத்து - திலகமிட்ட மணநாறுகின்ற அழகினையுடைய நெற்றியின்கண்ணே சுறாவினது அங்காந்த வாயாகப்பண்ணின தலைக்கோலம் தங்கப்பண்ணி,
மகரப்பகுவாய்: ஆகுபெயர். மண்ணுறுத்தலை, "ஆவுதி மண்ணி" (மதுரைக். 494) என்றாற்போலக் கொள்க. இனி மண்ணுறுத்துத் துவர முடித்தவென மேலேகூட்டி, கழுவி முடித்தவென்றுமாம்.
26-7. துவர முடித்த துகள் அறும் முச்சி பெரு தண் சண்பகம் செரீஇ - வேண்டுவன கூட்டி முற்றமுடித்த குற்றமறுகின்ற கொண்டையிலே பெரிய குளிர்ந்த சண்பகப்பூவைச் செருகி
27-8. கரு தகடு £உளை பூ மருதின் ஒள் இணர் அட்டி - கரிய புறவிதழினையும் மேலில் துய்யினையுமுடைய பூக்களையுடைய மருதினது ஒள்ளிய பூங்கொத்துக்களை அதன் மேலேயிட்டு,
இது ##முதலாகிய பொருட்கேற்ற அடையடுத்து நின்றது.
23-30. கிளை கவின்று எழுதரு கீழ்நீர் செவ்வரும்பு இணைப்பு உறு பிணையல் வளைஇ - பச்சென்ற அரும்புகளினின்றும் மேலே போந்து.
அழகுபெற்றுத் தோன்றுகின்ற நீர்க்கீழ் நின்ற சிவந்த அரும்பைக் கட்டுதலுறுகின்ற மாலையை வளையவைத்து,
கவினென்னும் பண்படியாகக் கவின்றென்னுந் தொழில் பிறந்தது. கீழ்நீர்: நீர்க்கீழென்னும் இலக்கணத்தோடு பொருந்திய மரூஉ.
அது மிகச்சிவத்தலின் ஒப்பனைக்குக் கொள்வர்.
---------
# விடுபூ - கட்டாத பூ; பூக்கள் விடுபூ, தொடைப்பூ, கட்டுப்பூவென, மூவகைப்படுமென்பர்;சிலப்.5:14, அடியார்.
@ வலம்புரி - வலம்புரிச்சங்கீன்ற முத்தின்மாலை ; நந்தியாவட்டப்பூ (வேறுரை)
§ "செந்திருவுத் திங்களும் பூவுந் தலைசிறப்ப" (தண்டி. 33, மேற்.)
$ பொட்டு ஊன்றின (வேறுரை)
£ உளைப்பூ - விரிந்தபூ (வேறுரை). "உளைப்பூ மருதத்து" (ஐங். 7)
## முதலென்றது மருதமரத்தை; அடையென்றது உளைப்பூ வென்றதனை.
-------------
30-32. [ துணைத்தக, வண்காது நிறைந்த பிண்டி யொண்டளிர், நுண்பூ ணாகந் திளைப்ப:] வள் காது துணை தக நிறைந்த பிண்டி ஒள் தளிர் நுண்பூண் ஆகம் திளைப்ப - வளவிய காதிலே தம்மில் ஒத்தற்குப் பொருந்த இட்டுநிறைந்த பிண்டியினது ஒள்ளிய தளிர் நுண்ணிய பூணையுடைய மார்பிடத்தே அசையாநிற்க,
32-5. திண் காழ் நறு குறடு உரிஞ்சிய பூ கேழ் தேய்வை தே கமழ் மருது இணர் கடுப்ப கோங்கின் குவி முகிழ் இளமுலை கொட்டி - திண்ணிய வயிரத்தையுடைய நறிய சந்தனத்தையுரைத்த பொலிவினையுடைய நிறத்தை யுடைத்தாகிய குழம்பை மணநாறுகின்ற மருதம் பூவை அப்பினாலொப்பக் கோங்கினது குவிந்த அரும்பையொத்த இளமுலையிலே யப்பி.
மருதிணர் நிறத்திற்குவமம்.
35-6. விரி மலர் வேங்கை நுண் தாது அப்பி - அவ்வீரம் புலர்வதற்கு முன்னே விரிந்த மலரையுடைய வேங்கைப்பூவினது நுண்ணிய தாதையும் அதன் மேலே அப்பி,
36-7. [காண்வர, வெள்ளிற் குறுமுறி கிள்ளுபு தெறியா:] வெள்ளில் குறுமுறி கிள்ளிபு காண் வர #தெறியா -விளவினது சிறிய தளிரைக் கிள்ளி அழகுவர ஒருவர்மேல் ஒருவர் தெறித்துத் தப்பாமற் பட்ட பொழுது,
38-9. [ கோழியோங்கிய வென்றடு விறற்கொடி, வாழிய பெரிதென்றேத்தி:] வென்று அடு விறல் கோழி ஓங்கிய கொடி பெரிது வாழிய என்று ஏத்தி - வஞ்சியாது எதிர்நின்று அடுகின்ற வெற்றியையுடைய கோழிமேலாய் நின்றகொடி நெடுங்காலம் வாழ்வதாகவென்று வாழ்த்தி,
39-41. [ பலருடன், சீர்திகழ் சிலம்பகஞ் சிலம்பப் பாடிச், சூரா மகளி ராடுஞ் சோலை] சூர் அரமகளிர் @பலருடன் சீர் திகழ் சிலம்பு அகம் சிலம்ப பாடி ஆடும் சோலை - கொடுமையையுடைய தெய்வமகளிர் பலருங்கூடிச் சீர்மை விளங்குகின்ற மலையிடமெல்லாம் ஆரவாரிக்கப் பாடி ஆடும் சோலையினையுடைய,
------------
# பிள்ளையார் சீபாதங்களை உள்ளித்தெறித்து (வேறுரை)
@ (பி-ம்.) 'பலவுடன்' பலவுடன் - பலதோத்திரங்களினாலே (வேறுரை)
-----------
42. #மந்தியும் அறியா மரன் பயில் அடுக்கத்து - மரமேறுதற் றொழிலிற் சிறப்பையுடைய மந்திகளும் மரங்களின் நீட்டத்தால் ஏறியறியாத மரம்நெருங்கின பக்கமலையிடத்து நின்ற,
உம்மை : சிறப்பும்மை.
43-4. சுரும்பும் மூசா சுடர் பூ காந்தள் பெரு தண்@கண்ணி மிலைந்த சென்னியன் - தான் விரும்புதலிற் சுரும்பினமும் மொய்யாத நெருப்புப்போலும் பூவினையுடைய செங்காந்தளினது பெரிய குளிர்ந்த கண்ணியைச் சூடிய திருமுடியையுடையவன்;
அடியினையும் (13) காலினையும் நுசுப்பினையும் தோளினையும் (14) துகிலினையும் (15) அல்குலினையும் (16) வனப்பினையும் (17) இழையினையும் (18) மேனியினையும் (19) உடைய சூரரமகளிர் (41) பலருங்கூடி (39) இடையிட்டு (21) வைத்துத் (23) தாழப்பண்ணிச் (25) செரீஇ (27) இணரட்டி (28) வளைஇத் (30) திளையாநிற்கக் (32) கொட்டி (35) அப்பித் (36) தெறித்து (37) ஏத்திப் (39) பாடி (40) ஆடுஞ்சோலையையுடைய (41) வெற்பில் (12) அடுக்கத்துக் (42) காந்தட் கண்ணி மிலைந்த சென்னியனென முடிக்க.
இதனான்§டையாளப்பூக் கூறினார். இது, "வெறியாட் டயர்ந்த காந்தளும்" (தொல். புறத். சூ. 5) என்பதனாலுணர்க.
"அகன்றபொருள் கிடப்பினு மணுகிய நிலையினு, மியன்று பொருண் முடியத் தந்தன ருணர்த்தன், மாட்டென மொழிப பாட்டியல் வழக்கின்" (தொல். செய். சூ. 211) என்னும் $மாட்டிலக்கணத்தான் இப்பாட்டுக்கள் பத்தும் செய்தார்களாதலின் இவ்வாறே மாட்டிமுடித்தல் யாண்டும் வருமென்றுணர்க.
45. பார் என்பதுமுதற் சேய் (61) என்னுந்துணையும் ஒரு தொடர்.
பார் முதிர் பனி கடல் கலங்க உள் புக்கு - பாராகிய நிலம் முற்றுப் பெற்ற குளிர்ச்சியையுடைய கடல் தன் நிலை குலையும்படி உள்ளேசென்று.
-----------
# மந்தி - அருக்கன் (வேறுரை)
@ கண்ணி - சூடும்பூவென்றும் வழங்கும் ; சீவக. 208, ந.
§ அடையாளப்பூ - ஒருவர்க்கே உரிய பூ. கொன்றைமாலையைச் சிவபெருமானுடைய அடையாளப்பூ வென்பர்; சீவக. 208, .
$ "அகன்றுவந்த மாட்டு முறுகாற்றுப்படை முதலியவற்றுட் காண்க : மொழிமாற்றாவது கேட்டோர் கூட்டியுணருமாற்றான் ஈர டிக்கண்ணே வருவதென்றும், மாட்டென்னுமுறுப்பாவது இரண்டிறந்த பலவடிக்கண்ணும் பல செய்யுட்டொடரின்கண்ணும் அகன்றும் அணுகியும் வருமென்றுணர்க" (தொல். எச்ச. சூ. 13, ந.)
--------------
பார் - பாற; மண்ணிடத்தே முதிர்ந்த கடலென்றுமாம்.
46. சூர் முதல் தடிந்த சுடர் இல நெடு வேல் - சூரபன்மா வாகிய தலவனக் கொன்ற எரிகின்ற இலைத்தொழிலையுடைய நெடிய வேலாலே,
47. உலறிய கப்பின் - காய்ந்த மயிரினையும்,
பிறழ் பல் - நிரை ஒவ்வாத பல்லினையும்,
பேழ் வாய் - பெருமையையுடைய வாயினையும்,
48. சுழல் விழி பசு கண் - கோபத்தாற் சுழலும் விழியையுடைய பசிய கண்ணினையும்,
#சூர்த்த நோக்கின் - கொடுமை செய்த பார்வையினையும்,
49-50. @கழல் கண் கூகையொடு கடு பாம்பு தூங்க பெருமுலை அலைக்கும் காதின்-பிதுங்கிய கண்ணையுடைய கூகையோடே கடிய பாம்பு தூங்குகையினாலே பெரிய முலையை வருத்துகின்ற காதினையும்,
பிணர் மோட்டு - சருச்சரையையுடைய பெரிய உடலினையும்,
மோடு - வயிறுமாம்.
51. உரு கெழு செலவின் - கண்டார் உட்குதல் பொருந்தும் நடையினையுமுடைய,
அஞ்சுவரு பேய்மகள் - கண்டார்க்கு அச்சம் தோன்றுகின்ற பேயாகிய மகள்,
52 - 3. குருதி ஆடிய கூர் உகிர் கொடு விரல் கண் தொட்டு உண்ட கழிமுடை கரு தலை - உதிரத்தையளைந்த கூரிய உகிரினையுடைய கொடிய விரலாலே கண்களைத் தோண்டி உண்ணப்பட்ட மிக்க முடை நாற்றத்தையுடைய கரிய தலையை,
இனி, தொட்டென்பதனை வினையெச்சமாக்காது தொழிற்பெயராக்கிக் கண் தோண்டுதலுண்டவென்று கூறுதலுமாம்.
54. ஒள் தொடி தட கையின் ஏந்தி - ஒள்ளிய தொடியினையுடைய பெருமையையுடைய கையிலே எடுத்து,
54-5. வெரு வர வென்று அடு விறல்களம் பாடி - அவுணர்க்கு அச்சந்தோன்ற வஞ்சியாது எதிர்நின்று கொல்கின்ற வெற்றிக்களத்தைப்பாடி,
தோள் பெயரா - தோளையசைத்து,
56.நிணம் தின் வாயள் - நிணத்தைத் தின்கின்ற வாயினையுடையளாய்,
------------
# சூர்த்தம் - நடுக்கம் (வேறுரை)
@ கழல்கண் - சுழன்று விழுவதுபோலும் கண். கடும்பாம்பு - கோபத்தையுடய பாம்பு (வேறுரை)
---------------
வாயள் : வினையெச்சமுற்று.
# துணங்கை தூங்க - துணங்கைக் கூத்தாட,
@ "பழுப்புடை யிருகை முடக்கி யடிக்கத், துடக்கிய நடையது துணங்கை யாகும்."
கதுப்பு (47) முதலியவற்றையுடைய பேய்மகள் (51) தலையை (53) ஏந்தி (54) வாயளாய்ப் (56) பாடித் (55) தூங்கவென முடிக்க.
57. § இரு பேர் உருவின் ஒரு பேர் யாக்கை - மக்கள் வடிவும் விலங்கின் வடிவுமாகிய $இரண்டு பெரிய வடிவினையுடைய ஒன்றாகிய பெரிய உடல்,
58. அறு வேறு வகையின் அஞ்சுவர மண்டி - ஆறாகிய வேறு பட்ட கூற்றாலே அச்சந்தோன்ற மிக்குச் சென்று,
என்றதனான், £இறைவன் உமையை வதுவை செய்துகொண்ட நாளிலே இந்திரன் சென்று நீ புணர்ச்சி தவிர வேண்டுமென்று வேண்டிக்கொள்ள அவனும் அதற்கு உடம்பட்டு அது தப்பானாகிப் புணர்ச்சி தவிர்ந்து கருப்பத்தை இந்திரன் கையிற் கொடுப்ப அதனை இருடிகள் உணர்ந்து அவன் பக்கனின்றும் வாங்கித் தமக்குத் தரித்தல் அரிதாகையினாலே இறைவன் கூறாகிய முத்திக்கட்பெய்து அதனைத் தம்மனைவியர் கையிற் கொடுப்ப அருந்ததியொழிந்த அறுவரும் வாங்கிக்கொண்டு விழுங்கிச் சூன்முதிர்ந்து சரவணப் பொய்கையிற் ##பதுமப்பாயலிலே பயந்தாராக, ஆறு கூறாகி வளர்கின்ற காலத்து இந்திரன்தான் இருடிகளுக்குக் கொடுத்த நிலையை மறந்து ஆண்டுவந்து வச்சிரத்தான் எறிய அவ்வாறு வடிவும் ஒன்றாய் அவனுடனே பொருது அவனைக் கெடுத்துப்பின் சூரபன்மாவைக் கொல்லுதற்கு அவ்வடிவம் ஆறாகிய வேறுபட்ட கூற்றாலே மண்டிச்சென்றதென்று புராணங்கூறிற்று.
-----------
# சிங்கிக் கூத்து (வேறுரை)
@ "முடக்கிய விருகை பழுப்புடை யொற்றத், துடக்கிய நடையது துணங்கை யாகும் " (திவா. பிங்கல.) எனவும் பாடம்.
§ இரு பேர் உரு - சூரனென்றும் பதுமனென்றும் இரண்டு பேரையுடைய வடிவம் (வேறுரை)
$ இரண்டு பெரிய வடிவினையுடைய ஒன்றாகிய உடலென்றது, குதிரைமுகமும் மக்களுடலுங்கொண்ட சூரபன்மாவின் உடலத்தை; "ஈரணிக் கேற்ற வொடியாப் படிவத்துச் சூர் " (கலித். 93 : 25 - 6) என்பதற்கு, ' கெடாத விரதத்தாலே முகம் குதிரைமுகமும் உடல் மக்களுடலுமாகிய இரண்டு அழகுக்குப் பொருந்திய சூரபன்மா என்றெழுதிய நச்சினார்க்கினியர் உரையும், "சூரொடும்பொர வஞ்சிசூடிய பிள்ளை யார்படை தொட்டநாள், ஈருடம்பு மிசைந்திரண்டுதி ரப்பரப்பு மிறைத்தனம்" (தக்க. 231) என்பதனுரையில் அதனுரையாசிரியர் எழுதிய, 'சூரபன்மாவான ............. அசுரசேனாபதி பட்டுவிழ அவனுடைய குதிரையும் அசுரனுமான இரண்டு வடிவும்' என்ற பகுதியும் இங்கே கருதத்தக்கன.
£ 254, 255-ஆம் அடிகளின் விசேடவுரையிலும் இக்கதை எழுதப்பட்டுள்ளது.
## " பயந்தோ ரென்ப பதுமத்துப் பாயல் " (பரி. 5 : 49)
-------------
இதனை, "பாயிரும் பனிக்கடல்" (5) என்னும்பரிபாடற்பாட்டானுணர்க. இவ்வாறன்றி #வேறு வேறு புராணங் கூறுவாருமுளர்.
இனி அவனுடல் அற்று வேறுவேறாம் வகையாலென்றுமாம்.
59. அவுணர் நல்வலம் அடங்க - அவனையொழிந்த அவுணருடைய நல்லவெற்றி இல்லையாம்படி,
அடங்க என்றது, "கணனடங்க" (சிறுபஞ்ச. 31) என்றாற்போலக் கொள்க.
59-60. @கவிழ் இணர் மா முதல் தடிந்த - கீழ்நோக்கின பூங்கொத்துக்களையுடைய மாமரத்தை வெட்டின,
என்றது, அவுணரெல்லாரும் தம்முடனே எதிர்ந்தார் வலியிலே பாதி தங்கள் வலியிலே கூடும்படி மந்திரங்கொண்டிருந்து சாதித்த தொருமாவை வெட்டினானென்றவாறு.
மறு இல் கொற்றத்து - குற்றமில்லாத வெற்றியினையும்.
61.எய்யா நல் இசை - §ஒருவரானும் அளந்தறியவொண்ணாத நல்ல புகழினையுமுடைய.
செ வேல் சேஎய் - செய்ய வேலையுடைய சேய்,
எக்காலமும் போர்செய்தலிற் செவ்வேலென்றார், $செய்யவனென்பது சேஎயென விகாரத்தால் நீண்ட தென்றுமாம்,
கடல் கலங்க உள் புக்குச் (45) சூர் முதலின் (46) ஒரு பேரியாக்கை (57) அறுவேறுவகையின் அஞ்சுவர மண்டிச்சென்று (58) பேய்மகள் (51) துணங்கை தூங்கும் படியாக (56) அச்சூர்முதல் தடிந்த வேலானே (46) பின்னும் அவுணர் நல்வலமடங்க (59) மாமுதல் தடிந்த கொற்றத்தினையும் (60)நல்லிசையினையுமுடையசேயெனமுடிக்க.
கணவன் (6) மார்பினன் (11) சென்னியனாகிய (44) சேயென்பன ஒரு பொருள் குறித்த வேறுபெயராய் நின்றன.
------------
# வேறு வேறு புராணமென்றது கந்தபுராணம், குமாரஸம்பவம் முதலியவற்றிற் கூறப்படும் செய்திகளை.
@ மாயையினாலே கீழ் நோக்கிப் பூத்த மாவாய் நிற்குஞ் சூரபன்மனை முதலோடே தடிந்த (வேறுரை);பதிற்.11 : 4-5, உரை.
§ "நின்னளந் தறிதன் மன்னுயிர்க் கருமையின்" (முருகு. 278)
$ செய்யவன் - சிவந்தவன்; "செய்யன்" (முருகு. 206)
------------
62-3.[ சேவடி படருஞ் செம்ம லுள்ளமொடு, நலம்புரி கொள்கைப் புலம்பிரிந்துறையும்:]
#புலம் பிரிந்து உறையும் அடி - மெய்ஞ்ஞானத்தான் அறிதலைக் கைவிட்டுத் தங்கும் திருவடி,
திருவடியே வீடாயிருக்குமென்றார்; அது, "தென்னன் பெருந்துறையான், காட்டா தனவெல்லாங் காட்டிச் சிவங்காட்டித், தாட்டா மரைகாட்டித் தன்கருணைத் தேன்காட்டி" (திருவா.திருவம்மானை, 6) @என்தபனானும் பிறரும் திருவடியைக் கூறுமாற்றானு முணர்க.
சேவடி படரும் நலம் புரி கொள்கை செம்மல் உள்ளமொடு - அத்திருவடியிற் செல்லுதற்குக் காரணமான நல்வினைகளைப் பலபிறப்புக்களிலும் விரும்பி நிகழ்த்தின கோட்பாட்டானே தலைமையினையுடைத்தாகிய உள்ளத்தோடே,
64. செலவு நீ நயந்தனை ஆயின் - செல்லுஞ் செலவை நீ விரும்பியே விட்டாயாயின்,
64-6.[ பலவுட, னன்னர் நெஞ்சத் தின்னசை வாய்ப்ப, வின்னே பெறுதிநீ முன்னிய வினையே:]நீ முன்னிய வினை பலவுடன் தன்னர் நெஞ்சத்து இன்னசை வாய்ப்ப இன்னே பெறுதி - நீ முற்பிறப்பிற் கருதிச் செய்த நல்வினையாலே வீடுபெறுவார்க்கு உரியனவாகக் கூறிய நற்குணங்கள் பலவுஞ்சேர நன்றாகிய நெஞ்சத்திலுண்டாகிய இனிய வீடு பேற்றைத் தப்பாமல் இப்பொழுதே பெறுவை;
67. செரு புகன்று எடுத்த சேண் உயர் நெடு கெரடி - போரை வென்று விரும்பிக் கட்டின சேய்நிலத்தே சென்றுயர்ந்த நெடிய கொடிக்கு அருகே,
68. வரி புனை பந்தொடு பாவை தூங்க - நூலால் வரிந்து புனையப்பட்ட பந்தும் பாவையும் அறுப்பாரின்மையின் தூங்கியேவிடும்படி,என்றது : 3பகைவரை மகளிராக்கி அவர் கொண்டு விளையாடுதற்குத் தூக்கின வென்றவாறு.
-------------
# தேசத்தைவிட்டு (வேறுரை)
@ முருகவேளுக்கும் சிவபெருமானுக்கும் வேறுபாடின்மையின் இங்கே திருவாசகத்தை யெடுத்துகாட்டினார்;100 -102-ஆம் அடிகளின் உரைக்கும் இஃது ஒக்கும்; "ஆதலி னமது சக்தி யறுமுகனவனும் யாமும், பேதக மன்றா னம்போற் பிரிவிலன் யாண்டு நின்றான், ஏதமில் குழவி போல்வான் யாவையு முணர்ந்தான் சீரும், போதமு மழிவில் வீடும் போற்றினர்க் கருள வல்லான்" (கந்த. திருவிளை. 19) என்பது இங்கே அறியத்தக்கது.
§ "செம்பொறிச் சிலம்பொ டணித்தழை தூங்கும் .............. புரிசை" (பதிற். 53 : 6-9) என்பதற்கு, 'சிலம்பும் தழையும் புரிசைக்கண்
---------------
69. பொருநர் தேய்த்த போர் அரு வாயில் - பொருவாரை இல்லையாக்குகையினாலே எக்காலமும் போர்த்தொழில் அரிதாகியவாயிலினையும்,
70. திரு #வீற்றிருந்த தீது தீர் நியமத்து - திருமகள் வருத்த மின்றியிருந்த குற்றந்தீர்ந்த அங்காடித் தெருவினையும்,
71. மாடம் மலி மறுகில் கூடல் குடவயின் - மாடங்கள் மிக்க ஏனைத் தெருக்களையுமுடைய மதுரையின் மேற்றிசையிடத்து,
அம் சிறை வண்டின் அரி கணம் (76) - அழகினையுடைத்தாகிய சிறகையுடைய வண்டினுடைய அழகினையுடைய திரள்,
72. இரு சேரு அகல் வயல் விரிந்து வாய் அவிழ்ந்த - கரிய சேற்றினையுடைய அகன்ற வயலிலே முறுக்கு நெகிழ்ந்து பின்பு தாதும் அல்லியும் தோன்ற மலர்ந்த,
73. முள் தாள் தாமரை துஞ்சி - முள்ளையுடைத்தாகிய தாளையுடையதாமரைப்பூவிலே இராப்பொழுது துயில்கொண்டு,
73-4. வைகறை கள் கமழ் நெய்தல் ஊதி -விடியற்காலத்தே தேன் நாறுகின்ற நெய்தற்பூவை யூதி,
எல் பட - ஞாயிறு தோன்றின காலத்தே,
75-7. [ கண்போன் மலர்ந்த காமரு சுனைமலர், அஞ்சிறை வண்டி னரிக்கண மொலிக்கும், குன்றமர்ந் துறைதலு முரியன்:]
அஞ்சிறைவண்டி னரிக்கணமென்பது முன்னே கூட்டிற்று.
கண் போல் மலர்ந்த காமரு சுனை மலர் ஒலிக்கும் குன்று அமர்ந்து உறைதலும் உரியன் - கண்ணையொக்க விரிந்த @விருப்பமருவின சுனைப்
தங்கினவென்றது, ஈண்டுப் பொருவீருளீரேல் நும்காலிற் கழலினையும் அரையிற் போர்க்குரிய உடையினையும் ஒழித்து இச்சிலம்பினையும் தழையினையும் அணிமினென அவரைப் பெண்பாலாக இகழ்ந்தவாறென்க' என்றெழுதிய விசேடவுரை இங்கே ஒப்பு நோக்கற்பாலது.
-----------
# வீற்றிருந்த வென்பதற்கு இங்கே கூறியவாறே சீவகசிந்தாமணியிலும் பொருளெழுதுவர்.
@ " காமரு தும்பி" (சிறுபாண். 77), "காமருருவின்" (மதுரைக். 422) என்பவற்றில், 'காமரு' என்பதற்கு இங்கே எழுதியவாறே விருப்பம் மருவினவென்றே பொருளெழுதுவர்; "காமரு நோக்கினை" (கலித். 80 : 14) என்பதில், 'காமரு' என்பதற்கு விருப்ப மருவுகின்ற வென்றெழுதிய பொருளும், காமர்: கடைக்குறைந்து நின்றது; மருவும்: ஈற்றுமிசை உகரம் மெய்யொடுங் கெட்டு மவ்வீறு சந்தியாற் கெட்டது" என்ற இலக்கணக் குறிப்பும் இங்கே பயன்படுவனவாம். " காமம் வருமென்பது விகாரத்தாற் காமருவென நின்று கண்டார்க்கு விருப்பம் வருமென்பதாயிற்று" என்பர் அடியார்க்கு நல்லார்; சிலப். 4 : 40.
--------------
பூக்களிலே சென்று ஆரவாரிக்கும் திருப்பரங்குன்றிலே நெஞ்சமர்ந் திருத்தலுமுரியன்.
உம்மை : எதிரது தழீஇய எச்சவும்மை.
கூடற்குடவயிற் (71) குன்று; வண்டின் அரிக்கணம் (76) துஞ்சி (73) ஊதி (74) ஒலிக்குங் (76) குன்று.
அதாஅன்று - அதுவன்றி,
அதாஅன்றென அகரமிட்டெழுதுக ; இதனை "அன்றுவருகாலை" (தொல். உயிர்மயங். சூ. 56) என்பதனாலும், "இன்றி யென்னும் வினையெஞ் சிறுதி" (தொல். உயிர்மயங். சூ. 35) என்பதனுள், "தொன்றியன் மருங்கின்" என்பதனானு முடிக்க.
திருச்சீரலைவாய்
78. வைந்நுதி யென்பது முதல் அலைவாய்ச்சேறல் (125) என்னுந் துணையும் ஒரு தொடர்.
வைந்நுதி பொருத வடு ஆழ் வரி நுதல் - கூர்மையுடைத்தாகிய தோட்டி வெட்டின வடுவழுத்தின புகரையுடைய மத்தகத்தே,
வைந்நுதி : ஆகுபெயர்.
79. வாடா மாலை ஓடையொடு துயல்வர - பொன்னரிமாலை பட்டத்தோடே கிடந்து அசைய,
80. #படும் மணி இரட்டும் மருகின் - தாழ்கின்ற மணி மாறி யொலிக்கின்ற பக்கத்தினையும்,
கடு நடை - கடிய நடையினையும்,
81. கூற்றத்து அன்ன மாற்றரு மொய்ம்பின் - கூற்றுவனையொத்த பிறரால் தடுத்தற்கரிய வலியினையுமுடைய,
82. கால் கிளர்ந்தன்ன வேழம் மேல்கொண்டு - ஓடுங்காற் காற்றெ ழுந்தாலொத்த களிற்றை யேறி,
மருங்கு (80) முதலியவற்றையுடைய வேழத்தை நுதலிலே மாலைபட்டத்தோடே யசைய ஏறியென முடிக்க.
83-4. ஐ வேறு உருவின் செய்வினை முற்றிய முடியொடு விளங்கிய முரண்மிகு திருமணி-ஐந்தாகிய வேறுபட்ட வடிவினையுடைய முடிக்குச் செய்யுந் தொழிலெல்லாம் முற்றுப்பெற்ற முடியோடே கூடி விளங்கிய ஒன்றற்கொன்று மாறுபாடுமிகும் அழகினையுடைய மணி,
ஐவேறுருவு: @"தாம முகுடம் பதுமங் கிம்புரி, கோடக மிவைமுடிக் கைவே றுருவே."
-------------
# ஓசைமணி (வேறுரை)
@ "தாம முகுடம் பதுமங் கோடகங், கிம்புரி முடியுறுப் பைந்தெனக் கிளப்பர்" (திவாகரம்); "கோடகங் கிம்புரி முகுடந் தாமம், பதும முடியுறுப் பிவையைந் தாகும்" (பிங். 1169)
-------------
85. மின் உறழ் இமைப்பின் சென்னி பொற்ப - மின்னோடே மாறுபடுகின்ற விளக்கத்தோடே முடியிலே பொலிவுபெற,
86. நகை தாழ்பு துயல்வரூஉம் வகை அமை பொலங்குழை -ஒளி தங்கி அசையும் தொழிற்கூறமைந்த பொன்னாற்செய்தமகரக்குழை,
87-8. சேண் விளங்கு இயற்கை வாள் மதி கவைஇ அகலாமீனீன் அவிர்வன இமைப்ப - சேய்நிலத்தே சென்று விளங்கும் இயல்பினையுடைய ஒளியையுடைய மதியைச் சூழ்ந்து நீங்காத மீன்கள்போல விளங்குவனவாய் ஒளியைக்கால,
மீன் - உரோகிணி முதலியன ; வியாழமும் வெள்ளியுமாம்.
89.தா இல் கொள்கை தம் தொழில் முடிமார் - வருத்தமில்லாத
விரதங்களையுடைய தவத்தொழிலை முடிப்பாருடைய,
90. மனன் நேர்பு எழுதரு #வாள் நிறம் முகன் – மனத்திலே பொருந்தித் தோன்றுகின்ற ஒளியையுடைய நிறத்தையுடைய முகங்களிலே,
பொற்ப (85) இமைப்ப (88) எழுதருமுகனென்க.
முகனென்றது ஆறற்கும் பொது.
91 - 2. [மாயிருண் ஞால மறுவின்றி விளங்கப், பல்கதிர் விரிந்தன் றொருமுகம்:] ஒருமுகம் மா இருள் ஞாலம் மறு இன்றி விளங்க பல்கதிர் விரிந்தன்று-ஒருமுகம் பெருமையையுடைத்தாகிய இருட்சியையுடைய உலகம் குற்றமின்றாய் விளங்கும்படி பலகிரணங்களையும் தோற்று வித்தது;
ஒரு முகமென்று முன்னே கூட்டிப் பொருள் கொள்க.
92-4. ஒருமுகம் @ஆர்வலர் ஏத்த அமர்ந்து இனிது ஒழுகி காதலின் உவந்து வரம் கொடுத்தன்று - ஒருமுகம் தன்மேல் அன்புசெய்தவர்கள் துதிக்க அதற்குப் பொருந்தி அவர்க்கு இனிதாக நடந்து அவர் மேற் சென்ற காதலாலே மகிழ்ந்து வேண்டும் பொருள்களை முடித்துக் கொடுத்தது;
94 - 6. ஒருமுகம் மந்திர விதியின் §மரபுளி வழாஅ அந்தணர் வேள்வி ஒர்க்கும் - ஒருமுகம் மந்திரத்தையுடைய வேதத்திற்கூறிய முறைமையிடத்துத் தப்பாத அந்தணருடைய யாகங்களில் தீங்கு வராத படி நினையாநிற்கும் ;
------------
# ஒளி விடுகின்ற ஆறுதிருமுகங்களை யுடையவன்; அந்தத்திருமுகங்களினுடைய படிவஞ்சொல்லின் (வேறுரை)
@ ஏழையர் இரந்து துதிக்க (வேறுரை)
§ மரபுளி : உளி, மூன்றாவதன் பொருள்படுவதோரிடைச் சொல். அந்தணர் - அழகிய தட்பத்தினையுடையார். ஓர்க்கும் - திருவுள்ளத்து அடைக்கும் (வேறுரை)
--------------
# அந்தத்தை அணவுவார் அந்தணர்; என்றது, வேதாந்தத்தையே நோக்குவாரென்றவாறு.
96-8. [ ஒருமுக, மெஞ்சிய பொருள்களை@யேமுற நாடித், திங்கள் போலத் திசைவிளக் கும்மே:] ஒரு முகம் எஞ்சிய பொருள்களை நாடி ஏம் உற திங்கள் போல திசை விளக்கும் - ஒருமுகம் ஈண்டு வழங்காத வேதங்களிலும் நூல்களிலுமுள்ள பொருள்களை ஆராய்ந்து இருடிகள் ஏமமுறும்படி உணர்த்தித் திங்கள் போலத் திசைகளெல்லாம் விளக்குவிக்கும்;
ஏமம் - இரட்சை. §கலைநிறைதலிற் றிங்கள் உவமையாயிற்று.
98-100 [ ஒருமுகஞ், செறுநர்த் தேய்த்துச் செல்சம முருக்கிக், கறுவுகொ ணெஞ்சமொடு களம்வேட் டன்றே:] ஒருமுகம் செல் சமம் முருக்கிக் கறுவுகொள் நெஞ்சமொடு செறுநர் தேய்த்து $களம்வேட்டன்று - ஒருமுகம் திருவுள்ளத்துச் செல்கின்ற நடுவுநிலைமையைக் கெடுத்து இவர்களைக் கொல்லவேண்டுமென்று கறுவுதல் கொண்ட திருவுள்ளத்தோடே செறப்படும் அசுரர் முதலியோரைப் பொன்றக் கெடுத்துக் களவேள்வியை வேட்டது;
சமம் - நடுவு நிலைமை; அதனைக் கெடுத்தலாவது, தேவரையும் அசுரரையும் ஒப்பக்கருதாது தேவரைக்காத்து அசுரரையழித்தல்.
100-102. [ ஒருமுகங் குறவர் மடமகள் கொடிபோ னுசுப்பின், £மடவரல் வள்ளியோடு நகையமர்ந் தன்றே:]
ஒருமுகம் குறவர் மடமகள் ##கொடிபோல் நுசுப்பின் வள்ளியொடு நகை அமர்ந்தன்று - ஒரு முகம் குறவருடைய மடப்பத்தையுடைய மகளாகிய வல்லி போலும் இடையினையுடைய வள்ளியுடனே மகிழ்ச்சியைப் பொருந்திற்று;
------------
# "அந்தணர் - வேதாந்தத்தை எக்காலமும் பார்ப்பார்" (மதுரைக். 474, ந.); "அந்தத்தை யணவுவார் அந்தணர்; என்றது, வேதாந்தத்தையே பொருளென்று மேற்கொண்டு பார்ப்பாரென்றவாறு" (கலித். கட. 3, ந.)
@ ஏமுற நாடி - இரக்கைபொருந்த ஆராயந்து ; ஏமம் கடைக்குறை பட்டது (வேறுரை)
§ "கலைகள் நிறைந்திருந்தமைபற்றித் தலைவற்கு ஈண்டு மதி உவமையாயிற்று" (சிறுபாண். 220, ந.) "நாடோறும் நிறைந்தமதி உலகறியக் கலை நிரம்பினமை தோற்றுவித்தலின், உவமையாம்" (சீவக. 454, ந.)
$ போர்க்களத்தை விரும்பாநிற்கும் (வேறுரை)
£ கற்பின் வரலாற்றினையுடைய வள்ளி நாய்ச்சியார் (வேறு4ரை)
## வல்லிசாதக்கொடி (வேறுரை)
-------------
மடவரல் நகையெனக் கூட்டித் தனக்கு ஓரறியாமைதோன்றுந் தன்மையுடைத்தாகிய நகையென்று கூறுக.
அவளொடு #நகையமர்தலின் அறியாமை கூறினார். காமநுகர்ச்சியில்லாத இறைவன் இங்ஙனம் நகையமர்ந்தான், உலகில் இல்வாழ்க்கை நடத்தற் கென்றுணர்க. அது, "தென்பா லுகந்தாடுந் தில்லைச்சிற் றம்பலவன்" (திருவா. திருச்சாழல், 9) என்பதனுள், "பெண்பா லுகந்திலனேற் பேதா யிருநிலத்தோர், விண்பாலி யோகெய்தி வீடுவர்காண் சாழலோ" என்பதனானுணர்க.
விரிந்தன்று (92) கொடுத்தன்று (94) வேட்டன்று (100) நகையமர்ந்தன்று (102) ஓர்க்கும் (96) விளக்கும் (98) என்பன முற்றுச் சொல்.
102-3. [ ஆங்கம் மூவிரு முகனு முறைநவின் றொழுகலின்:]
அ மூவிரு முகனும் - அவ்வாறுமுகமும்,
ஆங்கு முறை நவின்று ஒழுகலின் - அத்தொழில்களிடத்துச் செய்யும் முறைமைகளைப் பயின்று நடத்துகையினாலே அம்முகங்களுக்குப் பொருந்த,
104-6. [ஆரந் தாழ்ந்த வம்பகட்டு @மார்பிற், செம்பொறி வாங்கிய மொய்ம்பிற் சுடர்விடுபு, வண்புகழ் நிறைந்து வசிந்துவாங்கு நிமிர் தோள்:]
ஆரம் தாழ்ந்த அம்பகட்டு மார்பின் செம்பொறி வாங்கிய தோள் - பொன்னாற்செய்த ஆரந்தங்கிய அழகையுடைத்தாகிய பெருமையையுடைய மார்பிற்கிடக்கின்ற உத்தம இலக்கணமாகிய சிவந்த மூன்று வரியினையும் தன்னிடத்தே வந்து விழும்படி வாங்கிக்கொண்ட தோள்,
வாங்கிய வென்றார், அவ்வரி தோளளவும் வந்துகிடந்தமை தோன்ற; "வரையகன் மார்பிடை வரியு மூன்றுள" (சீவக. 1462) என்றார் பிறரும்.
மொய்ம்பின் வண்புகழ் நிறைந்து - தம்முடைய வலியினாலே பெரிய புகழ் நிறையப்பட்டு,
சுடர் விடுபு வசிந்து வாங்குதோள் - சுடரையுடைய படைக்கலங்களை யெறிந்து பகைவர்மார்பைப் பிளந்து அவற்றை வாங்குதோள்,
சுடரையுடைய படைக்கலங்களைச் சுடரென்றார்; அஃது ஆகுபெயர்.
---------
# (பி-ம்.) 'நகையமர்தல் இன்றியமையாமை'
@ மார்பிலே சீதேவியைக் கைக்கொண்ட வலியினையுடைய, ஒளிவிட்டு வளவியபுகழ் நிறைந்து வளர்ந்து நீண்டுநிமிர்ந்த தோள்கள் (வேறுரை)
--------------
நிமிர் - தோள் - பெருகு தோள்,
நிறைந்து நிமிர்தோளென்க.
வசிந்தென்பது பிளந்தென்னும் பொருட்டாதலின், செய்வதன் தொழிற்கும் செய்விப்பதன் தொழிற்கும் பொது. அசுரர் முதலியோரை அழிக்குங்காலத்துப் பன்னிருகையினும் படைக்கலமேந்துவனென்று உணர்க; அஃது அறுவேறுகையி னஞ்சுவர மண்டி (58) என்றதனானுணர்க.
வசிந்தென்பதற்குப் படைக்கலங்களால் வடுப்பட்டென்று பொருளுரைத்தல் #இறைவனாதலிற் பொருந்தாது.
இனி மொய்ம்பினையுடைத்தாய் ஒளிவிட்டு நிறைந்து வளையவேண்டுமிடம் வளைந்து நிமிரவேண்டுமிடம் நிமிரும் தோளென்றும் உரைப்பர். இதற்கு வசிந்தென்பனைத் தொடியொடுகொட்ப (114) மணியிரட்ட (115) என மேலே கூட்டுக.
இனி, அவை போர்செய்யாக்காலத்து இங்ஙனமிருக்குமென்று அவற்றின் இயல்பு கூறுகின்றார்.
அத்தோள்களில் ஒருகையென்க.
107. [ விண்செலன் மரபி னையர்க் கேந்திய தொருகை:] ஒருகை@விண் செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது - ஒருகை எக்காலமும் ஆகாயத்தே இயங்குதல் முறைமையினையுடைய தெய்வவிருடிகளுக்குப் பாதுகாவலாக வெடுத்தது;
108. [ உக்கஞ் சேர்த்திய தொருகை:] ஒருகை உக்கம் சேர்த்தியது - ஏந்தியகைக்கு இணைந்தகை மருங்கிலேவைத்தது;
என்றது - ஞாயிற்றின்வெம்மையைப் பல்லுயிரும் பொறுத்தலாற்றா வென்று கருதித் §தமதருளினாற் சுடரொடுதிரிந்து அவ்வெம்மையைப் பொறுக்கின்ற முனிவரைப்பாதுகாக்கவே உலகத்தைத் தாங்கிக் காத்ததாயிற்று. இதனானே இக்கை மாயிருண் ஞாலமறுவின்றி விளங்கப் பல்கதிர் விரிந்த முகத்திற்கு (91 - 2) ஏற்ற தொழில்செய்ததாயிற்று. இது, "நிலமிசை வாழ்ந ரலமர றீரத், தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக், காலுண வாகச் சுடரொடு கொட்கும், அவிர்சடை முனிவரு மருள" (புறநா. 43 : 1 - 4) என்ற புறப்பாட்டானுணர்க.
மனமும் முகமும் கையும் ஒருதொழிலைச் செய்தலின், ஏனைக்கை தொழிலின்றி மருங்கிலே கிடந்தது.
-------------
# இங்கே இவ்வாறு கூறியது, "வாண்மிகு வயமொய்ம்பின்" (பரி. 9 : 57) என்பதற்குப் பரிமேலழகர், 'வாட்டழும்பு நெருங்கிய வெற்றிமொய்ம்பினையுடைய முருகன்' என்றெழுதிய உரையைக் கருதிப் போலும்.
@ ஆகாயத்திலே இயக்கத்தை முறைமையாகவுடைய தேவர்க்கு (வேறுரை)
§ "சுடரொடு திரிதரு முனிவரு மமரரும்" (சிலப். வேட்டுவ. 18)
-------------
109 - 10. [ நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை யசைஇய தொருகை, அங்குசங் கடாவ வொருகை:] ஒருகை அங்குசம் கடாவ ஒருகை நலம்பெறு #கலிங்கத்து குறங்கின்மிசை அசைஇயது - ஒருகை தோட்டியைச் செலுத்தாநிற்க மற்றைக்கை செம்மைநிறம்பெற்ற ஆடையையுடைத்தாகிய துடையின் மேலே கிடந்தது;
இஃது யானையேறுவார்க்கு இயல்பென்று கூறினார். தன்னை வழிபடுவாரிடத்து வருங்கால் யாணை மேல்வந்து அருள்செய்தல் இயல்பாகலின், இக்கைகள் காதலினுவந்து வரங்கொடுத்த முகத்திற்கு (94) ஏற்றவாறுணர்க.
110 - 11. இருகை @ஐ இரு வட்டமொடு எஃகு §வலம்திரிப்ப - இரண்டுகைகள் வியப்பையும் கருமையையுமுடைய பரிசையுடனே வேலையும் வலமாகச் சுழற்ற,
இதனானே, $அசுரர்வந்து வேள்வியைக் கெடாமல் அவரை ஓட்டுதற்கு இவற்றைச் சுழற்றுதலின் வேள்வி ஓர்க்குமுகத்திற்கு (96) இக்கைகள் ஏற்றவாறுணர்க.
111 - 3. ஒருகை £மார்பொடுவிளங்க ஒருகை ##தாரொடு பொலிய - முனிவர்க்குக் தத்துவங்களைக்கூறி உரையிறந்தபொருளை உணர்த்தும் காலத்து ஒருகை மார்போடே விளங்காநிற்க, ஒருகை மார்பின் மாலை தாழ்ந்ததனோடே சேர்ந்து அழகுபெற,
என்றது : இறைவன் மோனமுத்திரையத்தனாய்த் தானாயே யிருந்து காட்ட @@ஊமைத்தசும்புள் நீர்நிறைந்தாற்போலஆனந்த மயமான ஒளி
மாணாக்கர்க்கு நிறைதலின், அதற்குரிய மோனமுத்திரை கூறிற்று; "தன்னை யுன்னி யென்னை யாக்கிய போழ்தே யானவ னாயினேன்" (கலித். 43, ந. மேற்.) என்பதனானுணர்க.
இக்கைகள் எஞ்சிய பொருள்களை விளக்கு முகத்திற்கு (97-8) ஏற்றவாறுணர்க.
--------------
# புடைவை (வேறுரை)
@ ஐந்தாகிய பெருத்த பரிசை;பத்துத் திருமுகத்தினையுடைய கேடகமெனினுமமையும் (வேறுரை).
§ வெற்றிபெறச் சுழற்ற (வேறுரை)
$ "அந்தண்மறை வேள்வி காவற்கார "(திருப்.); "அறங்குலவு மகத்தழலு மவுணமட வார்வயிற்றி னழலு மூள, மறங்குலவு வேலெடுத்த குமரவேல்" (திருவிளை. கடவுள்.)
£ மார்பினிடத்தே மௌனமந்திரத்தைப் பேணாநிற்க (வேறுரை)
## தார் - மார்பிலுள்ளமாலை ; "வண்ண மார்பிற் றாருங் கொன்றை" (புறநா. கடவுள்.)
@@ ஊமைத்தசும்பு - வாயில்லாதகுடம்; "குவிவா யமையாக் குட நிறை தீநீர், ............. துரியமு மிறந்த தூயோன் றூய்மை, யருளினன்" (ஞானாமிர்தம், 47)
-------------
113-5. [ ஒருகை, கீழ்வீழ் 1தொடியொடு மீமிசைக் கொட்ப வொருகை, பாடின் படுமணி யிரட்ட:] ஒருகை தொடியொடு மீமிசை கொட்ப கீழ்வீழ் ஒருகை பாடு இன் படு மணி இரட்ட - ஒருகை தொடியொடு மேலே சுழன்று களவேள்விக்கு முத்திரை கொடுப்பக் கீழே வீழ்ந்த மற்றைக்கை ஓசையினிதாகிய ஒலிக்கின்ற மணியை மாறியொலிக்கப்பண்ண,
இக்கை களவேள்வி வேட்கின்ற முகத்திற்கு (99 - 100) ஏற்றவாறுணர்க.
115 - 7. ஒருகை நீல் நிற விசும்பின் மலி துளி பொழிய ஒருகைவான் அரமகளிர்க்கு வதுவை சூட்ட - ஒருகை நீலநிறத்தையுடைய மேகத்தாலே மிக்க மழையைப் பெய்வியாநிற்க, ஒருகை தெய்வமகளிர்க்கு மணமாலையைச் சூட்ட,
என்றது : வள்ளியொடு நகையமர்ந்தமுகம் (100 - 102) உலகிற்கு இல்வாழ்க்கை நிகழ்த்துவித்ததாகலின்,2அவ்வில்வாழ்க்கை நிகழ்த்துதற்கு மழையைப் பெய்வித்தது ஒருகை; ஒருகை இல்வாழ்க்கை நிகழ்த்தற் பொருட்டு மணமாலையைச் சூட்டிற்றென்றவாறு.
117-8. 3ஆங்கு அ பன்னிருகையும் பால் பட இயற்றி - அப்படியே அந்தப் பன்னிரண்டு கையும் முகத்தின் பகுதியிலே படும்படி தொழில் செய்து,
முகங்களில் ஒருமுகம் ஓர்க்கும் (96) ஒருமுகம் விளக்கும் (98) ஒரு முகம் வேட்டன்று (100) ஒருமுகம் அமர்ந்தன்று (102) ஒருமுகம் விரிந்தன்று (92) ஒருமுகம் கொடுத்தன்று (94) அம்மூவிருமுகனும் அத்தொழில்களிடத்துச் செய்யும் முறைமைகளைப் பயின்று நடத்துகையினாலே (103) அம்முகங்களுக்குப் பொருந்தத் தோள்களில் (106) இருகை (110) திரிப்ப (111) ஒருகை விளங்க (112) ஒருகை பொலிய (113) ஒருகை கொட்ப (114) ஒருகை இரட்ட (115) ஒருகை பொழிய (116) ஒருகை சூட்ட (117) ஒருகை ஐயர்க்கேந்தியது (107) ஒருகை உக்கஞ் சேர்த்தியது (108) ஒருகை கடாவ (110) ஒருகை அசைந்தது (109) அப்படியே பன்னிருகையும் முகத்தின் பகுதியிலே படும்படி தொழில் செய்தென இச்சொன் முடிபுக்கேற்பக் கைகளையும் முகங்களையும்$மாட்டாக முடிக்க.
திரிப்பவென்பது முதலிய நிகழ்காலச் செயவெனெச்சங்கள் ஏந்தியது சேர்த்தியதென முற்றுவினைகொண்டு முடிந்தன.
---------
# பார வளையோடே (வேறுரை)
@ "நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும், வானின் றமையா தொழுக்கு" (குறள், 20)
§ ஆங்கு - ஆக (வேறுரை)
$ மாட்டு : 43 - 4-ஆம் அடிகளின் விசேடவுரையைப் பார்க்க.
--------------
119. அந்தரம் பல்லியம் கறங்க - ஆகாயத்தினது துந்துபி ஒலிப்ப,
119 - 20. திண் @காழ் வயிர் எழுந்து இசைப்ப - திண்ணிய வயிரத்தையுடைய கொம்பு மிக்கொலிப்ப,
வால் வளை ஞரல - வெள்ளிய சங்கு முழங்க,
121. உரம் தலை கொண்ட உரும் இடி முரசமொடு - வலியைத் தன்னிடத்தே கொண்ட உருமேற்றினது இடிப்புப்போலும் ஓசையையுடைய முரசுடனே.
122. பல்பொறி மஞ்ஞை வெல் கொடி அகவ - பல பீலியையுடைய மயில் அவனாணையினாலே§வென்றெடுத்த கொடியிலேயிருந்து ஒலியா நிற்க,
பொறி : ஆகுபெயர்.
123. விசும்பு ஆறாக - ஆகாயமே வழியாக,
விரை செலல் முன்னி - விரைந்த செலவினை மேற்கொண்டு,
124. [ உலகம் புகழ்ந்த வோங்குயர் விழுச்சீர்:] ஓங்கு உலகம் புகழ்ந்த உயர்$விழுச்சீர் - நன்மையோங்கும் நன்மக்கள் புகழ்ந்த உயரும் சீரினையுடைய புகழினையுடைய,
125.அலைவாய் £சேறலும் நிலைஇய பண்பு - நாமனூரலைவாயென்னும் திருப்பதியேற எழுந்தருளுதலும் அவற்கு நிலைபெற்ற குணம்;
குன்றமர்ந்துறைதலுமுரியன்; அதாஅன்று (77) வேழமேல் கொண்டு (82) இயற்றிக் (118) கறங்க (119) இசைப்ப ஞரல (120) அகவ (122) முன்னி (123) அலைவாய்ச் சேறலும் நிலைஇயபண்பென முடிக்க.
அதாஅன்று - அதுவன்றி,
திருவாவினன்குடி
126. சீரை தைஇயவென்பதுமுதல் முனிவர் முற்புக (137) என்னுந்துணையும் ஒரு தொடர்.
-----------
@ கரிய கொம்பு (வேறுரை)
§ "செருப்புகன் றெடுத்த சேணுயர் நெடுங்கொடி" (முருகு. 67)
$ விழுமிய அழகு (வேறுரை)
£ சேறல் - செறிதல் (வேறுரை)
----------------
சீரை #தைஇய உடுக்கையர் - மரவுரியை உடையாகச் செய்த உடையினையுடையர்,
இதற்குக் @கற்றோய்த்தல் முதலியன செய்த உடுக்கையரென்பாருமுளர்.
126 - 7. சீரொடு வலம்புரி புரையும் வால்§நரை முடியினர் - அழகோடு வடிவாலும் நிறத்தாலும் வலம்புரிச்சங்கினை யொக்கும் வெள்ளிய நரைமுடி யினையுடையர்,
128. மாசுஅற இமைக்கும் உருவினர் - $எக்காலத்தும் நீராடுதலின் அழுக்கற விளங்கும் வடிவினையுடையர்,
128 - 30. மானின் உரிவை தைஇய ஊன் கெடு மார்பின் என்பு எழுந்து இயங்கும் யாக்கையர் - கிருட்டினாசினம் போர்த்த விரதங்களால் விட்ட பட்டினியால் தசைகெடுகின்ற மார்பினெலும்புகள் கோவை தோன்றி உலவும் உடம்பினையுடையர்,
தைஇய மார்பென்க.
130 - 31. நன்பகல் பல உடன் கழிந்த உண்டியர் - எப்பொருளும் நுகர்தற்கு நன்றாகிய பகற்பொழுதுகள் பலவும் சேரக்கழிந்த உணவினையுடையர்,
இது மாதோபவாசங் கூறிற்று.
131 - 2. இகலொடு செற்றம் நீக்கிய மனத்தினர்-மாறுபாட்டோடே நெடுங்கால நிற்கும் செற்றத்தினையும் போக்கிய மனத்தினை யுடையர்,
பகைமை நெடுங்காலம் நிகழ்வது செற்றம்.
132-3. [யாவதுங், கற்றோ ரறியா வறிவினர்] £கற்றோர் யாவதும் அறியா அறிவினர் - பலவற்றையும் கற்றோர் சிறிதும்அறியப் படாத இயல்பான அறிவினையுடையர்,
133 - 4. கற்றோர்க்கு தாம் வரம்பு ஆகிய தலைமையர் - பலவற்றையும் கற்றோர்க்குத் தாம் எல்லையாகிய தலைமையையுடையர்,
என்றது கல்வியைக் கரைகண்டா ரென்றவாறு.
134 - 5. காமமொடு கடு சினம் கடிந்த ##காட்சியர் - ஆசையோடே கடிய சினத்தையும் போக்கின அறிவினையுடையர்,
@@கோபத்தின் பின்னாகச் சிறிது பொழுது நிற்பது சினம்.
-------------
# தைத்த (வேறுரை)
@ கற்றோய்த்தல் - காவிக்கல்லைக் கரைத்த நீரில் தோய்த்தல்.
§ நரைக்கொண்டையினை யுடையார் (வேறுரை)
$ "நீர்பலகான் மூழ்கி நிலத்தசைஇத் தோலுடீஇ" (பு. வெ. 168)
£ யாவதும் கற்றோர் - எவ்வகைப்பட்ட பொருளினையும் கற்று வல்லுநர் (வேறுரை)
## தோற்றத்தினை யுடையார் (வேறுரை)
@@ "கோபம் நீட்டித்து நிற்கின்றது சினம்" என்பர் பின்; சிறுபாண். 210, உரை,
------------
135-6. இடும்பை யாவதும் அறியா இயல்பினர் -@தவத்தான் மெய்வருத்தம் உளவேனும் மனத்தான் வருத்தம் சிறிதுமறியப்படாத இயல்பினையுடையர்,
மே வர - திருவுள்ளம் பொருந்துதல் வர,
137. §துனி இல் காட்சி முனிவர் முன் புக - ஒருவருடனும் வெறுப்பில்லாத நல்ல அறிவினையுடைய முனிவர் முன்னே செல்ல,
உடுக்கையர் (126) முடியினர் (127) உருவினர் (128) யாக்கையர் (130) உண்டியர் (131) மனத்தினர் (132) அறிவினர் (133) தலைமையர் (134) காட்சியர் (135) இயல்பினராகிய (136) முனிவர் (137) மேவர (136) முற்புக (137) வென முடிக்க.
138. புகைமுகந்தன்ன என்பதுமுதல் மேவலர் (142) என்னுந் துணையும் பாடுவாரைக் கூறிற்று.
$புகை முகந்தன்ன மாசு இல் தூ உடை - புகையை முகந்தாலொத்த; தெய்வத்தன்மையால் அழுக்கேறாத தூய உடையினையும்,
139. £முகை வாய் அவிழ்ந்த தகை சூழ் ஆகத்து - முகை வாய் நெகிழ்ந்த மாலை சூழ்ந்த மார்பினையும்,
கட்டுதலிற் றகையென்றார், மாலையை; ஆகுபெயர்.
140 - 41. செவி நேர்பு வைத்த செய்வு உறு திவவின் நல் யாழ் நவின்ற -##எஃகுச் செவியாலே சுருதியையளந்து நரம்பைக் கட்டின சுற்றுதலுறும் வார்க்கட்டினையுடைய நன்றாகிய யாழின் இசையிலே பயின்ற,
141 - 2. நயன் உடை நெஞ்சின் @@மென்மொழி மேவலர் இன் நரம்பு உளர - ஈரமுடைய நெஞ்சாலே எக்காலமும் மெல்லிய வார்த்தை சொல்லுதலைப் பொருந்திய கந்தருவர் இனிய நரம்பை வாசிக்க,
நவின்ற நயனென்க.
-----------
@ "இலக்க முடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக், கையாறாக் கொள்ளாதா மேல்" (குறள். 627).
§ துயரமில்லாத தோற்றம் (வேறுரை)
$ புகையைக் கையாலே முகந்தாற் போன்று நொய்யவாய (வேறுரை)
£ மொட்டுப்பூக் கிண்கிணிவாய்க் கொண்ட பக்குவத்திலே கட்டின மாலை சூழ்ந்த மார்பினையும் (வேறுரை)
## எஃகுச் செவி - மூவகைச் செவியிலும் தலையான கூரிய செவி; "எஃகுநுண் செவிகள் வீழ" (சீவக. 2718) ; "எஃகுச் செவித் தேவர்கள்" (தக்க. 610, உரை)
@@ மெத்தென்ற சொற்சேர்ந்தோராகிய வித்தியாதரர் (வேறுரை)
---------------
143. நோயின்றென்பது முதல் மகளிர் (147) என்னுந்துணையும் பாடு மகளிரைக் கூறிற்று.
நோய் இன்று இயன்ற யாக்கையர் - மக்களுக்குரிய நோய் இல்லையாக நிருமித்த உடம்பினையுடையராய்,
143 - 4. மாவின் அவிர் தளிர் புரையும் மேனியர் - மாவினது விளங்குகின்ற தளிரையொக்கும் நிறத்தினையுடையராய்,
144 - 5. அவிர்தொறும் பொன் உரை கடுக்கும் திதலையர் - விளங்குந்தோறும் பொன்னுரை விளங்கினாற்போலும் துத்தியினையுடையராய்,
145 - 7. இன் நகை #பருமம் தாங்கிய பணிந்து ஏந்து அல்குல்@மாசு இல் மகளிரொடு - கட்கினிய ஒளியினையுடைய பதினெண்கோவையாகிய §மேகலை யணிந்த தாழவேண்டியவிடம் தாழ்ந்து உயரவேண்டியவிடம் உயர்ந்த அல்குலையுடைய குற்றமில்லாத கந்தருவ மகளிரோடே,
மறு இன்றி விளங்க - குற்றமின்றாய் விளங்கா நிற்க,
உடையினையும் (138) ஆகத்தினையுமுடைய (139) மென்மொழி மேவலர் (142) யாக்கை (143) முதலியவற்றையுடையராய், மாசில்லாத மகளிரோடே மறுவின்று விளங்க (147) இன்னரம்புளர (142) வென முடிக்க.
148. $கடுவொடு ஒடுங்கிய தூம்பு உடை வால் எயிறு - நஞ்சுடனே உறைக்குள்ளே கிடந்த துளையினையுடைய வெள்ளிய எயிற்றினையும்,
மிடற்றினஞ்சு தன்னிடத்தே தோன்றுதலின், 'கடுவொடு' என்றார். £எயிறு : காளி, காளாத்திரி, யமன், யமதூதியென நான்காம்.
149. அழலென உயிர்க்கும் அஞ்சு வரு கடு திறல் - நெருப்பென்னும்படி நெட்டுயிர்ப்புக் கொள்ளும் கண்டார்க்கு அச்சந்தோன்றும் கடிய வலியினையுமுடைய,
150. பாம்பு பட புடைக்கும் - பாம்பு படும்படி அடிக்கும்,
-----------
# அரைப்பட்டிகை (வேறுரை)
@ தெய்வக் குறத்திகளோடே (வேறுரை)
§ மேகலை யென்பது காஞ்சி முதல் விரிசிகை யீறாக உள்ளவற்றிற்குப் பொதுப்பெயர் (பரி. 10 : 11, பரிமேல்.); "எண்கோவையாகிய மேகலை" (கலித். 56 : 9-12, ந.)
$ ஒடொடுங்கிய - ஒடுங்கி ஓடப்பட்ட (வேறுரை)
£ இப்பற்களின் இயல்பு, சித்தராரூடம், சிந்தாமணி முதலியவற்றிற் கூறப்பட்டுள்ளது; "காளி காளாத்திரி தூதி யமதூதி" என்பர் ; தக்க. 155, உரை.
-------------
150 - 51. பல் வரி கொடு சிறை புள் அணி நீள் கொடி செல்வனும் - பலவரியினையுடைத்தாகிய வளைந்த சிறகினையுடைய கருடனை யணிந்த நீண்ட கொடியினையுடைய திருமாலும்,
151 - 4. [ வெள்ளேறு, வலவயி னுயரிய பலர்புகழ் திணிதோள், உமையமர்ந்து விளங்கு மிமையா முக்கண், மூவெயின் முருக்கிய முரண்மிகு செல்வனும்:]
#வலம் வயின் வெள்ளேறு உயரிய செல்வன் - வெற்றிக்களத்தே வெள்ளிய ஏற்றினை வெற்றிக்கொடியாக எடுத்த உருத்திரன்,
உமை அமர்ந்து விளங்கும் செல்வன் - இறைவி ஒருபாகத்தே பொருந்தி விளங்கும் செல்வன்,
பலர் புகழ் திணி தோள் - பலரும் புகழ்கின்ற சிக்கென்ற தோளினையும்,
இமையா முக்கண் செல்வன் - இதழ் குவியாத மூன்றுகண்ணினையுமுடைய செல்வன்,
மூ எயில் முருக்கிய முரண் மிகு செல்வனும் - முப்புரத்தையெரித்த மாறுபாடு மிக்க செல்வனும்,
155. நூற்றுப்பத்து அடுக்கிய நாட்டத்து -நூற்றைப்பத்தாக அடுக்கிய கண்ணினையும்,
என்றது ஆயிரங்கண்ணென்றவாறு.
155 - 6. நுறு பல் வேள்வி முற்றிய வென்று அடு கொற்றத்து - நூறென்னும் எண்ணாகிய பலவேள்விகளை வேட்டுமுடித்ததனாற்பெற்ற பகைவரை வென்றுகொல்கின்ற வெற்றியினையும்,
157. [ ஈரிரண் டேந்திய மருப்பின் :] ஏந்திய ஈரிரண்டு மருப்பின் - தலைகள் ஏந்தியிருக்கின்ற நான்காகிய கொம்பினையும்,
எழில் நடை - அழகினையுடைய நடையினையும்,
158. தாழ் பெரு @தட கை - §நிலத்தே கிடக்கின்ற பெரிய வளை வினையுடைய கையினையுமுடைய,
158 - 9. உயர்த்த யானை எருத்தம் ஏறிய திரு கிளர் செல்வனும் - எல்லாரானும் உயர்த்துச் சொல்லப்படுகின்ற யானையின் புறக்கழுத்திலே ஏறிய திருமகள் விளங்கும் இந்திரனும்,
உயர்ந்த: உயர்த்தவென விகாரமுமாம்.
நாட்டத்தினையும்(155) கொற்றத்தினையுமுடைய (156) செல்வனென்க.
மருப்பு (157) முதலியவற்றையுடைய யானை (158) யென்க.
----------
# வலவயின் உயரிய - வெற்றியினால் ஏறிய (வேறுரை)
@ "தடவென் கிளவி கோட்டமுஞ் செய்யும்" (தொல். உரி. சூ. 23)
§ "ஈர்ந்துநிலந் தோயு மிரும்பிடித் தடக்கை" (சிறுபாண். 19); "இரும்பிணர்த் தடக்கை யிருநிலஞ் சேர்த்தி" (குறிஞ்சிப். 163)
--------------
160-61. நால் பெரு தெய்வத்து நல் நகர் நிலைஇய உலகம் காக்கும் ஒன்று புரி கொள்கை - நான்காகிய பெரிய தெய்வத்தையுடைய நன்றாகிய ஊர்கள் நிலைபெற்ற உலகத்தைக் காக்கும் ஒரு தொழிலையே விரும்பிய கோட்பாட்டையுடைய செல்வன் (151) என முன்னே கூட்டித் திருமாலுக்கு அடையாக்குக.
#நாற்பெருந் தெய்வமாவன : இந்திரன், யமன், வருணன், @சோமனென்னும் தெய்வங்கள்.
162. பலர் புகழ் மூவரும் தலைவராக - பலரும் புகழ்கின்ற அயன்அரி அரனென்னும் மூவரும் தத்தமக்குரிய தொழில்களை முன்புபோல நிகழ்த்தித் தலைவராகவேண்டி,
என்றது : பிள்ளையார் அயனைச்சபித்தலின், அயன் படைத்தற்றொழிலைத் தவிரவே ஏனையிருவர்க்கும் காத்தற்றொழிலும் அழித்தற்றொழிலும் இன்றாமாகலின் மூவரும் தத்தமக்குரிய தொழில்களைப் பெற்றுத் தலைவராகவென்றார்.
163-5. [§ஏமுறு ஞாலந் தன்னிற் றோன்றித், $தாமரை பயந்த தாவி லூழி, நான்முக வொருவற் சுட்டி:]
ஞாலம் தன்னில் தோன்றி£ஏம் உறு நான்முக ஒருவன் சுட்டி - பிள்ளையார் சபித்தலாலே மண்ணிடத்தே தோன்றி மயக்கமுறுகின்ற நான்கு முகத்தையுடைய அயனைப் பழைய நிலையிலே நிறுத்தக் கருதி,
தாமரை பயந்த ஊழி தா இல் ஒருவன் - திருமாலுடைய திருவுந்தித் தாமரை பெற்ற ஊழிகடோறும் தன் படைத்தற்றொழிலில் வருத்தமில்லாத ஒருவன் (165),
--------------
# நாற்பெருந் தெய்வம் - அந்தணர் தெய்வம், அரையர்தெய்வம், வசியர் தெய்வம், சூத்திரர்தெய்வம்; என்பதைச் சிலப்பதிகாரத்துக் (அழற்படுகாதையிற்) கண்டுகொள்க (வேறுரை)
@ சோமன் - குபேரன்.
§ ஏமுறு ஞாலம் - ஐயம் மிக உடைத்தாய பூமி (வேறுரை)
$ தாமரை பயந்த தாவி லூழி நான்முகவொருவற் சுட்டி தோன்றி - தாமரைப்பூவின் கட்டோன்றி கேடில்லாத காலத்தினையுடைய நான் முகனாகிய அயனுக்காக முன் சொன்ன மூவரும் பூமியின்கண் வந்து தோன்றி; அது, பிள்ளையார் அயனைச் சிறையிடுகையில் அவர் எழுந்தருளியிருக்கும் திருவாவினன்குடியிற் சென்று அயனை விடுவிக்கப் பூமியின்கண் வந்ததெனக் கொள்க (வேறுரை)
£ "ஏமுறுகடுந்திண்டேர் - பகைவர் மயக்கமுறுதற்குக் காரணமான கடிய திண்ணிய தேர்" (கலித். 27 : 25, ந.)
-----------
இனித் தாமரையென்னும் எண்ணைத்தந்த அழிவில்லாத ஊழிக் காலத்தையுடைய அயனுமாம்.
பயந்த ஒருவனென்க.
சாபமென்றது : பிள்ளையார் அசுரரையழித்துத் தேவரைக் காத்தற்கு இந்திரன்மகள் தெய்வயானையாரை அவர்க்குக் கொடுத்தவிடத்தே, பிள்ளையார் தம் கையில் வேலை நோக்கி, "நமக்கு எல்லாந்தந்தது இவ்வேல்" என்ன, அருகிருந்த அயன், "இவ்வேலிற்கு இந்நிலை என்னால் வந்ததன்றோ" என்றானாக, "நங்கையில் வேலுக்கு நீ கொடுப்பதொரு சத்தியுண்டோ" என்று கோபித்து, "இங்ஙனங் கூறிய நீ மண்ணிடைச் செல்வாய்"என்ற சாபத்தை.
#காண் வர - அழகு தோன்ற,
166. @பகலில் தோன்றும் இகல் இல் காட்சி - ஒரு பொருள் பலவாமாறு பகுத்துக்காண்டற்கண் வேறுபடத் தோன்றும் தம்முள் மாறுபாடில்லாத அறிவினையுடைய,
167. §நால் வேறு இயற்கை பதினொரு மூவரொடு - நான்காகிய வேறுபட்ட இயல்பினையுடைய முப்பத்துமூவரும்,
என்றது : ஆதித்தன், உருத்திரன், வசு, மருத்துவனென்னும் ஒரோவோர் பொருள்கள் பலவாகப் பகுக்குங்காற் பன்னிருவர் பதினொருவர் எண்மர் இருவராகப் பகுக்க, நான்கு கூறாய் முப்பத்துமூவ ராயினாரென்றவாறு; பதினொருவராகிய மூவரென்க. அவர் ஆதித்தர் பன்னிருவரும், உருத்திரர் பதினொருவரும், வசுக்கள் எண்மரும், மருத்துவர் இருவருமாம்.
ஒடு : எண்ணொடு:
168. $ஒன்பதிற்று இரட்டி உயர்நிலை பெறீஇயர் - பதினெண் வகையாகிய உயர்ந்த நிலையைப் பெற்றவரும்,
என்றது பதினெண்கணங்களை. அவர் தேவரும், அசுரரும், தைத்தியரும், கருடரும், கின்னரரும், கிம்புருடரும், இயக்கரும், விஞ்சையரும், இராக்கதரும், கந்தருவரும், சித்தரும், சாரணரும், பூதரும்,
பைசாசகணமும் தாராகணமும், நாகரும், ஆகாயவாசிகளும், போகபூமி யோருமெனவிவர்; இதற்குப் £பிறவாறு முரைப்பர்.
பெறீஇயர் : தொழிற் பெயர்.
------------
# காண்வர - காட்சிபெற (வேறுரை)
@ பகலாகிய அருக்கனைப் போலத் தோன்றாநின்ற (வேறுரை)
§ நால் வேறு இயற்கை - சாலோகம், சாமீபம், சாரூபம், சாயுச்சியம் (வேறுரை)
$ பதினெண் பூமியின் மிக்க பதங்களைப் பெற்றுடையர் (வேறுரை)
£ புறநானூறு, கடவுள் வாழ்த்து உரையில் பதினெண்கணங்களை இங்குக் கூறப்பட்டவற்றிற்குப் பெரும்பாலும் ஒப்பவே விரிப்பர்; "கின்னரர் கிம்புருடர் விச்சா தரர்கருடர், பொன்னமர் பூதர் புகழியக்கர் - மன்னும், உரகர் சுரர்சா ரணர்முனிவர் மேலாம், பரகதியோர் சித்தர் பலர்", "காந்தருவர் தாரகைகள் காணாப் பசாசகண, மேந்துபுகழ் மேய விராக்கதரோ - டாய்ந்ததிறற், போகா வியல்புடைய போகபூமி யோருடனே, யாகாச வாசிகளா வார் " (சிலப். 5; 176-8, அடியார், மேற்.); பிங்கலந்தை முதலிய நிகண்டுகளில் இவ்வாறே கூறப்பெற்றிருக்கின்றன. "பேயும் பூதமும் பாம்புமீறாகிய பதினெண்கணம்" (தொல். பொருள். சூ. 256) என்று பேராசிரியரும், "பதினெண்கணங்களாவன தேவகணம் பிதிரர்கணம் முதலியன" (136) என்று தக்கயாகப் பரணி உரையாசிரியரும் எழுதுவர்.
------------
169. மீன் பூத்தன்ன தோன்றலர் - உடுக்கள் பொலிவுபெற்றுத் தோன்றினாலொத்த தோற்றத்தையுடையராய்,
169 - 70. மீன் சேர்பு வளி கிளர்ந்தன்ன செலவினர் - மீன்களுலாவுகின்ற விடத்தைச் சேர்ந்துகாற்று எழுந்தாலொத்த செலவினையுடையராய்,
170 - 71. வளி இடை தீ எழுந்தன்ன திறலினர் - காற்றிடத்தே நெருப்பெழுந்தாலொத்த வலியினையுடையராய்,
171 - 2. தீ பட உரும் இடித்தன்ன குரலினர் - நெருப்புப் பிறக்க உருமேறு இடித்தாற் போன்ற குரலினையுடையராய்,
இவை வினையெச்சமுற்று.
172 - 3. [ விழுமிய, வுறுகுறை மருங்கிற்றம் பெறுமுறை கொண்மார் :] தம் விழுமிய பெறுமுறை குறை உறு மருங்கில் கொண்மார் -@தம்முடைய சீரிய படைத்தல் காத்தல் அழித்தலென்னும் தொழில்களைப் பண்டுபோலப் பெறுமுறைமையினைக் குறைவேண்டி நின்று பெறுங்கூற்றாலே முடித்துக் கோடற்கு,
174. அந்தரம் கொட்பினர் - ஆகாயத்தே சுழற்சியினையுடையராய், [வந்துடன் காண :] உடன் வந்து காண - சேரவந்து காணும் படியாக,
175. தா இல் கொள்கை மடந்தையொடு – வருத்தமில்லாத §அருட்கற்பினையுடைய தெய்வயானையாருடன்,
-----------
@ 162-ஆம் அடியின் உரையைப் பார்க்க.
§ 6-ஆம் அடி உரையின் அடிக்குறிப்பைப் பார்க்க.
-----------
175-6. [ சின்னாள், ஆவினன்குடி யசைதலு முரியன்:] ஆவினன்குடி சின்னாள் அசைதலும் உரியன் - ஆவினன்குடி யென்னும் ஊரிலே சிலநாள் இருந்தலுமுரியன்;
பலர்புகழ் மூவரும் தலைவராகவேண்டி (162) அதற்குக் குறை பாடுண்டாக்கின நான்முகவொருவனைக் கருதி (165) ஒன்றுபுரிகொள்கைப் (161) புள்ளணி நீள்கொடிச் செல்வனும் (151) முரண்மிகு செல்வனும் (154) யானையெருத்தமேறிய செல்வனும் (159) முப்பத்துமூவரும் (167) பதினெண்கணங்களும் (168) தோன்றலர் (169) செலவினர் (170) திறலினர் (171) குரலினர் (172) கொட்பினராய் உடன்வந்து (174) தம் (173) விழுமிய (172) பெறுமுறை குறையுறுமருங்கின் முடித்துக் கோடற்கு (173) மென்மொழி மேவலர் இன்னரம்புளர (142) முனிவர் (137) மேவர (136) முற்புகக் (137) காணத் (174) தான் ஆவினன் குடியிலே காண்வர (165) அசைதலு முரியனென முடிக்க.
கந்தருவர் பாட்டால் (141 - 2) முனிவு தீர்ப்பார்.
முனிவர் தம்மை மறாமைபற்றி முன்னேசென்றார்.
இனிச் சித்தன்வாழ்வென்று சொல்லுகின்றவூர் முற்காலத்து ஆவினன்குடி யென்று பெயர்பெற்றதென்றுமாம். அது, "நல்லம்பர் நல்ல குடியுடைத்துச் சித்தன்வாழ், வில்லந் தொருமூன் றெரியுடைத்து - நல்லரவப், பாட்டுடைத்துச் சோமன் வழிவந்த பாண்டியநின், னாட்டுடைத்து நல்ல தமிழ்" என்று ஒளவையார் கூறியதனாலுணர்க;
#சித்த னென்பதுபிள்ளையாரக்குத் திருநாமம்.
அதாஅன்று - அதுவன்றி.
திருவேரகம்
177. இரு மூன்று எய்திய 2இயல்பினின் வழாஅது - ஓதல் ஓதுவித்தல் வேட்டல் வேட்பித்தல் ஈதல் ஏற்றலென்னும் ஆறாகிய நன்மை பொருந்திய இலக்கணத்தில் வழுவாமல்,
வழாது, வழாமல் வழுவாமலெனத் திரிக்க.
178. இருவர் சுட்டிய பல் வேறு தொல் குடி - தாயும் தந்தையுமாகிய இருவர் குலத்தையும் உலகத்தார் நன்றென்று மதித்த பலவாய் வேறுபட்ட பழைய குடியிற் பிறந்த இருபிறப்பாளர் (182),
குடி - §குண்டினர், காசிபர் என்றாற்போல்வன.
------------
# இது முருகக்கடவுள் ஆயிரநாமத்துள்ஒன்று.
@ இயல்பினின் - ஒழுக்கத்தினின்; அது வைதீக ஆசாரம் (வேறுரை)
§ (பி-ம்.) 'குண்டலர்'
----------------
170 - 80. [ அறுநான் கிரட்டி யிளமை நல்லியாண், டாறினிற் கழிப்பிய:] அறுநான்கு இரட்டி ஆண்டு நல்லிளமை ஆறினில் கழிப்பிய - இருபத்து நான்கின் இரட்டியாகிய நாற்பத்தெட்டியாண்டு நல்லிளமையை வேதங்கூறிய நெறியிலே போக்கிய இருபிறப்பாளர் (182),
இவர் #பிரமசரியங்காத்த அந்தணர்.
அறன் நவில் கொள்கை - அறத்தை எப்பொழுதும் கூறுகின்ற கோட்பாட்டினையும்,
181. மூன்று வகை குறித்த @முத்தீ செல்வத்து - நாற்சதுரமும் முச்ச துரமும் வில்வடிவுமாகிய §மூன்று வகையைக் கருதின ஆகவனீயம் தக்கிணாக்கினி காருகபத்தியம் என்னும் மூன்று தீயானுண்டாகிய செல்வத்தினையுமுடைய,
182. இருபிறப்பாளர் - உபநயனத்துக்கு முன்பு ஒரு பிறப்பும் பின்பு ஒரு பிறப்புமாகிய இருபிறப்பினையுமுடைய அந்தணர்,
$பொழுது அறிந்து நுவல - தாங்கள் வழிபடுங்காலமறிந்து தோத்திரங்களைக் கூற,
183. ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண் - முந்நூல் கொண்டு முப்புரியாக்குதலின், ஒன்பதாகிய நூலைத் தன்னிடத்தே கொண்ட ஒரு புரி மூன்றாகிய நுண்ணிய பூணுநூலையும்,
ஞாணினையும் (183) கொள்கையினையும் (180) செல்வத்தினையுமுடைய (181) இருபிறப்பாளர் (182) என்க.
184. புலரா காழகம் புலர உடீஇ - நீராடுங்கால் தோய்க்கப்பட்ட கலிங்கம் உடம்பிலே கிடந்து புலர உடுத்து,
என்றது, ஈரத்துடனேயிருந்து வழிபடுதல் கூறிற்று.
185. உச்சி கூப்பிய கையினர் தன் புகழ்ந்து - தலைமேலே வைத்த கையினையுடையராய்த் தன்னைத் துதித்து,
-------------
# "நாற்பத்தெட்டியான்டு பிரமசரியங்காத்தான்" (தொல். களவு. சூ. 1, உரை : இறை. சூ, 1 உரை)
@ முத்தீ : மூன்றாவன ஒன்று வேதத்தை வழங்கவும் ஒன்று தேவர்கட்குத் தட்சிணை கொடுக்கவும் ஒன்று பூலோகத்தை ரட்சை பண்ணவும் இவ்வாறாய முத்தீ (வேறுரை)
§ இவற்றுட் பின்னைய இரண்டன் வகையும் இக்காலத்து வழங்குவனவற்றிற்கு வேறுபட்டிருத்தலின், இம்மூன்று வகையும் சாகாபேதமாக இருத்தல் வேண்டுமெனக் கூறுகின்றனர்.
$ உதயகாலத்தும் மத்தியான்ன காலத்தும் அத்தமன காலத்தும் தாபனம் அநுட்டானம் பூசையாகிய மூன்று தொழிலையும் முயன்று செய்ய (வேறுரை)
--------------
186. ஆறெழுத்து அடக்கிய அரு மறை கேள்வி - ஆறெழுத்தினைத் தன்னிடத்தே அடக்கியிருக்கின்ற கேட்டற்கரிய,#மறைய உச்சரிக்கப்படும் மந்திரத்தை,
அது, @"நமோகுமாராய" என்பதாம்.
187. நா இயல் மருங்கில் நவில பாடி - நாப் புடைபெயரும் அளவிலே பயில உச்சரித்து,
188. விரை உறு நறு மலர் ஏந்தி - மணமிக்க நறிய பூவை எடுத்து,
188-9. பெரிது உவந்து ஏரகத்து உறைதலும் உரியன் - பெரிது மகிழ்ந்து ஏரகமென்கின்ற ஊரிலே இருத்தலுமுரியன்;
இருபிறப்பாளர் (182) புலரவுடீஇத் (184) தற்புகழ்ந்து (185) நறுமலரேந்திக் (188) கூப்பியகையராய் (185) நவிலப்பாடிப் (187) பொழுதறிந்து நுவல (182) அதற்குப் பெரிதுமகிழ்ந்து (188) ஏரகத்துறைதலும் உரியனென முடிக்க.
§ஏரகம் - மலைநாட்டகத் தொரு திருப்பதி.
அதாஅன்று - அதுவன்றி.
குன்றுதொறாடல்
190. $பைங்கொடி - பச்சிலைக் கொடியாலே.
எல்லாவற்றினும் பசுத்திருத்தலிற் பச்சிலையென்று பெயர்பெற்றது; பச்சிலை யென்னாது சினைவினை முதன்மேலேற்றிப் பைங்கொடி யென்றார்.
நறை காய் - நறுநாற்றத்தையுடைய காயை, அது சாதிக்காய்.
இடை இடுபு - நடுவேயிட்டு,
வேலன் - படிமத்தான்,
------------
# "ஐதுரைத்து" (முருகு. 228) என்பதற்கு, 'தான் வழிபடுதற்குரிய மந்திரத்தைத் தோன்றாமல் உச்சரித்து' என்றெழுதிய உரை இங்கே கருதத்தக்கது.
@ (பி-ம்.) 'நமக்குமாராய'
§ இதனைச் சோழ நாட்டிலுள்ள சுவாமிமலை யென்னும் தலமென்று கொள்வர் அருணகிரிநாதர் முதலியோர்; "காவிரி யாற்றுக்கு ளேவரு, வளமைச் சோழநன் னாட்டுக்கு ளேரக, நகரிற் சீர்பெறு மோட்சத்தை யேதரு பெருமாளே", "யாவு மலைகொண்டு கைத்த காவிரி புறம்பு சுற்று மேரகமமர்ந்த பச்சை மயில்வீரா" (திருப்புகழ்); "சீர்கெழு செந்திலுஞ் செங்கோடும் வெண்குன்றும், ஏரகமு நீங்கா விறைவன்" (சிலப். குன்றக்.) என்பதன் உரையினால் ஏரகம் சுவாமிமலையினும் வேறான ஒருதலமென்று அரும்பதவுரையாசிரியர் கருதுவதாகத் தெரிகின்றது.
$ " பைங்கொடிப்படலை - பச்சிலைமாலை" (சிலப். 25 : 44, அரும்பத.)
---------------
191. அம் பொதி புட்டில் - அழகினையுடைத்தாகிய பொதிதலையுடைய தக்கோலமென்னும் முதலின் காய்,
அது புட்டில் போறலிற் புட்டிலென்றார்.
விரைஇ - கலந்து,
#குளவியொடு - காட்டு மல்லிகையுடனே,
192. @வெள் கூதாளம் தொடுத்த கண்ணியன் - வெண்டாளியையும்கட்டின கண்ணியையுடையனாய்,
193. நறு சாந்து அணிந்த கேழ் கிளர் மார்பின் - நறிய சந்தனத்தைப் பூசிய நிறம் விளங்கும் மார்பினையுடைய வேலன் (190),
வேலன் பைங்கொடியாலே (190) புட்டில்விரைஇ (191) நறைக்காய் இடையிடுபு (190) குளவியொடு (191) கூதாளத்தையுங் கட்டிய கண்ணியனாய் (192),
கண்ணியன்: வினையெச்ச வினைக்குறிப்புமுற்று.
194. கொடு தொழில் வல் வில் கொலைஇய கானவர் - §கொடிய தொழிலையுடைய வலியவில்லாற் கொல்லுதலைச்செய்த குறவர்,
'குலைஇய' என்ற பாடத்திற்குவில்லைவளைத்த கானவரென்க; எனவே கோறல் பெற்றாம்.
195. $நீடு அமை விளைந்த தேன் கள் தேறல் - நெடுகின மூங்கிலிலே யிருந்து முற்றின தேனாற்செய்த கட்டெளிவை,
196. குன்றகம் சிறுகுடி கிளையுடன் மகிழ்ந்து - மலையிடத்துச் சிறிது ஊரிலே இருக்கின்ற சுற்றத்தோடே உண்டு மகிழ்ந்து,
197. தொண்டகம் சிறு பறை குரவை அயர - அந்நிலத்துக்குரிய தொண்டகமாகிய சிறுபறையினது தாளத்திற்குக் குரவையாட,
கானவர் தேறலை மகிழ்ந்து குரவையாடவென்க.
198-9. [விரலுளர்ப் பவிழ்ந்த வேறுபடு நறுங்காற், குண்டுசுனை பூத்த வண்டுபடு கண்ணி:]
விரல் உளர்ப்பு அவிழ்ந்த வேறுபடு நறு கான் கண்ணி - விரலது அலைப்பாலே£வலிய அலர்த்த பூவாகலின் வேறுபடுகின்ற நறியமணத்தினையுடைய தலையிற்சூடும் மாலையினையும்,
-------------
# தாளிப்பூவோடு (வேறுரை)
@ வெள்ளைக் கூதாளப் பூவையும் (வேறுரை)
§ "கோட்டமை வல்விற் கொலைபிரியா வன்கண்ணர்"(ஐந். ஐம்.)
$ நெடிய மூங்கிலரிசியில் உண்டாகச் சமைத்திட்டுஇனிமைக்கு இடமாகிய மதுவை (வேறுரை)
£ "திறந்துமோந் தன்ன சிறந்துகமழ் நாற்றத்து"(மதுரைக். 567) என்பதும், அதனுரையும், "அகைமத்தம்"(தக்க. 98) என்பத
----------
குண்டு சுனை பூத்த வண்டு படு கண்ணி - அதுதான் ஆழ்ந்த சுனையிற்பூத்த பூவாற்செய்த வண்டு வீழ்கின்ற கண்ணி,
இஃது ஒற்றுமை நயம்பற்றிச் செயப்படு பொருண்மேல் நின்றது.
'கார்க் குண்டுசுனை' என்று பாடமாயின், கரிய ஆழ்ந்த சுனையென்க.
200. இணைத்த கோதை - இதழ் பறித்துக் கட்டின மாலையினையும், அணைத்த கூந்தல் - சேர்த்தின கூந்தலினையும்,
201. முடித்த குல்லை - இலையைத் தலையிலே யணிந்த1கஞ்சங் குல்லைனையும்,
இலை உடை நறு பூ - இலையையுடைய நறிய பூங்கொத்துக்களையும்,
202 - 3. செ வால் மராஅத்த மால் இணர் இடை இடுபு சுரும்பு உண தொடுத்த பெரு தண் மா தழை - செவ்விய காலினையுடைய மராத்திடத்தனவாகிய வெள்ளிய கொத்துக்களை நடுவே வைத்துச் சுரும்பு தேனை யுண்ணும்படி தொடுத்த பெரிய குளிர்ந்த அழகினையுடைய தழையை,
குல்லையையும் பூவையும் வாலிணர் இடையிட்டுத் தொடுத்த தழையென்க.
204. [ திருந்துகா ழல்கு றிளைப்ப வுடீஇ:]2காழ் திருந்து அல்குல் திளைப்ப உடீஇ - வடங்கள் திருந்தும் அல்குலிடத்தே அசையும்படி உடுத்து,
அல்குற்றிளைப்பவென்னும் வல்லொற்று விகாரமாயிற்று.
205. [ மயில் கண்டன்ன மடநடை மகளிரொடு :]
மயில் கண்டன்ன மகளிரொடு - 3சாயலுடைமையான் மயிலைக் கண்டாற்போன்ற மகளிரொடு,
மடநடை மகளிர் - மடப்பம் பொருந்திய ஒழுக்கத்தினையுமுடைய மகளிர்.
தழையை யுடுத்து மயில் கண்டன்ன மகளிரென்க.
உடுத்தென்னும் வினையெச்சம் அன்னவென்னும் பெயரெச்சமாகிய உவம உருபோடு முடிந்தது.
னுரையில் உள்ள, 'அகைத்தல் - வலிய மலர்த்தலுமாம்' என்ற பகுதியும் இங்கே கருதத்தக்கன.
கண்ணியினையும் கோதையினையும் சேர்த்தின கூந்தலினையும் மட$நடையினையுமுடைய மகளிரென்க.
இம்மகளிர் தன்னைச் சேவிக்கு மகளிர்.
-------------
# "கஞ்சங் குல்லை கஞ்சா வாகும்" (திவா.)
@ காழ் - புடைவை (வேறுரை)
§ " மயிலியன் மடவரல்" (சிலப். குன்றக்.); "அயில்வே லண்ணல் கூறிய, மயிலேர் சாயல் வண்ணமு மதுவே" (பொருளியல்); "விளங்கியலான் மயிலாம்" (திருச்சிற். 29)
$ மகளிர் நடைக்கு மயிலின் நடையை உவமை கூறுதலும் பண்டையாசிரியர் வழக்கம்; முருகு. 205-ஆம் அடியின் அடிக் குறிப்பைப் பார்க்க.
-----------
206. செய்யன் - சிவந்தவன்,
206-7. சிவந்த ஆடையன் செ அரை செயலை தண் தளிர் துயல் வரும் காதினன் - சிவந்த ஆடையுடுத்துச் சிவந்த அரையினையுடைய அசோகிற் குளிர்ந்த தளிர் அசையுங்காது பொருந்தி,
208. கச்சினன் கழலினன் செச்சை கண்ணியன் - கச்சைக் கட்டிக் கழலையணிந்து வெட்சிமாலையைச் சூடி,
209. குழலன் கோட்டன் 2குறு பல்லியத்தன் - குழலையூதிக் கொம்பைக் குறித்துச் சிறிய பல்லியங்களை எழுப்பி,
210 - 11. தகரன் மஞ்ஞையன் புகர் இல் சேவலங்கொடியன் - கிடாயைப் பின்னிட்டு மயிலையேறிக் குற்றமில்லாத கோழிக்கொடியை உயர்த்து,
நெடியன் - தான் வேண்டிய வடிவுகோடலிற் பிள்ளையாயிராது3நெடுக வளர்ந்து,
தொடி அணி தோளன் - தோளிலேதொடியையணிந்து,
212. நரம்பு ஆர்த்தன்ன இன் குரல் தொகுதியொடு - நரம்பு ஆரவாரித்தாலொத்த இனிய மிடற்றையுடைய பாடு மகளிரோடே,
இவர்கள் தன்னைச் சேவித்துப்பாடும் மகளிர்.
213 - 4. [ குறும்பொறிக் கொண்ட நறுந்தண் சாயல், மருங்கிற் கட்டிய நிலனேர்பு துகிலினன்:]
மருங்கில் கட்டிய குறும்பொறி கொண்ட - இடையிலே இறுகக் கட்டிய உதரபந்தத்தின் மேலே உடுப்பதாக உட்கொண்ட,
$நிலன் நேர்பு நறு தண் சாயல் துகிலினன் - நாலவிட்டமையால் நிலத்தைப் பொருந்தி நறிய குளிர்ந்த மென்மையை உடைத்தாகிய துகிலினையுடுத்து,
215 - 6. [ முழுவுறழ் தடக்கையி னியல வேந்தி, மென்றோட் பல்பிணை தழீஇத் தலைத்தந்து :]
மெல் தோள் பல் பிணை இயல - மெல்லிய தோளினையுடைய பலவாகிய மான்பிணைபோலும் மகளிர் குரவையாடி அசைய,
இவர்கள் மெய்தீண்டி விளையாடுதற்குரிய மகளிர்.
முழவு உறழ் தட கையின் தழீஇ ஏந்தி தலைத்தந்து - தன்னுடைய முழவையொத்த பெருமையையுடைய கையினாலே அவர்கள் கையினைத் தழீஇ எடுத்துக் கொண்டு முதற்கை கொடுத்து,
-----------
@ நெடும்பல்லியத்தனாரென்று ஒரு நல்லிசைப் புலவரின் பெயர் பழையநூல்களிற் காணப்படுகிறது ; இயங்கள் குறும்பல்லியம் நெடும் பல்லியமென இருவகைப்படுவனபோலும்.
§ "வான்றோய் நிவப்பிற் றான்வந் தெய்தி" (முருகு. 288)
$ "நிலந்தோய் புடுத்த நெடுநுண் ணாடையர்" (பெருங். 1-32 : 64)
----------
217. [ குன்றுதொ றாடலு நின்றதன் பண்பே :] குன்றுதொறு ஆடலும் தன் நின்ற பண்பு - மலைகடொறுஞ்சென்று விளையாடுதலும் தனக்கு நிலைநின்ற குணம்;
ஆடையன் (206) கண்ணியன் (208) என்பன முதலியன வினையெச்ச வினைக்குறிப்புமுற்று; "முன்னத்தி னுணருங் கிளவியு முளவே" (தொல். எச்சவியல், சூ. 63) என்னுஞ் சூத்திர விதியால் செய்தெனெச்சப் பொருளை உணர்த்தின,
கானவர் (194) குரவையயர (197) அதனைக்கண்டு மென்றோட் பல்பிணை (216) குரவையாடியசைய (215) அதனைப்பொறாதே செய்யன் (206) வேலன் (190) தொடுத்த கண்ணியைச்சூடி (192) உடுத்துப் (206) பொருந்திக் (207) கட்டி அணிந்து சூடி (208) ஊதிக் குறித்து எழுப்பிப் (209) பின்னிட்டு ஏறி (210) உயர்த்து வளர்ந்து தொடியை யணிந்து (211) துகிலையுடுத்துத் (214) தொகுதியுடனே (212) மகளிரோடே (205) மலைகடொறுஞ் சென்று (217) தழீஇ (216) ஏந்தித் (215) தலைத்தந்து (216) ஆடலும் நின்ற தன்பண்பென வினை முடிக்க.
#"குரவை யென்பது கூறுங் காலைச், செய்தோர் செய்த காமமும் வென்றியு, மெய்தக் கூறு மியல்பிற் றாகும்" எனவரும்.
அதாஅன்று - அதுவன்றி,
பழமுதிர்சோலை
218. சிறு தினை மலரொடு விரைஇ மறி அறுத்து - சிறிய தினையரிசியைப் பூக்களோடே கலந்து பிரப்பரிசியாகவைத்து மறியையறுத்து,
219. வாரணம் கொடியொடு வயின் பட நிறீஇ - கோழிக்கொடியோடே தான் அவ்விடத்தே நிற்கும்படி நிறுத்தி,
220. @ஊர் ஊர் கொண்ட சீர் கெழு விழவினும் - ஊர் தோறும் ஊர்தோறும் எடுத்துக்கொண்ட தலைமை பொருந்தின விழாவின் கண்ணும்,
--------------
#. சிலப். பதிகம், 77, அடியார். மேற். "குரவை யென்ப தெழுவர் மங்கையர், செந்திலை மண்டலக் கடகக் கைகோத், தந்நிலைக் கொட்ப நின்றாட லாகும்" (ஷ ஷ) ; "குரவைக் கூத்தே கைகோத் தாடல்" (திவா.)
@ அடுக்கு, பன்மை (வேறுரை)
------------
221. #ஆர்வலர் ஏத்த மே வரு நிலையினும் - தன்மேல் அன்புடையார் ஏத்துதலாலே தன் மனம் பொருந்துதல் வருகின்ற இடத்தினும்,
222. வேலன் தைஇய வெறி அயர் களனும் - படிமத்தான் இழைத்த வெறியாடுகளத்தினும்,
பிள்ளையார் வேலைத் தனக்கு அடையாளமாகக் கொண்டு திரிதலின், வேலனென்றார்; இது, "வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன்" (தொல். புறத், சூ. 5) எனப் புறத்திற்கும் கூறியது.
223. காடும் காவும் கவின் பெறு துருத்தியும் - காட்டினும் பொழிலினும் அழகுபெறுகின்ற ஆற்றிடைக்குறையினும்,
224. யாறும் குளனும் - ஆறுகளினும் குளங்களினும்,
வேறு பல் வைப்பும் - முற்கூறிய ஊர்களன்றி வேறுபட்ட பலவாகிய ஊர்களினும்,
225. சதுக்கமும் - நாற்சந்தியினும்,
சந்தியும் - முச்சந்தியினும் @ஐஞ்சந்தியினும்,
புது பூ கடம்பும் - புதிய பூக்களையுடைய கடம்பினும்,
226. மன்றமும் - ஊர்க்குநடுவாய் எல்லாருமிருக்கும் மரத்தடியினும் ;
§பொதியிலும் - அம்பலத்தினும்,
$கந்து உடை நிலையினும் - ஆதீண்டு குற்றியையுடைய இடத்தினும்,
227. [ மாண்டலைக் கொடியொடு மண்ணி யமைவர :] மாண் தலை கொடியொடு உரு கெழு வியனகர் (244) அமைவர மண்ணி - மாட்சிமைப்பட்ட தலைமையினையுடைய கோழிக்கொடியோடே உருகெழு வியனரை அமைவரப் பண்ணி,
ஒடு : வேறுவினையொடு.
இனி, £'ஆண்டலைக்கொடி' என்று பாடமாயின், பேய்முதலியன
பலியை நுகராமல் ##தலை ஆண்மகன்றலையும், உடல் புள்ளின் வடிவுமாக எழுதின கொடி யென்க.
------------
#. ஆர்வலர் - ஒன்றற்குறையுடையார் (வேறுரை)
@ "சந்தி யைந்துந் தம்முடன் கூடி, வந்துதலை மயங்கிய வான்பெரு மன்றத்து" (சிலப். 10 : 19-20); "காளத்தி, வருமைஞ் சந்தி மழை மத யானையே" (சீகாளத்தி. காப்பு.)
§. பொதியமலை யென்பாருமுளர் (வேறுரை)
$. யானைத் தறியிடத்தினும்; பசுமுதலானவை உரிஞ்சுதறி யெனினுமமையும் (வேறுரை)
£ ஆண்டலைக் கொடி - மயிற்கொடி (வேறுரை)
## ஆண்டலை ஆண்மகன்றலை போன்றதென்பதும் பிறவும், "வெறுந்தலையே தலையாகி .............. ஆண்டலையா யற்றனமே" (தக்க. 234) என்பதனாலும் அதன் விசேடக் குறிப்பினாலும் விளங்கும்.
-----------
228. நெய்யொடு ஐயவி அப்பி - நெய்யோடே வெண்சிறுகடுகையும் அப்பி,
@ஐது உரைத்து - தான் வழிபடுதற்குரிய மந்திரத்தைத் தோன்றாமல் உச்சரித்து,
229. குடந்தம்பட்டு - வழிபட்டு,
வணக்கம்பட்டென்று உரைப்பர் ; குடவென்பது தடவென்பது போல வளைவை உணர்த்துவதோர் உரிச்சொல்லாதலின், அதனடியாகப் பிறந்த பெயருமாம.§
கொழு மலர் சிதறி - அழகிய மலர்களைத் தூவி,
230. முரண் கொள் உருவின் இரண்டு உடன் உடீஇ - தம்மிற் பகைத்தல் கொண்ட வடிவினையுடைய இரண்டு அறுவையை உள்ளொன்றும் புறம்பொன்றுமாக உடுத்து,
231. செ நூல் யாத்து - சிவந்தநூலைக் கையிலே காப்புக்கட்டி, நூலொழுக்கி எல்லைப்படுத்தென்றுமாம்.
வெள் பொரி சிதறி - வெள்ளிய பொரியைத்தூவி,
232. மத வலி நிலைஇய மா தாள் $கொழு விடை - மிகுதியையுடைய வலி நிலைபெற்ற பெருமையையுடைத்தாகிய காலையுடைய கொழுவிய கிடாயினது,
233. குருதியொடு விரைஇய தூ வெள் அரிசி - உதிரத்தோடே பிசைந்த தூய வெள்ளரிசியை,
234. சில் பலி செய்து - சிறுபலியாக இட்டு,
பல் பிரப்பு இரீஇ - பலபிரப்பும் வைத்து,
இனிப் பிரப்புக்கூடை யென்பாருமுளர்.
235. £சிறு பசுமஞ்சளொடு நறு விரை தெளித்து - சிறிய பசு மஞ்சளோடே நறிய சந்தன முதலியவற்றையும் தெளித்து,
இனிச் சிறுபசுமஞ்சள் மஞ்சளில் ஒரு சாதிவிசேடமுமாம்.
விரை : ஆகுபெயர்.
-----------
@ சிறிது மந்திரங்களையும்மோதி (வேறுரை)
§ இதன்பின்னே உள்ள, "குடந்தமாவது : நால்விரன் முடக்கிப் பெருவிர னிறுத்தி, நெஞ்சிடை வைப்பது குடந்த மாகும்" என்பது ஒரு பிரதியிலுள்ள பாடம்.
$ யானைத்திரள் (வேறுரை)
£ காட்டு மஞ்சள் (வேறுரை)
-----------
236 - 7. [ பெருந்தண் கணவீர நறுந்தண் மாலை, துணையற வறுத்துத் தூங்க நாற்றி :]
பெரு தண் கணவீரம் மாலை பெரிய குளிர்ந்த செல்வலரி மாலையையும்,
நறு தண் மாலை - ஒழிந்த நறிய குளிர்ந்த மாலைகளையும்,
அறுத்து - தலையொக்க அறுத்து,
#துணை அற தூங்க நாற்றி - தமக்கு ஒப்பில்லாதபடி அசையத் தூக்கி,
இனித் தம்மில் இணையொத்த அறுப்பாக அறுத்தென்றுமாம்.
238. நளி மலை சிலம்பில் நல் நகர் வாழ்த்தி - செறிந்த மலைப் பக்கத்திலுள்ள நல்ல ஊர்களைப்@பசியும் பிணியும் பகையும் நீங்குக வென்று வாழ்த்தி,
நகர் - பிள்ளையார் கோயிலென்றுமாம்.
239. நறு புகை எடுத்து - நறிய தூபங்கொடுத்து,
குறிஞ்சி பாடி - அந்நிலத்திற்கு அடைத்த குறிஞ்சிப் பண்ணைப் பாடி,
240. இமிழ் இசை அருவியொடு இன்னியம் கறங்க - முழங்குகின்ற ஓசையினையுடைய அருவியோடே இனிய பல்லியங்களும் ஒலியா நிற்க,
241 - 2. உருவம் பல் பூ தூஉய் வெருவர 3குருதி செந்தினை பரப்பி - சிவந்த நிறத்தினையுடைய பல பூக்களையும் தூவி அச்சம் வரும் படி உதிரமளைந்த சிவந்த தினையினையும் பரப்பி,
242 - 4. குறமகள் $முருகு இயம் நிறுத்து முரணினர் உட்க5முருகு ஆற்றுப்படுத்த உரு கெழு வியன் நகர் - குறச்சாதியாகிய மகள் முருகன் உவக்கும் வாச்சியங்களை வாசிக்கப்பண்ணித் தெய்வமின்றென்பார் அஞ்சும்படியாகப் பிள்ளையார் வரும்படி வழிப்படுத்தின அச்சம் பொருந்தின அகற்சியையுடைய நகரின் கண்ணே,
"வேலன் வெறியாட் டயர்ந்த" (தொல். புறத். சூ. 5) என்புழிச் சிறுபான்மை ஏனையோரும் ஆடுவாரென்றலின் குறமகள் வெறியாட்டுக் கூறினார்.
குறமகள் (242) மண்ணி (227) அப்பி உரைத்துப் (228) பட்டுச் சிதறி உடீஇ யாத்துச் சிதறிச் செய்து இரீஇத் தெளித்து நாற்றி வாழ்த்தி எடுத்துப் பாடிக் கறங்காநிற்கத் தூஉய்ப் பரப்பி நிறுத்து ஆற்றுப் படுத்த நகரென வினை முடிக்க.
சாந்திசெய்ய ஆற்றுப்படுத்தாள்.
----------------
#. துணை அற அறுத்து - இணையொக்க நறுக்கி, தூங்கநாற்றி - அசைதரப் பூங்கோயிலாகத் தூக்கி (வேறுரை)
@. "பசியும் பிணியும் பகையு நீங்கி, வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி" (சிலப். 5 : 72 - 3; மணி. 1 : 70 - 71)
§. உதிரம் போன்ற செந்தினை (வேறுரை)
$. முருகியம் - துடி; தொண்டகப்பறையெனினும் அமையும் (வேறுரை); முருகியமும் தொண்டகப்பறையும் குறிஞ்சிக்குரிய பறையென்பர் ;தொல். அகத். சூ. 18, ந.
£. பிள்ளையாரைத் தம்வழிப் படுத்தின (வேறுரை)
----------
245. ஆடு களம் சிலம்ப பாடி - அவ்வெறியாடுகின்ற களம் ஆரவாரிப்ப அதற்கு ஏற்பனவற்றைப்பாடி,
245 - 6. [ பலவுடன் கோடுவாய் வைத்து :] கோடு பல உடன் வாய் வைத்து - கொம்புகள் பலவற்றையும் சேரவூதி,
கொடு மணி இயக்கி - கொடிய மணியையும் ஒலிப்பித்து,
247. ஓடா பூட்கை #பிணிமுகம் வாழ்த்தி - கெடாத வலியினையுடைய பிணிமுகமென்னும் பட்டத்தினையுடைய யானையை வாழ்த்தி,
@பிணிமுகம் - மயிலுமாம்.
248. வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட - காரியங்களை விரும்புவோர் தாங்கள் விரும்பின காரியங்களை விரும்பினாற்போலப் பெற்று நின்று வழிபட,
நகரிலே (244) பாடி வைத்து இயக்கி வாழ்த்தி வழிபட உறைதலு முரியன் (189) என்க.
விழவின் கண்ணும் (220) நிலையின் கண்ணும் (221) கந்துடை நிலையின் கண்ணும் (226) உறைதலுமுரியன் (189) என்க.
249. ஆண்டு ஆண்டு உறைதலும் - களனும் (222) காடும் காவும் துருத்தியும் யாறும் குளனும் வைப்பும் சதுக்கமும் சந்தியும் கடம்பும் மன்றமும் பொதியிலுமாகிய அவ்வவ்விடங்களிலே உறைதலு முரியனென்க.
அறிந்தவாறே - யான் அறிந்தபடியே கூறினேன் ;
250. ஆண்டு ஆண்டு ஆயினும் ஆக - யான் முற்கூறிய அவ்வவ்விடங்களிலே-யாயினுமாக,
பிறவிடங்களிலேயாயினுமாக,
உம்மை : ஐயவும்மை.
250 - 51. [ காண்டக, முந்துநீ கண்டுழி முகனமர்ந் தேத்தி :] முந்து நீ கண்டுழி காண் தக முகன் அமர்ந்து ஏத்தி - முற்பட நீ கண்ட பொழுது அழகு தக்கிருக்கும்படி முகம் விரும்பித் துதித்து, முகனமர்ந்தென்றார், §அவன் தெய்வத்தன்மையைக் கண்ட பொழுது அச்சம் பிறவாது நிற்க வேண்டுமென்றற்கு.
-----------
#. பிணிமுகமென்பது பிள்ளையார் பவனிவரும் யானை (வேறுரை). யானையென்றும் சொல்லுப வென்பது புறம் உரையாசிரியர் பரிமேலழகர் நச்சினார்க்கினியர் இவர்களைக் கருதிப் போலும்.
@. "பிணிமுக வூர்தி" (புறநா. 56 : 8), "பிணிமுக மேற்கொண்டு" (சிலப். குன்றக்.) என்பவற்றில் பிணிமுகமென்பதற்கு மயிலென்றே உரையாசிரியர்கள் பொருளெழுதியுள்ளார்கள்.
§. "அணங்குசா லுயர்நிலை தழீஇ" (முருகு. 289) என்பது இக்கருத்தை வலியுறுத்தும்.
-------------
252. கை தொழூஉ பரவி - முன்னர்க் கையைத் தலைமேலே வைத்து வாழ்த்தி,
கால் உற வணங்கி - பின்னர்த் திருவடி தலையிலேயுறும்படி தண்டனிட்டு,
253. நெடு பெரு சிமையத்து@ நீலம் பைஞ்சுனை - நெடிய பெரிய இமவானுச்சியில் தருப்பைவளர்ந்த பசிய சுனையிடத்தே,
நீலமென்றார், அதினின்ற நீலநிறத்தையுடைய தருப்பையை, அஃது ஆகுபெயர்; என்றது சரவணப் பொய்கையென்றவாறு.
254. ஐவருள் ஒருவன் அங்கை ஏற்ப - விசும்பும் வளியும் தீயும் நீரும் நிலனுமாகிய ஐவருள் தீ தன் அங்கையிலே ஏற்ப,
§சதாசிவனும் மயேச்சுரனும் உருத்திரனும் அரியும் அயனும் பூதங்கட்குத் தெய்வமாகலின், ஐவரென்றார்; ஐவருளொருவனென்றது உருத்திரன் தெய்வமாகிய தீயை.
அவன் அங்கையேற்பவென்றது, இறைவனிடத்தினின்றும் இந்திரன் வாங்கிய கருப்பத்தினை முனிவர் வாங்கித் தமக்குத் தரிக்கலாகாமையின் இறைவன் கூறாகிய முத்தீக்குண்டத்திட்டதனைக் கூறிற்று.
255. அறுவர் பயந்த ஆறு அமர் செல்வ - அருந்ததியொழிந்த அறுவராலே பெறப்பட்ட ஆறுவடிவு பொருந்திய செல்வ,
என்றது : $அங்ஙனம் அங்கியின்கணிட்டுச் சத்தி குறைந்த கருப்பத்தை முனிவரெழுவரும் வாங்கித் தம் மனைவியர்க்குக் கொடுப்ப அருந்ததியொழிந்தார் விழுங்கிச் சூன்முதிர்ந்து, சரவணப் பொய்கையிற் பதுமப்பாயலிலே பெற ஆறுவடிவாக வளர்ந்தமை கூறிற்று.
ஏற்கையினாலே (254) அறுவராற் பைஞ்சுனையிலே (253) பயக்கப் பட்ட செல்வ (255) வென்க; இது பரிபாடலில், "பாயிரும் பனிக்கடல்" (5) என்னும் பாட்டாணுணர்க.
-----------
@. நீலோற்பல முதலாகவுள்ள பூக்கள் மிடைந்து கிடக்கின்ற சரவணப் பொய்கையில் (வேறுரை)
§ "ஐவகைப் பூதத்திற்கு நாயகரான பிரமா விட்டுணுருத்திர ஈசுவர சதாசிவர்கள்" (தக்க. 138, உரை); "பாராதி யைந்துக்கும் பன்னுமதி தெய்வங்கள், ஆரா ரயனாதி தேவராம்" (உண்மைவிளக்கம், 8)
$ 58-ஆம் அடியின் விசேடவுரையாலும் இது விளங்குகின்றது.
-------------
256. ஆல் கெழு கடவுள் புதல்வ - கல்லாலின் கீழிருந்த கடவளினுடைய புதல்வ,
கடவுளரென உயர்திணையாய் நில்லாது கடவுளென்பது தெய்வமென்னும் பொருட்டாய் அஃறிணை முடிபுகொள்ளும் உயர்திணையாய் நிற்றலின், அஃறிணைப்பாற்பட்டு, "உணரக்கூறிய" (தொல். புள்ளி. சூ. 110) என்னும் புறனடையான் முடிந்தது.
256 - 7. #மால் வரை மலை மகள் மகனே - பெருமையையுடைய மலையாகிய மலையரையன் மகளுடைய மகனே,
வரை - மூங்கிலுமாம்.
மாற்றோர் கூற்றே - பகைவர்க்குக் கூற்றுவனே,
258. [ வெற்றி வெல்போர்க் கொற்றவை சிறுவ :]
வெற்றி கொற்றவை சிறுவ - வெற்றியை உலகத்திற்குக் கொடுக்கும் @வன துர்க்கையினுடைய புதல்வ,
வெல் போர் கொற்றவை - தான் வெல்லும்போரைச் செய்யும் கொற்றவை,
என்றது, மகிடனைச் செற்றதனை.
259. இழை அணி சிறப்பிற் பழையோள் குழவி - பூணணிந்த தலைமையினையுடைய காடுகாளுடைய குழவி,
காடுகிழாளென்பது இக்காலத்துக் §காடுகாளென மருவிற்று. அவளும் இறைவனுடைய சத்தியாகலின், அவளுடைய குழவியென்றார்.
260. [வானோர் வணங்குவிற் றானைத் தலைவ :]
வானோர் தானை தலைவ - தேவர்கள் படைத்தலைவ,
என்றது, தேவசேனாபதி என்றதாம்.
வணங்கு வில் - வளையும் வில்லையும்,
வில்லையும் தேவராகிய தானையையுமுடைய தலைவவென்க.
261. மாலை மார்ப - $இன்பத்திற்குரிய மாலையணிந்த மார்ப,
£நூல் அறி புலவ - எல்லா நூல்களையும் அறியும் புலவ,
----------
#. மால்போலும் வரையினையுடைய மலையரையன் திருமகளார் மகனே (வேறுரை)
@. "கானநாடி - வனதுர்க்காதேவி" (தக்க. 54, உரை)
§. "கையார் வளைக்கைக் காடுகாளோடு முடனாய்க், கொய்யார் பொழிற் கோடியே கோயில் கொண்டாயே" (தே.)
$. இன்பத்திற்குரிய மாலை- கடப்பமாலை; முருகு.11-ஆம் அடியின் உரையைப் பார்க்க
£.வேதாகமங்கள் முதலிய பல சாத்திரங்களையும் ஓதாதுணர்த்தும் பண்டிதனே (வேறுரை)
------------
புலவன் - அறிவுடையவன்,
262. செருவில் ஒருவ - போர்த்தொழிலில் ஒருவனாகி நிற்பாய், #பொரு விறல் மள்ள - பொருகின்ற வெற்றியினையுடைய மள்ள, மள்ளன் - இளமைப்பருவத்தோன்.
263. @அந்தணர் வெறுக்கை -அந்தணருடைய செல்வமாயிருப்பாய், அறிந்தோர் §சொல் மலை - சான்றோர் புகழ்ந்து சொல்லப்படும் சொற்களின் ஈட்டமாயிருப்பாய்,
264. மங்கையர் கணவ - தெய்வயானையாரும் வள்ளிநாய்ச்சி யாருமாகிய மகளிர்க்குக் கணவ,
மைந்தர் ஏறே - வீரர்க்கு இடபமே.
265. வேல் கெழு தட கை சால் பெரு செல்வ - வேல்பொருந்தின பெருமையையுடைய கையானமைந்த பெரிய செல்வ.
என்றது, வேல் வெற்றியாற்பெற்ற அச்செல்வத்தை.
266 - 7. [ குன்றங் கொன்ற குன்றாக் கொற்றத்து, விண்பொரு நெடுவரைக் குறிஞ்சிக் கிழவ :]
குன்றம் கொன்ற குன்றா கொற்றத்து கிழவ -$குருகாற் பெயர் பெற்ற மலையைப் பிளந்த குறையாத வெற்றியையுடைய கிழவ,
விண் பொரு நெடு வரை குறிஞ்சி கிழவ - தேவருலகைத் தீண்டும் நெடியவரைகளையுடைய குறிஞ்சி நிலத்துக்கு உரிமையுடையாய்,
அதற்கு உரியனாதல், "சேயோன் மேய மைவரை யுலகமும்" (தொல். அகத்திணை. சூ. 5) என்பதனாலுணர்க.
268. பலர் புகழ் நல் மொழி புலவர் ஏறே - பலரும் புகழ்ந்து சொல்லும் நன்றாகிய சொற்களையுடைய பரசமயத்தினுள்ளார்க்கு ஏற்றின் தன்மையை உடையவனே,
என்றது : கல்வி மதத்தையுடைய யானை போல்வார்க்குச் சிங்கவேறு போல்வாயென்றதாம்.
269. [ அரும்பெறன் மரபிற் பெரும்பெயர் முருக :] பெறல் அரு மரபின் பெரும்பெயர் முருக - பிறர்க்குப் பெறலரிய முறைமையினையுடைய பெரும்பொருளையுடைய முருக,
-------
#. வீரராயிருப்பார்க்கு வீரராயிருப்பவனே (வேறுரை)
@. "வேதியர் வெறுச்கையும்" (திருவகுப்பு, வேளைக்காரன்.)
§. "சொன்மலை யல்லன தொடுகட லமிர்தம்" (கம்ப. நாட்டுப். 47)
$. குருகு - கிரவுஞ்சமென்னும் பறவை ; அதனாற் பெயர்பெற்ற மலை கிரவுஞ்சமலை.
------------
பெயர் - பொருள். "பெற்ற பெரும்பெயர் பலர்கை யிரீஇய" (பதிற். 90 : 23) எனவும், "சொற்பெயர் நாட்டம்" (பதிற்.21 : 1) எனவும் வரும். பெரும்பொருளென்றது வீட்டினை.
270. [ நசையுநர்க் கார்த்து மிசைபே ராள :] நசையுநர்க்கு ஆர்த்தும் பேர் இசை ஆள - அவ்வீட்டைப் பெறவேண்டுமென்று நச்சிவந்தார்க்கு அதனை நுகர்விக்கும் பெரிய புகழை ஆளுதலையுடையாய்,
பேரிசையென்று மாறுக.
271 - 2. [ அலந்தோர்க் களிக்கும் பொலம்பூட் சேஎய் - மண்டமர் கடந்தநின் வென்றா டகலத்து :]
அலந்தோர்க்கு அளிக்கும் சேஎய் - பிறரால் இடுக்கட்பட்டு வந்தோர்க்கு அருள்பண்ணும் சேய்,
மண்டு அமர் கடந்த வென்று ஆடு நின் அகலத்து பொலம்பூண் சேஎய் - மிக்குச் செல்கின்ற போர்களை முடித்த வென்றடுகின்ற நினது மார்பிடத்தே பொன்னாற்செய்த பேரணிகலங்களையணிந்த சேயென்க.
273. பரிசிலர் தாங்கும் உரு கெழு நெடு வேள் - இரந்துவந் தோரை வேண்டுவன கொடுத்துப் பாதுகாக்கும் உட்குதல் பொருந்திய நெடிய வேளே,
274. பெரியோர் ஏத்தும் பெரும்பெயர் இயவுள் - தேவரும் முனிவரும் ஏத்தும் பெரிய திருநாமத்தையுடைய தலைவனே,
இயவுள் - கடவுளுமாம்.
275 - 6. [ சூர்மருங் கறுத்த மொய்ம்பின் மதவலி, போர்மிகு :] #போர் மிகு மொய்ம்பின் சூர் மருங்கு அறுத்த மதவலி - போர்த்தொழிலிலே மிகுகின்ற மொய்ம்பாலே சூரபன்மாவின் குலத்தை இல்லையாக்கின மதவலியென்னும் பெயரையுடையாய்,
பொருந - உவமிக்கப்படுவாய்,
பொருவப்படுமவன், பொருநனென நின்றது.
குரிசில் - தலைவனே,
276 - 7. [ எனப்பல, யானறி யளவையி னேத்தி யானாது :] எனயான் அறி அளவையின் ஆனாது பல ஏத்தி - என்று யானறிந்து நினக்குக்கூறிய அளவாலே நீயும் அமையாதே பலவற்றையும் கூறிப்புகழ்ந்து,
278. நின் அளந்து அறிதல் மன் உயிர்க்கு அருமையின் - நின் தன்மை யெல்லாம் முற்ற அளவிட்டறிதல் பல்லுயிர்க்கும் அரிதாகையினாலே,
279. நின் அடி உள்ளி வந்தனென் - நின் திருவடியைப் பெற வேண்டுமென்று நினைந்துவந்தேன்;
--------
#. போர்மிகுபொருந - போரை மிகப்பொர வல்லவனே (வேறுரை)
------------
279 - 80. நின்னொடு புரையநர் இல்லா புலமையோய் - நின்னொடு ஒப்பாரில்லாத மெய்ஞ்ஞானத்தை உடையோய்,
280 - 81. என குறித்தது மொழியா அளவையின் - என்று சொல்லி நீ கருதிய வீடுபேற்றினை விண்ணப்பஞ் செய்வதற்கு முன்னே,
முந்துநீ கண்டுழி முகனமர்ந்து (251) மகனே கூற்றே (257) குழவி (259) வெறுக்கை சொன்மலையாயிருப்பாய் (263) மைந்தரேறே (264) புலவரேறே (268) சேஎய் (271) வேஎள் (273) இயவுளே (274) மதவலி (275) குரிசில் (276) புலமையோய் (280) என்று முன்னர் எதிர்முகமாக்கி ஏத்தி (251) யென அண்மைவிளியல்லாதனவற்றை முன்னர்க் கூட்டி முடிக்க. அங்ஙனம் எதிர்முகமாக்கி யேத்திப் பின்னர்ப் பரவி வணங்கிச் (252) செல்வ (255) புதல்வ (256) சிறுவ (258) தலைவ (260) மார்ப புலவ (261) ஒருவ மள்ள (262) கணவ (264) செல்வ (265) கிழவ (267) முருக (269) இசைபேராள (270) பொருந (276) என்று அண்மையாக விளித்து, மன்னுயிர்க்கருமையின் (278) யானறி யளவையினேத்தி (277) நின்னடியுள்ளி வந்தனென் (279) என்று நீ குறித்தது மொழியா வளவையினென முடிக்க.
281 - 2. [ குறித்துடன், வேறுபல் லுருவிற் குறும்பல் கூளியர் :] வேறு பல் உருவில் #குறு பல் கூளியர் உடன் குறித்து - வேறுவேறாகிய பல வடிவினையுடைய சிறிய பலராகிய சேவித்து நிற்பார் சேரக்கருதி,
"நின், கூர்நல் லம்பிற் கொடுவிற் கூளியர்" (புறநா. 23 : 4-5) என்றார் பிறரும்.
283. சாறு அயர் களத்து வீறுபெற தோன்றி - விழாவெடுத்த களத்தே தாங்கள் பொலிவுபெறத் தோன்றி,
284. [ அளியன்றானே @முதுவா யிரவலன் :] முதுவாய் இரவலன் தான் அளியன் - அறிவு முதிர்ந்த வாய்மையையுடைய புலவன்றான் அளிக்கத்தக்கான்.
285-6. [ வந்தோன் பெரும நின் வண்புகழ் நயந்தென, இனியவு நல்லவு நனிபல வேத்தி :] பெரும நின் வள் புகழ் நயந்து இனியவும் நல்லவும் நனி பல ஏத்தி வந்தோன் என - பெரும, நினது வளவிய புகழினைக்கூற விரும்பிக் கேட்டோர்க்கு இனியனவும் உறுதிபயப்பனவுமாக மிக்க பலவற்றை வாழ்த்தி வந்தோனென்று கூற,
கூளியர் (282) குறித்துத் (281) தோன்றி (283) அளியன் (284) பெரும நின் வண்புகழைக் கூறநயந்து (285) இனியவும் நல்லவுமாக ஏத்தி (286) வந்தோன் (285) என்று கூறவென முடிக்க.
-----------
#. குறும்பல் கூளியர் - குறியவாயிருப்பன பல பூதங்கள் ; கூளிகளென்று பேய்க்கும் பெயராம் (வேறுரை)
@. நிரம்பவோதிய புலவன் (வேறுரை)
------------
287. தெய்வம் சான்ற திறல் விளங்கு உருவின் - தெய்வத்தன்மையமைந்த வலிவிளங்கும் வடிவினையும்,
288. வான் தோய் நிவப்பின் தான் வந்து எய்தி - வானைத்தீண்டும் வளர்ச்சியினையுமுடைய தான் அவையை வந்தணுகி,
289. அணங்குசால் உயர்நிலை தழீஇ - வருத்தமமைந்த தெய்வத்தன்மையை உள்ளடக்கிக் கொண்டு,
289 - 90. [பண்டைத்தன், மணங்கமழ் தெய்வத் திளநலங் காட்டி :] மணம் கமழ் தெய்வத்து பண்டை தன் இளநலம் காட்டி - மணம் நாறுகின்ற தெய்வத்தன்மையையுடைய முன்புண்டாகிய தன் இளைய வடிவைக் காட்டி,
291. [ அஞ்ச லோம்புமதி யறிவனின் வரவென :] நின் வரவு அறிவல் அஞ்சல் ஒம்புமதி என - நீ வீடுபெற நினைத்துவந்த வரவையான் முன்னே யறிவேன்; அது நினக்கு எய்தலரிதென்று அஞ்சுதலைப் பரிகரியென்று,
292. அன்புடை நன்மொழி அளைஇ - நின்மேல் அன்புடையவாகிய நல்ல வார்த்தைகளைப் பலகாலும் அருளிச் செய்து,
292 - 4. [ விளிவின்று, இருணிற முந்நீர் வளைஇய வுலகத், தொருநீயாகித் தோன்ற :] இருள் நிற முந்நீர் வளைஇய உலகத்து ஒரு நீ ஆகி விளிவு இன்று தோன்ற - இருண்ட நிறத்தையுடைய கடல் சூழ்ந்த உலகத்திடத்தே நீ ஒருவனுமே பிறர்க்கு வீடளித்தற்கு உரியையாய்க் கேடின்றித் தோன்றும்படி,
294-5. விழுமிய பெறல் அரு பரிசில் நல்குமதி - சீரிய பிறராற் பெறுதற்கரிய வீடுபேற்றினைத் தருவன்;
#"இகுமுஞ் சின்னு மேனை யிடத்தொடுந், தகுநிலை யுடைய வென்மனார் புலவர்" (தொல். இடை சூ. 27) என்றதனானாதல், "அவ்வச்சொல்லிற்கு" (தொல். இடை, சூ. 47) என்னும் புறனடையதனானாதல் மதி படர்க்கைக்கண் வருதல் கொள்க.
இனி மதிபலவுடனெனக் கூட்டி, அறிவுகள் பலவுடனே பரிசில் நல்குமென்று கூறுவாருமுளர்.
295-6. [ பலவுடன், வேறுபஃறுகிலி னுடங்கி :] வேறு பல் துகிலின் பல உடன் நுடங்கி - வேறுபட்ட பலவாகிய துகிற்கொடிகளைப் போலத்தாம் பலவும் கூடவசைந்து,
296-7. அகில் சுமந்து ஆரம் முழு முதல் உருட்டி - அகிலை மேற்கொண்டு சந்தனமாகிய பெரிய மரத்தைத் தள்ளி.
---------
#. இச்சூத்திர உரையில் நச்சினார்க்கினியர் இப்பகுதியை மேற்கோள் காட்டியதன்றி அங்கே பொருளும் இங்ஙனமே எழுதினர்.
-------------
297 - 8. வேரல் பூ உடை அலங்கு சினை புலம்ப வேர் கீண்டு - சிறு மூங்கிலினது பூவிடைத்தான அசைகின்ற கொம்பு தனிப்ப வேரைப்பிளந்து,
299 - 300. விண் பொரு நெடு வரை பரிதியின் தொடுத்த தண் கமழ் அலர் இறால் சிதைய - தேவருலகத்தைத் தீண்டுகின்ற நெடிய மலையிடத்தே ஞாயிற்றின் மண்டிலத்தைப்போல ஈ வைக்கப்பட்ட தண்ணியவாய் மணக்கின்ற விரிந்த தேன்கூடு கெட,
300 - 301. நல் பல ஆசினி முது சுளை கலாவ - நன்றாகிய பல#ஆசினிகளினுடைய முற்றிய சுளை தன்னிடத்தே கலக்க,
301 - 2. மீ மிசை நாகம் நறு மலர் உதிர - மலையினுச்சியிலுண்டான சுரபுன்னையின் நறிய மலர்கள் உதிர,
302 - 3. யூகமொடு @மா முகம் முசு கலை பனிப்ப - கருங்குரங்கோடே கரிய முகத்தையுடைய முசுக்கலைகளும் நடுங்க,
"கலையென் காட்சி யுழைக்கு முரித்தே", "நிலையிற் றப்பெயர் முசுவின் கண்ணும்" (தொல். மரபு. சூ. 45, 46) என்றார்.
303 - 4. பூ நுதல் இரு பிடி குளிர்ப்ப வீசி - புகரையணிந்த மத்தகத்தையுடைய பெரிய பிடி குளிரும்படி வீசி,
304 - 5. பெரு களிறு முத்து உடை வான் கோடு தழீஇ - பெரிய யானையினுடைய முத்தையுடையவாகிய வெள்ளிய கொம்புகளை உள்ளடக்கி,
305 - 6. [ தத்துற்று, நன்பொன் மணிநிறங் கிளர :] நல் பொன் மணிநிறம் கிளர தத்துற்று - நல்ல பொன்னும் மணியும் நிறம் விளங்கும் படி மேலே கொண்டு குதித்து,
தத்துற்று - தத்துதலையுற்று.
பொன் கொழியா - பொடியான பொன்னைத் தெள்ளி,
307 - 8. வாழை முழு முதல் துமிய தாழை இளநீர் விழு குலை உதிர தாக்கி - வாழையினது பெரிய முதல் துணியத் தெங்கினது இளநீரையுடைய சீரிய குலை உதிர அவ்விரண்டினையும் மோதி,
309. கறி கொடி கரு துணர் சாய - மிளகினது கொடியின் கரிய கொத்துக்கள் சாய,
309 - 11. [ பொறிப்புற, மடநடை மஞ்ஞை பலவுடன் வெரீஇக், கோழி வயப்படை யிரிய :] பொறிபுற§மட நடை மஞ்ஞை கோழி வயபெடை வெரீஇ பலவுடன் இரிய - பீலியையுடைத்தாகிய இடத்தினையும் மடப்பத்தையுடைத்தாகிய ஒழுக்கத்தினையுமுடைய மயில்களோடே கோழியினுடைய வலியையுடைய பெடை வெருவிப் பலவும் சேரக்கெட,
--------
#. ஆசினி - ஈரப்பலா.
@. "மைபட் டன்ன மாமுக முசுக்கலை" (குறுந். 121 : 2)
§. மடப்பத்தினையும் நடையினையும் உடைய மயில்கள் (வேறுரை)
-------------
311 - 4. [ கேழலொ, டிரும்பனை வெளிற்றின் புன்சா யன்ன, குரூஉ மயிர் யாக்கைக் குடவாடி யுளியம், பெருங்கல் விடரளைச் செறிய :] கேழலொடு வெளிற்றின் இருபனை புல் சாய் அன்ன குரூஉ மயிர் யாக்கை1குடவாடி உளியம், பெருங்கல் விடர் அளை செறிய - ஆண் பன்றியுடனே உள்ளே வெளிற்றினையுடைத்தாகிய கரிய பனையினது புல்லிய செறும்பையொத்த கரிய நிறத்தையுடைத்தாகிய மயிரினையுடைய உடம்பினையும், வளைந்த அடியினையுமுடைய கரடி பெரிய கல்விண்ட முழைஞ்சிலே சேர,
314 - 5. கரு கோடு ஆமா நல் ஏறு சிலைப்ப - கரிய கொம்பினை யுடைய ஆமாவினுடைய நன்றாகிய ஏறுகள் முழுங்க,
315 - 6. சேண் நின்று இழுமென இழிதரும் அருவி - மலையின் உச்சியினின்றும் இழுமென்னும் ஓசைபடக் குதிக்கும் அருவியையுடைய,
317. பழம் முதிர் சோலை 2மலை கிழவோனே - பழம் முற்றின சோலைகளையுடைய மலைக்கு உரிமையை யுடையோனே.
நுடங்கிச் சுமந்து (296) உருட்டிக் (297) கீண்டு (298) சிதையக் (300) கலாவ (301) உதிரப் (302) பனிப்ப (303) வீசித் (304) தழீஇத் தத்துற்றுக் (305) கொழியாத் (306) துமிய (307) உதிரத்தாக்கிச் (308) சாய (309) இரியச் (311) செறியச் (314) சிலைப்ப (315) இழிதரும் அருவி (316) யென முடிக்க.
கிழவோனென்ற பெயர், §உடம்படுபுணர்த்தலாற் கொள்க.
கணவன் (6) மார்பினன் (11) சென்னியனாகிய (44) சேயுடைய (61) சேவடி படரும் உள்ளத்தோடே (62) செல்லுஞ்செலவை நீ நயந் தனையாயின் (64) நன்னர் நெஞ்சத்து இன்னசைவாய்ப்ப (65) இன்னே பெறுதி (66); அது பெறுதற்கு அவன் யாண்டுறையுமென்னிற் குன்றமர்ந்துறைதலுமுரியன்; அதுவன்றி (77) அலைவாய்ச் சேறலும் நிலைஇய பண்பு; அதுவன்றி (125) ஆவினன்குடி அசைதலுமுரியன்; அதுவன்றி (176) ஏரகத்துறைதலுமுரியன்; அதுவன்றிக் (189) குன்றுதொறாடலும் நின்றதன் பண்பு; அதுவன்றி (217) விழவின்கண்ணும் (220) நிலையின்கண்ணும் (221) கந்துடை நிலையின் கண்ணும் (226) உறைதலு முரியன் (189); களனும் (222) காடும் (223)முதலியன ஆண்டாண்டுறை தலும் (249) உரியன் (189); நகரிலே (244) பாடி (245) வைத்து இயக்கி (246) வாழ்த்தி (247) வழிபட (248) உறைதலுமுரியன் (189); இஃது யானறிந்தபடியே கூறினேன் (249); இனி ஆண்டாண்டாயினுமாக, பிறவிடங்களிலே யாயினுமாக (250), முந்துநீகண்டுழி முகனமர்ந்து முன்னர் எதிர்முகமாக்கி ஏத்திப் (251) பரவி வணங்கிப் (252) பின்னர் அண்மையாக விளித்து யானறியளவையினேத்தி (277) நின்னடி யுள்ளி வந்தேனென்று (279) நீ குறித்தது மொழிவதற்குமுன்னே (281) கூளியர் (282) குறித்துத் (283) தோன்றிப் (288) பெரும (285) இரவலன் நீ அளிக்கத்தக்கான் (284) வந்தோனென்று கூற (285) மலைகிழவோனாகிய (317) குரிசிலும் (276) தான்வந்தெய்தித் (283) தழீஇக் (289) காட்டி (290) அஞ்சலோம்புமதியென்று (291) அன்புடை நன்மொழி யளைஇ (292) ஒரு நீயாகித் தோன்றும்படி (294) பெறலரும்பரிசில் நல்குவ (295) னென வீடுபெறக் கருதிய இரவலனை நோக்கி வீடுபெற்றானொருவன் ஆற்றுப்படுத்ததாக வினைமுடிக்க.
--------
#. குடமுழவுபோன்ற அடி (வேறுரை)
@. நன். சூ. 164 மயிலை. மேற்.
§. (பி-ம்). உடம்பொடு புணர்த்தல்.)
----------
இது புறத்திணையியலுள், "தாவினல்லிசை" (தொல். புறத். சூ. 36) என்னுஞ் சூத்திரத்துள், "ஆற்றிடைக் காட்சி யுறழத் தோன்றிப், பெற்ற பெருவளம் பெறாஅர்க் கறிவுறீஇச், சென்றுபய னெதிரச் சொன்ன பக்கமும்" என்பதனால் கந்தழியைப் பெற்றானொருவன் அதனைப்பெறாதானொருவனுக்குப் பெறுமாறு கூறி அவனை வழிப்படுத்துக் கூறுவானென்பது பற்றிச் செய்யுள் செய்தாராயிற்று.
கந்தழியாவது ஒருபற்றுமற்று அருவாய்த் தானேநிற்கும் தத்துவங்கடந்த பொருள் ; அது, # "சார்பினாற்றோன்றாது தானருவாய் ........ மைதீர் சுடர்" என்பதாம்; இதனை, "உற்ற வாக்கையி னுறுபொரு ணறுமல ரெழுதரு நாற்றம்போற், பற்ற லாவதோர் நிலையிலாப் பரம்பொருள்" (திருவா. அதிசயப்பத்து, 9) என அதனை உணர்ந்தோர் கூறியவாற்றானுணர்க.
முருகாற்றுப்படையென்றதற்கு வீடுபெறுதற்குச் சமைந்தானோர் இரவலனை வீடுபெற்றானொருவன் முருகனிடத்தே ஆற்றுப்படுத்ததென்று பொருள் கூறுக.
குமரவேளை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடிய திருமுருகாற்றுப்படைக்கு மதுரை ஆசிரியர் பாரத்து வாசி நச்சினார்க்கினியர் செய்தவுரை முற்றிற்று.
---------
#. "சார்பினாற் றோன்றாது தானருவா யெப்பொருட்கும், சார்பெனநின் றெஞ்ஞான்று மின்பந் தகைத்தரோ, வாய்மொழியான் மெய்யான் மனத்தா னறிவிறந்த, தூய்மையதா மைதீர் சுடர்" (தொல். புறத்திணை. சூ. 33, ந. மேற்.)
-------------
அடியிலுள்ள பாடல்கள், பத்துப் பாட்டும் சேர்ந்துள்ள பழைய ஏட்டுப்-பிரதிகளிலில்லாமல் திருமுறுகாற்றுப்படை மட்டுமுள்ள புதிய ஏட்டுப்பிரதிகளிலும் அச்சுப்பிரதிகளிலும் இருந்தமையால் தனியே பதிப்பிக்கப்பெற்றன; திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணத்திலுள்ள, "உயர்வுற வுலக முவப்பவென் றெடுத்தாங் கொண்டமிழ்த் தண்டல முவப்ப, வியனுற வுரைப்பக் கேட்டலு மடைந்து வெற்பகந் திறக்கவேல் விட்டு, நயனொடு மெடுத்து வினைகடீர்த் தருளு நன்சுனை காட்டிநீ ராட்டி, அயிலுடை நம்மைக் கிழவனென் றனையென்றாலயத் தடைந்தனன் காண", "இனிதொர்கவி குன்றமெறிந் தாயெனப்பி னென்றுமினை யாயழகி யாயென் னுங்கான், மனமகிழ்ந்தீ தியார்பகர்வா ரவர்க்கு வேண்டும் வரங்கொடுப்போ மதுரையிற்போ கென்னப் போந்து, கனமலிசங் கத்துரைப்பக் கேட்டி யாருங் களிகூர்ந்தார் தமிழ்முருக னருளை வாழ்த்தி" (44 : 27-8) என்னும் வரலாற்றை நோக்குங்கால், "குன்ற மெறிந்தாய்" என்னும் வெண்பா அந்நூலாசிரியர் காலத்தே வழங்கி வந்ததாகத் தெரிகின்றது.
குன்ற மெறிந்தாய் குரைகடலிற் சூர்தடிந்தாய்
புன்றலைய பூதப் பொருபடையாய் - #என்றும்
இளையா யழகியா யேறூர்ந்தா னேறே
உளையாயென் னுள்ளத் துறை. 1
# "என்றுமழி யாத விளமைக்கார" (திருப்புகழ்)
குன்ற மெறிந்ததுவுங் குன்றப்போர் செய்ததுவும்
அன்றங் கமரரிடர் தீர்த்ததுவும் - இன்றென்னைக்
கைவிடா நின்றதுவுங் @கற்பொதும்பிற் காத்ததுவும்
மெய்விடா வீரன்கை வேல். 2
@ பொதும்பு - முழை. கற்பொதும்பிற் காத்த வரலாற்றை, திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் 44-ஆம் திருவிளையாடலாலும், சீகாளத்திப்புராணம் நக்கீரச்சருக்கத்தாலும் அறியலாகும்.
வீரவே றாரைவேல் விண்ணோர் சிறைமீட்ட
தீரவேல் செவ்வே டிருக்கைவேல் - வாரி
குளித்தவேல் கொற்றவேல் #சூர்மார்புங் குன்றும்
துளைத்தவே லுண்டே துணை. 3
#. "உழல்சூரு மலைமார்பு முடனூடுறப் பொருது" (தக்க. 5) என்பதும், 'சூரபன்மாவுக்கு மறைவாய் ஓடிவரலான மலையினுடைய மார்பும் சூரபன்மாத்தானும் ஒக்க ஒரேகாலத்திலே ஊடுருவும்படி வேலேறு படப் பொருதருளி' என்ற அதனுரையும் இங்கே கருதத்தக்கன.
இன்ன மொருகா லென திடும்பைக் குன்றுக்கும்
கொன்னவில்வேற் சூர்தடிந்த கொற்றவா-முன்னம்
பனிவேய் நெடுங்குன்றம் பட்டுருவத் தொட்ட
தனிவேலை வாங்கத் தகும். 4
@உன்னை யொழிய வொருவரையு நம்புகிலேன்
பின்னை யொருவரையான் பின் செல்லேன் - பன்னிருகைக்
கோலப்பா வானோர் கொடியவினை தீர்த்தருளும்
வேலப்பா செந்திவாழ் வே. 5
@. "உன்னையலா லொருதெய்வ முள்கே னென்றும்" (தே. திருநா.); "உள்ளேன் பிறதெய்வ முன்னையல் லாதெங்க ளுத்தமனே" (திருவா.)
அஞ்சு முகந்தோன்றி னாறு முகந்தோன்றும்
§வெஞ்சமரி லஞ்சலென வேறோன்றும் - நெஞ்சில்
$ஒருகா னினைக்கி னிருகாலுந் தோன்றும்
முருகாவென் றோதுவார் முன். 6
§. (பி-ம்.) 'வெஞ்ச மரந்தோன்றில் வேறோன்றும்'
$. ஒருகால் - ஒரு முறை; இருகால் - இரண்டு திருவடிகள்.
முருகனே செந்தி முதல்வனே மாயோன்
மருகனே யீசன் மகனே - ஒருகைமுகன்
தம்பியே நின்னுடைய தண்டைக்கா லெப்பொழுதும்
நம்பியே கைதொழுவே னான். 7
காக்கக் £கடவியநீ காவா திருந்தக்கால்
ஆர்க்குப் ##பரமா மறுமுகவா - பூக்கும்
கடம்பா @@முருகா கதிர்வேலா நல்ல
இடங்கா ணிரங்கா யினி. 8
£. (பி-ம்.) 'கடன்காணீ'
##. (பி-ம்.) 'பயங்கா ணறுமுகமா'
@@. (பி-ம்.) 'குமரா கதிர்வேலா'
பரங்குன்றிற் பன்னிருகைக் கோமான்றன் - பாதம்
கரங்கூப்பிக் கண்குளிரக் கண்டு - சுருங்காமல்
ஆசையா னெஞ்சே யணிமுருகாற் றுப்படையைப்
பூசையாக் கொண்டே புகல். 9
நக்கீரர் தாமுரைத்த நன்முருகாற் றுப்படையைத்
தற்கோல நாடோறுஞ் சாற்றினால் - முற்கோல
மாமுருகன் வந்து மனக்கவலை தீர்த்தருளித்
தானினைத்த வெல்லாந் தரும். 10
பின்னருள்ள கட்டளைக்கலித்துறை, திருமுருகாற்றுப்படையை நியமமாகப் பாராயணஞ் செய்யுங்காலத்துப் பெரியோர்களால் தொன்று தொட்டு ஓதப்பெற்று வருகின்றது.
"ஒருமுரு காவென்ற னுள்ளங் குளிர வுவந்துடனே
வருமுரு காவென்று வாய்வெரு வாநிற்பக் கையிங்ஙனே
தருமுரு காவென்று தான்புலம் பாநிற்பத் தையன்முன்னே
திருமுரு காற்றுப் படையுட னேவருஞ் சேவகனே."
"வளவாய்மை சொற்ப்ரபந்த முளகீர னுக்குகந்து மலர்வாயிலக் கணங்க ளியல்போதி, அடிமோனை சொற்கிணங்க வுலகாமு வப்பவென்று னருளா லளிக்குகந்த பெரியோனே", "மருகு மாமது ரைக்கூடன் மால் வரை வளைவுளாகிய நக்கீர ரோதிய வளமை சேர்தமி ழுக்காக நீடிய கர வோனே", "கீதவிசை கூட்டி வேதமொழி சூட்டு கீரரியல் கேட்ட க்ருபைவேளே" (திருப்புகழ்), "நக்கீரர் சொற்றித்தித்ததே" (கந்தரந்தாதி)
என அருணகிரிநாதராலும்,
"இன்னன நினைந்து கீர னிலங்கிலை நெடுவேற் செம்மல்
பன்னிரு செவியு மாரப் பருகமு தாகி யோதின்
உன்னிய வுன்னி யாங்கிங் குதவுவ தாகிப் பாவுண்
முன்னுற வந்து நிற்கு முருகாற்றுப் படைமொழிந்தான்"
(சீகாளத்திப். நக்கீரச். 115)
எனக் கவிஞர்களிற் பெரும்புகழ்வாய்ந்த துறைமங்கலம் ஸ்ரீசிவப் பிரகாச ஸ்வாமிகளாலும் திருமுருகாற்றுப்படை பாராட்டப்பெற்றிருத்தல் காண்க.
------------
This file was last updated on 4 Jan. 2015
Feel free to send corrections to the webmaster.