புற நானூறு - மூலமும்
ஔவை துரைசாமி பிள்ளை விளக்க உரையும் - பாகம் 1
puRanAnURu -part 1 (verses 1-60)
with the commentary of auvai turaicAmi piLLai)
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Digital Library of India for providing a scanned image
version of this work for the etext preparation.
This etext has been produced via Distributed Proof-reading Implementation and
we thank the following volunteers for their assistance:
K.S. Kesavanathan, Anbu Jaya, V. Devarajan, V . Kamala, R. Navaneethakrishnan,
V. Ramasami, Rammohan Krishnan, P. Thulasimani,
Sezhian Annamalai, Thamizhagavan, P. Sukumar, SC. Thamizharasu,
V.S. Kannan. G. Gopal, S. Karthikeyan, Kalyana Kumar, and V. Jambulingam
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2015.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
புற நானூறு - பாகம் 1 (பாடல்கள் 1-60)
மூலமும் ஔவை துரைசாமி பிள்ளை விளக்க உரையும் .
௨
Source:
புறநானூறு(1 -200 பாட்டுகள்)
மதுரைத் தியாகராசர் கல்லூரித் தமிழப்பேராசிரியர்
சித்தாந்த கலாநிதிஔவை சு துரைசாமிப் பிள்ளை அவர்கள்
எழுதியவிளக்க வுரையுடன்
திருநெல்வேலித் தென்னிந்திய
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்
திருநெல்வேலி - 6 --- சென்னை - 1
1960.
கழக வெளியீடு - 438
ஔவையார்குப்பம் சுந்தரம் துரைசாமிப் பிள்ளை (1903)
© THE SOUTH INDIA SAIVA SIDDHANTA WORKS
PUBLISHING SOCIETY, TINNEVELLY, LTD.,
Ed 1 Mar 1947
Reprints: Sep 1952, April 1956, July 1960.
-----------
உ
முன்னுரை
இந்நாளைத் தமிழகத்துக்குப் புறநானூறு என்னும் இந்நூல் திரு. உ. வே. சாமிநாதைய ரவர்களால் சென்ற ஐம்பது ஆண்டுகட்கு முன்பே அச்சேற்றி வெளியிடப்பெற்றது; தமிழர்களின் பண்டை நாகரிகத்தை ஆராய்ந்த ஆராய்ச்சி யறிஞர் பலரும் கண்டறிந்தது; மேலைநாட்டுத் தமிழ்ப் புலவரான மறைத்திரு ஜி. யூ. போப் முதலியோர்களால் சில பாட்டுக்கள் மொழிபெயர்த்து ஆங்கிலத்திற் காட்டப்பெற்றது.
அரசியல் சமுதாயம் சமயம் முதலிய வாழ்க்கைத் துறைகளில் உழைக்கும் அறிஞர் பலரும் இந்நூலின் செய்யுட்களுட் பலவற்றைப் பயன்கொண்டுள்ளனர்; கருத்துக்களை மேற்கொண்டுள்ளனர். இப்போது சென்னை மாநில அரசியல் முதலமைச்சர் உணவுநிலைபற்றிப் பேச்சு நிகழ்த்த வேண்டியிருந்த காலையில், இப் புறநானூறு ஒருசில கருத்துக்களை அவர்க்கு வழங்கிச் சிறப்பளித்தது.
தென்குமரியின் தெற்கிலுள்ள இந்தமாக்கடல் தோன்றுதற்குமுன் தோன்றிய செய்யுட்களும், அது தோன்றியபின் பாரத இராமாயண நிகழ்ச்சிகட்கு முன்னும் பின்னும் தோன்றிய செய்யுட்களும், திரு வேங்கடத்தில் திருமால் கோயிலும், பழனியில் முருகன் கோயிலும், இராமேச்சுவரத்தில் இராமலிங்கர் கோயிலும் தோன்றுதற்குமுன் தோன்றிய செய்யுட்களும், சிலம்பு பாடிய இளங்கோவடிகளும், மணிமேகலை பாடிய சாத்தானாரும் தோன்றுதற்கு முன்னும் பின்னும் தோன்றிய செய்யுட்களும் இப் புறநானூற்றில் தொகுக்கப்பட்டுள்ளன. சுருங்கச் சொல்லுமிடத்து, மிகப் பழைய நூல்க ளெல்லாவற்றிற்கும் பழையதெனக் கருதப்படும் தொல்காப்பியத்துக்கு முன்னே தோன்றிய செய்யுட்களும் பின் தோன்றிய செய்யுட்களும் தன்னகத்தே கொண்டு, தமிழ் நாகரிகத்தின் தொன்மையுணர்த்தும் பெருநூலாகத் திகழ்வது இப் புறநானூறு என்பது மிகையாகாது.
இவ்வாறு பல்லாயிரம் ஆண்டுகட்கு முன்பே, நம் தமிழகத்தில் விளங்கிய புலவர் பெருமக்கள் அவ்வப்போது பாடிய பாட்டுக்களின் தொகுப்பாக விளங்கும் இத் தொகைநூல், தொல்காப்பியப் புறத்திணையியலில் அடங்கியுள்ள புறத்துறைகட் கேற்ப, திணையும், துறையும் வகுக்கப் பெற்றுப் புறத்துறை யிலக்கணத்துக்குச் சீர்த்த இலக்கியமாகவும் இலங்குகிறது. "மக்கள், தமது வாழ்விடை எண்ணும் எண்ணங்களும், சொல்லும் சொற்களும் இயற்கை இலக்கண வரம்புக் குட்பட்டு இயலுவன; அவ்விலக்கணத்தோடு ஒட்டிய இயற்கைமொழி யிலக்கணம் தமிழ்மொழியின் தொல்லிலக்கணம்" என மொழிநூலறிஞர் உரைப்பதற்கேற்பவே, இந்நூற்கண் காணப்படும் எண்ணங்களும் சொற்களும் இலக்கண வொழுக்கமும் இலக்கியச் செறிவும் பெற்றுத் திகழ்கின்றன. மேலும், இவ் விலக்கண வொழுக்கமும் இலக்கியச் செறிவும் பண்டைத் தமிழ் மக்களின் நல்லொழுக்கத்தையும், சீரிய நாகரிகப் பண்பாட்டையும் நல்லறிஞர் நன்கு தெளிய விளக்கி நிற்கின்றன.
இப் புறநானூறு போலவே, வேறே ஏழு தொகை நூல்கள் இப்புறப் பாட்டுக் காலத்தனவாய் உள்ளன. அவற்றோடு கூட்டி எண்வகைத் தொகைநூல்கள் என இயம்புவது மரபு. அவை, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு எனப்படும். இவையனைத்தும் பல புலவர்கள் பல காலத்திற் பாடிய பாட்டுக்களின் தொகையாகும். புறநானூற்றுச் செய்யுட்களைப் போலவே, இவை தொன்மையும் இலக்கண வொழுக்கமும் இலக்கியச் செறிவும் உடையன. இவ்வெட்டினுள், புறமும், பதிற்றுப் பத்தும் ஒழிய ஏனைய யாவும் அகப்பொருள் நெறிக்குரியன. பரி பாடல் என்பது இசைநூலே; ஆயினும் இது புறப்பொருளும் அகப் பொருளும் தழுவி இயலுவது. செல்வாக்குள்ள சூழலில் தக்கதோரிடம்பெறுவதே தமது அறிவின் எல்லையாகக் கருதித் தம்மையே வியந்து, அகப்பொருள் அமைதி காணாது. அதனை யிகழ்ந்துரைக்கும் சிறுமை, தமிழருட் சிலர்பால் இக்காலத்தே சிறிது காணப்படுகிறது. அவரது அறியாமைக்கு இரங்கும் தமிழுலகம், அவரது சிறுமையைப் பொருளாகக் கொண்டு அக முதலிய பொருணூல்களைத் தள்ளி யொதுக்கும் கீழ்மையை அடையாதென்பது ஒருதலை.
நிற்க, இந்நாளில், மண்ணுலக நல்வாழ்க்கைக்கமைந்த அரசியல் வகைகள், நாடுதோறும் வேறுவேறு வகையவாயினும், பொதுவாக அரசியல் வாழ்வில் மக்கட்கு நால்வகை உரிமைகள் இன்றியமையாது வேண்டப்படுகின்றன என்பதை, இரண்டாவது உலகப் போரை வென்றியுற முடித்த அரசியலறிஞர் வற்புறுத்தியுள்ளனர். அதனையுணர்ந்த அரசியலுலகம், அத்லாந்திக் சார்ட்டர் எனப்படும் உரிமை யாவணம் வகுத்தது; அது நீர்மேலெழுத்தாய் நிலைபேறின்றி விளங்காதாக, பண்டைநாளில் நம் தமிழகத்தே அவ்வுரிமை விளங்கியிருந்ததென்று காட்டும் பேரிலக்கியம் இப் புறநானூறு என இதனைக் கற்றுணர்தோர் நன்கறிவர். பேச்சுரிமை, வழிபாட்டுரிமை, அச்சமின்மை, வறுமையின்மை என்ற நான்கும் அத்லாந்திக் சார்ட்டரால் உரிமைகளாக வற்புறுத்தப்படுகின்றன. இந்த நான்கையும் பண்டைத் தமிழர் தம்முடைய பிறப்புரிமையாகக்கொண்டு வாழ்ந்த திறத்தை இப் புறநானூறும் ஏனைத் தொகைநூல்களும் நன்குணர்த்துகின்றன. இவ்வுரிமை வாழ்வில் ஊறிவந்ததனால்தான், நமது தமிழகம் இன்றுகாறும் வேற்று நாட்டவரது படையெடுப்பால் சீரழிந்து, நடை, உடை, மொழி, கலை, பண்பாடு முதலிய வாழ்க்கைக் கூறுகளில் நிலைதிரிந்து சீர்மையிழந்து தொன்மை நலம் மாறிவிடும் சிறுமைநிலை மிக எய்தாது, அரசியல், வாணிபம், பொருளாதாரம், கலை முதலிய துறைகளில் தனித்துநின்று உரிமைச் செயலாற்றும் ஒட்பம் குன்றா வியல்புடன் திகழ்கிறது என்னலாம். இந்நிலை வலிமிகப் பெற்றுப் பண்டைய நலம் முற்றும் பெற்றுச் சிறத்தற்கு வேண்டும். நல்லறிவுக்கு இத் தொகை நூல்கள் சீரிய கருவூலங்களாகும்; அவற்றுள் புறநானூறு மிகச் சிறந்ததென்பது மிகையாகாது.
இந்நாளைய அரசியல் இயக்கத்தின் விளைவாகத் தமிழகம் தமிழர்க்கே யுரிய தனியுரிமை நாடாகும் தகுதி பெற இருக்கிறது. அத்தகுதியைப் பெறாவாறு தடுக்கும் தடைகளைத் தகர்த்தெறித்ற்கும் பண்டைத் தொகை நூலறிவு பெருந்துணையாகும்.
புறநானூற்றுத் தமிழகம் மேற்கே கேரள நாட்டையும், வடமேற்கே கன்னட நாட்டையும், வடக்கே ஆந்திர நாட்டையும் தன்னகத்தே கொண்டிருந்தது. தமிழகத்தின் வடவெல்லை திருவேங்கடத்தைக் கடந்து நின்றது. கேரளரது மலையாளமும், கன்னடரது கன்னடமும், ஆந்திரரது தெலுங்கும் பழந் தமிழ்மொழியா மென்பது மொழிநூலறிஞர் பலகாலும் வற்புறுத்துரைத்துப் போதரும் பெருமொழி. இம் மலையாள முதலியன, வடமொழி முதலிய பிறமொழிக் கலப்பால் தமிழ்த்தன்மை மாறி, வேற்றுமொழிபொல இயலும் ஒலியும் பெற்று நிற்கின்றன. அதனால் அம் மொழி பேசுவோர், தாம் பழந்தமிழக் குடியின் வழித் தோன்றல்கள் என்பதை மறந்து வேறுபட வாழ்வு நடாத்த விழைகின்றனர். ஆயினும், சந்தனக்கோல் குறுகினால் வேப்பங்கோலாகாதவாறுபோல, ஆந்திரரும் கன்னடரும் கேரளரும் மொழிவகையிலும் நடைவகையிலும் எத்துணை வேற்றுமை மேற்கொள்ளினும் உள்ளத்து எண்ண வகையில் தமிழராய் வாழ்வது இனிது விளங்கித் தோன்றி நிற்கிறது. இவர்களது தொன்மையும் பண்பாடும் இனிது காணடற்கண் இப் புறநானூறு முதலிய தொகைநூல்கள் மிகுதியும் பயன்படுகின்றன.
இனி, இவ் வேற்றுமை யொழிதற்கும், ஆந்திரரும் முதலியோர் தமிழரென ஒன்றுபட்டு வாழ்ந்து சிறத்தற்கும், இவரனவரும் கூடிய ஒருமையரசியல் வகுத்து அரசியல் தனியுரிமை வாழ்வுபெற வேண்டுமெனும் முயற்சி ஒருபால் நிலவுகிறது; நெஞ்சொன்றி ஒற்றுமைப்பட்டு ஒருமையரசியல் வாழ்வு நடாத்தற்கு மொழியின் வேற்றுமைநிலை தடை செய்தலால். இப்போதுள்ள மொழிவாரியாகப் பகுப்புண்டு அரசியல் வாழ்வு நடாத்துவது தக்கது எனும் முயற்சி ஒருபால் நிலவுகிறது. இவ் விருவகை முயற்சிகட்கிடையே, இத் தென்றமிழகது அரசியல் வாழ்வைத் தனி யுரிமையுடன் நிலவவிடாது - பொருணிலை, மொழி, வாணிபம் முதலிய பல துறையினும் தமிழ் வாழ்வு தனித்தோங்க விடலாகாதெனக் கருதி - ஒடுக்கும் முயற்சி ஒருபால் முனைந்து நிற்கிறது. அரசியல் ஆக்க முயற்சிகளுட் கலந்து தமிழரசியலிற் பணிபுரிய விரும்புவோர்க்கு இப் புறநானூறு முதலிய தொகைநூல்களின் அறிவு இன்றியமையாததாகும். இதனை யுணரும் இந்நாளைய தமிழகம் தொகைநூலை விரும்பிப் பயிலுகின்றது. இந்நூற்கண் காணப்படும் எண்ணமும் சொல்லும் பாட்டு வடிவில் உள்ளன. இப்பாட்டுகளின் பொருளை விளக்குதற்குப் பழையோர் ஒருவர் எழுதிய பழைய வுரையும் உளது. இவ்வுரை இந்நூன் முழுதிற்கும் இல்லையாயினும், கிடைத்த அளவில் மிக்க சிறப்புடையதாகவே இருக்கிறது. எமது இவ் வெளியீடு நூல் முழுதும் உரை பெற்று இரு பகுதிகளாக வந்துள்ளன.
பாட்டும், அதன் உரையுமாக நிலவும் ஏனை நூல்களைப்போலவே இந்நூலின் பாட்டையும் உரையையும் படித்து வருவது இன்றுகாறும் இருந்து வரும் மரபு. இம்மரபு தமிழறிவு பெரிது பெற்றார்ககே எளிதாய் இயன்றுவந்தது. தமிழை ஓரளவு கற்றாரும் இன்றியமையாது படிக்க வேண்டிய நிலைமையுண்டாய்விட்டமையின், அவர்கட்கும் பயன்படுமாறு இவ் வெளியீடு வருவதாயிற்று. ஒவ்வொரு பாட்டுக்கும் ஏற்ற முன்னுரையும், உரையில் அரிய பொருள்கொண்டுநிற்கும் சொற்பொருள்களுக்கும் கருத்துக்களுக்கும் வேண்டும் விளக்கமும் இவ் வெளியீட்டின் தனிப் பண்பாகும்.
முன்னுரைப் பகுதி, ஒவ்வொரு பாட்டுக்கும் பாடினோர் வரலாறும் பாடப்பட்டோர் வரலாறும், பாட்டின் கருத்தும் பிறவும் கூறுகிறது. பழைய வுரை மிகச் சிறந்த உரையாதலின், அதனைச் சிறிதும் மாற்றாது, பாட்டோடு இயைத்துக் காண்பதற் கெளிதாகக் கண்ணழித் துரைவடிவில் அது காட்டப்பட்டுள்ளது. பாட்டும் உரையும் ஏட்டுப் பிரதிகள் சிலவற்றோடு ஒப்புநோக்கப்பெற்றுச் சில திருத்தங்களும் பெற்றுள்ளன.
நானூறு பாட்டுக்களைக் கொண்ட இப் புறநானூறு இப்போது இயன்றுவரும் முறையில் முழுதும் ஒரு நூலாக வெளிவரின் கைக்கடங்காப் பருமையும் எடுத்தேந்திப் படித்தற்கு அருமையும் தரு மென்னும் கருத்தால் இருநூறு பாட்டுக்கள் கொண்ட இருபகுதியாக வெளி வந்துள்ளது. இதன்கண் முதல் இருநூறு பாட்டுக்கள் உள்ளன.
முப்பெருங்காப்பிய ஆராய்ச்சியாளரும், ஐங்குறுநூறு, பதிற்றுப் பத்து முதலிய தொகைநூல்கட்கு விளக்கவுரை கண்டவரும், அண்ணா மலைப் பல்கலைக் கழக ஆராய்ச்சிப் பகுதி விரிவுரையாளராகவிருந்து இப்போது மதுரைத் தியாகராசர் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராக விருக்கும் சித்தாந்த கலாநிதி, ஔவை சு. துரைசாமிப் பிள்ளையவர்கள் இவ் வெளியீட்டிற்கு உறுப்பாகும் முன்னுரை, கண்ணழித்துரை, விளக்கவுரை முதலியன எழுதி யுதவினார்கள். அவர்களுடைய ஆராய்ச்சியின் அருமை பெருமைகள் இதன் முன்னுரை விளக்கவுரைப் பகுதிகளைக் காண்பார்க்கு இனிது புலனாம்.
இதுகாறும் எம் வெளியீடுகளை யேற்று எம்மை யூக்கிவரும் தமிழகம், இதனையும் ஏற்றுத் தன் பெருந்துணையைத் தளராமே நல்கு மெனும் துணிவுடையேம்.
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.
-----------------------------------------------------------
பாடியோர் பெயர் அகர வரிசை
[எண் : பாட்டு எண்]
அரிசில் கிழார் ... 146
ஆலத்தூர் கிழார் ... 34, 36, 69
ஆவூர் மூலங்கிழார் 38, 40, 166, 177, 178, 196
இடைக்காடனார் ... 42
இடைக்குன்றூர் கிழார் ... 76-79
இரும்பிடர்த்தலையார் ... 3
உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் ... 13, 127-135
உறையூர் மருத்துவன் தாமோதரனார் ... 60, 170
உறையூர் முதுகண்ணன் சாத்தனார் ... 27-30
ஊன்பொதி பசுங்குடையார் ... 10
ஐயூர் முடவனார் ... 51
ஐயூர் மூலங்கிழார் ... 21
ஒருசிறைப் பெரியனார் ... 137
ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் ... 71
ஓரேருழவர் ... 193
ஔவையார் ... 87-104;140,187
கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி ... 182
கணியன் பூங்குன்றன் ... 192
கபிலர் 8,14,105-111,113-124,143,200
கருங்குழலாதனார் ... 7
கருவூர்க் கதப்பிள்ளை சாத்தனார் ... 168
கல்லாடனார் ... 23, 25
கழாத்தலையார் ... 62, 65
கள்ளில் ஆத்திரையனார் ... 175
காரி கிழார் ... 6
காவற்பெண்டு ... 86
காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் ... 57-58,169,171
குடபுலவியனார் ... 18-19
குறமகள் இளவெயினியார் ... 157
குறுங்கோழியூர் கிழார் ... 17, 20, 22
கோவூர் கிழார் 31-33, 41, 44-47, 68, 70
கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக்
குமரனார் ... 54, 61, 167, 180, 197
சாத்தந்தையார் ... 80-82
சேரமான் கணைக்காலிரும்பொறை ... 74
சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந் தும்பியார் 181
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் 173
சோழன் நல்லுருத்திரன் ... 190
சோழன் நலங்கிள்ளி ... 73, 75
தாமற் பல்கண்ணனார் ... 43
துறையூர் ஓடைகிழார் ... 136
தொண்டைமான் இளந்திரையன் ... 185
நரிவெரூஉத்தலையார் ... 5, 195
நெட்டிமையார் ... 9, 12, 15
நெடும்பல்லியத்தனார் ... 64
பக்குடுக்கை நன்கணியார் ... 194
பரணர் 4, 63, 141-142, 144-145
பாண்டரங்கண்ணனார் ... 16
பாண்டியன் அறிவுடை நம்பி ... 188
பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் 133
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற
நெடுஞ்செழியன் 72
பாரதம் பாடிய பெருந்தேவனார் ... 1
பாரி மகளிர் ... 112
பிசிராந்தையார் ... 67, 184, 191
புறத்திணை நன்னாகனார் ... 176
பெருங்குன்றூர் கிழார் ... 147
பெருங்கோழி நாய்கன் மகள் நக்கண்ணையார் ... 83-85
பெருஞ்சித்திரனார் ... 158-163
பெருந்தலைச்சாத்தனார் ... 151, 164-165
பெரும்பதுமனார் ... 199
பேய்மகள் இளவெயினியார் ... 11
பொய்கையார் ... 48-49
பொருந்திலிளங்கீரனார் ... 53
மதுரைக் கணக்காயனார் மகனார்
நக்கீரனார் ... 56, 189
மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் 59
மதுரை மருதன் இளநாகனார் ...52, 55, 138-139
மாங்குடி கிழார் ... 24, 26
மாறோக்கத்து நப்பசலையார் ...7, 39, 126, 174
முரஞ்சியூர் முடிநாகனார் ... 2
மோசிகீரனார் . 50, 154-156, 186
வடநெடுந்தத்தனார் ... 179
வடமவண்ணக்கன் தாமோதரனார் ... 172
வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனார் ... 125
வடமவண்ணக்கன் பேரி சாத்தனார் ... 198
வன்பரணர் ...148-150,152-153
வெண்ணிக் குயத்தியார் ... 66
வெள்ளைக்குடி நாகனார் ... 35
-----
உ
உள்ளுறை
1. கடவுள் வாழ்த்து - பாரதம் பாடிய பெருந்தேவனார் ... 1
2. சேரமான் பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதன் – முரஞ்சியூர் முடிநாகனார் ... 2
3. பாண்டியன் கருங்கை யொள்வாட் பெரும்பெயர்வழுதி இரும்பிடர்த்தலையார் ... 3
4. சோழன் உருவப்பஃறோர் இளஞ்சேட்சென்னி-பரணர் ... 4
5. சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரலிரும்பொறை -நரிவெரூஉத்தலையார் ... 5
6. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி-
காரிகிழார் ... 6
நெட்டிமையார் 1,12,15
நெடும்பல்லியத்தனார் ... 64
7. சோழன் கரிகாற் பெருவளத்தான் - கருங்குழலாதனார் ... 7
வெண்ணிக்குயத்தியார் ... 66
8. சேரமான் கடுங்கோ வாழியாதன் - கபிலர் ... 8, 14
9. சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி-ஊன்பொதி பசுங்குடையார் ... 10
10.சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ - பேய்மகள்
இளவெயினியார் ... 11
11. சோழன் முடித்தலைக்கோப் பெருநற்கிள்ளி - உறையூர்
ஏணிச்சேரி முடமோசியார் ... 13 ... 16
12. சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி - பாண்டரங் கண்ணனார் ... 16
13. சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரலிரும்பொறை-
குறுங்கோழியூர் கிழார் 17,20,22
14. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் -
குடபுலவியனார் ... 18, 19
கல்லாடனார் 23, 25
மாங்குடி கிழார் 24, 26
இடைக்குன்றூர் குழார் 76, 77, 78, 79
15. கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி - ஐயூர் மூலங்கிழார் ... 21
16. சோழன் நலங்கிள்ளி -
உறையூர் முதுகண்ணன் சாத்தனார் 27, 28, 29, 30
கோவூர் கிழார் 31, 32, 33, 68
17. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன்.-
ஆலத்தூர் கிழார் ... 34,36,69
வெள்ளைக்குடி நாகனார் ... 35
மாறோக்கத்து நப்பசலையார் ... 37,39
ஆவூர் மூலங்கிழார் ... 38,40
கோவூர் கிழார் ... 41, 46, 70
இடைக்காடனார் ... 52
18. சோழன் (நலங்கிள்ளி தம்பி) மாவளத்தான்-தாமற்பல் கண்ணனார் ... 43
19. சோழன் நெடுங்கிள்ளி.- கோவூர் கிழார் ... 44
20. சோழன் நெடுங்கிள்ளியும் நலங்கிள்ளியும் - கோவூர் கிழார்... 45
21. சோழன் (காரியாற்றுத் துஞ்சிய) நெடுங்கிள்ளி.- கோவூர் கிழார் ... 47
22. சேரமான் கோக்கோதை மார்பன்.- பொய்கையார் ... 48,49
23. சேரமான் தகடூரெரிந்த பெருஞ்சேர லிரும்பொறை. மோசிகீரனார் ... **
24. பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி.- ஐயூர் முடவனார் ... 51
மருதன் இளநாகனார் ... 52
25. சேரமான் மாந்தரஞ்சேர லிரும்பொறை.- பொருந்தில் இளங்கீரனார் ... 53
26. சேரமான் குட்டுவன் கோதை - கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் ... 54
27. பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன்.-
மதுரை மருதன் இளநாகனார் ... 55
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் ... 56
காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் ... 57
28. சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமா வளவனும்,
பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும்.-
காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்னார் .. 58
29. பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன்.-
மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் ... 59
30. சோழன் குரப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமா வளவன்.-
உறையூர் மருத்துவன் தாமோதரனார் ... 60
கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் ... 197
31. சோழன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னி.-
32. சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதனும், சோழன் வெற்பஃறடைக்கப்
பெருவிறற் கிள்ளியும் - கழாத்தலையார் ...62
33. சேரமான் பெருஞ்சேரலாதன்.-கழாத்தலையார் ... 65
34. சோழன் கோப்பெருஞ் சோழன்.-பிசிராந்தையார் ...67
35. சோழன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளி.-சாத்தந்தையார் ... 80,81,82
பெருங்கோழிநாய்கன்மகள் நக்கண்ணையார் ... 83,84,85
36. அதியமான் நெடுமான் அஞ்சி.-ஒளவையார் ... 87,88,89,90,
91,92,93,94,95,97,98,99,100,101,103,104
37. அதியமான் பொகுட்டெழினி.-ஒளவையார் ... 96, 102
38. வேள் பாரி.-கபிலர் ... 105,106,107,108,109,110,111,
113,114,115,116,117,118,119,120
39. மலையமான் திருமுடிக்காரி.-கபிலர் ... 121,122,123,124
மாறோக்கத்து நப்பசலையார் ... 126
வடமவண்ணக்கன் பெருஞ்சாத்தனார் ... 125
40. ஆய் அண்டிரன்.-உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் ... 127
128,129,130,131,132,133,134,135
துறையூர் ஓடைக்கிழார் ... 136
41. நாஞ்சில் வள்ளுவன்.-ஒருசிறைப் பெரியனார் ... 137
மருதன் இளநாகனார் ... 138,139
ஒளவையார் ... 140
42. வையாவிக்கோப்பெரும் பேகன் - பரணர் ... 141,142,144,145
கபிலர் ... 143
அரிசில் கிழார் ... 146
பெருங்குன்றூர் கிழார் ... 147
43. கண்டீரக் கோப்பெரு நள்ளி.-வன்பரணர் ... 148,149,150
44. இளவிச்சிக்கோ.-பெருந்தலைச் சாத்தனார் ... 151
45. வல்வில் ஓரி.-வன்பரணர் ... 152,153
46. கொண்கானங்கிழான்.-மோசிகீரனார் ... 154,155,156
47. எறைக்கோன்.-குறமகள் இளவெயினி ... 157
48. குமணன்.-பெருஞ்சித்திரனார் ... 158,159,160,161,163
பெருந்தலைச் சாத்தனார் ... 164,165
49. இளவெளிமான்.-பெருஞ்சித்திரனார் ... 162
50. சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கெளணியன் விண்ணந்தாயன். -ஆவூர் மூலங்கிழார் ... 166
51. ஏனாதி திருக்கிள்ளி.-கோனாட்டு எறீச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் ... 167
52. பிட்டங்கொற்றன்.-கருவூர்க் கதப்பிள்ளை சாத்தனார் ... 168
காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் ... 169,171
உறையூர் மருத்துவன் தாமோதரனார் ... 170
வடமவண்ணக்கன் தாமோதரனார் ... 172
53. சிறுகுடி கிழான் பண்ணன்.-சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் ... 173
54. மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணன்.-மாறோக்கத்து நப்பசலையார் ... 174
55. ஆதனுங்கன்.-கள்ளில் ஆதிரையன் ... 175
56. ஓய்மான் நல்லியக்கோடன்.-புறத்திணை நன்னாகனார் ... 176
57. மல்லிகிழான் காரியாதி.-ஆவூர் மூலங்கிழார் ... 177
58. பாண்டியன் கீரஞ்சாத்தன்.-ஆவூர் மூலங்கிழார் ...178
59. நாலை கிழவன் நாகன்.-வடநெடுந் தத்தனார் ... 179
60. ஈர்ந்தூர் கிழான் கோயமான் -கோனாட்டு எறிச்சிலூர்
மாடலன் மதுரைக் குமரனார் ... 180
61. வல்லார் கிழான் பண்ணன்.-சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந் தும்பியார் ... 181
62. பாண்டியன் அறிவுடை நம்பி.-பிசிராந்தையார் ... 184
63. விச்சிக்கோ.-கபிலர் ... 200
64. ஒல்லையூர் தந்த பூதப்பாண்டியன் ... 71
65. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ் செழியன் ... 72
66. சோழன் நலங்கிள்ளி
67. சேரமான் கணைக்காலிரும்பொறை ... 74
68. காவற்பெண்டு ... 86
69. பாரி மகளிர் ... 112
70. கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி ... 182
71. பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் ... 183
72. தொண்டைமான் இளந்திரையன் ... 185
73. மோசிக்கீரனார் ... 186
74. ஒளவையார் ... 187
75. பாண்டியன் அறிவுடை நம்பி ... 188
76. மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் ... 189
77. சோழன் நல்லுருத்திரன் ... 190
78. பிசிராந்தையார் ... 191
79. கணியன் பூங்குன்றனார் ... 192
80. ஓரேருழவர் ... 193
81. பக்குடுக்கை நன்கணியார் ... 194
82. நரிவெரூஉத்தலையார் ... 195
83. பெரும்பதுமனார் ... 196
------------------
புறநானூறு -
மூலமும் உரையும்
1. கடவுள் வாழ்த்து
இக்கடவுள் வாழ்த்தைப் பாடியவர் பாரதம் பாடிய பெருந்தேவனார். பெருந்தேவனார் என்பது இவ்வாசிரியது இயற்பெயர். தமிழில் பாரத்தத்தைப் பாடிய செயல்பற்றி இவர் பாரதம் பாடிய பெருந்தேவனார் என வழங்கப்படுகின்றார். இப்போது வெளியாகியிருக்கும் பாரத வெண்பா வென்னும் நூல் இவர் பாடியதென்று கூறுவர். இப் பாரத வெண்பா உரையிடையிட்ட பாட்டு சங்கத்தொகை நூல்களுள் நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, அகநானூறு, புறநானூறு என்ற இவற்றிற்குக் கடவுள் வாழ்த்துச் செய்யுட்களைப் பாடிச் சேர்த்தவர் இவர். இதனால் இவர் கடவுட்கொள்கை நிறைந்த வுள்ளமுடையவரென்பது புலனாகும். இவர் பெருமெபாலும் சிவனையும் முருகனையும் பாடியிருக்கின்றார்; நற்றிணையில் உள்ள பாட்டு திருமாலைக் குறித்து நிற்பதாகப் பின்னத்தூர் நாராயணசாமி ஐயரவர்களால் உரை காணப்பட்டுள்ளது.
இப்பாட்டின்கண் ஆசிரியர் பெருந்தேவனார், சிவனை அருந்தவத் தோன் என்று குறிப்பிட்டு, அவனுக்குக் கண்ணியும் மாலையும் கொன்றை; ஊர்தியும் கொடியும் ஆனேறு என்று குறித்து, அவனுடைய கறைமிடறும், பெண்ணுருவாகிய திறனும், தலையிற்சூடிய பிறையும் முறையே அந்தணராலும் பதினெண் கணங்களாலும் புகழவும் ஏத்தவும்படும் எனத் தெரிவித்து, அதனால் நாமும் அவனை வணங்கி வாழ்த்துதல் வேண்டும் என்ற கருத்தை உய்த்துணர வைக்கின்றார்.
கண்ணி கார்நறுங் கொன்றை காமர்
வண்ண மார்பின் தாருங் கொன்றை
ஊர்தி வால்வெள் ளேறே சிறந்த
சீர்கெழு கொடியும் அவ்வே றென்ப
கறைமிட றணியலு மணிந்தன் றக்கறை 5
மறைநவி லந்தணர் நுவலவும் படுமே
பெண்ணுரு ஒருதிற னாகின் றவ்வுருத்
தன்னு ளடக்கிக் கரக்கினுங் கரக்கும்
பிறைநுதல் வண்ண மாகின் றப்பிறை
பதினெண் கணனு மேத்தவும் படுமே 10
எல்லா உயிர்க்கும் ஏம மாகிய,
நீரற வறியாக் கரகத்துத்
தாழ்சடைப் பொலிந்த அருந்தவத் தோற்கே. (1)
உரை: கண்ணி - திருமுடிமேல் சூடப்படும் கண்ணி; கார் நறுங் கொன்றை - கார்காலத்து மலரும் நறிய கொன்றைப் பூ; காமர் வண்ண மார்பின் தாரும் கொன்றை - அழகிய நிறத்தையுடைய திருமார்பின் மாலையும் கொன்றைப் பூ; ஊர்தி வால் வெள்ளேறு - ஏறப்படுவது தூய வெளிய ஆனேறு; சிறந்த சீர்கெழு கொடியும் அவ் ஏறு என்ப- மிக்க பெருமைபொருந்திய கொடியும் அவ் வானே றென்று சொல்லுவர்; கறை மிடறு அணியலும் அணிந்தன்று - நஞ்சினது கறுப்புத் திருமிடற்றை அழகுசெய்தலும் செய்தது; அக்கறை மறை நவில் அந்தணர் நுவலவும் படும் - அக்கறுப்புத்தான் மறுவாயும் வானோரை யுய்யக் கொண்டமையின் வேதத்தைப் பயிலும் அந்தணராற் புகழவும் படும்; பெண்ணுரு ஒருதிறன் ஆகின்று - பெண்வடிவு ஒருபக்கம் ஆயிற்று; அவ்வுரு தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும் - ஆய அவ்வடிவுதான் தன்னுள்ளே ஒடுக்கி மறைக்கினும் மறைக்கப்படும்; பிறை நுதல் வண்ணம் ஆகின்று - பிறை திரு நுதற்கு அழகாயது; அப்பிறை பதினெண்கணனும் ஏத்தவும் படும் - அப்பிறைதான் பெரியோன் சூடுதலாற் பதினெண்கணங்களாலும் புகழவும்படும்; எல்லா வுயிர்க்கும் ஏமமாகிய - எவ் வகைப்பட்ட உயிர்களுக்கும் காவலாகிய; நீர் அறவு அறியாக் கரகத்து - நீர் தொலைவறியாக் குண்டிகையானும்; தாழ் சடை- தாழ்ந்த திருச்சடையானும்; பொலிந்த - சிறந்த; அருந்தவத் தோற்கு- செய்தற்கரிய தவத்தையுடையோனுக்கு எ-று.
தன்னுள் அடகிக் கரக்கினும் கரக்கும் என்பதற்கு அவ்வடிவுதான் எல்லாப் பொருளையும் தன்னுள்ளே யடக்கி அவ்விறைவன் கூற்றிலே மறையினும் மறையும் என்று உரைப்பினும் அமையும். நீரறவு அறியாக் கரகம் கங்கை யென்பாருமுளர். அக்கறை, அவ்வுரு, அப்பிறை என நின்ற எழுவாய்கட்கு, நுவலவும் படும், கரக்கினும் கரக்கும், ஏத்தவும் படும் என நின்ற பயனிலைகளை நிரலே கொடுக்க. இவ்வெழு வாய்களையும் பிறவற்றையும் அருந்தவத்தோற் கென்னும் நான்காவதனோடு முடிக்க. ஏமமாகிய அருந்தவத்தோ னென்க. ஏமமாகிய நீர் எனினு மமையும். அணியலு மணிந்தன்று என்பது "உண்ணலு முண்ணேன்" (கலி. 23) என்பது போல நின்றது. பதினெண்கணங்களாவார் தேவரும் அசுரரும் முனிவரும் கின்னரரும் கிம்புடரும் கருடரும் இயக்கரும் இராக்கதரும் கந்தருவரும் சித்தரும் சாரணரும் வித்தியாதரரும் நாகரும் பூதரும் வேதாளமும் தாராகணமும் ஆகாச வாசிகளும் போகபூமியோரு மென இவர்; பிறவாறும் உரைப்பர். இப் பெரியோனை மன மொழி மெய்களான் வணங்க, அறமுதல் நான்கும் பயக்கும் என்பது கருத்தாகக் கொள்க.
விளக்கம்: தலையிற் சூடப்படுவது கண்ணி யென்றும், மார்பில் அணியப்படுவது மாலை யென்றும் வழங்குவது மரபாதாலால், கண்ணியென்பதற்குத் 'திருமுடிமேற் சூடப்படும் கண்ணி' யென்றார். காமர், அழகு. வண்ணம், முன்னது நிறமும் பின்னது அழகும் குறித்து நின்றது. செம்மேனியிற் கறுப்புநிறங் கொண்டு நிற்பதுபற்றி, கறையை நஞ்சுக் கறுப்பென்றும், அது நஞ்சினால் உண்டானதுபற்றி, நஞ்சினது கறுப்பு என்றும் உரைத்தார். அது மறை நவிலும் அந்தணராற் பரவப் படுதற்குக் காரணம் தொக்குநிற்றலின், அதனை விரித்து, "வானோரை யுய்யக் கொண்டமையின்" என்று உரை கூறினார். மறுவாயும் என்றது, அக்கறை மறுவாய் நுவலப்படுதற் குரித்தன் றாயினும் என்பதுபட நின்றது. நவிலுதல், பயிலுதல்; "வினைநவில் யானை" (பதிற். 82) என்பதின் உரை காண்க. பிறை மகளிரால் தொழப்படுமேயன்றி ஏனோரால் பெரிதும் தொழப்படுவதன்று; ஆயினும் அப்பிறை பதினெண் கணங்களாலும் தொழப்படுவதற்குக் காரணம் "பெரியோன் சூடுதலால்" என்பதனால் காட்டினார். அவ்வுரு தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும் என்பதற்கு, "எல்லாப் பொருளையும் தன்னுள்ளே அடக்கி அவ்விறைவன் கூற்றிலே மறையினும் மறையும்" என்று வேறு பொருள் கூறினும் பொருந்தும் என்றுரைக்கின்றார். அருந்தவத் தோற்கு அக்கறை நுவலும் படும்; அவ்வுரு கரக்கினும் கரக்கும்; அப்பிறை ஏத்தவும் படும் என முடியும், பதினெண்கணங்களையும், 'கின்னரர் கிம்புருடர் விச்சா தரர்கருடர், பொன்னமர் பூதர் புகழியக்கர் - மன்னும், உரகர் சுரர்சா ரணர்முனிவர் மேலாம். பரகதியோர் சித்தர் பலர்; காந்தருவர் தாரகைகள் காணாப் பசாசகணம், ஏந்து புகழ் மேய விராக்கதரோ - டாய்ந்ததிறற், போகா வியல்புடைய போகபுவி யோருடனே, ஆகாச வாசிகாள வார்" என அடியார்க்குநல்லார் காட்டும் பழைய வெண்பாக்களால் வேறு வகைப்படக் கூறுதலும் உண்டெனத் தோன்றுவதுபற்றி, "பிறவாறும் உரைப்ப" என்றார்.
-----------------
நூல்
2. சேரமான் பெருஞ்சோற் றுதியஞ்சேரலாதன்.
பெருஞ்சோற்றுதியஞ்சேரலாதன் சேரமன்னருள் ஒருவன். இவனை உதியனென்றும், உதியஞ்சேர லென்றும், உதியஞ் சேரல னென்றும் மாமூலனாரும் கோட்டம்பலத்துத் துஞ்சிய சேரமானும் பாடுவர். பாண்டவரும் துரியோதனனாதியோரும் பொருத காலத்து இருதிறத்துப் படைகட்கும் பெருஞ்சோறிட்டு இச்சேரமான் நடுநிலைபுரிந்தானென்பதுபற்றி இவன் பெருஞ்சோற் றுதியஞ் சேரலாதன் எனப்படுகின்றான். முரஞ்சியூ ரென்பது இப்ப்பாட்டைப் பாடிய ஆசிரியர் முடி நாகனாரது ஊராகும். இவர் தலைச்ச்சங்கப் புலவருள் ஒருவரென இறையனார் களவியலுரை கூறுகிறது. நாகனார் என்பது பிற்காலத்து ஏடெழுதினோரால் நாகராயர் எனப் பிறழ எழுதப்பட்டுவிட்டது.
இப்பாட்டில், இச்சேரமான். நிலம், விசும்பு, காற்று, தீ, நீர் என்ற ஐம்பெரும் பூதங்களின் இயற்கைபோலப் பொறை, சூழ்ச்சி, வலி, தெறல், அளி யென்ற ஐந்தும் உடையவன் என்றும், பாண்டவராகிய ஐவரும் துரியோதனன் முதலிய நூற்றுவரும் பொருதகளத்தில் அவர் படைக்குப் பெருஞ்சோறு வரையாது கொடுத்தவன் என்றும், மேலைக் கடற்கும் கீழைக்கடற்கும் இடையிற் கிடக்கும் நாடு முற்றும் இவற்கே யுரியது என்றும், இமயமும் பொதியமும் போல இவன் நடுக்கின்றி நிலை பெறுதல் வேண்டுமென்றும் கூறி வாழ்த்துகின்றார்.
மண்டிணிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித்தலைஇய தீயும்
தீமுரணிய நீரு மென்றாங் 5
கைம்பெரும் பூதத் தியற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தலுஞ் சூழ்ச்சிய தகலமும்
வலியுந் தெறலும் அளியு முடையோய்
நின்கடற் பிறந்த ஞாயிறு பெயர்த்துநின்
வெண்டலைப் புணரிக் குடகடற் குளிக்கும் 10
யாணர் வைப்பின் நன்னாட்டுப் பொருந
வான வரம்பனை நீயோ பெரும
அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப் 15
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்
பாஅல் புளிப்பினும் பகலிருளினும்
நா அல்வேத நெறிதிரியினும்
திரியாச் சுற்றமொடு முழுதுசேண் விளங்கி
நடுக்கின்றி நிலியரோ வத்தை அடுக்கத்துச் (20)
சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை
அந்தி யந்தணர் அருங்கட னிறுக்கும்
முத்தீ விளக்கிற் றுஞ்சும்
பொற்கோட் டிமயமும் பொதியமும் போன்றே. (2)
திணை- பாடாண்டிணை; துறை- செவியறிவுறூஉ; வாழ்த்தியலுமாம். சேரமான் பெருஞ்சோற் றுதியஞ்சேரலாதனை முரஞ்சியூர் முடி நாகனார் பாடியது.
உரை: மண் திணிந்த நிலனும்- அணுச்செறிந்த நிலனும்; நிலனேந்திய விசும்பும்- அந்நிலத்தின் ஓங்கிய ஆகாயமும்; விசும்பு தைவரு வளியும் - அவ்வாகாயத்தைத் தடவி வரும் காற்றும்; வளி தலைஇய தீயும் - அக்காற்றின்கண் தலைப்பட்ட தீயும்; தீ முரணிய நீரும் என்று- அத் தீயோடு மாறுபட்ட நீருமென; ஐம்பெரும் பூதத்து இயற்கை போல - ஐவகைப்பட்ட பெரிய பூதத்தினது தன்மை போல; போற்றார்ப் பொறுத்தலும்- பகைவர் பிழை செய்தால் அப்பிழையைப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்- அப்பிழை பொறுக்குமளவல்ல வாயின் அவரையழித்தற் குசாவும் உசாவினது அகலமும்; வலியும் – அவரை யழித்தற்கேற்ற மனவலியும் சதுரங்கவலியும்; தெறலும்- அவ்வாற்றால் அவரை யழித்தலும்; அளியும் உடையோய்- அவர் வழிபட்டால் அவர்க்குச் செய்யும் அருளு முடையோய்; நின் கடல் பிறந்த ஞாயிறு - நினது கடற்கண் தோன்றிய ஞாயிறு; பெயர்த்தும்- பின்னும்; நின் வெண்டலைப் புணரிக் குடகடல் குளிக்கும் - நினது வெளீய தலைபொருந்திய திரையையுடைய மேல்கடற்கண்ணே மூழ்கும்; யாணர் வைப்பின் நன்னாட்டுப் பொருந - புது வருவாய் இடையறாத வூர்களையுடைய நல்ல நாட்டிற்கு வேந்தே; வானவரம்பனை - வானவரம்ப; பெரும-; நீ--; அலங்கு உளைப் புரவி ஐவரோடு சினைஇ - அசைந்த தலையாட்ட மணிந்த குதிரையையுடைய பாண்டவ ரைவருடனே சினந்து; நிலம் தலைக் கொண்ட பொலம் பூந் தும்பை ஈரைம் பதின்மரும் - நிலத்தைத் தம்மிடத்தே கொண்ட பொற்பூந் தும்பையையுடைய துரியோதனன் முதலாகிய நூற்றுவரும்; பொருது களத் தொழிய - பொருது போர்க்களத்தின்கட் படுந்துணையும்; பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்- பெருஞ் சோறாகிய மிக்க வுணவை இரு படைக்கும் வரையாது வழங்கினோய்; பாஅல் புளிப்பினும் - பால் தன் இனிமை யொழிந்து புளிப்பினும்; பகல் இருளினும் - ஞாயிறு தன் விளக்கமொழிந்து இருளினும்; நாஅல் வேதம் நெறி திரியினும் - நான்கு வேதத்தினது ஒழுக்கம் வேறுபடினும்; திரியாச் சுற்றமொடு - வேறூபாடில்லாத சூழ்ச்சியையுடைய மந்திரிச் சுற்றத்தோடு; முழுது சேண் விளங்கி - ஒழியாது நெடுங்காலம் விளங்கி; நடுக்கின்றி நிலியர் - துளக்கமின்றி நிற்பாயாக; அடுக்கத்து - அரைமலையின் கண்; சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை - சிறிய தலையையுடைய மறிகளையுடையவாகிய பெரிய கண்ணையுடைய மான்பிணைகள்; அந்தி - அந்திக் காலத்தே; அந்தணர் அருங்கடன் இறுக்கும் முத்தீ விளக்கில் துஞ்சும் - அந்தணர் செய்தற்கரிய கடனாகிய ஆவுதியைப் பண்ணும் முத்தீயாகிய விளக்கின்கண்ணே துயிலும்; பொற்கோட்டு இமயமும் பொதியமும் போன்று - பொற்சிகரங்களையுடைய இமயமலையும் பொதியின்மலையும் போன்று- எ-று
குளிக்கும் நாடென இயையும். குளிக்கும் நாடென இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்துமேல் நின்றது. நியோ, ஓ: அசைநிலை. அன்றி, இதனை வினாவாக்கி, ஞாயிறு குளிக்கு மென்பதனை முற்றாக்கி வானவரம்பனென்பதனை அவ்வினாவிற்குப் பொருளாக்கி உரைப்பாருமுளர். முத்தீயாவன: ஆகவ*னீயம், காருகபத்தியம், தென்றிசையங்கி. ஆங்கும் அத்தையும் அசைநிலை. வானவரம்பனை: ஐகாரம் முன்னிலை விளக்கி நின்றது. நிலந் தலைக் கொண்டவென்பதற்கு நிலங்கோடல் காரணமாகத் தலைக்கட் சூடிய வெனினு மமையும்.
போற்றார்ப் பொறுத்தல் முதலிய குணங்களை யுடையோய், பொருந, வரையாது கொடுத்தோய், வானவரம்ப, பெரும, நீ புளிப்பினும் இருளினும் திரியினும் இமயமும் பொதியமும் போன்று நடுக்கின்றிச் சுற்றமொடு விளங்கி நிற்பாயாக எனக் கூட்டி வினைமுடிவு செய்க. போற்றார்ப் பொறுத்தல் முதலிய குணங்களை அரசியலடைவாற் கூறுகின்றாராதலின், பூதங்களின் அடைவு கூறாராயினார்.
இதனாற் சொல்லியது தன்கடற் பிறந்த ஞாயிறு தன்கடற் குளிக்கும் நாடனாதலால் செல்வமுடையயையாக வென்று வாழ்த்த வேண்டுவதின்மையின் நீடுவாழ்கவென வாழ்த்தியவாறாயிற்று.
விளக்கம்: குளிக்குமென்னும் பெயரெச்சவினை ஞாயிற்றின் வினையாயினும், ஞாயிற்றுக்கும் நாட்டுக்கு முள்ள தொடர்பு இடத்துநிகழ் பொருளுக்கும் இடத்துக்கு முள்ள தொடர்பாவது பற்றி, குளிக்கும் நாடென முடிந்தது. இதுபற்றியே "குளிக்கும் நாடென இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்துமேல் ஏறி நின்ற" தென்றார். வானவரம்பனை, வானவரம்ப வென முன்னிலையாய்க் கொள்ளாது, "'நீயோ வான வரம்பனை?" என வினாவாக்கிக் கூறுவதுமுண்டென்றற்கு, வினா வாக்கி யுரைப்பாரு முளர் என்றார். சூதுபொருது நிலத்தை முன்பே கவர்ந்து கொண்டமையின், நிலம் தலைக்கொண்ட வென்பதற்கு நிலத்தைத் தம்மிடத்தே கொண்ட என வுரை கூறினார். நிலந்தலைக்கொண்ட தும்பை யென்பதற்கு, நிலத்தைக் கைக்கொள்ளுதல் காரணமாகத் தலையிற் சூடிக்கொண்ட தும்பை என்றும் பொருள் கூறலாமாதலால் "நிலங்கோடல் காரணமாகத் தலைக்கட் சூடிய வெனினு மமையும்" என்றார். பெருஞ்சோற்று மிகுபதம்- பெரிய சோறாகிய மிக்க வுணவு. பொருது களத்தொழிந்தவழி, சோறு கொடுத்தற்கு வழியின்மையின், ஒழிய வென்றதற்கு, "போர்க்களத்தின் படுந்துணையும்" என்று பொருள் கூறினார். முழுது என்பது எஞ்சாமை குறித்தலின், ஒழியாதென்றுரைத்தார். திரியாச் சுற்றம் என்றவிடத்து, திரிதல் சுற்றத்தார்க் காகாது அவரது சூழ்ச்சிக் காதலால், இதற்கு வேறுபாடில்லாத சூழ்ச்சியையுடைய மந்திரச் சுற்றம் என்று உரை கூறினார். சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை யென்றவிடத்து, பிணை யென்றது பெண்மானுக் கானமையின் சிறுதலை நவ்வியென்றது சிறிய தலையையுடைய மான்மறிக் காயிற்று. மறி, கன்று. "மறியிடைப்படுத்த மான்பிணை" (ஐங் 401) என வருதல் காண்க. அரசியலடைவாவது பொறை, சூழ்ச்சி, வலி, தெறல், அளியென நிற்கும் முறை. இவற்றிற் கேற்பவே நிலமும் விசும்பும் வளியும் தீயும் நீரு மென முறையே பாட்டின்கட் கூறப்படுகின்றன. பொறைக்கு நிலமும் சூழ்ச்சிக்கு விசும்பும், வலிக்குவளியும், தெறலுக்குத் தீயும், அளிக்கு நீரும் அடைவு எனவுணர்க.
"அகழ்வாரைத் தாங்கும் நிலம்" (குறள் 151) என்றும், "விசும்பினன்ன சூழ்ச்சி" (பேரா உரை. மேற். உவம.6) என்றும், "வளி மிகின் வலியு மில்லை" (புற. 51) என்றும் வருதல் காண்க. பூதங்களின் அடைவாவது நிலம், நீர், தீ, வளி, விசும்பு என நிற்பது. பொற்கோட் டிமயமும் பொதியமும் போன்று நடுக்கின்றி நிலியர் என இப்பாட்டுக் கூறுவதையுட்கொண்டே இளங்கோவடிகள், இமயத்தும் பொதியிலிடத்தும் உயர்ந்தோ ருண்மையின், உயர்ந்தோர் இவற்றிற்கு ஒடுக்கம் கூறார் என்று கூட்டி, இமயமாயினும் பொதியிலாயினும் புகாரேயாயினும் "நடுக்கின்றி நிலைஇய வென்ப தல்லதை" ஒடுக்கங் கூறார் உய்ர்ந்தோருண்மையின், முடிந்த கேள்வி முழுதுணர்ந்தோரே" என்று கூறுவது ஒப்புநோக்கத்தக்கது. இமயப் பொற்கோட்டையும் பொதியத்தையும் சேர வெடுத்தோதுதலால், இமயத்து அடிப்பகுதியில் நடந்த பாரதப் போர்நிகழ்ச்சியில் சேரமான் செய்த நடுநிலையுதவியை இவர் நேரிற் கண்டறிந்தவ ரெனத் துணிதற் கிடனாகிறது.
----------
3. பான்டியன் கருங்கையொள்வாட் பெரும்பெயர் வழுதி
இப் பெரும்பெயர் வழுதி இப் பாட்டின்கண் ஆசிரியர் இரும்பிடர்த் தலையாரால் "கருங்கை யொள்வாட் பெரும்பெயர் வழுதி" யெனவே அழைக்கப் படுகின்றா னாதலால் இவனது பெயரும் இதுவே போலும். இவன் கவுரியர் வழித் தோன்றலென்றும், தன்பால் வரும் இரவலர் குறிப்பறிந்து அவர் வேண்டுவன நல்கும் பெருங்கொடை வள்ளல் என்றும், இதனால் இவனிடம் இர்வலர் வந்த வண்ணமே யிருப்ப ரென்றும் கூறி, இவ்வகையால் உண்டாகும் புகழினும், சொல் தவறாத வாய்மையால் உண்டாகும் புகழே மிகச் சிறந்த தாதலால், "நிலம் பெயரினும் நின் சொல் பெயரல்" என்றும் இப்பாட்டின்கண் ஆசிரியர் வற்புறுத்துகின்றார்.
இப்பாட்டினைப் பாடிய ஆசிரியர் இரும்பிடர்த் தலையார் சோழன் கரிகாலனுக்கு அம்மான் என்று கூறுவர். இவர் யானையின் பெரிய கழுத்தை இப்பாட்டின்கண் இரும்பிடர்த்தலை யென்று சிறப்பித்துக் கூறுவது பற்றி, இத்தொடரால் இவரைச் சான்றோர் இரும்பிடர்த் தலையார் என வழங்கலாயினர். இவரது இயற்பெயர் தெரிந்திலது. இவர்பால் கரிகாலன் இளமையில் கல்விகற்றுச் சிறப்புற்றா னென்று முன்றுறை யரையனார் கூறுவர். இப்பாட்டில் இவர் பெரும் பெயர் வழுதியின் குடிப் பிறப்பும் மனை மாண்பும் கொடைப் புகழும் எடுத்தோதிப் பாராட்டி வாழ்த்தி யொ*ழியாது சொற்பெயராமை வேண்டும் என வற்புறுத்தும் திறம், கரிகாலனைப் பேரரசனாக்கும் திறம் இவர்பால் உண்மையினை நாமறியப் புலப்படுத்துகிறது.
உவவுமதி யுருவின் ஓங்கல் வெண்குடை
நிலவுக்கடல் வரைப்பின் மண்ணக நிழற்ற
ஏம முரசம் இழுமென முழங்க
நேமி யுய்த்த நேஎ நெஞ்சின்
தவிரா ஈகைக் கவுரியர் மருக 5
செயிர்தீர் கற்பிற் சேயிழை கணவ
பொன்னோடைப் புகரணிநுதல்
துன்னருந்திறல் கமழ்கடாஅத்
தெயிறுபடையாக எயிற்கத விடாஅக்
கயிறுபிணிக் கொண்ட கவிழ்மணி மருங்கிற் 10
பெருங்கை யானை யிரும்பிடர்த் தலையிருந்து
மருந்தில் கூற்றத் தருந்தொழில் சாயாக்
கருங்கை யொள்வாட் பெரும்பெயர் வழுதி
நிலம்பெயரினும் நின்சொற் பெயரல்
பொலங்கழற்காற் புலர்சாந்தின் 15
விலங்ககன்ற வியன்மார்ப
ஊரில்ல உயவரிய
நீரில்ல நீளிடைய
பார்வ லிருக்கைக் கவிகண் ணோக்கிற்
செந்தொடை பிழையா வன்க ணாடவர் 20
அம்புவிட வீழ்ந்தோர் வம்பப் பதுக்கைத்
திருந்துசிறை வளைவாய்ப் பருந்திருந் துயவும்
உன்ன மரத்த துன்னருங் கவலை
நின்னசை வேட்கையின் இரவலர் வருவரது
முன்ன முகத்தி னுணர்ந்தவர் 25
இன்மை தீர்த்தல் வன்மை யானே. (3)
திணயும் துறையும் அவை. பான்டியன் கருங்கையொள்வாட்
பெரும்பெயர் வழுதியை இரும்பிடர்த் தலையார் பாடியது.
உரை: உவவுமதி உருவின் - உவாநாளின் மதியினது வடிவு போலும் வடிவினையுடயை; ஓங்கல் வெண்குடை - உயர்ந்த வெண்கொற்றக் குடை; நிலவுக் கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற - நிலைபெற்ற கடலெல்லைக்கண் நிலத்தை நிழற்செய்ய; ஏம முரசம் இழுமென முழங்க - காவலாகிய வீரமுரசம் இழுமென முழங்கும் ஓசையையுடைத்தாய் முழங்க; நேமி யுய்த்த நேஎ நெஞ்சின் - சக்கரத்தைச் செலுத்திய ஈரமுடைய நெஞ்சினையும்; தவிரா ஈகை - ஒழியாத வண்மையினையுமுடைய; கவுரியர் மருக- பாண்டியர் மரபினுள்ளாய்; செயிர்தீர் கற்பின் சேயிழை கணவ - குற்றமற்ற கற்பினையுடைய சேயிழையுக்குத் தலைவ; பொன் ஓடைப் புகர் அணி நுதல் - பொன்னானியன்ற பட்டத்தையுடைய புகரணிந்த மத்தகத்தினையும்; துன்னருந் திறல் - அணுகுதற் கரிய வலியையும்; கமழ்கடா அத்து - மணநாறும் மதத்தினையும்; கயிறு பிணிக்கொண்ட கவிழ்மணி மருங்கின் - கயிற்றற் பிணித்தலைச் செய்த கவிழ்ந்த மணியணிந்த பக்கத்தையும்; பெருங்கை - பெருங்கையையுமுடைய; எயிறு படையாக - கொம்பு படைக் கலமாகக் கொண்டு; எயிற் கதவிடா - பகைவர் மதிலின்கட் கதவைக் குத்தி; யானை இரும்பிடர்த் தலையிருந்து - யானையினது பெரிய கழுத்திடத்தே யிருந்து; மருந்தில் கூற்றத்து அருந் தொழில் சாயா - பரிகாரமில்லத கூற்றத்தினது பொறுத்தற் கரிய கொலைத்தொழிலுக்கு இளையாத; கருங்கை ஒள்வாள் - வலிய கையின் கண்ணே ஒள்ளிய வாளினையுடைய; பெரும்பெயர் வழுதி-; நிலம் பெயரினும் நின்சொல் பெயரல் - நிலம் பிறழினும் நினது ஆணையாகிய சொல் பிறழா தொழியல் வேண்டும்; பொலங் கழற்கால் - பொன்னாற் செய்யப்பட்ட வீரக்கழல் புனைந்த காலினையும்; புலர்சாந்தின் விலங்கு அகன்ற வியன்மார்ப - பூசிப் புலர்ந்த சந்தனத்தை யுடைத்தாகிய குறுக்ககன்ற பரந்த மார்பினையு முடையோய்; ஊர்இல்ல - ஊரில்லாதனவும்; அரிய உயவ - பொறுத்தற்கரிய உயங்குதலை யுடையனவும்; நீரில்ல - நீரில்லாதனவும்; நீள் இடைய - நீண்ட வழியனவுமாகிய; பார்வல் இருக்கை - வம்பலரைச் நலியச் சேய்மைக்கண்ணே பார்த்திருக்கும் இருப்பினையும்; கவி கண் நோக்கின் - கையாற் கவிக்கப்பட்ட கண்ணாற் குறித்துப் பார்க்கும் பார்வையும்; செந்தொடை பிழையா வன்கண் - செவ்விய தொடை பிழையாத தறுகண்மையையுமுடைய; ஆடவர் - மறவர்தாம்; அம்பு விட வீழ்ந்தோர் வம்பப் பதுக்கை - அம்பை விடுதலாற் பட்டோரது உடல் மூடிய புதிய கற்குவையின்மேலே; திருந்து சிறை வளைவாய்ப் பருந்து - திருந்திய சிறகினையும் வளைந்த வாயினையுமுடைய பருந்து; இருந்து உயவும் - இருந்து வருந்தும்; உன்ன மரத்த துன்னருங்கவலை - உன்ன மரத்தினை யுடையவாகிய அணுகுதற் கரிய கவர்த்த வழியின் கண்ணே;நின் நசை வேட்கையின் இரவலர் வருவர் - நின்பால் நச்சிய விருப்பத்தால் இரப்போர் வருகுவர்; அது – அங்ஙனம் வருவது; முன்னம் முகத்தின் உணர்ந்து - அவர் மனக்குறிப்பை அவர் முகத்தானறிந்து; அவர் இன்மை தீர்த்தல் வன்மையான் - அவருடைய வறுமையைத் தீர்த்தலை வல்ல தன்மையான் எ -று.
நுதலையும் திறலையும் கடாத்தையும் மருங்கையும் பெருங்கையையுமுடைய யானைப் பிடர்த்தலை யிருந்து, எயிறு படையாக எயிற்கத விடாக் கூற்றத் தருந்தொழில் சாயாப் பெரும்பெயர் வழுதியென மாறிக் கூட்டுக. காலா லடுதல் கையாலூக்குத லன்றி எயிறு படையாக எயிற் கதவு இடக்கை விடாத பெருங்கை யானை யென இயைத்துரைப்பினுமமையும்; எயிற்கத விடாஅக் கயிறு பிணிக்கொண்ட வென இயைத் துரைப்பாரு முளர். ஊரில்ல, உயவரிய, நீரில்ல, நீளிடையவாகிய உன்னமரத்த கவலை யெனவும், பருந்திருந் துயவும் துன்னருங் கவலை யெனவும் இயையும்.
மருக, கணவ, வழுதி, மார்ப, இரவலர் வருவர், அஃது அவர் இன்மை தீர்த்தல் வன்மையான்; அதனால் நின் சொற்பெயரா தொழியல் வேண்டும் எனக் கூட்டி வினைமுடிவு செய்க; வாழ்த்தியதலாதல் விளங்க. வேண்டுமென ஒரு சொல் தந்துரைக்கப்பட்டது.
விளக்கம்: உவாமதி - முழுத்திங்கள். வெண்கொற்றக் குடைக்கு முழுமதி உவமம். நிலவுக் கடல், நிலைபெற்ற கடல்: "மழைகொளக் குறையாது புனல்புக நிறையாது, விலங்குவளி கடவுந் துளங்கிடுங் கமஞ் சூல்"(பதிற்15) என்று சான்றோர் கூறுதலால் கடற்கு நிலைபேறுண்மையறிக. "இமிழ்குரன் முரச மூன்று" (புறம்.58) என்றவற்றுள், வீர முரசமாகிய காவன் முரசினை ஈண்டு "ஏமமுரச" மென்றார், நேஎ ஈரம்; நேயம், நேச மென்பன இதனடியாகப் பிறந்தன. சேயிழையணிந்த கோப்பெருந்தேவியைச் சேயிழை யென்றார். அருந்தொழில் சாயா என்புழி நான்கனுருபு விரித்துரைக்கப்பட்டது. யானையின் மதம் ஏழிலைப்பாலையின் மணம் கமழும் என்ப வாகலின், "கமழ்கடாஅத்து" என்றார். கருங்கை யென்றவிடத்துக் கருமை, வலிமை குறித்து நின்றது, "கருங்கை வினைஞர்" (பெரும்.228) என்றாற் போல. இடக்கை-இடத்தல். இடைஅ-இடந்து. கட்புருவத்தின்மேற் கையைக் கவித்துத் தொலைவிற் குறித்த பொருளை நோக்கும் செயல்வகையைக் "கவிகண் நோக்கு," என்பர். "மருந்தில் கூற்றம்" என்றும் "அருந் தொழில்" என்றும் விதந்தோதியது சாதலின் கொடுமை யுணர்த்தி நிற்ப, அதற்குச் சாயாவழுதி யென்றது, வழுதியது சாதலஞ்சாத் தறு கண்மை விளக்கி நின்றது. பெயரல் என்பது அல்லீற் றெதிர்மறை வியங்கோ ளாயினும் வேண்டும் என ஒருசொல் பெய்துரைக்கப்பட்டது; உரைகாரர் "வாழ்த்தியலாதல் விளங்க வேண்டுமென ஒரு சொல் தந் துரைக்கப்பட்ட" தென்றார். "நிலத்திறம் பெயருங் காலை யாயினும், கிளந்தசொல் நீ பொய்ப்பறி யிலையே" (பதிற்.63) என்று பிறரும் கூறுதல் காண்க. இனி, அரசரது ஆணை, வழியொழுகப்படாது பிறழு மாயின், அரசியல் அறம் பொரு ளின்பங்கள் நிலவுதற் கரணாகா தொழியுமாதலால், சொல்லென்பதற்கு "ஆணையாகிய சொல்" லெனப் பொருள் கூறுகின்றார். பாட்டுக் கிடந்தபடியே பொருள்கொள்ளாது, "எயிறு படையாக வெயிற்கதவிடாஅ" என்பதனை, "இரும்பிடர்த் தலையிருந்" தென்பதன்பின் கூட்டிப் பொருள்கொள்ள வேண்டியிருத்தலின், "மாறிக் கூட்டுக" என வுரைக்கின்றார். உடைமையை மிகுத்தற்கண் செல்லும் மனத்தை மீட்டுப் பிறரது இன்மை தீர்த்தற்குச் செலுத்துதல் மிக்க வன்மையுடையார்க் கல்ல தாகாமையால், "தீர்த்தல் வன்மையான்" என்று உரைக்கின்றார்.
---------
4. சோழன் உருவப் பஃறேர் இளஞ்செட் சென்னி
இச் சோழவேந்தன் கரிகால்வளவனுக்குத் தந்தை யென்பர். பொருநராற்றுப்படைகாரர் கரிகாலனை, "உருவப் பஃறேர் இளையோன் சிறுவன்" என்பர். இளஞ்சேட்சென்னி அழுந்தூர் வேளிடை மகட் கொடை கொண்டான் எனத் தொல்காப்பியவுரையில் நச்சினார்க்கினியர் உரைக்கின்றார். பெருங்குன்றூர்கிழார், இவனை, "நீர்திகழ் கழனி நாடு கெழு பெருவிறல், வான்றோய் நீள்குடை வயமான் சென்னி" (புறம். 266) என்று பாராட்டுகின்றார். இனி, இப் பாட்டைப் பாடிய பரணர் சங்கத்தொகை நூல்களுட் காணப்படும் பாட்டுக்கள் பலவற்றைப் பாடியவர். இவர் பாட்டுக்கள் கற்பனை வளமும் வரலாற்றுக் குறிப்பும் செறிந் தனவாகும். இப் புறநானூற்றின்கண் இவர் பாடியனவாகப் பதின்மூன்று பாட்டுக்கள் உள்ளன. அதியமான் கோவலூரை யெறிந்த காலத்து அவனை இவர் பாராட்டிப் பாடியதாக ஒளவையார் குறிக்கின்றார். இவர் மருதத்திணையை அழகொழுகப் பாடும் அமைதியுடையவர்.
இப் பாட்டின்கண் ஆசிரியர் பரணர், உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னியின் காலாட்படை, குதிரைப்படை, யானைப்படை, தேர்ப்படை யென்ற நான்கும் போருழந்து சிறக்கும் பெருமையைப் புகழ்ந்து, தேர்மீது தோன்றும் அவனை, "நீ, மரக்கடல் நிவந்தெழுதரு, செஞ் ஞாயிற்றுக் கவினை" என்றும், "நீ இத்தன்மையாக, நின்னைப் பகைத்தோருடைய நாடு அழியுமென அதன் அழிவுக்கிரங்கி, "தாயில் தூவாக் குழவி போல ஓவாது கூவும்" என்றும் கூறுகின்றார்.
வாள், வலந்தர மறுப்பட்டன
செவ்வானத்து வனப்புப்போன்றன
தாள், களங்கொளக் கழல்பறைந்தன
கொல்ல் லேற்றின் மருப்புப் போன்றன
தோல், துவைத்தம்பிற் றுளைதோன்றுவ 5
நிலைக்கொராஅ இலக்கம்போன்றன
மாவே, எறிபதத்தான் இடங்காட்டக்
கறுழ்பொருத செவ்வாயான்
எருத்துவவ்விய புலிபோன்றன
களிறே, கதவெறியாச் சிவந்துராஅய் 10
நுதிமழுங்கிய வெண்கோட்டான்
உயிருண்ணுங் கூற்றுப்போன்றன
நீயே, அலங்குளைப் பரீஇஇவுளிப்
பொலந்தேர்மிசைப் பொலிவுதோன்றி
மாக்கடல் நிவந்தெழுதரும் 15
செஞ்ஞாயிற்றுக் கவினைமாதோ
அனையை ஆகன் மாறே
தாயில் தூவாக் குழவி போல
ஓவாது கூஉநின் உடற்றியோர் நாடே. (4)
திணை: வஞ்சி; துறை: கொற்றவள்ளை. சோழன் உருவப் பஃறேர் இளசேட் சென்னியைப் பரணர் பாடியது.
உறை : வாள் வலந்தர மறுப்பட்டன - வாள் வெற்றியைத் தருதலாற் குருதிக்கறை பட்டன; செவ்வானத்து வனப்புப் போன்றன - செக்கர்வானத்தினது அழகை யொத்தன; தாள் களங்கொளக் கழல்பறைந்தன - கால் புடைபெயர்ந்து போர் செய்து களத்தைத் தமதாக்கிக் கொள்ளுதலால் வீரக்கழல் அருப்புத்தொழில் பறைந்தவை; கொல்லேற்றின் மருப்புப் போன்றன - கொல்லும் ஆனேற்றினது கோட்டை யொத்தன; தோல் துவைத் தம்பின் துளை தோன்றுவ-பரிசைகள் ஒலித்துத் தைத்த அம்புகளால் துளை தோன்றுவன; நிலைக்கு ஓராஅ இலக்கம் போன்றன- நிலையிற் றப்பாத இலக்கத்தை யொத்தன; மா எறிபதத்தான் இடம் காட்ட - குதிரைகள் எதிரியை யெறியும் காலமுடையான் இடவாய் வலவாயாகிய இடத்தைக் காட்ட; கறுழ் பொருத செவ்வாயான் - முகக்கருவி பொரப்பட்ட செவ்வாயை யுடைமையான்; எருத்து வவ்விய புலி போன்றன - மான் முதலாயினவற்றின் கழுத்தைக் கவ்வி யுதிரம் உவற்றியுண்ட புலியை யொத்தன; களிறு - களிறுகள், கதவெறியாச் சிவந்து உராஅய் - கதவை முறித்து வெகுண் டுலாவி; நுதி மழுங்கிய வெண்கோட்டான் - நுனை தேய்ந்த வெளிய கோட்டையுடைமையான்; உயிர் உண்ணும் கூற்றுப் போன்றன - உயிரையுண்ணும் கூற்றை யொத்தன; நீயே - நீதான்; அலங்குளைப் பரீஇ இவுளிப் பொலந் தேர்மிசை - அசைந்த தலையாட்டமணிந்த கதியையுடைய குதிரையாற் பூட்டப்பட்ட பொற் றேரின் மேலே; பொலிவு தோன்றி - பொலிவொடு தோன்றுதலால்; மாக்கடல் நிவந்து எழுதரு செஞ் ஞாயிற்றுக் கவினை - கரிய கடலின்கண்ணே யோங்கி யெழுகின்ற செய்ய ஞாயிற்றினது ஒளியையுடையை; அனையை யாகன்மாறு - அத்தன்மையையாதலால்; தாயில் தூவாக் குழவிபோல - தாயில்லாத உண்ணாக் குழவி போல; ஓவாது கூஉம் - ஒழியாது கூப்பிடும்; எஇன் உடற்றியோர் நாடு - நின்னைச் சினப்பவருடைய நாடு எ - று.
நாடென்றது, நாட்டுள் வாழ்வாரை. மாறென்பது ஏதுப்பொருள் படுவதோர் இடைச்சொல். கழல் பறிந்தன வென்றோதி வீரக்கழல் நீங்கியவை யென்றுரைப்பாரு முளர். வாளாகிய மறுப்பட்டவையெனவும், கழலாகிய பறைந்தவையெனவும். தோலாகிய துளை தோன்றுவவெனவும் கொள்க. துவைத்துத் தோன்றுவவென வியையும். எறிபதத்தா னென்பதற்கு ஒத்தும் காலையுடையா னென்றுரைப்பாருமுளர். செஞ்ஞாயிற்றுக் கவினையென்ற துணையும் மன்னவன் புகழும் ஓவாது கூஉம் நின் உடற்றியோர் நாடென ஒன்னார் நாடழி பிரங்கலும் ஓதலான் இது கொற்றவள்ளை யாயிற்று.
விளக்கம்: போர் செய்யுமிடத்துக் குருதிக் கறை படிந்து சிவந்து தோன்றும் வாட்படைக்குச் செக்கர் வானம் உவமம். வீரரணியும் கழல் முல்லையரும்புபோல வேலைப்பாடமைந்தவையாதலால், அவை வீரர் தம்முடைய காலை முன்னும் பின்னும் பக்கத்தும் புடை பெயர்த்துவைத்துத் தாவடியிட்டுப் பொருங்கால் பிறர் கழலோடும் நிலத்திற் கிடக்கும் பிறவற்றோடும் உடைப்புண்டு அரும்புகள் உதிர்ந்து மழுங்கி விடுதலைப் பறைதலென்று கூறுகின்றாராதலால், போரின்கண் களத்தைத் தமதாக்கிக் கொள்ளும் முயற்சியில் வீரர் கழல்கள் பறைந்து மழுங்குதல் கண்டு "கனங்கொளக் கழல் பறைந்தன" என்றார். தோல், கேடயம்; இது பரிசை யென்றும் வழங்கும். தோலாற் செய்யப்படுவது பற்றி. இது தோல் என்றும் பெயர் பெறும். துவைத்தல், ஒலித்தல். இலக்கம் இல்வழி, அதனை நோக்கி வீரர் நிலையின் றியங்குபவாதலால், இலக்கத்தை "நிலைக்கொராஅ இலக்கம்" என்றார். எறிபதம், பகைவரை யெறிதற்கு வேண்டும் காலம். அக்காலம் வாய்க்கப்பெற்ற வீரன் "எறிபதத்தான்" எனப்பட்டான். உவற்றியுண்டல், உறிஞ்சியுண்டல். பரி, குதிரையின் கதி; இது பரீஇயென அளபெடுத்து நின்றது. தோன்றி யென்னும் வினையெச்சம் தோன்றுதலாலெனக் காரணப் பொருளில் வந்தது. தூவாக் குழவி, உண்ணாக்குழவி; துவ்வாமை தூவாமை யென விகாரம். "துவைத் தம்பின் துளை தோன்றுவ" யன்பதில், துவைத்தென்னும் வினையெச்சம் தோன்றுவ வென்பதனோடு முடிதலின். "துவைத்துத் தோன்றுவ வென வியையும்" என்றுரைத்தார். காலாளும் குதிரையும் யானையும் தேருமாகிய படையினது மேற் செலவினைப் பாராட்டிக் கூறுதலால் இது வஞ்சித்திணையாயிற்று. கொற்றவள்ளையாவது வேந்தனது புகழைப் பாராட்டி, அவன் பகைவர் நாட்டது அழிவுக் கிரங்கிக் கூறுவது. இதனை விளக்குதற்பொருட்டே உரைகாரர், "செஞ்ஞாயிற்றுக் கவினை.....கொற்றவள்ளை யாயிற்" றென்றார்.
---------
5. சேரமான் கருவூரேரிய ஒள்வாட் கோப்பெருஞ்சேர லிரும்பொறை
இச் சேர வேந்தன் இரும்பொறைக் குடியிற் பிறந்தவன். ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் என்பது இவன தியற்பெயர். இவன் தன் அரசியலைக் கொங்குநாட்டுக் கருவூர்வரையில் நிலவச்செய்து அந்நகர்க்கண்ணே அரசுகட்டிலேறி முடிசூடிக்கொண்ட சிறப்புப்பற்றி, கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேர லிரும்பொறை யென வழங்கப்படுகின்றான். இவன் சிறந்த மெய்ப்பொலி வுடையவன். தன்னைக் கண்டார்க்கு நலஞ்செய்யும் இவனது தோற்றச் சிறப்பு. நரிவெரூஉத்தலையார் என்னும் சான்றோர்க்குற்ற மெய்வேறுபாடு இவனது காட்சியால் நீங்கிப் பண்டைய நலத்தை யடைந்தது என்று கூறுவர். பண்டைய நல் லுடம்பு பெற்ற அச்சான்றோர் பாடியது இப்பாட்டு.
இதன்கண் அவர் கோப்பெருஞ் சேர லிரும்பொறையைக் கண்டு அவனது தோற்றப் பொலிவை வியந்து தனக்குச் செய்ததுபோலப் பிறர்க்கும் இன்பம் செய்யும் இயல்பு குன்றாதிருப்பது காரணமாக, இத் தோற்றப் பொலிவு ***க்குறைவாலும் சிற்றினச் சேர்க்கையாலும் மக்கள்பால் அளியின்மையாலும் குன்றுமென நினைத்து, "பெரும, நீகானக நாடனாதலால், செல்வக்குறைவிலை; ஆதலால், நீ நிரயங்கொள்ளும் சிற்றினத்தைச் சேராது நாட்டினைக் குழவி வளர்ப்பாரைப் போலப் பாதுகாப்பாயாக" என அறிவுறுத்துகின்றார்.
எருமை யன்ன கருங்கல் லிடைதோ
றானிற் பரக்கும் யானைய முன்பின்
கானக நாடனை நீயோ பெரும
நீயோ ராகலி னின்னொன்று மொழிவல்
அருளும் அன்பும் நீக்கி நீங்கா 5
நிரயங் கொள்பவரொ டொன்றாது காவல்
குழவி கொள்பரின் ஓம்புமதி
அளிதோ தானேயது பெறலருங் குரைத்தே. (5)
திணை: பாடாண்டிணை. துறை: செவியறிவுறூஉ: பொருண் மொழிக் காஞ்சியுமாம். சேரமான் கருவூரேறிய ஒள்வாட் கோப்பெருஞ் சேர லிரும்பொறையைக் கண்டஞான்று நின்னுடம்பு பெறுவாயாகென, அவனைக் சென்று கண்டு தம்முடம்பு பெற்றுநின்ற நரிவெரூஉத்தலையார் பாடியது.
உரை: எருமையன்ன கருங்கல் இடைதோறு - எருமை போலும் வடிவையுடைய கரிய கற்பொருந்திய இடந்தோறும்; ஆனிற் பரக்கும் யானைய - பெற்றம்போலப் பரக்கும் யானையை யுடையவாய; முன்பின் கான் அக நாடனை - வலியையுடைய காட்டிற்குள்ளாகிய நாட்டினையுடையாய்; பெரும-; நீ ஆகலிந் நீ இங்ஙனம் பகைவரான் அணுகப்படாத இயல்பாகிய பெருஞ் செல்வத்தை யுடையனாதலால்; நின் ஒன்று மொழிவல் - நினக்கு ஒரு காரியஞ் சொல்லுவேன் அதனைக் கேட்பாயாக; அருளும் அன்பும் நீக்கி - அருளையும் அன்பையும் நீக்கி; நீங்கா நிரயங் கொள்பவரோடு ஒன்றாது - பாவஞ்செய்தாரை நீங்காத நரகத்தைத் தமக்கு இடமாகக் கொள்பவரோடு பொருந்தாது; காவல் - நீ காக்கப்படும் தேயத்தை; குழவி கொள்பவரின் ஓம்பு மதி - குழவியை வளர்ப்பாரைப் போலப் பாதுகாப்பாயாக; அளிது அது - அளிக்கத்தக்க தொன்று அக்காவல்; பெறல் அருங்குரைத்து - அது பெறுதற் கரிது எ - று.
காவல் என்றது ஆகுபெயர். நாடனை: ஐகாரம் முன்னிலைக்கண் வந்தது. ஓவும் ஓரும் அசைநிலை. அருளாவது ஒன்றின் துயர் கண்டாற் காரணமின்றித் தோன்றும் இரக்கம். அன்பாவது தன்னால் புரக்கப் படுவார்மேல் உளதாகிய காதல். இனி, ஓகாரத்தைப் பிரித்து வினா வாக்கிப் கோப்பெருஞ்சேர லிரும்பொறையைக் கண்டஞான்று நின்னுடம்பு பெறுவாயெனத் தம்முடம்பு பெற்றமை தோன்ற நீயோவென வினாவினாராக்கி யுரைப்பாரு முளர்.
காவல் குளவி கொள்பவரின் ஓம்பையென்றமையால் செவியறிவுறுாஉவும், அருளும் அன்பும் நீக்கி நீங்கா நிரயங்கொள்பவரோ டொன்றா தென்றமையால் பொருண்மொழிக் காஞ்சியுமாயிற்று.
விளக்கம் : பல எருமைகட்கிடையே விரவி நின்று மேயும் புசுக் கூட்டம்போலக் கருங்கற்பாறைகட்கிடையே விரவி யானைக்கூட்டம் காணப்படுகிற தென்பதை, "எருமை யன்ன கருங்கல் லிடைதோ,றானிற் பரக்கும் யானைய" என்றார். இது வடிவுவமம். பரக்கும் - பரந்து சென்று மேயும். முன்பு-வலி. கான் அக நாடு-காட்டின் அகத்தாகிய நாடு; காடு சூழ்ந்த நாடென்பதாம். கானக நாடனை நீயோ வென்பது, காட்டிற்குள்ளாகிய நாட்டினையுடையோன் நீதானோ வென்று பொருள் கொள்ளவும் இடந் தருதலின், ஓகாரத்தைப் பிரித்து நீ கானக நாடனையோ என வினாவினாராக்கி யுரைப்பாரு முளர் என்றுரைத்தார் கோப்பெருஞ் சேர லிரும்பொறையைக் காணில் உடம்பு பெறுவையெனச் சான்றோர் தமக்குரைத்தவாறே, நரிவெரூஉத்தலையார் அவனைக் கண்டு தம்முடம்பைப்பெற்று அதனால் உண்டாகிய வியப்பால், சான்றோரால் உரைக்கப்பட்ட கானக நாடனாகிய கோப்பெருஞ்சேரலிரும்பொறை நீயோ என்றா ரெனப் பொருள்கொள்வாரு முண்டு என்பதாம். காவலென்னுந் தொழில் காக்கப்படுந் தேயத்துக்காயினமையின் ஆகுபெயர் என்றார். குழவி கொள்பவரின் என்புழிக் கொள்ளுதல் வளர்த்துக் கொள்ளுதல். இன் : உவமப்பொருட்டு.
இனி, இப்பாட்டை வாயுறைவாழ்த்தாகக் கொண்ட நச்சினார்க்கினியர் " இதனுள் நிரயங் கொள்பவரோ டொன்றாது காவலை யோம்பென வேம்புங் கடுவும்போல வெய்தாகக் கூறி அவற் குறுதி பயத்தலின் வாயுறை வாழ்த்தாயிற்" றென்றார்.
கானக நாடென்றது, காவலும் செல்வமும் உடைய நாடென்பது பட நிற்றலின், அதற்கேற்ப "ஆகலின்" என்றவிடத்து "இங்ஙனம் பகைவரா னணுகப்படாத" என்பது முதலிய சொற்களைப் பெய்து கூறினார். இவை இசை யெச்சம்.
--------
6. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
இப் பாண்டியன் யாகசாலைகள் பல நிறுவி யாகங்கள் செய்தவன் என இவன் பெயராலும் நெட்டிமையார் பட்டாலும் அறியலாம். இவனை வாழ்த்தும் சான்றோர் "பஃறுளியாற்று மணலினும் பலயாண்டு வாழ்க" என வாழ்த்துதலால், இவன் குமரிக் கோடும் பஃறுளியாறும் கடல் கொள்ளப்படுதற்கு முன்பே நம் தமிழகத்தில் இருந்தவனென்பது பெறப்படுகிறது. இப் பாண்டியனைப் பாடும் காரிகிழார் காரி யென்னும் ஊரினர்: இவ்வூர் தொண்டைநாட்டிலுள்ளதென்றும், இப் போது இதற்கு இராமகிரியென்று பெயர் வழங்குகிற தென்றும் கூறுப.
இப் பாட்டின்கண், ஆசிரியர் காரிகிழார் பாண்டியனை நோக்கி, "வேந்தே, நினக்கு எல்லா உலகினும் உருவும் புகழும் உண்டாகுக; நின் கோல் ஒருதிறம் பற்றாது நடுநிலை நிற்க; நின் படைகுடி முதலியன சிறக்க; பகைப்புலத்து வென்ற நன்கலங்களைப் பரிசிலர்க்கு வழங்கி புயர்வதோடு முக்கட்செல்வன் நகர்வலம் செய்தற்கண் நின் குடை பணிக; நான்மறை முனிவர் கைகவித்து வாழ்த்துங்கால் நின் சென்னி தாழ்க; பகைப்புலத்துச் சுடுபுகையால் நின் கண்ணி வாடுக; மகளிர் கூட்டத்திற் சினமின்றி மெல்லியனாகுக; மதியமும் ஞாயிறும்போல இந் நிலமிசை மன்னுவாயாக" எனச் சொல்லி வாழ்த்துகின்றார்.
வடா அது பனிபடு நெடுவரை வடக்கும்
தெனாஅ துருகெழு குமரியின் றெற்கும்
குணாஅது கரைபொரு தொடுகடற் குணக்கும்
குடாஅது தொன்றுமுதிர் பெளவத்தின் குடக்கும்
கீழது, முப்புண ரடுக்கிய முறைமுதற் கட்டின் 5
நீர்நிலை நிவப்பின் கீழும் மேல
தானிலை யுலகத் தானு மானா
துருவும் புகழு மாகி விரிசீர்த்
தெரிகோன் ஞமன்ன் போல வொருதிறம்
பற்ற லிலியரோ நிற்றிறஞ் சிறக்க 10
செய்வினைக் கெதிர்ந்த தெவ்வர் தேஎத்துக்
கடற்படை குளிப்ப மண்டி யடர்ப்புகர்ச்
சிறுகண் யானை செவ்விதி னேவிப்
பாசவற் படப்பை யாரெயில் பலதந்
தவ்வெயிற் கொண்ட செய்வுறு நன்கலம் 15
பரிசின் மாக்கட்கு வரிசையி னல்கிப்
பணியிய ரத்தைநின் குடையே முனிவர்
முக்கட் செல்வர் நகர் நகர்வலஞ் செயற்கே
இறைஞ்சுக பெருமநின் சென்னி சிறந்த
நான்மறை முனிவ ரேந்துகை யெதிரே 20
வாடுக விறைவநின் கண்ணி யொன்னார்
நாடுசுடு கமழ்புகை யெறித்த லானே
செலிய ரத்தைநின் வெகுளி வாலிழை
மங்கையர் துனித்த வாண்முகத் தெதிரே
ஆங்க, வென்றி யெல்லாம் வென்றகத் தடக்கி 25
தண்டா வீகைத் தகைமாண் குடுமி
தண்கதிர் மதியம் போலவுந் தெறுசுடர்
ஒண்கதிர் ஞாயிறு போலவும்
மன்னிய பெருமநீ நிலமிசை யானே. (6)
திணையும் துறையுமவை; துறை - வாழ்த்தியலுமாம். பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் காரிகிழார் பாடியது.
உரை: வாடாஅது பனிபடு நெடுவரை வடக்கும் - வடக்கின் கண்ணது பனிதங்கிய நெடிய இமயமலையின் வடக்கும்; தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும் - தெற்கின் கண்ணது உட்குந் திறம்பொருந்திய கன்னியாற்றின் தெற்கும்; குணாஅது கரை பொரு தொடு கடற் குணக்கும் - கீழ்க்கண்ணது கரையைப் பொருகின்ற சகரரால் தோண்டப்பட்ட சாகரத்தின் கிழக்கும்; குடாஅது தொன்று முதிர் பொளவத்தின் குடக்கும் - மேல்கண்ணது பழையதாய் முதிர்ந்த கடலின் மேற்கும்; கீழது- கீழதாகிய: முப்புணர் அடுக்கிய முறை முதற் கட்டின் - நிலமும் ஆகாயமும் சுவர்க்கமுமென மூன்றுங் கூடிய புணர்ச்சியாக அடுக்கப்பட்ட அடைவின்கண் முதற்கட்டாகிய; நீர்நிலை நிவப்பின் கீழும் - நீர்நிலைக்கண் ஓங்கிய நிலத்தின் கீழும்; மேலது ஆன்நிலை உலகத்தானும் - மேலதாகிய கோ லோகத்தின்கண்ணும்; ஆனாது - அமையாது; உருவும் புகழும் ஆகி - உட்கும் புகழுமாக; விரிசீர்த் தெரிகோல் *ஞமன்ன் போல - பரந்த அளவையுடைய பொருள்களை ஆராயும் துலாக்கோலின்கட் சமன்வாய் போல; ஒரு திறம் பற்றல் இலியர் - ஒருபக்கம் கோடாதொழிக; நின் திறம் சிறக்க - நினது படை குடி முதலாகிய கூறுபாடுகள் சிறக்க; செய்வினைக் கெதிர்ந்த தெவ்வர் தேஎத்து - போர் செய்தற்கு மாறுபட்ட பகைவர் தேயத்தின் கண்ணே; கடற்படை குளிப்ப மண்டி - நினது கடல்போலும் படை மேல் விழுந்து உள்புக மிக்குச் சென்று; அடர்ப்புகர்ச் சிறுகண் யானை செவ்விதின் ஏவி - அடர்ந்த புகரினையுடைய சிறுகண் யானையைத் தடையின்றி நேரே யேவி; பாசவல் படப்பை ஆரெயில் பல தந்து - பசிய விளைநிலப் பக்கத்தையுடைய அரிய மதிலரண் பலவற்றையுங் கொண்டு; அவ் வெயில் கொண்ட செய்வுறு நன்கலம் - அவ்வரணின்கட் கொள்ளப்பட்ட அழகுபடச் செய்த நல்ல அணிகலங்களை; பரிசில் மாக்கட்கு வரிசையின் நல்கி - பரிசிலர்க்கு வரிசையின் வழங்கி; நின் குடை - நினது கொற்றக் குடை; முனிவர் முக்கட் செல்வர் நகர் வலம் செயற்கு - முனிவராற் பரவப்படும் மூன்று திருநயனத்தையுடைய செல்வரது கோயிலை வலம் வருவதற்கு; பணியியர்- தாழ்க; பெரும-; நின் சென்னி - நினது முடி; சிறந்த நான்மறை முனிவர் ஏந்து கை யெதிரே - மிக்க நான்கு வேதத் தினையுடைய அந்தணர் நின்னை நீடு வாழ்கவென் றெடுத்தகையின் முன்னே; இறைஞ்சுக - வணங்குக; இறைவ-; நின் கண்ணி - நினது கண்ணி; ஒன்னார் நாடு சுடு கமழ்புகை எறித்தலான் வாடுக - நின் பகைவரது நாட்டைச் சுடும் பல மணநாறும் புகையுறைத்தலான் வாடுக; நின் வெகுளி - நினது சினம்; வாலிழை மங்கையர் துனித்த வாண்முகத் தெதிரே செலியர் - வெளிய முத்தாரத்தையுடைய நின் தேவிய,உடைய துனித்த ஒள்யையுடைய முகத்தின் முன்னர்த் தணிக; வென்று வென்றி யெல்லாம் அகத்தடங்கிய - வென்று வென்றி முழுதையும் வியவாது நின்மனத்தே உட்கொண்ட; தண்டா ஈகை தகை மாண் குடுமி - தணியாத வண்மையையுடைய தகுதி மாட்சிமைப் பட்ட குடுமி; தண் கதிர் மதியம் போலவும் - குளிர்ந்த சுடரையுடைய திங்களை யொப்பவும்; தெறு சுடர்ஒண் கதிர் ஞாயிறு போலவும் - சுடுகின்ற ஒளிபொருந்திய ஒள்ளிய கதிரையுடைய ஞாயிற்றை யொப்பவும்; பெரும-; மன்னிய - நிலை பெறுவாயாக; நீ நிலமியையானே - நீ உலகத்தின்மேல் எ - று.
வடாஅ தென்னும் முற்றுவினைக்குறிப்பைப் பெயர்ப்படுத்தி, பனிபடு நெடுவரையோடு பண்பொட்டாக்கி, அதன் வடக்கு மென்க. ஒழிந்தனவும் அன்ன. "மேலது" துறக்கத்தின் மேலுமென்பார், அதற்கு மேலதாகிய "ஆனிலை யுலகத்தானு" மென்றார். உரு வென்பது இவனாணையாற் பிற ரஞ்சும் உட்குடைமை. அத்தையும் ஆங்கவும் அசைநிலை.
குடுமி, பெரும, உருவும் புகழும் ஆக; ஒருதிறம் பற்றா தொழிக; நிற்றிறம் சிறக்க; பணிக; இறைஞ்சுக; வாடுக; செல்லுக; பரிசின் மாக்கட்கு நல்கி,மதியம் போலவும்,ஞாயிறு போலவும்,பெரும,நீ நிலத்தின் மிசை மன்னுக வெனக் கூட்டி வினைமுடிவு செய்க.
தேஎத்தென்பதனுள், அத்தை அசைநிலையாக்கித் தேயம் கடற் படைக்குள்ளே குளிப்ப வென்றுரைப்பாருமுளர். ஞமன், யமனெனினு மமையும். அடற்புகர்ச் சிறுகண் யானை யென்று பாடமோதி, கொலையைச் செய்யும் புகரையுடைய யானை யெனினு மமையும். ஆகி, ஆகவெனத் திரிக்க; ஆகி யென்பதனைத் திரியாது நிற்றிறஞ் சிறக்க வென் பதனோ டியைத் துரைப்பாரு முளர். நின்றிறம், நிற்றிறம் என வலிந்து நகர்வலஞ் செயற்குப் பணியியரென வீடும், ஏந்துகை யெதிர் இறைஞ்சுக வென அறமும், புகையெறித்தலான் வாடுகவெனப் பொருளும், முகத்தெதிர் தணிகவென இன்பமும் கூறியாவாறாயிற்று. இஃது இவ்வாறு செய்கவென அரசியல் கூறலில் செவியறிவுறூஉம், மதியமும் ஞாயிறும் போல மன்னுக வென்றமையான் வாழ்த்தியலுமாயிற்று.
விளக்கம்: வடக்கின் கண்ணது வடாஅது, தெற்கின் கண்ணதுதெனாஅது, குணக்கின் கண்ணது குணாஅது, குடக்கின் கண்ணதுகுடாஅது என வந்தன."கண்ணென் வேற்றுமை நிலத்தினானும்" (தொல். சொல். 213) என்பதனால், இவை யாவும், ஏழாம் வேற்றுமைப் பொருண்மைக் கண்வந்த வினைக்குறிப்புமுற்று.
இவை பெயராய், வடக்கின்கண்ணதாகிய நெடுவரை யெனவும், தெற்கின்கண்ணதாகிய குமரியெனவும், குணக்கின்கண்ணதாகிய தொடுகடலெனவும், குடக்கின்கண்ணதாகிய பௌவமெனவும் இரு பெயரொட்டுப் பண்புத்தொகையாயின. இதனால், இவ்வுரைகாரர், "வடாதென்னும் முற்றுவினைக் குறிப்பைப் பெயர்ப்படுத்திப் பனி படு நெடுவரையொடு பண்பொட்டாக்கி, அதன் வடக்குமென்க" என்றார். பண்பொட்டென்றது இருபெயரொட்டுப் பண்புத்தொகை. தொடுகடல், தோண்டப்பட்ட கடலெனப் பொருள்படுதலின் இதற்கேற்ப, "சகரரால் தோண்டப்பட்ட சாகரம்" என்று உரைத்தார். சகரர் தோண்டியது சாகரமாயிற்று. கீழைக் கடலினும் மேலைக் கடல் பழைதாதலால், அதனைத் "தொன்றுமுதிர் பௌவம்" என்றார். இப்பாண்டியன் காலத்தில் தெற்கில் கடலில்லையாதலால், "தெனாஅது உருகெழு குமரி" யென்றாராக, உரைகாரரும் "தெற்கின் கண்ணது உட்குந் திறம்பொருந்திய கன்னியா" றென்றுரை கூறினார். மேலது என்றது, மேலுள்ள துறக்க முதலிய உலகுகளையெல்லாம் அகப்படுத்தி நிற்குமாயினும், எல்லாவுலகிற்கும் மேலதாகியா ஆனிலையுலகிற்காயிற்று. "உருவுட் காகும்" (தொல். சொல். 300) என்பவாகலின், அவ்வுட்காவது "ஆணையாற் பிறர் அஞ்சும் உட்குடைமை" என்றார். பணியியரத்தை, செலியரத்தை என நின்ற அத்தையும், ஆங்க வென்பதும் அசை நிலை. தேஎம் என்பது அத்துச் சாரியை பெற்றுத் "தேஎத்து" என நிற்கும். "தெவ்வர் தேஎத்துக் கடற்படை குளிப்ப" என்பதற்கு இங்கே கூறியது போலவன்றி வேறுரைத்துலு முண்டு. தேஎத்து என்பதன் அத்துச்சாரியையை அசைனிலையாக்கி விலக்கி; தேஎம் என நிறுத்தி, தேஎம் கடற்படைக்குள்ளே குளிப்ப (மூழ்க) என்று இயைத்து, பகைவரது தேயம் படையாகியு கடலுக்குள்ளே மூழ்க என்று பொருள் கூறுபவரும் உண்டு. உருவும் புகழுமாகி நிற்றிறம் சிறக்க என இயைத்து, உருவும்,புகழும் உடையவாய் நின் படை குடி முதலிய திறங்கள் சிறக்க வென்றுரைப்பவரு முண்டென்பதை,"ஆகியென்பதைத் திரியாது நிற்றிறஞ் சிறக்க வென்பதனோ டியைத்துரைப்பாருமுளர்" என்றார்.
அறமும் பொருளும் இன்பமும் வீடும் என்ற நான்கும் பெறுக வென்றறிவுறுத்துவது சான்றோர்க் கியல்பாதலால், காரிகிழாரும் பாண்டியற்குப் பணிக வென்பதனால் வீடும், இறைஞ்சுக வென்பதனால் அறமும், வாடுக வென்பதனால் பொருளும், தணிக வென்பதனால் இன்பமும் கூறினார். அற முதலிய நான்கனுள் சான்றோரால் தலையாயதெனக் கருதப்படுவது வீடாதலின் அதனை முதலிலும், கடையாக வைத்து ஒதுக்கப்படுவது இன்பமாதலின் அதனை இறுதியிலும் ஓதினார். வீடுபேற்றுக்கு வாயிலாதலின் அறத்தை வீட்டை யடுத்தும், இன்பத்துக்கு ஆக்கமாதலின் பொருளை அதனை யடுத்தும் வைத்துரைத்தார்.
வேந்தன்பால் நடுவுநிலை இன்றாயின், படை குடி அமைச்சு நட்பு முதலிய உறுப்புக்கள் சிறப்புற நின்று அரசியலுக்குத் துணைசெய்யாவாதலால் "ஒரு திறம் பற்றலிலியரோ" என்றார். அரசியலுக்கு உறுப்பாகிய படை குடி அமைச்சு முதலிய ஆறனையும் "திறம்" என்றார்.
திறம்-கூறு. ஞமன்-துலாக்கோலின் நாக்கு. பகைவர் மதிலைக் கவர்ந்து அவ்விடத்துப் பகைமன்னர் திறையாகத் தரும் செல்வத்தைக் கொணர்ந்து பரிசிலர்க் கீவது பண்டைத் தமிழ்வேந்தர் மரபாதலால், "ஆரெயில் பலதந்து அவ்வெயிற் கொண்ட செய்வுறு நன்கலம், பரிசில் மாக்கட்கு நல்கி" என்றார். "பலர் புறங் கண்டவர் அருங்கலந் தரீஇப், புலவோர்க்குச் சுரக்கு மவன் ஈகை மாரியும்" (மலைபடு.71-2) என்று பிறரும் கூறுதல் காண்க. பரிசிலர்க்கு வழங்குமிடத்தும் பொதுவுற வழங்காது பரிசிலரது தகுதியறிந்து அதற்கேற்ப வழங்குதல் வேண்டு மென்பதை, "வரிசையின் நல்கி" என்றார். "பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின், அதுநோக்கி வாழ்வார் பலர்" (குறள். 528) என்று சான்றோர் கூறுப. மகளி ரூடுமிடத்துச் சிறிது சினம் நிகழினும், ஊடியவரை உணர்த்துதற்கண் கருத்தைச் செலுத்தாது அவரை வாடப்பண்ணிக் காதலின்பத்தைக் கெடுக்குமாதலால், "செலியரத்தை நின் வெகுளி" என்றார். "ஊடி யவரை யுணராமை வாடிய, வள்ளி முதலரிந் தற்று" (1304) என்பது தமிழ்மறை. "நான் மறை முனிவர் ஏந்துகை யெதுரே இறைஞ்சுக பெரும" என்கின்றா ராதலால், "முனிவர் முக்கட் செல்வர்" என்ற விடத்து "முனிவராற் பரவப்படும் முக்கட் செல்வர்" என்று உரை கூறினார்; அவராற் பரவப்படும் அருந்தவச் செல்வம் முக்கட் செல்வரித் துண்பென் றறிக.
---------
7. சோழன் கரிகாற் பெருவளத்தான்
சோழன் கரிகாலன் தமிழ் மக்களால் இன்றுவரை மறக்கப்படாத பெருவேந்தனாவான். சோழநாட்டின் வளத்துக்கும் பெருமைக்கும் முதற்காரணமானவன். இரும்பிடர்த்தலையார்பால் கல்வி கற்று இளமையிலே தன் பகைவரை வென்று புகழ் மேம்பட்டவன். நடுநிலையிலும் அரசியல் முறையிலும் தலைசிறந்தவன். சோழநாட்டின் தலைநகராகிய உறையூரோடு காவிரிப்பூம்பட்டினத்தையும் தலைநகராக்கிச் சிறப்புற்றவன். முடத்தாமக் கண்ணியார், கடியலூர் உருத்திரங்கண்ணனார் முதலிய சான்றோர்களால் பொருநராற்றுப் படையும் பட்டினப்பாலையும் பாடப்பெற்றவன். இந்நூற்கண் இப்பாட்டினைப் பாடிய கருங்குழலாதனாரேயன்றி வெண்ணிக் குயத்தியார் என்பாரும் இவனைப் பாராட்டிப் பாடியுள்ளார். இப்பாட்டினைப் பாடிய கருங்குழலாதனார் சேரநாட்டுச் சான்றோர். கரிகாலனிடத்துப் பேரன்பும் பெருமதிப்பும் உடையவர். இவர் கரிகாலனுடைய கொற்றத்தைப் பாடும் கருத்தால், அவனது போரின் கடுமையால் பகைவர் நாடு அழிவுறுதலை யெடுத்தோதி, அவன் மனத்தில் அருள் பிறப்பிப்பது மிக நயமாகவுள்ளது.
இப்பாட்டின்கண் பகைவரின் நாடுகள் புதுவருவாய் நிரம்பிப் பயன் பல திகழ்வனவும், அகன்ற பரப்புடையனவுமாம். "நீயோ இரவும் பகலும் அந்நாட்டரசர்களான பகைவரைப் பொருதழிக்கக் கருதி, அவர் தம் ஊர்களைச் சுட்டெரித்தலால் நாட்டுமக்கள் அழுது புலம்பும் ஆரவாரக் கொள்ளையை விரும்புகின்றாய்; அதனால் அந்நாடுகள் நல மிழந்து கெட்டன காண்" என்று கூறுவது இவ்வாதனாரின் சான்றாண்மையைப் புலப்படுத்துகின்றது.
களிறு கடைஇயதாள்
கழலுரீஇய திருந்தடிக்
கணைபொருது கவிவண்கையாற்
கண்ணொளிர்வரூஉங் கவின்சாபத்து
மாமறுத்த மலர்மார்பின் 5
தோல்பெயரிய வெறுழ்முன்பின்
எல்லையு மிரவு மெண்ணாய் பகைவர்
ஊர்சுடு விளக்கத் தழுவிளிக் கம்பலைக்
கொள்ளை மேவலை யாகலின் நல்ல
இல்லவா குபவா லியல்தேர் வளவ 10
தண்புனல் பரந்த பூசன் மண்மறுத்து
மீனிற் செறுக்கும் யாணர்ப்
பயன்றிகழ் வைப்பிற்பிற ரகன்றலை நாடே. (7)
திணை: வஞ்சி. துறை - கொற்றவள்ளை; மழபுல வஞ்சியுமாம். சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கருங்குழலாதனார் பாடியது.
உரை: களிறு கடைஇய தாள் - களிற்றைச் செலுத்திய தாளையும்; கழல் உரீஇய திருந்தடி - வீரக்கழல் உரிஞ்சிய இலக் கணத்தால் திருந்திய அடியினையும்; கணை பொருது - அம் பொடு பொருது; கவி வண் கையால் - இடக்கவிந்த வள்ளிய கையுடனே; கண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்து - கண்ணிற்கு விளங்கும் அழகினையுடைய வில்லையும்; மாமறுத்த மலர் மார்பின் - திருமகள் பிறர் மார்பை மறுத்தற் கேதுவாகிய பரந்த மார்பினையும்; தோல் பெயரிய எறுழ் முன்பின் - யானையைப் பெயர்த்த மிக்க வலியினையுமுடைய; எல்லையும் இரவும் எண்ணாய் - பகலும் இரவும் எண்ணாது; பகைவர் ஊர் சுடு விளக்கத்து - பகைவரது ஊரைச் சுடுகின்ற தீயினது ஒளியின் கண்ணே; தங்கள் அழுவிளிக் கம்பலைக் கொள்ளை மேவலை - தம் சுற்றத்தை யழைத்தலுடனே அழுகின்ற கூவுதலையுடைய ஆரவாரத்தோடு கூடிய கொள்ளையை விரும்புதலுடையை; ஆகலின் - ஆதலான்; நல்ல இல்ல ஆகுபவால் - நல்ல பொருள்கள் இல்லையாகுவனவால்; இயல் தேர் வளவ - இயற்றப்பட்ட தேரையுடைய வளவ; தண் புனல் பரந்த பூசல் - குளிர்ந்த நீர் பரந்த ஓசையையுடைய உடைப்புக்களை; மண் மறுத்து - மண் மறுத்தலான்; மீனிற் செறுக்கும் - மீனாலடைக்கும்; யாணர் பயன் திகழ் வைப்பின் - புது வருவாயினையுடைய பயன் விளங்கும் ஊர்களையுடைய, பிறர் அகன்றலை நாடு - மாற்றாரது அகன்ற இடத்தையுடைய நாடுகள் எ - று.
திருந்தடி யென்பதற்குப் பிறக்கிடாத அடி யெனினு மமையும். கணைபொரு தென்றது, அதனொடு மருவுதலை. தாளையும் அடியையும் கையுடனே சாபத்தையும் மார்பையும் முன்பையுமுடைய வளவ,நீ கொள்ளை மேவலையாகலின், யாணரையும் வைப்பினையுமுடைய பிறர் நாடு நல்ல இல்ல வாகுப வெனக் கூட்டுக. நாடு நல்ல இல்ல வாகுபவென இடத்து நிகழ் பொருளின் றொழில் இடத்துமேலேறி நின்றது இனித் தாளாலும் அடியாலும் கையாலும் சாபத்தாலும் மார்பாலும் முன்பாலும் கொள்ளை மேவலையாகலின் என ஆலுருபு விரித்துரைப் பினுமமையும்.
இது, பிறர் அகன்றலை நாடு நல்ல வில்ல வாகுப வென்றமையிற் கொற்ற வள்ளையும், ஊர் சுடு விளக்கத் தழுவிளிக் கம்பலை யென்றமையின் மழபுல வஞ்சியுமாயிற்று.
விளக்கம்: யானையின் பிடரிமேலிருந்து அதனைச் செலுத்து வோர்க்குக் காலே பெருங்கருவியாதலால், "களிறு கடைஇய தாள்" என்றார். கடவிய என்பது கடைஇய வென நின்றது. உறுப்புநூல் வல்லார் கூறும் இலக்கணப்படியே அமைந்த அடியென்றற்குத் "திருந்து அடி" என்றாராகலின், "இலக்கணத்தால் திருந்திய அடி" யென உரை கூறப்பட்டது. இனி, இவ்வாறு கொள்ளாது முன் வைத்தது பின் வையாத அடியென்று கொள்ளினும் பொருந்தும் என்பார், "பிறக்கிடாத அடி யெனினு மையும்" என்று உரைகாரர் கூறினார். கணைபொருது என்பதற்கு "அம்பொடு பொருது" என்றுரைத்தார். அம்பொடு பொருதலாவது இதுவென்பார், "கணைபொரு தென்றது அதனொடு மருவுதலை" என்றார். கவிகை: வினைத்தொகை; பிறர்க்கு வேண்டுவது வழங்குதற்காகக் கவியும் கையென்பது பொருள். நிரம்ப அள்ளிக் கொடுக்கும் இயல்பு தோன்ற "வண்கை" யென்றார். ஒளிர் வரூஉம் - விளங்கும். "புனைமறு பார்ப" (பரி. 4:59) என்றும், "திருமறு மார்பு" (கலி. 104) என்றும் வந்த இடங்களில் "புகழப்படும் மறுவையுடைய மார்ப; திருமகளாதலால் புனைமறு என்றார்" என்று பரிமேலழகரும், "திருவாகிய மறுவையுடைத்தாகிய மார்பு" என்று நச்சினார்க்கினியரும் கூறியாங்கு, "மாமறுத்த மலர்மார்பு" என்பதற்குத் "திருவாகிய மறுவையுடைய அகன்ற மார்பு" என வுரை கூறாது, மறுத்த வென்பதைத் தெரிநிலைப் பெயரெச்சமாகக் கொண்டு, "திருமகள் பிறர் மார்பை மறுத்தற் கேதுவாகிய மார்பு" என்று கூறுவது குறிக்கத்தக்கது. அழுவிளி யென்பதில் விளி, அழைத்தலும் கூவுதலுமாகிய இருபொருளும் கொண்டு நிற்றலின், இருபொருண்மையும் விளங்க, "அழைத்தலுடனே அழுகின்ற கூவுதல்" என உரைக்கின்றார். இல்லையாகுவன நல்லனவாயினும், நாடு இல்ல வாகுப வென நாட்டின் வினையாகக் கூறியதற்குக் காரணம், நாடும் நல்லனவும் இடமும் இடத்து நிகழ்பொருளுமாம் இயைபுடைமையாதலால், "நாடு நல்ல... நின்றது" என்றார். இப்பாட்டிற்கு உரைத்துள்ள பொருள் வகையே நோக்கின், "நீ கொள்ளை மேவலையாகலின்" என்பதற்குக் காரணம் விளங்காமையாலும், அதனைக் காணலுறின், தாளும் அடியும் முதலிய வற்றையுடைமை காரணமென்று காணப்படுவதுபற்றி, "தாளாலும் அடியாலும்.....உரைப்பினு மையும்" என்றார்.
---------
8. சேரமான் கடுங்கோ வாழியாதன்
சேரமான் கடுங்கோ வாழியாதன், செல்வக் கடுங்கோவாழியாதன் என்றும் கூறப்படுவான். இவனைப் "பொறையன் பெருந்தேவி யீன்ற மகன்" என்று பதிற்றுப்பத்து ஏழாம்பதிகம் கூறுகிறது. திருமாலிடத்தே இவன் மிக்க ஈடுபாடுடையவன். இவன் கபிலருக்கு நூறாயிரங் காணம் பொன் தந்து நன்றா வென்னும் குன்றேறி நின்று தன் கண்ணிற் கண்ட நாடெல்லாம் காட்டிக்கொடுத்தான் என மேலே காட்டிய பதிகத்தால் அறியலாம். இவன் இருபத்தையாண்டு அரசு புரிந்தானென்ப. இவனைப் பாடிய கபிலர் சங்கத்தொகை நூல்களில் உள்ள பல பாட்டுக்களைப் பாடியவர். வேள்பாரியின் உயிர்த்தோழர். இவரால் சிறப்பிக்கப்பட்ட வள்ளல்களும் வேந்தர்களும் பலர். இவர் பாண்டிநாட்டில் பிறந்த அந்தணர். குறிஞ்சித் திணை பாடுவதில் நிகரற்றவர்.
இப்பாட்டின்கண், ஞாயிற்றை நோக்கி, "வீங்கு செலல் மண்டிலமே! நீ பகற்போதை நினக்கென வரைந்துகொள்வாய்; திங்களுக்குப் புறங் கொடுக்கின்றாய்; தெற்கினும் வடக்கினும் மாறி மாறி வருகின்றாய்; மலைவாயில் மறைகின்றாய்; பகற்பொதிற்றான் தோன்றுவாய்; இத்தனை குறைபாடுடைய நீ சேரலாதனை ஒப்பதென்பது நினக்கு ஆகாது" என்று பழிப்பது போலச் சேரமானைப் பாராட்டுகின்றார்.
வையங் காவலர் வழிமொழிந் தொழுகப்
போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறாஅ
திடஞ்சிறி தென்னும் ஊக்கந் துரப்ப
ஒடுங்கா வுள்ளத் தோம்பா வீகைக்
கடந்தடு தானைச் சேர லாதனை 5
யாங்கன மொத்தியோ வீங்குசெலன் மண்டிலம்
பொழுதென வரைதி புறக்கொடுத் திறத்தி
மாறி வருதி மலைமறைந் தொளித்தி
அகலிரு விசும்பி னானும்
பகல்விளங் குதியாற் பல்கதிர் விரித்தே. (8)
திணை: பாடாண்டிணை துறை: இயன்மொழி; பூவை நிலையுமாம். சேரமான் கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பாடியது.
உரை: வையங் காவலர் வழிமொழிந் தொழுக - உலகத்தைக் காக்கு மரசர் வழிபாடு சொல்லி நடக்க; போகம் வேண்டி - நுகரும் இன்பத்தை விரும்பி; பொதுச்சொற் பொறாஅது - பூமி பிற வேந்தருக்கும் பொது வென்னும் வார்த்தைக்குப் பொறாது; இடம் சிறிதென்னும் ஊக்கம் துரப்ப - தன் நாடு இடம் சிறிது என்னும் மேற்கோள் செலுத்த; ஒடுங்கா உள்ளத்து - மடியாத வுள்ளத்தையும்; ஓம்பா ஈகை - பொருளைப் பாதுகாவாது வழங்கும் வண்மையையும்; கடந்து அடு தானைச் சேரலாதனை - வஞ்சியாது எதிர்நின்று கொல்லும் படையையுமுடைய சேரலாதனை; வீங்கு செலல் மண்டிலம் - மிக்க செலவையுடைய மண்டிலமே; யாங்கனம் ஒத்தி - எவ்வாறொப்பை; பொழுது என வரைதி - நீ பகற்பொழுதை நினக்கெனக் கூறு படுப்பை; புறகொடுத்து இறத்தி - திங்கள் மண்டிலத்திற்கு முதுகிட்டுப் போதி; மாறி வருதி - தெற்கும் வடக்குமாகிய இடங்களில் மாறிமாறி வருவை; மலை மறைந்து ஒளித்தி -மலையின் கண்ணே வெளிப்படாது கரப்பை; அகல் இரு விசும்பினானும்-அகன்ற பெரிய ஆகாயத்தின்கண்ணும்; பகல் விளங்குதி பல்கதிர் விரித்து-பகற்பொழுது விளங்குவை பல கிரணங்களையும் பரப்பி எ-று.
மாறி வருதியென்பதற்கு, இராசிதோறும் மாறி வருதி யெனினு மமையும். வீங்கு செலல் மண்டிலமே, வரைதி, இறத்தி, வருதி, ஒளித்தி,நீ விசும்பினாலும் பகல் விளங்குதி; இக்குறைபாடெல்லாமுடைய நீ சேரலாதனை யாங்கன மொத்தியோ எனக் கூட்டி வினை முடிவு செய்க. ஒழுக வென்னு மெச்சம், நுகருமென ஒருசொல் வருவித்து அதனோடு கூட்டி முடிக்கப்பட்டது. ஒழுகவும் போக நுகரவும் வேண்டி யெனினு மமையும். வேண்டி, பொறாது, துரப்ப என நின்ற வினை யெச்சங்கள் ஒடுங்கா வென்னும் பெயரெச்ச மறையோடு முடிந்தன. இனி, பகல் விளங்கலை யென்னும் பாடத்திற்குத் திங்கண் மண்டிலமாக்கி மாறி வருதி யென்பதற்குத் தேய்ந்தும் வளர்ந்தும் வருதியெனவும் பிறவும் அதற்கேற்ப வுரைப்ப.
விளக்கம்: திங்கள்தோறும் மேடம் முதலாகக் கூறப்படும் இராசி தோறும்நின்று ஞாயிறு விளக்கம் செய்யும் என்னும் சோதிட நூன்முறைப்படி "மாறி வருதி யென்பதற்கு இராசி தோறும் மாறி வருதியெனினு மமையும்" என்றார். சேரலாதன் போல ஞாயிற்று மண்டிலமும் மிக்க செலவினை யுடைமைபற்றி. அவற்கு அதனை ஒப்பாகக் கூறுப; அதனை யாராயுமிடத்து, வீங்கு செலல் மண்டிலம் பல குறைபாடுகளை யுடைத்தாதலால், அவ்வொப்புமை பொருந்தாதென்பார். "யாங்கனம் ஒத்தியோ வீங்குசெலல் மண்டிலம்" என அம்மண்டிலத்தையே கேட்கின்றார். ஞாயிறு விளங்கும் காலம் பகற்போதெனப் படுவது பற்றி, பொழுதென வரைதி யென்பதற்கு,"பகற்பொழுதை நினெக்கெனக் கூறுபடுப்பை" என்றுரைத்தார். ஞாயிறு மறையத் திங்கள் தோன்றித் திகழ்வதால் "திங்களுக்கு முதுகிட்டுப் போதி" யென்றார்; திங்கள் முதுகிடுதல் இல்லை; ஞாயிறு எழுதற்கு முன் மறைதலும் எழுந்தபின் மறைதலும் திங்கட்குண்மையின். "பகல் விளங்குதல்" யென்றதற்கு "பகற்பொழுது விளங்குவை" யென்று கூறுதலால் "பொழுதென வரைதி" யென்பதற்குக் காலத்தைப் பலபொழுதுகளாக (சிறுபொழுது பெரும்பொழுதுகளாக) வகுத்தற்கு ஏதுவாகுவை யென்றுரைப்பினும் அமையும். உரைகிடந்தவாறே கொள்ளுமிடத்து, பகற்பொழுது நினக்கெனக் கூறுபடுக்கும் நீ அப்பகற்போதிற்றான் பல்கதிர்களையும் பரப்பி விளங்குவை யென்றதாகக் கொள்க. இவற்றிற்கு மாறாகச் சேரலாதனது ஒளி, இரவு பகலென வரையறையின்றி யெக் காலத்தும் திகழும் என்றும், "கடந்தடுதானை" யுடையனாதலால், இவன் பிறர்க்கும் புறங்கொடுத்தல் இலன் என்றும், போரில் வஞ்சிக்கும் இயல்பிலனாதலால், இடமாறுதலும், பகைவர் படைக்கு மாறுதலும் இவன்பால் இல்லையென்றும், அத்தகிரியில் மறைந்தொளிக்கும் ஞாயிறு போலாது எங்குந் தன் புகழே விளக்க மிக்குத் தோன்றுகின்றானென்றும், விண்ணும் மண்ணும் தன் புகழே பரப்பி விளங்குகின்றானென்றும் சேரலாதன் மிகுதி கூறியதாகக் கொள்க. காவலர் வழிமொழிந்தொழுகலால், அரம்பும் குறும்பும் பகையும் பிறவும் நாட்டில் இல்லையாக, சேரலாதன் போகநுகச்சி மேற்கொண்டிருந்தமையின், "வழியொழுக நுகரும் போகம் வேண்டி"யென ஒழுகவென்னும் வினையெச்சத்தை நுகரும் என ஒருசொல் வருவித்து முடித்தார். நுகரும் என்பது அவாய் நிலையான் வந்தது. ஒழுகவும் போகம் நுகரவும் வேண்டியென்று கொள்ளுமிடத்தும் நுகரவும் என்பது வருவிக்கப்படும்.
இனி, "பகல் விளங்குதி"யென்பதைப் "பகல் விளங்கலை" * யென்று பாடங் கொண்டு, அதற்கேற்பப் பகலில் விளக்கம் செய்யாத திங்கள் மண்டிலத்தை "வீங்கு செலல் மண்டிலம்" என்றார் என்று கொண்டு. மாறி வருதி என்பதற்குத் தேய்ந்தும் வளர்ந்தும் வருதியெனவும்..... உரைப்ப" என்றார், தொல்காப்பிய வுரைகாரரான பேராசிரியர்., இவ்வுரைகாரர் காட்டியவாறே "பகல் விளங்களையால்" என்று பாடங் கொண்டு, " வீங்கு செலல் மண்டிலத்தைத்" திங்களாக்கி, பொழுதெனவரைதி யென்பதற்கு. "நாடோறும் நாழிகை வேறுபட்டு எறித்தி" யென்றும், புறக்கொடுத்திறத்தி யென்பதற்கு, "தோற்றோர்போன்று ஒளிமழுங்கிச் செல்கின்றா" யென்றும். மாறி வருதி யென்பதற்கு, "திங்கடோறும் மாறிப் பிறத்தி" யென்றும், மலைமறைந் தொளித்தி யென்பதற்கு, "மலைசார்ந்த வழித் தோன்றா" யென்றும் பொருள் கூறுவர். வீங்கு செலல் மண்டிலம் என்பதை விலங்கு செலல் மண்டிலம் என்று பாடங் கொண்டு, "கடையாயினார் கதியிற் செல்லும் மதியம்" என்று கூறுவர். இவையெல்லாம் உட்கொண்டே உரைகாரர், 'பிறவும் அதற்கேற்ப வுரைப்ப" என்றார்.
---------
9. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
இப் பெருவழுதியை இப்பாட்டால் நெட்டிமையாரென்னும்சான்றோர் சிறப்பிக்கின்றார். நெடுந்தொலைவிலுள்ள பொருளைக் கூர்ந்து நோக்கி யறியும் கண்ணை, நெட்டிமையெனச் சிறப்பித்துரைத்த நயங் கருதி இவர்க்கு இப்பெயருண்டாயிற்று; இவர் பஃறுளியாறு கடல் கோட்படு முன்னர் இருந்தவராதலின், கடல் கோட்குப் பின்னர்த் தோன்றிய சங்ககாலத்தில் அப் பாட்டுஇறந்துபோயிற் றாதல்வேண்டும். இவரது கண்ணிமை நீண்ட பண்புடையது; அதனால் இவர்க்கு இப் பெயரெய்திற்று என்று கூறுவர். கண்ணிமை நீண்டிருத்தல் அழகன்மையின், அதனால் ஒருவர் பெயர்படைத்துக் கொள்வரென்பது மக்கள், இயல்பன்று.
* இப் பாட்டின்கண் பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதி. அறத்தாறு நுவலும் பூட்கையும் யானைமேற் கொடி கட்டிய சிவிகையமைத்து இவர்ந்து வரும் பெருமிதமும் உடையன் என்றும், இவனுடைய முன்னோனாகிய பாண்டியன் நெடியோனென்பான் பஃறுளியாறு கடலிற் கலக்குமிடத்தே முந்நீர் விழா ஆற்றினான் என்றும், அவ் வியாற்று மணலினும் பல வாண்டுகள் இப் பாண்டியன் முதுகுடுமி வாழ்வானாக என்றும் வாழ்த்துகின்றார்.
ஆவு மானியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புல வாழ்நர்க் கருங்கட னிறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம்மம்பு கடிவிடுது நும்மரண் சேர்மினென 5
அறத்தாறு நுவலும் பூட்கை மறத்திற்*
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ வாழிய குடுமி தங்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர் விழவி னெடியோன் 10
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே. (9)
திணையும் துறையும் அவை. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.
உரை: ஆவும் ஆன் இயற் பார்ப்பன மாக்களும் - ஆவும் ஆனினதியல்பையுடைய பார்ப்பாரும்; பெண்டிரும் - மகளிரும்; பிணியுடையீரும் - நோயுடையீரும்; பேணி - பாதுகாத்து; தென்புல வாழ்நர்க் கருங்கடன் இறுக்கும் - தென்றிசைக்கண் வாழ்வோராகிய நுங்குடியில் இறந்தோர்க்குச் செய்தற்கரிய பிண்டோதகக் கிரியையைப் பண்ணும்; பொன்போல் புதல்வர்ப் பெறாதீரும் - பொன்போலும் பிள்ளைகளைப் பெறாதீரும்; எம் அம்பு கடி விடுதும் - எம்முடைய அம்பை விரையச் செலுத்தக் கடவேம் ; நும் அரண் சேர்மின் என - நீர் நுமக்கு அரணாகிய இடத்தை அடையும் என்று; அறத்தாறு நுவலும் பூட்கை - அறநெறியைச் சொல்லும் மேற்கோளினையும்; மறத்தின் - அதற்கேற்ற மறத்தினையுமுடைய; கொல் களிற்று மீமிசைக் கொடி - கொல் யானை மேலே எடுக்கப்பட்ட கொடிகள்; விசும்பு நிழற்றும் - ஆகாயத்தை நிழற்செய்யும்; எங் கோ குடுமி வாழிய - எம்முடைய வேந்தனாகிய குடுமி வாழ்வானாக; தம் கோ - தம்முடைய கோவாகிய; செந்நீர்ப் பசும்பொன் - சிவந்த நீர்மையையுடைய போக்கற்ற பசிய பொன்னை; வயிரியர்க்கு ஈத்த - கூத்தர்க்கு வழங்கிய; முந்நீர் விழவின் நெடியோன் - முந்நீர் கடற்றெய்வத்திற்கெடுத்த விழாவினையுடய நெடியோனால் உளதாக்கப்பட்ட; நன்னீர்ப் ப•றுளி மணலினும் பல - நல்ல நீரையுடைய பஃறுளி யென்னும் ஆற்றின் மணலினும் பலகாலம் எ-று.
எங் கோவாகிய குடுமி பஃறுளியாற்று மணலினும் பலகாலம் வாழிய வெனக் கூட்டுக. கொடி விசும்பு நிழற்றுமென்பது சினைவினைப் பாற்பட்டு எங் கோ வென்னும் முதலொடு முடிந்தது. கொடியால் விசும்பு நிழற்றுமென் றுரைப்பினு மமையும். மீமிசைக்கொடி விசும்பு நிழற்றும் களிற்றினையு மென மாறிக் கூட்டுவாரு முளர். தங்கோச் செந்நீர்ப் பசும்பொன் என்பதற்குத் தமது அரசாட்சியினது செவ்விய நீர்மையாற் செய்த பசும்பொன் என்பாரு முளர். முந்நீர்க்கண் வடிம் பலம்ப நின்றானென்ற வியப்பால் நெடியோ னென்றா ரென்ப. யாற்று நீரும் ஊற்றுநீரும் மழைநீரு முடைமையான், கடற்கு முந்நீரென்று பெயராயிற்று, அன்றி முன்னீரென்று பாடமோதி நிலத்திற்கு முன்னாகிய நீரென்று முரைப்ப. பிணியுடையீரும் புதல்வர்ப் பெறாதீருமென்னும் முன்னிலைப் பெயரோடு ஆவும் பார்ப்பன மாக்களும் பெண்டிருமென்னும் படர்க்கைப் பெயர்கள் விராய் வந்து, நும்மரண் சேர்மின் என்னும் முன்னிலை வினையான் முடிதல், "செய்யுண் மருங்கினும் வழக்கியல் மருங்கினும்" (தொல். சொல். எச்ச.67) என்னும் அதிகாரப் புறனடையாற் கொள்ளப்படும்.
விளக்கம் : ஆனினதியல்பையுடைய பார்ப்பாரும் என்று ஏட்டில் காணப்படுகிறது. அந்தணரை மாக்களென்று வழங்காராதலால், ஏட்டிற் காணப்பட்டதே ஈண்டுக் கொள்ளப்பட்டது. அச்சுப்படி "ஆனினதியல்பையுடைய அந்தணரும்" என்று கூறுகிறது. பிண்டோதகம், பிண்டமும் உதகமும். பிண்டம் - சோறு; உதகம் - நீர். ஒரு குடியில் இறந்தோர், தென்றிசைக்கண் இருந்து, தம் குடியிற் பிறக்கும் புதல்வர் தம்மை நோக்கிப் படைக்கும் சோறும் நீரும் உண்டு வாழ்வர் என்ப. பகைவராலும் விரும்பப்படும் சிறப்புப்பற்றி, புதல்வரைப் "பொன்போற் புதல்வர்" என்றார்; "பொன்போற் புதல்வனோ டென்னீத் தோனே" (ஐங். 265) என்று பிறரும் கூறுப. அடையும் என்பது உம்மீற்று முன்னிலை வினைமுற்று; செய்யுமென்னும் முற்றன்று. மேற்கோல் - மேற்கொண்டொழுகும் கொள்கை. ஒரு கொள்கையினை மேற் கொண்ட வழியும், அதனைச் செயற்படுத்தற்கு இன்றியமையாது வேண்டப்படுவது மறப்பண்பாதலின், "மறத்தின்" என்றதற்கு, "அதற் கேற்ற மறத்தினையும்" என்றுரைத்தார். மீமிசைக் கொடியென்றதுபற்றி, அது விசும்பினும் உயர்ந்து அதனைக் கீழ்ப்படுத்தித் தான் மேலுயர்ந்து நின்று அவ் விசும்பிற்கு நிழல் செய்யும் என்பது தோன்ற "ஆகாயத்தை நிழற்செய்யும்" என்றார். மீமிசை யென்புழி மீ யென்றது யானைமீதுள்ள சிவிகையின் மேலிடத்தையும், மிசை யென்றது, அவ்விடத்தே விசும்பும் கீழ்ப்பட மேலுயர்ந்து நிற்கும் கொடி மரத்தின் உச்சியையும் குறித்து நின்றன. நிழற்றுமென்பது கொடியின் வினை. அது பெயரெச்சமாய்க் கோவென்பதனோடு முடிந்தது. கோவுக்குக் கொடி சினையாதலின், "சினை வினைப்பாற்பட்டு எங் கோவென்னும் முதலொடு முடிந்தது" என்றார். இவ்வாறு கொள்ளாமல், விசும்பானது தன்கீழ் களிற்றுமிசை நின்று நுடங்கும் கொடியால் நிலத்தை நிழற் செய்யும் என்றும் பொருள் கூறலாம் என்பதற்கு, "கொடியால் விசும்பு நிழற்றும் எனினும் அமையும்" என்றார். கொடிநின்று விசும்பு நிழற்றுதற்குக் களிறு இடமாதலின், இடத்து நிகழ் பொருளின் தொழில் இடத்துமேலேற்றிக் கூறுபவரும் உண்டு; அதனால், "மீமிசைக்கொடி.... மாறிக் கூட்டுவாருமுளர்" என்றார். "செவ்விய நீர்மாயாற் செய்த பசும்பொன்" என்று உரைகூறுவோர், செய்த என்பதற்கு ஈட்டிய என்பது பொருளாகக் கொண்டுரைப்பர்.
நெடியோன் பாண்டி வேந்தருள் மிகப் பழையோனாகிய ஒருவனாவான். தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனை மாங்குடி மருதனாரென்னும் சான்றோர், "பொலந்தார் மார்பின் நெடியோன் உம்பல்" (மதுரைக். 61) என்பதனாலும் இவனை யறியலாம். உரைகாரர், திருவிளையாடற் புராண காலத்துக்குப் பிற்பட்டவராதலின், வடிம் பலம்ப நின்ற பாண்டியன் வரலாற்றை யுட்கொண்டு இதற்கு வேறுரை கூறுபவரைக் கண்டு "முந்நீர்க்கண் வடிம் பலம்ப நின்றானென்ற வியப் பால் நெடியோ னென்றா ரென்ப" என்று குறிக்கின்றார். முந்நீர் விழவு கண்ட நெடியோனுக்கும் வடிம்பலம்ப நின்ற பாண்டியனுக்கும் பொருத்தம் யாதுமில்லையாதலால், வடிம் பலம்ப நின்ற பாண்டிய னென்னாது நெடியோனென்றே உரைகூறினார். இனி, முந்நீர் என்று கடற்குப் பெயருண்டானதற்கு இவ் வுரைகாரார் கூறும் காரணத்தை மறுத்து, மண்ணைப் படைத்தலும் காத்தலும் அழித்தலுமாகிய முச்செய்கையையுடைய நீர் முந்நீர்; ஆகுபெயரால் அது கடற்காயிற்றென அடியார்க்கு நல்லார் (சிலப். 17) கூறுவர்; அவர் கூறியதையே நச்சினார்க்கினியாரும் (பெரும்பாண். 441) மேற்கொள்வர். நிலத்திற்கு முன்னாகிய நீர் - நிலத்திற்கு முன்னே யுண்டாகிய நீர்; "முதுநீர்ப் பௌவம் கதுமெனக் கலங்க" (பெருங். 3.24:140) என்று பிறரும் இக் கருத்துத் தோன்ற உரைப்பது நோக்கத்தக்கது. முன்னிலைப்பெயரும் படர்க்கைப்பெயரும் விரவி முன்னிலைவினை கோடற்குத் தனியே விதி கூறப்படாமையால், அதிகாரப் புறனடையாற் கொள்ளவேண்டி யிருத்தல்கொண்டு, "முன்னிலைவினையான் முடிதல்.....கொள்ளப்படும்" என்றார்.
பாண்டியன் நெடியோன் காலத்திருந்த பஃறுளியாற்றை நெட்டிமையார் எடுத்தோதி அதன் மணலினும் பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துதலால், அப் பஃறுளியாறு நெட்டிமையார் காலத்தும் உளதாதல் பெறப்படும்; படவே, இவரும் இவராற் பாடப்பெற்ற பாண்டியனும் கடல்கோட் காலத்துக்கு முற்பட்டவர் என்பது விளக்கமாம்.
___________________
10. சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி
நெய்தலங்கானல் என்பது இச்சோழன் பிறந்த வூராகும். "நெய் தலங்கானல் நெடியோய்" என்று ஊன்பொதி பசுங்குடையார் கூறுவர். இவன் தென்னாட்டுப் பரதவரையும் வடநாட்டு வடுகரையும் வென்று புகழ் மேம்பட்டவன். இரப்போர்க்கு வரையாது வழங்கும் வண்மையுடையன். இவன் பாமுளூர் என்னுமிடத்தும் செருப்பாழி யென்னுமிடத்தும் பகைவரை வென்று முறையே பாமுளூரெறிந்த இளஞ்சேட் சென்னி யென்றும், செருப்பாழி யெறிந்த இளஞ்சேட்சென்னி யென்றும் கூறப்படுகின்றான். பாமுளூர் சேரர்கட் குரியது. இவன் நெய்தலங் கானலிலிருந்தபோதும், பாமுளூரெறிந்தபோதும், செருப்பாழி யெறிந்தபோதும் ஊன்பொதி பசுங்குடையார் இவனைப் பாடிப் பரிசில் பெற்றிருக்கின்றார். ஊன்பொதி பசுங்குடையாரது இயற்பெயர் தெரிந்திலது. பனையினது பச்சோலையால் உட்குடைவுடையதாகச் செய்யப்படுவது பனங்குடை. உணவுண்டற்கும் பூப்பறித்தற்கும் மக்கள் பயன்படுத்துவர்; "எய்ம்மான் எறிதசைப் பைஞ்ஞிணம் பெருத்த பசு வெள்ளமலை, இரும்பனங் குடையின் மிசையும்" (புறம்.177) என்றும், "அவல் வகுத்த பசுங் குடையாற், புதல் முல்லைப் பூப்பறிக் குந்து" (புறம்.352) என்றும் சான்றோர் கூறுதல் காண்க. வேண்டுமாயின் இதனிடத்தே சோறு பொதிந்துகொண்டும் போவது மரபு; "ஆறு சென்மாக்கள் சோறுபொதி வெண்குடை" (அகம். 121) என் வருவது காண்க. இதனிடத்தே ஊன் பொதிந்துகொண்டு செல்வதை வியந்து, இவ் வாசிரியர், "ஊன்பொதி பசுங்குடை" யென்று பாடிய சிறப்பால், இவர் "ஊன்பொதி பசுங்குடையார்" எனப்படுகின்றார். இவர் பாட்டில் நகைச்சுவையும், இயற்கை நவிற்சியும், அறவுணர்வும் விரவி இவரது பெருமாண்புலமை நலத்தைப் புலப்படுத்தி நிற்கின்றன.
இப் பாட்டின்கண், இளஞ்சேட்சென்னி நெய்தலங்கானலிடத்தே யிருக்குங்கால் தன்னை வழிபடுவோரைத் தழுவிக்கோடலும், பிறர் பழி மேற்கொள்ளாமையும், குற்றஞ்செய்தாரை நன்காராய்ந்து ஒறுத்தலும், அடியடைந்தாரை ஏற்றலும், மனைவாழ்வில் இன்புறுதலும் உடையனாய், முன்செய்து பின்னிரங்காவினையும் நாடு முழுவதும் பரந்த நல்லிசையும் கொண்டு சிறப்பது கண்டு மகிழ்ந்து புகழ்கின்றார்.
வழிபடு வோரை வல்லறி தீயே
பிறர்பழி கூறுவோர் மொழிதே றலையே
நீமெய் கண்ட தீமை காணின்
ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி
வந்தடி பொருந்தி முந்தை நிற்பிற் 5
றண்டமுந் தணிதிநீ பண்டையிற் பெரிதே
அமிழ்தட் டானாக் கமழ்குய் யடிசில்
வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கை
மகளிர் மலைத்த லல்லது மள்ளர்
மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப 10
செய்திரங் காவினைச் சேண்விளங் கும்புகழ்
நெய்தலங் கான னெடியோய்
எய்தவந் தனம்யா மேத்துகம் பலவே. (10)
திணையும் துறையும் அவை. சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடியது.
உரை: வழிபடுவோரை வல் அறிதி - நின்னை வழிபட்டொழுகுவோரை விரைய அறிவை; பிறர் பழி கூறுவோர் மொழி தேறலை - பிறருடைய குற்றம் சொல்லுவாரது வார்த்தையைத் தெளியாய்; நீ மெய்கண்ட தீமை - நீ மெய்யாக மனத்தான் ஆராய்ந்து; அத் தக ஒறுத்தி - அத் தீமைக்குத் தகத் தண்டம் செய்வை; வந்து அடி பொருந்தி - வந்து நின் பாதத்தையடைந்து; முந்தை நிற்பின் - முன்னே நிற்பாராயின்; பண்டையிற் பெரிது நீ தண்டமும் தணிதி - அவர் பிழைசெய்வதற்கு முன் நீ செய்யும் அருளினும் அருள் பெரிதாக அவரைச் செய்யுந் தண்டமும் தணிவை; அமிழ்து அட்டு - அமிழ்தத்தைத் தன் சுவையால் வென்று; ஆனா - உண்ணவுண்ண வமையாத; கமழ் குய் யடிசில் - மணங்கமழும் தாளிப்பையுடைய அடிசிலை; வருநர்க்கு வரையா - விருந்தினர்க்கு மிகுதி குறை படாமல் வழங்கும்; வசையில் வாழ்க்கை - பழி தீர்ந்த மனை வாழ்க்கையையுடைய; மகளிர் மலைத்தல் அல்லது - பெண்டிர் முயக்கத்தால் மாறுபடுத்தலல்லது; மள்ளர் மலைத்தல் போகிய - வீரர் போரான் மாறுபடுத்தலொழிந்த; சிலைத்தார் மார்ப இந்திர விற்போலும் மாலையையுடைய மார்ப; செய்து இரங்கா வினை- ஒருதொழிலைச்செய்து பின் பிழைக்கச் செய்தே மென்று கருதாத செய்கையைும்; சேண் விளங்கும் புகழ்- சேய்மைக் கண்ணே விளங்கும் புகழினையுமுடைய; நெய்தலங் கானல் நெடியோய்-நெய்தலங் கானலென்னும் ஊரையுடைய நெடியோய்; எய்த வந்தனம் யாம்- அணுக வந்தேம் யாம்; பல ஏத்துகம்-நின் பல குணங்களையும் புகழ்வேமாக எ-று.
வழிபடுவோரை வல்லறிதி யென்றது, அறிந்து அவர்களுக்கு அருள் செய்வை யென்பதாம். பெரிதென்பது வினையெச்சக் குறிப்பாதலின், ஆக வென ஒரு சொல் வருவித்துரைக்கப்பட்டது. பண்டையிற் பெரிது தணிதி யென்றுரைப்பினு மமையும். அடப்பட்டமையாத அமிழ்து போலும் அடிசிலென்றுரைப்பினு மமையும். வினையும் புகழும் உடைய நெய்தலங்கானல் நெடியோய், பல வேத்துவேமாக எய்த வந்தன மெனக் கூட்டு.
விளக்கம்: வினையும் புகழுமுடைய நெய்தலங்கானல் நெடியோய், மார்ப, நீ வல்லறிதி, மொழிதேறலை, தகவொறுத்தி, தண்டமும் தணிதி, ஏத்துவோமாக, எய்த வந்தனம் எனக் கூட்டி வினைமுடிவு செய்க. தன்னை வழிபட்டொழுகுபவரை அவர் சொல்செயல்களைக் கண்டறிதற்கு முன்னே அவர் முகக்குறிப்பால் மனநிலையைக் கண்ட மாத்திரையே யுணர்ந்து கொள்ளுதல்பற்றி, "வல்லறிதி" என்றார். அறிதியே யென்பது அறிதீயே யெனச் செய்யுளாதலின் விகாரமாயிற்று. அறிதலின் பயன் செயலால் வெளிப்படுதல்பற்றி, "அறிதி யென்றது அறிந்து அவர்களுக்கு அருள் செய்வை யென்பதாம்" என்றார். குற்றமென்பது பழிக்கப்படுவ தொன்றாதலால் பழியெனப்பட்டது. "நீதிநூற்குத் தக ஆராய்ந்து" என்பதனால், குற்ற வகைகளும் அவற்றை யாராயுந் திறங்களும் ஒறுக்கும் திறங்களும் உணர்த்தும் நீதிநூல்கள் தமிழகத்தே யிருந்தமை புலனாகிறது. பொருணூலை வடமொழியில் எழுதிய கௌடிலியன் தென்றமிழ் நாட்டவனாதலால் அவனது நூலில் காணப்படும் நீதிகள் பல தமிழகத்தே நிலவினவாம் என்பதும் ஈண்டு நினைவுகூரத்தக்கது. குறிப்பு வினையெச்சம் பொருள் முடிவின்கண் ஆக்கச்சொல் பெற்று முடிதல் வேண்டுமென்பது இலக்கணமாதலால் (சொல். எச்ச.36) " ஆக வென ஒருசொல் வருவித்துரைக்கப்பட்ட" தென்றார். ஒரு சொல் லென்றது ஆக்கச் சொல்லையென வறிக. தணிதி யென்றதனால் தணிதற்குரிய வெகுளியை வருவித்து, "பண்டு செய்த கோபத்தினும் பெரிதாகத் தணிதி" யென்று பொருள் கூறினும் பொருந்துவதாம் என்பார், " பண்டு ..., அமையும்" என்றார். அமிழ்து அட்டு என்புழி, அடுதல்-சுவையால் வெல்லுதல். அவ்வாறன்றி, அட் டென்றதை உவமப்பொருளதாகக் கொண்டு "அமிழ்து போலும் அடிசில்" என்றும் பொருள் கூறலாம் என்றார். "வருநர்க்கு வரையா" என்றதற்கு வரும் விருந்தினர்க்கு வரையாமல் வழங்கியென்று பொருள் கூறுகின்றாராதலால், அவ்வாறு வழங்கப்படும் அடிசிலின் அளவை வருவித்து, "மிகுதி குறையாமல்" என்றார். விருந்தோம்பலை மனை வாழ்க்கைக்கு வசையாமாதலால், விருந்து வரையாத வாழ்க்கை. "வசையில் வாழ்க்கை" யெனப்பட்டது, வாழ்க்கையையுடைய மகளிர் என்க; மனைவாழும் மகளிர்க்கு விருந்து புறந்தருதல் மாண்பாதலை. "கற்புங் காமமும் நற்பா லொழுக்கமும், மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின், விருந்துபுறந் தருதலும் சுற்றமோம்பலும், பிறவு மன்ன கிழவோன் மாண்புகள்" (கற்பு. 11) என ஆசிரியர் ஓதுவது காண்க. மகளிர்பால் மென்மையும், பகைவர்பால் வன்மையும் காட்டும் அவனது இயல்பை, "மகளிர் மலைத்தல் அல்லது மன்னர், மலைத்தல் போகிய சிலைத்தார் மார்ப" என்றார்; "வணங்குசிலை பொருத நின் மணங்கமழகலம், மகளிர்க் கல்லது மலைப்பறி யலையே" (பதிற். 63) என்று பிறரும் கூறுதல் காண்க. "செய்திரங்காவினை" யென்பதற்கு "முன்னொரு தொழிலைச் செய்து பின் பிழைக்கச் செய்தேம் என்று கருதாத செய்கை" யென்று பொருள் கூறியது "செய்து பின்னிரங்காவினை" (அகம். 268) என்றும், "எற்றென் றிரங்குவ செய்யற்க" (குறள். 655) என்றும் சான்றோர் கூறியதை யுட்கொண்டென வறிக. இங்கே கூறிய நற்பண்புடையோரை யணுகிக் காண்பதும் அவர் குணங்கள் உரைப்பதுவும் நலமென்பதுபற்றி, "எய்த வந்தனம்யாம் ஏத்துகம் பலவே" என்றார்.
11. சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ
இச்சேரமான் முடிவேந்தர் மூவருள் ஒருவனாதலேயன்றி, நல்லிசைச் செய்யுள் பாடும் சான்றோர் கூட்டத்தும் ஒருவனாவன். இவன் பாடிய பாட்டுக்கள் பலவும் பாலைத் திணைக்குரியனவாகும். பாலைக்கலி முற்றும் இவன் பாடியனவே. நற்றிணை, குறுந்தொகை, அகம் முதலிய தொகை நூல்களுட் காணப்படும் பாலைப்பாட்டுக்களுட் பல இவனாற் பாடப்பட்டவை. இப்பாட்டுக்கள் அனைத்தும் இலக்கிய வளமும் அறவுணர்வும் நல்லிசை மாண்பும் உடையன. கொண்கானநாடு பொன் மிகவுடையதென்றும், அதனை யுடையவன் நன்னன் என்றும், அந்நாட்டிலுள்ள எழிற்குன்றம் மிக்க பொருணலமுடையதாகலின் பெறலரிது என்றும் பாராட்டிக் கூறுவன். வேனிற் காலத்தில் குயில்கள் மாம் பொழிலிலிருந்து "புணர்ந்தீர் புணர்மினோ" என இசைக்கும் என்பதும், "குழவோ ரின்னா ரென்னாது பொருள்தன், பழவினை மருங்கிற் பெயர்பு பெயர் புறையும்" என்பதும் பிறவும் இவனது மனமாண்புலமையைப் புலப்படுத்தும். போரில் பகைவர் படையால் உடல் சிதைந்து உயிர் கெட்ட வீரனை, "அருங்கடன் இறுத்த பெருஞ்செயாளன்" என்றும், அவன் யாண்டுளன் எனில் "சேண்விளங்கு நல் விசை நிறீஇ, நாநவில் புலவர் வாயுளானே" (புறம். 282) என்றும் கூறுவது இவனுடைய மறப்பண்பை வலியுறுத்தும். இச்சேரமானைப் பேய்மகள் இளவெயினி யென்பார் பாடியுள்ளார். பேய்மகள் கட்புலனாகாத வடிவுடையளாதலால், கட்புலனாமாறு பெண்வடிவுகொண்டு இளவெயினியென்னும் பெயருடன் நின்று இதனைப் பாடினாளென்று இவ்வுரைகாரர் காலத்தே சிலர் கூறியிருக்கின்றனர். போர்க்களத்துப் பிணந்தின்னும் பேய்மகளிரை வியந்து விரியப் பாடிய சிறப்பால், இளவெயினியார்க்குப் பேய்மகளென்பது சிறப்புப்பெயரா யமைந்ததாகல் வேண்டும். இளவெயினியென்பது இவர தியற்பெயர். குறமகள் இளவெயினி யென்பார் ஒருவர் சான்றோர் குழாத்துட் காணப்படுதலின், அவரின் வேறுபடுத்த இவரை இவ்வாறு சிறப்பித்தனர். குறமகள் என்றதை, குறிஞ்சி நிலத்து நன்மகள் என்று கொள்ளாது குறக்குடியிற் பிறந்த மகளென்று பிழைபடக் கொண்டதுபோல, இவரைப் பேய்மகளென்று கோடல் அறமாகாது.
அரிமயிர்த் திரண்முன்கை
வாலிழை மடமங்கையர்
வரிமணற் புனைபாவைக்குக்
குலவுச்சினைப் பூக்கொய்து
தண்பொருநைப் புனல்பாயும் 5
விண்பொருபுகழ் விறல்வஞ்சிப்
பாடல்சான்ற விறல்வேந்தனும்மே
வெப்புடைய வரண்கடந்து
துப்புறுவர் புறம்பெற்றிசினே
புறம்பெற்ற வயவேந்தன் 10
மறம்பாடிய பாடினியும்மே
ஏருடைய விழுக்கழஞ்சிற்
சீருடைய விழைபெற்றிசினே
இழைபெற்ற பாடினிக்குக்
குரல்புணர்சீர்க் கொளைவல்பாண் மகனும்மே 15
எனவாங்கு
ஒள்ளழல் புரிந்த தாமரை
வெள்ளி நாராற் பூப்பெற் றிசினே. (11)
*திணை - பாடாண்டிணை. துறை - பரிசில் கடாநிலை. சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோவைப் பேய்மகள் இளவெயினி பாடியது.
உரை: அரிமயிர்த் திரள் முன் கை - ஐய மயிரையுடைய திரண்ட முன் கையினையும், வாலிழை - தூய ஆபரணத்தையுமுடைய; மட மங்கையர் - பேதை மகளிர்; வரி மணல் புனை பாவைக்கு - வண்டலிழைத்த சிற்றிற்கட் செய்த பாவைக்கு; குலவுச் சினைப் பூக் கொய்து - வளைந்த கோட்டுப்பூவைப் பறித்து; தண் பொருநைப் புனல் பாயும் - குளிர்ந்த ஆன் பொருந்தத்து நீரின்கட் பாய்ந்து விளையாடும்; விண்பொரு புகழ் விறல்வஞ்சி - வானை முட்டிய புகழினையும் வென்றியைமுடைய கருவூரின் கண்; பாடல் சான்ற விறல் வேந்தனும்மே - பாடுதற்கமைந்த வெற்றியையுடைய அரசனும்; வெப்புடைய அரண் கடந்து - பகைதெறும் வெம்மையையுடைய அரணை யழித்து; துப்புறுவர் புறம் பெற்றிசின் - வலியோடு எதிர்ந்தவருடைய புறக்கொடையைப் பெற்றான்; புறம் பெற்ற வய வேந்தன் மறம் பாடிய பாடினி யும்மே - அப் புறக்கொடையைப் பெற்ற வலிய அரசனது வீரத்தைப் பாடிய பாடினியும்; ஏருடைய விழுக் கழஞ்சின் - தோற்றப் பொலிவுடைய சிறந்த பல கழஞ்சால் செய்யப்பட்ட; சீருடைய இழை பெற்றிசின் - நன்மையையுடைய அணிகலத்தைப் பெற்றாள்; இழை பெற்ற பாடினிக்கு- அவ்வணிகலத்தைப் பெற்ற விறலிக்கு; குரல் புணர் சீர்க்கொளைவல் பாண் மகனும்மே - முதற் றானமாகுய குரலிலே வந்து பொருந்தும் அளவையுடைய பாட்டைவல்ல பாணனும்; ஒள்ளழல் புரிந்த தாமரை - விளங்கிய தழலின்கண்ணே ஆக்கப் பட்டபொற்றாமரையாகிய; வெள்ளி நாரால் பூப் பெற்றிசின் - வெள்ளி நாரால் தொடுத்த பூவைப் பெற்றான் எ - று.
பாடினி இழை பெற்றாள், பாணன் பூப்பெற்றான், யான் அது பெறுகின்றிலேன் எனப் பரிசில் கடாநிலையாயிற்று. இனி, இவள் பேயாயிருக்க, கட்புலனாயதோர் வடிவுகொண்டு பாடினாளொருத்தி யெனவும், "இக்களத்து வந்தோர் யாவரும் பரிசில் பெற்றார்கள், ஈண்டு நின்னோடு எதிர்ந்து பட்டோ ரில்லாமையான் எனக்கு உணவாகிய தசை பெற்றிலேன்" எனத் தான் பேய்மகளானமை தோன்றப் பரிசில் கடாயினாளெனவும் கூறுவாருமுளர். "பாடினிக்குப்...பாண்மகன்" என்பது அது வெனுருபுகெடக் குகரம் வந்தது, உயர்திணையாகலின் . பாடினி பாடலுக்கேற்பக் கொளைவல் பாண்மகன் எனினுமமையும். எனவும், ஆங்கும்: அசைநிலை. பெற்றிசின் மூன்றும் படர்க்கைக்கண் வந்தன.
விளக்கம்: அரி - ஐம்மை. ஐம்மையாவது மென்மை. திரட்சியினைக் கைக்கேற்றுக. மங்கை யென்பது, மங்கைப் பருவத்தராகிய மகளிரைக் குறியாது மகளிர் என்ற பொதுப்பெயராய் நிற்றலால், மடமங்கையர் என்றதற்கு, "பேதை மகளிர்" என்று பொருள் கூறப்பட்டது. பேதை மகளிர் - விளையாடும் பருவத்து இளமகளிர். வரி மணலிற் புனைந்த பாவையை வண்டற்பாவை யென்றும் கூறுப. "வண்டற்பாவை வௌவலின், நுண்பொடியளைஇக் கடறூர்ப்போளே" (ஐங். 124) எனவருவது காண்க. குலவுச்சினை யென்புழிக் குலவுதல் வளைதல்; "திருப்புருவ மென்னச் சிலைகுலவி: (திருவா. திருவெம். 14) என்புழியும் குலவுதல் இப்பொருளில் வருதல் காண்க. ஆன் பொருந்த மென்னும் யாறு வஞ்சிநகரின் புறமதிலைச் சார்ந்தோடுவது எனச் சான்றோர் (புறம். 387) கூறுவர். அதன் வெண்மணலில் மகளிர் விளையாட்டயர்வது மரபாதலை " குறுந்தொடி மகளிர் பொலஞ்செய் கழங்கிற் றெற்றியாடும், தண்ணான் பொருநை வெண்மணல்" (புறம். 36) எனப் பிறரும் கூறுதலாலும் அறியலாம். வேந்தனுமே யென்பது செய்யுளின்பங் குறித்து, "வேந்தனும்மே" என விகாரமாயிற்று: "பாடினியும்மே" "பாண் மகனும்மே" என்பவையும் இது போலவே விகாரம் எனக் கொள்க. வெப்புடைய அரண் என்றவிடத்து வெம்மை வெப்பென நின்றது; அஃதாவது பகை தெறும் வெம்மையென்பர். உறுவர், ஈண்டுப் போரிடத்தே எதிருறுபவ ரென்றாகிப் பகைவர்க்காயிற்று. துப்பு, வலி. "மூவருள் ஒருவன் துப்பாகியரென" (புறம் 122) என்றாற் போல. துப்பென் பதற்குப் பகையென்றே கொண்டு, துப்புறுவர், பகையுற்றவர் எனினும் பொருந்தும்: "துப்பி னெவனாவர்" (குறள். 1165) என்பதனால் துப்புப் பகையாதல் காண்க. ஏர்-தோற்றப் பொலிவு. விழுக்கழஞ் சென்புழி கழஞ்சுக்கு விழுப்பம் சிறப்பாலும் பன்மையாலும் உண்டாதலின், விழுக்கழஞ்சு என்றதற்குச் "சிறந்த பலகழஞ்சு" என உரைகூறினார்.
இழைகளாவன பொன்னரிமாலை முத்துமாலை முதலாயின. குரல் முதலிய எழுவகை இசைத் தானங்களுள், குரல் முதற் றானமாதலால், "முதற் றானமாகிய குரல்" என்றார். சீர், ஒரு மாத்திரையும் இருமாத்திரையுமாகிய தாள வளவு. கொளை - பாட்டு. பாடினிக்கு என்றவிடத்துக் குவ்வுருபு, சிறப்புப்பொருட்டு. இனி, உரைகாரர் பாடினிக்குப் பாண்மகன் என இயைத்து; பாடினியது பாண்மகனெனப் பொருள்கொண்டு உயர்திணையாகலின், அதுவென்னும் உருபுகெட, அதன் பொருண்மை தோன்றக் குகரம் வந்தது என்பர். அதுவென் வேற்றுமைக்கண் வந்த உயர் திணைத் தொகை விரியுமிடத்து, அதுவென்னும் உருபுகெடக் குகரம் வரும் எனத் தொல்காப்பியர் கூறினரேயன்றி, நான்கனுருபு விரிந்து தொகாநிலையாய தொடரிடத்தன்றாகலின், அவர் கூறுவது பொருந்தாமை யறிக. பாடினிக்கு என்பதற்குப் பாடினியது பாடலுக்கென்று பொருள்கொண்டு, அப் பாடற்கேற்பக் கொளைவல்ல பாண்மகன் என்றுரைப்பிற் பொருத்தமாதலின், "பாடினி பாடலுக் கேற்பக் கொளை வல்ல பாண்மகன் எனினு மமையும்" என்றார். இசின் என்பது முன்ளிலைக்குரிய அசைச்சொல்; ஈண்டு அது படர்க்கைக்கண் வந்தமையின், "பெற்றிசின் மூன்றும் படர்க்கக்கண் வந்தன" என்றார்.
-------------------
12. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
இப்பாட்டின்கண், பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, தன் பகைவர்க்கு இன்னாவாக, அவர்தம் நாட்டை வென்று கைக்கொண்டு, தன்னை வந்து அன்பால் இரக்கும் பரிசிலராகிய பாணர் பொற்றாமரைப்பூச் சூடவும், புலவர் யானையும் தேரும் பெற்றேகவும் இனியவற்றைச் செய்கின்றான்; இஃது அறமோ என நெட்டிமையார் அவனைப் பழிப்பது போலப் புகழ்கின்றார்.
பாணர் தாமரை மலையவும் புலவர்
பூநுதல் யானையோடு புனைதேர் பண்ணவும்
அறனோ மற்றிது விறன்மாண் குடுமி
இன்னா வாகப் பிறர்மண்கொண்
டினிய செய்திநின் னார்வலர் முகத்தே. (12)
திணை: அது. துறை: இயன்மொழி. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.
உரை: பாணர் தாமரை மலையவும் - பாணர் பொற்றாமரைப் பூவைச் சூடவும்; புலவர்-; பூ நுதல் யானையொடு புனை தேர் பண்ணவும் - பட்டம் பொலிந்த மத்தகத்தையுடைய யானையுடனே அலங்கரிக்கப்பட்ட தேரினை ஏறுதற்கேற்ப அமைக்கவும்; அறனோ இது - அறனோ இவ்வாறு செய்தல்; விறல் மாண் குடுமி - வெற்றி மாட்சிமைப்பட்ட குடுமி; பிறர் மண் இன்னாவாகக் கொண்டு - வேற்றரசருடைய நிலத்தை அவர்க்கு இன்னாவாகக் கொண்டு; நின் ஆர்வலர் முகத்து இனிய செய்தி - நின்னுடைய பரிசிலரிடத்து இனியவற்றைச் செய்வை எ-று.
குடுமி, பிறர் மண் இன்னாவாகக்கொண்டு, மலையவும், பண்ணவும், நின் ஆர்வலர் முகத்து இனிய செய்வை; இது நினக்கு அறனோ சொல்லுவாயாக வெனக் கூட்டி வினைமுடிவு செய்க, மற்று: அசை நிலை. இது பழித்தது போலப் புகழ்ந்ததாகக் கொள்க.
விளக்கம்: பொன்னால் தாமரைப்பூச் செய்து அதனை வெள்ளியாற் செய்த நாரிடைத்தொடுத்தது பொன்னரிமாலை; இதனைப் பாணர்க்கு வழங்குதல் மரபாதலால், "பாணர் தாமரை மலையவும்" என்றார்; " ஒள்ளழல் புரிந்த தாமரை, வெள்ளி நாராற் பூப்பெற் றிசினே" (புறம்-11) என்பது காண்க. புலவர்க்குக் களிறும் தேரும் நல்குதலும் பண்டையோர் மரபு. "புலவர் புனை தேர் பண்ணவும்" என்றார். மலைதல், சூடுதல். பண்ணல், ஏறுதற்கேற்ப அமைத்தல். நுதல், மத்தகத்துக் காயிற்று. பூ, பொற்பட்டம். அன்பு கொள்ளாது பகைமையைக் கொண்டமையின், பகைவேந்தரைப் பிறர் என்றும், அன்பு செய்து பரவிப் புகழ்வாரை "ஆர்வலர்" என்றும் கூறினார். ஒருவர்க்குரிய நிலத்தைப் பிறர் வலியாற் கொள்ளுமிடத்து உரியார்க்கு வருத்தமுண்டாதல் இயல்பாதலால், " பிறர் மண் இன்னாவாகக் கொண்டு" என்றார். வேந்தே, நீ ஒருபால் இனிமையும், ஒருபால் இன்னாமையும் செய்தல் அறனோ என்று வினவுவது பழிப்புரை. ஆர்வலர்க்கு இன்பம் செய்தலும், பகைவர்க்கு இன்னாமை செய்தலும் விறல் மாண்ட வேந்தர்க்குப் புகழாதலால், "இது பழித்தது போலப் புகழ்ந்ததாகக் கொள்க" என்றார். இதனை வஞ்சப்புகழ்ச்சி யென்றும் கூறுப.
------------
13. சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி
இப்பெருநற்கிள்ளி சோழநாட்டு வேந்தனாய் இருந்து வருகையில் தன்னோடு பகைகொண்ட சேரமன்னரொடு போருடற்றும் கருத்தினனாய்க் கருவூரை முற்றியிருந்தான். அப்பொழுது சேரநாட்டு மன்னனாவான் சேரமான் அந்துவஞ்சேர லிரும்பொறை. ஒருநாள் சோழன் கோப்பெருநற்கிள்ளி கருவூரை நோககிச் சென்றுகொண்டிருக்கையில் அவன் ஏறிய களிறு மதம் படுவதாயிற்று. அக்காலை ஆசிரியர் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்னும் சான்றோர் சேரமன்னனுடன் அவனது அரசமாளிகையாகிய வேண்மாடத்துமேல் இருந்தார். சோழன் களிற்றுமிசை யிருப்பதும், களிறு மதம்பட்டுத் திரிவதும், பாகரும் வீரரும் அதனை யடக்க முயல்வதும் கண்ட சேரமான் மோசியாருக்குக் காட்ட. அவர் இப்பாட்டினைப் பாடினார். முடமோசியார் என்னும் சான்றோர், ஏணிச்சேரி யென்னும் ஊரினர். இவர் உறையூரிடத்தே தங்கியிருந்தமையால், உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் எனப்படுகின்றார். இவர் பாடிய பாட்டுக்கள் பல இத்தொகை நூல்களில் உண்டு. அவை பெரும்பாலும் ஆஅய் அண்டிரனைப் பாடியவை யாதலால் அவன்பால் இவருக்கிருந்த நன்மதிப்பு நன்கு புலனாகும்.
இப்பாட்டின்கண், களிற்றுமேலிருந்த சோழனை இன்னானென்றறியாது கேட்ட சேரமான் அந்துவஞ்சேரலிரும்பொறைக்குக் களிற்று மேற் செல்வோனாகிய இவன் யாரெனின், நீர் வளத்தால் மிக்கு விளைந்த நெல்லை யறுக்கும் உழவர், மீனும் கள்ளும் பெறும் நீர்நாட்டை யுடையவன்; இவன் களிறு மதம்பட்டதனால் இவன் நோயின்றிச் செல்வானாதல் வேண்டும் என்று குறிக்கின்றார்.
இவனியா ரென்குவை யாயி னிவனே
புலிநிறக் கவசம் பூம்பொறி சிதைய
எய்கணை கிழித்த பகட்டெழின் மார்பின்
மறலி யன்ன களிற்றுமிசை யோனே
களிறே, முந்நீர் வழங்கும் நாவாய் போலவும் 5
பன்மீ னாப்பட் டிங்கள் போலவும்
சுறவினத் தன்ன வாளோர் மொய்ப்ப
மரீஇயோ ரறியாது மைந்துபட் டன்றே
நோயில னாகிப் பெயர்கதி லம்ம
பழன மஞ்ஞை யுகுத்த பீலி 10
கழனி யுழவர் சூட்டொடு தொகுக்கும்
கொழுமீன் விளைந்த கள்ளின்
விழுநீர் வேலி நாடுகிழ வோனே. (13)
திணை: பாடாண்டிணை. துறை: வாழ்த்தியல். சோழன் முடித்தலைக் கோப்பெருநற்கிள்ளி கருவூரிடஞ் செல்வானைக் கண்டு சேரமான் அந்துவஞ்சேர லிரும்பொறையொடு வேண்மாடத்து மேலிருந்து உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.
உரை: இவன் யார் என்குவையாயின் - இவன் யாரென்று வினவுவாயாயின்; இவனே - இவன்தான்: புலிநிறக் கவசம் - புலியினது தோலாற் செய்யப்பட்ட மெய்புகு கருவி பொலிந்த; பூம்பொறி சிதைய - கொளுத்தற; எய் கணை கிழித்த - எய்த அம்புகள் போழப்பட்ட; பகட் டெழில் மார்பின் - பரந் துயர்ந்த மார்பினையுடைய; மறலி யன்ன களிற்று மிசையோன் - கூற்றம்போன்ற களிற்றின் மேலோன்; களிறு - இக்களிறுதான்; முந்நீர் வழங்கும் நாவாய் போலவும் - கடலின் கண்ணே யியங்கும் மரக்கலத்தை யொப்பவும்; பன்மீன் நாப்பண் திங்கள் போலவும் - பல மீனினது நடுவே செல்லும் மதியத்தை யொப்பவும்; சுறவினத் தன்ன வாளோர் மொய்ப்ப - சுறவின் இனத்தையொத்த வாண் மறவர் சூழ; மரீஇயோர் அறியாது - தன்னை மருவிய பாகரை யறியாது; மைந்து பட்டன்று - மதம்பட்டது; நோயிலனாகிப் பெயர்க தில் அம்ம - இவன் நோயின்றிப் பெயர்வானாக; பழனம் - வயலிடத்து; மயில் உகுத்த பீலி - மயில் உதிர்த்த பீலியை; கழனி யுழவர் - ஆண்டுள்ள உழவர்; சூட்டொடு தொகுக்கும் - நெற் சூட்டுடனே திரட்டும்; கொழு மீன் - கொழுவிய மீனையும்; விளைந்த கள்ளின் - விளைந்த கள்ளையுமுடைய; விழுநீர் வேலி - மிக்க நீராகிய வேலியையுடைய; நாடு கிழவோன் - நாட்டையுடையோன் எ - று.
களிற்று மிசையோனாகிய இவன் யாரென்குவையாயின், நாடுகிழவோன்; இவன் களிறு மதம்பட்டது; அதனால் இவன் நோயின்றிப் பெயர்க வெனக் கூட்டி வினைமுடிவு செய்க. களிற்றுக்கு நாவாயோடுவமை எதிர்ப்படையைக் கிழித்தோடலும், திங்களோ டுவமைவாளோர் சூழத் தன் தலைமை தோன்றச் செல்லுதலுமாகக் கொள்க;தில்: விழைவின்கண் வந்தது. பெருநற்கிள்ளி களிறு கையிகந்து பகையகத்துப் புகுந்த்தமையால் அவற்குத் தீங்குறுமென் றஞ்சி வாழ்த்தினமையால், இது வாழ்த்தியலாயிற்று. இவற்குத் தீங்குறின் நமக்குத் தீங்குறுமென்னுங் கருத்தால், நோயிலனாகிப் பெயர்க வென்றாராயின் வாழ்த்தியலாகாது, துறையுடையானது பாட்டாமென வுணர்க.
விளக்கம்: புலி நிறம், புலியினது தோல். பூம் பொறி - பொலி வினையுடைய தோலினது இணைப்பு. புலியினது வரியுடன் இணைப்பும் கலந்து அழகு செய்தலின் அதனைப் "பூம்பொறி" யென்றார். உரையிற் கொளுத்து என்றது, தோலினது தையல் இணைப்பை. இப் புலிநிறக் கலசத்தை, "புலிப்பொறிப் போர்வை" யென்றும் கூறுவர். மறலி - கூற்றுவன். களிற்றினுடைய நிறமும் தோற்றமும் வன்மையும் தோன்ற, "மறலி யன்ன களிறு" என்றவர், மீட்டும் அதற்கு நாவாயும் திங்களும் உவமை கூறியதற்குக் காரணம், "களிற்றுக்கு .......கொள்க" என்றார். சோழன் கருவூரை முற்றியிருக்கின்றானாதலால், பகைப் புலமாகிய கருவூரிடம் செல்லுங்கால் ஊர்ந்து செல்லும் களிறு மதம் பட்டது. காணும் பகைவர், அதனை அடக்க முயலாது சினம் மிகுவித்து, அதற்கும் ஊர்ந்துவரும் சோழற்கும் தீங்கு விளைவிப்பரென்றகருத்தால், "நோயிலனாகிப் பெயர்கதில்" என்று வாழ்த்துகின்றார். "இவற்குத் தீங்குறின் நமக்குத் தீங்குறும்" என்றது. இவனுக்குத் தீங்குண்டாயின் இவனது ஆதரவு பெற்று வாழும் தம்மைப்போலும் பரிசிலருக்கும் ஆதரவின்றி யொழிதலால் தீங்குண்டாம் என்பதாம். தந்நலம் நோக்காது பிறர் நலமே பேணி வாழ்த்துவது வாழ்த்தியலாகும். தமக்குத் தீங்குறுமென்று கருதிக்கூறின் வாழ்த்தியலாகாது. சோழன் பெருநற் கிள்ளியையே பாடும் செந்துறைப் பாடாண்பாட்டாய் முடியும் என்பதாம். தில்லென்னும் இடைச்சொல் விழைவுப்பொருளில் வந்தது; "விழைவே காலம் ஒழியிசைக் கிளவியென், றம்முன் றென்ப தில்லைச் சொல்லே" (சொல். இடை. 5) என்பது தொல்காப்பியம்.
-----
14. சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன்
ஒருகால் கபிலரும் இக் கடுங்கோ வாழியாதனும் ஒருங்கிருந்த காலையின், இவ்வேந்தன் அவர் கையைப்பற்றி "நுமது கை மிக மென்மை யாகவுளதே!" என வியந்து கூறினான். அதுகேட்ட கபில ருள்ளத்தே, அவன் கூற்றே கருப்பொருளாகப் பாட்டொன் றெழுந்தது. அதுவே ஈண்டுக் காணப்படும் பாட்டு.
இப்பாட்டிண்கண், "அரசே, யானை,யிவருமிடத்து அதன் தோட்டி தாங்கவும், குதிரையைச் செலுத்துங்கால் அதன் குசை பிடிக்கவும், தேர் மிசை யிருந்து வில்லேந்தியவழி அம்பு செலுத்தவும், பரிசிலர்க்கு அருங் கலம் வழங்கவும் பயன்படுவதால் நின் கை வன்மையாக வுளது; என் போலும் பரிசிலர் மெய்ம் முயற்சியின்றிப் பிறர் நல்கப்பெறும் சோறுண்டு வருந்து தொழில் தவிர, தொழில் இலராதலால் அவர் கை மென்மையாக உளது என்று கூறுகின்றார்.
கடுங்கண்ண கொல்களிற்றாற்
காப்புடைய வெழுமுருக்கிப்
பொன்னியற் புனைதோட்டியான்
முன்புதுரந்து சமந்தாங்கவும்
பாருடைத்த குண்டகழி 5
நீரழுவ நிவப்புக்குறித்து
நிமிர்பரிய மாதாங்கவும்
ஆவஞ் சேர்ந்த புறத்தை தேர்மிசைச்
சாவ நோன்ஞாண் வடுக்கொள வழங்கவும்
பரிசிலர்க் கருங்கல நல்கவுங் குரிசில் 10
வலிய வாகுநின் றாடோய் தடக்கை
புலவு நாற்றத்த பைந்தடி
பூநாற் றத்த புகை கொளீஇ யூன்றுவை
கறிசோ றுண்டு வருந்துதொழி லல்லது
பிறிதுதொழி லறியா வாகலி னன்றும் 15
மெல்லிய பெரும தாமே நல்லவர்க்
காரணங் காகிய மார்பிற் பொருநர்க்
கிருநிலத் தன்ன நோன்மைச்
செருமிகு சேஎய்நிற் பாடுநர் கையே. (14)
திணை: அது. துறை: இயன்மொழி. சேரமான் செல்வக் கடுங்கோவாழியாதன் கபிலர் கைப்பற்றி "மெல்லிய வாமால் நுங் கை" எனக், கபிலர் பாடியது.
உரை: கடுங் கண்ண கொல் களிற்றால் - வன்கண்மையையுடைய கொலையானையாலே; காப்புடைய எழு முருக்கி - காவலையுடைய கணைய மரத்தை முறித்து; பொன் இயல் புனை தோட்டியான் - இரும்பாற் செய்யப்பட்ட அழகு செய்த அங்குசத்தால்; முன்பு துரந்து - முன்னர்க் கடாவி; சமம் தாங்கவும் - அது செய்யும் வினையைப் பின் வேண்டுமளவிலே பிடிக்கவும்; இடித் உடைத்த குண் டகழி - வலிய நிலத்தைக் குந்தாலியால் பார்துச் செய்த குழிந்த கிடங்கின்கண்; நீரழுவ நிவப்புக் குறித்து - நீர்ப் பரப்பினது ஆழமாகிய உயர்ச்சியைக் கருதி அதன்கட் செல்லாமல்; நிமிர் பரிய மா தாங்கவும் - மிகைத்த செலவினையுடைய குதிரையைக் குசைதாங்கி வேண்டுமளவிலே பிடிக்கவும்; ஆவம் சேர்ந்த புறத்தை - அம்பறாத்தூணி பொருந்திய முதுகை யுடையையாய்; தேர்மிசை - தேர்மேலே நின்று; சாப நோன் ஞாண் வடுக்கொள வழங்கவும் - வில்லினது வலிய நாணாற் பிறந்த வடுப் பொருந்தும்படி அம்பைச் செலுத்தவும்; பரி சிலர்க்கு அருங்கலம் நல்கவும் - பரிசிலர்குப் பெறுதற்கரிய அணிகலங்களை யளிக்கவும்; குரிசில் - தலைவ; வலிய வாகும் நின் தாள் தோய் தடக்கை - வலியவாகும் நின் முழந்தாளைப் பொருந்திய பெரிய கைகள்; புலவு நாற்றத்த பைந்தடி - புலால் நாற்றத்தை யுடையவாகிய செவ்வித் தடியை; பூ நாற்றத்த புகை கொளீஇ - பூ நாற்றத்தவாகிய புகையைக் கொளுத்தி; ஊன் துவை கறி சோறு உண்டு - அமைந்த வூனையும் துவையையும் கறியையும் சோற்றையும் உண்டு; வருந்து தொழில் அல்லது - வருந்தும் செயலல்லது; பிறிது தொழில் அறியா ஆகலின் - வேறு செயலறியா வாகலான்; தாம் நன்றும் மெல்லிய - அவைதாம் பெரிதும் மெல்லியவாயின; பெரும -; நல்லவர்க்கு ஆரணங் காகிய மார்பின் - பெண்டிர்கட்கு ஆற்றுதற்கரிய வருத்தமாகிய மார்பினையும்; பொருநர்க்கு இருநிலத் தன்ன நோன்மை - பொருவார்க்குத் துளக்கப்படாமையிற் பெரிய நிலம்போன்ற வலியினையுமுடைய; செரு மிகு சேஎய்- போரின்கண்ணே மிக்க சேயை யொப்பாய்; நிற் பாடுநர் கை - நின்னைப் பாடுவாருடைய கைகள் எ-று.
கோளீஇ யென்னு மெச்சம் அமைத்த வென்னும் ஒருசொல் வருவித்து முடிக்கப்பட்டது; கொளுத்த வெனத் திரித்து அவ்வூன் என ஒரு சுட்டு வருவித்து அதனொடு முடிப்பினு மமையும். உண்டென்பது பொதுவினை யன்றேனும் கறி யொழிந்தவற்றிற்கெல்லாம் சேறலின், பன்மைபற்றி அமைத்துக்கொள்ளப்படும். ஊன் துவை கறியொடு கூடிய சோற்றை உண்டென வுரைப்பினு மமையும். இதனைப் பொதுவினை யென்றுரைப்பாரு முளர்.
குரிசில், பெரும, சேஎய், வலியவாகும் நின் கை; நிற்பாடுநர் கைதாம் மெல்லியாவாகும் எனக் கூட்டுக.
இனி, மாதாங்கவும் என்பதற்கு அகழியைக் கடக்கப் பாய்தற்குக் குதிரைக் குசையைத் தாங்கி யெடுத்து விடவும் என்றுரைப்பாரு முளர். பாடுநரெனத் தம்மைப் படர்க்கையாகக் கூறினார். தம் கையின் மென்மையது இயல்பு கூறுவார், அரசன் கையின் வலி இயல்புங் கூறினமையான், இஃது இயன்மொழியாயிற்று.
விளக்கம் . கடுங்கண் - வன்கண்மை. எழு - கணைய மரம். பொன் - இரும்பு சமம் - வேண்டும் அளவு. பார் நிலத்தை யுடைத்தற்குக் கருவியாகலின், குந்தாலியாலென வருவித்துரைத்தார். குறிப்பதன் பயன், அந்நீரழுவத்துட் செல்லாமையாதலால், குறித்து என்பதற்குக் கருதிய தன்கண் செல்லாதபடி யென்று உரை கூறுகின்றார். குசை - சாட்டி; பிடிவாருமாம். புறம் - முதுகு. சாபம் - வில். அருங் கலம் என்பதில் அருமை, பெறலருமை. பரிசிலர்க்குப் பெறுதற்கரியது என்பது. செவ்வித் தடி - புதிய வூன் கறி. பூ நாற்றம் - தாளிதத்தாற் பெற்ற இனிய மணம். கொளீஇ யென்னும் வினையெச்சம் கிடந்தபடியே எவ்வினையோடும் இயையாமையால், அமைத்த என ஒருசொல் வருவித்து முடிக்கப் பட்டது என்றார். இனி, அவ் வினையெச்சத்தையே பெயரெச்சமாகத் திரித்து அதற்கேற்ப முடித்தாலும் அமையும் என்று கூறுகிறார். வினையெச்சத்தைப் பெயரெச்சமாகத் திரித்து வேண்டியவாறு முடிப்பது அத்துணைச் சிறப்புடையதன்றாதலால், அமைத்த வென ஒருசொல் வருவித்துரைப்பதையே மேற்கொள்கின்றார். ஊனுண்டல் துவையுண்டல், சோறுண்டல் என்றாற்போலக் கறியுண்டலென வாராது கறி தின்றல் என வருமாதலால், "கறியொழிந்தவற்றிற்கெல்லாம் சேறலின் பன்மை பற்றி அமைத்துக் கொள்ளப்படும்" என்றார். சேனாவரையர் முதலியோர் உண்டலென்பது பொதுவினை யென்பர்.
"நும் கை மெல்லியவால்" என்ற சேரமான் வாழியாதனுக்கு, கபிலர் தம் கையின் மென்மைக்குக் காரணம் கூறுமாற்றால் "என் கை"யென்று கூறாமல், "பாடுநர் கை" யென்றது, தன்னைப் படர்க்கை யாகக் கூறுவது. நும் கை மெல்லிது என்றதுவே வாயிலாக வேந்தனது கை வன்மையும் கை வண்மையும் ஒருங்கு பாடுதற்கு இடம் வாய்த்தமையின், அதனை விடாது அரசன் கையின் இயல்பு கூறினார்.
எம்கை உண்டு வருந்து தொழில் அல்லது பிறிது தொழி லறியா வென்றது, வேந்தன் கையின் பெருமையை விளக்கிற்று. ஆடவர் மார் பகலம் மகளிர்க்குப் பொறுத்தற்கரிய வேட்கைத் துன்பம் பயக்குமென்ப வாதலால், "மகளிர்க்கு ஆரணங்காகிய மார்பு" என்றார்; 'மணங் கமழ் வியன்மார் பணங்கிய செல்லல்" (அகம். 22) என்று பிறரும் கூறுப. போரின்கண் உயர்வற வுயர்ந்த ஒருவன் முருகனென்பது தமிழ் நாட்டு வழக்காதலின், போரில் மேம்படுவோரை முருகனோ டுவமை கூறிச் சிறப்பிப்பது வழக்காயிற்று. அதனால் சேரமானை. "செருமிகு சேஎய்" என்றார். நிலத்தோடு வேந்தனை யுவமித்தது, பொறைபற்றியன்று; துளக்கப்படாமைபற்றி யாதலால், அதனைப் பெய்து உரை கூறுகின்றார்.
-------------
15. பண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி
இப்பாட்டின்கண் ஆசிரியர் நெட்டிமையார், பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதியின் போர் மிகுதியும் கண்டு வியந்து, "பெரும, மைந்தினையுடையாய், பகைவருடைய நல்லெயில் சூழ்ந்த அகலிடங்களைக் கழுதை யேர் பூட்டி யுழுது பாழ் செய்தனை;அவர் தேயத்து விளைவயல்களில் தேர்களைச் செலுத்தி யழித்தனை; நீருண் கயங்களில் களிறுகளை நீராட்டிக் கலக்கி யழித்தனை, இவ்வாறு மிக்க சீற்றமுடையோனாகிய நின்னுடைய தூசிப்படையைக் கொள்ளவேண்டி வந்து பொருது வசையுற்ற வேந்தரோ பலர்; நால்வேதத்துக் கூறியவாறு வேள்வி பல செய்து முடித்து அவ் வேள்விச் சாலைகளில் நட்ட யூபங்களும் பல; வசையுற்றவர் தொகையோ, யூபங்களின் தொகையோ, இவற்றுள் மிக்க தொகை யாது?" என்று கேட்கின்றார்.
கடுந்தேர் குழித்த ஞெள்ள லாங்கண்
வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப்
பாழ்செய் தனையவர் நனந்தலை நல்லெயில்
புள்ளின மிமிழும் புகழ்சால் விளைவயல்
வெள்ளுளைக் கலிமான் கவிகுளம் புகளத் 5
தேர்வழங் கினைநின் றெவ்வர் தேஎத்துத்
துளங்கியலாற் பணையெருத்திற்
பாவடியாற் செறனோக்கின்
ஒளிறுமருப்பிற் களிறவர
காப்புடைய கயம்படியினை 10
அன்ன சீற்றத் தனையை யாகலின்
விளங்குபொன் னெறிந்த நலங்கிளர் பலகையொடு
நிழல்படு நெடுவே லேந்தி யொன்னார்
ஒண்படைக் கடுந்தார் முன்புதலைக் கொண்மார்
நசைதர வந்தோர் நசைபிறக் கொழிய 15
வசைபட வாழ்ந்தோர் பலர்கொல் புரையில்
நற்பனுவ னால்வேதத்
தருஞ்சீர்த்திப் பெருங்கண்ணுறை
நெய்ம்மலி ஆவுதி பொங்கப் பன்மாண்
வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி 20
யூப நட்ட வியன்களம் பலகொல்
யாபல கொல்லோ பெரும வாருற்று
விசிபிணிக் கொண்ட மண்கனை முழவிற்
பாடினி பாடும் வஞ்சிக்கு
நாடல் சான்ற மைந்தினோய் நினக்கே. (15)
திணையும் துறையும் அவை. பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.
உரை: கடுந்தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண் - விரைந்த தேர் குழித்த தெருவின்கண்ணே; வெள் வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டி - வெளிய வாயையுடைய கழுதையாகிய புல்லிய நிரையைப் பூட்டி யுழுது; பாழ் செய்தனை - பாழ் படுத்தினை; அவர் நனந்தலை நல்லெயில் - அவருடைய அகலிய் இடத்தையுடைய நல்ல அரண்களை; புள்ளினம் இமிழும் புகழ்சால் விளை வயல் - புள்ளினங்கள் ஒலிக்கும் புகழமைந்த விளை கழனிக் கண்ணே; வெள்ளுளைக் கலிமான் கவி குளம்பு உகள - வெளிய தலையாட்டமணிந்த மனஞ் செருக்கிய குதிரையினுடைய கவிந்த குளம்புகள் தாவ; நின் தெவ்வர் தேஎத்துத் தேர் வழங்கினை - நின்னுடைய பகைவர் தேயத்துக்கண் தேரைச் செலுத்தினை; துளங்கியாலால் பணை யெருத்தின் - அசைந்த தன்மையோடு பெரிய கழுத்தினையும்; பா வடியால் செறல் நோக்கின் - பரந்த அடியோடு வெகுட்சி பொருந்திய பார்வையினையும், ஒளிறு மருப்பின் களிறு - விளங்கிய கோட்டினையுமுடைய களிற்றை; அவர காப்புடைய கயம் படியினை - அப்பகைவருடையனவாகிய காவலையுடைய வாவிக்கட் படிவித்தனை; அன்ன சீற்றத்து அனைய - அப்பெற்றிப்பட்ட சினத்துடனே அதற்கேற்ற செய்கையையுடையை; ஆகலின் - ஆதலான்; விளங்கு பொன் எறிந்த நலங்கிளர் பலகையொடு - விளங்கிய இரும்பாற் செய்யப்பட்ட ஆணியும் பட்டமும் அறைந்த அழகுமிக்க பலகையுடனே; நிழல்படு நெடுவேல் ஏந்தி - நிழலுண்டாகிய நெடிய வேலை யெடுத்து; ஒன்னார் - பகைவர்; ஒண்படைக் கடுந்தார் - ஒள்ளிய படைக்கலங்களையுடைய நினது விரைந்த தூசிப்படையின்; முன்பு தலைக்கொண்மார் - வலியைக் கெடுத்தல்வேண்டி; நசைதர வந்தோர் - தம் ஆசை கொடுவர வந்தோர்; நசை பிறக் கொழிய - அவுவாசை பின்னொழிய; வசை பட வாழ்ந்தோர் பலர்கொல் - வசையுண்டாக உயிர் வாழ்ந்தோர் பலரோ?; நற் பனுவல் - குற்றமில்லாத நல்ல தரும நூலினும்; நால் வேதத்து - நால்வகைப்பட்ட வேதத்தினும் சொல்லப்பட்ட; அருஞ் சீர்த்தி - எய்தற்கரிய மிக்க புகழையுடைய; பெருங் கண்ணுறை நெய்ம்மலி ஆவுதி பொங்க - சமிதையும் பொரியும் முதலாகிய பெரிய கண்ணுறையோடு நெய் மிக்க புகை மேன்மேற் கிளர; பன்மாண் வீயாச் சிறப்பின் - பல மாட்சிமைப்பட்ட கெடாத தலைமையையுடைய; வேள்வி முற்றி - யாகங்களை முடித்து; யூபம் நட்ட வியன் களம் பலகொல் - தூண் நடப்பட்ட அகன்ற வேள்விச்சாலைகள் பலவோ?; யா பலகொல் - இவற்றுள் யாவையோ பல?; பெரும-; விசி பிணிக் கொண்ட மண்கனை முழவின் - வார் பொருந்தி வலித்துக் கட்டுதலைப் பொருந்திய மார்ச்சனை செறிந்த தண்ணுமையையுடைய; பாடினி பாடும் வஞ்சிக்கு - விறலி பாடும் மேற்செலவிற்கு ஏற்ப; நாடல் சான்ற மைந்தினோய் - ஆராய்தலமைந்த வலியையுடையோய்; நினக்கு-;
எ - று.
பூட்டி யென்னும் வினையெச்சத்திற்கு உழு தென்னுஞ்சொல் தந்துரைக்கப்பட்டது. நற்பனுவல் நால்வேதத்து வேள்வி யென இயையும். நற்பனுவலாகிய நால்வேத மென்பாரு முளர்.
'பெரும, மைந்தினோய், பாழ் செய்தனை, தேர் வழங்கினை, கயம் படியினை; ஆதலின், நினக்கு ஒன்னாராகிய வசைபட வாழ்ந்தோர் பலர்கொல், யூபம் நட்ட வியன் களம் பலகொல்; இவற்றுள் யா பல கொல்லோ வெனக் கூட்டி வினைமுடிவு செய்க.
விலங்கு பொன்னெறிந்த வென்பதற்குக் கண்ணாடிதைத்த வெனினுமமையும். தார் முன்பு தலைக் கொண்மார் என்பதற்குத் தாரை வலியால் தலைப்பட வெனினு மமையும். புரையுநற் பனுவலென்பதூஉம் பாடம். யா பலவென இவ் விரண்டின் பெருமையும் கூறியவாறு. இவை எப்பொழுதுஞ் செய்தல் இயல்பெனக் கூறினமையின், இஃது இயன்மொழியாயிற்று.
விளக்கம்: ஞெள்ளல் - தெரு. நன வென்னும் உரிச்சொல் அகலமென்னும் பொருட்டாதலாலும், தலையென்பது இடமாதலாலும், நனந் தலை யென்றது, அகன்ற இடமெனப் பொருள்படுவதாயிற்று. அகன்ற என்பது அகலிய வென வந்தது. உகளல், தாவுதல்; அஃதாவது ஊன்றிப் பாய்தல். பாவடி - பரந்த அடி. ஒளிறுதல் - விளங்குதல். பலகை,கிடுகு; கேடகம். வாளும் வேலும் கொண்டு பகைவர் தாக்குமிடத்து, அவற்றைத் தாங்கித் தடுத்து நிற்றற்கேற்ப, ஆணியும் பட்டமும் அறைந்து அழகும் வன்மையும் பொருந்தி யிருப்பதனால் இதனை "நலங்கிளர் பலகை" என்றார். முன்பு - வலி. இதனைத் தலைக்கொள்ளல் என்பது சிதைப்பதாகும்; ஆதலால் தலைக்கொண்மார் என்பதற்குக் கெடுத்தல் வேண்டியென்றார். இனித் தலைக்கொள்ள லென்பது எதிர்தல் என்றும் பொருள்படுதலால், முன்பு தலைக்கொண்மார் என்பதற்கு ‘முன்பால்’ என ஆலுருபு விரித்து, "வலியால் தலைப்பட்ட" என்றும் உரைக்கலாம் என்றார். நற்பனுவல் நால்வேதத் தென்பதை, நற்பனுவலும் நால்வேதமும் எனக் கொண்டு, தரும நூலினும் வேதத்தினு மெனவுரைத்தார். நற்பனுவலும் வேதமே யாமெனக் கோடலும் பொருந்து மாகையால், "நற்பனுவலாகிய நால்வேத மென்பாரு முளர்" என்றார். பொன்னென்னும் பல பொரு ளொருசொல் கண்ணாடிக்குமாதலின் "விளங்கு பொன்...தைத்த வெனினுமமையும்" என்று கூறினார்.
----------
16. சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி
இச் சோழன் காலத்தே சேரநாட்டில் சேரமான் மாரி வெண் கோவும், சேரமான் மாந்தரஞ் சேர லிரும்பொறையும், பாண்டிநாட்டில் பாண்டியன் கானப்பேர் எயில் தந்த உக்கிரப் பெருவழுதியும் ஆட்சிபுரிந்தனர். இவற்குச் சேரமன்னர் இருவரில் மாரி வெண்கோ நண்பன். ஒரு கால் மாரிவெண்கோவும் உக்கிரப் பெருவழுதியும் இப் பெருநற்கிள்ளியும் நட்பால் பிணிப்புற்று ஒருங்கிருப்ப ஒளவையார் கண்டு பெருமகிழ்வுற்று, வானத்து வயங்கும் மீனினும் மாமழைத் துளியினும் நும்முடைய வாழ்நாட்கள் "உயர்ந்து மேந்தோன்றிப் பொலிக" என வாழ்த்திச் சிறப்பித்தனர். பிறிதொருகால், இந்நற்கிள்ளிக்கும் சேரமான் மாந்தரஞ் சேரலிரும்பொறைக்கும் போருண்டாயிற்று. அக்காலை, சோழற்குத் துணையாய்த் தேர்வண் மலையனென்பான் போந்து இரும் பொறையை வென்று புறங்கண்டான். இக் கிள்ளியை உலோச்சனார் என்னும் சான்றோர் சென்று கண்டபோது அவர்க்கு இவன் மலைபயந்த மணியும், கடறு பயந்த பொன்னும், கடல் பயந்த கதிர் முத்தமும், வேறுபட்ட வுடையும்" பிறவும் தந்து சிறப்பித்தான். அவரும் "அடல் வெங்குருசில் மன்னிய நெடிதே" யென வாழ்த்தி மகிழ்ந்தார். இவன் பெயர், "இராச சுயம் வேட்ட பெருநற்கிள்ளி' யெனப்படுவது நோக்கின், இவன் இராசசூயம் என்னும் வேள்வியைச் செய்தவனென்பது தெரி கிறது. பாண்டரங் கண்ணனார் என்னும் சான்றோர் இவன் தன் பகை வர் நாட்டை யழித்த செய்தியைப் பாடிச் சிறப்பிக்கின்றார். பாண்டரங்கன் என்பார்க்கு மகனாதலால் இவர் பாண்டரங் கண்ணனார் எனப்பட்டார். கண்ணனாரென்ப்து இவரதியற்பெயர்.
இப்பாட்டின்கண், இவர் இப் பெருநற்கிள்ளியை நோக்கி, 'முருகன்
போலும் குரிசில், நீ பகைவர் நாட்டுட் புகுந்து அவர் ஊர் சுட்ட
தீயினது விளக்கம் செல்சுடர் ஞாயிற்றுச் செக்கர்போலத் தோன்று
கிறது; இவ்வாறு தீயிட்டுக் கொளுத்திய அந்நாடு "கரும்பல்லது காடறி
யாப் பெருந்தண் பணை" பொருந்திய நன்னாடாகும். ஆயினும் நீ எரி
யூட்டுவான் செய்த போரின்கண் நின் களிறுகளும் நின் கருத்தொப்பப்
போர் மலைந்தன" என்று கூறுகின்றார்.
வினை மாட்சிய விரைபுரவியொடு
மழையுருவின தோல்பரப்பி
முனைமுருங்கத் தலைச்சென்றவர்
விளைவயல் கவர்பூட்டி
மனைமரம் விறகாகக் 5
கடிதுறைநீர்க் களிறுபடீஇ
எல்லுப்பட விட்ட சுடுதீ விளக்கம்
செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரிற் றோன்றப்
புலங்கெட விறுக்கும் வரம்பிற் றானைத்
துணைவேண்டாச் செருவென்றிப் 10
புலவுவாட் புலர்சாந்தின்
முருகற் சீற்றத் துருகெழு குருசில்
மயங்குவள்ளை மலராம்பற்
பனிப்பகன்றைக் கனிப்பாகல்
கரும்பல்லது காடறியாப் 15
பெருந்தண்பணை பாழாக
ஏம நன்னா டொள்ளெரி யூட்டினை
நாம நல்லமர் செய்ய
ஒராங்கு மலைந்தன பெருமநின் களிறே. (16)
திணை வஞ்சி; துறை: மழபுலவஞ்சி. சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியைப் பாண்டரங் கண்ணனார் பாடியது.
உரை: வினை மாட்சிய விரை புரவியொடு - போரிற்கு நன்மையை யுடையவாகிய விரைந்த குதிரையுடனே; மழை உருவின தோல் பரப்பி - முகில்போலும் நிறத்தையுடைய பரிசையைப் பரப்பி; முனை முருங்கத் தலைச் சென்று - முனையிடம் கலங்க மேற்சென்று; அவர் விளை வயல் கவர்பு ஊட்டி - அவரது நெல்விளை கழனியைக் கொள்ளை யூட்டி; மனை மரம் விறகாக - மனையிடத்து மரமே விறகாக; கடி துறை நீர்க் களிறு படீஇ - காவற்பொய்கைகளின் நீரிலே களிற்றைப் படிவித்து; எல்லுப்பட இட்ட சூடு தீ விளக்கம் - விளக்கமுண்டாக இடப்பட்ட நாடு சுடு நெருப்பினது ஒளிதான்; செல் சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்ற - விடுகின்ற கதிரையுடைய ஞாயிற்றினது செக்கர் சிறம் போலத் தோன்ற; புலம் கெட இறுக்கும் வரம்பில் தானை - இடமில்லையாகச் சென்றுவிடும் எல்லையில்லாத படையினையும், துணை வேண்டாச் செரு வென்றி - துணைப்படை வேண்டாத போர் வெற்றியினையும்; புலவு வாள் - புலால் நாறும் வாளினையும்; புலர் சாந்தின் - பூசிப் புலர்ந்த சாந்தினையும்; முருகற் சீற்றத்து உருகெழு குருசில் - முருகனது வெகுட்சிபோலும் வெகுட்சியினையுமுடைய உட்குப் பொருந்திய தலைவ; மயங்கு வள்ளை மலர் ஆம்பல் - ஒன்றோடொன்று கலந்த வள்ளையையும் மலர்ந்த ஆம்பலையும்; பனிப் பகன்றை - குளிர்ச்சியையுடைய பகன்றையையும்; கனிப் பாகல் - பழத்தையுடைய பாகலையுமுடைத்தாகிய; கரும் பல்லது காடு அறியா - கரும்பல்லது பிறிது காடறியாத; பெருந் தண் பணை பாழாக - பெரிய மருதம் பாழாக; ஏம நன்னாடு ஒள்ளெரி ஊட்டினை - காவலையுடைய நல்ல நாட்டை ஒள்ளிய தீயை யூட்டி; நாம நல்லமர் செய்ய - அஞ்சத்தக்க நல்ல போரைச் செய்ய; ஓராங்கு மலைந்தன - நின் கருத்திற்கேற்ப ஒரு பெற்றிப் படப் பொருதனை; பெரும -; நின் களிறு – நின்னுடைய களிறுகள் எ - று.
தோல் பரப்பி யென்பது முதலாகிய வினையெச்சங்களை இறுக்குமென்னும் பெயரெச்ச வினையொடு முடித்து, அதனைத் தானை யென்னும் பெயரோடு முடிக்க. பாகற் றண்பணை யென வியையும். எல்லுப்பட இட்ட சுடு தீ யென்றதனைத் தானைக்கு அடையாக்குக. கவர் பூட்டியென்பதற்கு விரும்பிக் கொள்ளை யூட்டியெனவும், புலங்கெட வென்பதற்கு நாடழிய வெனவும், புலவு வா ளென்பதற்குப் புலாலுடைய வாளெனவும் உரைப்பினு ம்மையும்.
குருசில், பெரும, நீ அமர் செய்ய நின் களிறு ஓராங்கு மலைந்தனவென வினைமுடிவு செய்க.
பாகல் பலாவென் றுரைப்பாருமுளர். ஏம நன்னா டொள்ளெரியூட்டி யென்றதனால், இது மழபுலவஞ்சியாயிற்று.
விளக்கம் : கவர்பு - கொள்ளை. கடி துறை - ஊரார் உண்ணுநீர் கொள்ளும் நீர்நிலைகளில் மக்களும் விலங்குகளும் இறங்கிப் படிந்து நீரைக் கெடுக்காவண்ணம் காத்தல் பண்டையோர் மரபாதலால் அவற்றைக் கடி துறை யென்றார். தண் பணை - மருதநிலம். *நாமம் -அச்சம். போர் நிகழுமிடத்துப் பகைவர் நாட்டு விளைவயல்களைக் கெடுப்பதும், நீர்நிலைகளைச் சிதைத்தழிப்பதும், நெல் கரும்பு முதலியன விளையும் மருத நிலங்களைப் பாழ் செய்வதும், மக்கள் குடியிருக்கும் ஊர்களைத் தீயிட்டழிப்பதும், அவர்தம் பொருளைச் சூறையாடுவதும் நிகழ்வது குறித்தே, இப் போர் நிகழ்ச்சி சான்றோர்களால் வெறுக்கப்படுகின்றன. இதனைச் இச்சான்றோர் விரித் தோதுவது வேந்தன் உள்ளத்தில் அருள் பிறப்பித்துப் போரைக் கைவிடுத்தல் கருதியென் றறிதல்வேண்டும். தோல் பரப்பி கவர்பூட்டி, களிறு படிவித்துப் புலங்கெட இறுக்கும் தானை யென இயைவது விளங்க, தோல் .....முடிக்க" என்றார். பாகலையுடைய தண்பணை, காடறியாத் தண்பணை யெனக் கொள்க. "கவர்வு, விருப்பாகும்" என்பது தொல்காப்பியம்; அதற்கேற்பக் கவர்பூட்டி யென்பதற்கு "விரும்பிக் கொள்ளையூட்டி" என்றும், புலம் என்பது நாட்டிற்கும் பொருந்துதாலால், புலம் கெட வென்பதற்கு நாடழிய வென்றும் பொருள்கொள்ளலாம் என்றார். இறுத்தல் - தங்குதல். தங்குதலை விடுதலென்பதும் வழக்காதலால், இறுக்கும் என்பதற்கு விடும் என்று உரைகூறினார்.
-------------
17. சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறை.
இச் சேரமன்னனின் இயற்பெயர் சேய் என்பது. அவன் சேரர் மரபில் இரும்பொறைக் குடியில் பிறந்தவன். யானையினது நோக்குப் போலும் நோக்கினையுடையவன் என்பதுபற்றி இவன் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேர லிரும்போறை யெனப்படுகின்றான். "வேழ நோக்கின் விறல் வெஞ்சேய்" என இவனைக் குறிங்கோழியூர்க்கிழார் பாராட்டுவர். இவன் காக்கும் நாடு "புத்தே ளுலகத் தற்று" என்பது. இவனுக்கும் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்சழியனுக்கும் ஒருகால் நடந்த போரில் இச்சேரமான் தோல்வியுற்று அவனாற் சிறைப் படுத்தப்பட்டான். அச்சிறையினின்றும் தன் வலியினால் சிறை காவலரை வென்று தப்பிச் சென்று தன் அரசுகட்டிலிற் சிறப்புற்றான். இவன்பால் நல்லிசைச் சான்றோர் பலர்க்கும் பேரீடுபா டுண்டு. இவனது இறுதிக் காலத்தே, வானத்தே ஒரு மீன் வீழ்ந்தது. அதன் வீழ்ச்சி நாடாளும் வேந்தர்க்கு எய்தும் தீங்கினை யுணர்த்தும் குறியென்று அக் காலத்தவர் கருதியிருந்தனர். இக்காலத்தும் ஞாயிற்றினிடத்தே காணப்படும் கருப்புக்குறியே இப்போது நிகழ்ந்த போர்க்கும் வற்கடத்துக்கும் காரணமென ஆராய்ச்சியாளர் கூறுகின்றனரன்றோ! மீன் வீழ்ச்சி கண்ட சான்றோருள் கூடலூர்கிழார் என்பவர் பெரு வருத்த மெய்தி ஏழுநாள் கழித்து யானைகட்சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறை யிறந்தானென்றறிந்தார். அறிந்தவர், அப்போது தாம் கொண்ட கையறவை ஒரு பாட்டில் (புறம். 229) குறித்துள்ளார்; அஃது இந்நூலுள்ளே யுளது.
இப்பாட்டில் ஆசிரியர் குறுங்கோழியூர்கிழார், இச்சேரமான் தலை யாளங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் சிறையிலிருந்து தன் வலியாற் றப்பிச் சென்று அரசுகட்டி லேறியிருக்க, அவனைக்கண்டு; "குடவர் கோவே, சேரர் மரபைக் காத்தவனே, தொண்டிநகரத்தோர் தலைவனே, நின்னைக் காணவந்தேன்" என்று கூறுகின்றார். சிறையினின்று இவன் தப்பிச் சென்ற திறத்தை,தான் கைப்படுக்கப்பட்ட குழியினின்றும் கரையைக் குத்தித் தப்பிப்போகும் யானை யொன்றின் செயலோ டுவமித்திருப்பது மிக்க நயமுடையதாகும்.
தென்குமரி வடபெருங்கல்
குணகுடகட லாவெல்லை
குன்றுமலை காடுநா
டொன்றுபட்டு வழிமொழியக்
கொடிதுகடிந்து கோறிருத்திப் 5
படுவதுண்டு பகலாற்றி
இனிதுருண்ட சுடர்நேமி
முழுதாண்டோர் வழிகாவல
குலையிறைஞ்சிய கோட்டாழை
அகல்வயன் மலைவேலி 10
நிலவுமணல் வியன்கானற்
றெண்கழிமிசைச் சுடர்ப்பூவின்
தண்டொண்டியோ ரடுபொருந
மாப்பயம்பின் பொறைபோற்றாது
நீடுகுழி யகப்பட்ட 15
பீடுடைய வெறுழ்முன்பிற்
கோடுமுற்றிய கொல்களிறு
நிலைகலங்கக் குழிகொன்று
கிளைபுகலத் தலைக்கூடியாங்கு
நீபட்ட வருமுன்பிற் 20
பெருந்தளர்ச்சி பலருவப்பப்
பிறிதுசென்று மலர்தாயத்துப்
பலர்நாப்பண் மீக்கூறலின்
உண்டாகிய வுயர்மண்ணும்
சென்றுபட்ட விழுக்கலனும் 25
பெறல்கூடு மிவனெஞ் சுறப்பெறி னெனவும்
ஏந்துகொடி யிறைப்புரிசை
வீங்குசிறை வியலருப்பம்
இழந்துவைகுது மினிநாமிவன்
உடன்றுநோக்கின்ன் பெரிதெனவும் 30
வேற்றரசு பணிதொடங்குநின்
ஆற்றலொடு புகழேத்திக்
காண்கு வந்திசிற் பெரும ஈண்டிய
மழையென மருளும் பஃறோன் மலையெனத்
தேனிறை கொள்ளு மிரும்பல் யானை 35
உடலுந ருட்க வீங்கிக் கடலென
வானீர்க் கூக்குந் தானை யானாது
கடுவொடுங் கெயிற்ற வரவுத்தலை பனிப்ப
இடியென முழங்கு முரசின்
வரையா வீகைக் குடவர் கோவே. (17)
திணை : வாகை. துறை : அரசவாகை; இயன்மொழியுமாம். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனாற் பிணீயிருந்த யானைக்கட்சேய் மாந்தரஞெசேர லிரும்பொறை வலிதிற் போய்க் கட்டி லெய்தினானைக் குறுங்கோழியூர் கிழார் பாடியது.
உரை : தென் குமரி - தென்றிசைக்கட் கன்னியும்; வட பெருங் கல் - வடதிசைக்கண் இமயமும்; குண குட கடல் எல்லையா - கீழ்த்திசைக்கண்ணும் மேற்றிசைக்கண்ணும் கடலும் எல்லையாக; குன்று மலை காடு நாடு -- நடுவுபட்ட நிலத்துக் குன்றமும் மலையும் காடும் நாடும் என இவற்றையுடையோர்; ஒன்றுபட்டு வழி மொழிய - ஒரு பெற்றிப்பட்டு வழிபாடு கூற; கொடிது கடிந்து - தீத்தொழிலைப் போக்கி; கோல் திருத்தி - கோலைச் செவ்விதாக்கி; படுவதுண்டு ஆறிலொன்றாகிய இறையையுண்டு; பகல் ஆற்றி - நடுவு நிலைமையைச் செய்து; இனி துருண்ட சுடர் நேமி - தடையின்றாகவுருண்ட ஒளியையுடைய சக்கரத்தால்; முழுதாண்டோர் வழி காவல - நிலமுழுதையும் ஆண்டோரது மரபைக் காத்தவனே; குலை இறைஞ்சிய கோள் தாழை - குலை தாழ்ந்த கோட்புக்க தெஙுகினையும்; அகல் வயல் - அகன்ற சுழனியையும்; மலை வேலி - மலையாகிய வேலியையும்; நிலவு மணல் வியன் கானல் - நிலாப்போன்ற மணலையுடைய அகன்ற கடற் கரையையும்; தெண் கழி மிசைச் சுடர்ப் பூவின் - தெளிந்த கழியிடத்துத் தீப்போலும் பூவினையுமுடைய; தண் தொண்டியோர் அடு பொருந - குளிர்ந்த தொண்டியி லுள்ளோருடைய அடு பொருந; மாப் பயம்பின் பொறை போற்றாது - யானை படுக்கும் குழிமேற் பாவின பாவைத் தன் மனச் செருக்கால் பாதுகாவாது; நீடு குழி அகப்பட்ட - ஆழத்தால் நெடிய குழியின் கண்ணே அகப்பட்ட; பீடுடைய எறுழ் முன்பின் - பெருமையை யுடைத்தாகிய மிக்க வலிமையுடைய; கோடு முற்றிய கொல் களிறு - கொம்பு முதிர்ந்த கொல்லுங் களிறு; நிலை கலங்கக் குழி கொன்று - அதன் நிலைசரியக் குழியைத் தூர்த்து; கிளை புகல - தன் இனம் விரும்ப; தலைக்கூடி யாங்கு - தன்னினத்திலே சென்று பொருந்தினாற்போல; அரு முன்பின் - பொறுத்தற்கரிய வலியால் பகையை மதியாது; நீ பட்ட பெருந் தளர்ச்சி - நீயுற்ற பெரிய தளர்ச்சி நீங்க; பிறிது சென்று - பிறிதொரு சூழ்ச்சியாற் போய்; பலர் உவப்ப - பலரும் மகிழ; மலர் தாயத்துப் பலர் நாப்பண் மீக் கூறலின் - பரந்த உரிமையையுடைய இடத்தின் நின் சுற்றத்தார் பலர்க்கு நடுவே உயர்த்துச் சொல்லப்படுதலால்; உண்டு ஆகிய உயர் மண்ணும் - நீ செழியனாற் பிணிப்புண்பதற்கு முன்பு நின்னா லழிக்கப்பட்டுப் பின்பு தம் மரசு வெளவாது நின் வரவு பார்த்திருந்த அரசர் நமதாய் இவனாற் கொள்ளப்பட்டு உண்டு அடிப்பட்டுப் போந்த மேம்பட்ட நிலமும்; சென்று பட்ட விழுக் கலனும் பெறல் கூடும் - இவன்பாற் சென்றுற்ற சீரிய அணிகலமும் கிடைத்த லுண்டாம்; இவன் நெஞ்சுறப் பெறின் எனவும் - இவனது நெஞ்சு நமக்கு உரித்தாகப் பெறின் என நினைந்தும்; ஏந்து கொடி இறைப் புரிசை - நின் வரவு பார்த்திராது தம் மரசு வெளவிய பகைவர் எடுத்த கொடியையுடைய உயர்ந்த மதிலையும்; வீங்கு சிறை வியல் அருப்பம்-மிக்க காடும் அகழும் முதலாய காவலையுடைய அகலிய அரணினையும்; நாம் இனி இழந்து வைகுவதும் - நாம் இனி இழந்து தங்குவேம்; உடன்று நோக்கினன் பெரிது எனவும் - இவன் நம்மை வெகுண்டு பார்த்தான் மிக வென நினைந்தும்; வேற்றரசு - பகை வேந்தர்; பணி தொடங்கும் நின் ஆற்றலொடு புகழேத்தி - ஏவல் செய்யத் தொடங்குதற்குக் காரணமாகிய நினது வலியுடனே புகழை வாழ்த்தி; காண்கு வந்திசின் - காண் பேனாக வந்தேன்; பெரும-; ஈண்டிய மழை யென மருளும் பல் தோல் - திரண்ட முகிலெனக் கருதி மயங்கும் பல பரிசைப் படையினையும்; மலையெனத் தேன் இறை கொள்ளும் இரும் பல் யானை - மலையென்று கருதித் தேனினம் தங்கும் பெரிய பல யானையினையும்; உடலுநர் உட்க வீங்கி - மாறுபடுவோர் அஞ்சும்படி பெருத்தலால்; கடல் என வான் நீர்க்கு ஊக்கும் தானை - கடலெனக் கருதி மேகம் நீர் முகக்க மேற்கொள்ளும் படையினையும்; ஆனாது - அமையாது; கடு ஒடுங்கு எயிற்ற - நஞ்சு கரக்கும் பல்லினையுடையவாகிய; அரவுத் தலை பனிப்ப - பாம்பினது தலைநடுங்கும் பரிசு; இடி யென முழங்கும் முரசின் - இடியென்று கருத முழங்கும் முரசினையும்; வரையா ஈகை - எல்லார்க்கும் எப்பொருளும் வரையாது கொடுக்கும் வண்மையையுமுடைய; குடவர் கோவே - குடநாட்டார் வேந்தே எ - று.
காவல, பொருந, பெரும, கோவே, ஏத்திக் காண்கு வந்தேன் எனக் கூட்டி வினைமுடிவுசெய்க. குன்றென்றது சிறு மலைகளை; அன்றிமணற்குன்றென்று நெய்தல் நிலமாக்கி, ஏனை மூன்றோடுங் கூட்டி நானிலத்தோருமென் றுரைப்பாரு முளர். அடுபொருந வென்றது, வேந்தற்கு வெளிப்படையாய் நின்றது. தளர்ச்சி யென்பதன்பின் நீங்கவென ஒரு சொல் வந்தது. "அருமுன்பிற் பெருந்தளர்ச்சி பலருவப்பப் பிறிது சென்று" என்பதற்கு, முன்போலே தளர்ச்சி பிறிதாகப் பலருவப்பச் சென்று எனினு மமையும்: அன்றி முன்பின் தளர்ச்சி பிறிதாகச் சென்றென்றுரைப்பாருமுளர். ஆனாது முழுங்கும் முரசு என்க.
விளக்கம்: குண குட கடல் என்றார்போலக் குமரிக்கண் கடல் கூறப்படாமையால், குமரி கடல்கோட்படுதற்கு முன்னையது இப்பாட்டென்பது தெளிவாகும். தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், இல்லறத்தானாகிய தான் என்ற கூறு ஐந்தொழிய, எஞ்சிநிற்கும் ஆறாவது கூறு அரசர்க்காதலின், அதனைப் "படுவது" என்றார். தடையுண்டாகிய வழி, அரசு இனிது நட்வாதென்பதுபற்றி, இனிது உருண்ட என்பதற்குத் தடையின்றாக வுருண்ட என்றார். முழுதாளுதல் - நிலம் முழுதும் ஆளுதல் கோள் தாழை - தோட்புக்க தாழை; குலை தாழ்ந்து மக்கள் ஏறி இனிது கொள்ளத்தக்க வகையில் உய்ர்ந்த தெங்கு என்றற்குக் கோட்புக்க தெங்கு என வுரைத்தார். நிலாப்போல் வெண்மையான மணலை "நிலவு மணல்" என்றமையின், "நிலாப்போன்ற மணல்" என வுரைத்தார். நிலா, நிலவென வந்தது. பயம்பு, பள்ளம், யானை வரும் வழியில் ஆழ்ந்த பள்ளஞ்செய்து அதன்மேல் மெல்லிய கழிகளைப் பரப்பி மணலைக் கொட்டி, பொய்யே நிலம் போலத் தோன்றச் செய்து வைப்பர் யானை வேட்டம் புரிவோர். அதனை யறியாது வரும் யானை அப்பள்ளத்தில் வீழ்ந்துவிடும். பின்னர்ப் பழகிய யானைகளைக்கொண்டு அதனைப் பிணித்துக்கொள்வர். இக்கரவினை யறிந்த யானைகள், செல்லுமிடத்து மிக்க கருத்தோடு செல்லும். ஈண்டு யானை அகப்பட்டமைக்குக் காரணம் மனச்செருக்காலுண்டாகிய கருத்திண்மை யென்பார். "மாப்பயம்பின் பொறை போற்றாது" என்றார். எனவே, இவ்வாறு பல இடையூறுகளைக் கண்டு தேறிய களிறென்பது பெற்றாம். அருமுன்பு, முன்பு-வலி. இதனையுடைமையின் பயன் பகைக்கஞ்சாமையாதலால், அரு முன்பின் என்பதற்கு, "பொறுத்தற்கறிய வலியால் பகையை மதியாது" என வுரைத்தார். இறைப்பபுரிசை: இறை - உயர்வு காடு, அகழ் மதில் முதலிய அரண்களின் பன்மை தோன்ற, "வீங்கு சிறை" என்றார். சிறை, காவல். மலையிட்த்தே தேனினம் கூடமைத்தல் இயல்பாதலால், யானைகளின் மதநாற்றங் குறித்துத் தங்கும் தேனினத்தை, "மலையெனத் தேனிறைகொள்ளும் யானை" யென்றார். வான் மேகம்; "வான் பொய்ப்பினும் தான் பொய்யா" (பட்டி. 5) என்றாற் போல. குன்றுமலை காடு நாடென்றவிடத்துக் குன்றொழிந்த ஏனைய தனித்தனியே குறிஞ்சி, முல்லை, மருதங்களைக் குறித்தலின், குன்றென்பதும் ஒரு நிலப்பகுதி குறித்ததென்றற்கும் இடமுண்மையின், "அன்றி ...உளர்" என்றார். பொருநர், வேந்தர்க்கும், போர்க்களம் எ*ர்க்களம் என்ற இருவகைக் களம் பாடுவோர்க்கும் பொதுப்பெயர்.
----------------
18. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
இப் பாண்டியனது இயற்பெயர் நெடுஞ்செழியன் என்பது. தலையாலங்கானம் என்னுமிடத்தே தன்னை யெதிர்த்த முடிவேந்தர் இருவரும் வேளிர் ஐவருமாகிய எழுவரை வென்று மேம்பட்டது கொண்டு தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் எனச் சிறப்பிக்கப்பட்டான். மாங்குடி மருதனார் முதலிய சான்றோரிடத்தே பெருமதிப்பும் அன்பும் உடையவன். அவர் பாடிய மதுரைக்காஞ்சிக்கும் தலைவன் இவனே. யானைக்கட்சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறையை வென்று சிறைப்படுத்தியதும், வேள் எவ்வியின் மிழலைக் கூற்றத்தையும் முதுவேளிர்கட்குரிய முத்தூர்க்கூற்றத்தையும் வென்று தான் கைப்படுத்திக் கொண்டதும் இவனுடைய போர்ச்செயல்களாகும். தன்னை யெதிர்த்த வேந்தரோடு பொரச் சென்றபோது இவன் வழங்கிய வஞ்சினப்பாட்டு இத் தொகைநூற்கண் உள்ளது. இவனைக் குறுங்கோழியூர் கிழார், குடபுலவியனார், கல்லாட்னார், மாங்குடி கிழார், இடைக்குன்றூர் கிழார் முதலியோர் பாடியுள்ளனர். இவனைப் பாண்டியன் நெடுஞ்செழியனென்றும் கூறுவர். இவன் வேறு; கோவலனைக் கொலைபுரிவித்த நெடுஞ்செழியன் வேறு.
குடபுலவியனார் என்னும் சான்றோர் இப்பாண்டியனை இப்பாட்டாலும் வரும் பாட்டாலும் சிறப்பித்துப் பாடுகின்றார். புலவியன் என்பது இவரது இயற்பெயர். குடநாட்டவராதலால், குடபுலவியனார் எனப்பட்டார். புலவியன் என்பது விரிந்த அறிவுடையவனென்னும் பொருள்பட வருந் தமிழ்ச்சொல்லாதலால், புலத்தியனென்றும் வடசொற் றிரிபெனக் கூறுவது மடமையாகும்.
இப்பாட்டிண்கண், தாம் பாண்டிநாட்டின் மேற்பகுதியில் வாழ்பவராதலாலும், அப்பகுதி நீர்நிலையின்றி விளைநலம் குன்றி வாடுதலாலும், நீர்நிலை பெருக அமைக்க வேண்டுமெனப் பாண்டியற் குணர்த்தக் கருதி "வயவேந்தே, நீ மறுமைப்பேறாகிய துறக்க வின்பம் வேண்டினும், இம்மைக்கண் ஒரு பேரரசனாய்ப் புகழெய்த வேண்டினும், நாட்டில் நீர்நிலை பெருக அமைக்க வேண்டும்; வித்தி வானோக்கும் புன்புலம் வேந்தன் முயற்சிக்கு வேண்டுவ உதவாது; ஆகவே நீர்நிலை பெருக அமைப்பாயாக" வென வற்புறுத்துகின்றார். அரசன்பால் பொருட்கொடைபெறும் பான்மையரான புலவர் பெருமக்கள், அவன்பால் பொருள்வளம் குன்றாது மேன்மேலும் பெருகுதற்குறிய செயன்முறைகளை அவர்கட்கு அறிவுறுத்துவது கடமையாகும். ஆதலால், ஈண்டுக் குடபுலவியனார், நாடு வளம் மிகுவது குறித்து நீர்நிலை பெருகச் செய்க என அறிவுறுத்துகின்றார். சேரமான் கோதையென்பாற்குத் தானைத் தலைவனான் பிட்டங்கொற்றனென்பான் மாறுபடும் மன்னரை வென்று அவர் தம் பொருள் வளத்தைப் புலவருக்கு நல்கிப் புகழ்பெறக் கண்ட வடம வ்ண்ணக்கன் தாமோதரனார் என்னும் சான்றோர், அவனது பொருள்வளம் குன்றாமை வேண்டி, "வயமான் பிட்டன் ஆரமர் கடக்கும் வேலும் அவன் இறைமாவள்ளீகைக் கோதையும், மாறுகொள் மன்னரும் வாழியர் நெடிதே" (புறம். 172) என்று வாழ்த்துவது இக்கருத்தை நாம் நன்கு தெளிய வற்புறுத்துகின்றது.
முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇப்
பரந்துபட்ட வியன் ஞாலம்
தாளிற் றந்து தம்புகழ் நிறீஇ
ஒருதா மாகிய வுரவோ ரும்பல்
ஒன்றுபத் தடுக்கிய கோடிகடை யிரீஇய 5
பெருமைத் தாகநின் னாயு டானே
நீர்த்தாழ்ந்த குறுங்காஞ்சிப்
பூக்கதூஉ மினவாளை
*நுண்ணாரற் பருவராற்
குரூஉக்கெடிற்ற குண்டகழி 10
வானுட்கும் வடிநீண்மதில்
மல்லன்மூதூர் வயவேந்தே
செல்லு முலகத்துச் செல்வம் வேண்டினும்
ஞாலங் காவலர் தோள்வலி முருக்கி
ஒருநீ யாகல் வேண்டினுஞ் சிறந்த 15
நல்லிசை நிறுத்தல் வேண்டினு மற்றதன்
தகுதி கேளினி மிகுதி யாள
நீரின் றமையா யாக்கைக் கெல்லாம்
உண்டி கொடுத்தோ ருயிர்கொடுத் தோரே
உண்டி முதற்றே யுணவின் பிண்டம் 20
உணவெனப் படுவது நிலத்தோடு நீரே
நீருநிலனும் புணரி யோரீண்
டுடம்பு முயிரும் படைத்திசி னோரே
வித்திவா னோக்கும் புன்புலங் கண்ணகன்
வைப்பிற் றாயினு நண்ணி யாளும் 25
இறைவன் றாட்குத வாதே யதனால்
அடுபோர்ச் செழிய விகழாது வல்லே
நிலனெளி மருங்கி னீர்நிலை பெருகத்
தட்டோ ரம்ம விவட்டட் டோரே
தள்ளா தோரிவட் டள்ளா தோரே. (18)
திணை: பொதுவியல்; துறை: முதுமொழிக்காஞ்சி. பாண்டியன் நெடுஞ்செழியனைக் குடபுலவியனார் பாடியது.
உரை: முழங்கு முந்நீர் முழுவதும் வளைஇ - ஒலிக்கின்ற கடலானது முழுதும் சூழப்பட்டு; பரந்து பட்ட வியன் ஞாலம்- பரந்து கிடக்கின்ற அகன்ற வுலகத்தை; தாளின் தந்து - தமது முயற்சியாற் கொண்டு; தம் புகழ் நிறீஇ - தம்முடைய புகழை யுலகத்தின் கண்ணே நிறுத்தி; ஒருதாம் ஆகிய உரவோர் உம்பல் - தாமே ஆண்ட வலியோருடைய வழித்தோன்றினோய்; ஒன்று பத்து அடுக்கிய கோடி கடை இரீஇய - ஒன்றைப் பத்து முறையாக அடுக்கப்பட்டதாகிய கோடி யென்னும் எண்ணினைக் கடையெண்ணாக இருத்திய; பெருமைத்தாக நின் ஆயுள் - சங்கு முதலாகிய பேரெண்ணினை யுடைத்தாக நினது வாழ்நாள்; நீர்த் தாழ்ந்த குறுங்காஞ்சி - நீரின் கண்ணேயுறத் தாழ்ந்த குறிய காஞ்சியினது; பூக் கதூஉம் இன வாளை - பூவை கவரும் இனமாகிய வாளையினையும்; நுண்ணாரல் - நுண்ணிய ஆரலினையும்; பரு வரால் - பரிய வராலினையும்; குரூஉக் கெடிற்ற - நிறமுடைய கெடிற்றினையு முடைத்தாகிய; குண்டு அகழி - குழிந்த கிடங்கினையும்; வான் உட்கும் வடி நீண் மதில் - வான மஞ்சும் திருந்திய நெடிய மதிலையு முடைத்தாகிய; மல்லல் மூதூர் வய வேந்தே - வளவிய பழைய ஊரினையுடைய வலிய வேந்தே; செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும் - நீ போகக் கடவ மறுமை யுலகத்தின்கண் நுகரும் செல்வத்தை விரும்பினும்; ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி ஒரு நீ ஆகல் வேண்டினும் - உலகத்தைக் காப்பாரது தோள் வலி யைக் கெடுத்து நீ ஒருவனுமே தலைவனாதலை விரும்பினும்; சிறந்த நல்லிசை நிறுத்தல் வேண்டினும் - மிக்க நல்ல புகழை இவ்வுலகத்தே நிறுத்துதலை விரும்பினும்; அதன் தகுதி கேள் இனி - அவ் வேட்கைக்குத் தக்க செய்கையைக் கேட்பாயாக இப் பொழுது; மிகுதியாள - பெரியோய்; நீர் இன்று அமையா யாக்கைக்கெல்லாம் - நீரை யின்றியமையாத உடம்பிற்கெல்லாம்; உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் - உணவு கொடுத்தவர்கள் உயிரைக் கொடுத்தார்; உண்டி முதற்று உணவின் பிண்டம் - உணவை முதலாக வுடைத்து அவ்வுணவா லுளதாகிய உடம்பு; உணவெனப் படுவது நிலத்தொடு நீர் - ஆதலால் உணவென்று சொல்லப்படுவது நிலத்தோடு கூடிய நீர்; நீரும் நிலனும் புணரியோர் - அந்நீரையும் நிலத்தையும் ஒருவழிக் கூட்டினவர்கள்; ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசினோர்- இவ்வுலகத்து உடம்பையும் உயிரையும் படைத்தவராவர்; வித்தி வான் நோக்கும் புன்புலம் - நெல் முதலாயவற்றை வித்தி மழையைப் பார்த்திருக்கும் புல்லிய நிலம்; கண்ணகன் வைப்பிற் றாயினும் - இட மகன்ற நிலத்தையுடைத்தாயினும்; நண்ணி யாளும் இறைவன் தாட்கு உதவாது - அது பொருந்தியாளும் அரசனது முயற்சிக்குப் பயன்படாது; அதனால் - ஆதலால்; அடு போர்ச் செழிய - கொல்லும் போரையுடைய செழிய; இகழாது - இதனைக் கடைப் பிடித்து; வல்லே - விரைந்து; நிலன் நெளி மருங்கின் – நிலம் குழிந்த விடத்தே; நீர் பெருகத் தட்டோர் - நீர்நிலை மிகும் பரிசு தளைத்தோர்; இவண் தட்டோர் - தாம் செல்லு முலகத்துச் செல்வ முதலாகிய மூன்றினையும் இவ்வுலகத்துத் தம் பேரோடு தளைத்தோராவர்; தள்ளாதோர் - அந் நீரைத் தளையாதவர்; இவண் தள்ளாதோர் இவ்வுலகத்துத் தம் பெயரைத் தளையாதோர் எ-று.
இதனால் நீயும் நீர் நிலை பெருகத் தட்கவேண்டுமென்பது கருத்தாகக் கொள்க. மற்றும் அம்மவும் அசைநிலை. உணவின் பிண்டம் உண்டி முதற்றாதலான், உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரென மாறிக் கூட்டுக. தள்ளாதோர் இவண் தள்ளாதோ ராதலால், செழிய, இதனை இகழாது வல்லே செய்யென ஒரு சொல் வருவித்துரைப்பாரு முளர், தட்டோரென்பதற்குத் தம் பெயரைத் தளைத்தோ ரெனினு மமையும்.
நீரும் நிலமும் புணரியோர் உயிரும் உடம்பும் படைத்தோரெனவே, செல்லு முலகத்துச் செல்வமும், வித்திவானோக்கும் புன்புலம் இறைவன் தாட் குதவாதெனவே, நீர்நிலை பெருகத் தட்டலால் வானோக்கவேண்டாத நன்புலம் இறைவன் தாட்கு உதவி ஞாலங் காவலர் தோள்வலி முருக்குதலும், நிலனெளி மருங்கின் நீர்நிலை பெருகத் தட்டோர் இவண் தட்டோ ரெனவே, நல்லிசை நிறுத்தலும் கூறப்பட்டன.
நீர்நிலை பெருகத் தட்கவே அறன் முதன் மூன்றும் பயக்குமென்பது கூறினமையான் இது முதுமொழிக் காஞ்சியாயிற்று.
விளக்கம்: முந்நீர் முழுவதும் வளைஇப் பரந்து பட்ட ஞாலம் என்று இயைதலால், வளைஇ யென்பதற்குச் சூழப்பட்டு என்று பொருளுரைத்தார். புகழ் நிறீஇ யென்றவிடத்து, புகழ்க்கு ஆதாரம் உலக மாதலின், புகழை யுலகத்தின் கண்ணே நிறுத்தி யென்றார்; சிறந்த நல்லிசை நிறுத்த வேண்டினும் என்றவிடத்தும் இவ்வாறே உரை கூறுதல் காண்க. இருந்து ஆளும் உலகம் நிலவுலகமாதலால், செல்லு முலகம் மறுமை யுலகமாயிற்று. ஞாலங் காவலர் - ஞாலம் காக்கும் வேந்தர். உடம்பு உணவால் வளர்தலின், உணவின் பிண்டமெனப் பட்டது. மக்கள் யாக்கை யுணவின் பிண்டம் (10:10) என மணிமேகலை யாசிரியரும் கூறுவர். புணர்த்தவரைப் "புணரியோர்" என்றார். புணர்த்தல், கூட்டுதல். அஃதாவது நீர் இல்லா நிலத்தில் நீர்நிலை யுண்டு பண்ணுதல். ஆறு, ஏரி, குளம் முதலியவற்றால் நீர் வருவாயின்றி மழை வருவா யொன்றையே நோக்கி நிற்கும் புன்செய் நிலத்தை, "வானோக்கும் புன்புலம்" என்றார். இக் காலத்தும் இந்நிலங்களை "வானவாரி" யென்பர். தாள், முயற்சி, வெற்றிச் சிறப்பால் பகை களைந்து செல்வம் பெருகுவிக்கும் அரசியல் முயற்சி. இயல்பாகவே ஆழ்ந்திருக்கும் நிலப்பகுதி தேர்ந்து நீர்நிலை யமைத்தல் இயல்பாதலால், "நிலன் நெளி மருங்கு" என்றார். மூன்றுமாவன, செல்லு முலகத்துச் செல்வம், ஞாலங் காவலர் தோள்வலி முருக்குதல், நீர்நிலை பெருகத் தளைத்தல், "வித்தி வானோக்கும் புன்புலம் இறைவன் தாட்டு உதவாது " என்ற இவ்வுண்மையை இகழாது என இவ்வுரைகாரர் கூறியது போலாது, "இகழாது வல்லே செய்" என ஒருசொல் வருவித்துரைத்தலு முண்டு. களைதல், கட்டல் என வருதல்போலத் தளைத்தல் தட்டல் என வந்தது. நிலனெளி மருங்கில் நெடிய நீண்ட கரையெடுத்து நீரைத் தேக்கிவேண்டு மளவிற் பயன்படுமாறு கட்டிவைத்தலைத் தளைத்தல் என்கின்றார். உயரும் உடம்பும் படைத்தல் அறம்; வேந்தர் தோள்வலி முருக்குதல் பொருள்; நல்லிசை நிறுத்தல் இன்பம் இவ்வகையால் அறமுதல் மூன்றும் கூறப்பட்டனவாம்.
-------
19. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
ஆசிரியர் குடபுலவியனார், இந் நெடுஞ்செழியன் தலையாலங்கானத்துச் செருவென்று வந்திருக்க அவனைக் காண்பது கருதி வந்தார். அவரையும் அவன் அன்போடு வரவேற்றுத் தழீஇக்கொண்டான். அவனால் தழுவப்பட்ட இச் சான்றோர் அவனது பேரன்பை வியந்து, "செழிய, நின் மார்பு புலியைப் படுப்பது குறித்து வேட்டுவன் கல்லிடத்தே சேர்த்திய அடாரையும் ஒக்குமென்று கருதிப் புல்லினேன்; எம் போல்வார்க்கு இன்பமும் பகைவர்க்குத் துன்பமும் பயப்பது நின் மார்பு" என்று பாராட்டி, அவனது போர்ச் செயலைச் சிறப்பித்துரைக்கின்றார்.
இமிழ்கடல் வளைஇய வீண்டகன் கிடக்கைத்
தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து
மன்னுயிர்ப் பன்மையுங் கூற்றத் தொருமையும்
நின்னொடு தூக்கிய வென்வேற் செழிய
இரும்புலி வேட்டுவன் பொறியறிந்து மாட்டிய 5
பெருங்கல் லடாரும் போன்மென விரும்பி
முயங்கினெ னல்லனோ யானே மயங்கிக்
குன்றத் திறுத்த குரீஇயினம் போல
அம்புசென் றிறுத்த வரும்புண் யானைத்
தூம்புடைத் தடக்கை வாயொடு துமிந்து 10
நாஞ்சி லொப்ப நிலமிசைப் புரள
எறிந்துகளம் படுத்த வேந்துவாள் வலத்தார்
எந்தையொடு கிடந்தோரெம் புன்றலைப் புதல்வர்
இன்ன விறலு முளகொ னமக்கென
மூதிற் பெண்டிர் கசிந்தழ நாணிக் 15
கூற்றுக்கண் ணோடிய வெருவரு பறந்தலை
எழுவர் நல்வலங் கடந்தோய்நின்
கழூஉவிளங் காரங் கவைஇய மார்பே. (19)
திணை : வாகை; துறை: அரசவாகை. அவனை அவர் பாடியது.
உரை : இமிழ் கடல் வளைஇய - ஒலிக்கும் கடலாற் சூழப்பட்ட; ஈண்டு அகன் கிடக்கை - அணுச் செறிந்த அகன்ற உலகத்துக்கண்; தமிழ் தலை மயங்கிய தலையாலங் கானத்து - தமிழ்ப்படை கைகலந்த தலையாலங்கானத்துக்கண்; மன்னுயிர்ப் பன்மையும் -நிலைபெற்ற உயிரினது பன்மையையும்; கூற்றத் தொருமையும் - அவ்வுயிரைக் கொள்ளும் கூற்றினது ஒருமையையும்; நின்னோடு தூக்கிய வென்வேற் செழிய - நின்னுடனே சீர்தூக்கிக் காட்டிய வென்றி வேலையுடைய செழிய; இரும் புலி வேட்டுவன் பொறி யறிந்து மாட்டிய - பெரும் புலியைப் படுக்கும் வேட்டுவன் எந்திர மறிந்து கொளுத்திய; பெருங்கல் அடாரும் போன்ம் - பெரிய கல்லையுடைய அடாரையும் போலும்; என விரும்பி - என்று விரும்பி; முயங்கினென் அல்லனோ யானே - புல்லினே னல்லனோ யான்; மயங்கிக் குன்றத் திறுத்த குரீஇயினம் போல - கலங்கி மலைக்கண்ணே தங்கிய குருவியினம் போல; அம்பு சென்று இறுத்த அரும் புண் யானை - அம்பு சென்று தைத்த பொறுத்தற்கரிய புண்ணையுடைய யானையினது; தூம்புடைத் தடக்கை வாயொடு துமிந்து - துளையுடைய பெருங்கை வாயுடனே துணிந்து வீழ்ந்து; நாஞ்சில் ஒப்ப - கலப்பையை யொப்ப; நிலமிசைப் புரள - நிலத்தின்மேலே புரள; எறிந்து களம் படுத்த - வெட்டிப் போர்க்களத்தின் கண்ணே வீழ்த்த; ஏந்து வாள் வலத்தர் - ஏந்திய வாள் வெற்றியை யுடையோராய்; எந்தையொடு கிடந்தோர் எம் புன் தலைப் புதல்வர் - எம் தலைவனோடு கிடந்தார் எம்முடைய புல்லிய தலையையுடைய மைந்தர்; இன்ன விறலும் உளகொல் நமக்கு - இப்பெற்றிப்பட்ட வென்றியும் உளவோ நமக்கு; என - என்று சொல்லி; மூதில் பெண்டிர் கசிந் தழ - முதிய மறக்குடியிற் பிறந்த பெண்டிர் இன் புற்று உவகையால் அழ; நாணி - அது கண்டு நாணி; கூற்றுக் கண்ணோடிய - கூற்றம் இரங்கிய; வெருவரு பறந்தலை - அஞ்சத்தக்க போர்க்களத்தின் கண்ணே; எழுவர் நல் வலம் கடந்தோய் - இரு பெரு வேந்தரும் ஐம்பெரு வேளிருமாகிய எழுவரது நல்ல வலியை வென்றோய்; நின் கழூஉ விளங்கு ஆரம் கவைஇய மார்பு - நினது கழுவி விளங்கின முத்தாரம் அகத்திட்ட மார்பை எ-று.
தமிழ் தலை மயங்கிய வென்புழித் தலை; அசைநிலை; இடமுமாம். செழிய, கடந்தோய், நின் மார்பை யான் விரும்பி முயங்கினெ னல்லனோ வெனக் கூட்டுக. பெருங்கல் அடாருமென்றை வும்மை, எமக்கு விருப்பஞ் செய்தலேயன்றி நின் பகைவர்க்கு வருத்தஞ் செய்தலான், நின் மார்பு கல்லடாரும் போலுமென எச்சவும்மையாயிற்று; சிறப்பும்மையுமாம். மூதிற் பெண்டிர் கசிதலால் நாணி யெனவும், அழுதலாற் கண்ணோடிய வெனவும் நிரனிறையாகாக் கொள்க. போர் முடிதலாற் போயின கூற்றை நாணியும் கண்ணோடியும் போயிற்றுப் போலக் கூறியது ஓர் அணி கருதி நின்றது. இனி, அம்பு தைத்த யானையை வெட்டிப் படுத்தல் மறத்திற் கிழிபென்று பெண்டிர் இரங்கி யழுதலின், கூற்றுக் கண்டு நாணிக் கண்ணோடியதென் றுரைப்பாரு முளர்.
விளக்கம்: ஈண்டுதல் செறிதல் என்னும் பொருளதாகலின், ஈண்டகன் கிடக்கை யென்பதற்கு அணுச் செறிந்த அகன்ற உலகம் என்று கூறினார். அணு - மண் "மண் திணிந்த நிலனும்" (புறம். 2) என்பதன் உரை காண்க. தமிழ்ப்படை, வென்றோர் படையும் தோற்றோர் படையும் தமிழகத்துப் படையாதலால், "தமிழ்ப் படை" யென்றார். தலை மயங்கிய என்புழி, தலை, அசைநிலையாகக் கொண்டமையின், மயங்கிய என்பதற்குக் கைகலந்த என்றுரைத்தார். இனி, தமிழ் தலையென்று கொண்டு, தமிழகத்திடத்தே மயங்கிய என்று பொருள்கொள்ளற்கும் இடமுண்மையின், "தலை, இடமுமாம்" என்றார். உயிர்கள் பலவாயினும் கூற்றொன்றே நின்று அவை பலவற்றையும் உண்டலிற் சலியாமை போல, இப்பாண்டியன் ஒருவனே நின்று பகைவர் பலரையும் வெல்வது அமையுமெனக் கருதிப் போருடற்றுகின்றான் என்பது விளங்க, "நின்னோடு தூக்கிய செழிய" என்றார். அடார், கருங்கற் பாறைகளின் இணைப்பு; கற்பலகையுமாம். பொறியறிந்து மாட்டிய பெருங்கல் அடார் - மலை நாட்டவர் பாறைகள் செறிந்த குன்றுகளில் முழைகள் கண்டு, அவற்றின் வாயிலில் கற்பலகையால் கதவமைத்து, உள்ளே ஆடுகளைக் கட்டிப் புலிகளை அதனுட் புகுவித்து, அவை ஆடுகளைத் தாக்கியவழி வாயிற் கதவாகிய கற்பலகை விரைய மூடிக் கொள்ளுமாறு பொறியமைத்து வைப்பது. இவ்வடார், புலியை அகப் படுத்தற்கேயன்றி, வெயில் காற்று மழை முதலியவற்றின் மறைதற்கு இடமாய் வேட்டுவற் கின்பம் செய்யும். உம்மை, எச்சவும்மையாயிற்று. பகைவரைப் படுக்கும் ஆண்மைச் சிறப்பை விளக்குதலால், சிறப்பும்மை என்றலும் பொருந்தும் என்றற்குச் "சிறப்பும்மையுமாம்" என்றார். புனத்திடத்தே தங்கும் குரீஇயினம் மலையிடத்தே தங்குதற்குக் காரணம் இது வென்பார், "மயங்கி" யென்றார். மலையிடத்துத் தங்கிய குரீஇ யினம் போல வீரர் மார்பிடத்தே தங்கிய அம்பு தோன்றும் என வறிக. "மயங்கி....நமக்கு" என்பது மூதில் மகளிர் கூற்று. இறுத்தலாலுண்டாகிய புண்ணை, இறுத்த புண்ணென்றார். மூதில் மகளிர்க்குத் துயர் தருவது மற மானங்களின் இழப்பே தவிர உயிரிழப்பன்மையின், கசிந்து அழ என்பதற்கு, "உவகை யற்றழ" வென்றார். அணி, தற் குறிப்பேற்றம். மானமுடைய, "மறக்குடியிற் பிறந்தவர்" உணர்வில்லாத விலங்காகு மென்று கருதி யானையைக் கொல்வதும், பிறரால் தாக்குண்டு மிச்சிற் பட்டாரெனப் போர்ப்புண் பட்ட வீரரை வெல்வதும், ஒத்த மாறுபாடு இல்லாதவரென்று நினைத்து தமக்கு இளையவரை வெல்வதும், தம்மின் மூத்தவரொடு பொருவது போர் நெறி யன்றென எண்ணி அவரை வெல்வதும், மறத்திற்கு இழிபு என்று கருதுவர்; இதனை, "வீறின்மையின் விலங்காமென மதவேழமு மெறியான், ஏறுண்டவர் நிகராயினும் பிறர்மிச்சிலென் றெறியான், மாறன்மையின் மறம் வாடுமென் றிளையாரையும் எறியான், ஆறன்மையின் முதியாரையு மெறியான் அயில்உழவன்" (சீவக. 2261) என்று சான்றோர் கூறுதல் காண்க. இதனாற்றான், இவ்வுரைகாரர், "அம்பு தைத்த யானையை வெட்டிப் படுத்தல் மறத்திற் கிழிபென்று பெண்டிர் இரங்கி யழுதலின் கூற்றுக் கண்டு நாணித் கண்ணோடியதென் றுரைப்பாரு முளர்" என்றார். "தானால் விலங்கால் தனித்தால் பிறன் வரைத்தால், யானை யெறிதல் இளிவரவால் - யானை ஒருகை யுடைய தெறிவலோ யானும்,இரு கை சுமந்துவாழ் வேன்" (தொல். புறத். 5, நச்சி. மேற்.) என்பது ஈண்டு நினைவுகூரத்தக்கது.
-----------------------------
20. சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறை.
ஆசிரியர் குறுங்கோழியூர் கிழார் இப்பாட்டின்கண் யானைகட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையின் செங்கோலாட்சியின் செம்மையைப் புகழ்ந்து, "செம்மலே, நீ அறம் துஞ்சும் செங்கோலையுடையை; அதனால் நின்னாட்டவர் புதுப்புள் வரினும் பழம்புள் போகினும் நடுக்கம் சிறிதும் இலராய் இன்பத்திலே திளைத்திருக்கின்றனர். அவர்கள் நின் செம்மைப் பண்பு கருதி நின்னுயிர்க்கு ஏதேனும் ஏதம் வருமோ வென எண்ணி அன்பால் அஞ்சியிருக்கின்றனர்காண்" எனப் பாராட்டுகின்றார்.
இருமுந்நீர்க் குட்டமும்
வியன்ஞாலத் தகலமும்
வளிவழங்கு திசையும்
வறிதுநிலைஇய காயமும், என்றாங்
கவையளந் தறியினு மளத்தற் கரியை 5
அறிவு மீரமும் பெருங்க ணோட்டமும்
சோறுபடுக்குந் தீயோடு
செஞ்ஞாயிற்றுத் தெறலல்லது
பிறிதுதெற லறியார்நின் னிழல்வாழ் வோரே
திருவி லல்லது கொலைவில் லறியார் 10
நாஞ்சி லல்லது படையு மறியார்
திறனறி வயவரொடு தெவ்வர் தேயவப்
பிறர்மண் ணுண்ணுஞ் செம்மனின் னாட்டு
வயவுறு மகளிர் வேட்டுணி னல்லது
பகைவ ருண்ணா வருமண் ணினையே 15
அம்புதுஞ்சுங் கடியராணால்
அறந்துஞ்சுஞ் செங்கோலையே
புதுப்புள் வரினும் பழம்புட் போகினும்
விதுப்புற வறியா வேமக் காப்பினை
அனையை யாகன் மாறே 20
மன்னுயி ரெல்லா நின்னஞ் சும்மே. (20)
திணையும் துறையும் அவை. சேரமான் யானைகட்சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறையைக் குறுங்கோழியூர் கிழார் பாடியது.
உரை : இரு முந்நீர் குட்டமும் - பெரிய கடலினது ஆழமும்; வியன் ஞாலத் தகலமும் - அகன்ற உலகத்துப் பரப்பும்; வளி வழங்கு திசையும் - காற்றியங்குந் திசையும்; வறிது நிலைஇய காயமும் - வடிவின்றி நிலைபெற்ற ஆகாயமும்; என்ற ஆங்கவை- என்று சொல்லப்படுமவற்றை; அளந்தறியினும் - வரை யறுத்தறியினும்; அளத்தற் கரியை - வரையறுத்தற் கரியை; அறிவும் ஈரமும் பெருங் கண்ணோட்டமும் - அறிவும் அன்பும் மிக்க கண்ணோட்டமும்; சோறு படுக்கும் தீயோடு- ஆகலான் சோற்றையாக்கும் நெருப்புடனே; செஞ் ஞாயிற்றுத் தெறலல்லது பிறிது தெறல் அறியார் - செஞ்ஞாயிற்றினது வெம்மையல்லது வேறு வெம்மை யறியார்; நின் நிழல் வாழ்வோர் - நின் குடைநிழற்கண் வாழ்வோர்; திரு வில் அல்லது கொலை வில் அறியார் - இந்திர வில் லல்லது பகைவரது கொலைவில்லை யறியார்; நாஞ்சில் அல்லது படையும் அறியார் - கலப்பை யல்லது வேறு படைக்கலமும் அறியார்; திறன் அறி வயவரொடு தெவ்வர் தேய - போர் செய்யும் கூறுபாட்டை யறியும் வீரருடனே பகைவர் மாய; அப்பிறர் மண் உண்ணும் செம்மல்- அம்மாற்றாருடைய மண்ணைக் கொண்டுண்ணும் தலைவ; நின் நாட்டு வயவுறு மகளிர் வேட்டுணின் அல்லது - நின்னுடைய நாட்டின்கண் வேட்கை நோயுற்ற பெண்டிர் விரும்பி உண்ணினல்லது; பகைவர் உண்ணா அருமண்ணினை - பகைவர் உண்ணப்படாத பெறுதற்கரிய மண்ணையுடையை; அம்பு துஞ்சும் கடியரணால் - அம்பு தங்கும் காவலை யுடைய அரணுடனே; அறம் துஞ்சும் செங் கோலை - அறம் தங்கும் செவ்விய கோலையுடையை; புதுப் புள் வரினும் பழம் புள் போகினும் - புதுப்புள் வரினும் பழைய புள் அவ்விடத்தை விட்டுப் போகினும்; விதுப்புறவு அறியா ஏமக் காப்பினை - அவற்றால் நடுக்கமுறுத லறியாத சேமமாகிய காவலையுடையை; அனையை யாகன்மாறு- அத்தன்மையை யுடையை யாதலான்; மன் னுயி ரெல்லாம் - உலகத்து நிலைபெற்ற உயிரெல்லாம்; நின் அஞ்சும்மே - தத்தம் காதலால் நினக்கு ஏதம் வருங்கொல் என்று அஞ்சும் எ-று.
அறிவும் ஈரமும் கண்ணோட்டமும் என்பன சினைவினைப்பாற்பட்டு அளத்தற் கரியை யென்னும் முதல்வினை கொண்டன.
விளக்கம்: ஆகாயம், முதற் குறைந்து காயமென நின்றது. அதன் கண் காற்றும் கிடையாதாதலால், "வறிது நிலைஇய காயம்" என்றார். இக்கால வான நூலாரும் இஃதுண்மை யென்பர். பெருங் கண்ணோட்டம் என்பதற்கு மிக்க கண்ணோட்ட மென்றார். நீரின் குட்டமும் நிலத்தின் அகலமும் காற்றின் திசையும் காயத்தின் வறுமையும் என்றதற்கேற்ப, இவன் பால் அறிவும், ஈரமும், பெருமையும், கண்ணோட்டமும் அளத்தற்கரியன என்று கூறல் பொருத்தமாகும். பெருங்கண்ணோட்டம் கழிகண்ணோட்டமன்று. பிறர் மண் உண்டலாவது பிறர் மண்ணைக் கொண்டல்லது உண்டி கொள்ளே னென்றிருந்து கொண்டபின் உண்டல்; "வெவ்வெரி நிலைஇய எயிலெறிந் தல்லது, உண்ணா தடுக்கிய பொழுது பலகழிய" ( பதிற்.68) என்று சான்றோர் கூறுதல் காண்க. புதுப்புள் வருதலும் பழம்புள் ஏகுதலும் தீ நிமித்தமாகக் கருதுபவாதலின், "புதுப்புள் வரினும் பழம்புள் போகினும்" என்றார். பெருங்காதலாற் பிணிக்கப்பட்டார் தம்முள் ஒருவரொருவர்க்கு யாது தீங்கு நேருமோ என்ற அச்சத்தால் அடிக்கடி வருத்தப்படுவராதலால். "மன்னுயி ரெல்லாம் நின் அஞ்சும்மே" என்றார். அஞ்சுதற்கேது ஆசிரியர் கூறாமையின், 'தத்தம் காதலால்' என்று உரையின் கண் பெய்து கூறினார். அறிவும், ஈரமும், கண்ணோட்டமும், அவற்றையுடைய சேரமானும் முறையே சினையும் முதலுமாதலின், சினையொடு முதற்கொற்றுமையுண்மையால், 'நீ அறிவும் ஈரமும் கண்ணோட்டமும் அளத்தற் கரியை" என்றார். அளத்தற்கருமை, அறிவு முதலாயவற்றிற் குரியவாகும். அஃது "அளத்தற் கரியை நீ" என முதன்மேல் நிற்பது காண்க. "பகைவ ருண்ணா அரு மண்ணினை" என்ற விடத்து, அருமை பெறற் கருமை குறித்து நின்றது. சூலுற்ற மகளிர் புளியும் மண்ணும் உண்பர் என்ப. அதனால் "வயவுறு மகளிர் வேட்டுணி னல்லது பகைவருண்ணா அருமண்ணினையே" என்று கூறுகின்றார். திறனறி வயவர் - போர் செய்யும் கூறுபாட்டை யறியும் வீரர். திறம் - கூறுபாடு.
-------
21. கானப்பே ரெயில்கடந்த உக்கிரப் பெருவழுதி
இப் பெருவழுதி பாண்டி வேந்தருள் பழையோருள் ஒருவன். இவன் காலத்து ஏனை முடிவேந்தரான சேரமான் மாரி வெண்கோவும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் இவற்கு நண்பராயிருந்தனர். ஒருகாலத்து இம்முவரும் ஒருங்கிருந்த காட்சி கண்டு ஔவையார் மகிழ்ந்து பாடியுள்ளார். அகநானூற்றைத் தொகுப்பித் தோன் இவன் என்பர். அவன் முன்பே திருவள்ளுவரது திருக்குறள் அரங்கேற்றப்பட்டதென்றும் கூறுப. கானப்பேர் என்பது இப்போது காளையார் கோயிலென வழங்குகிறது. இது பாண்டிநாட்டிலுள்ளது. இவன் காலத்தே இது வேங்கை மார்பன் என்னும் குறுநில மன்னற் குரியதாய் நல்ல அரணமைந்து விளங்கிற்று. இவன் அம்மன்னனை வென்று அக்கானப்பேரெயிலைத் தனக்குரித்தாகக் கொண்டான். அதனாற்றான், இவற்குக் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி எனப் பெயர் வழங்குகிறது.
கானப் பேரெயில் கடந்து வென்றி கொண்டு விளங்கும் மேம்பாட்டைக் கண்டு வியந்து ஐயூர் மூலங்கிழார் என்னும் சான்றோர் இப்பாட் டின்கண் இக்கானப்பேரெயிலின் அரண் சிறப்பை யெடுத்தோதி, அதற்குரியனான வேங்கை மார்பன், "இனி, இஃது இரும்புண்ட நீரினும் மீட்டற் கரிது" என இரங்குமாறு இவன் அதனைக் கடந்த செய்தியைப் பாராட்டி வாழ்த்துகின்றார்.ஐயூர் மூலம் என்பது ஓரூர். ஐயூர் என்பது வேறு; ஐயூர் மூலமென்பது வேறு.
புலவரை யிறந்த புகழ்சா றோன்றல்
நிலவரை யிறந்த குண்டுகண் ணகழி
வான்றோய் வன்ன புரிசை விசும்பின்
மீன்பூத் தன்ன வுருவ ஞாயிற்
கதிர்நுழை கல்லா மரம்பயில் கடிமிளை 5
அருங்குறும் புடுத்த கானப் பேரெயில்
கருங்கைக் கொல்லன் செந்தீ மாட்டிய
இரும்பு ணீரினு மீட்டற் கரிதென
வேங்கை மார்பி னிரங்க வைகலும்
ஆடுகொளக் குறைந்த தும்பைப் புலவர் 10
பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே
இகழுந ரிசையொடு மாயப்
புகழொடு விளங்கிப் பூக்கநின் வேலே. (21)
திணையும் துறையும் அவை. கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதியை ஐயூர் மூலங் கிழார் பாடியது.
உரை: புலவரை யிறந்த புகழ் சால் தோன்றல் - நின்னைப் பாடுவாரது அறிவின் எல்லையைக் கடந்த புகழமைந்த தலைவ: நிலவரை இறந்த குண்டு கண் அகழி - நிலவெல்லையைக் கடந்த பாதாலத்தே யுற ஆழ்ந்த இடத்தையுடைய அகழியினையும்; வான் தோய் வன்ன புரிசை - உயர்ச்சியால் வானைப் பொருந்துவது போன்ற மதிலையும்; விசும்பின் மீன் பூத் தன்ன உருவ ஞாயில் - அவ்வானிடத்து மீனைப் பூத்தாற்போன்ற வடிவையுடைய சூட்டினையும்; கதிர் நுழை கல்லா மரம் பயில் கடிமிளை - வெயிற் கதிர் நுழையாத மரஞ் செறிந்த காவற்காட்டினையு முடைத்தாய்; அருங் குறும்பு உடுத்த கானப் பேரெயில் - அணைதற்கரிய சிற்றரண்களாற் சூழப்பட்ட கானப்பே ரென்னு மரண்; கருங் கைக் கொல்லன் - வலிய கையையுடைய கொல்லனால்; செந் தீ மாட்டிய - செந் தீயின் கண்ணே மாட்டப்பட்ட; இரும் புண் நீரினும் மீட்டற் கரிது என - இரும்புண்ட நீரினும் மீட்டற் கரிதெனக் கருதி; வேங்கை மார்பன் இரங்க- வேங்கை மார்பன் வருந்த; வைகலும்- நாடோறும்; ஆடு கொளக் குழைந்த தும்பை - வென்றி கொளத் தழைத்த தும்பையையுடைய; புலவர் பாடு துறை முற்றிய - புலவர் பாடப்படும் துறைகளை முடித்த; கொற்ற வேந்தே - வெற்றியினையுடைய வேந்தே; இகழுநர் இசை யொடு மாய - நின்னை மதியாத பகைவர் தம்முடைய புகழுடனே பொன்ற; புகழொடு விளங்கி - வெற்றிப் புகழுடனே விளங்கி; பூக்க நின் வேல் - பொலிவதாக நின் வேல் எ-று.
கானப் பேரெயில் மீட்டற் கரிதென வேங்கை மார்பன் இரங்கப்பாடுதுறை முற்றிய கொற்ற வேந்தே, நின் வேல் பூக்க வெனக் கூட்டி வினைமுடிவு செய்க. குழைத்த வென்பது குழைந்த வென மெலிந்து நின்றது.
விளக்கம்: உக்கிரப் பெருவழுதியின் புகழ் மிகுதி, புலவரது புலமை யெல்லையைக் கடந்து நிற்பது என்பது தோன்ற, 'புலவரை யிறந்த புகழ்சால் தோன்றல்" என்றார். நிலவரை இறந்தவழி யுள்ளது பாதல வெல்லை யென்பவாகலின், நிலவரை இறந்த என்றதற்கு, நில வெல்லையைக் கடந்த என்றதனோ டமையாது, "பாதலத்தே உற ஆழ்ந்த" என்றார். புரிசையின் எல்லைக்கு வான் கூறப்பட்டமையின், அகழியின் எல்லையாகப் பாதலம் கூறப்பட்டதென்றுமாம். புரிசை வானத்தின்கண் தோய்ந்தாற்போல்வதற்குக் காரணம் உயர்ச்சியாதலால் "உயர்ச்சியான்" என்றுரைத்தார். அகழி யென்றதே ஆழமுடைமை யுணர்த்துதலின், வேறு கூறாராயினார். சூட்டு, உச்சி. அது விண்மீன் போலத் தோன்றுதல்பற்றி, "மீன்பூத் தன்ன உருவ ஞாயில்" எனப்பட்டது. குறும்பு, சிற்றரண். பழுக்கக் காய்ச்சிய இரும்பில் நீரைச் சொரியின் அதன்பால் மிக்க வெம்மையுள்ள வரையில் அந்நீர் ஆவியாய் மறைந்து போதலின். அந்நீர் இரும்பால் உண்ணப்பட்ட தென்று கூறுப. இரும்பினிடத்திலிருந்து மீளவும் அது பெறலாகாமையின், "இரும்புண்ட நீரினும் மீட்டற் கரிது என்றார்; "கனலிரும் புண்ட நீரின் விடாது" (பெருங்.3.25.71) என்று கொங்கு வேளிரும் கூறுதல் காண்க. உக்கிரப் பெருவழுதி கைப்பற்றிக் கொண்டமையின், தோற்றோடிய வேங்கை மார்பன், இனி "இக் கானப் பேரெயில் இரும்புண் நீரினு மீட்டற் கரிதென" நினைத்துக் கூறினான். குழைதல், தழைத்தல். பாடு துறை-பாடுதற்குரிய புறத் திணைத் துறைகள். இசையொடு மாய்தலாவது, இசையைத் தாங்கும் நாடழிதலால், அதனாற் றாங்கப்படும் புகழும் உடனழிதல்.
----------
22 சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேர லிரும்பொறை
ஆசிரியர் குறுங்கோழியூர் கிழார் இப்பாட்டின்கண், "இச்சேரமான் மடிமையின்றி முயல்வதே பொருளாக வுடையன்; அதனால் நாடு சோறு வளம் மிக்கது; செல்வப் படைப்பும் மிகுந்துளது; இவனது காவல்லம் கண்ட சான்றோர் 'மாந்தரஞ்சேர லிரும்பொறை யோம்பிய நாடுபுத்தே ளுலகத் தற்று' என மீக்கூறுகின்றனர்; தன்னைப் பாடிய புலவர் பிறர்பாற் சென்று அவரிசையினைப் பாடாவாறு பெருங்கொடை நல்குவன்" என்றும், இத்தகைய சிறப்பைக் கேட்டுத் தான் வந்து கண்டு மகிழ்வுற்றதாகவும் கூறுகின்றார்.
தூங்குகையா னோங்குநடைய
உறழ்மணியா னுயர்மருப்பின
பிறைநுதலாற் செறனோக்கின *
பாவடியாற் பணையெருத்தின
தேன்சிதைந்த வரைபோல 5
மிஞிறார்க்குங் கமழ்க்கடாத்
தயறுசோரு மிருஞ்சென்னிய
மைந்துமலிந்த மழகளிறு
கந்துசேர்பு நிலைஇவழங்கப்
பாஅனின்று கதிர்சோரும் 10
வானுறையும் மதிபோலும்
மாலைவெண் குடைநீழலான்
வாண்மருங்கிலோர் காப்புறங்க
அலங்குநெந்நெற் கதிர்வேய்ந்த
ஆய்கரும்பின் கொடிக்கூரை 15
சாறுகொண்ட களம்போல
வேறுவேறு பொலிபு தோன்றக்
குற்றானா வுலக்கையாற்
கலிச்சும்மை வியலாங்கட்
பொலந்தோட்டுப் பைந்தும்பை 20
மிசையலங் குளைய பனைப்போழ் செரீஇச்
சினமாந்தர் வெறிக்குரவை
ஓத நீரிற் பெயர்பு பொங்க
வாய்காவாது பரந்துபட்ட
வியன்பாசறைக் காப்பாள 25
வேந்துதந்த பணிதிறையாற்
சேர்ந்தவர் கடும்பார்த்தும்
ஓங்குகொல்லியோ ரடுபொருந
வேழ நோக்கின் விறல்வெஞ் சேஎய்
வாழிய பெருமநின் வரம்பில் படைப்பே 30
நிற்பாடிய வலங்குசெந்நாப்
பிறரிசை நுவலாமை
ஓம்பா தீயு மாற்ற லெங்கோ
மாந்தரஞ் சேர லிரும்பொறை யோம்பிய நாடே
புத்தே ளுலகத் தற்றெனக் கேட்டுவந் 35
தினிது கண்டிசிற் பெரும முனிவிலை
வேறுபுலத் திறுக்குந் தானையொடு
சோறுபட நடத்திநீ துஞ்சாய் மாறே. (22)
திணையும் துறையு மவை. துறை : இயன் மொழியுமாம். சேரமான் யானைகட்சேஎய் மாந்தரஞ்சேர லிரும்பொறையைக் குறுங்கோழியூர் கிழார் பாடியது.
உரை : தூங்கு கையான் - அசைந்த பெருங் கையுடனே; ஓங்கு நடைய - தலையெடுத்து நடக்கும் உயர்ந்த நடையை யுடையனவும்; உறழ் மணியான் - அந்நடைக்கேற்ப ஒன்றற்கொன்று மாறுபட்டொலிக்கும் மணியுடனே, உயர் மருப்பின - உயர்ந்த கோட்டினையுடையனவும்; பிறை நுதலால் செறல் நோக்கின - பிறை வடிவாக இடப்பட்ட மத்தகத்துடனே சினம் பொருந்திய பார்வையை யுடையனவும்; பாவடியால் பணை எருத்தின-பரந்த அடியுடனே பரிய கழுத்தையுடையனவும்; தேன் சிதைந்த வரை போல- தேனழிந்த மலைபோல; மிஞிறார்க்கும் கமழ் கடாத்து- தேனீ யொலிக்கும் மண நாறும் மதத்துடனே; அயறு சோரும் இருஞ் சென்னிய-புண் வழலை வடியும் பெரிய தலை யுடையனயவுமாகிய; மைந்து மலிந்த மழ களிறு-வலிமிக்க இளங் களிறு; கந்து சோர்பு நிலைஇ வழங்க-கம்பத்தைப் பொருந்தித் தான் நின்ற நிலையிலே நின்று அசைய; பா அல் நின்று கதிர் சோரும்-பக்கத்தே நின்று கிரணத்தை விடுகின்ற; வான் உறையும் மதிபோலும் மாலை வெண்குடை நீழலான்- வானத்தின் கண்ணே தங்கும் திங்கள்போலும் மூத்த மாலையையுடைய வெண்கொற்றக் குடையினது நிழற்கண்ணே; மருங்கு வாள் இல்லோர் காப்பு உறங்க-தம் பக்கத்து வாள் இல்லாதோர் அக்குடையே காவலாக உறங்க; அலங்கு செந்நெற் கதிர் வேய்ந்த- அசைந்த செந்நெற் கதிரால் வேயப்பட்ட; ஆய் கரும்பின் கொடிக் கூரை-மெல்லிய கரும்பாற் கட்டபட்ட ஒழுங்குபட்ட கூரை; சாறு கொண்ட களம் போல-விழா எடுத்துக் கொள்ளப்பட்ட இடம் போல; வேறு வேறு பொலிவு தோன்ற-வேறு வேறாகப் பொலிந்து தோன்ற; குற்று ஆனா உலக்கையால்- குற்று அமையாத உலக்கை யொலியுடனே; கலிர் சும்மை வியல் ஆங்கன்-மிக்க ஆரவாரத்தையுடைய அகன்ற விடத்து; பொலந் தோட்டுப் பைந் தும்பை-பொன்னாற் செய்யப்பட்ட இதழையுடைய பசிய தும்பையுடனே; மிசை அலங்கு உளைஇய பனைப் போழ் செரீஇ-மிசையே அசைந்த தலையினையுடைய பனந்தோட்டைச் செருகி; சினமாந்தர் வெறிக்குரவை- சினத்தையுடைய வீரர் வெறியாடும் குரவைக் கூத்தொலி; ஓத நீரீற் பெயர்ப்பு பொங்க-ஓதத்தையுடைய கடலொலி போலக் கிளர்ந்து பொங்க; வாய் காவாது பரந்து பட்ட- படைப் பெருமையால் பகைவ ருட்கும் மதிப்புடைமையின் இடம் காவாது பரந்து கிடக்கின்ற; வியன் பாசறைக் காப்பாள- அகன்ற பாசறையிடத்துக் காவலாள; வேந்து தந்த பணி திறையால்- மாற்றரசர் பணிந்து தந்த திறையால்; சேர்ந்தவர் கடும்பு ஆர்த்தும்-தம்மை அடைந்தவருடைய சுற்றத்தை நிறைக்கும்; ஓங்கு கொல்லியோர் அடு பொருந-உயந்த கொல்லிமலையோருடைய அடு பொருந; வேழ நோக்கின் விறல் வெஞ் சேஎய்-யானையினது நோக்குப்போலும் நோக்கினையுடைய வெற்றியை விரும்பும் சேயே; வாழிய-வாழ்க; பெரும-பெருமானே; நின் வரம்பில் படைப்பு-நினது எல்லையில்லாத செல்வம்; நிற் பாடிய அலங்கு செந்நா-நின்னைப் பாடிய விளங்கிய செவ்விய நா; பிறர் இசை நூவலாமை - பின்னைப் பிறருடைய புகழைச் சொல்லாமல்; ஓம்பாது ஈயும் ஆற்றல் எம் கோ - பாதுகாவாது கொடுக்கும் வலியையுடைய எம் கோவே; மாந்தரஞ் சேரல் இரும்பொறை ஓம்பிய நாடு - மாந்தரஞ் சேர லிரும்பொற் பாதுகாத்த நாடு; புத்தே ளுலகத்து அற்று என - தேவருலகத்தை யொக்கும் என்று பிறர் சொல்ல; கேட்டு வந்து-; இனிது கண்டிசின் - கட்கினிதாகக் கண்டேன்; பெரும - பெருமானே; முனிவிலை - முயற்சி வெறுப்பில்லையாய்; வேறு புலத் திறுக்கும் தானையொடு - வேற்று நாட்டின்கட் சென்றுவிடும் படையுடனே; சோறு பட நடத்தி - சோறுண்டாக நடப்பை; நீ துஞ்சாய் மாறு - நீ மடியாயாதலான் எ - று.
கதிர் சோரு மதி யென இயையும்; கதிர் சோரு மென்னும் சினை வினை மதி யென்னும் முதலொடு முடிந்தது; கதிர் சோரு மாலை யென இயைப்பினு மமையும். பாய் நின் றென்னு பாடமோதுவாரு முளர். கூரை பொலிவு தோன்ற வென இடத்துநிகழ் பொருளின் றொழில் இடத்துமேலேறி நின்றது. செரீஇ யென்னும் வினையெச்சத்தை ஆடுமென ஒருசொல் வருவித்து அதனோடு முடிக்க. நிலைஇ வழங்கக் காப் புறங்கப் பொலிவு தோன்றப் பெயர்பு பொங்க வென்னும் செய வெனெச்சங்களும், வாய் காவா தென்னும் எதிர்மறை வினையெச்சமும் பரந்து பட்ட வென்னும் பெயரெச்ச வினையொடு முடிந்தன.
காப்பாள, பொருந, சேஎய், பெரும, எங்கோ, பெரும, நீ துஞ்சாயாதலாற் சோறுபட நடத்தி; அதனால் இரும்பொறை யோம்பிய நாடுபுத்தே ளுலகத் தற்றெனக் கேட்டு வந்து இனிது கண்டிசின்; நின் படைப்பு வாழிய வெனக் கூட்டி வினைமுடிவு செய்க. அன்றி எங் கோவே, நீ துஞ்சாதபடியாலே இரும்பொறை யோம்பிய புத்தேளுலகத் தற்றெனப் பிறர் சொல்லக் கேட்டு நிற்பாடிய அலங்கு செந்நாப் பிறரிசை நுவலாதபடி வந்து இனிது கண்டேன்; நினது படைப்பொடு வாழ்வாயாக வென இயைப்பினு மமையும்.
இசின், தன்மைக்கண் வந்தது. சோறுபட நடத்தி யென்பதனை வினையெச்சமாக உரைப்பினு மமையும். உயர்மருப்பி னென்பதூஉம், செறனோக்கி னென்பதூஉம் பணையெருத்தி னென்பதூஉம் பாடம்.
விளக்கம் : கையான், மணியான், நுதலான், அடியான் என் நின்ற ஆனுருபுகள் *ஒடு வுருபின் பெயரில் வந்தன. பிறை நுதல் என்ற விடத்து நுதல் மத்தகத்துக் காயிற்று, நடுவிடம் தாழ்ந்து பக்கமிரண்டும் உயர்ந்து பிறைவடிவாகத் தோன்றுதலின், "பிறை வடிவாக விடப்பட்ட மத்தகம்" என வுரைத்தார். பிறை நுதலாற் செறல் நோக்கின என்னும் இது நுதற்கண்ணால் மூவெயிலைச் செறல் நோக்கின சிவன் செயலைக் குறிப்பாய் நினைப்பிக்கின்றது. அயறு - நீர் கசியும் புண்; இதனைப் புண் வழலை யென்பர். நிலைஇ வழங்க என்றவிடத்து வழங்குதல், நிலைஇயென்று அடையடுத்தமையால் அசைதலாகலின், " நின்ற நிலையிலே அசைய" என்று பொருளுரைத்தார். காப்பு - காப்பாக. கொடி- ஒழுங்கு. வாய் காவாது பரந்து பட்ட என்றவிடத்து வாய் காவாமைக் கேது கூறப்படாமையால், "படைப்பெருமையால் பகைவ ருட்கும் மதிப்புடைமையின்" என்பது பெய்து கூறப்பட்டது. வாய்-இடம்; "எவ்வாயும்" (கலி.30) என்றாற்போல. விறல் வெஞ்சேய் என்புழி வெம்மை வேண்டல் (விரும்புதல்) என்னும் பொருளின தாகையால் வெற்றியை விரும்பும் சேய் என்று பொருளை கூறினார். கதிர் சோரும் மதி யென்பதில்,சோரும் என்பது கதிரின் வினை; அக் கதிர் மதிக்குச் சினையாதலால், சினைக்கும் முதலுக்கு முள்ள ஒற்றுமையால் சோருமென்னும் சினைவினைப் பெயரெச்சம் மதியென்னும் பெயர்கொண்டு முடிந்தது; இதனை,"கதிர் சோரும்....முடிந்தது" என்றார், மதிபோலும் குடையென இயைவதற்கேற்ப, கதிர் சோரும் மாலை, வானுறையும் மதி போலும் வெண் குடையென இயைததாலும் பொருள் நலம் குன்றாமை பற்றி "கதிர்சோரும் மாலை யென இயைப்பினு மமையும்" என்றார். கூரை பொலிவு தோன்ற என்றதில், தோன்றுதல் பொலிவின் வினை; கூரைக்கும் பொலிவுக்கும் இடமும் இடத்துநிகழ் பொருளுமாகிய தொடர்பு; அதனால் இடத்துநிகழ் பொருளின் தொழில் இடத்துமேல் நின்றதென்றார். பனைப்போழ், பனந் தோடு. செரீஇ யென்னும் வினை யெச்சம் குரவை யென்பதனோடு இயையாமையால், ஆடும் என ஒரு சொல் வருவித்து, செரீஇ ஆடும் குரவை யென்றார். இசின் என்பது முன்னிலைக்குரித்தாயினும் ஏனையிடத்திற்கும் "தகும் நிலையுடைய" வென்பவாதலால் "தனமைக்கண் வந்த" தென்றார். நீ சோறுபட நடத்தத் துஞ்சாய் எனக்கொள்ளலும் பொருந்தும்.
-----------
23. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
இப்பாட்டின்கண் ஆசிரியர் கல்லாடனார், இப் பாண்டியனுடைய படையிலுள்ள யானைகளாற் கலக்கப்பட்ட பகைவர் நாட்டு நீர்த்துறைகளையும், வில் வீரர் தாம் கொள்வது கொண்டு எஞ்சியற்றை யழித்துப் பாழ் செய்த புலங்களையும், ஊர்தோறும் கடிமரம் தடியப்பட்ட காக்களையும், ஏரி பரந்தெடுத்த இடங்களையும் கண்டு, இனியும் பகைமை செய்யும் பகைவர் நாட்டில் இன்ன பல செய்கைகளைச் செய்யும் துணிவே யுடையவன் இப்பாண்டியன் என்று உட்கொண்டு ஆள் வழங்குதலின்றிப் பாழ்பட்ட காட்டு வழியே வருபவர் நின்னைக் கண்டனென் வருலென உரைக்கின்றார்.
வெளிறி னோன்காழ்ப் பணைநிலை முனைஇக்
களிறுபடிந் துண்டெனக் கலங்கிய துறையும்
கார்நறுங் கடம்பின் பாசிலைத் தெரியற்
சூர்நவை முருகன் சுற்றத் தன்னநின்
கூர்நல் லம்பிற் கொடுவிற் கூளியர் 5
கொள்வது கொண்டு கொள்ளா மிச்சில்
கொள்பத மொழிய வீசிய புலனும்
வடிநவி னவியம் பாய்தலி னூர்தொறும்
கடிமரந் துளங்கிய காவு நெடுநகர்
வினைபுனை நல்லில் வெவ்வெரி யினைப்பக் 10
கனையெரி யுரறிய மருங்கு நோக்கி
நண்ணார் நாண நாடொறுந் தலைச்சென்
றின்னு மின்னபல செய்குவன் யாவரும்
துன்னல் போகிய துணிவி னோனென
ஞால நெளிய வீண்டிய வியன்படை 15
ஆலங் கானத் தமர்கடந் தட்ட
கால முன்பநிற் கண்டனென் வருவல்
அறுமருப் பெறிகலை புலிப்பாற் பட்டெனச்
சிறுமறி தழீஇய தெறிநடை மடப்பிணை
பூளை நீடிய வெருவரு பறந்தலை 20
வேளை வெண்பூக் கறிக்கும்
ஆளி லத்த மாகிய காடே. (23)
திணையும் துறையும் அவை. துரை: நல்லிசையும் வஞ்சியுமாம். பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைக் கல்லாடனார் பாடியது.
உரை: வெளிறில் நோன் காழ் பணை – வெண்மை யில்லாத வலிய வயிரக் கம்பத்தையுடைய கூடத்தில்; நிலை முனைஇ - நிற்றலை வெறுத்துச் சென்று; களிறு படிந் துண்டென - யானை படிந்து நீருண்டதாக; கலங்கிய துறையும் - கலக்கமுற்ற துறையையும்; கார் நறுங் கடம்பின் பாசிலைத் தெரியல் - கார்காலத்து நறிய கடம்பினது பசிய இலையோடு விரவிய மாலையையுடைய; சூர் நவை முருகன் சுற்றத் தன்ன - சூரபன்மாவைக் கொன்ற முருகனது கூளிச் சுற்றத்தை யொக்கும்; நின் கூர் நல் அம்பின் கொடு வில் கூளியர் - நின்னுடைய கூரிய நல்ல அம்பினையும் வளைந்த வில்லினையுமுடைய மறவர்; கொள்வது கொண்டு - தம்மால் கொள்ளலாவதனை முகந்துகொண்டு; கொள்ளா மிச்சில் - கொள்ளாத ஒழி பொருளை; கொள்பதம் ஒழிய வீசிய புலனும் - மாற்றார் முகந்துகொள்ளப்படும் உணவாக்காமல் சிதறிய நிலங்களையும்; வடி நவில் நவியம் பாய்தலின் - வடித்தல் பயின்ற கோடாலி வெட்டுதலான்; ஊர் தொறும் கடி மரம் துளங்கிய காவும் - ஊர்தோறும் காவல் மரங்கள் நிலைகலங்கிய காவையும்; நெடு நகர் வினை புனை நல்லில் - நெடிய நகரின்கண் தொழில் புனைந்த நல்ல மனைகளிடத்து; வெவ் வெரி இனைப்ப - விரும்பும் அடு தீயைக் கெடுக்க; கனை எரி உரறிய மருங்கும் - மிக்க தீ முழங்கிய பக்கத்தையும்; நோக்கி - பார்த்து; நண்ணார் நாண - பகைவர் நாண; நாடொறும் தலைச் சென்று - நாடோறும் அவரிடத்துச் சென்று; இன்னும் இன்ன பல செய்குவன் - இன்னமும் இத்தன்மையான பலவும் செய்குவன்; யாவரும் துன்னல் போகிய துணிவினோன் - யாவரும் தன்னை யணுகவொண்ணாத சூழ்ச்சித் தெளிவினையுடையோன் ; என - எனக் கருதி; ஞாலம் நெளிய ஈண்டிய வியன் படை - உலகம் பொறையாற்றாது நெளியத் திரண்ட பரந்த படையினையுடைய; ஆலங்கானத்தின்கண் போரை யெதிர்நின்று கொன்ற காலம்போலும் வலியையுடை யோய்; நிற் கண்டனென் வருவல் - நின்னைக் கண்டேனாய் வந்தேன்; அறு மருப்பு எழிற் கலை - அற்ற கோட்டையுடைய பெரிய கலை; புலிப்பாற் பட்டென - புலியின் கண்ணே யகப்பட்ட தாக ;சிறு மறி தழீஇய தெறி நடை மடப்பினை - சிறிய மறியை யணைத்துக் கொண்ட துள்ளிய நடையையுடைய மெல்லிய மான்பிணை ; பூளை நெடிய வெருவரு பறந்தலை- பூளை யோங்கிய அஞ்சத் தக்க பாழிடத்து; வேளை வெண்பூ கறிக்கும் - வேளையினது வெளிய பூவைத் தின்னும்; ஆளில் அத்தமாகிய காடு – ஆளற்ற அருஞ்சுரமாகிய காட்டு வழியே எ - று.
காலமுன்ப, துறையும் புலனும் காவும்மருங்கும் நோக்கி, இன்னும் இன்ன பல செய்குவன் துணிவினோ னென வுடகொண்டு, காட்டின் கண்ணே நின்னைக் கண்டு, அக்க காட்டுவழியே வந்தே னெனக் கூட்டி வினை முடிவுசெய்க.
வருவ லென்பது ஈண்டு இறந்தகாலப் பொருட்டாய் நின்றது. இவனைக் காணா முன்னே கண்டுவந்தே நென்றான், இவன் செய்த வென்றியெல்லாங் கண்டமையின், பாசிலைத் தெரியல் முருக னென வியையும். கவியம் பாய்த லென்பது கருவி கருத்தாவாய் நின்றது. கலை புலிப்பாற் பட்டெனச் சிறுமறி தழீய மடப்பிணை பறந்தலை வேளை வெண்பூக் கறிக்குமென்பது, அவன் பகைவரைக் கொன்றவழி அவர் பெண்டிர் தம் இளம் புதல்வரைக் கொன்றவழி அவர் பெண்டிர் தம் இளம் புதல்வரை ஓம்புதற்பொருட்டு இறந்து படாது அடகு தின்று உயிர் வாழ்கின்றா ரென்பதோர் பொருள் தோன்ற
நின்றது.
துணிவினோ னென்று பிறர் சொல்ல வெனவும், கண்டனென் வருவ லென்பதனைக் காலமயக்கமாக்கிக் கலங்கிய துறை முதலாயினவற்றை நோக்கி இன்னும் இவ்வாறு பகைவர் நாட்டின்கண் மேற்செல்வனென நினைந்து நாட்டிடத்தே நின்னைக் காணிய வந்தே னெனவும் உரைப்பாரு முளர்.
விளக்கம்: வெளிறு - வெண்மை; "இன்மை யரிதே வெளிறு" (குறள் 503) என்றாற் போல. புறத்தே வெளிறும் அகத்தே காழும் உடைய பணையன்று என்பதற்கு, "வெளிறில் நோன் காழ்ப்பணை" என்றார். கார்காலத்து மலர்ந்து மணங் கமழ்பது கடம்பு ; அதுபற்றி, "கார் நறுங் கடம்பு" என்று கூறப்பட்டது; உரை காரரும் "கார்காலத்துகறிய கடம்பு என்றுரைத்தார். பகைவர் நாட்டுப் பொருளைக் கொள்ளை கொண்டு வரும் மறவர் தம்மாற் கொள்ளப்படாது ஒழிந்து நிற்கும் பொருள் பிறர் எவர்க்கும் பயன்படாவாறு, அவற்றை யழித்துச் சிதைப்பதும் விளைவயல்களை யிழித்துவிடுவதும் பண்டைய போர் மரபு. இவ்விரபதாம் நூற்றாண்டில் நிகழ்ந்த இரண்டாவது உலகப்போரிலும் இச்செயல்கள் நிகழ்ந்தனவாதலால், இஃது எக்காலத்துப் போர்க்கும் இயல்பு எனத் தெரிகிறது. மனைகளில் விருந்தோம்பல் முதலிய நற்செயல் குறித்த சோறடும் தீயை "வெவ்வெரி"யென்றார். தெறிநடை- துள்ளுநடை. கண்டனென் வருவல் என்றது, காண்பேனாய் வந்தேன் என இறந்தகாலப் பொருளாதலின், "இறந்த கால ........நின்ற" தென்றார். செய் பொருளின் த்தோற்றம் செய்தோரைக் காண்போர் மனக் கண்ணிற் றோற்றுவித்தலின், "செய்த வென்றியெல்லாங் கண்டமையின்" என்றார். நவியமாகிய கருவி தானாகச் சென்று மரத்தை வெட்டாது; அதனைக் கையாள்வோன் செயலை அதன் செயலாக வைத்து, கருவி கருத்தாவாகக் கூறுதல் மரபு; இவ்வாள் நன்றாக அறுக்கும் என்பதுபோல. காணிய வந்தேன் என வுரைப்பதாயின், காண்பதற்காக வந்தேன் என் அதற்குப் பொருள் கொள்க.
-------------
24. பாண்டியன் தலையலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்.
பத்துப்பாட்டிற் காணப்படும் மதுரைக்காஞ்சி பாடிய மாங்குடி மருதனார், இப் பாட்டிலும் அக் காஞ்சியே பொருளாகப் பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடுகின்றார். இதன்கண் "நல்ல ஊர்களை இடமாகக் கொண்டு சிறந்த எவ்வி யென்பானுக்குரிய மிழலைக் கூற்றத்தையும், முதுவேளிர்க்குரிய முத்தூற்றுக் கூற்றத்தையும் வென்று கொண்ட நெடுஞ்செழிய, நின் நாண்மீன் நிலைபெறுக; நின் பகைவர் நாண்மீன் பட்டொழிக; வாள் வீரர் வாழ்த்தப், பரிசிலர் புகழ் பாட, மகளிரொடு மகிழ்ந்து இனிதொழுகிவாயாக; அங்ஙனம் ஒழுக வல்லோரையே வாழ்ந்தோர் என்பர்; இவ்வுலகத்தே தோன்றுப் புழ் தோற்றுவியாது உயிர் வாழ்ந்து விளிந்தவர் பலராயினும் அவர் வாழந்தோர் எனப்படார்" என்று நாளும் போர் கருதி யுழலும் அவன் நெஞ்சினைத் தெருட்டி இன்ப வாழ்வில் ஈடுபடச் செய்கின்றார். அருளும் பொறையு மேவுமுள்ளத்தனாவ னென்பது கருத்து.
நெல்லரியு மிருந்தொழுவர்
செஞ்ஞாயிற்று வெயின்முனையின்
தெண்கடற்றிரை மிசைப்பாயுந்து
திண்டிமில் வன்பரதவர்
வெப்புடைய மட்டுண்டு 5
தண்குரவைச் சீர்தூங்குந்து
தூவற் கலித்த தேம்பாய் புன்னை
மெல்லிணர்க் கண்ணி மிலைந்த மைந்தர்
எல்வளை மகளிர் தலைக்கை தரூஉந்து
வண்டுபட மலர்ந்த தண்ணறுங் கானல் 10
முண்டகக் கோதை யொண்டொடி மகளிர்
இரும்பனையின் குரும்பைநீரும்
பூங்கரும்பின் றீஞ்சாறும்
ஓங்குமணற் குவவுத்தாழைத்
தீநீரொ டுடன்விரா அய் 15
முந்நீ ருண்டு முந்நீர்ப் பாயும்
தாங்கா வுறையு ணல்லூர் கெழீஇய
ஓம்பா வீகை மாவே ளெவ்வி
புனலம் புதவின் மிழலையொடு கழனிக்
கயலார் நாரை போர்விற் சேக்கும் 20
பொன்னணி யானைத் தொன்முதிர் வேளிர்
குப்பை நெல்லின் முத்தூறு தந்த
கொற்ற நீள்குடைக் கொடித்தேர்ச் செழிய
நின்று நிலைஇயர்நின் னாண்மீ னில்லாது
படாஅச் செலீஇயர்நின் பகைவர் மீனே 25
நின்னொடு, தொன்று மூத்த வுயிரினு முயிரொடு
நின்று மூத்த யாக்கை யன்னநின்
ஆடுகுடி மூத்த விழுத்திணைச் சிறந்த
வாளின் வாழ்நர் தாள்வலம் வாழ்த்த
இரவன் மாக்க ளீகை நுவல 30
ஒண்டொடி மகளிர் பொலங்கலத் தேந்திய
தண்கமழ் தேறன் மடுப்ப மகிழ்சிறந்
தாங்கினி தொழுகுமதி பெரும வாங்கது
வல்லுநர் வழ்ந்தோ ரென்ப தொல்லிசை
மலர்தலை யுலகத்துத் தோன்றிப் 35
பலர்செலச் செல்லாது நின்றுவிளிந் தோரே. (24)
திணை: பொதுவியல். துறை: பொருண்மொழிக் காஞ்சி. அவனை மாங்குடி கிழார் பாடியது.
உரை: நெல் அரியும் இருந்தொழுவர் - நெல்லை யரியும் பெரிய உழவர்; செஞ்ஞாயிற்று வெயில் முனையின் - செஞ் ஞாயிற்றினது வெயிலை வெறுப்பின்; தெண் கடல் திரை மிசைப் பாயுந்து-தெளிந்த கடற்றிரையின்மேலே பாயும்; திண் திமில்வன் பரதவர் - திண்ணிய திமிலையுடைய வலிய நுளையர்; வெப்புடைய மட்டுண்டு - வெம்மையையுடைய மதுவையுண்டு; தண்குரவைச் சீர் தூங்குந்து - மெல்லிய குரவைக் கூத்திற்கேற்ற தாளத்துக்கேற்ப ஆடும்; தூவற் கலித்த தேம்பாய் புன்னை-கடற்றுவலையாலே தழைத்த தேன் பரந்த புன்னையினது; மெல்லிணர் கண்ணி மிலைந்த மைந்தர் - மெல்லிய பூங்கொத்தாற் செய்யப்பட்ட மாலையைச் சூடிய ஆடவர்; எல் வளை மகளிர் தலைக்கை தரூஉந்து - விளங்கிய வளையையுடைய மகளிர்க்கு முதற்கை கொடுக்கும்; வண்டுபட மலர்ந்த தண்ணறுங் கானல் - வண்டு மொய்ப்ப மலர்ந்த குளிர்ந்த நறிய கானலிடத்து; முண்டகக் கோதை ஒண்டொடி மகளிர் - கடல்முள்ளிப் பூவாற் செய்யப்பட்ட மாலையையுடைய விளங்கிய வளையையணிந்த மகளிர்; இரும் பனையின் குரும்பை நீரும் - பெரிய பனையினது நுங்கின் நீரும்; பூங்கரும்பின் தீஞ்சாறும் - பொலிவினையுடைய கரும்பினது இனிய சாறும்; ஓங்கு மணல் குவவுத் தாழை தீ நீரோடு - உயர்ந்த மணலிடத்துத் திரண்ட தெங்கினது இனிய இளநீருடனே; உடன் விராஅய் - கூடக் கலந்து; முந்நீர் உண்டு - இம் மூன்று நீரையுமுண்டு; முந்நீர்ப் பாயும் - மூன்று நீரையுடைய கடற்கண்ணே பாயும்; தாங்கா உறையுள் நல்லூர் கெழீஇய- பரிக்க வொண்ணாத பல மக்களும் வாழ்தலையுடைய நல்லவூர்கள் பொருந்திய; ஓம்பா ஈகை மாவேள் எவ்வி - பொருளைப் பாது காவாத வண்மையையுடைய பெரிய வேளாகிய எவ்வியது; புனலம் புதவின் மிழலையொடு - நீர் வழங்கும் வாய்த்தலைகளையுடைய மிழலைக் கூற்றத்துடனே; கழனிக் கயலார் நாரை - வயலிடத்துக் கயலை மேயும் நாரை; போர்விற் சேக்கும் - போரின்கண்ணே யுறங்கும்; பொன்னணி யானைத் தொன்முதிர் வேளிர் - பொன்னணிந்த யானையையுடைய பழைய முதிர்ந்த வேளிரது; குப்பை நெல்லின் முத்தூறு தந்த - திரண்ட நெல்லினையுடைய முத்தூற்றுக் கூற்றத்தைக் கொண்ட; கொற்ற நீள் குடைக் கொடித்தேர்ச் செழிய - வெற்றி பொருந்திய உயர்ந்த குடையினையும் கொடியாற் பொலிந்த தேரினையுமுடைய செழிய; நின்று நிலை இயர் நின் நாண் மீன் - நின்று நிலைப்பதாக நினது நாளாகிய மீன்; நில்லாது படாஅச் செலீஇயர் நின் பகைவர் மீன் - நில்லாது பட்டுப் போவதாக நின் பகைவருடைய நாளாகிய மீன்; நின்னொடு தொன்று மூத்த உயிரினும் - நின்னொடு பழையதாய் முதிர்ந்த உயிரினும்; உயிரொடு நின்று மூத்த யாக்கையன்ன - உயிருடனே நின்று முதிர்ந்த உடம்பு போன்ற; நின் ஆடு குடிமூத்த விழுத்திணைச் சிறந்த வாளின் வாழ்நர் - நினது வெற்றிக் குடியொடு மூத்த சீரிய குடியின்கட் சிறந்த வாட்போராலே வாழ்வோர்; தாள் வலம் வாழ்த்த - நினது முயற்சி வலியை வாழ்த்த; இரவல் மாக்கள் ஈகை நுவல - இரக்கும் பரிசிலர் நின் வண்மையைச் சொல்ல; ஒண்டொடி மகளிர் - ஒள்ளிய வளையையுடைய மகளிர்; பொலங்கலத் தேந்திய தண்கமழ் தேறல் மடுப்ப - பொற் கலத்தின்கண் ஏந்திய குளிர்ந்த நறுநாற்றத்தையுடைய மதுவை மடுப்ப அதனை யுண்டு; மகிழ் சிறந்து - மகிழ்ச்சி மிக்கு; ஆங்கு இனிது ஒழுகு மதி - அப்படி இனிதாக நடப்பாயாக; பெரும-; அது வல்லுநர் வாழ்ந்தோர் என்ப - அவ்வொழுக்கம் வல்லவரை வாழ்ந்தோரென்று சொல்லுவர் அறிவுடையோர்; மலர்தலை யுலகத்துத் தோன்றி - பரந்த இடத்தையுடைய உலகத்தின்கண்ணே பிறந்து; தொல்லிசை செலச் செல்லாது - பழைய புகழ்தான் பரக்க வொழுகாது; நின்று விளிந்தோர் பலர் - நின்று மாய்ந்தோர் பலர், அவர் வாழ்ந்தோரெனப்படார் ஆதலான் எ-று.
மேல் எண்ணப்பட்ட பெயரெச்ச மூன்றும் மிழலை யென்னும் பெயர் கொண்டன; அவை உம் உந்தாய் நின்றன, முந்நீர்ப் பாயும் நல்லூர் என்க. உயிரினும் சிறந்த யாக்கை யன்ன வாளின் வாழ்கரெனக் கூட்டி, உயிர்க்கு யாக்கை போலவும், யாக்கைக் குயிர்போலவும் இன்றியமையாது இரண்டுமாயிருக்கின்ற வாளின் வாழ்நர் என்க. நின் குடியொடு மூத்த, நின் யாக்கை யன்ன, விழுத்திணைக்கண் உளராய, நின்னுயிரினுஞ் சிறந்த வாளின் வாழ்நரெனக் கூட்டினுமமையும்.
செழிய, நின் நாண்மீன் நின்று நிலைஇயர்; நின் பகைவர் மீன்படாஅச் செலீஇயர்; உலகத்துத் தோன்றி இசை செலச் செல்லாது விளிந்தோர் பலர். அவர் வாழ்ந்தோர் எனப்படார் ஆதலால், பெரும, வாழ்த்த நுவல, மடுப்ப, மகிழ்சிறந்து இனிதொழுகு; அது வல்லுநரை வாழ்ந்தோரென்ப வெனக் கூட்டி வினைமுடிவு செய்க.
தாங்கா விளையு ளென்பதூஉம் பாடம். ஆங்கது, ஒருசொல். ஆங்கசை நிலையுமாம் இனி, தொல்லிசையையுடைய உலகத்துத் தோன்றி மேற்சொல்லப்பட்ட நன்மைகள் தமக்குப் பரக்க வொழுகாது நின்று விளிந்தோர் பலர் என வுரைப்பாருமுளர். இது நிலையாமை கூறி, இனிதொழு கென்றமையாற் பொருண்மொழிக் காஞ்சி.
விளக்கம் : தொழுவர் கடல் திரைமிசைப் பாயும் மிழலை, பரதவர் குரவைச் சீர்தூங்கும் மிழலை, மைந்தர் தலைக்கை தரூவும் மிழலை என்ற விடத்து, பாயும், தூங்கும், தரூஉம் என நின்ற மூன்று பெயரெச்சங்களிலும், ஈற்றுஉம், உந்தாய், பாயுந்து, தூங்குந்து, தரூஉந்து என வந்தன. "உம் முந்தாகும் இடனு மாருண்டே" (தொல். இடை 44) என்பர். சீர் - தாளம். சீர் தூங்குதலாவது தாளத்திற்கேற்ப ஒத்தறுத் தாடுதல். கடற்கானலிடத்தப் புன்னையின் வேர் நிலத்துக்குள் ஆழச் சென்று காற்றால் அலைப்புண்டு வீழ்ந்தொழியாமற் காக்க, இலைகள் காற்றிற் பறக்கும் நீர்த் துவலைகளை யேற்றுத் தழைப்பிக்கும் என்ற கருத்தால், "துவற் கலித்த புன்னை" என்றாராக; அதற்குக் "கடற்றுவலையாலே தழைத்த புன்னை" யென உரை கூறப்பட்டது. துவலை, சிறுநுண் நீர்த்துளி, ஊர்களில் உறைவார்க்கு அவ்வூர் வருவாய் நிரம்பாதென்னுமாறு மிக நிறைந்த மக்களையுடைய ஊர் என்பதைத் "தாங்கா உறையுள் ஊர்" என்றார். தாங்கா விளையுளையுடையவூர் என்ற பொருளமைய, "தாங்கா விளையுள்" என்று பாடமோதுதலுண்டு. சில பொருள்கள் பெறுதற்கரியன் எனக் கருதி இரப்போர்க்கு ஈயாதொழிதலின்றி, அரியனவற்றையும் ஈயும் வண்மையுடையன எவ்வி என்பதை, "ஓம்பா ஈகை எல்லி" என்றாராதலால், ஓம்பாமைக்குப் பொருளைப் பாதுகாவாமை என்றுரைத்தார். வாய்த் தலைகளில், நீர் வேண்டுமளவிற் செல்லவும் வேண்டா விடத்து நிறுத்தவும் வேண்டிக் கதவுகள் அமைத் திருத்தல் தோன்ற, "புனலம் புதவின் மிழலை" என்றார். புதவு - கதவு. சேக்குதல், தங்குதல். ஈண்டு உறங்குதல் என்னும் பொருளதாயிற்று. ஒருவரை வாழ்த்துவோர் அவர் பிறந்த நாளை வாழ்த்துதலும் மரபு. அதுபற்றியே, "நின் நாண் மீன் நின்று நிலைஇயர்" என்றார். உயிர்க்கு வளர்தலும் தேய்தலும் இல்லையாயினும், உயி ரில்வழி அதுநின்ற உடற்கு வளர்ச்சி கிடையாதாகையால், "உயிரொடு நின்று மூத்த யாக்கை" யென்றார். ஆடு குடி: ஆடு - வென்றி. மகிழ்சிறத்தற் கேது உண்டாதலால், மடுப்ப மகளிர் அதனையுண்டு என்பதைப் பெய்துரைத் தார். இனி தொழுகுமதி என்கின்றாராதலால், அதற்கு, நின்று விளிந் தோர் வாழ்ந்தோ ரெனப்படாராதலான் என்பதை ஏதுவாகக் கூறினார். தொல்லிசையை உலகத்துக்கேற்றி மலர்தலை யுலகத்துத் தோன்றிச் செலச் செல்லாது எனக் கொண்டு, "தொல்லிசையை.... பலர்" என்று கூறுதலு முண்டென்று உரைத்தார்.
------------
25 பாண்டியன் தலையானங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
இப் பாண்டிவேந்தனை ஆசிரியர் கல்லாடனார், இப்பாட்டின்கண் இவன் தன்னொடு பகைத்த வேந்தர் இருவரைப் பொருதழித்து அவருடன் துணைவந்த பிறரையும் வென்று மேம்பட்ட திறத்தை அப் பகைவரிறந்தமையான் அவருடைய மகளிர் கூந்தல் களைந்து கைம்மை மேற்கொள்ளும் செயலைக் கூறிச் சிறப்பிக்கின்றார்.
மீன்றிகழ் விசும்பிற் பாயிரு ளகல
ஈண்டுசெலன் மரபிற் றன்னியல் வழாஅ
துரவுச்சினந் திருகிய வுருகெழு ஞாயிறு
நிலவுத்திகழ் மதியமொடு நிலஞ்சேர்ந் தாஅங்
குடலருந் துப்பி னொன்றுமொழி வேந்தரை 5
அணங்கரும் பறந்தலை யுணங்கப் பண்ணிப்
பிணியுறு முரசங் கொண்ட காலை
நிலைதிரி பெறியத் தின்மடை கலங்கிச்
சிதைதலுய்ந் தன்றோ நின்வேல் செழிய
முலைபொலி யாக முருப்ப நூறி 10
மெய்ம்மறந்து பட்ட வரையாப் பூசல்
ஒண்ணுதன் மகளிர் கைம்மை கூர
அவிரறல் கடுக்கு மம்மென்
குவையிருங் கூந்தல் கொய்தல் கண்டே (25)
திணை:வாகை; துறை: அரசவாகை; அவனைக் கல்லாடனார் பாடியது.
உரை: மீன் திகழ் விசும்பின்-மீன் விளங்கும் வானத்தின்கண்; பாய் இருள் அகல- பரந்த இருள் நீங்க; ஈண்டு கெலல் மரபின்-ஓங்கிச் செல்லுதன் முறைமையையுடைய; தன் இயல் வழா அது-ஓங்கிச் செல்லுதன் முறைமையையுடைய; தன் இயல் வழா அது-தனது தன்மையிற் பிழையாது; உரவுச் சினம் திருகிய உருகெழு ஞாயிறு-வலிய வெம்மை முறுகிய உட்குப் பொருந்திய ஞாயிறு; நிலம் சேர்ந்தா அங்கு-நிலத்தைப் பொருந் தினார்போல; உடலருந் துப்பின் ஒன்று மொழி வேந்தரை- பகைத்தற்கரிய வலியையுடைய வஞ்சனங் கூறிய இரு வேந்தரை; அணங்கரும் பறந்தலை-வருந்துதற்கரிய போர்க்களத்தின் கண்ணே; உணங்கப்பண்ணி-மாயப் பொருது; பிணியுரு முர சம்கொண்ட காலை-அவருடைய வாராற் பிணிப்புற்ற முரசத்தைக் கொண்ட காலத்து; நிலை திரிபுஎறிய-நின்ற நிலையிலே நின்று நின்னைச் சூழ்ந்துகொண்ட வீரரைப் புரிந்து எறிதலால்; திம் மடை கலங்கிச் சிதைதல் உய்ந்தன்று-திண்ணிய கொளுத்துக் கலங்கிக் கெடுதல் பிழைத்தது; நின்வேல்-நினது வேல்; செழிய--; முலை பொலி ஆகம் உருப்ப நூறி-முலை பொலிந்த மார்பம் அழல அறைந்து கொண்டு; மெய்ம் மறந்து பட்டவரையாப் பூசல்-அறிவு மயங்கி உற்ற அளவற்ற அழுகை யாரவாரத்தையுடைய; ஒண்ணுதல் மகளிர் கைம்மை கூர-ஒண்ணுதல் மகளிர் கைம்மை நோன்பிலே மிக; அவிர் அறல் கடுக்கும்- விளங்கும் அறலை யொக்கும்; அம் மென் குவை இருங் கூந்தல்- அழகிய மெல்லிய குவிந்த கரிய மயிரினை; கொய்தல் கண்டு- கொய்த பரிசைக் கண்டு எ-று.
செழிய, மகளிர் கூந்தல் கொய்தல் கண்டு, நின் வேல் சிதைதலுய்ந்ததெனக் கூட்டுக. ஈண்டுச் செலல் மரபெனவும், ஐம்பாற் குவையிருங் கூந்தலெனவும் பாடமோதுவாரு முளர். உய்ந்தன்றோ; ஓ: அசைநிலை.
விளக்கம்: ஞாயிறு மதிய மொடு நிலஞ் சேர்ந்தது போல, பெரு வேந்தர் இருவர் போரிற் பட்டனர்; அவர் சேரனும் சோழனுமாவர். உடலுதல்-பொருதல்; இதற்குக் காரணம் பகையாதலின், உடலருந் துப்பு, பகைத்தற்கரிய வலியாயிற்று. போர்க்களத்துப் பொரும் வீரர் உயிரிழத்தற்கும் புண்ணுற்று வருந்தற்கும் அஞ்சாராதலின், போர்க்களம், "அணங்கரும் பறந்தலை" யெனப்பட்டது. மடை வேலினது மூட்டுவாய். வேலினுடைய இலையும் எறி பிடியும் ஆசிடை மடுத்துக் காய்சிப் பற்றவைக்கப் படுதல்பற்றி, மடை யென்றாராக, உரைகாரர் அதனைக் "கொளுத்து" என்றார். மெய்ம்மறத்தற்கு எது அறிவுமயக்க மாதலால், மெய்ம்மறந் தென்றதற்கு அறிவு மயங்கி என வுரைத்தார். மகளிர் கூந்தல் களைவது காணாவழி, வேல்கொண்டு தாக்குரலால், அவ் வேல் ஆற்றாது மடை சிதைந்துகெடுமெனப் போரின் கடுமை யுரைத்தாராயிற்று. இதனால் கணவனை யிழந்த மகளிர் தம் கூந்தலைக் கொய்து கொள்ளும் வழக்குப் பண்டைத் தமிழ் வழக்காதல் துணியப்படும்.
-----------
26. பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
மாங்குடி கிழாராகிய மருதனார் இந் நெடுஞ்செழியனது உயர்வு கண்டு, "அடுபோர்ச் செழிய, நான்மறை முதல்வரும் துணை வேந்தரும் சுற்றமாய்ச் சுற்ற, வேள்வி பல செய்த வேந்தே, நின் பகைவர் இவ்வுலகத்தே நின்பால் பகைமையுற்றுப் பொருது துன்புற்று வீழ்ந்தாராயினும் துறக்கவுலகம் புக்கு இன்புறுகின்றாராதலால், அவர் நோற்றவரேயாவர்" என்று பாடிப் பாண்டியன் சிறப்பைப் பாராட்டுகின்றார்.
நளிகட லிருங்குட்டத்து
வளிபுடைத்த கலம்போலக்
களிறுசென்று களனகற்றவும்
களனகற்றிய வியலாங்கண்
ஒளிறிலைய வெஃகேந்தி 5
அரைசுபட வமருழக்கி
உரைசெல முரசுவௌவி
முடித்தலை யடுப்பபாகப்
புனற்குருதி யுலைக்கொளீஇத்
தொடித்தோட் டுடுப்பிற் றுழந்த வல்சியின் 10
அடுகளம் வேட்ட வடுபோர்ச் செழிய
ஆன்ற கேள்வி யடங்கிய கொள்கை
நான்மறை முதல்வர் சுற்ற மாக
மன்ன ரேவல் செய்ய மன்னிய
வேள்வி முற்றிய வாய்வாள் வேந்தே 15
நோற்றோர் மன்றநின் பகைவர் நின்னொடு
மாற்றா ரென்னும் பெயர்பெற்
றாற்றா ராயினு மாண்டுவழ் வோரே (26)
திணையுந் துறையு மவை. அவனை மாங்குடி கிழார் பாடியது.
உரை: நளி கடல் இருங் குட்டத்து வளி புடைத்த நலம்போல - பெரிய கடலின்கண் பெரிய ஆழத்திடத்துக் காற்றாற் புடைக்கப்பட்ட மரக்கலம் நீரைக் கிழித்து ஓடுமாறு போல: களிறு சென்று களன் அகற்றவும் - களிறூ சென்று போர்க்களத்தை இடமகலச் செய்ய; களன் அகற்றிய விய லாங்கண் - அவ்வாறு களன் அகலச் செய்த பரந்த இடத்தின்கண்; ஒளிறு இலைய அஃகேந்தி - விளங்கிய இலையையுடைய வேலை ஏந்தி; அலரசு பட, அமர் உழக்கி - வேந்து படப் போரைக் கலக்கி; உரை செல - புகழ் பரக்க; முரசு வௌவி - அவர் முரசைக் கொண்டு; முடித்தலை அடுப்பாக - முடித்தலையை அடுப்பாகக் கொண்டு; புனல் குருதி உலைக்கொளீஇ - குருதிப் புனலாகிய உலையின்கண் தசையும் மூளையு முதலாயினவற்றைப் பெய்து; தொடித்தோள் துடுப்பின் துழந்த வல்சியின் - வீர வளையையுடைய தோளாகிய துடுப்பால் துழாவி யடப்பட்ட உணவால்; அடு களம் வேட்ட அடுபோர்ச் செழிய அடுகளத்தின்கண் கள வேள்வி வேட்ட கொல்லும் போரையுடைய செழிய; ஆன்ற கேள்வி அடங்கிய கொள்கை நான்மறை முதல்வர் சுற்றமாக- அமைந்த கேள்வியையும் ஐம்புலனு மடங்கிய விரதங்களையும் நான்கு வேதத்தையுமுடைய அந்தணர் சுற்றமாக; மன்னர் ஏவல் செய்ய - வேந்தர் அதற்கேற்ப ஏவல் செய்ய; மன்னிய வேள்வி முற்றிய வாய் வாள் வேந்தே - நிலை பெற்ற வேள்வியைச் செய்து முடித்த வாய்த்த வாளினையுடைய வேந்தே; மன்ற நோற்றோர் நின் பகைவர் - யாவர்க்கும் தெளிவாகத் தவஞ் செய்தார் நின்னுடைய பகைவர்; நின்னொடு மாற்றார் என்னும் பெயர் பெற்று - நினக்குப் பகைவரென்னும் பெயரைப் பெற்று; ஆற்றா ராயினும்- நின்னொடு போர் செய்தற்கு மாட்டாராயினும்; ஆண்டு வாழ்வோர் - அத் துறக்கத்து வாழ்வோர் எறு.
களனகற்றவு மென்னும் உம்மை அசைநிலை. மன்னிய வேள்வி யென்றது ,கள வேள்வி யொழிந்த வேள்விகளை, செழிய வேந்தே, ஆற்றாராயினும், ஆண்டு வாழ்வோராகிய நின் பகைவர் மாற்றாரென்னும்
பெயர் பெற்று நோற்றாரெனக் கூட்டுக.
விளக்கம்; காற்றாற் புடைக்கப்பட்ட மரக்கலம் மலிபோலெழும் கடலலைகளை கிழித்துக்கொண்டு விரைந்தேருவது ஒருதலையாதலால், வளி புடைத்த கலம் என்றதற்கு, "காற்றாற் புடைக்கப்பட்ட மரக்கலம் நீரைக் கிழித்தோடு"மென வுரைத்தார். முன்னே யானையைச் செலுத்தியவழி அதன் உடற்பருமையும் வலியும் கண்டு ஈண்டித் தம்முள் சேர்ந்திருக்கும் படை வீரர் இடம் விட்டு அகல் நின்றாராக, அவ்வழியே தானை வீரர்விரைந்து சென்று பகைவீர ரிடை நின்று பொருது அவரை யழிப்பதாகிய போர்ச்செயல் முறை இதனால் குறிக்கப்படுகிறது. முடித் தலை- முடியணிந்த வேந்தர் தலை. உலைக் கொளீஇ யென்றதனால் உலையிடத்துப் பெய்துகொள்ளப்படுவன " தசையும் மூளையு முதலாயின" என்றார். நான்மறை முதல்வர் வேந்தரைச் சுற்றியிருத்தல் வேள்வி செயதற்பொருட்டு, இராயசூய முதலிய வேள்விக்கண், நான் மறை முதல்வர் வேந்தர்க்கு ம்றைவழி காட்டும் சுற்றமாக, ஏனை வேந்தர் வேள்வி வினைக்குத் துணையாக ஏவல் செய்வர். இப்பாண்டியன் வீரரைக்கொண்டு கள வேள்வியும், நான்மறை முதல்வரைக் கொண்டு ஏனைத் தீ வேள்வியும் செய்தான் என்பதாம். போரிற் பட்டு வீழ்ந்தோர் துறக்கம் புகுவரென்பது நூல் வழக்கு. அதனால்,போரிற் பட்ட பகைவர் துறக்கம் புகுதலின் தோற்றவராயினார் என்றார்; "நோற்றோர் மன்ற தாமே கூற்றம கோளுற விளியார் பிறர்கொள விளிந்தோர்" (அகம். 31) எனக் கற்ற மகளிர் தம்முட் பேசிக் கொள்ளுதல் காண்க.
---------
27. சோழன் நலங்கிள்ளி
இச் சோழ மன்னன் காவிரி பாயும் சோழநாட்டுக் குரியவன். விம்மிய உள்ளம் படைத்தோர்க்கு அரசுரிமை தகுமேயன்றி உள்ளத்தாற் சிறியவர்க்குப் பொருந்தாதென்னும் கொள்கையுடையவன். இவனைச் சான்றோர் சேட்சென்னி நலங்கிள்ளி யென்றும் கூறுவர். இவனுக்கு உடன்பிறந்தான் ஒருவன் உண்டு; அவன் பெயர், சோழன் மாவளத்தான் என்பது. இவன் காலத்தே சோழநாட்டின் உறையூர்ப் பகுதிக்கு வேந்தாய் உறையூரை எடமாகக்கொண்டு சோழன் நெடுங்கிள்ளி யென்பான் ஆண்டான். அவற்கும் இந் நலங்கிள்ளிக்கும் பகைமையுண்டாயிற்று. அக்காலத்தே, "பகைவர் ஈயென விரப்பின் இன்னுயிரும் ஈகுவேன்; அரசுரிமையும் ஒரு பொருளன்று; அவர் அதனை என்னோடு பகைத்துப் பெறக் கருதின் கழை நன்னும் யானையது காலகப்பட்ட முளைபோலக் கெடுத்தொழிப்பேன்" என்று இவன் கூறும் வஞ்சினம் இவனது மன மாட்சியைப் புலப்படுக்கும். ஒருகால் நெடுங்கிள்ளி ஆவூரிலிருந்த காலத்து, இவன் தம்பி மாவளத்தான் ஆவூரை முற்றுகையிட்டு வருத்தினான்; அவன் பின் உறையூர்க்குச் சென்று தங்கினானாக, நலங்கிள்ளி உறையூரைத் தான் முற்றுகையிட்டுக் கொண்டான். கோவூர்கிழார் என்னும் சான்றோர் தருவன கூறி இருவர்க்கும் சந்து செய்தார். பின்பு நலங்கிள்ளி உறையூரைத் தனக்குரித்தாகக் கொண்டு, தனது வரையா ஈகையால் புகழ் மேம்பட்டான்; அக்காலத்தே பாண்டிநாட்டிற் சிறப்புற்றிருந்த மலை அரண்கள் ஏழினை யெறிந்து, அவற்றிடத்தே தன் புலிப்பொறியை வைத்தான். இவனது வென்றி கிழக்கே கீழ்கடலும் மேற்கே குடகடலுமாகிய இரண்டிற்கும் இடையே பரந்து மேலோங்கக் கண்ட வடநாட்டரசர், தங்கள் நாடு நோக்கி இச்சோழன் வருவானோ என நடுங்கித் துஞ்சாக்க்ண்ணராயினர். இவனைக் கோவூர்கிழார், ஆலத்தூர் கிழார் என்ற இருவரும் பாடியுள்ளன்ர். உறையூர் முதுகண்ணன் சாத்தனார் இது முதல் நான்கு பாட்டுக்களால் இவனது சிறப்பியல்பை எடுத்தோதுகின்றார். இந்த ஆசிரியரும் உறையூரைச் சேர்ந்தவர். முதுகண்ணன் என்பது இவர் தந்தை பெயர். புலவர் பாடும் புகழுடையோர் வலவனேவா வானவூர்தி யேறித் துறக்கஞ் செல்வரென்பதும், திங்கள் உலகில் உயிர்கள் பிறத்தலும் இறத்தலும் வளர்தலும் தேய்தலும் அறியா மடவோரும் அறியக் காட்டுமென்பதும், அறமும் பொருளும் இன்பமும்செய்தல் அறத்தின் பயனென்பதும், நாடகமே யுலகம் என்பது இவருடைய புலமைப் பண்பை நன்கு விளக்குகின்றன.
இப் பாட்டின்கண், "விழுமிய குடியிற் பிறந்து அரசு வீற்றிருந்தோர் பலருள்ளும் புலவர் பாடு புகழ் பெற்றவர் சிலரே; புகழ் பெற்றவர் வலவன் ஏவா வானவூர்தி யேறி விண்ணுலகு செல்வர் என்று அறிவுடையோர் சொல்லக் கேட்டுளேன்; வளர்தலும் தேய்தலும் பிறத்தலும் இறத்தலும் உடையது உலகம்; இவ்வுலகத்தில் வருந்தி வந்தோர்க்கு வேண்டுவன அருளும் வன்மைதான், வென்றிக்கு மாண்பு; நீ அதனைச் செய்க" என்று அறிவுறுத்துகின்றார்.
சேற்றுவளர் தாமரை பயந்த வொண்கேழ்
நூற்றித ழலரி னிரை கண் டன்ன
வேற்றுமை யில்லா விழுத்திணைப் பிறந்து
வீற்றிருந் தோரை யெண்ணுங் காலை
உரையும் பாட்டு முடையோர் சிலரே 5
மரையிலை போல மாய்ந்திசினோர் பலரே
புலவர் பாடும் புகழுடையொர் விசும்பின்
வலவ னேவா வான வூர்தி
எய்துப வென்பதஞ் செய்வினை முடித்தெனக்
கேட்ப லெந்தை சேட்சென்னி நலங்கிள்ளி 10
தேய்த லுண்மையும் பெருக லுண்மையும்
மாய்த லுண்மையும் பிறத்த லுண்மையும்
அறியா தோரையு மறியக் காட்டித்
திங்கட் புத்தே டிரிதரு முலகத்து
வல்லா ராயினும் வல்லுந ராயினும் 15
வருந்தி வந்தொர் மருங்கு நோக்கி
அருள வல்லை யாகுமதி யருளிலர்
கொடாமை வல்ல ராகுக
கெடாத துப்பினின் பகையெதிர்ந் தோரே. (27)
திணை: பொதுவியல். துறை: முதுமொழிக்காஞ்சி. சோழன் நலங்கிள்ளியை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது.
உரை: சேற்று வளர் தாமரை பயந்த - சேற்றின்கண்ணே வளரும் தாமரை பூத்த; ஒண் கேழ் நூற்றிதழ் அலரின் நிரை கண்டன்ன - ஒள்ளிய நிறத்தை யுடைத்தாகிய நூறாகிய இதழையுடைய மலரினது நிரையைக் கண்டாற்போன்ற; வேற்றுமையில்லாத விழுத்தினை பிறந்து - ஏற்றத் தாழ்வில்லாத சிறந்த குடியின்கட் பிறந்து; வீற்றிருந்தோரை எண்ணுங் காலை - வீற்றிருந்த வேந்தரை யெண்ணுங் காலத்து; உரையும் பாட்டும் உடையோர் சிலர் - புகழும் பாட்டும் உடையோர் சிலர்; மரையிலை போல மாய்ந்திசினோர் பலர் - தாமரையினது இலையை யொப்பப் பயன்படாது மாய்ந்தோர் பலர்; புலவர் பாடும் புகழுடையோர் - புலவராற் பாடப்படும் புகழை யுடையோர்; விசும்பின் - ஆகாயத்தின்கண்; வலவன் ஏவா வானவூர்தி எய்துப - என்ப தம் செய்வினை முடித்து - பாகனாற் செலுத்தப்படாத விமானத்தைப் பொருந்துவாரென்று சொல்லுவார் அறிவுடையார் தாம் செய்யும் நல்வினையை முடித்து; எனக் கேட்பல் - என்று சொல்லக் கேட்பேன்; எந்தை - என்னுடைய இறைவ; சேட்சென்னி நலங்கிள்ளி - ; தேய்த லுண்மையும்- வளர்ந்த தொன்று பின் குறைத லுண்டாதலும்; பெருக லுண்மையும் - குறைந்த தொன்று பின் வளர்த லுண்டாதலும்;மாய்த லுண்மையும் - பிறந்ததொன்று பின் இறத்த லுண்டாதலும்; பிறத்த லுண்மையும் - இறந்ததொன்று பின் பிறத்த லுண்டாதலும்; அறியாதோரையும் அறியக் காட்டி - கல்வி முகத்தான் அறியாத மடவோரையும் அறியக் காட்டி; திங்கட் புத்தேள் திரிதரும் உலகத்து - திங்களாகிய தெய்வம் இயங்குகின்ற தேயத்தின்கண்; வல்லா ராயினும் - ஒன்றை மாட்டாராயினும்; வல்லுந ராயினும்- வல்லாராயினும்; வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி – வறுமையான் வருத்தமுற்று வந்தோரது உண்ணாத மருங்கைப் பார்த்து; அருள வல்லை யாகுமதி - அவர்க்கு அருளி வழங்க வல்லை யாகுக; கெடாத துப்பின் நின் பகை யெதிர்ந்தோர்-. கெடாத வலியையுடைய நினக்குப் பகையாக மாறுபட்டோர்; அருளிலர் - அருளிலராய்; கொடாமை வல்ல ராகுக - கொடாமயை வல்லராகுக; எ-று.
நூற்றித ழலரின் நிரைகண் டன்ன உரையும் பாட்டும் உடையோர் சிலரென இயையும். நிரைகண் டன்ன விழுத்திணையென் றுரைப்பினுமமையும்; அருளிலார் கொடாமை வல்ல ராகுக வென்றனாற் பயன், அவையுடையோர் தத்தம் பகைவரை வெல்வராதலால் பகை யெதிர்ந்தோர் அவையிலராக வென்பதாம். செய்வினை முடித்து வானவூர்தி எய்துப வென இயையும்.
விளக்கம்: நூறாகிய இதழ் என்ற விடத்து நூற்றென்பது அப் பொருளுணர்த்தும் எண்ணைக் குறியாது பல வென்னும் பொருள் குறித்து நின்றது. இதனை யறியாதார் வடமொழியில் சததளம் என மொழிபெயர்த்துக் கொண்டனர்; " நூற்றிதழ்த் தாமரைப்பூ" (ஐங். 20) என்று வேறு சான்றோரும் கூறுவர். வேற்றுமை செய்வன உயர்வு தாழ்வுகளேயாதலின், வேற்றுமையில்லா வென்பதற்கு ஏற்றத் தாழ்வில்லாத என்றுரைத்தார். விழுமிய குடிக்கு விழுப்பம் தருவது உயர்வு தாழ்வு கருதாமையே என்பதற்கு "வேற்றுமை யில்லா விழுத்திண" என்பது வேற்றுமை மலிந்த இக்காலத் தமிழ்மக்கள் குறிக்கொண்டு போற்றத்தக்கதாகும் உரை - புகழ். இனிப் பரிமேலழகர், உரை யாவது எல்லாராலும் புகழப்படுவதென்றும், பாட்டாவது சான்றோர் பாடும் புகழ் என்றும் கொண்டு, "புகழ்தான் உரையும் பாட்டு மென இருவகைப்படும்" என்பர். உரையும் பாட்டும் பெற்றவர், பெற்றவுடனே 'வலவ னேவா வானவூர்தி எய்துப" என்பதன்று; செய்தற்குரிய நல் வினையைச் செய்து முடித்த பின்பே அவ்வூர்தியில் விசும் பெய்துப என்பார், "செய்வினை முடித்து" என வேறு வைத்து வற்புறுத்தினார். புலவர் பாடும் புகழ்ப் பயனை இவ்வாறு அறிவுடையோர் சொல்லக் கேட்டுளேன் என்பது விளங்க 'என்ப" என்றும், 'எனக் கேட்பல்" என்றும் கூறினார். வேற்றுமை யில்லா விழுத்திணைப் பிறந்து வீற்றிருந்தோரை யெண்ணுங்கால் நூற்றித ழலரின் நிரைகண் டன்ன உரையும் பாட்டும் உடையோர் சிலர் என இயைத்தல் வேண்டுமென்பது உரைகாரர் கருத்து. இவ்வாறின்றி, நிரைகண் டன்ன விழுத்திணை யென்றும் கிடந்தபடியே கொண்டாலும்பொருந்து மென்பதற்காக, "நிரை ..... அமையும்" என்றார். "அவை யுடையோர் தத்தம் பகைவரை வெல்வர்" என்ற விடத்து, அவை யென்றது அருளும் கொடையும் குறித்துநின்றது; அருளும் கொடையு முடையவர் வெல்வ ரென்பதாம்.
----------------
28. சோழன் நலங்கிள்ளி
உறையூர் முதுகண்ணன் சாத்தனார் இப்பாட்டின்கண், "மக்கட் பிறப்பிற் காணப்படும் சிதடு முதல் மருள் ஈறாகக் கூறப்படும் எண்வகை எச்சங்களும் ஒருவர்க்குப் பிறப்பில் பொருந்துவது குற்றம். கானத்தை இடமாகக் கொண்டு வாழும் நின் பகைவர் போலாது, கூத்தர் ஆடு களம்போலும் அகநாட்டை நீ யுடையை யாதலாலும், நீ பெற்ற செல்வம் அறம் பொரு ளின்பங்களை ஆற்றுதற்காகவே யாகும்; அவற்றை ஆக் காமை மேலே கூறிய குற்றம் பொருந்திய பிறப்புண்டாகப் பண்ணும்" என்று சோழன் நலங்கிள்ளிக்கு நல்லறிவு கொளுத்துகின்றார்.
சிறப்பில் சிதடு முறுப்பில் பிண்டமும்
கூனுங் குறளு மூமுஞ் செவிடும்
மாவு மருளு முளப்பட வாழ்நர்க்
கெண்பே ரெச்ச மென்றிவை யெல்லாம்
பேதைமை யல்ல தூதிய மில்லென 5
முன்னு மறிந்தோர் கூறின ரின்னும்
அதன்றிற மத்தையா னுரைக்க வந்தது
வட்ட வரிய செம்பொறிச் சேவல்
ஏனல் காப்போ ருணர்த்திய கூஉம்
கானத் தோர்நின் றெவ்வர் நீயே 10
புறஞ்சிறை மாக்கட் கறங்குறித் தகத்தோர்
புய்த்தெறி கரும்பின் விடுகழை தாமரைப்
பூம்போது சிதைய வீழ்ந்தெனக் கூத்தர்
ஆடுகளம் கடுக்கு மகநாட் டையே
அதனால், அறனும் பொருளு மின்பமு மூன்றும் 15
ஆற்றும் பெருமநின் செல்வம்
ஆற்றா மைந்நிற் போற்றா மையே. (28)
திணை: பொதுவியல். துறை: இயன்மொழி வாழ்த்து. முதுமொழிக் காஞ்சியுமாம். அவனை அவர் பாடியது.
உரை: சிறப்பில் சிதடும்-மக்கட் பிறப்பிற் சிறப்பில்லாத குருடும்; உறுப்பில் பிண்டமும்-வடிவில்லாத தசைத் திரளும்; கூனும் குறளும் ஊமும் செவிடும்-;மாவும் மருளும் உளப்பட-; வாழ்நர்க்கு- உலகத்து உயிர் வாழ்வார்க்கு; எண் பேர் எச்சம் என்ற இவை யெல்லாம்-எட்டு வகைப் பட்ட பெரிய எச்சமென்று சொல்லப்பட்ட இவையெல்லாம்; பேதைமை யல்லது- பேதைத் தன்மையுடைய பிறப்பாவதல்லது; ஊதிய மில்லென-இவற்றாற் பயனில்லை யென; முன்னும் அறிந்தோர் கூறினர்-முற்காலத்தும் அறிந்தோர் சொன்னார்; இன்னும் அதன் திறம் யான் உரைக்க வந்தது-இன்னமும் அவ்வூதியத்தின் பாகுபாட்டை யான் சொல்ல வந்தது; வட்ட வரிய செம் பொறிச் சேவல்-வட்டமாகிய வரியை யுடைத்தாகிய செம் பொறியையுடைய காட்டுக் கோழிச் சேவல்; ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம்-தினைப்புனங் காப்போரைத் துயிலுணர்த்துவதாகக் கூவும்; கானத்தோர் நின் தெவ்வர்-காட்டின்கண் உள்ளோர் நின்னுடைய பகைவர்; நீயே-நீதான்; புறஞ்சிறை மாக்கட்கு-வேலிப்புறத்து நின்று வேண்டிய மாக்கட்கு;அறம் குறித்து-அறத்தைக் கருதி; அகத்தோர் புய்த் தெறி கரும்பின் விடு கழை-அகத்துள்ளோர் தாம் பிடுங்கி யெறியும் கரும்பாகிய போகடப்பட்ட கழை; தாமரைப் பூம் போது சிதைய வீழ்ந்தென-வாவியகத்துத் தாமரையினது பொலிந்த பூச் சிதற வீழ்ந்ததாக; கூத்தர் ஆடு களம் கடுக்கும் அக நாட் டை- அது கூத்தர் ஆடு களத்தை யொக்கும் உள்ளாகிய நாட்டையுடையை; அதனால்-ஆதலான்; அறனும் பொருளும் இன்பமும் மூன்றும் ஆற்றும் நின் செல்வம்-அறனும் பொருளும் இன்பமு மென்னப்பட்ட மூன்றும் செய்வதற் குதவும் நினது செலவம்; பெரும-; ஆற்றாமை நிற் போற்றாமை- உதவா தொழிதல் நின்னைப் பாதுகாவாமை எ-று
பிண்ட மென்பது மணை போலப் பிறக்குமது. மா வென்பது விலங்கு வடிவாகப் பிறக்குமது. மரு ளென்பது அறிவின்றியே மயங்கி யிருக்குமது. ஊதிய மென்பது அறம் பொரு ளின்பங்களை; அன்றி அறமென்பாருமுளர். நிற் போற்றாமை யென்ற கருத்து,சிதடு முதல் அறிவின்மை பிறப்பொடு கூடாதவாறு போல நின் செல்வமும் அற முதலியன செய்தற் கேற்றிருப்பச் செய்யாமையாகிய அறிவின்மை மக்கள் யாக்கையிற் பிறந்தும் பயனில் பிறப்பாகப் பண்ணுதலால் நினக்கு வரும் பொல்லாங்கைப் போற்றாமையென்பதாம். கானத்தோர் நின் பகைவ ரென்ற வதனாற் பகையின்மை தோற்றி நின்றது. மாவும் மருளு முளப்படச் சிதடு முதலாகப் பிறப்பொடு கூட்டப்படாத பெரிய எச்சமெனப்பட்ட எட்டுமெனக் கூட்டியுரைப்பினு மமையும். இஃது அறஞ் செய்யாதானை அறஞ் செய்கவெனக் கூறியவாறு. அதன்றிற மென்பதற்கு அப் பேதைமை யென்றாக்கி, அஃது உண்டானால் வரும் பொல்லாங்கும், அது போனால் வரும் நன்மையு மென்றுரைப்பாருமுளர்.
விளக்கம்: சிதடு- குருடு. "கண்ணிற் சிறந்த உறுப்பில்லை" என்பராதலால், கண்ணிலாக் குருட்டினைச்"சிறப்பில் குருடன்" என்றார்; உரைகாரர், குருடு மக்கள் பிறப்புக்குச் சிறப்புத் தருவதன் றென்பதுபட, "மக்கட் பிறப்பிற் சிறப்பில்லாத குருடு" என்பர். கை கால் முதலிய உறுப்புக்கள் தோன்றுதற்கு முன்பே கருச் சிதைததலால் பிறக்கும் ஊன் பிண்டத்தை, "உறுப்பில் பிண்டம்" என்றும், அது வடிவு இல்லாத தசைத் திர"ளென்றும் கூறினார்; "ஊன் தடி பிறப்பினும்" (புறம்:74) எனச் சேரமான் கணைக்கா லிரும்பொறை கூறுவது காண்க. எச்சம், மக்கட் பிறப்புக்குரிய இலக்கணம் எஞ்சவுள்ளன. ஈண்டுக் கூறிய எண் வகைக் குறைபாடுமின்றியிருக்கும் பிறப்பு மக்களது நற்பிறப்பென வறிக. இக் குறையுடைய மக்கள் பேதைத்தன்மை யுடையரென்பார், "பேதைமை" யென்பதற்குப் "பேதைத்தன்மையுடைய பிறப்பு" என்றார். "பேதைமை யென்பதொன் றியாதெனின் ஏதங்கொண், டூதியம் போக விடல்"(குறள்.831) என்பதனால், "பேதைமை யல்லது ஊதியம் இல்"லென்றார். கோழி, விடியலில் எழுந்து கூவி, உறங்கு வோரைத் துயிலுணர்த்தும் என்ற இயல்புபற்றி, "ஏனல் காப்போர் உணர்த்திய கூவும்" என்றார். உணர்த்துதல், துயில் உணர்த்துதல். வைகறை வந்தன்றா லெனவே, "குக்கூ வென்றது கோழி" (குறுந். 157) என்று பிறரும் கூறுதல் காண்க. சிறைப்புறம் என்பது புறஞ் சிறையென வந்தது. கழை, இக்காலத்துக் கட்டையெனவும் கழியெனவும் வழங்கும். கூத்தர் பல்வகைப் பூவும் அணியும் அணிந்து ஆடுவர்; ஆடுங்கால் அவை உதிர்ந்து கிடக்கும் இடம், இங்கே உவமாகக் கூறப் படுகிறது.மணை, ஊன். மக்கட் பிறப்பாற் பெறும் பயன் அறம் பொருளின்பங்களாதலால், அப்பிறப்பிற் குறைந்தவர் அவற்றை யிழத்தலின், அற முதலியன ஊதிய மெனப்பட்டன. ஊதியமாவது, அறமொன்றுமேயெனக் கொள்பவரும் உண்டென்றதற்கு, "அன்றி...உளர்" என்றார். பகை கொண்டிருந்தால் நாட்டிலிருந்து குறும்பு செய்வராதலின், செய்யாது காணத் துறைதல் கொண்டு பகையில்லை யென்பது தெளிவாயிற்று. அதன் திறம் என்றவிடத்து, அது எனச் சுட்டப்பட்டது ஊதிய மெனக் கொள்ளாது பேதைமை யென்று கொள்பவருமுண்டென்பதை, "அதன் நிறம்...உளர்" என்றார்.
------------------
29. சோழன் நலங் கிள்ளி
இப் பாட்டின்கண், உறையூர் முதுகண்ணன் சாத்தனார் சோழன் நலங்கிள்ளியை நோக்கி, "வேந்தே, நின் திருவோலக்கத்தில் நின் புகழ் பாடும் பாணர் நிறைதல் வேண்டும்; பாணர் இசைகேட்ட பின்பு மகளிர் கூட்டத்தின் இன்பத்தை நீ நுகர்தல் வேண்டும்; கொடியோரைத் தெறுதலும், நல்லோரை யளித்தலும் தவிராது நிலவுதல் வேண்டும்; இவற்றோடமையாது நீ சிற்றினம் சேர்த லாகாது; நீ வழங்கும் நாடு பெற்றுச் சிறக்கும் படைத்தலைவர் நின்பால் வருநர்க்கு உதவியாற்றும் நண்புடைப் பண்புடையராமாறு நின் செய்கை முறைப்பட வமைதல் வேண்டும். கூத்தாட் டவைக் குழாம்போலக் கூடுதலும் கழிதலுமுடையது இவ்வுலகம்; இதன்கண் நின் சுற்றத்தார் நினக்கு நகைப்புறமாக, நின் செல்வம் இசைப்புறமாக விளங்குதல் வேண்டும்" என வற்புறுத்துகின்றார்.
அழல்புரிந்த வடர்தாமரை
ஐதடர்ந்த நூற்பெய்து
புனைவினைப் பொலிந்த பொலனறுந் தெரியல்
பாறுமயி ரிருந்தலை பொலியச் சூடிப்
பாண்முற் றுகநின் னாண்மகி ழிருக்கை 5
பாண்முற் றொழிந்த பின்றை மகளிர்
தோண்முற் றுகநின் சாந்துபுல ரகலம், ஆங்க
முனிவின் முற்றத் தினிதுமுர சியம்பக்
கொடியோர்த் தெறுதலுஞ் செவ்வியோர்க் களித்தலும்
ஒடியா முறையின் மடிவிலை யாகி 10
நல்லத நலனுந் தீயதன் றீமையும்
இல்லை யென்போர்க் கின்னா கிலியர்
நெல்விளை கழனிப் படுபுள் ளோப்புநர்
ஒழிமடல் விறகிற் கழிமீன் சுட்டு
வெங்கட் டொலைச்சியு மமையார் தெங்கின் 15
இளநீ ருதிர்க்கும் வளமிகு நன்னாடு
பெற்றன ருவக்குநின் படைகொண் மாக்கள்
பற்றா மாக்களிற் பரிவுமுந் துறுத்துக்
கூவை துற்ற நாற்காற் பந்தர்ச்
சிறுமனை வாழ்க்கையி னொரீஇ வருநர்க் 20
குதவி யாற்று நண்பிற் பண்புடை
ஊழிற் றாகநின் செய்கை விழவிற்
கோடியர் நீர்மை போல முறைமுறை
ஆடுநர் கழியுமிவ் வுலகத்துக் கூடிய 25
நகைப்புற னாகநின் சுற்றம்
இசைப்புற னாகநீ யோம்பிய பொருளே (29)
திணையும் துறையு மவை. அவனை அவர் பாடியது.
உரை: அழல் புரிந்த அடர் தாமரை – எரியா லாகப்பட்ட தகாடச் செய்த தாமரைப் பூவிடனே: ஐது அடர்ந்த நூல் பெய்து – ஐதாகத் தட்டிக் கம்பியாகச் செய்த நூலின் கண்ணேயிட்டு; புனை விளைப் பொலிந்த பொலன் நறுந்தெரியல் – அலங்கரித்த தொழிலாற் பொலிந்த பொன்னான் இயன்ற நறிய மாலையை; பாறு மயிர் இருந் தலை பொலியச் சூடி – பாறிய மயிரையுடைய கரிய தலை பொலிவு பெறச்சூடி; பாண் முற்றுக நின் நாள் மகிழ் இருக்கை – பாண் சுற்றம் சூழ்வதாக நினது நாட் காலத்து மகிழ்ந்திருக்கும் ஒலக்கம்; பாண் முற்று ஒழிந்த பின்றை – பாண் சுற்றம் சூழ லொழிந்த பின்னர்; மகளிர் தோள் முற்றுக நின் சார்ந்து புலர் அகலம் – நினது உரிமை மகளிருடைய தோள் சூழ்வதாக நின் சார்ந்து புலர்ந்த மார்பும்; முளிவில் முற்றத்து இனிது முரசு இயம்ப – எப்போதும் வெறுப்பில்லாத அலங்காரத்தையுடைய கோயில் முற்றத்தின் கண்ணே இனிதாக முரசு ஒலிப்ப; கொடியோர்த் தெறுதலும் செவ்வியோர்க்கு அளித்தலும் ஒடியா முறைமையின் – தீயோரைத் தண்டஞ் செய்தலும் நடுவு நிலைமையுடையோர்க்கு அருள் பண்ணுதலுமாகிய இடையறாத முறைமையால்; மடிவிலை யாகி – சோம்புதலையுடை யல்லையாகி; நல்லதன் நலனும் தீயதன் தீமையும் இல்லை என்போர்க்கு – நல்விளையினது நன்மையும் தீவினையினது தீமையும் இல்லயென்று சொல்லுவோர்க்கு; இன்னலாகியர் – இனமாகா தொழிவாயாக; நெல் விலை கழனிப் படுபுள் ஒப்புநர் – நெல் விளைந்த வயலிடத் துளதாகிய புள்ளை யோட்டுவோர்; ஒழி மடல் விறகில் கழி மீன் சுட்டு ; வெங்கள் தொலைச்சியும் அமையார் – அதனுடனே வெய்ய மதுவையுண்டு தொலைச்சியும் அமையராய்; தெங்கின் இளநீர் உதிர்க்கும் – தெங்கினது இளநீரை யுதிர்க்கும்; வளமிகு நன்னாடு பெற்றனர் உவக்கும் – செல்வ மிக்க நல்ல நாட்டைப் பெற்று மகிழும் ; நின்படைகொள் மாக்கள் – நின்னுடைய படைக்கலம் பிடித்த மாந்தர்; பற்றா மாக்களின் – நின்னுடைய பகைவரைப் போல; பரிவு முந்துறுத்து – இரக்கத்தை முன்னிட்டுக் கொண்டு; கூவை துற்ற – கூவை இலையால் வேயப்பட்ட; நாற்கால் பந்தர் சிறுமனை வாழ்க்கையின் ஒரீஇ – நான்கு காலையுடைய பந்தராகிய சிறிய இல்லின்கண் வாழும் வாழ்க்கையினின்று நீங்கி; வருநர்க்கு உதவியாற்றும் – நின்பால் வருவார்க்கு உதவி செய்யும்; நண்பிற் பண்புடை ஊழிற்றாக நின் செய்கை – நட்போடு கூடிய குணத்தையுடைய முறைமை யுடைத்தாக நினது தொழில்; விழவிற் கோடியர் நீர்மை போல – விழவின்கண் ஆடும் கூத்தாது வேறு பட்ட கோலம் போல; முறைமுறை ஆடுநர் கழியும் இவ்வுலகத்து – அடைவுடைவே தோன்றி இயங்கி இறந்து போகின்ற இவ்வுலகத்தின்கண்; கூடிய நகைப் புறனாக நின் சுற்றம் – பொருந்திய மகிழ்ச்சி யிடத்தாக நின்னுடைய கிளை; இசைப்புறனாக நீ ஓம்பிய பொருள் – புகழிடத்தாக நீ பாதுகாத்த பொருள். எ – று.
நின் நாண் மகிழிருக்கை பாண் முற்றுக; அதன்பின் அகலம் தோள் முற்றுக;ல் நீ மடிவிலியாய் இன்னாக தொழிவாயாக; நின் பற்றா மாக்களைப்போல முற்காலத்துச் சிறுமனை வாழும் வாழ்க்கையினீங்கி இப்பொழுது நின் நாடு பெற்றுவக்கும் நின் படைகொள் மாக்கள் வருனர்க்கு உதவியாற்றம் நண்போடு கூடிய பண்புடைத்தாகிய முறைமையுடைத்தாக நின் செய்கை; நகைப்புறனாக நின் சுற்றம்; இசைப்புறனாக நீ ஒம்பிய பொருளெனக் கூட்டுக.
ஓரீஇ யென்பதனை யொருவ வெனட் திரிப்பினு மமையும். நறுமை பொன்னிற் கின்றெனினும் தெரியற்கு அடையாய் நின்றது; நன்மையுமாம். ஆங்க, அசை நசைப்புறனாக வென்றுரைப்பாரு முளர். இதனாற் சொல்லியது படைகொண் மாக்களும் முறை முதலாயின தப்பாமற் செய்து இன்புற்றிருக்கும்படி சிறப்புச் செய்யவேண்டு மென்பதாயிற்று.
விளக்கம் : இருந்தலை : இருமை, கருமைப் பண்பு குறித்து நின்றது; இரும்பிடித் தொழுதி (புறம் 22) என்புழிப் போல. கட்கினிய அலங்காரத்தால் தன்கண் வந்திருந்தாரை நீங்காவாறு பிணித்து இன்புறுத்தும் சிறப்புடைய கோயில் முற்றத்தை, முனிவில் முற்றம் என்றார் ஒடியா முறைமை – இடையறவு படாத முறைமை; முக்குணங்களும் கணந்தோறும் மாறும் இயல்பினவாதலின், அதனால் முறைமை மாறாமை தோன்ற, ஒடியா முறைமை யென்றார். நெற்கதிர்களை மேய்ந்துண்ணும் கிளி முதலிய புட்கள், படுபுண் றெனப்படுகின்றன. வெங் கள் ளென்புழி வெம்மை மயக்கஞ் செய்யும் களிப்பு. பெற்றனர்; முற்றெச்சம். தம்மைக் கண்டவழிப் பகைமையால் தெறுதலைச் செய்யாது அருள் செய்யுமாறு மெலிவு புலப்படுத்தி நிற்கும் பகைவர்போல் வென்பார்; பற்றா மாக்களிற் பரிவு முந்துறத்து என்றார். கோடியர் நிர்மை, கூத்தருடைய வேறுபட்ட கோலம், கூத்தரது கோலம் தோன்றி நின்றியங்கி மறைவது , உலகம் தோன்றிநின்று மறைதற்கு உவமமாயிற்று. ஓரீஇ யென்பது செய்தெனெச்சமாய் ஆற்றும் என்பதனோடு முடியும். ஒருவனெவத் திரிப்பின், மாந்தர் வாழ்க்கையின் ஒருவ, நின் செய்கை ஊழிற்றாக என இயையும், அவ்வழியும் பொருள் நலங் குன்றாமையின், அமையும் என்றார். பொன் மாலைக்கு மணமில்லையாகவும், நறுந் தெரிய லென்றதற்கு அமைதி கூறுவார், தெரியற்கு அடையாய் நின்ற தென்றார். நறுமை நன்றாதலின் நன்மை யெனப் பொருள் கொண்டு, நல்லமாலை யென்று உரைப்பினுமாம் என்றற்கு நன்மையுமாம் என்றார்.
--------------
30. சோழன் நலங்கிள்ளி
உறையூர் முதுகண்ணன் சாத்தனார், இப்பாட்டின்கண், சோழன் நலங்கிள்ளிபாற் காணப்படும். அடக்கமாகிய பண்பு கண்டு வியந்து, "வேந்தே, செஞ்ஞாயிற்றின் செலவும், அதன் பரிப்பும், மண்டிலமும், திக்கும், ஆகாயமும் என இவற்றின் அளவை நேரிற் சென்று கண்டவரைப் போலத் தம் அறிவால் ஆராய்ந்துரைப்போரும் உளர்; அவர்களாலும் ஆராய்ந்தறியக் கூடாத அத்துணை அடக்கமுடையனாய்க் கல்லைக்கவுளில் அடக்கியுள்ள களிறுபோல வலி முழுதும் தோன்றாதவாறு அடக்கிக் கொண்டு விளங்குகின்றாய்" என்று பாராட்டுகின்றார்.
செஞ்ஞா யிற்றுச் செலவுமஞ் ஞாயிற்றுப்
பரிப்பும் பரிப்புச் சூழ்ந்தமண் டிலமும்
வளிதிரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமு மென்றிவை
சென்றளந் தறிந்தோர் போல வென்றும் 5
இனைத்தென் போரு முளரே யனைத்தும்
அறிவறி வாகாச் செறிவினை யாகிக்
களிறுகவு ளடுத்த வெறிகற் போல
ஒளித்த துப்பினை யாதலின் வெளிப்பட
யாங்ஙனம் பாடுவர் புலவர் கூம்பொடு 110
மீப்பாய் களையாது மிசைப்பரந் தோண்டாது
புகாஅர்ப் புகுந்த பெருங்கலந் தகாஅர்
இடைப்புலப் பெருவழிச் சொரியும்
கடற்பஃ றாரத்த நாடுகிழ வோயே. (30)
திணை: பாடாண்டிணை. துறை: இயன்மொழி. அவனை அவர் பாடியது.
உரை : செஞ்ஞாயிற்றுச் செலவும் - செஞ்ஞாயிற்றினது வீதியும்; அஞ் ஞாயிற்றுப் பரிப்பும் - அஞ் ஞாயிற்றினது இயக்கமும்; பரப்புச் சூழ்ந்த மண்டிலமும் - அவ்வியக்கத்தாற் சூழப்படும் பார் வட்டமும்;வளி திரிதரு திசையும் - காற்றியங்கும் திக்கும்; வறிது நிலைஇய காயமும் - ஓராதாரமுமின்றித் தானே நிற்கின்ற ஆகாயமும்; என்ற இவை சென்று அளந் தறிந்தோர் போல - என்று சொல்லப்பட்ட இவற்றை ஆண்டாண்டுப் போய் அளந்தறிந்தவர்களைப் போல; என்றும் இனைத்து என்போரும் உளர் - நாளும் இத்துணையளவை யுடையனவென்று சொல்லும் கல்வியை யுடையோரு முளர்; அனைத்தும் அறிவு அறிவாகாச் செறிவினையாகி - அப்பெரியோர் அச் செலவு முதலாயின அறியும் அறிவாலும் அறியாத அடக்கத்தை யுடையையாகி; களிறு கவுள் அடுத்த எறி கல் போல - யானை தன் கதுப்பின்கண் அடக்கிய எறியும் கல்லைப் போல; ஒளித்த துப்பினை யாதலின் - மறைந்த வலியையுடையை யாதலான்; வெளிப்பட யாங்ஙனம் பாடுவர் புலவர் - நின்னை விளங்க எப்பரிசு பாடுவர் புலவர், கூம்பொடு மீப்பாய் களையாது - கூம்புடனே மேற் பூரிக்கப்பட்ட பாயை மாற்றாமல்; மிசைப் பரம் தோண்டாது - அதன்மேற் பாரத்தையும் பறியாமல்; புகாஅர்ப் புகுந்த பெருங் கலம் - ஆற்றுமுகத்துப் புகுந்த பெரிய மரக்கலத்தை; தகாஅர் பரதவரும் - அளவரு முதலாகிய தகுதி யில்லாதோர்; இடைப்புலப் பெரு வழிச் சொரியும் - தம் புலத்திற் கிடையாகிய பெருவழிக்கண்ணே சொரியும்; கடல் பல் தாரத்த - கடலால் வரும் பல பண்டத்தையுடைய; நாடு கிழவோய் - நாட்டை யுடையோய் எ-று.
செல வென்றது, செல்லப்படும் வீதியை. பரிப்பென்றது, இத்துணை நாழிகைக்கு இத்துணை யோசனை செல்லுமென்னும் இயக்கத்தை. பாய் களையாது பரம் தோண்டா தென்பதனால், துறை நன்மை கூறியவாறாம். பெருங்கலத்தி னின்றென ஐந்தாவதாக உரைப்பினு மமையும். துப்பினை யாதலிற் புலவர் யாங்ஙனம் பாடுவர் எனக் கூட்டுக.
விளக்கம்: மண்டில மென்றது வட்டமாதலின் ஈண்டு நிலவட்டத்தைப் பார் வட்ட மென்றார். வறிது என்றது இன்மைப் பொருட்டாய், ஆதார மின்மை குறித்து நின்றது ஆகாய மென்பது, காயமெனத் தலை குறைந்தது. பூரித்தல், கட்டுற்று விரிதல். தோண்டுதல், குறைத்தல், கடலினும் ஆற்று முகம் ஆழம் குறைந்ததாதலின், ஆங்கு வரும் மரக்கலம் செவ்வே நிற்றற்குப் பாய் களைதலும் பாரம் குறைத்தலும் வேண்டுமென வறிக. பெரிய மலக்கலங்களைச் செலுத்தும் தகுதியிலராதலின், அளவர் முதலாயினாரைத் "தகாஅர்" என்றார். பரதவர், மீன் பிடிப்போர்; அளவர். உப்பு விளைப்போர். பெருங்கலத்தை யென இரண்டாவது விரித்துரைத்தார்; அவ்வாறு செய்யாது பெருங்கலத்தினின்று என ஐந்தாவது விரித்துரைப்பினும் பொருந்து மென்பதாம். நாடு கிழவோய், நீ ஒளித்த துப்பினையாதலின், புலவர் யாங்ஙனம் பாடுவர் என இயையும்.
-----------
31. சோழன் நலங்கிள்ளி
கோவூர் கிழார் என்னும் சான்றோர் இப்பாட்டின்கண் இச் சோழனைப் படுகின்றார். கோவூர் தொண்டை நாட்டிலுள்ளதோர் ஊர். இவ்வூரிற் பிறந்த சான்றோராகிய இவர், சிறந்த நல்லிசைப் புலமை யுடையராதல் ஒருபுறமிருக்க, இவர் செய்த அருஞ் செயல்கள் சில குறிக்கத் தகுவன. சோழன் நெடுங்கிள்ளி யென்பவன், ஆவூரிலும் உறையூரிலும் சோழன் நலங்கிள்ளியின் தம்பியாலும் அந் நலங்கிள்ளியாலும் முற்றுகையிடப் பட்டு அடைபட்டு அஞ்சிக் கிடந்தான். நெடுங்கிள்ளி, நலங்கிள்ளியின் தாயத்தாரில் ஒருவன். அக்காலத்தே இச் சான்றோர் அவற்கு அறிவுறுத்தும் வீர வுரைகள் இன்பந் தருவனவாகும். ஒருகால் அந்த நெடுங்கிள்ளி இளந்தத்த னென்னும் புலவனைச் சோழன் நலங்கிள்ளியின் ஒற்றனெனப் பிறழக் கருதிக் கொல்ல நினைத்தானாக, அதனை யுணர்ந்த இக் கோவூர் கிழார் தகுவன கூறி உய்வித்தார்; கிள்ளிவளவ னென்பான் மலையமான் மக்களைப் பற்றி யானைக் காலிலிட்டுக் கொல்ல நினைப்ப, இச் சான்றோர். சிறுவர்களின் இயல்பு கூறி, அவன் நினைவை மாற்றினார்.
இத்தகைய சான்றோர் இப்பாட்டின்கண், சோழன் நலங்கிள்ளியின் வென்றி நலத்தைச் சிறப்பித்து, "வேந்தே, நீ நல்லிசை வேட்டம் வேண்டிப் பாசறையில் இருப்பதற்கே விழைகின்றாய்; நின் யானைப் படை, பகைவர் அரண்களைச் சிதைத்தும் அடங்காவாய் மைந்துற்று நிற்கின்றன; போரெனிற் புகலும் நின் மறவர், பகைவர் நாடு காடிடையிட்டு நெடுந் தூரத்திலுள்ளதெனவறிந்தும் செல்லுதற் கஞ்சார்; இவ்வாற்றால், குணகடற் கரையையுடைய நீகுடகடல் அடைந்து பின் அங்கிருந்தே வடபுலம் நோக்கி வருவாயெனநினைந்து, வடபுலத்தரசர் இரவெல்லாம் உறக்கமின்றிக் கிடக்கின்றனர்" எனப் பாடிப் பாராட்டுகின்றார்.
சிறப்புடை மரபிற் பொருளு மின்பமும்
அறத்து வழிப்படூஉந் தோற்றம் போல
இருகுடை பின்பட வோங்கிய வொருகுடை
உருகெழு மதியி னிவந்துசேண் விளங்க
நல்லிசை வேட்டம் வேண்டி வெல்போர்ப் 5
பாசறை யல்லது நீயொல் லாயே
நுதிமுக மழுங்க மண்டி யொன்னார்
கடிமதில் பாயுநின் களிறடங் கலவே
போரெனிற் புகலும் புனைகழன் மறவர்
காடிடைக் கிடந்த நாடுநனி சேய 10
செல்வே மல்லே மென்னார் கல்லென்
விழவுடை யாங்கண் வேற்றுப்புலத் திறுத்துக்
குணகடல் பின்ன தாகக் குடகடல்
வெண்டலைப் புணரிநின் மான்குளம் பலைப்ப
வலமுறை வருதலு முண்டென் றலமந்து 15
நெஞ்சுநடுங் கவலம் பாயத்
துஞ்சாக் கண்ண வடபுலத் தரசே. (31)
திணை: வாகை. துறை: அசரவாகை; மழபுல வஞ்சியுமாம். அவனைக் கோவூர் கிழார் பாடியது.
உரை: சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும் - சிறப்புடை முறைமையால் பொருளும் இன்பமும்; அறத்து வழிப் படூஉம் தோற்றம் போல - அறத்தின் பின்னே தோன்றும் காட்சி போல; இரு குடை பின் பட - சேர பாண்டியருடைய இரண்டு குடையும் பின்னாக; ஓங்கிய ஒரு குடை உரு கெழு மதியின் நிவந்து சேண் விளங்க - ஓங்கிய நினது ஒன்றாகிய வெண் கொற்றக்குடை நிறம் பொருந்திய கலை நிறைந்த திங்கள் போல ஓங்கிச் சேய்மைக்கண்ணே விளங்க; நல்லிசை வட்டம் வேண்டி - நல்ல புகழ் வேட்கையை விரும்பி; வெல் போர்ப் பாசறை யல்லது ஒல்லாய் நீ - வெல்லும் போரினைச் செய்யும் பாடிவீட்டின் கண்ணே யிருத்தலல்லது நின்னகரின்கண் இருத்தலை உடம்படாய் நீ; நுதி முகம் மழுங்க மண்டி-கோட்டினது நுனை முகந் தேய மடுத்து; ஒன்னார் கடி மதில் பாயும் நின் களிறு அடங்கல - பகைவரது காவலையுடைய மதிலைக் குத்தும் நின்னுடைய யானைகள் அடங்கா; போரெனில் புகலும் புனை கழல் மறவர் - பூசலென்று கேட்பின் விரும்பும் அணிந்த வீரக் கழலையுடைய மறவர்; காடு இடைக் கிடந்த நாடு - காடு நடுவே கிடந்த நாடு; நனி சேய - மிகவும் தூரிய வாதலால்; செல்வே மல்லேம் என்னார் - யாம் போவேமல்லேமென்று கருதார் ஆதலான்; கல்லென் விழவுடை ஆங்கண் - ஓசையுண்டான விழாவினையுடைய அவ்விடத்து; வேற்றுப் புலத்திறுத்து - பகைப் புலத்தின்கண்ணே தங்கிவிட்டு; குண கடல் பின்ன தாக - கீழ் கடல் பின்னதாக; குட கடல் வெண்டலைப் புணரி - மேல் கடலினது வெளிய தலையையுடைய திரை; நின் மான் குளம்பு அலைப்ப - நினது குதிரையினது குளம்பை யலைப்ப; வலம் முறை வருதலுமுண்டென்று - வலமாக முறையே வருதலு முண்டாமென்று; அலமந்து - சுழன்று; நெஞ்சு நடுங்கு அவலம் பாய - நெஞ்சம் நடுங்கும் அவலம் பரப்ப; துஞ்சாக் கண்ண வடபுலத்தரசு - துயிலாத கண்ணையுடையவாயின வடநாட்டுள்ள அரசுகள் எ-று.
அவம்பாய வென்பதூஉமாம்.
விளக்கம்: உலக வாழ்க்கையில் மக்களால் நெறியறிந்து எய்துதற்கரிய சிறப்புடைய பொருள், அறம் பொருளின்ப மூன்று மாதலால், பொரு ளின்பங்களை, "சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும்" என்றார். சேர பாண்டியர் இருவர் குடைக்கும் பொருளின்ப மிரண்டும் உவமம். நல்லிசை வேட்ட மென்புழி, வேட்டம், வேட்கை யுணர்த்தி நின்றது; "உயர்ந்த வேட்டத் துயர்ந்திசி னோரே" (புறம்.214) எனப் பிறரும் கூறுதல் காண்க. தூரிய - தூரமுடைய. புணரி - அலை; "வெண்டலைப் புணரி" (புறம்.2) என வருதல் காண்க. ஒவ்வொரு திசையினும் வென்றி நிலைநாட்டி வரும் முறைமையால் வடதிசையினும் அது நிலைநாட்டற்கு வருவான் என்றற்கு, "வலம் முறை வருதலுமுண்`" டென்றஞ்சினர். பாய்தல் - பரத்தல்.
-----------
32. சோழன் நலங்கிள்ளி
ஆசிரியர் கோவூர் கிழார் இப்பாட்டின்கண், சோழன் நலங்கிள்ளியின் வள்ளன்மையை வியந்து, "இத் தண்பணை நாடு அவன் கருதிய முடிபே யுடையதாதலால், அவன் வஞ்சியும் மதுரையும் தருவன்;அவனை நாமெல்லாம் பாடுவோம் வம்மின்" என்று பாராட்டுகின்றார்.
கடும்பி னடுகல நிறையாக நெடுங்கொடிப்
பூவா வஞ்சியுந் தருகுவ னொன்றோ
வண்ண நீவிய வணங்கிறைப் பணைத்தோள்
ஒண்ணுதல் விறலியர் பூவிலை பெறுகென
மாட மதுரையுந் தருகுவ னெல்லாம் 5
பாடுகம் வம்மினோ பரிசின் மாக்கள்
தொன்னிலக் கிழமை சுட்டி னன்மதி
வேட்கோச் சிறாஅர் தேர்க்கால் வைத்த
பசுமட் குரூஉத்திரள் போலவவன்
கொண்ட குடுமித்தித் தண்பணை நாடே. (32)
திணை: பாடாண்டிணை. துறை: இயன்மொழி. அவனை அவர் பாடியது.
உரை: கடும்பின் அடு கலம் நிறையாக - நம் சுற்றத்தினது அடுகலத்தை நிறைக்கும் பொருட்டு விலையாக; நெடுங் கொடிப் பூவாவஞ்சியும் தருகுவன் - நெடிய துகிற்கொடியினையுடைய பூவாத வஞ்சியையும் தருகுவன்; வண்ணம் நீவிய - நிறமுடைய கலவை பூசப்பட்ட; வணங் கிறைப் பணைத் தோள் ஒண்ணுதல் விறலியர் - வளைந்த சந்தினையுடைய முன் கையினையும் வேய் போன்ற தோளினையும் ஒள்ளிய நுதலினையுமுடைய விறலியர்; பூவிலை பெறுக என - பூவிற்கு விலையாகப் பெறுகவென்று; மாட மதுரையும் தருகுவன் - மாடத்தையுடைய மதுரையையும் தருவன் ஆதலால்; எல்லாம் பாடுகம் வம்மினோ பரிசில் மாக்கள் - யாமெல்லாம் அவனைப் பாடுவோமாக வாரீர், பரிசின் மாக்காள்; தொன்னிலக் கிழமை சுட்டின் - பழைய நிலவுரிமையைக் குறிப்பின்; நன்மதி வேட்கோச் சிறாஅர் - நல்ல அறிவையுடைய குயக்குலத் திளையோர்;தேர்க் கால் வைத்த பசுமண் குரூஉத் திரள் போல - கலம் வனைதற்குத் திகிரிக் கண்ணே வைத்த பச்சை மண்ணாகிய கனத்த திரள் போல; அவன் கொண்ட குடுமித்து - அவன் கருத்திற் கொண்ட முடிபையுடைத்து; இத்தண் பணை நாடு - இக் குளிர்ந்த மருத நிலத்தையுடைய நாடு எ-று.
பூவா வஞ்சி யென்றது, கருவூர்க்கு வெளிப்படை ஒன்றோ வென்றது எண்ணிடைச் சொல். தேர்க்கா லென்றது, தேர்க்கால் போலும் திகிரியை அவன் கொண்ட குடுமித்து, இந் நாடு; ஆதலால், வஞ்சியையுந் தருகுவன்; மதுரையையும் தருகுவன்; ஆதலால், பரிசின் மாக்கள் நாமெல்லாம் அவனைப் பாடுகம் வம்மினோ வெனக் கூட்டுக. தொன்னிலைக் கிழமையென்று பாடமோதுவாரு முளர்.
விளக்கம் : அடு கலம் - உணவு சமைக்கும் கலங்கள். அடு கலம் நிறையாக என்றது, அக் கலங்கள் நிறையச் சமைக்கப்படும் உணவுப் பொருட்டு விலையாக என்பதாம். பூத்தவஞ்சி வஞ்சிக் கொடிக்கும் பூவா வஞ்சி வஞ்சிமாநகர்க்குமாதலின்; "பூவா வஞ்சி" யென்றாராக, "பூவா வஞ்சி யென்றது கருவூர்க்கு வெளிப்படை" யென்று உரைகாரர் கூறினர். கருவூர்க்கும் வஞ்சியென்பது பெயராதலின், இவ்வூர் கருவூர் எனவுரைகாரராற் கொள்ளப்படுகிறது. வஞ்சிநகர் வஞ்சிக்களமென்றும் அது பின்பு அஞ்சைக் களமென்றும் மாறிய காலத்துக் கருவூர் வஞ்சியென வழங்கப்படுவதாயிற்று. நல்ல நிறமுடைய கலவைப் பூச்சினை "வண்ண" மென்றார். விறலியர் பூவிலை பெறுக என என்றவிடத்து, பூவிலை மடந்தையராய கூத்தியரின் நீக்குதற்கு, பூவிலை யென்பதைப் பூவிற்கு விலையெனப் பிரித்துப் பொருள் கூறினார். இழை பெற்ற விறலியர்,தலையிற் சூடிக்கொள்ளும் பூவிற்கு விலையாக "மாட மதுரை தருகுவன்" என்றார். இவ் விருநகர்க்குமுரிய வேந்தர் இருவரும் தன் வழிப்பட, இந் நலங்கிள்ளி ஓங்கி விளங்குகின்றா னென முன் பாட்டிற் கூறியதைக் கடைப்பிடிக்க. குயவரது திகிரி, தேர்த் திகிரி போல்வதேயன்றி, அது வாகாமை விளக்குதற்கு, "தேர்க்கா லென்றது தேர்க்கால் போலும் திகிரியை" யென்றார். சிறார் கலம் வனைதற்பொருட்டுத் திகிரிக்கண் மண் பிசைந்து கொணர்ந்து வைப்பக் குயவன் தான் கருத்திற் கருதிய கலங்களைச் செய்வனாதலால், அவன் கருத்துப்படி உருப்படும் மண்போல, இத் தண்பணை நாடும் நலங்கிள்ளியின் கருத்துப்படி பயன்படு மென்றற்குக் "கொண்ட குடுமித்" தென்றார். தொன்னிலைக் கிழமை யென்ற பாடங் கொள்ளின், தொன்றுதொட்டே நிலை பெற்ற கிழமையெனப் பொருள் கொள்க.
----------
33. சோழன் நலங்கிள்ளி
ஆசிரியர் கோவூர் கிழார் இப் பாட்டின்கண் சோழன் நலங்கிள்ளியின் வென்றி நலம் கூறலுற்று, "வேந்தே, தென்னவன் நன்னாட்டிலுள்ள ஏழெயில்களின் கதவுகளை யெறிந்து, அவ்விடத்தே நின் புலிப்பொறியைப் பொறிக்கும் ஆற்றலுடையை; நின்னைப் பாடுவோர் வஞ்சிப் பாட்டுப் பாட, நின் படை வீரர் தங்கியிருக்கும் பாசறைக் கண்ணேயமைந்த தெருவில் பாணர்க்கு ஊன் சோற்றுத் திரள் கொடுக்கப்படும்; இத்தகைய முனையிருக்கைகள் பல உள்ளன; ஊரிடத்தே அல்லிய மாடும் விழாக்கள் பல நிகழ்கின்றனவாயினும், விழாக்களினும் முனையிருக்கைகளே பலவாக உள்ளன" என்று கூறுகின்றார்.
கானுறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன்
மான்றசை சொரிந்த வட்டியு மாய்மகள்
தயிர்கொடு வந்த தசும்பு நிறைய
ஏரின் வாழ்நர் பேரி லரிவையர்
குளக்கீழ் விளைந்த களக்கொள் வெண்ணெல் 5
முகந்தனர் கொடுப்ப வுகந்தனர் பெயரும்
தென்னம் பொருப்ப னன்னாட் டுள்ளும்
ஏழெயிற் கதவ மெறிந்துகைக் கொண்டுநின்
பேழ்வா யுழுவை பொறிக்கு மாற்றலை
பாடுநர் வஞ்சி பாடப் படையோர் 10
தாதெரு மறுகிற் பாசறை பொலியப்
புலராப் பச்சிலை யிடையிடுபு தொடுத்த
மலரா மாலைப் பந்துகண் டன்ன
ஊன்சோற் றமலை பாண்கடும் பருத்தும்
செம்மற் றம்மநின் வெம்முனை யிருக்கை 15
வல்லோன் றைஇய வரிவனப் புற்ற
அல்லிப் பாவை யாடுவனப் பேய்ப்பக்
காம விருவ ரல்லதி யாமத்துத்
தனிமகன் வழங்காப் பனிமலர்க் காவின்
ஒதுக்கின் றிணிமணற் புதுப்பூம் பள்ளி 20
வாயின் மாடந்தொறு மைவிடை வீழ்ப்ப
நீயாங்குக் கொண்ட விழவினும் பலவே. (33)
திணை: வாகை. துறை: அரசவாகை. அவனை அவர் பாடியது.
உரை: கான் உறை வாழ்க்கை - காட்டின் கண்ணே தங்கும் வாழ்க்கையையுடைய; கத நாய் வேட்டுவன் - சினம் பொருந்திய நாயையுடைய வேட்டுவன்; மான் தசை சொரிந்த வட்டியும் - மானினது தசையைச் சொரிந்த கடகமும்; ஆய் மகள் தயிர் கொடு வந்த தசும்பும் - இடை மகள் தயிர்கொண்டு வந்த மிடாவும்; நிறைய-; ஏரின் வாழ்நர் பேரில் அரிவையர் - ஏரான் உழுதுண்டு வாழ்வாரது பெரிய மனையின்கண் மகளிர்; குளக்கீழ் விளைந்த - குளத்துக்கீழ் விளைந்த; களக்கொள் வெண்ணெல் முகந்தனர் கொடுப்ப - களத்தின்கட் கொள்ளப்பட்ட வெண்ணெல்லை முகந்து கொடுப்ப; உகந்தனர் பெயரும் - உவந்து மீளும்; தென்னம் பொருப்பன் நன்னாட்டுள்ளும் - தென்றிசைக்கட் பொதியின் மலையையுடைய பாண்டியனது நல்ல நாட்டுள்ளும்; ஏழெயில் கதவம் எறிந்து கைக் கொண்டு - ஏழாகிய அரணின்கட் கதவத்தை யதித்துக் கைக்கொண்டு; நின் பேழ் வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை - நினது பெரிய வாயையுடைய புலியைப் பொறிக்கும் வலியை ஆதலான்; பாடுநர் வஞ்சி பாட - நின்னைப் பாடும் புலவர் நினது மேற்செலவைப் பாட; படையோர் தாதெரு மறுகிற் பாசறை பொலிய - படைக்கலத்தினையுடையோர் தாதாகிய எருப்பொருந்திய மறுகினையுடைய பாசறைக்கண்ணே பொலிவு பெற; புலராப் பச்சிலை இடை யிடுபு தொடுத்த - புலராத பசிய இலையை யிடையிட்டுத் தொடுக்கப்பட்ட; மலரா மாலைப் பந்து கண்டன்ன - மலராத முகையினையுடைய மாலையினது பந்தைக் கண்டாற்போன்ற; ஊன் சோற்றமலை - தசையோடு கூடிய பெருஞ் சோற்றுத் திரளையை; பாண் கடும்பு அருத்தும் - பாண் சுற்றத்தை யூட்டும்; செம்மற்று நின் வெம் முனை இருக்கை - தலைமையை யுடைத்து நினது வெய்ய முனையாகிய இருப்பிடம்; வல்லோன் - தைஇய - கைவல்லோனாற் புனைந்து செய்யப்பட்ட; வரி வனப்புற்ற - எழுதிய அழகு பொருந்திய; அல்லிப் பாவை ஆடு வனப்பு ஏய்ப்ப - அல்லிப் பாவை அல்லிய மென்னும் கூத்தையாடும் அழகை யொப்ப; காம இருவரல்லது - அன்பினையுடைய துணைவனும் துணைவியுமாகிய இருவரல்லது; யாமத்து - இடையா மத்தின்கண்; தனி மகன் வழங்காப் பனிமலர்க் காவின் - தனிமகன் வழங்காத குளிர்ந்த மலரையுடைய காவின்கண்; ஒதுக்கு இன் திணி மணல் - இயங்குதற்கினிய செறிந்த மணலையுடைய; புதுப் பூம் பள்ளி வாயில் - புதிய பூவையுடைய சாலையினது வாயிலின்கண்; மாடந் தொறும் மை விடை வீழ்ப்ப - மாடந்தோறும் செம்மறிக் கிடாயைப் படுக்க; நீ ஆங்குக் கொண்ட விழவினும் பல - நீ அவ்விடத்து எடுத்துக் கொண்ட விழவினும் பல எ-று.
நன்னாட்டுள்ளு மென்ற வும்மை, சிறப்பும்மை அல்லிப் பாவை ஆடுவனப்பென்றது. ஆண் கோலமும் பெண்கோலமுமாகிய அவ்விருவரும் ஆடுங் கூத்தை. படையோர் பாசறை பொலிய வென்பதற்குப் படையோரது பாசறை பொலிவு பெற என்றுரைப்பினும் அமையும். பாசிலை மலைய வென்று பாடமோதுவாரு முளர். தனிமகன் வழங்காவென்றது, தனித்து வழங்கின் அப்பொழில் வருத்து மென்பது. களத்துக்கொள் வெண்ணெல் என்பது, களக்கொள் வெண்ணெல்லெனத் தொக்கது முகந்தனர் கொடுப்ப, உகந்தனர் பெயரு மென்பன வினையெச்சமுற்று. உழுவை பொறிக்கு மாற்றலை யாகலின், பாண்கடும் பருத்தும் நின் வெம்முனை இருக்கை நீ கொண்ட விழவினும் பல செம்மற்றெனக் கூட்டுக. விழ வென்பது சிறுசோற்று விழவினை; வேள்வி யென்றுரைப்பினுமமையும்.
விளக்கம்: கடகம், ஓலையாற் செய்யப்பட்ட கடகப் பெட்டி குளம் - ஏரி குளத்தின் கீழுள்ள வயல்களில் விளையும் நெல்லை வேறிடத்தே யமைத்த களத்தின்கண் தொகுத்து வையும் பதரும் களைந்து நெல்லைப் பிரித்துக்கொள்பவாதலின், "குளக்கீழ் விளைந்த களக் கொள் வெண்ணெல்" என்றார். ஏழெயிற் கதவம் - ஏழெயில் என்பது சிவகங்கையைச் சார்ந்துள்ள ஏழு பொன்கோட்டை யென்னும் ஊராக இருக்கலாமென அறிஞர் கருதுகின்றனர். இப் பாட்டின்கட் கூறப்படும் பாண்டி நாட்டு மருத வளமும் அவ்வூர்ப் பகுதியின் இற்றை நிலையும் இக் கருத்தை வலியுறுத்துகின்றன. வஞ்சி பாடுதல், வஞ்சித் துறைப் பாடாண் பாட்டைப் பாடுதல்; அத்திணைக் குரிய துறைகளை விதந்து பாடுதலுமாம். முல்லை யரும்புகளாற் றொடுத்த பூப்பந்து போலச் சோற்றுத் திரளிருந்த தென்பதாம். திரள், திரளை யென வந்தது. வரிவனப்பு, வரையப்படும் அழகு; அதனால் ஈண்டு "எழுதிய அழகு" எனப்பட்டது. அல்லிய மென்னும் கூத்தானது கண்ணன், கஞ்சன் விடுத்த யானையின் கோட்டை யோசித்தற்காடிய கூத்து எனச் சிலப்பதிகார வுரை கூறுகிறது. அல்லிப்பாவை, ஆணும் பெண்ணுமாய கோலமுடைய பாவை; அலிப் பேடெனச் சிலப்பதிகார வுரைகாரர் கூறுவர். இக் கூத்தாடுவோர் வட்டணையும் அவிநயமு மின்றி எழுதிய வோவியம் போல்வராதலின், "வரிவனப் புற்ற அல்லிப் பாவை யாடு வனப்பு" என்றார். பள்ளி - சாலை. காம விருவர் வழங்கின் வருத்தம் செய்யாது தனிமகன் வழங்கின் அப்பொழில் வருத்து மென்றது, தனித்தோர்க்குக் காமவுணர்ச்சியை யெழுப்பி வருத்தும் மென்றது, தனித்தோர்க்குக் காமவுணர்ச்சியை யெழுப்பி வருத்தும் என்பதாம். சிறு சோறு, பொருஞ்சோறு என விழாவகை யுண்மையின், சிறு சோற்று விழா வென்றார்.
----------
34. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
இவன் சோழன் வேந்தருட் சிறப்புடையவனாவான். சிறுகுடிக்குரிய பண்ணன் என்பவன் மேல் இவன் பாடியுள்ள பாணாற்றுப்படை இத்தொகை நூற்கண் கோக்கப்பட்டுள்ளது. இவனை ஆலத்தூர் கிழார், வெள்ளைக்குடி நாகனார், ஐயூர் முடவனார், எருக்காட்டூர்த் தாயங் கண்ணனார், மாறோக்கத்து நப்பசலையார் முதலிய பல சான்றோர் பாராட்டிப் பாடியிருக்கின்றனர். இவன் ஒருகால் கருவூரை முற்றுகை யிட்டிருந்தானாக, அடைபட்ட வேந்தன் போர்க்கு வாராது அஞ்சிக் கிடப்ப, ஆலத்தூர் கிழார்,"அஞ்சிய வேந்தன் அடைபட்டுக் கிடக்க அவனொடு பொருதல் நின் பெருமைக்குப் பொருந்தா" தெனச் சொல்லிப் பாடினர். இவன் பகைவர் நாட்டினை யழிப்பது கண்ட மாறோக்கத்து நப்பசலையார், "புள்ளுறு புன்கண் தீர்த்த சோழன் வழித் தோன்றிய நீ, வேந்தன் நகரத்திருப்பவும் அவனது நல்ல வூரை யழித்தல் அருளற மாகாது" என்று தெருட்டினார். இவ்வளவன் ஆவூர் மூலங்கிழாரை நோக்கி, "எம்முள்ளீர்? எந் நாட்டீர்?" என்று வினவ, "எமது நினை வெல்லை சொல்லுதல் வேண்டா; பகைவர் தேயத் திருப்பினும் அது நின்னதே யெனக் கருதிப் பரிசிலர் அனைவரும் நின்னையே நினைப்பர்" என்று சொல்லி மகிழ்வித்தார். ஒருகால் கோவூர் கிழார் இவன் பகைவர் நாட்டை யழிக்கும் திறம் கண்டு இவன்பாற் போந்து கொற்றவள்ளை பாடி அருள் மேவியவுள்ள முடையவனாக்கினார். மலையமானோடு பொருத இவ்வளவன் பெருஞ் சினங்கொண்டு அவன் மக்களைப் பற்றிக் கொணர்ந்து யானையின் காலிலிடப் புக்கானாக, அதனை யறிந்த கோவூர் கிழார்,சோழன் குடிவரவும் இளஞ் சிறாரின் இயல்பும் கூறி அவன் செயலைத் தடுத்து மக்களை உய்வித்தார். வெள்ளைக் குடிநாகனார் என்னும் சான்றோர் இவனை கொடைத்திறத்தைப் புலவர் பலரும் பல்லாறாக மகிழ்ந்து பாடியுள்ளனர். இவன் இறந்த பிறகு, மாறோக்கத்து நப்பசலையாரும் ஆடுதுறை மாசாத்தனாரும் ஐயூர் முடவனாரும் இரங்கிப்பாடிய பாட்டுக்கள் மிக்க உருக்கமுடையனவாகும். இவன் இறந்தவிடம் குளமுற்றம் என்னும் ஊர். இதுபற்றியே இவன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் எனப் பிற்காலத் தான்றோரால் குறிக்கப் படுகின்றான்.
ஆலத்தூர் கிழாரின் இயற்பெயர் தெரிந்திலது. ஆலத்தூர் - சோழ நாட்டில் உள்ளதாகிய ஓர் ஊர். இவர், கிள்ளிவளவன் உறையூரிலிருந்தானாக, அவனைக் கண்டு பரிசில் பெற்ற திறத்தைப் பாணாற்றுப் படையால் விளக்கிக் கூறுகின்றார். இத் தொகைநூற்கண் ஐந்து பாட்டுக்கள் உள்ளன.
இப் பாட்டின்கண், இவர் கிள்ளிவளவன்பால் பெருஞ் செல்வம் பரிசில் பெற்றுச் செல்லும் தன்னை, அவன் "எம்மை நினைத்து மீளவும் வருதிரோ?" என்று கேட்க, "பாணர்க்குத் தொலையாச் செல்வத்தை வழங்கும் எம் கோனாகிய வளவன் வாழ்க என்று பாடேனாயின், ஒருவன் செய்தி கொன்றோர்க்கு உய்தி யில்லென அறநூல் கூறிற் றாதலின், அக்கூற்றுப்படி, யானுறையும் நாட்டில் ஞாயிறு முறைப்படி தோன்றுதலொழியும்; சான்றோர் செய்த நல்வினையால் நாட்டிற் பெய்யும் மழைத் துளியினும் பலவாகிய காலம் நீ வாழ்வாயாக" எனச் சொல்லி வாழ்த்துகின்றார்.
ஆன்முலை யறுத்த வறனி லோர்க்கும்
மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்
குரவர்த் தப்பிய கொடுமை யோர்க்கும
வழுவாய் மருங்கிற் கழுவாயு முளவென
நிலம்புடை பெயர்வ தாயினு மொருவன் 5
செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென
அறம்பா டிற்றே யாயிழை கணவ
காலை யந்தியு மாலை யந்தியும்
புறவுக் கருவன்ன புன்புல வரகின்
பாற்பெய் புன்கந் தேனொடு மயக்கிக் 10
குறுமுயற் கொழுஞ்சூடு கிழித்த வொக்கலோ
டிரத்தி நீடிய வகன்றலை மன்றத்துக்
கரப்பி லுள்ளமொடு வேண்டுமொழி பயிற்றி
அமலைக் கொழுஞ்சோ றார்ந்த பாணர்க்
கலாச் செல்வ முழுவதுஞ் செய்தோன் 15
எங்கோன் வளவன் வாழ்க வென்றுநின்
பீடுகெழு நோன்றாள் பாடே னாயிற்
படுபறி யலனே பல்கதிர்ச் செல்வன்
யானோ தஞ்சம் பெருமவிவ் வுலகத்துச்
சான்றோர் செய்த நன்றுண் டாயின் 20
இமயத் தீண்டி யின்குரல் பயிற்றிக்
கொண்டன் மாமழை பொழிந்த
நுண்பஃ றுளியினும் வாழிய பலவே. (34)
திணை: பாடாண்டிணை. துறை: இயன்மொழி. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியது.
உரை: ஆன் முலை அறுத்த அற னிலோர்க்கும் - ஆனினது முலையாற் பெறும் பயனைக் கெடுத்த தீவினையாளர்க்கும்; மாண் இழை மகளிர் கரு சிதைத்தோர்க்கும் - மாட்சிமைப்பட்ட ஆபரணத்தையுடைய பெண்டிரது கருப்பத்தை அழித்தோர்க்கும்; குரவர் தப்பிய கொடுமையோர்க்கும் - தந்தை தாயாரைப் பிழைத்த கொடுந் தொழிலை யுடையோர்க்கும்; வழுவாய் மருங்கின் கழுவாயும் உள என - அவர் செய்த பாதகத்தினை யாராயுமிடத்து அவற்றைப் போக்கும் வழியும் உள வெனவும்; நிலம் புடை பெயர்வ தாயினும் - நிலம் கீழ் மேலாம் காலமாயினும்; ஒருவன் செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்லென - ஒருவன் செய்த நன்றியைச் சிதைத்தோர்க்கு நரகம் நீங்குதலில்லை யெனவும்; அறம் பாடிற்று - அற நூல் கூறிற்று; ஆயிழை கணவ - தெரிந்த ஆபரணத்தை யுடையாள் தலைவ;காலை யந்தியும் மாலை யந்தியும் - காலையாகிய அந்திப் பொழுதும் மாலையாகிய அந்திப் பொழுதும்; புறவுக் கருவன்ன புன்புல வரகின் - புறவினது கருவாகிய முட்டை போன்ற புல்லிய நிலத்து வரகினது அரிசியை; பாற்பெய் புன்கம் தேனொடு மயக்கி - பாலின்கட் பெய்து அடப்பட்ட சோற்றைத் தேனொடு கலந்துண்டு; குறு முயற்கொழுஞ் சூடு கிழித்த ஒக்கலொடு - குறிய முயலினது கொழுவிய சூட்டிறைச்சியைத் தின்ற என் சுற்றத்தோடு கூட; இரத்தி நீடிய அகன்றலை மன்றத்து - இலந்தை மரமோங்கிய அகன்ற இடத்தையுடைய பொதியிற்கண்; கரப்பில் உள்ளமொடு-ஒன்றனையும் மறைத்தலில்லாத உள்ளத்துடனே; வேண்டுமொழி பயிற்றி - வேண்டி வார்த்தைகளைப் பலகாலும் கூறி; அமலைக்கொழுஞ் சோறு ஆர்ந்த பாணர்க்கு - பெரிய கட்டியாகிய கொழுவிய சோற்றை யருந்திய பாணர்க்கு; அகலாச் செல்வம் முழுவதும் செய்தோன் - நீங்காத செல்வ மெல்லாவற்றையும் செய்தோன்; எங்கோன் வளவன் வாழ்க என்று - எம்முடைய வேந்தனாகிய வளவன் வாழ்வானாக வென்று சொல்லி; நின் பீடு கெழுநோன்றாள் பாடேனாயின் - நினது பெருமை பொருந்திய வலிய தாளைப் பாடிற்றிலே னாயின்; பல் கதிர்ச் செல்வம் படுபறியலனே - வாழ்நாட் கலகாகிய பல கதிரையுடைய செல்வன் தோன்றுத லறியான்; யானோ தஞ்சம் - யானோ எளியேன்; பெரும-; இவ் வுலகத்துச் சான்றோர் செய்த நன்றுண் டாயின் - இவ்வுலகத்தின்கண் நற்குணங்களால் அமைந்தோர் செய்த நல்வினை யுண்டாயின்; இமயத்து ஈண்டி- இமய மலையின்கண்ணே திரண்டு; இன்குரல் பயிற்றி - இனிய ஓசையைப் பயிற்றி; கொண்டல் மாமழை பொழிந்த நுண் பல் துளியினும் பல வாழிய - கீழ் காற்றால் வரும் பெரிய முகில் சொரிந்த நுண்ணிய பல துளியினும் பல காலம் வாழ்வாயாக எ-று.
நிலம் புடை பெயர்வதாயினும் என்பதற்கு ஊழி பெயருங் காலத்து யாவரும் செய்த இருவினையும் நீங்குதலின், அக்காலத்தும் செய்தி கொன்றோர்க்கு உய்தியில் லென்றும், நிலத்துள்ளார் யாவரும் இவர் கூற்றிலே நிற்பாராயினும் என்றும் உரைப்பாரு முளர். புன்கம் இவன்பாற் செல்வதற்கு முன்பு பெற்ற உணவாகவும், அமலைக் கொழுஞ் சோறு இவன்பாற் பெற்ற உணவாகவும் கொள்க. அன்றிச், சென்ற இடந்தோறும் பெற்ற உணவாக வுரைப்பினு மமையும். மன்றத்துச் சூடு கிழித்த வொக்கலொடு கூட வேண்டு மொழி பயிற்றி ஆர்ந்த பாணர்க்கெனக் கூட்டுக. பாணர்க்கெனத் தம்மைப் பிறர் போலக் கூறினார்.
ஆயிழை கணவ, செய்தி கொன்றோர்க் குய்தி யில்லென அறம் பாடிற்று; ஆதலால், பாணர்க்குச் செல்வ முழுதுஞ் செய்தோன், எங்கோன் வளவன் வாழ்கவென்று காலை யந்தியும் மாலை யந்தியும் நின்றாள் பாடேனாயின், பல் கதிர்ச் செல்வன் படுபறியான்; பெரும, யானோ தஞ்சம்; சான்றோர் செய்த நன்றுண்டாயின், நுண்டுளியினும் பல காலம் வாழ்வாயாக வெனக் கூட்டுக.
கோவதை முதலாயின வாக்காற் சொல்லவும் படாமையின்,ஆன்முலை யறுத்த வெனவும், மகளிர் கருச்சிதைத்த வெனவும், குரவர்த் தப்பிய வெனவும் மறைத்துக் கூறப்பட்டன. இது பரிசில் பெற்றுப் போகின்றானை நீ எம்மை நினைத்து வருவையோ வென்றாற்கு, இவ்வாறு செய்த நின்னை வளவன் வாழ்க வென்று பாடேனாயின், யானிருக்குமிடத்துப் பல் கதிர்ச் செல்வன் படுதலறியான்; அதனால் இம்மை யின்பம் பெற்றேன் எனவும், செய்ந்நன்றி கொன்றோர்க்கு உய்தி யில்லை யெனவே மறுமையின்கண் நரகம் புகுவே னெனவும் கூறியதாகக் கொள்க.
விளக்கம்: ஆன் முலை யறுக்கும் கொடியவர்குறிப்பு அதனாற் பெறும் பயனைக் கெடுப்பதென்பதாதலின், அதற் கேற்பவே உரை கூறினார். குரவர்த் தப்பிய என்பது பார்ப்பார்த் தப்பிய கொடுமை யோர்க்கு மெனத் திருத்தப்பட்டிருக்கிறது. இத் திருத்தம் பரிமேலழகர் காலத்தேயே செய்யப்பட்டுளதென்பது திருக்குறளுரையாற் காணப்படுகிறது. நிலம் கீழ் மேலாங் காலமாவது நில நடுக்கத்தால் மேடுபள்ள மாதலும், பள்ள மேடாதலுமாகிய காலம். இமயம் கடலாகவும், அரபிக்கடல் நிலமாகவும் இருந்த காலமு முண்டென்ப. மண்ணுலகம் விண்ணுலக மென்பன தலைகீழாக மாறுங் காலமாகிய பேரூழிக் காலமெனச் சமய நூல்கள் கூறும் இக்காலத்தில் வினைகள் மூலப்பகுதியில் ஒடுங்குமெனச் சாங்கிய நூல்களும் மாயையி லொடுங்கு மெனச் சைவ நூல்களும் பிறவும் கூறலால். "ஊழி பெயருங் காலத்து வினை நீங்குதலின்" என்று உரைகாரர் கூறுகின்றார். புன்புலம், புன்செய்க்கொல்லை. மயக்குதல் - கலத்தல், "தேன் மயங்கு பாலினும் இனிய" (ஐங்.203) என்றாற் போல. முயலின் சூட்டிறைச்சியைக் கிழித்தெடுப்பது தின்றற்காகையால், கிழித்த ஒக்கல் என்றதற்கு, தின்ற ஒக்கல் என உரை கூறினார். அருந்திய வென்பது ஆர்ந்த வென வந்தது, "ஏற்றினம் மேய லருந்தென" ((ஐங்.93) என வருதல் காண்க. படுபறியலன் - படுதல் ஈண்டு தோன்றுதல் என்னும் பொருளது; "எற்படக் கண்போன் மலர்ந்த காமர் சுனைமலர்...... அரிக்கணம் ஒலிக்கும்" (முருகு.74-76) என்றாற் போல. ஞாயிறு வாழ்நாட் கலகா மென்பது, "வாழ்நாட் கலகாய் வயங்கொளி மண்டிலம்" (நாலடி:22) என்று பிறரும் கூறுதல் காண்க. மழை. மழையைச் சொரியும் முகின்மே னிற்றலின், முகில் என வுரைத்தார். தன்னைப் பிறன்போல் வைத்துக் கூறலும் உயர்ந்தோர் கூற்றுட்படும் மரபுகளுள் ஒன்றாதலின், பாணர்க்கெனத் தம்மையும் அகப்படுத்திக் கூறினார். ஒழுக்கமுடைய சான்றோர் தீயவற்றை வழுக்கியும் வாயாற் சொல்லாராதலால், சொல்லுமிடத்து அத் தீமையை மறைத்து வேறுபாட்டாற் கூறுவது மரபாயிற்று. அதனால், "ஆன் முலை யறுத்த" வென்றும், "தப்பிய" வென்றும் கூறினார். இவை யாவும் கொலைப் பொருள் என அறிக.
----------
35. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
ஆசிரியர் வெள்ளைக்குடி நாகனார் என்னும் சான்றோர், விளைநிலங்கட்குக் குடிகள் இறுக்க வேண்டிய செய்க்கடன் சில ஆண்டுகளாய் இறுக்கப்படாமல் அரசற்குக் கடனாய் விட, அதனைத் தள்ளி விடுதரல் வேண்டுமெனக் குடிகளின் பொருட்டுக் கிள்ளிவளவனை யடைந்து, "நாடுகெழு செல்வத்துப் பீடுகெழு வேந்தே, நீ குடிமக்கட்குக் காட்சி யெளிய னாதல் வேண்டும்; நின் கொற்றக் குடை வெயில் மறைத்தற்குக் கொண்ட தன்று; குடிகட்கு அருள் செய்தற்பொருட்டு; நின் கொற்றமும் உழவர் உழு படையூன்று சால் மருங்கில் உண்டாகும் விளை பயனேயாகும்; இயற்கையல்லாதன தம் செயற்கண்ணே தோன்றிய விடத்தும் மக்கள் வேந்தனையே தூற்றுவர்; ஆதலால்,நீ நொதுமலாளர் பொது மொழி கொள்ளாது பகடு புறந்தரும் குடிகளையும் ஏனைக் குடிகளையும் ஓம்பி அவர் மொழி கொண்டு ஒழுகுதல் வேண்டும்; அவ்வாறு செய்யின் பகை வேந்தரும் நின்னை வணங்கி வாழ்வர்" என்று அறிவுறுத்திச் செய்களின் பொருட்டுச் செலுத்தக்கடவ கடனை வீடு பெற்றுச் சென்றார் அக்காலையவர் பாடிய பாட்டு, இப் பாட்டு
நளியிரு முந்நீ ரேணி யாக
வளியிடை வழங்கா வானஞ் சூடிய
மண்டிணி கிடக்கைத் தண்டமிழ்க் கிழவர்
முரசுமுழங்கு தானை மூவ ருள்ளும்
அரசெனப் படுவது நினதே பெரும 5
அலங்குகதிர்க் கனலி நால்வயிற் றோன்றினும்
இலங்குகதிர் வெள்ளி தென்புலம் படரினும்
அந்தண் காவிரி வந்துகவர் பூட்டத்
தோடுகொள் வேலின் றோற்றம் போல
ஆடுகட் கரும்பின் வெண்பூ நுடங்கும் 10
நாடெனப் படுவது நினதே யத்தை, ஆங்க
நாடுகெழு செல்வத்துப் பீடுகெழு வேந்தே
நினவ கூறுவ லெனவ கேண்மதி
அறம்புரிந் தன்ன செங்கோ னாட்டத்து
முறைவேண்டு பொழுதிற் பதனெளி யோரீண் 15
டுறைவேண்டு பொழுதிற் பெயல்பெற் றோரே
ஞாயிறு சுமந்த கோடுதிரள் கொண்மூ
மாக விசும்பி னடுவுநின் றாங்குக்
கண்பொர விளங்குநின் விண்பொரு வியன்குடை
வெயின்மறைக் கொண்டன்றோ வன்றே வருந்திய 20
குடிமறைப் பதுவே கூர்வேல் வளவ
வெளிற்றுப்பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்பக்
களிற்றுக்கணம் பொருத கண்ணகன் பறந்தலை
வருபடை தாங்கிப் பெயர்புறத் தார்த்துப்
பொருபடை தரூஉங் கொற்றமு முழுபடை 25
ஊன்றுசான் மருங்கி னீன்றதன் பயனே
மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்
இயற்கை யல்லன செயற்கையிற் றோன்றினும்
காவலர்ப் பழிக்குமிக் கண்ணகன் ஞாலம்
அதுநற் கறிந்தனை யாயி னீயும் 30
நொதும லாளர் பொதுமொழி கொள்ளாது
பகடுபுறந் தருநர் பார மோம்பிக்
குடிபுறந் தருகுவை யாயினின்
அடிபுறந் தருகுவ ரடங்கா தோரே. (35)
திணை: அது. துறை: செவியறிவுறூஉ. அவனை வெள்ளைக் குடிநாகனார் பாடிப் பழஞ் செய்க் கடன் வீடு கொண்டது.
உரை: நளி யிரு முந்நீர் ஏணியாக - நீர் செறிந்த பெரிய கடல் எல்லையாக; வளி யிடை வழங்கா - காற்று ஊடு போகாத; வானம் சூடிய மண் திணி கிடக்கை - வானத்தைச் சூடிய மண்செறிந்த உலகத்தின்கண்; தண் தமிழ்க் கிழவர் - குளிர்ந்த தமிழ்நாட்டிற் குரியராகிய; முரசு முழங்கு தானை மூவருள்ளும் - முரசொலிக்கும் படையினையுடைய மூவேந்தருள்ளும்; அரசெனப் படுவது நினது - அரசென்றற்குச் சிறப்புடையது நின்னுடைய அரசே; பெரும-; அலங்கு கதிர்க் கனலி நால்வயின் தோன்றினும் - விளங்கிய சுடரையுடைய ஞாயிறு நான்கு திக்கினும் தோன்றினும்; இலங்கு கதிர் வெள்ளி தென் புலம் படரினும் - விளங்கிய கதிரையுடைய வெள்ளிமீன் தென்றிசைக்கட் செல்லினும்; அந் தண் காவிரி வந்து கவர்பு ஊட்ட - அழகிய குளிர்ந்த காவிரி வந்து பல காலாய் ஓடி ஊட்ட; தோடு கொள் வேலின் தோற்றம் போல - தொகுதி கொண்ட வேலினது காட்சியை யொப்ப; ஆடு கண் கரும்பின் வெண் பூ நுடங்கும் - அசைந்த கண்ணினையுடைய கரும்பினது வெளிய பூ அசையும்; நாடெனப் படுவது நினதே - நாடென்று சொல்லப்படுவது நின்னுடைய நாடே; நாடு கெழு செல்வத்துப் பீடு கெழு வேந்தே - அந் நாடு பொருந்திய செல்வத்தையுடைய பெருமை பொருந்திய வேந்தே; நினவ கூறுவல் - நின்னுடையன சில காரியஞ் சொல்லுவேன்; எனவ கேண்மதி - என்னுடையன சில வார்த்தையைக் கேட்பாயாக; அறம் புரிந்தன்ன செங்கோல் நாட்டத்து முறை வேண்டு பொழுதின் - அறக் கடவுள் மேவி ஆராய்ந்தாற் போன்ற செங்கோலா னாராயும் ஆராய்ச்சியையுடைய நீதியைக் கேட்கவேண்டுங் காலத்து; பதன் எளியோர் - செவ்வி யெளியோர்; ஈண்டு உறை வேண்டுபொழுதில் பெயல் பெற்றோர் - இவ்விடத்துத் துளிவேண்டுங் காலத்து மழை பெற்றவரே; ஞாயிறு சுமந்த கோடு திரள் கொண்மூ - ஞாயிற்றைத் தன்மேற் கொண்ட பக்கந் திரண்ட முகில்! மாக விசும்பின் நடுவு நின் றாங்கு - மாகமாகிய உயர்ந்த வானத்தினது நடுவு நின்று அதன் வெயிலை மறைத்தாற் போல; கண் பொர விளங்கும் - கண்ணொளியோடு மாறுபட விளங்குகின்ற; நின் விண் பொரு வியன் குடை - நினது வானை முட்டிய பரந்த வெண்கொற்றக் குடை; வெயில் மறைக் கொண்டன்றோ அன்றே - வெயிலை மறைத்தற்குக் கொண்டதோ வெனின் அன்று; வருந்திய குடி மறைப்பது - வருத்தமுற்ற குடியை நிழல் செய்தல் காரணத்தாற் கொள்ளப்பட்டது; கூர் வேல் வளவ - கூரிய வேலினையுடைய வளவ; வெளிற்றுப் பனந்துணியின் - இளைய பனையினது துண்டம் போல; வீற்று வீற்றுக் கிடப்ப - வேறு வேறு கிடப்ப; களிற்றுக் கணம் பொருத கண்ணகன் பறந்தலை - களிற்றுத் திரளைப் பொருத இடமகன்ற போர்க்களத்தின்கண்; வரு படை தாங்கிப் பெயர் புறத் தார்த்து - வருகின்ற படையை யெதிர்நின்று பொறுத்து அது சரிந்து மீளும் புறக்கொடை கண்டு ஆர்த்துக்கொண்டு; பொருபடை தரூஉம் கொற்றமும் - நின் போர் செய்யும் படை தரும் வெற்றியும்; உழு படை யூன்று சால் மருங்கின் ஈன்ற தன் பயன் - உழுகின்ற கலப்பை நிலத்தின் கண்ணே ஊன்று சாலிடத்து விளைந்த நெல்லினது பயன்; மாரி பொய்ப்பினும் – மழை பெய்யுங்காலத்துப் பெய்யா தொழியினும்; வாரி குன்றினும் - விளைவு குறையினும்; இயற்கை யல்லன செய்கையில் தோன்றினும் - இயல்பல்லாதன மக்களது தொழிலிலே தோன்றினும்; காவலர்ப் பழிக்கும் - காவலரைப் பழித்துரைக்கும்; இக்கண்ணகன் ஞாலம் - இவ்விடமகன்ற உலகம்; அது நற்கு அறிந்தனை யாயின் - அதனை நன்றாக அறிந்தனை யாயின்; நீயும் நொதுமலாளர் பொது மொழி கொள்ளாது - நீயும் குறளை கூறுவாரது உறுதியில்லாத வார்த்தையை உட்கொள்ளாது; பகடு புறந் தருநர் பாரம் ஓம்பி - ஏரைப் பாதுகாப்பாருடைய குடியைப் பாதுகாத்து; குடிபுறந் தருகுவையாயின் - அக்காவலாலே ஏனைக் குடிகளையும் பாது காப்பாயாயின்; நின் அடிபுறந் தருகுவர் அடங்காதோர் - நின் அடியைப் போற்றுவர் நின் பகைவர் எ-று.
வளியிடை வழங்கா மண்டிணி கிடக்கை யென இயையும்; அன்றி, வாயு பதத்துக்கு மேலான வானமெனக் கிடந்தவாறே உரைப்பினுமமையும். அரசென்றது, அரசர் தன்மையை. முறைவேண்டுபொழுதிற் பதன் எளியோர் ஈண்டு உறைவேண்டு பொழுதிற் பெயல் பெற்றாரென்ற கருத்து, நீயும் பதனெளியை யாதல் வேண்டும், அவ்வாறு பெயல் பெறுதற்கென்றவாறாம்; அன்றி, இதற்கு முறைவேண்டு பொழுதிற் பதனெளியோர் ஈண்டு உறைவேண்டு பொழுதிற் பெயல் பெற்றாரோ டொப்பரென் றுரைப்பாரு முளர். அத்தையும் ஆங்கவும் மதியும் அசைநிலை. நினவ எனவ வென ஈற்று நின்ற அகரங்கள் செய்யுள் நோக்கி விரிக்கப்பட்டன.
நாடு கெழு செல்வத்துப் பீடு கெழு வேந்தனே, நினவ கூறுவல் எனவ கேண்மதி; குடை வருந்திய குடி மறைப்பதுவாகும்; கூர் வேல் வளவ, பதினெளியோர் உறை வேண்டுபொழுதிற் பெயல் பெற்றோராவர்; ஆகையால், நீயும் அவ்வாறு காலம் எளியையாய்க் கொற்றமும் ஈன்றதன் பயனென்று கருதிக் காவலர்ப் பழிக்கும் இக் கண்ணகன் ஞாலமென்று கொண்டு நொதுமலாளர் பொதுமொழி கொள்ளாது பாரமோம்பிப் புறந்தருகுவையாயின், நின்னடி புறந்தருகுவர் அடங்காதோ ரென்றமையால் செவியறிவுறூஉ வாயிற்று.
விளக்கம்: "நளியென் கிளவி செறிவு மாகும்" (தொல். உரி: 25) என்பதனால், "நீர் செறிந்த கடல்" என்றுரை கூறினார். அலங்குதல், விளங்குதல். காவிரி கவர்பு ஊட்டலாவது; காவிரியாறு பல கால்களாய்ப் பிரிந்தோடி நீரை யுண்பித்தல். அறம் புரிந் தன்ன முறை - அறக்கடவுளே அரச ருருவிற் போந்து முறைமையினை விரும்பிச் செய்தாற்போலும் முறை. செங்கோல் நாட்டம் - செங்கோலா னாராயும் ஆராய்ச்சி; செவ்விய கோல் போறலின், முறைமையைச் செங்கோல் என்றார். முறை வேண்டி வருவார்க்குச் செவ்வியெளியனாகிய வழி, அவ்வெளிமை மழை வேண்டினார்க்கு அம் மழை யெய்தினாற்போலும் என்பதுபட "பதன் எளியோர் ஈண்டு உறை வேண்டு பொழுதில் பெயல் பெற்றோர்" என்றார். செவ்வி யெளியோர் - செவ்வி யெளிதாகப் பெற்றோர். கோடு - பக்கம். விசும்பின் நடுவே ஞாயிறு நிற்ப, அக்காலத் தவ்விடத்தே முில் நின்றால் அதனால் ஞாயிற்றி னொளி மறைக்கப்படுமாகலின், நின்றாங்கு என்பதற்கு "நின்று வெயிலை மறைத்தாற்போல" என்று உரை கூறினார். கண்ணொளியின் அளவிறந்து விளங்குவதால், "கண் பொர விளங்கும்" என்றார். வெளிற்றுப் பனந் துணி - உள்ளே வயிரமில்லாத பனந் துண்டம்; முற்றிய பனையே வயிரமுடைய தாகையால், அஃதில்லாத பனந்துணி இளையதாதல்பற்றி, இளைய பனையினது துண்டம் என்றார். ஈன்றதன் பயன், வித்திய நெல்லது விளைபயன். செயற்கை - தொழில். கை: விகுதிமேல் விகுதி. நொதுமலாளர் - குறளை கூறுபவர். பொதுமொழி - உறுதியில்லாத மொழி. புறந் தருதல், ஈண்டு வழிபடுதல் மேற்று. நின, என என்பன, அகரம் விரிந்து நினவ, எனவ என வந்தமையின், இவை செய்யுள் நோக்கி விரிக்கப் பட்டன வென்றார்.
-------------
36. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
இப் பாட்டின்கண் ஆலத்தூர் கிழார், கிள்ளி வளவன் கருவூரை முற்றியிருந்தானாக, அடைப்பட்டிருந்த, கருவூர் மன்னன், சோழனுடைய வீரர் தன் நகர்ப்புறத்துக் காவிலுள்ள காவல் மரங்களை வெட்டுதலா லுண்டாகும் ஓசை தன் செவிப்பட்டும் போர்க்கு வாராது அஞ்சி மடிந்து கிடப்பது கண்டு, சோழனை நோக்கி, "வேந்தே, காக்கள் தோறுங் கடி மரம் தடியும் ஓசை தானுறையும் அரண்மனைக்கண் இயம்பக் கேட்டும் ஆங்கு இனிதிருந்த வேந்தனுடன் பொருவது தூய வீரர்க்கு நாணுத் தருவதாகும்; ஆதலால், இது கேட்டு விடுவதோ அடுவதோ செய்க; அதனால் நினக்குப் புகழுண்டாகா தென்பதை நீ நன்கு அறிகுவாய்" என்று கூறிப் போரை விலக்குகின்றார்.
அடுநை யாயினும் விடுநை யாயினும்
நீயளந் தறிதிநின் புரைமை வார்கோல்
செறியரிச் சிலம்பிற் குறுந்தொடி மகளிர்
பொலஞ்செய் கழங்கிற் றெற்றி யாடும்
தண்ணான் பொருநை வெண்மணல் சிதையக் 5
கருங்கைக் கொல்ல னரஞ்செ யவ்வாய்
நெடுங்கை நவியம் பாய்தலி னிலையழிந்து
வீகமழ் நெடுஞ்சினை புலம்பக் காவுதொறும்
கடிமரந் தடியு மோசை தன்னூர்
நெடுமதில் வரைப்பிற் கடிமனை யியம்ப 10
ஆங்கினி திருந்த வேந்தனோ டீங்குநின்
சிலைத்தார் முரசங் கறங்க
மலைத்தனை யென்பது நாணுத்தக வுடைத்தே. (36)
திணை: வஞ்சி. துறை: துணை வஞ்சி. அவன் கருவூர் முற்றியிருந்தானை ஆலத்தூர் கிழார் பாடியது.
உரை: அடுநை யாயினும் - கொல்வா யாயினும்; விடுநை யாயினும் -கொல்லா தொழிவாயாயினும்; நின் புரைமை - அவற்றால் நினக்கு வரும் உயர்ச்சி யாம் சொல்ல வேண்டா; நீ அளந்தறிதி - நீயே எண்ணி யறிவை; செறி யரிச் சிலம்பின் - செறிந்த உள்ளிடு பருக்கையையுடைய சிலம்பினையும்; வார் கோல் குறுந் தொடி மகளிர்- நீண்ட கோற்றொழிலாற் செய்யப்பட்ட குறிய வளையினைமுடைய மகளிர்; பொலஞ் செய் கழங்கின் தெற்றி யாடும் - பொன்னாற் செய்யப்பட்ட கழலான் வேதிகை போல வுயர்ந்த எக்கர்க்கண்ணே யிருந்து விளையாடும் அணுமையையுடைய; தண்ணான் பொருநை வெண்மணல் சிதைய - குளிர்ந்த ஆன் பொருந்தத்தினது வெளிய மணல் சிதற; கருங்கைக் கொல்லன் அரஞ்செய் அவ்வாய் நெடுங்கைநவியம் பாய்தலின் - வலிய கையையுடைய கொல்லன் அரத்தாற் கூர்மை செய்யப்பட்ட அழகிய வாயினை யுடைத்தாகிய நெடிய கையையுடைய கோடாலி வெட்டுதலான்; நிலை யழிந்து வீ கமழ் நெடுஞ் சினை புலம்ப - நின்ற நிலை கலங்கி வீழும் பூ நாறுகின்ற நெடிய கொம்புகள் தனிப்ப; காவிதொறும் கடி மரம் தடியும் ஓசை - காக்கடோறும் காவன் மரங்களை வெட்டும் ஓசை; தன்னூர் நெடு மதில் வரைப்பின் கடி மனை இயம்ப - தன்னுடைய ஊரின்கண்ணே நெடிய மதி லெல்லையில் தனது காவலையுடைய கோவிற்கண்ணே சென்றொலிப்ப; ஆங்கு இனிதிருந்த வேந்தனோடு - அவ்விடத்து மானமின்றி இனிதாக இருந்த வேந்தனுடன்; ஈங்கு - இவ்விடத்து; நின்சிலைத்தார் முரசம் கறங்க - நினது இந்திர விற்போலும் மாலையையுடைய முரசொலிப்ப; மலைத் தனை என்பது நாணுத்தக வுடைத்து - பொருதா யென்பது கேட்டார்க்கு நாணும் தகுதியை யுடைத்து, ஆதலால அப்போரை ஒழியத்தகும் எ-று.
வார்கோற் குறுந்தொடி யென மாறி யுரைக்கப்பட்டது. இனி திருந்த வென்றது குறிப்பு மொழி.
கடி மரந் தடியு மோசை தன் மனை இயம்ப இனிதிருந்த வேந்தனொடு மலைத்தனை யென்பது நாணுத்தகவுடைத்து; அதனால் அடுநையாயினும் விடுநையாயினும் நின் புரைமை நீ யளந் தறிதி யென மாறிக் கூட்டி வினை முடிவு செய்க.
மகளிர் தெற்றி யாடும் பொருநை யென்ற கருத்து; இங்ஙனம் இனி மகளிர் கழங்காடும் அணுமையதாயினும் புறப்பட்டுப் போர் செய்யாத அவன் வலியின்மை தோற்றி நின்றது. தெற்றி யாடும் தன்னூ ரென இயைப்பினும் அமையும்.
மேற்சென்றோனைச் சந்து செய்து மீட்டலின் இது துணை வஞ்சியாயிற்று.
விளக்கம்: தெற்றிபோ லுயர்ந்த எக்கர் மணலைத் தெற்றி யென்றது ஆகுபெயர். "புரை யுயர் பாகும்" (தொல்.உரி:4) என்பதனால், புரைமை உயர்ச்சி குறித்து நிற்பதாயிற்று. கருங்கை யென்ற விடத்துக் கருமை வன்மை குறித்து நின்றது. பகைவர் தன்னூர்க் கடிமிளைக்குட் புகுந்து கடி பரம் தடியு மோசை தன் கோயிலிற் கேட்கவும், போர்க்கெழாது கோயிற்கண்ணே இனிதிருப்ப தென்பது மானமுடைய வேந்தரெவர்க்கும் இயலாத செயலாயிருப்ப, இனிதிருந்தானென்றமையின் "மான மின்றி யினி திருந்த" என வுரை கூறினார். இனிதிருந்த என்புழி இனிமை இன்னாமை யுணர்த்தி நிற்றலின், இதனைக் குறிப்புமொழி யென்றார். இள மகளிர் தெற்றி யாடும் அத்துணையண்மையில் போர் வந்த வழியும், அதனை ஏறட்டுப் பொருதற்கு நினையாத அவ் வேந்தனது இழிநிலை இதனால் விளக்கப்படுகிறது. கடி மரங்களைப் பகைவர் தடியக் காணுமிடத்தே அச்சமின்றிச் சென்று தெற்றியாடும் இள மகளிர்க்குள்ள மனவலியும் இவ் வேந்தன்பால் இல்லை யென்றற்கு இளமகளிர் செயலை யெடுத்தோதினார். ஆன்பொருந்தம் இப்போது அமராவதி யென வழங்குகிறது.
--------------
37. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
மாறோக்கத்து நப்பசலையார் இப் பாட்டின்கண், "புள்ளின் புன் கண் தீர்த்த செம்பியன் மருக, நல்லர ணமைந்த மூதூர்க்கண் வேந்தன் இருத்தலை யறிந்து போரின்கண் அந்நகரை யஞ்சாது சிதைக்கும் ஆற்றலுடையை" யெனச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனது வாகை நலத்தைப் பாராட்டுகின்றார்.
மாறோக்கம் என்பது மாறோகம் என்றும் வழங்கும். இது பாண்டி நாட்டிற் கொற்கையைச் சூழ்ந்த பகுதியாகும். நப்பசலையார் என்பது இவரதியற்பெயர். இவர் இச் சோழனையே யன்றி, மலையமான் திரு முடிக்காரி, மலையமான் சோழிய வேனாதி திருக்கண்ணன், கடுந்தேர் அவியன் என்போரைப் பாடியுள்ளார். இவருள் இச் சோழனைப் பற்றி மட்டில் பல பாட்டுக்கள் பாடியுள்ளார். இச் சோழனைப் பாடுமிடத்து இவன் முன்னோர் புள்ளுறு புன்கண் தீர்த்த வரலாற்றினை ஒருமுறைக் கிருமுறை வற்புறுப்பர். தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் வரலாற்றினையும் குறிப்பர். உறையூர் நல்லவைக்கண் அறம் நிலை நிற்பதும், சேரர் இமயத்தில் விற்பொறி வைத்ததும் இவரால் சிறப்புறக் குறிக்கப்படுகின்றன. இவர், இக் கிள்ளி வளவன் இறந்தகாலத்து உண்டாகிய தீ நிமித்தங்களை நிரலே தொடுத்துரைப்பதும், அவன் உயிரைக் கொண்டு கூற்றுவனை இகழ்ந்துரைப்பதும் நயமுடையவாகும்.
நஞ்சுடை வாலெயிற் றைந்தலை சுமந்த
வேக வெந்திற னாகம் புக்கென
விசும்புதீப் பிறப்பத் திருகிப் பசுங்கொடிப்
பெருமலை விடரகத் துருமெறிந் தாங்குப்
புள்ளுறு புன்கண் டீர்த்த வெள்வேற் 5
சினங்கெழு தானைச் செம்பியன் மருக
கராஅங் கலித்த குண்டுகண் ணகழி
இடங்கருங் குட்டத் துடன்றொக் கோடி
யாமங் கொள்பவர் சுடர்நிழற் கதூஉம்
கடுமுரண் முதலைய நெடுநீ ரிலஞ்சிச் 10
செம்புறழ் புரிசைச் செம்மன் மூதூர்
வம்பணி யானை வேந்தகத் துண்மையின்
நல்ல வென்னாது சிதைத்தல்
வல்லையா னெடுந்தகை செருவத் தானே. (37)
திணை: வாகை. துறை: அரசவாகை; முதல் வஞ்சியுமாம். சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
உரை: நஞ்சுடை வாலெயிற்று ஐந்தலை சுமந்த வேக வெந்திறல் நாகம் புக்கென - நஞ்சுடைத்தாகிய வெளிய பல்லினையுடைய ஐந்து படம் பொருந்திய தலையைச் சுமந்த சினம் பொருந்திய வெய்ய திறலையுடைய பாம்பு புக்கதாக; விசும்பு தீப்பிறப்பத்திருகி - வானம் தீப் பிறக்கும் பரிசு முறுகி; பசுங் கொடிப் பெருமலை விடரகத்து - பசிய கொடியினையுடைய பெரிய மலை முழையின்கண்ணே;உரும் எறிந் தாங்கு - இடியேறு எறிந்தாற்போல; புள்ளுறு புன்கண் தீர்த்த - புறவுற்ற துயரத்தைக் கெடுத்த; வெள் வேல் சினங் கெழு தானைச் செம்பியன் மருக - வெள்வேலொடு சினம்பொருந்திய படையையுடைய செம்பியன் மரபிலுள்ளாய்; கராஅம் கலித்த குண்டு கண் அகழி - கராம் செருக்கிய குழிந்த இடத்தையுடைய அகழியினையும்; இடம் கருங் குட்டத்து - இடம் கரிதாகிய ஆழத்தின்கண்; உடன் தொக்கு ஓடி - சேரத் திரண்டோடி; யாமம் கொள்பவர் சுடர் நிழல் கதூஉம் - இடையாமத்து ஊர் காப்பாருடைய விளக்கு நிழலைக் கவரும்; கடு முரண் முதலைய நெடு நீர் இலஞ்சி - கடிய மாறுபாடு பொருந்திய முதலையையுடைய நீர் மிக்க மடு வினையும்;செம்பு உறழ் புரிசை - செம்பு பொருவும் மதிலையுமுடைய; செம்மல் மூதூர் - தலைமை பொருந்திய பழைய வூரினுள்ளே; வம்பு அணி யானை வேந்து அகத் துண்மையின் - கச்சணிந்த யானையையுடைய அரசு உண்டாகலின்; நல்ல என்னாது - அவற்றை நல்லவென்று பாராது; செருவத்தான் சிதைத்தல் வல்லை - போரின்கண் அழித்தலை வல்லையா யிருந்தாய்; நெடுந் தகை - பெருந் தகாய் எ-று.
இலஞ்சியையுடைய அகழி யென மாறிக் கூட்டினும் அமையும். இப்பொருட்கும் கராம் கலித்தலை அகழிக் கடையாக்குக. கராம் - முதலையுள் ஒரு சாதி.
செம்பியன் மருக, நெடுந் தகாய், விட ரகத்து நாகம் புக்கென, உருமெறிந் தாங்கு மூதூரகத்து வேந்துண்மையின், செருவத்துச் சிதைத்தல் வல்லை யென மாறிக் கூட்டுக. புள்ளுறு புன்கண் தீர்த்த பேரருளினோன் மருகனாயும், செருவின் கண் இவற்றை நல்லவென்று பாராது அழித்தல் வல்லையாயிருந்தாயென அவன் மறம் வியந்து கூறியவாறு. ஐந்தலை யென்றதற்கு ஐந்து தலை யெனினு மமையும். இடங்கருங்குட்ட மென்பதனுள் உம்மையை அசைநிலையாக்கி இடங்கரையுடைய குட்டமென் றுரைப்பாரு முளர். இடங்க ரீட்டத் தென்று பாடமோதுவாரு முளர்.
விளக்கம்: விசும்பில் தீப் பிறப்பதில்லையாகலின், விசும்பு தீப்பிறப்ப என்பதற்குத் தீப் பிறக்கும் பரிசு என்று கூறினார். கலித்தல், தழைத்தல், வேண்டுவன குறைவறப் பெற்று மெய் வலி தழைத்தவழிச் செருக்கு விளைதலின், கலித்த என்றதற்குச் "செருக்கிய" என வுரைப்பர் "கண்ணார் கண்ணிக் கலிமான் வளவ" (புறம்:39) என்புழியும் இவ்வாறே கூறுதல் காண்க. நெடு நீர் என்றவிடத்து நெடுமை, மிகுதி குறித்து நின்றது. வேந்தன் கோயிலினுள்ளே யிருக்குமாறு விளங்க, "வேந்து அகத் துண்மையின்" என்றதற்கு "அரசுண்டாதலின்" என்றார். அரசன் உளனாதலின் என்பார், வேந்தென அஃறிணை வாய்ப்பட்டாற் கூறியது கொண்டு உண்டாதலின் என உரை கூறினார்.
-----------
38. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளவளவன்
ஒருகால் ஆசிரியர் ஆவூர் மூலங்கிழார், இக் கிள்ளி வளவனைக் காண வந்தாராக, "நீவிர் எந் நாட்டீர்? எம்மை நினைத்தலுண்டோ?" என்று வினவினான்;அவற்கு, வேந்தே, நீ சினந்து நோக்குமிடம் தீப்பரவும்; அருளி நோக்குமிடம் பொன் பொலியும்; நீ வேண்டியது விளைக்கும் ஆற்றலுடைய; யாம் நின்னிழற் பிறந்து நின்னிழல் வளர்ந்தோம்; நின்னளவு எம்மால் நினைக்கும் அளவிற்றன்று; பரிசிலர் நின் பகைவர் நாட்டில் இருப்பினும், நின் நாட்டையே நினைப்பர்" என்று பாராட்டிப் பாடிய பாட்டு இது.
ஆசிரியர் ஆவூர் மூலங்கிழார் ஆவூர் மூலம் என்னும் ஊரினர். சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப் பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயணையும், மல்லி கிழான் காரியாதியையும், பாண்டியன் கீரஞ்சாத்தனையும் பாராட்டிப் பாடியுள்ளார். பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் ஒருகால் பரிசில் தர நீட்டித்தானாக, சினமுற்ற இவர், "இரப்போரை வருத்துதலும் புகழ் குறைபட வரும் செய்கையும் சேய்மையிற் காணாது ஈண்டே கண்டனம்; நின் புதல்வர் நோயிலராக; யான் செல்வேன்" என்பது இவரது புலமை சான்ற மனத்திட்பத்தை யுணர்த்தும். இவர் பாடிய கரந்தைப் பாண் பாட்டும் தானை மறமும் மிக்க இன்பந் தருவனவாகும்.
வரைபுரையு மழகளிற்றின்மிசை
வான்றுடைக்கும் வகையபோல
விரவுருவின கொடிநுடங்கும்
வியன்றானை விறல்வேந்தே
நீ, உடன்றுநோக்கும்வா யெரிதவழ 5
நீ, நயந்து நோக்கும்வாய் பொன்பூப்பச்
செஞ்ஞாயிற்று நிலவுவேண்டினும்
வெண்டிங்களுள் வெயில்வேண்டினும்
வேண்டியது விளைக்கு மாற்றலை யாகலின்
நின்னிழற் பிறந்து நின்னிழல் வளர்ந்த 10
எம்மள வெவனோ மற்றே யின்னிலைப்
பொலம்பூங் காவி னன்னாட் டோரும்
செய்வினை மருங்கி னெய்த லல்லதை
உடையோ ரீதலு மில்லோ ரிரத்தலும்
கடவ தன்மையிற் கையற வுடைத்தென 15
ஆண்டுச்செய் நுகர்ச்சி யீண்டுங் கூடலின்
நின்னா டுள்ளுவர் பரிசிலர்
ஒன்னார் தேஎத்துநின்னுடைத் தெனவே. (38)
திணை: பாடாண்டிணை. துறை: இயன்மொழி. அவன், "எம்முள்ளீர் எந் நாட்டீர்" என்றாற்கு ஆவூர் மூலங்கிழார் பாடியது.
உரை: வரை புரையும் மழ களிற்றின் மிசை - மலையை யொக்கும் இளங் களிற்றின் மேல்; வான் துடைக்கும் வகைய போல -ஆகாயத்தைத் தடவும் கூறுபாட்டையுடையனபோல; விர வுருவின கொடி நுடங்கும் - விரவின பல நிறத்தையுடையனவாகிய கொடிகள் அசைந்து தோன்றும்; வியன் தானை விறல் வேந்தே - பரந்த படையையுடைய விறல் வேந்தே; நீ உடன்று நோக்கும் வாய் எரி தவழ - நீ முனிந்து பார்க்குமிடம் தீப்பரக்க; நீ நயந்து நோக்கும் வாய் பொன் பூப்ப - நீ அருளிப் பார்க்குமிடம் பொன் பொலிய; செஞ்ஞாயிற்று நிலவு வேண்டினும் - செஞ்ஞாயிற்றின்கண்ணே நிலவுண்டாக வேண்டினும்; வெண்டிலங்களுள் வெயில் வேண்டினும் - வெளிய திங்களின் கண்ணே வெயிலுண்டாக வேண்டினும்; வேண்டியது விளைக்கும் ஆற்றலை யாகலின் - நீ வேண்டிய பொருளை யுண்டாக்கும் வலியை யுடையை யாகலின்; நின் நிழல் பிறந்து - நினது நிழற்கண்ணே பிறந்து; நின் நிழல் வளர்ந்த எம் அளவு எவனோ - நினது நிழற் கண்ணே வளர்ந்த எமது நினைவெல்லை சொல்ல வேண்டுமோ வேண்டா வன்றே; இன்னிலைப் பொலம் பூங்காவின் நன்னாட்டோரும் - இனிய நிலையையுடைத்தாகிய பொற்பூப் பொருந்திய கற்பகக் காவையுடைய நல்ல விண்ணுலகத்தவரும்; செய் வினை மருங்கின் எய்த லல்லதை - தாம் செய்த நல்வினையாலுள்ள இன்பத்தின் பக்கத்தைப் பொருந்துவ தல்லது; உடையோர் ஈதலும் - செல்வமுடையோர் வறியோர்க்கு வழங்குதலும்; இல்லோர் இரத்தலும் - வறியோர் செல்வமுடையோர்பாற் சென்றிரத்தலும்; கடவ தன்மையின் - ஆண்டுச் செய்யக்கடவ தல்லாமையான்; கையற வுடைத்தென - அது செயலற வுடைத்தெனக் கருதி; ஆண்டுச் செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின் - அவ்விடத்து நுகரும் நுகர்ச்சி இவ்விடத்தும் கூடுதலான்; நின் நாடு உள்ளுவர் பரிசிலர் - நின்னாட்டை நினைப்பர் பரிசிலர்; ஒன்னார் தேஎத்தும் நின்னுடைத் தென - பகைவர் தேயத்திருந்தும் நின்னாடு நின்னை யுடைத்தென்று கருதி யாதலால் எ-று.
மற்று: அசை. வேந்தே,நீ வேண்டியது விளைக்கும்ஆற்றலையாகலின், விண்ணுலகத்து நுகர்ச்சி ஈண்டும் கூடலின், ஒன்னார் தேயத்திருந்தும் பரிசிலர் நின்னாடு நின்னை யுடைத்தென்று நின்னாட்டை யுள்ளுவர்; ஆதலான், நின்னிழற் பிறந்து நின் நிழல் வளர்ந்த எம்மளவு எவனோவென மாறிக் கூட்டுக.
விளக்கம்: வேந்தன் அருளி நோக்குமிடம் அவன் தானையால் அழிவுறாது ஆக்கமெய்தும் ஆதரவு பெற்றுப் பொன்னும் பொருளும் சிறக்கவுண்டா மென்றற்குப் "பொன் பூப்ப" என்றார். "வேண்டியது விளைக்கும் ஆற்றலை" யென்கின்றாராதலால், அவ்வாற்றலின் எல்லையைச் "செஞ்ஞாயிற்று நிலவு வேண்டினும், வெண் டிங்களுள் வெயில் வேண்டினும்" என்றார். "ஈவாரும் கொள்வாரு மில்லாத வானத்து, வாழ்வாரே வன்க ணவர்" (குறள், 1058. மேற்.) என்பவாகலின், இங்கும், "உடையோ ரீதலும் இல்லோ ரிரத்தலும், கடவ தன்மையிற் கையற வுடைத்தென" க் கூறுவாராயினர். செய்தல் நுகர்தலாதலால், செய் நுகர்ச்சியென்றதற்கு "நுகரும் நுகர்ச்சி" யென்றார்.
---------------
39. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
இக் கிள்ளி வளவனை இப் பாட்டின்கண் மாறோக்கத்து நப்பசலையார், "வளவ, நின்னைப் பாடுங்கால் நின் ஈகையைப் புகழ்வதும் புகழாகாது, அது நின் முன்னோர் செய்கை; பகைவரை யடுதலும் புகழன்று, நின் முன்னோர் தூங்கெயி லெறிந்தவர்; முறை செய்தலும் புகழன்று, நினக்குரிய உறந்தையில் அறம் நிலை நிற்பது; சேரரது வஞ்சி நகரை யலைக்கும் நின் வென்றி யான் பாடும் திறமன்று" என்று பாராட்டுகின்றார்.
புறவி னல்லல் சொல்லிய கறையடி
யானை வான்மருப் பெறிந்த வெண்கடைக்
கோனிறை துலாஅம் புக்கோன் மருக
ஈதனின் புகழு மன்றே சார்தல்
ஒன்னா ருட்குந் துன்னருங் கடுந்திறல் 5
தூங்கெயி லெறிந்தநின் னூங்கணோர் நினைப்பின்
அடுதனின் புகழு மன்றே கெடுவின்று
மறங்கெழு சோழ ருறந்தை யவையத்
தறநின்று நிலையிற் றாகலி னதனால்
முறைமையின் புகழு மன்றே மறமிக் 10
கெழுசமங் கடந்த வெழுவுறழ் திணிதோட்
கண்ணார் கண்ணிக் கலிமான் வளவ
யாங்கன மொழிகோ யானே யோங்கிய
வரையளந் தறியாப் பொன்படு நெடுங்கோட்
டிமயஞ் சூட்டிய வேம விற்பொறி 15
மாண்வினை நெடுந்தேர் வானவன் றொலைய
வாடா வஞ்சி வாட்டுநின்
பீடுகெழு நோன்றாள் பாடுங் காலே. (39)
திணையும் துறையும் அவை. அவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.
உரை: புறவின் அல்லல் சொல்லிய - புறவினது வருத்தத்தைக் களைய வேண்டி; கறை யடி யானை வான் மருப் பெறிந்த - பொருந்திய அடியினையுடைய யானையினது வெளிய கோட்டாற் கடைந்து செறிக்கப்பட்ட; வெண் கடைக் கோல் நிறை துலாம் புக்கோன் மருக - வெளிய கடையினையுடைய கோலாகிய நிறுக்கப்படும் துலாத்தின்கண்ணே துலை புக்க செம்பியனது மரபினுள்ளா யாதலான்; ஈதல் நின் புகழும் அன்றே - இரந்தோர்க்குக் கொடுத்தல் நினக் கியல்பாவதல்லது புகழு மல்லவே; ஒன்னார் சார்தல் உட்கும் - அசுரர்க்குப் பகைவராகிய தேவர்கள் கிட்டுதற்கு வெருவும்; துன்னரும் கடுந்திறல் - அணுகுதற்கரிய மிக்க வலியையுடைய; தூங்கெயில் எறிந்த நின் ஊங்கணோர் நினைப்பின் - ஆகாயத்துத் தூங்கெயிலை யழித்த நின்னுடைய முன்னுள்ளோரை நினைப்பின்; அடுதல் நின்புகழும் அன்றே - ஈண்டுள்ள பகைவரைக் கொல்லுதல் நினது புகழும் அல்லவே; கெடு வின்று - கேடின்றி, மறங்கெழு சோழர் உறந்தை அவையத்து அறம் நின்று நிலையிற் றாகலின் - மறம் பொருந்திய சோழரது உறையூர்க்கண் அவைக்களத்து அறம் நின்று நிலைபெற்ற தாதலால்; முறைமை நின் புகழும் அன்றே - முறைமை செய்தல் நினக்குப் புகழு மல்லவே; அதனால்-; மறம் மிக்கு எழு சமம் கடந்த - மறம் மிக்கு எழுந்திருந்த போரை வென்ற; எழு உறழ்திணி தோள் - கணைய மரத்தோடு மாறுபடும் தசை செறிந்த தோளினையும்; கண்ணார் கண்ணிக் கலியமான் வளவ - கண்ணிற் கார்ந்த கண்ணியையும் மணம் செருக்கிய குதிரையையுமுடைய வளவ; யாங்கனம் மொழிகோ யான் - எவ்வாறு கூறுவேனோ யான்; ஓங்கிய வரை அளந் தறியா - உயர்ந்த எல்லையளந் தறியப்படாத; பொன் படு நெடுங் கோட்டு இமயம் சூட்டிய ஏம விற்பொறி- பொன் படுகின்ற நெடிய சிகரங்களையுடைய இமயமலையின்கட் சூட்டப்பட்ட காவலாகிய விற் பொறியையும்; மாண்புனை நெடுந்தேர் வானவன் தொலைய - மாட்சிமைப்பட்ட தொழில் பொருந்திய நெடிய தேரையுமுடைய சேரன் அழிய; வாடா வஞ்சி வாட்டும் - அவனது அழிவில்லாத கருவூரை யழிக்கும்; நின் பீடு கெழு நோன்றாள் பாடுங்கால் - நினது பெருமை பொருந்திய வலிய தாளைப் பாடுங் காலத்து எ-று.
நின்னைப் பாடுங்கால் என்பார், அவனது சிறப்புத் தோன்றத் தாம் பாடுங்கால் என்றார். தாளை முயற்சி யெனினு மமையும். நிறை துலாம் புக்கோன் மருக, நீ அவன் மருகனாதலால், ஈதல் நின் புகழு மன்று; தூங்கெயி லெறிந்த நின் ஊங்கணோர் நினைப்பின், அடுதல் நின் புகழுமன்று; உறந்தை யவையத்து அறம் நின்று நிலையிற்றாதலின், முறைமை நின் புகழுமன்று; அதனால், கலிமான் வளவ, நின் தாள் பாடுங்கால் யான் யாங்கன மொழிகோவெனக் கூட்டுக. அதனால் யாங்கன மொழிகோவென வியையும். மருக வென்புழி ஆதலானென்பது ஆற்றலாற் போந்த பொருளெனக் கொள்க. கறையடி யென்பதற்கு உரல் போலும் அடியென்பாரு முளர்.
விளக்கம்: சொல்லிய என்புழிச் சொல்லுதல் களைதல் என்னும் பொருளது; "ஒக்கல் ஒக்கஞ் சொலிய" (புறம்.327) எனப் பிறரும் கூறுதல் காண்க. நின் புகழ் - நினக்குப் புகழ் என நான்கனுருபு விரித்துக் கொள்ளப்பட்டது. கடுந் திறல்: கடுமை: மிகுதி. ஊங்கணோர் - முன்னோர். கெடுவின்று என்புழிக் கெடுவென்பது முதனிலைத் தொழிற் பெயர்; "கெடுவாக வையா துலகு" (குறள்.117) என்றாற் போல. ஏழு சமம் - மறத்தீக் கிளர்தலால் எழுந்து வீறிட்டுச் செய்யும் போர். வரை - எல்லை. ஏம விற்பொறி - காவலாகிய விற்பொறி; சேரமான் தன்னரசு காவலாகிய ஆணை செல்லுதற் கெல்லையாக இட்ட பொறியாதலால், "ஏம விற்பொறி" என்றார். வானவன் சேரன்; சேரரை வானவ ரென்றும் வான வரம்ப ரென்றும் வழங்குப; இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன் என்று ஈண்டுக் கருதப்படுகின்றான். சீனர் தம்மை வானவர் என்று கூறிக்கொள்வது கொண்டு, சேரர் பண்டு சீனநாட்டிலிருந்து குடியேறியவரென முடிபு செய்வது, வரலாறறியாதார் தவறுடைக் கூற்றாகும். பாடுதற்குச் சிறப்புடையது தாள் எனஅறிக; "வாய்வாள் வளவன் வாழ்கெனப், பீடுகெழு நோன்றாள் பாடுகம் பலவே" (புறம்.393) எனப் பிறரும் தாளே பாடுதல் காண்க.
-----------
40. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
ஆசிரியர் ஆவூர் மூலங்கிழார் ஒருகால் இக் கிள்ளிவளவனைக் காண வந்தார்; அவர்க்கு இவனைக் காண்டல் அரிதாயிற்று. நாட்கள் சில கழிந்தன. ஒருநாள் அவனைக் காண்டற்கு வேண்டும் செவ்வி கிடைத்தது. அக்காலத்தே இப் பாட்டினைப் பாடினராதலால், இப் பாட்டின்கண், வளவனை நோக்கி, வேந்தே, நீ இன்சொல்லும் எளிய காட்சியும் உடையனாதல் வேண்டும்; யாங்கள் நின்னை இகழ்வோர் தலை மடங்கவும், புகழ்வோர் பொலிவுற்றுத் திகழவும் இன்று காண்பதுபோல் என்றும் கண்டு பாடிப் பரவுவோம்" என்று செவியறிவுறுத்துகின்றார்.
நீயே, பிறரோம்புறு மறமன்னெயில்
ஓம்பாது கடந்தட்டவர்
முடிபுனைந்த பசும்பொன்னின்
அடிபொலியக் கழறைஇய
வல்லாளனை வயவேந்தே 5
யாமேநின், இகழ்பாடுவோ ரெருத்தடங்கப்
புகழ்பாடுவோர் பொலிவுதோன்ற
இன்று கண்டாங்குக் காண்குவ மென்றும்
இன்சொலெண் பதத்தை யாகுமதி பெரும
ஒருபிடி படியுஞ் சீறிடம் 10
எழுகளிறு புரக்கு நாடுகிழ வோயே. (40)
திணை: அது. துறை: செவியறிவுறூஉ. அவனை ஆவூர் மூலங்கிழார் பாடியது.
உரை: நீ-; பிறர் ஓம்புறு மற மன் னெயில் ஓம்பாது - பகைவரது பாதுகாத்த மறம் நிலைபெற்ற அரண்களைப் பாதுகாவாது; கடந்தட்டு - எதிர் நின் றழித்து; அவர் முடிபுனைந்த பசும் பொன்னின் - அவரைக் கொன்று அவர் மகுடமாகச் செய்யப்பட்ட பசும்பொன்னால்; அடி பொலியக் கழல் தைஇய - நினது அடி பொலிய வீரக் கழல் செய்து புனைந்த; வல்லாளனை - வலிய ஆண்மையை யுடைய; வய வேந்தே; - யாம் - யாங்கள்; நின் இகழ் பாடுவோர் எருத்து அடங்க - நின்னை இழித்துரைப்போர் கழுத் திறைஞ்ச; புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற - புகழ்ந்துரைப்போர் பொலிவு தோன்ற; இன்று கண்டு ஆங்குக் காண்குவம் - இன்று கண்டாற்போலக் காண்குவம்; என்றும் - எந்நாளும்; இன் சொல் - இனிய மொழியொடு; எண்பதத்தை ஆகு மதி - எளிய செவ்வியை யாகுக; பெரும-; ஒரு பிடி படியும் சீறிடம் - ஒரு பிடி கிடைக்கும் சிறிய விடம்; எழு களிறு புரக்கும் நாடு கிழவோய் - ஏழு களிற்றியானையைப் பாதுகாக்கும் நாட்டை யுடையோய் எ-று.
நாடு கிழவோய், இன் சொல் எண் பதத்தை யாகுமதி; அதனால் நின் இகழ் பாடுவோர் எருத்தம் அடங்கப், புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற, யாம் இன்று கண்டாங்குக் காண்குவ மெனக் கூட்டுக.
வல்லாளனை யென்பதனுள் ஐகாரம் முன்னிலை விளக்கி நின்றது; அசைநிலையுமாம். மதி: முன்னிலை யசைச்சொல். "கழல் தைஇய வல்லாளன்" என்றதனாற் பகை யின்மையும், "ஒரு பிடி படியுஞ் சீறிடம் ஏழு களிறு புரக்கும் நாடு கிழவோய்" என்றதனால் பொருட்குறை வின்மையும் கூறியவாறாயிற்று.
விளக்கம்: நண்பரைப் பிற ரென்றல் வழக்கன்மையின், பிறரென்றது பகைவரை யாயிற்று. எருத்து - கழுத்து; எருத்துக் கடக்கமாவது நாணால் தலை குனிதல். "நாண்அடச் சாய்ந்த நலங்கிளர் எருத்தின்" (பொருந:31) எனச் சான்றோர் கூறுதல் காண்க. பொலிவு தோன்ற வென்றது, பெருமிதத்தால் தலை நிமிர்ந்து விளங்க வென்பதாம். கண்டு ஆங்கு என்றவிடத்துக் கண் டென்னும் செய்தெனெச்சம் பிறவினை முதல்வினை கொண்டு முடிதற்கு அமைதி கூறுவாராய், ஆசிரியர் பேராசிரியர், "நடை கற்றன்ன வென்புழிக் கற் றென்னும் வினையெச்சம் தன்னெச்சவினை இகந்ததாயினும், அஃது உவமப் பகுதியாகலான், அங்ஙனம் வருதலும் வகை யென்றதனானே கொள்ளப்படும்" (தொல்.உவம:1) என்பது காண்க. எழுகளிறு புரக்கும் நாடு - ஏழு களிற்றியானைகட்கு வேண்டும் உணவினை விளைக்கும் நாடு.
---------------
41. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
ஆசிரியர் கோவூர் கிழார், இப்பாட்டின்கண் இக் கிள்ளிவளவனைச் சினப்பித்தோர் நாட்டு மக்கள், நனவின்கண் திசைகளில் எரி கொள்ளி வீழ்ச்சி முதலிய தீ நிமித்தங்களும், கனவின்கண் வாயிற் பல் வீழ்தல் முதலிய தீ நிகழ்ச்சிகளும் கண்டு, நின்மேற் செலவு நினைந்து அஞ்சித் தாமெய்தும் மனக்கலக்கத்தை மகளிர் அறியாவாறு மறைத்து அலமருகின்றனர் எனக் கொற்ற வள்ளை பாடிச் சிறப்பிக்கின்றார்.
காலனும் காலம் பார்க்கும் பாராது
வேலீண்டு தானை விழுமியோர் தொலைய
வேண்டிடத் தடூஉம் வெல்போர் வேந்தே
திசையிரு நான்கு முற்க முற்கவும்
பெருமரத், திலையி னெடுங்கோடு வற்றல் பற்றவும் 5
வெங்கதிர்க் கனலி துற்றவும் பிறவும்
அஞ்சுவரத் தகுந புள்ளுக்குர லியம்பவும்
எயிறுநிலத்து வீழவு மெண்ணெ யாடவும்
களிறுமேல் கொள்ளவுங் காழக நீப்பவும்
வெள்ளி நோன்படை கட்டிலொடு கவிழவும் 10
கனவி னரியன காணா நனவிற்
செருச்செய் முன்பநின் வருதிற னோக்கி
மையல் கொண்ட வேமமி லிருக்கையர்
புதல்வர் பூங்கண் முத்தி மனையோட்
கெவ்வங் கரக்கும் பைதன் மாக்களொடு 15
பெருங்கலக் குற்றன்றாற் றானே காற்றோ
டெரிநிகழ்ந் தன்ன செலவிற்
செருமிகு வளவநிற் சினைஇயோர் நாடே. (41)
திணை: வஞ்சி. துறை: கொற்றவள்ளை. குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைக் கோவூர் கிழார் பாடியது.
உரை: காலனும் காலம் பார்க்கும் - கூற்றும் தன்னால் உயிர் கொள்ளலாம் காலம் வருந்துணையும் பார்க்கும்; பாராது - அவ்வாறு காலம் பாராது; வேலீண்டு தானை விழுமியோர் தொலைய - வேல் நெருங்கிய படையினையுடைய பெரியோர் மாளும் பரிசு; வேண்டிடத் தடூஉம் வெல் போர் வேந்தே - நீ வேண்டிய விடத்தே கொல்லும் வெல்லும் போரையுடைய வேந்தே; திசை இரு நான்கும் உற்கம் உற்கவும் - எட்டுத்திசையும் எரி கொள்ளி எரிந்து வீழவும்; பெரு மரத்து இலையில் நெடுங் கோடு வற்றல் பற்றவும் - பெரிய மரத்தின்கண்ணே இலையில்லாத நெடிய கோடாகியது வற்றல் பற்றவும்; வெங்கதிர்க் கனலி துற்றவும் - வெய்ய சுடரையுடைய ஞாயிறு பலவிடத்தும் செறிந்து தோன்றவும்; பிறவும் - மற்றும்; அஞ்சுவரத்தகுந புள்ளுக் குரல் இயம்பவும் - அஞ்சத் தகுவனவாகிய புட்கள் குரலிசைப்பவும்; எயிறு நிலத்து வீழவும் - பல் நிலத்தின் கண்ணே வீழவும்; எண்ணெய் ஆடவும் - எண்ணெயை மயிரின் கண்ணே வார்க்கவும்; களிறு மேல் கொள்ளவும் - பன்றியேற்றை யேறவும்; காழகம் நீப்பவும் - ஆடையைக் களையவும்; வெள்ளி நோன்படை கட்டிலொடு கவிழவும் - வெளிதாகிய வலிய படைக்கலம் தானிருந்த கட்டிலுடனே மறியவும்; கனவின் நனவின் அரியன காணா- இங்ஙனம் கனாவினும் மெய்ம்மையினும் பொறுத்தற்கரியவற்றைக் கண்டு; செருச் செய் முன்ப - போர் செய்யும் வலியையுடையோர்; நின்வரு திறன் நோக்கி - நின் மேற்செலவின் கூறுபாட்டைக் கருதி; மையல் கொண்ட ஏமமில் இருக்கையர் - மயக்கம் பொருந்திய காவலில்லாத இருத்தலை யுடையராய்; புதல்வர் பூங்கண் முத்தி - தம் பிள்ளைகளுடைய பூப் போலுங் கண்ணை முத்தங் கொண்டு; மனையோட்கு எவ்வம் கரக்கும் - தம் மனைவியர்க்குத் தமது வருத்தம் தோன்றாமல் மறைக்கும்; பைதல் மாக்களொடு - துன்பத்தையுடைய ஆடவரோடு; பெருங்கலக் குற்றன்று - மிக்க கலக்கமுற்றது; காற்றோடு எரி நிகழ்ந் தன்ன செலவின் - காற்றுடன் எரி நிகழ்ந்தாற்போன்ற செலவையுடைய; செருமிகு வளவ - போரின்கண்ணே மிக்க வளவ; நிற்சினைஇயோர் நாடு - நின்னைச் சினப்பித்தோருடைய நாடு எ-று.
உற்க வென்றது, வீழ்தல். உற்க முதலிய நான்கும் உற்பாதமாய் நனவிற் காணப்பட்டன; எயிறு நிலத்து வீழ்தல் முதலாயின கனவிற் காணப்பட்டன. வருதிறன்: ஈண்டுச் செல்லுந் திறனென இடவழுவ மைதியாய் நின்றது. "மனையோட் கெவ்வம் கரக்கு" மென்பது "ஏவலிளையர் தாய் வயிறு கறிப்ப" என்றாற் போலப் பன்மைக் கேற்ப நின்றது. தான்: ஈண்டு அசைநிலை பெருமரத்துப் பற்றவும் என இயையும் - இலையில் நெடுங்கோடு வற்றல் பற்றவு மென்பதற்கு நெடுங்கோட்டின்கண்ணே இலையில் வற்றற்றன்மை பற்றவுமென வுரைப்பினுமமையும்.
வேந்தே, முன்ப, வளவ நீ இத்தன்மையை யாதலால், நிற்சினைஇயோர் நாடு பைதன் மாக்களொடு பெருங் கலக்குற்றதெனக் கூட்டுக. காற்றோ டெரி நிகழ்ந் தன்ன செலவிற் செருமிகு வளவ வென மன்னவன் புகழும், நிற்கனைஇயோர் நாடு பைதன் மாக்களொடு பெருங்கலக் குற்றன் றென ஒன்னார் நாடழி பிரங்கியதும் கூறுதலால், இது கொற்றவள்ளை யாயிற்று.
விளக்கம்: உயிர்கள் அவை நின்ற உடம்பினின்று நீங்குதற்குரிய காலம் பார்த்து நீக்கும் இயல்புபற்றிக் கூற்றுவனைக் காலன் என்ப. அதனால் "காலனும் காலம் பார்க்கும்" என்றார். வேலீண்டு தானைக் கண் விறல் மிக்க செய்கைகளால் உயர்ந்த பெரியோரை "விழுமியோர்" என்றார். உற்கம், எரி கக்கும் விண்மீன்; அஃது எரிந்து வீழும் செய்தியை "உற்குதல்" என்பவாகலின், "உற்கம் உற்கவும்" என்றார். கனலையுடைய ஞாயிறு கனலி யெனப்பட்டது. களிறு - பன்றி; கேழற் கண்ணும் கடிவரை யின்றே" (மரபு:35) என்றலின், கேழற் பன்றியைக் களி றென்றார். வெள்ளி - வெண்மை நிறமுடையது. தாம் இருக்கும் இருக்கை போதிய காவலின்றி யிருத்தலால், ஆங்கிருப்போர் அதனை யுணர்ந்து வரும் தீங்கு குறித்து அறிவு மயங்குகின்றமை தோன்ற, "மையல் கொண்ட வேமமில் இருக்கையர்" என்றார். முத்துதல், முத்தமிடுதல். தன்னை யின்றியமையாத மனையவள் தனக்குளதாகும் வருத்தமறியின் பெரும் பேதுற்றுத் தன் நெஞ்சின் வலியைச் சிதைப்ப ளென்ற அச்சத்தால் "மனையோட்கு எவ்வம் கரத்தல்" நிகழ்வதாயிற்று. வருதிறன் - மேற்செல்லுந் திறம். படர்க்கைக்குரிய செல்லுதல் கூறவேண்டிய விடத்துத் தன்மை முன்னிலைகட்குரிய வருதல் என்ற சொல்லைக் கூறியது வழுவமைதியாயிற்று. மனையோள் என்ற ஒருமையும் மாக்களென்ற பன்மையும் இயைவது, "ஏவ லிளையர் தாய் வயிறு கறிப்ப" என்றாற் போலப் பன்மைக்கேற்ப நின்ற தென்றார். ஒரு மனைவியை மணப்பதே பண்டைத் தமிழ் வழக்காதல் அறிக.
-------------
42. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
இப் பாட்டின்கண், ஆசிரியர் இடைக்காடனார், இவன் ஏனை இருவேந்தர் நாடுகளைக் கவரும் கருத்தினனாய் மைந்துற்றிருப்பதும், மலை போன்ற யானையும் கடல்போலும் தானையும் கொண்டு, புலி, தன் குருளையைக் காப்பது போலத் தன்னாட்டை இனிது காத்துச் செங்கோலோச்சி வருவதும், கடல் நோக்கிச் செல்லும் யாறு போலப் புலவர் பலரும் இவன் புகழ் பாடிப் போதருவதும் எடுத்தோதிப் பாராட்டுகின்றார். இடைக்காடன் என்பது இயற்பெயர். இலக்கிய வளஞ் சிறந்த பாட்டுக்கள் பல இவரால் செய்யப் பெற்றுச் சங்கத் தொகை நூல்களிற் கோக்கப்பெற்றுள்ளன. தக்க உவமைகளைத் தொடுத்துப் பொருள்களை விளக்குவதில் நல்ல வாய்ப்புடையர். குறு முயலின் குறு வழியை, "சிறியிலை நெல்லிக் காய்கண் டன்ன, குறுவிழிக் கண்ண கூரலங் குறுமுயல்" என்பர்; காட்டிடத்தே காயாம் பூவும் தம்பலப் பூச்சிகளும் சிதறிக் கிடப்பதை, மணிமிடை பவளம் போலும் என்று புனைவர். காட்டிடத்தே ஆட்டிடையன் கோலூன்றி நின்று செய்யும் வீளை யொலி கேட்டுத் "தெறி மறி பார்க்கும் குறுநரி" முட் புதற்குள் ஓடி யொளியும் இயல்பை அழகு திகழக் கூறுகின்றார். மகளிர் விருந்தோம்பும் செய்கையால் மேம்படுவதனை, "அல்லி லாயினும் விருந்துவரின் உவக்கும், முல்லை சான்ற கற்பின், மெல்லியற் குறுமகள்" (நற்.142) என்று சிறப்பிப்பர். விருந்து புறந்தரும் அறத்தை இப் பாட்டின்கண்ணும் இவர் எடுத்தோதிப் பாராட்டுவதைக் காணலாம்.
ஆனா வீகை யடுபோ ரண்ணனின்
யானையு மலையிற் றோன்றும் பெருமநின்
தானையுங் கடலென முழங்குங் கூர்நுனை
வேலு மின்னின் விளங்கு முலகத்
தரைசுதலை பனிக்கு மாற்றலை யாதலிற் 5
புரைதீர்ந் தன்றது புதுவதோ வன்றே
தண்புனற் பூச லல்லது நொந்து
களைக வாழி வளவ வென்றுநின்
முனைதரு பூசல் கனவினு மறியாது
புலிபுறங் காக்குங் குருளை போல 10
மெலிவில் செங்கோ னீபுறங் காப்பப்
பெருவிறல் யாணர்த் தாகி யரிநர்
கீழ்மடைக் கொண்ட வாளையு முழவர்
படைமிளிர்ந் திட்ட யாமையு மறைநர்
கரும்பிற் கொண்ட தேனும் பெருந்துறை 15
நீர்தரு மகளிர் குற்ற குவளையும்
வன்புலக் கேளிர்க்கு வருவிருந் தயரும்
மென்புல வைப்பி னன்னாட்டுப் பொருந
மலையி னிழிந்து மாக்கட னோக்கி
நிலவரை யிழிதரும் பல்யாறு போலப் 20
புலவ ரெல்லா நின்னோக் கினரே
நீயே, மருந்தில் கணிச்சி வருந்த வட்டித்துக்
கூற்றுவெகுண் டன்ன முன்பொடு
மாற்றிரு வேந்தர் மண்ணோக் கினையே. (42)
திணை: வாகை. துறை: அரசவாகை. அவனை இடைக் காடனார் பாடியது.
உரை: ஆனா ஈகை - அமையாத வண்மையையும்; அடு போர் அண்ணல் - பகையைக் கொல்லும் பூசலையுமுடைய தலைவ; நின் யானையும் மலையின் தோன்றும் - நினது யானையும் மலை போலத் தோன்றும்; பெரும-; நின் தானையும் கட லென முழங்கும் - நின் படையும் கடல் போல முழங்கும்; கூர் நுனை வேலும் மின்னின் விளங்கும் - கூரிய நுனையையுடைய வேலும் மின்போல விட்டு விளங்கும்; உலகத்து அரசு தலை பனிக்கும் ஆற்றலை யாதலின் - இங்ஙனம் உலகத்தின்கண் வேந்து தலை நடுங்குதற் கேதுவாகிய வலியையுடைய யாதலால்; புரை தீர்ந்தன்று - குற்றம் தீர்ந்தது; அது புதுவதோ அன்று - அது நினக்குப் பழையதாய் வருகின்றது; தண் புனல் பூசல் அல்லது - குளிர்ந்த நீரால் உள்ளதாகிய பூசலல்லது; நொந்து - வருந்தி; களைக வாழி வளவ என்று - எமது துயத்தைத் தீர்ப்பாயாக வாழி வளவ என்று சொல்லி; நின் முனை தருபூசல் கனவினும் அறியாது - நினது முந்துற்றுச் செல்லும் படையுண்டாக்கும் பூசலைக் கனாவின்கண்ணும் அறியாது; புலி புறங் காக்கும் குருளை போல - புலி பாதுகாக்கும் குட்டி போல; மெலிவில் செங்கோல் நீ புறங் காப்ப - குறைவில்லாத செவ்விய கோலால் நீ பாதுகாப்ப; பெருவிறல் யாணர்த்தாகி - பெரிய விசேடத்தையுடைய புது வருவாயை யுடைத்தாய்; அரிநர் கீழ் மடைக்கொண்ட வாளையும் - நெல்லறுப்பார் கடை மடைக்கண் பிடித்துக் கொள்ளப்பட்ட வாளையும்; உழவர் படை மிளிர்ந்திட்டயாமையும் - உழுவார் படை வாளால் மறிக்கப்பட்ட ஆமையும்; அறைநர் கரும்பிற் கொண்ட தேனும் - கரும்பறுப்பார் கரும்பினின்றும் வாங்கப்பட்ட தேனும்; பெருந்துறை நீர் தரு மகளிர் குற்ற குவளையும் - பெரிய துறைக்கண் நீரை முகந்து கொள்ளும் பெண்டிர் பறித்த செங்கழுநீரு மென இவற்றை; வன் புலக்கேளிர்க்கு வருவிருந் தயரும் - வன்புலத்தினின்றும் வந்த சுற்றத்தார்க்கு விருந்தாக விரும்பிக் கொடுக்கும்; மென் புல வைப்பின் நன்னாட்டுப் பொருந - மென்புலத் தூர்களையுடைய நல்ல நாட்டுக்கு வேந்தே; மலையின் இழிந்து மாக் கடல் நோக்கி நிலவரை இழிதரும் பல் யாறு போல - மலையினின் றிழிந்து பெரிய கடலை நோக்கி நிலவெல்லையி னின்றிழியும் பல யாறுகளை யொப்ப; புலவரெல்லாம் நின் னோக்கினர் - புலவர் யாவரும் நின்னை நோக்கினர்; நீயே - நீதான் அவரக்குப் பரிசில் கொடுத்தற் பொருட்டு; மருந்தில் கணிச்சி - பரிகாரமில்லாத கணிச்சி யென்னும் படைக் கலத்தை; வருந்த - உயிர் வருந்த; வட்டித்து - சுழற்றி; கூற்று வெகுண் டன்ன - கூற்றம் சினந்தாய் போலும்; முன்பொடு - வலியுடனே; மாற்று இரு வேந்தர் மண்ணோக்கினை - நினக்கு மறுதலையாகிய இருவேந்தருடைய நிலத்தைக்கொள்ள நோக்கினாய் எ-று.
அறியா தென்பதனை அறியாம லெனத் திரிப்பினு மமையும். வன்புலம், குறிஞ்சியும் முல்லையும்; மென் புலம், மருதமும் நெய்தலும். கணிச்சியைக் குந்தாலி யென்றும் மழு வென்றும் சொல்லுவர். யாணர்த்தாகி விருந் தயரும் நன்னா டென்க.
பொருந, புலவரெல்லாம் நின் நோக்கினர்; நீ அரசுதலை பனிக்கும் ஆற்றலை யாதலின், இருவேந்தர் மண்ணோக்கினை; அதனால் இச் செய்தி புரை தீர்ந்தது; நினக்குப் புதுவ தன்றாகலி னெனக் கூட்டுக.
புரை தீர்ந்தன் றென்பதற்கு. உயர்ச்சி தீர்ந்த தெனப் பொருளாக்கி, பொருந, நீ ஆற்றலை யாதலின், இரு வேந்தர் மண் ணோக்கினை; புலவரெல்லாம் பரிசில் பெறுதற்பொருட்டு நின் னோக்கினர்; இச்செய்தி நினக்குப் புதிதன்று; ஆதலின் உயர்ச்சி தீர்ந்த தென் றுரைப்பினு மமையும்.
விளக்கம்: பொருட் குறைபாடு நோக்கித் தன்னளவிற் குன்றாத ஈகை யென்பது, "ஆனா வீகை" யெனப்பட்டது. புதுவதன் றெனவே, அதன் மறுதலையாய பழைய தென்பது கொள்ளப்பட்டது. முனை தருபூசல் என்புழி, முனை யென்பது முந்துற்று முன்னேறிச் செல்லும் படையென வறிக. "நாயே பன்றி புலிமுய னான்கும், ஆயுங் காலைக் குருளை யென்ப" (தொல்.மரபு:8) என்றலின், புலிக்குட்டி குருளை யெனப்பட்டது. விறல், ஈண்டுச் சிறப்புக்குறித்து நின்றது. மிளிர்தல், கீழ் மேலாகப் பெயர்தல்: மாக்கட லென்புழி பெருமை, தன்னை நோக்கி வரும் நீர்ப் பெருக்கை என்று கொண்டு தன்னியல்பில் விகாரமின்றி நிற்கும் இயல்பு பள்ள நோக்கி யோடுதல் நீர்க்கு இயல்பாதலின், பெரும் பள்ளமாகிய "மாக்கடல் நோக்கி" யென்றார். நோயைத் தடுப்பது மருந்தாதலால், சாக்காடாகிய நோய் செய்யும் கூற்றுவனை விலக்கும் ஆற்றலுடையது பிறிதியாது மில்லை யாதல் கொண்டு, "மருந்தில்......கூற்று" என்றார். உயர்ச்சி தீர்ந்த தென்பது, உயர்ச்சியிலதாயிற்றென்னும் குறிப்பினை யுடையதாயிற்று.
-----------
43. சோழன் மாவளத்தான்
இச் சோழன், சோழன் நலங்கிள்ளியின் தம்பியாவான். எளிதில் வெகுளும் இயல்பின னாயினும், நல்லதன் நல முணரும் நயம் மிக்கவன். சோழன் திருமாவளவன் வேறு; இவன் வேறு. ஒருகால் இவனும் ஆசிரியர் தாமற்பல்கண்ணனாரும் வட்டாடினர். வட்டுக்களில் ஒன்று தாமற்பல்கண்ணனாரை யறியாமல் அவர்க்கீழ் மறைந்து விட்டதாக, அதனைப் பின்புணர்ந்த மாவளத்தான் வெகுண்டு, அவரை அவ் வட்டினால் எறித்தான். உண்மை கூறவும் ஓராது. வெகுண் டெறிந்த அவன் செய்கையை இகழ்ந்து அப் புலவர், "வேந்தே, நின் செயல் பொருந்துவ தன்று; நின் குடிப் பிறந்தோர்க்கு இச் செயல் இயல்பன் றாதலின், நின் பிறப்பின்கண் ஐயமுறுகின்றேன்" என வருந்தி யுரைத்தார் அதனைக் கேட்டதும் மாவளத்தான் தன் தவற்றினை யுணர்ந்து, நாணி, மனம் கலங்கினான். முடிவில் அவரும் தகுவன கூறித் தேற்றிப் பாராட்டினர். இந் நிகழ்ச்சியையே இப் பாட்டு குறித்து நிற்கிறது.
தாமற்பல்கண்ணனார் என்பார் பார்ப்பனர்; கூர்த்த புலமை நலஞ் சிறந்தவர்; தாம் செய்த தவற்றை விரைந்துணரும் நல்லறிஞர். தாமப்பல் கண்ணனார் என்றும் பாடமுண்டு. இவர் தாமல் என்னும் ஊரினர். தாமல், காஞ்சிபுரத்துக்கு மேற்கில் உள்ளதோர் நல்ல வூர். இடைக்காலச் சோழவேந்தர் காலத்தில் இவ் வூர் மிக்க சிறப்புற்று விளங்கிய தென்பதை இவ்வூரிலுள்ள கோயிற் கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இக் கல்வெட்டுக்கள் இவ்வூரைத் தாமர் (S.I. Vol. V.1004. A.R. 139 of 1896) என்று கூறுதலின், இவர் பெயர் தாமர்ப்பல் கண்ணனாரென இருக்க வேண்டு மென்று துணியலாம். ஏடெழுதியோர் தாமற்பல் கண்ணனா ரென எழுதிவிட்டனர்; இவ்வூர் இப்போதும் தாமல் என்று வழங்குவது நோக்கி, இவ்வாறு கொள்ளப்பட்ட தென்று கொள்க. பல்கண்ணன் என்பது இந்திரனையும் குறிக்கும் பெயராதலின், பார்ப்பனராகிய இவர் இவ்வாறு பெயர் பெற்றனர் என்றறியலாம். இதன்கண், "பார்ப்பார் நோவன செய்யார்" என்று இவர் கூறுவதே, இவர் பார்ப்பனரென்பதை வற்புறுத்துகிறது.
இப் பாட்டின்கண் தாமற்பல்கண்ணனார், "கிள்ளிக்குத் தம்பி, நீ புறவின் பொருட்டுத் துலை புக்கவன் வழித்தோன்றல்; நின் முன்னோர் சான்றோர்க்கு நோய் செய்யார்; இச் செயல் நினக்குத் தகுவதோ? நின் பிறப்பில் ஐயமுடையேன்" என்று கூறக் கேட்டு, நாணியிருந்த மாவளத்தான் செய்கைச் சிறப்பைக் கண்டு வியந்து, "யான் செய்த பிழையை மனங் கொள்ளாது, நீ செய்ததையே நினைந்து நாணி யிருந்தது. பிழைத்தாரைப் பொறுப்பது நுங்கள் குடிகக்கு இயல்புகாண் என்பதைக் காட்டுகிறது. பிழை செய்தவன் யானே; நீ காவிரி மணலினும் பல்லாண்டு வாழ்க" எனப் பாராட்டுகின்றார்.
நிலமிசை வாழ்ந ரலமர றீரத்
தெறுகதிர்க் கனலி வெம்மை தாங்கிக்
காலுண வாகச் சுடரொடு கொட்கும்
அவிர்சடை முனிவரு மருளக் கொடுஞ்சிறைக்
கூருகிர்ப் பருந்தி னேறுகுறித் தொரீஇத் 5
தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
தபுதி யஞ்சிச் சீரை புக்க
வரையா வீகை யுரவோன் மருக
நேரார்க் கடந்த முரண்மிகு திருவின்
தேர்வண் கிள்ளி தம்பி வார்கோற் 10
கொடுமர மறவர் பெரும கடுமான்
கைவண் டோன்ற லைய முடையேன்
ஆர்புனை தெரியனின் முன்னோ ரெல்லாம்
பார்ப்பார் நோவன செய்யலர் மற்றிது
நீர்த்தோ நினக்கென வெறுப்பக் கூறி 15
நின்யான் பிழைத்தது நோவா யென்னினும்
நீபிழைத் தாய்போ னனிநா ணினையே
தம்மைப் பிழைத் தோர்ப் பொறுக்குஞ் செம்மல்
இக்குடிப் பிறந்தோர்க் கெண்மை காணுமெனக்
காண்டகு மொய்ம்ப காட்டினை யாகலின் 20
யானே பிழைத்தனென் சிறக்கநின் னாயுள்
மிக்குவரு மின்னீர்க் காவிரி
எக்க ரிட்ட மணலினும் பலவே. (43)
திணையும் துறையும் அவை. சோழன் நலங்கிள்ளி தம்பி மாவளத்தானும் தாமற்பல்கண்ணனும் வட்டுப் பொருவுழிக் கை கரப்பவெகுண்டு வட்டுக்கொண்டெறிந்தானைச் சோழன் மகன் அல்லையென, நாணியிருந்தானைத் தாமற்பல் கண்ணனார் பாடியது.
உரை: நில மிசை வாழ்நர் அலமரல் தீர - நிலத்தின்மேல் உயிர் வாழ்வார்க்கு வெம்மையான் உளதாகிய சுழற்சி நீங்க; தெறு கதிர்க் கனலி வெம்மை தாங்கி - சுடுகின்ற கதிரையுடைய ஞாயிற்றினது வெப்பத்தைத் தாம் பொறுத்து; கால் உணவாக - காற்றை யுணவாகக் கொண்டு; சுடரொடு கொட்கும் - அச்சுடருடனே சூழ வரும்; அவிர் சடை முனிவரும் மருள - விளங்கிய சடையையுடைய அருந் தவரும் வியப்பால் மயங்க; கொடுஞ் சிறைக் கூருகிர்ப் பருந்தின் ஏறு குறித் தொரீஇ - வளைந்த சிறகினையும் கூரிய உகிரினையுமுடைய பருந்தினது எறிதலைக் கருதி அதனைத் தப்பி; தன் னகம் புக்க - தன்னிடத்தை யடைந்த; குறு நடைப் புறவின் தபுதி யஞ்சி - குறிய நடையையுடைய புறாவினது அழிவிற் கஞ்சி; சீரை புக்க - தன் னழிவிற் கஞ்சாது துலாத்தலையுட் புக்க; வரையா ஈகை உரவோன் மருக - வரையாத வண்மையையுடைய வலியோனது மரபினுள்ளாய்; நேரார் கடந்த முரண் மிகு திருவின் - பகைவரை வென்ற மாறுபாட்டான் மிக்க செல்வத்தையுடைய, தேர் வண் கிள்ளி தம்பி - தேர் வண் கிள்ளிக்குத் தம்பி; வார் கோல் கொடுமா மறவர் பெரும - நீண்ட அம்பினையும் வளைந்த வில்லினையுமுடைய மறவர்க்குத் தலைவ; கடு மான் கை வண் தோன்றல் - விரைந்த குதிரையையுடைய கைவள்ளிய தோன்றால்; ஐயம் உடையேன் - நினது பிறப்பின்கண் ஐயப்பாடுடையேன்; ஆர் புனை தெரியல் - ஆத்தியாற் செய்யப்பட்ட தாரையுடைய; நின் முன்னோரெல்லாம் பார்ப்பார் நோவன செய்யார் - நினக்கு முன்னுள்ளார் யாவரும் பார்ப்பார் வெறுக்கத் தகுவன செய்யார்; மற்று இது நினக்கு நீர்த்தோ என - மற்று இவ்வெறுக்கத்தக்க செய்கை நினக்கு நீர்மையை யுடைத்தோ என்று; வெறுப்பக் கூறி - நீ வெறுக்கச் சொல்லி; நின் யான் பிழைத்தது நோவாய் என்னினும் நினக்கு யான் செய்த தவற்றிற்கு வெறாய் என்னினும்; நீ பிழைத்தாய் போல் நனி நாணினை - நீ தவறு செய்தாய் போல மிக நாணினாய்; தம்மைப் பிழைத்தோர்ப் பொறுக்குஞ் செம்மல் - இவ்வாறு தம்மைத் தப்பியவரைப் பொறுக்கும் தலைமை; இக் குடிப் பிறந்தோர்க் கெண்மை காணும் என - இக் குலத்தின்கட் பிறந்தோர்க்கு எளிமை யுடைத்துக் காணும் என; காண்தகு மொய்ம்ப - காணத்தக்க வலியையுடையோய்; காட்டினை யாகலின் - அறிவித்தா யாகலின்; யானே பிழைத்தனென் - யானே தவறு செய்தேன்; மிக்கு வரும் இன்னீர்க் காவிரி எக்கர் இட்ட மணலினும் பல நின் ஆயுள் சிறக்க - பெருகி வரும் இனிய நீரையுடைய காவிரி கொழித்திடப்பட்ட மணலினும் பலவாக நின் வாழ்நாள் சிறப்பதாக எ-று.
முனிவ ரென்றது, வேணாவியோரை; அன்றி, சுடர் திரிந்த வழித்திரிந்து தவஞ் செய்யு முனிவரென்று முரைப்ப. சீரை, துலாக்கோல் தட்டு மற்றிது நீர்த்தோ நினக்கென வெறுப்பக் கூறி என்றது, சூது பொருவுழிக் கையாற் கவறு புதைப்ப வெகுண்டு வட்டுக்கொண்டெறிந்தானை, இவ்வாறு செய்தல் நின் பெருமைக்குப் பொருந்துமோ? அதனால் நின் பிறப்பிலே ஓர் ஐயமுடையேன் என்ற சொல்லை.
இது பொறுத்தற்கரிய பிழையைப் பொறுத்த குணவென்றியான் அரசவாகை யாயிற்று.
விளக்கம்: "அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி" (உரி:13) என்பது தொல்காப்பியம். சுடரொடு கொட்கும் முனிவர், "விண்செலன் மரபின் ஐயர்" (முருகு:107) என்று நக்கீரரால் குறிக்கப்படுகின்றார். உயிர்கள்பா லுண்டாகிய அருள் மிகுதியால் சுடரொடு திரியும் தம்மினும் அருள்மிக வுடையனாதல் கண்டு; அவர் மதி மருண்டன ரென்றற்கு, "முனிவரும் மருள" என்றார். பருந்தின் ஏறு குறித்து ஒரீஇ - பருந்தினால் எறியப்படுவ துணர்ந்து அதன் இலக்கினின்றும் தப்பி எறியப்படுவது ஏறாயிற்று; "வேலேறுபடத் தேளேறு மாய்ந்தாற் போல" என்றாற் போல. சீர் தூக்கும் துலாக் கோல், "சீரை" யெனப்பட்டது. நனி நாணினை யென்புழி, மிகுதி, குடிப்பிறப்புக்கு உயர்வெடுத்து மொழிதற்கு இடந்தந்தது. தவறு கண்டு மிக நாணுதல் தலைமை மிக்க மன நலமும் அறிவு நலமும் உடையார்க்கே அமைவதாகலின், "காண்தகு மொய்ம்ப" என்று சிறப்பித்தார். வேணாவி - வேள்விக்கண் பெறும் அவி வேணாவி யெனப்பட்டது; "வேணவா" என்றாற் போல, அவரவர் தகுதிப்பாட்டை மிகுதிப்படுத்துவது வாகைத் திணையாதலால், பொறை மிக்க குணத்தை அரசவாகையில் அடக்கிக் கூறினார்.
-----------
44. சோழன் நெடுங்கிள்ளி
இவன், காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி யெனவும் வழங்கப் படுவன்; திருந்திய அரசியற் பயிற்சி இல்லாதவன். இவற்கும் சோழன் நலங்கிள்ளிக்கும் எவ்வகையாலோ பகைமை யுண்டாயிற்று. அக் காலத்தே சோழன் நலங்கிள்ளியிடமிருந்து இளந்தத்த னென்னும் புலவ னொருவன் வந்து பரிசில் வேண்டினாராக, அவரைச் சோழன் நலங்கிள்ளியின் ஒற்ற னெனத் தவறாகக் கருதிக் கொலைபுரிய முற்பட்டான். அதனை யுணர்ந்த ஆசிரியர் கோவூர் கிழார், இவ் வேந்தனுக்குத் தகுவன கூறி அப் புலவனை யுய்வித்தார். பின்பு. இவன் ஆவூர் சென்றிருக்கையில், ஆவூர் தனக்குரிய தாதலால், அதனைத் தான் பெறுதற்காகச் சோழன் நலங்கிள்ளி ஆவூரை முற்றுகையிட்டான். இவன் அஞ்சிப் போர்க்கு எழானாக, கோவூர் கிழார் தமது பாட்டால் இவற்கு மறத் தீ யெழுவித்துப் போர் செய்யத் தூண்டினார். அப் போரில் உய்ந்தோடிய இவன் உறையூரிடத்தே இருந்தான். உறையூர் இவற்குரியதே; நலங்கிள்ளி உறையூரையும் முற்றுகையிட்டான். ஆங்கும் இவன் அடைபட்டுக் கிடந்தான் அக்காலத்தும் ஆசிரியர் கோவூர் கிழாரே சென்று இருவரையும் சந்து செய்து போர் செய்யாவாறு தடுத்து நலஞ்செய்தார். முடிவில் இவன் காரியாறு என்னுமிடத்தே போரிற் பட்டு இறந்தான். அதனால் இவற்குக் காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி யென்று பெயரெய்துவதாயிற்று.
இப்பாட்டின்கண், முற்றுகைக்கஞ்சி அடைபட்டிருந்த நெடுங்கிள்ளியை நோக்கி, ஆசிரியர் கோவூர் கிழார், "தோன்றால், யானைகள் வெய்துயிர்த்து உருமென முழங்குகின்றன; குழவிகள் பாலின்றி அலறியழுகின்றன; மகளிர் வறுந்தலை முடிக்கின்றனர்; மனையிடங்களில் எழும் அழுகுரல் நின் அரண்மனைக்கண் கேட்கிறது; இவை நிகழவும் நீ அரண்மனைக்கண் அடங்கிக் கிடத்தல் இனிதன்று; முன்னே வந்து, முற்றுகை யிட்டிருக்கும் வேந்தனைப் பார்த்து ஈயும் அறவுணர்வால் "இது நினக்கு வேண்டின் பெற்றுக் கொள்ளெனச் சொல்லி எயிற்கதவைத் திறத்தல் வேண்டும்; எதிரூன்றிக் காத்தலே மறம் என்பது கருத்தாயின், போர் குறித்துத் திறந்துவிடல் வேண்டும். அறவையும் மறவையு மல்லையாய் மதிற் கதவைத் திறவாது ஒருபுறத் தொடுங்கியிருப்பது நாணத் தகுவதொன்று" என்று கூறுகின்றார்.
இரும்பிடித் தொழுதியொடு பெருங்கயம் படியா
நெல்லுடைக் கவளமொடு நெய்ம்மதி பெறாஅ
திருந்தரை நோன்வெளில் வருந்த வொற்றி
நிலமிசைப் புரளுங் கைய வெய்துயிர்த்
தலமரல் யானை யுருமென முழங்கவும் 5
பாலில் குழவி யலறவு மகளிர்
பூவில் வறுந்தலை முடிப்பவு நீரில்
வினைபுனை நல்லி லினைகூஉக் கேட்பவும்
இன்னா தம்ம வீங்கினி திருத்தல்
துன்னருந் துப்பின் வயமான் றோன்றல் 10
அறவை யாயி னினதெனத் திறத்தல்
மறவை யாயிற் போரொடு திறத்தல்
அறவையு மறவையு மல்லை யாகத்
திறவா தடைத்த திண்ணிலைக் கதவின்
நீண்மதி லொருசிறை யொடுங்குதல் 15
நாணுத்தக வுடைத்திது காணுங் காலே. (44)
திணையும் துறையும் அவை. அவன் ஆவூர் முற்றியிருந்த காலத்து அடைத்திருந்த நெடுங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது.
உரை: இரும் பிடித் தொழுதியொடு - கரிய பிடியினது ஈட்டத்தோடு; பெருங் கயம் படியா - பெரிய கயத்தின்கட் படியாவாய்; நெல்லுடைக் கவளமொடு நெய் மிதி பெறாஅ - நெல்லையுடைய கவளத்துடனே நெய்யால் மிதித்துத் திரட்டப்பட்ட கவளமும் பெறாவாய்; திருந்தரை நோன் வெளில் வருந்த ஒற்றி - திருந்திய மருங்கையுடைய வலிய கம்பம் வருந்தச் சாய்த்து; நிலமிசைப் புரளும் கைய - நிலத்தின் மேலே புரளும் கையை யுடையவாய்; வெய் துயிர்த்து அலமரல் யானை - வெய்தாக வுயிர்த்துச் சுழலும் யானை; உரு மென முழங்கவும் - உருமேறு போல முழங்கவும்; பாலில் குழவி அலறவும் - பாலில்லாத குழவி அழவும்; மகளிர் பூவில் வறுந்தலை முடிப்பவும் - மகளிர் பூவில்லாத வறிய தலையை முடிப்பவும்; நீரில் வினைபுனை நல்லில் இனை கூஉக் கேட்பவும் - நீரில்லாத தொழில் புனைந்த நல்ல மனையிடத்துள்ளார் வருந்திக் கூப்பிடும் கூப்பீட்டைக் கேட்கவும்; ஈங்கு இனிதிருத்தல் இன்னாது - இவற்றிற்கு நாணாது இவ்விடத்து நீ இனிதாக இருத்தல் இன்னாது; துன்னரும் துப்பின் வயமான் தோன்றல் - நண்ணுதற்கரிய வலிமையுடைய வலிய குதிரையையுடைய தோன்றால்; அறவை யாயின் நினது எனத் திறத்தல் - அறத்தையுடையையாயின் இது நினதன்றோ வென்று சொல்லித் திறத்தல் செய்வாயாக; மறவை யாயின் போரொடு திறத்தல் - மறத்தை யுடையை யாயின் போரால் திறத்தல் செய்வாயாக; அறவையும் மறவையும் அல்லையாக - அவ்வாறன்றி அறத்தையும் மறத்தையும் உடையை யல்லையாக; திறவாது அடைத்த திண்ணிலைக் கதவின் - திறவாது அடைக்கப்பட்ட திண்ணிய நிலையை யுடைத்தாகிய கதவினையுடைய; நீண் மதில் ஒரு சிறை ஒடுங்குதல் - நீண்ட மதிலுள் ஒரு பக்கத்தே ஒதுங்குதல்; நாணுத் தக வுடைத்து - நாணுந் தன்மையை யுடைத்து; இது காணுங் கால் - இஃது ஆராயுங்காலத்து எ-று.
செய் யென வொருசொல் வருவித்துரைக்கப்பட்டது; திறத்த லென்பதனை இது திறக்க வியங்கோளீறாக வுரைப்பினு மமையும். அம்ம, கேட்பித்தற்கண் வந்தது. அறவியு மறவியு மல்லையாயின் என்று பாடமோதுவாரு முளர். படியா பெறா வென்பன எதிர்மறை வினை யெச்சமுற்று. கைய வென்பது வினையெச்ச வினைக்குறிப்பு முற்று.
விளக்கம்: பெருங்கயம்: பெருமை, யானைகள் படிதற்குரிய தகுதி சுற்றிச் சுற்றி வரும் யானையை அலமரல் யானை யென்றார். நீர் இல்வினை - நன்னீர்மை யில்லாத தொழில் திறத்தல் என்பதற்குத் திறத்தலைச் செய்வாயாக என்று உரைக்கின்றாராதலால், "செய்யென வொருசொல் வருவித்துரைக்கப்பட்டது" என்றார். வினையெச்ச வினைக்குறிப்பு முற்று என்பது குறிப்பு முற்றெச்சம்.
------------
45. சோழன் நெடுங்கிள்ளியும் நலங்கிள்ளியும்
சோழன் நெடுங்கிள்ளி ஆவூரினின்றும் தப்பிப் போந்து தனக்குரிய உறையூரில் இருக்கையில், அதனை யறிந்த நலங்கிள்ளி போந்து உறையூரை முற்றுகையிட்டான். சோழர் குடிக் குரியராகிய இருவர் தம்முள் பகைகொண்டு மாறி மாறிப் போருடற்றித் திரிதல் நன்றன் றென்பதை யறிந்த கோவூர் கிழார் இப்பாட்டின்கண் இருவரையும் சந்து செய்விக்கின்றார்.
இரும்பனை வெண்டோடு மலைந்தோ னல்லன்
கருஞ்சினை வேம்பின் றெரியலோ னல்லன்
நின்ன கண்ணியு மார்மிடைந் தன்றே, நின்னொடு
பொருவோன் கண்ணியு மார்மிடைந் தன்றே
ஒருவீர் தோற்பினுந் தோற்பதுங் குடியே 5
இருவீர் வேற லியற்கையு மன்றே, அதனாற்
குடிப்பொரு ளன்றுநுஞ் செய்தி கொடித்தேர்
நும்மோ ரன்ன வேந்தர்க்கு
மெய்ம்மலி யுவகை செய்யுமிவ் விகலே. (45)
திணை: வஞ்சி. துறை: துணைவஞ்சி சோழன் நலங்கிள்ளி உறையூர் முற்றியிருந்தானையும் அடைத்திருந்த நெடுங்கிள்ளியையும் கோவூர் கிழார் பாடியது.
உரை: இரும் பனை வெண்டோடு மலைந்தோன் அல்லன் - பெரிய பனையினது வெளிய தோட்டைச் சூடினோ னல்லன்; கருஞ் சினை வேம்பின் தெரியலோன் அல்லன் - கரிய கோட்டினையுடைய வேம்பினது தாரையுடையோ னல்லன்; நின்ன கண்ணியும் ஆர்மிடைந் தன்று - நின்னுடைய கண்ணியும் ஆத்தியால் செறியக் கட்டப்பட்டது; நின்னொடு பொருவோன் கண்ணியும் ஆர்மிடைந் தன்று - நின்னுடன் பொருவானுடைய கண்ணியும் ஆத்தியாற் செறியக் கட்டப்பட்டது; ஒருவீர் தோற்பினும் தோற்பது உம் குடியே - ஆதலால் நும்முள் ஒருவீர் தோற்பினும் தோற்பது நுங் குடி யன்றோ; இருவீர் வேறல் இயற்கையு மன்று - இருவீரும் வெல்லுதல் இயல்புமன்று; அதனால் - ஆதலால்; குடிப் பொருள் அன்று நும் செய்தி - நும் குடிக்குத்தக்க தொன்றன்று நுமதுசெய்கை; கொடித் தேர் நும்மோ ரன்ன வேந்தர்க்கு - கொடியாற் பொலிந்த தேரையுடைய நும்மைப் போலும் வேந்தர்க்கு; மெய்ம் மலிஉவகை செய்யும் இவ்விகல் - உடம்பு பூரிக்கும் உவகையைச் செய்யும் இம் மாறுபாடு; ஆதலான் இது தவிர்தலே நுமக்குத் தக்கது எ-று.
நின கண்ணியு மென்பது, நின்ன கண்ணியு மென விகாரமாயிற்று. அதனா லென்பதனை யொழித்தும் பாட மோதுப. இது சந்து செய்தலால் துணைவஞ்சி யாயிற்று.
விளக்கம்: சேரர் குடியிற் பிறந்தவ னல்லன் என்பதற்குப் "பனை வெண்டோடு மலைந்தோ னல்லன்" என்றார். வேம்பின் தாரையுடையவன் பாண்டியன். வெல்லுதல் வேறல் என வந்தது; செல்லுதல் சேறல் என வருதல் போல, ஒரு குடிக்குப் பொருளாவது அதன் தகுதியாதலால், பொருளன் றென்றதற்குத் தக்க தொன்றன்றென வுரை கூறப்பட்டது. மெய்ம்மலி யுவமை உடம்பி பூரிப்பதற் கேதுவாகிய உவகை. நும்மோ ரன்ன வேந்தர் - சேர பாண்டியர்.
------------
46. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
கிள்ளி வளவன் தன் பகைவனான மலயமான் மக்களைக் கொணர்ந்து கொலையானைக் காற்கீழிட்டுக் கொல்ல முயறல் கண்ட கோவூர் கிழார், அதனைத் தவிர்க்க வேண்டி, இப் பாட்டின்கண், "நீயோ புறாவின் பொருட்டுத் தன்னை வழங்கிய சோழன் மரபிற் பிறந்துள்ளாய்; இவர்களோ புலவர்கட்குப் பெருங் கொடை நல்கி வாழும் பெரியோர் மரபினர்; மிக்க இளையர்; இம்மன்றினை யஞ்சி மருண்டு நோக்குகின்றனர்; யான் கூறுவது கேட்டபின் விரும்புவது செய்க" என்று இயம்புகின்றார்.
நீயோ, புறவி னல்ல லன்றியும் பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை
இவரே, புலனுழு துண்மார் புன்க ணஞ்சித்
தமதுபகுத் துண்ணுந் தண்ணிழல் வாழ்நர்
களிறுகண் டழூஉ மழாஅன் மறந்த 5
புன்றலைச் சிறாஅர் மன்றுமருண்டு நோக்கி
விருந்திற் புன்கணோ வுடையர்
கேட்டனை யாயினீ வேட்டது செய்ம்மே. (46)
திணையும் துறையு மவை. சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் மலையமான் மக்களை யானைக் கிடுவுழிக் கோவூர் கிழார் பாடி உய்யக் கொண்டது.
உரை: நீயே - நீதான்; புறவின் அல்லல் அன்றியும் - புறாவுற்ற துன்ப மன்றியும்; பிறவும் இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை - பிறவு முற்ற துன்பம் பலவற்றையும் தீர்த்த சோழன் மரபினுள்ளாய்; இவர் - இவர்தாம்; புலன் உழு துண்மார் புன்கண் அஞ்சி - அறிவான் உழுதுண்ணும் கற்றோரது வறுமையை யஞ்சி; தமது பகுத்துண்ணும் தண் ணிழல் வாழ்நர் - தம்முடைய பொருளைப் பகுத்துண்ணும் குளிர்ந்த நிழலை யுடையராய் வாழ்வாரது மரபினுள்ளார்; களிறு கண்டழூஉம் - இவர் இப்பொழுது களிற்றைக் கண்டு தம் இளமையால் தாம் முன்பு வெருவி யழுகின்ற; அழாஅல் மறந்த புன் றலைச் சிறாஅர் - அழுகையை மறந்த புல்லிய தலையையுடைய சிறு பிள்ளைகள்; மன்று மருண்டு நோக்கி - மன்றை வெருவிப் பார்த்து; விருந்திற் புன்கண் நோவுடையர் - முன்பு அறியாத புதியதொரு வருத்தத்தை யுடையர்; கேட்டனை யாயின் - இது கேட்டா யாயின்; நீ வேட்டது செய்ம்மே - நீ விரும்பியதைச் செய்வாயாக எ-று.
தண்ணிழல் வாழ்நர் சிறாஅரென வியைப்பினு மமையும். அழால் களிறு கண்டு மறந்த வெனக் கூட்டுக. நீ புறா முதலாயினவற்றின் துயர் தீர்த்தற்கு உயிர்க் கொடை பூண்டோன் மருக னாதலானும், இவர் கற்றோர் வறுமை யஞ்சிப் பகுத்துண்ணும் தண்ணிழல் வாழ்நர் மரபினுள்ளாராதலானும் இவர் நின்னால் அருளத் தகி னல்லது முனியத்தகா ரென்பதாம்.
இதுவும் இவரைக் கொல்லாமற் சந்து செய்வித்தலின், துணை வஞ்சியாயிற்று.
விளக்கம்: களிறு கண்டழுதற்குக் காரணம் விளக்குதற்கு, இளமையால்
வெருவி யழும் என்றுரைத்தார். உயிரிழக்கும் துன்பமாதலின் அதனை
"விருந்திற் புன்கண்" என்றார். அழூஉம் அழாஅல் - அழுகின்ற அழுகை;
அழாஅல்: தொழிற்பெயர் செய்ம்மே என்றது, ஈற்றுமிசை யுகரங்கெட்ட
செய்யுமென் முற்றன்று; அது முன்னிலைக்கண்செல்லாது, "நின்மே"
யென்றாற்போல ஏவற்பொருட்கண் வந்தது.
-----------
47. சோழன் நெடுங்கிள்ளி
ஆசிரியர் கோவூர் கிழார், இந்த நெடுங்கிள்ளி, சோழன் நலங்கிள்ளியிடத்திலிருந்து போந்த இளந்தத்த னென்னும் புலவரை அவருடைய ஒற்றனெனக் கருதிக் கொல்லப் புகுந்தானாகக் கண்டு, இப்பாட்டால் அப் புலவரை உய்விப்பாராய், "வேந்தே, வரிசை நோக்கி வாழும் புலவரது பரிசில் வாழ்க்கை பிறர்க்குத் தீங்கு செய்வ தன்று; வள்ளியோரை நாடிச் சென்று அவரைப் பாடி அவர் தரும் பொருள் கொண்டு பகுத்துண்டு பல்லுயி ரோம்புவது பரிசிலர் செயல்; மண்ணாளும் செல்வமுடைய நும் போலும் வேந்தரை யொப்பக் கல்வியால் மாறுபட்டோரைத் தம் புலமையால் வென்று தலைமை பெறுவது அவர்க் கியல்பு" என்று கூறுகின்றார்.
வள்ளியோர்ப் படர்ந்து புள்ளிற் போகி
நெடிய வென்னாது சுரம்பல கடந்து
வடியா நாவின் வல்லாங்குப் பாடிப்
பெற்றது மகிழ்ந்து சுற்ற மருத்தி
ஓம்பா துண்டு கூம்பாது வீசி 5
வரிசைக்கு வருந்துமிப் பரிசில் வாழ்க்கை
பிறர்க்குத் தீதறிந் தன்றோ வின்றே, திறப்பட
நண்ணார் நாண வண்ணாந் தேகி
ஆங்கினி தொழுகி னல்ல தோங்குபுகழ்
மண்ணாள் செல்வ மெய்திய 10
நும்மோ ரன்ன செம்மலு முடைத்தே. (47)
திணையும் துறையு மவை. சோழன் நலங்கிள்ளியுழை நின்று உறையூர் புகுந்த இளந்தத்த னென்னும் புலவனைக்காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி ஒற்று வந்தாரென்று கொல்லப் புக்குழிக் கோவூர் கிழார் பாடி உய்யக்கொண்டது.
உரை: வள்ளியோர்ப் படர்ந்து - வண்மை யுடையோரை நினைத்து; புள்ளிற் போகி - பழுமரம் தேரும் பறவை போலப் போகி; நெடிய என்னாது சுரம் பல கடந்து - நெடிய வென்று கருதாது அரிய வழி பலவற்றையும் கழிந்து; வடியா நாவின் - திருந்தாத நாவால்; வல்லாங்குப் பாடி - தாம் வல்லபடி பாடி; பெற்றது மகிழ்ந்து- ஆண்டுப் பெற்ற பரிசிலான் மகிழ்ந்து; சுற்றம் அருத்தி - சுற்றத்தை யூட்டி; ஓம்பா துண்டு - தாமும் பொருளைப் பாதுகாவா துண்டு; கூம்பாது வீசி - உள்ளம் மலர்ந்து வழங்கி; வரிசைக்கு வருந்தும்இப்பரிசில் வாழ்க்கை - தம்மைப் புரப்போாராற் பெறும் சிறப்பு ஏதுவாகவருந்தும் இப் பரிசிலான் வாழும் வாழ்க்கை; பிறர்க்குத் தீதறித் தன்றோ இன்று - பிறர்க்குச் செய்யும் கொடுமை யறிந்ததோ வெனின்இல்லை; திறப்பட - கூறுபட; நண்ணார் நாண - கல்வி முகத்தால் தம்மொடு மலைந்தோர் நாண; அண்ணாந் தேகி - தமது கல்வியான் வென்று தலையெடுத்து நடந்து; ஆங்கு இனி தொழுகின் அல்லது - அவ்விடத்து இனிதாக ஒழுகி னல்லது; ஓங்கு புகழ் மண்ணாள் செல்வமெய்திய நும்மோ ரன்ன செம்மலும் உடைத்து - உயர்ந்த புகழையுடைய நிலமாளும் திருப்பொருந்திய நும்மை யொக்கும் தலைமையு முடைத்து எ-று.
ஓங்கிய வென்பதூஉம் செல்வமுடைத் தென்பதூஉம் பாடம். சுரம்பல கடந்து புள்ளிற் போகி யென மாறிக் கூட்டுக. பரசில்வாழ்க்கை நும்மோ ரன்ன செம்மலு முடைத்து; ஆதலால், நண்ணார் நாண இனி தொழுகி னல்லது பிறர்க்குத் தீதறித் தன்றோ இன்று எனக் கூட்டுக.
இக் கோவூர் கிழார் தாமும் பரிசில் வாழ்நருள் ஒருவராதலான் வடியாநாவின் வல்லாங்குப் பாடியெனப்0 பணிந்து கூறினா ரென்க.
விளக்கம்: படர்தல் - நினைத்தல், வள்ளியோரை நினைந்து செல்வோர்க்கு உவமமாகக் கூறலின், அதற்கேற்ப, பழுமரந் தேர்ந்து செல்லும் பறவையென உரை கூறினார். "பழுமரந் தேரும் பறவை போல" (பெரும்பாண்.20) என்றார் பிறரும். கூம்பாது வீசி யென்புழி, கூம்புதல் மனம் சுருங்குதல். பெருமிதமான நடைகொண்டு சென்று என்பது, அண்ணாந்தேகி யெனப்பட்டது. செம்மல், தலைமை செம்மை நிலையுமாம்.
---------
48. சேரமான் கோக்கோதை மார்பன்
சேர வேந்தருள் ஒருவனான இவன், கோதை மார்பன் என்னும் இயற்பெயரை யுடையவன் இவனுடைய தலைநகரம் தொண்டி யென்பது. இவனது நாடு குறிஞ்சி வளமும், மருத வளமும், நெய்தல் வளமும் பொருந்தியது. இவன் பொய்கையார் முதலிய புலவர் பெருமக்களை ஆதரித்து அவராற் பாடப்பெறும் சிறப்புப் பெற்றவன். இச் சேரமானுக்கும் கூடல் நகரிலிருந்து ஆட்சி புரிந்த பழையன் மாறன் என்ற பாண்டிய மன்னனுக்கும் பகைமை யுண்டு. அக் காலத்தே சோழ வேந்தனான கிள்ளி வளவன் பழையன் மாறன்பாற் பகைமைகொண்டு கூடலை முற்றுகை செய்து, மாறனை வென்று, அவனுடைய குதிரை யானை முதலிய பலவும் கைக்கொண்டான். தான் செய்தற்குரிய செயலைக் கிள்ளிவளவன் செய்தது கண்டு, இச் சேரமான் பேருவகையுற்றுச் சிறந்தான். இச் சேரனது வள்ளன்மை புலவர் பாடும் புகழ் பெற்றதாகும்.
இப் பாட்டின்கண் பொய்கையார், கோதை மார்பன்பாற் சென்று அவன் போரில் மேம்படும் புகழைப் பாடிப் பெருவளம் பெற்று வருபவர், வேறொரு புலவரைக் கண்டு, அவரை இச் சேரன்பால் ஆற்றுப் படுக்கின்றார்.
ஆசிரியர் பொய்கையார், இச் சேரனை இரண்டு பாட்டுக்கள் பாடிச் சிறப்பிக்கின்றார். இவருடைய ஊர் சேரநாட்டுத் தொண்டி நகரம். இந்நகரத்து வாயிற் கதவில் மூவன் என்பா னொருவனது பல்லைப் பிடுங்கி இழைத்திருக்கும் செய்தி யொன்றை இவர் குறிக்கின்றார். கோக்கோதை மார்பனை இவர் "கானலந் தொண்டிப் பொருநன்" என்றும், "தெறலருந்தானைப் பொறையன்" என்றும் குறிக்கின்றார். சோழன் செங்கணான் சேரமான் கணைக்கா லிரும்பொறையொடு செய்த போரைப் புகழ்ந்து பாடப்பட்டுள்ள களவழி நாற்பது இவர் பாடிய தென்பர்.
கோதை மார்பிற் கோதை யானும்
கோதையைப் புணர்ந்தோர் கோதை யானும்
மாக்கழி மலர்ந்த நெய்த லானும்
கள்நா றும்மே கானலந் தொண்டி
அன்னோற் படர்தி யாயி னீயும் 5
எம்மு முள்ளுமோ முதுவா யிரவல
அமர்மேம் படூஉங் காலைநின்
புகழ்மேம் படுநனைக் கண்டன மெனவே. (48)
திணை: பாடாண்டிணை. துறை: புலவராற்றுப்படை. சேரமான்கோக்கோதை மார்பனைப் பொய்கையார் பாடியது.
உரை: கோதை மார்பின் கோதையானும் - கோதையுடைய மார் பிற்கணிந்த கோதையானும்; கோதையைப் புணர்ந்தோர் கோதை யானும் - அக் கோதையைப் புணர்ந்த மகளிர் சூடிய கோதையானும்;மாக்கழி மலர்ந்த நெய்தலானும் - கரிய கழியின்கண் மலர்ந்த நெய்தற் பூவானும்; கள் நாறும் கானலம் தொண்டி - தேன் நாறாநிற்கும் கானலையுடைய தொண்டி; அஃது எம் மூர் - அஃது எம்முடைய வூர்; அவன் எம் இறைவன் - அவன் எம்முடைய தலைவன்; அன்னோற் படர்தி யாயின் - அத் தன்மையோனிடத்தே போகின்றாயாயின்; நீயும் எம்மும் உள்ளுமோ - நீயும் எம்மையும் நினைப்பாயாக; முது வாய் இரவல - முதிய வாய்மையையுடைய இரவல; அமர் மேம்படூஉங் காலை - நீ அமரின்கண் மேம்படுங் காலத்து; நின் புகழ் மேம்படுநனைக் கண்டனம் என - நினக்கு உளதாகிய புகழை மேம்படுத்துமவனைக் கண்டேம் யாமெனச் சொல்லி எ-று.
இரவல, நீயும் அன்னோற் படர்குவையாயின், நின் புகழ் மேம்படு நனைக் கண்டன மென எம்மையும் உள்ளெனக் கூட்டுக. கண்டன மென எம்மும் உள்ளென்றாரேனும், உள்ளிக் கண்டனமெனச் சொல்லென்பது கருத்தாகக் கொள்க. மோ: முன்னிலை யசைச்சொல். நீயு மென்பதூஉ எம்மு மென்பதூஉம் எச்சவும்மை.
தலைவனது இயல்பையும் ஊரையும் கூறி, முதுவாயிரவல எம்முள் உள்ளெனத் தன் தலைமை தோன்றக் கூறினமையின், இது புலவராற்றுப்படையாயிற்று.
விளக்கம்: இடையறாச் சேறுடைமையால், கருத்திருக்கும் கழியை "மாக்கழி" யென்றார்; குவளை முதலிய பூக்களின் மிகுதியால் கருத்துத் தோன்றுதல்பற்றி இவ்வாறு கூறப்பட்டதென்றுமாம். அறிவு முதிர்ந்த வாய்மையையுடைய இரவலன் (முருகு.284உரை) என்பர் நச்சினார்க்கினியர். உள்ளு மென்பதை எச்சப்படுத்தி, உள்ளிக் கண்டன மென இயைத்துக் கொள்ளவேண்டு மென்பது கருத்து.
------------
49. சேரமான் கோக்கோதை மார்பன்
ஒருகால், சேரமான் கோக்கோதை மார்பனது நாட்டு நலம்பற்றி. நல்லிசைச் சான்றோரிடையே பேச்சு நிகழ்ந்தது. அவன் நாடு நானில வளமுடைய தென்பாராய், அங்கே இருந்த ஆசிரியர் பொய்கையார், இச் சேரமான் சேர நாட்டவனாயினும், முல்லையும் மருதமும் நெய்தலுமாகிய பல்வகை நாடுகளையு முடையன்; அதனால் அவனை நாடனென்றோ, ஊரனென்றோ, சேர்ப்ப னென்றோ வரையறுத்துக் கூறலாகாது; குறிஞ்சி நிலத்துப் புனவர் தட்டையைப் புடைப்பாராயின் மருத நிலத்துக் கழனியிலும் கடல்சார்ந்த நெய்த னிலத்திலும் உள்ள புள்ளினங்கள் வெருவி யெழுந்தோடும் என்று இப்பாட்டால் வற்புறுத்தினார்.
நாட னென்கோ வூர னென்கோ
பாடிமிழ் பனிக்கடற் சேர்ப்ப னென்கோ
யாங்கன மொழிகோ வோங்குவாட் கோதையைப்
புனவர் தட்டை புடைப்பி னயல
திறங்குகதி ரலமரு கழனியும் 5
பிறங்குநீர்ச் சேர்ப்பினும் புள்ளொருங் கெழுமே. (49)
திணையும் துறையு மவை. துறை: இயன்மொழியுமாம். அவனை அவர் பாடியது.
உரை: நாடன் என்கோ - குறிஞ்சி நில முடைமையால் நாடனென்று சொல்லுவேனோ; ஊரன் என்கோ - மருத நிலமுடைமையால் ஊரனென்று சொல்லுவேனோ; பாடிமிழ் பனிக்கடல் சேர்ப்பன் என்கோ - நெய்தல் நில முடைமையால் ஒலி முழங்குகின்ற குளிர்ந்த கடலையுடைய சேர்ப்பனென்று சொல்லுவேனோ; யாங்கனம்மொழிகோ - எவ்வாறு சொல்லுவேன்; ஓங்கு வாள் கோதையை- மேம்பட்ட வாளையுடைய கோதையை; புனவர் தட்டை புடைப்பின் - புனங்காப்போர் கிளிகடி கருவியைப் புடைப்பின்; அயலது இறங்கு கதிர் அலமரு கழனியும் - அப் புனத்திற் கயலதாகிய வளைந்த நெற்கதிர் சுழலும் வயலின் கண்ணும்; பிறங்கு நீர்ச் சேர்ப்பினும் - மிக்க நீரையுடைய கடற்கரையின்கண்ணும் உளவாகிய; புள் ஒருங்கு எழும் - புட்கள் சேர வெழுமாதலான் எ-று.
புனவர் தட்டை புடைப்பின் எனக் குறிஞ்சிக்கும் முல்லைக்கும் ஏற்பக் கூறினமையான், நாட னென்பதூஉம் அவ்விரண்டு நிலத்துக்கும் கொள்ளப்படும்; எனவே, முல்லை நிலமு முடைய னென்றவாறாம். புனவர் தட்டை புடைப்பின் கழனியிலும் சேர்ப்பினும் புள்ளெழு மாதலால், கோதையை யாங்கன் மொழிகோ வெனக் கூட்டுக.
இது. நானிலமு முடைய னாதலிற் பெருஞ் செல்வ முடையன்; நீ அவன்பாற் செல்லென ஆற்றுப்படுத்தவாறு; அவனது இயல்பைப் புகழ்ந்தமையான் இயன்மொழியு மாயிற்று.
விளக்கம்: குறிஞ்சி, முல்லை நிலங்கட்குரிய தலைமகனை நாடன் என்றும்,மருத நிலக் கிழவனை ஊர னென்றும், நெய்தல் நிலத் தலைவனைச் சேர்ப்ப னென்றும் கூறும் வழக்குப்பறி, "நாட னென்கோ ஊர னென்கோ" என்றதற்கு இவ்வாறு உரை கூறப்பட்டது. "கணங் கொளருவிக் கான்கெழு நாடன், குறும்பொறை நாடன் நல்வய லூரன், தண்கடற் சேர்ப்பன்" (ஐங்: 183) எனப் பிறரும் கூறுதல் காண்க. பாலை விளைநல முடையதன் றாதலால், அதனை யொழித்து ஏனை நானிலங்களே கூறப்பட்டன.
-------------
50. சேரமான் தகடூரெறிந்த பெருஞ்சேர லிரும்பொறை
இப் பெருஞ்சேர லிரும்பொறை செல்வக் கடுங்கோ வாழியாதன் மகன்.இவன் தாய் வேளாவிக் கோமான் பதுமன் தேவி யெனப் பதிற்றுப்பத்தின் பதிகம் கூறுகிறது. இவன் தகடூருக்குரிய அதியமானொடு பொருது அவனது தகடூரை யெறிந்து கொண்டதனால் இவ்வாறு சிறப்பித்துக் கூறப்படுகின்றான். இவனைப் பதிற்றுப்பத்திற் காணப்படும் எட்டாம் பத்தைப் பாடிய அரிசில்கிழாருக்கு இவன் தன் கோயிலாளுடன் வெளிப் போந்து கோயிலில்உள்ளனவும் அரசுங் கொள்கவென வழங்கினான். அவர் அவற்றை ஏலாது வேறாகக் கொடுத்த ஒன்பது நூறாயிரம் காணத்தைப் பெற்றுக்கொண்டு தமக்கு இவன் கொடுத்த அரசினை இவனையே மேற்கொண்டாளுமாறு வேண்டி அமைச்சுப் பூண்டார். இவன் பதினேழியாண்டு அரசு வீற்றிருந்தான். இவன் ஆட்சிக் காலத்தே,புலவர் பலரும் இவனால் உயிரினும் சிறந்தாராகப் பாராட்டப் பட்டனர். ஒருகால், இவனைக் காண்பதற்கு வந்திருந்த மோசிகீரனார் என்னும் சான்றோர், வெற்றி முரசு வைக்கும் கட்டிலின்மேல் தன்னை யறியாது கிடந்து உறங்கிவிட்டார். வெற்றித் திரு வீற்றிருக்கும் கட்டிலின்மேல் வேறு பிறர் இருந்து உறங்குவதுகுற்றமாகும். அது செய்வோர், கொலைத் தண்டத்துக் குரியவராவர். இஃது அக்கால அரசு முறை. இதனை யறியாதவர் புலவர். அவர் உறங்கியதை யறிந்த இவ்விரும்பொறை அவரைக் கொலை புரியாது, இனிதே உறங்குமாறு அவர்க்குக் கவரிகொண்டு வீசலுற்றான். இதனால், இவன் வெற்றித் திருவும் பிறவும் புலவர் புலமை மாண்பு நோக்கத் தாழ்ந்தன வெனக் கருதும் கருத்தினனாதலை நன்கறியலாம்.
இப் பாட்டின்கண். முரசு கட்டிலின்கண் அறியாது ஏறி உறங்கிக் கிடந்த தனக்கு உறக்கம் தெளியுங்காறும் சாமரை வீசிய சேரமானது பேரருளை வியந்து, மோசிகீரனார், "முரசினுடைய மென்பூஞ் சேக்கைக் கண் அறியா தேறிய என்னை, வாளால் இருபாற் படுப்பதைச் செய்யாதருளிய தொன்றே நீ தமிழ் முழுதும் நன்கறிந்த சிறப்புக்குப் போதிய சான்றாகும். அதனோ டமையாது, என்னை யணுக வந்து, முழவுத்தோள் கொண்டு, கவரி வீசியதற்குக் காரணம் யாதுகொல்லோ? இவ்வுலகத்தே இசையுடையோர்க் கல்லது உயர்நிலை யுலகத்துள் உறைவிடம் இல்லையெனச் சான்றோர் கூறுதலை விளங்கக் கேட்ட கேள்விப்பயனோ நீ இங்கே இதனைச் செய்தற்குக் காரணம்" எனக் கூறிப் பாராட்டுகின்றார்.
ஆசிரியர் மோசி கீரனார், மோசி யென்பாருடைய மகனார்போலும் இனி, மோசு கீரனார் என்று கொண்டு, மோசுகுடி யென்னும் ஊருண்மை பற்றி அவ் வூரினராகக் கருதுபவரும் உண்டு. இவர், சேர நாட்டு வேந்தனையே யன்றி, அவன் நாட்டிற்கடுத்த கொண்கான நாட்டுத் தலைவனையும் சிறப்பித்துப் பாடியுள்ளார். அவன் கொண்கானங் கிழான் எனப்படுவன். "உலகத்து வாழும் மக்கட்கு நெல்லும் நீருமன்று உயிர்; மக்கள் மன்னனையே உயிராகக்கொண்டு வாழ்வர்; அதனால், வேந்தன், "யான் உலகிற் குயிராவேன் என்றறிந் தொழுகுதல் கடமையாகும்" என்று பெருஞ்சேர லிரும்பொறைக்கு வற்புறுத்தி யுரைத்தவர் இவரே. கொண்கானங் கிழானைக் காணச்சென்ற காலத்து, "முடிவேந்தர்பால் நெருங்கிப் பயிலும் இவர், குறுநிலக் கிழாரைப் பாடிப் பரிசில் பெறல் வேண்டாவே" என்றொரு கேள்வி யெழுந்தது. அதற்கு விடையிறுப்பார் போல, கடலருகே வாழினும் நீர் வேட்கையுற்றோர் சிற்றூறலையே நாடுநர்; அதுபோல, அசரர் உழையராகிய வழியும் புலவர் உயர்ந்த வள்ளியோரையே விரும்பிச் செல்வர்; எனக்கு ஈயென இரத்தல் அரிதாயினும் இக்கொண்கானம் பாடுதல் எளிதுகாண்" என்று பாடுகின்றார்.
மாசற விசித்த வார்புறு வள்பின்
மைபடு மருங்குல் பொலிய மஞ்ஞை
ஒலிநெடும் பீலி யொண்பொறி மணித்தார்
பொலங்குழை யுழிஞையொடு பொலியச் சூட்டிக்
குருதி வேட்கை யுருகெழு முரசம் 5
மண்ணி வாரா வளவை யெண்ணெய்
நுரைமுகந் தன்ன மென்பூஞ் சேக்கை
அறியா தேறிய வென்னைத் தெறுவர
இருபாற் படுக்குநின் வாள்வா யொழித்ததை
அதூஉஞ் சாலுநற் றமிழ்முழு தறிதல் 10
அதனொடு மமையா தணுக வந்துநின்
மதனுடை முழவுத்தோ ளோச்சித் தண்ணென
வீசி யோயே வியலிடங் கமழ
இவணிசை யுடையோர்க் கல்ல தவண
துயர்நிலை யுலகத் துறையு ளின்மை 15
விளங்கக் கேட்ட மாறுகொல்
வலம்படு குருசினீ யீங்கிது செயலே. (50)
திணை: அது. துறை: இயன்மொழி. சேரமான் தகடூரெறிந்த பெருஞ்சேர லிரும்பொறை முரசு கட்டி லறியா தேறிய மோசிகீரனைத் தவறு செய்யாது, அவன் துயிலெழுந்துணையும் கவரி கொண்டு வீசீயானை மோசிகீரனார் பாடியது.
உரை: மாசற விசித்த - குற்றந் தீர வலித்துப் பிணித்த; வார்புறுவள்பின் - வாரப்பட்ட வாரையுடைய; மைபடு மருங்குல் பொலிய - கருமரத்தாற் செய்தலான் இருட்சி பொருந்திய பக்கம் பொலிவு பெற; மஞ்ஞை ஒலி நெடும் பீலி ஒண் பொறி - மயிலினது தழைத்த நெடிய பீலியால் தொடுக்கப்பட்ட ஒள்ளிய பொறியை யுடைத்தாகிய; மணித் தார் - நீல மணிபோலும் நிறத்தையுடைய தாரை; பொலங்குழை உழிஞையொடு பொலியச் சூட்டி - பொற்றளிரையுடைய உழிஞையுடனே பொலியச் சூட்டப்பட்டு; குருதி வேட்கை உரு கெழு முரசம் - குருதிப் பலிகொள்ளும் விருப்பத்தையுடைய உட்குப் பொருந்திய வீரமுரசம்; மண்ணி வாரா அளவை - நீராடி வருவதன் முன்னே; எண்ணெய் நுரை முகந் தன்ன மென்பூஞ் சேக்கை - எண்ணெயினது நுரையை முகந்தாற் போன்ற மெல்லிய பூவையுடைய கட்டிலின்கண்ணே; அறியா தேறிய என்னை - இதனை முரசு கட்டிலென்ப தறியாது ஏறிக் கிடந்த என்னை; தெறு வர இருபாற் படுக்கும் நின் வாள் வாய் ஒழித்ததை - வெகுட்சி தோன்றஇரு கூறாக்கும் நின்னுடைய வாளை வாயை மாற்றியதாகிய; அதூஉம் சாலும் - அதுவும் அமையும்; நல் தமிழ் முழு தறிதல் - நல்ல தமிழ் முழுதும் அறிந்தமைக்கு; அதனொடும் அமையாது - அவ் வெகுட்சி யொழிந்து அதனாலும் அமையாதே; அணுக வந்து - குறுக வந்து; நின் மதனுடை முழவுத் தோள் ஓச்சி - நினது வலியையுடைய முழவுபோலும் தோளை யெடுத்து; தண்ணென வீசியோய் - சாமரத்தாற் குளிர வீசினாய்; வியலிடம் கமழ - இவ் வகன்ற உலகத்தின்கண்ணே பரக்கும் பரிசு; இவண் இசை யுடையோர்க் கல்லது - இவ் வுலகத்துப் புகழுடையோர்க் கல்லது; அவணது - அவ்விடத்தாகிய; உயர் நிலை உலகத்துறையுள் இன்மை - உயர்ந்த நிலைமையுடைய உலகத்தின் கண் உறைதலில்லாமையை; விளங்கக் கேட்ட மாறு கொல் - தெரியக் கேட்ட பரிசாலேயோ; வலம் படு குருசில் - வெற்றி பொருந்தப்பட்ட தலைவர்; நீ ஈங்கு இது செயல் -நீ இவ்விடத்து இச் சாமரையை வீசுதல், அதற்குக் காரணம் சொல்லுவாயாக எ-று.
சூட்டி யென்பதனைச் சூட்ட வென்று திரிப்பினு மமையும். உழிஞை, கொற்றான்; அது குட நாட்டார் வழக்கு முழவுத்தோளோச்சி யெனவும் தண்ணென வீசியோ யெனவும் கூறியவாற்றால் சாமரை யென்பது பெற்றாம். கமழ்தல். ஈண்டுப் பரத்தற்பொருட்டாய் நின்றது. தமிழென்பதற்குத் தமிழ்நாடெனினுமமையும். குருசில், நீ இது செய்தல், இசையுடையோர்க் கல்லது உறையுனின்மை விளங்கக் கேட்ட மாறுகொல் எனக் கூட்டுக. எண்ணென்பது கருத்தெனவுமாம். எண்ணி யென்று பாடமாயின் கருதி யென்க.
விளக்கம்: மைபடு மருங்குல் என்புழி மருங்குல் பக்க மாதலால், மைபடு பக்க மெனக் கொண்டார்; மை, கருமை. இதற்குக் காரணம் கருமரத்தாற் செய்யப்பட்டது என்கின்றார். பொலங் குழை யுழிஞை, பொன்னாற் செய்யப்பட்ட உழிஞை யென்றும், குழை யென்பது அதற்கு அடையென்றும் கொள்ளலாம். பொற்றளிரையுடைய உழிஞை யென்பர் உரைகாரர். உழிஞைப்பூ பொன்னிறமுடையது. முரசுறை கடவுட்குக் குருதிப் பலி தருதல் மரபாதலால், "குருதி வேட்கை யுருகெழு முரசம்" என்றார். தெறுதல், வெகுளுதல், சாமரை வீசுவது தண்ணென்ற காற்றெழுப்புங் குறிப்பினாலாதலால், "தண்ணென வீசியோய்" என்றார். வெகுட்சியால் வெம்மை செய்தற்குரிய நீ, சாமரையால் தண்ணென வீசினாய் என்பதாம். இம்மையிற் புகழுடையோர்க் கல்லது மறுமைக்கண் துறக்கவாழ் வில்லை யென்பதுபற்றி, "இவணிசை யுடையோர்க் கல்லது அவணது உயர்நிலை யுலகத் துறையுள்" இல்லை யென்பது ஈண்டுக் கூறப்படுகிறது. தமிழ் முழுதும் என்றது, இய லிசை நாடக மென்ற முத்தமிழையும் குறித்து நின்றது. தமிழ் நாடு முழுவதும் என்று கூறலும் பொருந்தும் என்றற்குத் "தமிழென்பதற்குத் தமிழ் நாடெனினு மமையும்" என்றார். தண்ணென வென்பதற்கு வேறாக, எண்ணென வென்றும் எண்ணி யென்றும் பாடமுண்டு. அக்காலை, "எண்ணென்பது கருத்தெனவுமாம்; எண்ணி யென்று பாடமாயின் கருதி யென்க" என்று கூறுக வென்றார்.
---
51. பாண்டியன் கூடாரத்துத் துஞ்சிய இளம் வழுதி
கூடார மென்பது பாண்டிநாட்டி லிருந்ததோர் ஊர். இவ் வேந்தன் தன் நாட்டிற்கு வடக்கிலிருந்த வேந்தருடன் பெரும்போ ருடற்றி வெற்றி மேம்பட்டவன். இவனுடைய போர்த் திறலைவியந்து, ஐயூர் முடவனார், மதுரை மருதனின நாகனார் என்ற இரு சான்றோரும் அழகிய பாட்டுக்களைப் பாடியிருக்கின்றனர். இவன் காலத்தே, சோழ நாட்டைக் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் ஆட்சி புரிந்து வந்தான். இவ் வழுதிக்குப் பின் வந்த பாண்டி வேந்தன் இலவந்தி கைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன், நாஞ்சில்மலைத் தலைவனான வள்ளு வனும் இவன் காலத்தவனே.
ஆசிரியர் முடவனார் ஐயூர் என்னும் ஊரினர். இவர் முடவ ரெனப் படுதலால், நடந்து செல்ல இயலாதவரென்றும், இதனால் இவர் தாமான் தோன்றிக்கோன் என்பானை யடைந்து வண்டியிழுத்தற்குப் பகடு பல தரப் பெற்றன ரென்றும் கூறுவர். தாம் கிள்ளி வளவனைக் காணச் சென்றதாகவும், இடை வழியில் மாட்டாமை வந்துற," கிள்ளி வளவனுள்ளியவற் படர்ந்தும், செல்லேன் செல்லேன் பிறர்முக நோக்கேன்" என்று வருந்தி ஒருபால் இருப்ப, அதனை யரிந்த தோன்றிக்கோன் இவர்க்குச் சிறப்புச் செய்ததாகவும்; இவர் அவனை."கடுந்தேர் அள்ளற் கசாவா நோன்சுவல், பகடே யத்தை யான் வேண்டி வந்ததுவென" விரும்பியதாகவும், அவன் "விசும்பின் மீன்பூத் தன்ன உருவப் பன்னிரை, ஊர்தியொடு நல்கி"னானெனவும் இவரே பிறிதோரிடத்திற் (புறம்:399) பாடியுள்ளார். இப்பாண்டியன் கூட்காரத்துத் துஞ்சிய மாறன் வழுதி ஆட்சி புரிந்து வருகையில், தன் னேவல் வழிநின்று திறை செலுத்தி வாழ்தலின்றிப் பகைத்துப் போருடற்றிய வேந்தரது வலியினை யழித்துத் தன்னாணையே அவர் நாட்டினும் செல்வித்தான். அதுகண்ட ஐயூர் முடவனார், "வேந்தே, நீர் மிகின் சிறையும், தீ மிகின் நிழலும், காற்று மிகின் வலியும் இல்லாதவாறு போல, நீ மிக்கெழின் எதிர்ந்துய்யும் வேந்தர் பிறரில்லை; எவரேனும் உளராயின், அவர் வாழ்வும் அரணும், ஈயலும் அதன் புற்றும் போலச் சிறிது போதிற் கெடுதல் திண்ணம்" என இப் பாட்டின்கண் புகழ்ந்து பாராட்டுகின்றார்.
நீர்மிகிற் சிறையு மில்லை தீமிகின்
மன்னுயிர் நிழற்று நிழலு மில்லை
வளிமிகின் வலியு மில்லை யொளிமிக்
கவற்றோ ரன்ன சினப்போர் வழுதி
தண்டமிழ்பொதுவெனப்பொறாஅன்போரெதிர்ந்து 5
கொண்டி வேண்டுவ னாயிற் கொள்கெனக்
கொடுத்த மன்னர் நடுக்கற் றனரே
அளியரோ வளியரவ னளியிழந் தோரே
நுண்பல சிதலை யரிதுமுயன் றெடுத்த
செம்புற் றீயல் போல 10
ஒருபகல் வாழ்க்கைக் குலமரு வோரே. (51)
திணை: வாகை. துறை: அரசவாகை. பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதியை ஐயூர் முடவனார் பாடியது.
உரை: நீர் மிகின் சிறையு மில்லை - நீர் மிகு மாயின் அதனைத் தாங்கும் அரணு மில்லை; தீ மிகின் மன்னுயிர் நிழற்றும் நிழலும் இல்லை- நெருப்பு மிகுமாயின் உலகத்து நிலை பெற்ற உயிர்களை நிழல் செய்யும் நிழலு மில்லை;வளி மிகின் வலியும் இல்லை - காற்று மிகுமாயின் அதனைப் பொறுக்கும் வலியு மில்லை; ஒளி மிக்கு - விளக்கம் மிக்கு; அவற்றோர் அன்ன சினப் போர் வழுதி- அவற்றை யொத்த சினம் பொருந்திய போரையுடைய வழுதி; தண்டமிழ் பொதுவெனப் பொறாஅன்- குளிர்ந்த தமிழ்நாடு மூவேந்தர்க்கும் பொது வென்று கூறப் பொறானாய்; போரெதிர்ந்து - போரை யேற்று; கொண்டி வேண்டுவனாயின் - திறையை வேண்டுவனாயின்; கொள்க எனக் கொடுத்த மன்னர் நடுக்கற் றனர் - கொள்க வென்று சொல்லி முன்னே கொடுத்த மன்னர் நடுக்கம் தீர்ந்தார்; அளியரோ அளியர் - கொடாமையின் யாவராலும் மிக இரங்கத்தக்கார்; அவன் அளி யிழந் தோர்- அவனது அருளை யிழந்த அரசர்; நுண் பல சிதலை - நுண்ணிய பல கறையான்; அரிது முயன்று எடுத்த - அரிதாக உழந்தெடுக்கப்பட்ட; செம்புற் றீயல் போல - செம்புற்றினின்றும் புறப்பட்ட ஈயலைப்போல; ஒரு பகல் வாழ்க்கைக்கு உலமருவோர் - ஒரு பகற் பொழுதின்கண் வாழும் உயிர்வாழ்க்கையின் பொருட்டுச் சுழல்வோர் எ-று
வழுதி, தமிழ் பொதுவெனப் பொறானாய்க் கொண்டி வேண்டுவனாயின், கொடுத்த மன்னர் நடுக்கற்றனர்; கொடாமையின் அவன் அளியிழந்தோர், ஒரு பகல் வாழ்க்கைக் குலமருவோர்; ஆதாலான் அவர் அளியரோ அளியர் எனக் கூட்டி வினை முடிவு செய்க; அவன் அளியிழந்தோராகிய உலமருவோர் அளிய ரெனக் கூட்டி யுஅரைப்பினு மமையும். அளியரோ அளிய ரென இரங்கற்குறிப்புத் தோன்ற அடுக்கி நின்றது.
விளக்கம்: மாறன் வழுதி போர் வேட்டெழுந்த எழுச்சி காண் போர் தம்முட் கூறுவதுபோல் அமைந்துள்ளது. அரணழித்தற்கு நீர் மிகுதியும், வெம்மை செய்தற்குத் தீ மிகுதியும், மோதி முருக்குதற்கு வளியும் உவமமாயின. கொள்ளப்படுவது கொண்டி; அஃது ஈண்டுக் கொள்ளப்படும் திறைமேல் நின்றது. திறையை முன்னே செலுத்தி விட்டு இதனைக் கொள்க எனப் பின்னே வாயாற் சொல்லி வேண்டுதல் திறை செலுத்தும் முறையாதலால், "கொள்க வென்று சொல்லி முன்னே கொடுத்த மன்னர்" என வுரைத்தார். கொடாதவர் ஈயல் போல ஒரு பகல் வாழ்க்கைக்கு உலமருவோராவர் என்க. அவரது உலமரும் நிலையினைக் கண்டு இரங்கிக் கூறுதலின் "அளியரோ வளியர்" என்று இயம்புகின்றார். திறை செலுத்தாத வேந்தர்க்கு ஈயலை உவமை கூறலின், அவரது செல்வ வரண், அரிது, முயன்றெடுத்த செம்புற்றையொக்கு மென்றவாறாம். சுழற்சிப் பொருளதாகிய அலமரல் என்பது உலமரல் என வந்தது.
------------
52. பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி
ஆசிரியர் மருதன் இளநாகனார், பாண்டி வேந்தர்பால் பேரன்பும் பெருமதிப்பும் உடையர். பாண்டி நாட்டு மக்கள் அயரும் விழாக்களையும் பாண்டி வேந்தருடைய போர்த் திறங்களையும் பலபடியாகப் புகழ்ந்து பாடும் பண்பினர். பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை இறைவனுடைய "பிறைநுதல் விளங்கு மொருகண் போல வேந்து மேம்பட்ட பூந்தார் மாற" என்று பாராட்டுகின்றார். "நண்ணார் அரண்தலை மதிலராகவும் முரசு கொண்டு, ஓம்பரண் கடந்த அடுபோர்ச் செழியன் பெரும்பெயர்க் கூடல்" என்று கூடல் நகரையும், நான்மாடக் கூடல் மகளிரும் மைந்தரும், தேனிமிர் காவிற் புணர்ந்திருந் தாடுமார், ஆனா விருப்போ டணி யயர்ப காமற்கௌ வேனில் விருந்தெதிர் கொண்"டென அந்நகரவர் காமவேள் விழா வயர்தலும் பிறவும் கூறுகின்றார். இவரால் சிறுகுடி வாணனும், வேளிரும், நாஞ்சில் வள்ளுவனும் பிறரும் பாராட்டப்படுகின்றனர். அந்துவனார் முருகவேட்குரிய பரங்குன்றத்தைப் புகழ்ந்து பாடிய சிறப்பை இவர் வியந்து கூறுகின்றார். இவர் பாடியுள்ள பாட்டுக்கள் மிக்க இலக்கிய நலம் சிறந்தனவாகும். பாண்டி நாட்டுக்கு வடக்கிலுள்ள வேந்தர் இந்த மாறன் வழுதியின் போராண்மை கேட்டு அஞ்சும் திறத்தை இப்பாட்டின்கண் நயமுறக் கூறுகின்றார். இவர் பாடிய பாட்டுக்களை நோக்கின், இவர் பாணி நாட்டுத் திருச் செந்தூர்க் கருகில் பிறந்தவராகலாம் என்று நினைத்தற் கிடமுண்டாகிறது. மதுரை இளநாகனார் மதுரை மருதனிளநாகனார் என்றும் கூறப்படுவர். மருதம் பாடுதலில் வல்லவர். இவர் தந்தை பெயர் மருதன் என்பது. இரு திறனும் பொருந்த இவர் மருதனிளநாகனா ரெனப்படுகின்றார். இளநாகன் என்பது இவரது இயற்பெயர். இப் பாட்டின்கண், பாண்டியன் கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி தன் நாட்டின் பரப்பினை மிகுதிப்படுத்தும் கருத்தினனாய் போர்க்கெழுதலை யறிந்து, "வேந்தே, ஊண் வேட்கை யுள்ளத்தைச் செலுத்த, அது குறித்துத்தான் வேண்டு மருங்கில் புலி வேட்டெழுந்ததுபோல, நீ வடபுல நோக்கிப் போர்வேட் டெழுந்தனை; அப்புலத்தே நின்னைப் போரெதிரும் வேந்தர் யாரோ? அறியேம்; அவரது நாடு தன் பெரு நல் யாணர் வளம் இழந்து கானக்கோழி வாழும் காடாகி விளியு மென்பதை நன்கறிவேம்" எனப் பாராட்டிப் பாடியுள்ளார்.
அணங்குடை நெடுங்கோட் டளையக முனைஇ
முணங்குநிமிர் வயமான் முழுவலி யொருத்தல்
ஊனசை யுள்ளந் துரப்ப விரைகுறித்துத்
தான்வேண்டு மருங்கின் வேட்டெழுந் தாங்கு
வடபுல மன்னர் வாட வடல்குறித் 5
தின்னா வெம்போ ரியறேர் வழுதி
இதுநீ கண்ணிய தாயி னிருநிலத்
தியார்கொ லளியர் தாமே யூர்தொறும்
மீன்சுடு புகையின் புலவுநாறு நெடுங்கொடி
வயலுழை மருதின் வாங்குசினை வலக்கும் 10
பெருநல் யாணரி னொரீஇ யினியே
கலிகெழு கடவுள் கந்தங் கைவிடப்
பலிகண் மாறிய பாழ்படு பொதியில்
நரைமூ தாளர் நாயிடக் குழிந்த
வல்லி னல்லக நிறையப் பல்பொறிக் 15
கான வாரண மீனும்
காடாகி விளியு நாடுடை யோரே (52)
திணையும் துறையு மவை. அவனை மருதனிளநாகனார் பாடியது.
உரை:அணங்குடை நெடுங் கோட்டு அளையகம் - தெய்வங்களை யுடைத்தாகிய நெடிய சிகரங்களையுடைய மலையின் கண்ணே முழையின்கண்; முனைஇ - துயிலை வெறுத்து; முணங்கு நிமிர் வயமான் முழு வலி யொருத்தல்- மூரி நிமிர்ந்த புலியாகிய நிரம்பிய வலியையுடைய ஏற்றை; ஊன் நசை உள்ளம் துரப்ப - ஊனை விரும்பிய வுள்ளம் செலுத்துதலான்; இரை குறித்து - அவ் விரையைக் கருதி; தான் வேண்டு மருங்கின் வேட்டெழுந் தாங்கு - தான் வேண்டிய விடத்தே விரும்பிச் சென்றாற் போல; வட புல மன்னர் வாட அடல் குறித்து - வடநாட்டு வேந்தர் வாட அவரைக் கொல்லுதலைக் கருதி; இன்னா வெம் போர் இயல்தேர் வழுதி - இன்னாத வெய்ய போரைச் செய்யும் இயற்றப்பட்ட தேரினையுடைய வழுதி; நீ கண்ணியது இதுவாயின் - நீ கருதியது இப் போராயின்; இரு நிலத்து யார் கொல் அளியர்தாம் - பெரிய வுலகத்தின்கண் யாரோ அளிக்கத் தக்கார் தாம்; ஊர் தொறும் மீன் சுடு புகையின் - ஊர்தோறும் மீன் சுடுகின்ற புகையினது; புலவு நாறு நெடுங் கொடி - புலால் நாறும் நெடிய ஒழுங்கு; வய லுழை மருதின் வாங்கு சினை வலக்கும் - வயலிடத்து மருதினது வளைந்த கோட்டைச் சூழும்; பெரு நல்யாணரின் ஒரீஇ - பெரிய நல்ல புது வருவாயின் நீங்கி; இனி - இப்பொழுது; கலி கெழு கடவுள் கந்தம் கைவிட - முழவு முதலாகிய ஒலி பொருந்திய தெய்வங்கள் தூணத்தைக் கைவிடும் பரிசு; பலி கண் மாறிய பாழ் படு பொதியில் - பலி இடத்தின் மாறிய பாழ்பட்ட அம்பலத்தின்கண்; நரை மூதாளர் நாய் இடக் குழிந்த - முற்காலத்து நரையையுடைய முதியோர் சூதாடுங் கருவியை இடுதலாற் குழிந்த; வல்லின் நல்லகம் நிறைய - அச் சூது கருவியினது நல்ல மனையாகிய இடம் நிறைய; பல் பொறிக்கான வாரணம் ஈனும் - பல பொறியையுடைய காட்டுக் கோழி முட்டையிடும்; காடாகி விளியும் - காடாய்க் கெடும்; நாடுடையோர்-, எ-று.
கலி, புகழும் அரவமுமாம். வழுதி, அடல் குறித்து நீ கருதியது இதுவாயின், விளியும் நாடுடையோர்தாம் யார் கொல் அளியர் எனக் கூட்டுக.
விளக்கம்: முழையின்கண் இருக்குங்கால் உறங்குவது தவிரப் பிறிதியாதும் செய்யாதாகலின், முழையின் நீங்கி வெளிப்படும் புலியை "அளையகம் முனைஇ" வந்த தென்றாராக, உரைகாரர், "முழையின்கண் துயிலை வெறுத்து" எனவுரை கூறினார். முனைவு - வெறுப்பு. வெறுக்கப்படுவது துயில்; முழையன்று ஊன் நசையுள்ளம் துரப்ப - வென்பதற்கு ஊன்மேற் சென்ற விருப்பம் அதன் உள்ளத்தைச் செலுத்துதலான் எனினு மமையும். வடபுல வேந்தரை அடல் குறித் தெழுதலால், அவர் வாடுதலும், அதனால் விளையும் போர் துன்பம் பயத்தலும் பயனாதலால், "வாட இன்னா வெம் போர் செய்யும் வழுதி" யென்றார். இத்தகைய போர்க்கென்றே சமைக்கப்பட்ட தேர் என்றற்கு "இயல் தேர்" எனப்பட்டது. வடபுல மன்னர் பலராதலால் போர் ஏற்போர் இவ ரென்பது விளங்காமையின், "யார்கொல்" என்றும், ஏற்றவழி அவர் கெடுதல் ஒருதலையாதலின், "அளியர் தாமே" என்றும் கூறினார். போரில் அழியுமுன் நாடிரு்த நன்னிலையை, "பெரு நல் யாணர்" என்றும், அழிந்தபின், "காடாகி விளியும்" என்றும் குறிக்கின்றார். முழவு முதலியவற்றின் கண் தெய்வ முறையும் என்பவாகலின், "முழவு முதலாகிய ஒலி பொருந்திய தெய்வம்" என்றார். கந்தம், கடவு ளுறையும் தூண்; "கடவுள் போகிய கருந்தாட் கந்தம்" (அகம்-307) என்று பிறரும் கூறுதல் காண்க. நாய், சூதாடு கருவி. வல், சூதாடுங் காய்.
-----------------------------------------------------------
53. சேரமான் மாந்தரஞ்சேர லிரும்பொறை.
மாந்தரன் என்பது இச் சேரமானது இயற்பெயர். இவன் இரும் பொறைக் குடியினனாதலால், இவ்வாறு கறப்படுகின்றான். "நிறையருந்தானை வெல் போர் மாந்தரம் பொறையன்" (அகம்-142) என மாந்தரர் சான்றோரால் குறிக்கப்படுவது காணலாம். இவன் கபிலராற் சிறப்பிக்கப்பட்ட செல்வக் கடுங்கோ வாழியாதன் முதலிய சேரமன்னர்கட்குக் காலத்தாற் பிற்பட்டவன். கபிலர் முதலிய நல்லிசைப் புலவர் பாட்டுக்களிற் பேரீடுபா டுடையவன், ஒருகாலத்தே இவற்கும் இராய சூயம் வேட்ட பெருநற் கிள்ளிக்கும் போர் உண்டாயிற்று. தேர்வண்மலைய னென்பான் சோழற்குத் துணைவனாய் வந்து, இவனை வேறற்கு உதவினான். அக்காலத்தே இச் சேரமான் தன்னைத் தொலைவித்த தேர்வண் மலையனது போராண்மையை வியந்து "வல்வேல் மலையனல்ல னாயின் நல்லமர் கடத்தல் எளிதுமன் நமக்கென" நினைந்தானென வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார் பாடுகின்றார். இச் சேரமான் ஆட்சிக்குட்பட்ட விளங்கில் என்னும் ஊரைப் பகைவர் முற்றுகை யிட்டு வருத்தமுறுவித்தாராக, இவன் யானைப்படையும் குதிரைப்படையும் சிறப்புறக் கொண்டு சென்று பகைவரை வெருட்டி விளங்கிலரை உய்வித்தனன். இச் சிறப்பு நிகழ்ச்சி இப் பாட்டின்கண் குறிக்கப்படுகிறது,
கிடங்கில், விளங்கில் என்பன போலப் பொருந்தில் என்பது ஓர் ஊர். இளங்கீரன் என்பது இப் புலவரது பெயர். இதனால் இவர் பொருந்தி லிளங்கீரனார் எனப்படுகின்றார். இவர் அழகிய பாட்டுக்களைப் பாடும் நலஞ் சிறந்தவர். பொருள்வயிற் பிரிந்தேகும் ஒரு தலை மகன் நெஞ்சினை அவன் தன் மனைவிபாற் சென்ற காதல் தடுப்ப, அவன் அதனைத் தெருட்டிச் சென்றதும், சென்றவன் வினை முடித்துப் பொருள் நிரம்பக் கொண்டு வருங்கால் அக்காத லுணர்வு தோன்றி, அவன் காதலியை நினைப்பிக்க "குறைவினை முடித்த நிறைவின்னியக்கம்" எனத் தான் திரும்பி வரும் வருகையைப் புகழ்ந்து பேசியதும், தலைவி அவன் வரவு குறித்து ஆழி யிழைத்திருப்பதும் அவன் வரவினை அவள் நினைக்குந்தோறும் பல்லி யிசைப்பதும், பிறவும் இவரால் அழகொழுகப் பாடப் படுகின்றன. இவர், இச் சேரமான் திருமுன் சென்று பாடியவழி, அவன், செறுத்த செய்யுள் செய்யும் சிறப்புடைய "கபிலன் இன்று உளனாயின் நன்று" எனச் செய்யு ளின்பச் சொல்லாட்டிடை விதந்து கூறினன். அந்நிலையில் இவர் இப் பாட்டினைப் பாடியுள்ளார்.
முதிர்வா ரிப்பி முத்த வார்மணற்
கதிர்விடு மணியிற் கண்பொரு மாடத்
திலங்குவளை மகளிர் தெற்றி யாடும்
விளங்குசீர் விளங்கில் விழுமங் கொன்ற
களங்கொள் யானைக் கடுமான் பொறைய 5
விரிப்பி னகலுந் தொகுப்பி னெஞ்சும்
மம்மர் நெஞ்சத் தெம்மனோர்க் கொருதலை
கைம்முற் றலநின் புகழே யென்றும்
ஒளியோர் பிறந்தவிம் மலர்தலை யுலகத்து
வாழே மென்றலு மரிதே தாழாது 10
செறுத்த செய்யுட் செய்செந் நாவின்
வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலன்
இன்றுள னாயி னன்றும னென்றநின்
ஆடுகொள் வரிசைக் கொப்பப்
பாடுவன் மன்னாற் பகைவரைக் கடப்பே (53)
திணையும் துறையு மவை. சேரமான் மாந்தரஞ்சேர லிரும்பொறையைப் பொருந்திலிளங்கீரனார் பாடியது.
உரை: முதிர் வார் இப்பி முத்த வார் மணல்-முற்றி நீண்ட சிப்பிக்கண் முத்துப்போலும் வெளிய ஒழுங்கு பட்ட மணற்கண்ணே; கதிர் விடு மணியின் கண்பொரு மாடத்து-ஒளி விடுகின்ற மணிகளாற் கண்ணைப் பொருகின்ற மாடத்திடத்து; இலங்குவளை மகளிர் தெற்றி யாடும்- விளங்கிய வளையையுடைய மகளிர் வேதிகைக்கண்ணே விளையாடும்; விளங்குசீர் விளங்கில்- விளங்கிய சீர்மையையுடைய விளங்கிற்கு; விழுமம் கொன்ற- பகைவரான் வந்த இடும்பையைத் தீர்த்த; களங் கொள் யானைக் கடுமான் பொறைய- போர்க்களத்தைத் தனதாக்கிக் கொண்ட யானையையும் விரைந்தகுதிரையையுமுடைய பொறைய; விரிப் பின் அகலும்-விரித்துச் சொல்லிற் பரக்கும்; தொகுப்பின் எஞ்சும்- தொகுத்துச் சொல்லிற் பொருள் ஒழிவுபடு மாகலான்; மம்மர் நெஞ்சத்து எம்மனோர்க்கு- மயக்கம் பொருந்திய நெஞ்சையுடைய எங்களுக்கு; ஒரு தலை கைம்முற்றல நின் புகழ் என்றும்- ஒரு தலையாக முடியா நினது புகழ் எந்நாளும்; ஒளியோர் பிறந்த இம் மலர்தலை யுலகத்து - கலவியால் விளக்கமுடையோர் பிறந்த இப் பெரிய இடத்தையுடைய வுலகத்தின் கண்ணே; வாழேம் என்றலும் அரிது- வாழே மென் றிருத்தலம் கூடாது; தாழாது- விரைய; செறுத்த செய்யுள் செய் செந் நாவின் வெறுத்த கேள்வி விளங்கு புகழ்க் கபிலன்- பல பொருளையும் அடக்கிய செய்யுளைச் செய்யும் செவ்விய நாவினையும் மிக்க கேள்வியையும் விளங்கிய புகழையுமுடைய கபிலன்; இன்று உளனாயின் நன்று மன் என்ற- இன்று உளனாகப் பெறின் நன்று அது பெற்றிலேன் என்று சொல்லிய; நின் ஆடு கொள் வரிசைக்கு ஒப்ப- நினது வென்றி கொண்ட சிறப்பிற்குப் பொருந்த; பாடுவன்மன்- பாடுவேன்; பகைவரைக்கடப்பு- நீ பகைவரை வென்ற வெற்றியை எ-று.
மாடத்து மகளிர் மணலிடத்துத் தெற்றிக்கண்ணாடும் விளங்கில் என்க. தெற்றி யென்பதனைக் கை கோத்தாடும் குரவை யென்பாருமுளர். பொறைய, கபிலன் இன்றுளனாயின் நன்று மன் னென்ற நின் ஆடு கொள் வரிசைக் கொப்பப் பகைவரைக் கடப்பை யான் தாழாது பாடுவேன்; நின் புகழ் விரிப்பின் அகலும்; தொகுப்பின் எஞ்சும்; ஆதலான் எமக்குக் கைம்முற்றல; ஒளியோர் பிறந்த இம் மலர்தலை யுலகத்து வாழே மென்றலும் அரிது என மாறிக் கூட்டுக. தாழாது செய்யுட் செய் செந்நா வென வியைப்பினு மமையும். ஒளியோரென்றது, கபிலன் முதலாயினோரை வாழே மென்றலும் அரிதென்ற கருத்து, பாடாதிருத்தலும் அரிதென்றதாக்கி, யாமும் வல்லபடி பாடிப் போதுவே மென்றதாகக் கொள்க. நன்றுமன் என்பது கழிவின் கண் வந்தது. பாடுவன்மன்னா லென்றவழி மன்னும் ஆலும் அசைநிலை. பாடுவன்மன் னென்பதனை அல்லீற்றுத் தனித்தன்மை வினை யாக்கி நின் வரிசைக் கொப்ப, நின் பகைவரைக் கடப்பைப் பாடுவேன்; அதனால் விரிப்பின் அகலும், தொகுப்பின் எச்சும், மம்மர் நெஞ்சத்து எமக்கு நின் புகழ் கைம்முற்றல வென அவன் புகழை மேம்படுத்துக் கூரியவாறாக வுரைப்பினு மமையும். இப்பொருட்குப் பாடுவன் மன்னென்றதனை ஒழியிசையாகக் கொள்க. சிறந்த செய்யுள் என்றும், செய்யுட் செய்த செந்நா என்றும் பாடம்.
விளக்கம்: தெற்றிக்கண்ணிருந்து விளையாடல் மகளிர் இயல்பாதலின், "தெற்றி யாடும்" என்றார்; "குறுந்தொடி மகளிர் பொலஞ்செய் கழங்கிற் றெற்றி யாடும்" (புறம்:*34) என்ரு பிறரும் கூறுதல் காண்க. விரிப்பின் அகலுதலாலும், தொகுப்பின் எஞ்சுதலானும் இவ்விரண்டினும் வேறு நெறி யில்லாமையாலும், பாடுவோர்க்கு மயக்கமுண்டாதலின் "மம்மர் நெஞ்சத் தெம்மனோர்க்" கென்றார். கல்வி கேள்விகளால் உயர்ந்தோர்க் குளதாகும் புகழ் காரணமாகப் பிறக்கும் இசை, ஈண்டு ஒளியெனப் படுகிறது. ஒத்தல், ஈண்டு உவமப்பொருளதாகாது "உவமையும் பொருளும் ஒத்தல், வேண்டும்" (தொல். உவமை:8) என்றாற் போல அமைதி குறித்து வந்தது. சிறிதும் "தாழாது கபிலன் இன்றுளனாயின் நன்றுமன் என்ற" என இயையும். தாழா தென்னும் வினை யெச்சத்தைச் செய் சென்பதனோடு முடித்தலும் அமையும் என்றற்குத் "தாழாது......அமையும்" என்றார். வாழ்தல், பாடற்குரியோரைப் பாடி வாழ்தலாதலின், "வாழே மென்றலும் அரிதென்ற கருத்து.....கொள்க" என்றார்.
-------------
54. சேரமான் குட்டுவன் கோதை
இவன், சேரநாட்டின் ஒரு பகுதியாகிய குட்ட நாட்டுக்கு உரியவன். ஆதலால் இவன் குட்டுவன் கோதை யெனப்படுகின்றான். கோதை யென்பது இயற்பெயர். இவன் காலத்தில் சோழ நாட்டில் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னியும் குராப் பள்ளித் துஞ்சிய பெருந்திருமா வளவனும் ஆட்சி புரிந்தனர். "வானம் நாண வரையாது சென்றோர்க், கானா தீயும் கவிகை வண்மைக், கடுமான் கோதை" யெனப்படுதலால், இவனது கொடைச் சிறப்பும், "புலி துஞ்சு வியன்புலத் தற்றே, வலிதுஞ்சு தடக்கை யவனுடை நாடே" என்பதனால், இவனது வென்றிச் சிறப்பும் புலவர் பாடும் புகழ் பெற்று விளங்குகின்றன.
இக் குமரனார், கோனாட்டு எறிச்சிலூரைச் சார்ந்த மாடல னென்பாற்கு மகனாராவர். மாடல னென்ற பெயரை நோக்கின் இவர் பார்ப்பன ரென அறியலாம். இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நலங்கிள்ளி சேட்சென்னியும் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமா வளவனும் இவராற் பாடப்பட்டுள்ளனர். சோழர்கட்குத் தானைத் தலைவராகிய சோழிய வேனாதி திருக்குட்டுவனையும் ஏனாதி திருக் கிள்ளியையும் இவர் பாராட்டிப் பாடியிருக்கின்றார். இவர், கேட்போர் மனமகிழத்தக்க இனிய சொல் லமையப் பாடல் வல்லவர். பெருந்திருமா வளவன் ஒரு கால் பரிசில் நீட்டித்தானாக, இக் குமரனார், வெண்குடைச் செல்வமுடைய வேந்தராயினும், சீறூர் மன்னராயினும் எம்மால் வியக்கப்படுவோர், "எம்வயிற் பாடறிந் தொழுகும் பண்பினோரே" என்றும் "மிகப்பே ரெவ்வ முறினும் எனைத்தும் உணர்ச்சி யில்லோ ருடைமையுள்ளேம், நல்லறிவுடையோர் நல்குரவு உள்ளுதும்" என்றும் இவர் கூறுவது இவருடைய உயர்ந்த மனமாண்பைப் புலப்படுத்துகிறது. சேரமான் குட்டுவன் கோதையினுடைய கொடை நலனும், காவற்சிறப்பும் பிறர்க்கு அறிவுறுத்தும் கருத்தால் மதுரைக் குமரனார் இப் பாட்டின்கண், "ஓரூரையுடைய தலைவன் ஒருவன் அதனுட் செம்மாந்து புகுவதுபோல, சேரமான் குட்டுவன் கோதையின் அவைக்களத்துட் செம்மாந்து செல்வது எம்போல்வார்க்கு எளிது; அவனைப் பகைத்துப் போரெதிரக் கருதும் வேந்தர்க்கு இடையன் தன் ஆட்டு நிரையுடன் புகுதற்கஞ்சும் புலி துஞ்சும் காடு போலப் பேரச்சம் விளப்பதாசையால், புகுவ தென்பது அரிது" என்று சிறப்பித்துக் கூறுகின்றார்.
எங்கோ னிருந்த கம்பலை மூதூர்
உடையோர் போல விடையின்று குறுகிக்
செம்ம னாளவை யண்ணாந்து புகுதல்
எம்மன வாழ்க்கை யிரவலர்க் கெளிதே
இரவலர்க் கெண்மை யல்லது புரவெதிர்ந்து 5
வான நாண வரையாது சென்றோர்க்
கானா தீயுங் கவிகை வண்மைக்
கடுமான் கோதை துப்பெதிர்ந் தெழுந்த
நெடுமொழி மன்னர் நினைக்குங் காலைப்
பாசிலைத் தொடுத்த வுவலைக் கண்ணி 10
மாசு ணுடுக்கை மடிவா யிடையன்
சிறுதலை யாயமொடு குறுகல் செல்லாப்
புலிதுஞ்சு வியன்புலத் தற்றே
வலிதுஞ்சு தடக்கை யவனுடை நாடே. (54)
திணையும் துறையு மவை. சேரமான் குட்டுவன் கோதையைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.
உரை: எங்கோன் இருந்த கம்பலை மூதூர் - எம்முடைய இறைவன் இருந்த ஓசையையுடைய பழைய வூரிடத்து; உடையோர் போல இடை யின்று குறுகி - அதனை யுடையவர்களைப் போலக் காலம் பாராதே யணுகி; செம்மல் நாளவை அண்ணாந்து புகுதல் - தலைமையுடைய நாளோலக்கத்தின் கண்ணே தலையெடுத்துச் செம்மாந்து சென்று புகுதல்; எம் மன வாழ்க்கை இரவலர்க்கெளிது - எம்மைப்போலும் வாழ்க்கையுடைய இரப் போருக்கு எளிது; இரவலர்க்கு எண்மை யல்லது - இங்ஙனம் இரப்போர்க்கு எளிதாவ தல்லது; புர வெதிர்ந்து - பாதுகாத்தலை ஏற்றுக் கொண்டு; வானம் நாண வரையாது - மழை நாணும்படி எப்பொருளையும் வரையாது; சென்றோர்க்கு - தன்பாற் சென்றவர்கட்கு; கவிகை ஆனாது ஈயும் வண்மைக் கடுமான் கோதை - இடக் கவிந்த கையால் அமையாது கொடுக்கும் வன்மையையுடைய கடுமான் கோதையது; துப்பு எதிர்ந் தெழுந்த நெடு மொழி மன்னர்- வலியோடு மாறுபட்டெழுந்திருந்த வஞ்சினங் கூறிய வேந்தர்; நினைக்குங் காலை - கருதுங் காலத்து; பாசிலைத் தொடுத்த உவலைக் கண்ணி - பசிய இலையால் தொடுக்கப்பட்ட தழைக் கண்ணியையும்; மாசுண் உடுக்கை - மாசுண்ட உடையையும்; மடி வாய் இடையன் - மடிந்த வாயையுமுடைய இடையன்; சிறு தலை ஆய மொடு குறுகல் செல்லா - சிறிய தலையையுடைய ஆட்டினத்தோடு கூட அணுகல் செல்லாத; புலி துஞ்சு வியன் புலத் தற்று - புலி தங்கும் அகன்ற நிலத்தை யொக்கும்; வலி துஞ்சு தடக்கை யவனுடை நாடு - வலி தங்கிய பெரிய கையை யுடையவனுடைய நாடு எ-று.
எங்கோ னிருந்த மூதூர்ப் புகுதல் இரவலர்க் கெளிது; அவனுடைய நாடு மன்னர் நினைக்குங்காலை இடையன் சிறுதலை யாயமொடு குறுகல் செல்லாப் புலி துஞ்சு வியன் புலத் தற்றெனக் கூட்டி வினை முடிவு செய்க; மன்னர்க்கு இடையனும் அவர் படைக்குச் சிறுதலையாயமும் கோதை நாட்டிற்குப் புலி துஞ்சு வியன் புலமும் உவமையாகக் கொள்க. உவலைக் கண்ணி யென்றதனைப் பெயராகக் கொள்க; புலியுடை வியன் புல மென்பதூஉம் பாடம்.
விளக்கம் ; மூதூ ரென முன்னர்க் கூறி உடையோ ரென்றமையின், "மூதூரை யுடையோரைப் போல்" என்றார்; அவரை யன்றிப் பிறர் இடை யின்று குறுகுதல் கூடாதாகலின். செம்மல், தலைமை "சேவடி படரும் செம்ம லுள்ளமொடு" (முருகு: 42 ) என்றாற்போல. எண்மை யுடையதனை யெண்மை யென்றது உபசாரம். கவிகை ; இறந்த காலந் தொக்க வினைத் தொகை; நெடுமொழி; வஞ்சினம். துஞ்சுதல் - தங்குதல். உவலை கருதி இடையன் குறுகல் செல்லா என இயைக்காமல், உவலையாற் றொடுக்கப்பட்ட கண்ணி யெனப் பெயராக்குக வென்பார், "உவலைக் கண்ணி யென்றதனை..............கொள்க" என்றார். புலி துஞ்சு வியன் புலம் ஆட்டிடையர் புகாத அச்சமுடைய தாதல் போலக் குட்டுவன் கோதையது நாடு பகைவர் புகுதற் கச்சமுடையதென இதனால் அவன் காவற்சிறப்புக் கூறினாராம்; அதியமா னெடுமானஞ்சியின் காவற்சிறப்புக் கூறவந்த ஔவையார், "ஆர்வலர் குறுகினல்லது காவலர், கனவினுங் குறுகாக் கடியுடை வியனகர்" (புறம்; 390) என்றது ஈண்டு நினைவு கூரத் தக்கதாம்.
-------------
55 பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்
இப்பாண்டியன், இலவந்திகைப் பள்ளிக்கண் இறந்ததுபற்றி பிற்காலச் சான்றோரால் இவன் இவ்வாறு கூறப்படுகின்றான். இவன் மிக்க பேராண்மை யுடையவன்; இவனைப் பாடிய சான்றோர் பலரும் இவனுடைய போர் வன்மை முதலிய பேராற்றல்களையே பெரிதெடுத்து மொழிந்திருக்கின்றனர். காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார், "வல்லா ராயினும் வல்லுந ராயினும், புகழ்த லுற்றோர்க்கு மாயோனன்ன, உரைசால் சிறப்பின் புகழ்சால் மாற" என்றும், நக்கீரனார், "ஓங்குவாள் மாற" என்றும் பாராட்டியிருக்கின்றனர். ஒருகால் இவனை ஆவூர் மூலங் கிழாரும், வடம வண்ணக்கன் பேரிசாத்தனாரும் தனித்தனியே காணச் சென்றபோது, அவர்கட்கு இவன் பரிசில் தர நீட்டித்தான். அதுகண்டு, அவர்கள் வெகுண்டு பாடியன மிக்க பெருமிதம் தோற்றுவிப்பனவாகும். அவன் புதல்வர் பலரை யுடையவன்: "நோயிலராக நின் புதல்வர்" என ஆவூர் மூலங் கிழாரும், "நின்னோ ரன்ன நின் புதல்வர்" என வடம வண்ணக்கன் பெரிசாத்தனாரும் இவன் மக்கள் நலத்தைக் குறித்துரைப்பது நோக்கத்தக்கது.
ஓங்குமலைப் பெருவிற் பாம்புஞாண் கொளீஇ
ஒருகணை கொண்டு மூவெயி லுடற்றிப்
பெருவிற லமரர்க்கு வென்றி தந்த
கறைமிடற் றண்ணல் காமர் சென்னிப்
பிறைநுதல் விளங்கு மொருகண் போல 5
வேந்துமேம் பட்டபூந்தார் மாற
கடுஞ்சினத்த கொல்களிறுங் கதழ்பரிய கலிமாவும்
நெடுங்கொடிய நிமிர்தேரு நெஞ்சுடைய புகன்மறவரும் என
நான்குடன் மாண்ட தாயினு மாண்ட
அறநெறி முதற்றே யரசின் கொற்றம் 10
அதனால், நமரெனக் கோல்கோ டாது
பிறரெனக் குணங்கொல் லாது
ஞாயிற் றன்ன வெந்திற லாண்மையும்
திங்க ளன்ன தண்பெருஞ் சாயலும்
வானத் தன்ன வண்மையு மூன்றும் 15
உடையை யாகி யில்லொர் கையற
நீநீடு வாழிய நெடுந்தகை தாழ்நீர்
வெண்டலைப் புணரி யலைக்குஞ் செந்தில்
நெடுவே ணிலைஇய காமர் வியன்றுறைக்
கடுவளி தொகுப்ப வீண்டிய 20
வடுவா ழெக்கர் மணலினும் பலவே. 55
திணை: பாடாண்டிணை. துறை: செவியறிவுறூஉ. பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறனை மதுரை மருதனிளநாகனார் பாடியது.
உரை: ஓங்கு மலைப் பெரு வில் பாம்பு ஞாண் கொளீஇ- உயர்ந்த மலையாகிய பெரிய வில்லைப் பாம்பாகிய நாணைக் கொளுத்தி; ஒரு கணை கொண்டு மூவெயில் உடற்றி-ஒப்பில்லாததோ ரம்பை வாங்கி மூன்று மதிலையும் எய்து; பெரு விறல் அமரர்க்கு-பெரிய வலியையுடைய தேவர்கட்கு; வென்றி தந்த- வெற்றியைக் கொடுத்த; கறை மிடற் றண்ணல்- கரிய நிறஞ் சேர்ந்த திருமிடற்றையுடைய இறைவனது; காமர் சென்னிப் பிறை நுதல் விளங்கும் ஒரு கண் போல-அழகிய திருமுடிப் பக்கத் தணிந்த பிறை சேர்ந்த திரு நெற்றிக் கண்ணே விளங்கும் ஒரு திரு நயனம் போல; வேந்து மேம்பட்ட பூந்தார் மாற- மூவேந்த ருள்ளும், மேம்பட்ட பூந்தாரையுடைய மாற, கடுஞ் சினத்த கொல் களிறும்-கடிய சினத்தை யுடையவாகிய கொல்களிறும்; கதழ் பரிய கலி மாவும்- விரைந்த செலவை யுடையவகிய மணஞ் செருக்கிய குதிரையும்; நெடுங் கொடிய நிமிர் தேரும்-நெடிய கொடியை யுடைய வாகிய உயர்ந்த தேரும்; நெஞ்சுடைய புகல் மறவரு மென- நெஞ்சு வலியையுடைய போரை விரும்பும் மறவருமென; நான்குடன் மாண்டதாயினும்- நான்கு படையுங் கூட மாட்சிமைப்பட்டதாயினும்; மாண்ட அற நெறி முதற்று அரசின் கொற்றம்- மாட்சிமைப்பட்ட அற நெறியை முதலாக வுடைத்து வேந்தரது வெற்றி; அதனால்-; நமர் எனக் கோல் கொடாது-இவர் நம்முடைய ரென அவர் செய்த கொடுந் தொழிலைப் பொறுத்துக் கோல் வளையாது; பிறர் எனக் குணம் கொல்லாது- இவர் நமக்கு அயலோ ரென்று அவர் நற்குணங்களைக் கெடாது; ஞாயிற் றன்ன வெந் திறல் ஆண்மையும்-ஞாயிற்றைப் போன்ற வெய்ய திறலையுடைய வீரமும்; திங்கள் அன்ன தண் பெருஞ் சாயலும்-திங்களைப் போன்ற குளிரந்த பெரிய மென்மையும்; வானத் தன்ன வண்மையும்- மழையைப் போன்ற வண்மையுமென்ற; மூன்று முடையை யாகி- மூன்றையு முடையை யாகி; இல்லோர் கையற-இல்லாதோர் இல்லையாக; நீ நீடு வாழிய-நீ நெடுங் காலம் வாழ்வாயாக; நெடுந்தகை- நெடுந்தகாய்; தாழ் நீர் வெண்டலைப் புணரி அலைக்கும் செந்தில்-தாழ்ந்த நீரையுடைய கடலின்கண் வெளிய தலையையுடைய திரை யலைக்கும் செந்திலிடத்து; நெடு வேள் நிலைஇய-நெடிய முருகவேள் நிலைபெற்ற; காமர் வியன் துறை- அழகிய அகன்ற துறைக்கண்; கடுவளி தொகுப்ப- பெருங் காற்றுத் திரட்டுதலால்; ஈண்டிய வடுவாழ் எக்கர் மணலினும் பல குவிந்த வடு வழுந்திய எக்கர் மணலினும் பலகாலம் எ-று.
குணம் கொல்லாது என்பதற்கு, முறைமை யழிய நீ வேண்டியவாறு
செய்யா தெனினுமாம். பூந் தார் மாற, நெடுந்தகாய், நான்குடன்
மாண்டதாயினும் அரசின் கொற்றம் அறநெறி முதற்கு; அதனால் கோல்
கோடாது குணங் கொல்லாது, ஆண்மையும் சாயலும் வண்மையு
முடையையாகி இல்லோர் கையற நீ மணலிலும் பலகாலும் நீடு வாழிய
வெனக் கூட்டி வினைமுடிவு செய்க.
விளக்கம்: கொளீஇ - கொளுத்தி; கொள்வித் தென்பது கொளுத்தி
யென வந்தது; வருவித் தென்பது வருத்தி யென இன்றும் வழங்குவது போல
வென்க. மூவெயில், மூன்றாகிய மதில்; பொன் வெள்ளி இரும்பெனப்
புராணங்கள் கூறும். ஓரம்பே கொண்டு மூவெயிலும் எய்தாரென வரலாறு
கூறலின், "ஒருகணை கொண்டு மூவெயி லுடற்றி" யென்றார். "கறைமிட
றணியலு மணிந்தன்று" என்ற விடத்துக் கறை கறுப்புநிறங் குறிப்பதாக உரை
கூறினமையின் ஈண்டும் கறைமிடற்றண்ணல் என்றதற்குக் கரிய நிறஞ்
சேர்ந்த திருமிடற்றையுடைய இறைவன் என்று உரை கூறினார். வேந்தெனப்
பொதுப்படக் கூறினமையின் மூவேந்தரையும் கொண்டார். நெஞ்சுடைய புகல்
மறவர் என்ற விடத்துப் புகல்வது விரும்புத லென்னும் பொருளதாகலின்,
அதற்கேற்பப் போரை விரும்பும் மறவர் என்றார்; "போரெனிற் புகலும்
புனை கழல் மறவர்" (புறம்:31) எனப் பிறரும் கூறுதல் காண்க. நம ரெனக்
கோல் கோடுவது இவ்வா றென விளக்கவேண்டி, இவர்
நம்முடையரென.......பொறுத்து"க் கொள்ளுவது என்பது தோன்ற விரித்துக்
கூறினார். சாயல், மென்மை கையற இல்லையாக; இல்லோர்க்கு
இடமில்லையாக; கை, இடம். இடமில்லாமையாவது இன்மையுடையோர்
இலராய் எல்லோரும் செல்வராக என்பதாம். செந்தில், திருச்செந்தூர், நுண்
மணற் குவை திரை திரையாகத் திரைத்துத் தோன்றுவது பற்றி, "வடுவாழ்
எக்கர்" எனப்பட்டது.
56. இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய பாண்டியன் நன்மாறன்
இப் பாண்டி வேந்தனான இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்
தெறலும் அளியும் வண்மையும் நிரம்ப வுடையனாய், மிக்க புகழ் கொண்டு
விளங்குதல் கண்ட மருதன் இளநாகனார், தெறல் முதலியன வுடையனாய்
நெடுங் காலம் வாழ்க வெனப் பாராட்டி வாழ்த்தியது போலக்
கணக்காயனார் மகனார் நக்கீரனார், இப்பாட்டின்கண் இவனை
உலகங்காக்கும், நால்வராகிய மணிமிடற் றிறைவனும், பலராமனும்,
திருமாலும், முருகவேளும் செயல் வகையில் ஒப்ப ரெனக் கூறி, "வேந்தே,
இன்ப நுகர்ச்சிக்கண் குறைவிலனாய் உலகில் இருணீக்கி யொளி விளக்கும்
ஞாயிறும் திங்களும் போல நிலைபெற்று வாழ்க" வென வாழ்த்துகின்றார். நக்கீரனார் மதுரைக் கணக்காயனார்க்கு மகனாராவார், சங்ககாலத்துப்
புலவர் நிரலில் தலைமை பெற்றவர். பாண்டியன் தலையாலங்கானத்துச்
செருவென்ற நெடுஞ்செழியனது ஆலங்கானப் போரையும் பொலம் பூண்
கிள்ளி யென்பவன், கோய ரென்பாரை வென்று நிலங் கொண்ட திறமும்,
சேரமான் கோதை மார்பனுக்குப் பகையாய் இறுத்த கிள்ளிவளவனைப்
பழையன் மாறன் என்பான் வென்று சேரனுக்கு உவகை யெய்துவித்த திறமும், பிறவும் இவரால் குறிக்கப்படுவனவாகும்.
இவர் மதுரையைச் சேர்ந்தவராதலின், அதனை வாய்த்த விடங்களில், “அரண் பல கடந்த முரண்கொள் தானை, வாடா வேம்பின் வழுதி கூடல்” “பொன்மலி நெடுநகர்க் கூடல்” “மாடமலி மறுகிற் கூடல்” என்று சிறப்பித்துரைப்பர். மருங்கூர்ப் பட்டினம், காவிரிப்பூம் பட்டினம், முசிறி, கருவூர், உறையூர், முதலிய வூர்களும் ஆங்காங்கு இவரால் சிறப்பிக்கப்படுகின்றன. வேள் பாரியைத் தமிழ்வேந்தர் மூவரும் நெடுங்காலம் முற்றுகையிட்டிருந்த காலத்துக் கபிலர் கிளிகளைப் பயிற்றி, வெளியே விளைபுலங்களிலிருந்து நெற்கதிர் கொணர்வித்து, உணவுக் குறைவுண்டாகாவாறு பேணிக் காத்த செய்தியை இவர் குறிக்கின்றார். கபிலரை இவர் “உலகுடன் திரிதரும் பலர்புகழ் நல்லிசை, வாய் மொழிக் கபிலன்” எனச் சிறப்பிக்கின்றார். தூங்க லோரியார் என்னும் புலவர் இவர் காலத்தே சிறப்புற்றிருந்த செய்தி இவர் பாட்டால் விளங்குகிறது. இவருடைய பாட்டுக்கள் இலக்கியச் செறிவுடையன. உறையூர்க்குக் கிழக்கேயுள்ள பிடவூருக்கு ஒருகால் சென்று, ஆங்கிருந்த பெருஞ் சாத்தன் என்பானைக் கண்டார். அவன் இவரைத் தன் மனைவிக்குக் காட்டி, “என்பால் செய்யும் அன்பளவே இவர்பாலும் செய்க” என்றான். அதனால் வியப்பு மிகக் கொண்ட நக்கீரர், “தன் மனைப் பொன்போல் மடந்தையைக் காட்டி, இவனை என்போல் போற்றென்றோனே” யென்று பாடிப் பரவினார். இவர் பாடியுள்ள பொருண் மொழிக் காஞ்சி ஒவ்வொரு செல்வ மகனும் படித்து இன்புறுதற்குரியது. இவரைப் பற்றிக் கூறப்படும் வரலாறுகள் பல.
ஏற்றுவல னுயரிய வெரிமரு ளவிர்சடை
மாற்றருங் கணிச்சி மணிமிடற் றோனும்
கடல்வளர் புரிவளை புரையு மேனி
அடர்வெந் நாஞ்சிற் பனைக்கொடி யோனும்
மண்ணுறு திருமணி புரையு மேனி 5
விண்ணுயர் புட்கொடி விறல்வெய் யோனும்
மணிமயி லுயரிய மாறா வென்றிப்
பிணிமுக வூர்தி யொண்செய் யோனுமென
ஞாலங் காக்குங் கால முன்பின்
தோலா நல்லிசை நால்வ ருள்ளும் 10
கூற்றொத் தீயே மாற்றருஞ் சீற்றம்
வலியொத் தீயே வாலி யோனைப்
புகழொத் தீயே யிகழுந ரடுநனை
முருகொத் தீயே முன்னியது முடித்தலின்
ஆங்காங் கவரவ ரொத்தலின் யாங்கும் 15
அரியவு முளவோ நினக்கே யதனால்
இரவலர்க் கருங்கல மருகா தீயா
யவனர், நன்கலந் தந்த தண்கமழ் தேறல்
பொன்செய் புனைகலத் தேந்தி நாளும்
ஒண்டொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந் 20
தாங்கினி தொழுகுமதி யோங்குவாண் மாற
அங்கண் விசும்பி னாரிரு ளகற்றும்
வெங்கதிர்ச் செல்வன் போலவுங் குடதிசைத்
தண்கதிர் மதியம் போலவும்
நின்று நிலைஇய ருலகமோ டுடனே. (56)
திணை: அது. துறை: பூவைநிலை. அவனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.
உரை: ஏற்று வலன் உயரிய - ஆனேற்றை வெற்றியாக உயர்த்த; எரி மருள் அவிர் சடை - அழல் போலும் விளங்கிய சடையினையும்; மாற்றருங் கணிச்சி மணி மிடற்றோனும் - விலக்குதற்கரிய மழுப்படையையுமுடைய நீலமணிபோலும் திருமிடற்றை யுடையோனும்; கடல் வளர் புரி வளை புரையும் மேனி - கடற் கண்ணே வளரும் புரிந்த சங்கை யொக்கும் திரு நிறத்தையுடைய; அடர் வெம் நாஞ்சிற் பனைக் கொடி யோனும் - கொலையை விரும்பும் கலப்பையையும் பனைக்கொடியையு முடையோனும்; மண்ணுறு திரு மணி புரையும் மேனி - கழுவப்பட்ட அழகிய நீலமணி போலும் திரு மேனியையும்; விண் உயர் புட்கொடி விறல் வெய்யோனும் - வானுற வோங்கிய கருடக்கொடியையுமுடைய வென்றியை விரும்புவோனும்; மணி மயில் உயரிய - நீலமணிபோலும் நிறத்தையுடைய மயிற்கொடியை யெடுத்த; மாறா வென்றி - மாறாத வெற்றியையுடைய; பிணி முக வூர்தி ஒண் செய்யோனும் என - அம் மயிலாகிய வூர்தியையுடைய ஒள்ளிய செய்யோனுமென்று சொல்லப்பட்ட; ஞாலம் காக்கும் கால முன்பின் - உலகம் காக்கும் முடிவு காலத்தைச் செய்யும் வலியினையும்; தோலா நல்லிசை நால்வ ருள்ளும் - தோல்வியில்லாத நல்ல புகழினையுமுடைய நால்வ ருள்ளும்; மாற்றரும் சீற்றம் - விலக்குதற்கரிய வெகுட்சியால்; கூற்று ஒத்தீ - கூற்றத்தை யொப்பை; வலி வாலியோனை ஒத்தீ - வலியால் வாலியோனை யொப்பை; புகழ் இகழுநர் அடுநனை ஒத்தீ - புகழால் பகைவரைக் கொல்லும் மாயோனை யொப்பை; முன்னியது முடித்தலின் முருகு ஒத்தீ - கருதியது முடித்தலான் முருகனை யொப்பை; ஆங்காங்கு அவரவர் ஒத்தலின் - அப்படி யப்படி அவரவரை யொத்தலான்; யாங்கும் அரியவும் உளவோ நினக்கு - எவ்விடத்தும் அரியனவும் உளவோ நினக்கு; அதனால் - ஆதலால்; இரவலர்க் கருங்கலம் அருகா தீயா - இரப்போர்க்கும் பெறுதற்கரிய அணிகலங்களைப் பெரிதும் வழங்கி; யவனர் நன்கலம் தந்த தண் கமழ் தேறல் - யவனர் நல்ல குப்பியிற் கொடுவரப்பட்ட குளிர்ந்த நறுநாற்றத்தையுடைய தேறலை; பொன் செய் புனை கலத் தேந்தி - பொன்னாற் செய்யப்பட்ட புனைந்த கலத்தின்கண்ணே யேந்தி; நாளும் ஒண்டோடி மகளிர் மடுப்ப மகிழ் சிறந்து இனிது ஒழுகு மதி - நாடோறும் ஒள்ளிய வளையையுடைய மகளிர் ஊட்ட மகிழ்ச்சி மிக்குஇனிதாக நடப்பாயாக; ஓங்கு வாள் மாற - வென்றியான் உயர்ந்த வாளையுடைய மாற; அங்கண் விசும்பின் - அழகிய இடத்தையுடைய வானத்தின்கண்ணே; ஆரிருள் அகற்றும் வெங்கதிர்ச் செல்வன் போலவும் - நிறைந்த இருளைப் போக்கும் வெய்ய கதிரையுடைய ஞாயிற்றை - யொப்பவும்; குட திசைத் தண்கதிர் மதியம் போலவும் -மேலைத் திக்கிற் றோன்றும் குளிர்ந்த கதிரையுடைய பிறையைப் போலவும்; உலகமோ டுடன் நின்று நிலைஇயர் இவ்வுலகத்தோடு கூட நின்று நிலைபெறுவாயாக எ-று.
பிணிமுகம் பிள்ளையா ரேறும் யானை யென்றும் சொல்லுப. கால முனபென்றது, தம்மை யெதிர்ந்தோர்க்குத் தாம் நினைந்தபொழுதே முடிவு காலத்தைச் செய்யும் வலியை மணிமிடற்றோனைக் கூற்றமென்றது, அழித்தற் றொழிலை யுடைமையான். வாலியோ னென்றது நம்பி மூத்தபிரானை. இகழுந ரடுநன் என்றது, மாயோனை. ஆரிரு ளகற்றும் வெங்கதிர்ச் செல்வன் என்றது, எழுகின்ற ஞாயிற்றை. மதி, இளம் பிறை. இது தேவரோடுவமித்தமையாற் பூவைநிலை யாயிற்று.
விளக்கம்: மணி யெனப் பொதுப்படக் கூறியவழிச் சிறப்புடைய நீல மணியே கொள்ளப்படுமாகலின், “மணி மிடற்றோன்” “திருமணி” “மணிமயில்” என்புழி யெல்லாம் நீலமணி யென்றே உரை கூறினார். வெம் நாஞ்சில் என்றவிடத்து, வெம்மை வேண்டற்பொருட் டாதலால், “அடல் வெம் நாஞ்சில்” என்றதற்குக் “கொலையை விரும்பும் நாஞ்சில்” என்றார். மணி மிடற்றோன் முதலிய நால்வரும் தெய்வமாதலின் அவர்க்கேற்ப, கால முன்பு என்பதற்கு முடிவு காலத்தைச் செய்யும் வலி யென்றார். “கால முன்ப” (புறம்:23) என்றவிடத்துப் பாண்டியன் நெடுஞ்செழியன் குறிக்கப்படுதலின், அவற்கேற்பக் காலன் போலும் வலியுடையோய் என்று உரை கூறினார். தான் கருதியதைக் கருதியவாறே முடிக்கும் பேராற்றல் முருகற் குண்டு; முருகன் திருவடி கருவோர்க்கே இவ் வுண்மை யுண்டாமென நக்கீரர் “இன்னே பெறுதிநீ முன்னிய வினையே” என்பர். மேனாட்டுக் கிரேக்கரும் உரோமரும் தம்மை அயோனியர் என்ப; அது யவனர் எனத் திரிந்தது. ஓங்கு வாள் மாற என்ற விடத்து, ஓங்குதற்குக் காரணம் இது வென்பார், “வென்றியான் உயர்ந்த வாள்” என்றார். ஞாயிறு இருளகற்றலாலும் திங்கட்பிறை தொழப்படலாலும் உவமமாயின.
----------
57. இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய பாண்டியன் நன்மாறன்
இப்பாண்டிவேந்தன்,ஒருகால்பகைவர்மேற்போர்குறித்துச் செல்லலுற்றானாக, அவனைக் காணப் போந்திருந்த காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார், அவனுடைய போர்வன்மையை நன்குணர்ந்தவராதலால், "வேந்தே, நின் வீரர் பகைவர் நாட்டு வயல்களைக் கொள்ளை கொள்ளின் கொள்க; ஊர்களைத் தீக்கிரை யாக்கினும் ஆக்குக; நின் வேல் அப் பகைவரை அழிப்பினும் அழிக்க; அவர் கடிமரங்களை மட்டும் தடியாமல் விடுக; அவை நின் யானைகட்குக் கட்டுத் தறியாகும் வன்மை யுடையவல்ல" என்று பாடுகின்றார்.
இக் காரிக்கண்ணனார், காவிரிப்பூம் பட்டினத்தைச் சேர்ந்தவர். இவர் சிறந்த செய்யுள் செய்யும் செந்நாப் புலவர். இவர் காலத்தே இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய பாண்டியன் நன்மாறனும், வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருவரை யொருவர் அடுத்து வாழ்ந்தனர். சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவன் இவர் காலத்தவன். இச் சோழன் நம் கண்ணனார்பால் நன்மதிப்புக்கொண்டு, அவர் சொல்வழி நின்று சீர்த்தியுற்றான். அங்கே காவிரி கடலொடு கலக்கும் நீர்த்துறைக்கண் போந்து பரவும் கடலோதம், தான் வருங்கால் இறாமீனைக் கொணர்ந்தெற்றி மீண்டு செல்லும்போது மகளி ரெறிந்த கோதைகளைக் கொண்டேகு மெனத் தமக்குரிய நகரின் சிறப்பை யெடுத்தோதுவர். ஒருகால் இவர், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமா வளவனும் பாண்டியன் வள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கிருப்பக் கண்டார். கண்டவர், இருவரது ஒற்றுமையால் உண்டாகும் நலத்தை வியந்து, "இருவீரும் உடனிலை திரியீராயின், இமிழ் திரைப் பௌவ முடுத்த இப் பயங்கெழு மாநிலம் கையகப் படுவது பொய்யாகாதே" என்று கூறி, என்றும் "இன்றே போல்கநும் புணர்ச்சி" யென வற்புறுத்திப் பெருஞ் சிறப்புற்றார். பிட்டங் கொற்றன் என்பவனுடைய வண்மையைப் புகழ்ந்து பாடிய இவர், அவன் "உள்ளடி, முள்ளும் உறாற்க தில்ல" என்றும், "ஈவோர் அரிய இவ்வுலகத்து வாழ்வோர் வாழ அவன் தாள் வாழியவே" என்றும் வாழ்த்துவர். ஆஅய் அண்டிரன் இரவலர் வருவதுணர்ந்து அவர்க்கு யானைகளைத் தொகுத்து வைத்தளிப்ப னென்றும், கோச ரென்பார் படைப்பயிற்சி செய்யுமிடத்து, முருக்கமரத்துப் பெருங் கம்பத்தை நிறுத்திப் பயிலுவ ரென்றும் கூறுவர்.
வல்லா ராயினும் வல்லுந ராயினும்
புகழ்த லுற்றோர்க்கு மாயோ னன்ன
உரைசால் சிறப்பிற் புகழ்சான் மாற
நின்னொன்று கூறுவ துடையே னென்னெனின்
நீயே, பிறர்நாடு கொள்ளுங் காலை யவர்நாட் 5
டிறங்குகதிர்க் கழனிநின் னிளையருங் கவர்க
நனந்தலைப் பேரூ ரெரியு நக்க
மின்னுநிமிர்ந் தன்னநின் னொளிறிலங்கு நெடுவேல்
ஒன்னார்ச் செகுப்பினுஞ் செகுக்க வென்னதூஉம்
கடிமரந் தடித லோம்புநின் 10
நெடுதல் யானைக்குக் கந்தாற் றாவே. (57)
திணை: வஞ்சி. துறை: துணைவஞ்சி. அவனைக் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.
உரை: வல்லா ராயினும் - யாதொரு கல்வியை மாட்டாராயினும்; வல்லுந ராயினும் - அதனை வல்லா ராயினும்; புகழ்தலுற்றோர்க்கு மாயோன் அன்ன - புகழ்தலைப் பொருந்தியவர்கட்கு மாயோனை யொத்த; உரை சால் சிறப்பின் புகழ் சால் மாற - சொல்லுத லமைந்த தலைமையையுடைய புகழமைந்த மாற; நின் ஒன்று கூறுவ துடையேன் - நினது ஒரு காரியஞ் சொல்லுத லுடையேன்; என் னெனில் அது யாதெனின்; நீ பிறர் நாடு கொள்ளுங் காலை - நீ நின் பகைவர் நாட்டைக் கொள்ளுங் காலத்து; அவர் நாட்டு இறங்கு கதிர்க் கழனி - அவர் நாட்டின்கண் வளைந்த கதிரையுடைய வயலை; நின் இளையரும் கவர்க - நின்னுடைய வீரரும் கொள்ளை கொள்க; நனந் தலைப் பேரூர் எரயும் நக்க - அகலிய இடத்தையுடைய பெரிய வூரைத் தீயும் சுடுக; மின்னு நிமிர்ந் தன்ன நின் ஒளி றிலங்கு நெடு வேல் - மின் நிமிர்ந்தாற் போன்ற நினது பாடஞ் செய்கின்ற விளங்கிய நெடிய வேல்; ஒன்னார்ச் செகுப்பினும் செகுக்க - பகைவரை யழிக்கினும் அழிக்க; என்னதூஉம் - யாவதும்; கடி மரந் தடிதலோம்பு - காவன் மரத்தை வெட்டுதலைப் பாதுகாப்பாயாக; நின் நெடு நல் யானைக்குக் கந்தாற்றா - நின்னுடைய நெடிய நல்ல யானைகட்கு முன்பு நட்டு நிற்கின்ற தறிகள் ஆற்றமாட்டா வாதலான் எ-று.
அவை இளமர மாதலால், நின் நெடுநல் யானைக்குத் றியாதற்குப் பொறையாற்றா வென்று உரைப்பாரு முளர். வல்லவர்க்கும் மாட்டார்க்கும் ஒப்பப் புகழ்ந்து முடிய வொண்ணாமையான், "மாயோ னன்ன" வென்றார். அன்றி, அவ்விருவர்க்கும் ஒப்ப அருள் பண்ணுதலின் அவ்வாறு கூறிற் றெனினு அமையும். மாற, நின் யானைக்குக் கந்து ஆற்றாவாதலால் கடி மரந் தடித லோம்பெனக் கூட்டுக.
நின் யானைக்குக் கந்தாற்றா வாதலால் கடி மரந் தடித லோம்பெனக் கூறுவான்போல் சந்து செய்விக்கும் நினைவாற் கூறினமையின், இது துணைவஞ்சி யாயிற்று.
விளக்கம்: வல்லுந ரென்பதற்கு, மறுதலை வல்லாரென் றறிக. வல்லுநரும் வல்லாருமாகிய இருதிறந்தார் புகழினும் மாயோன் ஏற்றுக் கோடலை, "ஆர்வலர் தொழுதேத்தி, நின் புகழ் விரித்தனர் கிளக்குங்கா லவைநினக், கிறும்பூ தன்மை நற்கறிந்தே மாயினும், நகுதலுந் தகுதியீங் கூங்குநிற் கிளப்ப" (பரி.4) என்று சான்றோர் கூறுதலா லறிக. நின்னொன்று கூறுவ தென்ற விடத்து நினக் கென்னாது நின தென்றது, கூறுவதாகிய ஒன்று அவனது செய லென்பது தோன்ற; நினக்கென்ற வழி, அவ்வொன்று பிறரதாகலும் கூடும். இறங்கு கதிர்க் கழனி - முற்றி விளைந்து வளைந்து நிற்கும் கதிர்களையுடைய நெல் விளையும் கழனி. பாடஞ் செய்தலாவது, வடித்துத் தீட்டி நெய் பூசி உறையிலிட்டு வைத்தல். கடிமரந் தடிந்தாலன்றி வென்றி நிரம்பாதாகலின், அதனைச் செய்யற்க வென்றது, கழனியைக் கவர்தல் முதலிய செயல் தண்ட மாத்திரையே பகைவர் பணிந்து திறைபகரலுறுவர்; அதனை யேற்றுப் போரைத் தவிர்த்து அவரை யருளுதல் வேண்டும் என்பதுபட நிற்றலின், "சந்து செய்விக்கும் நினைவாற்" கூறியவாறாயிற்று; ஆகவே, இது துணைவஞ்சி யாயிற்றென வறிக.
-----------
58. சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனும்
பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் சோழன் பெருந் திருமாவளவன் குராப்பள்ளி யென்னும் இடத்தே உயிர் துறந்தமை கருதிப் பிற்காலத்தான்றோர் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவன் எனச் சிறப்பித்தனர். இவன் போருடற்றுவதில் தலைசிறந்தவன். தன் காலத்தே வாழ்ந்த சேரமன்னன் கொங்கு நாட்டவர் துணைபெற்று இவனோடு பகை கொண்டானாக, இவன் அக் கொங்கரை வென்று சேரனாடு புகுந்து, அதன் தலைநகராகிய வஞ்சி நகரையே போர்க்களமாகக் கொண்டு போருடற்றி வென்றி யெய்தினான். இவன், "பகைவர் புகழ்ந்த ஆண்மையும் நகைவர்க்குத், தாவின் றுதவும் பண்பும்" உடைய னெனக் கோவூர் கிழார் பாடுகின்றார். பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனுக்கு முன்னோ பின்னோ அடுத்திருந்தவன். ஏனையோர் போலாது தனது ஆட்சி நிலைபெறுதற்குச் சோழனொடு நட்புற்றிருப்பதே வேண்டுவதெனத் துணிந்து சோழன் குராப்பள்ளித ் துஞ்சிய பெருந் திருமாவளவனது நட்பைப் பெற்று இனிதிருந்தான். ஒருகால் இருவரும் ஒருங்கிருப்பக்கண்ட காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணனா ரென்னும் சான்றோர் இப் பாட்டால், "நீவிர் இருவீரும் ஒருவர்க்கொருவர் உதவி நட்பு மாறா தொழுகுவீராயின், இந் நிலவுலகு முற்றும் நும் கையகப்படுவது பொய்யாகாது" என வற்புறுத்தினார். சோழனிலும் பாண்டியனையே சிறப்புற வெடுத்தோதி இப் பாட்டின் கண் வற்புறுத்துவதால், சோழன் அவர் கருத்துக்கு இனி தியைந்திருப்பதும் பாண்டியன் தெருட்டப்பட்ட வேண்டியிருப்பதும் நன்கு விளங்குகின்றன.
நீயே, தண்புனற் காவிரிக் கிழவனை யிவனே
முழுமுத றொலைந்த கோளி யாலத்துக்
கொழுநிழ னெடுஞ்சினை வீழ்பொறுத் தாங்குத்
தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது
நல்லிசை முதுகுடி நடுக்கறத் தழீஇ 5
இளைய தாயினுங் கிளையரா வெறியும்
அருநரை யுருமிற் பொருநரைப் பொறாஅச்
செருமாண் பஞ்சவ ரேறே நீயே
அறந்துஞ் சுறந்தைப் பொருநனை யிவனே
நெல்லு நீரு மெல்லார்க்கு மெளியவென 10
வரைய சாந்தமுந் திரைய முத்தமும்
இமிழ்குரன் முரச மூன்றுட னாளும்
தமிழ்கெழு கூடற் றண்கோல் வேந்தே
பானிற வுருவிற் பனைக்கொடி யோனும்
நீனிற வுருவி னேமி யோனுமென் 15
றிருபெருந் தெய்வமு முடனின்றா அங்
குருகெழு தோற்றமொ டுட்குவர விளங்கி
இன்னீ ராகலி னினியவு முளவோ
இன்னுங் கேண்மினும் மிசைவா ழியவே
ஒருவீ ரொருவீர்க் காற்றுதி ரிருவிரும் 20
உடனிலை திரியீ ராயி னிமிழ்திரைப்
பௌவ முடுத்தவிப் பயங்கெழு மாநிலம்
கையகப் படுவது பொய்யா காதே
அதனால், நல்ல போலவும் நயவ போலவும்
தொல்லோர் சென்ற நெறிய போலவும் 25
காத னெஞ்சினும் மிடைபுகற் கலமரும்
ஏதின் மாக்கள் பொதுமொழி கொள்ளா
தின்றே போல்கநும் வேலே கொடுவரிக்
கோண்மாக் குயின்ற சேண்விளங்கு தொடுபொறி 30
நெடுநீர்க் கெண்டையொடு பொறித்த
குடுமிய வாகபிறர் குன்றுகெழு நாடே. (58)
திணை: பாடாண்டிணை. துறை: உடனிலை. சோழன் குராப் பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனும், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஒருங்கிருந்தாரைக் காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.
உரை: நீயே தண் புனல் காவிரிக் கிழவனை - நீ குளிர்ந்த நீரையுடைய காவிரிக்குத் தலைவன்; இவனே - இவன்; முழு முதல் தொலைந்த கோளி யாலத்துக் கொழு நிழல் நெடுஞ் சினை - பரிய அடிமாய்ந்த கோளியாகிய ஆலத்துக் கொழுவிய நிழலையுடைய நெடிய கொம்பை; வீழ் பொறுத் தாங்கு - அதன் வீழ் தாங்கினாற் போல; தொல்லோர் மாய்ந் தென - தனக்கு முன்னுள்ளோர்; இறந்தாராக; துளங்கல் செல்லாது - தான் தளராது; நல்லிசை முது குடி நடுக்கறத் தழீஇ – நல்ல புகழையுடைய பழைய குடியைத் தடுமாற்றமற அணைத்து; இளைய தாயினும் - தான் சிறிதே யாயினும்; கிளை அரா எறியும் - கிளையுடனே பாம்பை யெறியும்; அரு நரை உருமின் - பொறுத்தற்கரிய வெள்ளிய உருமேறு போல; பொருநரைப் பொறாஅ - இளமைக் காலத்தும் பகைவர்க் காணப் பொறாத; செரு மாண் பஞ்சவர் ஏறு - போரின்கண் மாட்சிமைப்பட்ட பாண்டியர் குடியுள் ஏறு போல்வான்; நீயே அறம் துஞ்சு உறந்தைப் பொருநனை - நீ அறம் தங்கும் உறையூரின்கண் அரசன்; இவனே - இவன்; நெல்லும் நீரும் எல்லோர்க்கும் எளிய - நெல்லும் நீரும் யாவர்க்கும் எளிய வெனக் கருதி; வரைய சாந்தமும் - அவை போலாது யாவர்க்கும் பெறுதற்கரிய பொதியின்மலையிடத்துச் சந்தனமும்; திரைய முத்தமும் - கடலிடத்து முத்துமென இவற்றை; இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும் - ஒலிக்கும் குரலையுடைய முரசம் மூன்றுடனே யாளும்; தமிழ் கெழு கூடல் தண் கெழு வேந்து - தமிழ் பொருந்திய மதுரைக்கட் குளிர்ந்த செங்கோலையுடைய வேந்தன்; பால் நிற உருவின் பனைக் கொடி யோனும் - பால்போலும் நிறத்தையுடைய பனைக் கொடியை யுடையோனும்; நீல் நிற வுருவின் நேமியோனும் என்று - நீல நிறம்போலும் திருமேனியையுடைய ஆழியை யுடையோனு மென்று சொல்லப்படும்; இரு பெருந் தெய்வமும் உடனின்றாங்கு - இரண்டு பெரிய தெய்வமும் ஒருங்கு நின்றாற்போல; உருகெழு தோற்றமொடு - உட்குப் பொருந்திய காட்சியோடு; உட்கு வர விளங்கி - அச்சம் வர விளங்கி; இன்னீ ராகலின் - நீர் இத்தன்மையிராகுதலின்; இனியவும் உளவோ - இதனினும் இனிய பொருள் உளவோ; இன்னும் கேண்மின் - இன்னமும் கேளீர்; நும் இசை வாழிய - நும்முடைய புகழ் நெடுங்காலம் செல்வதாக; ஒருவீர் ஒருவீர்க் காற்றுதிர் - நும்முள் ஒருவீர் ஒருவீர்க் குதவுவீராக; இருவிரும் உடனிலை திரியீ ராயின் - நீங்க ளிருவீரும் கூடி நிற்கின்ற இந்நிலையின் வேறுபடீராயின்; இமிழ் திரைப் பௌவம் உடுத்த இப் பயங்கெழு மாநிலம் - ஒலிக்கும் திரையையுடைய கடல் சூழ்ந்த இப் பயன் பொருந்திய உலகங்கள்; கையகப் படுவது பொய்யாகாது - கையகத்தே யகப்படுதல் பொய்யாகாது; அனால் - ஆதலால்; நல்ல போலவும் - நல்லன போலே யிருக்கவும்; நயவ போலவும் - நியாயத்தை யுடையன போலே யிருக்கவும்; தொல்லோர் சென்ற நெறிய போலவும் - பழையோ ரொழுகிய ஒழுக்க முடையனபோலே யிருக்கவும்; காதல் நெஞ்சின் - அன்பு பொருந்திய நெஞ்சையுடைய; நும் இடை புகற்கு அலமரும் ஏதில் மாக்கள் - நும்மிடையே புகுந்து நும்மைப் பிரித்தற்கு அலமரும் அயலாருடைய; பொது மொழி கொள்ளாது - சிறிப்பில்லாத மொழியைக் கேளாது; இன்று போல்க நும் புணர்ச்சி - இன்று போல்க நுமது கூட்டம்; வென்று வென்று அடு களத்து உயர்க நும் வேல் - வென்று வென்று போர்க்களத்தின்கண் மேம்படுக நும்முடைய வேல்; கொடு வரிக் கோண்மாக்குயின்ற - வளைந்த வரியை யுடைய புலி வடிவாகச் செய்யப்பட்ட; சேண் விளங்கு தொடுபொறி - சேய்மைக்கண் விளங்குகின்ற தோண்டிய இலாஞ்சனையை; நெடு நீர்க் கெண்டை யொடு பொறித்த - பெரிய நீரின்கண் வாழும் கயலுடனே பொறித்த; குடுமிய வாக - சிகரங்களை யுடையவாக; பிறர் குன்று கெழு நாடு - பிறருடைய குன்றையுடைய நாடுகள் எ-று.
குன்று கெழு நாடென்ற தாயினும் கருதியது பிறர் நாட்டுக் குன்றுக ளென்றதாகக் கொள்க. கோளி யென்றது, பூவாது காய்க்கும் மரம். தழீஇப் பொறாவென வியையும் முரச மூன்றாவன: வீர முரசும் நியாய முரசும் தியாக முரசும்; மண முரசுடனே ஏனை யிரண்டு முரசென்பாரு முளர். தொடு பொறி, பெயர்மாத்திரையாய் நின்றது. ஒருவீர் ஒருவீர்க்கு உதவியாய் வலியையுடையீராய் நீங்கள் இருவீருமென்பாரு முளர்.
இருவ ரரசர் ஒருங்கிருந்தாரைப் பாடினமையின், இஃது உடனிலையாயிற்று.
விளக்கம்: ஆலமரத்தின் கிளையைத் தாங்குதற்குரிய வீழ் தோன்றித்
தாங்கத் தொடங்கிய வளவில் அதன் அடி முதல் புரை யோடித் தொலைந்து
போதலின், "முழுமுதல் தொலைந்த கோளி யால" மென்றார். துளங்கல்
செல்லாது. ஒரு சொல்லாய்த் துளங்கா தென்பது படநின்றது. உருமின்பால்
உள்ள அருமை யிது வென்றற்குப், "பொறுத்தற்கரிய" என்றார். "இளைய
தாயினும் கிளையரா வெறியும் உருமின்" என்ற உவமத்தால், பொருநரைப்
பொறாஅ என்றதற்கு, இளமைக்காலத்தும் பகைவரைக் காணப் பொறாத என்று
உரை கூறினார். நெல்லும் நீரும் பாண்டியர்க்கே யன்றி, ஏனைச் சோழ
சேரர்க்கும் எளியவாய்க் கிடைப்பது பற்றி, "எல்லார்க்கும் எளிய" என்றும்
"வரைய சாந்தமும் திரைய முத்தமும்" பாண்டியர்க்கே யுரிய, ஏனையோர்க்கு
அரிய வென்றும் அறிக. உடனிலை, நட்பாற் கூடி யொன்றியிருக்கும் நிலை.
யாவராலும் நயக்கப்படுவது நடுவு நிலையாதலின், அதனை நயம் என்றும்
அதனைப் புலப்படுத்தும் மொழிகளை நயவ வென்றும் கூறுவர். காதல் நெஞ்சின்
நும் - காதல் நெஞ்சினையுடைய நுங்கள் என்க. தொடு பொறி - கல்லின்கண்
வெட்டப்படும் பொறி. இரண்டு முரசாவன வெற்றியும் கொடையுமாம். தொடு
பொறி, தொடராற்றலால் வேறு பொருள் பயவாமையின் "பெயர்மாத்திரையாய்
நின்ற" தென்றார்.
-------
59. பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன்
கூடகாரம், வெள்ளியம்பலம், இலவந்திகைப் பள்ளி முதலியன போலச் சித்திரமாட மென்பது ஓரிடம். இவ்விடத்தே இறந்தமைபற்றி இப்பாண்டியன் இவ்வாறு கூறுப்படுகின்றான் கள்ளங் கபடமற்ற வுள்ளமும் சான்றோரைப் பேணும் சால்பும் பெருவன்மையும் உடையன்; இவனுடைய வெற்றிச் செய லொன்றும் விளக்கப்படவில்லை. மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார், இப் பாட்டின்கண் இவனுடைய அணிவிளங்கும் மார்பினையும், தாளுற நீண்டு விளங்கும் தடக்கையினையும் பாராட்டி, "நீ அருளுதல் வல்லையேயன்றிப், பிறர் கூறும் பொய்யைத் தேர்ந்தறிகுவாயல்லை; பகைவரைத் தெறுதலின் ஞாயிற்றையும், எம்போல்வாரை யருளுதலில் திங்களையும் ஒப்பாய்" என்று பரிந்தோதுகின்றார்.
சீ்த்தலை யென்பது ஓர் ஊர். அவ் வூரினராயினும் மதுரை நகர்க் கண் இருந்து கூலவாணிகம் செய்தமையின், இவர் இவ்வாறு கூறப்பட்டார். இவர் காலத்து வேந்தன் இப் பாட்டிற்குரிய நன்மாறனே யாவன், மணிமேகலை பாடிய ஆசிரியரும் இவரே யென்று பெயரளவே நோக்குமிடத்துப் புலனாகும். மணிமேகலை யாசிரியர் காலத்துப் பாண்டிவேந்தன் இவனல்ல னென்பது சிலப்பதிகாரத்தால் இனிது விளங்குதலின், இச் சீத்தலைச் சாத்தனார் வேறென்பது தெளிவாகும். ஆயினும் இஃது ஆராய்தற்குரிய தொன்று.
ஆரந் தாழ்ந்த வணிகிளர் மார்பின்
தாடோய் தடக்கைத் தகைமாண் வழுதி
வல்லை மன்ற நீநயந் தளித்தல்
தேற்றாய் பெரும பொய்யே யென்றும்
காய்சினந் தவிராது கடலூர் பெழுதரும் 5
காய்சினந் தவிராது கடலூர் பெழுதரும்
ஞாயி றனையைநின் பகைவர்க்குத்
திங்க ளனையை யெம்ம னோர்க்கே. (59)
திணை: அது. துறை: பூவை நிலை. பாண்டியன் சித்திர மாடத்துத் துஞ்சிய நன்மாறனை மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார் பாடியது.
உரை: ஆரம் தாழ்ந்த அணி கிளர் மார்பின் - ஆரம் தாழ்ந்த அழகு மிக்க மார்பினையும்; தாள் தோய் தடக்கை - முழந்தாளிலே தோய்ந்த பெரிய கையினையுமுடைய; தகைமாண் வழுதி - அழகு மாட்சிமைப்பட்ட வழுதி; நீ நயந்தளித்தல் வல்லை மன்ற - நீ யாவர்க்கும் உவந்து அருளைப் பண்ணுதலைத் தெளிவாக வல்லை மெய்யாக; தேற்றாய் - யாவரிடத்தும் தெளியாய்; பெரும-; பொய்யே - பொய்யை; என்றும் காய் சினம் தவிராது - எந்நாளும் சுடும் வெம்மை யொழியாது; கடல் ஊர்பு எழு தரும் ஞாயிறு அனையை - கடலிடத்தே கிளர்ந்தெழுகின்ற ஞாயிற்றை யொப்பை; நின் பகைவர்க்கு-; எம்மனோர்க்குத் திங்கள் அனையை - எம்போல்வார்க்குத் திங்களை யொப்பை எ-று.
தேற்றா யென்றது, தேறா யெனத் தன்வினையாய் நின்றது. தேற்றா யென்பதற்குப் பொய் தெளிக்கப்படா யெனினு மமையும். ஞாயிற்றோடும் திங்களோடு முவமித்தமையால், இது பூவைநிலை யாயிற்று.
விளக்கம்: முழந்தாளளவும் கை நீண்டிருத்தல் ஆண் மக்கட்கிலக்கணம், "வலிய வாகும் நின் தாடோய் தடக்கை" எனப் பிறரும் கூறுப. பிறவினை யென்றே கொள்ளின், பொருள் இது வென்பார், "பொய்........அமையும்" என்றார்.
-----------
60. சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவன்
இவ்வளவனை உறையூரிடத்தே யிருந்த மருத்துவன் தாமோதரனார் இப் பாட்டின்கண் பாராட்டுகின்றார். இவன் தன் காலத்தேயிருந்த பாண்டி வேந்தனோடு நட்புற்றுச் சேரனது பகைமையை வென்று புகழ் மேம்பட்டிருக்கையில், சான்றோர் பலரும் இவனைப் பாடிப் பாராட்டி யிருக்கின்றனர். நாட்டிற் குண்டாகும் குறை பலவும் போக்கி அதனைக் காக்கும் வகையில் பெருமுயற்சியும் பேருழைப்பு முடையனாய் இருந்த இவனது இயல்பை இப் பாட்டின்கண், "கானற் கழியுப்பு முகந்து கல்நாடு மடுக்கும், ஆரைச் சாகாட்டாழ்ச்சி போக்கும், உரனுடை நோன்பகட்டன்ன, எங்கோன்" என்பதனால் தாமோதரனார் சிறப்பிக்கின்றார்.
தாமோதரனார் என்னும் சான்றோர் உறையூரின்கண் மருத்துவத் தொழில் புரிந்திருந்தவர். இனிய செய்யுள் செய்வதில் சிறந்தவர். இவரும் சேரமான் தானைத் தலைவன் பிட்டங்கொற்றனால் பெருஞ் சிறப்புச் செய்யப்பெற்றவர். இவர் இவ் வளவனைப் போலப் பிட்டங்கொற்றனையும் அழகு திகழப் பாடியுள்ளார். "மலைகெழு நாடன் கூர்வேற் பிட்டனைக் குறுக லோம்புமின் தெவ்விர்" என்றும், அவன் "நசைவர்க்கு மென்மையல்லது பகைவர்க்கு உலைக்கல் லன்ன வல்லாளன்" என்றும் கொற்றனது வன்மையும் வண்மையும் ஒருங்கு விளங்கப் பாடியிருக்கின்றார்.
முந்நீர் நாப்பட் டிமிற்சுடர் போலச்
செம்மீ னிமைக்கு மாக விசும்பின்
உச்சி நின்ற வுவவுமதி கண்டு
கட்சி மஞ்ஞையிற் சுரமுதல் சேர்ந்த
சில்வளை விறலியும் யானும் வல்விரைந்து 5
தொழுதன மல்லமோ பலவே கானற்
கழியுப்பு முகந்து கன்னாடு மடுக்கும்
ஆரைச் சாகாட் டாழ்ச்சி போக்கும்
உரனுடை நோன்பகட் டன்ன வெங்கோன்
வலனிரங்கு முரசின் வாய்வாள் வளவன் 10
வெயின்மறைக் கொண்ட வுருகெழு சிறப்பின்
மாலை வெண்குடை யொக்குமா லெனவே. (60)
திணை: அது. துறை: குடை மங்கலம். சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனை உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.
உரை: முந்நீர் நாப்பண் திமில் சுடர் போல - கடனடுவே தோன்றுகின்ற திமிலின்கண் இடப்பட்ட விளக்குப் போல; செம் மீன் இமைக்கும் - செவ்வாய் மீன் விளங்கும்; மாக விசும்பின் உச்சி நின்ற உவவு மதி கண்டு - மாகமாகிய விசும்பினது உச்சிக்கண்ணே நின்ற உவா நாளின் மதியத்தைக் கண்டு; கட்சி மஞ்ஞையின் - காட்டுள் வாழும் மயிலைப்போல; சுர முதல் சேர்ந்த சில் வளை விறலியும் யானும் - சுரத்திடைப் பொருந்திய சிலவாகிய வளையையுடைய விறலியும் யானும்; வல் விரைந்து தொழுதனம் அல்லமோ பலவே - கடிதின் விரைந்து தொழுதே மல்லேமோ பலகால்; கானல் கழியுப்பு முகந்து கல் நாடு மடுக்கும் - கடற்கரையிடத்துக் கழியினீரான் விளைந்த உப்பை முகந்து கொண்டு மலைநாட்டை நோக்கிச் செல்கின்ற; ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும் - ஆரையுடைய சகடையினது குழிப்பாய் தலைத் தீர்த்துச் செலுத்தும்; உரன் உடை நோன் பகட்டன்ன எங்கோன் - வலியையுடைய பாரம் பொறுக்கும் பகட்டை யொக்கும் எங் கோன்; வலன் இரங்கு முரசின் - வென்றியாக முழங்கும் முரசினையும்; வாய் வாள் வளவன் - தப்பாத வாளினையுமுடைய வளவனது; வெயில் மறைக் கொண்ட - வெயிலை மறைத்தற் கெடுத்த; உரு கெழு சிறப்பின் மாலை வெண் குடை ஒக்குமால் என - உட்குப் பொருந்திய தலைமையையுடைய தாமம் பொருந்திய வெண்கொற்றக் குடையை யொக்குமெனக் கருதி எ-று.
செம்மீ னிமைக்கும் விசும்பின் உச்சிநின்ற மதியை உவமித்தமையின், இது தலைப்பெய லுவமையாய் நின்றது; கானல்: கடற்கரை. வெயி லன்றது, பகைவரானும் கொடியோரானும் வரும் வெம்மையை. இராச்சிய பாரத்தைப் பொறுத்து நடத்துமாறு நோக்கி, நோன்பகட்டோடுவமித்தமையின், இறப்ப விழிந்த ஆனந்த வுவமையன் றாயிற்று உவாமதியைக் கண்டு வளவன் வெண்குடையை யொக்கு வினை முடிவு செய்க. வளவன் வெண்குடையைக் காட்டித் தொழுமின் என்றார்க்கு நிறைமதி தொழப்படாதாயினும் குடையோடு ஒப்புமை கண்டு தொழுத யாம் குடை தன்னைக் கண்டால் தொழுதல் சொல்ல வேண்டுமோ வென அதன் சிறப்புக்கூறியவாறு. செம்மீன்-திருவாதிரையுமாம்.
விளக்கம்: கடலிற் செல்லும் திமிலின்கண் இரவுக் காலங்களில் விளங்கேற்றுதல் மரபாதலால், அவ்விளக்கு வானத்தில் இரவில் விளங்கும் செவ்வாய் மீனுக்கு உவமமாயிற்று. முழுத்திங்கள் தொழப்படாதாயினும் தொழுதமை தோன்ற, "வல் விரைந்" தென்றார். கல்நாடு - மலைநாடு. ஆழ்ச்சி - குழிகளில் சகடம் புதைந்து ஆழ்தல். மறைக் கொண்ட என்புழி, மறை முதனிலைத் தொழிற்பெயர். நான்கனுருபு விரித்து மறைத்தற்குக் கொண்ட என உரை கூறப்பட்டது. உயர்ந்த பொருட்கு மிகத் தாழ்ந்த தொன்றையுவ மித்தல் இறப்ப விழிந்த ஆனந்த வுவமை யென்னும் குற்றமாம். அரசியற் பொறையைத் தாங்கிப் பகைக்கூழள்ளற்படாது உய்க்கும் வேந்தற்கு நோன்பகடு சிறந்த வுவமையாதலின், இது குற்றமன் றென்பதாம்.
-----------
This file was last updated on 8 Jan. 2015.
Feel free to send corrections to the Webmaster.