உதயணன் சரித்திரச் சுருக்கம்
எழுதியவர்: உ.வே. சாமிநாதையர்
utayaNan carittirac curukkam
of u.vE. cAminAta aiyar
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Digital Library of India for providing scanned image copy
of this work for the e-text preparation.
This work has been prepared via the Distributed Proof-reading implementation
and we thank the following volunteers for their assistance in the preparation of the etext:
Anbu Jaya, V. Devarajan, S. Karthikeyan, R. Navaneethakrishnan,
P. Thulasimani, V. Ramasami, A. Sezhian, P. Sukumar, C. Susanna Abigail,
S. Yoganandam, S.C. Thamizharasu, V. Jambulingam
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2015.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
உதயணன் சரித்திரச் சுருக்கம்
எழுதியவர்: உ.வே. சாமிநாதையர்
திருச்சிற்றம்பலம்
Source:
உதயணன் சரித்திரச் சுருக்கம்
{பெருங்கதையைத் தழுவிய வசனம்}
டாக்டர் உ.வே. சாமிநாதையர்
உரிமை பதிவு
*மகள் காரியாலயம், மயிலாப்பூர் - சென்னை
இரண்டாம் பதிப்பு - ஜனவரி 1948
Printed at: The Madras Law Journal Press, Mylapore, Madras
--------
முகவுரை
கொங்கு நாட்டிலிருந்த வேளிர்களுள் ஒருவரான கொங்கு வேளிர் என்பரால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழில் அகவல் பாக்களால் இயற்றப் பெற்ற பெருங்கதை யென்னும் நூலின் கதைப்போக்கைத் தழுவி எழுதி அதற்கு அங்கமாக அதனோடு சேர்த்துப் பதிப்பிக்கப்பெற்ற இவ்வசன நூலைச் சில அன்பர்கள் விரும்பியபடி தனியாகவும் வெளியிடலாயிற்று.
குருகுலத்தில் பிறந்தவனும் கெளசாம்பி நகரத்து அரசனும் சதானிகனுடைய புதல்வனுமான உதயணன் என்பவன் பிறந்தது முதல் அவன் துறவு பூண்டமை இறுதியாகவுள்ள வரலாறுகள் இதன் பால் விரிவாகக் காணலாகும்.
பண்டைக்காலத்து அரசாட்சி முறையையும் நாடுகளின் அமைதிகளையும், நீதிகளையும், சிற்பம் முதலிய பலவகைக் கலைகளின் நுட்பங்களையும் இது காறும் அறியப்படாத இன்னும் எத்தனையோ அரிய பெரிய விஷயங்களையும் அறிந்து கொள்வதற்குத் தக்க கருவியாகும் இது.
இக்கதையின் சம்பந்தமாக வடமொழி முதலியவற்றில் இயற்றப்பட்டுள்ள நூல்கள் பல வழங்கப்படினும் குணாட்டியர் என்னும் மஹாகவியால் பைசாச பாஷையில் முதலில் இயற்றப் பெற்ற பிருஹத் கதையை முதல் நூலாகக்கொண்டு கங்கநாட்டு அரசனாகிய துர்நீதன் இயற்றியதாகத் தெரியவரும் ஒரு வடநூலே கொங்கு வேளிர் இயற்றிய பெருங்கதைக்கு முதல் நூலாக இருத்தல் வேண்டுமென்பது சில அறிஞர்கள் கருத்து.
இந்நூல் உஞ்சைக் காண்டம், இலாவாண காண்டம், மகத காண்டம், வத்தவ காண்டம், நரவாண காண்டம், துறவுக் காண்டம் என்னும் ஆறு பகுதிகளை உடையது. படிப்பவர்கள் மூலத்தின் இனிமையை ஒருவாறு அறிந்து இன்புறும்பொருட்டு முக்கியமான இடங்களில் சில சில மூலப்பகுதிகள் அங்கங்கே சேர்க்கப்பட்டுள்ளன.
கிடைத்த பெருங்கதைக் கையெழுத்துப் பிரதியில், மகத காண்டத்தின் முற்பகுதியும், நரவாண காண்டத்தின் பிற்பகுதியும், துறவுக் காண்டமும் இல்லாமையால் அந்தப் பகுதிகளுக்குரிய கதையை உதிதோதய காவ்யம் முதலிய வேறு நூல்களிலிருந்து அறிந்து எழுதி இது பூர்த்திசெய்யப் பெற்றது.
அரும்பதங்களுக்கு உரையும், அபிதான விளக்கமும் படிப்பவர்களுக்கு உபயோகமாக இருக்குமென்றெண்ணி இதன்பால் சேர்க்கப்பெற்றுள்ளன.
"சிதம்பரம்" இங்ஙனம்,
20-8-26 வே. சாமிநாதையர்.
---------------
உதயணன் சரித்திரச் சுருக்கம்
1. உஞ்சைக் காண்டம்
சம்புத்தீவிற் சுதர்சனமென்னும் மலையின் தெற்கேயுள்ளதான பாரதவருடத்திலுள்ள 1தரும கண்டத்தில் 2வத்தவநாட்டில் 3 கெளசாம்பி நகரத்தில் குருகுலத்திற் பிறந்து அதனை விளக்கிய சதானிகனென்னும் அரசன் சேதிநாட்டிலுள்ள வைசாலி நகரத்தரசனும் 4ஏயர்குலத்தவ னுமாகிய 5சேடனென்பனுடைய புதல்வி மிருகாபதி என்பவளை மணஞ்செய்து இல்லறத்தை இனிது நடத்தி அரசாட்சி செய்துவந்தான். அவன், அரசர்க்குரிய குண விசேடங்களை யுடையவனாதலின், மந்திரச்சுற்றத்தாரும் ஏனையாரும் மிக்க இன்பமுற்று அவன் குடைநிழலில் வாழ்வாராயினர். இங்ஙனம் சில ஆண்டுகள் சென்றன.
சரற்காலத்தில் ஒரு நாள் மேகந் தோன்றுவதையும் அழிவதையும் கண்டபோது வைராக்கியம் பிறந்தமையால், மேற்கூறிய சேடகராஜன், ஞாலங் காவலை நஞ்சென வெறுத்துத் தன் புதல்வருள் பதின்மர்களுள் மூத்தவனான தனமித்திரனை அழைத்து, "இனித் தவஞ் செய்யச் செல்வேன்; நீ இந்த இராச்சியபாரத்தை ஒப்புக்கொள்ள வேண்டும்" என்றான். அவன், "யானும் தவஞ் செய்தற்கு வருவேன்" என்று கூறி மறுப்ப, சேடகன், அவன் தம்பிகள் எண்மரைத் தனித்தனியே அழைத் தழைத்துச் சொல்ல அவர்களும் மூத்தவன் கூறியதையே கூறி மறுத்து விட்டனர். அப்பால் அவன் பத்தாம் பிள்ளையாகிய விக்கிரனை அருகழைத்து மிகவும் வற்புறுத்திக் கூறித் தன் அரசாட்சியை அவனிடம் ஒப்புத்துவிட்டுச் சென்று விபுலமென்னும் மலையொன்றின் சாரலில் ஆலிங்கானத்தில் தவஞ் செய்துகொண் டிருந்த ஸ்ரீதரரென்னும் முனிவரைச் சரணமடைந்து உபதேசம் பெற்றுத் தவஞ் செய்வானாயினன்.
--------
1. ஆரிய கண்டமெனவும் வழங்கப்படும். 2. வத்ஸதேசம்.
3. கோசம்பியென இந்நூலுள் வழங்கப்படும். 4.ஹேஹயர்.
5. உதிதோதய காவியத்தில் இப்பெயர் காணப்படுகின்றது.
தந்தை முதலியவர்களுடைய பிரிவாற்றாமல் வருத்தமுற்ற விக்கிரன், நிகழ்ந்தவற்றைச் சதானிகனுக்கும் தன் தங்கை மிருகாபதிக்கும் தூதுவர் மூலமாகத் தெரிவித்து விட்டுத் தந்தையின் கட்டளையின்படி அரசாட்சி செய்து கொண்டிருந்தான். இச் செய்தியை அறிந்த சதானிகன் வியந்தான்; மிருகாபதி மிக்க வருத்தத்தை யடைந்து மூர்ச்சையுற்றாள். பின்பு கணவன் பலவாறு தேற்றத் தேறி அவள் ஒருவாறு ஆறுதலுற் றிருந்தாள். இருவரும் இங்ஙனம் சில நாள் வாழ்ந்து வந்தார்கள். சில காலம் சென்றபின் மிருகாபதி கருப்பமுற்றாள். அக்கருப்பத்தில் புண்ணிய புருடனாகிய தேவனொருவன் வந்து தங்கினான். அவளுக்குவேண்டிய பொருள்களை வருவித்தளித்தும் விரும்பிய இடங்களுக்கு அழைத்துச் சென்றும் அவளது மயற்கை (மசக்கை)யைப் போக்கி அரசன் அவளைப் பாதுகாத்து வந்தான். கருப்பம் நிரம்பியது. அக்காலத்தில் ஒரு நாள் இரவில் மேல்மாடத்துள்ள நிலாமுற்றத்தில் தான் இருந்த இடங்களையெல்லாம் சாதிலிங்க முதலியவற்றாற் சிவந்த நிறமுள்ளனவாகச் செய்வித்துச் சிவந்த மலர்மாலைகளையும் சிவந்த அணிகலங்களையும் தான் அணிந்துகொண்டு தன்னைச் சூழ்ந்துள்ள தோழியர்களையும் அங்ஙனம் அணிந்துகொள்ளச் செய்துவிட்டு அவர்களின் இடையே ஒரு மஞ்சத்தின் மேல் சிவந்த பட்டாடை யொன்றைப் போர்த்துக்கொண்டு அவள் அயர்ந்து நித்திரை செய்தாள்.
அப்பொழுது ஆகாய வழியே சென்றதும் பல்வன்மை யுடையதுமான 1சரபப் பறவை யொன்று ஈரம் புலராத தசைத்தொகுதி யென்று நினைத்து அவளை மஞ்சத்துடன் தூக்கிக்கொண்டு பறந்து சென்று விபுலகிரியிற் சேடக முனிவருடைய பள்ளினருகே மெல்ல வைத்து உண்ணத் தொடங்குகையில், அவள் விழித்துக்கொண்டாள். அதனைக் கண்ட அப்பறவை, "இது தசைத்தொகுதியன்று. உயிரோடு கூடிய ஒரு பெண்வடிவம்" என்று நினைத்து உண்ணாமல் திடீரென் றெழுந்து தன்னிடம் சென்றுவிட்டது. அப்பால் அவள் நாற்புறத்தையும் பார்த்துத் தான் வேறிடம் வந்திருத்தலை யறிந்து திகைத்து அஞ்சி வருந்துவாளாயினள். பின்பு அச்சத்தாலும் ஆகாய வழியே வந்த வருத்தத்தாலும் கருப்ப வேதனை அதிகரிக்கப்பெற்றுச் சூரியோதய காலத்தில் எல்லாக் கோள்களும் நல்வழி நோக்கத் திருமணி விளக்கம் திசைநின் றழல ஓர் ஆண் குழந்தையைப் பெற்றாள்.
-------
1. கண்டப்புள்ளென்றும் கண்டபேரண்டமென்றும் கருடப் பறவை யென்றும் வேறு நூல்கள் கூறும்.
"பொருகடற் பருதிபோலப் பொன்னனான் பிறந்த போழ்தே
மருளுடைய மாத ருற்ற மம்மர்நோய் மறைந்தது" (சீவ.304)
பின்பு அவள் மிக்க விருப்பத்தோடு அக்குழந்தையைத் தழுவி யெடுத்து அந்தச் சமயத்துள்ள தன் நிலைமையை நினைந்து பலவாறு புலம்பினாள். அப்பொழுது நீராடுதற் பொருட்டு இயல்பாக அந்த வழியே அவ்விடம் வந்த சேடகமுனிவருடைய காதிற்கு அவளுடைய புலம்பலொலி எட்டியது. உடனே அவர் வந்து கண்டு அவளைத் தம்முடைய மகளென் றறிந்த தன்றி நிகழ்ந்தவற்றையும் தம்முடைய ஞானத்தா லறிந்துகொண்டு, "அஞ்சாதே" என்று அபய மளித்துக் குழந்தையுடன் அவளை அழைத்துச் சென்று தம்முடைய பள்ளியின் ஒருபால் இருக்கச் செய்து ஆதரித்து வருவாராயினர். அவரைத் தன் தந்தையென்றறிந்த மிருகாபதி ஒருவகையாக ஆறுதலுற்றிருந்தாள். அங்கே தவஞ் செய்துகொண்டிருந்த பரமவிருடிகள் பல்லோருக்குத் தலைவரும், தருமத்தையும் விரதத்தையும் தாங்கியருமாகிய பிரமசுந்தர முனிவரும் அவர் மனைவி பழிப்பில் கற்பிற் பரமசுந்தரியும் சேடக முனிவருடைய விருப்பத்தின்படி மிருகாபதியைக் குழந்தையுடன் பாதுகாத்து வந்தமையின் அவள் சிறிதும் கவலையின்றி யிருந்தனள்.
சூரியோதய காலத்திற் பிறந்தமையின் அவன் உதயணனென்னும் பெயர் பெறுதற்கு உரியனென்று சேடகமுனிவர் நாமகரணஞ் செய்ததன்றி அவனுடைய வரலாறு அநேகருடைய வரலாறுகளுக்கு இடமாக விளங்குமென்றுங் கூறினர்:
"அதிரா ஞாலத் தரசுவீற் றிருந்த
கதையுரைக் கெல்லாங் காரண மாதலிற்
புதையிரு ளகற்றும் பொங்கொளி மண்டிலம்
உதய மிவர்தர வுதித்தோன் மற்றிவன்
உதயண னாகெனப் பெயர்முதற் கொளீஇ" (2.11:79-83)
உதயணன், பிறைபோல் வளர்ந்து மேற்கூறிய பிரமசுந்தர முனிவர்க்குப் பரமசுந்தரிபாற் றோன்றிய யூகியுடன் நட்புற்று விரும்பி விளையாடிப் பின் அம்முனிவரிடத்தும் சேடக முனிவரிடத்தும் அரசர்க்குரிய பலவகைக் கலைக்ளையும் வேறு கலைகளையும் அவனுடன் கசடறக் கற்று இயற்கை அறிவாலும் செயற்கை அறிவாலும் மேம்பட்டு விளங்கினான். அவர்களுடைய ஆக்கத்தைக் கண்ட முனிவர்கள் மிகவும் பாராட்டி ஆசி கூறினார்கள்.
அப்பால் ஒரு நாள் பிரமசுந்தரமுனிவர் யானையின் கோபத்தை அடக்கி வயப்படுத்தி ஆளுதற்குரிய மந்திரமொன்றை உதயணனுக்கு உபதேசித்ததன்றி இசைப் பயிற்சி பண்ணுவித்து, முன்பு இந்திரனால் தமக்குக் கிடைத்திருந்ததும் யானை முதலியவற்றை வயமாக்குவதற்குரியதுமாகிய கோடபதியென்னும் யாழை அவனுக்குக் கற்பித்து அதனை அவன் வாசித்து வருகையிற் கேட்ட காட்டு யானைகள் முதலியனவும் பறவைகளும் பிறவுயிர்களும் மிகுந்த உவகையுடன் வந்து அவனுக்கு வேண்டிய ஏவல்கள் செய்தலைக் கண்டு வியந்து அந்த யாழை அவனுக்கே கொடுத்து, "நீ இந்த வித்தையில் மிக்க ஆற்றலை அடைவாயாக" என்று ஆசி கூறினர். கூறியவர், "இவன் உனக்கு அடைக்கலம்" என்று தன் புதல்வனாகிய யூகியையும் அவன்பால் ஒப்பித்தனர். "கடந்து ளோர்களுங் கடப்பரோ மக்கண்மேற் காதல்." பின்பு உதயணன் யூகியை உயிர்த்துணையாகக் கொண்டு எல்லா வகையிலும் சிறப்புற்று விளங்கினான்.
ஒருநாள், தான் சென்ற காட்டில் பல பிடிகள் சூழப் பெற்றதும் பதினாயிரம் யானைகளின் பலமுள்ளதுமான ஒரு தெய்வயானை நின்றது. அதனைக் கண்ட உதயணன் மந்திரத் தியானத்தோடு கோடபதியை வாசித்தான். வாசிக்கவே அஃது அவனருகே வந்து மிக்க அன்பு பாராட்டி அவன் ஏவிய தொழில்களைச் செய்தது. அதன் நிலையைக் கண்ட உதயணன் அதன் மேலேறித் தன்னிடமடைந்தான். அஃது அவனைவிட்டுப் பிரியாமல் அவனுக்குரிய பணிகளைச் செய்துவந்தது. சில நாட்கள் சென்ற பின்பு ஒரு நாள் இரவில் அந்த யானை அவன் கனவில் தோன்றி, "என்மேற் பாகரை யேற்றினாலும் தோற்கயிற்றால் என்னைக் கட்டினாலும் யான் உண்ணுதற்கு முன்னமே நீ உண்டாலும் உன்னைவிட்டு நீங்கிவிடுவேன்" என்றது. கேட்ட உதயணன் உடனே விழித்தெழுந்து அதுமுதல் மேற்கூறிய மூன்று தவறுகளும் உண்டாகாதபடி சாக்கிரதையாக நடந்து வந்தான். தெய்வ யானையும் அவனை விட்டு நீங்காமற் பணிபுரிந்து ஒழுகியது.
இப்படி யிருக்குங் காலத்தில் அரசாட்சியில் வெறுப்புற்றுத் துறவறம் பூணுதற்கு விரும்பிய விக்கிரமன் தனக்குச் சந்ததியில்லாமையினால் தன் இராச்சியத்தைப் பாதுகாத்தற்கு யாரும் இல்லையேயென்று துன்பமுற்றுப் பின் தன் தந்தையாகிய சேடக முனிவர்பாற் சென்று வணங்கி முதலில் தன் கருத்தைத் தெரிவித்து அப்பால் அவருடைய உபதேச மொழிகளை விருப்பத்துடன் கேட்டுக் கொண்டிருந்தபொழுது, இயல்பாகவே அவ்விடம் வந்த உதயணனைக் கன்டு, ஒளியாலும் தோற்றப் பொலிவாலும் சிறப்புற்று விளங்கிய அவனை நன்கு மதித்து, "இவன் யார்?" என்று கேட்டனன். கேட்கவே முனிவர், "குரு குலத்தரசனாகிய சதானிகன் தேவியும் உன் தங்கையுமாகிய மிருகாபதியின் புதல்வன் இவன்; ஊழ்வினை வயத்தால் அவள் இங்கே வந்து அவனைப் பெற்றனள். கல்வி கேள்விகளில் அவன் சிறந்தவனாயினன். உரிய பிராயம் வந்துவிட்டமையால் இவனுக்கு இனி அறிவிக்க வேண்டியவற்றை அறிவித்துக் கௌசாம்பி நகர்க்கு அனுப்ப எண்ணியிருக்கிறேன்" என்றனர். உடனே விக்கிரன் மிகவும் உவந்து, "இவனை அடியேனுக்கு அளித்தால் ஏயர்குலத்திற்கு உரிய உரிமையை இவன்பால் ஒப்பித்து இவனை அரசனாக்கிவிட்டுத் துறவு பூண்டு தவஞ் செய்து உய்வேன்" என்று முதலில் அவரையும் அப்பால் மிருகாபதியையும் இரந்து அவர்களுடைய அனுமதி பெற்று யூகியோடு உதயணனையும் மிருகாபதியையும் வைசாலி நகருக்கு அழைத்துச் சென்று அங்கேயுள்ள மந்திரிகளுக்கும் சேனைத் தலைவர்களுக்கும் மற்றவர்களுக்கும் தெரிவித்துத் தன் அரசாட்சியை அவன்பால் ஒப்பித்துவிட்டுத் தன் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளுதற்குத் தவவனஞ் சென்றான்.
மேற்கூறிய தெய்வ யானை உதயணனுடனே வைசாலிக்கு வந்து வழக்கப்படியே உதயணனுக்குச் செய்தற்குரிய ஏவல்களைச் செய்துகொண்டு அவனுடைய யாழிசையை நுகர்ந்து அந்நகரில் இருந்தது.
அப்பால் உதயணன் யூகியைத் தன்னுடைய முதல் மந்திரியாக்கி அரசாட்சி செய்துகொண்டு வைசாலி நகரத்திலிருந்தான். அப்போது அவன் தன்னுடைய வீரத்தாலும் யூகியின் உதவியாலும் தெய்வ யானையின் உபகாரத்தாலும் பல பகைவர்களை வென்று அடக்கி அவர்களுடைய நாடுகளைத் தன்வயமாக்கி வாழ்ந்து வந்தான்.
நிலாமுற்றத்தில் உறங்கிய தேவியைக் காணாமற் சதானிகன் திடுக்கிட்டு நிகழ்ந்ததை அறியாமல், பல இடங்க்களுக்கும் தன் பரிவாரங்களை அனுப்பித் தேடுவித்துக் கொண்டே காலங் கழித்துவந்தான். வருகையில் ஒரு நாள் அவன் முக்கால உணர்சியுள்ள ஸுவ்ருதரென்னும் முனிவரை யடைந்து தன் குறையைத் தெரிவித்து வருந்தினான். அவர் மிருகாபதியைச் சரபப் புள் எடுத்துச் சென்று விபுலகிரியில் வைத்தது முதல் உதயணன் வைசாலியில் அரசாட்சி செய்துகொண் டிருப்பது இறுதியாகவுள்ள செய்திகளையெல்லாம் விளங்கக் கூறியதன்றிச் சதானிகனுடைய பிற்காலச் செய்திகளையும் தெரிவித்தனர். உடனே சதானிகன் வைசாலி நகரத்தை யடைந்து மிருகாபதியைக் கண்டு அவளுடைய குணவிசேடங்களைப் பாராட்டிப் புகழ்ந்தனன். பின்பு அவள் வாயிலாக உதயணனைக் கண்டு அவனால் உபசரிக்கப்பெற்றுச் சில நாள் அங்கே யிருந்து, அப்பால் அவனை அந்நகரிலேயே அரசாட்சி செய்துகொண் டிருக்கும்படி சொல்லிவிட்டுத்தான் தேவியுடன் கெளசாம்பியை யடைந்து முன்போல அரசு புரிந்து வந்தான். அப்போது மிருகாபதி இரண்டு புதல்வர்களைப் பெற்றாள். அவர்கள் முறையே பிங்கலன், கடகன் என வழங்கப்பெற்றனர். அவர்கள் கல்வி கேள்விகளிற் சிறந்து விளங்கினார்கள். உதயணன் இடையிடையே கெளசாம்பிக்கு வந்து தந்தையுடன் சில காலமிருந்துவிட்டுச் செல்வதுண்டு. இங்ஙனம் சில ஆண்டுகள் சென்ற பின், சதானிகனுக்குத் தன் அரசாட்சியில் வெறுப்பும் துறவில் விருப்பமும் உண்டாயின. அதனால், உதயணனை வருவித்து அவன்பால் அரசாட்சியை ஒப்பித்துவிட்டுத் தான் எண்ணியவாறே தவஞ் செய்தற்கு வனஞ் சென்றான்.
அப்பால் உதயணன், கெளசாம்பி, வைசாலியென்னும் இரண்டு இராச்சியங்களையும் கெளசாம்பியிலே யிருந்து கொண்டு செவ்வனே சில நாள் ஆண்டு பின் வைசாலியிலேயிருந்து அரசு புரியும்படி யூகியை நியமித்துவிட்டுத் தான் கௌசாம்பியை மட்டும் ஆளுவானாயினன். யூகியையல்லாமற் கல்வியறிவிற் சிறந்தவர்களும் புறத்தே சென்று உலாவி வரும் உயிர் போன்றவர்களுமான வயந்தகன், உருமண்ணுவா, இடவகனென்று வேறு மூன்று மந்திரிகளும் உதயணனுக்கு உண்டு. அவர்களும் வேறு சில தோழரும் அவனுக்கு அங்கே உதவி புரிந்து வந்தார்கள். மேற்கூறிய தெய்வ யானையும் அவனுக்கு வேண்டிய பணிகள் புரிந்து அங்கே உதவி செய்துவந்தது. அப்போது உதயணன் பல பகைவர்களை வென்று அவர்களுடைய இடங்களைக் கைக்கொண்டு மிக மேம்பாடுற்று விளங்கினான். கல்வியாலூம், வீரத்தாலும், ஆட்சி முறையாலும், பிரதாபத்தாலும், உதயணன் சிறந்தவனென்ற புகழ் எங்கும் பரவியது.
இங்ஙன மிருக்கையில் ஒரு நாள் உதயணன், சேனையையும் தெய்வ யானையையும் ஊரில் நிறுத்திவிட்டு உருமண்ணுவா முதலிய சில தோழரோடும், சில வீரரோடும் மட்டுஞ் சென்று ஒரு காட்டில் வேட்டையாடிக் களைத்து மயங்கி நீர் வேட்கையுற்று வருந்தினன். மற்றவர்களும் அப்படியே வருத்தமடைந்தார்கள். பின் எல்லோரும், "இந்தக் காட்டில் ஏதேனும் தெய்வமிருக்குமாயின் இரங்கி நம்முடைய தாகத்தை அது போக்கியருளும்" என்று நிச்சயித்துக் கொண்டவர்களாகி அங்கே ஒரு புரசமரத்தி னிழலிலே சோர்ந்து கிடந்தார்கள். கிடக்கையில், வெண்டுகில் உடுத்திய வண்ணம் மிக மெல்லிய மேற் போர்வையை யுடையவனும் அரையிற் கச்சணிந்தவனும் சந்தனம் பூசிய மார்பை யுடையவனும் ஒளிவிட்டு வீசுகின்ற மேனியை யுடையவனும் பிறைவடம் விளங்குகின்ற கழுத்தை யுடையவனும் செங்கழுநீர் மாலையைச் சூடிய குஞ்சியை யுடையவனும் ஆயிரம் இதழை யுடைய செந்தாமரை மலர் போன்ற கண்களை யுடையவனுமாகிய மிக அழகிய ஓரிளைஞன் அங்கே வந்து அவர்களை நோக்கி, "நீவிர் யாவிர்? மிகுந்த இளைப்பை யடைந்திருக்கிறீர்களே; நேர்ந்த துன்பம் யாது?" என்று வினாவினன். அவர்கள் தமக்கு அப்போதுள்ள நீர் வேட்கைத் துன்பத்தைக் கூறினர். அவன் உடனே இனிய நன்னீரைக் கொணர்ந்து அவர்களுடைய தாகத்தை நீக்கினன். நீக்கிய பின் வேறொன்றையும் எதிர்பாராமல் அவன் செல்லத் தொடங்கியபொழுது அவர்கள் அவனுடைய உபகாரத்தை மிகவும் பாராட்டி அவனை நோக்கி, "இது போன்ற துன்பம் இனி எங்களுக்கு ஏதேனும் உண்டாகுமாயின், உம்மை நினைத்துப் போக்கிக் கொள்ளக் கருதுகின்றோம்; நீர் இன்னாரென்று எமக்குத் தெரிவிக்க வேண்டும்" என்று கேட்டனர். கேட்கவே அவன், "நான் குபேரனுக்குத் தொண்டு செய்யும் இயக்கர்களில் ஒருவன். என் பெயெர் நஞ்சுகனென்பது; உங்களுடைய இனிய நட்பினனாக என்னைக் கருதுக; நீங்கள் எந்தச் சமயத்தில் நினைத்தாலும் உடனே நான் வந்து நும் குறையைத் தீர்த்தற்குரிய கடப்பாடுடையேன்; என்னை நினைத்தற்குரிய மந்திரம் இஃது" என்ரு சொல்லி அம் மந்திரத்தை உருமண்ணுவாவுக்கு உபதேசித்துவிட்டுத் தன்னிடஞ் சென்றனன்; அவர்கள் அவனுடைய பேருதவியை மறவாதவர்களாகி அவனைப் பாராட்டிக் கொண்டு நகரம் வந்து சேர்ந்தார்கள்.
பின்பு ஒரு நாள் நாடக அரங்கில் ஆடிய ஆடன் மகளிருடைய கூத்திலும் பாட்டிலும் மனத்தைச் செலுத்தி மயங்கிப் போய்ப் பசி மிகுதியால் உதயணன் மேற்கூறிய தெய்வ யானைக்கு வழக்கம்போலே உணவளித்தலை மறந்து தான் முந்தி யுண்டான். அதனையறிந்த அந்த யானை,"உதயணன் எனக்கு வாக்களித்ததை மறந்துவிட்டு உண்டது தன் புண்ணியக் குறைவாலேதான்" என்றெண்ணி உடனே தன்னிடம் சென்றுவிட்டது. பின்பு கோடபதியை வாசிக்கும்போது கேட்பதற்கு வழக்கப்படியே தெய்வ யானை வாராமையை அறிந்த உதயணன் தான் செய்த பிழையை நினைந்து மிகவும் வருந்தினன்; அதனை அறிந்த மந்திரிமார், "அந்த யானையை எப்படியாவது தேடித் தருவோம்" என்று வாக்களித்தனர். அங்ஙனம் வாக்களித்தும் வருத்தந் தணியாதவனாகிக் கவலைக் கடலில் அழுந்திய உதயணன் அநேக இடங்களுக்குத் தன் பரிசனங்கள் பலரை அனுப்பி அதனைத் தேடச் செய்தனன். செய்தும் அஃது அகப்படாமையால் யாழுங் கையுமாகத் தானே காடுகளுக்கு நாள்தோறுஞ் சென்று சென்று அதனைத் தேடித் திரிவானாயினன்.
அவந்தி நாட்டில் உச்சைனி நகரத்தில் 1பிரச்சோதனனென்னுஞ் சக்கரவரத்தி, வீரம் முதலியவற்றால் சிறந்து பல அரசர்களும் திறை கொடுக்க அரசாட்சி செய்து செங்கோல் செலுத்தி வந்தான். அவனுடைய பதினாயிரந் தேவிமார்களில் முதன்மை வாய்ந்த பதுமகாரிகை யென்பவள்பால் அவனுக்கு இந்திரனுடைய அருளினாற் பெண் ஒருத்தி உதித்தனள். அதனால் அவளுக்கு வாசவதத்தை யென்று பெயரிடப்பட்டது. அவள் மிக்க அழகுடையவள்:
------
1. பிரத்தியோதனன்.
----
"யாற்றற லன்ன கூந்தல் யாற்றுச்
சுழியெனக் கிடந்த குழிநவில் கொப்பூழ்;
வில்லெனக் கிடந்த புருவம் வில்லின்
அம்பெனக் கிடந்த செங்கடை மழைக்கண்;
பிறையெனச் சுடருஞ் சிறுநுதல் பிறையின்
நிறையெனத் தோன்றுங் கறையில் வாண்முகம்;
கிளியென மிழற்றுங் கிளவி கிளியின்
ஒளிபெறு வாயி னன்ன வொள்ளுகிர்;
வேயெனத் திரண்ட மென்றோள் வேயின்
விளங்குமுத் தன்ன துளங்கொளி முறுவல்;
காந்தண்முகி ழன்ன மெல்விரல் காந்தட்
பூந்துடுப் பன்ன புனைவளை முன்கை" (4.11:64-79)
அவள் மற்ற எல்லாவகையிலும் சிறந்தவள்; வேறுள்ள பட்டத் தேவியர்களிடம் பிரச்சோதனனுக்கு உதித்த பிள்ளைகளும் பெண்களும் மிகப் பலர். பிள்ளைகளுள்ளே மிகச் சிறந்தவர்கள் பாலகன், பாலகுமரன், கோபாலகன் என்பார். மிக்க வீரியமுடையதும் மிகப் பெரியதுமான ஒரு பட்டத்து யானை அவனுக்கு உண்டு. அதன் பெயர் நளகிரி யென்பது. அவனுக்கு மந்திரிகள் பதினாறாயிரவர்.
அந்தச் சக்கரவர்த்தி ஒரு நாள், "எல்லா அரசர்களும் கப்பம் செலுத்திவருகிறார்களா?" என்று விசாரித்த பொழுது கணக்கர், "வத்தவ நாட்டரசனும் வைசாலி நகரத்தரசனும் வழக்கப்படி செலுத்தவில்லை" என்று தெரிவித்தனர்.அதற்குரிய காரணத்தை வினாவியதன்றி அவர்களைப் பிடித்து வரும்படி செய்து விசாரிக்க வேண்டுமென்று அரசன் மந்திரிகளை நோக்கிக் கூற, அவர்களுள்ளே முதன்மை வாந்தவனும் நீதிநூற் பயிற்சியிலும் தந்திரத்திலும் மிக்கவனுமாகிய சாலங்காயனென்பவன், "உதயணனுக்குத் தெய்வயானையொன்றும் பராக் கிரமசாலிகளான மந்திரிகளும் துணையாக இருத்தலின் அவன் இப்பொழுது வெல்லப்படான். இப்போது வைசாலி நகரத்தரசனாக இருப்பவனும் உதயணனுடைய நண்பனுமாகிய யூகியும் வெல்லுதற்கரியன். அவனும் உதயணனும் சேராமலிருக்கும்படி முதலிற் செய்ய வேண்டும். யூகியுடன் போர் செய்தற்காகச் சதுரங்க சேனைகளையும், தக்க வீரர்களையும் நாம் வைசாலிக்கு அனுப்பினால், யூகி தன் சேனைகளோடு வந்து நம்முடைய சேனைகளுடன் போர் செய்வான்; அவன் வந்து உதயணனுக்கு உதவி செய்ய இடமிராது. இயல்பாகவே எல்லா நலமும் வாய்ந்த உதயணன் தனக்குப் பணி புரிந்துவந்த தெய்வ யானையைப் பிரிந்தமையால் இப்போது அதனைத் தேடிக்கொண்டு யாழுங் கையுமாகக் காடுகளில் அலைகிறான். அதனாலும், யூகி வந்து உதவுவதற்கு இட மில்லாமையாலும் உதயணனை நாம் பிடித்துக்கொண்டு வருவதற்குத் தக்க சமயம் இது. யாம் மாய யானை யொன்றை நிருமித்து அனுப்பி மயக்கி உதயணனைப் பிடித்துவரச் செய்வதுதான் தக்க உபாயம்" என்றான். கேட்ட பிரச்சோதனன் உடனே யூகியுடன் போர் செய்வதற்காகச் சில வீரர்களைச் சேனைகளுடன் வைசாலிக்கு அனுப்பினன். சிறந்த சிற்பிகளைக் கொண்டு அரக்கு முதலியவற்றாலும், மரங்களாலும் மிகப் பெரிதாக எந்திரயானை யொன்றைச் செய்வித்து ஆயுதபாணிகளான தொண்ணூற்றாறு போர்வீரர்களை அதன் வயிற்றில் இருக்கும்படி செய்து அதன் துதிக்கையுள்ளும், நான்கு கால்களுள்ளும் பல வகையான ஆயுதங்களை வைப்பித்து அனுப்பியதன்றிப் பதினாறாயிரஞ் சதுரங்கப் படைகளுடன் மேற்கூறிய சாலங்காயனையும் ஒரு சேனைத் தலைவனையும் அதன்பின் கெளசாம்பிக்கு அனுப்பினான்.
பிரச்சோதனன் கட்டளைப்படியே சென்று சேனைகளுடன் வைசாலி நகரத்தைச் சூழ்ந்துகொண்ட வீரர் முதலியவர்களுக்கும் யூகிக்கும் பெரும் போர் நிகழ்ந்தது.
உதயணன் தேடிக்கொண் டிருக்கும் காட்டின் நடுவில் நீலமலை போன்ற அந்த எந்திர யானையானது மேகம் போற் பிளிறிக்கொண்டு சென்று உலாவியது. சாலங் காயன் பிறர் அயாதபடி பெரும் படையோடு சென்று அதன் பின்னே வேறிடத்து ஒளித்திருந்தான். அந்த வஞ்ச யானை தன்னை உயிருள்ள யானைபோற் காட்டிப் பல பிடிகள் சூழ அக்காட்டில் உலாவுகையில் அதனைக் கண்ட காட்டு வேடர்கள் முன்னம் காணாமற்போன தெய்வ யானையென்று நினைத்து மகிழ்ந்து உடனே சென்று உதயணனுக்குத் தெரிவித்தார்கள். அப்போது உதயணன் மகிழ்வுற்று அவர்களுக்கு வேண்டிய சம்மானங்களைச் செய்துவிட்டு யாழுடன் புறப்பட்டான். பகைப்படை வருமென்று வயவனென்னும் பறவையின் ஒலியால் தெரியவந்தது. பின்னும் பல தீய நிமித்தங்கள் காணப்பட்டன. உடன்வந்த வயந்தகன் தடுத்தான்.
உதயணன் அவற்றைச் சிறிதும் உட்கொள்ளாமல் விரைந்து காடு சென்று அந்த யானையைக் கண்டு தனக்குப் பழக்கமுள்ள தெய்வ யானையாகவே நினைந்து முழு மதியைக் கண்ட சகோரம்போல் மகிழ்ந்து தன்னுடன் வந்த சேனைகளை வெகு தூரத்திற்கப்பால் நிறுத்திவிட்டுத் தான்மட்டும் அதனருகிற் சென்று 1இனிய இராக மொன்றை யாழில் வாசித்தான். அப்போது அது யாழிசையில் மிக்க விருப்ப முள்ளதுபோல்வந்து அவன் எதிரே நின்றது. அவன் மகிழ்வடைந்து மெய்ம்மறந்து நின்றான்; நின்றவுடன் உள்ளிருந்த போர்வீரர்கள் மிக விரைவாக அதன் பொறிகளைக் கழற்றிக்கொண்டு திடீரென்று வெளியே வந்து கொடிய சொற்களைச் சொல்லிக்கொண்டு போர் செய்யத் தொடங்கினார்கள். இது மிகச் சிறியவர்களுடைய செயலென்று எண்ணிப் புன்முறுவல் செய்துகொண்டு உதயணன் கம்பீரமாக நின்றான். நிற்கையில், ஐந்நூறு போர்வீரர்களோடு பின்னே நின்ற வயந்தகனால் அந்தத் தொண்ணூற்றறுவரும் கொல்லப்பட்டார்கள். மறைந்து சேனையுடன் பின்னே ஒருபாலிருந்த சாலங்காயன் மிகுந்த கோபங்கொண்டு பல வீரர்களோடு வந்து எதிர்த்துப் போர் செய்து உதயணனால் தோல்வியுற்றான்;
--------
1. மாளவராகமென்றும் தக்கராகமென்றும் வேறு நூல்கள் கூறும்.
சேனாதிபதியும் மாண்டான். சாலங்காயனை வெட்டுவதற்குத் தன் வாளை உயர்த்திய உதயணன், மந்திரியைக் கொல்லலாகாதென்ற நூல் விதியை யுட்கொண்டு அவனைக் கொல்லாமல் விட்டுவிட்டு அவ்வாளாற் பல்யானைகளை வெட்டி வீழ்த்திப் பின்பு ஒரு யானையை வெட்டத் தொடங்கியபொழுது அதன் கொம்பிற் பட்டு அவ்வாள் ஒடிந்து போயிற்று. ஆயுதமின்றித் தனியே நின்ற உதயணனைப் பிடித்துக்கொள்ளுதற்குச் சாலங்காயன் முதலியோர் சூழ்ந்துகொண்டார்கள். அப்பொழுது உதயணன் நிகழ்ந்தவற்றை ஓர் ஓலையிலெழுதி அதனை யூகியிடம் சேர்ப்பிக்கும்படி வயந்தகனிடம் கொடுத்தனுப்பிவிட்டுத் தான் அவர்கள் வசமாயினன்.
அப்பால், ஒரு மதயானையைத் தாமரைத் தண்டின் நூலாற் கட்டுவது போலத் தன் மேலாடையாற் சாலங்காயன் உதயணனைக் கட்டி ஒரு தேரின் மேலேற்றிக் கொண்டு உச்சைனி சென்று பிரச்சோதனனிடம் தெரிவித்து அவன் கட்டளைப்படியே 1இருண்மயமாகிய ஒரு பெருஞ் சிறையிற் கால்களில் விலங்கிட்டு மிகத் துன்பமுறும்படி அவனை வைத்துவிட்டான். இஃதிவ்வாறாக;
வயந்தகன் விரைந்து சென்று வைசாலியின் புறத்தே பெரும் போர் நிகழ்த்திக்கொண்டு நின்ற யூகியைக் கண்டு நிகழ்ந்தவற்றைக் கூறி உதயணனது திருமுகத்தை அவனிடங்கொடுத்தான். அதனைப் பிரித்துப் படித்தறிந்த யூகி முதலில் மிகுந்த துன்பமுற்றுத் தன் தலைவனது நிலைமைக்கு வருந்தி, அப்பால் மிக்க சினம் கொண்டு2 "இரும்பை எலி விழுங்கிற்று" என்றதற்கு, "குழந்தையைப் பருந்து கொண்டுபோயிற்று" என்றது போல உலகில் வஞ்சகச் செயல் செய்தவனை வஞ்சகசசெயல் செய்தே.
-----
1 "வேழ வேட்டத்து வீழ நூறி யருஞ்சிறைப் பள்ளி யாப்பொடு புக்க பெருஞ்சிறைப் பள்ளிப் பேரிருள்" {1.15:132-4) எனப் பெருங்கதையிலும் "வான்றளை விடீஇய"(15:63) என மணிமேகலை யிலும், வாரார் வனமுலை வாசவ தத்தையென் றாரானுஞ் சொல்லப் படுவா ளவளுந்தன் பேராய மெல்லா மொழியப் பெருந்தெருவே,காரார் தடந்தோட் டனைக்காலன் பின் போனாள், ஊரா ரிகழ்ந்திடப் பட்டாளே?" (சிறிய திருமடல் 66-8) எனத் திருமங்கையாழ்வார் வாக்கிலும் காணப்படுதலால், உதயணனிருந்த சிறைச்சாலை மிக்க இருண்மயமாக இருந்ததென்றும் அவன் காலில் விலங்கு இடப்பட் டிருந்த தென்றும் தெரிகின்றன.
2. உதிதோதய காவியம்.
வெல்லவேண்டுமென்று தன்னுள்ளே நிச்சயித்துக்கொண்டு அங்கே சூழ்ந்து நின்ற நண்பர்களை நோக்கி, "கள்ள யானையால் மயக்கி எம்மரசனைப் பிடித்துத் தன்னகர்க்கு வருவித்த பிரச்சோதனனுடைய நகரத்தை யான் ஒரு யானையாலேயே அழிப்பித்து உதயணனை மீட்பதல்லாமல் உஞ்சை நகரத்தைத் தீக்கிரையாக்கியும் அவனைக்கொண்டு வாசவதத்தையைப் பிரித்துப் பிரச்சோதனன் அறியாமல் வலித்துக் கொண்டுவரச் செய்தும் அவனுக்கு அவளை மணஞ் செய்விப்பேன்" என்று சபதஞ் செய்துவிட்டு வைசாலி நகரத்தைப் பாதுகாத்து வரும்படி தன் சுற்றத்தார்களை நியமித்தான். கெளசாம்பி நகரத்தைப் பாதுகாக்கும் வண்ணம் பிங்கல கடகருக்குச் சொல்லி அனுப்பினான்.
அவந்திநாட்டின் எல்லைப்புறத்ததாகிய புட்பக நகரத்தில் உதயணனுடைய சுற்றத்தார்களை இருக்கச் செய்து சேனைகளோடே அங்கிருந்து அவர்களைப் பாதுகாப்பதுடன் பின்பு செய்ய வேண்டுவனவற்றை அப்பொழு தப் பொழுது ஆலோசித்துச் செய்து வரும்படி சொல்லி இடவகனை அந்த நகருக்கு அனுப்பினான். சயந்தி நகரத்தில் உருமண்ணுவாவை இருக்கச் செய்தான்; இங்ஙனம் இன்னும் செய்ய வேண்டியவறைச் செய்து முடித்த யூகி, "உதயணனுடைய பிரிவினுக்கு ஆற்றாமல் வருந்திய யூகி, இறந்து போய்விட்டான்" என்ற செய்தியை எல்லா நாடுகளிலும் நகரங்களிலும் பரவச் செய்துவிட்டு ஒருவருக்குந் தெரியாதபடி தான் மறைந்து நின்று, ஒரு பிணத்தைத் தன்னுடைய பிணமாகப் பிறர் நினைக்கும்படி செய்து அதனைத் தன்னுடைய அணிகல முதலியவற்றாற் புனைந்து அதைச் சுடுவிக்கும்படி செய்துவிட்டுத் தான் மாறுவேடம் பூண்டு அப்படியே வேறு வேடம் பூண்ட பல வீரர்களோடும் வயந்தகன் முதலிய தோழர்களோடும் கூனர், குறளர், சித்தர் முதலியவர்களோடும் உஞ்சையை யடைந்து அதன் புறத்தேயுள்ள தனியிடமொன்றில் இருந்து மேல் நிகழ்த்த வேண்டியவற்றை எல்லோருக்கும் தெரிவித்துவிட்டுப் பிரச்சோதனனது அரண்மனையிலும் அகநகரத்திலும், புறநகரத்திலும், அயலூர்களிலும் பிறர் அறியாதபடி அவ்வவ்விடத்திற்கேற்ற வேலைகளைப் பெற்று இருந்து வரும் வண்ணம் சொல்லி அவர்களை அனுப்பிவிட்டுச் சென்று தான் அந்த நகர்ப் புறத்தேயுள்ள மாகள வனத்தே யிருக்கும் காளி கோயிலில் இருந்து மேல் ஆக வேண்டியவற்றை முதலில் ஆராய்ந்தான்.
யூகி இறந்துவிட்டா னென்பதைக் கேட்ட பிரச்சோதனன் மிக மகிழ்ந்து போருக்குச் சென்ற சேனைகளை வைசாலியினின்றும் வருவித்துவிட்டுக் கவலை நீங்கி, உதயணனுடைய நாடுகளிற் சில பகுதிகளையும் வலிந்து கைப்பற்றினான்.
பிங்கல கடகர் யூகி, இறந்தானென்ற செய்தியைக் கேள்வியுற்று வருந்திப் புலம்பி மயான மடைந்து அங்கேயுள்ள சாம்பலில் அவனுடைய அணிகலன்கள் முதலியவற்றைக் கண்டு மிகத் துன்புற்றுக் கெளசாம்பி நகர்க்கு மீண்டனர்.
அப்பால் யூகி உச்சைனியின் புறத்தேயுள்ள1 ஓர் ஊரை யடைந்து அங்கே ஒருவருமில்லாத பாழ்வீடொன்றில் வயந்தகன் முதலிய சில அன்பர்களுடன் இருந்து ஆலோசித்து வேறு பாஷைகளை அவர்களுக்குக் கற்பித்துக்
கடைவீதி முதலிய இடங்களில் வியாபார முதலியவற்றைச் செய்யும்படி அவர்களை அனுப்பினான். வயந்தகன் பிரச்சோதனனுடைய குமாரர்களோடு சேர்ந்து கல்வி கற்பானாகி அவர்களுக்கு ஏவல் செய்துகொண்டு மிருந்தான்.
---------
1 அவ்வூர்ப் பெயர் பாகமென்று தெரிகிறது; உதிதோதய காவியம், உதயண.
யூகியால் அனுப்பப்பட்ட வீரர்களிற் சிலர் ஊமை வேடமும் சிலர் செவிடர் வேடமும் தரித்துக் கொண்டு அரண்மனை முதலிய இடங்களில் தாம்தாம் செய்தற்குரிய வேலைகளைப் பெற்று அவற்றை நன்கு செய்பவர்களாகி அப்பொழு தப்பொழுது அங்கே நிகழும் செய்திகளையும் ஆண்டுள்ளார் செய்யும் ஆலோசனைகளையும் மெல்ல அறிந்து வந்து யூகிக்குச் சொலவாராயினர். மற்றையோரிற் பலர் பிறரறியாமல் அங்கங்கே சென்று தாங்கள் அவ்வவ் விடங்களில் அறிவனவற்றை யூகிக்கு அறிவித்தும் அவன் கூறுவனவற்றைத் தாம் அறிந்துகொண்டும் தத்தம் இடம் செல்வார்கள். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வதற்ககும் சேர்ந்தார்கள் பிரிந்து செல்வதற்கும் சில குறிப்பொலிகளும் குறிப்புக்களும் அவனால் அறிவிக்கப்பட்டிருந்தன.
அவர்கள் அப்படியிருக்கையில் சேதிநாட்டின் அயல்நாடான பாஞ்சால தேசத்து அரசனாகிய ஆருணியென்பவன், ஏயர் குலத்தவர்க்கும், தன் குலத்தவர்க்குமுள்ள பரம்பரை வைரத்தால் அக்குல வுரிமை பூண்ட உதயணன்பாற் பகைமை கொண்டவனாதலின், அவன் சிறைப்பட்டதை அறிந்து உடனே சேனைகள்டன் புறப்பட்டுப்போய் கௌசாம்பி நகரத்தைக் கைப்பற்றி அதனையே தன்னுடைய இராசதானியாகக் கொண்டு ஆளத் தொடங்கி விட்டான். அவனுக்கு அஞ்சிப் பிங்கலனும் கடகனும் சில சேனைகளோடு அயலிடஞ் சென்று மறைந்திருப்பாராயினர்.
உச்சைனி நகரில் இங்ஙனம் சங்கேதமான சில ஏற்பாடுகளைச் செய்துகொண்டு புறத்தே இருந்த யூகி, ஒரு நாள் மிகுந்த நோயுடையவன் போலவும் தெய்வாவேசங் கொண்டவன் போலவும் தன்னைக் காட்டி நீர்க் கரகம் ஒன்றைத் தலையில் ஏந்திக்கொண்டும் கையைத் தட்டிக்கொண்டும் பாடிக்கொண்டும் நகர வீதியிற் சென்று, " தேவ லோகத்திலிருந்து ஒரு தேவன் இந்நகரில் வந்திருக்கிறான். அவன் என்னுடைய தலைவன்: யான் அவனைப் பின்தொடர்ந்து வந்தேன்;1 ஐந்தலை நாகம் ஒன்றை இவ்வூர் அரசன் வைத்திருக்கிறான். அஃது எவ்விடத்தே யுள்ளது?" என்று மயக்கமும் தெளிவுமுள்ள பல வகையான வார்த்தைகளைச்சொல்லிக்கொண்டே2 பல சனங்கள் வியந்தும் பயந் தும் இரங்கியும் தன்னைச் சூழ்ந்துவர நடித்துக்கொண்டும் உதயணன் இருக்கும் சிறைச்சாலையின் பக்கத்தை யடைந்தான். அடைந்தவன் உதயணனும் தானுமே கற்றதும் பிறர் அறியாதுமான ஒரு பாட்டைப் பாடினான். கேட்ட உதயணன் யூகி வந்திருக்கிறானென்று தெரிந்து மகிழ்ந்து கவலை தீர்ந்து தான் அங்கிருத்தலை வேய்ங்குழலை ஊதி அவனுக்குத் தெரிவித்துவிட்டுச் சிறை காப்பாளரிடஞ் சொல்லிக் கொண்டு வேடிக்கை பார்ப்பவன் போலப் புறத்தே வந்தான். யூகியும் அவனுடன் வந்த வீரர்களும் உதயணனைக் கண்டு ஆறுதலுற்றார்கள். பின்பு யூகி பிறர் தன்னைப்பேயென்று நினைக்கும்படி நடித்துக்கொண்டு தான் இருக்கும் இடஞ் சென்றான்.
-------
1 'ஐந்தலை நாகம்’ என்றது, தோழர் நால்வர்க்கும் உதயணனுக்கும் உயிரொன்றாக இருத்தல்பற்றி; "ஐந்தலை யரவின் சீற்றத் தாரழல் குளிக்கலுற்றார்" (சீவக சிந்தாமணி, 746) "புற்றினி லுறையும் பொறிவரி யைந்தலைப் பற்றரு நாகம் பற்றிவந் தினிதா, வுற்றவிந் நகரத் துட்சிறை வைத்தார்" (உதயண குமார காவியம், 1:76), "உடம்பாறிரண்டிற் குயிரொன் றென" (திருவிளையாடல், 46:13) என்பவை அறியற் பாலன.
2 "கொடிக்கோ சம்பிக் கோமக னாகிய, வடித்தேர்த் தானை வத்தவன் றன்னை, வஞ்சஞ் செய்துழி வான்றளை விடீஇய, உஞ்சையிற் றோன்றிய யூகி யந்தணன், உருவுக் கொவ்வாவுறு நோய்கண்டு, பரிவுறு மாக்களிற் றாம்பரி வெய்தி" மணிமேகலை, 15: 61-6.
யூகி மேற்கூறியவாறு வேடம் பூண்டு சனங்கள் ஐயுறுதற்கிடமான சில வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டு பின்னும் சில நாள் வீதிகளில் உலாவி வருகையில், சிறைச்சாலை வேலைக்காரர்களிற் கூர்த்த புத்தியையுடைய ஒருவன் பிரச் சோதனனிடஞ் சென்று வணங்கி, "அரசர்க்கரசே! சில தினங்களாகப்பல சனங்கள் தன்னைச் சூழ்ந்துவர நோயாளி ஒருவன் வினோத வேடம் பூண்டு ஆடிக்கொண்டும் பாடிக் கொண்டும் சிலவற்றைச் சொல்லிக்கொண்டும் வீதியில் வருகின்றான். அவன் பாட்டைக் கேட்குஞ் சமயங்களில் உதயணன் வேய்குழல் ஊதுகின்றான். இவற்றைத் தெரிவிக்க வந்தேன்; பாதுகாத்தருள்க" என்றான். என்றபொழுது, அரசன் அருகிலிருந்த மந்திரிகளை நோக்க, அவர்களிற் சாலங்காயன், "அரசே, அவன் யூகியாக இருக்கலாமென்று நான் ஐயுறுகிறேன்: அவன் இறந்திருக்கமாட்டான். அவன் மார்பில்1 யானைக் கொம்பு குத்தியதால் உண்டாகிய தழும்பு ஒன்று உண்டு. அதனை எப்படியேனும் அறிந்து வரும்படி செய்தல் நன்று" என்று தெரிவித்தான். அதனைக் கேட்ட அரசன் அதைப்பற்றி நன்கு ஆராய்ந்து அதை அறிந்துகொள்ளுதற்கு வேண்டிய முயற்சியைச் செய்விப்பானாயினன். தான் கேளாதவன் போல அவற்றை எல்லாம் அறிந்துகொண் டிருந்தவனும் செவிடன் வேடம் பூண்டவனுமாகிய (யூகியின் ஒற்றன்) ஒருவன் உடனே வந்து நிகழ்ந்தவற்றை யூகியினிடம் தெரிவித்தான். அப் பால் யூகி தன் மார்பிலுள்ள தழும்பை அயலார் ஒரு வரும் தெரிந்துகொள்ளாதபடி கந்தைகளால் மறைத்துக் கொண்டு வழக்கம்போலே வீதியிற் போய் வருவானாயினன்.
-------
1 "வலிந்துமேற் சென்ற கலிங்கத் தரசன், குஞ்சர மருப்பிற் குறியிடப் பட்டுச், செஞ்சாந்து மெழுகிய சேடுபடு செல்வத்து, மார்பினது வனப்புந் தோளினது திரட்சியும்" பெருங்கதை,1.45: 20-23.
இப்படிச் சில தினங்கள் சென்றன. பின்பு ஒரு நாள் யூகி, "இனி உதயணனைச் சிறையினின்றும் விடுவித்தற்கு உரிய உபாயம் யாது?" என்று தன்னுள் ஆராய்ந்து பேய் வடிவங் கொண்டு நள்ளிரவில், பிறர் அறியாமல் நகரத்துள்ளே சென்று, குணஞ் சிதைந்து கெட்டு மயங்கித் திரிந்து பிறரை வருத்தும்படி ந்ளகிரிக்கு அகிற்புகை யூட்டியும் ஒருவகை மருந்தைக் கொடுத்தும் மதவெறியையும் கோபத்தையும் பலத்தையும் உண்டாக்கி அதனருகிற் சென்று, "இந்நகரத்தை அழித்து அரசன் முதலியோர்களுக்குக் கவலை உண்டாகும்படி செய்து உதயணனைச் சிறையினின்றும் நீக்கல் உன்னுடைய கடன்" என்று சொல்லி உச்சாடன மந்திரம் ஒன்றை அதன் செவியில் ஓதினான். ஓதியவுடன் அது மிகுந்த கோபமுற்று மதவெறி கொண்டு கட்டுத்தறியை முறித்துத் தன்னைக் கட்டிய சங்கிலியையும் அறுத்து விட்டுப் பெரு முழக்கம் செய்துகொண்டு சுழன்று ஓடி ஓடி ஊரை அழிக்கத் தொடங்கிற்று. அது கண்ட யூகி உடனே தானிருந்த ஊரை அடைந்தான்.
பழகிய பாகர்கள் அத்னை அடக்குவதற்கு மிக்க முயற்சி பண்ணவும் அந்த யானை அடங்காமல் அவர்கள் எல்லாரையும் கொன்றுவிட்டது. நகரத்தார் யாவரும் நடுங்குவராயினர்; இச் செய்தியைக் கேள்வியுற்று,
"நாவாய் கவிழ்த்த நாய்கன் போல
ஓவா வவலமொடு காவலன் கலங்கி"(2.9:46-7)
மிக்க கவலையை யடைந்து, அரண்மனையின் சூளிகையில் ஏறி நின்று பார்த்தான். அந்த யானை, மாளிகைகள் பலவற்றையும் கோபுர முதலியவற்றையும் தன் கொம்புகளாற் குத்தி அழித்தலையும், சனங்கள் கொல்லப்படுதலையுங் கண்டான். அந்த யானை ஐந்நூறு வீரர்களைக் கொன்றுவிட்டு மதிற்புறம் போந்து அறுநூற்றைம்பது சேரிகளையும் இரண்டாயிரத் தெண்ணூறு பாடிகளையும் பல உய்யானங்களையும் அழித்தது. நகரம் நிலை குலைந்தது, அதனால் கவலைக் கடலில் அழுந்திய பிரச்சோதனன், இத்துன்பத்தை நீக்குவதற்குரிய உபாயம் யாது?" என்று கேட்டபொழுது, "இந்த யானையின் கோபத்தை அடக்குதற் குரிய கருவி சிறைச்சாலையில் இருக்கும் உதயணனும் அவன் கையிலுள்ள யாழுமே. ஆதலால், அவனை யாழுடன் இவ்விடம் அனுப்பின் இந்த யானையை அடக்கி விடுவான்" என்று சாலங்காயன் கூறினன். பிரச்சோதனன், "வெல்ல முடியாமல் வஞ்சனையால் மாய யானையைக் காட்டிப் பிடிப்பித்து வருவித்துச் சிறையில் வைத்ததன்றி உதயணனை மதங்கொண்ட யானையின் முன்பும் அனுப்பினோமென்ற பழி நமக்கு வருமே" என்று தன்னுள் எண்ணி, "அது செய்தற்கு என் மனம் துணிந்திலது" என்று மறுத்தான். சாலங்காயன், "இந்திரனுடைய யானையாக இருந்தாலும் அவனுடைய யாழிசைக்கு வசமாகி அடங்கி நடக்குமேயன்றி யாதும் செய்யாது. ஆதலால் அவனை நளகிரியின் முன்பு அனுப்பலாம். இல்லையாயின் இனி என்ன என்ன தீங்கு விளையுமோ!" என்று வற்புறுத்திக் கூற அரசன், "இச் செய்தியை உதயணனிடம் தெரிவித்து நீயே அவனை அழைத்து வருக" என்று சொல்ல, அவன், "வஞ்சனையாற் பிடித்து வந்தேனாதலின், அவனிடம் செல்லுதற்கு அச்சமும் நாணமும் உடையேன்" என்று மறுத்தான்.
பின்பு சிவேதனென்னும் மந்திரியை அனுப்ப அவன் சென்று உதயணனைக் கண்டு பலபடப் பாராட்டி, 'அரசர் கட்டளைப்படி இங்கே வந்தேன். இப்போது இவ்வூருக்கு நளகிரி யென்னும் யானையால் நேர்ந்திருக்கிற பெருந் துன்பத்தை நீக்குதல் உம்முடைய கடமை. சிறையினின்றும் நீக்கி உம்மைக் கெளசாம்பி நகருக்கு அனுப்புதல் தம்முடைய கடமையென்று அவர் தெரிவிக்கச்சொன்னார்; ஆதலால், அருள் செய்ய வேண்டும்; மனத்தில் யாதொன்றையும் வைத்துக்கொள்ள வேண்டாம்" என்று பல முறை வணக்கத்துடன் சொல்லி உடன்படுவித்து மிக்க மரியாதையோடு மெல்ல அழைத்துக்கொண்டு வெளியே வந்து அவனைச் சிவிகையில் ஏற்றுவித்துக் கண்டோர் இன்புறும்படி அழைத்துச் சென்று, பல பருந்துகளும் கழுகுகளும் மேலே வட்டமிடக் கீழே மிகுந்த கோபாவேசத்தோடு உலாவித் திரியும் அந்த நளகிரியின் முன்பு இறக்குவித்து நிறுத்தினான். உதயணன், மந்திரத்தின் மகிமையால் முதலில் அதனை அசைவறச் செய்துவிட்டு அங்கே நின்று மிகுந்த கருணையுடன் பாடி யாழையும் வாசித்து அருகிற் செல்ல, கேட்ட யானை உடனே சினந் தனிந்து 1ஆணையாசாற் கடியுறை செய்யும் மாணி போல மிகவும் அடங்கி அவனருகில் வந்து அன்புடன் அவனை வணங்கி அவனுடைய ஏவல் கேட்டு நின்றது. கண்டோர் மிகவும் வியந்தார்கள். உதயணன், வணங்கி நிற்கும் அதன் மருப்பின் மீது அடிவைத்தேறி அதன் பிடரியில் இருந்துகொண்டு செலுத்த, யாதோர் இடை யூறுஞ் செய்யாமலே அஃது எல்லா வீதிகளிலும் உலாவியது. உலாவவே, கண்டவர்கள்,
-------
1. "பிரிந்தாற் புதல்வர் வந்து பெற்றதந் தந்தை பாதம்,பரிந்தநற் காதலாலே தாம் பணிந்திடுவதேபோல், இருந்துதற் பணிந்த யானை யெழின்மருப் படிவைத் தேறிப், பெருந்தகை யேவல் கூறப் பெருங்கையாற் றோட்டி கொண்டான்" (உதயண குமார காவியம், 1:91) என இந் நிகழ்ச்சிக்கு வேறு உவமை கூறப்பட்டுள்ளது.
-------
"மன்னவன் வாழ்க வத்தவன் வாழ்க
ஒலிகெழு நகரத் துறுபிணி நீக்கிய
வலிகெழு தடக்கை வயவன் வாழ்கெனப்
பூத்தூய் வீதிதோ றேத்தின ரெதிர்கொள." (2.9:62-5).
பிரச்சோதனன் இதனைக் கேட்டு மகிழ்ந்து தேவிமாரோடும் புலிமுக மாடத்து வந்து உதயணனைக் காணுதற்கு விரும்ப, உதயணன் அதனை யறிந்து யானையைச் செலுத்திக்கொண்டு சென்று அவன் முன்னே நிறுத்தினன். அந் நிகழ்ச்சியைக் கண்ட பிரச்சோதனன் மிகுந்த மகிழ்ச்சி யடைந்து உதயணனை நோக்கி, "நீ புண்ணியவான்; தூய்மை யமைந்த குலத்திற் பிறந்தவன்; குணக் கடல்; மிக்க பராக்கிரமசாலி; மந்திர நூலில் வலியை; உன் நிலையை யறியாமல் யான் உனக்கு மிக்க தவறு செய்துவிட்டேன்; பொறுத்திடுக" என்று சொல்லி விலை வரம்பில்லாத ஆரமொன்றை அணிந்துகொள்ளும்படி அவன்பால் அனுப்பினான். உதயணன் அதனை ஏற்றுக் கொண்டு அவன் விரும்பியபடி எதிரே வந்தான்.
பிரச்சோதனன், உதயணனையும், யானை அவனுக்கு அடங்கி அவன் ஏவிய தொழில்களைச் செய்துகொண்டு நிற்றலையும் கண்டு மகிழ்ந்து, "உன்னுடைய அருமைச் செயல்களைக் கண்டு மகிழ்ந்தேன். நீ கற்ற வித்தைகள் யாவை? அவற்றை அறிந்துகொள்ள என் மனம் அவாவுகின்றது" என்று சொல்ல, 1உதயணன் தான் கற்ற கலைகள் இன்னவை யென்று அவற்றை விரித்து விளங்கச் சொல்லியவுடன், "இந்த இளமையில் இவ்வளவு வித்தைகள் இவன்பால் நிறைந்திருப்பதற்குக் காரணம் இவன் பழம் பிறப்பிற் செய்த பெருந் தவமே யாகும்" என்று தன் உள்ளே வியந்து அன்புற்ற பிரச்சோதனன், "இங்கே எம்மால் இயன்ற அளவு உனக்கு வேண்டுவனவற்றைச் செய்யா நிற்போம். கெளசாம்பி நகர்க்கு உன்னை அனுப்பும்பொழுது உன் தம்பியர் வந்து உன்னை வழிபடுவார்களாகுக" என்று சொல்லி மதிப்புப் பெற்ற இராசகுமாரர்கள் சிலரை அவன்புடையே நின்று குற்றேவல் செய்யும்படி நியமித்துவிட்டு மனங்கலந்து பேசிக்கொண்டிருந்தான். இருந்த அவன் பின்னும் உதயணனை நோக்கி, "இந்த யானை தன் நிலைமை திரிந்ததற்குக் காரணம் என்ன?" என்று கேட்ப, உதயணன், அதனைக் கூறுவதற்குத் தலையெடுத்துப் பிரச்சோதனனைப் பார்த்த பொழுது, அவன் பின்னே தாய்மார்களின் இடையே நின்ற வாசவதத்தையைக் கண்டான். காணவே ஒருவர் முகத்தை ஒருவர் நோக்கி, மதங்கொண்ட களிறும் பிடி யும் பாகர்களுக்கு அடங்காமல் ஒன்றை யொன்று உற்று நோக்கி, இன்புற்றாற்போல் இன்புற்று வேறொன்றையும் அறியாராகி ஒருவர் உள்ளத்தில் ஒருவர் மாறிப் புகுந்து நின்றனர்.
---------
1. கிடைத்த பெருங்கதை யேட்டுப் பிரதியில் இதுவரையிலுள்ள கதையின் மூலப் பகுதி யில்லை.
அப்பால், இடம் அரசன் முன்னிலை யாதலால், உதயணன் தன் மனத்தை ஒருவாறு தேற்றிக் கொண்டு, நளகிரி தன்மை திரிந்ததற்குரிய காரணத்தைத் தக்க ஆதாரங்களுடன் விளங்க விரித்துக் கூறினன். அப் போது பாகர்களும் சபையில் உள்ளவர்களும் அவன் தேர்ச்சியை அறிந்து கைவிதிர்த்துப் புகழ்ந்தார்கள். அரசன் அயலில் நின்ற பரிசனங்களை அனுப்பிவிட்டுக் கணக்கர் முதலியவர்களை அழைத்துத் தான்எண்ணியவற்றைத் தன் கையிலிருந்த ஏட்டில் வரைந்து அதனை அவர்களுக்குக் காட்டிக் குறிப்பித்து "இவற்றை யானைச் சேரியிலுள்ள அரண்மனையில் விரைவில் ஆயத்தஞ் செய்துவிட்டு வந்து தெரிவித்திடுக" என்று கட்டளையிட்டனன். அவர்களும் அப்படியே சென்று
"பன்மணி விளக்கும் பள்ளிக் கட்டிலும்
பொன்னி னடைப்பையும் பூரண கலசமும்
கவரியுங் கடமுங் கதிர்முத் தாரமும்
நிகரின் மாண்கல நிதியொடு நிறைந்த
ஆரியச் செப்பும் யவனமஞ் சிகையும்
பொன்செய் பேழையொடு பொறித்தாழ் நீக்கி
நன்கனம் படுத்து நகுமலர் பரப்பி
விரைவிரி யாளர் புரைவுறப் புணர்த்த
பண்டம் புதைத்த வண்டுபடு வளநகர்
மடையரு மகளிரு மல்லரு மமைச்சரும்
கடையருங் கணக்கருங் காப்பரு முளப்பட
இறைவினை திரியாப் பழவினை யாளரை
வழிமுறை மரபிற்றந் தொழின்முறை நிறீஇ (1-32:72-84)
எல்லாம் நிறைவேறின" என்று பணிந்து விண்ணப்பஞ் செய்தார்கள். அரசன் உதயணனை நோக்கி, "இஃது உன்னுடைய நகர்; யாங்கள் யாவரும் உனக்குரியவர்களே.
எம்முடைய பொருள்களெல்லாம் உன்னுடையனவே. ஆதலால் இனி உன்னுடைய மாளிகை சென்று இளைப்பாறுக" என்ரு முக மலர்ந்து அனுப்பி அவன் பின்னர்ச் செல்லும்படி ஊர்தியையும் செலுத்திவிட்டுத் தான் அரண்மனையை அடைந்தான். உதயணன், கண்டோர் யாவரும் எழுந்து எழுந்து தன்னைக் கைதொழுது புகழ்ந்து மிகப் பாராட்டும்படி வீதிவழியே சென்று குஞ்சரச்சேரியை அடைந்து நளகிரியினின்றும் இறங்கித் தனக்கு அமைத்திருந்த மாளிகையை அடைந்தான்.
பின்னர் அவன், அம்மாளிகையில் உள்ள பல வாயில்களையும் கடந்து சென்று அங்கங்கே அமைந்துள்ள,
"அந்தக் கேணியு மெந்திரக் கிணறும்
தண்பூங் காவுந் தலைத்தோன் றருவிய
வெண்சுதைக் குன்றொடு வேண்டுவ பிறவும்
இளையோர்க் கியற்றிய விளையாட் டிடத்த
சித்திரப் பூமி வித்தக நோக்கி" (1.33:2-7)
வியந்து, "துரியோதனாதியர் பாண்டவர்களை அகப்படுத்தற்குச் செய்த அரக்கு மாளிகையைப்போலப் பிரச் சோதனன் நம்மை அகப்படுத்தற்கு வஞ்சனையாக அமைத்த இடமாகவும் இவ்விடம் இருத்தல் கூடும். இதன் உண்மையை ஆராய்ந்தே தெளிய வேண்டும்" என்று எண்ணி உடனிருக்கும் வேலைக்காரர்களுடன் ஒவ்வோரிடத்தும் சென்று சென்று அம்மாளிகையிலும் அதன் சுற்றுப்புறத்திலுமுள்ள,
முட்டு முடுக்கு மிட்டிடை கழியும்
கரப்பறை வீதியுங் கள்ளப் பூமியும்
மரத்தினு மண்ணினு மதியோர் புணர்க்கும்
எந்திர மருங்கி னிழுக்க மின்மையை (1.33:16-9)
ஆராய்ந்து ஆராய்ந்து பார்த்துப் பார்த்துப் அதிற் சிறிதும் தீங்கில்லை யென்றறிந்து தேறி அதன்பாலுள்ள சோலையின் வளத்தைக் கண்டு அங்குள்ள இரட்டைகளான பறவைகளும் மான் முதலிய மிருகங்களும் தம்முள் ஒன்றை யொன்று அன்புடன் பாராட்டுதலை யறிந்து " மதரரி நெடுங்கண் வேற்கடை கான்ற, புள்ளி வெம்பனி கரந்த கள்விதன், காரிகை யுண்டவென் பேரிசை யாண்மை, செறுநர் முன்னர்ச் சிறுமை யின்றிப் பெறுவேன் கொல்" என்று வாசவதத்தையை நினைந்து நினைந்து காமபரவசனாகிக் கவலையுற்றான். உறுகையில், 1உலகையெல்லாம் ஆண்ட சக்கரவர்த்தி தன்னிலைமை வேறுபட்டுக் குறைந்தது போலச் சூரியன் அத்தமித்தது. உடுக்கள் விளங்கின;
--------
1. பிரச்சோதனனுடைய பெருமையின் குறைவு இங்கே கூறிய சூரியாஸ்தமய வருணனையாற் குறிப்பிக்கப்படுகின்றது.
----------
"முலைப்பாற் காலத்து முடி முறை யெய்திக்
குடைவீற் றிருந்த குழவி போல்" (1.33: 52-3)
பிறை உதித்தது. அப்போது உதயணன் வாசவதத்தையின் நினைவால் வருந்தி மயங்குவானாயினன்.
புலிமுக மாடத்திலிருந்து தாய்மாருடன் சென்ற வாசவதத்தை தோழிமார்களுடன் கன்னிமாடத்தைச் சார்ந்த பூஞ்சோலையின் ஒரு பக்கத்தை யடைந்து உதயணனை நினைந்து நினைந்து மயங்கி, "அரசிளங் குமரனைச் சுற்றத்தினின்றும் பிரித்து வருவித்துச் சிறைப்படுத்தியதன்றித் தனியனென்று நினையாமல் நளகிரியை அடக்குவதற்கு யாழொடு செல்கவென்றுங் கூறி அவன் அதனை அடக்குஞ் செயலை உற்று நோக்கிக்கொண்டே நின்ற அரசன் கண்கள்தாம் மரத்தால் இயன்றனவோ!" என்று தந்தையை வெறுத்துப் பொறியற்ற பாவை போலச் செயலற்று நிறையழிந்து, "காமனென்னு நாமத்தை மறைத்து வத்தவனென்னும் நற்பெயர் கொண்டு யானையைப் பிணித்ததன்றி என் உள்ளத்தையும் பிணித்த கள்வனை இன்னும் காணவும் பெறுவேனோ" என்று புலம்பி அவன் போலக் காமபரவசையாகி உருவம் வேறுபட்டனள். அவளைப் பிரிந்து தனித்தனியே பூக்கொய்தல் முதலியவற்றிற்கு வேறு வேறிடங்களுக்குச் சென்ற தோழிமார்களெல்லோரும் வந்து அவளுடைய வேறுபாட்டை யறிந்து, "தத்தையே! இந்த நிலைமை உனக்கு வந்ததற்குக் காரணம் என்ன?" என்று வினாவி வினாவி ஒன்றும் அறியாதவர்களாகி அவளை மெல்ல அழைத்துச் சென்று மலரணையிற் படுக்கச் செய்தனர். அவள் அதிற் கிடந்து இமை பொருந்தாளாய் மிகத் துன்புற்றனள்.
இங்ஙனம் இருவர் நெஞ்சமும் அந்த இராமுற்றும் இப்படியே நிலை குலைந்து வருந்தின; அப்போது 1"எல்லாம்,விடிந்தது விடிந்ததென்ன விடிந்தது கங்குற் காலம்." உதயணனையே நினைந்துகொண் டிருந்த பிரச்சோதனன் துயிலுணர்ந் தெழுந்து, கண்களுக்கு மையெழுதிப் பசுவைத் தரிசித்துக் காலைக்கடனை முடித்துக்கொண்டு மகடூஉத் துறந்த மாசறு படிவத்தையுடைய துறவிகளை வணங்கிப் பெரியோர் மந்திரித்து அளித்த தீர்த்தத்தை உட்கொண்டு பேரத்தாணியில் மாலை தொடர்ந்த மங்கலப் பந்தரின் கீழே விரிநூலந்தணர் இருக்கும் வெண்மணை சூழ்ந்த ஆசனத்தே இருந்து கேட்க வேண்டிய தருமங்களையும் பிறவற்றையும் அறிஞர்பால் கேட்டான்.
---------
1. திருக்குற்றாலப்புராணம், 12, 72.
கேட்டபின், அங்கே வந்தவர்களை அனுப்பிவிட்டு அரண்மனை சென்று உதயணனோடு தனியே பேச விரும்பி, அவனை விரைந்து அழைத்து வருகவென்று உழையர்களை அனுப்பினான். அவர்கள் ஓடிச் சென்று தெரிவிக்கவே உதயணன், 'இழையணி இரும்பிடி யெருத்த மேறிக் கடையணி யாவணம் கைதொழும்படி’ வந்து அரண்மனை வாயிலில் நிற்க; அதனை யறிந்த அரசன், தருமணல் முற்றத்துத் தான் எதிர்சென்று மிக்க உபசாரத்துடன் அழைத்துக்கொண்டு உள்ளே சென்று மணியம்பல மொன்றில் இரட்டைத் தவிசில் அவனை முதலில் இருக்கச்செய்து தானும் அதில் உடனிருந்து, "இஃது உன்னுடைய இடமென்று இனி நான் சொல்லுவது மிகை" என்பது போன்ற உபசார வார்த்தைகள் பலவற்றைச் சொல்லி, முகவாச முதலியவற்றை யளித்து, "இனி உரிமை பூண்டு எண்ணியவாறு நீ நடப்பாயாக" என்று சொல்லி அவனை அங்கே இருக்கச் செய்துவிட்டு, "உதயணனை எந்த வகையாலாவது சில காலம் இவ்விடத்திலேயே இருக்கும்படி செய்ய வேண்டும்" என்கிற எண்ணத்தோடு, தான் அரண்மனைக் குள்ளே சென்று சிவேதனை வருவித்து அவனை நோக்கி, "நீ உதயணனிடஞ் சென்று, 'இராசகுமாரர்க்கு ஆயுதவித்தை முதலிய பலவகைக் கலைகளையும் வாசவதத்தைக்கு வீணையையும் பயிற்றுவிக்க வேண்டும்; இஃது எம்முடைய குறை’ என்று யாம் விரும்புவதாகச் சொல்லி எப்படியேனும் அவனை உடன்படுவித்து வருக" என்று சொல்ல அவனும் அப்படியே சென்று அரசன் சொல்லியவற்றை உதயணனுக்கு மிக்க வணக்கத்துடன் தெரிவித்தனன்.
அப்பொழுது உதயணன் நெடுநேரம் யோசித்து, "அரசன் கூறியவண்ணம் இத் தொழிலைச் செய்தல் நமக்குச் சிறுமையென்று நாணினால், விரும்பிய கன்னியைப் பெறுதற்கு வேறு விழியில்லாமையின் யாம் பிழைத்தற்கு இடமில்லை; அங்ஙனம் கற்பிக்குமிடத்துப் புலிமுகமாடத்தில் அன்று கண்ட கன்னியாரை யாம் காணுதல் கூடும்: காணின் நாம் உய்தற்கு வழி உளதாம்: நமக்கு
'உயிர்கெட வருவழி யொழுக்கங் கொள்ளார்
செயிரறு கேள்வி தேர்ந்துணர்ந் தோர்’ (1.34: 88-9);
என்ன சிறுமை வரினும் இனி அரசன் கூறுவனவற்றைச் செய்வதே நன்று" என்று தெளிந்து, "விரும்பிய வண்ணம் செய்வேனென்பதைச் சொல்லுமின்" என்று சொல்ல, சிவேதன் சென்று அரசனுக்கு உதயணன் உடன்பட்டதைத் தெரிவித்தனன். அப்பால் அரசன் தன் தேவியர் பலர் பெற்ற மகளிருள் பெதும்பைப் பருவத்து மகளிர்கள் யாவரும் வருவார்களாக என்று சொல்லி விடுப்ப, செவிலித் தாயார் முதலியோர்,
"பளிக்கறைப் பூமியும் பந்தெறி களத்தும்
மணிக்கயிற் றூசன் மறலிய விடத்தும்
கொய்ம்மலர்க் காவும் பொய்கைக் கரையும்
அந்தக் கேணியும் வந்துபெயர் கூவி (1.34: 115-18)
முத்தினரும், உத்தியரும், மும்மணிக் காசினரும், கச்சினரும், கண்ணியரும், வெள்வளையினரும், சில்கலத்தியன்ற அணியினரல்லது பல்கலஞ் சேரா மெல்லென் யாக்கையருமாகிய அவர்களை அழைத்துக்கொண்டு வர, அவர்கள் பால்பரந்தன்ன பஞ்சு மெல்லணையிற் சேக்கை மெலியச் செம்மாந்திருந்த முடிகெழு தந்தை முன்னர்த் தோன்றி வணங்கி நின்றனர். நின்றவர்களை யெல்லாம் அரசன் முறையே நோக்கி அவர்களுள்ளே,
"ஒண்மையு நிறையும் ஓங்கிய வொளியும்
பெண்மையும் பெருமையும் பிறவு முடைமையிற்
பாசிழை யாயத்துப் பையென நின்ற
வாசவ தத்தை வல்ல ளாகென" (1.34: 151-4)
எண்ணி, பந்தும், கிளியும், பசும்பொற் றூதையும், கந்தியன் மயிலும், கரந்துறை பூவையும், கழங்கும், கச்சும், முற்றிலும் பவழப் பாவையும், பளிக்குக் கிளிக்கூடுமாகிய இவற்றில் விரும்பியவற்றை அவர்களுக்கு அளித்து, "நீங்கள் இது வரையிற் கற்ற,
அடிசில் வினையும் யாழின் றுறையும்
கடிமலர்ச் சிப்பமுங் கரந்துறை கணக்கும்
வட்டிகை வரைப்பும் வாக்கின் விகற்பமும்
கற்றவை யெல்லாங் காட்டுமி னெமக்கு" (1.34:166-9)
என உரைத்து ஒருவகையாக மகிழ்வித்து அவர்களை யெல்லாம் அனுப்பிவிட்டு, அயலில் நின்றவர்களை நோக்கி, "இனி வாசவதத்தை உதயணகுமரன்பால் யாழ் கற்றுக் கொள்ளத் தொடங்குவாள்; அதற்கு வேண்டியவற்றை விரைவில் அமைமின்" என்றனன். அதனைக் கேட்ட முதற் பெருந்தேவி தன் மகளுக்கு இப்பயிற்சி மிக்க மாட்சிமையைத் தருவதற்குரியது என்று தன்னுள் மகிழ்ந்தாள். மற்ற தேவியர் மிகப் புகழ்ந்தார்கள். சக்கரவர்த்தியின் மகளுக்கு யாழ் கற்பித்தற்குரிய ஆசானாக வருபவன் பெரும் புண்ணியமுடையோன் என்று அடியவரும் ஆயத்தாரும் வியந்தார்கள். வத்தவர்பெருமானுக்குரிய வீணை விச்சை தத்தைக்கே உரியதென்று முற்றத்தே நின்ற்வர்கள் தம்முள் மெல்லப் பேசிக்கொண்டார்கள்.
அப்பொழுது செவிலியர்கள் பூக்கள் முதலியவை வைக்கப்பட்டுள்ள பொன் அகல்களை அங்கே அலங்காரமாக வைத்து இசைக்குரிய தெய்வங்களை அழைத்துத் துதித்து வாச்வதத்தையைச் சந்தன ந்றுநீரால் ஆட்டி அலங்கரிப்பாராய் யானைத்தந்தத்தாற் செய்த மங்கலச் சீப்பாற் கூந்தலை வாரிப் பொன்னாணாற் கட்டி முடித்துப் பொற் சின்னங்களை அதன்மேலே சிதறி, நெற்றியிற் சுட்டியையும் முத்தணிகலங்களையுஞ் சேர்த்தி, முன்னமிருந்த ஓலையையும் குழையையும் நீக்கிக் காதுகளிற் கடிப்பிணைகளை யணிந்து, சந்தனக் குழம்பால் தோள்களில் பூங்கொடி ஒன்றை எழுதி, மார்பில் முத்தவள்ளியையும் மும்மணியையும் பொற்றோரையையும் பூட்டி, இடையிற் கட்டிய மட்டஞ் செய்த பட்டுடைமீது மேகலையைச் சேர்த்தி, பின்னும் அணிய வேண்டிய மெல்லிய ஆபரணங்களை யணிந்து, நடைப் பெருந்தவிசின்மீது அவளை மெல்ல நடத்தி வருவாராயினர். அப்போது மிகவும் அழகிய நான்கு ஆலவட்டங்கள் பக்கத்தே கன்னியர்களால் அசைக்கப்பட்டன. அவள் தன் தாய்மாரோடு மெல்லென வந்து பொற்றகடு பொதிந்த சுவர்களை யுடையதும் யானைக் கொம் பாலாகிய தூண்களை யுடையதும் மேற்கட்டி கட்டியதுமாகிய கீதசாலையின் வேதியின்மீது செவ்வரக்கு வழித்த பூமியின் மேலே சுற்றத்தோடு புகுந்து மெல்லிய பலவகையான மலர் பரப்பிய தனியிடம் ஒன்றில் திரை மறையில் நின்றனள். அப்போது தாய்மார்கள், "யாழைப் பூசித்தற்கும் அதனைக் கற்பிக்கத் தொடங்குவதற்கும் உரிய நல்ல வேளை வந்துவிட்டது. இதனை உதயணனுக்குத் தெரிவிக்க வேண்டும்" என்று சொன்னார்கள். உடனே சில மகளிர் ஓடிச் சென்று தெரிவிக்கவே அவன் வந்து அங்கே அமைக்கப்பட்டுள்ள மெல்லிய ஆசனத்தின்மேல் வீற்றிருந்தனன். வாசவதத்தையை அழைத்து வந்து மேற் கூறிய திரைமறைவிலேயே வேறொரு தவிசில் இருக்கச் செய்தனர்.
அப்போது "யாழ் கற்றுக்கொள்ள இங்கே வந்திருப்பாள் என் மனத்தை முன்பு கவர்ந்த பெண் மணியோ, இல்லளோ?" என்று உதயணன் எண்ணிக் கொண்டிருந்தான். "நமக்கு யாழைக் கற்பித்தற்கு இங்கே வந்திருப்பவன் அன்று நளகிரியை அடக்கி அதனை ஊர்ந்து வந்து புலிமுக மாடத்தின் எதிரே நின்று நம் மனத்தைக் கவர்ந்து சென்ற ஆடவர் சிங்கமோ, வேறு யாரோ?" என்று வாசவதத்தையும் எண்ணிக் கொண்டிருந்தாள்.அந்தச் சமயத்தில் தோழிமார், "ஆசிரியனுக்குக் செய்ய வேண்டிய வழிபாடு இதுவாகும்" என்று சொல்லி, வாசவதத்தையின் கையைக் குவிக்கச் செய்து திரையைத் திறந்தனர். திறந்தபொழுது, ஒருவரை ஒருவர் கண்டு இருவரும் களித்து ஐயம் நீங்கி இன்புற்றனர்;1 "செம்புலப் பெய்ந்நீர்போல அன்புடை நெஞ்சந் தாம்கலந்தன"2 "பிரிந்தவர் கூடினாற் பேசவும் வேண்டுமோ?" அப்பால், தாய்மாரும் கைக்கோற் சிலதரும் கன்னியரும் புறத்தே பாதுகாத்து நின்றனர். அப்போது அவன் யாழை அளித்துக் கற்பியாநிற்க, அவள் அதனை ஏந்திக் கற்பாளாயினள்.
---------
1. குறுந்தொகை, 40 2. கம்பராமாயணம், மிதிலை. 37.
இங்ஙனம் அவன் நாடோறும் வந்து வாசவதத்தைக்கு யாழைப் பயிற்றுவிக்கையில் அந்நகரத்துள்ள வம்ப மாக்களில் ஒரு சாரார், "பகைவர் குறுக வொண்ணாத அந்தப்புரத்தி லிருத்தற்குரிய தன்மகள் ஒருத்திக்கு யாழ் கற்பிக்கும்படி அயலானாகிய அரசிளங் குமரன் ஒருவனை ஆராயாமல் தெளிந்து ஆசானாக நியமித்த நம் பேதை மன்னன் அதனால் விளையுந் தீங்கைச் சில காலஞ் சென்ற பின்னராவது நன்றாகத் தெரிந்துகொள்வான்" என்றனர். இப்படியே மற்றையோரும் தத்தமக்குத் தோற்றிய கருத்துக்களைத் தோன்றியவாறு விரைவாகச் சொல்லிவிட்டு, அப்பால் அச்சமுற்று அயலிடங்களைப் பார்த்துக்கொண்டு, "இஃது அரசன்பால் நிகழுஞ் செய்தியாதலின், யாம் யாதொன்றையும் சொல்லலாகாது" என்று வாயடங்கினர்.
தந்தையின் கட்டளைப்படி இராசகுமாரர்கள் உதயணன்பால் வில்வித்தை முதலியவற்றையும் யானையேற்றம் முதலியவற்றையும் போர் செய்யும் விதங்கள் பலவற்றையும் பிறவற்றையும் முறையே நாடோறும் கற்றுவருவாராயினர். இங்ஙனம் சில நாட்கள் சென்றன.
உடுப்பன, பூசுவன, அணிவன, உண்பனவற்றையும், பிறவற்றையும் உரிய காலத்தில் தக்கவர்கள் முகமாகத் தவறின்றி உதயணகுமரனுக்கு நாடோறும் அரசனது கட்டளையால் அனுப்பிக்கொண்டே வரும் பாலகுமாரன், தன்னுடன் கல்வி பயிலும் வயந்தகனிடமாக ஒரு நாள் அவற்றை அனுப்பினன். அங்ஙனம் அனுப்பப்படு வந்த வயந்தகனைக் கண்டு உதயணன், 'இவர் எனக்கு முன்பு பழக்கமுள்ளவர் போல்கின்றார்’ என்று அயலில் நின்றவர்களை நோக்கிக் கூற, வயந்தகன் மறுத்தனன். "இவர் செப்பமுடையவராக இருத்தலின் எனக்கு அனுப்ப வேண்டுவனவற்றை இவர்பால் அனுப்பி வருக" என்று உதயணன் சொல்லிவிடுத்தமையால் அன்று முதல் பால குமரன் அனுப்ப வேண்டியவற்றை வயந்தகனிடமாகவே அனுப்புவானாயினன். அங்ஙனம் அனுப்பிவருகையில் தன்னுடைய தோழர், வீரர் முதலியோர் வேறு வடிவமும் வேறு பெயருங் கொண்டு ஒவ்வொரு வேலையைப் பெற்று அந்நகரத்தின் அகத்தும் புறத்தும் இருத்தலையும் அவர்கள் செய்துவரும் அரிய செயல்களையும் அவற்றிற்கெல்லாங் காரணமான யூகியின் இடைவிடாத முயற்சியையும் வயந்தகன் முகமாக உதயணன் அறிந்துகொண்டான்.
புறத்தேயுள்ள அவனுடைய தோழர் முதலியோர்களும் உதயணனுடைய நிலைமையை ஒவ்வொரு நாளும் வயந்தகனால் அறிந்து, "எண்ணியவற்றை எப்படியும் நிறை வேற்றுவோம்" என்று ஆறுதலுற்று மிக்க ஊக்கம் உடையவர்களாய் இருந்து வருவாராயினர்.
இப்படியிருக்கையில், வாசவதத்தையின் பார்வையால் உதயணன் மிக்க துன்பமுற்று மன வேறுபாட்டையும் உடல் வேறுபாட்டையும் அடைந்து நனவிலுங் கனவிலும் அவளையே நினைத்து நினைத்து அரற்றும்படியான காம நோய் அதிகரிக்கப் பெற்று,
"தீமுகத் திட்ட மெழுகிற் றேம்பியும்
தாய்முகத் தியாத்த கன்றிற் புலம்பியும்" (1.35:52-3)
வருந்துவானாகி ஒரு நாள், "இவள் காரணமாக உண்டான நமது வேறுபாட்டைப் பழகியவர் காணின் ஐயுறுதல் கூடும்; பின்பு இதனை மறைப்பதற்கும் வழியிராது; ஆதலால், இதனை வேறு வகையால் மறைத்தல் வேண்டும்" என எண்ணி வயந்தனோடு ஆராய்ந்து, "அயலான் ஒருவனிடம் ஆசைகொண்டு அவனிடஞ் சென்றுவரும் இயல்புள்ள பரத்தை ஒருத்தியை எப்படியேனும் அழைத்துவா" என்று சொல்ல, வயந்தகன், அவன் கட்டளையின்படி புறத்தே சென்று நகரத்தார் அறியுமாறு, "முன்னம் வெறிகொண்ட நளகிரியின்மீது உதயணன் உலாவியபொழுது அவனை விரும்பி அவன் மனத்தைக் கவர்ந்து அவனை அரற்றிக்கொண் டிருக்கும்படி செய்த நருமதை என்பவள் எங்கே யுள்ளாள்?" என்று கேட்ப ஊரார், "அத்தன்மையை யுடையாள் பரத்தையர் சேரியில் அரங் கியல் மகளிர்க்கு ஆடலைக் கற்பிக்கும் தலைக்கோற் பெண்டிருள் முதல்வளாகிய ஒருத்தியின் மகள் நருமதை யென்பாள்" என்று கூறினர்.
வயந்தகன் கைந்நிறைய மாற்றுயர்ந்த நூற்றொரு கழஞ்சு பொன்னை ஏந்திக் கொண்டு
மன்றங்களிலும் மறுகுகளிலும் தான் செல்லும் செய்தி பரவும்படி செய்து தேர்மீது சென்று, தமக்குரிய யாழ்
முதலிய அறுபத்து நான்கு கலைகளில் பயின்றவர்களும்
ஒன்றுமுதல் ஆயிரத்தெட்டு இறுதியாகிய பொற்
பரிசங்களைப் பெறுபவர்களும் பள்ளி மருங்கிற் படிறின்றி
ஒழுகுபவர்களுமாகிய செல்வப் பரத்தையருடைய
சேரியை அடைந்து விசாரித்துக்கொண்டு நருமதையின்
வீட்டை அடைந்தனன், அப்பொழுது அவன் வரவை
அறிந்த தாய்க் கிழவி மிக்க மரியாதையோடு வரவேற்று
அவனை ஓர் ஆதனத்தில் இருத்தி அவன் வந்த செய்தியை
அறிந்து, "என் மகள் உதயணன் மனத்தில் உள்ளாளென்றான் அவள் எல்லாரிலும் மிகப் பெருமை பெற்றவளே;
அவளைப் பெற்ற நானும் பாக்கியசாலியே; அவளைப்
பொருளாக நினைந்து இப்போது பொன்னை யனுப்பியவன்
தான் வந்து பாதுகாக்கவில்லையே" என்று சொல்லிவிட்டு
அவன் வந்த நோக்கத்தை நருமதைக்குச் சொல்லியனுப்ப
அவள்,1 "என்ன கொடுத்தாலும் நான் அயலான் வீட்டுக்குச் செல்லேன்" என்று மறுத்தனள்.
-----
1 இஃது ஒரு சாரார் கொள்கை.
அருகிலிருந்த உறவினர், "இவளை வலிந்து பிடித்துச் செல்வாயாக" என்று கூறவே வயந்தகன் அவளை அப்படியே செய்து தேரிலேற்றி வீதி வழியே செல்லும்பொழுது அவள், "என்னைக் கொல்லுதற்கு வத்தவன்பால் இவன் கொண்டு செல்லுவதைக் கூட்டத்தாரே காண்பீராக" என்று அரற்ற, அவர்கள், "தக்க தலைவன்பால் அழைத்துச் செல்லு கையில் இங்ஙனம் அரற்றுகின்ற இவள் அறியாமையையுடையவளோ?" என்றும், "உடன்பாடில்லாதவளைத் தன்னுடைய அதிகாரத்தால் வலிந்து அழைத்துவரச் செய்தமையால் வத்தவன் காம விருந்தினன்; அவன் பெண்டிர்கள்பால் தவறு செய்தலுங் கூடும்" என்றும், "நடநவில் மங்கையருடைய நலத்திற்கு அவன் விருந்தினன் போலும்" என்றும் சொல்வாராயினர். வயந்தகன், உதயணனது காம வேறுபாட்டினை இவ்வாறு நகரத்தார் யாரும் அறியும்படி செய்தவனாகி அவளைஅழைத்துச் சென்று உதயணன்பால் அன்றிரவு முற்றும் இருத்தி மறு நாட் காலையில் அவளை அனுப்பிவிட்டனன். அவ்விரு வரும் ஒருவரை ஒருவர் விரும்பினாரல்லர். வாசவதத்தை பால் தனக்குள்ள விருப்பத்தையும் அதனாலுண்டாகிய தன் வேறுபாட்டையும் மறைத்தற்கு உதயணன் செய்வித்த இச் செயல் நருமதையின்பாலுள்ள விருப்பத்தால் அவன் நிகழ்த்தியதாகவே நகர் முழுவதும் பரவியது.
இதனை அறிந்த ஒற்றர்கள் விரைந்தோடிச் சென்று செவ்வியறிந்து பிரச்சோதனனுக்கு உணர்த்தினர். கேட்ட அரசன் இச்செயலில் வெறுப்புற்றாலும் பிறரைப் பழியாத இயல்பினனாதலால், "உதயணன் இங்ஙனம் ஒழுகுதல் இராஜகுமாரனாகிய அவனது இளமைக்கு இயல்பே" என்று புன்னகையுடன் சொல்லிவிட்டு,
"சாமரை இரட்டையுந் தமனியக் குடையும்
மாமணி யடைப்பையு மருப்பிய லூர்தியும்
பைந்தொடி யாயமும் பட்டமு முடையோர்
ஐம்பதி னாயிர ரரங்கியன் மகளிருள் (1-34: 21-4)
உதயணன் தன்னை விரும்பும்படி நல்வினைப் பயன் வாய்க்கப்பெற்ற நருமதைக்கு இவை உரியன" என்று பல ஆபரணப் பேழைகளையும், மரத்தாற் செய்விக்கப்படாமல் யானைத் தந்தத்தாலும் பொன்னாலும் மணியாலும் செய்விக்கப்பட்டதும், முகத்தில் முத்துமாலைகளையும் கழுத்திற் பொன்னாலாகிய கிண்கிணி மாலைகலையும் அணிந்த உயர்ந்த பாண்டி லெருதுகள் பூட்டியதுமாகிய ஒரு வண்டியையும் நருமதைக்கு அனுப்பச் செய்ததன்றி, "இன்று முதல் அவள் நீர்விளையாட்டு, திருவிழா முதலியவற்றிற்காக நகர்ப்புறத்தே செல்லுதலையும், அரண் மனையில் வந்து ஆடுதலையும் தவிர்வாளாக" என்றும் கட்டளையிட்டான்.
வாசவதத்தை உதயணன்பாற் கற்று யாழ் வித்தையில் மிக்கத் தேர்ச்சி யடைந்து விளங்கி வருதலைக் கேள்வியுற்ற ஏனை அரசர்கள் அவளை மணஞ் செய்துகொள்ள விரும்பி ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் மிகவும் உயர்வுள்ள பொன்னாபரணங்களை யானைகளின் மேலேற்றி மிகுந்த வணக்கத்துடன் அனுப்பிய தல்லாமற் பிரச்சோதனனுக்குத் தத்தம் கருத்தையும் சொல்லிவிடுத்தார்கள். அவனும் அவற்றை அங்கீகரித்து அவர்கள் குறிப்பை யறிந்தும் தன் கருத்தை வெளியிடாதவனாகி யிருந்தான். இச் செய்தியைத் தன் செவிலிகளுள் ஒருத்தியாகிய சாங்கியத் தாயால் அறிந்த வாசவதத்தை பொறியற்ற புதுமரப் பாவைபோலே விழுந்து நடுங்கி விம்மி, "அரசர்கள் எனக்காகப் பொற்பரிசம் அனுப்பியதும் அவற்றைத் தந்தை அங்கீகரித்ததும் உண்மையாயின் உயிரை விடுவேன்; அதன் எப்படியாவது தந்தை தன் கருத்தை முற்றுவித்துக் கொண்டு வாழ்க" என்று உதயணன்பாலுள்ள அன்பின் மிகுதியாற் பலவாறு அரற்றிக் கண்ணீர்த் துளிகளை வீழ்த்தி மயங்கிக் கலங்கிப் புலம்புவாளாயினள். அந் நிகழ்ச்சியைக் கண்ட செவிலி, தன் மடிமீது அவளை வைத்துக்கொண்டு கண்ணீரைத் துடைத்து அவள் துன்பத்தை மாற்றி, "என் பாவையே! பிற அரசனுக்கு உன்னை மணஞ் செய்விக்க அரசன் துணிவானோ? அங்ஙனம் துணிவானாயின் நாமெல்லாம் அரசனை விட்டுப் பிரிந்து சென்று தவஞ் செய்வோம்; உன்னுடைய எண்ணத்தை அறிந்துகொள்ளுதற்காகவே நான் இப் பொய்ச் செய்தியைச் சொன்னேன்" என்று அவளுடைய கூந்தலையும் நெற்றியையும் கையால்தைவந்து, உன் தந்தையின் கருத்தை யான் அறிவேன்; கேட்பாயாக;
இளமையும் வனப்பு மில்லொடு வரவும்
வளமையுந் தறுகணும் வரம்பில் கல்வியும்
தேசத் தமைதியு மாசில் சூழ்ச்சியோ
டெண்வகை நிறைந்த நன்மகற் கல்லது
மகட்கொடை நேரார் மதியோ ராதலின்’ (1.36:89-93)
இக்குணங்கள் நிறைந்த உதயணனுக்கே உன்னை மணஞ் செய்விக்க எண்ணி யிருக்கின்றனன்; இதனைத் தெளிவாயாக" என்று தேற்ற வாசவதத்தை தலையெடுத்துக் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு வருத்தம் நீங்கினள். செவிலி, "தத்தையே! ஆயத்தாரோடு நொடிகளைப் பேசிக்கொண்டே யிருந்தமையின் நேற்றிரவு முழுவதும் நீ தூங்கவில்லை; உதயணன் வரும்வரையில் தூங்குவாயாக" என்று சொல்லி அவளைப் படுக்கச் செய்து காஞ்சன மாலையை அழைத்து, "காஞ்சனமாலாய்! யான் வரும் வரையில் யாரையும் இங்கே புகவிடாதே" என்று கூறிவிட்டுக் கீதசாலை சென்று இயல்பாகவே யாழ் கற்பித்தற்கு அங்கு வந்த உதயணனைத் தனியிடத்திற்கு அழைத்துச் சென்று இருக்கச் செய்து, நிகழும் செய்திகளைக் கண்ணாலும் செவியாலும் அறிந்து உடனே சென்று வெளிப்படுத்துவோர் அவ்விடத்தில் இல்லை யென்பதை யறிந்து உதயணனை நோக்கி,
"மண்ணகங் காவலன் மாபெருந்தேவி
திருவயிற் றியன்ற பெருவிறற் பொலிவே!
இனையை யாவது மெம்மனோர் வினை" (1.36:144-6)
என்று பாராட்டித் தன் அன்பைப் புலப்படுத்தி, "அரசிளஞ் சிங்கமே, என் வரலாற்றை அறிவாயாக: நான் கெளசாம்பி நகரிலுள்ள ஒரு பார்ப்பனி. கணவன் இளமையில் என்னைப் பிரிந்து உன் தந்தையின் அவைக்களத்தைச் சார்ந்து அங்கே சில தினங்கள் தங்கி அப்படியே வேறிடஞ் சென்று திரும்பி வாராமையால்; கற்பின் வரம்பைக் கடந்து ஒழுகினேன். என் செய்கேன்! அதனை யறிந்த அறங்கூறவையத்தார் அக்குற்றத்திற்காக மணற் குடத்தோடு கட்டி யமுனையாற்றினிடையே என்னை வீழ்த்திவிடும்படி விதித்தனர். விதிக்கவே ஒரு புலையன் அவர் கூறியவாறு கட்டிச் செங்கற்பொடியை என்மேலே தூவிப் பம்பைப் பறையை அறைந்து நகரத்தார்க்கு என் குற்றத்தைத் தெரிவித்துக்கொண்டே சென்று தோணியொன்றிலேற்றி யமுனை யாற்றினிடையே சென்ற பொழுது, யானையின்மேல் ஏறிச் சென்று அந்த ஆற்றில் தோழர்களுடன் விளையாடிக்கொண் டிருந்த நீ கேள்வியுற்று என்னை, அழைத்துவரும்படி ஏவலாளரை அனுப்பினை. அப்போது அப்புலையன் கரைக்கு அருகேயுள்ள இடத்திற் கொணர்ந்து மிக விரைவாகத் தோணியினின்றும் இறக்கிய பொழுது துடுப்பு என்னுடைய நெற்றியிற் பட்டது; அதனாலுண்டாகிய தழும்பு இதுவாகும்; காண்பாயாக. நீ பிற்பாடு நிகழ்ந்ததை விசாரித்துத் தெரிந்துகொண்டு, 'இக்குற்றத்திற்காக இவளுக்கு விதித்த இத்தண்டம் மிக அதிகமே. இதற்குத் தக்க சிக்ஷையைச் சொல்லுக’ என்று அயல் நின்ற அறிஞர்களைக் கேட்ட பொழுது ஒரு குறிகோளாளன் "தாம் மேற்கொண்ட தவத்தை இடையே கைவிட்டார்கள் செய்தற்குறிய விரதத்தை இவள் கைப்பற்றுவாளாக’ என்றனன். நீ அவன் கூற்றை அங்கீகரியாமற் பின்னும் வினாவியபோது அங்கே நின்ற கோசிகனென்ற பெயருள்ள சேனைக் கணி மகனொருவன், 'மணம்புரிந்தவன் முற்றுங் கைவிட்டுப் புறத்தே சென்றமையால் வரம்பைக் கடந்த இவளுக்குத் தவமே உரியது; கொல்லுவித்தல் தவறாகும்; இன்னுங் கூறுவேன். யானையின் நிழல் தன்மேற் படும்படி நின்றமையால் இவ்வந்தணி தான் மேற்கொண்ட தவத்துறையிற் சில காலம் ஒழுகி அப்பால் அதினின்றும் நீங்கி ஓரரசனுடைய பாதுகாப்பிற் றங்கி அவனுடைய அந்தப்புர மகளிர்க்கு அறம் செவியறிவுறுத்தும் தலைவியாக விளங்குவாள்" என்று கூறினன்" என்றனள்.
இவற்றை யெல்லாங்கேட்ட உதயணன் தான் அவளை விடுவித்தபின் நிகழ்ந்ததையுங் கேட்க விரும்பினன். விரும்பவே அவள், "நீ விடையளித்தபின் அவ்விடம் நீங்கிச் சென்று கங்கைக் கரையை யடைந்து வியாபாரஞ் செய்யுங் கூட்டத்தாருடன் வடக்கே யுள்ள தேயத்திற் சென்று பெருவழி யொன்றற்கு அயலதாகிய ஓரரச மரத்தின் கீழேயிருந்தேன். இருந்த காலத்தில்,
'பூதியு மண்ணும் பொத்தக் கட்டு
மானுரி மடியு மந்திரக் கலப்பையும்
கானொடு மணையுங் கட்டுறுத் தியாத்த
கூறை வெள்ளுறிக் குண்டிகைக் காவினர்
தரும் தருக்கர் தற்புறஞ் சூழப்
பரிபு மெலிந்த படிவப் பண்டிதன்
சாங்கிய நுனித்தவோர் சாறயர் முனிவனை
ஆங்கெதிர்ப் பட்டாங் கவனொடும் போகி’ (1.36: 225-32)
அவனிடம் கல்வி பயில்வோருடனிருந்து சாங்கிய மதக் கொள்கையை அறிந்து அதனையே மேற்கொண்டு மற்றச் சமயநூ லுணர்ச்சிகளையும் நன்கு பெற்று அவற்றைப் பிறர்க்கு விளங்கச் சொல்லும் வன்மையையுமுடையேனாகி இமயமலையில் இரண்டு வருடம் அவனுடன் தங்கினேன். அவ்வாசிரியன் கன்னியாகுமரியில் நீராடநினைந்து மாணாக்கர்களுடன் யாத்திரையாகப் புறப்பட்டுத் தெற்கே வந்து இந் நகரத்தைச் சார்ந்த காலத்தில் ஒராச்சிரமத்தில் தங்கி இளைப்பாறினன். யானும் உடன் வந்து அங்கே தங்கினேன். பிரச்சோதனனுடைய அவைக்களத்தில் அறு வகைச் சமயத்தோரும் அவனுடைய வேண்டுகோளால் தம்முள் வாதஞ் செய்கின்றார்களென்ற செய்தியைக் கேட்டு மேற் கூறிய ஆசிரியன் அங்கே சென்று வாதம் நிகழ்த்தி மற்றச் சமயத்தவரை வென்று சாங்கிய சமயமே சிறந்த தென்று தாபித்தான். கேட்ட ஆண்டுள்ளோர் அச்சமயத்தை மேற்கொண்டார்கள். அரசன் அவ்வாசிரியனை நன்கு மதித்துத் தன்னுட னிருக்கும்படி விரும்பினமையால் அவன் மாணாக்கருடன் இங்கே இருந்தனன். யானும் இருந்தேன். இருக்கையில் அரசன் தேவி என்பால் அறங் கேட்டலை விரும்பி என்னைத் தன் பாங்கியாகக்கொண்டு பாதுகாத்து வந்தாள். அக் காலத்தில் இளங் குழந்தையாக இருந்த வாசவதத்தை அடிக்கடி என்னிடம் வந்து விளையாடக்கண்ட நற்றாய் அவளுக்குச் செவிலித்தாயாக இருக்கும்படி கேட்டுக்கொண்டைமையால் அப்படியே இருந்துவருகின்றேன். இது நிற்க; தகாத இடத்தில் மனத்தைச் செலுத்தாத நீ நருமதை யென்னுங் கணிகை ஒருத்தியை விரும்பி அவளை வருவித்தாயென்று ஊரார் கூறும் பழிமொழி மிக்க துன்பத்தை உண்டுபண்ணுகின்றது. அதற்குக் காரணம் யாது?" என்று வினவினாள்.
உதயணன், "பழமையாளரென்று நினைந்து, பகைவர் பாலுள்ளவரை நம்பி உண்மைக் கருத்தை வெளியிடுதல் தவறேயாயினும் இவளையன்றி இப்போது இங்கே நம்முடைய குறையை நீக்குவோரில்லை" என்று துணிந்து நருமதையைத் தன்பால் வருவித்ததற்குரிய காரணத்தைத் தெரிவித்தனன். அவள் கேட்டு மகிழ்ந்து அவன்பால் வாசவதத்தைக்குள்ள வேணவாவையும் உறுதியையும் விளங்க விரித்து அவனுக்குக் கூறியதல்லாமல், வாசவதத்தையை மணஞ்செய்தற்குரிய நன்முயற்சிகளை மேற்கொள்வாயாக; நின்னுடைய மணம் தனக்கு நேராதாயின் வாசவதத்தையானவள் தனக்கு நேர்ந்த பழிக்கஞ்சி, ’மண்கெழு மடந்தாய் மறைவிடந்தா’ என்று வேண்டிப் பூமிக்குள்ளே ஒளித்துத் தன் புகழை எங்கும் விளங்கச் செய்த சீதாதேவிபோல எந்த வகையாலாவது தன்னுயிரை விட்விடுவாளென்று அஞ்சுகின்றேன். நான் அவளிடம் போய்ச் சொல்லி விடுக்குமளவும் இங்கே இருப்பாயாக" என்று அவனிடம் சொல்லிவிட்டு வாசவதத்தையை யடைந்து உதயணன்பால் நிகழ்ந்தவற்றை அவளுக்குக் கூறி அவள் மயக்கத்தைத் தீர்த்தனள். தீர்த்த பின்பு காஞ்சனமாலையை நோக்கி, "தத்தை கற்றற்குரிய நேரம் ஆய்விட்டமையால், தன்னுடைய அரண்மனைக்குச் செல்லலாமென்று நீ உதயணனிடம் சொல்லி வருக" என்று கூறினள். அவள் அங்ஙனமே சென்று தெரிவிக்க உதயணன், "வாசவதத்தை யாழ் வித்தையை முற்றக் கற்றனள். அரச குமாரர்களும் யானையேற்ற முதலியவற்றையும் வில்வித்தை முதலியவற்றையும் நீதி நூல்களையுங் கற்றுக் கரைகண்டனர். விரைவில் அரங்கேற்றுவிக்க அரசர்பிரன் எண்ணியிருக்கின்றனன். ஆதலால் வீணை வாசித்தலை நன்றாகப் பயின்று வைத்துக்கொள்க வென்று வாசவதத்தைக்குச் சொல்வாயாக" என்று காஞ்சனமாலையிடம் சொல்லிவிட்டு, அவன் கோவலர் சூழ்ந்து பாதுகாத்து வரக் குறும்புழை வழியே போய்த் தன்னிடத்தைச் சார்ந்தான்.
முதலில் மைந்தர்களை அரங்கேற்றுவிக்க எண்ணிய அரசன் மறுநாட் காலையில் ஐயாயிரம் இராசகுமாரர் முதலியவர்கள் தன்னைச் சூழ்ந்துவர அவைக்களத்தை அடைந்து சந்தனப் பீடிகையிலுள்ள சார்வணையின்கண் வீற்றிருந்தான். அப்பொழுது, நகரத்திலுள்ள அறிஞர் முதலியோர் வந்து தத்தமக்கு அமைக்கப்பட்டுள்ள ஆசனத்தில் இருந்தார்கள். அரசன் கட்டளைப்படி இராசகுமாரர்கள் வந்து தாம் கற்றுக்கொண்ட பலவகைப் படைக்கலக் கல்விகளையும் பிறவற்றையும் தனித்தனியே நன்கு அரங்கேற்றினர். கண்டு சபையோர் மிக வியந்தார்கள். அப்படியே வியந்த அரசன், "தனக்கும் எமக்குமுள்ள விரோதத்தைப் பாராட்டமலும் கபடமில்லாமலும் நம் மக்களைக் கற்பித்த உதயணனுக்கு யாம் செய்தற்குரிய கைம்மாறு யாதுளது?
ஒன்பதின் கோடி யொண்பொருள் கொடுப்பினும்
பண்பெனக் கொண்டவன் பண்டஞ் செய்யான்
நங்குடித் தலைமை யிங்கிவற் கியற்றி
நாமிவன் குடைக்கீழ்க் காமுறக் கலந்திவன்
வேண்டியது செய்யு மாண்பல திலம்." (1.37: 64-8).
என்று மிகப் பாராட்டி, "கௌசாம்பி நகர்க்கு விரைவில் இவனை அனுப்பி மணம் புரிந்துகொண்டு கவலையின்றி வாழும்படி செய்வதுதான் நமது கடன்" என்று பிறரோடு பேசிக்கொண்டே இருந்து முகமன்களைக் கூறி அவனை இருக்கைக்கு அனுப்பிவிட்டு அந்தப்புரம் சென்று மைந்தர்கள் கல்வியால் நிரம்பியதையும் அரங்கேற்றியதையும் தேவிக்குக் கூறினன். அவள் கேட்டு, "தத்தையின் கல்வியையும் நல்ல தினம் ஒன்றில் அவையார் அறியும்படி செய்விக்க வேண்டும்" என்று தெரிவித்தாள். அதனி உதயணனுக்கு அறிவிக்க அவனும் உடன் பட்டான். அரசன் சொல்லி விடுப்பக் கேட்டு அறியும் வன்மையுள்ள பலவகை இசைப்பயிற்சியாளரும் வந்து அவைக்களத்தில் நாற்புறத்தும் நிரம்பினர். தோழிமாருடன் வாசவதத்தை அவைக்கண் வந்து விதிப்படி யாழ் வாசித்தனள்; பின்பு பாடினள். கேட்டவர் முதலில் வத்தவனைப் புகழ்ந்து பின்பு பிரச்சோதனனை நோக்கி,
"வத்தவ நாடன் வாய்மையிற் றருக்கும்
கொற்ற வீணையுங் கொடுங்குழை கொண்டனள்
இரைகெழு குமரரு மேனை விச்சைத்
துறைநெறி போகிய துணிவின ராயினர்
தேயாத் திருவ நீயுந் தேரின்
நிலங்கொடை முனியாய் கலங்கொடை கடவாய்
வேள்வியிற் றிரியாய் கேள்வியிற் பிரியாய்
இனையோர் தாணிழற் றங்கிய நாடே
வயிர வெல்படை வானவ ரிறைவன்
ஆயிரங் குஞ்சரத் தண்ணல் காக்கும்
மீமிசை யுலகினுந் தீதிகந் தன்று" (1.37:137-47).
என்று கொண்டாடினார்கள். வாசவதத்தை வந்து தந்தையை வணங்கினள். அவன் மிகவும் பாராட்டி அவளை நற்றாய்பா லனுப்பினான். நற்றாயும் மற்றைத் தாயரும் அவளைத் தழுவிக் கொண்டாடினர்.
பிரச்சோதனன் கற்றறிவாளர் சுற்றிய ஆசனத்தேயிருந்து உதயணனை அழைத்து, "தாம் பிழைத்திருத்தற்கு விரும்பிய உலகத்தார்,
மரமுதல் சாய மருந்துகொண் டாஅங்கு
நங்குடி வலித்தல் வேண்டிய நம்பி
தன்குடி கெடுத்த தகவி லாளனேன்" (1.37: 188-90).
என்று சொல்லி வருந்தி ஆருணியை வென்று உதயணனைக் கெளசாம்பி நகரத்திற்கு அனுப்பி முடிசூட்டத் துணிந்து மந்திரிகளுடன் ஆலோசித்தனன். அங்ஙனம் செய்வித்தல் நன்றென்று அவர்கள் சொன்னார்கள். பின்பு, "கோசம்பியும் உஞ்சேனையும் முன்புள்ள பகைமை யொழிந்து பொன்னும் நெல்லும் வழங்குவன வாகுக" என்று பலரும் அறியும்படி முரசறைவித்து,
"முன்யா னிவனை முருக்கலும் வேண்டினேன்
பின்யா னிவனைப் பெருக்கலு முற்றனென்
எமர னாயி னிறைகொடுத் தகல்க
அமர னாயி னமைவொடு நிற்க (1.37:192-202).
உதயணனுக்குப் போர்த் துணையாக என்னுடைய குமாரன் பாலகனும் வருவான்" என்ற கடுஞ்சொற்களை அமைத்தெழுதிய ஓலையொன்றை ஒரு தூதன் மூலமாக ஆருணிக்கு அனுப்பிவிட்டு உதயணனுக்கு வரிசைகள் பலவற்றை அளித்து, "சேனைகளும் சேனைத் தலைவர்களும் பாலகனும் நாளை உதயணனுடன் புறப்படுக" என்று கட்டளையிட்டுவிட்டுப் போயினன்.
இதனைக் கேள்வியுற்ற யூகி, "உதயண குமாரன் பாலகன் முதலியவர்களோடு கெளசாம்பிக்கு இப்போது செல்வானாயின் முன்னமே நாம் செய்த சபதம் நிறைவேறாமற் போம். ஆதலால், இதனை இப்பொழுது நடை பெறாமற் செய்வித்து நம்முடைய சபதத்தை நிறைவேற்ற வேண்டுவது இன்றியமையாதது" என்று தன்னுள் நிச்சயித்துக்கொண்டு, குறி சொல்லுபவளாகிய பாகீரதி என்பளை வருவித்து, "நீ ஆவேசமுற்றவள் போல நகரத்துள்ளே சென்று அரண்மனையி லுள்ளாரும் புறத்துள்ளாரும் அறியும்படி குறிசொல்லி எல்லோருக்கும் மிக்க கவலையை உண்டாக்கி விரைவில் நீர்விழா நடக்கும்படி செய்க" என்றதன்றிச் சொல்ல-வேண்டியவற்றையும் அறிவுறுத்தி அவளை அனுப்பினன். உடனே அவள் தெய்வாவேசமுடையவள் போலக் கையை வீசி ஆடிக் கொண்டு சென்று நகரிலுள்ள இரு பாலாரும் கேட்கும்படி, "சென்ற யாண்டில் நீர் விழாவை இந் நகரத்தார் செய்யாமல் நிறுத்தி விட்டமையாற் கோபங்கொண்டு முன்பு நளகிரியை வெறிகொள்வித்து ஊரை அழிக்கும்படி செய்த தெய்வம் யான்; இப்பொழுதும் அவ் விழாவை நீங்கள் செய்யீராயின்,
பிணக்குறை படுத்துப் பிளிறுபு சீறிய
இன்றுஞ் சென்றியான் குஞ்சரம் புகுவல்" (1.37:249-50)
என்று சொல்ல, பன்றியால் மிகவும் துன்புற்ற நாய் சோற்றுப் பானையைக் கண்டபொழுதும் அதனைப் பன்றியென்று நினைத்து மிக அஞ்சுவதுபோல ஊரார் பொய்யா வேசங் கொண்டவளது கூற்றுக்கும் அஞ்சினவராகி அரசனுக்கு அதனைச் சொல்லி விடுத்தனர். கேட்ட அவன் நீர் விழாவை நடத்தும்படி கட்டளையிட்டான். சேனைத் தலைவன், 'நாலை நீராட்டணி’ என்று முரசறைவித்து ஊராரெல்லார்க்கும் அறிவித்தான். அறிவித்தவுடன் இயல்பாகவே நீர் விழாவில் விருப்பமுள்ள நகரத்தார்,
தோணியு மரமுந் துறைநா வாயும்
நீரியன் மாடமு நீந்தியற் புணையும்
சுண்ணமுஞ் சுட்டுஞ் சுவைநறுந் தேறலும்
செண்ணச் சிவிகையுந் தேரும் வையமும்
கண்ணார் பிடிகையுங் கட்டமை யூர்தியும்
பண்ணிரும் பிடியும் பண்ணுவனர் மறலிப் (1.37:266-71)
புறப்படுவாராயினர். இச் செய்தியை உதயணனுக்குத் தெரிவிக்கும்படி அரசன் நூலறிவாளர் நால்வரை யனுப்பினன். எல்லாச் சேரியிலும் சங்கங்களும் கொம்பு முதலியவைகளும் முழங்கின. பலவகைக் கொடிகளும் அசைந்தன.
ஆர்வ மகளிரு மாய்கழன் மைந்தரும்
வீர குமரரும் விரும்புவன ரேறிய
மாவுங் களிறு மருப்பிய லூர்தியும்
காலிரும் பிடியுங் கடுங்காற் பிடிகையும்
தேரு மாக்களுந் தெருவகத் தெடுத்த
எழுதுகள் சூழ்ந்து’ (1.38:9-14.
எழும்பிச் சூரியனுடைய கிரணங்களை மறைத்தன. யானைகளில் வரும் நகர நம்பியரும் இராசகுமாரரும், "செல்லுதற்கு வழியில்லை; யானைகள் வருகின்றன; வழிவிலகுமின்; அரசனாணை இஃது" என்று சொல்லவும், இளைஞர், "அரசன் ஆணைக்கு யாம் அஞ்சோம்; இப்புது நீராட்டு எமக்கே உரியது" என்று கூறி நெருங்கினார்கள்.
’வைய நிரையும் வயப்பிடி யொழுக்கும்
கைபுனை சிவிகையுங் கச்சணி மாடமும்
செற்றுபு செறிந்தவை மொக்குக ளாக
மக்கட் பெருங்கடன் மடைதிறந் ததுபோல்
எத்திசை மருங்கினு மிவர்ந்து’ (1.38: 42-6)
எல்லோரும் பலவகைச் சிறப்புக்களுடன் நகரத்தின் வாயிலைக் கடந்து 1ஆற்றி னிரு கரையையும் ஒரு யோசனை யளவுள்ளதாகிய பொய்கையின் நாற்கரையையும் அடைந்து அங்கங்கே யுள்ள அசோகம்பொழில் முதலிய தோட்டங்களில் மரவடிகள்தோறும் படமாடங்கள் அமைத்துப் பலவகைப்பட்ட நுகர்பொருள்களுடன் தனித்தனியே தங்கினர். பல பண்டங்கள் விற்கப்படும் கடைகள் அங்கங்கே அமைக்கப் பெற்றன. அரசன் வாராமையால் யாரும் விழாச்செய்யத் தொடங்கவில்லை; அச் செய்தியைத் தூதர்கள் பிரச்சோதனனுக்கு அறிவித்தனர். அவன் உரிமை மகளிரோடு புறப்பட நினைந்து, "மதம்பட்ட களிறுகளை நகர் புறத்தேயுள்ள சோலை களின்பாற் சேர்த்திடுக;
-----------
1 ஆறு - சிப்பிராநதி; உதிதோதய காவியம்
---------
வேந்துபிழைத் தகன்ற வினைவ ராயினும்
சேர்ந்தோர்த் தப்பிய செறுந ராயினும்
கலங்கவர்ந் தகன்ற கள்வ ராயினும்
நிலம்பெயர்ந் துறைத னெடுந்தகை வேண்டான்
தொகுதந் தீண்டிக் கிளைஞ ராகிப்
புகுதந் தீகவிப் புனலாட் டகத்து" (1.38: 94-9)
என்று முரசறைவித்து யாவர்க்கும் தெரிவிக்கச் செய்து தன் மெய்காப்பாளரையன்றி மற்ற வீரர் யாவரும் அந்த விழா நடைபெறும் இருபத்தொரு நாட்களிலும் ஆயுதங்களைக் கைக்கொள்ளாதொழிக வென்றும் கட்டளையிட்டான்;
'தாழ்புனற் றாரையுந் தமரோடு தருக்கும்
நாழிகைத் தூம்பும் நறுமலர்ப் பந்தும்
சுண்ண வட்டுஞ் சுழிநீர்க் கோடுமென்
றெண்ணிய பிறவும்’ (1.38:105-8).
ஆகிய தேவியர்க்குரிய நீர்விளையாட்டுக் கருவிகள் யானைகளின் மீது சென்றன. பிரச்சோதனன், அரசர்கள் கைகொடுப்பக் 1கடிகையாரங் கழுத்தில் மின்ன அண்ணாந்து சென்று ஆயிரம் பிடிகளினிடையே அலங்கரிக்கப்பட்டு நின்ற நளகிரியின்மீது ஏறிச் சென்றனன். மந்திரிகள் முதலியோர் தத்தம் ஊர்திகளிலேறி அவனைச் சூழ்ந்து சென்றனர். உரிமை மகளிரும் தத்தமக்கமைந்த ஊர்திகளிற் சென்றார்கள்.
---------
1 நாழிகையை அறிந்துகொள்ளுதற்குரிய கருவி (கடியாரம்).
-------
'கடைப்பகச் செப்பே கவரி குஞ்சம்
அடைப்பைச் சுற்றமோ டன்னவை பிறவும்
அணிகலப் பேழையு மாடை வட்டியும்
மணிசெய் வள்ளமு மதுமகிழ் குடமும்
பூப்பெய் செப்பும் புகையகி லறையும்
சீப்பிடு சிக்கமுஞ் செம்பொற் கலசமும்
காப்பியக் கோசமுங் கட்டிலும் பள்ளியும்
சுட்டிக் கலனுஞ் சுண்ணகக் குற்றியும்
வட்டிகைப் பலகையும் வருமுலைக் கச்சும்
முட்டினை வட்டு முகக்கண் ணாடியும்
நக்கிரப் பலகையு நறுஞ்சாந் தம்மியும்
கழுத்திடு கழங்குங் கவறுங் கண்ணியும்
பந்தும் பாவையும் பைங்கிளிக் கூடும்
யாழுங் குழலு மரிச்சிறு பறையும்
தாழ முழவமுந் தண்ணுமைக் கருவியும்’ (1.38:161-75)
ஆகிய பொருள்கள் அவர்கள் புடையே கூனர் முதலியோர்களாற் கொண்டு செல்லப்பட்டன. தேவியர்கள் வாசவதத்தை வாராதது கண்டு ஏவன் மகளிரிடமாகச் சொல்லி யனுப்பிவிட்டு அவளது வரவைக் கதிர்விரற் கவியலுட் கண்ணிணை பிறழ நோக்கிக்கொண்டு வழியிற் காத்திருந்தனர். சென்றவர்கள், சேனாபதி மகளை அலங்கரித்துக்கொண் டிருந்த வாசவதத்தையிடஞ் சொல்ல, அவள் தோழியர்க்கு வேண்டுவனவற்றை யளித்து அவர்களுடன் சென்றனள். அவளைக் கண்ட நற்றாய், "முற்றத் துறந்த முனிவர்களையும் நிலைகுலையச் செய்யும், இவள் கண்கள்" என்று கூறி இன்புற்று அவளுடைய பாங்கிமாரையும் உயிர்த்தோழியாகிய காஞ்சனமாலையையும் பார்த்து, "இவள் உமதடைக்கலம்" என்று கூறி ஒப்பித்துவிட்டுச் செல்ல, வாசவதத்தை ஒரு வையத்திலேறினள். அதிற் பூட்டிய காளைகளின் குளம்புகள் வழுக்கக் கண்ட பாகன் அவற்றை அனுப்பிவிட்டு மல்லர் பலர் தாங்கும் ஒரு மாடச் சிவிகையின்மீது அவளை ஏற்றினன். அவள் பொய்கைக் கரையை யடைந்தாள்.
அரசன், பிடிகளுட் சிறந்ததும் இலக்கண மிக்கதும் மங்கலகரமான யாக்கையை யுடையதும் வீரியமுடையதும் நெடுந் தூரஞ் செல்லும் வன்மையையுடையதும் மத்தக மாலையை யணிந்து மணமகள் போல விளங்குவதும் நிகரில்லாததுமான பத்திராபதி யென்னும் பெண்யானையைச் சிவேதன் முகமாக உதயணனுக்கு அனுப்பி அதனை ஊர்ந்து வரும்படி செய்து விட்டுத் தான் மேற்கூரிய பொய்கைக்கரையிற் சென்று தங்கினான். உதயணனும் அரசனுடைய விருப்பத்தின்படி அந்த யானையை ஊர்ந்து வயந்தகனோடு அங்கே சென்றனன். நால்வகைப் படைகளும் தம்மைச் சூழ அரசகுமாரர்கள் வந்து தமக்கு அமைந்த இடங்களில் தங்கினார்கள். சிவப்புக் கொடிகளை எங்கும் பிடிக்கச் செய்து பரிவாரங்களுடன் நகர நம்பியர்கள் தமக்குரிய இடங்களில் வந்து அமர்ந்தார்கள்.
நீராடுதற் குரிய நற்காலத்தை மங்கலக் கணிகள் கூறினர். அரசன் இருபது யானைகளையும் எண்பது புரவிகளையும் ஐம்பது தேர்களையும் நூறாயிரத்தொரு கழஞ்சு மாசையையும் தானம் செய்தான்; தக்கணை யளித்தான்; பெரியோர்களை வணங்கினான்; இரணிய கர்ப்பம் நடத்தினான்; ஸ்ரீகோயிலுக்குப் பொற்பூ ஆயிரஞ் சேர்ப்பித்தான்; பின்னும் செய்ய வேண்டியவற்றைச் செய்தான்; நெற்கதிர் சூட்டி வெண்டுகிலிட்ட விசய முரசத்தை முன்னே யனுப்பினான்; நீராடப் புறப்படும்படி ஏனையோர்க்குக் கூறியதன்றி விரும்பிய இடங்களிற் சென்று ஆடுமினென்று இராச குமாரர்களுக்கும் நீர்விழாவின் காட்சிகளை அங்கங்கே சென்று கண்டு நீராடி வருகவென்று உதயணனுக்கும் சொல்லி யனுப்பிவிட்டுப் பின்னும் பலவகைப்பட்ட தானங்கள் புரிந்து நீராடினன். உடன்வந்தோர்,
’துறைதுறை தோறு முறைவிடம் பெறாஅர்
தண்புன லாட்டின் றக்கணை யேற்கும்
அந்த ணாள ரடைக விரைந்தெனப்
பயினூ லாளரைப் பயிர்வனர் கூஉய்க்
கவர்வனர் போலக் காதலி னுய்த்து
நன்கல மேற்றி நாளணி யணிந்து
மங்கல வேள்வியுண் மகளீ வோரும்
செம்பொற் புரிசை வெண்சுதை மாடத்
துழைக்கலம் பரப்பி யுருவிய மகளிரோ
டிழைக்கல நிறீஇ யில்லீ வோரும்
ஆலைக் கரும்பு மரியுறு செந்நெலும்
பாளைக் கமுகின் படுவுஞ் சுட்டிப்
புயல்சே ணீங்கினும் பூவளங் குன்றா
வயலுந் தோட்டமும் வழங்கு வோரும்
நாகுசூ னீங்கிய சேதாத் தொகுத்துக்
குளம்புங் கோடும் விளங்கு பொன்னுறீஇத்
தளையுந் தாம்பு மளைகடை மத்தும்
கழுவுங் கலனும் வழுவில பிறவும்
பைம்பொனி னியன்றவை பாற்பட வகுத்துக்
குன்றாக் கோடி கொடுத்துவப் போரும்
இன்னவை பிறவு மென்னோர்க் காயினும்
உடையவை தவாஅக் கொடைபுரி படிவமோ
டிலமென் மாககளை யிரவொழிப் பவர்போற்
கலங்கொடை பூண்ட கைய ராகி
வெண்டுகில் பூட்டிய வேழக் குழவியும்
ஒண்படை யணிந்த வண்பரிப் பரவியும்
உண்டியு முடையுங் கொண்டகஞ் செறித்த
பண்டியு மூர்தியுங் கொண்டன ருழிதந்
தந்தணர் சாலையு மருந்தவர் பள்ளியும்
தந்தற மருங்கிற் றலைவைப் போரும்
நிலம்பெய் வோரு நிதிபெய் வோரும்
களிறுபெய் வோரும் பரிபெய் வோரும்’ (1.39:50-81)
ஆகித் தத்தமக்கு இயன்ற தானங்களைச் செய்தனர். நீராட்டு விழவு இங்ஙனம் மிக்க சிறப்புடன் நடை பெறுவதாயிற்று.
நகரமாந்தர் அங்கங்கேயுள்ள1 பலவகையான காட்சிகளைத் தாம் கண்டு பிறர்க்குங் காட்டி இன்புற்று,
"பணிவி னல்வினைப் பயனுண் டாயின்
மணிமுடி பன்ன னணியுஞ் சேனையுள்
ஏழுமைப் பிறப்பு மெய்துகம் யாம்" (1.40: 386-8)
என்று இன்புற்றுக் கூறினர்.
----------
1. இந்தப்பகுதி மிக விரிவாகவும் அழகாகவும் இதன் முதனூலிற் காணப்படுகின்றது; பக்கம், 60-71.
பொய்கையும் பொய்கைக் கரையும் பலவகைச் சிறப்புக்களாலும் பலவகை ஓசைகளாலும் விளங்குதலுற்றன.
அரச குமரரும் பேதை மகளிர் முதலிய 2ஏழு பருவ மகளிரும் நீராடி மகிழ்ந்தனர். அப்பால், காஞ்சன மாலையும் மற்றத் தோழிமாரும் வாசவதத்தையை,
வெயிலழல் கவியாது வியலக வரைப்பின்
உயிரழல் கவிக்கு முயர்ச்சித் தாகிப்
பூந்தா ரணிந்த வேந்தல் வெண்குடை
வேந்தன் மகளே விரையா தென்மரும்
பண்டை மகளிர் படிமையிற் பிழையாது
தண்டந் தூக்கித் தலைப்புனல் விழவினைக்
கொண்டுவந் தாடுங் கொழுமலர்த் தடங்கட்
பொங்குமலர்க் கோதாய் போற்றென் போரும்
நின்னை யுவக்குநின் பெருமா னேந்திய
வென்வேல் கடுக்கும் வென்மை நோக்கத்துப்
பொன்னே போற்றி பொலிகென் போரும்’ (1.42:44.54)
ஆகி மிக்க உபசாரத்துடன் அழைத்துச் சென்று விதிப்படி நீராட்டி அலங்கரிப்பா-ராயினர்.
----------
2. இந்தப் பகுதி, மற்ற எந்த நூலிலுங் காணப்படாத இன்பமுடையதாய் இதன் முதனூலிற் காணப்படுகின்றது; பக்கம், 72-6.
அந்தண மகளிரும், அரச மகளிரும், சேனாபதி மகளும், திணை மகளிரும், காவிதி மகளிரும், பெருங்குடி மகளிரும்,
நீர்த்தலைக் கொண்ட நெடும்பெருந் துறைவயிற்
போர்தலைக் கொண்டு பொங்குபு மறலிக்
கொங்கலர் கோதை கொண்டுபுறத் தோச்சியும்
அஞ்செஞ் சாந்த மாகத் தெறிந்தும்
நறுநீர்ச் சிவிறிப் பொரிநீ ரெக்கியும்
முகிழ்விரற் றாரை முகநேர் விட்டும்
மதிமரு டிருமுகத் தெதிர்நீர் தூவியும்
பொதிபூம் பந்தி னெதிர்நீ ரெறிந்தும்
சிவந்த கண்ணினர் வியந்த நுதலினர்
அவிழ்ந்த கூந்தலர் நெகிழ்ந்த வாடையர்
ஒசிந்த மருங்குல ரசைந்த தோளினர்
நல்கூர் பெரும்புனல் கொள்க வென்றுதம்
செல்வ மெல்லாஞ் சேர்த்திறைத் தருளி
இளையா விருப்பிற்றம் விளையாட்டு முனைஇக்
கயம்பா டவியப் புறங்கரை போந்து’ (1.42:184.98)
கூந்தல் உலர்த்திப் பூமாலைகளை முடித்து,
'பைங்கூற் பாதிரிப் போதுபிரித் தன்ன
அங்கோ சிகமும் வாங்கச் சாதரும்
கொங்கார் கோங்கின் கொய்ம்மல ரன்ன
பைங்கோழ்க் கலிங்கமும் பட்டுத் தூசும்
நீலமு மரத்தமும் வாலிழை வட்டமும்
கோலமொடு புணர்ந்த வேறுவே றியற்கை
நூலினு முலண்டினு நாரினு மியன்றன
யாவை யாவை யவையவை மற்றவை
மேவன மேவன காமுற வணிந்து’ (1.42:20-12)
பின் ஏற்ற ஆபரணங்களையும் அணிந்துகொண்டனர்.
அந்தச் சமயத்தில், உதயணன் தன்னைச் சிறைப் படுத்திய பிரச்சோதனனுடைய செல்வ மிகுதியும் அங்கே நீராடுவோருடைய இன்ப விசேடமும் தன் மனத்தை வருத்த, "பத்திராபதியின் மேலே ஏறிய இந்தப் பகலிலாவது நம் எண்ணத்தை முடிக்க வேண்டும்" என்ற கருத்துள்ளவனாகிப் பிரச்சோதனனை வஞ்சித்து வருத்துவதற்குரிய உபாயம் யாதென்னும் யோசனையோடே அந்தப் பிடியின்மேல் இருந்தனன்.
இருந்தபொழுது, உதயணன் குறித்ததை அறிந்த வயந்தகன், பிரயாணத்துக்குச் சாதனமானவற்றைச் சேகரித்து வைத்துக்கொண்டு அவனை நோக்கி, "உனக்குத் தெரிவிக்கும்படி யூகி சொல்லிவிடுத்தவற்றை விண்ணப்பஞ் செய்வேன்; கேட்டுக் கைக்கொள்ள வேண்டும்; உதயணன் இப்போது பிரச்சோதனனுடைய பாதுகாப்பில் உள்ளானாயினும் பாம்பைப்போலச் சமயம் பார்த்துப் பகையை வெல்லுதல் அரசர்க்குக் கடமையாதலாலும், தான் பத்திராபதியின் மேல் ஏறியிருத்தலாலும், வாசவதத்தை தனியே நீராடுதலாலும் கைப்பற்றி அவளை அந்த யானையின் மேலேற்றிச் செல்லுதற்குரிய சமயம் இதுவேயாம்; முன்னமே என்னால் நியமிக்கப்பட்டுள்ள சில கள்ள மகளிர் விரைவில் அந் நகரத்தைத் தீக்கு இரையாக்குதல் கூடும்; அங்கே புகை தோன்றியவுடன் சிறிதும் பாணித்தலின்றி வாசவதத்தையைப் பிடியின் மீது ஏற்றிச் செல்வானாக; ஏற்றியவுடன் தடுக்க வந்த பிரச் சோதனுடைய வீரர்களை, நாற்றிசைகளிலும் மறைந்து திரியும் நம் வீரர், 'வாழ்க உதயணன்' என்று கூறிக் கொண்டும் அங்கங்கே மரப்பொந்து முதலியவற்றில் ஒளித்து வைத்திருக்கும் ஆயுதங்களை வெளிப்படையாகத் தாங்கிக்கொண்டும் போர் செய்து தொலைத்து விடுவார்கள். அது பற்றிய கவலை தனக்குச் சிறிதும் வேண்டாம்.
பகையரசனுடைய நாட்டின் அக எல்லையினளவாகிய1 ஐந்நூறையும் கடந்து செல்லுதற்கு இப்பிடிக்கு வன்மை யில்லையாயினும் நானூறெல்லை யளவு
சென்று வீழ்ந்தாலும் வீழ்க, அதனால் நமக்குத் துன்பமில்லை. அப்பாலுள்ள நாட்டின் பகுதி வேடர் முதலியோரை யுடையதாதலால் செல்லுதற் கரியது. ஆனாலும் தான் வாசவதத்தை முதலியவர்களுடன் அங்கே வந்தாற் பாதுகாத்துக் கொண்டுபோய் விடும்படி அவ்விடமுள்ள வேடர்களின் தலைவனும் என்னுடைய நண்பனுமாகிய
ஒருவனிடம் முன்னமே சொல்லிவைத்திருக்கிறேன்.
------
1. இங்கே ஐந்நூறென்றது, காதம், யோசனை, கல்வியூகி, அம்புவீழெல்லை, குரோசம், விற்கிடை முதலிய நீட்டலளவை களுள் இன்னதென்று விளங்கவில்லை.
ஆதலால், அவன் பாதுகாப்பான். அவ்விடத்திற் சிறிது துன்பம் நேரினும் அதனைப் பரிகரித்துக்கொண்டு அப்பாலுள்ள எல்லை நூறையும் கடந்துவிடுக. பகைவரை வெல்லும் ஆற்றலையுடைய நம்மவர் அங்கே உள்ளார். அங்கே தங்குக. யான் எண்ணித் துணிவது எந்தக் காரியமாயினும் தீதின்றி நிறைவேறு மென்பதை இதன் முகமாகத் தெளிக. யூகியென்னும் பெயர் எங்கும் பரவும்படி மான் கூட்டத்திற் புலி புகுந்தாற்போலப் பகைவர்களுடைய வீரரை வாளால் வீழ்த்திவிட்டு விரைவில் தன்னிடம் வந்து சேருவேன். யான் சொல்லியவண்ணம் செய்யாவிட்டால் அரசாட்சியைத் தான் இழந்துவிடுதல் நிச்சயம் என்பவையே" என்று சொல்ல உதயணன், "அவனும் யானும் உயிரோடிருப்பின் வானுலகத்தையும் வணங்கச் செய்வோம்; மற்றவை மிக எளியன" என்று சொல்லிப் புன் முறுவலுடன் அங்கங்கே நிகழுங் காட்சிகளைப் பார்ப்பதற்குச் செல்பவன்போலே பத்திராபதியை நடத்திக்கொண்டு சென்று வாசவதத்தை ஆடும் பெருந் துறையை அடைவானாயினன்.
அப்பொழுது நீருடை மேகமும் காற்றும் கலந்து மிகக் கடுமையாகத் தோன்றின. அதனைக் கண்ட யூகி கனாவிற் கண்ட பொருளைக் கையிற் பெற்ற வறியவன்போல மிக மகிழ்ந்து அங்கே மறைந்து திரியும் வீரர்கள் தன் கருத்தை அறிந்துகொள்ளும்படி முரச மொன்றைக் கொட்டினன். அஃது இடியைப்போல் முழங்கிற்று. அதனைக் கேட்ட அவன் வீரர்கள் மிக்க ஊக்கமுடையவர்களாகித் தத்தம் வாட்படைகளைத் தாங்கி, "உதயண குமாரனும் யூகியும் வாழ்க" என்று முழக்கஞ் செய்பவர்களாய் உறையினின்றும் வாளை உருவி எடுத்துக்கொண்டு ஆண்டுள்ளாரோடு போர் செய்யத் தொடங்கினர்.
உள் நகரத்தில் யூகியினால் வைக்கப்பட்டிருந்த கள்ள மகளிர் தங்கள் இருப்பிடங்களை விட்டுப் புறப்பட்டு வீடுகள் தோறும் நெருப்பு வைப்பாராயினர்.
'ஐந்தலை யுத்தி யரவுநா ணாக
மந்தர வில்லி னந்தணன் விட்ட
தீவா யம்பு திரிதரு நகரின்
ஓவா தெழு மடங் குட்குவர' {1,43: 119-22)
எங்கும் தீக்கொழுந்து நெடுந்தூரத்தி லுள்ளவர்களும் அறிந்துகொள்ளும்படி மிக ஓங்கித் தோன்றியது. ஆற்றங் கரையிலும் பொய்கைக் கரையிலுமுள்ள மகளிர்கள் அதனைக் கண்டு, "சக்கரவர்த்தி இல்லாத சமயம் பார்த்துப் பகைவர்கள் நகரத்திற் புகுந்து துன்பம் விளைக்கின்றார்களோ? நளகிரியென்னும் யானை முன்போலக் குணஞ் சிதைந்து மத வெறியால் வீதிதோறுஞ் சென்று சென்று துன்புறுத்துகின்றதோ? யாதுந் தெரியவில்லையே!" என்று சொல்லிக்கொண்டு நிலைகுலைந்து தத்தம் குழந்தைகளையும் பிறரையும் தம்மையும் பாதுகாத்தற்கு அறியாராய்ப் பரவச முற்று ஓடி ஓடிப் பலவாறு திரிவாராயினர். உச்சைனியில்
'நறுநெய் பயந்த நன்னகர் முத்தீ
மறுமைக் கெண்ணிய மயலறு கிரிசை
அந்தணர் சேரியு மருந்தவர் பள்ளியும்
வெண்சுதை மாடமும் வேந்தன் கோயிலும்
தெய்வத் தானமோ டவ்வழி யொளிய' (1.43; 173-7).
ஏனைய இடங்கள் தீக்கிரையாயின. பின்னும்,
'படலணி வாயின் மடலணி வேயுள்
இடையற வில்லா விருக்கையிற் பொலிந்த
பன்னா றாயிரம் பாடிக் கொட்டிலும்
முந்நூ றாயிர முட்டிகைச் சேரியும்
ஐந்நூ றாயிரங் கம்மவா லயமும்
சேனை வேந்தன் சிறப்பினோ டிருந்த
தானைச் சேரியுந் தலைக்கொண் டோடிக்
கானத் தீயிற் கடுகுபு திசைப்ப' (1.43: 197-204)
மற்ற மாடங்களும் எரிந்துபோயின. அதனைக் கண்டஅரசமங்கையர்கள் பலரும் பல வகையாக அலைந்து துன்புற்றனர்.
அப்போது பிரச்சோதனன் வேறொன்றுஞ் செய்ய அறியாதவனாகி, "யானைகளை நாற்புறத்தும் அரணாக நிறுத்தி அதன் இடையே நம்முடைய உரிமை மகளிரை இருக்கும்படி செய்க" என்று கட்டளையிட்டான். அங்கே நின்ற யானைகளுட் சில மேக முழக்கத்தைப் பகைமையையுடைய யானை முழக்கமென்று கருதி வரம்பு கடந்து ஓடிச் சென்று கூட்டங்களை மிதிக்கத் தொடங்கின.
"நகரி முழக்கினு மிகையெழு தீயினும்
அளவி லார்ப்பினு மருந்தளை பரிந்து
கடலென வதிர்ந்து காரெனத் தோன்றி
விடலெருஞ் சீற்றமொடு வேறுபட நோக்கிக்
களமெனக் கருதிக் கனன்ற வுள்ளமொடு
நளகிரிக் கூற்ற நகர முழக்க
எதிரெழு வோரை யதிர நூறி
வத்தவர் கோமான் வயவர் திரிதர," (1.44:86-93)
அங்கிருந்த பிரச்சோதனன் தன் ஏவலிளையரை நோக்கி, "தன் மாணாக்கியாகிய வாசவதத்தையை எப்படியேனும் பாதுகாத்தல் தன் கடனென்று யான் கூறியதாக உதயணனுக்கு விரைந்து சென்று சொல்லுமின்" என்று கூறினன். அதனை அவர்கள் உதயணனிடம் தெரிவிக்கவே அவன், " வாசவதத்தையைப் பாதுகாத்தல் என்னுடைய கடமை. அதுபற்றிச் சிறிதும் கவலையடையா தொழிக" என்று அரசனுக்குச் சொல்லி அனுப்பிவிட்டுப் பத்திரா பதியைச் செலுத்திக்கொண்டு வாசவதத்தையிருந்த துறையை அடைந்தான். அடைந்தவனை, அங்கே இருந்த காவலாளர் முதலியோர் கண்டு விரைந்து சென்று, "நெருப்பு பற்றி எரிகின்றமையால், இப்பொழுது நகரத்தினுள்ளே செல்லல் எம்மால் இயலுவதன்று; பெருங்காற்றாற் பொறிகள் சிதைந்து போனமையின், ஊர்தி வகைகளும் இப்போது உதவா; ஆதலால், உம் மாணாக்கியாகிய வாசவதத்தையை இப் பிடியின்மீது ஏற்றிக்கொண்டு பாதுகாத்ததருளல் வேண்டும்" என்று பணிந்துரைத்தனர். மற்றையோரும் அங்ஙனமே வேண்டிக் கூறினர். கேட்ட உதயணன் தன் மனத்திலுள்ள பேருவகையைச் சிறிதும் வெளியிடாது அடக்கிக்கொண்டு, அவர்கள் கூறுவதைக் கேட்டுத் தன்னை அடைவதில் மிக்க ஆர்வத்தோடு நிற்கும் வாசவதத்தையைக் காஞ்சனமாலை ஏற்ற அவன் தன் குடங்கையால் தழுவிப் பிடி மீதேற்றி, "முடியா ஆள்வினை முடித்தன மின்று" என்று மகிழ்வுற்றான்.
அப்பிடியின்மேல் அவளுடன் காஞ்சனமாலையும் ஏறினள். ஏறியவள் தன் கையிலிருந்த கோடபதியை வயந்தகனிடங் கொடுத்துவிட்டுப் பிடியின் வேகத்தால் நடுங்கும் வாசவதத்தையைப் பாதுகாத்துக்கொண்டிருந்தாள். அப்பொழுது வாசவதத்தையைப் பார்த்தற்கு வருபவள் போலவே சாங்கியத்தாய் அங்கே வந்தனள்; யூகியின் அடையாளங்களை அவள் தெரிந்து கொண்டு அவனை அடைந்து யோசித்து மேல் நிகழ்த்த வேண்டியவற்றைச் செய்வித்தற்கு எண்ணிய உதயணன் முன்னமே தான் எழுதி வைத்திருந்த ஓலையை அவளிடம் பிறரறியாமற் கொடுப்பித்து அவளை மந்தணமாக அவன்பாற் செல்லும்படி குறிப்பித்தனன். அவளும் அக்குறிப் பறிந்து வாசவதத்தையி்ன் பிரிவாற்றாமற் சென்றனள்.
உதயணன் பிடியை நோக்கி, " உங்கள் சாதியிடத்துள்ள அன்பால் யான் அடைந்த சிறைத் துன்பத்தை முன்பு நளகிரி தீர்த் தளித்தது; இப்பொழுது இவள் கண்ணால் உண்டாகிய துன்பத்தை இவ்விருளில் விரைந்து சென்று தீர்த்தளிப்பது உன்னுடைய கடனாகும்"என்று அதன் செவியிற் கூறி அதனைச் செலுத்தினன்.. செலுத்துகையில், அம்பையும் வில்லையுந் தாங்கிய கையனாகி அங்கே வராகனென்னும் வீரன் வந்தனன். அவனைக் கண்டு, " வராக! நீ அஞ்சாதே; இங்கே சூழ்ந்து நிற்போர்கள்வர்களாகவும் இருத்தல் கூடும். ஆதலால் உன் கையிலுள்ள வில்லையும் அம்பையும் என்னிடங் கொடுத்துவிட்டு என் கையிலுள்ள வாளை நீ தாங்கிக்கொண்டு இப் பிடியின் மீது ஏறிக் கவலையின்றி உடன்வருவாயாக" என்று கபடமாகச் சொல்ல, வராகன் தன் கையிலுள்ள வில்லையும் அம்பையும் உதயணன் கையிற் கொடுத்துவிட்டுப் பிடியின் மீதேறுதற்கு அதனருகிற் சென்றனன். அவன் ஏறுதற்கு இடங்கொடாமற் பத்திராபதியை உதயணன் அதி வேகமாகச் செலுத்திக்கொண்டு சென்றான். அங்கே நின்ற காவலர்கள் பெரிதும் மனங் கலங்கி, "வத்தவனுடைய கருத்தை நாம் அறிந்து கொள்ளாமல் இரந்து வாசவதத்தையை இவன் பிடியின்மேல் ஏற்றிவிட்டோமே! இவன் தன் நாட்டை நோக்கிச் செல்லுகின்றனனே! இனிக் கூற்ற வாணையெங் கொற்றவன் திருமுன் யாது சொல்லிச் செல்வேம்?" என்று எண்ணி அச்சமும் நாணம் உற்றார்.
உதயணன் வீரர்களில் ஒரு சாரார் அம்புகளையும் விற்களையும் கையிலேந்தி எதிர்ப்போரைப் பெறாதவர்களாகித் தம் அரசனுடைய வெற்றியைப் பாராட்டிக் கொண்டு, "எம் தலைவனுக்குப் பிழை செய்தோர் விண்ணுலகை அடைவதன்றி மண்ணுலகில் இருத்தற்கு உரியரல்லர்" என்று சொல்லிக்கொண்டே பிடியின் பின் சென்றனர். வேறொரு சாரார், போர் செய்தற்கு வருபவர் யாரேனு முளரோ என்று இரையை விரும்பிக் கடலில் உலாவித் திரியும் சுறாக்களைப் போன்று அங்கங்கே தேடித் திரிந்து சுழன்றுகொண்டு திட்டிவிடமென்னும் பாம்பைப்போலவே நெருப்பை உமிழுங் கண்களை உடையவர்களாகி, எதிர்ப்போர்களை வெட்டி வீழ்த்துபவர்களாய்ப் பிடித்த வாளர் மடித்த வாயராய் நடுங்குவித்துத் திரிவாராயினர்.
பின்னும் யூகியால் அங்கங்கே இருத்தப்பட்ட ஐந்நூற் றைம்பத்தைந்து வீரர்கள் வெளிப்பட்டுக் கேடகத்தையும் வாளையு முடையவர்களாகி, பிடியைத் தடுத்தற்கு அதன்பின் செல்லும் வீரர்களை முன் சென்று வெட்டி வீழ்த்திக்கொண்டும் கூற்றுறை உலகினுள் உறைகுவி ராயின் விரைந்து குறுகுமின் என்று சொல்லிக்கொண்டும் திரிந்தனர்.
அந்தச் சமயத்தில் யூகி, இயல்பான உருவமுடையவனாகி மயானத்திலிருந்து பெருந்தவஞ் செய்து தான் பெற்றதும் கருங் கல்லைப் பிளந்தாலும் வடுப்படாத வாயை யுடையதுமாகிய வாளைக் கையிலேந்தி அதனை நோக்கி, "வாட்படையே! அருச்சுனன் செந்தீக் கடவுளுக்குக் காண்டவ வனத்தை முற்காலத்தில் உணவாக அருத்தி அதன் பசியைத் தீர்த்ததுபோல உன் பசியை இன்று தீர்த்துவிடுவேன்; பாதுகாக்க வேண்டும்" என்று சொல்லி எதிர்த்தவர்களை எளிதிற் கொன்றுகொண்டு அதி வேகமாக உதயணனை அடைந்து பத்திராபதியை வலம் வந்து பல முறை துதித்து, "பத்திராபதீ! உன் சாதியிலுள்ள பிரியத்தால் எம் தலைவன் அடைந்த வருத்தத்தைத் தீர்த்தற்கு நீ விரைந்து சென்று இடையேயுள்ள காட்டில் தங்கி விடாமல் எம்முடைய நாட்டை யடைக. உனக்கு இது பெருங்கடனாகும்" என்று ஒம்படை சொல்லி அதன் காதில் மந்திரம் ஒன்றை உபதேசித்து அரசனை நோக்கி, "விரைந்து செல்க; சயமுண்டாகுக" என்றனன்.
உதயணன், சாங்கியத் தாயினுடைய இலக்கணங்களையும் இயல்பையும் உதவியையும் அவள் கைவிடுதற்கரியள் என்பதையும் விளங்கப் பொறித்த ஓலை ஒன்றை யூகியினிடம் கொடுப்பித்து விட்டு, தன்னுடைய வீரர்களின் வெற்றியும் யூகியினுடைய ஆலோசனையின் மேம்பாடும் அவற்றாலுண்டாகிய இன்பமும் தன்னுள்ளத்தை நிரப்பத் தனக்காகவே இமையவர் நிருமித்துத் தந்தாற்போன்ற அந்தப் பிடியை வட கீழ்த் திசையின்வழியே செலுத்தத் தொடங்குகையில், மேற்கூறிய வராகனென்பவன் உஞ்சை வீரர்களின் உயிரைப் பாதுகாப்பவனாகிப் பின்தொடர்ந்து அங்கே வந்தான். அவனை நோக்கி உதயணன், "நீ அவந்தியர் பெருமானுடைய தாணிழலை யடைந்து, 'பாதுகாத்திடுக’ என்று வாசவதத்தையை என்பால் அன்புடன் ஒப்பித்தமையால் யான் இவளைக் கொண்டு என்னாடு செல்லுதற்குத் துணிந்தேன்; இதனை அவருக்குக் கூறுவதுடன் என் வணக்கத்தையும் தெரிவிக்க வேண்டும்" என்று பாலொடுதேன் கலந்தாற்போன்ற சொல்லைச் சொல்ல, வராகன் அதனைக் கேட்டு மயங்கிப் பிடியின் பின்னே மீட்டும் சென்று நின்றனன். உடனழைத்துச் செல்லாமற் செய்தி சொல்லி வராகனைமட்டும் தந்தைபால் விடுத்தமை தெரிந்த வாசவதத்தை மயங்கி வெய்துயிர்த்துத் துன்புற்றுக் காஞ்சனமாலையை நோக்கி, "காஞ்சனமாலாய், என்னைக் கைப்பற்றிக்கொண்டு கீழே இறங்குக" என்று சொல்லுவாளாய்த் தந்தை முதலியோரின் பிரிவாற்றாதவள் போலவும் அச்சமுற்றவள் போலவும் புலம்புவாளாயினாள். அதனைக் கண்ட காஞ்சனமாலை கைகுவித்துக்கொண்டு தான் எண்ணியதை முடித்து விளங்கும் உதயணனை நோக்கி, "அரசே! தான் ஊசலாடினும் பாங்கியர் குரவை யாடினும் மிக அஞ்சுகின்ற எங் கோமகள் நடுங்கும்படி,
எறிவளி புரையு மிரும்பிடி கடைஇப்
பின்வழிப் படருமெம் பெரும்படை பேணாய்
என்வலித் தனையோ இறைவ" (1.46:185-7)
என்ரு சொல்லி வருந்தினள். உடனே உதயணன், "நீவிர் இருவரும் மயங்கா தொழிக. அரசன் இவளை என்னோடு சேர்த்து அனுப்பியதை அறியாத வீரர்கள் போர் செய்தற்குத் துணிந்து வருகின்றார்கள். யான் இவர்களை ஒரு பொருளாக எண்ணேன். இவர்களை வெல்லுதல் எனக்கு மிக எளிய காரியமாகும்; அஞ்சற்க" என்றனன். காஞ்சனமாலை வாசவதத்தையைத் தெருட்டி அவள் நடுக்கத்தைத் தீர்த்தனள். அவளும் நடுக்கொழிந் திருந்தாள். அப்பால் உதயணன் தன் நாட்டை நோக்கிப் பிடியைச் செலுத்தினன். அது கண்டோர் யாவரும், "உதயணன் வாசவதத்தையை அரசனிடத்தாவது இராசமாதேவியிடத்தாவது கொண்டு செல்லாமல் தன் நாடு நோக்கிச் செல்லுகின்றனனே! இனி என்ன நேருமோ!’ என்று பகற் காலத்திற் சூரியனை இழந்தவர்கள் போலே மிகவும் அஞ்சினர். செவிலித் தாயரும் பாங்கிமாரும் மற்றையோரும் அவளுடைய செயல்களை நினைந்து சொல்லிச் சொல்லி அங்கங்கே பலவகையாகப் புலம்புவாராயினர்.
சாங்கியத்தாய், எதிர்த்தோரை வென்றுகொண்டு திரிகின்ற யூகியை ஒற்றியடைந்தனள். அடையவே உதயணன் கொடுத்த ஓலையால் அவ்விருவரும் ஒருவரையொருவர் நன்கு அறிந்துகொண்டு மேல் ஆக வேண்டிய வற்றை உணர்ந்து சாதகனென்னும் குயவனுடைய மனையில் மறைந்திருந்தனர்.
நிகழ்ந்த நிகழ்ச்சிகளை அரசனுக்கு அறிவித்தற் கஞ்சி நகரத்தார் இன்னது செய்வதென் றறியாமல் தங்கள் கையைப் பிசைந்துகொண்டு அங்குமிங்கும் திரிவாராயினர்.
உதயணனால் விடுக்கப்பட்ட வராகன் மீண்டு வந்து அரசனுடைய படமாடக் கோயிலின் முதல் வாயிலிலுள்ள தோரண கம்பத்தின் அடியை அடைந்து வாயில் காவலனைக் கண்டு, "அரசர் பெருமானுக்குச் சில செய்திகள் அடியேன் வணங்கித் தெரிவிக்க வேண்டுவ துண்டு; அதற்குச் சமயமறிந்து விரைந்து வருக" என்று சொல்லி நின்றான்.
நிற்கையில் உள்ளே அரசனை நோக்கிச் சோதிட னொருவன், "காற்றும் மேகமும் கலந்த இந் நிமித்த மானது ஊருக்கு முதலில் துன்பத்தைத் தந்து பின்பு உமக்கு இன்பத்தைத் தரும்" என்று சொல்ல அரசன், "அஃதென்ன?" என்ரு வினாவியபொழுது, வாயில்காவலன் வந்து இறைஞ்சினன். அரசன், "வந்த காரியத்தைச் சொல்" என்று கட்டளையிட அவன் மீட்டும் வணங்கி, "நும் மடித்தியும் எம்பெருமானுமாகிய வாசவதத்தைக்கு அடித்தொண்டு செய்பவர்களுள் ஒருவனும் வல்வில் இளைஞனுமாகிய வராகனென்பவன், தான் வந்து இங்கே சிலவற்றைத் தெரிவித்துக் கொள்வதற்குச் சமயம் பெற வேண்டிப் புறத்தே நிற்கின்றான்; பல்லாண்டு வாழ்க" என்ரு இறைஞ்சினன். அரசன், "அவனை விரைவில் வரவிடுக" என்ரு சொல்ல அவன் வராகனுக்குத் தெரிவித்தனன். உடனே வராகன் உள்ளே வந்து, உலாவு மண்டபத்தில் உலாவாமல் முளைக்கோற் பெருந்திரை சூழ்ந்த வட்டத்தினிடையே சிங்காதனத்திற் சிவந்த மேலாடையால் தாண்முதலைக் கட்டிக் கொண்டு ஒரு தாமரைப் பூவைக் கையிலேந்திக் கதிரவன் போலவே வீற்றிருந்த அரசர்பிரானை எழுகோல் எல்லைக்கு அப்பால் நின்று மிக்க நடுக்கத்துடன் வணங்க, அரசன் அவனது அச்சத் தோற்றத்தைக் கண்டு அவன் கருதி வந்த காரியம் மிகவும் கடுமையாக இருத்தல் வேண்டு மென் றெண்ணி அவனை இருகோல் எல்லையுள் வரும்படி கட்டளையிட்டு, "வாசவதத்தைபால் நிகழ்ந்த புதிய நிகழ்ச்சி ஏதேனும் உண்டோ?" என்று வினாவினன். வினாவவே, அவன் யாதொன்றையும் சொல்ல இயலாதவனாகி மீட்டும் இறைஞ்சினன். தான் மீட்டும் மீட்டுங் கேட்கவும் அவன் விடை கூறாமற் பின்னும் பின்னும் மயங்குதலைக் கண்டு, "நிகழ்ந்ததை அஞ்சாமற் சொல்" என்று அவன் உயிர்க்கு அபயங்கொடுத்தனன்.
அப்போது வராகன் தீயிற்பட்ட மெழுகுபோல் உருகிய முகத்தனாகி, :அரசர்பிரானுடைய ஆணையாலோ வேறொன்றாலோ விளங்கவில்லை; காற்றாலும் மழையாலும் தீயாலும் புற நகரும் அக நகரும் அணுகுதற் கரியனவாயின; அங்கங்கே பலர் போர் செய்தற்குப் புறப்பட்டனர். அந் நிகழ்ச்சிகளைக் கண்டு மிகவும் அஞ்சி வாசவதத்தையை இங்கே அழைத்து வருவதற்கு ஏற்ற அரண் காணப்படாமையின், நின் ஆற்றலாணை; யாங்கள் செயலற்றோமாகி இனிச் செய்ய வேண்டுவது யாதென்று கருதி முன்னம் நளகிரியை அடக்கிய உதயகுமjனைக் குறையிரந்து அவனுடன் பத்திராபதியின்மேலே ஏற்றினம்; ஏற்றியவுடன் அவன் பத்திராதிபதியைக் காற்றைப்போலவே செலுத்திக்கொண்டு, எம்மைப் பாராமலும் இந் நகரத்தை அடையாமலும் தன் நகரம் செல்லத் தொடங்கினன். மாயிரு ஞாலத்து மன்னுயிருண்ணும் கூற்றைப் போன்றவராகிய நம்முடைய வீரர் ஆயிரத் தைஞ்ஞூற்றுவர் அஞ்சாமற் சென்று தடுத்தனர். தடுக்கவும் அவனுடைய வீரர் வந்து போர் செய்து நம்மவர்களைக் கொன்று வீழ்த்தி வெற்றிபெற்றுத் திரியலாயினர். அப் பொழுதும் நான் அஞ்சி நில்லாமல் பத்திராதிபதியின் பின்னே விரைந்து சென்றபொழுது உதயணன் என்னை நோக்கி, 'நம்மரசர்பிரான் வாசவதத்தையை என்னிடம் ஒப்பித்து அனுப்பினமையால் நான் இவளுடன் என்னிடஞ் செல்கின்றேன்; என் வணக்கத்தை அவருக்குச் சொல்ல வேண்டும்' என்று திசைநோக்கி இறைஞ்சிக் கூறிப் பிடியை நடத்திக்கொண்டு செல்வானாயினன். தெரிவித்தற்கு வந்தேன்; இச்செயல் மாயம்போலும், காவல! அருள் புரிக" என்று கூறினன்.
கேட்டவுடன் பிரச்சோதனனுக்குக் கண்கள் தீயைப்போலே மிகச் சிவந்தன. சூழ்ந்து நின்ற உறுதிச் சுற்றத்தார்களைச் சுடுபவன் போலப்பார்த்து அருகேயிள்ள தூணைப் புடைத்து பகைச்சிங்கத்தின் கொடுங்குரலைக் கேட்ட சி்ங்கவேற்றைப்போலே பெரு முழக்கஞ் செய்து, கொடியணி தேரும் குதிரையும் யானையும் வடிவே லிளையரும் வல்விரைந்தோடி, இப்புபுண்ணிய விழவிற் சமயம் பார்த்து ஒற்றி நம்முடைய சோர்வை யறிந்து வாசவதத்தையைக் கைப்பற்றிக் கொண்டு நம்மை இகழ்ந்து சென்ற பகைவனைப் பிடித்துக் கொண்டு விரைவில் வருக" என்று வீரர்களுக்குக் கட்டளையிட்டனன்; அவர்களும் அப்படியே சென்றனர். அப்போது அங்கே பல மந்திரிமாருடனிருந்த சாலங்காயன், " உதயணன் வாசவதத்தையைப் பிடித்துச் சென்றது குற்றமாகாது; ஆலோசித்துப் பார்க்கு மிடத்து,
'குலத்தினுங் குணத்தினு நலத்தகு நண்பினும்
நிலத்தினி னின்னொடு நிகர்க்குந னாதலின்
மேல்வகை விதியின் விழுமியோர் வகுத்த
பால்வகை யல்லது பழிக்குந ரில்லை.' (1,47:137.40)
ஆதலால், இப்போது சினந் தணிதல் நலமாகும்" என்று சொல்லக் கோபந் தணிந்த பிரச்சோதனன், " இச் செய்தியை மற்றையோர் தெரிவித்தற்கு முன்னதாக நாமே பட்டத்தேவிக்குத் தெரிவிக்க வேண்டும்" என் றெண்ணி முரசறைகின்ற வள்ளுவமுதுமகனை வருவித்து. "இப் புனலாடு விழாவிண் கண், மாலையில் மழைத்துளியில் நகரத்துக்குச் செல்லுதல் நன்றன்று; ஆதலால் இப்போது செல்ல வேண்டாம்; காலையிற் செல்லுக; இஃது அரசன் கட்டளை யென்று நீர்த்துறை நகரத்தார் அறியும்படி முரசறைவித்துத் தெரிவித்திடுக" என்று கட்டளையிட்டான். அவனும் அவ் வண்ணஞ் செய்தனன். அப்பால் அரசன் முதற் பெருந்தேவியை அடைந்து அங்கே பள்ளிகொள்ளானாகி அவளை நோக்கி, "வாசவதத்தையை உதயணனுக்கு மணஞ் செய்வித்து அவனுடைய நாட்டிற்கு அனுப்ப என் மனம் விரும்பியது; உனக்கு இது உடன்பாடாகுமோ?" என்று கேட்டனன். அவள், "நளகிரியை அடக்கி நமக்கு முன் கொணர்ந்து நிறுத்திய அன்றே அவனுடைய இளமைக் கோலமும் பிறவும் அவன் வாசவதத்தைக்கு உரியவனென்று நினைக்கும்படி செய்தது; எனக்கு அச் செயலில் யாதொரு வெறுப்பு மில்லை; விருப்பமே" என்று உவந்து கூறினள். அதனைக் கேட்டு உட்கொண்ட அரசன், நெறுப்பில் காய்ந்த நாராசத்தைக் காதிற் செறித்ததுபோல வாசவதத்தையின் பிரிவுச் செய்தியைப் பின்பு கூறினன்; கூறியவுடன் அவள்,
"இசைகொள் சீறியா ழின்னிசை கேட்ட
அசுண நன்மா வந்நிலைக் கண்ணே
பறையொலி கேட்டுத்தன் படிமறந் ததுபோல் (1.47; 241-3)
மூர்ச்சித்துப் பின்பு புலம்புவாளாயினள்; அரசன் தக்க காரணங்களைக் கூறித் தேற்றினன். அவள் சிறிது தெளிந்திருந்தாள்; மற்றை அந்தப்புரமகளிர் தத்தையின் பிரிவாற்றாமையாற் பலவாறு புலம்புவாராயினர். பொய்கைக் கரைக் கண் விழாவிற்காக அமைக்கப்பட்ட அப் புதிய நகரத்துள்ள மகளிர் பலரும் வாசவதத்தையைப் பிரிந்தமையால் திங்களை யிழந்த விண்மீன்களைப்போலப் பொலிவில்லாதவர்களாய் விலாவித்துக் கொண்டிருந்தனர்.
முன்னம் உதயணனைப் பிடித்து வரும்படி பிரச்சோதனனால் அனுப்பப்பட்ட போர்வீரர் பலர் நால்வகைப் படைகளுடன் சென்று கடல் புடைபெயர்ந்தாற்போலவே முன்பும் பின்பும் பக்கங்களிலும் வந்து தடுக்கையில் அங்கங்கே யூகியால் வைக்கப்பட்டுப் பதுங்கியிருந்த வீரர்கள் அவர்களை வென்று மீளச்செய்தார்கள். பத்திராபதி உஞ்சேனைக்கு அப்பால் இரண்டு காததூரம் செல்லுதற்கு முன் சூரியன் அஸ்தமித்தான்; மதி தோன்றியது. பிடி விரைந்து சென்றது அதன் அடியோசைக்கும் வேகத்திற்கும் வாசவதத்தை அஞ்சினள்; அவளை நோக்கிக் காஞ்சனை, "உன் தந்தை விதிப்படி மணஞ் செய்து கொடுக்கவில்லை என்கிற குறையை யன்றி வேறு குறை யாதும் இலது; நீ விரும்பிய அணிமுடி யண்ணல் வலிய வந்து உன்னை அடுத்தான்; ஆதலால், நீ கவலை அடையாதே; பிடியின் வேகத்தால் சந்திர மண்டிலமும் நக்ஷத்திரங்களும் விண்ணில் ஒரு நிலையாக இராமல் சுழலுவனபோலத் தோன்றாநின்றன; மலைகளும் மரங்களும் பிறவும் முகத்தைத் தாக்குவதற்கு விரைந்து வருவனபோலவே மண்ணிற் காணப்படுகின்றன; நீ ஒன் றையும் பாராமலிருப்பாயாக'' என்று அவளது நுதல் வேர்வையைத் துடைத்துக் கூட்டமாகச் செல்லுங் கருடப் பறவைகளுடைய சிறகுகளின் ஒலியைப் போலவே திம்மென ஒலிக்கும் பிடியின் அடியோசை கேளாதபடி அவள் காதிற் பஞ்சியைச் செறித்து அவளைத் தழுவிக்கொண் டிருந்தாள். இருந்த காலத்திற் பிடியானது,
'பாளைக் கமுகும் பனையும் பழக்கிய
வாழைக் கானமும் வார்குலைத் தெங்கும்
பலவும் பயினு மிலைவளர் மாவும்
புன்னையுஞ் செருந்தியும் பொன்னிணர் ஞாழலும்
இன்னவை பிறவு மிடையற வின்றி
இயற்றப் பட்டவை யெரிகதிர் விலக்கிப்
பகலிருள் பயக்கும் படிமத் தாகி
அகல மமைந்த வயிர்மண லடுக்கத்துக்
காறோய் கணைக்கதிர்ச் சாறோய் சாலி
வரம்பணி கொண்ட நிரம்பணி நெடுவிடை
உழவ ரொடியுங் களமர் கம்பலும்
வளவய லிடையிடைக் களைகளை கடைசியர்
பதலை யரியல் பாசிலைப் பருகிய
மதலைக் கிளியின் மழலைப் பாடலும்
தண்ணுமை யொலியுந் தடாரிக் கம்பலும்
மண்ணமை முழவின் வயவ ரார்ப்பும்
மடைவாய் திருத்து மள்ளர் சும்மையும்
இடையற வின்றி யிரையாறு தழீஇ
வயற்புலச் சீறூ ரயற்புலத் தணுகி
மருதந் தழீஇய ' (1.48:151-70)
அம்மருதத்திணையைக் கடந்து விரைந்து சென்றது. செல்லுகையில், வயந்தகன், " இங்கே தோன்றும் அருட்ட நகரத்தார் இதன் ஓசையைக் கேளாதபடி இந் நகரத்தின் வலப்பக்கமாக உள்ள பெருவழியில் இதனைச் செலுத்துதல் நன்று" என்று தெரிவித்தனன்; உதயணன் அவ்வாறு செலுத்த, அப்பிடி,
'இறங்குகுர லிறடி யிறுங்கடை நீடிக்
கவைக்கதிர் வரகுங் கார்பயி லெள்ளும்
புகர்ப்பூ வவரையும் பொங்குகுலைப் பயறும்
உழுந்துங் கொள்ளுங் கொழுந்துபடு சணாயும்
தோரையுந் துவரையு மாயவும் பிறவும்
அடக்க லாகா விடற்கரு விளையுட்
கொல்லை பயின்று வல்லை யோங்கிய
வரையி னருகா மரையா மடப்பிணை
செருத்தற் றீம்பால் செதும்புபடப் பிலிற்றி
வெண்பூ முசுண்டைப் பைங்குழை மேயச்
சிறுபிணை தழீய திரிமருப் பிரலை
செறியிலைக் காயா சிறுபுறத் துறைப்பத்
தடவுநிலைக் கொன்றையொடு பிடவுதலைப் பிணங்கிய' (1.49;104-16)
முல்லைத்திணையையும்,
'ஈரமில் குறவ ரிதண்மிசைப் பொத்திய
ஆரத் துணியோடு காரகில் கழுமிய
கொள்ளிக் கூரெரி வெள்ளி விளக்கிற்
கவரிமா னேறு கண்படை கொள்ளும்
தகரங் கவினிய தண்வரச் சாரல்
கறையு நாகமு முறையிரு வேரியும்
வருக்கையு மாவும் வழையும் வாழையும்
மருப்பிடை நிவந்த வாசினி மரமும்
பெருஞ்செண் பகமும் பிண்டியும் பிரம்பும்
கருகாற் குறிஞ்சியுங் கடிநாள் வேங்கையும்
சுள்ளியுஞ் சூரலும் வள்ளியு மரலும்
வால்வெள் வசம்பும் வள்ளிதழ்க் காந்தளும்
பால்வெண் கோட்டமும் பணிச்சையுந் திலகமும்
வேயும் வெதிரமும் வெட்சியுங் குளவியும்
ஆய்பூந் தில்லையு மணிமா ரோடமும்
ஆரமுஞ் சந்து மகிலுந் தமாலமும்
ஏரில வங்கமு மேலமு மிருப்பையும்’ (1.50:17.33
செறிந்த குறிஞ்சித்திணையையும்,
விஞ்சையம் பெருமலை நெஞ்சகம் பிளந்து
கல்லுட் பிறந்த கழுவாக் கதிர்மணி
மண்ணுட் பிறந்த மாசறு பசும்பொன்
வேயுட் பிறந்த வாய்கதிர் முத்தம்
வெதிரிற் பிறந்த பொதியவி ழருநெல்
மருப்பினுட் பிறந்த மண்ணா முத்தம்
வரையிற் பிறந்த வயிரமொடு வரன்றி
…. …. …. …. …. …. …. …. …
முடந்தாட் பாலாவின் குடம்புரை யமிழ்தமும்
நெடுந்தாண் மாவி னெய்படு கனியும்
கருந்தாள் வாழைப் பருங்குலைப் பழனும்
பெருந்தேன் றொடையலும் விரைந்துகொண் டளைஇ
நறவஞ் சாரற் குறவர் பரீஇய
ஐவன நெல்லுங் கைவளர் கரும்பும்
கருந்தினைக் குரலும் பெருந்தினைப் பிறங்கலும்
பாவை யிஞ்சியுங் கூவைச் சுண்ணமும்
நாகத் தல்லியு மேலத் திணரும்
கட்சா லேகமு முட்கா ழகிலும்
குங்குமத் தாதும் பைங்கறிப் பழனும்
கிழங்கு மஞ்சளுங் கொழுங்காற் றகரமும்
கடுப்படு கனியுங் காழ்த்திப் பிலியும்
சிற்றிலை நெல்லிச் சிறுகாய்த் துணரும்
அரக்கின் கோலோ டன்னவை பிறவும்
ஒருப்படுத் தொழியாது விருப்பினேந்தி
மலையிற் பிறந்த மாண்புறு பெருங்கலம்
நிலைவயின் வாழ்நர்க்குத் தலைவயி னுய்க்கும்
பகர்விலை மாந்தரின் நுகர்பொரு ளடக்கிப்
பன்மலைப் பிறந்த தண்ணிற வருவிய
அமலை யருங்கல மடக்குபு தழீஇத்
தன்னிற் கூட்டிய தானைச் செல்வமோ
டிருகரை மருங்கினும் பெருகுபு தழீஇத்
அணிக்குருக் கத்தியு மதிரலு மனுக்கி
மணிச்சையு மயிலை மௌவலு மயக்கி
ஞாழலும் புன்னையும் வீழ நூக்கிக்
குருந்துங் கொன்றையும் வருந்த வணக்கித்
தடவும் பிடவுந் தாழச் சாய்த்து
முளவு முருக்கு முருங்க வொற்றி
மாவு மருதும் வேரறப் புய்த்துச்
சேவுங் குரவுஞ் சினைபிளந் தளைந்து
நறையு நாகமு முறைநடு முருக்கி
வழையும் வாழையுங் கழையுங் கால்கீண்
டாலு மரசுங் காலொடு துளக்கிப்
புன்கு நாவலும் புரள வெற்றிக்
கொங்கார் கோடலோடு கொய்யல் குழைஇ
அனிச்சமு மசோகமு மடர வலைத்துத்*
பனிச்சையும் பயினும் பறியப் பாய்ந்து
வள்ளியு வரலுந் தன்வழி வணக்கிப்
புள்ளி மானும் புல்வாய்த் தொகுதியும்
ஆமா வினமுந் தாமா றோடி' (1,51:8-56)
வரும் நருமதையாற்றையுங் கடந்து செல்லும்பொழுது, வயந்தகன் விண்மீன்களைப் பார்த்துக் கால வெல்லையை அளந்து கூறினன். உதயணன் விரைவாகப் பிடியை நடத்திய பொழுது, அரத்தின் நுதி போன்ற பருக்கைக் கற்களாலாகிய முரம்புகளையுடைய பாலை நிலம் காணப் பட்டது. "எயினர் அதிலுள்ள துர்க்காதேவியின் கற்சிறைக் கோட்டத்தின் ஒருசார் ஒடுங்கி மறைந்திருந்து கொண்டு அவ் வழியே செல்லும் வணிகர் திரளையும் மற்றவர்களையும் வருத்திப் பொருள்களைப் பறித்துக்கொள்ளும் நடுகல் உழலையும், இறந்தவர்களின் உடம்புகளை அவர்கள் தழைகளால் மூடி அவற்றின் மேற் குவிக்கப்பட்டிருக்கும் கற்குவியல்களை உடைய இடங்களும், சிறு தூறுகள் பிணங்கி இருக்கும் இடங் களும், கொல்லப்பட்ட ஆட்களைச் சும்மா போகட்டுவிடும் குழிகளும், இவை போன்ற பிறவும் மிக்கதாய்த் தட்பக் காலத்தும் வெப்பம் நீங்காததாய்,
'ஓமையு முழிஞ்சிலு முலவையு முகாயும்
கடுவுந் தான்றியுங் கொடுமுட் டொடரியும்
அரவு மரசு மாரு மாத்தியும்
இரவு மிண்டுங் குரவுங் கோங்கும்
தணக்கும் பலாசுங் கணைக்கான் ஞெமையும்
ஈங்கையு மிலவுந் தேங்காய் நெல்லியும்
வாகையும் பிறவும்' (1.51: 37-44)
ஆகிய மரங்களை உடையதாய்த் தோன்றும் இப்பாலைத் திணைப் பெருவழியிற் பகலிற் செல்லுதல் இயலுவதன்று; இரவிலேயே செல்ல வேண்டும்" என்று வயந்தகன்
சொல்ல, உதயணன் பிடியை விரைவாக நடத்தினன். நடத்தியபொழுது அவனுடைய யாழ் கட்டவிழ்ந்து வீழ்ந்து 1மூங்கிற்காட்டில் ஒரு மூங்கிலிற் சிக்கிக் கொண்டது.
---------
1 இக்காட்டின் பெயர் பஞ்சவனமென்பது; உதிதோதய காவியம்.
அதனை யறிந்த வயந்தகன், "நின் யாழ் கீழே விழுந்தது; பிடியை நிறுத்துக" என்ன, உதயணன், "பிடி எண்ணூறு விற்கிடைத் தூரம் வந்துவிட்டது; இனி நம்மாற் செய்யற்பாலது யாதொன்றும் இல்லை; தந்த தெய்வம் தானே தரும்" என்று சொல்லிப் பறந்து செல்வதுபோலத் தோன்றும்படி பிடியை விரைவாக நடத்தினன். நடத்தவே காலவேகமென்னும் நோய் கனற்ற அப்பிடி மெல்லச் சென்று பிரச்சோதனனுடைய நாட்டின் எல்லையாகிய ஐந்நூற்றினுள் மெலிவுறுவதாயிற்று. அதனை அறிந்த உதயணன் வயந்தகனிடம், "இப்பிடி நோயால் மெலிவுற்றது; இனி வீழ்ந்துவிடும்; காஞ்சனையுடன் நீ பின்பக்கத்து வழியே இறங்குவாயாக" என்று கூறித் தான் வாசவதத்தையைத் தழுவிக் கொண்டான்;
"உமையொடு புணர்ந்த விமையா நாட்டத்துக்
கண்ணணங் கவிரொளிக் கடவுள் போல" (1.53;15-6)
அதன் தலைப்பக்கத்து வழியே மெல்ல இறங்குகையில் அப்பிடி சாயாமற் காலைப் பரப்பிகொண்டு, "நான் செய்த குற்றத்தைப் பொறுத்தருள்க" என்று உதயணனை வணங்குவதுபோலத் தன் தலை அவன் காலிற்படும்படி வீழ்ந்தது. உதயணன் அது வீழ்ந்த இயல்பையும் அது நோக்கிய திசையையும் நிமித்த நூல்வழியே ஆராய்ந்து பார்த்து, முதலில் தனக்குத் துன்பம் உண்டாகு மென்றும் அப்பால் அத் துன்பம் நீங்கப் பெற்றுத் தன் இடத்தைத் தான் அடைதல் கூடும் என்றும் தெரிந்துகொண்டான். பின்பு அதனுடைய மணிகள், புரோசைக் கயிறு, தவிசு, கடித்தகம் என்பவற்றைக் களைந்து வேறிடத்தே வைத்தான். வைத்தவன், "இதன் உயிர் விரைவில் நீங்கும்" என்று வயந்தகனுக்குச் சொல்லிவிட்டுத் தான் அதன் மத்தகத்ததைச் சார்ந்து உடம்பு குளிரும்படி அதனைத் தைவந்து, இறுதிக் காலத்திற் சொல்லுதற்குரிய உறுதியாகிய ஓம்படை மொழிகளைக் கூறி, நற்கதியை அடைவிக்க எண்ணிப் 1பஞ்ச மந்திரத்தை அதன் செவியில் உபதேசித்துவிட்டு, 'இப்பிறப்பில் என்னுடைய துயரத்தைத் தீர்த்த பிடியே! வருபிறப்பில் என்னோடு உடன்வாழ்வாயாக" என்று கண்ணீர்த்துளியுடன் சொல்லித் தாங்க முடியாத மனக்கவலை உடையவனாகி வயந்தகனை நோக்கி, " இவ்விருவரையும் துயிலச் செய்து பாதுகாத்திடுக" என்று சொல்லிவில்லையும் அம்பையும் அவன் கையிற் கொடுத்துவிட்டுக் கேடகத்தையும் வாளையும் தான் கைக்கொண்டு யானைக்கு நீர்க்கடன் கழித்தற்பொருட்டு அங்கே நீர்நிலை உளதோ என்று தேடித் திரிபவன் ஓர் அம்புவீழ் தூரத்தில் ஒரு புட்கரணியைக் கண்டனன்.
-------
1பஞ்ச நமஸ்காரமென வழங்கும்.
அப்பொழுது வெள்ளி முளைத்துத் தோன்றியது; தோன்றவே உதயணன் வாள் முதலியவற்றை அதன் கரையில் வைத்துவிட்டு அதில் ஆடித் தன்னுடைய நியமங்களை நிறைவேற்றிப் பிடி நல்ல கதியை அடையக் கடவதென்று அதற்கு நீர்க்கடனாற்றி வயந்தகனை அடைந்து, "இனிப் பகற் காலத்தில் யாம் மறைந்திருக்க வேண்டிய இடத்தை அறிய வேண்டுவது இன்றியமையாதது" என்று சொல்லி ஆலோசிக்கையில் வயந்தகன், " இவ்விடம் நாட்டுச் சந்தி; அன்றியும் காட்டகத் துறையுங் கடுவினை வாழ்க்கை வேட்டுவர் பயிலும் இடம். ஆதலால் இந்த இடம் இருத்தற்குத் தகுதியுள்ள தன்று. இனி இரண்டு காத வழித்தூரம் சென்றால் நம்மவர் இருக்கும் நகரத்திற்குச் செல்லும் வழியை நாம் அறிந்து செல்லலாம்" என்ரு சொன்னான். கேட்ட உதயணன் தன் கையிலிருந்த வாளையும் கேடகத்தையும் அவன் கையிற் கொடுத்துவிட்டு அவன் கையிலிருந்த வில்லையும் அம்பையும் தான் வாங்கிக் கொண்டு காஞ்சனமாலையை நோக்கி, "இனி வாசவதத்தையை எழுப்பிக்கொண்டு நடந்து சென்று துன்பமில்லாத இடத்தை யாம் அடைய வேண்டும்" என்றனன். காஞ்சன மாலை அவளை எழுப்பி நடந்து வரும்படி வேண்டினள். வேண்டவே, பூமலர்க் கோதையும் பொறை என்பவளாகிய வாசவதத்தை உதயணன்பாலுள்ள காதன் மிகுதியால், தன் மென்மையை அறியாமல் மிகுந்த ஊக்கத்தோடு நடப்பாளாயினள். அப்பொழுது அவளுடைய முன்னிடத்தை உதயணனும் பின்னிடத்தை வயந்தகனும் பக்கத்தைக் காஞ்சனையும் காத்துக்கொண்டு சென்றனர்;
"கொடிப்படை கோமக னாகக் கூழை
வடுத்தீர் வயந்தகன் வாள்வலம் பிடித்துக்
கடித்தகப் பூம்படை கைவயி னடக்கிக்
காவல் கொண்ட கருத்தின னாகப்
புரிசைச் சுற்றங் காஞ்சனை யாக" (1.53:138-42)
வாசவதத்தை விரைவாக நடந்து சென்றனள். செல்லுகையில், அனித்த மிதிப்பினும் பனித்த லானாத அவளுடைய கால்கள் கொப்புளங்கொண்டு வருந்தின. அதனை அறிந்த உதயணன், "இவள் வருந்தினள், இனிச் செல்லுதல் முறையன்று. மறைந்து தங்கும் இடத்தை விரைந்து அறிவாயாக" என்று சொல்ல, வயந்தகன் சென்று பார்த்து அவ்விடத்தே ஒரு பொய்கையும் அதன் கரையில் கிளைகள் பக்கத்திற் றாழ்ந்திருத்தலால் உள்ளிடம் புறத்தோர்க்கு அறிவரியதாகவும் புள்ளினமும் புகுதற்கு அரியதாகவும் உள்ல முள்ளிலவமரப் பொதும்பரையுங் கண்டு தெரிவிக்க, இருவரும் அவ்விடம் இருத்தற்குரியதென்று எண்ணி அந்த இடத்தைத் தூத்து இலைகளாற் படுக்கை அமைத்து வாசவதத்தையைத் துயிற்றிக் காஞ்சனையை அங்கே இருக்கச் செய்துவிட்டுத் தாம் புறத்தே நின்று பாதுகாப்பாராயினர்.
அப்பொழுது சூரியன் அத்தமித்தான்; சந்திரன் உதித்தனன். விலங்குகளும் பறவைகளும் எங்கும் ஒன்றோ டொன்று பகைத்து முழங்கத் தொடங்கின. வயந்தகன், "அரசே! உருமண்ணுவா உறையும் சயந்தி நகரத்தை இனி யாம் அடையலாம் என்றாலோ இருட்காலமாதலால் வழியிற் பலவகையான துன்பங்கள் நமக்கு உண்டாகும். மிக மெல்லியலான வாசவதத்தையும் வருந்துவாள்; ஆதலால் யூகிக்கு மிக்க அநுகூலங்களைச் செய்துகொண்டு பரந்த படையோடு இடவகன் தங்கியிருக்கும் புட்பகநகரத்தை இவ்விருளிலேயே அடைந்து மிக்க சேனைகளுடன் காலையில் வருவேன். அது வரையில் பாதுகாத்துக்கொண்டு இவ்விடத்தே இருந்திடுக" என்று கூறினன். கேட்ட உதயணன் இடவகனும் தானுமே அறிந்த ஓரடையாளச் செய்தியை அவனுக்குச் சொல்லி "உன்னை நம்பும்படி இச்செய்தியை முதலிற் சொல்லிவிட்டு அப்பால் வாசவதத்தையை உச்சைனியிலிருந்து யான் பிடிமேலேற்றிப் போந்ததுமுதல் இவ்விடத்தே வந்து தங்கியிருத்தல் இறுதியாக வுள்ள செய்திகளைக் கூறிச் சேனைகளைத் தொகுத்துக்கொண்டு காலையில் வருவாயாக" என்று சொல்லி அவனை அனுப்பிவிட்டு, வாசவதத்தையின் காட்சியையே அத் துன்பக் கடலைக் கடத்தற்குப் புணையாக எண்ணிக் கணையொடு திரிதரு காமன் போலத் தான் உலாவிக்கொண்டு, அவளைக் காஞ்சனமாலையோடு துயில்வித்துத் தான் வாளை வலத்தே ஏந்திப் பாதுகாப்பவனாகி முன்புறத்தே நின்றான். நிற்கையில் இரவு புலர்ந்தது.
அப்பால் உதயணன் கண்களைக் கழுவிக் காலைக்கடனை முடித்துவிட்டுத் தன்னுடைய தனிமையை நினைந்து வருந்துபவனாகிச் சேனையுடன் வயந்தகன் வருதலைப் பார்த்துக்கொண்டே நின்றனன். அப்பொழுது, குடுமி நெற்றியையும் கூருள்ளியன்ன வல்வாயையு முடைய வயவ னென்றும் பறவை யொன்று இலவமரத்தின் உச்சியிற் பலமுறை ஒலித்தது. அதனைக்கேட்ட உதயணன், "இனி விரைவிற் பகைப்படை வருமென்பதை இது தெரிவிக்கின்றதே" என்று அச்சங்கொண்டவனாகி அம்பைத் திருத்தி வில்லை இடக்கையிற் றாங்கிக்கொண்டு நிற்பானாயினன். அப்பொழுது பத்திராபதி வீழ்ந்த மலைச்சாரற்காட்டிலுள்ள சிற்றூர்களில் உறைபவர்களும் அவ்வழியே செல்லுபவர்களை வருத்தி அவர்களுடைய அரும் பண்டங்களைக் கவர்ந்து சிறு விலைக்கு விற்றுண்பவர்களும் இன்னும் பற்பல தீச்செயல்களை உடையவர்களுமாகிய சவரரும் புளிஞரும் கூடிநின்று அடிச்சுவடுகளை உற்று நோக்கிக்கொண்டே வந்து யானை அடிச்சுவட்டைக் கண்டு "இங்கே நடந்து சென்றது காட்டுப்பிடியன்று; நாட்டுப்பிடியே " என்று அதன் உதிரம் வீழ்ந்த வழியே ஓடிச்சென்று பார்த்தனர். பார்க்கையில், பிடி வீழ்ந்து கிடத்தலையும், அதன் அயல் தோன்று மகளிர் ஆடவர்களின் காற்சுவடுகளைுங் கவனித்து "நேற்றிருளில் இவ்வழியே சென்றவர்களுடைய அடிச்சுவடுகள் இவை; இனி அவர்களை யாம் காணுதல் அரிது." என்று பரபரப்பு அடங்கி நிற்கும் பொழுது அங்கே உண்டான புட்குரல் ஒன்றைக்கேட்ட நிமித்திகனாகிய முதிய வேடன் ஒருவன் அவர்களை இகழ்ந்து கூறி "இப்பொழுதே நாம் செல்வோமாயின், பெரும்பொருளை உடைய ஒரு தலைவனைக் காண்போம். முதலில் அவன் நம்மைத் துன்புறுத்திப் பின்பு நம்முடைய கையில் அகப்படுவான்" என்று கூறினன். கேட்ட அவர்கள் உடனே புறப்பட்டு,
"வான்மரப் பொதும்புங் கானமுங் கடறும்
முழைவளர் குன்றுங் கழைவளர் கானமும்
பயம்பும் பாழியு மியங்குவனர் வதியும்
முதுமரப் பொந்தும் புதுமலர்ப் பொய்கையும்
இனையவை பிறவு மனையவ ருள்வழிச்
செருக்கய லுண்கட் சீதையைத் தேர்வுழிக்
குரக்கினத் தன்ன பரப்பின ராகி" (1:55: 104-10)
ஊன்றி ஊன்றிப் பார்த்துக்கொண்டே செல்லுகையில் உதயணனைக் கண்டனர். பலவகைப்பட்ட ஒலிகளையும் எழுப்பினர். நாற்புறமுஞ் சூழ்ந்து தாக்கினர். அதனைக் கண்டு நடுங்கும் வாசவதத்தையைப் பாது காக்கும்படி காஞ்சனமாலையிடம் சொல்லிவிட்டு உதயணன் புறத்தே வந்து ஒரு கோங்க மரத்தின் அடியை யடைந்து நின்று வில்லை வளைத்து அவர்கள் மீது அம்புகளைத் தொடுத்துத் தொடுத்து மிக வருத்துவானாயினன். அதனைக்கண்டும் அவர்கள் சிறிதும் அஞ்சாமல் அவனை நெருங்கி "பிடி வீழ்ந்தவுடன் யாம் பிழைக்கலாமென்று நீ ஒளித்து வந்தவ னல்லையோ? உன் உயிரை உண்பேம்; எங்கே செல்லுகின்றாய்? நீ யாவன்? உண்மையைச் சொல்வாயாக" என்று கொடிய மொழிகளைக்கூறி அவன்மீது அம்புகளைத் தூவினர். அவன் சிறிதும் அஞ்சானாகி அவற்றை விலக்கி அவர்கள் மெய்யைத் துளைத்துக்கொண்டு பூமியிற்புதையும்படி அம்புகளை எய்தனன்; எய்கையில் நாற்பத்தொன்பது மறவர்கள் இறந்தனர். இறக்கவே அச்சமுற்று அவர்கள் ஆற்றாராகி, "அழகிய வடிவத்தோடு நம்மைக் கொல்வதற்கு இம்மலையிடத்தே வந்த காலனோ இவன்?" என்று சொல்லி அவனுடைய வில்லுக்கு எதிரே நிறச்றற்கும் ஆற்றல் இல்லாதவராகி நிமித்தங் கூறிய முதியவனைப் பலவாறு பழித்துக் கொண்டே மீட்டும் உதயணனை வளைத்து நின்றார்கள்.
பின்பு அவர்கள் மேலே செய்வது இன்னதென்பதை அறியாதவர்களாகி "இவன் ஒருவன்; யாம் பலராயிருந்தும் இவனால் அழிக்கப்பட்டோம். மேலே யாம் செய்யவேண்டியவற்றை அறிந்து கூறுமின்" என்று பறவை நிமித்தங் கூறுவோனைக் கேட்ப, "இலவம் பொதும்பரைச் சூழ்ந்த இடங்களை நீங்கள் தீக்கு இரையாக்கிவிட்டு உள்ளே இருப்பவர்களைப் புறப்படச் செய்து துன்புறுத்துங்கோள்" என்று அவன் கூறினன். உடனே எல்லாப் பக்கங்களிலும் தீயை மூட்டிவிட்டு ஒரு சிங்கத்தைப் பல நரிகள் சூழ்ந்ததுபோல அவர்கள் உதயணனைச் சூழ்ந்து நின்று துன்புறுத்தினார்கள். அதனைக்கண்ட வாசவதத்தை மிகுந்த துயரமடைந்தாள். அப்போது உதயணன், "காஞ்சனமாலாய், இவளை அழைத்துக்கொண்டு வேறொரு பக்கத்தின் வழியே செல்வாயாக. யான் இவ் வழியே சென்று அவர்களை வென்று மீள்வேன்" என்று சொல்லி அனுப்பிவிட்டுத் தான் குகையினின்றும் வெளிப்படும் புலிபோல முள்ளிலவமரப் பொதும் பரினின்றும் புறப்பட்டனன். கண்ட வேடர்கள், அத்தியாளியைக்கண்ட யானைகள்போலவே அஞ்சி நீங்கினர். அப்பொழுது வாசவதத்தையை மெல்ல நடத்திக்கொண்டு உதயணன் புறப்படுவானாயினன். அவ்வேடர்கள் திரும்பவும் நாற்புறமும் வந்து நெருக்கி அவனது விற்போர் அடங்கும்படி பொருது வில் நாணை அறுத்தனர். அறுக்கவே யொதொன்றையும் செய்வதற்கு இயலாமைால் வலையிற் சிக்குண்டு அகப்பட்ட சிங்கம்போன்று செய்தற்குரியது இன்னதென்பதை அறியாதவனாகிப் பாரதப்போரிற் பலவீரர்க்கு இடையில் கர்ணனால் நாணற்றுப்போன வில்லையுடையவனாகித் தனியே நின்று போர்செய்த அபிமன்னுவைப்போலவே உதயணன் அவர்கள் எய்யும் அம்புகளை வில்லாலே விலக்கிக்கொண்டு நின்றனன். அதனைக்கண்டு ஆற்றாத வளாகி வாசவதத்தை நடுங்கித் தான் அணிந்திருந்த ஆபரணங்களைக் களைந்து, "இவற்றை வேட்டுவர் கையிற் கொடு" என்று காஞ்சனமாலையின் கையிற் கொடுத்துவிட்டு வேடரை நோக்கி " நீங்கள் வருத்தாதீர்கள்" என்று கூறி அழுதனள். காஞ்சனமாலை, "இவற்றை வேடர்கள் கையிற் கொடேமாயின் மிக்க கொடுந்துன்பம் விளையும்" என்றுகூறி ஆபரணங்களை உதயணன் கையிற் கொடுத்தனள்.
அதுகண்டவேடர் "நீங்கள் யார்?" என்று கேட்ப, உதயணன் "வேடர்களே! உதயணனுடைய வாணிகர் யாங்கள். வத்தவநாட்டினின்றும் பிரச்சோதனனது நாடு சென்று பொருள்களை ஈட்டி அவற்றைப் பிடிமீதேற்றிக் கொண்டு வந்தோம்; வழியில் அப்பிடி வீழ்ந்துவிடவே அப்பொருள்களை இருளில் ஒரு சோலையிடத்திற் புதைத்து அடையாளம் இட்டிருக்கின்றோம். அவற்றைப் பெற்றுக்கொள்ளுதலில் உங்களுக்கு மனம் இருப்பின் இக்கொலைத்தொழிலை ஒழிமின், எம்முடன் வரின் அப் பொருளைக் காட்டுவோம்" என்று கூறினன்.
"உதயணனுடைய வாணிகர் யாங்கள்" என்ற சொல்லைக் கேட்ட வேடர்களின் தலைவன் சினந்தணிந்து தன்வில்லை மடக்கிக்கொண்டு போர்செய்யும் ஏனையோர்களையும் அடக்கி ஆயுதங்களைத் தூரத்திற் போடும்படி செய்து மேலாடையால் உதயணனது முன்கையைக்கட்டி "அப் பொருளைக் காட்டுதற்கு எழுவாயாக" என்று கூற உதயணன் அந்த இடத்தைப் பார்ப்பவன்போலவே விரைந்து சிறிது தூரம் சென்று பார்த்து "நாம் பாலை நிலத்து வழியே வந்தமையால் மெலிவுற்றுத் தங்கிய சோலை ஒன்றில் அவற்றைப் புதைத்தோம்; நீங்கள் மூட்டிய நெருப்பாலும் புகையாலும் புதைத்த இடத்தைக் காண முடியவில்லை. இவ்வழல் ஆறுமளவும் நீங்கள் சும்மா நில்லுங்கள்" என்று கூறினன். அவர்கள் மனந்தெளிந்து, "அழல் அவிந்தபின்பு நீ காட்டாயாயின் உன்னைக் கொன்றுவிடுவோம்" என்றனர்.
அதனை அறிந்து வாசவதத்தை மிகவும் நடுங்கி அழுதனள். உதயணன் "யாம் புதைத்த ஆபரணங்களைப் பெறுதற்கு விருப்பமிருப்பின் எமது கைக்கட்டை அவிழ்த்து விடுங்கள்; இவளுடைய துயரத்தை நீக்கிப் புகை தீர்ந்தவுடன் ஆபரணங்களைக் காட்டுவோம்" என்று கூற. அவர்கள் "சொல்லியவண்ணஞ் செய்யானாயின் இவன் பிழைத்தற்கு வழியில்லை" என்று சொல்லிக் கொண்டு மையணி யானையைத் தடுத்துத் தழும்பிய அவன் கைகளின் கட்டை அவிழ்த்துவிட்டு அவனைச் சூழ்ந்து நின்றார்கள். உதயணன் இனிய மொழிகளால் வாசவதத் தையைத் தேற்றித் தன் மெல்லிய கரத்தால் தைவர அவள் கண்களினின்றும் நீர்த்துளிகள் சிந்தின. ஒருவரை ஒருவர் நோக்கி அவலங்கொண்டு நிற்பாராயினர்,.
இவர்கள் இப்படியிருக்க, கன்றைப்பிரிந்த கறவைபோல உதயணனது பிரிவாற்றாமல் அவன் கட்டளையால் இருளிற் சென்ற வயந்தகன் புட்பகநகரத்தை அடைந்தான்.
அங்கே இடவகன் "உதயணனுடைய குண மிகுதிகளை எல்லாம் அறிந்த பிரச்சோதனனுடைய தமர், உதயணன் எல்லாவற்றிலும் சிறந்து மிக்க செறுக்குடையவனாக இருத்தலால் அவனை எப்படியேனும் அடக்கிவிட வேண்டுமென்றெண்ணி உள்ளே ஆயுதங்களைப் பரப்பிய பொய்ந்நிலமொன்றைக் காட்டி அதில் வீழச் செய்தனர்" என்னும் பொய்மொழியைச் சிலர் கூறக் கேட்டு மிகுந்த கவலையை உடையவனாகி, " இச்செய்தி உண்மையாயின் யாம் உயிர் துறப்பேம்" என்று எண்ணி, உச்சைனிநகர் சென்று நிகழ்ந்ததை அறிந்துவரும் ஆற்றலை உடைய ஒற்றன் ஒருவனை வருவித்து அவனிடம் அச் செய்தியைக் கூறி அந்நகருக்கு அனுப்புதற்கு வந்து நின்றனன். அந்தச் சமயத்தில், அங்கு எதிரே வந்த வயந்தகனை அவன் கண்டு, தோழனாகிய உதயணன் உயிரோடிருத்தலை முதலில் அறிந்து மனமுவந்து, முத்தி உலகத்தைப் பெற்றவன் போல இன்புற்று உதயணனுடைய சௌக்கியமுதலியவற்றை விசாரித்துத் தெரிந்துகொண்டு அவன் வந்த காரியத்தை அறிந்து ஆராய்தற்கு அவனோடு தனியே சென்றனன்; உச்சைனிநகரத்து நிகழ்ந்த நீர்விழவிற் பிரச்சோதனனுடைய சோர்வை அறிந்து வாசவதத்தையைப் பிடிமீதேற்றிக்கொண்டு இருளிற் போந்தது முதலிய செய்திகளையும் உதயணன் கூறிய அடையாளச் செய்தியையும் வயந்தகன் கூறினன். அவற்றைக் கேட்ட இடவகன், "சேனைகளை அமைத்து நாம் விரைவில் செல்ல வேண்டும்" என்று எழுந்து, உதயணனுக்கும் வாசவதத்தைக்கும் வேண்டிய ஊர்திகள் முதலியவற்றுடன் பின்னே வரும்படி வேலைக்காரர்களுக்குக் கட்டளையிட்டு வயந்தகனுடன் புறப்பட்டுச் சேனைகளோடு சென்று உதயணனிருந்த முள்ளிலவம் பொதும்பரை அடைந்தனன்.
அடைந்தபொழுது அங்கே உதயணனுடைய அம்புகளால் வீழ்ந்த வேடர்களின் இரத்தத்தை உண்டு மரங்களின்மீது அங்கங்கே இருந்த காக்கைக் கூட்டங்களையும் கழுகின் கூட்டங்களையும் புகைப்படலத்தையுங் கண்டு, "இது நம் இறைவன் இருந்த இடம்"; அவனுக்கு ஏதோ ஒரு துன்பம் நேர்ந்ததுபோலும்; யாம் உயிரை, விடுதலே நலம்" என்று வயந்தகன் புலம்பினன்: இடவகனும் வருந்துவானாயினன். அப்போது உடன்வந்த படை வீரர், அங்ஙனம் நடந்திருக்க மாட்டாதென்பதைத் தக்க காரணத்துடன் சொல்லி அவர்களுடைய வருத்தத்தைப் போக்கி அப்பாற் சிறிது தூரம் அழைத்துச் செல்லுகையில், வரசவதத்தையுடன் உதயணன் நிற்றலையும் வேடர்கள் சூழ்ந்து நெருக்குதலையுங் கண்டு சிறிது ஆறுதலுற்றனர்.. குதிரை வீரரும் யானை வீரரும் விரைந்து வந்து வேடர்களை வருத்தத்தொடங்கினர். அப்போது "நீங்கள் விரைவில் ஓடிப்போமின்; போகீராயின் உங்கள் உயிர் இப்போதே கெடும் என்று ஒரு பறவை தெரிவிக்கின்றது" என்று முன்பு நிமித்தங்கூறிய முதுமகன் வேடர்க்குக் கூறினன். கூறியும் அதனை மதியாமல் துத்தரிக் கொம்புகளை ஊதி முழக்கினர். உதயணன் அங்கே வந்தோர் தம்மவர் என்பதை அறிந்தும் அதனை வெளிப்படுத்தாமல் மனத்தில் அடக்கிக்கொண்டு அவ்வேடர்களை நோக்கி "இங்கே வந்த படை நும்முடையதோ பிறருடையதோ?" என்று வினவினன். வினாவவே இப்படை உதயணன் மந்திரியாகிய இடவகன் படை; நீ எம்மோடு வா; வாராயாயின் இப்படையால் துன்புறுவை" என்று தம் உருவை மறைத்துக்கொண்டு சிலர் போன இடம் தெரியாதபடி ஓடியே போயினர். சிலர் புல்லிலும் புதரிலும் மறைந்து தம்மைப் பாதுகாத்துக்கொண்டனர். சிலர்மட்டும் எதிர்த் துப் போர்செய்து நின்றனர். அங்ஙனம் நின்றவர்களை இடவகன் வீரர் ஆயுதங்களாற் பலவாறு வருத்தினர். வருத்தவே, அவர்களும் ஓடி விட்டனர். தம்மவர் வழங்கும் படைகளும் வேடர்கள் வழங்கும் படைகளும் தங்கள் மேலே படாதபடி உதயணன் பாதுகாத்துக் கொண்டே அங்கு நின்றனன். இங்ஙனம் குறவர்களை வென்ற படைவீரர், திங்களைச் சூழ்ந்த விண்மீன்போல உதயணனைச் சூழ்ந்து பாதுகாத்து நின்றனர், உதயணன் முகமலர்ச்சியுடன் வாசவதத்தையோடு அப்படையிடையே விளங்கி நின்றான்.
அப்போது, வயந்தகனும் இடவகனும் அருகே வந்து உதயணனைப் பாராட்டினார்கள். அவர்கள் பணித்த ஏவல்களைக் கேட்டு இயற்றிக் கொண்டே படைவீரர் சூழ்ந்து நின்றார்கள். அவ்விருவரையும் நோக்கி உதயணன் "துன்பமாகிய பெருங்கடலைக் கடத்தற்கு நீவிர் பெரும் புணையாயினீர்" என்று அன்புடன் பாராட்டினன். அப்பொழுது சயந்தி நகரத்தைச் சார்ந்த மலைச்சாரலிற் பலவகையினரும் தனித் தனியே தங்குதற்கேற்ற கொட்டில்கள் அமைந்த மிக விசாலமான பாடி நகரமொன்று அமைக்கப்பெற்றது. உதயணனுக்கும் வாசவதத்தைக்கும் உரிய படமாடங்கள் அதில் அமைக்கப்பெற்றன. அவற்றில் பலவகைப் பொருள்களும் ஆயத்தஞ்செய்து நிறைத்து வைக்கப்ட்டன. உதயணன் வாசவதத்தையுடன் வந்து அப்படைவீட்டில் தங்கி இன்புற்றிருந்தனன்.
வாசவதத்தைக்கு அமைந்தனவாகிய பாவை, முற்றில், வேய்ங்குழல், பொற் கவறு, பளிக்கு நாய், சந்தனப் பலகை, சந்தனப் பேழை, சாந்தரை அம்மி, அகிற் புகைத்துளையகல், சிக்கம், கோதைச்செப்பு, கிளி, மயில், பூவை, பொற்கரண்டம், அணிகலப் பேழை, மணிக் கண்ணாடி, மணிவிளக்கு, மயிர்வினைத்தவிசு, பட்டமளி, ஆலவட்டம், சாந்தாற்றி, மாலைப்பந்து, முதலியவற்றை ஏந்திய மங்கையர் ஒருபால் நின்றனர். உதயணனுக்கு அமைந்தனவாகிய பரிமா, யானை, தேர், கொற்றக்குடை, வேல், கொடி, கவரி, முரசு, சங்கம், படவம், விதானம், சிங்காதனம், பொங்கு பூந்தவிசு, முதலியவற்றையுடைய வர்களாய்ச் சிலதரும், இயவரும், சிந்துதேசத்துள்ள பலவகைப் பாஷைமாக்களும் ஒருபால் நின்றனர். கைக் கோல் இளைஞரும், கணக்கரும், மெய்காப்பாளரும், வீரரும், பிறரும் புற்றிலிருந்து புறப்படும் ஈயற் கணம் போல் வந்து கூடிச் சூழ்ந்து நின்றனர்.
நாழிகைக் கணக்கர் வந்த உண்ணுதற்குரிய காலத்தைத் தெரிவிக்க, இருளிற் பிடியை ஊர்ந்து வந்த நலிவாலும், துயில் கொள்ளாத மெலிவாலும், வேடர்களோடு போர்செய்த துன்பத்தாலும், பல பொழுது உண்ணாத பசி மிகுதியாலும் மிக்க வருத்தமுற்றிருந்த உதயணன் வல்லவன் வகுத்த வாச எண்ணெய் பூசிக் காப்புடை நறு நீராடி, மருத்துவர் வகுத்த அரும்பெறலடிசிலைத் தோழரோடு உண்டு மகிழ்ந்தான்.
வண்ண மகளிர் முதலியோர் வந்து மிக உபசரித்து நீராட்டி அலங்கரித்து வாசவதத்தையை உண்பித்தார்கள். அவளும் மிக்க ஆறுதலையடைந்து மகிழ்ந்தாள்.
படமாடங்களின் வரிசைகளாலும் யானைகளின் பெருமுழக்கத்தாலும் அலைகளையுடைய பாற்கடலையும் பலவகையான இன்ப நுகர்ச்சிகளால் உத்தர குருவையும் போன்று அப்புதுநகர் சிறந்து விளங்கிற்று.
அப்பொழுது சயந்திநகரஞ் செல்லுதற்கு யானை ஒன்றை அலங்கரித்துக் கொணர்ந்து நிறுத்தினர். உதயணன் மேகத்தின்மேலே தோன்றும் பருதியஞ் செல்வன்போல அதனை ஊர்ந்து விளங்கினன். பூர்ணசந்திரனைப்போலே வெண்கொற்றக் குடை நிழற்றியது; தோழர் களிறுகளிலேறி அவன் இருபுறத்துஞ் சென்றனர். கடுங்கட்காவலர் சட்டையிட்டு வாளையேந்திப் பாதுகாத்துக் கொண்டு வந்தார்கள். யானைகளும் குதிரைகளும் காலாட்படைகளும் சூழ்ந்து சென்றன. பொதியிற்சந்தனம் விந்தமலையிலுள்ள யானைத்தந்தம், வடமலைப்பொன், மேல்கடற் கொடிப்பவழம், கொற்கைத்துறை முத்தம், விஞ்சையம்பெருமலை வெள்ளி, இலங்கையீழத்துச் செப்பு, இமயத்து வயிரம், கடாரத்து இரும்பு ஆகிய இவற்றைக் கொண்டு,
'யவனத் தச்சரு மவந்திக் கொல்லரும்
மகதத்துப் பிறந்த மணிவினைக் காரரும்
பாடலிற் பிறந்த பசும்பொன் வினைஞரும்
கோசலத் தியன்ற வோவியத் தொழிலரும்
வத்த நாட்டு வண்ணக் கம்மரும்' (1.58:40-44)
தத்தம் கைத்தொழில் திறமை புலப்படும்படி இயற்றிய ஆரம் முதலிய உறுப்புக்களையும், நாண்மீன் கோண்மீன் முதலியவற்றின் எழுச்சி அத்தமயங்களைப் புலப்படுத்தும் பொறிமண்டலம் அமைந்த உள்ளிடத்தையும், சாமரையிரட்டல் முதலியவற்றைச் செய்யும் எந்திரப் பாவைகள் பல நிற்கும் பக்கங்களையும், பின்னும் பற்பல விசித்திர வேலைப்பாடுகளையும் உடையதாய் விளங்கும் ஒரு தேரின்மீது காஞ்சன மாலையின் தோளைப் பற்றிக்கொண்டு வாசவதத்தை ஏறி இந்திரனுடைய செல்வக்குமாரிபோல் விளங்கிப் பின்னே வருவாளாயினள். புதுத்துணைமகளிர் அவளுடைய அடியீடுகளை ஏத்தினர். கோற்கைக் காவலாளர் பக்கத்தே பாதுகாத்து வந்தார்கள். பலவகைக் கொடிகள் அசைந்து தோன்றின. மலையில் எதிரொலி உண்டகும்படி முரசங்கள் முழங்கின.
அப்போது மலையைச் சார்ந்த சிற்றூர்களில் வாழுங் குறும்பர்கள் யானைக்கொம்பு, மலைத்தேன், பலாக்கனி முதலிய கனிகள், வீணத்தண்டு, மூங்கில் முத்து, அகில், பன்றியின் எறி, புலித்தோல், ஊகம், பிணை முத்லிய காணிக்கைப் பொருள்களை ஏந்திக்கொண்டு வந்து அரசன் முன்னே வைத்து வணங்கி, "அரசே!
அற்ற காலத்து முற்ற நோக்கி
அடியுறை செய்தொழிற் குடிமுதல் பிழைத்தல்
இருநிலம் பெயரினு மெம்மாட்டில்" (1.58: 90-92)
என்று பணிவுடன் மொழிந்து படைகளோடு கூடித்தாமும் பாதுகாத்து வந்தனர். மிலைச்சமன்னர் முற்படையிலும், வீரர் பிற்படையிலும் காவல் செய்துகொண்டு வந்தார்கள். பலரும் இங்ஙனமே பணிசெய்துவர இடையிலே உள்ள சிற்றரண்களையுடைய ஊர்கள் பலவற்றைக் கடந்து உதயணன் சயந்தியம்பதியை அடைந்தனன்.
-----------------
2. இலாவாண காண்டம்
உதயணன் வாசவதத்தையுடன் வருதலைக் கேட்ட சயந்தி நகரத்தார் மிகுந்த மகிழ்ச்சியடைந்து வீதிகள் தோறும் நடைக்காவணமிட்டுக் கீழே பூக்களைப் பரப்பிப் பழுக்குலைக்கமுகு, குலைவாழை, கரும்பு முதலியவற்றை இரண்டு பக்கங்களில் முறையே கட்டி முத்த மாலைகளையும் பவழமாலைகளையும் அங்கங்கே நாற்றி வாயில்தோறும் தோரண கம்பங்களை நாட்டிப் பெருங்கொடிகளையும் சிறு கொடிகளையுங் கட்டிப் பின்னும் பலவகையான அலங்காரங்களையுஞ் செய்தனர். செய்து, வெந்துய 1ரருவினை வீட்டிய 2 அண்ணலை இந்திரவுலகம் எதிர் கொண்டாற்போல, அவர்கள் உதயணனை எதிர் கொண்டார்கள். முரசங்கள் முழங்கின; பலவகையான வாத்தியங்கள் ஒலித்தன. மகளிரும் மைந்தரும் வாயில்களில் வந்து நின்று அவனையும் வாசவதத்தையையுங் கண்டு கண்குளிர்ந்து மனங்களித்து, "எங்களுடைய துன்பமாகிய இருளைப் போக்குதற்குச் சூரியன்போலவே தோன்றிய பொங்குமலர்த் தாரோய்! புகுக" என்போரும், "தெய்வயானையைப் பெறவேண்டிச் சேனையின்றித் தனியே போய்ப் பகைவனாற் பற்றப்பட்டு உச்சைனி சென்று வென்று அப்பகைவனுடைய செல்வப் புதல்வியைக் கைப்பற்றி அழைத்துக்கொண்டு வந்த ஆண் சிங்கமே! வருக" என்போரும்,
--------
1.அருவினை - காதிகர்மம். 2. அண்ணல் - அருகன்.
"நீ இல்லாத சமயம் பார்த்துக் கௌசாம்பி நகரத்தைக் கைப்பற்றிய ஆருணி அரசனை வென்று புதல்வர்களாகிய எங்களைப் பாதுகாத்துச் செங்கோல் செலுத்திக்கொண்டு நெடுங்காலம் வாழ் வாயாக" என்போரும், "திருமால் மார்பைச் சார்ந்து இன்புற்றிருக்குந் திருமகள்போல எங்கள் அரசனைச் சார்ந்து இன்புறுதற்கு முற்பிறப்பில் தவஞ்செய்த புண்ணியப் பாவையே! எங்களைப் பாதுகாத்தருள்வாயாக" என்போரும், " செந்தாமரைக் கண்ணனாகிய நம்மரசனுடன் பிரச்சோதனச் சக்கரவர்த்தியின் அருமைப் புதல்வியாகிய வாசவதத்தை மகிழ்ந்து வருதலைக் கண்டோம்; யாமே மிக்க புண்ணியமுடையோம்; இப்பிறப்பில் இனி யாம் அடைய வேண்டிய பயன் யாதுளது?" என்போரும், "பிரச்சோதனனுடைய பெண்கள் பலருள் வாசவதத்தையென்பவள் பேரழகினளென்றும் காணுதற்கு அரியளென்றும் சொல்லக் கேட்டிருந்ததுண்டு; கண்டதில்லை; அந்தக் கட்டழகியை நாம் எளிதிற் கண்டு கண்கள் பெற்ற பயனை அடையும்படி அழைத்துவந்து நமக்குக் காட்டிய மன்னர்மன்னன் மன்னுக" என்போரும் " பிரச் சோதனன் காட்டில் மாயயானையைக் காட்டி வஞ்சித்து நம் பெருமானைப் பிடிப்பித்துத் தன் நகர்க்கு வருவித்துச் சிறைப்படுத்திய செய்தியைக் கேட்டுத் தான் இறந்து விட்டதாக யாவரையும் நினைக்கச் செய்துவிட்டு மாறு வேடம் பூண்டு உச்சைனியிற் புகுந்து செய்தற்கரியவற்றைச் செய்து தன் தலைவனைச் சிறைமீட்டுப் பகைமன்னனுடைய நங்கையைக் கைக்கொண்டு செல்க என்று சொல்லிப் போய்வருகவென்று அனுப்பிய பேராற்றலையுடைய யூகி இவ்வுலகில் நீடூழி வாழ்வானாக" என்போரும், "நம் அரசனுக்கு வந்த பெருந்துன்பம் முடிவில் வாசவதத்தையை அவன் அடையும்படிச் செய்ததன்றி நம்முடைய துன்பத்தையுந் தீர்த்துவிட்டது. ஆதலால், இது மிகவும் வியப்பைத் தருகின்றது" என்று அவனது புண்ணியத்தைப் புகழ்வோரும், "யாழில் மிக்க தேர்ச்சியுற்றுத் தருக்கி இணையற்று விளங்கும் உதயணனுக்கு வாசவதத்தையை மணஞ் செய்துகொடுக்க எண்ணிய பிரச்சோதனன், ' நம் மகளை மணஞ் செய்துகொள்ளும்படி இரப்போமாயின் அவன் செய்து கொள்ள மாட்டான்; இவளை அவன்பால் அனுப்பி அவனுக்கு மணஞ்செய்விப்போமாயின், குலத்திற் சிறியவனென்று நம்மை உலகம் இகழும்’ என்று நாணி, யானை மாயத்தால் நம் சேனைக்கிழவனைப் பிடிப்பித்துச் சிறைப்படுத்தி வாசவதத்தைக்கு யாழ் கற்பிக்கும் வண்ணஞ் செய்து அவளுடைய அழகில் ஈடுபடும்படி பண்ணி அவனுடன் அவளை அனுப்பினன். மகளிரைக் கொடுப் போருடைய குறிப்பு இதுவாகும்" என்போரும், தத்தமக்குத் தோற்றியவாறே இன்னும் இவைபோன்ற பலவற்றைச் சொல்லுபவர்களுமாய் அங்கங்கே நிற்க, உதயணன் அமராபதியிற் புகும் இந்திரன் போலவே சயந்தி நகரத்திற் புகுந்து தன்னுடைய அரண்மனையை அடைந்து வீற்றிருந்து விளங்குவானாயினன்.
இருக்கும் நாட்களிலே ஒரு நாள், குடை, ஆசனத்திருத்தல், செருப்பொடு புகுதல், சேனையெழுச்சி, யானை, தானை முதலிய மரியாதைகளைத் தன்னுடைய கல்விப் பெருமையாற் பெற்றவனாகிய பெருங்கணியானவன் வந்து மணஞ் செய்தற்குரிய நல்ல நாளைத் தெரிவித்தனன். தெரிவிக்கவே திருநாள், படைநாள், மணநாளென்னும் நாட்களிலன்றி மற்றை நாட்களில் முரசறையாத வள்ளுவ முதுமகன், வெண்சாந்து பூசி வெண்மலர் மாலைகளை அணிந்து வெந்துகில் உடுத்துச் சென்று, பொன்வார் விசித்து முத்தமாலை மலர்மாலைகளை அணிந்து ஏற்றுரி போர்த்தப்பெற்றதாகிய அரசனுடைய கொற்ற முரசத்தைப் பெரும்பணைக் கொட்டிலிற் பூசித்துக் கொற்றவையைத் துதித்து அதனை யானையினது பணை எருத்தத்தில் ஏற்றிப் பலர் தன்னைச் சூழ்ந்து வரத் தான் அந்த யானையின் முதுகிலுள்ள அணையில் இருந்துகொண்டு, தேரோடும் வீதிகடோறும் சென்று நகரத்தாரெல்லாரும் அறியும்படி, "அரசன் வேல் வெற்றிபெற்று விளங்குக! பூமகள் புணர்க: மண்மகள் மலிக; நகரத்தீர்! நான் கூறுவனவற்றைக் கேளுங்கள்: பாவச்செயல்களை நீக்கித் திருவையுடையீராய்ப் புகழ்பெற்று விளங்குங்கள்; பிரச்சோதன சக்கரவர்த்தியின் குலமகளாகிய வாசவதத்தையை நம்முடைய அரசர்பிரான் மணஞ்செய்யும் நாள் இன்னதாகும்" என்று குறுந்தடியால் அம்முரசை அறைந்து தெரிவித்தனன். கேட்ட நகரத்தார்கள் மகிழ்ந்து அதிக விருப்பத்துடன் தத்தம் வாயில்கடோறும் தோரணங்களை நாட்டி மிகவும் விசாலமான பந்தர்களைப் போடுவித்து அவற்றின் அகத்தும் புறத்தும் விசித்திரமாகிய அலங்காரங்களைச் செய்வித்தனர்.
பலவகையான பழங்களும் வெற்றிலையும் பலவகைப் பாக்குக்களும் நிரம்பிய பெட்டிகளையும் சுண்ணப் பெருங் குடங்களையும் தம் பக்கத்தில் வைத்துக்கொண்டு வந்தோர்க்கு வரைவின்றி அவற்றைக் கொடுப்போர் முழக்கமும், முரட்கோலிளையர்களின் காவல் சூழப் பெற்றுக் கீழே வெண்மணல் பரப்பிய தண்ணிழற் பந்தரைச் சுற்றுப்பக்கத்திலுடையனவும் மடைத்தொழில் வழுவாத வாழ்க்கையர் பயின்றனவுமாகிய அறச்சோற்றட்டில்களின் அகத்தும் புறத்தும் அந்தணாளர்க்கும் அல்லாத பிறர்க்கும் அமுதினன்ன அடிசில்களையும் நெய்யாலாக்கிய சிற்றுண்டிகளையும் எப்போது விரும்பினாலும் அப்போதே அளித்தலைத் தவறின்றிச் செய்வோர் முழக்கமும், கொடுப்பவர்கள் வீழ்த்திய குங்குமக் களியும் மலர்களும் வேதியர்களின் வீட்டு வாயில்களிற் சிந்திய சமிதைகளும், வாசனைப்பொருள்களைத் தொகுப்போர்களின் வீட்டு வாயில்களிற் சிந்திய வாசச்சுண்ணமும், புலந்த மகளிர் எறிந்த மலர்மாலைகளும், சிறார் வீழ்த்திய செம்பொற் கண்ணிகளும், வீதிகளின் தெய்வங்களுக்குக் கொடுக்கப்படும் பலிகளும் தம்பலமுமாகிய குப்பைகளைத் தூத்துச் சந்தனக் குழம்பால் துகளை அவித்துப்போது பல பரப்பிய வாயில்களிற் செய்யப்பட்டுள்ள அலங்காரங்களை அழித்துவிட்ட சிறு பிள்ளைகளைப் பிடித்துக்கொண்டு சென்று அவர்களுடைய குற்றச்செயல்களைத் தாய்மார்களுக்கு அறிவுறுத்தும் ஏவன் மகளிருடைய முழக்கமும், சக்கர வடிவத்தினவாகிய ஆறு எந்திரங்கள் ஒன்றற் கொன்று மாறாய் நின்று நீரைச் சொரியாநிற்கச் சந்திராதித்த முதலிய முக்குடைகள் எந்திரத்தாற் புடைபெயர்ந்து அசையாநிற்க விளங்கும் சினாலயங்களில் தீர்த்தங்கரர்களுடைய சரித்திரங்களை விளங்க எடுத்துரைத்துப் பெரியோர்கள் அருகனைப் பூசிக்கும் முழக்கமும், கண்ணாற் கண்டவற்றைக் கையாற் செய்யும் நூல்வினைக் கம்மியர் பனையோலை, நெட்டி, துகில் முதலியவற்றால் நாற்றம் தோற்றங்களிற் சிறிதும் வேற்றுமையில்லாதபடி இயற்றிய இலை, கொழுந்து, முகிழ், போது, மலர் என் பவற்றையுடைய பலவகை மரங்களை அங்கங்கே பந்தர்க் கால்தோறுங் கட்டி, அப்படியே முன்சுவர்களில் ஓவியங்களைத் தீட்டிக் 1காலத்தைப் புலப்படுத்தும் எந்திரங்களை உரிய இடங்களில் அமைத்துப் பார்த்தவர் கண்களை மீளவிடாதபடி பின்னும் செய்யவேண்டிய அலங்காரங்களையெல்லாம் அங்கங்கே செய்பவர்களிடத்துண்டாகிய முழக்கமும், அரசனுடைய வேலைக்காரர்களில் முதியவர்கள் பலர் நாற்புறத்துமுள்ள கடைவீதிகடோறும் வந்து, "கிரீடமல்லாத பெருங்கலங்களுள் எவற்றை யாவர் வேண்டினாலும் உடனே அன்புடன் அவற்றைக் கொடுத்துவிடலாம்.
கொடுத்தவற்றிற்கு இரண்டு மடங்கு அரசன் பின்பு மகிழ்ந்து அளிப்பது திண்ணம்" என்ரு வாணிகர்களுக்குச் சொல்லும் பெருமுழக்கமும், அலங்காரமின்றிச் சும்மா ஓடி விளையாடுகின்ற தம்முடைய பிள்ளைகளை அழைத்து, "எந்தைமீர்! இங்கே வருக; நம் அரசர்பிரானுடைய கலியாண மண்டபத்திற்குப் புதியவற்றை அணிந்து நும் தந்தைமார்களோடு செல்லுங்கள்" என்று சொல்லி நல்ல உடைகளை உடுத்தி அவர்களுடைய உச்சி முதல் பாதம்வரையில் அணிய வேண்டியவற்றை அணிந்து தழுவி முத்தமளித்து அவர்களை அனுப்பும் அரிவைமார்களின் முழக்கமும், உண்டவர் கைவிட முடியாத பலவகைப்பட்ட பானவகைகளைத் தம் இல்லங்கள்தோறும் தொகுத்துவைத்து, "வள்ளத்திற் பெய்யுங்கள்; பிறர்க்குக் கொடுங்கள்; தாருங்கள்" என்று மிக்க ஊக்கத்தோடு கூறுங் கள்ளுண்ணாளருடைய பெரு முழக்கமும், பகைவரை வென்று அவர்களுடைய குடரை மாலையாகச் சூடுவனவும், மூத்தோர் பெண்டிர் துறவியர் பாலரென்பவர்களுக்கு ஒரு பொழுதும் துன்பஞ் செய்யாதனவும் உத்தம இலக்கணங்கள் உடையனவுமாகிய ஆயிரத்தெட்டு யானைகளை அலங்கரித்து அரசன் ஆடுதற்குரிய மண்ணுநீர் கொணர்தற்காக அவற்றைச் செலுத்துகின்ற பாகர்களுடைய பெருமுழக்கமும், மிக்க அழகையுடையவர்களும் ஈன்றோரையும் எதிர்நோக்காதவர்களுமாகிய கன்னி மகளிருள், "மண்ணுநீர் சுமத்தற்குரிய புண்ணியமுடையவர்களே! வாருங்கள்" என்று எதிர்கொள்ளும் கோயின்மகளிர்களின் பாடகவோசையும், இவைபோன்ற பல்லாயிர ஓசைகளும் தம்முள் கலக்கப்பட்டு நகர் கடிமணச் செல்வத்தால் விளங்கியது. கல்யாணத்திற்கு வேண்டிய எல்லாம் அமைக்கப் பெற்றன. அப்பொழுது சோதிடர் வந்து முகூர்த்தவேளையைத் தெரிவித்தனர். அறுதொழில், முத்தீ அருந்துறை போகிய மறைநவில் நாவினையுடைய புரோகிதன் வந்து மணப்பந்தரில் உதயணனையும் வாசவதத்தையையும் ஆசனத்தில் இருக்கச் செய்து எதிரில் அக்கினியைவளர்த்து உரிய பொருள்களைக் கொண்டு ஆகுதிபண்ணித் திசைகடோறும் உரிய தெய்வங்களைப் பிரதிட்டைசெய்து பூசித்து, நிவேதித்து, அம்மியேற்றுதல் முதலிய விசேடங்களை நிகழ்த்தி, "நன்னிலையுலகி னாவல் போலவும், பொன்னணி நெடுமலை போலவும் மன்னுக இவர்" என வாழ்த்தினன். பின்னர் வாசவதத்தையின் முன்கையைப் பற்றிக் கொண்டு உதயணன் தீயை வலம் வந்தனன்.அருந்ததி காட்டல் முதலாகிய மற்றச் சடங்குகளும் விதிப்படி நிறைவேறியபின் இருவரையும் கட்டிலேற்றினர்.
அப்பால் ஆறாந்திங்களிற் பெருங்கணிச் சங்கத்தாரும், திணைகளும் கணக்கரும், பிறரும் வந்து உடல்மயிர் களைதலாகிய விசேடத்தையும் விதிப்படி நிகழ்த்தினர்.
பின்பு, உதயணனுக்கு மண்ணுநீர் ஆட்டுதற் பொருட்டு ஐம்பெருங்குழுவும், எண்பேராயமும் உறுதிச் சுற்றத்தாரும், பிறரும் பக்கங்களில் நெருங்கி வாராநிற்க, ஆயிரத்தெட்டு யானைகளின் மேல் குடைகள் கவிப்ப ஆயிரத்தெட்டுப் பொற்குடங்கள் சென்றன. அக்குடங்களை இறுகப் பிடித்துக்கொண்டு அவற்றின் இருபுறத்தும் கன்னி மகளிர் இருந்தார்கள். முழவும் பிற வாத்தியங்களும் முழங்கின; முரசங்கள் சிலைத்தன; சங்கங்கள் ஒலித்தன; சிறு கொடிகளும் பெருங்கொடிகளும் உயர்ந்து அசைந்து விளங்கின; மேற்கட்டிகளின் கீழே பதினாறு மங்கலப் பொருள்களை ஏந்திக்கொண்டு மங்கல மகளிர் முன்னே சென்றனர்; வேல் வாள் கோல் இவற்றைக் கையிற் கொண்ட காவலிளையர் பாதுகாத்துச் சென்றனர்; இந்தச் சிறப்புடன் சென்று ஒரு வாவியில் நீரை முகந்து கொணர்ந்து, உதயணனுடைய இடப்பக்கத்தில் வாசவதத்தையை வைத்து இருவருக்கும் விதிப்படி நீராட்டி அலங்கரித்தனர். பின் நிகழ்த்த வேண்டியவை முறைப்படி நடைபெற்றன. அப்பால் இருவரும் இனிய உணவுகளை உண்டு அன்பு மிக்கவர்களாகி இன்புறுவாராயினர்.
அக்காலத்தில் அறிஞர் சிலர் உதயணனை அடைந்து "தேவாலயத்தையும் நகரத்தையும் வலஞ்செய்தல் விவாகத்திற்குரிய விதியாகும்" என்ரு கூற, உதயணன் அதனை அங்கீகரித்து முறைப்படி வாசவதத்தையோடு கோயிலை அடைந்து முக்குடைக்கீழ் விளங்கும் அருந்தவக் கிழவனாகிய அருகதேவனைத் தரிசித்துத் தன்னுடைய பிரார்த்தனையை நிறைவேற்றிக்கொண்டு புறத்தே போந்து மிக்க வைபவத்துடன் நகர்வலஞ் செய்தனன். செய்த பொழுது, அவனுடைய புதுமணக் கோலத்தையும் வாசவதத்தையையும் உலாச்சிறப்பையும் பார்த்தற்கு நகரத்துள்ள இருபாலாரும் வாயில் மாடங்களின்மீதும் கட்டுமலைகளின்மீதும், நகர்காண் ஏணியின்மீதும், ஏறிக் கண்டுகளித்தார்கள். அதன்பின் அவ்விருவரும் அரண்மனையை அடைந்து ஒருவரை ஒருவர் விட்டுப்பிரியாமல் மிக்க காதலை உடையவர்களாகி ஒப்பற்ற இன்பமடைந்து வாழ்வாரயினர்.
அவ்விருவரும் இங்ஙனம் வாழ்ந்து வருகையில், புகழின் பெருமையையும் வேறு வேறிடத்துப் பிறந்த ஆன்பாலும் தேனும் கலந்தாற்போலத் தோழர் வேறுபட்டேகினும் கூறுபட்டியலாத அன்புமிக்க நண்பின் அமைதியையும் இராச காரியங்களில் தளும்புபட்ட அமைச்சின் ஆற்றலையும் இவைபோன்ற பிற குணங்களையும் தன்பால் தாங்கி உச்சைனியில் எல்லாவற்றிலும் வெற்றிபெற்று விளங்கிய யூகி, உதயணன் சிறைப்பட்டுச் செல்வத்தை நீத்தன னென்று நினையாமல், பிரச்சோதனன் தன் மகள் வாசவதத்தையை அவனுக்கு அன்போடு கொடுத்தமையாலேதான் அவன் பிடிமேலேற்றிக்கொண்டு தன் நகர் சென்றனன் என்பதையும் பிறவற்றையும்,
'கோயின் முற்றத்தும் வாயின் மருங்கினும்
வம்பலர் மொய்த்த வம்பலத் தகத்தும்
யானைத் தானத்து மருந்தவப் பள்ளியும்
தானைச் சேரியுந் தானெடுத் துரைக்கும்
பாடை யறியாத் தேசிகச் சேரியும்
ஓதுநர் சாலை யகத்து மோவாச்
சூதுபொரு கழகத் தருகலுந் தோமில்
நல்லதுந் தீயது மறிந்தகத் தடக்கா
மட்டுமகிழ் மகளிர் துட்டச் சேரியும்
காரிகை பகருங் கருங்கடை மழைக்கண்
வார்கொடி மகளிர் வளநகர் வரைப்பினும்
குதிரைப் பந்தியுங் கோடிகர் வரைப்பினும்
மதிமயக் குறூஉ மறுகணி கடையினும்
நீர்த்துறைக் கரையிலும் கூத்துறை சேரியும்
மன்றுஞ் சந்தியும்’ (2.8 : 56-70)
ஆகிய இடங்களிற் பேசுவித்து நகரத்தாரெல்லாரும் அறியும்படி பண்ணி, அங்கே உள்ளவர்கள் பேசுவனவற்றையெல்லாங் கேட்டு, மாகளவனத்திற் காளி கோயிலில் இருந்த தன் தோழர்களையும் வீரர்களையும் பிறரையும் ஓரிடத்திற் கூட்டி முகமன் கூறி, "இந்நகர் வறுமை அடையும்படி இனி நீங்கள் பெறுவழியே தனித்தனியாகச் சென்று விரைவில் நம் மன்னனை அடையுமின்" என்று சொல்லி அவர்களைப் புறப்படச் செய்தான்.
அப்பால் அவன் ஆகவேண்டியவற்றை நாடினன். நாடி, துறந்தோர்களின் வேடம் பூண்டு நகரத்தாருடைய மனங்களைக் கவர்ந்து காரியங்களை முடிப்பவர்களாய்க் கிராமங்களிலிருக்கும் தன் தோழர்களைக் கண்டு அங்குள்ள முனிவர் தெரிந்துகொள்ளாதபடி வேற்றோன்போலத் தன்னைக் காட்டிச் சொல்ல வேண்டியவற்றைச் சொல்லி அவர்களை உதயணன்பாற் செல்லும்படி அனுப்பினான். அனுப்பியபின், ஆண்டுள்ள முனிவர்களிடம் சமய விகற்பங்களையும் நீதிகளையும் பகற்கால முழுவதும் பேசிக்கொண்டே இருந்துவிட்டு இரவிற் புறப்பட்டுத் தன்னுடன் முன்னமே வந்து ஆக வேண்டியவற்றைப் பிறரறியாமற் செய்துகொண்டிருந்த சாதகனென்னுங் குய மகனது இல்லத்தை அடைந்து அங்கே இருந்த சாங்கியத் தாயைக் கண்டு நிகழ்ந்தவற்றையும் நிகழ்த்த வேண்டுவனவற்றையும் அவளுக்குக் கூறிப் பசியையும் வெப்பத்தையும் போக்கும் மருந்தொடு கலந்த அவல் வைத்துள்ள கிழியையும் தண்ணீர்க் கரகத்தையும் கைக்கொண்டு புறப்படுதற்கு ஆயத்தமாக இருக்கும்படி அவளுக்குச் சொன்னான்.
பின்னர் அவன், உதயணனுடைய நண்பனானயவனப்பாடித் தலைவனை அடைந்து சொல்ல வேண்டுவனவற்றையும் தன் புறப்பாட்டையும் அவனுக்குச் சொல்லி அவன் கொடுத்த யந்திர வண்டியாகிய பூணியின்றியும் பொறியின் இயங்கும் வையத்தைக் கைக்கொண்டு, "ஈண்டு எஞ்சியுள்ள தோழர்களையெல்லாம் புறப்படச் செய்துவிட்டே நீ புறப்படவேண்டும்" என்பதை அவனுக்குச் சொல்லித் தனக்கு வேண்டுவனவற்றையெல்லாம் அவ் வண்டியில் வைத்துக்கொண்டு சாங்கியத் தாயையும் அதில் ஏற்றி அதை ஊர்ந்து புறப்பட்டுப் புறநகர் கடந்து பூமியில் விமானமேறிச் செல்லும் இந்திரகுமரன் போலப் புட் பக நகரத்தைநோக்கிச் சென்றான். அப்போது பிறர் அறியாமல் தங்கவேண்டிய இடங்களில் தங்கிச் சென்று நானூற்று நாற்பதெல்லையில் அந்த வண்டியை நிறுத்த வேண்டிய முறைப்படியே நிறுத்திச் சாங்கியத்தாயை ஒரு பாதுகாப்பான இடத்தில் இறக்கிப் பின்னே வரும்படி சொல்லி விட்டுத் தான் மாத்திரம் புட்பக நகரத்தைக் இரவில் அடைந்து ஒருவரும் தெரிந்துகொள்ளாதபடி தன் வண்டியைப் பிரித்து ஒருபால் வைத்துவிட்டு இடவகனைக் கண்டு மன்னவனுடைய சௌக்கியத்தைக் கேட்டுத் தன்னுடைய இளைப்புகளையெல்லாம் அங்கே இருளிற் போக்கிவிட்டு மேலே நிகழ்த்த வேண்டியவற்றை யோசித்தற்கு எண்ணி வெந்திறன் மிலைச்சர் வந்தோரை விலக்கிக்கொண்டு பாது காத்திருக்கும் மந்திரமாடத்தில் அவனுடன் மறைந்திருந்து, யானை மாயத்தாற் பிடியுண்டு சிறையில் அகப்பட்ட உதயணனை விடுத்தல் வேண்டித் தான் இறந்து விட்டதாகப் பெயர் பண்ணி உச்சைனியை அடைந்தது முதலிய செய்திகளை யெல்லாம் அவனுக்குக் கூறினன்; கேட்ட இடவகன்,
"கெட்ட காலை விட்டன ரென்னாது
நட்டோ ரென்பது நாட்டினை நன்று". (2.9:118-9)
எனப் பாராட்டினன்.
பின்னர் யூகி, உதயணன் நீர்விழவின் கண்ணே வாசவதத்தையைப் பிடிமீதேற்றி வந்த பின்பு நிகழ்ந்த செய்திகளைச் சொல்" என்று கேட்ப இடவகன், " பத்திராபதி ஐந்நூறெல்லையளவு ஓடிப் பாலை நிலத்தின் இடையிலே உயிர் துறந்தது; உதயணன் முதலியோர் நடந்து வந்து பகற்காலம் நீங்கும் வரையில் ஒரு முள்ளிலமரப் பொதும்பரில் மறைந்து தங்கினர். இரவிற் படைகளைத் தொகுத்துச் செல்லுவதற்கு வயந்தகன் வந்தனன். உதயணன் வாசவதத்தையைப் பாதுகாத்துக்கொண்டு தனியே அங்கிருந்தனன். இருக்கையில் சூரியன் உதித்தபின்பு அக் காட்டிலுள்ள சவரர், புளிஞர்கள் இவர்களுடைய அடிச் சுவடுகளையும் பிடியின் அடிச்சுவடுகளையும் பாத்துக் கொண்டே வந்து உதயணனைக் கண்டு சூழ்ந்து போர் செய்யத் தொடங்கினர். அவர்களைக் கண்டு வருந்திய வாசவதத்தையை உதயணன் 'அஞ்சற்க" என்று சொல்லிக் காஞ்சனையோடு அவளைத் தனியே நிறுத்திவிட்டுப் போந்து வில்லை வளைத்து அம்புகளை எய்து நாற்பத்தொன்பது மறவர்களை வீழ்த்தினன். வீழ்த்தவே இறந்தவருடைய தமர் அச்சமுற்றுப் போர்செய்தலை நிறுத்தி அந்தப் பொதும்பரின் நாற்புறத்தும் நெருப்பை வைத்து மூட்டிவிட்டு ஓடினர்" என்று சொன்னவுடன், யூகி மூர்ச்சித்துத் திடீரென்று கீழே விழுந்தனன். இடவகன், அவனை எடுத்துத் தழுவித் தான் அச்செய்தியைச் சொல்ல வேண்டிய முறைப்படி மெல்லச் சொல்லாததற்குக் கவன்று சைத்தியோபசாரஞ் செய்து உணர்ச்சியை உண்டாக்கி, "உதயணனன் உயிருடன் இருக்கின்றனன்" என்று கூறினன். உடனே யூகி எழுந்திருந்து, "அதன்மேல் நிகழ்ந்தவற்றைக் கூறு" என்று கேட்டனன்.
அப்போது இடவகன், "ஆடுகளின் இடையே பாயும் சிங்கம் போலவே அவ்வேடர் கூட்டத்தினிடையே உதயணன் பாய்ந்து போர்செய்யத் தொடங்குதலைக் கண்ட வாசவதத்தை அஞ்சி நடுங்கினள். அவளை மெல்ல நடத்திக்கொண்டு ஓரிடத்தில் அவன் நிற்கையில், உரோகிணியோடு நின்ற திங்களைச் சூழ்ந்த ஊர்கோளைப் போல வேடர்கள் அவர்களை வளைந்துகொண்டு துன் புறுத்தத் தொடங்கினர். உதயணன், 'யாம் புதைத்திருக்கும் பொருட்டொகுதியை உமக்குக் காட்டுவோம்; துன் புறுத்தாமல் இரும்’ என்றனன். அதனைக்கேட்டு அவர்கள் சும்மா நின்றனர். அப்பொழுது நாங்கள் சேனைகளோடு சென்றோம். உதயணன் எங்களை அறியாதவன் போலவே அவர்களோடு சேர்ந்து முதலில் நின்று அப்பால் வாசவதத்தையோடு ஒரு பக்கத்தில் நின்றனன். சேனையின் பெருக்கத்தைக் கண்டு அவ்வேடர்கள் ஓடிவிட்டார்கள். பின்பு, அவ்விருவரையும் முறைப்படி அழைத்துக் கொண்டு சயந்திநகரம் அடைந்து மணம் செய்வித்தோம். உதயணன் வாசவதத்தையோடு இன்புற்று வாழ்வானாயினன். சூரியசந்திரர் உதித்தலும் அத்தமித்தலும் அவனுக்குத் தெரியா; தன்னுடைய இராசதானியாகிய கௌசாம்பியைக் கைப்பற்றிக்கொண்டு ஆருணியென்னும் அரசன் ஆண்டு வருதலையும் அறிந்திலன். உயிர்போன்ற தன் தம்பியர்களாகிய பிங்கல கடகரையும் நினைக்கின்றானில்லை. நகுடராசன் போலக் காம இன்பம் ஒன்றையே நினைந்து அதனையே பாராட்டிக்கொண்டு பிறர்க்குச் சமயங் கொடானாயினன். நாம் என் செய்வோம்!" என்று வருத்த முற்றுக் கூறினன். அது கேட்ட யூகி புன்முறுவல் செய்து, "அன்பே! இதுகாறும் துன்புற்றிருந்த அரசன் இடைவிடாமல் இன்பத்தை நுகர்வது இயல்பே!" என்று முதலிற் கூறிவிட்டு, அப்பால் அங்கே வந்திருந்த சாங்கியத்தாயை வருவித்துத் தரும் இயல்பைக் கேட்பவன்போலவே சில நேரம் பேசிக்கொண்டிருந்து, நீங்காமல் அயலில் நிற்கும் ஒற்றர் போன்றவர்களுக்கு ஒவ்வொரு காரியத்தைக் கூறி அனுப்பிவிட்டு அவளை நோக்கி, "உதயணனை இனிமேலும் பாதுகாத்தல் உம்முடைய கடமையாகும்;
'அற்றங் காத்தலி னாண்மை போலவும்
குற்றங் காத்தலிற் குரவர் போலவும்
ஒன்றி யொழுகலி னுயிரே போலவும்
நன்றி யன்றிக் கன்றியது கடிதற்குத்
தகவில செய்தலிற் பகைவர் போலவும்' (2.9; 219-23)
ஒழுகுதல் அன்பரது செயலென்பது நீர் அறிந்ததே. உதயணன் இன்பச்சேற்றுள் இறங்கினன். ஆதலால் இனி இலாவாண நகரத்தின் பக்கத்தேயுள்ள மலையைச் சார்ந்த சோலை ஒன்றில் அவனை உண்டாடும்படி செய்வித்து அவன் அங்ஙனம் செய்யும் நாட்களுள் ஒருநாள் வாசவதத்தையை அவன் பிரியும்வண்ணஞ் செய்து அங்ஙனம் பிரிந்து சென்றபொழுது அவள் இருந்த வீட்டைத் தீக்கிரையாக்கி அவளைச் சுருங்கைவழியே அழைத்துவந்து நீர் என்னிடம் சேர்ப்பிக்க வேண்டும். நெடுந்தூர வழிப்பிரயாணத்திற்காக வைத்திருந்த அவலை உண்டு விக்கி "யூகி இறந்துவிட்டானென்பதையும் அவனுக்குச் சொல்லி அவனை அரசாட்சிக்கு உரியவனாகச் செய்தல் உம்முடைய கடமை. இது நாங்கள் எல்லோரும் ஆலோசித்த செய்தியாகும்" என்று விரிவாகச் சொல்லி, இன்ன இடத்தில் தன்னை வந்து பார்க்க வேண்டும் என்று அவளுக்கும் தோழர்க்கும் தெரிவித்துவிட்டு அவலை உண்டு விக்கி இறந்தவன்போலத் தன்னைப் புலப்படுத்தினன். உடனே இடவகனும் ஏனையோரும், "எம்முடைய உயிர்த்தோழனாகிய யூகி இறந்தபின்பு யாம் இனி உயிரோடு இரேம்" என்று அழுது தம்முடைய துக்கத்தைப் பிறர்க்குப் புலப்படுத்தினர். பின்பு அவர்கள், "சிறந்த அறிவுடையோனாகிய இவனைச் சுடுதல் முறையன்று; இவன் உடம்பைக் கங்கா தீரத்தில் இடுவதுதான் முறை" என்று சொல்லிப் பிறரறியாமல் அவன் உடம்பை மறைத்துவைத்தனர். சாங்கியத்தாயை நோக்கி, "நீர் சென்று அரசனிடத்தும் அரசியிடத்தும் முன்போலவே அன்போடு பழக வேண்டும். யூகி கூறியவற்றை உரிய காலத்தில் நிறைவேற்ற வேண்டும்" என்று அவளை உதயணன்பால் அனுப்பினர். அங்ஙனமே அவள் புறப்பட்டுத் தயங்கிதழ்த் தாமரைத் தண்பணை தழீஇய சயந்தியம் பெரும்பதியை அடைந்தாள்.
உண்ட அவல் விக்கியதால் யூகி இறந்தானென்ற செய்தி எங்கும் பரவியது.
சயந்திநகரை அடைந்த சாங்கியத்தாய் உதயணகுமரனைக் கண்டாள். தாயைக் கண்ட கன்றைப்போல அவன் விருப்பங்கொண்டு உபசரித்துப் பீடமொன்றில் அவளை இருக்கச்செய்தான். இருந்த அவள் அவனுக்கு உபசார மொழிகளைக் கூறி, "வாசவதத்தையை நீ அழைத்துவந்த பின்பு உச்சைனி நகரத்தில் நிகழ்ந்தவை இவை" என்று கூறினள். கூறியவுடன், "இனிய நண்பர்களுடைய கடமையைத் தீர்த்த யூகி நும்முடன் வந்திலனோ?" என்று அவன் வினாவினன். அதற்கு அவள் விரைவாக விடை கூறாமற் சற்று நேரம் ஆராய்ந்து பின், "நீ வாசவதத்தையைப் பிடிமேல் ஏற்றிக்கொண்டுவந்த இரவில் அங்கே போர் செய்தற்கு வந்த வீரர்களையெல்லாம் வென்று அந் நகரின் அகத்தும் புறத்தும் உள்ளார் தத்தமக்குத் தோற்றியவாறே கூறுவனவற்றையெல்லாம் கேட்டுப் பின்னர்ச் செய்விக்கவேண்டியவற்றை யெல்லாம் அங்கே செய்வித்துவிட்டு இருட்பொழுதில் மறைந்து எந்திர வையமொன்றில் என்னையும் ஏற்றிக்கொண்டு இப்பால் வந்து பாதுகாப் புள்ள இடமொன்றில் என்னை இருக்கச்செய்து, "வேடர். களுடைய உறைவிடமாகிய இவ்விடத்திற் செய்தற்குரிய காரியங்களைச் செய்துவருவேன்; நீர் அரசனை அடையும்' என்று பின்னே தங்கி விட்டான்" என்றனள். என்றவளை நோக்கி உதயணன், "வாசவதத்தையைப் பார்த்துவிட்டு வருக" என்றனன்.
சாங்கியத்தாய் கன்றைக் காணும் கறவையைப்போல ஆவலுடன் சென்று வாசவதத்தையைக் கண்டனள். அவள் இளமை தொடங்கித் தன்னைப் பாதுகாத்துவந்த செவிலியாதலின், கண்டவுடன் எழுந்து உவகைக் கண்ணீர் பெருகச் சாங்கியத்தாயைத் தழுவி மிகப் பாராட்டினள். பாராட்டவே அவள்," தாய்மார் பதினாறாயிரவரும் தோவிமார்களும் பிறரும் உன்னுடைய பிரிவாற்றாமற் புலம்புகையில், பிரச்சோதனன். 'யானே வாசவததத்தையை உதயணனுடன் அனுப்பினேன்' என்ற சொல்லக்கேட்டு அவர்கள் வருத்தந் தணிந்து உய்ந்தனர்" என்றனள். என்னவும் வாசவதத்தை பின்னும் தம்மவரை நினைந்து வருந்துவாளாயினள். சாங்கியத்தாய் அவளுடைய கண்ணீரைத் தன் விரலால் துடைத்து, "பாவையே! பிறந்த வீட்டினரையே நினைந்து நீ இங்ஙனம் அவலங்கொள்ளாதே; கொள்ளுதல் மங்கல மகளிர்க்கு மரபன்று" என்று கூறி அவளை உடனழைத்துச் சென்று அங்கே மிக உயர்ந்ததாகவுள்ள கட்டுமலை ஒன்றின் மேல் ஏற்றி அதன் உச்சியில் அவளை நிறுத்தி, "நங்கையே! பார்ப்பாயாக; அரசர் பெருமானாகிய உன் தந்தையின் நகரம் அதோ தோன்றுவதாகும்; ஏன் கவலை அடைகிறாய்?" என்று அவள் உவப்பக் கூறிப் பின்பு காம இன்பத்தில் அழுந்தித் தன் அரச உரிமை.யையும், பகைவன் நகரைக் கைக்கொண்டிருத்தலையும் நினையாமலிருக்கும் உதயணனுக்கு நல்லறிவை உண்டாக்குதற் பொருட்டு யூகி கூறிய அழற்கருமத்தை மந்தணமாகச் சொல்லியவுடன், நன்னெறி நூல்வழித் திண்ணறிவாளன் வருந்தி நோற்ற அருந்தவம் போலப் பிற்பயமுடைமையைத் தெளிந்து வாசவதத்தை உடன்பட்டாள்.
அப்பால் சாங்கியத்தாய் மறைந்திருந்த யூகியை அடைந்து நிகழ்ந்தவற்றைக் கூறவே, அவன் உதயணனது வடிவம் போன்ற ஓவிய மொன்றைப் படத்தில் எழுதி அவ்வுருவத்தில் நான்கு கண்களைப் பொறித்து அவற்றுள் மேலேயுள்ள கண்ணை மழுக்கியதாக அமைப்பித்து அப்படத்தை அவளிடங் கொடுத்து, "இதனை உதயணனுக்குக் காட்டும்" என்றனன். அவள் சென்று வாசவதத்தையோடு அவன் இருந்த சமயம் பார்த்து அப்படத்தைக் காட்டினள். அவன் அதனைப் பார்த்து அதில் அமைந்த நுட்ப வேலைகளைக் கண்டு வியந்து மனிதருடைய உறுப்புக்களுள், "அடிகளே ஆட்கள்; தோள் மனைவி; பல் மக்கள்; கண் தோழர்; தலை இருமுது குரவர்" என்னும் நூற்கருத்தை அறிந்தவனாதலின், நான்கனுள் மேலாய கண் மழுங்கியிருத்தலை அறிந்து,"நம்முடைய தோழர்கள் நால்வருள் மேம் பட்டவனான யூகிக்கு ஏதோ துன்பம் உளது" என்று கவலையுற்று நோக்கியபொழுது சாங்கியத்தாய், "உச்சைனியிலிருந்து வருகையில் அவலை உண்டு விக்கி இறந்து போயினன் அவன்" என்றனள். எனவே உதயணன் பொறிகெட்ட எந்திரம்போலக் கண்சோர்ந்து கீழே வீழ்ந்து தன்னை மறந்து கிடந்தனன். அதனைக் கண்ட வாசவதத்தையும் இடியேறுண்ட நாகம்போல் துயருற்று அவன் மார்பில் வீழ்ந்தாள். அது தெரிந்து அரண் மனையில் உள்ளார் எல்லாரும் துன்புற்றனர். அப்பொழுது அருகிலிருந்தோர் சைத்தியோப-சாரத்தால் அவனுடைய மூர்ச்சையைப் போக்கவே அவன் எழுந்து கண்களினின்றும் அவலக் கண்ணீர் பெருக,
" விண்டோய் கானத்து வேழ வேட்டத்துச்
சிறைகொளப் பட்டியான் செல்சார் வறுத்தபின்
மறைகொண் மாயமொடு துறைநகர் விழவினுள்
ஏதின் மன்னன் காதலி பயந்த
மாதரைத் தழீஇப் போதரப் புணர்த்துப்
போதுவ லென்றோய் பொய்த்த னையோ? (2.10: 125-30)
இனி வாழ்தல் ஆற்றேன். இளமைதொடங்கித் தாயினும்என்பால் அன்புடையாய்! என்னையும் உடனழைத்துச் செல்லவேண்டு்ம் அன்றோ? நீ மட்டும் முன்னே தனித்துச் சென்றது முறையோ!" என்று பலவாறு விலாவித்தனன்.
அங்கிருந்த அறிஞர், "விரோதிகளுக்குமுன் இங்ஙனம் நீ வருந்துதல் இறைமை அன்று. தளர்ச்சியின்றி இருத்தல் வேண்டும். நல்வினை துணைசெய்யுமாயின் யூகியைப் பெறலாம்" என்று தேற்ற அவன் மேல் ஆக வேண்டியவற்றை நினைந்து சிறிது வருத்தந் தணிந்திருந்தான். ஆனாலும் யூகியின் நினைவால், அபரபக்கத்துத் திங்கள் ஒளி குன்றுவதுபோல் அவன் எல்லா வகையிலும் குறைவுறுவதை அறிந்த தோழர், அரசனுக்குரிய எல்லாக் காரியங்களையும் யூகியைப் போலவே செய்தற்குரியவன் உருமண்ணுவாவே என்றறிந்து அக்காரியங்களை எல்லாம் அவனிடமாகச் சார்த்தினர். அவன் அங்ஙனமே அரசனுக்குரிய எல்லாவற்றையும் அறிந்து செய்வானாயினன்.
அப்படி நிகழுங்காலத்தில் ஒருநாள் உருமண்ணுவா தோழரை நோக்கி, "அரசனுடைய துன்பத்தை நீக்குதற்குரிய பரிகார வழிகள் பல உள. அவை பகைவரைவென்று அவர் கொடுக்கும் கப்பங்களைக் கொணர்ந்து முன்னிடுதல், மகளிருடன் தெப்பத்திலேற்றி நீர் விளையாடச் செய்தல், உண்டாட்டயர்வித்தல் முதலியனவாம்.. அவற்றுள் ஏதேனும் ஒன்றால் அரசன் கவலையைப் போக்குவதுடன் மலைச்சாரலிலுள்ள முனிவரை அடைந்து வினாவின் நிகழ்ந்தவற்றையும் நிகழ்வனவற்றையும் கூறுவாரென்பதைச் சொல்லி அங்ஙனமே கேட்பித்தும், அவனது துக்கத்தைப் போக்கவேண்டும்" என்றனன். அதனைச் சொல்ல வேண்டிய முறைப்படியே மற்றத் தோழர் உதயணனுக்குக் கூறினர்.
கேட்ட உதயணன், " அங்ஙனங் கூறும் முனிவரும் உளரோ?" என்ற பொழுது அருகிலிருந்த உருமண்ணுவா, "அரசே! நின்னைக் கருவுற்றுப் பூரண கர்ப்பிணியாக இருந்த மிருகாவதி நிலாமுற்றத்திற் சிவந்த ஆடையைப் போர்த்துக்கொண்டு துயிலும்பொழுது அவளைத் தசைத் திரளென்று கிம்புட்பறவை ஒன்று எடுத்துச் சென்று விபுலகிரியில் வைக்க, நீ அங்கே உதித்து வளர்ந்து கற்றுத் தேர்ந்து உன் மாமன் விக்கிரனால் ஏயர்குலத்திற்குரிய இறைமை பெற்று அரசாட்சி செய்துகொண்டிருந்தாய். அப்போது, இந்நிகழ்ச்சியைச் சிறிதும் அறியாத உன் தந்தை கௌசாம்பி நகரத்தின் அயலதாகிய வனத்தில் உள்ள ஒரு முனிவரை அடைந்து வணங்கித் தன் குறையை விண்ணப்பஞ் செய்தனன். அம்முனிவர் நிகழ்ந்தவற்றையும் நிகழ்வனவற்றையும் தம்முடைய ஞானத்தால் அறிந்து கூறினார். அதனைக் கேட்ட சதானிகன் உன்னையும் உன் தாயையும் கௌசாம்பிக்கு அழைத்துச் சென்று தன்னுடைய அரசாட்சியையும் உன்னிடம் ஒப்பித்துத் துறந்தனன். அப்படியே இப்பொழுதும் ஒரு முனிவரை அடைந்து கேட்பின் எல்லாம் தெரிந்து கொள்ளலாம். யூகி முன் போலவே இறந்து முடிக்குங் காரியம் யாதேனும் இருத்தலும் கூடும். அது விளங்கவில்லை" என்றனன். கேட்ட உதயணன் உண்டாட்டயர்தலுக்கு உடன்பட்டான். தோழரும் உண்டாட்டயர்தல் உறுதியுடைத்து என்றனர். அச்செய்தியை வள்ளுவ முதுமகன் முரசறைந்து நகரத்தார்க்குத் தெரிவித்தனன்.
உடனே மடமொழி மகளிரும் மைந்தரும் வான் பூத் தன்ன அந்நகரம் வறுவிதாகும்படி வேண்டியவற்றைக் கைக்கொண்டு நல்ல நாளிற் புறப்பட்டுத் தேர் முதலியவற்றை ஊர்ந்து ஒரு காலத்தில் இலாவாண நகரின் அயலில் உள்ளதும் தக்கோர் உறையும் தாபதப்பள்ளிகளையும் கற்றோர் உறையும் கடவுட்டானங்களையும், ஆடப்புகுந்தவர் மீளுவதற்குத் துணியாத சுனைகளையும், கோயில்களையும், குரம்பைகளையும் தன்பால் உடையதும், பலா முதலிய பலவகை மரங்கள் கொடிப்பந்தர் முதலியவற்றோடு செறிந்ததுமாகிய மலைச்சாரலை அடைந்தனர். உதயணன் வாசவதத்தை முதலியவர்களோடும் மற்றப் பரிசனங்களோடும் வந்து அங்கே தங்கினன். தூசக்குடிஞை, துலாமண்டபம், பல் காழ்த்திரை, படாகைக்கொட்டில், கூடம் முதலியவற்றை இருபுறத்தும் பெற்றவீதிகளாலும் அங்கங்கேயுள்ள மன்றுகளாலும் வீறெய்தி, இந்திரன் தன்னுடைய நந்தனவனத்தோடும் உரிமையோடும் வந்து தங்கினாற்போன்ற அழகு பெற்று விளங்கியது அப்பாடி. மைந்தரும் மகளிரும் சுனைப்பூக் குற்றும், சுள்ளி சூடியும், சுனைப்பூ அணிந்தும், கொடிப்பூக்கொய்தும், மகிழின் வட்டமலர்களைத் தொகுத்தும், அசோகின் செந்தளிர்களாற் கண்ணி கட்டியும், மாலை தொடுத்தும், மலைவளம் புகழ்ந்தும், குரவையாடியும், மயில்களின் ஆடல்களைக் கண்டு உவந்தும், கிளிகளின் மழலைச் சொற்களைக் கேட்டு இன்புற்றும், பல மகளிரின் இடையே களிப்புற்று விளங்கும் அரசர்களைப்போலப் பல பிடிகளி னிடையே விளையாடிக்கொண்டு இறுமாந்து நிற்குங் களிற்றினங்களை நோக்கியும், நீர் விளையாடியும், தினைக் கொல்லைகளிலும் சுனையைச் சூழ்ந்த பாறைகளிலும் மிக உயர்ந்த மரங்கள் செறிந்த காடுகளிலும் பூஞ்சோலைகளிலும் கொடிவீடுகளிலும் மாறாத்தானை மன்னனை வழுத்தி ஆறாக் காதலொடு திளைத்தும், அமையாதவர்களாகி ஆடியும், பாடியும் கூடியும், பிரிந்தும், ஊடியும் உணர்ந்தும், ஓடியும் ஒளித்தும், நாடியும் நயந்தும், நலம் பாராட்டியும் விளையாடி இன்புறுவாராயினர்.
இங்ஙனம் இரு பாலார்களும் அன்புற்று அம்மலைச் சாரலில் விளையாடிக்கொண் டிருக்கையில், ஐம்பெருங் குழுவினரும் எண்பேராயத்தாரும் உதயணனுக்கு அங்கங்கேயுள்ள இனிய காட்சிகளைக் காட்டிக்கொண்டு சென்று, அவனைத் தொடர்ந்துவரும் உரிமைச்சுற்றத்தாரைப் பின்னே வரும்படி செய்து அவர்களுக்குத் தக்க பாதுகாப்பை அமைத்துவிட்டுப் பண்டை நூற்பொருள்களை அறிந்து பிறர்க்கும் அறிவித்துத் தவம் செய்து விளங்கும் ஒரு முனிவருடைய தவப்பள்ளியாகிய சோலை ஒன்றை அடைந்தார்கள். முக்குற்றங்களையும் நீக்கிய பெரியோர் தங்கியிருத்தலின் துட்ட விலங்குகள் முதலியவற்றால் உண்டாகும் அச்சத்திற்கு அதிற் சிறிதும் இடமில்லை. காவலையே வேண்டாதது அது. மேலும் மிகுந்த வளத்தை உடையதாகி ஐந்திணை மரங்களும் பைந்தளிர்க் கொடிகளும் நெருங்கப்பெற்று வெப்பம்நீங்கி, நீருட் புகுந்தாற்போன்ற தண்மையுற்று, ஊரின் உள்ளிடத்தைப் போன்ற விரிந்த இடங்களை உடையதாய் மலர்த் தவிசு அடுத்துத் தளிர்க்குடை ஓங்கிப் பூங்குலைக் கவரி புடைபுடை வீசி மிஞிறும் சுரும்பும் வண்டும் தும்பியும் குயிலும் பாடும் மழலையும் பாடலாற் கேட்போருடைய மனத்தை வயப்படுத்துவதாகிப் பிறர்க்குக் கொடுக்கக் கருதித் தாங்கி வைத்திருந்தாற்போலவே தோற்றும்படி அமுதமயமான கனிகளை ஏந்திப் பயனுள்ள மரங்களையே முற்றும் பெற்று விளங்குவது அச்சோலை.
அவர்கள், அதன் புறத்தை அடைந்து, "உதயணன் ஒரு காரியத்தைக் கருதித் தரிசிக்க வந்திருக்கின்றனன்" என்பதை அம் முனிவருக்கு முறைப்படியே சொல்லி விடுத்தனர். முனிவர் அவனுடைய பெருங்குலப் பிறப்பையும் அரும்பொருள் வகையையும் மன்னுயிரைத் தன்னுயிர் போலவே எண்ணிப் பாதுகாக்கும் கடப்பாட்டையும் மதித்து அவனைக் காணுதற்கு விரும்பி, இந்திரனை எதிர் கொள்ளும் தெய்வ முனிவரைப்போலவே முறைப்படி வரவேற்று, அசோக மரத்தின் அணிநிழலில் மணலின்மீது கிடந்துள்ள பலவகைப்பட்ட மலர்த் தொகுதியாகிய இயற்றாத் தவிசில் இருக்கும்படி கையாற் குறிப்பித்தனர். அவன் அந்த முனிவரை வணங்கி அவர் காட்டிய இடத்தில் இருந்தனன். இருந்தவன் பின்னர் அம்மரத்தின் அடியைச் சார்ந்து யூகியையே நினைந்து கவலை கொண்டிருந்தான். இருக்கையில், அவன் பிடித்திருந்த வெள்ளைப்பூ ஒன்று கையினின்றும் நழுவிக் காலின்கீழே வீழ்ந்தது. அவற்றை யெல்லாம் அறிந்த முனிவர், நிமித்தப் பயனை அறிந்து சொல்லுவதில் மிக்க வல்லுநராதலின் அவனை நோக்கி, "அரச! நீ பசுமரத்தைச் சார்ந்திருந்தமையால், அது நின் உயிர்த்தோழன் உயிரோடிருத்தலையும் அவன் பின்பு வந்து உன்னை அடைதலையும் நன்கு புலப்படுத்தும். இது தவறாது; தெளிவாயாக. பிடித்த வெண்பூவின் வீழ்ச்சி நீ இப்போது அநுபவிக்கும் போகத்திற்கு இடையூறு உண்டென்பதை அறிவியா நிற்கும். அந்தப்பூ வேறிடம் செல்லாமல் உன் காலின் கீழிடத்தை அடைந்தமையால் அந்தப் போகத்தை மீட்டும் அடைவை. நீ பூமியின்மேல் இருந்தமையால் நின் தலைநகரத்தையும் நாட்டையும் பெற்று அரச உரிமையையும் அடைவை. சிறிதும் ஐயமில்லை. பிற்காலத்தில் உனக்குச் சாரணனுடைய உபதேசமும் உண்டு. உன்னுடைய ஆயுள் நாளின் அளவு இத்துணையாகும்" என்று கூறினர். உதயணன், "இவருடைய அருள்மொழி நிச்சயமாகவே இருத்தல் கூடும்" என்று எண்ணி யூகியை அடைந்தவன் போன்றவனாகி வணங்கி அவரிடம் விடை பெற்றுப் புறம்போந்து வாசவதத்தையை அடைந்து அவளுடன் அங்கே தனக்கு அமைக்கப்பட்டிருக்கும் பட மாடத்தில் உறைபவனாயினன்.
அங்ஙனம் உறைந்த உதயணன், ஒருவாறு கவலை தீர்ந்து வாசவதத்தையுடன் சென்று கான்யாற்றுக் கடும்புனலாடியும்;பலநிற மலர்கள் பூத்து, மேல் மூடியைத் திறந்த ஆபரணப் பெட்டிபோலத் தோன்றும் குறுவாய்ச் சுனைநீரில் முழவொலியைப் பிறப்பித்து அத்தாளத்திற் கேற்பப் பாடியும்; காட்டிலுள்ள அரமகளிர்போன்றவரும் குழையர், கோதையர், இழையர், இணர்த்தழையர், தாரினர்களுமாகிய பலவகை மகளிர்களின் இடையே நின்று அவர்களுடைய ஆடலைக் கண்டும்; பாடல்களைக் கேட்டு இன்புற்றும்; பாறையாகிய உரலில் ஐவனநெல்லைச் சொரிந்து யானைக் கொம்பாகிய உலக்கையால் தம் ஐயருடைய இயல்புகளைப் புகழ்ந்துகொண்டு பாசவல் இடிக்கும் வேட மகளிருடைய அம்மனை, வள்ளைப்பாட்டைக் கேட்டும்; அருவியாடியும்; சுனை விளையாடியும்; பூங்குழைமகளிர் பொன்வள்ளத்தேந்திய தேறலையும் மதுவையும் உண்டும்; ஓர் உயிரை உடைய இரு தலைப் புள்ளைப்போல் ஒட்டி இன்புற்றும்; அம்மலைச் சாரலில் உண்டாட்டயர்ந்தனன்.
உடன்வந்த மகளிர், வெண்முத்தங்களாற் சிற்றில் இழைத்தும், கோங்கம் பூக்களைப் பறித்து இவை பொற் பணியென்று பாவைகளின் தலையில் வைத்தும், அசோகஞ்சினைகளிற் கட்டப்பட்டிருக்கும் தழைக்கயிற்று ஊஞ்சல்களில் இருந்து ஆடியும், முல்லைப் போதுகளைப் பறித்துக் கத்திகை கொடுத்தும், பித்திகை பிணைத்தும், தளிர்களைக் கையிற்கொண்டு பல விசித்திர வடிவங்கள் தோன்றும்படி கிள்ளியும், சண்பகச் சோலை அடைந்து தழை உடைகளை அமைத்தும், வாசவதத்தையின் செல்வத்தையும் சிறப்பையும் பாடிக்கொண்டே குராமரத்தின் நிழலில் வளைகள் ஒலிப்ப மறலிக் குறவையாடியும், பந்தாடியும், பாவை புனைந்தும், தளிர்ப்படுக்கையின்மேலே கண்படை கொண்டும், பானவகைகளை உண்டும் விளையாடினர். மற்றையோர்களும் தத்தமக்கு இயன்றவண்ணம் இப்படியே விளையாடிக் களித்து இன்புற்றனர்.
இங்ஙனம் உண்டாட்டயரும் நாட்களில் ஒரு நாள், யாத்திரை செய்பவர்கள் வந்து தங்கும் கொட்டில்களையும் கொடிப்பந்தர்களையும் பின்னும் இலைபோன்ற இனிய பல இடங்களையும் உடையதாய்க் காண்பானாயின் இந்திரனும் வேறிடம் செல்லத் துணியாத மிக்க அழகைப் பெற்று, இனிய பழமரங்களையும் நறுவிய பூமரங்களையுந் தன்பால் கொண்டு மயில் முதலிய பறவைகளின் செறிவை உடையதாய் என்றும் நலிவோர் இல்லாமையால் உயிர்த்தொகுதிகள் கவலையின்றி வாழும் பொலிவை உடையதாய் விளங்கும் பொழில் ஒன்றில் மரவுரி உடுக்கையும் சிவந்த சடையையும் உண்மை ஞானத்தையும் விரதத்தையும் உடைய முனிவர் ஒருவர் தவஞ்செய்யும் ஆச்சிரமத்தை அடைந்து அசோக மரத்தின் நிழலில் மணற்பரப்பில், உதயணன் வயந்தகனுடன் இருந்தான்.
இருந்தபொழுது அவனிடம் விடைபெற்று வாசவதத்தை காஞ்சனையோடு சோலை வளங் காணுதற்குச் சென்றாள். ஏவலாளர்களும் ஒவ்வொரு காரியத்தை முன்னிட்டு வேறு வேறிடங்கள் சென்றனர். அரசாட்சி யைத் துறந்து மனைவியுடன் வந்து அங்கே தவம் செய்து கொண்டிருக்கும் ஓர் அரசமுனிவருடைய புத்திரியும் பேரழகினளுமாகிய விரிசிகையென்னும் பெயருடைய சிறு பிராயத்தாள் ஒருத்தி அங்கே இருந்தனள். அவள் முனிவர்களை அன்றி வேறு ஆடவர்கள் யாரையும் கண்டறியாதவள். அவள் உதயணனைக் கண்டு, "இவன் காமன்" என்று எண்ணிக் காதல்கொண்டு தான் வைத்திருந்த பாவை பந்துகளை ஓரிடத்தே வைத்துவிட்டு மெல்லச் சென்று நந்தியாவர்த்தம், நாகம், சிந்துவாரம், சேபாலிகை, குருக் கத்தி, சுள்ளி, சிறுசேடம், சண்பகம் ஆகிய இவற்றின் பூக்களைப் பறித்துத் தன் குடங்கையில் அடக்கிக்கொண்டு வந்து உதயணனை அடைந்து, "ஐயா! இம்மலர்களைப் பிணையல்களாகத் தொடுத்து ஈமின்; ஈந்தாற் பாவையும்யானும் அணிந்துகொள்வோம்" என்று சொல்லி இரந்து அம்மலர்களை நீட்டினள். அவன் அவளைப் பார்த்து, "இத் தவவனத்தில் உறையுந் திருமகளோ இவள்?" என்று முதலில் எண்னி, அவளுடைய கண்களின் இமைகள் ஆடுதலையும் அணிந்தமாலைகள் வாடுதலையும் கண்டு, "இவள் முனிவர் மகளே" என்று தெளிந்து தெய்வத் திகிரியையுடைய அரசர் மகளிர்க்குரிய சிறந்த இலக்கணங்களை அவள்பால் கண்டு யாழ்நரம்பை வருடுதலாலும் படைக் கலங்களைப் பகைவர்மேற் செலுத்துதலாலும் தழும்புபட்டுத் திருந்திய அங்கையால் தன் மேலாடையை விரித்து அதில் அம்மலர்களை வாங்கிப் பல நிறமுள்ள மணிகள் நிறம் மாறுபட அழுத்தப்பெற்ற இரத்தினமாலைபோலத் தோற்றும்படி பல வகை நிறமுள்ள அம்மலர்களை உரிய இடங்களில் வைத்துப் பலவகை மாலைகள் கட்டி அவளுக்குக் கொடுக்க, அவள் அம்மாலையைத் தக்கவாறு அணிந்து கொள்ளுதற்கு அறியாதவளாகி வருந்தி அலமந்தனள். அதனை அறிந்த அவன், "இங்கே வா" என்று அழைத்து அவளைத் தன் மடிமேல் வைத்து அவற்றை அவள் உச்சியிலும் தலைப்பக்கத்திலும் மயிர் முடியிலும் அலங்காரமாகப் புனைந்து பாராட்டி, "மெல்லச் செல்" என்று விடுக்க அவள் சென்றாள்.
உதயணனை விட்டுப் பிரிந்த சில நேரத்தை ஒரு வருடமாக நினைந்து அவன் பிரிவாற்றாமையால் வருந்தித் தழைகளையும் கண்ணிகளையும் ஏந்திக்கொண்டு நற்பூங் கொம்பர் நடைபெற்றாங்கு நடந்து விரைந்து வரும் வாசவதத்தை, தன்முன் வரும் விரிசிகையையும் அவள் கூந்தலில் அணியப்பட்டிருக்கும் மாலைகளையுங் கண்டு அம்மாலைகள் உதயணனால் தொடுத்துச் சூட்டப்பட்டன என்பதை அறிந்து சினந்து கண்களினின்றும் வெய்ய நீர்த்துளிகளைச் சிந்திக் கையிலிருந்த கண்ணிகளையும் தழைகளையும் எறிந்துவிட்டு, "கிடைத்த தாமரைப் பூவிலுள்ள தேனை உண்பதற்குச் செல்லும் வண்டைப் போல்வார் ஆடவர் என்பதை இன்று கண்கூடாகக் கண்டேன்." என்று கடுஞ் சினம்கொண்டு, உடன்வரும் சாங்கியத்தாயையும் காஞ்சனையையும் நோக்கி, " என் தந்தையின் அணி நகரத்திற்கு என்னை அனுப்பிவிடுங்கள்" என்று சொல்லித் தன்னுடைய கோலங்களைச் சிதைத்துக்கொண்டே அச்சோலையின் ஒரு பக்கத்தே செல்வாளாயினள். அதனைக் காஞ்சனையால் அறிந்த உதயணன் அச்சமுற்றுச் சென்று அவளைத் தழுவி அவளுடைய முடியணிகளைத் திருத்தியும்; பாத கிண்கிணியைத் துடைத்தும் துகள்போக்கியும், கூந்தல் அணிகளைப் புனைந்தும், வளைகலைக் கையில் ஏற்றியும், கண்ணீர்த்துளிகளைத் துடைத்தும் காதணிகளைச் சரியாக அணிந்தும், புதுத் தளிர்களைக் கையிற் கொடுத்தும், புறத்தைத் தைவந்தும், '*நீ இங்ஙனம் கோபிப்பாயாயின் அன் உயிருக்குப் பெருந் தீங்கு விளைத்தாயாவாய்' என்று கூறியும் பலவாறு தேற்றினான். தேற்றவும் அவள் சிறிதும் ஊடல் தணியாமற் கடுஞ்சினத்தோடே இருந்தனள். அப்போது அம் மலைச்சாரலிலுள்ள ஒரு பலாமரத்திலிருந்த ஆண் குரங்கொன்று திடீரென்று குதித்து வந்தது. அதனைக் கண்ட வாசவதத்தை அஞ்சி நடுநடுங்கி விரைந்து அவனைத் தழுவிக்கொண்டனள். அவன் மனம் உவந்து வேறு யாதொரு கவலையும் இல்லாதவனாகி அக்கணத்தில் அவளுடன் காலத்தை இனிது கழிப்பானாயினன்.
இலாவாணநகரினது புறத்தே ஒடுங்கியிருந்த யூகி அந்நகரத்திலுள்ள அரண்மனைக்கும் தான் இருக்கும் இடத்திற்கும் பிறர் அறியாமல் ஒரு சுருங்கை வழியை இயற்றுவித்துப் பின் செய்ய வேண்டுவனவற்றை உருமண்ணுவாவிற்கும் வயந்தகனுக்கும் உணர்த்தினன். அவர்கள் அவன் கூறியதைச் சாங்கியத்தாய்க்குத் தெரிவித்தனர். சாங்கியத்தாய் உதயணனை அடைந்து, "அரசே, கொடிய விலங்குகள் உலாவும் மலைச்சாரலில் இருந்தால் ஒரு சமயம் யாதேனும் ஒன்றால் வாசவதத்தை அச்சம் அடையக்கூடும். ஆதலால் இனிமேல் இலாவாண நகரத்துள்ள அரண்மனைச் சார்ந்திருத்தல் நலமாகும்" என்றனள். உதயணன் அதனை அங்கீகரித்து வாசவதத்தையோடும் புறப்பட்டு அந் நரத்தை அடைந்து அரண்மனையில் வாழ்வானாயினன். இங்ஙனம் சில நாட்கள் சென்றன.
இப்படியிருக்கையில் தோழர்கள் உதயணனை நோக்கி, "ஒரு காரியமும் இல்லாமல் சும்மா இருந்தால் திருமகள் நம்மை வெறுப்பாள். ஆதலால் எங்கேனும் சென்று வர வேண்டும்" என்று கூறினார். கேட்ட உதயணன் வாசவதத்தையின் பிரிவிற்கு அஞ்சி அதற்கு உடன்படவில்லை. சில தினம் சென்றபின் பிரிதற்குரிய ஊழ்வினை வந்தமையால், அரசனை நோக்கி வாசவதத்தை, "அடிகளே, வேட்டஞ் சென்று அரும்பு, மலர், தளிர் என்பவற்றாற் கண்ணி கட்டி எனக்குத் தந்தருளுக" என்று வேண்டினள். அதுசெய்தற்கு விரும்பிய உதயணன் மறுநாள் காலையிற் பரிமா ஊர்ந்து காட்டிற்குச் சென்றனன்; மந்திரிகள் தாம் எண்ணியதை நிறைவேற்றுதற்கு அது நல்ல சமயம் என்று நினைத்து, "அரசன் காம இன்பத்தையே விரும்பி ஊக்கம் இலனாயினானென்று வேடர்கள் ஊரைச் சுடுதற்கு வந்து சூழ்ந்துகொண்டனர்" என்ற பேச்சை எங்கும் பரவச்செய்து ஏவலாளர்களைக்கொண்டு அரண்மனையின் நாற்புறத்தையும் தீக்கு இரையாக்கி அந்தப்புரத்திற் சென்று, வெளியே புறப்பட்டுச் செல்லுதற்கு முடியாமல் தவித்து அலமந்து நிற்கும் வாசவதத்தையையும் சாங்கியத் தாயையுங் கண்டு, " இந்தச் சுருங்கை வழியாகச் செல்லுங்கள்" என்று அவர்களை அனுப்பிவிட்டு அவர்கள் இருந்த இடத்திற் கொலைசிறையாளர் இருவரை வலிந்து புகுத்தி வாசவதத்தையின் அடிக்கலமுதல் தலைக்கலம் இறுதியாக உள்ள ஆபரணங்களை எல்லாம் ஓரிடத்திற் சிதறிவைத் தார்கள். அரண்மனையின் நாற்புறத்தையும் தீக்கிறையாக்கிய கருமக் கள்வரைத் தாக்க்கிக்கொண்டே உருமண்ணுவா ஒருபாற் செல்வானாயினன்.
அப்போது சாங்கியத்தாய் வெய்துயிர்த்து நடுங்கும் வாசவதத்தையை சுருங்கை வழியே அழைத்துகொண்டு யூகி இருக்கும் இடம்சென்றாள். செல்லுகையில் வாசவதத்தையை நோக்கி அவள்,"நீ சிறிதும் அஞ்சாதே. உன்னுடைய உயிர்த்துணைவனுக்கு ஆக்கமளிக்க விரும்பி அவனுடைய உயிர் நண்பனாகிய யூகி செய்த மாயச் சூழ்ச்சியாகும் இது" என்று கூறினள். அந்தச் சமயத்தில் யூகி, தான் எண்ணியது முடிந்ததென்று புன்முறுவல் கொண்டு அங்கே வந்து வணங்கி, "தாயே! மறமாச்சேனன் காதல் மகளே! கேட்டருள்க; உன்னுடைய தந்தை சேனைகளின் இடையே உதயணனைச் சிறைப்படுத்தித் தளையிட்டமையால் பாஞ்சாலராயன் கௌசாம்பி நகரத்தைக் கைப்பற்றிக்கொண்டான். பிங்கல கடகர் அஞ்சியோடினர். அவற்றை அறியாத உன் தலைவன் யாதொன்றையும் நினைத்தலின்றிக் கவலையற்று உன்னுடன் இடைவிடாமல் உறைவானாயினன். பகைவனைக் கொன்று உன் தலைவனை நல்ல பதவியில் நிறுத்த வேண்டுமாயின் நீ சில நாள் பிரிந்திருக்க வேண்டுவதே, ஆதலால், உங்கள் குடிக்கு வந்த சிறுசொல் நீங்கும்படி ஆவதைச் சொல்லும் உயிர் போன்ற என்னை நோக்கியும், நின் குலத்தை நோக்கியும் தலைவன் தன் தலைமையினின்றும் வழுவிய நிலைமையை நோக்கியும், நிலம் புடை பெயரினும் விசும்பு வந்திழியினும் சிறிதும் கலங்காத நின் கடவுட் கற்பை நோக்கியும், இந்த வரத்தை அருளிச் செய்ய வேண்டும்" என்று மிகவும் இரந்து வேண்டினன்.
வாசவதத்தை, "நம்முடைய அரசர்பிரானுக்கு இயைந்த நூல் வல்லாளர்களாகிய மந்திரிகள் நால்வருள் யூகி இறந்தனன்; இவன் யாரோ?" என்று எண்ணிக் கவலையுற்று விரைந்து விடைகொடாமல் ஆராய்வாளாயினள். அவளுடைய நிலைமையை அறிந்த சாங்கியத் தாய், "இவன் யூகியே. அரசன் கவலையற்றிருப்பதை மாற்றுவதற்கே தான் இறந்துவிட்டதாகப் பெயர் பண்ணிவிட்டு இவன் இங்கே வந்திருக்கிறான். நீ கவலையை விட்டுவிடு" என்று தெரிவிக்கவே அவள் தேறினள். யூகி கூறிய நியாயங்களை யெல்லாம் உட்கொண்டவளாயினும் அவள் உதயணன் பிரிவை நினைந்து வருந்திப் பின்பு, "இவன் எண்ணியது உறுதி பயப்பதாகும்" என்று துணிந்து, "என் இறைவன், முன் மாய யானையாற் சிறைப் பட்டபொழுது அவனை மீட்பதற்கு மாய இறுதி வல்லையாகிய நீதியாள! நீ வேண்டியதைச் செய்வாயாக" என்று அவனுக்கு உபசார மொழிகளைக் கூறி ஒருவாறு கவலை யொழிந்திருந்தனள்.
வாசவதத்தையின் பிரிவால் அரசன் தீங்கில்லாமல் இருத்தலை அறிந்து கொள்ளும் வரையில் அவ்விடத்திலேயே இருத்தற்கு நிச்சயித்துக் கொண்டு யூகி அவ் விருவரோடும் மேலே ஆக வேண்டிய காரியங்களைப் பற்றி ஆராய்பவனாகி அவர்களுடன் அங்கே இருந்தான். இது நிற்க;
உதயணகுமரன் வாசவதத்தை விரும்பியபடியே தழையும், தாரும், கண்ணியும், பிணையலும் கைக்கொண்டு குதிரையை ஊர்ந்து அவளைக் காண விரைந்து வருகையில் இடக்கண் ஆடியது. இடத்தோள் அசைந்தது. பின்னும் சில துர்நிமித்தங்களும் தீய சகுனங்களும் தோன்றின. அவற்றின் பயனை ஆராய்ந்து பார்க்கையில், "உயிர்க்கிழத்தி நீங்கினள்; இங்கே இலள்; அவளைக் காணாத வருத்தத்தால் தோழர்களோடு தான் சிலகாலம் புறத்தே இயங்குதல் கூடும்" என்பது தெரியவந்தது. அதனால் மிக்க கவலையுற்று வரும் அவன், எதிரே பெரும் புகையின் எழுச்சியைக் கண்டு மிகவும் விரைந்து வருகையில், வாசவதத்தை இருந்த இடத்திலும் நெருப்புப் பரவித் தோன்றக் கண்டான். கண்டு ஊக்கங் குன்றியவனாகிச் செல்லும் பொழுது தனக்கு ஒரு சோர்வும் நேராதபடி உரு மண்ணுவாவும் வயந்தகனும் மாய மள்ளரைக் கூட்டத் தோடு துரத்தி அடிப்பவர்களாகித் தன் வரவு பார்த்துக் கொண்டு எதிரே நிற்பதைக் கண்டனன். அப்போது, காஞ்சனமாலை,
"நாவலந் தண்பொழி னண்ணா ரோட்டிய
காவலன் மகளே ! கனங்குழை மடவோய் !
மண்விளக் காகி வரத்தின் வந்தோய் !
பெண்விளக் காகிய பெறலரும் பேதாய் !
பொன்னே ! திருவே ! அன்னே ! அரிவாய் !
நங்காய் ! நல்லாய் ! கொங்கார் கோதாய் !
வீணைக் கிழத்தீ! வித்தக வுருவீ!
தேனேர் கிளவீ! சிறுமுதுக் குறைவீ!
உதையண குமர னுயிர்த்துணைத் தேவீ!
புதையழ லகவயிற் புக்க னையோ!" (2.18:76-85)
என்று காட்டுத் தீயின் இடையே அகப்பட்டு வருந்தும் மயிலைப்போல இடைவிடாமற் புலம்பி அலமந்து வீழ்ந்து புரண்டு புரண்டு அழுதலை அவன் பார்த்தனன். பார்த்து வாசவதத்தைக்கு ஏதோ ஒரு துன்பம் வந்துவிட்ட தென்று நிச்சயித்து அறிவு மயங்கிச் சோர்ந்து பொறியற்ற பாவைபோலக் குதிரையினின்றும் திடீரென்று நிலத்தில் வீழ்ந்தனன். வீழ்ந்து அறிவற்றுக் கிடக்கும் அரசனைத் தோழர் அணுகி மூர்ச்சையை மாற்றுதற்குரிய பொருள்களைக் கொண்டு மாற்ற, எழுமையுந் தொடர்ந்த அன் புடைய அவளை நினைந்து அரற்றிக்கொண்டே அவன் எழுந்தான். எழுந்தவனை அவர்கள் சூழ்ந்து பல வகையான சமாதானங்களைச் சொல்லித் தேற்றவும் அவன் தேறாமல், "என் உயிர்த்துணைவி மூழ்கிய தீயில் யானும் புகுவேன்" என்று அத்தீயிற் புகுவானாயினன். அப்போது தோழர், "உன்னுடைய பகைவர் மகிழும்படி நீ இங்ஙனம் எண்ணுதல் மிகவும் தவறாகும்; 'யூகி இல்லாவிடின் உதயணனுக்கு யாதும் செயலில்லை' என்று அறிவிலார் சொல்லுஞ் சொல் எங்கள் மனத்தைச் சுடா நிற்கும். அதனை நீ அறிந்து உன் குலத்தைத் தாங்குதல் நன்று" என்று விலக்க, கடல் கரையைக் கடவாததுபோல அவன் தோழர்கள் வார்த்தையைக் கடவானாகி, "என் உயிர்த்துணைவியின் உடம்பைப் பார்க்க வேண்டும்; ஆதலால் விரைந்து நெருப்பை அவித்து அதனைக் காட்டுமின்" என்றனன்.
அவர்கள், "அரசர் கரிப்பிணத்தைக் காண்பது மரபன்று" என்று வற்புறுத்தவும் அவன் தடைப்படாமற் காண்பதையே விரும்பித் துன்புற்றனன். "நம்முடைய பெருந்தேவி உயிர் நீங்கும்படி இவர் பார்த்திராரென்று அரசன் எண்ணுவானாயின், அது நாம் எண்ணிய காரியத்திற்கு மிக்க இடையூறாகும்" என்று தோழர் அவனை அழைத்துக்கொண்டு ஒருவகையாகப் பள்ளிப்பேரறை சென்று அங்கே அமைக்கப்பட்டுள்ள சுருங்கை அவனுக்குத் தோன்றாதபடி அதன் வாயிலை நன்றாக முதலில் மறைத்துவிட்டு அங்கே கரிந்து கிடந்த இரண்டு குறைப் பிணங்களைக் காட்டி, "சாங்கியத்தாயும் தத்தையும் இறந்தமை பொய்யன்று; உண்மையே!" என்று அவன் மனங்கொள்ளச் செய்து அங்கங்கே சிதறுண்டு கிடந்தனவும் தீயில் மூழ்கினமையால் ஒளிவிட்டு விளங்குவனவுமாகிய அவளுடைய ஆபரணங்களைப் பொறுக்கிவந்து அவனுக்கு முன்னே இட்டனர். பொன்னரிமாலை, நெற்றிப்பட்டம், திலகம், செவியணி, பொற்கொடி, இலைப்பெரும்பூண், இதயவாசனை, களிகை, முத்தாரம், பன்மணிப்பூண், சின்மணித்தாலி, முத்தணிவடம், சித்திரவுத்தி, நாண், தொடர், தோளணி, இடையனி, விரலணி முதலிய அணிகலங்களுள் ஒவ்வொன்றையும் அவன் தனித்தனியே எடுத்தெடுத்துப் பார்த்துப் பார்த்து விளித்து விளித்துப் பலவாறு புலம்பி அரற்றினன்.
பின்பு அவனுடைய மெலிவையும் கவலையையும் அறிந்த மந்திரிமார், "இவன் சோர்வை அறிந்து பாஞ்சாலராயன் போர் செய்வதற்கு வருவானாயின் இந்நகரத்துள்ளே வரவிடாமல் தடுத்துவிடுக" என்று சொல்லிச் சதுரங்கப் படைகளுடன் வீரர்களை அந்நகரத்தைச் சூழ அமைத்து அவர்களுக்கும் சேனைகளுக்கும் வேண்டிய போர்க்கருவிகளையும் அளித்து, உணவுப் பொருள்களையும் அங்கங்கே நிரம்ப வைத்ததன்றி பெரும்படைகளைத் திசைதோறும் அனுப்பிப் பாதுகாக்கும்படி செய்வித்து உதயணனுக்கும் அதனைத் தெரிவித்து அவனது துன்பத்தை ஒருவாறு தீர்த்து வருவாராயிருந்தனர். பின்னும் அவர்கள் காமத்தால் உண்டாகும் தீங்குகளைப் பலவாறு எடுத்தெடுத்து உரைத்து அவனுடைய வருத்தத்தைப் போக்க, அவன் ஆறுதலுற்றிருந்தனன்.
அதனை அறிந்த தோழர், "அரசனுக்கு யாதொரு தீங்கும் இல்லை. இனி வேறிடத்திற்கு செல்லுதல் நலம்" என்று யூகிக்குத் தெரிவிக்க, அவன் வாசவதத்தைக்கு அச் செய்தியைத் தெரிவித்தனன். அவள் மந்திரத்தாற் பிணிப்புண்ட நாககன்னிகைபோல யூகியினுடைய நீதிமொழியாற் பிணிப்புண்டவளாகித் தன்னுடைய குறையை வெளிப்படுத்தாமல் தலைவன் ஆக்கமடைதலையே பெரும் பயனாக நினைந்து ஆறுதலுற்றனள். பின்பு அம் மூவரும் உடம்பை வேறுபடுத்துவதாகிய மருந்தொன்றால் வேறு நிறம்பெற்று அந்தண வடிவங்கொண்டு மெல்லப் புறப்பட்டு ஒரு மலையைச் சார்ந்து அங்கே தவம் செய்துகொண்டிருந்த உருமண்ணுவாவின் தந்தையாகிய முனிவனை அடைந்து தாம் இன்னாரென்பதை அவனுக்கு புலப்படுத்தாமல் ஆகவேண்டியவற்றை அவனிடஞ் சொல்லி மிக அணுகாமலும் மிக அகலாமலும் அவனது தவப்பள்ளியில் தங்கியிருந்தனர்.
வாசவதத்தையின் பிரிவாற்றாமல் வருந்துகின்ற காஞ்சனைக்குத் தாம் எண்ணிய காரியத்தை உருமண்ணுவா மந்தணமாகத் தெரிவித்துத் தேற்றி அவளை அழைத்து வந்து வாசவதத்தையிடம் சேர்ப்பித்துவிட்டுச் சென்றனன். அவள் வாசவதத்தையைத் தேற்றுவித்து அவளுடன் இருந்தனள். இருக்கும் நாட்களில் ஒரு நாள் அந் நால்வரும், "நாம் இங்கே இருத்தலை அயலார் அறியின், நம்முடைய காரியம் பழுதுபடும்" என்று எண்ணி, "இனி யாம் இருத்தற்குரிய இடம் யாது?" என்று ஆலோசித்து ஒருவருக்குந் தெரியாமல் புறப்பட்டுச் சென்று உருமண்ணுவாவின் தந்தையின் தோழனும் உக்கிர குலத்திற் பிறந்தவனுமாகிய விசயவரனென்னும் அரசனுடைய இராசதானியும் அங்க நாட்டில் உள்ளதுமான சண்பையென்னும் பெருநகரத்தில் வாழும் பெருஞ் செல்வவானாகிய மித்திரகாமனென்னும் வணிகர்பெருமானுடைய வீட்டில் தங்கிக் காலம் கழிப்பாராயினர்.
-------------------
3. மகத காண்டம்
ஏயர் குலத்திற்குப் பழம்பகைவனும் அதுபற்றியே கௌசாம்பி நகரத்தை கைப்பற்றியவனுமாகிய பாஞ்சால அரசன், யூகி இறந்த செய்தியையும் வாசவதத்தையை இழந்தமையால் உதயணன் மெலிவுற்றிருத்தலையும் அறிந்து அப்பால் தனக்கு யாதொரு தீங்கும் உண்டாக மாட்டாதென்று எண்ணிக் கௌசாம்பிநகரத்தைப் பாதுகாவாமல் செல்வக்களிப்பால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருந்தனன். அதனை அறிந்த உருமண் ணுவா முதலியோர், "இனி மகத மன்னனோடு நட்புப்பூண்டு அவனுடைய படைகளையும் சேர்த்துக்கொண்டு பகைவனை வெல்ல வேண்டும்." என்று உதயணனுக்குக் கூறினர். அவன், "யூகி முதலியவரை இழந்தபின்பு எனக்கு வேண்டுவது யாது? என்று மறுத்தனன். நாளுக்கு நாள் உதயணனுடைய உடம்பு மெலிவுற்றது. அப்பொழுது தோழர், "சிறந்த வித்தையில் வல்லவனாகிய இலாமயனென்னும் ஒரு முனிவன் இருந்த வனங்கூடத் தீயால் வெந்துவிட்டது" என்று எடுத்துக் கூறி, "தீயால் துன்பமுறுதல் யாவராலும் விலக்கற் பாலதன்று" என்று தேற்றிக்கொண் டிருந்தனர்.
அங்ஙனம் இருக்கையில் பார்ப்பனத் தோழனாகிய இசைச்சனென்பவன், "யான் கூறுவதைக் கேட்டிடுக; மந்திரத்தால் முடியாத காரியம் யாதும் இல்லை. வாசவதத்தை இறந்து வேறு பிறப்பை அடைந்திருப்பினும் பழைய உருவத்தோடு அவளைத் தருவதற்கு உரித்தான மந்திரம் ஒன்று உண்டு. அதனைக் கற்று வல்லோனாகிய அந்தணன் ஒருவன் இராசகிரியமென்னும் நகரத்தின்பால் உள்ளான். அவனை அடைந்து வழிபாடாற்றி வேண்டின், வாசவதத்தையை யாம் பெறுதல் எளியதாகும்" என்று கூறினன். கேட்ட உதயணன், "அங்ஙனம் செய்யும் மந்திரமும் உண்டோ?" என்று வியந்து, தலையெடுப்ப அந்த வழியே இனி முயல வேண்டும் என்று நிச்சயித்து, "இங்ஙனம் பெரியோர் சொல்லக் கேட்டிருக்கிறேன்" என்று இசைச்சன் பின்னும் கூறினன். கேட்ட உதயணன், "இப்பொழுதே அவ்விடத்திற்கு யாம் விரைந்து செல்ல வேண்டும்" என்று சொல்லத் தோழர்கள் அவனைக் கூட்டத்தினின்றும் தனியே பிரித்து அழைத்துக்கொண்டு வந்து மிக்க ஆற்றலையும் கல்வியையும் உடையவர்களாகிய நூறு வீரர்களை வருவித்து வேறு வடிவம் கொள்ளும்படி சொல்ல, அவர்கள் அங்ஙனமே கொண்டனர்.
அரசனும் தாமும் யாத்திரைக்கு ஏற்ற பார்ப்பன வடிவங் கொண்டவர்களாகிப் புறப்பட்டுப் புன்றாளகமென்னும் நாட்டையும் காள வனத்தையும் கடந்து கருப்பாச மென்னும் காட்டாறு ஒன்றைத் தாண்டி அப்பாலுள்ள காட்டின்வழியே சென்றனர்.
அப்போது உதயணன், அங்கே திரியும் கலைமான் பாதுகாப்பப் பெண்மான் மருண்டு நோக்கி நிற்றலைக் கண்டு, வாசவதத்தையின் பார்வையை நினைந்து மனம் புழுங்கி, "பிணையே! என் உயிர்த்துணைவி சென்ற இடத்தை நீ கூறுவாயாயின் யான் அவ்விடம் சென்று உய்வேன்; நீ கூறுக" என்று புலம்பியும் அப்படியே மயில், புறவு, வண்டு, தென்றல் முதலியவற்றைத் தனித்தனியே விளித்து அரற்றிக்கொண்டும் செல்லுதலை அறிந்த தோழர் இரங்கி அவனுடன்,
'துறக்கம் புரியுந் தொல்லையி னியன்றது
பிறப்பற முயலும் பெரியோர் பிறந்தது
சிறப்பிடை யறாத தேசிக முடையது
மறப்பெருந் தகையது மாற்றோ ரில்லது
விறற்புக ழுடையது வீரிய மமைந்தது
உலகிற் கெல்லாந் திலகம் போல்வது
அலகை வேந்த னாணை கேட்பது
அரம்பு மல்லலுங் கரம்பு மில்லது
செல்வப் பெருங்குடி சிறந்தணி பெற்றது
நல்குர வாளரை நாடினு மில்லது
நன்பெரும் புலவர் பண்புளிப் பன்னிய
புகழ்ச்சி முற்றா மகிழ்ச்சியின் மலிந்தது
இன்னவை பிறவு மெண்ணுவரம் பிகந்த
மன்பெருஞ் சிறப்பின் மகதநன் னாடு' (3.3:41.54)
சென்று சார்ந்தனர்.
சார்ந்தவர்கள் அவனுக்கு மிக்க ஆறுதல் சொல்பவர்களாகி அந் நாட்டின் ஐந்திணை வளங்களையும் நோக்கிக் கொண்டே அதன் தலைநகராகிய இராசகிரியத்தை அடைந்து, அதன் அகழி, மதில், பலவகைச் சாதியாருடைய சேரிகள், நால்வகை வருணத்தாருடைய தெருக்கள் முதலியவற்றை எல்லாங் கண்டு மிகவும் உவகையுற்று உள்நகர் சென்றனர். உதயணன் அதன் வளங்களையெல்லாங் கண்டு வாசவதத்தையின் பிரிவு மனத்தை வருத்த மிகுந்த வாட்டமுற்று அவர்களுடன் தங்கினான்; தங்கியவன்,
விழுப்பெருஞ் செல்வமொடு வென்றி தாங்கிய
ஐம்பதி னிரட்டி யவனச் சேரியும்
எண்பதி னிரட்டி யெறிபடைப் பாடியும்
அளப்பருஞ் சிறப்பி னாயிர மாகிய
தலைப்பெருஞ் சேனைத் தமிழச் சேரியும்
கொலைப்பெருங் கடுந்திறற் கொல்லர் சேரியும்
மிலைச்சச் சேரியுந் தலைத்தலை சிறந்து
வித்தக வினைஞர் பத்தியிற் குயிற்றிய
சித்திர சாலையு மொத்தியைந் தோங்கிய
ஒட்டுவினை மாடமுங் கொட்டுவினைக் கொட்டிலும்
தண்ணீர்ப் பந்தருந் தகையமை சாலையும்
அறத்தியல் கொட்டிலு மம்பலக் கூடமும்
மறப்போர்க் கோழி மரபிற் பொருத்தும்
விறற்போ ராடவர் விரும்பிய கண்ணும்
மறக்களி யானை வடிக்கும் வட்டமும்
கடிசெல் புரவி முடுகும் வீதியும்
அடுத்தொலி யறாஅ வரங்கமுங் கழகமும்
அறச்சோற் றட்டிலு மம்பலச் சாலையும்
..............................................................நெருங்கி' (3.4: 7 - 29)
விளங்குவதும் அதன் அயலில் உள்ளதுமான புறநகரத்தில் காமன்கோயிலின் பக்கத்தேஉள்ள பொய்கைக் கரையில் விளங்கும் இளமரக்காவில் இருக்கும் தாபதப் பள்ளி ஒன்றில் அவர்களுடன் தங்கி வாசவதத்தையின் பிரிவாற்றாமல் மிகவும் வருந்துவானாயினன்.
அவன் உயிரைக் காப்பாற்ற நினைந்த தோழர் அங்கேயுள்ள கண்கவர் பேரொளிக் காகதுண்டகரென்னும் ஒரு பெரியவரை அடைந்து தம்முடைய குறைகளையெல்லாம் அவரிடம் விளங்கக் கூறி, உதயணனுக்குத் தைரியம் உண்டாக வேண்டிய வழிகளை இன்ன இன்ன வகையாகச் சொல்ல வேண்டுமென்று சொல்லி உடன்படுவித்து அவரை அழைத்து வந்து அவனுக்குக் காட்டி, " முன்னம் யாம் கூறிய பெரியோர் இவரே" என்றனர். உதயணன் மிகுந்த ஆவலோடு அவர் கூறுவதைக் கேட்பதற்கு விரும்பி அவரை வணங்கினன். அவர் அவனை நோக்கி, "இரண்டு மாதம் விரதத்தோடே நீர் இங்கே இருத்தல் வேண்டும். அப்பால் ஈமத்தில் யாம் செய்ய வேண்டிய சாதனை ஒன்று உண்டு; அது முடிந்தபின் வாசவதத்தை பழைய உருவத்தோடு வருதல் ஒருதலை. உம்முடைய இராச்சியமும் உமக்குக் கிடைக்கும். இதனை நீர் நம்பும் என்று சொல்லிக் கைக்கொள்ள வேண்டிய விரதத்தையும் அதன் விதியையும் தெரிவித்துத் தம்மிடம் சென்றனர்.
கேட்ட உருமண்ணுவா முதலியோர், "நிலத்திற் புகுதலும் விசும்பிற் செல்லுதலும் கடல் நீரை வாய்க்" கொண்டு உமிழ்தலும் மலையை ஏந்துதலும் ஆகிய இவை போன்ற விச்சை பயின்றவர்களைக் கண்கூடாகவே கண்டிருக்கிறோம், செத்தோரை மீட்கும் விச்சையை உடையோரை இதுவரையிற் கேட்டும் அறிந்திலம். பெரும் புண்ணியம் உடையோமாதலின் இவரைக் கண்டோம்.
இவர் வாசவதத்தையை வருவித்து அளித்தல் ஒருதலை" என்று வியப்புற்றுக் கூறியவராகி அரசனைத் தேற்றிப் புறநகரத்தே முன்பு கூறிய இடத்தில் அவனுடன் தங்கினர். "நம் அரசனை மகத மன்னனுக்கு நண்பனாக எப்படியேனும் செய்துவிட வேண்டும்" என்ற ஆலோசனை அவர்களுக்கு மிகுதியாக இருந்தது.
அப்போது அந்நகரில் காமதேவனுக்கு விழா நடந்தது. நடக்கையில் அரசன் கட்டளைப்படி, "பதுமாபதி காமனை வழிபடுதற்கு இன்று செல்வாள்; நகரத்தை அலங்கரித்திடுமின்" என்று வள்ளுவ முதுமகன் முரசறைந்து தெரிவித்தனன். கேட்டவர்கள் அங்கங்கே அலங்காரஞ் செய்வித்தார்கள். திருமகளாயினும் உருவினும் உணர்வினும் ஒப்புமையாற்றாப் பதுமாபதி, நீராடி அலங்காரஞ் செய்துகொண்டு யாப்பியாயினி முதலிய தோழியரும் காஞ்சுகியர் முதலியோரும் சூழ ஒரு வையத்தை ஊர்ந்து செல்லுகையில், அது புறநகரத்தே உள்ள காமன் கோட்டத்து வாயிலில் வந்து நின்றது.
வையம் நின்ற பொழுது அதனை மூடிய திரை காற்றால் விலகியது. விலகவே அதனுள்ளே இருந்த பதுமாபதியை எதிரில் புன்னைமரத்தின் கீழே வாசவதத்தையின் நினைவுடன் இருந்த உதயணன் கண்டான். பதுமாபதியும் அவனைக் கண்டாள்; ஒருவரை ஒருவர் விரும்பி மனம் குழைந்தார்கள். வாசவதத்தைக்கும் அவளுக்கும் வேற்றுமை தோன்றாமையால், "நாம் கருதி வந்த பெரியோர் வாசவதத்தையை மீட்டு அளித்தனரோ?" என்று உதயணன் எண்ணினான்; "இவன், தன்னை வழிபடவந்த எனது நிறையை அளத்தற்கு என் முன்னர்த் தோன்றிய காமதேவனோ?அன்றி அந்தண வடிவத்தோடு தோன்றிய வேறு தேவகுமாரனோ?" என்று பதுமை எண்ணினள். அப்பொழுது தோழி வந்து வணங்கினள். அவள் தோளைப் பற்றிக்கொண்டு வண்டியிலிருந்து இறங்கிய பதுமாபதி, கோயிலினுள்ளே சென்று காமதேவனுடைய மாடத்தை வலம்வந்து, விதிப்படி தானங்களைச் செய்து நோன்பியற்றத் தொடங்கினள். தொடங்கினவள், தன் முன்னே நின்ற முதிய காவலாளர்களை நோக்கி, "இங்கே தானம் பெற வரும் அந்தணர்களைத் தடைசெய்யாமல் உள்ளே வரச் செய்ம்மின்" என்று கட்டளையிட்டனள்.
"எல்லா நலமும் அமைந்த உதயணனைப்போன்ற தலைவனை இவள் அடைதற்குரியள்" என்று அங்கே நின்ற முதியவள் ஒருத்தி ஒரு பாட்டைப் பாடினள். அதனைக் கேட்ட பதுமை, 'இப்போது புன்னையின் கீழே நின்றோன் அவனைப் போன்றவனே' என்று கருதினள். விழாவினது முதல் நாளிற் செய்ய வேண்டிய தானங்கள் விதிப்படி செய்யப்பட்டன. அப்பொழுது முதுமகளிர், "சூரியன் அத்தமித்தற்கு முன்பே நாம் கன்னிமாடம் செல்வது நலம்" என்று கூறினர். கூறவே செல்லுதற்கு அவளுடைய மனம் தடுமாறியது. தோழிமார் வந்து ஏற்ற, பதுமாபதி வையமேறிக் கன்னிமாடம் சென்றனள். சென்றபின், "இவளுடைய நோன்பு இந்த விழாவில் முடிவுபெறும்; அந்தக் காலத்தில் இவள் தானம் செய்வாள்; வாங்க வருபவர்களை நீவிர் விலக்க வேண்டாம்" என்று சிலதியர் சொற்றனர். அதைக் கேட்ட உதயணன், "மீட்டும் இவளை நாம் பார்த்தல் கூடும்" என்று தன்னுடைய மனத்திற்கு ஆறுதல் செய்துகொண்டிருந்தான்.
இருந்தபொழுது பின்னே மெல்லச் செல்லும் ஐராவதியென்னும் அவள் தோழியைக் கண்டு, "இவள் யார்? இவள் பெயரென்ன? இச் சோலையின்கண் இவள் வந்த காரியம் யாது?" என்று உதயணன் வினவினன். "இந்த அந்தணாளன் பொருள் நசையால் வந்தவன்" என்று நினைத்து ஐராவதி, "இவள் இந்நகரத்து அரசன் பட்டத்துத் தேவியாகிய, சிவமதியென்பவளுடைய சகோதரியும் காசிராசன் மனைவியுமான உதயையோடை என்பவளுடைய மகள்; பதுமாபதியென்னும் பேருடையாள்; கலியாணமாகாதவள்; மன்மதனுக்கு நகரம் செய்யும் விழாவின் முடிவில் வேதியர்களுக்கு வேண்டியவற்றைக் கொடுக்க எண்ணியிருக்கின்றாள். பொருளில் விருப்பம் இருப்பின் நீர் இங்கே இரும்" என்று சொன்னதன்றி, "உம்முடைய நாடு எது? ஊர் எது? கோத்திரம் யாது?" என்றும் கேட்டனள். உதயணன் அவள் கேட்டதைக் குறித்து உள்ளே மகிழ்ந்து, "என்னுடைய நாடு காந்தாரம்; ஊர் இரத்தினபுரம்; என்னுடைய தந்தை சாண்டியனென்னும் அந்தணன்; என் பெயரை மாணகனென்று சொல்லுவர்" என்று கூறினான். கேட்ட ஐராவதி மகிழ்ந்து விரைந்து கன்னிமாடஞ் சென்றாள்.
அப்பால் உதயணன் தோழரை அடைந்தான். சூரியன் அத்தமித்தது; முல்லை மலர்ந்தது; தாமரைகள் குவிந்தன; பின்னும் உள்ள மாலைக்கால நிகழ்ச்சிகளைக் கண்டு காம வேகம் அதிகரிக்கப்பெற்ற உதயணன் வாசவதத்தையை மறந்து பதுமாபதியின் அழகையே நினைந்து,
"வனப்பமை வையம் தனக்குமறை யாகிய
கஞ்சிகை கடுவளி யெடுப்ப மஞ்சிடை
வானர மகளிரிற் றானணி சுடர
முகைநலக் காந்தண் முகிழ்விர னோவத்
தகைமலர்ப் பொய்கைத் தண்செங் கழுநீர்
சில்லெனப் பிடித்து மெல்லென விழிந்து
நண்ண வருவோள் போலு மென்கண்
ஆற்றேன்; (3.7: 47-54)
தவஞ்செய்தேனும் யான் இவளை அடைவேன்" என்று துணிந்து தன் கருத்தைத் தேழர்களுக்குக் கூறி வருந்தினன்.
சென்ற பதுமாபதியும் அவனையே நினைந்து வருந்திப்
பின்பு அமளியில் ஏறி,
'நறுமலர்க் காவினுட் டுறுமிய பூந்துணர்க்
கொடிக்குருக் கத்திக் கொழுந்தளிர் பிடித்து
நாண்மலர்ப் புன்னைத் தாண்முத லணைந்து
பருகு வன்ன நோக்கமொடு பையாந்து
உருகு முள்ளமோ டொருமர னொடுங்கி
நின்றோன் போலவு மென்றோள் பற்றி
அகலத் தொடுக்கி நுகர்வோன் போலவும்
அரிமலர் நெடுங்க ணகவயிற் போகாப்
புரிநூன் மார்பன் புண்ணிய நறுந்தோள்
தீண்டும் வாயில் யாதுகொ லென்றுதன்
மாண்ட சூழ்ச்சி மனத்தே மறுகி
ஆசி லணியிழை தீயயல் வைத்த
மெழுகுசெய் பாவையி னுருகு நெஞ்சினள்
பள்ளி கொள்ளா ளுள்ளுபு வதிய (3.7: 77-90)
இவ்வண்ணம் இருவரும் இருவயினொத்த இயற்கை நோக்கமொடு ஒருவயினொத்த உள்ள நோயை உடையவர்களாய்த் துன்புற்றனர்; அந்த இராத்திரியானது கொல்ல வந்தது போலவே அவர்களுக்குத் தோற்றி 1ஏழிருள் போலச் சென்றது.
---------------
1 "நெருநற்றுச் சென்றாரெங் காதலர் யாமும், எழுநாளே மேனி பசந்து" திருக்குறள், 1288.
மறுநாள் காலையில் மீட்டும் அவனைக் காண வேண்டுமென்னும் விருப்பத்தை மனத்திலேயே அடக்கிக்கொண்டு பதுமாபதி கண்களைக் கழுவித் தெய்வத்தை வழிபட்டுக் கவலையுடன் இருந்தாள். இருந்தபொழுது அவளுடைய வேறுபாட்டைக் கண்ட செவிலித்தாய் முதலியோர்கள் பலவாறு கவலையுற்றுச் சமயம் பார்த்து, "வையமேறிச் சோலைக்குச் செல்வோமா?" என்று அவளை வினாவினர். அவள், "நோன்பு முற்றும்வரையில் என்னைக் கேட்க வேண்டுவதில்லை; அரசனுடைய கட்டளை இல்லையாயினும் செல்ல வேண்டுவதே முறை" என்றனள். உடனே அவர்கள் அவளை வையத்தில் ஏற்றிச் சோலைக்கு அனுப்பினர். அனுப்பியபொழுது முதல்நாளிற்போலப் புன்னைமரத்தின் கீழே நின்ற உதயணனும் அவளும் ஒருவரை ஒருவர் நோக்கித் தம் விழைவைப் புலப்படுத்திக்கொண்டு மயங்கினர்.இப்படியே சில தினங்கள் சென்றன.
ஒருநாள் அங்கே வந்த பதுமாபதி தன் காமநோயை வெளிப்படுத்தும் ஊக்கமுடையவளாகி ஐராவதியின் கழுத்தில் தன் கையைச் சேர்த்துத் தழுவிக்கொண்டு ஒரு மண்டபத்தின்மேல் ஏறி நின்றாள். அப்படியே உதயணன் தன் விருப்பத்தை வெளிப்படுத்தும் குறிப்போடு வயந்தகன் தோளை ஒரு கையால் தழுவி மற்றொரு கையால் மிக அழகிதாகிய பூம்பந்தொன்றை உருட்டிக் கொண்டு புன்னையின்கீழே நின்றான். அங்ஙனம் நின்ற வனைக் கண்ட பதுமாபதி ஐராவதியை நோக்கி, "அந்தண உருவத்தோடு அங்கே நிற்பவன் யாவன்? நீ அவனை அறிவாயோ?" என்று வினாவினள், ஐராவதி, "முன்னொருநாள் நீ கன்னிமாடம் சென்றபின்பு நான் அன்பின் மிகுதியால் அவன் வரலாற்றைக் கேட்டு அறிந்து கொண்டேன். மாணகனென்பது அவன் பெயர். அவன் அந்தணன்; இந்நாடு பார்த்தற்கு வந்தான். அவனும் அவனுடைய தோழர்களும் உன்னுடைய தானத்தை விரும்பியே இங்கே தாமதித்தனர் போலும். விரைவில் திரும்பிச் செல்வாரல்லர்" என்றனள்.
கேட்ட பதுமை, "பிறர் அறியாமல் குறிப்பித்து அவன் கையிலுள்ள பந்தை வாங்கித் தருதல் கூடுமோ?" என்ன, ஐராவதி கையைத் தட்டி அவனை நோக்கி, "உன் கைப்பந்தை இவளுக்குத் தர வேண்டும்" என்று கண்ணாலும் கையாலும் அவனுக்குத் தெரிவித்தனள்.அதனை அறிந்து மனத்தில் அடக்கிக்கொண்ட அவன், "தத்தையை நினைந்து உழலும் என் மனத்தைத் தன்பால் இவள் இழுத்துக்கொண்டு தன் மனத்தை என்னிடத்தே நிறுத்திக் கலந்த நேயம் உள்ளவளாக இருக்கின்றனள்" என்று தோழர்க்கு உணர்த்தினன். கேட்ட தோழருள் இசைச்ச னென்பவன், "இந்த நாட்டு மகளிர் நிறையை உடையார்; மனத்தைப் பிறர்பாற் செலுத்தார். அரசனுடைய கட்டளையும் அதுவே. பதுமாபதியும் அத்தன்மையளே. அஃதன்றாயின் தன் மனைவி தீப்பட்டா ளென்பது தெரிந்து வருந்தி உதயணன் பார்ப்பன வேடங்கொண்டு வந்துளானென்பதை அறிந்தோர் சொல்லக் கேட்டு அவனிடம் நம்முடைய கருத்தைத் தெரிவித்தல் குணமென்று தன்னுடைய கருத்தை வெளியிட்டிருத்தல் கூடும். அன்றாயின் தோற்றப்பொலிவால் மிக்க இவர்கள் வந்து தானம் ஏற்றல் தகுதி அன்று என்று நன்மதிப்போடும் நம்மை நோக்கியிருத்தல் கூடும். ஆதலால், அவளிடத்தில் விருப்பத்தைச் செலுத்துதல் முறையன்று" என்று தடுத்தனன். மற்றத் தோழர்களும் அக் கருத்தையே தழுவிக் கூறினர்.
அவளுக்கும் தனக்கும் உள்ள அன்பை அறியாத மற்றத் தோழர்களைத் தேற்ற வேண்டி உதயணன், "மலர் முதலியவற்றாற் செய்த கண்ணியை இப்பொய்கையின் பக்கத்துள்ள மரக்கிளை ஒன்றில் அவள் காணக் கட்டி விட்டு நான் மறைந்திருப்பேன். அவள் அக் கண்ணியைக் கைக்கொள்வாளாயின் யான் கூறியதை உண்மையென்று கொள்க" என்று அவர்களுக்குக் கூறினன். பின்பு அவன் அப்படியே கண்ணியொன்று கட்டித் தான் கருதிய சோலையிற் புன்னை, ஞாழல், மகிழ் ஆகிய மரங்களின் செறிவிற் கிளையொன்றில் அவள் காணும்படி அதனைக் கட்டிவிட்டுப் பின்னும் தான் அவளை முதலில் கண்ட காமன் கோட்டம் முதலியவற்றையும் தம்முள் நிகழ்ந்த செய்திகளை புலப் படுத்தும் சித்திரங்களையும் வாழைக் குருத்தில் நகத்தாற் பொறித்து அவற்றை ஆண்டுள்ள ஞாழல் மரத்தின் கிளையில் தொங்கச் செய்துவிட்டுத் தான் அயலிடஞ் சென்றனன்.
பதுமாபதி, யாப்பியாயினியோடு சென்று அப்பொய் கையில் நீராடித் தன்னை அலங்கரித்துக்கொண்டு கரையில் தனியே சென்று சோலையைப் பார்த்தபொழுது அங்கே உதயணன் கட்டி நாற்றிய கண்ணி முதலியவற்றைக் கண்டாள். கண்டு புன்முறுவல்கொண்டு, ஒரு கழுநீர்ப் பூவைக் கையில் பற்றி அதன் தண்டில் தன் பெயர் பொறிக்கப்பட்டுள்ள மோதிரத்தைச் செறித்து அதனையும் பிணையலையும் சந்தனத்தையும் அவன் வைத்த கண்ணியைச் சார ஒருபால் வைத்தனள். பின்பு அவன் வைத்த கண்ணி முதலியவற்றை எடுத்துவந்து அக்கண்ணியைத் தன் சென்னியில் அணிந்து பிறவற்றை மார்பில் அப்பிக்கொண்டு மிக அழகு பெற்று விளங்கிநின்றாள். நின்றவளை அங்கு வந்த யாப்பியாயினி கண்டு, "நீ யார்? உன்னைப்போன்றவளும் என் உயிர்த்தோழியும் தருசகன் தங்கையுமாகிய பதுமாபதியை யான் பிரிந்தேன்" என்றனள். தன் வேறுபாட்டை அறிந்து அவள் கேட்கின்றாளென்று பதுமாபதி நாணி முகம் கவிழ்ந்தனள். பின்பு அவ்விருவரும் தம்மிடஞ் சென்றார்கள்.
அங்கே நிகழ்ந்தவற்றை மறைந்திருந்த உருமண்ணுவா கண்டு மற்ரைத் தோழர்க்குக் கூறினன். எல்லோரும் ஒத்த மனமுடையவர்களாயினர். வயந்தகன் சென்று ஆராய்ந்து அவள் உதயணனுக்காக அங்கே வைத் திருந்த பிணையல், சாந்தம், கழுநீர்ப்பூ, மணியாழி இவற்றைக் கண்டு எடுத்துவந்து உதயணனுக்குக் கொடுத்தனன். அவன் யூகி முதலியவர்களைப் பெற்றவன்போல மகிழ்வுற்றுப் பதுமாபதி ஆடிய பொய்கையில் நீராடி அவள் வைத்த சந்தனத்தை மார்பிலும் தோளிலும் பூசி அப் பிணையலைச் சூடி மோதிரத்தைப் பிறர் அறிந்துகொள்ளாதபடி தன் விரலிற் சேர்த்திக் கழுநீர்மலரைக் கையிற் பிடித்துக்கொண்டு சிறிதும் கவலையே இல்லாமல் முகமலர்ச்சியோடும் போந்தபொழுது மாடத்தின்மேலே நின்ற பதுமாபதி கண்டு, " யாம் கண்ணாற் கூடிய கூட்டமன்றிக் கண்ணிமுதலியவற்றாலும் கலப்புடையேமாயினேம். நெஞ்சே! கவலைப்படாமல் இரு" என்று தன்னுள் சில வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டு தன்னிடம் சென்றனள். உதயணன் தனக்கு அவள் உரிமைபூண்டனளென்று தோழர்க்குத் தெரிவித்துவிட்டுச் சென்று கவலை யின்றித் துயின்றான்.
அப்பொழுது அவனுடைய கனவில் வாசவதத்தை மெலிந்து வாடிய உடம்போடு தோன்றினள். தோன்றவே
"மாசில் கற்பின் வாசவ தத்தாய்!
வன்க ணாளனேன் புன்கண் தீர
வந்தனையோ" (3.1;158-60)
என உதயணன், வாய்திறந்து அரற்றினன். அரற்றவே அவள், "அயல்நாட்டிற்கு என்னைத் துறந்து சென்றாய்; அன்புடையார்போல் கூறுங் கட்டுரையை ஒழிவாயாக" என்று சொல்லி அகல்வாளாயினள். அகலவே அவன் குறுகி, "உன்னைப் பிழைப்பித்துத் தருபவன் இவ்வூரில் உள்ளான் என்பதைக் கேட்டே பல மலைகளையும் காடுகளையுங் கடந்து இங்கே வந்தேன். நீ வெகுளாதே" என்று இரக்க, அவள், " பதுமாபதியினிடத்தே அன்புற்று அவள் வைத்த மாலையையும் சந்தனத்தையும் இப்பொழுது அணிந்தாயன்றோ" என்று சொல்லிவிட்டுப் பின்னும் நீங்க அவன், " பதுமாபதியென்கின்ற பெயரை இன்றுதான் நின் வாயால் கேட்டேன். வேறு அறியேன்" என்று பின்னும் இரக்கும்பொழுது அவள் மறைந்தனள். சூரியன் உதித்தனன்.
விழித்தெழுந்த உதயணன் தான்கண்ட கனவைத் தோழர்க்குக் கூறினன். அவர்கள், "வாசவதத்தை சினங் கொண்டாளாதலால், பதுமையின் மாலை முதலியவற்றை நீ அணிந்தது பிழையாகும்: இவள்பால் வைத்த காமத்தை விட்டொழிவாயாக" என்று மிக வற்புறுத்தவும் அவன் தன் கொள்கையை விடானாகிப் பதுமையை அடைவதற்கு மிக்க முயற்சி செய்வானாயினன். அதனைக் கண்ணுற்ற தோழர், "இவனைத் தருசகனுக்கு நண்பனாகச் செய்தற்கு வந்த நமக்குஇங்ஙனம் நேர்ந்ததற்குக் காரணம் ஊழ்வினையின் வலி" என்று மனமுவந்து ஆலோசிப்பாராயினர். அப்பொழுது உதயணன், "பதுமையோடு மாடத்திற் புகுந்து அவளுடன் இரேனாயின் என் உள்ளம் கலங்காநிற்கும்" என்று தன்குறையைத் தெரிவித்தனன். தோழர், "அவளுடைய மாடத்தில் நீ புகுவாயாயின் உண்டாகுந் தீங்குகள் இன்னவை" என்பதைக் கூறித் தடுப்ப, உதயணன் உடன்பட்டானாகி ஒரு நாள் 1 தோழர்களைப் பிரிந்து முதுமை வேடம் பூண்டு, தானம் வாங்கச் செல்பவர்களுடன் சென்று காமன் கோட்டத்தின் உள்ளே இருக்கும் கடியறையில் ஒருவரும் அறியாதபடி ஒளிந்திருந்தான்.
----------
1 இதன் மேலுள்ள மூலப்பகுதி கையெழுத்துப்பிரதியிற் சிதைந்து போய்விட்டமையால், அதற்குப் பின்னும் முன்னும் உள்ள ஆதாரங்களைக்கொண்டும் வேறு நூல்களைக்கொண்டும் ஆராய்ந்து கதை இங்கே எழுதலாயிற்று.
இருக்கையில், பதுமாபதி தனியே அவ்வறையின் உள்ளிடத்தை அடைந்தாள். அடைந்தபொழுது உதயணன் தன் இளமைக் கோலத்தோடு எதிரே நின்றான். நின்றவனை மனம் துட்கெனக்கண்டு அவள் நாணிக் கொடி போல அசைந்து ஒதுங்கி நின்றாள். அவன் பாராட்டி, "தீண்டிலேனாயின் உய்யேன்; அருள்" என்று வேண்டி னன். அப்போது அவ்விருவருக்கும் காந்தருவ மணம் நடைபெற்றது. பின்பு அவள் புறம்போந்து தோழிமாரோடு வையம் ஊர்ந்து தன் மாடஞ் சென்றாள். அவள் சென்றபின், பிறர் அறியாமற் புறம்போந்த உதயணன், ஒரு நாள் வேற்று வடிவத்தோடு தருசகன் அரண்மனை வாயிலை அடைந்து அங்கே நின்ற பேரறிவாளன் ஒருவனைக் கண்டு, "தருசகராசனுக்கு எந்த வித்தையில் விருப்பம் உண்டு? " என்று வினாவ, அவன், "தன்னுடைய தகப்பன் ஈட்டிய பெரும்பொருள் வைக்கப்பட்ட இடம் தெரியாமையால் தருசகன் கவலையுற்று வருந்துகின்றான். அதனை அறிந்து சொல்வோருக்கு அவன் தன்னுடைய உயிரையும் அளிப்பான்" என்று கூறினன். கூறவே., "புதையல் எடுக்கும் வித்தையிலும் கீழ்நீர்களை அறியும் நூல்களிலும் நான் மிக்க பயிற்சி உடையேன்; அரசனைப் பார்த்தலில் எனக்கு விருப்பம் மிகுதியாக உண்டு" என்று உதயணன் சொல்ல, அம் முதியோன் சென்று, " புதையல் எடுத்தல் முதலிய வித்தைகளில் மிக்க பயிற்சியுள்ள ஒருவர் நும்மைக் காணுதற்கு விருப்பங்கொண்டு வாயிலில் வந்து காத்திருக்கின்றனர்" என்று தருசகனிடம் தெரிவித்தான். தெரிவிக்கவே தருசகன், "கற்றவர்களைக் காண்பது அரசாட்சியால் ஆகிய பயனாகும்" என்று சொல்லி அவனை அழைத்துவரச் செய்து தனியே சென்று ஓர் ஆசனத்தில் இருத்திக் கற்ற வித்தைகளையெல்லாம் வினாவி அறிந்து, "என்னுடைய தந்தை புதைத்த பொருள்களை யான் அறியும்படி செய்ய வேண்டும்" என்று தெரிவிக்க, உதயணன் தான் புதைத்து வைத்த பொருள்கள் உள்ள இடத்தைக் காட்டுபவன் போலவே அவனுக்கு அவ்விடத்தை காட்டினான்.
காட்டவே அவற்றைக் கண்டு அரசன் மிகவும் வியப்புற்று,"இவன் பெறுதற்கரியன். எதனை விரும்பினாலும் அதனை இவனுக்குக் கொடுத்தற்குக் கடப்பாடுடையேன்" என்று சொல்லிப் பின்பு, "இவ்வரண்மனையிலும் இதனைச் சார்ந்த இடங்களிலும் நல்ல நீர் இருக்குமாயின் அதனையும் காட்ட வேண்டும்" என்று கூற, உதயணன் அப்படியே நீர் நிலைகளை அறிதற்குரிய இலக்கணங்களை முறையே தெரிவித்ததன்றி நல்ல நீருள்ள இடத்தை அகழ்வித்துக்காட்டி மகிழ்விப்ப, தருசகன் மகிழ்ந்து அவனை அரண்மனையின் அகத்தே இருக்கும்படி சொல்லிப் பொன்னறைப் பாது காவலராகிய கணக்கு வினையாளரை அவனுடன் இருந்து பாதுகாக்கும்படி செய்தனன்.
உதயணன் அங்கிருப்பவன்போலத் தன்னைக் காட்டிப் பிறர் அறியாமல் உரிய காலத்திற் சென்று காமன் கோட்டத்துள்ள கடியறையில் இருந்து வருவானாயினன். அதனை அறிந்த உருமண்ணுவா வேற்று வடிவங்கொண்டு சென்று அரசன்பால் ஒரு வேலையைப் பெற்று அதனை நன்கு செய்பவனாகி அரண்மனையிலேயே இருந்து உதயணனைப் பாதுகாத்து வருவானாயினன். அங்ஙனமே இசைச்சனும் வயந்தகனும் அவனைப் பாதுகாத்தற் பொருட்டு வேற்று வடிவங் கொண்டு தருமநூல் முதலியவற்றைப் பதுமையின் தாய்க்குச் சொல்பவர்களாகியும் கண்டோர் வியக்கும்படி மலர்களைப் பலவகைப் பிணையல் களாகக் கட்டியும் கட்டுவித்தும் பதுமைக்கு அனுப்புபவர்களாகியும் அங்கே இருந்தனர். உடன்வந்த ஏனைவீரர்களும் வேறு வேறு வடிவங்கொண்டு தத்தமக்கு ஏற்ற தொழில்களைச் செய்பவர்களாகிச் சமீபமான வேறு வேறு இடங்களில் தங்கினர்.
இப்படி இருக்கையில் பதுமை உதயணனைத் தன்னுடன் கன்னிமாடத்திற்குப் பிறர் அறியாமல் அழைத்துக் கொண்டு செல்ல நினைந்து அதற்குரிய உபாயம் ஒன்றை ஆராய்ந்து, "பலவகையான தானங்களைச் செய்தற்கு நிச்சயித்திருக்கிறேன்" என்று சொல்லி அதனைப் பலரும் அறியச் செய்தனள். செய்தபின் சிவிகையை வருவித்து அதில் ஏறிச் சென்று காமன்கோட்டத்தின் வாயிலில் இறங்கித் தான் இருக்கும் அறையின் வாயிலிற் சிவிகையை வைக்கும்படி கட்டளையிட்டுவிட்டுத் தனியே அறையுட் சென்று அங்கே ஒதுங்கியிருந்த உதயணனைக் கண்டு உவந்து அவனுடன் அங்கே காலத்தைப் போக்கினள். பின்பு தனது நோன்பிற்குகுரிய நாட்களின் இறுதித் தினம் அன்றாதலால் வந்த யாவர்க்கும் மணியும், முத்தும், பவழமும், மாசையும், அணியும், ஆடையும், ஆசில் உண்டியும், பூவும், நானமும், பூசுஞ் சாந்தமும் யாவை யாவை அவையவை அவரவர் வேண்டாராயினும் ஈண்ட வீசி அவர்களுடைய ஆசிகளைப் பெற்று அவர்களை அவள் அனுப்பினள். பின்பு காமன் கோயிலில் மணிவிளக்கேற்றி மகளிர் பாடினர். அப்பொழுது உயிர்த்தோழியாகிய யாப்பியாயினி அவளது குறிப்பறிந்து வந்து ஆங்கு நின்றாரை நோக்கி, "எம் இறைவி இன்று பட்டினியுற்றாள். ஜன நெருக்கத்தால் வெப்பமடைந்து வருந்துகிறாள். நீவிர் எல்லோரும் புறத்தே செல்லுமின்" என்று சொல்ல எல்லோரும் உடனே புறத்தே போயினர்.
மறைந்து வந்து கஞ்சிகைச் சிவிகையில் உதயணன் தங்கினன்; பதுமையும் சென்று அதில் தங்கினள். அப்பொழுது சுருக்குத்திரையை விரித்து அச் சிவிகையை மறைத்தனர். காவலாளர்கள், "இச் சிவிகையைக் கன்னி மாடத்துள்ள பள்ளியறையினுள்ளே சென்று வைத்திடுக" என்று சொல்லிக்கொண்டு பின்சென்றனர். யாரும் அணுகாதபடி கடுங்காவலராகிய சிலத மாக்கள் உசும்பிக் கொண்டு அயலிடஞ் சென்றார்கள். புற நகரத்துள்ள காவும் வாவியும் காமன்கோட்டமும் பூவீழ்கொடியிற் பொலிவிலவாக அகநகரஞ் சென்று பல வீதிகளையுங் கடந்து அரண்மனையுட் சென்று கன்னிமாடம் புகுந்து மல்லர் உள்ளே சென்று சிவிகையை வைத்தனர்.
அப்பொழுது பதுமை, "எனக்கு மிகவும் வெப்பம் உண்டாகின்றது; எல்லோரும் போமின்" என்று கட்டளையிடவே, ஆங்குச் செறிந்து நின்ற யாவரும் புறத்தே சென்றனர்.உடனே திரையை அகற்றிப் பதுமை தன்னுடைய பள்ளியறையிற் சென்று புகுந்தனள். யாப்பியாயினி பள்ளியறையின் நாற்புறத்துஞ் சென்று ஆராயந்து யாரும் இல்லை என்பதைச் சொன்னபின்பு, உதயணன் பிறர் அறியாமற் சென்று அங்கே தங்கி மிக்க மகிழ்ச்சியுடையவனாயினன். "யாவராய் இருப்பினும் சமயம் அறியாமல் இங்கே வாரற்க" என்பதைப் பதுமை தோழிமார்க்குத் தெரிவித்ததன்றி, "யாழும் பாட்டும் இனி நன்றாகப் பயிலும் எண்ணம் உடையேனாதலின் எனக்குரிய உணவு வகைகள் இங்கேயே வருவனவாக" என்றும் கட்டளையிட்டனள். அங்ஙனமே அவை வருவனவாயின. பின் அவள் எழுநிலை மாடத்தில் உயர்நிலை அறையிற் சென்று ஆண்டுள்ள அணையின்மிசை உதயணனோடு இருந்து அளவளாவி மகிழ்ச்சியடைந்திருந்தனள்.
இருந்தபொழுது உதயணன் ஒரு நாள் நாற்புறத்தும் உள்ள நுட்பமான சிற்பவேலைகளைப் பார்த்துப் பார்த்து வியப்புற்றான். பதுமாபதி, அவன் தன்னைப் பாராமல் வேறிடத்திற் கருத்தைச் செலுத்திக்கொண்டே இருத்தலை அறிந்து புலந்து கடிய சொற்களைச் சொல்லி உடல் வியர்த்துக் கண்ணீர் பெருக்கித் தன்னுடைய அணிகலங்களையும் மாலைகளையும் எடுத்து எறிந்துவிட்டுக் கலங்குவாளாயினள். அதனை அறிந்த உதயணன், "நங்காய்! யான் யாதொரு குற்றமும் செய்திலேன்; நினைத்தும் இலேன்; வருந்தல் வேண்டா; பொறுத்திடுக" என்று பல முறை குறையிரந்து அவளுடைய புறத்தைத் தைவந்து தோட்டைக் காதில் அணிந்து மற்ற ஆபரணங்களையும் திருத்தி நலம் பாராட்டிச் சந்தனத்தைப் பூசித் தழுவுவதற்கு நெருங்குகையில் அவள், "என்னைத் தீண்டாதீர்" என்று சினந் துரைத்து வேறிடஞ் செல்லப் புடைபெயர்ந்தனள். அப்பொழுது, பக்கத்துள்ள பூஞ்சோலையின் கிளையிலிருந்த கோட்டான் ஒன்று வந்து அம்மாடத்தின்மேல் உள்ள சூலத்தில் ஏறியிருந்து கேட்போர் அஞ்சும்படி ஒலித்தது. ஒலிக்கவே பதுமை நடுக்கமுற்று ஓடிவந்து உதயணனைத் தழுவிக்கொண்டாள். உதயணன் அவளுடைய அச்சமுயக்கத்தை மிக விரும்பி, "அஞ்சற்க" என்று கூறிக் கூகையின் உதவியை நெஞ்சத்துள்ளே பாராட்டி அவலைப் புல்லியும் திளைத்தும், "அமரராக்கிய அமிழ்தே!" எனப் புகழ்ந்தும் ஒழுகுவானாயினன்.
இங்ஙனம் ஒழுகும் நாட்களில் ஒரு நாள் பதுமை தோழியை அழைத்து, "இவன் கற்ற வித்தைகளை நாம் ஆராய்ந்து அறிய வேண்டும்" என்று சொல்ல, தோழி அவனை வினாவினள். வினாவவே அவன், "வேள்விக்குரிய வித்தைகள் எல்லாவற்றிலும் வல்லேன். என்னுடைய மனைவி விரும்பியபொழுது குடமுழவென்னும் வாத்தியத்தை அவட்குப் பயிற்றினேன்" என்றனன். "அதில் வல்ல இவ்வந்தணன் இசையிலும் வல்லவனாக இருத்தல் கூடும். இவன் சுவைத்தொழில் மகன்" என்று சொல்லிப் பதுமை நகைத்துத் தன் யாழை வருவித்துத் தான் வாசித்தற்கு ஆற்றாதவளாகி, "இதனை இவனிடம் கொடு" என்று தோழிக்குக் குறிப்பால் உணர்த்தினள். அவள் அப்படியே சென்று அதனை அவனிடங் கொடுத்து, "இதனைச் செப்பஞ்செய்து தருக" என்றனள். அவன், "எம்முடைய குலத்திற்கு ஒவ்வாத இதனை வாசிக்கும்படி என்னை வருத்தாது ஒழிக. யாழ் வித்தையை இனிக் கற்றற்கு விரும்பினேன்" என்றான். அவள், "நரம்புகளை வலித்து இறுக்கித் தானத்தில் இருத்தலையே யாம் விரும்பினேம்" என்றாள். அவன், "அப்படியானால் ஒருவாறு பார்ப்பேன்; அதனைக் கொடு" என்று சொல்லி வாங்கித் திவவை இறுக்கிப் பார்த்து, அது பட்ட மரத்தாற் செய்யப்பட்ட தென்பதையும் பிற இலக்கணங்களையுங் கூறினன். கேட்ட பதுமை,"இவன் யாழறி வித்தகன் போலும்; அதனை நன்கு அறிந்துகொண்டு வாசிக்கச் செய்வாயாக" என்று தோழிக்குக் கூறினள். அவள் வந்து குறையிரப்பதை அறிந்த உதயணன், "இவளுக்கு அறிவு பெரிது" என்று எண்ணி, "யான் இதில் வல்லுநனல்லேன்" என்றான். பதுமை, "ஒருமனம் உடையவர்க்குத் தெரியாத காரியம் ஒன்றும் இல்லை; இன்ப மயக்கம் அடைந்து எம்மை வஞ்சித்தல் அறன் அன்று; மறாதருள்க" என்றனள். அப்போது சூரியன் அத்தமித்தனன்; மலர்ந்த முல்லைப்பூ மணத்துடன் தென்றல் சாளரத்துள்ளே வந்து தவழ்ந்தது.
உதயணன் தனது யாழாகிய கோடபதியினை நினைந்து வருந்திப் பின்பு அந்த யாழைத் தீண்டி வாசித்தனன். அவனுடைய குரலிசைக்கும் யாழொலிக்கும் வேற்றுமை
தோற்றவில்லை;
"செவிச்சுவை யமிர்த மிசைத்தலின் மயங்கி
மாடக் கொடுமுடி மழலையும் புறாவும்
ஆடமை பயிரு மன்னமுங் கிளியும்
பிறவு மின்னன பறவையும் பறவா
ஆடுகிற கொடுக்கி மாடஞ் சேரக்
கொய்ம்மலர்க் காவிற் குறிஞ்சி முதலாப்
பன்மர மெல்லாம் பணிந்தன குரங்க
மைம்மலர்க் கண்ணியு மகிழ்ந்துமெய்ம் மறப்ப
ஏனோர்க் கிசைப்பி னேதந் தரும்" (1.34:277-85)
என்று எண்ணிப் பதுமை, "யாழ்வித்தையிற் சிறந்தவன் காமன்; அவனுக்குப்பின் தும்புரு; அவனுக்குப்பின் உதயணன் சிறந்தவனென்று சொல்லுவர்; அவனிலும் இவ்வந்தணன் சிறந்தோனாவான்" என்று நினைந்து உள்ளங்கொள்ளா உவகையளாகி அவனைப் பெரிதும் பேணுவாளாய்க் கழிபெருங் காம நுகர்ச்சியைக் களவினிற் கழித்து ஒழுகுவாளாயினள்.
அந்த நாட்களில் ஒரு நாள், பதுமையின் தோழி உதயணனை நோக்கி, "மறையோம்பாள, கேட்பாயாக; பிரமதேவன் கொன்றைக்காயைப் பெருக்கியும் பயற்று நெற்றைச் சிறுக்கியும் கரும்பைச் சுருக்கியும் மூங்கிலை மிக நீட்டியும் இசைவிலவாகப் படைத்தான். அதுபோல யானையை வணக்கும் யாழில் வல்ல உதயணனிலும் மிக்க உன்னுடைய இயல்பை முன்னம் உணரேமாயினேம். இனி உன் மாணாக்கியராவேம்" என்று சொல்லி, "இதை செவ்விதாக்கித் தர வேண்டும்" என்று ஓர் யாழை அவன் கையிற் கொடுத்தனள். அவன், "இது கெட்டுப்போன மரத்தாற் செய்யப்பட்டது வாசித்தற்கு உதவாதது" என்று அதைக் கீழே வைத்துவிட்டனன். பின்பு தருசகன் பதுமைக்கு அன்புடன் அளித்த ஓர் யாழை அவள் அளிப்ப அவன், "இந்த யாழ் சிறிதும் குற்றம் இல்லாததே; ஆனாலும் இதிலுள்ள நரம்புகள் மட்டும் மிகவும் குற்றமுடையன; வேறு நரம்புகள் இருந்தால் அவற்றைத் தருக" என்றனன்; அவள் அப்படியே வேறு நரம்புகளை வருவித்தளிப்ப அவன், "இன்ன இன்ன காரணத்தால் இவைகளும் குற்றமுடையன" என்று மறுத்தனன். பின்னும் அவள் புதிய வேறு நரம்புகளை வருவித்தளிப்ப அவன், "இவைகளும் குற்றமுடையனவே" என்றனன். அவள், "குற்றங்களை விளங்கச் சொல்ல வேண்டும்" என்று வேண்ட, அவன் அவற்றை ஆதாரத்துடன் விளங்கக் காட்டினன். அவள், "யாழும் பாட்டும் யாவரும் அறிவர். இவனைப்போல அவற்றின் குணகுற்றங்களை அறிந்து விரித்துரைப்பவர்களைக் கண்டதில்லை" என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று பொன்னைத் திரித்தாற்போன்ற நரம்புகளைக் கொணர்ந்து கொடுப்ப, அவன் அவற்றை வாங்கி யாழில் அமைத்துச் செவ்வைசெய்து கொடுத்தனள். அதனைப் பதுமை பெற்று மகிழ்ந்தாள். பின்பு,
'குறிவயிற் புணர்ந்து நெறிவயிற் றிரியார்
வாயினுஞ் செவியினுங் கண்ணினு மூக்கினும்
மேதகு மெய்யினும் ஓத லின்றி
உண்டுங் கேட்டுங் கண்டும் நாறியும்
உற்று மற்றிவை யற்ற மின்றி
ஐம்புல வாயிலுந் தம்புலம் பெருக
வைக றோறு மெய்வகை தெரிவார்
செய்வளைத் தோளியைச் சேர்ந்துநல னுகர்வதோர்
தெய்வங் கொல்லெனத் தெளித லாற்றார்
உருவினு முணர்வினு மொப்போ ரில்லென
வரிவளைத் தோளியொடு வத்தவர் பெருமகன்
ஒழுகினன்" (3.15:63-74):
இவ்வாறு ஒரு திங்கள் சென்றது.
இப்படியிருக்கையில், பதுமாபதியின் மணத்தை விரும்பி அதற்குரிய பரிசங்களை முன்னே செல்லவிட்டுக் கொண்டு கேகயதேசத்தரசனாகிய அச்சுவப் பெருமகன் என்பவன் ஒரு நாள் வந்து தருசகனுக்குத் தன் வரவைத் தெரிவித்தனன். தருசகன் நகரை அலங்கரிப்பித்துத் தன் பரிவாரங்களோடு எதிர்கொண்டு சென்று அளவளாவி அவனை அழைத்து வந்து தன் அரண்மனை சென்று விருந்தளித்து மகிழ்ந்திருந்தனன்.
அப்போது தருசகனுடைய 1மேம்பாட்டைப் பொறாதவர்களாகிப் பகைமை கொண்டு ஒழுகுபவர்ளாகிய விரிசிகன், அரிமான், எலிச்செவி, அடவி, அயோத்தியரசன், மிலைச்சன், சங்கரன், மல்லன், வேசாலி என்னும் அரசர்கள் ஒருங்கு கூடிச் சதுரங்க சேனைகளுடன் புறப்பட்டுப் பலபுரிகளாலாகிய ஒரு பெருங்கயிற்றால் யானையைப் பிணிப்பதுபோல இராசகிரிய நகரத்தைச் சூழ்ந்துகொண்டு பெருமுழக்கத்தைச் செய்தனர். அதனை அறிந்த தருசகன் மிகுந்த கவலையுற்று தெருமரல் எய்தினன்.
-----
1பதுமையைக் கேகயத்தரசனுக்குக் கொடுக்கக் கருதியது *தெரிந்து தருசகன்பால் வேற்றரசர் பகைமை கொண்டார்களென்று வேறு நூல்கள் கூறும்.
அதனைக் கேட்ட பதுமை, "இச் செய்தியை மாணகனுக்குச்சொல்" என்று ஐராபதியை விடுத்தனள். அவள் காமன் கோட்டத்திற்கு வந்து நிகழ்ந்தவற்றையும் பதுமையின் கருத்தையும் உதயணனுக்குச் சொல்ல அவன், "இங்ஙனம் பகைவர் வந்து போர்செய்தற்குச் சூழ்ந்தமை நமக்கு அனுகூலமான காரியம்" என்று எண்ணி ஐராபதியை நோக்கி, "இரண்டு மாதத்திற் பதுமையை வந்து பார்ப்பேன்; இதனை அவளுக்கு நீ சென்று கூறி அவளைப் பாதுகாத்துக்கொள்" என்று அனுப்பிவிட்டுப் பின், "வாணிக உருவத்தோடு பகைவருடைய படையுட் சென்று அவரை அழிப்போம்" என்று நிச்சயித்துக்கொண்டு சின்னச்சோலையென்னும் மலைமேல் ஏறிச் சங்கேதயமாகிய ஒரு பண்ணைப் பாடினன்.
கேட்ட அவனுடைய வீரர் எல்லோரும் அங்கே வந்து கூடினர். அவர்களை நோக்கி உதயணன், "இனி எமக்கு யாதொரு தீங்கும் இலது" என்று எண்ணி மேலே செய்ய வேண்டுவனவற்றை அவர்களுக்குக் கூறிவிட்டு, தானும் தோழர்களும் வாணிக வேடங்கொண்டு வாணிகத்திற்குரிய பல பொருள்களையுஞ் சேகரித்துக் கைக்கொண்டு பகைவருடைய பாடிகளைச் சார்ந்தபொழுது, முன்பு இடவகனால் அனுப்பப்பட்ட இசைச்சன் பல குதிரைகளோடு அங்கே தோன்றினன். தோன்றியபொழுது வயந்தகனைக் குதிரை வியாபாரிகளுக்குத் தலைவனாக நியமித்து அவனுடன் பகைவருடைய பாடிகளிற் புகுந்து அவர்களை நோக்கி உதயணன். "யாம் குதிரை வியாபாரிகள்; பல வருடங்களாக மகதராசனோடு பழக்க முடையோம்; இப்பொழுது அவன் எம்மிடம் மன வேறுபாடு உடையனாதலின், வென்று அவன் எம்முடைய நகரமாகச் செய்துகொள்ள எண்ணினேம்; நீவிரும் எமக்கு நட்புடையவர்களாக இருத்தல் வேண்டும்" என்று சொல்ல, அவர்கள் அங்கீகரித்து அவனை உடனிருக்கச் செய்தனர். செய்யவே தோழர் தமக்குரிய இடங்களை அமைத்து அவற்றில் இருப்பவர்களாகப் பகைவர்பாலுள்ள எல்லா இரகசியச் செய்திகளையும் கால அடைவில் அறிந்து அப் பகைவர்களை இன்னவகையாக வெல்ல வேண்டும் என்பதைத் தம்முள் நிச்சயித்துக்கொண்டு தாங்கள் யுத்த சன்னத்தர்களாகி வேறுவேறாக விரைவிற் சென்று, "விரிசிகன் வாழ்க" என்று கூறி மல்லன்பாடி காத்த வீரர்களைக் கொன்று,பகைவர்கள் தம்முள் விரோதங் கொண்டு ஒருவரோடொருவர் போர்செய்வது போலவே தோற்றும்படி இப்படியே போர்செய்து முடிவில், "வத்தவன் வாழ்க" என்று கூறிப் போர் செய்தார்கள்; அதனைக் கண்ட பகைவர்கள், "நமக்குள் யாரோ விரோதத்தை உண்டாக்குதற்கு இங்ஙனம் போர் செய்கின்றார்கள்; இனி இங்கிருத்தல் ஆகாது. பொழுது விடிவதற்குள் எப்படியேனும் நாம் புறத்தே சென்றுவிட வேண்டும்" என்று நிச்சயித்துத் தத்தம் பொருள்கள் பாடிகளில் அங்கங்கே கிடப்ப ஓடிப்போய்த் தமக்கு அரணாக உள்ள ஒரு மலையை அடைந்து அங்கே தங்கினர்.
உருமண்ணுவா முதலியோர் தம்முட் கூடி மகிழ்வுற்று, "பகைவரை வென்றோ மாதலால், பதுமையை விரும்பிய உதயணனுக்கு இனி ஆக்கமுண்டு" என்று எண்ணிக் கொண்டு, "தன் தேவி வாசவதத்தையை இழந்து தன் வருத்தத்தைத் தீர்த்துக்கொள்ளுதற்கு இந் நாட்டிற்கு வந்த உதயணன் தருசகனுடைய பகைவர் போர் செய்தற்கு நகரத்தைச் சூழ்ந்தது தெரிந்து தன் தந்தைக்கும் மகதராசனுக்கும் மிகுந்த நட்பு உண்டு என்பதை அறிந்தோனாதலின், அவனுக்கு வந்த துன்பத்தைப் போக்க வேண்டுவது தன் கடமையென்று நினைந்து வலிந்து சென்று போர் செய்து பகைவரை வென்று ஓடச் செய்துவிட்டு அதனையே கையுறையையாகக்கொண்டு காணவந்தான் என்பதை நீ சென்று சொல்லுக" என்று வயந்தகனை அனுப்பினர். அவன் இச் செய்தியை வீதிதோறும் சொல்லிக்கொண்டே அரசன் மாளிகைக்குச் செல்வானாயினன். இஃது இவ்வாறாக.
"இந் நகரத்தைச் சூழ்ந்த பகைவரை வெல்லுதற்கு வழி யாது?" என்று கவலையுற்று அத்தாணியிலிருந்த தருசகனுக்கு, "உதயணன் பழமையைப் பாராட்டி வந்து துணைவருடன் சென்று போர்செய்து வென்று பகைவரை ஓட்டிவிட்டான்" என்ற செய்தி எட்டியது. உடனே அவன் எழுந்து வெளியே வந்து, "இச் செய்தியை அறிந்து வந்தோர்களை எனக்கு நேரில் காட்ட வேண்டும்" என்றனன். எனவே ஏவலாளர் போந்து வயந்தகனை அழைத்து வந்து காட்டினர். நிகழ்ந்தவற்றை அவன் கூறக்கேட்ட தருசகன், "விறல்வேல் உசயணன் இவண் வரப் பெற்றேன்; தவமிக உடையேன்" என்றும், "கேட்ட காலையுங் கேட்டோர் உவப்ப நட்டோர்க் காற்றும் நன்னராளனுடைய வரவை எதிர்கொள்ளக்கடவேன்" என்றும் சொல்லி நகரை அலங்கரி்ப்பித்து எதிர்கொண்டு செல்லும்பொழுது "உதயணனைத் தெளிந்து அழைத்தல் தீது" என்று சிலர் தடுத்தனர். தடுக்கவும் அதனை மதியாது தருசகன் அவனைத் தழுவி அழைத்துவந்து மிகப்பாராட்டித் தனியே வசதி அமைத்து அதில் இருக்கச் செய்து அவனுக்குப் போர்செய்தலால் உண்டான வருத்தத்தைப் போக்குவானாயினன்.
இவர்கள் இங்கே இப்படியிருக்கையில், தோற்றோடிய அப் பகையரசர் தம்முள்ளே கூடி ஆராய்ந்து தங்களுள் யாரிடத்தும் பிழைப்பில்லையென்று தெளிந்து, 'இனி யாரையும் நம்பித் தெளிதலாகாது' என்று நிச்சயித் துக்கொண்டு சூளுறவு செய்து எல்லோரும் ஒன்றுசேர்ந்து பெரும்படைகளோடு வந்து மரங்களை வெட்டி வீழ்த்தியும் விளைந்த நெற்கதிர்களைக் கொளுத்தியும் பிற தீங்குகளைச் செய்தும் நாட்டிற்குப் பெருந் துன்பத்தை விளைவித்தனர். அதனை அறிந்த படையொற்றாளர் விரைந்து வந்து தருசகனுக்குத் தெரிவித்தனர். அவன் மிக்க கோபங்கொண்டு தானே போர்செய்தற்குப் புறப்பட நிச்சயித்தனன்.
அது தெரிந்த உதயணன், "யானே சென்று போர்புரிந்து வென்று வருவேன். தன்னுடைய நால்வகைப் படைகளையும் அவற்றிற்குத் தலைவனாக ஒரு வீரனையும் எனக்குத் துணையாக அனுப்புமாறு தருசகனிடம் சொல்லிவா" என்று வயந்தகனை அனுப்பினான். அவன் வந்து சொல்லக் கேட்ட தருசகன் மந்திரிகளுடன் யோசித்துத் தன்னுடைய படைகளையும் வீரர்களையும் அவன்பால் அனுப்பினான். அதை அறிந்த கேகயத்தரசன், "என்னை அனுப்பின் நான் விரைவில் பகைவரை வென்று வருவேன்" என்று தெரிவிக்க, தருசகன், "என்னுடைய படைகளுக்குத் தலைவனாகச் சென்று உதயணனுடனிருந்து பகைவரோடு போர்செய்து வருக" என்று அவனை அனுப்பிவிட்டு, "தங்கையை விரும்பி வந்த கேகய அரசனும் வருகின்றான். அவனுக்கு யாதொரு தீங்கும் நேராதபடி பாடுகாத்துக்கொள்ள வேண்டுமென்று உதயணனுக்கு சொல்" என்று வயந்தகனை அனுப்பினான். அவனும் அப்படியே வந்து அதனை உதயணனுக்குக் கூறினன். உதயணன் யானைமீதேறிப் போருக்குப் புறப்பட்டனன். உருமண்ணுவா முதலிய முந்நூற்றாறு வீரர்கள் தமக்குரிய ஊர்திகளில் ஏறி உதயணனைப் புறங்காத்துச் சென்றனர். அக் காலத்தில் தருசகன் வந்து, "கேகயத்தரசனைப் பாதுகாத்துக்கொள்க" என்று மட்டும் உதயணனுக்கு நேரிற் சொல்லிவிட்டு மீண்டு தன்னிடம் சென்றனன். உதயணன், "சேனையின் நடுவே, கேகயத்தரசனும் உருமண்ணுவாவும் எனக்கு முன்னே செல்லுக. இன்னார் எனக்குப் பின்னே வருக" என்று கூறுபடுத்தி அமைத்துக்கொண்டு பகைவரது பாசறையை அடைந்தனன். உடனே பகைவரெல்லோரும் தங்களுக்குரிய பெரும்படையோடு வந்து எதிர்த்தார்கள்.
அப்போது இருவகைப் படைகளுக்கும் பெரும்போர் நிகழ்ந்தது. உதயணன் எலிச்செவி அரசனுடைய தம்பி ஏறியிருந்த யானையின்மேல் பாய்ந்து அவனைப் பிடித்துக் கச்சால் அவன் தேரில் கட்டினன். அதனைக் கண்ட உரு மண்ணுவா, "நம்முடைய கருத்தை முடித்தற்குரிய காலம் இதுதான்" என்று எண்ணிக் கேகயத்தரசனோடு சேர்ந்து எலிச்செவியரசன் படையோடு போர்செய்தற்கு எழுந்தான். உடனே எலிச்செவியரசன் விரைந்து வந்து கேகயத்தரசனுடைய தலையை வெட்டி வீழ்த்திவிட்டுத் தன் தம்பி உதயணனாற் சிறைப்பட்டிருத்தலை அறிந்து உருமண்ணுவாவின் யானையின்மேல் குதித்து, "என் தம்பியை விட்டுவிடும்படி செய்வாயாயின் நீ பிழைப்பாய்" என்று சொல்ல, அதனைக் கண்ட உதயணன், " தருசகனுக்கும் இவனுக்கும் வேறுபாடில்லை. இவனைப் போற்று வாயாயின் உன் தம்பியைப் நீ பெறுவாய்" என்று சொல்லிப் போர்செய்தனன், அப்பொழுது, வெள்ளத்தால் உப்பணை கரைவதுபோலப் பகைவர்படை உடைந்துபோயிற்று. போகியும் பகைவர் உருமண்ணுவாவைப் பிடித்துக் கொண்டு தம்மிடம் சென்று அவனைச் சிறைப்படுத்தி விட்டனர்.
விசயமுரசத்தோடு தோழர்கள் சூழச்சென்று உதயணன் வெற்றிச் செய்தியைத் தருசகனுக்குத் தூதர் மூலமாக அறிவித்தான். தருசகன் புறம்போந்து உதயணனைப் பலமுறை புல்லி, "நிகழ்ந்ததைச் சொல்ல வேண்டும்" என்று கேட்க, "கேகயத்தரசன் பகைப் படையின் எழுச்சியையும் அதனால் உண்டாகும் தீங்கையும் நினையாதவனாகி யாம் விலக்கவும் அடங்கி நில்லாமல் விரைந்தோடித் தமரையும் எமரையும் நீங்கிப் போர்செய்து எலிச்செவியரசனுடைய வாளால் வெட்டுண்டு வீர சுவர்க்கம் அடைந்தான்" என்று கூறினன்; அதுகேட்ட தருசகன்,
"என்கடன் றீரே னாயி னேனவன்
தன்கடன் றீர்ந்து தக்க தாற்றினன்" (3.20:141-2)
என்பதைக் கூறி உள்ளம் நெகிழ்ந்துருகிப் போர்க்களத்தில் ஆராய்ந்தெடுத்து அவன் உடம்பைத் தகனஞ் செய்வித்து மற்றக் காரியங்களையும் முடித்துவிட்டு உதயணனுடன் அகநகர் புகுந்தான். புகுந்தபொழுது கண்டோர் மகிழ்ந்து உதயணனைப் பலவாறு வாழ்த்தினார்கள். அங்ஙனம் வாழ்த்திக்கொண் டிருக்கத் தருசகனோடு சேர்ந்து உதயணன் அரண்மனைக்குட் புகுந்தான்.
அப்பொழுது தருசகன், "துரியோதனாதியர் நூற்றுவரைத் தனியே வென்ற பெருவிறல் வாய்ந்த வீமனைப்போலத் தனியே சென்று பகைவரை வென்ற உதயணனுடைய சுற்றத்தாரென்று சொல்லப்படும் அரசர் பழம் பிறப்பில் தவமுடையோர்" என்றெண்ணித் தன் தங்கையாகிய பதுமாபதியை அவனுக்கு மணம் செய்விக்க நினைந்து அச் செய்தியை அவளிடத்தும் உதயணனிடத்தும் சொல்லிவரும்படி முதுமகனாகிய அமைச்சன் ஒருவனை அனுப்ப, அவன் சென்று தனியே இருந்த பதுமையைக் கண்டு,"நம்முடைய பகைவரை வென்றவனும் யானையை வணக்கும் வீணை வித்தகனுமாகிய உதயணனுக்கு உன்னை மணஞ்செய்விக்கத் தான் எண்ணியிருப்பதாக அரசன் உனக்குத் தெரிவிக்கச் சொன்னான்" என்று சொல்ல அவள் புன்முறுவலை உடையவளாகி, "மந்திர நாவின் அந்தணன் கேண்மை இருநிலம் பேரினும் தீர்தல் இன்று. ஆதலால், இங்ஙனம் நேரின் யான் உயிருடன் வாழேன்" என்ற உறுதியுடன் பேசாமல் இருந்தாள்.
அப்பால், அவ்வமைச்சன் உதயணனை அடைந்து அரசன் கருதியதைச் சொல்ல, உதயணன் நெடுநேரம் யோசித்துக் கொண்டிருந்து பின்பு, "யான் குறைகொள்ளுங் காரியத்தை அவனே குறைகோடல் என் தவத்தின் விளைவு" என உவந்த உள்ளமொடு தன் மகிழ்வை வெளிப்படுத்தாதவனாகி, "வாசவதத்தை தீப்பட்டமையால் மிக்க கவலையுடன் என்னுடைய அரசாட்சியைத் துறந்துவிட்டு அவளையும் யூகியையும் இழந்தபின் வாழ்வதனால் உளதாகும் பயன் யாதென்று எண்ணினேன். எனக்கு நீ சொல்லிய காரியத்தைச் செய்தலில் விருப்பமில்லை" என்று மறுத்தான். கேட்ட அவன், "நீ கூறும் சொல் குடிப்பிறந்தோர்க்கு ஒத்ததன்று" என்று வணங்கி நின்று, "மத்த யானையை வணக்கும் நல்யாழ் வித்தக வீர! இவ் வேண்டுகோளை நிறைவேற்ற வேண்டும்" என்று மீட்டும் இரப்ப, உதயணன், "தருசகனும் நீயும் மிக வற்புறுத்துதலால் நான் செய்வதற்கு யாது தடையுளது?" என்று கூறினன். அவ் வமைச்சன் மகிழ்ந்து மீண்டு சென்றான்.
சென்ற அமைச்சன் நிகழ்ந்தவற்றைத் தருசகனுக்குச் சொல்ல அவன் கேட்டு மகிழ்ந்தனன். இஃது இவ்வாறாக;
"மாடத்தில் ஒடுங்கியிருக்கும் மாணகனே நாம் என்பதைப் பதுமாபதி அறியாளாதலின், நம்மை மணத்தற்கு உடன்படாள். ஆதலால், அவனே நாம் என்பதை முதலில் அவளுக்கு ஏதேனும் ஒருவாற்றால் தெரிவிக்க வேண்டும். அதற்கு உபாயம் யாது?" என்பதை நினைந்த உதயணன் வயந்தகனை அழைத்து, "என்னுடைய உயிர்த்தோழனாகிய இசைச்சனென்பவன் இருமுதுகுரவரையும் இழந்தோன். அவனுக்கு ஓர் அந்தணக் கன்னியை மணம் புரிவித்த பின்பே என்னுடைய மணத்தைக் குறித்து நினைத்தல் வேண்டும் என்பதை என் வார்த்தையாகத் தருசகனிடஞ் சொல்லி அதனை முடித்துக்கொண்டு வருதல் உனது கடமையாகும்" என்று சொல்லி அனுப்ப வயந்தகன் சென்று தருசகனுக்கு உதயணனுடைய கருத்தை முறையாகத் தெரிவித்தனன்.
தருசகன், "பதுமையின் பார்ப்பனத்தோழியாகிய யாப்பியாயினியென்னும் கன்னி ஒழுக்கத்திலும் குலத்திலும் விழுப்பம் மிக்கவளாதலால், அவளை இசைச்சனுக்கு மணஞ் செய்வித்தல் நலம் என்பதை உதயணனுக்குத் தெரிவித்திடுக" என்று சொல்லியனுப்பினன். வயந்தகன் வந்து அதனை உதயணனுக்குத் தெரிவித்தான். தோழர்கள் கேட்டு மகிழ்ந்தார்கள். பின்பு அந்த மணத்திற்குரிய நாள் குறிப்பிடப்பட்டது. அதனை அறிந்த தருசகன், "பதுமையை உதயணனுக்கும் யாப்பியாயினியை அவன் தோழன் இசைச்சனுக்கும் மணஞ் செய்விக்க நிச்சயித்திருத்தலையும் யாப்பியாயினியின் மணத்தை முன்னதாகவே நிகழ்த்த வேண்டும் என்பதையும் தன்னுடைய தாய்க்குத் தெரிவித்துத் தாயின் அருள்வகை அறிந்து வம்மின்" என்று தம்மியல் வழாப் பெருமூதாளரை விடுத்தனன். அவர்கள் சென்று சொல்லக் கேட்ட தாய் உண்மலி உவகையளாய் யாப்பியாயினி அணிந்து கொள்ளுதற்கேற்ற ஆபரணங்களைக் கொடுத்தனுப்பினள்.
இச் செய்தியைக் கேட்ட பதுமை, "மாணகனைப் பிரிந்து என்னுடைய பெருந் துயரத்தை நீக்கிக்கொள்ளுதற்குப் பெருந்துணையாக இருந்த யாப்பியாயினிக்கு நீங்குதிறன் உண்டெனின் என் உயிரைத் தாங்கும் வழியை அறியேன். விலக்குதலும் இயல்பன்று. என் செய்கேன்" என்று நினைந்து ஆடை, அணிகலம், மாலை முதலியவற்றை யாப்பியாயினிக்கு அன்புடன் அளித்து, "வதுவை விசேடத்தால் என்னை மறந்தொழியாமல் விரைந்து வா" என்று சொல்லி அவளைத் தழுவித் தன்னுடைய கவலையைப் புலப்படுத்தாமல் நற்றாய் செய்தற்குரிய பரிசுகளையெல்லாம் அவளுக்குச் செய்து தன்னுடைய உழைக்கலங்களையும் சிறந்த சிவிகை ஒன்றனையும் அளித்தனள்.
தருசகன், பதுமையின் பெருந்தகைமையை நினைந்து மகிழ்ந்ததன்றி யாப்பியாயினியின் வதுவைச் செய்தியை நகரத்தார் எல்லாரும் அறியும்படி செய்வித்து மணத்திற்கு வேண்டியவற்றை மிகச் செவ்வையாக அமைப்பித்தனன். உரிய நாளில் வதுவை மண்டபத்தில் இசைச்சனும் யாப்பியாயினியும் ஆசனத்தில் இருந்தனர். வதுவைச் சடங்கு நடைபெற்றது. அச் சமயத்தில் உதயணன் அருகே இருந்து இசைச்சனை நோக்கி, "தாம் மகதத்திற்கு வந்தது முதன்மையான கோசம்பிநகரத்தையும் யமுனை யாற்றையும் பிறவளங்களையும் யாப்பியாயினி கண்டு மகிழ்ந்து உறைவதற்கு ஏதுவாயிற்று" என்று அவள் காதில் படும்படி கூறினன். கேட்ட அவள், "இக்குரல் மாணகன் குரலாக இருக்கின்றதே" என்று கடைக்கண்ணால் அவனைப் பார்த்து ஐயம் ஒழிந்து, "உதயணனே பார்ப்பன உருவோடு பதுமாபதியின் யாப்புடை நெஞ்சம் அழித்தனன்; ஒத்த இடத்தன்றி ஒவ்வாத இடத்தில் மனம் செல்லாதென்பது உண்மையே" என்றுநினைந்து, "இச் செய்தியை விரைவில் அவளுக்குத் தெரிவிக்க வேண்டும்" என்னும் எண்ணத்தோடு சமயம் நோக்கிக்கொண்டே இருந்தனள். வதுவைக்குரிய ஏழுநாட்களும் சென்றன. செல்லவே மணக்கோலத்தோடு தன்னைக் காண வரும்படி பதுமை சொல்லி, விடுத்த சிவிகையில் யாப்பியாயினி ஏறிச் சென்று அவளைக் கண்டு அளவளாவிய பின்னர். "மாணகனாக வந்து உன்னுடைய உள்ளத்தைக் கவர்ந்தவன் உதயணனே; இனி வருந்துதலை ஒழிக" என்று துணிந்துகூறினள்.
"உன்னை மணந்த அந்தணன் உதயணனுடைய தோழன் என்பதை முன்னமே நான் கேட்டறிந் திருப்பது உண்டு. மாணகனுக்கு உரிமைபூண்ட என் நிறை வடுப்படாதிருத்தல் வேண்டுமன்றோ? ஆராய்ந்து பார்" என்று பதுமை சொற்றனள். பதுமையின் கருத்தை யாப் பியாயினி உதயணனுக்குத் தெரிவிக்க அவன் தன் வடி வத்தை ஒரு படத்தில் எழுதி, "ஓர் இரவிற் கன்னி மாடத்தில் என்னுடன் இருக்கையில் கோட்டானது குரலைக் கேட்டு மிகவும் அஞ்சினள். அந்த அடையாளத்தையும் சொல்" என்று சொல்லித் தன் படத்தைக் கொடுத்தனுப்பினன். படத்தில் உதயணன் வடிவைக் கண்ட பதுமை, "மாணகன் வடிவத்திற்கும் இதற்கும் சிறிதும் வேற்றுமை இல்லை; ஆயினும் இதனை நன்கு ஆராய்ந்தே தெளிய வேண்டும். இதனைத் தொடுதலும் தவறு" என்று சொல்லி அதனைக் கையில் வாங்காளாயினள். உடனே நள்ளிரவிற் கோட்டானுடைய ஒலிக்கு அஞ்சிய அடையாளத்தை அவள் சொற்றனள். சொல்லவே பதுமை தன் கணவன் உயிரைக் கூற்றுவன் கையினின்றும் மீட்ட சாவித்திரியைப்போல மிக்க இன்ப மடைந்து தோழியைக் கையால் தட்டி அப் படத்தைத் தாங்க முடியாத விருப்பதோடு மார்பில் ஒடுக்கி அதன் தோளைத் தீண்டிப் புன்முறுவல் செய்துகொண்டு, "நெஞ்சங் கொண்ட நெடுமொழியாள! வஞ்ச உருவொடு வலைப் படுத்தனை" என்று பாராட்டுவாளாய்க் கவலை ஒழிந்திருந்தனள்.
சில நாள் சென்றபின், அரசன் கட்டளைப்படி சேனைக் கணியால் வதுவைக்குரிய நல்ல முகூர்த்தம் வைக்கப் பெற்றது; நகரம் அலங்கரிக்கப்பட்டது, பதுமைக்கும் உதயணனுக்கும் மணம் விதிப்படி நடைபெற்றது. உதயணன், "மிக விரைந்து உருமண்ணுவாவைச் சிறையினின்றும் மீட்டுவரச் செய்ய வேண்டும்" என்று தருசகனுக்குத் தெரிவித்தனன். அவன் அதனை அங்கீகரித்ததன்றி. "உதயணன் வலிந்து வந்து நம்முடைய பகைவரை வென்ற நட்பாளானாக இருப்பதல்லாமல் சுற்றமாகவும் இருத்தலின் அவன் பகைவனாகிய ஆருணியை வென்று வத்த நாட்டையும் கௌசாம்பி நகரையும் அவனுக்கு உரியனவாகச் செய்ய வேண்டியது நம்முடைய கடப்பாடு" என்று எண்ணினான். எண்ணி, தாமே சென்று தம் வினை முடிக்கும் மந்திரிகளுள் சிறந்த வருடகாரன், தாரகாரி, தருமதத்தன் சத்தியகாயன் முதலிய மந்திரிகளையும்,
'இருநூ றானையு மிராயிரங் குதிரையும்
அறுநூற் றிரட்டி யடன்மணித் தேரும்
அறுபதி னாயிர மெறிபடை மள்ளரும்
திருமணிச் சிவிகையும் பொருவினைப் படாகையும்
செங்காற் பாண்டிய நன்று பூண்ட
பைம்பொ னூர்தியும் பவழக் கட்டிலும்
படாஅக் கொட்டிலும் பண்டிபண் டாரமும்
கடாஅக் களியானைக் காவலற் கியைந்த
பணைத்தோட் சிலசொற் பதுமா நங்கைக்கு
அமைக்கப் பட்ட வகன்பரி யாளமும்
அன்னவை யெல்லா மந்நிலை நல்கி' (3.23:30-40)
பின்னும் வேண்டுவனவற்றை அப்பொழுது அப்பொழுது வரவிடுவேன்" என்று மந்திரிகளிடஞ் சொன்னதன்றி, "உதயணனுக்கு ஆவனவற்றை அறிந்து அவ்வப்பொழுதே செய்துவர வேண்டுவது உம்முடைய கடமை" என்று ஒவ்வொரு மந்திரிக்கும் தனித்தனியே கூறினன்;
’வடுத்தொழி லகன்ற வருட கார!
உடற்றுநர்க் கடந்த உதயண குமரன்
அடைக்கல நினக்கு’ (3.23:47-9)
என்று ஓம்படுத்து மந்திரிமாரை நோக்கி, "ஒற்றினானும் உபாயத்தானும் ஆருணியைத் தொலைத்துவிட்டே நீர் பெயர்ந்து வரல் வேண்டும்" என்று சொல்ல, எல்லோரும்
கோசாம்பி நகரத்தை நோக்கிப் படையுடன் புறப்பட்டார்கள்.
புறப்படவே தருசகன் பின்னும் தொடர்ந்துவந்து உதயணனைக் கண்டு அன்பு மிக்க சொற்கள் பலவற்றைச் சொன்னதன்றி, "வந்து உதவி செய்ய வேண்டுமென்பதைப் பிரச்சோதனனுக்குத் தெரிவித்தால் அவனும் நமக்கு அநுகூலஞ் செய்பவனாவான். வேண்டுமாயின் யானும் வருவேன்; தெரிவித்தால் அன்புடைய பிற அரசர்களும் வருவார்கள். எல்லாவற்றையும் ஆராய்ந்து செய்க; உனக்கு வெற்றியுண்டாகுக" என்று கூறினன். உதயணன் தருசகனை நோக்கி, "அடையக்கூடிய இன்பங்களை இன்பமாக யான் எண்ணுவது உருமண்ணுவாவை அடைந்த பின்புதான். ஆதலால், அவனைப் பதினைந்து தினத்துட் சிறைவிடுவித்து வருவித்து அனுப்புவது உனக்குக் கடனாகும்" என்பதைத் தெரிவித்தனன். தருசகன், உருமண்ணுவாவின் பெருமையையும் அவனிடத்தே உதயணனுக்குள்ள ஆர்வத்தையும் அறிந்து மனமுவந்து "அப்படியே செய்வேன்" என்று சொல்லி விடை பெற்றுத் தன் நகர்க்குச் சென்றான். சென்ற பின்பு,
'அடற்பே ரியானையு மலங்குமயிர்ப் புரவியும்
படைக்கூழ்ப் பண்டியும் பள்ளி வையமும்
நடைத்தே ரொழுக்கும் நற்கோட் டூர்தியும்
கொடிப்படை போக்கிப் படிப்படை நிறீஇப்
புடைப்படை புணர்த்து' (3.24: 35-40)
உதயணன் செல்லுதலை அறிந்த மன்னர்கள், " உதயணன் போரை மேற்கொண்டு செல்லுகின்றான். இச் செலவு யார்மேலதோ? இஃது அஞ்சற்பாலது" என்று தம்முட்
கவலையுற்றார்கள்.
அவன் அங்ஙனஞ் சென்று ஓரிடத்தில் தங்கியிருந்த பொழுது, "பாஞ்சாலனோடு போர் செய்வதற்கு விரைவில் எழ வேண்டும்" என்று யூகிதனக்கு இரகசியமாக எழுதிய ஓலையை வயந்தகன் பிறித்து வைத்துவிட்டு, அங்கே வந்த பிங்கல கடகரைக் கண்டு அவர்கள் கூறியவற்றை அறிந்து, உதயணனை அடைந்து, " உன்னுடைய தம்பிகளாகிய பிங்கல கடகர் முன்னம் கோசம்பிநகரத்தைப் பாதுகாத்துக்கொண்டிருந்தனர். பின்பு அந் நகரத்தைச் சூழ்ந்துவந்து முற்றிய பாஞ்சாலராசனுடைய போருக்கு ஆற்றாராகித் தோல்வியுற்று யமுனையாற்றில் வீழ்தற்குக் குதிரை ஊர்ந்து விரைந்து செல்லுகையில், இடையே அரணுள்ளதும் பெண்கள் மட்டும் உறைவதுமாகிய நகரம் ஒன்றைக் கண்ணுற்று அதில் பன்னிரண்டு திங்கள் தங்கியிருந்து பாஞ்சாலராசனுடைய ஆட்சியைப் பொறாதவர்களாகித் தம்குறையை உனக்குத்தெரிவித்தற்கு இங்கே வந்திருக்கின்றனர்" என்று சொல்ல உதயணன் மிகுந்த ஆவலோடு அவர்களைப் பார்க்க விரும்பிய காலத்தில், பிங்கல கடகர் பன்னீராயிரம் வீரர்களோடும் அற்ற காலைக்கு அமைக்கப்பட்ட ஏனைக் கொற்றத் தானையோடும் வந்து பணிந்தனர். அவர்கள், "உனக்கு வழிபாடு செய்தலைத் தவிர்ந்ததன்றிப் பெற்ற தாய்க்குப் பணி செய்துகொண்டிருத்தலையும் ஒழிந்தேம்; நல்வினை இல்லேம்" என்று கலங்கிக் கண்ணீர் ஆறாகப் பெருகத் தலை காலில் படும்படி வணங்கினர்.
உதயணன் அவர்களை எடுத்துத் தழுவி, "மந்திரிகளுடைய எண்ணத்தின் வழியே நடவாத புல்லறிவினையுடையேன் செய்த குற்றத்தின் பயன் இது. நீங்கள் இனி வருந்த வேண்டாம் என்று இனிய மொழிகளைக் கூறி, " உங்களை, அடைந்தமையால் இனிப் பகைவர் எரிவாய்ப்பட்ட பஞ்சி போல்வார். யான் யாதொரு குறையும் இல்லேன்" என்றும், " இனி யூகியையும் வாசவதத்தையையும் யான் எளிதில் அடைவேன்; என்னுடைய தவம் உம்மைத் தந்து எல்லாத் துயரையும் நீக்கியது" என்றும் சொல்லி இன்புற்று அவர்களுடைய கண்ணீரைத் துடைத்துவிட்டு மந்திரிகளை நோக்கி, " பாஞ்சால ராசனை வெல்லுதற்குரிய ஆலோசனையைச் செய்ய வேண்டும்" என்றனன். உடனே வருடகாரன், "நாம் மேல் நடத்த வேண்டுவது இன்னது" என் பதை விளங்கக் கூறிப் பாஞ்சாலராசனிடத்துள்ள நிகழ்ச்சிகளை அறிந்து வரும்படி ஒற்றர்களைக் கோசம்பிநகருக்கு அனுப்பினன். சென்ற ஒற்றர் அங்கே நிகழ்ந்தவற்றை அறிந்துவந்து விளங்கக் கூறினர்.
அப்பால் வருடகாரனும் பிறரும் இடையிடையே செய்த முயற்சிகள் பல. இருதிறத்தாரும் போர்செய்யத் தொடங்கினர். பெரும்போர் நிகழ்ந்தது. இறந்தோர் பலர். பின்னர் பாஞ்சால ராசன் சேனைகளுடன் போர் செய்யப் புறப்பட்டான். தீய நிமித்தங்கள் பல நிகழ்ந்தன. பூரண குண்டலனென்னும் மந்திரி, " இப்பொழுது யாம் போருக்குச் செல்லுதல் முறையன்று," திரும்பி விடுதலே நலம்" என்று தடுப்பவும் ஆருணி கேளானாகிச் சென்று போர் செய்யத் தொடங்கினன். அப்பொழுது,
' சிலைத்தன தூசி; மலைத்தன யானை;
ஆர்த்தனர் மறவர்; தூர்த்தனர் பல்கணை!
விலங்கின வொள்வாள்; இலங்கின குந்தம்;
விட்டன தோமரம்; பட்டன பாய்மா;
துணிந்தன தடக்கை; குனிந்தன குஞ்சரம்;
அற்றன பைந்தலை; இற்றன பல்கொடி;
சோர்ந்தன பல்குடர்; வார்ந்தன குருதி;
குழிந்தது போர்க்களம்; எழுந்தது செந்துகள்;
அழிந்தன பூமி; விழுந்தனர் மேலோர்;
இப்படி நிகழ்ந்த காலை' (3.27:170-16)
ஆருணியைச் சார்ந்த வீரர்கள் பலர் உதயணனுடைய வீரர்களால் கொல்லப்பட்டனர். கார்த்தவீரியார்ச்சுனனைக் கொன்ற பரசுராமனைப் போலப் பாஞ்சாலராசனை உதயணன் வெட்டி வீழ்த்தினான். அப்பால், "அரச உரிமையை உதயணன் பெற்றான்" என்று நாட்டினரும் நகரத்தினரும் அறிந்துகொள்ளும்படி யானையின்மேல் வெற்றி முரசத்தை ஏற்றி அறையச் செய்தனர். உதயணன் பின்பு உரியவர்களைக் கொண்டு பாஞ்சாலராசனுக்கு ஈமக்கடனைக் கழிப்பித்தனன். வருடகாரன் கோட்டை வாயிலை அடைந்து கதவை அடைத்துக்கொண்டு உள்ளே இருக்கும் நகரத்தார்களை நோக்கி, "இனி நீங்கள் சிறிதும் அஞ்ச வேண்டாம். உங்கள் தலைவனாகிய உதயணன் பாஞ்சாலராசனைக் கொன்று விட்டான். ஆதலால் கதவைத் திறந்திடுமின்" என்று கூறினன். கேட்ட நகரத்தார், "எம்முடைய பழைய அரசனாகிய உதயணனுடைய முத்திரை அமைந்த ஓலையைக் கண்டாலன்றி யாம் கதவைத் திறவேம்" என்று மறுத்தனர். உடனே அவர்களுடைய சந்தேகம் நீங்கும்படி, "உதயணனுடைய மந்திரியாகிய இடவகன் வந்திருக்கின்றான்" என்பதைக் கூறினன். கூறவே அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுற்றுக் கதவைத் திறந்து கொடி முதலியவற்றை உயர்த்திக் கொண்டு எதிர்கொண்டார்கள். அங்கே நின்ற பாஞ்சாலராசனுடைய நண்பனாகிய கும்பன் என்பவனைக் கண்டு அவனைக் கொன்று பின்னும், "பகைவனுடைய தமர் இங்கு உளராயின் அவர்களையும் கொல்வேம்" என்று சொல்லிக்கொண்டு ஆயுதபாணிகளாகப் பல வீரர்கள் பாதுகாக்கச் சென்று வீதிதோறும், "உதயணன் வாழ்க" என்று சொல்லுவாராகி யாவரும் அறியும்படி யானையின் மேல் பறையை ஏற்றி விடுத்தனர்.
--------------
4. வத்தவ காண்டம்
அப்பால், உதயணன் வருடகாரனைத் தழுவி மிகப் பாராட்டித் தன்னுடைய யானையையும் ஆபரணங்களையும் அவனுக்குக் கொடுத்தனன். பின்பு தருமதத்தனை நோக்கி, "பாஞ்சாலராசனை வென்றது உன்னால்தான்" என்று முகமன் கூறி, "அவனை வென்றதற்கு இவை அறிகுறிகள்" என்று நெய்த்தோர்ப் பட்டிகையையும் பத்து ஊர்களையும் அவனுக்கு அளித்தனன். நல்ல வேளையில் புறப்பட்டு யானையின் மேல் ஏறிக்கொண்டு, தோழர்கள் சூழ, வெண்கொற்றக் குடை கவிப்ப, கவரிகள் இரட்ட, சங்கமும் முரசும் இயம்ப, மா சனங்களின் வாழ்த்தொலி மிக, "நெடுந்தகாய்! நெடுங்காலம் உலகத்தைப் பாதுகாத்து வாழ்வாயாக" என்று பலர் கோபுரந்தோறும் நின்று பூமழை பொழியாநிற்ப உதயணன் அரண்மனையை அடைந்தான். அடைந்தவன், ஆருணியோடு அழற் பள்ளியை அடையாத அவன் மனைவியர்களுக்கு வேண்டும் பொன்னை அளித்து வேறிடம் சென்று இருக்கும்படி செய்வித்தான். "இறந்தோர்களுக்குரிய கடன்களைக் கழிப்பீர்களாக" என்று மற்றவர்களுக்கு வேண்டியவற்றை அளித்தான். இப்படியே செய்ய வேண்டிய பலவற்றையும் செய்து முடித்த பின்பு முதன்மையான வேறோர் அரண்மனையைத் தனக்கு இயற்றுவித்துத் தனக்கு உரியவர்களான அமைச்சர்கள், நண்பர்கள் முதலியவர்களை முறையே உடன் அமைத்துக்கொண்டு எல்லா அங்கங்களையும் நிரப்பி, அரண்மனையிலுள்ள பேரத்தாணியினிடையே பகைவனை வென்ற மகிழ்ச்சியுடன் வீற்றிருந்தான்.
ஆருணி அரசனால் இடையே அமைக்கப்பட்ட புதிய கொடுங்கோல் முறைகளையெல்லாம் பின்பு உதயணன் அடியோடே அகற்றிவிட்டுச் செங்கோற்செல்வம் சிறப்பச்செய்து பரம்பரையாகக் காரியம் பார்த்து வந்த குடிமக்களை நகரிலும் நாட்டிலும் உயர்த்தினான். தேவாலயங்கள், அருந்தவர் பள்ளி, அந்தணர் இருக்கை, தோட்டம் வாவி, ஆவணக்கடை, நாற்சந்தி, முச்சந்தி தெரு முதலியவற்றைப் புதுப்பித்து, "தமக்கு உரியவற்றை இடையே இழந்த மாந்தர் அவற்றை அடைவாராக" என்று கட்டளையிட்டான். "வறுமையை உடையீரும், ஊக்கம் முதலியவற்றை இழந்து மூப்பால் முடங்கினீரும், கணவன் கைவிடுதலால் வாழ்வை இழந்து வருந்தும் பெண்டிரும், உறுப்புக் குறைந்தீரும், பிறரும் வந்து வேண்டியவற்றை வேண்டியவாறே பெற்று வாழக்கடவீர்" என்று மன்றங்கள் தோறும் முரசறைவித்துச் சாற்றி வேண்டியவற்றை அவர்களுக்கு உபகரிக்கச் செய்தான்.
'போரின் வாழ்நரும் புலத்தின் வாழ்நரும்
தாரின் வாழ்நருந் தவாஅப் பண்டத்துப்
பயத்தின் வாழ்நரும் படியிற் றிரியா
ஓததின் வாழ்நரும் ஒழுக்கின் வாழ்நரும்
யாத்த சிற்பக் கயிற்றின் வாழ்நரும்
உயர்ந்தோர் தலையா இழிந்தோ ரீறா' (4.2:47-52)
யாவர்க்கும் சிறிதேனும் துன்பம் உண்டாகாதபடி செய்வித்தான். அறம் ஓங்கிற்று; பாவம் நீங்கிற்று; கூற்று அகாலத்தில் வந்து உயிர்களைக் கவர்ந்து செல்லுதலைத் தவிர்ந்தது; நானிலங்களும் செழித்தன. தம்பியர், பகைவருடைய ஊர்தோறும் சென்று அவர்களை அடக்கி வரு வாராயினர்; தருசகனுடைய சேனையோடு வந்து உதவி புரிந்த வீரர்களுக்கு வேண்டியவற்றை அளித்து அனுப்பினன். அருவிலை நன்கலம் முதலியவற்றைத் தமர்முகமாக அவனுக்கு விடுத்தனன்.
இவ்வாறு உதயணன், பட்டமெய்தி, பதுமாபதியுடன் இன்புறுவானாகிச் செங்கதிர்ச் செல்வனுடைய எழுச்சியும், பாடும், திங்களும், நாளும் தெளிதலின்றி மகிழ்வெய்திச் செங்கோலோச்சித் தன்னுடைய நாட்டை வளமுறச் செய்தனன்.
அவன் தன் நாட்டில் உள்ளாருடைய துன்பத்தை இங்ஙனந் தீர்த்தபின், "செய்ய வேண்டுவது யாது?" என்று ஆராய்ந்து, உஞ்சையிலிருந்து தன்னை ஏற்றிவந்தபிடி வீழ்ந்த இடத்தை விளங்கச் சொல்லி, "அதன் என்பு, தோல் முதலியவைகளை விரைவில் கொண்டுவாருங்கள்" என்று சிலரை அனுப்பிவிட்டு, அந்தப் பக்கத்துள்ள வேட்டுவத் தலைவர்களையும் குறும்பர்களையும் அழைத்து, "எம்மைச் சுமந்து வந்து காட்டில் விழுந்த பிடி செய்த பேருதவிக்கு யாம் செய்யும் கைம்மாறு யாதும் இல்லை. ஆனாலும் அதனை மறவாமல் இருத்தல் மாட்சிமை உடையதாதலால், அது வீழ்ந்த இடத்தில் ஒரு மாடம் எடுப்பித்து அதில் அதன் உருவத்தை அமைப்பித்துக் காலை மாலைகளில் அதனை வழிபடல் வேண்டும். அவ் வழியே செல்லுபவர்களுக்குப் பசி தீரும்படி அடிசிற்சாலை அமைத்து உணவு அளித்தல் வேண்டும். தாகத்தைத் தீர்ப்பதற்குத் தண்ணீர்ப் பந்தர்கள் வைத்து உண்ணீர் அளித்தல் வேண்டும். யாராயிருப்பினும் துன்பம் உற்றவர்களுக்கு உரிய நுகர்பொருள்களைக் கொடுத்தல் வேண்டும்" என்று சொல்லி அவற்றுக்கு வேண்டிய திரவியங்களை அவர்களுக்கு அளித்து, அவர்களுடன் அம் மாடம் எடுப்பித்தற்குரிய தச்சர் முதலியோர்களையும் அதன் வடிவம் அமைப்போர்களையும் அனுப்பினன்.
அதன்பின், முற்கூறியவாறு அப் பிடியின் என்பு முதலியவற்றைக் கொணர்ந்தவர்களுக்கு வேண்டியவற்றை அளித்து அனுப்பிவிட்டு, அவற்றைக் கௌசாம்பியினிடையே ஓர் இடத்தில் சேமித்துவைத்து அங்கே ஒரு கொற்றவாயிலையும் அதன் முன்னே மிக உயர்ந்த மாடம் ஒன்றையும் இயற்றுவித்து அவ் வாயிலுக்கு அப் பிடியின் உருவத்தை அமைப்பித்து அவ் வடிவத்தை வழிபடுதற்கு உரியவர்களையும் பிறரையும் நியமித்து அடிசிற் சாலைகளையும் தண்ணீர்ப் பந்தர்களையும் அம் மாடத்தின் பக்கத்தே அமைத்து அதனைச்சூழக் கூத்தியர் இருக்கையையும் தருமசரிதங்களைப் படிப்போர்களுடைய இருப்பிடங்களையும் அமைத்து மாதந்தோறும் விழாக் கொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டு வேண்டிய பொருள்களையும் கொடுத்தனன்.
இங்ஙனம் உதயணன் தன்னுடைய கடப்பாடுகளை நிறைவேற்றி மகிழ்வுற்றிருக்கும்பொழுது, உஞ்சைநகரத்திலுள்ள பிரமசாரியும் வேதம் முதலியவற்றை நன்கு ஓதி உணர்ந்தவனும் பேரியாழ் முதலிய யாழ்வகையையும் பிற நூல்களையும் மிக நன்றாக அறிந்தவனுமாகிற 1அருஞ்சுகன் என்னும் அந்தணன் ஒருவன் கௌசாம்பி நகரத்திலுள்ள தன் உறவினரைக் காணுதற்பொருட்டுப் புறப்பட்டு வந்தான். இடைவழியில் நீர் உண்ணுதற்கு எழுந்த யானைக் கூட்டத்தினிடையே அவன் அகப்பட்டு அச்சமுற்று, அங்கே நின்ற மிக உயர்ந்த வேங்கைமரம் ஒன்றின் கிளைமீது ஏறி நின்று நாற்புறத்தையும் நோக்கினன். நோக்குகையில், கோடபதியென்னும் யாழ், தலைவனைப் பிரிந்த கற்புடையாள்போல அழகு கெட்டு நரம்புகளை மூங்கில் வருடும்பொழுது 'தாமதீம்' என்னும் முழக்கம் உடையதாகி அங்கே மாட்டிக்கொண்டு கிடப்பதைக் கண்டான்.
----------
1 அரிஞ்சயனென்று இப் பெயர் வேறு நூல்களில் காணப்படுகின்றது.
அதன் இனிய ஓசையைக்கேட்டு யானைகள் கோபம் நீங்கிச் சாந்தமுற்றுச் சென்றதை அறிந்து அவன் அதன் சமீபத்தில் சென்று, 'இது கின்னரரால் இடப்பட்டதாயினும் இயக்கர்கள் மெய்ம்மறந்து போகட்டதாயினும் வேறு யாவதாயினும் ஆகுக' என்று நினைத்துப் பல மலர்களால் அருச்சித்து அதனைக் கையில் எடுத்துக்கொண்டு கௌசாம்பியை அடைந்து உதயணனுடைய அரண்மனையின் அயலிடத்தே உள்ள தன் சுற்றத்தாரைச் சார்ந்து அவர்களோடு மகிழ்வுற்றிருந்தான். மாலைக்காலம் வந்தது. அப்போது அதனை வாசித்தான்.
வாசிக்கையில், மேல் மாடத்தில் சாளரத்தைத் திறந்து வைத்துக்கொண்டு பதுமாபதியோடு அளவளாவி மகிழ்வுற்றிருந்த உதயணன் அந்த யாழொலியைக் கேட் டனன். கேட்டவுடன் அவன் விம்மிதமுற்று ஆராய்ந்து பார்த்து, "இவ்வொலி நம்முடைய யாழின் ஒலியாகும்" என்று தெளிந்து உடனே அதனை வருவிக்க நினைந்து புறத்தே வந்து தன் மெய்காப்பாளரைத் தேடியபொழுது அங்கே விழிப்புடன் படுத்திருந்த வயந்தகன் எழுந்து விரைந்து சென்று, "யாது நிகழ்ந்தது?" என்று கேட்டனன். உதயணன்,"கோடபதியின் குரல் இங்கே கேட்கப்படுகின்றது; நீயும் கேட்பாயாக. விரைந்து சென்று அது வாசிப்பவனை இங்கே அழைத்துவா" என்றனன். உடனே வயந்தகன் மாடத்தினின்றும் கீழே இறங்கி அவ்வொலி தோன்றிய எதிர் வீட்டை அடைந்து உள்ளே புகுந்து யாழ் வாசிப்பவனை நோக்கி, "இந்த யாழ் எப்படி உனக்குக் கிடைத்தது?" என்று கேட்க, அவன், "உஞ்சையிலிருந்து நான் நருமதையாற்றைக் கடந்து வரும்பொழுது ஒரு மலைச்சாரலில் இதனைப் பெற்றேன்" என்று கூறினன். கூறவே, அந்த யாழுடன் அவனை அழைத்துக்கொண்டு வந்து காட்டி,"நாம் உஞ்சையம்பதியினின்று வரும் நாளில் நள் இருளில் பத்திராபதி மிகுந்த வேகமாக வருகையில் விந்தமலையின் தென்திசைச் சாரலில் விழுந்த கோடபதியாகும் இது" என்று வயந்தகன் உதயணனிடம் கூறினன்.
கூறவே, உதயணன் தாங்கா உவகையனாகி, "வருகவென் னல்லியாழ் வத்தவ னமுதம்" என்று அதனை வாங்கி, "என் உயிர்த் துணையாகிய இந்த யாழைத் தந்த நீ வேண்டுவனவற்றைக் கூறுவாயாக" என்று சொல்லிப் வேண்டிய அருங்கலங்களையும் பெரும் பொருளையும் ஓர் ஊரையும் அருஞ்சுகனுக்குக் கொடுத்து, "நீ இந் நகரத்தே இருக்க வேண்டும்" என்று சொல்லிப் பின்னும் விரும்புவனவற்றை அளித்து அவனை அனுப்பிவிட்டு, உலவா விருப்பொடு புலர்தலைகாறும் உள்ளியும், உருகியும், அதனைப் புல்லியும் பாராட்டி வாசவதத்தையை நினைந்தே இராப்பொழுதைக் கழித்தனன்.
விடிந்தவுடன் அந்த யாழைப் புதுப்பித்து வாசவதத்தையை நினைந்து, "வாசவதத்தாய்! நீ கற்ற யாழ் இதோ வந்துவிட்டது. நீ வந்து இதனை வாசித்து மகிழ்வாயாக. என்னை மறந்தாய்" என்று அவளை நினைந்து நினைந்து புலம்புவானாகி, இழந்த தம்பிகளைப் பெற்றும் கோடபதியை அடைந்தும் சிறிதும் மகிழ்வின்றிக் காலம் கழிப்பானாயினன்.
அவன் இங்ஙனம் இருக்கையில் இராசகிரிய நகரத்தில், தருசகன், தான் பாதுகாத்து வைத்திருந்த சங்கமன்னருடைய உரிமைப் பொருள்களை அவர்களிடம் அனுப்பிவிட்டு, "அங்கே உள்ள அரசர்களைச் சிறையினின்றும் நீக்கி இங்கே விரைவில் அனுப்புக" என்பதைச் சொல்லும்படி தன்னுடைய கருமமாக்களை அப் பகைவர்பால் விடுத்தனன். கேட்ட அவர்கள் மிக மகிழ்ந்து,
"இழிந்த மாக்களோ டின்ப மார்தலின்
உயர்ந்த மாக்களோ டுறுபகை யினிது" (4.4:21-22)
என்று கூறி மகிழ்ந்து தருசகனைப் புகழ்ந்து உருமண்ணுவாவைச் சிறையினின்றும் நீக்கி அவன்பால் அனுப்பினர். உருமண்ணுவா வந்து தருசகனைக் கண்டு எலிச்செவியரசன் தம்பியாகிய சித்திராங்கதனையும் மற்ற அரசர்களையும் சிறையினின்று நீக்கி அவர்களுக்கு வேண்டியவற்றைக் கொடுத்தனுப்பும்படி செய்தபின்பு, உதயணன்பால் நிகழ்ந்த செய்திகளை எல்லாம் கேட்டு எல்லையற்ற மகிழ்ச்சியோடு அங்கே இருந்தான்.
இருந்தபொழுது, யூகி கொடுத்ததாக ஓர் ஓலையைச் சாதகன் கொணர்ந்து உருமண்ணுவாவிடம் கொடுத்தான். அவ் வோலையில், "யாம் எண்ணிய காரியம் இனிது நிறைவேறினமையின், இனி வாசவதத்தையை உதயணன்பால் ஒப்பித்தல் நலம்" என்று எழுதப்பட்டிருந்தது. அதனை அறிந்த உருமண்ணுவா சாதகனை நோக்கி, "எம்மை விட்டுப் பிரிந்தபின்பு நிகழ்ந்தவற்றைச் சொல்லவேண்டும்" என்ன, அவன் அவற்றையெல்லாம் கூறினன். உடனே உருமண்ணுவா அவனுடன் புறப்பட்டு இடையே தங்க வேண்டிய இடங்களில் தங்கி., புண்டரமென்னும் நகரத்தை அடைந்து அங்கே இருந்த யூகியையும் வாசவதத்தை முதலியவர்களையும் பார்த்து, மிகுந்த உவகையுற்று அவர்களுடன் கௌசாம்பிகையைச் சார்ந்து அதன் புறத்தே உள்ள மதுகாம்பீரமென்னும் சோலையில் புதியராய் வரும் அரசர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள மாடம் ஒன்றில், வாசவதத்தை முதலியவர்களை இருக்கு்ம்படி செய்துவிட்டுத் தான்மட்டும் உதயணன்பால் செல்வானாயினன்.
உருமண்ணுவா செல்லுவதற்கு முன்பு ஒரு நாள் உதயணன் கோடபதியை வாசித்துக்கொண்டு மகிழ்ந்திருக்கும்பொழுது பதுமை, "அரச, நின்னை வழிபட்டு வாசவதத்தை கற்று வல்லளாதற்குக் காரணமான இந்த யாழை அடிச்சியும் வழிபட்டுக் கற்றற்கு விருப்பமுடையேன்; தெரிவித்தருள வேண்டும்" என்று மெல்லச் சொல்லி அஞ்சலி செய்யவே, அவன் வாசவதத்தையின் நினைவினால் மனம் நெகிழ்ந்து உருகி விம்முதலுற்றுப் பதுமைக்கு யாதொரு விடையும் கொடானாயினன்.
அதனை அறிந்த பதுமை, "இப்பொழுது யாம் புலத்தல் பொருந்துவதன்று" என்றும், "வாசவதத்தையை இவர் நினைந்து வருந்துதல் முறையே; இஃது உயர்ந்தோர் ஒழுக்கம்" என்றும் எண்ணி யாதொன்றையும் அறியாதவள்போல இருந்து வேறொரு காரியத்தை முன்னிட்டு எழுபவள்போலவே எழுந்து தோழியர்கள் சூழத் தன் மாடத்தை அடைந்தாள்.
அப்பொழுது வயந்தகன் உதயணனை நோக்கி, "இதுகாறும் இரண்டு மனைவியரையும் சமமாக நினைந்து ஒழுகிய நீ வாசவதத்தையை நினைந்து இன்று இவள்பால் அன்பு குறைந்ததற்குக் காரணம் என்னை?" என்று வினாவ, அவன் அதனையும் கேளானாயினன்; பதுமாபதியையும் நினைந்திலன். பின்பு, நளகிரியை அடக்கி அதன் பிடரில் ஏறியபொழுது வாசவதத்தையைக் கண்டதுமுதல் அவள் அழல்வாய்ப்பட்டு இறந்தனள் என்பது இறுதியாகவுள்ள செய்திகளை இடைவிடாது சொல்லி அரற்றிக்கொண்டு படுக்கையில் சாய்ந்தவிடத்துச் சிறிது துயில் வந்தது. அப்பொழுது, பாற்கடலின் இடையே உள்ள வெள்ளேறு ஒன்று வந்து தங்கப்பெற்ற வெண்டாமரைப் பூ ஒன்றை ஒரு தெய்வ மங்கை தனக்குக் கொடுத்ததாக ஒரு கனாக் கண்டனன். கண்டபின் எழுந்து அருகனைத் தொழுது ஒரு முனிவரைக் கண்டு வணங்கித் தான் முதல் நாள் இரவில் கண்ட கனாவைத் தெரிவித்து அதன் பயனைச் சொல்ல வேண்டுமென்று வேண்டினன்.
வேண்டவே அவர், "வாசவதத்தை தீயில் மூழ்கி இறந்ததாளென்று எண்ணியிருக்கின்றனை. அது பொய். அவளை விரைவில் அடைவாய். அடைந்தபின்பு அவளிடமாக வித்தியாதரர் உலகை ஆளும் சக்கரவர்த்தியாதற்குரிய ஒரு மகனைப் பெறுவை" என்று சொல்லி அதற்குரிய காரணத்தையும் கூறினர், கேட்ட உதயணன், "முனிவருடைய வாக்கு என்றும் வீண்போவதில்லை. வாசவதத்தையை நாம் எதிர்ப்படுவதும் உளதாகுமோ?" என்று எண்ணிக்கொண் டிருந்தனன். இருக்கையில், உருமண்ணுவாவின் வரவை வாயிற்காவலர் உணர்த்தினர். உணர்த்தவே உதயணன், "வருக" என்று சொல்லிவிட்டுத் தான் எழுந்து விரைந்து சென்று தன் அடியில் வீழ்ந்த உருமண்ணுவாவின் கையைப் பற்றிக்கொண்டு யூகியை அடைந்தாற் போன்ற மகிழ்ச்சியைப் பெற்றுத் தன்னுடைய உரிமைப் பள்ளியை அடைந்தான்.
அடைந்த உதயணன் அவனுடன் தனியே ஓரிடத்தில் இருந்து "நிகழ்ந்தவற்றைக் கூறுக" என்று கேட்க, உரு மண்ணுவா தான் சிறைப்பட்டது முதலிய செய்திகளை விளங்கச் சொல்லிவிட்டு, "இங்கே நிகழ்ந்த செய்திகளைக் கூறு" என்று வயந்தகனைக் கேட்ப, அவன் உதயணன் கோடபதியைப் பெற்றதைச் சொற்றனன். சொல்லவே உதயணன் அது கற்ற வாசவதத்தையை நினைந்து மீட்டும் அரற்றுவானாயினன். அப்பொழுது அவனுடைய மனவருத்தத்தை ஒருவகையாக மாற்ற விரும்பிய வயந்தகன், "மனைவியர் இருவருள் அறிவிலும் ஒழுக்கத்திலும் சிறந்தவள் யார்? யாரிடத்தில் உனக்கு விருப்பம் அதிகம்?" என்று கேட்ப, "எனக்கு வாசவதத்தையே சிறந்தவள்; யான் தவம் இல்லேனாதலின் அவள் தீயில் ஒளித்தனள்" என்று சொல்லி உதயணன் பின்னும் மனம் மறுகுவானாயினன்.
கண்ட வயந்தகன். "வாசவதத்தையை மீட்டுத் தரும் பெரியோரைத் தரிசித்து வழிபாடாற்றுதற்கு யாம் மகத நாடு சென்றபொழுது பதுமையைக் கண்ணுற்று அவளை விரும்பி அவள் *மய*க இருந்தனை; அங்ஙனம் இருந்தது உனக்கு நலமோ? உன்னுடைய மனம் ஒருவழிப்பட்டதன்று" என்று சொல்ல உதயணன், "வாசவதத்தைக்கும் பதுமைக்கும் உருவத்திலும் குணங்களிலும் சிறிதேனும் வேறுபாடின்மையின் யான் விரும்பலாயினேன்; அன்றியும் பதுமையை யான் விரும்பியதற்குக் காரணம் ஊழ்வினையும் ஆகும்; அதனை மறுத்தற்கு யாராலே முடியும்?" என்று கூறினன். கேட்ட வயந்தகன், "அறியாதவனென்று என்னை இகழற்க; யான் சொல்லுதலை ஊன்றிக் கேட்டிடுக; முன்பு இராசகிரியத்தின் புறத்தேயுள்ள சோலையில் யாம் கண்ட பெறுதற்கரிய பெரி யோர் இன்று வந்திருக்கின்றனர்; வாசவதத்தையை அவர் வருவித்துத் தருவதாகவும் வலிந்து கூறினர். ஆதலால், நீ சில தினம் பதுமையை நீங்கித் தனியே தூயையாகியிருத்தல் நன்று" என்று சொன்னான். சொன்னவுடன் உதயணன் விரைந்து சென்று பதுமாபதியை நோக்கி, "எஞ்சியுள்ள பகைவரைக் கெடுத்தற்குரிய சிறந்த ஆலோசனை ஒன்று உண்டு; அதனை யாம் தனித்துச் செய்ய வேண்டும்; ஆதலால், தோழிமாரோடு நீ வேறிடத்திற்குச் செல்லுக" என்று சொல்லி அனுப்பி விட்டு, அவளுடைய அந்தப்புரத்தைத் தூய்மைசெய்து விளக்கேற்றுவித்துத் தானும் தூயனாகி வெள்ளுடையுடுத்து, "தெய்வமே! வாசவதத்தையை எனக்குத் தர வேண்டும்" என்று சொல்லிக்கொண்டும் வீணையைக் கையால் அணைத்துக்கொண்டும் துயில்வானாயினன்.
அவன் அங்ஙனம் துயிலுகையில், வேறு மகளிரிடத்து அவனுக்கு விருப்பம் இல்லாமையும் பகைவனை வெல்லுதற்குத் தருசகனுடைய நட்பைப் பெற வேண்டியே அவன் தங்கையாகிய பதுமாபதியை உதயணன் மணந்தனன் என்பதையும் இரவும் பகலும் வாசவதத்தையையே நினைந்து துயிலுங்காலத்தும் அரற்றிப் பலவாறு புலம்பிக்கொண்டே இருத்தலையும் காட்டி வாசவதத்தையைத் தேறச்செய்ய விரும்பி மந்திரிகள் அவளை ஒரு சிவிகையில் ஏற்றிக் கொணர்ந்து, "உன்னுடைய தலைவன் இயல்பை நீ பார்ப்பாயாக" என்று அவ்வந்தப்புரத்தினுள்ளே அனுப்பினர்.
அச் சமயத்தில் உதயணன், "வாசவதத்தாய்! உனக்கு வீணையைப் பயிற்றுவிக்கும் பொழுது உன்னுடைய பார்வையால் வருந்திய யான் உன்னைப் பிரிந்து ஆற்றேனாயினேன்; என்னை மறந்தாயே" என்று அரற்றிக்கொண்டும் அங்கேயுள்ள பூமாலைகளை வாடச்செய்யும் வெவ்விய *உயி**பினனாகியும் கனவில் அவன் வருந்துதலை வாசவதத்தை கண்டாள். "நனவிலும் என் உயிர்த் துணைவன் இருத்தல் இவ்வண்ணந்தானோ? தம்மையன்றி வேறு தெய்வம் இல்லாத மகளிருடைய பிரிவின்கண் அவர்களை நினைந்து வருந்துதல் உயர்ந்த கணவர்களது இயல்பென்று நூல்கள் கூறுவதை இன்று நேரே கன்டேன்" என்னும் தணியாத உவகையளாகி, "இங்ஙனம் நல்ல ஒழுக்கத்தையுடைய இவருக்கு மறுமையின்பமும் இயைவதாக" என்று சொல்லி அவனுக்கு அஞ்சலிசெய்து மெல்ல அருகில் சென்று கோடபதியைக் கண்டு பிரிந்த குழந்தையைக் காணும் தாயைப் போலவே ஆறுதலுற்று அதனை மெல்ல எடுத்து வாசிக்கத் தொடங்கினள். அவ்வொலி உதயணன் காதில்பட்டது. படவே அவன், "வாசவதத்தாய்! வந்தனையோ?" என்று கூந்தன்முதலாப் பூம்புறம் நீவி, "என்னை நெடுநாள் பிரிந்து நீ எங்ஙனம் ஆற்றினை? அதனைச் சொல்ல வேண்டும்" என்று கேட்ப, அவள் வியந்து ஒன்றற்கும் விடை கூறாளாகி வணங்கிச் சும்மா இருந்தனள். இருக்கவே அவன் மீட்டும், "பொழில் விளையாட்டைக் கருதி யாம் இலாவாணக மலைச்சாரலில் தங்கியபொழுது ஒரு நாள், "தழைமுதலியவற்றைக் கொணர்ந்து தர வேண்டும்" என்று நீ சொல்லக்கேட்டு யான் கொண்டுவருதற்குக் காட்டிற்குச் சென்றவிடத்து வீட்டில் நெருப்புப்பற்ற இன்னுயிர் நீத்த இலங்கிழை மடவோய்! உரிய அணிகளையெல்லாம் நீக்கி மெலிந்து பிறள்போலே தோற்றுகின்றாய்; நெருப்பில் வெந்தோர் இயல்பு இப்படியோ? இதனைச் சொல்ல வேண்டும்" என்று அவள் மெய்யைத் தீண்டித் துயிலத் தொடங்கினன்.
அப்பொழுது வயந்தகன் வந்து அவளை நோக்கி, "நீர் இங்கே வர வேண்டுவது நாளைத்தினம், யூகியோடேதான்; தலைவன் எப்பொழுதும் உம்மிடத்து அன்போடு இருப்பதைக் காட்டுதற்கே இப்பொழுது அழைத்துவந்தேம்" என்று சொல்ல, அவள் பிரிவிற்கு அஞ்சி, நடுங்கும் மனத்தோடு தன்மேலே கிடந்த உதயணன் கையை மெல்ல எடுத்து அணையில் வைத்துவிட்டு அவனை வணங்கி உடம்பினின்றும் நீங்கும் உயிர்போல வெளிப்போந்து சாங்கியத்தாயையும் யூகியையும் அடைந்தனள். உதயணன் புடைபெயர்ந்து எழுந்து, "எனக்கு ஏன் விடைதரவில்லை?" என்று அவளைத் தழுவுவதற்குச் சென்று அவளை அங்கே காணானாகிச் செயலற்றுத் துயில்மயக்கம் ஒழிந்து, உயர்ந்த மாணிக்கத்தைப் பெற்ற வறியவன் ஒருவன் அதனை ஆழமான நீர்நிலையில் போகட்டுவிட்டுத் தளர்வதுபோலத் துயிலிற்கண்ட தன் உயிர்த் துணைவியை விழித்தபின் காணாமையால் அரற்றுவானாயினன்.
அதனை அறிந்த வயந்தகன் மிக விரைந்து சென்று "இங்ஙனம் இரவும் பகலும் துன்பத்தோடு அரற்றுதல் அரசர்க்கு இயல்பன்று" என்று தக்க காரணங்களைக் காட்டிக் கூறினன். உதயணன் "வாசவதத்தை நேற்றிரவில் என் பள்ளியறையில் மெல்ல வந்து கோடபதியை எடுதது வாசித்துக் கொண்டிருந்தனள். இருக்கையில், எண்ணெயின்றி அழுக்கடைந்து பிணங்கிய கூந்தல் பின்னலையுடைய அவளுடைய புறத்தையும் நெற்றியையும்; தைவந்து மெலிவொழிந்து கண்படை கொண்டேன். கொண்டபொழுது அவள் என்னைவிட்டு நீங்கினள். என்னுடைய நெஞ்சம் எனக்கு வயமாகின்றதில்லை. யான் என் செய்வேன்?" என்று சொல்ல வயந்தகன் "கனவில் கண்ட பொருளை நனவில் அடைதல் தேவர்க்கும் இசைவதன்று. இக் கூற்றைக் கேட்பின் பிறர் நகைப்பர். வாசவதத்தையின் வடிவங்கொண்ட இயக்கியென்னும் தெய்வம் இங்கே உண்டு. அதனைத் தடுத்தற்கு ஏற்ற மந்திரத்தை யான் அறிவேன்" என்று இன்னோரன்ன பொருளில்லாத வார்த்தைகள் பலவற்றைச் சொல்லி மிக்க துணிவோடு இருந்தனன். இப்பொழுது பொழுது விடிந்தது.
உடனே உதயணன் கண்கழுவி நியமங்களை முடித்துக் கொண்டு குளம்பும், கோடும், பொன் அழுத்தியனவும், புதிய ஆடைகள் அணியப் பெற்றனவுமாகிய பசுக்கள் பலவற்றை வாசவதத்தையை நினைந்து அருமறையாளர்க்கு எழுமுறை வீசித் தன் கனவை வேறு பிறர்க்குச் சொல்லாமல், "விரகமுடையவர்களுக்கு உளதாகும் காரியம் இதுவோ?" என்று எண்ணிக்கொண்டிருந்தனன். இருந்த பொழுது வயந்தகன் வந்து "யாம் முன்பு மகதத்தில் கண்ட பெரியோர் இந் நகரத்தைச் சார்ந்த மதுகாம்பீரவன மென்னும் சோலையில் வந்து தங்கியிருக்கின்றனர். அங்கே செல்வோமாக" என்று சொல்லவே உதயணன் மகிழந்து தேர் ஏறி அவனுடன் அச் சோலையை அடைந்தனன்.
அங்கே உள்ள மாடத்தின் ஓர் அறையில் தவக் கோலத்தோடு யூகி இருந்தனன். மற்றோர் அறையில் சாங்கியத்தாயோடு வாசவதத்தை இருந்தனள். வயந்தகன் முதலில் உதயணன் வரவை யூகிக்கு உணர்த்திப் பின் அவனோடு சென்று யூகியைக் காட்ட உதயணன், "இவன் யாம் மகதத்தில் கண்ட முனிவன் அல்லன்; யூகியே. இவனைத் தழுவுதற்கு மனம் விரைகின்றது; இதனை நன்றாக அறிதல் வேண்டும்" என்று ஆராய்கையில், அவனது மார்பின்கண் யானைக்கொம்பால் உள்ள தழும்பு காணப்பட்டது. படவே ஐயம் தீர்ந்து வெய்துயிர்த்து எழுந்து நின்று;
"ஊறில் சூழ்ச்சி யுகந்த ராய!
நாறிருங் கூந்தலை மாறிப் பிறந்துழிக்
காணத் தருகுறு முனிவனை நீயினி
யாணர்ச் செய்கை யுடைத்தது தெளிந்தேன்;
வந்தனை யென்றுதன் சந்தன மார்பிற்
பூந்தார் குழையப் புல்லினன் பொருக்கெனத்
தீந்தேன் கலந்த தேம்பால் போல
நகையுருத் தெழுதரு முகத்த னாகித்
துறந்தோர்க் கொத்த தன்றுநின் சிறந்த
அருள்வகை" (4.7:186-95)
என்று கூறி, "இனி எதைக் கருதியாவது நீங்குவாயாயின், என் உயிர் நீங்கிவிடும்" என்று சொன்னபொழுது யூகி, "வாசவதத்தையை விரைந்து இவனுக்குக் காட்ட வேண்டும்" என்று கூறினன். உடனே தோழர் வாசவதத்தை செவிலித்தாயோ டிருந்த அறைக்கு *அவளை அழைத்துச் சென்றனர். வாசவதத்தை, "நுமக்குப் பெரிய அநுகூலம் பிறக்கும் என்பதை உணர்த்தி நும் அன்பர் சொல்லியதை மேற்கொண்டு நுமது கட்டளை பெறாமையாகிய அபசாரத்தை மேற் கொண்ட கல்லாக் கற்பிற் கயத்தியேன் யான்" என்று மிக்க நாணங்கொண்டு நடுங்கி எழுந்து கைகுவித்துத் தன் கூந்தல் அவன் காலில் புரளவும் கண்ணீர் அவன் புறவடியை நனைப்பவும் வணங்கிக்கிடந்தனள். உதயணன் அவளை எடுத்துப் பலமுறை தழுவி, அகல நின்ற சாங்கியத்தாயை நோக்கி,
துன்பக் காலத்துத் துணையெமக் காகி
இன்ப மீதற் கியைந்துகை விடாது
பெருமுது தலைமையி னொருமீக் கூரிய
உயர்தவக் கிழமைநும் முடம்பி னாகிய
சிற்றுப காரம் வற்றல் செல்லாது
ஆல வித்திற் பெருகி ஞாலத்து
நன்றி யீன்றது" (4.7:219-25)
என்று அன்புமயமாகிய மொழிகளை அவளுக்குச் சாலக் கூறினன்.
பின்பு வாசவதத்தையின் தோற்றத்தை அறிந்து உதயணன் மனம் வருந்தினான். அவளைத் தான் அடைந்த நற்செய்தியை நகரத்தார்க்கு முரசறைவித்துத் தெரிவித்தான். அறிந்த நகரத்தார் தத்தம் மாடங்களின்மீது கொடியெடுத்து விழவயர்ந்தனர். யூகியின் ஆற்றலையும் அவனது நண்பின் மேம்பாட்டையும் வாசவதத்தையின் நிறையையும் வியந்து மதித்துப் பலபடப் பாராட்டினார்கள். அப்பால் உதயணனும் வாசவதத்தையும் யூகியும் பஞ்சவண்ணத்துப் படாகைகள் பல அசையும்படி யானையின் பிடரியிற் கொண்டுவரப்பட்ட புண்ணியதீர்த்த நீராடி விலை வரம்பற்ற சிறந்த ஆபரணங்களை அணிந்து கொண்டு மிக்க இன்பத்தோடு வீறுபெற்று விளங்கினார்கள்.
அப்பால் உதயணன் யூகிக்குச் சொல்ல வேண்டிய முகமன்களைச் சொல்லுதல் 1வேறுபாட்டைப் புலப்படுத்தும் என்று எண்ணி ஒன்றும் சொல்லாதவனாகிச் சாங்கியத்தாயின் அருள் மிகுதியை மீட்டும் பாராட்டினன். "உன் தவ்வையை வந்து பார்த்துச் செல்ல வேண்டும்" என்று பதுமாபதிக்கு அவன் சொல்லியனுப்ப, உடனே அவள், தலைவனுக்கு வாசவதத்தை உயிர்த்துணைவி என்பதை நன்கு அறிந்தவளாதலால், அம் மொழியை விருப்பத்தோடு ஏற்றுக்கொண்டு சிறந்த அணிகலங்களைக் காணிக்கையாக ஏந்தித் தோழிமார் பலர் சூழ்ந்துவர அரசனை நீங்கித் தனியே இருக்கும் சமயம் அறிந்து தன் வரவை அவளுக்கு முன்னதாகவே தெரிவித்துக் கொண்டு சென்று வாசவதத்தையை வணங்கினள்.
-------
1"இணைய ரிவரெமக் *கின்னமயா மென்று புனையினும் புல்லென்னு நட்பு" திருக்குறள் 790.
வணங்கவே அவள் பதுமையைத் தழுவியெடுத்து, "கற்பில் இன்னும் மேம்படுவாயாக" என்று ஆசிகூறி மிகுந்த இன்பமடைந்தாள். அப்பால் இருவரும் யானைத்தந்தத்தால் செய்யப்பட்ட கால்களையுடைய கட்டிலின்மேலுள்ள மெல்லணை ஒன்றில் ஏறியிருந்து ஒரு தாமரை மலரில் சேர்ந்து தங்கிய இரண்டு திருமகளிர்போல விளங்கினர்.
உதயணன் பேரத்தாணியில் பல பெரியோர் சூழ இருந்து யூகியை நோக்கி, "உஞ்சை நகரத்தில் நான் அடைந்த சிறைத்துன்பத்தை நீக்கியபின்பு மீட்டும் உனக்கு நேர்ந்த மாயச்சாக்காட்டிற்கும் வாசவதத்தை தீயில் பாய்ந்தனளென்ற மாயச் செய்திக்கும் உரிய காரணங்களை விளங்கச் சொல்லவேண்டும்" என்று கேட்க யூகி, "பாஞ்சால ராசன், கௌசாம்பியைத் தன்னதாக ஆக்கிக்கொண்டிருந்ததையும் பிரச்சோதனனோடு நட்புக் கொள்ளுதற்கு முயன்று அதற்குரிய காலத்தை அவன் பார்த்துக்கொண் டிருந்தது முதலியவற்றையும் அகத் தொற்றாளரால் நன்கு அறிந்து அவனுடைய மாறுபாட்டையும் பெருமுயற்சியையும் குறைக்க வேண்டுமென்று துணிந்தும், அவனை வென்று பழைய அரசாட்சியைப் பெறுதலிற் சிறிதும் கவலையின்றி வாசவதத்தையை ஒரு பொழுதும் பிரியாமல் இன்புற்றிருந்த உனது இயல்பை வேறுபடுத்த எண்ணியும், தருசகனை உனக்குப் படைத் துணையாக்க நிச்சயித்தும், பிங்கலகடகரை உன்னுடன் சேர்க்க நினைத்தும் இங்ஙனம் செய்தேன். எண்ணியவெல்லாம் தெய்வத்தால் செவ்வனே நிறைவேறின. உன் திறத்தும் வாசவதத்தை திறத்தும் யாங்கள் எண்ணியவெல்லாம் திண்ணியவாய் நிறைவேறியதற்குக் காரணம் அந்தச் சாங்கியத்தாயின் பேருதவியே. உன்னுடைய கட்டளையின்றி 1உரிமையால் யான் செய்தனவற்றைப் பொறுத் தருள வேண்டும்" என்று கூறினன். கேட்ட உதயணன் "என்னுடைய தலைமையை யான் அடையும்படி செய்தாய் என்பதை அயலார் இருக்கும்பொழுது சொல்லுவேனாயின் அது வேற்றுமை பயக்கும். யாம் இருவரும் ஓர் உயிரே" என்று முகமன் கூறி அவனை அழைத்துக்கொண்டு அரண்மனை சென்றனன்.
-------
1 "விழைதகையான் வேண்டியிருப்பர் கெழுதகையாற் கேளாது நட்டார் செயின்." திருக்குறள், 804.
சென்றபின் அவன் பதுமையை நோக்கி, "வாசவதத்தையோடு நீ ஒரு கலத்திலேயே உண்ண வேண்டும்" என்று சொல்லியபொழுது அவள் வணங்கி,
"பெருந்தகு கழற்பினெம் பெருமக டன்னொடு
பிரிந்த திங்க ளெல்லாம் பிரியாது
ஒருந்தவ ணுறைதல் வேண்டுவ லடிகள்!
அவ்வர மருளித் தருத லென்குறை" (4.8:92-5)
என்று வேண்டினள். உதயணன் அவளை அன்புடன் மிகப் பாராட்டி அனுப்பினன். அது தெரிந்த வாசவதத்தை பதுமாபதியிடம் அவன் வைத்துள்ள அன்பை நினைந்து மிக ஊடினள். அதுகண்ட உதயணன் அவளை நோக்கி "அறிவிலும் தோற்றப்பொலிவிலும் உன்னை ஒத்திருந் தமைபற்றியே பதுமையை மணஞ்செய்தேன்" என்று தெளிவித்தான். ஆயினும் தன்னைப்போன்றவள் அவள் என்ற சொல் மனத்தை வருத்த வாசவதத்தை கடைக்கண் சிவந்து அப்பால் சென்றனள்,. அப்போது அவன் அவளைப் பலமுறை நயந்து பாராட்டி, "உருவினல்லது பெண்மையில் நின்னை அவள் ஒவ்வாள்" என்று அவள் மகிழ்தற்குரிய இனிய மொழிகள் பலவற்றைச் சொல்லித் தெருட்டியும், தெளித்தும், மருட்டியும் மகிழ்ந்தும் அவளது துனியைத் தீர்த்தனன். அப்பால் கண்டோர் வியக்கும்படி ஒருவரை ஒருவர் பிரியாமல் உறைவாராயினர்.
அங்ஙனம் உறைகையில் உதயணன் தன்னுடைய பரிசனத்தார் யாவரையும் வைத்துக்கொண்டு உருமண்ணுவாவிற்குச் சேனாபதிப் பட்டத்தை அளித்து ஏனாதி மோதிரத்தைத் தானே அவன் விரலில் செறித்ததன்றி, பல இலக்கம் பொன் வருவாயுள்ள பல ஊர்களையும் நால்வகைப் படைகளையும் கொடுத்துப் பதுமையின் தோழியாகிய இராசனை என்பவளை அவனுக்குப் பெருஞ் சிறப்புடன் மணம் செய்வித்துச் சயந்தி நகரத்தையும் இலாவாணக நகரத்தையும் அளித்து 1"குரவரைக் கண்டு வழிபாடு செய்துகொண்டு அவ்விடத்திலேயே இருந்து யாம் விரும்பிய காலத்தில் இங்கே வந்து செல்வாயாக" என்று சொல்லி அவனை அனுப்பினன்.
----------
1 குரவர்-இங்கே தந்தையார்.
பின்பு சேதி நாட்டையும் வைசாலி நகரத்தையும் யூகிக்கு அளித்து அச் செய்தியை அந் நாட்டாரும் நகரத்தாரும் அறிந்து கொள்ளும்படி திருமுகம் அனுப்பித் தெரிவித்தனன். இடபகனுக்கு, முனையூர் என்று பெயருள்ள ஒரு தலைநகரும் காட்டுநாடு ஐம்பதும் கொடுத்துப் பின்னும் சில வரு வாய்களை அளித்து "புட்பக நகரத்தை அடைந்து நட்பாளரோடு மகிழ்ந்திருந்து அழைத்தபின் வருக" என்று அவனைப் போக்கினன். வயந்தகனுக்குப் பதினொரு நகரங்களை அளித்ததுடன் ஒவ்வொரு நாளைக்கும் ஆயிரம் பொன் வேதனம் அளித்து "எப்பொழுதும் என்னுடன் உறைக" என்று கட்டளையிட்டனன்; இசைச்சன் முதலிய தோழர்க்குப் பல ஊர்களை அளித்து விரும்பிய இடங்களில் சென்று இருக்கும்படி செய்வித்தான். தான் உஞ்சையம்பதியில் சிறையில் இருந்தபொழுது பல இடங்களில் மறைந்திருந்து பாதுகாத்து வந்த வீரர்களை முரசறைவித்து வருவித்து வேண்டியவற்றை அளித்து அனுப்பிவிட்டுப் போரில் இறந்தவர்களுடைய சந்ததியாக உள்ளவர்களைத் தெரிந்தழைத்து அவர்களுக்கு விரும்பியவற்றை ஈந்தனன்.
சாதகன் என்னும் குலாலனை அழைப்பித்து அவனுக்குப் பெருங்குயப் பட்டம் அளித்து "நீ கவலையின்றி இலாவாண நகரில் இரு" என்று சொல்லி அவனுக்கு இரண்டு ஊர்களைக் கொடுத்தனன். தனக்காக வந்து மகத நாட்டில் உழந்து உதவிய மாந்தர்களுக்கு விரும்பிய பொருள்களை அளித்துத் தத்தம் ஊர்களில் சென்று இருக்கும்படி அனுப்பினன். ஆதுத்தியதருமன் என்னும் வீரனுக்கு ஓர் ஊர் நல்கினன். போரில் உயிர்விட்ட சத்தியகாயன் என்னும் வீரனுடைய மக்களை வருவித்து அவர்களுடைய கூட்டத்தாருள் தலைமையை மேற்கொண்டிருக்கும் பதவியை அவர்களுக்கு அளித்தனன். யூகியை மட்டும் தன்னுடன் இருக்கும்படி செய்துவிட்டு அவனுடன் இருந்த படையாளிகள் பலரையும் உரிய இடங்களில் தங்கும்படி வேண்டியவற்றை அளித்து அனுப்பினன். தன்னுடைய தாயை அடைந்து பணிந்து "வேண்டிய தானங்களைச் செய்வாயாக" என்று மிக்க வருவாயை உடையதொரு நாட்டைச் சேர்ப்பித்தான். வாசவதத்தைக்கும் பதுமைக்கும் தேவிகளுக்குக் கொடுத்தற்குரிய விருத்தியைக் கொடுத்தான். ஆடல், பாடல், அழகு,என் பவற்றில் மிக்க சேடிமார்களை இரு கூறாக்கி அளித்துப் பின்னும் அவர்களுக்கு வேண்டுவன அளித்து அவர்களுடன் மிக மகிழ்ந்;து உறைவானாயினன்.
இப்படி இருக்கையில் ஒரு நாள் வாயில்காவலன் வந்து வணங்கி "பிரச்சோதனன் தூதுவர் கடைத்தலையில் வந்து நிற்கின்றனர்." என்று கூற உதயணன் "அவர்களை
வரவிடுக" என்றனன். எனவே,
"மண்ணியன் மன்னர்க்குக் கண்ணென வகுத்த
நீதி நன்னூ லோதிய நாவினள்;
கற்றுநன் கடங்கிச் செற்றமு மார்வமும்
முற்ற நீங்கித் தத்துவ வகையினும்
கண்ணினு முள்ளே...
குறிப்பி னெச்ச நெறிப்பட நாடித்
தேன்றோய்த் தன்ன கிளவியிற் றெளிபடத்
தான்றெரிந் துணருந் தன்மை யறிலினள்
உறுப்புப்பல வுறுப்பினு முயிர்முத றருக்கினும்
நிறுத்துப்பல வூசி நெருங்க வூன்றினும்
கறுத்துப்பல கடியக் காட்டினுங் காட்டாது
சிறப்புபல செயினுந் திரிந்துபிறி துரையாள்;
பிறைப்பூ ணகலத்துப் பெருமக னவன்மாட்டுக்
குறித்தது கூறுதல் செல்லாக் கொள்கையள்;
இன்னது செய்கென வேவ லின்றியும்
மன்னிய கோமான் மனத்ததை யுணர்ந்து
முன்னியது முடிக்கு முயற்சிய ளொன்னார்
சிறந்தன பின்னுஞ் செயினு மறியினும்
புறஞ்சொ றூற்றாது புகழுந் தன்மையள்;
புல்லோர் வாய்மொழி யொரீஇ நல்லோர்
துணிந்த நூற்பொருள் செவியுளங் கெழீஇப்
பணிந்த தீஞ்சொற் பதுமை யென்னுங்
கட்டுரை மகளொடு" (4.10:13-35)
மேம்பாடுற்ற காரியக்காரரும் கணக்கரும் திணைகளும் காவலாளருமாகிய இவர்கள் ஐம்பது யவன வையம் முதலிய பொருள்கள் பலவற்றைக் கொணர்ந்து வைத்து ஆயிரம் தோழிமார்களையும் *மேற்கூறிய நருமதை முதலிய நாடக மகளிர்களையும் பிறரையும் உள்ளே அழைத்து வந்து நிறுத்தி உதயணனுக்குக் காட்டி, "இவற்றையும் இவர்களையும் உம்மிடம் சேர்ப்பிக்க வேண்டுமென்பது எங்கள் அரசனது கட்டளை" என்று தெரிவித்த பொழுது பதுமையென்னுங் கட்டுரைமகள் வணங்கி, அருகில் சென்ற பிரச்சோதனன் கொடுத்த திருமுகத்தை வணக்கத்துடன் உதயணன்முன்பு நீட்டினன். உடனே அவன் ஆசனத்தினின்றும் இறங்கி மிகுந்த வணக்கத்துடன் கைகளால் ஏற்று அதனைப் படித்துப் பார்த்தனன்.
அதில் "பிரச்சோதனனென்னும் அரசனுடைய ஓலையை உதயணன் காண்க; தன்னுடைய, உறவைக் கொள்ள விரும்பிய யான் போர்செய்து தன்னை வெல்லுதல் அருமை என்று நினைத்து மாய யானையைக் காட்டித் தன்னைப் பிடித்து வரும்படி முன்னம் என்னுடைய மந்திரி முதலியோரை அனுப்பினேன். இப்பொழுது அந்த நினைவை விட்டுவிட்டேன்; தன்னுடைய தந்தையாகவே என்னைக் கொள்ள விரும்பினேன்; யானும் பட்டத்தேவியும் உவக்கும்படி வாசவதத்தையோடு தான் இங்கே வந்து மகிழ்ச்சியை விளைவித்திடுக. பாஞ்சாலனை வென்று தான் கொற்றங்கொண்டதைக் கேள்வியுற்றேன். யான் செய்ய வேண்டுவதைத் தான் செய்தனன். தன்னுடைய குடை நிழலில் தங்கி உலகு இன்புறும்படி குழவி கொள்பவரின் இகழாது ஓம்பிப் புகழ்பட வாழ்க. யூகியை விரைவில் இவ்விடத்திற்கு அனுப்புக. அவனைப் பா்க்க வேண்டும் என்னும் விருப்பம் எனக்கு மிகுதியாக உண்டு. இதில் எழுதியவற்றை யெல்லாம் யான் விருப்பத்தோடு எழுதினேனென்று எண்ணிக்கொள்க" என்பது எழுதப் பட்டிருந்தது.
உதயணன் எல்லாவற்றையும் பார்த்து அவற்றை மனத்தில் அடக்கிக்கொண்டு பதுமையை நோக்கி "வாசவதத்தை தீயிற்பட்டது பொய்ச்செய்தி ஆயினும் அச் செய்தியை இவ் வோலையில் ஏன் எழுதவில்லை?" என்று கேட்கவே அவள் கைகுவித்து "எங்கள் சக்கரவர்த்தி இச் செய்தியைக் கேள்வியுற்று மிக வாட்டமடைந்து அறிவில் சிறந்த ஒரு முனிவர்பால் சென்று ஒன்றும் சொல்லாமல் முகவாட்டத்தோடும் அவர் முன்னே நின்றார். உடனே அவர் உம்முடைய மந்திரிகளோடு ஆராய்ந்து தெளிந்தவர்போல, "வாசவதத்தை மறைந்திருக்கும் நாட்கள் இத்துணை; அவள் உம்மை அடையும்காலம் இன்னது" என்று தொடுத்த மாலையை எடுத்ததுபோலச் சொல்லியதன்றி இன்றுவரையில் நிகழும் நிகழ்ச்சிகளையெல்லாம் விளங்கக் கூறினர். அம் முனிவர் அன்புடையவராதலின் அதனை அரசன் தெளிந்து அடங்கினன். அரசர் தலைவ, யான் சொல்லியவை ஒத்துள்ளனவா" என்று கூறினள். அதற்குள் உதயணன், "எல்லாம் சரியாகவே இருக்கின்றன" என்று சொல்லி அம் முனிவரைப் புகழ்ந்து இனிய தோழர்களோடு சென்று அங்கே வைக்கப்பட்டுள்ளனவாகிய பல பொருள்களையும் பார்த்து மகிழ்ந்து வந்தவர்களுக்கு இனிய வார்த்தைகளைக் கூறி அச் செய்திகளை எல்லாம் வாசவதத்தைக்கு அவர்களைக் கொண்டு சொல்லும்படி செய்வித்து அவர்களுக்குத் தனி இடங்களை வேறே அமைப்பித்து உபசரித்து வேண்டியவற்றை அளித்தனன். யூகியை நோக்கி "நீ பிரச்சோதனனிடம் சென்று இங்கே நிகழ்ந்தவற்றையெல்லாம் சொல்லி உன்னுடைய நீதி நூல் பயிற்சியையும் நன்கு விளக்கித் தாமதியாமல் விரைவில் வருக" என்று சொற்றனன்.
அங்ஙனம் சொன்னபின்பு உதயணன் "தம்முடைய நாட்டிற்கும் எங்கள் நாட்டிற்கும் இடையே உள்ள காடுகெழு குறும்பும் கனமலைவட்டமும் நான் இங்கில்லாத பொழுது எல்லையற்றுப் பிறர்வசமாகி அழிந்துபோயின. அவை எங்கள் ஆட்சிக்கு உட்பட்டாலன்றி எம்மவர் புகுதற்கு இடங்கொடா" என்று மிக்க வணக்கத்துடன் எழுதிய ஓலை ஒன்றைப் பிரச்சோதனனுக்குத் தூதர்வசம் அனுப்பியதன்றி "எந்தக் காலத்தும் இருகுலத்தவரும் இனி மனம் ஒத்தே நடக்கும்படி செய்வித்திடுக" என்பதையும் தெரிவிக்குமாறு சொல்லியனுப்பினன். பிரச்சோதனனுக்குக் கொடுக்கும்படி பல பொன்னணிகளையும் இலக்கணத்தில் சிறந்த நாலாயிரங் குதிரைகளையும் ஐந்நூறு தேர்களையும் நூறு யானைகளையும் பதினாறாயிரம் பசுக்களையும் வாசவதத்தையின் நற்றாய்க்குப் பணிபுரியும்படி பாஞ் சாலனுடைய உரிமைப் பள்ளியினின்றுங் கொணர்ந்த பல மகளிரையும் அனுப்பினன். அப்படியே கோபாலகன் நற்றாய், கோபாலகன், பாலகுமரன், பரதகன், சிவேதன் என்பவர்களுக்குக் கொடுக்கும்படி தக்க பொருள்கள் பலவற்றை வகை வகையாக அனுப்பி மிகவும் அழகிதாகிய வையாக்கிரம் என்னும் தேரை யூகிக்கு அளித்து விண்ணுத்தராயன் என்பவனை மெய்காவலனாக அவனுடன் செல்லும்படி கட்டளையிட்டு நல்ல தினத்தில் எல்லோரையும் பிரச்சோதனன்பால் விடுத்தனன். விடுத்தபின் இரண்டு தேவியர்களும் தனக்கு வழிபாடு செய்ய அவர்களோடு பல இடங்களுக்குச் சென்று உண்டாடி மிகவும் மகிழ்ச்சியுற்றிருந்தனன்.
பின்பு உதயணன் பாஞ்சால ராசனுடைய உரிமைப் பள்ளியினின்றும் பற்றிக்கொண்டு வந்த அரங்கியன் மகளிர் ஆயிரத்தெண்மர்களைப் பங்கிட்டு இரண்டு தேவியர்களுக்கும் அளித்தனன். அளித்தபின் தேவியர் இருவரும் அரசன் புறத்தே சென்று உலாவிவரும் சமயம் பார்த்து முற்ற வெளியின்கண் பந்தடித்தற்கு எண்ணி நின்றார்கள். அச் செய்தியை அறிந்த வயந்தகன் "தேவியர் இருவரும் தோழியருடன் பந்தாடுதற்கு நிச்சயித்திருக்கின்றார்கள். அது காணத்தக்கது. ஆதலால் நீ புறத்தே செல்லாமல் பெண் வடிவங்கொண்டு பிடியின்மீது ஏறி அவர்கள் அறிந்துகொள்ளாதபடி பார்த்தருள வேண்டும்" என்று தெரிவித்தனன். உதயணன் அதற்கு உடன்பட்டுத் தான் புறத்தே செல்வதாகப் பிறர் நினைக்கும்படி செய்து சேனைகளைமட்டும் வெளியே அனுப்பிவிட்டுத் தான் ஒரு பெண் வடிவங்கொண்டு வந்து பல மகளிர்களினிடையே பெண் யானை ஒன்றன்மேல் இருந்து காண்பானாயினன்.
அங்கே தேவியர் இருவரும் தத்தம் தோழிமார்களுடன் அந்த முற்ற வெளியில் ஒருவர்க்கொருவர் எதிரெதிர் நின்றார்கள். அப்பொழுது பதுமையின் தோழியாகிய இராசனை என்பவள் ஏழு பந்தை எடுத்து ஆயிரங்கை அடித்துவிட்டுச் சென்றனள். அப்பால் காஞ்சனமாலை பந்துகளைக் கைக்கொண்டு ஆயிரத்தைந் நூறுகை அடித்துவிட்டுச் சென்றாள். பின்னர் பதுமையின் மற்றொரு தோழியாகிய ஐராபதி என்னும் கூனி ஈராயிரம் கை அடித்துச் சென்றாள். வாசவதத்தையின் தோழியாகிய விச்சுவலேகை என்னும் குறளி அடித்தற்குரிய கோலைக் கைக்கொண்டு பந்துகளை எடுத்து ஈராயிரத்தைந்நூறுகை அடித்துவிட்டுச் சென்றனள். பதுமையின் உயிர்த்தோழியாகிய ஆரியை என்பவள் அதிவிசித்திரமாக மூவாயிரங்கை அடித்துப் பந்தைப் போகட்டுவிட்டுச் சென்றாள். அப்பால் பந்துகள் அடித்தற்கு யாராலும் எடுக்கப்படாமல் கிடந்தன.
அப்பொழுது வாசவதத்தை தலை சாய்த்து, " அடித்தற்குரியவர் யாவர்?" என்று கடைக்கண்ணால் பார்த்துக் கொண்டு சிறிது மன வருத்தத்துடன் நின்றாள். அக்குறிப் பறிந்து, அவளிடம் பணி புரிந்துகொண் டிருப்பவளும் பேரழகியும் மானனீகை என்னும் பெயர் உடையவளுமான மங்கை ஒருத்தி வந்து அங்கே நின்று, தனக்கு முன்பு ஆடியவர்களுடைய ஆட்டத்தை இகழ்ந்துகூறிச் சிரித்துப் பந்தாட்டத்தின் இலக்கணங்கள் பலவற்றை அங்கே நின்ற யாவரும் அறியும்படி சொல்லிவிட்டு ஆடத் தொடங்கி இருபத்தொரு பந்துகளை எடுத்துப் பிறர் வியக்குமாறு ஆடினள். ஆடுகையில்,
"சுழன்றன தாமம்; குழன்றது கூந்தல்;
அழன்றது மேனி; அவிழ்ந்தது மேகலை;
எழுந்தது குறுவியர்; இழிந்தது சாநதம்;
ஓடின தடங்கண்; கூடின புருவம்;
அங்கையி னேற்றும் புறங்கையி னோட்டியும்
தங்குற வளைத்துத் தான்புரிந் தடித்தும்
இடையிடை யிருகா நெறிதர மடித்தும்
............................................
நித்திலக் குறுவியர் பத்தியிற் றுடைத்தும்
பற்றிய *கந்துகஞ் சுற்றுமுறை யுரைத்தும்
தொடையுங் கண்ணியு முறைமுறை யியற்றியும்
அடிமுரன் முடிவரை யிழைபல திருத்தியும்
படிந்தவண் டெழுப்பியுங் கிடந்தபந் தெண்ணியும்
தேமலர்த் தொடைய றிறத்திறம் பிணைத்தும்
பந்துவர னோக்கியும் பாணிவர நொடித்துஞ்
சிம்புளித் தடித்துங் கம்பிதம் பாடியும்
ஆழியென வுருட்டியும் தோழியொடு பேசியும்
சாரிபல வோட்டியும் வாழியென வாழ்த்தியும்
அந்தளிர்க் கண்ணி யவந்திகை வெல்கெனப்
பைந்தொடி மாதர் பற்பல வகையால்
எண்ணா யிரங்கை யேற்றின ளேற்றலும்" (4.12"225-45)
வாசவதத்தை மிகவியந்து, "அரசன் இவளைக் காணின் அவனது மனம் வேறுபடும்" என்று எண்ணி நின்றனள்.
நிற்கையில் மானனீகையின் சிறந்த தோற்றத்தைக் கண்டு மயங்கி அவளை அடைந்த தன் மனத்தை ஒருவாறு மீட்பதற்கும் சிறிதும் ஆற்றல் இல்லாதவனாகி உதயணன் உரிய வடிவத்தோடு அங்கே தோன்றினன். அவனைக் கண்ட தேவியர் இருவரும் தொழிமார்களோடு தம்மிடஞ் சென்றனர்.
அவர்கள் அங்ஙனம் செல்ல, காம மிகுதியால் நொந்து தளர்ந்த உதயணன் பள்ளியம்பலத்துள்ளே தான் இருந்து தேவியர் இருவரையும் அழைத்துவரும்படி சொல்லிவிடுத்தனன். தோழியர்கள் சென்று சொன்னவுடன் அவ்விருவரும் அரசன் அழைத்ததற்குக் காரணம் இன்னதென்பதை அறியாதவர்களாகி ஐயமுற்று மானனீகையைமட்டும் ஓரிடத்தில் மறைத்து வைத்துவிட்டு மற்றத் தோழிமார்களுடன் சென்று அவர்களைப் புறத்தே நிறுத்தித் தாம்மட்டும் அரசனிடம் போய் வணங்கினர். வணங்கவே உதயணன் "இவர்களுடைய தோழியர்களையும் இங்கே வரவிடுக" என்றனன். அவர்களும் வந்து வணங்கி நின்றபொழுது அவர்களையெல்லாம் முறையே நோக்கி "உங்களுடைய சுற்றத்தாரையும் உங்கள் பெயரையும் சொல்லுக" என்றனன். அவர்கள் அவற்றைச் சொன்னபோது உதயணன் பாராதவன்போலவே அவர்களை முறையே பார்த்து வாசவதத்தையை நோக்கி "உன்னுடைய தோழிமார்களுள் ஒருத்திமட்டும் இங்கே வாராமைக்குக் காரணம் என்ன" என்று வினாவ, வாசவதத்தை, "அவளுக்குச் சொல்ல வேண்டியது ஏதேனும் இருப்பின் அதனைத் தனியே பார்த்துக்கொள்க; இக் கூட்டத்தில் ஆக வேண்டுவது யாது?" என்று சொல்லி மிக்க கோபங் கொண்டனள். அவளுடைய கண்கள் மிகச் சிவந்தன. அவளது சீற்றத்தைக் கண் சிவப்பால் அறிந்த அரசன் "பாஞ்சாலராசன் பெற்ற செல்வத்தையும் அவனுக்குள்ள பிறவற்றையும் அவள் நன்கு அறிவாளென்று மந்திரிகளால் அறிந்துள்ளேன். அவற்றைத் தெரிந்துகொள்ளுதற்பொருட்டே அவளைக்குறித்து இப்பொழுது யான் வினாவினேன். காரணம் வேறே ஒன்றும் இல்லை" என்றனன்.
அப்பால் வாசவதத்தை மானனீகையை அங்கே வருவித்தனள். அவள் வந்து அடிவணங்கினள். உதயணன் அவளை நோக்கி "பாஞ்சால ராசனுக்குரிய பல பணிகளிலும் அவனுடைய அந்தப்புரத்தார்க்கு அலங்காரஞ் செய்தலிலும் நீ வல்லாயென்று சொல்லக் கேட்டுள்ளேன். உன் பெயரையும் உன் சுற்றத்தார் பெயர்களையும் சொல்" என்று கேட்க, அவள் மீட்டும் வணங்கி அஞ்சலி செய்து கொண்டு அரசனை நோக்கி, "அடியேன் கோசல தேசத்து அரசனுடைய பெருந்தேவியாகிய வசுந்தரி என்பவளுடைய சேடியாவேன். என் பெயர் மானனீகை. பாஞ்சாலராசன் படையெடுத்து வந்து எம் அரசனுடைய படைகளை வென்று அவனுடைய அந்தப்புரத்திலிருந்த சிலதியரோடு என்னையும் பற்றிக்கொண்டு சென்று தன் தேவிக்கு அளித்தனன். அப்போது அடிச்சி அத் தேவிக்கு வண்ணமகளாக இருந்தேன். இது ஒன்றன்றித் தேவரீர் அருளிச்செய்த வேறொரு செயலையும் அறியேன்" என்று சொல்லி அழுதுகொண்டு நின்றாள்.
நிற்கவே உதயணன் அவளை நோக்கி "நீ வாசவதத்தைக்கு இன்றுமுதல் வண்ணமகளாக இருந்து அவளை நாள் தோறும் அலங்கரிப்பாயாக" என்று கட்டளையிட அவள் அப்படியே சென்று கண்டோர் வியக்கும்படி அடிமுதல் முடியளவாக அவளைப் புனைந்தனள். பின்பு வாசவதத்தை வந்து உதயணனுக்கு அவ்வணியைக் காட்டினள். அப்போது உதயணன் "மானனீகை அலங்காரம் செய்வதில் வல்லுநள் அல்லள்; யான் அலங்கரிக்கிறேன்; பார்" என்று அவள் செய்த அலங்காரத்தைச் சிதைத்துவிட்டு யவன பாஷைக்குரிய எழுத்துக்களை மானனீகை நன்கு கற்றவள் என்பதை முன்பு கேட்டிருந்தவனாதலின் பூந்தாதினையும் சந்தனக் குழம்பையும் கூட்டி வாசவதத்தையின் நெற்றியில் "உதயணன் ஓலையை மானனீகை காண்க: நீ ஆடிய பந்தாட்டத்தில் உன்னுடைய கண்கள் என் நெஞ்சத்தைப் பிளக்க அதனால் புண்ணுற்றேன்; அப்புண்ணைத் தீர்க்கும் மருந்தினை நீ அறிவாய். என்னுடைய துயரம் ஆற்றுதற்கு அரியது. இரப்போர்க்கு அவர் விரும்பியதை அளித்தல் நன்று. இங்கே எழுதுவதற்கு இடம் இன்மையின் நான் சுருக்கமாக எழுதினேன். நீ என் கருத்தை நன்றாக அறிந்துகொள்ள வேண்டும்" என்று எழுதிவிட்டு வாசவதத்தையை நோக்கி "உனக்கு யான் செய்த அலங்காரம் இப்பொழுது ஒத்திருக்கின்றது" என்று சொல்லி அவளை அனுப்பினன். உடனே வாசவ தத்தை தன்னுடைய அந்தப்புரத்தை அடைந்து அங்கே வந்த மானனீகைக்கு "இந்த அலங்காரத்தை நீ பார்" என்று காட்டினள். அவள் அதனைப் படித்தறிந்து கூசி "அரசர் செய்துள்ள அலங்காரம் மிகவும் அழகுடையது" என்று வாசவதத்தையை மருட்டினள். அந்நாள் நீங்கியது.
மறுநாள் காலையில் வழக்கம்போலவே வாசவதத்தையை மானனீகை அலங்கரித்துவிட்டு அவன் எழுதிய பாஷையாலேயே அவனுக்குத் தன் கருத்தைத் தெரிவிக்க நினைந்து "அடியேனைப் பொருளாக எண்ணித் தேவரீர் எழுதிய திருமுகம் முழுவதையும் தவறின்றி அறிந்தேன். அடியேனிடத்து அருள் இருந்தாலும் அதனை இப்பொழுது தவிர்த்தல் வேண்டும். தேவியர்க்கு மிக்க வருத்தத்தை உண்டுபண்ணும் செயலைச் செய்தற்கு என் மனம் துணிந்திலது. காவலில் இருக்கும் அடியேன் பிறர் காணார் என்று தகாததைச் செய்தல் இயல்பன்று; செய்தால் பழிப்பு உண்டாகும். தருமமும் நீங்கும். சிறிய என்னிடத்தே வைத்த விருப்பத்தை மறப்பது நன்று" என்று அவளுடைய நெற்றியில் எழுதி "என்னால் செய்யக்கூடிய அலங்காரம் இதுவே" என்று சொல்லி அனுப்பினள்.
வாசவதத்தை சென்று அரசனை வணங்கினள். வணங்கவே அவன் மானனீகை எழுதியதைக் கண்டு அவளுடைய கருத்தை அறிந்து அழலால் உண்டாகிய புண்ணின் மேல் கோலிட்டாற்போலக் கலங்கி அவ்வணியை அழித்து, "உன்னை நான் விரைவில் அடையேனாயின் என் உயிரைச் சென்றதாகவே எண்ணிக்கொள்க" என்று அவள் நெற்றியில் எழுதி "இந்தப் புதியதோர் அலங்காாரத்தை அவளுக்குக் காட்டுவாயாக" என்று கூறி மீளவிடுத்தனன். அதனைக்கண்டு தன் மனத்தைத் திண்ணிதாக்கி மறுநாள் காலையில் மானனீகை "இற்றை இரவின் கண்ணே கூத்தப்பள்ளியினிடத்தே குச்சரக்குடிகை வேதிகையின்பால் வந்தருள்க" என்று அந்த இடமும் புலப்படும்படி சங்கேதமாக ஒருவகைக் கோலத்தை எழுதி அனுப்பினள். வாசவதத்தை வந்து வணங்கி நின்றாள். அதனைக்கண்ட உதயணன் அவள் எழுதிய குறிப்பை அறிந்து மகிழ்ந்து "மானனீகை இன்றைக்குப் பயந்து செய்த அலங்காரம் மிகவும் அழகுடையது" என்று சொல்லி வாசவதத்தையோடு அளவளாவிக்கொண்டிருந்தனன். பகற்காலம் நீங்கியது.
இரவில் வாசவதத்தைக்குத் தெரியாமல் மானனீகை தான் குறிப்பிட்ட இடத்தில் சென்றிருந்தனள். உதயணன் "வாசவதத்தைபால் துயிலச்செல்வேன்" என்று பதுமையிடத்தும் "பதுமைபால் துயிலச் செல்வேன்" என்று வாசவதத்தையிடத்தும் விருப்பக் குறிப் பின்றிக் கூறினன். கூறவே வாசவதத்தை ஐயமுற்று ஓரிடத்தில் சென்று இருந்தனள். அப்பொழுது உதயணன் எழுந்து ஒதுங்கி வேறிடம் செல்வானாயினன். அதனைக் கண்ட வாசவதத்தை காஞ்சனமாலையைக் கை கொட்டி அழைத்து "அரசன் செல்லும் இடத்தை நீ அறிந்து வருக" என்று சொன்னாள். சொல்லவே அவள் அவன் அறிந்துகொள்ளாதபடி பின்னர்ச் சென்று, அரசன் ஆடல் பேரறையைச் சார்ந்தபின் அவளும் பின் சென்று அங்கே ஒரு பக்கத்தில் மறைந்திருந்தனள்.
சென்ற உதயணனும் முன்னமே அங்கு வந்திருந்த மானனீகையும் ஒருவரை ஒருவர் கண்டு அளவளாவி நெடுநேரம் விளையாடிக்கொண் டிருந்தபின்பு வாசவதத்தையின் நெற்றியில் காதலோடு எழுதிவிடுத்த வாசகங்களையெல்லாம் இருவரும் சொல்லிக்கொண் டிருந்தனர். இருந்தபின் அரசன் "நாள்தோறும் தவறின்றி இங்கே வர வேண்டும்." என்று சொல்லித் தன்னுடைய சிறுவிரல் மோதிரத்தை அவளுக்குக் கொடுத்துவிட்டு நீங்கினன்.
எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டே இருந்த காஞ்சனமாலை மிக்க மனப்பொருமலோடு சென்று நிகழ்ந்தவற்றையெல்லாம் வாசவதத்தைக்குச் சொன்னாள். கேட்ட வாசவதத்தை கோபத்தை மனத்தில் அடக்கிக் கொண்டிருந்துவிட்டுக் காலையில் அரசனை அடைந்து வணங்கி அவனை நோக்கி "நேற்றிரவில் யான் ஒரு கனாக் கண்டேன்; அது குற்றமற்றது" என்று சொல்ல அவன், "அஃது யாது?" என்று வினவினான். உடனே அவள் "நீர் எனக்குத் தெரியாமல் தனித்துச் சென்று ஒரு மடந்தையோடு ஆடரங்கு ஒன்றில் ஏறி நெடுநேரம் விளையாடிக்கொண்டு தங்கி என் நெற்றியில் மாறிமாறி எழுதிய வாசகங்களை எல்லாம் சொல்லிக்காட்டி உமது அன்பைப் புலப்படுத்திக்கொண்டே இருந்து புறப்படும்பொழுது அவளுக்கு மோதிரத்தை அளித்து வந்துவிட்டீர். அப்பால் என் கண்கள் விழித்தன" என்று சொன்னாள். உதயணன் "என் மனத்திலும் இல்லாததை நீ கண்டாயாதலால் கலக்கம் அடைந்தாய்போலும்" என்பது முதலியவற்றைச் சொல்ல அவள் "கனவில் கண்டதைப் பிறரோடு சொன்னால் அதனால் உண்டாகும் தீமை நீங்கும் என்று நூல்கள் கூறுதலின் நான் இப்போது தெரிவித்தேன். அன்றியும் எவற்றைக் கண்டாலும் அவற்றை அரசனிடத்ததன்றி யாரிடத்துப் பேசுவது?" என்று சொல்லி விட்டு மனத்துள்ளே நகைத்துக்கொண்டு சென்றனள். உதயணன், "தேவிக்கு உண்டான கவலையை ஒரு வழியாகப் போக்கிவிட்டோம்" என்று உவந்திருந்தான். இப்படி இருக்கையில் பகற்காலம் நீங்கிற்று; இரவு வந்தது.
வாசவதத்தையோ மானனீகையைப் பிடித்துக் கொண்டுவரச் செய்து காவலில் வைத்துவிட்டுப் பிறர் அறிந்துகொள்ளாதபடி காஞ்சனமாலையோடு சென்று ஆடரங்கில் ஏறி மானனீகை இருந்த இடத்திலே இருந்தாள். இருக்கவே உதயணன் நிகழ்ந்ததை அறியாமல் மெல்லச்சென்று அவள் சமீபத்தை அடைந்தான். அடையவே வாசவதத்தை "அரசன் இங்கே என்ன செய்கின்றான்? அவன் இனிச் செய்வதை அறிவோம்" என்று எண்ணிக் கையால் நீக்க உதயணன் "மானனீகை ஊடியிருக்கின்றனள்" என்று நினைந்து
"முரசுமுழங்கு தானை யரசொடு வேண்டினும்
தருகுவ லின்னே பருவர லொழியினி
மானே! தேனே! மான னீகாய்!" (4.3:227-9)
என்று அவள் காலைக் கையால் பற்றினன். பற்றவே காலைக் கொடாதவளாகி வாசவதத்தை அப்பால் சென்றனள். அதனைப் பொறாத உதயணன் "ஏதேனும் புதிய செய்தி ஒன்றைச் சொல்லி இவளுடைய ஊடலைத் தீர்த்து முன்னிலைப் படுத்திக்கொள்வோம்" என்று நினைந்து அவளை நோக்கி "நேற்றிரவில் நம் இருவர்க்கும் இங்கே நிகழ்ந்தவற்றை யெல்லாம் கனவில் கண்டதாக வாசவதத்தை சிறிதும் தவறின்றிச் சொல்லிச் சினப்ப நான் "என் நெஞ்சில் சிறிதும் அந்த எண்ணம் இல்லை" என்று சொல்லி அவ் வருத்தத்தை நீக்கினேன். அதனையும் நீ அறிந்தாயில்லையே. மானனீகாய்! அருள்செய்ய வேண்டும்" என்று அடுத்தடுத்து உரைப்பவும், ஆற்றானாகவும், இந்தச் சொல் சொல்லவும், வணக்கம் செய்யவும், ஒன்றையும் மதியாதவளாகி வாசவதத்தை சிரித்துக்கொண்டு, "நீ கூறிய மானும் தேனும் மானனீகையும் யான் அல்லேன். என் பெயர் வாசவதத்தை" என்றனள். உடனே உதயணன் திடுக்கிட்டு விரைந்து ஓடிச்சென்று வேறொரு மண்டபத்தில் தனித்து ஒளித்துக்கொண் டிருந்தான். வாசவதத்தையும் சினங்கொண்டு அவனைப் பாராமல் சென்றாள். செல்லவே கங்குல் புலர்ந்தது.
புலர்ந்தவுடன் வாசவதத்தை மானனீகையை வருவித்து மிகவும் கோபித்துக்கொண்டு ஒரு தூணோடு சேர்த்துக் கட்டி அவளை நோக்கி " கூத்தப்பள்ளியில் நீ அரசனோடு பேசிய வார்த்தைகளையெல்லாம் சொல்" என்று கூறி அருகே நின்ற ஒருத்தியைப் பார்த்து "இவள் கூந்தலை அரிதற்கு ஒரு கத்தரிகை கொண்டு வருவாயாக" என்று சொன்னாள். அதனை அயலிடத்தே இருந்த வயந்தகன் அறிந்து விரைந்து சென்று உதயணனுக்குக் கூற அவன் "மானீகையின் ஒரு மயிரைக் கத்தரிகை தீண்டுமாயின் என்னுடைய உயிர் நீங்கும். இந்தக் கொடுஞ்செயலை விலக்குவாயாக" என்றனன். வயந்தகன் "நிகழந்தது யாது?" என்றான்.
உதயணன் "எல்லாம் உன்னாலே முடிந்ததுதான்" என்ன, வயந்தகன் "பந்து விளையாட்டை யான் பார்க்கச் சொன்னது உண்டேயன்றி வேறு எதையேனும் செய்யச் சொன்னது உண்டோ? இராசமாதேவியினுடைய தணியாக் கோபத்தைத் தீர்க்கும் வன்மை யாவர்க்கு உண்டு? ஆனாலும் ஆறேழு நாழிகை அளவில் அக் கோபத்தைத் தணிப்பேன். அதற்குள் வேறு யாரையேனும் அங்கே விடுத்தருள வேண்டும்" என்ற சொல்லிவிட்டு விரைந்து சென்று தேவியை அடைந்து "அரசன் எங்கே யுள்ளனன்?" என்று தேட, அங்கே உள்ள காவன்மகள் ஒருத்தி "இது தலைவிக்குக் கோபமுள்ள சமயம்" என்று அருகில வந்து மெல்லச் சொல்லி, "சும்மா இரும்" என்று கையை அமைத்தனள். உடனே வயந்தகன் நடுங்கி, "தலைவிக்குள்ள குறை யாது?" என்று கேட்டனன். அதனை வாசவதத்தை அறிந்து அவனை நோக்கி, "அரச வடிவம் கொண்டிருக்கும் தூர்த்தக் கள்ளனைக் கேட்பீராயின் என்னுடைய கோபத்தின் காரணத்தை நீர் எளிதில் அறிந்து கொள்ளுதல் கூடும்" என்று சொல்லி ஆண்டு உள்ளாள் ஒருத்தியை நோக்கி, " இக் கத்திரிகையால் இவள் கூந்தலைக் குறை" என மிகவும் சினந்து மொழிந்தனள். வயந்தகன், "அப்படியானால் கேசம் குறைத்தலில் எனக்கு மிக்க பயிற்சி உண்டு" என்றனன். எனவே அவள் குறைக்கும்படி கூற அவன் வாசவதத்தையை நோக்கி, "கத்திரிகையின் இலக்கணங்கள் பலவுள்ளன. நின் கைம் மலர் மயிரைத் தீண்டுதல் தகாது; கருவியைத் தருக" என்று சொல்லி வாங்கி அதன் இலக்கணத்தை விளங்கக் கூறுபவன்போலக் கத்திரிகையின் வேறுபாட்டிலக்கணம் பலவற்றைக் கூறி, " இக் கத்திரிகையால் இவள் மயிரைத் தீண்டின் இவளுக்கு மிகவும் நன்மை உண்டாகும்; ஆகலால் இது வேண்டாம்" என்று அதனைத் தூரத்தில் எறிந்தனன். பின்பு அவளால் கொடுக்கப்பட்ட கத்திரிகை ஒவ்வொன்றற்கும் ஒவ்வொரு குற்றம் கூறிக் கூறி எறிவானாயினன்.
அவற்றையெல்லாம் உடனுடன் ஒற்றரால் அறிந்து கொண்டே இருந்த உதயணன் 1யூகியை வருவித்து நிகழ்ந்தவற்றைச் சுருக்கிக் கூறினன். கேட்ட யூகி, "யானும் ஆறேழு நாழிகை அளவு அவள் கூந்தலைப் பாதுகாப்பேன். அதற்குமேலே யாதொன்றும் செய்ய அறிந்திலேன்" என்று இழிந்த பலவகைப்பட்ட பொருள்களையும் தன் உறுப்புகளின்மேல் தாங்கி நீற்றை உடம்பெங்கும் பூசிக் கொண்டு பித்தர் வடிவம் பூண்டு, கண்டோர் துட்கென்று அஞ்சும்படி அங்கே சென்றனன்.
---------
1 உதயணனால் அனுப்பப்பெற்றுப் பிரசோதனன்பால் சென்ற யூகி அவனைக் கண்டு உடனே கௌசாம்பிக்கு வந்துவிட்டான் என்பதைக் கூறும் பகுதி இதன் முதனூலில் சிதைந்து போயிருக்க வேண்டுமென்று தெரிகின்றது; உதிதோதயகாவ்யம்
முதலியன இக் கருத்தை வலியுறுத்தும்.
வாசவதத்தையைச் சூழ்ந்து நின்ற மகளிர்கள் அவனைக் கண்டு அச்சமுற்றுப் பலவிடத்தும் ஓடுவராய், விழுநரும், எழுநரும், மேல்வர நடுங்கி அழுநரும், தேவியின்பின்னே அணைநரும் ஆயினர். வாசவதத்தை அதனைக் கண்டு சிரித்துக்கொண்டு அக் காட்சியையே விரும்பி நின்றனள். அச் செய்தியைச் சொல்லும்படி வயந்தகன் ஒரு தூதியை மந்தணமாக அரசன்பால் அனுப்பினன். அனுப்பவே அரசன் பதுமையை வருவித்து ஏதோ சொல்லத் தொடங்கித் திகைத்தனன். அத்திகைப்பை அறிந்த பதுமை, "எனக்கு உரையாததான செயல் யாதுளது? சொல்லியருள வேண்டும்" என்று வணங்கிக் கேட்ப அவன், "யான் சொல்லுதற்குக் கூசுகின்றேன். உன் தவ்வையை அடைவாயின் அவள் சொல்லுவாள். நீ என் செயிர் காணாத தெய்வமாதலின் அவள் கோபத்தைத் தணித்து என் உயிரைத் தர வேண்டும்" என்று அவளை அனுப்பினன்.
பதுமை வாசவத்தையை அடைந்து வணங்கினள். வணங்கவே அவள் நிகழ்ந்தவற்றைக் கூறப் பதுமை, "நீர் பொறுத்திடுக. இவ் வரத்தை எனக்குக் கொடுத்தருள வேண்டும்" என்று சொல்லித் தான் வந்த காரியத்தைத் தெரிவித்துப் பின்னும் வணங்கி அவள் முகத்தைப் பார்த்துக்கொண்டே நிற்பளாயினள்.
அப்பொழுது வாயல்காவலன் வந்து உதயணனை வணங்கி, "கோசலத்தரசன் தூதுவர் வாயிலின்கண் வந்து நிற்கின்றனர்" என்று சொல்லக்கேட்டு உதயணன் அவரை வருவித்து, வந்த செய்தியைக் கூறும்படி சொன்னபொழுது, அவர், "கோசலத்தரசர் உம்முடைய மாபெருந் தேவியார்க்கு ஒரு திருமுகங் கொடுத்தனுப்பினர். அதனை அங்கே அனுப்ப வேண்டும்" என்று கொடுத்தனர். அப்போது உதயணன், "இச் சமயத்தில் இது வந்ததும் நலமே" என்று எண்ணி அதனை வாசவதத்தைபால் அனுப்பினன். அவள் அதனை வாங்கி, 'இதனைப் படித்துச் சொல்" என்று பதுமையின் கையில் கொடுத்தனள். பதுமை எழுந்து அதனை வாங்கிப் பிரித்து, "கோசலத் தரசன் ஓலையை வாசவதத்தை காண்பாளாக; சோர்விடம் பார்த்து என் ஊரை எறிந்த பாஞ்சால ராசனால் 1தன் தங்கை வாசவதத்தை ஆயத்துடன் கைக்கொள்ளப் பட்டுப் போயினள். பாஞ்சாலராசனை வென்ற உதயணனால் பல மங்கையருடன் அவள் கவரப்பட்டுப் பின்பு தன்பால் பணிப்பெண்ணாக இருப்பதைக் கேட்டேன். அவள் தன்னை இன்னாளென்றும் தன் பெயர் இன்னதென்றும் உணர்த்தாமல் மானனீகையென்று பெயர் வைத்துக் கொண்டிருப்பதையும் அறிந்தேன். விரைவில் அங்கு வருவேன். யான் வருமளவும் துயரத்தைத் தீர்த்து அவளைப் பாதுகாக்க வேண்டுவது தன் கடமை; இஃது என்னுடைய குறையாகும்" என்று அதில் எழுதிய வாசகங்களைப் படித்து அறிந்து வாசவதத்தையைப் பார்த்து, "இதனிலுள்ள வாசகம் எனக்கு விளங்கவில்லை; நீரே பார்த்தருள்க" என்று அவளிடம் கொடுத்தனள்.
---------
1. வாசவததைக்குத் தாய்வருக்கத்தைச் சேர்ந்தவளுடைய மகளகிப் பிராயத்தால் சிறியவளகவும் இருந்ததுபற்றி, அவள் 'தங்கை' எனப்பட்டாள்.
வாசவதத்தை அதனை வாங்கிப் படித்து இடையிடையே ஏங்கி ஏங்கிக் கண்ணீர் உகுத்துக்கொண்டு, "பெண்ணீர்மைக்கு இயல் பிழையே போலும்" என்று சொல்லி மானனீகை பட்ட துன்பத்திற்கு ஆற்றாதவளாகி எழுந்து பதுமையுடன் சென்று மானனீகையின் கட்டை அவிழ்த்துவிட்டு அவளை அணைத்துக்கொண்டு, "குழூஉக் களியானை கோசலன் மகளே! அழேற்க என் பாவாய்! அரும்பெறற் ரவ்வை செய்தது பொறு" என்று சொல்லி அவள் கண்ணீரைத் துடைத்துச் சூழ்ந்திருப்பவர்களைப் புறத்தே போகும்படி செய்துவிட்டு அவளை உடன் இருக்கச் செய்து அவள் கூந்தலைத் தன் கையால் வகிர்ந்து ஆற்றி எண்ணெய் தேய்த்து நீராட்டித் துகிலுடுத்துப் பதுமையும் தானும் நின்று அவளிக்கு இனிய வார்த்தைகள் பலவற்றைச் சொல்லிச் சிறந்த இடத்திலிருந்து மூவரும் ஒரு கலத்தில் உண்பாராயினர். அதனைக் கண்ட வயந்தகன் விரைந்து சென்று உதயணனுக்குக் கூற அவன் கேட்டு மிகவும் மகிழ்ந்து அவனைத் தழுவிக்கொண்டனன்.
அப்பொழுது வாசவதத்தை, "கோசலதேசத்து அரசன் மகளை மணக்கோலஞ் செய்" என்று பதுமைக்குக் கூறிவிட்டு அரசனுக்கு மணச் செய்தியைச் சொல்லி விடுத்தனள். உடனே மணக்கோலத்துடன் அவன் வந்து மணப்பந்தரில் ஆசனத்தின்மீது இருந்தனன். இருந்தபொழுது வாசவதத்தையும் பதுமையும் விரும்பி அளிக்க அவன் கோசலவரசன் மகளை மணம் செய்துகொண்டனன். அதன்பின்,
'முற்றிழை மகளிர் மூவரும் வழிபடக்
கொற்ற வேந்தர் நற்றிறை யளப்ப
நல்வளந் தரூஉம் பல்குடி தழைப்பச்
செல்வ வேந்தன் செங்கோ லோச்சி' (4.14:182-5)
மகிழ்ந்திருந்தாள்.
உதயணன் இப்படி இருக்கும் காலத்தில், இலாவாண நகரத்தின் அயலிலுள்ள சோலையில் முன்பு உண்டாட்டு நிகழ்ந்தபொழுது இளமைப் பருவத்தில் உதயணனால் கண்ணிமுதலியவை சூட்டப்பெற்ற விரிசிகையென்பவள் அவன் சூட்டிய மாலையையன்றி வேறொன்றையும் அறியாதவளாகி விரதத்துடனிருந்து பருவமுதிர்ச்சி அடைந்து விளங்கினள். அதனை அறிந்து அவள் தந்தையாகிய முனிவர் விரைந்து வந்து கௌசாம்பி நகரம் அடைந்து தமது வரவைத் தெரிவித்து உதயணனைக் கண்டு, "யான் கூறுவனவற்றை அங்கீகரித்துக் கேட்டிடுக: நீ வியாசர் முதலாகிய பெரியோர்கள் விளங்கப்பெற்ற குருகுலத்தில் பிறந்தோன். யான் வெள்ளியங்கிரியிலுள்ள மந்தரவரசன். அமைச்சரோடு அரசாட்சி செய்துகொண்டிருந்த யான் முத்தியை விரும்பிய முயற்சியை உடையேனாகி என்னுடைய பாரத்தைப் புதல்வனிடத்தே ஒப்பித்துவிட்டுக் காசியரசன் புத்திரியும் நீலகேசி என்னும் பெயரினளுமாகிய என் மனைவியோடும் விரிசிகையென்னும் புத்திரியோடும் காடொன்றை அடைந்து தவம் செய்துகொண்டிருந்தேன். இருந்தபொழுது ஒரு நாள் யான் புண்ணிய தீர்த்தம் ஆடுவதற்கு அயலிடம் சென்றேன். அச்சமயத்தில் நீ வந்து என் மகள் விரிசிகையை மடியில் வைத்துக்கொண்டு அவளுக்கு மாலைசூட்டிச் சென்றனை. அதனையே தனக்குப் பற்றுக்கோடாகக்கொண்டு உன்னையே விரும்பி அவள் காலம் கழிப்பாளாயினள். உன்னையே விரும்பியிருக்கும் அவளுடைய உள்ளத் தாமரைப்போது வேறொருவர் பொருட்டு மலர்வது அரிது. தம்மிடத்து அன்புள்ள கன்னி மகளிர் யாவராயினும் அவரைத் தாமும் விரும்பி அவரது துயரத்தைத் தீர்த்துப் பாதுகாத்தல் ஆடவர் திலகத்தின் கடப்பாடென்பது உலகம் அறிந்ததே. "என் மகளை யான் அளிப்பேன். நீ பெற்றுக்கொள்க" என்று தெரிவித்துக் கொள்ளுதல் மரபு அன்றாயினும் சொல்லாநிற்பேன். இயல்பாகவே உன்னால் மாலை சூட்டப்பட்டவளாதலின் அவள் உன் மனைவியே. ஆதலால் என் வேண்டுகோளின்படி செந்தீக்கடவுளின் முன்பு அவளை நல்ல நாளில் மணஞ் செய்துகொள்ளுதல் நன்று" என்று தெரிவித்தனர்.
கேட்ட உதயணன் அதனை வாசவதத்தைக்கு அறிவித்தான். இந்நிகழ்ச்சியை இயல்பாகவே முன்னம் அறிந்தவளாதலின் வாசவதத்தை சிறிதும் ஊடாதவளாகி அங்கீகரித்தனள். அவளது உள்ளத்தை அறிந்த உதயணன் பின்புதன் உடன்பாட்டை அம்முனிவருக்குத் தெரிவித்தான். அம் மகிழ்ச்சியால் அரசன் யாசகர்க்கு அரும் பொருள்களை மிக வழங்கினான். இந்த மணச் செய்தியை நாட்டினரும் நகரத்தினரும் அறிந்து தத்தம் இடங்களை அலங்கரித்தல் முதலியவற்றைச் செய்யும் வண்ணம் முரசறைவிக்கச் செய்தான். அலங்காரத்தின் மிகுதியால் அந் நகரம் போகபூமியைப்போல விளங்கிற்று. எந்த மருங்கிலும் நகரத்தார் அடையாக் கடையரும் வரையா வண்மையரும் இல்லோர்க்கு உறுபொருள் வீசுபவரும் ஆகி, "தாபதன் மடமகள் இங்கே வருவதை யாம் பார்க்க வேண்டும்" என்று விரும்பிச் சென்று,
"பூத்தோய் மாடமும் புலிமுக மாடமும்
கூத்தா டிடமுங் கொழுஞ்சுதைக் குன்றமும்
நாயின் மாடமு நகரநன் புரிசையும்
வாயின் மாடமு மணிமண் டபமும்
ஏனைய பிறவும்" (4.15:108-112)
ஏறி நிற்பாராயினர்.
அது தெரிந்த உதயணன் "பிடிகை, சிவிகை முதலியவற்றில் ஊர்தலின்றி நகரினுள்ளே விரிசிகை நடந்தே வருவாளாக" என்று சொல்லிவிடுத்தனன். விடுத்தவன் "வீட்டுவாயில்கள் தோறும் நறுமலர் பரப்புக; யானை முதலியவை வீதியில் சஞ்சரித்தலைத் தவிர்த்திடுக" என்று ஏவலர்முகமாக நகரத்தார்க்குத் தெரிவித்தனன். "அரண் மனையிலிருந்து மங்கலமகளிரும் பெரியோர்களும் நண்பில் திரியாமல் பண்பொடு புணர்ந்த காஞ்சுகிகளும் எதிர் சென்று அழைத்து வருக" என்று கட்டளையிட்டனன். அப்படியே அவர்கள் சென்றார்கள். விரிசிகையைக் காண்பதற்குச் சனங்கள் வழியின் இருபுறத்தும் நெருங்கி நின்றார்கள். தவப்பள்ளியிலிருந்து புறநகரத்திற்கு அவளை அழைத்துவரும்பொருட்டுச் சிவிகையானது பரிவாரங்களுடன் அனுப்பப்பெற்றது.
அழைக்கச் சென்றவர்கள் விரிசிகையைச் சிவிகையில் ஏற்றி அழைத்துவந்து புறநகரத்தின்கண் சோலையிலுள்ள மாடம் ஒன்றில் இறக்குவித்து வாசனைப்பொருள்களை அவள் உடம்பில் பூசி நறு நீரால் ஆட்டுவித்துச் சில்லென் கூந்தலை மெல்லென வாரி முடித்து அந்த மயிர்முடியில் உதயணனால் முன்பு சூட்டப் பெற்றதும் வாடியதுமான பிணையலுடன் தளிரினும் போதினும் தொடுத்த புதிய தாமத்தைச் சூட்டிப் பனங்குருத்தோலையைக் காதில் செருகி நெற்சிறு தாலியைக் கழுத்தடியில்சேர்த்தி முத்தைக் கோத்த ஒரு காழ்வடத்தை மார்பில் பூட்டிக் காவி உடையை நீக்கிக் கோடித் துகிலை உடுத்தி ஓர் உத்தரீகத்தை மேலே சேர்த்திக் கையில் பிடித்துக்கொள்ளும்படி ஒரு குவளைப்போதைக் கொடுத்து அவளை அலங்காரஞ் செய்தனர்.
செய்தபின் உடன்வந்த முனிவர்மங்கையரிற் சிலர், சாங்கியத்தாய் முதலியர்களை நோக்கி,"இவளைப் பாது காக்க வேண்டுவது உமது கடமை" என்று ஒம்படை கூறி, "இனி இவளுக்குத் தாயும், தந்தையும், தவ்வையரும் உதயணனே" என்று சொல்லிவிட்டு அவர்களிடம் விடை பெற்றுக்கொண்டு தம்மிடம் சென்றார்கள்.
சென்றவர்கள் விரிசிகையின் தந்தைக்கு நிகழ்ந்தவற்றைச் சொல்ல, அம்முனிவர் தம் மனைவியை அழைத்து, "விரிசிகையை மணம் செய்துக்கொள்ளும்படி உதயணனிடம் சொல்லிச் சேர்ப்பித்துவிட்டேன். இனி உன்னையும் துறந்து தவம் செய்யச் செல்வேன்" என்று கூறினர். கேட்ட அவள் வருந்திப் புலம்பினள். அதனை அம் முனிவர் ஏற்றுக் கொள்ளாதவராகிக் கடிய தவவொழுக்கத்தை மேற்கொண்டு வேறிடம் சென்றார்.
சென்றபின் அவ் வனத்திலுள்ள மங்கையரில் ஒருசாரார் விரிசிகையால் வளர்க்கப்பட்டு அவளொடு பழகிய குயில் முதலியவற்றையும் தவச்சாலையிலுள்ள அரிய பொருள்களையும் அருங்கலன்களையும் கைக்கொண்டு உடன்வர, வீதியில் விரிசிகை நடந்து செல்வாளாயினள். கண்டோர், " இவள் முனிவருடைய வேள்வியில் தோன்றிய தெய்வ மங்கை. இவளை மானிட மங்கை என்றல் மெய்ம்மையன்று" என்றும், "சூடிய தளிர்க்கோதை வாடுதல் முதலிய நிகழ்ச்சிகள் இவள் தெய்வமங்கை அல்லள் என்பதைத் தெரிவிக்கின்றன" என்றும் "இவள் கயத்தினின்றும் நீங்கிக் குவளைமலர் பிடித்துப் போந்த நீரரமகளாக இருப்பின் இவளுடைய கண்கள் இமைக்குமோ? உதயணனை மணமகனாகப் பெறுதற்குப் பழம்பிறப்பில் தவம் செய்த ஒருத்தி இவள்" என்றும் "உதயணனைச் சார்ந்து போகம் நுகர்தற்கு வந்த இயக்கி" என்றும் "உதயணன் இவளை விட்டு நெடுங் காலம் பிரிந்திருந்தது தவறு" என்றும், "இவளுக்கு உறுப்புக்களே அணிகலன்கள்" என்றும், "அழகில் தம்மை ஒப்போர் இல்லையென்று எண்ணியிருக்கும் மகளிர் இவளைக் காண்பார்களாக" என்றும் "உதயணனுக்கு இவளே ஏற்றவள்" என்றும் சொல்லாநிற்ப விரிசிகை தன் அடிகள் சின்மலர் மிதித்துச் சிவந்து சலிப்புறும்படி மெல்ல மெல்ல வீதியில் நடந்து சென்று கோயில்வாசலை அடைந்தாள். அடைந்த பொழுது, அரண்மனையிலிருந்து மங்கலப்பொருள்களை ஏந்திக்கொண்டு சிலர் எதிர்கொண்டனர். விரிசிகை கோயுலினுள்ளே சென்றனள். தேவியர் மூவரும் செய்ய வேண்டியவற்றைச் செய்து அவளுடைய குரவர்போலக் கொடுப்ப உதயணன் அவளை மணம் செய்து கொண்டனன்.
அப்பால் தேவியர் நால்வரும் வழிபட, மிக்கசெல்வத்தோடு கூடிப் பல்லுயிர்களையும் உதயணன் பாதுகாத்து வருபவனாயினன்.
------------------------------
5. நரவாண காண்டம்
பின்பு ஒருநாள் மந்திரிமார்களோடு உதயணன் பேரத்தாணியில் சென்று வீற்றிருந்தனன். அப்பொழுது ஒழுக்கமுடைய வணிகர் சிலர் நெருங்கி வந்து முறைப்படியே சென்று தமக்குள்ள வழக்கொன்றை உதயணனுக்குத் தெிவித்தனர். அதனைத் தீர்க்கும்படி உருமண்ணுவாவுக்கு அவன் கட்டளையிட அவன் அதை நன்கு விசாரித்துத் தீர்ப்புச்சொல்லிவிட்டு மீண்டுவந்து அந்த விவரத்தைக் கூறினன். 1அந்த வழக்கு, சந்ததியின்மையால் உண்டாகும் குறையையும் அஃது இருத்தலின் உண்டாகும் பெருமையையும் புலப்படுத்தியதாதலின் உதயணன் "நமக்குச் சந்ததி இல்லையே. மக்கள் இலையெனின் மிக்குயர் சிறப்பின் நம் குலம் இடையறுமே" என்ற வருத்தத்தை அடைந்து வாசவதத்தைபால் சென்றான்.
---------
1ஒரு வழக்கைத் தீர்த்ததிலிருந்து தனக்குச் சந்ததியில்லையே என்ற கவலை துஷ்யந்தனுக்கு உண்டானதாகச் சாகுந்தலத்தின் 6-ஆம் அங்கத்தால் தெரிகின்றது.
சென்றபொழுது அவள் நோன்பிகளுக்கு உணவளித்து அவர்களுடைய ஆசியைப் பெற்று மங்கலக் கோலத்தோடு மாடத்தில் ஓரிடத்தில் இருந்தனள். இருந்தவள் ஒரு புறவு தான் வாய்க்கொண்டிருந்த அரிய இரையைத் தன்னுடைய பார்ப்பின் வாயில் சொரிந்ததைக் கண்டு பார்ப்பின் பசிவருத்தத்தையும் தாய்ப்புறவினது அன்பின் பெருமையையும் நோக்கி, அதன் அன்பைப் பாராட்டிக்கொண் டிருந்ததை அரசன் வினாவி அறிந்து கொண்டு, தாகித்தவர்களுக்குத் தண்ணீர்போன்ற அவளுடன் துயின்றான். துயின்றபொழுது, இடையாமத்தில் ஒரு தெய்வமங்கை வந்து "எம் இறைவனாகிய குபேரன் உம்மை அழைக்கிறான். வருக" என்றனள். உதயணன், "வாசவதத்தையையும் உடன் அழைத்துவர என் மனம் விரும்புகின்றது. அதனை நீ அங்கீகரிக்க வேண்டும்" என்றனன். உடனே அவள், இருவரையும் கையில் தாங்கிக்கொண்டு பறந்துசென்று குபேரனை அடைய, அவன் சிங்காதனம் ஒன்றைக் காட்டி அதில் இருக்கும்படி சொல்ல, உதயணன் தேவியோடு அதில் இருந்த பொழுது குபேரன் கட்டளைப்படி ஒரு மணிமுடியை அத் தெய்வப்பெண் கொணர்ந்து உதயணனுக்குக் கொடுப்ப அவன் பெற்று வாசவதத்தையுடன் நகர்வந்து அதை அவளுக்கு அளிக்க அவள் அதைத் தன் மார்பினிற் சேர்த்தினள். சேர்த்தவே அது சூரியன்போல் தோன்றி அவள் வயிற்றில் புகுந்துவிட்டது. புகவே அவள் அஞ்சித் திடீரென்று எழுந்தாள். தானும் உடனே எழுந்துவிட்டதாக அவன் கனாவொன்றைக் கண்டு ஒரு முனிவரை அடைந்து தான் கண்டகனாவைக் கூறி அதன் பயனைச் சொல்ல வேண்டும் என்று கேட்ப அவர் "வெள்ளிமலையை ஆளும் சக்கரவர்த்தியாகிய ஒரு புதல்வனை நீ பெறுவாய். அவன் வெற்றி பெற்று விளங்குவன். சிறிதும் ஐயமில்லை" என்றனர். உதயணன் கேட்டு அதை வாசவதத்தைக்குச் சொல்லி மகிழ்வுற்றிருந்தனன்.
இப்படி இருக்கையில் வாசவதத்தை கருவுற்றாள். அதற்குரிய அடையாளங்கள் அவள் தேகத்தில் காணப் பட்டன. மயற்கையடைந்து வருந்தினாள். ஒரு நாள் வருந்தித் துயிலுகையில் விடியற்காலத்தில் ஆகாயத்தில் செல்லும் வெள்ளானை ஒன்று வந்து துதிக்கையைச் சுருட்டிக்கொண்டு தன் வயிற்றில் புகுந்ததாகவும் அப் பொழுது ஆகாயத்தில் துந்துபிகள் முழங்கப் பலர் துதித்ததாகவும் பின்பு அதனை உமிழ்ந்துவிடவே அஃது இறகுகளைப் பெற்றுப் பறந்து சென்று ஒரு வெள்ளி மலையின்மேல் ஏறி அதில் விளங்கிய ஒரு சூரியனை விழுங்கியதாகவும் அவள் கனவொன்று கண்டு திடீரென்று அஞ்சி எழுந்தாள். எழுந்தவள் அதை உதயணனுக்குக் கூற,"வித்தியாதரர் உலகில் சென்று பெரும்பகைவன் ஒருவனை வென்று அங்கே சக்கரம் செலுத்தும் ஒரு புதல்வனைப் பெறுவாய்" என்று மொழிந்தனன்.
வாசவதத்தையின் கருப்பத்திலிருந்த குழந்தையினிடம் சிறந்த வித்தை ஒன்று இருந்தமையின், மேலே பறந்து சென்று மலைகளையும் பிறவற்றையும் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அதற்கு உண்டாயிற்று. அந்த விருப்பத்தை வாசவதத்தையும் அடைந்தனள். அப்பொழுது கருப்பத்தின் வளர்ச்சியால் அவளுடைய தேகம் மெலிவுற்றது. அதனைக் கண்ணுற்ற உதயணன் "உனக்கு வேண்டுவது யாது?" என்று வினாவினன். தான் விரும்பியது கிடைத்தற்கு அரியதாகலின் தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தாமல் இருந்தனள். அவன் "நீ எதை விரும்பினாலும் அதனை அளித்தற்கு உரியேன்; ஐயம் உறாதே" என்று சூள் அறைந்து வற்புறுத்திக் கேட்க அவள் "என்னுடைய உள்ளம் வித்தியாதரர்களைப்போல ஆகாயத்தில் பறந்து சென்ற பல இடங்களைப் பார்ப் பதற்கு விரும்புகின்றது" என்பதை அஞ்சித் தெரிவித்தனள். அவள் விருப்பத்தை முடித்தற்குரிய ஆலோசனைகளை மந்திரிகடளுடன் அவன் செயாவானாயினன்.
அங்ஙனம் ஆராய்ந்துகொண் டிருக்கையில் இலாவாண நகரத்திலிருந்து வந்த உருமண்ணுவாவுக்கு வாசவதத்தையின் கருத்து இன்னது என்பதையும் அதை அடைதற்குச் செய்யும் உபாயத்தைத் தான் நாடியிருத்தலையும் உதயணன் தெரிவிக்க அவன் "முன்னொரு காலத்தில் வந்து நம்முடைய 1தாகத்தைப் போக்கிய இயக்கனை நினைப்போமாயின் அவன் வந்து நம்முடைய கருத்தை முடிப்பான்" என்று அவனைத் தியானித்தற்கு உரிய மந்திரத்தை எழுதிக் கொடுத்தான். உதயணன் அதனை அறிந்து தூய்மையோடும் விரதத்தோடும் இருந்து மனத்தை ஒன்று படுத்தி அம் மந்திரத்தை ஓதிக்கொண்டிருந்த காலத்தில் அந்த இயக்கன் விண்ணிலிருந்து இறங்கி அங்கே வந்து அவன் முன்னே நின்றான்.
--------
1 ஒரு தேவன் வந்து தாகத்தைத் தீர்த்த செய்தியை முன்பு காண்க.
நின்றவன் உதயணனை நோக்கி "மாய யானையைப் பிடிக்கச் சென்று சிறைப்பட்ட பொழுதும், வேடர்களின் இடையே அகப்பட்டபொழுதும், மகத நாட்டில் துயரம் உற்றபொழுதும், ஆருணியோடு போர் செய்தபொழுதும் என்னை நினையாமல் மிக்க செல்வத்தால் இன்பமுற்றிருக்கும் நீ இக்காலத்தில் என்னை நினைத்தற்குக் காரணம் யாது?" என்று கேட்ப உதயணன், " அத் துன்பங்களெல்லாம் யாமே தீர்த்தற்கு உரியனவாக இருந்தமையின் நினைக்க வில்லை. எங்களால் இயலாதவற்றை விரும்பிய வாசவதத்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செயவிக்க வேண்டியிருந்தமையின் இப்போது நினைத்தேன்" என்றனன். எனவே அந்த இயக்கன், " உன் தேவியின் வயிற்றில் உறைபவன் வித்தியாதர சக்கரவர்த்தியாதற்கு உரியவன். அதற்குரிய காரணத்தைக் கேட்பாயாக. விந்தமலையைச் சார்ந்த நருமதையாற்றின் ஒரு கரையில் உள்ள பருப்பதமென்னும் மலையின்மேல் குபேரன் தன் உரிமைமகளிருடன் இருந்தபொழுது, பத்திரை முதலாகிய தெய்வமகளிர் ஒன்பதின்மருள் ஒருத்தியாகிய பத்திராபதி என்பவளைத் தளிர்முதலியவற்றைக் கொய்து தரும்படி அவன் வெளியே அனுப்பினன். சென்ற பத்திராபதி அங்ஙனம் கொய்த தளிர்முதலியவற்றைக் கையில் ஏந்திக்கொண்டு நின்று, ஓர் ஆண் யானையால் தழவப்பட்டு நின்ற பெண் யானையை நோக்கி, 'யானைப் பிறப்பும் விரும்பற்பாலது' என்று எண்ணிக்கொண்டு குபேரனைஅடைந்தாள். அடைந்தவளுடைய எண்ணத்தை அறிந்த குபேரன் அவளை நோக்கி, ' தெய்வ இன்பத்தை விரும்பாமவ் யானையின் இன்பத்தைப் பெரிதாக நினைத்தமையின், மண்ணுலகத்தில் சென்று பெண் யானையகப் பிறந்து நீ விரும்பியபடி ஆண் யானையுடன் விளையடிப் போகம் நுகர்க' என்று சாபமிட்டனன். இடவே அவள் நடுநடுங்கி, 'அப் பிறப்பினின்றும் நான் நீங்குதல் எப்பொழுது?' என்று கேட்டனள்.
கேட்டவளுக்கு, 'நீ பிரச்சோதனனுடைய நகரில் ஒரு பெண் யானையாகப் பிறந்து இந்தப் பெயரையே பெற்று வளர்ந்து வாழும் காலத்தில் அவ்வரசனால் உதணனுக்குக் கொடுக்கப்படுவாய். அவன் வாசவதத்தையை உன்மீது ஏற்றி இருளில் செலுத்தும்பொழுது நீ நெடுந்தூரம் சென்று காலகூடமென்னும் நோயாலும் பெரும்பசியாலும் வீழ்வாய். விழ்ந்தவுடன் உதயணன் பஞ்சமந்திரத்தை உன் காதில் உபதேசிப்பான். அவ்வுப தேசத்தைப் பெற்று நீ பிறப்பொழிந்து தெய்வ வடிவங் கொண்டு இங்கே வருவாய்' என்று கூறினன். கூறியபடியே நிகழ்ந்தமையின் அவள், உனக்கு மாற்றுபகாரம் ஒன்றைச் செய்ய நினைந்து அதற்குரிய உபாயத்தை நாடிக் குபேரனை அடைந்து வணங்கி, 'எனக்கு ஒரு சிறு வரம் தந்தருளல் வேண்டும்' என்று கேட்டனள். கேட்கவே குபேரன், நீ விரும்பியதை மறையாமல் சொல்' என்று கட்டளையிட்டனன். அப்போது அவள், 'யான் பிரச்சோதனனது நாட்டின் எல்லைவரையில் சுமந்து சென்று விழுந்தவுடன் தன்காரியம் முடிந்துவிட்ட தென்று நினையாமல் உதயணன் என்பால் வந்து நான் செய்த உதவியை மிகவும் பாராட்டிக் கண்ணீர் விடுத்து என் உடம்பைத் தைவந்து நான் தெய்வப்பிறப்பை அடைந்து இன்புற்று வாழும்வண்ணம் பஞ்சமந்திரத்தை என் காதில் உபதேசித்துத் தன் கடனைக் கழித்தனன். அவனுக்கு ஒரு மகன் உண்டாகும்படி அருள் செய்யுமாறு வேண்டுகின்றேன்' என்று கேட்கவே குபேரன், அந்த வரத்தை அவளுக்குக் கொடுத்துவிட்டு விண்ணுலகத்துள்ள சௌ தர்மேந்திரனை அடைந்து உன் பெருமை முதலியவற்றை அவனுக்குச் சொல்லி, 'உதயணனுக்கு மகிழ்வளிக்கத் தக்க ஒரு புதல்வன் பிறக்க வேண்டும்' என்று கூறினன்.
சௌதர்மேந்திரன் "வெள்ளியம் பெருமலையில் சக்கர வர்த்தியாக இருக்க வேண்டுமென்ற விருப்பத்தோடு சோதவனென்னும் முனிவன் ஒருவன் தவம் செய்து கொண்டிருக்கின்றனன். அவன் உதயணனுக்குப் புத்திரனாகப்பிறந்து வித்தியாதர சக்கரவர்த்தியாகி அரசாட்சி செய்துவிட்டு என்பால் வருவான்" என்று விடையளித்து அவனை வருவித்து "நீ வாசவதத்தையின் வயிற்றில் தங்கிப் பிறப்பாயாக" என்று கட்டளையிட்டனன். ஆதலால் உனக்குச் சிறந்த குமாரன் உண்டாதல் தப்பாது. அந்தப் பத்திராபதி இன்னும் உனக்கு ஏதேனும் ஓர் உதவி செய்ய வேண்டும் என்ற விருப்பத்துடன் இருக்கின்றனள். அவளை நினைத்தால் வந்து உன் குறையைத் தீர்ப்பாள். அங்ஙனந் தீராளாயின் யான் திரும்பவும் வந்து தீர்ப்பேன்" என்று சொல்லிப் பத்திராபதியை அழைத்தற்குரிய மந்திரம் ஒன்றை உபதேசித்துவிட்டுப் பல உப சார மொழிகளால் உதயணனைப் பாராட்டித் தழுவி விடை பெற்றுத் தன்னிடம் சென்றனன். செல்லவே உதயணன் அம் மந்திரத்தை ஓதி உருவேற்றிக்கொண்டிருந்தான்.
இருந்தவன் பின்பு "வாசவதத்தையின் விருப்பத்தைத் தீர்த்தற்கு உபாயம் யாது?" என்று நாடிப் பல இடத்திலிருந்தும் தச்சர்களை வருவித்து "வாசவதத்தை ஊர்ந்து ஆகாயவழியே சென்று பல இடங்களையும் பார்த்துவருதற்குரிய எந்திர விமானம் ஒன்றைச் செய்வித்திடுக" என்று சொன்னபொழுது அவர்கள் "அஃது எம்மால் செய்தற்கரியது" என்றனர்,.
இதனை அறிந்த பத்திராபதி "நாமே தச்சவடிவங் கொண்டு சென்று இக் காரியத்தை முடிப்போம்" என்று நினைந்து ஒரு தச்சுவினை இளைஞன்போலவே அங்கே வந்து உருமண்ணுவாவால் அரசனை அடைந்து "இத் தச்சர்கள் அதைச் செய்ய அறியார். யான் அதை எளிதில் செய் வேன் என்று தெரிவித்தனள். அரசன் உடன்பட்டு அதற்குவேண்டியவற்றைக் கொடுக்க, அவற்றைக்கொண்டு சென்று சில தினத்தில் எந்திர விமானம் ஒன்றைச் செய்து முடித்துவிட்டு வந்து அரசனிடம் தெரிவித்தனள்.
உதயணன் சென்று அதனைக் கண்டு உமையொடு புணர்ந்த இமையா நாட்டத்துக் கண்ணணங் கவிரொளிக் கடவுளைப்போல வாசவதத்தையோடு அதில் ஏறியிருந்து விளங்கினன். 1உருமண்ணுவா முதலிய தோழர் நால் வரும் "எங்கள் மனைவியர்களும் கருப்பமுற்றவர்களாதலின் இதில் ஏறிச் செல்லும் விருப்பமுடையார்" என்று சொல்ல உதயணன் பத்திராபதியினுடைய அநுமதியைப் பெற்று யூகி முதலிய தொழர் நால்வரையும் அவர்களுடைய மனைவியர்களையும் அதில் ஏற்றினன். பத்திரா பதி அதனை ஆகாயவழியே செலுத்திக்கொண்டு பொன்மலைமுதல் பொதியில்மலை இறுதியாக பல மலைகளையும், பல காடுகளையும், பல தேசங்களையும், பல நகரங்களையும் பின்னும் காட்டவேண்டிய இடங்கள் பலவற்றையும் காட்டிவிட்டு மீட்டும் கௌசாம்பிநகரம் வந்து சேர்ந்தனள்.
----------
1 உருமண்ணுவா முதலிய மூவருக்கும் விவாகமான பொழுதே யூகிக்கும் முதல்முறை விவாகம் ஆகியிருக்க வேண்டும் என்பது இதனால் அறியப்படுகிறது.
சேர்ந்தபின் உதயணன் விமானம் செய்த தச்சுவினை இளைஞன்போல உதவிய பத்திராபதியை அழைத்து மிக்க உபசார மொழிகளைக் கூறி "எங்களுடைய பெரும் துயரத்தைத் தீர்த்த உனக்கு எம்மால் செய்தற்குரிய கைம்மாறு யாது?" என்று சொல்லித் தன்னுடைய அணிகலங்களைக் கழற்றிக் கொடுக்கத் தொடங்கியபொழுது பத்திராபதி அவற்றைக் கொள்ளாமல் தன் பழைய வரலாறு முழுவதையும் சொல்லி "நான் பத்திராபதியென்னும் பெண் யானையாக இருந்தபொழுது என்னுடைய மரணகாலத்தில் நீர் செய்த உதவிக்கு மாறாக என்னால் செய்தற்கு உரியது ஒன்றும் இல்லை. நீரும் நானும் வேறலம்" என்று சொல்லி விடைபெற்றுத் தன்னுடைய பண்டைத் தெய்வப் பெண் வடிவத்தைக் கொண்டனள்.
பின்னர் அவள் ஆகாயவழியே செல்லுதற்குரிய மந்திரம் ஒன்றை அவனுக்கு உபதேசித்துவிட்டுத் தன்னிடம் செல்ல, உதயணன் முதலியோர் அவளை நோக்கிப் புகழ்ந்து வழிபட்டனர்.
உதயணன் வாசவதத்தையை மிகவும் பாதுகாத்து அவளுக்கு வேண்டியவற்றைச் செய்துவந்தபொழுது அவள் நல்ல நாளில் ஆண்குழந்தை ஒன்றைப் பெற்றாள்.
பின்னர் யூகி முதலிய நால்வர்களுடைய மனைவியரும் ஆண்குழந்தைகளைப் பெற்றார்கள். அப்போது உதயணனும் தோழர்களும் மற்றையோரும்; மிக்க தான தருமங்களைச் செய்தனர். முரசறைவித்து நாட்டினரும் நகரத்தினரும் சிறப்பு அயருமாறும் தெரிவித்தனர். உதயணன் இச் செய்தியைத் தருசகனுக்கும்; பிரச்சோதனனுக்கும் மற்றையோர்க்கும் சொல்லிவிடுத்தான். பன்னிரண்டு தினங்கள் சென்றன. பின்பு நாமகரணம் செய்தனர். உதயணன் புதல்வன் குபேரனால் கொடுக்கப்பட்டவனாதலின், அவனுக்கு நரவாணதத்தன் என்னும் பெயர் இடப்பட்டது. யூகியின் புதல்வனுக்கு மருபூதியென்றும், உருமண்ணுவாவின் புதல்வனுக்கு அரிசிகனென்றும், வயந்தகன் புதல்வனுக்குத் தவந்தகன் என்றும், இடவகன் புதல்வனுக்குக் கோமுகனென்றும் பெயர்கள் முறையே இடப் பட்டன. நகரத்தார் பலவாறு பாராட்டினர். பிள்ளைகள் நாளுக்கு நாள் பிறைபோல வளர்ச்சியடைந்தார்கள்.
அப்பால் 1பதுமாபதி கருவுற்று ஒரு புதல்வனைப் பெற்றாள். அவனுக்குக் கோமுகன் என்னும் பெயர் இடப் பட்டது. உதயணனால் அனுப்பப்பட்ட தூதர்கள் யூகியுடன் உச்சைனியை அடைந்து பிரச்சோதனனுக்கு இச் செய்தியைத் தெரிவித்தனர். தெரிவித்தவர்களுக்குப் பிரச்சோதனன் மிக்க சம்மானம் அளித்தான். தன்னுடைய ஆட்சிக்கு உட்பட்ட பதினாயிரம் நகரங்களில் உள்ளவர்களை யெல்லாம் வருவித்து அவர்களுக்கு நன்கொடை அளித்தனன்; விழா எடுப்பித்தனன்.
-------
1 இச்செய்தி வேறு நூல்களிலிருந்து அறிந்து எழுதப்பட்டது.
அப்பால் அவன் ஒருநாள் போத்தாணியிலிருந்து யூகியைக் கௌசாம்பிக்கு அனுப்ப எண்ணித் தன்னுடைய மந்திரிகளுள் மேம் பட்ட சாலங்காயனையும் யூகியையும் வருவித்து எதிரே இருக்கச்செய்து அவர்களுடைய கல்வியை அளத்தற்கு எண்ணி நீதிநூல் வாதம் செய்வித்தனன். அவ்விருவர்க்கும் வாதப்போர் நடந்தது. அப்போரில் யூகி வென்றனன். அப்பொழுது,
"ஏற்ற முகத்தி னிறைவனும் விரும்பி
நண்பின் மாட்சியுங் கல்விய தகலமும்
பண்பின் றொழிலும் படைத்தொழின் மாண்பும்
காயு மாந்த ராயினும் யாதும்
தீயவை கூறப் படாத திண்மையும்
இவற்கல தில்லை யிவனாற் பெற்ற
அவற்கல தில்லை யரசின் மாட்சி" (5.7:106-112)
என்று யூகியைப் பலபடப் பாராட்டி பரதகனென்னும் மந்திரியின் தங்கையாகிய திலகசேனையையும் சாலங்காயன் தங்கை யாப்பியையும் அவனுக்கு மணம் செய்வித்து,
"நவில்தொறு மினிய ஞானம் போலப்
பயில்தொறு மினியநின் பண்புடைக் கிழமை
உள்ளுதொ றுள்ளுதொ றுள்ள மின்புறப்
பிரிவுறு துன்ப மெமாட் டெய்த (5.7:148-151)
கௌசாம்பி நகரஞ் செல்வாயாக. உதயணன் உன்னை அனுப்பும்படி தெரிவித்தமையாலேயே இப்பொழுது அனுப்பத் துணிந்தேன். உன்னைப்போன்ற நல்லொழுக்கமுடையவர் உலகத்தில் உளரோ? என்றுகூறி உபசரித்து அனுப்பினன். அவன் கொடுத்த அருங்கல முதலியவற்றை முன்னர் அனுப்பிவிட்டு அவன் அளித்த பெரும் செல்வத்தோடு யூகி பின்பு புறப்பட்டுக் கௌசாம்பிக்குச் சென்றனன்.
சென்ற யூகி உதயணனைக் கண்டு பிரச்சோதனன் செய்த முகமன்களையும் பிறவற்றையும் கூற, உதயணன் மகிழ்வுற்றுத் தோழர்களோடு அளவளாவி அரசாட்சி
செய்துகொண் டிருனந்தனன்.
நரவாணதத்தன் நாள்தோறும் பெருகுதலுற்று மருபூதிமுதலிய நான்கு தோழர்களொடும் கூடித் தரும நூல் முதலியவற்றிலும் தனுர் வேதத்திலும் மிக்க பயிற்சியை உடையவனாகிக் காளைப்பருவம் உற்றுக் கொடைக்கடம் பூண்டு மிக்க மேம்பாட்டுடன் விளங்குவானாயினன்.
அப்பொழுது அந் நகரத்தில் கல்வி கேள்விகளில் சிறந்தவர்களாகிய இரண்டாயித்தைந்நூறு கணிகையர்களுள் சிறந்தவளான கலிங்கசேனை அன்பவளுடைய மகள் 1மதனமஞ்சிகை என்பவள் தன்னுடைய மாடத்தின்மேல் உள்ள நிலாமுற்றத்தில் தோழிமாரோடு ஆடிய பந்துகளில் ஒன்று சாளரத்தின்வழியே வந்து, வீதியில் தோழர்கள் சூழ யானையின்மேல் செல்லும் நரவாணதத்தனுடைய மெல்லிய துகிலின்மேல் விழுந்தது. அதனை அவன் எடுத்துப் பார்த்து, "இதனை இட்டவள் யார்?" என்று யானையில் இருந்தபடியே எட்டிப் பார்த்தனன்.
--------
1. மதனமஞ்சிகையென்பவள், கௌசாம்பியிலிருந்த தனமித்திரனென்னும் வணிகனுக்குக் கலிங்கசேனையென்பவள்பால் தோன்றியவளென்று உதிதோதயகாவ்யத்தால் தெரிகின்றது.
பார்த்தபொழுது அங்கே காணப்பட்ட மதனமஞ்சிகையின் அழகிய வடிவம் அவன் மனத்தைக் கவர்ந்தது. கவரவே மயங்கிச் செயலற்றிருந்து பின்பு அப் பந்தையே தனக்குத் துணையாகக்கொண்டு சென்று ஒரு சோலையில் இருந்து உடன்வந்த தன் தோழனாகிய கோமுகனை அழைத்து, "இப்பந்தை எறிந்த மங்கையை நீ அறிவாயாயில் சொல்ல வேண்டும்" என்று வினாவினன். சித்திரவித்தையில் சிறந்த கோமுகன் அப்பந்தைக் கைக்கொண்டு சந்தனம் பூசிய கையால் அம் மங்கை அழுந்தப் பிடித்திருந்தமையின் விரல் நிரைகளின் சுவடுகள் அதில் அழுந்தியிருந்தை அறிந்து அவளுடைய வடிவம் முழுவதையும் மனத்தால் உணர்ந்து,
'விரலும் விரலிற் கேற்ற வங்கையும்
அங்கைக் கேற்ற பைந்தொடி முன்கையும்
முன்கைக் கேற்ற நன்கமை தோளும்
தோளிற் கேற்ற வாளொளி முகமும்
மாம்படு வடுவுறழ் மலர்நெடுங் கண்ணும்
துப்பன வாயு முத்தொளி முறுவலும்
ஒழுகுகொடி மூக்கு மெழுதுநன் புருவமும்
சேடமை செவியும் சில்லிருங் கூந்தலும்' (5.8:100-107)
ஆகியவற்றையுடைய ஒரு பெண்வடிவைப் படத்தினில் எழுதுக் கொணர்ந்து அப் படத்தை நரவாணதத்தனுக்குக் காட்டி, "இவ் வடிவத்தைப் போன்ற வடிவமுடையாள் இந் நகரத்தில் மதனமஞ்சிகை என்பவள்தான்" என்று சொல்லிவிட்டுப் பொற்பரிசங்களோடு அவள் வீட்டிற்குச்சென்று அவளுடைய நற்றாயைக் கண்டு நிகழ்ந் ததைக் கூறினான். கூறவே அவள் "வழிபடுதெய்வம் வரந்தருகின்றது" என்று சொல்லி விரும்பி உடன்பட்டனள். அவளுடைய சுற்றத்தார், "உதயணனுடைய அநுமதியைப் பெறாமல் அரசகுமாரனுக்கு இவளைக் கொடுத்தல் மிக்க தவறாகும்" என்று மறுத்தனர். கோமுகன் அதனை உதயணனுக்குத் தெரிவிக்க, அவன் பெரிதும் உவந்து வாசவதத்தையின் அநுமதி பெற்று நரவாணதத்தனுக்கு மதனமஞ்சிகையை நல்லநாளில் மணம்புரிவித்தனன்.
அப்பால் கௌசாம்பிநகரத்தில் மிக்க சிறப்புடன் விழாவொன்று நடைபெற்றது. அக்காட்சியை விரும்பி வித்தியாதர நகரத்துள்ள நூற்றுப்பத்து அரசர்களுள் சிறந்தவனாகிய மானசவேகன் என்பவன் வந்து அந் நகரத்துச் சிறப்புக்களையெல்லாம் பார்த்துக் கொண்டு செல்லுகையில் அரண்மனையினுள்ளே செயற்கையாகிய நால் வகை நிலனும் சூழ்ந்த ஒரு சோலையினிடையே உள்ள கட்டுமலை ஒன்றன் சிகரத்தில் நின்று நகரில் நிகழும் விழாவணியைப் பார்ப்பவளாகிய மதனமஞ்சிகையைக் கண்டு வியந்து அவளை எடுத்துக்கொண்டு தன் நகரஞ் செல்லுதற்குச் சமயம் பார்த்துக்கொண்டே இருந்தான். அவன் அப்படி இருக்கையில் நரவாணதத்தனும் மதன மஞ்செகையும் ஒரு பூஞ்சோலையை அடைந்து அங்கேயுள்ள கொடிவீடொன்றைச் சார்ந்து மெல்லிய மலர்கள் பரப்பிய அணையில் அயர்ந்து நித்திரைசெய்தனர். அதனைக் கண்ட மானசவேகன் தன் மாயையால் நரவாணனை மிக நன்றாகத் துயிலும்படி செய்துவிட்டு மதனமஞ்சிகையை மட்டும் மெல்லத் தூக்கி எடுத்துக்கொண்டு ஆகாயத்தில் எழுந்து "இன்று மிகச் சிறந்த அருமையான பொருள் ஒன்றைப் பெற்றோம்" என்று 1மகிழ்வுற்றுச் சென்று தன் நகரை அடைந்து அவளைச் சிறந்ததோர் இடத்தில் மெல்ல வைத்தனன். அவள் துயிலுணர்ந்து எழுந்து நாற்புறத்தையும் பார்த்து "இந்த இடம் மிகப் புதிதாக இருக்கின்றதே. இங்கே நாம் வந்ததற்குக் காரணம் யாது?" என்று கவலையுற்று மயங்கி வருந்துவாளாயினள். அப்பொழுது மானசவேகன் அவளை அடைந்து தன் விருப்பத்தைத் தெரிவித்தனன். அவள் உடன்படாமல் மறுத்தனள். மறுக்கவே அவன் ஏங்கி "மதனமஞ்சிகையின் மனத்தை எப்படியாவது வேறுபடுத்திவிட்டுவா" என்று தன் தங்கையாகிய வேகவதியென்பவளை அவள்பால் அனுப்பினன். அவள் வந்து மானசவேகனது உயர்வை எடுத்துக்கூறி "நீ என் தமையனுக்கு உரியவளாக இருப்பாயாயின் மிக்க இன்பத்தை அடைவாய்" என்று காரணங்காட்டிப் பலவாறு வற்புறுத்திக் கூறியபொழுது மதனமஞ்சிகை "அழகு கல்வி வீரம் முதலிய எல்லாவற்றிலும் மேம்பட்டுச் சிறந்து விளங்கும் என்னுடைய தலைவன் நரவாணதத்தனை இனி அடையேனாயின் யான் உயிரைநீத்தல் ஒருதலை" என்று மறுத்துக் கூறினள்.
---------
1 இதன் பின்னுள்ள கதைக்குரிய மூலப்பகுதி சிதைந்து போனமையின் உதிதோதயகாவ்யம் முதலிய வேறு நூல்களிலிருந்து படித்தறிந்து எழுதலாயிற்று.
அப்பால் வேகவதி தன் தமையனது கட்டளையை மறந்து நரவாணதத்தன்பால் வேட்கை மிகுந்து "எப்படியும் அவனைக் கணவனாக விரைவில் அடைந்துவிட வேண்டும்" என்ற வேகமுடையவளாய் உடனே விமானம் ஊர்ந்து புறப்பட்டு வந்து கௌசாம்பியை அடைந்தனள். அப்போது நரவாணன் மதனமஞ்சிகையின் பிரிவாற்றாமல் வருந்தி மயங்கிச் சோலையெங்கும் அவளைத் தேடி அலமந்து உழலுதலைக் கண்டாள். கண்டு அவன் வடிவைப் பார்த்து மிக வியந்து விருப்பம் மிகப்பெற்று ஒரு விச்சை வலியால் மதனமஞ்சிகையின் வடிவத்தைத் தான் எடுத்துக்கொண்டு ஒரு கொடிவீட்டில் இருப்ப, அங்கே மதனமஞ்சி கையைத் தேடித் திரிந்துகொண்டிருக்கும் நரவாணன் வந்து கண்டு கவலையொழிந்து மிக்க பரபரப்புடன் அவளைத் தழுவி இன்புற்றான். பின்னர் அவன் ஐயுற்று "நீ யார்?" என்ன, அவள்தான் இன்னாள் என்பதையும் தன் தமையனாகிய மானசவேகன் மதனமஞ்சிகையை விரும்பிக் கைப்பற்றிச் சென்றதையும் அவள் அவனுக்கு இணங்கா மல் ஊணுறக்கமின்றி வருத்தமுற்றிருத்தலையும் தான் வந்ததற்குக் காரணத்தையும் கூறிப் பின்பு தனது உண்மை உருவத்தைக் காட்டினள். கண்ட நரவாணன் மகிழ்ந்து மதனமஞ்சிகையை மறந்து வேகவதிபால் அன்புற்றுக் காமபரவசனாகி அவளுடன் எப்பொழுதும் இருப்பானாயினன்.
இவர்கள் இப்படியிருக்க மானசவேகன் சென்ற தங்கையைக் காணானாகிப் பல இடங்களிலும் தேடிக்கொண்டு வந்து கௌசாம்பியைச் சார்ந்த சோலையில் இருக்கும் அவ்விருவரையுங்கண்டு சினமுற்று அவர்களைப் பற்றிக்கொண்டு ஆகாய மார்க்கமாகச் சென்றபொழுது இடைவழியில் நாவாணனைத் திடீரென்று கீழே தள்ளி விட்டான். வேகவதி தன் விச்சைவலியால் அவனுக்கு யாதொரு துன்பமும் தோன்றாதபடி செய்வித்தனள். நரவாணன் வீழ்ந்த இடம் 1சதானிக முனிவருடைய தவப்பள்ளியாதலின், அம் முனிவருடைய மகிமையைக் கேட்டறிந்த அவன், தன் துன்பத்தை அவர் எப்படியும் தீர்த்துவிடுவார் என்று நிச்சயித்துச் சென்று அவரை அன்புடன் வணங்கினான். அவர் ஞானத்தால் அவனை இன்னானென்று அறிந்து "உதயணனுடைய புதல்வனே! உனக்கு மங்களமும் அறிவும் உண்டாகுக" என்றனர்.
-------
1இவர் உதயணன் தந்தை.
"நம் தந்தையின் பெயரை இவர் எப்படி அறிந்தனர்?" என்று வியப்புற்ற அவன் "தேவரீர் யாவர்?" என்று கேட்ட பொழுது அவர் "யான் உன்னுடைய தந்தையின் தந்தை" என்றதன்றித் தம் வரலாறு முழுவதையும் கூறினர். அவன் "வித்தியாதரர் உலக ஆட்சியை நான் பெறுதல் கூடுமென்று முன்னம் கேட்டுளேன். அதனைப் பெறுதற்கு உபாயம் யாது?" என்று கேட்ப அவர் "உன்னுடைய நகரம் அடைந்து உதயணன் பால் ஆகாய மார்க்கமாகச் செல்லுதற்குரிய விச்சையைப் பெற்று அதன் மகிமையால் அந்த ஆட்சியைப் பெறுவை" என்றனர். பின்பு நரவாணன் அவரை வணங்கி அவர் சொல்லியபடி கௌசாம்பியைச் சார்ந்து தன்னைக் காணாமல் தேடித் தேடி வருத்தமுற்றிருக்கும் தாய்தந்தையரை அடைந்து வணங்கி நிகழ்ந்தவற்றைக் கூறினன். உதயணன் அவனுக்கு மேற்கூறிய மந்திரத்தை உபதேசித்தனன் . பின்பு நரவாணன் விமானம் ஊர்ந்து சென்று 1விசயார்த்தம் என்னும் மலையின் தென்பாகத்திலுள்ள ஸ்ரீதரமென்னும் நகரத்தை அடைந்து அதன் கோட்டைவாயிலில் தங்கி இருந்தனன்.
------
1இது வித்தியாதரர்களுக்கு உறைவிடமாகிய ஒரு வெள்ளி மலை என்பர்.
அப்பொழுது ஒருவன் வந்து வணங்கி "கந்தருவ புரத்தின் அரசனாகிய நீலவேகனுக்கு நாகதத்தை என்பவள்பால் தோன்றிய அநங்கவிலாசினி என்பவள் முன்னொருநாள் துயிலும்பொழுது ஒரு சிங்கக்குட்டி பூமியிலிருந்து வந்து தனக்கு மாலை சூட்டியதாகக் கனாவொன்றைக் கண்டு அதனைத் தந்தைக்கு தெரிவித்தனள். அவன் சுமித்திரனென்னும் முனிவரை அடைந்து வணங்கி அக் கனாவைத் தெரிவித்து அதன் பயனை வினாவினன். அவர், 'பூமியிலிருந்து தீரனான ஓர் இளைஞன் வந்து உன் மகளுக்கு மாலை சூட்டுவான். சூட்டியபின் அவன் இங்கே சக்கரவர்த்தியுமாகி எல்லா அரசர்களையும் அடக்கி ஆட்சிபுரிந்து விளங்குவான்' என்று விடையளித்தனர். அளிக்கவே உம்முடைய நல்வரவை நாடோறும் நோக்கிக் கொண்டே இருக்கும் அவன் நீர் இங்கே வந்ததை அறிந்து தன்பால் உம்மை அழைத்துவரும்படி கட்டளையிட்டனன்' என்று தெரிவிக்க, நரவாணன் மகிழ்ந்து அவனுடன் அவ்வரசனை அடைந்து அவன் வேண்டுகோளின்படி அநங்கவிலாசினியை மணந்தான். மணந்து அங்கே தங்கியிருந்தபொழுது பழம்பிறப்பில் செய்த புண்ணியத்தின் பயன்கள் முறையே அவனை அடைவனவாயின. இந்திரன் கட்டளையால் தேவர்கள் வந்து அவனுக்கு நவநிதிகளையும் அளித்துச் சென்றனர். அவனது விறலை அறிந்த அவ்வுலகத்து அரசர்கள் எல்லோரும் வந்து வணங்கிப் பணிந்து திறைகொடுத்து அவன் கட்டளைப்படி ஒழுகுவாராயினர். அச் செய்திகளை அறிந்த மானசவேகன் மிகவும் அஞ்சித் தன்னிடம் இருந்த மதனமஞ்சிகையை அழைத்துவந்து நரவாணன்பால் சேர்ப்பித்துவிட்டு, "என் குற்றத்தைப் பொறுத்தருள வேண்டும்" என்று வேண்டினன். பின்பு அவன் தன் தங்கை வேகவதியையும் அன்புடன் நரவாணனுக்கு மணம் செய்வித்தனன்.
நரவாணன் தன் பிரிவால் வாட்டமுற்றிருந்த மதன மஞ்சிகையைத் தழுவி இனிய மொழிகளால் மகிழ்வித்து அவளோடும் வேகவதி, அநங்கவிலாசனி என்பவ்ர்களோடும் பின்பு அங்கே மணஞ்செய்த எண்ணாயிரந் தேவிமாரோடும் இன்புறுபவனாகி ஒற்றைச் செங்கோல் செலுத்திச் சக்கரவர்த்தியாகி அவ்வுலகை ஆண்டு வந்தான்.
அக் காலத்தில் தன்னுடைய இருமுதுகுரவர்களைத் தரிசிக்க வேண்டுமென்ற விருப்பம் அவனுக்கு உண்டாயிற்று. உண்டாகவே அவன் பரிசனங்களோடும் மனைவிமாரோடும் புறப்பட்டுக் கௌசாம்பி நகரம் அடைந்து தாய் தந்தையரை வணங்கினன். அவனுடைய பெருமையைக் கேட்டு அவர்கள் மகிழ்ந்தார்கள்.
அப்பால் நரவாணதத்தன் பதுமையின் புதல்வனான கோமுகனை இளவரசாக நியமிக்கும்படி தந்தையை வேண்டி அவ்வண்ணம் செய்வித்துவிட்டு விடைபெற்றுக்கொண்டு மனைவிமார் முதலியவர்களோடு வித்தியாதர உலகத்தை அடைந்து அரசாட்சி செய்துகொண்டு வாழ்வானாயினன்.
மனிதனாகப் பிறந்து வித்தியாதர சக்கரவர்த்தியாக விளங்கிய அவனுடைய புண்ணிய மிகுதியை யாவரும் அறிந்து பாராட்டுவாராயினர்.
--
6. துறவுக் காண்டம்
உதயணன், தனக்கு ஒப்பற்ற யூகி மந்திரியானதும், வாசவதத்தை மனைவியானதும், வித்தியாதர சக்கரவர்த்தியாக விளங்கும் நரவாணதத்தன் புதல்வனானதும், பிற நலங்களும் தவத்தின் பயனே ஆதலால், பின் தான்மேற் கொள்ளற்பாலது தவமே என்று துணிந்து செல்வத்தை வெறுத்தனன. அதனை அறிந்த தேவிமார் நீர் விளையாட்டு முதலியவற்றால் அவன் மனத்தை வேறுபடுத்தித் தம்மையே கருதி ஒழுகச்செய்ய அவன் மனம் அந்த வழியில் சிலநாட்கள் சென்றது. பின்பு ஒருநநாள் அவனுடைய பட்டத்து யானை மதங்கொண்டு புறப்பட்டு நகரை அழிக்கத் தொடங்கி யாருக்கும் அடங்காமல் பாகர்களையும் குத்துக்கோல்காரரையும் பிளந்தெறிந்தது. அதனால் நகரம் நடுங்கியது.
அக் காலத்தில் அந் நகரத்தை அடுத்த சோலை ஒன்றில் தவத்தால் சித்திபெற்ற சாரணர் பலர் வந்து தங்கினார்கள். அவர்களுக்குத் தலைவரான தருமவீரர் என்பவர் தம்மை அடைந்தவர்களுக்கு வழக்கப்படி அங்கே தருமோபதேசஞ் செய்துவருவாராயினர். அவ்வுபதேச மொழிகளை விலங்குகளும் பறவைகளும் கேட்பனவாய்த் தத்தஞ் செயல்களை மறந்து உணவொழிந்து தாம் செய்த பாவங்களை நினைந்து துன்புற்றவண்ணமாய் அடங்கி நின்றன. மேற்கூறிய பட்டத்து யானையும் இயல்பாகவே அங்கே வந்து அந்த அறவுரையைக் கேட்டுக் கோபம் நீங்கித் தன் பாவச்செயல்களுக்கு அஞ்சிக் கண்ணீர் உகுத்துக்கொண்டு யாதொரு கொடுஞ்செயலும் இன்றி அரண்மனை வாயிலில் வந்து நின்றது.
வாயில் காவலர் யானை வந்து அடங்கிநிற்பதை அரசனுக்குத் தெரிவிக்க, அவன் வந்து பார்த்து வியப்புற்று நிற்கையில் யூகி, "ஏதோ அறவுரையைக் கேட்டு இது பக்குவமுற்று அடங்கி நின்கின்றதுபோலும்; இனி ஊர்ந்து செல்லுதற்கு இது தகுதியுள்ளது" என்றனன். உதயணன் அதன் பிடரியில் ஏறியபொழுது யானை அவனை மிக்க விருப்பத்துடன் தாங்கிக்கொண்டு சென்று மேற் கூறிய வனத்தை அடைந்து நின்றது. அரசன் அவ் வனத்தில் பெரியோர் பலர் வந்திருத்தலை அறிந்து இறங்கி வழி பாட்டுடன் சென்று தருமவீரமுனிவரை வணங்க, அவர் அவனுக்கு ஓர் இருக்கை அளித்துத் தருமோபதேசஞ் செய்தனர். அதனைக் கேட்ட அரசன் இன்புற்று, "இந்த யானையின் பண்டை வரலாறு என்ன?" என்று கேட்ப அவர், "சாலி என்பதொரு நாட்டில் கடகம் என்பதோர் ஊரிலுள்ள இடபகன் என்பவனும் அவன் மனைவி சாலி என்பவளும் இல்லறம் நடத்திக்கொண்டு வருகையில், அவன் பண்டைப் பாவ வசத்தால் அமரிகை என்னும் ஒரு கணிகை வயத்தனாய்க் குலவொழுக்கத்தை விட்டுவிட்டு மிக்க பாவச் செய்கைகளைச் செய்வனாயினன். இறந்த பின்பு அவனே இந்த யானைப் பிறப்பை அடைந்தனன். அதனால் இந்த யானை தருமங்களைக் கேட்டவுடன் கொடுஞ்செய்கைகளைத் துறந்து அடங்கிநின்றது" என்றனர்.
கேட்ட உதயணன் அதை நன்கு பாதுகாக்கும்படி பாகர்களுக்குக் கட்டளையிட்டு அதன் பக்கத்தை அடைந்து, "யானை அரசே! உனக்கு யான் செய்வித்த துன்பங்களைப் பொறுத்துக்கொள்" என்று சொல்லி அதனை அன்புடன் தைவந்து தன்னிடம் அடைந்தனன். அதன் வரலாற்றைக் கேட்ட யாவரும் வியப்புற்றுத் தருமோபதேசத்தின் பெருமையைப் பாராட்டினர்.
அப்பால் அரசனுக்கு வைராக்கியம் உண்டாக அவன் நரவாணதத்தனை வருவித்து, "நீ இந்த அரசாட்சியை ஒப்புக்கொள். துறந்து தவம் செய்வதற்கு என் மனம் விரைகின்றது" என்று சொல்ல, அவன் வணங்கி, "அடியேனுக்கும் அரசாட்சியில் சிறிதும் விருப்பம் இல்லை. துறத்தற்கே என் மனம் விரைகின்றது" என்று தன் கருத்தைத் தெரிவித்தான். பின் உதயணன் பதுமையின் புதல்வனாகிய கோமுகணை அழைத்து அவனுக்கு முடிசூட்டி விட்டுச் சென்று தேவியருக்குத் தன் கருத்தைத் தெரிவித்தனன். அவர்களும் உடன்வந்து தவம் செய்வதாகக் கூறினர்.யூகி முதலிய மந்திரிகள் நால்வரும் வாசவதத்தை முதலிய தேவிமாரும் பிறரும் புடைசூழ்ந்துவர உதயணன் தவவனம் சென்று அங்கே தவம்செய்துகொண்டிருந்த தருமச்சுருதியென்னும் முனிவரைச் சரணம் அடைந்து துதித்து, "அடிகேள்! தவவழிகளை உப தேசித்து அடியேங்களை உய்வித்தருள வேன்டும்" என்று பிரார்த்தித்தனன். அவர்சில தருமங்களை விரிவாக உப தேசித்தனர். உபதேசித்தபின்பு அவன் அப்பொழுது செய்யவேண்டிய நியமங்களை முடித்துக் கொண்டு தியானாதிகளைச் செய்வானாயினன். தவவொழுக்கமும் ஒளியும் அவன்பால் சிறந்து விளங்கின.
பின்பு உதயணமுனிவன் யோகசமாதியைச் செய்து முடித்துச் சித்தபதத்தை அடைந்தான். தேவியரும் மந்திரிகளும் தவம் செய்து கற்பலோகத்தை அடைந்து
இன்புற்று வாழ்ந்தார்கள்.
--------------------
அபிதான விளக்கம் (அபிதானம்-பெயர்)
அச்சுவப் பெருமகன்: இவன் கேகயநாட்டின் அரசன்; குற்றமற்ற புகழை உடையவன்; முடியுடை மன்னன்; மிக்க வீரன்; பதுமாபதியை மணஞ்செய்ய விரும்பிக் கொடுத்தற்குரிய பரிச முதலியவற்றுடன் வந்து அவள் தமையனாகிய தருசகனைக் கண்டு தன் கருத்தைக் கூறி அவனது உடன்பாட்டைப் பெற்று உடனிருந்த காலத்தில் அவனோடு போர்செய்தற்கு வந்த பகைவருடன் யுத்தம் செய்தற்கு வலிந்துபோய்ப் பொருது எலிச்செவி அரசனால் கொல்லப்பட்டவன்.
அடவி: இடவகனுக்குச் சீவிதமாக உதயணனால் கொடுக்கப்பட்ட நாடு
அமரிகை: சாலி நாட்டிலிருந்த ஒரு கணிகை.
அரிசிகன்: உருமண்ணுவாவின் புதல்வன்.
அரிமான்: தருசகனோடு பகைமைகொண்டொழுகிய அரசர்களுள் ஒருவன்.
அருஞ்சுகன்: உச்சைனியில் இருந்த ஓர் அந்தணப் பிரமசாரி; வேத முதலியவற்றை ஓதியுணர்ந்தவன்; யாழ்வகையையும், பிற நூல்களையும் நன்கு அறிந்தவன்; கோடபதியென்னும் யாழைக் கண்டெடுத்து உதயணனிடம் கொடுத்தவன்.
அவந்தி: பிரச்சோதன அரசனுடைய நாடு; இதன் தலைநகர் உச்சைனி.
அனங்கவிலாசினி: கந்தருவபுரத்து அரசனான நீலவேனது புத்திரி;நரவாணதத்தனால் மணம் செய்து கொள்ளப்பட்டாள்.
ஆதித்தியதருமன்: ஒரு வீரன்.
ஆப்பியாயினி: பதுமையின் பார்ப்பனத்தோழி; அவளோடு ஒருங்கு வளர்ந்தவள்; அவள் தனியே ஆலோசித்தற்குரிய உயிர்த்துணைவி; தோழமைக்குரிய இயல்புகளிற் சிறந்தவள்; இவளால் பதுமை அடைந்த பயன்கள் பல; உதயணனுடைய பார்ப்பனத் தோழனாகிய இசைச்சனென்பவனால் இவள் மணஞ் செய்து கொள்ளப்பட்டாள்; இப் பெயர் யாப்பியாயினி எனவும் வழங்கும்.
ஆப்பியை: சாலங்காயனுடைய தங்கை; பிரச்சோதன அரசன் விரும்பியபடி யூகிக்கு மணம் செய்விக்கப் பட்டாள். யாப்பியை யெனவும் வழங்கப்படுவாள்.
ஆரியை: பதுமையின் தோழி; அவளுடைய மனக் குறிப்பறிந்தே ஒழுகுபவள்; மிக்க மேன்மையை உடையவள்; பந்தடித்தலில் மிக்க ஆற்றல் வாய்ந்தவள்.
ஆருணி அரசன்: இவன் பாஞ்சாலதேசத்தரசன்; மிக்க பராக்கிரமத்தையும் மிக்க வீரியமுள்ள சேனையையும் உடையவன்; கோசல தேயத்தரசனை வென்று அவனது ஊரை அழித்து அவன் மகள் வாசவதத்தை முதலியவர்களைப் பிடித்துவந்து தன் உரிமைமகளிர்க்குத் தாதியர்களாக அமைத்தனன்; இவனுக்குக் கார்த்தவீரியனை உவமை கூறியிருக்கின்றனர்; இவன் பட்டத்து யானைக்கு மந்தரமென்று பெயர்; ஏயர்குலத்தாரோடு குலப்பகைஞனாதலின், அக் குல அரசாட்சிக்கு உரியனான உதயணன் சிறைப்பட்ட பொழுது, பெரும்படையோடு சென்று கோசம்பி நகரத்தைக் கைப்பற்றிக்கொண்டு முரசறைவித்துத் தன் கொற்றத்தை யாவர்க்கும் தெரிவித்து அந் நகரையே தனது இராசதானியாகக்கொண்டு ஆட்சி புரிந்தனன்; காளமயிடனென்னும் ஒற்றனால் பகைப்புலத்தே நிகழும் செய்திகளை அறிந்து கொண்டே வந்தவன்; பூரணகுண்டலன் என்பவன் இவனுக்கு முக்கியமான மந்திரி; பின்பு உதயணன் வந்து செய்த பெரும் போரில் அவனால் கொல்லப் பட்டான்; அவனால் வெட்டுண்டபோது இவன்பால் அச்சகுறிகள் சிறிதும் நிகழவே இல்லை; இவன் பாஞ்சால ராசன்; பாஞ்சால ராயன் என்றும் வழங்கப் படுவான்.
ஆலாங்கானம்: இப்பெயருடையவை இரண்டு; ஒன்று விபுலகிரியின் பக்கத்தில் மிருகாவதியின் தந்தை தவம் செய்துகொண்டிருந்த இடம்; மற்றொன்று, பூக்கொய்தற்கு வந்த பத்திராபதி என்னுந் தெய்வ மகள் யானையின் சேர்க்கையைக் கண்டு மனம் வேறு பட்டுப் பெண் யானையாகப் பிறக்கும்படி குபேரனால் சாபம் பெற்ற இடம்; இது விந்தமலையின் பக்கத்தே நருமதையாற்றங்கரையில் உள்ளது.
இசைச்சன்: இவன் உதயணனுடைய பார்ப்பனத் தோழன்; அவனுடைய அமைச்சனாகவுங் கூறப்படுவன்; இளமையில் இரு முதுகுரவரையும் இழந்தோன்; வாசவதத்தையையும் யூகியையும் இழந்ததனால் மிகுந்த கவலையுற்று மெலிந்த உதயணனைத் தேற்றி அவனை வேற்று வடிவங்கொள்வித்து மற்றைத் தோழர்களோடு இராசகிரியநகர்க்கு அழைத்துச் சென்றவன்; சென்றவிடத்துக் காமன் கோட்டத்தின் வாயிலில் காணப்பட்ட பதுமாபதி தன்னை விரும்பினாளென்று வேட்கையுற்ற உதயணனுக்கு மகததேயத்து மகளிரது நிறையுடமையைக் கூறி அவனது காமவேகத்தைத் தணிவித்தவன்; அவன் பதுமாபதியின் கன்னிமாடத்தில் வேற்று வடிவங்கொண்டு மறைந்திருந்த காலத்தில் மற்றத் தோழர்களோடு தானும் வேற்றுவடி வங்கொண்டு அயலிடத்தில் இருந்து அவனைப் பாது காத்து வந்தோன்; தருசகனோடு பெரும்போர் புரிதற்கு வந்த பகைவருடன் போர் செய்தற்குச் சென்ற உதயணனுக்குத் துணையாகச் சென்றவன்; ஒழுக்கினும் குலத்தினும் விழுப்பமிக்க ஆப்பியாயினி என்னும் அந்தணக் கன்னிகையை மணம் செய்து கொண்டவன். மிக்க வருவாயையுடைய பல ஊர்களைச் சீவிதமாக உதயணன்பால் பெற்றவன்.
இடவகன்: உதயணனுடைய மந்திரிகளில் ஒருவன்; அவனுடைய உயிர்த் தோழன்; சூழ்ச்சி, வாய்மை, நன்றியறிவு, வீரம் இவை இவனுடைய சிறப்புக் குணங்கள். மனம் குளிர்ந்து உதயணனால் பாராட்டப் பெற்ற பெருமை வாய்ந்தவன். உஞ்சை நகரத்திலிருந்து பிறர் அறியாதபடி நேரே தனபால் தனியே வந்து வினாவிய யூகிக்கு உதயணன் செய்தி முழுவதையும் கூறி மேலே ஆக வேண்டியவற்றை அவன் ஆராய்ந்து செய்யும்படி தூண்டியவன். தருசகன் பொருட்டுப் பகைவரோடு போர் செய்தற்கு உதயணன் சென்றபொழுது அவனுக்குத் துணையாகப் பல வீரர்களுடன் சென்று போர் செய்து வெற்றி அடையும்படி செய்தவன். உதயணனால் இவன் சீவிதமாகப் பெற்றவை, புட்பகமென்னும் நகரமும் சிறு நாடுகள் ஐம்பதும் பிற வருவாய்களும்; இவன் புட்பகத்தையே தலைநகராக்கி அரசாட்சி செய்து கொண்டிருந்து அழைத்தபொழுது சென்று உதயணனுக்கு வேண்டியவைகளைச் செய்து வருபவனாக இருந்தான். பல தேயங்களையும் எளிதில் பார்த்து வருவதற்கு வாசவதத்தையோடு உதயணன் ஏறிச் சென்ற விமானத்தில் சென்றவர்களில் இவனும் ஒருவன். இவன் பெயர் இடபகன் எனவும் வழங்கும்.
இரத்தினபுரம்: காந்தார நாட்டில் உள்ளதொரு நகரம்.
இராசகிரியம்: இது புகழ்பெற்றதும் மிக்க பழமையானதுமான ஒரு பெரிய நகரம். பலவகை நுகர்ச்சிகளை உடைமையாலும் அச்சத்தை விளைவித்தலாலும் பவண லோகத்தையும் செல்வமிகுதியால் அமராவதியையும் ஒப்பது; மகதநாட்டின் தலைநகர். இதன் புறத்தே யவனச் சேரிகள் நூறும், எறிபடைப்பாடிகள் நூற்றறுபதும், தமிழ்வீரர்களின் சேரிகள் ஆயிரமும், கொல்லர் சேரிகள் பலவும், மிலைச்சச்சேரிகள் பலவும், சித்திரசாலைகள் முதலிய பலவகை இடங்களும், தண்ணீர்ப் பந்தர் முதலிய பல தருமத்தானங்களும், பலவகைத் தேவாலயங்களும் இருந்தன. அழகிய அகழிகளாலும் பல உறுப்புக்கள் வாய்ந்த மதில்களாலும் சூழப்பெற்ற இதன் அகநகரில் பெரும்படைச் சேரி, போகச்சேரி, உழவர்சேரி, அந்தணர்சேரி, அமைச்சர்சேரி முதலியன அமைந்த வீதிகள் பலவற்றால் சூழப்பெற்று இடையே விளங்கும் இராச மாளிகை ஒரு தாமரை மலரில் பலவகை இதழ்கள் சூழப்பெற்ற பூம்பொகுட்டைப்போல விளங்கியது. இந் நகரத்தோர் யாவரும் தத்தம் குலவொழுக்கங்களில் சிறிதும் வழுவாமல் இருந்தனர். இதன் அரசன் தருசகன் என்பவன். உதயணன் பார்ப்பனப் பிரமசாரி வடிவம் கொண்டு தோழர் முதலியவர்களுடன் சில மாதங்கள் மறைந்திருந்து தருசகனுக்கு உதவி செய்து பின்பு அவனுடைய நட்பைப் பெற்று அவன் தங்கையாகிய பதுமையை மணந்து சில நாள் இதில் தங்கியிருந்தனன். இஃது இராசகிரியெனவும் வழங்கும்.
இராசனை: பதுமையின் தோழி. மிக்க அழகுடையவள். உதயணனது விருப்பின்படி இவளை உருமண்ணுவா மணம் செய்துகொண்டான். பந்தாட்டத்தில் தேர்ச்சியுள்ளவள்.
இலாமயன்: ஓர் அந்தணன். இனிய மொழியை உடையவன். மந்திர வித்தையில் சிறந்தவன். உதயணனுக்கு இவன்பால் நன்கு மதிப்புண்டு. இவன் இருந்த இடம் காளவனம் என்பது. "வாசவதத்தை தீக்கு இரையாயினளே! இனி யாது செய்வோம்" என்று மிக்க வருத்தம் அடைந்து செயலற்றிருந்த உதயணன் இவன் இருந்த இடமும் தீக்கு இரையாயிற்றென்று தோழர் கூறினமையால் எந்தப் பொருளுக்கும் அழிவுண்டு என்பதை அறிந்து சிறிது ஆறுதலை அடைந்தான்.
இலாவாணகம்: இஃது உதயணனுக்கு உரிய பெரிய நகர்களுள் ஒன்று; பகைவர் வருதற்கு மிக அஞ்சும் பேரரண்கள் முதலியவற்றையும் இடையே மிக அழகியதான ஓர் அரண்மனையையும் உடையது; இதன் பக்கத்தே பலவகை வளமுள்ள ஒரு மலை உண்டு; அதன் சாரல் மிக்க இன்பம் பயப்பதாக இருந்தது; உண்டாட்டுக்கு உரிய பலவகை மரங்களையும் கொடிகளையும் உடைய பூஞ்சோலைகளும், சுனை முதலிய நீர்நிலைகளும், படமாடம் முதலியன அமைத்தற்குரிய இட விசேடங்களும் இச் சாரலில் இருந்தன; முனிவர் ஆச்சிரமங்களும் தேவாலயங்களும் மேற்கூறிய சோலைகளில் உண்டு; தவம் செய்துகொண்டிருந்த ஓர் அரசமுனிவருடைய புத்திரியாகிய விரிசிகை என்னும் கன்னியின் வேண்டுகோட்கு இரங்கி அவள் கொடுத்த பலவகை மலர்களைக் கண்ணி முதலியனவாகக் கட்டி உதயணன் சூட்டியது அச் சோலைகளுள் ஒன்றிலேதான்; அக் கன்னி வேறொன்றையும் அணியாமல் அம் மாலையுடனே இருந்து முயன்று உதயணனுக்குத் தேவியாயினள்; உருமண்ணுவாவிற்கு அவனால் கொடுக்கப்பட்ட சீவிதங்களுள் இந் நகரமும் ஒன்று; இஃது இலாவாணம் என்றும் வழங்கும்.
உஞ்சேனை: உச்சைனி நகரம்; உஞ்சையெனவும் வழங்கும்; இஃது அவந்தி நாட்டில் உள்ளது; பிரச்சோதனனுடைய இராசதானி; மதில் முதலிய அரண்களாலும். சேனைகளாலும், பலவகைச் செல்வங்களாலும், சிற்ப அமைதிகளாலும் சிறப்புற்றது; குளிர்ச்சியும் பலவகை நுகர்ச்சியும் இதில் அதிகம். அகநகர் புற நகர்களின் பாகுபாடுகளினால் மிக்கது. யாதொரு குற்றமும் இல்லாதது. சத்துரு பயம் இதற்கு இல்லை. இதில் வாழ்வோர் பெரும்பாலும் முருகக்கடவுளை வழிபடுவார் என்று தெரிகிறது. இது பெருநகர், மாநகர் எனவும் வழங்கப்படும். இதன் அயலில் மகாகாளவனம் அல்லது காளவனம் என்ற ஒரு தவ வனமும், அதில் ஒரு காளிகோயில் முதலியனவும், ஒரு நதியும், அந் நதி பாயப்பெற்று ஒரு யோசனை அளவுள்ளதான ஒரு பொய்கையும் உண்டு. அந் நதியின் இரு கரையிலும் அப் பொய்கைக் கரையிலும் இந் நகரத்தார் வருடத்திற்கு ஒருமுறை நீர்விழா அயராநிற்பர். உதயணன் வஞ்சனையால் பிடிக்கப்பட்டுச் சிறையில் இருந்ததுமுதல் வாசவதத்தையை அவன் பிடிமேல் ஏற்றிச்சென்றது இறுதியாகவுள்ள கதைப்பகுதி இந் நகரில் நிகழ்ந்தது. இந் நகரம் அவந்தியென்றும் கூறப்படும். இது முத்தி நகரம் ஏழனுள் ஒன்று. பழைய நூல்களாலும் சிலாசாசனங்களாலும் இதில் சைன முனிவர் பலர் இருந்ததாகத் தெரிகிறது. வடநூல்கள் பலவற்றிலும் சிலப்பதிகாரம் யசோதரகாவியம் முதலிய தமிழ்நூல்களிலும் மிகப் பாராட்டப் பட்டுள்ளது. உச்சைனிமகாகாளமென்னும் ஒரு சிவக்ஷேத்திரம் இதில் உண்டு.
உதயணன்: இவன் இந் நூல் கதாநாயகன். குருகுலத்தில் பிறந்தவன். சதானிகனுக்கு மிருகாவதிபால் தோன்றியவன். இவன் நாடு வத்தவநாடு. இராசதானி கோசம்பி நகர். சூரியோதயகாலத்தில் பிறந்தது பற்றி இவனுக்கு இப் பெயர் அமைந்தது. தேவியர் வாசவதத்தை முதலிய நால்வர். தன்னிகர் இல்லாதவனே தொடர்நிலைச் செய்யுட்குத் தலைவனாக இருத்தல் வேண்டுமென்று ஆன்றோர் கூறியதற்கு ஏற்பக் கல்வி முதலிய சிறப்பியல்புகள் பலவற்றாலும் ஒப்பற்று விளங்கியவன் இவன்; அரசர்க்கு அரசனென்றும், ஏகச்செங்கோலினன் என்றும் இவன் வழங்கப்படுவான்; இவனுடய தாய் மரபு, தந்தை மரபு இரண்டும் மிகப் புகழ் பெற்றவை; தந்தையின் குலம் குருகுலம்; தாயின் குலம் ஏயர் குலம்; இவன் இந்த இரண்டு குலத்திற்கும் உரிமை பூண்டு விளங்கினான்; ஏயர் குடிக்கும் சேதிநாட்டிற்கும் உரியவர் இவன் தாய் மரபினர்; வத்த நாட்டிற்கும் குருகுலத்திற்கும் உரியவர் இவன் தந்தை மரபினர்; இயற்கை அழகிலும் செயற்கை அழகிலும் சிறந்தவன்; மிக்க இளமைப் பருவத்திலேயே பலவகைக் கலைகளையும் பழம்பிறப்பில் செய்த தவத்தால் முற்றக் கற்றுத் தேர்ந்தோன்; விற்படை முதலியவற்றிலும், யானையேற்றம் முதலியவற்றிலும் யாழ் விச்சையிலும் வல்லுநன்; விற்படை முதலிய வித்தைகளைக் கற்பித்தலிலும் சிறந்தவன்; இது பற்றியே ஆசான்,தேசிகன் என்னும் சிறப்புப் பெயர்களுக்கு உரியனாக இவன் விளங்கினான் என்றும், விச்சை வீரன் என்று சிறப்பித்துப் பாராட்டுதற்கு உரியனாக இவன் விளங்கினான் என்றும் தெரிகின்றன; செல்வத்துள் செல்வமாகிய கேள்விச் செல்வம் இவன்பால் அமைந்திருந்தது; இன்னும் இவன் யானையை அடக்கும் ஆற்றல் உடையான் என்றும், யானை இலக்கணத்தை நன்கு அறிந்தவன் என்றும், யானைப் பேச்சில் வல்லவன் என்றும் கருதப்படுகிறான்; பிரச்சோதனனுடைய பட்டத்துயானையாகிய நளகிரி என்பது மத வெறி கொண்டு திரிந்து ஒருவருக்கும் அடங்காமல் உஞ்சேனை நகரத்தைப் பாழ்படுத்தியபொழுது அவன் வேண்டுகோட்கு இரங்கிச் சிறையினின்றும் சென்று அதனை மிக எளிதில் அடக்கியதுபற்றியே அவனாலும் மற்றையோராலும் மிக மதிக்கப்பட்டு விளங்கினான்; இதனாலேதான் பிரச்சோதனன் உஞ்சேனை நகரில் குஞ்சரச்சேரியிலுள்ள மாளிகையை இவனுக்கு இருப்பிடமாய் அமைத்தனன்; இவனுடைய யாழின் பெயர் கோடபதி என்பது; அஃது எக்காலத்தும் தன் தன்மை திரியாதது; அஃது இந்திரனால் பிரமசுந்தர முனிவருக்கும், அவரால் இவனுக்கும் கொடுக்கப்பட்டது; அதன்பால் இவனுக்கு மிக்க அன்பு உண்டு; யாழிற்குரிய மரங்களின் இயல்பையும் நரம்புகளின் இலக்கணங்களையும் இவன் நன்கு அறிந்தவன்; அதிவிசித்திரமான கண்ணி கட்டுதலிலும், வாழைக் குருத்தில் நகத்தினால் பொய்கை முதலிய பலவகையான சித்திரங்கள் பொறித்தல் முதலியவற்றிலும் வல்லவனாக இருந்தான்; தன்னைச் சுமந்துவந்தபிடி இறக்கும் தருணதில் நற்கதி அடையுமாறு பஞ்ச மந்திரத்தை அதன் காதில் ஓதினன் என்று தெரிதலாலும், பிறவற்றாலும் இவன் மந்திரவித்தையிலும் வல்லவனென்று தெரிகிறது; ஒவ்வொன்றையும் ஆராய்ந்தே தெளிபவன் இவன்; இடவகன், உருமண்ணுவா, யூகி, வயந்தகன் என்னும் நான்கு முக்கிய மந்திரிகளும், வேறு பல மந்திரிகளும் இவனுக்கு உண்டு; அவர்கள் இவனுக்காகச் செய்த உதவிகள் மிகப்பல; இந் நால்வரும் இவனுடைய தோழர்களாகவும் விளங்கினார்கள்; அவர்களிடத்து இவனுக்கு விசேஷ அன்பு உண்டு; மேற்கூறிய மந்திரிகளாகிய தோழர்களையன்றி இசைச்சன் முதலிய அன்புடைய தோழர்கள் பலர் இவனுக்கு இருந்தார்கள்; அறப்போரிலும் மறப்போரிலும் பேராற்றல் உடையவன்; குறித்த இலக்கை ஊடுருவிக்கொண்டு அப்பால் உள்ளவற்றையும் துளைத்து உருவும்படி எய்யவல்ல இராமன், ஓரி என்பவர்களைப்போல் அம்புகளை எய்யும் வீரருள் வீரனாக இவன் விளங்கியதுபற்றி வல்வல்லியென்றும் பாராட்டப்படுவான்; நன்றியறிவில் சிறந்தவன்.
உதயையோடை: இவள் பதுமாபதியின் நற்றாய்; சிவமதியின் சகோதரி; காசியரசன் மனைவி. உருமண்ணுவா: இவன் பலவகைப் பெருமையும் வாய்ந்த உயர்குடியில் பிறந்தவன்; உதயணனுடைய மந்திரிகள் நால்வருள்ளும் அவன் உயிர்த்தோழர்களுள்ளும் ஒருவன். வயந்தகனுடன் சேர்ந்தே பெரும்பாலும் வழங்கப்படுவான். யூகிக்கு அடுத்தபடி என்னும் பெருமை வாய்ந்தவன். சேனைகளைப் போரில் நடத்துவதில் மிக்க ஆற்றல் உள்ளவன். எந்தச் சமயத்திலும் மனநடுக்கம் கொள்ளாதவன். மிக்க புகழினன். நட்பு, ஊக்கம், வீரம், பகைவர்க்கு அஞ்சாமை, காலம், இடம் முதலியவற்றை நன்கு ஆராய்ந்தே ஒவ்வொன்றையும் செய்யத் துணிதல் நன்றியறிவு முதலியவை இவன்பாலுள்ள விசேட குணங்கள். வாசவதத்தையை வலிந்து கொண்டுவந்த உதயணனை மிக்க உபசாரத்துடன் வரவேற்று அழைத்துச் சென்று சயந்தி நகரில் அவளை அவனுக்கு மணஞ் செய்வித்து வேண்டியவற்றைக் குறிப்பறிந்து அளித்து அவனுக்கு யாதொரு கவலையும் இல்லாதபடி பாதுகாத்து மகிழ்வித்து வந்தோன். அவளைப் பிரிந்து வருந்திய அவனுக்கு அடிசில், உடை முதலியவற்றைக் கொடுக்கும்படி தோழர்களால் நியமிக்கப் பெற்ற உண்மை அன்பினன். இராசகிரிய நகரத்தில் உதயணன் மறைந்திருந்தபொழுது தாமும் மறைந்து அவனைப் பாதுகாத்து வந்தவர்களில் இவனும் ஒருவன். உதயணனுடைய வாழ்வைக் கருதித் தன்னுடைய உயிர்க்குச் சிறிதும் இரங்காமல் போரில் அவனுக்கு முன் சென்று பகைவரால் சிறைப் படுத்தப்பட்டோன். கோசம்பி நகரத்தைப் பெற்ற பின்பு தன் பிரிவாற்றாமல் வருந்தி "இருமணமெய்திய இன்பமெல்லா, முருமண்ணுலாவினை யுற்றதற் பின்னை" என உதயணனால் கூறப்பெற்ற உத்தம சீலன். மறைந்திருந்த யூகியின் கருத்தைத் தான் அறிந்துகொள்ளுதற்கும் தன் கருத்தை அவனுக்குத் தெரிவித்தற்குமாகச் சாதகனென்னும் ஓர் அன்பனை இடையே வைத்துக்கொண்டு சில முக்கியமான காரியங்களை முடித்தவன். மிகவும் சிக்கலான வழக்கைத் தீர்த்தலில் வல்லவன். உதயணன் விருப்பத்தின்படி பதுமாபதியின் தோழியாகிய இராசனை என்பவளை மணம் செய்துகொண்டோன். பல பரிவாரங்களினிடையே உதயணன் தன் கையினால் அலங்கரித்து அளித்த ஏனாதி மோதிர மும் சேனாபதிப் பட்டமும் பெற்றதன்றி, சயந்தி, இலாவாணகம் என்னும் பெரிய நகரங்களையும் அவற்றைச் சூழ்ந்த இடங்களையும் மிக்க வருவாயை உடைய பல ஊர்களையும் சதுரங்கப் படைகளையும் பெற்றவன். துறவறம் பூண்டு தவம் செய்துகொண்டிருந்த தன் தந்தைக்கு யாதொரு துன்பமும் நேராதபடி வேண்டியவற்றை அளித்து வழிபாடு செய்து ஒழுகியவன். கருவுற்ற வாசவதத்தையுடன் விமான மேறி ஆகாயவழியே சென்ற உதயணனோடு கூடச் சென்றவர்களில் இவனும் ஒருவன். இவனுடைய புதல்வன் பூதியென்பான்,.
எலிச்செவி: தருசகனோடு பகைமைகொண்ட அரசர்களுள் ஒருவன்.
ஏயர் குலம் (ஏகயர் குலம்) : இது மிருகாவதியின் தந்தை குலம்.
ஐராபதி: இவள் பதுமாபதியின் செவிலித்தாயின் மகளும் அவள் உயிர்த்தோழியுமாக உள்ளவள். கூனிய உருவம் உடையவளாதல்பற்றிக் கூனியெனவும் வழங்கப்படுவாள். இராசகிரியத்தில் காமன் கோட்டத் தயலில் பதுமாபதியைக் கண்டு மயங்கி வினாவிய உதயணனுக்கு அவள் வரலாறுகள் யாவற்றையும் சொல்லி அவனுக்கும் அவளுக்கும் தான் இடையே நின்று இருவர் கருத்தையும் முற்றுவித்தவள். கூர்த்த மதியினள். எதையும் மந்தணமாக முடிக்கும் ஆற்றல் வாய்ந்தவள். பந்தடித்தலில் மிக்க வல்லமை உடையவள்; இப் பெயர் அயிராவதி எனவும் வழங்கும்.
கடகன்: உதயணன் தம்பி. பிங்கலகடகர் என்பதைப் பார்க்க.
கருப்பாசம்: ஒரு காட்டாறு.
கலிங்கசேனை: கோசம்பி நகரிலுள்ள தலைக்கோல் பட்டம் பெற்ற இரண்டாயிரத்தைந்நூறு கணிகைமார்களுள் ஒருத்தி. குற்றமற்ற கற்புடையவள். மதனமஞ்சிகையின் தாய்.
காகதுண்டகன்: இராசகிரிய நகரின் புறத்ததாகிய சோலை ஒன்றிலுள்ள ஒரு பெரியவன். தோற்றப்பொலிவுள்ளவன். வாசவதத்தை இறந்துவிட்டாளே என்று கவலைக்கடலில் அழுந்திச் செயலற்றிருந்த உதயணன் கவலையை மாற்றியவன்.
காசியரசன்: இப் பெயரினர் இருவர்; (1) பதுமாபதியின் தந்தை. உதயையோடை என்பவளுடைய கணவன். மிக்க சேனையை உடையவன் (2) நீலகேசி என்பவளுடைய தந்தை.
காஞ்சனமாலை: வாசவதத்தையின் உயிர்ப்பாங்கி; அவளுடைய கண்மணி போன்றவள். பேரழகினள். சுவைபயக்கும் இனிய மொழியினள். தலைவியின் குறிப் பறிந்து நடப்பவள். வாசவதத்தையின் கருத்தை இவள்போல் அறிந்து நடப்பவர்கள் இல்லை. அவளுக்கு மனக்கலக்கம் நேரும்போதெல்லாம் தக்க பரிகார மொழிகளை மெல்லக் கூறித் தெருட்டுபவள். அவள்பால் உண்மை அன்புடையவள். அவளுடைய இன்பக்காலத்தும் துன்பக்காலத்தும் பிரியாதவள் இவள். பந்து விளையாட்டில் மிக்க பயிற்சியுள்ளவள். இவள் பெயர் காஞ்சனை, கஞ்சனமாலை எனவும் வழங்கும்.
காம்போசம்: சிறந்த குதிரைகள் பிறக்கும் தேயத்துள் இஃது ஒன்று.
காளவனம்: இப் பெயருடைய வனம் இரண்டு; உஞ்சை நகரின் புறத்தே உள்ளது ஒன்று. இது மகாகாள வனம் என்று வேறு நூல்களில் கூறப்படும். மற்றொன்று உதயணன்பால் மிக்க அன்புடையவனாகிய இலாமயன் என்பவன் இருந்த வனம்.
கும்பன்: இவன் ஆருணியரசனுக்குக் கண்மணிபோன்றவனும் திண்ணிய அறிவை உடையவனுமாகிய ஒரு
வீரன்; பஞ்சால ராசன் இறந்த பின்பு கோசம்பி நகரத்தே கொல்லப்பட்டான்.
குருகுலம்: சைனநூல்களில் கூறப்படும் ஐவகைக் குலத்துள் ஒன்று.
கோசம்பி (கௌசாம்பி நகரம்): இஃது ஆதியில் குசாம்பன் என்னும் அரசனால் உண்டாக்கப்பட்டது என்பர்; இது வத்தவநாட்டின் தலைநகர்;. யமுனையாற்றைத் தன்பால் உடையது. உதயணனது இராசதானி. இதிலிருந்து அரசாட்சி செய்துவந்த உதயணன் சிறைப்பட்டு உஞ்சை நகர்க்குச் சென்றபொழுது பகைவனாகிய பாஞ்சால தேசத்தரசனால் இது கைக்கொள்ளப் பட்டது. அப்பால் அவனைக் கொன்ற உதயணனால் ஆளப்பட்டது. வாசவதத்தையை உதயணன் மணம் செய்துகொண்ட பின்பு உஞ்சை நகரத்தாரும் இந் நகரத்தாரும் மனக்கலப்புடையவராய்த் தானியங்களையும் நாணயங்களையும் வேறுபாடின்றி வழங்குவாராயினர். இந் நகரில் சிறந்த விழவொன்று நடந்ததாகத் தெரிகிறது.
கோசலத்தரசன்: இவனது இயற்பெயர் தெரியவில்லை. இவன் பிரச்சோதனனுடைய முதல் மனைவியின் சகோதரி கணவன். ஒருபொழுது பாஞ்சால வேந்தன் படையெடுத்து வந்து இவனை வென்று இவன் மகள் வாசவதத்தையையும் அவளுடைய ஆயத்தாரையும் கவர்ந்துசென்று தன்னுடைய தேவிமார்களுக்குப் பணிப்பெண்களாக நியமித்தனன்; அவனை வென்ற உதயணன் அம் மகளிரைத் தன் தேவியர்க்குப் பங்கிட்டுக் கொடுத்துவிட்டு வாசவதத்தை (மானனீகை) என்பவளை மணம் செய்து கொண்டனன்.
கோசிகன்: கோசாம்பி நகரத்திருந்த ஒரு நிமித்திகன்; யமுனையில் வீழ்த்துவதற்குக் கொண்டுபோகப் பட்ட சாங்கியத்தாயைக் காப்பாற்ற நினைந்த உதயணன் வினாவியபொழுது அவளுடைய வருங்காலச் செய்தியை நன்கு கூறியவன்.
கோடாபதி. இஃது உதயணனுடைய யாழ்; யாழ்வகையில் பேரியாழின்பால் படும்; பிரமசுந்தரர் என்னும் முனிவரால் உதயணனுக்கு யாழ்வித்தையுடன் கொடுக்கப்பட்டது; தெய்வத்தன்மை வாய்ந்தது; அவன் இதனைக் கற்பிக்கும்பொழுதுதான் வாசவதத்தையின் அன்பைப் பெற்றான்; அவ்விருவருக்கும் இதன்பால் அன்பு அதிகம்.
கோபாலகன்: இவன் பிரச்சோதனன் பட்டத்தேவிமாருள் ஒருத்தியின் புதல்வன்; இவன் வாசவதத்தையின் சகோதரன் அல்லன்; உதயணனுடைய விரோதிகளாகிய இருபதின்மரை வென்றனன்.
கோமுகன்: இப் பெயருடையார் இருவர்; ஒருவன் இடவகனுடைய மகன்; உதயணனுக்குப் பதுமாபதிபால் தோன்றியவன் மற்றொருவன்.
கௌசாம்பி: கோசாம்பியைப் பார்க்க.
சங்கமன்னர்: தருசகனோடு போர்செய்தற்கு வந்த எலிச் செவியரசன் முதலியோர்.
சங்கரன்: தருசகனுடன் போர்செய்தற்கு வந்த அரசர்களுள் ஒருவன்.
*சண்மைநகர்: அங்கநாட்டில் உள்ளதொரு பெரிய நகரம்; எல்லா வளத்திலும் மிகச் சிறந்து விளங்குவது; உக்கிரகுலத்தரனாகிய விசையவரன் என்பவனால்
பாதுகாக்கப்பட்டுவந்தது; இந்த நகரத்தில் மித்திரகாமன் என்னும் ஒரு வணிகர்பெருமான் வீட்டில் யூகியும், வாசவதத்தை, காஞ்சனமாலை, சாங்கியத்தாய் என்னும் மூவரும் தம்மைப் பிறர் அறியாதபடி வேற்றுவடிவம் கொண்டு அவனால் பாதுகாக்கப்பட்டுத் தங்கியிருந்தனர்.
சத்தியகாயன்: இவன் தருசகன் மந்திரிகளுள் ஒருவன்; ஆருணி அரசனோடு போர் செய்தற்கு உதயணன் புறப்பட்ட காலத்தில் அவனுக்குத் துணையாகத் தருசகனால் அனுப்பப்பட்ட வீரர்களில் ஒருவன்; அப் போரில் இவன் இறந்ததுபற்றி இவன் மக்களுக்கு உதயணன் சீவிதங்கள் அளித்து மிக மேம்படுத்தினன்.
சதானிகன்: குருகுலத்தில் பிறந்த அரசன்; உதயணன் தந்தை.
சயந்தி: உதயணனுடைய ஆட்சிக்கு உட்பட்டதொரு பெரியநகரம்; இதனை உருமண்ணுவா பாதுகாத்து வந்தனன்; உதயணனுககும் வாதவதத்தைக்கும் இந்நகரத்திலேதான் விவாகம் நடந்தது; இது மருத நிலவளத்தால் சிறந்தது; இதன் பக்கத்தே மிக அழகிதான மலை ஒன்று உண்டு; இந்நகரில் வாசவ தத்தையோடு உதயணன் பல நாள் கவலையின்றி வாழ்ந்திருந்தனன்; இந்நகரமும் வேறு சில இடங்களும் உருமண்ணுவாவுக்கு உதயணனால் சீவிதமாக அளிக்கப்பட்டன.
சாங்கியத்தாய்: இவளது இயற்பெயர் தெரியவில்லை! கோசம்பி நகரத்தில் பார்ப்பன குலத்தில் பிறந்த இவளை மணந்த கணவன் இளமையில் நீங்கியதுபற்றி இவளுக்கு ஒழுக்கத் தவறு ஒருபொழுது உண்டாயது; அது தெரிந்த அதிகாரிகளுடைய கட்டளையால் யமுனையாற்றில் இவளை வீழ்த்திவிடுவதற்குச் சிலர் கொண்டு செல்வதைக் கண்ட உதயணன் இரங்கி விடுவித்துத் தீர்த்தயாத்திரை செய்யும்படி அனுப்பினன்; அப்பால் இவள் கங்கையாடி இமயமலையில் சென்று இரண்டு வருடம் அங்கே தங்கி ஆண்டுள்ள பெரியோரால் சமய விகற்பங்களை அறிந்து கன்னியா குமரியில் நீராடுவதற்கு யாத்திரையாளரோடு அங்கிருந்து புறப்பட்டு உஞ்சை நகருக்கு வந்தபொழுது, இவளுடைய கல்வி, அறிவு முதலியவற்றை அறிந்த பிரச்சோதனன் தன் பட்டத்துத் தேவியாகிய ஸ்ரீமதிக்கு நீதிகள் முதலியவற்றைச் சொல்லும்படி இவளை நியமித்தனன்; இவள் அதனச் செய்துவருகையில் ஒரு பிராயத்தினளாக இருந்த வாசவதத்தை இவளிடத்து அன்பு வைத்ததை அறிந்த பட்டத்தேவி அவளுக்குச் செவிலித் தாயாயிருக்கும்படி வேண்ட இவள் அங்ஙனமே இருந்து வந்தனள். சாங்கிய சமயத்தை மேற்கொண்டமையாலும் வாசவதத்தைக்கு செவிலித்தாயாக இருந்தமையாலும் சாங்கியத்தாயென்று இவள் வழங்கப்படுவாள்; வாசவதத்தைபால் இவளுக்கிருந்த அன்பிற்கு எல்லையில்லை; தன் உயிரைக் காப்பாற்றியதுபற்றி உதயணன்பால் இவளுக்கு மிக்க அன்புண்டு; வாசவதத்தையையும் உதயணனையும் அவனைச் சார்ந்தவர்களையும் காப்பாற்றுதற்கு அவ்வப் பொழுது தன் வருத்ததைப் பாராட்டாமல் இவள் செய்துவந்த முயற்சிகள் மிகப்பல; தாயைக் காட்டிலும் அன்புவைத்து உதயணன் இவளை ஆதரித்து வந்தான்; தாயெனவும், செவிலியெனவும், சாங்கிய முதுமகள் எனவும் இவள் வழங்கப்படுவள்.
சாங்கியமுனி: இவன் பல மாணாக்கர்களுடன் தீர்த்த யாத்திரை செய்துகொண் டிருந்த ஒரு பண்டிதன்; சாங்கியத்தாய்க்குப் பல சமயக் கொள்கைகளை அறிவுறுத்தி அவளை நல்வழிப்படுத்தியவன்.
சாண்டியன்: காந்தார நாட்டில் இரத்தின புரத்திலிருந்த ஓர் அந்தணன். இது படைத்துக்கோட் பெயர். அந்தண வடிவமுற்று மாணகனென்னும் பெயர் கொண்டு இராசகிரியத்தில் இருந்தபொழுது உதயணன் இப் பெயரை உடையவன் மகன் என்று தன்னைக் கூறிக்கொண்டனன்.
சாககன்: இவனுடைய ஊர் கோசம்பி நகரம். சாதியால் குயவன்; உதயணன் சிறைப்பட்டுச் சென்றபொழுது அது பொறாமல் வேறு வடிவங்கொண்டு தானும் உடன்சென்று உஞ்சைநகரின் பக்கத்தில் உள்ளதோர் ஊரில் ஒரு வீட்டில் இருந்து உதயணனுக்கு வேண்டிய அநுகூலங்களைப் பிறர் அறியாமல் செய்துவந்தவன். மறைந்திருந்த யூகிக்கு உயிர் நட்பாளர்களாய் அவனுடன் இருந்த வீரர் பதின்மருள் ஒருவனாகவும் இருந்தவன். இராச விசுவாசத்தில் சிறந்தவன். வாசவதத்ததையைப் பிடிமீது ஏற்றி உதயணன் புறப்பட்ட பின்பு சாங்கியத்தாய் இவன் வீட்டிலே இருந்துதான் யூகியைச் சந்தித்துப் பேசினள். யூகிக்கும் உருமண்ணுவாவுக்கும் இடையே நின்று பிறர் அறியாமல் ஒருவர் கூறுவனவற்றை மற்றொருவரிடம் சொல்லிக் காரியங்களை நிறைவேற்றியவன். ஆருணியைக் கொன்று வெற்றியடைந்த பின்பு உதயணனால் இலாவாண நகரத்தில் பெருங்குயமென்னும் பட்டத்தையும் சீவிதமாக இரண்டு ஊர்களையும் பெற்றான்.
சாலங்காயன்: இவன் பிரச்சோதனனுடைய பதினாறாயிரம் மந்திரிகளுள் முதல் மந்திரி. யாராலும் தணிக்க முடியாத அரசன் கோபம் இவனுடைய சொற்களால் தணியும்; பேரமைச்சன் என்றும் வழங்கப்படுவான்; அவனது கட்டளைப்படி மாய யானையைக் காட்டி உதயணனை வஞ்சித்துப் பிடித்துக் கொணர்ந்து உஞ்சை நகரில் சிறை செய்வித்தவன்; தருக்க நூல் முதலியவற்றில் மிக்க தேர்ச்சியை உடையவன்; வாசவதத்தையை உதயணன் பிடிமீதேற்றித் தன்னகர் சென்றான் என்பது கேட்டுக் கடும் சினங்கொண்டு அவனைப் பிடித்துவரும்படி சேனைகளை அனுப்பத் தொடங்கிய பிரச்சோதனனை நோக்கிச் சில நியாயங்களை இவன் சொன்னமையால் அவன் அச் செயலை நிறுத்தினான். யூகியைத் தன் நகருக்கு அழைத்த பிரச்சோதனனுடைய விருப்பத்தின்படி யூகியோடு நூல்களில் வாதம் செய்து தோல்வியுற்றவன். தன் தங்கை ஆப்பியை என்பவளை அரசன் வேண்டுகோளால் யூகிக்கு மணம் செய்வித்தோன்.
சாலி: இடபகன் மனைவி. ஒரு நாட்டின் பெயராகவும் உள்ளது.
சித்திராங்கதன்: எலிச்செவியரசன் தம்பி; தருசகனுக்குப் பகைவன். மகத நாட்டில் நடந்த போரில் பிடித்து உதயணனால் சிறையில் வைக்கப்பட்டுச் சிலநாள்
சென்றபின் தருசகனால் விடுவிக்கப்பட்டான்.
சிந்து: இப் பெயருள்ள நதிகள் இரண்டு. ஒன்று இமயத்திலும் மற்றொன்று மேருவிலும் தோன்றும்.
சிவமதி: இவள் தருசகன் தாய். உதயையோடையின் சகோதரி. அவள் மகளாகிய பதுமாபதியை அபிமானித்து வளர்த்து வந்தவள்.
சிவேதன்: இவன் பிரச்சோதனனுடைய மந்திரிகளுள் ஒருவன். ஆலோசனையில் வல்லவன். நளகிரி என்னும் யானை வெறிகொண்டு நகரை அழித்தபொழுது பிரச்சோதனன் கட்டளைப்படியே சென்று மிக்க செற்றத்தோடு சிறையிலிருந்த உதயணனை மிக இரந்து அவன் மனத்தைக் கனிவித்துச் சிறையினின்றும் நீக்கி அழைத்துவந்து அதனை அடக்குவித்து அவனுக்கும் அரசனுக்கும் பழக்கஞ் செய்வித்தவன்; அவன் குமாரர்களுக்கும் வாசவதத்தைக்கும் உரிய கல்விகளைக் கற்பிக்கும்படி அரசனது அநுமதியால் சென்று சொல்லி உதயணனை இணங்குவித்தவன்; உதயணனுக்குரிய பணிகளையெல்லாம் பின்னர் அன்புடன் செய்துவந்தவன்; ஐராபதம் என்னும் மலையில் பிறந்த பொன்னின் நாணயங்களில் பதினாறாயிரம் நன்கொடையாக உதயணனால் இவன் பெற்றான்.
சின்னச்சோலை: ஒரு மலை. இதன்மேல் இருந்து உதயணன் சங்கேதமான ஒரு பண்ணைப் பாட அவன் வீரர் எல்லோரும் வந்து கூடினர்.
சுமித்திரர்: ஒரு முனிவர்; நீலவேகனுக்கு அவன் கண்ட கனாவின் பயனைத் தெரிவித்தவர்.
சேடகர்: அரசாட்சியைத் துறந்த ஒரு முனிவர்; விக்கிரனுக்கும் மிருகாபதிக்கும் தந்தை.
சேதிநாடு: இது மிருகாபதியின் தந்தைக்குரிய நாடு; இந் நாடு யூகிக்கு உதயணனால் சீவிதமாகப் பின்பு அளிக்கப்பட்டது.
சோதமன்: சௌதர்மேந்திரன். சௌதர்மமென்பது கற்பலோகம் பதினாறனுள் முதலாவது. இந்த இந்திரன், பத்திராபதியின் வேண்டுகோளால் உதயணனுக்கு மகனாகச் சென்று பிறக்கும்படி சோதவன் என்னும் முனிவனுக்குக் கட்டளையிட்டனன்.
சோதவன்: ஒரு முனிவன்; இவன் சௌதர்மேந்திரனுடைய கட்டளையால் நரவாணனாக வந்து பிறந்தவன்.
தருசகன்: இவன் மகத தேயத்து அரசன்; இவனுடைய இராசதானி இராசகிரியம் என்பது; இவன் பதுமா பதி என்பவளுடைய தமையன்; ஆருணியை வெல்லு வதற்கு இவனுடைய நட்பைப் பெற எண்ணிய உரு மண்ணுவா முதலிய மந்திரிகளுடன் உதயணன் அந்தணப் பிரமசாரி வடிவங் கொண்டு அந் நகர்ப்புறச் சோலையில் சிலகாலம் மறைந் திருந்தனன்; இவன் தந்தையால் புதைத்துவைக்கப்பட்ட வைப்புத் திரவியங்கள் உதயணனால் அறிந்து எடுத்துக்கொடுக்கப்பட்டன; சில நீருற்றுக்களும் அவனால் இவனுக்குக் காட்டப்பட்டன. பதுமாபதியைக் கேகய அரசனுக்குக் கொடுத்தற்கு இவன் எண்ணினான் என்பதை அறிந்து போர்செய்தற்கு வந்த அரசர் எழுவரையும் மந்திரிகளுடன் சென்று உதயணன் வென்றான் என்பதுபற்றி அவனுக்குப் பதுமாபதியை மணஞ் செய்வித்தான்; தனக்கு உதயணன் செய்த உதவியை நினைந்து அவனுக்கு உதவியாகத் தன் மந்திரிகளையும் சதுரங்க சேனைகளையும் அனுப்பி வெற்றி உண்டாகும்படி செய்தான்; எலிச்செவி அரசனால் சிறையில் வைக்கப்பட்டிருந்த உருமண்ணுவாவை விடுவித்து உதயணன்பால் அனுப்பினான்; உதயணனுக்கு இவனிடத்தில் மிகுந்த அன்பு உண்டு; ஒவ்வொன்றையும் ஆராய்ந்து செய்பவன்; நன்றியறிவுடையோன்; இவன் தந்தையும் உதயணன் தந்தையும் மிக்க நட்புடையோரென்று தெரிகிறது; இவன் பெயர் மகத மன்னன், தரிசகன், தருசககுமரன் எனவும் வழங்கும்.
தருமச்சுருதி: உதயணனுக்குச் சினதருமங்களை விரிவாக உபதேசித்த முனிவர்.
தருமதத்தன்: தருசகனுடைய மந்திரிகளில் ஒருவன்; ஆருணியோடு போர் செய்தற்குச் சென்றபொழுது உதயணனுக்கு உதவியாக அனுப்பப்பட்டு முன்படையில் நின்று பொருத வீரன்; அவனை வென்றதற்குக் காரணனாக இருந்ததுபற்றி, நெய்த்தோர்ப் பட்டிகையும் பத்தூரும் உதயணனால் பெற்றவன்.
தருமவீரர்: சித்திபெற்ற சாரணர்களின் தலைவர்; இவருடைய உபதேசமொழிகளைக் கேட்ட விலங்குகளும் பறவைகளும் தத்தம் செயல்களை மறந்து அடங்கி நின்றன.
தவந்தகன்: வயந்தகனுடைய மகன்.
தனமித்திரன்: சேடகராசன் புதல்வருள் மூத்தோன்.
தாரகாரி: தருசகன் மந்திரிகளுள் ஒருவன். உதயணன் ஆருணியோடு போர்செய்தற்குச் சென்ற காலத்தில் உதவியாக இருந்தவன்.
திலகசேனை: பரதகனுடைய தங்கை. யூகியின் மனைவி.
நஞ்சுகன்: குபேரனுக்குத் தொண்டு செய்யும் ஓர் இயக்கன்.
நரவாணதத்தன்: உதயணனுக்குப் பிரச்சோதனன் மகளாகிய வாசவதத்தையினிடம் பிறந்த புத்திரன்; குபேரனது அருளினால் உதித்தவனாதலின் இப் பெயர் பெற்றான். (நரவாகனன்- குபேரன்); வித்தியாதர சக்கரவர்த்தியாகப் பின்பு ஆயினன்.
நருமதை: உஞ்சை நகரிலுள்ள ஐம்பதினாயிரம் நாடகக் கணிகையருள் தலைக்கோல் பட்டம்பெற்ற ஒருத்தியின் மகள்; பிரச்சோதனனால் நன்கு மதிக்கப் பெற்றவள். வாசவதத்தைபாலுள்ள அன்பின் மிகுதியால் தனக்கு உண்டான வேறுபாடு இவளால் உண்டாயிற்று என்று பிறர் அறிந்துகொள்ளும்படி வயந்தகனைக் கொண்டு உதயணனால் வருவிக்கப் பட்டவள்.
நருமதையாறு: விந்தமலையில் உண்டாவது. பத்திரை என்னும் தெய்வமகள் பெண்யானை ஆகும்படி குபேரனால் சாபம் பெற்றது இதன் கரையிலேதான்.
நளகிரி: இது பிரச்சோதனனது பட்டத்து யானை; மிக்க வீரியம் உடையது. மதவெறிகொண்டு உஞ்சை நகரை அழித்துக் கலக்கிய இதன் கோபத்தை
அடக்கி ஊர்ந்தமையாலேதான் உதயணன் சிறைவீடு பெற்றான்.
நாகதத்தை: கந்தருவபுரத்து அரசனாகிய நீலவேகன் மனைவி.
நீலகேசி: காசியரசன் மகள்; மந்தரவரசன் மனைவி; விரி சிகையின் தாய்.
நீலவேகன்: கந்தருவபுரத்து அரசன்.
பத்திராபதி: ஒருபெண்யானை; பிரச்சோதனனுக்கு உரியது; மிக்க வேகமுடையது. ஊர்ந்துசெல்லும்படி உதயணனுக்குச் பிரச்சோதனனால் கொடுக்கப்பட்டது, நீர் விழவில் இதன்மேலேதான் வாசவதத்தையை ஏற்றிக் கொண்டு உதயணன் தன் நகர் சென்றனன்; செல்லுகையில் காலகூடம் என்னும் வியாதியால் இடையே இது வீழ்ந்து இறந்துவிட்டது. கோசம்பி நகரத்தை அடைந்து வாழ்க்கையில் உதயணன் இந்த ஞாபகார்த்தமாக இது வீழ்ந்த இடத்திலும் கோசம்பியிலும் கோயில்கள் சமைத்து அவற்றில் இதன் வடிவங்களை அமைப்பித்து நித்திய பூசை முதலியவற்றை நடத்தி வரும்படி செய்வித்தனன்; இப் பெயர் பத்திராவதியெனவும் வழங்கும்; பத்திராவதி என்னும் தெய்வப் பெண் குபேரன் சாபத்தால் இந்த யானையாகப் பிறந்து இறந்த பின்பு பழைய உருவத்தை அடைந்தாள் என்று ஒரு வரலாறு காணப்படுகிறது.
பத்திரை: இவள் ஒரு தெய்வ மங்கை; குபேரனுக்குப் பல்வகைப் பணி புரிந்தொழுகும் எண்பது நாடக மகளிருள் ஒருத்தி.
பதுமகாரிகை: இவள் பிரச்சோதனனுடைய தேவிமார் பதினாறாயிரவருள் முதல்வி; வாசவதத்தையின் நற்றாய். இவள் பெயர் வடமொழிநூல் ஒன்றில் ஸ்ரீமதியென வழங்கும்.
பதுமரபசி: தருசக அரசன் தாயின் சகோதரியான உதயையேடையின் மகள்; இவள் தந்தை காசி ராசன்; அபிமான புத்திரியாகத் தருசகன் தாய் வளர்த்து வந்தமையின், இவள் தருசகன் தங்கையென்று கூறப்படுவாள்; இராசகிரியத்தில் நடந்த காமனுடைய விழாவில் வழிபடுவதற்குக் காமன் கோட்டத்திற்குச் சென்றபொழுது அக் கோயிலின் வாயிலில் வேற்று வடிவங்கொண்டு மாணகனென்னும் பெயருடன் நின்ற உதயணனுக்கும் இவளுக்கும் நட்புண்டாகிக் காந்தருவ மணம் முதலில் நடந்தது; பிறகு அவனைத் தன் கன்னிமாடத்திற்கு ஒருவரும் அறியாதபடி அழைத்துவந்து பலநாள் வைத்திருந்தனள்; பகைவர் தருசகனோடு போர் செய்வதற்கு வந்தபோது உதயணன் புறத்தே இருந்து வந்தவன்போல வந்து தன்னை இன்னானென்று பலரும் தெரிந்துகொள்ளச் செய்து தோழர்களோடு சேர்ந்து அப் பகைவரைவென்றனன்; அதனால் பதுமாபதி உதயணனுக்கு மணம் செய்விக்கப்பட்டு இரண்டாம் பட்டத்தேவி ஆயினள்; இவள் வாசவதத்தைபோன்ற தோற்றம் உடையவள்; சிறந்த குணத்தினள்; இனிய சொல்லை உடையவள்; கல்வி கேள்விகளில் சிறந்தவள்; வாசவதத்தைபால் பொறாமைகொள்ளாதவள்; அவளுக்கு அநுகூலத்தையே தேடுபவள்; இராசனை, ஐராவதி. யாப்பி யாயினி என்பவர்கள் இவளுடைய உயிர்த் தோழியர்கள்; இவள் பெயர் பதுமாபதி எனவும் வழங்கும்.
பதுமை: இவள் ஒரு தூதி; உதயணன் வெற்றிபெற்றுக்
கௌசாம்பியில் வாசவதத்தையுடன் அரசாளுகையில் அவன் அன்பைப் பெற வேண்டி அவனுக்கும் அவளுக்குமாகப் பல வேலைக்காரர்களுடன் பல அரும்பொருள்களை அனுப்பிய பிரச்சோதனனால் சமாதானமாகப் பேசுதற்கு அவனிடம் அனுப்பப்பட்டவள் இவள்; அங்ஙனமே உதயணனைப் பார்த்தபொழுது பேசித் தன் தலைவன்மீது அவனுக்கிருந்த மனவருத்தத்தைப் போக்கினள்.
பரதகன்: பிரச்சோதனனுடைய மந்திரிகள் பதினாறாயிரவருள் ஒருவன்; சாலங்காயனுக்கு அடுத்தபடி என்னும் பெருமை வாய்ந்தவன்; சிறந்த நூல்பொருள்களை அறிந்தவன்; உதயணன்பால் மிக்க அன்புடையவன்.
பரதன்: இவன் ஒரு சக்கரவர்த்தி; உதயணனுடைய குலமுதல்வன்.
பரமசுந்தரி: பிரமசுந்தரயோகியின் மனைவி; யூகியின் தாய்; கற்பில் சிறந்தவள்.
பவணம்: இது நாகலோகம்; செல்வத்திலும் போகத்திலும் சிறந்தது.
பாகீரதி: தேவராட்டி வேடம்பூண்ட ஒருத்தி; தன் மக்கள் உதயணன்பால் கற்றுக் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவதைத் தெரிந்த பிரச்சோதனன், அவனை அழைத்துப் பாராட்டி மறுநாள் சேனைகளுடன் கௌசாம்பிக்கு அனுப்ப எண்ணியது தெரிந்து, அதனால் தன்னுடைய சூளுறவு தவறிவிடுமே என்று எண்ணிய யூகியின் கட்டளையால் தெய்வாவேசங்கொண்டவள்போல் உஞ்சைநகரின் வீதியில் வந்து ஆடிச் சனங்களை அச்சுறுத்தி நீர்விழாச் செய்யும்படி
செய்வித்தவள் இவள்.
பாஞ்சால தேயம்: இது மிக்க நீர்வளம் உடையது; ஆருணியரசனுடைய தேசம்.
பாலகன்: இப் பெயருடையார் இருவர். (1) முனிவர் வேடங்கொண்ட ஒரு சமணன் (2) பிரச்சோதனன் புதல்வர்களுள் ஒருவன்; சிறந்த வீரன்.
பாலகுமரன்: பிரச்சோதனன் புதல்வன்; உஞ்சை நகரில் உதயணன் நளகிரியை அடக்கியபுன்பு தந்தையின் கட்டளைப்படி அவனுக்கு வேண்டியவைகளை அவ்வப்
பொழுது குறிப்பறிந்து செய்துவந்தான்.
பிங்கல கடகர்: உதயணன் தம்பிகள்; அவனுக்கு உயிர் போன்றவர்கள்; உதயணன் மாய யானையால் பிடித்துக் கொண்டு போகப்பட்டபொழுது யூகியின் வேண்டுகோளால் தாய் மிருகாவதியையும் கோசம்பிநகரத்தையும் பாதுகாத்தார்கள்; ஆருணியரசன் அந் நகரைக் கைப்பற்றியபொழுது அவனை வெல்லமாட்டாதவர்களாய்த் தம் உருவத்தை மறைத்துக்கொண்டு பல வீரர்களோடு வேறிடஞ் சென்று ஒளிந்திருந்தார்கள்; அப்பால் உதயணன் ஆருணியோடு போர்செய்தற்குச் செல்லும்பொழுது அவனைக் கண்டு பணிந்து பலவாறு புலம்பி வழிபடுவர்களாய் உடனிருந்து உதவிசெய்தவர்கள்; கடகபிங்கலரெனவும் வழங்கப்படுவர்.
பிரச்சோதனன்: இவன் ஒரு சக்கரவர்த்தி; வாசவதத்தையின் தந்தை; இவன் நாடு அவந்தி; இராசதானி உச்சைனி நகர்; உதயணனை வஞ்சத்தால் பிடித்துச் சிறையில் வைக்கும்படி செய்தவன்; இவன் தேவியர் பதினாறாயிரவருள் வாசவதத்தையைப் பெற்ற நற்றாயாகிய பதுமகாரிகை என்பவள் முதன்மை வாய்ந்தவள்; அப் பதினாறாயிரவரும் விரும்பப்பெற்ற கட்டழகு வாய்ந்தவன் இவன்; இவனுக்குப் பாலகன், பாலகுமரன், கோபாலகன் என்பவர் முதலிய குமாரர்கள் பலர் உண்டு; மந்திரிகள் பதினாறாயிரவர்; இவனுக்குள்ள முரசம் பதினாறாயிரம்; இவன் பிறர்க்குக் கொடுப்பனவும் பிறர் இவனுக்குக் கொடுக்குங் கையுறைகளும் பதினாறாயிரம்; இவனுக்கு இப்படியே ஒவ்வொன்றும் பதினாறாயிரம் பதினாறாயிரமாகப் பதினாறு பகுதிகள் இருந்தன; பெரு வண்மையன்; இவன் சொல் மிக்க பொருள் சிறப்பை உடையது; ஆற்றலிலும், வெற்றியிலும், அறிவிலும் நிகரற்றவன்; யாவரும் அஞ்சுதற்குரிய கடுங்கோபத்தினன்; ஆணையில் சிறந்தவன்; வீரிய வேந்தன், அவந்தி வேந்தன், ஏகத்திகிரி இறைவன், வெற்றி வேந்தன், மறமாச்சேனன், உஞ்சையர் பெரு மகன், பெருவேந்தன், ஆற்றல் வேந்தன் எனவும் இவன் பெயர்கள் வழங்கும்.
பிரமசுந்தர முனிவர்: பல பெரிய முனிவர்களுக்குத் தலைவர்; தருமத்தைப் பரிபாலன் செய்வதே இவர் கோட்பாடு; இவர் மனைவி பரமசுந்தரி என்பாள்! இவர் யூகியின் தந்தை; உதயணனுக்கு யானையின் கோபத்தை அடக்கும் வித்தையையும் கோடவதி யென்னும் யாழையும் இசைநூலையும் மற்றுமுள்ள பல வித்தைகளையும் அளித்தவர்; யூகியை உதயணன்பால் அடைக்கலமாக ஒப்பித்தவர்; யூகியின் பாலுள்ள கல்வி, அறிவு, ஆற்றல் முதலிய விசேட குணங்களுக்கு இவர் தவமே காரணம்.
புட்பகம்: உதயணனுக்குரிய பெரு நகரங்களுள் ஒன்று; சேனைகளுடன் இருந்து இதனைப் பாதுகாத்துவந்த இடவகனுக்கு இது விருத்தியாகக் கொடுக்கப் பெற்றது.
புண்டரன்: இது வாசவதத்தையும், சாங்கியத்தாயும், யூகியும் வேற்று வடிவங்கொண்டு தங்கிய இடங்களுள் ஒன்று.
புன்றாளகம்: இலாவாணக நகரத்திற்கும் மகதத்திற்கும் இடையே உள்ள நாடு.
பூரணகுண்டலன்: இவன் ஆருணி அரசனுடைய அமைச்சன்; உதயணனோடு போர்செய்தற்கு அவன் புறப்பட்டபோது நிமித்தம் நன்றாக இல்லாமையால், அவனுக்கு புத்தி கூறியவன்.
மகதநாடு: தருசகனுடைய நாடு; மிக்க சிறப்பை உடையது; இதன் வேலைக்காரர்கள் மிக்க புகழை உடையவர்கள்.
மதனமஞ்சிகை: கலிங்கசேனை என்பவளுடைய புதல்வி; நரவாணதத்தன் மனைவி; மிக்க அழகுடையவள்; மானசவேகன் என்னும் வித்தியாதரனால் விரும்பி எடுத்துச்செல்லப்பட்டுத் தன் கணவனால் மீட்கப்பெற்றவள்.
மதுகாம்பீரவனம்: கோசாம்பி நகரத்தின் புறத்ததாகிய ஒரு பூஞ்சோலை.
மந்தரம்: ஆருணி அரசனுடைய பட்டத்து யானை; நளகிரியைப் போல்வது.
மந்தரவரசன்: வெள்ளிமலையில் உள்ள வித்தியாதர அரசருள் ஒருவன்; இவன் வனத்தில் வந்து தவம் செய்கையில், உதயணனால் இளமையில் மாலை சூட்டப்
பெற்ற தன் மகளுக்குப் பருவம் வந்தபொழுது அவளை அவனுக்கு மணம் செய்வித்துவிட்டு மனைவியைத் துறந்து தவம் செய்தற்குச் சென்றான்.
மருபூதி: யூகியின் புதல்வன்.
மல்லன்: தருசகனோடு போர் செய்ய வந்த பகையரசர் எழுவர்களுள் ஒருவன்.
மாகளவனம்: உஞ்சை நகரத்தின் புறத்தேயுள்ள ஒரு காடு; இதில் ஒரு துர்க்கை கோயில் உண்டு; அது யூகிக்கும் அவனுடைய நண்பர்களுக்கும் தனியே இருந்து ஆலோசனை செய்தற்குரிய இடமாக இருந்தது; இது மகாகாளவனம் எனவும் வழங்கும்.
மாணகன்: இஃது உதயணன் சில நிமித்தம்பற்றித் தன்னைப் பிறர் அறிந்துகொள்ளாபடி இராசகிரியத்தில் இருந்தபொழுது கொண்ட வேறு பெயர்.
மானசவேகன்: வெள்ளிமலை ஓரத்திலுள்ள 110 வித்தியாத அரசர்களுள் ஒருவன்; இவன் மதனமஞ்சிகையை விரும்பி எடுத்துச் சென்று நரவாண தத்தனால் வெல்லப்பட்டனன்.
மானனீகை: இது கோசலத்தரசன் மகளது வேறு பெயர். இவளது இயற்பெயர் வாசவதத்தை என்பது; இவள் தாய் வசுந்தரியென்பாள்; கோசல தேசத்து அரசனை வென்று அவனது அந்தப்புரத்திலிருந்து பாஞ்சாலராசன் கவர்ந்து சென்ற மங்கையர்களுள் இவளும் ஒருத்தி; பின்பு அவன் பட்டத்தேவியின் பணிப்பெண்ணாக இருந்து அவனைக்கொன்ற உதயணணன் கொண்டுவந்த மகளிரோடு இவளும் கொண்டு வரப்பட்டு வாசவதத்தையின் பணிப்பெண்ணாக இருந்து தன் பந்தாட்டத்தைக் கண்டு மோகித்த உதயணனுக்குப் பின்பு மனைவியாயினள்; இவள் யவனபஷையிலும் சிற்பவேலை முதலியவற்றிலும் மிகத் தேர்ச்சியுற்றவள்.
மித்திரகாமன்: இவன் நற்குண நற்செய்கையை உடைய ஒரு வணிகன்; பெருஞ்செல்வத்தால் மிக்கவன்; வேறு வேடங்கொண்ட வாசவதத்தை முதலிய நால்வரும் இவன் வீட்டிலேதான் சில காலம் மறைந்திருந்தனர்.
மிருகாபதி (மிருகாவதி): உதயணன் நற்றாய்; இவளுடைய சகோதரன் விக்கிரன்; இவள் தந்தை ஏயர் குலத்திற்குத் தலைவன்.
மிலைச்சன்: போதனபுரத்திற்கு அரசன்; தருசகனோடு பகைமைகொண்டு போர் செய்ய வந்த அரசர்களுள் ஒருவன்; மிக்க வீரமுடையவன்.
முனையூர்: இஃது இடவகனுக்கு உதயணன் கொடுத்த நாடுகளுள் ஒரு நாட்டினது தலைநகரப் பெயர்.
யமுனை: யமுனா நதி; இது கோசம்பிநகரத்தின் பக்கத்தே ஓடுவது.
யவனம்: இது தச்சு வினையில் மேம்பட்ட ஒரு தேயம்; இத்தேயத்திற்கென்றே தனியாக ஒரு பாஷை இருந்ததென்றும் அதில் உதயணனும் கோசல தேசத்தரசன் மகள் வாசவதத்தையும் மிக்க பயிற்சியுள்ளவர்களென்றும், தங்கள் கருத்தைப் பிறர் அறியாதபடி ஒருவருக்கொருவர் அந்தப் பாஷையால் தெரிவித்துக் கொண்டனரென்றும் தெரிகின்றன.
யாப்பியை: இவள் சாலங்காயனுடைய தங்கை; யூகியால் மணம் செய்து கொள்ளப்பட்டவள்.
யூகி: இவன் உதயணனுடைய மந்திரிகளுள் முதன்மை வாய்ந்தவன்; இவனுடைய குணவிசேடங்கள் எழுதி அடங்குவனவல்ல; வில்வித்தை முதலிய எல்லாக் கலைகளையும் உதயணனுடன் கற்றுப் பயின்று உடன் வளர்ந்தவன்; அவனுக்கு உயிர்த்தோழன்; சிறைத் துன்பத்தினின்றும் அவன் நீங்கியது முதலியவற்றிற்கும், இழந்த அரசாட்சியை மீட்டும் பெற்றதற்கும், பிற நலத்திற்கும் காரணம் இவனுடைய பெரு முயற்சியே; பிரச்சோதனன் உதயணனை வஞ்சச் செய்கையால் பிடிப்பித்து வருவித்துச் சிறைப்படுத்தினான் என்ற செய்தியை வயந்தகன் கூறக் கேட்டவுடன், "என் தலைவனைக் கபடமாகப் பிடிப்பித்து வருவித்தவன் மகள் வாசவதத்தையை அவன் அறியாதபடி கொண்டுவரும்படி செய்வேன்" என்பதுமுதலிய சபதம் செய்துவிட்டுத் தான் இறந்துபோனதாக ஒரு செய்தியை எங்கும் பரவச் செய்து பிறர் அறியாமல் உஞ்சை நகரம் சென்று தான் கருதியதை நிறைவேற்றியவன்; பிரச்சோதனனால் பிற்காலத்தில் வருவித்து நன்கு உபசரிக்கப்பெற்றவன்; அவன் விரும்பிய வண்ணம் சாலங்காயனோடு சொற்போர் புரிந்து அவனை வென்ற கல்வி வீரன்; அவன் தங்கையையும் பரதகன் தங்கையையும் பிரச்சோதனன் விருப்பத்தின்படி மணம் செய்து கொண்டவன்; பெருவிறற்றோழன், இடனறி சூழ்ச்சி யூகி, அரும்பெறற் சூழ்ச் சியவன், ஒழுக்கியல் திரியா யூகி எனப் பாராட்டிக் கூறப்படுவான்; உதயணன் முதலில் பெற்ற சேதி நாட்டின் ஆட்சி அவனால் இவனுக்குச் சீவிதமாகக் கொடுக்கப்பட்டது; ஊகி, யூகந்தராயணன், யூகந்தராயன் எனவும் இவன் பெயர் வழங்கும்.
வசுந்தரி: கோசல நாட்டு அரசன் தேவி; மானனீகை என்று வேறு பெயர்கொண்ட வாசவதத்தையின் தாய்.
வத்தவநாடு (வத்சஸதேசம்): இதன் தலைநகர் கௌசாம்பி; இதற்குத் தலைவன் உதயணன். வச்சமெனவும், வத்தமெனவும் வழங்கும்.
வயந்தகன்: இவன் உதயணனுடைய மந்திரிகளுள் ஒருவன்; உயிர்த்தோழன்; சாதியால் அந்தணன்; வில்வித்தை முதலிய பல கலைகளில் வல்லவன்; அவனுடைய குறிப்பறிந்து நடந்து மதிப்புப் பெற்றவன்; பகைவன் விடுத்த மாய யானையின் உள்ளே இருந்தும் புறத்தே வந்தும் போர் செய்தற்கு வந்த வீரரோடு போர் செய்ததன்றி அவர்கள் கையில் அகப்பட்ட உதயணன் கொடுத்த ஓலையைக் கொண்டுபோய் யூகியிடம் கொடுத்து மேலே நிகழ்த்த வேண்டியவற்றை விரைவில் நிகழ்த்தும்படி அவனை ஊக்கியவன்; உதயணனோடு இடைவிடாமல் இருந்து உதவியவன்; அவன் உஞ்சை நகரஞ் சென்றபின் வேறு வேடம் பூண்டு அந் நகர் சென்று பிரச்சோதனனுடைய குமாரர்களுடன் சேர்ந்து வில்வித்தை முதலியவற்றைக் கற்கும் மாணக்கன்போல் இருந்து அங்கே நடப்பனவற்றை அறிந்தறிந்து அவ்வப்பொழுது யூகிக்குச் சொல்லியனுப்பிவன்; உதயணனுக்குப் பணிபுரிந்து ஒழுகும்படி பாலகுமரனால் நியமிக்கப்பெற்றவன்; யூகி சொல்லியனுப்புவனவற்றையும் அவ்வப் பொழுது உதயணனுக்குத் தெரிவித்து நிறைவேற்றியவன்; பிடி வீழ்ந்த பின்பு காட்டில் வாசவதத்தையோடு தனித்துத் தங்கியபோது வேடர்களால் அவ னுக்கு உண்டான துன்பத்தைப் போக்கிச் சயந்திநகரை அடையச் செய்தவன்; வானசாஸ்திரத்திலும் வல்லவன்; நல்ல பயனைத் தரும் நகரங்கள் பதினொன்றை இவனுக்கு விருத்தியாகக் கொடுத்ததன்றி உதயணன் இவனுக்கு நாடோறும் ஆயிரம் பொன்னுங் கொடுப்பானாகி எப்பொழுதும் தன்னுடன் இருக்கும்படியும் செய்தான்.
வராகன்: பிரச்சோதனனுடைய அந்தப்புர ஏவலாளனாகிய ஒரு வில்வீரன், வாசவதத்தையைப் பிடிமீதேற்றி உதயணன் சென்றபொழுது சில தூரம் தொடர்ந்து சென்று அதனை முதலில் பிரச்சோதனனுக்கு அறிவித்தவன். வருடகாரன்: தருசகனுடைய முதல் மந்திரி. மிகக் கபடமான ஆலோசனையையும் தறுகண்மையையும் உடையவன், பாஞ்சால ராசனை வெல்லுதற்கு இவன் செய்த ஆலோசனைகளும் செயல்களும் மிகப் பல. அந்த அரசனைக் கொன்றபின்பு உதயணன் மனம் உவந்து இவனைத் தழுவித் தான் அணிந்த கலன்களையும் ஏறிய யானையையும் இவனுக்கு அளித்தனன்.
வாசவதத்தை: இவள் உதயணனுடைய தேவியர் நால் வருள் முதல்வி; பட்டத் தேவி; பதுமகாரிகையின் புதல்வி;இந்;திரன் அருளால் உதித்தவளாதலின் இவள் இப் பெயர் பெற்றாள்; அழகிலும் குணத்திலும் சிறந்தவள்; பெண்பாலார்க்குரிய கலைகளில் மிகப் பயிற்சியுள்ளவள்; அவற்றுள் இசையையும் யாழையும் உதயணன்பால் கற்றுத் தேர்ந்தவள்; மாலை தொடுத்தல் முதலிய கைத்தொழிலில் சிறந்தவள்; சிற்பவேலையில் இவளுக்கு மிக்க பயிற்சியுண்டு; தந்தை முதலியவர்பால் அன்பு மிக்கவள்; மற்ற மகளிர் பலருள்ளும் பிரச்சோதனனுக்கு இவள்பால் அன்பு அதிகம்; தன்பால் உள்ள காதலால் உதயணன் இராச காரியத்தை மறந்துவிட்டான் என்று பிறர் சொல்லத் தெரிந்தமையால், இவள் தான் இறந்து போய்விட்டதாகப் பெயர் பண்ணிச் சிலகாலம் செவிலித்தாய் முதலியவர்களோடு வேற்றுருவங்கொண்டு மறைந்திருந்தனள்; அவனுடைய ஆக்கத்தைக் கருதி இவள் அடைந்த துன்பங்கள்பல;. உதயணனுக்கு இவள்பால் அன்பு அதிகம்; இவ்விருவரும் ஒருவரை ஒருவர் அடைந்தது தவப்பயன் என்பர்; இவளுக்குத் தோழியர் பலர் இருப்பினும் காஞ்சனமாலையிடத்தேதான் மிகுந்த அன்புடையாள்; மிக்க தூய்மையை உடையவளாயிருந்ததுபற்றியே சோதவன் என்னும் முனிவரன் இவளுடைய கருப்பத்தில் தங்கி நரவாணதத்தனாகப் பிறந்து வித்தியாதர சக்கரவர்த்தியாக ஆயினன் என்பர்.
வாரணவாசி: அடவியென்னும் அரசனது நகரம்; காசியம் ஆம்.
விக்கிரன்: இவன் உதயணனுடைய அம்மான்; மிருகாபதியின் தமையன்; ஏயர் குலத்தில் பிறந்தவன்; தன் அரசாட்சியை உதயணனிடம் ஒப்புவித்துவிட்டுத் தான் தவம் செய்யச் சென்றவன்.
விச்சுவலேகை: இவள் வாசவதத்தையின் தோழிமார்களுள் ஒருத்தி; குறுகிய வடிவம் உடையவள்; பந்தாட்டத்தில் சிறந்தவள்.
விசயவரன்: இவன் உக்கிரகுலத்தில் பிறந்த அரசன்; இவனுடைய இராசதானி அங்க நாட்டிலுள்ள சண்பை நகர்.
விசயார்த்தம்: வித்தியாதரர்களுக்கு உறைவிடமாகிய ஒரு வெள்ளிமலை.
விஞ்சையம்பெருமலை: வெள்ளிமலை; இது வித்தியாதரர்கள் இருத்தற்குரிய இடம்; இதிலுள்ள வெள்ளி மிகச் சிறந்தது.
விண்ணுத்தராயன்: இவன் பிரச்சோதனனால் அழைக்கப்பட்ட யூகி, உஞ்சைநகர் சென்றபொழுது அவனுக்குப் பாதுகாப்பாக உதயணனால் அனுப்பபட்டு
அவனுடன் சென்றவன்.
விதையம் (விதேகதேசம்): இது விமானத்தில் சென்ற வாசவதத்தையால் பார்க்கப்பட்ட தேயங்களுள் ஒன்று.
விந்தம்: விந்தியமலை; இதிலுள்ள காடு புகழ் பெற்றது; இதிலுள்ள யானைகள் மிக்க வீரியமுடையவைகள்; இது விஞ்சமெனவும் வழங்கும்.
விபுலம்: மிருகாபதியின் தந்தை தவம் செய்துகொண்டிருந்த ஒரு மலை; உதயணன் பிறந்தது இம்மலைச் சாரலிலேதான்.
விரிசிகன்: தருசகனுடைய பகையரசருள் முதல்வன்.
விரிசிகை: இவள் ஒரு ராசரிஷியின் மகள்; தவம் செய்ய வந்த அவருடன் இவளும் வந்து ஒரு வனத்தில் இருந்தபொழுது இளமைப்பருவத்தில் உதயணனால் மாலை சூட்டப்பெற்றுப் பின்பு அவனால் மணம் செய்து கொள்ளப்பட்டவள்; கற்பில் சிறந்தவள்.
வேகவதி: வித்தியாதர அரசனாகிய மானசவேகன் தங்கை; மதனமஞ்சிகையின் மனத்தை வேறுபடுத்தும்படி அவனால் அனுப்பப்பட்ட இவள் நரவாண தத்தனுடைய மேம்பாட்டைக் கேட்டு அவனிடம் விருப்பங்கொண்டு மதனமஞ்சிகையின் வடிவத்தைஅடைந்து அவனோடு இன்புற்றாள்.
வேசாலி: தருசகனுடைய பகையரசருள் ஒருவன்.
வைசாலி: விக்கிரனுடைய இராசதானி; உதயணனுக்கு ஒப்பிக்கப்பட்டது.
வையாக்கிரம்: உதயணன் யூகிக்குக் கொடுத்த தேர்.
ஸ்ரீதரர்: விபுலமலையின் சாரலில் தவம் செய்துகொண்டிருந்த முனிவர்.
ஸுவ்ருதர்: முக்கால உணர்ச்சியுள்ள ஒரு முனிவர்; மிருகாபதியைச் சரபப்புள் எடுத்துச் சென்று விபுலகிரியில் வைத்ததுமுதல் உதயணன் வைசாலியில் அரசாட்சி செய்தது வரையிலுள்ள செய்திகளையும், சதாகனிகனுடைய பிற்காலச் செய்திகளையும் அவனுக்குத் தெரிவித்தவர்.
-----------------
அரும்பத உரை
உஞ்சைக்காண்டம் – உச்சைனி நகரத்தில் நிகழ்ந்த சரித்திரங்களைக் கூறும் பகுதி;
உஞ்சை-உச்சைனி நகரம்.
புதல்வி - குமாரி.
மணம் - கலியாணம்.
மந்திரச்சுற்றத்தார் - மந்திரிகள்
ஏனையோர் - மற்றவர்.
ஆண்டு - வருஷம்.
சரற்காலம் - கூதிர்காலம்; ஐப்பசி கார்த்திகை மாதங்கள்.
வைராக்கியம் - ஆசையில்லாமை; விரக்தி.
ஞாலங்காவல் - பூமியைக் காத்தல்; அரசாட்சி.
நஞ்சு - விஷம்.
புதல்வர் - புத்திரர்.
அருகு -சமீபம்.
வற்புறுத்தி - உறுதிப்படுத்தி.
சாரல் - மலைப்பக்கம்.
ஆற்றாமல் - பொறாமல்.
வியந்தான் - அதிசயித்தான்.
ஆறுதல் - தேறுதல்.
மயற்கை – கருப்பமுற்ற மகளிர்க்குச் சிலவற்றின்மேல் உண்டாகும் விருப்பம்.
சாதிலிங்கம் - சிவப்பு நிறத்திற்குக் கருவியான ஒரு வகைச் சரக்கு.
அணிகலம் - ஆபரணம்.
மஞ்சம் - கட்டில்.
புலராத - உலராத.
தொகுதி - திரள்.
பள்ளி - முனிவர் ஆச்சிரமம்; தவச்சாலை.
அச்சம் - பயம்.
கோள் - கிரகம்.
திருமணிவிளக்கம் - இரத்தின தீபம்.
அழல - ஒளிவீச.
பருதி - சூரியன்
பொன்னனான் – பொன்னைப் போன்றவன்.
மருள் - மயக்கம்.
மம்மர் - மயக்கம்.
புலம்பொலி - அழுகைக் குரல்.
அபயம் - தயை.
பரமவிருடிகள் – மேற்பட்ட முனிவர்கள்.
நாமகரணம் செய்தல் – பெயர் வைத்தல்.
அகற்றும் - நீக்கும்.
ஒளி - பிரகாசம்.
இவர்தர - பரக்க.
கொளீஇ - கொளுவி - இட்டு
நட்புற்று- சிநேகள் கொண்டு
மேம்பாடு - சிறப்பு
பலவகைக் கலை - பலவகை வித்தை; வில்வித்தை முதலியவைகள்.
வேட்கை-விருப்பம்
வெண்டுகில் - வெள்ளையாகிய ஆடை
கசடற - குற்றமற
பிறைவடம் - சந்திரஹார மென்னும் ஆபரணம்
ஆக்கம் - அபிவிருத்தி
ஆசி - ஆசீர்வாதம்
குஞ்சி - குடுமி
இசை- சங்கீதம்
இளைஞன் - சிறுவன்
உவகை - சந்தோஷம்
நன்னீர் - நல்ல ஜலம்
ஆற்றல் - சக்தி; வன்மை
தொண்டு - வேலை
கடந்துளோர் - துறவிகள்
இயக்கன்- யக்ஷன்.
மக்கள் - பிள்ளைகள்
கடப்பாடு - கடமை
காதல் - அன்பு
நாடக அரங்கு - நாடகசாலை
பிடி - பெண்யானை
கூத்து - ஆட்டம்
தியானம் - நினைவு
பணி-வேலை
பரிசனங்கள்-சூழ்ந்து நின்று வேலை செய்பவர்கள்.
கனவு - சொப்பனம்
தவறு -பிழை
திறை - கப்பம்
பொலிவு - அழகு யாற்று
அறல்-ஆற்றிலுள்ள கருமணல்
நுதல் - நெற்றி.
பிறையின் நிறை - பூர்ண சந்திரன்
பிராயம்-வயது கறை - குற்றம்
உய்வேன்-பிழைப்பேன்; உஜ்ஜீவிப்பேன்
மிழற்றும் - கொஞ்சும்
கிளவி - சொல்
நுகர்ந்து - அநுபவித்து.
உகிர் - நகம்;
வயம் - வசம்
வேய் - மூங்கில்
முறுவல்-பல்
காந்தட்பூந்துடுப்பு-காந்தட் பூவின் மடல்
உறங்கிய - தூங்கிய
முக்கால உணர்ச்சி-மூன்று காலச் செய்திகளையும் அறியும் அறிவு.
உதித்த - பிறந்த
செல்வன்-நன்றாக
சதுரங்கசேனை-தேர்ப்படை, யானைப்படை, குதிரைப் படையென்னும்
நால்வகைச் சேனை.
செல்வார்கள் - போவோராயினர்.
குறிப்பு - சந்தேகம்.
வைரம் - தணியாகோபம்.
நிருமித்து - உண்டாக்கி. கரகம் - ஒருவகைப் பாத்திரம்.
பிளிறுதல் - முழங்குதல்; இது பெரும்பாலும் யானைச் சாதிக்கே உரியது.
வேய்ங்குழல் - புல்லாங்குழல்; மூங்கிலால் செய்யப்படுவது.
சம்மானம் - வெகுமதி.
ஐயுறுதல் - சந்தேகித்தல்
வயவன் - ஒரு பறவை; கரிக்குருவி
கூர்த்த - கூர்மையுற்ற,
ஒற்றன் - பிறர்பால் நிகழ்ந்தனவற்றை ஒன்றி ஒன்றி ஆராய்ந்தறிபவன்.
முழு மதி - பூர்ண சந்திரன்.
சகோரம் - நிலவை உண்ணும் ஒருவகைப் பறவை.
பொறிகள் - எந்திர உறுப்புக்கள்.
நள்ளிரவு - நடுராத்திரி.
புன்முறுவல் - புன்னகை.
உச்சாடன மந்திரம்-ஒன்றை ஏவும் மந்திரம்.
மாண்டான் - இறந்தான்.
செவி-காது.
மேலாடை - மேல்வஸ்திரம்.
முழக்கம்-சத்தம்
சிறை - சிறைச்சாலை.
சுழன்று-சுற்றி.
திருமுகம் - எழுதப்படும் பனை ஓலை; நிருபம்.
நாவாய்-கப்பல்
ஓவா-ஒழியாத,
சினம் - கோபம்.
அவலம்-சோர்வு.
குளிகை-மாளிகையின் உச்சியிலுள்ள அறை
அணிகலம் - ஆபரணம். .
புனைந்து - அலங்கரித்து.
பாடி - வீரர்கள் தங்கும் பெருந்தெருக்கள்.
குறளர் - மிகக் குட்டையானவர்
சிந்தர் - குறளரைக்காட்டிலும் சற்றே உயர்ந்தவர்.
உய்யானம்-பூஞ்சோலை
உடன்படுவித்து-சம்மதிக்கச்செய்து
மகாகளவனம்-மாகாளவனம்.
சிவிகை-ஒருவகையான பல்லக்கு
ஆண்டு - அவ்விடம்.
வட்டமிட - சுற்ற.
ஆசாற்கு - ஆசிரியனுக்கு.
அடியிறை செய்யும் - ஏவல் செய்யும்.
மாணி - பிரமசாரி.
மருப்பு - கொம்பு.
வயவன் - வெற்றியை உடையவன்.
புலிமுக மாடம் - புலியின் முகம் போன்ற வடிவத்தை உடைய மாளிகை; அஃதாவது
அரண்மனையின் முகப்பு.
வலியை - வன்மை உள்ளாய்.
ஆரம் - இரத்தினமாலை.
அவாவுகின்றது - விரும்புகின்றது.
புடை - பக்கம்.
குற்றேவல் - அற்பவேலை.
களிறு - ஆண்யானை.
கைவிதிர்த்து - கை அசைத்து.
வரைந்து - எழுதி.
அடைப்பை - வெற்றிலைப்பை.
பேழை - பெட்டி.
மஞ்சிகை - பெட்டி.
நன்கனம் - நன்றாக.
புரைவுற - மேன்மையுற.
புணர்த்த - இயற்றிச்சேர்த்த.
மடையர் - சோறுசமைப்போர்.
கடையர் - வாயில்காப்போர்.
நீறிஇ - நிறுத்தி.
ஊர்தி - வாகனம் (ஏறப்படுவது).
குஞ்சரச்சேரி - யானைச்சேரி.
அந்தக்கேணி - மறைந்த கிணறு.
கா - சோலை.
வெண்சுதைக்குன்று – வெள்ளிய சுண்ணச்சாந்தாற் கட்டப் பட்ட மலை; கட்டுமலை.
வித்தகம் - வியப்பு.
முட்டு - வழி சென்ற பின்பு இல்லையான இடம்.
முடுக்கு - வளைந்த இடங்களையுடைய சந்து.
இட்டிடைகழி - மிகவுஞ் சிறிய ரேழி.
கரப்பு அறை வீதி - மறைந்திருதற்குரிய அறைகளையுடைய வீதி; சுருங்கையுமாம்.
இழுக்கம் - தளர்வு.
மதர் - களிப்பு.
கான்ற - வீழ்த்திய.
செறுநர் - பகைவர்.
உடுக்கள் - நக்ஷத்திரங்கள்.
முலைப்பால்...குழவி - மிக்க இளமையில் அரச உரிமையை அடைந்த சோழன்
கரிகாற் பெருவளத்தானும் சோழன் தலையாலங் கானத்துச் செருவென்ற
நெடுஞ்செழியனும் இங்கே கருதற்பாலர்.
இயன்றனவோ – செய்யப் பட்டனவோ.
பொறியற்ற-எந்திரப்பிணிப் பற்ற.
மும்மணிக் காசினர்-புருட ராகம் வைடூரியம் கோமேதகம் என்னும் மூன்று மணிகள் அழுத்திய பொற்காசால்
ஆகிய ஆபரணத்தை உடையவர்.
பிணித்தது - கட்டியது.
கொய்தல்-பறித்தல்
மலரணை- மலர்ப்படுக்கை
சில்கலம்-சிலவாகிய ஆபரணம்
கங்குல்- விடியற்பாலம்
துயிலுணர்ந்து-விழித்து
ஒண்மை-இயற்கை அழகு
மகடூஉத் துறந்த -பெண்ணாசையை நீக்கிய
ஒளி- செயற்கை அழகு
பையென-மெல்ல
மாசு-குற்றம்
பொற்றூதை-பொன்னாலாகிய சிறு பானை
படிவம்-விரதம்; வடிவமுமாம்
கந்து-தூண்
பேரத்தாணி-பெரிய அரசிருக்கை மண்டபம்
கரந்துறை- மறைந்து தங்குகின்ற
உழையர்-பக்கத்திலுள்ள வேலைக்காரர்கள்
முற்றில்- சிறு சுளகு.
சிப்பம்-சிற்பம்
இரட்டைத்தவிசு-இருவர் இருத்தற்குரிய ஆசனம்
வட்டிகை-எழுதுகோல்
வரைப்பு-எழுதுதல்
முகவாசம்-ஏலம் முதலியன
தத்தை-வாசவதத்தை
செயிரறு-குற்றமற்ற நறுநீர்-மணமுள்ளநீர்
பெதும்பைப் பருவம்-மகளிர்க்குரிய ஏழு பருவங்களுள் இரண்டாவது
ஆட்டி-ஸ்நானம் செய்வித்து
நாண்-கயிறு
கடுப்பிணை-ஒருவகைக் காதணி
செவிலித்தாயர்-வளர்த்த தாய்மார்
முத்தவள்ளி-முத்துக்கோத்த கொடிபோன்றதோர் ஆபரணம்
பளிக்கறை- பளிங்காலாகிய அறை
பொற்றோரை-பொன்வடம்
மணிக்கயிறு-முத்துவடமாகிய கயிறு
மட்டஞ் செய்த-செப்பஞ் செய்த
உத்தியர்-சீதேவியென்னுந்
கீதசாலை-சங்கீத சாலை தலைக்கோலத்தினர்
வேதி-மேடை, திண்ணை
சிலதர்- ஏவலாளர்
வம்பமாக்கள்-அன்னிய தேசத்திலிருந்து வந்த புதிய சனங்கள்
உடுப்பன-உடுத்திக்கொள்வன
செப்பம்-செம்மை
மெழுகின்-மெழுகைப்போல
கன்றின-கன்றைப்போல
தலைக்கோற் பெண்டிர்-தலைக் கோலென்னும் பட்டம்பெற்ற கணிகையர்;
இவர் பரத்தையருள் ஆடி முதிர்ந்தோர்
மறுகு- நெடுந்தெரு
படிறு-வஞ்சனை
அரற்றுகின்ற-முழங்குகின்ற
செவ்வி-சமயம்
தமனியம்-பொன்
மருப்பு-யானைக்கொம்பு
பாண்டிலெருது-ஒருவகை எருது
ஏனை-மற்ற
தைவந்து-தடவி
தறுகண்-அஞ்சாமை .
நொடி-நொடிப் பேச்சுக்கள்
அறங்கூறவையத்தார்- தரும நியாயம் சொல்லும் சபையோர்
பம்பை-ஒருவகைப் பறை
தண்டம்-தண்டனை
குறிகோளாளன்-நிமித்திகன்; குறிசொல்பவன்
சேனைக்கணிமகன்- சேனையிலுள்ள நிமித்திகன்
அந்தணி-பார்ப்பனி; இங்கே சாங்கியத்தாய்
தவத்துறை-தவவழி
செவியறிவுறுத்தும் - போதிக்கும்
பூதி-விபூதி
பொத்தகக் கட்டு-புத்தகங்களின் தொகுதி
மானுரி மடி- மான்தோலால் ஆகிய ஆடை
கலப்பை-கலங்கள் வைத்திருக்கும் பை
கூறை-ஆடை
காவினர்-தோள் சுமையை உடையவர்;
பரிபு-வருந்தி
சாங்கியம் நுனித்த-சாங்கிய நூலைக் கூர்த்து அறிந்த
சாறு-விழா
சமயம்-மதம்
தாபித்தான்-நிலை நிறுத்தினான்.
பாங்கி-தோழி
நற்றாய்-பெற்ற தாய்
வேணவா-மிகுந்த விருப்பம்
அரங்கு -கற்றோர் கூடிய சபை
கோலவர் -கைக்கோலை உடையவர்
உஞ்சேனை-உச்சைனி நகரம்.
முருக்கல்-அழித்தல்.
குறும்புழை-சிறிய வாயில்; ஓரிடத்தின் பின்புற வழி.
பெருக்கல்-பெருகச் செய்தல்.
எமரன்-என்னைச் சார்ந்தவர்களுக்கு நண்பன்.
சந்தனப் பீடிகை-சந்தன மரத்தால் செய்யப்பட்ட பீடம்.
அகல்க-(கோசம்பியை விட்டு) நீங்குக.
சார்வணை-சார்ந்திருத்தற்குரிய அணை.
அமரன்-போர் செய்தற்கு உரியவன்.
படைக்கலம்-ஆயுதம்.
கைம்மாறு- பிரதியுபகாரம்.
அமைவு-அமைதி.
பண்டஞ்செய்யான்-பொருட் படுத்தான்.
யாண்டு-வருடம்.
முகமன்-உபசார வார்த்தை.
விழா-திருவிழா.
பிணக்குறை படுத்து-குறைப் பிணங்கள் உண்டாகும்படி செய்து
அவை-சபை.
வத்தவ நாடன்-உதயணன். .
இறைகெழு குமரர்-தலைமை பொருந்திய இராச குமாரர்.
குஞ்சரம்-யானை.
புகுவல்-புகுவேன்.
நிலம் கொடை- நிலத்தைக் கொடுத்தல்.
நீரியல் மாடம்-நீரிற் செல்லும் மாடவடிவமான ஓடம்.
சூட்டு-மாலை
கலம் கொடை-ஆபரணத் தைக் கொடுத்தல்.
தேறல்-கள்ளின் தெளிவு.
செண்ணச்சிவிகை- வடிவமைந்த சிவிகை.
ஆயிரம் குஞ்சரத்து அண்ணல்- பரதேசுவர சக்கரவர்த்தி; இவர் சைன நூல்களில்
கூறப்படும் சக்கரவர்த்திகளுள் ஒருவர்.
வையம்-வண்டி.
பிடிகை-ஒருவர் இருத்தற்குரிய ஊர்தி.
மறலி-பகைத்து.
இகந்தன்று-நீங்கியது.
கொம்பு-ஒருவகை வாத்தியம்.
மரமுதல்...கொண்டா அங்கு- மரம் சாயும்படி உலகத்தார் மருந்து கொண்டாற்போல.
மா-குதிரை.
துகள்-தூசி.
வலித்தல்-வன்மையை உடையதாகச் செய்தல்.
நகர நம்பியார்-நகரத்திலுள்ள செல்வக் குமாரர்.
ஆணை-ஆக்கினை; கட்டளை.
அறை-துண்டம்.
கச்சணி மாடம்-கச்சுக்களால் அணியப்பட்ட மாடச் சிவிகை.
சிக்கம்-உறி.
காப்பியக் கோசம்-காப்பிய மெழுதிய புத்தகங்கள்.
செற்றுபு-நெருங்கி.
பள்ளி-படுக்கை
செற்றுபு செறிந்தவை-மிக நெருங்கியவை.
குற்றி-குறுகிய வாயையுடைய பாத்திரம்.
இவர்ந்து-பரந்து.
வட்டிகை-சித்திரம்.
நுகர்பொருள்-அநுபவித்தற்கு ஏற்ற பொருள்.
வட்டு-உருண்டை வடிவமாக உள்ளது.
உரிமை மகளிர்- அந்தப்புர மகளிர்.
முட்டிணை வட்டு- ஒன்றை ஒன்று சேர்ந்த இரட்டைவட்டு.
வினைவர்-தொழிலையுடையவர்.
செறுநர்-தண்டிக்கப்படுவோர்.
நக்கிரப் பலகை-முதலை வடிவமாகச் செய்த பலகை.
கலம்-அணிதல்.
தொகுதந்து ஈண்டி- கூடி நெருங்கி.
கழங்கு-கழற்காய் வடிவமாகச் செய்த உருக்களையுடைய ஓர் அணிகலம்.
புகுதந்தீக-புகுக.
கவறு-சூதாடுதற்கு உரிய கருவி.
தாரை-நீர்வீசு கருவிகளுள் ஒன்று.
நாழிகைத் தூம்பு முதலியன: நேர்வீசு கருவிகளுள் ஒவ்வொன்றின் பெயர்.
தாழ முழவம்-மெல்லிய ஓசையையுடைய முழவம்.
மலர்ப்பந்து-மலர்வடிவமாக வுள்ள மட்டத்துருத்தி; நீர் வீசு கருவிகளுள் ஒன்று.
தண்ணுமை-ஒருவகைப் பறை.
புடை-பக்கம்.
விரற்கவியலுள்-விரல்களின் கவித்தற்குக் கீழே.
கண்ணவட்டு-சுண்ண நீர் பொதிந்த வட்டு.
கண்ணிணை-இரண்டு கண்கள்
வையம்-வண்டி.
கோடு-கொம்பு.
மல்லர்-ஒருவகைச் சாதியார்;
ஊர்தி-வாகனம்.
இவர்கள் அரசரிடத்துப் பலவகையான பணிகள் செய்ற்கு உரியவராக இருந்தனர்.
கடைப்பகச் செப்பு-உட்புறத்தில் கடைந்திருக்கும் செப்பு.
குஞ்சம்-ஈயோட்டி.
வட்டி-கடகப்பெட்டி.
யாக்கை-சரீரம்.
நிகர் - ஒப்பு. பண்டி- வண்டி.
உழிதந்து - சுழன்று திரிந்து.
நிதி -பொற்றிரள்.
மங்கலக் கணி - மங்கல நாளைக் கூறும் சோதிடன்.
பணிவு - தாழ்வு.
புரவி - குதிரை.
பொய்கை - மானிடர் ஆக்காத நீர்நிலை.
மாசை - ஒருவகை நாணயம்; பொன்.
இரணிய கர்ப்பம் - அரசன் பொன்னிலாடுதல்; இஃது ஒருவகைப் புண்ணியக் கிரியை.
ஏழுபருவமகளிர் - பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை,
பேரிளம்பெண் என்னும் எழுவகையோர்.
பயில்வனர் கூஉய் - கூவி அழைத்து.
ஏந்தல் - ஆண்மையில் சிறந்தவன்.
உய்த்து - கொடுத்து.
இழைக்கலம் - ஆபரணம்.
என்மரும் - என்பாரும்.
இல் - வீடு.
படிமை - ஒழுக்கம்.
அரியுறு - அறுத்தற்குத் தகுதியான.
பிழையாது - தவறாமல்.
கமுகின் படு - பாக்கு மரத்தில் உண்டாகிய பயன்; பாக்கு மரங்களையுடைய
படுகை யுமாம்.
தண்டம் - பிராயச்சித்தம்.
வென்வேல் - வெற்றியை யுடைய வேல்.
காவிதிமகளிர்-காவிதிப் பட்டம் பெற்ற மகளிர்.
நாகு - பாலுண்ணுதலைவிட்ட கிடாரி.
பெருங்குடி - வணிகருள் ஒரு வகைக் குடி.
தளை - பசுவின் பின்காலைக் கட்டும் கயிறு.
கோதை - ஒருவகை மாலை.
புறத்தோச்சியும் -முதுகில் அடித்தும்.
அளை - தயிர்.
கழு - மூங்கிற் பிளப்பின் கோப்பு.
சாந்தம் - சந்தனம்.
தாரை - நீர்வீசு கருவிகளுள்ஒன்று.
கோடி - பல.
படிவம் - விரதக்கோலம்.
நுதல் - நெற்றி.
கொடை - கொடுத்தல்.
ஒசிந்த - துவண்ட.
வேழக்குழவி - யானைக் கன்று.
படை - சேணம்.
முனைஇ - வெறுத்து.
பரி - வேகம்.
கயம் - பொய்கை.
பாடு அவிய-ஒலி அடங்க
அரணாக-காவலாக
போது-பூ
வரம்பு-எல்லை
கோசிகம்-பட்டாடை
வங்கச்சாதர்-வங்கதேசத்திலிருந்து வந்த சாதர் என்னும் உடை; ஸாதரா
தனைபரிந்து-கட்டறுத்து
சீற்றம்-கோபம்
களம்-போர்க்களம்
கொங்கு-தேன்
கூற்றம்-யமன்
கேழ்-நிறம் உழக்க-கலக்க
கலிங்கம்-ஒருவகை ஆடை
அதிரநூறி-நடுங்க அழித்து
உலண்டு-பட்டு நூல்
ஏவலிளையர்-ஏவல் கேட்கும் வீரர்
மேவன-மேவுவன-விரும்புவன.
உவகை-உவத்தல்;மகிழ்தல்
குடங்கை-வளைந்த கை
பாணித்தல்-தாமதித்தல்;
தமக்கு-உனக்கு
தான்-நீ
மந்தணமாக-இரசியமாக
தன்னிடம்-உன்னிடம்
கூற்றவாணை-யமனுடைய ஆஞ்ஞைபோன்ற ஆஞ்ஞை.
வறியவன்-தரித்திரன்
கொட்டினன்-அடித்தனன்.
சுறாக்கள்-சுறாமீன்கள்
மந்தரம்-மேரு
திட்டிவிடம்-கண்களால் தீயை உமிழும் பாம்பு; நஞ்சு விழி அரவு
அந்தணன்-இறைவன்
நகர்-முப்புரம்
அருத்தி-உண்ணச்செய்து
நன்னகர்-யாகசாலை
கிரிசை-கிரியை
ஓம்படை-பாதுகாத்தற்குரிய மொழி.
தெய்வத்தானம்-தேவாலயம்
மடல்-பனையோலை முதலியன.
பொறித்த-எழுதிய
பாடிக் கொட்டில்-சேனை வீரர் தங்கும் சிறு குடில்
நிருமித்து-சிருட்டித்து; உண்டாக்கி
முட்டிகைச்சேரி-கொல்லர் சேரி.
வெய்துயிர்த்து-வெம்மையாக மூச்சுவிட்டு
கம்மவாலயம்-கம்மியர்களின் தொழிற்சாலை
குரவை-ஒருவகைக்கூத்து
கடுகுபு-விரைந்து
வளி-வருங்காற்று
கடைஇ-செலுத்தி
பள்ளிகொள்ளானாகி-துயில் கொள்ளாமல்
என் வலித்தனையோ-என்ன நினைத்தாயோ.
நாராசம்-இருப்புக்கம்பி
இராசமாதேவி-பட்டத்தேவி.
அசுண நன்மா-இசையை
அறிவதொரு விலங்கு.
படிமறத்தல்-மெய்ம்மறத்தல்.
இறைஞ்சினன்-வணங்கினன்.
திங்கள்-சந்திரன்.
எம்பெருமான்-பெருமாட்டி: இங்கே னகரஒற்று பெண் பாலை உணர்த்தி நின்றது;
"தம்பெருமான் பாதமுடி அழுது தீண்டி" (சீவகசிந்தாமணி, 2608) என்றாற்போல.
விண்மீன்-நக்ஷத்திரம்.
பொலிவு-அழகு.
விலாவித்து-பிரலாபித்து;
வல்வில் இளைஞன்-விற்றொழிலிற் சிறந்த இளைய வீரன்.
மதி-சந்திரன்
அணிமுடியண்ணல்-அழகிய கிரீடத்தைடைய தலைவன்.
முளைக்கோல் பெருந்திரை- முளைகளையுடைய கோல்களில் மாட்டிய பெரிய திரைச் சீலை
சுழலுவன-சுற்றுவன.
பஞ்சி-பஞ்சு.
பணை-மூங்கில்.
பயின்-ஒருவகை மரம்.
ஞாழல்-புலிநகக்கொன்றை
அணுகுதற்கு-நெருங்குதற்கு
படிமம்-வடிவம்.
மாயிருஞாலம்-மிகப்பெரிய பூமி.
அயிர்மணலடுக்கம்-நுண்மணற்குவியல்
கணை-திரட்சி
உறுதிச்சுற்றத்தார்-நட்பினர் முதலிய ஐவகையார்
சாலி-நெல்
விடை-எருது.
பால்-ஊழ் கம்பல்-முழக்கம்
முதுமகன்-வயோதிகன்
களமர் கம்பல்-களத்தில் வேலை செய்வோரது முழக்கம்.
நீர்த்துறை நகரத்தார்-நீர்த்துறையில் அமைக்கப்பெற்ற புதிய பாடி நகரத்திலுள்ள பரிசனத்தார்.
நிரம்பு அணி- நிரம்புதலைப் பெற்ற
முதற்பெருந்தேவி-பட்ட மகிஷி
களைகளை-களைகளைக் களைகின்ற.
பதலையரியல்-பத்தரில் உள்ள கள்
நறை-ஒருவகைக்கொடி
நாகம்-ஒருவகை மரம்
தடாரி-கிணைப்பறை
வழை-சுரபுன்னை மரம்
சும்மை-ஒலி
அரும்பிடை-அரிய வழியின் இடையே
இரையாறு-முழங்குகின்ற நதி
இறங்கு குரல்-வளைந்த கதிர்
ஆசினி-ஈரப்பலா
இறடி-தினை
பிண்டி-அசோக மரம்
இறங்கு-சோளம்
கடிநாள் வேங்கை-தான் மலர்ந்து மணநாளைப் புலப்படுத்தும் வேங்கைமரம்
புகர்ப்பூ-சிவப்பையுடையபூ
சணாய்- கடலை
சுள்ளி-ஆச்சாமரம்
விளையுள்-விளைச்சல்
சூரல்-ஒருவகைப் பிரம்பு
செருத்தல்-மடி
பால் வெள்-மிக வெள்ளிய
செதும்பு-சேறு
பனிச்சை-ஒருவகைமரம்
முசுண்டை-முசுட்டைக் கொடி
வேய், வெதிரம்-மூங்கில் விசேடம்
குழை-தளிர்
குளவி-மலை மல்லிகை
பிணை-பெண் மான்
மாரோடம்-செங்கருங்காலி
திரிமருப்பஇரலை-முறுக்கிய கொம்பையுடைய கலைமான்
ஆரம், சந்து-சந்தனமரவிசேடம்
செறியிலை-நெருங்கியஇலை
தமாலம்-பச்சிலை மரம்
காயா-ஒருவகை மரம்
விஞ்சையம் பெருமலை-விந்த மலை
உறைப்ப-சிந்த
நெஞ்சகம்-மூங்கில்
தடவு நிலை-பெரிய நிலையை உடைய
மருப்பு-யானைத்தந்தம்
முடந்தாள்-வளைந்த அடி
பிடவு-பிடா
குடம்புரை-குடத்தைப் போன்ற
நெய்-தேன்
ஈரம்-அன்பு
தேன்தொடையல்-தேனடை
இதண்-பரண்
நறவம்-குங்குமமரம்
பொத்திய-மூட்டிய
பரீஇய-அறுத்த
ஆரத்துணி-சந்தனத்துண்டு
ஐவன நெல்-மலை நெல்
வெள்ளி-வெள்ளை நிறம்
பிறங்கல்-திரட்சி
தகரம்-ஒருவகை மரம்
பாவையிஞ்சி-இஞ்சிக்கிழங்கு
உழலை-இரண்டு பக்கத்துமுள்ள கற்களில் துவாரம் செய்த விடத்து மூங்கில்
முதலியவற்றைச் செலுத்தி வைத் திருக்கும் ஒருவகை வாயில்
நாகத்தல்லி-நாகப்பூவின் உள்ளிதழ்.
இணர்-கொத்து..
சாலேகம்-சிறு தேக்கு.
தூறு-செடிகளின் தொகுதி. ஓமை முதலியன:மரவிசேடம்
உட்காழ்-உள்ளே வைரத்தை யுடைய.
அரவு-நாகமரம்.
கறி-மிளகு.
இரவு-இருள்மரம்.
கடு-கடுமரம்.
காலவேகம்-யானையை வருத்துவதாகிய ஒருவகை வியாதி.
அரக்கின்கோல்-கொம்பரக்கு.
அதிரல்-மோசிமல்லிகை.
கனற்ற-வருத்த.
மணிச்சை-ஒருவகைமரம்.
கண்ணணங் கவிரொளி-காண்போர்கண்களை வருத்துகின்ற மிக்க ஒளி.
மயிலை-இருள்வாசி (இரு வாட்சி.)
மௌவல்-செம்முல்லை.
கடவுள்-சிவபெருமான்.
ஞாழல்-குங்குமமரம்; புலிநகக் கொன்றையுமாம்.
நிமித்த நூல்-சோதிட நூல்.
புரோசைக்கயிறு-யானைக் கழுத்தில் கட்டும் கயிறு
தடவு-தடா (மரவிசேடம்.)
பிடவு-பிடா.
தவிசு-யானையின் முதுகில் போடப்பட்டுள்ள மெத்தை.
முளவு-முள்.
புய்த்து-பெயர்த்து.
கடித்தகம்-யானையின் பின்புறத்தே கட்டப்பட்டிருக்கும் கேடகம்போன்ற ஒருவகைப் படை.
சே-ஒரு மரம்.
கோடல்-வெண்காந்தள்.
கொய்யல், அனிச்சம், பனிச்சை; இவை ஒவ்வொரு மரச்சாதி.
பயின்-ஒருமரம்.
துயில-நீங்க.
ஆமா-காட்டுப்பசு.
நீர்க்கடன்-உதகக்கிரியை.
தாமாறு-தாவும்படி.
புட்கரணி-குளம்.
வெள்ளி-சுக்கிரன்.
இன்றியமையாதது-அவசியமானது.
முரம்பு-பருக்கைக் கற்களாலாகிய மேடு.
பொறை-பாரம்.
கற்சிறை-கல்மதில்.
சார்-பக்கம்.
கொடிப்படை-முன்படை.
கூழை - பின்படை.
ஈட்டி - சம்பாதித்து.
கடித்தகப்பூம்படை - கேடகம் போல்வதோர் ஆயுதம்.
ஒழிமின் - விட்டுவிடுங்கள்
புரிசைச்சுற்றம் - சுற்றுப்படை.
அழல் - நெருப்பு.
புரிசை - மதில்.
துயரம் - துக்கம்.
அனித்தம் - அனிச்சமலர்.
தைவர - தடவ.
பனித்தல் - நடுங்குதல்.
புள் - பறவை.
தூத்து - விளக்கி.
செருக்கு - கர்வம்.
புகைப்படலம் - புகையின் தொகுதி.
புணை - தெப்பம்.
இறைவன் - தலைவன்.
கணை - பாணம்.
முதுமகன் - வயோதிகன்.
சவரர், புளிஞர் - ஒருவகை வேடர்கள்.
துத்தரிக்கொம்பு - ஒருவகை வாத்தியம்.
புட்குரல் - பறவையின் குரல்.
விண்மீன் - நக்ஷத்திரம்.
பொதும்பு - செறிவு.
கடறு - அருநெறி. பணித்த - கட்டளையிட்ட.
பயம்பு - பள்ளம்.
பாடிநகரம் - பலவகைச் சேனைகள் தங்குமிடம்.
பாழி - குகை.
முதுமரப்பொந்து - ஆலமரப் பொந்து.
கவறு - சூதாடு கருவி.
பளிக்குநாய் - பளிங்காற் செய்தகாய்.
குரக்கினனம் - குரங்கின் கூட்டம்.
பேழை - பெட்டி.
காலன் - யமன்
சிக்கம் - சீப்பு; உறியுமாம்.
கரண்டம் - கரண்டகம்.
பட்டு அமளி - பட்டாலாகிய படுக்கை
அத்தியாளி - ஒருவகை விலங்கு; இது யானையை வருத்துவது.
ஆலவட்டம், சாந்தாற்றி: விசிறி விசேடங்கள்.
மாலைப்பந்து - மாலையாலாகியபந்து.
பொருது - யுத்தஞ்செய்து.
வாணிகர் - வியாபாரம் செய்வோர்.
படவம் - ஒருவகைப்பறை.
விதானம் - மேற்கட்டி.
சிலதர்-ஏவல்செய்வோர்
இயவர்-வாத்தியக்காரர்
திருமால்-விஷ்ணு
நலிவு-வருத்தம்
திருமகள்-இலக்குமி
மன்னுக-நிலைபெற்றிடுக
மருத்துவர்-வைத்திய நூலோர்
தருக்கி-செருக்குற்று
வண்ணமகளிர்-அலங்கரிக்கும் மகளிர்
பெருங்கணி-கணித நூலில் வல்லவர்களில் பெரியவன்
படமாடம்-கூடாரம்
உத்தரகுரு-மேருவின் வடக்கேயுள்ள போகபூமி
ஏற்றுரி-இடபத்தின் தோல்
பணைக்கொட்டில்-முரசு இருத்தற்குரிய இடம்
கடாரம்-காழகம் (பர்மா)
பாடல்-பாடலிபுத்திர நகரம்
கொற்றவை- துர்க்கை
ஓவியத்தொழிலர்-சித்திர வேலைக்காரர்
அணை-ஆசனம்
வண்ணக் கம்மர்-வர்ண வேலைக்காரர்
குறுந்தடி-சிறியதடி
பன்றியின்ஏறி-பன்றிப்பல்; பன்றிமுள்ளுமாம்
சுண்ணப் பெருங்குடம்-வாசனைப் பொடிகளையுடைய பெரிய குடங்கள்
ஊகம்-கருங்குரங்கு
அற்றகாலம்-வறுமையுற்ற காலம்
முரண்-மாறுபாடு
அறச்சோறு-தருமத்திற்காகப் போடப்படும் அன்னம்
அடியுறைசெய்தொழில்-அடிமைத்தொழில்
சமிதைகள்-சமித்துக்கள்
சிற்றரண்-சிறியகாவலிடங்கள்
புலந்த-ஊடிய
கண்ணி-மாலை
இலாவண காண்டம்-இலா தூத்து-விளக்கி வாணநகரத்தில் உதயணன்
இருந்தபோது நிகழ்ந்த செய்திகளைக் கூறும்பகுதி
துகள்-தூசி
போது-மலரும் பருவமுள்ள அரும்பு
காவணம்-பந்தல்
சந்திராதித்தம்-அருக தேவனுடைய குடைகளுள் ஒன்று
தாரோய்-மாலையை உடையோய்
தீர்த்தங்கரர் - சைனாகமங்களை இயம்பிய ஆசிரியர்கள்; இவர்கள் இருபத்து நால்வர்.
நூல்வினைக் கம்மியர் - பஞ்சு நூலால் செய்யப்படும் தொழிலையுடைய வேலைக்காரர்.
அரிவைமார் - மகளிர்.
வள்ளம் - கிண்ணம்.
மண்ணு நீர் - மஞ்சன நீர்.
பாடகம் - மகளிருடைய ஒரு வகைக் காலணி.
கடிமணம் - புதிய விவாகம்.
அறுதொழில் - ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்பன.
முத்தீ - ஆகவனியம், காருகபத்தியம், தக்ஷிணாக்கினி என்பன.
போகிய - முற்றச்சென்ற.
பிரதிட்டை - பிரதிஷ்டை.
பெருங்கணிச்சங்கத்தார் - உயர்ந்த சோதிடர்களின் கூட்டத்தார்.
திணைகள் - ஒருவகை உத்தியோகஸ்தர்.
ஐம்பெருங்குழு - அமைச்சர், புரோகிதர், சேனாபதியர், தூதுவ சாரணர் என்பார்.
எண்பேராயம் - கணக்கர், கருமகாரர், கனகச்சுற்றம், கடை காப்பாளர், நகரமாந்தர்,
படைத்தலைவர், யானைவீரர்,குதிரைவீரர்.
முக்குடை - சந்திராதித்தம், நித்திய விநோதம், சகல பாசனம்; இவை
அருகதேவனுக்கு உரியவை.
ஆன்பால் - பசுவின் பால்.
வம்பலர் - அயல்தேசத்தார்.
பாடை - பாஷை.
தேசிகச்சேரி - பல நாட்டு வாணிகர் இருக்கும் தெரு.
கழகம் - சூதாடும் இடம்.
அருகலும் - சமீபமான இடத்தும்.
மட்டுமகிழ் - கள்ளை உண்டு களிக்கின்ற.
காரிகை பகரும் - (தம்) அழகை விற்கும்.
மகளிர் - இங்கே பரத்தையர்.
கோடிகர் - ஆடை நெய்வோர்.
மறுகு - வீதி.
கூத்துறை சேரி - கூத்தர் இருக்கும் இடம்.
நாடினன் - ஆராய்ந்து யோசித்தான்.
துறந்தோர்கள் - துறவிகள்.
வேற்றோன் - அயலான்.
ஆண்டுள்ள - அவ்விடத்துள்ள.
சமயவிகற்பம் - மத வேறுபாடு.
இல்லம் - வீடு.
கிழி - ஆடைத்துண்டு.
யவனப்பாடி - யவனதேசத்து வேலைக்காரர் தங்கிய தெரு.
பூணி - வண்டி இழுக்கும் எருது.
ஈண்டு - இவ்விடம்.
எஞ்சியுள்ள - மிகுந்துள்ள.
வெந்திறல் மிலைச்சர் - மிக்க பாராக்கிரமத்தையுடைய மலைச்சாதியர்.
மந்திர மாடம் – ஆலோசனை செய்தற்குரிய மாளிகை.
காஞ்சனை - காஞ்சனமாலை.
தமர் - உறவினர்.
கவன்று - கவலையடைந்து.
சைத்தியோபசாராம் - குளிர்ச்சியான பொருள்களால் செய்யும் உபசாரம்.
ஊர்கோள் - ஒரு கிரகம்; இக்காலத்து அது கோட்டையென்று வழங்கப்படும்.
நகுட ராசன் - இந்திர பதவியை அடையச் செலலுகையில் இந்திராணி இன்பம்
ஒன்றையே விரும்பியிருந்த காலத்து மலைப்பாம்பாகும்படி அகத்திய முனிவரால்
சபிக்கப்பட்டான் என்பது புராண வரலாறு.
நுகர்வது - அநுபவிப்பது.
அற்றம் காத்தல் - சோர்வுவாராமல் பாதுகாத்தல்.
குரவர் - பெரியோர்.
உண்டாடல் – சோலையில் சென்று பலவகைப் பொருள்களையும் நுகர்ந்து விளையாடல்.
சுருங்கை - நிலவறையாக அமைந்திருக்கும் நுழைவழி.
உறைவிடம் - தங்குமிடம்.
உவகைக் கண்ணீர் - ஆனந்த பாஷ்யம்.
பாவையே - பாவைபோல்வாய்.
அவலம் - சோர்வு.
அழற்கருமம் - தீமூட்டுதலாகிய காரியம்.
திண்ணறிவாளன் - உறுதியானஅறிவை உடையவன்.
பிற்பயமுடைமை – பின்னாலே பிரயோஜனத்தை உடைய தாதல்.
ஓவியம் - சித்திரம்.
பொறித்து - எழுதி.
இருமுதுகுரவர் – தாய் தந்தையர்.
வேழவேட்டம் – யானை மேலுள்ள விருப்பம்.
செல்சார்வறுத்தபின் - பற்றுக்கோட்டை இழந்தபின்பு.
மறைகொள் மாயம் - இரகசியமாகிய வஞ்சகச் செயல்.
துறைநகர்விழவு - நீர்விளையாட்டு.
மாதரை - வாசவதத்தையை.
போதுவல் - பின்வருவேன்.
வாழ்தலாற்றேன் - வாழேன்.
விலாவித்தனன் - பிரலாபித்துப் புலம்பினன்.
இறைமை - அரசர்க்குரிய தலைமை.
அவரபக்கம் - கிருஷ்ணபக்ஷம்.
கருவுற்று - கருப்பமுற்று.
வள்ளூவமுதுமகன் - வருங்காலச் செய்தியை முரசறைந்து நகரத்தார்க்கு தெரிவிப்போன்.
வறுவிது - பொருளில்லாதது.
தாபதப்பள்ளி - தவத்தினருடைய இடம்.
கடவுட்டானம் - தேவாலயம்.
சுனை - மலையிலுள்ள நீர்நிலை.
குரம்பை - சிறுவீடு.
செறிந்தது - நெருங்கியது.
தூசக்குடிஞை - வெள்ளிய ஆடையாலாகிய சிறு குடிசை.
துலாம் - தூணின் மேலுள்ள ஓர் உறுப்பு.
பல்காழ்த்திரை - பல குத்துக் கோல்களுடனே செய்யப்பட்ட திரைச்சீலை.
படாகை - பெருங்கொடி.
வீறெய்தி - வேறொன்றிற்கு இல்லாத அழகைப் பெற்று.
நந்தனவனம் - பூஞ்சோலை.
உரிமை - அந்தப்புரமகளிர்; இங்கே இந்திராணி.
குற்றும் - பறித்தும்.
சுள்ளி - மராமரம்.
வழுத்தி - போற்றி.
திளைத்தல் - இடைவிடாமல் அநுபவித்தல்.
உரிமைச்சுற்றம் - அந்தப்புர மங்கையர்.
ஐந்திணைமரங்கள் - குறிஞ்சி, முல்லை, பாலை, நெய்தல்,மருதம் என்னும் ஐந்து நிலங்களுக்குரிய மரங்கள்.
மிஞிறு, தும்பி, சுரும்பு: வண்டின் சாதி விசேடங்கள்.
இயற்றாத் தவிசு - இயற்கையாகவே அமைந்த ஆசனம்.
சாரணர் - இங்கே சைன முனிவர்.
கான்யாறு - காட்டாறு.
குறுவாய் - சிறிய வாய்.
அரமகளிர் - தெய்வமங்கையர்.
குழையர் - தளிர்களை ஏந்தியவர்.
கோதையர் - மாலையை அணிந்தவர்.
இழையர் - ஆபரணங்களை உடையோர்.
இணர்த்தழையர் - பலவகைப் பூங்கொத்தாலாகிய தழையென்னும் உடையை உடையோர்.
ஐயர் - தலைவர்.
பாசவல்-பச்சை அவல்;வறாது இடிக்கப்படும் அவல்.
அம்மனை வள்ளைப்பாட்டு-உலக் வெய்துயிர்த்து-வெம்மையா
கைப் பாட்டு கிய பெருமூச்சு விட்டு
இருதலைப்புள்-இரண்டு தலையையுடைய ஒருவகைப்பறவை.
சூழ்ச்சி-ஆலோசனை
கத்திகை, பித்திகை: மாலை விசேடம்.
மறமாச்சேனன்-பிரச்சோதன அரசன்
மறலி-மாறுபட்டு
சிறுசொல்-பழிச்சொல்
விசும்பு-ஆகாயம்
பயப்பது-கொடுப்பது
நறுவிய-நல்ல மணமுள்ள
மாயவிறுதிவல்லையாகிய-வஞ்சனையாகிய மரணத்தில் வல்லமையுடையாயாகிய
செறிவு-தொகுதி
நலிவோர்-வருத்துவோர்
பொலிவு-அழகு.
மரவுரி உடுக்கை-மரத்தோலாலாகிய உடை.
உயிர்க்கிழத்தி-மனைவி.
குடங்கை-உள்ளங்கை.
ஊக்கம்-உற்சாகம்.
பிணையல்-மாலை
காவலன்-இங்கே பிரச்சோதனன்
அன்னே-தாயே
தெய்வத்திகிரி-தெய்வத் தன்மையுள்ள சக்கரம்
கரி-யானை
கண்கூடாக-பிரத்தியக்ஷமாக
இதயவாசனை-ஓர் ஆபரணம்
சிதைத்து-கலைத்து
களிகை-கழுத்தில் அணியப்படும் ஓர் ஆபரணம்
முடியணி-தலைக்குரிய ஆபரணம்
உத்தி-சீதேவியென்னும் ஆபரணம்
துகள்-தூசி
புறம்-முதுகு
பிணிப்புண்ட-கட்டுண்ட
தைவந்து-தடவியும்
அணுகாமல்-நெருங்காமல்
இயற்றுவித்து-உண்டாக்கி
அகலாமல்-பிரியாமல்
பரிமாவூர்ந்து-குதிரையேறி
மகதகாண்டம்-உதயணன் மகதநாட்டில் இருந்தபோது நிகழ்ந்தவற்றைக் கூறும் பகுதி
கருமக் கள்வர்-ஒருகாரியத்தைக் கருதித் திருடர் வேடம் பூண்டோர்
நட்பு-சிநேகம்
கொட்டு வெனைக்கொட்டில்- செம்பு முதலியவைகளைக் கொட்டிவேலை செய்யும் இடம்
விலக்கற்பாலதன்று-ஒழிக்கும் பகுதியை உடையதன்று
உரித்தான-உரியதான
அறத்தியல் கொட்டில்-தருமோபதேசம் செய்யும் இடம்
பார்ப்பன வடிவம்-பிராமண
வடிவம் அம்பலம்-பொதுவிடம்
மருண்டு-மயக்கத்தை அடைந்து
கோழிகளைமரபில் பொரச் செய்தல்-கோழிகளை அவற்றின் இயல்பறிந்து சண்டைக்கு விடுதல்
பிணை-பெண்மான்
தேசிகம்-ஒளி; கௌரவம்
மறம்-வீரம்
யானை வடிக்கும் வட்டம்-யானைகளை வயமாக்கிப் பயிற்றும் வட்டமான இடங்கள்
வீரியம்-இங்கே நிலவளம்
அலகை வேந்தன்-மற்ற அரசர்க்கு உவமையாகவுள்ள அரசன்
அரங்கம்-நாடகசாலை
கழகம்-சூதாடும் இடம்; படைக்கலம் பயிலும் இடமுமாம்
அரம்பு-குறும்பு செய்யும் கூட்டம்
கடிசெல் ;புரவி-வேகமாகச் செல்லுகின்ற குதிரை
கரம்பு-பாழ்நிலம்
சேரிகள்-தெருக்கள்
அறாஅ-நீங்காத
எறிபடை்பாடி-ஈட்டி, வேல் முதலிய படைகளையுடைய வீரச்சேரி.
அறச்சோற்று அட்டில்-தருமச் சோறு சமைக்கும் மடைப் பள்ளி.
தமிழச்சேரி-தமிழவீரர் தெரு.
இளமரக்கா- இளமரச் சோலை.
மிலைச்சச்சேரி-மிலைச்சநாட்டு வீரர் தெரு
தாபதப்பள்ளி-முனிவர் ஆசிரமம்.
வித்தக வினைஞர்-சிற்பவேலை செய்வோர்.
ஈமம்-மயானம்.
சாதனை-விரதங்கொண்டு பயிலல்.
குயிற்றிய-செய்த.
ஒருதலை-நிச்சயம்.
ஒட்டுவினை மாடம்-செங்கற் களை ஒன்றோ டொன்று பொருந்த ஒட்டிய மாடம்- வௌவால் நத்தி
காமதேவன்-மன்மதன்
காஞ்சுகியர்-சட்டையிட்ட முதிய சேவகர்கள்.
அகழ்வித்து-தோண்டி
வேற்றுமை-வேறுபாடு
மாசை-பொன்
சிலதியர்-ஏவலாட்டியர்
ஈண்டவீசி-விரையக்கொடுத்து
பொருள் நசை-திரவியத்திலுள்ள விருப்பம்
கஞ்சிகைச் சிவிகை-திரையால் மூடிய பல்லக்கு
மறையாகிய கஞ்சிகை-மூடுதிரை
சிலத மாக்கள்-வேலைக்காரர்கள்
மஞ்சு-வெண்மேகம்
உசும்புதல்-எழுப்புதல்
அமளி-படுக்கை
கா-சோலை
தாள்முதல்-அடி
பொலிவில-அழகில்லாதன
பருகுவன்ன நோக்கமொடு-கண்ணாற் பருகும் தன்மையை யொத்த பார்வையோடு
வெப்பம்-வெம்மை
செறிந்து-நெருங்கி
பள்ளியறை-படுக்கையறை
பையாந்து-துன்பமுற்று
பயிலுதல்-நன்றாகக் கற்றல்
இருவயின்-இரண்டிடம்; தலை வன் தலைவிகளின் உள்ளம்
புடைபெயர்ந்தனள்-நகர்ந்தனள்
ஏழிருள்-ஏழ் இராத்திரி
சூலம்-மாடத்தின்மேலுள்ள இடிதாங்கி என்னும் உறுப்பு
விழைவு-விருப்பம்
அச்சமுயக்கம்-அச்சத்தால் உண்டாகிய தழுவுகை
சென்னி-தலை; கூந்தல்
சாந்தம்-சந்தனம் கூகை-கோட்டான்
வேள்வி-யாகம்
குடமுழவு-குட வடிவமாக உள்ள ஒருவகை வாத்தியம்
மாசு-குற்றம்
புன்கண்-துன்பம்
பயிற்றுதல்-கற்பித்தல்
சுவைத்தொழில் மகன்-ரஸக்ஞன்
கடியறை-மணவறை .
காந்தருவமணம்-ஒரு கன்னியும் தலைமகனும் ஒருவரை ஒருவர் விரும்பி மனமொத்துக் கூடும் மணம்.
செப்பஞ்செய்து-செவ்வைசெய்து.
தானம்-இடம்
திவவு-நரம்புகளை இறுக்கும் யாழின்வலிக்கட்டு
ஈட்டிய- சம்பாதித்த
சாளரம்-பல்கணி
பாடி-படைவீடு
செவிச்சுவை அமிர்தம்-செவிக்கு உணவாகிய சுவையை உடைய அமிழ்தம்; என்றது இசையை
அரண்-காவல்
ஆக்கம்-விருத்தி
கொடுமுடி-மாடத்தின்மேல் உள்ளதோர் உறுப்பு
கையுறை-காணிக்கை
பயிர்-ஒருவகைப்பறவை
அத்தாணி-அரசிருக்கை
சோர- மெய்ம்மறந்துவிட
நட்டோர்-சிநேகிதர்கள்.
குறிஞ்சி-குறிஞ்சிமரம்
நன்னராளன்-நன்மையை உடையவன்; இங்கே உதயணன்
குரங்க-வளைய
மைம்மலர்க்கண்ணி-நீலமலர் போன்ற கண்ணையுடைய பதுமாபதி
சூளுறவு-சபதம்
ஏனோர்-ஏனையோர், மற்றை யோர்
படையொற்றாளர்-சேனைக்குரிய ஒற்றர்கள்
புறங்காத்து-பாதுகாத்து
பேணுவாளாய்-மிகவிரும்பிப் பாதுகாப்பாளாகி
கூறுபடுத்து-வகைப்படுத்து; பிரித்து
இசைவிலவாக-பொருத்தமில் லாதனவாக
உப்பணை-உப்பாலாகிய கரை
புறம்போந்து-வெளியே வந்து
நாறியும்-மோந்தும்
புல்லி-தழுவி.
உற்றும்-தழுவியும்
தமர்-தம்மைச்சேர்ந்தவர்
அற்றம்-சமயம்
எமர்-எம்மைச்சார்ந்தவர்
ஐம்புலவாயில்-மெய், வாய் ஆற்றினன்-செய்தனன்
கண், மூக்கு, செவி
வைகல்தோறும்-நாள்தோறும்
பரிசங்கள்-பெண்ணுக்காகக் கொடுக்கப்படும் பொருள்கள்
விறல்-பிரதாபம்
முதுமகன்-வயோதிகன்
கேண்மை-சிநேகம்
தெருமரல்-மனஞ்சுழன்று
குறைகொள்ளும்-குறையிரந்து
விரும்பும் வருந்துதல்
சங்கேதம்-உத்தேசமாகிய குறிப்பு
கோடல்-கொள்ளுதல்
விழுப்பம்-சிறப்பு
வம்மின்-வாருங்கள்
அலங்குதல்-அசைதல்
இயல்-இயல்பு
படைக்கூழ்-சேனைகளுக்கு உரிய உணவு
வழா-வழுவாத; தவறாத
பெருமூதாளர்-முதியோர்
பள்ளி வையம்-படுத்தற்குரிய வண்டி
உண்மலி உவகையளாய்- உள்ளே மிக்க மகிழ்ச்சியை யுடையவளாகி
கோட்டூர்தி-யானைத் தந்தத்தால் செய்த வாகனம்
நீங்குதிறன்-நீங்கும் விதம்
கொடிப்படை-முன்படை
வதுவை-கல்யாணம்
படிப்படை-கூலிப்படை
உழைக்கலம்-பக்கத்தில் வைத்துக்கொள்ளும் பாத்திரங்கள்
புடைப்படை-சுற்றுப்படை
புல்லறிவினை உடையேன்-அற்பமான அறிவை உடையேன்
யாப்புடை நெஞ்சம்-உறுதியான மனம்
எரிவாய்ப்பட்ட பஞ்சி-அக்கினியில் பட்ட பஞ்சு
சொற்றனள்-சொன்னாள் சிலைத்தன-ஒலித்தன.
தூசி-முன்படை
மலைத்தன-போர்செய்தன
கூற்றுவன்-யமன்
கணி-நிமித்திகன்
விலங்கின-குறுக்கிட்டன
அடல்-வலி
குந்தம்-கைவேல்
பொருவினைப் படாகை-போர் செய்தற்கு எடுக்கும் பெருங் கொடி
தோமரம்-எறியும் ஒருவகை ஆயுதம்
தடக்கை-வளைந்த கை
படாஅக் கொட்டில்-கூடாரம்
அழிந்தன-மிகுந்தன
கடாஅக்களியானை-மதத்தால் களிக்கின்ற யானை
வத்தவ காண்டம்-உதயணன் வத்தவ தேசத்தில் இருக்கையில் நிகழ்த செய்திகளைக் கூறும் பகுதி
பணைத்தோள்-பருத்த தோள்
பரியாளம்-பரிவாரம்
வடுத்தொழில்-குற்றச்செய்கை
ஓம்படுத்து-பாதுகாக்கும்படி ஒப்பித்து
நெய்த்தோர்ப்பட்டிகை- போர்க்களத்தில் வெற்றி பெற்றோர்க்குத் தலைவனால்
கொடுக்கப்படும் ஒரு விருதோலை.
கவரி - சாமரம்.
இயம்ப - ஒலிக்க.
பொழியாநிற்ப - பொழிய.
அமைச்சர்கள் - மந்திரிகள்.
அகற்றி - நீக்கி.
நாற்சந்தி - நான்கு தெருக்கள் கூடுமிடம்.
முச்சந்தி - மூன்று தெருக்கள் கூடுமிடம்.
மூப்பு - முதுமை.
முடங்கினீர் - வளைந்து மெலிவை அடைந்தீர்.
உறுப்பு - அவயவம்.
மன்றம் - சபை.
போரின்வாழ்நர் - வீரர்.
புலத்தின்வாழ்நர் - குடிமக்கள்.
தாரின்வாழ்நர் - நெய்தற்றொழில் செய்பவர்.
பண்டத்துப் பயத்தின்வாழ்நர் - வாணிகஞ்செய்பவர்.
படியிற்றிரியா ஒத்தின் வாழ்நர் - அந்தணர்.
ஒழுக்கின் வாழ்நர் - நல்லொழுக்கத்தவர்.
சிற்பக் கயிற்றின் வாழ்நர் - சிற்பநூலால் வாழபவர்.
கயிறு - நூல்.
உயர்ந்தோர் தலையா இழிந்தோர் ஈறா - பெரியோர்கள்
முதல் இழிந்தவர்கள் எல்லையாக.
அறம் - தருமம்.
கூற்று - யமன்.
கவர்ந்து - கொள்ளைகொண்டு
நானிலங்கள் - நால்வகையான நிலங்கள்.
அருவிலை நன்கலம் - அரியவிலை பெற்ற நல்ல ஆபரணம்.
செங்கதிர்ச் செல்வன் - சூரியன்.
பாடு - அத்தமித்தல்.
திங்கள் - மாதம்.
ஒச்சி - செலுத்தி.
குறும்பர் - குறுநிலமன்னர்.
கைம்மாறு - பிரதியுபகாரம்.
மாட்சிமை - பெருமை.
மாடம் - மாளிகை வடிவமாகிய கோயில்.
வழிபடல் - வணங்குதல்.
அடிசிற்சாலை - அன்னசத்திரம்.
நுகர்பொருள் - அநுபவித்தற்கேற்ற பொருள்
கொணர்ந்தவர் - கொண்டு வந்தவர்.
சேமித்து - பாதுகாத்து.
கூத்தியர் இருக்கை - கோயிற்குரிய பணிசெய்யும் பெண்டிர்களின் தெரு.
கடப்பாடு - கடமை.
வருடும்பொழுது - தடவும்பொழுது.
இடப்பட்டது - போடப்பட்டது.
இயைவதாக-பொருந்துவதாக.
விம்மிதமுற்று-ஆச்சரிய மடைந்து.
மெய்காப்பாளர்-சரீரத்தைப் பாதுகாப்பவர்.
பூம்புறம் நீவி-அழகிய முது
தாங்கா உவகை-அடங்கா கைத் தடவி.
மகிழ்ச்சி. எங்ஙனம்-எவ்வாறு
உலவாவிருப்பொடு-கெடாத ஆற்றினை-மொறுத்தாய்.
ஆசையோடு. இலங்கிளை-விளங்குகின்ற
புலர்தலைகாறும்-பொழுது ஆபரணம்
விடியுமளவும். பிறள்-அயலாள்
உள்ளி-நினைந்து. தீண்டி-பரிகசித்து;தொட்டு
அணை-படுக்கை
கருமமாக்கள்-காரியக்காரர். வறியவன்-தரித்திரன்
இழிந்த...இனிது-இழிந்த ஜனங்களுடைய உறவைக் காட்டிலும் உயர்ந்தோர்களுடைய விரோதம் சிறந்தது.
கண்படை-தூங்குதல்
வீசி-கொடுத்து.
நியமங்கள்-நித்திய கருமங்கள்
விரகம்-தலைவன் தலைவிகள் தம்முள் பிரியும் பிரிவு
அஞ்சலி செய்ய-கைகுவித்து வணங்க.
விடை-உத்தரம்
ஊறு-இடையூறு
யுகந்தராய-யூகியே
அரற்றி-அடிக்கடிகூறி
முனிவனை-முனிவனாக உள்ளாய்!
அருகன்-அருகதேவன்
உரிமைப்பள்ளி-அந்தப்புரம்
இனி-இப்பொழுது
யாணர்-புதியது.
உகுத்து-தோன்றி.
மனமறுகுதல்-மனஞ்சுழலுதல்.
கயத்தியேன்-தாழ்வையுடையேன்.
துயையாகியிருத்தல்-பரிசுத்தமுடைமையாய் இருத்தல்.
இயைந்து-உடன்பட்டு
கைவிடாது-தளரவிடாமல்.
வெள்ளுடை-வெள்ளை ஆடை.
மீக்கூரிய-மீக்கூர்ந்த-அதிகரித்த
வெவ்விய-வெம்மையான.
வற்றல்செல்லாது-குறையாது
வியக்கும்படி-அதிசயிக்கும்படி
ஆலவித்து-ஆலவிதை
ஏனாதிமோதிரம்-ஏனாதிப் பட்டத்தார்க்கு உரிய மோதிரம்
ஞாலம்-பூமி
சால-மிகுதியாக
செறித்தல்-சேர்த்தல்
விழவயர்ந்தனர்-திருவிழாச் செய்தனர்
இலக்கம்-லக்ஷம்
வருவாய்-வரும்படி
பஞ்சவண்ணப்படாகை-பஞ்ச வர்ணப் பெருங்கொடி
வரம்பு-எல்லை
வேதனம்-சம்பளம்
வீறு-வேறொன்றற்கு இல்லாத அழகு நல்கினன்-கொடுத்தனன்
விருத்தி-சீவிதம்(மானியம்)
முகமன்-உபசார வார்த்தை
சேடிமார்-வேலைக்காரிகள்
தவ்வை-தமக்கை
கூறு-பிரிவு
வாயில்காவலன்-வாயில்காப்போன்
மேம்படுதல்-சிறப்புற்று விளங் குதல்
கடைத்தலையில்-தலைவாசலில்
மாயச்சாக்காடு-பொய்மரணம்
செற்றம்-தணியாக் கோபம்
அகத்தொற்றாளர்-அக ஒற்றர்
உன்திறத்தும்-உன்னிடத்தும்
குறிப்பினெச்ச நெறிப்படநாடி- குறிப்பினாலே ஒழிந்த வற்றை வழிப்பட ஆராய்ந்து
திண்ணியவாய்-உறுதியை உடையவனாய்
கலம்-பாத்திரம்
கிளவி-சொற்கள்
அருளித்தருதல்-அருள்புரிதல்
கறுத்து-கோபித்து
என்குறை-எனக்கு ஆகவேண்டிய காரியம்
திரிந்து-வேறுபட்டு
பிறைப்பூண்-சந்திர ஹாரம்.
ஊடினள்-பிணங்கினள்
பெருமகன் அவன்மாட்டு-அரசன்பால்
தோற்றப்பொலிவு-இயற்கை அழகு
கூறுதல் செல்லா-கூறாத
பெண்மை-பெண்தன்மை
செய்கென-செய்க என
தெருட்டி-அறிவுறுத்தி
மனத்தது-மனத்தில் உள்ளது
மருட்டி-மயங்கச்செய்து
முன்னி-முற்பட்டு
ஒன்னார்-பகைவர்
புல்லோர்-அற்பர்; புன்மையை உடையோர்
துனி-தணியா ஊடல்
ஒரீஇ-நீக்கி.
கெழீஇ-கொண்டு
சிம்புளித்து-கண்ணை மூடிக்கொண்டு
கட்டுரை மகள்-பொருள் பொதிந்த சொற்களைக் கூறுபவள்
கம்பிதம்-நடுக்கமுள்ள பாட்டு
பள்ளியம்பலம்-படுத்தற்குரிய பொதுவிடம்
தன்னுடைய -உன்னுடைய
சீற்றம்-கோபம்
தன்னை-உன்னை
பணி-வேலை
குழவி-குழந்தை.
வண்ணமகள்-அலங்காரஞ் செய்பவள்
இத்துணை-இவ்வளவு
சொற்றனன்-சொன்னான்
பூந்தாது-பூவிலுள்ள மகரந்தப்பொடி
காடுகெழு குறும்பு-காடுகள் நெருங்கிய குறிஞ்சிநிலத்தைச்சார்ந்த பாலைநிலம்
கனமலைவட்டம்-பெரியமலைகளை உடைய இடம்
அவ்வணியை-அந்த அலங்காரத்தை
பொன்னணி-பொன் ஆபரணம்
கூத்தப்பள்ளி-நாடகசாலை
குச்சரக்குடிகை-கூச்சரதேசத்துச் சிற்பம் அமைந்த குடிசை
குறளி-மிகக்குறிய வடிவம் உடையவள்
வேதிகை-திண்ணை
போகட்டுவிட்டு-போட்டு விட்டு
ஆடல்பேரறை-ஆடுதற்குரிய பெரிய அறை;மேற்கூறிய குடிகை
தாமம்-மாலை
குழன்றது-வளைந்தது
சார்ந்தபின்-அடைந்தபினபு
அழன்றது-வெம்மையுற்றது
அளவளாவி-கலந்து
வியர்-வேர்வை
நித்திலம்-முத்து
கந்துகம்-பந்து
தானை-சேனை
இழை-ஆபரணம்
தருகுவல்-தருவேன்
திறத்திறம்-வகைவகையாக
பருவரல்-துன்பம்
மானேதேனே- மான்போன்ற பார்வையை உடையாய்; தேன்போன்ற சொல்லை யுடையாய்
மகளிர்மூவர்-வாசவதத்தை, பதுமை, மானனீகை என்று பெயர் இருந்த வேறொரு வாசவதத்தை
தூர்த்தக் கள்வன்-காமபரவச னாகிய திருடன்
திறை அளப்ப-கப்பஞ்செலுத்த
கேசம்-மயிர்
தரூஉம்-கொடுக்கும்
பயிற்சி-வழக்கம்
தழைப்ப-செழிக்க
கத்தரிகை-கத்தரிக்கோல்
பருவமுதிர்ச்சி-பிராய முதிர்ச்சி
கைம்மலர்-கையாகிய பூ
தீண்டுதல்-தொடுதல்
வெள்ளியங்கிரி-வெள்ளிமலை
நீற்றை-விபூதியை
மந்தர அரசன்-வித்தியாதர அரசன்
துட்கென்று-அஞ்சி
விழுநர்-விழுபவர்
பற்றுக்கோடு-ஆதாரம்
எழுநர்-எழுபவர்
ஆடவர்திலகம்-ஆண்மக்களில் சிறந்தவன்
அழுநர்-அழுபவர்
அணைநர்-அணைபவர்
கடப்பாடு-கடமை
செயிர்-குற்றம்
வேண்டுகோள்-பிரார்த்தனை
மாபெருந்தேவி-பட்டமகிஷி
போகபூமி-போகத்தை மட்டும் நுகருதற்குரிய இடங்கள்; ஆதியரிவஞ்சம் முதலியன
சோர்விடம்-தளர்ந்தசமயம்
ஆயம்-கூட்டம்
பணிப்பெண்-வேலைக்காரி
மருங்கு-பக்கம்
தன்கடமை-உன்கடமை
இல்லோர்க்கு-வறுமையுற்றோர்களுக்கு
குறை-வேண்டுகோள்
பண்ணீர்மைக்குஇயல்-பெண் தன்மைக்குரிய இயல்பு
உறுபொருள்-மிக்கபொருள்
வீசுபவர்-கொடுப்பவர்
அழேற்க-அழாதே
சில்லென் கூந்தல்-சிலவாகிய கூந்தலை
பாவாய்-பிரதிமை போல்வாய்
அரும்பெறற்றவ்வை-பெறுதற்கரிய தமக்கை(வாசவதத்தை)
பிணையல்-மாலை
நெற்சிறுதாலி-நெல்லாகிய சிறிய தாலி
போது - மலரும்போது பருவமுள்ள பேரரரும்பு.
ஒருகாழ்வடம் - ஒற்றைச் சரட்டாலாகிய வடமன்னும் ஆபரணம்.
கோடித்துகில் - புதிய ஆடை.
உத்தரீகம் - உத்தரியம்;மேலாடை.
குவளைப்போது - நீலமலர்.
கயம் - குளம்.
நீரரமகள் - நீரிலுள்ள தெய்வமங்கை.
ஏற்றவள் - தகுதியானவள்.
சின்மலர் - சிலவாகிய பூ.
சலிப்பு - மன இளைப்பு.
நரவாண காண்டம் - உதயணன் குமாரனாகிய நரவாணனுடைய பிறப்பு முதலியவற்றைக் கூறும் பகுதி.
ஆசி - ஆசீர்வாதம்.
புறவு - புறா.
பார்ப்பு - குஞ்சு.
இறைவன் - தலைவன்.
புதல்வன் - புத்திரன்.
துயிலுகையில் - தூங்குகையில்.
வெள்ளானை - வெள்ளை யானை.
கண்ணுற்ற - பார்த்த.
சூளறைந்து - சபதம் செய்து.
தியானித்தல் - நினைத்தல்.
விண் - ஆகாயம்.
காலகூடம் - யானையை வருத்துவதாகிய ஒரு நோய்.
பஞ்ச மந்திரம் - ஐந்து மந்திரம்; அவை பஞ்ச நமஸ்காரமென்றும் வழங்கப்படும்; சைன மதத்திற்கு உரியவை.
தப்பாது - தவறாது.
உருவேற்றுதல் - பலமுறை ஜபித்தல்.
உமை - உமாதேவி.
நாட்டம் - கண்.
தச்சுவினை இளைஞன் - இளம் பருவத்தையுடைய தச்சன்.
மாறாக -பிரதியுபகாரமாக.
சிறப்பயர்தல் - சிறப்புச் செய்தல்.
சம்மானம் - வெகுமதி.
யாப்பியை - யாப்பியாயினியை.
உள்ளுதோ றுள்ளுதோறும் - நினைக்குந்தோறும்.
பெருகுதலுற்று - வளர்ச்சி யடைந்து.
இட்டவள் - போகட்டவள்; எறிந்தவள்.
கவர்ந்தது - கொள்ளை கொண்டது.
விரல் நிரை - விரல்களின் வரிசை.
ஒழுகு கொடி மூக்கு - நீண்ட கொடிபோலும் மூக்கு.
விழாவணி - திருவிழாவின் அலங்காரம்.
கொடிவீடு - பூங்கொடியாலாகிய வீடு; லதாக்கிருகம்.
துயிலுணர்ந்தெழுந்து - தூங்கியெழுந்து.
ஒருதலை - நிச்சயம்.
வேட்கை - விருப்பம்.
விச்சை - வித்தை.
நவநிதி - ஒன்பது வகையான பொருள்களின் தொகுதி. ஒன்பது வகையான நாணயமுமாம்.
துறவுக்காண்டம் - உதயணன் முதலியோர் துறவறம் பூண்டது முதலியவற்றைக் கூறும் பகுதி.
குத்துக்கோற்காரர் - குத்துக்கோலைக் கையிலே தாங்கி யானையின் முன் நின்று அது
வெறிகொண்ட பொழுது முகத்தில் குத்தி அதனை அடக்கும் ஒருவகை வேலைக்காரர்.
சாரணர் - சைன முனிவர்.
அறவுரை - தருமோபதேசம்.
இருக்கை - ஆசனம்.
துறந்து - நீங்கி.
விரைகின்றது - விரைந்து செல்கின்றது.
This file was last updated on 2nd April 2015.
Feel free to send the corrections to the webmaster.