பாண்டிமாதேவி (சரித்திர நாவல்) - பாகம் 1
தீபம் நா. பார்த்தசாரதி எழுதியது.
pANTimAtEvi (historical novel), part 1
of tIpam nA. pArtacArati
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the ChennaiLibrary.com and Mr. Chandrasekaran for providing a soft copy
of this work and for permission to include it as part of Project Madurai collections.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2015.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
பாண்டிமாதேவி (சரித்திர நாவல்) - பாகம் 1
தீபம் நா. பார்த்தசாரதி எழுதியது.
Source:
பாண்டிமாதேவி
நா. பார்த்தசாரதி
தமிழ்ப் புத்தகாலயம், சென்னை -600 017
6ம் பதிப்பு 2000 (முதற் பதிப்பு 1960)
---------
முதல் பாகம் - அட்டவணை
1.1. நீலத் திரைக்கடல் ஓரத்திலே
1.2. ஆலயத்தில் ஆபத்து
1.3. தளபதி கைப்பற்றிய ஓலை
1.4. இடையாற்றுமங்கலம் நம்பி
1.5. வானவன்மாதேவியின் விரக்தி
1.6. யார் இந்தத் துறவி?
1.7. நந்தவனத்தில் நடந்த குழப்பம்
1.8. நாராயணன் சேந்தன்
1.9. ஓலையின் மர்மம்
1.10. உறையூர்க் கோட்டையில் மந்திராலோசனை
1.11. முன்சிறை அறக்கோட்டம்
1.12. வசந்த மண்டபத்து இரகசியங்கள்
1.13. பகவதி காப்பாற்றினாள்
1.14. முரட்டுக் கரம்
1.15. தளபதிக்குப் புரியாதது!
1.16. கூற்றத் தலைவர் கூட்டம்
1.17. எதிர்பாரா சில நிகழ்ச்சிகள்
1.18. தென்னவன் ஆபத்துதவிகள்
1.19. துறவியின் காதல்
1.20. கோட்டையில் நடந்த கூட்டம்
1.21. சேந்தன் செய்த சூழ்ச்சி
1.22. அடிகள் கூறிய ஆருடம்
1.23. ஊமை பேசினாள்
1.24. கரவந்தபுரத்துத் தூதன்
1.25. நிலவறைக்குள் நிகழ்ந்தவை
1.26. வேடம் வெளிப்பட்டது
1.27. சேந்தன் மனத்தில் சில சந்தேகங்கள்
1.28. நள்ளிரவில் நால்வர்
1.29. கொள்ளையோ கொள்ளை!
1.30. புவன மோகினியின் பீதி
1.31. செம்பவழத் தீவு
1.32. மதிவதனி விரித்த வலை
1.33. மகாமண்டலேசுவரர்
1.34. கனவு கலைந்தது
1.35. நெஞ்சமெனும் கடல் நிறைய...
பாண்டிமாதேவி
1.1. நீலத் திரைக்கடல் ஓரத்திலே
இன்பம் நிறைந்து பொங்கும் இயற்கையின் மகிழ்ச்சி வெள்ளம் போல் பொன்னிறம் போர்த்ததோர் அழகிய மாலைப் பொழுது, மேலே மஞ்சள் வானம்; கீழே நீலத் திரைக்கடல்; கரைமேல் குமரியன்னையின் ஓங்காரம் முழங்கும் தேவகோட்டம்.
'ஏ! கடலே? சங்கமிருந்து தமிழ் வளர்த்த கபாடபுரத்தையும், தென் மதுரையையும் விழுங்கி உன் தமிழ்ப் பசியைத் தீர்த்துக் கொண்டாய்! இனி உன்னை இந்தத் தமிழ் மண்ணில் அணுகளவு கூடக் கவர விடமாட்டேன்' என்று கடலுக்கு எச்சரிக்கை செய்வது போல் குமரி கன்னியா பகவதியார் கோயிலின் மணியோசை முழங்குகிறது! சங்கொலி விம்முகிறது! ஆயிரமாயிரம் அலைக் குரல்களால் ஓலமிடும் அந்தப் பெருங்கடல் குமரித்தாயின் செந்தாமரைச் சிறு பாதங்களைப் பயபக்தியோடு எட்டித் தொட்டு மீள்வது போல் நீண்ட மதிற்சுவரில் மோதி மீண்டு கொண்டிருக்கிறது.
அந்த மாலைப்பொழுது ஒவ்வொரு நாளும் வந்து போகிற சாதாரண மாலைப் பொழுதுகளில் ஒன்றா? அல்லவே அல்ல! பல நூறு ஆண்டுகளுக்கு முன்னால் செந்தமிழ் நாட்டின் சரித்திரத்தில் காலத்தால் அழிக்க முடியா நினைவுக்கும் நிகழ்ச்சிக்கும் இடமாக அமைந்த மாலைப் பொழுது அது!
தென்பாண்டிப் புறத்தாய நாடாகியா நாஞ்சில் நாட்டின் அரசுரிமையும், அமைதியும், குழப்பமான சூழ்நிலைகளால் அவதியுற்றுக் கொண்டிருந்த போது அதற்கான நல்ல, அல்லது தீய முடிவை உருவாக்க வேண்டிய பொறுப்பு அந்த அழகிய மாலை நேரத்துக்கு ஏற்பட்டிருந்தது. தென் தமிழ்நாட்டின் காவற் பொறுப்பை ஏற்க வேண்டிய பொறுப்பை தம் வாழ்நாளில் அந்தப்புரத்தினின்றும் வெளியேறியறியாத ஒரு பெண்ணின் தலையில் சுமத்தப்பட வேண்டிய நிலை.
அண்டை நாட்டில், சோழ அரசன் ஆதரவற்ற தென்பாண்டி நாட்டை எப்போது கைப்பற்றலாமென்று படை வசதிகளோடு துடித்துக் கொண்டிருக்கிறான்.
மகா மன்னரும், திருபுவனச் சக்கரவர்த்தியும், சென்ற போரெல்லாம் வெற்றியே அடைந்தவருமான சடையவர்ம பராந்தக பாண்டியர் பள்ளிப்படை எய்தி இறைவனடி சேர்ந்துவிட்டார். பாண்டிய நாடு துயரத்தில் ஆழ்ந்திருக்கும் சமயம். பராந்தக பாண்டியரின் புதல்வராகிய இராசசிம்ம பாண்டியன் இளைஞன். காலஞ்சென்ற மகா மன்னரின் கோப்பெருந்தேவியான வானவன்மாதேவியார் கணவனை இழந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை. யாராவது படையெடுத்து வந்தாலும் எதிர்த்துப் போர் செய்ய இயலாத இந்த நிலையில் சோழ அரசனும் கொடும்பாளூர்க் குறுநில மன்னனும் படையெடுத்து வடபாண்டி நாட்டைக் கைப்பற்றிவிட்டனர். இளைஞனான இராசசிம்ம பாண்டியன் சோழனாலும், கொடும்பாளூர்க் குறுநில மன்னனாலும் துரத்தப்பட்டு அவர்களுக்கு அஞ்சி இலங்கைத் தீவுக்கு ஓடி விட்டான்.
கோப்பெருந்தேவியாகிய வானவன்மாதேவி தென்பாண்டி நாட்டில் பறளியாற்றின் கரையிலிருந்த புறத்தாய நாட்டுக் கோட்டையில் போய்த் தங்கியிருந்தார். கணவனை இழந்த கவலை, போரில் தோற்று இலங்கைத் தீவுக்கு ஓடிய மகனைப் பற்றிய வருத்தம், வடபாண்டி நாட்டை அபகரித்துக் கொண்ட எதிரிகள் தென்பாண்டி நாடாகிய நாஞ்சில் நாட்டுக்கும் படையெடுத்து வந்து விடுவார்களோ என்ற பயம் ஆகியவற்றால் தவித்துக் கொண்டிருந்த வானவன்மாதேவியைத் துணிவான ஒரு முடிவுக்கு வரச் செய்த பெருமை அந்த மாலை நேரத்துக்குத்தான் உண்டு.
புறத்தாய நாட்டுக் கோட்டையில் வந்து தங்கியிருந்த வானவன்மாதேவி தென்பாண்டிக் குலதெய்வமாகிய குமரியன்னையைத் தொழுவதற்காக வந்திருந்தார். பறளியாற்றின் கரையிலிருந்து குமரித்துறை வரையிலும் அங்கங்கே வாழையும், தோரணமும், பாளையும் கட்டி மகாராணியாரின் வருகையில் தங்களுக்குள்ள ஆர்வத்தை அலங்கரித்துக் காட்டியிருந்தனர் நாஞ்சில் நாட்டுப் பெருமக்கள். கோட்டையிலிருந்து இருபுறமும் திறந்த அமைப்புள்ள பல்லக்கில் பயணம் செய்த தேவிக்கு கூட்டத்தைக் கண்டு புதிய ஊக்கம் பிறந்தது. கணவன் மறைந்த சோகமும், மகன் ஓடிப்போன துன்பமும் நினைவின் அடிப்பள்ளத்தில் அமுங்கிவிட்டன.
'புவன முழுதுடைய மகாராணி வானவன்மாதேவி வாழ்க!' என்று நாஞ்சில் நாட்டு வேளாளப் பெருமக்களின் பல்லாயிரம் பல்லாயிரம் குரல்கள் வாழ்த்தொலி செய்தபோது, சோகத்தில் புழுங்கிய அரசியின் உள்ளம் பெருமிதமுற்றது.
'எதிரிகள் கைப்படாமல் எஞ்சியிருக்கும் தென்பாண்டி நாட்டை என் உயிரின் இறுதி மூச்சு உள்ளவரையில் அன்னியர் வசமாக விடமாட்டேன்' என்ற சபதத்தைத் தனக்குத் தானே செய்து கொண்டார், மகாராணி வானவன் மாதேவி. கன்னியாகுமரியை வானவன்மாதேவி அடைந்தபோது ஏற்கெனவே வேறு சில முக்கியப் பிரமுகர்கள் அங்கு முன்பே வந்து காத்திருந்தனர். அப்படிக் காத்திருந்தவர்கள் எல்லோரும் நாஞ்சில் நாட்டு அரசியல், கலை, அமைதி ஆகிய பலப்பல துறைகளில் அக்கறையுள்ளவர்கள் ஆவர்.
கோட்டாற்றில் தங்கியிருக்கும் பாண்டியர்களின் தென் திசைப் பெரும் படைக்குத் தளபதியான வல்லாளதேவன், நிலந்தரு திருவிற்பாண்டியன் காலத்திலிருந்து வழிமுறை வழிமுறையாக அறிவுப்பணி புரிந்துவரும் ஆசிரிய மரபில் வந்த அதங்கோட்டாசிரியர், காந்தளூர்ச்சாலை மணியம்பலங்காக்கும் பவழக்கனிவாயர் முதலிய பிரமுகர்கள் மகாராணியாரைப் பணிவன்புடன் எதிர்கொண்டு வரவேற்றனர்.
கன்னியாகுமரிக் கடலைக் காண வேண்டுமானால் பௌர்ணமி தினத்தின் மாலை நேரத்தில் காண வேண்டும். அன்று தற்செயலாக வாய்த்த ஒரு பெரும் வாய்ப்பைப் போலப் பௌர்ணமியும் வாய்த்திருந்தது.
"மகாராணி! இப்படி வாருங்கள்? உங்களுக்கு ஓர் அதிசயத்தைக் காட்டுகிறேன்" என்று சிரித்துக் கொண்டே கூறினார் அதங்கோட்டாசிரியர். வானவன்மாதேவியையும் மற்றவர்களையும் கடலோரத்துப் பாறை ஒன்றுக்கு அழைத்துச் சென்று கிழக்கிலும், மேற்கிலும் சுட்டிக் காட்டினார் அவர்.
மூன்று புறமும் நீல நெடுங்கடல் தரங்கங்கள் என்னும் கரங்கொட்டிப் பண்பாடும் அந்த இடத்தில் அவ்வற்புதக் காட்சியை மகாராணி அதற்குமுன் கண்டதில்லை. "ஆசிரியப் பெருந்தகையே! இது என்ன விந்தை! இந்த இடத்தில் மட்டும் இரண்டு சூரியன்களா?" என்று கிழக்கிலும் மேற்கிலும் தனித்தனியே கடலின் இரு கோடி விளிம்புகளிலும் தெரியும் இரண்டு ஒளி வட்டங்களைப் பார்த்துக் கொண்டே அதங்கோட்டாசிரியரை வியப்புடன் கேட்டார் அரசி.
அந்தக் கேள்வியைக் கேட்டு அதங்கோட்டாசிரியர் சிரித்தார்.
"மகாராணி! இவை இரு சூரியன்கள் அல்ல. ஒன்று சந்திரன்; மற்றொன்று சூரியன். பௌர்ணமி நாட்களில் மட்டும் குமரித்தாய் இந்த அற்புதக் காட்சியை முழு அழகோடு நமக்குக் காட்டுகிறாள். சந்திரோதயத்தையும், சூரியாஸ்தமனத்தையும் ஒரே சமயத்தில் இந்த இடத்தில் நின்று காணலாம். சக்கரவர்த்தி இங்கு வரும்போதெல்லாம் பௌர்ணமி நாளாகப் பார்த்துத்தான் வருவார். எத்தனை முறை பார்த்தாலும் இது அவருக்கு அலுக்காது."
காலஞ்சென்ற கணவரைப் பற்றிய பேச்சைக் கேட்க நேர்ந்ததும் மகாராணியாருக்குக் கண் கலங்கி விட்டது. அதங்கோட்டாசிரியர் உதட்டைக் கடித்துக் கொண்டார். பேச்சுப் போக்கில் தாம் செய்த தவறு அவருக்குப் புரிந்து விட்டது.
"அடாடா, மகாராணியாருக்கு வருத்தத்தை நினைவு கூறும்படியான விதத்தில் அல்லவா சக்கரவர்த்தியைப் பற்றி ஞாபகப்படுத்தி விட்டேன்; என்னை மன்னிக்கவேண்டும்" என்று அவர் மெல்லிய குரலில் கூறினார்.
வானவன்மாதேவி கண்களைத் துடைத்துக் கொண்டார். மறுபடியும் அந்த அதிசயக் காட்சியைப் பார்த்தார். அதே சமயத்தில் தளபதி வல்லாளதேவன் மற்றொரு அதிசயக் காட்சியைக் கண் இமைக்காமல் உற்றுப் பார்த்துக் கொண்டே நின்றான்.
எந்தப் பாறையில் நின்று மகாராணியாரும், மற்றவர்களும் கடலில் தென்பட்ட அதிசயத்தை நோக்கிக் கொண்டிருந்தார்களோ, அதன் வடமேற்கு மூலையில் மாட்டுக் கொம்பு போலக் கீழே விரிந்து மேலே நுனிகள் ஒன்று கூடும் பாறைகள் இரண்டு இருந்தன. அந்தப் பாறைகளின் முக்கோண வடிவான இடைவெளியில் இரண்டு சிவப்புத் தலைப்பாகைகள் தெரிந்தன. பாறையின் மேல் நின்ற மற்றவர்களுக்கு அது கண் பார்வையிலே பட்டிருக்க முடியாது. பாறையின் உயர்ந்த இடம் எதுவோ, அதில் வல்லாளதேவன் நின்று கொண்டிருந்ததனால் தற்செயலாக அது அவன் பார்வையில் பட்டது. தங்களோடு வந்திருந்த பரிவாரத்தைச் சேர்ந்த வீரர்களில் யாராவது இருவர் கடற்காட்சியை வேடிக்கை பார்ப்பதற்காக இறங்கிப் போய் அந்தப் பாறை இடுக்கில் நின்று கொண்டிருக்கிறார்களோ என்ற இயல்பான எண்ணம் தளபதிக்கு உண்டாயிற்று. 'பரிவாரத்து வீரர்கள் கோவில் வாசலிலேயே தங்கிவிட்டார்களே! தவிர அவர்களில் யாரும் சிவப்புத் தலைப்பாகை அணிந்தவர்கள் இல்லையே?' என்று ஐயம் மெல்ல அவன் மனத்தில் எழுந்தது. 'தான், அதங்கோட்டாசிரியர், மகாராணியார், பவழக்கனிவாயர் ஆகிய நால்வரைத் தவிர வேறு வீரர்கள் எவரும் கடற்கரைப் பாறைக்கு வரவே இல்லை' என்று உறுதியாகத் தெரிந்து கொண்டபின் தளபதியின் சந்தேகம் வலுப்பட்டது. பாறையை ஒட்டித் திடீர் திடீரென்று ஆள் உயரத்துக்கு அலைகள் எழும்போது அந்தத் தலைப்பாகைகள் அவன் கண் பார்வைக்குத் தெரியாமல் மறைந்து விடும். அலைகள் தணிந்த போது மறுபடியும் தெரியும்.
தளபதி வல்லாளதேவன் நீண்ட நேரமாக அந்தப் பாறை இடுக்கையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். மற்ற மூவரும் தேவியின் ஆலயத்துக்குத் திரும்புவதற்காகப் பாறையிலிருந்து இறங்கத் தொடங்கிவிட்டனர்.
"என்ன ஐயா, தளபதியாரே! கோவிலுக்கு வரவில்லையா? வீரர்களுக்கு அழகு உணர்ச்சி குறைவு என்று சொல்லுவார்கள். நீர், கடலின் அழகை வைத்த கண் வாங்காமல் காண்பதைப் பார்த்தால் வீரர்களுக்குத்தான் அழகு உணர்ச்சி அதிகமென்று துணிந்து கூறிவிடலாம் போலிருக்கிறதே?" என்றார் அதங்கோட்டாசிரியர்.
"அழகை எங்கே அவர் பார்க்கப் போகிறார்? இந்தக் கடலில் எத்தனை போர்க் கப்பல்களை எப்படி எப்படியெல்லாம் செலுத்தலாம் என்பதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருப்பார்," என்றார் பவழக்கனிவாயர்.
"உங்கள் இரண்டு பேருடைய அநுமானங்களுமே தவறு. நான் வேறொரு காரியமாக நிற்கிறேன். சிறிது தாமதமாகலாம். நீங்கள் மகாராணியாரை ஆலயத்துக்கு அழைத்துச் செல்லுங்கள்" என்று தளபதி அவர்களுக்கு மறுமொழி கூறி அனுப்பினான்.
அவர்கள் மூவரும் பாறையிலிருந்து இறங்கிச் செல்லத் தொடங்கிய அதே சமயத்தில் கீழே கடற்கரைப் பாறையின் பிளவில் தெரிந்த அந்தச் சிவப்புத் தலைப்பாகைகள் மெல்ல நகர்ந்து அசைவதை வல்லாளதேவன் கண்டான். எண்ணற்ற தீரச் செயல்களைச் செய்து பழக்கப்பட்டவனும், தென்கடற் கோடியில் பல கடற்போர்களில் வாகை சூடியவனுமான தென் திசைத் தளபதியின் மனத்தில் இனம் புரியாத திகில் பரவியது. சந்தேகங்களும், குழப்பங்களும் அடுக்கடுக்காகத் தோன்றின.
மாலை ஒளி குறைந்து பொழுது மங்கிக் கொண்டே வந்தது. ஆனாலும் முழுமதியின் நிலா ஒளியில் அந்த இடத்தை அவன் நன்றாகப் பார்க்க முடிந்தது. பார்த்துக் கொண்டிருக்கும் போதே ஒரு பெரிய அலை பாய்ந்து வந்து அந்தப் பாறைப் பிளவவ மறைத்தது. வல்லாளதேவன் திரும்பிப் பார்த்தான். கோவில் வாயிலில் கண்ணைக் கவரும் தீபாலங்காரங்களுக்கிடையே அர்ச்சகர்களின் வாழ்த்தொலியும், மங்கள வாத்தியங்களின் இன்னிசையும், அடிகள்மார் பாடும் பண்ணிறைந்த பாட்டொலியுமாக மகாராணியாருக்கு வரவேற்பு நடந்து கொண்டிருந்தது.
ஒரே ஒரு கணம்! அவன் மனத்தில் ஒரு சிறிய போராட்டம்! கோவில் வாயிலுக்குப் போய்க் கோலாகலமான வரவேற்பில் கலந்து கொள்வதா? கீழே இறங்கி அந்தக் கடலோரத்துப் பாறைப் பிளவில் மறைந்து கொண்டிருக்கும் 'தலைப்பாகை'களைப் பின் தொடர்வதா? இன்னும் ஓரிரு விநாடிகள் தாமதித்தாலும் மேடும் பள்ளமுமாக முண்டும் முடிச்சுமாக நெடுந்தூரம் பரவியிருக்கும் அந்தப் பாறை பிரதேசத்தில் குறிப்பிட்ட உருவங்கள் எந்த வழியாகச் சென்று எப்படி மறையுமென்று கூற முடியாது. ஆர அமரச் சிந்தித்து நிதானமாக ஒரு முடிவுக்கு வர அவனுக்கு அவகாசமில்லை.
அரைப் பனை உயரமுள்ள அந்தப் பாறை விளிம்புக்கு வந்து வேகமாகக் கீழே மணற் பரப்பில் தாவிக் குதித்தான். முழங்காலளவு கடல் நீரில் நடந்து சென்றால் தான் அந்தப் பாறைப் பிளவை நெருங்க முடியும். தளபதியின் கால்களில் அதற்கு முன்பில்லாத சுறுசுறுப்பும் விரைவும் ஏற்பட்டன. நீரைக் கடந்து செல்லும் போது குறுக்கிட்ட இரண்டொரு அலைகள் அவனை நன்றாக நனைத்துவிட்டன. வேகமாக வந்து முகத்தில் அறைந்த கடல் நீர் மூக்கின் வழியே வாயில் புகுந்து உப்புக் கரித்தது. கண்கள் காந்தின. எதிரே பார்க்காமல் நடந்ததால் பாறைகளில் இடித்து முழங்காலில் இரத்தம் கசிந்தது.
இடுப்பிலிருந்த உடைவாளை இறுக்கிப் பிடித்துக் கொண்டு தட்டுத் தடுமாறி ஏறி, முன்பு சிவப்புத் தலைப்பாகைகள் தெரிந்த பாறையின் இடைவெளியில் குதித்தான். சுற்றும் முற்றும் பார்த்தான்; யாரையும் காணவில்லை.
'இதென்ன மாயமா? மந்திரமா? இவ்வளவு வேகமாக அந்த உருவங்கள் எப்படி வெளியேறியிருக்க முடியும்? ஒருவேளை அவை பொய்த் தோற்றமாக நம்முடைய கண்களுக்கு மட்டும் தெரிந்த பிரமையா' என்று எண்ணிக் கொண்டே மற்றொரு வழியாகக் கீழே செல்லும் பாதையில் வேகமாக நடந்தான். இரண்டு மூன்று அடிகளே நடந்திருப்பான்; வழியின் திருப்பத்திலிருந்து இருபுறமும் இரண்டு வாள் நுனிகள் பாய்ந்து நீண்டன!
---------
1.2. ஆலயத்தில் ஆபத்து
ஆலயத்து வாசலில் மகாராணி வானவன்மாதேவியாருக்கு வரவேற்பு நடந்து கொண்டிருந்த போது வேறு இரண்டு புதிய பெண்கள் அங்கே பல்லக்கு மூலமாக வந்து சேர்ந்தனர். இந்தக் கதையின் எதிர்கால நிகழ்ச்சிகளில் எத்தனையோ பல மாறுதல்களை உண்டாக்கப் போகும் அழகும் இளமையும் நிறைந்த அந்தப் பெண்மணிகளை இங்கேயே நேயர்களுக்கு அறிமுகப்படுத்தி விட வேண்டியது அவசியம் தான். தரைப் பிரதேசத்தின் முடிவிடமாகிய அந்தக் கன்னியாகுமரிக் கோவில் முன்றிலில் வடக்கிலிருந்தும், கிழக்கிலிருந்தும், மேற்கிலிருந்தும் மூன்று பெரிய சாலைகள் திரிசூலத்தின் நுனியைப் போல வந்து ஒன்று கூடின.
நேர் வடக்கே செல்லும் சாலை புறத்தாய நாட்டுக் கோட்டை வழியே மதுரைக்கும், அதற்கப்பால் உறையூர், காஞ்சி முதலிய வடபால் நாட்டுத் தலை நகரங்களுக்கும் போவதற்குரிய மிக முக்கியமான இராஜபாட்டையாகும்.
கிழக்கே செல்லும் சாலை அழகிய பாண்டியபுரம், பூதப்பாண்டி, ஆரல்வாய் மொழி, கோட்டாறு முதலிய நாஞ்சில் நாட்டுக் கீழ்ப்பகுதி ஊர்களுக்குப் போவது.
மேற்கே செல்லும் சாலை, சரித்திர ஏடுகளில் இடந்தோறும் பொன் எழுத்துகளால் எழுதப்பட வேண்டிய பெருமையை உடையது. அதுவே காந்தளூர்ச்சாலை. கடற்கரை ஓரமாகவே மேற்கே சென்று தென் மேற்குக் கோடியிலுள்ள விழிஞம் என்னும் துறைமுகத்தோடு முடிவடைகிறது அது. தென்பாண்டி நாட்டின் படையெடுப்புகளுக்கும், வெற்றி தோல்விகளுக்கும் இந்த முப்பெரும் இராஜபாட்டைகள் எவ்வளவுக்கு எவ்வளவு காரணமாக இருந்திருக்கின்றன என்பதைக் கதைப் போக்கில் நேயர்கள் தெரிந்து கொள்வார்கள்.
மகாராணியாரைக் கோவில் வாயிலில் நிறுத்தி விட்டு நடுவே இந்தச் சாலைகளைப் பற்றிக் கூற நேர்ந்ததற்குக் காரணம், கதையில் புதிதாகப் பிரவேசிக்கும் பெண்கள் இருவரும் முறையே கீழ்ப்புறத்துச் சாலையிலிருந்தும், மேல்புறத்துச் சாலையிலிருந்தும் பல்லக்குகளில் வந்து இறங்குவதுதான்.
கோவிலுக்குள்ளே செல்வதற்கு இருந்த வானவன்மாதேவி, அதங்கோட்டாசிரியர், முதலியவர்கள் இருபுறத்துச் சாலைகளிலிருந்தும் பல்லக்குகள் வருவதைப் பார்த்துவிட்டுச் சற்றுத் தயங்கி நின்றனர்.
சிறிது தொலைவில் அந்தப் பல்லக்குகள் வந்து கொண்டிருக்கும் போதே அவைகளில் வருகிறவர்கள் யாராயிருக்கலாம் என்பதைப் பற்றி அதங்கோட்டாசிரியர் சொல்லிவிட்டார். "மகாராணி! என்னுடைய பெண் அநங்க விலாசினி தங்களைத் தரிசிப்பதற்காகக் காலையிலேயே என்னோடு புறப்பட்டு வருகிறேனென்றாள். நான் காந்தளூர் மணியம்பலத்திலிருந்து பவழக்கனிவாயரையும் அழைத்துக் கொண்டு வர வேண்டியிருந்ததனால் அவளை உடன் அழைத்துக் கொண்டு வர முடியாமற் போய்விட்டது. மேற்கிலிருந்து வருகிற பல்லக்கு அவளுடையதாகத்தான் இருக்க வேண்டும். கிழக்கேயிருந்து வருகிற பல்லக்கு வல்லாளதேவனின் தங்கை பகவதியினுடையது. நீங்கள் வருவதற்கு முன் நானும் வல்லாளனும் பேசிக் கொண்டிருந்த போது, தன் தங்கை உங்களைக் காண வரப்போவதாகச் சொன்னான்" என்று அதங்கோட்டாசிரியர் மகாராணி வானவன்மாதேவியிடம் கூறிய அனுமானம் பிழையில்லாமல் இருந்தது.
"மிகவும் நல்லது! தென்பாண்டி நாட்டில் தமிழறிவு பரப்பும் உங்கள் மகளையும், வீரப் பொறுப்பை மேற்கொண்டிருக்கும் தளபதியின் சகோதரியையும் காணும் பேறு எனக்குக் கிடைத்ததே! அது என்னுடைய பாக்கியம்" என்று உபசாரமாகச் சொன்னார் மகாராணி வானவன்மாதேவி!
கோவிலுக்கெதிரே கூப்பிடு தூரத்தில் இரண்டு சாலைகளும் ஒன்று கூடுமிடத்தில் பல்லக்குகள் இறங்கி வைக்கப்பட்டன. இரண்டு பெண்களும் கீழே இறங்கி மகாராணிக்கு மரியாதை செய்யும் பாவனையில் அடக்க ஒடுக்கமாக நடந்து வந்தனர். அவர்களில் வலது புறமாக நடந்து வருகிறாளே, செந்தாழை மடல் போன்ற நிறமும், சிரிப்பைச் சிறை பிடித்து வைத்திருக்கும் செவ்வாயுமாக; அவள் தான் அதங்கோட்டாசிரியரின் மகள் அநங்க விலாசினி. கொடி துவள்வது போல ஒற்றை நாடியான உடல்; ஒருமுறை பார்த்தால் எவ்வளவு மறதியுள்ளவர்களுக்கும் நன்றாக மனத்தில் பதிந்து விடக்கூடிய எழில் பொழியும் வட்ட மதிமுகம், அஞ்சனம் தீட்டிய கரு நெடுங்கண்கள், இப்படித்தான் நடக்க வேண்டுமென்று மாதிரிக்கு நடந்து காட்டுவது போல், மானின் குழைவும் அன்னத்தின் மென்மையும் கலந்த ஒருவகை நடையில் அவள் மெல்ல நடந்து வந்தாள். காலடி பெயர்த்து வைக்கும் போதெல்லாம், 'இந்தப் பட்டுப் பாதத்தின் மேல் தொட்டுத் தழுவும் உரிமை எனக்கு இருக்கிறது' என்று தன் பெருமையை வாய்க்கு வாய் சொல்லிக் கொள்வது போலச் சிலம்பு ஒலித்தது. கூந்தலைக் கொண்டையாக உயர்த்தி முடிந்து அதில் பெயர் பெற்ற நாஞ்சில் நாட்டு முல்லைப் பூக்களின் சரத்தைப் பிறைச் சந்திர வடிவில் சூடிக்கொண்டிருந்தாள். செம்பொன்னில் வார்த்தெடுத்த உயிர்ச்சிலை ஒன்று நடந்து வருவது போல் அதங்கோட்டாசிரியரின் மகள் வந்து கொண்டிருந்தாள் என்றால் போதும்; அதற்கு மேல் விவரிக்கத் தேவையில்லை.
இனி அவளுக்கு இடதுபுறம் மாநிறமும் சற்றே உயர்ந்து வாளித்த தோற்றமுமாக நடந்துவரும் தென்பாண்டித் தளபதியின் தங்கை பகவதியைக் காணலாம். அதங்கோட்டாசிரியரின் மகளைப் புனிதமான பாரிஜாதப் பூவின் அழகுக்கு ஒப்பிட்டால், தளபதியின் தங்கையை, மோந்து பார்க்குமளவில் மனத்தை மயக்கிப் போதையூட்டும் குடை மல்லிகைப் பூவுக்குத்தான் ஒப்பிட வேண்டும்.
பாலை பருகினால் கழுத்து வழியே பால் தொண்டைக்குள் இறங்குவது தெரியும் என்று சொல்லும்படியான அவ்வளவு சிவப்புடையவள் விலாசினி; பகவதியோ மாநிறத்தாள்; ஆனால் விலாசினியின் அழகிலும் இல்லாத ஒரு வகை மிடுக்கும், கம்பீரமும் பகவதியின் கட்டமைந்த தோற்றத்தில் பொருந்தியிருந்தன. நிமிர்ந்த நடை! நேரான பார்வை; கணீரென்ற பேச்சு; கலீரென்ற சிரிப்பு; இளமைப் பருவத்தின் துடிதுடிப்பு ஒவ்வோர் அணுவிலும் நிறைந்து பொங்கிப் பூரித்து நிற்கும் அமுதக் கலசத்தைப் போன்ற உடல்; கோடு கீறினாற் போன்ற புருவங்களின் கீழே சேல் மீன்களென ஆண்மையின் நெஞ்சாழத்தைக் கிழித்துப் பார்க்கும் கூரிய விழிகள்; நீண்ட நாசி; அலட்சிய பாவமான ஒருவித நெளிவு திகழும் வாயிதழ்கள். பெண் யானை நடந்து வருவது போன்ற நடை.
"சந்தேகமே இல்லை. இவள் ஒரு வீர புருஷனின் தங்கைதான்" என்று பார்த்தவுடனே சொல்லி விடலாம்.
பகவதியும் விலாசினியும், மேகமும் மின்னலும் அருகருகே நடந்து சென்றது போல் சென்று, கோவில் வாசலில் மகாராணியை வணங்கினார்கள்.
"குழந்தைகளே! வாருங்கள்! உங்கள் பல்லக்குகள் வருவதைப் பார்த்துவிட்டுத்தான் உள்ளே போகாமல் நிற்கிறோம். உங்களைப் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி. இப்போதுதான் நீங்கள் இருவரும் வருகிற செய்தியை அதங்கோட்டாசிரியர் சொன்னார். வாருங்கள்; கோவிலுக்குள் சென்று தரிசனத்தை முடித்துக் கொண்டு வருவோம்" என்று சொல்லி, அந்த இரு பெண்களையும் தன் இருபுறமும் அணைத்தாற் போலக் கைகளால் தழுவிக் கொண்டு கோவிலுக்குள் நுழைந்தார் மகாராணி.
"ஆசிரியரே! வல்லாளதேவனை ஏன் இன்னும் காணவில்லை? அந்தப் பாறையில் நின்று கொண்டு இன்னும் என்ன செய்து கொண்டிருக்கிறானோ?" என்று ஆலயத்துக்குள் நுழையும் போது பவழக்கனிவாயர் அதங்கோட்டாசிரியரின் காது அருகே மெல்லக் கேட்டார்.
"வராமல் எங்கே போகப் போகிறான்? அவனுடைய தங்கை வேறு வந்திருக்கிறாள். ஏதாவது முக்கியமான காரியம் இருக்கும்! விரைவில் வந்துவிடுவான். நீங்கள் வாருங்கள்; நாம் உள்ளே போகலாம்" என்று ஆசிரியர் அவருக்குச் சமாதானம் கூறினார்.
கடற்கரையோரக் கோவிலாகையினால் மிகவும் தணிவாகக் கட்டப்பட்டிருந்தது. மதிற் சுவர்களில் பலகணிகள் அமையப் பெறவில்லை. உள்ளே வெளிச்சம் வருவதற்காக மேற்புறத்து விதான சுவரில் வட்ட வட்டமாக இடைவெளிகள் விடப்பட்டிருந்தன.
காற்று நுழைவதற்கு வசதிகளே இல்லாமலிருந்தும் கடலை ஒட்டி இருந்ததால் குளிர்ச்சியாக இருந்தது. மகாராணியாரின் விஜயத்தை முன்னிட்டுக் கோவிலுக்குள் விசேஷ தீபாலங்காரங்கள் செய்திருந்த போதிலும் மூலை முடுக்குகளில் தேங்கி நின்ற பயங்கர இருளைச் சின்னஞ் சிறு தீபங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
கல்பகோடி காலமாக மூன்று மகா சமுத்திரங்களும் ஒன்று சேரும் அந்த இடத்தில் கன்னித் தவம் இயற்றிக் கொண்டிருக்கும் குமரித் தாயின் தரிசனம் வானவன்மாதேவியின் மனத்தில் நிர்மலமானதொரு சாந்தியை உண்டாக்கியது. கர்ப்பக்கிருகத்தில் குமரித் தேவியின் நெற்றியிலிருந்து மின்னல் கீற்றுப் போல் வைர வைடூரியங்களில் இழைத்த திலகம் ஒளி வீசி மின்னியது.
'அரசி! நான் தமிழ் நிலத்தின் எல்லையைக் காக்கும் தமிழ்த்தேவி. நீ தமிழகத்தையே ஒரு குடைக்கீழ் ஆண்ட மன்னாதி மன்னனான ஒருவனை மணந்த பாண்டிமாதேவி. அஞ்சாதே! என் அருள் உனக்கு உண்டு' என்று திருநுதலின் புருவங்களுக்கிடையே அருளொளி வீசும் திலகச் சுடர் சொல்லாமல் சொல்லுகிறதோ?
"தேவீ! இந்தச் சந்நிதிக்கு நேரே கடல் தெரியும்படியாக மதிற் சுவரில் ஒரு துவாரம் இருந்ததாம். அன்னையின் திலகச் சுடரொளி கண்டு கவரப்பட்ட எத்தனையோ மரக்கலங்களும், கப்பல்களும் போக வேண்டிய துறை இதுதானோ என மயங்கி வந்து பாறைகளில் மோதிச் சிதைந்ததுண்டாம். இப்போது அந்தத் துவாரத்தை மூடி விட்டார்கள்" என்று கூறினார் பவழக்கனிவாயர்.
பக்திப்பரவசம் நிறைந்த முகபாவத்தோடு சந்நிதியையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த மகாராணி பவழக்கனிவாயர் கூறியதைக் கேட்டுத் தலையசைத்தார். தன் இருபுறமும் நின்று கொண்டிருந்த இளம் பெண்களைப் பார்த்து ஒருமுறை புன்முறுவல் பூத்தார். பகவதியும் விலாசினியும் பதிலுக்கு மரியாதையாகப் புன்னகை செய்தார்கள்.
அர்ச்சகர் எல்லோருக்கும் குங்குமம், சந்தனம் ஆகிய பிரசாதங்களைக் கொண்டு வந்து அளித்தார். குங்குமம் முதலியவற்றை அர்ச்சகர் கொண்டு வந்த போது மகாராணி கைகூப்பி வணங்கிவிட்டுத் திருநீற்றை மட்டும் எடுத்து அணிந்துகொண்டார்.
"இந்தக் குழந்தைகளுக்கு நிறையக் குங்குமமும் சந்தனமும் கொடுங்கள். இவர்கள் தான் பூவும் குங்குமமுமாகச் சந்தனமும் மஞ்சளும் பூசிப் பெருவாழ்வு வாழ வேண்டியவர்கள். எங்களையெல்லாம் விடக் கன்னியாக்குமரியம்மன் மேல் இவர்களுக்குத்தான் உரிமை அதிகம். அவளைப் போலவே இவர்களும் கன்னிகைகள். ஆனால் என்றைக்குமே அப்படி இருந்து விடமாட்டார்கள்!" என்று மகாராணி சிரித்துக் கொண்டே கூறிய போது எல்லோரும் சிரித்தார்கள். தாழ்வான குறுகிய அந்த முன் மண்டபத்தில் ஏககாலத்தில் அத்தனை சிரிப்பொலிகளும் எதிரொலித்தன. கேலிக்கு ஆளான பகவதியும் விலாசினியும் கன்னஞ் சிவக்க முறுவலித்தவாறு தலை குனிந்தார்கள். குனிந்த தலை நிமிராமலே குங்குமமும், சந்தனமும் எடுத்துக் கொண்டார்கள்.
"குழந்தைகளே! வாருங்கள். கர்ப்பக்கிருகத்தைச் சுற்றியிருக்கும் இந்தப் பிரகாரத்தை வலம் வரலாம்" என்று அவர்கள் இருவரையும் இரண்டு கைகளிலும் பற்றிக் கொண்டு பிரகாரத்துக்குள் நுழைந்தார் மகாராணி.
இருண்டு குறுகலாயிருந்த அந்தச் சிறிய பிரகாரத்தில் ஒளி மங்கிய அகல் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. மகாராணியாரும் பெண்கள் இருவரும் தவிர மற்றவர்கள் எல்லோரும் மண்டபத்திலே நின்று விட்டார்கள். குறுகலான வழியில் எல்லோரும் ஒரே சமயத்தில் நுழைந்தால் இடையூறாக இருக்குமென்று எண்ணி அதங்கோட்டாசிரியர், பவழக்கனிவாயர் முதலியவர்கள் கூட வெளியே நின்று கொண்டனர்.
விலாசினியிடமும், பகவதியிடமும் ஏதேதோ சிரித்துப் பேசிக் கொண்டே பிரகாரத்தில் நடந்தார் மகாராணி. பிரகாரத்தின் மேற்புறச் சுவரில் மூன்று பாகத்துக்கு ஒரு துவாரமாக வட்டத் துவாரங்கள் இருந்தன.
அந்த வட்ட இடைவெளிகளின் மூலம் நீலவானத்தின் சின்னஞ் சிறு நட்சத்திரப் பூக்கள் பௌர்ணமி நிலா ஒளியில் அழகாகத் தோன்றின.
மகாராணியின் கையைப் பிடித்துக் கொண்டே நடந்த பகவதி மேலே பராக்குப் பார்த்தவாறே சென்றாள். விலாசினி தரையைப் பார்த்துக் கொண்டே குனிந்து சென்றாள். அவர்கள் இருவருக்கும் நடுவே தியானத்தினால் குவிந்த கண்ணிமைகளுடனே பரவசத்தோடு மெல்ல நடந்து கொண்டிருந்தார் மகாராணி வானவன்மாதேவி.
பிரகாரத்தின் கிழக்கு மூலையும் வடக்கு மூலையும் சந்திக்கிற திருப்பத்தை நெருங்கிய போது மேலே பார்த்துக் கொண்டே வந்த பகவதி 'வீல்' என்று பயங்கரமாக அலறினாள்! முன்னால் நடந்து கொண்டிருந்த மகாராணியாரையும் விலாசினியையும் குபீரென்று பாய்ந்து நாலைந்தடி பின்னுக்கு இழுத்துக் கீழே தள்ளினாள் அவள். தள்ளிய வேகத்தில் அவர்களைப் போலவே தானும் நிலை குலைந்து கல் தளத்தில் விழுந்தாள். "என்ன? ஏன் இப்படிச் செய்தாய்?" என்று மகாராணியும், விலாசினியும் இரைந்த குரலில் கத்தினார்கள். ஆனால் அவர்களுக்குப் பகவதி பதில் சொல்வதற்கு முன்பே அதன் காரணம் கண் காணத் தெரிந்து விட்டது.
பிரகாரத் திருப்பத்தின் மேற்புறத்துத் துவாரத்தில் கூர்மையான பெரிய வேல் நுனி ஒன்றும் அதைப் பிடித்துக் கொண்டிருக்கும் வலிமை வாய்ந்த முரட்டுக் கையும் தெரிந்தன. மறுகணம் படீர் என்ற ஓசையோடு அந்த வேல் கல்தளத்தில் விழுந்து முனை மழுங்கியது.
அவர்கள் தொடர்ந்து சென்றிருந்தால் மூவரில் நடுநாயகமாக நடந்த மகாராணியாரின் மேல் பாய்ந்திருக்க வேண்டிய வேல் அது. வேல் கல்தளத்தில் விழுந்த ஓசை அடங்குவதற்குள் மேலே விதானத்தில் யாரோ ஆள் ஓடும் ஓசை திடுதிடுவென்று கேட்டது.
அதற்குள் பகவதியின் அலறலையும் கல்லில் வேல் விழுந்ததனால் உண்டான ஓசையையும் கேட்டு முன் மண்டபத்தில் நின்று கொண்டிருந்த அதங்கோட்டாசிரியர் முதலியவர்களும் மற்ற வீரர்களும் பதறியடித்துக் கொண்டு பிரகாரத்துக்குள் வேகமாக ஓடிவந்தனர்!
"என்ன? என்ன? இங்கே என்ன நடந்தது? ஏது இந்த வேல்?" என்ற கேள்விக் குரல்கள் கிளம்பின.
"மேலே இருந்து யாரோ துவாரத்தின் வழியாக வேல் எறிந்து விட்டு ஓடுகிறான். மதில் வழியாக மேலே ஏறிப் பிடியுங்கள் ஓடுங்கள்!" என்று வீரர்களை நோக்கிக் கூச்சலிட்டாள் பகவதி.
----------------
1.3. தளபதி கைப்பற்றிய ஓலை
இதோ இன்னும் ஓரிரு விநாடியில் இறப்பது உறுதி என்று எண்ணி, எல்லாம் ஓய்ந்து தளர்ந்து சாவுக்குத் தயாராகும்படியான சூழ்ச்சிகளெல்லாம் தளபதி வல்லாளதேவனின் வாழ்வில் கணக்கின்றி ஏற்பட்டிருக்கின்றன. தன் எதிரிகள், தன்னைக் கொல்வதற்காகத் துடித்துக் கொண்டிருப்பவர்கள் - இவர்களுக்கிடையில் கூட வேடிக்கைக்காக வலுவில் போய் மாட்டிக் கொண்டு முடிவில் சிரித்தபடியே தப்பி வருவது அவன் வழக்கம். எதற்கும், எப்போதும் அஞ்சியறியாத நெஞ்சுரம் கொண்ட வல்லாளதேவன் அன்று அந்த இரவில் கடலோரத்துப் பாறைகளின் நடுவில் இரண்டு பக்கமிருந்தும் பாய்ந்து தன் தோள்பட்டையில் உரசும் வாள் நுனிகளைப் பார்த்ததும் ஒரு கணம் அப்படியே திகைத்து நின்றுவிட்டான்.
அவன் பாதங்கள் முன்னும் நகரவில்லை; பின்னும் நகரவில்லை. உயிருள்ள ஆளாக இயங்கி நடந்து வந்தவன் திடீரென்று சிலையாக மாறிவிட்டது போல் ஆடாது அசையாது நின்றான். கொஞ்சம் நகர்ந்தாலோ, அசைந்தாலோ வாள்கள் தோளில் அழுந்திவிடும். அவன் இடையிலும்தான் வாள் இருந்தது. இடுப்பில் உறைக்குள் தொங்கும் அந்த வாளை உருவி எடுக்கக் கூட அவன் கைகள் அசைய முடியாது. அப்படிப்பட்ட நிலை!
முகத்தைத் திருப்பாமல் நின்ற வண்ணமே விழிகளின் இருபக்கத்துப் பார்வையும் பக்கவாட்டில் சாய்ந்து நிற்பவர்களைப் பார்க்க முயன்றான் தளபதி. அவன் விழிகள் இரண்டும் காதைத் தொட்டு விட்டன போல் நீண்டன. பார்க்காதது போல் பார்த்த அப் பார்வையிலே ஒரு மிரட்சி இருந்தது.
"தென்பாண்டி நாட்டு வீரத் தளபதியாருக்கு வாள் முனையில் வணக்கம் செலுத்துகிறோம்."
அவர்கள் குரல் தான். ஏளனமும் மமதையும் தொனித்தன அதில். தளபதி பதில் சொல்லாமல் சிரித்தான். கடைக் கண் பார்வையாலேயே இருபுறம் வாளை நீட்டிக் கொண்டு நின்றவர்களைப் பார்த்துக் கொண்டு விட்டான். முன்பு தெரிந்த சிவப்புத் தலைப்பாகைப் பேர்வழிகள் தான் அவர்கள். சாமர்த்தியமும் சமயோசித சாதுரியமும் கொண்டு எத்தனையோ சூழ்ச்சிகளைக் கடந்திருக்கும் அவன் மனத்தில் சிந்தனையலைகள் ஒன்றோடு ஒன்றாக மோதிப் புரண்டன.
தளபதியின் முகத்தில் மின்னி மறையும் சிந்தனை ரேகைகளையும், அவன் சலனமற்று நிற்பதையும் பார்த்து, அவர்கள் மனத்துக்குள் என்ன நினைத்துக் கொண்டார்களோ? தெரிந்து கொள்ள முடியவில்லை.
"தளபதி அவர்களே! தங்கள் இடையிலிருக்கும் வாளை இப்படிக் கழற்றி வைத்துவிட்டால் நன்றாயிருக்கும். வீணாக நாங்கள் சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டியிருக்காது" என்றனர்.
வல்லாளதேவன், "ஆகா! அதற்கென்ன? இதோ கழற்றி வைத்து விடுகிறேன்" என்று சொல்லிக் கொண்டே குபீரென இரண்டடி முன்னால் நகர்ந்து கொண்டு இடையிலிருந்த வாளை உருவினான். அவன் இப்படிச் செய்வானென்பதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. 'வாளை உருவிக் கீழே வைப்பதற்குத்தான் குனிகிறான்' என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே தளபதி வாளை உருவிக் கொண்டு அவர்கள் மேல் பாய்ந்தான். இரண்டு பேருடைய வாள்களில் அவனது ஒரே வாள் மோதியது.
"தென்பாண்டி நாட்டுப் படைத் தலைவருக்கு இன்று நம்முடைய கையால் முடிவு காலம் போலிருக்கிறது!" என்றான் அந்த வீரர்களில் ஒருவன்.
"ஐயா, தளபதியாரே! இந்த ஏமாற்று வேலைகளெல்லாம் எங்களிடம் வேண்டாம்!" என்று மிகுந்த ஆத்திரத்தோடு சொல்லிக் கொண்டே வாளைச் சுழற்றி வீசினான் இன்னொருவன்.
"அது சரி! சாவு யாருக்கு என்பதை உங்கள் கைகளிலும், என் கையிலும் சுழலும் இந்த வாள்கள் அல்லவா தீர்மானிக்க வேண்டும்? பாண்டி நாட்டுத் தளபதிக்குச் சாவு நேர்ந்தாலும் அது இன்னொரு உண்மை வீரன் கையால் தான் நேரும். உங்களைப் போல யாரோ ஊர் பேர் தெரியாத ஒற்றர்களின் கைகளால் அல்ல! தெரிந்து கொள்ளுங்கள்!" என்று வீரமொழி கூறி அறை கூவியவாறே வாளை வேகமாகச் சுழற்றினான் வல்லாளதேவன்.
போர்ப் பழக்கம் மிகுந்த தளபதியின் வாள் வீச்சுக்கு முன்னால் அந்த இரண்டு ஒற்றர்களும் திணறிப் போய் விட்டனர். அவர்களில் ஒருவனைப் பாறை விளிம்பு வரையில் துரத்திக் கொண்டு போய்க் கடலுக்குள் தள்ளிவிட்டான் தளபதி. கடலுக்குள் விழுந்தவன் பாறைகளில் மோதி அடிபட்டு மூர்ச்சையாகிக் கீழே பாறைத் திடலின் மேல் கிடந்தான். மற்றொருவனுடைய வாளைத் தண்ணீருக்குள் 'படீர்' என்று தட்டிவிட்ட பின் கையோடு அவனை இறுக்கிப் பிடித்துக் கொண்டான்.
"அடே, பதரே! நீ எந்த நாட்டு ஒற்றன்? என்னிடம் உண்மையைச் சொல்ல வேண்டும். பாண்டி நாட்டு வீரர்கள் எப்போதும் உண்மையைத் தான் பேசுவார்கள். மற்றவர்களிடமிருந்தும் உண்மையைத்தான் கேட்பார்கள்."
பிடிபட்டவன் பதில் சொல்லாமல் திருட்டு விழி விழித்தான். "பதில் சொல்கிறாயா? உன்னைச் சொல்ல வைக்கட்டுமா?" என்று கையை ஓங்கினான் தளபதி. பிடிபட்ட ஒற்றனின் உடல் 'கிடுகிடு'வென்று நடுங்கியது. கலக்கமும் சஞ்சலமும் அவன் முகத்தில் பதிந்தன. வாயைத் திறக்காமல் ஊமை நடிப்பு நடித்தான்.
வல்லாளதேவன் தன்னை அதட்டிக் கொண்டிருக்கும் போதே திடீரென்று தனது இடுப்புக் கச்சையிலிருந்து ஏதோ ஒரு பொருளை உருவி எடுத்துக் கடலுக்குள் எறிய முயன்றான் அந்த ஒற்றன். அவன் கை இடது பக்கத்து இடுப்பைத் தடவி எதையோ எடுக்க முயல்வதை அவனைப் பிடித்த கணத்திலிருந்தே கவனித்துக் கொண்டிருந்த தளபதி, விருட்டென்று எறிவதற்கு ஓங்கிய அவன் கையைப் பிடித்து அதிலிருந்த பொருளைப் பறித்துக் கொண்டான். அது ஒரு திருமுக ஓலை. ஒரு கையால் அவனைப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் அந்தத் திருமுக ஓலையைக் கண்களுக்கு அருகே கொண்டு போய், நிலா ஒளியில் அதில் என்ன வரைந்திருக்கிறதென்று வாசிக்க முயன்றான்.
ஆனால் அதே சமயத்தில் கோவிலின் மேல் தளத்தில் வீரர்கள் ஏறி ஓடும் ஓசையும், "விடாதே பிடி! மகாராணியின் மேல் வேலை எறிந்து விட்டு ஓடுகிறான்!" என்ற கூக்குரல்களுமாகக் கேட்கவே அவர்கள் இருவருடைய கவனமும் ஒரே சமயத்தில் கோவிலின் பக்கம் திரும்பியது.
அவர்கள் திரும்பிப் பார்த்த சமயத்தில் கோவில் மதிலின் பின்புறமாக உள்ள ஆழமான கடற்பகுதியில் மேல் தளத்திலிருந்து ஓர் உருவம் குதிப்பது மட்டும் தெரிந்தது. மேல் தளத்தில் கேட்ட கூக்குரலும் நடந்த நிகழ்ச்சியும் தன்னை விடத் தன் கையில் பிடிப்பட்டிருந்த ஒற்றனையே அதிகமாகக் கலவரத்துக்கும் திடுக்கிடுதலுக்கும் உள்ளாக்கியிருக்கின்றன என்பதை அவன் முகக் குறிப்புகளால் ஒருவாறு தெரிந்து கொண்டான் வல்லாளதேவன்.
தளபதியின் மனம் நடுங்கியது. "ஐயோ! மகாராணியின் மேல் வேல் எறியப்பட்டு விட்டதா? தளபதி அருகிலிருந்தும் இப்படி நடந்துவிட்டதென்று உலகம் பழிக்குமே! இது என்ன? போதாத காலமோ?" என்று பதறினான். 'மேல் தளத்திலிருந்து வேல் எறிந்து விட்டுக் கடலில் குதித்தவனுக்கும் இந்தச் சிகப்புத் தலைப்பாகை ஒற்றர்களுக்கும் ஏதாவது தொடர்பிருக்குமோ?' என்று அவனுக்குச் சந்தேகம் உண்டாயிற்று. உடனே தன் கையில் கிடைத்த ஓலையோடும் ஒற்றனோடும் அங்கிருந்து இறங்கிக் கோவிலுக்கு விரைந்தான். "இந்த ஒற்றனைப் பாதுகாத்து வைத்திருங்கள். தப்பிவிடாமல் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்" என்று கூறி, பரிவாரத்து வீரர்களிடம் தன் கையில் பிடிபட்ட ஒற்றனை ஒப்படைத்து விட்டு, திருமுக ஓலையோடு மகாராணியைப் பார்க்க விரைந்து உள்ளே சென்றான்.
மேலே இருந்து விதானத் துவாரத்தின் வழியே வீசி எறியப்பட்ட வேலினால் மகாராணியாருக்கு எந்த விதமான ஆபத்தும் ஏற்படவில்லை என்று அறிந்து கொண்ட பின்புதான் தளபதிக்கு நிம்மதியாக மூச்சு வந்தது. கோவிலின் கர்ப்பக்கிருகத்துக்கு முன்னால் இருந்த மணி மண்டபத்தில் மகாராணி வானவன்மாதேவி, பவழக்கனிவாயர், அதங்கோட்டாசிரியர், தன்னுடைய தங்கை பகவதி, ஆசிரியர் மகள் விலாசினி ஆகியோர் வீற்றிருக்கும் போது தளபதி வல்லாளதேவன் அங்கே பிரவேசித்தான். "மகாராணி! நான் கேள்விப்பட்டது மெய்தானா? யாரோ வஞ்சகன் வேலை எறிந்து விட்டு ஓடினான் என்றார்களே? இதென்ன கொடுமை? ஆலயத்துக்குள் தெய்வ தரிசனத்துக்காக நுழையும் போது கூடவா அரசியல் சூழ்ச்சிகள்? இத்தகைய பயங்கர நிகழ்ச்சியின் போது மகாராணியாரின் அருகிலிருக்க இயலாமற் போனதற்கு அடியேனை மன்னிக்க வேண்டும். தீய சக்திகள் தென்பாண்டி நாட்டை வட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. சற்று முன் அடியேன் கடற்கரைப் பாறையில் பின் தங்கி நின்றதன் காரணம் இங்கு ஒருவருக்கும் புரிந்திருக்காது. அதுவும் நம்மைச் சூழ்ந்து நெருங்கிக் கொண்டிருக்கும் ஒரு பயங்கரச் சதியின் உண்மையைப் புரிந்து கொள்வதற்காகத்தான். இதோ இந்த ஓலையைப் பாருங்கள்" என்று ஒற்றனிடமிருந்து கைப்பற்றிய திருமுக ஓலையை எடுத்து மகாராணிக்கு முன்னால் வைத்தான் தளபதி.
"தளபதியாரே! இன்றைக்கு மகாராணியார் உயிர் பிழைத்தது யாரால் தெரியுமா? உங்கள் தங்கை பகவதியின் வீரச் செயல்தான் தேவியைக் காப்பாற்றியது. ஒரு மகா வீரனின் தங்கை என்பதை உங்கள் சகோதரி நிரூபித்து விட்டார். பாய்வதற்கு இருந்த வேலைப் பார்த்தவுடன் மகாராணியைப் பின்னுக்கு இழுத்துக் கீழே தள்ளியதால் தான் ஆபத்தில்லாமல் போயிற்று" என்றார் கோவில் அர்ச்சகர்.
அதைக் கேட்டதும், "பகவதி! நீ எப்போது இங்கே வந்தாய்?" என்று தங்கையை விசாரித்தான் தளபதி.
"மகாராணியார் ஆலயத்துக்குள் நுழைவதற்கு முன்பே நானும் ஆசிரியர் மகள் விலாசினியும் இங்கே வந்து சேர்ந்து கொண்டோம் அண்ணா!" என்று பதில் கூறினாள் பகவதி.
தளபதி கொடுத்த ஓலையைக் கையில் எடுத்த மகாராணி அப்போதே அந்த இடத்தில் அதைப் படித்து அறிந்து கொள்ள விரும்பவில்லை. மண்டபத்தில் இருந்த எல்லோர் முகங்களிலும் ஒருவகைக் கலவரத்தின் சாயை படிந்திருந்தது. தளபதி கொண்டு வந்த ஓலையில் அடங்கியிருக்கும் செய்தியை அறிந்து கொள்ளத் துடிக்கும் ஆவல் அவர்கள் எல்லோர் பார்வையிலும் இருந்தது. தளபதி கூறிய சில சொற்களிலிருந்து பகைச் சக்திகள் எதிர்ப்பதற்கு ஒன்று கூடுகின்றன, என்று மற்றவர்கள் அநுமானிக்க முடிந்தது.
ஓலையைப் பார்த்துவிட்டு மகாராணி வானவன்மாதேவி என்ன கூறப் போகிறார் என்பதைக் கேட்க எல்லோரும் காத்திருந்தனர். ஆலயத்துக்குள் அசாதாரணமான அமைதி நிலவியது. வீரர்கள், பரிவாரங்கள், அர்ச்சகர்கள் எல்லோரும் அடங்கி ஒடுங்கி மகாராணியாரின் முகத்தையே இமையாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். மகாராணியாரோ ஓலையைப் படிக்கவுமில்லை, வாய் திறந்து பேசவுமில்லை. ஊசி விழுந்தாலும் அது தெளிவாகக் கேட்கும் படியான அந்த அமைதி சில விநாடிகள் நீடித்தது. தளபதியின் பார்வையில் தூணோரமாக வளைந்து நெளிந்து கிடந்த வேல் தென்பட்டது. அதுதான் மகாராணியின் மேல் எறியப்பட்ட வேலாக இருக்க வேண்டுமென்று அவன் எண்ணிக்கொண்டான்.
"தளபதி! கோட்டையிலிருந்து புறப்பட்ட போது ஆலயத்துக்குப் போகிறோம் என்ற அமைதியில் மனக்குழப்பங்களை மறந்து நிம்மதியோடு புறப்பட்டேன். இப்போதோ இங்கு வந்த பின் நடந்த நிகழ்ச்சியல் மனம் குழம்பிப் போயிருக்கிறது. வார்த்தைகளால் விவரித்துச் சொல்ல முடியாத அதிர்ச்சியில் மூழ்கிக் கொண்டிருக்கிறேன். என்ன பேசுவது? எதைச் சிந்திப்பது? எதைச் செய்வது? ஒன்றுமே எனக்குப் புரியவில்லை. வரவர அரசாட்சியில் பற்றுக் குறைந்து கொண்டே வருகிறது. ஒன்று, இந்த அரசையும் ஆட்சியையும் கைப்பற்றுவதற்காகப் பொய்யும், சூழ்ச்சியும் செய்யும் எதிரிகளிடம் இதை உதறிவிட்டு எங்காவது போய்ப் புத்த மதத்தில் சேர்ந்து பிறவிப் பிணிக்கு மருந்து தேட வேண்டும்; அல்லது ஓடிப்போன இராசசிம்மனைத் தேடிப் பிடித்துக் கொண்டு வந்து முடிசூட்டி விட்டு நான் நிம்மதியாக இருக்க வேண்டும். இந்த இரண்டில் ஏதாவதொன்று நடந்தாலொழிய என்னால் இப்படியே மதில் மேல் பூனையாக காலங்கழிக்க முடியாது. என்னைப் போல் நாயகனை இழந்த ஒரு பெண்ணை இந்தத் தென்பாண்டி நாட்டுக்குப் பேரரசியாக உரிமை கொண்டாடி, இன்பத்திலும் துன்பத்திலும் எவ்வளவோ ஒத்துழைக்கிறீர்கள். அதற்காக நான் பெருமைப்படத்தான் வேண்டும். ஆனால் இந்தப் பெருமையைத் தொடர்ந்து ஏற்றுக் கொள்ளும் நெஞ்சு உரம் எனக்கு இல்லை. என் அருமைக் குமாரனும் உங்கள் இளைய சக்கரவர்த்தியுமான இராசசிம்மன் இலங்கைத் தீவில் போய்ச் சுற்றிக் கொண்டிருப்பதாகச் சொல்லுகிறார்கள். மகாமன்னரான பராந்தக பாண்டியரின் வழி முறையினர்தான் உங்களை ஆளவேண்டுமென்ற உறுதி உங்களுக்கு இருக்குமானால் இலங்கைத் தீவுக்குப் போய் இளைய சக்கரவர்த்தியைத் தேடிக் கொண்டு வாருங்கள். தளபதி! இந்த ஓலையை இப்போது நான் படிக்க விரும்பவில்லை. இது உம்மிடமே இருக்கட்டும்."
உருக்கம் நிறைந்த நீண்ட பேச்சுக்குப் பின் திருமுக ஓலையை வல்லாள தேவனிடமே திருப்பிக் கொடுத்து விட்டார் மகாராணி. பின்பும் அங்கு நிலவிய அமைதி கலையவில்லை. அதங்கோட்டாசிரியரும், பவழக்கனிவாயரும், தளபதியும் ஒன்றும் பேசத் தோன்றாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ஆலயத்தில் எரிந்து கொண்டிருந்த தீபச் சுடர்கள் கூட ஆடாமல் ஸ்தம்பித்துப் போனவை போல விளங்கின. மகாராணியார் மனம் வெதும்பி விரக்தியடைந்து போயிருக்கும் அந்த நிலையில் என்ன பேசுவதென்று தெரியாமல் மலைத்துப் போய் அப்படியே நின்றான் தளபதி.
"தளபதி! நாளையே புறத்தாய நாட்டு மகாசபையைக் கூட்டுங்கள். இந்தப் பிரச்சினைகளுக்கு ஒரு முடிவு கண்டாக வேண்டும். நாஞ்சில் நாட்டுக் கூற்றங்களின் பிரதம மந்திராலோசனைத் தலைவராகிய இடையாற்றுமங்கலத்து நம்பியை அழைத்து வாருங்கள். இந்த ஓலையையும், இது சம்பந்தமான எதிரிகளின் சூழ்ச்சிகளையும் கூட நாளை மகாசபைக் கூட்டத்தில் ஆலோசித்துக் கொள்ளலாம். இப்போது நாம் புறப்படலாம்" என்று மீண்டும் உறுதியான குரலில் கூறினார் மகாராணி. அப்போது கோயில் வாயிலில் பரிவாரத்து வீரர்களில் முக்கியமான ஒருவன் தளபதியின் காதருகே வந்து, "பிரபு! நீங்கள் எங்களிடம் ஒப்படைத்திருந்த அந்த ஒற்றன் தப்பிவிட்டான்" என்று மெல்லிய குரலில் கூறினான். தளபதி வல்லாளதேவன் திடுக்கிட்டான்.
---------
1.4. இடையாற்றுமங்கலம் நம்பி
இந்தக் கதையை மேலே தொடர்வதற்கு முன்னால் பன்னூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தென்பாண்டி நாடாகிய நாஞ்சில் நாட்டின் பல்வேறு உட்பிரிவுகளைப் பற்றி இங்கே ஒரு சில செய்திகளைத் தெரிந்து கொள்ள வேண்டியது இன்றியமையாததாகிறது.
தோவாழைக் கூற்றம், மருங்கூர்க் கூற்றம், பொன்மனைக் கூற்றம், அருவிக்கரை கூற்றம், பாகோட்டுக் கூற்றம் ஆகிய ஐந்து பெருங் கூற்றங்களாக நாஞ்சிற் புறத்தாய நாடு பிரிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு கூற்றத்துக்கும் பாண்டியர் ஆட்சியை மேற்பார்க்கும் இராஜப் பிரிதிநிதியாக ஒரு தலைமகன் நியமிக்கப்பட்டிருந்தான். இந்தக் கூற்றத் தலைவர்களின் தொகுதிக்கு நாஞ்சில் நாட்டு மகாசபை என்று பெயர். இந்த மகாசபையின் மந்திராலோசனைத் தலைவராக அறிவினும், திருவினும், ஒழுக்கத்தினும், வயதினும் மூத்த சான்றோர் ஒருவரைப் பாண்டிய மன்னன் தானே தேர்ந்தெடுத்து நியமிப்பது வழக்கம். அவருக்குப் புறத்தாய நாட்டு மகாமண்டலேசுவரர் என்று பெயர்.
திரிபுவனச் சக்கரவர்த்திகளாகிய பராந்தக பாண்டியதேவர் காலத்தில் பாண்டிய சாம்ராஜ்யம் வடக்கிலும் தெற்கிலும் பெரிதாகப் பரந்திருந்தாலும் மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு ஆண்டு வந்த அவரால் தென்கோடி மூலையிலுள்ள நாஞ்சில் நாட்டை நேரடியாகக் கவனித்து ஆள முடியாததாலும் இந்த ஏற்பாட்டைச் செய்தார். இந்த ஏற்பாட்டின்படி மருங்கூர்க் கூற்றத்து இடையாற்றுமங்கலம் நம்பி என்ற நாஞ்சில் நாட்டு மேதை மகாமண்டலேசுவரராக நியமிக்கப்பட்டிருந்தார்.
பராந்தகச் சக்கரவர்த்திகள் ஆண்ட இருபதாண்டுக் காலமும் அதன் பின்பும் இடையாற்றுமங்கலம் நம்பியே தொடர்ந்து அம் மாபெரும் பொறுப்பை நிர்வகித்து வந்தார். சக்கரவர்த்திகள் தேகவியோகமடைந்து, அமரரான பின்பு வடபாண்டி நாட்டைச் சோழனும், அவனோடு சேர்ந்தவர்களும் கைப்பற்றிக் கொண்டதும், குமார சக்கரவர்த்தி இராசசிம்மன் இலங்கைத் தீவுக்கு ஓடியதும் நேயர்கள் ஏற்கெனவே அறிந்த செய்திகள். அந்தப் பயங்கரமான சூழ்நிலையின் போது மகாராணி வானவன்மாதேவியாரைத் தென்பாண்டி நாட்டுக்கு அழைத்து வந்து புறத்தாய நாட்டுக் கோட்டையில் இருக்கச் செய்து மகாராணிக்கு அளிக்க வேண்டிய இராஜ கௌரவமும் மரியாதையும் அளித்தவர் மகாமண்டலேசுவரரான இடையாற்றுமங்கலம் நம்பி அவர்களே.
நாஞ்சில் நாட்டின் உயிர்நாடி போன்ற பகுதி மருங்கூற்றம், கன்னியாகுமரி, சுசீந்திரம், தாணுமாலய விண்ணகரம், தென் திசைப் பெரும்படை தங்கியிருக்கும் கோட்டாற்றுப் படைத்தளம், புறத்தாய நாட்டுக் கோட்டை, மகாமண்டலேசுவரரின் வாசஸ்தலமாகிய இடையாற்றுமங்கலம் ஆகிய எல்லா முக்கிய இடங்களும் மருங்கூர்க் கூற்றத்திலேயே அமைந்திருந்தன. பார்க்குமிடமெங்கும் பரந்து கிடக்கும் நெல்வயல் வெளிகளும், சாலைகளும் நிறைந்த மருங்கூர்க் கூற்றத்தின் பசுமை வெளியில் இரட்டை வடமாகிய முத்துமாலையொன்றை நெளியவிட்டது போல் பஃறுளியாறு என முதற் சங்கக் காலத்து அழைக்கப்பட்ட பறளியாறும், புத்தனாறும் பாய்ந்து ஓடுகின்றன.
பறளியாறும், புத்தனாறும் கடலோடு கலக்கும் சங்கம முகத்துவாரத்துக்கு முன்னால் தனித்தனியே விலகிப் பிரிந்து ஒரு சிறிய அழகான தீவை உண்டாக்கியிருக்கின்றன. அதுவே இடையாற்றுமங்கலம். தென்பாண்டி நாட்டு மகாமண்டலேசுவரரும், முதுபெரும் பேரறிஞருமாகிய நம்பியின் மாளிகை இந்தத் தீவில்தான் அமைந்திருந்தது. இந்தத் தீவின் பெரும்பாகத்தை நிரப்பிக் கொண்டு நின்றது மகாமண்டலேசுவரரின் கம்பீரமான மாளிகைதான் என்றால் அது எவ்வளவு பெரிதாக இருக்குமென்பதை நேரில் பார்க்காமலே கற்பனை செய்து கொள்ள முடியும். மலைத் தொடர்போல் அந்த மாளிகையைச் சுற்றி வளைந்து செல்லும் பிரம்மாண்டமான கோட்டை மதிற்சுவர்களுக்கு இப்பால் வெட்டப்படாத இயற்கை அகழிகளைப் போல் புத்தனாறும், பறளியாறும் இரு கரையும் நிரப்பி நீர் ஓடிக் கொண்டிருந்தன.
பகல் நேரத்தில் கதிரவன் ஒளியில் இந்த மாளிகையைப் பார்ப்பதற்குப் பதிலாக, நடு இரவில் உலகமே ஆழ்ந்த அமைதியின் மாபெரும் ஒடுக்கத்தினுள் உறங்கிக் கிடக்கும் போது பார்க்கும்படியான அவசர வாய்ப்பை இந்தக் கதை ஏற்படுத்தி விடுகிறது. நடு இரவானால் என்ன? மடல் விரித்த கமுகம் பாளையைப் போலப் பௌர்ணமி நிலா ஒளிக்கதிர்களை உமிழ்ந்து கொண்டிருக்கிறதே! குளிர்ந்த கடற்காற்றின் சுகத்தை அனுபவித்துக் கொண்டே வளம் நிறைந்த நாஞ்சில் நாட்டு இராஜபாட்டையில் நடந்து செல்வதற்கு சோம்பல் அடைவார்களா?
இடையாற்றுமங்கலத்துக்குச் செல்லும் கீழ்த் திசைச் சாலையில் ஆளரவமற்ற அந்த நடு யாமத்தில் ஒரு வெண்ணிறப் புரவி கன வேகமாகப் பாய்ந்து சென்றது. அதன் மேல் வல்லாளதேவனே வீற்றிருப்பதை நிலா ஒளியில் நன்றாக அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. அவன் முகத்தில் அவசர காரியத்தை எதிர்நோக்கிப் பிரயாணம் செய்யும் பரபரப்பைக் காணமுடிந்தது.
வானமும், பூமியும், திசைகளும், திசைக் கோணங்களும் அமைதியில் கட்டுண்டு கிடந்த அந்த யாமப் பொழுதில் யாரோ, மத்தளத்தின் புறமுதுகில் 'தடதட' வென்று தட்டுவது போல் குதிரையின் குளம்போசை எதிரொலித்தது. வாயு வேகம், மனோவேகம் என்பார்களே, அவையெல்லாம் பிச்சை வாங்க வேண்டும்! தென் திசைத் தளபதி வல்லாளதேவனின் குதிரை நாலு கால் பாய்ச்சலில் பறந்து கொண்டிருந்தது!
சாதாரணமாகக் கன்னியாகுமரியிலிருந்து இடையாற்றுமங்கலத்துக்கு ஒன்றரை நாழிகை நேரம் குதிரைப் பயணத்துக்கு ஆகும். காரியத்தின் அவசரத்தை முன்னிட்டுக் கொண்டு வந்திருந்த வல்லாளதேவன் ஒரு நாழிகை நேரத்துக்கு முன்னதாகவே இடையாற்றுமங்கலத்தை நெருங்கிவிட்டான்.
மண்டலேசுவரரின் மாளிகைக்குத் தென்புறம் கண்ணுக்கெட்டிய வரை நெடுந்தூரத்துக்கு நெடுந்தூரம் ஒரே தண்ணீர்ப் பிரவாகமாகத் தெரிந்த பறளியாற்றின் இக்கரையில் வந்து தளபதியின் குதிரை நின்றது. பூமிக்குக் குடை பிடித்தது போல் பரந்து வளர்ந்திருந்த ஒரு பெரிய ஆலமரத்தின் கீழ் அவனும் அவன் ஏறிக் கொண்டு வந்த குதிரையும் நின்ற போது, நிலா மேகத்தில் மறைந்து மெல்லிய இருள் பரவியது. கரையோரத்து ஆலமரத்தின் அடர்த்தியால் முன்பே ஒளி மங்கியிருந்த அந்த இடம் இன்னும் அதிகமாக இருண்டது.
ஆற்றில் தண்ணீர் குறைவாக ஓடினால் நனைந்தாலும் பரவாயில்லையென்று குதிரையையும் பிடித்துக் கொண்டு இறங்கி நடந்து அக்கறையிலுள்ள மாளிகைக்குச் சென்று விட முடியும். ஆனால் ஆற்றில் அப்போது ஆள் இறங்க முடியாத வெள்ளம் போய்க் கொண்டிருந்தது. தளபதி தன் குதிரையை மரத்தடியிலேயே நிறுத்திவிட்டுக் கரையில் விளிம்பருகே சென்று ஆற்றின் நிலையை நிதானிக்க முயன்றான். இரு தினங்களாக நாஞ்சில் நாட்டு மலைத் தொடர்களில் நல்ல மழை பெய்திருந்ததால் பறளியாற்றில் நீர் இரு கரையும் நிமிர ஒடிக் கொண்டிருந்தது. இறங்கிப் போவதென்பது சாத்தியமில்லை என்று தெரிந்தது வல்லாளதேவனுக்கு. திரும்பி வந்தான். குதிரையை ஆலமரத்தின் வேரில் கட்டி விட்டு நின்றான்.
இதற்கு முன்பு இத்தகைய திகைப்புக்குரிய அநுபவம் நாஞ்சில் நாட்டுப் படைத்தலைவனுக்கு ஏற்பட்டதில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மேற்கே சிறிது தூரம் கரையோரமாகவே நடந்தான். இடையாற்றுமங்கலம் மண்டலேசுவரர் மாளிகைக்குத் தோணி விடும் துறை இருந்தது. தோணித் துறையில் தொண்டாற்றும் அம்பலவன் வேளான் துறையில் இருக்கிறானோ, இல்லையோ! பெரும்பாலும் இரவு ஏழெட்டு நாழிகைக்குள் தோணிப் போக்குவரத்து முடிந்து விடும். அதன் பின் படகுடன் அக்கரையிலேயே தங்கிவிடுவது வேளானின் வழக்கம். பகலில் வந்திருந்தால் இடையாற்றுமங்கலம் போவதற்கு இவ்வளவு அவதிப்பட வேண்டியதில்லை. மாளிகைத் தோணியுடன் அதைச் செலுத்தும் வேளான் காத்திருப்பான். இரவில் அகால வேளையில் வர நேர்ந்ததனால் தான் இவ்வளவு துன்பமும்.
'சரி! எதற்கும் தோணித்துறை வரையில் போய்ப் பார்க்கலாம். நம்முடைய நல்வினைப் பயனாக அம்பலவன் வேளானும் அவன் தோணியும் இக்கரையில் இருந்தால் நல்லதாகப் போயிற்று' என்று நினைத்துக் கொண்டே கரையோரத்துப் புதர் மண்டிய பாதையில் மேற்கே தோணித் துறையை நோக்கி நடந்தான் தளபதி. ஒற்றையடிப் பாதையின் இருபுறமும் அடர்த்தியான தாழம்புதர் இருக்குமிடம் தெரியாமல் மலர்ந்திருந்த தாழம் பூக்களின் மணமும், நதிக்கரைக் குளிர்ச்சியும், நிலாவின் இன்பமும், தளபதியின் மனத்துக்கோ உடலுக்கோ சுகத்தை அளிக்கவில்லை. கவலை நிறைந்த சூழ்நிலையில் கடமையை நோக்கி ஓடிக் கொண்டிருந்தான் அவன்.
கன்னியாகுமரிக் கோவிலிலிருந்து மகாராணியார், அதங்கோட்டாசிரியர், பவழக்கனிவாயர், பகவதி, விலாசினி எல்லோரையும் பரிவாரங்களோடு அரண்மனைக்கு அனுப்பிவிட்டு, தப்பிச் சென்ற ஒற்றனைத் தேடிப் பிடிப்பதற்காகத் தளபதியும் வேறு சில வீரர்களும் அங்கேயே தங்கிவிட்டனர். மகாராணி மனக்குழப்பமடைந்திருக்கும் நிலையைப் புரிந்து கொண்டதால் கடற்கரைப் பாறைகளிடையே, தான் கண்ட ஒற்றர்களைப் பற்றியோ, அவர்களில் ஒருவனைப் பிடித்துக் கொண்டு வந்ததைப் பற்றியோ அவன் கூறவில்லை. ஓலையை மட்டும் கொடுத்தான்; அதையும் அவர் படிக்காமலே திருப்பிக் கொடுத்து விட்டார். மகாராணி முதலியோர் கோட்டைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த போது தன் காதருகே வந்து பரிவாரத்து வீரன், ஒற்றன் தப்பியதாகக் கூறிய செய்தியையும் அவன் யாருக்கும் அறிவிக்கவில்லை.
"மகாராணி! நீங்கள் எல்லோரும் கோட்டைக்குப் போய் இருங்கள். எனக்கும் இந்த வீரர்களுக்கும் இங்கே கொஞ்சம் வேலை இருக்கிறது. உங்கள் உத்தரவுப்படியே நாளை மகாசபைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து விடுகிறேன். இன்றிரவே இடையாற்றுமங்கலத்தில் நம்பியைச் சந்தித்து விவரம் கூறிவிடுகிறேன். மற்றக் கூற்றத் தலைவர்களுக்கும் இரவோடிரவாக ஆள் அனுப்பி விடுகிறேன்" என்று கூறினான் தளபதி!
"அப்படியானால் இன்றிரவு நீ கோட்டைக்கு வருவது சந்தேகந்தான். இவ்வளவு வேலைகளையும் செய்ய இரவு முழுவதும் சரியாயிருக்கும்!" என்றார் அதங்கோட்டாசிரியர்.
"எங்கே வரமுடியப் போகிறது? நீங்கள் போய் வாருங்கள். ஒருவேளை இடையாற்றுமங்கலத்திலிருந்து விரைவில் திரும்பினால் உடனே கோட்டைக்கு வந்து விடுகிறேன்" என்று சொல்லித் தளபதி அவர்களை அனுப்பிவிட்டான். அவர்கள் சென்றதும் பிடிபட்ட ஒற்றனை அஜாக்கிரதையாய் தப்ப விட்டு விட்ட வீரர்களைத் திட்டினான். கோபத்தோடு கடிந்து கொண்டான். மறுபடியும் அவர்களை அழைத்துக் கொண்டு பாறை இடுக்குகளிலும், கடலோரத்து இடங்களிலும் கோவிலைச் சுற்றியும் தேடினான். ஏற்கெனவே தளபதியால் அடிபட்டு மயங்கி விழுந்திருந்தவனையும் இப்போது அந்தப் பாறை மேல் காணவில்லை. 'மூன்று பேர்கள் வந்திருக்கிறார்கள். வேலை எறிவதற்காக ஒருவன் கோவில் மேல்தளத்தில் ஏறிக் காத்திருக்கிறான். மற்ற இருவரும் பாறை இடுக்கில் இருந்திருக்கிறார்கள்' - நடந்ததை ஒருவாறு உணர முடிந்தது அவனால்.
'எப்படியானால் என்ன? மூன்று பேர்களுமே தப்பி விட்டார்கள்! நமக்குக் கிடைத்தது இந்த ஓலை ஒன்றுதான்' என்று மேலும் தேடும் முயற்சியைக் கைவிட்டுவிட்டு இடையாற்றுமங்கலம் புறப்பட்டான் வல்லாளதேவன். தன்னோடு இருந்த வீரர்களை மகாசபையின் ஐந்து கூற்றத்தைச் சேர்ந்தவர்களுக்கும் தனித்தனியே மறுநாள் கூடும் சபையைப் பற்றிய செய்தியைத் தெரிவிக்குமாறு இரவோடிரவாக அங்கிருந்தே குதிரைகளில் அனுப்பினான்.
இவ்வளவும் செய்து முடித்து விட்டு அவன் கன்னியாகுமரியிலிருந்து இடையாற்றுமங்கலம் புறப்படும் போது இரவு பதினோரு நாழிகைக்கு மேலாகிவிட்டது. அப்படிப் புறப்படுவதற்கு முன் கோவில் தீபத்தின் ஒளியில் தனியாக மீண்டும் ஒரு முறை ஒற்றனிடமிருந்து கிடைத்த அந்த ஓலையைப் படித்த போதுதான் தளபதியின் இதயத்தில் அதன் விளைவான பயங்கரமும் கொடிய சூழ்நிலையும் நன்றாக உறைத்தன. 'மகாராணி இந்தத் திருமுகத்தைப் படிக்காமல் கொடுத்ததும் ஒருவகைக்கு நல்லதுதான். கூடுமானால் மகாமண்டலேசுவரரிடம் கூட இந்த ஓலையைப் பற்றிக் குறிப்பிடாமல் இருப்பது நல்லது!" என்ற முடிவான தீர்மானத்தோடு தான் மகாமண்டலேசுவரரைச் சந்திப்பதற்குக் கிளம்பியிருந்தான் அவன்.
பறளியாற்றங்கரை ஆலமரத்தடியில் குதிரையைக் கட்டிவிட்டுத் தோணித் துறையை நோக்கித் தாழை மரக்கூட்டத்தின் இடையே வளைந்து வளைந்து செல்லும் குறுகிய பாதையில் நடந்து கொண்டே அன்று மாலையில் நிகழ்ந்தவற்றையெல்லாம் மீண்டும் மேற்கண்டவாறு நினைத்துப் பார்த்துக் கொண்டான் தளபதி வல்லாளதேவன்.
தோணித்துறையை நெருங்கியபோது அங்கே தீப்பந்தங்களின் வெளிச்சமும், பேச்சுக் குரல்களும் இருப்பதைக் கண்டு அவன் முகம் மலர்ந்தது. தன் நம்பிக்கை வீண் போகாமல் காப்பாற்றியதற்காகத் தெய்வத்துக்கு நன்றி செலுத்திக் கொண்டே துறையில் இறங்கினான். தோணி அக்கரைக்குப் புறப்படுவதற்குத் தயாராக இருந்தது.
அதில் உட்கார்ந்திருந்தவர்களைப் பார்த்தபோதுதான் தளபதியால் தன் கண்களையே நம்ப முடியவில்லை! 'தோணியே இருக்காது இந்த நள்ளிரவில்' என்று அவநம்பிக்கையோடு அங்கு வந்த அவன் தோணியையும் அதைச் செலுத்தும் படகோட்டி அம்பலவன் வேளானையும் மட்டும் பார்த்திருந்தால் கூட அவ்வாறு ஆச்சரியப்பட்டிருக்க மாட்டான்.
ஆனால், தோணியில் வீற்றிருந்தவர்கள் யார்? யாரைக் கண்டு தளபதி இவ்வளவு வியப்படைகிறான்?
யாரைத் தேடி வந்தானோ அந்த இடையாற்றுமங்கலம் நம்பியே படகில் உட்கார்ந்திருந்தார். அவரோடு அவருடைய திருக்குமரியாகிய குழல்வாய்மொழி நாச்சியாரும், அவன் இதற்கு முன் பார்த்திராத ஒரு வாலிபத் துறவியும் படகில் அமர்ந்திருந்தனர். தாடி மீசையோடு காட்சியளித்த அந்தத் துறவியின் களை சொட்டும் முகம் பார்ப்பதற்கு அழகாக இருந்தது. தளபதியின் உருவத்தைத் துறையின் அருகில் கரையின் மேல் கண்டதும் தோணி நின்றது. "யாரது கரையில் நிற்பது? இந்நேரத்துக்கு வேற்றாட்களைத் தோணியில் ஏற்றும் வழக்கம் இல்லை" என்று கூச்சலிட்டான் அம்பலவன் வேளான்.
அதைக் கேட்டு மெல்லத் தனக்குள் சிரித்துக் கொண்டே, "மகாமண்டலேசுவரர்க்குத் தளபதி வல்லாளதேவனின் வணக்கங்கள் உரியனவாகுக!" என்று கூறியவாறு, தீப்பந்த வெளிச்சம் தன் முகத்தில் படும்படி படகு அருகே வந்து நின்று கொண்டான் தளபதி.
கம்பீரமான தோற்றமும், அறிவொளி வீசும் முகத்தில் கூர்ந்து நோக்கும் கண்களும் கொண்ட இடையாற்றுமங்கலம் நம்பி, "யார் வல்லாளதேவனா? ஏது இந்த அர்த்த இராத்திரியில் இப்படி இங்கே திடீர் விஜயம்?" என்றார். அப்பப்பா! என்ன மிடுக்கான குரல்!
"மகாராணியார் ஓர் அவசர காரியமாக அனுப்பி வைத்தார்கள்."
"சரியான சமயத்துக்குத்தான் வந்தாய்! இன்னும் கால் நாழிகை கழித்து வந்திருந்தால் எங்கள் தோணி அக்கரை சென்று அடைந்திருக்கும். வா! நீயும் படகில் ஏறிக்கொள். மாளிகையில் போய்ப் பேசிக் கொள்ளலாம்!"
"தளபதியாரே! வாருங்கள்" என்று சிரித்துக் கொண்டே அவனுக்கு இடம் கொடுத்தாள் மகாமண்டலேசுவரரின் புதல்வி. படகிலிருந்த மூன்றாவது ஆளாகிய வாலிபத் துறவி 'உம்'மென்றிருந்தார். அவர் பேசவேயில்லை. படகு மறுகரையை அடைகிறவரையில் அவர் பேசவேயில்லை!
-------------
1.5. வானவன்மாதேவியின் விரக்தி
ஆலயத்துக்கு வந்து திரும்பினால் அலை மோதும் துயரம் மறைந்து மனத்தில் சாந்தி பிறக்குமென்று பெரியோர்கள் சொல்வார்கள். ஆனால் நிலவு பொழியும் அந்த நீளிரவில் பரிவாரங்களோடு கன்னியாகுமரியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த போது மகாராணி வானவன்மாதேவியாரின் இதயத்தில் கவலைகள் முதிர்ந்து விரக்தி வளர்ந்து கொண்டிருந்தது.
அவர் தனியாகச் செல்லவில்லை. ஆறுதலும் அன்பும் நிறைந்தவர்கள், ஞானமும், அநுபவமும் செறிந்த இரண்டு பெரியோர்கள், குழந்தைகள் போல் சிரித்துச் சிரித்துப் பேசும் நிர்மலமான நெஞ்சம் படைத்த இரண்டு கன்னிகைகள் ஆகிய எல்லோரும் அவரோடு வருகிறார்கள். பரிவாரத்து வீரர்கள் சங்கு, கொம்பு, தமருகம், பேரிகை, முழவு, திருச்சின்னம் ஆகிய பிரயாண கால இன்னிசைக் கருவிகளால் கீத வெள்ளத்தை உண்டாக்குகின்றனர். உடம்பில் பொதியமலைச் சந்தனக் குழம்பை ஒரு சிறு குழந்தை தன் பிஞ்சு விரல்களால் அள்ளித் தடவுவது போல் கடல்காற்று வீசுகிறது. ஆனால் அவற்றில் எதுவும் வானவன்மாதேவியின் மனத்துக்குச் சுகத்தை அளிக்கவில்லை. குமரியன்னை கோவிலின் கருப்பக் கிருகத்துப் பிரகாரத்தில் நடந்த நிகழ்ச்சியை நினைக்கும் போதே அவர் உடம்பு புல்லரித்தது. ஒரு கணம் தவறியிருந்தால், எவனோ குறி வைத்து எறிந்த அந்தக் கூர்மையான வேல் அவர் நெஞ்சைப் பிளக்காமல் விட்டிருக்குமோ? அப்படி ஏதாவது விபரீதமாக நடந்திருந்தால் இப்போது பல்லக்கில் சென்று கொண்டிருப்பதற்குப் பதிலாக...? ஐயோ! இந்த மாதிரி எண்ணிப் பார்ப்பதற்கே அருவருப்பாக இருந்தது. வானவன்மாதேவியின் எண்ணங்கள் பல்லக்கைத் தூக்கிச் செல்லும் வீரர்களின் நடையைப் போலவே துரிதமாக மேலெழுந்து சென்றன.
'இந்தத் தென்பாண்டி நாட்டை ஏதோ நான் அரியணையில் அமர்ந்து ஆண்டு கொண்டிருக்கிற மாதிரி அல்லவா எண்ணுகிறார்கள்? இல்லையானால் என்னைச் சுற்றி ஒற்றர்களும் வஞ்சகர்களும் உலாவக் காரணமென்ன? தரிசனத்திற்குப் போன இடத்தில் முன்னேற்பாடாக மறைந்திருந்து என்னைக் கொல்லச் சதி நடக்கிறது. இது எனக்குப் போதாத காலம் போலிருக்கிறது. சக்கரவர்த்திகள் காலமான பின் நான் அமங்கலியாக மட்டும் ஆகவில்லை; எவ்வளவு துரதிருஷ்டங்களும் துர்பாக்கியங்களும் உண்டோ, அவ்வளவும் என்னை வந்து சார்ந்துவிட்டன போலிருக்கிறது. கணவனை இழந்தேன், அருமைக் குமாரன் இராசசிம்மனுமா என்னை விட்டு ஓடிப்போக வேண்டும்? போரில் தோற்றுவிட்டால் என்ன? அதற்காகப் பெற்றவளிடம் கூடச் சொல்லிக் கொள்ளாமல் இலங்கைக்கும் புட்பகத்துக்குமா ஓட வேண்டும்? பாழாய்ப் போன எதிரிகளுமா வட பாண்டி நாட்டின் மேல் படையெடுக்க வேண்டும்? நாடு தான் போயிற்று, இவனும் இப்படி எதற்காக ஓடிப் போனான்?
'எங்காவது சமணப் பள்ளியிலோ, பௌத்தப் பள்ளியிலோ, தீட்சை பெற்று மணிமேகலை, குண்டலகேசி இவர்களைப் போல் எஞ்சிய வாழ்நாளைத் துறவு மார்க்கத்தில் கழித்துவிட எண்ணியிருந்தவளை இந்த மகாமண்டலேசுவரர் ஏன் தான் இங்கு அழைத்துக் கொண்டு வந்தாரோ? இந்த இடையாற்றுமங்கலம் நம்பி இருக்கிறாரே, அப்பப்பா! எதையும் சில புன்னகைகளாலும், சில வார்த்தைகளாலும் சாதித்து விடுகிறார். எவ்வளவோ விரக்தியோடு இருந்தவளை மனத்தை மாற்றி இங்கு அழைத்துக் கொண்டு வந்து இந்தப் புறத்தாய நாட்டுக் கோட்டையில் மறுபடியும் இராஜ போகங்களுக்கும், அரசியல் சூழ்ச்சிகளுக்கும் நடுவே சிக்கவைத்துவிட்டாரே! இதிலிருந்து எப்படித் தப்புவது? தப்பாமல் இப்படியே இருக்கத்தான் முடியுமா? மகாமண்டலேசுவரர் எனக்கு அளித்திருக்கும் கௌரவம் மிக மிகப் பெரியதுதான். அதில் சந்தேகமே இல்லை. ஐம்பெருங் கூற்றத் தலைப் பெருமக்களும், மந்திராலோசனைத் தலைவரும் இருக்கும் தென்பாண்டி நாட்டின் அரசியைப் போன்ற மரியாதையை அந்த மகாபுருஷரான இடையாற்றுமங்கலம் நம்பி எனக்கு அளித்திருந்தாலும் இதிலிருந்து நான் தப்பித்துத்தானாக வேண்டும். காலஞ்சென்ற என் நாயகர் மீது நாஞ்சில் நாட்டாருக்கு இருக்கும் அளவு கடந்த அன்பினால் மகாமண்டலேசுவரர் இதைச் செய்திருக்கிறார்.
'அதே சமயத்தில் இதன் விளைவு என்ன ஆகுமென்பதை அவர் சிந்திக்காமல் விட்டிருக்கவும் முடியாது. அபாரமான சாணக்கியத் திறமை படைத்த இடையாற்றுமங்கலம் நம்பிக்கா சிந்தனையை நினைவுபடுத்த வேண்டும்?
'தென்பாண்டிப் புறத்தாய நாட்டுக் கோட்டையில் நான் இருப்பதால் தான் ஒற்றர்களும் கொலைக்கு ஏவப்பட்டிருக்கலாம்! வடபாண்டி நாட்டைக் கைப்பற்றிய எதிரிகள் இங்கே படையோடு நுழைய எவ்வளவு நாட்களாகும்? என் ஒருத்தியின் பொருட்டு அமைதியும், வளமும், அழகுச் செல்வமும் கொழிக்கும் இந்த நாஞ்சில் நாட்டில் போர் ஏற்படத்தான் வேண்டுமா? இன்று மாலை முன்னிரவு நேரத்தில் கன்னியாகுமரியில் நடந்த தீய நிகழ்ச்சிகள் எதைக் குறிக்கின்றன? மகா மேதையான மண்டலேசுவரர் தளபதி மூலமாக அவற்றைக் கேள்விப்பட்ட பின்பாவது, தம் கருத்தை மாற்றிக் கொள்வாரா? அல்லது அவருடைய மௌனத்துக்கும், அமைதிக்கும் வேறு ஏதாவது காரணம் உண்டா? சில சமயங்களில் அவர் பெரிய புதிராக மாறிவிடுகிறாரே? 'இராசசிம்மனைத் தேடி இலங்கைத் தீவுக்கு ஒற்றர்களை அனுப்புங்கள்' என்று மூன்று தினங்களாக அவரிடம் சொல்லி வருகிறேன்; ஓர் ஏற்பாடும் செய்யாமல் தண்ணீருக்குள் போட்ட கல் மாதிரி இருக்கிறார். சமீப காலமாக இங்கேயும் கோட்டைக்கு வருவதில்லை. எப்போதாவது வந்தாலும் சொல்வதையெல்லாம் கேட்டுவிட்டுப் பதில் சொல்லாமல் வழக்கம் போல் சிரித்துவிட்டுப் போய்விடுகிறார்.
'வரட்டும்! நாளைய மகாசபைக் கூட்டத்துக்கு அவர் எப்படியும் வந்துதானாக வேண்டும். அப்போது எல்லாவற்றையும் தெளிவாக மனம்விட்டுச் சொல்லி விடுகிறேன். 'மகாமண்டலேசுவரரே! என்னை இந்தப் பெரிய கோட்டையிலிருந்து விடுதலை செய்து விடுங்கள். என்னால் இனியும் இங்கிருக்க முடியாது. நான் சமண மதத்தில் சேர்ந்து தீட்சை பெற்றுச் சந்நியாசினியாகப் போகிறேன். என் மகனையும் தேடி அழைத்து வராமல் என்னையும் இந்தக் கௌரவ வலையில் அடைத்து வதைக்காதீர்கள். என் மனம் விரக்தியடைந்துவிட்டது' என்று சொல்லத்தான் வேண்டும்.'
"மகாராணி! என்ன? இன்னும் பல்லக்கினுள்ளேயே உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்? ஏதாவது சிந்தனையோ?" - அதங்கோட்டாசிரியரின் குரலைக் கேட்டு வானவன்மாதேவிக்குச் சுய நினைவு வந்தது. வெளியே பார்த்தார். பல்லக்குகள் புறத்தாய நாட்டுக் கோட்டைக்குள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருந்தன. பகவதியும், விலாசினியும் தங்கள் பல்லக்குகளிலிருந்து இறங்கிக் கீழே நின்று கொண்டிருந்தனர்.
சிந்தனை வேகத்தில் அரண்மனையை அடைந்து விட்டதை உணர்ந்து கொண்டு பல்லக்கிலிருந்து கீழே இறங்கச் சிறிது நேரமாயிற்று வானவன்மாதேவிக்கு. பகவதியும், விலாசினியும் கன்னங்குழியச் சிரித்துக் கொண்டே மகாராணியின் அருகே வந்து நின்று கொண்டனர். முகக் குறிப்பையும் மௌனத்தையும் பார்த்த போது பவழக்கனிவாயரும் அதங்கோட்டாசிரியரும் மகாராணியின் மனம் நிம்மதியற்று இருக்கிறதென்று தெரிந்து கொண்டனர். அந்த நிலையில் பேசாமலிருப்பதே நல்லதென்று அவர்களுக்குத் தோன்றியது.
உணவு முடிந்த பின் நிலா முற்றத்தில் போய் எல்லோரும் உட்கார்ந்து கொண்டிருந்தனர். ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ளவில்லை. அந்த அமைதி அதங்கோட்டாசிரியரின் மனத்தில் ஒருவகை வேதனையை உண்டாக்கிற்று. அங்கே மகிழ்ச்சியும், கலகலப்பும் நிலவுவதற்காக ஏதாவது ஒரு மாறுதலை உடனே உண்டாக்க வேண்டும் என்று நினைத்தார்.
"மகாராணி! என் குமாரி விலாசினிக்குப் பரத நாட்டியம் முழுதும் கற்பித்திருக்கிறேன். அபிநயமும் நிருத்தியமும் அவளுக்கு அழகாகப் பொருந்தியிருக்கின்றன. திருவாசகம் திருக்கோவையாரிலுள்ள மாணிக்கவாசகரின் அற்புதமான பாடல்களுக்கெல்லாம் அபிநயப் பயிற்சி அளித்திருக்கிறேன். இப்போது எல்லோரும் ஓய்வாக உட்கார்ந்திருக்கிறோம். மகாராணியாரின் நிம்மதியற்ற குழம்பிய மனத்துக்கும் ஆறுதலாக இருக்கும்" என்று மெதுவாகப் பேச்சைத் தொடங்கினார் அதங்கோட்டாசிரியர்.
"மிகவும் நல்லது! உங்கள் பெண்ணின் நாட்டியத்தைப் பார்த்தாவது என் மனக் கவலைகளைச் சிறிது நேரத்துக்கு மறக்க முயல்கிறேன்" என்று கூறினார் மகாராணி. "குழந்தாய், விலாசினி! உனக்கு நடனமாடத் தெரியுமென்று நீ என்னிடம் சொல்லவே இல்லையே? வா இப்படி! ஏதாவதொரு நல்ல பாட்டுக்கு அபியம் பிடித்துக் காட்டு, பார்க்கலாம்" என்று ஆசிரியரின் மகளிடம் திரும்பிக் கூறினார். விலாசினி சிரித்துக் கொண்டே எழுந்திருந்தாள். நிலா முற்றத்துச் சுவரோரமாக மறைவில் சென்று உடையை நாட்டியத்துக்கு ஏற்றபடி வரிந்து கச்சும், தாருமாகக் கட்டிக்கொண்டு வந்தாள்.
"வல்லாளனின் தங்கைக்கு நன்றாகப் பாட வரும் என்று நினைக்கிறேன். அவளே பாடட்டும்" என்று பவழக்கனிவாயர் சும்மா இருந்த பகவதியையும் அதில் சேர்த்து வைத்தார்.
"பழம் நழுவிப் பாலில் விழுந்தாற் போல் ஆயிற்று! இந்த இரண்டு இளம் பெண்களுமாகச் சேர்ந்து நமக்குக் கலை விருந்து அளிக்கட்டும்."
"மகாராணியாரே பார்த்து ஆசிமொழி கூறுவதற்கு முன்வந்திருக்கிற போது எங்கள் கலைக்கு அதைவிடப் பெரும் பேறு வேறென்ன இருக்க முடியும்?" என்றாள் சிலம்பு குலுங்க நாட்டிய உடையோடு வந்து நின்ற விலாசினி. பகவதி மகாராணியை வணங்கி வீணையை ஏந்திப் பாடுவதற்குத் தயாராக முன்னால் வந்து உட்கார்ந்து கொண்டாள்.
"தேவி! கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டு வந்ததிலிருந்து இந்த விநாடிவரை உங்கள் மனத்தில் ஏற்பட்ட பெரிய கவலைகளால் நிம்மதியற்றுக் குழம்புகிறீர்கள் என்று தோன்றுகிறது. வல்லாளதேவனின் தங்கையும், அதங்கோட்டாசிரியரின் குமாரியுமாகச் சேர்ந்து போட்டி போட்டுக் கொண்டு உங்கள் கவலையைத் துரத்தப் போகிறார்கள், பாருங்கள்!" என்றார் பவழக்கனிவாயர். மகாராணி அதைக் கேட்டு முகத்தில் மலர்ச்சியையும், உதடுகளில் சிரிப்பையும் வருவித்துக் கொள்ள முயன்றார். ஆனால் அந்தச் சிரிப்பில் இயற்கையின் உயிர்ப்பு இல்லை.
அடுத்த கணம் நிலா முற்றத்தில் சிலம்பும் சலங்கையும் குலுங்கும் ஒலி எழுந்தது. நாட்டியத்துக்கு என்றே படைக்கப்பட்டதைப் போன்ற விலாசினியின் உடல் வளைந்து நெளிந்து அபிநயம் பிடித்த அழகை எப்படி வருணிப்பது? இது என்ன? குயிலின் இனிமை இந்த மானிட நங்கையின் தொண்டைக்கு எப்படிக் கிடைத்தது? பாடுவது வல்லாளதேவனின் தங்கை பகவதிதானா? அல்லது தேவலோகத்துச் சங்கீத தேவதை ஒன்று வீணையை ஏந்தி வந்து இந்த நிலா முற்றத்தில் உட்கார்ந்து பாடுகிறதா?
'சூடகந் தோள்வளை யார்ப்ப வார்ப்ப
தொண்டர் குழாம் எழுந்தார்ப்ப வார்ப்ப
நாடவர் நந்தம்மை யார்ப்ப வார்ப்ப
நாமும் அவர் தம்மை யார்ப்ப வார்ப்ப
பாடக மெல்லடி யார்க்கு மங்கை
பங்கினன் எங்கள் பராபரனுக்
காடக மாமலை யன்ன கோவுக்
காடப் பொற் சுண்ணம் இடித்தும்நாமே!'
திருவாசகத் திருப்பொற் சுண்ணப் பதிகத்திலிருந்து ஒரு பாடலை வரி வரியாக நிறுத்தி, அபிநயத்துக்கு அவகாசம் கொடுத்து, நிதான கதியில் வீணையை மீட்டிப் பாடும் பகவதி அங்கிருந்த எல்லோரையும் முற்றிலும் புதிய உலகத்துக்கு அழைத்துப் போய்விட்டாள். விலாசினியின் நடனமோ பாட்டின் ஒவ்வொரு எழுத்தையும் தத்ரூபமாக அபிநயத்தில் சித்தரித்துக் காட்டியது. விரக்தியின் எல்லையில் குமைந்து கொண்டிருந்த மகாராணி சகலத்தையும் மறந்து அந்தப் பாட்டிலும் நடனத்திலும் லயித்துப் போயிருந்தார். ஆனால் உள்ளத்தை உருக்கும் மாணிக்கவாசகரின் அந்தப் பாட்டு இன்னொரு வகையில் அவர் மனத்தை விரக்தி கொள்ளச் செய்தது.
'பார்க்கப் போனால் பொன்னும், பொருளும், அரச போகமும், அதிகார ஆணவங்களும் என்ன பயனைக் கொடுக்கப் போகின்றன? துன்பத்தையும், சூழ்ச்சியையும், குரோதத்தையும் உண்டாக்கவல்லன. போட்டிதான் இவற்றால் உண்டாகின்றன. பரம்பொருளை நினைந்து அல்லும், பகலும் அனுவரதமும் பாடித் திரிவதில் மாணிக்கவாசகர் போன்ற அடியார்களுக்குக் கிடைத்த ஆத்மீகமான இன்பம் என்னைப் போல ஒரு நாட்டின் அரசியே விரும்பினாலும் கிடைக்குமா? இந்தப் பாடலை வீணையோடு இழைத்து பாடும் பகவதியின் குரலையும், இதற்கு அழகாக அபிநயம் செய்யும் விலாசினியின் தோற்றத்தையும் பார்க்கும் போது என் மனத்தில் ஏன் இந்தக் கிளர்ச்சி ஏற்படுகிறது. இந்தக் கிளர்ச்சிக்குப் பொருள் என்ன? கோட்டை, கொத்தளம், அரண்மனை அரசபோகம், எல்லாவற்றையும் விட்டு விட்டு இப்படியே, இப்போதே எழுந்திருந்து எங்காவது ஓடிப்போய் விடலாம் போலத் தோன்றுகிறதே? இது ஏன்? ஏன்?'
மேலே பால் மாரியென முழுநிலா, சீதமாருத மென்காற்று, பாட்டின் குரல் இனிமை, கருத்தாழம், சலங்கை ஒலிக்கும் பாதம், இவையெல்லாம் சேர்ந்து மகாராணியைத் தெய்வீகம் நிறைந்த புனிதமானதொரு மானஸீக பூமிக்குத் தூக்கிக் கொண்டு செல்வதைப் போலிருந்தது.
கிண்கிணிச் சிறுசலங்கையின் ஒலியும் பகவதியின் பாடற் குரலும் நின்ற போதுதான் மகாராணி வானவன்மாதேவி இந்த உலகத்துக்கு வந்து கண்ணைத் திறந்து எதிரே பார்த்தார். பகவதியும் விலாசினியும் பவ்வியமாக அடக்க ஒடுக்கத்துடன் கைகளைக் கூப்பி வணங்கினார்கள்.
"அற்புதமான நிருத்தியம்! அற்புதமான கீதம்!" என்று சிரக்கம்பம் செய்தார் பவழக்கனிவாயர். தம் முன்னே அழகின் மாசுபடாத பொற்சிலையாக வணங்கி நிற்கும் அந்த யுவதிகளிடம் எந்த வார்த்தைகளைச் சொல்லி எப்படிப் பாராட்டுவதென்றே மகாராணிக்குத் தெரியவில்லை.
"மகாராணி! தங்கள் வாயால் குழந்தைகளை ஆசிமொழி கூறி வாழ்த்த வேண்டும்" என்று அதங்கோட்டாசிரியர் கேட்டுக் கொண்டார்.
"ஆசிரியரே! இந்தக் குழந்தைகளை எப்படி வாழ்த்துவதென்றே எனக்குத் தோன்றவில்லை. ஒரு வேளை இந்த மாபெரும் கலைச் செல்விகளை வாழ்த்துவதற்கு வேண்டிய அவ்வளவு தகுதி கூட எனக்கு இல்லையோ என்று நான் பயப்படுகிறேன். உங்களைப் போல ஆன்றோர்கள் தாம் இம்மாதிரிப் பெருங் கலைகளுக்கு வாழ்த்துவதற்கு உரிமை உடையவர்கள். குழந்தைகளே! என்னை வணங்காதீர்கள். ஆசிரியர் பிரானையும், பவழக்கனிவாயரையும் முதலில் வணங்குங்கள்."
"நீங்கள் இப்படிச் சொல்லக்கூடாது. அன்னை கன்னியாகுமரித் தெய்வத்துக்கு அடுத்தபடி இந்தத் தென்பாண்டி நாட்டின் மாபெருந்தேவி தாங்கள். உங்கள் மனத்தில் எழுகின்ற அன்பு நிறைந்த வார்த்தைகளால் வாழ்த்துங்கள்" என்றார் அதங்கோட்டாசிரியர்.
"குழந்தைகளே! இப்படி அருகில் வாருங்கள்." பகவதியும் விலாசினியும் அருகே சென்றார்கள். உட்காரச் சொல்லிக் கையமர்த்தினார் மகாராணி. இரண்டு பெண்களும் இருபுறமும் மண்டியிட்டு அமர்ந்தனர். இரண்டு பெண்களையும் முதுகைச் சேர்த்துத் தழுவிக் கொண்டாற் போல் இரு கைகளாலும் பாசத்தோடு அணைத்துக் கொண்டார் மகாராணி வானவன்மாதேவி.
"அருமைக் குழந்தைகளே! உங்களுக்கு எல்லா மங்கலங்களும் உண்டாகட்டும். அறிவும், திருவும் மிக்க நல்ல நாயகர்கள் வாய்க்கட்டும்!"
மகாராணி இப்படி அவர்களை வாழ்த்திக் கொண்டிருந்த போது நிலா முற்றத்தின் தென் பக்கம் மதிற்சுவருக்குக் கீழே இருந்த அரண்மனை நந்தவனத்திலிருந்து ஒரு குரூரமான கூப்பாடு எழுந்தது. அதையடுத்துச் சடசடவென்று ஒரு பெரிய மரக்கிளை முறிந்து விழும் ஓசை கேட்டது. ஆந்தைகள் அலறின. 'திடு திடு' வென ஆட்கள் ஓடும் காலடி ஓசையும், இனம் புரிந்து கொள்ள முடியாத வேறு சில சத்தங்களும் அரண்மனை நந்தவனத்திலிருந்து கிளம்பின. நந்தவனத்தில் மூலைக் கொன்றாகத் தீப்பந்தங்கள் மின்னிக் கொண்டிருந்தன. நிலா முற்றத்திலிருந்த மகாராணி உட்பட எல்லோரும் திடுக்கிட்டு எழுந்தார்கள். 'என்ன? என்ன?' என்ற கேள்வி ஒவ்வொருவர் வாயிலிருந்தும் முந்தி எழுந்தது. எல்லோரும் நந்தவனத்தின் பக்கமாக மிரண்ட பார்வையால் திரும்பிப் பார்த்தனர். அங்கே தீப்பந்தங்களோடு வீரர்கள் ஓடுவதும், 'பிடி! விடாதே!' என்ற கூப்பாடுகளும் கண்டு அவர்கள் திகைத்தனர்.
-------------
1.6. யார் இந்தத் துறவி?
தோணித் துறையிலிருந்து இரவின் அகால நேரத்தில் புறப்பட்ட அந்தப் படகு பறளியாற்றைக் கடந்து கொண்டிருந்தது. ஆற்றில் வெள்ளத்தின் வேகமும், சுழிப்பும் மிகுதியாக இருந்ததால் அம்பலவன் வேளான் படகை மெல்லச் செலுத்திக் கொண்டு போனான்.
படகில் சென்று கொண்டிருந்த போது மகாமண்டலேசுவரர் தளபதி வல்லாளதேவனிடம் கலகலப்பாகப் பேசினார். அவருடைய திருக்குமரி குழல்வாய்மொழி நாச்சியாரும் சிரித்துக் கொண்டே வேடிக்கையாகவும், கலகலப்பாகவும் பேசினாள். படகோட்டி அம்பலவன் வேளானும் பேசினான். குழல்மொழிக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அந்த வாலிபத் துறவிதான் பேசவேயில்லை. எப்படியாவது அந்தத் துறவியைப் பேச வைத்துவிடவேண்டுமென்று தளபதி ஆனமட்டிலும் முயன்றான். வேண்டுமென்றே பேச்சினிடையே துறவிகளைப் பற்றிப் பேசினான். அப்போதாவது அந்த இளம் துறவி வாய் திறந்து பேசுவாரென்று அவன் எதிர்பார்த்து ஏமாற்றம் அடைந்தான். உதடுகளை நெகிழ்ந்து மௌனமாக ஒரு புன்னகை செய்துவிட்டுப் பேசாமலிருந்தார் அவர். 'மனிதர் வாய் பேச முடியாத ஊமையோ?' என்று சந்தேகம் உண்டாகிவிட்டது அவனுக்கு.
மகாமண்டலேசுவரராவது அவருடைய புதல்வியாவது அந்தத் துறவியைத் தனக்கு அறிமுகம் செய்து வைப்பார்கள் என்று தளபதி எதிர்பார்த்தான். ஆனால் அவர்கள் அதைச் செய்யவே இல்லை. வேண்டுமென்றே அறிமுகம் செய்யாமலிருப்பது போல் தோன்றியது அவனுக்கு. 'இந்தத் துறவி யார்? எங்கிருந்து வருகிறார்? ஏன் இபப்டிப் பேசாமல் ஊமை போல் மௌனமாக உட்கார்ந்து கொண்டு வருகிறார்?' என்று வெளிப்படையாக இடையாற்றுமங்கலம் நம்பியிடம் நேருக்கு நேர் கேட்டுவிடலாம். ஆனால் அந்தத் துறவியையும் அருகில் வைத்துக் கொண்டே அப்படிக் கேட்பது அவ்வளவு சிறந்த முறையாகாது. பண்பற்ற முரட்டு விசாரணையாக முடிந்துவிடும் அது!
அவர்கள் வேண்டுமென்றே பிடிவாதமாக அதைத் தன்னிடம் சொல்ல விரும்பாதது போல் மறைக்கும் போது கேட்பது நாகரிகமில்லை. ஆனால் ஒரு உண்மையைத் தளபதி வல்லாளதேவன் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிந்தது. திருமணமாகாத தம் குமாரியை அந்த வாலிப வயதுத் துறவியோடு நெருங்கிப் பழகவிடுவதைக் கண்ட போது, துறவிக்கும் இடையாற்றுமங்கலம் நம்பிக்கும் நெருங்கிய விதத்தில் உறவோ தொடர்போ இருக்க வேண்டுமென்று தெரிந்தது. குழல்மொழி அந்தத் துறவியிடம் நடந்து கொண்ட விதம் எவ்வளவோ நாள் தெரிந்து பழகிய மாதிரி கூச்சமோ, நாணமோ இல்லாமல் இருந்தது. தன் பக்கத்தில் கன்னிப் பருவத்து அழகு பூரித்து நிற்கும் ஓர் இளம் பெண் படகில் உட்கார்ந்திருக்கிறாளே என்று துறவி கூச்சமடைந்ததாகத் தெரியவில்லை. அதே போல் தளதளவென்று உருக்கிய செம்பொன் போன்ற நிறமும், இளமைக் கட்டமைந்த காளை போன்ற உடலும், அழகு ததும்பும் முகத் தோற்றமுமாக ஓர் ஆண் மகன் தன் அருகே உட்கார்ந்திருக்கிறானே என்று மகாமண்டலேசுவரரின் குமாரியும் கூசியதாகத் தெரியவில்லை. அவள் நெருங்கி உட்கார்ந்து கொண்டிருந்தாள். அடிக்கடி சிரித்துக் கொண்டே துறவியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள்! இவற்றையெல்லாம் பார்த்துத்தான் தளபதி மனம் குழம்பினான். படகு மேலே முன்னேறிச் சென்று கொண்டிருந்தது.
ஆண்பிள்ளையாகிய வல்லாளதேவனையே அந்த இளந்துறவியின் தோற்றம் மயக்கியது. 'இந்த முகத்தை இன்னொரு முறை பார்!' என்று பார்த்தவன் அல்லது பார்த்தவளை மீண்டும் மீண்டும் தூண்டக்கூடிய அதிசயமானதோர் அழகு துறவியின் முகத்தில் இருந்தது.
தங்கத் தாம்பாளத்தில் அரைக்கீரை விதையைக் கொட்டி வைத்தாற்போல் அந்தப் பொன்னிற முகத்தில் கருகருவென்று வளர்ந்திருந்த தாடி எடுப்பாக இருந்தது. தளபதி மீண்டும் நிலா ஒளியில் படகுக்குள் தன் எதிரே உட்கார்ந்திருக்கும் துறவியைப் பார்த்தான்.
அந்தக் கம்பீரமான பார்வை, அழகிய கண்கள், நீண்ட நாசி, புன்னகை தவழும் சிவந்த உதடுகள் இவற்றையெல்லாம் இதற்கு முன் எங்கோ, எப்போதோ, பல முறைகள் பார்த்திருப்பது போல் ஒரு பிரமை. ஒரு தற்செயலான நினைவு திடீரென்று வல்லாளதேவனின் மனத்தில் ஏற்பட்டது.
மாளிகைக் கரையிலுள்ள துறையில் போய்த் தோணி நிற்கிறவரை இடையாற்றுமங்கலம் நம்பியும், அவருடைய பெண்ணும் எதை எதையோ பேசினார்கள். மகாராணியாரின் உடல்நலம், வடபாண்டி நாட்டின் அரசியல் நிலைமை, துறைமுகத்திற்கு வந்து செல்லும் வெளிநாட்டு மரக்கலங்கள், கோட்டாற்றிலுள்ள தென்பாண்டிப் பெரும் படைகளின் நிலைமை என்று எத்தனையோ செய்திகளைப் பற்றி விரிவாக விவாதித்துப் பேசினார்கள். ஆனால் தப்பித் தவறிக் கூட அந்த வாலிபத் துறவியைப் பற்றிப் பேசவில்லை.
'இந்த அகால வேளையில் இவர்களோடு எங்கே போய்விட்டு மாளிகைக்குத் திரும்புகிறார் இடையாற்றுமங்கலம் நம்பி?' என்று இன்னொரு சந்தேகமும் தளபதிக்கு ஏற்பட்டது. கரையில் இறங்கியதும் மகாமண்டலேசுவரர் செய்த முதல் காரியம் வீரத்தளபதி வல்லாளதேவனுடைய சந்தேகத்தை மேலும் வளர்ப்பதாகவே இருந்தது.
"குழல் மொழி! தளபதி ஏதோ முக்கியமான செய்தி கொண்டு வந்திருக்கிறார். அவரோடு நான் தனியாகப் பேச வேண்டும். நீ 'சுவாமி'களை அழைத்துக் கொண்டு போய் வசந்த மண்டபத்தில் தங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்து கொடு" என்று தீவின் மேற்குக் கோடியிலிருந்த வசந்த மண்டபக் கட்டடத்தைச் சுட்டிக் காட்டினார் மகாமண்டலேசுவரர். "ஆகட்டும் அப்பா! 'இவரை' நான் கவனித்துக் கொள்கிறேன். நீங்கள் தளபதியாரை அழைத்துக் கொண்டு போய் உங்கள் காரியத்தைக் கவனியுங்கள்" என்று சொல்லிவிட்டு, அவருடைய பெண் குழல்மொழி அந்த இளந்துறவியை அழைத்துக் கொண்டு அதே நேரத்தில் தனியே வசந்த மண்டபத்தை நோக்கி நடந்ததைப் பார்த்த போது தளபதி திகைத்துப் போய் நின்றுவிட்டான். அவன் மனத்துக்குள் நிகழ்ந்து கொண்டிருந்த மர்மக் குழப்பம் இன்னும் ஒரு படி அதிகமாகிவிட்டது.
"என்ன தளபதி? நாம் போகலாமா? அந்தரங்க மண்டபத்தில் போய் நாம் பேசவேண்டியதைப் பேசுவோம்" என்று கூறிக் கொண்டே முன்னால் நடந்தார் இடையாற்றுமங்கலம் நம்பி. தளபதி வசந்த மண்டபத்தை நோக்கி நடந்து கொண்டிருக்கும் அந்தத் துறவியையும், பூங்கொடி அசைந்து துவள்வது போல் அவர் அருகே நடை பயிலும் குழல்மொழியையும் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கொண்டே மகாமண்டலேசுவரரைப் பின்பற்றி நடந்தான்.
"தளபதி! வழியைப் பார்த்து நடந்து வா! மழை பெய்த ஈரம்; வழுக்கி விடப் போகிறது. எங்கேயோ பார்த்துக் கொண்டு நடக்கிறாயே?" என்று அவர் குறிப்பாகத் தன் செயலைக் கண்டித்த போது தான் திரும்பிப் பார்ப்பதை வல்லாளதேவன் நிறுத்திக் கொண்டான். அப்போது மகாமண்டலேசுவரரும் தானும் தனியாக இருப்பதால் அந்தத் துறவியைப் பற்றி அவரிடம் விசாரிப்பது தவறில்லை என்று அவனுக்குத் தோன்றியது.
"மகாமண்டலேசுவரரிடம் அடியேன் ஒரு சந்தேகம் கேட்கலாமோ?" என்றான்.
முன்னால் 'விறுவிறு' வென்று விரைந்து நடந்து கொண்டிருந்த இடையாற்றுமங்கலம் நம்பி நின்று அவனைத் திரும்பிப் பார்த்தார். இமையாமல் அவர் பார்த்த அந்தப் பார்வையில் ஆத்திரமா? திகைப்பா? வெறுப்பா? கோபமா? - எது நிறைந்திருந்தது என்பதை வல்லாளதேவனால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.
"சந்தேகமா! என்ன சந்தேகம்?" நிதானமான குரலில் பதற்றமில்லாமல் வெளி வந்தது அவருடைய கேள்வி.
மகாமண்டலேசுவரர் திரும்பிப் பார்த்த விதத்தையும் கேட்ட கேள்வியையும் பார்த்து ஒரு கணம் அப்படியே அயர்ந்து போய் நின்றுவிட்டான் வீரத்தளபதி. தான் கேட்க நினைத்ததை கேட்காமலே இருந்து விடலாமா என்று ஒருவிதத் தயக்கம் கூட அவனுக்கு உண்டாயிற்று. அறிவிலும், அநுபவத்திலும், சூழ்ச்சியிலும், எதையும் ஆளும் திறமையிலும் மலை போல் உயர்ந்த மகாமண்டலேசுவரரிடம் எதையும் மறைக்க முடியாது. ஒவ்வொரு சொல்லிலும், ஒவ்வொரு பார்வையிலும், ஒவ்வொரு அசைவிலும் மனத்தின் ஆழத்தில் பதுங்கியிருக்கும் அதற்கு மூலமான எண்ணத்தை ஊடுருவி அறியக்கூடியவர் இடையாற்றுமங்கலம் நம்பி. எனவே கேட்க நினைத்ததை மறைக்காமல் கேட்டு விடுவதென்று உறுதி செய்து கொண்டு, "நம்மோடு படகில் வந்தாரே, அந்தத் துறவி..." என்று தொடங்கி, அவன் தன் கேள்வியைக் கேட்டு முடிப்பதற்குள்ளேயே அவர் இடைமறித்துப் பதில் சொல்லத் தொடங்கிவிட்டார்.
"அவர் இன்னாரென்று அறிவதற்காகப் படகு புறப்பட்ட போதிலிருந்து நீ துடிதுடித்துக் கொண்டிருப்பது எனக்குத் தெரியும். வல்லாளா! அவரை வாய் திறந்து பேச வைப்பதற்காக நீ செய்த சாகஸங்களை யெல்லாம் பார்த்து உள்ளூரச் சிரித்துக் கொண்டுதான் வந்தேன் நான். அவரைப் பற்றி நீ கட்டாயம் தெரிந்து கொள்ளத்தான் வேண்டும். ஆனால் இப்போது வேண்டாம், அதற்கொரு சமயம் வரும்" என்று சொல்லிவிட்டுக் குறும்புத்தனமானதொரு சிரிப்பை இதழ்களில் மலரச் செய்தார் இடையாற்றுமங்கலம் நம்பி.
தன் கேள்விக்கு விடை சொல்லாமல் அவர் சாமர்த்தியமாக அதை மறுத்த விதம் தளபதியை அதிர்ச்சியடையச் செய்தது. "வல்லாளதேவா! நீ வந்திருக்கிற நேரத்தையும் அவசரத்தையும் பார்த்தால் மிக மிக இன்றியமையாத காரியமாகத்தான் வந்திருப்பாய் என்று எனக்கு தோன்றுகிறது. இந்தத் துறவியைப் பற்றி விசாரித்து உன் நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்காதே. வந்த காரியத்தைப் பேசுவோம், வா!" என்று சொல்லிக் கொண்டே மாளிகையின் அந்தரங்க அறை வாசலில் வந்து நின்றார் மகாமண்டலேசுவரர்.
அங்கிருந்த சேவகன் ஒருவன் ஓடி வந்து அந்தரங்க அறையின் மணிகள் பொருத்தப்பட்ட கதவுகளைத் திறந்து விட்டான். கதவுகளில் தொங்கிய மணிகள் அமைதியான இரவில் கலகலவென்று ஒலித்தன. உள்ளே எரிந்து கொண்டிருந்த தீபங்களைத் தூண்டி விட்டான். தூப கலசங்களிலிருந்த அனலை ஊதிக் கனியச் செய்து அதில் அகில் பொடியைத் தூவினான். தீபங்களின் ஒளியும், தூபங்களின் நறுமணமுமாக அற்புதச் சோபையுடன் விளங்கிய அந்த அறைக்குள் இருவரும் நுழைந்தவுடன் சேவகன் வெளிப்புறமாக வந்து நின்று கொண்டு கதவுகளை இழுத்துச் சாத்தினான். மறுபடியும் ஒரே சமயத்தில் இரு கதவுகளிலும் இருந்த எல்லா மணிகளும் ஒலித்து ஓய்ந்தன. சேவகன் அங்கேயே காவலாக நின்று கொண்டான்.
இடையாற்றுமங்கலம் மாளிகை கடல் போல் பெரியது. சொல்லப் போனால் இரண்டு ஆறுகளுக்கு நடுவே நதிகளின் செல்லப் பிள்ளை போல் அமைந்திருந்த அந்தத் தீவின் முக்கால் பகுதி இடம் அந்த மாபெரும் மாளிகைதான். கடலுக்கு அடியில் எத்தனை இரகசியங்கள் மர்மங்கள் அபூர்வப் பொருள்கள் மூழ்கிக் கிடக்கின்றனவோ தெரியாது. ஆனால் இடையாற்று நாஞ்சில் அரசியலில் எண்ணற்ற மர்மங்கள் மறைந்திருக்கின்றன என்பார்கள்.
மாளிகையின் முக்கியமான அறைகளின் கதவுகளிலெல்லாம் நிச்சயமாக மணிகள் பொருத்தப்பட்டிருக்கும். எவ்வளவு மெதுவாகக் கதவைத் திறக்க முயன்றாலும் சிறு சிறு வெண்கல மணிகள் நாவு அசைந்து கணீரென்று ஒலியைக் கிளப்பிவிடும். தனியாக உட்கார்ந்து அந்தரங்கமான செய்திகளைப் பேசும்போதோ மந்திராலோசனையில் இருக்கும் போதோ அன்னியர் எவரும் முன்னறிவிப்பின்றி உள்ளே நுழைந்து விட முடியாதபடி கதவுகளை இப்படி நுணுக்கமாக அமைத்திருந்தார் இடையாற்றுமங்கலம் நம்பி.
அரசியல் மேதையும், அறிவுச் செல்வரும், இராஜ தந்திரங்களின் இருப்பிடமுமான இடையாற்றுமங்கலம் நம்பியின் எண்ணங்களையும் செயல்களையும், மனத்தையும் வல்லாளதேவன் எப்படி முழு அளவில் இன்றுவரை தெரிந்து கொள்ள முடியவில்லையோ, அதே போல் அந்த மாளிகையிலும் தெரிந்து கொள்ளாத அல்லது தெரிந்து கொள்ள முடியாத இன்னும் எத்தனை எத்தனையோ விசித்திரமான இடங்கள் இருந்தன.
வரிசை வரிசையாக அணிவகுத்து நிற்கும் ஆயிரக்கணக்கான படைவீரர்களுக்கு நடுவே போர்க்களத்தில் நின்று அஞ்சாமல் கட்டளைகளை இட்டும், கையில் வாளேந்தியும், ஒரு பெரும் படையினை முன்னின்று நடத்தி வெற்றி பெறும் திறன் அவனிடம் இருந்தது. ஆனால் புறத்தாய நாட்டு மகாமண்டலேசுவரர் செய்ய நினைக்கும் செயல்களையும் எண்ணங்களையும் துணிந்து முன்னின்று ஆராயும் இதயத் திடம் அவனுக்கு இல்லை. அந்த ஒரு விஷயத்தில் மட்டும் அவன் மனம் இந்த நொடி வரை பலவீனம் என்ற எல்லைக்கோட்டை மீறி அப்பாற் சென்றதே இல்லை. இதற்குப் பல காரணங்கள் உண்டு. மகாமண்டலேசுவரரின் முகத்தைப் பார்த்துக் கொண்டு அவருக்கு எதிரே உட்கார்ந்து பேசும் போது இதயத்தை மறைத்து எந்தப் பொய்யையும் பேசமுடியாது. உயர்ந்தோங்கி, வானமண்டலத்தை அணைந்து நிற்கும் பிரமாண்டமான ஒரு மலைச்சிகரத்தைக் கண்ணெதிரே பார்க்கிற உணர்ச்சி உண்டாகும், அந்த மனிதரின் முகத்தை பார்க்கும் போது. ஆகவே எவ்வளவுதான் மறைக்க முயன்றாலும் உண்மைதான் வாயில் வரும். தன்னிடம் யார் பேசிக் கொண்டிருந்தாலும் வேறெங்காவது பராக்குப் பார்த்துக் கொண்டு அந்தப் பேச்சைக் கேட்கும் வழக்கம் அவரிடம் கிடையவே கிடையாது. பேசுகிறவனின் முகத்தையும் அதிலுள்ள கண்களையும் பார்த்துக் கொண்டே தான் பேச்சைக் கேட்பார். அந்தப் பார்வை பேசுகிறவனின் மனத்தில் புதைந்து கொள்ள முயலுகிற உண்மைகளையெல்லாம் குத்தி இழுத்து வெளியே கொண்டு வந்து விடும். அவ்வளவு கூர்மை அதற்கு!
அவசியம் ஏற்பட்டாலொழிய இடையில் குறுக்கிட்டு எதையும் கேள்வி கேட்காமல், எதிராளியின் பேச்சைக் கூர்ந்து கேட்டுக் கொண்டே போவார்.
அவரிடம் இப்படிப் பலமுறை அநுபவப்பட்டிருந்த தளபதி வல்லாளதேவன் அன்று அந்தரங்க அறைக்குள் அவரோடு நுழைந்த போது மிகவும் முன்னெச்சரிக்கையுடன் அவசியமானவற்றைத் தவிர வேறெதையும் பேசக் கூடாதென்று மனத்தை உறுதிப்படுத்திக் கொண்டு தான் நுழைந்தான். கன்னியாகுமரியில் கைப்பற்றிய ஓலையைப் பற்றி அவரிடம் வாய் தவறி உளறி விடக்கூடாதென்று தீர்மானித்துக் கொண்டான் வல்லாளதேவன்.
ஆனால், இடையாற்றுமங்கலம் நம்பியிடம் பேசத் தொடங்கிவிட்டதும் தளபதி வல்லாளதேவன் எதை எதை மகாமண்டலேசுவரரிடம் சொல்லக் கூடாதென்று நினைத்துக் கொண்டிருந்தானோ, அவையெல்லாம் அவனையறியாமலே அவன் வாயில் வந்து விட்டன. அவர்கள் உட்கார்ந்திருந்த அந்தரங்க அறை ஒளிமயமாக இருந்தது. தூபப் புகையின் நறுமணம்! அன்னக்கொடி விளக்குகளின் ஒளி! நாற்புறமும் சுவர்களில் அழகான ஓவியங்கள்! அறை முழுவதும் கட்டித் தொடங்க விடப்பட்டிருந்த மல்லிகைப் பூச்சரங்கள்! பூ மணமும் அகிற்புகையும், தீப ஒளியும், எதிரே நிமிர்ந்து உட்கார்ந்து தன்னையே இமைக்காமல், பார்த்துக் கொண்டிருக்கும் இடையாற்றுமங்கலம் நம்பியின் பார்வையும் ஒன்று சேர்ந்து தளபதியை என்னவோ செய்தன!
புறத்தாய நாட்டுக் கோட்டையிலிருந்து மகாராணியார் கன்னியாகுமரிக்குப் புறப்பட்டது, பாறையிடுக்கில் ஒற்றர்களைச் சந்தித்தது, தரிசனத்தின் போது மகாராணிக்கு ஏற்பட்ட ஆபத்து, மறுநாள் நாஞ்சில் நாட்டு மகாசபையைக் கூட்டுமாறு மகாராணி ஆணையிட்டிருப்பது ஆகிய எல்லா விஷயங்களையும் மகாமண்டலேசுவரரிடம் அவன் கூறினான். ஒற்றர்களிடமிருந்து கைப்பற்றிய ஓலையைப் பற்றி மட்டும் அவன் சொல்லவே இல்லை.
எல்லாவற்றையும் கேட்டுவிட்டு மகாமண்டலேசுவரர் சிரித்தார். "தளபதி! எல்லாம் சரி. உன்னுடைய இடுப்பிலிருக்கும் அந்த ஓலையில் என்ன எழுதியிருக்கிறதென்று எனக்குத் தெரியும். ஆனாலும் அதை என்னிடம் எடுத்துக் காட்டி விடுவதுதான் முறை!" என்றார்.
இதைக் கேட்டதும் வல்லாளதேவன் வெலவெலத்துப் போனான். அவன் உடல் நடுங்கியது. மகாமண்டலேசுவரர் அவனை நோக்கி வெற்றிப் புன்னகைப் பூத்தார். அதே சமயம் கதவுகளின் மணிகள் மெல்ல ஒலித்தன.
-----------
1.7. நந்தவனத்தில் நடந்த குழப்பம்
நிலா முற்றத்துப் படிகளில் வேகமாக இறங்கி எல்லோரும் கீழே சென்றனர். அத்தனை பேருடைய மனத்திலும் திகில் சூழ்ந்திருந்தது. வேற்றவர் நுழைய முடியாத புறத்தாய நாட்டுக் கோட்டைக்குள் அமைதியான நள்ளிரவில் நந்தவனத்தில் அப்படி ஒரு பயங்கரக் குழப்பம் ஏற்பட்டால் யாருக்குத்தான் திகில் உண்டாகாது?
மகாராணி வானவன்மாதேவியாரின் மனம் காரணமின்றி நடுங்கியது. 'இன்று மாலை கன்னியாகுமரிக்குப் புறப்பட்டதிலிருந்து என்னுடைய போதாத காலமும் என்னோடு புறப்பட்டுவிட்டது போலிருக்கிறது. இன்றைக்குக் குறை இரவு கழிவதற்குள் இன்னும் என்னென்ன நடக்கப் போகின்றனவோ? ஐயோ! இடையாற்றுமங்கலம் நம்பியின் வார்த்தைகளைக் கேட்டு இந்தப் புறத்தாய நாட்டுக் கோட்டைக்கு எதற்காக வந்து தங்கினேன் என்று எண்ணி அவர் மனம் வாடினார். பகவதியும், விலாசினியும் மிரண்டு போய் உடன் நடந்தனர். ஆடவர்களான பவழக்கனிவாயரும், அதங்கோட்டாசிரியரும் வேகமாக நந்தவனத்தை நோக்கி ஓடினர். 'நடக்கிற கலவரம் என்ன என்று நந்தவனத்துக்கு நேரில் போய் விசாரித்து அறிய வேண்டும்' என்ற ஆவல் மகாராணியின் உள்ளத்தில் அணுவளவும் இல்லை. 'என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும்! எது நடந்தால் எனக்கென்ன? நாளைக்கு மகாசபைக் கூட்டம் நடந்து முடிகிற வரை பல்லைக் கடித்துக் கொண்டு முள்ளின் மேலிருப்பது போல் இந்த மாளிகையில் இருந்து தீர வேண்டியதுதான். அப்புறம் எந்தத் தவப் பள்ளியில் போய் எப்படி வாழ்வின் எஞ்சியிருக்கும் பாவ நாட்கள் கழியப் போகின்றனவோ?' என்ற பழைய விரக்திதான் மகாராணியின் உள்ளத்தில் உறுதிப்பட்டது.
அந்த இரண்டு பெண்களையும் தன் இரு கைகளாலும் பற்றிக் கொண்டு, தான் பெற்ற மக்களை அழைத்துச் செல்வதைப் போல் பரிவோடும் பாசத்தோடும் அழைத்துக் கொண்டு அந்தப்புரத்துக்குச் சென்றார் மகாராணி.
இனி நிலாமுற்றத்தில் நடனமும், பாடலும் நிகழ்ந்து முடியும் தறுவாயில் ஏற்பட்ட அந்தக் குழப்பம் என்னவென்பதைத் தெரிந்து கொள்ளலாம். அதைத் தெரிந்து கொள்வதற்கு முன் ஏற்கெனவே நமக்குத் தெரியாமல் இந்தக் கதையில் நடந்து முடிந்து விட்ட சில முன் நிகழ்ச்சிகளையும் இங்கே தெரிந்து கொண்டுதான் ஆகவேண்டியிருக்கிறது. அவற்றைத் தெரிந்து கொண்டால் கதை தொடர்விட்டுப் போகாமல் விளக்கமாகப் புரிவதற்கு இயலும்.
'மகாராணி வானவன்மாதேவி கன்னியாகுமரி ஆலயத்துக்கு வந்திருந்த அன்றைய தினம் மாலையில் நாஞ்சில் நாட்டின் தளபதி வல்லாளதேவன், பெரும் புலவராகிய அதங்கோட்டாசிரியர், காந்தளூர்ச்சாலை மணியம்பலங்காக்கும் பவழக்கனிவாயர் ஆகிய எல்லோரும் ஆலயத்துக்கும் வந்திருந்தார்களே! மகாமண்டலேசுவரராகிய இடையாற்றுமங்கலம் நம்பியும் அவருடைய புதல்வியும் மட்டும் ஏன் வரவில்லை' என்ற சந்தேகம் நேயர்களுக்கு உண்டாகவில்லையா? இந்தச் சந்தேகம் இதுவரை நேயர்களுக்கு ஏற்படவில்லையானால், 'உடன் ஏற்படுத்திக் கொள்ளுங்கள்' என்று வற்புறுத்திவிட்டு மேலே தொடருகிறேன்.
அதே தினம் மாலையில் மகாமண்டலேசுவரரும் அவருடைய புதல்வி குழல்வாய் மொழியும், இன்னும் இந்தக் கதையில் இதுவரை நமக்கு அறிமுகமாகாத ஒரு புதிய பாத்திரமும் தென்பாண்டி நாட்டின் மேல்புறம் மேலை மண்டலக் கடற்கரையின் முக்கியத் துறைமுகப் பட்டினமாகிய விழிஞத்தில் நின்று கொண்டிருப்பதைக் காண்கிறோம்.
சாரி சாரியாக ஏற்றுமதிக்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த மிளகுப் பொதிகள், கொற்கை முத்துச் சலாபத்திலிருந்து முத்திரையிட்டுக் கொண்டு வரப்பட்டிருந்த முத்து மூட்டைகள், ஏலக்காய், இலவங்கம், சாதிக்காய், கிராம்பு ஆகிய வாசனைத் திரவியங்கள் அடங்கிய பொதிகள் எல்லாம் கிடந்தன அந்தத் துறைமுகத்தில். நாஞ்சில் நாட்டு அரசாங்க இலச்சினையாகிய மேழியோடு கூடிய கலப்பையும், அதன் ஒரு மூலையில் பாண்டியர் மீன் இலச்சினையும் பதித்த பெரிய பெரிய கொடிகள் மரக்கலங்கலின் கூம்பில் அசைந்தாடிக் கொண்டிருந்தன. பல தேசத்து வியாபாரிகளின் கூட்டமும், பிரயாணம் செய்து வந்து இறங்கியவர்கள், பிரயாணம் செய்வதற்காகக் கப்பலேற வந்திருப்பவர்களின் கூட்டங்களுமாகத் துறைமுகம் கலகலப்பாக இருந்தது.
இடையாற்றுமங்கலம் நம்பியும், அவர் மகளும், அவர்களோடு இருந்த குட்டையான ஓர் இளைஞனும், துறைமுகத்துக்கு வந்து சேர வேண்டிய கப்பலொன்றை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களைப் போல் நின்று கொண்டிருந்தனர். அவர்களோடு இருந்த அந்த இளைஞன் பார்ப்பதற்கு விசித்திரமான தோற்றத்தை உடையவனாக இருந்தான். 'தமிழ் முனிவர் அகத்தியரைப் பார்த்திருந்தால் இவனைப் பார்க்க வேண்டாம்' - என்று சொல்லத் தக்க குட்டையான தோற்றம், பீமசேனனைப் போலக் கட்டமைந்த உடல், உருண்டை முகம், மூக்கும் விழியுமாக எடுப்பான தோற்றம். நெற்றியில் தீபச் சுடர்போல் சிவப்பு நிறத்தில் ஒரு சிந்தூரக் கீறல் - இது அவன் இட்டுக் கொண்டிருந்த திலகம். செவிகளில் சங்கு சக்கர வடிவமாக முத்துகள் பதிக்கப் பெற்ற இரண்டு முத்துக் கடுக்கன்கள் மின்னின. மூலத்தாராகக் கச்சம் வைத்துக் கட்டிக் கொண்டிருந்த ஆடை முழங்காலுக்கு மேல் தொங்கியது. அடிக்கடி எதையாவது சொல்லிக் கொண்டே இடி இடியென்று சிரித்துக் கொண்டிருந்தான் அவன். அப்படிச் சிரிக்கும் போது முன்புறமாக முடிந்திருந்த அவன் தலையின் சிறிய குடுமி ஆடுவது காண்பதற்கு வேடிக்கையாக இருந்தது. அவன் கூறுவனவற்றைக் கேட்டு மகாமண்டலேசுவரர் அவ்வளவாக இரசித்து சிரிக்கவில்லையானாலும் அவருடைய குமாரி குழல்மொழி தன் முல்லைப் பற்கள் தெரியச் சிரித்து அநுபவித்துக் கொண்டிருந்தாள். அதிகமாகச் சொன்னாலும் இருபத்தெட்டு வயதுக்கு மேல் மதிப்பிட்டுச் சொல்ல முடியாது அந்த இளைஞனுக்கு. அவனுடைய வைதிகமான இந்த எளிய கோலத்துக்கு ஒரு சிறிய விதிவிலக்குப் போல் இடையில் ஒரு வாள் உறையோடு தொங்கியது.
அவர்கள் நின்று கொண்டிருந்த வழியாக வந்து போய்க் கொண்டிருந்த கூட்டத்தினரில் அந்த இளைஞனின் விசித்திரத் தோற்றத்தையும், அவன் சிரித்துச் சிரித்துப் பேசும் வேடிக்கையான காட்சியையும் ஒரு கணம் நின்று வியப்புடன் பார்த்துவிட்டுப் போகாதவர்களே இல்லை. மகாமண்டலேசுவரர் தென்மேற்குத் திசையில் கடலையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார்.
திடீரென்று அந்த இளைஞனின் பக்கமாகத் திரும்பி, "சேந்தா! கிளம்பு. இன்று மாலை மகாராணியார் கன்னியாகுமரிக்கு வரப் போவதை மறந்து விட்டாயா? இங்கே நின்று கொண்டு உன் சிரிப்பொலியால் கடற்கரையையே அதிர அடித்துக் கொண்டிருக்கிறாயே! கப்பல் வந்ததும் நானும், குழல்மொழியும் அவரை மாளிகைக்கு அழைத்துக் கொண்டு போகிறோம். எவ்வளவு நாழிகையானாலும் நாங்கள் இங்கே இன்றிரவு தங்க மாட்டோம். மாளிகைக்கு வந்து சேர்ந்து விடுவோம். அதே போல் நீயும் மாளிகைக்கு வந்துவிடு. உனக்காகத் தென்கரையில் அம்பலவன் வேளானைத் தோணியோடு காத்திருக்கச் செய்வேன். மகாராணி கன்னியாகுமரியிலிருந்து கோட்டைக்குத் திரும்பிப் போய்ச் சேர்கிறவரை என்னென்ன நடக்கிறது என்பதை ஒன்று விடாமல் கவனித்துக் கொண்டு வந்து சொல்ல வேண்டும். நீ அங்கே சென்று கவனிப்பதை வேறு யாரும் தெரிந்து கொள்ளாதபடி மறைந்து கவனிக்க வேண்டியது மிக முக்கியம். நீ வந்து தகவல்களைக் கூறுகிற வரையில் நான் உறங்காமல் உனக்காக விழித்துக் கொண்டு காத்திருப்பேன்."
மகாமண்டலேசுவரரின் இந்தக் கம்பீரமான கட்ட்டளையைக் கேட்டதும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த அந்த இளைஞனின் முகத்தில் பொறுப்பும் கடமை உணர்ச்சியும் குடி கொண்டன.
"அப்படியே செய்கிறேன் பிரபு" என்று சொல்லிக் கைகூப்பி வணங்கி விட்டுக் கிளம்பினான் அவன்.
"சேந்தா! கொஞ்சம் இப்படி அருகே வா. இதையும் கேட்டுக் கொண்டு போ." சிறிது தூரம் நடந்து சென்று விட்ட அவனை மீண்டும் கை நீட்டிக் கூப்பிட்டார், இடையாற்றுமங்கலம் நம்பி. அவன் திரும்பி நடந்து வந்தான்.
நாஞ்சில் நாட்டு வேளாளப் பெருமக்கள் நெல் போட்டு வைத்திருக்கப் பயன்படுத்தும் குறுகிய தாழி ஒன்று உருண்டு உருண்டு வருவது போல் அந்தக் குட்டை இளைஞன் நடப்பது பார்ப்பவர்களுக்குச் சிரிப்பை மூட்டியது.
"சேந்தா! நானும் குழல்மொழியும் இங்கே விழிஞத்துக்கு வந்திருக்கும் செய்தியை வேறு யாரிடமும் சொல்லி விடாதே. எச்சரிக்கையாக நடந்து கொள்! நானும் குழல்மொழியும், 'கப்பலில் வருகின்றவரும்' திரும்பிச் செல்கிற வழியில் சுசீந்திரம் தாணுமாலய விண்ணகரத்தில் சிறிது நேரம் தங்கித் தரிசித்துவிட்டு போகலாம் என்று நினைத்திருக்கிறேன். இரவு மாளிகைக்கு வருவதற்கு முன்பே அவசரமான செய்தி ஏதாவது என்னிடம் சொல்ல வேண்டியிருந்தால் சுசீந்திரத்துக்கு ஒரு நடை வந்து சொல்லிவிட்டுப் போ" என்று அவன் காதருகே குனிந்து தணிந்த குரலில் கூறினார் அவர். அவனுடைய உருண்டைத் தலையும் அதில் முடியப்பட்டிருந்த குடுமியும் சம்மதத்துக்கு அறிகுறியாக அசைந்தன. "சரி! அவ்வளவுதான். போய்வா" என்றார் அவர்.
துறைமுகத்தின் சுங்கச் சாவடிக்கு அருகில் கட்டியிருந்த தன் குதிரையை அவிழ்த்து அதன் மேல் தாவி ஏறிக் கொண்டான் அந்தக் குட்டை இளைஞன். குதிரை சாலையில் திரும்பி வேகமாகச் சென்றது. வாமனாவதாரம் போன்ற அந்தக் குறள் வடிவ இளைஞன் குதிரைக் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டு சவாரி செய்யும் காட்சியைத் துறைமுகத்தில் நின்று கொண்டிருந்தவர்களில் சிலர் வியப்புடன் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவனது குதிரை கிழக்கே காந்தளூர் இராஜ பாட்டையில் திரும்பிக் கன்னியாகுமரியை நோக்கி விரைந்து சென்றது.
வியப்புக்கும், விந்தைக்கும் காரணமான இந்த இளைஞன் யார், தெரியுமா? மகாமண்டலேசுவரரான இடையாற்றுமங்கலம் நம்பியைத் தெரிந்தவர்களுக்கு இவனையும் தெரிந்திருக்க வேண்டும். 'நாராயணன் சேந்தன்' என்னும் பெயரையுடைய இந்தக் குட்டை இளைஞன் மகாமண்டலேசுவரருக்கு வலது கையைப் போல உதவி வருபவன்.
'உருவு கண்டு எள்ளாமை வேண்டும் உருள் பெருந் தேர்க்(கு)
அச்சாணி யன்னா ருடைத்து.'
என்ற திருவள்ளுவ நாயனார் கூறியருளிய திருக்குறலுக்குப் பொருத்தமானவன் நாராயணன் சேந்தன். 'நாடக அரங்கில் வந்து போகின்ற விதூடகனைப் போலத் தோன்றும் இந்தக் குட்டை மனிதனால் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தையே நிர்வகிக்கும் மகாமண்டலேசுவரருக்கு என்ன ஆகப் போகிறது?' என்று யாராவது நினைத்தால் அது முதல் தரமான தவறு. நாஞ்சில் நாட்டுக்கும் அதன் அரசாட்சி அமைப்புக்கும் இடையாற்றுமங்கலம் நம்பி எவ்வளவு முக்கியமானவரோ அவ்வளவுக்கு அவருக்கு முக்கியமானவன் இந்த நாராயணன் சேந்தன். இவனை அவருடைய உதவி ஆள் என்பதா, அந்தரங்க ஒற்றன் என்பதா, நண்பன் என்பதா, மாணவன் என்பதா என்றெல்லாம் தனித்தனியே ஆராய்ந்து கொண்டிருப்பதை விடச் சுருக்கமாக ஒன்றுச் சொல்லிவிடலாம். எந்தெந்தச் சமயங்களில் எப்படி எப்படியெல்லாம் பயன்பட முடியுமோ, அப்படிச் சமய சஞ்சீவியாகப் பயன்படுபவன் இவன்.
இவன் உடலின் உயரத்தை விட அறிவின் உயரம் அதிகம். பார்ப்பதற்குப் பாமரனைப் போல் தான் இடி இடியென்று சிரித்துப் பேசிக் கொண்டிருப்பான்; ஆனால் ஏதாவது ஒரு காரியத்தில் இறங்கி விட்டாலோ இவன் சூரப்புலிதான்.
'நாராயணன் சேந்தனால் செய்ய முடிந்த காரியத்துக்கு நாராயணன் சேந்தனைத் தவிர வேறு யாரையும் அனுப்ப முடியாது' என்று இடையாற்றுமங்கலம் நம்பி அடிக்கடி அவனைப் புகழுவதுண்டு. அதற்கு முற்றிலும் தகுதியானவன் தான் அவன்.
அன்று மாலை 'விழிஞம்' துறைமுகத்திலிருந்து புறப்பட்ட நாராயணன் சேந்தன், மகாராணியாரும் அவருடைய பரிவாரமும் கன்னியாகுமரியை அடைவதற்கு முன்பே தான் அங்கு போய்ச் சேர்ந்துவிட்டான். குதிரையோடு ஆலயத்தருகே போய் இறங்கினால் தன் வரவை வெளிப்படையாகப் பலருக்கு அறிவித்தது போல் ஆகிவிடுமென்று அவன் அறிவான். கூடியவரை தன்னை அங்கே யாரும், எதற்காகவும் தெரிந்து கொள்ளக் கூடாது; ஆனால், தான் எல்லாவற்றையும் எல்லோரையும் தெரிந்து கொள்ள வேண்டுமென்பது அவனுடைய நோக்கம். கோவிலின் மேற்குப் புறமாகக் கடற்கரையோரத்தில் இருந்த புன்னைமரச்சோலை ஒன்றுக்குள் நுழைந்து ஒரு மறைவான இடத்தில் குதிரையைக் கட்டினான்.
பின்பு சிறிது நேரம் அந்தச் சோலையிலேயே இங்கும் அங்குமாகச் சுற்றிய போது, ஒரு பெரிய மரத்தின் அடியில் சில ஆடைகளும், அங்கிகளும், மூன்று சிவப்புத் தலைப்பாகைகளும் களைந்து வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தான்.
'இவைகளை யார் இங்கே வைத்திருக்கக்கூடும்?' என்ற சந்தேகத்தோடு நாராயணன் சேந்தன் சுற்றும் முற்றும் திரும்பிப் பார்த்தான். புன்னைமரத் தோட்டத்தின் வேலிக்கு அப்பால் கடலில் கரையோரமாக மூன்று மனிதர்கள் நீராடிக் கொண்டிருக்கும் காட்சியைக் கண்டான். மரத்தடியில் அவிழ்த்து வைக்கப்பட்டிருந்த அந்த உடைகளும் தலைப்பாகைகளும், அவர்களுடையனவாகத்தான் இருக்க வேண்டுமென்று நாராயணன் சேந்தன் புரிந்து கொண்டான். சாதாரண மனிதர்கள் அணியக்கூடிய உடைகளாகத் தெரியவில்லை அவை. அரசாங்கப் பணி புரியும் வீரர்களோ, சேவகர்களோ, அணியக்கூடிய உடையாகத் தோன்றின அவை. புறத்தாய நாட்டு வீரர்களும் வழக்கமாக அணியக்கூடிய உடை அவனுக்கு நன்றாகத் தெரியும். அவன் புன்னை மரத்தடியில் கண்ட உடைகளும் அப்படி இருந்திருந்தால், 'சரிதான்! யாரோ பாண்டி நாட்டு வீரர்கள் உடைகளைக் கழற்றி வைத்து விட்டு நீராடிக் கொண்டிருக்கிறார்கள் போலிருக்கிறது' என்று நினைத்துக் கொண்டு போயிருப்பான். ஆனால் அந்த மாதிரி உடையணிந்த வீரர்களை அவன் பாண்டி நாட்டுப் படையில் எங்கும், எப்போதும் கண்டதே இல்லை. ஆகவே, அருகில் நெருங்கி உற்றுப் பார்த்தான். தலைப்பாகைகள் மூன்றில் ஒன்றுக்குள் செருகி வைக்கப்பட்டிருந்த ஓர் ஓலை நாராயணன் சேந்தனின் கூரிய விழிகளில் தென்பட்டது. சட்டென்று குனிந்து அதைக் கையில் எடுத்தான்.
அந்த ஓலையைப் படிப்பதற்குள் வேலிக்கு அப்பால் மணலில் ஆட்கள் நடந்து வரும் ஒலி கேட்டது. அவன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான். கடலில் குளித்துக் கொண்டிருந்த மூன்று வீரர்களும் தங்கள் உடைகளை அணிந்து கொள்வதற்காக மரத்தடிக்குத் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
கையில் எடுத்த ஓலையை அது முன்பிருந்தபடியே தலைப்பாகைக்குள்ளேயே வைத்து விட்டு வேலி ஓரமாகப் பதுங்கினான் நாராயணன் சேந்தன்.
அதன்பின் அன்று கன்னியாகுமரியில் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் அவன் மறைந்திருந்து கவனித்தான். மகாராணியார் கடற்கரைக் காட்சியைக் கண்டது, தளபதி ஒற்றர்களோடு போரிட்டது. ஓலையைக் கைப்பற்றியது, கன்னியாகுமரி அம்மன் ஆலயத்தில் வானவன்மாதேவிக்கு ஏற்பட்ட துன்பம் ஆகியவையெல்லாம் ஒன்று விடாமல் தெரிந்து கொண்டான்.
மகாராணியாரும் பரிவாரமும் ஆலயத்திலிருந்து கோட்டைக்குத் திரும்பிய போது அவனும் பின்னாலேயே புறப்பட்டு விட்டான். சுசீந்திரத்தை அடைந்தவுடன் மகாமண்டலேசுவரர் தம்மைச் சுசீந்திரத்தில் சந்திக்கச் சொல்லியிருந்தது, அவனுக்கு ஞாபகம் வந்தது. உடனே மகாராணியாரைக் கோட்டைக்குப் போகும் சாலையில் பின்பற்றுவதை நிறுத்திக் கொண்டு, சுசீந்திரம் கோவிலுக்குத் திரும்பிப் பிரிந்து சென்றான் அவன். சுசீந்திரம் கோவிலில் இடையாற்றுமங்கலம் நம்பியும் அவர் புதல்வி குழல்மொழியும் அவர்களோடு மூன்றாம் மனிதரான ஓர் இளம் வயது துறவியும் நாராயணன் சேந்தனை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். கன்னியாகுமரியில் நடந்த நிகழ்ச்சிகளைக் கேட்டுத் தெரிந்து கொண்டு, "சேந்தா! இப்போது நீ மகாராணியாரைப் பாதியில் விட்டு விட்டு இங்கே வந்திருக்கிறாய். நீ கூறியதிலிருந்து வானவன்மாதேவியாரை ஏதோ தீய சக்திகள் சூழ்வதாகத் தெரிகிறது. இப்போது நீ மீண்டும் பின் தொடர்ந்து செல். முடியுமானால் இன்றிரவு கோட்டையிலேயே யாரும் அறியாமல் தங்கியிருந்து கவனி, உடன் போ!" என்று அவனை அங்கிருந்து அனுப்பி விட்டார் மகாமண்டலேசுவரர்.
நாராயணன் சேந்தன் மகாராணியாரும் பரிவாரங்களும் சென்ற நாஞ்சில் நாட்டு இராஜபாட்டையில் போகாமல் வேறொரு கிளைச்சாலை வழியாகப் புறப்பட்டுச் சென்றான். அந்தக் கிளை வழி ஓரிடத்தில் நெடுந்தூரத்துக்கு ஒரு பாதிரித் தோட்டத்துக்கு நடுவிலே புகுந்து சென்றது. குறுகலான அவ்வழியில் நாராயணன் சேந்தனின் புரவி மெல்லச் சென்றது. நெடிதுயர்ந்த பாதிரி மரக் கிளைக்கு இடையே வழியின் மேல் அங்கங்கே நிலவின் ஒளி பரவியது. சில இடங்களில் மரக்கிளைகளின் அடர்ந்த நிழல் பட்டு இடைவழி தெரியாமல் இருண்டாற் போலவும் இருந்தது.
ஓர் இடத்தில் பாதையோரமாக யாரோ இரண்டு மூன்று ஆட்கள் உட்கார்ந்து மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருப்பதைத் தூரத்தில் வரும்போதே அவனுடைய கூரிய கண்கள் பார்த்து விட்டன. அதைப் பொருட்படுத்தாமல், 'யாரோ வழிப் போக்கர்கள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்' என்று நினைத்துக் குதிரையை விட்டுக் கொண்டு போக முயன்றான்.
ஆனால் அவனுடைய குதிரை அந்த இடத்தை அடைந்ததும், சாலையோரத்து இருளில் உட்கார்ந்திருந்த அந்த மூன்று ஆட்களும் குபீரென்று எழுந்து பாய்ந்து மறித்த போதுதான், நாராயணன் சேந்தன் அவர்கள் இன்னாரென்று புரிந்து கொள்ள முடிந்தது. நிலவொளியில் தெரிந்த சிவப்புத் தலைப்பாகைகளைக் கண்டதும் குதிரையை நிறுத்தாமல், கடிவாளத்தைச் சுண்டி நாலுகால் பாய்ச்சலில் ஓடச் செய்தான்.
------------
1.8. நாராயணன் சேந்தன்
குதிரை பாய்ந்தோடுவதற்காக முன் கால்களைத் தூக்கிய வேகத்தில் வழியை மறிக்க வந்த மூவரில் ஒருவன் அடிபட்டுத் தடுமாறிக் கீழே உருண்டான். நல்ல வேளையாக மற்ற இரண்டு பேர்களும் ஒதுங்கி நின்று கொண்டு வழியை விட்டு விட்டார்கள். இல்லையானால் அவர்களுக்கும் மற்றவனுக்கு நேர்ந்த கதிதான் நேர்ந்திருக்கும். சேந்தன் குதிரையைச் செலுத்துவதில் சில சூட்சுமங்கள் வைத்திருப்பான். இம்மாதிரி அபாயகரமான சந்தர்ப்பங்களில் குதிரையை வாயுவேகமாகப் பறக்கச் செய்யும் தந்திரம் அவனுக்கா தெரியாது?
தான் அவ்வாறு விரைவாகக் குதிரையைச் செலுத்திக் கொண்டு ஓடிவந்த போது அந்த மூன்று சிவப்புத் தலைப்பாகை அணிந்த வீரர்களும் பின்னால் துரத்திக் கொண்டு ஓடி வருகிறார்களா, இல்லையா என்பதைக் கூட நாராயணன் சேந்தன் திரும்பிக் கவனிக்கவில்லை. அங்கே குதிரையை முடுக்கின முடுக்கில் புறத்தாய நாட்டுக் கோட்டையின் தென்மேற்கு மூலையிலுள்ள ஏரியின் கரையில் போய்த்தான் நிறுத்தினான்.
பிரதான வாசல் வழியாகக் கோட்டைக்குள் நுழைந்து சென்றால் தன் வரவைப் பலரும் தெரிந்து கொள்ளும்படி ஆகிவிடும் என்று அவன் பயந்தான். ஏரிக்கரையில் குதிரையை நிறுத்திவிட்டுக் கோட்டைக்குள் எப்படி நுழைவதென்று அங்கே நின்று சிந்தித்தான். அவன் மனத்தில் குழப்பமும், அதிர்ச்சியும் மாறிமாறித் தோன்றின. கன்னியாகுமரியிலிருந்து தப்பிய அந்த வீரர்கள் சுசீந்திரம் பாதிரித் தோட்டத்துக் கிளை வழியில் எப்படி வந்து சேர்ந்தார்கள்? எப்போது வந்து சேர்ந்தார்கள்? அவர்கள் தன் குதிரையை ஏன் மறிக்க வேண்டும்? சிந்திக்கச் சிந்திக்க மனம் தான் குழம்பிற்றே தவிர வேறொன்றும் விளங்கவில்லை.
அங்கே அந்த இரவின் தனிமையில் நின்று மனம் குழம்பிக் கொண்டிருப்பதை விட உடனே கோட்டைக்குள்ளே செல்ல முயன்றால் பயனளிக்கும் என்று அவன் நினைத்தான். சுற்றுமுற்றும் கோட்டை மதிலைப் பார்த்தபோது அவனுக்கு ஒரு வழி புலப்பட்டது. தென்மேற்குப் புறத்திலிருந்த ஏரியிலிருந்து கோட்டைக்குள்ளே இருக்கும் நந்தவனத்துக்கு உபயோகப்படுவதற்காக ஒரு சிறிய தண்ணீர்க் கால்வாய் பிரிந்து போயிற்று. கனத்த மதிற் சுவரில் அரைவட்ட அளவில் அந்தக் கால்வாய்த் தண்ணீர் உள்ளே நுழைந்து போவதற்காக ஒரு சிறிய வாய்க்கால் வழி உண்டாக்கியிருந்தார்கள்.
தன்னைப் போன்ற குட்டை மனிதன் நுழைவதற்கே உயரமும், அகலமும் போதாது போல் தோன்றிய அந்தக் கால்வாய் வழியில் நீரோட்டத்தின் வேகத்தையும் சமாளித்துக் கொண்டு எப்படி உள்ளே நுழைவதென்று மலைத்தான் அவன். அப்போது மிக அருகில் ஆட்கள் ஓடி வரும் காலடியோசை கேட்டது. அவன் மனத்தில் பலவிதமான சந்தேகங்கள் எழுந்தன. ஒருவேளை பாதிரித் தோட்டத்துக் கிளை வழியில் தன்னிடம் வம்பு செய்த அந்த முரடர்களாக இருக்குமோ என்று நினைத்துக் கொண்டே திரும்பிப் பார்த்தான்.
அவனுடைய சந்தேகம் சரியாகவே இருந்தது. கிளை வழிச் சாலை ஏரிக்கரையை அடையும் திருப்பத்தில் நிலா ஒளியில் அவர்கள் வெகு வேகமாக ஓடி வந்து கொண்டிருப்பதை அவன் கண்டான். அவர்களுடைய சிவப்புத் தலைப்பாகைகள் நன்றாக அடையாளம் தெரிந்தன.
நாராயணன் சேந்தனுக்கு யோசிக்க நேரமில்லை. குபீரென்று கால்வாயில் குதித்தான். மார்பளவு தண்ணீர் திமுதிமுவென்று உட்புறம் பாய்ந்து கொண்டிருந்தது. உள்ளே நந்தவனம் இருந்த பகுதி வெளிப்புறத்தை விடச் சிறிது பள்ளமாக இருக்க வேண்டும். இல்லையானால் வெள்ளம் இழுத்துக் கொண்டு போவது போல் அப்படி ஆளை இழுத்துப் பறிக்குமா? நிமிர்ந்தால் தலை மேலே மதிற்சுவரின் அடிப்பாகத்தில் இடித்தது. இரண்டு விலாப்புறமும் பக்கச் சுவர்களில் உரசின. பருத்த தேகத்தை உடைய அவனுக்கு மூச்சுத் திணறியது, விழிகள் பிதுங்கின. 'ஐயோ, மறுபுறம் போய்க் கரையேறுவதற்குள் மூச்சுத் திணறிச் செத்துப் போய்விடுவேன் போலிருக்கிறதே. இந்தப் பாழாய்ப் போன கால்வாய் வழியாக உள்ளே போக வேண்டுமென்ற ஆசை எனக்கு ஏன் தான் உண்டாயிற்றோ? இடைவழியிலேயே இந்த இருண்ட கால்வாய்க்குள் நம்முடைய உடல் செருகிச் சிக்கிக் கொண்டாலும் ஏனென்று கேட்பார் இல்லையே?' என்று தனக்குள் எண்ணித் துணுக்குற்றான் அவன். வேகமாக உள்நோக்கிப் பாயும் நீரோட்டம் ஓர் இடத்திலும் பாதங்களை ஊன்றி நிற்க விடாமல் அவனை இழுத்துத் தள்ளிக் கொண்டு போயிற்று.
நாராயணன் சேந்தன் மதிலின் உட்புறம் நந்தவனத்தில் வந்து கரையேறிய அதே சமயத்தில் வெளிப்புறம் கால்வாய் தொடங்குமிடத்தில் 'திடும்திடு'மென்று தண்ணீரில் ஆட்கள் குதிக்கின்ற ஓசை உட்புறமிருந்த அவனுக்குத் தெளிவாகக் கேட்டது. தன்னை துரத்திக் கொண்டு வந்தவர்கள் தான் குதித்திருக்க வேண்டுமென்று அவனுக்குத் தோன்றியது. அவன் உடனே நந்தவனத்திலிருந்த ஒரு பெரிய மரத்தில் ஏறி உட்கார்ந்து கொண்டான். அது ஒரு மகிழ மரம். அதில் அவன் உட்கார்ந்து கொண்டிருந்த கிளை அரண்மனை நிலாமுற்றத்தை தொடுவது போல் நெருக்கமாகப் படர்ந்திருந்தது. அந்தக் கிளையில் அமர்ந்து கால்வாயை இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அதன் வழியே தன்னைப் பின் தொடர்ந்து குதித்து வந்த மனிதர்களின் வரவை எதிர்பார்த்து, அந்தத் திசை நோக்கி இமைக்காமல் காத்திருந்தன அவன் விழிகள். அந்த நடு இரவில் நிலா முற்றத்தில் பாட்டொலியும், நடன ஒலியும் கேட்பதை அவன் செவிகள் கூர்ந்து கவனித்தன. மேலே நிலா முற்றத்தில் மகாராணியாரும், வேறு சிலரும் அமர்ந்து கொண்டு ஆடல் பாடலை அநுபவிக்கிறார்கள் என்பதை அங்கிருந்து வந்த குரல்களால் அவன் தெரிந்து கொண்டான்.
மதிலோரமாகக் கால்வாயிலிருந்து உட்புறம் பிரவேசிக்கும் வழியில் நிழல்போல் உருவங்கள் ஆடின. நீர்ப் பரப்பில் காலடி பெயர்த்து வைக்கும் ஓசை கேட்டது. தான் மகிழ மரக் கிளையில் உட்கார்ந்திருப்பது உள்ளே வரும் அவர்களுக்குத் தெரிந்து விடாத வண்ணம் கிளைகளின் அடர்த்தியில் தன்னை மறைத்துக் கொண்டான் நாராயணன் சேந்தன். சிவப்புத் தலைப்பாகைகள் கால்வாய்த் துவாரத்தின் வழியே நிலா ஒளியில் நன்றாகத் தெரிந்தன. துணிவு மிகுந்தவனும், ஆபத்துகளைச் சாதாரண விளையாட்டாக வரவேற்கும் இயல்புடையவனுமாகிய நாராயணன் சேந்தனுடைய மனத்தில் ஒரு விநாடி இனம் புரியாத பயத்தின் சாயை படிந்தது. அவர்கள் எதற்காகத் தன்னைப் பின் தொடர்ந்து வருகிறார்கள் என்று தன்னால் ஆனமட்டிலும் சிந்தித்து முடிவு செய்ய முயன்றான் அவன். ஆனால் அது அவனால் முடியவில்லை.
ஒன்று மட்டும் அவனுக்கு நன்றாகப் புரிந்து விட்டது. சிவப்புத் தலைப்பாகையோடு கூடிய அந்த மூன்று முரட்டு ஒற்றர்களும் நல்ல எண்ணத்துடனோ அல்லது நல்ல காரியத்தைச் செய்வதற்காகவோ, தென்பாண்டி நாட்டிற்குள் நுழைந்திருக்க முடியாது என்பதுதான் அது. கன்னியாகுமரிக் கடற்கரையில் புன்னைமரச் சோலைக்கருகில் அவர்கள் நீராடிக் கொண்டிருந்த போது முதல் முதலாகப் பார்த்தவுடனே அவன் மனத்தில் இந்த எண்ணம் உறுதிப்பட்டு விட்டது. பின்னால் கன்னியாகுமரி ஆலயத்தில் நடந்தவை, பாதிரித் தோட்டத்து வழியில் மறிக்க முயன்றது ஆகிய நிகழ்ச்சிகளால் நாராயணன் சேந்தன் அந்த முரட்டுச் சிவப்புத் தலைப்பாகை ஆட்களைப் பற்றி அதிகமாகச் சிந்திக்கத் தொடங்கியிருந்தான்.
இப்போது அவர்கள் தன்னைப் பின்பற்றிக் கோட்டைக்குள்ளேயும் நுழைந்துவிட்டதைப் பார்த்த அவனுக்கு உடம்பு புல்லரித்தது.
அவனை மேலும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறவர்களைப் போலக் கால்வாய் வழியாக உட்புறம் வந்து கரையேறிய அந்த மூவரும் அவன் ஏறி உட்கார்ந்திருந்த அதே மகிழ மரத்தை நோக்கி நடந்து வந்தனர். நிலா ஒளி தன்னை அவர்களுக்குக் காட்டி கொடுத்து விடக் கூடாதே என்ற திகில் நாராயணன் சேந்தனுக்கு ஏற்பட்டது. நிலா முற்றத்துச் சுவரின் நிழலும் மகிழ மரத்தின் அடர்த்தியும் அவனுக்கு அபயமளித்தன. மிக அருகில் மரத்தின் அடர்த்தியின் கீழே அம் மூவரும் வந்து நின்ற போது அவனால் அவர்களை நன்றாகப் பார்ப்பதற்கு முடிந்தது. பீமசேனர்களைப் போல் மூவரும் பருத்த ஆகிருதியுடையவர்கள். ஒருவனது முகத்திலும், கை கால்களிலும் சிராய்த்து இரத்தக் காயங்கள் தென்பட்டன. அந்த ஆள் இன்னாரென்று நாராயணன் சேந்தன் தெரிந்து கொண்டு விட்டான். கன்னியாகுமரியில் தளபதி வல்லாளதேவனை வழியில் மடக்கி எதிர்த்து அவனிடம் நன்றாக அடிபட்டுப் பாறையிடுக்கில் விழுந்து மூர்ச்சை அடைந்தவனே அவன்.
கீழே அவர்கள் வந்து நின்ற நிலையும், சுற்றிலும் ஏதோ தேடுகிறவர்களைப் போல அவர்கள் பார்த்த விதமும் மரக்கிளையில் பதுங்கிக் கொண்டிருந்த நாராயணன் சேந்தன் மனத்தில் சந்தேகத்தை உண்டாக்கின. மகிழ மரத்துப் பொந்தில் நெருப்புக் கங்கு போன்ற விழிகளோடு உட்கார்ந்து கொண்டிருந்த கோட்டான் ஒன்று குரூரமாகக் கத்தியது. மேற்புறம் நிலா முற்றத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த நாட்டிய ஒலியும், இனிய பாடற் குரலும் அந்தக் கோட்டானின் அலறலில் கலந்து விகாரமடைந்தன.
நாராயணன் சேந்தன் பாதங்களை மரக் கொம்பில் அழுத்திக் கிளையைப் பற்றியிருந்த கைகளின் பிடியை இறுக்கினான். அவன் உட்கார்ந்திருந்த கிளை குலுங்கியது. கீழே நின்று கொண்டிருந்தவர்களின் கவனம் ஒரு கணம் அந்தச் சிறிய சலனத்தால் கவரப்பட்டது. அவர்கள் தங்களுக்குள் இரகசியமாக ஏதோ பேசிக் கொள்ளத் தொடங்கவே நாராயணன் சேந்தன் மறைந்திருந்தபடியே அவற்றை உற்றுக் கேட்டான்.
"ஏண்டா செம்பியன், இதென்ன வேடிக்கை! இதுவரை ஆடாமல் அசையாமல் இருந்த மரக்கிளை ஏன் இப்படித் திடீரென்று குலுங்குகிறது?" - மூவரில் ஒருவன் மற்றொருவனைப் பார்த்து இப்படிக் கேட்கவும், மற்ற இருவரும் குறும்புத்தனமாகச் சிரித்தனர்.
"முத்தரையா! மேலே நிலா முற்றத்தில்தான் மகாராணியார் இருக்கிறார் போலிருக்கிறது! இதோ இந்த ஒலிகளைக் கவனித்தாயா?" என்று, முதலில் கேட்டவனுடைய கேள்விக்குப் பதில் சொல்லாமலே வேறொரு கேள்வியை எழுப்பினான் இன்னொருவன்.
"இரும்பொறை! அப்படியானால் நம்முடைய முயற்சியை இங்கே தொடர்ந்து செய்தால் என்ன? நமக்கு முன்னால் குதிரையில் வந்த அந்தக் குட்டைத் தடியன் கூட இங்கே தான் எங்கேயாவது இருபபன். கன்னியாகுமரிக் கோவிலில் நிறைவேறாத நமது எண்ணம் இங்கே நிறைவேறினாலும் நிறைவேறலாம். இந்த மகிழ மரத்துக் கிளை வழியாகவே நாம் நிலா முற்றத்தில் ஏறிக் குதிக்க முடியுமென்று தோன்றுகிறது." - இப்படி அதுவரை பேசாமல் நின்றிருந்த மூன்றாமவன் கூறிய போது மரக்கிளையில் பதுங்கியவாறே இவற்றை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த நாராயணன் சேந்தனின் உடல் 'வெடவெட'வென்று ஆடி நடுங்கியது. 'குட்டைத் தடியன்' என்று கீழே நின்று பேசியவன் குறிப்பிட்டது தன்னைத்தான் என்பது அவனுக்கு நன்றாகத் தெரிந்துவிட்டது.
அந்தச் சிவப்புத் தலைப்பாகை ஒற்றர்கள் தங்களுக்குள் பேசிக் கொண்ட பேச்சிலிருந்து அவர்கள் மூவருடைய பெயரையும் கூட அவன் ஒருவாரு தெரிந்து கொண்டான். செம்பியன், முத்தரையன், இரும்பொறை - கீழே நிற்கும் அவர்களுடைய இந்தப் பெயர்கள் பாண்டிய நாட்டுப் பெயர்களாகவே தோன்றவில்லை. அவர்களுடைய பேச்சின் உட்கருத்தை உணர்ந்த போது, இரண்டாவது முறையாக வானவன்மாதேவியின் உயிரைக் குறி வைத்துக் கொண்டு அவர்கள் வந்திருப்பதை அறிந்தான் சேந்தன்.
கோட்டான் இன்னொரு முறை அதி பயங்கரமாக அலறியது. கீழே நின்று கொண்டிருந்தவர்களில் 'முத்தரையன்' என்று அழைக்கப்பட்டவன் ஒரு கூரிய குத்துவாளை தன் இடுப்பிலிருந்து வெளியே எடுத்து நிலா ஒளியில் தூக்கிப் பிடித்தான். கொழுந்து விட்டெரியும் நெருப்பின் நுனி நாக்குப்போல் அது 'பளீர்' என்று மின்னிப் பளபளத்தது.
மறுகணம் கையில் அந்த வாளைப் பிடித்துக் கொண்டே அவன் மகிழ மரத்தில் தாவி ஏறத் தொடங்கிய போது, அதைப் பார்த்துக் கொண்டிருந்த நாராயணன் சேந்தனுக்கு இதயத் துடிப்பே நின்றுவிடும் போலிருந்தது. அப்படியே நிலா முற்றத்தில் குதித்துத் தப்பி ஓடி விடலாமா என்று நினைத்தான் அவன். வரிசையாகக் கீழே நின்றிருந்த மூவருமே ஒருவர் பின் ஒருவராக மரத்தில் ஏறுவதைக் கண்டு அவன் அதிர்ச்சியடைந்தான். அவர்கள் மேலே ஏறி வந்துவிட்டால் கிளையில் பதுங்கிக் கொண்டிருக்கும் தன்னைக் கண்டு கொள்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.
அந்த மரத்தில் ஒரே கிளை மட்டும் தான் நிலா முற்றத்தின் மேல் தளம் வரை நெருங்கி வளர்ந்திருந்தது. அதுதான் நாராயணன் சேந்தன் உட்கார்ந்திருந்த கிளை. ஏறிக்கொண்டிருந்த மூவரும் மேலே ஏறி வந்தவுடன் அதே கிளையில் காலை வைத்தபோது நாராயணன் சேந்தன் திடுக்கிட்டான். முன்னை விட அதிகப் பரபரப்படைந்தான்.
கடைசி நம்பிக்கையாக, அவர்கள் தன்னை நெருங்காமல் இருப்பதற்காக ஒரு தந்திரம் செய்து பார்த்தான் அவன். இரண்டு கைவிரல்களையும் வாயருகே குவித்து மயிர் சிலிர்க்க வைக்கும் பயங்கரக் கூச்சல் ஒன்றை உண்டாக்கினான். தன்னுடைய அந்தக் கூச்சலைக் கேட்டு பயந்தாவது அவர்கள் மரத்திலிருந்து கீழே இறங்கி, 'பேயோ பிசாசோ' என்று நினைத்துக் கொண்டு திரும்பிப் போய் விடட்டும் என்று அவன் நினைத்திருந்தான். ஆனால், நடந்ததோ முற்றிலும் எதிர்பாராத வேறொரு நிகழ்ச்சி.
அந்தக் கூப்பாட்டினால் அதிர்ச்சியடைந்த மூன்று ஒற்றர்களும் கிளை நுனிக்கு வேகமாக ஓடி வந்து நிற்கவே சுமை அதிகமாகி நாராயணன் சேந்தன் உட்கார்ந்து கொண்டிருந்த அந்தக் கிளை 'மடமட'வென்று முறிந்தது.
தான் நின்று கொண்டிருந்த கிளைக்கு மேலே வேறொரு கிளையில் தாவியதால், நாராயணன் சேந்தன் முறிந்து விழுந்த கிளையோடு கீழே விழாமல் பிழைத்தான். ஆனால் மற்றவர்கள் கிளை முறிந்து கீழே விழுவதற்குள் தாங்களாகவே குதித்து விட்டனர்.
அரண்மனை நந்தவனத்தில் கூப்பாடும், குழப்பமும், மரம் முறிந்து விழும் ஓசையும் கேட்டுக் கோட்டைக்குள்ளேயிருந்த வீரர்கள் தீவட்டியும் கையுமாக ஓடி வரவே, புதிதாகப் புகுந்திருந்த ஒற்றர்கள் விழுந்தடித்துக் கொண்டு ஓடினர்; மறுபடியும் கால்வாயில் இறங்கி மதிலுக்கு வெளியே போகாவிட்டால் அகப்பட்டுக் கொள்ள நேரிடுமென்று அவர்களுக்குத் தெரியாதா, என்ன? மரத்தில் திரிசங்குவைப் போலத் தொங்கிக் கொண்டிருந்த நாராயணன் சேந்தனுக்குத் தான் தலைவலி போய்த் திருகுவலி வந்த கதையாக ஆகிவிட்டது! அவனால் கீழேயும் குதிக்க முடியவில்லை. மேலேயும் பிடித்துக் கொள்வதற்குச் சரியான ஆதாரமில்லை. அவன் அந்தக் கோட்டைக்கோ அரண்மனைக்கோ அந்நியனில்லை, மகாமண்டலேசுவரருக்கு அந்தரங்க மனிதன். ஆனால் அப்போதுள்ள சூழ்நிலையில் அவன் அகப்பட்டுக் கொண்டால் பலவிதமான கேள்விகள் எழுவதற்கு இடம் ஏற்பட்டுவிடும் அல்லவா?
'எப்படி வந்தான்? எதற்காக வந்தான்? நந்தவனத்துக்குள் யாருமறியாமல் நுழைந்து மரத்தின் மேல் ஏறி உட்கார்ந்து கொண்டிருக்க வேண்டிய அவசியம் என்ன?' என்பது போன்ற கேள்விகள் பிறந்தால் அந்த நிலையில் அவற்றுக்கு அவன் என்ன பதில் சொல்ல முடியும்? பதில் சொன்னால் இடையாற்றுமங்கலம் நம்பியையே காட்டிக் கொடுப்பது போல் ஆகும்.
'உண்மையில் அகப்பட்டுக் கொள்ள வேண்டியவர்கள் யாரோ அவர்களே தப்பி ஓடிவிட்டார்கள். நான் எதற்காக அகப்பட்டுக் கொள்ள வேண்டும்? வந்த சுவடு தெரியாமல் இங்கிருந்து போய் விடுவது நல்லது!' என்று தனக்குள் தீர்மானித்துக் கொண்ட நாராயணன் சேந்தன் கிளையில் தொங்கிக் கொண்டே நுனிவரை வந்து, அப்படியே நிலா முற்றத்துத் தளத்தில் இறங்கினான்.
அவனுடைய நல்ல காலமாக நிலா முற்றத்தில் அப்போது வேறு யாரும் இல்லை. நந்தவனத்தில் ஏற்பட்ட குழப்பத்தால் மகாராணி வானவன்மாதேவியார் உள்பட யாவரும் பரபரப்படைந்து கீழே சென்றிருந்தனர்.
'இந்த மரம் முறிந்ததும் ஒரு வகையில் நல்லதாகப் போயிற்று. இல்லையானால் அந்தப் பாவிகள் இரண்டாவது முறையாக மகாராணியாரின் மேல் குறி வைத்திருப்பார்கள்' என்று எண்ணித் திருப்திப்பட்டான் சேந்தன். வெகுநேரம் கழித்து கோட்டையில் சந்தடிகளெல்லாம் அடங்கிய பின் வந்த வழியே வெளியேறி இடையாற்றுமங்கலத்துக்குப் புறப்பட்டான் அவன்.
---------
1.9. ஓலையின் மர்மம்
தானும் மகாமண்டலேசுவரரான இடையாற்று மங்கலம் நம்பியும், அந்தரங்க அறையில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்த போது வெளிப்புறம் யாரோ கதவைத் தட்டும் மணியோசை கேட்டவுடன் தளபதி வல்லாளதேவனால் அது யாராயிருக்கக் கூடுமென்று நினைத்துப் பார்க்கக் கூட முடியவில்லை.
ஆனால் மகாமண்டலேசுவரரான இடையாற்று மங்கலம் நம்பியோ, கதவு திறக்கப்படுவதற்கு முன்பே மெதுவாகச் சிரித்துக் கொண்டு வெளியே நிற்பவனை அவனுடைய பெயரைச் சொல்லிக் கூப்பிட்டார்.
"யார், நாராயணன் சேந்தன் தானே? வா, அப்பா! கதவைத் திறந்து கொண்டு உள்ளே வா! உன்னைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்" என்று அவர் கூறிய போது தளபதி அடைந்த வியப்புக்கு அளவே இல்லை.
மணிகள் ஒலிக்குமாறு கதவைத் திறந்து கொண்டு நாராயணன் சேந்தன் உள்ளே பிரவேசித்தான். அவன் அணிந்திருந்த ஆடைகள் நனைந்திருந்தன. உடம்பில் சேறும், சகதியுமாக இருந்தது. தலை முடியில் இரண்டொரு பழுப்படைந்த மகிழ இலைகளும், பூக்களும் செருகிக் கொண்டு கிடந்தன.
இந்தக் கோலத்தோடு உள்ளே வந்து நின்ற அவனை ஏற இறங்கப் பார்த்தார் இடையாற்று மங்கலம் நம்பி. "இது என்னப்பா தோற்றம்? உன்னுடைய அழகான கேசத்துக்கு மகிழம்பூச் சூட்டிக் கொள்ளவில்லை என்றால் அடிக்கிறதோ?" என்று அவர் கேட்ட போது அவனுக்கே ஆச்சரியமாகி விட்டது.
"என்னது! மகிழம் பூவா? என் தலையிலா?" என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே அவன் தலையைத் தடவி உதறினான். இலைகளும் பூக்களும் கீழே உதிர்ந்தன.
"சேந்தா! நீ சுசீந்திரம் தாணுமாலய விண்ணகரத்தில் என்னைச் சந்தித்துக் கூறியதெல்லாம் உண்மைதானே? இதோ உட்கார்ந்திருக்கும் தளபதி ஓரே ஓர் உண்மையை மட்டும் ஏனோ மறைப்பதற்கு முயற்சி செய்கிறார். அந்த மூன்று ஒற்றர்களிடம் ஏதோ ஓர் ஓலை இருந்ததென்றும், அந்த ஓலையைத் தளபதி அவர்களோடு போரிட்டுக் கைப்பற்றி வைத்துக் கொண்டிருப்பதாகவும் நீ கூறினாய். இவர் எல்லாவற்றையும் சொல்லிவிட்டார்; ஆனால் அதை மட்டும் சொல்லவில்லை. நானாகவே இப்போதுதான் வலுவில் அவரிடம் அதைப் பற்றிக் கேட்டுக் கொண்டிருந்தேன். நல்ல சமயத்தில் நீயும் வந்திருக்கிறாய்!"
"சுவாமீ! என் கண்களால் கண்ட உண்மையைத் தான் அடியேன் சுசீந்திரத்தில் தங்களிடம் தெரிவித்தேன். புலி இலச்சினையும், பனை இலச்சினையும் ஆகிய அரசாங்க முத்திரைகள் அந்த ஓலையில் அடுத்தடுத்து வரிசையாகப் பொறிக்கப்பட்டிருந்தன. என் கையாலேயே அதை எடுத்துப் பார்க்கும் வாய்ப்புக் கூட எனக்குக் கிட்டியது. துரதிருஷ்டவசமாக என்னால் அதைப் படித்துப் பார்க்க முடியாமல் சந்தர்ப்பம் கெடுத்து விட்டது. ஆனால் கடற்கரைப் பாறைகளுக்கு நடுவே தளபதி எதிரிகளோடு வாட்போர் செய்ததையும் ஓலையை வைத்துக் கொண்டிருந்தவன் அதைக் கடலில் எறிவதற்குப் போன போது அவன் கையை மறித்து அவர் அதைப் பறித்துக் கொண்டதையும் என் கண்களால் கண்டேன்."
"நீ இவ்வளவு உறுதியாகச் சொல்கிறாய். அவர் அதைப் பற்றி வாய் திறக்கவே பயப்படுகிறாரே!" என்று புன்னகையோடு அருகில் அமர்ந்திருந்த வல்லாளதேவனைச் சுட்டிக் காட்டினார் மகாமண்டலேசுவரர்.
"ஒரு வேளை அந்த ஓலையில் அடங்கியிருக்கும் செய்தி இவரை இப்படி மௌனம் சாதிக்கச் செய்கிறதோ என்னவோ?" என்றான் நாராயணன் சேந்தன். தளபதி வல்லாளதேவன் திக்பிரமையடைந்து போய் பேசாமல் உட்கார்ந்திருந்தான். அவன் மனத்தில் கீழ்க்கண்ட எண்ணங்கள் ஓடின.
'ஆகா! இந்த இடையாற்று மங்கலம் நம்பி யாருக்கும் தெரியாமல் எவ்வளவு அந்தரங்க ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்! நாட்டில் நடப்பதையெல்லாம் ஒன்றுவிடாமல் அறிந்து கொண்டு வந்து கூற இவரைப் போலவே இவருக்கு ஒரு தந்திரசாலியான ஒற்றன்! இவருக்குத் தெரியாது என்றோ, தெரியவிடக் கூடாது என்றோ எதையும் எவராலும் மறைத்து வைக்க முடியாது போலிருக்கிறதே! எவ்வளவு முன் யோசனை எவ்வளவு சாமர்த்தியம்' என்று அவரைப் பற்றிய வியப்பான நினைவுகளில் ஆழ்ந்து போய் உட்கார்ந்திருந்தான்!
"வல்லாளதேவா! இதோ நிற்கிறானே நாராயணன் சேந்தன், இவனை உனக்குத் தெரியுமல்லவா? இவன் யாரிடம் பொய் சொன்னாலும் என்னிடம் பொய் சொல்ல மாட்டான்."
இடையாற்று மங்கலம் நம்பி சொற்களை ஒவ்வொன்றாக நிறுத்திச் சொன்னார். இதுவரை அவருக்கு எடுத்துக் காட்டாமல் மறைத்து வைத்திருந்த ஓலையை வெளியே எடுத்தான்.
"மகாமண்டலேசுவரர் என்னை மன்னிக்க வேண்டும். ஒரு காரணத்துக்காக நான் இந்த ஓலையைக் கைப்பற்றிய விவரம் யாருக்கும் தெரியாமலிருப்பது நல்லதென்று மறைத்தேன். வேறு விதத்தில் தவறாக நினைத்துக் கொள்ளக் கூடாது" என்று பவ்வியமான குரலில் சொல்லிக் கொண்டே மடங்கிச் சுருண்டிருந்த அந்த ஓலையை எடுத்து அவர் கையில் கொடுத்தான்.
"ஆ! இந்த ஓலைதான்..." என்று அதைப் பார்த்ததும் அருகில் அடக்கமாக நின்று கொண்டிருந்த நாராயணன் சேந்தன் வியந்து கூவினான்.
அந்த ஓலை, அதில் இடப்பட்டிருந்த புலி, பனை ஆகிய முத்திரைகள் இவற்றையெல்லாம் பார்த்த பின்பும் வியப்போ, அதிர்ச்சியோ அடையாத நிதானமான முகக் குறிப்புடன் அதைப் படித்தார் இடையாற்று மங்கலம் நம்பி. அந்த ஓலை அவர் பெயருக்குத்தான் எழுதப்பட்டிருந்தது. அதில் அடங்கியிருந்த செய்தியும் சாதாரணமான செய்தியல்ல.
"மகாமண்டலேசுவரரான புறத்தாய நாட்டு நாஞ்சில் மருங்கூர்க் கூற்றத்து இடையாற்று மங்கலம் நம்பி அவர்கள் திருச் சமூகத்துக்கு, வடதிசைப் பெருமன்னரான சோழன் கோப்பரகேசரி பராந்தகனும், கொடும்பாளூர்க் குறுநில மன்னனும், அரசூருடையானும் ஆகிய மூவரும் எழுதிக் கொண்ட திருமுகம். இந்தத் திருமுக ஓலை தங்கள் கையை அடைவதற்கு முன் தங்களால் புறத்தாய நாட்டுக் கோட்டையில் பாதுகாக்கப்பட்டு வருபவரும், நாஞ்சில் நாட்டு மகாராணியாருமாகிய, காலஞ்சென்ற திரிபுவனச் சக்கரவர்த்திகளான பராந்தக பாண்டிய தேவரின் திருத்தேவி வானவன்மாதேவியார் விண்ணுலக பதவி அடைந்திருப்பார்; அல்லது நாங்கள் செய்திருக்கும் ஏற்பாடு அவருக்கு அந்தப் பதவியை அளித்திருக்கும்.
எனவே, மகாமண்டலேசுவரராகிய தங்களையும், தங்களுடன் இருக்கும் நாஞ்சில் நாட்டுக் கூற்றத் தலைவர்களையும் உடனே வடதிசைப் பேரரசுக்கு அடிபணியுமாறு வேண்டிக் கொள்ளுகிறோம். நாளை மறுநாள் சோழ நாட்டுத் திருப்புறம்பியத்தில் நாங்கள் மூவரும் உங்களை எதிர்பார்க்கிறோம்.
இந்த ஏற்பாட்டுக்கு இணங்காவிட்டால் உடனே வடதிசை மும்மன்னர்கள் பெரும் படையோடு நாஞ்சில் நாட்டைத் தாக்குவதற்கு நேரிடும்.
1. பராந்தக சோழன்
2. கொடும்பாளூர்க் குறுநில மன்னன்
3. அரசூருடையான் சென்னிப் பேரரையன்."
இந்தச் செய்தியைப் படித்து முடித்த போது, மகாமண்டலேசுவரரின் இதழ்களில் அலட்சிய பாவம் நிறைந்ததொரு புன்னகை மிளிர்ந்தது. அவர் தலையை நிமிர்த்தித் தளபதி வல்லாளதேவனை உற்றுப் பார்த்தார். அருகிலிருந்த நாராயணன் சேந்தனை ஒரு தடவை பார்த்தார்.
"சுவாமி! இந்த விநாடி வரை மகாராணியாருக்கு ஒரு துன்பமும் இல்லை. அடியேன் இப்போது கூட அங்கே கோட்டையிலிருந்துதான் நேரே வருகிறேன்" என்று அவருடைய பார்வையில் பொதிந்திருந்த கேள்வியைக் குறிப்பினால் புரிந்து கொண்டு பதில் கூறினான் சேந்தன்.
"தளபதி! இந்த ஓலையை நீ என்னிடம் காட்டத் தயங்கியதற்குச் சிறப்பாக வேறு காரணம் ஏதோ இருக்குமென்று எனக்குத் தோன்றுகிறது. அதை எனக்குச் சொல்லலாம் அல்லவா? தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறேன்" என்றார் மகாமண்டலேசுவரர். தன் மனத்தில் யாருக்கும் வெளிப்படுத்திச் சொல்ல இயலாத அந்தரங்கமான இடத்தில் மறைந்திருந்த ஓர் உண்மையை அவருடைய கேள்விக்கு பதிலாகச் சொல்ல வேண்டியிருந்ததால் தளபதி வல்லாளதேவன் தயங்கினான்.
ஒருவேளை நாராயணன் சேந்தன் அருகில் இருப்பதால் தான் தளபதி சொல்லத் தயங்குகிறானோ என்று நினைத்தார் மகாமண்டலேசுவரர்.
"சேந்தா! ஆற்று நீரிலும் சேற்றிலும் சகதியிலும் புரண்டுவிட்டு ஈர உடையோடு நின்று கொண்டிருக்கிறாயே. போய் உடை மாற்றிக் கொண்டு வா," என்று சொல்லி நாராயணன் சேந்தனை அங்கிருந்து அவர் அனுப்பி வைத்தார்.
ஆனால் அதன் பின்பும் தளபதி வாய் திறக்கவில்லை. "வல்லாளதேவா! உன் மனத்தில் இருப்பதை நீ என்னிடம் சொல்லத் தயங்குகிறாய்; பரவாயில்லை. நீ சொல்லவே வேண்டாம். பல நூறு காத தொலைவிலிருக்கும் வடதிசை மும்மன்னரும் இந்தக் கணத்தில் என்ன எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் என்பதைக் கூட என்னால் இங்கிருந்தே சொல்லிவிட முடியும். நீ நினைப்பதைத் தெரிந்து கொள்வது பெரிய காரியமில்லை. இதோ சொல்கிறேன் கேள்! இந்த ஓலையைப் படித்ததும் உன் மனத்தில் என்ன தோன்றியது தெரியுமா? 'மகாமண்டலேசுவரரே வடதிசை மூவேந்தர்களுக்கு உள்கையாக இருப்பார் போலிருக்கிறது. இல்லையானால் இந்த ஓலை அவர் பெயருக்கு எழுதப்படுமா? ஆகா! இது எவ்வளவு அநியாயம்! வானவன்மாதேவியைக் கொலை செய்வதற்கு ஒற்றர்களை அனுப்புமாறு இவரே வடதிசைப் பேரரசருக்குத் தெரிவித்திருக்க வேண்டும். திருப்புறம்பியத்தில் அவர்களை வந்து சந்திப்பதாக இவரே சொல்லியிருப்பார். மகாமண்டலேசுவரரே இப்படிச் சதி செய்தால் இந்த நாடு எங்கே உருப்படப் போகிறது?' என்றெல்லாம் உன் மனத்தில் தோன்றியது உண்டா, இல்லையா?" என்று கேட்டுவிட்டு நகைத்தார் அவர்.
தளபதி வல்லாளதேவன் திடுக்கிட்டுப் போனான். இந்த மனிதர் என்ன மந்திரவாதியா? இவருக்கு ஏதாவது குறளி வித்தை தெரியுமா? என்னுடைய மனத்தில் ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தை அப்படியே கண்டுபிடித்துச் சொல்லி விட்டாரே! என்று வியந்தான்.
"என்ன தளபதி! உண்மைதானா?"
தன் நினைவில்லாமலே அவருடைய கேள்விக்கு 'ஆம்' என்று பதில் சொல்வது போல் அவன் தலை அசைந்தது.
"நீ இப்படி நினைத்ததை நான் ஒரு பிழையாகக் கருதவில்லை. சந்தர்ப்பத்தின் கோளாறு உன்னை இப்படி நினைக்கச் செய்திருக்கிறது. ஆனால் வல்லாளதேவா! இந்த ஓலையையும் இது கிடைத்த நிகழ்ச்சியையும் தொடர்ந்து எண்ணி மனத்தைக் குழப்பிக் கொள்ளாதே. இப்போதே மறந்து விடு!" இதுவரையில் அமைதியாகத் தலை குனிந்து அவர் கூறியதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த தளபதி தலை நிமிர்ந்து ஒரு கேள்வி கேட்டான்.
"மகாமண்டலேசுவரர் சொல்வதை நான் அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் மகாராணி வானவன்மாதேவியாரைக் கொலை செய்வதற்காகப் பயங்கரமான சதி முயற்சிகள் என் கண்காணவே நடக்கும் போது கடமையும் பொறுப்புமுள்ள நான் அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியுமா? அது நீதியல்லவே?"
"தளபதி! உன்னுடைய பதவிக்கு இந்தப் பொறுப்பு உணர்ச்சி அவசியமானதுதான். ஆனால் மகாராணியாரைக் கொலை செய்வதும், புறத்தாய நாட்டைக் கைப்பற்ற முயல்வதும் யாராலும் எளிதில் முடியாத காரியங்கள். அப்படியே முடிவதாக இருந்தாலும் அதனை நீயும் உன்னைச் சேர்ந்த படைவீரர்களும் மட்டும் தடுத்துவிட முடியுமென்று எண்ணுவது பேதமை! உன்னைக் காட்டிலும் உன் சாமர்த்தியம், பொறுப்பு ஆகியவற்றைக் காட்டிலும் பல மடங்கு வலிமை வாய்ந்த சக்தி ஒன்று மகாராணி வானவன்மாதேவியை அல்லும், பகலும், அனவரதமும் இடைவிடாமல் காத்து வருகிறதென்பது உனக்குத் தெரியுமா?"
அவருடைய இந்தச் சொற்களிலிருந்து ஏதோ ஒரு கூர்மையான முள் தன் மனத்தில் தைத்துவிட்டது போலிருந்தது வல்லாளதேவனுக்கு. அவர் தன்னையும் தன் சக்தியையும் ஏளனம் செய்யவேண்டும் என்பதற்காக அப்படிப் பேசுகிறாரா, அல்லது மறைமுகமாகக் குத்திக் காட்டுகிறாரா என்று தெளிவாகப் புரிந்து கொள்ள முடியாமல் திணறினான் அவன். குபீரென்று அவன் மனத்தில் ஆத்திரம் புகைந்தது. ஒரே ஒரு விநாடிக்குள் உணர்ச்சி வசப்பட்டு அவரை எதிர்த்துப் பேசிவிடத் துணிந்து விட்டான் வல்லாளதேவன்.
அவன் நிலையைப் பார்த்துப் புரிந்து கொண்ட அவர் உள்ளூரச் சிரித்துக் கொண்டே, "வல்லாளதேவா! உனக்கு வருகிற கோபத்தைப் பார்த்தால், இப்போதே வாளை உருவிக் கொண்டு என்மேல் பாய்ந்து விடுவாய் என்று தோன்றுகிறது. பொறு! ஆத்திரப்படாதே. மகாராணியாரின் நலத்திலும் நாஞ்சில் நாட்டின் அமைதியிலும் மிக அதிகமான பொறுப்பு எனக்கும் இருக்கிறது" என்று நிதானமாகக் கூறினார்.
"மகாமண்டலேசுவரரின் ஆற்றலையோ, ஆணைகளையோ அடியேன் எப்போதும் குறைவாக மதிப்பிட்டதில்லை. ஆனாலும் அடியேனிடம் அவர் இவ்வளவு கடுமையாக நடந்து கொள்வாரென்றும் எதிர்பார்க்கவில்லை. நாளை நாஞ்சில்நாட்டு மகாசபையைக் கூட்ட வேண்டுமென்று மகாராணியார் தெரிவிக்கச் சொன்னதனால் தான் இங்கு வந்தேன். இல்லையானால் இங்கு வந்து தங்களுக்கு இவ்வளவு சிரமம் கொடுத்திருக்க மாட்டேன்." தளபதி அமைதியாகப் பேச முயன்றாலும் வேகமாக வந்த கோபத்தை வலுவில் அடக்கிய சாயல் அவன் சொற்கள் ஒவ்வொன்றிலும் பிரதிபலிக்கச் செய்தன.
அவன் கூறியதைக் கேட்டுவிட்டு, ஏதோ பதில் கூறுவதற்காக இடையாற்று மங்கலம் நம்பி வாய் திறந்தார். அதே நேரத்துக்கு ஈர உடைகளை மாற்றிக் கொண்டு திரும்பிய நாராயணன் சேந்தன் அந்தரங்க அறைக்குள் நுழைந்து விட்டான்.
இரவுப் போது நடுச்சாமத்துக்கும் மேலாகிவிட்டது. மகாமண்டலேசுவரரின் அழகிய பெரிய மாளிகையில் அந்த ஒரே ஒரு அறையைத் தவிர மற்றெல்லாப் பகுதிகளும் நிலவொளியின் அமைதியில் அடங்கிக் கிடந்தன. பறளியாற்றில் 'கலகல'வென்று தண்ணீர் பாயும் ஒலி, மரப்பொந்துகளிலுள்ள ஆந்தைகளின் குரல் இவை தவிர இடையாற்று மங்கலம் தீவு நிசப்தமாகி விட்டது.
தளபதி வல்லாளதேவனின் அப்போதைய மனநிலை எவ்வளவு நேரமானாலும் அந்தத் தீவை விட்டு அக்கரைக்குப் போய் அரண்மனைக்குச் சென்று விட வேண்டும் என்று உறுதியாக இருந்தது. அன்றைக்கு மட்டுமே அதற்கு முன் அவனுடைய மனத்தில் ஏற்பட்டிராத சில பயம் நிறைந்த உணர்வுகள் ஏற்பட்டன. அந்தத் தீவு, அந்த மாளிகை, அவனெதிரே ஊடுருவும் விழிப்பார்வையோடு பொதியமலை சிகரமெனக் கம்பீரமாக வீற்றிருக்கும் மகாமண்டலேசுவரர், அவர் அருகில் நிற்கும் நாராயணன் சேந்தன் என்ற அந்தக் குள்ளன், எல்லோரும், எல்லாப் பொருளும், ஏதோ ஒரு பெரிய மர்மத்தின் சின்னஞ்சிறு பிரிவுகளைப் போல் தோன்றினார்கள்.
'படகு விடும் அம்பலவன் வேளான் மட்டும் உறங்காமல் துறையில் விழித்திருப்பானானால் எப்படியும் இவரிடம் விடை பெற்றுக் கொண்டு புறப்பட்டு விடலாம். இவர் என்னிடமிருந்து எல்லாச் செய்திகளையும் தெரிந்து கொண்டு விட்டார். ஆனால் இவரிடமிருந்து நான் ஒன்றும் தெரிந்து கொள்ள முடியவில்லை. இன்று மாலை கன்னியாகுமரியில் நடந்த எல்லாச் சம்பவங்களையும் எனக்குத் தெரியாமலே இவருடைய ஒற்றனான இந்தக் குட்டையன் மறைந்திருந்து கண்காணித்திருக்கிறான். நானோ மகாமண்டலேசுவரருக்கு ஒன்றும் தெரிந்திருக்கக் காரணமில்லை என்று பகற்கனவு கண்டு கொண்டிருக்கிறேன். ஒரு கோடியிலுள்ள இந்தத் தீவின் மாளிகையில் இருந்து கொண்டு நாஞ்சில் நாட்டு மூலை முடுக்குகளில் நடப்பதைக் கூட ஒன்றுவிடாமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் இந்த மனிதர்!' - பயமும் மலைப்பும் கலந்த இது போன்ற திகைப்பூட்டும் நினைவுகள் தாம் வல்லாள தேவனின் மனத்தில் கிளர்ந்தன.
"சரி! அப்படியானால் நாளைக்கு மகாசபை கூட்டுவதைப் பற்றிக் கூறுங்கள். அதைத் தெரிந்து கொண்டு நான் இங்கிருந்து விடைபெற்றுக் கொள்ளுகிறேன். அரண்மனையில் மகாராணியார் என்னை எதிர்பார்த்துக் காத்திருந்தாலும் காத்திருப்பார்" என்று அவன் இப்படிக் கேட்டதும் அவர் மறுபடியும் அவனை நோக்கிச் சிரித்தார். அவருடைய அந்தச் சிரிப்புகளில் அப்படி என்னதான் மறைந்து கொண்டிருக்கின்றன? ஒவ்வொரு சிரிப்புக்கும் ஓர் உள்ளர்த்தம் இருப்பது போல் அல்லவா அவனுக்குத் தோன்றியது!
"சேந்தா! தளபதி திரும்பிப் போவதற்கு எவ்வளவு அவசரப்படுகிறார் பார்த்தாயா? அவருக்கு இங்கே இருப்பதற்கே பயமாக இருக்கிறது. நாமெல்லாம் சிங்கம், புலி, கரடிகள் என்று நினைக்கிறார் போலும்" என்று தளபதிக்குப் பதில் சொல்லாமல் சேந்தனை நோக்கிக் கூறுபவர் போலக் கூறினார் மகாமண்டலேசுவரர்.
"சுவாமீ! இவர் போக வேண்டுமென்றாலும் இப்போது போக முடியாது. என்னை இக்கரைக்குக் கொண்டு வந்து விட்ட பின் அம்பலவன் வேளான் தோணியைத் துறையில் கட்டிவிட்டு, உறங்கப் போய்விட்டான். இனி நாளைக்கு வைகறையில் தான் தோணி போகும்" என்று சேந்தன் கூறினான்.
"கேட்டுக் கொண்டாயா, தளபதி! உன்னை இங்கே யாரும் விழுங்கிவிட மாட்டார்கள். இன்றிரவு இங்கே தங்கிவிட்டுக் காலையில் போகலாம். மகாசபைக் கூட்டத்துக்காக நானும் அரண்மனைக்கு வரவேண்டியிருக்கிறது. நாம் இருவரும் சேர்ந்தே போகலாம். மற்ற கூற்றத் தலைவர்களையெல்லாம் நேரே அரண்மனைக்குப் புறப்பட்டு வரும்படி தானே சொல்லி அனுப்பியிருக்கிறாய்?"
"ஆம்! அவர்கள் யாவரும் நாளைக் காலையில் நேரே அரண்மனைக்குத் தான் புறப்பட்டு வருவார்கள்."
"நல்லது! இப்போது உன்னிடம் ஒரு முக்கியமான வேண்டுகோள் விடுக்கப் போகிறேன். இந்த வேண்டுகோள் என்னுடைய சொந்த நன்மைக்காக மட்டும் அல்ல, எத்தனையோ வகையில் இந்தத் தேசத்தின் நன்மைகள் இந்த வேண்டுகோளுக்குள்ளே பொதிந்திருக்கலாம். அவற்றையெல்லாம் விளக்கவோ விவரித்துச் சொல்லவோ இது நேரமில்லை" என்றார் நம்பி.
"மகாமண்டலேசுவரரின் பலமான அடிப்படையைப் பார்த்தால் அது எத்தகைய வேண்டுகோளாக இருக்குமோ என்று அடியேனுக்கு உண்மையிலே பயமாகத்தான் இருக்கிறது" என்று தளபதி இடைமறித்துக் கூறினார்.
"பயப்படுவதற்கு இதில் அப்படி ஒன்றும் இல்லை. இந்த ஓலையை இப்போது நான் உன்னிடம் திருப்பிக் கொடுக்கப் போவதில்லை. நான் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வேனோ என்று நினைக்கிறாய் அல்லவா? அப்படியும் செய்யப் போவதில்லை. பின் என்ன செய்யப் போகிறேன் தெரியுமா? இதோ நீயே பார்த்துத் தெரிந்து கொள்" என்று சொல்லிவிட்டுப் பக்கத்தில் நின்று கொண்டிருந்த நாராயணன் சேந்தனைச் சமிக்ஞை செய்து கூப்பிட்டு ஏதோ மெல்லக் கூறினார்.
அவன் உடனே அந்த அறைக்குள்ளே எரிந்து கொண்டிருந்த தீபங்களில் ஒன்றை எடுத்து வந்து அவருக்கு முன்னால் ஏந்திப் பிடித்துக் கொண்டு நின்றான். தளபதி வல்லாளதேவனுக்குப் பகீரென்றது. "ஐயோ இதென்ன காரியம் செய்கிறீர்கள்?" என்று மகாமண்டலேசுவரரின் கையைப் பிடித்துத் தடுக்க எழுந்தான் அவன்.
"நில், அப்படியே! செய்ய வேண்டியதைத்தான் செய்கிறேன்" என்று சொல்லிக் கொண்டே ஓலையைச் சுடரில் காட்டினார் இடையாற்று மங்கலம் நம்பி. அந்த ஓலையில் தீப்பற்றியது.
--------------
1.10. உறையூர்க் கோட்டையில் மந்திராலோசனை
இந்தக் கதையின் ஆரம்பத்தில் கன்னியாகுமரிக் கடற்கரையில் சந்தித்த பயங்கர ஒற்றர்களைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவல் நேயர்களுக்கு இருக்கும் அல்லவா? அந்த ஒற்றர்கள் வந்த நோக்கம், அனுப்பப்பட்ட விதம் இவை பற்றி இதற்குள்ளேயே ஒரு மாதிரி அநுமானித்துக் கொள்ள முடிந்தாலும் இங்கே அதைப் பற்றிச் சற்று விரிவாகக் கூறிவிட வேண்டியது அவசியம் தான்.
மன்னாதி மன்னரும், தென் திசைப் பேரரசருமாகிய பராந்தக பாண்டியர் காலமான பின் வட திசை மன்னர் பாண்டிய நாட்டின் மேல் படையெடுத்ததும், குமார பாண்டியனாகிய இராசசிம்மன் ஈழத்தீவுக்கு ஓடிப் போனதும், வட பாண்டி நாடு எதிரிகளின் வசப்பட்டதும், ஏற்கனவே நேயர்கள் அறிந்து கொண்ட நிகழ்ச்சிகள்.
வடதிசை வேந்தர்களின் ஆசை வட பாண்டி நாட்டை வென்றதோடு அடங்கி விடவில்லை; அவர்கள் தென் பாண்டி நாட்டையும் கைப்பற்ற விரும்பினார்கள். முக்கியமாக அந்த விருப்பத்துக்கு மூன்று காரணங்கள் இருந்தன.
முதல் காரணம், பராந்தகனின் கோப்பெருந்தேவி உயிருடன் தப்பிச் சென்று தென்பாண்டி நாட்டு மகாமண்டலேசுவரரின் பாதுகாப்பில் வாழ்கிறாள் என்று அவர்கள் தெரிந்து கொண்டது. அவள் உயிருடன் இருக்கிறவரை என்றாவது எப்படியாவது தன் புதல்வன் இராசசிம்மனைத் தேடிக் கொண்டு வந்து மீண்டும் பாண்டியர் ஆட்சியை நிலைநிறுத்துவதற்கு அவள் முயன்று விடுவாளோ என்ற பயம் அவர்களுக்கு இருந்தது. இடையாற்று மங்கலம் நம்பியும் தென்புறத்தாய நாட்டுப் பெரும் படையும் வானவன் மாதேவியோடு ஒத்துழைத்து அப்படிச் செய்ய முற்படுவதற்குள் சில சதித்திட்டங்களின் மூலம் தங்களுடைய ஆசையை முடித்துக் கொள்ளத் திட்டமிட்டனர் வடதிசை மும்மன்னர்கள். அதற்காகச் சோழன் கோப்பரகேசரி பராந்தகனும், கொடும்பாளூர் மன்னனும், அரசூருடையானும் உறையூர்க் கோட்டையில் ஓர் இரகசிய மந்திராலோசனைக் கூட்டம் நடத்தினார்கள். வடதிசை மும்மன்னர்களும் தங்களுடைய முக்கியமான இராஜாங்க அதிகாரியோடு உறையூருக்கு வந்திருந்தனர்.
சோழன் கோப்பரகேசரி பராந்தகனின் உறையூர் அரண்மனையில் மந்திராலோசனை சபையின் கூட்டம் கூடியது. அழகும், இளமையும், வீரமும், ஒன்றோடொன்று போட்டி போட்டுக் கொண்டு ஒன்றுபட்ட உருவம் போல் சோழனும், பிடரி மயிரோடு கூடிய சிங்கத்தைப் போன்ற கம்பீரமான தோற்றத்தையுடைய அரசூருடையானும், காண்பவர்களைப் பயமுறுத்தும் வளமான அடர்ந்த மீசையும், நெருப்பு வட்டங்களைப் போல் சுழலும் கண்களும், யானை போல் பருத்த தோற்றத்தையுமுடைய கொடும்பாளூர் மன்னனும் அருகருகே மூன்று சிம்மாசனங்களில் வீற்றிருந்தனர். திருமந்திர ஓலைநாயகர்களும் அமைச்சர் பிரதானிகளும் சுற்றிலும் இடப்பட்டிருந்த மற்ற ஆசனங்களில் அமர்ந்திருந்தனர்.
"இந்த மந்திராலோசனைக் கூட்டம் வடபால் நாட்டுப் பெரு மன்னர்களாகிய நமக்குள் ஓர் அவசியமான தீர்மானத்தை ஏற்படுத்தி முடிவு செய்து கொள்வதற்காகக் கூட்டப்பட்டிருக்கிறது. நாம் மூவரும், நம்முடைய படைகளுமாகச் சேர்ந்து சமீபத்தில் பாண்டி நாட்டின் வடபகுதியை வெற்றி கொண்டோம். சிறு பிள்ளையாகிய பாண்டிய இளவரசன் இராசசிம்மன் நமக்கு அஞ்சிக் கடல் கடந்த நாட்டுக்கு ஓடிவிட்டான். அவனைப் பற்றி நமக்குக் கவலை இல்லை. ஆனால் காலஞ்சென்ற பராந்தக பாண்டியனின் கோப்பெருந்தேவியும், இராசசிம்மனின் தாயுமான வானவன்மாதேவி தென்பாண்டி நாட்டில் போய் வலிமைமிக்க ஆதரவுகளோடு வாழ்ந்து வருகிறாள். அதனால் நமக்கு ஓரளவு நிம்மதிக் குறைவு ஏற்பட்டிருக்கிறது என்பதை நாம் மூவரும் நன்கு உணர்வோம்" என்று சோழன் பேச்சைத் தொடங்கி வைத்தான். அதுவரையில் ஏதோ சொல்வதற்காகத் துடித்துக் கொண்டிருந்த அரசூருடையான் ஒரு கனைப்புக் கனைத்துக் கொண்டு பேசுவதற்கு முற்பட்டான்.
"நண்பர்களே! தென்பாண்டி நாட்டையும் அங்கே மகாராணி வானவன்மாதேவிக்குக் கிடைத்திருக்கும் பலமான ஆதரவையும் சாதாரணமாக மதிப்பிட்டு விட்டு நாம் பேசாமல் இருந்துவிட முடியாது. அமர பதவி அடைந்து விட்ட பராந்தகனின் வீரம் உங்களுக்குத் தெரியாததன்று. அந்த வழிமுறையில் இரண்டு கொழுந்துகள் எஞ்சியிருக்கின்றன. மகாராணியையும், குமார பாண்டியனையும் தான் இப்படிக் குறிப்பிடுகிறேன். மதிநுட்பமும் அறிவாற்றலும் உடையவரான தென்பாண்டி நாட்டு மகாமண்டலேசுவரரின் சிந்தனையும், நாஞ்சில் நாட்டுப் பெரும்படைத் தளபதியான வல்லாளதேவனின் வீரமும் ஒன்று சேர்ந்தால் பின்பு நம்மையே கதிகலங்கச் செய்து விடுவார்கள்."
பேசும்போது அரசூருடையான் கண்களில் உறுதியான ஒளி மின்னியது. குரலில் அழுத்தம் தொனித்தது. "அன்புக்குரிய சோழ வேந்தரே! அரசூருடைய சென்னிப் பேரரசரே! நீங்கள் இருவரும் கூறியவற்றை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். நீண்ட நேரம் பேசிக் கொண்டே கழிப்பதால் என்ன பயன்? செயலை நிறைவேற்ற வேண்டும். அதற்கு உடனடியாக ஒரு வழி சொல்லுங்கள்."
இப்படிக் கூறியவன் கொடும்பாளூர் மன்னன். அப்பப்பா! அவன் தோற்றத்தைப் போலவே குரலும் கடுமையாகத்தான் இருக்கிறது. இடி முழக்கத்தைப் போல கையைத் தூக்கி ஆட்டி உணர்ச்சிகரமாகப் பேசினான் அவன். அந்தச் சுருக்கமான பேச்சிலும், முக பாவத்திலுமே 'இவன் அதிகம் பேசுவதை விரும்பாத காரியப் புலி' என்று தெரிந்து கொள்ள முடிந்தது.
"முன்பு செய்தது போலவே நாம் மூவரும் ஒன்று சேர்ந்து நாஞ்சில் நாட்டின் மேல் படையெடுத்து விடலாம்" என்றான் அரசூருடையான்.
மற்ற இருவரும் அதற்கு இணங்கவில்லை. "இப்போதுதான் ஒரு பெரிய போரில் ஈடுபட்டு அலுத்துப் போன படைகளை மறுபடியும் உடனடியாகத் துன்புறுத்த முடியாது. போரைத் தவிர வேறு தந்திரமான வழிகள் எவையேனும் இருந்தால் பார்க்கலாம்" என்று கோப்பரகேசரியும் கொடும்பாளூரானும் ஒரு முகமாக மறுத்துவிட்டனர். அங்கிருந்த மூவரசரின் அமைச்சர் பிரதானிகளும் போர் யோசனையை அவ்வளவாக வரவேற்கவில்லை.
"நான் ஒரு வழி சொல்லுகிறேன். ஆனால் அது கடுமையான வழி. பயங்கரமும் இரகசியமுமாக இருக்க வேண்டியது ஆகும் அது!" என்று சொல்லியவாறே சுற்றிலும் இருந்தவர்களைப் பார்த்து மேலே சொல்வதற்குத் தயங்கினான் கொடும்பாளூர் மன்னன். அவனுடைய தயக்கம் நிறைந்த அந்தப் பார்வையின் அர்த்தத்தை அரசூருடையானும் சோழ கேசரியும் புரிந்து கொண்டு விட்டனர்.
உடனே சோழன் கோப்பரகேசரி அங்கிருந்த மற்றவர்களுக்குச் சைகை செய்தான். அவர்கள் மௌனமாக எழுந்து மந்திராலோசனை மண்டபத்துக்கு வெளியே சென்றார்கள். மண்டபத்துக்குள் அரசர்கள் மூவரும் தனியே விடப்பட்டனர். பரகேசரியும் அரசூருடையானும் கொடும்பாளூர் மன்னனின் பக்கத்தில் நெருங்கி வந்து உட்கார்ந்தனர்.
கொடும்பாளூரான் வெறிச் சிரிப்புச் சிரித்தான். அவனுடைய கோரம் நிறைந்த பயங்கர முகத் தோற்றத்தையும் அந்தச் சிரிப்பையும் ஒன்று சேர்த்துப் பார்த்த போது, அது உடனிருந்த மற்ற இருவருக்குமே அச்சமூட்டியது. அவன் வாயிலிருந்து வெளிவரப் போகும் முடிவு என்னவென்று அறியும் ஆவலுடன் இருவரும் காத்திருந்தனர்.
ஆனால் அவனோ அவர்களுடைய ஆவலை மேலும் சோதிக்கிறவனைப் போல ஒன்றும் பேசாமல் அங்கே கிடந்த ஓலைகளில் எழுத்தாணியால கைபோன போக்கில் ஏதோ கிறுக்கத் தொடங்கினான். அரசூருடையானும் கோப்பரகேசரியும் வியப்படைந்து திகைத்தனர். அவன் என்ன செய்கிறான் என்பதையே அவர்களால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. பார்த்துக் கொண்டே மலைத்துப் போய் அமர்ந்திருந்தனர். சில விநாடிகளுக்குள் ஆச்சரியகரமானதொரு காரியத்தைச் செய்து காட்டினான் கொடும்பாளூர் மன்னன்.
எழுத்தாணி கொண்டு மூன்று ஓலைகளிலும் கோடுகளால் சில படங்களை வரைந்து விட்டான் கொடும்பாளூர் மன்னன். சில எழுத்துகளும் அவற்றில் தென்பட்டன. தன் மனக் கருத்தை அவன் வெளியிட்ட சாமர்த்தியமான முறை அவர்களைப் பிரமிக்கச் செய்துவிட்டது.
"இதோ, இவற்றைப் பாருங்கள்! என் கருத்து விளக்கமாகப் புரியும்" என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே அந்த ஓலைகளை அவர்களிடம் நீட்டினான் அவன். கொடும்பாளூர் மன்னனின் முரட்டுக் கையில் அவ்வளவு நளினம் மறைந்து கொண்டிருக்குமென்று அரசூருடையானோ, அல்லது பரகேசரியோ கனவிலும் எதிர்பார்க்கவில்லை.
அவர்கள் இருவரும் அவன் கொடுத்த அந்த ஓலைகளையெல்லாம் ஒவ்வொன்றாகப் பார்த்தனர்.
முதல் ஓலையில் மகாராணி வானவன்மாதேவியைப் போல் ஓர் உருவம் வரையப்பட்டிருந்தது. அந்த உருவத்தின் கழுத்துக்கு நேரே ஆறு முரட்டுக் கைகள் ஒரு கூர்மையான வேலை எறிவதற்குக் குறி வைத்துப் பிடித்துக் கொண்டிருப்பது போல் சித்தரிக்கப்பட்டிருந்தது. உருவத்தின் கீழே வானவன்மாதேவியார் என்றும் எழுதியிருந்தது. இரண்டாவது ஓலையில் கடலின் மேல் ஒரு பாய்மரக் கப்பல் வேகமாகச் செல்வது போல் வரைந்திருந்தது. அதன் அருகில் குமார பாண்டியன் இராசசிம்மனைப் போல் ஓர் இளைஞனின் உருவம் சித்தரிக்கப்பட்டு, முதல் ஓலையில் கண்டபடியே கப்பலிலிருந்து ஆறு கைகள் நீண்டு ஒரு வேலை அந்த இளைஞனின் நெஞ்சில் பாய்ச்சுவதற்குத் தயாராக இருப்பது போல் வரையப்பட்டு உருவின் கீழே 'பாண்டிய குமாரன் இராசசிம்மன்' என்று எழுதியிருந்தது.
எதையும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியாத மன குழப்பத்தோடு மூன்றாவது ஓலையைக் கையிலெடுத்துப் பார்த்தனர் அரசூருடையானும், கோப்பரகேசரியும். அந்த மூன்றாவது ஓலையில் அவர்களுடைய இதயத்தைக் குழப்பும் மூன்றாவது புதிர் மறைந்திருந்தது. அதையும் பார்த்துத் திகைத்து விட்டனர் இருவரும்.
மூன்றாவது ஓலையில் இரண்டு ஆறுகளுக்கு இடையே ஒரு சிறு தீவு போலவும், அதில் ஒரு மாளிகை போலவும் வரையப்பட்டிருந்தது. மாளிகை வாசலில் இடையாற்று மங்கலம் நம்பி என்று பெயர் எழுதப்பட்ட ஓர் உருவமும் வரையப்பட்டிருந்தது. இந்தப் படத்திலும் ஆறு கைகள் இருந்தன. ஆனால் முன் ஓலைகள் இரண்டுக்கும் இந்த ஓலைக்கும் மிகப் பெரிய வேறுபாடு ஒன்றும் இருந்தது.
மூன்று ஓலைகளிலும் கொடும்பாளூர்க் குறுநில மன்னன் அவசரம் அவசரமாகக் கிறுக்கியிருந்த சித்திரங்களையும் எழுத்துக்களையும் பார்த்துவிட்டு அரசூருடையானும், பரகேசரியும் தலை நிமிர்ந்தனர். எதையும் விளக்கமாகப் புரிந்து கொண்டாற் போன்ற தெளிவு அவர்கள் முகத்தில் துலங்கவே இல்லை.
அதுவரையில் அவர்களையே கவனித்துக் கொண்டிருந்த கொடும்பாளூரான், "என்ன? புரிந்து கொண்டீர்களல்லவா?" என்று மிகுந்த ஆர்வத்தோடு வினவினான்.
"கொடும்பாளூர் வேந்தர் இவ்வளவு பெரிய ஓவிய வல்லுநராக இருப்பார் என்று இதுவரையில் எனக்குத் தெரியவே தெரியாது!" என்றான் அரசூருடையான்.
"ஓவியம் மட்டுமா? சொல்ல வேண்டிய செய்திகளைக் குறிப்பாக அறிவுறுத்த முயன்றிருக்கிறீர்கள். ஆனால் எங்கள் இருவருக்கும் அது அவ்வளவாகப் பொருள் விளங்கவில்லை. நீங்கள் எங்கள் சந்தேகத்தைப் போக்கி விட்டால் நல்லது!" என்று சந்தேகத்தை மனம்விட்டுக் கேட்டான் பரகேசரி.
உடனே கொடும்பாளூர் மன்னன் அந்த ஓலைகளைக் கையில் எடுத்துக் கொண்டு அவர்களுக்கு நடுவில் வந்து நின்றவாறு ஒவ்வொன்றாக விளக்கிக் கூறலானான். கால் நாழிகை நேரம் அவனுடைய விளக்கவுரை தொடர்ந்தது. அந்த விளக்கவுரையிலிருந்து அரசூருடையானும், கோப்பரகேசரியும் புரிந்து கொண்ட விவரங்கள் வருமாறு: நாஞ்சில் நாட்டு மகாமண்டலேசுவரரின் ஆதரவில் புறத்தாய நாட்டுக் கோட்டையில் தங்கியிருக்கும் மகாராணி வானவன்மாதேவியைக் கொலை செய்துவிடுவது முதல் திட்டம். இலங்கைத் தீவுக்கு ஓடியிருப்பதாக எண்ணப்படும் குமார பாண்டியன் இராசசிம்மனையும், சில அந்தரங்கமான ஆட்களைக் கப்பலில் அனுப்பி அங்கிருந்து திரும்பவோ திரும்பக் கருதவோ அவகாசமின்றி அங்கேயே யாருமறியாது தீர்த்து விடவேண்டுமென்பது இரண்டாவது திட்டம். யாரை வேண்டுமானாலும் பகைத்துக் கொள்ளலாம். ஆனால் இடையாற்று மங்கலம் நம்பியைப் பகைத்துக் கொண்டால் ஒரு காரியமும் நடக்காது. புறத்தாய நாட்டுப் பகுதியைக் கைப்பற்றவோ, ஆளவோ அந்த மனிதரின் தயவு நிச்சயமாக வேண்டும். மகாராணியாரையும், குமார பாண்டியனையும் கொலை செய்த பின்னரும், மகாமண்டலேசுவரரைத் தங்கள் மனிதராக்கிக் கொண்டு தன்மையாகத் தழுவி வைத்துக் கொண்டாலொழியத் தாங்கள் மூவரும் அந்தப் பிரதேசத்தில் காலடியெடுத்து வைக்க முடியாது என்று அவர்கள் உணர்ந்திருந்தனர். ஆகவே இடையாற்று மங்கலம் நம்பியை மட்டும் தங்களுடைய பாராட்டு வலையில் வீழ்த்தித் தொடர்ந்து மகாமண்டலேசுவரராக இருக்கச் செய்ய வேண்டும் என்பது மூன்றாவது ஓலையில் கண்ட திட்டம்.
இப்படி மூன்று ஓலைகளிலும் கண்ட திட்டங்களை நிறைவேற்றுவதில் மூன்று பேருடைய பங்கும் இருப்பதனால் ஆறு கைகளை ஒவ்வொரு படத்திலும் வரைந்திருப்பதாகத் தன் திட்டங்களைக் காரண காரியங்களோடு அவர்களுக்குச் சொன்னான் கொடும்பாளூர் மன்னன்.
"எல்லாம் சரிதான்! ஆனால் மகாராணியையும், குமார பாண்டியனையும் கொலை செய்ய வேண்டுமென்பதுதான் நம்முடைய பெருந்தன்மைக்குப் பொருத்தமான காரியமாகப் படவில்லை எனக்கு" என்று அலுத்துக் கொள்வது போன்ற குரலில் மற்ற இருவரின் முகத்தையும் பார்த்துக் கொண்டே சொன்னான் அரசூருடையான்.
"அரசூருடையார் கூறுவது போலத்தான் எனக்கும் தோன்றுகிறது. இடையாற்று மங்கலம் நம்பியை வேண்டுமானால் நம்முடைய சூழ்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். அவரே நமக்கு ஒத்துழைக்க இணங்கிவிட்டாரானால் எங்கோ கண்காணாத இடத்தில் மறைந்து கிடக்கும் பயந்தாங்கொள்ளி இராசசிம்மனும், வானவன்மாதேவியும் நம்மை என்ன செய்துவிட முடியும்? உயிரோடிருந்தாலும் அவர்கள் நடைப்பிணம் போன்றவர்களே. அப்படியிருக்கும் போது அவர்களைக் கொலை செய்வதற்காக நாம் நம்முடைய நேரத்தை வீணாகச் செலவழிப்பானேன்?" என்று பரகேசரியும் கொடும்பாளூர் மன்னனைப் பார்த்துக் கேட்டான்.
அரசூருடையான், பரகேசரி இருவரையும் பார்த்து கொடும்பாளூரான் சிரித்தான். "நண்பர்களே! காரியத்தைச் சாதித்துக் கொள்ள விரும்புகிறவர்களுக்கு இந்த அநாவசியமான கருணையெல்லாம் இருக்கக்கூடாது. மேலும் நாம் நினைப்பதைப் போல இடையாற்று மங்கலம் நம்பி அவ்வளவு விரைவில் நம்முடைய சூழ்ச்சிக்கு வசப்பட்டுவிட மாட்டார். இராசசிம்மனும், மகாராணியும் தொலைந்து விட்டால் மகாமண்டலேசுவரரான இடையாற்று மங்கலம் நம்பியைக் கூடப் பொருட்படுத்தாமல் காரியங்களைச் செய்கிற துணிவு நமக்கு ஏற்பட்டு விடும்" என்று மேலும் அவன் வற்புறுத்திக் கூறினான்.
அரசூருடையானும், பரகேசரியும் எத்தனையோ விதங்களில் விவாதித்தனர், மறுப்புக் கூறினர். புறத் தோற்றத்தைப் போலவே அகத் தோற்றத்திலும் முரட்டுத்தன்மையும் பிடிவாதமும் உள்ள கொடும்பாளூர் மன்னன் தன்னுடைய கருத்தையே நிலைநிறுத்திப் பேசினான். அவனுடைய பேச்சின் போக்கைப் பார்த்தால் விட்டுக் கொடுக்கும் தன்மைக்கு அணுவளவும் இடம் இருப்பதாகப் படவில்லை.
அரசூருடையானும், பரகேசரியும் தங்களுக்குள் எப்போதும் ஒத்துப் போகும் தன்மையுடையவர்கள். கொடும்பாளூரானின் பிடிவாத குணம் அவர்களுக்கு முன்பே தெரிந்ததுதான். கேவலம், இந்தச் சிறிய விஷயத்துக்காக மனம் வேறுபட்டுப் பிரியவோ, ஒற்றுமைக் குலைவை ஏற்படுத்திக் கொள்ளவோ அவர்கள் விரும்பவில்லை. விந்திய மலைக்குத் தென்பால் குமரிக் கடல் ஈறாகவுள்ள சகல பிரதேசங்களிலும் தங்கள் மூவருடைய கொடிகளும் பறக்க வேண்டுமென்பதுதான் அவர்களுடைய ஆசை. அந்த மாபெரும் ஆசையை எந்த வழியில் பூர்த்தி செய்து கொள்ள வேண்டுமானாலும் அதற்கு அவர்கள் சித்தமாகத்தான் இருக்கிறார்கள். "என்ன சொல்கிறீர்கள்? இந்த ஏற்பாட்டுக்கு நீங்கள் ஒத்து வந்தால் தான் நான் உங்களோடு சேர்ந்தவன். இல்லையானால் என்னுடைய வழியை நான் தனியே வகுத்துக் கொண்டு போக வேண்டியதுதான்" என்றான் கொடும்பாளூர் மன்னன்.
அரசூருடையானும், பரகேசரியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு பேசாமல் இருந்தனர் சிறிது நேரம். "நீங்கள் கற்சிலைகளைப் போல் வாய் திறவாமல் இப்படி மௌனமாக உட்கார்ந்திருப்பதற்காகவா நான் சிரமப்பட்டு இந்த ஓலைகளை எழுதினேன்? எனக்கு வேண்டும்!"
உள்ளங் கைகளைத் தட்டிப் புடைத்து மீசை துடிதுடிக்க ஆத்திரத்தோடு இரைந்து கத்தினான் முன்கோபியான கொடும்பாளூர் மன்னன்.
"கொடும்பாளூர் மன்னரே! கவலைப்படாதீர்கள். எதற்காக ஆத்திரமடைகிறீர்கள்? உங்களுடைய யோசனையை எதற்காகவேனும், எப்பொழுதேனும் நாங்கள் மறுத்திருக்கிறோமா? உங்கள் திட்டப்படியே செய்வோம்" என்று பரகேசரி கூறிய பின்பு தான் கொடும்பாளூரானின் முகத்தில் தோன்றிய கடுகடுப்பும், ஆத்திரமும் மறைந்தன.
"மிகவும் நல்லது! உங்கள் திட்டப்படியே யாவும் நடைபெறட்டும்! நானும் பரகேசரியும் மனப்பூர்வமாக ஒத்துழைக்கிறோம். இப்போது மேலே செய்ய வேண்டிய காரியத்தைச் சொல்லுங்கள். குமார பாண்டியனையும், வானவன்மாதேவியையும் ஒழிப்பதற்கு என்ன செய்யப் போகிறீர்கள்?" அரசூருடையானின் இந்தக் கேள்வி சற்றுத் தணிந்திருந்த கொடும்பாளூர் மன்னன் கோபத்தை உடனே மீண்டும் கிளப்பி விட்டுவிடும் போலிருந்தது.
"என்ன செய்யப் போகிறீர்கள்? என்று என்னை மட்டும் பார்த்துக் கேட்கிறீர்களே? யோசனையை நான் சொல்லிவிட்டேன். இனிமேல் செய்ய வேண்டியதை மூன்று பேர்களுமாகச் சேர்ந்துதான் செய்ய வேண்டும். அரசூருடையார் என்னை மட்டும் 'நீங்கள் நீங்கள்' என்று சுட்டிக் காட்டிப் பேசுவதில் பயனில்லை!" என்று சீறி விழுவது போல் இரைந்தான் கொடும்பாளூர் மன்னன்.
அதன் பின்னர் அவனைச் சுய நிலைக்குக் கொண்டு வந்து பேசி முடிப்பதற்குள் ஒரு மத யானையை அடக்குவதற்குப் பட வேண்டிய அவ்வளவு சிரமங்களையும் அநுபவித்து விட்டனர் சோழன் பரகேசரியும் அரசூருடையானும்.
உறையூரில் மந்திராலோசனைக் கூட்டம் நடந்த மறுதினம் மாலை நாகைப்பட்டினத்துக் கடல் துறையில் ஒரு காட்சியைக் காண்கிறோம். கரையில் ஒரு பெரிய பாய்மரக் கப்பல் ஈழ நாட்டுக்குப் புறப்படுவதற்குத் தயாராக நிற்கிறது. பாய்மரத்தின் கூம்பில் கப்பலுக்கே அழகு செய்வது போலப் புலி, பனை ஆகிய சின்னங்கள் ஒன்றாகப் பொறிக்கப்பட்ட கொடி ஒன்று காற்றில் பறந்து கொண்டிருக்கிறது.
கரையில் கொடியிலே கண்ட அந்தச் சின்னங்களுக்குரிய மாபெரும் வேந்தர்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். ஆம்! நாம் உறையூர் அரண்மனையில் சந்தித்த அந்த மூவரும் தான். அவர்களுக்கு எதிரே சிவப்புத் தலைப்பாகை அணிந்த ஆறு வீரர்கள் அடக்க ஒடுக்கமாக நின்று கொண்டிருந்தனர். கொடும்பாளூர் மன்னன் அந்த வீரர்களிடம் உபதேசம் செய்வது போலக் கைகளை ஆட்டியும், கண்களைச் சுழற்றிப் புருவத்தை வளைத்தும் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். அவன் அப்படி என்னதான் முக்கியமான செய்தியை அவர்களுக்குக் கூறிக் கொண்டிருக்கின்றான்? அருகில் நெருங்கிச் சென்று நாமும் தான் அந்தச் செய்தியைக் கேட்டுத் தெரிந்து கொள்வோமே!
"அடே! நீங்கள் மூவரும் பரம ஜாக்கிரதையாக இந்தக் காரியத்தை முடித்துவிட்டுத் திரும்பி வரவேண்டும். முத்தரையா! இரும்பொறை! செம்பியா! நீங்கள் ஏறிச் செல்லுகிற இந்தப் பாய்மரக் கப்பல் நேராக மேல் கடற்கோடியிலுள்ள 'விழிஞம் துறைமுகத்தில் கொண்டு போய் உங்கள் மூவரையும் இறக்கி விட்டு விட்டு அப்புறம் தான் ஈழத்துக்குப் போகும். உங்களோடு வருகின்ற மற்ற மூவரும் கப்பலோடு அப்படியே ஈழ நாட்டுக்குச் சென்று விடுவார்கள். உங்களைப் போலவே அவர்கள் ஈழத்தில் போய் ஒரு செயலை முடித்துக் கொண்டு வெற்றிகரமாகத் திரும்ப வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் உங்கள் செயலை முடிப்பதற்கு முன் நான் கொடுத்த ஓலையை இடையாற்று மங்கலம் நம்பியிடம் சேர்த்து விடக் கூடாது!" என்று எச்சரித்தான் கொடும்பாளூர் மன்னன்.
அந்த வீரர்கள் அவன் கூறியவற்றைக் கவனமாகக் கேட்டுக் கொண்டு மரியாதை செலுத்துகிற பாவனையில் தலை வணங்கினர்.
அப்போது அந்தப் பாய்மரக் கப்பலைச் செலுத்தும் மாலுமி வந்து கும்பிட்டான். "பிரபூ! கடலில் காற்று அதிகமாக இருக்கும் போதே புறப்பட வேண்டும். இல்லையானால் எத்தனை பாய்களை விரித்தாலும் பயனில்லை. நேரமாகிறது. இவர்களை ஏற்றிக் கொண்டு புறப்படுகிறேன். எங்களுக்கு விடை கொடுங்கள்" என்று கொடும்பாளூர் மன்னரிடம் பணிவான குரலில் அவன் வேண்டிக் கொண்டான்.
சற்றுத் தள்ளித் தங்களுக்குள் ஏதோ பேசியவாறு நின்று கொண்டிருந்த அரசூருடையானும், சோழன் பரகேசரியும் நெருங்கி வந்தனர்.
கிங்கரர்களைப் போலத் தோற்றமளித்த அந்த ஆறு வீரர்களும் பாய்மரக் கப்பலின் முதல் தளத்தில் ஏறி நின்று கொண்டனர். கரையில் நின்று தங்களையே பார்த்துக் கொண்டிருந்த அரசர்கள் மூவரையும் கடைசி முறையாக வணங்கினர்.
அதே சமயத்தில் தேர் வடம் போல் இழுத்துக் கட்டியிருந்த நங்கூரக்கயிறு அவிழ்க்கப்பட்டது. சிகரத்தில் அசைந்தாடும் கொடியுடனே மிகவும் பெரிய வெண்ணிறப் பாவை ஒன்று தண்ணீர்ப் பரப்பை ஒட்டினாற் போலச் சிறகுகளை அடித்துக் கொண்டு பறப்பது போல் கப்பல் கடலுக்குள் நகர்ந்தது.
"நண்பர்களே! இன்னும் பதினைந்தே தினங்கள் தான். நம்முடைய மனோரதம் நிறைவேறிவிடும்!" என்று கொடும்பாளூர் மன்னன் அரசூருடையானையும் பரகேசரியையும் பார்த்துக் கூறினான்.
-----------
1.11. முன்சிறை அறக்கோட்டம்
செல்வச் செழிப்பும், வேளாண்மை வளமும் மிக்க அந்நாளைய நாஞ்சில் நாட்டில் மூலைக்கு மூலை, ஊருக்கு ஊர், இடத்துக்கு இடம், அறக்கோட்டங்களும், ஆலயங்களும், வழிப்போக்கர் தங்கக்கூடிய மன்றங்களும் இருந்தன.
'அறத்தால் விளங்கி ஆன்ற கேள்விப் புறத்தாயநாடு' என்று புலமைவாணர்கள் புகழ்ந்த பெருமை அதற்கு உண்டு. மகாமன்னர் பராந்தக சக்கரவர்த்தியின் காலத்தில் அவருடைய தர்மசிந்தனை மிகுந்த உள்ளத்தினாலும், மகாமண்டலேசுவரரின் நிர்வாகத் திறமையினாலும் புதிய தர்மசாலைகள் பல தென்பாண்டி நாடு முழுவதும் உண்டாயின.
அப்போது தென்பாண்டிப் பகுதியிலேயே முதன்மையானதும் பெரியதுமான அறக்கோட்டமொன்று முன்சிறையில் அமைக்கப்பட்டது. துறைமுகப் பட்டினமான விழிஞத்தில் பல தேசத்துக் கப்பல்களில் வரும் வணிகர்கள் தங்குவதற்கு முன்சிறை அறக்கோட்டத்துக்கு வந்து சேர்வது வழக்கம். கீழ்ப்புறத்தாய நாட்டையும், மேலப்புறத்தாய நாட்டையும் இணைக்கும் இராஜபாட்டையில் கிளை வழி பிரிகின்றதொரு திருப்பத்தில் முன்சிறை நகரம் இருந்ததால் கடல் வழியே கப்பலில் வருவோர், தீர்த்த யாத்திரைக்காக வடபால் நாடுகளிலிருந்து வருவோர், புனிதம் நிறைந்த குமரிக் கடலில் நீராடிப் போக வருவோர் ஆகிய யாவருக்கும் எப்போதும் தங்குவதற்கு வசதி நிறைந்ததாக முன்சிறை அறக்கோட்டம் கேந்திரமான இடத்தில் வாய்த்திருந்தது.
நாகப்பட்டினத்துத் துறைமுகத்தில் பாய்மரக்கப்பல் புறப்பட்ட பின் ஒரு நாள் இரவு மூன்றாம் யாமத்தில் முன்சிறை அறக்கோட்டத்தில் ஓர் அதிசயமான சம்பவம் நடந்தது. சத்திரத்து மணியக்காரனான அண்டராதித்த வைணவனும் அவன் மனைவியும் அங்கேயே ஒரு பகுதியில் குடியிருந்து வந்தனர். சாதாரணமாக, முதல் யாமம் முடிவதற்கு முன்பே மணியக்காரன் பிரதான வாசலை அடைத்து உட்புறமாகத் தாழிட்டுக் கொண்டுத் தன் வீட்டுக்குப் போய்விடுவான். அவனுடைய குடியிருப்பு வீடும் உட்புறமே கட்டிக் கொடுக்கப்பட்டிருந்தது.
முன்சிறை அறக்கோட்டத்தின் அமைப்பை மானஸீகக் கண்ணால் நோக்கிப் பார்த்தால் தான் நேயர்களால் இவற்றையெல்லாம் நன்கு விளங்கிக் கொள்ளமுடியும். வாருங்கள்! 'இரவு நேரமே' என்று தயங்காமல் முன்சிறைக்குப் போவோம். இப்போது நாழிகை என்ன? நாழிகையைப் பற்றி நமக்கு என்ன கவலை? இன்னும் முதல் யாமம் முடியவில்லையாதலால் அறக்கோட்டத்தின் கதவை இதற்குள் அடைத்திருக்க மாட்டார்கள்.
ஆ! இதோ வந்துவிட்டோம். எதிரே தெரிகிறது பாருங்கள், உயரமான மருதமரக் கூட்டத்துக்கு நடுவே காவி நிறக் கட்டடங்கள். கோட்டை வாசல் கதவுகளைப் போன்ற அந்த முன்வாசல் கதவருகே யாரோ தீவட்டியும் கையுமாக நின்று கொண்டிருப்பது தெரிகிறது! நிற்பது யார்? சற்று அருகில் நெருங்கிப் போய் அவர்களைப் பார்ப்போம்.
அடாடா! முதல் யாமம் முடிகிற நேரம் நெருங்கிவிட்டது போலிருக்கிறது. தீவட்டியோடு நிற்பவன் வேறு யாருமில்லை, மணியக்காரனான அண்டராதித்த வைணவன் தான். கதவுகளை அடைப்பதற்காக வந்து நின்று கொண்டிருக்கிறான். ஆகா! இந்த மாதிரி கட்டை குட்டையான தோற்றத்தையுடைய ஆளை இதற்கு முன்பே பல தடவைகள் பார்த்திருப்பதைப் போல் ஒரு பிரமை உண்டாகிறதே!
ஆமாம்! இப்போது நினைவு வருகிறது. கையில் தீப்பந்தத்தோடு கதவைச் சாத்துவதற்காக நிற்கும் இந்த மனிதன் அசைப்பில் நமக்கு ஏற்கெனவே அறிமுகமன நாராயணன் சேந்தனைப் போல் அல்லவா இருக்கிறான்? அதே போலக் குடுமி! அதே போல நெற்றியில் கீற்றுத் திலகம்! அகத்திய வடிவம்!
இங்கே மணியக்காரனாக இருக்கும் இந்த அண்டராதித்த வைணவன் வேறு யாருமில்லை. நம்முடைய சாட்சாத் நாராயணன் சேந்தனின் சொந்தத் திருத்தமையன் தான். முன்சிறைத் தர்மசாலையின் எல்லா நிர்வாகப் பொறுப்புகளும் இவன் கையில்தான். ஆனால் இவனையும், இவனுடைய நிர்வாகங்களையும் மொத்தமாகச் சேர்த்து மேய்க்கும் பொறுப்பு இவனுடைய மனைவியான கோதை நாச்சியாரிடம் இருந்தது.
தன் தம்பி மகாமண்டலேசுவரரிடம் மிக முக்கியமான பதவியை வகிக்கிறான் என்று மற்றவர்களிடம் சொல்லிக் கொள்வதில் அண்டராதித்த வைணவனுக்குத் தனிப் பெருமை. தன் மனைவி எப்போதாவது தன்னைக் கண்டிப்பது போல் இரைந்து பேசினால் அவள் வாயை அடக்குவதற்கு அவன் பிரயோகிக்கும் கடைசி அஸ்திரமும் இதுதான்.
"இந்தா, கோதை! என் தம்பி இந்தத் தென்பாண்டி மகாமண்டலேசுவரருக்கு எவ்வளவு அந்தரங்கமானவன் தெரியுமா? அவன் இல்லாவிட்டால் அவருக்கு ஒரு காரியமும் ஓடாது. அவன் சுட்டு விரலை அசைத்தால் போதும், பெரிய பெரிய காரியங்களைச் சாதித்து விடுவான். அப்படிப்பட்டவனுக்கு மூத்தவனாகப் பிறந்துவிட்டு நான் உன்னிடம் மாட்டிக் கொண்டு இந்தப் பாடுபடுகிறேனே!" என்று தன் மனைவியிடம் கூறுவான் அண்டராதித்த வைணவன்.
"ஏன் சும்மா இருக்கிறீர்களாம்? உங்கள் தம்பியிடம் சொல்லிச் சுட்டு விரலை ஆட்டச் செய்து என்னையும் அடக்குவதுதானே?" என்பாள் அவள்.
இந்த வேடிக்கைத் தம்பதிகளால் அந்தச் சத்திரத்து நிர்வாகம் குறைவில்லாமல் நடந்து இவர்களுடைய பேச்சும் சிரிப்பும் அங்கே வந்து செல்லும் நூற்றுக்கணக்கான யாத்திரீகர்களுக்கு மகிழ்ச்சியளிப்பவை. மூத்தவனான அண்டராதித்த வைணவனுக்கும், இளையவனான நாராயணன் சேந்தனுக்கும் சுபாவத்தில் நிறைய ஏற்றத் தாழ்வுகள் இருந்தன. துணிவும், சாமர்த்தியமும், சூழ்ச்சிகளைப் பழகிய இராஜதந்திரமும் தேர்ந்தவனான நாராயணன் சேந்தன் எங்கே? பயந்த சுபாவம், எளிதில் பிறருக்கு அடங்கிவிடுகிற இயல்பு, ஒளிவு மறைவில்லாத எண்ணம், அப்படியே பேச்சு, அப்படியே செயல் எல்லாம் அமைந்த அண்டராதித்த வைணவன் எங்கே?
இப்படிக் குண ரீதியாகப் பார்த்தால் நாராயணன் சேந்தனை மூத்தவனென்றும், அண்டராதித்த வைணவனை இளையவனென்றும் மாற்றிச் சொல்ல வேண்டியதாக நேரிட்டுவிடும். போகட்டும், கதை நிகழ்ச்சிக்கு வருவோம்.
முதல் யாமம் முடியப் போகிற தருவாயில் அண்டராதித்த வைணவன் கதவைச் சாத்துவதற்காக அறக்கோட்டத்தின் வாசலில் வந்து நின்றானல்லவா? அப்போது தென்கிழக்குத் திசையிலுள்ள கிளை வழியிலிருந்து யாரோ இரண்டு மூன்று ஆட்கள் சத்திரத்தை நோக்கி வருவது போல் தோன்றியதால் தான் அவன் கதவை அடைக்காமல் தயங்கி நின்றான்.
"கதவை அடைத்துவிட்டு உள்ளே வரப் போகிறீர்களா இல்லையா? குளிர் வாட்டி எடுக்கிறது!" என்று அதட்டுவது போன்ற தொனியில் வினவிக் கொண்டே நடுத்தர வயதுள்ள கோதை நாச்சியார் உட்புறத்தில் இருந்து வெளியே வந்தாள்.
"கொஞ்சம் பொறு, கோதை! கிழக்கே துறைமுகச் சாலையிலிருந்து யாரோ ஆட்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். பாவம்! எவராவது வெளி தேசத்திலிருந்து கப்பலில் புதிதாக வந்து இறங்கியிருப்பார்கள். நாம் கதவை அடைத்துக் கொண்டு போய்விட்டால் தங்குவதற்கு இடமின்றி அவர்கள் திண்டாடப் போகிறார்கள்" என்றான்.
"ஐயோ! என்ன கருணை! என்ன கருணை! மகாமண்டலேசுவரர் சத்திரத்து மணியக்காரர் பதவிக்குச் சரியான ஆளாகப் பிடித்துத்தான் நியமித்திருக்கிறார்" என்று அழகு காட்டினாள் அவன் மனைவி கோதை நாச்சியார்.
"இதோ பார், தாயே! பரதேவதை! உனக்குக் கோடிப் புண்ணியம் உண்டு! வருகிறவர்களுக்கு முன் என் மானத்தை வாங்காதே. தயவு செய்து உள்ளே போ, கோதை!" என்று அவள் அருகே வந்து நின்று கொண்டு தணிந்த குரலில் கெஞ்சினான் அவன்.
"ஆள் இனம் தெரியாமல் கண்டவர்களுக்கெல்லாம் சத்திரத்தில் தங்க இடம் கொடுக்காதீர்கள். சத்திரத்துப் பொருள்கள் அடிக்கடி மாயமாக மறைந்து விடுகின்றன. களவு போவதற்கு இடம் கொடுப்பது உங்களால் வருகிற வினைதான்!" என்று உரிமையோடு கணவனை எச்சரித்துவிட்டு உட்புறம் இருட்டில் மறைந்தாள் கோதை நாச்சியார்.
"ஐயா! இதுதானே முன்சிறை அறக்கோட்டம்?" உள்ளே செல்லும் மனைவியின் தோற்றத்தைப் பார்த்துக் கொண்டு நின்ற அண்டராதித்த வைணவன் இந்தக் கேள்வியைக் கேட்டுப் பரபரப்படைந்து திரும்பிப் பார்த்தான்.
சத்திரத்து வாசற்படியில் பருத்த தோற்றமுடைய மூன்று மனிதர்கள் நின்று கொண்டிருந்தார்கள். கையிலிருந்த தீப்பந்தத்தை அவர்கள் முக்த்துக்கு நேரே பிடித்துப் பார்த்த அண்டராதித்தன், "உங்களுக்கு எந்த தேசம்? என்ன காரியமாக இங்கு வந்திருக்கிறீர்கள்?" என்று வினவினான் மூவரையும் பார்த்து.
"முதலில் நாங்கள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லுங்கள்!"
அதிகாரம், அல்லது அதையும் மிஞ்சிய கடுமை அவர்களுடைய குரலில் ஒலித்ததைக் கேட்டு அண்டராதித்தன் சிறிது சினமடைந்தான்.
முதலாவதாக அவர்களுடைய தோற்றமே அவன் மனத்தில் நல்ல எண்ணத்தை உண்டாக்கவில்லை. காளிகோவில் பூசாரிகள் உடுத்துக் கொள்வது போன்று இரத்த நிறச் சிவப்புத் துணியில் தலைப்பாகையும் அமைதி இல்லாமல் நாற்புறமும் சுழலும் விழிப் பார்வையுமாகச் சத்திரத்து அதிகாரியான தன்னிடமே அதிகாரம் செய்து கேள்வி கேட்கும் அவர்கள் யாராயிருக்கலாம் என்று எண்ணியவாறு முகத்தைச் சுளித்து அவர்களைப் பார்த்தான் அவன்.
"அடேடே! இவன் என்ன நம்மை இப்படிக் கடுமையாகப் பார்க்கிறான்? காமனையும், நக்கீரனையும் நெற்றிக் கண்ணால் எரித்து வாட்டிய சிவபெருமான் என்று எண்ணம் போலிருக்கிறது இவனுக்கு" என்று வந்தவர்களில் ஒருவன் தன் பக்கத்திலிருந்த மற்றொருவனிடம் எகத்தாளமாகக் கேட்டான்.
"அட, அது இல்லை அப்பா! இந்த மனிதன் நம்மைப் பார்த்ததும் ஊமையாகிவிட்டான்" என்றான் மற்றவன்.
தன் கேள்விக்குப் பதில் சொல்லாமலே தன்னைப் பற்றித் தன் முன்பே அவர்கள் வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டு போவதைக் கண்டு அண்டராதித்தன் கைகள் துடித்தன. கையிலிருக்கும் தீப்பந்தத்தால் அந்த மூன்று முரடர்களையும் அப்படியே மூக்கு, முகம் பாராமல் வாங்கு வாங்கென்று வாங்கிவிடலாம் என்று தோன்றியது.
"மரியாதை தெரியாத மனிதர்களுக்கு இங்கே பதில் சொல்கிற வழக்கம் இல்லை" என்று சுடச்சுடப் பதில் கூறினான் அண்டராதித்தன்.
"ஓகோ! இனிமேல் உங்களிடம் தான் அதைக் கற்றுக் கொள்ள வேண்டும்."
"பண்பாடற்ற தடியர்களுக்கு இந்த நாட்டில் யாரும் எதையும் கற்பிக்க விரும்புவதில்லை."
இப்படியே பேச்சு முற்றியது. அண்டராதித்தன் ஒன்று சொல்ல அவர்கள் ஒன்று சொல்ல அறக்கோட்டத்து வாசலில் ஒரே கூப்பாடாகி விட்டது.
உள்ளே ஒதுங்கி நின்று அந்தக் கூப்பாட்டைக் கேட்டுக் கொண்டிருந்த அண்டராதித்தன் மனைவி கோதை நாச்சியார் பொறுமையிழந்து, "அது யார் அங்கே வந்திருக்கிறார்கள்? என்ன கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறீர்?" என்று இரைந்து கொண்டே வெளியில் வந்தாள்.
கண்களில் கனல் பொறி பறக்க வந்து நின்ற கோதை நாச்சியாரைப் பார்த்து, "யாரா? யாரென்று நீயே வந்து கேள்! இவர்கள் பேசுவதைக் கேட்டால் மனிதர்கள் பேசுவது போல் தெரியவில்லை" என்று பதில் கூறினான் மணியக்காரன்.
ஒரு பெண்ணுக்கு முன்னால் துச்சமான சொல்லுக்கோ செயலுக்கோ ஆளானால் அது யாருக்குத்தான் பொறுக்கும்?
"அப்பனே! ஒழுங்காகப் பேசு!" என்று சொல்லிக் கொண்டே கையை ஓங்கிக் கொண்டு அண்டராதித்தன் மேல் பாய்ந்தான் ஒருவன்.
"அருகில் நெருங்கினாயோ பொசுக்கி விடுவேன் பொசுக்கி!" என்று தீப்பந்தத்தை ஓங்கினான் அண்டராதித்தன். உடனே இன்னொருவன் இடையிலிருந்த வாளை உருவினான். மற்றொருவன் கையிலிருந்த வேலை நீட்டினான். 'ஐயோ! இந்தக் குண்டர்களிடம் எதற்காக வம்பு செய்தோம்? இவர்கள் ஆயுத பாணிகளாக வந்திருக்கிறார்களே' என்று அப்போதுதான் மனத்தில் பயம் உறைத்தது அவனுக்கு. கொடுமை தவழும் அவர்களுடைய கண்களைக் கவனிக்கையில் 'இவர்கள் எந்தத் தீமையையும் கூசாமல் செய்துவிடக் கூடியவர்கள்' என்று தோன்றியது.
"இதுதானா சத்திரம் என்று கேட்டால் பதில் சொல்வானா? தீவட்டியை ஓங்கிக் கொண்டு வருகிறான் மடையன்" என்று வந்தவர்களில் ஒருவன் தன் கடைசி வசை புராணத்தை வெளிப்படுத்திய அதே சமயத்தில், "இதுதான் சத்திரம்! யார் ஐயா நீங்கள்? அகால வேளையில் வந்து கலவரம் செய்கிறீர்கள்? என்ன வேண்டும்?" என்று வினவிக் கொண்டு பெண் புலி போல் கணவனுக்கு முன் வந்தாள் கோதை.
பெண்ணின் முகத்துக்கு இந்த உலகத்தில் எப்போதும் இரண்டு பெரிய ஆற்றல்கள் உண்டு. பிறரைக் கவருவது; பிறரை அடக்குவது. கோதை நாச்சியார் வந்து நின்றவுடன் வாளையும், வேலையும் பார்த்துப் பயந்து சிறிதே நடுங்கிக் கொண்டிருந்த அண்டராதித்த வைணவனுக்குத் தெம்பு உண்டாயிற்று.
"அப்படிக் கேள், சொல்கிறேன்! இந்த மாதிரி முரடர்களுக்காகவா சத்திரத்தைக் கட்டி வைத்திருக்கிறார்கள்?" என்று அவளோடு ஒத்துப் பாடினான் அண்டராதித்தன்.
"அம்மணீ! இதுவரை இந்த அசட்டு மனிதரிடம் சண்டை பிடித்ததுதான் பலன். நீங்கள் மிகவும் நல்லவர் போல் தோன்றுகிறீர்கள். நாங்கள் வெளிதேசத்திலிருந்து வந்தவர்கள். விழிஞத்தில் வந்து இறங்கினோம். முன்சிறைச் சத்திரத்துக்குப் போனால் தங்குவதற்கு இடம் கிடைக்கும் என்று கூறினார்கள். அதனால் தான் இங்கு வந்து சேர்ந்தோம்" என்று குழைந்து கொண்டு பேசினான் ஒருவன்.
"அது சரி! நீங்கள் மூவரும் யாரென்று முதலில் சொல்லுங்கள். வருகிறவர்களை இன்னாரென்று தெரிந்து கொள்ளாமல் இங்கு யாருக்கும் இடம் கொடுப்பது வழக்கமில்லை" என்றாள் கோதை நாச்சியார்.
வாசற்படியில் நின்ற அந்த மூவரும் பதில் சொல்லவில்லை. தங்களுக்குள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு ஆந்தையைப் போல் பேந்தப் பேந்த விழித்தனர்.
"ஒரு வேளை நீங்கள் யாரென்று உங்களுக்கே தெரியாதோ?" மனைவி பக்கத்தில் நிற்கிற தெம்பில் குத்தலாக இப்படி ஒரு போடு போட்டான் அண்டராதித்த வைணவன்.
"ஏய்! குடுமிக்காரச் சோழியா! இனிமேல் நீ குறுக்கே பேசினால் மண்டையைப் பிளந்துவிடுவோம்" என்று சினம் அடைந்து கத்தினான் ஒருவன்.
"யாராயிருந்தால் உங்களுக்கு என்ன? சத்திரத்தில் தங்க இடம் கேட்டால் பூர்வோத்ரமெல்லாம் சொல்லித்தான் ஆகவேண்டுமா?" என்றான் இன்னொருவன்.
கோதை நாச்சியார் அவர்களை ஒருமுறை நன்றாகப் பார்த்தாள். அவர்கள் விவாதமும் குயுக்தியும் அவளுடைய மனத்தில் பல மாதிரியான சந்தேகங்களைக் கிளப்பின.
"ஐயா! உலகத்தில் தங்களை இன்னாரெனச் சொல்லிக் கொள்ள விரும்பாதவர்கள் இவர்கள்தான் - திருடினவர்கள், திருட வந்தவர்கள், கொலை செய்தவர்கள், கொலை செய்யப் போகிறவர்கள், வாழ்ந்து கெட்டவர்கள் அல்லது மானம் இழந்தவர்கள் இந்த வகையைச் சேர்ந்தவர்கள்தாம் தங்களை இன்னாரென்று சொல்லிக் கொள்ளுவதற்கு நாணம் அடைய வேண்டும்" என்று சொல்லிவிட்டுக் குறும்புத்தனமான சிரிப்பொன்றை நெளியவிட்டாள் அவள்.
"என்ன சொன்னாய்? எவ்வளவு திமிர் உனக்கு!" என்று சொல்லிக் கொண்டே மூன்று பேர்களும் சத்திரத்து வாசற் படியின் மேலே ஏறினர்.
"ஆமாம்! சொன்னேன், சோற்றுக்கு உப்பில்லை என்று, சீ! போங்கள் வெளியே" என்று சொல்லிக் கொண்டே கணவனை உட்புறம் இழுத்துக் கொண்டு முகத்தில் அறைந்தாற் போல் வாசல் கதவைப் படீரென்று அடைத்துத் தாழிட்டாள் கோதை.
கதவு முகத்தில் இடித்து விடுமோ என்ற பயத்தில் அதிர்ச்சியடைந்து பின்னுக்கு நகர்ந்த மூவரும் வாசற்படிகளில் தடுமாறி நிலைகுலைந்து வீழ்ந்தனர்.
"அயோக்கியப் பெண்பிள்ளை! என்ன பேச்சுப் பேசி விட்டாள்" என்று கறுவிக் கொண்டான் ஒருவன்.
"வரட்டும்! வரட்டும்! எங்கே போய்விடப் போகிறாள்? நாமும் சில நாட்கள் இந்தப் பிரதேசத்தில் தானே இருக்கப் போகிறோம்? இந்த அம்மையைக் கவனித்துக் கொள்ளலாம்" என்று சூளுரை கூறினான் இன்னொருவன்.
"அந்த ராணியைத் தீர்த்துவிட்டுப் போகிற போக்கில் இந்தச் சத்திரத்து ராணியையும் தீர்த்துவிட வேண்டியதுதான்!" என்று பல்லைக் கடித்துக் கொண்டு உறுமினான் மூன்றாமவன்.
அப்போது மேலேயிருந்து மூன்று பேர்களின் தலையிலும் அருவி கொட்டுவது போல் மாட்டு சாணம் கரைத்த தண்ணீர் விழுந்தது. திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தனர். மேல் மாடத்தில் அந்தப் பெண் கோதை கலகலவென்று சிரித்துக் கொண்டு நின்றாள். அவள் தன் கையிலிருந்த செப்புக் கொப்பரையை அவர்கள் தலைகளுக்கு நேரே கவிழ்த்தாள். அந்த மூன்று ஆண்பிள்ளைகளின் நரம்புகள் யாவும் முறுக்கேறித் துடித்தன.
--------
1.12. வசந்த மண்டபத்து இரகசியங்கள்
கன்னியாகுமரியிலிருந்து எவ்வளவோ அருமையாகப் பாதுகாத்துக் கொண்டு வந்த அந்த ஓலை கடைசியில் மகாமண்டலேசுவரர் மாளிகையின் அந்தரங்க அறையில் எரிந்து சாம்பலாகப் போகும்படி நேரிடுமென்று தளபதி வல்லாளதேவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
ஓலையை எரித்துச் சாம்பலாக்கிவிட்ட பெருமையோ என்னவோ, இடையாற்று மங்கலம் நம்பி அவனைப் பார்த்து மிக அலட்சியமாகச் சிரித்தார்.
"என்ன தளபதி? நான் இப்படித் திடீரென்று உன்னுடைய அனுமதியில்லாமலே நீ கொண்டு வந்த ஓலையை அழித்துவிட்டேன் என்ற வருத்தமா? ஏன் பேசாமல் உம்மென்று உட்கார்ந்திருக்கிறாய்? கவலையை விட்டுவிட்டு உறங்கச் செல், மற்றவற்றைக் காலையில் பேசிக் கொள்ளலாம்."
அவருக்கு அவன் ஒரு பதிலும் சொல்லவில்லை. அதற்குள் அவரே மேலும் கூறினார்: "சேந்தா! பாவம், தளபதி இன்று மாலையிலிருந்து அடுத்தடுத்துப் பல அதிர்ச்சிகளுக்கு ஆளாகித் தொல்லைப் பட்டிருக்கிறார். மிகவும் களைத்துப் போயிருப்பார். விடிந்தால் மந்திராலோசனைக் கூட்டத்துக்காக அரண்மனைக்குப் போயாக வேண்டும். சிறிது நேரமாவது அவர் உறங்கட்டும். போ! விருந்தினர் மாளிகையில் கொண்டு போய்ப் படுக்கை ஒழித்துக் கொடு, வேண்டிய வசதிகளைக் கவனித்துக் கொள்" என்று நாராயணன் சேந்தனை நோக்கிக் கூறிவிட்டு, வல்லாளதேவன் பக்கமாகத் திரும்பி, "போ, வல்லாளதேவா! போய் ஓய்வெடுத்துக் கொள்" என்று சொன்னார். அவருடைய பேச்சின் விரைவும் அவசரமும் கண்டு அவனுக்கு மனத்தில் ஏதோ ஒரு சந்தேகம் தோன்றியது.
எதற்காகவோ தன்னை அந்த இடத்திலிருந்து அவர் விரைவில் அனுப்பிவிட விரும்புகிறாரென்று அனுமானம் செய்தது அவனுடைய மனம்.
"நான் வருகிறேன் சுவாமி!" என்று அவருக்கு வணக்கம் செலுத்திவிட்டு, அங்கிருந்து எழுந்திருந்து நாராயணன் சேந்தனைப் பின்பற்றி விருந்தினர் மாளிகைக்கு நடந்தான் அவன். விருந்தினர் மாளிகை வசந்த மண்டபத்துக்கு அருகில் இருந்தது.
தூக்கம்? அது அன்றிரவு மட்டுமல்ல, அதற்கு அப்புறமும் பத்து இரவுகளுக்குத் தன்னை நெருங்க முடியாத அவ்வளவு கவலைகளாலும், ஐயங்களாலும், குழப்பங்களாலும் மண்டை கனத்துப் பாரமாகி வெடித்துவிடும் போலத் தோன்றியது தளபதிக்கு. விருந்தினர் மாளிகையில் கொண்டு வந்து விட்டு விட்டு நாராயணன் சேந்தன் போய்விட்டான். தளபதி வல்லாளதேவனைச் சுற்றி அவனுக்குத் துணை இருந்தவை இருளும் தனிமையும் தாம்.
சேர நாட்டு யானைத் தந்தத்தில் இழைத்துச் செய்த விருந்தினர் மாளிகையின் அழகான கட்டிலில் எண்ணெய் நுரையைப் போன்ற பஞ்சணை மெத்தையின் மேல் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தான் வல்லாளதேவன்.
மாளிகையின் பின்புறத்துச் சுவரில் பறளியாற்று நீர் அலைகள் மோதும் ஒலி, சுவர்க்கோழிகளின் 'கொய்' என்ற ரீங்காரம் இவற்றைத் தவிர எங்கும் நிசப்தம் சூழ்ந்திருந்தது. அவன் கட்டிலில் புரண்டதைப் போலவே அவன் மனத்திலும் பலப் பல எண்ணங்கள் புரண்டு கொண்டிருந்தன.
'எவ்வளவு அரும்பாடுபட்டு ஒற்றர்களிடமிருந்து நாம் அந்த இரகசிய ஓலையைக் கைப்பற்றினோம்? அதனுள் அடங்கியிருந்த செய்திதான் எவ்வளவு முக்கியமானது? பார்க்கப் போனால் எவ்வளவு பயங்கரமானது? நமது திடமான உள்ளத்தின் நம்பிக்கையையே எரிப்பது போல் அல்லவா மகாமண்டலேசுவரர் அந்த ஓலையை எரித்துவிட்டார்! அவருக்கு எவ்வளவு நெஞ்சுரம்? ஒருவேளை அவரே வடதிசைப் பேரரசர்களுக்கு உள் கையைப் போல இருந்து கொண்டு சதி செய்கிறாரோ? அதனால் தான் அந்த ஓலையை மகாராணியாரோ கூற்றத் தலைவர்களோ பார்க்கக் கூடாதென்று எரித்து விட்டாரோ?'
மகாமண்டலேசுவரரைப் பற்றித் தென்பாண்டி நாட்டுத் தளபதி பதவியை ஏற்றுக் கொண்ட நாளிலிருந்து அவனுடைய மனத்தில் தோன்றியிராத சந்தேகங்களெல்லாம் இப்போது ஒன்றன்பின் ஒன்றாகத் தோன்றின.
எதை எதையோ நினைத்துக் கொண்டு படுக்கையில் தவித்துக் கொண்டு கிடந்தவன் குபீரென்று வாரிச் சுருட்டிக் கொண்டு துள்ளி எழுந்தான். அந்த மாளிகையின் இருட்டில் அவனுடைய செவிகள் எந்த ஒலியையோ கூர்ந்து கேட்பதற்கு முயன்றன. அவன் உடலில் நடுக்கமும் ரோமாஞ்சலியும் உண்டாயின. உற்றுக் கேட்டான். இதுவரை இயற்கையாகக் கேட்ட பறளியாற்றுத் தண்ணீர் பாயும் ஓசையோ, சில வண்டுகளின் சப்தமோ அல்ல அது. அவனுடைய கட்டிலுக்கு அடியில் தளத்தின் மேல் யாரோ திடும் திடுமென்று கால் வைத்து நடப்பது போலக் கேட்டது. மாளிகைக்கு வெளியே நிலா ஒளி இரவைப் பகலாக்கிக் கொண்டிருந்தாலும், உள்ளே இருட்டாகத்தான் இருந்தது. சாளரங்களெல்லாம் சுவரில் மிக உயரத்தில் இருந்ததனால் உள்ளே ஒளியைத் தர முடியவில்லை. அந்த அகால வேளையில் இருட்டில் அப்படிப்பட்ட ஓசையைக் கேட்ட போது தன் படுக்கைக்கு எதிரே நிற்கும் பெரிய வடிவுடன் கூடிய தூண்களெல்லாம் கருநெடும் பூதங்களாக மாறிக் கால்பெற்று மெதுவாக நடப்பன போல ஒரு பயங்கரப் பிரமை உண்டாயிற்று அவனுக்கு.
ஒரு விதமாக இடையிலிருந்த வாளை உருவிக் கையில் வைத்துக் கொண்டு வேகமாக அடித்துக் கொள்ளும் இதயத்துடன் படுக்கையிலிருந்து கீழே இறங்கினான் தளபதி. தயங்கித் தயங்கி அடி எடுத்து வைத்தான். அந்த ஒலி மெல்ல மெல்லத் தேய்ந்து மங்கியது. படுக்கையின் கீழே கேட்ட ஒலி இப்போது மேற்கு நோக்கிச் செல்லுவது போல் திசை மாறியது. அந்த ஒலி கேட்ட இடங்களிலெல்லாம் விருந்தினர் மாளிகையின் தரையே அதிர்வது போல் ஒருவகைச் சலனம் உண்டாயிற்று. வல்லாளதேவனும் பொறுமை இழக்காமல், இருட்டில் தூண்களிலும், படிகளிலும் மோதித் தட்டுத் தடுமாறி விழுந்து எழுந்து அந்த ஒலியைப் பின்பற்றிச் சென்றான்.
மாளிகை முற்றத்தின் கடைசிச் சுவர்வரை அந்த ஒலியைப் பின் தொடர முடிந்தது. அப்பால் முற்றத்துக் கதவைத் திறந்த போது கதவு நிலையின் கீழே வாசற்படியைத் தழுவினாற்போல் பறளியாறு பொங்கிப் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது.
நிலா ஒளியின் மோகன மயக்கத்தில் வானுலகத்து அமுதக் குழம்பே பொங்கிப் பாய்வது போலிருந்த ஆற்றின் அழகை அப்போது அவன் கண்கள் அநுபவிக்க முடியவில்லை.
'இந்த மாளிகையில் இரவு வேளைகளில் ஏதாவது பிசாசு நடமாட்டம் இருக்குமோ?' என்று முதலில் ஓர் எண்ணம் எழுந்தது. 'சை! இதென்ன சுத்த அசட்டுத்தனமான எண்ணம்? பிசாசாவது நடமாடுகிறதாவது? நாம் தான் இந்த அர்த்த ராத்திரிப் பொழுதுக்கு மேலே இந்த இருண்ட மாளிகையில் பிசாசு போல் அலைந்து கொண்டிருக்கிறோம்' என்று முதலில் தோன்றிய அந்த எண்ணத்தை அழிக்க முயன்றான்.
'புது இடம்! எவ்வளவு களைப்பாக இருந்தாலும் உறக்கம் வராது' என்று அவன் நினைத்தான். அதுவோ வெறும் புது இடமாக மட்டும் இருக்கவில்லை. புதுமைகளும் சூழ்ச்சிகளும் நிறைந்த இடமாகவும் இருந்தது.
'எப்படியாவது இருந்து தொலைந்து விட்டுப் போகட்டும், நான் போய்ப் படுக்கையில் புரண்டு இந்த இரவைக் கழித்து விடுகிறேன்' என்று தனக்குள் ஒரு தீர்மானத்துக்கு வந்தவனாக முற்றத்துக் கதவை மறுபடியும் வேகமாகச் சாத்திவிட்டுத் திரும்பிப் படுக்கையில் வந்து உட்கார்ந்தான்.
ஒரு சில விநாடிகளே கழிந்திருக்கும். மீண்டும் அதே ஓசை! அதே இடத்திலிருந்து தொடங்கி மேற்கு நோக்கிச் சென்றது. இப்போது பாதாளக் கிணற்றுக்குள்ளேயிருந்து கேட்கிறமாதிரி 'கசுமுசு'வென்று பேச்சுக்குரலும் கேட்பது போலிருந்தது. 'மனப்பிரமைதானோ?' என்று தன்னை நம்புவதற்கே மறுத்தது அவன் மனம். 'இது உண்மையா? அல்லது நமக்கு மட்டுமே ஏற்படக்கூடிய மனப்பிரமையா? நாராயணன் சேந்தனைப் போய் அழைத்துக் கொண்டு வந்து இந்த மர்மத்தைச் சோதித்துப் பார்த்துவிட்டால் என்ன? இதற்கு முன்பு பகலில் எவ்வளவோ தடவைகள் இந்த மாளிகையில் வந்து தங்கியபோது இம்மாதிரி மர்மமான அனுபவம் எதுவும் ஏற்பட்டதில்லையே! என்ன ஆனாலும் சரி! நம்பியும், நம்பாமலும் இப்படித் தவிப்பதற்கு நானே எழுந்திருந்து போய் நாராயணன் சேந்தனைக் கூப்பிட்டு வந்து விடுகிறேனே?' என்று ஒரு முடிவுக்கு வந்தவனாக, விருந்தினர் மாளிகைக் கட்டிலிலிருந்து இறங்கி வெளியேறினான் அவன்.
இருட்டில் நிதானமாக நடந்து மாளிகையின் வாசற்படிக்கு அவன் வந்த போது ஆச்சரியத்தில் மூழ்கிப் போனான். எதிரே கையில் தீபத்துடன் நாராயணன் சேந்தனே அங்கு வந்து கொண்டிருந்தான். 'இதென்ன விந்தை! நெல் அளக்கும் தாழியைவிடக் குட்டையான இந்த மனிதன் ஏதாவது மாயம், மந்திரம் தெரிந்தவனா? இவனைச் சந்திக்கப் போனால் இவன் விழித்துக் கொண்டிருப்பானோ, அல்லது குறட்டை விட ஆரம்பித்திருப்பானோ என்று சந்தேகப்பட்டுக் கொண்டே நான் புறப்படுகிறேன். இவனோ நினைப்பதற்கு முன்னால் தானே கையில் சுடர்விடும் விளக்கோடு என் முன்னால் வந்து நிற்கிறானே.'
இவ்வாறு எண்ணிக் கொண்டு மாளிகையின் வாசலிலேயே நின்றுவிட்டான் வல்லாளதேவன். ஆனால் மறுவிநாடியே தன் அநுமானம் தவறு என்பது அவனுக்குப் புரிந்தது. அவன் ஏமாற்றமடைந்தான். அவன் நாராயணன் சேந்தன் வருவதைப் பார்த்துக் கொண்டு நின்றானே தவிர, வந்து கொண்டிருந்த நாராயணன் சேந்தன் அவன் நின்று கொண்டிருப்பதைக் கவனித்ததாகவே தெரியவில்லை. நேரே விருந்தினர் மாளிகையை நோக்கித்தான் அவன் வந்து கொண்டிருக்கிறானென்று வல்லாளதேவன் நினைத்தான்.
ஆனால் மாளிகைக்கு மிகப் பக்கத்தில் வந்ததும், சட்டென்று வலது பக்கமாகத் திரும்பி அங்கிருந்த கொடி மண்டபத்துக்குள் நுழைந்து விட்டான் நாராயணன் சேந்தன்.
"ஓ! சேந்தா! இப்படிக் கொஞ்சம் வந்துவிட்டுப் போயேன்!" சொற்கள் நுனி நாவரைக்கு வந்துவிட்டன. என்ன தோன்றியதோ, தான் சொல்ல வந்ததைச் சொல்லாமல் தளபதி உடனடியாக அடக்கிக் கொண்டு விட்டான். நின்ற இடத்திலிருந்தே நிலவின் ஒளியில் மரகதக் குன்றமெனக் காட்சியளிக்கும் அந்தக் கொடிமண்டபத்தை நன்றாகப் பார்த்தான் தளபதி. அதற்குள்ளிருந்து முரசடிப்பது போல் ஒலி வந்தது.
மல்லிகை, முல்லை, மாதவி ஆகிய கொடிகளை இயற்கையாக அந்த இடத்தில் மரங்களில் படரச் செய்து முற்றிலும் பசுங்கொடிகளாலானதோர் கட்டடம் போலவே காட்சி தருமாறு அமைக்கப்பட்டிருந்தது லதா மண்டபமெனப்படும் அந்தக் கொடி மணடபம்.
'மழைக் குளிரும், ஈரம் மிகுந்திருக்கும் சூழலுமுள்ள அந்தச் சமயத்தில், உலகம் உறங்கும் நடு இரவில் நாராயணன் சேந்தனுக்கு அங்கே என்ன வேலை? பால் போல் நிலா ஒளி பரவியிருக்கும் போது அவனுக்கு விளக்கு எதற்கு?' என்று சிந்தித்துத் திகைத்தான் வல்லாளதேவன். 'ஏ, அப்பா! இந்தக் குள்ளனும், இவனை ஆட்டி வைக்கும் இடையாற்று மங்கலம் நம்பியும் எவ்வளவு மர்மங்களை அடக்கி வைத்துக் கொண்டிருக்கிறார்கள்? இவைகளை முழுவதும் தெரிந்து கொள்வதற்கு வீரமும், வாளும், ஆள்பலமும் மட்டும் போதாது போலிருக்கிறது. அறிவு நுட்பத்தினால் சொந்தச் சாமர்த்தியம் சாதுரியம் இவைகளால் மாத்திரமே சாதிக்க முடிந்த காரியங்கள் இந்த உலகத்தில் நிறைய இருக்கின்றன. மகாமண்டலேசுவரரின் செயல்களெல்லாம் இந்த வகையைச் சேர்ந்தவை.' ஏனோ தெரியவில்லை இடையாற்று மங்கலம் நம்பியைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் அவனுடைய மனக்கண்ணுக்கு முன் உருவெளியில் உயரமும், அகலமும் பருமனும் அளக்கலாகா அளவும் பொருளும் துளக்கலாகா நிலையும் தோற்றமும் மாபெரும் மலைச்சிகரமொன்று தோன்றியது.
லதா மண்டபத்துக்குள் நுழைந்த நாராயணன் சேந்தன் வெகு நேரமாகியும் வெளியே திரும்பி வரவில்லை. 'அங்கே அவன் என்ன தான் செய்து கொண்டிருக்கிறான்? போய்ப் பார்ப்போமே' என்று வல்லாளதேவன் விருந்தினர் மாளிகை வாசலிலிருந்து பதுங்கிப் பதுங்கி நடந்து லதா மண்டபத்துக்குள் புகுந்தான். அவனுக்கு ஒரே ஏமாற்றமாக இருந்தது. லதா மண்டபத்தில் நாராயணன் சேந்தன் இல்லை. 'வந்த வழியே திரும்பாமல் இந்தக் கொடி மண்டபத்திலிருந்து வெளியேறுவதற்கு வேறு வழி ஏதேனும் இருக்குமோ? அப்படி இருக்குமானால் அந்த வழியாகச் சேந்தன் வெளியேறியிருப்பானோ? எதற்கும் சந்தேகமற சுற்றிப் பார்த்துவிடலாம்' என்று எண்ணியவனாய் வட்ட வடிவமாக அமைக்கப்பட்டிருந்த ஒரு மேடையை நெருங்கினான்.
பளிங்கு மேடையில் ஓரிடத்தில் தீபத்தைக் கீழே வைத்து எடுத்ததற்கு அடையாளமாகிய எண்ணெய்க் கறை படிந்திருப்பது இலேசாகத் தெரிந்தது.
பளிங்கு மேடையின் நட்ட நடுவில் உட்கார்ந்த கோலத்தில் திருமகள் சிலை ஒன்று செதுக்கி வைக்கப்பட்டிருந்தது. சிலையின் கையிலிருந்த தாமரை மொட்டின் மேலும் கீழே படிந்திருந்தது போல் எண்ணெய்க் கறையின் தழும்பு தெரிந்தது. யாரோ எண்ணெய்பட்ட விரல்களால் தொட்டிருக்க வேண்டுமென்று சிரமம் இல்லாமல் ஊகிக்க முடிந்தது.
நாராயணன் சேந்தன் தன் கையில் கொண்டு வந்த எண்ணெய்த் தீபத்தைப் பளிங்குத் தரையில் வைத்துவிட்டு அந்தக் கைவிரல்களால் திருமகள் சிலையின் கையிலுள்ள தாமரை மொட்டையும் தொட்டிருக்கிறான்.
தளபதி வல்லாளதேவனுக்கு மின்வெட்டும் நேரத்தில் ஒரு யோசனை உண்டாயிற்று. நடுங்கும் கையால் திருமகள் சிலையின் வலது புறத்துத் தாமரை அரும்பைத் தொட்டான். தொட்ட வேகத்தில் அது நன்றாகத் திருகுவதற்கு வந்தது. அது தானாகத் திருக முடியாமல் இறுதி நிற்கிறவரையில் அதைத் திருகினான் தளபதி.
பன்னிரண்டாவது முறையாக அவன் கைவிரல்கள் அந்த மலர் அரும்பைத் திருகுவதற்கு நெருடியபோது அவனுடைய உடலைச் சுமந்து கொண்டிருந்த பளிங்கு மேடை பூகம்பமடைந்தது போலக் கிடுகிடுவென்று ஆடியது. அடுத்த கணம் அந்தக் கருங்கல்லாலான திருமகள் சிலை யாரோ பிடித்து இழுத்துக் கொண்டு போவதைப் போலக் கிறுகிறுவென்று பின்னால் நகர்ந்தது. அது இருந்த இடத்தில் நாலு கோல் நீளமும் நாலு கோல் அகலமுமுள்ள சதுரமான இடைவெளி ஒன்று ஏற்பட்டது. மிரளும் கண்களால் குனிந்து பார்த்தான் அவன். வரிசையாகப் படிகள் தெரிந்தன. அதற்கப்பால் 'கருங்கும்' என்று ஓர் இருட்டுக் குகையாக இருந்தது. தன்னைச் சுற்றிலும் நாலுபுறமும் ஓர் பார்வை பார்த்துவிட்டு அந்தச் சுரங்கத்துக்குள் துணிந்து இறங்கினான் அவன்.
பத்துப் பதினைந்து படிகள் இறங்கி உள்ளே சென்றதும் மேலே பார்த்தது போலவே ஒரு திருமகள் சிலை. சிலையின் இடது கைத் தாமரை அரும்பைத் திருகினான் அவன். தளபதியின் எண்ணம் சரியாக இருந்தது. அவன் அதைத் திருகி முடிந்ததும் மேலே சுரங்க வாயில் நகர்ந்து மூடிக் கொண்டுவிட்டது. வெளியிலிருந்து வந்து கொண்டிருந்த சிறிதளவு நிலா ஒளியும் அடைபட்டுப் போகவே, மைக்குழம்பை வழித்து அப்பினாற் போல் இருட்டு கோரமாயிருந்தது.
எங்கோ ஒரு மூலையில் சிறு மின்மினிப் பூச்சி போல் சுரங்கப் பாதையில் தொலை தூரத்தில் ஒரு வெளிச்சம் தெரிந்தது. அந்த வெளிச்சம் சிறிது சிறிதாக நகர்ந்து மேலே சென்று கொண்டிருந்ததனால் நாராயணன் சேந்தன் தீபம் ஏந்திய கையுடன் முன்னே சென்று கொண்டிருக்கிறானென்று உய்த்துணர முடிந்தது.
தட்டுத் தடுமாறி வழியைத் தடவிக் கொண்டு தளபதி மேலே நடந்தான். சிறிது தூரம் சென்றதும் கீழே பாறையும் மணலுமாக இருந்தன. அங்கே சலசலவென்று தண்ணீர் கசிந்து இனிய ஜலதரங்க நாதத்துடன் பாய்ந்து கொண்டிருந்தது. அதன் காரணமாக, வருகிறவர்கள் நடப்பதற்குக் கல்தூண்களை நிறுத்தி அவற்றின் மேல் வரிசையாக மரப்பலகைகளைப் பாலம் போலப் பிணைத்திருந்தார்கள். அதன் மேல் நடக்கும் போது 'திடும்' 'திடும்' என்ற ஓசை உண்டாயிற்று. அது விருந்தினர் மாளிகையில் தான் படுத்திருந்த பகுதிக்கு அடியில் இருக்க வேண்டுமென்று வல்லாளதேவன் நினைத்தான். தான் படுத்திருந்த இடத்தில் அந்த மாதிரி ஓசை உண்டானதற்குக் காரணம் அந்தச் சமயத்தில் சுரங்கத்துக்குள் அதே மரப் பாலத்தில் யாரோ நடந்து சென்றிருக்கிறார்களென்று அவனுக்குத் தோன்றியது. பறளியாற்றில் நீர் நிறைந்து பாய்வதால் அந்தச் சுரங்கத்துக்குள் நீர் ஊறிக் கசிவு ஏற்பட்டிருக்கிறதென்று தெரிந்து கொள்ள முடிந்தது.
முன்னால் விளக்குடன் போய்க் கொண்டிருக்கிற நாராயணன் சேந்தன் தான் நடக்கிற ஓசையைக் கேட்டுத் திரும்பிப் பார்த்துவிடக் கூடாதே என்பதற்காக, மரப்பாலத்தில் பாதங்களை அழுத்தி ஊன்றாமல் மெள்ள நடந்து சென்றான் வல்லாளதேவன். கால் நாழிகை நடைக்குப் பின் பூமிக்கு அடியிலேயே கட்டப்பட்டிருந்த ஒரு விசாலமான மண்டபம் போன்ற இடம் அவனுடைய கண்பார்வையில் பட்டது.
அந்த மண்டபத்தில் வெளிச்சமாக இருந்தது. பேச்சுக் குரல்கள் கேட்டன. சுரங்கப் பாதையின் முடிவில் மண்டபத்துக்குள் நுழையும் இடத்தில் சுவரோடு சுவராகப் பதுங்கி நின்று கொண்டு பார்த்தான் வல்லாளதேவன்.
அந்தப் பாதாள மண்டபத்தின் நாற்புறத்து இருண்ட மூலைகளிலும் அம்பாரம் அம்பாரமாகக் குவித்து வைக்கப்பட்டிருந்த வாள்களையும் வேல்களையும், கேடயங்களையும், ஈட்டிகளையும் கவசங்களையும் பார்த்த போது அவனுக்குத் திகைப்பு ஏற்பட்டது.
சற்று முன் அந்தரங்க மண்டபத்திலிருந்து அவனுக்கு விடை கொடுத்து அனுப்பிய மகாமண்டலேசுவரர் இப்போது அந்தப் பாதாள மண்டபத்துக்குள் நின்று கொண்டிருந்தார். அவருடைய திருப்புதல்வி குழல்மொழி நாச்சியாரும் இருந்தாள். இருட்டில் கொள்ளி ஏந்தி நிற்கும் குட்டைப் பேயற் போல் நாராயணன் சேந்தன் தீபத்தைப் பிடித்துக் கொண்டு நின்றான். அவர்கள் மட்டும் அங்கே அப்போது இருந்திருந்தால் தளபதிக்கு ஆச்சரியம் ஏற்பட்டிருக்கக் காரணமே இல்லையே!
வடதிசை மூவரசருக்கும், அரச பாரத்தைத் தாங்கும் சுமைக்கும் பயந்து இலங்கைத் தீவுக்கு ஓடி விட்டதாக நினைக்கப்பட்ட குமார பாண்டியன் இராசசிம்மனும் அங்கே அவர்களோடு நிற்பது போல் தளபதிக்கு ஒரு பிரமை கண்களில் ஏற்பட்டது. ஆனால் அந்த பிரமை மறுகணமே நீங்கிவிட்டது. அவனுக்குக் குமார பாண்டியரைப் போல் காட்சியளித்து அவன் கண்களை ஒரு கணம் ஏமாற்றத்துக்கு உள்ளாக்கியது அந்த இளம் துறவியின் தோற்றம் தான். படகில் வரும் போது துறவியை எங்கோ கண்டிருப்பது போல் வந்த நினைவு மனத்தில் இப்போது உறுதிப்பட்டது.
"சேந்தா! அது என்ன? அந்த மூலையில் யாரோ ஒளிந்து நிற்பதுபோல் தெரிகிறதே? இப்படி விளக்கைக் கொண்டு வா" என்று மகாமண்டலேசுவரர் தளபதி நின்ற மூலையைச் சுட்டிக் காட்டினார்.
உடனே சேந்தன் விளக்கோடு வர, மகாமண்டலேசுவரர் அவனைப் பின்பற்றித் தளபதி நின்று கொண்டிருந்த மூலைக்கு வேகமாக வந்தார்.
சுவரோரமாக நின்று கொண்டிருந்த தளபதிக்கு மூச்சே நின்று விடும் போல் இருந்தது.
----------
1.13. பகவதி காப்பாற்றினாள்
மேல் மாடத்து நிலா முற்றத்தில் எதிர்பாராத நிகழ்ச்சியால் அரைகுறையாக முடிந்த நாட்டியத்துக்குப் பின் மகாராணியாரும் அவரோடு இருந்த பெண்களும் பரபரப்படைந்து அந்தப்புரத்துக்குச் சென்றார்களல்லவா? அதன் பின் அங்கு நடந்த தொடர்பான நிகழ்ச்சிகளைக் கவனிப்போம்.
திடீரென்று ஏற்பட்ட குழப்பத்தினால் சூதுவாதறியாத அந்தக் கன்னிப் பெண்களின் மனத்தில் தன்னைப் பற்றித் தவறான எண்ணம் ஏற்பட்டிருக்குமோ என்று மகாராணி வானவன்மாதேவி கலக்கமுற்றார். இந்தப் பரந்த உலகத்தில் எத்தனை கொடுமைகளைச் செய்தாலும் அவற்றிலிருந்து தப்பலாம். கள்ளங் கபடமற்ற நல்ல மனங்களில் தீமையை விதைத்தவர்கள் எந்த விதத்திலும் தப்ப முடியாது. மகாராணி வானவன்மாதேவியின் மனத்தில் எப்போதும் நிரந்தரமாக நிலைத்திருக்கக் கூடிய சிந்தனையில் இதுவும் ஒன்று.
"குழந்தைகளே! பகவதி! விலாசினி! உங்களுடைய ஆடல் பாடல்களை இன்னும் சிறிது நேரம் காணவும், கேட்கவும் ஆவலாயிருந்தேன். என்னுடைய எத்தனை, எத்தனை கவலைகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விட்டன தெரியுமா? ஒரு தேசத்தின் மகாராணியாக இருந்து காணுகிற சுகத்தை விட உங்களைப் போல் இரண்டு பெண்களின் தாயாக ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்திருந்தேனானால் இன்னும் எவ்வளவோ சுகத்தையும், நிம்மதியையும், கண்டிருப்பேன்" என்று கூறினார் வானவன்மாதேவி.
"மகாராணியாரின் திருவாயிலிருந்து இத்தகைய வார்த்தைகளைக் கேட்க நேரிடுவது எங்கள் பெரும் பாக்கியம்! தாங்கள் சாதாரணக் குடும்பத்துத் தாயாகப் பிறந்திருந்தால் நாங்களெல்லாம் அஞ்சலி செய்யும் மதிப்புக்குரிய பாண்டிமாதேவியாகத் தங்களை அடைந்திருக்க முடியுமா?" என்று உபசாரமாக மறுமொழி கூறினாள் விலாசினி.
"எங்களுடைய ஆடலும், பாடலும் எங்கே ஓடிப்போய் விடப் போகின்றன? மகாராணியாருடைய அன்புக் கட்டளை எந்த விநாடியில் கிடைத்தாலும் ஓடி வந்து ஆடவும், பாடவும் காத்திருக்கிறோம். கலைகளை அர்ப்பணம் செய்ய வேண்டிய இடமே இதுதானே?" என்று விநயமாகக் கூறினாள் பகவதி.
அவர்கள் இருவரும் கூறியவற்றைக் கேட்ட வானவன்மாதேவியின் வதனத்தில் எத்தனையோ அர்த்தங்களை உள்ளடக்கிக் கொண்டிருக்கிற அற்புதமான புன்னகை ஒன்று மலர்ந்தது. உலக அநுபவங்களின் வாசனையை அதிகம் நுகர்ந்தறியாத அந்த இளம் பெண்களுக்கு மகாராணியின் சிரிப்புப் புரியவா போகிறது?
"குழந்தைகளே! இந்த வயதில் உங்களைப் போன்றவர்களுக்கு இப்படித்தான் தோன்றும். பதவி, படாடோபம், இராஜபோகம் எல்லாவற்றாலும் கிடைக்கக்கூடிய ஆடம்பரம் இணையற்ற பெரும் பேறு என்று நினைப்பீர்கள். ஆனால் அவற்றுக்குப் பின்னால் மறைந்திருக்கக்கூடிய துன்பங்கள், ஆசாபாசங்கள் எல்லாம் உங்களுக்குப் புரியாதவை, விலாசினி! உன் தகப்பனார் உனக்குச் சிலப்பதிகாரம் கற்பித்திருப்பாரே? தொல்காப்பியத்தை அரங்கேற்றிய மாபெரும் அதங்கோட்டாசிரியரின் வழியில் வந்து இன்று தாமும் அதே பேர் பூண்டு விளங்கும் உன் தந்தை தமிழ் இலக்கியக் கடல். அவரிடம் அநேகமாக நீ எல்லா நூல்களையும் கற்றுக் கொண்டிருப்பாய். என்ன, நான் நினைப்பது சரிதானா?"
"ஆமாம், தேவி! என் தந்தை குழந்தைப் பருவத்திலிருந்து என்னை வற்புறுத்தி ஆவலோடு அவற்றையெல்லாம் எனக்குக் கற்பித்திருக்கிறார். சிலப்பதிகாரத்தைப் பலமுறை அவரிடம் பாடம் கேட்டிருக்கிறேன். அந்த முத்தமிழ்க் காவியம் என் மனத்தைக் கவர்ந்ததைப் போல் வேறு எதுவும் கவரவில்லை" என்றாள் விலாசினி.
"அந்த மகா காவியத்தில் ஓர் அருமையான கட்டம் எனக்கு நினைவுக்கு வருகிறது. குழந்தாய்! மதுரையில் கண்ணகிக்கு தவறிழைத்த பாண்டியன் உயிர் துறந்த செய்தியைச் சாத்தனார் என்ற புலவர், சேர நாட்டில் பேராற்றங்கரைப் படுகையில் செங்குட்டுவன் வந்து தங்கியிருக்கும் போது அவனுக்குக் கூறுகிறார். அந்த அவலச் செய்தியைக் கேட்ட செங்குட்டுவன் இதயத்தில் பெருந்தன்மையான முறையில் அநுதாபம் சுரக்கிறது. அந்த அநுதாபத்தைச் சேரர் பெருவேந்தனான செங்குட்டுவன் எவ்வளவு நாகரிகமாக வெளியிடுகிறான், தெரியுமா?
'ஆகா! என்னைப் போல் சக அரசனாகிய பாண்டியன் ஒரு பெண்ணுக்குத் தவறாக நியாயம் வழங்கியதற்கு நாணித் தன் உயிரையே விட்டுவிட்டான். அரசாளுகிற பரம்பரையில் பிறப்பது மகத்தான அதிர்ஷ்டம் என்று எத்தனை பேர்கள் கனவு கண்டு கொண்டிருக்கிறார்கள். மழை பெய்யாமற் போனால், 'அரசன் சரியில்லை; மழை தவறிவிட்டது' என்பார்கள். மழை அதிகமாகப் பெய்து வெள்ளச் சேதம் ஏற்பட்டுவிட்டாலோ அப்போதும், 'அரசன் சரியில்லை' என்பார்கள். நியாயம் தவறி ஓர் உயிரைக் கொன்று விட்டால் பெரும்பழியை அரசன் சுமக்க நேரிடும். ஓர் அரசனுடைய தோளில் இத்தனை துன்பச் சுமைகள். அப்படி இருந்தும், அரசாளும் குடியில் பிறக்கவில்லையே என்று இந்த அசட்டு மனிதர்கள் வீணாக ஏங்குகிறார்களே!' என்று செங்குட்டுவன் சாத்தனாரிடம் கூறியதாகச் சிலப்பதிகாரத்தில் வருகிறது."
"தேவி! இந்த இடத்தில் புலவர் பெருந்தகையான இளங்கோவடிகள் செங்குட்டுவனின் இதயப் பண்பை மிக அருமையாகச் சித்தரித்திருக்கிறார்; உயர்ந்த காவியப் பண்புக்காகப் பாராட்டுவதாக யிருந்தால் இதை அல்லவா பாராட்ட வேண்டும்?"
"பெண்ணே, விலாசினி! உங்கள் புகழ்ச்சியும், மகாராணிப் பட்டமும், இந்தக் கோட்டை கொத்தளம் முதலிய அரசபோக ஆடம்பரங்களும் எனக்குச் செங்குட்டுவன் கூறிய இந்தக் கருத்தை ஞாபகப்படுத்தின."
மகாராணி இவ்வாறு சொல்லிக் கொண்டிருந்த போது நந்தவனத்தில் ஏற்பட்ட குழப்பத்தைப் பார்த்துவிட்டு வருவதற்காகப் போயிருந்த பவழக்கனிவாயரும், அதங்கோட்டாசிரியரும் அங்கே திரும்பி வந்து சேர்ந்தனர்.
"என்ன! செங்குட்டுவனைப் பற்றி ஏதோ பேச்சு நடக்கிறாற் போலிருக்கிறதே? மகாராணியாரின் சுவாரஸ்யமான இலக்கியச் சம்பாஷணையில் நாங்களும் கலந்து கொள்ளாமல்லவா?" என்று சிரித்துக் கொண்டே கேட்டார் அதங்கோட்டாசிரியர்.
"நான் எதையும் உங்களைப் போல வகை தொகையாக விவரித்துச் சொல்ல முடியுமா? அதெல்லாம் சரி! நந்தவனத்திலிருந்துதானே வருகிறீர்கள்? அது என்ன குழப்பம் அங்கே? விவரம் தெரிந்து கொண்டு வந்திருப்பீர்களே! சொல்லுங்கள். நாங்களும் தெரிந்து கொள்கிறோம்" என்று மகாராணியார் அதங்கோட்டாசிரியரை நோக்கிக் கேட்டார். உடனே அதங்கோட்டாசிரியர் பக்கத்தில் திரும்பி, "பவழக்கனிவாயரே! மகாராணியாருக்குச் சொல்லும். நீர் தான் இம்மாதிரி விஷயத்தை நன்றாக வருணித்துச் சொல்லமுடியும்" என்று தம் சமீபத்திலிருந்த பவழக்கனிவாயரைத் தூண்டினார்.
"கலகத்தைப் பற்றிச் சொல்ல நான் தான் சரியான ஆள் என்று தீன்மானித்து விட்டீராக்கும். பரவாயில்லை! நானே சொல்லுகிறேன்," என்று சிரிப்போடு பீடிகை போட்டுப் பேச்சைத் தொடங்கினார் பவழக்கனிவாயர்.
"மகாராணி! கோட்டைக்கு வெளியிலிருக்கும் ஏரியிலிருந்து அரண்மனை நந்தவனத்துக்குத் தண்ணீர் கொண்டு வரும் கால்வாய் வழியாக யாரோ நந்தவனத்துக்குள் புகுந்திருக்கிறார்கள். அப்படிப் புகுந்தவர்கள் யார், என்ன நோக்கத்தோடு புகுந்தார்கள், என்பனவெல்லாம் தெரியவில்லை. நிலா முற்றத்துச் சுவரை ஒட்டினாற்போல் இருக்கும் மகிழ மரக்கிளையில் வந்தவர்கள் ஏதோ ஒரு காரணத்தை உத்தேசித்து ஏறியிருக்க வேண்டும். அதனால் தான் சுமை தாங்காமல் அந்தக் கிளை முறிந்திருக்கிறது."
"இதென்ன? எல்லாம் அநுமானம் தானா? நேரடியாக ஒன்றும் பார்த்துத் தெரிந்து கொண்டு வரவில்லையா நீங்கள்?" என்று வானவன்மாதேவி குறுக்கிட்டுக் கேட்டார்.
"தேவீ! நாங்கள் என்ன செய்ய முடியும்? வந்தவர்களில் எவரும் பிடிபடவில்லை. வீரர்கள் அரண்மனை நந்தவனத்தில் சல்லடைக் கண் இடமும் விடாமல் தேடிப் பார்த்து விட்டார்கள். நந்தவனத்து ஈர மண்ணிலும், கால்வாய்க் கரையில் தரையில் பதிந்திருக்கும் அடிச்சுவடுகளிலிருந்தும் ஒருவன் தனியாக வரவில்லை என்று தெரிகிறது. அதைத் தவிர மகிழ மரத்தடியில் ஒரு குத்துவாளும், கால்வாய்க் கரைப் படியில் ஒரு தலைப்பாகையும் விழுந்து கிடந்தன. கோட்டை மெய்க்காப்பாளர்கள் அவற்றை எடுத்துக் கொண்டு போய்ப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். ஒருவேளை இந்த இரண்டு பொருள்களையும் கொண்டு வந்தவர்களைக் கண்டுபிடிக்க முயன்றால் வெற்றி கிடைத்தாலும் கிடைக்கும்" என்று பவழக்கனிவாயர் கூறி முடித்த போது, கேட்டுக் கொண்டிருந்த வானவன்மாதேவியின் முகத்தில் சிரிப்பில் மலர்ச்சி ஒளிர்ந்தது.
"ஏன் சிரிக்கிறீர்கள்?"
"சிரிக்க வேண்டிய காரணம் இருந்தது சிரித்தேன். பவழக்கனிவாயரே! உலகியல் அறிவையும், ஞானச் செல்வத்தின் விளைவையும் வளர்க்கக் கூடிய காந்தளூர் மணியம்பலத்தின் தலைவராகிய உமக்குக் கூடவா இதிலெல்லாம் நம்பிக்கை இருக்கிறது?"
"இதில் எல்லாம் என்றால்...?"
"கோட்டையின் உயரமான பெரிய சுவர்கள், அவைகளைச் சுற்றிலும் ஆழமான அகழி, போதும் போதாதற்கு வாளும், வேலும் சுமந்த மெய்க்காவல் வீரர்கள், சீவல்லப மாறனைப் போல அவர்களுக்கு ஒரு தலைவன் - எல்லாம் எனக்கு வேடிக்கையாகத்தான் இருக்கின்றன. கேவலம் ஐம்புலச் செங்கற்களால் உருவான நிலையற்ற இந்த உடற்கோட்டையைப் பாதுகாக்க இவ்வளவு ஏற்பாடுகளா? எனக்குச் சிரிப்புத்தான் வருகிறது. மனிதர்களுக்கு ஆத்மபலம் குறையும் போது புறக்கருவிகளின் துணையால் கிடைக்கும் பாதுகாப்பில் நம்பிக்கை விழுகிறது. உண்மையில் இந்த ஏற்பாடுகளால் என்னுடைய ஆத்ம பலத்தை நலியச் செய்கிறீர்கள் நீங்கள்! கோட்டைக்குள் திருட்டுத்தனமாக நுழைந்தவர்கள் கன்னியாகுமரியில் என்னைக் கொலை செய்ய முயன்று முடியாமல் ஏமாந்து போனவர்களாகவே இருக்கலாம். அவர்களைப் போன்ற ஒரு சிலரின் கையால்தான் எனக்குச் சாவு என்றிருக்குமானால் அதை உங்களால் தடுத்துவிட முடியுமா?"
"தேவீ! இன்று மாலையிலிருந்து உங்கள் பேச்சு பற்றற்ற விரக்தி நிலையையே காட்டுகிறது. இவ்வளவு நம்பிக்கை இழக்கும்படியான பெருந் துன்பங்கள் எவையும் வரவில்லையே?" என்று உருக்கம் நிறைந்த தொனியில் விசாரித்தார் அதங்கோட்டாசிரியர்.
"ஆசிரியரே! இதுவரையில் வந்த துன்பங்கள் போதாதா? இன்னும் என்ன வரவேண்டும்?"
"ஒரு துன்பமுமில்லை! நீங்களாகவே என்னென்னவோ நினைத்துக் கொள்கிறீர்கள். குமரித் தெய்வத்தின் அருளும் தென்பாண்டி நாட்டு மக்களின் குறைவில்லாத அன்பும் இருக்கிறவரை உங்களுக்கு எவராலும் கேடு சூழ முடியாது. தங்களுடைய அருமந்தப் புதல்வரும் குமாரபாண்டியருமான இளவரசர் அருகில் இல்லையே என்று கவலைப்படலாம். நாளைக் காலையில் நடக்க இருக்கும் மகாசபைக் கூட்டத்தில் செய்யப் போகிற ஏற்பாடுகளின் மூலம் அந்தக் கவலையையும் போக்கிவிடுகிறோம். இளவரசர் எங்கிருந்தாலும் அவரை உடனே அழைத்துக் கொண்டு வருவதற்கு வேண்டிய செயல் திட்டங்களெல்லாம் நாளைக் கூட்டத்தில் உருவாகிவிடும்" என்றார் ஆசிரியர்.
"அதோடு விட்டு விடமாட்டோம். இளவரசர் திரும்பி வந்ததும் உடனடியாக மகுடாபிஷேகத்தையும் கூடவே திருமணத்தையும் செய்து முடித்து விட்டால் தான் மகாராணியாருக்குப் பூரணமாகத் திருப்தி ஏற்படும்" என்று பவழக்கனிவாயர் கூறியபோது அங்கே அவர்களோடு உட்கார்ந்திருந்த விலாசினியும், பகவதியும் தலை குனிந்து கொண்டனர். அந்த இளம் பெண்களின் கன்னங்களில் ஏன் அந்தச் சிரிப்பு; கண்களில் மின்னும் அந்த ஒளிக்கு என்ன பெயர் சொல்லுவது?
எப்போதோ, சில ஆண்டுகளுக்கு முன்னால் மதுரை அரண்மனையில் கண்டிருந்த குமார பாண்டியரின் சுந்தரத் தோற்றம், அவர்கள் நினைவில் அப்போது காட்சியளித்திருக்க வேண்டும். பெண்களுக்கு நாணம் எவ்வளவு அழகாக இருக்கிறது! எத்தனையோ சமயங்களில் எத்தனையோ காரணங்களுக்காகப் பெண்களுக்கு நாணம் ஏற்படுகிறது. ஆனால் ஒரே ஒரு சமயத்தில் மட்டும் நாணத்தில் முழுமையான கனிவைக் காண முடிகிறது. திருமணமாகாத இளம் பெண்களுக்கு நடுவில் திருமணத்தைப் பற்றிப் பேசினால், உண்டாகிற நாணம் இருக்கிறதே அதற்கு ஈடும் இல்லை, இணையும் இல்லை.
மேலும் சிறிது நேரம் வானவன்மாதேவிக்கு ஆறுதலை உண்டாக்குகிற விதத்தில் பேசிக் கொண்டிருந்து விட்டுப் பவழக்கனிவாயரும், அதங்கோட்டாசிரியரும் உறங்குவதற்குச் சென்றனர். போகும்போது பகவதியையும், விலாசினியையும் தனியே அழைத்து, "பெண்களே! இன்று மகாராணியின் மனநிலை சரியில்லை. கசப்பும், விரக்தியும் அடைந்த நிலையில் புண்பட்டு நொந்து போயிருக்கிறார். எந்த விநாடியில் அவருக்கு என்ன தோன்றுமென்று ஒன்றும் உறுதியாகச் சொல்வதற்கில்லை. நீங்கள் இருவரும் இங்கேயே மகாராணியோடு படுத்துக் கொள்ளுங்கள். ஆடவர்களாகிய நாங்கள் இவ்வளவு நாழிகைக்கு மேலும் இங்கே அந்தப்புரப் பகுதியில் நின்று பேசிக் கொண்டிருப்பது முறையல்ல. கீழே மாளிகையில் போய்ப் படுத்துக் கொள்கிறோம். நீங்கள் இருவரும் மகாராணியைக் கவனித்துக் கொள்ளுங்கள்" என்று கூறி எச்சரித்து விட்டுச் சென்றனர். இரவு நீண்ட நேரம் ஆகிவிட்டது. அந்தப்புரத்துப் பணிப்பெண்கள் தீபங்களை அணைத்துக் கதவுகளை ஒவ்வொன்றாக அடைத்துக் கொண்டிருந்தனர்.
சயனக் கிருகங்களின் தூப கலசங்களிலிருந்து கிளம்பிய அகிற்புகையின் நறுமணம் காற்றோடு இழைந்து எங்கும் பரவிக் கொண்டிருந்தது.
வானவன்மாதேவியின் பள்ளியறையில் விளக்கு ஒன்று மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. அங்கிருந்த மூன்று மஞ்சங்களில் இரண்டில் கொடிகள் துவண்டு நெளிந்து கிடப்பது போல் பகவதியும், விலாசினியும் படுத்துக் கொண்டிருந்தனர். நடுவாக இருந்த மூன்றாவது மஞ்சத்தில் வானவன்மாதேவி உட்கார்ந்தபடியே ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். "தேவீ! இப்படியே விடிகின்றவரை விழித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கப் போகிறீர்களா? களைப்புத்தீர உறங்கினால் என்ன?" என்றாள் பகவதி.
"தூக்கம் வரவில்லையே, குழந்தாய்! நான் என்ன செய்வேன்? நீ தூங்கு!" என்று பதில் கூறினார் மகாராணி. விலாசினியோ படுத்த சில வினாடிகளுக்குள்ளேயே ஆழ்ந்த உறக்கத்தில் ஈடுபட்டு விட்டாள்.
பகவதி அதற்கு மேல் மகாராணியை வற்புறுத்தும் உரிமை தனக்கு இல்லையென்று கண்களை மூடிக்கொண்டு தலையணையில் சாய்ந்தாள். நன்றாக உறங்கவுமில்லை. நன்றாக விழித்துக் கொண்டிருக்கவுமில்லை. இரண்டுக்கும் நடுப்பட்ட ஒரு நிலையில் அவள் படுக்கையில் கிடந்தாள்.
உறக்கத்துக்கும் விழிப்புக்கும் நடுவே ஒருவகைச் சாதாரண ஓய்வில் கிடந்த பகவதி சிறிது நேரத்துக்குப் பின் தற்செயலாகக் கண் விழித்தாள். விழித்துக் கொண்டவள் மகாராணியைக் காணவில்லை. மஞ்சத்தின் மேல் விரித்திருந்த விரிப்புகள், திண்டுகள், அணைகள் எல்லாம் அப்படியே இருந்தன. வாயிற் கதவுப் பக்கம் திரும்பிப் பார்த்தாள்! அது இலேசாகத் திறந்திருந்தது. அதங்கோட்டாசிரியரும், பவழக்கனிவாயரும் எச்சரித்து விட்டுப் போனது அவளுடைய நினைவில் மின்னலைப் போல் தோன்றியது. உடனே எழுந்திருந்து கதவைத் திறந்திருந்த வழியாகப் பகவதியும் கீழே இறங்கினாள். அந்த அறையின் வெளியே அந்தப்புரத்திலிருந்து பிற இடங்களுக்குச் செல்லும் இரண்டு மூன்று வழிகள் பிரிந்தன. படிக்கட்டில் இறங்கிக் கீழே வந்த பகவதி ஒரு கணம் வழிகள் பிரியும் இடத்தில் தயங்கி நின்றாள். அந்த அர்த்த ராத்திரி வேளையில் என்ன நோக்கத்தோடு, எந்த வழியில் மகாராணி சென்றிருக்கக் கூடும் என்று அவளால் ஊகிக்க முடியவில்லை. 'திகைத்து நின்று கொண்டிருப்பதைக் காட்டிலும் மனத்துக்குத் தோன்றிய ஏதாவது ஒரு வழியில் போய்ப் பார்க்கலாமே! நம்முடைய நல்லகாலமாக மகாராணியாரும் அதே வழியாகச் சென்றிருக்கலாமல்லவா?' என்று நினைத்தவளாய் நேரே செல்லும் வழியில் நடந்தாள். தீபங்களெல்லாம் அணைக்கப்பட்டிருந்ததனால் இருள் சூழ்ந்திருந்தது. வழி வளைந்து வளைந்து கீழ் நோக்கி இறங்கியது. அந்த இருளில் அம்மாதிரிப் பழக்கமில்லாத பாதையில் பகவதியைத் தவிர வேறு எந்தப் பெண்ணாலும் அவ்வளவு துணிவாக நடந்து சென்றிருக்க முடியாது. அதை ஒரு சாகஸம் என்று தான் சொல்ல வேண்டும்.
கடைசியாக, அவளைக் கோட்டைக்குள் ஒரு திறந்த வெளியான இடத்தில் கொண்டு போய் விட்டது. அந்த வழி, 'கம்'மென்று பவழ மல்லிகைப் பூக்களின் மணம் கமழ்ந்தது.
அது அரண்மனைப் பெண்கள் நீராடும் பகுதி. சிறுசிறு குளங்கள். அவற்றில் நிலா ஒளியையும் வானையும் பிரதிபலிக்கும் தெளிவான நீர். குளங்களின் நடுவே நீராழி மண்டபங்கள். சுற்றிலும் அடர்ந்த பவழ மல்லிகை மரங்கள். நிலாத் திகழும் வானவொளியின் நட்சத்திரங்களெல்லாம் அந்த மரக் கிளையில் வந்து அப்பிக் கொண்டது போல் வெண்ணிற மலர்கள் மலர்ந்திருந்தன. 'கீ' என்ற ஓசை நிறைந்திருந்தது. அதோடு யாரோ மெல்லிய குரலில் விசும்பி அழுகிற ஒலி! - பகவதி நாலா பக்கமும் மிரண்டு பார்த்துக் கொண்டே அந்த ஒலி வருகிற இடத்தைக் கண்டுபிடிப்பதற்காகச் சுற்றிச் சுற்றி வந்தாள்; பவழ மல்லிகை மரங்களையும் நீராழி மண்டபத்தையும் கடந்து தென் கோடியில் வந்து பார்த்தாள். கோட்டைச் சுவரை ஒட்டினாற் போலிருந்த ஒரு பாழுங் கிணற்றின் விளிம்பில் மகாராணி விரித்த கூந்தலும் அழுத கண்களுமாக அமர்ந்து கொண்டிருந்தார். ஓசைப்படாமல் பின்புறமாக மெதுவாக நடந்து போய் மகாராணி வானவன்மாதேவியின் கைகளைப் பற்றிக் கொண்டாள் பகவதி.
---------
1.14. முரட்டுக் கரம்
அன்றொரு நாள் இரவு முன்சிறை அறக்கோட்டத்தில் வந்து அண்டராதித்தனுடன் வம்பு செய்த பின் அவன் மனைவியால் அவமானப்படுத்தப்பட்டுத் திரும்பியவர்கள் இன்னாரென்பதை நேயர்கள் இதற்குள் ஒருவாறு தெரிந்து கொண்டிருப்பார்கள்.
நாகைப்பட்டினத்திலிருந்து புறப்பட்டு விழிஞத்தில் வந்திறங்கிய ஒற்றர்களே அந்த ஆட்கள். முன்சிறை அறக்கோட்டத்தில் தங்குவதற்கு இடம் கிடைக்காமல் திண்டாடிய அந்த இரவுக்குப் பின் அவர்கள் தென்பாண்டி நாட்டில் இரண்டொரு நாட்களை ஒளிவு மறைவாகக் கழித்து விட்டார்கள். நாஞ்சில் நாட்டு அரசாட்சி நிலைகளைப் பற்றியும் மகாராணி வானவன் மாதேவியைப் பற்றியும் எத்தனையோ செய்திகளை அறிந்து கொண்டார்கள். தாங்கள் அங்கே வந்த மறுநாளைக்கு மறுநாள் மகாராணி பௌர்ணமி தினத்தன்று கன்னியாகுமரியில் தரிசனத்துக்காக வரப்போகும் செய்தியும் அவர்களுக்குத் தெரிந்தது.
தங்களின் எந்தக் காரியத்தை நிறைவேற்றுவதற்காக வந்தார்களோ அதை நிறைவேற்றுவதற்கு மகாராணியின் கன்னியாகுமரி விஜயத்தை பயன்படுத்திக் கொள்வதென்று தீர்மானித்தனர். அங்கே இங்கே தங்குவதற்கு இடம் தேடாமல் நேரே கன்னியாகுமரிக்கே போய்ச் சேர்ந்துவிட்டனர். அங்கேயும் தங்குவதற்குச் சரியான இடம் கிடைக்கவில்லை. கடற்கரையோரத்துச் சோலைகளிலும், தோட்டங்களிலும் தங்குவதை மட்டும் யாரும் தடுக்க முன் வரவில்லை.
மகாராணி விஜயம் செய்வதற்கு முன் தினமே கன்னியாகுமரிக்குச் சென்று விட்டதால் சில முன்னேற்பாடுகளைச் செய்து கொள்வதற்கு அவர்களுக்கு வசதியாக இருந்தது. எங்கே ஒளிந்திருப்பது? தங்கள் திட்டத்தை எப்படி நிறைவேற்றுவது? எப்படித் தப்புவது? என்பது போன்ற முன்னேற்பாடுகளைப் பக்குவமாகச் செய்து வைத்துக் கொண்டு விட்டனர், வடதிசைப் பேரரசரின் அந்த ஒற்றர்கள். இதன் விளைவாக ஏற்பட்ட நிகழ்ச்சிகளை கடந்த அத்தியாயங்களில் தெரிந்து கொண்டு விட்டோம். அந்த ஒற்றர்கள் எண்ணியபடியோ, திட்டமிட்டபடியோ எதுவும் நடக்கவில்லை. கன்னியாகுமரியிலிருந்து தப்பி வருவது பிரம்மப் பிரயத்தனமாகி விட்டது அவர்களுக்கு. அன்றைய தினம் இரண்டு பெரிய அதிர்ச்சிகளுக்கு ஆளாகிவிட்டனர் அவர்கள். ஒன்று அவர்கள் மூவரும் திட்டமிட்டு எதிர்பார்த்திருந்தபடி குமரிக் கோவில் பிரகாரத்தில் வானவன் மாதேவியின் மேல் வேலை எறிந்து கொல்ல முடியாமற் போனது; மற்றொன்று இடையாற்று மங்கலம் நம்பியிடம் கொடுக்கப்பட வேண்டிய திருமுகவோலை, அந்த ஓலையில் குறிப்பிட்டிருந்த நிகழ்ச்சிகளைச் செய்து முடிப்பதற்கு முன்பே தளபதி வல்லாளதேவனின் கையில் சிக்கியது.
இந்த இரண்டு எதிர்பாராத அதிர்ச்சிகளிலிருந்தும் விடுபட்டுத் தாங்கள் அனுப்பப்பட்ட நோக்கத்தை நிறைவேற்றித் திரும்பவில்லையானால் ஆத்திரக்காரனான கொடும்பாளூர் மன்னன் தங்கள் தலையை வாங்கி விடுவான் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். என்ன செய்வது என்று திகைத்தனர், அந்த மூன்று ஒற்றர்களும்.
"முத்தரையா! ஊருக்குத் திரும்பின பின் நாம் உயிரோடு இருப்பதும் இல்லாததும் சொல்லிவிட்ட காரியத்தை முடித்துக் கொண்டு போகிறோமா, இல்லையா என்பதைப் பொறுத்திருக்கிறது. ஆகவே இன்னும் காலம் கடந்து விடவில்லை. இன்று மீதமிருக்கும் இந்த இராப்போது முடிந்து, நாளைப் பொழுது விடிவதற்குள் நூறு கொலைகளைச் செய்யலாம். நூறு ஓலைகளை எழுதலாம்" - என்றான் செம்பியன் என்னும் ஒற்றன்.
"எனக்கு அப்போதே தெரியும். புன்னை மரத்துத் தோட்டத்தில் நாம் ஆடைகளைக் களைந்து வைத்துவிட்டுக் கடலில் நீராடிக் கொண்டிருந்த போது அந்தக் குட்டைத் தடியன் வந்து பார்த்தானே; அப்போதே ஏதோ கோளாறு நடக்கப் போகிறதென்று என்னுடைய மனத்தில் குறளி சொல்லிவிட்டது" என்றான் முத்தரையன்.
"நடந்ததைப் பேசி என்ன ஆகப் போகிறது? அந்தக் குடுமிக்காரத் தடியனை மறுபடியும் எங்காவது காண நேர்ந்தால் உடனே வெட்டிப் போடுவோம். இப்போது நடக்க வேண்டியதைக் காண்போம். செம்பியா! உன்னுடைய யோசனையைச் சொல். ஏதோ கூறினாயே?" என்றான் இரும்பொறை.
"நான் சொல்கிற வழியைக் கேட்டால் தான் கொடும்பாளூர் மன்னரின் கோபத்துக்கு ஆளாகிச் சாகாமல் தப்ப முடியும். முதலில் ஒரு போலி ஓலை தயார் செய்ய வேண்டும். தளபதி நம்மிடமிருந்து பறித்துக் கொண்ட ஓலையில் என்ன எழுதியிருந்ததோ, அதை அப்படியே இந்தப் புது ஓலையில் எழுதி விடுவோம். ஓலையில் வடதிசை மூவரசரின் அடையாளச் சின்னங்களையும் எழுத்தாணியால் வரைந்து கொள்ளலாம். அந்த ஓலையைப் பத்திரமாக வைத்துக் கொண்டு புறத்தாய நாட்டுக் கோட்டைக்குப் போவோம். எப்படி நம்மால் கோட்டைக்குள் நுழைய முடியும்? எந்த விதத்தில் மகாராணியை நெருங்கிக் கொலை செய்ய முடியும் என்பதையெல்லாம் இப்போது நான் விவரித்துச் சொல்ல முடியாது. இந்த நள்ளிரவில் வேற்று நாட்டு ஒற்றர்களான நாம் கோட்டைக்குள் நுழைவதும், குறிக்கோளை முடித்துக் கொள்வதும் நம்முடைய சாமர்த்தியத்தைப் பொறுத்திருக்கின்றன. இது நம்முடைய கடைசி விநாடி முயற்சிகள்" - என்று செம்பியன் ஆணித்தரமாகக் கூறிய போது மற்ற இரண்டு பேர்களும் மறுக்க முடியவில்லை.
"முதலில் இப்போது ஓலைக்கும் எழுத்தாணிக்கும் எங்கே போவது?"
"ஆ! போவதற்கு ஓர் இடம் இருக்கிறது. எனக்கு இப்போதுதான் நினைவு வருகிறது. முன்சிறை அறக்கோட்டத்துக்குப் போனால் இப்போது ஓலையும் எழுத்தாணியும் தயாரித்து விடலாம். அந்தச் சத்திரத்து மணியக்காரன் கணக்கெழுதுவதற்காக ஓலை எழுத்தாணி நிச்சயம் வைத்திருப்பான். அதோடு அந்தத் தடியனும், அவன் மனைவியான அந்தத் துடுக்குக்காரியும் அன்று நம்மை அவமானப்படுத்தினதற்குச் சரியானபடி பழிவாங்கி விடலாம்" என்று இரும்பொறை யோசனை கூறிய போது, "பாராட்டுகிறேன் இரும்பொறை! உன்னுடைய மண்டைக்குள்ளே இவ்வளவு ஞாபகசக்தி ஒளிந்து கொண்டிருக்கிறதென்பது எங்களுக்கு இதுவரையில் தெரியாமல் போய் விட்டதே!" என்று அவன் முதுகில் தட்டிக் கொடுத்தனர் செம்பியனும் முத்தரையனும்.
இந்தத் தீர்மானத்துக்குப் பின் அவர்கள் மூவரும் வேகமாக முன்சிறை அறக்கோட்டத்துக்குப் புறப்பட்டுச் சென்றனர். அப்படிச் செல்லும் போது எங்காவது, யாரிடமாவது அகப்பட்டுக் கொண்டு விட நேரிடுமோ என்ற பயத்தினால் ஊர்களுக்கும், நகரங்களுக்கும் ஊடே செல்லும் நாட்டுப் புறத்துச் சாலைகளிலோ, வழிகளிலோ செல்லாமல் காட்டுப் பாங்கான கிளை வழிகளிலே மறைந்து சென்றனர்.
இந்த முவரும் இப்படி முன்சிறை அறக்கோட்டத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த நேரத்தில் தான் தளபதி வல்லாளதேவன் கன்னியாகுமரியில் தன் வீரர்களோடு இவர்களைத் தேடிக் கொண்டிருந்தான். நாராயணன் சேந்தன் சுசீந்திரம் தாணுமாலய விண்ணகரத்தில் மகாமண்டலேசுவரரைச் சந்தித்துக் கன்னியாகுமரியில் நடந்த நிகழ்ச்சிகளைக் கூறுவதற்காகக் குதிரைப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். சுசீந்திரம் தாணுமாலயம் பெருமாள் கோவிலில் தம்முடைய செல்வக் குமாரி குழல்மொழியுடனும் விழிஞத்திலிருந்து அழைத்துக் கொண்டு வந்த இளந்துறவியுடனும் நாராயணன் சேந்தனையும் அவன் கொண்டு வரப்போகும் செய்திகளையும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார் மகாமண்டலேசுவரர். மகாராணி, அதங்கோட்டாசிரியர் முதலியவர்கள் குமரிக் கடற்கரையிலிருந்து புறத்தாய நாட்டுக் கோட்டைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
முன்சிறை அறக்கோட்டத்தில் முதல் யாமம் முடிவதற்குள்ளேயே அன்று அசாதாரணமான அமைதி நிலவியது. 'பௌர்ணமி' தினமாகையினால் சத்திரத்தில் வந்து தங்கியிருந்த யாத்திரீகர்களில் பெரும்பாலோர் கன்னியாகுமரிக்கும் சுசீந்திரத்துக்குமாகத் தரிசனத்துக்குச் சென்று விட்டனர். யாத்திரை வந்தவர்கள் பௌர்ணமி என்பதற்காக மட்டும் அன்று கன்னியாகுமரி செல்லவில்லை. அன்றைக்குச் சென்றால் உலகமாதேவியாகிய கன்னியாகுமரி அம்மனின் தரிசனத்தோடு பாண்டிமாதேவியாகிய மகாராணியின் தரிசனமும் அங்கேயே கிடைக்கும் என்ற செய்தியும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. மகாராணியைப் பார்க்க வேண்டுமென்ற ஆவலும் கட்டுக் கடங்காமல் இருந்ததால் அவர்கள் அண்டராதித்த வைணவனை வழிகாட்டியாகத் துணைக்கு அழைத்துக் கொண்டு கிளம்பினர்.
சத்திரத்தைப் பார்த்துக் கொள்வதற்கு வேறு யாராவது ஆள் இருந்தால் கோதை நாச்சியாரிடம் சொல்லி வற்புறுத்தி அவளையும் தங்களோடு அழைத்துக் கொண்டு போயிருப்பான் அண்டராதித்தன். ஆனால் அதற்கு வழியில்லாமல் இருந்தது நிலைமை. யாத்ரீகர்களும், தானும் தரிசனத்தை முடித்துக் கொண்டு திரும்பி வரும்போது சாப்பிடுவதற்கு உணவு தயாரித்து வைத்திருக்க வேண்டும். கோதையோ, தானோ இருந்தால் தான் அதை நிறைவேற்ற முடியும்.
"கோதை! இந்த யாத்ரீகர்களையெல்லாம் அழைத்துக் கொண்டு நீ கன்னியாகுமரிக்குப் போய்விட்டு வா. நான் இங்கே இருந்து ஆக வேண்டிய காரியங்களைக் கவனித்துக் கொள்கிறேன்" என்று அவன் அவளிடம் சொல்லிப் பார்த்தான். ஆனால் அவள் அதற்கு இணங்கவில்லை. அதற்கு மேல் இன்னும் வற்புறுத்தியிருந்தால் இணங்கியிருப்பாளோ என்னவோ? அவன் வற்புறுத்தவில்லை. தானே யாத்ரீகர்களை அழைத்துக் கொண்டு புறப்பட்டு விட்டான்.
"கோதை! யாருக்கென்ன வந்ததென்று நீ பாட்டுக்குச் சத்திரத்துக் கதவை அடைத்துக் கொண்டு தூங்கிவிடாதே. நாங்கள் இரண்டாவது யாமம் முடிவதற்குள் எப்படியும் திரும்பி வந்துவிடுவோம். வயிற்றைக் காயப்போட்டு விடாதே" என்று போகும் போது சிரித்துக் கொண்டு சொல்லிவிட்டுப் போனான் அண்டராதித்தன்.
கோதையின் கணவனும், சத்திரத்தில் தங்கியிருந்தவர்களும் மாலையிலேயே புறப்பட்டுச் சென்றுவிட்டார்கள். ஒரே சமயத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்க முடியும் அளவுக்குப் பெரும் பரப்புள்ள அந்தச் சத்திரத்தில் இப்போது மூன்றே மூன்று பெண்கள் மட்டும் தனித்திருந்தனர். சத்திரத்து மடைப்பள்ளிகளில் சமையல் வேலை செய்யும் இரண்டு பணிப்பெண்கள் தவிரக் கோதை நாச்சியார் ஒருத்தி ஆக மொத்தம் மூன்று பேர்கள் தான். பணிப்பெண்கள் இரவுச் சாப்பாட்டுக்காக அடுப்பு மூட்டிச் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தனர். கோதை நாச்சியார் சமையலுக்கு வேண்டிய படித்தரப் பொருள்களை உக்கிராணத்துக் கட்டளை அறையிலிருந்து எடுத்துக் கொடுத்து விட்டு மேற்பார்த்துக் கொண்டிருந்தாள். சமையல் வேலையில் ஈடுபட்டிருந்த பணிப்பெண்கள் இரண்டு பேரும் கோதையின் நகைச்சுவையில் ஈடுபட்டு அடிக்கடி குலுங்கக் குலுங்கச் சிரித்தார்கள். முன்சிறை அறக்கோட்டத்தில் தங்குபவர்களுக்குச் சுவையான வசதிகள் இரண்டு. ஒன்று: அங்கே வருவோரை உபசரிக்க விருந்தோம்புகிற முறை. இரண்டாவது: அந்த அறக்கோட்டத்தை நிர்வாகம் செய்யும் அண்டராதித்தன் - கோதை - இந்தத் தம்பதியின் நகைச்சுவை நிறைந்த சரளமான வேடிக்கைப் பேச்சு.
அதுவும் கோதை பேசத் தொடங்கிவிட்டால் ஒரே கொண்டாட்டம் தான். மடைப்பள்ளியில் வேலை பார்க்கும் பணிப் பெண்கள் தங்கள் கைக் காரியங்களையெல்லாம் மறந்து கேட்டுக் கொண்டே இருப்பார்கள். ஒரு முறை கோதையின் நகைச்சுவைப் பேச்சு வெள்ளத்தில் மூழ்கியிருந்த பணிப்பெண்கள் ஒரு பெரிய விபரீதமான காரியத்தையே செய்து விட்டார்கள். அதாவது சர்க்கரைப் பொங்கலில் போடவேண்டிய வெல்லத்தைப் புளிக் குழம்பிலும் புளிக்குழம்பில் போட வேண்டிய உப்பு, காரம் முதலியவற்றைச் சர்க்கரைப் பொங்கலிலும் போட்டுச் சமையல் செய்து வைத்து விட்டார்கள். அதன் விளைவாக அன்றைக்குச் சத்திரத்தில் சாப்பிட உட்கார்ந்த அத்தனை பேரும் அவதிப்பட்டனர். "இந்தா, கோதை! இனிமேல் மடைப்பள்ளியில் வேலை நடந்து கொண்டிருக்கும் போது பணிப்பெண்களிடம் போய் பேச்சுக் கொடுத்தாயோ தெரியும் சேதி!" என்று அன்றைக்கு அவளைக் கடுமையாகவும் வேடிக்கையாகவும் எச்சரித்து வைத்தான் அண்டராதித்த வைணவன்.
இதனால் பணிப்பெண்கள் கோதையோடு பேசிக் கொண்டே மடைப்பள்ளி காரியங்களைக் கவனிக்க நேர்ந்தால் உஷாராக வேலை செய்வது வழக்கம். கோதை ஏதோ பேச ஆரம்பித்ததும், "அம்மணீ! தயவு செய்து இப்போது நிறுத்திக் கொள்ளுங்கள். நாங்கள் மடைப்பள்ளி வேலைகளை முடித்துவிட்டு வருகிறவரை பொறுத்துக் கொள்ளுங்கள்" என்றார்கள்.
"சரிதான்! நீங்கள் வேலையைக் கவனியுங்கள். நான் போய்ச் சத்திரத்தின் அந்தி விளக்குகளை ஏற்றுகிறேன். இருட்டுகிற சமயமாகிவிட்டது" என்று கூறிவிட்டு மடைப்பள்ளியிலிருந்து வெளியில் வந்தாள் கோதை நாச்சியார்.
தீபங்களை ஏற்றிய பின் வாசற்புறத்துக்கு அருகில் உள் பக்கமாக இருந்த சத்திரத்துக் குறட்டில் உட்கார்ந்து ஓலைச் சுவடியை எடுத்து அன்றையப் படித்தரக் கணக்கு விவரங்களை அதில் எழுதிடலானாள். அவளுடைய கணவன் அன்றாடம் செய்ய வேண்டிய வழக்கமான வேலை அது. அன்று அவன் வெளியே சென்றிருந்ததால், தான் கொடுத்திருந்த படித்தரத்துக்குத் தானே கணக்கு எழுதினாள்.
அடிக்கடி எழுதிப் பழக்கப்படாத அவள் கை எழுத்தாணியைப் பிடித்து ஒவ்வொரு எழுத்தாக ஓலையில் எழுதிக் கொண்டிருந்தது. ஏதோ கேட்பதற்காக அப்போது அங்கு வந்த மடைப்பள்ளிப் பணிப்பெண், "என்ன அம்மா! ஓலையில் ஏதாவது சித்திரம் வரைகிறீர்களா? இவ்வளவு மெதுவாக எழுதிக் கொண்டிருக்கிறீர்களே?" என்று விளையாட்டாகச் சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டுப் போனாள்.
"சரி! சரி! போய்க் காரியத்தைச் செய். நான் எழுதி விட்டு வருகிறேன்" என்று அவளுக்குப் பதில் சொல்லிவிட்டு மேலும் குனிந்து கொண்டே எழுதலானாள் கோதை.
பக்கத்தில் காலடி ஓசை கேட்டது. பணிப்பெண்கள் தாம் ஏதாவது கேட்டுப் போக வந்திருப்பார்கள் என்று தலை நிமிராமல் எழுதிக் கொண்டேயிருந்தாள் அவள்.
குபீரென்று விளக்கை நோக்கி வாயால் ஊதும் காற்றோசை. விளக்கு உடனே அணைந்தது. "சீ! இதென்னடி உங்களுக்கு இந்தத் திமிர்? எது விளையாடுகிற நேரம் என்று உங்களுக்குத் தெரியாதா?" என்று சொல்லிக் கொண்டே தலை நிமிர்ந்த கோதை எதிரே தனக்கு முன் இருட்டில் நின்றவர்களைப் பார்த்து 'வீல்' என்று அலறுவதற்கு வாயைத் திறந்தாள். ஆனால் அவளுடைய வாயிலிருந்து அலறல் வெளி வருவதற்குள் வலிமை வாய்ந்த முரட்டுக் கரம் ஒன்று அவள் வாயில் துணியைத் திணித்தது. எவ்வளவோ முயன்றும் ஒரு சிறு முனகல் கூட அவள் வாயிலிருந்து வெளிப்பட இயலாமற் போய்விட்டது. இன்னொரு முரட்டுக் கை அவள் கையிலிருந்து ஓலையையும் எழுத்தாணியையும் பறித்துக் கொண்டது. கோதை கை கால்களை உதைத்துக் கொண்டு திமிறினாள். அவள் முகத்துக்கு மிக அருகில் இருளில் ஒரு மின்னல் மின்னியது. கோதை மூச்சுத் திணறிப் பிதுங்கும் விழிகளால் பார்த்தாள். பார்வை கூசியது. அது மின்னலல்ல. ஒரு கத்தி! மறு விநாடி அந்தப் பெண் மூர்ச்சையாகித் துவண்டு விழுந்தாள்.
---------
1.15. தளபதிக்குப் புரியாதது!
நாராயணன் சேந்தனும், மகாமண்டலேசுவரரும் விளக்கோடு தான் நின்று கொண்டிருந்த பக்கமாகத் திரும்பிய போது, 'ஐயோ இப்போது இங்கே இவர்கள் பார்ப்பதைக் காட்டிலும் இந்தச் சுரங்கத்துக் கற்பாறைகள் மேலிருந்து மொத்தமாக இடிந்து விழுந்து என்னை இப்படியே அமுக்கி விட்டாலும் பரவாயில்லையே! அகப்பட்டுக் கொண்டால் மகாமண்டலேசுவரர் என்னைப் பற்றி எவ்வளவு கேவலமாக நினைப்பார்? நான் தான் அவர் முகத்தில் எப்படி விழிப்பேன்? எதற்காக எந்த விதத்தில் இந்தச் சுரங்கப் பாதைக்குள் இறங்க நேர்ந்ததென்று சமாதானம் சொல்லிச் சமாளிப்பேன்? நான் என்ன சொன்னால்தான் என்ன? நம்பவா போகிறார்கள்?' என்று இப்படி எத்தனை எத்தனை எண்ணங்கள் தளபதி வல்லாளதேவனின் மனத்தில் தோன்றின தெரியுமா?
இவ்வளவு தூரத்துக்கு அவர்கள் நெருங்கி வந்து விட்ட பின் தப்ப முடியுமென்ற நம்பிக்கையே செத்துவிட்டது அவன் மனத்தில். அந்த நிலையிலும் மனிதனுக்கு இயற்கையாக ஏற்படுகின்ற தற்காப்பு உணர்ச்சியையும், பயத்தின் தூண்டுதலும் தருகின்ற சுயபலமும் அவனைக் கைவிட்டு விடவில்லை.
தன்னையறியாமலே மெல்ல மெல்லப் பின்னுக்கு நகர்ந்து கொண்டிருந்தான் அவன். பத்துப் பன்னிரண்டு பாகதூரம் பின்னுக்கு நகர்ந்த பின் ஒரு பாறை இடுக்கில் வல்லாளதேவன் ஒட்டிப் பதுங்கிக் கொண்டான்.
சுரங்கப் பாதை திருப்பத்துக்கு வந்ததுமே நாராயணன் சேந்தனும் மகாமண்டலேசுவரரும் நின்றுவிட்டனர். "இந்த இடத்தில்தான் யாரோ நிற்பது போலத் தெரிந்தது. இப்போது பார்த்தால் ஒருவரையும் காணோம். ஒரு வேளை என் கண்களுக்கு மட்டுமே தெரிந்த வெறும் பிரமையோ?" என்றார் இடையாற்றுமங்கலம் நம்பி.
"சுவாமி! அப்படி நம்மைத் தவிர வேற்றவர் எவரும் இந்த மாளிகையில் நுழைந்திருக்க வழியில்லை!" என்று நாராயணன் சேந்தன் அவருக்குப் பதில் கூறினான்.
"எனக்கொரு சந்தேகம் சேந்தா! தளபதி வல்லாளதேவனை விருந்தினர் மாளிகைக்குக் கொண்டு போய் தங்கச் செய்தாயே? அவன் நீ அங்கிருக்கும் போதே படுத்து உறங்கத் தொடங்கி விட்டானோ? அல்லது விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தானோ?" என்று இருந்தாற் போலிருந்து எதையோ நினைத்துக் கொண்டு கேட்பவர் போல் கேட்டார் இடையாற்றுமங்கலம் நம்பி.
"சுவாமி! தளபதி வல்லாளதேவனைப் பற்றி நீங்கள் சிறிதும் சந்தேகப்பட வேண்டாம். அவர் இந்நேரத்தில் விருந்து மாளிகையில் சுகமாகக் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருப்பார்!" என்று நாராயணன் சேந்தன் பதில் கூறிய போது மறைவாகப் பதுங்கியபடி அவர்களுக்குள் நிகழ்ந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த தளபதிக்குச் சிரிப்புப் பொங்கிக் கொண்டு வந்தது.
"சரி அப்படியானால் இங்கே தளபதி வந்து நிற்பது போல் என் கண்களுக்குத் தென்பட்ட தோற்றம் வெறும் பிரமையாகத்தான் இருக்கும். வீண் மனச் சந்தேகத்தால் ஏற்பட்ட நிழல் உருவம் தான். அப்படியே இங்கே ஆள் வந்திருந்தாலும் அதற்குள் நம் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு எங்கே ஓடியிருக்க முடியும்?" என்று கூறிவிட்டு அவனையும் அழைத்துக் கொண்டு திரும்பி நடந்தார் மகாமண்டலேசுவரரான இடையாற்றுமங்கலம் நம்பி.
அவர்கள் அந்தச் சுரங்கப் பாதையின் திருப்பத்திலிருந்து திரும்பி முன்பு நின்று கொண்டிருந்த அந்த இடத்துக்குப் போன போதுதான் அசுர வேகத்தில் அடித்துக் கொண்டிருந்த தளபதியின் நெஞ்சு சுபாவ நிலைக்கு வந்தது. 'இந்த நாராயணன் சேந்தன் நீடூழி வாழ்க! நான் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருப்பதாக இவன் மட்டும் சொல்லியிராவிட்டால் மகாமண்டலேசுவரரின் சந்தேகம் இலேசில் அவரை விட்டு நீங்கியிருக்காது. சுரங்கப் பாதை முழுவதும் விளக்கோடு தேடி என்னைக் கண்டிருப்பார்!' என்று தனக்குள் எண்ணிக் கொண்டான்.
இப்படி மகிழ்ந்து பெருமைப்பட்டுக் கொண்டிருக்கும் போதே இன்னொரு சந்தேகமும் பீதியும் அவன் மனத்தில் கிளம்பி அவனைப் பயமுறுத்தத் தொடங்கிவிட்டன. 'இடையாற்றுமங்கலம் நம்பி முதலியவர்கள் இந்தப் பாதாள மண்டபத்திலிருந்து மேலே ஏறிப் போவதற்கு நீ நின்று கொண்டிருக்கும் இதே வழியாகத்தானே திரும்பி வருவார்கள்! அப்போது என்ன செய்வாய்? அதற்குள் நீ வந்த வழியே திரும்பி மேலே போகாவிட்டால் நிச்சயமாக அவர்கள் உன்னைப் பார்த்துவிடப் போகிறார்கள். நீ அவர்களிடம் நிச்சயம் அகப்பட்டுக் கொள்ளத்தான் போகிறாய்' என்று தளபதி வல்லாளதேவனுடைய உள் மனம் அவனை எச்சரித்தது.
'அடாடா! இதுவரை இந்த யோசனையே நமக்கு ஏற்படவில்லையே. நான் நின்று கொண்டிருக்கும் இடத்துக்கு அவர்கள் திரும்பி வருவதற்குள் நான் மேலே ஏறிப் போய்விட வேண்டும்' என்று எண்ணியவனாய்ப் பதுங்கிக் கொண்டிருந்த இடத்திலிருந்து மெல்ல எழுந்தான் தளபதி வல்லாளதேவன்.
அவன் அப்படி எழுந்திருந்து திரும்புவதற்குத் தயாரான நிலையில், கடைசி முறையாக அவனுடைய விழிகள் பாதாள மண்டபத்துப் பக்கமாகத் திரும்பிப் பார்த்தன. அப்போது சிறிது நேரத்துக்கு முன் தன் மனம் எண்ணியதற்கு மாறாக அவர்கள் வேறோர் புதுப் பாதை வழியே மேலே ஏறிச் சென்று கொண்டிருப்பதை அவன் கண்டான்.
அவன் நின்று கொண்டிருந்த இடம் பாதாள மண்டபத்தின் கிழக்குக் கோடி மூலை. அந்த மூலையின் மேலே பளிங்கு மேடையில் திருமகள் சிலைக்கருகே கொண்டு போய் விடும் சுரங்கப்பாதை ஆரம்பமாகிறது.
மறுபக்கம் மேற்குக் கோடி மூலையில் அதே போல் ஒரு படிக்கட்டு சரிவாக மேலே நோக்கி ஏறிச் சென்றது. அந்தப் படியில் நாராயணன் சேந்தன் தீபத்தைப் பிடித்துக் கொண்டு முன்னால் செல்ல, அவனுக்குப் பின் இடையாற்று மங்கலம் நம்பி, குமார பாண்டியர் போல் அவன் கண்களுக்குப் பிரமையளித்த துறவி, அவருக்கு அருகில் சிரித்துப் பேசிக் கொண்டு செல்லும் குழல்மொழி - ஆக நால்வரும் மேலே ஏறிச் சென்று கொண்டிருப்பதைத் தளபதி வல்லாளதேவன் பார்த்தான்.
மேல் கோடியிலிருந்து உயரச் சொல்லும் அந்தப் படிக்கட்டு வழி எங்கே கொண்டு போய் விடுவதாயிருக்கும் என்று அவனால் தீர்மானிக்க முடியவில்லை. அந்த ஒரு கணத்தில் அவனுடைய மனம் முழுவதும் நிறைந்திருந்த ஆவல் ஒன்றே ஒன்றுதான். அங்குள்ள மர்மங்களையும் இரகசியங்களையும் ஒரேயடியாகப் புரிந்து கொண்டு விட வேண்டுமென்ற ஆசைதான் அது.
அவர்கள் கண்பார்வைக்கு மறைகின்ற வரையில் பொறுத்திருந்துவிட்டு அடக்க முடியாத ஆசையுடன் பாதாள மண்டபத்துக்குள் அடியெடுத்து வைத்தான் அவன். ஆனால் அவன் நினைத்தபடி அப்போது அங்கே எதையும் பார்க்க முடியவில்லை. அங்கே இருந்த ஒரே ஒரு தீபத்தையும் நாராயணன் சேந்தன் போகும் போது மேலே எடுத்துக் கொண்டு போய் விட்டதனால் மண்டபம், அதிலிருந்து கிழக்கேயும் மேற்கேயும் செல்லும் வழிகள் யாவும் பழையபடி பயங்கர அந்தகாரப் போர்வையில் மூழ்கிவிட்டிருந்தன.
'இந்த மகாமண்டலேசுவரர் மாளிகையில் வந்து என்னுடைய மூளையே குழம்பிப் போய்விட்டதா? முன் யோசனையோ, விளைவோ தெரியாமலே ஒவ்வொரு காரியத்தையும் செய்து கொண்டு போகிறேனே! பிள்ளையார் பிடிக்கப் போய்க் குரங்காக அல்லவா முடிந்து விட்டது? வெளியேறுவதற்கு வழிகூடத் தெரியாத மையிருட்டில் இந்த மண்டபத்துக்குள் நுழைந்து மாட்டிக் கொண்டேனே' என்ற மனத்தவிப்புடன் இருட்டைத் துழாவினான் வல்லாளதேவன்.
ஒருமுறை அங்கே குவிந்திருந்த கேடயங்களின் குவியலில் மோதி நிலை குலைந்து தடுமாறினான் அவன். அப்போது நூறு வெண்கலக் கடைகளில் ஆயிரமாயிரம் மத யானைகள் புகுந்து அமளி செய்தாற் போன்ற அவ்வளவு ஒலியும் எதிரொலியும் அங்கே உண்டாயின. தளபதி நடுங்கிப் போனான். இவ்வளவு பெரிய ஓசை மேலே இருப்பவர்களுக்குக் கேட்காமலா போகும்? அவன் மனக்கண்களுக்கு முன்னால் அவனாகவே ஒரு காட்சியைக் கற்பனை செய்து கொண்டு பார்த்தான்.
அந்த ஓசையைக் கேட்டு நாராயணன் சேந்தனும் எமகிங்கரர்களைப் போன்ற நாலைந்து வீரர்களும் கையில் உருவிய வாள்களோடு சுரங்கத்துக்குள் இறங்கி ஒடிவருகிறார்கள். அவர்களைப் பார்த்ததும், 'ஐயோ! நான் ஒரு குற்றமும் செய்யவில்லை. தெரியாமல் இதற்குள் இறங்கி வந்து விட்டேன். தயவு செய்து இது மகாமண்டலேசுவரருக்குத் தெரிய வேண்டாம்!' என்று நாராயணன் சேந்தனின் கைகளைப் பிடித்துக் கொண்டு அபயக் குரலில் கெஞ்சுகிறான் அவன்.
குட்டைக் கரும் பேய் போல் குரூரமாகத் தன் பெரிய கண்களை விழித்துப் பார்க்கும் நாராயணன் சேந்தன், 'அதெல்லாம் முடியாது! தளபதியாயிருந்தால் என்ன? யாராயிருந்தால் என்ன? உரிமைகளைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டவர்களை அவர்கள் யாராக இருந்தாலும் சரி, இங்கிருந்து உயிரோடு தப்ப விடுகிற வழக்கம் எங்கள் மகாமண்டலேசுவரரிடம் கிடையவே கிடையாது!' என்று நிர்த்தாட்சண்யமான கடுமை நிறைந்த குரலில் பதில் சொல்லுகிறான். இந்தக் கற்பனையை நினைக்கும் போதே பயமாக இருந்தது தளபதிக்கு.
அந்தப் பாதாள மண்டபத்தில் ஊசி நுனி இடமும் விடாமல் சுற்றிப் பார்த்து எல்லா மர்மங்களையும் தெரிந்து கொண்டு விட வேண்டுமென்று அவன் மனத்தில் பொங்கி எழுந்த ஆவல் இப்போது இருந்த இடம் தெரியாமல் வற்றிப் போய்விட்டது.
ஆனால் என்ன துரதிர்ஷ்டம்? அந்த வழியின் படிக்கட்டு இருந்த திசை புரியாமல் மண்டபத்துக்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தான் அவன். 'சரி! விடிகிற வரை இப்படியே சுற்றி அலைக்கழிந்து கொண்டிருக்க வேண்டியதுதான்! விடிந்தால் மட்டும் என்ன? இதற்குள் வெளிச்சமா வரப்போகிறது. இதற்குள் பகலானாலும், இரவானாலும் ஒரே மாதிரிதான் இருக்கப் போகிறது' - என்று எண்ணிப் பரிதவிப்பின் எல்லைக்கு அவன் மனம் வந்துவிட்ட போது அந்த வழி அவன் கால்களில் இடறியது. 'அப்பா! பிழைத்தோம்!' என்று எண்ணி மேலே ஏறிச் சென்றான்.
அந்தச் சுரங்கப் பாதையில் தவித்துத் தடுமாறி இறுதியாக வசந்த மண்டபத்துத் தோட்டத்திலுள்ள இடிபாடடைந்த கோவிலுக்குள் வந்து நின்றான். அந்த வழி அவனை அங்கேதான் கொண்டு வந்து விட்டது.
தனக்கு முன்னால் மகாமண்டலேசுவரர், சேந்தன் ஆகியோர் ஏறி வந்த வழி அதுதானா? அல்லது அவர்கள் ஏறிச் சென்ற வழி வேறொன்றா? என்று சந்தேகமாயிருந்தது அவனுக்கு. அங்கு நின்று சிந்தனையில் லயித்துத் தடுமாறியது அவன் உள்ளம்.
'எதற்காக இந்த ஏற்பாடுகள்? இவ்வளவு மறைவாக ஆயுதங்களையும் போர்க்கருவிகளையும் மகாமண்டலேசுவரர் சேகரித்து வைக்க வேண்டிய அவசியம் என்ன? தென்பாண்டி நாட்டுக் கூற்றத் தலைவர்களுக்கும், படைகளுக்கும் பொறுப்பாளியாக இருக்கும் எனக்கும், மகாராணியாரைப் போன்று நாட்டின் உரிமையைச் சொந்தமாகக் கொண்டிருப்பவருக்கும் தெரியாமல் இவ்வளவு மறைவான காரியங்களை எந்த ஒரு அந்தரங்க நோக்கத்துடன் இவர் செய்து கொண்டிருக்க முடியும்? இவைதான் போகட்டும்! இவற்றுக்காகவெல்லாம் கூட இந்த மனிதரை மகாராணி வானவன்மாதேவியாரின் பெருந்தன்மை மிகுந்த உள்ளம் மன்னித்து விடுவதற்கு தயங்காது.
'ஆனால் மகாராணியாரின் உயிருக்குயிரான புதல்வராகவும் எதிர்காலத்தில் முடிசூடி இந்த நாட்டை ஆளவேண்டியவராகவும் இருக்கும் குமார பாண்டியர் ஈழத் தீவுக்குள் ஓடிவிட்டதாகப் பொய்ச் செய்தியைப் பரவவிட்டு அதைத் தாமும் நம்புவது போல் நடித்துக் கொண்டிருக்கும் இந்த மனிதர் அதே இளவரசரைப் போல் தோன்றும் ஒரு துறவியை உலகத்துக்குத் தெரியாமல் தம்முடன் வைத்திருக்கும் மர்மம் என்ன? துறவி மகாமண்டலேசுவரருக்குக் கட்டுப்பட்டு விருப்பத்தோடு இங்கே தங்கியிருக்கிறாரா? அல்லது பயந்த சுபாவமுடையவராக இருந்து பயமுறுத்திச் சிறைப்படுத்தி வைத்திருப்பது போல் இவர் தம்முடைய வசந்த மண்டபத்திலும் பாதாள மண்டபத்திலும் அடைத்து வெளியேற விடாமல் தடுத்திருக்கிறாரோ? உண்மை எதுவோ?
'ஐயோ! வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பும் இயல்புடையவராகிய நம் மகாராணியார் இந்த இடையாற்றுமங்கலம் நம்பியின் மேல் எவ்வளவு நம்பிக்கையும், பயபக்தி விசுவாசமும் கொண்டிருக்கிறார்? இவரோ, உண்ட வீட்டுக்கே இரண்டகம் நினைக்கிறாரே! இவரையே நம்பியிருக்கும் மகாராணியாருக்கு இவர் செய்து கொண்டிருக்கிற துரோகம் எவ்வளவு பெரியது? இது தெரிந்தால் மகாராணியின் மனம் என்ன பாடுபடும்? எவ்வளவு வேதனை ஏற்படும்? என்னுடைய மனமே இந்தப் பாடுபடுகின்றதே?
'ஆகா பசுத்தோல் போர்த்துக் கொண்டு திரியும் வேங்கையைப் போல் இந்த மகாராணியாரைப் புறத்தாய நாட்டுக் கோட்டைக்கு அழைத்து வந்ததும், ஆதரவளித்ததும் இதற்குத்தானா? இது தெரியாமல் ஊர் உலகமெல்லாம் இது இவருடைய ராஜபக்தியைக் குறிப்பதாக எண்ணிப் பெருமை கொண்டாடுகிறதே? பேருக்கு மகாராணியைப் 'பாண்டிமாதேவி' என்று இங்கே கொண்டு வந்து உட்கார்த்தி விட்டு ஈழத் தீவுக்கு ஓடிவிட்டதாக நாட்டிலுள்ளவர்கள் எண்ணிக் கொள்ளும்படி செய்த குமாரபாண்டியனைப் பயமுறுத்தி வைத்துக் கொண்டிருக்கிறார். வடதிசைப் பேரரசர்களுக்கு உதவி செய்து இந்தத் தென்பாண்டி நாட்டையும் அவர்களிடம் பறித்துக் கொடுத்து விட்டு அவர்கள் தயவால் தாமே இந்நாட்டுக்கு மன்னராகி விடலாம் என்று இவர் கனவு காண்கிறாரோ?'
'இல்லையானால் இவர் செயல்களுக்கு என்னதான் பொருள்? இவர் தான் மர்மமாக இருக்கிறார் என்றால் இவரிடம் வருகிற ஆட்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். நம்மோடு படகில் வந்தானே, அந்தத் துறவி, அந்த மனிதன் வாய்திறந்து பேசிவிடாதபடி அவனைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தது கூட மகாமண்டலேசுவரரின் சாகஸம்தான். எனக்கு உண்டாகும் பிரமையின்படி அவன் குமாரபாண்டியனாக இல்லாத பட்சத்தில் அந்தத் துறவி யாராவது ஒற்றனோ, வடதிசை மூவரசரால் இவருக்கு தூதனுப்பப்பட்ட கபட சந்நியாசியோ? அவன் எவ்வளவு அழுத்தமான ஆள்! சிரித்துச் சிரித்துக் கழுத்தை அறுத்தானே ஒழிய ஒரு வார்த்தையாவது பேசினானா? உண்மையில் அவன் யாரோ முக்கியமான ஆளாகத்தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கன்னிகைப் பருவத்துப் பெண்ணான தம் புதல்வியிடம் அவ்வளவு நெருங்கிப் பழக அனுமதிப்பாரா! அடடே! அவன் கூட இந்த வசந்த மண்டபத்தில்தானே தங்கப் போவதாகச் சொன்னார்? இங்கே அவன் எப்பகுதியில் தங்கியிருக்கிறானோ தெரியவில்லையே? பார்க்கலாம்' என்று வெகுநேரமாக அந்தப் பாழுங் கோவில் வாசலில் நின்று இவ்வளவு சிந்தித்த தளபதி வல்லாளதேவன் வசந்த மண்டபத்தின் உட்பகுதி நோக்கி விரைந்து நடந்தான்.
அவன் மனத்தில் புதிய தெம்பும், எல்லா உண்மைகளையும் உடைத்துத் தெரிந்து கொண்டுவிடும் ஆத்திரமும் உண்டாகியிருந்தன. மலைச்சிகரம் போல் பெருமிதமாக யாரைப் பற்றி எண்ணி வந்தானோ அந்த இடையாற்றுமங்கலம் நம்பி இப்போது அவனுக்கு ஒரு குரூரமான சூழ்ச்சியோடு கூடிய சுயநலவாதியாகத் தோன்றினார். எத்தனையோ ஆண்டுகளாக எண்ணி வந்த மதிப்பான எண்ணத்தைச் சில நாழிகை நேரத்துச் சம்பவங்கள் மிகவும் எளிதாக மாற்றி வைத்து விட்டன.
சிற்பங்களும் ஓவியங்களும் செய்குன்றங்களும் பூங்கொடிப் பந்தல்களும் நிறைந்த அழகான வசந்த மண்டபம் இரவின் நிலா ஒளியில் மயன் சமைத்த வித்தியாதர உலகத்து மணி மண்டபம் போலக் காட்சியளித்தது. அதற்குள் நுழைந்த வல்லாளதேவன் நடு மையத்தில் இருந்த அலங்காரக் கிருகத்துக்குள்ளேயிருந்து தீப ஒளி தெரிவதைக் கவனித்தான். தூபப் புகையின் நறுமணமும் காற்றில் கலந்து வந்தது. அவன் மெதுவாக நடந்து சென்று அலங்காரக் கிருகத்தில் பலகணி வழியே உள்ளே எட்டிப் பார்த்தான்.
பொன் தகடுகள் பதிக்கப்பெற்று ஒளி நிறைந்த முத்துச் சர விதானமும் பட்டு மெத்தையுமாக விளங்கிய சப்ரமஞ்சக் கட்டில் ஒன்றில் அந்த இளம் துறவி நிம்மதியாகப் படுத்து உறங்கிக் கொண்டிருந்தான். தலைப்பக்கத்தில் வைரக்கற்கள் இழைத்த பிடியோடு கூடிய கவரி, ஆலவட்டம், தண்ணீர்க்குடம் முதலியன இருந்தன.
'சந்நியாசிக்கு இவ்வளவு சுகம் கேட்கிறதா?' என்று எண்ணிய தளபதி வல்லாளதேவனின் மனத்துக்கு அந்தத் துறவியைப் பற்றிப் பூரணமாக எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை.
----------
1.16. கூற்றத் தலைவர் கூட்டம்
இருட்டில் திடீரென்று பின்புறமிருந்து யாரோ தன் கையை இறுக்கிப் பிடித்ததைக் கண்டு மகாராணி பயந்து கூச்சலிட்டு விடுவதற்கிருந்தாள். "மகாராணி! நான் தான் பகவதி!" என்று பகவதி மெல்லக் கூறியதைக் கேட்ட பின்பே வானவன்மாதேவியின் அதிர்ச்சி நீங்கியது. தலைவிரி கோலமாக அழுது கொண்டு நீராழி மண்டபத்துக்கருகே இருந்த பாழுங்கிணற்று விளிம்பில் உட்கார்ந்து கொண்டிருந்த வானவன்மாதேவி சற்றும் எதிர்பாராத நிலையில் பகவதியை அங்கே கண்டதும் சிறிது நாணமடைந்து விட்டாள்.
"பெண்ணே! நீ எப்போது இங்கே வந்தாய்? நான் எழுந்திருந்து வந்தது உனக்கு எப்படித் தெரியும்? நீதான் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தாயே?" - மகாராணியின் குரலில் வெகு நேரம் அழுது கொண்டிருந்ததைக் காட்டும் கரகரப்பு இருந்தது.
"தேவி! இன்றறக்கு உங்கள் மனநிலை சரியில்லை. இப்படி ஏதாவது செய்ய முற்படுவீர்கள் என்று எதிர்பார்த்தே உறங்காமல் இருந்தேன். என்னையும் மீறிக் கண்கள் சிறிது அயர்ந்து விட்டேன். நான் விழித்துக் கொண்ட போது உங்களைப் படுக்கையில் காணவில்லை. எழுந்திருந்து ஓடி வந்தேன். இங்கே வந்து பார்த்தால் நீங்கள் பெரிய அநியாயத்தைச் செய்வதற்கு இருந்தீர்கள். இப்படிச் செய்யலாமா தாயே? இந்தத் தென்பாண்டி நாட்டு மக்கள் மாமன்னரான பராந்தகச் சக்கரவத்தியை இழந்து விட்டார்கள். குமார பாண்டியர் எங்கிருக்கிறார் என்று தெரியவில்லை. மக்களெல்லாம் கைகூப்பி வணங்கத்தக்க தென்பாண்டி மாதேவியாக கண்கண்ட தெய்வமாக விளங்கி வருகிறீர்கள். தாங்களும் எங்கள் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டுவிட்டு இந்த மாதிரிப் போக முயற்சி செய்தால் நாங்கள் யாரைத் தாயே கைகூப்பி வணங்கிப் பெருமைப்படுவோம்" என்று உருக்கமாகப் பேசினாள் பகவதி.
"குழந்தாய்! சாகத் துணிந்து விட்டவளுக்குச் சமுத்திரத்தின் ஆழத்தைப் பற்றி என்ன கவலை. மனத்தில் அளவற்ற வெறுப்பு ஏற்பட்டு விட்டால் எதைச் செய்யவும் துணிவு வந்து விடுகிறது. இதோ இன்னும் சில நொடிப் போது நீ இங்கே வராமலிருந்தால் என்னுடைய துன்ப உடல் கூடு நாளை இந்தப் பாழுங்கிணற்றில் மிதந்து கொண்டிருப்பதைப் பார்ப்பீர்கள். ஆனால் எவற்றை வேண்டுமானாலும் இவ்வுலகில் நம் விருப்பப்படியே செய்து கொண்டு போவதற்கு இடமில்லை. 'இறைவன் சித்தம்' என்று ஒன்றிருக்கிறது. சாவதோ, பிழைப்பதோ, அந்தச் சித்தப்படிதான் நடக்கிறது. இதோ என் சொந்த அநுபவத்தைத்தான் பாரேன்! இன்று மாலையிலிருந்து நான் படும் கவலைகளுக்கு ஒரு முடிவும் காண முடியாமல் இந்த முடிவுக்கு வந்தேன். நீ பின் தொடர்ந்து வந்து இதையும் நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் செய்துவிட்டாய்."
"எவ்வளவு புண்ணிய பலன் இது? நான் மட்டும் விழித்துக் கொண்டு தேடிப் பின் தொடர்ந்து வந்திருக்கவில்லையானால் நாளைக் காலை இந்த நாடு முழுவதுமே கதிகலங்கிப் போய் அலறிப் பதைபதைக்கும் படியான காட்சியையல்லவா காண நேர்ந்திருக்கும்?"
"உனக்குப் புண்ணியமாக இருக்கலாம். என்னைப் பொறுத்தவரையில் இது பாவக் கணக்குத்தான். தண்ணீர் தேங்கத் தேங்க அழுகி நாறுவதைப் போல் இந்த உலகத்தில் வாழும் நாட்கள் பெருகப் பெருகப் பாவச் சுமையை அதிகமாகக் கட்டிக் கொள்கிறோம்."
"தேவி! தாங்கள் அறியாத ஞான நூல்களையும் கருத்துக்களையும் நானா உங்களுக்குச் சொல்லப் போகிறேன்? 'இந்த உலகில் பிறருக்குப் பயன்படுமாறு வாழ்வதனால் பாவமோ துன்பமோ பெருகுமானால் அத்தகைய துன்பத்தை விலை கொடுத்தாவது வாங்கிக் கொள்ள வேண்டும்' என்று நம்முடைய திருவள்ளுவப் பெருமான் கூறியருளிய கருத்து தங்களுக்குத் தெரியாததல்லவே?"
"ஒப்புரவி னால்வரும் கேடுஎனின் அஃதொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து."
என்ற குறளின் கருத்தால் மகாராணியைச் சமாதானப்படுத்தி அழைத்துக் கொண்டு போக முயன்றாள் பகவதி! சிறிது நேரத்துத் தர்க்க விவாதங்களுக்குப் பின், "வா, குழந்தாய்! சரியானபடி மடக்கிவிட்டாய் நீ. போகலாம் வா" என்று பகவதியின் கையைப் பற்றி அழைத்துக் கொண்டு அந்தப்புரத்துக்குத் திரும்பினார் மகாராணி வானவன்மாதேவி.
அரண்மனை நிகழ்ச்சியை இவ்வளவில் நிறுத்திக் கொண்டு எல்லா வகையிலும் முக்கியத்துவம் வாய்ந்த அந்த ஒரு நாள் மாலைப் பொழுதுக்குப் பின் வந்த இரவில் வேறோர் பகுதியிலே நடந்த எதிர்பாராத சில நிகழ்ச்சிகளைக் கொஞ்சம் கவனிப்போம்.
யாத்திரீகர்களை அழைத்துக் கொண்டு கன்னியாகுமரியிலிருந்து திரும்பிய அண்டராதித்த வைணவன் முன்சிறைக்குத் திரும்பும் போது இரவு வெகு நேரம் ஆகிவிட்டது. அவர்களெல்லோரும் சத்திரத்து வாசலை அடைந்த போது அங்கே மடைப்பள்ளியில் வேலை செய்யும் பணிப் பெண்கள் கையைப் பிசைந்து கொண்டு நின்றார்கள். அவ்விருவர் முகத்திலும் கவலையும், பரபரப்பும் தோன்றின.
"பெண்களே! என்ன நடந்தது? ஏன் இப்படிக் கையைப் பிசைந்து கொண்டு நிற்கிறீர்கள்? கோதை எங்கே? அதற்குள் தூங்கிவிட்டாளா? எனக்குத் தெரியுமே, அவள் சோம்பேறித்தனம்!" என்று தன் வழக்கப்படி வேடிக்கையாகப் பேச்சை ஆரம்பித்த அண்டராதித்த வைணவன் அந்தப் பெண்களின் முகம் போன போக்ககப் பார்த்துத் திடுக்கிட்டான். ஏதோ நடக்கத் தகாதது நடந்திருக்கிறதென்று அவன் மனதில் பட்டுவிட்டது.
"ஏன் மௌனம் சாதிக்கிறீர்கள்? என்ன நடந்தது? சொல்லுங்களேன். வாயில் கொழுக்கட்டையா அடைத்திருக்கிறது?" என்று இரைந்தான். அவனோடு நிற்கும் யாத்திரீகர்களின் கூட்டத்தைப் பார்த்து அந்தப் பணிப்பெண்கள் சிறிது தயக்கமடைந்தனர்.
அந்தக் குறிப்பைப் புரிந்து கொண்ட அண்டராதித்தன் வாயிற் கதவு முழுவதையும் நன்றாகத் திறந்துவிட்டு, "நீங்கள் உள்ளே செல்லுங்கள். நான் இதோ இவர்களிடம் என்னவென்று விவரம் கேட்டுக் கொண்டு வருகிறேன்." அருகில் இருந்தவர்களிடம் கூறி அவர்களை உள்ளே அனுப்பினான்.
அந்தப் பணிப்பெண்கள் அவன் பக்கத்தில் வந்து நெருங்கி நின்று கொண்டு பயத்தால் ஒடுங்கிப் போன குரலில், "ஐயா! திடீரென்று அம்மாவைக் காணவில்லை. இருட்டி இரண்டு நாழிகை இருக்கும். தீபங்களை ஏற்றிவிட்டு இங்கே சத்திரத்துக் குறட்டில் உட்கார்ந்து கொண்டு ஓலையில் படித்தரக் கணக்கு எழுதிக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரம் கழித்து நாங்கள் வந்து பார்த்த போது அம்மாவைக் காணவில்லை. இங்கிருந்த ஓலை எழுத்தாணி ஆகியவற்றையும் காணோம். தீபம் அணைக்கப்பட்டு இருளடைந்திருந்தது. மறுபடியும் தீபத்தை ஏற்றிக் கொண்டு வந்து இங்கே பார்த்த போது இந்த உடைந்த வளையல் சில்லுகள் தான் கிடந்தன" என்று அவனிடம் அவற்றைக் காட்டினர் பணிப்பெண்கள்.
அவன் திகைத்தான்! துணுக்குற்றான். கோதை காணாமற் போய் விட்டாள் என்ற போது அவன் மனத்தில் பலவிதமான ஐயப்பாடுகள் உண்டாயின.
அண்டராதித்தன் உணர்ச்சிமயமானவன். இம்மாதிரி சமயங்களில் நிதானமாகச் சிந்தித்து என்ன செய்வது என்று அவனுக்குத் தெரியாது. 'தம்பி நாராயணன் சேந்தனைப் போய்ச் சந்தித்தால் அவன் ஏதாவது உருப்படியான வழியைக் கூறுவான்; உதவியும் செய்வான். தம்பியைத் தவிர வேறு யாரிடமும் இந்தச் செய்தியைச் சொல்லி உதவி கேட்கப் போவதே வெட்கக் கேடு' - என்று நினைத்தான்.
"பெண்களே, இந்தச் செய்தி உங்களோடு இருக்கட்டும். வேறு யாருக்கும் தெரிய வேண்டாம். யாராவது கேட்டால் கோதையை அழைத்துக் கொண்டு நான் அவசர காரியமாக இடையாற்று மங்கலம் போயிருக்கிறேனென்றும், திரும்பி வருவதற்குச் சில நாட்கள் ஆகுமென்றும் சொல்லுங்கள்! இப்போது நான் அவளைத் தேடிக் கொண்டு போகிறேன். சத்திரத்துக் காரியங்களை ஒன்றும் குறைவில்லாமல் நீங்கள் தான் இன்னும் சில நாட்களுக்குக் கவனித்துக் கொள்ள வேண்டும்."
"நீங்கள் சாப்பிடவில்லையே! சாப்பிட்டுவிட்டுப் போங்கள்" என்று பணிப்பெண்கள் கூறினர்.
"இல்லை. யாத்திரீகர்களைக் கவனியுங்கள். நான் புறப்படுகிறேன்" என்று சத்திரத்திற்குள்ளே காலை வைக்காமல் அப்படியே திரும்பி நடந்தான் அண்டராதித்த வைணவன். அவன் நிலை பரிதாபத்துக்குரியதாக இருந்தது. என்ன செய்யலாம்? உலகத்தில் எந்தப் பொருள் காணாமற் போனால் மற்றவர்களிடம் சொல்லிக் கொள்வதற்குக் கூட வெட்கப் பட வேண்டுமோ, அந்தப் பொருளைக் காணவில்லை யென்றால் மன வேதனையை என்னவென்று சொல்ல முடியும்! ஏற்கெனவே நடந்து நடந்து ஓய்ந்து போயிருந்த அவன் கால்கள் அந்தக் களைப்பையும் மறந்து இடையாற்று மங்கலத்திற்குச் செல்லும் கிளை வழியில் வேகமாக நடந்தன. சுசீந்திரம் வரையில் வழி ஒரே சாலையாகச் சென்று பாதிரித் தோட்டத்துக்குத் தெற்கே விழிஞம், குமரி, இடையாற்று மங்கலம் என்று மூன்று இடங்களுக்கும் தனித்தனியே பிரிகிறது.
ஜனசஞ்சாரமற்ற, ஓசை ஒலிகள் அடங்கிப் போன அந்த நள்ளிரவில் தன்னந்தனியாக மனத்தில் கவலைகளையும், குதிகாலில் களைப்பையும் சுமந்து கொண்டு நாராயணன் சேந்தனைக் கண்டு ஒரு வழி செய்யலாம் என்ற ஒரே நம்பிக்கையோடு அண்டராதித்தன் நடந்து கொண்டிருந்தான்.
பாதிரித் தோட்டத்தை நெருங்கிய போது சாலையில் அவன் மேலே நடந்து செல்ல முடியாத நிலை ஒன்று ஏற்பட்டது. யாரோ ஓர் ஆள் அசுர வேகத்தில் குதிரையை விரட்டிக் கொண்டு வந்தான். குதிரை பாய்ந்தோடிச் சென்ற வேகத்தில் அதன் மேல் உட்கார்ந்து கொண்டிருந்தவனின் தோற்றத்தைக் கூடச் சரியாகப் பார்க்க முடியவில்லை. அடுத்து அந்தக் குதிரைக்குப் பின்னால் தலைதெறித்துப் போகிறாற் போன்ற வேகத்தில் இரண்டு மூன்று ஆட்கள் துரத்திக் கொண்டு ஓடுவதையும் அவன் பார்த்தான். சாலையோரத்தில் ஒரு மரத்தடியில் ஒதுங்கி நின்று கொண்டு அவர்கள் செல்கிற வரை தாமதித்தான் அண்டராதித்த வைணவன்.
சாலையில் ஏற்பட்ட புழுதி அடங்குவதற்காகக் கண்களை மூடிக் கொண்டு ஓரமாக ஒதுங்கி நின்றவன், 'சரி! யார் குதிரையில் போனால் என்ன? எனக்கு என்ன வந்தது?' என்று நினைத்தவனாய் அந்த இடத்திலிருந்து புறப்பட்டு மேலே நடப்பதற்காக அடி எடுத்து வைத்த போது சாலையோரத்து மரத்தடியில் யாரோ முனகுவது போல் தீனக்குரலில் ஒலி எழுந்தது.
"யார் அங்கே?" என்று ஒரு கேள்வியைக் கேட்டுக் கொண்டே மரத்தடிக்குத் திரும்பிச் சென்றான் அண்டராதித்தன். அவன் உடல் நடுங்கியது! மனத்தில் பயமும் பதற்றமும் ஏற்பட்டன. பக்கத்தில் சென்ற போது வாயில் துணியை அடைத்து யாரோ ஓர் ஆளை அடி மரத்தோடு சேர்த்துக் கட்டி வைத்திருப்பது போல் தெரிந்தது. இன்னும் நெருங்கிச் சென்று உற்றுப் பார்த்ததில் அப்படிக் கட்டி வைக்கப்பட்டிருந்தது ஒரு பெண்பிள்ளை என்று அறிந்தான். மரக்கிளைகளின் அடர்த்தியாலும், இலைகளின் செறிவாலும் அந்த இடத்தில் நிலா ஒளி படரவில்லை.
'என்ன அக்கிரமம் பெண்பிள்ளையை மரத்தில் கட்டிப் போட்டுத் துன்புறுத்திக் கொள்ளையடிக்கிற அளவுக்கு இந்த நாட்டில் கொள்ளைத் தொழில் கேவலமான முறையில் வளர்ந்து விட்டதா?' என்று எண்ணிக் கொண்டே பரபரப்படைந்து அந்தப் பெண்ணை அவிழ்த்து அவளுடைய மென்மையான உடலைத் தன் கைகளால் தாங்கிக் கொண்டு வந்து வெளிச்சத்தில் வைத்தான். நிலா ஒளியில் அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்த்ததும் அவன் வாயிலிருந்து, "ஆ! கோதை! நீயா?" என்ற அலறல் கிளம்பிப் பாதிரித் தோட்டத்துப் பிரதேசமெங்கும் எதிரொலித்தது. ஆம்! அவள் அவனுடைய மனைவி, காணாமற் போன கோதையேதான்!
அண்டராதித்தன் பதறிப் போய் அவளுடைய வாயை மூடிக் கட்டப்பட்டிருந்த துணியை அவிழ்த்து எடுத்தான். தண்ணீர் கொண்டு வந்து முகத்தில் தெளித்து மயக்கத்தைப் போக்கினான். கோதைக்குக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிரக்ஞை வந்ததுடன் தன் பக்கத்தில் கணவனைப் பார்த்த போது அவளுக்கு ஆறுதலாக இருந்தது. "கோதை! என்ன நடந்தது? எப்படி இங்கு வந்தாய்? யார் உன்னை இந்த மரத்தில் கட்டிப் போட்டார்கள்?" அண்டராதித்தன் கொதிப்படைந்த உள்ளத்துடன் இந்தக் கேள்வியை அவளிடம் கேட்டான். அவள் கண்களில் நீர் துளிர்த்தது. தான் சத்திரத்துக் குறட்டில் கணக்கெழுதிக் கொண்டிருந்த போது நடந்தது மட்டும் தான் அவளுக்கே தெளிவாக நினைவில் இருந்தது. அதைக் கணவனிடம் கூறினாள்.
"அப்படியானால் உன்னிடமிருந்து அவர்கள் ஆபரணங்களைத் திருடவில்லை. வேறு எந்த விதத்திலும் உன்னைத் துன்புறுத்தவில்லை. உன் கையிலிருந்த ஓலையையும் எழுத்தாணியையும் மட்டும் கைப்பற்றிக் கொண்டார்கள் என்று தானே சொல்லுகிறாய்?"
"ஆமாம்! அப்போது நான் கூச்சலிட முயன்றேன். அவர்கள் என் வாயில் துணியைத் திணித்துத் தூக்கிக் கொண்டு வந்துவிட்டார்கள். நான் மூர்ச்சையடைந்து விட்டதால் அதற்குப் பின் நடந்ததொன்றும் தெரியாது. இப்போது தான் தெளிவடைந்து இங்கே உங்களை என் கண் முன்னால் காண்கிறேன்" என்றாள் கோதை.
"அப்படியானால் அந்த ஆட்கள் உன்னை அநாவசியமாக இவ்வளவு தூரம் தூக்கி வந்து இந்த மரத்தில் ஏன் கட்டிப் போட்டிருந்தார்கள்?"
"அதுதான் எனக்கும் விளங்கவில்லை! ஓலைகளையும், எழுத்தாணிகளையும் திருடுவதற்காகக் கூடச் சில ஆட்கள் கிளம்பியிருக்கிறார்கள் போலிருக்கிறது. ஆனால் வேறொரு சந்தேகமும் உண்டாகிறது!" என்று கோதை சொல்லவும், "என்ன சந்தேகம்? சொல்லேன்" என்றான் அண்டராதித்தன்.
"விளக்கை வாயால் ஊதி அணைத்து விட்டார்கள். அதனால் அந்தத் தடியர்களை இருட்டில் என்னால் அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. ஒரு வேளை அன்றொரு நாள் இரவு சத்திரத்துக் கதவை அடைக்கிற நேரத்துக்கு வந்து வம்பு செய்தார்களே, அவர்களாக இருக்கலாமோ?"
"இருந்தாலும் இருக்கும். நீ செய்ததும் வம்புதானே? கதவை அடைத்து, 'இடங்கொடுக்க மாட்டோம்' என்று சொன்னது சரி. அதோடு போகாமல் மேலே நின்று கொண்டு சாணத்தை வேறு கரைத்துக் கொட்டினாய். எல்லாம் உன்னால் வருகிற வினைதான். உன் துடுக்குத் தனத்தால் எனக்கு இல்லாத வம்பையெல்லாம் விலைக்கு வாங்கி வைக்கிறாய்."
"சரி! நீங்கள் எப்படி இவ்வளவு கணக்காக இந்த இடத்துக்குத் தேடி வந்தீர்கள்?" என்று கேட்டாள் கோதை. நடந்ததையெல்லாம் அவளுக்கு விவரித்துக் கூறினான்.
"எப்படியானால் என்ன? எப்படியோ என்னைக் கண்டு பிடித்து விட்டீர்கள். உங்கள் தம்பியின் ஆலோசனையும், உதவியும் இல்லாமலே நீங்கள் அடைந்த முதல் வெற்றியாகட்டும் இது. வாருங்கள், சத்திரத்துக்குப் போகலாம்! இந்த இரவில் இப்படி நடுக்காட்டில் உட்கார்ந்து கொண்டிருப்பானேன்?" என்று அவனையும் கூப்பிட்டுக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டாள் கோதை.
மறுநாள் காலை புறத்தாய நாட்டுக் கோட்டையில் நாஞ்சில் நாட்டின் கூற்றத் தலைவர்கள் வந்து கூடிவிட்டனர். தோவாழைக் கூற்றத்து நன்கணிநாதர், பொன்மனைக் கூற்றத்துக் கழற்கால மாறினார், அருவிக்கரைக் கூற்றத்து அழகிய நம்பியார், பாகோட்டுக் கூற்றத்துப் பரிமேலுவந்த பெருமாள் முதலிய நாஞ்சில் நாட்டுப் பெருமக்களில் முதன்மையாளர்களெல்லாம் மகாராணி வானவன்மாதேவியாரின் அவசரக் கட்டளையை மதித்து ஓடோடியும் வந்து கூடியிருந்த்னர்.
அவ்வளவு அவசரமாக மகாசபையைக் கூட்டுவதின் நோக்கம் என்னவாக இருக்குமென்று புரிந்து கொள்ளூம் ஆவல் நிரம்பிய மனத்தோடு காத்திருந்தனர் அவர்கள்.
ஆனால் மகாசபைக் கூட்டம் எந்த இருவர் இல்லாவிடின் நிச்சயமாக நடக்க முடியாமல் போய்விடுமோ, அந்த இருவரும் அதுவரையில் வந்து சேரவே இல்லை. முடிந்தால் முதல் நாள் இரவே வந்து விடுவதாகச் சொல்லி விட்டுப் போயிருந்த தளபதி வல்லாளதேவன் மறுநாள் காலை விடிந்து பத்து நாழிகைக்கு மேலாகியும் இடையாற்று மங்கலத்திலிருந்து திரும்பி வரவில்லை. மகாமண்டலேசுவரரான இடையாற்று மங்கலம் நம்பியும் வரவில்லை. கூற்றத் தலைவர்களும், மகாராணியும், பவழக்கனிவாயர், அதங்கோட்டாசிரியர் முதலிட்டோரும் அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தனர்.
------------
1.17. எதிர்பாரா சில நிகழ்ச்சிகள்
தீபம் நா. பார்த்தசாரதியின் படைப்புகள் இடையாற்றுமங்கலம் மாளிகையில் மறுநாள் பொழுது புலர்ந்த போது இந்தக் கதையைப் படிக்கின்ற நேயர்கள் ஏற்கனவே எதிர்பார்த்த சில நிகழ்ச்சிகளும், முற்றிலும் எதிர்பார்த்திருக்க முடியாத சில நிகழ்ச்சிகளும் நடந்தன.
பாதாள மண்டபத்துச் சுரங்கத்திலிருந்து வெளியேறிய தளபதி வல்லாளதேவன் வசந்த மண்டபத்தில் பிரவேசித்ததும், அலங்காரக் கிருகத்தில் பொன்னாலும், மணியாலும் இழைத்த சப்ரமஞ்சக் கட்டிலில் உடலுக்குச் சுகம் தேடுவதைக் கொடுந்தவறாக எண்ண வேண்டிய துறவி கொண்டாட்டத்தோடு படுத்துத் தூங்குவதைக் கண்டதையும், வியந்து நினைத்ததையும், சென்ற பகுதிகளில் கண்டோம்.
அதன் பின் வசந்த மண்டபத்திலிருந்து வெளியேறிச் சென்று முன்பு படுத்திருந்த விருந்து மாளிகைக் கட்டிலில் போய்ப் படுத்துக் கொண்டான். உறக்கம் கண்களைச் செருக வைக்கும் நேரத்தில் யாரோ விளக்கும் கையுமாக உள்ளே நுழையவே ஒளி கண்களில் உறுத்தி விழித்துக் கொண்டான்.
விழித்துக் கொண்டு படுக்கையில் எழுந்து உட்கார்ந்து பார்த்த போது, நாராயணன் சேந்தன் விளக்கோடு எதிரே நின்று கொண்டிருந்தான். "யார்? சேந்தனா? வா, அப்பா! ஏது இந்த நேரத்துக்கு இப்படி மறுபடியும் வந்தாய்? தளபதி நன்றாகத் தூங்குகிறாரா, இல்லையா என்று பார்த்து விட்டுப் போக வந்தாயோ? அல்லது மகாமண்டலேசுவரரே போய்ப் பார்த்துவிட்டு வா என்று அனுப்பினரா?" என்று சிரித்துக் கொண்டே சற்றுக் குத்தலாகக் கேட்டான் வீரத் தளபதி வல்லாளதேவன்.
நாராயணன் சேந்தனும் பதிலுக்கு ஒரு சிரிப்புச் சிரித்துக் கொண்டே, "தளபதி! உங்கள் கேள்வி விசித்திரமாக அல்லவா இருக்கிறது? 'தூங்குகிறவர்களைத் தூங்கிக் கொண்டிருக்கிறார்களா?' என்று பரிசோதனை செய்ய இங்கிருப்பவர்கள் இன்னும் பித்தர்களாகி விடவில்லை. நானும் இந்த மாளிகையில் தான் படுத்துறங்குவது வழக்கம். இப்போதுதான் படுக்க வந்திருக்கிறேன். நீங்கள் தூங்குகிறீர்களா, தூங்கவில்லையா என்பதைப் பார்ப்பதற்காக வரவில்லை" என்று குத்தலாகவே மறுமொழி கூறினான்.
"எங்கே அப்பா! இந்த இடையாற்று மங்கலம் மாளிகையில் சுலபமாக அப்படி எதையும் நம்பி விடவா முடிகிறது? இங்கே தூங்கி விட்டதாக நினைக்கப் படுகிறவர்கள் எல்லோரும் விழித்துக் கொண்டிருக்கிறார்கள். இரவில் தூங்காமலோ அல்லது தூங்க முடியாமலோ செய்ய வேண்டிய எத்தனையோ முக்கியமான காரியங்களெல்லாம் மகாமண்டலேசுவரரின் நிர்வாகத்தில் இருக்கலாம்?" வேண்டுமென்றே தான் மறுபடியும் நாராயணன் சேந்தனின் வாயைக் கிளறினான் தளபதி. ஆனால் அவன் எதிர்பார்த்தது போல் நாராயணன் சேந்தன் விசேடமான பதில் எதையும் சொல்லவில்லை.
"தளபதி! நீங்கள் எதை வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டிருங்கள். எனக்குத் தூக்கம் வருகிறது. நான் படுத்துத் தூங்கப் போகிறேன்" என்று சொல்லி மழுப்பிவிட்டுத் தீபத்தின் ஒளியைக் குறைத்து ஒரு மூலையில் வைத்த பின் எதிர்ப்புறமிருந்த மற்றோர் கட்டிலில் ஏறிப் படுத்துக் கொண்டு விட்டான் அவன். உடனே தூங்கியும் விட்டான். சில விநாடிகளுக்குள் விருந்து மாளிகையின் பலமான சுவர்கள் பிளந்து விழுந்து விடும் போல் 'கர்புர்' என்று பிரமாதமான குறட்டை ஒலி நாராயணன் சேந்தனின் கட்டிலிலிருந்து கிளம்பியது.
வல்லாளதேவன் அந்த ஓசையைச் சகித்துக் கொள்வதற்காக இரண்டு கைகளாலும் காதுகளைப் பொத்திக் கொண்டான். அப்படியும் அந்த ஒலி செவிக்குள் புகுந்து துளைத்தது. அப்படியே எழுந்திருந்து போய்க் கட்டிலில் மல்லாந்து கிடக்கும் அந்தக் குட்டைத் தடியனின் உச்சிக் குடுமியை ஒரு கையால் இறுக்கிப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் மொத்துமொத்தென்று மொத்தி விடலாமா என்று தோன்றியது அவனுக்கு. வேண்டுமென்றே ஏதோ ஒரு காரணத்துக்காகத் தனக்குக் காவலைப் போலத் தன்னருகே படுத்துக் கொள்ளச் சொல்லி மகாமண்டலேசுவரர் அவனை அங்கே அனுப்பியிருக்கலாமென்று தளபதி வல்லாளதேவனின் மனத்தில் ஒரு சந்தேக எண்ணம் உறைக்க ஆரம்பித்தது.
'துறவிக்கு மகாமண்டலேசுவரர் தம்முடைய மாளிகையிலேயே எல்லா வசதிகளும் ஏற்பாடு செய்து கொடுத்து விட்டார் போலிருக்கிறது? இதில் ஆச்சரியப்படுவதற்கு என்ன இருக்கிறது? கிளியைப் பிடித்துக் கூண்டுக்குள் அடைத்து வைத்துத் தம் சொந்த இன்பத்துக்காக அதற்குப் பாலும் பழமும் கொடுக்கின்ற மனிதர்களைப் போல ஏதோ ஒரு பெரிய சுயநலத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காகத் துறவியை இடையாற்று மங்கலம் தீவுக்குள் உலகத்துக்குத் தெரியாமல் இவர் ஒளித்து வைத்திருக்கிறார்.
'மகா மேதையாகவும் குல தெய்வமாகவும் இவரை எண்ணிக் கொண்டிருக்கும் மகாராணியிடம் இந்த இரகசியங்களைக் கூறினால் நம்பக்கூடத் தோன்றாது. காலம் வரும். அப்போது ஆதாரப் பூர்வமான சான்றுகளோடு எல்லா உண்மைகளையும் விவரமாக வெளிப்படுத்துகிறேன்.'
நாராயணன் சேந்தனின் குறட்டை ஒலியால் தூக்கத்தை இழந்த வல்லாளதேவன் மேற்கண்டவாறு பலவகைச் சிந்தனைகளில் மூழ்கியிருந்தான்.
'அட என்னதான் ஆசை இருக்கட்டுமே! மனிதருக்கு மானம், வெட்கம் ஆகிய பண்புகள் கூடவா ஆசை வந்தால் இல்லாமல் போய்விடும்? யாரோ ஒரு சாமியாரை மயக்குவதற்கு சொந்த மகளை அவனோடு சிரித்துப் பேசுமாறு செய்கிறார். பிறரை மயக்கிக் கைக்குள் போட்டுக் கொள்வதற்கும் மகளின் சிரிப்பும், பேச்சும் தான் இவருக்குச் சரியான சாதனம் போலும்! இவ்வளவு படித்தவருக்குப் பெண்களுக்கென்று இந்த நாட்டில் பரம்பரை பரம்பரையாக ஏற்பட்டுள்ள கட்டுப்பாடு, பண்பு, ஒழுக்கம் எல்லாம் மறந்தா போய்விட்டன? ஐயோ இந்த மனிதருடைய அந்தரங்க வாழ்க்கையை நினைத்தால் எனக்குச் சிரிப்பாக வருகிறது. இன்னொரு புறம் பரிதாபமாகவும் இருக்கிறது. இவ்வளவும் ஆசை படுத்துகிற பாடு அல்லவா?'
இப்படியே இன்னும் என்னென்னவோ சிந்தித்துக் கொண்டே கட்டிலில் உட்கார்ந்து கொண்டிருந்த தளபதி வல்லாளதேவன் பொழுது விடிவதற்குள் ஏதோ ஒரு முடிவான தீர்மானத்துக்கு வந்தவனாகச் சட்டென்று எழுந்திருந்தான்.
எவ்வளவு முக்கியமான காரியங்கள் குறுக்கிட்டாலும் தம்முடைய தினசரி வழக்கங்களைக் குன்றாமல் கடைப்பிடிப்பவர் இடையாற்று மங்கலம் நம்பி. புலரிப் பொழுதாகிய வைகறையின் பனிக்காற்று நீங்குவதற்கு முன்பே எழுந்து போய்ப் பறளியாற்றில் நீராடி விடுவார். ஈர ஆடைகளைக் களையாமல் நந்தவனத்துக்குச் சென்று தம் கையாலேயே மலர்களைக் கொய்து கொண்டு வருவார். கிழக்கே கதிரவனின் செங்கிரணங்கள் பொன் வண்ணக்கோலமிடத் தொடங்கும் நேரத்தில் தான் அவர் பூஜையை முடித்துக் கொண்டு மாளிகையிலுள்ள சிவன் கோவிலிலிருந்து வெளிவருவார். அப்போது அவரைப் பார்த்தால் கோவில் வாயிலில் ஒளி மயமான மற்றொரு சூரியன் உதித்து நடந்து வருவது போலிருக்கும். சிவந்த கம்பீரமான நெடிதுயர்ந்த மேனியில் வெள்ளிக் கம்பிகள் பதித்தாற் போலத் திருநீற்றுக் கீற்றுகளும் வெண்ணிற ஆடையும் விளங்க அவிழ்ந்து முடிந்த ஈரத் தலையோடு அவர் நடந்து வருவது அற்புதமான காட்சியாக இருக்கும். எவ்வளவு தலைபோகிற காரியமானாலும் இந்த அன்றாட அனுட்டானங்களில் குறைவே ஏற்படாது, மாறுதலும் நிகழாது.
அன்றைக்கு மகாசபைக் கூட்டத்துக்காகப் புறத்தாய நாட்டுக் கோட்டைக்குப் போகவேண்டுமென்ற நினைவு இருந்ததனால் வழக்கத்தைக் காட்டிலும் முன்னதாகவே எழுந்து விட்டார் இடையாற்று மங்கலம் நம்பி. அவர் தம்முடைய நித்திய கர்மானுட்டானங்களை முடித்துக் கொண்டு வெளிவந்த போது, நாராயணன் சேந்தன் விருந்து மண்டபத்திலிருந்து பரபரப்பாக ஓடி வந்தான்.
"என்ன சேந்தா? இப்போதுதான் திருப்பள்ளி எழுச்சி ஆயிற்றா! தளபதி வல்லாளதேவன் இன்னுமா உறங்கிக் கொண்டிருக்கிறான்?" என்று கேலியாகச் சிரித்துக் கொண்டே கேட்டார் மகாமண்டலேசுவரர்.
"சுவாமி! நேற்றிரவு நான் விருந்து மண்டபத்துக்குப் படுத்துக் கொள்ளச் சென்ற போது கூடத் தளபதி அங்கே தான் உறங்கிக் கொண்டிருந்தார். நான் சென்றதும் விழித்துக் கொண்டு சிறிது நேரம் என்னோடு பேசிக் கொண்டும் இருந்தார். இப்போது காலையில் எழுந்திருந்து பார்த்தால் ஆளைக் காணவில்லை" என்று மூச்சுவிடாமல் பதற்றத்தோடு தான் சொல்ல வந்த செய்தியைக் கூறி முடித்தான் நாராயணன் சேந்தன்.
இடையாற்று மங்கலம் நம்பி அதைக் கேட்டுச் சிறிதும் திகைப்படையவில்லை. "ஏன் இவ்வளவு பதறுகிறாய், சேந்தா? பக்கத்தில் எங்காவது எழுந்திருந்து போயிருப்பான். சிறிது நேரத்தில் தானாக வந்து விடுவான். இன்றைக்கு மகாசபை கூடுகிறது. கோட்டைக்குப் போக வேண்டும். இருவரும் இங்கிருந்து புறப்பட்டுச் சேர்ந்தே போகலாம் என்று அவனிடம் நேற்றிரவே நான் சொல்லியிருக்கிறேன். அப்படியிருக்கும் போது அவன் என்னிடம் சொல்லாமல் போவானா?" என்றார்.
"இல்லை, சுவாமீ! அநேகமாக இடையாற்று மங்கலம் தீவு முழுவதும் தேடிப் பார்த்து விட்டேன். கால் கடுக்கச் சுற்றியாகி விட்டது. காலையில் எழுந்ததிலிருந்து இதே வேலை தான். ஆனால் அந்த மனிதரைக் காணவில்லை. மாளிகைக்குள் இருந்தால் தான் உண்டு. ஆனால் இங்கும் அவர் இல்லையென்று தெரிகின்றது."
"சேந்தா! தளபதி எப்படிப் போயிருக்க முடியும்? என்னிடம் அவ்வளவு உறுதியாகச் சொல்லியிருந்தவன் போவானா? எதற்கும் படகோட்டி அம்பலவன் வேளானுடைய குடிசைக்குப் போய்க் காலையில் யாருக்காவது அவன் படகு செலுத்திக் கொண்டு போனானா என்பதை விசாரித்துத் தெரிந்து கொண்டு வா. பறளியாற்றில் தண்ணி அதிகமாகப் போய்க் கொண்டிருப்பதனால் அம்பலவன் வேளானின் உதவியில்லாமல் யாரும் அக்கரைக்குச் சென்றிருக்க முடியாது."
நாராயணன் சேந்தன் படகோட்டியைக் கண்டு விசாரித்து வருவதற்காக அவன் குடிசையை நோக்கிப் புறப்பட்டான். அதுவும் மகாமண்டலேசுவரரின் சொற்களைத் தட்டக்கூடாதே என்பதற்காகத்தான். அவன் மனத்தைப் பொறுத்த வரையில் தளபதி வல்லாளதேவன் அப்போது அந்தத் தீவிலேயே இல்லை என்பது உறுதியாகத் தெரிந்துவிட்டது. தளபதி முதல் நாள் இரவு படுத்துக் கொள்ளச் சென்ற போது தன்னிடம் குத்தலாகக் கேட்ட கேள்விகளை நினைத்துப் பார்த்த போது அவன் எண்ணம் வலுப்பட்டது. ஏதேனும் ஒரு விதத்தில் தளபதி வல்லாளதேவனுக்கு மகாமண்டலேசுவரரிடம் அவநம்பிக்கையோ அதிருப்தியோ ஏற்பட்டிருக்க வேண்டுமென்று அவனுக்குத் தோன்றியது. சாதாரணமாக இப்படித் தனக்கு ஏற்படுகிற சந்தேகங்களை உடனே இடையாற்று மங்கலம் நம்பியிடம் தெரிவித்து விடுவது அவன் வழக்கம். அன்று ஏனோ தளபதியைப் பற்றித் தன் மனத்தில் ஏற்பட்ட சந்தேகத்தை உடனடியாகத் தெரிவித்துவிட வேண்டுமென்ற எழுச்சியோ ஆர்வமோ அவனுக்கு உண்டாகவில்லை.
படகோட்டி அம்பலவன் வேளானின் குடிசை தோணித்துறைக்கு அருகே பறளியாற்றின் கரையில் அமைந்திருந்தது. எண்ணங்களின் சுமை கனக்கும் மனத்துடன் தன் போக்கில் அம்பலவன் வேளானின் இருப்பிடத்துக்கு நடந்து கொண்டிருந்த நாராயணன் சேந்தன் எதிரே வந்த யார் மேலேயோ 'பட்'டென்று மோதிக் கொள்வதற்கு இருந்தான்.
"ஐயா! எங்கே இப்படி? அதிகாலை நேரத்தில் கிளம்பி விட்டீர்கள்?" என்று எதிரே வந்த ஆள் விலகி நின்று கேட்ட போது, அது அம்பலவன் வேளான் குரல் தான் என்பதைப் புரிந்து கொண்டு நிமிர்ந்தான் நாராயணன் சேந்தன். "நல்லவேளை! கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தது போல் நீயே வந்துவிட்டாய்! உன்னைத்தான் அப்பா தேடிக் கொண்டு புறப்பட்டேன். உன்னிடம் ஒரு முக்கியமான விஷயம் விசாரிக்க வேண்டும்" என்று தணிந்த குரலில் அவனிடம் கூறினான் சேந்தன். அதைக் கேட்டுக் கொண்டே, "ஐயா! இந்த அநியாயத்தைக் கேட்டீர்களா? நான் என்ன செய்வேன்? யாரிடம் போய்ச் சொல்வேன்? நேற்றிரவு துறையில் இழுத்துக் கட்டிவிட்டு வந்த தோணியைக் காலையில் எழுந்திருந்து போய்ப் பார்த்தால் காணவில்லை" என்று பதற்றமும் நடுக்கமும் செறிந்த குரலில் சொன்னான் அம்பலவன் வேளான். வேளான் கூறியதைக் கேட்டுச் சேந்தன் மேலும் வியப்பில் மூழ்கினான்.
"ஐயா! நீங்கள் தான் ஏதாவது ஒரு வழி சொல்ல வேண்டும். இன்றைக்கு மகாமண்டலேசுவரரும் தளபதியும் காலையில் அக்கரைக்குப் போய்க் கோட்டைக்குச் செல்ல வேண்டுமென்று கூறியிருந்தார்கள். கோட்டையில் இன்று காலை மகாசபைக் கூட்டமாமே? இன்னும் சிறிது நேரத்தில் அவர்கள் இருவரும் துறைக்கு வந்து 'படகு எங்கே?' என்று கேட்டால் நான் என்ன பதில் சொல்வேன்? ஐயோ இன்றைக்கென்றா இப்படி நடக்க வேண்டும்? எல்லாம் என் தலையெழுத்து" என்று அலுத்துக் கவலைப்பட்டுக் கொண்டான் படகோட்டி அம்பலவன் வேளான்.
"இன்று காலையில், எப்போது போய்ப் பார்த்தாய்?" என்று நாராயணன் சேந்தன் கேட்டான்.
"இப்போதுதான். சிறிது நேரத்துக்கு முன்பு போய்ப் பார்த்தேன். தோணியைக் காணவில்லை என்று தெரிந்ததும் பதறிப் போய் உடனே உங்களைப் பார்ப்பதற்காகப் புறப்பட்டேன். நீங்களே எதிரில் வந்து விட்டீர்கள்."
"அது சரி! நேற்றிரவு துறையில் தோணியைக் கட்டிவிட்டு வரும் போது துடுப்புகளையும் அதற்குள்ளேயே போட்டுவிட்டு வந்திருந்தாயோ?"
"ஆமாம், ஐயா! துடுப்புகளை எப்போதும் தோணிக்குள்ளே போட்டு வைத்துவிட்டு வருவதுதான் வழக்கம். அது போலவே நேற்றும் செய்தேன்."
"ஆகா! நான் நினைத்தபடிதான் நடந்திருக்கிறது" என்றான் சேந்தன்.
"என்ன நினைத்தீர்கள் ஐயா! படகை யார் எடுத்துக் கொண்டு போயிருக்கிறார்களென்று உங்களுக்குத் தெரியுமா?" என்ற ஆவல் துடிக்கும் தொனியில் நம்பிக்கையின் சாயை மலர வினவினான் படகோட்டி அம்பலவன் வேளான்.
"அப்பா! அதை இப்போது உன்னிடம் உறுதியாகச் சொல்லிவிட முடியாது. ஒரு தினுசாக எனக்குள் தீர்மானித்திருக்கிறேன். படகைக் கொண்டு போனவர்கள் யாராக இருக்கலாம் என்பது பற்றிப் பின்பு ஆராயலாம். வா! முதலில் மகாமண்டலேசுவரரிடம் போய்ப் படகு காணாமற் போன செய்தியைத் தெரிவிப்போம்" என்று கூறி வேளானையும் உடன் அழைத்துக் கொண்டு திரும்பினான் சேந்தன்.
சிவ பூஜை செய்து விட்டு நிர்மலமான மனமும், உடலுமாக மாளிகை வாசலில் வந்து நின்ற இடையாற்றுமங்கலம் நம்பிக்கு நாராயணன் சேந்தன் வந்து கூறிய செய்தியைக் கேட்டு சஞ்சலமும் சிந்தனையும் உண்டாயிற்று. "வல்லாளதேவன் காலை வரை தங்கியிருந்து தன்னோடு உடன் புறப்படுவதாகச் சொல்லியிருந்தும் அம்மாதிரி மோசம் செய்வானா?" என்று சிந்தித்தார். 'ஒரு வேளை அப்படியே அவன் புறப்பட்டுப் போயிருந்தாலும் கோட்டையைத் தவிர வேறெங்கே போயிருக்க முடியும்? போனதை ஒரு குற்றமாகச் சொல்லிவிட முடியாது. போகும் போது என்னிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டுப் போயிருக்கக் கூடாதோ?' என்று சமாதானமும் அடைந்தார். 'தளபதி இல்லாவிட்டால் என்ன? படகுக்குச் சொல்லியிருந்த நேரத்தில் வேளானை வரச் சொல்லி நாராயணன் சேந்தனையும் உடன் அழைத்துக் கொண்டு நாம் தனியே புறப்பட வேண்டியதுதான்' என்று தமக்குள் அவர் ஒரு முடிவுக்கு வந்த போது அம்பலவன் வேளானும், நாராயணன் சேந்தனும் வந்து, 'படகு காணவில்லை' என்ற அந்தச் செய்தியைக் கூறியதால் அவர் ஒரு கணம் அதிர்ச்சியடைந்தார். வேறு படகுக்கு ஏற்பாடு செய்யும்படி கூறினார்.
--------------
1.18. தென்னவன் ஆபத்துதவிகள்
இன்னவென்று புரியாத எண்ணங்களாலும், அந்த இரவில் இடையாற்றுமங்கலம் மாளிகையில் நடந்த எதிர்பாராத சில நிகழ்ச்சிகளாலும் தளபதியின் உள்ளம் குழப்பமடைந்திருந்தது. நாராயணன் சேந்தன் ஏற்றிக் கொண்டு வந்து வைத்திருந்த சிறிய அகல் விளக்கு மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. அதன் ஒளியில் சேந்தனைப் பார்த்தான் தளபதி. சேந்தன் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். தளபதிக்கு உறக்கம் வரவில்லை. அங்கு இருப்புக் கொள்ளவும் இல்லை. பயமும், கலவரமும் நிறைந்ததொரு உணர்வு அந்த இருளிலேயே அங்கிருந்து வெளியேறி விடுமாறு அவனைத் தூண்டியது.
விருந்தினர் மாளிகையிலிருந்து புறப்பட்டுப் பறளியாற்றின் கரையிலுள்ள படகுத் துறையை நோக்கி நடந்தான் அவன். துறைக்கு அருகேயிருந்த குடிசையின் முகப்பில் யாரோ கட்டிலில் படுத்துத் தூங்கிக் கொண்டிருப்பதைத் தளபதி கண்டான். பக்கத்தில் நெருங்கிச் சென்று பார்த்த போது படுத்திருப்பது படகோட்டி அம்பலவன் வேளான் என்று தெரிந்து கொள்ள முடிந்தது. தளபதி சுற்றும் முற்றும் பார்த்தான். தன்னை அப்போது அந்த நிசி வேளையில் இடையாற்று மங்கலம் தீவிலுள்ள யாருடைய விழிகளும் எந்த இடத்திலிருந்தும் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்து கொண்டான். மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு கரையோரத்துப் புன்னை மரத்தில் இழுத்துக் கட்டியிருந்த படகை ஓசைப்படாமல் அவிழ்த்தான். நல்ல வேளையாகத் துடுப்புகளையும் படகிலேயே வைத்து விட்டுப் போயிருந்தான் வேளான். அப்போது பறளியாற்றில் கரை நிமிர ஓடிக் கொண்டிருந்த வெள்ளத்தின் வேகத்தை எதிர்த்துத் தன்னால் படகைச் செலுத்த முடியுமா? - என்று எண்ணித் தயங்கிக் கொண்டிருக்கவில்லை அவன். கேவலம், ஒரு சாதாரணப் படகோட்டியான அம்பலவன் வேளானின் கைகளுக்குள்ள வன்மை, புறத்தாய நாட்டின் மாபெரும் படைத் தலைவனின் கைகளுக்கு இல்லாமலா போய் விடும்? தளபதியின் கைகள் துடுப்பை வலித்தன. படகு அக்கரையை நோக்கி மெல்ல நகர்ந்தது. வெள்ளத்தின் வேகத்தையும், இழுப்பையும் சமாளிப்பது கடினமாகத்தான் இருந்தது. இளமையும், வளமையும், தோற்றமும், ஏற்றமும் உள்ள நூற்றுக்கணக்கான செந்நிறக் குதிரைகள் ஒரே திசையில் கால்கள் போனபடி தறிகெட்டுப் பாய்ந்து வெறி கொண்டு ஓடினால் என்ன வேகம் இருக்குமோ, அந்தப் பயங்கர வேகத்தைத்தான் அப்போதைய பறளியாற்று வெள்ளத்துக்கு உவமை கூற வேண்டும்.
புறப்பட்ட இடத்திலிருந்து நேரே அம்பு பாய்வது போல் அக்கரைக்குப் போக முடியவில்லை. வெள்ளத்தின் போக்கில் இழுபட்டு ஒருபுறமாகச் சாய்ந்து மெதுவாகவே சென்றது படகு. அவர்கள் வரும் போது இருந்ததை விட வெள்ளத்தின் வேகம் இப்போது அதிகரித்திருந்தது. தளபதி வல்லாளதேவன் அக்கரையை அடைந்த போது வெகு நேரமாகிவிட்டது. பொழுது விடிவதற்கு இன்னும் நான்கைந்து நாழிகைகளே இருந்தன. நிலா ஒளி சற்று மங்கியிருந்தது.
அங்கிருந்த மரமொன்றில் படகை இழுத்துக் கட்டிவிட்டுக் கரையோரமாக நடந்து முன்னிரவில் தான் குதிரையை விட்டிருந்த மரத்தடியை அடைந்தான். பின்னிரவு நேரத்தின் குளிர்ந்த காற்றும், கரையோரத்துத் தாழம் புதர்களில் இருக்குமிடம் தெரியாமல் மலர்ந்திருந்த தாழம் பூக்களின் மணமும் சோர்ந்திருந்த தளபதி வல்லாளதேவனின் உடலுக்கும், மனத்துக்கும் புத்துணர்ச்சி ஊட்டின.
மரத்தடியில் அவன் குதிரை துவண்டு போய்ப் படுத்திருந்தது. அந்த அமைதியான நேரத்தில் மரத்தடியில் ஆளரவம் கேட்டுக் கிளைகளைச் சரணடைந்திருந்த பறவைகள் சிறகுகளை அடித்தும், ஒலிகளைக் கிளப்பியும் தங்கள் இருப்பைப் புலப்படுத்தின. தளபதி குதிரையைத் தட்டி எழுப்பினான். குதிரை கனைத்துக் கொண்டே எழுந்து நின்று உடலைச் சிலிர்த்தது. ஓசை ஒலியடங்கிய பேரமைதி செறிந்த அந்தப் போதில் பயங்கரமாகப் பறளியாற்றங்கரை எங்கணும் எதிரொலித்தது அந்தக் கனைப்பொலி.
'சூழ்நிலை இருக்கிற விதத்தைப் பார்த்தால் இன்றும் இனி வரும் சில நாட்களிலும், புறத்தாய நாட்டுக் கோட்டையைச் சுற்றி மகாராணியாருக்கு என்னென்ன ஆபத்துகள் காத்திருக்குமோ? என்னைக் காட்டிலும் பொறுப்புள்ள பதவியும், அதிகாரங்களும் மகாமண்டலேசுவரருக்கு இருக்கலாம். ஆனால் பாதுகாப்புக் குறைவினால் மகாராணியாருக்கு ஏதாவது நேர்ந்து விட்டால் அந்தப் பழியைத் தளபதியின் தலையில் தான் சுமத்துவார்கள். எதற்கும் நாம் முன்னெச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும்.' இவ்வாறு தளபதி நினைத்தான். பின்பு ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவனாகக் குதிரையில் ஏறிப் புறப்பட்டான். குதிரை கோட்டாற்றிலுள்ள தென் திசைப் பெரும்படையின் கோட்டையை நோக்கிச் சென்றது.
சாலையோரத்து மரப்பொந்துகளில் நெருப்புக் கங்குகளைப் போன்ற விழிகளை உருட்டிக் கொண்டு பதுங்கியிருந்த கோட்டான்கள் இடையிடையே எழுப்பிய குரூரமான ஒலிகள் தவிர முற்றிலும் அமைதியாக இருந்த அந்த நேரத்தில் குதிரைக் குளம்புகளின் ஒலி அளவாக வரிசையொத்துத் தொடர்ந்து ஒலிப்பது என்னவோ போலிருந்தது.
பூ சிறிது சிறிதாக மலர்ந்து இதழ்களின் நறுமணமும், அழகும் பரவுவது போல் ஒளியின் மலர்ச்சியை நோக்கி இருள் தோற்று நைந்து கொண்டிருக்கும் அந்தப் பின்னிரவு நேரத்தில் மண்ணும், விண்ணும், மரங்களும், செடி கொடிகளும் தன்னைச் சுற்றியுள்ள எங்கும் எதுவும் வார்த்தைகளின் பொருள் எல்லைக்குள் சிக்காத ஒரு பேரழகில் தோய்ந்தெழுந்து கொண்டிருப்பது போல் அவன் கண்களுக்குத் தோன்றியது.
தென் பாண்டி நாட்டுப் படைத் தலைவனுக்கு வாள் முனையில் போரிடும் வீரச்சுவை ஒன்று மட்டும் தான் கை வந்த பழக்கம் என்பதில்லை; ஆண்மையும், பருவமும், பொறுப்பும் வந்த பின்பு கற்றுத் தெரிந்து கொண்ட சுவை அது. இரத்தத்தோடு இரத்தமாகப் பழக்கத்தோடு பழக்கமாகத் தமிழ்ச் சுவையும், கவிச்சுவையும் பிறவியிலேயே வல்லாளதேவனிடம் இயல்பாக அமைந்திருக்கின்றன. எத்தகைய குழப்பமும் கலவரமும் தன்னையும், தன் பொறுப்பையும் சூழ்ந்திருந்தாலும் சுற்றுப்புறத்தின் அழகில், அந்த அழகு உண்டாக்கும் சிந்தனைகளில் தோயும் வழக்கம் மனப் பண்பால் அவனுக்கு இருந்தது.
தளபதி கோட்டாற்றை அடைந்து படையிருப்பினுள் நுழையும் போது கீழ்த்திசை வெளுத்துவிட்டது. விடிந்ததும் விடியாததுமாகத் திடீரென்று தளபதி கோட்டைக்குள் வரவே அங்கிருந்த பலவகைப் படைகளையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான வீரர்கள் பரபரப்புக்கு உள்ளானார்கள். 'என்னவோ? ஏதோ? படைத் தலைவருடைய திடீர் வருகையின் விளைவு யாதாயிருக்குமோ?' என்று வீரர்கள் தங்களுக்குள் மெதுவாகப் பேசிக் கொண்டனர். நால்வகைப் பெரும்படைகளும், ஆயுதச் சாலைகளும், யானைகளும், குதிரைகளும் வரிசை வரிசையாகக் கட்டப்பட்டிருந்த கொட்டங்களும் நிறைந்த அப்பெரிய கோட்டையில் மிகச் சில விநாடிகளுக்குள் ஒரு புதிய சுறுசுறுப்புப் பரவிவிட்டது. எதையோ எதிர்பார்த்து ஆவலோடு துடித்து நிற்கும் எழுச்சி ஏற்பட்டிருந்தது. தளபதியின் கீழ் உள்ள படை அணிகளின் தலைவர்களெல்லாம் விழிப்பும், தூக்கமும் ஒன்றோடொன்று போரிடும் சோர்ந்த கண்களோடு ஓடோடி வந்து அவனை வரவேற்றனர். அவனது கட்டளையை எதிர்நோக்கிக் கட்டிக் காத்து நின்றனர் அவர்கள்.
தளபதியின் கண்கள் அவர்களுள் யாரோ ஒருவரை மட்டும் குறிப்பிட்டுத் தேடுவது போல் சுழன்றன. ஒவ்வொருவராகப் பார்த்துக் கொண்டு வந்த அவன் பார்வை ஆபத்துதவிகளின் படைக்குத் தலைவனான மகர நெடுங்குழைக்காதனின் மேல் ஒரு கணம் நிலைத்தது. அந்தப் பார்வையின் குறிப்பைப் புரிந்து கொண்டு ஓரிரு அடிகள் முன் வைத்து நடந்து வந்து வணங்கினான் மகர நெடுங்குழைக்காதன்.
"குழைக்காதரே! ஆபத்துதவிகள் படையைச் சேர்ந்த வீரர்களெல்லாம் கோட்டைக்குள் தானே இருக்கிறார்கள்?" என்று கேட்டான் தளபதி.
"ஆம்! எல்லோரும் கோட்டைக்குள்ளே இருக்கிறார்கள்?"
"நல்லது! மற்றவர்கள் போகலாம்! குழைக்காதரும் நானும் தனிமையில் சிறிது நேரம் பேச வேண்டும்..."
குழைக்காதனைத் தவிர அங்கு நின்று கொண்டிருந்த மற்றவர்கள் வெளியேறினர். தென்னவன் ஆபத்துதவிகள் என்பார் படைகளுள் ஒரு முக்கியமான பிரிவினர். தென்பாண்டி நாட்டு அரசமரபினரின் உயிருக்குக் கவசம் போன்றவர். வெளிப்படையாகத் தெரிந்தோ, தெரியாமலோ ஆபத்துதவிகளின் காவல் இருந்து கொண்டிருக்கும். ஆட்சியில் குழப்பம், சூழ்ச்சி, சதி இவற்றில் ஏதாவது ஏற்பட்டாலோ, ஏற்படுவதாகத் தெரிந்தாலோ தளபதி ஆபத்துதவிகளைப் பயன்படுத்தலாம்.
ஆபத்துதவிகளைப் பயன்படுத்த வேண்டிய அத்தகைய நெருக்கடி இப்போது தளபதி வல்லாளதேவனுக்கு ஏற்பட்டிருந்தது. யாரால் எப்போது என்ன ஏற்பட முடியுமென்று அவனால் சிந்திக்கவோ, சொல்லவோ முடியவில்லை. இரவு நடந்தவற்றை நினைத்தால் இடையாற்று மங்கலம் நம்பியின் மேலேயே அவனுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டது. இரண்டு ஆறுகளுக்கு நடுவேயுள்ள அந்தச் சின்னஞ்சிறு தீவில் மகாமண்டலேசுவரரின் உள்ளத்திலும், மாளிகையிலும் நிறைந்து கிடந்த சூழ்ச்சிகளை எண்ணியபோது அவன் திகைத்தான். 'ஒரு பெரிய இரவின் சிறிய சில நாழிகைகளுக்குள் இடையாற்று மங்கலத்தில் இவ்வளவு மர்மங்களைப் புரிந்து கொள்ள முடியுமானால் சில நாட்கள் இரவும் பகலும் எந்நேரமும் அங்கேயே முழுமையாகத் தங்கியிருந்தால் இன்னும் எவ்வளவோ தெரிந்து கொள்ள முடியும்?' என்று எண்ணினான் அவன்.
தளபதியின் முகத்தில் தோன்றி மறையும் ஆழ்ந்த சிந்தனைகளின் சாயையைப் பார்த்துக் கொண்டே பயபக்தியோடு எதிரில் நின்று கொண்டிருந்தான் மகர நெடுங்குழைக்காதன்.
"ஓ! உங்களை நிறுத்தி வைத்துக் கொண்டு நான் ஏதோ சிந்தனையில் மூழ்கிவிட்டேன்!"
"பரவாயில்லை! நான் காத்திருப்பேன்" என்று அடக்கமாகக் கூறினான் மகர நெடுங்குழைக்காதன்.
"குழைக்காதரே! நேற்று மாலை குமரித் துறையில் மகாராணியார் வழிபாட்டுக்கு வந்திருந்த போது நடந்த நிகழ்ச்சி பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். தென்பாண்டி நாட்டுக்கு இது ஒரு சோதனைக்காலம். நமக்குத் தெரியாமலே நம்மைச் சுற்றிச் சதிகள் நடந்து கொண்டிருக்கின்றன. சிறிது காலத்துக்கு நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். அறிவின் பலத்தையோ, சிந்தனையின் வன்மையையோ கொண்டு மட்டும் இவற்றைச் சமாளித்து விட முடியாது. இப்போது நான் சொல்வதை நீங்கள் நன்றாகக் கவனித்துக் கேட்க வேண்டும். ஆபத்துதவிப் படைகள் இன்னும் சிறிது காலத்துக்குப் புறத்தாய நாட்டுக் கோட்டையில் மகாராணியாரைச் சுற்றி இருப்பது நல்லது. கூடியவரையில் இந்தப் பாதுகாப்பு ஏற்பாடு வெளியில் அதிகம் பரவித் தெரிந்து விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மகாராணியாரைச் சுற்றியோ, அல்லது கோட்டைப் பகுதிகளிலோ சந்தேகத்துக்குரிய ஆட்கள் யார் நடமாடினாலும் கண்காணித்து எனக்குத் தகவல் அனுப்பவேண்டும்."
"இப்போதே ஆபத்துதவிகளோடு புறப்படுகிறேன்."
"புறப்படுவது சரி! இன்றைக்கு அங்கே தென்பாண்டி மண்டலக் கூற்றத் தலைவர்களின் கூட்டம் நடைபெறுகிறது. அதற்காக இடையாற்று மங்கலம் நம்பி அங்கு வர இருக்கிறார். அவர் போய்ச் சேருவதற்கு முன்பே நீங்களும் ஆபத்துதவிப் படைகளும் அங்கே போய்ச் சேர்ந்து விட வேண்டும்."
"அப்படியே செய்கிறோம்."
"இடையாற்று மங்கலம் நம்பி இன்று அல்லது நாளை வரை அரண்மனையில் தங்குவார். நீங்கள் முடிந்த மட்டில் அவருடைய பார்வையில் தென்படாமல் இருக்கவே முயலுங்கள்."
"எங்களால் இயன்றவரை அவருடைய கவனத்துக்கு ஆளாகமலே இருக்க முயல்கிறோம்."
"நீங்கள் புறப்படலாம், தாமதம் செய்யாதீர்கள்" - தளபதி வல்லாளதேவன் ஆபத்துதவிகள் படைத்தலைவனான மகர நெடுங்குழைக்காதனுக்கு விடைகொடுத்து அனுப்பினான்.
பொழுது விடிந்து நன்றாக வெயில் பரவிவிட்டது. அங்கேயே நீராடிவிட்டுக் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு கூற்றத் தலைவர் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகத் தானும் கோட்டைக்குப் புறப்பட்டுச் செல்ல நினைத்தான் அவன். இவ்வாறு நினைத்துக் கொண்டே படைக் குடியிருப்பின் வாயிற்புறமாக வந்து மேற்கே சாலையில் ஆபத்துதவிப் படைகள் அணிவகுத்துக் கோட்டைக்குப் புறப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தான். படைத் தலைவன் மகர நெடுங்குழைக்காதன் புறப்படுவதற்கு முன்னால் இறுதியாகத் தளபதி வல்லாளதேவனுக்கு வணக்கம் செலுத்தி மரியாதை செய்தான்.
"நீங்கள் போகலாம். நான் கூட இன்னும் சிறிது நேரத்தில் அங்கு வருவேன்" என்று சொல்லி அனுப்புவதற்காகத் தளபதி வாய் திறந்த போது கீழ்ப்புறம் இடையாற்று மங்கலத்துக் கிளை வழியில் குதிரை வரும் ஒலி கேட்டது. வல்லாளதேவன் வியப்போடு திரும்பிப் பார்த்தான். குதிரை மேல் வந்து கொண்டிருந்த வீரன் அவர்களை நோக்கித்தான் வருவது போல் தெரிந்தது.
"நீங்கள் புறப்படுங்கள்! தாமதிக்க வேண்டாம்" என்று குழைக்காதனைத் துரிதப்படுத்தினான் தளபதி. "யாரோ வருகிறாற் போலிருக்கிறதே!" என்று சொல்லித் தயங்கினான் குழைக்காதன்.
"வரட்டும்! நான் பார்த்து விசாரித்துக் கொள்கிறேன். நீங்கள் நிற்கக் கூடாது. உடனே புறப்பட்டு விடுங்கள்." தளபதியின் குரலிலிருந்த அவசரத்தைப் புரிந்து கொண்டு குழைக்காதன் படைகளுடன் கிளம்பினான். அவனும் படைகளும் மேற்கே சிறிது தூரம் சென்று மறையும் வரையில் பார்த்துக் கொண்டிருந்து விட்டுக் கிளம்பினான் தளபதி வல்லாளதேவன். யாரோ சிரிக்கும் ஒலி கேட்டது.
"என்ன தளபதி? ஆபத்துதவிகளை அனுப்பியாயிற்றல்லவா?" என்று கேலியாகச் சிரித்துக் கொண்டே கேட்டவாறு குதிரையிலிருந்து இறங்கினான் நாராயணன் சேந்தன்.
---------
1.19. துறவியின் காதல்
இடையாற்று மங்கலம் தீவில் வைகறையின் அழகிய சூழ்நிலையில் வசந்த மண்டபத்துப் பொழிலிலுள்ள மரங்கள் அசைந்தன. இலைகளிலும், பூக்களிலும், புல் நுனிகளிலும் முத்துப் போல் திரண்டிருந்த வெண்பனித் துளிகள் இளகி உதிர்ந்தன. பொழிலில் மலர்ந்திருந்த சண்பகம், கோங்கு, வேங்கை, மல்லிகை, முல்லை மலர்களின் நறுமணத்தைத் தென்றல் காற்று வாரிக் கொண்டு வந்தது. வாவிகளிலும் சித்திரப் பூங்குளத்திலும், செம்மையும், வெண்மையுமாக ஆம்பலும், தாமரையும் அலர்ந்து விரிந்து, வண்டுகளை விருந்துக்கு அழைத்தன. காதலனின் பருத்த தோளைத் தன் மெல்லிய கைகளால் அணைத்துத் தழுவும் காதலியைப் போல் கரையோரத்து மரங்களின் பருத்த அடிப்பகுதியைப் பறளியாற்று நீர்த்தரங்கள் தழுவிச் சென்றன. இலைகளிலும், பூக்களிலும், குங்குமக் கரைசல் போல் பொங்கிவரும் செந்நீர்ப் பரப்பிலும், இளங் கதிரவனின் ஒளிக் கதிர்கள் மின்னின. வசந்த மண்டபத்து விமான மதிற்சுவர்களின் மாடங்களில் அடைந்து கிடந்த மணிப்புறாக்கள் கூட்டமாக வெளிப்பட்டுப் பறந்தன.
பொழுது புலர்ந்து விட்டது. ஒளியின் ஆட்சிக்கு உரியவன் கிழக்கே அடிவானத்தைக் கிழித்துக் கொண்டு கிளர்ந்தெழுந்து விட்டான். ஆனால் வசந்த மண்டபத்துப் பள்ளியறையின் பொற்கட்டிலில் இரத்தினக் கம்பள விரிப்புகளின் மேல் படுத்துக் கொண்டிருந்த அந்த இளம் துறவி மட்டும் இன்னும் விழித்துக் கொள்ளவில்லை. ஐயோ, பாவம்! நன்றாக அயர்ந்து தூங்குகிறார் போலிருக்கிறது. பள்ளியறையின் அழகிய ஓவியப் பலகணி வழியே ஒளிக்கதிர்கள் கட்டிலின் விளிம்பில் பட்டும் அவர் உறங்கிக் கொண்டு தான் இருக்கிறார்.
அப்போது அந்தப் பள்ளியறையின் கதவுகளைச் செந்தாமரை மலர் போன்ற அழகும், செண்பக அரும்பு போன்ற விரல்களும் பொருந்திய அந்தப் பெண் கரம் திறந்தது. முன் கையில் வெண்மையான சங்கு வளையல்களையும் விரல்களில் பொன் மோதிரங்களையும் அணிந்திருந்தது.
வனப்பு நிறைந்த அந்த மலர்க் கரத்துக்கு உரியவள் யார்? அருகில் நெருங்கிப் பார்க்கலாம். ஆ! இடையாற்று மங்கலம் நம்பியின் புதல்வி குழல்வாய்மொழி அல்லவா இவள்? அடடா? இந்த விடியற்காலை நேரத்தில் இவ்வளவு அழகான பூம்பொழிலின் இடையே அலங்காரமான வசந்த மண்டபத்தின் கதவருகே தங்கப் பதுமை ஒன்று உயிர் பெற்று நிற்பது போல் அல்லவா நிற்கிறாள்? நீராடி, அகிற்புகையூட்டிய கூந்தல் மேகக் காடு போல் விளங்கியது. அந்த மேகக் காட்டில் மின்னும் பிறைமதி போல் கொடை மல்லிகைச் சரத்தை அள்ளி முடித்திருந்தாள். சுழலும் கரு வண்டுகள் போல், பிறழும் கெண்டை மீன்கள் போல் மலர்ந்த விழிகளும், சிரிக்கும் செம்பவழ இதழ்களுமாகக் கதவருகே தயங்கி நின்றாள் குழல்மொழி.
உறங்கிக் கொண்டிருப்பவரை எழுப்பிவிட வேண்டுமென்றும் ஆசை; அதே சமயத்தில் கதவைப் பலமாகத் தட்டி ஓசை உண்டாக்குவதற்கும் பயமாக இருந்தது. தயங்கித் துவண்டு மின்னலோ எனச் சிறிய இடை நெளிய அவள் நின்ற தோற்றம் நெஞ்சத்தைச் சூறையாடுவதாக இருந்தது.
பலகணியின் வழியே எட்டிப் பார்த்து, "அடிகளே!" என்று கிளி மிழற்றுவது போல் மெல்லக் கூப்பிட்டாள் அவள். பள்ளியறைக் கட்டிலில் படுத்திருந்த இளந் துறவி புரண்டு படுத்தார்.
"அடிகளே! இன்னும் உறக்கத்தை உதறிவிட்டு எழுந்திருப்பதற்கு உங்களுக்கு மனம் வரவில்லையா? பொழுது நன்றாகப் புலர்ந்து விட்டதே?" இரண்டாவது முறையாகச் சற்று இரைந்தே கூப்பிட்டாள் குழல்மொழி. அதனோடு கதவிலும் தட்டவே, தட்டிய ஒலி, அதைச் செய்த மென்பூங்கைகளில் செறிந்திருந்த வளைகளின் ஒலி - எல்லாமாகச் சேர்ந்து துறவியின் உறக்கத்துக்குத் திருப்பள்ளி எழுச்சி பாடிவிட்டன. துறவி கண் விழித்தார். மஞ்சத்தில் எழுந்து உட்கார்ந்தார். விரத நியமங்களாலும், தவத்தாலும் வருந்திய ஒரு துறவியின் உடம்பு போலவா தோன்றுகிறது அது? ஆகா! என்ன கட்டழகு? தீக்கொழுந்து போல் எவ்வளவு சிவப்பான நிறம்? வாலிபத்தின் அழகு முழுமையாய் நிறைந்து, ஆசையைக் களையும் தவத்தொழிலில் இருந்து தம்மைக் காண்போர் கண்களின் ஆசையை வளர்த்துவிடும் போலிருக்கிறதே இந்தத் துறவியின் தோற்றம்!
"ஓ! நீயா? இந்த நேரத்துக்குள் எழுந்து நீராடி, பூச்சூடி அலங்கரித்துக் கொண்டு என்னையும் எழுப்புவதற்கு வந்து விட்டாயே?" எழுந்து உட்கார்ந்த துறவி அவள் வெளியே நின்று கொண்டு தம்மை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதைக் கண்டு இவ்வாறு கூறினார்.
"ஆமாம்! அதிகாலையில் எழுந்திருந்து தவக் கடன்களையும், நியம ஒழுக்கங்களையும் தவறாமல் செய்ய வேண்டிய துறவிகளே இப்போதெல்லாம் அதிக நேரம் தூங்கத் தொடங்கி விட்டார்கள். அதன் கதி என்ன ஆவது?" - அவள் வேண்டுமென்றே குறும்பாகப் பேசினாள். நீண்ட முகமும், கூரிய நாசியும், பிறரை மயக்கும் வசீகர விழிகளும் பொருந்திய அந்தத் துறவி ஓரிரு கணங்கள் அவளையே உற்றுப் பார்த்தார். அவருடைய இதழ்களில் மோகனப் புன்னகை அரும்பியிருந்தது. தோள்களையும் மார்பையும் சேர்த்துப் போர்த்திக் கொண்டிருந்த மெல்லிய காவித் துணி விலகி நழுவியது. அடியில் சிறுத்து மேலே பரந்து அகன்ற பொன் நிற மார்பு, உருண்டு திரண்ட வளமான தோள்கள், அவற்றைக் குழல்மொழி கடைக் கண்களால் திருட்டுப் பார்வை பார்த்தாள். பிறகு அவள் தரையைப் பார்த்தாள். கன்னங்கள் சிவந்தன. 'இவர் துறவியா? அல்லது நம் போன்ற பேதைப் பெண்களிடம் உள்ளங்களையெல்லாம் கொள்ளை கொள்வதற்கு குமாரவேள் கொண்ட மாறு வேடமா?' என்று எண்ணி எண்ணி உள்ளம் உருகினாள் குழல்மொழி.
"பெண்ணே நீ என் மேல் வீணாகப் பழி சுமத்துகிறாய்! மான் தோலில் படுத்துத் தூங்கும் துறவியைப் பஞ்சணைகளோடு கூடிய மஞ்சத்தில் உறங்க வைத்தால் அவன் அந்தப் புதிய சுகத்தில் தன்னையும் மறந்து நேரத்தையும் மறந்து விடுவது தானே இயற்கை?"
"பரவாயில்லை! துறவியை நாங்கள் மன்னித்து விடத் தயாராக இருக்கிறோம். எழுந்திருந்து வாருங்கள். நீராடுவதற்குப் போகலாம்."
"நீராடுவதற்கு வேறு எங்கே போகவேண்டும்? இதோ இங்கேயே வசந்த மண்டபத்துக்குப் பின்னால் பறளியாற்றுப் படித்துறை இருக்கிறது. நீ சிரமப்பட வேண்டாம். நான் இங்கேயே நீராடிக் கொள்கிறேன்."
"ஐயோ! கூடாது. அப்பா சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். பறளியாற்றில் புதுத் தண்ணீர் பாய்கிறது. உடலுக்கு ஒத்துக் கொள்ளாது. நீங்கள் பேசாமல் என்னோடு எழுந்து வாருங்கள். நான் சொல்கிறபடி கேளுங்கள். நீங்கள் இருக்கிற வரை உங்களைக் கவனித்துக் கொள்ள வேண்டியது என் பொறுப்பு என்று சிறிது நேரத்துக்கு முன்பு தான் அப்பா கூறிவிட்டுப் போனார்" என்றாள் குழல்மொழி.
"அப்படியானால் மகாமண்டலேசுவரர் இப்போது இங்கு இல்லையா?" என்றார் துறவி.
"இல்லை! மகாராணியாரைச் சந்திப்பதற்காகப் போயிருக்கிறார்."
"என்ன காரியமாகப் போயிருக்கிறாரோ? என்னிடம் சொல்லிக் கொள்ளாமலே போய்விட்டாரே!"
"எனக்கு அதெல்லாம் ஒன்றும் தெரியாது! அவர் திரும்பி வருகிற வரை தங்களுக்கு இங்கு ஒரு குறைவும் இல்லாமல் கவனித்துக் கொள்ள வேண்டுமென்று எனக்கு உத்தரவு."
துறவி ஒன்றும் மறுமொழி கூறாமல் அவளுடைய முகத்தை ஏறிட்டுப் பார்த்துப் புன்னகை புரிந்தார்.
கருகருவென்று அடர்ந்து வளர்ந்திருந்த இளந் தாடிக்கு மேல் சிவந்த உதடுகள் நெகிழ அவர் சிரித்த சிரிப்பு குழல்மொழியைக் கிறங்க வைத்தது. துறவி நீராடப் புறப்படுவதற்காக எழுந்தார். இரண்டு கைகளையும் உயர்த்தி மேலே தூக்கிச் சோம்பல் முறித்த போது, மூங்கிலின் மேல்புறம் போல மின்னிய அந்த வளமான புஜங்களின் அழகு மகாமண்டலேசுவரருடைய புதல்வியின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது.
"வாருங்கள் நேரமாகிறது. அடிகளை அரண்மனை நீராழி மண்டபத்தில் கொண்டு போய் விட்டுவிட்டுப் பூசைக்காக நான் மலர் கொய்து வரவேண்டும்" என்று குழல்மொழி துறவியை அவசரப் படுத்தினாள்.
அவர் சிரித்துக் கொண்டே அவளைப் பின்பற்றி நடந்தார். குழல்மொழி அன்னம் போல் நடந்து சென்ற நடையின் அழகைக் கவியின் கண்களோடு பார்த்தார் துறவி. பாம்புப் படம் போல் விரிந்து சுருங்கிய அந்த நடையின் பின்புறக் காட்சி, மலர் சூடிய கரிகுழல், ஆமையின் புறவடிபோல் செவ்விய பாதங்கள் பெயர்த்து நடந்த பெருமை, அத்தனை அழகையும் கண்குளிர நோக்கிக் கொண்டே அவளுக்குப் பின்னால் மெல்லச் சென்றார் அவர்.
வழியில் ஒரு முறை பின்னால் திரும்பி அவரைப் பார்த்தாள் அவள். அவர் முறுவல் புரிந்தார். காரணமில்லாமல் சும்மா பார்த்ததாக அவர் எண்ணிக் கொள்ளக் கூடாது என்பதற்காக, "அடிகளே! தாங்கள் வழக்கமாக எந்த மலர்களைக் கொண்டு பூசையில் வழிபடுவீர்கள் என்று நான் அறிந்து கொள்ளலாமா?" என்று கேட்டாள்.
"பயப்படாதே, பெண்ணே! இந்த இடையாற்று மங்கலம் தீவில் இல்லாத மலரின் பெயரெதையாவது சொல்லி உன்னைத் திண்டாட வைத்து விட மட்டேன் நான்."
"ஏன்? அடிகள் கேட்டுப் பார்ப்பதுதானே? இந்தத் தீவில் இல்லாத மலர்களே கிடையாதென்பது அடிகளுக்குத் தெரியாது போலும்!"
"இதோ, எனக்கு முன்னால் நடந்து கொண்டிருக்கிறதே, இந்த மலரையும் சேர்த்துத்தானே சொல்கிறாய்?" துறவி குறும்புப் பார்வையோடு சுட்டு விரலை அவள் பக்கமாக நீட்டிக் காட்டினார். குழல்மொழி விருட்டென்று திரும்பினாள். இரு விழிகளும் மலர்ந்து விரிய அவருடைய முகத்தைப் பார்த்தாள்.
"நீ கோபித்துக் கொள்ளாதே. தவறாக வேறொன்றும் கூறிவிடவில்லை. உன்னை ஒரு மலராக உருவகம் செய்து கூறினேன்" என்றார் துறவி.
"ஓகோ! உருவகம், உவமை - இந்த மாதிரிக் கவிதைத் துறையில் கூட அடிகளுக்கு அனுபவம் அதிகமோ?"
"எல்லாம் சூழ்நிலையின் சிறப்பு. இடையாற்று மங்கலம் நம்பியின் புதல்வி அருகே இருந்தால் கல்லும் மரமும் கூடச் சொல்லுமே கவி? என்னைப் போல் ஒரு வயதுத் துறவி ஏதோ ஒரு வார்த்தை சொல்லி விட்டதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்."
"ஏதேது? அடிகளைப் பேச விட்டுவிட்டால் விநயமாக நகைச்சுவையாகப் பேசிக் கொண்டே இருப்பீர்கள் போல் தோன்றுகிறதே."
"எல்லோரிடமும் அப்படிப் பேசி விட முடியுமா? ஏதோ உள்ளத்தில் பேச வேண்டுமென்று எனக்கு ஆசையாயிருந்தது, பேசினேன்."
இப்படிக் கூறியதும் மறுபடியும் அவள் தன் அகன்ற நீண்ட கருவிழிகளால் அவருடைய முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள். துறவியும் முன்போலவே அவளைப் பார்த்துப் புன்முறுவல் செய்தார்.
பேசிக் கொண்டே இருவரும் அரண்மனைக்குள் நீராழி மண்டபத்தின் கரையருகே வந்து நின்றனர். துறவி நீராடுவதற்குத் தயாரானார். "நீராடித் தயாராக இருங்கள். நான் நந்தவனத்தில் போய்ப் பூசைக்கு வேண்டிய மலர்களைக் கொய்து கொண்டு வருகிறேன்" என்று புறப்பட்டள் குழல்மொழி.
அவள் நந்தவனத்து வாசலில் நுழைய இருந்த போது ஆற்றின் கரையிலுள்ள படகுத் துறைப்பக்கமிருந்து படகோட்டி அம்பலவன் வேளான் வந்து கொண்டிருந்தான். அவன் அவளை நோக்கித்தான் வருவது போல் தெரிந்தது. அவசரமும் பரபரப்பும் அவன் வருகையில் தெரிந்தன.
"என்னைத் தேடித்தான் வருகிறாயா?" என்று அவள் கேட்டாள்.
"ஆமாம், அம்மா! போகும் போது உங்களிடம் தெரிவிக்கச் சொல்லி மகாமண்டலேசுவரர் இரகசியமாக ஒரு செய்தி கூறிவிட்டுச் சென்றிருக்கிறார். அதைச் சொல்லுவதற்காகத்தான் இவ்வளவு அவசரமாக வந்தேன்" என்று கூறிக் கொண்டே அவளை நெருங்கினான் படகோட்டி அம்பலவன் வேளான்.
-----------
1.20. கோட்டையில் நடந்த கூட்டம்
நாராயணன் சேந்தன் கேட்ட கேள்வியைச் செவியுற்றதும் தளபதி வல்லாளதேவன் திகைத்துப் போனான்.
"என்ன கேட்டாய்?" - மீண்டும் சந்தேகத்தோடு வினவினான் தளபதி.
"ஒன்றுமில்லை! நேற்று இரவோடு இரவாக யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் நீங்களாகவே படகைச் செலுத்திக் கொண்டு அவ்வளவு அவசரம் அவசரமாய் ஓடி வந்தீர்களே! வந்த காரியத்தைச் செய்தாயிற்றோ இல்லையோ என்று தான் கேட்டேன்."
தளபதி சேந்தனைச் சந்தேகத்தோடு பார்த்தான். அந்தக் குட்டையன் தன்னை வெற்றி கொண்டு விட்டது போல் எண்ணிச் சிரித்த சிரிப்பு தளபதி வல்லாளதேவனின் உள்ளத்தில் எரிச்சலை உண்டாக்கியது.
"எனக்கு அங்கே உறக்கம் வரவில்லை. படகுத் துறைக்கு வந்து பார்த்தேன். படகு தயாராக இருந்தது. எடுத்துக் கொண்டு புறப்பட்டு விட்டேன்; அவ்வளவுதான். நான் அங்கிருந்து புறப்பட்டதற்கு வேறு எந்த முக்கியமோ அவசரமோ இல்லை" என்றான் தளபதி.
நாராயணன் சேந்தன் இதைக் கேட்டு நமட்டுச் சிரிப்புச் சிரித்தான்.
"தளபதி! கொல்லர் தெருவிலேயே ஊசி விற்க நினைக்கிறீர்கள் நீங்கள். ஆபத்துதவிப் படைகளைக் கோட்டைக்கு அனுப்ப வேண்டுமென்பதற்காகவே நீங்கள் இங்கு வந்ததும் எனக்குத் தெரியும். இப்போது அனுப்பிவிட்டுத்தான் இங்கே நிற்கிறீர்கள் என்பதும் எனக்குத் தெரியும்."
தளபதி ஆத்திரத்தோடு சேந்தனை உற்றுப் பார்த்தான். நாஞ்சில் நாட்டு வேளாளப் பெருமக்கள் விதை நெல்லைச் சேர்த்து வைக்கும் நெல்லுக்குதிர் போன்ற உருவத்தையுடைய சேந்தனைக் கோபம் தீர உதைத்து விட வேண்டும் போல் கை துறுதுறுத்தது தளபதிக்கு. 'இடையாற்று மங்கலம் நம்பியைப் போன்ற ஒரு மாபெரும் இராஜதந்திரிக்கு ஒற்றனாக வேலை செய்ய இவன் முற்றிலும் தகுதியானவன் தான். அவருடைய திறமையான அரசியல் நிர்வாகத்தின் வெற்றியில் சரிபாதி இந்த ஒற்றனுக்கு உரியது' என்று தன் மனத்தில் எண்ணி வியந்து கொண்டான்.
'அவன் அந்த அதிகாலையில் தன்னைத் தேடிக் கொண்டு எதற்காக அங்கு வந்தான்? தான் அங்கிருப்பதை அவன் எப்படித் தெரிந்து கொண்டான்? ஆபத்துதவிப் படைகளை அனுப்புவதற்காகத் தான் அங்கே வந்திருக்கும் நோக்கத்தை அவன் எப்படிப் புள்ளி பிசகாமல் அனுமானிக்க முடிந்தது?' என்று பலவிதமாக எண்ணி மனம் குழம்பினான் தளபதி வல்லாளதேவன்.
"தென் திசைப் பெரும் படையின் மகா சேனாதிபதியும் இளமைப் பருவத்திலேயே பல போர்களில் வெற்றிவாகை சூடியவரும், சூழ்ச்சித் திறன் மிக்கவருமாகிய தங்களையும் கூற்றத் தலைவர் கூட்டத்துக்கு அழைத்து வரச் சொல்லி மகாமண்டலேசுவரர் அடியேனுக்குக் கட்டளையிட்டிருக்கிறார். அதை நிறைவேற்றவே இங்கு வந்தேன்."
நாராயணன் சேந்தன் இதைக் கூறிய போது அவன் சாதாரணமான விநயத்தோடு தான் அப்படிப் பேசுகிறானா? அல்லது தன்னைக் குத்தலாகக் கேலி செய்கிறானா? என்று தளபதிக்குச் சந்தேகமாக இருந்தது. அந்தச் சந்தேகத்தை மனத்துக்குள் அடக்கிக் கொண்டு, "சேந்தா! நீ என்னை அழைத்துக் கொண்டு போக வந்திருப்பதும், அதற்காக மகாமண்டலேசுவரர் உன்னை என்னிடம் அனுப்பியதும் வேடிக்கையாக அல்லவா இருக்கிறது? கூப்பிட்டாலும் கூப்பிடாவிட்டாலும் வழக்கமாகக் கூட்டத்துக்கு வரவேண்டியவன் தானே நான்?" என்று சிரித்துக் கொண்டே கேட்டான்.
"அப்படி இல்லை! நீங்கள் நேற்றிரவு திடீரென்று அங்கிருந்து யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் புறப்பட்டு விட்டதால் கூட்டத்துக்கு வருவீர்களோ, வரமாட்டீர்களோ என்று அவருக்குச் சந்தேகம்!"
"சில நாட்களாக மகாமண்டலேசுவரருடைய சந்தேகத்துக்கு யாரும் எதுவும் தப்ப முடிவதில்லை போலிருக்கிறது!" வேண்டுமென்றே சேந்தனின் வாயைக் கிண்டுவதற்காகத் தான் அவன் இவ்வாறு கூறினான். ஆனால் தளபதியின் பேச்சை விழிப்போடு கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த சேந்தன் சுடச்சுடப் பதில் சொன்னான்.
"ஆமாம்! ஆமாம்! இப்போதெல்லாம் தென்பாண்டி நாட்டு அரசாட்சியைத் தங்கள் பலத்தினால் மட்டுமே காப்பதாக எண்ணிக் கொண்டு மகாமண்டலேசுவரர் மேலேயே சிலர் சந்தேகப் படுகிறார்களாமே!"
சேந்தன் தன்னைத்தான் குத்திக் காட்டுகிறான் என்று தளபதிக்குப் புரிந்து விட்டது. ஆனாலும் அதைப் புரிந்து கொள்ளாதது போல் வேண்டுமென்றே அவன் சிரித்து மழுப்பினான்.
அதன் பின் அவர்கள் இருவரும் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. தளபதி வல்லாளதேவன் நீராடிக் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு வருகிறவரை சேந்தன் காத்திருக்க வேண்டியதாயிற்று. இருவரும் கூற்றத்தலைவர் கூட்டத்துக்காக அரண்மனைக்குப் புறப்பட்ட போது பொழுது நன்றாகப் புலர்ந்து வெயில் பரவிவிட்டது. படைப்பள்ளியிலிருந்து சிறிது தொலைவு சென்றதும் நேரே புறத்தாய நாட்டு அரண்மனைக்குச் செல்லும் வழியை விட்டுவிட்டுச் சுற்றி வளைத்துத் திருநந்திக் கரை வழியே அரண்மனை செல்லும் சாலையில் குதிரையை செலுத்தினான் சேந்தன். அந்தப் பாதையில் போகாமல் தளபதி குதிரையின் கடிவாளத்தைச் சுண்டி இழுத்து நிறுத்தினான். தளபதி பின் தங்கியதைப் பார்த்துச் சேந்தனும் குதிரையின் வேகத்தைக் குறைத்துக் கொண்டு திரும்பி, "என்ன தளபதி ஏன் நின்று விட்டீர்கள். நேரமாகவில்லையா?" என்று கேட்டான்.
"நீ போகிற பாதையாகப் போனால் கூட்டமெல்லாம் முடிந்த பின்புதான் அரண்மனைக்குப் போய்ச் சேரலாம். இதோ அரண்மனைக்கு நேர்பாதை இருக்கும் போது ஏன் திருநந்திக் கரையைச் சுற்றிக் கொண்டு போக வேண்டுமென்கிறாய்?" என்று தளபதி வல்லாளதேவன் சற்றுச் சினத்தோடு நாராயணன் சேந்தனை வினவினான்.
"பறளியாற்றில் உடைப்பெடுத்து வெள்ளம் அந்தச் சாலையில் பெரும் பகுதியை அழித்து விட்டதே! அது உங்களுக்குத் தெரியாதா? காலையில் மகாமண்டலேசுவரர் கூடத் திருநந்திக் கரைவழியாகச் சுற்றித்தான் அரண்மனைக்குப் போயிருக்கிறார்."
"ஓஹோ! அதுவா செய்தி? அப்படியானால் சரிதான். திருநந்திக் கரை வழியே போகலாம். விடு குதிரையை" - தளபதியின் குதிரை திருநந்திக் கரைச் சாலையில் திரும்பியது.
தளபதி வல்லாளதேவனையும், இடையாற்று மங்கலம் நம்பியின் ஒற்றனான நாராயணன் சேந்தனையும் இப்படியே திருநந்திக்கரை போகும் நெடுஞ்சாலையில் செல்லவிட்டு நாம் புறத்தாய நாட்டு அரண்மனைக்குச் சென்று அங்கு நடக்கும் முக்கிய நிகழ்ச்சிகளைச் சிறிது கவனிப்போம்.
வேறு வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த கூற்றத் தலைவர்கள் அரண்மனை மந்திராலோசனை மண்டபத்தில் கூடியிருந்தார்கள். கூட்டத்துக்கு முக்கியமான இருவர் யாரோ அவர்கள் மட்டும் இன்னும் வந்து சேரவில்லை. மகாமண்டலேசுவரர் இடையாற்று மங்கலத்திலிருந்தே இன்னும் வரவில்லை. அவர் வந்ததும் தமக்குச் சொல்லியனுப்பினால் தாம் உடனே புறப்பட்டு வந்துவிடுவதாக மகாராணி வானவன்மாதேவி அந்தப்புரத்திலிருந்து சொல்லியனுப்பியிருந்தார். தனிமையாக மண்டபத்தில் அமர்ந்திருந்த கூற்றத் தலைவர்கள் தங்கள் மனம் போன போக்கில் பேசித் தென்பாண்டி நாட்டு அரசியல் நிலைமை பற்றி விவாதிக்கத் தொடங்கினார்கள். அப்போது அங்கே கூடியிருந்த கூற்றத் தலைவர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியக்கூடாத இரகசியங்களைக் கூட அவர்கள் பேசினார்கள். அப்போது அந்த இடத்தில் எதைப் பேசலாம், எதைப் பேசக்கூடாது என்ற கட்டுப்பாடு இன்றி அவர்கள் தாராளமாகப் பேசியதற்குக் காரணம் தனிமைதான். தங்களை விடப் பெரியவர்கள், தங்களைக் கட்டுப்படுத்தக் கூடியவர்கள் அப்போது யாரும் இல்லை என்ற துணிவுந்தான். அவர்கள் எல்லோரும் நன்றாகத் தமிழ் நூல்களைக் கற்றுத் தன்னடக்கமும், பண்பும் நன்றாக வாயக்கப் பெற்றவர்தாம். பொறுப்பின்றி வாய்க்கு வந்தபடி பேசுதல், அளவுக்கு அதிகமாக உணர்ச்சி வசப்படுதல் இவற்றால் விளையும் கேடுகளைத் திருக்குறளில் படித்திருந்தார்கள்.
'நுனிக்கொம்பர் ஏறினார் அஃதிறந்து ஊக்கின்
உயிர்க் கிறுதி யாகிவிடும்.'
என்றெல்லாம் படித்திருந்தால் மட்டும் போதுமா? மந்திராலோசனை மண்டபத்தின் அரங்கத்தைச் சுற்றிக் கட்டியிருந்த பட்டுத் திரைச் சீலைக்குப் பின்னல் மறைந்து நின்று செவிப்புலனின் உணர்வைக் கூர்மையாக்கிக் கொண்டு ஒன்று விடாமல் ஒட்டுக் கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு மனித உருவத்தைப் பார்த்திருந்தால் அவர்கள் அப்படிப் பேசியிருக்க மாட்டார்கள்.
"இந்தத் தென்பாண்டி நாட்டுக்கு ஒரு பொல்லாத சோதனைக் காலம். தேசத்தின் பெரிய பெரிய அரசியல் பொறுப்புகள் தாய் இழந்த பிள்ளைகளைப் போல் ஆகிவிட்டன. எவனோ ஊர் பேர் தெரியாத ஒற்றன் மகாராணியாரை வேல் எறிந்து கொல்லத் துணிந்து விட்டான் என்றால் நம்முடைய வீரத்துக்கு எவ்வளவு பெரிய அவமானம்?" என்றார் தோவாழைக் கூற்றத்து நன்கனிநாதர்.
"மகாமண்டலேசுவரர் இடையாற்று மங்கலம் தீவை விட்டு அந்தப்புறம், இந்தப்புறம் அசையாமல் நாட்டு நிலையைப் பற்றிக் கவலையே இன்றி உட்கார்ந்திருக்கிறார். தென் திசைப் படைகளும் படைத் தலைவர்களும் வேளை தவறாமல் உடல் கொழுக்கத் தின்று விட்டுப் பொழுது போகாமல், படைப்பள்ளியில் தாயமும், சதுரங்கமும் விளையாடிக் கொண்டிருக்கிறார்களாமே? இப்படி இருந்தால் நாடு எப்படி உருப்படும்?" என்று ஆத்திரத்தோடு சொல்மாரி பொழிந்தார் பாகோட்டுக் கூற்றத்துப் பரிமேலுவந்த பெருமாள்.
"அது சரி, ஐயா! தளபதி என்று ஒருவர் மகா சேனாதிபதிப் பட்டம் கட்டிக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாரே! அவருக்குக் கண் அவிந்து போயிற்றா? அரச குடும்பத்தாருக்குப் பயங்கரமான ஆபத்துகள் ஏற்படுகிற சூழ்நிலையை அறிந்தும் ஆபத்துதவிப் படைகளை அனுப்பாமல் இருக்கலாமா? இப்படிப்பட்ட சமயங்களில் கூட உதவி செய்ய முடியாமல் அவர்கள் எதற்காகத்தான் இருக்கிறார்கள்?" என்று பொன்மானைக் கூற்றத்துக் கழற்கால் மாறானார் தம்முடைய மனக் கொதிப்புப் புலப்படும்படி பேசினார்.
"காணாமற் போன குமார சக்ரவர்த்தியைத் தேடுவதற்காக இதுவரை மகாமண்டலேசுவரரோ, தளபதியோ ஏதாவது முயற்சி செய்திருக்கிறார்களா? பொறுப்புள்ளவர்களே இப்படி இருந்தால் நாமெல்லாம் என்ன செய்ய முடியும்? இளவரசர் இராசசிம்ம பாண்டியர் கடல் கடந்து ஈழ நாட்டில் மறைந்து வசிப்பதாகச் சொல்லிக் கொள்கிறார்கள். இன்னும் சிலர் இளவரசர் பகைவர்களுக்காகப் பயந்து தென்பாண்டி நாட்டு எல்லைக்குள்ளேயே மறைந்து வசிக்கிறார் என்கிறார்கள். எது உண்மையென்று நமக்குத் தெரியவில்லை. இன்றையக் கூட்டத்தில் இதைப் பற்றியெல்லாம் விரிவாகப் பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும்!" என்று தம்முடைய கருத்தைத் தெளிவாகவும், நிதானமாகவும் ஆனால் அழுத்தமாகவும் எடுத்துக் கூறினார் அருவிக்கரைக் கூற்றத்து அழகிய நம்பியார்.
"இந்தக் குழப்பமான சூழ்நிலைகளால் மகாராணி மனம் நொந்து விரக்தியடைந்து போயிருப்பதாகப் பேசிக் கொள்கிறார்கள். மகாராணி வானவன்மாதேவி இந்த நாட்டில் கன்னியாகுமரித் தெய்வத்துக்கு அடுத்தபடியாக மரியாதைக்கும், வழிபாட்டுக்கும் உரியவர்கள். அவர் மனம் கலங்குமாறு செய்வது நம்முடைய பெருந்தன்மைக்கே இழுக்கு" என்று உணர்ச்சி நிறைந்த உருக்கமான குரலில் மீண்டும் அழுத்திக் கூறினார் முதலில் பேச்சைத் தொடங்கிய நன்கனிநாதர்.
"தாம் அமர பதவி அடைந்த பின்னர் இப்படியெல்லாம் நம்முடைய நாட்டுக்கும், புதல்வனுக்கும், பட்டத்தரசி வானவன்மாதேவியார்க்கும் துன்பங்களும், தொல்லைகளும் ஏற்படுமென்று பராந்தக பாண்டியச் சக்ரவர்த்தி கனவிலாவது எண்ணியிருப்பாரா? அவர் இருந்தால் தான் இப்படிப்பட்ட நிலைகள் ஒன்றும் ஏற்பட்டிருக்க முடியாதே?" என்று மிகுந்த ஏக்கத்தோடு கூறிப் பெருமூச்சு விட்டார் மற்றொரு கூற்றத் தலைவர்.
அவர்கள் இப்படி ஒருவரோடொருவர் பேசிக் கொண்டிருந்த போது மந்திராலோசனை மண்டபத்து வாசலில் யாரோ பலர் பேசிக் கொண்டே உள்ளே வரும் ஒலி கேட்டது. ஒரு சேவகன் முன்னால் வேகமாக ஓடி வந்து, "மகாமண்டலேசுவரரும், மகாராணியும் வந்து கொண்டிருக்கிறார்கள்" என்று கூற்றத் தலைவர்களுக்கு முன் தகவல் கொடுத்தான். மூலைக்கொருவராகத் தங்களுக்குத் தோன்றியபடி இருக்கைகளில் உட்கார்ந்து உரையாடிக் கொண்டிருந்தவர்கள் மரியாதையாக எழுந்து நின்றனர். தங்களை விட அதிகாரமும், மதிப்பும், பெருமையும் உள்ளவர்களை எதிர்பார்த்துச் சாதாரணமான மனிதர்கள் காத்திருக்கும் போது ஏற்படும் ஒரு வகை அமைதி அங்கே திடீரென்று நிலவியது. வேலேந்திய வீரர் ஒடுக்கமாக ஒதுங்கி நின்று கொண்டனர்.
மகாராணி வானவன்மாதேவியாரும், இடையாற்று மங்கலம் நம்பியும் மண்டபத்துக்குள் நுழைந்தனர். அவர்களுக்குப் பின்னால் அதங்கோட்டாசிரியர் பிரானும், பவழக்கனிவாயரும் வந்தனர். மகாராணியோடு ஆசிரியர் மகள் விலாசினியும், தளபதியின் தங்கை பகவதியும் உடன் வந்திருந்தனர். மண்டபத்தில் இருந்த கூற்றத் தலைவர்கள் எல்லோரையும் வணங்கி எதிர்கொண்டு வரவேற்றனர்.
"தளபதி வல்லாளதேவன் எங்கே? அவனை அழைத்து வரச் சொல்லி சேந்தனை அனுப்பினேனே! இன்றைய கூட்டத்தில் அவன் கலந்து கொள்வது அவசியமாயிற்றே? இன்னும் வரவில்லையோ?" என்று அங்கிருந்தவர்களிடம் கேட்டார் இடையாற்று மங்கலம் நம்பி. "வரவில்லை" என்று அவர்களிடமிருந்து பதில் கிடைத்தது. மண்டபத்தின் நான்கு புறமும் கண்களைச் செலுத்திச் சிறிது நேரம் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார் மகாமண்டலேசுவரர்.
"இதென்ன? இந்த மண்டபத்தில் ஏற்கெனவே காற்றுக் குறைந்து புழுக்கமாக இருக்கிறது. இந்தப் பட்டுத் திரைகள் எதற்கு? இவற்றை அகற்றி விடுங்கள்" என்று அங்கு நின்றிருந்த மெய்க்காப்பாளர்களை நோக்கித் திடீரென்று ஒரு கட்டளை பிறப்பித்தார் அவர். அப்போது திரைக்குப் பின்னால் யாரோ அவசரமாக நடந்து செல்லும் ஒலி கேட்டது.
--------
1.21. சேந்தன் செய்த சூழ்ச்சி
பறளியாற்று வெள்ளம் காரணமாகச் சுற்று வழியில் அரண்மனைக்குப் புறப்பட்டிருந்த சேந்தனும், தளபதியும் திருநந்திக்கரையை அடையும் போது ஏறக்குறைய நடுப்பகல் ஆகிவிட்டது. வல்லாளதேவனின் உடல் தான் குதிரை மேல் திருநந்திக்கரைச் சாலையில் சென்று கொண்டிருந்ததே யொழிய உள்ளம் முழுவதும் அரண்மனையில் நடந்து கொண்டிருக்கும் கூற்றத் தலைவர் கூட்டத்தில் லயித்திருந்தது.
'அடடா! இந்தப் பாழாய்ப்போன பறளியாற்று வெள்ளம் நம்முடைய திட்டத்தையே மாற்றிவிட்டதே? இன்னுமா அரண்மனையில் கூற்றத் தலைவர் கூட்டத்தைத் தொடங்காமல் இருக்கப் போகிறார்கள்? நேர்வழியாகப் புறப்பட்டுப் போயிருந்தால் இதற்குள் நாமும் ஒழுங்காக அரண்மனைக்குப் போய்க் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கலாம். நாம் போகவில்லை என்பதற்காகக் கூட்டம் நின்று விடவா போகிறது? நமக்குத்தான் பல விதத்தில் நஷ்டம்! இப்போதுள்ள தென்பாண்டி நாட்டு அரசியல் சூழ்நிலையில் மாறுதலைச் செய்வதற்கான முக்கியமான பல செய்திகளைக் கூட்டத்தில் விவாதித்திருப்பார்கள். போய்க் கலந்து கொண்டிருந்தால் கூற்றத் தலைவர்களும், மகாமண்டலேசுவரரும் எந்த நோக்கத்தில் கருத்துக்களை வெளியிடுகிறார்கள் என்று தெரிந்து கொண்டிருக்கலாம். ஊம்! நினைத்துப் பயன் என்ன? கூட்டம் முடிவதற்குள் அங்கு எப்படிப் போக முடியும்!'
இத்தகைய நினைவுகளோடு குதிரையில் சென்று கொண்டிருந்த வல்லாளதேவன் அடிக்கொருதரம் பெருமூச்சு விட்டான். பக்கத்தில் குதிரையை மெதுவாகச் செலுத்தியவாறே வந்து கொண்டிருந்த நாராயணன் சேந்தன் தளபதியின் முக மாறுதல்களையும் பிற செயல்களையும் உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டே வந்தான். அக்காலத்தில் திருநந்திக்கரையும், அதைச் சூழ அமைந்திருந்த இடங்களும் பூதப்பாண்டி முதலிய சிற்றூர்களும் சமணர்களும் அவர்களுடைய திருமடங்களும், தவப்பள்ளிகளும் நிறைந்துள்ள பிரதேசமாக இருந்தன. காலஞ்சென்ற பேரரசர் பராந்தக பாண்டியர் சைவ சமயத்தைப் போற்றி வளர்த்தாலும் ஏனைய சமயங்கள் வளரவும் உறுதுணை புரிந்தார். தமது அரசாட்சிக் காலத்தில் திருநந்திக்கரையிலுள்ள சமணப் பெரும்பள்ளிகள் சிறப்பாக நடைபெறுவதற்காக அவர் அளித்த பள்ளிச் சந்தப்பங்கள் பல. சமணர்கள் சீராக வாழ்ந்த காலத்தில் திருநந்திக்கரை மலைப் பகுதிகளில் அற்புதமான குகைக் கோவில்களைக் குடைந்தார்கள். சமண மதம் இப்போதுள்ள சூழ்நிலையில் அவ்வளவு சிறப்போடில்லையானாலும் அதன் பெருமைக்குரிய அடையாளங்கள் அங்கங்கே தென்படத்தான் செய்தன.
சமணர் திருமடங்களும், பெருந்தவப் பள்ளிகளும் நிறைந்த ஒரு பகுதியில் தளபதியும், சேந்தனும் குதிரையைச் செலுத்திக் கொண்டு சென்றனர். அழுக்கடைந்த ஆடையும் மயிற்பீலி தாங்கிய கையுமாக சமணத் துறவிமார்கள் வீதியில் அங்கும் இங்குமாகப் போய் வந்து கொண்டிருந்தனர்.
"சேந்தா! தண்ணீர் வேட்கை அதிகமாக இருக்கிறது. இங்கே பருகுவதற்கு நீர் கிடைக்குமா?" என்று ஒரு சமணப் பள்ளியைச் சுட்டிக் காட்டிச் சேந்தனிடம் கேட்டான் தளபதி.
"கிடைக்கும்! இறங்கி உள்ளே போய்க் கேளுங்கள். அதுவரை நான் குதிரையைப் பார்த்துக் கொண்டு இங்கே இருக்கிறேன்" என்றான் நாராயணன் சேந்தன்.
தளபதி குதிரையிலிருந்து இறங்கிச் சமணப் பள்ளியினுள் நுழைந்தான். அங்கே உட்புறம் உட்கார்ந்து ஏதோ பழைய சுவடியைப் படித்துக் கொண்டிருந்த வயது முதிர்ந்த துறவி ஒருவர் அவனைப் முன்முறுவல் செய்து வரவேற்றார். அவனுடைய தோற்றத்தையும், உடைகளையும் பார்த்தவுடனேயே அவன் பெரிய பதவியிலுள்ளவனாக இருக்க வேண்டுமென்பதை அந்தச் சமணத் துறவி தெரிந்து கொண்டார்.
"வாருங்கள்! உங்களுக்கு என்ன வேண்டும்?" என்று அன்புடனே விசாரித்தார் அவர்.
"சுவாமி! தாகம் அதிகமாயிருக்கிறது. பருகுவதற்குக் கொஞ்சம் தண்ணீர் வேண்டும்" என்றான் வல்லாளதேவன். துறவி எழுந்து சென்று அவனுக்குத் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தார். அவன் வேண்டிய மட்டும் பருகித் தாகத்தைத் தணித்துக் கொண்டான்.
"வெகு தூரம் பிரயாணம் செய்து அலுப்படைந்தவர் போல் தென்படுகிறீர்கள். இப்படிச் சிறிது படுத்திருந்து பிரயாணக் களைப்புத் தீர ஓய்வு எடுத்துக் கொள்ளுங்களேன்" என்று பரிவாக உபசரித்தார் அந்தத் துறவி.
"இல்லை. நான் அவசரமாகப் புறத்தாய நாட்டு அரண்மனைக்குச் செல்ல வேண்டும். தங்க நேரமில்லை" என்று அவன் கூறவும் வியப்புடன் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்த துறவி, "அடாடா! இவ்வளவு தூரம் வீணாக அலைந்திருக்கிறீர்களே? அரண்மனைக்குச் செல்லப் பறளியாற்றின் கரையை ஒட்டினாற் போலக் குறுக்குச் சாலை ஒன்று செல்கிறதே. அதன் வழியாகப் போயிருந்தால் இதற்குள் அரண்மனை போய்ச் சேர்ந்திருக்கலாமே. அதை விட்டு விட்டு இவ்வளவு தொலைவு அலைந்திருக்கிறீர்களே?" என்றார்.
"சுவாமீ! அந்த வழி எனக்கும் தெரியும்! ஆனால் பறளியாற்றில் வெள்ளம் வந்து நேற்று இரவே அந்தக் குறுக்கு வழியெல்லாம் உடைப்பெடுத்து மூழ்கி விட்டதாமே? அதனால் தான் சுற்று வழியாக இருந்தாலும் பரவாயில்லை என்று நானும் என் நண்பனும் இப்படி வந்தோம்."
"அப்படியா! வெள்ளம் உடைத்துக் கொண்டு போய் விட்டதென்று உங்களுக்கு யார் அப்படிச் சொன்னார்கள்?" என்று ஒரு தினுசாகச் சிரித்துக் கொண்டே கேட்டார் அவர்.
"ஏன்? என்னுடன் பிரயாணம் செய்யும் ஒரு நண்பன் தான் சொன்னான்."
"நான் இன்று காலையில் தானே அதே பாதையாக இங்கு வந்து சேர்ந்தேன்! பறளியாற்றில் வெள்ளம் போவது உண்மைதான். ஆனால் பாதை உடைப்பெடுத்து மூழ்கி விட்டதாக உங்கள் நண்பன் சொல்லியிருந்தல் அது முழுப் பொய்யாகத்தான் இருக்க வேண்டும்."
தூய்மை திகழும் அந்தத் துறவியின் முகத்தைப் பார்த்த போது அவர் கூறுவது பொய்யாக இருக்காது என்று தோன்றியது அவனுக்கு. திடீரென்று தளபதியின் சந்தேகம், கோபம் எல்லாம் நாராயணன் சேந்தன் மேல் திரும்பின. அவன் எதற்காகவோ, தன்னிடம் பொய் சொல்லித் தன்னைச் சுற்றி வளைத்து இழுத்தடிப்பதாகத் தோன்றியது. "சுவாமீ! ஒரு வேளை நீங்கள் வரும் போது ஆற்றில் வெள்ளம் குறைவாக இருந்திருக்கலாம். அதன் பின்பு அதிகமாகிச் சாலைகளை மூழ்கச் செய்திருக்கலாம் அல்லவா?" என்று தன் சந்தேகத்தை உறுதி செய்து கொள்வதற்காக மறுபடியும் கேட்டான் தளபதி. அவர் கலகலவென்று சிரித்தார். "ஐயா! நீங்கள் சிந்தனை உணர்வே இன்றிக் கேள்வி கேட்கின்றீர்கள். நான் இங்கு வந்து சில நாழிகைப் போதுக்கு மேல் ஆகியிருக்காது. பறளியாறு மிகவும் பள்ளமான இடத்தில் ஓடுகிறது. அரண்மனைக்குச் செல்லும் சாலையோ கரைமேல் மலைச்சிகரம் போல் மேடான இடத்தில் போகிறது. என்ன தான் வெள்ளம் வரட்டுமே, இந்த சில நாழிகை நேரத்தில் சாலைகளெல்லாம் அழிந்து மூழ்கியிருக்க முடியுமென்பதை என்னால் நம்பமுடியவில்லை."
நிதானமாகச் சிந்தித்த போது அவர் கூறுவது நியாயமாகவே பட்டது அவனுக்கு. தன் உணர்ச்சிகளையோ, கோபதாபங்களையோ அங்கே அந்தத் துறவிக்கு முன் வெளிக் காட்டிக் கொள்ள விரும்பவில்லை அவன். "சரி! நான் வருகிறேன் சுவாமீ! இவ்வளவு தொலைவு அலைந்தது அலைந்தாயிற்று. இனி எந்த வழியாகப் போனால் என்ன?" என்று அவரிடம் வணங்கி விடைபெற்றுக் கொண்டான்.
'இந்த ஊர் எல்லை கடக்கிறவரை நாராயணன் சேந்தனிடம் எதுவும் கேட்கக் கூடாது. எல்லை கடந்தவுடன் அந்தத் திருட்டுக் குள்ளநரியைக் குதிரையிலிருந்து கீழே பிடித்துத் தள்ளி இரண்டு கன்னங்களிலும் பூசைக்காப்புக் கொடுத்து, 'ஏனடா நாயே! என்னைப் பொய் சொல்லியா ஏமாற்றினாய்?' என்று கேட்க வேண்டும்!' இவ்வாறு மனக் கொதிப்புடன் எண்ணிக் கொண்டே திருநந்திக்கரைச் சமணப் பெரும் பள்ளியிலிருந்து வெளி வந்தான் தளபதி வல்லாளதேவன். படிகளில் இறங்கித் தெருவைப் பார்த்ததும் அவனுக்குப் பகீரென்றது. அங்கே நாராயணன் சேந்தன் இல்லை. நிறுத்திவிட்டுப் போயிருந்த தளபதியின் குதிரையும் இல்லை. வல்லாளதேவன் திகைத்தான். ஒரு விநாடி அவனுக்கு மேற்கொண்டு என்ன செய்வதென்றே புரியவில்லை. நெற்றி சுருங்கியது, புருவங்கள் வளைந்தன. விழிகள் சிவந்தன. தோள்கள் விம்மிப் புடைத்தெழுந்தன. வார்த்தைகளில் அடக்கி விவரிக்க முடியாத ஆத்திரம் அவனுள் குமுறியது. சேந்தன் தன்னை வேண்டுமென்றே ஏதோ ஒரு காரணத்துக்காக திட்டமிட்டு முட்டாளாக்கி விட்டது போல் இருந்தது அவனுக்கு. தான் அன்றையக் கூட்டத்தில் கலந்து கொள்ள அரண்மனைக்கு உரிய நேரத்தில் போய்விடாமல் தடுத்து அலைக்கழிக்கவே சேந்தன் தொடக்கத்திலிருந்து சூழ்ச்சி புரிந்து வந்திருக்கிறான் என்பதும் அவனுக்கு ஒருவாறு புரிந்தது. அப்போது மட்டும் தப்பித் தவறி நாராயணன் சேந்தன் அவனுக்கு முன்னால் அகப்பட்டிருந்தால் பழி பாவம் வந்தாலும் பரவாயில்லை என்று கொலை செய்வதற்குக் கூடத் துணிந்திருப்பான் அவன்.
'சேந்தன் எந்தப் பக்கமாகக் குதிரையைச் செலுத்திக் கொண்டு போனான்? எப்போது போனான்?' என்று அக்கம் பக்கத்தில் யாரிடமாவது விசாரிக்கலாமென்று எண்ணியவனாய்ச் சுற்றும் முற்றும் பார்த்தான் தளபதி.
சமணப் பள்ளியின் வாயிற்புறத்து மேடையில் இருபது இருபத்திரண்டு வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருத்தி பூ விற்றுக் கொண்டிருந்தாள். அவள் கையில் பூக்கூடை ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. கையிலே பூமாலை ஒன்றை வைத்துக் கொண்டிருந்தாள். கூடையில் ஆம்பல், தாமரை, மல்லிகை, முல்லை, சண்பகம், கோங்கு, வேங்கை முதலிய பல நிறங்களையும், பலவகையையும் சேர்ந்த புது மலர்கள் குவிந்திருந்தன. தான் தண்ணீர் குடிப்பதற்காகச் சமணப் பள்ளிக்குள் நுழைந்த போதும் அந்தப் பெண் அங்கே உட்கார்ந்திருந்ததாக நினைவிருந்தது வல்லாளதேவனுக்கு. அவளைக் கேட்டால் சேந்தன் எங்கே போனான் என்ற விவரம் தெரியலாம் என்று நினைத்தான்.
அந்தப் பூக்காரப் பெண் நல்ல அழகியாகக் காட்சியளித்தாள். அந்த நிலையில் மலர் குவியல்களுக்கிடையே அவளை எவனாவது ஒரு கவிஞன் பார்த்திருந்தால், "மலர்களுக்கிடையே - சாதாரணமான வெறும் மலர்களுக்கு இடையே - இளமையும், மோகமும், செறிந்த புதிய பெருமலர் ஒன்று பூத்துப் பொலிவுடன் வீற்றிருக்கிறது" என்ற கருத்து அமையும் படி ஒரு கவிதையே இயற்றியிருப்பான். செந்தாழை நிறமும், செங்குமுத இதழும் கருமேகக் கூந்தலுமாகப் பூப்போன்ற கையில் இருவாட்சி பூப்போன்ற விரல்களைக் கொண்டு பூக்களைத் தொடுத்துக் கொண்டிருந்தாள் அவள். சண்பகம் மொட்டுக்களைப் போன்ற அவளுடைய விரல்களில் ஒளிந்து கொண்டிருந்த திறமை உதிரிப் பூக்களை ஊழ்வினையை வரிசைப்படுத்தும் பரம்பொருள் நியதி போல் வரிசைப்படுத்தி வேகமாகவும் நளினத்துடனும் தொடுத்துக் கொண்டிருந்தது.
சிறிது நேரம் தன்னுடைய சொந்தக் கவலைகளையும் மறந்து அந்த விரல்களின் நளினத்தை விரல்களுக்குரியவளின் வனப்பை அனுபவித்து நோக்கினான் தளபதி. பின்பு தன் நினைவு வரப்பெற்றவனாய் மெல்ல நடந்து அவள் அருகில் சென்று, "பெண்ணே! சிறிது நேரத்துக்கு முன் இந்த மடத்து வாசலில் இரண்டு குதிரைகளும் ஒரு குட்டை மனிதனும் இருந்தார்களே, அவன் குதிரைகளைச் செலுத்திக் கொண்டு எந்தப் பக்கமாகப் போனானென்று உனக்குத் தெரியுமா?" என்று தன்னுடைய குரலில் கனிவையும், இனிமையையும் வரவழைத்துக் கொண்டு விசாரித்தான்.
கீழே குனிந்து பூத்தொடுத்துக் கொண்டிருந்த அந்தப் பெண் தலையை நிமிர்த்தி அவனைப் பார்த்தாள். அவள் முகத்தில் ஒருவித உணர்ச்சியும் தென்படவில்லை. உதடுகள் அசைந்து கோணின. பதில் சொல்லவில்லை.
"உன்னைத்தான் அம்மா கேட்கிறேன். பதில் சொல்லேன்" என்று சிறிது உரத்த குரலில் இரைந்தான் தளபதி. அப்போதும் அவள் வாயிலிருந்து பதில் வரவில்லை. "ஐயா உங்களுக்கு என்ன வேண்டும். அந்தப் பெண்ணுக்குப் பேச வராது. அவள் பிறவிச் செவிடு - பிறவி ஊமை." பின்னாலிருந்து குரல் வந்தது.
தளபதி திரும்பிப் பார்த்தான். அந்தப் பெண்ணின் தந்தைபோல் தோன்றிய வயதான கிழவன் ஒருவன் நின்று கொண்டிருந்தான். கேள்விப்பட்ட உண்மையில் ஏற்பட்ட அதிர்ச்சி, தான் கேட்க வேண்டிய கேள்வியைக் கூட மறந்து போகச் செய்து விட்டது. 'அவளா ஊமை? அமுதக் குடம் போல் பருவத்தின் அழகு மெருகு செய்திருக்கும் அந்தப் பொற் சித்திரப் பாவையா ஊமை?'
தளபதி பரிதாபத்தோடு அவளைப் பார்த்தான். 'படைப்புக் கடவுள் பொல்லாதவன், மிகமிகப் பொல்லாதவன்!' என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான் அவன்.
"என்ன ஐயா? பூ எதாவது வேண்டுமா? வேண்டுமானால் சொல்லுங்கள். தரச் சொல்கிறேன்" என்று அந்தக் கிழவன் தொண தொணத்தான்.
"ஒன்றும் வேண்டாம்! இங்கே வாசலில் என் நண்பன் ஒருவன் குதிரைகளோடு நின்று கொண்டிருந்தான். நான் மடத்துக்குள் சென்று திரும்புவதற்குள் திடீரென்று எங்கோ போய்விட்டான். அவன் எந்தப் பக்கமாகப் போனான் என்று எனக்குத் தெரிய வேண்டும்."
"எனக்குத் தெரியாது! நான் பார்க்கவேயில்லை, ஐயா!" என்று கையை விரித்து விட்டான் கிழவன். 'இங்கே இவர்களிடம் விசாரித்துப் பயன் இல்லை' என்று எண்ணிக் கொண்டு சாலையில் இறங்கி நடந்தான் தளபதி.
போகும் போது கடைசி முறையாக அந்தப் பூக்காரப் பெண்ணை அவன் கண்கள் ஏக்கத்தோடு பார்க்கத் தவறவில்லை. தன்னை ஏமாற்றிய சேந்தன், அவனுடைய சூழ்ச்சிகள் வேறு எத்தனையோ முக்கியமான சிந்தனைகள் - எதுவும் அப்போது தளபதியின் உள்ளத்தில் மேலெழுந்து நிற்கவில்லை. கால் போன போக்கில் நடந்து கொண்டே, பொருத்தமில்லாத இடத்தில் பொருத்தமில்லாத அழகை வைத்து விடும் படைப்பின் முரண்பாட்டைச் சிந்தித்துக் கொண்டே சாலையில் நடந்தான். எங்கே போகிறோம் என்ற நினைவே இல்லை அவனுக்கு.
--------------
1.22. அடிகள் கூறிய ஆரூடம்
துறவியை நீராடச் சொல்லிவிட்டு அவருடைய பூசைக்கு வேண்டிய மலர்களைக் கொய்வதற்காக நந்தவனத்துக்குச் சென்ற குழல்மொழியை அம்பலவன் வேளான் சந்தித்தான் அல்லவா? மகாமண்டலேசுவரர் உங்களிடம் சொல்லும்படி முக்கிய செய்தி கூறியனுப்பியிருக்கிறார் என்று வேளான் கூறவும், "என்ன அவசரச் செய்தியோ?" எனப் பதறிப் போனாள் அவள்.
"அம்மா! வசந்த மண்டபத்தில் தங்கியிருக்கும் துறவியைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொள்ளச் சொன்னார். அடிகள் மாபெரும் சித்துவித்தைகள், மந்திர தந்திரங்கள் எல்லாம் கைவரப் பெற்றவராம். சிறிது மனங்கோணினாலும் சொல்லாமல் இங்கிருந்து மறைந்து விடுவாராம். அவர் இங்கிருந்து மறைந்து விட்டால் அதனால் தென்பாண்டி நாட்டுக்கே பலவிதத்திலும் தீங்குகள் உண்டாகுமாம். கண்ணை இமை காப்பது போல் இந்தத் தீவிலிருந்து வெளியேறி விடாமல் அவரைப் பத்திரமாக காக்க வேண்டும் என்று கூறி அனுப்பினார்" என்றான் படகோட்டி அம்பலவன் வேளான்.
இதைக் கேட்டதும் குழல்மொழிக்கு நிம்மதி ஏற்பட்டது. "அப்பா! இவ்வளவுதானா? என்ன பிரமாதமான செய்தியோ என்று பயந்து போனேன். இதைத்தானா திரும்பவும் அப்பா உன்னிடம் சொல்லிவிட்டுப் போனார். ஏற்கனவே என்னிடம் அவர் கூறிய செய்திதானே!" என்று அவனுக்குப் பதில் சொல்லிவிட்டு நந்தவனத்துக்குள் நுழைந்தாள் அவள்.
வேளான் வந்த வழியே திரும்பிப் படகுத்துறைக்குப் போய்ச் சேர்ந்தான். இடையாற்று மங்கலம் அரண்மனை நந்தவனத்தில் இல்லாத மலர் வகைகள் தென்பாண்டி நாட்டிலேயே இல்லை என்று சொல்லி விடலாம். தீவின் நிலப் பரப்பில் கட்டடங்களும் மாளிகைகளும் அமைந்திருந்த பகுதி போக எஞ்சிய பகுதி முழுவதும், வானளாவிய மரங்களும், மலர்ச் சோலைகளும், பசும் புல்வெளிகளும், மலர் வாவிகளும் நிறைத்துக் கொண்டிருந்தன. நந்தவனத்துக்குள் சென்ற குழல்மொழி கால் நாழிகைக்குள் பலவகை மலர்களாலும் குடலையை நிரப்பிக் கொண்டு திரும்பி விட்டாள்.
அடிகள் நீராடி வழிபாடுகளை முடித்துக் கொண்ட பின் குழல்மொழி அவரை அட்டிற்சாலை சமையலறைக்கு அழைத்துச் சென்று உணவு பரிமாறினாள். உணவு முடிந்ததும் குழல்மொழி அவரை நோக்கி, "அடிகளே! தாங்கள் இனி வசந்த மண்டபத்தில் சென்று ஓய்வெடுத்துக் கொள்ளலாம். மாலையில் நான் அங்கு வருவேன். வேளானிடம் சொல்லிப் படகில் சிறிது நேரம் பறளியாற்றில் சுற்றி வரலாம்" என்றாள்.
"பெண்ணே! பகலில் உறங்கும் வழக்கம் எனக்குக் கிடையாது. இப்போது நீ எனக்கு ஓர் உதவி செய்ய வேண்டும். இந்த இடையாற்று மங்கலம் மாளிகையைச் சுற்றிப் பார்க்க வேண்டுமென்று எனக்கு ஆசையாக இருக்கிறது. நீ என்னோடு கூட வந்து சுற்றிக் காட்ட முடியுமா?" என்றார் அவள் முகத்தை உற்றுப் பார்த்துக் கொண்டே.
அவருடைய விருப்பத்தைக் கேட்டுக் குழல்மொழி திகைத்தாள். அவருக்கு என்ன பதில் சொல்வதென்று தயங்கினாள். அவர் வெளியிட்ட விருப்பம் அத்தகையதாக இருந்தது. தென்பாண்டி நாட்டின் படைத் தலைவனான தளபதி வல்லாளதேவன் கூட வெளியிட முடியாத விருப்பம் அது. இன்று வரை இடையாற்று மங்கலம் மாளிகையின் ஒவ்வொரு மூலை முடுக்குகளையும் குறைவின்றி முழுமையாகப் பார்த்தவர் மகாமண்டலேசுவரரைத் தவிர வேறு யாருமில்லை. அவருடைய அருமைப் புதல்வியான குழல்மொழிக்கும் அந்தரங்க ஒற்றனான நாராயணன் சேந்தனுக்கும் கூடத் தெரியாத இரகசியப் பகுதிகள், பாதுகாப்புக்குட்பட்ட இடங்கள் எத்தனையோ அந்த மாளிகையில் உண்டு. அப்படி இருக்கும் போது ஊர் பேர் தெரியாத இந்தத் துறவிக்கு மாளிகையைச் சுற்றிக் காட்டுவது எப்படி முடியும்? 'சுற்றிக் காட்டலாம் என்றே வைத்துக் கொண்டாலும் எவற்றைக் காட்டுவது? எவற்றை மறைப்பது?' குழல்மொழி இரு தலைக் கொள்ளி எறும்பாகத் தவித்தாள்.
"நீ தயங்குவதைக் கண்டால் என்னுடைய விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஏதோ சில இடையூறுகள் இருப்பதாக அல்லவா தெரிகிறது? முடிந்தால் சுற்றிக் காட்டலாம். இல்லாவிட்டால் நான் வற்புறுத்தவில்லை" என்று தணிவான குரலில் மன்னிப்புக் கேட்பது போன்ற தொனியில் கூறினார் துறவி.
"இடையூறுகளா? அப்படி ஒன்றுமில்லை. இந்த மாளிகையைப் பொறுத்தவரையில் என்னுடைய தந்தை சில கட்டுப்பாடுகளும் வரையறைகளும் வைத்திருக்கிறார்."
"என்ன கட்டுப்பாடுகளென்று நான் அறியலாமோ?"
"எல்லா இடங்களையும் எல்லோருக்கும் சுற்றிக் காட்டுவதில்லை! அரண்மனையில் இருப்பவர்களும் சரி, வந்து போகிற விருந்தினர்களும் சரி, இன்னார் இன்ன பகுதிகளில் தான் பழக வேண்டுமென்று கடுமையான கட்டுக்காவல் வைத்திருக்கிறார்."
அவள் கூறியதைக் கேட்டுத் துறவி மறுமொழி கூறாமல் இலேசாகப் புன்முறுவல் செய்தார்.
"என்ன நீங்களாகவே சிரித்துக் கொள்ளுகிறீர்கள்?"
"மகாமண்டலேசுவரரின் கூர்மையான அறிவு எப்படியெல்லாம் வேலை செய்கிறதென்று நினைத்துப் பார்த்தேன், சிரிப்பு வந்தது."
"பரவாயில்லை அடிகளே! உங்கள் விருப்பத்தை நான் கெடுக்கக் கூடாது. எழுந்து வாருங்கள். இந்த மாளிகையில் எந்த இடங்களையெல்லாம் காட்ட முடியுமோ அவற்றைக் காட்டுகிறேன்."
"நீ காட்டாத இடங்களையெல்லாம் நான் என்னுடைய தவ வலிமையைக் கொண்டு ஞான நோக்கத்தால் பார்த்து விட்டால் என்ன செய்வாய்?"
"அப்படி ஞான நோக்கத்தால் பார்க்கிற சாமர்த்தியமுள்ளவர் எல்லா இடங்களையும் இருந்த இடத்திலிருந்தே பார்த்துக் கொள்ளலாமே?" என்று பச்சைக் குழந்தை போல் கைகொட்டிச் சிரித்து அவரைக் கேலி செய்தாள் மகாமண்டலேசுவரரின் புதல்வி.
"நீ பெரிய குறும்புக்காரப் பெண்! உன் தந்தையின் சூழ்ச்சி, சாதுரியம் ஆகியவற்றில் முக்கால் பங்கு உனக்கு வந்திருக்கிறது" என்று சிரிப்புக்கிடையே கூறிக் கொண்டே சுற்றிப் பார்ப்பதற்காக எழுந்திருந்தார் துறவி.
குழல்மொழி அவரை அழைத்துக் கொண்டு அவருக்கு முன் நடந்தாள்.
"அடிகளே! துறவிகளுக்கு முக்காலமும் உணரும் திறன் உண்டென்று கேள்விப் பட்டிருக்கிறேன். இத் தென்பாண்டி நாட்டின் எதிர்காலத்தைப் பற்றிய சில முக்கியமான செய்திகளைப் பற்றி நான் உங்களிடம் ஆருடம் கேட்கப் போகிறேன்."
"ஆகா தாராளமாகச் சொல்கிறேன். எதிர்காலம் ஒளி நிறைந்ததாக இருக்கப் போகிறது. வெற்றிகளும், செல்வங்களும் விளையப் போகின்றன. மாதந் தவறாமல் மூன்று மழை பொழியப் போகிறது..."
"போதும்! போதும்! நிறுத்திக் கொள்ளுங்கள். உலகத்தில் முதல் சோதியுடன் பிறந்ததிலிருந்து இன்று வரை பொதுவாக எல்லோரும் வைத்துக் கொண்டிருக்கிற நாலைந்து புளுகு மூட்டைகளையே நீங்களும் அவிழ்த்து விடுகிறீர்களே? மாதம் மூன்று மழை பெய்வதை இன்னொருவர் கூறியா அறிந்து கொள்ள வேண்டும்? வளத்துக்கு இருப்பிடமான நாஞ்சில் நாட்டில் மாதம் முப்பது நாளும் எங்கேயாவது மழை பெய்து கொண்டுதான் இருக்கிறது..." முன்னால் நடந்து கொண்டிருந்த குழல்மொழி திரும்பி நின்று அவரைக் கேலி செய்தாள்.
அப்போது அவர்கள் இருவரும் இடையாற்று மங்கலம் மாளிகையில் தெற்கு மூலையில் ஒரு முக்கியமான பகுதிக்கு வந்திருந்தார்கள். கண்ணாடி போன்ற சுவர்களில் தீட்டியிருந்த உயிர்க்களை சொட்டும் ஓவியங்களையெல்லாம் பார்த்துக் கொண்டே நடந்தார் துறவி. மகாமன்னராகிய பராந்தகப் பாண்டியரின் வீரச் செயல்கள் அந்த ஓவியங்களில் தீட்டப்பட்டிருந்தன. இன்னும் தென்பாண்டி நாட்டின் அரச மரபைச் சேர்ந்த வீரர்களின் போர் செயல்கள், வாழ்க்கைக் காட்சிகள், அறச் செயல்கள், திருப்பணிகள் எல்லாம் தீட்டப்பட்டிருந்தன. அந்த ஓவியங்களை நிமிர்ந்து பார்க்கும் போது இளந் துறவியின் மயக்கும் முகத்தில் பெருமிதச் சாயல் படர்ந்தது. விரிந்து அகன்ற வீர மார்பும், செறிந்து உயர்ந்த தோள்களும் விம்மிப் புடைத்தன. விழிகளில் அற்புதமானதொரு ஒளி மின்னியது. துறவிக்கு மனதில் சுய நினைவு, சூழ்நிலைகளை மறந்த ஒரு பெரும் பரவசம் உண்டாயிற்று. தன்னோடு குழல்மொழி என்ற பெண் வந்து கொண்டிருப்பது கூட அவருக்கு மறந்து போய்விட்டது. சுவர்ப்பரப்பில் துடிக்கும் உயிர்களாக நின்ற அந்த ஓவியங்களில் பந்த பாசங்கள் இல்லாத துறவியின் உணர்ச்சியைக் கவர அப்படி என்னதான் இருந்ததோ? எதிரே பார்க்காமல் சுவரைக் கண்டு கொண்டே நடந்தவரை "நில்லுங்கள்! இதற்கு மேல் போகக் கூடாது. இனிமேல் கடுமையான பாதுகாப்புக்கு உட்பட்ட இடம்" என்று குறுக்கே கை நீட்டி வழிமறித்தாள் குழல்மொழி.
சுவர்ச் சித்திரங்கள் என்ற கனவுலகத்திலிருந்து விடுபட்டு எதிரே பார்த்தார் துறவி. அந்த இடத்துக்கு எதிரே இருந்த அறை வாயிலில் தூய வெள்ளைத் திரை தொங்கியது. திரையில் பாண்டிப் பேரரசின் அடையாளச் சின்னமாகிய மீனின் உருவமும் நாஞ்சில் நாட்டுக் கலப்பை, மேழி வடிவங்களும் பெரிதாக வரையப்பட்டிருந்தன. திரைக்கு இப்பால் மின்னல் தண்டு போல் ஒளி வீசும் உருவிய வாள்களுடன் இரண்டு யவன வீரர்கள் காவல் புரிந்து கொண்டிருந்தனர். 'அடல் வாள் யவனர்' என்ற சங்கத் தமிழ் நூல்களின் வர்ணனைக்கு ஏற்பக் கருமெழுகில் பிடித்துப் பிடித்து உருவாக்கிய இரண்டு பயங்கரச் சிலைகள் நிற்பது போல் ஆடாமல், அசையாமல் நின்று கொண்டிருந்தனர் அந்த யவன நாட்டுக் காவல் வீரர்கள்.
"ஏன் இதற்கு மேல் போகக்கூடாது என்கிறாய்? போனால் என்னவாகிவிடும்?" என்று கேட்டார் துறவி.
"நான் தான் முன்னமேயே சொன்னேனே! இந்த மாளிகையில் என் தந்தையாரின் விருப்பத்துக்கு இணங்கத்தான் ஒவ்வொருவரும் நடந்து கொள்ள வேண்டும். அவருடைய உத்தரவை மீறினால் அவருக்குக் கோபம் வந்து விடும். என்ன செய்வார் என்றே சொல்ல முடியாது."
"யாரும் பார்க்கக் கூடாத அறைகளில் இதுவும் ஒன்றோ?"
"ஆமாம்!"
"அப்படியானால் சரி! இதற்கு மேல் நாம் போக வேண்டாம். உன் வார்த்தைக்கு நான் கட்டுப்படுகிறேன். ஆனால் அந்தத் திறைக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பதையாவது தெரிந்து கொள்ளலாமோ?" - துறவி கேட்டார்.
குழல்மொழி கொற்கைத்துறை ஒளி முத்துக்களைப் போன்ற தன் அழகிய பல்வரிசை தெரியச் சிரித்தாள். "அடிகளே! நீங்கள் பெரிய தந்திரக்காரர். அந்த இடத்துக்கே போகக்கூடாதென்று நான் சொல்கிறேன். நீங்களோ அங்கே என்ன இருக்கிறதென்று கேட்கிறீர்கள்? கெட்டிக்கார மனிதர்தாம் நீங்கள்."
"சொல்லாவிட்டால் போயேன். நான் ஆருடத்தால் கண்டு பிடித்துத் தெரிந்து கொண்டால் அப்போது என்ன செய்வாய்? இதோ கண்டு பிடித்து விடுகிறேன் பார்!" என்று சொல்லி ஏதோ மந்திரத்தை உச்சரிக்கிறவர் போல் பாவனை செய்தார்.
"அடே அப்பா! கண்டுபிடித்து விடுவீர்களோ? எங்கே, கண்டுபிடித்துச் சொல்லி விடுங்களேன், பார்ப்போம்."
"இதோ கேட்டுக் கொள், தென்பாண்டி வேந்தர் மரபின் சுந்தர முடியும், வீர வாளும், பொற் சிம்மாசனமும் ஆகிய அரசுரிமைச் சின்னங்கள் இருக்கின்றன அங்கே."
துறவியின் ஆருடத்தைக் கேட்டு அதிர்ந்து போய் நின்ற குழல்மொழியின் முகத்தில் ஈயாடவில்லை.
------------
1.23. ஊமை பேசினாள்
திருநந்திக்கரைச் சமணப் பெரும்பள்ளியின் வாசலில் அந்தப் பூக்கார ஊமைப் பெண்ணிடம் சேந்தனைப் பற்றி விசாரித்து விட்டுத் தளபதி வல்லாளதேவன் சாலையில் இறங்கிச் சென்ற சில கணங்களுக்குப் பின் ஓர் அதிசய நிகழ்ச்சி நடைபெற்றது. அதிசயமென்றால் வெறும் அதிசயமா அது? வியப்பையும், திகைப்பையும் ஒருங்கே உண்டாக்கக் கூடிய அதிசய நிகழ்ச்சி அப்போது அங்கே நடைபெற்றது.
சமணப் பள்ளியின் கிழக்குப் புறம், இருபது முப்பது அடி பள்ளத்தாக்கு நிலமாக இருந்தது. அந்தப் பள்ளத்தாக்குப் பிரதேசத்தில் சிறிய காட்டாறு ஒன்றின் கிளைக் கால்வாய் பாய்ந்து கொண்டிருந்தது. கால்வாய்க்கு அப்பால் சமவெளி நிலத்தில் நெடுந்தூரத்துக்கு நெடுந்தூரம் பாக்கு மரங்களும் தென்னை மரங்களும் அடர்த்தியாக வளர்ந்திருந்தன. பாக்கு மரங்களின் தூரில் மினுமினுவென்று மின்னும் முக்கோண வடிவப் பச்சை இலைகளும், கொத்துக் கொத்தாக மிளகுக் கொடிகளும் தழுவிப் படர்ந்திருந்தன.
தளபதியின் தலை மேற்கே திருநந்திக்கரைச் சாலையின் திருப்பத்தில் மறைந்ததோ இல்லையோ, தரையின் இடைவெளி தெரியாமல் படர்ந்து கிடந்த கீழ்ப்புறத்துப் பள்ளத்தின் பசுமையிலிருந்து இரண்டு செந்நிறக் குதிரைகளும் ஒரு குட்டை மனித உருவமும் மெதுவாக வெளியேறி மேட்டுக்கு வந்தன. அந்த உருவமே நாராயணன் சேந்தன்.
அப்போதும் அந்தப் பூக்காரப் பெண்ணுடன் அவள் தந்தையும் அங்கே தான் உட்கார்ந்து கொண்டிருந்தார். என்ன ஆச்சரியம்? எந்த ஓர் அழகிய பெண்ணைப் பிறவிச் செவிடு என்றும் பிறவி ஊமை என்றும் தளபதி எண்ணி, படைத்தவன் கைகளைத் தூற்றிக் கொண்டு போனானோ, அந்தப் பெண் இப்போது நாராயணன் சேந்தனிடம் வாய் திறந்து பேசினாள். "ஐயா! நீங்கள் கூறியபடியே அந்த மனிதரிடம் நடித்து ஏமாற்றி அனுப்பி விட்டோம். நான் ஊமையாகவே நடித்து விட்டேன். என் தந்தையும் தமக்கு ஒன்றும் தெரியாதென்று பதில் சொல்லி அனுப்பிவிட்டார்" என்று குயிலின் இனிமையும் யாழின் நளினமும் செறிந்த குரலில் நாராயணன் சேந்தனிடம் கூறினாள் அந்தப் பூக்காரப் பெண்.
"மிகவும் நல்ல காரியம் செய்தீர்கள்! உனக்கும் உன் தந்தைக்கும் நான் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன், பெண்ணே!" என்று சொல்லிக் கொண்டே தன் இடுப்புக் கச்சையை அவிழ்த்து இரண்டு பொற்காசுகளை அந்தப் பெண்ணிடம் எடுத்துக் கொடுத்தான் நாராயணன் சேந்தன். வட்டமாக இருந்த அந்தக் காசுகளின் ஒருபுறம் மகர மீன் வடிவம், இன்னொரு புறம் யானையின் உருவம் அமைந்திருந்தன. பாண்டிய நாட்டில் பராந்தகனின் இறுதிக் காலத்தில் வெளியிடப் பெற்ற நாணயங்கள் அவை.
காசுகளைப் பெற்றுக் கொண்டு மலர்ந்த முகத்தோடு கை கூப்பி வணங்கினாள் அவள்.
"ஐயா! நீங்கள் அடிக்கடி இந்தப் பக்கம் குதிரையில் வந்து போக வேண்டும்!" உபசாரத்துக்காகச் சொல்லுகிறவனைப் போலக் கிழவன் அந்த வார்த்தைகளைச் சொன்னான்.
உடனே நாராயணன் சேந்தன் முகத்தில் குறும்பு மிளிரச் சிரித்துக் கொண்டே கிழவனையும் அவன் பெண்ணையும் பார்த்து, "ஆகா! அதற்கென்ன? அடிக்கடி வருவதற்கு தடையில்லை. ஆனால் அடிக்கடி என்னிடத்தில் இரண்டு பொற்காசுகள் இருக்காதே?" என்று குத்தலாக ஒரு போடு போட்டுவிட்டுப் புறப்பட்டான்.
அவன் புறப்படுகிற சமயத்தில், "கொஞ்சம் பூக்கள் தருகிறேன். உங்கள் இல்லத்துக்குக் கொண்டு செல்லுங்கள்" என்று கூறிப் பூக்களை அள்ளினாள் அவள். "அதற்குப் பயனே இல்லை. நான் இன்னும் ஒற்றைக் கட்டைதான்!" என்று கூறி நகைத்தான் நாராயணன் சேந்தன்.
"இன்னுமா உங்களுக்குத் திருமணம் ஆகவில்லை?" என்று கேட்டார் கிழவர்! "உங்கள் மகளைப் போல ஓர் அழகான நல்ல பெண் கிடைக்கிற வரை திருமணமே செய்து கொள்வதில்லை என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறேன்" என்று சொல்லிக் கொண்டே ஓரக்கண்ணால் அந்தப் பூக்காரப் பெண்ணை நோக்கினான். அவள் தலையைக் குனிந்து கொண்டாள்.
"வருகிறேன், பெரியவரே!" என்று ஒரு குதிரையில் ஏறிக் கொண்டு இன்னொன்றின் கடிவாளக் கயிற்றைப் பிடித்தவாறே பக்கத்தில் நடத்திக் கொண்டு புறப்பட்டான் சேந்தன்.
வந்த வழியே திரும்பிச் சென்று முன்பு எந்தச் சாலையில் பறளியாற்று வெள்ளத்தினால் உடைப்பு ஏற்பட்டிருப்பதாகத் தளபதியிடம் சொல்லி அவனைச் சுற்று வழியில் இழுத்தடித்தானோ அதே சாலையில் தான் இப்போது சென்றான் சேந்தன். கூற்றத் தலைவர் கூட்டத்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகச் சேந்தனும் அரண்மனைக்குப் போகிறான் போலிருக்கிறது. போகட்டும். அவனுக்கும் முன்பே நேயர்களை அரண்மனைக்கு அழைத்துக் கொண்டு போய் அங்கு நடக்கும் விறுவிறுப்பான நிகழ்ச்சிகளைக் காண்பித்து விட விரும்புகிறேன் நான். திருநந்திக்கரைச் சமணப்பள்ளியில் சேந்தனால் ஏமாற்றப்பட்டு மனம் சோர்ந்து கால்நடையாகக் கிளம்பிய தளபதி வல்லாளதேவனும், ஏமாற்றிவிட்டுக் குதிரையில் கிளம்பிய சேந்தனும் புறத்தாய நாட்டு அரண்மனைக்கு வந்து சேர வெகு நேரம் செல்லுமாகையினால் நாம் முந்திக் கொண்டு விடலாம்.
"திரையை அகற்றி விடுங்கள்" என்று மகாமண்டலேசுவரர் கூறியவுடனே திரைக்குப் பின்னாலிருந்து ஆள் நடந்து செல்லும் அரவம் கேட்டதும் அங்கே கூடியிருந்த அத்தனை பேரும் பரபரப்படைந்தார்கள். "பிடி! பிடி! யாராயிருந்தாலும் ஓடி தப்பி விடக்கூடாது" என்று அங்கிருந்த காவல் வீரர்களைப் பார்த்துக் கூச்சலிட்டார் மகாமண்டலேசுவரர். அங்கு நின்று கொண்டிருந்த மெய்க்காப்பாளர்களும், காவல் வீரர்களும் வாள்களை உருவிக் கொண்டும், கூர்மையான வேல்களை ஓங்கிக் கொண்டும் தடதடவென்று ஓசையுண்டாகும்படித் திரைக்குப் பின்னால் பாய்ந்தோடினர். திரைக்குப் பின்னாலிருந்த பகுதியில் சாளரங்களோ, கதிர்மாடங்களோ, பலகணிகளோ இல்லாததால் பகல் நேரத்திலேயே இருண்டு கிடந்தது. அதன் காரணமாகத் தேடிச் சென்றவர்களே ஒருவர் மேல் ஒருவர் மோதிக் கொண்டனர். கண்டுபிடிக்க வேண்டிய ஆள் மட்டும் அகப்படவே இல்லை. மந்திராலோசனை மண்டபத்தின் பின்புறம் சுவரோரமாக ஒரு படிக்கட்டு கீழ் நோக்கி இறங்கிச் சென்றது. அது அரண்மனையின் நிலவறைக்குச் செல்லும் பாதை. புறத்தாய நாட்டு அரண்மனையின் பல பகுதிகளில் அமைந்திருந்த நிலவறைகளில் முக்கியமானது அதுதான். போர்க் காலங்களிலும், அரசியல் குழப்பமான சூழ்நிலைகள் ஏற்படும் காலத்திலும், அரண்மனையிலுள்ள விலையுயர்ந்த கலைப்பொருள்கள், சிலைகள், முன்னுள்ள வேந்தர்கள் வழங்கிய நாணயங்கள், உபயோகித்த ஆயுதங்கள், கவசங்கள் இவற்றையெல்லாம் அந்த நிலவறையில் பாதுகாப்பாகப் பத்திரப்படுத்தி வைப்பது வழக்கம்.
திரைக்குப் பின்னால் ஒளிந்திருந்தவன் தப்பிச் சென்றிருந்தால் கீழே நிலவறைக்குச் செல்லும் படிக்கட்டைத் தவிர வேறெந்த வழியினாலும் தப்பிச் சென்றிருக்க முடியாது. சிலர் நிலவறைக்குள் போகும் வழியிலும் சிறிது தூரம் சென்று தேடினார்கள். ஆள் அகப்படவில்லை. படிக்கட்டு ஆரம்பமாகும் இடத்தில் ஒரு சிறிய சதுரமான வெள்ளைப் பட்டுத் துணி கிடந்தது. அதை எடுத்துக் கொண்டு போய் மகாமண்டலேசுவரரிடம் கொடுத்தார்கள்.
"ஆள் அகப்படவில்லையா?" என்று சினம் பொங்கும் குரலில் அதட்டிக் கேட்டார் அவர்.
"நிலவறைக்குள் போய்த் தப்பிச் சென்றிருக்கலாமென்று தெரிகிறது. படி இறங்கும் வழியில் இந்தப் பட்டுத் துணி கிடந்தது" என்று சொல்லி துணியை அவரிடம் கொடுத்தார்கள் தேடிச் சென்று திரும்பியவர்கள்.
"உடனே ஓடிப் போய்க் கீழே நிலவறைக்கு இறங்கும் வழியின் கதவை அடைத்து முன்புறமாகத் தாழிட்டு விடுங்கள்" என்று கூறி அவர்களை மறுபடியும் துரத்தினார் மகாமண்டலேசுவரர். அவர்கள் கதவை அடைக்கச் சென்றதும் அங்கு கூடியிருந்த அத்தனை பேருக்கும் நடுவில் அந்தப் பட்டுத் துணியை விரிக்காமல் ஒரு மூலையில் தூணின் மறுபுறம் மறைவில் போய் நின்று கொண்டு அதை விரித்துப் பார்த்தார். பயமும் கலவரமும் அடைந்த பீதியின் நிழல் பதிந்த முகங்களால் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு மகாராணியாரும் கூற்றத் தலைவர்களும் மந்திராலோசனை மண்டபத்து இருக்கைகளில் வீற்றிருந்தனர். மெய்க் காப்பாளர்களும், வீரர்களும் நிலவறைக்குச் செல்லும் வழியை அடைப்பதற்காக அதன் கனமான பெரிய மரக்கதவை இழுத்து மூடும் ஓசை மண்டபம் எங்கும் எதிரொலித்தது.
மகாமண்டலேசுவரர் விரித்துப் பார்த்த அந்தப் பட்டுத் துணியில் ஏதோ ஒரு குறிப்பிட்ட குழிவினருக்கு அடையாளச் சின்னம் போன்றதொரு சித்திரம் தீட்டப்பட்டிருந்தது.
ஒரு வீர இளைஞன் தன் வலது கையில் உருவி ஏந்திய வாளினால் தனது தலையை அரிந்து குருதி ஒழுக இடது கையால் தாங்கி நிற்பது போல் அந்த ஓவியம் அமைந்திருந்தது. அந்த இளைஞர்களின் தலைபுறமாக மகரமீன் இலச்சினையும் பொறிக்கப்பட்டிருந்தது. அவர் அந்த ஓவியத்தைக் கவனமாகப் பார்த்தார். பட்டுத் துணியில் வரையப் பெற்றிருந்த அந்த அடையாளச் சின்னம் அவருக்குப் புதியதல்ல. தென்னவன் ஆபத்துதவிகளின் அடையாளம் அது. ஆபத்துதவிப் படையைச் சேர்ந்த ஒவ்வொரு வீரனும் அந்த மாதிரித் துணியை இடுப்புக் கச்சையாக அணிந்து கொள்வது வழக்கம்.
பட்டுத் துணியை மடித்து வைத்துக் கொண்டார் இடையாற்று மங்கலம் நம்பி. அவர் மனத்தில் பல விதமான சந்தேகங்கள் உண்டாயின.
'ஆபத்துதவிப் படைகளைச் சேர்ந்த யாவரும் இப்போது கோட்டாற்றிலுள்ள தென் திசைப் பெரும் படையின் குடியிருப்பில் அல்லவா தங்கியிருக்கிறார்கள்? அவர்களோ அல்லது அவர்களில் ஒருவனோ இப்போது இங்கே எப்படி வந்திருக்க முடியும்? திரைக்குப் பின்னால் ஒளிந்திருந்தவன் ஆபத்துதவிகளில் ஒருவன் தானோ? அல்லது என்றைக்காவது தென்னவன் ஆபத்துதவிகள் இங்கே அரண்மனைக்கு வந்திருந்த போது நிலவறைக்கு அருகில் இதைத் தவறிப் போட்டு விட்டார்களா? இந்தப் பொருள் நிலவறைக்கருகில் கிடந்ததனால் மட்டும் நாம் ஆபத்துதவிகளின் மேல் சந்தேகப்பட்டு விடுவதற்கில்லை. வேறு எவனாவது நம்முடைய பகைவர்களின் கையாளாகிய ஒற்றன் வந்து ஒட்டுக் கேட்டு விட்டுப் போயிருக்கலாம். நாம் இந்தத் துணி ஒன்றை மட்டும் சான்றாகக் கொண்டு யாரையும் குற்றவாளியாக முடிவு எய்து விடுவதற்கு இயலாது' - என்று சிந்தித்து முடிவு செய்து கொண்டார் மகாமண்டலேசுவரர்.
அவர் தூண் மறைவிலிருந்து மறுபடியும் மந்திராலோசனை மண்டபத்தின் நடுவில் வந்து நின்ற போது அவருடைய உத்தரவுப் படியே நிலவறைக் கதவை அடைத்து விட்டதாக வீரர்கள் வந்து கூறினார்கள்.
எல்லாருடைய கண்களும் அவருடைய முகத்தையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தன.
"சந்தேகப்பட்டுக் கொண்டே இந்த இடத்தில் கூட்டத்தை நடத்தக் கூடாது. அவசியமானால் நிலவறையைத் திறந்து தீபங்களோடு உள்ளே சென்று தேடிப் பார்த்து விடலாம். இந்த மந்திராலோசனை மண்டபத்தை சுற்றியும் வெளிப் பகுதிகளில் சந்தேகப்படத் தக்க புதிய மனிதர்கள் யாரும் இல்லை என்று உறுதியாகத் தெரிந்து கொள்வதற்கு முன்னால் கூற்றத்தலைவர் கூட்டத்தை இங்கே தொடங்குவது நன்றாயிராது" என்று தம் கருத்தைக் கூறினார் பவழக்கனிவாயர்.
ஏதோ கவலையில் ஆழ்ந்து போய் அமர்ந்திருப்பவர் போல் தலைகுனிந்து ஒன்றும் பேசாமல் உட்கார்ந்திருந்தார் மகாராணி வானவன்மாதேவியார்.
"பவழக்கனிவாயர் கூறுவது சரியே! 'தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும்' - என்று தெய்வப் புலவராகிய திருவள்ளுவர் கூறியிருப்பதைப் படிக்காதவர்கள் நம்மில் யாருமில்லை. தென்பாண்டி நாட்டு அரசியல் இரகசியங்களை அறிவதற்காக யார் யாரோ சூழ்ச்சி செய்கிறார்கள் போலிருக்கிறது. இல்லையானால் அந்தரங்க மந்திராலோசனைக் கூட்டம் நடைபெறும் இந்த இடத்தில் நமக்கு மிக அருகில் வந்து ஒளிந்திருக்கும் அளவுக்கு ஒரு மூன்றாவது மனிதனுக்குத் துணிவு ஏற்படுமா?" என்றார் பல்லாயிரங் காலத்துப் பயிர் போலச் சிறந்த தொன்மை வாய்ந்த அதங்கோட்டாசிரியர் குடும்பத்தில் பிறந்த ஆசிரியர். படிப்பின் பெருமிதமும் கலையின் எழிலும் ஒருங்கு தென்படும் அவருடைய ஒளி பொருந்திய முகமண்டலத்தில் இதைச் சொல்லும்போது கவலை இருள் சூழ்ந்திருந்தது.
"மகாராணியாரும், மகாமண்டலேசுவரரும் இங்கு வருவதற்கு முன் நாங்கள் இதே இடத்தில் நீண்ட நேரமாகப் பல செய்திகளையும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போதெல்லாம் திரைக்குப் பின்னால் யாரும் ஒளிந்திருந்ததாக எங்களுக்குத் தெரியவில்லையே" என்றார் கூற்றத் தலைவர்களுள் ஒருவராகிய கழற்கால் மாறனார்.
"ஒளிந்திருக்கவில்லை என்று நீங்களும் நானும் எப்படி உறுதியாகச் சொல்ல முடியும்? ஒரு வேளை, பேச்சில் கவனமாக இருந்த நாம் கவனிக்காமல் இருந்திருக்கலாம். திரைக்குப் பின்னால் இருப்பதை இங்கே உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த நாம் எப்படிக் கவனித்திருக்க முடியும்? நம் பேச்சையே தப்பி ஓடினவன் முழுவதும் கேட்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை" என்று கழற்கால் மாறனாரின் கருத்தைத் திருத்தினார் நன்கனிநாதர்.
"இந்த மந்திராலோசனைக் கூட்டத்தை இவ்வளவு நடந்த பின்பும் இன்றே நிகழ்த்துவானேன்? நாளைக்குத் தள்ளிவைத்து விடலாமே!" என்றார் அதுவரை ஒன்றும் பேசாமல் சிந்தனையில் ஆழ்ந்திருந்த வானவன்மாதேவியார்.
"ஆம்! அப்படிச் செய்வதுதான் நல்லது" என்ற குரல் எல்லோருடைய வாயிலிருந்தும் ஒலித்தது. ஆனால் மகாமண்டலேசுவரரான இடையாற்று மங்கலம் நம்பி மட்டும் வாயைத் திறக்கவே இல்லை. அவருடைய மௌனத்தை மகாராணி கவனித்து விட்டார்.
"மகாமண்டலேசுவரருடைய கருத்து என்னவோ?" என்று மெல்லக் கேட்டார் மகாராணி.
"கூட்டத்தை இன்றே நடத்தி விட வேண்டுமென்பதுதான் என் கருத்து. வேண்டுமானால் இந்த இடத்தில் நடத்தாமல் வேறோர் இடத்தில் நடத்தலாம். இன்றைக்கு என்று குறிப்பிட்ட கூட்டத்தை இன்றே நடத்தலாம். நடத்தாமல் போவதால் எத்தனையோ புதிய தொல்லைகள் உண்டாகலாம்" என்று அவர் உறுதிமொழி கூறிய போது அதில் தீர்மானமான பிடிவாதம் ஒலித்தது.
-----------
1.24. கரவந்தபுரத்துத் தூதன்
இந்த அத்தியாயத்தின் கதை நிகழ்ச்சியைத் தொடங்குவதற்கு முன்னால் நேயர்களுக்கு ஒரு சில சரித்திர உண்மைகளைத் தெளிவாகச் சொல்லிவிட வேண்டியது அவசியமாகிறது. பாண்டியர் அரச மரபு பற்றியும், அவர் வீரச் செயல்கள் பற்றியும் சிறிது அறிந்து கொண்டால் கதையின் மேற்பகுதிகளை நன்றாக விளங்கிக் கொள்வதற்கு முடியும்.
அளவற்றுப் பரந்த, காலத்தின் பேரெல்லைக்கும் எட்டாமல் விரிந்து கொண்டே போகின்ற பழமையைத் தன் குலச் செல்வமாகக் கொண்ட பாண்டியர் மரபின் முதலரசன் வடிவம்பலம் நின்ற பாண்டியன். நிலந்தரு திருவின்நெடியோன் எனவும், மாகீர்த்தி எனவும் சிறப்புப் பெயர்கள் பூண்டிருந்தான் இம் மன்னன். தமிழ் மொழியின் முழு முதல் தனி நூலாகவும், இலக்கணக் களஞ்சியமாகவும் விளங்கும் தொல்காப்பியம், இவன் அவையில் பெரும் புலவராக விளங்கிய அதங்கோட்டாசிரியர் தலைமையில் தான் அரங்கேற்றம் பெற்றது. அதங்கோட்டாசிரியன் வழிமுறையினரான ஒவ்வொருவரும் பிற்காலத்தே பன்னூறாயிரம் ஆண்டுகள் அதே குடிப்பெயர் கொண்டு தமிழின் புகழ் பரவ வாழ்ந்திருக்கலாம். இந்தக் கதையில் வரும் அதங்கோட்டாசிரியர் பழைய அதங்கோட்டாசிரியரின் பிற்காலத் தலைமுறையினரில் ஒருவராக இருக்க வேண்டுமென்று கொண்டு இந்தக் கதைக்காகக் கற்பனை செய்யப்பட்ட பாத்திரமாவார்.
வடிவம்பலம் நின்ற பாண்டியன் (இந்தக் கதை நிகழும் காலத்தின் தென்பாண்டி நாட்டின் வற்றாத நீர் வளத்துக்குக் காரணமாக இருக்கும் பறளியாறு எனப்படும் பஃறுளியாற்றை முன்பு முதன்முதலாக வெட்டுவித்தான். கடல் தெய்வத்தை வழிபட்டுக் கொண்டாடும் 'முந்நீர் விழா' என்ற விழாவை ஏற்படுத்தினான். தலைச்சங்கத்தின் இறுதியில் ஆண்ட பெரும் பேரரசனான இவன் காலத்துக்குப் பின் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற மன்னன் குற்ப்பிடத்தக்கவன்.
இவர்கள் காலத்துக்குப் பின் கடைச்சங்க காலத்துக்கு முன்னுள்ள கால இடைவெளி பாண்டியர் வரலாற்றின் இருள் சூழ்ந்த பகுதியாகும். கடைச் சங்கத்தின் முதல் பாண்டிய மன்னாகிய முடத்திருமாறன் காலத்தில் குமரிமலைத் தொடரும், குமரியாறும், குமரி நாடும் - ஆகிய தென்பாண்டி நாட்டின் தென்கோடி நிலப்பரப்பு முழுவதும் கடல்கோளால் அழிந்தது. இனிய பெருங்கனவு போல், அழகிய சுவைக் காவியம் போல், சிறந்து இலங்கிய கபாடபுரம் என்ற நகரத்தைக் கடல் விழுங்கிவிட்டது.
முடத்திருமாறனுக்குப் பின் பதினைந்து பாண்டிய அரசர்களின் வழிமுறைக்கு அப்பால் இறுதி மன்னனாகிய நம்பி நெடுஞ்செழியனோடு கடைச்சங்கப் பாண்டியர் மரபு முடிந்து விடுகிறது. நம்பி நெடுஞ்செழியனுக்குப் பின் பாண்டிய நாட்டில் களப்பிரர்களின் ஆதிக்கம் ஏற்பட்டது. பாண்டியன் கடுங்கோன் தலையெடுத்த பின்பே பாண்டி நாட்டில் களப்பிரர் ஆட்சி ஒழிந்தது.
"தன்பாலுரிமை நன்கனம் அமைத்த
மானம் போர்த்த தானை வேந்தன்
ஒடுங்கா மன்னர் ஒளிநக ரழித்த
கடுங்கோ னென்னும் கதிர்வேல் தென்னன்"
என்று அவன் புகழை வேள்விக் குடிச் செப்பேடு போற்றிப் பாடியது. கடுங்கோன் முதலான பிற்காலப் பாண்டியர் வழியில் கோச்சடையன், இரணதீரன், நெடுஞ்சடையன் பராந்தகன் முதலிய புகழ்பெற்ற அரசர்களெல்லாம் ஆண்டு முடித்த பின் வரகுண மகாராசன் என்னும் ஈடு இணையற்ற பேரரசன் முடிசூட்டிக் கொண்டான். பிறவிக் கடலைக் கடக்கும் ஞானத்தோணியாம் திருவாசகத்தை எழுதிய மாணிக்கவாசகப் பெருமான் இவ்வரசன் காலத்திலேயே வாழ்ந்துள்ளார். சைவத் திருமுறைகளின் தொகுப்பாசிரியராகிய நம்பியாண்டார் நம்பி தம்முடைய கோயில் திருப்பண்ணியார் விருத்தத்தில் வரகுண மகாராசனைப் புகழ்ந்திருக்கிறார்.
வரகுணனின் புதல்வனான சீமாறன் சீவல்லபன் தன் இரு மக்களுள் மூத்தவரான வரகுண வர்மனுக்குப் பட்டம் சூட்டிக் கொண்டான்; இவனுக்கும் வானவன்மாதேவி என்னும் பட்டத்தரசிக்கும் பிறந்த முதல்வனே இந்தக் கதையில் வரும் இராசசிம்மன்.
இனி இங்கே தலைப்பில் காணும் கரவந்தபுரம் பற்றிக் காண்போம். தென்பாண்டி நாட்டுக்கும் வடபாண்டி நாட்டுக்கும் நடுவே நெல்வேலிக் கோட்டத்துத் தென்கோடியில் பாண்டியப் பேரரசுக்கு உட்பட்ட சிற்றரசு ஒன்று இருந்தது. கோட்டையும் கொத்தளமுமாகப் பாதுகாப்பு அமைப்புடன் கரவந்தபுரம் என்ற பெயர் கொண்டு புகழ் பரப்பியது. இந்தக் கதையில் வரும் இராசசிம்மனின் தந்தையான சடையவர்ம பராந்தகனின் காலத்தில் கரவந்தபுரத்துக் கோட்டையும் அதன் ஆட்சி உரிமையும் உக்கிரன் என்னும் குறுநிலவேள் கையிலிருந்தது. செருக்கின் காரணமாக உக்கிரன் பாண்டியப் பேரரசை அவமதித்தான். அதனால் பெருமன்னரான பராந்தக பாண்டியர் அவனை அடக்கிச் சிறைப்பிடித்துக் கொண்டு வந்தார். பாண்டியனின் சிறையில் சில திங்கள் துன்புற்ற பின் ஒப்புக் கொண்டு மீண்டும் தன் கோட்டையைப் பெற்றான் உக்கிரன். அதிலிருந்து கரவந்தபுரத்து ஆட்சியும் உக்கிரன் கோட்டையும் பாண்டியப் பேரரசின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாகவும், ஆதரவாகவும் இருந்தன. கரவந்தபுரத்துக் கோட்டை உக்கிரனுடைய மகன் உரிமையாயிற்று.
இதன் பின் பாண்டி நாட்டு அரசியலில் இளவரசனான இராசசிம்மனுக்கும், அவன் தாய் வானவன்மாதேவிக்கும் ஏற்பட்ட குழப்பம் நிறைந்த சூழ்நிலைகளையும், வடபாண்டி நாட்டையும், மதுரையையும், வடதிசை மன்னர் வென்று கைப்பற்றியதையும், இராசசிம்மன் தலைமறைவாகச் சென்றதையும், கதையைப் படித்து வரும் நேயர்கள் அறிவார்கள். எஞ்சிய தென்பாண்டி நாட்டின் வடக்கு எல்லையாக இருந்தது கரவந்தபுரமே. தென்பாண்டி நாட்டுக் கோட்டையில் கூற்றத் தலைவர்கள் கூடியிருந்த அதே நாளில் கரவந்தபுரத்துக் கோட்டையின் வடக்கே பயங்கரமான சில சங்கேத நிகழ்ச்சிகள் நடந்தன. அதன் சிற்றரசனாக இருந்த பெரும் பெயர்ச் சாத்தன் அதிர்ச்சியடைந்து போய் உடனே அரண்மனையில் மகாராணியைச் சந்தித்து விவரங்களை அறிவிப்பதற்காக ஒரு தூதனை அவசரமாகவும் பரம இரகசியமாகவும் அனுப்பினான். இனிமேல் கதையைப் படியுங்கள். சரித்திரச் சூழ்நிலை ஒருவாறு விளங்கியிருக்கும்.
திருநந்திக்கரையிலிருந்து கால்நடையாகப் புறப்பட்ட தளபதி எப்படியும் அன்று இரவுக்குள் அரண்மனைக்குப் போய்விட வேண்டுமென்று துடியாய்த் துடித்தான். அவன் உள்ளம் என்ன செய்வதென்றறியாமல் தவித்தது. திருநந்திக் கரையிலோ, அதைச் சார்ந்துள்ள இடங்களிலோ பிரயாணத்துக்கு குதிரை கிடைக்குமென்று தோன்றவில்லை. 'முக்கியமான பல செய்திகளைப் பற்றி ஆலோசிக்க வேண்டியிருப்பதனால் மகாமண்டலேசுவரரோ, கூற்றத் தலைவர்களோ, காலையிலேயே கூட்டத்தை முடித்துக் கொண்டு ஊர்களுக்குத் திரும்பியிருக்க முடியாது. என்ன அவசரமாயிருந்தாலும் நாளைக்குத் தான் அரண்மனையிலிருந்து புறப்படுவார்கள். இப்போதே இங்கு எங்காவது குதிரை மட்டும் கிடைத்தால் பொழுது மங்குவதற்குள் அரண்மனைக்குப் போய்ச் சேர்ந்து விடலாம்!' இப்படிப் பலவாறு சிந்தித்த பின் கால்நடையாகவே முன்சிறைவரை செல்வதென்றும் அங்கே யாரிடமாவது தேடிப் பிடித்துக் குதிரை வாங்கிக் கொள்ளலாம் என்றும் ஒரு முடிவான தீர்மானம் செய்து கொண்டு புறப்பட்டான் வல்லாளதேவன்.
சில நாட்களாகத் தொடர்ந்து பெய்த மழையின் அளவையும் சேர்த்து வெயில் வாட்டிப் பிழிந்து கொண்டிருந்தது. சாலையின் இருமருங்கிலும் மரங்கள் மட்டும் இல்லாமல் இருந்தால் தளபதி நடந்து சென்றிருக்கவே முடியாது. நாஞ்சில் நாட்டின் சிறப்புகளிலெல்லாம் சிறப்பு அதன் அற்புதமான சாலைகள். ஒவ்வொரு சாலையும் ஒரு பசுஞ்சோலையாகக் காட்சியளிக்கும். சத்தியத்தின் முன்னும் பின்னும் அறம் காரணத்துணையாக நிற்பது போல் சாலையின் இருபுறமும் சிறிதும் வெயில் நுழைய முடியாதபடி அடர்ந்த மரங்கள் பசுமைக் குடையாக நின்றனவென்றால் நிழலுக்குக் கேட்கவா வேண்டும்?
முன்சிறையை நோக்கிச் சாலையில் நடந்து கொண்டிருந்த போது சாலையின் இருபுறமும் அழகிய இயற்கைக் காட்சிகளைக் கண்டான் தளபதி. பச்சைப் பசும்பாய் விரித்தாற் போன்ற நெல் வயல்கள், அவற்றின் இடையேயுள்ள நீர்ப் பள்ளங்களில் தீப்பிடித்தது போல் மலர்ந்துள்ள பல செந்நிற மலர்கள், கரும்புத் தோட்டங்கள், கதலிக்காடுகள், கன்னிப் பெண்ணைப் போல் கலகலத்துப் பாயும் சிற்றோடைகள்! என்ன வளம்! என்ன அழகு! வாழ்நாள் முழுவதும் அந்தத் தென்பாண்டி நாட்டு காட்சிகளில் ஒரு புதிய அழகு பிறந்து கொண்டிருப்பது போல் தோன்றியது.
பலநூறு ஆண்டுகளுக்கு முன்னால் சங்க காலத்தில் ஒருசிறைப் பெரியனார் என்ற புலவர் நாஞ்சில் நாட்டைப் பற்றி வருணித்துப் பாடியிருக்கும் புறநானூற்றுப் பாடலின் அழகிய கருத்துகள் அவனுக்கு நினைவுக்கு வந்தன.
'விதைத்த வித்துகள் தண்ணீர் இல்லையே என்பதனால் முளைக்காமற் போகமாட்டா. முளைத்துச் செழித்துக் கரும்பு போல் வளரும். கோடைக் காலத்தில் எங்கும் வறட்சி தென்படும் போது பெண்களின் கண்களை ஒத்த கருங்குவளை மலர்கள் பாருக்குமிடமெல்லாம் வளமாகப் பூத்துக் கிடக்கும். கறுப்பு நிற அடி மரத்தையுடைய மலர்கள் உதிர்ந்து மிதக்கும்படி நீர்க் கால்கள் கடலை நோக்கி ஓடும்.'
'ஆகா! இந்தப் புலவருக்குக் கருங்குவளைப் பூக்களை நினைக்கும் போதே பெண்களின் கண்கள் தானே நினைவுக்கு வருகிறதே! உலகத்தில் கவிநோக்கு என்பதே இப்படித்தான் இருக்கும் போலும்! அழகுள்ள ஒரு பொருளைப் பார்க்கும் போது அதே அழகுள்ள மற்றொரு பொருளின் நினைவை அது தூண்டி விடுகிறதோ?'
தன்னை அறியாமலே திருநந்திக்கரையில் பூ விற்றுக் கொண்டிருந்த அந்த இளம் பெண்ணின் எழில் முகம், நினைவுகள் ஓடி மறையும் அழகிய தடக்கண்கள் எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்கத் தொடங்கினான் தளபதி வல்லாளதேவன்.
தனக்குத்தானே சிரித்துக் கொண்டான். 'சற்று முன் அந்தப் புலவரைப் பற்றி இகழ்ச்சியாக எண்ணினேன்! எனக்கு மட்டும் இப்போது எந்த நினைவு உண்டாகிறது? உடம்பில் இரத்தமும் உள்ளத்தில் நினைக்கும் உரமும் இருக்கிறவரை மனிதர்கள் எல்லோருக்கும் இந்த நினைவுத் தொத்துநோய் பொதுவானதுதானோ?'
சிந்தித்தவாறே முன்சிறையை நெருங்கிக் கொண்டிருந்தான் அவன். இன்னும் கால் நாழிகைத் தூரம் நடந்தால் முன்சிறையை அடைந்து விடலாம். தொலைவில் தென்படும் ஓவியம் போல் அவன் நடந்து கொண்டிருந்த சாலையிலிருந்து பார்க்கும் போது ஊர் மங்கலாகத் தெரிந்தது. எந்த ஊரையும் தொலைவிலிருந்து பார்க்கும் போது கோவிலும், கோபுரமும், வீடுகளும், மரங்களுமாக அதன் அழகே தனிக்கவர்ச்சி மிகுந்து தோன்றும். அருகில் நெருங்கி உள்ளே நுழைந்து விட்டால் அந்தக் கவர்ச்சி இருப்பதில்லை. நுழைந்து பார்க்கும் போது கவலையும், துன்பமும், வேதனையும், வஞ்சனையும் தான் அவற்றுள் தெரிகின்றன.
ஊர் நெருங்க நெருங்கத் தளபதியின் மனத்தில் சிந்தனைகள் குறைந்து சொந்தக் கவலைகள் எழுந்தன. 'முன்சிறையில் எங்கே போய்த் தேடி யாரிடம் குதிரை கேட்பது? குதிரை கிடைத்தாலும் அரண்மனைக்குப் போய்ச் சேருவதற்குள் இரவாகிவிடுமே? காலையிலிருந்து கூற்றத் தலைவர் கூட்டத்தில் என்னென்ன முக்கியமான செய்திகளைப் பேசி முடிவு செய்தார்களோ? அவற்றையெல்லாம் நான் அருகிலிருந்து அறிந்து கொள்ள முடியாமல் கெடுத்து என்னை, இந்தக் குட்டையன் ஏமாற்றி விட்டானே? இனி நான் இரவில் அரண்மனைக்குப் போனாலும் அந்தரங்கக் கூட்டத்தில் நடந்தது பற்றி யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்பதும் இயலாது. என்ன நடக்கிறதோ பார்க்கலாம். எண்ணத்தில் அவநம்பிக்கை கலந்திருந்தாலும், வல்லாளதேவனுக்கு அதனிடையே ஒரு சிறு நம்பிக்கையும் இருந்தது. 'வைகறையிலேயே ஆபத்துதவிகள் தலைவன் மகரநெடுங்குழைக்காதன் தன் கூட்டத்தோடு அரண்மனைக்குச் சென்றிருப்பதனால் அவன் மூலமாக ஏதாவது நடந்த செய்திகள், பேசப்பட்ட விவரங்கள், குறிப்பாகவோ வெளிப்படையாகவோ தெரியலாம்' என நம்பினான் தளபதி. மந்திராலோசனைக் கூட்டம் நடக்கிற இடத்தில் எல்லோரையும் உள்ளே இருக்கவிட மாட்டார்கள். ஆனால் குழைக்காதன் குறிப்புத் தெரிந்தவன். சமயத்துக்கேற்றாற் போல் சாமர்த்தியமாக நடந்து கொள்ள அவனுக்குத் தெரியும் என்று எண்ணித் தற்காலிகமாகத் திருப்தியடைந்தான் தளபதி.
'நேரே முன்சிறை அறக்கோட்டத்துக்குப் போனால் அங்கே பகல் உணவை முடித்துக் கொள்ளலாம். அறக்கோட்டத்தில் இருப்பவன் கூட நாராயணன் சேந்தனின் தமையனான அண்டராதித்த வைணவன் தானே? அவனிடமே அவனுடைய தம்பி செய்த வஞ்சனையை விவரித்து நம்முடைய அவசர நிலையையும் கூறி குதிரை சம்பாதித்துத் தருமாறு கேட்கலாம். நாராயணன் சேந்தனைப் போல் அடங்காப்பிடாரி இல்லை அவன் தமையன். பரம சாது, அப்பாவி மனிதனுங் கூட. நாம் சொன்னால் உடனே கேட்பான்' என்று எண்ணியவனாக ஊருக்குள் நுழைந்து அறக்கோட்டத்துக்குச் செல்லும் பகுதியில் நடந்தான் வல்லாளதேவன்.
அறக்கோட்டத்து வாசலை அவன் நெருங்கிய போது அங்கே அண்டராதித்த வைணவனும், அவன் மனைவி கோதையும் நின்று கொண்டு யாரோ ஒரு குதிரை வீரனை வழியனுப்பிக் கொண்டிருந்தனர். குதிரையின் மேல் வீற்றிருந்தவன் அவர்களுக்கு வணக்கம் செலுத்தி விடைபெற்றுக் கொண்டு புறப்படத் தயாராயிருந்தான்.
திடீரென்று தளபதி வல்லாளதேவன் கால்நடையாக அங்கு வந்து சேர்ந்தது அவர்களுக்கு வியப்பை அளித்தது. குதிரையின் மேல் இருந்தவன் பரபரப்படைந்து உடனே கீழே குதித்துத் தளபதியை வணங்கினான். அண்டராதித்தனும் கோதையும் கூட வணங்கினர்.
"கரவந்தபுரத்துக் குறுநிலவேள் பெரும்பெயர்ச் சாத்தனிடமிருந்து வருகிறேன். அவசர ஓலை ஒன்றுடன் அரண்மனைக்குத் தூதனுப்பப் பட்டிருக்கிறேன்" என்று தளபதி வல்லாளதேவனுக்குத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான் புதியவன்.
-------------
1.25. நிலவறைக்குள் நிகழ்ந்தவை
திருநந்திக்கரையில் தளபதியை ஏமாற்றி விட்டு அவசரமாகக் குறுக்கு வழியில் அரண்மனைக்குத் திரும்பி வந்து விட்டான் நாராயணன் சேந்தன். கோட்டை வாயிலில் நுழையும் போதே குறிப்பாகச் சில காட்சிகளைக் கண்டு காவல் வீரர்கள் இரண்டொருவராகக் கூடி நின்று கொண்டிருந்தனர். தான் ஏறி வந்த குதிரை, கைப்பற்றிக் கொண்டு வந்த தளபதியின் குதிரை இரண்டையுமே கோட்டைச் சுவர்களின் அருகே ஒரு மரத்தடியில் கட்டிவிட்டு அதன் பின்பு தான் கோட்டைக்குள் நுழைந்தான் சேந்தன்.
அரண்மனையை ஒட்டியே அத்தாணி மண்டபமும், ஆலோசனைக் கூடங்களும், உள்படு கருமக் கோட்டங்களும் சார்பாக இருந்தன.
கோட்டையின் முதல் இரண்டு பிரதான வாயில்களைக் கடந்த பின்பே மகாராணியின் அரண்மனை அமைந்திருந்தது. கோட்டையின் ஒவ்வொரு வாயிலும் பாண்டிய மரபின் புகழ்பெற்ற அரசர் ஒருவருடைய பெயரைத் தாங்கிக் கொண்டிருந்தது.
முதல் வாயிலாகிய பராந்தகப் பெருவாயிலைக் கடக்கின்றவரை நாராயணன் சேந்தனுக்கு ஒரு தடையும் ஏற்படவில்லை. மதிற் சுவரோரத்தில் சிறு சிறு கும்பல்களாகக் காவல் நின்று கொண்டிருந்த வீரர்கள் கூட அவனை ஒரு பொருட்டாக மதித்துத் தடுக்கவோ விசாரிக்கவோ செய்யாமல் போகவிட்டு, வாயிலை நெருங்கிய போது தான் அன்றைய தினம் கோட்டையிலும் அரண்மனைக்குள்ளும் எவ்வளவு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள் என்பது அவனுக்குத் தெரிய வந்தது.
அவனுக்குப் பின்புறம் 'சுரிகை' எனப்படும் பயங்கரமான சுழல் வாளை அணிந்த இரண்டு வீரர்கள் மௌனமாகப் பின் தொடர்ந்தனர். நாராயணன் சேந்தனுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. கோபத்தோடு பின்புறம் திரும்பித் தன் புறாமுட்டை போன்ற பெரிய கண்களை உருட்டி விழித்து அவர்களைப் பார்த்து, "ஏன் என்னைப் பின் தொடருகிறீர்கள்? நான் மகாமண்டலேசுவரரின் அந்தரங்க ஒற்றன். அவர் இங்கே தங்கியிருக்கும் போது அவரைப் பார்ப்பதற்கு வரவும், போகவும் எனக்கு முழு உரிமை உண்டு. நான் சந்தேகத்துக்குரியவனோ, உளவறிய வந்திருப்பவனோ, அல்லவே?" என்று சீற்றத்தோடு கேட்டான். அப்போது சேந்தனுக்குக் கண்கள் கோவைப்பழம் போல் சிவந்துவிட்டன. உதடுகள் துடித்தன.
ஆனால் அவனுடைய கேள்விக்கு அவனைப் பின் தொடர்ந்த வீரர்கள் பதிலே சொல்லவில்லை. அவ்வளவேன்? அவனுடைய சினமும், கொதிப்புடன் வெளிப்பட்ட கேள்வியும் அவர்கள் முகங்களில் உணர்ச்சியின் ஒரு சிறிய மாறுதலையாவது தோற்றுவிக்க வேண்டுமே. அது கூட இல்லை. அவர்கள் சிலைபோல் நடந்தனர். அவன் நின்றால் அந்த வீரர்களும் நின்றனர்.
சேந்தன் திகைத்தான். அவன் மனத்தில் சந்தேகமே வளர்ந்தது. சிறிது திகிலும் எட்டிப் பார்த்தது. அவர்களை அடியிலிருந்து முடிவரை நன்றாகக் கவனித்துப் பார்த்தான். ஆபத்துதவிப் படையைச் சேர்ந்தவர்களாக இருக்கலாமென்று அவனுக்குத் தோன்றியது. அவர்கள் நடந்து கொண்ட விதமும் அவர்களைப் பற்றி அனுமானிக்க ஏற்றதாகத்தான் இருந்தது. காரணமோ மறுமொழியோ கூறாமல் பாதுகாப்புக்காக எதையும் செய்யும் உரிமை ஆபத்துதவிகளுக்கு மட்டுமே உண்டு.
'வந்தது வரட்டும்! இவர்களிடம் கேள்வி கேட்டு கெஞ்சிக் கொண்டு நிற்பதில் பயனில்லை. துணிந்து உள்ளே நுழைகிறேன். முடிந்ததைச் செய்து கொள்ளட்டும்' என்று பின்னால் வருபவர்களைக் கவனிக்காமல் வரகுணன் வாயிலில் நுழைந்தான் அவன். பின்னால் தொடர்ந்து வந்த ஆபத்துதவிகள் வரகுணன் வாயில் வரைதான் அவனைப் பின்பற்றி வந்தனர். அதற்கு மேல் அவர்கள் அவனைப் பின் தொடரவும் இல்லை; உள்ளே போகக் கூடாதென்று தடுக்கவும் இல்லை. பேசாமல் வாயிலுக்கு இந்தப்புறமே ஒதுங்கி நின்று கொண்டனர். ஆனால் வாயிற் காவலுக்கென்றே வழக்கமாக அந்த இடத்தில் அரண்மனையைச் சேர்ந்த வேறு இரு காவலர்கள் இருப்பதுண்டு. அவர்கள், "காலையிலிருந்து அரண்மனையில் கூற்றத் தலைவர்களின் அந்தரங்க ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. உள்ளே யாரையும் விடுவதற்கு அனுமதி இல்லை" என்று சொல்லி நாராயணன் சேந்தனைத் தடுத்து விட்டனர். தலைவலி போய்த் திருகுவலி வந்த கதையாகி விட்டது. 'ஆபத்துதவிகள் அந்த மட்டில் விட்டார்களே!' என்று மகிழ்ச்சியோடு உள்ளே நுழையப் போக இவர்கள் தடுத்துவிட்டார்களே! என்று தயங்கி நின்றான் சேந்தன்.
"காவல் வீரர்களே! உங்கள் கடமை உணர்ச்சியைப் பாராட்டுகிறேன். அந்தரங்க ஆலோசனைக் கூட்டம் நடக்கும் போது யாரையும் உள்ளே விடக்கூடாது என்று கட்டுப்பாடு நல்லதுதான். ஆனால் எல்லோரையும் அதற்காகத் தராதரம் பார்க்காமல் தடுத்து நிறுத்தி விடலாமா? நான் இப்போது உடனே மகாமண்டலேசுவரரைச் சந்தித்து ஓர் அவசரச் செய்தியைக் கூறியாக வேண்டுமே! என்னை நீங்கள் இப்படித் தடுத்தால் நான் என்ன செய்வது? உங்களிடம் வாதாடிக் கொண்டிருக்காமல் நான் திரும்பிப் போய் விட்டாலோ, என்னை உள்ளே விட மறுத்த குற்றத்துக்காக நீங்கள் தான் பிறகு மகாமண்டலேசுவரரிடம் திட்டுக் கேட்க நேரிடும். எனக்கென்ன வந்தது? நான் பேசாமல் இப்போதே திரும்பிப் போய்விடுகிறேன்" என்று நாராயணன் சேந்தன் நயத்துடனும், பயமுறுத்தல் போலவும் பேசி உடனே திரும்பிப் போய் விடுகிறவனைப் போல் நடித்தான்.
அவனுடைய தந்திரமான பேச்சும், நடிப்பும் நல்ல பயனை அளித்தன.
"ஐயா! இருங்கள். போய்விடாதீர்கள். எங்களுக்கு எதற்கு வம்பு? உங்கள் பெயரைச் சொல்லுங்கள். உள்ளே போய் மகாமண்டலேசுவரரிடமே சொல்லி அனுமதி பெற்று வந்துவிடுகிறேன். அதுவரையில் இப்படி நில்லுங்கள்" என்றான் காவலர்களில் ஒருவன். உடனே நாராயணன் சேந்தன் மகாமண்டலேசுவரரின் பெயரைக் கூறியதும் காவலன் அடைந்த பரபரப்பைக் கண்டு சிரித்துக் கொண்டே தன் பெயரைக் கூறினான். காவலன் அதைக் கேட்டுக் கொண்டு உள்ளே சென்றான். கோட்டைக்குள் ஆபத்துதவிகள் இரகசியக் காவல் புரிவதையும், காவல் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரித்திருப்பதையும் பார்த்த போது அன்று ஏதோ சில முக்கிய நிகழ்ச்சிகள் அங்கு நடந்திருக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டான் நாராயணன் சேந்தன்.
உள்ளே போனவன் திரும்பி வருகிற வரையில் மற்றவனிடம் பேச்சுக் கொடுத்துப் பார்த்தால் நடந்த நிகழ்ச்சிகள் பற்றி ஏதாவது தெரியும் என்று அவன் வாயைக் கிளறி வம்புக்கு இழுத்தான். ஆனால் அந்த மற்றொரு காவலன் சேந்தனின் கேள்விகளுக்கு அமுத்தலாக இரண்டொரு சொற்களில் பதில் சொல்லி முடித்துவிட்டான். அவனிடமிருந்து தான் எதிர்பார்த்த எதையும் தெரிந்து கொள்ள முடியவில்லை சேந்தனுக்கு.
அதற்குள் உள்ளே சென்றவன் திரும்பி வந்தான். "மகாமண்டலேசுவரர் உங்களை அழைத்து வரச் சொன்னார்."
"நானே போய்க் கொள்வேன். நீ ஒன்றும் என்னை அழைத்துச் செல்ல வேண்டாம்" என்று கூறிவிட்டு வரகுணன் வாயிலைக் கடந்து உள்ளே சென்றான் நாராயணன் சேந்தன்.
அரண்மனையில் கொலுமண்டபத்தின் வடக்குப் புறத்தில் புலவர்கள் வாதிடும் இடமான அரசவைப் பட்டிமண்டபத்தில் கூற்றத் தலைவர்களின் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. 'அந்தரங்க மந்திராலோசனைக் கென்றே தனி மண்டபம் இருக்கும் போது அரசவை பட்டிமண்டபத்தில் ஏன் கூடியிருக்கிறார்கள்?' என்ற கேள்வி சேந்தன் மனத்தில் உண்டாயிற்று. பட்டிமண்டபத்தின் வெளிப்புறத்திலேயே மகாமண்டலேசுவரருக்காகக் காத்துக் கொண்டு நின்றான் அவன்.
சிறிது நேரத்தில் அவர் வெளியே வந்தார். "என்ன செய்தி? இப்பொழுதுதான் வருகிறாயா?" என்று மலர்ந்த முகத்தோடு தம் அந்தரங்க ஒற்றனை வரவேற்றார். "சுவாமீ! தளபதியைத் திருநந்திக்கரை வரைக்கும் இழுத்தடித்து உரிய காலத்தில் கூட்டத்துக்கு வரமுடியாமல் ஏமாற்றி விட்டேன்" என்று அவர் காதருகில் வந்து கூறினான் சேந்தன்.
"அதெல்லாம் சரிதான் சேந்தா! இப்போது வேறொரு திறமையான செயலை உன் கைகளில் ஒப்படைக்கப் போகிறேன். மந்திராலோசனை மண்டபத்தின் பின்புறமுள்ள நிலவறையின் கதவை வெளிப்புறமாக அடைத்துத் தாழ் போடச் செய்திருக்கிறேன். நீதான் நிலவறைக்குள் போய் அங்கு ஒளிந்திருப்பவனை யாருக்கும் தெரியாமல் வெளியே இழுத்துக் கொண்டு வர வேண்டும். என்ன சொல்கிறாய்? உன்னால் முடியுமா? முடியாதா?" என்று மெல்லிய குரலில் அவனுக்கு மட்டும் கேட்கும்படி சொன்னார் அவர்.
'ஐயோ! நான் மட்டும் தனியாகவா?' என்ற சொற்கள் சேந்தனுடைய நாக்கு நுனி வரை வந்து விட்டன. அவரிடம் தனக்கிருந்த பயம், மரியாதைகளை எண்ணி அவற்றைக் கூறிவிடாமல் 'ஆகட்டும்' என்பது போல் தலையை ஆட்டினான்.
"போ! முதலில் அதைக் கவனி! வேறு யாரையும் உன்னோடு துணைக்குக் கூப்பிடாதே! நீ மட்டும் தனியாகவே போ!" என்று துரத்தினார் மகாமண்டலேசுவரர்.
"சுவாமி! இன்னொரு இரகசியம். உங்களிடம் சொல்லிவிட்டுப் போய்விடுகிறேன்" என்றான் சேந்தன்.
"என்ன சொல்லேன்?"
"அரண்மனையில் ஆபத்துதவிகள் வந்திருக்கிறார்கள் போலிருக்கிறதே?"
"அது எனக்கு முன்பே தெரியும்! நீ போய் உன் காரியத்தைப் பார்."
சேந்தன் நிலவறையை நோக்கிப் புறப்பட்டான். இருட்குகையாக, அந்தகாரக் களஞ்சியமாக இருக்கும் நிலவறையில் தனியாக நுழைய வேண்டுமென்பதை நினைத்த போதே துணிவு மிகுந்தவனான நாராயணன் சேந்தனுக்கே பாதாதிகேச பரியந்தம் நடுங்கியது. ஒரு நாழிகை இரண்டு நாழிகையில் சுற்றித் தேடிப் பார்த்து விடக்கூடிய நிலவறையா அது? விடிய விடியத் தேடினாலும் அங்கு ஆள் ஒளிந்து கொண்டிருப்பதைக் கண்டுபிடிக்க முடியாதே! வேறு யாராவது வந்து அவனிடம் அந்த வேலையைச் செய்யும்படி கூறியிருந்தால் முடியாது என்று மறுத்திருப்பான். அல்லது செய்வதாக ஒப்புக் கொண்டு செய்யாமல் இருந்திருப்பான். மகாமண்டலேசுவரரே கட்டளையிட்டிருக்கும் போது அலட்சியமாக இருக்க முடியுமா?
வெளிப்புறம் இழுத்து அடைத்திருந்த மரக்கதவைத் திறந்து கொண்டு நிலவறையின் இருண்ட படிகளில் இறங்கினான் சேந்தன். எந்த விநாடியும் அந்த இருள் பரப்பின் எந்த மூலையிலிருந்தும், எதிரி ஒருவரின் முரட்டுக் கைகள் தன் கழுத்திலோ, பிடரியிலோ பாய்ந்து அழுத்தலாம் என்ற முன் எச்சரிக்கை அவன் மனத்தில் இருந்தது.
படிகளைக் கடந்து நிலவறைக்குள் இறங்கியாயிற்று. நின்ற இடத்திலிருந்து மிரண்ட விழிகளால் நான்கு புறமும் பார்த்தான். வெளிச்சத்திலிருந்து இருட்டுக்கு வந்திருந்த அவன் கண்களுக்கு அந்த இருள் பழகுவதற்குச் சில கணங்கள் ஆயின. இருளை ஓரளவு ஊடுருவும் கூர்மை கண்களுக்கு வந்த பின் சுற்றிலும் நிறைந்திருந்த பொருள்கள் மங்கலாகத் தெரிவதைக் கண்டான்.
வலது புறச் சுவர் முழுவதும் மனிதர்கள் தலையிழந்த முண்டங்களாய்த் தொங்குவது போல் செப்புக் கவசங்கள் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தன. இன்னொரு புறம் மின்னல் துண்டங்களைச் சுவரில் பிடித்துப் பதிப்பித்து வைத்திருந்தது போல் வீர வாள்கள் வரிசையாக விளங்கின. மூலைக்கு மூலை பழைய நாணயங்கள் குவிந்திருந்தன. ஒரு காலத்தில் பாண்டி மண்டலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த இப்போது பயன்படாமல் போன அந்த நாணயங்கள் தன் கால்களில் இடறிய போது, 'காசு எத்தனை பேர்க் காலை இடறி விடுகிறது? நான் இப்போது காசை இடறிவிடுகிறேன்' என்று வேடிக்கையாக நினைத்துக் கொண்டான் சேந்தன். நிலவறையில் தன்னைச் சுற்றிலும் சிறிதும் பெரிதுமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிலைகள் யாரோ உயிருடன் கூடிய மனிதர்கள் தன்னைப் போல் பயந்து ஒடுங்கி மௌனமாக அந்த இருளில் நின்று கொண்டிருப்பது போல் அவன் கண்களுக்குத் தோன்றின.
வலது கையில் தாமரை மலரை ஏந்தி அபிநயம் பிடிப்பது போன்ற பாவனையில் ஒரு நடன மங்கையின் சிலை, வட்டக் கண்ணாடியால் தன் முகத்தை அழகு பார்த்துக் கொண்டே நெற்றிக்குத் திலகமிடும் கோலத்தில் ஒரு குமரிப் பெண்ணின் உயிரும் உணர்வும் துடிக்கும் உருவம், கைகளில் விளக்குத் தாங்கி நிற்கும் விளக்குப் பாவைகளின் வெண்கலச் சிலைகள், பாண்டிய அரச பரம்பரையைச் சேர்ந்த மன்னர்களின் சிற்பங்கள் எல்லாம் அங்கு இருந்தன. சுவரின் உச்சியில் ஒளியும் காற்றும் சிறிது நுழைந்து விட்டுப் போகட்டுமென்று அவ்விடத்தில் பக்கத்திற்கு ஒன்றாக இரு சிறு வட்டத் துவாரங்கள் அமைத்திருந்தார்கள். அந்த உயிரற்ற சிலைகளுக்கும் பொருள்களுக்கும் நடுவே உயிருள்ள ஒரு மனிதன் ஒளிந்து கொண்டிருந்தால் அவனை எப்படிக் கண்டுபிடிக்க முடியும்? சேந்தனுக்கு தலைசுற்றி மயக்கம் வந்துவிடும் போலிருந்தது.
அப்போது இருந்தாற் போலிருந்து நடன மங்கை சிலைக்கு அருகில் நிழல் அசைவது போல் கருப்பாக ஏதோ அசைந்தது.
"நில் அங்கேயே! ஓர் அடி நகர்ந்தாலும் உன் உயிர் உனக்குச் சொந்தமில்லை" என்று கையிலிருந்த வாளை ஓங்கியவாறு கத்திக் கொண்டே பாய்ந்தான் சேந்தன். அவன் கையில் இருந்த வாள் நடன மங்கையின் வெண்கலச் சிலையில் மோதி மணி அடித்தாற் போன்ற பெரிய ஓசையையும் எதிரொலியையும் உண்டாக்கிவிட்டு இரண்டாக முறிந்து கீழே விழுந்தது. 'வெறும் பிரமைதானோ?' என்று திகைத்து நின்றான். யாரோ மெல்லச் சிரிக்கின்ற ஒலி அவனுக்கு அருகில் மிகமிக அருகில் கேட்டது.
"யார் அது சிரிப்பது? மானமுள்ள ஆண்பிள்ளையானால் நேருக்கு நேர் வந்து நிற்க வேண்டும்." பயத்தையும் நடுக்கத்தையும் மறைத்துக் கொண்டு தன் முழு மூச்சையும் அடக்கி இரைந்து கத்தினான் அவன். அவன் குரல் ஆயிரம் பதினாயிரம் எதிரொலிக் குரல்களாக மாறி அந்த நிலவறைக்குள் ஒலித்து அவனையே பயமுறுத்தின. எதிரொலி ஓய்ந்ததும் முன்பு கேட்ட அதே சிரிப்பொலி முன்னிலும் பலமாகக் கேட்டது. சேந்தன் இரண்டு கைகளாலும் இருளைத் துழாவிக் கொண்டு முன்னால் பாய்ந்தான். பிறந்த மேனியராய்ப் பல கன்னிப் பெண்கள் இருளில் நின்று கொண்டு இருப்பது போல் அவனைச் சுற்றிலும் அவன் உயரத்துக்குச் சரியாக சிலைகள் நிறுத்தப்பட்டிருந்தன. அவற்றில் முட்டி மோதி மண்டையை உடைத்துக் கொள்ளாமல் இருட்டில் பார்த்து நடக்க வேண்டியிருந்தது. அவன் முன்னால் நடக்க நடக்க அந்தச் சிரிப்பொலியும் அவனைவிட்டுத் தள்ளிச் சென்று கொண்டே இருந்தது. திடீரென்று ஒரு பெரிய வௌவால் வேகமாகப் பறந்து வந்து சேந்தன் முகத்தில் மோதியது. அப்போது சேந்தனுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியில் யாரோ முகத்தில் ஓங்கி அடித்து விட்ட மாதிரி இருந்தது. கையிலிருந்த ஒரே ஒரு பாதுகாப்புக் கருவியான வாளும் சிலையில் மோதி முறிந்துவிட்டது.
உயிரின் மேலுள்ள இயற்கையான ஆசையும், பயமும் சேந்தனைக் கட்டுப்படுத்தி நிறுத்தின. சுவரில் வரிசையாகக் கட்டப்பட்டுத் தொங்கும் வாள்களின் வரிசையிலிருந்து ஒன்றை உருவிக் கையில் எடுத்துக் கொண்டு அப்புறம் அந்த நிலவறை முழுவதும் சுற்றலாமென்று எண்ணினான் அவன். பயம் அந்த முன்னெச்சரிக்கையை அவன் மனத்தில் எழுப்பி விட்டிருந்தது.
பதற்றமும் அவசரமும் உந்தித் தள்ளச் சுவர் அருகில் சென்று ஒரு வாளின் நுனியைப் பிடித்து இழுத்தான். அது மேற்புறம் நன்றாக இறுக்கிக் கட்டப்பட்டிருந்ததால் அவ்வளவு லேசாக அவன் இழுத்த மாத்திரத்தில் கைக்கு வந்துவிடவில்லை. எனவே பக்கத்தில் சென்று இரண்டு கைகளாலும் பலங்கொண்ட மட்டும் அதைப் பிடித்து இழுத்தான். அடுத்த விநாடி நூற்றுக்கணக்கான வெண்கல மணிகளை ஒரே சமயத்தில் யாரோ தாறுமாறாக அடித்தது போன்று ஓர் ஒலிக் குழப்பம் அங்கு உண்டாயிற்று. மடமடவென்று சுவரிலிருந்த அத்தனை வாள்களும், கேடயங்களும் சரிந்து உதிர்ந்தன. நாராயணன் சேந்தன் பின்னுக்கு விலகி நின்று கொண்டான். அவன் எதிர்பாராதது நடந்து விட்டது. அந்தச் சுவரில் கட்டப்பட்டிருந்த எல்லா வாள்களும் ஒரு கோடியிலிருந்து மற்றொரு கோடி வரை ஒரே நீளக் கயிற்றினால் கட்டப்பட்டிருந்தன. அவன் இழுத்த வேகத்தில் கயிறு அறுந்து விட்டது. அந்த எதிர்பாராத நிகழ்ச்சியால் அவன் திகைத்து நின்று கொண்டிருக்கும் போதே நிலவறையிலிருந்து வெளியேறும் படியில் மேலே யாரோ ஏறி ஓடும் காலடியோசை கேட்டது.
--------
1.26. வேடம் வெளிப்பட்டது
குழல்மொழியின் முகத்தில் தென்பட்ட வியப்பைக் கண்டு துறவி சிரித்தார். "இந்த அறைக்குள் இருப்பதை நான் எப்படி இவ்வளவு சரியாகக் கண்டு பிடித்துக் கூறினேன் என்று தானே நீ வியப்படைகிறாய்?"
குழல்மொழி அவருடைய கேள்விக்கு மறுமொழி சொல்லாமல் ஒரு கணம் அவருடைய முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டு நின்றாள்.
"ஏன் அப்படி என்னையே பார்க்கிறாய்? என்னுடைய ஆருடத் திறமையைப் பரிசோதிப்பது போல் நீ கேள்வி கேட்டாய். நான் பதில் கூறினேன். இத்தனைக் கட்டுக் காவல்களையும் கடந்து யவன வீரர்கள் வாளேந்தி நின்று அயராமல் காக்கும் இந்த இடத்துக்குள் இருப்பதைப் புள்ளி பிசகாமல் தெள்ளத் தெளிய அடிகள் எப்படிக் கூறினாரென்று சிந்தித்துப் பார்க்கிறாயா?"
அடிகளின் கேள்விகளைக் கவனிக்காதது போல் இருந்து விட்டு, "சரி! வாருங்கள். மேலே சுற்றிப் பார்க்கலாம்" என்று கூறி அவரை அந்த இடத்திலிருந்து அழைத்துச் செல்ல முயன்றாள் குழல்மொழி.
"முடியாது பெண்ணே! நான் ஏமாற மாட்டேன். இந்த யவன வீரர்களின் காவலுக்கு அப்பால் என்ன இருக்கிறதென்பதைத் தெரிந்து கொள்ளாமல் நான் இங்கிருந்து ஓர் அடி கூட நகர மாட்டேன்!" என்று கூறி அவர் பிடிவாதமாக அங்கிருந்து புறப்பட மறுத்தார்.
"அதுதான் அங்கிருப்பதை உங்கள் ஆருடத்தினால் சொல்லி விட்டீர்களே?"
"சொன்னால் மட்டும் போதுமா? எங்களுடைய முன்னோர் சுந்தர முடியையும், வீர வாளையும் நான் ஒரு முறையாவது கண் குளிரக் காண வேண்டாமா?" துறவி உருக்கமான குரலில் அவளைக் கெஞ்சினார்.
"அதென்ன? 'எங்களுடைய முன்னோர்' என்கிறீர்கள்? அடிகளுக்குத் தமிழில் தன்மை, முன்னிலை, படர்க்கை வேறுபாடொன்றும் தெரியவே தெரியாதோ? நீர் தான் பாண்டிய மரபின் இறுதி வாரிசு போலல்லவா பேசுகிறீர்?" என்று திருப்பிக் கேட்டாள் இடையாற்று மங்கலம் நம்பியின் புதல்வி.
"ஏன்? அப்படி இருக்க முடியாதோ? உனக்கு வேண்டுமானால் அது தெரியாமல் இருக்கலாம். இதோ ஒரு கணம் பொறுத்திரு" என்று சொல்லிவிட்டு அங்கே பக்கத்திலிருந்த வேறோர் மண்டபத்தில் நுழைந்து மறைந்தார் அடிகள். அவர் என்ன செய்யப் போகிறார் என்று அறியும் ஆவலோடு அந்த மண்டபத்தின் வாயிலையே பார்த்துக் கொண்டு தான் நின்றிருந்த இடத்தை விட்டு அசையாமல் நின்றாள் குழல்மொழி.
சிறிது நேரம் கழித்து மண்டபத்துக்குள்ளிருந்து வெளிவந்த ஆளைப் பார்த்த போது அவள் அப்படியே அதிர்ச்சி அடைந்து போய் நின்றாள். அவளால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. இளவரசன் இராசசிம்ம பாண்டியன் அவள் முன்பு வந்து நின்றான். அவனுடைய கவர்ச்சிகரமான கண்களிலும், சிரிப்புக் குடியிருக்கும் செவ்விதழ்களிலும் குறும்புத்தனம் குமிழியிட்டது. வியப்பும், பயமும், வெட்கமும் ஆகிய அத்தனை உணர்ச்சிகளும் அந்தப் பெண்ணின் பிறைச் சந்திரனையொத்த நெற்றியில் சங்கமமாயின.
"நான் தான் துறவி. துறவி தான் நான். இந்த உண்மை உன் தந்தைக்கும் அவருடைய அந்தரங்க ஒற்றனான நாராயனன் சேந்தனுக்கும் நன்றாகத் தெரியும். வேண்டுமென்றே உனக்கு மட்டும் தெரியவிடாமல் மறைத்துக் கொண்டேன் நான். இப்போது நீயும் தெரிந்து கொள்வதற்குச் சந்தர்ப்பம் வந்துவிட்டது. தெரிந்து கொள்" என்றான் இராசசிம்மன்.
துறவியாக வேடம்போட்டு இளவரசராக மாறித் தன்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தி நிற்கும் அவரிடம் என்ன பேசுவதென்று தெரியாமல் திகைத்தாள் அவள்.
"இப்போதாவது சொல்! எதிர்காலத்தில் யாருடைய தலையில் சூடுவதற்காக வைக்கப்பட்டிருக்கிறதோ அவன் கூடவா தனது முன்னோர் பயன்படுத்திய சுந்தர முடியையும் வீரவாளையும் பார்க்கக் கூடாது?"
"இனி உங்களைத் தடுக்க நான் யார்? அதோ அந்த பயங்கரமான அந்த யவனக் காவல் வீரர்களே இன்னாரென்று தெரிந்து கொண்டவுடன் உருவிய வாளை உறைக்குள்ளே போட்டுக் கொண்டு வணங்கி நிற்கிறார்களே?" என்று அதுவரையில் வாய் திறவாமல் இருந்த குழல்மொழி வாய் திறந்து மறுமொழி சொன்னாள்.
"அந்த வாள்களுக்கு நான் என்றும் அஞ்சமாட்டேன்; இதோ குறுகுறுவென்று வண்டு சுழல்வது போல் என்னைப் பார்க்கின்றனவே இந்த வாள்கள்தான் என்னைப் பயமுறுத்துகின்றன" என்று நகைத்துக் கொண்டே அவள் கண்களுக்கு அருகில் சுட்டு விரலை நீட்டிக் காட்டினான் இராசசிம்மன்.
குழல்மொழியின் பொன்னிறக் கன்னங்களில் குங்குமக் கோடுகள் படர்ந்தன. கண்களின் விழித்திரைகளில் இன்ப நிறைவு பொங்கும் உணர்ச்சிகளின் சாயல்கள் ஓடி மறைந்தன.
"வேடம் மாறியதற்கு ஏற்பப் பேச்சும் மாறுகிறாற் போலிருக்கிறதே? இளவரசர் தலைமறைவாக இருந்த காலத்தில் படித்துக் கொண்ட பேச்சுக்கள் போலிருக்கின்றன இவையெல்லாம்?" என்றாள் அவள்.
"எல்லாம் அந்த நாளிலிருந்தே உன்னைப் போன்ற பெண்களிடம் படித்துக் கொண்ட பேச்சுத்தானே? பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் மதுரை அரண்மனை நந்தவனத்தில் சிறு குழந்தைகளாக விளையாடிக் கொண்டிருப்போமே, அப்போது நடந்ததெல்லாம் உனக்கு நினைவிருக்கிறதா குழல்மொழி? உங்களுக்கெல்லாம் அப்போது ஏழெட்டு வயது கூட இருக்காது. பட்டுப் பாவாடை மண்ணில் புரள நீ, தளபதியின் தங்கை பகவதி, ஆசிரியர் மகள் விலாசினி இன்னும் இரண்டு மூன்று சிறுமிகள் எல்லோருமாகச் சேர்ந்து கொண்டு அரண்மனை நந்தவனத்துக்குப் பூப்பறிக்க வருவீர்கள். நான் அப்போது பத்துப் பன்னிரண்டு வயதுச் சிறுவன். வாட்போர் கற்றுக் கொண்டிருந்த சமயம் அது. வேடிக்கையாக வாளை உருவிச் செடிகளை வெட்டுவேன். உங்கள் பூக் கூடைகளைத் தட்டி விடுவேன். உங்களுக்கு அப்போது எப்படிக் கோபம் வரும்? என்னை என்னென்ன பேச்சுப் பேசுவீர்கள்?" பழைய இளமை நினைவுகளை நினைத்துப் பார்க்கும் போது ஏற்படும் ஒருவித ஏக்கம் மிகுந்த குரலில் பேசினான் இராசசிம்மன்.
"ஏ, அப்பா! உங்களுக்குத்தான் எவ்வளவு நினைவாற்றல்? நாங்கள் கூட மறந்து விட்டோம். சிறு வயதில் நடந்தவற்றையெல்லாம் மறந்து விடாமல் நினைவு வைத்துக் கொண்டிருக்கிறீர்களே?" என்று சொல்லிச் சிரித்தாள் குழல்மொழி. சொல்லி முடித்ததும் அவள் நெஞ்சம் மேலெழுந்து தணிய ஒரு பெருமூச்சு அவளிடமிருந்து வெளிப்பட்டது. அவள் உள்ளத்திலும் துள்ளித் திரிந்த காலமான அந்தப் பிள்ளைப் பருவத்து நிகழ்ச்சிகள், அவற்றைப் பற்றிய நினைவு அலைகள், கழிவிரக்கங்கள் எல்லாம் குமுறி எழுந்தன.
"வயது ஆக ஆக மனிதனுக்கு எது தன்னுடைய சொந்தக் கணக்கில் மீதமாகிறது தெரியுமா, குழல்மொழி? பழைய இளமை நினைவுகள் மட்டும் தான். இதோ என்னைப் பார், எத்தனை அரசியல் குழப்பங்கள், வெற்றிகள், தோல்விகள், சூழ்ச்சிகள், சோதனைகள் எல்லாம் வயதான பிறகு என்னைப் பிடித்துக் கொண்டன! தெரிந்தோ, தெரியாமலோ என் வயதையும் பொறுப்பையும் இவை அதிகப்படுத்தி விட்டன. அந்தப் பிள்ளை மனம், அந்த விளையாட்டுத் தனமான குறும்புகள் எல்லாம் இப்போது கல்லாக முற்றி விட்டன."
தன் உள்ளத்தின் அடக்க முடியாத துன்ப உணர்ச்சிகளின் தடுக்க முடியாத வெள்ளத்தையே உடைத்து விடுவது போல் அவளிடம் மனம் திறந்து பேசினான் அவன்.
பேசிக் கொண்டே இருந்தவன் பேச்சை நிறுத்திவிட்டு அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்த போது மென்மையான சோகம் படிவதைப் போன்ற கண்களின் கடைக்கோடியில் இரு நீர் முத்துகள் உதிர இருந்தன. அவன் பார்த்ததும் திடுக்கிட்டவள் போலத் தன் கையால் கண்களைத் துடைத்துக் கொண்டாள் குழல்மொழி.
"அடடா! உணர்ச்சி வசப்பட்டு எதையெதையோ பேசி உன் துன்பத்தைக் கிளறி விட்டுவிட்டேன் போலிருக்கிறது. இதுவரை நான் கூறியவறை மறந்து விடு. வா! உள்ளே போய் அந்தச் சுந்தரமுடியையும் பொற் சிம்மாசனத்தையும், வீர வாளையும் இருவருமே பார்த்துவிட்டு வருவோம்."
"நான் வரவில்லை! நீங்கள் மட்டும் போய்ப் பார்த்து விட்டு வாருங்கள்."
"பரவாயில்லை! நீயும் வா!" இராசசிம்மன் அவளை வற்புறுத்தி அழைத்துக் கொண்டு உள்ளே போனான்.
ஆகா! அந்த அறைக்குள் தான் என்ன ஒளி! என்ன அழகு! தாமரைப் பூவைப் போல் வட்டமாகப் பளிங்கு மேடை! அந்த மேடையின் மேல் ஒரு நீண்ட, பெரிய தந்தப் பேழை, பக்கத்தில் பட்டு உறையினால் பொற் சிம்மாசனம் மூடி வைக்கப்பட்டிருந்தது. தரைப் பரப்பின் மேல் குங்குமச் சிவப்பில் ஒளி நிறைந்த இரத்தினக் கம்பளங்களை விரித்திருந்தார்கள். கோவிலின் கர்ப்பக் கிருகத்துக்குள் நிற்பதைப் போன்று பயபக்தியோடு தந்தப் பேழைக்கு முன் வந்து நின்றனர் இராசசிம்மனும் குழல்மொழியும். அறை முழுவதும் பரிமளமான மணங்கள் கலந்து நிறைந்திருந்தன. தெய்வச் சிலைக்கு முன் நின்று மரியாதை மிளிரும் கண்களால் பார்ப்பது போல் அந்தப் பேழையை இமையாமல் பார்த்துக் கொண்டு நின்றான் இராசசிம்மன்.
"என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்?" அவள் கேட்டாள்.
"பார்ப்பதற்கு என்ன இருக்கிறது? ஊழி ஊழியாகப் பொதியமலைத் தென்றலையும் முதிய தமிழ்ப் புலமையையும் போற்றிப் பாராட்டி அசைந்த முடி எதுவோ அது இப்போது இந்த நான்கு முழ நீளமுள்ள தந்தப் பேழைக்குள் அடங்கி விட்டதே!" என்று இரங்கிய குரலில் கூறிக் கொண்டே பிறகு அருகில் நெருங்கி அந்தப் பேழையைத் திறந்தான் அவன். உள்ளிருந்து ஒரு நட்சத்திர மண்டலமே எட்டிப் பார்ப்பது போல் ஒளிக்கீற்றுகள் பாய்ந்தன. மஞ்சள் நிறப் பட்டு விரிப்பின் மேல் அந்த மின்னல் முடி வெண்ணிலா விரித்தது. அதனருகே பேழையின் நீளத்துக்குச் சரியாக வைரக் கற்களும், வெண் முத்துக்களும் விரவிப் பதித்த உறைக்குள் வீரவாள் ஒன்று மறைந்து கொண்டிருந்தது.
'மகாமன்னரான என் தந்தைக்குப் பின்னர் இந்த ஒளி முடியும், வீரவாளும் இப்படியே பேழையில் உறங்க வேண்டியதுதானா? இவற்றைப் பேழைக்குள் பார்க்கும் போது, கண்ணின் நடுமையத்துக் கருவிழிகளைக் கூச வைக்கும் இந்த ஒளியைப் பார்க்கும் போது, என் உள்ளம் ஏன் இப்படிப் பொங்கி மேலெழுகிறது? உணர்ச்சிகளில் ஏன் புதிய வேகம் உண்டாகிறது? வெறும் முடியும், வாளும் மட்டுமா இதற்குள் அடைபட்டிருக்கின்றன? என் கண்களுக்கு இவை வேறொரு விதமாகவும் தோன்றுகின்றனவே! என் தந்தையின் தலைமுறைக்குப் பாண்டியப் பேரரசின் புகழும், வீரமுமே இப்படிச் சிறைப்பட்டு விட்டனவா?' அவனுடைய உள்ளத்தில் அலை அலையாகச் சிந்தனைகள் எழுந்தன.
இரண்டு கைகளாலும் அவற்றைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டான். குழல்மொழி எதுவும் பேசத் தோன்றாமல் மருண்ட விழிகளால் அவனைப் பார்த்துக் கொண்டே நின்றாள். அவன் பேழையை மூடிவிட்டுக் கடுமையான காவலுக்கு உட்பட்ட அந்தச் சிறிய அறையைச் சுற்றிலும் தன்னுடைய விழிகளைச் சுழற்றினான்.
பின்பு, "போகலாம் வா!" என்று குழல்மொழியையும் அழைத்துக் கொண்டு வெளியில் வந்தான். யவன வீரர்கள் மறுபடியும், வணக்கத்தோடு வழிவிட்டு விலகி நின்று கொண்டனர்.
மாளிகையின் மற்றப் பகுதிகளைச் சுற்றிப் பார்க்கும் போது குழல்மொழியும் இராசசிம்மனும் ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. இதற்கிடையில் தன் தோற்றத்தைப் பழையபடி துறவிபோல் மாற்றிக் கொண்டு விட்டான் அவன்.
கடைசியாக இடையாற்று மங்கலம் மாளிகையின் மேல் மாடத்தில் நிலா முற்றத்தின் திறந்த வெளியில் வந்து நின்றார்கள் அவர்கள் இருவரும். அந்த மாளிகையிலேயே உயர்ந்த இடம் அதுதான். அங்கிருந்து கீழே நாற்புறத்துக் காட்சிகளும் அற்புதமாகத் தெரிந்தன. இடையாற்று மங்கலம் என்ற பசுமைப் போலப் பறளியாறு பாய்ந்து கொண்டிருந்தது. வர்ணக் கலவைகளை வாரி இறைத்தது போல அரண்மனை நந்தவனத்தில் பல நிற மலர்கள் தெரிந்தன.
"உலகத்தின் சாதாரணமான அழகை உலக நிலைக்கும் மேலே இருந்து கண்டால் எவ்வளவு அழகாக இருக்கிறது, பார்த்தாயா?" என்று சிரித்துக் கொண்டே கூறினான் இராசசிம்மன்.
"உண்மைதான்! எந்தச் சாதாரணப் பொருளின் நிலையையும் நன்றாக உணர வேண்டுமானால் அதை விட உயர்ந்த நிலையிலிருந்து தான் காண வேண்டும்." குழல்மொழி பேச்சில் தத்துவத்தைக் கொண்டு வந்து புகுத்தினாள்.
ஆனால் இராசசிம்மன் அவளுடைய பேச்சைக் காதில் போட்டுக் கொள்ளாமல் வேறொரு காட்சியில் கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்தான்.
"இதென்ன? என்னிடம் பேச்சைக் கொடுத்துவிட்டு இதைக் கவனிக்காமல் எங்கே பார்க்கிறீர்கள்?" என்று சிறிது சினத்துடனே கடிந்து கொண்டு அவன் பார்வை சென்ற திசையில் தானும் பார்த்தாள் குழல்மொழி.
பறளியாற்றின் நடுவில் ஒரு படகு வேகமாக அரண்மனையை நோக்கி வந்து கொண்டிருந்தது. படகில் வீற்றிருந்தவர்கள் நன்றாகத் தெரியாவிட்டாலும் வேளான் தான் அதைச் செலுத்திக் கொண்டு வருகிறான் என்று தெரிந்து கொள்ள முடிந்தது. படகில் இருந்த மற்ற மனிதர்களை இன்னாரென்று குழல்மொழியால் கண்டு கொள்ள முடியவில்லை. ஆனால் அந்த திசையில் பார்த்துக் கொண்டிருந்த இளவரசன் இராசசிம்மனின் முகத்தில் வியப்பு மலர்வதை அவள் கவனித்தாள்.
"இவ்வளவு அவசரமாக வேளான் யாரைப் படகில் ஏற்றிக் கொண்டு வருகிறான்?" என்று இராசசிம்மனிடமே கேட்டாள் குழல்மொழி.
"ஆம், அவசரம் தான். நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு முக்கியமான மனிதன் என்னைச் சந்திக்க வந்து கொண்டிருக்கிறான். நீ சிறிது நேரம் இங்கேயே இரு. அவனைச் சந்தித்துப் பேசிவிட்டு வருகிறேன்" என்று சொல்லிக் கொண்டே மேல்மாடத்திலிருந்து இறங்கிச் சென்று விட்டான் இராசசிம்மன். அவன் நின்று பதில் சொல்லாமல் வேகமாகச் செல்வதைக் கண்டு திகைத்துப் போய் நின்றாள் குழல்மொழி.
------------
1.27. சேந்தன் மனத்தில் சில சந்தேகங்கள்
நிலவறையிலிருந்து ஆள் தப்பித்துக் கொண்டு மேலே ஓடும் காலடியோசை கேட்டதும் நாராயணன் சேந்தனுக்கு இதயத் துடிப்பே நின்று விடும் போலிருந்தது. அப்படியே இருட்டில் தாவிப் பாய்ந்து ஓடிப் பிடிக்கலாமென்றால் காலடியில் அவனைச் சுற்றிக் கூர்மையான வாள்கள் சிதறிக் கிடந்தன.
அவற்றை மிதியாதபடி பதறாமல் கீழே குனிந்து உட்கார்ந்து கொண்டு கை விரல்களை அறுத்து விடாமல் சிதறியிருந்த வாள்களை ஒதுக்கி வழி உண்டாக்கிக் கொண்டான். பின்பு தப்பிச் சென்றவனைத் துரத்திக் கொண்டு படியேறி ஓடினான். ஆனால் தப்பித்தவன் போகிற போக்கில் தாழிட்டுக் கொண்டு போயிருப்பதைக் கண்டதும் சேந்தனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.
பலங்கொண்ட மட்டும் கதவைத் தன் கைகளால் ஓங்கித் தட்டினான். நீண்ட நேரமாக அப்படித் தட்டிக் கொண்டே இருந்தான். கைகள் தான் வலித்தன. "சரிதான்! வகையாக மாட்டிக் கொண்டு விட்டேன். இந்த முரட்டுக் கதவை விடிய விடியத் தட்டினாலும் யாருக்குக் கேட்கப் போகிறது? இந்த இருட்டுக் கிடங்கில் பட்டினி கிடந்து சாக வேண்டுமென்று தான் என் தலையில் எழுதியிருக்கிறதோ என்னவோ?" என்று கதவடியில் கன்னத்தில் கையை ஊன்றிக் கொண்டு உட்கார்ந்து விட்டான். காலையில் இடையாற்று மங்கலத்திலிருந்து கோட்டாற்றுக்கும், கோட்டாற்றிலிருந்து தளபதியை அலைக்கழிப்பதற்காகத் திருநந்திக்கரைக்கும் அலைந்து களைத்திருந்த நாராயணன் சேந்தன் உட்கார்ந்தவாறே தூங்கத் தொடங்கி விட்டான்.
மறுபடியும் அவன் கண் விழித்த போது அவனுக்காகவே திறந்து வைக்கப்பட்டிருந்தது போல் நிலவறையின் மேற்கதவு திறந்திருந்தது. கதவுக்கு அப்பால் மந்திராலோசனை மண்டபத்தில் யாரோ பெண்களின் சிரிப்பொலியும் பேச்சொலியும் கேட்டன. அதற்குள் ஒரு குட்டித் தூக்கம் தூங்கி முடித்திருந்த சேந்தன் மேலே எழுந்து வந்தான். 'யார் கதவைத் திறந்து வைத்திருக்கக் கூடும்?' என்ற சந்தேகம் அவனுக்கு ஏற்பட்டது. 'தான் கைவலிக்கத் தட்டியபோது ஒருவரும் திறக்கவில்லை. அலுப்பினால் கண் அயர்ந்து விட்ட போது யாரோ பூனை போல் மெல்ல வந்து கதவைத் திறந்திருக்கிறார்கள். திறந்ததுதான் திறந்தார்கள், கீழே கதவருகில் உட்கார்ந்து கொண்டிருந்த என்னைக் கவனிக்கவில்லையே!' என்று அவன் நினைத்தான்.
உள்ளிருந்து வெளியேறி மேலே வந்த பின் கதவை முன் போலவே அடைத்துத் தாழிட்டு விட்டு மந்திராலோசனை மண்டபத்தில் கும்மாளமடிக்கும் அந்தப் பெண்கள் யார் என்று பார்க்க வந்தான்.
தளபதியின் தங்கை பகவதி, ஆசிரியர் மகள் விலாசினி, மகாராணியாரின் உடன் கூட்டத் தோழிகளைச் சேர்ந்த இன்னும் இரண்டு மூன்று பெண்கள் - எல்லோரும் அங்கு உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். விளையாட்டினிடையே இலக்கியச் சர்ச்சையும் நடந்து கொண்டிருந்தது.
"ஏண்டி, விலாசினி? தொல்காப்பியத்தை இயற்றிய தொல்காப்பியர் அகத்தியரின் மாணவரா? அல்லது அதங்கோட்டாசிரியரின் மாணவரா?" என்றாள் பகவதி.
"சதுரங்க விளையாட்டினிடையே இந்தச் சந்தேகம் உனக்கு எங்கிருந்து முளைத்தது...?" விலாசினி சிரித்துக் கொண்டே கேட்டாள்.
அவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருந்த சமயத்திலா நாராயணன் சேந்தன் அங்கே தலையைக் காட்ட வேண்டும்?
"ஆ! அதோ, அகத்தியரே நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். அவரையே நேரில் கேட்டு விடலாம்" என்று நாராயணன் சேந்தன் குட்டையாயிருப்பதைச் சொல்லாமல் சொல்லிக் கேலி செய்தாள் ஒருத்தி.
"ஓ! இந்த அகத்தியரா? இவருக்கு உளவறியும் வேலையைத் தவிர எதுவும் தெரியாதே. பாவம்! இந்த உலகத்தில் எல்லோருடைய உடம்பும் மேல் நோக்கி வளருகின்றன என்றால் இவருடைய உடம்பு மட்டும் கீழ் நோக்கி வளர்ந்து கொண்டிருக்கிறது" என்று சேந்தன் காதில் கேட்டு விடாமல் மெல்லச் சொல்லிச் சிரித்தாள் ஒருத்தி.
"நிலவறைக் கதவைத் திறந்தது நீங்கள் தானா?" என்று கடுமையான குரலில் அவர்களைக் கேட்டான் சேந்தன்.
விளையாட்டை நிறுத்திவிட்டு ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள் அந்தப் பெண்கள். அவர்கள் பதில் சொல்லாமலிருந்தது அவனுடைய கடுமையை அதிகப்படுத்தியது.
"பெண்களாகச் சேர்ந்து கொண்டு விளையாட்டாக ஏதாவது செய்து விடுகிறீர்கள். அதனால் பெரிய பெரிய காரியங்கள் கெட்டுப் போய்விடுகின்றன."
"ஐயா! ஒற்றர் பெருமானே! உமக்குக் கோடி வணக்கங்கள் செலுத்துகிறேன். எங்களிடம் வம்புக்கு வராமல் போய்ச் சேருங்கள். உள்ளே இருந்து யாரோ கதவைத் தட்டுவது போலிருந்தது. 'திறக்கலாமா, வேண்டாமா?' என்று நீண்ட நேரம் யோசித்தோம். கடைசியில் நாங்கள் திறந்த போது யாரும் உள்ளேயிருந்து வெளியில் வரவில்லை. நிலவறைக்குள் எட்டிப் பார்த்ததில் படியருகில் யாரோ உட்கார்ந்திருப்பது போல் தெரிந்தது. இரண்டு மூன்று முறை 'யார்? யார்?' என்று இரைந்து கேட்டுப் பார்த்தோம். பதில் இல்லை. நிலவறைக்குள் இருட்டாக இருந்ததனால் எங்களுக்குப் பயமாக இருந்தது. பேசாமல் திரும்பி வந்துவிட்டோம்" என்று பகவதி அவனுக்குப் பதில் கூறினாள்.
சேந்தன் மகாமண்டலேசுவரரைச் சந்திப்பதற்காக அங்கிருந்து சென்றான். அவன் மனத்தில் சந்தேகங்களும், வயிற்றில் பசியும், உடம்பில் அலுப்பும் வளர்ந்து கொண்டிருந்தன. அவற்றுக்கு இடையே வேறொரு வகைப் பயமும் அவனுக்கு ஏற்பட்டது. 'முன்கோபக்காரனும், செல்வாக்கு மிகுந்தவனுமான தளபதி வல்லாளதேவனிடம் பொய் சொல்லி ஏமாற்றிவிட்டேனே, அதன் விளைவு என்ன ஆகுமோ?' என்று உள்ளூர அஞ்சிக் கொண்டிருந்தான்.
'திருநந்திக்கரையிலிருந்து அரண்மனைக்கு வந்து சேருவதற்குத் தளபதிக்குக் குதிரை கிடைக்கப் போவதில்லை. தளபதி கோட்டாறிலுள்ள படைச்சாலைக்குச் சொல்லி அனுப்பிக் குதிரை வரவழைக்க வேண்டும். அல்லது கடல் துறையிலிருந்து மிளகுப் பொதி ஏற்றிவிட்டுத் திரும்பும் வணிகப் பெருமக்களின் வாகனங்களில் ஏதாவதொன்றில் இடம்பிடித்து வரவேண்டும். இந்த இரண்டு வழியுமே சாத்தியப் படாவிட்டால் இன்றிரவிற்குள் இங்கே வந்து சேர முடியாது.' இந்த ஒரே ஒரு சமாதானம் தான் சேந்தனுக்கு தற்காலிகமான தன்னம்பிக்கையைக் கொடுத்தது.
'இன்னும் கூற்றத் தலைவர் கூட்டம் நடந்து கொண்டுதான் இருக்கும். அதற்குள் எங்கே முடிந்திருக்கப் போகிறது?' என்ற எண்ணத்தினால் மகாமண்டலேசுவரர் பட்டி மண்டபத்தில்தான் இருப்பாரென்று கருதிக் கொண்டு அங்கே சென்றான். ஆனால் பட்டிமண்டபத்தில் யாருமில்லை. கூட்டமும் முடிந்து அவரவர்கள் தங்கும் இடங்களுக்குப் போயிருந்தார்கள். சேந்தனுக்குப் பெரிய ஏமாற்றமாக இருந்தது.
பட்டிமண்டபத்திலிருந்து அவன் திரும்பிய போது பின்புறம் தோள்பட்டையின் வலதுபுறம் ஒரு கை அழுத்தித் தொட்டது. நாராயணன் சேந்தன் அலறிவிட இருந்தான். தன்னைச் சமாளித்துக் கொண்டு பயத்தை அடக்கியவனாகத் திரும்பிப் பார்த்தான். பட்டிமண்டபத்துத் தூண் ஒன்றின் மறைவிலிருந்து ஆபத்துதவிகளின் படையணியின் தலைவனான மகரநெடுங்குழைக்காதன் சேந்தனுக்கு முன்னால் வந்து நின்றான். அவன் அப்போதிருந்த நிலையைப் பார்த்த போது சேந்தனுக்கு வியப்பு மட்டும் ஏற்படவில்லை. பயம் தான் அதிகமாக ஏற்பட்டது. மகர நெடுங்குழைக்காதனின் கண்கள் நெருப்புத் துண்டங்களைப் போலச் சிவந்திருந்தன. அங்கியும், மேலாடையும், அங்கங்கே தூசியும் அழுக்கும் பட்டுக் கிழிந்திருந்தன. முகத்திலும் கை கால்களிலும் சிராய்த்து இரத்தக் கசிவு தெரிந்தது. அந்த நிலையில் நாராயணன் சேந்தனைப் பார்த்து ஒரு சிரிப்புச் சிரித்தான். அவன் சிரிக்க வேண்டுமென்று எதையோ நினைத்துக் கொண்டு சிரித்தது போலிருந்தது. பயங்கரமாகவும் இருந்தது அந்தச் சிரிப்பு.
"என்ன ஐயா? இங்கே பட்டிமண்டபத்துத் தூண்மறைவில் நின்று கொண்டு என்ன செய்கிறீர்?" என்று கேட்டான் சேந்தன். குழைக்காதன் சேந்தனுக்குப் பதில் சொல்லாமல் அவன் முகத்தை உற்றுப் பார்த்து மெல்லச் சிரித்தான். இயற்கையாகச் சிரிக்கிற சிரிப்பாக இல்லை அது.
"ஆபத்துதவிகளின் செயல் மட்டும் தான் கடுமையானதென்று இதுவரையில் கேள்விப்பட்டிருந்தேன். அவர்களுடைய பார்வையும், சிரிப்பும் கூட அல்லவா கடுமையாக இருக்கின்றன!"
சேந்தன் அதோடு பேச்சை விடவில்லை. மேலும் தொடர்ந்தான். "உங்கள் திருமேனியில் தென்படும் விழுப்புண் (காயங்கள்)களையும், கிழிசல்களையும் பார்த்தால் யாருடனோ போரிட்டுவிட்டு வந்திருப்பது போல் தோன்றுகிறதே?"
"அப்பனே! என் உடம்பைப் பற்றிச் சொல்ல வந்து விட்டாய். உன்னையே கொஞ்சம் நிதானமாகப் பார்த்துக் கொள். நீ எப்படியிருக்கிறாய் என்பது தெரியவரும்." எதையோ மறைத்துக் கொண்டு சிரிக்கிறாற் போன்ற அந்த மர்மச் சிரிப்பு, அது ஆபத்துதவிகள் படைத்தலைவனுக்கே உரியது போலும். பேச்சின் இறுதியில் கடைசி வார்த்தை அவன் வாயிலிருந்து வெளிவந்து முடிந்த பின் அந்தச் சிரிப்பு மலர்ந்தது. குழைக்காதன் கூறிய பின்புதான் சேந்தன் தன் தோற்றத்தைத் தானே பார்த்துக் கொண்டான். ஏறக்குறைய தன் நிலையும் அதே போல் இருந்ததைச் சேந்தன் அப்போதுதான் உணர்ந்தான். 'அடடே! இந்தத் தோற்றத்தோடு மகாமண்டலேசுவரரைப் பார்ப்பதற்கு வேறு கிளம்பி விட்டேனே! நல்லவேளை, இவன் இதைக் கண்டு சொல்லியிராவிட்டால் இப்படியே போய் அவருக்கு முன்னால் நின்றிருப்பேன்' என்று எண்ணியவனாய் மகரநெடுங்குழைக்காதனிடம் விடைபெற்றுக் கொண்டு உடைமாற்றி வருவதற்குக் கிளம்பினான்.
நாராயணன் சேந்தனின் தலைமறைந்ததோ இல்லையோ, அதற்காகவே காத்துக் கொண்டிருந்தவன் போல் பட்டிமண்டபத்துக்குள் நுழைந்து மந்திராலோசனைக் கூட்டம் நடந்த இடத்தில் எதையோ தேடினான் ஆபத்துதவிகள் தலைவன். அங்கே அவன் தேடிய பொருள் எதுவோ அது கைக்குக் கிடைப்பதற்கு அதிக நேரம் ஆகவில்லை. அவன் எடுத்துக் கொண்டு போவதற்காகவே அங்கு வைக்கப்பட்டிருந்தது போல் சுலபமாகக் கிடைத்துவிட்டது.
பட்டிமண்டபத்தில் கூற்றத் தலைவர்களின் மந்திராலோசனைக் கூட்டம் நடந்த போது மகாமண்டலேசுவரர் எந்த ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தாரோ, அதன் கீழே தான் அந்தப் பொருள் அவனுக்குக் கிடைத்தது. அது வேறொன்றுமில்லை, ஆபத்துதவிகளின் முத்திரைச் சின்னம் பொறித்த ஒரு பட்டுத்துணி. கீழே குனிந்து எடுப்பதற்கு முன் அதைத் தான் எடுப்பதை எங்கிருந்தாவது யாராவது பார்க்கிறார்களா என்று அவன் மனத்தில் சந்தேகம் ஏற்பட்டிருக்கும் போலும்! ஒரு வேளை தன்னைச் சோதிப்பதற்காகத்தான் அதைத் தேடி வருவதைப் பார்ப்பதற்காகவே அவ்வளவு சுலபமாகப் போட்டு வைத்திருக்கலாமே என்று அவன் பயந்திருக்க வேண்டும்.
அதனால் தான் அவ்வளவு தயக்கத்துடன் சுற்றிலும் பார்த்துக் கொண்டு அவன் அதை எடுத்தான். ஆனால் தன்னுடைய நிதானமும் முன்யோசனையும் தன்னை ஏமாற்றிவிட்டன என்பதை அந்தத் துணியை எடுத்து வழக்கம் போல் இடுப்பில் அணிந்து தலை நிமிர்ந்த போது அவன் தெரிந்து கொண்டான்.
மேலேயிருந்து இரண்டு பெரிய குடை மல்லிகைப் பூக்கள் அவனுடைய முன் தலையில் உதிர்ந்து நெற்றியில் நழுவி விழுந்தன. அந்தப்புரத்து நங்கையர்கள் தங்கள் அளக பாரத்திற்குப் பூசும் வாசனைத் தைலத்தின் மணம் அந்தப் பூவின் மணத்தில் விரவியிருந்தது. மகரநெடுங்குழைக்காதன் திடுக்கிட்டு மேலே நிமிர்ந்து பார்த்தான்.
மேலே அந்த இடத்துக்கு நேரே அந்தப்புரத்தின் மாடத்தில் ஒரு பெண் முகம் விருட்டென்று திரும்பி மறைந்தது. திரும்பும் போது கருநாகம் போன்ற அந்தப் பெண்ணின் சடை சுழன்று அதிலிருந்து மல்லிகைப் பூக்களில் மேலும் சில அவன் மேல் உதிர்ந்தன. இளம் பெண் முகமாகத்தான் தெரிந்தது. திரும்பிய வேகத்தில் அவனால் முகத்தை அடையாளம் கண்டு நினைவில் வைத்துக் கொள்ளுவதற்கு முடியவில்லை. 'எவ்வளவு முன்னெச்சரிக்கையோடு நான்கு புறமும் பார்த்தேன்! மேலே பார்க்கத் தவறி விட்டேனே!' என்று உதட்டைக் கடித்துக் கொண்டான் மகரநெடுங்குழைக்காதன். சிறிது நேரம் ஏதோ சிந்தித்துக் கொண்டு அங்கேயே நின்றான். கீழே கிடந்த அந்தக் குடை மல்லிகைப் பூக்களை ஒன்று விடாமல் பொறுக்கித் தன் அங்கியில் மறைத்து வைத்துக் கொண்டு புறப்பட்டான்.
அவன் புறப்பட்டுச் சென்றதும் அங்கு மற்றோர் ஆச்சரியம் நிகழ்ந்தது. உடை மாற்றிக் கொண்டு மகாமண்டலேசுவரரைச் சந்திக்கச் சென்று விட்டதாக நாம் யாரைப் பற்றி எண்ணிக் கொண்டிருக்கிறோமோ அவன் பட்டிமண்டபத்து மேல் கோடித் தூண் ஒன்றின் மறைவிலிருந்து வெளிவந்தான். உண்மையில் நாராயணன் சேந்தன் மகரநெடுங்குழைக்காதனிடம் விடைபெற்றுக் கொண்டு போவது போல் போக்குக் காட்டினானே ஒழிய அங்கிருந்து போய் விடவில்லை. பட்டிமண்டபத்தில் ஆபத்துதவிகள் தலைவன் அலங்கோலமான நிலையில் தனியாக நின்று கொண்டிருப்பதைப் பார்த்தவுடனே சேந்தனைப் போல் அறிவுக் கூர்மையுள்ள ஒற்றனுக்குச் சந்தேகங்கள் ஏற்படாமலிருக்குமா? தெளிவற்ற பல குழப்பமான எண்ணங்களும், சந்தேகங்களும் அவனுக்கு உண்டாயின. 'ஆபத்துதவிகள் தலைவன் பட்டிமண்டபத்தில் தனியாக என்ன செய்கிறான்?' என்பதைப் பார்த்து வைத்துக் கொண்டால் பின்பு மகாமண்டலேசுவரர் கேட்கும் போது கூறுவதற்கு வசதியாக இருக்குமென்று தான் அவன் மறைந்திருந்து அதைக் கண்காணித்தான்.
அதன் பின் சேந்தன் பட்டிமண்டபத்திலிருந்து வெளியேறிப் பராந்தகப் பெரு வாயிலுக்கு வந்து நின்றான். பராந்தகப் பெரு வாயிலிலிருந்து மேற்கு நோக்கி இரண்டாங் கோட்டை வாசல் திருச்சுற்றினுள்ளே சென்றால் அரண்மனை விருந்தினர் மாளிகைகள் பூந்தோட்டத்துக்கு நடுவே இருந்தன. அந்த மாளிகையில் ஒன்றில் தான் மகாமண்டலேசுவரர் தங்கியிருக்க வேண்டுமென்பது அவனுக்குத் தெரியும்.
கோட்டைக்குள் யாரோ குதிரையில் வரும் ஒலி கேட்டு சேந்தன் பராந்தகப் பெருவாயிலின் முகப்பில் தயங்கி நின்றான். வருவது யார் என்று பார்த்து விட்டு அதன் பின் விருந்தினர் மாளிகைக்குப் போகலாமென்பது அவன் எண்ணம். ஒரே குதிரையில் இரண்டு பேர்கள் ஏறிக் கொண்டு வருவதைப் பார்த்ததும் அவனுக்கு ஆச்சரியம் உண்டாயிற்று. முன்னால் உட்கார்ந்திருந்தவன் இன்னாரென்று தெரிந்து கொள்ள முடியவில்லை. தோற்றத்திலுள்ள நிலையைக் கொண்டு பார்த்தால் ஏதோ அரசாங்கத் தூதன் மாதிரி இருந்தது. குதிரை அருகில் வந்ததும் பின்னால் உட்கார்ந்திருந்த இரண்டாவது ஆளின் முகம் தெரிந்தது. அதைப் பார்த்ததும் பயத்தோடு சரேலென்று பூந்தோட்டத்தின் அடர்ந்த பசுமைக்குள் புகுந்து தன்னை மறைத்துக் கொண்டான் சேந்தன். கோட்டைக்குள் வந்த குதிரையில் வீற்றிருந்த இரண்டாவது ஆள் வல்லாளதேவன்.
-----------
1.28. நள்ளிரவில் நால்வர்
முன்சிறை அறக்கோட்டத்தின் வாயிலில் எதிர்பாராத விதமாகக் கரவந்தபுரத்துத் தூதுவனைச் சந்திக்க நேர்ந்தது இரண்டு வகையில் நன்மையாக முடிந்தது தளபதி வல்லாளதேவனுக்கு. ஒன்று அந்தத் தூதுவன் கொண்டு வந்திருந்த அதிமுக்கியமான அவசரச் செய்தியைத் தெரிந்து கொள்ள முடிந்தது. மற்றொரு நன்மை, 'அரண்மனைக்குப் போவதற்குக் குதிரையில்லையே?' என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல் தூதுவனுடைய குதிரையிலேயே இருவரும் போய்விடலாம். பசி தீர அறக்கோட்டத்தில் சாப்பிட்டுவிட்டுப் பின்பு அரண்மனைக்குப் புறப்படலாம் என்று தான் முதலில் தளபதி நினைத்திருந்தான். ஆனால் தூதுவன் கொண்டு வந்திருந்த செய்தியின் அவசரத்தை அறிந்த போது பசி, களைப்பு எதுவுமே அவனுக்கு மறந்து போய்விட்டன. தூதுவனின் குதிரையிலேயே பின்புறமாகத் தாவி ஏறி உட்கார்ந்து கொண்டு புறப்பட்டு விட்டான்.
"மகா சேனாதிபதி எங்களுடைய அறக்கோட்டத்தையும், எங்களையும் இப்படி ஒரேயடியாக அவமதித்து விட்டுப் போவது கொஞ்சம் கூட நன்றாயில்லை. இன்னும் ஓரிரண்டு நாழிகைகள் தங்கி உணவருந்தி எங்கள் உபசாரத்தை ஏற்றுக் கொண்டு போகலாமே!" என்று முன்சிறை அறக்கோட்டத்திலுள்ள அண்டராதித்த வைணவனும் அவன் மனைவி கோதையும் மரியாதையாக வேண்டிக் கொண்டதைக் கூட அவன் பொருட்படுத்தவில்லை.
பதில் சொல்லாமலே அவன் குதிரையை விட்டுக் கொண்டு செல்வதைப் பார்த்து, 'தளபதிக்குத் தம் மேல் ஏதோ கோபம் போலிருக்கிறது?' என்று எண்ணிக் கொண்டு மேலும் வற்புறுத்திச் சொல்லாமல் பயந்து போய் நின்று விட்டனர் வைணவனும் அவன் மனைவி கோதையும்.
"தூதுவனே! நீ கொண்டு வந்திருக்கும் செய்தி மட்டும் மெய்யாக இருக்குமானால் இப்போதுள்ள சூழ்நிலையில் நம்மைப் போல் பரிதாபப்படத் தக்கவர்கள் வேறு யாருமில்லை. நல்ல சமயத்தில் நீ வந்திருக்கிறாய். இப்போது அரண்மனையில் மகாமண்டலேசுவரர் உள்படக் கூற்றத் தலைவர்கள் எல்லோரும் இருப்பார்கள். நாம் செய்ய வேண்டிய ஏற்பாடுகளைப் பற்றி எல்லோரிடமும் கலந்து பேசிவிடலாம். குதிரையை மட்டும் இன்னும் சிறிது வேகமாகவே செலுத்திக் கொண்டு போ" என்று தூதுவனைத் துரிதப்படுத்தினான் தளபதி. தூதுவனும் தன்னால் இயன்ற அளவு குதிரையை வேகமாகச் செலுத்திக் கொண்டு போனான்.
பட்டி மண்டபத்தில் நடந்த கூற்றத் தலைவர்களின் கூட்டத்தில் நம்பிக்கையும் ஒளியும் நிறைந்த எதிர்காலத் தீர்மானங்களை உருவாக்கியிருந்தார்கள்.
அன்று கூற்றத் தலைவர்களுக்கும் மகாமண்டலேசுவரருக்கும் முன்னால் தன் நிலையைப் பற்றி விவரிக்கும் போது மகாராணி வானவன்மாதேவிக்கு அழுகையே வந்து விடும் போலிருந்தது.
"மகாமன்னர் இறந்த பிறகு மகாமண்டலேசுவரரும் நீங்களும் எனக்குப் பெரும் பதவியையும் மரியாதையையும் அளித்திருக்கிறீர்கள். ஆனால் இந்த அரசபோக ஆடம்பரங்களை நீண்ட நாட்கள் அனுபவிக்கும் பொறுமை எனக்கு இல்லை. என் அருமைப் புதல்வன் எங்கே இருக்கிறானென்றே நான் அறிய முடியவில்லை. என்னைச் சுற்றிலும் துன்பங்களையும், சூழ்ச்சிகளையும் காண்கிறேன். எனது பிறந்தகமாகிய சேர நாட்டுக்காவது சென்று அமைதியாக வாழ்வேன். அதையும் செய்ய விடாமல் உங்கள் அன்பு என்னைக் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறது. மகாமன்னரையும் இழந்து யாருக்காக இங்கு வாழ வேண்டும்? இப்படி நான் வாழ்வது கூடச் சிலருக்குப் பிடிக்கவில்லை போலிருக்கிறது. என்னையே அழித்து விடுவதற்குக் கூடச் சூழ்ச்சிகள் நடக்கின்றன."
இப்படி மகாராணி வானவன்மாதேவியார் பேசிக் கொண்டு வரும்போதே, "மகாராணியார் அப்படி அஞ்சக் கூடாது. தென்பாண்டி நாட்டு வீரர்களின் நெஞ்சில் நம்பிக்கையும், கைகளில் வலிமையும், வாளில் ஒளியும் இந்த விநாடி வரை குன்றிவிடவில்லை. மகாராணியாரை அழிக்க எந்தத் தீய சக்தியாலும் முடியாது" என்று ஆவேசம் பொங்கும் குரலில் உறுதியாகக் கூறினார் இடையாற்று மங்கலம் நம்பி. அதை ஆமோதிப்பது போல் அங்கிருந்த மற்றவர்களும் சிரக்கம்பம் செய்தனர்.
"அது சரிதான்! குமார பாண்டியர் எங்கேயிருக்கிறார் என்றறிவதற்கு நாமாகவே ஏதேனும் முயற்சிகள் செய்ய வேண்டாமா? இப்படி வாளாவிருந்தால் அவரைப் பற்றி என்ன தெரிந்து கொள்ள முடியும்?" என்று மகாமண்டலேசுவரர் பக்கமாகத் திரும்பி ஒரு கேள்வியைக் கேட்டார் சுழற்கால் மாறனார்.
மகாமண்டலேசுவரர் அந்தக் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன்பே, மற்றவர்களும் அவரிடம் சரமாரியாகக் கேள்விகளைத் தொடுக்க ஆரம்பித்தனர்.
"இளைய சக்கரவர்த்தியை உடனே அழைத்து வர ஏற்பாடு செய்ய வேண்டாமா?" என்று கேட்டார் ஒருவர்.
"மகாராணியாரின் கவலைகள் குறைந்து நிம்மதியும், அமைதியும் உண்டாக வேண்டுமானால் குமார பாண்டியர் எங்கிருந்தாலும் தேடிக் கொண்டு வந்து முடிசூட்டி விடுவதே முறை" என்றார் மற்றொருவர்.
"எல்லோரும் சற்று அமைதியாக இருங்கள். என்னுடைய கருத்தை விரிவாகச் சொல்லி விடுகிறேன். இதுவரை இந்த எண்ணங்கள் எல்லாம் எனக்குத் தோன்றாமல் போய்விடவில்லை. அல்லது தோன்றியும் எவற்றையும் செயல்படுத்தக் கூடாது என்பதற்காக நான் பேசாமல் இருக்கவில்லை. என்னுடைய ஒவ்வொரு தயக்கத்துக்கும் ஒரு முக்கியமான காரணம் இருக்கும். இளவரசர் எங்கேயிருக்கிறார் என்று தேடுவதோ, தேடிக் கண்டுபிடிப்பதோ எனக்குக் கடினமான காரியமில்லை. நினைத்தால் இப்போதே கொண்டு வந்து நிறுத்தி விட முடியும் என்னால். ஆனால் நான் சூழ்நிலையைப் பற்றிச் சிந்திக்கிறேன். தென்பாண்டி நாட்டு அரசியலில் ஒழுங்கையும் அமைதியையும் ஏற்படுத்தி விட்டால் நமக்கு இருக்கும் பிற பகைகள் நீங்கும். அதன்பின் குமார பாண்டியருக்கு முடிசூட்டலாமென்பது என் எண்ணம்" என்று அவர் கூறிய சமாதானத்தைக் கேட்ட போது மற்றவர்களுக்கு அவரை எதிர்த்து என்ன சொல்வதென்றே தெரியவில்லை. முகத்தில் ஈயாடாமல் உட்கார்ந்திருந்தார்கள்.
"அலை ஓய்ந்து நீராட முடியாது. பகைவர்களை எண்ணிக் கொண்டே எவ்வளவு நாட்களுக்குப் பேசாமல் இருக்க முடியும்? தவிர முடிசூட்டுவதற்கும் இளவரசரைத் தேடிக் கண்டுபிடித்து இங்கே அழைத்து வருவதற்கும் என்ன சம்பந்தம்? முடி சூட்டுவதைப் பின்னால் வைத்துக் கொண்டாலும், இளவரசர் இப்போதே இங்கு வந்து இருக்கலாமே! அவ்வாறு இருப்பது மகாராணியாருக்கும் ஆறுதல் அளிக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது" என்று துணிந்து இடையாற்று மங்கலம் நம்பியை நோக்கி நேருக்கு நேர் கூறினார், அதுவரை ஒன்றும் பேசாமல் அமைதியாக வீற்றிருந்த அதங்கோட்டாசிரியர்.
"வடதிசை மன்னர்களின் படையெடுப்பு இந்தச் சமயத்தில் நேரலாமென்று மகாமண்டலேசுவரர் எதிர்பார்க்கிறார் போலிருக்கிறது. குமார பாண்டியர் இங்கு வந்திருந்தால் படையெடுப்பைச் சமாளிக்க நமக்கு உதவி கிடைக்கும். குமார பாண்டியரின் தாய்வழி மாமன்மார்களும், மகாராணியாரின் பிறந்த வீட்டுச் சகோதரரும் ஆகிய சேரர் படை உதவியை நாம் பெறலாம். சேர வேந்தரிடம் அவர் படை உதவி செய்வதற்கு மறுக்க இயலாதபடி அவருடைய மருமகராகிய குமார பாண்டியரையே தூதனுப்பலாம். இதையெல்லாம் மகாமண்டலேசுவரர் நன்றாகச் சிந்தித்திருந்தால் இளவரசரைத் தேடி உடனே இங்கு அழைத்து வர ஏற்பாடு செய்திருக்கலாமே!" என்று பவழக் கனிவாயரும் அதங்கோட்டாசிரியரோடு சேர்ந்து கொண்டார்.
பேசுவதற்கு அஞ்சி உட்கார்ந்திருந்த கூற்றத் தலைவர்களும் சிறிது நேரம் கழித்து ஒவ்வொருவராக அதே கருத்தை ஆதரித்துப் பேசத் தலைப்பட்டனர். மகாராணியாரின் விருப்பமும் அதுவாகத்தான் இருக்கும் என்பதை இடையாற்று மங்கலம் நம்பி குறிப்பாகப் புரிந்து கொண்டார். பல்லாண்டுகளாக நிமிர்ந்து நின்று பிடிவாதத்தாலும், அறிவுத் திறனாலும், தம் எண்ணமே எல்லாருடைய எண்ணமாகவும், தம் சொல்லே எல்லோருடைய சொல்லாகவும், தம் செயலே எல்லோருடைய செயலாகவும் - வெற்றி பெற்று வந்த அவருடைய அரசியல் வாழ்வில் முதல் முதலாக ஒரு வளைவு ஏற்பட்டது. மற்றவர்களை மாற்றி அவர்களைத் தம் வழிக்குக் கட்டுப்படுத்தும் சாமர்த்தியமான கலையில் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த அவர் முதன் முதலாக மற்றவர்களுக்காக மாறிக் கட்டுப்படும் நிலையை அடைந்தார். எதற்கும் எவராலும் அசைந்து விட முடியாமல் கல்லாய் முற்றிப் போயிருந்த அந்த உள்ளத்தில் சற்றே தளர்ச்சி உண்டாயிற்று. ஆனால் அந்தத் தளர்ச்சி வெளிப்பட்டு விடாமல் மிகத் தந்திரமாக மறைத்துக் கொண்டார் அவர். ஒரு நளினமான சிரிப்பினால் மட்டுமே அதை அவரால் மறைக்க முடிந்தது.
"நல்லது! இன்றைய தினம் உங்கள் எல்லோருடைய கருத்தையும் குறிப்பாகவும், வெளிப்படையாகவும், தெளிவாக மறைக்காமல் என்னிடம் கூறிவிட்டீர்கள். நான் ஒப்புக் கொள்கிறேன். இன்னும் நான்கு நாட்களுக்குள் குமார பாண்டியரை இங்கே கொண்டு வந்து சேர்க்கும் பொறுப்பை நானே ஏற்றுக் கொள்கிறேன்."
மகாமண்டலேசுவரருடைய இந்தப் பேச்சில் அதங்கோட்டாசிரியர் மறுபடியும் குறுக்கிட்டார்.
"மகாமண்டலேசுவரரை யாரும் வற்புறுத்தவோ, அவசரப்படுத்தவோ விரும்பவில்லை. நான்கு நாட்களில் தேடிக் கொண்டு வர வேண்டுமென்று அவசரப்பட்டுத் துன்பமுற வேண்டாம். வேண்டிய நாட்களை எடுத்துக் கொண்டு பதறாமல் தேடிப் பார்க்கலாமே!" என்றார் ஆசிரியர் பிரான்.
"தேவையில்லை! நான்கு நாட்களே அதிகம். விரும்பினால் நான்கு நாழிகைக்குள் இளவரசரை அழைத்து வர என்னால் முடியும்?" என்று முகத்தில் அடித்தாற் போல் அதங்கோட்டாசிரியருக்குப் பதில் சொல்லிவிட்டார் இடையாற்றும் மங்கலம் நம்பி.
"முடிந்தால் செய்யுங்கள்!" என்று படித்தவருக்கே உரிய அடக்கத்தோடு பேச்சை முடித்து விட்டார் ஆசிரியர். 'ஏனடா இந்த மனிதரிடம் பேச்சுக் கொடுத்தோம்' என்று ஆகிவிட்டது அவருக்கு. தம் மேல் மகாமண்டலேசுவரருக்கு உள்ளூரச் சிறிது கோபம் ஏற்பட்டிருக்கிறது என்பதை அவருடைய பேச்சிலிருந்தே அதங்கோட்டாசிரியர் புரிந்து கொண்டார்.
இளவரசர் அரண்மனைக்கு அழைத்துக் கொண்டு வரப்பட்டதும் மற்றொரு கூற்றத் தலைவர் கூட்டம் நடத்துவதென்றும், அதில் மற்ற விஷயங்களைப் பேசி முடிவு செய்து கொள்ளுவதென்றும் தீர்மானித்த பின் அன்றையக் கூட்டம் அதோடு முடிந்து விட்டது.
பட்டி மண்டபத்தில் கூட்டம் நடந்து கொண்டிருந்த போது நாராயணன் சேந்தன் வந்ததும், மகாமண்டலேசுவரர் அவனை இரகசியமாக நிலவறைக்கு அனுப்பியதும் நேயர்களுக்கு நினைவிருக்கலாம். கூட்டம் முடிந்ததும் எல்லோரும் அவரவர்கள் தங்கியிருந்த விருந்தினர் விடுதிகளுக்குச் சென்று விட்டனர். மகாமண்டலேசுவரர் மட்டும் தாம் நிலவறைக்கு அனுப்பியிருந்த சேந்தன் திரும்பி வருவானென்று எதிர்பார்த்துச் சிறிது நேரம் அங்கே தாமதித்தார். இடையே மற்றொரு காரியத்தையும் அங்கிருந்தவாறே முடித்துக் கொண்டார். அவர் அங்கே சேந்தனுக்காகத் தாமதித்துக் கொண்டு நின்ற போது அந்தப் பட்டி மண்டபத்தின் மேலே இருந்த அந்தப்புரத்து மடத்தில் புவன மோகினி என்ற வண்ண மகளின் உருவம் தெரிந்தது. புவன மோகினி அந்த அரண்மனையில் வண்ண மகளாகப் பணி புரிபவள். வண்ண மகளின் வேலை அந்தப்புரத்திலும், கன்னி மாடத்திலும் உள்ள அரச குடும்பத்துப் பெண்களுக்கு அலங்காரம் செய்வதாகும். மற்றவர்களுக்கெல்லாம் அவள் அலங்காரம் செய்து விட்டால்தான் அழகு பிறக்கும். ஆனால் அவளுக்கோ யாரும் அலங்காரம் செய்யாமலே அபூர்வமான அழகும் இளமையும் வாய்த்திருந்தன. உண்மையில் புவன மோகினி என்ற பெயருக்கு அவள் பொருத்தமானவள் தான். பின்னிவிட்ட சடை அசையப் பிறைமதி போல் மல்லிகைச் செண்டு சூடி நடந்தாளானால் பார்க்கிறவர்களின் உள்ளமெல்லாம் பறிபோக வேண்டியதுதான்.
கீழே நின்று கொண்டிருந்த மகாமண்டலேசுவரர் புவன மோகினியைக் கைதட்டிக் கூப்பிட்டார். மதிப்புக்குரிய மகாமண்டலேசுவரருடைய அழைப்புக்குப் பணிந்து கீழே இறங்கி ஓடோடி வந்தாள் புவன மோகினி.
"பெண்ணே! எனக்கு உன்னால் ஒரு காரியம் ஆக வேண்டும். இதோ இந்த ஆசனத்தின் கீழே இந்தப் பட்டுத் துணியைப் போட்டு விட்டுப் போகிறேன். இன்னும் சிறிது நேரத்துக்குள் இதை எடுத்துச் செல்ல வரும் மனிதனை நீ மேலேயிருந்து கவனித்து வைத்துக் கொள். அப்புறம் வந்து என்னிடம் சொல்" என்று கூறிவிட்டுத் தம் இடுப்பிலிருந்து ஒரு சிறு பட்டுத் துணியை எடுத்துத் தாம் உட்கார்ந்திருந்த ஆசனத்தின் கீழே போட்டுவிட்டுச் சென்றார் மகாமண்டலேசுவரர். புவன மோகினி அவர் கூறியபடியே செய்ய ஒப்புக் கொண்டு மாடத்தில் போய் நின்று கீழே கவனித்தாள். இதே சமயத்தில் விலாசினி, பகவதி முதலியவர்கள் மந்திராலோசனை மண்டபத்துப் பக்கமாகச் சதுரங்கம் விளையாடச் சென்று விட்டதனால் புவன மோகினி அந்தப்புரத்தில் தனியாகவே இருந்தாள். அதனால் அவர் தன்னிடம் ஒப்புவித்துச் சென்றிருந்த உளவறியும் வேலையை அவள் சரியாகச் செய்ய முடிந்தது. கூடிய வரையில் தான் அங்கே நின்று கண்காணிப்பது கண்காணிக்கப் படுகிறவருக்குத் தெரியாமல் இருக்க வேண்டுமென்று அவள் நினைத்திருந்தாள். ஆனால் அவள் குனிந்து பார்த்த போது அவளுடைய தலையில் அணிந்திருந்த குடை மல்லிகைப் பூக்கள் அவளைக் காட்டிக் கொடுத்து விட்டன. அந்தப் பாழாய்ப் போன பூக்கள் கீழே உதிர்ந்து அவள் எண்ணத்தில் கலக்கத்தை உண்டாக்காமல் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்?
புவன மோகினி உடனே ஓடிப்போய் இடையாற்று மங்கலம் நம்பியிடம் செய்தியைத் தெரிவித்துவிட்டு வந்திருந்தாலும் அவள் மனத்தில் பயம் ஏற்பட்டது. ஆபத்துதவிகள் தலைவனின் நெருப்புப் போன்ற விழிகளும், குரூரமான முகமும் அடிக்கடி தோன்றி அவளைப் பயமுறுத்தின. 'மகரநெடுங்குழைக்காதன் தான் அவனை மேலேயிருந்து கண்காணித்த போது தன்னைப் பார்த்திருப்பானோ?' என்ற பயத்தினால் அன்றிரவு தூக்கமே அவளை அணுகுவதற்கு மறுத்தது. பழி பாவத்துக்கு அஞ்சாதவன், ஈரமற்றவன், கல் மனமுடையவன் என்று ஆபத்துதவிகள் தலைவனைப் பற்றி அவள் கேள்விப்பட்டிருந்த செய்திகள் ஒவ்வொன்றாக நினைவுக்கு வந்து அவளை மிரட்டிக் கொண்டிருந்தன.
புவன மோகினி, ஆபத்துதவிகள் தலைவனை எண்ணி நடுங்கி உறக்கமின்றித் தவித்துக் கொண்டிருந்த அதே நேரத்தில் நாராயணன் சேந்தன் தளபதி வல்லாளதேவனை எண்ணி உறக்கமின்றித் தவித்துக் கொண்டிருந்தான்.
'ஐயோ! நான் தளபதியிடம் சிக்கி அடிபட வேண்டுமென்றுதான் என் தலையில் எழுதியிருக்கிறது போலும். இவ்வளவு தூரம் ஏமாற்றி திருநந்திக்கரை வரையில் இழுத்தடித்தும் எவன் குதிரையிலோ இரவல் இடம் பிடித்து அரண்மனைக்கு வந்துவிட்டானே. அவனோடு போகாமல் யாரோ ஒரு தூதுவனையும் அல்லவா அழைத்துக் கொண்டு வந்திருக்கிறான்? என்ன ஆகப் போகிறதோ?' என்று கவலை கொண்டு தூக்கம் இழந்தான் சேந்தன்.
அந்தப்புரத்து மேல் மாடத்திலிருந்து தன் மேல் உதிர்ந்த பூக்களை வைத்துக் கொண்டு தன்னைக் கண்காணித்த பெண் புலி யாரென்று தூக்கமில்லாமல் மண்டையைக் குழப்பிக் கொண்டிருந்தான் குழைக்காதன். 'முதல் முதலாகக் கூற்றத் தலைவர் கூட்டத்தில் என் பேச்சு எடுபடாமல் தோற்றுப் போய்விட்டதே!' என்று மனம் புழுங்கிக் கொண்டிருந்தார் மகாமண்டலேசுவரர். அன்று நள்ளிரவு வரையில் இவர்கள் நால்வரும் உறங்கவே இல்லை.
-----------
1.29. கொள்ளையோ கொள்ளை
இராசசிம்மன் அப்படி நடந்து கொண்டது குழல்மொழிக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. 'அக்கரையிலிருந்து படகில் வருபவர் யாராக இருந்தால் தான் என்ன! எவ்வளவு அவசரமாக இருந்தால் தான் என்ன? அதற்காக ஒரு பெண்ணிடம் தனிமையில் மனம் விட்டுப் பேசிக் கொண்டிருந்தவர் இப்படியா முகத்தை முறித்துக் கொண்டு போவது போல் திடீரென்று போவார்?' என்று எண்ணி நொந்து கொண்டாள். வந்தவர்களோடு விரைவில் பேசி முடித்து அனுப்பிவிட்டுத் திரும்பி வந்து விடுவார் என்று நிலா முற்றத்துத் திறந்த வெளியிலேயே அவள் இராசசிம்மனுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள். நீண்ட நேரமாகியும் அவன் திரும்பி வராமற் போகவே அவளுக்கு ஏமாற்றமாக இருந்தது. கீழே இறங்கி வந்துவிட்டாள்.
அவள் கிழே இறங்கி வந்த சமயத்தில் படகோட்டி அம்பலவன் வேளான் வசந்த மண்டபத்துப் பக்கமாகப் போய்க் கொண்டிருந்தான். முதலில் படகில் வந்தவர்களை அழைத்துக் கொண்டு இராசசிம்மன் முன்பே வசந்த மண்டபத்தில் தான் தங்கியிருந்த இடத்துக்குப் போயிருக்க வேண்டுமென்று குழல்மொழி அனுமானித்து உணர்ந்து கொண்டாள்.
'வந்திருப்பவர்கள் யார்? என்ன காரியத்துக்காக வந்திருக்கிறார்கள்?' என்று அவனிடம் கேட்கலாம் என்று எண்ணி வேளான் வருவதை எதிர்பார்த்து நின்றாள் குழல்மொழி.
சிறிது நேரத்தில் வசந்த மண்டபத்திலிருந்து மாளிகைக்கு வரும் ஒற்றையடிப் பாதையில் வேளான் வருவது தெரிந்தது. அவன் தான் நின்று கொண்டிருக்கிற இடத்துக்கு வந்து சேருகிற வரை ஆவலை அடக்கிக் கொள்ளும் பொறுமை கூட அவளுக்கு இல்லை. மான் துள்ளி ஓடுவது போல் வேகமாக ஓடிச் சென்று அவனை எதிர்கொண்டு, "வேளான்! வந்திருப்பவர்கள் யார்? எதற்காக இவ்வளவு அவசரமாய் அடிகளைச் சந்திக்க வந்திருக்கிறார்கள்?" என்று அவனை நடுவழியிலேயே மறித்துக் கொண்டு கேட்டாள். வேளான் சிறிது தயங்கி நின்று விட்டுப் பின்பு கூறலானான். "அம்மா! அவர்கள் இன்னாரென்பதைப் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. அவர்கள் அக்கரையிலிருந்து வசந்த மண்டபம் வரை என்னுடன் வந்தார்கள் என்று பெயரே ஒழிய என்னிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. 'இந்தத் தீவில் மகாமண்டலேசுவரரின் விருந்தினராக ஒரு துறவி வந்து தங்கியிருக்கிறாரே, அவரை நாங்கள் சந்திக்க வேண்டும்' என்று சுருக்கமாக என்னிடம் கூறினார்கள். ஆனால் வந்திருப்பவர்களுடைய பேச்சையும் நடையுடை பாவனைகளையும் கூர்ந்து கவனித்தால் நம்முடைய முத்தமிழ் நாட்டின் எந்தப் பகுதியையும் சேர்ந்தவர்களாகத் தெரியவே இல்லை. துறவிக்கு அவர்கள் மிகவும் வேண்டியவர்கள் போலிருக்கிறது. எல்லோருடனும் வசந்த மண்டபத்தில் உட்கார்ந்து ஏதோ இரகசியமாகப் பேசிக் கொண்டிருக்கிறார். வேறு யாரையும் தப்பித் தவறிக் கூட அந்தப் பக்கம் விட்டுவிடக் கூடாதென்று எனக்குக் கடுமையான உத்தரவு போட்டிருக்கிறார்."
வேளானுடைய பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த குழல்மொழி, "என்னைக் கூடவா உள்ளே விடக்கூடாதென்று உத்தரவு?" என்று சிரித்துக் கொண்டே வேடிக்கையாகக் கேட்டாள். "ஆம்! உங்களையும் தான் விடக் கூடாதென்றிருக்கிறார்" என்று வேளான் சொல்லியதும், அவளுக்கு உச்சந்தலையில் ஓங்கி அடித்த மாதிரி இருந்தது. ஏதோ விளையாட்டுத்தனமாகக் கேட்டாளேயன்றி அந்தப் பதிலை எதிர்பார்த்துக் கேட்கவில்லை. அந்தப் பதிலை அவனிடமிருந்து கேட்டதும் அவள் கண்களில் சினம் கொண்ட சாயல் ஒளிர்ந்தது. புருவங்கள் நெளிந்து வளைந்தன. "பரவாயில்லையே! வந்து ஒரு நாள் கழிவதற்குள் அடிகளுக்கு இவ்வளவு அதிகாரம் செய்யும் உரிமை வந்து விட்டதா?" என்று வெடுக்கென்று ஆத்திரத்தோடு சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றாள் அவள். அவ்வளவு கோபத்திலும் இராசசிம்மன் தான் அடிகளாக நடிக்கிறான் என்ற உண்மையைப் படகோட்டியிடம் கூறத் துணிவு வரவில்லை அவளுக்கு. 'நான் கூட வரக்கூடாதாமே? அப்படி என்ன தான் இரகசியம் பேசுகிறார்களோ? வரட்டும், சொல்கிறேன்" என்று இராசசிம்மன் மேல் ஊடலும், பொய்க்கோபமும் கொண்டு அரண்மனைக்குச் சென்றுவிட்டாள் குழல்மொழி. இராசசிம்மன் வசந்த மண்டபத்துக்கு வரக்கூடாதென்று சொல்லிவிட்டதனால் இடையாறு மங்கலம் அரண்மனையில் போவதற்கு இடமோ, பேசுவதற்குத் தோழிகளோ இல்லாமலா போய்விட்டார்கள் அவளுக்கு!
அதன் பின் அன்று அவள் வசந்த மண்டபத்துப் பக்கம் வரவேயில்லை. துறவியும் அவரைச் சந்திக்க வந்திருந்தவர்களும் கூட வசந்த மண்டபத்தை விட்டு வெளியேறவில்லை. படகோட்டி அம்பலவன் வேளான் யாரையும் உள்ளே விட்டு விடாமல் பாதுகாப்பாக வசந்த மண்டபத்துப் பாதை தொடங்கும் இடத்தில் காவலுக்கு உட்கார்ந்து கொண்டான்.
இருட்டியதும் வழக்கமாகத் துறவியை உணவுக்கு அழைத்துக் கொண்டு போக வருவாள் குழல்மொழி. அன்று அதற்காகவும் அவள் வரவில்லை. "நீ போய் அவர்களைச் சாப்பிட அழைத்துக் கொண்டு வா!" என்று ஒரு தோழியை வசந்த மண்டபத்துக்கு அனுப்பினாள். அந்தத் தோழி அடிகளைத் தேடிக் கொண்டு வசந்த மண்டபத்துக்குச் செல்லும் போது இருட்டி நான்கைந்து நாழிகைகள் ஆகியிருக்கும். துறவியும் அவரைத் தேடிப் புதிதாக வந்திருப்பவர்களும் கூடியிருப்பதால் தீபாலங்காரங்களினால் ஒளி மயமாகவும், பலருடைய பேச்சுக் குரல்களால் கலகலப்பாகவும் இருக்குமென்று நினைத்துக் கொண்டு வசந்த மண்டபத்துக்கு வந்த தோழி அங்கிருந்த நிலைமையைக் கண்டு திகைத்துப் போனாள். வசந்த மண்டபம் இருண்டு கிடந்தது. அங்கே எவருடைய பேச்சுக் குரலும் கேட்கவில்லை. இருளும், தனிமையும் ஆட்சி புரிந்த அந்த இடத்தில் நிற்பதே பயமாக இருந்தது தோழிக்கு. அவள் வசந்த மண்டபத்தின் எல்லாப் பகுதிகளையும் நன்றாகச் சுற்றிப் பார்க்காமல் முகப்பிலேயே பயந்து கொண்டு திரும்பி விட்டாள். வசந்த மண்டபத்தின் பின்புறமிருந்த தோட்டத்துக்குள் சென்று பார்த்திருந்தால் ஒரு சிறிய தீப்பந்தத்தின் வெளிச்சத்தில் துறவியும், அவரைத் தேடி வந்தவர்களும் ஏதோ சதிக்கூட்டம் நடத்துகிறவர்களைப் போல் அந்தரங்கமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பதை அவள் பார்த்திருக்கலாம். ஆனால் அந்தத் தோழிக்குத்தான் அவ்வளவுக்குப் பொறுமையில்லாமல் போய்விட்டதே!
"அம்மா! துறவியையும் அவரோடு வந்திருந்தவர்களையும் வசந்த மண்டபத்தில் காணவில்லை" என்று குழல்மொழியிடம் திரும்பி வந்து சொல்லிவிட்டாள் அந்தத் தோழி.
"வசந்த மண்டபத்துக்குப் போகிற பாதையின் தொடக்கத்தில் அம்பலவன் வேளான் காவலுக்கு உட்கார்ந்திருப்பானே? அவனைக் கூடவா காணவில்லை!"
"ஆம்! அவனையும் காணவில்லை!"
"சரிதான், படகில் அக்கரைக்குப் போயிருப்பார்கள். அடிகளுக்குத் திடீரென்று சுசீந்திரத்துக்குப் போய்த் தாணுமாலய விண்ணகரத்தில் தரிசனம் செய்ய வேண்டுமென்று ஆசை உண்டாகியிருக்கும். நமக்கென்ன வந்தது? எக்கேடாவது கெட்டுப் போகட்டும். நாம் தூங்கலாம்" என்று சுவாரஸ்யமில்லாமல் பேசினாள் குழல்மொழி.
அதன் பின் அடிகள் உணவு கொள்ள வரவில்லையே என்று அங்கு யாரும் அவருக்காகக் காத்துக் கொண்டிருக்கவில்லை. இரவு பத்துப் பதினொரு நாழிகைக்கெல்லாம் இடையாற்று மங்கலம் மாளிகையில் பூரண அமைதி நிலவியது. மகாமண்டலேசுவரரின் செல்வப் புதல்வியும், மாளிகையிலிருந்த மற்றப் பணிப் பெண்களும் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த கன்னிமாடப் பகுதிக்குப் போய் உறக்கத்தில் ஆழ்ந்து விட்டனர்.
இரவின் நாழிகைகள் ஒவ்வொன்றாக வளர்ந்து கொண்டிருந்தன. நடுச்சாமத்தை எட்டிப்பிடித்து விட்ட போது வானமும், நட்சத்திரங்களும் சோகை பிடித்த மாதிரி வெளுத்து ஒளி மங்கிக் கொண்டு வந்தன. மாளிகையில் அங்கங்கே அவசியமான இடங்களில் காவல் வைக்கப்பட்டிருந்த வீரர்களெல்லாம் கூடச் சோர்ந்து கண் மயங்கும் நேரம் அது.
அந்த நேரத்தில் வசந்த மண்டபத்தின் பின்புறத்துத் தோட்டத்திலிருந்து அடிகளும் மற்ற மூவரும் புறப்பட்டனர். மாளிகையின் பிரதான வாசலில் கொண்டு போய் விடும் ஒற்றையடிப் பாதையில் வந்து படகோட்டியின் குடிசையருகே தயங்கி நின்றனர். அன்று குளிர் அதிகமாக இருந்ததனால் படகோட்டி அம்பலவன் வேளான் குடிசைக்குள்ளேயே படுத்திருந்தான்.
வசந்த மண்டபத்திலிருந்து வந்து நின்றவர்களில் ஒருவன் படகோட்டியின் குடிசைக் கதவருகே வந்தான். ஓசைப்படாமல் கதவை வெளிப்பக்கமாக இழுத்துத் தாழிட்டான்.
"அடே! படகை அவிழ்த்து வைத்துக் கொண்டு புறப்படுவதற்குத் தயாராக நீ துறையிலேயே இரு. நாங்கள் விரைவில் காரியத்தை முடித்துக் கொண்டு வந்து விடுகிறோம்" என்று மற்றவர்கள் அவனைத் துறையில் இருக்கச் செய்துவிட்டு மாளிகையை நோக்கி விரைந்தனர். குரல் தான் கேட்டதே ஒழிய இருளில் அவர்கள் முகங்கள் சரியாகத் தெரியவில்லை. அதன் பின் அன்றிரவு நடுச் சாமத்துக்கு மேல் இடையாற்று மங்கலம் மாளிகையில் எந்தப் பகுதியில் என்ன நடந்ததென்று எவருக்கும் தெரியாது.
பொழுது விடிந்த போது அலறிப் புடைத்துக் கொண்டு குழல்மொழியின் கன்னிமாடத்து வாசலில் வந்து கூக்குரலிட்டனர் யவனக் காவல் வீரர்கள். மாளிகை முழுவதும் கூச்சலும் ஓலமுமாக ஒரே குழப்பமாக இருந்தது. அந்தக் குழப்பங்களாலும், கூப்பாடுகளாலும் தூக்கம் கலைந்த குழல்மொழி எழுந்திருந்தவுடன் அந்த யவனக் காவல் வீரர்களின் முகத்தில்தான் விழித்தாள். அவர்கள் ஒன்றும் விளக்கிச் சொல்லத் தோன்றாமல் 'ஓ'வென்று வீறிட்டு அலறி அழத் தொடங்கினர்.
"ஏன் அழுகிறீர்கள்? விடிந்ததும் விடியாததுமாக இப்போது என்ன நடந்து விட்டது? விவரத்தைச் சொல்லுங்கள். இதென்ன? மாளிகை முழுவதும் கூச்சலும் குழப்பமுமாக இருக்கிறதே!" என்று பதறிப் போய் அதிர்ச்சியடைந்து கேட்டாள் குழல்மொழி. அதே சமயம் மாளிகையின் எதிர்ப்புறம் பறளியாற்றுப் படகுத் துறையில் 'தடால், தடால்' என்று ஏதோ இடிபடும் ஓசை கேட்டது. நாலைந்து வீரர்கள் என்னவென்று பார்ப்பதற்காக அங்கே ஓடினார்கள். போய்ப் பார்த்த போது அம்பலவன் வேளான் தன் குடிசைக்குள்ளிருந்து வெளிப்புறமாகத் தாழிட்டிருந்த கதவைப் போட்டு உடைத்துக் கொண்டிருந்தான். அந்த ஓசையைக் கேட்டு அங்கே போன வீரர்களில் ஒருவன் கதவைத் திறந்து விட்டான். இல்லையானால் கதவு பிழைத்திருக்காது. வேளான் வெளியே வந்து பார்த்த போது துறையில் கட்டியிருந்த படகைக் காணவில்லை. "ஐயோ! படகைக் காணவில்லையே?" என்று கூச்சலிட்டான் அவன்.
"போ, ஐயா! உன் ஓட்டைப் படகு போனதனால் ஒன்றும் குடி முழுகிவிடாது. கொள்ளை போகக்கூடாத மாபெரும் ஐசுவரியம் நேற்றிரவு இந்த மாளிகையிலிருந்து கொள்ளை போய்விட்டது. மகாமண்டலேசுவரர் கண்ணுக்குக் கண்ணாக வைத்துப் பாதுகாத்து வந்த பாண்டிய மரபின் சுந்தர முடியும், வீரவாளும், பொற்சிம்மாசனமும் காணாமல் போய் விட்டனவே!" என்று வேளானின் வாய்க் கூச்சலை அடக்கினான் ஒருவன்.
--------
1.30. புவன மோகினியின் பீதி
நள்ளிரவு வரை இடையாற்று மங்கலம் நம்பிக்கு ஒற்றறிந்து கூறியதற்காக ஆபத்துதவிகளின் தலைவன் தன்னை எப்போது எப்படித் துன்புறுத்துவானோ என்று அஞ்சி மஞ்சத்தில் உறக்கமின்றி புரண்டு கொண்டிருந்த புவன மோகினி அரண்மனை நாழிகை மன்றத்தில் ஒவ்வொரு யாம முடிவிலும் அடிக்கும் மணி அடித்து முடித்த சிறிது நேரத்துக்கெல்லாம் தன்னையறியாமலே துயில் வயப்பட்டாள். நன்றாக அயர்ந்து தூங்கி விடவில்லையானாலும் உடல் சோர்வடைந்து தன்னுணர்வை இழந்திருந்தது. தூக்கத்தில் ஒரு முறை புரண்டு படுத்தாள்.
புரண்டு படுத்த சிறிது நேரத்தில் கழுத்தின் பின்புறம் பிடரியில் ஏதோ வெப்பமான மூச்சுக்காற்று உரசிச் செல்லுவது போலிருந்தது. தலையில் பூச்சூடிக் கொண்டிருந்த இடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அந்த வெப்பக் காற்றுப் பட்டு உறைப்பது போலிருந்தது.
உண்மைதானா? அல்லது தூக்கக் கலக்கத்தில் ஏதாவது சொப்பனம் காண்கிறோமா? என்று சந்தேகப்பட்டு மெல்லக் கண்களைத் திறந்தாள் புவன மோகினி. தலையருகே யாரோ குனிந்து பூவை முகர்ந்து பார்ப்பது போல் ஒரு பிரமை, ஒரு குறுகுறுப்பு அவள் மனத்தில் உண்டாயிற்று. தலைப்பக்கம் விளக்கு மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. தலைமாட்டில் ஆள் நின்று கொண்டிருந்தால் திரும்பிப் பார்த்துத்தான் அதைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதில்லை. சுவரில் நிழல் நன்றாக விழும். புவனமோகினி எதிர்பார்த்தது வீண் போகவில்லை. எதிர்ச் சுவரில் ஓர் உருவத்தின் கரிய நிழல் பயங்கரமாகப் படிந்திருந்தது. கண்களைத் திறந்து அந்த நிழலைப் பார்த்ததும், பீதியினால் 'வீல்' என்று அலறி விட்டாள் அவள். அந்த அலறல் அவள் வாயிலிருந்து முழுமையாக வெளிப்பட்டு விடாமல் ஒரு முரட்டுக் கை தலைப் பக்கத்திலிருந்து அவள் வாயைப் பொத்தியது. அச்சத்தினால் மை தீட்டிய அவள் கண் இமைகளுக்குக் கீழே விழிகள் பிதுங்கின. முகம் வெளிறியது. படுத்திருந்தாலும் பயத்தினால் உடம்பு 'வெட வெட'வென்று நடுங்கியது. நெஞ்சங்கள் திடீரென்று மலைகளாக மாறிக் கனத்து இறுகி அழுத்துவது போல் மூச்சு அடைத்தது. பயத்தோடு பயமாக தலையை ஒருக்களித்துத் திருப்பி மிரளும் விழிகளால் தலைப் பக்கம் பார்த்தாள். தூண்டா விளக்கின் மங்கலான ஒளியில் ஆபத்துதவிகள் தலைவனின் முகத்தைக் கண்டாள் புவன மோகினி. அவள் நெஞ்சு 'படக் படக்' என்று வேகமாக அடித்துக் கொண்டது. வலிமை பொருந்திய அவனது இரும்புக் கை அவள் வாய்க்குக் கவசம் போட்டுப் பூட்டியது போல் அழுத்திப் பொத்திக் கொண்டிருந்தது. ஆபத்துதவிகள் தலைவனின் மற்றொரு கை அவள் கழுத்துக்கு நேர் உயரப் பாம்பு நெளிவது போன்ற சிறு குத்துவால் ஒன்றை ஓங்கிக் கொண்டிருந்தது. அந்த நிலையில் அந்தச் சமயத்தில் எதிர்ச் சுவரில் தெரிந்த அவன் நிழல் கூடப் பார்ப்பதற்குப் பயங்கரமாக இருந்தது. சிறிது நேரம் அப்படியே கழிந்தது. அவள் கழுத்துக்கு நேரே ஓங்கியிருந்த கத்தியாலேயே விளக்கின் திரியை நசுக்கி அணைத்தான் அவன். சுடர் நாற்றமும், திரி கருகிய புகையும் மூச்சில் கலந்து நெஞ்சைக் குமட்டின. விளக்கு அணைந்து இருள் பரவியவுடன் புவன மோகினியின் பயம் அதிகமாயிற்று. பலங்கொண்ட மட்டும் அவன் கையைப் பிடித்துத் தள்ளித் திமிறி எழுந்து மீண்டும் கூச்சலிட்டாள் அவள். இருட்டில் அவன் ஓடிவிட்டான்.
அவள் போட்ட கூச்சலைக் கேட்டு விளக்கோடும் தீப்பந்தங்களோடும், அந்தப்புரத்துப் பெண்களும், காவல் வீரர்களும் அங்கு ஓடி வந்த போது யாரும் வந்து போன சுவடே தெரியவில்லை. அவ்வளவு விரைவில் வந்த ஆள் தப்பி விட்டான். புவன மோகினி கூறியதை அவர்களில் எவருமே நம்பத் தயாராயில்லை. "அடி, பைத்தியக்காரப் பெண்ணே! ஏதாவது கெட்ட சொப்பனம் கண்டாயா? உன் கூச்சலால் அந்தப்புரத்தையே அதிரச் செய்துவிட்டாயே? என்னதான் பயங்கரமாகச் சொப்பனம் கண்டாலும் இப்படியா கூச்சல் போடுவார்கள்?" என்று வண்ண மகள் புவன மோகினியை விலாசினியும், பகவதியும் கேலி செய்யத் தொடங்கி விட்டார்கள். புவன மோகினி தன் அனுபவம் உண்மை என்பதைக் கடைசி வரை அவர்கள் நம்பும்படி செய்ய முடியவில்லை. அவள் கனவு தான் கண்டிருக்க வேண்டுமென்று பிடிவாதமாகச் சாதித்தார்கள் அவர்கள். அதன் பின் அன்றிரவு அவளைச் சுற்றிப் பன்னிரண்டு தோழிப் பெண்களைப் பக்கத்துக்கு மூன்று பேர்கள் வீதம் நான்கு பக்கமும் துணைக்கு காவலாகப் படுத்துக் கொள்ள செய்த பின்பே படுக்கையில் படுத்தாள். இங்கே இது நடந்த நேரத்தில் தான் இடையாற்று மங்கலத்து மாளிகையில் அந்தப் பயங்கரக் கொள்ளையும் நடந்திருக்கிறது. ஒரே இரவில் ஒரே நேரத்தில் இரண்டு குழப்பங்கள் நடந்து விட்டன.
மறுநாள் பொழுது புலர்ந்த போது தென்பாண்டி நாட்டின் அரசியல் வாழ்வுக்கு அதிர்ச்சி தரும் உண்மைகளும் வந்து சேர்ந்தன. மகாமண்டலேசுவரர் கண் விழுத்து எழுந்தவுடன் கரவந்தபுரத்திலிருந்து வந்திருந்த தூதுவனை அவருக்கு முன்னால் கொண்டு போய் நிறுத்தினான் தளபதி வல்லாளதேவன். அதற்கு முன்பே முதல் நள்ளிரவு புவன மோகினியின் பள்ளியறையில் நடந்த கலவரம் அவர் காதுக்கு எட்டியிருந்தது. கரவந்தபுரத்துத் தூதுவன் தான் கொண்டு வந்திருந்த முத்திரையிட்டு ஜாக்கிரதையாகப் பத்திரப்படுத்திய ஓலையை மகாமண்டலேசுவரரிடம் கொடுத்தான்.
அவசர அவசரமாக அதன் மேலிருந்த அரக்கு முத்திரைகளைக் கலைத்து உதிர்த்துவிட்டு ஓலையைப் பிரித்துப் படித்தனர்.
"தென்பாண்டி நாட்டு மகாமண்டலேசுவரர் திருச்சமூகத்துக்குக் கரவந்தபுரத்து உக்கிரன் கோட்டைக் குறுசில் வேள் பெரும்பெயர்ச்சாத்தன் பல வணக்கங்களுடன் அவசரமாய் எழுதும் திருமுகம்.
"வடபாண்டி நாட்டு மதுரை மண்டலம் முழுதும் வென்று கைப்பற்றியதோடு ஆசை தணியாமல் கோப்பரகேசரி பராந்தக சோழன் தென்பாண்டி நாட்டின் மீது தக்கவர்களின் படைத் துணையோடு படையெடுக்கக் கருதியுள்ளான். இந்தப் படையெடுப்பு நாம் எதிர்பாராமலிருக்கும் போது மிக விரைவில் திடீரென்று நம்மேல் நிகழும் என்று தெரிகிறது. சில நாட்களாக இங்கே உக்கிரன் கோட்டையிலும், இதைச் சுற்றியுள்ள இடங்களிலும் சோழ மண்டலத்து ஒற்றர்களும், உளவறிவோரும் இரகசியமாக உலாவக் காண்கிறேன். மிக விரைவில் வடதிசை மன்னர் படையெடுப்பால் - நாம் தாக்கப்படுவோம் என்பதற்குரிய வேறு சில சங்கேதமான நிகழ்ச்சிகளை நமது வட எல்லைப் பிரதேசங்களில் அடிக்கடி காண முடிகிறது. கீழைப்பழுவூர்ச் சிற்றரசன் பழுவேட்டரையன் கண்டன் அமுதனும், சோழமண்டலத்துப் பாம்புணிக் கூற்றத்து அரசூருடையான் தீரன் சென்னிப் பேரரையனும், கொடும்பாளூர் மன்னனும், பரதூருடையானும், இப்படையெடுப்பில் பராந்தக சோழனுக்கு உறுதுணையாயிருப்பார்களென்று தெரிகிறது. தென்பாண்டி மண்டலத்தின் வட எல்லைக் காவல் பொறுப்பு அடியேனிடம் ஒப்புவிக்கப்பட்டிருப்பதால் இந்தச் செய்தியை உடனே தங்களுக்கும், மகாராணி வானவன்மாதேவியாருக்கும் அறிவித்து விட வேண்டுமென்று இத்திருமுகம் எழுதலானேன்.
"கட்டளைப்படி இத் திருமுகம் கொண்டு வருவான் மானகவசனென்னும் உத்தமதேவன் பால் மறுமொழியும் படையெடுப்பைச் சமாளிக்கும் ஏற்பாட்டு விவரங்களும் காலந் தாழ்த்தாது அறிவித்து அனுப்புக.
"இங்ஙனம் தென்பாண்டி மண்டலப் பேரரசுக்கு அடங்கிய குறுநிலவேள்." பெரும்பெயர்ச்சாத்தனின் திருமுகத்தைப் படித்து முடித்ததும் இடையாற்று மங்கலம் நம்பி மிகப் பெரிய அதிர்ச்சிக்குள்ளானார். இவ்வளவு சீக்கிரமாக இந்தப் படையெடுப்பு நேருமென்று கனவிற் கூட எதிர்பார்க்கவில்லை அவர். உடனே தளபதியையும் கரவந்தபுரத்துத் தூதுவனையும் அழைத்துக் கொண்டு மகாராணியாரைச் சந்திப்பதற்காக அந்தப்புரத்துக்குச் சென்றார் அவர். செய்தியை மகாராணியாரிடம் படித்துக் காட்டியபோது அவரும் அதிர்ச்சிக் குள்ளானார். "மகாமண்டலேசுவரரே! ஒரே ஒரு வழிதான் எனக்குத் தோன்றுகிறது. அவசரமாக விரைவில் நீங்கள் இராசசிம்மனைத் தேடிக் கொண்டு வந்தால் அவனையே சேர நாட்டுக்குத் தூதனுப்பலாம். அவனே நேரில் போனால் மாமன்மாராகிய சேரர்கள் படை உதவி செய்ய நிச்சயம் ஒப்புக் கொள்வார்கள். சேரர் படை உதவி கிடைத்தால் நாம் எதற்கும் அஞ்ச வேண்டாம். இப்போது இதைத் தவிர வேறு ஒரு வழியும் எனக்குத் தோன்றவில்லை. நீங்கள் உடனே இராசசிம்மனைத் தேடிக் கொண்டு வர ஏற்பாடு செய்யுங்கள்" என்று கூறினார் மகாராணியார்.
"மகாராணியார் என்னை மன்னிக்க வேண்டும். ஓர் இரகசியத்தை இந்தக் கணம் வரை உங்களிடம் சொல்லாமலே மறைத்து வந்திருக்கிறேன். குமாரபாண்டியர் சில நாட்களாக என் விருந்தினராக இடையாற்று மங்கலம் வசந்த மண்டபத்தில் தான் தங்கியிருக்கிறார். இப்போதே சென்று இங்கு அழைத்து வரச் செய்கிறேன்."
"உண்மையாகவா?" மகாராணியின் குரலில் அவநம்பிக்கையும், வியப்பும் போட்டியிட்டன. தளபதி வல்லாளதேவனின் முகத்தில் ஆச்சரியத்தின் உணர்வுச் சாயைகள் கோடிட்டன. அன்று இடையாற்று மங்கலத்து நிலவறையில் அந்தத் துறவியைப் பார்த்துக் குமாரபாண்டியரோ எனத் தான் அடைந்த பிரமை அவனுக்கு நினைவு வந்தது. தூதுவன் திகைத்துப் போய் நின்றான். "உண்மைதான்! சில நாட்களுக்கு முன்பு தான் கடல் கடந்த நாட்டிலிருந்து இளவரசரை இரகசியமாக இங்கு வரவழைத்தேன். யாருக்கும் தெரிந்து விடக் கூடாதென்பதற்காக அவரை மாறுவேடத்திலேயே விழிஞம் துறைமுகத்திலிருந்து இரவோடிரவாக அழைத்துச் சென்றேன். இடையாற்று மங்கலத்தில் இப்போதும் இளவரசர் துறவி போல் மாறுவேடத்திலேயே தங்கியிருக்கிறார். ஒரு சில முக்கியமான அரசியல் காரணங்களுக்காக இளவரசர் வரவைத் தங்களுக்குக் கூடத் தெரிவிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் நான் எவ்வளவு முன்னேற்பாடாகவும், பரம இரகசியமாகவும் இதை மறைத்தேனோ, அவ்வளவு எதிர்பாராத விதமாக சிலருக்கு இந்த இரகசியம் புரிந்து விட்டது" என்று கூறிக் கொண்டே சிரித்துவிட்டுத் தளபதியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார் அவர். ஏற்கெனவே அவர் மேலே சிறிது மனக்கசப்போடு இருந்த தளபதி, "மற்றவர்களுக்கும் சாமர்த்தியம், அறிவு, சூழ்ச்சித்திறன் எல்லாம் இருக்க முடியும் என்பதைச் சில சமயங்களில் தாங்களும் தங்களுடைய அந்தரங்க ஒற்றனும் மறந்து விடுகிறீர்கள்" என்று குத்தலாக அவருக்குப் பதில் சொன்னான்.
"சேந்தன் அசட்டுத்தனமாக எதையாவது செய்திருப்பான். அதையெல்லாம் மனத்தில் வைத்துக் கொள்ளாதே தளபதி!" அவனைச் சமாதானப்படுத்தித் தழுவிக் கொள்கிறவர் போல் குழைந்து பேசினார் இடையாற்று மங்கலம் நம்பி.
"ஓகோ! அசட்டுத்தனத்தைக் கூடத் திட்டமிட்டுக் கொண்டு செய்வது தான் தங்களுக்கும், தங்கள் ஒற்றனுக்கும் வழக்கம் போலிருக்கிறது. இன்றுதான் எனக்கு உங்களைச் சரியாகப் புரிகிறது" என்று சுடச்சுடப் பதில் கொடுத்தான் தளபதி. அதற்கு மேலும் அவரை வம்புக்கு இழுக்க வேண்டுமென்று அவன் ஆத்திரம் அவனைத் தூண்டியது. மகாராணியாரின் முன்னிலையில் அப்படிச் செய்வது மரியாதைக் குறைவாகப் போய்விடும் என்று அடக்கிக் கொண்டு பேசாமல் இருந்து விட்டான். தளபதியும், மண்டலேசுவரரும் பேசிக் கொண்ட விதத்தைக் கவனித்ததில் அவர்களுக்குள் ஏதோ பிணக்கு இருக்கிறது என்ற குறிப்பு மட்டும் மகாராணியாருக்குப் புரிந்தது. 'அது என்ன பிணக்கு?' என்பதை அவர்களிடமே வற்புறுத்தித் தூண்டிக் கேட்க விரும்பவில்லை. "மகாமண்டலேசுவரரே! இன்னும் எதைச் சிந்தித்துக் கொண்டு நேரத்தைக் கழிக்கிறீர்கள்? தூதுவன் காத்துக் கொண்டிருக்கிறான். அவனுக்குப் பதில் ஓலை கொடுத்து அனுப்பி வையுங்கள். உடனே இடையாற்று மங்கலம் சென்று வடதிசை மன்னர் படையெடுப்பு விவரங்களைக் கூறிக் குமாரபாண்டியனை இங்கே அழைத்து வாருங்கள். இன்று இரவிலேயே மறுபடியும் கூற்றத் தலைவர்களைக் கூட்டி இளவரசனையும் உடன் வைத்துக் கொண்டு கலந்து ஆலோசிப்போம். உடனே புறப்படுங்கள். தாமதத்துக்கு இது நேரமில்லை" என்று வானவன்மாதேவியார் அவரைத் துரிதப்படுத்தினார்.
"தளபதி, உனக்கும் எனக்கும் என்னுடைய ஒற்றனுக்கும் ஒருவரையொருவர் சரியாகப் புரிந்து கொள்ள முடியாத சந்தர்ப்பச் சூழ்நிலைகளின் காரணமாக எத்தனையோ உட்பகைகள் இருக்கலாம். அவற்றையெல்லாம் இந்தச் சமயத்தில் நாம் மறந்து விட வேண்டும்" என்று அவனிடம் கெஞ்சுவது போல் கூறினார் இடையாற்று மங்கலம் நம்பி.
இந்தச் சமயத்தில் ஒரு வீரன் அவர்கள் பேசிக் கொண்டிருந்த இடத்துக்கு வந்து, "மகாமண்டலேசுவரரைத் தேடிக் கொண்டு இடையாற்று மங்கலத்திலிருந்து அவசரமாக ஓர் ஆள் வந்திருக்கிறான்" என்று தெரிவித்தான். "அவனை உடனே இங்கு அழைத்துக் கொண்டு வா" என்று உத்தரவிட்டார் மகாமண்டலேசுவரர்.
படகோட்டி அம்பலவன் வேளான் உள்ளே வந்து நின்றான். அவன் முகம் பேயறைபட்டது போல் வெளிறிப் போயிருந்தது.
"சுவாமி! மாளிகையில் நடக்கக்கூடாத அநியாயம் நடந்து விட்டது. எந்தப் பொருள்களை உயிரினும் மேலானவையாகக் கருதிப் பாதுகாத்து வந்தோமோ, அந்தப் பொருள்கள் நேற்றிரவு கொள்ளை போய்விட்டன. பாண்டிய மரபின் சுந்தர முடியையும் வீர வாளையும் பொற் சிம்மாசனத்தையும் பறிகொடுத்து விட்டோம். இன்று காலையில் தான் தெரிய வந்தது. கொள்ளை நடந்த பின் வசந்த மண்டபத்தில் வந்து தங்கியிருந்த அந்தச் சாமியாரையும், நேற்றுக் காலை அவரைத் தேடி வந்து அவரோடு தங்கியிருந்த ஆட்களையும் தீவின் எல்லையிலேயே காணவில்லை." படகோட்டி மூச்சுவிடாமல் கூறிக் கொண்டே போனான். அங்கிருந்தவர்கள் அனைவரும் கல்லாய்ச் சிலையாய்ச் சமைந்து நின்றார்கள்.
----------
1.31. செம்பவழத் தீவு
இடையாற்று மங்கலம் மாளிகையில் பாண்டிய மரபின் மரியாதைக்குரிய மாபெரும் அரசுரிமைச் சின்னங்கள் கொள்ளை போன மறுநாள் அங்கே ஒருவகைப் பயமும் திகைப்பும் பரவி விட்டன. சாவு நிகழ்ந்த வீடு போல், மழையைக் கொட்டித் தீர்த்து விட்ட வானம் போல், ஓர் அமைதி. பறிகொடுக்கக்கூடாத பொருளைப் பறிகொடுத்து விட்டால் ஏற்படுமே அந்த அமைதி, இடையாற்று மங்கலத்தில் சோகம் கலந்து சூழ்ந்திருந்தது.
அமைதியும், துயரமும் கலந்த இந்தச் சூழ்நிலையிலிருந்து நேயர்களை அழகான கடல் பகுதிக்கு அழைத்துக் கொண்டு போகப் போகிறேன். தென் மேற்குக் கோடியில் அலைகொட்டி முழக்கும் மேலைக் கடலின் நுழைவாயிலெனச் சிறந்து விளங்கும் விழிஞம் துறைமுகத்தைப் பற்றி நம் நேயர்கள் முன்பே அறிந்து கொண்டிருப்பார்கள். அந்தத் துறைமுகத்தில் தானே நாராயணன் சேந்தன் என்ற அபூர்வமான மனிதனை நேயர்களுக்கு முதன் முதலாக அறிமுகப்படுத்தி வைத்தேன்!
இடையாற்று மங்கலத்தில் கொள்ளை போன மறுநாள் நண்பகல் உச்சி வேளைக்கு விழிஞம் துறைமுகத்துக்குத் தெற்கே ஐந்து காத தூரத்தில் ஒரு வனப்பு மிக்க தீவின் கரையோரமாகக் கடலில் மிதக்கும் வெண்தாமரை போல் அழகிய கப்பலொன்று விரைந்து செல்வதைக் காண்கிறோம். ஆ! அதென்ன உச்சிவேளையின் ஒளிக்கதிர்களில் அந்த மரக் கலத்தின் பாய்மரக் கூம்பில் ஆண் சிங்கம் ஒன்று பாய்வதற்குத் தயாராகிக் கொண்டிருப்பது போல் ஒரு காட்சி தெரிகிறதே! அல்ல! அல்ல! அது ஒரு கொடி தான். அந்தக் கொடி காற்றில் ஆடி அசையும் போதெல்லாம் அதில் தத்ரூபமாகச் சித்திரிக்கப்பட்டிருக்கும் சிங்கத்தின் உருவம் உயிர்ப்பெற்றுப் பாய்வது போல் பார்க்கிறவர்களின் கண்களில் ஒரு பிரமையை உண்டாக்கி விடுகிறது. தீவின் பெயர் தான் அப்படியென்றால் அவர்களுடைய நிறம் கூடவா செம்பவழம் போலிருக்க வேண்டும்? கூந்தலில் அடுக்கடுக்காக மயில் தோகைகளையும், முழு நீளத் தாழை மடல்களையும் சூடிக் கொண்டு அன்னமும், கிளியும், குயிலும், மானும் கூட்டம் கூட்டமாக ஓடி வந்தாற் போலத் துள்ளி ஓடி வரும் அந்தத் தீவின் யுவதிகளை எப்படி வருணிப்பது? அந்த மாதிரி ஒளியும் வசியமும் நிறைந்த கரிய கண்களை அவர்களுக்கு மட்டும் தான் அமைக்க வேண்டுமென்று படைத்தவன் தீர்மானம் செய்து வைத்துக் கொண்டிருந்தானோ? அவ்வளவுதான். அடடா? அந்தத் தீவில் தான் என்ன எழில், எவ்வளவு இயற்கைக் கவர்ச்சி. தீவுக்கு என்ன பெயர் என்று சொல்லவும் வேண்டுமோ? கரையோரமாக இரத்தக் காடு முளைத்தது போல படர்ந்து கிடக்கும் செம்பவழத்தீவு! எத்தனை இனிமையான பெயர். மேலைக் கடலில் மூலைக்கு மூலை பரவிக்கிடக்கும் பன்னீராயிரம் 'முந்நீர்ப் பழந்தீவு'களில் அதுவும் ஒன்று.
கொத்துக் கொத்தாகக் கடலை நோக்கித் தொங்குவது போல் மேகங்கள், தீவின் பசுமை, கப்பல் செல்லும் அழகு, கடல் மக்களுக்குச் செம்பஞ்சுக் குழம்பு பூசியது போல் பவழக் கொடிகள் - ஆகிய இவற்றின் அழகில் மயங்கி, அந்தக் கப்பலில் பிரயாணம் செய்வோர் யார்? எதற்காகப் பிரயாணம் செய்கின்றனர்? எங்கே பிரயாணம் செய்கின்றனர்? என்பது போன்றவற்றை நாம் கவனிக்காமல் விட்டுவிடக் கூடாதல்லவா?
அதோ கப்பல் செம்பவழத் தீவின் கரையோரமாக நிற்கிறது. பயங்கரமான மீசையோடு காட்சியளிக்கும் ஒரு முரட்டு மீகாமன் (மாலுமி) கீழே குதித்துத் தீவின் கரையோரத்துத் தென்னைமரம் ஒன்றில் கப்பலை நங்கூரம் பாய்ச்சுகிறான். ஏதோ, தேர், திருவிழா அதிசயங்களைப் பார்க்க ஓடி வருகிறவர்களைப் போல் அந்தத் தீவில் ஆண்களும், பெண்களும் கப்பலைப் பார்க்க ஓடி வருகிறார்கள். ஆகா! அந்தத் தீவின் மக்கள் தான் என்னென்ன விநோதமான முறைகளில் உடையணிந்திருக்கிறார்கள்.
முகத்திலும், விழிகளிலும், வியப்பும், புதுமையும் இலங்கக் கப்பல் நின்ற இடத்தைச் சூழ்ந்து கொண்டார்கள் அவர்கள். மீகாமன் அவர்களை வழிவிட்டு ஒதுங்கி நின்று கொள்ளுமாறு அதட்டினான்.
இப்போது அந்தக் கப்பலிலிருந்து செம்பவழத் தீவின் கரையில் இறங்கப் போகிறவர்களைப் பார்க்கலாம்.
உள்ளேயிருப்பவர்கள் கரையில் இறங்குவதற்காகத் தூக்கிக் கட்டியிருந்த மரப் படிக்கட்டைத் தணிவாக இறக்கி வைத்தான் மீகாமன்.
முதலில் குமார பாண்டியன் இராசசிம்மன் சிரித்த முகத்தோடு கீழே இறங்கினான். தாடி மீசையோடு கூடிய பழைய துறவித் தோற்றத்துக்கும் இப்போதைய இளமைத் தோற்றத்துக்கும் தான் எவ்வளவு வேற்றுமை? அடுத்து முதல் நாள் அவனைத் தேடி இடையாற்று மங்கலத்துக்கு வந்திருந்தவர்களும் கப்பலிலிருந்து இறங்கினார்கள்.
"சக்கசேனாபதி! இந்நேரத்துக்குள் செய்தி தென்பாண்டி நாடு முழுவதும் பரவியிருக்கும். அரண்மனையில் கூற்றத் தலைவர் கூட்டத்துக்காகப் போய் தங்கியிருக்கும் மகாமண்டலேசுவரருக்கு இடையாற்று மங்கலத்திலிருந்து கொள்ளை போன தகவல் கூறி அனுப்பப்பட்டிருக்கும்." தன்னோடு கப்பலிலிருந்து இறங்கியவர்களின் மூத்தவரும், வீரகம்பீரம் துலங்கும் தோற்றத்தை உடையவருமான ஒருவரைப் பார்த்து இராசசிம்மன் நகைத்துக் கொண்டே இவ்வாறு கூறினான்.
"இளவரசே! திருடினவர்கள் திருட்டுக் கொடுத்தவர்களுக்காக அனுதாபப்படுவது உண்டோ?" என்றார் சக்கசேனாபதி.
"சக்கசேனாபதி! இந்த இடத்தில் பயனப்டுத்தத் தகுதியற்ற ஒரு வார்த்தையை நீங்கள் பயன்படுத்தி விட்டீர்கள். யார் திருடினவன்? யார் திருட்டுக் கொடுத்தவன்? என்றோ ஒரு நாள் என் தலையில் சூட்டிக் கொள்ளப் போகிற முடியையும், இடையில் அணிபெற வேண்டிய வாளையும் இன்றே பாதுகாப்பான இடத்தில் கொண்டு போய் மறைத்து வைக்கப் போகிறேன். பொருளுக்கு உரியவர்கள் பொருளை எடுத்துச் சென்று பத்திரப்படுத்துவதைத் திருட்டு என்று கூறக் கூடாது."
சக்கசேனாபதி சிரித்தார். கம்பீரமான ஆண் சிங்கம் போன்ற அவருடைய முகத் தோற்றத்திலும், பார்வையிலும் ஒருவித மிடுக்கு இருந்தது. அவர் முகத்தைப் பார்க்கும் போது பிடரி மயிரோடு கூடிய ஓர் ஆண் சிங்கத்தின் நிமிர்ந்த பார்வை நினைவுக்கு வராமற் போகாது. வீரத்தின் மதர்ப்பும் ஆண்மையும் விளங்கும் பருத்த, உயர்ந்த தோற்றம் அவருடையது. இந்தக் கதையில் மேற்பகுதிகளில் இன்றியமையாத சில நிகழ்ச்சிகளுக்கும், மாறுதல்களுக்கும் காரணமாக இருக்கப் பொகிறவர் சக்கசேனாபதி.
அவர் ஈழ மண்டலப் பேரரசின் மகா சேனாபதி. குமார பாண்டியனின் உற்ற நண்பரும் இலங்கைத் தீவின் புகழ்மிக்க வேந்தருமாகிய காசிப மன்னரின் படைத்தலைவர். தந்தை காலஞ்சென்ற நாளிலிருந்து இராசசிம்மனின் இளமைக் காலத்தில் அவனுக்கு எத்தனையோ முறை கடல் கடந்து சென்று ஒளிந்து கொண்டு வாழ வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. அப்போதெல்லாம் அவனுக்கு ஆதரவளித்து உதவி செய்தது இலங்கைப் பேரரசே. அவன் மனச் சோர்வோடு கடல் கடந்து சென்ற போதெல்லாம் வரவேற்று ஆதரவளித்தவர்கள் சக்கசேனாபதியும், காசிபனும் தான். தென்பாண்டி நாட்டு இளவரசன் தன் அரசியல் வாழ்க்கையின் துன்பம் நிறைந்த சூழலில் கழித்த சந்தர்ப்பங்கள் கணக்கற்றவை. வளமான கடற்கரை, அழகான மலைத்தொடர், இளமரக் காடுகள், குளிர்பொழிற் சோலைகள் அத்தனையும் நிறைந்த ஈழ நாட்டின் சூழலில் சொந்தத் துயரங்களை மறந்து விடுவான் இராசசிம்மன். அனுராதபுரத்துக் கற்கனவுகளைக் காணும் போதெல்லாம் சோர்வும் ஏமாற்றமும் நிறைந்த அவன் உள்ளத்தில் ஆயிரமாயிரம் திடம் வாய்ந்த எண்ணங்களும், நம்பிக்கைகளும் முகிழ்ந்திருக்கின்றன. வாழ்க்கையின் துன்பங்களைத் தமிழ்நாட்டிலும் அவைகளை மறக்கும் இன்பங்களை ஈழநாட்டிலும் அனுபவித்தான் இராசசிம்மன்.
இப்போதும் ஈழநாட்டின் படைத்தலைவர் இந்த மரக்கலத்தில் அவனை அங்கே தான் அழைத்துக் கொண்டு போகிறார். இடைவழியில் சிறிது தங்கிச் செல்வதற்காக அந்தத் தீவில் இறங்கியிருக்கிறார்கள் அவர்கள்.
சக்கசேனாபதியும், இராசசிம்மனும் கரையில் இறங்கி நின்று பேசிக் கொண்டிருந்த நேரத்துக்குள் அந்தக் கப்பலில் அவர்களோடு வந்திருந்த ஆட்கள் தீவின் கரையில் இரத்தினக் கம்பளங்களையும் சித்திரத் துணிகளையும் கொண்டு தங்குவதற்கு ஓர் அழகான கூடாரம் அமைத்து விட்டார்கள். தென்னை மரக் கூட்டங்களின் இடையே காற்றில் ஆடி அசையும் பசுந் தோகைகளின் கீழே எழும்பி நின்ற அந்தச் சித்திரக் கூடாரம் மண்ணைப் பிளந்து கொண்டு தானே மேலே வந்து தோன்றும் மலர் வீடு போல் காட்சியளித்தது. அன்றைய இரவு முடிய அங்கே பொழுதைக் கழித்து விட்டு மறுநாள் காலை மறுபடியும் கடற் பயணத்தைத் தொடரலாம் என்பது சக்கசேனாபதியின் திட்டம். தங்குவதற்கு அத்தியாவசியமான பொருள்கள் மட்டும் கப்பலிலிருந்து கூடாரத்துக்குள் இறக்கி வைக்கப்பட்டன. நீராடி உணவு முடிந்ததும் அன்று பகல் முழுவதும் இராசசிம்மனும், சக்கசேனாபதியும் கூடாரத்தில் ஓய்வு பெற்று நிம்மதியாக உறங்கினர்.
கதிரவன் மலைவாயில் விழுகிற நேரத்துக்குக் குமார பாண்டியனும், சக்கசேனாபதியும் அந்த அழகிய தீவைச் சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம் என்று புறப்பட்டனர். உடனிருந்த ஆட்கள் கப்பலுக்கும் கூடாரத்துக்கும் காவலாக இருந்தனர். மாலை நேரத்தில் அந்தத் தீவின் அழகு பன்மடங்கு மிகுதியாகத் தோன்றியது. வானப் பரப்பு முழுவதும் குங்குமக் குழம்பும், கீழே கடலில் மிதக்கும் பசுமைக் கனவு போல் அந்தத் தீவும் இருந்தது.
விந்தையும் விநோதமும் பொருந்திய கடல்படு பொருள்களான சங்கு, முத்து, சிப்பிகள், சலங்கைகள், பல நிறம் பொருந்திய கடற்பாசிக் கொத்துகள் இவற்றையெல்லாம் குவியல் குவியலாகக் குவித்து விற்கும் தீவின் கடைவீதிக்குள் அவர்கள் நுழைந்தார்கள்.
சக்கசேனாபதியையும் அழைத்துக் கொண்டு அந்தக் கடைகளில் ஒன்றை நெருங்கினான் தென்பாண்டி நாட்டு இளவரசன் இராசசிம்மன்.
வனப்பும், வாளிப்பும் நிறைந்த உடலோடு சிரிப்பும் மலர்ச்சியும் கொஞ்சும் முகத்தையுடைய இளம் பெண் ஒருத்தி அந்தக் கடையில் அமர்ந்து வியாபாரம் செய்து கொண்டிருந்தாள். முற்றிலும் கடலில் கிடைக்கும் அலங்காரப் பொருள்களாலேயே அவள் தன்னை அலங்கரித்துக் கொண்டிருந்தாள். கழுத்தில் முத்து மாலை, செவிகளில் முத்துக் குண்டலம், நெற்றியில் முத்துச் சுட்டி, கைகளில் சங்கு வளையல், கால்களில் முத்துச் சிலம்பு, அள்ளி முடிந்த அளகபாரத்தில் இரண்டொரு மயில் கண்களைத் தோகையிலிருந்து பிரித்துச் செருகியிருந்தாள்.
அவர்களைக் கண்டதும் தோகையை விரித்துக் கொண்டு எழுந்திருக்கும் இளமயில் போல் பாதங்களில் சிலம்பு ஒலிக்க எழுந்து நின்று அவள் வரவேற்றாள். அடடா! அப்போது அந்தப் பெண் சிரித்த சிரிப்புக்குத்தான் எவ்வளவு கவர்ச்சியும் ஆற்றலும் இருந்தன.
"சக்கசேனாபதி! இந்தத் தீவின் கடலில் சிப்பிகளில் மட்டும் முத்தும் பவழமும் விளையவில்லை. இங்குள்ள பெண்களின் வாய் இதழ்களிலும், வாய்க்குள்ளும் கூடப் பவழமும், முத்தும் விளைகின்றன போலும்!" என்று மெல்ல அவர் காதருகில் சிரித்துக் கொண்டே சொன்னான் குமார பாண்டியன். அவர் முகத்திலும் புன்னகை அரும்பியது.
சிறிய செவ்விளநீர் அளவுக்கு வலப்பக்கமாக வளைந்து செந்நிறத்தோடு அழகாக விளங்கிய ஒரு சங்கைக் கையில் எடுத்தான் இளவரசன். பவழத்தில் கைப்பிடியும், முத்துக்களில் விளிம்பும் கட்டி வைத்திருந்த அந்தச் சங்கு அவனுடைய உள்ளத்தைக் கவர்ந்தது.
ஆனால் இதென்ன? அவன் அதைக் கையில் எடுத்ததைப் பார்த்ததும், கண்களில் கலவரமும், முகத்தில் பதற்றமும் தோன்ற நின்ற இடத்திலிருந்து ஓடி வந்து அந்தப் பெண் அவனுடைய கைகளை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். இளவரசனுக்குச் சிரிப்பு வந்தது. சிறிது சினமும் உண்டாயிற்று! பூவைக் காட்டிலும் மென்மையான அந்தப் பட்டுக் கைகள் தன் மேல் தீண்டியதால் ஏற்பட்ட உணர்வு அவன் உடலில் பாதாதி கேச பரியந்தம் பரவியது. சிரிப்பு, சினம், சிருங்காரம் மூன்று உணர்ச்சிகளும் பதிந்த பார்வையால் அவள் முகத்தை உற்றுப் பார்த்தான் அவன்.
அப்போதுதான் பூத்த கருங்குவளைப் பூக்களைப் போல் நீண்டு குறுகுறுவென்றிருக்கும் அவள் கண்களில் பயத்தையும், பரபரப்பையும் அவன் கண்டான்.
அந்த நிலையில் ஏதோ பெரிய நகைச்சுவைக் காட்சியைக் கண்டு விட்டவர் போல் இரண்டு கைகளாலும் வாயைப் பொத்திக் கொண்டு அடக்க முடியாமல் குலுங்கக் குலுங்கச் சிரித்தார் சக்கசேனாபதி. ஒரு கணம் இராசசிம்மன் தயங்கினான். அந்தப் பெண்ணின் கைகளிலிருந்து தன்னை எப்படி விடுவித்துக் கொள்வதென்று திகைத்தான்.
"ஏதேது? இந்த செம்பவழத் தீவில் பெண்களெல்லாம் பெரிய வம்புக்காரர்களாக இருப்பார்கள் போலிருக்கிறதே?" அவன் சக்கசேனாபதியைப் பார்த்துக் கூறுகிறவனைப் போல் இதழ்களில் குறும்புநகை நெளிய அவளைப் பேச்சுக்கு இழுத்தான்.
"வருகிறவர்கள் அளவுக்கு மீறித் துணிச்சல் உள்ளவர்களாயிருக்கும் போது நாங்கள் வம்புக்காரர்களாக மாறுவது வியப்பில்லையே!"
"நீ சங்கு விற்கிறவள். நான் வாங்கப் போகிறவன். வாங்க இருக்கும் பொருளை எடுத்துப் பார்ப்பதற்குக் கூட நான் உரிமையற்றவனா?"
"சங்கு என்றால் ஒரு பொற்கழஞ்சுக்கு ஐந்தும், ஆறுமாக அள்ளிக் கொடுக்கின்ற சாதாரணச் சங்கு இல்லை இது! வலம்புரிச் சங்கு! இதன் விலை ஆயிரம் பொற்கழஞ்சுகள். இந்தத் தீவின் எல்லையிலேயே இந்த மாதிரிச் சங்கு ஒன்று தான் இருக்கிறது. இதை விற்க வேண்டுமானால் யாராவது பேரரசர்கள் வாங்க வந்தால் தான் முடியுமென்று என் தந்தை சொல்லியிருக்கிறார்!"
"பெண்ணே! பேரரசர்கள் கிடக்கிறார்கள்! அவர்கள் எல்லாம் பேருக்குத்தான் அரசர்கள். நான் இரண்டாயிரம் பொற்கழஞ்சுகள் தருகிறேன். இந்தச் சங்கை எனக்கு விற்பாயா?"
"இல்லை, பொய் சொல்கிறீர்கள் நீங்கள். உங்களைப் பார்த்தால் உங்களிடம் இரண்டு பொற்கழஞ்சுகள் கூட இருக்காது போல் தோன்றுகிறது. நீங்கள் என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்கள். மரியாதையாக சங்கை வைத்துவிட்டுப் போகிறீர்களா...? இல்லையானால்...?"
"அடேடே! உன் கோபத்தைப் பார்த்தால் என்னை இப்போதே அடித்துக் கொன்று விடுவாய் போலிருக்கிறதே? வேண்டாம்! இதோ வாங்கிக் கொள்..." இப்படிச் சொல்லிக் கொண்டே சக்கசேனாபதியின் பக்கமாகத் திரும்பினான் இராசசிம்மன்.
அவர் இடுப்பிலிருந்து தயாராக எடுத்து வைத்துக் கொண்டிருந்த இரண்டு பட்டுப்பை முடிப்புகளை அவன் கையில் கொடுத்தார். அவன் அதை வாங்கி அந்தப் பெண்ணின் கையில் கொடுத்தான்.
பைகளை வாங்கிப் பிரித்துப் பார்த்த அந்தப் பெண் ஆச்சரியத்தால் வாய் அடைத்துப் போய் நின்றாள். பை நிறையப் பொற்கழஞ்சுகள் மின்னின. அவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று தலைநிமிர்ந்து பார்த்த போது அவர்களைக் காணவில்லை.
தொலைவில் கடைவீதி திரும்பும் மூலையில் கையில் வலம்புரிச் சங்கோடு அந்த இளைஞனும் அவனோடு வந்த முதியவரும் வேகமாகச் செல்வது தெரிந்தது. அளவொத்து மேலெழும்பித் தணியும் இரு செவ்விளநீர்க் காய்கள் போல் நெஞ்சங்கள் நிமிர்ந்து தணியக் கடைவீதி மூலையைப் பார்த்துப் பெருமூச்சு விட்டாள் அந்தப் பெண்.
---------
1.32. மதிவதனி விரித்த வலை
இருட்டி வெகு நேரமாகிவிட்டது. தென்னை மரங்களின் தோகைகள் காற்றில் ஆடும் ஓசையும், கடல் அலைகளின் இரைச்சலும் தவிரச் செம்பவழத் தீவு அமைதி பெற்றிருந்தது. பாலில் நனைத்து எறிந்த நீலத்துணி நெடுந்தூரத்துக்கு விரித்துக் கிடப்பது போல் கடல் நிலா ஒளியில் மிக அழகாகத் தெரிந்தது. தென்னங் கீற்றுகளிடையே நுழைந்து நிலவுக் கதிர்கள் நிழலினிடையே தரை மகளின் செம்மேனியின் மேல் விழுந்தது போல் எவ்வளவு அழகாகப் பதிகின்றன?
கூடாரத்தின் வாயிலில் இராசசிம்மனும், சக்கசேனாபதியும் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார்கள். இராசசிம்மனின் மடியில் மாலையில் வாங்கிய அந்த வலம்புரிச் சங்கு இருந்தது.
"சக்கசேனாபதி! இந்தச் சங்குதான் எவ்வளவு அழகாக இருக்கிறது பார்த்தீர்களா!" அதன் வழவழப்பான மேல் பாகத்தை விரல்களால் தடவியபடியே கூறினான் இராசசிம்மன்.
சக்கசேனாபதி அவன் முகத்தை உற்றுப் பார்த்து விஷமத்தனமாகக் கண்களைச் சிமிட்டினார்.
"சங்கு மட்டும் தானா அழகாக இருக்கிறது! அதைக் கொடுத்த..." சொல்ல வந்ததை முழுவதும் சொல்லி முடிக்காமல் மறுபடியும் சிரித்தார் அவர்.
"சரிதான்! நீங்களே என்னைக் கேலி செய்ய ஆரம்பித்து விட்டீர்களா?"
"கேலியில்லை, இளவரசே! அந்தப் பெண் உண்மையிலேயே..."
"போதும் வருணனை! உங்களுக்குத் தலை, மீசை எல்லாமே நரைத்திருப்பது மறந்து போய்விட்டது போலிருக்கிறது."
அவர் தன்னை வம்புக்கு இழுப்பதைத் தடுப்பதற்காக அவரையே வம்புக்கு இழுத்தான் இராசசிம்மன்.
"தலை, மீசை நரைத்து விட்டால் பெண்களைப் பற்றிப் பேசக்கூடாதென்று எந்த அறநூலில் சொல்லியிருக்கிறது? அந்தப் பெண் என் கைகளையா ஓடி வந்து பிடித்துக் கொண்டாள்? இளவரசருடைய வாலிபக் கைகளைத் தானே அவள் வலுவில்..."
"எவனோ அன்னக்காவடிப் பயல் ஆயிரக்கணக்கில் விலை பெறக்கூடிய சங்கைத் தூக்குகிறானே என்று பயந்து போய்க் கையைப் பிடித்திருக்கிறாள்?"
"நியாயந்தானே? அவளுக்குத் தெரியுமா, நீங்கள் தென்பாண்டி நாட்டு இளவரசர் என்று?"
"தெரிந்திருந்தால்...!"
"கையைப் பிடித்திருக்க மாட்டாள். அப்படியே காலடியில் விழுந்து வணங்கியிருப்பாள்!"
"அப்படியானால் தெரியாததே நல்லதாகப் போயிற்று." இராசசிம்மன் சிரித்தான். சக்கசேனாபதி அவனுக்குப் பயந்து பெரிதாக வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டார்.
"இளவரசே! நீங்கள் என்ன நினைத்துக் கொண்டாலும் சரி, நான் விளையாட்டுக்காகச் சொல்லவில்லை. இந்தத் தீவில் எல்லாப் பெண்களுமே அழகாகத்தான் இருக்கிறார்கள்..."
"சக்கசேனாபதி அவர்களே! மறுபடியும் நினைவூட்டுகிறேன். உங்களுக்குத் தலை நரைத்து விட்டது. நீங்கள் இந்தப் பேச்சுப் பேசாதீர்கள்."
"ஏன் சொல்லமாட்டீர்கள் இளவரசே? ஐம்பதுக்கு மேல் வயது ஆகிவிட்டதென்ற தெம்பில்தானே என்னை இப்படிக் கேலி செய்கிறீர்கள்? நானும் உங்களைப் போல் வயதுப் பிள்ளையாக இருந்தால்...!"
"இருந்தால் என்ன? அப்படி ஆவதற்கு வேண்டுமானால் காயகல்ப மருந்து சாப்பிட்டுப் பாருங்களேன்." இளவரசனின் கேலிச் சிரிப்பு பலமாக ஒலித்தது.
"எனக்கு உங்களோடு 'வாலிபப் பேச்சு' பேசிக் கொண்டிருக்க நேரமில்லை. காலையில் அருணோதயத்துக்கு முன்பே கப்பல் புறப்பட வேண்டும். ஆக வேண்டியவைகளைக் கவனிக்கிறேன்" என்று எழுந்திருந்தார் சக்கசேனாபதி.
பகலில் அலுப்புத் தீர நன்கு உறங்கியிருந்ததனால் இராசசிம்மனுக்கு உறக்கம் வரவில்லை. நிலா ஒளியில் தீவின் கரையோரமாகச் சிறிது தூரம் நடந்து சென்று திரும்பலாமென்று எண்ணினான். சேனாபதியும், மற்ற ஆட்களும் கூடாரத்திலிருந்து சாமான்களைக் கப்பலில் ஏற்றுவதும், கப்பல் இயந்திரங்களைச் சரிபார்ப்பதுமாக வேலையில் மும்முரமாக முனைந்திருந்தார்கள்.
இராசசிம்மன் யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் கையில் அந்தச் சங்கையும் எடுத்துக் கொண்டு கரையோரமாக நடந்தான். சில இடங்களில் கடலுக்கு மிக அருகிலே அலை நீர்த்துளிகள் மேலே தெளிக்கும்படி பாதை கடலைத் தொட்டாற்போல் இருந்தது. இன்னும் சில இடங்களில் தாழை மரங்களும், புன்னை மரங்களும் அடர்த்தியாக வளர்ந்து பக்கத்தில் கடல் இருப்பதே தெரியாமல் மறைத்துக் கொண்டிருந்தன. சுழித்துச் சுழித்து வீசும் காற்றுக்கும் அலை இறைச்சலுக்கும் நடுவில் தனியனாக நடந்து சென்று கொண்டிருந்த இராசசிம்மனுக்கு, மனத்தில் எத்தனையோ விதமான சிந்தனைகள் உண்டாயின. அழகான இடங்களைப் பார்த்தால் உள்ளத்தில் அழகான ஆழமான சிந்தனைகள் உண்டாகின்றன. சிந்தித்துக் கொண்டே நீண்ட தூரம் நடந்து விட்டான் இராசசிம்மன்.
அந்த இடத்தில் கரையின் தரைப் பரப்பு வளைந்து தெற்கு முகமாகத் திரும்பியது. திருப்பத்தில் ஒரு வேடிக்கையான காட்சியை இராசசிம்மன் கண்டான். கடலுக்கு மிக அருகில் சற்றே தாழ்வான பள்ளம் ஒன்றில் அழுத்தமாகவும், நெருக்கமாகவும் இரும்புக் கம்பிகளால் பின்னப்பட்டிருந்த வலை ஒன்று விரிக்கப்பட்டிருந்தது. வலையின் நான்கு முனைகளிலும் கட்டப்பட்டிருந்த தேர்வடம் போன்ற கயிறுகள் மேலே உள்ள புன்னை மரத்து உச்சியில் தேர்ச்சக்கரம் போன்ற ஒரு மர இராட்டினத்தில் இணைக்கப்பட்டிருந்தன. இராட்டினத்தைச் சுற்றினால் வலை சுருட்டிக் கொண்டு மேலே எழும்பி விடும். இராட்டினத்துக்குப் பக்கத்தில் மரத்தின் அடர்த்தியில் யாரோ உட்கார்ந்து கொண்டிருப்பது போலிருந்தது. இராசசிம்மன் அந்தக் காட்சியை வேடிக்கை பார்த்துவிட்டுத் தெற்குப் புறமாகத் திரும்பி நடந்தான்.
திருப்பத்தில் கரையோரமாக இன்னொரு பாய்மரக் கப்பல் நின்று கொண்டிருப்பது அவன் பார்வையில் பட்டது. அதைப் பார்த்ததும் அவன் வேறுவிதமாகச் சந்தேகப்பட்டான். வழி தெரியாமல் சுற்றி வளைத்துத் தீவை வலம் வந்து பழையபடி தங்கள் கப்பல் நின்று கொண்டிருந்த இடத்துக்கே வந்து விட்டோமோ என்று மலைத்தான் அவன்.
ஆனால் அந்தக் கப்பலின் பாய்மரத்து உச்சியில் பறந்து கொண்டிருந்த கொடி அவன் சந்தேகத்தைப் போக்கியது. புலியும் பனைமரமும் ஆகிய இலச்சினைகள் பொறித்த கொடி அது.
இராசசிம்மன் சிறிது அருகில் நெருங்கி அந்தக் கப்பலைப் பார்த்தான். 'அந்தக் கப்பல் எப்போது வந்தது? ஏன் அப்படி ஒதுக்குப்புறமான இடத்தில் நிற்கிறது?' என்று சிந்தித்தான் அவன்.
"யார் ஐயா அது கரையில் நிற்கிறது?" என்று அதட்டுகிறாற் போன்ற குரலில் கேட்டுக் கொண்டே அந்தக் கப்பலின் மேல் தளத்திலிருந்து யாரோ இரண்டு மூன்று பேர்கள் இறங்கி வந்தார்கள்.
"நான் ஒரு வழிப்போக்கன், ஐயா! சும்மா கப்பலை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றேன்" என்று அவர்களுக்குப் பதில் சொல்லிக் கொண்டே இராசசிம்மன் அங்கிருந்து மெதுவாக நகர முயன்றான். அந்தக் கப்பலில் இருப்பது யாராக இருந்தாலும் அப்போது அவர்கள் பார்வையில் தான் படக்கூடாது என்பது அவன் நினைவு. ஆனால் அவன் நினைத்தபடி நடக்கவில்லை. கப்பலிலிருந்து இறங்கி வந்தவர்கள் அவன் நாலைந்தடி தூரம் நடப்பதற்குள் அவனை நெருங்கி விட்டார்கள்.
இராசசிம்மன் நடையை வேகமாக்கிக் கொண்டு முந்திவிட முயன்றான். அவர்கள் அவனை முந்த விடவில்லை. "இந்தா, ஐயா! கொஞ்சம் நில்!"
அவன் நின்றான்! கப்பலிலிருந்து இறங்கி வந்த மூன்று பேர்களில் சற்றுப் பருமனான தோற்றத்தையுடைய ஒருவன் அருகில் வந்து இராசசிம்மனுடைய முகத்தை உற்றுப் பார்த்தான். தன்னோடு வந்த மற்ற இரண்டு பேர்களையும் பார்த்து ஏதோ ஒரு குறிப்புப் படச் சிரித்தான். பின்பு இராசசிம்மனைப் பார்த்துக் கேட்டான். "ஐயா! நீங்கள் யார்?"
இந்தக் கேள்வியைச் செவியுற்றதும் இராசசிம்மனுடைய உள்ளுணர்வு விழித்துக் கொண்டது. "நான் யாரென்றால்... நான் நான் தான்!"
"அது தெரிகிறது! உங்கள் பெயர்?"
"எனக்கு ஒரு பெயர் இருப்பது உண்மைதான். ஆனால் அது உங்களுக்குத் தெரிய வேண்டிய அவசியம் என்ன?" இராசசிம்மனுடைய குரலில் கடுமை இருந்ததை அவர்கள் உணர்ந்தனர்.
கப்பலிலிருந்து இறங்கி வந்த மூன்று பேர்களும் அவனுடைய வழியை மறித்துக் கொண்டு நிற்பவர்களைப் போல் குறுக்கே நின்றார்கள். அவர்களில் ஒருவன் அவனுடைய கையிலிருந்த அந்த வலம்புரிச் சங்கைப் பார்த்துவிட்டு, "இந்தச் சங்கு உங்களுக்கு எங்கே கிடைத்தது?" என்று கேட்டான்.
அவர்கள் ஏதோ காரணத்துக்காகத் தன்னை வம்பு பேசி வழிமறிக்கிறார்கள் என்பது இராசசிம்மனுக்குத் தெளிவாக விளங்கிவிட்டது. யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் தற்காப்பாக உடைவாள் கூட இன்றிப் பழக்கமற்ற புதிய தீவில் தனியே இரவில் உலாவப் புறப்பட்ட தவறு அப்போதுதான் அவன் மனத்தில் உறைத்தது.
"நான் போக வேண்டும். என் வழியை விடுங்கள்" என்று அவர்களை விலக்கிக் கொண்டு முன்னோக்கிப் புறப்பட்டான் அவன். பின்னால் எக்காளமிட்டுச் சிரிக்கும் வெடிச் சிரிப்பொலி எழுந்தது!
"தென்பாண்டி நாட்டு இளவரசரை இவ்வளவு சுலபமாக தப்பிப் போகவிட்டு விடுகிற நோக்கம் இல்லை."
எக்காளச் சிரிப்பும், இந்த எச்சரிக்கைக் குரலும் இராசசிம்மன் காதுகளில் நாராசமாய் ஒலித்தன. அவன் ஓட்டமும் நடையுமாக அவர்களிடமிருந்து தப்பும் நோக்கத்துடன் விரைந்தான். திருப்பத்தில் திரும்பி இரும்புவலை விரித்திருந்த அந்தப் பள்ளத்தை அவன் நெருங்கவும் அந்த மூன்று ஆட்களும் அவனைத் துரத்திக் கொண்டு வேகமாக ஓடி வரவும் சரியாக இருந்தது.
பயத்தில் அதிர்ச்சியடைந்த இராசசிம்மன் விழுந்தடித்துக் கொண்டு ஓடினான். அடுத்த கணம் அவனுடைய உடலை ஏதோ ஒன்று வேகமாகச் சுருட்டிக் 'கிறு கிறு'வென்று மேலே தூக்கியது. மர இராட்டினம் வேகமாகச் சுழலும் ஓசை பெரிதாக ஒலித்தது.
ஓடி வந்த அவசரத்தில் பள்ளத்தில் விரித்துக் கிடந்த இரும்புக் கம்பி வலைக்குள் அகப்பட்டுக் கொண்டோமென்று விளங்கிக் கொள்ள அவனுக்குச் சிறிது நேரம் பிடித்தது. அதை உணர்ந்து கொண்ட போது அவனுடைய உடல் மிகவும் பத்திரமாக ஒற்றைப் பனை உயரத்துக்கு மேலே புன்னைமரக் கிளை வரை வெகு வேகமாக இழுத்துக் கொண்டு போகப்பட்டு விட்டது.
கீழே துரத்திக் கொண்டு வந்தவர்கள் அவனைக் குறி வைத்து எறிந்த கூர்மையான வேல் பக்கத்து மரத்தில் பாய்ந்து ஆழப் பதிந்து கொண்டு அப்படியே நின்றது. துரத்திக் கொண்டு வந்தவர்களுக்கு என்ன நடந்தது என்று அனுமானிக்கக் கூட நேரமில்லை. இரும்பு வலை கீழே கிடந்ததும், மின்னல் மின்னுகிற நேரத்துக்குள் இராசசிம்மனை மேலே மர உச்சிக்குத் தூக்கிக் கொண்டு சென்றதும் அவர்களுக்குத் தெரியாது. இராசசிம்மன் எப்படியோ மாயமாகத் தங்களிடமிருந்து தப்பி விட்டானே என்று வியந்து அவர்கள் அந்தப் பக்கத்திலிருந்த தாழம் புதர்களைக் குடைந்து கொண்டிருந்தார்கள்.
அவர்கள் அவனைத் தாழம் புதரில் தேடிக் கொண்டிருந்த அதே சமயத்தில் புன்னை மரத்தின் உச்சிக் கிளையில் வளை குலுங்கும் அழகிய பெண் ஒருத்தியின் இரண்டு கரங்கள் அவனை வலையிலிருந்து விடுவித்துக் கொண்டிருந்தன.
"ஐயா கவலைப்படாதீர்கள். எல்லாம் நான் இங்கிருந்து பார்த்துக் கொண்டு தான் இருந்தேன். அதிர்ஷ்டவசமாக நீங்கள் வலையின் குறுக்கே விழுந்து ஓடினீர்கள். இல்லையானால் உங்களை நான் காப்பாற்றியிருக்க முடியாது" என்றாள் அந்தப் பெண்.
மரக் கிளையில் மங்கலான ஒளியில் அவள் முகத்தைப் பார்த்த இராசசிம்மன், "நீயா?" என்று வியப்பு மேலிட்டுக் கூவினான். அவள் தன் சண்பக மொட்டுப் போன்ற விரல்களால் அவன் வாயைப் பொத்தினாள். "இரையாதீர்கள். கீழே அந்த வேட்டை நாய்கள் உங்களைத் தேடிக் கொண்டிருக்கின்றன" என்று மெல்ல அவன் காதருகே கூறினாள் அவள்.
மரக்கிளையில் உட்கார்ந்து அவனை வலை மூலம் தூக்கிக் காப்பாற்றிய அந்தப் பெண் வேறு யாருமில்லை. அன்று மாலை அவனுக்குச் சங்கு விற்ற பெண் தான் அவள். இரவில் கரைக்கு வரும் முதலைகளைப் பிடிப்பதற்காக அப்படி வலை விரிப்பது வழக்கமென்றும் அன்று அந்த வலை அவனைக் காப்பாற்ற உதவியதற்காகத் தான் பெருமைப்படுவதாகவும் அந்தப் பெண் அவனிடம் கூறினாள்.
"பெண்ணே! உன் பெயரை நான் அறிந்து கொள்ளலாமோ?" என்று அவளுடைய வளைக் கரங்களைத் தன் இரு கைகளாலும் பற்றிக் கண்களில் ஒற்றிக் கொண்டு நன்றி சுரக்கத் தழுதழுக்கும் குரலில் கேட்டான் இராசசிம்மன்.
செந்தாமரைப் பூக்கள் போன்ற அந்தப் பெண்ணின் புறங்கைகளைத் தென்பாண்டி நாட்டு இளவரசன் சிந்திய ஆனந்தக் கண்ணீர் துளிகள் நனைத்தன.
"என் பெயர் மதிவதனி" என்று தலை குனிந்து நாணத்தோடு சொன்னாள் அந்தப் பெண்.
"மதிவதினி! மாலையில் ஈராயிரம் பொற்கழஞ்சுகளை வாங்கிக் கொண்டு இந்த ஒரு வலம்புரிச் சங்கை எனக்குக் கொடுத்தாய்! இப்போதோ எத்தனை ஆயிரம் பொற் கழஞ்சுகள் கொடுத்தாலும் ஈடாகாத என் உயிரையே எனக்கு மீட்டுக் கொடுத்திருக்கிறாய்!"
"ஐயா! பொற்கழஞ்சுகளுக்காகவே எல்லாக் காரியங்களையும் மனிதர்கள் செய்து விடுவதில்லை. இதயத்துக்காக - மனிதத் தன்மைக்காகச் செய்து தீரவேண்டிய சில செயல்களும் உலகில் இருக்கின்றன!" மதிவதனியின் குரலில் உருக்கம் நிறைந்திருந்தது.
அவர்கள் புன்னை மரத்தின் அடர்ந்த கிளையிலேயே அமர்ந்து நெடுநேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். கீழே தாழம் புதர்களில் தேடிக் கொண்டிருந்தவர்களும் ஏமாற்றத்தோடு திரும்பிப் போய்விட்டார்கள்.
"ஐயா! இனி நாம் கீழே இறங்கலாம்" என்றாள் மதிவதனி. இராசசிம்மன் மிரண்ட பார்வையால் அவள் முகத்தைப் பார்த்தான்.
மதிவதனி அவனுடைய பயம் நிறைந்த பார்வையைக் கண்டு சிரித்தாள்.
அதே சமயத்தில் மரத்தடியில், "மதிவதனீ!... மதிவதனீ! எங்கே, எங்கேயிருக்கிறாய்? மரக் கிளையிலேயே உறங்கிவிட்டாயா?" என்று கீழே ஓர் ஆண் குரல் இரைந்து கூப்பிட்டது.
----------
1.33. மகாமண்டலேசுவரர்
இடையாற்று மங்கலத்தில் கொள்ளை போன செய்தியை அம்பலவன் வேளான் வந்து கூறிய போது எல்லோரும் அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தார்கள். ஆனால் இடையாற்று மங்கலம் நம்பியோ அதிர்ச்சியை விட அதிகமாக விழிப்பும், முன்னெச்சரிக்கையும் பெற்றார். தாம் பொறுப்பும், திறமையும், சூழ்ச்சியும் ஒருங்கே அமைந்த ஒரு மகாமண்டலேசுவரர் தான் என்பதை அந்த விநாடியில் அவர் செய்த காரியத்தால் நிரூபித்து விட்டார்.
அம்பலவன் வேளான் செய்தியைத் தெரிவித்த போது அவர்களெல்லாம் எந்த இடத்தில் இருந்தார்களோ அந்த இடத்தின் வெளிவாயிற் கதவுகளை உடனே அடைத்து உட்புறமாகப் பூட்டிக் கொண்டு வருமாறு நாராயணன் சேந்தனை அனுப்பினார் இடையாற்று மங்கலம் நம்பி. அவருடைய செயல் எல்லாருக்கும் வியப்பை அளித்தது. சிலருக்கு அர்த்தமற்றதாகவும் பட்டது? சிலருக்குப் பயமாகவும் இருந்தது. நம்பியின் கட்டளைப்படி உடனே கதவைப் பூட்டிக் கொண்டு வந்து விட்டான் சேந்தன். மகாமண்டலேசுவரர் என்ன சொல்லப் போகிறாரோ என்று எல்லாரும் அவருடைய முகத்தையே பார்த்தார்கள். அந்த முகத்திலும், கண்களிலும் ஆழம் காணமுடியாத அமைதி தெரிந்தது.
மகாராணி வானவன்மாதேவி, தளபதி வல்லாளதேவன், நாராயணன் சேந்தன், கரவந்தபுரத்திலிருந்து வந்த தூதன், இடையாற்று மங்கலத்தில் கொள்ளை போன செய்தியைக் கூற வந்த அம்பலவன் வேளான் முதலிய முக்கியமான ஆட்களே அப்போது அந்த இடத்தில் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவர் முகத்தையும் நின்று நிதானித்துத் தனித் தனியே ஏறிட்டுப் பார்த்தார் இடையாற்று மங்கலம் நம்பி. மேலோட்டமாகப் பார்க்கின்ற சாதாரணப் பார்வையன்று அது! முகத்தை, கண்களை, அவை இரண்டின் மூலமாக உள்ளத்தைப் பார்க்கின்ற அழுத்தமான பார்வை அது. மழை பெய்வதற்கு முன் பூமியில் ஏற்படுகின்ற ஒருவகைப் புழுக்கம் போல் பெரிய பேச்சுகளை எதிர்பார்த்து நிற்கும் சிறிய அமைதி அங்கே நிலவியது. ஆனால், அந்த அமைதியின் கால எல்லை சில விநாடிகள் தான். அதைக் கலைத்துக் கொண்டு மகாமண்டலேசுவரரின் கணீரென்ற குரல் எழுந்தது. "மகாராணியின் முன்னிலையில் இவர்களுக்கெல்லாம், இவர்களுக்கு மட்டுமென்ன? எனக்கும், தங்களுக்கும் கூட எச்சரித்து அறிவுறுத்த வேண்டிய முக்கியமான செய்தி ஒன்று உண்டு."
இதைச் சொல்லிவிட்டு நம்பி சிறிது நிறுத்திக் கொண்டு எல்லோருடைய முகங்களையும் பார்த்தார். பின், மீண்டும் தொடர்ந்தார். "தேசத்தைக் காப்பாற்றுவதற்கு முன்னால் இரகசியங்களைக் காப்பாற்றுவதற்கு நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நமக்குள் தோல்விகள், பலவீனங்கள் இருக்கலாம். ஆனால் அவற்றை நம்முடைய எதிரிகள் அறிந்து கொள்ளும்படியாக விட்டு விடக்கூடாது. இப்போது நான் வேண்டிக் கொள்வதெல்லாம் இதுதான். இடையாற்று மங்கலத்தில் அரசுரிமைப் பொருள்கள் களவு போன செய்தி நம்மைத் தவிர மற்றவர் செவிகளில் பரவவிடாமல் பாதுகாக்கப்பட வேண்டும். கரவந்தப்புரத்திலிருந்த வந்த செய்தியும் அப்படியே. களவைக் கண்டுபிடிக்கவும், பகைவர் படையெடுப்பைச் சமாளிக்கவும் வேண்டிய ஏற்பாடுகளை நாம் செய்ய வேண்டும். ஆனால் நாம் செய்யும் எல்லா ஏற்பாடுகளும் நமக்குள் இருக்க வேண்டும். இப்போது நாம் இருக்கும் இந்தக் கட்டடத்தின் வாயிற் கதவுகளை நான் அடைக்கச் சொல்லிவிட்டேன். பிறரிடம் செய்தியைச் சொல்லிவிட மனத்தில் ஏற்படும் ஆவலையோ வாய்த்துடிப்பையோ நான் அடைக்க முடியாது. நீங்கள் எல்லோரும் பொறுப்புள்ளவர்களாக நடந்து கொள்ளுங்கள்."
"மகாமண்டலேசுவரருடைய இந்த வேண்டுகோள் நம்முடைய நன்மைக்காகவே என்பதை நீங்கள் எல்லோரும் விளங்கிக் கொண்டிருப்பீர்கள். வயதும், அனுபவமும் உள்ள அவர் கட்டளைகளை என் கட்டளைகளாகவே நினைத்துப் போற்ற வேண்டியது உங்கள் கடமை" என்று அதையடுத்து மகாராணி வானவன்மாதேவியார் கூறினார். எல்லோரும் சிலை போல் அடக்கமாக நின்று கொண்டிருந்தார்கள். மகாமண்டலேசுவரரை எதிர்த்து மடக்கி என்னென்னவோ குறுக்குக் கேள்விகளெல்லாம் கேட்க வேண்டுமென்று துடிதுடித்துக் கொண்டிருந்த தளபதி வல்லாளதேவனுக்குக் கூட அப்போது பேச நா எழவில்லை.
எப்போதும், எவர் முன்னிலையிலும், சிரிப்பும் குறும்புமாகத் தன் பேச்சுகளால் பாதி - தன் தோற்றத்தால் பாதி என்று நகைச்சுவையலைகளைக் கிளப்பிக் கொண்டிருக்கும் நாராயணன் சேந்தன் இருக்குமிடம் தெரியாமல் நின்று கொண்டிருந்தான். எதிரே இருப்பவர்களின் வாயையும், புலன் உணர்வுகளையும் கட்டி விடுகிற ஆற்றல் உலகத்தில் மிகச் சிலருடைய கண் பார்வைக்கே உண்டு. அப்படிப்பட்ட கண்களைப் பெற்றவர்கள் வாயில் வீரமொழிகளும், கையில் வாளும் இல்லாமலே கண்களால் காரியத்தைச் சாதித்துக் கொள்வார்கள். கண்கள் என்ற ஒரே புலனுணர்வால் மட்டுமே உலகத்தை அளந்து எடை போட்டு நிறுத்திவிடும் மகாசாமர்த்தியக்காரர்கள் அவர்கள். அந்தச் சாமர்த்தியத்தின் சாயல் தென்பாண்டி நாட்டு மகாமண்டலேசுவரரிடம் இருந்தது.
"நுண்ணியம் என்பார் அளக்கும்கோல் காணுங்கால்
கண்ணல்ல தில்லை பிற."
என்று மகாமண்டலேசுவரரைப் போன்றவர்களை நினைத்துத்தான் திருவள்ளுவப் பெருந்தகையார் அழகாகப் பாடிவைத்தார் போலும்.
மழைக்காலத்து மங்கிய நிலவு போல் மகாராணி வானவன்மாதேவியின் முகத்தில் கவலைகள் தேங்கி நின்றன. அந்த முகத்தில் ஏற்கனவே நிரந்தரமாகத் தேங்கிவிட்ட கவலை ஒன்று உண்டு. அது கைம்மைக் கவலை. கணவனை இழந்த கவலை. சுட்டுவிரலால் கீறிய கறுப்புக்கோட்டை மேலும் கட்டை விரலால் கீறிப் பெரிதாக்கினாற் போல் அந்தப் பழைய கவலை புதிய கவலைகளால் விரிவடைந்திருந்தது. ஏதோ ஒரு சோகக் கனவில் ஆழ்ந்திருப்பது போல் மோட்டுவளையை வெறித்துப் பார்த்துக் கொண்டு வீற்றிருந்த மகாராணியைத் தம் பேச்சுக் குரலால் கவனம் திரும்பும்படி செய்தார் இடையாற்று மங்கலம் நம்பி.
"மகாராணி! இது பலவகையிலும் சோதனைகள் நம்மைச் சூழ்கின்ற காலம். இந்த நாட்டின் நன்மைக்கும், பாதுகாப்புக்கும் ஏற்ற எதையும் செய்கின்ற அதிகாரங்களை முன்பே நீங்கள் எனக்குக் கொடுத்திருக்கிறீர்கள். இப்போதுள்ள சூழ்நிலையில் அவற்றைப் பூரணமாகப் பயன்படுத்த வேண்டிய சமயம் என்னை நோக்கி வந்திருக்கிறது."
"மகாமண்டலேசுவரருக்கு எந்த உரிமையையும் எப்போதும் நான் மறுத்ததில்லையே?" வானவன்மாதேவியிடமிருந்து சுருக்காமாகவும் விநயமாகவும் மறுமொழி பிறந்தது.
"தங்கள் அன்புள்ளம் மறுப்பறியாததென்று நான் அறிவேன். இருந்தாலும் நிலைமையைக் கூறிவிட வேண்டியது என் கடமை." இந்தச் சொற்களைச் சொல்லும் போது புன்னகை - அல்ல, புன்னகை செய்வது போன்ற சாயல் மகாமண்டலேசுவரரின் முகத்தில் நிலவி நின்றது.
மகராணி மறுபடியும் அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்தார். தயக்கத்தோடு கேட்டார்: "மகாமண்டலேசுவரரே! இராசசிம்மனை இடையாற்று மங்கலத்திலிருந்து உடனே அழைத்து வர ஏற்பாடு செய்வதாகக் கூறினீர்களே...?"
வானவன்மாதேவியின் இந்தக் கேள்வி அவரைச் சிறிது அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்க வேண்டும். அவர் தயங்கினார். மிடுக்கு நிறைந்த அவருடைய நிமிர்ந்த பார்வையில் சற்றே சோர்வு நிழலாடி மறைந்தது.
"மகாராணி! நான் அதைப் பற்றித் தங்களிடம் தனிமையில் சிறிது நேரம் பேச வேண்டும். புதிதாக வந்த செய்திகள் சிறிது குழப்பத்தை உண்டாக்கிவிட்டன...!"
"இந்தச் செய்திகளுக்கும் நீங்கள் இராசசிம்மனை அழைத்து வருவதற்கும் என்ன சம்பந்தமோ?"
"இப்போது இந்த இடத்தில் இந்தச் சூழலில் தங்களிடம் அதைப் பேச இயலாதவனாக இருக்கிறேன். தயவு செய்து என்னைப் பொறுத்தருள வேண்டும். நாம் தனிமையில் மட்டும் தான் பேச முடிந்த செய்தி அது!"
மகாராணி பதில் பேசவில்லல.
"சேந்தா! கதவு மூடியிருக்க வேண்டிய அவசியம் இனி மேல் இல்லை. கதவைத் திறந்துவிடு."
மகாமண்டலேசுவரரின் ஆணைப்படி மூடிப் பூட்டிய கதவுகளைச் சேந்தன் அவசர அவசரமாகத் திறந்து விட்டான்.
"மகாராணி! இதோ நம்மைச் சுற்றி நிற்கும் இவர்கள் ஒவ்வொருவருக்கும் பொறுப்பைப் பேசி ஒப்படைத்து அனுப்பிவிட்டு நான் மறுபடியும் இங்கே வருகிறேன். குமார பாண்டியரைப் பற்றி அப்போது நாம் பேசலாம்."
வானவன்மாதேவி மகாமண்டலேசுவரருடைய பேச்சைக் கேட்டுத் தலையசைத்தார். உணர்ச்சியும், விருப்பமும், நம்பிக்கையின் மலர்ச்சியும் இல்லாத வெற்றுத் தலையசைப்பாக அது இருந்தது.
அங்கிருந்தவர்களில் மகாராணியாரைத் தவிர மற்றவர்கள் பின் தொடர அரண்மனையில் தாம் தங்கியிருந்த விருந்தினர் மாளிகைக்குப் புறப்பட்டார் மகாமண்டலேசுவரர். தயங்கித் தயங்கிப் பின் தொடரும் ஆட்களோடு அவர் அங்கிருந்து வெளியேறி நடந்து சென்ற காட்சி நிமிர்ந்த பார்வையும் இராஜ கம்பீரமும் பொருந்திய வயதான கிழட்டுச் சிங்கமொன்று சில இளம் புலிகள் பின் தொடர அவற்றை எங்கோ அடக்கி அழைத்துச் செல்லுவது போலிருந்தது.
அந்தப்புரத்திலும், கன்னிமாடத்திலும் இருந்த அரண்மனைப் பெண்கள் கூட்டமாகப் பலகணித் துவாரங்களின் வழியாகவும், மேல்மாடங்களில் நின்று கொண்டும் இந்தக் காட்சியை வேடிக்கை பார்த்தனர். விடிந்ததும் விடியாததுமாக மகாமண்டலேசுவரர், தளபதி முதலிய பெரிய பெரிய ஆட்களெல்லாம் அந்தப்புரத்துக்குத் தேடிவந்து அவசரமாக மகாராணியைச் சந்தித்துவிட்டுத் திரும்பவேண்டுமென்றால் விஷயம் ஏதோ பெரியதாகத்தான் இருக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றியது. தளபதியின் தங்கை பகவதியும் அதங்கோட்டாசிரியரின் மகள் விலாசினியும் கூட அந்தக் காட்சியைப் பரபரப்புடன் பார்த்தார்கள்.
இவர்களுக்கு ஏற்பட்ட பரபரப்பைப் போல் அல்லாமல் முன்பே சில இரகசியங்கள் தெரிந்திருந்த காரணத்தால் வண்ணமகள் புவன மோகினிக்கு அதிகமான பரபரப்பும், பீதியும் ஏற்பட்டிருந்தன. தமையன் அரண்மனையிலிருந்து எங்கேயாவது வெளியேறிச் சென்று விடுவதற்குமுன் அவனை ஒருமுறை சந்திக்க வேண்டும் போல் இருந்தது தளபதியின் தங்கை பகவதிக்கு.
இப்படியாக, அதிகாலையில் அந்தப்புரத்தில் மகாராணியின் தனி மாளிகையில் நடந்த கூட்டத்தில் என்ன பேச்சுகள் நடந்தன என்ற செய்தி எங்கும் பரவாவிடினும், ஒரு பரபரப்பும் மர்மமான பீதியும் அரண்மனையில் பரவிவிட்டிருந்தன. முக்கியமானவர்கள், முக்கியமில்லாதவர்கள், காவல் வீரர்கள், சாதாரணப் பெண்கள் எல்லாரும் அரண்மனைக்குள் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்ளும் போது இதைப் பற்றியே பேசிக் கொண்டார்கள். காதும் காதும் வைத்தாற் போல் வாய்களும், காதுகளும் இந்தச் செய்தியைப் பரப்பி விட்டன.
எல்லோரையும் அழைத்துக் கொண்டு விருந்து மாளிகைக்குச் சென்ற இடையாற்று மங்கலம் நம்பி இரண்டொரு நாழிகைக்குப் பின் ஒவ்வொருவரையும் ஓரோர் காரியத்துக்காக வெளியே அனுப்பினார். மகாமண்டலேசுவரருடைய ஆணை பெற்று அந்த மாளிகையிலிருந்து வெளியேறிய ஒவ்வோர் முகத்திலும் ஒவ்வொரு விதமான உணர்ச்சியின் சாயல் படிந்திருந்தது. சிரிப்பு, சீற்றம், கடமை, பணிவு - இன்னும் அவர்கள் அனுப்பப்பட்ட நோக்கங்களும், சென்ற திசைகளும் போலவே அவர்களுடைய நெஞ்சத்து எண்ணங்களும் ஒன்றுக்கொன்று வேறுபட்டனவாக இருந்தன.
மகாமண்டலேசுவரருடைய கட்டளைப்படி எல்லோரும் அவரவர்கள் அனுப்பிய இடத்துக்கு உடனே புறப்பட்டு விட்டனர். ஆனால் தளபதி வல்லாளதேவன் மட்டும் உடனே புறப்படவில்லை. மகாமண்டலேசுவரர் தன்னை அனுப்பிய வேலை அவசரமாயினும் அவசரமாக அவன் கிளம்பவில்லை. அந்தப்புரத்திலிருந்த தன் தங்கை பகவதியையும், அரண்மனையில் மறைந்திருந்த ஆபத்துதவிகள் தலைவனையும் அந்தரங்கமாகச் சந்தித்து ஏதோ பேசிய பின்பே அவன் கிளம்பினான்.
---------------
1.34. கனவு கலைந்தது
அன்றைக்குப் பொழுது புலர்ந்த போது இடையாற்று மங்கலம், இடையாற்று மங்கலமாக இல்லை. அந்தத் தீவில் சோகமும், ஏமாற்றமும், ஏக்கமும் ஒன்று சேர்ந்து நிரம்பிவிட்டது போல் ஒருவகை அமைதி பரவியிருந்தது. மகாமண்டலேசுவரரின் மாளிகை, சாவு நடந்து விட்ட வீடு போல் களையில்லாமல் காட்சியளித்தது. வைகறையில் அங்கு ஒலிக்கும் வழக்கமான இன்னிசைக் கருவிகளின் மங்கல ஒலி கேட்கவில்லை. மாளிகையிலுள்ள சிவன் கோவிலில் அடிகள்மார் ஊனும், உயிரும் உருகும் வண்ணம் பாடும் திருப்பள்ளி எழுச்சிப் பாடல்களின் பூபாளப் பண்ணொலி கேட்கவில்லை. மாளிகையைச் சுற்றியிருந்த நந்தவனங்களில் பூத்திருந்த பூக்கள் யாரும் கொய்வாரின்றிக் கிடந்தன.
பெண்களின் கைவளை ஒலி, பாதங்களின் சிலம்பொலி, கதவுகளைத் திறந்து மூடும் ஓசை, முரசுகளின் முழக்கம், சங்குகளின் ஒலி, கன்னி மாடத்துக் குமரி நங்கையரின் குதூகலமான கலகலப்பு - எதுவும், எங்கும் இன்று அளவிட முடியாத துன்பத்துள் அடங்கி ஒடுங்கி முழுகி விட்டது போலிருந்தது தீவு முழுவதும். கன்னி மாடத்து வாசற்படியில் கன்னத்தில் கையூன்றித் துயரமே உருவாக வீற்றிருந்தாள் குழல்மொழி. தூங்கி விழித்த சோர்வு கூட இன்னும் மாறவில்லை அவள் முகத்தில். தூக்கத்தில் கலைந்திருந்த கரிகுழல் காதோரங்களிலும், முன் நெற்றியிலும் சுருண்டு வளையமிட்டிருந்தது. உறங்கி விழித்த இளஞ்சிவப்புப் படிந்த கண்களின் செருகினாற் போன்ற ஒடுங்கிய பார்வையில் அலுப்பும் ஓர் அழகு மயக்கத்தை உண்டாக்கியது. பகலின் ஒளி மருவி உறவாடிய அந்தித் தாமரை போல் சோகம் மருவித் துவண்ட அந்த முகத்தில் இனம் புரியாத ஏக்கம் தெரிந்தது. அதை விட அதிகமாக ஏமாற்றம் தெரிந்தது.
புறத்தாய நாட்டு அரண்மனையில் கூற்றத் தலைவர் கூட்டத்துக்காகப் போயிருந்த தன் தந்தைக்கு அம்பலவன் வேளான் மூலமாக நடந்த செய்தியைச் சொல்லி அனுப்பிவிட்டு மேலே என்ன செய்வதென்று திகைத்து வீற்றிருந்தாள் அவள். இதயம் எண்ணங்களின் சுமைகளால் கனத்தது. இன்ப துன்ப உணர்ச்சிகளெல்லாம் பாழாய்ப் போன மனித இதயத்துக்குத்தான் உண்டு போலிருக்கிறது. அவள் கண் பார்வைக்கு முன்னால் நேற்றைக்கு இருந்தது போலவே இன்றும் பறளியாறு கவலையின்றி ஓடிக் கொண்டிருந்தது. கரையோரத்துக் கொன்றை கொத்துக் கொத்தாகப் பொன் பூத்திருந்தது. மரக்கிளையில் பறவைகள் மகிழ்ச்சிக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தன. 'நேற்றிரவு கொள்ளை போனதைப் பற்றி இவை சிறிதாவது பொருட்படுத்தினவா? சிறிதாவது கவலைப்பட்டனவா?' - குழல்மொழி நெடு மூச்சு விட்டாள். 'உணரத் தெரிந்த உள்ளத்துக்குத் தான் துன்பமெல்லாம்!' தனக்குள் அவள் முணுமுணுத்துக் கொண்டாள்.
அவள் இருந்த நிலையைப் பார்த்த போது அருகில் நெருங்கவோ, ஆறுதல் கூறவோ, துணிவின்றி அஞ்சினார்கள் உடனிருந்த பணிப்பெண்கள்.
சுந்தர முடியும், வீரவாளும், பொற்சிம்மாசனமும் கொள்ளை போன துயரத்துக்கு மேல் தன்னுடைய உள்ளம் கொள்ளை போன துயரம் பெரிதாக இருந்தது அவளுக்கு. துறவுக் கோளத்தில் மறைந்து நின்ற அந்த இளமையின் சிரிக்கும் முகத்தை, திரண்ட தோள்களை, பரந்த மார்பை, உருவெளியில் ஒன்றாக்கி நிறுத்திக் கண்களை மூடிக் கொண்டு பார்க்க முயன்றாள் குழல்மொழி. கண்முன் இருப்பவரை விழித்துக் கொண்டால் தான் பார்க்க முடியும்! கண்முன் இல்லாதவரையோ கண்கள் மூடிக் கொண்டால்தானே பார்க்க முடிகிறது? புறக்கண்ணால் எதிரில் இருப்பவரைப் பார்க்கும் போது அகக்கண் மூடுகிறது. அகக்கண்ணால் எங்கோ இருப்பவரை நினைவில் கொணர்ந்து பார்க்க முயலும் போது புறக்கண்கள் தாமே மூடிக் கொள்கின்றன. தியானம் செய்யும் போது தன் தந்தை கண்களை மூடிக் கொள்ளும் காட்சி குழல்மொழிக்கு நினைவு வந்தது. துறவியாக வந்தவர் யார் என்று தன் உள்ளத்துக்குப் புதிதாகத் தெரிந்த உண்மையோடு அவர் அழகையும் இணைத்து எண்ணிப் பார்த்த போது அவளுக்கும் ஏக்கம் ஏக்கமாக வந்தது. சொந்தக்காரன் தனக்குச் சொந்தமான பொருள்களை எடுத்துக் கொண்டு போனதைக் கொள்ளை என்று ஒப்புக் கொள்ள அவள் மனம் தயாராயில்லை. சொந்தமில்லாத அவள் உள்ளத்தையும் புதிதாகச் சொந்தமாக்கிக் கொண்டு போனதைக் கொள்ளை என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது? எப்படிக் குறிப்பிடுவது? தன் தந்தை கூற்றத் தலைவர் கூட்டத்துக்காக அரண்மனைக்குப் புறப்பட்டுப் போனபின் துறவிக்கும், தனக்கும் இடையே நடந்த பேச்சுக்களை - நிகழ்ச்சிகளைக் கூடியவரை அவரிடம் கூறாமல் மறைத்து விடுவதென்று தீர்மானித்துக் கொண்டிருந்தாள் அவள். துறவிக்கு மாளிகையைச் சுற்றிக் காட்டியது, அப்படிச் சுற்றிக் காட்டும் போது அவரைப் பற்றித் தான் அறிந்த ஒரு பெரிய உண்மை, அதன் பின் அரசுரிமைப் பொருள்கள் வைத்திருந்த அறைக்கு அவரை அழைத்துச் சென்றது ஆகிய நிகழ்ச்சிகளையெல்லாம் தன் தந்தையிடம் கூறினால் அவர் தன்னையே கோபித்துக் கொள்வாரோ என்ற அச்சம் உள்ளூர அவளுக்கு இருக்கத்தான் செய்தது.
'துறவி இன்னாரென்ற உண்மை தனக்கும் முன்பே தன் தந்தைக்குத் தெரியாமல் இருந்திருக்காது. அன்று விழிஞத்திலிருந்து அழைத்து வரும் போதே அவருக்கு அது தெரிந்து தான் இருக்கும். வேண்டுமென்றே என்னிடம் அவர் அதை மறைத்திருக்கலாம்!' - நினைக்க நினைக்க என்னென்னவோ செய்தது, மனம் குழம்பியது குழல்மொழிக்கு.
ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு, சிந்தனையைக் குழப்பிக் கொண்டிருந்த அவளுக்குப் பைத்தியம் பிடித்து விடும் போலிருந்தது. கவலைகளும், மனக் குழப்பமும், அதிகமாக உள்ள சமயங்களில் பசுமையான சோலைகள், மலர்க்கூட்டங்கள், நீர்ப்பிரவாகங்கள் இவற்றைப் பார்த்தால் சிறிது நிம்மதி உண்டாகும். சிறு பருவத்திலிருந்தே அப்படி ஒரு பழக்கம் அவளுக்கு. தந்தை எதற்காவது அவளைக் கண்டித்தால், தோழிகளோடு எந்தக் காரணத்திலாவது பிணக்கு ஏற்பட்டால், நந்தவனத்துக்கோ, பறளியாற்றங் கரைக்கோ போய்த் தனியாக உட்கார்ந்து விடுவாள் அவள். கண்ணுக்கெட்டிய தூரம் பசுமையை, நீர்ப்பரப்பை அல்லது மலைத்தொடரைப் பார்த்துக் கொண்டு இருந்தால் அவை மனத்தைப் புதுமையாக்கி அனுப்பிவிடுகின்றன. பித்துப் பிடித்தாற் போல் கன்னிமாடத்து வாசலில் அமர்ந்திருந்த குழல்மொழி எழுந்திருந்து வெளியே நடந்தாள். மாளிகையை சுற்றியிருந்த தோட்டங்களில், மலர் வனங்களில், மண்டபங்களில், ஆற்றங்கரையில், இன்னும் எங்கெங்கோ தன் மன நிம்மதியைத் தேடி உலாவினாள் அவள். அகத்தின் நிம்மதி புறத்தில் கிடைப்பதற்குப் பதிலாக ஒவ்வோர் இடமும் ஒவ்வொரு நினைவை உண்டாக்கிக் கொண்டிருந்தது.
வசந்த மண்டபம் கண்களில் தென்பட்ட போது அவர் அங்கே தங்கியிருந்தது நினைவுக்கு வந்தது. நீராழி மண்டபத்தினருகே அவள் சென்ற போது அவர் அங்கே நீராடியதை நினைத்தாள். நந்தவனத்தில் நுழைந்து மலர்களைப் பார்த்த போது அவருடைய வழிபாட்டுக்காக மலர் கொய்ததை நினைத்துக் கொண்டாள். வசந்த மண்டபத்து மலர்ச்சோலை வழிகளில் அவரோடு விளையாட்டுத்தனமாகப் பேசிக் கொண்ட பேச்சுக்களையெல்லாம் எண்ணினாள்.
நண்பகலின் உச்சி வெயில் மேலேறிக் காயும் வரையில் அப்படியே தன் நினைவின்றித் திரிந்து கொண்டிருந்தாள் அந்தப் பேதைப் பெண். இனிமையான, நல்ல கனவு ஒன்றைக் கண்டு கொண்டிருந்த போது யாரோ முரட்டுத் தனமாக அடித்துத் தட்டி எழுப்பிக் கலைத்து விட்டது போன்றிருந்தது அவளுடைய நிலை.
அதற்கு மேல் பணிப்பெண்கள் வந்து வற்புறுத்தி அழைத்துச் சென்று நீராடச் செய்தனர். உணவு கொள்ளச் செய்தனர். தன் விருப்பமின்றி அவர்களுடைய வற்புறுத்தலுக்காக அவள் நீராடினாள்; உண்டாள். வீரர்களும் மெய் காவற் பணிபுரிவோரும் அரசுரிமைப் பொருள்கள் களவு போய்விட்டனவே என்று கலங்கிப் போய்ச் செய்வதறியாது திகைத்திருந்தனர். அவளோ உள்ளம் களவு போய்விட்டதே என்று உன்மத்தம் பிடித்தவள் போலிருந்தாள்.
நீண்ட பகல் நேரம் எப்படியோ சிறிது சிறிதாகக் கழிந்தது. பால் வாய்ப் பிறைப் பிள்ளையை இடுப்பில் எடுத்துக் கொண்டு பகல் என்னும் கணவனைப் பறிகொடுத்த மேற்றிசைப் பெண் புலம்பும் மாலை நேரம் வந்தது. இருள், ஒளியைச் சிறிது சிறிதாக விழுங்கத் தொடங்கியிருந்தது. முதல் நாளிரவு நடந்துவிட்ட கொள்ளையால் அரண்டு போயிருந்த காவல் வீரர்கள் அன்றும் பயந்து போய் ஏராளமான காவல் ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். மாளிகையின் எல்லாப் பகுதிகளிலும் வசந்த மண்டபம் உட்படச் சிறிதும் இருளின்றித் தீபங்களை எரிய விட்டிருந்தார்கள். பொழுது விடிகிறவரை அவற்றை எவரும் அணைக்கக் கூடாதென்று முன் எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது.
மாளிகையின் நான்கு புறமும் பறளியாற்றங்கரையை ஒட்டினாற் போல் சுற்றிலும் ஆயுதபாணிகளாக வீரர்கள் நிறுத்தி வைக்கப் பட்டார்கள். வழக்கமான மாளிகைப் படகைத் தவிர புதிய படகுகளோ, ஆட்களோ அனுமதிக்கப்படக் கூடாதென்று கடுமையாக உத்தரவிடப் பட்டிருந்தது.
களவு போனபின் மறுநாள் செய்யப்படும் அந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பார்த்த போது குழல்மொழிக்குச் சிரிப்புத்தான் வந்தது. காவலுக்கு ஆட்கள் நிறுத்தி வைக்கப்படாத இடங்கள் பறளியாற்று நீர்ப்பரப்பும், கரைமேலிருந்த உயரமான மரங்களின் உச்சிகளும் தான். கரையோரமாக இரண்டு மூன்று பாக தூரத்துக்கு ஒருவராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காவல் வீரர்கள் வெளிச்சத்துக்காகப் பிடித்துக் கொண்டிருந்த தீப்பந்தங்கள் தீவைச் சுற்றிக் கரை நெடுகக் கார்த்திகைச் சோதி எடுத்தது போல் தூரப் பார்வைக்குத் தோன்றியது. வீரர்கள் ஒருவருக்கொருவர் எச்சரிக்கை செய்து கொள்ளுகிற பாராக் குரலோசை இரவின் அமைதியில் அலை அலையாகப் பரவி எதிரொலித்தது.
உறக்கம் வராத குழல்மொழி கன்னிமாடத்து முகப்பில் அமர்ந்து இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தாள். காலை அரும்பி பகலெல்லாம் நினைவாகி மாலை மலர்ந்த நோய் அவள் துயிலைக் கெடுத்து உட்காரச் செய்திருந்தது. உட்கார்ந்திருந்ததும் வீண் போகவில்லை. சற்று நேரத்துக்கெல்லாம் ஒரு பணிப்பெண் ஓடி வந்து "நாராயணன் சேந்தனும், அம்பலவன் வேளானும் தங்களைப் பார்ப்பதற்காக அரண்மனையிலிருந்து வந்திருக்கிறார்கள்" என்று கூறினாள்.
"எப்போது வந்தார்கள்?" என்று வியப்புடன் அந்தப் பெண்ணைக் கேட்டாள் குழல்மொழி.
"இப்போதுதான் படகிலிருந்து இறங்கி வந்து கொண்டிருக்கிறார்கள். தங்களை அவசரமாகச் சந்திக்க வேண்டுமாம்."
"இப்போது எங்கே இருக்கிறார்கள்?"
"மாளிகையின் கீழ்ப்பகுதியில் மெய்க்காவல் வீரர்களிடம் ஏதோ பேசிக் கொண்டு நிற்கிறார்கள்."
"அங்கேயே இருக்கச் சொல்! இதோ நானே வருகிறேன்."
பணிப்பெண் இதைப் போய்ச் சொல்வதற்குக் கீழே இறங்கிச் சென்றாள். சில விநாடிகளில் குழல்மொழியும் கீழே இறங்கிச் சென்றாள்.
பாதி இறங்கிச் சென்று கொண்டிருக்கும் போதே நாராயணன் சேந்தன் யாரிடமோ இரைந்து பேசிக் கொண்டிருப்பது அரைகுறையாக அவள் காதில் விழுந்தது.
"யாரைச் சொல்லி என்ன ஐயா குற்றம்? மகாமண்டலேசுவரரின் புதல்விக்கு அவர் அதிகமாகச் செல்லம் கொடுத்து கெடுத்து விட்டதால் வந்த வினைதான் இவ்வளவும்" - சேந்தனுடைய இந்தச் சொற்களைக் கேட்டு நடந்து கொண்டிருந்தவள் அப்படியே திகைத்துப் போய் நின்றாள்.
--------
1.35. நெஞ்சமெனும் கடல் நிறைய...
கிழே மணற் பரப்பிலிருந்து மதிவதனியின் பெயரைச் சொல்லி யாரோ அழைக்கும் குரலைக் கேட்டு முகத்தில் கலவரம் தோன்ற அவளைப் பார்த்தான் குமாரபாண்டியன். 'இரவு நேரத்தில் கடலோரத்துத் தனிமையில் உயரமான மரக்கிளையின் மேல் அப்படி ஓர் அழகிய பெண்ணோடு நிற்கும் இளைஞனை மூன்றாவது மனிதன் பார்த்தால் எவ்வளவு தவறாகக் கற்பனை செய்து கொள்ள முடியும்?' இதை நினைக்கும் போது ஒரு துன்பத்திலிருந்து நீங்கி இன்னொரு துன்பத்தில் சிக்கிக் கொண்டுவிட்டது போன்ற உணர்ச்சி அவனுக்கு ஏற்பட்டது. அவன் அஞ்சினான். அந்த அச்சம் அவனுடைய முகத்தில், பார்வையில், பேச்சில் வெளிப்பட்டுத் தெரிந்தது.
"மதிவதனி! கீழேயிருந்து யாரோ உன்னைக் கூப்பிடுகிறார்களே?"
"வேறு யாருமில்லை. என் தந்தை தான். நேரமாயிற்றே என்று என்னைத் தேடிக் கொண்டு வந்திருக்கிறார்."
"ஐயோ! இந்த நிலையில் உன்னோடு என்னை இங்கே பார்த்தால் என்ன நினைத்துக் கொள்வார்?"
அவனுடைய கேள்வியின் உட்பொருள் விளங்காதவள் போல் அவன் முகத்தைச் சாதாரணமாகப் பார்த்தாள் அவள். பின்பு மெல்லச் சிரித்தாள். சிறிது சிறிதாகச் செந்நிற மலர் போல் நடு இதழில் மலர்ந்த அந்தச் சிரிப்பு இதழ் முடியும் இடத்தில் வலது கன்னத்தில் ஒரு சிறு குழியாகத் தேங்கி மறைந்தது. அவள் சிரிக்கும் போதெல்லாம் தென்படும் அந்த நளினச் சுழிப்பு சிரிப்பின் இங்கிதங்களையெல்லாம் மொத்தமாக ஒன்று சேர்த்துக் காட்டும் இறுதி முத்திரையாக அமைந்தது. எதிரே நின்று காண்பவரின் எண்ணங்களைத் தேக்கிச் சிறைப்பிடிக்கும் அந்த இங்கிதச் சிரிப்பில் சற்றே கிறங்கி நின்றான் இராசசிம்மன்.
அப்போது இரண்டாவது முறையாகக் கீழேயிருந்து அவள் தந்தை அவளை இரைந்து கூப்பிடும் ஒலி எழுந்தது.
"மதிவதனீ! பேசாமல் நீ மட்டும் கீழே இறங்கிப் போய்விடு. நான் இப்படியே மரக்கிளையில் ஒளிந்து கொண்டு விடுகிறேன்."
அவனுடைய குரலில் இருந்த நடுக்கத்தையும், பதற்றத்தையும் உணர்ந்து அவள் மீண்டும் புன்முறுவல் பூத்தாள். அவனுக்கோ இரைந்து பேசவே நா எழவில்லை. அவன் பயந்தான்.
"ஏன் தான் இப்படிப் பயப்படுகிறீர்களோ நீங்கள்? மரியாதையாக என்னோடு கீழே இறங்கி வரப்போகிறீர்களா? அல்லது நான் கீழே இறங்கிப் போய் 'மரத்தில் ஒரு திருடன் ஒளிந்து கொண்டிருக்கிறான்' என்று என் தந்தையிடம் சொல்லட்டுமா?"
"ஐயோ வேண்டாம் பெண்ணே! நானே வந்து விடுகிறேன்."
முதலில் மரக்கிளையிலிருந்து கீழே இறங்கிக் கால் வைத்துக் கொண்டு கையை நீட்டிக் குமாரபாண்டியனை இறக்கி விட்டாள் அவள்.
மரத்திலிருந்து முன்பின் அறிமுகமில்லாத இளைஞன் ஒருவனோடு தம் பெண் இறங்குவதைக் கண்டு ஒன்றும் விளங்காமல் திகைப்பும் சிறிது சினமும் அடைந்தார் கீழே நின்று கொண்டிருந்த மதிவதனியின் தந்தை.
"அப்பா! இவர் தான் நமது வலம்புரிச் சங்கை விலைக்கு வாங்கியவர்" என்று அவனை இழுத்துக் கொண்டு போய்த் தன் தந்தைக்கு அறிமுகம் செய்து வைத்தாள். சிறு குழந்தை வீட்டில் பெரியவர்களுக்குத் தெரியாமல் கண்டெடுத்த விளையாட்டுப் பொம்மையை அடக்க முடியாத ஆசைத் துடிப்போடு பெரியவர்களிடம் கொண்டு போய்க் காட்டுவது போன்ற மகிழ்ச்சித் துள்ளல் மதிவதனியிடம் இருந்தது. முதலைக்கு வலை விரித்துக் கொண்டு மரத்தின் மேல் காத்திருந்தது, அப்போது அவன் எவராலோ துரத்தப்பட்டு வலையின் குறுக்கே ஓடி வந்தது, அவனைக் காப்பாற்றுவதற்காகத் தான் வலையைத் தூக்கியது ஆகிய எல்லா நிகழ்ச்சிகளையும் ஒரே மூச்சில் தன் தந்தையிடம் சொல்லிவிட்டாள் அவள்.
விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்ட பின்புதான் அந்த மனிதருடைய முகத்தில் மலர்ச்சியைக் காண முடிந்தது.
"விலைமதிப்பற்ற இந்தச் சங்கை வாங்குவதற்கு யார் வரப் போகிறார்கள் என்று நெடுநாட்கள் காத்திருந்தோம். இத்தனை நாட்களுக்குப் பிறகு நீங்கள் அந்தப் பாக்கியத்தை அடைந்திருக்கிறீர்கள்" என்று சொல்லிக் கொண்டே குமாரபாண்டியனின் கையிலிருந்த சங்கை வாங்கி மேலும் கீழும் திருப்பிப் பார்த்தார். பின்பு அந்தச் சங்கை வைத்திருப்பவருக்கு அதனால் என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதை விவரித்துவிட்டு அதை அவனிடம் திருப்பிக் கொடுத்து விட்டார்.
கணக்குப் பாராமல் பொற்கழஞ்சுகளை அள்ளிக் கொடுத்து வலம்புரிச் சங்கை விலைக்கு வாங்கிய அவன் எந்த நாட்டைச் சேர்ந்தவன், எந்த நகரத்தில் வசிப்பவன், என்ன பெயரினன் என்பதையெல்லாம் அறிந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டினார் மதிவதனியின் அருமைத் தந்தை.
'காவிரிப்பூம்பட்டினத்தில் ஏதோ ஒரு பெரிய பொன் வணிகரின் புதல்வன்' என்று அவர் நம்பும் விதத்தில் பொய் சொல்லித் தப்பித்துக் கொண்டான் குமாரபாண்டியன். மேலும் தொடர்ந்து அவர் கேட்ட கேள்விகளுக்கு ஒவ்வொரு பொய்யாக மனத்துக்குள் உருவாக்கித் தடுமாற்றமின்றி வெளியிட்டுக் கொண்டிருந்தான் அவன். பழகிவிட்டால் பொய்யைக் கூட அழகாகச் சொல்ல முடிகிறது. மாபெரும் கற்பனைக் காவியங்களைப் படைத்த மகா கவிகளே அந்த வேலையைத் திறம்படச் செய்திருக்கும் போது தென்பாண்டித் தமிழ் இளவரசனால் மட்டும் முடியாமல் போய்விடுமா?
"திருட்டுப் பயமே இல்லாத இந்தத் தீவில் உங்களை யார், எதற்காகத் துரத்திக் கொண்டு வந்தார்கள்? அவர்களால் உங்களுக்கு எத்தகைய துன்பம் நேர இருந்தது?" என்று மதிவதனியின் தந்தை அவனைக் கேட்ட போது, "தீவின் கரையோரமாகப் போய்க் கொண்டிருந்தேன். என் கையிலிருந்த இந்தச் சங்கைப் பறிப்பதற்காகவோ என்னவோ, யாரோ சிலர் என்னைத் துரத்திக் கொண்டு வந்தார்கள். உங்கள் பெண் மட்டும் என்னைக் காப்பாற்றியிரா விட்டால் நான் அவர்களிடம் சிக்கிக் கொள்ள நேர்ந்திருக்கும். உங்கள் பெண் மதிவதனிக்கும் நான் மிகவும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறேன்" என்று அவரிடம் கூறினான் அவன். அப்போது அவன் கண்களின் கடையோரத்தில் மிதந்த கள்ளக் குறும்புப் பார்வை அவள் மேல் சென்றது. அந்தப் பார்வையின் விளைவாக அவள் பூத்த புன்னகை படர்ந்து இதழ்க் கோடியில் சுழித்து மறைந்தது.
"ஐயா! பெரியவரே! உங்கள் பெண் துணிவு மிகுந்தவள்" என்று அவளையும் அருகில் வைத்துக் கொண்டே அவரிடம் பிரமாதமாகப் புகழத் தொடங்கினான் குமாரபாண்டியன்.
"சிறு வயதிலிருந்தே தாயில்லாமல் வளர்ந்தவள். இன்னும் விளையாட்டுப் புத்தி போகவில்லை. துடுக்குத்தனம் அதிகமாக இருக்கிறது. நினைவு தெரிந்து பொறுப்பு வர வேண்டுமே என்று தான் எனக்கு இடைவிடாத கவலை."
பெரியவர் அவனிடம் குறைபட்டுக் கொண்டார். பேசிக் கொண்டே மூவரும் அங்கிருந்து நடந்தார்கள்.
தன் தந்தைக்குப் பக்கத்தில் துள்ளிக் குதித்து நடந்து வந்த அவள், தாய் மானுக்குப் பக்கத்தில் வரும் குட்டி மான் போல் தோன்றினாள்.
"அப்பா, முதலைக்காக வலை விரித்துக் காத்திருந்தது தான் மீதம். ஒரு முதலை கூட வரவில்லை. இந்த மனிதர் வலையில் விழுந்து நேரத்தை வீணாக்கியிராவிட்டால் ஒரு முதலையாவது தப்பித் தவறி வந்திருக்கும்." பேசாமல் நடந்து கொண்டிருந்த அவனைப் பேச வைக்க நினைத்த மதிவதனி தன் சொற்களால் வம்புக்கு இழுத்தாள்.
"தான் செய்த குற்றத்துக்கு பிறர் மேல் பழி சுமத்துவது தான் செம்பவழத் தீவின் நடைமுறை வழக்கமோ? தலைதெறிக்க ஓடிக் கொண்டிருந்தவனை வலைக்குள் இழுத்துச் சுருக்கி மேலே தூக்கியது அல்லாமல் என் மேல் பழி கூறவும் செய்கிறாயே?"
"அடே அப்பா! ஒரு வார்த்தை சொல்வதற்குள் இவருக்கு எவ்வளவு கோபம் வருகிறது பாருங்கள் அப்பா!"
"போதும்! விளையாட்டுத்தனமாக எதையாவது பேசிக் குறும்பு செய்வதே உனக்கு வழக்கமாகப் போயிற்று."
தந்தையின் வார்த்தைகளிலிருந்த கண்டிப்பின் கடுமை அவள் பேச்சுக்கு அணையிட்டது. மூவரும் பேசாமல் கரையோரமாகவே நடந்தார்கள்.
"நீங்கள் எந்த இடத்துக்குப் போக வேண்டும்? உங்களுக்கு வழி தெரியாவிட்டால் நாங்கள் உடன் வந்து காண்பித்துவிட்டுப் பின்பு வீடு செல்வோம்" என்றார் பெரியவர்.
"வேண்டாம் நானே போய்க் கொள்வேன். அதோ கடலோரத்தில் நிற்கிறதே ஒரு கப்பல், அதற்கு அருகில் கரையில் எங்கள் கூடாரம்" என்று கூறிவிட்டு இருவரிடமும் விடைபெற்றுக் கொண்டு புறப்படத் தயாரானான் குமாரபாண்டியன். கடைசியாக அந்தப் பெண்ணின் முகத்தை ஒரு முறை காணும் அவாவோடு அவன் கண்கள் திரும்பிய போது அவள் கண்கள் அதற்காகவே காத்திருப்பது போல் அவனைப் பருகிக் கொண்டிருந்தன. "இங்கிருந்து என்றைக்கு உங்கள் கப்பல் புறப்படுகிறது?" என்று பெரியவர் கேட்டார்.
"நாளை வைகறையில் நாங்கள் புறப்படுகிறோம்."
"மறந்து விடாதீர்கள். எத்தனையோ எண்ணங்களுக்கு நடுவே எங்களையும் நினைவு வைத்துக் கொள்ளுங்கள். திரும்பும் போது உங்கள் கப்பல் இந்தப் பாதையாக வந்தால் உங்களை மீண்டும் சந்திக்கும் வாய்ப்பை எங்களுக்கு அளியுங்கள்" - பெரியவர் தழுதழுக்கும் குரலில் வேண்டிக் கொண்டார்.
"உங்களை நினைப்பதற்காக நான் அதிகம் துன்பப்பட வேண்டியதேயில்லை, பெரியவரே! இந்தச் சங்கு என் கையில் இருக்கிற வரையில் உங்களையும் உங்கள் பெண்ணையும் நான் நினைக்காமல் இருக்க முடியாது. இதைக் காணும் போது, தீண்டும் போது, ஒலிக்கும் போது உங்களை நினைத்து மகிழ்வேன்."
"அதுதான் எங்களுக்குப் பெருமை! போய் வாருங்கள். வணக்கம்." பெரியவரும், மதிவதனியும் கைகூப்பி வணங்கி விடை கொடுத்தனர். நீண்ட செம்மையான தாமரைப் பூக்கள் இரண்டு அளவாக, அழகாக ஒன்றுபட்டுக் குவிந்தது போல் குவிந்த மதிவதனியின் கூப்பிய கரங்களை, அவற்றின் காட்சியை அப்படியே தன் நினைவில் பதித்துக் கொண்டு திரும்பி நடந்தான் குமாரபாண்டியன். போகும் போது கையிலிருந்த சங்கை மார்போடு அணைத்துக் கொண்டான். அவன் மனத்தில் என்ன நினைத்துக் கொண்டு அதைச் செய்தானோ? இரண்டு வழிகளிலும் சென்ற நான்கு கண்கள் சிறிது தொலைவு செல்வதற்குள் எத்தனை முறைகள் திரும்பிப் பார்த்துக் கொண்டன என்று கணக்கிட்டுச் சொல்ல இயலாது.
குமாரபாண்டியனுக்கும், மதிவதனிக்கும் தரையில் நடப்பதாகவே நினைவில்லை. வானில் நிலவில் மிதப்பது போல் ஒரு பூரிப்பு. அவர்களின் கண்கள் சந்தித்துக் கொண்ட அந்தச் சில விநாடிகள் என்றுமே நிலைக்கும் விநாடிகள்; மகாகவிகளைப் பாடவைக்கும் விநாடிகள் அவை.
எதிரே சக்கசேனாபதி தேடிக் கொண்டு வந்திருக்கா விட்டால் குமாரபாண்டியனுக்குச் சுய நினைவு வர இன்னும் எவ்வளவு நேரமாகியிருக்குமென்று சொல்ல முடியாது.
"இளவரசே! நீங்கள் நாளைக் காலையில் பயணம் செய்ய வேண்டியதை மறந்து இப்படிச் சுற்றிக் கொண்டிருந்தால் உடல் என்ன ஆகும்? போகும் போது சொல்லிக் கொள்ளாமல் வேறு போய் விட்டீர்கள். இரவில் நேரங்கெட்ட நேரத்தில் நான் எங்கே வந்து உங்களைத் தேடுவேன்?"
"கடல் ஓரமாகச் சிறிது தொலைவு உலாவி விட்டு வந்தேன். பகலில் உறங்கி விட்டதால் எனக்கு உறக்கம் வரவில்லை."
போன இடத்தில் நடந்த நிகழ்ச்சியை அவன் சக்கசேனாபதியிடம் கூறவில்லை. இருவரும் கூடாரத்தில் போய்ப் படுத்துக் கொண்டார்கள்.
இரவு நேரங்கழித்துப் படுத்துக் கொண்டதனால் காலையில் விடிந்த போது பொழுது வழக்கத்தை விட விரைவாகவே புலர்ந்து விட்டது போலிருந்தது. சக்கசேனாபதி விரைவாகவே பயண ஏற்பாடுகளையெல்லாம் முழுமையாகச் செய்து வைத்திருந்தார். பொழுது புலர்ந்தும், புலராமலும் மங்கலமாக இருந்த நேரத்தில் அவர்களுடைய கப்பல் புறப்பட்டது. காலை நேரத்தின் மணத்தோடு கூடிய ஒரு வகைக் குளிர்க்காற்று செம்பவழத் தீவின் உயிர்க் குலத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக எழுப்பிக் கொண்டிருக்கும் சமயத்தில் அவர்கள் அங்கிருந்து கிளம்பி விட்டார்கள். குமாரபாண்டியனும் சக்கசேனாபதியும் கப்பலின் மேல் தளத்துத் திறந்த வெளியில் நின்று கொண்டிருந்தார்கள். மேலே வைகறையின் வானவெளி வெண்ணீலப்பட்டு விரிப்பைப் போல் படர்ந்து கிடந்தது. அந்த வெண்ணீலத் துணியின் கீழே அடியோரத்து நெருப்பு நிறத்தில் சிவப்புச் சரிகை மினுமினுப்பது போல் சூரியன் உதயமாகியது.
இளவரசன் இராசசிம்மனின் கையிலிருந்த பொன்னிற வலம்புரிச் சங்கு அடிவானத்து ஒளியை வாங்கி உமிழ்ந்து வண்ணம் காட்டியது. ஆட்டமின்றி மெல்ல நகர்ந்து கொண்டிருக்கும் கப்பலின் தளத்தில் நின்று கொண்டு அந்த அழகைச் சுவைப்பதற்கு ஆசையாக இருந்தது அவனுக்கு.
அந்தச் சங்குதான் அவன் மனதுக்கு எவ்வளவு நினைவுகளைக் கொடுத்து உதவுகிறது? அதன் நிறத்தை மட்டும் பிரித்து நினைத்தால் அவனுக்கு மதிவதனியின் நிறம் நினைவுக்கு வருகிறது. அதில் பதிந்துள்ள முத்துகள் அவள் சிரிப்பு. பவழங்கள் அவள் இதழ்கள். சங்கு வளைந்து திருகும் இடத்திலுள்ள சுழிப்பு அவள் சிரிக்கும் போது கன்னத்தில் விழும் சுழிப்பு. அதன் கூம்பிய தோற்றம் அவள் கைகள் செலுத்திய வணக்கம். அந்தச் சங்கை ஏந்தி நிற்கும் அவன் உள்ளங்கைகளுக்கு அவளையே ஏந்திக் கொண்டிருப்பதாக ஓர் இனிய பிரமை.
கரையிலிருந்து யாரோ கைதட்டிக் கூப்பிடும் ஒலி மங்கலாகக் கேட்டது. சங்கை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருந்த இராசசிம்மன் நிமிர்ந்து திரும்பிப் பார்த்தான். தீவின் கரையிலிருந்து மணல் திட்டு ஒன்றில் மதிவதனி இரண்டு கைகளையும் உயர்த்திக் கொண்டு நின்றாள். அவள் தெரிந்தாள். அவளுடைய சொற்கள் அவனுக்குக் கேட்கவில்லை. அவள் தனக்கு விடை கொடுக்க வந்ததைத் தான் கண்டு கொண்டதை எந்தக் குரலால், எந்த அடையாளத்தால் அவளுக்குத் தெரிவிப்பதென்று தெரியாமல் தயங்கினான் இராசசிம்மன். கப்பல் நகர நகர அவள் உருவம் சிறிது சிறிதாக மங்கியது.
அதே போல் அவன் உருவமும் அவள் கண்களுக்கு மங்கியிருக்கும். அவன் உயிரைக் காப்பாற்றி உதவிய அந்தப் பேதைப் பெண் தன் நெஞ்சின் அன்பையெல்லாம் திரட்டிக் கொண்டு வந்து அவனுக்கு விடை கொடுக்கிறாள். அதை ஏற்றுக் கொண்ட நன்றியை அவன் எப்படித் தெரிவிப்பது? வார்த்தைகளில் கூறினால் அந்த ஒலி அவள் செவிகளில் அடைவதற்கு முன் கடல் காற்று வாரிக்கொண்டு போய் விடும். அவளைப் போல் கைகளை ஆட்டித் தெரிவிக்கலாமென்றால் அதைப் பார்த்து, "திரும்பிப் போ!" என்று அவளைத் துரத்துவதாக அவள் தப்பர்த்தம் செய்து கொள்வாளோ என்ற பயம் உண்டாயிற்று அவனுக்கு.
குமாரபாண்டியன் இப்படிக் குழம்பிக் கொண்டிருந்த போது அவன் கையிலிருந்த வலம்புரிச் சங்கு அவனுக்குச் சமய சஞ்சீவியாகப் பயன்பட்டது. அதன் ஊதுவாயில் தன் இதழ்களைப் பொருத்தி, மூச்சை அடக்கிப் பலங்கொண்ட மட்டும் ஊதினான். அந்தச் சங்கொலி கரையை எட்டியிருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அவனை நினைத்து நெஞ்சில் ஆழம் வரை வற்றிக் கொண்டிருக்கும் ஒரு பேதை பெண்ணின் உள்ளக் கடலை அந்தச் சங்கொலி பரிபூர்ணமாக நிறைத்துப் பொங்கச் செய்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
கப்பல் வெகு தூரம் வந்து செம்பவழத் தீவின் தோற்றம் மங்கி மறைந்த பின்னும், 'நான் இன்னும் பலமுறை இந்தத் தீவுக்கு வர வேண்டும். எந்த வகையிலோ நான் தள்ள முடியாத, தவிர்க்க முடியாத ஒரு கவர்ச்சி என்னை இந்தத் தீவுக்கு மறுபடியும் வரவேண்டுமென்று நினைக்கச் செய்கிறது' என்று எண்ணிப் பெருமூச்சு விட்டான் குமாரபாண்டியன். "இளவரசே! வெய்யில் அதிகமாகுமுன் கீழ்த் தளத்துக்குப் போய் விடலாம், வாருங்கள்" என்றார் சக்கசேனாபதி.
(பாண்டிமாதேவி - முதல் பாகம் முற்றிற்று)
This file was last updated on 20 March 2015.
Feel free to send corrections to the Webmaster.