பாண்டிமாதேவி (சரித்திர நாவல்) - பாகம் 2
தீபம் நா. பார்த்தசாரதி எழுதியது.
pANTimAtEvi (historical novel), part 2
of tIpam nA. pArtacArati
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the ChennaiLibrary.com and Mr. Chandrasekaran for providing a soft copy
of this work and for permission to include it as part of Project Madurai collections.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2015.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
பாண்டிமாதேவி (சரித்திர நாவல்) - பாகம் 2
தீபம் நா. பார்த்தசாரதி எழுதியது.
Source:
பாண்டிமாதேவி
நா. பார்த்தசாரதி
தமிழ்ப் புத்தகாலயம், சென்னை -600 017
6ம் பதிப்பு 2000 (முதற் பதிப்பு 1960)
---------
இரண்டாம் பாகம்- அட்டவணை
2.1. பொருநைப் புனலாட்டு விழா
2.2. கொற்கையில் குழப்பம்
2.3. நெருங்கி வரும் நெடும் போர்
2.4. கோட்டாற்றுக் குணவீர பண்டிதர்
2.5. மானகவசனுக்கு நேர்ந்த துன்பம்
2.6. தமையனும் தங்கையும்
2.7. கடலில் மிதந்த கற்பனைகள்
2.8. முடியாக் கனவின் முடிவினிலே...
2.9. விலாசினியின் வியப்பு
2.10. அந்தரங்கத் திருமுகம்
2.11. முள்ளால் எடுத்த முள்
2.12. கொடும்பாளூர் உடன்படிக்கை
2.13. சுசீந்திரம் கைமுக்குத் தண்டனை
2.14. தாயாகி வந்த தவம்
2.15. 'யாரோ ஓர் இளைஞன்'
2.16. பேசாதவர் பேசினார்
2.17. காந்தளூர் மணியம்பலம்
2.18. வீரர் திருக்கூட்டம்
2.19. கருணை வெள்ளம்
2.20. எதையும் இழக்கும் இயல்பு
2.21. சதி உருவாகிறது
2.22. கொற்றவைக் கூத்து
2.23. திரிசூலம் சுழன்றது
2.24. கூடல் இழைத்த குதூகலம்
2.25. கடற் காய்ச்சல்
2.26. வம்புக்கார வாலிபன்
2.27. குழைக்காதன் திரும்பி வந்தான்
2.28. 'ஒப்புரவு மொழி மாறா ஓலை'
2.29. கொடும்பாளூர்க் கழுமரத்தில் கோட்டாற்றான் குருதி
2.30. இடையாற்றுமங்கலத்தில் ஓர் இரவு
2.31. ஏனாதி மோதிரம்
2.32. பழைய நினைவுகள்
2.33. நினைப்பென்னும் நோன்பு
2.34. தளபதி திடுக்கிட்டான்
2.35. போர் முரசு முழங்கியது
2.36. கூற்றத் தலைவர்கள் குறும்பு
2.37. காலப் பெருவெளியிற் சில கனவுப் பறவைகள்
--------
பாண்டிமாதேவி - இரண்டாம் பாகம்
2,1. பொருநைப் புனலாட்டு விழா
அன்றைக்குக் காலையில் பொதிய மலைக்குக் கிழக்கே கரவந்தபுரக் கோட்டத்தில் பொழுது புலரும் போது கதிரவனுக்கு அடக்க முடியாத ஆவல் உண்டாகியிருக்க வேண்டும். வைகறையில் வழக்கத்தை விடச் சற்று முன்பாகவே உதயம் ஆகிவிட்டது போலிருந்தது.
சில நாட்களாக இடைவிடாத மழை. பொதிய மலையின் எழிலார்ந்த நீலக் கொடுமுடிகளைக் காண முடியாதபடி எப்போதும் கருமேகங்கள் திரையிட்டுக் கவிந்திருந்தன. ஆவேசம் பிடித்து ஓடும் பேய் கொண்ட பெண்களைப் போல் ஆறுகளெல்லாம் கரைமீறிப் பொங்கி ஓடிக் கொண்டிருந்தன. சந்தனமும், செந்தமிழும், மந்தமாருதமும் எந்தப் பொதிய மலையில் பிறந்தனவோ அதே பொதிய மலையில் தான் பொருநையும் பிறந்தாள். அருவிகளாக இறங்கும் வரை பிறந்த வீட்டில் சுதந்திரமாக இருக்கும் கன்னிப் பெண் போலிருந்தாள் அவள். தரையில் இறங்கிய பின்போ, புக்ககம் செல்லும் மணப்பெண்ணின் அடக்கமும், ஒரே நெறியை நோக்கி நடக்கும் பண்பும் அவளுக்கு வந்து விட்டன. கணவன் வீடாகிய கடலை அடைவதற்கு முன் அவள் தான் இரு கரையிலும் எத்தனை காட்சிகளைக் காணப் போகிறாள்? விண் முகட்டை நெருடும் கோபுரங்கள், மண்ணில் புதையும் குடிசைகள், பெரிய மரங்கள், சிறிய நாணற் புதர்கள், அழுக்கு நிறைந்த மனிதர்கள், இன்னும் எத்தனை எத்தனையோ? போகிற வழியில், குற்றாலத்து மலை முகட்டிலிருந்து குதித்துக் குறும் பலாவை நனைத்து வரும் சித்திராநதித் தோழி பொருநையைத் தழுவிக் கொள்கிறாள். பொருநைக்குப் போகும் வழிக்குத் துணை கிடைத்து விடுகிறது.
போகிற வழியெல்லாம் பொருநைக்கு நல்ல வரவேற்புதான். மலரும் மாலையும் தூவுவோர், மங்கல வாழ்த்தெடுப்போர், வாசனைத் தூள்களை வாரியிறைப்போர், எல்லோரும் அவளைப் போற்றினார்கள். அது புனலாட்டு விழாக் காலம். பருவத்தில் பெய்த அந்த மழையால் தான் எவ்வளவு நன்மைகள். அந்த மேல் மழை பெய்திராவிட்டால் கொற்கைத் துறையில் முத்துச் சிப்பிகள் விளைவெய்தாமல் போயிருக்கும். சிப்பிகள் விளைவின்றிச் சலாபத்தில் (முத்துக்குளி நடைபெறும் இடம்) முத்துக்குளி நின்று போனால் தென்பாண்டிப் பேரரசுக்கு வருவாய் குறையும். கரவந்தபுரத்து உக்கிரன் கோட்டைக் குறுநிலவேள் தென்பாண்டிப் பேரரசுக்கு அடங்கி நடப்பதாக ஒப்புக் கொண்ட நாளிலிருந்து கொற்கைத் துறையையும், முத்துச் சலாபத்தையும் நிர்வாகம் செய்யும் பொறுப்பு அவனிடம் அளிக்கப்பட்டிருந்தது.
ஆண்டுதோறும் பொருநையில் புதுப்புனல் பெருகி அது பாயும் பகுதியெல்லாம் பசுமையும், வளமும் பரவி நிற்கும் நல்ல பருவத்தில் கொற்கை முத்துக்குளி விழா தொடங்கும். அன்று கரவந்தபுரத்துச் சிற்றரசன் தன் பரிவாரங்களோடு கொற்கைக்கு வருவான். சுற்றுப்புறங்களிலிருந்து திரள்திரளாக மக்கள் கூடுவார்கள். உள்நாட்டிலிருந்தும் கடலுக்கு அப்பாலுள்ள நாடுகளிலிருந்தும் பெரிய பெரிய வாணிகர்கள் முத்துக்களை விலை பேசி வாங்கிச் செல்ல வருவார்கள். கொற்கையில் திருவிழாக் கூட்டம் பெரிதாகக் கூடி விடும்.
'கடலாடி மலையேறுதல்' என்று ஒரு பழைய மரபு. கொற்கையின் முத்துக்குளி முடிந்ததும், கரவந்தபுரத்தார் பொதியமலைச் சாரல்வரை சென்று பொருநையில் நீராடி மீள்வது வழக்கம். பொருநை கடலோடு கலக்கும் இடத்துக்குச் சற்று வடக்கே கொற்கை முத்துச் சலாபம் அமைந்திருந்தது.
கொற்கைத் துறையில் கரையின் மணற்பரப்பே தெரியாமல் கூடாரங்களும் மக்கள் கூட்டமும் நிறைந்திருந்தன. இன்னிசைக் கருவிகள் முழங்கின. வாழ்த்தொலி அதிர்ந்தது. முத்துக் குளிப்புக்கெனக் குறித்த மங்கல வேளையும் வந்தது. துறையின் முன்புறத்தில் சலாபத்துக்கு அருகே கரவந்தபுரத்துச் சிற்றரசன் பெரும்பெயர்ச்சாத்தன் நின்றான். அவன் பக்கத்தில் அவனுடைய பட்டத்தரசி அடக்க ஒடுக்கமாக நின்றாள். அரச பரிவாரத்தைச் சேர்ந்தவர்கள் சூழ நின்றார்கள். விலை பேச வந்திருக்கும் பெருஞ்செல்வர்களான வணிகர்கள் இன்னும் சிறிது தள்ளி நின்றார்கள். பல விதமான தோற்றத்தோடு கூடிய, பலமொழிகள் பேசும், பல தேசத்து வணிகர்கள் அங்கே நிறைந்திருந்தனர். கடல் ஓசையும், வாத்தியங்களின் ஒலியும், பலமொழிக் குரல்களும் கலந்து ஒரே ஒலிக் குழப்பமாக இருந்தன. தண்ணீருக்குள் மூச்சை அடக்கும் ஆற்றல் வாய்ந்த கட்டிளங் காளைகளான இளைஞர்கள் வாட்டசாட்டமான தோற்றத்தோடு வரிசையாக நின்றார்கள். அவர்கள் தாம் முத்துக் குளிக்காகக் கடலில் மூழ்கும் பரதவ வாலிபர்கள். பளிங்கால் இழைத்தெடுத்துப் பொருந்தினது போல் உடற்கட்டுள்ள அவர்கள் தோற்றம் மனத்தைக் கவர்ந்தது.
சலாபத்துக்குப் பக்கத்தில் இருந்த சிறிய கோவிலில் முத்துக் குளிப்பதற்கு முன் அவர்கள் வழக்கமாக வழிபடும் கடல் தெய்வத்தின் சிலை இருந்தது. முறைப்படி அதை வழிபட்ட பின் பரதவ இளைஞர்கள் அரசனை வணங்கிவிட்டு ஒவ்வொருவராகக் கடலில் குதித்தனர்.
அதைப் பார்த்துக் கொண்டிருந்த பெரும்பெயர்ச்சாத்தனின் பட்டத்தரசி, "எவ்வளவு துணிவு இந்த வாலிபர்களுக்கு?" என்று வியப்புடன் கணவனை நோக்கிக் கூறினாள். பெரும்பெயர்ச்சாத்தன் அவள் கூறியதைக் கேட்டுச் சிரித்தான்.
"இப்படிச் சில ஆண்பிள்ளைகள் துணிந்தால் தான் உங்களைப் போன்ற பெண்களின் கழுத்தில் முத்து மாலை இருக்க முடியும்." அவன் அவள் கழுத்தை வளைத்துக் கிடந்த முத்து மாலையைச் சுட்டிக் காட்டிச் சொன்னான்.
"ஓகோ! பெண்களை மட்டம் தட்டியா பேசுகிறீர்கள்?"
"அப்படி ஒன்றுமில்லை! உலகத்தில் ஆண் பிள்ளைகள் அதிகத் துன்பத்தின் பேரில் அடைய வேண்டிய பொருள்களெல்லாம் பெண்களின் தேவைகளாயிருக்கின்றன என்று தான் சொல்ல வந்தேன்."
"அழகுள்ளவர்களுக்குத்தானே அழகான பொருள்கள் தேவை?" என்று தன் கணவனைப் பேச்சில் வென்றாள் அந்தப் பட்டத்தரசி. சுற்றிலும் இருந்த உயர்தர அரசாங்க அதிகாரிகள் அரசனுக்கும் அரசிக்கும் இடையே நிகழ்ந்த இந்த நகைச்சுவைப் பேச்சைத் சிரித்து வரவேற்றனர்.
கடலில் மூழ்கிய இளைஞர்கள் கிடைத்தமட்டில் முத்துச் சிப்பிகளை அள்ளிக் கொண்டு வந்தார்கள். மறுபடியும் மறுபடியும் உடல் அலுப்பு அடைகின்ற வரையில் மூழ்கிக் கொண்டே இருந்தார்கள். முத்து வணிகத்துக்காக வரும் அயல்நாட்டு வணிகர்களின் கப்பல்கள் மேலும் மேலும் வந்து கொண்டே இருந்தன. துறையில் கப்பல்கள் நிறுத்தப் போதுமான இடமின்றி ஒரே நெருக்கமாக இருந்தது. எனவே கடலில் கண்ணுக்குத் தென்பட்ட தொலைவு வரை கப்பல்களின் பாய்மரக் கூம்புகள் தெரிந்தன. பல நாட்டுக் கொடிகள், பலவிதச் சின்னங்களோடு, பல நிறத்தில் அவற்றின் உச்சியில் பறந்தன. வானில் வட்டமிடும் பறவைக் கூட்டங்களுக்கும் அந்தக் கொடிகளுக்கும் வேறுபாடு தெரியாமல் பார்க்கிறவர்கள் மயக்கமுறும் வண்ணம் அவை அதிகமாயிருந்தன.
ஐந்தாறு நாழிகைகளுக்குப் பின் முத்துக்குளி நின்றது. அது வரையில் எடுத்த சிப்பிகள் அரசனுக்கு முன்னால் வரிசையாக குவிக்கப்பட்டிருந்தன. அவற்றிலிருந்து உயர்ந்த முத்துக்களை எடுத்து அரசனிடம் கொண்டு வந்து கொடுத்து வணங்கினான் ஒரு வயது முதிர்ந்த பரதவன். அது ஒரு வழக்கமான மரியாதை. அந்த முத்துக்களைப் பெற்றுக் கொண்டு அரசன் ஏதோ ஒரு குறிப்பை நினைப்பூட்டும் புன்னகையோடு தன்னுடைய பட்டத்தரசியின் கையில் அவைகளைக் கொடுத்தான்.
"ஆண் பிள்ளைகள் அதிகத் துன்பப்பட்டு அடையும் பொருள்களெல்லாம் பெண்களுக்கே வந்து சேர்கின்றன!" - அவற்றை வாங்கிக் கொண்டு அவள் குறும்பாகப் பேசினாள்.
"என்ன செய்யலாம்? உலகம் பரம்பரையாக அப்படிக் கெட்டுப் போய்க் கொண்டிருக்கிறது!" - அவன் வருத்தப்பட்டுச் சொல்வது போல் இந்த வார்த்தைகளைச் சொல்லி நடித்தான்.
சுற்றி நின்றவர்கள் சிரிப்பை அடக்க முடியாமல் இரைந்தே சிரித்து விட்டார்கள். பட்டத்தரசி சிறிது நாணத்தோடு தலையைக் குனிந்து கொண்டாள்.
சிப்பிகளை விலை பேசும் நேரம் வந்தது. அதற்காக அமைக்கப்பட்டிருந்த கூடாரத்தில் வாணிகர்கள் நூற்றுக் கணக்கில் கூடினார்கள். பெரும்பெயர்ச்சாத்தனும் அவன் மனைவியும் கரவந்தபுரத்து அரண்மனையைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகளும் சிப்பிகளுக்கு அருகே இருக்கைகளில் அமர்ந்திருந்தனர்.
மன்னர்களுக்கு ஈடான செல்வச் செருக்குள்ள சில பெரிய வாணிகர்கள் மட்டும் முன்வந்து தைரியமாக விலை கேட்க ஆரம்பித்தனர். அப்படி முன் வந்த பெரிய வாணிகர்களின் தொகை பத்துப் பன்னிரண்டு பேருக்கு மேல் இருக்காது. அவர்களில் இருவர் விலை கேட்கத் தொடங்கிய விதம், கேட்கும் போது வார்த்தைகளை வெளியிட்ட முறை - எதுவும் மரியாதையாகத் தெரியவில்லை. எடுத்தெறிந்த பேச்சும், குதர்க்கமும் அவ்விருவரும் வியாபாரத்துக்குப் புதியவர்களோ என்று நினைக்கச் செய்தன. எல்லோருடைய கவனமும் அந்த இருவர் மேல் நிலைத்தன. அப்படி நடந்து கொண்டார்கள் அவர்கள். இதையெல்லாம் பார்த்த பெரும்பெயர்ச்சாத்தன் பொறுமையாக இருந்தான்.
"எங்கள் நாட்டிலும் முத்துக்குளிக்கிறோம்! ஆனால் இவ்வளவு அநியாய விலைக்கு விற்றுக் கொள்ளையடிப்பதில்லை."
"நீங்கள் எந்த நாடு?"
"ஏன் அதைச் சொன்னால் தான் எங்களுக்கு முத்து விற்பீர்களோ?"
"அப்படி இல்லை. முத்துக்களைப் புளியங்கொட்டை போல் மலிவாக விற்கும் நாடு எது என்று தெரிந்து கொள்ள ஆவலாயிருக்கிறது எனக்கு."
"நாங்கள் இருவரும் சோழநாட்டினர். எங்கள் நாட்டிலும் புகார்த் துறைக்கு அருகில் சில இடங்களில் முத்துக் குளிக்கிறர்கள், தெரியுமா?"
"தெரியும்! சோழநாட்டு முத்துக்களை என்றுமே உலகம் முத்துக்களாக ஒப்புக் கொண்டதில்லை. எங்கள் கொற்கைதான் உலகம் போற்றும் முத்துச் சலாபம். இதை நீங்கள் மறுக்க முடியாது." சொல்லிவிட்டு அவர்களைப் பார்த்துக் கொஞ்சம் ஏளனமாகச் சிரித்து விட்டான் கரவந்தபுரத்துச் சிற்றரசன். அது அந்த இருவருக்கும் பொறுக்கவில்லை.
"இதே கொற்கைப் பகுதி இதற்கு முன்பும் பலமுறைகள் சோழநாட்டு ஆட்சிக்கு உட்பட்டதுண்டு. இனிமேலும் அப்படி ஆகாதென்று யார் சொல்ல முடியும்? அதை நீங்கள் மறந்து பேசுகிறீர்களே."
பெரும்பெயர்ச்சாத்தனுக்குச் சினம் மூண்டது. "நீங்கள் முத்து வாணிகத்துக்கு வந்திருக்கிறீர்களா? அல்லது அரசியல் பேசி வம்பு செய்ய வந்திருக்கிறீர்களா?" என்று ஆத்திரத்தோடு இரைந்து கத்தினான் அவன்.
பெரும்பெயர்ச்சாத்தனது சுடுசொற்களைக் கேட்டதும், இருவரும் கதிகலங்கி விட்டனர். தங்கள் குட்டு வெளிப்பட்டு விடுமோ என்ற கவலை அவர்களைப் பிடித்துக் கொண்டது. அவசரக் கோலம் அள்ளித் தெளித்த கதையாக அங்கிருந்து நழுவி விடுவது என்று சமிக்ஞை மூலம் திட்டமிட்டுக் கொண்டனர். அது இன்னும் சந்தேகத்தை விளைவித்து விடுமே என்று அப்பொழுது அவர்களுக்குத் தோன்றவில்லை. எனவே, அந்த இருவரும் வாணிகர் கூட்டத்திலிருந்து வெளியேறி மெல்ல நழுவி விட்டனர். அவர்கள் நடந்து கொண்ட முறையையும், சொல்லாமல் கொள்ளாமல் நழுவிவிட்டதையும் காணப் பெரும்பெயர்ச்சாத்தனின் சந்தேகம் வலுத்தது. தன் அருகில் நின்ற 'மானகவசன்' என்னும் மெய்க்காவலனை அழைத்து, இருவரையும் அவர்களுக்குத் தெரியாமல் பின்பற்றிச் சென்று கண்காணிக்குமாறு இரகசியமாகச் சொல்லி அனுப்பினான். அவனுடைய மனத்தில் பலத்த சந்தேகத்தை உண்டாக்கிவிட்டுப் போய்விட்டார்கள் அவர்கள். ஏற்கனவே வடபுறம் எல்லைக் காவல் வீரர்களிடமிருந்து அவனுக்குச் சில செய்திகள் வந்திருந்தன. கடந்த இரு வாரங்களுக்குள் சோழநாட்டு ஒற்றர்களாகச் சந்தேகிக்கப்பட்டவர்கள் இருபது முப்பது பேருக்கு மேல் உக்கிரன் கோட்டைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். பாண்டி நாட்டு எல்லைக்குள் அந்நியர்களை எச்சரிக்கையாகக் கவனித்து அனுமதிக்குமாறு அங்கங்கே எல்லைப்புறக் காவல் வீரர்கள் ஆணையிடப்பட்டிருந்தார்கள். அப்படியிருந்தும் வாணிகர்களைப் போல், துறவிகளைப் போல், யாராவது வந்து கொண்டு தான் இருந்தார்கள்.
முத்துக்குளி விழாவுக்கு மறுநாள் பொதியமலைச் சாரலில் பொருநை நதியில் புனலாட்டு விழாவிற்குச் சென்ற போது அங்கும் அந்த முத்து வாணிகர் இருவரைச் சந்தித்தான் பெரும்பெயர்ச்சாத்தன். மூன்றாம் நாள் கரவந்தபுரம் திரும்பியபின் ஒரு மாலைப் போதில் மேல் மாடத்திலிருந்து தெருவைப் பார்த்துக் கொண்டிருந்த பெரும்பெயர்ச்சாத்தனின் பட்டத்தரசி அதே ஆட்கள் தெருவில் நடந்து சென்றதைக் கண்டதாகக் கூறினாள். பொறுமை இழந்து பெரும்பெயர்ச்சாத்தன் மானகவசனைக் கூப்பிட்டு, "இனியும் அவர்களைப் பின்பற்ற வேண்டாம். பிடித்துச் சிறையில் அடைக்க ஏற்பாடு செய்" என்று கடுமையாக உத்தரவிட்டான். ஆனால் அந்த இருவரும் அகப்படவே இல்லை!
கரவந்தபுரத்து எல்லையிலேயே தென்படாமல் மறைந்து விட்டார்கள். பாண்டிய நாட்டு எல்லையோரச் சிற்றூர்களில் சிறு களவுகள், கலவரங்கள், அடிபிடிகள் நடக்கும் செய்திகள் வளர்ந்தன. இந்த அடையாளங்களெல்லாம் எதற்கு முன் அறிவிப்பு என்பது பெரிம்பெயர்ச்சாத்தனுக்குப் புரிந்து விட்டது.
'இனியும் மூடி மறைப்பதில் பயனில்லை. செய்தியை மகாமண்டலேசுவரருக்கும், மகாராணியாருக்கும் எட்டவிட வேண்டியதுதான்' என்று தீர்மானத்துக்கு வந்தான். அந்தத் தீர்மானத்தை உடனே செயலாற்றியும் முடித்து விட்டான்.
---------
2.2. கொற்கையில் குழப்பம்
சிவந்த வாயும், வெள்ளிய நகையும், பிறழும் கண்களும், சுருண்ட கூந்தலும், துவண்ட நடையுமாக முத்துச் சலாபத்து அருகிலிருந்த கடல் துறையில் இளம் பெண்கள் நீராடிக் கொண்டிருந்தனர். வேறு சில சிறுமிகள் கடற்கரை ஈரமணலில் வீடுகட்டி விளையாடினர். அவர்களுடைய மணல் வீட்டைக் கடல் அலை அழித்தது. அதைக் கண்ட நினைவு மலராப் பருவத்தையுடைய அந்தச் சிறுமிகளுக்குக் கடலின் மேல் சினம் மூண்டது. "ஏ, கடலே! இரு, இரு! என் அம்மாவிடம் சொல்லிக் கண்டிக்கச் சொல்கிறேன்" என்று கடலைப் பயமுறுத்தி விட்டு ஆத்திரமும் அழுகையுமாக வெறுப்போடு தன் கழுத்திலிருந்த முத்து மாலையை அறுத்துச் சிதறி அடம் பிடித்தாள் ஒரு சிறுமி. கடற்கரையோரத்துப் புன்னை மரத்திலிருந்து உதிர்ந்த அரும்புகளுக்கும் இப்படிச் சிதறப்பட்ட முத்துக்களுக்கும் வேறுபாடு தெரியாமல் அந்தப் பக்கம் நடந்து வருவோர் திகைத்தனர்.
கொற்கைக் கடலில் இளம் பெண்கள் நீராடி மகிழ்வதே ஒரு தனி அழகு. இளம்பெண் ஒருத்தி தன் தோழியின் தோள் மேல் வாரி இறைப்பதற்காக இரண்டு உள்ளங் கைகளிலும் நீரை அள்ளினாள். அதில் அவள் கண்கள் தெரிந்தன. 'ஐயோ மீன்!' என்று தண்ணீரை விட்டுக் கரையேறிப் பயந்து போய் மணலில் உட்கார்ந்து விட்டாள் அந்தப் பெண்.
"தொக்குத் துறைபடியும் தொண்டை அம்
செவ்வாய் மகளிர் தோள்மேற் பெய்வான்
கைக்கொண்ட நீருள் கருங்கண்
பிறழ்வ கயலென் றெண்ணி
மெய்க் கென்றும் பெய்கல்லார் மீண்டு
கரைக்கே சொரிந்து மீள்வார் காணார்
எக்கர் மணங்கிளைக்கும் ஏழை
மகளிர்க்கே எறிநீர்க் கொற்கை."
என்று இப்படியெல்லாம் முத்து விளையும் கொற்கைத் துறையைப் பற்றி முத்து முத்தான தமிழ்ப் பாடல்களைப் பழம் புலவர்கள் பாடியிருந்தார்கள். பல்லாயிரங் காலத்துப் பயிர் அந்தப் பெருமை. மானமும், வீரமும், புகழும், மாண்பும், பாண்டிய மரபுக்குக் கொடுத்த பெருமை அது! பாண்டிய நாட்டு மண்ணைத்தான் தங்கள் மறத்தினாற் காத்தனர் பாண்டியர். ஆனால் முத்து விளையும் கொற்கைக் கடலை அறத்தினாற் காத்தார்கள்.
"மறப்போர்ப் பாண்டியர் அறத்திற் காக்கும்
கொற்கையம் பெருந்துறைமுத்து."
என்று எவ்வளவு நன்றாகச் சங்கநூற் கவிஞர் அந்தப் பெருந்தன்மையைப் பாராட்டியிருக்கிறார்!
இப்போதுள்ள சூழ்நிலையில் இந்தப் பாராட்டெல்லாம் வெறும் பழம் பெருமையாகி விட்டனவே. அறத்தினால் காத்த கொற்கையை மறத்தினாற் காக்க வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. பகைமையும் பூசலும் வளரும் போது உலகத்தில் எந்தப் பொருளையுமே அறத்தினால் காக்க முடிவதில்லை. தங்க நகையை இரும்புப் பெட்டியில் வைத்துப் பூட்டுவது போல் மெய்யைக் கூட பொய்யால் தான் பாதுகாக்க வேண்டியிருக்கிறது. வலிமையுள்ளவனுக்கு ஆசைகள் வளரும் போது வலிமை அற்றவன் தன் பொருள்களை அறத்தினால் எப்படிக் காக்க முடியும்?
முடியாதுதான்! முடியவும் இல்லை. முத்துக்குளி விழாவுக்கு மறுநாள் கொற்கையில் நடந்த குழப்பங்கள் இந்த உண்மையை விளக்கிவிட்டன. கரவந்தபுரத்து அரசனும், அரசியும், பரிவாரங்களும் விழாவன்றைக்கு மாலையிலேயே பொருநைப் புனலாட்டு விழாவுக்காகத் திரும்பிச் சென்று விட்டனர். முத்துச் சலாபத்தில் நடைபெற வேண்டிய வாணிபத்தை மேற்பார்வை செய்வதற்குக் கரவந்தபுரத்து அரசாங்கப் பிரதிநிதிகளாகக் 'காவிதி'ப் பட்டம் பெற்ற அதிகாரி ஒருவரும், 'ஏனாதி'ப் பட்டம் பெற்ற கருமத்தலைவர் ஒருவரும், 'எட்டி'ப் பட்டம் பெற்ற வணிகர் ஒருவரும் கொற்கையில் தங்கியிருந்தார்கள். பாண்டிய மன்னர்கள் இளவரசர்களாக இருக்கும் காலத்தில் வந்து தங்கியிருப்பதற்காகப் பழங்காலத்தில் கட்டப்பட்ட அரசு மாளிகை ஒன்று கொற்கையில் உண்டு. அது கடல் துறையிலிருந்து சிறிது தொலைவு தள்ளி இருந்தது.
முத்துச் சலாபத்தை மேற்பார்வையிடக் கொற்கையில் இருந்த அரசாங்கப் பிரதிநிதிகள் மூவரும் அந்த அரச மாளிகையில் தான் தங்கியிருந்தனர்.
காலையில் விழாவுக்காக வந்து கூடியிருந்த கூட்டம் இப்போது இல்லை. அரசன் புனலாட்டு விழாவுக்காகப் பொதிய மலைச் சாரலுக்குத் திரும்பியதும் கூட்டமும் கலைந்திருந்தது. ஆனாலும் அதனாற் கொற்கைத் துறையின் கலகலப்புக் குறைந்து விடவில்லை. ஈழம், கடாரம், புட்பகம், சாவகம், சீனம், யவனம் முதலிய பலநாட்டு வாணிகர்களும், கப்பல்களும் நிறைந்திருக்கும் போது கொற்கைத் துறையின் ஆரவாரத்துக்கு எப்படிக் குறைவு வரும்?
பேரரசன் மறைந்த பின், குறும்பு செய்யத் தலையெடுக்கும் சிறு பகைவர்களைப் போல் கதிரவன் ஒளியிழந்த வானில் விண்மீன்கள் மினுக்கின. சுற்றுப்புறம் இருண்டது. மணற்பரப்பில் தெரிந்த வெண்மையான கூடாரங்களின் தீபங்கள் ஒளிபரப்பத் தொடங்கும் நேரம். கப்பல்களைக் கரையோரமாக இழுத்து நங்கூரம் பாய்ச்சுவோர் அலுப்புத் தெரியாமல் இருப்பதற்காக ஒருவகைப் பாட்டுப் பாடுவார்கள். துறைமுகப் பகுதியில் அந்தப் பாட்டொலி எப்போதும் ஒலித்த வண்ணம் இருக்கும். அது கூட அடங்கிவிட்டது. துறைப் பக்கமாகச் சிறு கோபுரம் போல் உயர்ந்திருந்த கலங்கரை உச்சியில் தீ கொழுந்து விட்டுக் காற்றில் எரிந்து கொண்டிருந்தது. வரிசையாக நின்ற பாய்மரக் கப்பல்களில் காற்று உரசும் போது ஒருவகை அழுத்தமான ஓசை உண்டாயிற்று. மற்றபடித் துறையின் ஆரவாரத்தை இரவின் அமைதி குறைத்து விட்டிருந்தது!
ஆனால் வணிகர்களின் கூடாரங்கள் இருந்த பகுதிகளில் இதற்கு நேர்மாறாகப் பாட்டும், கூத்துமாய் ஆரவாரம் அதிகரித்திருந்தது. நீண்ட தொலைவு பயணம் செய்து வியாபாரத்துக்காக வந்து தங்கியுள்ள இடத்திலும் தங்கள் இன்பப் பொழுதுபோக்குகளை, அவர்கள் விட்டுக் கொடுக்கத் தயாராயில்லை. அவர்களுடைய கூடாரங்களிலெல்லாம் விளக்கொளி இரவைப் பகலாக்கியது. பூக்களின் நறுமணமும் அகிற்புகையின் வாசனையும், யாழிசையும், நாட்டியக் கணிகையரின் பாதச் சிலம்பொலியும், மனத்தை முறுக்கேற்றித் துள்ள வைக்கும் பாடல்களும் காற்று வழியாகக் கலந்து வந்து கொண்டிருந்தது. எங்கும் எதற்காகவும் தங்கள் சுகபோகங்களைக் குறைத்துக் கொள்ளாத அளவுக்கு வளமும் வசதியுமுள்ள துறையில் பணிபுரிவோர் வசிக்கும் மற்றோர் பகுதி இருளில் மூழ்கியிருந்தது. இவை தவிர முத்துக்குளி விழாவைக் காணவந்து, மறுநாள் காலை ஊருக்குத் திரும்பிக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் அன்றிரவு அங்கேயே தங்கிவிட்ட மக்களும் இருந்தனர். அவர்களும் கூடாரங்கள் அமைத்தே தங்கியிருந்தனர்.
அந்த மாதிரிச் சாதாரண மனிதர்கள் தங்கியிருந்த கூடாரங்கள் ஒன்றிலிருந்து நமக்கு முன்பே பழக்கமானவர்களின் பேச்சுக் கேட்கிறது. ஒன்று, அடங்கிய ஆண் குரல்; மற்றொன்று துடுக்குத்தனம் நிறைந்த பெண் குரல். 'யார் இவர்கள்?' என்று அருகில் நெருங்கிப் பார்த்ததும் வியப்படைகிறோம்.
அந்த ஆடம்பரமற்ற எளிமையான சிறிய கூடாரத்தின் உட்புறம் அகல் விளக்கின் மங்கலான வெளிச்சத்தில் நமக்கு முன்பே பழக்கமான முன்சிறை அறக்கோட்டத்து மணியக்காரன் அண்டராதித்த வைணவனையும், அவன் மனைவி கோதையையும் காண்கின்றோம். அந்த வேடிக்கைத் தம்பதிகள் வழக்கம் போல் உலகத்தையே மறந்து நகைச்சுவை உரையாடலில் மூழ்கியிருக்கின்றனர்.
"உன்னுடைய ஆவல் நிறைவேறிவிட்டதா? முத்துக்குளி விழாப் பார்க்க வேண்டுமென்று மூன்று ஆண்டுகளாக உயிரை வாங்கிக் கொண்டிருந்தாய். கொண்டு வந்து காண்பித்தாகி விட்டது; இனி நான் நிம்மதியாயிருக்கலாம்."
"அதுதான் இல்லை; நாளைக் காலையில் நாம் இங்கிருந்து புறப்படுவதற்கு முன்னால் நீங்கள் எனக்கு ஒரு முத்து மாலையை வாங்கித் தர வேண்டும். இவ்வளவு பிரமாதமான முத்துக்களெல்லாம் விளைகின்ற கொற்கைக்கு வந்து விட்டு வெறுங் கையோடு போவது நன்றாயிருக்காது!" கோதை இதைக் கூறிவிட்டு மெதுவாக நகைத்தாள்.
"அதெல்லாம் மூச்சு விடக்கூடாது. பொழுது விடிந்ததும் ஊருக்குக் கிளம்பி விட வேண்டும். இரண்டு பேருமே இங்கு வந்துவிட்டோம். அறக்கோட்டத்தில் ஆள் இல்லை. நாட்டு நிலைமையும் பலவிதமாகக் கலவரமுற்றிருக்கிறது."
"முத்து மாலை வாங்கிக் கொள்ளாமல் ஓர் அடி கூட இங்கிருந்து நான் நகர மாட்டேன். முத்து விளையும் கொற்கைக்கு வந்து விட்டு முத்து வாங்காமற் போனால் மிகவும் பாவமாம்?"
"அடடே! அப்படிக்கூட ஒரு சாஸ்திரம் இருக்கிறதா? எனக்கு இதுவரையில் தெரியாதே?"
கோதை அண்டராதித்தனுக்கு முகத்தைக் கோணிக் கொண்டு அழகு காட்டிவிட்டுச் சிரித்தாள்.
"பெண்ணே! நீ சிரிக்கிறாய், அழகு காட்டுகிறாய்; முத்து மாலை வாங்கிக் கொடு, வைரமாலை வாங்கிக் கொடு என்று பிடிவாதம் செய்கிறாய்; நான் ஓர் ஏழை மணியக்காரன் என்பதை நீ மறந்து விட்டாய் போலிருக்கிறது."
"ஆகா! இந்தப் பசப்பு வார்த்தைகளுக்கு ஒன்றும் குறைவில்லை. உங்கள் உடன் பிறந்த தம்பி இந்த நாட்டு மகாமண்டலேசுவரருக்கு வலது கை போன்றவர். அவர் மனம் வைத்தால் எதை எதையோ செய்ய முடிகிறது. உங்களை இந்த அறக்கோட்டத்து மணியக்காரர் பதவியிலிருந்து வேறு பதவிக்கு உயர்த்த மட்டும் அவருக்கு மனம் வரவில்லை."
"அவன் என்ன செய்வான்? அவனுக்கு எத்தனையோ அரசாங்கக் கவலைகள். அவனுக்கு இருக்கிற நேரத்தில் அவன் மகாமண்டலேசுவரருக்கு நல்ல பிள்ளையானால் போதும்."
"விநாடிக்கு ஒரு தரம் தம்பியின் பெயரைச் சொல்லிப் பெருமை அடித்துக் கொள்வதில் ஒன்றும் குறைவில்லை."
"இதற்காக அதை நான் விட்டு விட முடியுமோ, கோதை?" அவள் கையைப் பற்றிக் கெஞ்சும் பாவனையில் சமாதானத்துக்குக் கொண்டு வர முயன்றான் அண்டராதித்த வைணவன்.
அதே சமயம் முத்துச் சலாபம் இருந்தப் பகுதியிலிருந்து பெருங் கூப்பாடு எழுந்தது. கோதையும், வைணவனும், பதற்றமடைந்து என்னவென்று அறிந்து கொள்ளும் ஆவலுடன் கூடாரத்துக்கு வெளியே வந்து பார்த்தார்கள். சலாபத்தைச் சுற்றிலும் இருந்த கூடாரங்கள் தீப்பற்றிப் பெரிதாக எரிந்து கொண்டிருந்தன. மணற்பரப்பில் குதிரைகள் பாய்ந்து வரும் ஓசையும், வாளோடு வாள் மோதும் ஒலிகளும், ஓலங்களும், கடல் அலைகளின் ஓசையும் உடன் சேர்ந்து கொண்டதனால் ஒன்றும் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியவில்லை. யார் யாரோ திடுதிடுவென்று இருளில் ஓடினார்கள், போனார்கள், வந்தார்கள்.
"ஏதோ பெரிய கலவரம் நடக்கிறாற் போலிருக்கிறது" என்றான் வைணவன்.
"கூடாரத்துக்குள் வாருங்கள், விளக்கை அணைத்து விட்டுப் படுத்துக் கொள்ளலாம்" என்றாள் கோதை.
அவர்கள் கூடாரத்துக்குள் திரும்ப இருந்த போது அந்தப் பக்கமாக யாரோ ஓர் ஆள் தீப்பந்தத்தோடு விழுந்தடித்துக் கொண்டு ஓடி வருவது தெரிந்தது. பின்னால் கூட்டமாகச் சிலர் அப்படி ஓடி வந்த ஆளைத் துரத்திக் கொண்டு வந்தார்கள். ஓடி வந்தவன் எப்படியாவது தப்பினால் போதுமென்ற எண்ணத்துடன் தலைதெறிக்க ஓடி வந்து கொண்டிருந்தான். அவன் கோதையும், வைணவனும் நின்று கொண்டிருந்த பக்கமாக வந்த போது அவ்விருவரும் அவனுடைய முகத்தைத் தீவட்டி வெளிச்சத்தில் ஒரு கணம் நன்றாகப் பார்க்க முடிந்தது.
"ஐயோ! இந்தப் பாதகனா?" என்ற வார்த்தைகள் கோதையின் வாயிலிருந்து மெதுவாக ஒலித்தன. வைணவனுக்கும் அவன் இன்னாரென்று புரிந்து விட்டது. உடல் ஒரு விநாடி மெதுவாக நடுங்கியது. புல்லரித்து ஓய்ந்தது. "கோதை! உள்ளே வந்துவிடு. துரத்திக் கொண்டு வருகிறவர்கள் நம்மைப் பிடித்துக் கொண்டு எதையாவது விசாரித்துத் தொந்தரவு செய்யப் போகிறார்கள்" என்று அவள் கையைப் பற்றி பரபரவென்று இழுத்துக் கொண்டு கூடாரத்துக்குள் போய்விட்டான். உள்ளே எரிந்து கொண்டிருந்த விளக்கையும் அணைத்து விட்டான். ஓடிவந்தவன் வேறு யாரும் இல்லை. முன்பொரு நாள் முன்சிறை அறக்கோட்டத்தில் நடு இரவில் வந்து தங்க இடம் கேட்டு வம்பு செய்த மூன்று முரட்டு ஆட்களில் ஒருவன் தான் அவன்.
என்ன நடந்தது? அவனை ஏன் துரத்திக் கொண்டு வருகிறார்கள்? சலாபத்துக்கு அருகில் கூடாரங்கள் ஏன் தீப்பற்றி எரிகின்றன? - இவற்றையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆசையும், தெரிந்து கொள்ள முடியாத சூழ்நிலையுமாகக் குழம்பிக் கலவரமுற்ற மனநிலையோடு விடிகிற வரை அந்தக் கூடாரத்து இருளிலேயே அடைபட்டுக் கிடந்தனர் அவர்கள் இருவரும்.
இரவின் நீண்ட யாமங்கள் எப்படித்தான் ஒவ்வொன்றாக விரைவில் கழிந்தனவோ? பொழுது விடிந்த போது போர் நடந்து முடிந்த களம் போல் எல்லா ஒலிகளையும் விழுங்கித் தனதாக்கிக் கொள்ளும் ஒரு நீண்ட மௌனம் அந்தப் பிரதேசத்தில் சூழ்ந்திருந்தது.
அண்டராதித்தனும் கோதையும் எழுந்திருந்து ஊருக்குப் புறப்படத் தயாரானார்கள். புறப்படுவதற்கு முன் முத்துச் சலாபமும், துறையின் பிரதான வீதிகளும், சிப்பிகளைக் குவித்து வீரர்கள் காத்து நிற்கும் சிப்பிக் கிடங்குகளும் இருந்த பகுதியில் போய்ப் பார்த்தனர்.
அந்தப் பகுதியில் கூடாரங்கள் எரிந்து சின்னாபின்னமாகிக் கிடந்தன. ஆள் நடமாட்டம் இல்லாமல் களையின்றி ஒளியின்றி இருந்தது அப்பகுதி. கடைகளெல்லாம் மூடி அடைக்கப் பெற்றிருந்தன. கிடங்குகளில் பத்திரமாகக் குவிக்கப்பட்டிருந்த சிப்பிகள் மணற்பரப்பில் தாறுமாறாகச் சிதறிக் கிடந்தன. சில குவியல்களைக் காணவே இல்லை. நெடுந்தொலைவிலிருந்து வந்திருந்த வியாபாரிகள் பயத்துடனும், பதற்றத்துடனும் அவசர அவசரமாகக் கப்பலேறிக் கொண்டிருந்தார்கள். முதல் நாள் இரவில் பாட்டும் கூத்துமாக அவர்கள் கூடாரங்கள் இருந்த இடத்தில் இப்போது வெறும் மணற்பரப்புத்தான் இருந்தது. கரவந்தபுரத்து வீரர்கள் சிலரும் முத்துக்குளிப்பைத் தொடர்ந்து மேற்பார்வை செய்து நிர்வகிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த அரசாங்கப் பிரதிநிதிகள் மூவரும் சலாபத்துக்கருகே அழிவு நடந்த இடங்களையும் சிப்பிக் கிடங்குகளையும் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் முகங்களில் கவலை தேங்கியிருந்தது. அங்கே யாரிடமாவது இரவு நிகழ்ந்த குழப்பத்தைப் பற்றி விசாரிக்க வேண்டுமென்று கோதைக்கும் அண்டராதித்தனுக்கும் ஆசை துறுதுறுத்தது.
"பார்த்தீர்களா? இதைக் காணும் போது அந்த முரடனும் அவனைச் சேர்ந்தவர்களும் செய்த வேலைதானென்றும் தோன்றுகிறது" என்றாள் கோதை.
"பேசாமல் இரு! நமக்கு எதற்கு இந்த வம்பெல்லாம்? நிலைமை சரியில்லை, ஊருக்குப் போய்ச் சேருவோம்" என்று அவள் வாயை அடக்கி அழைத்துக் கொண்டு புறப்பட்டான் அண்டராதித்தன். சுகமாக முன்சிறைக்குப் போய்ச் சேருவதற்குள் இடைவழியில் கலவரங்கள், பூசல்களில் மாட்டிக் கொள்ளாமல் போய்ச் சேரவேண்டுமே என்று நினைத்துப் பயப்படுகிற அளவுக்கு குழம்பியிருந்தன, புறப்படும் போது அவர்கள் மனங்கள்.
மறப்போர் பாண்டியர் அறத்தினால் காத்து வந்த கொற்கைப் பெருந்துறையில் மறம் நிகழ்ந்து விட்டது. அலைகள் சங்குகளை ஒதுக்கிக் கரை சேர்த்து விளையாடும் துறையில் அநியாயம் நடந்து விட்டது. கடல் ஓலமிடுதல் தவிர மனிதர் ஓலமிட்டறியாத கொற்கையில் மனிதர் ஓலமிடும் கலவரமும் நடந்து விட்டது.
-----------
2.3. நெருங்கி வரும் நெடும் போர்
அடுத்தடுத்து வந்த பயங்கரச் செய்திகளைக் கேள்விப்பட்டுப் பெரும்பெயர்ச்சாத்தன் பதறிப் போனான். நிலைமையை விவரித்து எழுதிய திருமுகத்துடன் அப்போதுதான் தூதனுப்பியிருந்தான். தூதுவன் புறப்பட்டுப் போன சிறிது நேரத்திற்குள் கொற்கையிலிருந்து அந்தப் புதிய செய்தி வந்தது.
"இரவில் ஆயுதபாணிகளான முரட்டு வீரர்கள் சிலர் தீப்பந்தங்களோடு கூட்டமாக வந்தார்கள். முத்துச் சலாபத்துக்கு அண்மையிலிருந்த கூடாரங்களுக்குத் தீ வைத்துவிட்டுக் காவலுக்கு இருந்த நம் வீரர்களோடு போரிட்டனர். குவித்து வைக்கப்பட்டிருந்த சிப்பிக் குவியல்கள் சூறையாடப்பட்டு விட்டன. அந்த முரட்டுக் கூட்டத்தில் யாருமே அகப்படவில்லை. சிலரைத் துரத்திப் பிடிக்க முயன்றும் முடியாமல் போய்விட்டது." கொற்கையிலிருந்து செய்து கொண்டு வந்த ஆள் இப்படிக் கூறிய போது பெரும்பெயர்ச்சாத்தன் திகைத்துப் போய் விட்டான்.
"தொடர்ந்து முத்துக்குளிப்பு நடைபெறுகிறதோ, இல்லையோ?"
"இல்லை! தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. முத்து வாணிபத்துக்காக நெடுந்தொலைவிலிருந்து கடல் கடந்து வந்திருந்த வணிகர்களெல்லாம் பயந்து போய்த் திரும்பிச் சென்று விட்டனர்."
"என்ன ஆனாலும் முத்துக்குளிப்போ, சலாபத்து வேலைகளோ தடைப்பட்டு நிற்கக்கூடாது. நம்மைப் பலவீனப்படுத்த விரும்புகிறவர்களுக்கு முன் நாம் பலவீனமடைவது போல் காட்டிக் கொள்வது நல்லதல்ல. இந்தத் திருமுகம் கொண்டு வரும் தூதனோடு பொறுக்கி எடுத்த வீரர்களாக நூறு பேர் அனுப்பியிருக்கிறேன். இவர்களைக் காவலுக்கு வைத்துக் கொண்டு தொடர்ந்து முத்துக் குளிப்பை நடத்துங்கள். மற்ற ஏற்பாடுகளை இங்கே நான் கவனித்துக் கொள்கிறேன்" என்று முக்கியமான ஆள் வசம் ஓர் ஓலையையும் நூறு வீரர்களையும் ஒப்படைத்து உடனே கொற்கைக்கு அனுப்பினான் பெரும்பெயர்ச்சாத்தன்.
பயமும், திகைப்பும், மேலும் மேலும் திடுக்கிடும் செய்திகளும் அவனைக் கவலைக்குள்ளாக்கிக் கொண்டிருந்தாலும் தன்னைப் பொறுத்தவரையில் உறுதியாக இருந்து காரியங்களைச் செய்து வரவேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டிருந்தான் அவன்.
வடக்கு எல்லைப் பகுதியில் பலமான காவல் ஏற்பாடுகளைச் செய்திருந்த போதிலும் அங்கிருந்தும் சில கலவரச் செய்திகள் காதுக்கு எட்டிக் கொண்டு தான் இருந்தன. எல்லை முடியும் இடத்தில் நடப்பட்டிருந்த கொழுக்குத்துக் கற்கள் (எல்லை பிரியும் இடத்தை விளக்கும் அடையாளக் கற்கள்) இரவோடு இரவாகப் பிடுங்கி எறிந்து உடைக்கப் பட்டிருந்தனவாம்.
தன்னால் முடிந்த காவல் ஏற்பாடுகளைச் செய்துவிட்டு அரண்மனைக்குச் செய்தி கொண்டு போன மானகவசன் திரும்ப வருவதை எதிர்பார்த்திருந்தான் பெரும்பெயர்ச்சாத்தன். ஏற்கெனவே சந்தேகத்தின் பேரில் சிறைபிடிக்கப்பட்டிருந்த வடதிசை ஒற்றர்கள் சிலரைப் பயமுறுத்தியும், துன்புறுத்தியும் அவர்களிடமிருந்து ஒரு சில உண்மைகளை அறிய முடிந்திருந்தது.
படையெடுக்க முனைந்திருப்பவர்களை யார் யாரென்றும், அவர்களுடைய நோக்கங்கள் என்னென்னவென்றும் பெரும்பெயர்ச்சாத்தன் ஒருவாறு தெரிந்து கொண்டிருந்தான். அரண்மனைக்கு அனுப்பிய திருமுகத்திலும் அதைக் குறிப்பிட்டிருந்தான். கரவந்தபுரத்துக் கோட்டை சிறந்த பாதுகாவல் அமைப்புக்களைக் கொண்டது. பராந்தக பாண்டியரும், பெரும்பெயர்ச்சாத்தனின் தந்தை உக்கிரனும் அவர்கள் காலத்தில் வடக்கு எல்லைப் பாதுகாப்பையும் வேறு சில வசதிகளையும் எண்ணித் திட்டமிட்டு உருவாக்கிய கோட்டை அது. ஆழமான அகன்ற அகழி. எந்திரப் பொறிகளும் தந்திரச் செயல்களும் மிக்க உயரமான மதிற்சுவர். சிலப்பதிகாரத்து மதுரைக் கோட்டையை மனத்தில் கொண்டு கட்டப்பட்டிருந்தது கரவந்தபுரத்துக் கோட்டை. கோட்டைக் கதவுகளை அடைத்து, முட்டுக் கொடுப்பதற்கு மூன்று பெரிய கணைய மரங்கள் தேவையென்றால் அதன் பெருமையை வேறு எப்படிக் கூற முடியும்? இப்படியெல்லாம் இருந்தும் பாதுகாப்புக்காக மேலும் கவலை எடுத்துக் கொண்டான் அந்தக் கோட்டையின் சிற்றரசன். மகாமண்டலேசுவரரிடமிருந்தும் மகாராணியிடமிருந்தும் மறுமொழி கிடைப்பதற்கு முன்னால் தன்னால் ஆனவற்றையெல்லாம் தயங்காமல், மயங்காமல் செய்ய வேண்டுமென்ற துடிதுடிப்பு அவனுக்கு இருந்தது.
அன்று மாலைக்குள் மானகவசன் மறுமொழி ஓலையோடு திரும்பி விடுவான் என்று அவன் ஒவ்வொரு விநாடியும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் மானகவசன் அன்று மாலை மட்டுமல்ல மறுநாள் காலை வரையில் வரவே இல்லை. வேறு சில செய்திகள் பராபரியாக அவனுக்குத் தெரிந்தன.
கன்னியாகுமரிக் கோவிலில் யாரோ மகாராணியார் மேல் வேல் எறிந்து கொல்ல முயன்ற செய்தியைக் கேட்ட போதே அவன் மிகவும் கலங்கினான். அதன்பின் கூற்றத் தலைவர்கள் அரண்மனையில் ஒன்று கூடித் தென்பாண்டி நாட்டின் எதிர்காலம் பற்றி விவாதிக்கப் போவதும் அவனுக்குத் தெரிந்திருந்தது. ஆனால், 'இடையாற்று மங்கலம் மாளிகையில் அந்நியர் அடிச்சுவடு படமுடியாத பாதுகாப்பான இடத்திலிருந்து பாண்டிய மரபின் சுந்தர முடியும், வீர வாளும், பொற் சிம்மாசனமும் கொள்ளை போய்விட்டன' - என்ற புதுச்செய்தியை அறிந்த போது அவன் அடைந்த அதிர்ச்சி அவன் வாழ்நாளிலேயே பேரதிர்ச்சி.
'அடாடா! வலிமையான தலைமையற்றிருக்கும் இந்த நாட்டுக்குத்தான் ஒரே சமயத்தில் எத்தனை சோதனைகள்? பட்டகாலிலேயே படும் கெட்ட குடியே கெடும் என்பது போல் அடுத்தடுத்து வரும் இந்தத் துன்பங்களையெல்லாம் மகாராணியார் எப்படித்தான் தாங்கிக் கொள்ளப் போகிறாரோ? கணவனை இழந்த கைம்மை நிலை, குமாரபாண்டியர் காணாமற் போன துயரம், பகைவர்களின் பலம் வாய்ந்த தொல்லைகள், அரசுரிமைப் பொருள்கள் கொள்ளை போன அவலம். ஐயோ இந்தச் சமயத்திலா நான் போர்ச் செய்தியை பற்றிய திருமுகத்தைக் கொடுத்தனுப்ப வேண்டும்? இதை வேறு கேள்விப்பட்டால் அவர்கள் மனம் எவ்வளவு வேதனைப்படும்? தெய்வத்துக்குச் சமமான மகாராணியாரின் நெஞ்சம் இந்நாட்டையும், தம் புதல்வனையும், எதிர்கால ஆட்சியையும் பற்றி எத்தனை எத்தனை உயர்ந்த எண்ணங்களை எண்ணிக் கொண்டிருக்கின்றது? ஐயோ! ஊழ்வினையே! எங்கள் மகாராணி 'பாண்டிமாதேவி'யின் எண்ணங்களுக்கு நீ என்ன முடிவு வகுத்து வைத்திருக்கிறாயோ?'
இவ்வாறு எண்ணி நெடுமூச்செறிந்த பெரும்பெயர்ச்சாத்தனின் மனக்கண்களுக்கு முன்னால் ஒரு கணம் பாண்டிமாதேவியின் சாந்தம் தவழும் தெய்விக முகமண்டலம் தோன்றி மறைந்தது. ஏனோ, மகாராணி பாண்டிமாதேவியின் திருமுகம் தோன்றிய மறுகணமே அதை ஒட்டித் தோன்றினாற் போல், மணத்தை நுகர்ந்த அளவில் பூவின் உருவை மனம் உரு வெளியில் கற்பித்துக் காண முயலுமே, அப்படிப்பட்ட ஓர் இயல்பு அது.
பெரும்பெயர்ச்சாத்தன் அவன் தந்தையைப் போலவே அஞ்சா நெஞ்சம் படைத்த வீரன். அவன் தந்தை உக்கிரன் மகாமன்னரான பராந்தக பாண்டியரையே பல முறைகள் எதிர்த்துப் போரிட்டு அதன் பின்னே அவருக்குப் பணிந்து நண்பனானான். அத்தகைய திடமான வீரப் பரம்பரையில் பிறந்திருந்தும் நல்லவர்களுக்கு வரும் துன்பங்களைக் காணும் போது அவன் மனம் நெகிழ்ந்து விடுகிறது.
ஒருபுறம் நாட்டின் சூழ்நிலைகளைப் பற்றிய தவிப்பு. மறுபுறம் தூது போன மானகவசன் இன்னும் ஏன் திரும்பி வரவில்லை என்ற கவலை. இரண்டும் பெரும்பெயர்ச்சாத்தனைப் பற்றிக் கொண்டு அவன் அமைதியைக் குலைத்தன.
'எதற்கும் இன்னொரு தூதனை அனுப்பிவிட்டால் நல்லது. காரியம் பெரிது. மெத்தனமாக இருந்து விடக்கூடாது. மானகவசன் போய்ச் சேர்ந்தானோ, போகவில்லையோ?' என்று நினைத்துப் பார்க்குங்கால் பற்பல விதமான ஐயப்பாடுகள் அவனுக்கு உண்டாயின. உடனே மற்றொரு தூதனிடம் கொற்கையில் நடந்த குழப்பம், வட எல்லையில் கொழுக்குத்துக் கற்கள் உடைபட்ட விவரம் எல்லாவற்றையும் விவரித்து மற்றொரு திருமுகத்தை எழுதிக் கொடுத்து அனுப்பினான். அப்புறமும் பெயர்ச்சாத்தனின் மனத்தில் நிம்மதி ஏற்படவில்லை. எண்ணங்களிலிருந்து விடுபட்டுச் சிந்தனைகளைத் தவிர்க்க முயன்றாலும் மறுபடியும் அவன் மனம் வலுவில் சிந்தனைகளிலேயே போய் ஆழ்ந்தது.
கொற்கையில் புகுந்து குழப்பம் செய்தது போல் இடையாற்று மங்கலத்தில் நடந்த கொள்ளைக்கும் எதிரிகள் தான் காரணமோ என்று நினைத்தது அவன் மனம். 'இவ்வளவெல்லாம் இங்கே குழப்பங்கள், சூழ்ச்சிகள் நடக்கின்றன. குமாரபாண்டியர் எங்கிருந்தால் தான் என்ன? ஏதாவது ஒரு குறிப்புக் கூடவா அவர் காதுக்கு எட்டாமல் இருக்கும்? தளபதி வல்லாளதேவனின் படைத்திறனும், இடையாற்று மங்கலம் நம்பியின் இணையற்ற சாமர்த்தியமும் எங்கே போய்விட்டன?'
மகாமண்டலேசுவரரை அவன் என்றும் புரிந்து கொள்ள முடிந்ததில்லை. புரிந்து கொள்கிற அளவுக்கு அவனை அவர் நெருங்க விட்டதும் இல்லை. சாமர்த்தியமே உருவான ஒரு பெரும் புதிர் என்று அவரைப் பற்றி அவன் முடிவு செய்து வைத்திருந்தான். தளபதி வல்லாளதேவன் கடமையில் கருத்துள்ளவன். சிறிது உணர்ச்சித் துடிப்பு மிகுந்தவன் என்பதும் அவன் அறிந்த விவரமே. மகாராணியாரையும், குமாரபாண்டியரையும் பொறுத்தமட்டில் அவனுக்கு ஒரே விதமான எண்ணம்தான். 'வணக்கத்துக்குரியவர்கள். அன்பும், அனுதாபமும் செலுத்தத் தக்கவர்கள்'... தன் உயிரின் இறுதித் துடிப்பு வரை அந்தப் பேரரசின் வாழ்வுக்குக் கட்டுப்பட்டு உதவ வேண்டுமென்ற அவன் எண்ணத்தை ஊழி பெயரினும் மாற்ற இயலாது. இல்லையானால் அவனைத் தங்களுடையவனாக்கிக் கொள்ள வடதிசை அரசர் பலமுறைகள் முயன்றும் அவன் மறுத்திருக்க மாட்டான்.
மனத்தின் தெளிவற்ற நிலையைச் சரி செய்து கொள்வதற்கு எங்கேயாவது திறந்த வெளியில் காற்றுப் படும்படி உலாவ வேண்டும் போலிருந்தது.
"மானகவசனோ, வேறு ஆட்களோ வந்தால் என்னிடம் அனுப்புங்கள்" என்று அங்கிருந்தவர்களிடம் சொல்லிவிட்டு மேல் மாடத்துத் திறந்த வெளி முற்றத்துக்குச் சென்றான் அவன்.
மேல் மாடத்தில் அந்த மலைக்காற்று சிலுசிலுவென்று வீசியது. 'காலத்தால் அழிக்க முடியாத பேருண்மை நான்' என்று கூறுவது போல் வடமேற்கே பொதியமலை பரந்து கிடந்தது. ஆகாயப் பெருங்குடையை அணைய முயலும் அந்த எழில் நீலப் பேரெழுச்சியை - காலத்தை வென்று கொண்டு நிற்கும் கல்லின் எழுச்சியைத் திறந்த வெளியிடையே பார்க்கும் போது நம்பிக்கை பிறப்பது போல் இருந்தது பெரும்பெயர்ச்சாத்தனுக்கு. 'தன் பக்கத்தில் வடக்கு எல்லையில் போர் நெருங்கி வந்து கொண்டிருக்கிறதே' என்பதைப் பற்றி இந்த மலைக்குச் சிறிதும் வாட்டமிருப்பதாகத் தெரியவில்லையே என்று வேடிக்கையாக நினைத்தான். மேல் மாடத்துப் படிகளில் யாரோ வேகமாக ஏறிவரும் காலடியோசை கேட்டது. அவன் திரும்பிப் பார்த்தான். ஒரு சாதாரண வீரன் வந்து வணங்கி நின்றான்.
"என்ன?"
"தூதன் மானகவசன் திரும்பி வந்திருக்கிறான்... ஆனால்..." வந்த வீரன் பதில் சொல்வதற்குத் தயங்குவது போல் தெரிந்தது.
----------
2.4. கோட்டாற்றுக் குணவீர பண்டிதர்
இடையாற்று மங்கலத்தில் கொள்ளை போன செய்தியையும், கரவந்தபுரத்திலிருந்து வந்த போர்ச் செய்தியையும் மகாமண்டலேசுவரர் எவ்வளவுக்கெவ்வளவு இரகசியமாகப் பாதுகாக்க வேண்டுமென்று கருதினாரோ, அவ்வளவுக்கு அவர் நினைக்குமுன்பே அவை பொதுவாக வெளியில் பரவி விட்டிருந்தன. இடையாற்று மங்கலத்திலிருந்து அம்பலவன் வேளானும், கரவந்தபுரத்திலிருந்து மானகவசனும் செய்திகளை அரண்மனைக்குள் கொண்டு வந்த பின்பே அவற்றைப் பாதுகாக்க வேண்டுமென்ற அக்கறை அவருக்கு உண்டாயிற்று. ஆனால் அந்தச் செய்திகள் அரண்மனை எல்லைக்குள் வந்து சேருவதற்கு முன்பே வெளியில் பரவி விட்டன என்பதை அவர் உணரவில்லை.
இடையாற்று மங்கலத்து நிகழ்ச்சி மறுநாள் பொழுது புலரும் போது சுற்றுப் புறங்களுக்கு எட்டிவிட்டது. போர் வரப்போகிறது என்ற செய்தியைச் சூழ்நிலை இருக்கிற விதத்தால் மக்களே அனுமானித்துக் கொள்ள முடிந்தது. ஆகவே செய்திகளை வெளியில் தெரியாமல் ஒடுக்கி வைக்க வேண்டுமென்ற ஏற்பாடு அவர் புரிந்து கொள்ள முடியாதபடி அவருக்குப் பெருத்த ஏமாற்றத்தை அளித்துவிட்டது.
'அரசுரிமைப் பொருள்கள் கொள்ளை போய்விட்டன' - என்ற செய்தியை அடுத்து - வசந்த மண்டபத்து துறவியைக் காணவில்லை என்று அம்பலவன் வேளான் கூறுவான் என்று அவர் கனவிலும் எதிர்பார்க்கவில்லை. குமாரபாண்டியர் தன்னிடமே இரகசியமாகத் தங்கியிருப்பதாகவும் உடனே அவரை அரண்மனைக்கு அழைத்து வருவதாகவும் மகாராணியார் முன்னிலையில் அவர் ஒப்புக் கொண்டிருந்தார். நாளை நடக்கப் போவதை மட்டுமல்ல, நாற்பது ஆண்டுகளுக்குப் பின் என்ன நடக்க முடியும் என்று அனுமானிக்கிற அளவுக்கு அறிவும், சிந்தனையும், உள்ள அவரே இந்த இடத்தில் புள்ளி பிசகிவிட்டார். இடையாற்று மங்கலம் மகாமண்டலேசுவரருடைய கணக்குத் தப்புக் கணக்காகி விட்டது.
குமாரபாண்டியன் இராசசிம்மன் தன்னை மீறி எங்கும் எதற்கும் போகத் துணிவான் என்று அவர் நினைத்ததில்லை. அவன் மீறிச் செல்ல வழியின்றித் தம் அருமைப் புதல்வியையே துணை வைத்துவிட்டு வந்தார். எல்லோரையும் ஏமாற்றி விட்டுத் தனது முன்னோர் செல்வத்தையும் கிளப்பிக் கொண்டு போய்விட்டான் அவன். அவன் தான் அவற்றைக் கொண்டு போயிருக்க வேண்டும் என்பது கூட நடந்த நிகழ்ச்சிகளை ஒவ்வொன்றாக இணைத்துப் பார்த்து அவராக அனுமானித்துக் கொண்டது தான்.
இப்போது மகாராணியாருக்கு என்ன பதில் சொல்வதென்ற திகைப்பு அவருக்கு ஏற்பட்டது. எல்லோரையும் அனுப்பிவிட்டு அவர் மறுபடியும் மகாராணியாரைச் சந்திக்கச் சென்றார். மகாராணியும் அவரையே எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பது போல் அங்கேயே இருந்தார்.
"வாருங்கள்! நீங்கள் குமாரபாண்டியன் இராசசிம்மனைப் பற்றி நாம் தனிமையில் ஏதோ பேச வேண்டுமென்று கூறிவிட்டுப் போயிருந்தீர்கள். அதனால்தான் வேறு எங்கும் போகாமல் ஒவ்வொரு கணமும் உங்களை எதிர்பார்த்து இங்கேயே காத்துக் கொண்டிருக்கிறேன்."
மகாராணியின் வார்த்தைகளில் தம் புதல்வனைப் பற்றி அறியக் காத்திருக்கும் ஆவல் தொனித்தது.
இடையாற்று மங்கலம் நம்பி எதிரேயிருந்த இருக்கையில் அமர்ந்தார். நல்ல கண்ணாடியில் சிறிது புகை படிந்தாற் போல அவர் முகபாவம் ஒளி மங்கியிருந்தது. எதையோ நினைத்துப் பெருமூச்சு விட்டபின் மகாராணியாருக்கு மறுமொழி கூறத் தொடங்கினார்.
"தேவி! குமாரபாண்டியரை எந்தெந்த உயர்ந்த நோக்கங்களோடு இடையாற்று மங்கலத்தில் என்னிடம் மறைவாகக் கொண்டு வந்து தங்கச் செய்திருந்தேனோ, அவற்றுக்கு முற்றிலும் மாறாக அவர் நடந்து கொண்டு விட்டார்."
"அப்படி என்ன செய்தான் அவன்?"
"அதைத் தங்களிடம் மட்டும் தான் நான் சொல்ல முடியும். எல்லாருக்கும் தெரிந்தால் குமார பாண்டியருடைய பெருமையையே நாம் விட்டுக் கொடுத்தது போலாகிவிடும்."
"நீங்கள் சொல்வதைப் பார்த்தால் பெரிதாக ஏதோ செய்து விட்டான் போல் அல்லவா தோன்றுகிறது!"
"பெரிதுதான்! நேற்றிரவு நம்முடைய பாண்டிய மரபின் மாபெரும் அரசுரிமைச் சின்னங்கள் கொள்ளை போனதாக இப்போது செய்தி வந்ததே, அதைச் செய்தவர் இடையாற்று மங்கலத்தில் வந்து தங்கியிருந்த தங்கள் குமாரர் இராசசிம்மனேதான்."
"என்ன? இராசசிம்மனா அப்படிச் செய்தான்? இங்கிருந்து கொண்டே அவன் தான் அதைச் செய்தானென்று நீங்கள் எதைக் கொண்டு முடிவு செய்தீர்கள்?" மகாராணியின் முகத்தில் வியப்பும் கலவரமும் பதிந்தன.
"இன்று நாம் எல்லோரும் கூடியிருந்த இந்த இடத்தில் தான் இடையாற்று மங்கலத்துப் படகோட்டி வந்து அந்தச் செய்தியைச் சொன்னான். கொள்ளை போன செய்தியோடு வசந்த மண்டபத்திலிருந்த துறவியைக் காணவில்லை என்றும் அன்று பகலில் அவரை யாரோ தேடி வந்திருந்ததாகவும் அவன் கூறினான். நீங்கள் எல்லோரும் 'கொள்ளை போயிற்று' என்ற அளவிலேயே அதிர்ச்சியடைந்து அதையடுத்து அவன் கூறிய குறிப்புகளை ஊன்றிக் கவனிக்கவில்லை. வசந்த மண்டபத்தில் தங்கியிருந்த துறவிதான் தங்கள் புதல்வர் குமாரபாண்டியர் என்பதை முன்பே தங்களிடம் குறிப்பிட்டுள்ளேன்."
மகாராணி வானவன்மாதேவி எதுவும் சொல்லத் தோன்றாமல் அவருடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.
"தேவி! கொள்ளை போன செய்தி வேண்டுமானால் என் முன்னெச்சரிக்கையையும் மீறி எங்கும் பரவியிருக்கலாம். ஆனால் அதைச் செய்தவர் குமாரபாண்டியர் தான் என்பது இப்போதைக்கு என்னையும் தங்களையும் தவிர வேறு யாருக்கும் தெரிந்திருக்க முடியாது. ஒரு வேளை என்னுடைய அந்தரங்க ஒற்றனான நாராயணன் சேந்தனுக்கும் தளபதிக்கும் சிறிது சந்தேகம் இருக்கலாம். வெளிப்படையாக இன்னார் தான் என்று அவர்களுக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை."
"மகாமண்டலேசுவரரே! குமாரபாண்டியன் எந்த நோக்கத்தோடு இதைச் செய்தானோ? ஆனால் 'அவன் தான் இதைச் செய்தான்' என்ற இந்தச் செய்தி வெளியே பரவினால் பொது மக்கள் அவனைப் பற்றி என்னென்ன இழிவான பேச்சுக்களெல்லாமோ பேசி விடுவார்களே. செயலைக் கொண்டு மனிதனை அளக்கிறவர்களே எங்கும் நிறைந்துள்ள உலகம் இது. எண்ணங்களையும் மனப்போக்கையும் மதிப்பிட்டுப் பார்க்க மாட்டார்களே! இதுவும் என் போதாத காலந்தான்!" மகாராணியின் குரல் தழுதழுத்தது.
"தங்களுக்கு அந்தப் பயம் தேவையில்லை! குமாரபாண்டியரின் பெயருக்கு எந்த விதமான களங்கமும் ஏற்படாமல் கவனித்துக் கொள்ளும் பொறுப்பு என்னைச் சேர்ந்தது."
"மகாமண்டலேசுவரரே! உங்களுக்குத் தெரியாததில்லை. இவ்வளவு துன்பங்களையும், சோதனைகளையும் தாங்கிக் கொண்டு நான் வாழ்ந்து கொண்டிருப்பதெல்லாம் அவனை நம்பித்தான். மறுபடியும் அவன் முகத்தைப் பார்க்க வேண்டும். அவனை இந்த நாட்டின் அரசனாக உலாவச் செய்ய வேண்டும். என் மகன் காலத்தில் பாண்டிய அரச மரபு இருண்டு அழிந்தது என்ற பழமொழி எதிர்காலத்தில் வந்து விடக் கூடாதே என்பது தான் என் கவலை. ஐயோ! இந்தப் பிள்ளை இப்படி என்னென்னவோ செய்யத் தகாததைச் செய்துவிட்டு நெருங்கி வராமல் விலகி ஓடிக் கொண்டிருக்கிறானே?"
பேசிக் கொண்டே வந்த மகாராணி மெல்லிய விசும்பலோடு பேச்சை நிறுத்தினார். கண்களில் கண்ணீர் துளிர்த்து விட்டது. முகத்திலிருந்த கலவரத்தைப் பார்த்த போது வாய்விட்டு அழுதுவிடுவாரோ என்று மகாமண்டலேசுவரர் பயந்தார். அந்தப் பெருந்தேவி உள்ளங் குமுறி அழுத காட்சியைப் பராந்தக பாண்டியர் அமர பதவி அடைந்த போது ஒரு முறைதான் மகாமண்டலேசுவரர் பார்த்திருக்கிறார். "இந்த அரசப் பெருங்குலத்து அன்னையை எதிர்காலத்தில் இனி என்றும் அழ விடக் கூடாது" என்று அப்போது தம் பொறுப்புடன் எண்ணி வைத்திருந்தார் மகாமண்டலேசுவரர்.
"தேவி! இதென்ன? இப்படித் தாங்களே உணர்ச்சி வசப்படலாமா? யாருடைய கண்ணீரையும் எங்களால் பார்த்துக் கொண்டிருக்க முடியும்! ஆனால் மகாராணியாகிய தாங்களே கண்ணீர் சிந்தினால் என்ன செய்வது?"
"கண்ணீர் சிந்தாமல் வேறென்ன செய்வது? வடக்கு எல்லையில் 'போர் இதோ வந்து விட்டது' என்கிறார்கள். இராசசிம்மன் வருவான் என்று நம்பிக் கொண்டிருந்தேன். அவனோ தன்னோடு போகாமல் இந்த அரசுரிமைப் பொருள்களையும் எடுத்துக் கொண்டு அசட்டுத் தனமாக என்னென்னவோ செய்துவிட்டுப் போயிருக்கிறான். எனக்கு ஏது நிம்மதி? என் தாய் கன்னியாகுமரி அன்னையை அடிக்கடி வழிபட்டு என் துயரங்களை மறக்க முயலலாம் என்றால் நான் வெளியில் புறப்படுவதே என் உயிருக்கு ஆபத்தாக இருக்கிறது."
"கவலைகளையெல்லாம் என்னிடம் விட்டுவிடுங்கள்! அவற்றுக்காகவே நான் இருக்கிறேன். தங்களைப் போன்றவர்களுக்கு அதிகக் கவலைகள் இருந்தால் நிம்மதி இராது. என்னைப் போன்றவனுக்கு அதிகக் கவலைகள் சூழும் போதுதான் சிந்தனை நிம்மதியாகத் திட்டமிடும். உங்கள் மனம் குழம்பியிருக்கிறது. இப்போது உங்களுக்குத் தனிமை தேவை. நான் பின்பு வந்து சந்திக்கிறேன்."
மகாமண்டலேசுவரர் அங்கிருந்து புறப்பட்டு விட்டார். துயரம் குமுறிக் கொண்டு வரும்போது மிகவும் வேண்டிய மனிதர் எதிரில் இருந்தாலே அழவேண்டும் போலத் தோன்றும். அழுது தணித்துக் கொள்ளவும் துணிவு இருக்காது. தனிமையில் விட்டு விட்டால் ஒருவாறு தணியும் என்று கருதியே அவர் அங்கிருந்து சென்றார். அவர் சென்ற பின்பும் நெடுநேரமாக மகாராணி அமைதியாகக் கண்ணீர் வடித்தவாறு அதே இடத்தில் வீற்றிருந்தார். அமைதியோ, நிம்மதியோ ஏற்படுகிற வழியில்லை. கவலைகளை மறக்க, அல்லது மறைக்க ஏதாவது புதிய பேச்சு வேண்டியிருந்தது. கோட்டாற்றிலுள்ள சமணப் பள்ளியில் குணவீர பண்டிதர், கமலவாகன பண்டிதர் என்று இரண்டு சமணத் துறவிகள் இருந்தனர். அவர்கள் எப்போதாவது சில சந்தர்ப்பங்களில் மகாராணியாரைச் சந்திக்க வருவதுண்டு. வந்தால் நீண்ட நேரம் சமய சம்பந்தமான தத்துவங்களைப் பேசிவிட்டுப் போவார்கள். அவர்கள் வந்து பேசிவிட்டுச் சென்ற பின்பு அதைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் மனத்தில் அழுக்கைத் துடைத்து வாசனை பூசிய மாதிரி ஒரு சாந்தி, ஒரு நம்பிக்கை, வாழ்க்கை முழுவதும் நல்ல விளையாட்டு என்ற பயமற்ற ஒரு எண்ணம் ஏற்படும். இந்த மாதிரி நாநலம் படைத்தவர்கள் உலகில் அத்தி பூத்தாற் போலத்தான் அகப்படுவார்கள். வாழ்க்கையில் அவநம்பிக்கை ஏற்படும்படி பேசிவிட்டுச் செல்பவர்களே பெரும்பாலோர்.
பேச்சைப் பொறுத்தமட்டில் மகாராணிக்கு எடை போட்டுப் பார்த்த அனுபவம் உண்டு. இடையாற்று மங்கலம் நம்பி பேசி விட்டுப் போனால் கேட்டுக் கொண்டிருந்தவர் மனத்தில் அவரை எண்ணிப் பிரமிக்கும்படி செய்துவிட்டுப் போவார். தளபதி வல்லாளதேவன் வெடிப்பாகப் பேசி உணர்ச்சியூட்டுவான். அதங்கோட்டாசிரியர், பவழக்கனிவாயர் போன்ற பண்டிதர்கள் காரண காரிய ரீதியாக அழுத்தம் படப் பேசுவர். நாராயணன் சேந்தன் குதர்க்கமும் சிரிப்பும் உண்டாக்குவான்.
ஆனால் கோட்டாற்று சமணத் துறவியின் பேச்சு இவற்றோடு மாறுபட்டது. வாடும் பயிருக்குப் பருவமறிந்து பெய்து தழைக்கச் செய்யும் மழை போன்றது அது. சில துயரமான நேரங்களில் மகாராணியே சிவிகையை அனுப்பி அவரை வரவழைப்பதுண்டு. சமீபத்தில் சிறிது காலமாக அந்தத் துறவி யாத்திரை போயிருந்ததால் அரண்மனைப் பக்கம் வரவில்லை. இரண்டு மூன்று நாட்களுக்கு முன் அவர் திரும்பி வந்திருப்பதாகக் கூறினார்கள். நிம்மதியற்ற அந்தச் சூழ்நிலையில் அந்தத் துறவியை வரவழைத்துப் பேசினால் மனத் தெளிவு ஏற்படுமென்று அவருக்குத் தோன்றியது. உடனே சிவிகையை எடுத்துப் போய் அவரையும் முடிந்தால் மற்றொருவரையும் அழைத்து வருமாறு ஆட்களை அனுப்பினார். சில நாழிகைகளில் அவர் வந்து சேரும் வரை தனிமையும், கவலைகளும் மகாராணியாரின் மனத்தை வாட்டி எடுத்து விட்டன. இரண்டு துறவிகளும் வந்திருந்தார்கள். ஒளி தவழும் தூய முகமும், முண்டிதமாக்கப்பட்டு வழுவழுவென்று மின்னும் தலையுமாக அருளொளி கனியும் அந்தத் துறவிகளின் தோற்றத்தைப் பார்த்த போது நிம்மதி வந்துவிட்டது போலிருந்தது. மகாராணி எதிர்கொண்டு எழுந்து சென்று வணங்கி அவர்களை வரவேற்றார். ஒருவருக்கொருவர் நலம் விசாரித்துக் கொண்டு தன் யாத்திரை அனுபவங்களைச் சிறிது நேரம் கூறினார்கள் அவர்கள் இருவரும். அந்தச் சமயத்தில் அதங்கோட்டாசிரியரும், பவழக்கனிவாயரும் வேறு அங்கு வந்து சேர்ந்தார்கள். 'சரியான அவை கூடி விட்டது!' என்று நினைத்து மனநிறைவு பெற்றார் மகாராணி! "சுவாமி! கவலைகளை உணர்ந்து கொண்டு கலங்கும் இயல்பு முதன் முதலாக எப்போது மனித மனத்துக்கு உண்டாயிற்று?" என்று ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டுக் குணவீர பண்டிதருடைய முகத்தை நிமிர்ந்து பார்த்தார் மகாராணி.
குணவீர பண்டிதர் தம்மோடு வந்திருந்த கமல வாகனரைப் பார்த்துச் சிரித்தார். பின்பு கூறினார்:
"இன்பங்களை உணர்ந்து மகிழும் இயல்பு ஏற்பட்ட போது!"
மகாராணி இதற்குப் பதில் சொல்வதற்குள் அதங்கோட்டாசிரியரும், பவழக்கனிவாயரும் குறுக்குக் கேள்வி கேட்டார்கள். பேச்சு அவர்கள் நால்வருக்குள்ளேயே விவாதம் போலச் சுழன்றது. மகாராணி அதன் நயத்தை விலகியிருந்து அனுபவிக்கலானார்.
"சமணர்கள் எப்போதுமே நிலையாமையைத்தான் வற்புறுத்துவார்கள்" - அதங்கோட்டாசிரியர் பிரான் இடையிலே குறுக்கிட்டார்.
"நிலையாமை ஒன்றே நிலைப்பது, நிலைப்பதாகத் தோன்றுவதெல்லாம் நிலையாதது, என்று தானே சமணர்களின் நூல்கள் எல்லாம் கூறுகின்றன?" என்றார் பவழக்கனிவாயர்.
"நீங்கள் எங்களுடைய கொள்கையைத் திரித்துக் கூறுகிறீர்கள். நிலையாமையைக் குறித்து எல்லாச் சமயங்களுமே உடன்படுகின்றன. எங்கள் நூல்கள் உண்மையை ஒளிக்காமல் சொல்லும் போது கசப்பாக இருக்கிறது. திருக்குறளும் நிலையாமையைச் சொல்கிறது. எங்கள் சமயத்தார் எழுதிய நாலடியாரும் நிலையாமையைச் சொல்லுகிறது. திருக்குறள், 'வாழ்க்கை நிலையாதது; செல்வம் நிலையாதது; இளமை நிலையாதது; ஆனாலும் வாழ்ந்து பார். மனைவி மக்களோடு அறம் பிறழாமல் வாழு. புகழ் எய்து' என்று நம்பிக்கை யூட்டுகிறது. நாங்கள் சாதாரண மனித இயல்பை மனத்தில் கொண்டு பயமுறுத்திச் சொல்லியிருக்கிறோம்" என்றார் குணவீர பண்டிதர்.
"எங்கே? நிலையாமையைப் பற்றி ஒரு பாட்டுச் சொல்லுங்கள்" என்று அவரைக் கேட்டார், அதுவரையில் பேசாமல் இருந்த மகாராணி.
"இளமையும் நிலையாவால் இன்பமும் நின்றவல்ல
வளமையுங் அஃதேயால் வைகலும் துன்பவெள்ளம்
உளவென நினையாதே செல்கதிக் கென்று மென்றும்
விளைநிலம் உழுவார்போல் வித்துநீர் செய்துகொள்மின்!"
குணவீர பண்டிதரின் குரல் கணீரென்று ஒலித்து ஓய்ந்தது.
"இதுதான் எங்கள் தத்துவம். இன்றைக்கு இருப்பது என்றைக்கும் இருக்குமென்று எண்ணி நாங்கள் நம்பி ஏமாறுவதில்லை. என்றைக்கும் இருக்கும் எதுவோ அதைப் பயிர் செய்ய முயலுகிறோம்." - அவரே விளக்கினார்.
"தமிழ் இலக்கியத்திலுள்ள பெரும்பாலான சமணப்பாடல்கள் இதைத் தான் வற்புறுத்துகின்றன" என்று அதங்கோட்டாசிரியர் கூறினார்.
"சித்திரக்காரனுக்கு ஏழு வர்ணங்கள் மேலும் ஒரே மாதிரி அன்புதான். உலகத்திலுள்ள இன்பம், துன்பம் எல்லா உணர்ச்சிகளையும் நாங்கள் பிரித்துப் பார்ப்பதில்லை. எல்லாமே நிலையாதவை என்ற உணர்வில் அடங்கியவை. நிலையாதவற்றை வெறுக்கவில்லை. அனுதாப்படுகிறோம். 'எவ்வளவு நாட்களானாலும் வாடாது' என்ற பேதமை நினைவுடன் கையில் பூச்செண்டை ஏந்திக் கொண்டிருக்கும் குழந்தை மாதிரி உலகம் இருக்கிறது. நாங்கள் தூர இருந்து அந்தக் குழந்தையைப் பார்த்து அனுதாபப்படும் வயதானவர் போலிருக்கின்றோம். காரணம்? 'அந்த பூச்செண்டு வாடிவிடும்' என்ற உண்மை எங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கின்றது?" என்றார் குணவீரர்.
"விவாத முறைக்கு உங்கள் பேச்சு ஏற்கும்! ஆனால் நடைமுறைக்கு ஒத்துவராதே" என்றார் பவழக்கனிவாயர்.
"நடைமுறையைப் பற்றிக் கவலைப்படுகிறவர்கள் அல்லது பயப்படுகிறவர்கள் எந்த இலட்சியங்களையும் நிறுவ முடியாது" என்று பவழக்கனிவாருக்குக் கமலவாகனர் பதில் கொடுத்தார். விவாதம் கருத்துச் செறிவுள்ளதாக இருந்தது. அந்த உரையாடல் வளர்ந்து கொண்டே போன விதத்தில் மகாராணிக்கு ஆறுதல் ஏற்பட்டிருந்தது.
நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டுக் குணவீர பண்டிதர் புறப்பட எழுந்தார். எல்லாருமே மரியாதையாக எழுந்து நின்றனர்.
"சுவாமி! ஒரு சிறு விண்ணப்பம்."
"என்ன?"
"தாங்கள் சற்று முன் பாடினீர்களே, அந்தப் பாடலை ஓர் ஓலையில் எழுதிக் கொடுத்துவிட்டுப் போக இயலுமா?" இருந்தாற் போலிருந்து நினைத்துக் கொண்டு கேட்பவர் போலக் கேட்டார் மகாராணி வானவன்மாதேவி.
"ஆகா! ஓலையும் எழுத்தாணியும் கொண்டு வரச் சொல்லுங்கள். இப்போதே எழுதிக் கொடுத்துவிட்டுப் போகிறேன்" என்றார் அவர். ஓலையும் எழுத்தாணியும் வந்தன. குணவீரர் வாயால் சொல்ல, கமலவாகனர் ஓலையில் எழுதினார். எழுதி முடித்ததும் மகாராணி அதைப் பயபக்தியோடு வாங்கிக் கொண்டார். அந்தப் பாட்டுக்கு அவ்வளவு மரியாதை கொடுத்து மகாராணியார் வாங்கிக் கொண்டதைக் கண்டு அதங்கோட்டாசிரியரும், பவழக்கனிவாயரும் ஆச்சரியத்தோடு சிறிது அசூயையும் அடைந்தனர்.
---------
2.5. மானகவசனுக்கு நேர்ந்த துன்பம்
"தென்பாண்டி நாட்டுப் படைகள் விரைவில் வடக்கு எல்லைக்கு அனுப்பப்படும். அதுவரையில் எல்லைப் பாதுகாப்பு ஏற்பாடுகளை நீங்கள் சமாளித்துப் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது" என்ற கருத்தடங்கிய திருமுகத்தோடு மானகவசனை அன்று காலையிலேயே அவசரமாகக் கரவந்தபுரத்துக்குத் திருப்பி அனுப்பிவிட்டார் மகாமண்டலேசுவரர். மானகவசனும் தாமதமின்றி உடனே புறப்பட்டு விட்டான். வருகிறபோது வந்ததுபோல் முன்சிறைப் பாதை வழியே சென்றான். சரியாக நடுப்பகல் நேரத்துக்கு முன்சிறை போய்விட முடியும். குதிரையை விரைவாகச் செலுத்தினால் அதற்கும் முன்னால் போய்விடலாம். அந்த நேரத்துக்கு அங்கே போவதனால் ஒரு நன்மையும் இருக்கிறது. பகல் உணவை முன்சிறை அறக்கோட்டத்தில் அந்த வேடிக்கைத் தம்பதிகளின் உபசரிப்புக்கு இடையே சுவை நிறைந்ததாக முடித்துக் கொள்ளலாம். கணவனும், மனைவியுமாக ஒருவருக்கொருவர் கேலி செய்து கொண்டே அறக்கோட்டத்துக்கு வந்து செல்வோருக்கெல்லாம் அறுசுவை உணவோடு நகைச்சுவையும் அளிக்கும் அண்டராதித்தனையும், கோதையையும் நினைக்கும் போது அப்போதே அவர்களைக் கண்டுவிட்டது போன்றிருந்தது அவனுக்கு. கரவந்தபுரத்திலிருந்து முக்கியமான திருமுகத்தை அரண்மனைக்குக் கொண்டுவரும் அவசரத்தில் ஒரே ஒரு வேளைதான் அந்த அறக்கோட்டத்தில் தங்கிச் சாப்பிட்டிருக்கிறான் அவன். இருந்தும் அந்த ஒரு வேளைப் பழக்கத்துக்குள்ளே அவர்கள் அவனுடைய மனத்தில் ஆழப் பதிந்திருந்தார்கள்.
'குழந்தை குட்டிகள் இல்லாமல் வயது மூத்த அந்தத் தம்பதிகள் அதை ஒரு குறைவாக எண்ணிக் கவலைப்படுவதாகவே தெரியவில்லை. அதனால் தானோ என்னவோ வருகிறவர்களையெல்லாம் குழந்தைகளாக நினைத்து அன்பு செலுத்த அவர்களால் முடிகிறது. அறக்கோட்டங்களும், அட்டிற்சாலைகளும் நடத்தினால் மட்டும் போதுமா? உலகம் முழுவதும் சிரிப்பதற்கும், அன்பு செய்வதற்கும், உபசரிப்பதற்கும் ஏற்றது என்று எண்ணும் அண்டராதித்தனும் கோதையும் போன்ற ஆட்கள்தான் அறக் கோட்டத்தை அர்த்தமுள்ள தாக்குகிறார்கள். சேர, சோழ நாடுகளில் எத்தனை அறச்சாலைகள் இருந்தால் என்ன? அங்கெல்லாம் அண்டராதித்தனும், கோதையும் இல்லாதவரை அவை அறச்சாலைகளாக முடியுமா? சிரிப்பதற்கு ஆளில்லாத அறச்சாலைகள் அவை! கடல் கடந்தும், தரை வழியாகவும் எவ்வளவு தொலைவிலிருந்து யாத்திரீகர்கள் வந்தாலும் அவர்களையெல்லாம் அண்ணன் தம்பிகளாக, உடன் பிறந்தோராக எண்ணும் கோதையும் அண்டராதித்தனும் தான் பார்க்கப் போனால் இந்நாட்டின் உண்மையான பிரமுகர்கள்! 'உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே' என்ற தத்துவத்தை மெய்ப்பித்துக் கொண்டு வருபவர்கள் அவர்கள் தாமே?' அன்று ஏனோ, அந்தத் தூதன் மனத்தில் முன்சிறை மணியக்காரனும், அவன் மனைவியுமே நிறைந்திருந்தார்கள். அவர்களைப் பற்றியே அவன் அதிகமாகச் சிந்தித்தான். தான் கொண்டு போகும் அரசாங்கச் செய்தி, அதன் அவசரம் ஆகியவை கூட அவ்வளவாக அவனுடைய மனத்தைக் கவர்ந்து விடவில்லை.
ஆனால் நண்பகலில் அவன் முன்சிறை அறக்கோட்டத்தை அடைந்த போது பெரிதும் ஏமாற்றமடைந்தான். அங்கே அண்டராதித்த வைணவனும் கோதையும் இல்லை. "கொற்கை முத்துக்குளி விழாவைப் பார்ப்பதற்காகப் போயிருக்கிறார்கள்" என்று அறக்கோட்டத்துப் பணியாட்கள் கூறினார்கள். தூதனுக்கு அன்றும் அங்கே பகல் உணவு கிடைத்தது. ஆனால் அண்டராதித்தனும், கோதையும் பக்கத்திலிருந்து சிரிக்கச் சிரிக்கப் பேசி உபசாரம் செய்து போடுகிற சாப்பாடு மாதிரி இல்லை அது! அங்கு அதிக நேரம் தங்கக் கூட விருப்பமில்லாமல் உடனே புறப்பட்டு விட்டான் அவன். கொற்கையிலிருந்து திரும்பினாலும் தான் செல்லுகிற அதே சாலை வழியாகத்தான் திரும்ப வேண்டும் என்று அவனுக்குத் தெரியும். ஆனால் முத்துக்குளி விழாவைப் பார்க்கப் போகிறவர்கள் அவ்வளவு அவசரமாகத் திரும்ப மாட்டார்கள் என்று தோன்றியதனால் அவர்களை வழியில் எங்கேயாவது எதிரே சந்திக்கலாம் என்ற நம்பிக்கையை அவன் கைவிட்டுவிட்டான்.
அதே நிலையில் இடைவழியில் எங்கும் தங்காமல் பயணத்தைத் தொடர்ந்ததால், அன்று இரவு நடுச்சாமத்துக்குள்ளாக ஒருவாறு அவன் கவந்தபுரத்தை அடைந்து விட முடியும். வெயிலின் மிகுதியையும் வானில் அங்கொன்றும், இங்கொன்றுமாக மேகக் கற்பாறைகள் மிதப்பதையும் கண்டு மழை வந்து நடுவே பிரயாணத்தைத் தடைப்படுத்தி விடாமல் இருக்க வேண்டுமே என்று கவலையாயிருந்தது அவனுக்கு. ஏதாவது ஊர்ப்புறத்தை ஒட்டிச் சென்று கொண்டிருக்கும் போது மழை வந்தால் குதிரையையும் கட்டிவிட்டு எங்கேயாவது தங்கிக் கொள்ளலாம். இல்லாவிட்டால் தொல்லைதான். முன்சிறையிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொலைவுவரை அந்தச் சாலையில் ஊர்கள் இடையிடையே வரும். அதன் பின் கவந்தபுரம் வரை மலைச்சரிவிலும், அடர்ந்த காடுகளை வகிர்ந்து கொண்டும் செல்கிறது சாலை. எதற்கும் கொஞ்சம் வேகமாகப் போவதே நல்லது என்ற எண்ணத்துடன் குதிரையை விரைவாகச் செலுத்திக் கொண்டிருந்தான் அவன். சாலையில் எந்த இடங்களில் சிறுசிறு ஊர்கள் இருந்தனவோ, அங்கெல்லாம் கூட அதிகமான கலகலப்பு இல்லை. எல்லோரும் முத்துக்குளி விழாவிற்குச் சென்றிருந்தார்களாதலால் ஊர்கள் அமைதியாக இருந்தன. அனேகமாக அந்தப் பெருஞ்சாலையில் சிவிகைகள், யானைகள், குதிரைகள், கால்நடையாகச் செல்வோர் என்று போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். அன்றைக்கோ அதுவும் குன்றியிருந்தது. அவனுடைய குதிரைதான் சாலையை ஏகபோகமாக அக்கிரமித்துச் சுதந்திரமாகச் சென்று கொண்டிருந்தது. மாலையில் சிறு தூறல் இருந்தது. பெருமழையாகப் பெய்யாததால் அதனால் அவனுக்கு அதிக இடையூறு இல்லை. எங்கும் நிற்காமல் சென்று கொண்டிருந்தான். ஆனால் இருட்டுகிற சமயத்துக்குச் சாலை மலைச்சரிவை ஒட்டிச் சென்று கொண்டிருந்த போது மழை வலுவாகப் பிடித்துக் கொண்டு விட்டது. மின்னலும் இடியுமாக மேகம் இருட்டிக் கொண்டு இயற்கையான இருளோடு கலந்து கருமைக்கு அழுத்தம் கொடுத்திருந்தது. வானப் பெருங்குளத்தின் வடிகாற் கண்களை யாரோ உடைத்து விட்டுவிட்ட மாதிரி மழை கொட்டியது. இருளில் வழி அறிவது கூட வரவரக் கடினமாகிக் கொண்டிருந்தது. ஏதாவது ஒரு பாழ்மண்டபம் வழியில் அகப்பட்டால் கூடப் பிரயாணத்தைத் தற்காலிகமாக நிறுத்திக் கொண்டு விடலாமென்று அவனுக்குத் தோன்றியது. பெருமழைக் காலங்களில் இடி அதிகமாக இருக்கும் போது காட்டு மரங்களின் கீழே தங்குவது நல்லதல்லவே என்ற அச்சமும் அவனுக்கு இருந்தது.
அந்தச் சமயத்தில் சமய சஞ்சீவி போல் சாலையோரத்தில் ஒரு பாழ்மண்டபம் தெரிந்தது. அதில் காட்டுச் சுள்ளிகளால் நெருப்பு மூட்டிக் குளிர்காய்ந்து கொண்டிருந்தார்கள் சிலர். அந்த வெளிச்சம் இல்லையானால் அப்போதிருந்த இருட்டில் அந்த மண்டபம் அங்கிருப்பதோ, அதில் ஆட்கள் உட்கார்ந்திருப்பதோ அவன் கட்புலனுக்குத் தெரிந்திருக்கவே முடியாது.
அவ்வளவு மழையோசையிலும் அவனுடைய குதிரைக் குளம்பொலி அவர்களுக்குக் கேட்டிருக்க வேண்டும். எல்லோரும் சாலைப்பக்கமாகத் திரும்பிப் பார்த்ததை மானகவசன் கண்டான். குதிரை நனையாமல் மண்டபத்தின் முன்புறத் தூணில் கட்டிவிட்டு, உடைகளைப் பிழிந்து விட்டுக் கொண்டான். உடல் தெப்பமாக நனைந்திருந்தது. மகாமண்டலேசுவரரின் திருமுக ஓலை இடுப்புக்குள் பத்திரமாக இருந்தது. "அந்தக் காலத்தில் இந்தப் பாழ்மண்டபத்தைக் கட்டிய வள்ளல் யாரென்று தெரிந்தால் இப்போது அவனுக்கு நாம் எல்லோரும் சேர்ந்து ஒரு நல்ல நினைவு மண்டபமே கட்டி வைத்து விடலாம்" என்று சிரிப்புடன் சொல்லிக் கொண்டே அவர்களுக்குப் பக்கத்தில் தானும் போய்க் குளிர் காய்வதற்கு உட்கார்ந்தான் மானகவசன். அவன் சிரிப்போ, பேச்சோ அவர்களிடையே பதில் சிரிப்புகளையோ, பேச்சுக்களையோ உண்டாக்கவில்லை. தங்களுக்குள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். மானகவசன் அதைப் பொருட்படுத்தா விட்டாலும் மனித இயல்பை மீறியதாக இருந்தது அவர்கள் நடந்து கொண்ட விதம். இந்த மாதிரி சமயத்தில் "நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்?" என்று விசாரித்து அறிய முயல்வது தான் சாதாரண மனித இயற்கை. அதற்குக் கூட அவர்கள் முயவில்லை. ஆனால் மானகவசன் அவர்களைப் போல் ஊமையாக இருந்து விடவில்லை.
"ஐயா! நீங்களெல்லாம் யார்? கொற்கை முத்துக்குளி விழா பார்த்துவிட்டுத் திரும்பி வரும்போது மழையில் அகப்பட்டுக் கொண்டீர்களா? அடடா! எதற்கு இவ்வளவு அவசரமாகத் திரும்பினீர்கள்? நாளைக்குக் காலையில் சாவகாசமாகத் திரும்பியிருக்கக் கூடாதோ?" என்று அன்போடு விசாரித்தான்.
அவர்கள் இந்த விசாரிப்புக்கு பதில் சொல்லவில்லை. தங்களுக்குள் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள். மானகவசனுக்கு முகம் சுண்டிப் போயிற்று. பேசுவதை நிறுத்திக் கொண்டான். வேற்று முகம், புது ஆட்கள் என்று வேறுபாடின்றிப் பேசிப் பழகும் அண்டராதித்தன் தம்பதிகள் அவன் நினைவில் மறுபடியும் தோன்றினார்கள். 'மனிதனுக்கு மனிதன் பேசிப் பழகிக் கொள்ளத்தானே மொழி, உணர்ச்சிகளெல்லாம் இருக்கின்றன? அதற்குக் கூடத் தயங்கும் சில பிரகிருதிகள் இப்படியும் இருக்கின்றனவே' என்று எண்ணி வியந்தான் அவன். ஒன்று அவர்கள் ஊமைகளாயிருக்க வேண்டும் அல்லது அமிழ்தினும் இனிய தமிழ் மொழியே தெரியாதவர்களாயிருக்க வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது.
மழையும் விடுகிறபாடாயில்லை. நேரமாகிக் கொண்டிருந்தது. அந்தப் பாழ் மண்டபத்திலேயே எல்லோரும் மூலைக்கு மூலை சுருண்டு படுத்தனர். குளிர் காய்வதற்காக மூட்டியிருந்த தீ அணைந்து மண்டபத்தில் இருள் சூழ்ந்தது. படுத்த சிறிது நேரத்துக்கெல்லாம் மானகவசன் அயர்ந்து தூங்கிவிட்டான்.
நல்ல தூக்கத்தில் யாரோ உடம்பைத் தொட்டு அமுக்குகிற மாதிரி இருந்தது. உடம்பைத் தொட்டு அமுக்கி இடுப்பைக் கட்டுவது போல் உணரவே துள்ளி எழுந்தான். அவனால் எழுந்திருக்க முடியவில்லை. ஏதோ சொல்ல முயன்றான், வார்த்தைகள் வரவில்லை. வாய் உளறியது. தன்னை யாரோ பலமாகப் பிடித்துக் கொண்டு, வாயையும் மூடியிருக்கிறார்கள் என்பதை உணர்ந்தான். அடுத்த கணம் முதுகிலும், தலையிலும் பலமான அடிகள் விழுந்தன. அவனுக்குத் தன் நினைவு தவறியது. அப்படியே சுருண்டு விழுந்தான். அதன் பின்னர் பாழ்மண்டபத்தில் நடந்ததொன்றும் அவனுக்குத் தெரியாது.
பொழுது விடிந்து கதிரவன் ஒளி மேலேறிக் கதிர்கள் மண்டபத்துக்குள் விழுந்த போது வலி பொறுக்க முடியாமல் முனகிக் கொண்டே மெல்ல எழுந்திருக்க முயன்றான் அவன். எழுந்து நடக்க முடியவில்லை. மூட்டுக்கு மூட்டு வலித்தது. அந்த நேரத்தில் தெய்வம் அவனுக்கு ஓர் அருமையான உதவியைக் கொண்டு வந்து சேர்த்தது. இடுப்பிலிருந்து திருமுகமும் மண்டபத்துத் தூணில் கட்டியிருந்த குதிரையும் அவனிடமிருந்து பறிபோயின. கொற்கைத் திருவிழாவுக்குப் போயிருந்த அண்டராதித்தனும், கோதையும் அந்தப் பாதையாகத் திரும்பி வந்தார்கள். அவன் இறைந்து கூச்சலிட்டான்.
'யாரைப் பற்றி நாம் அதிகம் சிந்திக்கிறோமோ, அவர்களைத் தெய்வம் நம் பக்கத்தில் துணையாகக் கொண்டு வந்து சேர்க்கின்றதென்பது எவ்வளவு பெரிய உண்மை?' என்று அவர்களை அந்தப் பாதையில் கண்டவுடனே எண்ணினான். அவன் மெய்சிலிர்த்தது. அவர்களை அங்கு கொண்டு வந்து சேர்த்த இறைவனை வாழ்த்தினான் மானகவசன்.
அந்தத் தம்பதிகள் அந்நிலையில் அவனை அங்கே கண்டு பதறிப் போனார்கள். நடந்ததையெல்லாம் அவர்களிடம் விவரமாகக் கூறினான் மானகவசன்.
"நாடு முழுவதுமே கெட்டுப் போய்க் கிடக்கிறது அப்பா! நல்லவன் வெளியில் இறங்கி நடக்கவே காலமில்லை இது!" என்று தொடங்கிக் கொற்கையில் நடந்த குழப்பத்தை அவனுக்குச் சொன்னார்கள்.
அடி, உதை பட்டதுகூட அவனை வருத்தத்துக்குள்ளாக்கவில்லை. 'முக்கியமான அரசாங்கத் திருமுகத்தைத் திருட்டுக் கொடுத்து விட்டோமே, என்ன ஆகுமோ - என்ன ஆகுமோ?' என்று எண்ணி அஞ்சினான் அவன்.
"பரவாயில்லை அப்பா? நீ என்ன செய்வாய், உன்னை முதலில் ஊருக்கு அழைத்துப் போக ஏற்பாடு செய்கிறேன்" என்று கோதையை அவனருகில் துணை வைத்துவிட்டுத் தான் மட்டும் பக்கத்து ஊர் வரை நடந்து போய் ஒரு சிவிகையும் சுமக்கும் ஆட்களும் தயார் செய்து கொண்டு வந்தான் அண்டராதித்த வைணவன். சிவிகை அன்று மாலைப் பொழுது சாயும் நேரத்துக்கு அவனைக் கரவந்தபுரத்துக்குக் கொண்டு போய்ச் சேர்த்தது.
-------
2.6. தமையனும் தங்கையும்
தென்பாண்டி நாட்டின் வீரத் தளபதி வல்லாளதேவன் இந்தக் கதையின் தொடக்கத்திலிருந்து இதுவரையில் ஓய்வில்லாமல் அலைந்து கொண்டு தான் இருந்தான். அவனுக்கும் அவன் சிந்தனைக்கும் சில நாழிகைப் பொழுதாவது அமைதி கிடைத்திருக்குமா என்பது சந்தேகம் தான். தன்னையும் தன்னுடையவற்றையும் விடத் தன் கடமைகளைப் பெரிதாகக் கருதும் அந்த உண்மை வீரனுக்கு உடன் பிறந்த தங்கையைச் சந்தித்து மனம் விட்டுச் சிறிது நேரம் பேசிக் கொண்டிருப்பதற்குக் கூட இதுவரை ஒழியவில்லை.
இப்போது கூட அவனுக்கு ஒழியாது தான். கோட்டாற்றுப் படைத்தளத்துக்குப் போய் உடனே படை ஏற்பாடுகளைக் கவனிக்குமாறு அவனுக்கு அவசரக் கட்டளை இட்டிருந்தார் மகாமண்டலேசுவரர். அவருடைய கட்டளையின் அவசரத்தை விட, அவசரமாகத் தன் தங்கை பகவதியையும், ஆபத்துதவிகள் தலைவன் குழைக்காதனையும் சந்திக்க வேண்டியிருந்தது அவனுக்கு.
வெளிப்படையாகச் சந்திக்க முடியாத சந்திப்பு அது. மறைமுகமாகப் பயந்து பயந்து செய்கிற காரியங்களே மகாமண்டலேசுவரருடைய கவனத்துக்கு எட்டி விடுகின்றன. வெளிப்படையாகச் செய்தால் தப்ப முடியுமா? அன்றைய நிகழ்ச்சிகளிலிருந்து இடையாற்று மங்கலம் நம்பியைப் பற்றி அதிக முன்னெச்சரிக்கையும், கவனமும் வேண்டுமென்று அவன் தீர்மானத்துக்கு வந்திருந்தான்.
முதலில் ஆபத்துதவிகள் தலைவன் மகர நெடுங்குழைக்காதனைக் கண்டு அரண்மனைத் தோட்டத்தின் அடர்த்தியான பகுதி ஒன்றுக்குச் சென்று பேசிக் கொண்டிருந்தான். குழைக்காதன், தளபதி அரண்மனைக்கு வருவதற்கு முன் அங்கு நடந்த சில நிகழ்ச்சிகளில் தான் கண்ட சிலவற்றை விவரமாகக் குறிப்பிட்டுச் சொன்னான்.
"நீங்கள் முன்பு கோட்டாற்றிலிருந்து என்னை அனுப்பிய போது கூறியபடி கூடிய வரை மகாமண்டலேசுவரருடைய கண்ணுக்கு அகப்படாமல் இருக்க முயன்றேன். ஆனால் கடைசியில் அவர் கண்டு பிடித்து விட்டார்."
"குழைக்காதரே! நீங்கள் நினைப்பது போல் அந்த மனிதரை அவ்வளவு எளிதாக ஏமாற்றி விட முடியாது. எனக்கே தெரியும். இருந்தாலும் உங்களால் முடிகிறதா இல்லையா என்று சோதிப்பதற்காகவே அப்படிச் சொல்லி அனுப்பினேன். உங்களுக்கும் எனக்கும் இரண்டு கண்கள் இருந்தால் இரண்டின் பார்வை ஆற்றல் தான் இருக்கும். ஆனால் அவருடைய இரண்டு கண்களுக்கு இருபது கண்களின் ஆற்றல் உண்டு. அப்படி இருந்தும் சில சமயங்கள் அவரைப் பலவீனப்படுத்தி விடுகின்றன!"
"உண்மை! கூற்றத் தலைவர்கள் கூட்டத்தின் போது அவருடைய ஆற்றலையும், பலவீனத்தையும் சேர்ந்து என்னால் காணமுடிந்தது!"
"அது இருக்கட்டும்! இப்போது நீங்கள் எப்படியாவது அந்தப்புரப் பகுதிக்குச் சென்று என்னுடைய தங்கை பகவதியை இங்கே அழைத்து வரவேண்டும்" என்றான் தளபதி.
"இப்போதிருக்கிற சூழ்நிலையில் நான் அந்தப்புரத்துக்குள் நுழைந்தால் ஒரு பெரிய கலவரமே உண்டாகிவிடும். அங்கே புவன மோகினி என்று ஒரு வண்ணமகள் என்னை நினைத்து நடுங்கிக் கொண்டிருக்கிறாள். என் தலையை அந்தப்புரத்துக்குள் பார்த்துவிட்டால் வேறு வினையே வேண்டியதில்லை" என்று தொடங்கிப் புவன மோகினியின் மூலம் மகாமண்டலேசுவரர் தன்னைப் பற்றி உளவறிந்த விவரத்தை தளபதிக்கு விளக்கிக் கூறினான் அவன்.
"அப்படியானால் பகவதியை இப்போது இங்கே வரவழைத்துச் சந்திப்பதற்கு வேறு வழி?"
தளபதியின் கேள்விக்கு வழி சொல்ல வகையறியாமல் விழித்தான் குழைக்காதன். அவர்கள் இருவரும் தோட்டத்தில் எந்த இடத்தில் நின்று பேசிக் கொண்டிருந்தார்களோ, அந்த இடமே அந்தப்புரத்துச் சுவரோரமாகத்தான் இருந்தது. மேல் மாடத்தில் தான் பகவதி, விலாசினி முதலிய பெண்கள் தங்கியிருந்தார்கள். மேன்மாடத்திலிருந்த அந்த அறை அவர்கள் நின்றிருந்த இடத்திலிருந்து நான்காள் உயரத்தில் இருந்தது. மேலே இருந்த அந்தப்புரத்து அறைகள் ஒவ்வொன்றின் நிலைக்கு மேலேயும் ஒரு சிறிய வெண்கல மணி தொங்கிக் கொண்டிருந்தது.
இருவரும் அந்த அறைகளை ஏறிட்டுப் பார்த்துக் கொண்டே என்ன விதமாகப் பகவதியைச் சந்திப்பதென்று தெரியாமல் திகைத்து நின்றனர்.
"எனக்கு ஒரு வழி தோன்றுகிறது. செய்து பார்க்கிறேன். நான் நினைக்கிறபடி நடந்தாலும் நடக்கலாம். வேறு மாதிரி ஆகிவிட்டால் ஏமாற்றம் தான்" என்று முகம் மலர்ந்து கூறினான் மகர நெடுங்குழைக்காதன்.
"என்ன வழி அது?" தளபதியின் வினாவில் ஆவல் துள்ளி நின்றது.
"இருங்கள், இதோ செய்து பார்க்கிறேன்" என்று சொல்லிக் கொண்டே தலைக்கு மேலிருந்த மாமரத்தில் கைக்கெட்டுவது போல் சரம் சரமாகத் தொங்கிக் கொண்டிருந்த மாவடுக்களில் நாலைந்தைப் பறித்தான்.
மேலே பார்த்து குறி வைத்து ஒவ்வொரு மாவடுவாக எறிந்தான். அவன் எறிந்த மூன்றாவது மாவடு அறையின் வாசலில் தொங்கிய மணியின் நாக்கில் பட்டு அசைந்தது. அடுத்த கணம் கணீரென்று மணியின் ஓசை ஒலித்தது.
எதை எதிர்பார்த்து அவன் அப்படிச் செய்தானோ, அது உடனே நடந்தது. அந்த மணியோசை எழுந்ததுமே, "யாரது?" என்று அதட்டிக் கேட்டுக் கொண்டே பகவதி அறைவாசலுக்கு வந்தாள். கீழே குனிந்து மாவடு எறியப்பட்ட திசையைப் பார்த்தாள். மறுகணமே அவள் கோபம் மலர்ந்த சிரிப்பாக மாறியது. கீழே அவள் தமையன் வல்லாளதேவன் மாமரத்து அடர்த்தியிலிருந்து தலை நீட்டிச் சைகை செய்து அவளைக் கூப்பிட்டான். அவள் 'வருகிறேன்' என்பதற்கு அடையாளமாகப் பதில் குறிப்புக் காட்டிவிட்டுக் கீழே இறங்கினாள்.
"நல்ல வேளை! அறைக்குள் உங்கள் தங்கையே இருந்ததனால் என் தந்திரம் பலித்தது! இல்லாவிட்டால் வம்பாகியிருக்கும்" என்றான் மகர நெடுங்குழைக்காதன்.
"குழைக்காதரே! இப்போதுதான் 'ஆபத்துதவி' என்ற உம்முடைய பெயருக்குச் சரியான செயலைச் செய்து விளக்கினீர். பிரமாதமான தந்திரம். அபூர்வமான யோசனை, அபாரமான குறி" எனப் பாராட்டினான் தளபதி வல்லாளதேவன்.
"என்ன அண்ணா இது?என்னைச் சந்திக்க வேண்டுமென்றால் அந்தப்புரத்துக்குள் வந்து உரிமையோடு சந்திக்கலாமே? தோட்டத்தில் நின்று இப்படியெல்லாம் தந்திரம் செய்வானேன்?" என்று கேட்டுக் கொண்டே பகவதி அங்கு வந்து சேர்ந்தாள்.
"தந்திரம் என்னுடையதல்ல, பகவதி! நம் குழைக்காதருடையது!" என்று சொல்லிச் சிரித்தான் தளபதி.
"நினைத்தேன்! அவருடையதாகத்தான் இருக்க வேண்டுமென்று. குறி தவறாமல் எறிகிறாரே!"
"என் குறி கூடச் சில சமயங்களில் தவறி விடுகிறது அம்மணி!" எதையோ உட்பொருளாக அடக்கி வைத்துப் பேசினான் ஆபத்துதவிகள் தலைவன். அவனுடைய அந்தச் சிலேடைப் பேச்சு தளபதி வல்லாளதேவனுக்குச் சிரிப்பை உண்டாக்கிற்று.
"குழைக்காதரே! நீங்கள் போய் உங்கள் வேலைகளைக் கவனிக்கலாம். நானும் பகவதியும் தனிமையாகப் பேச வேண்டியிருக்கிறது. உங்களுக்குத் தெரிவிக்க வேண்டிய முக்கியமான செய்திகள் எவையேனும் இருந்தால் பகவதியிடம் சொல்லிவிட்டுப் போகிறேன். அவள் உங்களுக்குத் தெரிவிப்பாள் இப்போது நீங்கள் போகலாம்" என்று தளபதி கூறினான்.
"நல்லது, வணக்கம்! நான் விடைபெற்றுக் கொள்கிறேன்" என்று வணங்கி புறப்பட்டான் குழைக்காதன். தோட்டத்துப் புதர்கள், பதுங்கிப் பதுங்கித் தன்னை மறைத்துக் கொண்டு வெளியேற அவனுக்கு ஒத்துழைத்தன.
"அண்ணா! நீங்கள் அரண்மனையிலிருந்து வெளியேறிச் செல்லுவதற்கு முன் உங்களை எப்படியாவது ஒருமுறை சந்தித்துவிட வேண்டுமென்று நானே நினைத்துக் கொண்டு தானிருந்தேன்" என்றாள் பகவதி.
"பகவதி! இப்போது இந்த அரண்மனையில் நிலவும் சூழ்நிலையில் அண்ணனும் தங்கையும் தனியே சந்தித்துப் பேசினால் கூட மிகப் பெரிய அரசியல் இரகசியங்களைப் பேசிக் கொள்வதாக எண்ணிக் கொள்வார்கள்."
"மற்றவர்கள் என்னென்ன நினைப்பார்கள் என்பதைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தால் உலகத்தில் எந்தக் காரியத்தையுமே செய்ய முடியாது. அண்ணா! நீங்கள் என்னைக் கூப்பிட்ட காரியத்தைப் பேசுங்கள். நேரம் ஆகிறது" என்று அவனைத் துரிதப்படுத்தினாள் அவன் தங்கை.
"பகவதி! சிறு வயதில் உனக்கு நான் வேடிக்கையாக ஒரு கதையை அடிக்கடி சொல்வேன், அது நினைவிருக்கிறதா?"
"ஏழை வேளான் ஒருவனுக்கு மண் சுவரின் மேல் கூரையால் வேய்ந்த குடிசை தான் வீடு. விடாத அடைமழையால் சுவர்கள் விழுந்துவிடுமோ என்று அஞ்ச வேண்டிய சமயத்தில் குடிசைக்குள் மாடு கன்று போட்டு விடுகிறது. நிறை மாதத்தோடு பிள்ளைப் பேற்றுக்குத் தயாராயிருந்த அந்த ஏழையின் மனைவிக்கு அதே சமயத்தில் இடுப்பில் வலி கண்டது. இன்னும் சிறிது நேரத்தில் குழந்தை பிறந்து விடுமோ என்று பரபரப்பு ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் குடிசையின் ஒரு பக்கத்து மண் சுவர் ஈரம் தாங்காமல் விழுந்து விட்டது. அந்த வீட்டில் வேலை பார்த்து வந்த அடிமைச் சிறுவன் ஒருவன் இறந்து போனான். வயல்கள் ஈரப்பதமாகவே இருக்கும் போதே விதை விதைத்துவிட வேண்டுமே என்று வீட்டுத் தலைவன் வயலுக்கு ஓடினான். வழியிலே அவனுக்குக் கடன் கொடுத்தவர் அவனை மறித்துக் கொண்டார். அந்தச் சமயம் பார்த்துப் பக்கத்து ஊரில் அவன் உறவினர் ஒருவர் இறந்து போனதாக இழவு ஓலை கொண்டு வந்தான் ஒருவன். என்ன செய்வதென்றே புரியாமல் அவன் திகைத்துக் கொண்டிருந்த போது தள்ளமுடியாத விருந்தினர்கள் இரண்டு பேர்கள் அவன் குடிசையைத் தேடிக் கொண்டு வந்தார்கள். அப்போது குடிசையின் பின்புறமிருந்து அவனுடைய மூத்த புதல்வனின் அலறல் கேட்டது. அவன் ஓடிப் போய்ப் பார்த்தான். அங்கே அவன் புதல்வனைப் பாம்பு தீண்டியிருந்தது. அவன் 'கோ'வென்று கதறி அழுதான். அந்தச் சமயத்தில் ஊர்க்கணக்கர் வந்து அவன் நிலவரி செலுத்தவில்லை என்பதை நினைவுபடுத்தினார். அவனுடைய குலகுருவும் அந்த நேரம் பார்த்து அங்கே வந்து 'தட்சிணையைக் கீழே வைத்துவிட்டு மறு வேலை பார்' என்று கேட்க ஆரம்பித்தார்..."
பகவதிக்குச் சிரிப்பு பொறுக்க முடியவில்லை. "ஏதோ தலைபோகிற காரியம் என்று அவசரமாகக் கூப்பிட்டுவிட்டு எதற்கு அண்ணா இந்தக் கதையெல்லாம் அளக்கிறீர்கள்?"
"கதையில்லை! தென்பாண்டி நாட்டின் இப்போதைய சூழ்நிலை ஏறக்குறைய இதுதான். கதையில் அத்தனை துன்பங்களுக்கும் ஒரு மனிதன் இலக்கு. இங்கே ஒரு நாடு இலக்கு."
"கதையா அது? தாங்க முடியாத வறுமைத் தொல்லைகளை அனுபவித்த எவனோ ஒரு புலவன் திரித்த பொய்!"
"கதை பொய்யாகவே இருக்கட்டுமே! இப்போது நம்மைச் சுற்றி நடப்பவைகள் பொய்களல்ல. பாண்டிநாட்டுக் கதவைத் தட்டிக் கூப்பிடும் கவலைகள் கனவுகள் அல்ல!"
"அண்ணா! கதையும் எடுத்துக் காட்டும் சொல்லி உண்மைகளைப் புரியவைப்பதற்கு நான் இன்னும் சிறு குழந்தையா என்ன? சொல்ல வந்ததை நேரடியாகவே சொல்லுங்கள்!"
"பகவதி! நீ என்னுடைய தங்கை! இந்தச் சூழ்நிலையில் என்னுடைய தங்கையிடமிருந்து நான் சில வீரச் செயல்களை எதிர்பார்க்கிறேன்!" - பொருள் புரிய நிறுத்தி இடைவெளி விட்டு ஒவ்வொரு சொல்லாகச் சொன்ன பின் புருவங்கள் ஒன்று கூடுமிடத்திற்கு மேல் உணர்ச்சி மேடாகிய அந்த அழகு நெற்றியை இமையாமல் பார்த்தான் தளபதி.
"என்ன அண்ணா, அப்படிப் பார்க்கிறீர்கள்? உங்கள் தங்கை மேல் உங்களுக்கே நம்பிக்கை இல்லையா?"
"நம்பிக்கைக்கு ஒன்றும் குறைவில்லை! இப்போது உன்னிடம் மனம் திறந்து உரிமையோடு பேசுகிறேன். நான் உடன் பிறந்தவன் என்ற முறையில் இதுநாள் வரை உனக்கு ஒரு குறைவும் வைக்கவில்லை. நம் அன்னையும் தந்தையும் பிரிந்த நாளிலிருந்து நீ என் கண்காண வளர்ந்திருக்கிறாய், பகவதி. என்னுடைய போர்த் தொழிலுக்குப் பயன்படும் சில வீரக் கலைகளிலிருந்து யாழ், இசை முதலிய நளினக் கலைகள் வரை கற்றுக் கொண்டிருக்கும் நீ இதுவரை அரசியல் சூழ்ச்சிக் கலைகளை அதிகம் அறிந்து கொள்ள வாய்த்ததில்லை. நானும் அதற்கு உன்னை விடவில்லை. பவழக்கனிவாயரிடம் நளினக் கலைகளைக் கற்றாய்! ஆசிரியர் பிரானிடம் இலக்கிய அறிவு பெற்றாய்! நான் இப்போது கடைசியாகக் குறிப்பிட்ட கலையை என் மூலமாக எனக்காக நீ கற்றுக் கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டது!"
"என்ன அண்ணா! புதிர் போடுகிறீர்கள்?" என்றாள் பகவதி.
"இப்போதைக்கு அது புதிர்தான்! புதிரை விளங்கிக் கொண்டு வரத்தான் நீ உடனடியாகப் புறப்பட வேண்டும். மிகப் பெரிய அந்தரங்களெல்லாம் இந்தப் புதிருக்குள் தான் அடங்கிப் போயிருக்கின்றன!"
அந்தப் பேச்சிலிருந்து எதுவும் விளங்கிக் கொள்ள முடியாமல் குழப்பத்தோடு அண்ணன் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள் பகவதி. அவனுடைய கண்களில் துணிவின் ஒளி, உறுதியின் சாயை இரண்டையும் அவள் கண்டாள். செய்தே தீர வேண்டிய செயல்களைப் பற்றிப் பிடிவாதமாகப் பேசும் போது அண்ணனுடைய கண்களில் அந்த ஒளியை அவள் கண்டிருக்கிறாள்.
"மென்மையான உன்னுடைய கைகளிலிருந்து வன்மையான செயல்களை எதிர்பார்க்கிறேன், பகவதி! வளை சுமக்கும் கைகளில் பொறுப்பைச் சுமத்த முடியுமா என்று தயங்குகிறேன்!"
"உங்கள் தங்கையின் கைகள் அதற்குத் தயங்கப் போவதில்லை, அண்ணா!"
"இந்த வார்த்தைகளை உன்னிடமிருந்து வரவழைப்பதற்குத்தான் இத்தனைப் பேச்சும் பேச வேண்டியிருந்தது. இனிமேல் கவலை இல்லை." இவ்வாறு கூறிவிட்டுத் தன் தங்கைக்கு மிக அருகில் நெருங்கிக் காதோடு காதாக மெல்லிய குரலில் ஏதோ கூறத் தொடங்கினான் தளபதி வல்லாளதேவன்.
அவன் கூறியவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த போதே அவள் முகத்தில் பல்வேறு உணர்ச்சிகளின் நிழல்கள் படிந்து மறைந்தன. நெடுநேரமாக அவள் காதருகில் அவனுடைய உதடுகள் அசைந்து கொண்டிருந்தன. வண்டு பூவைக் குடையும் ஓசையை விட மிக மெல்லிய ஓசையில் பேசுவதற்குத் தென்பாண்டி நாட்டுத் தளபதி எங்கே கற்றுக் கொண்டிருந்தானோ?
பகவதியின் முக பாவங்கள் விநாடிக்கு விநாடி அவன் சொற்களைப் புரிந்து கொண்டதற்கு ஏற்ப மாறுபடும் போது எத்தனை எத்தனை உணர்ச்சிக் குழப்பங்களை அந்த வனப்பு மிக்க நெற்றியில் காண முடிகிறது? பிறைச் சந்திரனைக் கவிழ்த்து வைத்தாற் போன்ற நெற்றி அது. தன் தங்கையிடம் அற்புதமான அழகும், வனப்பும் அமைந்திருப்பதாகப் பெருமைப்பட்டதைக் காட்டிலும், துணிவும் சாமர்த்தியமும் பெருக வேண்டுமென்பதற்காகத்தான் அதிகக் கவலைப் பட்டிருக்கிறான் வல்லாளதேவன். அந்தக் கவலையும் அவன் இப்போது கூறிய செயலைச் செய்ய அவள் ஒப்புக் கொண்டதால் அகன்றுவிட்டது.
எல்லாவற்றையும் அவள் காதில் இரகசியமாகக் கூறி விட்டுத் தலை நிமிர்ந்த போது, மேலேயிருந்து சற்றுப் பெரிதான மாவடு ஒன்று தளபதியின் நெற்றிப் பொட்டில் விழுந்தது. விண்ணென்று தெரித்து விழுந்த அது உண்டாக்கிய வலியில் ஒரு கணம் கண் கலங்கிவிட்டது அவனுக்கு.
"ஐயோ, அண்ணா! 'வடு'ப் பட்டுவிட்டதே?" என்று அவன் நெற்றியைத் தடவ நெருங்கினாள் பகவதி.
"அதனாலென்ன? இங்கே வடுப்பட்டால் கவலை இல்லை. நீ போகிற காரியம் வடுப்படாமல் பார்த்துக் கொள் பகவதி!" என்று கூறிவிட்டு அவள் பதிலுக்குக் காத்திராமல் அங்கிருந்து கிளம்பிவிட்டான் அவன்.
-----------
2.7. கடலில் மிதந்த கற்பனைகள்
அடிவானத்து விளிம்பு கடற்பரப்பைத் தொடுமிடத்தில் சிறிதாய், இன்னும் சிறிதாய், மிகச் சிறிதாய் மறையும் அந்தக் கப்பலை திடலில் நின்று பார்த்துக் கொண்டிருந்தாள் மதிவதனி. இன்னும் அந்தச் சங்கொலி அவளுடைய செவிகளில் புகுந்து மனத்தின் பரப்பெல்லாம் நிறைப்பது போலிருந்தது. பருகுவதற்குத் தண்ணீரே கிடைக்காத பாலை நிலத்தில் பயணம் செய்யப் போகிறவன் சேகரித்து வைத்துக் கொள்ளுகிற மாதிரி அந்த ஒலியையும், அதற்குரியவனின் அழகிய முகத்தையும் மனச் செவிகள் நிறைய, மனக் கண்கள் நிறையச் சேகரித்து வைத்துக் கொள்ள முயன்றாள் அவள். பின்னால் அவளுக்குப் பழக்கமான குரல் ஒலித்தது.
"பெண்ணே! இதென்ன? உனக்குப் பித்துப் பிடித்து விட்டதா? விடிந்ததும் விடியாததுமாக உன்னை வீட்டில் காணவில்லையே என்று தேடிக் கொண்டு வந்தால், நீயோ மணல் மேட்டில் நின்று கடலைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்!"
தன் நினைவு வரப்பெற்றவளாய்த் திரும்பிப் பார்த்தாள் அவள். மணல் மேட்டின் கீழே அவளுடைய தந்தை நின்று கொண்டிருந்தார்.
"அப்பா! அவருடைய கப்பல் புறப்பட்டுப் போய்விட்டது." எதையோ இழந்து விட்ட ஏக்கம் அவளுடைய சொற்களில் ஒலித்தது.
வாழ்க்கையின் எல்லா அனுபவங்களையும் எண்ணி, பேசி, அனுபவித்து உணர்ந்திருந்த அந்தப் பெரியவர், தம் பெண்ணின் பேதமையை எண்ணி மனத்துக்குள் இலேசாக சிரித்துக் கொண்டே சொன்னார்:
"அதைப் பார்க்கத்தான் சொல்லாமல் கொள்ளாமல் இவ்வளவு அவசரமாக எழுந்திருந்து ஓடி வந்தாயா? அங்கே உன் அத்தை உன்னைக் காணவில்லையே என்று கிடந்து தவித்துக் கொண்டிருக்கிறாள்."
மதிவதனி அவருடைய பேச்சைக் காதில் போட்டுக் கொண்டதாகவே தெரியவில்லை. "அப்பா, நான் இங்கே கரையில் வந்து நின்றதும் கப்பல் மேல் தளத்திலிருந்து என்னைப் பார்த்துவிட்ட அவர் மகிழ்ச்சியோடு அந்தச் சங்கை எடுத்து ஊதினார் அப்பா!" என்று அந்த மகிழ்ச்சித் திளைப்பிலே தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தாள் அவள்.
"சரியம்மா!... போதும் அவருடைய பெருமை! வா, வீட்டுக்குப் போகலாம். இங்கே சிறிது தாமதித்தால் உன் அத்தையே நம் இருவரையும் தேடிக் கொண்டு வந்து விடுவாள்." மகளைக் கடிந்து கொள்பவர் போல் சினத்துடன் பேசி அழைத்துக் கொண்டு சென்றார் அவர். அந்தப் பெண்ணின் கால்கள் தரையில் நடந்தன. எண்ணங்களோ கடலில் மிதந்து சென்ற அந்தக் கப்பலோடு மிதந்து சென்றன.
வீட்டுக்குப் போனதும் அவளுடைய அத்தை வேறு அவளைக் கோபித்துக் கொண்டாள். "வயது தான் ஆகி விட்டது உனக்கு. உன் வயதுக்கு இவ்வளவு அசட்டுத்தனமும், முரட்டுத்தனமும் வேறு எந்தப் பெண்ணுக்காவது இருக்கிறதா பார். யாரோ ஊர் பேர் தெரியாதவன் கடையில் வந்து சங்கு வாங்கிக் கொண்டு போனான் என்றால் இப்படியா அவனையே நினைத்துக் கொண்டு பைத்தியம் பிடித்துப் போய் அலைவார்கள்! கிழக்கே ஒரு மூலை விடிவதற்குள் உனக்குக் கடற்கரையில் என்ன வேலை?"
அத்தையின் சீற்றத்துக்கு முன் தலைகுனிந்து நின்றாள் மதிவதனி. கால் கட்டை விரலால் தரையைத் தேய்த்துக் கொண்டு நின்ற அவளுக்குக் கண்கள் கலங்கிவிட்டன. பக்கத்தில் நின்ற தந்தை அனுதாபத்தோடு அவளைச் சமாதானப்படுத்தினார்.
"அசடே! இதற்காக வருத்தப்படலாமா? அத்தை உன் நன்மைக்காகத்தான் சொல்லுகிறாள்! எவரோ மூன்றாவது மனிதனை நினைத்து ஏங்கிக் கொண்டிருந்தால் அவர் நம்மவர் ஆகி விடுவாரா? நீதான் இப்படி நினைத்து நினைத்துக் குமைகிறாய்! இரண்டாயிரம் பொற்கழஞ்சுகளை அலட்சியமாகத் தூக்கிக் கொடுத்து ஒரு சங்கை வாங்கிக் கொண்டு போகும் செல்வச் சீமான் அந்த இளைஞன். நேற்றிரவு நீ அவன் உயிரையே காப்பாற்றியிருக்கிறாய்! ஆனாலும் என்ன? இந்தத் தீவு பார்வையிலிருந்து மறைந்ததுமே உன்னையும் என்னையும் இந்தத் தீவையும் மறந்து விடப் போகிறான் அவன். செல்வர்களுக்கு நினைவு வைத்துக் கொள்வதற்கு நேரம் ஏது அம்மா!"
'அப்பா! நீங்கள் நினைப்பது தவறு! அவர் என்னையும் இந்தத் தீவையும் ஒரு போதும் மறக்க மாட்டார்' என்று உடனே பதில் சொல்லிவிடத் துடித்தது அவள் நாக்கு. ஆனால் சொல்லவில்லை. தந்தையின் மேல் கோபம் கோபமாக வந்தது அவளுக்கு. காற்றில் மேலும் கீழுமாக ஆடும் இரண்டு மாதுளை மொட்டுக்களைப் போல் துடித்தன அவள் இதழ்கள். வலம்புரிச் சங்கோடு தன் நெஞ்சையும் கொண்டு போனவனை அவ்வளவு சுலபமாக - அவர் மதிப்பிட்டதை அவளால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. அடிபட்ட புலி சீறுவது போல் தந்தையை எதிர்த்துச் சீறின அவள் சொற்கள். "'உங்களையும் இந்தத் தீவையும் எந்நாளும் மறக்க மாட்டேன்' என்று நேற்று அவர் நமக்கு நன்றி கூறும் போது நீங்களும் தானே உடன் இருந்தீர்கள் அப்பா?"
பெண்ணின் சினம் அவருக்குச் சிரிப்பை உண்டாக்கியது.
"பேதைப் பெண்ணே! மனிதர்கள் சொல்லுகிற வார்த்தைகள் எல்லாமே நூற்றுக்கு நூறு உண்மையாக எடுத்துக் கொண்டு ஏமாறக் கூடாது! செல்வந்தர்கள் எதையுமே சீக்கிரமாக மறந்து விடுவார்கள். உலகத்தில் தாங்கள் செல்வர்களாக இருப்பதற்குக் காரணமாக எங்கோ சிலர் துன்பப்பட்டுக் கொண்டிருப்பதையே அவர்கள் மறந்து விடும் போது உன்னையும் என்னையுமா நினைத்துக் கொண்டு இருக்கப் போகிறார்கள்?"
"இல்லை! இல்லவே இல்லை. அவர், என்னை மறக்க மாட்டார்" - குழந்தை போல் முரண்டு பிடித்துப் பேசினாள் அவள். என்னவோ தெரியவில்லை, தன்னடக்கத்தையும் மீறிப் பேசும் ஒரு துணிவு, வெறி அவளுக்குள் அந்தச் சமயத்தில் உண்டாகியிருந்தது.
"மதிவதனி! 'அனிச்சம்' என்று ஒரு வகைப் பூ இருக்கிறது. அது மோந்து பார்த்துக் கொண்டிருக்கும் போதே வாடிப் போய்விடும். செல்வந்தர்கள் கொடுத்துவிட்டுச் செல்லும் உறுதிமொழிகளும் அப்படித்தான். அவற்றை உண்மை என்று நம்ப முயலும் போதே அவை பொய்யாகி வாடிவிடும். செல்வந்தனான ஆண்மகன் ஒருவனின் வார்த்தையை நம்பிக் கொண்டு ஏங்கிக் கால வெள்ளத்தில் கரைந்து கொண்டிருந்தாள் ஒரு பெண். பெயர் சகுந்தலை. அந்த ஆண் மகனோ அவளை மறந்தே போனான். அந்தப் பெண்ணின் ஏக்கத்தை உலகத்துக்கு எடுத்துக் கூற ஒரு மகாகவி தேவையாயிருந்தது. உனக்குத்தான் தெரியுமே, இந்தக் கதை?" - பெரியவர் மறுபடியும் அவளிடம் விவாதித்தார்.
"தெரியாது, அப்பா! தெரிந்து கொள்ளவும் ஆசை இல்லை." அழுகை வெடித்துக் கொண்டு கிளம்பும் எல்லைக்குப் போய்விட்டது அவள் குரல்.
"அண்ணா! இதென்ன? நீங்களும் அவளுக்குச் சரியாகப் பேச்சுக் கொடுத்துக் கொண்டு நின்றால் என்ன ஆவது?" என்று மதிவதனியின் அத்தை கூப்பாடு போட்ட பின்பே அவரும் தம்முடைய பேச்சை நிறுத்தினார்.
முகத்தை மூடிக் கொண்டு ஒரு மூலையில் போய் உட்கார்ந்து தேம்பித் தேம்பி அழத் தொடங்கிவிட்டாள் மதிவதனி. அந்தப் பெரியவர்களுக்கு அவளை எப்படித் திருப்தி செய்வதென்றே திகைப்பாகிவிட்டது. நயமாகவும், பயமாகவும் அவள் அழுகையைத் தணித்து வழிக்குக் கொண்டு வந்தார்கள். அவர்களுக்கு அவள் ஒரே குலக்கொழுந்து, செல்லப் பெண். அந்தப் பெரியவர் வாழ்க்கையில் பல துயர அனுபவங்களைக் கண்டவர். இதோ வளர்ந்து பெரியவளாகி மதிவதனி என்ற பெயருடன் நிற்கும் இப்பெண், சிறு குழந்தையாய் இருந்த போது தாய்மைப் பேணுதல் மட்டும் தான் இல்லாமற் போய்விட்டது. ஏறக்குறைய அதே சமயத்தில் பக்கத்துத் தீவில் ஒரு பரதனுக்கு வாழ்க்கைப்பட்டிருந்த அவருடைய இளைய சகோதரி அமங்கலியாக அண்ணனைத் தேடிக் கொண்டு பிறந்த வீடு வந்து சேர்ந்தாள். இந்த இரண்டு துன்பங்களும் அவருக்கு வாழ்க்கையிலேயே பெரிய அதிர்ச்சிகள்.
தங்கை வீட்டோடு இருந்து அவருடைய பெண் குழந்தையைப் பேணி வளர்த்து விட்டாள். அத்தையின் ஆதரவில் மதிவதனி வளர்ந்து உருவாகி விட்டாள். கண்டிப்பும், கண்காணிப்பும் அதிகமாக இருந்தாலும், அவளுடைய கண் கலங்கினால் மட்டும் அவர்களால் பொறுக்க முடியாது.
"மதிவதனி! உனக்கு நல்ல கைராசி இருக்கிறது. நீ போய் உட்கார்ந்து வியாபாரம் செய்தால் கடையிலும் நன்றாக விலை போகிறது. இன்றும் நீயே கடையில் போய் இரு. நான் வேறு வேலையாகக் கொஞ்சம் வெளியே போய் வருகிறேன்." பெண்ணின் அழுகையையும், கோபத்தையும் தணித்து ஒரு வழியாக அவளைத் தமது கடையில் வாணிகத்தைக் கவனித்துக் கொள்வதற்கு அனுப்பி வைத்தார் அந்தப் பெரியவர்.
கடையில் போய் உட்கார்ந்த பின்பும் அவளுடைய நினைவுகள் எல்லையற்ற கடலில் தான் இருந்தன.
மதிவதனியின் சிந்தனைகள் இளவரசன் இராசசிம்மனைச் சுற்றியே வட்டமிட்டன. 'இந்த நேரத்துக்கு அவருடைய கப்பல் எவ்வளவு தூரம் போய் இருக்கும்? எத்தனை தடவை அவர் என்னைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பார்? எத்தனை தடவையாவது? மறந்தால் தானே பல தடவைகள் நினைக்க முடியும்? அவர் தான் என்னை மறந்திருக்கவே மாட்டாரே! அவராக நினைக்காவிட்டாலும் அந்தச் சங்கு அவர் கையிலிருந்து நினைப்பூட்டிக் கொண்டே இருக்கும்!' தும்மல் வரும் போதெல்லாம் அவர் தன்னை நினைப்பதாகக் கற்பனை செய்து கொண்டாள் அவள். அத்தையும், தந்தையும் அன்று காலை சொல்லியது போல் அவர் தன்னை உடனே மறந்து விடுவாரென்பதை அவளால் நம்பவே முடியவில்லை! கடலுக்கு அப்பாலிருக்கும் உலகத்தை அறியாத அந்தப் அப்பாவிப் பெண்ணின் மனத்தில் அசைக்க முடியாததொரு நம்பிக்கையை, சிதைக்க முடியாததொரு கனவை வேரூன்றச் செய்து விட்டுப் போய்விட்டான் முதல் நாள் சங்கு வாங்க வந்த அந்த இளைஞன். அவன் ஒருவனுக்காகவே தன் உள்ளமும், உணர்வும் தோற்றுத் தொண்டு பட வேண்டுமென்று தன்னைக் காக்க வைத்துக் கொண்டிருந்தது போல் அவளுக்குத் தோன்றியது. கால ஓட்டத்தில் இறுதிப் பேருழிவரை கழிந்தாலும் அவனை மறுபடியும் அங்கே காணாமல் தன் கன்னிமை கழியாது போல் நினைவு குமுறிற்று அவளுக்கு. 'நீ அவனைக் காணலாம்! பன்முறை காணலாம்... பிறவி, பிறவியாகத் தொடர்ந்து விலாசம் தவறாமல் வந்து கொண்டிருக்கும் உயிர்களின் வினைப் பிணிப்புப் போல் விளக்கிச் சொல்ல முடியாததோர் பிணைப்பு உங்களுக்கிடையே இருக்கலாம். இருக்க முடியும்' என்பது போலத் தற்செயலான ஒரு தெம்பு அவள் நெஞ்சில் நிறைந்து கொண்டிருந்தது. அவநம்பிக்கையின் தளர்ச்சியை மறைக்க அவளாக உண்டாக்கிக் கொண்ட நினைவன்று அது. புனல் ஓடும் வழியில் புல் சாய்ந்தாற் போலவும் நீர் வழி மிதவைப் போலவும், துளையிட்ட காசுகள் கயிற்றில் கோவை பெறல் போலவும், தற்செயலான ஒரு தவிர்க்க முடியாத நினைவு என்று அதைக் கூறவேண்டும்.
வட கடலில் இட்ட நுகத்தடி ஒன்று பல்லாண்டுக் காலமாகத் தள்ளுண்டு மிதந்து மிதந்து தென்கடலில் இட்ட துளையுள்ள சுழி ஒன்றில் வந்து பொருந்திக் கொள்வது மாதிரிப் பொருந்திய நினைவு அது.
ஒவ்வொரு நாளும் செம்பவழத்தீவின் கடைவீதியில் கலகலப்புக்கு குறைவே இருக்காது! அன்றும் அவளுடைய கடைக்கு யார் யாரோ வந்தார்கள்! சங்கு வாங்கினார்கள். முத்து, பவழம் வாங்கினார்கள். வருபவர்களுக்கு விற்பதற்காகச் சங்கை எடுத்துக் கொடுக்கும் போது எல்லாம் சங்கோடு சேர்த்துப் பிடித்துக் கொண்ட அந்த ஆண்மகனின் கைகள் நினைவுக்கு வரும். உச்சிமரக் கிளையில் நின்று கொண்டு தன் உயிரைக் காப்பாற்றியதற்காக நன்றி கூறி அவளுடைய வளைக்கரங்களைப் பற்றிக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் சிந்திய காட்சி நினைவுக்கு வரும். அந்த நினைவுகளெல்லாம் வரும் போது மதிவதனி தன்னை மறந்து தான் இருக்கும் கடையையும், கடையிலுள்ள பொருள்களையும் மறந்து எங்கோ போய் மீள்வாள்.
நேற்றுக் காலை வரை தன்னையும், தன்னுடையவர்களையும் தன் சூழ்நிலையையும் பற்றித் தான் அவளுக்கு நினைக்கத் தெரிந்திருந்தது. இப்போதோ, நினைப்பதற்கும் நினைவுகளை ஆளுவதற்கும் வேறு ஒரு புதியவன் கிடைத்துவிட்டான். செம்மண் நிலத்தில் மழை பெய்த பின் நீருக்குத் தன் நிறம் ஏது? தன் சுவை ஏது? தன் மணம் ஏது?
மாலையில் அவளுடைய தந்தை கடைக்கு வந்துவிட்டார். "பெண்ணே! கடையை நான் பார்த்துக் கொள்கிறேன். உன்னுடைய அத்தை உன்னை வீட்டுக்கு வரச்சொன்னாள், நீ போ" என்று அவளை வீட்டுக்கு அனுப்பினார். வீட்டுக்குச் செல்வதற்காக அவள் வீதியில் இறங்கி நடந்து கொண்டிருந்த போது அவளுக்குச் சிறிது தொலைவு முன்னால் நடந்து கொண்டிருந்த யாரோ இரண்டு மூன்று பேருடைய பேச்சு அவளுடைய கவனத்தைக் கவர்ந்தது. வேகமாக நடந்து அவர்களைக் கடந்து முன்னே சென்று விடாமல் அவர்களது பேச்சைக் கேட்டுக் கொண்டே பின்பற்றினாள் அவள்.
"அடே! உன்னைப் போல் பெரிய முட்டாள் உலகத்திலேயே இருக்க முடியாதடா? ஆள் தானாக வலுவில் தேடிக் கொண்டு வந்து நிற்பது போல் நின்றான். நீ வம்பு பேசி நேரத்தைக் கடத்தியிருக்காவிட்டால் உடனே அங்கேயே ஆளைத் தீர்த்திருக்கலாம்."
"போடா மடையா! நாம் தீர்ப்பதற்கு தயாராகிக் கொண்டிருக்கும் போது அவன் தான் உயிர் தப்பினால் போதுமென்று ஓட்டமெடுத்து விட்டானே?"
"நாமும் துரத்திக் கொண்டு தானே போனோம்! ஓடிக் கொண்டிருந்தவன் திடீரென்று மாயமாக மறைந்து விட்டானே? நாம் என்ன செய்யலாம்? பக்கத்துப் புதர்களிலெல்லாம் துருவிப் பார்த்தும் அகப்படவில்லையே?"
"கடலில் குதித்திருப்பானென்று எனக்குத் தோன்றுகிறதடா!"
"எப்படியோ தப்பிவிட்டானே? வேறோருவர் காணாமல் உலாவும் சித்து வித்தை - மாய மந்திரம், வசியம் ஏதாவது அவன் கையிலிருந்த அந்தச் சங்கில் இருந்திருக்குமோ என்னவோ?"
"மாயமாவது, வசியமாவது! அதெல்லாம் ஒன்றுமில்லை. கடலில் தான் குதித்திருப்பான். அப்படியில்லையானால் இன்று காலையில் விடிந்ததிலிருந்து இவ்வளவு நேரமாக இந்தத் தீவு முழுவதும் சுற்றி அலைந்தும் எங்கேயாவது ஓரிடத்தில் நம் கண்ணில் அகப்படாமல் போவானா?"
"நாகைப்பட்டினத்தில் போய் இறங்கியதும் நம்மை அனுப்பியவர்களுக்கு நாம் பதில் சொல்லியாக வேண்டும்! இல்லையானால் நாம் செய்யாது போன செயலை நமக்கே செய்து விடுவார்களே!"
கடைசியாகப் பேசியவனுடைய குரலில் பயம் மிதந்தது. தெருக்கோடி வரை வீதியில் போய்க் கொண்டும், வந்து கொண்டும் இருக்கும் மற்றவர்களைப் பற்றி கவலையில்லாமல் இரைந்து பேசிக் கொண்டு நடந்தார்கள் அந்த மூவரும். மதிவதனி தற்செயலாகத் தெருவில் நடந்து செல்பவள் போல் கேட்டுக் கொண்டே சென்றாள். அந்த மூன்று பேரும் ஒரே மாதிரிச் சிவப்பு நிறத்தில் தலைப்பாகை அணிந்திருந்தனர். பார்ப்பதற்கு முரடர்களாகத் தோன்றினர். அவர்கள் பேச்சைக் கேட்டு எந்தச் சந்தேகத்தோடு அவள் பின் தொடர்ந்தாளோ அது சரியாக இருந்தது. நேற்றிரவு கடற்கரையில் அந்த இளைஞனை அவர்கள் துரத்தும் போதும், அவன் வலை மூலம் தன்னால் மரக்கிளைக்குத் தூக்கப்பட்ட பின் தாழம் புதரில் தேடிய போதும், அந்த முரடர்களுடைய உருவத்தைச் சரியாகக் கொண்டு நினைவு வைத்துக் கொள்ள அவகாசமில்லை அவளுக்கு. இப்போது அவர்களைக் காணும் போது அவளுக்கே அச்சமாக இருந்தது. அவர்கள் பேச்சிலிருந்து அனுமானித்துக் கொண்ட உண்மையால் கொலை செய்ய வேண்டுமென்றே அவர்களை யாரோ தூண்டிவிட்டு அனுப்பியிருக்கும் விவரமும் அவளுக்குப் புரிந்தது. வீட்டுக்குப் போவதை மறந்து மேலும் பின் தொடர்ந்தாள் அவள். அவர்கள் உரையாடல் மேலும் வளர்ந்தது.
"ஈழத்தில் போய்ச் செய்ய வேண்டிய கொலையை இடை வழியிலேயே செய்வதற்கு நல்ல வாய்ப்புக் கிடைத்தது, தவற விட்டுவிட்டோம்."
"கொல்லாவிட்டால் என்ன? அவன் மட்டும் நமக்குப் பயந்து ஓடிக் கடலில் குதித்திருந்தால் கொன்றது மாதிரிதான். இந்தப் பக்கத்து கடல் ஓரங்களில் முதலைகளின் புழக்கம் அதிகம். அதனால் தான் எங்கு பார்த்தாலும் கரையோரங்களில் இரும்பு வலைகள் விரித்திருக்கிறார்கள். அவன் கடலில் குதித்தது மெய்யானால் நாம் செய்ய வேண்டிய காரியத்தை முதலைகள் செய்திருக்கும்."
மதிவதனி இதைக் கேட்டுத் தனக்குள் சிரித்துக் கொண்டாள். அவர்கள் பேச்சு தொடர்ந்தது.
"நம் கதைதான் இப்படி ஆயிற்றென்றால் நாம் விழிஞத்தில் இறக்கி விட்டு வந்த அந்த மூன்று தோழர்களும் என்ன செய்திருக்கிறார்களோ?"
"என்ன செய்தால் நமக்கென்ன? நாம் திரும்பிவிட வேண்டியதுதான். நமக்கு இனி வேலை இல்லை."
வீதியின் ஆரவாரம் குறைந்து கடற்கரை தொடங்கும் திருப்பத்தில் அவர்கள் திரும்பிவிட்டனர். மதிவதனி சிறிது பின் தங்கினாள். அதுவரை தெருவில் ஆள் நாமாட்டமுள்ள கலகலப்பான பகுதியில் அவர்கள் சென்றதால் ஒட்டுக் கேட்டுக் கொண்டே பக்கத்தில் ஒட்டி நடக்க வசதியாக இருந்தது. இனி அப்படி முடியாது. ஆகவே அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று தீர்மானித்து வீட்டுக்குப் போய்விட்டாள் அவள்.
பொழுது மறையும் நேரத்துக்குத் தான் வலை விரிக்கும் பகுதியை ஒட்டியிருந்த கடற்கரைக்கு அவள் சென்ற போது கடல் திருப்பத்தில் புலிச் சின்னமும், பனைமரச் சின்னமும் உள்ள கொடி உச்சியில் அசைய அந்தக் கப்பல் புறப்பட்டுக் கொண்டிருந்தது. அதன் மேல் தளத்தில் அவர்களுடைய சிவப்புத் தலைப்பாகைகள் தெரிந்தன.
'ஐயோ! கடலில் எங்கேயாவது அவருடைய கப்பலும் இதுவும் சந்தித்துக் கொண்டால்?' பேதமையான இந்தக் கற்பனை மதிவதனிக்குத் தோன்றிய போது அவள் உடல் நடுங்கியது. அவளுடைய கற்பனைகளோ கையில் சங்கோடு நிற்கும் அவனைச் சுற்றி அவனுடைய கப்பல் போகும் கடலில் மிதந்தன.
--------
2.8. முடியாக் கனவின் முடிவினிலே...
நான்கு புறமும் திக்குத் திகாந்தரங்களெல்லாம் ஒரே நீல நெடு நீர்ப் பரப்பு. யாரோ சொல்லித் தூண்டி அனுப்புவது போல் அடுக்கடுக்காய் ஒன்றன் பின் ஒன்றாய் நிரவி மேலெழுந்து நிமிர்ந்து வரும் அலைகளின் ஆனந்தக் காட்சி. சுழித்து ஓலமிடும் காற்றுக்கும், அலைகளின் ஆர்ப்புக்கும் அஞ்சாமல் அந்தக் கப்பல் சென்று கொண்டே இருந்தது.
"இளவரசே! சோர்ந்து போய்க் காணப்படுகிறீர்களே! மிகவும் களைப்பாக இருந்தால் படுத்துக் கொள்ளலாமே!" என்றார் சக்கசேனாபதி. இராசசிம்மன் உண்மையில் சோர்ந்து தான் போயிருந்தான். அதிக நேரக் கடற் பயணத்தின் அலுப்பு அது.
கண்கள் சிவந்திருந்தன. உடல் நெருப்பாய்க் கொதித்தது. தலை கனத்து வலிப்பது போலிருந்தது. கீழ்த்தளத்தில் ஒரு மரக் கம்பத்தின் அடியில் சாய்ந்து கொண்டு வீற்றிருந்தான் இராசசிம்மன். அந்த நிலையில் ஒற்றை நாடியான அவன் உடலையும் முகத்தையும் பார்த்தால் குளத்திலிருந்து தண்டோடு வெளியில் பறித்து எறிந்த தாமரை போலத் தோன்றியது. அந்த வாட்டத்தைக் கண்டு சக்கசேனாபதி மனத்தில் வேறு விதமாக நினைத்துப் பயந்தார். 'கடற் காய்ச்சல் மாதிரி ஏதாவது வருவதற்கு முன்னறிவிப்புதான் அந்தச் சோர்வோ?' என்று தோன்றியது அவருக்கு.
கப்பலுக்குள் பொருள்கள் வைத்திருந்த பகுதிக்குப் போய் மெத்தென்றிருக்கும் கனமான விரிப்பு ஒன்றையும் சாய்ந்து கொள்வதற்கு வசதியான தலையணைகளையும் எடுத்துக் கொண்டு வந்தார். தளத்தில் ஒரு நல்ல இடமாகப் பார்த்து விரிப்பை விரித்தார். இராசசிம்மனை எழுந்திருக்கச் செய்து கைத்தாங்கலாக நடத்தி அழைத்துக் கொண்டு போய்ப் படுக்க வைத்தார். கையிலிருந்த வலம்புரிச் சங்கையும் படுக்கையிலேயே பக்கத்தில் வைத்துக் கொண்டான் அவன். அந்தச் செயலைப் பார்த்த போது சக்கசேனாபதி மனத்துக்குள் சிரித்துக் கொண்டார். வீரமும், சூழ்ச்சியும் துணைகொண்டு ஒரு நாட்டின் அரியணையில் வீற்றிருக்க வேண்டிய அரச குமாரனுக்கு இவ்வளவு குழந்தை மனமா? தனது விளையாட்டுப் பொருளைத் தான் தூங்கும் போதும் பக்கத்தில் வைத்துக் கொண்டு தூங்கும் சிறு பிள்ளையைப் போன்றல்லவா இருக்கிறது இது?' - அவர் நினைத்தார்.
"இந்த சங்கு எப்போதும் உங்கள் பக்கத்திலேயே இருக்க வேண்டுமா? கப்பல் ஆடும் போது உருண்டு எங்கேயாவது போய்விடுமே. நான் இதை உள்ளே கொண்டு போய் வைத்து விடுகிறேன்" என்று சிரித்துக் கொண்டே குனிந்து அதைக் கையில் எடுக்க முயன்றார் அவர்.
"வேண்டாம்! அது இங்கேயே இருக்கட்டும்!" படுத்திருந்தபடியே அவருடைய கைகளை மறித்துத் தடுத்து விட்டான் அவன்.
"சரி! தூங்குங்கள்" - இப்படிச் சொல்லிவிட்டு நடந்தவர் எதையோ நினைத்துக் கொண்டவர் போல் மறுபடியும் அவனருகே வந்து முழங்கால்களை மடித்து மண்டியிட்டு அமர்ந்தார். இளவரசனின் மார்பை மூடியிருந்த பட்டு அங்கியை விலக்கி வலது கையால் தொட்டுப் பார்த்தார். பின்பு நெற்றியிலும் கையை வைத்துப் பார்த்தார். அவருடைய முகத்தில் கவலை வந்து குடிபுகுந்தது.
"கண்கள் எரிச்சலாக இருக்கின்றதா உங்களுக்கு?"
'ஆம்' என்பதற்கு அடையாளமாகத் தலையசைத்தான் இராசசிம்மன்.
"நீங்கள் கவனமாயிருக்க வேண்டும்! கடற்காய்ச்சலை இழுத்து விட்டுக் கொண்டு தொல்லைப்படக் கூடாது." அவர் எச்சரிக்கை செய்து விட்டுப் போனார். நினைத்துப் பார்க்கும் போது அவருக்கு வேடிக்கையாக இருந்தது. 'தலைமுறை தலைமுறையாக உரிமை கொண்டாட வேண்டிய முடியையும் வாளையும் சிம்மாசனத்தையும் கூட இப்படிப் பக்கத்தில் வைத்துக் கொண்டு பாதுக்காக்கத் தெரியவில்லை. கப்பலில் ஒரு மூலையிலுள்ள அறையில் அடைப்பட்டுக் கிடக்கின்றன அவை. ஏதோ ஒரு தீவில் எவளோ ஒரு பெண்ணிடம் விலைக்கு வாங்கிய இந்தச் சங்குக்கு இவ்வளவு யோகம், புதுப் பொருள் மோகம்.
'ஊம்! யாரை நொந்து கொள்வது? உலகத்தில் பெண் சம்பந்தப்பட்ட எந்தப் பொருளுக்கும் மதிப்பு உயர்ந்து கொண்டே போகிறது' என்று தளத்தில் நடந்து கொண்டே முணுமுணுத்தது அவருடைய வாய்.
உடல் தளர்ந்து படுத்துக் கொண்டிருந்த இராசசிம்மனுக்கு கண் இமைகள் சொருகி விழிகள் மேற் கவிந்தன. உடலின் அனுபவங்களுக்கும், உள்ளத்துக்கும் ஏதோ நெருங்கிய தொடர்பு இருக்கும் போலும். காலையில் செம்பவழத் தீவிலிருந்து புறப்படுகிறவரை உற்சாகமாக இருந்த அவன் மனமும் இப்போது தளர்ந்திருந்தது. தன் செயல்களால் ஏற்பட்டிருக்கும் விளைவுகளைப் பற்றியெல்லாம் கற்பனை செய்து பார்த்தது அவன் உள்ளம். கடுங்குளிர் காலத்தில் வெந்நீருக்குள் உடலை முக்கிக் கொண்டால் இதமாக இருக்குமே! அதுபோல் படுக்கையில் படுத்துக் கொண்டே கண்களை மூடிக் கொண்டு நினைவுகளை எங்கெங்கோ படரவிடுவது சுகமாக இருந்தது அவனுக்கு.
ஒவ்வொருவர் முகமாக, ஒவ்வோர் இடமாக, அவன் முன் தோன்றியது. நினைவு நழுவித் துயில் தழுவும் ஓய்ந்த நிலை. காற்று மண்டலத்தின் எட்ட முடியாத உயரத்துக்கு உடலின் கனம் குறைந்து நுண்ணிய உணர்வுகளே உடலாகி மெல்லப் பறப்பது போன்ற தன் வசமற்றதோர் பரவசத்தில் ஆழ்ந்திருந்தது மனம்.
மலையுச்சியும், வான்முகடும், கடல் ஆழமும், நிலப்பரப்பும், இவையனைத்தின் பெருமையும், கம்பீரமும் ஒன்றாய்ச் சமைந்து ஒரு முகமாக மாறி அவன் கண்களுக்கு அருகில் நெருங்கி வருகிறது. பயந்து போய் அவன் கண்களை இறுக்கி மூடிக் கொள்கிறான்.
'இராசசிம்மா! நீ அசட்டுத்தனமாக நடந்து கொண்டு விட்டாய். என்னென்னவோ பெரிய எண்ணங்களை எண்ணிக் கொண்டு உன்னை வரவழைத்து இடையாற்று மங்கலத்தில் இரகசியமாகத் தங்க வைத்தேன். நான் எதை எதையே திட்டமிட்டுக் கொண்டு செய்தேன். நீயும் எதை எதையோ திட்டமிட்டுக் கொண்டு தான் என்னிடம் வந்து தங்கினாய் என்பது இப்போது புரிகிறது. என்ன செய்யலாம்? எப்படி நடக்குமோ, அப்படி நடத்திக் கொடுப்பதற்கு விதிக்குச் சிறிதும் சம்மதமில்லை."
பெரிய கண்டாமணியின் நாக்கைக் கையின் வலிமை கொண்ட மட்டும் இழுத்து விட்டு விட்டு அடிப்பது போல் ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு அறையாக அவன் கன்னத்தில் மோதிவிட்டுச் செவிக்குள் புகுந்தது. பயந்து கொண்டே மெல்லக் கண்ணைத் திறக்க முயல்கிறான் அவன். ஆனால் கண்ணைத் திறப்பதற்கு முன்பே மகாமண்டலேசுவரரின் முகம் கண்ணுக்குள்ளேயே புகுந்து வந்து தெரிவதுபோல் அவனுக்குப் புலனாகிறது.
மறுபடியும் சில கணங்கள் காற்று மண்டலத்தில் பறப்பது போல் ஒரு பரவசம் ஏற்பட்டது.
அந்தப் பரவசத்தைக் கலைத்துக் கொண்டு, 'குழந்தாய்!' என்று ஒரு குரல் உலகத்துக் கருணையையெல்லாம் உள்ளடக்கிக் கொண்டு ஒலித்தது. இராசசிம்மன் தன்னைப் பெற்றெடுத்த அன்னையின் முகத்தைக் கண்டான்; நெஞ்சை நெகிழ்த்தது, 'குழந்தாய்' என்ற அந்தக் குரல். உலகில் தாயின் குரலைத் தவிர வேறு எந்தக் குரலும் ஏற்படுத்த முடியாத நெகிழ்ச்சி அது.
'செல்வா!' இத்தனை வயதும் பொறுப்பும் ஏற்பட்ட பின்பும் உனக்கு இன்னும் விளையாட்டுப் புத்தி போகவில்லையே, அப்பா! யாரிடம் விளையாடலாம், யாரை ஏமாற்றலாம் என்று கூடவா உனக்குத் தெரியாமற் போய்விட்டது? மகாமண்டலேசுவரர் எவ்வளவு பெரியவர்? நம் நலனிலும் நாட்டு நலனிலும் எவ்வளவு அக்கறையுள்ளவர்? அவர் உனக்குக் கெடுதல் செய்ய முற்படுவாரா? அவரைக் கூட நம்பாமல் இப்படி நடந்து கொண்டு விட்டாயே நீ? இடையாற்று மங்கலத்தில் வந்து மறைந்து கொண்டிருந்த போது உன் தாயைப் பார்க்க வேண்டுமென்ற துடிப்பு உன் மனத்தில் ஒரு தரம் கூட ஏற்படவேயில்லையா குழந்தாய்? நீ வந்து பார்க்க வேண்டுமென்று உன் மனத்தில் ஒரு முறையாவது நினைத்திருந்தாலே போதும். அதுவே என் தாய்மைக்கு வெற்றிதான். அரியணை ஏறி அரசாண்டு வீரச் செயல்கள் புரிந்து தென்பாண்டி நாட்டு மக்கள் மனங்களையெல்லாம் கவரவேண்டிய நீ அந்த அரியணையையும் அரசுரிமைப் பொருள்களையுமே கவர்ந்துகொண்டு போய்விட்டாயே! யாருக்கும் தெரியாமல் இப்படிக் கவர்ந்து கொண்டு கள்வனைப் போல் போவதற்கு உனக்கு வெட்கமாக இல்லையா, அப்பா? ஆற்றங்கரை மரம் போல் செழித்துக் கொழித்துப் பெரு வாழ்வு வாழ்ந்த உன் தந்தையைப் போல் தென்பாண்டி நாட்டை ஆளும் வீரம், கடகம் செறிந்த உன் கைகளில் இருக்குமென்றுதான் நான் நம்பிக் கொண்டிருக்கிறேன்! நீ என்ன செய்யப் போகிறாயோ?' - அந்தக் குரல் ஒலி நின்று போயிற்று.
'ஐயோ, அம்மா!' என்று அலறி விட வேண்டும் போலிருந்தது குமார பாண்டியனுக்கும். ஆனால் அப்படி அலற முடியாமலும் அழ முடியாமலும் ஏதோ ஓர் உணர்ச்சி அவன் வாயைக் கட்டி விட்டது போலிருந்தது. வாயிருந்தும் நாவிருந்தும், பேசத் தெரிந்தும், அவன் ஊமையானான்.
'நீங்கள் மிகவும் பொல்லாதவர்! உங்களுக்கு இரக்கமே கிடையாது. கல்நெஞ்சு உடையவர்' - முகத்திலும் கண்களிலும் பொய்க் கோபம் துடிக்கக் குழல்வாய்மொழி அவன் முன் தோன்றினாள்.
'குழல்வாய்மொழி! நீ என்னை மன்னித்துவிடு. நான் உன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் வந்துவிட்டேன்' என்று எதையோ சொல்வதற்காக அவன் வாயைத் திறந்தான்.
ஆனால் அந்தப் பெண்ணின் பேச்சு அவனை வாயைத் திறக்கவே விடவில்லை. ஆத்திரமடைந்து கூப்பாடு போட்டாள் அவள். 'நீங்கள் பேசாதீர்கள்! போதும், உங்கள் பேச்சு. பேசிப் பேசி என்னை ஏமாற்றினீர்கள். அத்தனையும் வெளிவேடம். உடலுக்கு வேடம் போட்டுக் கொள்ளத்தான் உங்களுக்குத் தெரியுமென்று நினைத்திருந்தேன். நீங்களோ மனத்தில், நினைவில், அன்பில், பேச்சில், எல்லாவற்றிலும் வெளிவேடம் போடுகிறீர்கள். நீங்கள் பெரிய கள்வர், மிகப் பெரிய கள்வர். உலகத்துக் களவர்களுக்கெல்லாம் பொன்னையும், பொருளையும் தான் திருடத் தெரிந்திருக்கிறது. உங்களுக்கு அதோடு மனத்தையும் திருடி ஏமாற்றிவிட்டுப் போகத் தெரிகிறது. ஐயா இளவரசே! நீங்கள் கெட்டிக் காரர் என்று உங்கள் மனத்தில் எண்ணமோ?'
படபடப்பாகப் பேச்சைக் கொட்டிவிட்டு மறைந்து விட்டது இடையாற்று மங்கலத்து இளங்குமரியின் மதிமுகம். அப்புறம் சமீபத்தில் அவன் சந்தித்த, சந்திக்காத, யார் யாருடைய முகங்களோ, எந்த எந்த இடங்களோ, அவன் கண்முன் தெரிந்து மறைந்தன. நாராயணன் சேந்தன், தளபதி வல்லாளதேவன், பகவதி, விலாசினி, ஆசிரியர்பிரான், பவழக்கனிவாயர், இடையாற்று மங்கலத்துப் படகோட்டி, பாண்டிநாட்டுக் கூற்றத் தலைவர்கள், அரசாங்க அதிகாரிகள் ஒவ்வொருவர் முகமும் அவன் பார்வைக்கு முன்னால் தோன்றி மறைந்து ஏசி இரைந்து, சினந்து பேசுவது போல் தோன்றின. கோட்டை, அரண்மனை, இடையாற்றுமங்கலம், பறளியாறு, வசந்த மண்டபம், குமரிக் கோயில், விழிஞம், சுசீந்திரம், மின்னல் மின்னலாக, ஒளிவட்டம் ஒளிவட்டமாக, அந்த இடங்கள் அவன் உணர்வுக்குப் புலனாகி மறைந்தன.
எல்லாவற்றுக்கும் இறுதியில் கடல் முடிவற்றுத் தெரிந்த நீர்ப் பிரளயத்தின் மேல் சக்கசேனாபதி அருகில் துணை நின்று, ஒரு கப்பலில் அவனை எங்கே அழைத்துக் கொண்டு போகிறார். செம்பவழத் தீவு, கடைவீதி, மதிவதனி, வலம்புரிச் சங்கு, உயிருக்கு நேர்ந்த ஆபத்து, முதலை வலையில் சுருண்டு தப்பியது - நினைவுகள் - முகை பிறழாமல் ஒவ்வொன்றாகத் தொடருகின்றன.
சிரித்துக் கொண்டே மதிவதனி அவனுக்கு முன் தோன்றுகிறாள். அவன் ஆவலோடு எழுந்து ஓடிப் போய் அவள் கொடி உடலைத் தழுவிக் கொள்கிறான். அடடா! அந்த இன்ப அரவணைப்பில் தான் என்ன சுகம்? எலும்பும் தோலும் நரம்பும் இணைந்த மனிதப் பெண்ணின் உடல் போலவா இருக்கிறது அது? மலர்களின் மென்மையும், அமுதத்தின் இனிமையும், மின்னலின் ஒளியும் கலந்து கவின் பெற்று இளமை ரசம் பூசிய ஒரு கந்தர்வச் சிலை அவள் உடல்! அவன் தழுவலில் கண்ணொடு கண்ணினை கலப்புற்று நிற்கும் அவள் நாணிக் கண் புதைத்துச் சிரிக்கிறாள். வலது இதழ் முடியுமிடத்தில் சிரிப்பு சுழித்துக் குழியும் சமயத்தில் தன் கையால் குறும்புத்தனமாகக் கிள்ளுகிறான் அவன்.
பொய்க்காக வலிப்பது போல நடிக்கிறாள் அவள். அந்த இனிய நிலை முடிவற்றுத் தடையற்று வளர்ந்து தொடராய் நீண்டு கொண்டே போகிறது.
அப்போது இடையாற்று மங்கலம் நம்பி ஓடி வந்து, 'நீ ஓர் அசடன்?' என்று கூச்சலிடுகிறார். அவனுடைய அன்னை ஓடி வந்து, 'உனக்கு இன்னும் விளையாட்டுப் புத்தி போகவில்லை' என்கிறார். குழல்வாய்மொழி ஓடிவந்து, 'நீங்கள் பொல்லாதவர்' என்று பொறாமையோடு கத்துகிறாள். சக்கசேனாபதி சிரித்துக் கொண்டே 'நீங்கள் இன்னும் குழந்தையாகவே இருக்கிறீர்களே?' என்று குற்றம் சுமத்துகிறார். அத்தனை குரல்களும் மண்டையைப் பிளப்பது போல் ஒன்றாகச் சேர்ந்து ஒலிக்கின்றன. அவன் பயந்து போய் மதிவதனியை இன்னும் இறுக்கித் தழுவிக் கொள்கிறான்.
'ஐயோ! இதென்ன உங்கள் உடல் இப்படி அனலாய்ச் சுடுகிறதே?' என்று பதறிப் போய்ச் சொல்கிறாள் அவள். இராசசிம்மனின் உடல் வெடவெடவென்று நடுங்கியது. 'பெண்ணே! இந்தக் கனவைத் தீர்க்கும் மருந்து நீதான்' என்று அவளைத் தழுவிய கைகளை எடுக்காமலே சொல்லுகிறான் அவன். திடீரென்று யாரோ கைகொட்டிச் சிரிக்கும் ஒலி கடல் ஒலியோடு கலந்து கேட்கிறது. காற்று மண்டலத்தில் நுண்ணுணர்வே உடலாகி மேலே எட்டாத உயரத்தில் பறந்து கொண்டிருந்த இராசசிம்மனின் உடல் 'பொத்தென்று' தரையில் வந்து விழுந்ததைப் போல் ஒரு பெரிய அதிர்ச்சி. அந்த அதிர்ச்சியைத் தாங்கிக் கொண்டு அவன் மெல்லக் கண்களைத் திறக்கிறான். எதிரே கப்பல் தளத்தில் சக்கசேனாபதி அவன் அருகே சிரித்துக் கொண்டு நின்றார். தன் கைகளினால் படுக்கையின் பக்கத்தில் இருந்த வலம்புரிச் சங்கை நெரித்து விடுவது போல் தழுவிக் கொண்டிருப்பதை அப்போது தான் உணர்ந்தான் அவன். அவர் சிரிப்பதன் காரணம் புரிந்தது.
அத்தனையும் கனவு! முடியாக் கனவு! என்று தான் அதற்கு முடிவோ! இராசசிம்மன் வெட்கமடைந்து சங்கைப் பற்றித் தழுவிக் கொண்டிருந்த தன் கைகளை எடுத்தான். "தூக்கத்தில் இப்படியா அழுகையும் சிரிப்புமாக மாறி மாறி உளறிப் பிதற்றுவீர்கள்? நான் பயந்தே போனேன். நீங்கள் இந்தச் சங்கை அழுத்திய விதத்தைப் பார்த்தால் உங்கள் பிடியின் இறுக்கம் தாங்காமல் இது உடைந்து விடுமோ என்று அஞ்சிவிட்டேன்" சக்கசேனாபதி கூறினார். அவன் அருகில் குனிந்து உட்கார்ந்து மீண்டும் மார்பையும், நெற்றியையும் தொட்டு நீவிப் பார்த்தார். அவர் முகம் சுருங்கிச் சிறுத்தது.
"உங்களுக்குக் காய்ச்சல் தான் வந்திருக்கிறது! நான் நினைத்தது சரியாகப் போயிற்று" என்று பதட்டத்தோடு கூறிவிட்டுப் போர்வையை எடுத்து நன்றாகப் போர்த்திவிட்டார். இராசசிம்மன் அவரைப் பார்த்து மிரள மிரள விழித்தான். கப்பல் அறைக்குப் போய் ஏதோ ஒரு தைலத்தை எடுத்துக் கொண்டு வந்து அவன் மார்பிலும் நெற்றியிலும் சூடு பறக்கத் தேய்த்துத் தடவிக் கொடுத்தார்.
--------
2.9. விலாசினியின் வியப்பு
அரண்மனைத் தோட்டத்து மரத்தடியில் தளபதியை அந்தரங்கமாகச் சந்தித்த பின் பகவதிக்குச் சுறுசுறுப்பாகத் திட்டமிட்டுக் கொண்டு செய்ய வேண்டிய சில காரியங்கள் இருந்தன. அண்ணன் அவளிடம் சொல்லிவிட்டுப் போயிருந்த செயல்கள் எத்துணைப் பெரியவை? அவற்றை ஒழுங்காகவும், பிறருக்குத் தெரியாமலும் செய்து முடிப்பதற்கு எவ்வளவு சூழ்ச்சியும், சாதுரியமும் வேண்டும்?
தமையனின் அந்தச் சொற்கள் அவளுடைய செவிகளில் ஒலித்துக் கொண்டே இருந்தன.
"நீ என்னுடைய தங்கை...! இந்தச் சூழ்நிலையில் என்னுடைய தங்கையிடமிருந்து நான் சில வீரச் செயல்களை எதிர்பார்க்கிறேன்."
நாட்டின் பயங்கரமான சூழ்நிலையை விளக்க அண்ணன் உதாரணமாகக் கூறிய துன்பக் கதையை நினைத்துக் கொண்ட போது அவனுடைய கதை கூறும் திறமையை எண்ணிச் சிரிப்பு வந்தது அவளுக்கு. 'எவ்வளவு இரகசியமாக எவ்வளவு நம்பிக்கையோடு அண்ணன் இந்தக் காரியங்களை அவளிடம் ஒப்படைத்துப் போயிருக்கிறேன்?' இதை எண்ணும் போது மட்டும் ஈடில்லாத பெருமிதத்தை அடைந்தாள் பகவதி. எல்லாப் பொறுப்புகளையும் தன்னுடையதாக இழுத்துப் போட்டுக் கொண்டு செயலாற்ற முந்தும் ஒரு வீரனுக்கு உடன் பிறந்தவள் தான் அப்படிப்பட்ட பெருமிதத்தை அடையலாம்.
அவள் தோட்டத்துக்குப் போய்விட்டுத் திரும்பி வந்த சிறிது நேரத்துக்கெல்லாம் ஆசிரியர் மகள் விலாசினி அவளைத் தேடிக் கொண்டு வந்தாள்.
"என்னடியம்மா! திடீரென்று உன்னை இங்கே காணவில்லை? சிறிது நேரத்துக்கு முன்னால் இங்கு வந்தேன். நீ இல்லாததால் திரும்பிப் போய்விட்டேன்" என்றாள் விலாசினி.
"அதங்கோட்டாசிரியர் பிரானின் அருமைப் புதல்வியார் தேடிக் கொண்டு வரப் போகும் விவரம் முன்பே தெரிந்திருந்தால் நான் இந்த இடத்தை விட்டு நகர்ந்திருக்கவே மாட்டேன். மன்னித்தருள வேண்டும்" என்று சிரிக்காமல் பேசினாள் அவள். விலாசினி செல்லமாகக் கோபித்துக் கொள்வது போல் பகவதியை உறுத்துப் பார்த்தாள்.
"போதும், கேலிப் பேச்சு! சற்று முன் எங்கே போயிருந்தாய் நீ?"
"கேட்கிற கேள்வியைப் பார்த்தால் உன்னிடம் சொல்லிக் கொள்ளாமல் நான் எங்கும், எதற்கும் போய்விட்டு வரக்கூடாது போல் அல்லவா இருக்கிறது?" என்றாள் பகவதி வியப்புடன்.
"போ போ! நன்றாகப் போய்விட்டு வா. எனக்கென்ன வந்தது? உன்னைப் போகக்கூடாது என்று தடுக்க நான் யார்? மகாராணி உன்னைப் பார்த்துக் கூப்பிட்டுக் கொண்டு வரச் சொன்னார்கள். அதனால் தான் வந்தேன்!"
ஒரு பிணக்குமில்லாமலே சண்டை போடுவது போல் இப்படிப் பொய்க் கோபத்தோடு பேசிக்கொள்வது அந்த இரு பெண்களுக்கும் பொழுதுபோக்கான ஒரு விளையாட்டு. 'மகாராணி' என்ற பெயரை விலாசினி எடுத்தவுடன் பகவதி கலவரமடைந்தாள். விலாசினிதான் ஏதாவது அரட்டை அடிப்பதற்குத் தேடி வந்திருப்பாள் என்று எண்ணி வம்பு பேசிய பகவதி பரபரப்புற்று, "ஐயோ! மகாராணியா கூப்பிட்டார்கள்? வந்தவுடனே இதைச் சொல்லியிருக்கக் கூடாதா நீ?" என்று அவளைத் துரிதப்படுத்தி வினவினாள்.
"ஏனடி பதறுகிறாய்? ஒன்றும் அவசரமான காரியமில்லை. கோட்டாற்றுச் சமணப் பள்ளியிலிருந்து அந்த மொட்டைத் தலைச் சாமியார்கள் வந்து மகாராணியிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடமிருந்து மகாராணி ஏதோ ஒரு பாட்டை எழுதி வாங்கி வைத்துக் கொண்டார். அதை உன் வாயால் பண்ணோடு பாடிக் கேட்க வேண்டும் போல் ஆசையாக இருக்கிறதாம்!" என்றாள் விலாசினி.
"இவ்வளவுதானா?"
"இவ்வளவேதான் செய்தி. நீ அன்று நிலா முற்றத்தில் என் நடனத்தின் போது பாடிய திருவாசகப் பாட்டைக் கேட்டதிலிருந்தே உன்னுடைய குரலில் மகாராணிக்கு ஒரே மோகம்."
"ஏன்? உன் நாட்டியத்தில் மட்டும் மோகமில்லையாக்கும்?" விலாசினியை எதிர்த்துக் கேட்டாள் பகவதி.
"சரி சரி. நீ வா. மகாராணியைப் போய்ப் பார்த்துவிட்டு வந்து அப்புறம் நமக்குள் வம்பளக்கலாம்" என்று குரலைக் கடுமையாக்கிக் கொண்டு பகவதியைக் கூப்பிட்டாள் அவள்.
அவசரம் அவசரமாக உடை மாற்றி அலங்கரித்துக் கொண்டு விலாசினியோடு புறப்பட்டாள் பகவதி.
மகாராணி அவர்களை அன்போடு வரவேற்றாள். "பகவதி இன்று என் உள்ளம் பல காரணங்களினால் அலமந்து கிடக்கிறது. இந்த மாதிரிக் கவலைகளை மறக்கத் தெய்வத்தை நினைக்க வேண்டும். அல்லது தீந்தமிழ் இசையைக் கேட்க வேண்டும். கோட்டாற்றுப் பண்டிதர் வந்து கவலைக்கு மருந்தளித்துப் பேசிக் கொண்டிருந்தார். அவரும் போய்விட்டார். உன்னுடைய வாயால் பாடிக் கேட்க வேண்டுமென்பதற்காகவே அவரிடம் இந்தப் பாட்டை நான் எழுதி வாங்கிக் கொண்டேன்."
பகவதியின் கையில் அந்த ஓலையைக் கொடுத்தார் மகாராணி. ஒரு தரம் வாய்க்குள் முணுமுணுத்தாற் போல் பாடிப் பார்த்துக் கொண்டு அதற்கு பண் நிர்ணயம் செய்யச் சில கணங்கள் பிடித்தன அவளுக்கு.
"தேவி! இந்தப் பாடலைப் பழம்பஞ்சுரப் பண்ணிலும் பாடலாம். இந்தளப் பண்ணிலும் பாடலாம்."
"இரண்டிலும் தனித்தனியாகப் பாடிக்காட்டேன். கேட்கலாம்!" மகாராணியிடமிருந்து ஆணை பிறந்தது.
மோனத்தைக் கிழித்துக் கொண்டு பழம்பஞ்சுரம் எழுந்தது. பின்பு இந்தளம் இனிமை பரப்பியது. பகவதியே வீணையும் வாசித்துக் கொண்டாள். பொல பொலவென்று பூக்குவியலை அள்ளிச் சொரிவது போல் ஒரு மென்மையை எங்கும் இழைய விட்டது அவள் குரல். செவிவழிப் புகுந்து பாய்ந்த அந்த இனிமையில் தன்னை மறந்து இலயித்துப் போய்ச் சிலையாய் வீற்றிருந்த மகாராணிக்குச் சுயநினைவு வந்தது. பகவதி பாடல் ஓலையைத் திருப்பி அளித்தாள்.
"குழந்தைகளே! நம்முடைய தமிழ் மொழிக்கு எவ்வளவு ஆற்றல் இருக்கிறது பார்த்தீர்களா? பேசினால் ஒருவகை இனிமை; பாடினால் ஒரு வகை இனிமை; எழுதினால் ஒருவகை இனிமை. இறைவன் தந்த மொழிக்குள் எத்தனை கோடி இன்பங்களை வைத்திருக்கிறான்!" என்று மகாராணி வியந்து கூறினார்.
பாடற் பண்களின் பெயர்களைப் பற்றிய ஆராய்ச்சி, நாட்டியத்தில் மெய்பாடு வகைகள் - இவ்வாறு எதை எதையோ பற்றி மகாராணியோடு சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்து விட்டு விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டனர் அந்தப் பெண்கள் இருவரும். போகும் போது விலாசினி மறுபடியும் பகவதியின் வாயைக் கிண்டினாள். "இப்போது நீயே சொல்! மகாராணிக்கு உன்னுடைய பாடலில் எவ்வளவு ஆசை தெரியுமா?"
"போடி, பைத்தியமே! ஆலையில்லாத ஊருக்கு இலுப்பைபூச் சர்க்கரை மாதிரி தான் நீயும் நானும். ஏதோ ஆளுக்கொரு கலை அறைகுறையாகத் தெரியும். உனக்கு நாட்டியம் தெரிந்த அளவு பாடத் தெரியாது. எனக்குப் பாடத் தெரிந்த அளவு ஆடத் தெரியாது. எல்லாக் கலைகளும் தெரிந்த பெண்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். இடையாற்று மங்கலத்து நங்கை குழல்வாய்மொழி - அவளை நீயும் நானும் சிறு வயதில் பார்த்தது, இப்போது அவள் எப்படி இருக்கிறாளாம் தெரியுமா? ஆடல், பாடல், பேச்சு, சிரிப்பு, பார்வை, அத்தனையும் அத்தனைக் கலைகளாம் அவளிடம். அவள் இங்கு வந்து மகாராணியோடு ஒரு நான்கு ஐந்து நாட்கள் நெருங்கிப் பழகி விட்டால் நீயும், நானும் பின்பு இருக்குமிடமே தெரியாது!" - பகவதி நிறுத்தாமல் பேசிக் கொண்டே போனாள். திடீரென்று தொடர்பில்லாமல் அவள் இடையாற்று மங்கலம் நங்கையைப் பற்றிப் பேசுவதற்குக் காரணமென்னவென்று விலாசினிக்கு விளங்கவில்லை. அவள் வியப்பு அடைந்தாள்.
"ஏதடி அம்மா? திடீரென்று அந்தப் பெண்ணின் மேல் உனக்கு இவ்வளவு பொறாமை?"
"பொறாமையாவது, ஒன்றாவது? அவளைப் பற்றி இன்றைக்குச் சில செய்திகள் கேள்விப்பட்டேன். அதிலிருந்து அதே நினைவு!" என்றாள்.
"யாரிடத்தில் கேள்விப்பட்டாயோ?" விலாசினியிடமிருந்து இக்கேள்வியை பகவதி எதிர்பார்க்கவே இல்லை. வாய் தவறிப் பேச்சுவாக்கில் தனக்கு இரகசியமாகக் கூறப்பட்டவற்றை வெளிப்படையாக வெளியிட்டுவிட்டதை எண்ணி உதட்டைக் கடித்துக் கொண்டாள். 'கொஞ்சம் பொறாமை தலைகாட்டினால் என்னைப் போன்ற ஒரு பெண் எவ்வளவு சாதாரணமாக அதைக் காட்டிக் கொண்டு விடுகிறாள்?' என்று தன்னையே கடிந்து கொண்டாள்.
"என்னடி பகவதி! கேட்கிறேன். பதில் சொல்லாமல் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டாய்?"
பகவதி அவளுடைய கேள்விக்கு பதிலே சொல்லாமல் பேச்சை வேறு திசையில் மாற்றிப் பார்த்தாள். ஆனால் அவள் விடவில்லை. பகவதியைத் துளைத்தெடுத்து விட்டாள்.
"இடையாற்று மங்கலத்துப் பெண்ணைப் பற்றித் தெரியாமல் உன்னிடம் சொல்லி விட்டேனடி அம்மா! நீ என்னைத் தூண்டித் தூண்டி கேள்வி கேட்டு வாயைப் பிடுங்காதே!" என்று சிறிதளவு கடுமையான குரலில் எரிந்து விழுந்தாள் பகவதி. விலாசினிக்கு முகம் சுண்டி விட்டது. பேசுவதற்கு ஒன்றும் தோன்றாமல் வாயடைத்துப் போய் நின்றாள் அவள். அந்த நிலையில் பகவதியோடு அங்கிருப்பதற்கே பிடிக்கவில்லை அவளுக்கு.
"நான் அப்புறம் வந்து சந்திக்கிறேன்! இப்போது உன் மனநிலை சரியில்லை போலிருக்கிறது" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து போய்விட்டாள். "விலாசினி! மனநிலையெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. நீ போகாதே, சிறிது நேரம் இரு; பேசிக் கொண்டிருக்கலாம்" என்று பகவதி கூப்பிட்டும் அதைக் காதில் வாங்கிக் கொள்ளாதவள் போல் நிற்காமல் போய்விட்டாள் அவள்.
"அடாடா! வீணாக இவள் மனத்தைப் புண்படுத்தி விட்டேனே" என்று உள்ளூர வருந்தினாள் பகவதி. பின்பு ஏதோ ஒரு திட்டமான முடிவுக்கு வந்தவள் போன்ற முகபாவத்துடன் தான் தங்கியிருந்த அந்தப்புரப் பகுதியின் அறைக்கதவை அடைத்து உட்புறமாகத் தாழிட்டாள்.
அப்படிக் கதவு அடைத்துத் தாழிடப்படுவதைக் கீழே தோட்டத்து வழியாக இறங்கிப் போய்க் கொண்டிருந்த விலாசினி பார்த்துவிட்டுப் போனாள். "இருந்தாற் போலிருந்து பகவதிக்கு என்ன வந்துவிட்டது?" என்ற சிந்தனைதான் அவள் உள்ளத்தில் போகும் போது புரண்டு கொண்டிருந்தது. கொஞ்ச நேரத்துக்குப் பின் தன் தந்தை அதங்கோட்டாசிரியரை சந்தித்த போது அவள் அதையும் மறந்து விட நேர்ந்தது.
"விலாசினி! நாளை காலையில் நானும் பவழக்கனிவாயரும் ஊருக்குப் புறப்பட ஏற்பாடு செய்திருக்கிறோம். நீ எங்களோடு வருகிறாயா? அல்லது இங்கே அரண்மனையிலேயே இன்னும் சில நாட்கள் தங்கியிருக்கப் போகிறாயா? உன் விருப்பம் போல் செய்யலாம். நான் எதையும் வற்புறுத்தவில்லை. நீ இங்கே தங்கியிருந்தால் மகாராணியாருக்கும் ஆறுதலாகவும், துணையாகவும் இருக்கும் போலிருக்கிறது. உன் தோழி பகவதி வேறு இங்கு இருக்கிறாள். உங்கள் இருவரையும் சமீபத்தில் ஊருக்குப் போகவிடும் நோக்கம் மகாராணியாருக்கும் இல்லை என்பதை அவர்களோடு பேசிக் கொண்டிருக்கும் போது குறிப்பாக அறிந்தேன்" என்று மகளிடம் கூறினார் ஆசிரியர்பிரான். இங்கிருப்பதா? ஊருக்குப் போவதா? என்று ஒரு சிறு போராட்டம் இரண்டொரு விநாடிகள் அவள் மனத்தில் நிகழ்ந்தது.
"அவசரமில்லை! நிதானமாக யோசித்துச் சொல்லம்மா" என்றார் அவளுடைய அருமைத் தந்தை.
"யோசிப்பதற்கு இதில் என்ன இருக்கிறது அப்பா? நான் இருந்தே வருகிறேன். நீங்கள் போய்விட்டு வாருங்கள்!" ஒரு தீர்மானமான முடிவுடன் தந்தைக்கு மறுமொழி கூறிவிட்டாள் அவள்.
"மிகவும் நல்லது! இதைத்தானே நானும் சொன்னேன்" என்று சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டுப் போய்விட்டார் ஆசிரியர்பிரான்.
என்னதான் எடுத்தெறிந்து பேசிவிட்டாலும் பழக்கமானவர்களைச் சந்திக்காமலிருக்க மனம் ஒப்புவதில்லையே? பகவதியிடம் பேசிக் கொண்டிருக்கும் போது மனமுறிவு ஏற்பட்டுத் திடீரென்று தான் அருகிருந்து வந்துவிட்டதை அவள் தப்பாக எடுத்துக் கொள்வாளோ என்ற எண்ணம் அன்றிரவு படுக்கையில் படுத்த போது மீண்டும் விலாசினியைப் பற்றிக் கொண்டது. அப்போது இரவு பத்துப் பதினொரு நாழிகைக்கு மேலாகியிருக்கும். அரண்மனையில் அமைதி பரவத் தொடங்கியிருந்தது. பகவதியைப் போய்ப் பார்த்து அவளோடு சிறிது போது பேசிக் கொண்டிருந்துவிட்டு வந்தால் தான் நிம்மதி உண்டாகும் போலிருந்தது. விலாசினிக்கு மிக மென்மையான சுபாவம். பிறர் தன்னை நோகச் செய்தாலும் சரி, தான் அறியாமல் பிறரை நோகச் செய்தாலும் சரி, விரைவில் அதற்காக வாட்டமடைந்து விடுவது அவள் இயல்பு. உறக்கம் வராமல் மஞ்சத்தில் இதே நினைவோடு புரண்டு கொண்டிருந்த விலாசினி, 'போய் அவளைப் பார்த்துப் பேசிவிட்டே திரும்புவது' - என்ற உறுதியுடன் கிளம்பினாள். முன்பெல்லாம் அவர்கள் ஒரே இடத்தில் அருகருகே சேர்ந்து படுத்துக் கொள்வார்கள். தூக்கம் தூங்குவார்கள். இப்போது தனித்தனியே அவரவர்கள் தங்கியிருந்த இடங்களில் படுத்துக் கொண்டதால் 'விலாசினி படுத்துத் தூங்கியிருந்ததால் என்ன செய்வது?' என்ற சந்தேகம் போகும் போது அவளுக்கு ஏற்பட்டது. 'தூங்கியிருந்தால் பேசாமல் திரும்பி வந்து விடுவோம். காலையில் பார்த்துக் கொள்ளலாம்' என்று தனக்குத்தானே சமாதானமும் செய்து கொண்டு மேலே நடந்தாள்.
விலாசினி பகவதியின் அறைவாசலை அடைந்த போது அறைக்குள் விளக்கெரிவது தெரிந்தது. 'தூங்கவில்லை. விழித்துக் கொண்டுதான் இருக்கிறாள் போலும்' என்று தனக்குள் மெல்லச் சொல்லிக் கொண்டாள் விலாசினி. அறையின் கதவு அடைத்து உட்புறமாகத் தாழிட்டிருப்பது போல் தெரிந்தது. விலாசினிக்குக் கதவைத் தட்டலாமா, வேண்டாமா என்று தயக்கம் ஏற்பட்டது. அறைக்குள் எட்டிப் பார்த்துவிட்டுத் தட்டலாம் என்று அறைக் கதவின் இடப்பக்கம் இருந்த சாளரத்தை நெருங்கி உள்ளே எட்டிப் பார்க்க முயன்றாள் அவள். சுவரில் சாளரம் அவளுடைய உயரத்தை விட அதிகமான உயரமுள்ள இடத்தில் அமைந்திருந்ததனால் எட்டவில்லை.
என்ன செய்வதென்று தெரியாமல் திகைப்பும் வியப்பும் அடைந்து சுற்றும் முற்றும் மருண்டு பார்த்துக் கொண்டு நின்றாள் விலாசினி. அப்போது அங்கே ஒரு மூலையில் கிடந்த மர முக்காலி அவளுக்கு அபயமளித்தது. அந்தப் பகுதியில் விதானத்திலுள்ள, சரவிளக்குகளை ஏற்றவரும் அரண்மனை பணிப்பெண்கள் உயரத்துக்காக அதை இழுத்துப் போட்டுக் கொண்டு அதன் மேல் நின்று விளக்கேற்றுவார்கள். விளக்கேற்றியதும் எடுத்துக் கொண்டு போய்விடும் அந்த முக்காலியை அன்று மறந்து போய் அங்கே போட்டுவிட்டுப் போயிருந்தனர். அந்த முக்காலியையும் அங்கே அதை விட்டுப் போன அரண்மனைப் பணிப்பெண்களையும் மனமார வாழ்த்திவிட்டு ஓசைப்படாமல் அதைத் தூக்கிச் சாளரத்தை ஒட்டினாற் போலச் சுவர் அருகே கீழே வைத்தாள்.
கால் சிலம்புகள் கைவளைகள் ஓசைப்பட்டு விடாமல் மெதுவாக முக்காலியின் மேல் ஏறி நின்று உள்ளே பார்த்தாள். அவளுடைய கண்கள் அகன்று விரிந்து செவிகள் வரை நீண்டன. வியப்பின் எல்லையா அது! அறைக்குள் பிரம்மாண்டமான நிலைக்கண்ணாடிக்கு முன்னால் இடையில் வாளும் தலையில் அழகாகத் தலைப்பாகையும் தரித்துப் பெண்மைச் சாயல் கொண்ட முகமுள்ள ஓர் இளைஞன் நின்று அழகு பார்த்துக் கொண்டிருந்தான். விலாசினி வியப்பு, திகைப்பு, பயம், சந்தேகம் எல்லா உணர்ச்சிகளையும் ஒருங்கே அடைந்தாள். மேலும் உற்றுப் பார்த்தாள். உண்மை தெரிந்த போது அவளுக்குச் சிரிப்பு வந்தது. முகமும் மலர்ந்தது.
இளைஞனாவது, கிழவனாவது; பகவதிதான் ஆண் வேடத்தில் கண்ணாடிக்கு முன் நின்று அழகு பார்த்துக் கொண்டிருந்தாள். உற்றுப் பார்த்து அதை நிதானிக்கச் சில விநாடிகள் பிடித்தன அவளுக்கு. உள்ளே பகவதி இருந்த நிலையைப் பார்த்த போது அவள் அந்த வேடத்தோடு எங்கோ கிளம்பத் தயாராகிக் கொண்டிருப்பது போல் தோன்றியது.
விலாசினி சட்டென்று முக்காலியிலிருந்து இறங்கி அங்கே அதிக இருட்டாயிருந்த ஒரு மூலையில் பதுங்கி நின்று கவனிக்கலானாள். பகவதி கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தாள். அறைவாசலில் கிடந்த இரண்டு மூன்று மாவடுக்களில் ஒன்றை எடுத்துத் தோட்டத்துப் பக்கமாக எரிந்தாள். அங்கே சலசலப்பு உண்டாயிற்று. மறுகணம் ஆபத்துதவிகள் தலைவனின் தலை மாமரத்துப் புதரிலிருந்து எட்டிப் பார்த்தது. பகவதி ஏதோ சைகை செய்து விட்டுக் கீழே இறங்கிப் போனாள். குழைக்காதனும் ஆண் உடையிலிருந்த பகவதியும் மதிலோரமாகப் பதுங்கிப் பதுங்கி எங்கோ செல்வதை மறைந்து நின்ற விலாசினி கவனித்தாள். பின்பு திரும்பிப் போய்ப் படுத்துக் கொண்டாள். விடிந்ததும் அவள் தந்தை ஊருக்குப் புறப்பட்ட போது, பிடிவாதமாக அவளும் ஊருக்குக் கிளம்பினது கண்டு அவள் தந்தை ஆச்சரியம் அடைந்தார்.
--------
2.10. அந்தரங்கத் திருமுகம்
ஆத்திரம் கொண்ட போர்வீரனின் கையில் வில் வளைவதைப் போல் குழல்வாய்மொழியின் புருவங்கள் வளைந்தன. அரண்மனையிலிருந்து நாராயணன் சேந்தனும் வேளானும் வந்திருப்பதாகக் கேள்விப்பட்டதும் அவர்களைக் காண்பதற்காக இடையாற்று மங்கலத்து அந்தப்புர மேல்மாடத்திலிருந்து கீழே படியிறங்கி வந்து கொண்டிருந்தாள் அவள். தன் தந்தை தனக்கு அதிகம் செல்லம் கொடுத்துக் கெடுத்து விட்டதாக நாராயணன் சேந்தன் யாரிடமோ கூறிக் கொண்டிருந்த அந்தச் சொற்களைக் கேட்டவுடன் அவனைச் சந்திக்காமலே திரும்பி விடலாம் என்று கூட அவள் எண்ணினாள். அத்தனை கோபம் அவளுக்கு உண்டாயிற்று. 'தன் தந்தைக்கு அந்தரங்கமானவனாக இருக்கலாம். நெருங்கிப் பழகி ஒட்டுறவு கொண்டிருக்கலாம். ஆனால், அதற்காகத் தன்னைப் பற்றி அப்படிப் பேச அவனுக்கு என்ன உரிமை?'
ஆத்திர மிகுதியால் அவனைப் பார்க்காமலே திரும்பிப் போய்விட நினைத்தவள் அப்படிச் செய்யவில்லை. அவனிடமே ஆத்திரம் தீர நேரில் கேட்டு விடுவதென்று வந்தாள். எவ்வளவு கடுமையான சூழ்நிலையாக இருந்தாலும் தன்னிடம் சிரித்துப் பேசி அரட்டையடிக்கும் நாராயணன் சேந்தன் அன்று அவ்வாறு பேசியது அவள் உள்ளத்தில் உறைத்தது.
வேகமாகக் கீழே இறங்கிப் போய் ஒன்றும் பேசாமல் சினத்தைக் காட்டும் முகக் குறிப்புடன் அவன் முன் நின்றாள். படகோட்டி வேளானும், சில மெய்க்காவல் வீரர்களும் சூழ நின்று பேசிக் கொண்டிருந்த சேந்தன் அவள் அருகில் வந்து நின்றதும் பேச்சை நிறுத்தினான். குழல்வாய்மொழியின் பக்கமாகத் திரும்பி, "அம்மணி! வணக்கம்... தங்களைத் தான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். கூற்றத்தலைவர்கள் கூட்டம் முடிந்ததும் தவிர்க்க முடியாத காரணங்களால் மகாமண்டலேசுவரர் அரண்மனையிலேயே தொடர்ந்து தங்க நேரிட்டு விட்டது. ஆனாலும் தாங்கள் இங்கே இப்படியெல்லாம் நடக்க விட்டுவிடுவீர்களென்று நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை. தங்கள் தந்தை அதிகமாகக் கவலைப்படும்படியான சூழ்நிலையைத் தாங்கள் உண்டாக்கியிருக்கிறீர்கள்!"
குழல்வாய்மொழி புருவங்களுக்கு மேலே நெற்றி மேடு புடைக்க, முகம் சிவக்க கோபத் துடிப்புடன் இரைந்தாள்.
"ஐயோ! போதும், நிறுத்துங்கள். நீங்கள் மிகவும் பெரியவர். எத்தனையோ குடும்பங்களில் எவ்வளவோ தந்தைமார்களுக்கு அறிவுரைக் கூறிப் பழகியவர். உங்கள் அறிவுரை கிடைக்காததனால் தான் என் தந்தை அநாவசியமாக எனக்குச் செல்லம் கொடுத்துப் பாழாக்கி விட்டார். இனிமேலாவது அவருக்கு தக்க சமயத்தில் அறிவுரை கூறி எனக்கு செல்லம் கொடுத்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்."
அவளிடமிருந்து வார்த்தைகளை வாங்கிக் கட்டிக் கொண்ட நாராயணன் சேந்தன் சிறிது நேரம் அந்தப் பெண்ணின் கோபத்தைப் போக்க வகை தெரியாமல் தயங்கினான். அவளைப் பற்றித் தான் பேசிக் கொண்டிருந்ததைப் படியிறங்கி வரும் போது அவள் கேட்டுக் கொண்டு வந்திருக்கிறாள் என்பது அவனுக்குப் புரிந்து விட்டது.
"வருத்தப்பட்டுக் கொள்ளாதீர்கள். நான் சற்று முன் தங்களைப் பற்றி இங்கே பேசிக் கொண்டிருந்ததைத் தாங்கள் கேட்டுக் கொண்டே வந்திருக்கிறீர்கள் போலிருக்கிறது. நான் ஒன்றும் தவறாகச் சொல்லிவிடவில்லை. மகாமண்டலேசுவரர் இல்லாத சமயத்தில் இங்கு நடந்திருக்கும் கவலை தரும் நிகழ்ச்சிகளை நினைத்து உணர்ச்சி வசப்பட்டு அவ்வாறு பேசியிருப்பேன். அதை ஒரு தவறாக எடுத்துக் கொண்டு என் மேல் கோபித்துக் கொள்ளக் கூடாது."
"உங்கள் மேல் கோபித்துக் கொள்வதற்கு நான் யார்? அப்படியே கோபித்துக் கொண்டாலும் என்னுடைய கோபம் உங்களை என்ன செய்து விடப் போகிறது?"
குழல்வாய்மொழி சமாதானப்பட்டு வழிக்கு வருவதாகத் தெரியவில்லை. கோபம் வரும் போது பெண்களுக்கு இயல்பாக ஏற்படும், வீம்பும், முரண்டும் அவளிடமும் இருந்தன. நாராயணன் சேந்தன் குழைந்தான்; கெஞ்சினான்; என்னென்னவோ பேசி அவளைச் சமாதானப்படுத்த முயன்றான். வீம்பு நீடித்ததே தவிரக் குறையவில்லை. உலகத்தில் சிரமப்பட்டுத்தான் செய்ய முடியும் என்ற வகையைச் சேர்ந்த காரியங்களில் பெண்களின் வீம்புக் கோபத்தைச் சமாதானப்படுத்துவதும் ஒன்று என அவனுக்குத் தோன்றியது.
கடைசியாக, அவளைச் சமாதானப்படுத்தி முடிந்த போது தான் சேந்தனுக்கு நிம்மதியாக மூச்சு வந்தது.
"நீங்களே இப்படிக் கோபித்துக் கொண்டால் நான் என்ன செய்வது? உங்கள் தந்தை உங்களை உடன் வைத்துக் கொண்டு செய்ய வேண்டிய பெரிய பெரிய செயல்களையெல்லாம் என்னிடம் ஒப்புவித்திருக்கிறார். முக்கியமும், அவசரமும் வாய்ந்த செய்திகளை அனுப்பியிருக்கிறார். நாம் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும். நீங்கள் முரண்டு பிடித்தால் ஒன்றும் ஆகாது."
"முக்கியமும் அவசரமும் இல்லாத நேரம் அப்பாவுக்கு எப்போதுதான் இருந்தது? நாட்டைப் பற்றியும் அரசாங்கத்தைப் பற்றியும் கவலைப்பட்டுக் கவலைப்பட்டுத் தம்முடைய உடல் நலத்தைப் பற்றிக் கவலைப் படுவதற்கு நேரம் இல்லையே அவருக்கு. வெளியே யாரிடமும் சொல்லாமல் பொதுக் கவலைகளையும், துன்பங்களையும், மனத்தில் தேக்கி வைத்துக் கொண்டு என்ன சுகம் கிடைத்து விட்டது அவருக்கு?" குழல்வாய்மொழியின் பேச்சு பிடிவாதத்திலிருந்து விலகிப் போய்த் தந்தையின் மேல் அனுதாபமாக வெளிவந்தது.
"உங்களுக்கே அவையெல்லாம் நன்றாகத் தெரிந்திருக்கின்றனவே, அம்மணி! உங்கள் தந்தைக்கு இருக்கும் பொறுப்புகளையும், கவலைகளையும் சொல்லி நீங்களே இரக்கப்படுகிறீர்கள். தமது மாளிகையில் தம் பொறுப்பில் வைக்கப்பட்டிருந்த அரசுரிமைப் பொருள்கள் கொள்ளை போய் விட்டதென்று தெரிந்தால் அவர் எப்படி? அதிர்ச்சியடையாமல் இருக்க முடியும்?" சேந்தனுடைய பேச்சு வளர்கிற விதத்தைக் கண்டு குழல்வாய்மொழிக்கு வேறு வகை அச்சம் ஏற்பட்டது. 'வசந்த மண்டபத்திலிருந்த துறவி காணாமற் போனது பற்றியும் தன்னிடம் அவன் தூண்டித் துளைத்து ஏதாவது கேள்விகள் கேட்பானோ?' என்று சிறிது கலவரமடைந்தது அவன் உள்ளம். இந்தக் கலவரமும், தந்தையிடமிருந்து அவன் கொண்டு வந்திருக்கும் முக்கியச் செய்திகளைத் தெரிந்து கொள்ளும் ஆவலும் அவள் சினத்தைப் போக்கிவிட்டன.
பிறர் எந்தச் செய்தியைத் தன் வாயிலிருந்து கேட்பதற்கு அதிக ஆர்வத்தோடு துடித்துக் கொண்டிருக்கிறார்களோ அந்தச் செய்தியை உடனடியாகச் சொல்லி முடித்து விடாமல் அவர்களுடைய ஆவலைத் தொடரச் செய்து தன் காரியத்தைச் சாதித்துக் கொள்ளும் தந்திரத்தை மேற்கொண்டான் நாராயணன் சேந்தன்.
"மகாமண்டலேசுவரருடைய திருக்குமாரியிடம் அதிகப்படியான கேள்விகளைக் கேட்டுப் புண்படுத்த வேண்டுமென்று நான் கருதவில்லை. அதே சமயத்தில் ஒன்றும் கேட்க விரும்பாமலும் இருக்க முடியவில்லை!"
"கேட்டுத் தெரிந்து கொள்வதற்கு என்ன இருக்கிறது? இங்கே நடந்தவற்றையெல்லாம் தான் அம்பலவன் வேளான் அங்கு தெளிவாகச் சொல்லியிருப்பானே."
குழல்வாய்மொழியிடமிருந்த் கொஞ்சம் அமைதியாகப் பதில் வந்தது. முன்பிருந்த படபடப்பும் ஆத்திரமும் இல்லை. நாராயணன் சேந்தன் சிரித்துக் கொண்டான். 'ஏ, அப்பா! தங்கம் நிறுக்கும் பெரிய வணிகனைப் போல் மகாமண்டலேசுவரர்தான் ஒரு சொல் மிகாமல், ஒரு சொல் குறையாமல், எண்ணி அளந்து அளந்து பேசுவார் என்றால் அவருடைய புதல்வி அவரைக் காட்டிலும் அழுத்தமாக இருக்கிறாளே' என்று அவன் மனத்துக்குள் நினைத்துக் கொண்ட நினைப்பின் சாயைதான் சிரிப்பாக வெளிப்பட்டு மறைந்தது.
"என்னிடம் எதையெல்லாமோ கேட்டு நேரத்தைக் கடத்துகிறீர்களே தவிர, என் தந்தை உங்களிடம் கூறி அனுப்பியிருப்பதாகச் சொன்ன முக்கியச் செய்திகளைப் பற்றி நீங்கள் கூறப் போவதாகவே தெரியவில்லையே?"
"அவற்றை இந்த அகால நேரத்தில் இங்கு நான் விவரித்துக் கொண்டிருப்பதைக் காட்டிலும் நீங்களே படித்துத் தெரிந்து கொள்வது நல்லது. உங்கள் தந்தை உங்களுக்கென்று அந்தரங்கமாக எழுதி அனுப்பியிருக்கும் விரிவான திருமுகத்தை உங்களிடம் கொடுத்துவிட்டுப் போகிறேன். அதைப் படித்து எல்லாவற்றையும் நன்கு சிந்தித்து ஒரு முடிவுக்கு வாருங்கள். நாளைக் காலையில் விடிந்ததும் உங்களைச் சந்திக்கிறேன்."
சேந்தன் மகாமண்டலேசுவரரின் அந்தரங்கத் திருமுகத்தை அவளிடம் எடுத்துக் கொடுத்துவிட்டுத் தூங்கச் சென்று விட்டான்.
மனத்தில் பெருகும் ஆவலையும், பரபரப்பையும் அடக்கிக் கொண்டு அந்தத் திருமுகச் சுருளோடு தன் தனியறைக்குச் சென்றாள் குழல்வாய்மொழி. அதைப் படித்து அறிந்து கொள்வதற்கு முன் அவள் மனத்தில் பல்வேறு உணர்ச்சிகள் தடுமாறின. தந்தை என்ன எழுதியிருப்பாரோ என்று எண்ணும் போதே பயம், பதற்றம், வியப்பு அத்தனையும் அவளைப் பற்றிக் கொண்டன. அவள் இருந்த அறை அவளுடைய கன்னிமாடத்தின் மேற்பகுதியில் ஒதுக்குப்புறமாக இருந்தது. அவளுடைய அணிகலன்கள், அலங்காரப் பொருள்கள், இசைக்கருவிகள் இவையெல்லாம் மறைந்திருந்த அந்தத் தனியறையில் பிறர் அதிகம் பழக முடியாது. பணிப் பெண்கள் வண்ண மகளிர் கூட முன் அனுமதியின்றி அந்த அறைக்குள்ளே வரக்கூடாது.
அறைக்குள் மங்கலாக எரிந்து கொண்டிருந்த தீபச் சுடரின் ஒளியைத் தூண்டிவிட்டாள். சுடர் குதித்தெழுந்தது. ஒளியும், வனப்பும் மிக்க அந்த அறையின் பொருட்கள் தீப ஒளியில் கவர்ச்சி செறிந்து காட்சி அளித்தன. எத்தனை விதமான யாழ்கள்? எவ்வளவு வகை மத்தளங்கள்? இன்னும் இசை, நாட்டியக் கலைகளில் பயிற்சியுள்ளவர்கள் பயன்படுத்தும் வகை வகையான நளின கலைக் கருவிகள் நாற்புறமும் அறையில் தென்பட்டன. குழல்வாய்மொழி தீபத்தின் கீழே அமர்ந்து திருமுகத்தைப் பிரித்தாள். தந்தையின் திருமுகத்தையே பார்ப்பது போல் அவள் விழிகளில் பயபக்தி ஒளிர்ந்தது.
'ஒருவர் மற்றொருவருக்கு எழுத்து மூலம் எழுதி அனுப்பும் செய்திக்கு தமிழில் 'திருமுகம்' என்று எவ்வளவு பொருத்தமாகப் பெயரிட்டிருக்கிறார்கள்! ஒருவர் எழுதியதைப் படிக்கும் போது படிக்கிறவருக்கு எழுதியவரின் முகம் தானே நினைவுக்கு வருகிறது!'
தந்தையின் முகத்தை நினைவுபடுத்திக் கொண்ட போது பெயர்ப் பொருத்தத்தைப் பற்றிய இந்த அழகிய கற்பனையும் அவளுக்குத் தோன்றியது. திருமுகத்தைப் படிக்கலானாள்.
"அருமைப் புதல்வி குழல்வாய்மொழிக்கு, எல்லா நலங்களும் பெருகுக, மங்கலங்கள் யாவும் பொலிக.
செல்வக் குமாரி! என்னுடைய இந்தத் திருமுகத்தை படிக்கத் தொடங்கும் முன், படித்துக் கொண்டிருக்கும் போது, படித்த பின் ஒவ்வொரு நிலையிலும் உன் மனத்தில் எந்தெந்த உணர்ச்சிகள் அலைமோதும் என்பதை இதை எழுதும் முன்னாலேயே இங்கிருந்தே என்னால் நினைத்துப் பார்க்க முடிகிறது. ஆனாலும் எழுத வேண்டியதையெல்லாம் உனக்கு எழுதித்தான் ஆக வேண்டும்.
எப்போதுமே உன் தந்தைக்கு வியப்பு உணர்ச்சி குறைவு என்பது உனக்குத் தெரியும். எதையும் எதற்காகவும் ஆச்சரியமாகக் கருதாமல் சர்வ சாதாரணமாக நினைப்பவனுக்கு அதிசயங்களிலும் அபூர்வ அற்புதங்களிலும் எப்படி ஈடுபாடு இருக்க முடியும்? ஆச்சரியம் எவ்வாறு ஏற்பட முடியும்? உணர்ச்சி மயமாகவே வாழ்பவர்களால் வாழ்க்கையில் எதிலும் ஒட்டிக் கொண்டு கலந்து எதையும் அனுபவிக்க முடிகிறது. உணர்ச்சிகளை வென்று புளியம் பழமும் அதை மூடிக் கொண்டிருக்கும் ஓடும் போல் ஒட்டாமல் வாழ்ந்தால் சமய சமயங்களில் வேதனைப்படத்தான் வேண்டியிருக்கிறது. ஆச்சரியப்படத் தெரியாதவன் மற்றவர்களுக்கு ஆச்சரியப் பொருளாகவே ஆகிவிடுகிறான். என்னைப் போன்ற ஒருவன் தன் அறிவால் மட்டுமே வாழ்ந்து பார்க்க முயன்றால் என்னைச் சுற்றியிருக்கும் பல்லாயிரம் பேர்களுக்கு நான் ஒர் ஆச்சரியம், ஒரு புதிர் என்று ஆகிவிடுகிறேன். அப்படி ஆகும் போது சந்தர்ப்பங்கள் என்னைக் காலை வாரி விட ஒவ்வொரு கணமும் நெருங்குகின்றன.
புதல்வி! அம்பலவன் வேளான் வந்து கூறிய செய்திகள் ஆச்சரியப்படத் தெரியாது, அதிர்ச்சியுற அறியாமல் இருந்த எனக்கும் அவற்றை உணர்த்தி விட்டன. மற்றவர்களுக்குத் தெரிந்து விடாமல் நானும் ஆச்சரியப்பட்டேன். நானும் அதிர்ச்சியடைந்தேன். உன்னால் எனக்கு ஏற்பட்ட தோல்விகள், அவை போகட்டும்! நான் அங்கிருந்து புறப்படும் போது எவ்வளவு எச்சரிக்கை செய்து விட்டுப் புறப்பட்டேன்? 'பெண்ணே! வசந்த மண்டபத்தில் வந்து தங்கியிருக்கும் 'துறவியை ஒவ்வொரு கணமும் அருகிருந்து கவனித்துப் பேணிக் கொள்ள வேண்டியது உன் பொறுப்பு. அந்நியர்களை அவரோடு சந்தித்துப் பழக விடக் கூடாது' என்று நான் கூறிவிட்டு வந்த அறிவுரையை நீ புறக்கணித்து விட்டாய் போலும்! துறவியாக வந்து தங்கியிருந்தது யார் என்று நீயே தெரிந்து கொண்டிருப்பாய். தெரியாமலிருந்தால் நாராயணன் சேந்தன் விளக்குவான்.
'யாரோ வந்தார்கள், சந்தித்தார்கள், வசந்த மண்டபத்தில் கூடிப் பேசினார்கள். மறுநாள் விடிந்த போது வந்தவர்களையும் காணவில்லை, துறவியையும் காணவில்லை, பாதுகாவலில் வைக்கப்பட்டிருந்த அரசுரிமைப் பொருள்களையும் காணவில்லை' என்று வேளான் வந்து கூறினான்.
குழல்வாய்மொழி! வடக்கே போருக்கும், பூசலுக்கும் எதிரிகள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். மகாராணி கவலைகளால் மன நிறைவு இழந்து காணப்படுகிறார். கூற்றத்தலைவர்கள் என்னைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் ஏதேதோ கேள்விகளையெல்லாம் கேட்டுத் துளைக்கிறார்கள். தளபதிக்கு என்மேல் இருக்கும் சந்தேகங்களைப் பார்த்தால் அவற்றை இப்போதைக்குப் போக்க முடியாது போலிருக்கிறது. அறிவின் அளவைக் கொண்டு செயல்களைத் திட்டமிட்டு வரும் எனக்கும், உணர்வின் அளவைக் கொண்டு என்னைக் கண்காணித்து வரும் மற்றவர்களுக்கும் நடுவில் இப்படி ஓர் உள்துறை பிளவு இருந்து வருகிறது. நான் என் மனத்துக்குள்லேயே பாதுகாக்க விரும்பும் செய்திகளை அறிந்து கொள்ள முயல்கின்றவர்கள் அதிகமாகி விட்டார்கள். இந்த நிலையில் எனது பலவீனத்தை வளர்ப்பது போன்ற செய்திகளை அம்பலவன் வேளான் வந்து கூறினான். ஆனாலும் நான் இதுவரையில் கலங்கி விடவில்லை. தளர்ந்து விடவில்லை, சோர்ந்து விடவில்லை. எனக்கு என் மேல் என் அறிவின் மேல் இன்னும் நம்பிக்கை இருக்கிறது.
இந்தச் சமயத்தில் உன்னிடமும் நாராயணன் சேந்தனிடமும் ஒரு பொறுப்பை அளிக்கிறேன். இடையாற்று மங்கலத்திலிருந்து நீங்கள் இருவரும் இந்தத் திருமுகத்தைப் படித்த மறுநாள் காலையிலேயே புறப்பட வேண்டும். கொள்ளை போன சுந்தர முடியையும் பொற் சிம்மாசனத்தையும் வீரவாளையும் தேடிக் கண்டுபிடிக்கும் முன்பே அவைகளை ஆள்பவனைக் கண்டுபிடிக்க வேண்டும். என் அனுமானம் உண்மையானால் அவைகளை ஆள்பவனைக் கண்டுபிடித்தால் அவனிடமே அவைகளைக் காணலாம். அவனைக் கண்டுபிடிக்க வேண்டுமானால் அந்த இளந்துறவியைக் கண்டு பிடிக்க வேண்டும்.
உண்மையை மறைத்து எழுதுவானேன்? நம்முடைய வசந்த மண்டபத்தில் வந்து தங்கியிருந்த இளந்துறவிதான் குமாரபாண்டியன் இராசசிம்மன். நாராயணன் சேந்தனிடம் கேட்டறிவதற்கு முன் நானே சொல்லிவிட்டேன் உனக்கு. ஒரு வேளை எங்கள் இருவரையும் முந்திக் கொண்டு இதை நீ அறிந்திருந்தால் உனக்கு மதி நுட்பம் மிகுதிதான். குமாரபாண்டியனை விரைவில் அழைத்து வருவதாக மகாராணிக்கு வாக்களித்து விட்டேன். நான் தேடிக் கொண்டு புறப்பட முடியாதபடி இருக்கிறது சூழ்நிலை. வேறு யாரையும் அனுப்புவதற்குமில்லை. அதில் எனக்கு நம்பிக்கையுமில்லை. உடனே புறப்படுங்கள். எங்கே எப்படிப் புறப்பட வேண்டுமென்று தயங்காதே. உனக்கு அது தெரியும்! உன் உள்ளத்துக்கும் அது தெரியும். சேந்தனுக்கும் சேந்தனுடைய உள்ளத்துக்கும் கூடத் தெரியும். உரிமையோடும், உரியவனோடும் திரும்பி வாருங்கள். படித்து முடித்ததும் நீ எந்த விளக்கின் ஒளியிலிருந்து இதைப் படிக்கிறாயோ, அதன் சுடர்ப் பசிக்கு இதை இரையாக்கி விடு."
அவள் அப்படியே செய்து விட்டாள்.
-------
2.11. முள்ளால் எடுத்த முள்
மகாமண்டலேசுவரரான இடையாற்று மங்கலம் நம்பியைச் சாதாரண மனிதராக சாதாரண உணர்ச்சிகளுக்கு ஆளாக்கிப் பார்க்க வேண்டுமென்று விதிக்கு என்ன தான் ஆசையோ? தெரியவில்லை. சந்தர்ப்பங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன.
கரவந்தபுரத்திலிருந்து அனுப்பப்பட்ட இரண்டாவது தூதுவன் அரண்மனைக்கு வந்த போது அவர் மேலும் வியப்புக்கு உள்ளானார். கொற்கைக் கலவரங்களும், வடக்கு எல்லைப் பூசல்களும் பற்றிய செய்திகள் அந்த இரண்டாவது தூதன் மூலம் வந்து சேர்ந்தன. ஏற்கனவே அனுப்பப்பட்ட மானகவசன் என்னும் தூதன், தான் அங்கிருந்து புறப்படுகிற வரையில் கரவந்தபுரத்துக்குத் திரும்பி வந்து சேரவில்லை என்பதையும் புதிதாக வந்தவன் கூறினான்.
அவற்றைக் கேள்விப்பட்ட போது, உணர்வுகள் பதிந்தறியாத அந்த நெற்றியில் உணர்ச்சிகளைக் காண முடிந்தது. இரண்டாம் முறையாக அந்தத் தூதுவன் வந்திருப்பதையும், அவன் கூறிய செய்திகளையும் மகாராணியாருக்கு அறிவிக்கவில்லை அவர். புதுப் புதுத் துன்பங்களைக் கூறி முன்பே கவலைகள் பெருகியிருக்கும் அந்த மலர் நெஞ்சத்தை மேலும் வாடவிடுவதற்கு விரும்பவில்லை அவர். எல்லைக் கற்களை உடைக்கிற அளவு வடக்கே பூசல் நடப்பது அவருடைய பொறுமையையே சோதித்தது.
"உன்னிடமும் ஒரு பதில் ஓலை கொடுத்து அனுப்புகிறேன். ஆனால் நீ அதைக் கரவந்தபுரத்துக்குக் கொண்டு செல்லும் போது இடை வழியில் எங்காவது, யாராவது உன்னிடமிருந்து பறிக்க முயன்றால் சிரமப்பட்டு அவர்களுடன் போராடிக் கொண்டிருக்க வேண்டாம். தாராளமாக விட்டுக் கொடுத்துவிடு."
இடையாற்று மங்கலம் நம்பி இப்படிக் கூறிய போது வந்திருந்த தூதுவன் திகைத்துப் போனான். அவனுக்கு அவர் என்ன நோக்கத்தோடு அப்படிச் சொல்லுகிறார் என்பதே புரியவில்லை. அவன் விழித்தான். அவரோ சிறிதும் தாமதம் செய்யாமல் பதில் ஓலை எழுதி உறையிலிட்டு அரக்கு இலச்சினை பொறித்து அவன் கையில் கொடுத்து விட்டார். கொடுத்ததோடு மட்டுமல்லாமல், அந்தத் தூதுவன் அங்கே அதிக நேரம் தங்கியிருப்பதையே விரும்பாதவர் போல் துரத்தினார். அவனும் புறப்பட்டு விட்டான். அவனை அனுப்பிய பின் மகாமண்டலேசுவரர் சிந்தனையில் மூழ்கினார்.
அவருடைய சிந்தனையில் முக்கியமான இடத்தைப் பிடித்துக் கொண்டு நின்ற ஒரே கேள்வி இதுதான்:
'நெருங்கி வந்து கொண்டிருக்கும் போரை இன்னும் சிறிது காலம் பொறுத்துத் தாமதமாக வரச் செய்வதற்கு வழி என்ன?'
இந்தச் சில நாட்களுக்குள் எத்தனையோ துன்பங்களையும் அதிர்ச்சிகளையும் தாங்கி அவற்றைத் தவிர்க்கும் வழிவகைகளையும் உடனுக்குடன் நினைத்து முடிவு செய்திருக்கிறார் அவர். ஆனால் மலை போல் எழுந்து நிற்கும் இந்தப் பெரிய கேள்விக்கு அவ்வளவு எளிமையாக விடை கண்டுபிடிக்க முடியவில்லை. சிந்தனை பல கிளைகளாய்க் கிளைத்து எங்கெங்கோ சுற்றிப் படர்ந்தது. எத்தனையோ பெரிய படையெடுப்புகளின் திடுக்கிடத் தக்க நிலைமைகளையெல்லாம் அவர் சமாளித்திருக்கிறார். போரில் வெற்றிகளையும் பார்த்திருக்கிறார், தோல்விகளும் உண்டு. இதே இராசசிம்மன் இப்போது இருப்பதை விட இளைஞனாக இருந்த காலத்தில் போர்கள் ஏற்பட்டிருக்கின்றன. பராந்தக பாண்டியர் மறைந்த நாளிலிருந்து எங்கேயாவது ஒரு மூலையில் ஏதாவது ஒரு காரணம் பற்றிப் போர் உண்டாகிக் கொண்டுதான் இருக்கிறது.
உப்பிலிமங்கலத்துப் போரைக் காட்டிலுமா பெரிய போர் இனிமேல் ஏற்படப் போகிறது? வடதிசை அரசர்களுக்கு ஒத்துழைத்து அந்தப் போருக்கு ஏற்பாடு செய்த கொடும்பாளூர் மன்னன் பாண்டி நாட்டை வென்று விடலாமென்று எத்தனை நம்பிக்கை வைத்திருந்தான். கடைசியில் மேலாடையையும் உடை வாளையும் கூடக் களத்தில் எறிந்து விட்டு உயிர் பிழைத்தால் போதுமென்று தோற்று ஓடும் நிலையை அடைந்தான் அவன்.
அதன் பின் வைப்பூரிலும், நாவற்பதியிலும் நடந்த போர்களில் தஞ்சைப் பெரு மன்னனை இரண்டு முறை ஓடஓட விரட்டினோம். அப்போது பாண்டி நாட்டின் எல்லை விரிந்து பரந்திருந்தது. போர் வீரர்களும் ஏராளமாக இருந்தார்கள். இராசசிம்மனுக்கு அது மிகவும் இளமைப் பருவமாதலால் எதற்கும் அஞ்சாத துணிவும் வாலிபச் செருக்கும் இருந்தன. தளபதி வல்லாளதேவனும் அவனும் உற்சாகமாகப் போர் வேலைகளில் ஈடுபட்டார்கள். பாண்டிய மண்ணின் பெருமையைக் காத்திட வேண்டும் என்ற ஒரு வீராவேச வெறி அப்போது எங்கும் பரவியிருந்தது. இப்போது மட்டும் அந்தத் துடிப்பு இல்லாமலா போய் விட்டது?
துடிப்பும், துணிவும் இருந்து என்ன செய்வது? சரியான தலைமையில்லை. தொடர்ந்து அடுத்தடுத்து நிகழ்ந்த படையெடுப்புகளால் படை வசதிகள் அழிவுபட்டுக் குறைந்து போயின. நாட்டு எல்லை தென்கோடி வரை குறுகிவிட்டது. அன்றைய நிலையில் வஞ்சிமாநகரம் வரை சென்று பெரும் படையோடு தனியாக நின்று தனது தாய்வழிப் பாட்டனுக்கு வெற்றி தேடித் தரும் அளவுக்குக் குமாரபாண்டியன் தீரனாக இருந்தான். கடைசியாக வடதிசை அரசர்கள் ஒன்று சேர்ந்து கொண்டு செய்த போரில் வடபாண்டி நாடாகிய பகுதி முழுவதும் தோற்றுப் போக நேரிட்டுவிட்டது. தோற்றால்தான் என்ன? எப்போதும் வெற்றியடைந்து கொண்டிருக்க முடியுமா? குமாரபாண்டியன் நாடு தோற்றது பெரிதன்று. மனம் தோற்றுப் பயந்து போய் கடல் கடந்து ஓடினானே, அதுதான் பெரிய தவறு. அவனுடைய இந்தத் தவறு வடதிசையரசர்களைப் பெரிய அளவுக்கு ஊக்கமுறச் செய்து மேலும் மேலும் படையெடுத்து வரத் தூண்டுகின்றது. அவன் நாட்டில் இல்லாமல் எங்கோ மறைந்திருப்பது கூடாதென்று அரிய முயற்சியால் ஈழ நாட்டிலிருந்து வரவழித்தேன்; வந்தான். அவனை இரகசியமாக மறைத்து வைத்திருந்து என்னென்னவோ செய்ய எண்ணினேன். காலம் வரும் வரை பொறுத்திருந்து சரியான படைபலத்தை உருவாக்கிக் கொண்டு வடபாண்டி நாட்டை மீண்டும் கைப்பற்றியிருக்க முடியும். மகாராணி வானவன்மாதேவியின் இரண்டு பெரிய கனவுகளை நனவாக்கிவிட எண்ணியிருந்தேன்.
"செந்தமிழ் தென்பாண்டி நாட்டின் அரசனாக இராசசிம்மனுக்கு முடிசூட்ட வேண்டும். மணவினை மங்கலம் முடிவெடுக்க வேண்டும்."
இராசசிம்மனோ என் திட்டங்களையும் தன் அருமந்த அன்னையின் கனவுகளையும் காற்றில் பறக்கவிட்டுக் கடலைக் கடந்து போய்விட்டான். நான் சேந்தனிடம் கூறியனுப்பியிருக்கும் திட்டப்படி குழல்வாய்மொழியும் அவனும் இளவரசனைத் தேடிக் கொண்டு வரப் புறப்பட்டிருப்பார்கள். தளபதி வல்லாளதேவன் கோட்டாறிலுள்ள தென் திசைப் பெரும் படையைப் போருக்குத் தயார் செய்து கொண்டிருப்பான். எப்படியிருந்தாலும் நமக்கு பிறருடைய உதவி வேண்டும். இராசசிம்மன் மனம் வைத்தால் ஈழ நாட்டுக் காசிப மன்னரிடமிருந்து கூடப் படை உதவி பெற்றுக் கொண்டு வரமுடியும்.
பார்க்கலாம்! எப்படி எப்படி எது எது நடக்கிறதோ? இப்போது செய்ய வேண்டிய முதல் வேலை வந்து கொண்டிருக்கிற போரை உடனடியாக வரவிடாமல் தடுப்பது. மகாமண்டலேசுவரருடைய நினைவுகள் ஒரே வட்டத்துக்குள் சுற்றிச் சுற்றி வந்தன. அவர் மனத்தில் தென் பாண்டி நாட்டின் மேல் படையெடுக்கத் துடித்துக் கொண்டிருந்தவர்கள் ஒவ்வொருவராக மானசீகத் தோற்றத்தில் தோன்றிக் குழம்பிக் கொண்டிருந்தனர். கோப்பரகேசரி பராந்தக சோழன், கொடும்பாளூரான் கீழைப் பழுவூர்க் கண்டன் அமுதன், அரசூருடையான் சென்னிப் பேரரையன் - அந்த நான்கு எதிரிகள் தாம் படையெடுப்பு ஏற்பாட்டில் ஒரு முகமாக முனைந்திருப்பதாகக் கரவந்தபுரத்திலிருந்து வந்த செய்தி கூறியது. ஆனால் மகாமண்டலேசுவரருக்கு எட்டியிருந்த வேறு சில செய்திகளால் இதில் பரதூருடையான் என்னும் மற்றோர் பெருவீரனும் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தெரிந்தது. படைகளிலும், போர்ப் பழக்கத்திலும் வல்லவர்களான இந்த ஐந்து பேரும் ஒன்று கூடிய கூட்டணியை முறியடிப்பது எளிமையானதல்லவென்று அவரும் உணர்ந்தார். ஆகையால் தான் அந்தப் போர் விரைவில் நெருங்கி வந்து விடாதபடி எப்படித் தடுப்பதென்ற சிந்தனையில் அவர் ஆழ்ந்து மூழ்க நேர்ந்தது. எதிரிகள் எவ்வாறு நேரடியாகப் போருக்கு வந்து விடாமல் கலவரங்களையும், குழப்பங்களையும் ஏற்படுத்திச் சூழ்ச்சி செய்திருக்கிறார்களோ, அப்படி நாமும் ஏதாவது செய்தால் என்னவென்று அவருக்குத் தோன்றியது.
சிந்தித்துக் கொண்டே இருந்தவர் திடீரென்று ஒரு முடிவுக்கு வந்தவர் போல் அரண்மனை மெய்க்காவலர் படைத்தலைவன் சீவல்லபமாறனை அழைத்து வருமாறு ஒரு சேவகனை அனுப்பினார். அவரால் அனுப்பப்பட்ட சேவகன் சீவல்லபமாறனைக் கூப்பிட்டுக் கொண்டு வருவதற்கு அவசரமாகச் சென்றான்.
மகாமண்டலேசுவரர் குறுக்கும், நெடுக்குமாக உலாவுவது போல நடந்தார். 'முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்; வேறு வழி இல்லை' - வாய்க்குள்ளேயே இந்தச் சொற்களை மெல்லச் சொல்லிக் கொண்டார். கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு அளவு பிசகாமல் காலடி பெயர்த்து வைத்து அவர் நடந்த நிமிர்வான நடை உள்ளத்துச் சிந்தனையின் தெளிவைக் காட்டியது.
சீவல்லபமாறன் வந்து அடக்க ஒடுக்கமாக வணங்கி விட்டு நின்றான். மகாமண்டலேசுவரர் அவனை வரவேற்றார். "வா அப்பா! உன்னை வரவழைத்த காரியம் மிக அவசரம். அதற்கு நீ தயாராக இருப்பாய் என்றே நினைக்கிறேன்" என்று கூறினார்.
"மகாமண்டலேசுவரரின் கட்டளை எதுவாக இருந்தாலும் அதற்கு அடியேன் தயாராக இருந்துதான் ஆகவேண்டும்."
"கட்டளை இருக்கட்டும். அதற்கு முன்பு வேறோரு எச்சரிக்கை. நீயோ மெய்க்காவற் படைத்தலைவன்; மெய்க் காவலனுக்கு மெய்யைக் காக்க தெரிந்திருக்க வேண்டும். இப்போது நான் கூறப்போகும் மெய், உன்னையும் என்னையும் தவிர்த்துப் புறம் போகக்கூடாத மெய். ஒரு பெரிய காரியத்தைச் சாதிக்கப் போகிற மெய்."
"புறம் போகக் கூடாதென்பது தங்கள் விருப்பமாயின் அப்படியே மனத்தில் பாதுகாத்துக் கொள்வேன்."
"நல்லது! ஏற்பாட்டைச் சொல்லட்டுமா?"
"சொல்லுங்கள்."
"பொய்களை உண்மைகள் போல் சொல்லத் தெரிந்தவர்களாகவும், எங்கும், எந்த விதத்திலும் வேடமிட்டு நடிக்கத் தெரிந்தவர்களாகவும், உயிருக்கு அஞ்சாதவர்களாகவும், ஓர் ஐம்பது வீரர்கள் இப்போது உன்னிடமிருந்து எனக்குத் தேவை!"
அவரையும், அவருடைய வார்த்தைகளையும் விளங்கிக் கொள்ள முடியாமல் திணறிப் போய் மருண்டு பார்த்துவிட்டுக் கேட்டான் அவன்:
"ஐம்பது வீரர்களா வேண்டும்?"
"ஆம்! எண்ணி ஐம்பது பேர்கள் வேண்டும் எனக்கு."
"அரண்மனை மெய்க் காவற் படையினரில் இருந்து தான் ஐம்பது பேர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வேறு ஆட்கள் இல்லை!"
"செய்! ஆனால் அப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் நான் கூறிய தகுதிகளுக்குப் பொருந்தியிருக்க வேண்டியது மிகவும் அவசியம்."
சீவல்லபமாறன் அதற்கு ஒப்புக் கொண்டு போனான். மகாமண்டலேசுவரர் எதை எண்ணியோ சிரித்துக் கொண்டார். அந்தச் சமயத்தில் வண்ணமகள் புவன மோகினி அந்தப் பக்கமாக வந்து சேர்ந்தாள்.
"சுவாமி! தளபதி வல்லாளதேவனின் தங்கை பகவதியைக் காணவில்லை. இன்று காலை மகாராணியார் பார்த்து அழைத்து வரச் சொன்னார்கள். போய்ப் பார்த்தேன்; இல்லை. அரண்மனையில் எங்குமே தளபதியின் தங்கையைக் காணாததால் எங்களுக்கு ஒரே கவலையாக இருக்கிறது. செய்தியை அறிந்து மகாராணியாரும் மனக் கலவரமடைந்தார்கள். தங்களிடம் தெரிவிக்கச் சொன்னார்கள்."
"அதங்கோட்டாசிரியர் மகள் விலாசினியைக் கேட்டால் தெரியுமே? அந்தப் பெண்கள் இருவரையும் எப்போதும் சேர்ந்தே காண்கிறேன் நான்!" - வியப்பை மறைத்துக் கொண்டு பதில் கூறினார் மகாமண்டலேசுவரர்.
"விலாசினி இங்கு இல்லை. இன்று காலை ஆசிரியரும் பவழக்கனிவாயரும் ஊருக்குப் போகும் போது அந்தப் பெண்ணும் போய்விட்டாள்" என்று மீண்டும் பரபரப்பான குரலில் முறையிட்டாள் வண்ணமகள்.
"அந்தப் பெண் காணாமல் போய்விட்டாளே என்று மகாராணியோ நீங்களோ யாருமே கவலைப்பட வேண்டாம். அவள் தைரியசாலி. ஏமாறுகிறவள் இல்லை. ஏமாற்றும் ஆற்றலுள்ளவள். காரியமாகத்தான் அவள் காணாமல் போயிருப்பாள்."
பெரிதாகக் கவலைப்படும்படி எதுவும் நடந்து விடாத மாதிரி அலட்சியமாகப் பேசினார் அவர். மகாமண்டலேசுவரர் அந்தப் பெண் காணாமற் போனது பற்றி அக்கறையில்லாமல் பேசுவது ஏனென்று வண்ணமகளின் சிற்றறிவுக்கு எட்டவில்லை! அவள் திரும்பிச் சென்றாள்.
'ஆண்களும் பெண்களும், சிறியவர்களும் பெரியவர்களுமாகத் தெரிந்தும், தெரியாமலும் என்ன என்னவோ செய்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த அரண்மனையில் காணாமற் போகிறார்கள், வருகிறார்கள். என்னைப் போல் பொறுப்பும், பதவியும் உள்ளவனுக்குத்தான் மாபெரும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த காரியங்கள் இருப்பதாக நான் நினைத்துப் பெருமைப் பட்டுக் கொண்டிருக்கிறேன். கூர்ந்து நோக்கினால் வேறு சிலரும் இந்தப் பெருமைக்குப் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றல்லவா தெரிய வருகிறது!' வேடிக்கையாக இவ்வாறு எண்ணி நகைத்துக் கொண்டார் அவர்.
அப்போது சீவல்லபமாறன் திரும்ப வந்து, "மகாமண்டலேசுவரரின் திருவுள்ளப்படி திறமையான வீரர்களைத் தயார் செய்துவிட்டேன். அவர்கள் எல்லோரும் காவற்படை மாளிகையில் தங்கள் கட்டளையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இனி மேலே செய்ய வேண்டியதென்ன?" என்றான். அவர் புன்னகை பூத்தார்.
"மேலே செய்ய வேண்டியதா!... இதோ என் அருகில் வா... சொல்கிறேன்." சீவல்லபன் மகாமண்டலேசுவரருக்கு அருகில் சென்றான்.
"உன் வலது உள்ளங்கையை நீட்டு!" அவன் நீட்டினான். குபீரென்று ஒரு நீளமான கருவேல முள்ளை எடுத்து அவனது சிவந்த உள்ளங்கையில் பதியும்படி குத்தினார் அவர். அவன் வலி பொறுக்க முடியாமல் கையைப் பின்னுக்கு இழுத்துக் கொண்டு அவருடைய செயலின் பொருள் புரியாமல் முகத்தை சுளித்துக் கொண்டான்.
"வேறொரு கருவியின் துணையின்றி இதை எப்படி எடுப்பாய்?" ஒன்றுமறியாத பச்சைக் குழந்தையை வினாவுவது போல் வினவினார்.
"..." அவன் பதில் கூறவில்லை. "இதோ இப்படி எடுக்க வேண்டும்" என்று மற்றொரு கூரிய முள்ளால் அதைக் கிளறி வெளியே எடுத்துவிட்டுச் சிரித்தார் அவர். குன்றிமணி பழுத்தது போல் ஒரு துளி குருதி உருண்டு எழுந்தது அவன் கையில்.
மகாமண்டலேசுவரரின் அதிசயிக்கத்தக்க இந்தச் செயல் மெய்க்காவலர் படைத் தலைவனான சீவல்லபமாறனைத் திகைக்க வைத்தது. குழம்பிய உள்ளத்துடன் அவன் அவரைப் பணிவோடு நிமிர்ந்து பார்த்தான். அவர் என்ன சொல்லப் போகிறார் என்று அறியும் ஆவல் அவன் முகத்தில் நிறைந்திருந்தது.
"சீவல்லபமாற! நீ தயார் செய்திருக்கும் வீரர்கள் இது போன்றதொரு வேலையைத்தான் செய்ய வேண்டும். இது உனக்கு விளங்கியிருக்காது. விளக்கமாகச் சொல்கிறேன் கேள்!" என்று ஆரம்பித்தார் அவர்.
------
2.12. கொடும்பாளூர் உடன்படிக்கை
கோனாட்டின் பெரு நகரமாகிய கொடும்பாளூர் அன்று வைகறையிலிருந்தே புதுமணப் பெண் போல் அழகு பொலிந்து விளங்கியது. அரண்மனைச் சுற்றுப்புறங்களும் வீதிகளும் சிறந்த முறையில் அலங்கரிக்கப்பட்டிருந்தன. கோட்டைக்கு வரும் அகன்ற வீதியில் அங்கங்கே மக்கள் கூட்டம் கூட்டமாகக் கூடி நின்றார்கள். உயர்ந்தோங்கி நின்ற பெரிய மலையைப் போன்ற கோட்டையின் பிரதான வாசலில் பூரண கும்பங்களோடும், பொற்பாலிகைகளுடனும், அரண்மனையைச் சேர்ந்த உடன் கூட்டத்துப் பெருமக்கள் சூழக் கொடும்பாளூர் மன்னன் நின்று கொண்டிருந்தான். யாரோ மதிப்புக்குரிய பெரியவர்களை மரியாதையாக வரவேற்பதற்காக எதிர்பார்த்துக் காத்திருப்பது போல் தென்பட்டது. கோட்டைச் சுவரின் மேல் பக்கத்துக்கு ஐந்து பேராக நுழைவாயிலின் இருபுறமும் நின்று கொண்டு திருச்சின்னம் எனப்படும் நீண்ட வளைந்த இசைக் கருவியையும் முரசங்களையும் முழக்கிக் கொண்டிருந்தனர்.
இந்த மகத்தான வரவேற்பு ஏற்பாடுகள் எல்லாம் யாருக்காக, எதன் பொருட்டு - என்று நேயர்களுக்குச் சந்தேகமாக இருக்கிறதல்லவா. இதுவரை கதையுடனும் கதாபாத்திரங்களுடனும் தென்பாண்டி நாட்டுப் பகுதிகளிலும், கடற் பிரதேசத்திலுமே சுற்றிக் கொண்டிருந்து விட்டோம். கதையின் தொடக்கத்தில் ஒரே ஒரு முறை உறையூரில் நடந்த வடதிசையரசர் சதிக் கூட்டத்தையும் அதன் விளைவாக நாகப்பட்டினத்திலிருந்து மகாராணியையும் குமாரபாண்டியனையும் கொலை செய்யவும் தென்பாண்டி நாட்டு நிலையை அறியவும், ஒற்றர்கள் அனுப்பப்பட்டதையும் காண்பதற்காகப் பாண்டி நாட்டு எல்லையைக் கடந்து செல்ல நேரிட்டது. இதுவரை இந்த வரலாற்றுப் பெருங்கதையில் நமக்கும், கதைக்கும் வேண்டிய தன்மையான மனிதர்களை மட்டுமே அதிகமாகச் சந்தித்துக் கொண்டு வந்தோம். எதிரிகளையும் சந்திக்க வேண்டாமா? உறையூரில் முன்பு சந்தித்த பின் இப்போது இரண்டாவது முறையாகக் கொடும்பாளூரில் சந்திக்கப் போகிறோம்.
ஆம்! சோழ கோப்பரகேசரி மகாமன்னர் பராந்தகரும் பாம்புணிக் கூற்றத்து அரசூருடையானும் இன்னும் இது வரையில் நமக்கு அறிமுகமாகாத பரதூருடையான், கீழைப் பழுவூர்க் கண்டன் அமுதன் என்னும் இருவரும் அன்று காலை கொடும்பாளூருக்கு வருகிறார்கள். அதற்காகத்தான் அத்தனை வரவேற்பு ஏற்பாடுகள். அன்று உறையூரில் நடந்த கூட்டத்துக்குப் பிறகு தென் திசைப் படையெடுப்பைப் பற்றிய மேல் நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதற்காக இந்த இரண்டாவது கூட்டத்தைக் கொடும்பாளூரில் கூட்டியிருந்தான் அதன் சிற்றரசன். சோழ நாடும், பாண்டி நாடும் சந்திக்குமிடத்தில் இரண்டையும் இணைக்கும் நிலப்பகுதி போல் விளங்கிய கோனாடும் அதன் ஆட்சிப் பொறுப்பும் கொடும்பாளூரானிடம் இருந்தன.
தங்கள் தலைநகரத்துக்கு வரும் சோழனையும் மற்றவர்களையும் ஆசை தீரக் கண்டு களிப்பதற்குத்தான் கோனாட்டு மக்கள் கொடும்பாளூர் அரண்மனைக்கும், கோட்டைக்கும் போகும் சாலையில் அவ்வாறு திரண்டு கூடியிருந்தார்கள். சாலையின் கிழக்குக் கோடியில் நான்கு குதிரைகள் புழுதியைக் கிளப்பிக் கொண்டு பாய்ந்தோடி வந்தன. எல்லோருடைய கண்களிலும் ஆவல் நிறைந்திருந்தது. திருச்சின்னங்களும், முரசங்களும் திசைகள் அதிர ஒலித்தன. கூட்டத்தில் நின்று கொண்டிருந்த சிலர் வருகிற மன்னர்களுக்குத் தங்கள் மனக்களிப்பையும், ஆர்வத்தையும் தெரிவித்துக் கொள்ள எண்ணி முன்னேற்பாடாக வாங்கிக் கொண்டு வந்திருந்த மலர்களை வாரித் தூவினர். சிலர் பெரிய பெரிய வெண்தாமரைப் பூக்களையும், செந்தாமரைப் பூக்களையும் தூக்கி எறிந்த போது அவை வெண்ணிறமும் செந்நிறமும் பொருந்திய புறாக்கள் பறந்து போகிற மாதிரிப் போய்க் குதிரை மேல் செல்லும் அரசர்கள் போல் விழுந்தன. சோழனையும், ஏனையோரையும் வரவேற்று வாழ்த்தும் குரல்கள் கடலொலி போல் அதிர்ந்தன.
உடலை ஒட்டினாற் போன்று இறுக உடையணிந்திருந்த நான்கு ஆடல் மகளிரிடம் பூரண கும்பங்களைக் கொடுத்து முன் நிறுத்தினான் கொடும்பாளூர் மன்னன். இன்னும் சில கன்னிகைகள் பொற் பாலிகைகளை ஏந்தி அழகு படையெடுக்க நிற்பது போல் அணிவகுத்து நின்றனர். மங்கல விளக்குகளை உயர்த்திப் பிடித்தனர். பனைமரக் கொடிகள் எங்கும் பறந்து கொண்டிருந்தன. குதிரைகள் வந்து நின்றதும், அவற்றின் மேலிருந்தவர்கள் சிரித்த முகத்தோடு கீழே இறங்கி எல்லோருக்கும் வணக்கம் செலுத்தினர். கொடும்பாளூரான் ஆசையோடு ஓடி வந்து சோழனை மார்புறத் தழுவிக் கொண்டான். பின்பு மற்ற மூவரையும் அதே போல் மார்புறத் தழுவி வரவேற்றான்.
"புலியின் பாதுகாப்பில் இந்தப் பனைமரம் வளர்ந்து வருகிறது. சோழ மண்டலப் பேரரசின் அன்பும், ஆதரவும் இந்தப் பனைமரத்துக்குக் கிடைத்துக் கொண்டிருக்க வேண்டும்" - மலர்ச்சியும், சிரிப்பும் கொஞ்சிக் குழையும் முகத்துடனே இப்படிக் கூறிக் கொண்டே கொடும்பாளூரான் சோழனுக்கு மாலை சூட்டினான். மற்றவர்களுக்கு உடன் கூட்டத்துப் பெருமக்களும், அமைச்சர்களும் மாலையிட்டனர்.
எல்லோரையும் உள்ளே அழைத்துக் கொண்டு சென்றான் கொடும்பாளூரான். சோழனுக்குப் பக்கத்தில் நடந்து சென்ற அவன், "அரசே! நாம் நாகைப்பட்டனத்திலிருந்து கடல் மார்க்கமாக அனுப்பிய ஆட்கள் தெற்கேயிருந்து ஏதேனும் இரகசியச் செய்திகள் அனுப்பினார்களா? அவர்கள் போன காரியம் என்ன ஆயிற்று?" - என்று காதருகில் மெல்லக் கேட்டான்.
"அதைப் பற்றி நம்முடைய தனிக் கூட்டத்தில் விரிவாகப் பேசிக் கொள்ளலாம்" என்று சுருக்கமான மறுமொழி கிடைத்தது சோழனிடமிருந்து. உரிமை கொண்டாடி ஆர்வத்தோடு கேட்ட தன் கேள்விக்கு அங்கே அப்போதே சோழன் விடை சொல்லாதது கொடும்பாளூர் மன்னனுக்குக் கொஞ்சம் வருத்தத்தை அளித்தது.
கொடும்பாளூர் அரண்மனையில் மிக ரகசியமானதொரு பகுதியில் ஐந்து அரசர்கள் சந்தித்தார்கள். முன்றையக் கூட்டத்தைக் காட்டிலும் இது முக்கியமான கூட்டமாகையினால் அமைச்சர்கள் பிரதானிகளைக் கூட இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு விடவில்லை.
சோழன் கூட்டத்தைத் தொடங்கி வைத்தான். "உறையூரில் சந்திக்கும் போது நாம் மூவராயிருந்தோம். இப்பொழுது கொடும்பாளூரில் ஐந்து பேராக வளர்ந்திருக்கிறோம். இது நம்முடைய எண்ணத்தின் வெற்றிக்கு ஒரு சிறிய அறிகுறிதான். காவிரிக் கரையிலிருந்து காந்தளூர்ச் சாலையீறாக அவ்வளவு பிரதேசமும் சோழப் பேராட்சி ஒன்றுக்கே உட்பட்டிருக்க வேண்டும் என்பதில் நம்மையெல்லாம் காட்டிலும் கொடும்பாளூர் அரசருக்கு அவா அதிகம். மூன்று பேராக இருந்த நாம் ஐந்து பேராக வளர்ந்திருப்பது கூட அவருடைய முயற்சியின் விளைவேயாகும். கீழைப்பழுவூர்க் கண்டன் அமுதனையும், பரதூருடையானையும் நாம் நல்வரவு கூறி நம்முடைய கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம். அவ்வாறு சேர்த்துக் கொள்வதில் உங்களில் யாருக்கும் கருத்து மாறுபாடு இருக்காதென்று எண்ணுகிறேன்."
கருத்து மாறுபாடு இல்லை என்பதற்கு அடையாளமாக எல்லோரும் தலையை ஆட்டித் தங்கள் இணக்கத்தைக் காட்டினர்.
"நம்முடைய நோக்கமெல்லாம் சோழ நாட்டுக்குத் தெற்கே வேறு ஒருவருடைய ஆட்சிக்கு உட்பட்ட வேறொரு நிலப்பரப்பு இருக்கக் கூடாதென்பது தான். அதற்கு ஒத்து உழைக்க எத்தனை பேர் சேர்ந்தாலும் நம்மோடு அவர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டியதுதான்" என்று கொடும்பாளூரான் அந்தக் கருத்தை ஆதரித்தான்.
சோழன் மேலும் கூறலானான்: "கூடியவரை போர் செய்து துன்பப்படாமலே நம்முடைய விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டு விடலாம் என்று உறையூரில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் செய்தோம். கொடும்பாளூர் மன்னர் அன்று உறையூரில் கூறிய திட்டப்படி இளவரசன் இராசசிம்மனையும், மகாராணி வானவன்மாதேவியையும் சூழ்ச்சியாக அழித்து விடுவதற்கும் மகாமண்டலேசுவரரை நம் கைக்குள் போட்டுக் கொள்வதற்கும் வேண்டிய ஏற்பாடுகளைச் செய்தோம். கப்பல் மார்க்கமாக நம் ஆட்களைத் தென்பாண்டி நாட்டுக்கும் ஈழத் தீவுக்கும் அனுப்பினோம். ஆனால் அந்தப் பழைய ஏற்பாடுகளெல்லாம் நமக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியளிக்கவில்லை." இடையில் அரசூருடையான் குறுக்கிட்டு ஏதோ கேட்கத் தொடங்கவே சோழன் பேச்சுத் தடைப்பட்டது.
"அந்தச் சூழ்ச்சிகள் வெற்றியளிக்குமென்றுதான் அவற்றைச் செய்தோம். இல்லையானால் உடனே படையெடுப்புக்கு வழி செய்வதைத் தவிர வேறு முயற்சியில்லை."
"அவசரப்படாதீர்கள். நான் தான் ஒவ்வொரு விவரமாகச் சொல்லிக் கொண்டு வருகின்றேனே! எல்லாவற்றையும் கேட்டுக் கொண்ட பின் அவரவருடைய கருத்துக்களைச் சொல்லுங்கள், போதும். நாம் நாகைப்பட்டனத்திலிருந்து கப்பலில் அனுப்பிய ஆறு ஆட்களில் மூன்று பேரைத் தென்மேற்குக் கோடியிலுள்ள விழிஞம் துறைமுகத்தில் இறக்கி விட்டு விட்டு மற்ற மூவரோடு கப்பல் ஈழ நாட்டுக்குப் போய்விட்டதாம். விழிஞத்தில் இறங்கிய நம் ஆட்களான செம்பியன், இரும்பொறை, முத்தரையன் ஆகிய மூவரும் தென்பாண்டி நாட்டுக்குள் புகுந்து கன்னியாகுமரிக் கோயிலில் வானவன்மாதேவியின் மேல் வேலை எறிந்து கொல்ல முயன்றிருக்கிறார்கள். முடியவில்லை. நாம் இடையாற்று மங்கலம் நம்பியிடம் கொடுக்குமாறு அனுப்பிய ஓலையை நம் ஆட்களோடு போரிட்டுத் தளபதி வல்லாளதேவன் கைப்பற்றிக் கொண்டு விட்டானாம். வடதிசைப் பேரரசுக்கு உட்பட்டு நம்மோடு சமரசமாக அடங்கியிருக்க விரும்பினால் திருப்புறம்பியத்தில் வந்து நம்மைச் சந்திக்குமாறு இடையாற்று மங்கலம் நம்பியைக் கேட்டுக் கொண்டு அந்த ஓலையை எழுதியிருந்தோம் நாம். வானவன்மாதேவியைக் கொலை செய்ய இயலாததனாலும், இடையாற்று மங்கலம் நம்பி இதுவரையில் சந்திக்க வராததனாலும் அந்தத் திட்டம் இனிமேற் பயன்படாது. எனினும் நம்முடைய ஒற்றர்கள் மூவரும் இன்னும் தென்பாண்டி நாட்டு எல்லைக்குள்ளேதான் மறைவாகச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களிடமிருந்து எனக்கு அடிக்கடி போதுமான செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன."
"குமார பாண்டியனைக் கொல்லுவதற்காக ஈழ நாட்டுக்குப் போனவர்கள் என்ன ஆனார்கள் என்பது பற்றித் தாங்கள் ஒன்றுமே கூறவில்லையே?"
அதுவரையில் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த கொடும்பாளூர் மன்னன் தன்னுடைய சந்தேகத்தைக் கேட்டான்.
"அவர்களைப் பற்றித்தான் எனக்கும் இதுவரை ஒரு தகவலும் கிடைக்கவில்லை. விரைவில் திரும்பி வருவார்கள் என்று எதிர்பார்க்கிறேன். அவர்கள் வந்தால் நாகைத் துறைமுகத்தில் இறங்கியதும் உடனே இங்கு வருமாறு கூறியிருக்கிறேன். தாமதமின்றி இங்கே கூப்பிட்டுக் கொண்டு வருவதற்கு துறைமுகத்துக்கே ஆட்களை அனுப்பி எதிர்பார்த்துக் கொண்டு காத்திருக்கச் செய்திருக்கிறேன்."
"தென்பாண்டி நாட்டில் சுற்றிக் கொண்டிருக்கும் நம் ஒற்றர்கள் போதுமான செய்திகளை அவ்வப்போது அனுப்பிக் கொண்டிருப்பதாகச் சொன்னீர்களே, அந்தச் செய்திகளையெல்லாம் நாங்களும் அறிந்து கொள்ளலாமோ?"
அரசூருடையானின் இந்தக் கேள்விக்குச் சோழன் சிரித்துக் கொண்டே பதில் கூறினான்:
"நம்முடைய புதிய நண்பர்கள் இருவரும் ஒன்றும் பேசாமல் உட்கார்ந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் சேர்த்துக் கேட்பது போல் பழைய நண்பர்கள் கேள்விகளைக் கேட்கிறார்கள். யோசனைகளைக் கூறுகிறார்கள். நம் அரசூருடைய சென்னிப் பேரரையர் கேட்பதற்கு முன் தென்பாண்டி நாட்டிலிருந்து ஒற்றர்கள் மூலம் கிடைக்கும் செய்திகளை நானே விரிவாகச் சொல்ல வேண்டுமென்றிருந்தேன். அதற்கு முன்னால் உங்களையெல்லாம் கலந்தாலோசித்துக் கொள்ளாமல் நான் செய்திருக்கும் ஒரு சில செயல்களுக்காக நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும். 'நாம் மிக விரைவில் படையெடுத்துவிடப் போகிறோம்' என்ற பெரும் பீதியைத் தென்பாண்டி நாடு எங்ஙணும் உண்டாக்குவதற்காக ஒரு தந்திரம் செய்தேன். நம் வீரர்களை வணிகர்கள் போலவும், தலயாத்திரை செய்பவர்கள் போலவும் நிறைய அனுப்பியிருக்கிறேன். தென்பாண்டி நாட்டின் வடக்கு எல்லையான கரவந்தபுரத்துப் பகுதிகளில் நம் ஆட்கள் திடீர் திடீரென்று கலகங்களையும், குழப்பங்களையும் செய்து போர் நெருங்கி வருவது போல் அச்சுறுத்துகிறார்கள். கொற்கையில் நடந்த முத்துக்குளி விழாவின் போது நம்மிடமிருந்து போன ஆட்கள் உண்டாக்கிய கலவரம் தென்பாண்டி நாட்டையே நடுங்கச் செய்திருக்கிறது. வட எல்லைக் காவலனும், கரவந்தபுரத்து அரசனுமாகிய பெரும்பெயர்ச்சாத்தன் அஞ்சிப் போய் மகாமண்டலேசுவரருக்குத் தூது அனுப்பி விட்டான். அந்தத் தூதுவன் மகாமண்டலேசுவரரிடமிருந்து கரவந்தபுரத்துக்கு வாங்கிக் கொண்டு போன பதில் செய்தியை நம் ஆட்கள் எப்படியோ கைப்பற்றி, இங்கே எனக்குக் கொடுத்தனுப்பியிருக்கிறார்கள். அதில் முக்கியமான விவரம் ஒன்றுமில்லாவிட்டாலும் உண்மையிலேயே நாம், இன்றோ நாளையோ படையெடுத்து வந்து விடப் போகிற மாதிரி எண்ணி அரண்டு படை ஏற்பாடுகளைத் தயார் செய்யும் முனைப்பு தெற்கே உண்டாகிவிட்டது என்று அறிந்து கொள்ள முடிகிறது. இதே போல் கரவந்தபுரத்துக்கும் அரண்மனைக்கும் நடக்கும் செய்தித் தொடர்புகளைக் கண்காணித்தோ, கைப்பற்றியோ அனுப்பவேண்டுமென்று நம் ஆட்களுக்குக் கூறி அனுப்பியிருக்கிறேன். சாமர்த்தியமும், திறமையும் போதாத காரணத்தினால், நம் ஆட்களில் சிலர் அகப்பட்டு விட்டனர். அவர்கள் கரவந்தபுரத்துச் சிறைச்சாலையில் சிக்கி விழித்துக் கொண்டிருக்கிறார்களாம்..."
"புலி வருகிறது, புலி வருகிறதென்று பயமுறுத்திக் கொண்டிருப்பதனால் மட்டும் நமக்கு பயன் என்ன? படையெடுத்துப் போய்விட வேண்டும்."
பேசுவதற்குக் கூச்சப்படுகிறவனைப் போலப் பேசாமல் உட்கார்ந்திருந்த கண்டன் அமுதன் மேற்கண்டவாறு உடனே படையெடுக்க வேண்டுமென்று வற்புறுத்தினான்.
"நிதானமாகச் செய்வோம். இன்று ஒரு நாளில் செய்து விட முடிகிற முடிவில்லை இது. இங்கே கொடும்பாளூரிலேயே தங்கி இன்னும் இரண்டு மூன்று நாட்கள் ஆலோசனை செய்து முடிவுக்கு வருவோம். அதற்குள் நமக்கு ஏதாகிலும் நம்பிக்கையூட்டும் புதிய செய்திகள் தெற்கேயிருந்து கிடைத்தாலும் கிடைக்கலாம்." சோழன் விட்டுக் கொடுக்காமல் பதில் சொல்லிச் சமாளித்தான். அதன் பின் சோழனும், கொடும்பாளூர் மன்னனும் சிறிது தொலைவு தள்ளிப் போய் நின்று தனியாகத் தங்களுக்குள் ஏதோ பேசிக் கொண்டு திரும்பவும் பழைய இடத்துக்கு வந்து எல்லோரோடும் அமர்ந்தார்கள்.
அப்படி அமர்ந்தவுடன் தனக்கே சொந்தமான முரட்டுக் குரலில் கனைத்துக் கொண்டு ஏதோ இன்றியமையாத விஷயத்தைப் பேசுகிறவனின் முகச்சாயலோடு தொடங்கினான் கொடும்பாளூரான்:
"நண்பர்களே! நம் எல்லோருக்கும் நோக்கமும் நினைவும் ஒன்றானாலும் அரசும், ஆட்சியும் வேறு வேறாக இருப்பவை. 'நன்றாற்றல் உள்ளும் தவறு உண்டு அவரவர் பண்பறிந்து ஆற்றாக்கடை' என்பதை நாம் நினைவிற் கொள்ள வேண்டும். எல்லாவகையிலும் ஒருவருக்கொருவர் முழு மனத்தோடு ஒத்துழைப்பதென்று முதலில் நாம் ஒரு உடன்படிக்கை செய்து கொள்ள வேண்டும். இன்று கொடும்பாளூர் அரச மாளிகையின் ஒரு மூலையில் நாம் ஐவருக்குள்ளே செய்து கொள்ளும் இந்த உடன்படிக்கைதான் எதிர்காலத்தில் தமிழ் வழங்கும் நிலம் முழுவதும் சோழ நாடாக ஒருமை பெற்று விரிவடையினும் நம்மை பிரிக்க முடியாத உடன்படிக்கை. கை விரல்கள் ஐந்து, ஆனால் கை ஒன்றுதான். தனித் தனியாகச் சொந்த நன்மைகளைப் பொருட்படுத்துவதில்லை என்றும் வெற்றிகள் அடைந்தால் அந்த வெற்றிக்காகத் தனித்தனியே பெருமைப்படுவதில்லை என்றும் உறுதி செய்து கொள்ள வேண்டும். நமது கூட்டணியின் மாபெரும் படைக்கு அரசூருடையாரையும், பரதூருடையாரையும் தளபதிகளாக்கி மற்ற மூவரும் போர்த்தலைவர்களாக இருக்கட்டும் என்றே மதிப்புக்குரிய சோழமன்னர் கருதுகிறார். அந்தக் கோரிக்கைக்கு இணங்குகிறோம் என்பதற்கு அடையாளமாக வாள்களை உறைகழித்து நீட்டிச் சத்தியம் செய்வோம்" என்று சொல்லிக் கொண்டே தன் வாளை உருவி நீட்டினான் கொடும்பாளூரான். அடுத்த கணம் மற்ற நான்கு கைகளும் ஒரே சமயத்தில் வாள்களை உருவும் ஒலி உண்டாயிற்று. ஐந்து வாள்கள் நுனி கூடி உறவாடுவது போல் கூடாரமிட்டுக் கொண்டு நின்றன. அந்த வாள்களின் நுனி கூடுமிடத்தில் எங்கிருந்தோ ஒரு வண்டு பறந்து வந்து உட்கார்ந்தது. பாண்டியர் பலத்தையே அடித்து வீழ்த்துகிறவனைப் போல் கடுப்போடு அந்த வண்டை அடித்துத் தள்ளினான், கொடும்பாளூரான். "அரசே அவசரமாக ஓர் ஒற்றன் வந்திருக்கிறான்" என்று சோழனை விளித்துக் கொண்டு உள்ளே வேகமாக வந்த ஒரு வீரன் முகத்தில் போய் விழுந்தது அந்தச் செத்த வண்டு.
--------
2.13. சுசீந்திரம் கைமுக்குத் தண்டனை
குணவீரபண்டிதர் வந்து உரையாடி விட்டுப் போன மறுநாள் காலை மகராணி வானவன்மாதேவிக்கு அரண்மனையில் இருப்புக் கொள்ளவில்லை. அரசபோக ஆடம்பரங்களின் நடுவே எல்லோரும் வணங்கத்தக்க நிலையில் இருந்தும் உள்ளத்தின் ஏதோ ஒரு பகுதி நிறையாமலே இருந்து கொண்டிருந்தது. நிறைந்த வசதிகள் நிறையாத நெஞ்சம், உயர்ந்த எதிர்கால நினைவுகள், உயராத நிகழ்காலச் சூழ்நிலை இப்படித் தவித்துக் கொண்டிருந்தது அந்தப் பேருள்ளம். அந்தத் தவிப்பை மாற்ற விலாசினியும், பகவதியும் உடன் இருந்தது எவ்வளவோ ஆறுதலாக இருந்தது. அந்த ஒரே ஆறுதலும் இப்போது இல்லை.
அன்று விடிந்ததும் வானவன்மாதேவிக்கு விலாசினி திடீரென்று தந்தையோடு ஊருக்குச் சென்றுவிட்ட செய்தி தெரிந்தது. பகவதியாவது அரண்மனையில் இருப்பாள் என்று எண்ணி அவளை அழைத்து வரச் சொல்லி வண்ணமகளை அனுப்பினார் மகாராணி. பகவதி அரண்மனை எல்லையிலேயே காணப்படவில்லை என்று அறிந்ததும் அவருக்குப் பயமும் கவலையும் உண்டாயிற்று. புவன மோகினியின் மூலம் அந்தச் செய்தியை மகாமண்டலேசுவரருக்குச் சொல்லி அனுப்பினார்.
கோட்டாற்றுத் துறவி எழுதிக் கொடுத்துவிட்டுப் போன அந்தப் பாடலைத் திரும்பத் திரும்ப பாடச் சொல்லிக் கேட்க வேண்டுமென்று தோன்றியது மகாராணிக்கு. உலக வாழ்வின் அடிமூலத்துக்கும் அடிமூலமான கருத்தை அந்தப் பாட்டுக்குள் பொதிந்து வைத்திருப்பதாக அதைக் கேட்கும் போதெல்லாம் அவருக்கு ஒரு மனத்தோற்றம் உருவாயிற்று.
குமார பாண்டியனைப் பற்றி மகாமண்டலேசுவரர் வந்து கூறிய விவரங்கள் அவருக்கு மிகுந்த வேதனையைக் கொடுத்திருந்தன. மகனைப் பற்றிய கவலை, மகன் ஆளவேண்டியதாயிருந்தும் அவனால் ஆளப்படாமல் இருக்கிற நாட்டைப் பற்றிய கவலை, மலர் போன்ற உள்ளம் கொண்ட மகாராணிக்கு இத்தனை கவலைகளையும் சற்றே மறந்து புனிதமான சிந்தனைகளில் ஈடுபட அந்தப் பாடல் உதவி செய்தது. விலாசினியாவது, பகவதியாவது உடனிருந்தால் மனம் விட்டுப் பேசிக் கொண்டிருக்கலாம். அல்லது ஆடல் பாடல்களில் சுவையான அனுபவத்தில் தன்னை மறக்கலாம். அவர்களும் அரண்மனையில் இல்லை? மகாமண்டலேசுவரர் அந்தப்புரப் பகுதிக்குள் அதிகம் வருவதில்லை! அன்று குமார பாண்டியனைப் பற்றிய உண்மை நிலைகளை அவர் வந்து தனிமையில் கூறிய போதே, மகாராணிக்குத் தாங்க முடியாத துயரம் அழுகையாகப் பொங்கிக் கொண்டு வந்தது. வீணாக அடிக்கடி மகாராணியாரைச் சந்திக்கச் சென்று எதையாவது கூறி அவர் மனத்தில் உணர்ச்சி நெகிழுமாறு புண்படுத்தக் கூடாதென்று மகாராணியைக் காணாமல் இருந்தார் மகாமண்டலேசுவரர். கோட்டாற்றுப் பண்டிதரையும் நினைத்த போதெல்லாம் வரவழைத்து அவர் பெருமை குறையும்படியாக நடந்து கொள்ள முடியாது.
சொன்னதைக் கேட்கவும், கேட்டதைக் கொடுக்கவும் எத்தனை பணிப்பெண்களோ இருந்தார்கள்? யார் இருந்தால்தான் என்ன? யார் போனால் என்ன? நாட்டுக்கெல்லாம் அரசி கூட்டுக்குள் கிளியாக உள்ளம் குலைய வேண்டியிருந்தது. மண்ணின் உலகத்தில் பாண்டி நாட்டுக்குத் தேவியாயிருக்க முடிகிறது. மனத்தின் உலகத்திலோ ஏழையிலும் ஏழை போல் வெறுமை சூழ்கிறது. ஒரே சுவைக் கலப்பற்ற தனிமை! உள்ளும் புறமும், நினைவும் கனவும், எங்கும் எதுவும் சூனியமாய்ப் பாழ்வெளியாய்ப் போய்விட்டது போன்ற தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கும் தனிமை அது. ஏழை கந்தல் துணிகளை இழுத்துப் போர்த்திக் குளிரைப் போக்கிக் கொள்ள முடியாதது போல் வலுவில்லாத நினைவுகளால் மனத்திடம் கிட்டமாட்டேனென்கிறது.
மகாராணி அந்தப் பெரிய மாளிகையில் சிறிதும் நிம்மதியின்றி இருந்தார். குமார பாண்டியனைப் பற்றிய நினைவுகள், நாட்டின் எதிர்காலம், போர் வருமோ என்ற பயம் எல்லாம் ஒன்றாய்க் கூடி நின்று, 'ஓடு! ஓடு!' என்று அந்தத் தனிமையிலிருந்து எங்கோ துரத்துவது போல் இருந்தது. சொற்களின் பொருள் வரம்புக்குள் இழுத்துப் பிடித்து விளக்க முடியாத ஒரு தாபம் - ஆத்மதாபம், அகன்ற மாளிகையின் நீண்ட இடங்களைக் கடந்து உயர்ந்த மதில்களுக்கு அப்பால் எட்டமுடியாத உயரத்துக்குப் போய்விட வேண்டும் என்று உந்தித் தள்ளுவது போல் உள்ளத்தில் குமிழியிட்டது.
"தேவி! உணவருந்துவதற்கு எழுந்தருள வேண்டும்" என்று ஒரு பணிப்பெண் வந்து அழைத்தாள். மகாராணி பதில் சொல்லவில்லை!
"நீ போய் வண்ணமகள் புவன மோகினியை வரச்சொல்" பணிப்பெண் உணவருந்துவதற்கு அழைத்ததையே காதில் போட்டுக் கொள்ளாமல் அவளை வேறொரு பணிக்கு ஏவினார் மகாராணி. சிறிது நேரத்தில் வண்ணமகள் வந்தாள்.
"புவன மோகினி! நான் உடனே தாணுமாலய விண்ணகரத்துக்குப் புறப்பட வேண்டும். சுசீந்திரத்துக்குச் சிவிகை ஏற்பாடு செய். நீயும் உடன் வரவேண்டும்."
முன் தகவல் இல்லாமல், உணவருந்தாமல், திடீரென்று இப்படி மகாராணி கோவிலுக்குப் புறப்பட வேண்டுமென்று கூறியதைக் கேட்டுப் புவன மோகினி திகைத்தாள்.
"தேவி தாங்கள் இன்னும் உணவைக் கூட முடித்துக் கொள்ளவில்லையே? அதற்குள்..."
"பசி இப்போது வயிற்றுக்கு அல்ல, ஆன்மாவுக்கு! கேள்வி கேட்டுக் கொண்டு நிற்காதே, போய் உடனே ஏற்பாடு செய்."
வண்ணமகள் பதில் பேச வாயிழந்து சிவிகை ஏற்பாடு செய்வதற்காகச் சென்றாள். படைவீரர்கள் துணை வராமல் தனியாக மகாராணி எங்கும் புறப்படக் கூடாதென்று அன்று கன்னியாகுமரியில் வந்த ஆபத்துக்குப் பின் ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனால் அப்போதிருந்த மனநிலையில் யாருக்கும் தெரியாமல், யாருடைய பாதுகாப்பும் இன்றிச் சுசீந்திரத்துக்குப் போய் வர முடிவு செய்திருந்தார் மகாராணி. மகாமண்டலேசுவரருக்கோ, மெய்க்காவற் படை வீரர்களுக்கோ தன் புறப்பாட்டைப் பற்றி அவர் தெரிவிக்கவே இல்லை! பரிவாரங்கள் புடைசூழ ஆரவாரம் நிறைந்த அரச மரியாதைகளோடு கோயிலுக்குச் செல்வது, 'நான் மகாராணி... எனக்குப் பெருமை, பீடு, பதவி எல்லாம் உண்டு' என்று பெருமையை அநாவசியமாக அறிவித்துக் கொண்டு போவது போல் வெறுப்பை உண்டாக்கிற்று. அவர் எண்ணினார்:
'உலகத்தின் கண்களுக்கு நான் பாண்டிமாதேவி. இராசசிம்மனின் கண்களுக்கு அன்னை. ஆனால் தெய்வத்தின் கண்களுக்கு நான் ஓர் அபலைப் பெண். எளியவன் செல்வந்தனுக்கு முன் இரவல் நகைகளையும் ஆடை அணிகளையும் பூண்டு தன்னைப் பெரிதாகக் காண்பித்துக் கொள்ள முயல்வது போல் அபலையாக இருந்து கொண்டு அரசியாகப் பெருமை கொண்டாடக் கூடாது.'
சிவிகையில் புவன மோகினி ஒருத்தியை மட்டும் துணைக்கு ஏற்றிக் கொண்டு தனிமையாகப் புறப்பட்டார் வானவன்மாதேவி. கோட்டையின் இரண்டு வாயில்களிலும் மிகுந்த காவல் வீரர்கள். 'ஐயோ! இப்ப மகாராணி தனிமையாகப் போகிறார்களே?' என்று வருந்தத்தான் முடிந்தது. தடுப்பதற்கு அவர்கள் யார்? எல்லாப் பெருமையும் உள்ளவள், இல்லாதவளைப் போல் போக விரும்பும் போது யார் தான் அதைத் தடுத்து நிறுத்த முடியும்?
அது நன்றாகப் பட்டுத் திரையிட்டு மூடப்பெற்ற சிவிகையாதலால் சுசீந்திரத்தை அடைகிற வரையில் அதில் மகாராணி வானவன்மாதேவியார் போகின்றார் என்ற பெரிய உண்மை இடைவழி ஊர்களில் இருந்த மக்களுக்குத் தெரியாமலே போய்விட்டது. தெரிந்திருந்தால் எவ்வளவு பெரிய கோலாகலமான வரவேற்புகள் கிடைத்திருக்கும்? எத்தனை ஆரவாரமும் மக்கட் கூட்டமும் சிவிகையின் இருபுறமும் நிரம்பி வழிந்திருக்கும்? அந்த மாதிரிச் சாலைகளில் எத்தனையோ செல்வக் குடும்பத்துப் பெண்கள் அந்த மாதிரிப் பல்லக்குகளில் போவது வழக்கம். அது போல் நினைத்துக் கொண்டு அதை விசேடமாகக் கவனிக்கவில்லை மக்கள். சிவிகை சுமந்து செல்வோருக்கும் கூறக்கூடாது என்று முன்னெச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது.
தாணுமாலய விண்ணகரத்தின் கோபுர வாயிலில் மகாராணியும், புவன மோகினியும் இறங்கிக் கொண்டார்கள். கோயில் முன்புறமும், உள்ளேயும் கூட்டம் அதிகமாக இருந்தது.
"தேவி! இன்றைக்கு இந்தக் கோயிலில் உள்ள தெய்வ நீதி மண்டபத்தில் ஏதோ ஒரு முக்கியமான வழக்கில் தீர்ப்புக் கூறி 'கைமுக்குத் தண்டனை' நிறைவேற்றப் போகிறார்களாம். இவ்வளவு கூட்டமும் கைமுக்குத் தண்டனையைக் காண்பதற்குக் கூடியிருக்கிறது" என்று புவன மோகினி விசாரித்துக் கொண்டு வந்து கூறினாள். சாதாரண உடையில் சாதாரணப் பெண்கள் போல் கூட்டத்துக்குள் புகுந்து சென்ற அவர்கள் யாருடைய பார்வைக்கும் படாமல் தப்பியது வியப்புதான்.
"புவனி மோகினி! இந்தக் கோயிலுக்கு வந்தால் மட்டும் இரு சிறப்பு. இங்கே படைத்துக் காத்து அழிக்கும் முப்பெருங்கடவுளரின் ஒன்றுபட்ட அம்சத்தைத் தெய்வமாக வணங்குகிறோம்" - மகாராணி வண்ணமகளிடம் கூறிக் கொண்டே சந்நிதிக்கு முன் சென்று வணங்கினார். அர்ச்சகர் அருகில் வந்து பார்த்து அடையாளம் கண்டு கொண்டார். அவருக்குக் கையும், காலும் பதறி நடுங்கின.
"தேவி! இதென்ன கோலம்...? இப்படித் தனியாக..." சரியாகப் பேச முடியாமல் வாய் குழறியது அவருக்கு. ஆள் காட்டி விரலை இதழ் வாயிற் பொறுத்திப் பேசாமல் இருக்குமாறு அர்ச்சகருக்குச் சாடை காட்டினார் மகாராணி. அவர் அடங்கினார். கைகூப்பி வணங்கிக் கொண்டே நெடுநேரம் நின்றிருந்தார் மகாராணி. முகத்திலும், கண்களிலும் தெய்விக நிலை ஒளிர்ந்தது. உலகத்தில் மறந்த பெருநிம்மதியில் திளைக்கும் ஓர் அருள் இன்பம் சிறிது நாழிகை தொடர்ந்தது. வழிபாடு முடிந்தது.
"அர்ச்சகரே இன்று ஏதோ கைமுக்குத் தண்டனை நடைபெறுகிறதாமே? வரும் வழியில் இருந்த கூட்டத்தைப் பார்த்து இவள் விசாரித்துக் கூறினாள். அது என்னவென்று விவரம் சொல்லுங்கள்" மகாராணி கேட்டார்.
"தேவி! தங்களுக்குத் தெரியாததொன்றும் இல்லை. நாஞ்சில் நாட்டின் எப்பகுதியில் தெய்வக் குற்றம், ஒழுக்கக்கேடு முதலிய பேரநீதிகள் செய்தவர் மீது அவ்வநீதிக்கு ஆளான எவர் வழக்குத் தொடர்ந்தாலும் அவ்வழக்கைப் பன்னெடுந் தலைமுறைகளாக இந்த கோயிலில் உள்ள தெய்வ நீதிமன்றத்தார் தீர விசாரித்துத் தீர்ப்புக் கூறி வருகிறார்கள். குற்றம் செய்தவர்கள் 'கைமுக்குத் தண்டனை' - பெறுகிறார்கள். இக்கோவிலில் தெய்வ நீதிமன்றத்தார் கைமுக்குத் தண்டனைக்கென்றே ஒரு பெரிய நெய்க் கொப்பரையும் பொன்னாற் செய்த நந்திச்சிலை ஒன்றும் வைத்திருக்கின்றதைத் தாங்கள் அறிவீர்கள். தண்டனைக்குரியோராகத் தீர்ப்புப் பெறுவோர் கொப்பரை நிறையக் காய்ந்து கொதிக்கும் நெய்க்குள் கையை விட்டு, அடியில் கிடக்கும் பொன் நந்தியை வெளியே எடுக்க வேண்டும். தென்பாண்டி நாட்டிலேயே பெரிதாக நினைக்கப்படும் இந்தத் தண்டனையை கடந்த நான்கைந்து ஆண்டுகளில் எவருக்குமே அளிக்கப்படவில்லை. அதாவது 'கைமுக்குத் தண்டனை' பெறும் அளவுக்கு இந்தச் சில ஆண்டுகளில் இந்தப் பகுதியில் யாரும் குற்றம் செய்யவில்லை.
"சென்ற திங்களில் திருவட்டாறு ஆதிகேசவ விண்ணகரத்தில் வழிபாட்டுரிமை பெற்ற சோழிய அந்தணர் ஒருவருடைய புதலவன் அதே விண்ணகரக் கோயிலின் விலைமதிப்பற்ற பொன் அணிகலன்களைத் திருடிக் கொண்டு யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் திடீரென்று எங்கோ மறைந்து விட்டான். சோழிய அந்தணர் தம் மகன் தான் திருடிச் சென்றிருக்கிறான் என்பதனை அறிந்து கொண்டு விட்டார். புதல்வன் செய்தது குற்றமே என்று தயக்கமின்றிச் சுசீந்திரம் தெய்வ நீதிமன்றத்தாருக்கு அக்குற்றத்தை அறிவித்துவிட்டார் அவர். எனினும் குற்றம் செய்த சோழிய இளைஞன் அகப்படவில்லை. இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னால் காந்தளூரில் ஒரு பொற்கொல்லன் வீட்டில் விண்ணகரத்துப் பொன் நகைகளை அழித்து உருக்கி விடுவதற்கு முயன்று கொண்டிருந்த போது அந்தச் சோழிய இளைஞனைப் பிடித்து விட்டார்கள். இன்று தீர்ப்புக் கூறுகிறார்கள். நீண்ட நாட்களுக்குப் பின்னர் நடைபெறும் 'கைமுக்குத் தண்டனை' யாகையால் மக்கள் திருவிழாக் கூட்டம் போல் பார்ப்பதற்குக் கூடிவிட்டார்கள். கைமுக்கு மண்டபத்துப் பக்கம் போவதற்கே பரிதாபமாக இருக்கிறது" என்றார் அர்ச்சகர்.
"கல்மனம் படைத்த அந்தச் சோழிய அந்தணர், 'என் மகனானால் என்ன? வேறெவனானால் என்ன? செய்தது தவறு. பெற வேண்டியது தண்டனை தான்' என்று பாசத்தை மறந்து நியாயத்தை ஒப்புக் கொள்கிறார். ஆனால்... நான் உங்களிடம் எப்படிச் சொல்வேன், மகாராணி! அவனைப் பெற்ற அந்தச் சோழிய நங்கையின் கதறல் அந்த மண்டபத்தையே சோக வெள்ளத்தில் மூழ்கச் செய்திருக்கிறது. அந்தத் தாய் தூணில் முட்டிக் கொள்கிறாள், முறையிடுகிறாள். 'என் மகன் கையை நெய்க் கொப்பரைக்குள் விடு முன் நானே கொப்பரையின் கொதிக்கும் நெய்க்குள் பாய்ந்து உயிரை விட்டு விடுவேன்' என்று அடம் பிடிக்கிறாள். அவளுக்கு ஒரே மகன் அவன். தந்தைக்கு நியாயம் பெரிதாகத் தெரிகிறது. தாய்க்குப் பாசம் பெரிதாகத் தெரிகிறது. தாய் ஈரைந்து திங்கள் வயிற்றில் சுமந்தவள். என்ன செய்வது, தேவி! தாயாக இருந்தால் தான் மகனை உணர முடிகிறது. அடியானாக இருந்தால் தான் தெய்வத்தை உணர முடிகிறது. ஆண்டவனாக இருந்தால் தான் அடியாளின் வேதனை தெரிகிறது. வாழ்க்கை நியதி அப்படி அமைந்து கிடக்கிறது."
அர்ச்சகர் உணர்ச்சிகரமாக, உருக்கமாகத் தம் மனத்தில் புதைந்து கிடந்த துன்பங்களை மகாராணிக்கு முன் கொட்டினார். அவர் முடித்ததும் மகாராணி ஆவலோடு கேட்டார்: "அதெல்லாம் சரி! முடிவு என்ன ஆயிற்று? 'கைமுக்குத் தண்டனை'யை நிறைவேற்றினார்களா, இல்லையா?"
"நீதி மன்றத்தார் தண்டனையை அளித்து விட்டார்கள். ஆனால் தண்டனையை நிறைவேற்ற முடியாமல் ஒரு தாயின் இரண்டு கைகள் தடுத்து அடம் பிடிக்கின்றன. நெய்க்கொப்பரை கொதித்துக் கொண்டிருக்கிறது. இவ்வளவு கூட்டமும் அதைத்தான் வேடிக்கை பார்க்கப் போகிறது. முடிவு என்ன ஆகுமோ தெரியவில்லை."
அர்ச்சகருடைய வார்த்தைகளைக் கேட்டு முடிந்ததும், மகாராணி வானவன்மாதேவியார் பெருமூச்சுவிட்டார். அவருடைய பேச்சு மகாராணியின் மனத்தில் இரண்டொரு சொற்களை ஆழப் பதித்து விட்டது.
'தாயாக இருந்தால் தான் மகனை உணர முடிகிறது. ஆண்டவனாக இருந்தால் தான் அடியானின் வேதனை தெரிகிறது.'
யாரும் அறியாமல் புதையல் எடுத்து எளியவன் அதனைத் திரும்பத் திரும்பத் தனிமையில் தான் மட்டும் பார்த்து மகிழ்வது போல் இந்த உயிரோட்டமுள்ள வாக்கியங்கள் அவர் மன ஆழத்தைத் தொட்டுத் துடிப்பு ஊட்டின.
தெய்வ நீதிமன்றம் அந்தக் கோவிலின் வேறொரு பகுதியில் இருந்தது. ஏக்கத்தோடும், அனுதாபத்தோடும் நிராசையோடும் அந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தார் மகாராணி. கூட்டம் திரள்திரளாகத் தெய்வ நீதிமன்றம் இருந்த பகுதிக்குள் சென்று கொண்டிருந்தது. இவ்வளவு கூட்டமும் கைமுக்குத் தண்டனையை வேடிக்கை பார்க்கப் போகிறது. ஆனால் இவ்வளவு பேரும் அடையாத சோக உணர்ச்சி தண்டனை அடைந்தவனைப் பெற்ற தாய்க்கு மட்டும் ஏற்படுகிறது. உலகத்துக்கு வேடிக்கை. தாய்க்கு வேதனை. தாயாக இருந்தால் எத்தனை துன்பங்கள்? ஆனாலும் தாயாக இருப்பதில்தான் எவ்வளவு பெருமை!
யாரையோ அடிப்பதற்காக ஓங்கிய கை, யார் மேலேயோ விழுந்தது போல், எந்தத் தாயையோ நினைத்துக் கொண்டு அர்ச்சகர் கூறிய அந்த வாக்கியம் தம் இதயத்தையே கசக்கிப் பிழிவதை வானவன்மாதேவி உணர முடிந்தது. அந்த விநாடி வானவன்மாதேவியின் மனத்தில் மின்னலைப் போல் ஓர் எண்ணம் உண்டாயிற்று. முகம் மலர விழிகளில் சத்தியம் ஒளிர அர்ச்சகரை நிமிர்ந்து பார்த்தார்.
"அர்ச்சகரே! நீங்கள் எனக்கு ஒரு சிறு உதவி செய்ய வேண்டும். இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கடந்து உள்ளே போய்க் 'கைமுக்குத் தண்டனை' நிறைவேறும் இடத்தில் நான் இங்கு வந்திருப்பதை வெளிக்காட்டிக் கொள்ள எனக்கு விருப்பமில்லை. நீங்கள் தயவு செய்து இந்தப் பணிப் பெண்ணையும் உடன் அழைத்துச் சென்று அந்தச் சோழிய நங்கையை மட்டும் இங்கே தனியாகக் கூப்பிட்டுக் கொண்டு வர ஏற்பாடு செய்யுங்கள்."
அர்ச்சகருக்கு மகாராணியின் அந்த வேண்டுகோள் ஆச்சரியத்தை உண்டாக்கிற்று. ஆனாலும் அதை அடக்கிக் கொண்டு, "அப்படியே அழைத்து வர முயல்கிறேன் தேவி" என்று கூறி புவன மோகினியையும் உடன் அழைத்துக் கொண்டு கூட்டத்துக்குள் புகுந்தார். சந்நிதிக்கு முன் தனியாக நின்ற மகாராணி பிறருடைய கவனம் தம்மால் கவரப்படக் கூடாதென்று நினைத்து யாரோ தரிசனத்துக்கு வந்தவள் போலத் தோன்றும்படி ஒரு தூண் ஓரமாக ஒதுங்கி ஒடுங்கி நின்றாள். பாண்டி நாட்டின் மாபெருந் தாய் போன்ற அந்தத் தேவியின் மனம் எங்கோ ஒரு சிறிய ஊரில் கோவிலில் தொண்டு செய்யும் அர்ச்சகரின் மனைவியான மற்றொரு தாய்க்காக நெகிழ்ந்து உருகியது. உலகத்தில் எங்குமே எதற்காகவும் தாய்க்குலம் மனவேதனைப்படக் கூடாதென்கிற மாதிரி ஒரு பரந்த கருணை அந்த மகாராணியின் நெஞ்சில் அந்தச் சில கணங்களில் வந்து நிறைந்து கொண்டது. ஒரு தாயின் துன்பத்தை உணர இன்னொரு தாய். ஆகா! உலகத்துத் தாய்க் குலத்தின் இணையற்ற பெருமை அது.
அர்ச்சகரும், புவன மோகினியும் எப்படியோ அந்தச் சோழிய நங்கையை அழைத்து வந்துவிட்டனர். அவளைச் சுற்றி ஒரு சிறு கூட்டமும் வந்தது. அழுது அழுது சிவந்த கண்கள், வெளிறிய முகம், கலைந்த கூந்தல், முகம் முழுவதும் தன் மகனின் உயிர் காப்பதற்கு வீறு கொண்டெழுந்த தாய்மை வெறி. 'பார்! இதுதான் உலகத்தின் தாய்மைத் துடிப்பின் உண்மை ஓவியம்' என்று எழுதி ஒட்டியிருப்பது போன்ற முகம் அவளுக்கு. அவளைச் சுற்றிலும் பைத்தியத்தைப் பார்க்க வருவது போல் தொடர்ந்து வந்த கூட்டத்தை அர்ச்சகர் ஏதோ சொல்லி அதட்டி விரட்டினார்.
அந்தத் தாயும் அர்ச்சகரும் புவனமோகினியும், மகாராணி நின்று கொண்டிருந்த தூணுக்கு அருகே வந்தனர். அர்ச்சகரையும், புவன மோகினியையும் ஒதுங்கிச் செல்லுமாறு குறிப்புக் காட்டிவிட்டு அவளை நோக்கி, "வா அம்மா! உன் துன்பத்தைக் கேள்விப்பட்டேன். என் மனம் பெரிதும் கலங்கியது. எனக்கு மட்டுமல்லை, அம்மா! உலகத்துத் தாய்மார்களெல்லாரும் துன்பப்படவே பிறந்திருக்கிறோம். இந்த நாட்டு மகாராணி வானவன்மாதேவியைப் பற்றி நீ கேள்விப்பட்டிருப்பாய். அவர் கூடத் தம் மகனை எண்ணித்தான் ஓயாமல் கலங்கிக் கொண்டிருக்கிறார். நாம் என்ன செய்வது? நாம் பெற்ற பிள்ளைகள் அசடுகளாக இருந்து விட்டால் அவர்களுக்கும் சேர்த்து நாம் தாம் வருத்தப்பட வேண்டியிருக்கிறது" என்று, தாம் இன்னாரெனக் காட்டிக் கொள்ளாமல் மூன்றாவது மனிதர் தற்செயலாக அனுதாபப்படுவது போல் பேசினார் மகாராணி.
அந்தச் சோழிய நங்கை விக்கலும், விசும்பலுமாக வெடித்துக் கொண்டு வரும் அழுகையோடு சீறினாள்:
"இவ்வளவு ஆறுதல் சொல்கிறீர்களே? உங்களுக்கு ஒரு மகன் இருந்து அவனும் இம்மாதிரித் திருடிக் கொண்டு ஓடி அகப்பட்டு விட்டால் அவன் கைமுக்குத் தண்டனை அடைவதைக் கண்டு உங்களால் பொறுமையாக இருந்து விட முடியுமா? பெரிய ஔவை மூதாட்டியைப் போல் கூப்பிட்டுவிட்டு இருந்த இடத்திலிருந்து கொண்டே எனக்கு அறிவுரை சொல்ல வந்து விட்டீர்களே!... யார் நீங்கள்? உங்களுக்கென்ன அக்கறை இதில்?"
"அம்மா! நானும் உன்னைப் போல் ஒரு தாய். எனக்கும் ஒரு மகன் இருக்கிறான்!" மகாராணி ஒவ்வொரு சொல்லாக நிறுத்திப் பதில் கூறினாள். வானவன்மாதேவியின் உள்ளத்தில் பேரிடியைப் பாய்ச்சியிருந்தால் அந்தச் சோழிய நங்கை - "உனக்கும் ஒரு மகன் இருந்து அவனும் இப்படித் திருடிக் கொண்டு ஓடி அகப்பட்டிருந்தால்" சரியாகக் கேட்டிருந்தாள் அவள். 'ஆம்! எனக்கும் மகன் இருக்கிறான். அவனும் ஒருவிதத்தில் திருடியிருக்கிறான்!' மகாராணி மனத்துக்குள் சொல்லிக் கொண்டார். அவருடைய மனம் வலித்தது, மிகவும் வலித்தது.
--------
2.14. தாயாகி வந்த தவம்
திருவட்டாற்றிலிருந்து சுசீந்திரத்துக்கு வந்திருந்த அந்தத் தாய் தன் சொற்களால் மகாராணியின் உள்ளத்தில் ஓங்கி அறைந்து விட்டிருந்தாள். எழுத்தாகிச் சொல்லாகி ஒலியாகிப் பொருள்படப் புரிந்த வெறும் சொற்களா அவை? ஒரு தாயுள்ளத்தின் கொதிப்பு, பெற்றவளின் பீடு - அன்னையின் ஆணவம் - அவளுடைய வார்த்தைகளில் சீறிக் குமுறின.
அந்த வார்த்தைகள் நெஞ்சில் கிளப்பிய வலியைத் தாங்கிக் கொண்டு அதிலிருந்து விடுபட்டுத் தன் நிதானத்துக்கு வரச் சிறிது நேரம் ஆயிற்று வானவன்மாதேவிக்கு. ஒரு தாய் இன்னொரு தாய்க்கு விடுத்த அறைகூவலாக இருந்தது திருவட்டாற்றுப் பெண்ணின் கேள்வி. அதன் வேகத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தலை குனிந்து கொண்டு நின்ற மகாராணி நிமிர்ந்து பார்த்தார். அந்தப் பெண்ணும், அர்ச்சகரும், புவன மோகினியும் தமது முகத்தையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டதும் இன்னும் வேதனையாக இருந்தது அவருக்கு.
மற்றவர்கள் தன் முகத்தைப் பார்க்கவில்லையே என்று ஏங்கும் மனநிலையும் வாழ்வில் உண்டு. மற்றவர்கள் தன் முகத்தைப் பார்க்கிறார்களே என்று ஏங்கும் மனநிலையும் வாழ்வில் உண்டு. அன்று அவ்வளவு அவசரமாக யாருக்கும் தெரியாமல் சசீந்திரத்துக்குப் புறப்பட்டு வந்திருக்காவிட்டால் இந்த இரண்டாவது நிலை மகாராணிக்கு ஏற்பட்டிருக்காது. அந்தக் 'கைமுக்குத் தண்டனை'யைக் காணவும், அதற்காளான மகனின் தாயைச் சந்திக்கவும் நேர்ந்திருக்காது. அந்தத் தாயைச் சந்தித்திருக்கா விட்டால் அவள் அப்படி ஒரு கேள்வி கேட்டிருக்கவும் மாட்டாள்.
வானவன்மாதேவி ஆத்திரமும் அலங்கோலமுமாக நின்ற அந்தத் தாயின் அருகே சென்று, அவளைத் தம் தோளோடு தோள் சேரத் தழுவிக் கொண்டார். புன்முறுவலும், சாந்தமும் தவழும் முகத்தோடு அவளை நோக்கி ஆறுதலாகப் பேசினார்:
"அம்மா! தாயானாலும் நீதி நியாயங்களுக்குக் கட்டுப்படுத்தானே ஆக வேண்டும்? நீ அழுதும், அலறியும் என்ன பயன் விளையப் போகிறது?"
"நீதியாம்! நியாயமாம்! அவைகளை உண்டாக்கியவர்களைப் பெற்றவரும் தாய்தான். இந்த வறட்டு அறிவுரைகளை என் செவிகளில் திணிப்பதற்குத்தான் என்னை இங்கே கூப்பிட்டு அனுப்பினீர்களா?"
"பதறாதே, அம்மா! என் வார்த்தைகளை முழுவதும் கேள். உலகத்து உயிர்களைப் படைத்ததால் கடவுளுக்கும், ஒரு மகா காவியத்தை எழுதியதால் கவிஞனுக்கும், எவ்வளவு பெருமை உண்டோ, அதை விட அதிகமான பெருமை ஒரு மகனைப் பெற்றதால் தாய்க்கு உண்டு. ஆனால் அந்தப் பெருமையை நாம் அடைவதற்கு நாம் பெற்ற பிள்ளைகளும் தகுதி உள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டாமா?"
மகாராணியின் கேள்விக்கு அந்தப் பெண்ணால் பதில் சொல்ல முடியவில்லை. கோபத்தால் அவளுடைய உதடுகள் துடித்தன. பளிங்குக் கண்ணாடியில் முத்துகள் உருள்வதைப் போல் அவளுடைய கன்னங்களில் கண்ணீர்த் துளிகள் உருண்டன. மகாராணி உரிமையையும், பாசத்தையும் தாமாகவே உண்டாக்கிக் கொண்டு நடுங்கும் கையால் அந்தப் பெண்ணின் கண்ணீரைத் துடைத்துவிட்டுச் சொன்னார்:
"உன் அழுகை என் நெஞ்சை வருத்துகிறது. அம்மா நீ அழாதே. தாயாக வாழ்வதே பெண்ணுக்கு ஒரு தவம். அந்தத் தவத்தில் சுகபோக ஆடம்பர இன்பங்களுக்கு இடமே இல்லை. பெறுவதற்கு முன்னும் துன்பம்! பெறும் போதும் துன்பம்! பெற்ற பின்னும் துன்பம்! ஒரே துன்பம் - ஓயாத துன்பம்! அந்தத் துன்பம் தான் தாய்மை என்கிற தவம்! எந்தப் பொருள்களின் மேல் அதிகமாகப் பற்றும், பாசமும் இருக்கிறதோ, அந்தப் பொருளைக் கூட இழக்கத் துணிவதுதான் தவம்!"
அந்தத் தாய் மகாராணியின் தோளில் சாய்ந்து முகத்தைப் புதைத்துக் கொண்டு விம்மி விம்மி அழுதாள். பதவியும், பொறுப்பும் பெருமையுமாகச் சேர்ந்து கொண்டு எந்த ஓர் அழுகையைத் தான் அழ முடியாமல் தடைப்படுத்தி வைத்திருக்கின்றனவோ, அந்த அழுகையை - மகனுக்காகத் தாய் அழும் அழுகையை - அந்தப் பெண் தம்முன் அழுது கொண்டிருப்பதை மகாராணி இரு கண்களாலும் நன்றாகக் கண்டார்.
'இந்த ஏழைச் சோழியப் பெண்ணும் ஒரு தாய், நானும் ஒரு தாய். இவள் ஏழையாயிருப்பதன் பெரிய நன்மை துன்பம் வந்தால் மனம் விட்டு அழ முடிகிறது. நான் மகாராணியாயிருப்பதனால் அப்படி அழக்கூடச் சுதந்திரமில்லை. நல்ல பதவி! நல்ல பெருமை! அழவும் உரிமையில்லை, சிரிக்கவும் உரிமையில்லை!' மகாராணி தம் மனத்துக்குள் நினைத்துக் கொண்டு வேதனைப்பட்டார். தம் தோளில் சாய்ந்திருந்த அந்தத் தாயை ஆறுதலாக அணைத்துக் கொண்டு முதுகைத் தடவிக் கொடுத்தார். தாயும் தாயும் அணைத்துக் கொண்டு நின்ற அந்தக் காட்சி கங்கையும், காவிரியும் கலந்தாற் போல் புனிதமாகத் தோன்றியது.
விலகி நின்று கொண்டிருந்த அர்ச்சகரும், புவன மோகினியும் அந்தக் காட்சியைக் கண்டு உள்ளம் உருகினர்.
"அம்மா! தெய்வத்தின் சந்நிதியில் உலகத்தையெல்லாம் காக்கும் ஆதிபராசக்தி போல் வலுவில் வந்து என்னைக் கூப்பிட்டு எனக்கு அறிவுரை கூறினீர்கள். நீங்கள் யார்? எங்கே இருக்கிறீர்கள்? உங்கள் திருப்பெயர் என்ன? மறுக்காமல் எனக்குச் சொல்லுங்கள். என்னிடம் கூச்சமோ, தயக்கமோ கொள்ள வேண்டாம் நீங்கள்" என்று மகாராணியின் முகத்தை நிமிர்ந்து பார்த்துக் கேட்டாள் அந்தச் சோழியப் பெண். அர்ச்சகரும் புவன மோகினியும் பொருள் பொதிந்த பார்வையால் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். தனக்கு ஆறுதல் கூறிக் கொண்டு தன் முன் நிற்கும் தாய் யாரென்று தெரிந்து கொண்டால் அந்த ஏழைப் பெண் எவ்வளவு பரபரப்பும், பதற்றமும் அடைவாளென்று புவன மோகினி மனத்துக்குள் கற்பனை செய்து பார்த்துக் கொண்டாள்.
மகாராணி அந்தப் பெண்ணுக்கு என்ன மறுமொழி கூறுவதென்று தோன்றாமல் நின்றார். உதடுகள் பிரியாமல் சிரிக்கும் தன்னடக்கம் நிறைந்த கண்ணியமான சிரிப்பை மட்டும் மகாராணியின் இதழ்களில் காணமுடிந்தது. அவருடைய உள்ளத்திலோ அந்தத் தன்னடக்கச் சிரிப்புக்குப் பின்புலமான சிந்தனைகள் வளர்ந்து கொண்டிருந்தன. மகனைக் கொதிக்கும் நெய்க் கொப்பரைக்குப் பலி கொடுத்து இழக்கப் போகிறோமே என்ற துடிதுடிப்போடு தம்முன் கதறி நிற்கும் அந்தச் சோழியப் பெண்ணின் நிலையில் தம்மை எண்ணிப் பார்த்தார் மகாராணி. எண்ணம் நிரம்பிப் பெருகியது.
'தாய்க்குப் பெண்ணாகப் பிறந்து, தானும் தாயாகித் தனக்குப் பிறந்த பெண்களையும் தாயாக்கித் தன் தாய் போன இடத்துக்குப் போய்ச் சேருவதுதான் உலகத்துப் பெண் இனத்தின் அவலக் கதை. உலகத்தின் முதல் பெண் பிறந்த நாளிலிருந்து இந்தத் துன்பக் கதை தொடர்ந்து கொண்டே வருகிறது. இந்தத் தொடர்பு முடியும் போது உயிர்க்குலமே அழிந்துவிடும். கனமான பெரிய மாங்காய் கனமற்ற சிறிய காம்பில் தொங்கிக் கொண்டிருப்பது போல் தாய்மை என்ற ஒரு மெல்லிய அடிப்படையில் இந்தத் தொல்லைப் பழம்பெரும் பூமி இன்னும் தன் உயிர்த்துடிப்பை இழந்து விடாமல் இருந்து கொண்டிருக்கிறது.'
சிந்தனைப் பெருக்கின் ஊடே எப்போதோ கேள்விப்பட்டிருந்த தாயைப் பற்றிய செய்யுள் ஒன்று மகாராணியாரின் நினைவில் குமிழியிட்டது.
"எனக்குத் தாயாகியான் என்னை யீங்கிட்டுத்
தனக்குத் தாய்நாடியே சென்றாள் - தனக்குத்தாய்
ஆகியவளும் அதுவானால் தாய்த்தாய்க் கொண்
டேகும் அளித்திவ் வுலகு."
'நீராழி யுடுத்த நெடும்புவனமாகிய இந்த மண்ணுலகம்' - இது தாய்க்குலம் அளித்த பிச்சை. அந்த தாய்க்குலத்தில் ஒருத்தி துன்பம் அடைய அதை தாயாக இருந்தால் - உனக்கும் ஒரு மகன் இருந்தால் - அவனும் திருடி விட்டு அகப்பட்டுக் கொண்டிருந்தால்? - இப்படிக் குத்திக் காட்டிக் குமுறிக் கேட்ட பின்பும் வாளா இருக்கலாமா?
மகாராணியின் உள்ளத்தில் ஒரு பெரிய போராட்டம்; நினைவில் வேதனை. சிந்தனையில் தடுமாற்றம். அப்படியே பிரமை பிடித்தவர் போல் சிந்தனையிலிருந்து விடுபடாமல் நின்றார் அவர்.
"என்னம்மா திகைக்கிறீர்கள்? என் கேள்விக்கு மறுமொழி சொல்வதற்கு உங்களுக்கு விருப்பமில்லையா?" அந்தப் பெண் மறுபடியும் கேட்டாள். அவள் குரல் பணிவோடு குழைந்து ஏங்கியது.
"பெண்ணே! நான் யார் என்பதை நீ தெரிந்து கொள்வதை விடத் தெரிந்து கொள்ளாமல் இருப்பதே நல்லது. ஆனால் ஒன்று மட்டும் நான் உனக்குச் சொல்ல முடியும். நானும் உன்னைப் போல் ஒரு துர்ப்பாக்கியவதி, கொஞ்சம் அதிகமான புகழும் பெருமையும் உள்ள துர்ப்பாக்கியவதி. வேறுபாடு அவ்வளவுதான். உன்னைப் போலவே பிள்ளையைப் பெற்றதால் தொல்லையை அடைந்து கொண்டிருக்கும் தாய் தான் நானும். இதைத் தவிர வேறு என்ன நான் உனக்குச் சொல்ல வேண்டும்?"
சொல்லிவிட்டுப் பெருமூச்சுவிட்டுக் கொண்டே அந்தப் பெண்ணின் கண்களைக் கூர்ந்து பார்த்தார் மகாராணி. அவைகளில் ஏமாற்றம் தேங்கிப் பதிந்திருந்தது.
"நான் வருகிறேன். ஆத்திரத்தால் உங்கள் மனம் புண்படும்படி ஏதாவது பேசியிருந்தால் என்னை மன்னித்து மறந்து விடுங்கள்!" அந்தப் பெண் மகாராணியிடம் விடைபெற்றுக் கொண்டு வந்த வழியே திரும்பிக் கைமுக்குத் தண்டனை நடக்கும் மண்டபத்தை நோக்கி நடக்கலானாள்.
"உன்னை மன்னித்து விடுகிறேன். ஆனால் மறந்து விடச் சொல்கிறாயே, அதுமட்டும் என்னால் முடியவே முடியாது. உன்னை என்றுமே நான் மறக்க மாட்டேன்."
மகாராணியின் இந்தச் சொற்கள் வேகமாக நடந்து சென்ற அவள் செவிகளில் விழுந்தனவோ, இல்லையோ? அவள் திரும்பிப் பாராமல் வேகமாக நடந்து சென்று கூட்டத்தில் கலந்துவிட்டாள்.
புவன மோகினியும், அர்ச்சகரும் மகாராணி வானவன்மாதேவிக்கு அருகில் நெருங்கி வந்தார்கள்.
"தேவி! அந்தப் பெண்ணிடம் தாங்கள் இன்னாரென்ற உண்மையைக் கூறாததே நல்லதாயிற்று. கூறியிருந்ததால் உங்கள் கால்களைப் பிடித்துக் கொண்டு தன் மகனைக் காப்பாற்றுமாறு கெஞ்சியிருப்பாள்" என்றார் அர்ச்சகர்.
"அர்ச்சகரே! அவள் நிலையில் யார் இருந்தாலும் அப்படிக் கெஞ்சுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?"
மகாராணியிடமிருந்து இந்தப் பதில் கேள்வியை அர்ச்சகர் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.
"வேறொன்றும் செய்ய முடியாதுதான். ஆனால் அதற்காக யாருக்கும் தெரியாமல் இரகசியமாக இங்கே வந்திருக்கும் உங்களிடம் மகனைக் காப்பாற்றச் சொல்லி முறையிட்டால் நீங்கள் என்ன செய்ய முடியும்?"
"என்ன செய்ய முடியுமோ, அதை இப்போதும் நான் செய்யத்தான் போகிறேன், அர்ச்சகரே! ஆனால் நான் தான் செய்தேன் என்பதை வெளிக்காட்டிக் கொள்ள மட்டும் எனக்கு விருப்பமில்லை."
"என்ன செய்யப் போகிறீர்களோ?" அர்ச்சகர் பரபரப்படைந்து வினவினார்.
"நான் செய்யப் போவதில்லை. எனக்காக நீங்களே அதைச் செய்துவிட வேண்டும். இந்தச் சமயத்தில் நான் இங்கு வந்து போனது யாருக்குமே தெரிய வேண்டாம்."
இப்படிக் கூறிக்கொண்டே தமது வலது கை விரலில் அணிந்திருந்த அரச முத்திரையோடு கூடிய கணையாழி மோதிரத்தைக் கழற்றினார் மகாராணி. அர்ச்சகர், புவன மோகினி இருவருக்கும் விழிகள் ஆச்சரியத்தால் அகன்றன.
"கைமுக்குத் தண்டனையை நிறைவேற்றுவதற்கு இருக்கும் தெய்வநீதி மன்றத்துத் தலைவரிடம் இந்த மோதிரத்தைக் காண்பியுங்கள். அந்தத் தாயின் மகன் திருடிய பொன் அணிகலன்களைப் போல் நான்கு மடங்கு பெறுமானமுள்ள பொன்னை அவன் அபராதமாகச் செலுத்தினால் போதும், கைமுக்குத் தண்டனை வேண்டாமென்று நான் கூறியனுப்பியதாகச் சொல்லுங்கள். அந்தத் தாயின் பெருமையைக் காப்பாற்றுவதற்காக அபராதம் விதிக்கப்பெறும் நான்கு மடங்கு பொன்னை நானே அரண்மனையில் இருந்து கொடுத்து அனுப்பி விடுகிறேன். இது உமக்கும் நீதி மன்றத்தின் தலைவருக்கும் தவிர வேறெவர்க்கும் தெரிய வேண்டாம்."
சிறிய மகரமீன் இலச்சினையோடு கூடிய அந்த மோதிரத்தைப் பயபக்தியோடு இரு கைகளையும் நீட்டி வாங்கிக் கொண்டார் அர்ச்சகர்.
"காரியம் முடிந்ததும் மோதிரம் பத்திரமாக எனக்குத் திரும்பி வந்து சேர்ந்து விட வேண்டும்."
"அப்படியே செய்கிறேன், தேவி!" என்றார் அர்ச்சகர்.
"புவன மோகினி! இனி நமக்கு இங்கு வேலை இல்லை. வா நாம் போகலாம்." மகாராணி புவன மோகினியை உடன் அழைத்துக் கொண்டு சிவிகையில் ஏறுவதற்காக வெளியேறினார். அர்ச்சகர் முத்திரை மோதிரத்தோடு கைமுக்கு மண்டபத்துப் பக்கம் சென்றார்.
------
2.15. 'யாரோ ஓர் இளைஞன்'
தன் தந்தையிடமிருந்து நாராயணன் சேந்தன் கொண்டு வந்த அந்தரங்கத் திருமுகத்தைப் படித்த மறுநாள் காலையிலே குழல்வாய்மொழி திருமுகத்தில் கண்ட கட்டளையை நிறைவேற்றுவதற்குப் புறப்பட்டுவிட்டாள். நாராயணன் சேந்தன் அவளோடு துணையாகச் சென்றான். தாங்கள் புறப்பட்டுச் செல்லும் செய்தி இடையாற்று மங்கலம் மாளிகையை விட்டு வெளியே பரவி விடாமல் எச்சரிக்கையும், ஏற்பாடும் செய்து விட்டுத்தான் புறப்பட்டிருந்தார்கள் அவர்கள். 'மகாமண்டலேசுவரருடைய ஏற்பாட்டின்படி தாங்கள் இருவரும் குமார பாண்டியனைத் தேடிக் கொண்டு செல்வது' எவருக்கும் தெரிந்து விடக் கூடாதென்று கருதியதனால் தான் அவர்கள் அதில் அவ்வளவு கண்டிப்பாக இருக்கும்படி நேர்ந்தது.
விழிஞம் துறைமுகத்துக்குப் போய் அங்கிருந்து தனியாக ஒரு கப்பல் ஏற்பாடு செய்து கொண்ட பின் பயணத்தை மேலே தொடர வேண்டுமென்பது அவர்கள் திட்டம். நாராயணன் சேந்தன் வைகறையில் சற்று முன்னதாகவே இடையாற்று மங்கலத்திலிருந்து குதிரையில் புறப்பட்டு விழிஞத்துக்குப் போய்விட்டான். அவன் சென்ற பின்பு குழல்மொழி சிவிகை மூலமாகப் பயணம் செய்தாள். இடையாற்று மங்கலத்துக்கும் விழிஞத்துக்கும் இடையில் பரந்து கிடந்த தொலைவைக் கடந்து வழிப்பயணம் செய்வதில் தான் எவ்வளவு இன்பம். கடல் அருகில் இருந்ததனால் சுகமான காற்று வீசியது. ஓவியன் அளவு பார்த்து, அழகு பார்த்து, இடப் பொருத்தம் பார்த்து, அள்ளிச் சிதறிய வர்ணங்களைப் போல் அவள் பயணம் செய்த அந்த நெடுவழியில் பல நிறங்களில், பல விதங்களில், பல அடிப்படைகளில், உயிர் வாழ்க்கை என்ற பேரியக்கம் பரவிக் கிடந்தது. காடுகளும், கூட்டம் கூட்டமாகப் பசுக்களை மேய்க்கும் ஆயர்களும் சூழ்ந்த முல்லை நிலம். குன்றமும், அருவியும், தினைப்புலமும், வேடர்களும் நிறைந்த குறிஞ்சி நிலம். நிலம் என்னும் நல்லாள் நெடும் பசுமை சூழ்கொண்டு தோன்றும் வயல் வெளிகளும், தாமரைப் பொய்கைகளும், சிற்றூர்களும் செறிந்த மருத நிலம். தாழம்புதரும் மீனவர் குடியிருக்கும் பரதவர் பாக்கமும் மலிந்த நெய்தல் நிலம். இத்தகைய நானிலங்களின் அழகையும், நானாவிதமான வாழ்க்கை முறைகளையும் சிவிகையின் இருபுறமும் பார்த்துக் கொண்டே போனாள் குழல்வாய்மொழி. மண்ணில் உள்ள மேடு பள்ளங்களைப் போல் மனித வாழ்க்கையிலுள்ள மேடு பள்ளங்களையும் அவள் பார்த்தாள். குறிஞ்சி நில வாழ்வின் செழிப்பு மருத நிலத்தில் இல்லை. மருத நில வாழ்வின் வளம் முல்லை நிலத்தில் இல்லை. முல்லை நில வாழ்வின் ஊட்டம் நெய்தல் நிலத்தில் இல்லை! ஆனால் மொத்தமாக வாழ்க்கை என்ற ஒன்று எல்லா இடத்திலும் ஓடிக் கொண்டிருந்தது. நிற்காமல் ஓடிக் கொண்டும் ஓடாமல் நின்று கொண்டும் நிலத்துக்கேற்ப, வளத்துக்கேற்ப, இன்ப துன்பங்களின் மிகுதிக்கேற்ப, உயிரியக்கம் நடை பெயர்ந்து கொண்டிருந்தது.
வேகமாகச் செல்லும் சிவிகையில் பட்டு மெத்தைமேல் அமர்ந்து கொண்டு மழை பெய்வதை வேடிக்கை பார்க்கும் சிறு பிள்ளையின் ஆசையோடு அந்த நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும் பரவிக் கிடக்கும் வளமுறைகளையும் வாழ்க்கையையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு போனாள் மகாமண்டலேசுவரரின் செல்லப் பெண்.
இடையிடையே எதை நினைத்துக் கொண்டோ பெருமூச்சு விட்டாள் அவள். நீண்டு பிறழ்ந்து குறுகுறுத்து நெஞ்சின் நளினமெல்லாம் நிழலாடும் அவள் நயனங்களில் பெருமூச்சு விடும்போதெல்லாம் ஏக்கம் படர்ந்து, விழிகள் ஏங்கும் போதெல்லாம் வதனம் வாடியது. வதனம் வாடும் போதெல்லாம் வட்டப் பிறை நெற்றி சுருங்கியது. நெற்றி சுருங்கும் போதெல்லாம் நெற்றிக்குக் கீழே நாசிக்கு மேலே புருவ நுனிகளின் கூடுவாயில் எதிரெதிரே இரண்டு நெளி கோடுகள் இறங்கித் தோன்றின. நாகலிங்க மலருக்கு மடிப்பு மடிப்பான இதழ்கள் எப்படி அழகோ, அப்படி அவள் நெற்றிக்கு இது ஒரு தனி அழகு.
அவள் நினைத்தாள்: 'நான் மறுபடியும் இந்தச் சாலை வழியே திரும்பும் போது குமார பாண்டியரோடு திரும்புவேனானால்தான் என் உள்ளத்தில் நிறைவு இருக்கும். என்னை அனுப்பிய என் தந்தையின் உள்ளம் பெருமை கொள்ளும். அவரைத் தேடிச் செல்லும் முயற்சியில் நான் வெற்றி பெறுவேனா? தெய்வமே! என்னை ஏமாற்றி விடாதே. எனக்கு வெற்றியைக் கொடு. என் மனத்துக்குப் பூரிப்பைக் கொடு. நான் யாரைத் தேடிச் செல்கிறேனோ, அவரை நாங்கள் அதிகம் அலைந்து திரிய நேரிடாமல் எங்கள் கண்களுக்கு முன்னால் காட்டிவிடு. கடலைக் கடந்து சென்றதும் என் உள்ளத்தைக் கடந்து செல்லாமல் உறைந்து, பதிந்து போனவரை ஒளிக்காதே' என்று நெஞ்சுருக வேண்டிக் கொண்டாள் குழல்வாய்மொழி. விழிஞத்துக்குப் போய்ச் சேருகிறவரை அவளுக்கு அதே எண்ணம்தான்.
நண்பகலை எட்டிக் கொண்டிருக்கும் போது அவளுடைய சிவிகை விழிஞத்தை அடைந்தது. முன்பே அங்கு வந்திருந்த சேந்தன் அவளை எதிர்பார்த்துத் தயாராகக் காத்துக் கொண்டிருந்தான். மேற்றிசைத் தேசங்களிலிருந்து குதிரைகளும், மதுவகைகளும் கொண்டு வந்து இறக்குமதி செய்யும் கப்பல்கள் இரண்டு மூன்று சேர்ந்தாற் போல் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்திருந்ததனால் அன்றைக்கு அதிகமாக கலகலப்பு இருந்தது. கீழ்த்திசை தீவுகளிலிருந்து கற்பூரம், கண்ணாடிப் பொருள் முதலியவற்றை ஏற்றிக் கொண்டு வந்த கப்பல்களும் சில அன்றைக்குத் துறையை அடைந்திருந்தன. சுங்க வரி தண்டுவோராகிய அரசாங்கச் சுங்கக் காவலர்கள் வரும் பொருள்களுக்கும், போகும் பொருள்களுக்கும் மகர மீன் முத்திரை குத்தி வரி வாங்கிக் கொண்டிருந்தனர்.
அவ்வளவு பெரிய கூட்டத்தில் அத்தனை கலகலப்புக் கிடையிலும் நாராயணன் சேந்தனுடைய திருவுருவம் தனியாகத் தெரிந்தது. குழல்வாய்மொழியின் பல்லக்கு வருவதைப் பார்த்து விட்டு முன்னால் ஓடிவந்து வரவேற்பதற்காகக் கூட்டத்தில் முண்டி இடித்துக் கொண்டு வந்தான் சேந்தன். சுங்க வரி செலுத்தாமல் பொருள்களைக் கள்ளத்தனமாக கடத்திக் கொண்டு போகிறவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களைக் கண்டு பிடிப்பதற்காக மாறு வேடத்தோடு பல காவலர்கள் கூட்டத்துக்கிடையே உலாவிக் கொண்டிருப்பார்கள். அவசரமாக இடித்து முந்திக் கொண்டு விரைந்து வந்த சேந்தன் அத்தகைய சுங்கக் காவலன் ஒருவன் மேல் மோதிக் கொண்டான். அந்தக் காவலன் சேந்தனுடைய இரண்டு கைகளையும் சேர்த்து இறுக்கிப் பிடித்துக் கொண்டு அவனையே உற்றுப் பார்த்தான். மார்புக்குக் கீழ் இடுப்புக்கு மேல் சரிந்து முன் தள்ளிய சேந்தனின் தாழிப் பெரு வயிற்றில் அவனுடைய பார்வை நிலைத்தது. அவனுடைய பார்வையைக் கண்டதும் நாராயணன் சேந்தனுக்குச் சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது.
"என்ன அப்படிப் பார்க்கிறாய்?" சிரிப்பை அடக்கிக் கொண்டு கேட்டான் நாராயணன் சேந்தன்.
"மரியாதையாக வெளியில் எடுத்து விடு! சுங்கம் கொடுக்காமல் ஏமாற்றுவதற்காக எந்தப்பொருளை இப்படி இடுப்பில் மறைத்து வைத்துக் கட்டிக் கொண்டு போகிறாய்?" அவன் மிரட்டினான்.
இரண்டு விலாப்புறமும் வெடித்துவிடும் போல் பெரிதான சிரிப்பை அடக்கிக் கொள்ளச் சிரமமாய் இருந்தது சேந்தனுக்கு. 'உலகத்திலுள்ள அத்தனை காவல்காரர்களும் தங்கள் கண்முன் நடமாடுகிற எல்லோரையும் திருடர்கள் என்று சந்தேகப்படுகிறார்கள். அதே போல் உலகத்திலுள்ள அத்தனை திருடர்களும் தங்களை உற்றுப் பார்க்கிற எல்லோரையும் காவற்காரர்களென்று பயப்படுகிறார்கள்' என்று சேந்தன் தன் மனத்தில் நினைத்துக் கொண்டான்.
"உண்மையைச் சொல்லப் போகிறாயா? உதைக்கட்டுமா?" காவற்காரனுடைய குரலில் கடுமை ஏறியது. கண்களை உருட்டிக் கோபம் தோன்ற விழித்தான் அவன்.
"ஆகா! என்ன அற்புதமான கேள்வி கேட்டாய் அப்பா நீ? உன் கண் பார்வையின் கூர்மையே கூர்மை. உலகத்தில் இதுவரையில் எந்த மன்னருடைய அரசாட்சியிலும் நான் இடுப்பில் ஒளித்து வைத்துக் கொண்டிருக்கும் இந்தப் பொருளுக்குச் சுங்கம் கேட்டதில்லை. இதோ நன்றாகப் பார்த்துக் கொள்" என்று சொல்லிச் சிரித்துக் கொண்டே தன் மேல் அங்கியை விலக்கிக் காட்டினான் சேந்தன்.
தொந்தி முன் தள்ளிய அவன் வயிற்றைப் பார்த்து அந்தக் காவலன் விழுந்து விழுந்து சிரித்தான்.
"பூ! வயிறுதானா இவ்வளவு பெரிதாக முன்னால் துருத்திக் கொண்டிருக்கிறது? நான் எதையோ ஒளித்துக் கொண்டு போகிறாய் என்றல்லவா நினைத்தேன்?"
"நினைப்பாய் அப்பா! நன்றாக நினைப்பாய்! நீ ஏன் நினைக்க மாட்டாய்? சுய நினைவோடுதான் பேசுகிறாயா அல்லது அதோ கப்பலிலிருந்து இறங்கிக் கொண்டிருக்கும் யவனத்து மதுத்தாழியைப் பதம் பார்த்துவிட்டுப் பேசுகிறாயா?"
காவலன் சிறிது நாணமுற்றுத் தலை குனிந்து நின்றான். சேந்தன் விலாவிரியச் சிரித்தான். அந்தச் சிரிப்பால் காவற்காரன் பொறுமையிழந்தான்.
"ஏன் ஐயா! சும்மா விழுந்து விழுந்து சிரிக்கிறாய்? ஆனாலும் மனிதன் உன்னைப் போல் இப்படிப் பருமனாக இருக்கக் கூடாது. உனக்கு ஒரு விஷயம் எச்சரிக்கை செய்து வைக்கிறேன். கேட்டுக் கொண்டு பேசாமல் போய்ச் சேர். குதிரை இறக்குமதி செய்வதற்குப் பதிலாக யவன வணிகர்கள் சேர நாட்டு யானைக் குட்டிகளை ஏற்றுமதி செய்து கொண்டு போக வேண்டுமென்று நெடு நாட்களாக ஆசைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். 'யானைக்குட்டி பருமனாகக் குட்டையாக இருக்கும்' என்பதைத் தவிர அவர்களுக்கு அதைப்பற்றி வேறு விவரம் தெரியாது. நீ எங்கேயாவது தப்பித் தவறி யவனக் கப்பல்களுக்குப் பக்கமாகப் போய் நின்று தொலைக்காதே. 'யானைக்குட்டி' என்று உன் முதுகில் மகர முத்திரை குத்தச் சொல்லிக் கப்பலில் தூக்கிப் போட்டுக் கொண்டு போய்விடப் போகிறார்கள்" என்று சுடச்சுடச் சேந்தனைப் பதிலுக்குக் கேலி செய்து தன்னுடைய ஆத்திரத்தைத் தீர்த்துக் கொண்டான் அந்தக் காவலன்.
இந்தச் சமயத்தில் பல்லக்கிலிருந்து இறங்கிய குழல்வாய்மொழி சேந்தனைக் கைதட்டிக் கூப்பிடவே, நாராயணன் சேந்தன் அந்தக் காவலனோடு வம்பளப்பதை நிறுத்திக் கொண்டு விரைந்து நடந்தான்.
"அம்மணி! வாருங்கள், நேரமாக்கி விட்டீர்களே? நான் அப்போதிருந்து உங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன். சிவிகையை இன்னும் விரைவாகக் கொண்டு வரச் சொல்லி ஆட்களை விரைவு படுத்தி வந்திருக்கலாம் நீங்கள்" என்று குழல்வாய்மொழியின் அருகில் சென்று சேந்தன் அடக்க ஒடுக்கமாகக் கூறினான்.
"சுமப்பவர்களும் மனிதர்கள்தானே? அவர்களை அடித்தா துரத்த முடியும்?... சரி! நீங்கள் முன்னால் வந்து கப்பலுக்கு ஏற்பாடு செய்து விட்டீர்களா இல்லையா?" என்று அவள் கேட்டாள்.
"ஓ! அந்த ஏற்பாடெல்லாம் வந்தவுடனேயே முடித்து விட்டேன். அதோ கப்பல் தயாராக நிற்கிறது. நாம் புறப்பட வேண்டியதுதான்" என்றான் சேந்தன்.
சிவிகையையும் அதைத் தூக்கிக் கொண்டு வந்தவர்களையும் திருப்பி அனுப்பிவிட்டுக் கப்பல் நின்று கொண்டிருந்த இடத்தை நோக்கி நடந்தார்கள் சேந்தனும், குழல்வாய்மொழியும். சிறிதானாலும் உயர்ந்த வசதிகள் நிறைந்த அழகான கப்பல் அது. தாங்கள் போகிற காரியத்தின் இரகசியத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக அந்தக் கப்பலைத் தனியாகத் தங்களுக்கென்று மட்டும் ஏற்பாடு செய்திருந்தான் சேந்தன். குழல்வாய்மொழியையும், அவனையும் தவிர மாலுமியும், இரண்டொரு கப்பல் ஊழியர்களும் மட்டுமே அதில் இருந்தனர்.
கப்பல் புறப்படுவதற்கு முன் சேந்தனும் குழல்வாய்மொழியும் கரையில் நின்று சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தனர். அப்போது சிரிப்பு மலர்ந்த முகத்தோடு கவர்ச்சி நிறைந்த உடையணிந்து கொண்டிருந்த ஓர் இளைஞன் அவர்களுக்கு அருகில் வந்தான். பெண்மைச் சாயல் கொண்ட அந்த இளைஞனின் நீண்ட முகம் பார்க்கிற எவரையும் ஒரு கணம் மயக்காமல் போகாது. ஆடவர் பெண்மையை அவாவும் தோற்றம் அது. பெண்ணுக்கு இருக்க வேண்டிய ஒளிவு மறைவு உட்பொருளுள்ள சிரிப்பும் இதழ்களின் சிவப்பும் அந்த வாலிபனுக்கு இருப்பதைச் சேந்தன் வியப்போடு பார்த்தான்.
"ஐயா! இந்தக் கப்பலில் உங்களோடு பிரயாணம் செய்ய என்னையும் அனுமதிப்பீர்களா?"
'அடடே! குரல் கூட இனிமை சொட்டுகிறது. இந்தப் பயல் மட்டும் பெண் பிள்ளையாகப் பிறந்திருந்தால் உலகத்திலுள்ள அத்தனை அரசகுமாரர்களும் இவளை யார் மணந்து கொள்வதென்ற போட்டியில் அடித்துக் கொண்டு கிடப்பார்கள்' என்று மனத்துக்குள் எண்ணியவனாய், "தம்பி, இந்தக் கப்பலில் வேறு யாரையும் ஏற்றிக் கொள்வதற்கில்லை. நீ போய் வேறு கப்பல்களைப் பார்" என்று பதில் சொன்னான் சேந்தன். அந்த இளைஞன் சேந்தன் கூறியதைக் கேட்டுக் கொண்ட பின்னும் அங்கிருந்து போகாமல் நின்றான்.
"சகோதரி! நீங்களாவது மனம் இரங்குங்கள். நான் பயந்த சுபாவம் உள்ளவன். உங்களைப் போல் துணையோடு பயணம் செய்தால் எனக்கும் நல்லது" என்று குழல்வாய்மொழிக்கு அருகில் போய் நின்று கொண்டு கெஞ்சினான். பெண்மையின் எழிலும் ஆண்மையின் மிடுக்கும் ஒன்றுபட்டுத் தோன்றிய அந்த விடலைப் பிள்ளையை நிமிர்ந்து நன்றாகப் பார்த்தாள் குழல்வாய்மொழி. அவள் கண்களைக் கூச வைத்தன அவன் பார்த்த பார்வையும், சிரித்த சிரிப்பும். சினத்தோடு முகத்தைச் சுளித்துப் பார்வையைக் கடுமையாக்கினாள் குழல்வாய்மொழி. அதன் பின்பே இளைஞன் சிரிப்பதை நிறுத்தினான்.
"தம்பி! நீ பயந்த சுபாவம் உள்ளவன் என்கிறாய்! ஆனால் இடையில் பெரிதாக உறையிட்ட வாள் தொங்குகிறது. பொய்யும் புரட்டும் பேசுவதற்குக் கொஞ்சம் வயதான பின்னர் கிளம்பியிருக்கலாமே நீ! உன் முகத்தைப் பார்த்தால் பால் வடிகிறது. பேச்சைப் பார்த்தால் சூது இருக்கிறதே! மீசை கூட இன்னும் அரும்பவில்லை. அதற்குள் இதெல்லாம் எங்கேயப்பா கற்றுக் கொண்டாய் நீ?" என்று சேந்தன் கடுமையான குரலில் இரைந்தான்.
"ஐயோ! கோபித்துக் கொள்ளாதீர்கள். உங்களைப் பார்த்தால் நல்லவர் மாதிரி தெரிந்தது. உதவி செய்வீர்களென்று நம்பிக் கேட்டேன்."
"போ! போ! அதெல்லாம் முடியாது. இந்தக் கப்பலில் இடம் கிடையாது."
"மனத்தில் இடமிருந்தால் கப்பலில் இடம் இருக்கும். கொஞ்சம் தயவு செய்யுங்கள்."
"பேசாமல் போகிறாயா? கப்பல் ஊழியனைக் கூப்பிட்டுப் பூசைக்காப்பு முதுகில் போடச் சொல்லட்டுமா?"
சேந்தனின் ஆத்திரத்தைக் கண்டு அந்த இளைஞன் கன்னங் கனியச் சிரித்தான். குழல்வாய்மொழி தன் மனத்தை எவ்வளவுதான் அடக்கிக் கட்டுப்படுத்திப் பார்த்தாலும் அவள் விழிகள் அவளையும் மீறி அந்தச் சிரிப்பை ஆவலோடு ஓரக் கண்ணால் காண விரைந்தன. பொல்லென்று பூத்து மறையும் முல்லைப்பூ வரிசை போல் அப்படி ஓர் அழகிய சிரிப்பு அது. சிரித்துக் கொண்டே அவர்களைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி அங்கிருந்து நகர்ந்தான் அந்த இளைஞன். அவன் சிறிது தள்ளிச் சென்ற பின்பு சேந்தன், குழல்வாய்மொழியைப் பார்த்து, "அம்மணி இந்த மாதிரி விடலைப் பயல்களை நம்பவே கூடாது. சிரிப்பையும், பேச்சையும், முகமலர்ச்சியையுமே முதலாக வைத்துக் கொண்டு வஞ்சகம், ஏமாற்று ஆகிய பண்டங்களை விற்பனை செய்யும் அறவிலை வணிகர்கள் இப்போது உலகத்தில் அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள். கவனமாக இருக்க வேண்டும். புலியையும் சிங்கத்தையும் பார்த்துப் பயந்து கொண்டிருந்தது போய் இப்போது மனிதர்களைப் பார்த்தே மனிதர்கள் பயப்பட வேண்டியிருக்கிறது. புலிக்கும், சிங்கத்துக்கும், கெட்டவற்றைத் திட்டமிட்டுக் கொண்டு செய்வதற்கு மனம் என்ற ஒன்று இல்லை. மனிதர்களுக்கு அது இருக்கிறது" என்று பெரிய அற நூலாசிரியனைப் போல் பேசினான் சேந்தன்.
"கீழே நின்று கொண்டிருந்தால் மறுபடியும் அந்த இளைஞன் வந்து ஏதாவது கேட்டுக் கெஞ்சுவான். அல்லது வல்வழக்குப் பேசி வம்பு செய்வான். வாருங்கள்! கப்பலில் போய் இருந்து கொண்டு பேசலாம்" என்று சேந்தனைக் கூப்பிட்டுக் கொண்டு கப்பலுக்குள் ஏறிச் சென்றாள் குழல்வாய்மொழி.
கப்பலுக்குள் சென்ற பின் அவர்கள் பேச்சு, 'குமார பாண்டியனை எந்தெந்த தீவுகளில் தேடுவது? எப்படிக் கண்டுபிடிப்பது?' என்பது பற்றி நிகழ்ந்தது. சிறிது நாழிகைக்குப் பின் கப்பல் மாலுமி வந்து, 'புறப்படலாமா?' என்று கேட்ட போது அவர்கள் சம்மதம் தெரிவித்தனர். நங்கூரக் கயிற்றை அவிழ்த்து விட்டதும் கப்பல் மெல்ல நகர்ந்தது. கப்பலுக்கும் கரைக்கும் நடுவே கடலின் பரப்பு அதிகமாகி விரிந்து கொண்டே வந்தது.
"வாருங்கள்! கீழ்த்தளத்தில் நீங்கள் தங்கிக் கொள்வதற்கென்று ஓர் அறையை எல்லா வசதிகளோடும் தனியே ஒழித்து வைக்கச் செய்திருக்கிறேன். அதை உங்களுக்குக் காண்பிக்கிறேன்" என்று குழல்வாய்மொழியைக் கீழ்த்தளத்துக்கு அழைத்துச் சென்றான் நாராயணன் சேந்தன். எந்தக் கப்பலிலும் இருக்க முடியாத அளவு அலங்கரிக்கப்பட்டு அரசகுமாரிக்கு ஒப்பான ஓர் இளம்பெண் தங்குவதற்குரிய சகல வசதிகளுடனும் இருப்பதாகச் சொல்லிக் கொண்டே அந்த அறையின் கதவைத் திறந்தான் நாராயணன் சேந்தன்.
கதவைத் திறந்ததும் கலகலவென்று சிரிப்பொலியுடன் அந்த அறைக்குள்ளிருந்து வெளிவந்த ஆளைப் பார்த்த போது சேந்தனும் குழல்வாய்மொழியும் பேயறைபட்டவர்களைப் போல் முகம் வெளிறிப் போய்த் திகைத்து நின்றார்கள். "நானாகவே இந்தக் கப்பலில் இடம் தேடி எடுத்துக் கொண்டதற்காக என்னை மன்னிக்க வேண்டும். நான் என்ன செய்வேன்? நேர்வழி மூடியிருந்தது. குறுக்கு வழியை நானே திறந்து கொண்டேன்!" பெரிய காரியத்தைச் சாதித்து விட்டவன் போலச் சிரித்துக் கொண்டே கூறினான் அந்த எழில் வாலிபன்.
-----------
2.16. பேசாதவர் பேசினார்
ஏதோ பெரிய காரியத்தைச் சொல்லப் போகிறவர் போல் தன்னைக் கூப்பிட்டனுப்பித் தன் உள்ளங்கையில் கருவேல முள்ளைக் குத்திய மகாமண்டலேசுவரரின் செயலைக் கண்டு வெளியே பொறுமையாக இருப்பது போல் காட்டிக் கொண்டாலும் உள்ளுக்குளே அடக்கமுடியாத வெகுளி உண்டாயிற்று சீவல்லபமாறனுக்கு. அவன் மனம் உணர்ச்சி வசப்பட்டுக் கொதித்தது.
'சே! சே! பொம்மை செய்வதற்காகக் களிமண்ணைப் பிசைந்து வைத்த குயவன் தன் நிலை சோர்ந்து அதே களி மண்ணில் தலைகுப்புற வழுக்கி விழுவது போல் அறிவின் ஆற்றலால் எட்டுத் திக்கும் விட்டெறிந்து ஆள்வதாக எண்ணிக் கொண்டு பைத்தியக்காரத்தனமாக நடந்து கொண்டு விடுகிறார்கள் சிலர். அரிய பெரிய அறிவாளியின் மனமும் கைகளும், சில சமயங்களில் எளிய சிறிய காரியங்களை நினைத்தும் செயல்பட்டும் தடுமாறி விடுகின்றன. அறிவில்லாதவனிடத்தில் இருக்க முடியாத அவ்வளவு பலவீனங்களும் அறிவுள்ளவனிடத்தில் நிரம்பிக் கிடக்கின்றன. தேனைக் குடிப்பதற்குப் போன ஈ தேனுக்குள்ளே விழுந்து முழுகி விடுவது போல், நீர் அருந்தப் போய் தண்ணீரில் விழ நேர்வது போல் காமம், குரோதம், பொறாமை, சுயநலம் இவையெல்லாம் கூடாதென்று சொல்லிக் கொண்டே இவைகளைத் தவிர வேறு பண்பையே கடைப்பிடிக்காத அறிவாளிகள் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள் உலகில்? இந்த உலகத்தில் சாதாரண மனிதன் கவலையில்லாமல் வயிற்றுக்குச் சோறும், உடலுக்குத் துணியும் பெற்று ஊருக்குக் கெடுதல் செய்யாத சாதாரண அறிவுடன் நிம்மதியாக வாழ வேண்டுமானால் முதல் காரியமாக அறத்தையும் கருணையையும் மறந்து மனம் மரத்துப் போன அறிவாளிகள் அத்தனை பேரையும் கழுவில் ஏற்றிக் கொன்று விட வேண்டும். உலகத்துக்கு அத்தனை கெடுதல்களையும் நினைவுபடுத்திச் சொல்லிக் கொடுப்பவர்கள் இவர்கள்.'
உள்ளங்கையில் குமிழியிட்டு உருண்டு நின்ற ஒரு துளி இரத்தத்தைப் பார்த்துக் கொண்டே இவ்வளவு ஆவேசமான நினவுகளையும் நினைத்துப் பார்த்துவிட்டான் சீவல்லபன். கையைப் போலவே அவன் முகமும் கோபத்தால் சிவப்பேறிவிட்டது. பேசத் துடிக்கும் வாயோடும் பேசுவதற்குப் பயந்த மனத்தோடும் மகாமண்டலேசுவரருக்கு முன்பு நின்று கொண்டிருந்தான் அவன். அம்புகள் பாய்வது போல் ஊடுருவிப் பார்க்கும் அவருடைய இணைவிழிகள் பார்வை அவனைக் கட்டுப்படுத்தி நிறுத்தியிருந்தது.
அமைதியாக அவன் முகத்தைக் கூர்ந்து பார்த்துக் கொண்டே நின்ற மகாமண்டலேசுவரர் மெல்ல நகை புரிந்தார்.
"சீவல்லபா! நீ நினைத்தது சரிதான். வரம்புக்குட்படாத அறிவின் கனம் உள்ளவர்களால் உலகத்தில் மற்றவர்களுக்கு எப்போதுமே வேதனைதான். உங்களைப் போல் உடல் வன்மையையும், உடல் உழைப்பையும் நம்பி வாழும் வீரர்கள் வாழ்க்கை வேகமாக ஓடிக் கொண்டிருக்க வேண்டும் என்று மட்டும் ஆசைப்படுகிறீர்கள். என்னைப் போல் மனத்திண்மையும், மன உழைப்பையும் நம்பி வாழ்பவர்கள் வாழ்க்கை ஒவ்வொரு கணமும் நின்று நிதானித்துச் சிந்தனையோடு தேங்கிப் போய்க் கொண்டிருக்க வேண்டுமென்று நினைக்கிறோம். அறிவுக்கும், ஆண்மைக்கும் அவையிரண்டும் தோன்றிய நாளிலிருந்து நடந்து வரும் போராட்டம் தான் இது."
அவருடைய சொற்களைக் கேட்டதும் சீவல்லபமாறன் திடுக்கிட்டான். 'ஏ! அப்பா! இவருடைய இவருடைய கண்களுக்கு முன்னால் நிற்கிறவன் மனத்தில் கூட ஒன்றும் நினைக்க முடியாது போலிருக்கிறதே! என் எண்ணங்களை எனது முகத்திலிருந்தே எப்படித் தெரிந்து கொண்டார் இவர்?' என்று மலைத்தான் அவன்.
சிரித்துக் கொண்டே மெதுவாக நடந்து அவன் அருகே வந்து சுதந்திரமான உரிமையோடு அவனை முதுகில் தட்டிக் கொடுத்தார் அவர்.
"மெய்க் காவற்படைத் தலைவனே! நீ கவலைப்படாதே. என்னுடைய அறிவின் கனம் உனக்கு எந்தவிதமான கெடுதலையும் எப்போதும் உண்டு பண்ணாது. அதை எண்ணி நீ அஞ்ச வேண்டியதே இல்லை. 'ஆயிரம் வேல்களாலும், வாள்களாலும் நாம் சாதிக்க முடியாத காரியத்தை ஒரு சொல்லால், ஓர் எழுத்தால் அறிவாளி சாதித்து விடுகிறானே' என்ற பொறாமை படை வீரனுக்கு ஏற்படுமானால் அதன்பின் உலகில் அரசர்கள் இருக்கமாட்டார்கள். அமைச்சர்கள் இருக்க மாட்டார்கள். என்னைப் போல் மகாமண்டலேசுவரர்கள் இருக்க மாட்டார்கள். தளபதி வல்லாளதேவனையும், உன்னையும் போல் ஆள்கட்டுள்ள படைத்தலைவர்கள் மக்களையும், அறிவாளிகளையும் அடக்கி ஒடுக்கிவிட்டுத் தங்களைத் தாங்களே அரசர்களாக்கிக் கொண்டு விடுவார்கள். எதிர்காலத்தில் பல நூறு தலைமுறைகளுக்குப் பின் இப்படிப்பட்ட படைவீரர் ஆட்சி உலகெங்கும் ஏற்பட்டாலும் ஏற்படும். ஆனால், இந்தத் தலைமுறையில் மகாராணி வானவன்மாதேவியும், என் போன்றோரும் உயிரோடு இருக்கிறவரை இந்த நிலை வரவேண்டாம். வரக்கூடாது. வரவிடவும் மாட்டேன்." இந்தச் சொற்களைக் கூறும் போது மகாமண்டலேசுவரருடைய முகத்தைப் பார்க்க வேண்டுமே? என்ன ஒளி! என்ன அழுத்தம்! எவ்வளவு உறுதி!
ஏனடா இந்த மனிதரிடம் அகப்பட்டுக் கொண்டோமென்று எண்ணி வெலவெலத்து நடுங்கிப் போனான் மெய்க்காவற் படைத்தலைவன். மகாமண்டலேசுவரருடைய மனத்தில் ஒரு விஷயம் தைத்து அதைப்பற்றி அவர் பேசத் தொடங்கி விட்டாரென்றால் பின்பு அதை எதிர்த்துப் பேசி வாதாடுவதற்கு இன்னொரு மகாமண்டலேசுவரர் பிறந்து வந்தால் தான் உண்டு.
'சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லும்சொல் இன்மை அறிந்து.'
என்று சொல்வன்மையைப் பற்றிக் கூறியது அவருக்கே பொருந்தும். இடையாற்றுமங்கலம் நம்பி கூறுகிற ஒரு வார்த்தையை வெற்றி கொள்ளும் மற்றோர் வார்த்தையை மற்றொரு மனிதர் கண்டுபிடித்துப் பேசுவதற்கும் இல்லை. தம் சொல்லை வெல்லும் மற்றொரு சொல்லை அவரே கண்டுபிடித்துச் சொன்னால் தான் உண்டு. நினைப்பில், பேச்சில், செயலில் அப்படி ஓர் ஈடு இணையற்ற சாமர்த்தியம் அமைவது மிகவும் அபூர்வம்.
முதல் முதலாகக் கடலைப் பார்க்கும் சிறுபிள்ளையின் பிரமிப்போடு மகாமண்டலேசுவரரின் முகத்தைப் பார்த்துக் கொண்டு பேசாமல் நின்று கொண்டிருந்தான் அவன்.
"சீவல்லபா! நீ பச்சைக் குழந்தையில்லை. உன்னைக் கூப்பிட்டு உன் கையில் ஒரு முள்ளைக் குத்தி அதை இன்னொரு முள்ளால் எடுத்துக் காட்டி இவ்வளவு செய்த பின்புதான் உனக்கு உண்மையை விளக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. வாயாற் சொல்லி விளக்கியிருந்தாலே உனக்குப் புரிந்திருக்கும். ஆனால் நான் ஏன் அப்படிச் செய்தேன் தெரியுமா? ஒரு கருத்தை மனத்தில் பதிக்க வேண்டுமானால் அந்தக் கருத்தின் நினைவு பசுமையாக இருக்கும்படி எதையாவது செய்துதான் ஆக வேண்டியிருக்கிறது. குழந்தைத்தனமான காரியங்களானாலும் அவற்றைச் செய்துதான் சில மெய்களைப் புரியவைக்க முடிகிறது. இந்த மாதிரிக் குழந்தைத்தனம் இருப்பதால் தானே சத்தியத்தையும் தருமத்தையும் காப்பாற்றுவதற்காகச் சில அறிவாளிகள் கதையும், கவிதையும் எழுதிக் கொண்டிருக்க வேண்டியிருக்கிறது? உன் கையில் முள் குத்தி விட்டதாக நீ என் மேல் வருத்தப்பட்டுக் கொள்ளாதே. வா, போகலாம். நான் கூறியபடி நீ தயார் செய்திருக்கும் வீரர்கள் ஐம்பது பேர்களையும் போய்க் காண்போம். அவர்கள் காவற்படை மாளிகையில் தானே தங்கியிருக்கிறார்கள்?" என்று அவனை உடன் அழைத்துக் கொண்டு அரண்மனைக் காவற்படை மாளிகைக்கு விரைந்தார் மகாமண்டலேசுவரர்.
"சீவல்லபா! வடக்கு எல்லையில் கரவந்தபுரம், கொற்கைப் பகுதிகளில் நம் பகைவர்கள் உண்டாக்கும் கலவரங்களையும், குழப்பங்களையும் பற்றி நீ கேள்விப்பட்டிருப்பாய். நாம் அவர்களை எண்ணிப் பயமும், பதற்றமும் அடைவதற்காக உடனடியாகப் படையெடுப்பு நடக்க இருப்பது போல் ஒரு மிரட்டலைச் செய்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள். கன்னம் வைத்துத் திருடப் போகிற திருடன் தந்திரசாலியாக இருந்தால் கன்னத் துவாரத்துக்குள் முதலில் தன் தலையை நீட்டமாட்டான். உள்ளே சொத்துக்கு உரியவர் விழித்துக் கொண்டிருக்கிறாரா இல்லையா என்று சோதிப்பதற்காக ஒரு குச்சியில் பழைய மண் சட்டியை மாட்டித் துவாரத்தின் வழியே நீட்டுவான். ஆள் விழித்திருந்தால் அவன் நீட்டிய சட்டியைத் திருடனின் தலையாக எண்ணி உள்ளிருப்பவர் ஓங்கிப் புடைப்பார். சட்டி உடைகிற சத்தம் கேட்டுத் திருடன் ஓடித் தப்பித்துக் கொள்ளுவான். இது போன்ற வேலையைத்தான் வடதிசை அரசர்கள் இப்போது நம்மிடத்தில் செய்து கொண்டிருக்கிறார்கள். நாம் ஒன்றுமே அறியாமல் தூங்கிக் கொண்டிருக்கிறோமென்பது அவர்கள் நினைப்பு. வைரத்தை வைரத்தால் அறுக்கப் போகிறேன். முள்ளை முள்ளால் எடுக்கப் போகிறேன். சூழ்ச்சியைச் சூழ்ச்சியால் வெல்லப் போகிறேன். அவர்கள் கற்றுக் கொடுத்த பாடத்தை அவர்களுக்கே திரும்பக் கற்பிக்கப் போகிறேன். சிந்திக்கவும், சூழ்ச்சி செய்யவும், திட்டமிடவும் அறிவுள்ளவர்கள் தென்பாண்டி நாட்டில் கிடையாதென்று தீர்மானித்து விட்டார்கள் போலிருக்கிறது. சோழ நாட்டில் சோறு இருக்கிறது. சேர நாட்டில் யானைகள் இருக்கின்றன. பாண்டி நாட்டில் தமிழ் அறிஞர்கள் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் மறந்துவிட்டார்கள். இந்த நாவலந் தீவிலேயே சிறிந்த அறிவாளிகள் தொண்டை நாட்டிலும், தென்பாண்டி நாட்டிலும் இருக்கிறார்கள். தொண்டை நாட்டு அறிவாளிகள் எதையும் மன்னித்துவிடும் இயல்புள்ள சான்றோர்கள். ஆனால், பாண்டி நாட்டான் பாதகத்தை மன்னிக்க மாட்டான். தென் திசை எல்லாத் தீமைகளையும் அழித்தொழிக்கும் காலனுக்குச் சொந்தமென்பார்கள். அதே தென் திசையில்தான் இப்போது நாமும் இருக்கிறோம்." - காரியங்களைக் கண் பார்வையிலேயே சாதித்துக் கொண்டு போகிற மகாமண்டலேசுவரர் அன்று மெய்க்காவற் படைத் தலைவனிடம் சற்று அதிகமாகவே பேசினார்.
நாட்டின் உயிர் நாடியான படைகளை ஆளும் பொறுப்புள்ளவர்கள் தம் மேற் சந்தேகப்படும்படியாகத் தான் தொடர்ந்து நடந்து கொண்டிருப்பதாக மகாமண்டலேசுவரருக்கு ஒரு பயம் உண்டாகி விட்டிருந்தது. தளபதி வல்லாளதேவன் மனத்தில் தம்மைப் பற்றி அவ்வளவாக நல்ல எண்ணம் இல்லையென்று அவரே அறிந்திருந்தார். ஆபத்துதவிகள் படைத்தலைவன் மகர நெடுங்குழைக்காதனுக்கும் அவர் மேல் ஓரளவு பகை இருந்தது. சீவல்லபமாறனையும் அப்படிப் பகைத்துக் கொண்டால் இந்த மூவருமே தமக்கு எதிராக ஒன்று கூடி மாறுபடுவார்களோ என்ற உள்பயம் அவருக்கு ஏற்பட்டது. தொடக்கத்தில் சீவல்லபனும் அதற்கேற்றாற் போல் நடந்து கொள்ளவே அவனும் ஆகாதவனாகி விடுவானோ என்ற அச்சம் அந்தக் கணமே சூழ்ந்து கொண்டது அவரை.
அந்தக் கணத்திலிருந்தே அவனைத் தட்டிக் கொடுத்து அவனோடு அதிகமாகப் பேசத் தொடங்கிவிட்டார் அவர். துணிவு வந்துவிட்டால் அறிவுள்ளவனுக்கு ஆயிரம் யானைப் பலம் ஏற்படுகிறது. பயம் வந்துவிட்டால் அவனை விடக் கோழை உலகத்தில் வேறு எவனும் இருக்கமுடியாது. மகாமண்டலேசுவரர் அன்று நடந்து கொண்ட விதம் இந்த உண்மைக்குப் பொருத்தமாக இருந்தது.
சீவல்லபமாறனோ உண்மையில் அவருடைய கண் பார்வைக்கே பயந்து நடுங்கிக் கொண்டிருந்தான். தளபதி, ஆபத்துதவிகள் தலைவன், எல்லோருக்குமே அவர் மேல் பிணக்கு இருந்தாலும் அந்தப் பேரறிவுக்கு முன்னால் தலைவணங்கி விடுகிற நடுக்கம் நிச்சயமாக உண்டு. ஆனால் அப்படியிருந்தும் அவர் அவர்களை எண்ணிப் பயந்து கொண்டு தான் இருந்தார். யானைக்குத் தன் பலம் தெரியாதல்லவா? சங்க காலத்தில் கிள்ளி வளவன் என்றொரு அரசன் இருந்தான். அவனுடைய கண்பார்வைக்கு நினைத்ததைச் செய்து முடிக்கும் ஆற்றல் இருந்ததை,
"நீ உடன்று நோக்கும்வாய் எரிதவழ
நீ நயந்து நோக்குவாய் பொன்பூப்ப
செஞ்ஞாயிற்று நிலவு வேண்டினும்
வெண்திங்களுள் வெயில் வேண்டினும்
வேண்டியது விளைக்கும் ஆற்றலை"
என்று ஆவூர் மூலங்கிழார் என்னும் புலவர் மிகையாகப் புகழ்ந்து பாடியிருந்தார். அப்படிப்பட்ட வேண்டியது விளைவிக்கும் ஆற்றல் நம் கண்களுக்கு இருந்தும் மனத்தின் ஒரு மூலையில் வேண்டாத வீண் பயத்தை எண்ணிப் பயப்படும் அறிவுள்ளவனுக்கே சொந்தமான தாழ்வு மனப்பான்மையும் வெளிக்குத் தெரியாமல் மகாமண்டலேசுவரரிடம் ஒளிந்து கொண்டிருந்தது.
பேசிக் கொண்டே சென்று அவரும் சீவல்லபமாறனும் அரண்மனைக் காவற்படை மாளிகைக்குள் நுழைந்தனர். மாளிகை முன்றிலில் சீவல்லபன் தேர்ந்தெடுத்து நிறுத்திவிட்டு வந்திருந்த வீரர்கள் ஐம்பதின்மரும் அணிவகுத்து நின்று கொண்டிருந்தனர்.
"இதோ இவர்கள் தான், தாங்கள் கூறிய செயலுக்காகத் தேர்ந்தெடுத்து நிறுத்தப்பட்டிருப்பவர்கள்" - சீவல்லபன் அவர்களைச் சுட்டிக் காட்டினான். மகாமண்டலேசுவரர் அந்த வீரர்களுக்கு முன்னால் ஒரு சொற்பொழிவே செய்து விட்டார்.
"அன்பார்ந்த மெய்க்காவற் படை வீரர்களே! நீங்கள் சூழ்ச்சியும், சாதுரியமும் மிக்க பெரிய காரியத்தைச் செய்யப் பெறுவதற்காக அனுப்பப்படுகிறீர்கள். உயிரின் மேலும் உடலின் மேலும் பற்றுள்ளவராக இருந்தாலும் துணிவோடு செல்லுங்கள். முன்பு பாண்டி நாடாக இருந்து இப்போது வடதிசையரசர்களினால் கைப்பற்றி ஆளப்படும் பகுதிகளிலும், கோனாட்டுக் கொடும்பாளூரிலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் கூட்டமாகவோ, தனித் தனியாகவோ சென்று மறைந்திருந்து உங்களால் இயன்ற குழப்பங்களையும் கலவரங்களையும் செய்யுங்கள். நாம் அவர்கள் மேல் படையெடுக்கப் போவதாகவும், பிறகு ஈழத்திலிருந்தும், சேர நாட்டிலிருந்தும், நமக்குப் பெரும் படையுதவி கிடைக்கப் போவதாகவும் செய்திகளைப் பரப்பி அவர்களை நம்பவையுங்கள். நீங்கள் ஒருவர் கூட முடிந்தவரை, எதிரிகள் கையில் அகப்பட்டுக் கொண்டு விடாமல், இந்த வேலைகளைச் செய்ய வேண்டும். தப்பித் தவறி யாராவது அகப்பட்டுக் கொண்டால் சதையைத் துண்டு துண்டாக்கினாலும் உண்மைகளைச் சொல்லி நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகத்தைச் செய்யக் கூடாது. நம் நாட்டு வடக்கு எல்லையில் கொற்கையிலும், கரவந்தபுரத்திலும், அவர்கள் செய்கின்ற குழப்பங்களைப் போல் நீங்கள் அங்கே போய்ச் செய்ய வேண்டும். அவ்வப்போது அங்கே உங்களுக்குக் கிடைக்கும் உளவுச் செய்திகளை இங்கே எனக்குத் தெரியுமாறு அனுப்ப வேண்டும். இந்தக் காரியங்களையெல்லாம் நன்றாகச் செய்து உயிர் தப்புவதற்கு உங்களுக்கு என்னென்ன திறமைகள் வேண்டுமென்று தெரியுமா? முதலாவதாகப் பொய்களை உண்மைகள் போல் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். சமயத்துக்கு ஏற்றாற் போல் வேடமிட்டு நடிப்பதற்குத் தெரிந்திருக்க வேண்டும். மிக முக்கியமான மூன்றாவது திறமை, உயிர், உடல், பொருள் எதையும் எந்த விநாடியும் இழக்கத் தயாராகயிருக்க வேண்டும். அவ்வளவு தான்! இறுதியாக உங்களுக்கு நான் கூறும் எச்சரிக்கை ஒன்று உண்டு. இங்கிருந்து இந்தக் காரியத்தைச் செய்வதற்காக இன்று நீங்கள் புறப்பட்டுச் செல்வது கூடியவரையில் பரம இரகசியமாகவே இருக்க வேண்டும்... நீங்கள் எல்லோரும் புறப்பட்டுச் செல்வதற்கு முன் கடைசியாக மிக வேடிக்கையான முறையில் உங்கள் திறமையைப் பரீட்சை செய்து பார்க்கப் போகிறேன்" என்று சொல்லிவிட்டுக் குறும்பாகச் சிரித்தார்.
"அந்தச் சோதனை யாதோ?" சீவல்லபமாறன் விநயமாகக் கேட்டான்.
"உங்களில் யாருக்கு அதிகப் பொய் கூறும் திறமை இருக்கிறதென்று பரீட்சை செய்யப் போகிறேன்."
அவருடைய இந்தச் சொற்களைக் கேட்டு எல்லோரும் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விட்டனர்.
"சுவாமி! மெய்க்காவற் படை வீரர்களிடம் பொய் சொல்லும் திறமையை எதிர்பார்த்தால் தங்களுக்கு பெருத்த ஏமாற்றம் தான் கிட்டும்!"
"பரவாயில்லை, சீவல்லபா! உலகத்தில் பொய் சொல்லத் தெரியாத ஆட்களே கிடையாது. நன்றாகப் பொய் கூறத் தெரிந்த கூட்டத்தில் இருந்து தான் கவிகள், கதாசிரியர்கள், பௌராணிகர்களெல்லாம் உருவாகிறார்கள். எங்கே, பார்க்கலாம்? முதலில் உன் திறமையைக் காண்கிறேன். அழகாக ஒரு பொய் சொல்."
சீவல்லபன் நாணித் தலை குனிந்தான். அவனால் முடியவில்லை.
"நீ தோற்றாய்" என்று சொல்லிவிட்டு அடுத்த வீரனைக் கேட்டார் அவர். அவன் ஒன்றும் புரிந்து கொள்ள முடியாமல் ஏதோ உளறினான்.
"சே! சுகமில்லையே? உங்களில் ஒருவருக்குக் கூட அழகாகப் பொய் சொல்லத் தெரியவில்லையே?" என்று உதட்டைப் பிதுக்கினார் மகாமண்டலேசுவரர். அப்போது அந்த வீரர்களில் கோமாளி போன்ற முக அமைப்பும் கோணிய வாயும் நீளமான மூக்குமுள்ள ஒரு வீரன் முன் வந்தான்.
"நான் சொல்லுகிறேன் ஒரு பொய்!"
"எங்கே சொல் பார்க்கலாம்!"
அவன் சிரித்து விடாமல் சொன்னான்: "என்னைப் பெற்ற அப்பாவுக்கும் அம்மாவுக்கு கல்யாணமாகும் போது நான் சிறு பையனாயிருந்தேன். அப்பா அம்மாவுக்குத் தாலி கட்டுகிற போது நான் அம்மாவின் மடியில் ஏறி உட்கார்ந்து கொண்டு பக்கத்தில் வைத்திருந்த உலக்கையின் கொழுந்தை கிள்ளிப் போட்டுக் கொண்டிருந்தேன். அப்போது ஊர்வலத்துக்குக் கொம்புள்ள குதிரை ஒன்றாவது கிடைக்கவில்லையே என்று எல்லோரும் வருத்தப்பட்டுக் கொண்டிருந்தார்கள். நான் உடனே ஓடிப் போய்த் தெருக்கோடியிலிருந்த மலடியின் எட்டாவது மகனிடம் சொல்லிக் கொம்புள்ள குதிரைக்கு ஏற்பாடு செய்தேன்..."
"அபாரம்! அற்புதம்! இன்னும் பல நூற்றாண்டுகள் கழித்து இதே திறமையோடு இந்த தமிழ்நாட்டில் நீ பிறந்தால் அந்தக் காலத்துக்கே நீதான் மகாகவியாக இலங்குவாய். என்ன அருமையான பொய்!" - மகாமண்டலேசுவரர் கூறினார். அவரும் மற்றவர்களும் நெடுநேரம் அடக்க முடியாமல் வயிறு குலுங்கச் சிரித்தார்கள். சிரிப்பு முடிந்ததும் மகாமண்டலேசுவரரின் கண் பார்வை சீவல்லபமாறனுக்குக் கட்டளையிட்டது. அவன் அந்த வீரர்களை அவர்களிடம் ஒப்படைத்த காரியத்தைச் செய்யப் புறப்படுமாறு ஆணையிட்டான்.
----------
2.17. காந்தளூர் மணியம்பலம்
ஓர் ஏழைத் தாயின் கண்ணீரைத் துடைத்த மகிழ்ச்சியோடு சுசீந்திரம் தாணுமாலய விண்ணகரத்திலிருந்து வெளியேறிய மகாராணி வானவன்மாதேவி நேரே அரண்மனைக்குத்தான் திரும்பிச் செல்வாரென்று புவன மோகினி எண்ணினாள்.
இருவரும் சிவிகையில் ஏறி அமர்ந்து கொண்டதும், "நேரே காந்தளூர் மணியம்பலத்துக்குப் போக வேண்டும். வேகமாகச் செல்லுங்கள்" என்று சிவிகை தூக்குவோருக்குக் கட்டளை பிறந்த போதுதான் புவன மோகினிக்கு மகாராணியின் நோக்கம் புரிந்தது. ஏதோ ஒரு காரணம் பற்றி மகாராணிக்கு அரண்மனையில் அடைபட்டுக் கிடப்பதில் வெறுப்பு ஏற்பட்டு விட்டதென்பதை வண்ணமகள் நினைத்து உணர முடிந்தது.
எவ்வளவுதான் துன்பம் நிறைந்த சூழ்நிலையாக இருந்தாலும் மகாராணியின் முகத்தில் ஏக்கத்தைக் காட்டிலும் சாந்த குணத்தை வெளிக்காட்டும் சால்பு மிக்க மலர்ச்சி ஒன்று பதிந்திருக்கும். ஆனால் இன்று சுசீந்திரம் கோவிலில் அந்தத் தாயைச் சந்தித்துவிட்டு வந்த பின் தெய்வத்தின் திருவடிகளில் அர்ச்சிப்பதற்கு மலர்ந்த பெரிய செந்தாமரைப் பூவைப் போன்ற மகாராணியின் முக மண்டலத்தில் எதையோ மீண்டும் மீண்டும் எண்ணி மனத்துக்குள்ளேயே நினைவுகளின் சூட்டினால் வெந்து புழுங்கித் தவிக்கும் சோகச் சாயை கோடிட்டிருந்தது. அந்த முகத்துக்கு எதிரே அமர்ந்து கொண்டு அந்த முகத்தையே பார்ப்பதற்கு வேதனையாக இருந்தது வண்ணமகளுக்கு. தன் மன வேதனைகளைத் தெரிந்து கொண்டு தனக்கு வேண்டியவர்கள் தன்னை எண்ணி வருந்தக் கூடாதே என்கிற அளவுக்குக் கூச்சம் நிறைந்த மெல்லிய மனம் மகாராணியுடையது.
அந்த முகத்தைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதற்கு அஞ்சித் தன் பார்வையைப் பல்லக்கின் வெளிப்பக்கத்திற்கு மாற்றிக் கொண்டாள் புவன மோகினி. பல்லக்கு விரைந்து கொண்டிருந்தது.
பெருமூச்சோடு மெல்ல விம்மி அழுவது போன்ற ஒலியைக் கேட்டுத் திகைத்துத் திரும்பினாள் வண்ணமகள். அவள் கண்களுக்கு எதிரே சிவிகையில் வீற்றிருந்த மகாராணி ஓசைப்படாமல் மெல்ல அழுது கொண்டிருந்தார். அந்தத் தாமரைப் பூ முகத்தில் கண்ணீர்த் துளிகளைக் கண்ட போது புவன மோகினி திடுக்கிட்டாள். அவளுக்குத் துயரங் கலந்த ஒருவகைப் பயத்தினால் மெய் சிலிர்த்தது. 'மகாராணியிடம் என்ன பேசுவது? - ஏன் அழுகிறீர்கள்? என்று எப்படிக் கூசாமல் கேட்பது?' ஒன்றும் புரியாமல் திகைத்துக் கலங்கும் மனநிலையோடு மகாராணியையே பார்த்துக் கொண்டிருந்தாள் அந்த எளிய வண்ணமகள்.
"புவன மோகினி! என் அழுகையின் காரணம் புரியாமல் தானே நீ இப்படி என்னைப் பார்க்கிறாய்! கேட்டால் நான் 'வருந்துவேன்' என்று தயங்குகிறாய் இல்லையா?"
சாம்பலை ஊதிக் கனிய வைத்த மங்கலான நெருப்பின் ஒளி போல் அழுகையின் நடுவே ஒரு புன்னகையோடு கேட்டார் மகாராணி.
"தாயே! தங்கள் முகத்தையும், கண்ணீரையும் பார்க்கும் போது, எனக்குப் பெரிதும் வேதனையாயிருந்தது. அதே சமயத்தில் தங்களைக் கேட்பதற்கும் பயமாக இருக்கிறது."
"பயம் என்ன வந்தது? உனக்குத் தோன்றிய எண்ணத்தை நீ கேட்க வேண்டியதுதானே?"
"திருவட்டாற்றுச் சோழியப் பெண்ணின் தாய்மைத் துன்பத்தை எண்ணி உங்கள் மனம் கலங்குகிறதென்று நான் அனுமானிக்கிறேன். நீங்கள் தான் அந்தப் பெண்ணின் துன்பத்தைப் போக்குவதற்கு ஏற்பாடு செய்து விட்டீர்களே! இனியும் ஏன் கலங்க வேண்டும்?"
"கலக்கமல்ல பெண்ணே, இது! உலகத்தின் கசப்பு நிறைந்த உண்மைகளைத் தெரிந்து கொள்ளும் பொழுதெல்லாம் எனக்கு அழுகை வருகிறது. எனக்கு அழுகை வரும் போதெல்லாம் உண்மைகளை அடைகிற தகுதியும் வருகிறது. புவன மோகினி! இந்த மாதிரித் தத்துவங்களெல்லாம் உனக்குப் புரியாது. என்றாலும் சொல்லுகிறேன். மெய்யைத் தெரிந்து கொள்வதற்கு நூல்களைப் படித்தலும் அறிவுரைகளைக் கேட்டலுமே போதுமான கருவிகளென்று பல பேர்கள் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மைகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் உலகத்துத் துன்பங்களையெல்லாம் உணர்ந்துணர்ந்து உருகி அழுகின்ற மனம் வேண்டும். உள்ளம் உருகி அழுதால் உண்மை விளங்கும். நெஞ்சம் கலங்கிக் குமுறினால் நியாயம் பிறக்கும். பிறவி என்ற பிணி வாசனை தொலைக்கும் மணிவாசகர் ஒரே வாக்கியத்தில் இதை, "அழுதால் உன்னைப் பெறலாமே" என்று விளக்குகிறார். இப்போது சில சமயங்களில் இறைவனைப் பெறுவதற்கு அழுவதை விட நம்மைப் புரிந்து கொள்வதற்கே நாம் அழுதாக வேண்டும். நான் அழுகின்ற அழுகை உண்மையை அறிந்தும், அறிய முயன்றும் அழுவதே தவிர வேறென்று நீ வருந்த வேண்டாம்."
மகாராணியின் இந்தச் சொற்களைக் கேட்டதும் புவன மோகினிக்கு ஒரு சிலிர்ப்பு உடல் முழுவதும் பரவியது. கண்களில் பக்திப் பரவசத்தின் ஒளி சுடர்க்கோடிட்டது. மின்னல் மின்னும் நேரத்தில், ஒரு கணத்தின் ஒரு சிறு பகுதிப் பொழுதில், அந்த வண்ணமகளின் கண்களுக்கு முன்னால் மகாராணி வானவன்மாதேவியாரின் கண்ணீர் சிந்திய முகம் தெரியவில்லை. நீலத்திரைக் கடலோரத்தில் கோலக்கன்னிமை யெனும் தவம் பூண்டு நிற்கும் வாலைக்குமரி வடிவம் சிவிகையினுள் வந்தமர்ந்து கொண்டு 'ஐயோ! தலைமுறைக்குத் தலைமுறை உலகில் தாய்க் குலத்தின் துன்பங்கள் பெருகி வருகின்றனவே' என்று கதறிக் குமுறிக் கலங்குவது போல் ஒரு பொய்த் தோற்றம் - ஒரு பிரமைக் காட்சி - புவன மோகினியின் கண்களுக்கு முன்பு தெரிந்து மறைந்தது. புவன மோகினி தன் வசமிழந்த நிலையில் அந்த ஒரு கணம் உடலெங்கும் பரவி நின்ற எல்லையற்ற பரவசத்தினால் என்ன செய்கிறோமென்ற நினைவேயன்றி இரண்டு கைகளும் மேல் எழுப்பிக் கைகூப்பி வணங்குவதற்குத் தயாராகி விட்டாள்.
'ஆகா! எவ்வளவு விந்தையான பரந்த மனம் இவருக்கு வாய்த்திருக்கிறது? உலகத்தில் முக்கால்வாசிப் பேருக்கு தங்கள் சொந்தத் துன்பத்தை எண்ணி வருந்துவதற்கே நேரமில்லை. கால்வாசிப் பேருக்குத் துன்பங்களே நிரந்தரமாகப் பழகிவிட்டதால் அவற்றையே இன்பங்களாக எண்ணிச் சிரித்துக் கொண்டே வாழப் பழகி விட்டார்கள். கண்களின் பார்வைக்கு இவர் பாண்டிமாதேவி மட்டும் தான். கருணையின் பார்வையில் இவர் உலகமாதேவி! நாட்டையும், மகனையும், கண்ணீரையும் அடக்கிக் காக்க முடியாத சூழ்நிலை. உலகத்தையே துன்பமின்றிக் காக்க வேண்டுமென்ற ஆவல். உண்மைக்காக அழுது உயர உயரப் போகும் உலகளாவிய மனம், இந்த மனம்?... இது மனிதப் பெண்ணின் மனமில்லை!' தெய்வப் பெண்ணின் மனத்தோடும் மனிதத் தாயின் உடலோடும் அந்தச் சமயத்தில் புவன மோகினியின் கண்களுக்குத் தோன்றினார் மகாராணி.
"தாயே! உணவைக் கூட முடித்துக் கொள்ளாமல் அரண்மனையிலிருந்து கிளம்பினீர்கள். சுசீந்திரத்திலிருந்து நேரே அரண்மனைக்கே திரும்பி விடலாமென்று எண்ணியிருந்தேன். தாங்களோ திடீரென்று காந்தளூர் மணியம்பலத்துக்குப் புறப்பட்டு விட்டீர்கள்" என்று வண்ணமகள் கவலையோடு வினவினாள்.
"உணவுக்கென்ன? எங்கும் கிடைக்கக் கூடியதுதான். நிம்மதியை அல்லவா நான் தேடிக் கொண்டு போகின்றேன். திரும்பத் திரும்பக் கட்டுக்குள் அடைபடும் பறவையைப் போல் மறுபடியும் நான் அரண்மனைக்குள் போய் அடைபட்டுக் கொண்டிருக்க என் மனம் ஒப்ப மாட்டேன் என்கிறதே! ஆசிரியர், பவழக்கனிவாயர் போன்றவர்கள் அரண்மனையில் வந்து தங்கியிருந்தார்கள். அவர்களும் திரும்பிச் சென்று விட்டார்கள். என்னோடு உடன் இருப்பதாகச் சொல்லிக் கொண்டிருந்தாள் அந்தப் பெண் விலாசினி. அவளும் திடீரென்று தந்தையோடு புறப்பட்டுப் போய்விட்டாளே. வல்லாளதேவனின் தங்கைக்கு என்னிடம் சொல்லிக் கொள்வதற்குக் கூட நேரமில்லை போலிருக்கிறது. அவளும் போய்விட்டாள். மனம் விட்டுப் பேசுவதற்கு யார் இருக்கிறார்கள் அரண்மனையில்? காந்தளூர் மணியம்பலத்துக்குப் போய் நிம்மதியாக இரண்டு நாட்கள் தங்கிவிட்டுக் கொஞ்சம் மெதுவாகத்தான் திரும்பிப் போகலாமே. இப்போது என்ன அவசரம்?"
"அவசரம் இல்லை? ஆனால் நாம் கூடியவரையில் யாருக்கும் தெரியாமல் புறப்பட்டிருக்கிறோமே என்று தான் கவலைப்படுகிறேன்."
"ஒரு கவலையும் உனக்கு வேண்டாம். பேசாமல் என்னோடு வா!"
கண்களைத் துடைத்துக் கொண்டு அழுவதை நிறுத்தி விட்டு மகாராணி இவ்வாறு உறுதிமொழி கூறியதும் புவன மோகினி அமைதியடைந்தாள்.
மகாராணியையும், வண்ணமகளையும் சுமந்து கொண்டு அந்தப் பல்லக்கு அப்படியே காந்தளூரை அடைவதற்குள் நேயர்களுக்கு ஒருவாறு காந்தளூர் மணியம்பலத்தைப் பற்றியும் அறிமுகப்படுத்தி வைத்துவிடுகிறேன்.
பல்லாயிரங் காலத்துப் பேரெல்லைவரை பரவிக் கிடக்கும் தமிழக வரலாற்றுப் பெருக்கில் தமிழ் மூவேந்தர்களிற் சிறப்பெய்திய எவரும் காந்தளூருடன் தொடர்புற்றிருப்பர். எந்த மகா மன்னனுடைய மெய்க் கீர்த்தியும் காந்தளூர்ச் சாலையில் கலமறுத்தருளிய பெருமையைப் பறை சாற்றத் தவறியதில்லை. எத்தனை முறைகள் தோல்வியடைந்தாலும் பாண்டியனை எதிர்த்துக் காந்தளூரை வென்றிடும் ஆசையை எவரும் விடத் தயாராயில்லை. இவ்வாறு மன்னாதி மன்னர்களின் ஆசைகளை வளர்க்கும் அழகுக்கு கனவாகத் தென்பாண்டி நாட்டில் இலங்கி வந்தது காந்தளூர்.
'செருவல ரானதானற் சிந்தியார் போலும்
மருவலராய் வாள்மாறன் சீறக் - கருவிளை
கண்தோற்ற வண்டரவம் கார் தோற்று காந்தளூர்
மண்தோற்ற வேந்தர் மனம்.'
சாலை என்றும், காந்தளூர்ச் சாலை என்றும் இதே இடத்துக்கு வேறு பெயர்கள் வழங்கும். இராசசிம்மனின் தந்தை பராந்தக பாண்டியனுடைய காலத்தில் விழிஞத்தையும், காந்தளூரையும் சேர மன்னனிடமிருந்து கைப்பற்றினார் பராந்தக பாண்டியர். மிக இளைஞராயிருக்கும் காலத்திலே முதல் முதலாகச் செய்த கன்னிப் போர் காந்தளூரில்தான் நிகழ்ந்தது. கன்னிப் போர் திருமணமாகாமல் இளைஞராயிருந்த அவருக்கு ஒரு கன்னிகையையே அளித்து விட்டது. சேர மன்னன் பராந்தகனுக்குத் தன் மகளை மணம் முடித்துக் கொடுத்தான். அந்தப் பெண்ணே பட்டமகிஷியாய் வானவன்மாதேவி என்னும் பெயரோடு பராந்தகன் வாழ்வில் பங்கு பற்றினாள். விழிஞத்தில் நிறையக் கடற்போர்களைச் செய்து, பகைவர்கள் கப்பல்களை அழித்து வாகை சூடும் பெருமை பராந்தகனுக்குக் கிடைத்தது. அதையெல்லாம் விடப் பெரிய பெருமை அவன் காந்தளூரில் திருத்தியமைத்து நிறுவிய மணியம்பலமே ஆகும்.
இந்த மணியம்பலத்தில் ஆயிரத்தெட்டுப் பேர் எல்லாக் கலைகளிலும் வல்லவர்களாக இருந்தார்கள். மறையவர்கள் பெருபாலோரும், கவிஞர்களும், கலைஞர்களும், தர்க்க நியாய சாத்திரங்களில் வல்லவர்களுமாகச் சிலரும் காந்தளூர் மணியம்பலத்தில் இருந்ததனால் தென்பாண்டி நாட்டின் பல்கலைக் கழகம் போன்றிலங்கி வந்தது இது. பவழக்கனிவாயர் இந்த மணியம்பலத்தின் அறங்காவலராகவும், அதங்கோட்டாசிரியர் கலை, கல்வி, தமிழ் போன்ற அறிவுத் துறைகட்குக் காவலராகவும் பொறுப்பேற்றிருந்தனர்.
அதேபோல் திருநந்திக் கரையிலும் குழித்துறையாற்றங் கரையில் திருச்சேரண நகரிலும் சமணர்களின் கலாசாலைகள் இருந்தன. அவற்றையும் பராந்தகன் ஆதரித்தான். காந்தளூர் மணியம்பலத்திலிருந்து மறையவர்களும் அற நூலாசிரியர்களும் மிக உயர்ந்த கருத்துக்களைக் கல்லில் செதுக்கச் செய்து நாட்டின் பல பகுதிகளிலும் அக்கற்களை நடுவித்தனர். காந்தளூரில் மரங்களும், செடி கொடிகளும், மலர்வனங்களும் நிறைந்த அற்புதமான இயற்கைச் சூழலின் நடுவே மணியம்பலம் அமைந்திருந்தது. இந்த மணியம்பலத்தில் இருந்த ஆயிரத்தெட்டு மறையவர்களும், பிறரும் போட்டி பொறாமை, புலமைக் காய்ச்சலின்றி ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்பதில் பராந்தகனுக்கு அக்கறை அதிகமாயிருந்தது.
திருச்சேரணத்துச் சமணர்களும் தங்கள் கலாசாலை மூலம் பெரிய காரியங்களைச் சாதித்தனர். தெய்வங்களின் கோவில்கள் பல இருந்தன போல் அறிவின் ஆலயங்களாக மணியம்பலமும் பிறவும் விளங்கி வந்தன.
எனவே, மகாராணியாகிய வானவன்மாதேவி தாணுமாலய விண்ணகரமென்னும் சுசீந்திரம் தேவாலயத்தைத் தரிசனம் செய்த பின் அறிவாலயமாகிய மணியம்பலத்துக்குப் புறப்பட்டது மிகவும் பொருத்தமும் ஆகிவிட்டது.
பவழக்கனிவாயர் முதலியவர்களும் கூட அன்று அதிகாலையில் தான் அரண்மனையிலிருந்து அங்கே திரும்பி வந்திருந்தார்கள். யாருக்கும் தெரியாமல், யாரும் எதிர்பாராத போது அப்படித் திடீரென்று மகாராணி அங்கே வருவார் என்று எவரும் நினைத்திருக்க முடியாது. சுசீந்திரத்திலிருந்து புறப்பட்ட சிவிகை காந்தளூர் மணியம்பலத்தை அடையும் போது மாலை மயங்கி இருள் சூழத் தொடங்கியிருந்தது.
இயற்கையின் அழகான பசுமைக் கோலத்தின் நடுவே தீப ஒளியில் அமைதியாகக் காட்சியளித்தது மணியம்பலம். பகுதி பகுதியாகப் பிரிந்திருந்த அந்தப் பேரம்பலத்தில் ஒவ்வொரு பகுதியிலிருந்தும் ஒவ்வொரு வகைக் கலையைக் கற்பிக்கும் ஒலி கேட்டுக் கொண்டிருந்தது. ஒருபுறம் மறை யொலி, இன்னொரு புறம் தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்களின் விரிவுரை, வேறோர் பகுதியில் பாதச் சிலம்புகள் குலுங்கும் நாட்டிய ஒலி, இசைக் குரல்களின் இனிமை - எல்லா ஒலிகளுமாகச் சேர்ந்து வேறு வகையில் அந்த இடத்தின் அமைதியைத் தெளிவுபடுத்தின.
சிவிகையை விட்டு இறங்கி மணியம்பலத்துக்குள் நடந்தனர் மகாராணியும், புவன மோகினியும்.
"நான் முன்னால் ஓடிப்போய்த் தங்கள் வரவைப் பவழக்கனிவாயருக்கு அறிவித்து விடுகிறேன்" என்று சிறிது விரைவாக முன்னால் நடக்க முயன்ற புவன மோகினியைத் தடுத்து நிறுத்தினார் மகாராணி.
"நமக்குக் கால் இருக்கிறது. நாமே நடந்து செல்லலாம். அவரவர் கடமைகளை அந்தந்த நேரத்துக்கு ஒழுங்காகச் செய்து கொண்டிருக்கும் இந்தக் கலைக்கோயிலில் இப்போது நீ போய் என் வரவைக் கூறினால் இங்குள்ள அத்தனை மறையவர்களும், கலைஞர்களும், மாணவர்களும், ஆசிரியர்களும் பரபரப்படைந்து என்னை வரவேற்பதற்கு ஓடி வந்து வீண் கூட்டம் போடுவார்கள். அந்த ஆடம்பர ஆரவாரத்தை எதிர்நோக்கி நான் இங்கு வரவில்லை."
புவன மோகினி பதில் சொல்ல வாயின்றி உடன் நடந்தாள். மணியம்பலத்தில் யாருமே இவர்கள் உள்ளே வந்ததைக் கவனிக்கவில்லை.
தர்க்க நியாய சாத்திரங்களையும், சமய நூல்களையும் கற்பிக்கும் ஒரு பகுதிக்கு அருகே வந்ததும் மகாராணியும், புவனமோகினியும் நின்றார்கள். அங்கே ஒரு முதுபெரும் புலவர் மணியம்பலத்தைச் சேர்ந்த சீடர்களைத் தம்மைச் சுற்றிலும் உட்கார வைத்துக் கற்பித்துக் கொண்டிருந்தார். அதில் சில வார்த்தைகள் உள்ளத்தைத் தொடவே, தாம் நிற்பது தெரியாமல் மறைந்து நின்று கேட்கத் தொடங்கினார் மகாராணி.
"துன்பங்கள் குறைவதற்கு எதையும் இழக்கத் துணிகின்ற மனம் வேண்டும். 'இது வேண்டும், அது வேண்டும்' என்று ஆசையை வளர்த்துக் கொண்டு போகிறவனைக் காட்டிலும் எதுவுமே வேண்டாமென்று மனத்தைக் கட்டுகிறவன் பெரிய செல்வன். வேண்டாமையைப் போன்ற சிறந்த செல்வம் வேறில்லை. எந்தப் பொருளை அடைய வேண்டுமென்று ஆசைப்படுகிறோமோ அந்தப் பொருள்களை விரும்புவதால், பெறுவதால் வரும் துயரங்கள் நமக்கு இல்லை.
"யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்."
"மாணவர்களே! சமயநெறி ஒப்புக் கொண்ட வாழ்க்கை இதுதான். இதுவே தவம்" என்று மூதறிஞர் கூறி முடித்தார்.
'எதையும் இழக்கத் துணிகின்ற மனம் வேண்டும்.' மகாராணி தமக்குள் மெல்லக் கூறிக் கொண்டார் அந்த வாக்கியத்தை. விளக்கைக் கண்டவுடன் மாயும் இருள் போல் நெடுநேரமாக மனத்தை வதைத்துத் துன்புறுத்திக் கொண்டிருந்த ஏதோ ஒன்றை அந்த முதுபெரும் புலவர் கூறிய திருக்குறள் கருத்து நீக்கிவிட்டது போலிருந்தது. "புவன மோகினி வா... நாம் அரண்மனைக்கே திரும்பிப் போய்விடலாம்." இவ்வாறு கூறிவிட்டு இருளில் மறைந்து நின்று கொண்டிருந்த மகாராணி புறப்பட்ட போது புவன மோகினிக்கு ஒரே ஆச்சரியமாகிவிட்டது. மகாராணியின் மனம் ஒரு நிலையில் நிற்காமல் ஏதோ காரணத்தால் அலை பாய்ந்து கொண்டிருக்கும் போலுமென்று அவளுக்குத் தோன்றியது.
"இரண்டு நாட்கள் இங்கே நிம்மதியாகத் தங்கி விட்டுப் போக வேண்டுமென்று கூறினீர்களே! இப்போது உடனே புறப்பட வேண்டுமென்கிறீர்களே? சுசீந்திரத்திலிருந்தே அரண்மனைக்குத் திரும்பியிருந்தால் இதற்குள் போய்ச் சேர்ந்திருக்கலாமே?" என்று மெல்லிய குரலில் மகாராணியைக் கேட்டாள் வண்ணமகள்.
"பெண்ணே! அப்போது அப்படித் தோன்றியது, சொன்னேன். இப்போது இப்படித் தோன்றுகிறது, சொல்கிறேன். இரண்டு நாட்கள் இந்த மணியம்பலத்தில் தங்கி என்னென்ன தெரிந்து கொண்டு நிம்மதி அடைய வேண்டுமென்று எண்ணி வந்தேனோ அந்த நிம்மதி இரண்டு கணங்களில் இந்தப் புலவரின் சொற்களில் கிடைத்துவிட்டது."
"போகுமுன் பவழக்கனிவாயரைப் பார்க்க வேண்டுமல்லவா?"
"யாரையும் பார்க்க வேண்டாம்! யாருக்கும் தெரியாமல் நாம் திரும்பி விடுவோம்!"
ஓசைப்படாமல் திரும்பிச் சென்று, வந்தது போலவே வெளியேறினார்கள் அவர்கள். மணியம்பலத்தின் வாயிலில் அலுத்துப் போய் உட்கார்ந்திருந்த பல்லக்குத் தூக்குவோர் களைப்பையும் பொருட்படுத்தாமல் புறப்பட்டு விட்டார்கள். இருளின் நடுவே ஒளி நிறைந்த மனத்தோடு மகாராணியின் பயணம் தொடர்ந்தது.
--------------
2.18. வீரர் திருக்கூட்டம்
அரண்மனைத் தோட்டத்து மாமரத்தடியில் யாருக்கும் தெரியாமல் தங்கை பகவதியைச் சந்தித்து விட்டுச் சென்ற தளபதி வல்லாளதேவன் நேரே கோட்டாற்றுப் படைத்தளத்துக்குப் போய் ஏற்பாடுகளைக் கவனிக்கத் தொடங்கி விட்டான்.
அன்று வரை உண்பதும், உறங்குவதும், விளையாட்டான பொழுது போக்குகளில் ஈடுபடுவதுமாக இருந்த ஐந்நூறு பத்திப்படை வீரர்களுக்கும் தளபதியின் வரவு சுறுசுறுப்பூட்டியது. விரைவாகவும், தீவிரமாகவும் தளபதி செய்யும் ஏற்பாடுகளைக் கவனிக்குமுன் அந்தப் பிரம்மாண்டமான படைத்தளத்தில் ஒவ்வொரு பகுதியையும் சற்றே சுற்றிப் பார்த்து விடலாம்.
தென் பாண்டி நாட்டின் அறிவுக்கு முன்மாதிரியாக இடையாற்று மங்கலத்தைச் சுட்டிக் காட்டலாமென்றால் ஆண்மைக்கு முன்மாதிரியாகக் கோட்டாற்றுப் படைத் தளத்தைத் தான் சொல்ல வேண்டும். பல்வகைப் பெரும் படைகளும், படைக்கருவிகளும் ஆயுதச் சாலைகளும் நிறைந்த படைத் திருமாளிகை அது. தமிழ்நாட்டுப் பொதுவான படைவீரர்கள் தவிர மோகர், மழவர், யவனர் போன்ற சிறப்புப் பிரிவினரான வீரர்களும் அங்கு இருந்தார்கள்.
யானை, குதிரை, தேர்கள் உட்பட எல்லாப் படைவீரர்களும் அணிவகுத்து நிற்பதற்கேற்ற பெரும் பரப்புள்ள திறந்தவெளி முற்றம் தான் படைத்தளத்தின் முக்கியமான இடம்.
அதோ, சிற்ப வேலைப்பாடு மிக்க பளிங்குமேடையின் மேல் குன்று போல் பெரிய முரசம் ஒன்று வார்களால் இறுக்கிக் கட்டப்பட்டு விளங்குகிறதே, அது ஒலிக்கப்பட்டால் அந்த முற்றம் படைகளால் நிரம்பி வழியும்.
யானைகள் பிளிறும் ஓசை, குதிரைகளின் கனைப்பொலி படைத்தளத்தில் எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கும். படையைச் சேர்ந்த யானைகளுக்கும் குதிரைகளுக்கும் தனித் தனியே கொட்டங்கள் அங்கிருந்தன. போருக்குரிய தேர்கள் ஒருபுறம் வரிசையாக அழகாக இலங்கின. அங்கிருந்த பெரிய ஆயுதச்சாலைக்குள் கோழைகள் நுழைந்தால் மயக்கம் போட்டுத் தலைசுற்றி விழுந்து விட வேண்டியதுதான். அப்பப்பா! மனிதனுக்கும் மனிதனுக்கும் பகை ஏற்பட்டால் ஒருவருக்கொருவர் போரிட்டுக் கொள்வதற்கு எத்தனை கருவிகள். ஒளியுறத் தீட்டிச் செம்மை செய்யப்பட்ட வாள்கள் பல்லாயிரக்கணக்கில் குவிந்து கிடக்கின்றன. வேல்கள், ஈட்டிகள், வில், அம்பறாத் தூணிகள், கேடயங்கள், இரும்புக் கவசங்கள் இன்னும் எத்தனையோ வகைப் போர்க் கருவிகள் குன்று குன்றாகக் குவிக்கப்பட்டு நிறைந்திருக்கிறது கோட்டாற்றுப் படைத்தளத்தின் ஆயுதச்சாலை.
எல்லாக் கேடயங்களிலும் அவற்றை எதிர்த்துப் பிடிக்கும் பக்கத்துக்குப் பின்னால் இருந்த குழியில் ஒரு சிறு கண்ணாடி பதிந்திருந்தது. கேடயத்தைப் பிடித்துக் கொண்டு போர் புரியும் போது முறையற்ற விதத்தில் எவரேனும் பின்புறமாகத் தாக்க வந்தால் அதில் பதிந்திருக்கும் கண்ணாடியின் மூலம் போரிடுபவன் அதைத் தெரிந்து கொள்வான். வீரர்களின் வசதிக்காக இந்தப் புதிய நுணுக்கத்தை அறிந்து கேடயத்தில் பொருந்தியிருந்தனர்.
போர் வீரர்கள் முழக்கும் துடி, பறை, கொம்பு, வளை, வயிர் முதலிய போர்க்கால வாத்தியங்களும் கோட்டாற்றுப் படைக்கோட்டத்தில் குறைவின்றி இருந்தன. யானைகளுக்குப் போர்த்தும், முகபாடங்களும், அவற்றை அடக்கும் அங்குசங்களும், அவற்றின் மேல் வைக்கும் அம்பாரிகளும் ஒருபுறம் பெருகிக் கிடந்தன. குதிரைகளை அலங்கரிக்கும் நெற்றிப் பட்டங்களும், கடிவாளங்களும், சேணங்களும் மற்றோர் புறம் நிறைந்திருந்தன. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளோடு முன் தோன்றி மூத்த குடிப்பெருமை அந்தப் பெரும்படைச் சாலையின் ஆயுதங்களில் விளங்கிற்று.
'எத்தனை போர்களில் எத்தனை வீரர்களுடைய தசையைத் துளைத்துக் குருதியைக் குடித்திருக்கும் இந்த ஆயுதங்கள்? இன்னும் எத்தனை போர்களில் அப்படிச் செய்ய இருக்கின்றனவோ? மண்ணைக் காப்பதற்குச் சில போர்கள். மண்ணைப் பறிப்பதற்குச் சில போர்கள். பெண்ணைக் காப்பதற்குச் சில போர்கள். பெண்ணைப் பறிப்பதற்குச் சில போர்கள். போர் செய்யத் தெரிந்த நாளிலிருந்து ஆயுதங்கள் புதிது புதிதாக வந்தன. ஆயுதங்கள் புதிது புதிதாக வந்த நாளிலிருந்து போர்களும் புதிது புதிதாகப் புதுப்புதுக் காரணங்களுக்காக உண்டாகிவிட்டன.
தளபதி வல்லாளதேவன் அன்று படைத்தளத்துக்கு வந்த போது அங்கிருந்த எல்லாப் பிரிவுகளிலும் பரபரப்பும் வேகமும் உண்டாயின. மேல்மாடத்தில் கோட்டையின் உயரமான கொடி மரம் அமைந்திருந்த மேடையில் ஏறி நின்று பார்த்தால் பரிமாளிகை (குதிரைகள் இருக்குமிடம்) கரிமாளிகை (யானைகள் இருக்குமிடம்) உட்பட யாவும் நன்றாகத் தெரியும். வீரர்களையும் படைத் தலைவர்களையும் ஒன்று கூட்டி நிலைமையை விளக்கி ஏற்பாடுகள் செய்வதற்காக அங்கே வந்திருந்த தளபதி கொடி மரத்து மேடையில் ஏறி நின்று கொண்டு அன்று தான் புதிதாகப் பார்க்கிறவனைப் போல் அந்தப் படைத்தளத்தின் மொத்தமான தோற்றத்தைப் பார்த்தான். படைத்தளமே ஒரு சிறிய நகரம் போல் காட்சியளித்தது.
'தென் பாண்டி நாட்டையும், மகாராணியையும் காப்பாற்றும் விதியின் வலிமை இந்தப் படைக் கோட்டத்திலும் இதில் நான் செய்யப் போகிற ஏற்பாடுகளிலும் அடங்கியிருக்கின்றன. ஆனால் தம்முடைய மூளையிலும் சிந்தனைகளிலும் அடங்கியிருப்பதாக மகாமண்டலேசுவரர் நினைத்துக் கொண்டிருக்கிறார் என்று அதைக் காணும் போது ஒரு நினைவு அவன் மனத்தில் உண்டாயிற்று. மகாமண்டலேசுவரர் இல்லாத இடத்தில் அவரைப் பற்றி அசூயையும், காழ்ப்பும், காய்ச்சலும் தன்மனத்தில் உண்டாவதை அவனால் தடுக்க முடியவில்லை. ஆனால் அவரை நேரில் பார்த்து விட்டாலோ பயம், அடக்கம், பணிவு எல்லாம் அவனையும் மீறி அவனிடத்தில் வந்து பொருந்திக் கொண்டு விடுகின்றன. துணிந்து ஓரிரு முறை அவரை சந்தித்துப் பேசியிருக்கிறானென்றாலும் அவ்வாறு பேசி முடிந்த பின் 'ஏன் பேசினோம்' என்று தன்னை நொந்து கொண்டிருக்கிறான். ஆழமும் அழுத்தமும் நிறைந்த அவருடைய கண்களின் முன் அவன் தனக்குத் தானே சிறு பிள்ளையாய்ப் போய்விடுவான். அவருடைய பார்வைக்கு முன்னால் அவனுக்கு உண்டாகிற தாழ்வு மனப்பான்மையை அவன் தவிர்க்க முடிவதில்லை. கணவனின் முகத்தைக் காணாத போது ஏற்பட்ட ஊடல் அவனைப் பார்த்து விட்டதுமே மறைந்துவிடும் பலவீனமான பெண் மனநிலையைத்தான் அவனுக்கு உவமை கூற வேண்டும்.
அவருடைய கட்டளைக்குத்தான் அவன் கீழ்ப்படிந்தான். அவன் என்ன? மகாராணியே அப்படித்தானே? ஆனால் எவருடைய கண்களுக்கு முன்னால் அவன் தலைகுனிவானோ, எவருடையோ கட்டளை அவனை ஆளுமோ, எவருடைய அறிவு அவனை மலைக்க வைத்ததோ, அவர் மேலேயே அவன் சந்தேகப்பட்டான்; பொறாமை கொண்டான். பிறருக்குத் தெரியாமல் அவர் நடவடிக்கைகளை நேரிலும், தன்னைச் சார்ந்தவர்களைக் கொண்டும் இடைவிடாமல் கண்காணித்தான்.
பெரிய அரசன் அரண்மனையின் ஒரு மூலையில் தூங்கிக் கொண்டிருந்தாலும் அவனுடைய ஆற்றலின் ஒளியால் அவனால் ஆளப்படும் நாட்டின் பல காதப் பரப்புக்குள்ளும் அவன் ஆணைகள், சட்டதிட்டங்கள் ஒழுங்காக நடப்பதற்குக் காரணம் என்ன? அவன் ஆளுமிடம் எங்கும் அவனுடைய ஆற்றல் ஒளி காக்கிறது.
'உறங்கமாயினும் மன்னவன் தன்னொளி
கறங்கு தெண்டிரை வையகம் காக்குமால்.'
கறங்கு சிந்தாமணியாசிரியர் கூறிய தொடர்தான் மகாமண்டலேசுவரரைப் பொறுத்த மட்டில் தளபதியின் தத்துவமாக இருந்தது. மகாமண்டலேசுவரர் தென்பாண்டி நாட்டின் மன்னர் இல்லை. ஆனால் இடையாற்று மங்கலத்திலோ அரண்மனையின் ஒரு மூலையில் இருந்து கொண்டு தம் எண்ணத்தின் ஒளியால் நாடு முழுவதும் காத்துக் கண்காணிக்க முடிகிறது. மந்திரவாதிகளுடைய கண் பார்வைக்கு எதிராளியைக் கட்டிவிடும் ஆற்றல் இருப்பது போல் அவரிடம் ஏதோ ஒரு அதீத ஆற்றல் இருப்பதாகத் தளபதிக்குப் பட்டது. கோட்டாற்றின் மாபெரும் படைத் தளத்தின் தலைவனாக இருந்தும் மகாமண்டலேசுவரரின் அந்த ஈடு இணையற்ற சதுரப் பாட்டில் நாலில் ஒரு பங்குகூடத் தனக்கு வரவில்லையே என்ற புகைச்சல் அவனுக்கு உண்டாயிற்று.
கண்ணுக்கு மையெழுதும் எழுதுகோலைத் தொலைவில் இருக்கும் போது கண்ணால் பார்க்க முடிகிறது. அதே எழுதுகோலால் மைதீட்டும் போது கண்களாலேயே அதைக் காண முடிவதில்லை. மகாமண்டலேசுவரரைக் காணாத போது பொறாமையைக் கண்ட தளபதிக்கு அவரை நேரில் கண்டால் அவரது பெருமைதான் தெரிந்தது.
கொடி மரத்து மேடையில் நின்று கொண்டு கண் பார்வையில் படுமிடம் வரை பரவியிருக்கும் அப்பெரும் படைத்தளத்தைப் பார்வையிட்ட போதும் மகாமண்டலேசுவரரைத்தான் அவன் நினைக்க முடிந்தது. தன் சிந்தனை அத்தனை பெரிய படைத்தளத்தையும் அந்த ஒரே ஒரு மனிதரையும் சமமாக நிறுத்துப் பார்ப்பது ஏனென்றே அவனுக்குப் புரியவில்லை.
அதோ! பூண் பிடித்த எடுப்பான தந்தங்கள் ஒளிரக் கருமலைகள் போல் நூற்றுக்கணக்கான யானைகள், வெண்பட்டுப் போல் பளபளக்கும் கொழுத்த உடல் வனப்புள்ள குதிரைகள், தேர்கள் - அவ்வளவையும் ஆளும் அந்த வீரத் தளபதியும் ஒரே மனிதரின் அறிவானச் சுழலை நினைக்கும் போது கொஞ்சம் நினைவு துவளாமல் இருக்க முடியவில்லை. உடலின் வன்மையால் வாழத் துடிக்கிறவனுக்கு எப்போதாவது ஏற்பட்டே தீரவேண்டிய சோர்வு இது.
கோட்டாற்றிலுள்ள ஆயுதச் சாலையில் இருந்தது போல் முன்பு நான் இடையாற்று மங்கலத்து விருந்தினர் மாளிகையில் தங்கின இரவில் அதன் அடியில் கண்ட பாதாள மண்டபத்தில் மகாமண்டலேசுவரர் ஆயுதங்கள் சேர்த்துக் குவித்து வைத்திருந்ததை நினைவுபடுத்திக் கொண்டான் வல்லாளதேவன்.
மனத்தில் நிகழும் போராட்டத்துக்கு ஓர் ஏற்பாடும் தோன்றாமல் நாட்டுக்கு வரப்போகும் போராட்டத்தைத் தாங்க வேண்டியதைச் செய்வதற்காகக் கொடி மரத்து மேடையிலிருந்து கீழிறங்கிப் படை முற்றத்துக்கு வந்தான் அவன். ஐநூறு பத்தி (பத்தியென்பது குறிப்பிட்ட தொகையினரைக் கொண்ட படையணி) வீரர்களின் சிறு தலைவர்களும் முரசமேடையைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர். அவர்கள் தன்னை வணங்கி வரவேற்ற வரவேற்பை ஏற்றுத் தளபதி படைகளை முற்றத்தில் அணிவகுத்து நிறுத்த வேண்டுமென்று கட்டளையிட்டான்.
கட்டளை பிறந்த அடுத்த கணம் ஊழிக்காலப் பேரிடிகள் ஏககாலத்தில் முழங்கிச் சாடுதல் போல் அந்தப் பெரும் முரசு முழங்கியது. நான்கு பக்கமும் நெடுந்தூரத்துக்குப் பரந்திருந்த படைக்கோட்டத்துப் பகுதிகளில் எல்லாம் அம் முரசொலி கேட்டது. பக்கத்துக்கு ஒருவராக இருபுறமும் நின்று கொண்டு அந்த முரசை முழக்கிய வீரர்கள் கை ஓயுமட்டும் முழக்கினர்.
அரை நாழிகைக்குள் அந்த முற்றம் பத்தி பத்தியாக அணிவகுத்த வீரர்கள் திருக்கூட்டத்தால் நிறைந்துவிட்டது. முரச முழக்கம் நின்றதும் அமைதி சூழ்ந்தது. ஆயிரக்கணக்கான வீரர்கள் அணிபெற்று நிற்கும் அந்தப் படைவெள்ளத்தில் ஊசி விழுந்தால் கூட ஓசை கேட்கும், அவ்வளவு நுண்ணிய அமைதி பரவி நின்றது. முரசு மேடையில் அவர்களின் சிறு தலைவர்களோடு ஏறி நின்று கொண்டு படைகளை நிதானித்துப் பார்த்தான் தளபதி வல்லாளதேவன்.
சோழனுக்கும், அவனோடு சேர்ந்திருக்கும் வடதிசை அரசர்களுக்கும் உள்ள படைகளின் மொத்தமான தொகையை மனம் அனுமானித்துக் கொண்டபடி ஒப்பு நோக்கித் தன் கண்ணெதிர் நிற்கும் படைப் பரப்போடு இணை பார்க்க முயன்றான் அவன். இணை பொருந்தவில்லை. ஏதாவது வெளியிலிருந்து படை உதவி கிடைத்தாலொழியத் தென்பாண்டிப் படை வடதிசைப் பெரும் படைகளின் கூட்டணியைச் சமாளிக்கப் போதுமானதாக இருக்காதென்று அவன் மதிப்பில் தோன்றியது. தன்னைச் சூழ்ந்து கொண்டு நின்ற அணித் தலைவர்களை நோக்கி அவன் ஆவேச உணர்ச்சியோடு பேசலானான்:
"நண்பர்களே! வெற்றியும், தோல்வியுமாகப் பல போர்களில் அனுபவப்பட்டுள்ள நாம் இப்போது மலைப்பு அடைய வேண்டிய நிலையில் இருக்கிறோம். வடக்கே சோழப் பேரரசின் படை பெரிது. அதோடு கொடும்பாளூர்ப் படை, கீழைப் பழுவூர்ப்படை ஆகிய சிறுபடைகளும் ஒன்று சேரப் போகின்றன. ஐந்து அரிய திறமைசாலிகள் ஒன்றுபட்டுக் கூட்டுப்படை அணியாக அது அமையலாம். சோழ கோப்பரகேசரி பராந்தகனும், கொடும்பாளூரானும், கீழைப் பழுவூர் கண்டன் அமுதனும், பரதூருடையானும், அரசூருடையானும் ஒவ்வொரு வகையில் போர் அனுபவம் மிகுந்தவர்கள். அவர்கள் ஒன்றுபட்டுக் கூட்டாகப் படையெடுக்கும் இந்தப் போரை வன்மம் பாராட்டிக் கொண்டு செய்யப் போகிறார்கள்.
"நாம் எல்லாருமே கடமையிற் கருத்துள்ள வீரர்கள் தாம். போர் செய்து மார்பிற் புண்களைப் பெறாத நாட்களெல்லாம் நம் வாழ்க்கையிலே பயனற்றுக் கழிந்த நாட்களென்று கருதுபவர்கள்தாம். கண்களுக்கு நேரே வேலை ஓங்கினால் இமைகள் மூடினும் அதையே தோல்வியாக எண்ணி நாணப்படும் அளவுக்குத் தன்மானமும், மறப்பண்புள்ள மகாவீரர்களும் நம்மில் அநேகர் இருக்கின்றனர்.
"கொற்கை, கரவந்தபுரம் பகுதிகளில் வடதிசையரசர் மறைமுகமாக நடத்திய குழப்பங்களைக் கொண்டு விரைவில் படையெடுப்பு நிகழலாமென்ற பயம் ஏற்பட்டிருக்கிறது. கரவந்தபுரத்துக் கோட்டையில் பெரும்பெயர்ச் சாத்தனிடமுள்ள படையும் தயாராகவே இருக்கிறது. வடக்கு எல்லையில் போர் தொடங்கும் என்ற தகவல் உறுதிப் பட்டவுடன் எந்தக் கணத்திலும் நமது பெரும் படை வடக்கே புறப்படத் தயாராயிருக்க வேண்டும். இப்போது வடக்கேயிருந்து ஒற்றுமையாகச் சேர்ந்து படையெடுக்கும் இந்த வடதிசையரசர்கள் முன்பு தனித்தனியாகப் போர் செய்த போது நாம் பலமுறைகள் வெற்றி பெற்றிருக்கிறோம். ஆனால் அப்போதெல்லாம் குமாரபாண்டியர் உடனிருந்து போருக்குத் தலைமை தாங்கியதனால் நமக்கு உற்சாகமும், நம்பிக்கையும் இருந்தன. இப்போதோ, குமாரபாண்டியரும் நம்முடன் இல்லை. ஒரு வேளை போர் தொடங்கும் நாள் நீடித்தால் அவர் வந்து விடலாம். உறுதி இல்லை. வந்தால் நமது நல்வினையாகும்.
"எப்படியிருப்பினும் குறைவோ, நிறைவோ நமது அவநம்பிக்கைகள் மறந்து ஊக்கமோடு போரில் ஈடுபடுகிற வீரம் நம்மை விட்டு ஒரு போதும் போய்விடாது. என்னைப் பொறுத்தவரையில் இந்த நாட்டுக்காக என் உயிரைக் கொடுக்க எந்த விநாடியும் நான் தயாராயிருக்கிறேன். செஞ்சோற்றுக் கடனும், செய்நன்றிக் கடனும் பட்டிருக்கிறோம் நாம். இந்தப் போரில் எவ்வளவு ஊக்கத்தோடு நீங்கள் ஈடுபடுவீர்களென்பதை இப்போது நீங்கள் செய்யும் வீரப்பிரமானம் மூலமும் சூளுரை மூலமும் நான் அறியப் போகின்றேன்" என்று சொல்லி நிறுத்தினான் தளபதி.
அவன் பேச்சு நின்றது. வீரர்கள் வாளை உருவி வணங்கி வீரப்பிரமாணம் செய்தனர். "செஞ்சோற்றுக் கடன் கழிப்போம், செய்நன்றி மறவோம்" என்ற சூளுரைக் குரலொலி கடல் ஒலி போல் எழுந்தது.
தளபதி நின்று கொண்டிருந்த முரசு மேடைக்கு நேரே படைக்கோட்டத்தின் தலைவாயில் இருந்தது. தற்செயலாக வாயிற் பக்கம் சென்ற பார்வை அங்கே நிலைத்தது தளபதிக்கு. ஆபத்துதவிகள் தலைவன் குதிரையில் கனவேகமாக வந்து இறங்கித் தன்னைத் தேடிப் படைக்கோட்டத்துக்குள் நுழைவதைத் தளபதி பார்த்தான். அவன் மனத்தில் ஆவல் துள்ளி எழுந்தது.
------------
2.19. கருணை வெள்ளம்
காந்தளூர் மணியம்பலத்திலிருந்து இருளில் புறப்பட்ட சிவிகைப் பயணம் தொடர்ந்தது. பல்லக்குத் தூக்குகிறவர்களுடைய துவண்ட நடையையும் வாடித் தொங்கினாற் போல் இருந்த புவன மோகினியின் முகத்தையும் கவனித்த போது தான் மகாராணிக்குத் தான் செய்து விட்ட பெருந்தவறு புரிந்தது.
தன் ஒருத்தியோடு போகாமல் காலையில் புறப்பட்டதிலிருந்து அவர்கள் வயிற்றைக் காயப்போட்டு விட்டோமே என்ற உணர்வு அப்போதுதான் அவர் நெஞ்சில் உறைத்தது. அவருடைய மிக மெல்லிய மனம் வருத்தமுற்றது. அரண்மனையிலிருந்து சுசீந்திரத்துக்கும், சுசீந்திரத்திலிருந்து காந்தளூருக்கும், காந்தளூரிலிருந்து மீண்டும் அரண்மனைக்குமாக பல்லக்குத் தூக்கும் ஆட்களை இழுத்தடித்து அலைய வைக்கிறோம் என்ற உணர்வைத் தாங்கிக் கொள்ளக்கூட முடியவில்லை.
'எனக்குத்தான் ஏதேதோ கவலைகளில் பசியே தோன்றவில்லை யென்றால் எல்லோருக்குமா அப்படி இருக்கும்? இதோ இந்த வண்ண மகளின் முகத்தில் பசியின் சோர்வுக் களை படர்ந்து பரிதாபகரமாகத் தோன்றுகிறதே. என்னிடம் பசியைச் சொல்வதற்குப் பயப்பட்டுக் கொண்டு பேசாமல் உட்கார்ந்திருக்கிறாளென்று தெரிகிறது. பல்லக்குத் தூக்கிகள் பாவம்! மகாராணி சொல்லும் போது மறுக்கக் கூடாதேயென்று பயத்தினாலும், பதவி, பெருமை காரணமாக உண்டாக்கிக் கொண்ட மரியாதைகளாலும் பசியை, நடையை - சுமைக்களைப்பைக் கூறாமல் ஏவியபடி நடக்கிறார்கள். அடடா! சிலபேர் பதவியினாலும், அறிவு மிகுதியினாலும், வயது மூப்பினாலும் மற்றவர்களுடைய துன்பங்களையும், எண்ணங்களையும் பொருட்படுத்தாமல், புரிந்து கொள்ளாமல் தங்களை அறியாமலே பிறருக்குத் துன்பம் தருவது போல், நானும் நடந்து கொண்டு விட்டேனே. அழுதாலும் வாய்விட்டுக் கதறினாலும் தான் துன்பமா? அழாமலும் கதறாமலும் விளாம்பழத்துக்கு வெளியே தெரியாமல் உள்ளுக்குள்ளேயே வரும் நோய் போல் நெஞ்சிலேயே ஏங்கி மாய்ந்து வேதனைப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் இந்த உலகில் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள்?'
மகாராணி பல்லக்கை நிறுத்தச் சொல்லிவிட்டு அதைச் சுமப்பவர்களை விசாரிப்பதற்காகத் தலையை வெளியே நீட்டி கேட்டார், "அப்பா! நீங்களெல்லாம் எப்போது சாப்பிட்டீர்கள்? எனக்குப் பயந்து கொண்டு ஒளிக்காமல் மறைக்காமல் உங்கள் துன்பங்களை சொல்லுங்கள். உங்களுக்கு களைப்பும் பசியும் அதிகமாயிருக்குமே?"
"தாயே! நாங்கள் காலையில் அரண்மனையிலிருந்து புறப்பட்ட போது சாப்பிட்டதுதான். பசியையும், களைப்பையும் பற்றி நாங்கள் கவலையே படவில்லை. மகாராணியாருக்குப் பணிபுரியும் பாக்கியமே போதும்" என்று விநயமாக மறுமொழி கூறினான். பல்லக்கின் முன்கொம்பைச் சுமந்து கொண்டு நின்ற இருவரில் ஒருவன்.
"புவன மோகினி! உன் முகத்திலும் பசிக்களை படர்ந்து விட்டது. நீ சொல்லாமல் இருந்தாலும் எனக்குத் தெரிகிறது. 'மகாராணியோடு இனிமேல் எங்குமே வெளியில் புறப்பட்டு வரக்கூடாது. வந்தால் வயிறு காய வேண்டியதுதான்' என்று உன் மனத்துக்குள் என்னைத் திட்டிக் கொண்டிருப்பாய்" என்றார் மகாராணி.
"தாங்களே வெறும் வயிற்றோடு இவ்வளவு சுற்றிக் கொண்டிருக்கும் போது நாங்கள் அப்படியெல்லாம் நினைக்க முடியுமா? பயண அலுப்பினால் கொஞ்சம் தளர்ந்து போனேன். வேறொன்றுமில்லை" என்று சிறிது வெட்கத்தோடு தலை தாழ்த்திக் கொண்டு பதில் சொன்னாள் புவன மோகினி. தான் சொல்லக்கூடாதென்று அடக்கிக் கொண்டிருந்தாலும் தன் வயிற்றுப் பசி வேதனை மகாராணிக்கு எப்படியோ தெரிந்துவிட்டதே என்று நாணினாள் அவள்.
'இவர்களுடைய பசிக்கு ஏதாவது வழி செய்து தான் ஆக வேண்டும். இல்லாவிட்டால் பெரும் பாவத்தைச் செய்தவள் ஆவேன்' என்ற உடனடியான உணர்ச்சித் துடிப்பு மகாராணியின் மனத்தில் ஏற்பட்டது. அந்தக் காந்தளூர் நெடுஞ்சாலையில் ஒரு கேந்திரமான இடத்தில் நான்கு கிளை வழிகள் பிரிந்தன. நான்கில் எந்த வழியாகச் சென்றாலும் பாதை சுற்றி அரண்மனைக்குப் போய்ச் சேர முடியும். வழிகள் பிரிகிற இடத்துக்கு வந்ததும், "முன்சிறை வழியாக அரண்மனைக்குச் செல்லும் பாதையில் செல்லுங்கள்" என்று ஏதோ ஒரு தீர்மானத்துக்கு வந்த கருத்தோடு சுமப்பவர்களிடம் கூறினார் மகாராணி. புவன மோகினி குறுக்கிட்டு அதைத் தடுத்துக் கூறினாள்:
"முன்சிறை வழியாகச் சுற்றிக் கொண்டு சென்றால் அரண்மனையை அடைவதற்கு நள்ளிரவு ஆகிவிடுமே! வேண்டாம் தேவி! எங்களுடைய பசியைப் பற்றி ஏதோ நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டு நீங்கள் முன்சிறைப் பாதையாகப் போகலாமென்று சொல்கிறீர்கள் போலிருக்கிறது. இந்தப் பசி ஒன்றும் பிரமாதமில்லை. இதை எங்களால் தாங்கிக் கொள்ள முடியும். நாங்களாவது ஒரு வேளை சாப்பிட்டிருக்கிறோம். பச்சைத் தண்ணீரால் கூட வயிற்றை நனைத்துக் கொள்ளாமல் மகாராணியாரே எங்களோடு வரும் போது எங்கள் பசியும் களைப்புமா எங்களுக்குப் பெரிது?"
"இல்லை அம்மா! நீ சொல்வது தவறு. என்னையறியாமலே இன்று காலையிலிருந்து இந்தக் கணம் வரை உங்களையெல்லாம் துன்புறுத்திக் கொண்டிருந்து விட்டேன் நான். நீங்கள் எல்லாம் பசியும் களைப்பும் அடைந்திருக்கிறீர்கள் என்பதை நான் உணராமலும், நினைக்காமலும் இருந்தது எவ்வளவு பெரிய தவறு? பிறரைத் துன்புறுத்துகிறதை உணராமல் நாகரிகமாகவும், கௌரவமாகவும் இருந்து விடுகிறோம் சில சமயங்களில்."
"தேவி! தங்கள் கவலைகள் ஆயிரமாயிரம். அவற்றுக்கிடையிலும் கருணையும், இரக்கமும் எங்கள் மேலிருக்கின்றன என்று அறிவதே எங்களுக்கெல்லாம் வயிறு நிறைந்த மாதிரி. முன்சிறைக்குப் போய் நேரத்தை வீணாக்க வேண்டாம். தவிர, நமது சிவிகை போய்ச் சேருகிற நேரத்துக்கு அறக்கோட்டத்தில் உணவு வைத்திருப்பார்களா என்பது சந்தேகம் தான்!"
"எல்லாம் வேண்டிய உணவு இருக்கும். என் சொற்படி கேளுங்கள் தடுத்துப் பேசாமல் முன்சிறைக்கே செல்லுங்கள்" என்று உறுதியான குரலில் மகாராணி உத்தரவிட்ட பின் புவன மோகினியால் தடுக்க முடியவில்லை. சிவிகை வழிமாறி விரைந்தது. வெள்ளம் போல் பெருகும் இந்தக் கருணை உள்ளத்தை நினைத்த போது சிவிகை சுமப்பவர்களுக்குக் கூட மனம் உருகியது. அதிகாரம் செய்பவர்களுக்கு அநுதாபப்படும் பண்பு குறைவாயிருக்கும். ஆனால் மகாராணி வானவன்மாதேவிக்கு அநுதாப்படும் பண்பு அதிகமாக இருந்தது. அதிகாரம் செய்யும் பண்பு மிகக் குறைவு என்பது அவரோடு சிறிது நேரம் பழகினாலும் தெளிவாகத் தெரிந்து விடும்.
---------
2.20. எதையும் இழக்கும் இயல்பு
இரவு ஒன்பது, பத்து நாழிகை இருக்கும். முன்சிறை அறக்கோட்டத்தின் முன்வாயிற் கதவுகள் அடைக்கப்பட்டு விட்டன. அறக்கோட்டத்து வேலைகளை முடித்துக் கொண்டு ஓய்வாக அமர்ந்து உரையாடலில் ஈடுபட்டிருந்தனர் அண்டராதித்தனும் கோதையும்.
"இன்னும் ஒரு நாள் கொற்கையில் தங்கி முத்து மாலை வாங்கிக் கொண்டு வந்திருக்கலாம். கலவரத்தை சாக்குக் காட்டிப் பயமுறுத்தி என்னை இழுத்துக் கொண்டு வந்து விட்டீர்கள். இப்படித் தொடர்ந்து என்னை ஏமாற்றிக் கொண்டே வருகிறீர்கள். இது கொஞ்சங் கூட உங்களுக்கு நன்றாயில்லை" என்று கோதை வம்புக்குக் கொடி கட்டி பறக்கவிட்டாள்!
"அதுதானே கேட்டேன்! காரியத்தோடுதான் பேசுவதற்கு வந்தாயா! அன்றைக்கு நாம் இருவரும் கொற்கையிலிருந்து அந்த நேரத்தில் திரும்பியிருக்கா விட்டால் அந்தக் கரவந்தபுரத்துப் பிள்ளையாண்டான் பாழ்மண்டபத்தில் அழுதுகொண்டே கிடந்து திண்டாடியிருப்பான். பாவம்! அவனுக்கு அப்படியா நேரவேண்டும்? எந்தப் பயல்களோ திருமுகத்தைப் பறித்துக் கொண்டு அடித்துப் போட்டுவிட்டுப் போயிருக்கும் போது நாம் சென்றதால் அவனுக்கு உதவ முடிந்தது கோதை! இந்த மாதிரி மற்றவர்களுக்குத் துன்பத்தைப் போக்கி உதவுவதில் கிடைக்கும் பெருமை ஒரு முத்துமாலையைக் கழுத்தில் அணிந்து கொள்வதால் கிடைக்குமா?"
"அடடா! என்ன சாமர்த்தியமான பதில்! உலகத்திலுள்ள ஆண்பிள்ளைகள் அத்தனை பேரும் எங்கெங்கோ நன்றாகப் பேசிப் பெயர் வாங்கிவிடுகிறார்கள். வீட்டுப் பெண்களிடம் பேசும் போது மட்டும் இப்படி அசடு வழிந்து விடுகிறதே? 'எனக்கு முத்துமாலை வாங்கித் தருவதற்கு வக்கில்லை' என்று ஒப்புக் கொள்ளுங்களேன். ஏன் இப்படி பூசி மெழுகிப் பதில் சொல்கிறீர்கள்?"
"அம்மா தாயே! பரதேவதை! உன் வெண்கல நாக்கைக் கொஞ்சம் அடக்கியே பேசு. மூலைக்கு மூலை படுத்துத் தூங்கிக் கொண்டிருக்கும் யாத்திரிகர்கள் விழித்துக் கொண்டு விடப் போகிறார்கள். உன்னிடம் நான் படும்பாட்டை வேறு ஆண்பிள்ளைகள் பார்த்துவிட்டால் வெட்கக் கேடுதான்!"
"இந்தப் பயம் மட்டும் உங்களுக்கு இருக்கிறதே, ஒரு முத்துமாலை வாங்கிக் கொடுத்து விடுவதுதானே?"
"கோதை உனக்கு ஒரு 'அறிவுரை' சொல்கிறேன் கேள். 'உன்னுடைய மனைவி உனக்கு அடங்கிய கற்பும் புகழும் உடையவளாய் இருந்தால் நீ உன் பகைவர்களுக்கு முன் பீடு நடை நடக்கலாம்' என்று திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார். இந்த அறிவுரையை உன்னைப் போன்ற அடங்காப்பிடாரிப் பெண்களை நினைத்துக் கொண்டுதான் அவர் கூறியிருக்கிறார்."
"ஆகா! அறிவுரைக்கு ஒன்றுமே குறைவில்லை. உலகில் மலிவாக வேண்டாமென்று வெறுத்து ஒதுக்கும் அளவுக்குக் கிடைக்கக்கூடிய பொருளாயிற்றே அது! உங்களுக்குப் பகைவர்களும் இல்லை, நீங்கள் அவர்கள் முன் பீடு நடை நடக்கவும் வேண்டாம்."
"நீ இப்படி முரண்டு பிடித்தால் கூறாமற் சந்நியாசம் கொள்வதைத் தவிர எனக்கு வேறு வழி இல்லை!"
"சந்நியாசம் கொள்கிற ஆளைப் பார். ஒரு பானை புளிக்குழம்பும், புளித்த தயிரும், பழைய சோறும் படுகிற பாட்டில் சந்நியாசமாம், சந்நியாசம்!"
"ஐயோ! மானம் போகிறதடி... மெல்லப் பேசேன்."
இந்த வேடிக்கைத் தம்பதிகள் இப்படி இரசமாகப் பேசிக் கொண்டிருக்கிற கட்டத்தில் அறக்கோட்டத்தின் வாயிற் கதவு பலமாகத் தட்டப்பட்டது. இருவரும் எழுந்திருந்து போய்க் கதவைத் திறந்தார்கள். அந்த அகாலத்தில் இருளில் வாயிலில் நின்று கொண்டிருந்தவர்களைப் பார்த்ததுமே அவர்கள் திகைப்பின் எல்லையை அடைந்தனர்.
மகாராணி வானவன்மாதேவியாரும் மற்றொரு பெண்ணும் வாயிலில் நின்று கொண்டிருந்தனர். பல்லக்கை இறக்கிவிட்டு ஓய்ந்து போய் நிற்கும் நாலு போகிகளையும் (பல்லக்குத் தூக்கிப் போவோர்) அண்டராதித்தனும் கோதையும் கண்டனர்.
"தேவீ! வரவேண்டும், வரவேண்டும் இந்த நேரத்தில் எதிர்பாராத விதமாகத் தாங்கள் வந்தருளியது அறக்கோட்டத்துக்கே பெருமை" என்று பரபரப்படைந்து கூறினான் அண்டராதித்தன். கோதை ஒன்றும் பேசத் தோன்றாமல் பயபக்தியோடு மகாராணியைக் கைகூப்பி வணங்கினாள். அவசரம் அவசரமாக உள்ளே ஓடிப்போய்க் கைவிளக்கைப் பொருத்தி ஏற்றிக் கொண்டு வந்தான் அண்டராதித்தன். அவன் விளக்கை முன்னால் பிடித்துக் கொண்டு மகாராணியையும் வண்ண மகளையும் உள்ளே அழைத்துச் சென்றான்.
கோதை ஓடிப் போய் மகாராணி அமர்வதற்கேற்ற ஆசனம் ஒன்றைத் தேடி எடுத்துக் கொண்டு வந்து போட்டாள். மகாராணி அமர்ந்து கொண்டார். அண்டராதித்தன் மகாராணி என்ன கூறப் போகிறார் என்பதைக் கேட்பதற்குச் சித்தமாகக் கைக்கட்டி வாய் பொத்திப் பவ்யமாக அருகில் நின்றான். புவன மோகினி தரையில் மகாராணிக்கு அருகே உட்கார்ந்து கொண்டாள். மருண்ட பார்வையோடு கோதை அண்டராதித்தனின் முதுகுக்குப் பின்னால் அடக்க ஒடுக்கமாகத் தோற்றமளித்தாள். அவளுடைய கலகலப்பான சுபாவத்துக்கும், குறுகுறுப்பான பேச்சுக்கும் முற்றிலும் மாறாக இருந்தது, அவள் செயற்கையாக வருவித்துக் கொண்ட அந்த அடக்கம்.
"என்ன ஐயா, அறக்கோட்டத்து மணியக்காரரே! பசியோடு உங்கள் அறக்கோட்டத்தைத் தேடிக் கொண்டு வந்திருக்கிறோம். எங்கள் வயிற்றை நிரப்புவதற்கு ஏதாவது வைத்திருக்கிறீரா?"
மகாராணி விளையாட்டுக்காகக் கேட்கிறாரென்று நினைத்துக் கொண்டான் அண்டராதித்தன்.
"தேவி! தாங்கள் உத்தரவிட்டால் இப்போதே அறுசுவை உண்டி தயாரித்து அளிக்கிறோம்."
"தயாரிக்கவும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம். இந்த வேளையல்லாத வேளையில் உம்மையும் உமது மனைவியையும் சிரமப்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை. கைவசம் என்ன உணவு இருந்தாலும் அது போதும்!"
"கைவசம் ஒன்றும் வகையாக இல்லை. ஒரு நொடியில் அட்டிற்சாலையில் மடைப் பரிசாரகம் புரியும் பணிப்பெண்களை எழுப்பி வந்து அடுப்பு மூட்டச் சொல்லிவிடுகிறேன்."
"அடுப்பு மூட்டச் சொல்வது இருக்கட்டும். கையில் என்ன உணவு இருந்தாலும் நாங்கள் உண்ணத் தயார். வகையாக வேண்டுமென்று இப்போது நாங்கள் எதிர்பார்க்கவில்லை."
மகாராணி விளையாட்டுக்காகக் கேட்கவில்லை, உண்மையாகவே கேட்கிறாரென்று அவனுக்கு அப்போதுதான் விளங்கியது.
"தேவீ! நீங்கள் அப்படிச் சொல்லக்கூடாது? பொறுத்திருந்து நாங்கள் தயாரிக்கும் அறுசுவை உணவை ஏற்றுக் கொண்டு தான் போக வேண்டும். வராதவர் வந்திருக்கிறீர்கள்" என்று கோதை பணிவான குரலில் முன்னால் வந்து வேண்டினாள். அவள் குரலில் ஆவல் கிளர்ந்து ஒலித்தது!
"நான் சாப்பிட வேண்டுமென்பதற்காகக் கேட்கவில்லை பெண்ணே! எனக்கு அது முக்கியமில்லை. பல்லக்குச் சுமந்து கொண்டு வந்தவர்களின் பசியை முதலில் தீர்த்து விட வேண்டும்! அப்புறம் இந்தப் பெண் காலையிலிருந்து என்னிடம் சொல்லாமல் பட்டினி கிடக்கிறாள். இவள் பசியையும் தீர்க்க வேண்டும்!"
"நீரில் இட்ட பழைய சோறும், புளிக் குழம்பும் தான் இருப்பவை. அவை இந்த நேரத்தில் வாய்க்குச் சுவையாக இருக்காது. தயவு செய்து அடிசில் ஆக்கியே அளித்து விட அனுமதிக்க வேண்டும்" என்று கெஞ்சினாள் கோதை. மகாராணி கேட்கவில்லை. இருந்த உணவே போதும் என்றார். அண்டராதித்தன் வாயிற்புறம் போய்ப் பல்லக்குத் தூக்கிகளை அழைத்து வந்து உட்கார்த்தினான்.
கோதை சோற்றைப் பிசைந்து ஒவ்வொருவருக்கும் இலையில் கொண்டு வந்து வைத்தாள். புவன மோகினிக்குக் கூட அதையே அளித்தாள் அவள். மகாராணிக்கு மட்டும் அந்தப் பழைய சோற்றைக் கொடுக்கவில்லை. பயந்து கூசிப் பேசாமல் இருந்துவிட்டாள். அரண்மனையில் முக்கனிகளும், பாலும், தேனும், நறு நெய்யும், அறுசுவை உண்டிகளும் உண்ணும் மகாராணியிடம் சில்லிட்டுக் குளிர்ந்த பழைய சோற்றையும், ஆறிப்போன புளிக் குழம்பையும் எப்படிக் கொடுப்பது? புதிதாகத் தயாரிக்கவும் மகாராணி சம்மதிக்க மாட்டேனென்கிறார்.
குழந்தைகள் உண்பதைக் கருணை ததும்பி வழிந்து அகமும் புறமும் தளும்ப இருந்து காணும் தாய் போல, அவர்கள் உண்பதைப் பார்த்துக் கொண்டே வீற்றிருந்தார் மகாராணி. அவர் உள்ளம் நிறைந்தது.
எல்லோரும் உண்டு எழுந்த பின் கோதை சோறு பிசைந்த உண்கலத்தில் ஒரு சிறு தேங்காயளவு பழைய சோறு மீதம் இருந்தது. மகாராணி அதைப் பார்த்தார். கோதையை அருகில் கூப்பிட்டு, "பெண்ணே! அந்தச் சோற்றை ஓர் இலையில் திரட்டி வைத்து எடுத்துக் கொண்டு வா" என்று கூறினார்.
"தேவி... அது..." ஏதோ சொல்லித் தடுக்க முயன்றாள் கோதை.
"சொன்னால் சொன்னபடி எடுத்துக் கொண்டு வா" என்று அழுத்தமான தொனியில் மகாராணி இடையிட்டுக் கூறியதால் கோதை மறுபேச்சுப் பேச வழியில்லை. அப்படியே இலையில் திரட்டி எடுத்துக் கொண்டு வந்தாள்.
மகாராணி தின்பண்டத்துக்காக கையை நீட்டி ஒரு செல்லக் குழந்தையைப் போல் இரு கைகளையும் நீட்டி ஆசையோடு இலையை வாங்கிக் கொண்டார். அடுத்த கணம் அவருடைய வலக்கை விரல்கள், இடது கையில் ஏந்திக் கொள்ளப்பட்ட இலையிலிருந்து சோற்றுத் திரளை அள்ளி வாய்க்குக் கொண்டு போயின.
பல்லக்குத் தூக்கிகள், வண்ணமகள், கோதை, அண்டராதித்தன் - அத்தனை பேருக்கும் ஒரே திகைப்பு. பிடிவாதமாக அந்தச் சோறுதான் வேண்டுமென்று மகாராணி வற்புறுத்திக் கேட்டு வாங்கிச் சாப்பிடும் போது எப்படித் தடுக்க முடியும்?
எல்லோரும் இரக்கமும், பரிதாபமும் ததும்பும் விழிகளால் இலையை ஒரு கையால் ஏந்தி மற்றொரு கையால் உண்ணும் அந்தப் பேரரசியை இமைக்காமல் பார்த்துக் கொண்டு நின்றார்கள்.
"ஏன் இப்படிப் பார்க்கிறீர்கள்? பாற்சோறு உண்கிறவள் பழைய சோறு உண்கிறேனே என்று தானே வியக்கிறீர்கள்? பாற்சோறானால் என்ன? பழைய சோறானால் என்ன? பார்த்தால் இரண்டும் ஒரே நிறந்தான்!" - சிரித்துக் கொண்டே அவர்களுக்குச் சொன்னார் மகாராணி.
'எதையும் இழக்கத் துணிகிற மனம் வேண்டும்' என்று காந்தளூர் மணியம்பலத்தில் மகாராணி தனக்குத் தானே சொல்லிக் கொண்ட வாக்கியம் புவனமோகினிக்கு இப்போது நினைவுக்கு வந்தது.
சிறிது நேரம் அறக்கோட்டத்தில் இருந்து விட்டு, இரவே பயணத்தை மீண்டும் தொடங்கி அரண்மனைக்குப் போய் விட்டார்கள் அவர்கள்.
---------
2.21. சதி உருவாகிறது
கொடும்பாளூர் அரச மாளிகையின் ஒரு புறத்தே தனியாக அமர்ந்து, பல செய்திகளையும் பேசிய பின் வடதிசையரசர்கள் வாளை உருவி நீட்டிச் சூளுரை செய்து கொண்டிருந்த சமயத்தில் அந்த வீரன் வந்து அப்படிக் கூறியது பரபரப்பை உண்டாக்கிவிட்டது.
"அரசே! அவசரமாக ஓர் ஒற்றன் தேடிக் கொண்டு வந்திருக்கிறான். அவனை இங்கே அனுப்பலாமா?" என்று சோழனிடம் மட்டும் தான் கேட்டுத் தெரிந்து கொண்டு போக வந்தான் அவன். கொடும்பாளூர் மன்னன் தன் வாள் நுனியால் அடித்துத் தள்ளிய வண்டு வந்தவன் முகத்தில் போய் விழுந்ததனால் அவன் 'என்னவோ, ஏதோ' என்று எண்ணி ஒரு கணம் பொறி கலங்கிப் போய்விட்டான்.
"ஒற்றன் எங்கிருந்து வந்திருக்கிறானாம்?" என்று சோழன் கேட்ட கேள்விக்குத் தன்னை சமாளித்துக் கொண்டு மறுமொழி சொல்லச் சிறிது நேரம் பிடித்தது அவனுக்கு.
"அந்த ஒற்றனை இங்கேயே அனுப்பிவை" என்று வந்தவனுக்குக் கூறி அனுப்பினான் சோழன். ஒற்றன் கொண்டு வரும் செய்தி என்னவாக இருக்குமோ என்ற பரபரப்பு ஒவ்வொருவருக்கும் ஏற்பட்டது. ஒவ்வொருவருடைய கண்களும் தங்கள் முகத்தைத் தவிர மற்ற நான்கு பேருடைய முகங்களையும் பார்ப்பதில் ஆவல் காட்டின. எல்லோரும் எல்லோரையும் பார்த்துவிட முயல்கின்ற அந்த நிலை ஒருவர் மனத்தையும், உணர்ச்சியையும் அறிய முற்படுவதில் மற்றவருக்கு எவ்வளவு துடிப்பு இருக்கிறது என்பதைக் காட்டியது. அந்தத் துடிப்பின் வேகத்துக்கு உச்சநிலை உண்டாக்குகிறவனைப் போல் ஒற்றன் அவர்களுக்கு முன்னால் வந்து பணிவாக வணங்கியபடியே நின்றான்.
இப்போது எல்லோர் கண்களும் ஒற்றன் முகத்தை ஊடுருவின. சோழன் உரிமையையும், அதிகாரம் செய்யும் ஆற்றலையும் காட்டும் பாவனையில், "என்ன செய்தி கொண்டு வந்தாய்? விரைவில் சொல். எங்கள் ஆவலை வளர்க்காதே" என்று ஒற்றனை அதட்டினான். நடுங்கும் குரலில் ஒற்றன் கூறத் தொடங்கினான்.
"வேந்தர் வேந்தே! தென்பாண்டி நாட்டின் வடக்கு எல்லைப் பகுதிகளில் முன்பு போல் இப்போது எங்களால் கலவரமும், குழப்பமும் செய்ய முடியவில்லை. கரவந்தபுரத்து வீரர்கள் எல்லைப்புறப் பகுதிகளில் விழிப்புடன் காத்து நிற்கிறார்கள். முத்துக்குளிக்கும் துறையைச் சுற்றித் தேவையான படை வீரர்களைக் காவல் வைத்துக் கொண்டு, முத்துக் குளிப்பைத் தொடர்ந்து நடத்துகிறார்கள். 'நாம் படையெடுக்கப் போகிறோம்' என்ற செய்தியைப் பரவ விட்ட போது தொடக்கத்தில் அங்கேயிருந்த பரபரப்பு இப்போது இல்லை. மகாமண்டலேசுவரரான இடையாற்று மங்கலம் நம்பி அரண்மனையிலே வந்து தங்கியிருந்து எல்லாக் காரியங்களையும் தம்முடைய நேரடி மேற்பார்வையில் செய்கின்றாராம். போர் நேரிட்டால் ஈழ நாட்டுப் படைகளும், சேர நாட்டுப் படைகளும் தென்பாண்டி நாட்டுக்கு உதவியாக வந்து சேர்ந்து கொள்ளலாமென்று ஒரு தகவல் காதில் விழுகிறது. இதோ அந்தச் செய்திக்கு ஆதாரமாக ஓர் ஓலையையும் கைப்பற்றினோம்" என்று சொல்லிக் கொண்டே, தான் கொணர்ந்திருந்த ஓலையை எடுத்துக் கொடுத்தான் ஒற்றன்.
சோழன் அதை வாங்கி விரித்தான். மற்ற நால்வரும் ஓடி வந்து அவனைச் சூழ்ந்து கொண்டார்கள். அந்தத் திருமுகவோலை இடையாற்று மங்கலம் நம்பியால் கரவந்தபுரத்துச் சிற்றரசனுக்கு அனுப்பப்பட்டதாகும். மிகமிக முக்கியமான இரகசிய ஓலை என்பதைக் காட்டும் அரசாங்க இலச்சினைகளெல்லாம் அதில் இருந்தன. 'வடதிசையரசர் படையெடுப்பு நேர்ந்தாலும் அதை நினைத்து அதிகம் கவலை கொள்ள வேண்டிய அவசியமில்லையென்றும் ஈழப் பெரும் படையும், மலைநாட்டுச் சேரர் படையும் தங்களுக்கு உதவி புரியும்' என்றும் மகாமண்டலேசுவரர் கரவந்தபுரத்துப் பெரும்பெயர்ச்சாத்தனுக்குப் பரம இரகசியமாக எழுதியிருந்தார் அந்த ஓலையில்.
"கரவந்தபுரத்துத் தூதனிடமிருந்து கைப்பற்றியதென்று முன்பே ஒரு செய்தித் திருமுகத்தை நம் ஆட்கள் அனுப்பியிருந்தார்கள். அதில் கண்ட செய்திகளுக்கும், இதில் காணும் செய்திகளுக்கும் முழு அளவில் முரண்பாடு இருக்கிறதே? நாம் படையெடுக்கப் போகிறோமென்ற செய்தியைக் கேட்டு அவர்கள் பீதியும் பரபரப்பும் அடைந்திருப்பதை அந்த ஓலையிலிருந்து அனுமானித்தோம். ஆனால் இப்போது கிடைத்திருக்கும் இந்த ஓலையிலோ போரைப் பற்றியே கவலைப்படாமல் 'பாராமுகமாக இருப்பது போலத் தெரிகிறது'. இதன் மர்மம் என்னவாக இருக்கும்?"
சோழ கோப்பரகேசரி பராந்தகன் அந்த ஓலையைப் படித்து முகத்தில் சிந்தனைக் குறியுடன் மற்றவர்களைப் பார்த்து இப்படிக் கேட்டான்:
"எனக்கு ஒரு சந்தேகம். இவ்வளவு அந்தரங்கமான அரசாங்கச் செய்தி அடங்கிய திருமுகத்தை நம் ஒற்றர் கையில் சிக்கிவிடுகிற அளவு சாதாரணமான முறையில் மகாமண்டலேசுவரர் எப்படிக் கொடுத்தனுப்பினார்? நாம் சிந்திக்க வேண்டிய இடம் இதுதான்!" என்று கொடும்பாளூரான் தன் சந்தேகத்தைத் தெரிவித்தான். உடனே ஒற்றன் குறுக்கிட்டுப் பதில் சொன்னான்: "அரசே! முன்பு கைப்பற்றிய திருமுகத்தையாவது அதிகம் சிரமப்பட்டு அந்தத் தூதனைப் பாழ்மண்டபத்து இருளில் நடுக்காட்டில் அடித்துப் போட்டு விட்டுக் கைப்பற்றினோம். ஆனால் இரண்டாவது திருமுகத்தைக் கொண்டு வந்த தூதன் சரியான பயந்தான்கொள்ளிப் பயல் போலிருக்கிறது. நடுவழியில் நாங்கள் அவனுடைய குதிரையை மறித்துக் கொண்டதுமே, 'ஐயோ என்னை விட்டுவிடுங்கள். ஒன்றும் செய்யாதீர்கள். நான் என்னிடம் இருக்கும் அரசாங்க ஓலையைக் கொடுத்து விடுகிறேன்' என்று அவனாகவே ஓலையை எடுத்துக் கொடுத்துவிட்டு ஓடிப்போய் விட்டான்."
"யார் யார் சேர்ந்துகொண்டு அவனை வழி மறித்தீர்கள்? எந்த இடத்தில் வழி மறித்தீர்கள்?" - கொடும்பாளூரான் அந்த ஒற்றனைக் குறுக்குக் கேள்வி கேட்டு மடக்கினான்.
"கரவந்தபுரத்துக்கும் அரண்மனைக்கும் செய்தித் தொடர்பு தொடங்கிய நாளிலிருந்து நம் ஆட்களாகிய செம்பியன், இரும்பொறை, முத்தரையன் ஆகியோரும் நானும் கரவந்தபுரம், கொற்கை ஆகிய பகுதிகளிலும் இவற்றுக்கும் நடுவழியிலுள்ள வனாந்தரப் பிரதேசங்களிலும் ஓயாமல் சுற்றிக் கொண்டே இருக்கிறோம். தெற்கேயிருந்து கரவந்தபுரத்துக்கு வரும் வழியில் மேற்கு மலைச் சரிவிலுள்ள காடுகள் தான் நம் திட்டங்களை மறைந்திருந்து செய்ய ஏற்ற இடமென்று தீர்மானித்துக் கொண்டு பெரும் பகுதி நேரம் அங்கேயே இருக்கிறோம். நம்முடைய மற்ற ஆட்கள் பொதியமலைப் பகுதிகளிலும் பொருநை நதிக் கரையோரங்களிலுள்ள சிற்றூர்களிலும் தனித்தனிக் குழுவாகப் பிரிந்து மறைந்திருக்கிறார்கள்."
"போதும்! நீ போய் வெளியே இரு. நாங்கள் மறுபடியும் கூப்பிட்டு அனுப்பினால் மட்டும் உள்ளே வா."
சோழனுடைய குரல் கடுமையாகவும் கண்டிப்பாகவும் இருந்தது. அந்த ஒற்றன் வணங்கிவிட்டு, அங்கிருந்து வெளியேறிச் சென்றான். அவர்கள் ஐந்து பேரும் தனிமையில் மறுபடியும் ஒன்றுபட்டுச் சிந்தனையில் ஆழ்ந்தார்கள். சற்று முன் வீராவேசமாக வாட்களை உருவி உயர்த்திச் சபதமும், உடன்படிக்கையும் செய்து கொண்ட போது இருந்த வீறாப்பு இப்போது அவர்களிடம் இல்லை. சோழன் கேட்டான்: "கொடும்பாளூர் மன்னரே! உங்களுக்கு என்ன தோன்றுகிறது? இலங்கை மன்னனும், சேரன் அவர்களுக்குப் படை உதவி செய்வார்களென்று நம்புகிறீர்களா?"
"நம்பாமல் எப்படி இருக்க முடியும்? குமார பாண்டியனுக்குச் சேரன் தாய்வழிப் பாட்டன் முறையினன், ஈழநாட்டுக் காசிபன் குமாரபாண்டியனைத் தன் உயிரினும் இனிய நண்பனாகக் கருதி வருகிறான். இராசசிம்மனுக்கும் காசிப மன்னனுக்கும் இந்தக் கெழுதகைமை நட்பு எப்போது, எதன் மூலம் ஏற்பட்டதென்று தெரியவில்லை. தென்பாண்டி நாட்டு அரசியல் சூழ்நிலைகளில் துன்பங்களும், தோல்விகளும் ஏற்படும் போதெல்லாம் இராசசிம்மனைத் தன்னிடம் வரவழைத்து இருக்கச் செய்து கொள்கிறான் ஈழ நாட்டு மன்னன். ஈழ மண்டலப் பெரும் படையின் தலைவனாகிய சக்கசேனாபதி ஒரு பழம் புலி. கடற்போரிலும் தரைப்போரிலும் பலமுறை வெற்றி பெற்ற அநுபவமுள்ளவன். ஆகவே இவர்கள் எல்லோரும் ஒன்று சேருவதாயிருந்தால் அந்த ஒற்றுமையின் விளைவைப் பற்றி நாம் சிந்தித்தே ஆக வேண்டியிருக்கிறது" என்று மற்ற நான்கு பேர் முகங்களையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டே சொன்னான் கொடும்பாளூர் மன்னன்.
"இந்த ஒற்றுமையே ஏற்பட முடியாதபடி இதைத் தகர்ப்பதற்கு நாம் முயற்சி செய்தால் என்ன?" - அரசூருடையானின் கேள்வி இது.
"நமக்குள் நம் நன்மைக்காக ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்று நினைக்கிற ஒவ்வொரு கூட்டமும், ஒவ்வொரு இனமும், அடுத்தவர்கள் அப்படி ஒற்றுமையாக இருக்க விடாமல் செய்யவே முயல்கிறது. வடக்கே நமக்குள் பெருங் கூட்டணி ஒன்று அமைத்து நாம் உடன்படிக்கை செய்து கொள்கிற மாதிரி தெற்கேயும் செய்ய நினைப்பார்கள் அல்லவா?" என்று குறும்புத்தனமாக - ஆனால் கோபத்தோடு - மறுமொழி சொன்னான் கீழைப் பழுவூர்க் கண்டன் அமுதன்.
"எனக்கென்னவோ இப்படித் தோன்றுகிறது; தெற்கே அவர்கள் மூவரும் ஒன்றுபடுவதால் படைபலம் பெருகினாலும் அதைப் பற்றி நாம் கவலை கொள்ள வேண்டியது இல்லை. நம் ஐவருடைய உடன்படிக்கை, ஒற்றுமை சாதிக்கிறதை விட அவைகள் அதிகமாகச் சாதித்து விட முடியாது!" என்று பரதூருடையானின் கருத்து வெளிப்பட்டது.
"யார் என்ன வேண்டுமானாலும் கூறுங்கள். முன்பு உறையூரில் நடந்த மந்திராலோசனைக் கூட்டத்தில் நான் கூறி ஏற்பாடு செய்த திட்டப்படி எல்லாம் நடந்திருந்தால் இப்போது இப்படியெல்லாம் நடந்திருக்காது. இந்தப் புதிய கவலைகளும் கிளம்பியிருக்க வழியில்லை" என்று சிறிது படபடப்போடு பேசிய கொடும்பாளூர் மன்னனைச் சோழன் கையமர்த்தி நிறுத்தினான். "நாம் என்ன செய்ய முடியும்? உங்கள் திட்டத்தை அப்படியே ஏற்றுக் கொண்டு குமாரபாண்டியனையும், மகாராணியையும் ஒழித்து விடுவதற்கு ஆட்களை அனுப்பினோம். மகாராணியைக் கொலை செய்யும் முயற்சியும், இடையாற்று மங்கலம் நம்பியை நம்மவராக ஆக்கிக் கொள்ளலாம் என்ற எண்ணமும் சாத்தியமில்லை என்று ஆகிவிட்டது. உங்கள் திட்டத்தில் ஒரே ஓர் அம்சத்தைப் பற்றிய முடிவு தான் இன்னும் தெரியவில்லை. அதாவது குமாரபாண்டியனைக் கொல்வதற்காகத் தேடிச் சென்றவர்கள் இன்னும் திரும்பி வரவில்லை. அவர்களும் திரும்பி வந்துவிட்டால் உங்கள் திட்டம் முழு வெற்றியா, அல்லது முழுத் தோல்வியா என்பது தெரிந்து விடும்" என்று சோழன் விவரமாகப் பதில் கூறிய பின்பே கொடும்பாளூரானின் படபடப்பு அடங்கியது. அப்படியிருந்தும் அவன் விட்டுக் கொடுக்காமல் பேசினான்: "என் திட்டம் தோல்வியா, வெற்றியா என்பதற்காக இங்கு வாதிடுகிற நோக்கம் எனக்கு இல்லை. நம்முடைய கனவுகள் விரைவில் நனவாக வேண்டும் என்பதற்காகத்தான் அந்தத் திட்டத்தைக் கூடச் சொன்னேன். இளவரசன் இராசசிம்மனும் மகாராணி வானவன்மாதேவியும் உயிரோடு இருக்கிறவரை சேரப் படை உதவி, இலங்கைப் படை உதவி முதலிய உதவிகளெல்லாம் தென்பாண்டி நாட்டுக்குக் கிடைத்தே தீரும். பாண்டிய மரபின் எஞ்சிய இரு உயிர்களான மகாராணியும், இளவரசனும் அழிந்து போய்விட்டால் அதன் பின்னர் மகாமண்டலேசுவரருக்காகவோ, தளபதி வல்லாளதேவனுக்காகவோ, கரவந்தபுரத்தானுக்காகவோ யாரும் படை உதவி செய்ய மாட்டார்கள். உதவியற்ற அந்தச் சூழ்நிலையில் மிக எளிதாக தென்பாண்டி நாட்டை நாம் கைப்பற்றி விடலாம். அதற்காகத்தான் அந்தத் திட்டத்தையே அப்போது நான் கூறினேன்.
"இப்போதும் காரியம் ஒன்றும் கைமீறிப் போய்விடவில்லை. இராசசிம்மனைத் தேடிச் சென்ற நம் ஆட்கள் காரியத்தை முடித்து விட்டு வந்தால் எல்லாம் சரியாகிவிடும். இராசசிம்மனே இறந்த பின் தென்பாண்டி நாட்டுக்கு எவன் படை உதவி செய்யப் போகிறான்?" என்று கூறிய அரசூருடையானை வன்மையாக எதிர்த்துப் பேசினான் கண்டன் அமுதன். "அரசூருடைய சென்னிப் பேரரையரே நீங்கள் இப்போது போடுகிற கணக்குத்தான் தப்புக் கணக்கு. இராசசிம்மன் இருப்பதால் எவ்வளவு கெடுதலோ அதைப் போல் நான்கு மடங்கு கெடுதல் அவன் இறப்பதால் ஏற்படும். அவன் உயிருக்குயிராகப் பழகும் இலங்கைக் காசிபனும், பாட்டனாகிய சேரனும் அவனுடைய சாவுக்கு வடதிசையரசராகிய நாம் காரணமாயிருந்தோமென்று அறிந்து கொள்ள நேர்ந்தால் எவ்வளவு கொதிப்படைவார்கள் என்று நினைத்துப் பாருங்கள்! அந்தக் கொதிப்பின் பயன் யார் தலையில் விடியுமென்று நீங்கள் சிறிதாவது சிந்தித்தீர்களா?" - கண்டன் அமுதனுடைய பேச்சை ஆதரிப்பவன் போல் சோழனும் தலையாட்டினான்.
"கீழைப் பழுவூரார் சொல்வதையும் நாம் சிந்திக்கத்தான் வேண்டும். இப்போதிருக்கிற சூழ்நிலையை மட்டும் வைத்துக் கொண்டு இராசசிம்மனுடைய பெருமையை நாம் கேவலமாக மதிப்பிட்டு விடுவதற்கு இல்லை. இப்போதிருக்கிறதை விட இன்னும் இளைஞனாயிருந்த அந்தக் காலத்திலேயே வைப்பூரிலும், நாவற்பதியிலும் நடந்த இரண்டு பெரிய போர்களில் இராசசிம்மன் என்னைத் தோற்கச் செய்திருக்கிறான். உவப்பிலிமங்கலத்தில் நடந்த போரில் நம் எல்லோரையுமே வென்றிருக்கிறான். இதோ இன்றைக்கு நம்மிடையே இவ்வளவு வீரமாகப் பேசுகிறாரே, இந்தக் கொடும்பாளூர் மன்னரையே பாண்டிநாட்டுப் படைகள் ஓட ஓட விரட்டியிருக்கின்றன. அதை அவரும் மறந்திருக்க மாட்டாரென்றே நினைக்கிறேன்!" - இப்படிச் சொல்லியவாறே விஷமத்தனமாக நகைத்துக் கொண்டே கொடும்பாளூரானின் முகத்தைப் பார்த்தான் சோழன். அந்த முகத்தில் எள்ளும் கொள்ளும் அள்ளித் தூவினால் பொரிந்து வெடிக்கும் போலிருந்தது. அவ்வளவு ஆத்திரம் கனன்று கொண்டிருந்தது.
"தஞ்சைப் பெருமன்னர் அவர்கள் இன்னொரு போரை கூற மறந்துவிட்டார்கள். வஞ்சமாநகரத்தில் நடந்த மாபெரும் போரில் இராசசிம்மன் தன் பாட்டனுக்கு உதவி செய்து வாகை சூடியிருக்கிறான். கடைசியாக அவன் நம்மிடம் ஒருமுறை மதுரையில் தோற்று, நாட்டின் ஒரு சிறு பகுதியை இழந்து விட்டிருப்பதனால் பலத்தைக் குறைவாக மதிக்கக் கூடாது" என்று மேலும் தன் கருத்தை வற்புறுத்தினான் கீழைப் பழுவூர்ச் சிற்றரசன்.
அவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டு அமர்ந்திருந்த போது வாயிற் பக்கம் தெரிகிறாற் போன்ற இடத்தில் அமர்ந்திருந்த அரசூருடையான் திடீரென்று, "ஆ! அதோ, நல்ல சமயத்தில் அவர்களே வந்து விட்டார்கள்!" என்று வியப்புடன் கூறிக் கொண்டே வாசற் பக்கம் கையைக் காட்டினான்.
---------
2.22. கொற்றவைக் கூத்து
அதோ அவர்களே வந்துவிட்டார்கள் என்று அரசூருடையான் வாயில் பக்கமாகத் தன் கையைச் சுட்டிக் காட்டிய போது மற்ற நான்கு பேருடைய எட்டுக் கண்களும் தணிக்க இயலாத ஆர்வத் துடிப்போடு விரைந்து நோக்கின. நான்கு முகங்களின் எட்டு விழிகள் ஒருமித்துப் பாய்ந்த அந்தத் திசையிலிருந்து வந்து கொண்டிருந்தவர்கள் சோர்ந்து தளர்ந்து தென்பட்டனர். பார்த்தவர்களது உற்சாகமும், ஆவலும் பார்க்கப்பட்டவர்களிடம் காணோம். அவர்களுடைய முகத்தில் களை இல்லை, கண்களில் ஒளி இல்லை, பார்வையில் மிடுக்கு இல்லை, நடையில் உற்சாகமில்லை. பயந்து நடுங்கிக் கொண்டே வருவது போல் தோன்றியது, அவர்கள் வந்த விதம். வந்தவர்கள் வேறு யாரும் இல்லை. முன்பு நாகைப்பட்டினத்திலிருந்து அனுப்பப்பட்ட ஆறு ஒற்றர்களில் தெற்கே குமாரபாண்டியனைக் கொல்வதற்காக ஈழத்துக்குச் சென்ற மூன்று பேர்தான் வந்து கொண்டிருந்தார்கள். மெல்லத் தயங்கி வந்து நின்ற அவர்கள் அங்கே வீற்றிருந்த வடதிசையரசர்களுக்கு வணக்கம் செலுத்தி விட்டுத் தலை குனிந்தனர். தென் திசைப் படையெடுப்பைப் பற்றிய முக்கிய ஆலோசனையில் இருந்த அந்த ஐவரின் முகத்தையும் நேருக்கு நேர் பார்ப்பதற்குத் தெம்பில்லாதவர்கள் போல் நடந்து கொண்டனர் வந்தவர்கள்.
"எப்பொழுது வந்தீர்கள்?" என்று சோழன் அவர்களை நோக்கிக் கேட்டான்.
"நாகைப்பட்டனத்தில் வந்து இறங்கியதும் நேரே இங்குதான் புறப்பட்டு வருகிறோம். நாங்கள் வந்தால் அங்கிருந்து உடனே கொடும்பாளூருக்கு வரச் சொல்லிக் கட்டளை என்று துறைமுகத்தில் காத்திருந்தவர்கள் கூறினார்கள். அதன்படி வந்து விட்டோம்" என்று அந்த மூவரில் ஒருவன் பதில் கூறினான்.
சோழன் முகத்தில் கடுமை படர்ந்தது. குரலில் கண்டிப்பு ஏறியது. "நீங்கள் வந்த வரலாற்றை விவரிக்கச் சொல்லி இப்போது உங்களைக் கேட்கவில்லை. எந்தக் காரியத்தைச் செய்வதற்காகக் கடல் கடந்து போய் இத்தனை நாட்கள் சுற்றினீர்களோ அந்தக் காரியம் என்ன ஆயிற்று? அதை முதலில் சொல்லுங்கள். உங்களுடைய குனிந்த தலைகளும் பயந்த பார்வையும் நல்ல விடை கிடைக்குமென்று எனக்குச் சிறிதும் நம்பிக்கையூட்டவில்லையே?"
சோழனுடைய கேள்விக்கு அந்த மூன்று பேருமே பதில் கூறவில்லை. தங்களுக்குள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு சொல்லத் தயங்கி நின்றனர்.
"என்னடா! ஒருவருக்கொருவர் பார்த்துத் திருட்டு விழி விழித்துக் கொண்டு நிற்கிறீர்கள்! எனக்குத் தெரியுமே! நீங்கள் போன காரியத்தைக் கோட்டை விட்டு விட்டுத்தான் வந்திருக்கிறீர்கள். உங்கள் நெற்றியில் தோல்விக் களை பதிந்து போய்க் கிடப்பதைப் பார்த்தாலே தெரிகிறதே?" என்று தன் முரட்டுக் குரலை உரத்த ஒலியில் எழுப்பி, அவர்களை விரட்டினான் கொடும்பாளூரான். அவர்கள் தலைகள் இன்னும் தாழ்ந்தன.
"என்ன நெஞ்சழுத்தம் இந்தப் பயல்களுக்கு! நான் கேட்கிறேன். பதில் சொல்லாமல் தலையைக் குனிந்து கொண்டு ஊமை நாடகம் நடத்துகிறார்களே!" என்று முன்னிலும் உரத்த குரலில் கூப்பாடு போட்டுக் கொண்டு புலி பாய்ந்து வருவது போல் அவர்கள் அருகே பாய்ந்து வந்தான் கொடும்பாளூர் மன்னன். கடுங்குளிரில் உதறல் எடுத்து நடுங்கும் மணிப் புறாவைப் போல் அந்த மூன்று பேருடைய உடல்களும் பயத்தால் நடுங்கின.
"குமாரபாண்டியனைத் தேடிக் கண்டு பிடித்துக் கொன்றீர்களா இல்லையா? வாயில் கொழுக்கட்டையா அடைத்திருக்கிறது? பதில் சொல்லேன்." இவ்வாறு ஆத்திரத்தோடு கத்திக் கொண்டே முன்னால் பாய்ந்து வந்த கொடும்பாளூரான், அந்த மூவரில் ஒருவனுடைய கன்னத்தில் பளீரென்று ஓங்கி அறைந்தான். அவனுடைய ஆத்திரத்தின் வேகத்துக்கு அளவு கூறியது அந்த அறை. வெடவெடவென்று நடுங்கிக் கீழே விழுந்து விடும்போல் ஆடியது அறை வாங்கியவனின் உடல். பேசுவதற்காக அவன் உதடுகள் துடித்தன. ஆனால் பயத்தினால் பேச்சு வரவில்லை.
"இப்படிக் கேட்டால் உன்னிடமிருந்து பதில் கிடைக்காது. இரு, அப்பனே! கேட்கிற விதமாகக் கேட்கிறேன். 'உண்டு' இல்லை என்று பதில் வந்தால் உங்கள் தலைகள் உங்களுக்கு உண்டு. 'இல்லை' என்று பதில் வந்தால் உங்கள் தலைகள் உங்களுக்கு இல்லை" என்று மறுபடியும் கையை மடக்கி ஓங்கிக் கொண்டு அறைவதற்கு வந்தான் கொடும்பாளூரான். அந்த அறை தன்மேல் விழுவதற்குள் பேசத் துடித்துக் கொண்டும் பேச முடியாமலும் நின்ற அவன் பேசிவிட்டான்.
"ஈழ நாட்டை அடையுமுன்பே சற்றும் எதிர்பாராத விதமாகச் 'செம்பவழத்தீவு' என்ற தீவில் குமாரபாண்டியனைக் கண்டுபிடித்து விட்டோம். ஆனால் எங்கள் வாளுக்கு இறையாகிச் சாவதற்கு முன் மாயமாக மறைந்து எப்படியோ தப்பி விட்டான் அவன். பின்பு அந்தத் தீவு முழுவதும் விடாமல் தேடிப் பார்த்தும் எங்களால் அவனைக் கண்டு பிடித்துக் கொல்வதற்கு முடியவில்லை."
குரலில் இருந்த நடுக்கத்தின் காரணமாக ஒவ்வொரு வார்த்தையையும் முழுமையான வார்த்தையாக முழுமையான ஒலியோடு அவனால் கூற முடியவில்லை. வார்த்தைகள் ஒவ்வோர் எழுத்தின் ஒலிப்பிலும் தயங்கித் தேங்கி நடுங்கின. பசியோடு தன் கோரப் பெருவாயைத் திறந்து நிற்கும் வேங்கைப் புலியின் காலடியில் நிற்கும் சிறிய மான் குட்டிகளைப் போல் அரண்டு போய் நின்று கொண்டிருந்தனர் அந்த மூன்று பேரும். எதிர்பார்த்த பதிலில் கிடைத்த ஏமாற்றம் கொடும்பாளூர் மன்னனைக் கோபத்தின் உருவமாக மாற்றியது. அவனுடைய விழி வட்டங்களில் அனல் கனன்றது. சிங்க முகத்தில் சிவப்புப் பரவியது. நினைப்பிலும் முழங்காலைத் தொடும் நீண்ட கைகளிலும் வெறி வந்து குடி புகுந்தது. முகிலுறை கிழித்து வெளிப்பாயும் மின்னல் ஒளிக்கோடு போல் அவன் தன் உறையிலிருந்து வாளை வெளியே உருவினான்.
பின்புறமிருந்து அரசூருடையானது கேலிச் சிரிப்பின் ஒலி கிளர்ந்து எழுந்தது. "இனிமேல் சந்தேகத்துக்கு இடமே இல்லை. கொடும்பாளூருடையாரின் திட்டம் முழுக்கத் தோற்றுவிட்டது. இப்போது அவருக்கு உண்டாகும் தோல்விக்கு அடையாளம் தான் இது."
அரசூருடையானின் இந்தச் சொற்கள் கொடும்பாளூர் மன்னனின் கொதிப்பை மிகைப்படுத்தின. அவன் வலக்கையில் துடித்த வாளின் நுனியிலிருந்து சிதறிய ஒளிக்கொழுந்துகள் பயந்து நின்று கொண்டிருந்த அந்த மூன்று பேருடைய கண்களையும் கூசச் செய்தன. அந்த ஒளியும் அதை உண்டாக்கும் வாளின் நுனியும் இன்னும் சில கணங்களில் தங்கள் நெஞ்சுக் குழியை நறுக்கிக் குருதிப் பெருக்கில் குளித்தெழுந்துவிடப் போகிறதே என்று அவர்களுடைய தேகத்தின் ஒவ்வோர் அணுவும் புல்லரித்து நடுங்கிக் கொண்டிருந்தன. தங்கள் மூவரின் உயிருக்கும் மொத்தமாக உருப்பெற்ற காலன் அந்த வாள் வடிவில் மின்னிக் கொண்டிருப்பதை அவர்கள் புரிந்து கொண்டு விட்டார்கள். இன்னும் ஒரு நொடியில் அற்றுப் போக இருக்கும் உயிருக்கும் தங்களுக்கும் நடுவேயிருந்த பந்தத்தைக்கூட ஏறக்குறைய அவர்கள் மறக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
அந்தச் சமயத்தில் கொடும்பாளூரானின் கோபத்தைச் சோழ மன்னன் தணிக்க முன் வந்தான்.
"ஐயா! கொடும்பாளூர் மன்னரே! கோபத்தை இடம் தவறி, இலக்குத் தவறி, தகுதி தவறி, அநாவசியமாக இவர்களிடம் செலவழித்து என்ன பயன்? எவர்களுடைய தலைகளை வாங்க வேண்டுமோ அவர்களுடைய தலைகள் கிடைக்காவிட்டால் அதைச் செய்வதற்குச் சென்ற இவர்களுடைய தலைகளை வாங்கி என்ன பெருமைப்பட்டுவிட முடியும்? புலி வேட்டையாடப் போனவன் குழிமுயலை அடித்துக் கொண்டு திரும்புகிற மாதிரி, பெரியது கிடைக்காததனால் சிறியதை எண்ணிச் சிறியதைச் செய்யும் அற்ப மகிழ்ச்சி பண்புக்குப் பலவீனம். வாளையும், கோபத்தையும் ஒன்றாகச் சேர்த்து உறையில் போடுங்கள். இப்போது நமக்குத் தேவையான பொருள் நிதானம். இந்தத் தடியர்கள் ஒன்றும் செய்யாமல் திரும்பி வந்திருப்பதைப் பார்த்ததும் எனக்கும் சினம் தான் உண்டாயிற்று. ஆனால் என்ன நன்மையைச் சினத்தால் அடையப் போகிறோம்? நெருப்பைத் தண்ணீர் அவித்து அணைக்கிற மாதிரி நெருப்பு தண்ணீரை விரைவாக அவித்து அணைக்க முடியாது. கோபம், குமுறல், பொறாமை போன்ற எதிர்மறையான குணங்கள், அன்பு, அறம், பொறுமை போல் காரியத்தை விரைவாகச் சாதித்துக் கொள்ளப் பயன்படா. இந்த மாதிரி அறிவுரைக் கருத்துகளெல்லாம் நம்மைப் போன்று சூழ்ச்சியும், போரும், மண்ணாசையும் விரும்புகிறவர்களுக்குப் பயன்படாதென்றாலும், இப்போதைக்குப் பயன்படுத்துவோம். நாம் கூறியதைச் செய்யாததற்காக இந்த மூன்று பேரையும் கொடும்பாளூர் அரண்மனையின் இந்த இரகசியமான இடத்தில் கொன்று அந்தக் கொலையை மறைத்து விடுவதும் நமக்கு எளிதுதான். ஆனாலும் வேண்டாம். கோபத்தையும், ஆத்திரத்தையும் பெரிய சாதனைகளுக்காக மீதப்படுத்திச் சேமித்து வைத்துக் கொள்வோம்."
சோழனுடைய பேச்சு முடிவு பெற்று நின்ற போது கொடும்பாளூரானுடைய வாள் உறைக்குள் சென்று அடங்கிக் கொண்டது. வளர்த்துப் பால் வார்க்கும் நன்றிக்காகப் பாம்பாட்டியின் பெட்டிக்குள் அடங்கும் பாம்பு போல் சீறிக் கொண்டு வெளிவந்த சினமும் செயற்கையாக அடங்கி மனத்தில் போய்ப் புகுந்து கொண்டது. அதைப் பார்த்து அரசூருடையான் ஓசைப்படாமல் மெல்லச் சிரித்துக் கொண்டான். பரதூருடையானும், கண்டன் அமுதனும் அந்தக் கூட்டத்துக்குப் புதியவர்களாகையினால் அதற்குரிய அடக்கத்தோடு அமைதியாக இருந்தார்கள்.
கொடும்பாளூரானுடைய ஆத்திரத்துக்கு ஆளாகாமல் அந்த மட்டில் தங்கள் தலைகள் தப்பினவே என்று நிறைவுடன் அந்த இடத்திலிருந்து மெதுவாக நழுவி நகர முற்பட்டனர் அம் மூன்று ஆட்களும்.
"நில்லுங்கள்! எங்கே போகிறீர்கள் இவ்வளவு அவசரமாக?" சோழமன்னன் குரல் அவர்கள் நடையைத் தடைப்படுத்தி நிறுத்தியது. அடுத்த விநாடி கொடும்பாளூர் மன்னனைக் கையைப் பற்றி இழுத்துக் கொண்டு தனியே ஒரு மூலைக்குச் சென்றான் சோழ மன்னன். அந்த மூலையில் சித்திர வேலைப்பாடுகளோடு கூடிய பெரிய கிளிக்கூண்டு ஒன்று கைக்கெட்டுகிற உயரத்தில் தொங்கியது. கூண்டின் கதவு திறந்திருந்தது. கூண்டில் வசிக்கும் பல நிறக் கிளிகளும், கிளிக் குஞ்சுகளும், அதன் இருபுறமும் இருந்த மரச் சட்டங்களில் சுதந்திரமாக உட்கார்ந்திருந்தன. திறந்து விட்டதும் வெளியேறி, அடைகிற நேரத்துக்குத் தாமாகவே கூண்டுக்குள் வந்து சேர்ந்துவிடும்படி பழக்கப்படுத்தப்பட்ட கிளிகள் அவை. அந்தக் கிளிக்கூண்டின் அடியில் வந்து நின்று கொண்டதும், "சொன்ன காரியத்தைச் செய்து கொண்டு வரத் திறமையில்லாத அந்த அறிவிலிகளை அழித்து ஒழித்து விடுவதற்காக என் கைகள் துடித்தன. அந்தத் துடிப்பை நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் அத்தனை பேருக்கும் நடுவில் என்னைத் தடுத்து அவமானப் படுத்தி விட்டீர்கள்?" என்று ஏக்கமும், ஏமாற்றமும் மேலிட்ட குரலில் சோழனை நிமிர்ந்து பார்த்துச் சொன்னான் கொடும்பாளூரான். சோழன் அதைக் கேட்டு மெல்ல நகைத்தான்.
"கொடும்பாளூர் மன்னரே! வேகமாகக் கையை ஓங்க வேண்டும். ஆனால் இலேசாக அறைய வேண்டும். கல்லை எறிவதற்கு முன்னுள்ள வேகம் எறியும் போது மெதுவாகிவிடுவது நல்லது.
"கடிதோச்சி மெல்ல எறிக நெடிது ஆக்கம்
நீங்காமை வேண்டு பவர்."
என்ற பொய்யில் புலவர் பொருளுரை நம்மைப் போன்ற அரசர்களை மனத்தில் வைத்துக் கொண்டு கூறப்பட்டது அல்லவா? இதோ கொஞ்சம் என் பக்கமாகத் திரும்பிப் பார்த்துவிட்டு, நான் என்ன செய்கிறேனென்று கவனியுங்கள்."
சோழனின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும் சிறிது வெறுப்பு நிழலாடும் பார்வையோடு திரும்பி நோக்கினான் கொடும்பாளூர் மன்னன். மரச் சட்டத்திலிருந்து ஒவ்வொன்றாக மூன்று கிளிக் குஞ்சுகளை எடுத்துக் கூண்டுக்குள் விட்டுக் கதவை அடைத்த பின், குறிப்பாக எதையோ சொல்லும் பொருள் செறிந்த நோக்கினால் சோழ மண்ணன் கொடும்பாளூரானின் முகத்தைப் பார்த்தான். அந்தப் பார்வையை விளங்கிக் கொள்ளாமல், "உங்களுடைய இந்தச் செயலுக்கு என்ன அர்த்தமென்று எனக்கு விளங்கவில்லையே?" என்று கேட்டான் கொடும்பாளூரான்.
"கொடும்பாளூர் மண்ணுக்கே குறிப்பறியும் உணர்ச்சி அதிகம் என்பார்கள். ஆனால் அந்த மண்ணை ஆளும் அரசராகிய உங்களுக்கே என் குறிப்புப் புரியவில்லையே?"
சோழன் குத்திக் காட்டிப் பேசியது வேதனையைக் கொடுத்தாலும், அந்தக் குறிப்புச் செய்கையின் பொருள் புரியக் கொடும்பாளூர் மன்னனுக்குச் சிறிது நேரமாயிற்று. அது புரிந்ததும் தான் அவன் முகத்தில் மலர்ச்சி வந்தது.
"புரிந்து விட்டது. அப்படியே செய்து விடுகிறேன்" என்று கிளிக் கூண்டையும் அடைப்பட்ட மூன்று குஞ்சுகளையும் பார்த்து விஷமத்தனமாகச் சிரித்துக் கொண்டே வெளியேறினான் கொடும்பாளூர் மன்னன். அடுத்த கால் நாழிகைக்குள் கொடும்பாளூர்க் கோட்டையின் ஒளி நுழைய முடியாத பாதாள இருட்டறைகளின் இரகசிய அறை ஒன்றில் அந்த மூன்று ஒற்றர்களையும் கொண்டு போய் அடைத்து விட்டுத்தான் திரும்பி வந்தான் அவன்.
நீண்ட நேரமாகச் சூழ்ச்சிகளிலும், அரசியல் சிந்தனைகளிலுமே ஆழ்ந்து போயிருந்ததன் காரணமாக, வடதிசையரசரின் கூட்டணியைச் சேர்ந்த அந்த ஐவருக்கும் களைப்பு ஏற்பட்டிருந்தது. ஒரு மாறுதல் - மனமகிழ்ச்சிக்குரிய ஒரு பொழுது போக்கு - அப்போது அவர்களுக்குத் தேவைப்பட்டது. தங்களையும் தங்கள் அரசியல் கவலைகளையும் மறந்து ஏதாவதொரு கலையின் சுவை அநுபவத்தில் மிதக்க வேண்டும் போலிருந்தது அவர்களுக்கு.
"கொடும்பாளூர் மன்னரே! வெளியூர்களிலிருந்து வந்திருக்கும் நாங்கள் நால்வரும் இங்கேயிருக்கிறவரை உம்முடைய விருந்தாளிகள். உற்சாகமும் மன எழுச்சியும் வெற்றியில் நம்பிக்கையும் ஊட்டத்தக்க ஒரு பொழுது போக்கு இப்போது எங்களுக்குத் தேவை. அதற்கு ஏதாவது ஏற்பாடு செய்யுங்கள்" என்று சோழன் வேண்டிக் கொண்டான். "அப்படியானால் 'தேவராட்டியின்' கொற்றவைக் கூத்துக்கு ஏற்பாடு செய்கிறேன். நீங்கள் எல்லோரும் கண்டு களிக்க வேண்டிய கலை அது. இந்தச் சோர்ந்த சூழ்நிலையில் அதைக் கண்டு புதிய எழுச்சியும் பெற முடியும்" என்றான் கொடும்பாளூரான்.
"அது யார் தேவராட்டி?"
"அவள் இந்தக் கொடும்பாளூர் அரண்மனையில் தனிச் சிறப்பு வாய்ந்த ஓர் ஆடல் மகள். தன்னை மறந்து ஆடிக் கொண்டிருக்கும் போதே அவளுக்குத் தெய்வ ஆவேசத்தால் அருள் வந்து விடும். அந்தச் சமயத்தில் அவள் வாயிலிருந்து எதைப் பற்றியும் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். தேவி சந்நதத்தில் வாய் சோர்ந்து நமக்கு வேண்டிய உண்மைகள் அவளிடமிருந்து வரும். கையில் திரிசூலம் ஏந்திச் சுழற்றிக் கொண்டே அவள் கொற்றவைக் கூத்தாடும்போது, அவளே காளியாக மாறிக் காட்சியளிப்பாள் நம் கண்களுக்கு."
"இது என்ன நம்ப முடியாத வேடிக்கையாக அல்லவா இருக்கிறது!"
"வேடிக்கையில்லை. அந்த ஆடல் மகள் இன்னும் தூய்மையான கன்னியாகவே வாழ்கிறாள். தேவதைக்கு உள்ள மதிப்பு அவளுக்கு இந்த அரண்மனையில் உண்டு" என்று கொடும்பாளூர் மன்னன் பயபக்தியோடு மறுமொழி கூறினான்.
"அதற்கே ஏற்பாடு செய்யுங்கள். அந்தக் கொற்றவைக் கூத்தைக் காணும் பாக்கியத்தை நாங்களும் பெறுகிறோம்." சோழ மன்னனின் விருப்பப்படி கொடும்பாளூர் மன்னன் கூத்தரங்கத்தை வகுத்து அவர்களையெல்லாம் அழைத்துக் கொண்டு போய் உட்கார்த்தினான். கொற்றவைக் கூத்துக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரங்கம் கோவில் போலத் தூய்மையாகப் புனிதப் பொருள்கள் நிறைந்திருந்தது. தீபச் சுடர்கள் பூத்திருந்தன. தூபக் கலசங்கள் கொடி படரச் செய்தன. எல்லோரும் பயபக்தியோடு அரங்கில் வீற்றிருந்தனர். மத்தளம் கொட்ட வரிசங்கம் ஊத, அரங்கின் எழினி (திரைச்சீலை) மெல்ல விலகியது. ஆ! அதென்ன தோற்றம்? புவனகோடியைப் போக்குவரவென்னும் கவன ஊஞ்சலிட்டு ஆட்டும் கௌரியே அங்கு நிற்கிறாளா? தேவராட்டி மும்முகச் சூலம் ஏந்திய கோலத்தோடு அரங்கில் வந்து நின்றாள்.
---------
2.23. திரிசூலம் சுழன்றது
சகல புவனங்களையும் ஆட்டுவிக்கும் தேவதேவனைத் தன் இருவிழிகளால் ஆட்டி வைத்த உமையே சின்னஞ்சிறு கன்னிப் பெண்ணாய் உருக்கொண்டு, கூத்துடை தரித்து வந்து நிற்பதுபோல் வலக்கையில் திரிதோரியாய்க் கம்பீரமாக அரங்கில் காட்சியளித்தாள் தேவராட்டி. அவள் கொடும்பாளூர் அரசவையில் ஆடல் மகளாய்ப் பணிபுரியும் ஒரு சாதாரண மானிடப் பெண் தான் என்ற உணர்வு அரங்கில் கூடியிருந்த அரசர்களுக்கு ஏற்படவே இல்லை. இமையா விழிகளால் அரங்கின் மேற் சென்ற பார்வையை மீட்க மனமின்றி வீற்றிருந்தனர். அழகொழுக எழுதிய நிருத்திய உயிரோவியமாய்த் தோன்றிய அவள் கூத்தைத் தொடங்குவதற்கு முன்பே அவர்கள் மனங்களை வென்றுவிட்டாள்.
தேவராட்டியின் தோற்றத்தைப் பற்றி இங்கே சிறிது கூற வேண்டும். மறக்குலத்துப் பெண்கள் அணிந்து கொள்வது போல் முழங்காலுக்கு மேல் கச்சம் வைத்துக் கட்டிய புடவை. பாதங்களுக்கு மேல் இரண்டு பாம்புகள் சுருண்டு கிடப்பது போல் பாடகங்கள் (ஒரு வகைச் சிலம்பு). இல்லையோ உண்டோவெனத் திகழ்ந்த இடையில் மேகலை போல் இறுகப் பிணித்த புலித்தோல். கழுத்திலும், தோளிலும் முன் கைகளிலும் பல நிறப் பூமாலைகள் அணிந்திருந்தாள். கூந்தலைத் தலை கீழாக நிறுத்திய சங்கின் தோற்றம் போல் உச்சந்தலையில் தூக்கி அழகாக முடிந்து கொண்டிருந்தாள். அந்தக் கொண்டையைச் சிறிய கொன்றைப் பூச்சரம் ஒன்று அலங்கரித்துக் கொண்டிருந்தது. உடம்பெல்லாம் திருநீறு பூசிய வெண்மை. வலது கரத்தில் நீளமாக ஒளி மின்னும் கூர்மையான திரிசூலத்தைப் போல இடது கையில் சிறியதாக அழகாக ஓர் உடுக்கு. இந்தக் கோலத்தில் ஒரு பக்கமாகத் துவண்டு சிங்காரமாக அவள் நின்ற அபிநய அலங்காரம் பார்க்கும் கண்களிலெல்லாம் தெய்வத்தைப் படரவிட்டது. கொற்றவைக் கூற்றத்துக்குரிய வீராவேசத்தோடு தேவராட்டி தன் ஆடலைத் தொடங்கினாள். பாறைகளுக்கு நடுவேயுள்ள சுனைத் தண்ணீரில் கூழாங்கல்லை வீசி எறிவது போன்ற இன்ப ஒலியை எழுப்பியது உடுக்கு. கால் பாடகத்தின் உள்ளேயிருந்த பரல்கள் (சிறு சிறு மணிகள்) ஒலித்தன. சூலம் ஒளி கக்கிச் சுழன்றது, துள்ளியது.
ஆட்டத்தின் ஒன்பது வகைக் கூத்துக்களில் ஒன்றாகிய 'வீரட்டானக் கூத்'தின் கம்பீரமான துரித கதியில் தெய்வ ஆவேசத்தோடு சுழன்று சுழன்று ஆடினாள் அந்தப் பெண். காளிதேவியாகிய கொற்றவையே அந்தப் பெண்ணின் உடலில், உணர்வுகளில் தன் மயமாகிக் கலந்து விட்டது போல் ஒரு தத்ரூபம் அவள் ஆடலில் இருந்தது. வீரட்டான அபிநயத்தின் முடிவில் முத்திரை பிடித்துக் காட்ட வேண்டிய 'குனிப்பு' என்னும் விகற்பத்தைத் தாண்டி, அற்புதமான 'உள்ளாளக் கூத்தில் தன்னை மறந்து லயித்துக் கொண்டிருந்தாள் அவள். தெய்விகம் கலையாக மாறித் திகழ்ந்து கொண்டிருந்தது அவளிடம்.
சோழகோப்பரகேசரி தன்னை மறந்து, தன் நினைவை இழந்து பார்த்துக் கொண்டிருந்தான். கண்டன் அமுதன், அரசூருடையான், பரதூருடையான் எல்லோரும் ஏறக்குறைய அதே நிலையில்தான் இலயித்திருந்தார்கள். ஆனால், கூத்து அரங்குக்கு ஏற்பாடு செய்த கொடும்பாளூர் மன்னனின் கண்கள் மட்டும் ஒன்றிலும் ஊன்றிப் பார்க்காமல், நாற்புறமும் அலை பாய்ந்து கொண்டிருந்தன. கனற்கோளங்களைப் போன்ற அவனுடைய பெரிய கண்கள் அரங்கின் மேலும், தன்னோடு உடன் வீற்றிருந்த சோழன் முதலியவர்கள் மேலும் அரங்கின் வெளிப்புறத்து நுழைவாயில் மேலும் மாறி மாறி நிலைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தன. இயற்கையிலேயே அவனுக்கு அப்படி ஒரு சுபாவம். குட்டி போட்ட பூனை மாதிரிச் சாதாரணமான காரியங்களுக்காகக் கூடப் பதறி அலை பாய்கின்ற மனம் அவனுக்கு. கலைகளை அநுபவிக்க ஆழ்ந்து ஈடுபட்டுத் தோயும் மனம் வேண்டும். அலைபாயும் மனமுள்ளவர்களால் எந்தக் கலையிலும் இந்த மாதிரி ஈடுபட்டு இலயிக்க முடியாது. கொடும்பாளூரானிடம் அந்த ஈடுபாடு இல்லை என்பதை அவன் கண்களே விளக்கின. குணரீதியாகவே இப்படி எதிலும் ஆழ்ந்து ஈடுபட முடியாதவர்கள் முன் கோபக்காரர்களாகவும், ஆத்திரமும் உணர்ச்சி வெறியும் உடையவர்களாகவும் இருப்பார்கள். தேவராட்டியின் ஆடல் சுவையநுபவத்தின் உயர்ந்த எல்லையில் நிகழ்ந்து கொண்டிருந்தது. அருளாவேசமுற்றுத் தானே கொற்றவை என்ற முனைப்பால் சுழன்று சுழன்று ஆடிக் கொண்டிருந்தாள். அவள் மட்டுமா ஆடிச் சுழன்றாள்! அவள் ஆடும் போது கொண்டையாக முடிந்திருந்த சடாமகுடத்தின் கொன்றை மலர்க்கொத்தும், பிறைச்சந்திரனைப் போல் தங்கத்தில் செய்து புனைந்திருந்த அணியும், செவிகளின் நாக குண்டலங்களும் எல்லாம் ஆடிச் சுழன்றன.
பார்த்துக் கொண்டேயிருந்த சோழனுக்குக் கண்களில் நீர் பனித்து விட்டது. உள்ளம் நெக்குருகி உடல் சிலிர்த்தது. மகாமன்னனான கோப்பரகேசரி பாராந்தக சோழன் எத்தனையோ அற்புதமான ஆடல்களை உறையூரிலும் காவிரிப்பூம்பட்டினத்திலும் கண்டிருக்கிறான். நாட்டியக் கலையில் தலைக்கோல் பட்டமும் (அக்காலத்தில் நாட்டியக் கலையில் சிறந்த ஆடல் மகளிர்க்கு அரசனால் அளிக்கப்படும் விருதுப்பெயர்), பொற்பூவும், பொன் மோதிரமும் பெற்ற பெரிய பெரிய ஆடல் மகளிரின் ஆடல்களையெல்லாம் அவன் கண்டிருக்கிறான். அவையெல்லாம் அவன் உணர்வுக்குக் கிளர்ச்சி மட்டுமே ஊட்டின. அவைகளில் இல்லாத - அவைகளிலும் மேம்பட்ட ஏதோ ஒன்று இந்தத் தேவராட்டியின் ஆடலில் இருப்பதாக அவனுக்குத் தோன்றியது. தேவராட்டியின் ஆடற்கலையில் வெயில் படாத நீரின் குளிர்ச்சி போல் தெய்விகப் பண்பு விரவியிருந்தது. நீரைச் சுடவைத்துக் குளிர்ச்சியை நீக்கிச் செயற்கையாகச் சூடாக்குவது போல் பாட்டு, கூத்து, புலமை, ஒவ்வொரு துறையையும் அறிவின் வெம்மையால் சூடேற்றி அவைகளிலிருந்தும் தெய்விகப் பண்பை நீக்கிவிடும் போது அவை சாதாரணமாகி விடுகின்றன. அரங்கில் ஆடிக்கொண்டிருந்த அந்தத் தேவராட்டியின் முகத்தைப் பார்க்கும் போதே மலையரசன் மகளாகத் தோன்றிய உமையின் கன்னித் தவக்கோலம் தான் நினைவுக்கு வந்தது. எப்போதும் ஏதோ பெரிய இலட்சியங்களுக்காகக் கனவு கண்டு கொண்டிருப்பது போல் இடுங்கிய கண்கள் நீளமும், கன்னிப் பருவத்துப் பேதைமையின் அழகு நிழலாடும் நெற்றி, வடிந்த நாசி, வளர்ந்த புருவங்கள், கரந்து நிற்கும் சிரிப்பு, கனிந்து சரிந்த கன்னங்கள்.
தேவராட்டி சந்நத நிலையில் அருளுற்று ஏதேதோ பிதற்றினாள். தங்களுடைய கூட்டணியைப் பற்றியும், தென் திசைப் படையெடுப்பைப் பற்றியும் அதில் வெற்றி ஏற்படுமா தோல்வி ஏற்படுமா என்பதைப் பற்றியும் தேவராட்டியிடம் குறி கேட்டு நிமித்தம் தெரிந்து கொள்ள வேண்டுமென்று சோழன் எண்ணியிருந்தான். தனக்குப் பழக்கமில்லாத காரணத்தால் கொடும்பாளூர் மன்னனைவிட்டே அவைகளைத் தேவராட்டியிடம் கேட்கச் செய்யலாமென்று மனத்துக்குள் ஒரு முடிவுக்கு வந்தவனாகத் தன் பக்கத்தில் கொடும்பாளூரான் வீற்றிருந்த ஆசனத்தைப் பார்த்த சோழன் ஏமாற்றமடைந்தான்.
அங்கே கொடும்பாளூரானைக் காணவில்லை. அவன் வீற்றிருந்த இருக்கை காலியாயிருந்தது. மற்ற மூவரையும் பார்த்தான். அவர்கள் இந்த உலகத்தையே மறந்து, தேவராட்டியின் கூத்தில் ஆழ்ந்திருந்தார்கள். அவ்வளவு அற்புதமான கூத்தை இரசிக்காமல் நடுவில் எழுந்திருந்து கொடும்பாளூரான் எங்கே போயிருப்பான் என்ற கேள்வியும், சந்தேகமும் சோழன் மனத்தில் உண்டாயின. சோழனுடைய கண்கள் கொடும்பாளூரானைத் தேடிச் சுழன்றன. அவனைக் காணோம். கூத்தரங்கின் வாயிற்புறம் போய் அங்கு யாராவது ஆட்களிருந்தால் அவர்களை அனுப்பிக் கொடும்பாளூரானை அழைத்துக் கொண்டு வரச் செய்யலாமென்ற நோகத்தோடு சோழன் மெல்ல எழுந்தான்.
ஆனால், அந்தக் கணமே அவன் எழுந்திருக்க வேண்டிய அவசியமில்லாமல் போய்விட்டது. கொடும்பாளூரானே மிக வேகமாக வாயிற்புறத்திலிருந்து கூத்தரங்கத்துக்குள் வந்து கொண்டிருந்தான். அவன் முகச்சாயலும் நடையின் வேகமும் பரபரப்பையும், அவசரத்தையும் காட்டின. வெளியே செல்வதற்காக எழுந்திருந்த சோழன் மறுபடியும் இடத்திலேயே உட்கார்ந்து கொண்டான். வேகமாக உள்ளே பிரவேசித்த கொடும்பாளூர் மன்னன் சோழன் காதருகே போய்க் குனிந்து மெதுவாகப் பேசினான்: "அரசே! தென்பாண்டி நாட்டின் பலவீனத்தை மிகைப்படுத்தக் கூடிய வேறொரு செய்தி சற்று முன்புதான் என் காதுக்கு எட்டியது."
"அப்படி என்ன செய்தி அது?" சோழனும் மெதுவான குரலிலேயே கேட்டான். "சில நாட்களுக்கு முன்னால், இடையாற்று மங்கலம் மகாமண்டலேசுவரர் மாளிகையில் பாதுகாக்கப்பட்டு வந்த பாண்டிய மரபின் சுந்தர முடியும், வீரவாளும், பொற் சிம்மாசனமும் திடீரென்று காணாமற் போய்விட்டனவாம்."
"யார் வந்து கூறினார்கள் இந்தச் செய்தியை?"
"தெற்கேயிருந்து நம் ஒற்றர்களில் ஒருவன் வந்து கூறினான். நீங்களெல்லாம் கூத்தில் ஈடுபட்டிருந்த போது இடையில் நான் கொஞ்சம் வெளியே எழுந்து சென்றேன். அதே நேரத்துக்கு அந்த ஒற்றனும் வந்து சேர்ந்ததனால் அவனை அங்கேயே நிறுத்திச் செய்தியை விசாரித்துக் கேட்டுக் கொண்டு வந்தேன்."
"ஒருவேளை இந்தச் செய்தி இப்படியும் இருக்கலாமல்லாவா? நம்மைப் போன்ற வடதிசையரசர்கள் தெற்கே படையெடுத்துத் தென்பாண்டி நாட்டை வென்று விட்டால் இடையாற்று மங்கலத்தில் போய் முடியையும், வாளையும், சிம்மாசனத்தையும் தேடி எடுத்துக் கொண்டு விடுவோமோ என்பதற்காக இப்படி ஒரு பொய்ச் செய்தியை மகாமண்டலேசுவரர் பரப்பியிருப்பார்."
"இருக்காது, அரசே! வந்திருக்கும் ஒற்றன் கூறுவதைப் பார்த்தால் உண்மையாகவே அரசுரிமைப் பொருள்கள் கொள்ளை போயிருக்கலாம் என்று தான் தோன்றுகிறது."
"எப்படியிருந்தாலும் நாம் படையெடுப்புக்கு ஏற்பாடு செய்யத்தான் போகிறோம். நமக்கு ஏன் இந்தக் கவலை?" - சோழனும் கொடும்பாளூரானும் மேற்கண்டவாறு மெதுவான குரலில் பேசிக் கொண்டிருந்த போதும் தேவராட்டியின் கொற்றவைக் கூத்து நடந்து கொண்டுதான் இருந்தது. அவள் வலக்கையில் திரிசூலத்தின் சுழற்சியும், இடக்கையில் உடுக்கின் ஒலியும் குன்றவில்லை, குறையவில்லை.
சோழனும் கொடும்பாளூரானும் வீற்றிருந்த இடத்தின் பின்புறத்துச் சுவரில் அவர்கள் தலைக்கு மேல் மானின் கண்களைப் போல் துவாரங்கள் அமைந்த பலகணி ஒன்று இருந்தது.
அருளுற்று ஆடிக் கொண்டேயிருந்த தேவராட்டி திடீரென்று இருந்தாற் போலிருந்து அந்த மான்விழிப் பலகணியைச் சுட்டிக் காட்டி 'வீல்' என்று அலறிக் கூச்சலிட்டாள். அந்தப் பலகணியை நோக்கித் தன் திரிசூலத்தை ஓங்கிச் சுழற்றினாள்; பற்களைக் கடித்தாள்; கால்களை உதைத்தாள். திரிசூலத்தைக் குறி பார்த்துச் சுழற்றி அந்தப் பலகணியை நோக்கி எறிந்தாள். எல்லோரும் அவளுடைய கோபத்தின் காரணம் விளங்காமல் எழுந்திருந்து அந்தப் பலகணியைப் பார்த்த போது அதன் நடுத்துவராத்திலிருந்து ஒளி மின்னும் இரு கண்கள் வேகமாகப் பின்னுக்கு நகர்ந்தன.
----------
2.24. கூடல் இழைத்த குதூகலம்
அன்றைக்கொரு நாள் செம்பவழத் தீவின் கடை வீதியில் அந்த மூன்று முரட்டு மனிதர்கள் பேசிக் கொண்டு போன பேச்சைக் கேட்டதிலிருந்து மதிவதனிக்குக் கவலையும் பயமும் அதிகமாயிருந்தன. அந்தப் பேச்சை ஒட்டுக் கேட்பதனால் இப்படிப் புதுக் கவலைகளும், பயமும் ஏற்படும் என்று தெரிந்திருந்தால் முதலிலேயே ஒட்டுக் கேட்காமல் இருந்திருப்பாள்.
கொம்பு முளைக்காத குட்டிப் பருவத்துப் புள்ளிமான் போல் அவலமற்றுக் கவலையற்று அந்தத் தீவின் எழிலரசியாய்த் துள்ளித் திரிய வேண்டிய அவளுக்குக் கவலை ஏன்? பயம் ஏன்? கலக்கம் ஏன்? எவனைப் பற்றிய நினைவுகள் அவள் நெஞ்சில் நிரந்தரமாக ஓடிக்கொண்டிருக்கின்றனவோ, அவனையே கொலை செய்வதற்கு முயல்கிறவர்களைப் போல அவர்கள் பேசிக் கொண்டு சென்றதனால்தான் அவள் கவலைப்பட்டாள், பயந்தாள், கலங்கினாள். அந்த முரடர்களுடைய பேச்சை ஒட்டுக் கேட்ட நாளிலிருந்து அவளுக்கு ஒரு காரியமும் ஓடவில்லை.
'ஐயோ! அந்த முரடர்களால் நடுக்கடலில் அவருடைய கப்பலுக்கு ஒரு துன்பமும் நேராமலிருக்க வேண்டுமே! அவர்கள் கையில் அகப்பட்டுக் கொண்டால் அவரைக் கொல்லாமல் விடமாட்டார்களே? அவருடைய விரோதிகள் எவரோ அவரைக் கொன்று விடுவதற்கென்றே அந்த முரட்டு ஆட்களைத் தூண்டி விட்டு அனுப்பியிருக்கிறார்கள் போலிருக்கிறது. எல்லா நன்மையும் கொடுக்கும் அந்த வலம்புரிச் சங்கு அவர் கையிலிருக்கிற வரை அவரை எந்தப் பகை என்ன செய்து விட முடியும்? கடவுளின் கருணையும், அவரையே நினைத்துக் கொண்டிருக்கும் எனது நல்ல காலமும் தான் அவரைக் காப்பாற்ற வேண்டும்' என்று தானே தனக்குள் சிந்தித்துச் சிந்தனைச் சூட்டில் வெந்து கொண்டிருந்தாள் மதிவதனி. அதன் காரணமாக எந்தக் காரியத்தைச் செய்தாலும் சுய நினைவு இன்றிச் செய்து கொண்டிருந்தாள் அவள். சிந்தனை ஓரிடத்திலும், செயல் ஓரிடத்திலுமாகப் பைத்தியக்காரி போல் கடையிலும் வீட்டிலும், கடற்கரை மணற்குன்றுகளிலும் திரிந்து கொண்டிருந்தாள் அவள். அந்தத் தீவின் கரையோரத் தென்னை மரங்களிலிருந்து பறந்து செல்லும் கிளிகளின் கூட்டங்களைப் பார்க்கும் போதெல்லாம், 'என் மனத்துக்கும் இப்படி வானவெளியில் நீந்திக் கீழேயுள்ள கடலைக் கடந்து பறந்து செல்லும் ஆற்றல் இருந்தால் வேகமாகப் பறந்து போய் அவருடைய தோளின் மீது உரிமையோடு உட்கார்ந்து கொண்டு, அந்த முரடர்கள் அவரைத் தேடிக் கொண்டிருக்கும் இரகசியத்தைக் காதோடு சொல்லி எச்சரித்து விடுவேன்' என்று எண்ணி ஏங்குவாள். அவளும் ஒரு கிளிதான். ஆனால் பறக்கும் கிளி இல்லையே, பேசிச் சிரித்து உணர்ந்து நடக்கும் பெண் கிளியாயிற்றே அவள்!
'தலையை அழுத்தும் பாரமான சுமைகளைத் தாங்கிக் கொண்டு கூடப் பொறுமையாக நீண்ட தூரம் நடந்து விட முடிகிறது. ஆனால் கனமோ, பாரமோ உறைக்காத எண்ணங்களையும், ஆசைகளையும், ஏக்கங்களையும் சுமந்து கொண்டு மட்டும் பொறுமையாக வாழ முடிவதில்லையே? நினைவின் சுமைகளுக்கு அவ்வளவு கனமா? அவ்வளவு பாரமா?' மதிவதனியால் தாங்க முடியவில்லை.
சில நாட்களாகவே அவள் ஒரு மாதிரி ஏக்கம் பிடித்துப் போய்க் கிடப்பதை அவளுடைய தந்தையும், அத்தையும் உணர்ந்து கொண்டனர். அந்தப் பெண்ணின் முரண்டுக்கும் பிடிவாதத்துக்கும் பயந்து அவளிடம் ஒன்றும் கேட்கவில்லை அவர்கள். எதையாவது வற்புறுத்திக் கேட்டால் அழுதுவிடுவாளோ என்று பயம் அவர்களுக்கு.
அன்று நண்பகலில் மதிவதனியின் அத்தை ஒரு குடலை நிறைய அடுக்கு மல்லிகைப் பூக்களைக் கொண்டு வந்து கொடுத்து, "மதிவதனி! இவற்றை உன் கையால் அழகாகத் தொடுத்துக் கொடு, பார்க்கலாம். இன்று மாலை நான் கடற்கரையிலுள்ள ஏழு கன்னிமார் கோவிலுக்குப் போய் நேர்த்திக் கடன் செலுத்தி வழிபட்டுவிட்டு வரவேண்டும். எல்லாம் உனக்கு நல்ல இடத்தில் கொழுநன் வாய்த்துப் பெரு வாழ்வு வாழவேண்டுமே என்பதற்காகத்தான்" என்று கூறி வேண்டிக் கொண்டாள்.
அத்தையின் வேண்டுகோளை மறுக்க முடியாமல் மதிவதனி உட்கார்ந்து கொண்டு நாரை எடுத்து மலரைத் தொடுக்க ஆரம்பித்தாள். கை மலர்களைத் தொடுத்துக் கொண்டிருக்கும் போதே மனம் நினைவுகளைத் தொடுக்க ஆரம்பித்தது. மனம் ஏதாவதொன்றில் ஒருமையாகக் குவியும் போது அந்த ஒன்றைத் தவிர இரண்டாவதாகச் செய்யப்படும் காரியம் சரியாக நடைபெறாது. பராக்குப் பார்த்துக் கொண்டே சிந்தனையில் மூழ்கியிருந்த மதிவதனி பூக்களை எடுத்து முடிவதை மறந்து வெறும் நாரையே மாற்றி மாற்றிச் சுருக்கிட்டு முடிந்து கொண்டிருந்தாள். தற்செயலாக அந்தப் பக்கமாக வந்த அவளுடைய அத்தை, அவள் பூத்தொடுத்துக் கொண்டிருந்த அழகைப் பார்த்ததும் பொறுக்க முடியாமல் சிரித்து விட்டாள்.
"நீ பூத்தொடுக்கிற சீரைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது. ஏதோ நினைவில் எங்கேயோ கவனத்தை வைத்துக் கொண்டு வெறும் நாரை வளைத்து வளைத்து முடிந்து கொண்டிருக்கிறாயே அம்மா! நீ காரியம் செய்கிற அழகு மிகவும் நன்றாக இருக்கிறது. நானும் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறேன், நாலைந்து நாட்களாக நீ பித்துப் பிடித்தவளைப் போல் இருக்கிறாய். வேளா வேளைக்கு உண்ண வருவதில்லை. இந்த வயதான காலத்தில் அண்ணனுக்கு உதவியாகக் கடைக்குப் போக மாட்டேனென்கிறாய். கால் கடுக்கச் சுற்றிக் கொண்டிருக்கிறாய். நீ எப்போது வீட்டுக்குத் திரும்பி வருவாய், எப்போது வெளியே போவாய் என்பதே எனக்கும் அண்ணனுக்கும் தெரியாமற் போய்விட்டது. உன்னைப் போல் பருவம் வந்த பெண்ணுக்கு இந்தப் போக்கு நல்லதில்லை."
அவளைப் பற்றித் தன் மனத்திலிருந்த குறைகளை அவள் முன்பே சொல்லித் தீர்த்து விட்டாள் அத்தை.
பூக்களையே தொடாமல் தான் வெறும் நாரை முடிந்து கொண்டிருப்பதை உணர்ந்த போது மதிவதனிக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது. முதலில் ஐந்தாறு கண்ணிகள் பூ வைத்துத் தொடுத்திருந்தாள். அதன் பின்பு வெறும் நாரில் தான் வரிசையாக முடிச்சுகள் விழுந்திருந்தன. தப்பித்தவறி இது மாதிரி அத்தையின் வாயில் விழுந்து விட்டால் நிறையப் பேச்சு வாங்கிக் கட்டிக் கொள்ளாமல் மீள முடியாதென்று அவளுக்குத் தெரியும்.
"ஏதோ தெரியாமல் செய்து விட்டேன் அத்தை! கொஞ்சம் நினைவு தடுமாறி விட்டது. இன்னும் சிறிது நேரத்தில் எல்லாப் பூக்களையும் விரைவாகத் தொடுத்துக் கொடுத்து விடுகிறேன்" என்று முகத்தில் மலர்ச்சியை வரவழைத்துக் கொண்டு கூறினாள் மதிவதனி.
"கொஞ்சம் என்ன? சில நாட்களாகவே நீ முழுக்க முழுக்க நினைவுத் தடுமாறிப் போய்த்தானே திரிகிறாய்? அந்த வலம்புரிச் சங்கை விலைக்கு வாங்கிக் கொண்டு போன இளைஞனை நீ இன்னும் மறக்கவில்லை போலிருக்கிறது. அவனை நினைத்துக் கொண்டு தான் நீ இவ்வளவு ஆட்டமும் போடுகிறாய். நானும் அண்ணனும் உன்னை எவ்வளவோ கண்டித்துப் பார்த்துவிட்டோம். நீ எங்கள் கண்டிப்பைக் கேட்டுத் திருந்துகிற பெண்ணாகத் தெரியவில்லை. நடக்கக்கூடிய காரியத்தையா நீ நினைக்கிறாய்? நீயும் உன் தந்தையும் சொல்வதிலிருந்து அந்த இளைஞன் பெரிய செல்வக் குடும்பத்துப் பிள்ளையாயிருக்க வேண்டுமென்று தெரிகிறது. தென் திசைக் கடலில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் இந்தச் சிறு தீவில் உன்னைப் போல் ஒரு பெண்ணைச் சந்தித்ததை எப்போதோ மறந்து போயிருப்பான் அவன். அவனையே நினைத்துக் கொண்டு ஏங்கும் அசட்டு எண்ணங்களை இந்த விநாடியிலேயே விட்டுவிடு. நமக்கு எட்டாத பொருளை, நம்மால் எட்டி எடுக்க முடியாத உயரத்தில் இருக்கும் அழகை, நாம் நினைத்து உருகிப் பயனென்ன? இரண்டு கைகளும் முடமாகிக் கால் நொண்டியான ஊமை ஒருவன் தனக்கு எதிரே உள்ள பாறையில் சுவையான 'பசுவெண்ணெய்' உருட்டி வைத்திருப்பதைப் பார்க்கிறான். வெயிலில் வெண்ணெய் உருகிப் பாறையில் வீணாகி வழிகிறது. அவனால் என்ன செய்ய முடியும். தான் உண்ணக் கைகள் இல்லை; நடந்து செல்லக் கால்கள் இல்லை, பிறரைக் கூப்பிடலாமென்றாலோ வாய் ஊமை. சாத்தியமில்லாத ஆசைகளோடு போராடி என்ன நன்மை விளையப் போகிறது, பெண்ணே? அந்த இளைஞனைப் பற்றிய ஆசைகளைத் தொலைத்துத் தலைமுழுகிவிட்டு எப்போதும் போல் நீ பழைய மதிவதனியாக மாறிவிடு. நான் உன் முகத்தில் மலர்ச்சியைக் காண வேண்டும். உன் உதட்டில் சிரிப்பைக் காண வேண்டும். உன் வாயில் கலகலப்பு நிறைந்த பழைய குறும்புப் பேச்சைக் கேட்க வேண்டும். உன் நடையில் பழைய துள்ளலைக் காணவேண்டும். இன்றே இந்தக் கணமே நீ பழைய மதிவதனியாக மாறிவிடு. கடைக்குப் போ; பழைய சுறுசுறுப்போடு விற்பனையைக் கவனி. அண்ணனுக்கு மகள், மகன் இரண்டாகவும் இருப்பவள் நீ ஒருத்திதான். இப்படிச் சோக நாடகம் நடித்து அண்ணனையும் என்னையும் வேதனைப்படுத்தாதே." அத்தை தன் உள்ளத்தின் உணர்ச்சிகளாயிருந்த ஆத்திரம், வேதனை, ஆவல் எல்லாவற்றையும் அடக்க முடியாமல் அந்தப் பெண்ணின் முன்பு கொட்டித் தீர்த்து விட்டாள். அத்தையின் பேச்சுக்கு மதிவதனியிடமிருந்து பதில் வரவில்லை. முழங்காலைக் குத்தவைத்து அதன்மேல் முகத்தைப் புதைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள் அவள். மெல்லிய விசும்பல் ஒலி அத்தையின் செவிகளில் விழுந்தது.
"என்னடி, பெண்ணே? இதற்காகவா அழுகிறாய்? அழுகை வரும்படி நான் என்ன சொல்லிவிட்டேன் இப்போது?" என்று கேட்டுக் கொண்டே கீழே குனிந்து அவள் முகத்தை நிமிர்த்தினாள் அத்தை. அவளுடைய விழிகள் கண்ணீர்க் குளங்களாக மாறியிருந்தன. கண்களில் அரும்பிய கண்ணீர் அரும்புகள் செடிகளில் அரும்பி மலர்ந்த மலர்களில் உதிர்ந்தன.
"யாராவது இதற்காக அழுவார்களா? கோவிலுக்குக் கொண்டு போக வேண்டிய மலர்களின் தூய்மை கெடும்படியாக இப்படி இவற்றின் மேல் கண்ணீரைச் சிந்துகிறாயே? நீ செய்கிற காரியம் உனக்கே நன்றாயிருந்தால் சரிதான்" என்று கடிந்து கொண்டே அவள் கூந்தலைக் கோதிவிட்டுச் சரி செய்தாள் அத்தை.
அந்தச் சமயத்தில் வெளியே சென்றிருந்த மதிவதனியின் தந்தை வீட்டுக்குள் நுழைந்தார்.
"மதிவதனி! எதற்காக அம்மா இப்படி உன் அத்தையிடம் அழுது முரண்டு பிடித்துக் கொண்டிருக்கிறாய்?" என்று அவர் கேட்டார்.
"அண்ணா! உங்கள் பெண்ணுக்கு நீங்கள் தான் சொல்ல வேண்டும். அவளுடைய நினைவுகளும், கனவுகளும் இப்போது இந்தத் தீவிலேயே இல்லை. முன்னைப் போல் சிரிக்காமல், பேசாமல், கலகலப்பாக இருக்காமல், எப்போதும் 'அவனை'யே நினைத்துப் புழுங்கிக் கொண்டிருக்கிறாள். கடற்கரைக் கன்னிமார் கோயிலுக்குப் போவதற்காகப் பூத்தொடுக்கச் சொன்னேன். தொடுப்பதற்காக உட்கார்ந்தவள் சுய நினைவே இல்லாமல் பூவை மறந்து வெறும் நாரை முடிந்து கொண்டிருக்கிறாள். 'இப்படியெல்லாம் இருக்காதே. அவனை மறந்துவிட்டு முன்போல் இரு' என்று கண்டித்தேன். அதற்குத்தான் இந்தப் பலமான அழுகை!"
தன் தங்கை கூறியதைக் கேட்டு மதிவதனியின் தந்தை சிரித்தார். "இந்த மாதிரி வயதுப் பெண்களை இத்தகைய அநுபவங்களிலிருந்து கண்டித்து மட்டும் திருத்தி விட முடியாது. தன்னை நினைக்காதவனைத் தான் நினைத்து ஏமாந்த பெண்களின் கதைகள் உலகத்தில் அதிகமாக இருக்கின்றன. அந்தக் கதைகளில் ஒன்றாக என் அருமைப் பெண்ணின் நினைவுகளும் ஆகிவிடக்கூடாதே என்பதுதான் என்னுடைய கவலை. நினைப்பதை அடைவது ஒரு தவம்; ஒரு புனிதமான வேள்வி அது. நினைத்து நினைத்து அந்த நினைவுகளை உருவேற்றி வலுவேற்றி எண்ணியதை அடைந்தே தீரும் ஆசைத் தவத்துக்குப் பிடிவாதம் நிறைய வேண்டும். அந்த அன்புமயமான தவத்தை விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு வெல்லும் தெம்பு இதிகாச காலத்துப் பெண்களுக்கு இருந்தது. சீதைக்கும், பாஞ்சாலிக்கும், ஓரளவு சகுந்தலைக்கும் இருந்த அந்தத் தெம்பு செம்பவழத் தீவின் ஏழைப் பரதவனான என்னுடைய மகளுக்கு இருந்தால் அவளுடைய நல்வினைதான் அது. சீதையும் பாஞ்சாலியும் சகுந்தலையும் நினைத்தவர்களை அடைய மட்டும் தான் முடிந்தது. சாவித்திரியோ அவர்களினும் ஒரு படி மேலே போய்விட்டாள். தான் அடைந்த ஆடவனைத் தன் நினைவுத் தவத்தால் கூற்றுவனிடமிருந்தே மீட்க முடிந்தது அவளால். தெய்விகக் காதலின் வெற்றிக்கு இத்தகைய நினைவு வன்மை பெண்களுக்கு வேண்டும். சிறிய ஆசைகளில் மனம் வைத்துவிட்டால் நினைவுகளுக்கு ஆற்றலே உண்டாவதில்லை. நீயும் நானும் இவளைக் கண்டிப்பதை இன்றோடு விட்டுவிட வேண்டும். இவ்வளவு வயது வந்த பெண்ணைக் கண்டிப்பதும் அநாகரிகமானது. இவளுடைய நினைவுகளே இவளுக்கு விளைவு கற்பிக்கட்டுமென்று விட்டு விடுவதுதான் நல்லது." ஒன்றிலும் பட்டுக் கொள்ளாதவர் போல் தன் தங்கையிடம் கூறிய அவர் மதிவதனியின் பக்கமாகத் திரும்பி, "மதிவதனீ! நீ ஏன் அழுகிறாய்? நீ இன்னும் குழந்தையில்லையே? தாயைத் தவிர வேறு நினைவில்லாதவரை பெண் பேதையாயிருக்கிறாள். தந்தை உடன்பிறந்தோர், விளையாட்டுப் பொருள் - எல்லாவற்றையும் கடந்து தன்னைத் தவிர இன்னொரு ஆண்மகனை நினைக்கத் தொடங்கும் போது பேதை முழுமைபெற்ற பெண்ணாகி விடுகிறாள். இப்போது நீ ஒரு பெண். உன் நினைவுக்கு நீ ஒர் ஆண்மகனைத் தேடி உறுதியாக்கு. அதுதான் நான் உனக்குக் கூறும் அறிவுரை. இனிமேல் நான் உன்னைக் கண்டிக்கப் போவதில்லை. பயமுறுத்தப் போவதில்லை. அந்த இளைஞன் உன்னை மறந்து விடுவானென்று சொல்லிக் கலக்கமடையச் செய்யும் வழக்கத்தையும் இந்த விநாடியிலிருந்து நான் விட்டுவிடுகிறேன்."
தந்தையின் அந்தப் பேச்சைக் கேட்டவுடன் மதிவதனிக்கு உடல் சிலிர்த்தது. தை மாதத்து வைகறையில் கடலில் நீராடினது போல் இருந்தது.
"அப்பா..." என்று உணர்ச்சி மேலிட்டுக் கூவிக் கொண்டே எழுந்து ஓடி வந்து அவர் காலடியில் சுருண்டு விழுந்தாள் அவள். "நினைவை உறுதியாக்கு. நினைப்பதை அடைவது ஒரு தவம்" என்ற சொற்கள் அவள் செவியை விட்டு நீங்காமல் நித்திய ஒலியாகச் சுழன்று கொண்டிருந்தன. தன் எண்ணத்தின் இலட்சியமான காதலில் வெற்றிபெற ஒரு புதிய கருவி கிடைத்துவிட்டது. அவனை அடைவதற்கு அவளுக்கு ஒரு புதிய உண்மையை அவள் தந்தை கூறிவிட்டார்.
"அப்பா! 'இதிகாச காலத்துக்குப் பின்பும் நினைவைத் தவமாக்கி, நினைத்தவனை அடையும் இலட்சியக் காதலுக்கு உதாரணமாகச் செம்பவழத் தீவில் ஒரு பெண் பிறந்திருந்தாள்' என்று என்னையும் எடுத்துக்காட்டாகக் கூறுவதற்குத் தகுந்தபடி நான் வாழ்ந்து காட்டிவிடப் போகிறேன். அப்பா! அப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்துவிட வேண்டுமென்று பிடிவாதம் இப்போதே எனக்கு உண்டாகிவிட்டது" - அவருடைய பாதங்களில் தன் கண்ணீர் ஒழுக ஆவேசத்தோடு உறுதியான குரலில் கதறினாள் மதிவதனி.
"எழுந்திரு, அம்மா! காலம் உன் நினைவுக்கு வெற்றியைக் கொடுக்கட்டும்" என்று அமைதியாகக் கூறி, அவள் பிடியிலிருந்து தம் பாதங்களை விடுவித்துக் கொண்டு வீட்டின் உட்பக்கமாக நடந்தார் அவர். மதிவதனியின் அத்தை ஒன்றும் சொல்லத் தோன்றாமல் சூனியத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றாள்.
அன்றைக்கு மாலையில் தன் அத்தையோடு கடற்கரையிலுள்ள ஏழு கன்னிகைகளின் கோயிலுக்குப் போயிருந்தாள் மதிவதனி. ஏழு கன்னியர் கோவிலின் வாசலில் ஒரு பழைய புன்னை மரம் இருந்தது. மிகவும் வயதான மரம் அது. அதனடியில் மணற் பரப்பில் திருமணமாகாத கன்னிப் பெண்கள் தங்கள் மனத்திலுள்ள எண்ணம் நிறைவேறுமா என்றும், நினைவுக்கு இசைந்த கணவன் கிடைப்பானா என்றும் 'கூடல் இழைத்து'ப் பார்ப்பது வழக்கம். கூடல் இழைத்துப் பார்த்தலாவது: மணற்பரப்பில் கிழக்குத் திசை நோக்கி அமர்ந்து கொண்டு, இரண்டு கண்களையும் மூடி வழிபடும் தெய்வத்தை மனத்தில் தியானித்து, வலது கை ஆள் காட்டி விரலால் மணற்பரப்பில் குருட்டாம் போக்கில் ஒரு வட்டம் போடுவது. கோட்டைத் தொடங்கிய நுனியில் விலகாமல் ஒழுங்காக வந்து பொருந்தி வட்டம் முழுமையாக முடிவு பெற்றால் எண்ணிய காரியம் வெற்றி பெறும் என்று தீர்மானித்துக் கொள்ளலாம்.
அத்தைக்குத் தெரியாமல் புன்னை மரத்தடியில் கூடல் இழைத்துப் பார்த்து விட வேண்டும் போல் ஆவல் குறுகுறுத்தது மதிவதனிக்கு. வரிசையாக இருந்த ஏழு கன்னியரின் சிலைகளுக்கும் பூ அணிவித்து விட்டு அத்தை கண்களை மூடித் தியானித்துக் கொண்டு நின்ற போது மெல்ல வெளிப் பக்கமாக நழுவிப் புன்னை மரத்தடி மணற்பரப்புக்கு வந்தாள் அவள். அத்தை திரும்பி வந்து பார்த்துவிடப் போகிறாளே என்ற பயமும், வெட்கமும் பதற்றத்தை உண்டாக்கின. கண்களை மூடினாள். பளபளப்பான இமைத் தோள்களின் கரும் பசுமைச் சிறு நரம்புகள் மூடிய கண்களின் அழகைக் காட்டின. வலது கை விரல்கள் பயத்தால் நடுங்கின. உடல் வியர்த்தது. நெஞ்சு ஆவலால் வேகமாக அடித்துக்கொண்டது. வலது கை ஆள் காட்டி விரலால் வட்டத்தை மணலில் கீறிவிட்டுக் கண்களை ஆசையோடு திறந்து பார்த்தாள். என்ன ஆச்சரியம்? ஆரம்பித்த நுனியோடு கோடு சரியாகப் போய்ப் பொருந்தி வட்டம் ஒழுங்காக முடிந்திருந்தது. அந்த வட்டத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் போதே தன் அன்புக்குரியவன் அன்று கப்பல் மேல் தளத்திலிருந்து ஊதிய சங்கின் ஒலி மறுபடியும் கேட்பது போல் ஒரு பிரமை ஏற்பட்டது அவளுக்கு. கூடல் கூடியதால் உண்டான குதூகலத்தால் மதிவதனி அதையே பார்த்துப் பூரித்துக் கொண்டிருந்த போது பின்னால் யாரோ சிரிக்கும் ஒலி கேட்டது. திரும்பிப் பார்த்தாள். அவளுடைய அத்தை நின்று கொண்டிருந்தாள். அவளுக்கு வெட்கம் தாங்க முடியவில்லை.
-------
2.25. கடற் காய்ச்சல்
சக்கசேனாபதி பதறிப் போனார். நடுக்கடலில் குமார பாண்டியனுக்கு அப்படி ஒரு நிலை ஏற்படுமென்று அவர் எதிர்பார்க்கவில்லை. சிலருடைய உடல் இயல்புக்குத் தொடர்ந்தாற் போல் கடலில் பயணம் செய்வது ஒத்துக் கொள்ளாது. இராசசிம்மனுக்குக் கடற் காய்ச்சல் வருவதற்கான அறிகுறிகள் இருந்ததை முன் கூட்டியே அவர் உணர்ந்து கொண்டார். சுருண்டு சுருண்டு படுத்துக் கொள்வதையும், சோர்வடைந்து தென்படுவதையும் கொண்டே கடற் காய்ச்சல் வரலாமென்று அநுமானித்திருந்தார். ஆனால் அது இவ்வளவு கடுமையான நிலைக்கு வந்துவிடுமென்று அவர் நினைக்கவில்லை.
அன்று மாலை நேரத்துக்குள் காய்ச்சல் மிகுதியாகி விட்டது. குமார பாண்டியன் தன் நினைவின்றிக் கிடந்தான். ஏற்கெனவே அவனுக்கு ஒற்றை நாடியான உடல். காய்ச்சலின் கொடுமையால் அந்த உடல் அல்லித் தண்டாகத் துவண்டு போய்விட்டது. வெறும் காய்ச்சலோடு மட்டும் இருந்தால் பரவாயில்லை. மன உளைச்சலும் சேர்ந்து கொண்டது. 'தன் செயலைப் பற்றித் தாய் என்ன நினைப்பாள்? மகாமண்டலேசுவரர் என்ன நினைப்பார்? அன்பை எல்லாம் அள்ளிச் சொரிந்து ஒட்டிக் கொண்டு பழகிய மகாமண்டலேசுவரரின் அருமைப்பெண் குழல்வாய்மொழி என்ன எண்ணுவாள்?' என்று இத்தகைய கவலைகள் வேறு குமாரபாண்டியன் மனத்தைக் கலக்கியிருந்தன. அவன் கப்பல் தளத்தில் படுத்துக் கொண்டு தன்னை மறந்து உறங்கிய போது ஒரு கனவு கண்டிருந்தானே, அந்தக் கனவும் அவன் உள்ளத்தைக் குழப்பிக் கொண்டிருந்தது.
காய்ச்சல், சோர்வு, கலக்கம், குழப்பம் எல்லாவற்றுக்கும் நடுவில் அவன் நெஞ்சுக்கு ஆறுதலான நினைவு ஒன்றும் கோடையின் வெப்பத்தினிடையே சிலுசிலுக்கும் தென்றலைப் போல் ஊடுருவிக் கொண்டிருந்தது. அந்த நினைவு...? அது தான் மதிவதனி என்ற இனிய கனவு! பழுத்த மாங்காயில் காம்போரத்துச் செங்கனிகளின் செழுமை போல் கன்னங் குழியச் சிரிக்கும் மதிவதனியின் கன்னிச் சிரிப்பு மூடினாலும் திறந்தாலும் அவன் இமைகளுக்குள்ளேயே நிறைந்து நின்றது. பூவுக்குள் மர்மமாக மறைந்து நிற்கும் நறுமணம் போல அந்தப் பெண்ணின் சிரிப்புக்குள் 'ஏதோ ஒன்று' மறைந்திருந்து தன்னைக் கவர்வதை அவன் உணர்ந்தான். காய்ச்சலின் வெப்பம் அவன் உடலெங்கும் கனன்றது. மதிவதனியைப் பற்றிய நினைவோ அவன் உள்ளமெங்கும் குளிர்வித்தது. சக்கசேனாபதி அவன் தலைப்பக்கத்தில் கன்னத்தில் ஊன்றிய கையுடன் அமர்ந்திருந்தார்.
குமார பாண்டியனையும் அவன் கொண்டு வரும் பாண்டிய மரபின் அரசுரிமைச் சின்னங்களையும் பத்திரமாக ஒரு குறைவுமின்றி ஈழ நாட்டுக்குக் கொண்டு போய்ச் சேர்க்கும் பொறுப்பு அவருடையது தானே? அவர் கவலைப்படாமல் வேறு யார் கவலைப்பட முடியும்? இலங்கைப் பேரரசன் காசிபனின் உயிர் நண்பனான இராசசிம்மனைக் கடற் காய்ச்சலோடு அழைத்துக் கொண்டு போய் அவன் முன் நிறுத்தினால் அவனுடைய கோபம் முழுவதும் சக்கசேனாபதியின் மேல் தான் திரும்பும்.
காசிபனுடைய கோபத்துக்கு ஆளாக நேரிடாமல், கப்பல் ஈழமண்டலக் கரையை அடையுமுன்பே குமார பாண்டியனுக்குச் சுகம் ஏற்பட்டு அவன் பழைய உற்சாகத்தைப் பெற வேண்டுமென்று எல்லாத் தெய்வங்களையும் மனத்துக்குள் வேண்டிக் கொண்டிருந்தார் சக்கசேனாபதி. இளவரசன் இராசசிம்மனின் உடலுக்கு அதிர்ச்சி ஏற்படாமல் இருக்க வேண்டுமென்பதற்காகக் கப்பலைக் கூட வேகத்தைக் குறைத்து மெதுவாகச் செலுத்த வேண்டுமென்று மாலுமியைக் கூப்பிட்டு எச்சரிக்கை செய்திருந்தார். கடற் காய்ச்சலை விரைவாகத் தணிப்பதற்குப் போதுமான மருந்துகள் கப்பலிலேயே இருந்த போதும் அவருக்குக் கவலை என்னவோ ஏற்படத்தான் செய்தது. எல்லோருக்குமே கப்பலில் அந்த ஒரே கவலைதான் இருந்தது. கப்பலைச் செலுத்தும் மாலுமி, கப்பலின் பொறுப்பாளனான கலபதி, சாதாரண ஊழியர்கள் எல்லோரும் குமார பாண்டியனுக்குச் சீக்கிரமாக உடல் நலம் ஏற்பட வேண்டுமே என்ற நினைவிலேயே இருந்தனர். இன்னும் இரண்டொரு நாள் பயணத்தில் கப்பல் இலங்கைக் கரையை அடைந்து விடும். கப்பலின் வேகத்துக்கும் வேகமின்மைக்கும் ஏற்பக் கூடக் குறைய ஆகலாம்.
நீண்ட பகல் நேரம் முழுவதும் இராசசிம்மன் அன்றைக்குக் கண் விழிக்கவேயில்லை, உணவும் உட்கொள்ளவில்லை. தூக்கத்தில் அவன் என்னென்னவோ பிதற்றினான். மாலையில் பொழுது மங்கும் நேரத்திற்கு அவன் கண் விழித்தான். தாமரையின் சிவப்பான உட்புறத்து அகவிதழைப் போல் அவனுடைய கண்கள் சிவந்திருந்தன. ஈரக்கசிவும் கலக்கமும் கூடத் தென்பட்டன.
"இளவரசே! காய்ச்சல் உடம்போடு நீங்கள் இப்படிப் பசியையும் சேர்த்துத் தாங்கிக் கொண்டிருப்பது நல்லதில்லை. ஏதாவது கொஞ்சம் உணவு உட்கொள்ளுங்கள்" என்று சக்கசேனாபதி கெஞ்சினார்.
"நான் என்ன செய்யட்டும்? எனக்கு உணவு வேண்டியிருக்கவில்லை. வாயெல்லாம் சுவைப் புலன் மரத்துப் போய்க் கசந்து வழிகிறது. என்னை வற்புறுத்தாதீர்கள்" என்று குமார பாண்டியனிடமிருந்து பதில் வந்தது. தட்டுத் தடுமாறிக் கொண்டே தளத்தில் விரித்திருந்த விரிப்பில் தள்ளாடி எழுந்து உட்கார்ந்தான். அவனுக்கு இருந்த தளர்ச்சியைக் கண்டு பதறிக் கீழே சாயந்து விடாமல் சக்கசேனாபதி முதுகுப் பக்கமாகத் தாங்கிக் கொண்டார். நோயுற்றுத் தளர்ந்திருக்கும் அந்த நிலையிலும் இராசசிம்மனின் முக மண்டலத்தில் யாரையும் ஒரு நொடியில் கவர்ந்து தன்வயமாக்கிக் கொள்ளும் அந்த அழகுக் குறுகுறுப்பு மட்டும் குன்றவேயில்லை. சக்கசேனாபதியின் பருத்த தோளில் சாய்ந்து கொண்டு பெருமூச்சு விட்டான் அவன்.
"ஈழ நாட்டுக்கரையை அணுகுவதற்கு முன் உங்களுக்கு உடல் தேறவில்லையானால் காசிப மன்னருக்கு நான் காரணம் சொல்லி மீள முடியாது. நான் சரியாகக் கவனித்து அழைத்துக் கொண்டு வராததனால் தான் உங்களுக்குக் காய்ச்சல் வந்திருக்க வேண்டுமென்று என்னைக் கோபித்துக் கொள்ளத் தொடங்கிவிடுவார்" என்று சக்கசேனாபதி கூறியதற்கு இராசசிம்மன் உடனே மறுமொழி கூறவில்லை. சிறிது நேரம் நிதானமாக எதையோ சிந்தித்துவிட்டுப் பதில் சொல்லுகிறவனைப் போல், "சக்கசேனாபதி! உடற் காய்ச்சலை விட இப்போது மனக் காய்ச்சல் தான் அதிகமாகிவிட்டது" என்று தழுதழுக்கும் குரலில் சொன்னான். அந்தச் சொற்களைச் சொல்லும் போது உணர்ச்சிக் குமுறலின் வேதனையால் வார்த்தைகள் தடைப்பட்டு வந்தன. நெஞ்சு பலமாக விம்மித் தணிந்தது. சக்கசேனாபதி அதைக் கண்டு பயந்தார். அவனது நெஞ்சை மெதுவாகத் தடவி விட்டுக் கொண்டே, "இளவரசே! காய்ச்சல் உள்ள போது இப்படி உணர்ச்சி வசப்பட்டுப் பேசவோ, நினைக்கவோ கூடாது. எதைப்பற்றியும் மனத்தைக் கவலைப்பட விடாமல் நிம்மதியாக வைத்துக் கொள்ள வேண்டும்" என்று கூறினார்.
"என்னால் அப்படி நிம்மதியாக இருக்க முடியாவில்லையே, சக்கசேனாபதி! முள்ளில் புரண்டு கொண்டு பஞ்சணையாக நினைத்துக் கொள்வதற்கு நான் யோகியாக இருந்தால் அல்லவா முடியும்? ஆசையும் பாசமும் ஆட்டிவைக்க ஆடும் சாதாரண மனிதன் தானே நானும்? நான் செய்துவிட்டனவாக என்னாலேயே உணரப்படும் என் தவறுகள் நிழல் போல் என்னைச் சாடுகின்றனவே?" இராசசிம்மன் மனவேதனையோடு இப்படிச் சொல்லிய போது அவனுக்கு என்ன பதில் சொல்லுவதென்று சக்கசேனாபதிக்கு விளங்கவில்லை.
அவர்கள் இருவருக்கும் இடையே சில விநாடிகள் மௌனம் நிலவியது. இருந்தாற் போலிருந்து இராசசிம்மன் திடீரென்று குமுறி அழ ஆரம்பித்து விட்டான். என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார் அவர். அவனை வேதனைக் குள்ளாக்கியிருக்கும் எண்ணம் என்னவென்று சக்கசேனாபதியினால் விளங்கிக் கொள்ள முடியவில்லை. உடலில் நோய் வேதனை அதிகமாகும் போது சில மனிதர்கள் தங்களுக்குத் தாங்களே அசட்டுத்தனமாக வாய்விட்டு அழுது கொள்வதுண்டு. 'குமார பாண்டியனுடைய அழுகையும் அந்த வகையைச் சேர்ந்ததுதானோ?' என்று எண்ணி வருந்தினார்.
"இளவரசர் இப்படி வரவரச் சிறு குழந்தையாக மாறிக் கொண்டு வந்தால் நான் எப்படி ஆறுதல் சொல்ல முடியும்? எதற்காக, எதை நினைத்துக் கொண்டு இப்போது நீங்கள் அழுகிறீர்கள்?" அவன் முகத்தருகே நெருங்கிக் குனிந்து விசாரித்தார் அவர்.
"இத்தனை நாட்களாக இடையாற்று மங்கலம் மாளிகையில் போய் யாருக்கும் தெரியாமல் திருடனைப் போல் ஒளிந்திருந்தேனே! என் அன்னையைப் போய்ப் பார்க்கவேண்டுமென்று என் பாழாய்ப் போன மனத்துக்குத் தோன்றவே இல்லையே? சக்கசேனாபதி! 'பெற்றம் மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு' என்று என் தாய் அடிக்கடி ஒரு பழமொழியைச் சொல்லுவாள். அதற்கேற்றாற் போலவே நானும் நடந்து கொண்டிருக்கிறேன். என் செயல்களையெல்லாம் தெரிந்து கொண்டால் என் தாயின் மனம் என்ன பாடுபடும்? என்னால் யாருக்கு என்ன பயன்? எல்லோருக்குமே கெட்ட பிள்ளையாக நடந்து கொண்டு விட்டேன். இதையெல்லாம் நினைத்தால் எனக்கே அழுகை அழுகையாக வருகிறது. மகாமண்டலேசுவரர் என்னைப் பற்றி எவ்வளவோ நம்பிக்கையும் நல்ல எண்ணமும் வைத்துக் கொண்டு இடையாற்று மங்கலத்தில் கொண்டு போய்த் தங்கச் செய்திருந்தார். நான் அவருக்கே நம்பிக்கைத் துரோகம் செய்து ஏமாற்றி அரசுரிமைப் பொருள்களைக் கவர்ந்து கொண்டு வந்துவிட்டேனே!" என்று சக்கசேனாபதியிடம் அழுதுகொண்டே சொல்லிப் புலம்பினான் அவன். என்ன கூறி எந்த விதத்தில் அவனைச் சமாதானப்படுத்துவதென்றே அவருக்குத் தெரியவில்லை.
"இல்லாததையெல்லாம் நீங்களாகக் கற்பனை செய்து கொண்டு அழாதீர்கள். சந்தர்ப்பங்கள் நம்மை எப்படி நடத்திக் கொண்டு போகின்றனவோ, அப்படித்தானே நாம் நடக்க முடியும்? உங்கள் மேல் என்ன தவறு இருக்கிறது. மகாமண்டலேசுவரர் உங்களை அவ்வளவு கட்டுக்காவலில் இரகசியமாக வைக்காவிட்டால் நீங்கள் உங்கள் அன்னையைச் சந்தித்திருப்பீர்கள் அல்லவா? அப்போது என்னவாகியிருக்கும்? போரும், பகைவர் பயமும் உள்ள இந்தச் சூழலில் அரசுரிமைச் சின்னங்கள் இடையாற்று மங்கலத்தில் இருப்பதை விட இலங்கையில் இருப்பதே நல்லது" என்று ஒருவிதமாக ஆறுதல் சொன்னார்.
"என்னை அங்கே கூட்டிக் கொண்டு போய் அவற்றைக் காண்பியுங்கள்" என்று கப்பலில் அரசுரிமைப் பொருள்கள் வைத்திருக்கும் அறையைச் சுட்டிக் காட்டிப் பிடிவாதம் பிடித்தான் அவன்.
மெல்ல எழுந்திருக்கச் செய்து நடத்திக் கூட்டிக் கொண்டு போய்க் காண்பித்தார். குழந்தை ஆச்சரியத்தோடு பார்ப்பது போல் முடியையும், வாளையும், சிம்மாசனத்தையும் திரும்பத் திரும்பத் தொட்டுப் பார்த்தான் இராசசிம்மன். அந்த அறையிலிருந்து வெளிவந்ததும், 'என்னை உடனே மேல் தளத்துக்குக் கூட்டிக் கொண்டு போனால்தான் ஆயிற்று!' என்று முரண்டு பிடித்தான். அந்தத் திறந்த வெளிக் காற்று காய்ச்சல் உடம்புக்கு ஒத்துக் கொள்ளாது என்று அவர் எவ்வளவோ சொல்லித் தடுத்துப் பார்த்தார். அவன் கேட்கவில்லை. மேல் தளத்தில் கூட்டிக் கொண்டு போய் நிறுத்தினார். மேலே மாலை நேரத்து வானின் செம்பொன்னிறச் செம்முகில்கள் ஆகாய வெளியைத் தகத்தகாயம் செய்து கோலமிட்டிருந்தன. வானின் பிறைச்சந்திரனை எட்டிப் பிடித்து விடுவது போல் அலைக் கைகளை மேல் எழுப்பியது நீலக் கடல். இராசசிம்மன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு விழிகளை இமைக்காமல், கடலையும், வானவெளியையும், நாற்புறத்திலும் திரும்பித் திரும்பிப் பார்த்தான். அந்த வானில், கடலில், அலைகளில், மேகங்களில், பிறைச்சந்திரனில் அவன் எதைக் கண்டானோ?
"சக்கசேனாபதி? கீழே போய் அந்த வலம்புரிச் சங்கை எடுத்து வாருங்கள்" என்றான். அவர் கீழே சென்றார். திரும்பிய பக்கமெல்லாம் செம்பவழத் தீவில் சந்தித்த அந்த அழகியின் முகமே தெரிவது போலிருந்தது இராசசிம்மனுக்கு. அந்த அற்புதமான இயற்கையின் சூழல் அவனை என்னவோ செய்தது. அவனுடைய நாவின் நுனியில் சில சொற்கள் துடித்தன. அவன் உள்ளம் ஏதோ ஒன்றை உணர்ந்து எதையோ அழகாக வெளியிடக் கிளர்ந்தது. அடுத்த விநாடி அவன் பாடத் தொடங்கினான். அலை ஓசையை இடையிட்டு அவன் இனிய குரல் ஒலித்தது. அந்த இனிமையில் 'மதிவதனி'யின் நினைவு அவனுள் சுழன்றது.
"மின்னலின் ஒளியெடுத்து முகில்தனில்
குழல் தொடுத்துப்
பொன்னில் நிறம்படைத்துப்
பிறையினில் நுதல் மடுத்துப்
புன்னகை முல்லையாகிப்
புருவங்கள் விற்களாகிக்
கன்னலின் சுவை குயிற்றிக்
கருவிளைக் கண்களாக்கி
மென்நடை பரதமாகி
மெல்லிதழ் பவழமாகிப்
பன்னெடுங் காலமென்றும்
படைப்பினுங் கழகுகாட்டிக்
கன்னிமை யென்னுமோர்
கற்பகம் பழுத்ததம்மா."
சங்கோடு வந்து நின்ற சக்கசேனாபதி அந்த இன்னிசை வெள்ளத்தில் சொக்கி நின்றார். "உங்களுக்கு இவ்வளவு நன்றாகப் பாடவருமா?" என்ற அவர் கேள்விக்குப் பதில் கூறாமலே அவரிடமிருந்து சங்கை வாங்கிக் கொண்டான் அவன்.
-----------
2.26. வம்புக்கார வாலிபன்
குழல்வாய்மொழிக்காக ஏற்பாடு செய்திருந்த கப்பலின் அலங்கார அறைக்குள்ளிருந்து அந்த இளைஞன் சிரித்துக் கொண்டே எதிரே வந்ததைப் பார்த்த போது நாராயணன் சேந்தனுக்கு ஏற்பட்ட திகைப்பு உடனே கோபமாக மாறியது. வேடிக்கையும், குறும்புத்தனமும் தென்படுகிற சேந்தன் முகத்தில் முதன் முதலாகக் கடுமையான சீற்றத்தைக் காணமுடிந்தது. "தம்பி! நீ சரியான திருட்டுப் பயல் என்பதைக் காட்டி விட்டாயே! நீ பெரிய கள்ளன். இந்தக் கப்பலில் ஏறக் கூடாதென்று கண்டித்துச் சொல்லியும் எங்கள் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு எப்படியோ மாயமாக உள்ளே புகுந்துவிட்டாய். இவ்வளவு தூரம் வம்புக்கு வந்துவிட்ட பின்பு உனக்கெல்லாம் இனிமேல் மதிப்பும் மரியாதையும் கொடுத்துக் கொண்டிருப்பதில் பயனில்லை. நீ என்னிடம் வாங்கிக் கட்டிக் கொண்டு தான் போகப் போகிறாய்" என்று தன்னுடைய மத்தளம் போன்ற புயங்களை மடக்கி அங்கியை மடித்து விட்டுக் கொண்டு அந்த வாலிபனை நெருங்கினான் சேந்தன். அவனுடைய உருண்டை முகத்திலும் பெரிய வட்டக் கண்களிலும் சினம் முறுக்கேறியிருந்தது.
குழல்வாய்மொழி பயந்து மருண்ட பார்வையோடு அறை வாயிலிலேயே நின்றுவிட்டாள். அந்த இளைஞன் எப்படி, எப்போது கப்பல் அறைக்குள் புகுந்திருக்க முடியுமென்பது அவள் அனுமானத்துக்கு எட்டவே இல்லை. அவளுக்கும் அந்த இளைஞன் மேல் ஆத்திரம் உண்டானாலும், சேந்தன் அவனை அடிப்பதற்காகக் கையை ஓங்கிக் கொண்டு போன போது சிறிது வேதனையாக இருந்தது. உள்ளத்தின் ஒரு மூலையில் அந்த இளைஞனுக்காக அநுதாபத்தின் மிகச் சிறிய ஊற்றுக் கண் திறந்து வருவதை அவளால் தடுத்துக் கொள்ள முடியவில்லை. ஆனால் சேந்தனிடம் அந்த இளைஞன் நடந்து கொள்ளத் தொடங்கிய விதத்தைப் பார்த்த போது அவள் தன் அநுதாபத்தையே மாற்றிக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. அவள் எண்ணியதைப் போல் அவன் சாதுப் பிள்ளையாண்டானாக இருக்கவில்லை. பெரிய வம்புக்காரனாக இருந்தான். தன்னை நோக்கிக் கையை ஓங்கிக் கொண்டு அடிக்க வந்த சேந்தனை எதிர்த்துக் கொண்டு முறைத்தான் அவன். "ஐயா! சும்மா மிரட்டிப் பார்க்காதீர்கள். நான் நல்லவனுக்கு நல்லவன், கெட்டவனுக்குக் கெட்டவன். 'ஏதோ இளம் பிள்ளைதானே' என்று கையை ஓங்கிக் கொண்டு வருகிறீர்கள். உங்களுடைய ஆத்திரம் உண்மையானால் நானும் உங்களிடம் பொல்லாதவனாக நடந்து கொள்ள வேண்டியதுதான்" என்று அவன் விறைப்பாக நிமிர்ந்து நின்று வலது கையால் இடையிலிருந்த வாளின் பிடியைத் தொட்டுக் கொண்டே கூறினான். அது நாராயணன் சேந்தனுடைய கோப நெருப்பைக் கொழுந்து விட்டெரியச் செய்தது. அவன் சினத்தோடு கூச்சலிட்டான். "அடே, பொட்டைப் பயலே! நீயும் உன் கீச்சுக் குரலும் நாசமாய்ப் போக! கடவுள் உன் திமிருக்கு ஏற்றாற்போல் தொண்டையை அளந்துதான் வைத்திருக்கிறார் உனக்கு. வாளைக் கையில் உருவிக் கொண்டு என்னை ஏமாற்றி விடலாமென்றா பார்க்கிறாய்? ஏதாவது வம்பு செய்தாயோ, உன்னை அப்படியே குண்டுக் கட்டாகக் கட்டித் தூக்கிக் கீழ்த்தளத்தில் இருந்தபடியே கடலில் எறிந்து விடுவேன். என்னுடைய இந்தக் கைகளில் ஒளிந்து கொண்டிருக்கும் வலிமையை நீ அறியமாட்டாய். நேற்று பயல் நீ கொஞ்சம் வணக்கமாகவே பேசு. இந்த விறைப்பெல்லாம் என்னிடம் வைத்துக் கொள்ளாதே!"
"சரிதான், ஐயா! கொஞ்சம் நாக்கை உள்ளுக்குள்ளே அடக்கியே பேசுங்கள். நீங்கள் இருப்பது முழங்கால் உயரம்! ஆகாயத்தைப் பிளக்கும்படி பெரிதாகக் கூச்சல் போடுகிறீர்களே! கடவுள் எனக்குத்தான் தொண்டையைக் குட்டையாகப் படைத்து என் திமிரை மட்டம் தட்டிவிட்டார்; உங்களுக்கு என்ன காரணத்துக்காக உடம்பையே இப்படிக் கட்டையாகப் படைத்தாரோ தெரியவில்லை! போகட்டும். இதோ அறைவாசலில் நின்று கொண்டிருக்கும் இந்தச் சகோதரிக்கு முன்னால் உங்களை அநாவசியமாக அவமானப்படுத்த வேண்டாமென்று பார்க்கிறேன். இல்லையானால்...?" அவன் முடிக்கவில்லை. அதற்குள் சேந்தன் குறுக்கிட்டு, "இல்லையானால் என்ன செய்துவிடுவாயாம்?" என்று கொதிப்போடு கேட்டுக் கொண்டே இன்னும் அருகில் நெருங்கினான். ஆனால் அந்த இளைஞனோ சேந்தன் நெருங்க நெருங்க அவன் கைக்கெட்டாதபடி ஒரு பாக தூரம் பின்னுக்கு நகர்ந்து நின்று கொண்டான். அறை வாசலில் நின்று பார்த்துக் கொண்டிருந்த குழல்வாய்மொழி அந்த இளைஞனின் செயலைக் கண்டு மெல்லச் சிரித்துக் கொண்டாள். வீராதி வீரனைப் போல் பேசிக் கொண்டே பின்னுக்கு நகரும் அந்த வாலிபன் முகத்தில் பயமும், பதற்றமும் தோன்றுவதைக் குழல்வாய்மொழி கவனித்தாள். சேந்தனும் பெரிய ஆள்தான். பிரமாதமாக அடித்து நொறுக்கி விடப் போகிறவனைப் போலக் கையை ஓங்கிவிட்டு அடிக்கப் பயந்து தயங்குவதையும் குழல்வாய்மொழி கவனித்தாள். இரண்டு ஆண்பிள்ளைகளுமே ஒருவருக்கொருவர் பயந்து கொண்டு வெளியில் தைரியசாலிகளாக நடிக்கும் அந்த நிலையைக் கூர்ந்து கவனித்த போது அவளுக்குச் சிரிப்புத்தான் வந்தது. சேந்தன் அந்த வாலிபனை அதட்டினான். "அடேய்! பேசாமல் நான் சொல்கிறபடி கேள். இப்போது கப்பல் போய்க் கொண்டிருக்கும் இந்த இடத்திலிருந்து துறைமுகம் அதிக தூரமில்லை. கடலில் குதித்துக் கரைக்கு நீந்திப் போய்விடு. இல்லாவிட்டால் நானே பிடித்துத் தள்ளிவிடுவேன். என்னால் முடியாவிட்டால் கப்பல் மீகாமனையும், மற்ற ஆட்களையும் கூப்பிட்டு உன்னைப் பிடித்துக் கடலில் தள்ளச் சொல்வேன். உன் மேல் சிறிது கூடக் கருணை காட்ட மாட்டேன். நீ கெட்ட குறும்புக்காரப் பயல்."
"ஆகா! அதற்கென்ன? உங்களால் மட்டும் முடியுமானால் தாராளமாகப் பிடித்துத் தள்ளிவிடுங்கள். அதற்கு முன்னால் உங்களிடம் ஒரு வார்த்தை. நான் திருடுவதற்கோ, வேறெந்த வகைகளிலாவது ஏமாற்றி வஞ்சகம் செய்வதற்காகவோ இந்தக் கப்பலில் ஏறவில்லை. இன்றைக்கு விழிஞத்தில் நின்ற கப்பல்களில் வேறெந்தக் கப்பலிலும் எள் விழ இடமில்லை. ஒரே கூட்டம். நானோ இலங்கைத் தீவு வரை பயணம் செய்ய வேண்டும். மிகவும் அவசரம். துறைமுகத்தில் விசாரித்ததில் இந்தக் கப்பல் இலங்கைத் தீவுக்குப் போனாலும் போகலாமென்று கூறி, அருகில் நின்ற உங்களையும் இந்தச் சகோதரியையும் விசாரிக்கச் சொன்னார்கள். நான் வந்து விசாரித்தேன். நீங்கள் இடம் இல்லையென்று கண்டிப்பாக மறுத்துச் சொல்லி விட்டீர்கள். எனக்கோ அவசரம். இந்தக் கப்பலை விட்டால் வேறு வழியில்லை என்பதைப் புரிந்து கொண்டேன். நீங்களும் சகோதரியும் மேல்தளத்தில் பேசிக் கொண்டு நின்ற போது உங்களுக்குத் தெரியாமல் ஏறிக் கீழ்த்தளத்திலுள்ள இந்த அறைக்குள் ஒளிந்து கொண்டேன். இப்போது நீங்கள் வந்து பார்த்து விட்டீர்கள். கடலில் தள்ளுவேன் என்கிறீர்கள். அப்படிச் சொல்ல உங்களுக்கு உரிமை உண்டு. ஆனால் உங்களைக் கொஞ்சம் சிந்திக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகிறேன் நான். இவ்வளவு பெரிய கப்பலில் நீங்கள் இரண்டே இரண்டு பேர்கள் தானே பயணம் செய்கிறீர்கள். நான் ஒருவன் கூட இருந்து விட்டதனால் உங்களுக்கு என்ன குடி முழுகி விடப் போகிறது? என்னால் உங்களுக்கு என்ன கெடுதல் வந்து விடப் போகிறது?"
"இரண்டு பேர்கள் போகிறோம். அல்லது வெறுங் கப்பலை ஓட்டிக் கொண்டு போகிறார்கள். அதைப் பற்றிக் கேட்க நீ யார் தம்பீ? உனக்கு இடமில்லையென்றால் பேசாமல் போக வேண்டியது தானே? இந்தக் குறுக்குக் கேள்வியெல்லாம் உன்னை யார் கேட்கச் சொன்னார்கள்?" என்றான் நாராயணன் சேந்தன்.
தொடக்கத்தில் சேந்தனிடம் எரிந்து பேசி வம்பு செய்த அந்த வாலிபனின் முகத்தில் இப்போது சிறிது கலவரமும் பதற்றமும் தோன்றின. "சகோதரி! என்னை உங்கள் கூடப் பிறந்த தம்பி போல் நினைத்துக் கொள்ளுங்கள். பெண்களுக்கு நெகிழ்ந்த மனமும் பிறருக்கு விட்டுக் கொடுத்து இரங்கும் பண்பும் அதிகம் என்பார்கள். நீங்களே இப்படிப் பாராமுகமாக இருக்கிறீர்களே. இப்படி நடுக்கடலில் வைத்துக் கொண்டு, 'உன்னைப் பிடித்துக் கடலில் தள்ளிவிடுவேன் என்று பயமுறுத்தினால் நான் என்ன செய்வேன்? இந்த மனிதரிடம் கொஞ்சம் நீங்கள் எனக்காகச் சொல்லுங்கள். இந்தப் பிரயாணத்தின் போது நடுநடுவே நான் உங்களுக்கு எவ்வளவோ உதவியாக இருப்பேன். நான் உங்கள் மனிதன், உங்கள் ஊழியனைப் போல் நினைத்துக் கொள்ளுங்கள்."
அந்த வாலிபனுடைய திடீர்ப் பணிவைக் கண்டு குழல்வாய்மொழி சிரித்தாள். சேந்தன் ஏளனம் நிறைந்த குரலில், "கெஞ்சினால் மிஞ்சுவது, மிஞ்சினால் கெஞ்சுவது என்கிற விவகாரம் வைத்துக் கொள்ளாதே. சிறிது நேரத்துக்கு முன்னால் அசகாயசூரனைப் போல் வாளை உருவத் தயாராகி விட்டாய். இப்போது என்னடாவென்றால் சரணாகதி நாடகம் போடுகிறாய். நான் உன்னை இதுவரை ஒன்றுமே செய்யாமல் நின்று பேசிக் கொண்டிருப்பதனால்தான் நீ எனக்குப் பயப்பட மாட்டேனென்கிறாய். கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப் பூச்சி. இரு, இரு. இப்போதே ஆட்களைக் கூப்பிட்டு உன்னைக் கடலில் தூக்கி எறியச் சொல்லுகிறேன்" என்று சொல்லிக் கொண்டே ஆட்களைக் கூப்பிடுவதற்காகக் கைகளைச் சேர்த்துத் தட்டப் போனான். அப்போது அந்த வாலிபன் விருட்டென்று அருகில் பாய்ந்து சேந்தனுடைய கைகளைப் பிடித்துக் கொண்டு மேலும் குழைவான குரலில் கெஞ்சத் தொடங்கிவிட்டான். சேந்தன் திகைத்துப் போனான். குளிர்ந்த செந்தாமரைப் பூக்கள் இரண்டு தன் கைகளைக் கவ்விக் கொண்டிருப்பது போல் சுகமாகவும் மிருதுவாகவும் இருந்தன, நாராயணன் சேந்தனுக்கு அந்த வாலிபனின் கைகள்.
"ஐயா! ஆரம்பத்தில் நான் உங்களிடம் சிறிது வரம்பு கடந்து தான் பேசிவிட்டேன். அதற்காக என்னை மன்னித்து விடுங்கள். இந்தத் தென்கடலில் எங்கு போக வேண்டுமானாலும் எனக்கு வழிகள் நன்றாகத் தெரியும். அநேகமாக ஒவ்வொரு தீவிலும் சில நாட்கள் இருந்திருக்கிறேன் நான். இலங்கை போன்ற பெரிய தீவுகளில் என்னால் எவ்வளவோ உதவிகள் செய்ய முடியும். தென்கடலில் அங்கங்கே கடம்பர்கள் என்ற ஒரு வகைக் கடற் கொள்ளைக்காரர்கள் கப்பலை நடுக்கடலில் கொள்ளையடித்துத் துன்புறுத்தி வருகிறார்கள். அந்தக் கொள்ளைக்காரர்கள் எப்படியிருப்பார்கள், எப்போது வருவார்கள் என்ற நெளிவு சுளிவெல்லாம் எனக்குத் தெரியும். உங்கள் கப்பலுக்கு அவர்களால் தொல்லைகள் வராதபடி நான் காப்பாற்றுவேன். நீங்கள் என்னைக் காப்பாற்றுங்கள். தயவு செய்து இந்தக் கப்பலிலேயே உங்களோடு என்னையும் பிரயாணம் செய்ய விடுங்கள்."
இதைக் கேட்டுச் சேந்தன் பலமாக 'ஓகோ'வென்று சிரித்தான். குழல்வாய்மொழியும் சிரித்துக் கொண்டு தான் நின்றாள். "சரியான பயல் தான் அப்பா நீ! பெரிய சூரனைப் போல் நடித்து விட்டுக் கடைசியில் இந்த முடிவுக்குத்தானா வந்தாய்? இவ்வளவு பணிவையும் தொடக்கத்திலேயே எங்களிடம் காட்டிக் கப்பலில் அனுமதியின்றி ஏறி விட்டதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டிருந்தாயானால் விவகாரம் இவ்வளவு முற்றியிருக்காதே. உன்னைச் சொல்லி என்ன தம்பி, குற்றம்? உலகம் முழுவதுமே பண்பாட்டுக்குப் பஞ்சம் வந்துவிட்டது. எதையும் செய்ய முடிந்த தீரன் பணிவாக அடங்கி ஒடுங்கிப் பணிவாக வாழ்ந்தால் அந்தப் பணிவைப் போற்றலாம். கையாலாகாதவன் பணிவது தான் உலக வழக்கமாகி விட்டது. முடிகிற வரை ஆண்மையும் வீராப்பும் காட்டுவது, முடியாவிட்டால் பணிந்து அடங்கி விடுவது. மனிதர்கள் பழகிப் பழகி வாழத் தெரிந்து கொண்டுவிட்ட இரகசியம் தான் இந்தப் பணிவு. இதனால் தான் உலகத்தில் உண்மை வீரர்களே குறைந்துவிட்டார்கள்" என்று சொல்லிவிட்டுக் குழல்வாய்மொழியின் பக்கமாகத் திரும்பி, "அம்மணீ! நீங்களும் பார்த்துக் கொண்டுதானே நிற்கிறீர்கள்! புலியாக இருந்த பயல் அதற்குள் இப்படிப் பூனையாக மாறிவிட்டான்! இந்தக் காலத்து இளைஞர்களுக்கு எதிலுமே உறுதி கிடையாது. அலைபாயும் செயல்கள், அதனால் தான் எதிலும் தோல்வி மனப்பான்மையும் நம்பிக்கை வறட்சியும் அடைந்து கெட்டுப் போகிறார்கள். மனத்தை எந்தச் செயலிலும் ஆழமாகக் குவிந்து ஈடுபட விடமாட்டேனென்கிறார்கள். மேலோட்டமான அகலத்தையும் பரபரப்பையும் பார்த்தே உணர்ச்சி மயமாக வாழ்ந்து அழிகிறார்கள். இதோ இந்த வாலிபனையே எடுத்துக் கொள்ளுங்களேன். பார்ப்பதற்கு எவ்வளவு அழகாக இருக்கிறான். பண்பில் எவ்வளவு மோசமாயிருக்கிறான்!" என்றான் நாராயணன் சேந்தன்.
குழல்வாய்மொழி தான் சிரிப்பதை நிறுத்திக் கொண்டு அந்த வாலிபனை நோக்கி, "உன் பெயர் என்ன அப்பா?" என்று கேட்டாள். வாலிபன் மனத்தில் எதையோ சிந்திப்பவனைப் போல் சிறிது தயங்கினான். பின்பு குழல்வாய்மொழியைப் பார்த்துப் புன்னகை செய்துகொண்டே, "சகோதரி! என் பெயர் கூத்தன்" என்றான்.
"உனக்குப் பொருத்தமான பெயர் தான் தம்பி! சில பேருக்குப் பொருத்தமான பெயர் கிடைப்பதில்லை. இன்னும் சிலர் பெயருக்குப் பொருத்தமாக நடந்து கொள்வதே இல்லை. நீ இரண்டு வகையிலும் கொடுத்து வைத்தவன். கூத்தன் என்ற பெயருக்கு நடிப்பவன் என்று பொருள். நீ நடப்பது, சிரிப்பது, பெண் குரலில் பேசுவது, பயமுறுத்துவது, கெஞ்சுவது, உன்னுடைய தோற்றம் எல்லாமே செயற்கையாக நடிப்பது போல் இருக்கின்றன. உன் இயல்போடு ஒட்டியதாகவே தெரியவில்லை. நீ கூத்தனேதான்!" சேந்தன் தற்செயலாக அவன் பேரைக் கேட்டதும் தன் மனத்தில் பட்டதைத் தான் மேற்கண்டவாறு கூறினான். ஆனால் அதைச் செவியுற்றதும் அந்த வாலிபனது முகத்தில் அவ்வளவு பீதியும் பரபரப்பும் ஏன் உண்டாயினவோ? சற்றுக் கூர்ந்து கவனித்தால் அவன் உடல் மெல்ல நடுங்கிப் புல்லரித்து ஓய்வது கூடத் தெரியும். சேந்தன் குழல்வாய்மொழியைப் பார்த்துப் பின் வருமாறு கேட்டான்: "அம்மணி நீங்கள் சொல்லுங்கள். இவனை என்ன செய்யலாம்? போனால் போகிறானென்று இப்படியே நம் கூட இந்தக் கப்பலில் பயணம் செய்வதற்கு அநுமதித்து விடலாமா? அல்லது கடலில் பிடித்துத் தள்ளிவிடலாமா?"
சேந்தனுடைய கேள்விக்குக் குழல்வாய்மொழி பதில் சொல்லு முன் அந்த வாலிபனே முந்திக் கொண்டு, "கடலில் தள்ளிவிடுங்கள். இந்தக் கடலில் அல்ல. உங்களுடைய கருணைக் கடலில் என்னையும் தள்ளிக் கொண்டு காப்பாற்றுங்கள்" என்றான். அதைக் கேட்டு மகாமண்டலேசுவரரின் அருமை மகள் உள்ளம் பூரித்தாள். சேந்தனோ முகத்தைச் சுளித்துக் கொண்டு சொன்னான்: "பயல் விநயமாகப் பேசுவதில் உலகத்தை விலைபேசி விற்றுச் சுருட்டிக் கொண்டு போய் விடுவான் போலிருக்கிறது. அதைப் பார்த்து ஏமாந்து விடாதீர்கள் அம்மணி!"
"ஆனாலும் பரவாயில்லை! கப்பலில் எத்தனையோ ஊழியர்கள் இருந்தாலும், உங்களுக்கும் எனக்கும் உதவியாக ஓர் ஆள் வேண்டுமல்லவா? இவனும் இருந்து விட்டுப் போகட்டும். இவன் தான் பழைய முரட்டுத்தனத்தையெல்லாம் விட்டுவிட்டு நம் வழிக்குப் பணிந்து வந்து விட்டானே! இனிமேல் இவனால் நமக்குக் கெடுதல் இருக்காது" என்றாள் குழல்வாய்மொழி. அவளுடைய ஆதரவான சொற்களைக் கேட்ட பின்புதான் அந்த வாலிபனுடைய முகத்தில் மலர்ச்சி வந்தது.
"என்னமோ, உங்கள் பாடு, இவன் பாடு. இவனைக் கட்டி மேய்ப்பதற்கு என்னால் முடியாது. நான் மேல் தளத்துக்குப் போகிறேன்" என்று முகத்தைத் திருப்பிக் கொண்டு போய்விட்டான் நாராயணன் சேந்தன்.
"சகோதரி! இந்தக் குட்டை மனிதர் யார்? கொதிக்கிற எண்ணெயில் கடுகு வெடிக்கிற மாதிரி ஏன் இப்படித் திடீர் திடீர் என்று இவருக்குக் கோபம் வந்து விடுகிறது? இவர் உங்களுக்கு உறவா?" என்று சிரித்துக் கொண்டே கேட்டான் வாலிபன்.
"கூத்தா! அது அவர் சுபாவம். அதை நாம் மாற்ற முடியாது. எனக்குக் களைப்பாக இருக்கிறது. நான் படுத்து உறங்கப் போகிறேன். நீயும் மேல்தளத்துக்குப் போ. நான் கூப்பிடுகிற போது வந்தால் போதும்" என்றாள் குழல்வாய்மொழி. கூத்தன் என்ற அந்த வாலிபன் கப்பலின் மேல் தளத்துக்கு ஏறிப் போனான். அவன் சேந்தனோடு ஒட்டிக் கொண்டு நெருங்கிப் பழக முயன்றான். ஆனால் சேந்தன் நெருங்க விடவில்லை. யாரோ சொல்லி வைத்து ஏற்பாடு செய்திருந்தது போல் கப்பல் ஊழியர்களும் அந்த வாலிபனோடு ஒட்டுதல் இன்றியே பழகினார்கள். அவனுடன் பேச நேரும்போதெல்லாம் 'பொட்டைப் பயல்', 'பொட்டைப் பயல்' என்று வாய்க்கு வாய் திட்டினான் சேந்தன்.
-------
2.27. குழைக்காதன் திரும்பி வந்தான்
கோட்டாற்றுப் படைத்தளத்தின் பிரும்மாண்டமான முரச மேடையில் நின்று கொண்டு கண்களின் எதிரே கடல் போல் பரந்து தோன்றும் படையணிவகுப்பைப் பார்த்துக் கொண்டிருந்த தளபதி வல்லாளதேவன், படைக்கோட்டத்தின் வாசலில் ஆபத்துதவிகள் தலைவனின் உருவத்தைப் பார்த்ததுமே பரபரப்படைந்தான். அவனைச் சந்தித்து அவன் கொண்டு வரும் விவரங்களை அறிந்து கொள்ள வேண்டுமென்ற ஆவலினாலும், பரபரப்பினாலும் ஒரு கணம் தன் நிலை, தான் நின்று கொண்டிருந்த சூழல் எல்லாவற்றையுமே மறந்துவிட்டான் தளபதி. அப்படியே இறங்கி ஓடிப்போய்க் குழைக்காதன் கொண்டு வரும் செய்திகளை அங்கேயே அவனை நிறுத்தித் தெரிந்து கொண்டுவிட வேண்டும் போலிருந்தது. பல்லாயிரக்கணக்கான படைவீரர்கள் தனக்கு மரியாதை செய்வதற்காகக் கூடி அணிவகுத்து நிற்கும் சூழ்நிலையை உணர்ந்து அப்படி இறங்கிச் செல்லாமல் சமாளித்துக் கொண்டான். பெரிய சூழ்நிலைகளில் சிறிய ஆசைகளை அடக்கிக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.
முரச மேடை மேல் தன் பக்கத்தில் நின்று கொண்டிருந்த படையணித் தலைவர்களில் ஒருவனைக் குறிப்புக் காட்டி அருகே அழைத்தான். "அதோ, வாயிற்புறமாகக் குதிரையிலிருந்து இறங்கி வந்து கொண்டிருக்கும் ஆபத்துதவிகள் தலைவனை நேரே இங்கே அழைத்து வா" என்று சொல்லி அனுப்பி வைத்தான். அவன் மேடையிலிருந்து இறங்கி வேகமாக வாயிற் பக்கம் நடந்தான். அந்த மாபெரும் அணிவகுப்பின் நடுவே - அசையாது நிற்கும் சிலைகளைப் போன்று வரிசை வரிசையாக நிற்கும் வீரர்களை வகிர்ந்து கொண்டு ஒரே ஓர் ஆள் நடந்து சென்றது, நெற்குவியலினிடையே ஒரே ஓர் எறும்பு ஊர்கிற மாதிரித் தெரிந்தது. உயரமான மேடை மேலிருந்து பார்க்கும் போது தளபதிக்கு அப்படித்தான் மனத்துக்குள் உவமை தோன்றியது. அத்தனை ஆயிரம் வீரர்களின் கூட்டத்தில் மூச்சுவிடுகிற ஓசையாவது கேட்க வேண்டுமே! அவ்வளவு அமைதி. தளபதி என்ற ஒரு மனிதனுக்கு அத்தனை மனிதர்களும் கட்டுப்பட வேண்டியிருக்கிறது. அவனுடைய ஒரு சுட்டு விரலின் அசைவுக்குக் கூட அந்தக் கூட்டத்தில் விளைவு உண்டு. இதை நினைத்துக் கொண்ட போது திடீரென்று தான் மிகமிகப் பெரியவனாக மாறி உயர்ந்து விட்டது போலவும், அந்த உயரத்தின் நீண்ட நிழலில் மகாமண்டலேசுவரர் என்ற அறிவின் கூர்மை சிறியதோர் அணுவாய்த் தேய்ந்து குறுகி மங்கி மறைந்துவிட்டது போலவும் தளபதி வல்லாளதேவனுக்கு ஒரு பொய்யான பூரிப்பு ஏற்பட்டது. ஒரே ஒரு கணம் தான் அந்தப் பூரிப்பு நிலைத்தது. அடுத்த கணம் ஆழங்காண முடியாத மகாமண்டலேசுவரரின் அந்தக் கண்களும், ஒரு திசையைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் எட்டுத் திசையை உணர்ந்து கொள்ளும் பார்வையும், உரு வெளியில் பெரிதாகத் தோன்றி அவன் சிறுமையை அவனுக்கு நினைவுபடுத்தின. தென்பாண்டி நாட்டின் எத்தனையோ ஆயிரம் வீரர்களுக்கு வாய்க் கட்டளையிடும் அவனை, வாய் திறவாமல் கண் பார்வையாலேயே நிற்கவும், நடக்கவும், செயலாற்றவும் ஏவுகிற அரும்பெரும் ஆற்றல் அந்த இடையாற்று மங்கலத்து 'மலைச்சிகர'த்தினிடம் இருந்தது.
மனத்தைத் தடுக்க முயன்றாலும், முடியாமல் மறுபடியும் அவன் சிந்தனை இடையாற்று மங்கலம் நம்பியையே சுற்றிக் கொண்டு மலைத்தது. ஆபத்துதவிகள் தலைவனைக் கூட்டிக் கொண்டு வர வாயிற்புறம் சென்றவன் கூட்டிக் கொண்டு வந்துவிட்டான்.
நெடுந்தூரம் பயணம் செய்து வந்த அலுப்பும், களைப்பும் குழைக்காதனிடம் தெரிந்தன. அலைந்து திரிந்து வந்தவன் முகத்தில் காணப்படும் ஒரு கருமை அவன் முகத்தில் பதிந்து ஒளி மங்கியிருந்தது. மேடையில் ஏறி அருகில் வந்து தளபதியை வணங்கினான் அவன்.
"நேரே அங்கிருந்து தான் வருகிறீர்களா?" தளபதி கேட்டான். 'ஆம்' என்பதற்கு அறிகுறியாகக் குழைக்காதனின் தலை அசைந்தது. அந்த இடத்தில் பொதுவாக எல்லோரும் காணும்படி நின்று கொண்டு குழைக்காதனிடம் ஒரு அந்தரங்கமான செய்தியைப் பற்றி விசாரிப்பது நாகரிகமற்ற செயலாகும் என்று தளபதிக்குத் தோன்றியது.
"குழைக்காதரே! கொஞ்சம் இப்படி என் பின்னால் வாருங்கள்" என்று குறிப்பாக மெதுவான குரலில் கூறிவிட்டு முரச மேடையின் பின்புறத்துப் படிகளில் இறங்கி ஆயுதச் சாலையை நோக்கி நடந்தான் வல்லாளதேவன். குழைக்காதனும் மௌனமாக அவனைப் பின்பற்றிப் படியிறங்கிச் சென்றான். அந்த இரண்டு பேர்கள் படியிறங்கி நடந்து செல்லும் திசையில் அங்கே கூடியிருந்த வீரர்களின் பல ஆயிரம் விழியிணைகளின் பார்வைகள் இலயித்துப் பதிந்தன. ஆயுதச் சாலையின் தனிமையான ஒரு மூலையில் வந்து தளபதியும் குழைக்காதனும் நின்றார்கள்.
"குழைக்காதரே! இரகசியமான செய்திகளைப் பொதுவான இடங்களில் பேசுவது காய்ந்த வைக்கோற்போரில் நெருப்பைப் பத்திரப்படுத்தி வைக்க முயல்வது போல மடமையான செயல். சில சந்தர்ப்பங்கள் நம்மைத் தவறாக பயன்படுத்திக் கொண்டு விடும். அதனால் தான் இவ்வளவு முன்னெச்சரிக்கை. சரி, நீங்கள் போன காரியம் என்ன ஆயிற்று? அதைப் பற்றிச் சொல்லுங்கள்."
"ஆவது என்ன? இந்த விநாடி வரை எல்லாம் சரியாகத்தான் நடைபெற்றிருக்கின்றன. இனிமேல் எப்படியோ? காரியத்தை முடித்துக் கொண்டு வெற்றியை நம்முடையதாக்கிக் கொண்டு வரவேண்டிய திறமை தங்களுடைய திருத்தங்கையாரின் கைகளில் தான் இருக்கிறது."
"நீங்கள் எதுவரை உடன் சென்றிருந்தீர்கள்?"
"விழிஞம் வரை நானும் கூடப் போயிருந்தேன். அவர்களுடைய கப்பலில் தங்கள் தங்கையார் ஏறிக் கொள்கிற வரை மறைந்திருந்து பார்த்து விட்டுத் தான் திரும்பினேன்."
"தங்கள் கப்பலில் ஏறக்கூடாதென்று அவர்கள் மறுக்கவில்லையா?"
"மறுக்கவில்லையாவது? மறுக்காமல் விடுவதாவது. மகாமண்டலேசுவரருக்கு மதியமைச்சன் போல் திரிகிறானே அந்தக் குட்டையன், அவன் தங்கையாருக்கு இடமில்லை என்று கடைசி வரையில் சாதித்து விட்டான்."
"அடடே! அப்புறம் எப்படி இடம் கிடைத்தது?"
"நேர்மையாக இடம் கிடைக்கவே இல்லை. அவர்கள் பார்க்காத நேரத்தில் தங்கள் தங்கையார் கப்பலின் கீழ்த்தளத்தில் ஏறி ஒளிந்து கொண்டு விட்டார்கள். கப்பல் புறப்படுகிற வரை நான் மறைந்திருந்து பார்த்துவிட்டுத்தான் வந்தேன். விழிஞத்தில் புறப்பட்டவன், நேரே இங்கே குதிரையை விரட்டிக் கொண்டு வந்து சேர்ந்தேன்."
"குழைக்காதரே! என் தங்கையின் ஆண் வேடத்தைப் பார்த்து மகிழும் வாய்ப்பு எனக்குக் கிடைக்காமற் போய்விட்டதே என்று இந்த நெருக்கடியான நிலையிலும் எனக்குச் சிறிது மனக்குறைவு உண்டாகத்தான் செய்கிறது" என்று சொல்லிவிட்டுச் சிரித்தான் தளபதி.
"மகாசேனாபதி அப்படி ஒரு குறையை உணர வேண்டியது அவசியம் தான். ஏனென்றால் தங்கள் உடன் பிறந்த தங்கையார் அவ்வளவு தத்ரூபமாக ஆண் வேடத்தோடு பொருந்திக் காட்சியளிக்கிறார்கள். அவர்கள் அந்த மாறு வேடத்தோடு அன்றிரவு அரண்மனைத் தோட்டத்தில் வந்து என் முன் நின்ற போது எனக்கே அடையாளம் புரியவில்லையே? மிக அருமையாக நடிக்கிறார்கள். விழிஞத்தில் அந்தக் குறுந்தடியனுக்கும் மகாமண்டலேசுவரரின் புதல்விக்கும் முன்னால் ஆண் வேடத்தோடு தங்கள் தங்கையார் சிரித்துப் பேசிய சீரைப் பார்த்து அடியேன் அயர்ந்து போனேன்."
"என்ன செய்யலாம்? வேடம் போட்டு நடித்துப் பிறரை ஏமாற்றி வாழ்வதெல்லாம் அறத்தின் நோக்கத்தில் பாவம் தான். சில சமயங்களில் வாழ்வதற்காகப் பொய்யாக நடிக்க வேண்டியிருக்கிறது. நடிப்பதற்காகவே வாழ்கிற வாழ்வை மகாமண்டலேசுவரரைப் போன்றவர்களே வைத்துக் கொண்டிருக்கிறார்களே!"
"ஆ! தாங்கள் மகாமண்டலேசுவரரைப் பற்றிப் பேச்செடுத்ததும் தான் எனக்கு நினைவு வருகிறது. இப்போது அரண்மனையின் எல்லா அரசியல் காரியங்களும் அவர் பொறுப்பில் தான் நடக்கின்றன. அதங்கோட்டாசிரியர், பவழக்கனிவாயர் எல்லோரும் ஊருக்குப் போய்விட்டார்கள். மகாராணியாருடைய நினைவுகளெல்லாம் சமயத் தத்துவங்களில் திரும்பியிருக்கின்றன. கூற்றத் தலைவர்கள் இருந்தாலாவது ஏதாவது கேள்வி கேட்டு அவர் மண்டையில் குட்டிக் கொண்டேயிருப்பார்கள். அவர்களும் திரும்பி வந்து விட்டனர். கரவந்தபுரத்துக்குச் செய்தி அனுப்புவது, வடதிசைப் போர் நிலவரங்களைக் கண்காணிப்பது எல்லாம் மகாமண்டலேசுவரரே பார்த்துச் செய்கிறார்."
"செய்யட்டும், நன்றாக அவரே முழுச் சர்வாதிகாரமும் நடத்தட்டும். நான் ஒருவன் அங்கேயிருந்தால் தனக்கு இடையூறாக இருக்குமென்றோ என்னவோ என்னையும் 'படை ஏற்பாடுகளைக் கவனி' என்று இங்கே அனுப்பிவிட்டார். எதற்கெடுத்தாலும் மகாராணி கூட அவர் பக்கமே தலையசைக்கிறார். ஒவ்வொரு வீட்டிலும் நாய்களைக் காவலுக்கு மட்டும் தான் வைத்துக் கொள்வார்கள். குளிப்பாட்டி மஞ்சள் தடவி மரியாதை செலுத்துவதற்கு பசுமாட்டை வைத்திருப்பார்கள்." தளபதி வல்லாளதேவன் தாழ்வு மனப்பான்மையோடு பேசினான்.
தகுதியாற் பெரியவர்கள் தங்களை விடத் தாழ்ந்தவர்களிடம் பலவீனமான சமயங்களில் மனம் திறந்து தங்களைத் தாழ்வாகச் சொல்லிவிட நேர்ந்தால், அதைக் கேட்பவர் பதில் கூறாமல் அடக்கமாக இருந்து விடுவது தான் அழகு. ஆபத்துதவிகள் தலைவன் அந்த மாதிரி தளபதிக்குப் பதில் கூறாமல் அடக்கமாக நின்றான்.
சிறிது நேரம் அமைதியில் கழிந்தது. எதையோ சிந்தித்துக் கொண்டிருப்பது போல் நின்ற தளபதி திடீரென்று முகபாவத்தை மாற்றிக் கொண்டு, "பரவாயில்லை? மகாமண்டலேசுவரர் அரண்மனையிலிருந்தும், குழல்வாய்மொழி நாராயணன் சேந்தன் ஆகியோர் தெற்கேயிருந்தும் இடையாற்று மங்கலத்துக்குத் திரும்பு முன் நீங்கள் அங்கே போய் ஒரு காரியத்தைச் சாதித்துக் கொண்டு வரவேண்டும். இடையாற்று மங்கலம் தீவில் வசந்த மண்டபத்துக்கு அருகில் விருந்தினர் மாளிகைக்குக் கீழே ஒரு நிலவறை உண்டு. அதில் ஏராளமான ஆயுதங்களை மகாமண்டலேசுவரர் சேர்த்து வைத்திருக்கிறார். எப்படியாவது அவற்றை இங்கே கிளப்பிக் கொண்டு வந்துவிட வேண்டும். பரம இரகசியமாக இதைச் செய்யுங்கள். வேண்டிய ஆட்களையும் கூட்டிக் கொள்ளுங்கள். அறிவு தங்கியிருக்கிற இடத்தில் ஆயுதங்களும் தங்க வேண்டாம்" என்றான் தளபதி வல்லாளதேவன்.
---------
2.28. 'ஒப்புரவு மொழி மாறா ஓலை'
[இந்தக் காலத்தில் அரசாங்கத்தின் மேல் கொண்டு வருகிற நம்பிக்கை இல்லாத் தீர்மானம் மாதிரி அந்த நாளில் தென்பாண்டி நாட்டில் அரசர்கள் மீதோ, பொறுப்பு ஒதுக்கப்பட்ட மகாமண்டலேசுவரர் போன்றவர் மீதோ கொண்டு வரும் நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு 'ஒப்புரவு மொழி மாறா ஓலை' என்று பெயர். கூற்றத் தலைவர்கள் ஒன்று கூடி ஒப்புரவு மொழி மாறா ஓலை கொண்டு வருவர். Ref. No. 73 Olai document of Kollam 878 T.A.S. Vol. V.P.215]
காய்ந்த மரத்தில் நான்கு புறத்திலிருந்தும் கல்லெறி விழும் என்பார்கள். பழுத்த மரமாக இருந்து விட்டாலோ இன்னும் அதிகமான துன்பம்தான். எதற்கும் அடங்காத அறிவின் கூர்மையை வைத்துக் கொண்டு வாழ்கிறவர்கள் எவ்வளவோ எதிரிகளை உண்டாக்கிக் கொள்ளவும் தயாராகத்தான் இருக்க வேண்டும். எட்ட முடியாத உயரத்தில் புரிந்து கொள்ள முடியாத சாமர்த்தியத்தோடு நெஞ்சின் பலத்தால் நிமிர்ந்து நிற்பவர்களுக்குச் சுற்றியுள்ளவர்களின் பகைமையும் வெறுப்பும் கிடைக்கத்தான் செய்யும்.
பொருட்செறிவுள்ள செழுமையான சொற்களால் உட்பொருள் நயம் பொருந்த ஒரு மகாகவி காவியம் ஒன்று எழுதியிருந்தால் அதைப் புரிந்து கொள்ளத் தகுதியற்றவர்களும், புரிந்து கொள்ள முடியாதவர்களும் காரணமின்றி அதன் மேல் வெறுப்படைவது போல் தென்பாண்டி நாட்டின் மகாமண்டலேசுவரர் மேல் சிலருக்கு வெறுப்பு உண்டாகியிருந்தது.
"மக்களின் மனப் பண்பு தாழ்ந்து கீழ்த்தரமாகப் போய்விட்டால் உயர்வும், தரமும் உள்ள எல்லாப் பொருள்களின் மேலும் ஏதோ ஒருவகை வெறுப்பு வந்துவிடுகிறது. மண்ணில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் மனத்தில் மண்படாமல் வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் பேதமையின் காரணமாகப் பெரும்பாலோர் மனத்தையும் மண்ணில் புரட்டிக் கொண்டு விடுகிறார்கள்" என்று கோட்டாற்றுச் சமணப் பண்டிதர் அடிக்கடி மகாராணியிடம் சொல்லுவார்.
அன்றைக்குக் காலையில் இந்த வார்த்தைகளை மீண்டும் நினைத்துப் பார்க்க வேண்டிய நிலை மகாராணி வானவன்மாதேவிக்கு ஏற்பட்டது. சுசீந்திரம், காந்தளூர் முதலிய இடங்களுக்குச் சென்று விட்டு முன்சிறை வழியாக அரண்மனைக்குத் திரும்பி வந்து சில நாட்கள் ஆகியிருந்தன.
திரும்பி வந்த அன்றைக்கு மறுநாளே திருவட்டாற்றுத் தாயின் மகனுக்காகச் செலுத்த வேண்டிய அபராதப் பொன் அனுப்பப்பட்டது. உதவியைத் தாம் செய்வது யாருக்கும் தெரியாமல் செய்தார் வானவன்மாதேவி. அபராதப் பொன் அனுப்பப்பட்ட தினத்தன்று மாலையே சுசீந்திரம் அர்ச்சகர் அரண்மனைக்கு வந்து மோதிரத்தைத் திருப்பிக் கொடுத்து அங்கு நடந்ததையெல்லாம் விவரித்துவிட்டுச் சென்றார். 'ஒரு தாயின் உள்ளமும் அவள் மகனின் கைகளும் வெந்து போகாமல் காப்பாற்றி விட்டோம்' என்ற நினைவு இன்பமாகத்தான் இருந்தது மகாராணிக்கு. அருள் மயமான வானவன்மாதேவியின் மனம் அப்படிப் பிறருக்கு உதவி செய்தும், பிறருக்காகத் தன்னை இழந்தும் வாழும் பண்பை இயல்பாகவே பெற்றிருந்தது. வெயில் பட்டவுடன் வாடும் பூப்போலப் பிறர் துன்பத்தை உணர்ந்து இரங்கும் மனம் அது.
சுசீந்திரத்திலிருந்து திரும்பிய பின்பு சில நாட்கள் மகாராணி அந்தப்புரப் பகுதியிலிருந்து வெளியேறவே இல்லை. கோட்டாற்றுப் பண்டிதர் அன்றொரு நாள் ஓலையில் எழுதிக் கொடுத்துச் சென்றிருந்த அந்தச் செய்யுளையும் காந்தளூர் மணியம்பலத்தில் மறைந்து நின்று கேட்ட அறிவுரைகளையும் நினைத்துக் கொண்டே பொழுதைப் போக்கினார். அரண்மனையிலேயே மற்றொரு பகுதியில் தங்கியிருந்த மகாமண்டலேசுவரரைக் கூட அவர் சந்திக்க விரும்பவில்லை. எண்ணங்கள் பழுத்து முதிரும் ஒரு குறிப்பிட்ட நிலையில் யாரையும் சந்திக்காமல், யாரோடும் பேசாமல் தனக்குள்ளேயே, தன்னைத்தானே உள்முகமாக ஆழ்ந்து பார்க்கும் உயர்ந்த நிலை ஏற்படும். அந்த நிலையில் தான் தென்பாண்டி நாட்டின் மாதேவியார் இப்போது இருந்தார்.
ஆனால் அவரது பேரின்ப மோன நிலையைக் கலைக்க அந்த அதிர்ச்சி தரும் ஓலையோடு அன்று காலையில் பொன்மனைக் கூற்றத்துக் கழற்கால் மாறனார் வந்து சேர்ந்தார். தென்பாண்டி நாட்டின் மற்றக் கூற்றத் தலைவர்களெல்லோரும் சேர்ந்து தங்களுடைய ஏகப் பிரதிநிதியாக அந்த ஓலையோடு அவரை மகாராணியாரிடம் அனுப்பியிருந்தனர்.
வைகறையில் நீராடி வழிபாடு முடித்துக் கொண்டு, புனிதமான நினைவுகளில் திளைத்துப் போய் வீற்றிருந்த மகாராணிக்கு முன் புவன மோகினி தோன்றி அந்தச் செய்தியைக் கூறினாள்.
"தேவீ! மிக முக்கியமான காரியமாகப் பொன்மனைக் கூற்றத்துக் கழற்கால் மாறனார் அவசரமாகத் தங்களைச் சந்திக்க வந்திருக்கிறார்."
"கூற்றத் தலைவர் கூட்டம் முடிந்த அன்றே அவர்களெல்லாரும் திரும்பிப் போய்விட்டார்களே! இப்போது கழற்கால் மாறனார் மட்டும் மறுபடியும் எதற்காக வந்திருக்கிறார்? தனியாக வந்திருக்கிறாரா? அவரோடு வேறு யாராவது வந்திருக்கிறார்களா?" என்று திகைப்புத் தொனிக்கும் குரலில் மகாராணி வண்ணமகளைப் பார்த்துக் கேட்டார்.
"தேவீ! அவர் மட்டும் தான் தனியாக வந்திருக்கிறார்" என்று புவன மோகினி பதில் கூறியதும், "அப்படியானால் நீ ஒன்று செய், புவன மோகினி! அவரை அழைத்துக் கொண்டு போய் நேரே மகாமண்டலேசுவரர் தங்கியிருக்கும் மாளிகையில் விட்டு விடு. ஏதாவது அரசாங்க சம்பந்தமாகத்தான் பேசுவதற்கு வந்திருப்பார். நமக்கு எதற்கு இந்த வம்பெல்லாம்? நிம்மதியாகத் தெய்விகச் சிந்தனையில் ஈடுபட்டிருக்கிற மனத்தை அரசியல் சேறு படவிடுவதற்கு இப்போது நான் சித்தமாயில்லை. திருவாசகத்தையும், திருக்குறளையும் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் தெற்கேயும், வடக்கேயும் யார் படையெடுக்கப் போகிறார்கள் என்று தெரிந்து கொண்டு புதிய கவலைகளைச் சுமக்க வேண்டாம். எதுவாக இருந்தாலும் சரி; வந்திருப்பவரை மகாமண்டலேசுவரரிடமே கூட்டிக் கொண்டு போய் விட்டுவிடு. அவர் பாடு, வந்திருப்பவர் பாடு. பேசித் தீர்த்துக் கொள்ளட்டும்" என்று ஒட்டுதல் இல்லாமல் கூறினார் மகாராணி வானவன்மாதேவி.
புவன மோகினி திரும்பிச் சென்றாள். 'எந்த எந்தப் பற்றுகளிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்கிறோமோ அந்தந்தப் பற்றுகளால் வரும் துன்பங்கள் நமக்கு இல்லை' என்று முன்பொரு நாள் காந்தளூர் மணியம்பலத்தில் கேட்ட அந்தச் சொற்களை நினைத்துப் பெருமூச்சு விட்டார் மகாராணி. நெஞ்சின் சுமையைக் குறைக்க அந்தப் பெருமூச்சு வெளியேறின போது நிம்மதி உள்ளே குடிபுகுந்தாற் போல் இருந்தது. சிறிது நேரந்தான் அந்த நிலை. இரண்டாவதாக மற்றொரு பெருமூச்சை வெளியேற்றும் செய்தியைத் தாங்கிக் கொண்டு புவன மோகினி திரும்பி வந்தாள். "தேவீ! அவர் மகாமண்டலேசுவரரைச் சந்திக்க விரும்பவில்லையாம். தங்களைத்தான் சந்தித்துப் பேசியாக வேண்டுமாம். நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்துவிட்டேன். அவர் கேட்கவில்லை. பிடிவாதமாக உங்களையே காண வேண்டுமென்கிறார்."
அவளிடம் என்ன பதில் சொல்லி அனுப்புவதென்று சிறிது தயங்கிய பின், "சரி! வேறென்ன செய்ய முடியும்? நீ போய் அவரை இங்கேயே கூட்டிக் கொண்டு வா" என்று சொல்லி அனுப்பினார் மகாராணி. 'மகாமண்டலேசுவரரைப் பார்க்க விரும்பவில்லை' என்று வெறுத்துச் சொல்கிற அளவு கழற்கால் மாறனாருக்கு அவர் மேல் அப்படி என்ன மனத்தாங்கல் ஏற்பட்டிருக்க முடியும்' என்ற ஐயம் மகாராணிக்கு ஏற்பட்டது. திடீர் திடீரென்று தம்மைச் சுற்றியிருப்பவர்கள் இருப்பவைகள் எல்லாம் புதிர்களாக மாறிக் கொண்டு வருவதாகப் பட்டது அவருக்கு. 'உலகத்தில் ஒவ்வொரு மனிதரும் கண்ணின் நோக்கத்தில் எப்படிப் படுகிறார்களோ அப்படிக் கருத்தின் நோக்கத்தில் படுவதில்லையா? அல்லது மனிதர்களையும், சுற்றுப்புறத்தையும் அளந்து பார்த்து விளங்கிக் கொள்ளும் ஆற்றல் என்னுடைய மென்மையான மனத்துக்கு இல்லாமல் போய்விட்டதா' என்று திகைத்தார் மகாராணி வானவன்மாதேவியார்.
அந்தச் சமயத்தில் புவன மோகினி, கழற்கால் மாறனாரை கூட்டிக் கொண்டு வந்து நிறுத்தினாள். தென்பாண்டி நாட்டின் ஐம்பெருங் கூற்றத் தலைவர்களுக்குள் செல்வாக்கு மிகுந்தவரும், பொன்மனைக் கூற்றத்துத் தலைவரும், வயது மூத்தவரும், தென்னவன் தமிழவேள் பாண்டிய மூவேந்த வேளார் என்ற சிறப்புப் பட்டம் பெற்றவரும் ஆகிய கழற்கால் மாறனார் முன்வந்து மகாராணியை வணங்கினார். அவர் கையில் உறையிட்டு இலைச்சினை பொறித்த ஓலைச் சுருள் இருந்தது. அவருடைய வயதுக்கும், அநுபவத்துக்கும் மரியாதை கொடுத்து எழுந்து நின்று வணங்கினார் மகாராணி.
"வரவேண்டும், பெரியவரே! அதிகாலையில் சிரமப்பட்டு வந்திருக்கிறீர்கள். அரசாங்க காரியமாக இருக்குமானால் மகாமண்டலேசுவரரைப் பார்த்தாலே போதுமானதென்று தான் உங்களை அவரிடம் அழைத்துப் போகச் சொன்னேன். நீங்கள் என்னையே பார்க்க வேண்டுமென்று கூறினீர்களாம்."
"ஆமாம்! நான் பார்க்க வந்தது தென்பாண்டி நாட்டு மகாராணியாரைத்தான்" என்று கழற்கால் மாறனார் கூறிய பதிலில் கடுமையும், சிறிது அழுத்தமும் ஒலித்தாற் போல் தோன்றியது மகாராணிக்கு.
"அது சரிதான்! ஆனால் ஓர் அரசாங்கக் காரியமாக என்னைச் சந்தித்து நீங்கள் அடைய முடிந்த பயனைக் காட்டிலும் மகாமண்டலேசுவரரைச் சந்தித்து அதிகமான பயனை அடையலாமே என்பதற்காகத்தான் சொன்னேன்."
"இல்லை மகாராணி! நாங்கள் இனி என்றுமே மகாமண்டலேசுவரர் என்ற முறையில் அந்தப் பதவியில் வைத்து அவரைச் சந்திக்க விரும்பவில்லை. காரணம், அவர் மேல் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அவருடைய செயல்களையும் நாங்கள் புரிந்து கொள்ள முடிவதில்லை."
இதைக் கேட்டதும் அமைதியான மகாராணியின் விழிகள் நீண்டு உயர்ந்து அகன்று விரிந்தன. தம் செவிகளையே அவரால் நம்ப முடியவில்லை. மறுபடியும் அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்துக் கேட்டார். "நீங்கள் என்ன சொல்லுகிறீர்கள்?"
"மகாமண்டலேசுவரர் மேல் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லுகிறேன்."
"'எங்களுக்கு' என்றால்...? உங்களுக்கும், இன்னும் வேறு யாருக்கும்? நீங்கள் ஒருவராய்த்தானே இங்கு வந்திருக்கிறீர்கள்?"
"மகாராணியவர்கள் என்னுடைய துணிச்சலுக்காக என்னை மன்னிக்க வேண்டும். நான் ஒருவனாக இங்கு வந்திருந்தாலும் மற்றக் கூற்றத் தலைவர்களோடு கூடிக் கலந்து கொண்டு, பேசி அவர்கள் கையொப்பமிட்ட 'ஒப்புரவு மொழி மாறா ஓலை'யையும் கொண்டு தான் வந்திருக்கிறேன். இதோ எங்கள் ஓலை."
அவர் தாம் கையோடு கொண்டு வந்திருந்த ஒப்புரவு மொழி மாறா ஓலையை மகாராணியிடம் நீட்டினார். அந்த விநாடி வரையில் சாந்தமும், அமைதியும், கருணையும் கலந்து ஒரு பெரு மலர்ச்சி நிலவிக் கொண்டிருந்த மகாராணியின் முகத்தில் மண்ணுலகத்து உணர்ச்சிகளின் சிறுமைகள் படிந்தன. பயமும், கலவரமும், பதற்றமும் நெற்றியில் சுருக்கங்கள் இட அந்த ஓலையை அவரிடமிருந்து வாங்கினார் மகாராணி. அப்படி வாங்கும் போது அவருடைய கைகள் மெல்ல நடுங்கின. மேலே இட்டிருந்த இலச்சினைகளை நீக்கி அரக்கை உதிர்த்து, அதைப் பிரிக்கும் போது கைகள் இன்னும் அதிகமாக நடுங்கின. நீர்ப்பரப்பில் ஏதேனும் ஒரு பொருள் விழுந்தால் முதலில் சிறிதாக உண்டாகும் அலைவட்டம் வளர்ந்து விரிந்து பெரிதாகிக் கரைவரையில் நீள்வதைப் போல் அந்தப் பயங்கர ஓலைச் சுருள் விரிய மகாராணியின் பயமும் அதற்கேற்ப விரிந்தது.
'ஐயோ! ஒரு மனிதர் மிக உயர்ந்த நிலையில் சாதாரண அறிவால் புரிந்து கொள்ள முடியாதவராக இருந்தால் அவருக்குத்தான் எத்தனை கெடுதல்கள்! எவ்வளவு பேருடைய பகை! முதுகைத் தட்டிக் கொடுத்துப் பாராட்டி விட்டுக் கால்களை வாரிவிடுகிற உலகமாகவல்லவா இருக்கிறது! மடையனைப் பார்த்து அறிவாளியாக வேண்டுமென்று உபதேசிக்கிறார்கள். அறிவாளியைப் பார்த்து அவன் ஏன் அவ்வளவு அறிவாளியாயிருக்கிறானென்று பொறாமைப்படுகிறார்கள். வளர்ச்சிக்குப் பாடுபட்டுக் கொண்டே தளர்ச்சி அடைகிறார்களே! பழங்காலப் புலவர் ஒருவர் திரி சொற்களால் பாடி வைத்த கடினமான அங்கதப் பாடல் பொருள் ஒளித்து வைக்கப்பட்ட பாடல் போல், சாமானியமானவர்களுக்கு விளங்கிக் கொள்ள முடியாதவராக இருக்கிறார் மகாமண்டலேசுவரர். அதனால்தான் இத்தனை குழப்பமும் ஏற்படுகிறது. இது என்ன கேவலமான உலகம்! உட்படாததாக, உயர்ந்ததாக மேலே உள்ள பொருள்களையெல்லாம் கீழே புழுதியிலும் அழுக்கிலும் புரளும்படி தரையில் இறக்கிப் பார்த்து விட ஆசைப்படுகிறார்களே! என்ன செய்வது? மனித இயல்பே அப்படி அமைந்து விட்டது. உயரமான மரக்கிளைகளிலும், செடி, கொடிகளின் கொம்புகளிலும் இருக்கும் பழங்களையும் பூக்களையும் தரையில் உதிரச் செய்து பயன்படுத்துகிற வழக்கம் போலச் சில மேலான மனிதர்களையும் கீழே இறக்கித் தள்ளிப் பார்க்க ஆசைப்படுகிறார்கள் போலும். பெருமையும் வளர்ச்சியும் அடைய வேண்டுமானால் கீழே இருப்பவர்களையும் மேலே போகச் செய்ய வேண்டும். மேலே இருப்பவர்களையும் கீழே இழுத்துத் தள்ளி என்ன பயன்? ஒரு நொண்டி, 'ஊரிலுள்ள கால் பெற்ற மனிதரெல்லாம் நொண்டியாக மாறவேண்டும்' என்று ஆசைப்படுவது போலன்றோ இருக்கிறது?'
'நாம் சாவதற்குள் ஒரு நாளாவது அல்லது ஒரு சில நாழிகைக்காவது 'தென்பாண்டி நாட்டு மகாமண்டலேசுவரர்' என்ற பெயரோடு பதவி வகித்துவிட்டுச் சாக வேண்டுமென்று இந்தக் கழற்கால் மாறனாருக்கு ஆசை. அந்த ஆசையின் விளைவுதான் வயது முதிர்ந்த காலத்தில் இப்படி மனம் முதிராத செயல்களைச் செய்யத் தூண்டுகிறது. பெரிய மனிதராக இருந்து கொண்டு சிறிய காரியத்தைச் செய்கிறாரே! பாவம் இவர் என்ன செய்வார்? பதவி ஆசை, பெயர் ஆசை, அதிகார ஆசை! மற்றக் கூற்றத் தலைவர்களின் தூண்டுதல் எல்லாம் சேர்ந்து இந்த ஒப்புரவு மொழி மாறா ஓலையோடு இவரை இங்கே அனுப்பியிருக்கின்றன.'
கையில் வாங்கிய ஓலையைச் சிறிது சிறிதாக விரித்துக் கொண்டே இவ்வளவு நினைவுகளையும் மனத்தில் ஓடவிட்டுச் சிந்தித்தார் மகாராணி. ஓலையைப் படிக்கத் தொடங்குவதற்கு முன்னால் தலையை நிமிர்த்தி எதிரே நின்று கொண்டிருந்த கழற்கால் மாறனாரை வானவன்மாதேவி கூர்ந்து நோக்கினார். நோக்கிக் கொண்டே கேட்டார்: "இந்த ஓலையை நான் படித்துத்தானாக வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா? நன்றாகச் சிந்தித்து விட்டு என் கேள்விக்குப் பதில் சொல்லுங்கள். அவசரமில்லை." மகாராணியாரின் இந்தக் கேள்வியைச் செவியுற்றுக் கழற்கால் மாறனார் சிறிது மிரண்டார். பின்பு சமாளித்துக் கொண்டு கூறினார்:
"மகாராணியவர்கள் உடனடியாக இந்த ஓலையைப் படித்து மகாமண்டலேசுவரருடைய பொறுப்புகளைக் கைமாற்றி அமைக்க வேண்டுமென்பது என் விருப்பம் மட்டும் இல்லை; எல்லாக் கூற்றத் தலைவர்களும் ஒரு மனத்தோடு அப்படி விரும்பியே என்னை இங்கே அனுப்பியிருக்கிறார்கள். இதில் இனிமேலும் சிந்திக்க எதுவுமில்லை."
அவருடைய பதிலைக் கேட்டதும் மகாராணி அந்த ஓலையைப் படிக்கத் தொடங்கிவிட்டார்.
"திருவளர, நலம் வளர, குமரி கன்னியா பகவதியார் அருள் பரவி நிற்கும் தென்பாண்டி நாட்டின் மகாராணியார் திருமுன்பு பொன்மனையிற் கூடிய கூற்றத் தலைவர்கள் தம்முள் ஒரு நினைவாய், ஒருமனதாய், ஒன்றுபட்டு நிலை நிறுவி நிறைவேற்றி அனுப்பும் ஒப்புரவு மொழி மாறா ஓலை.
"காலஞ்சென்ற மகாமன்னர் நாள் தொட்டு இது காறும் நம்முள் தலை நின்று அறிவும், சூழ்ச்சியும் வல்லாராய் மருங்கூர்க் கூற்றத்து முதன்மை பூண்டு இடையாற்று மங்கலத்திலிருந்து மகாமண்டலேசுவரராயிருக்கும் நம்பியானவர் அண்மையிற் சிறிது காலமாய் மற்றக் கூற்றத் தலைவர்களைக் கலக்காமலும், பொருட்படுத்தாமலும், தாமே நினைத்து தாமே செயற்பட்டு வருதலை நினைத்து வருந்துகிறோம்.
"கன்னியாகுமரித் தேவ கோட்டத்தில் இந்த நாட்டு அரசியைப் பகைவர் வேலெறிந்து கொல்ல முயலும் அளவுக்கு கவனக் குறைவாக இருக்க நேர்ந்தது, காணாமற் போன இளவரசரைத் தேடி அழைத்து வர முயற்சி செய்யாமலிருந்தது. பாண்டி நாட்டின் மதிப்புக்குரிய அரசுரிமைப் பொருள்களைத் தம்முடைய மாளிகையிலிருந்து கொள்ளை போகும்படி விட்டது, கரவந்தபுரத்தார் கண்காணிப்பில் இருக்கும் கொற்கை முத்துச் சலாபத்தில் பகைவர் புகுந்து குழப்பம் விளைவிக்கும் அளவுக்குப் பாதுகாப்புக் குறைவாக இருந்தது போன்ற காரணங்களால் இனி மகாமண்டலேசுவரர் மேல் நாங்கள் நம்பிக்கை கொள்வதற்கில்லை என்பதை எல்லோரும் கூடிக் கையொப்பம் நாட்டிய இந்த ஒப்புரவு மொழி மாறா ஓலை மூலம் மாதேவியாகிய மகாராணியாருக்கு அறிவித்துக் கொள்கிறோம். இவ்வோலை கொண்டு சமூகத்துக்கு வருபவர், முதியவரும் பொன்மனைக் கூற்றத் தலைவருமாகிய கழற்கால் மாறனார் ஆவார். இவ்வண்ணம் இவ்வோலை கூடியெழுதுவித்த நாளும், எழுதுவித்தவர் பெயர்களும் வருமாறு" என்று முடிந்திருந்த அந்த ஓலையின் கீழே இடையாற்று மங்கலம் நம்பி நீங்கலாக மற்ற நால்வருடைய பெயர்களும், எழுதிய நாளும் காணப்பட்டன. மகாராணி வேதனையோடு கூடிய சிரிப்புடன், "நல்லது; உங்கள் ஓலையை நான் படித்துவிட்டேன், பெரியவரே" என்று கழற்கால் மாறனாரைப் பார்த்துச் சொன்னார்.
"படித்ததும் மகாராணியாருக்கு என்ன தோன்றுகிறதென்று எளியேன் அறியலாமோ?" என்று அவர் கேட்டார்.
"ஆகா! தாராளமாக அறியலாம். இதோ சொல்கிறேன்! கேளுங்கள். எந்த ஒரே ஒரு மனிதருடைய சிந்தனைக் கூர்மையினால் இந்த நாடும், நானும், நம்பிக்கைகளும் காப்பாற்றப் படுகின்றோமோ அந்த ஒரு மனிதரை அந்தப் பதவியிலிருந்து இறக்க எனக்கு விருப்பமில்லை."
"அப்படியானால் தென்பாண்டி நாட்டு மகாராணியார் எங்களையெல்லாம் இழந்துவிடத்தான் நேரும்."
"நான் உங்களை இழந்துவிடுவது தான் நல்லதென்றோ அல்லது நீங்கள் என்னை இழந்துவிடுவதுதான் உங்களுக்கு நல்லதென்றோ தோன்றினால் அப்படியே வைத்துக் கொள்ளுங்களேன்!" என்றார் மகாராணி.
"எங்கள் ஒத்துழையாமையின் விளைவு மிகவும் பயங்கரமாக இருக்குமென்பதை இப்போதே கூறிக் கொள்ள விரும்புகிறேன்."
"அதற்கு நான் என்ன செய்யட்டும்! நீங்களே உங்களைப் பயங்கரமாக்கிக் கொள்கிறீர்கள்?"
"சரி! நான் வருகிறேன்." கிழட்டுப் புலி பின்நோக்கிப் பாய்வது போல் விறுட்டென்று கோபமாகத் திரும்பினார் கழற்கால் மாறனார்.
"எங்கே அவ்வளவு அவசரம்? கொஞ்சம் இருங்கள், போகலாம்" என்று கூறி சிரித்துக் கொண்டே அப்போதுதான் உள்ளே நுழைந்த மகாமண்டலேசுவரரைப் பார்த்த போது பூதம் கண்ட சிறு பிள்ளை போல் நடுங்கினார் கழற்கால் மாறனார்.
----------
2.29. கொடும்பாளூர்க் கழுமரத்தில் கோட்டாற்றான் குருதி
கொடும்பாளூர்க் கோட்டைக்குள் அரண்மனைக் கூத்தரங்கத்தில் ஆடிக் கொண்டிருந்த தேவராட்டி பயங்கரமாக அலறிக் கொண்டே தன் கையிலிருந்த திரிசூலத்தை மான்கண் சாளரத்தை நோக்கிச் சுழற்றி எறிந்த போது அந்தச் சாளரத்துக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருந்தவனைப் பிடிப்பதற்காக ஐந்து பேருடைய பத்துக் கால்கள் விரைந்து சென்றன.
ஓடத் தொடங்கிய அந்தப் பத்துக் கால்கள் யாருடையவை என்று இங்கு சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை. இடையாற்று மங்கலத்து மகாமண்டலேசுவரர் மாளிகையிலிருந்து தென்பாண்டி நாட்டு அரசுரிமைப் பொருள்கள் காணாமற் போய்விட்டன என்ற செய்தியைக் கொடும்பாளூர் மன்னன் வாயிலிருந்து கேட்டு வியந்து நின்று கொண்டிருந்த சோழன் உள்பட மற்ற நான்கு பேரும் ஓடினார்கள்.
அந்த மான்கண் பலகணியின் மறுபுறம் கொடும்பாளூர் அரண்மனையின் சித்திரக் கூடம் அமைந்திருந்தது. கோனாட்டு அரச பரம்பரையின் வீரச் செயல்களை விளக்கும் அற்புதமான ஓவியங்கள் அந்தக் கூடத்துச் சுவர்களை நிறைத்துக் கொண்டிருந்தன. சித்திரக் கூடத்தின் பின்புறம் கோட்டை மதிற்சுவரை ஒட்டினாற் போல் பெரிய தோட்டம் இருந்தது. மதிற்சுவரின் உட்புறத்தைப் போலவே வெளிப்புறத்திலும் அகழிக் கரையை ஒட்டித் தென்னை மரங்கள் அடர்ந்து வளர்ந்திருந்தன.
ஒளிந்திருந்தவனைப் பிடிப்பதற்காகச் சித்திரக் கூடத்துக்குள் ஓடி வந்தவர்கள், நாற்புறமும் மூலைக்கொருவராகச் சிதறிப் பாய்ந்தனர். ஆனால் அங்கே ஒளிந்து கொண்டிருந்த ஆள் அவர்கள் வருவதற்குள் சித்திரக்கூடத்து எல்லையைக் கடந்து தோட்டத்துக்குள் புகுந்துவிட்டான் என்பது அவர்களுக்குத் தெரியாது. சித்திரக் கூடத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் தேடிப் பார்த்துவிட்டு ஓரளவு ஏமாற்றத்தோடு அவர்கள் தோட்டத்துக்குள் நுழைந்த போது, "அதோ! அங்கே பாருங்கள், மதில் சுவர் மேல்" என்று ஒரு துள்ளுத் துள்ளிக் கொண்டே சுட்டிக் காட்டிக் கூச்சலிட்டான் கீழைப் பழுவூர்க் கண்டன் அமுதன். அந்தக் கணமே மற்ற நான்கு பேருடைய பார்வையும் நான்கு வில்களிலிருந்து ஒரே குறியை நோக்கிப் பாயும் அம்புகள் போல் அவன் சுட்டிக் காட்டிய திசையிற் போய்ப் பதிந்தன. அங்கே ஒரு மனிதன் மதில் மேலிருந்து சுவரை ஒட்டி வளர்ந்திருந்த அகழிக்கரைத் தென்னை மரம் ஒன்றின் வழியாக வெளிப்புறம் கீழே இறங்க முயற்சி செய்து கொண்டிருந்தான். அவனுடைய முதுகுப்புறம் தான் சித்திரக் கூடத்துக் கொல்லையில் நின்று கொண்டு பார்த்த அவர்களுக்குத் தெரிந்தது. முகம் தெரியவில்லை. உட்பக்கத்திலும் மதில் சுவர் அருகே அதே மாதிரி மற்றொரு தென்னை மரம் இருந்ததனால் அந்த ஆள் அதன் வழியாகத்தான் மதில் மேல் ஏறியிருக்க வேண்டுமென்று அவர்கள் அனுமானித்துக் கொண்டார்கள். மிக வேகமாகத் தென்னை மரங்களில் ஏறிப் பழக்கப்பட்டவனாக இருந்தாலொழிய அவ்வளவு விரைவில் மேலே ஏறி மதில் சுவரை அடைந்திருப்பது சாத்தியமில்லை.
"திருட்டு நாய்! மதில் மேலிருந்தே செத்துக் கீழே விழட்டும்!" என்று கடுங்கோபத்தோடு இரைந்து கத்திக் கொண்டே பாம்பு படமெடுத்து நெளிவது போல் இருந்த ஒரு சிறு குத்துவாளை இடையிலிருந்து உருவிக் குறிவைத்து வீசுவதற்கு ஓங்கினான் கொடும்பாளூர் மன்னன். சோழன் அருகிற் பாய்ந்து வந்து வாளை வீசுவதற்கு ஓங்கிய அவனது கையைப் பிடித்துக் கொண்டான்.
"பொறுங்கள்! நீங்கள் விவரம் தெரிந்த மனிதராக இருந்தால் இப்படிச் செய்யமாட்டீர்கள். திருட்டுத்தனமாக இங்கே அவன் எப்படி நுழைந்தான் என்பதையும் முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டுமானால், அவன் வந்த வழியே அவன் போக்கில் அவனை வெளியேற விட்டுக் கடைசியில் பிடித்துக் கொண்டு உண்மை அறிய வேண்டும். கையில் அகப்பட்ட ஒரு காடையை (ஒரு வகைப் பறவை) வெளியே விட்டால் காட்டிலுள்ள காடைகளையெல்லாம் அதைக் கொண்டே பிடித்து விடலாம். ஓசைப்படாமல் திரும்பி வாருங்கள். அவன் சுதந்திரமாகக் கவலையின்றித் தென்னைமரத்தின் வழியாக மறுபடியும் அகழிக்கரையில் போய் இறங்கட்டும். நாம் அங்கே போய் காத்திருந்து அவனைப் பிடித்துக் கொள்ளலாம்" என்றான் சோழ மன்னன். எல்லோரும் உடனே அங்கிருந்து அகழிக்கரைக்கு விரைந்தனர்.
"கொடும்பாளூராரே! எனக்கு ஒரு சந்தேகம். இவ்வளவு வேகமாகத் தென்னை மரம் ஏறி இறங்கத் தெரிந்தவனாக இருந்தால் தென்னை மரங்கள் அதிகமாக இருக்கும் பகுதியைச் சேர்ந்தவனாக இருக்க வேண்டும். ஒரு வேளை தென்பாண்டி நாட்டு நாஞ்சிற் பகுதியைச் சேர்ந்தவனாக இருக்கலாம்" என்று அகழிக்கரைக்குப் போகும் போது சோழன் கொடும்பாளூர் மன்னனிடம் சந்தேகம் தொனிக்கும் குரலில் மெதுவாகச் சொன்னான்.
"சந்தேகமே இல்லை! எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது" என்று கொடும்பாளூரானிடமிருந்து பதில் வந்தது.
அகழிக்கரைத் தென்னை மரத்திலிருந்து அவன் கீழே இறங்கவும் அவர்கள் ஐந்து பேரும் ஓடிப் போய்ச் சுற்றி வளைத்துக் கொள்ளவும் சரியாக இருந்தது. அவன் தப்பி ஓட முடியவில்லை. ஆ! இப்போது அவனுடைய முகத்தையும் முழு உருவத்தையும் நன்றாகப் பார்க்க முடிகிறது. இந்தக் கோணல் வாயையும், நீள மூக்கையும், கோமாளித்தனமான தோற்றத்தையும் பார்த்ததுமே நமக்கு இதற்கு முன்பே எங்கோ பார்த்திருக்கிறாற் போன்ற நினைவு வருகிறதல்லவா? ஆம்! இந்தக் கோமாளி ஏற்கனவே நமக்கு அறிமுகமானவன் தான்.
வடதிசையில் ஒற்றறிவதற்கும், வேறு சில இரகசியக் காரியங்களுக்காகவும் மெய்க்காவற் படை வீரர்கள் ஐம்பது பேர்களைத் தேர்ந்தெடுத்து மகாமண்டலேசுவரர் வடக்கே அனுப்பினாரல்லவா? அப்போது பொய் கூறுவதில் சிறந்தவனைத் தேர்ந்தெடுப்பதற்கு அவர் வைத்த சோதனையில் வெற்றிபெற்ற கோமாளிதான் இப்போது சிக்கிக் கொண்டு விழிக்கிறான்.
தன்னைச் சுற்றி நான்கு புறமும் ஓடமுடியாமல் எதிரிகளால் வளைத்துக் கொள்ளப்பட்ட நிலையில் அன்று தாங்கள் புறப்பட்ட போது வழியனுப்பிய மகாமண்டலேசுவரரின் சில சொற்களை அவனுடைய அகச்செவிகள் மானசீகமாகக் கேட்டன.
"அகப்பட்டுக் கொண்டால் சதையைத் துண்டு துண்டாக்கினாலும் உண்மைகளைச் சொல்லி நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகத்தைச் செய்யக் கூடாது. உயிர், உடல், பொருள் எதையும் இழக்கத் தயாராயிருக்க வேண்டும்." இந்தக் கணீரென்ற குரலோடு அந்தக் கம்பீரமான முகம் தோன்றி எதிரிகளிடையே மாட்டிக் கொண்ட அவன் மனத்துக்கு உறுதியின் அவசியத்தை நினைப்பூட்டி வற்புறுத்தின.
"அடே! அற்பப் பதரே! இந்தக் கொடும்பாளூர்க் கோட்டைக்குள் புகுந்து ஒற்றறிய முயன்றவர்கள் எவரையும் இதுவரையில் நான் உயிரோடு திரும்ப விட்டதில்லை. நீ யார், எங்கிருந்து வந்தாய் என்பதையெல்லாம் மரியாதையாகச் சொல்லிவிடு. என்னுடைய கோட்டைக் கழுமரத்துக்கு நீண்ட நாட்களாக இரத்தப் பசி ஏற்பட்டிருக்கிறது. அதைத் தணிக்கத்தான் நீ வந்து சேர்ந்திருக்கிறாய்" என்று தன் இரும்புப் பிடியில் அகப்பட்டவனின் இரண்டு கைகளையும் இறுக்கிப் பிடித்துக் கொண்டு இரைந்தான் கொடும்பாளூர் மன்னன். ஆனால் அகப்பட்டவனோ முற்றிலும் ஊமையாக மாறிவிட்டான். அன்றிரவு நெடுநேரம் வரையில் அவனை ஓரிடத்தில் கட்டிப் போட்டு என்னென்னவோ சித்திரவதைகளெல்லாம் செய்தார்கள். அவன் பேசவே இல்லை. கடைசியாகக் கொடும்பாளூரான் ஒரு பயங்கரமான கேள்வி கேட்டான்: "அடே! ஊமைத் தடியா நாளைக் காலையில் இரத்தப் பசியெடுத்துக் காய்ந்து உலர்ந்து கிடக்கும் இந்தக் கோட்டையின் கழுமரத்தில் நீ உன் முடிவைக் காண வேண்டுமென்றுதான் விரும்புகிறாயா?"
"செய்யுங்கள் அப்படியே!" - எல்லோரும் ஆச்சரியப்படுமாறு அதுவரை பேசாமல் இருந்த அவன் இந்த இரண்டே வார்த்தைகளை மட்டும் முகத்தில் உறுதி ஒளிர உரக்கப் பேசிவிட்டு மீண்டும் வாய் மூடிக் கொண்டு ஊமையானான். அவனிடமிருந்து உண்மையைக் கறக்கும் முயற்சியில் அவர்கள் ஐந்து பேருமே தோற்றுப் போனார்கள். கொடும்பாளூரான் பயமுறுத்தி மிரட்டினான். சோழன் நயமாகப் பேசி அரட்டினான். கண்டன் அமுதனும், பரதூருடையானும், அரசூருடையானும் அடியடியென்று கைத்தினவு தீர அடித்தார்கள். பார்ப்பதற்குக் கோமாளி போல் இருந்த அந்த ஒற்றனோ தன் கொள்கையில் தளராமல் திடமாக இருந்தான்.
கோட்டைக்குள் ஏறிக் குதிக்க வசதியாக உள்ளும் புறமும் வளர்ந்திருந்த அந்த இரண்டு தென்னை மரங்களையும் இரவோடிரவாக வெட்டிச் சாய்க்குமாறு தன் ஆட்களுக்கு உத்தரவு போட்டான் கொடும்பாளூர் மன்னன். மறுநாள் வைகறையில் கீழ்வானில் செம்மை படர்வதற்கு முன்னால் கொடும்பாளூர்க் கோட்டைக் கழுமரத்தில் செம்மை படர்ந்து விட்டது. கோட்டாற்றுப் படைத் தளத்தில் வீரனாக உருவாகி அரண்மனையில் மெய்க் காவலனாகப் பணியாற்றிய தென்பாண்டி நாட்டு வீரன் ஒருவனின் குருதி அந்தக் கழுமரத்தை நனைத்துச் செந்நிறம் பூசிவிட்டது.
---------
2.30. இடையாற்று மங்கலத்தில் ஓர் இரவு
இடையாற்று மங்கலத்துக்குப் போய் அங்கே நிலவறையில் மகாமண்டலேசுவரர் ஒளித்து வைத்திருக்கும் ஆயுதங்களைக் கோட்டாற்றுப் படைத்தளத்துக்குக் கிளப்பிக் கொண்டு வந்து விட வேண்டுமென்று தளபதி தனக்குக் கட்டளை இட்ட போது ஆபத்துதவிகள் தலைவன் மகர நெடுங்குழைக்காதன் அதற்கு உடனே ஒப்புக் கொள்ளவில்லை.
"மகாசேனாதிபதி அவர்கள் கூறுவது போல் இது அவ்வளவு இலேசான காரியமாகப் படவில்லையே எனக்கு? இடையாற்று மங்கலத்துக்குப் போய் நிலவறைக்குள் புகுந்து ஆயுதங்களை வெளியேற்றிப் பறளியாற்றைக் கடந்து இங்கே கொண்டு வர விடுகிற அளவுக்குப் பாதுகாப்புக் குறைவாக மகாமண்டலேசுவரர் வைத்திருக்க மாட்டார் என்று எனக்குத் தோன்றுகிறது!" என்று தன் சந்தேகத்தைத் தெரிவித்தான் அவன்.
"குழைக்காதரே! நீங்கள் சொல்வது சரிதான். இது ஒன்று மட்டுமில்லை; மகாமண்டலேசுவரருக்கு எதிராக நாம் எந்தக் காரியத்தைச் செய்யத் தொடங்கினாலும் அது நமக்கு இலேசான காரியமாக இருக்காது, கடினமாகத்தான் இருக்கும். ஆனால் கடினமாக இருக்குமென்பதற்காக நாம் சும்மா இருந்து விடவும் கூடாது. முடிந்ததைச் செய்துதானாக வேண்டும்."
"என்னால் முடிந்தவரை முயன்று பார்க்கிறேன். உதவிக்கு இங்கிருந்தும் சிலரை அழைத்துக் கொண்டு போகிறேன்" என்று குழைக்காதன் இணங்கியதும் தளபதி அவனுக்குச் சில விவரங்களை விளக்கினான். நிலவறைக்குள் எப்படிப் போவது, எவ்வாறு ஆயுதங்களை வெளியேற்றுவது என்பதையெல்லாம் விவரித்துச் சொன்னான். அன்றிரவு அங்கே படைத்தளத்திலேயே தங்கிவிட்டு மறுநாள் வேறு சிலரையும் அழைத்துக் கொண்டு இடையாற்று மங்கலத்துக்குப் புறப்பட்டு விட்டான் குழைக்காதன்.
பறளியாற்றைக் கடப்பதற்கும் ஆயுதங்களைக் கொண்டு வருவதற்கும் சொந்தமாக ஒரு தனிப் படகை ஏற்பாடு செய்து கொள்ள வேண்டுமென்றும் இடையாற்றுமங்கலத்தில் அவர்கள் பிரவேசிக்கும் நேரம் இரவு நேரமாயிருக்க வேண்டுமென்றும் தளபதி வற்புறுத்திச் சொல்லியனுப்பியிருந்தான். ஆபத்துதவிகள் தலைவனும், அவனோடு சென்றவர்களும் அந்தி மயங்குவதற்குச் சில நாழிகைக்கு முன்பே பறளியாற்றங்கரையை அடைந்து விட்டார்கள். அவர்கள் வேண்டுமென்றே மெதுவாகப் பயணம் செய்து வந்ததனால் தான் அவ்வளவு நாழிகையாயிற்று. இல்லையானால் இன்னும் விரைவான நேரத்திலேயே அங்கு வந்திருக்க முடியும். இடையாற்று மங்கலத்துக்குப் பக்கத்தில் பறளியாற்றின் இக்கரையில் கிழக்கு மேற்காகச் சிறிது தூரத்துக்கு ஒரே ஆலமரக்காடு. ஆலமரங்களென்றால் சாதாரண ஆலமரங்கள் இல்லை. ஒவ்வொரு மரமும் படர்ந்து, பரந்து, வளர்ந்து, பற்பல விழுதுகளை இறக்கிக் கொண்டு மண்ணின் மேல் தனக்குள் ஊன்றிக் கொள்ளும் உரிமையை நிலைநாட்டும் வயதான மரம். இத்தகைய மூத்த முதிர்ந்த ஆலமரங்களைத் 'தொன் மூதாலயம்' என்று பழைய கவிகள் புகழ்ந்திருந்தார்கள். அந்தப் பகுதியின் நதிக்கரை மண்ணில் வெயிலின் கதிர்கள் படக்கூடாதென்று இயற்கை தானாகவே அக்கறை கொண்டு வேய்ந்து வைத்த பசுமைப் பந்தல் போல் மண்ணுக்கு விண்ணையும், விண்ணுக்கு மண்ணையும் தெரியவிடாமல் அடர்ந்து செழுமையாய்ச் செம்மையாய்த் தன்மையாய் வளர்ந்திருந்தன அந்த ஆலமரங்கள்.
அந்த இடத்தில் இடையாற்று மங்கலத்தை ஒட்டிப் பறளியாற்றங் கரையில் சிறிது தொலைவு வரை பரவி நிற்கும் இயற்கையின் எழில்களை, பசுமையின் செல்வங்களை, வளமையின் வகைகளை உண்மையாக அனுபவிக்க வேண்டுமானால் ஓவியனின் கண்களும், கவியின் உள்ளமும், ஞானியின் உள்ளுணர்வும், குழந்தையின் பேதைமையும் வேண்டும். அறிவின் எல்லைக் கோடாகிய மகாமண்டலேசுவரரின் இருப்பிடத்தைச் சுற்றிலும் இயற்கை செலுத்துகிற மரியாதைகள் தான் இப்படி மலர்ச் செடிகளாகவும், மரக் கூட்டங்களாகவும், பசுமைப் பெருமை பரப்பாய்த் தோன்றிப் பிரகிருதி என்னும் காணாக் கவிஞன் எழுதாத எழுத்தால் இயற்றி வைத்த பயிலாக் கவிதைகளாய்ப் பரந்து கிடக்கின்றனவோ? இவ்வளவு அழகிலும் அந்தச் சூழ்நிலையில் பறளியாற்று நீர் ஒலி, பறவைகளின் குரல்கள், மரங்கள் ஆடும் ஓசை தவிர செயற்கையான வேறு மண்ணுலக ஓசைகளே இல்லாத ஒரு தனிமையின் அடக்கம் இடையாற்று மங்கலம் நம்பியின் மன ஆழத்தில் விளங்கிக் கொள்ள முடியாத தன்மை போல் வியாபித்திருந்தது.
'மங்கலம்' என்றால் நிறைந்தது, தூயது, அழகியது என்று பொருள். இடையாற்று மங்கலம் அந்தப் பொருட் பொருத்தப் பெருமையைக் காப்பாற்றிக் கொண்டு காட்சியளித்தது.
ஆபத்துதவிகள் தலைவனும் அவனுடன் வந்தவர்களும் பறளியாற்றங்கரை ஆலமரக் கூட்டத்தின் இடையே நுழைந்த போது, மாலை நேரமாக இருந்தாலும் பெரிதும் ஒளி குன்றி இருள் படர ஆரம்பித்திருந்தது. வழக்கமாகக் கரையிலிருந்து இடையாற்று மங்கலத்துக்குப் படகு புறப்பட்டுப் போகும் நேரடியான துறை வழியே செல்வதற்கு அவர்கள் தயங்கினார்கள். ஆற்றில் சிறிது தொலைவு தள்ளிக் குறுக்கு வழியாகப் படகைச் செலுத்திக் கொண்டு போய் இடையாற்று மங்கலம் விருந்தினர் மாளிகைக்குப் பின்புறம் இறங்குவதற்கு ஏற்றாற் போல் செல்வதற்குத் திட்டமிட்டிருந்தனர் அவர்கள். அதற்கு முன்னேற்பாடாகத் தங்களுக்கு வேண்டிய படகோட்டி ஒருவனை படகோடு புறப்பட வேண்டிய இடத்தில் மறைந்து காத்திருக்கும்படி ஏற்பாடு செய்திருந்தனர். இருட்டிச் சில நாழிகைகள் கழிந்த பின் புறப்படலாமென்று சொல்லி, நதிக்கரை நாணற்புதரிலும் தாழை மரங்களின் அடர்த்தியிலும் படகும் படகோட்டியும் மறைந்திருக்கச் செய்துவிட்டு ஆலமரக் காட்டில் சுற்றித் திரிந்து கொண்டிருந்தார்கள் அவர்கள்.
தன்னோடு கூட வந்தவர்களைக் கீழே நிறுத்தி விட்டு ஒரு பெரிய ஆலமரத்தின் மேல் விழுதுகளைப் பிடித்துக் கொண்டு தாவி ஏறினான் ஆபத்துதவிகள் தலைவன். மிக உயரமான உச்சிக் கிளையில் ஏறித் தலைக்கு மேல் குடை போல் மூட்டம் போட்டிருந்த இலைகளின் அடர்த்தியை விலக்கிக் கொண்டு தலையை நீட்டிப் பார்த்தான். பறளியாற்றுக்கு அப்பால் இடையாற்று மங்கலம் தீவும், மகாமண்டலேசுவரர் மாளிகையும், அதன் சுற்றுப்புறங்களும் நன்றாகத் தெரிந்தன. 'தானும் தன்னைச் சேர்ந்தவர்களும் இரவில் தீவுக்குள் போய் நிலவறையில் புகுந்து ஆயுதங்களைக் கடத்திக் கொண்டு எப்படி வெளியேறித் தப்புவது?' என்று மனத்தில் முறையாகத் திட்டத்தை வகுத்துக் கொண்டே, ஆலமரத்துக் கிளையில் நின்று மகாமண்டலேசுவரர் மாளிகையையும், அதன் சுற்றுப்புறங்களையும் கண்காணித்தான் அவன். நேரம் வளர்ந்து கொண்டிருந்தது. எவனோ கண்ணுக்குத் தெரியாத மாயாவி ஒருவன் தன் முரட்டுக் கைகளால் ஒளித்து வைத்திருந்த கறுப்புப் போர்வையை எட்டுத் திசையிலும் எடுத்து விரித்துப் போர்த்துவது போல் உலகத்தை இருள் தழுவிக் கொண்டு வந்தது. இருள் மாயாவியின் பயங்கரமான சூனியத்தனத்துக்கு வாழ்த்தொலி வழங்குவது போல் ஆந்தைகளின் குரல்கள் பலவாகப் பரந்து மூலைக்கு மூலை ஒலித்தன. இருட்டில் நடமாடும் பிசாசுகளைப் போல் மகர நெடுங்குழைக்காதனும் அவனோடு வந்திருந்தவர்களும் அந்தப் பகுதியில் சுற்றிக் கொண்டிருந்தார்கள். இருட்டில் சில நாழிகைகள் கழிந்ததும், தாழை மரங்களின் மறைவில் நாணற் புதருக்குள் மறைக்கப்பட்டிருந்த படகை அதிகம் ஒலியுண்டாக்கி விடாமல் மெல்ல வெளிக் கிளப்பிக் கொண்டு வந்தான் அதற்கு உரியவன். மகர நெடுங்குழைக்காதனும், அவனோடு இருந்தவர்களும் படகில் ஏறி அமர்ந்து கொண்டார்கள். படகு பறளியாற்றில் நகர்ந்து முன்னேறியது. பழக்கமில்லாத அந்தப் புதிய படகோட்டி படகை மெதுவாகச் செலுத்திக் கொண்டு போய் இடையாற்று மங்கலத்துக் கரையில் விருந்தினர் மாளிகைக்குப் பின்புறம் புதர் அடர்ந்த பகுதியில் நிறுத்தினான். படகு நின்ற இடத்துக்கு நேரே விருந்தினர் மாளிகையின் பின்புறத்து வாயில் கதவு அடைத்திருந்தது. கதவுக்குக் கீழே வரிசையாகப் படிகள். படிகளில் நாலைந்தை நீரில் முழுகச் செய்து பறளியாறு பாய்ந்து கொண்டிருந்தது.
"நீங்கள் எல்லோரும் இப்படியே இந்த இடத்தில் இருங்கள். நான் முன்பக்கமாக விருந்தினர் மாளிகைக்குள் புகுந்து வந்து இந்தப் பின்புறத்துக் கதவைத் திறந்து விடுகிறேன்" என்று மற்றவர்களை அங்கேயே நிறுத்தி விட்டு முன்புறம் சென்றான் மகர நெடுங்குழைக்காதன். மரங்களிலிருந்து உதிர்ந்திருந்த இலைச் சருகுகளில் கால் பதித்தால் எழுகிற சலசலப்பு ஒலி கூடக் கேட்கவிடாமல், பம்மிப் பம்மி நடந்து போய் விருந்தினர் மாளிகையில் புகுந்து விட்டான் அவன். காவல் வீரர்களெல்லாம் அந்த இடத்திலிருந்து சிறிது தொலைவு தள்ளியிருந்த மகாமண்டலேசுவரர் மாளிகையைச் சுற்றியிருந்தார்கள். அரசுரிமைப் பொருள்கள் காணாமல் போன சமயத்தில் மட்டும் தொடர்ந்து சில நாட்களுக்குத் தீவைச் சுற்றிலும் எல்லா இடங்களிலும் காவல் ஏற்பாடு செய்யப் பெற்றிருந்தது. பின்பு நாளாக ஆக அந்தக் காவல் ஏற்பாடு சுருங்கித் தீவின் பிரதான மாளிகை அளவில் நின்று விட்டிருந்தது. அதனாலும், செறிந்து கனத்த இருட்டும், மரங்களின் அடர்த்தியும் தனக்குச் சாதமாக இருந்ததனாலும் ஆபத்துதவிகள் தலைவன் இடையாற்று மங்கலத்தில் அந்த இரவில் அதிகம் துன்பப்படவில்லை. ஒருவன் வைத்து விட்டுப் போன பொருளை அவனே திரும்பி அடையாளமாக எடுத்துக் கொண்டு போகிற மாதிரிக் காரியம் சுலபமாக நடந்தது. சொல்லி விட்டிருந்தபடியே எல்லாவற்றையும் செய்தான். விருந்தினர் மாளிகைக்குப் பின்புறம் படகை நிறுத்தி அதற்கு நேரே இருந்த கதவையும் திறந்து வைத்துக் கொண்டது, அவனுக்கு வசதியாகப் போய்விட்டது. அவன் முன்னேற்பாடாக கையோடு கொண்டு வந்திருந்த தீப்பந்தத்தைக் கூட நிலவறைக்குள் கொண்டு போய்த் தீக்கடையும் கற்களைத் தட்டிக் கொளுத்திக் கொண்டான். விறகுக் கட்டைகளை மணிக்கயிற்றால் கட்டுவது போல் இரண்டொரு நாழிகைக்குள் அங்கிருந்த ஆயுதங்கள் கட்டப்பட்டன. கட்டப்பட்டதற்கு ஆகிய காலத்தில் நான்கில் ஒரு பங்கு கூட அவற்றைப் படகில் கொண்டு வந்து வைப்பதற்கு ஆகவில்லை. பின்புற வாயிலை ஒட்டி நின்ற படகில் கொண்டு வந்து அடக்கிவிட்டார்கள்.
படகில் பாரம் அதிகமாகிவிட்டது. தன்னைத் தவிர இன்னும் ஓர் ஆள்தான் ஏறிக் கொள்ள முடியும் என்று படகோட்டி உறுதியாகச் சொல்லிவிட்டான். அக்கரைக்குப் போய் அடர்த்தியான ஆலமரக் காட்டில் ஆயுதங்களை எங்காவது ஒரு மறைவான இடத்தில் ஒளித்து வைத்துவிட்டுத் திரும்பிப் போய்விட்டால் பின்பொரு நாளிரவில் வசதியான வாகனத்தோடு வந்து அவைகளை கோட்டாற்றுப் படைத்தளத்துக்குக் கொண்டு போய்விடலாமென்பது குழைக்காதனின் திட்டம். தன் திட்டப்படி செய்து வெற்றிகரமாக நடந்து தளபதியிடம் செல்வாக்குப் பெறலாம் என்று அவன் நம்பினான். மனத்தையும், சிந்தனைகளையும், அறிவையும் நம்பாமல் உடல் வன்மையாலேயே வெற்றிகளைக் கணக்கிட்டுக் கொண்டு போகும் மனம் அவனுக்கு.
படகோட்டி ஓர் ஆள்தான் ஏறி வர முடியும் என்று சொன்னவுடன் "ஆற்றில் வேகம் அதிகமில்லை; நீங்களெல்லாம் மெதுவாக நீந்தி அக்கரைக்கு வந்துவிடுங்கள். நான் படகில் போய் விடுகிறேன்" என்று தன்னோடு வந்தவர்களுக்கு உத்தரவு போட்டுவிட்டுப் படகில் ஏறிக் கொண்டான் குழைக்காதன். 'கவிழ்ந்து விடுமோ' என்று பயப்படுகிற அளவு பாரம் இருந்ததனால் நத்தை ஊர்வதை விட மெதுவாகப் படகு செலுத்தப்பட்டது. அதன் காரணமாக ஆற்றில் குதித்து நீந்த ஆரம்பித்தவர்கள் படகு நடு ஆற்றைக் கடப்பதற்கு முன்பே அக்கரையை அடைந்து விட்டார்கள்.
"மகாமண்டலேசுவரரையும், அவருடைய சாமர்த்திய சாலியான அந்தரங்க ஒற்றனையுமே கண்களில் விரலைவிட்டு ஆட்டி ஏமாற்றியிருக்கிறேன் நான். கேவலம், இந்த இடையாற்றுமங்கலத்தில் வேலைப் பிடித்துக் கொண்டு நிற்கும் நாலைந்து யவனக் 'காவல் நாய்'களா என்னைப் பிடித்துவிடப் போகின்றன? நீ சும்மா பயப்படாமல் படகை ஓட்டிக் கொண்டு போ, அப்பா!" என்று படகோட்டிக்குத் தைரியமூட்டிக் கொண்டிருந்தான் குழைக்காதன். அவனுடைய அந்த இருமாப்பான பேச்சின் ஒலி அடங்குவதற்கு முன் இருபுறமும் நெருங்கி வந்த ஆபத்துகள் அவன் ஆணவத்தை அடக்கி முற்றுப்புள்ளி வைத்தன. சற்று முன் அவனால் 'நாய்கள்' என்று வருணிக்கப்பட்ட இடையாற்று மங்கலம் மாளிகையைச் சேர்ந்த யவனர் காவல் வீரர்கள் வலது பக்கத்திலும், இடது பக்கத்திலுமாக இரண்டு படகுகளில் வேகமாக வளைத்துக் கொண்டு அவனது ஆயுதங்கள் நிறைந்த படகை அணுகிக் கொண்டிருந்தனர். ஆபத்துதவிகள் தலைவன் படகை ஓட்டிக் கொண்டு கரைக்குப் போய்விட முடியாமல் பாரம் தடுத்தது. அகப்பட்டுக் கொண்டாலோ அதைவிடக் கேவலம் வேறு இல்லை. அவனுக்கு மட்டும் கேவலமில்லை. அவனால் தளபதியின் பெயருக்கும் கேவலம். அவன் திகைத்தான். கள்ளிப்பழம் போல் சிவந்து கொடுமை குடியிருக்கும் அவன் கண்கள் கொடூரமாக உருண்டு புரண்டு விழித்தன. ஏற்கெனவே கடுமையான முகத்தில் கொடுமை வெறி கூத்தாடியது. அடுத்த கணம் முன்புறம் பார்த்துப் படகைச் செலுத்திக் கொண்டிருந்த படகோட்டியின் முதுகுக்கு மேல் பிடரியைத் தன் இரும்புக் கரங்களால் பிடித்துத் தலைகுப்புறத் தண்ணீரில் தள்ளினான். படகோட்டியின் அலறல் தண்ணீர் ஓசையில் சிறிதாக மங்கிவிட்டது. படகின் ஒரு மூலையைக் காலால் ஓங்கி மிதித்து அது கவிழத் தொடங்கியதும் தண்ணீரில் பாய்ந்து மூழ்கினான் குழைக்காதன்.
தண்ணீர்ப் பரப்பில் வேகமாக நீந்தினால் தெரிந்துவிடும் என்பதற்காக மூச்சடக்கிக் கரையைக் குறிவைத்து நீரின் ஆழத்திலேயே முக்குளித்து நீந்தினான் அவன். கடத்திக் கொண்டு வந்த ஆயுதங்களோடு படகைக் கவிழ்த்தது பற்றி அவனுக்குக் கவலை இல்லை. யவனக் காவல் வீரர்களிடம் அகப்பட்டுக் கொண்டு மானத்தையும், பெருமையையும் கவிழ்த்து மூழ்கடித்துக் கொண்டு கேவலப்பட்டு நிற்க நேர்ந்து விடக் கூடாதே என்பதுதான் இப்போது அவனுடைய ஒரே கவலை. எத்தனையோ ஆபத்துகளைக் காத்து உதவ வேண்டியவன் அவன். இப்போது அவனுடைய ஆபத்துக்கு உதவ ஆளின்றி ஆபத்தில் மூழ்கி வேகமாக நீந்திக் கொண்டிருந்தான். கனமான பருத்த சரீரம் உடைய அவனுக்குத் தண்ணீரில் மூழ்கி மூச்சடக்குவது கடினமாயிருந்தது. இடையிடையே தலையை வெளியே நீட்டி மூச்சுவிட்டுக் கொண்டு மறுபடியும் மூழ்கி நீந்தினான். ஒருவழியாக ஆய்ந்தோய்ந்து போய்த் தள்ளாடிக் கொண்டே கரையை அடைந்து விட்டான். அங்கே முன்பே நீந்தி வந்திருந்தவர்கள் நாணற் புதரில் பதுங்கிக் காத்திருந்தார்கள். குழைக்காதனுக்கு நீந்தி வந்த களைப்புத் தீர ஓய்வு கொள்ளக்கூட நேரமில்லை. தன் ஆட்களையும் கூட்டிக் கொண்டு ஆலமரக் காட்டில் புகுந்து ஓட்டம் எடுத்தான்.
மறுநாள் உலகைப் போர்த்த மெல்லிருட்டுப் போர்வை விலகும் அருங்காலை நேரத்தில் மகர நெடுங்குழைக்காதனும் அவன் ஆட்களும் கோட்டாற்றுப் படைத்தளத்தில் தளபதிக்கு முன்னால் நின்றார்கள். குழைக்காதன் கூறியவற்றையெல்லாம் கேட்டு முடித்த வல்லாளதேவன் பெருமூச்சோடு பேசினான்: "குழைக்காதரே! நீங்கள் படகை மட்டும் பறளியாற்றில் தலைகுப்புறக் கவிழ்க்கவில்லை. நீங்களே கவிழ்ந்து விட்டீர்கள். நம்முடைய திட்டத்தையும் கவிழ்த்து விட்டீர்கள். ஆனாலும் பரவாயில்லை. இதை நான் மன்னித்துதானாக வேண்டும்."
"மகாசேனாபதிக்கு என் நிலை புரிந்திருக்குமென்று நினைக்கிறேன். அந்த ஆபத்தான சூழ்நிலையில் படகைக் கவிழ்த்து விட்டு நான் தப்புவதைத் தவிர வேறு வழியில்லை."
"படகோட்டி என்ன ஆனான்?"
"அவன் அநேகமாக நீந்தித் தப்பியிருப்பான். அவன் அகப்பட்டுக் கொண்டாலும், தப்பினாலும் அவன் மூலம் நம்முடைய எந்த இரகசியமும் வெளிவராது. அவன் எனக்கு மிகவும் வேண்டியவன். 'உன் வாயிலிருந்து இரகசியம் வெளியேறினால் கழுத்திலிருந்து தலையை வெளியேற்றி விடுவேன்' என்று முன்பே பயமுறுத்தி வைத்திருக்கிறேன்."
"எப்படியானால் என்ன? ஆயுதங்களை அங்கிருந்து வெளியேற்றியாயிற்று. இனிமேல் கவலை இல்லை. நீங்கள் வழக்கம் போல் அரண்மனையில் போய் இருங்கள். மகாராணியாரைப் பாதுகாத்து வரவேண்டும். மகாமண்டலேசுவரருடைய செயல்களிலும் உங்கள் கண்காணிப்பு மறைமுகமாக இருக்கட்டும்" என்று சொல்லி, மகரநெடுங்குழைக்காதனை அரண்மனைக்கே மீண்டும் அனுப்பி வைத்தான் தளபதி.
---------
2.31. ஏனாதி மோதிரம்
மகாமண்டலேசுவரர் மேல் நம்பிக்கையில்லையென்று தென்பாண்டி நாட்டுக் கூற்றத் தலைவர்களின் சார்பில் தாம் கொண்டு வந்த ஒப்புரவு மொழி மாறா ஓலையை மகாராணியார் ஒப்புக் கொள்ளவில்லை என்றதுமே பொன்மனைக் கூற்றத்துக் கழற்கால் மாறனாருக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. அதனால் தான் அவர், 'இனிமேல் மகாராணியாருக்கும் நாட்டுக்கும் எங்கள் ஒத்துழைப்புக் கிடைக்காது' என்று கோபமாகக் கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினார்.
ஆனால் அந்தச் சமயத்தில் யாரும் எதிர்பாராதவிதமாக மகாமண்டலேசுவரரே திடீரென்று அங்கே வந்து விட்டதால் அப்படியே அயர்ந்து போய் நின்று விட்டார் கழற்கால் மாறனார். மகுடியோசையில் மயங்கிக் கடிக்கும் நினைவை மறந்து படத்தை ஆட்டிக் கொண்டிருக்கும் நாகப் பாம்பைப் போல் எந்த மகாமண்டலேசுவரரை அடியோடு கீழே குழிபறித்துத் தள்ளிவிட நினைத்தாரோ, அவரையே எதிரே பார்த்து விட்டதும் ஒன்றும் தோன்றாமல் அடங்கி நின்றார் அவர்.
எதிரே நிற்பவர்களை அப்படி ஆக்கிவிடுவதற்கு மகாமண்டலேசுவரர் என்ற மனிதரின் நெஞ்சிலும், நினைவுகளிலும், கண்களிலும், பார்வையிலும், அவ்வளவேன், ஒவ்வொரு அசைவிலும் தன்னைப் பிறர் அசைக்க முடியாததான பிறரை அசைக்க முடிந்த ஒரு வலிமை இருந்தது. பகைவர்களை அடக்கிவிடவும், நண்பர்களை ஆக்கிக் கொள்ளவும் முடிந்த இந்தப் பெரும் பேராற்றலைத் தவம் செய்து அடைந்த சித்தியைப் போல் வைத்திருந்தார் அவர்.
"ஒன்னார் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தால் வரும்."
என்று துறவியின் ஆற்றலாகச் சொல்லப்பட்ட அதைத் துறவியாக வாழாமலே இடையாற்று மங்கலம் நம்பி பெற்றிருந்தார்.
"பொன்மனைக் கூற்றத்துத் தென்னவன் தமிழவேள் பாண்டிய மூவேந்த வேளாராகிய கழற்கால் மாறனார் அவர்கள் இன்று அரண்மனைக்கு வரப்போகிறாரென்று எனக்குத் தெரியவே தெரியாதே" என்று அவருடைய எல்லாப் பட்டப் பெயர்களையும் சேர்த்து நீட்டிச் சொல்லி அவரிடமே கேட்டார் மகாமண்டலேசுவரர். அந்தக் கேள்வியில் இயல்பான பேச்சின் தொனி கொஞ்சமாகவும், குத்தல் அதிகமாகவும் இருப்பது போல் பட்டது. கழற்கால் மாறனார் அதைக் கேட்டு மிரண்டு போய் நின்றார். அந்த மிரட்சி மகாராணியாருக்கு வேடிக்கையாக இருந்தது. எதிரே கம்பீரமாக நின்று சிரித்துக் கொண்டிருக்கும் மகாமண்டலேசுவரரிடம் என்ன பேசுவதென்று தெரியாமல் தவறான காரியத்தை மறைவாகச் செய்து கொண்டிருக்கும் போது வயதானவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட சிறு குழந்தை மருண்டு விழிப்பதைப் போல் விழித்துக் கொண்டு நின்றார் கழற்கால் மாறனார்.
"ஓ! இதென்ன கையில்?... என் மேல் நம்பிக்கையேயில்லை என்று மகாராணியிடம் கொடுப்பதற்காகக் கூடி எழுதிக் கொண்டு வந்த ஒப்புதல் மொழி மாறா ஓலையா?" என்று கேட்டுக் கொண்டே உரிமையோடு மிகவும் சுவாதீனமாக வானவன்மாதேவியின் கையிலிருந்து அந்த ஓலையை வாங்கினார் மகாமண்டலேசுவரர். 'அதை அவர் வாங்கிப் படிக்க நேர்ந்தால் அவருடைய மனம் புண்படும்' என்பதனால் அவரிடம் கொடுக்கக் கூடாதென்று நினைத்திருந்த மகாராணி மகாமண்டலேசுவரர் கேட்ட போது மறுக்க முடியாமல் கொடுத்துவிட்டார்.
தன்மேல் நம்பிக்கையில்லை என்று கூற்றத்தலைவர்கள் கூடி நிறைவேற்றியிருந்த அந்த ஒப்புரவு மொழி மாறா ஓலையைப் படித்து முடிந்ததும் புன்னகை செய்து கொண்டே தலைநிமிர்ந்தார் மகாமண்டலேசுவரர். ஒரே விதமான வார்த்தைக்குப் பல பொருள்கள் கிடைக்கும் சிலேடைப் பாட்டைப் போல் அவருடைய அந்த ஒரு புன்னகைக்குப் பல பொருள்கள் உண்டு. புன்னகை தவழும் முகத்துடனேயே பேசினார் அவர்.
"ஐயா, கழற்கால் மாறனாரே! இப்படி, இங்கே என் முகத்தைக் கொஞ்சம் நிமிர்ந்து பார்த்து நான் சொல்வதைக் கேளுங்கள். இதோ இந்த இடத்துக்குள் நான் நுழையுமுன் என் கால்களில் அணிந்திருந்த பாதக் குறடுகளை (மரச் செருப்புகள்) எப்படிக் கழற்றி எறிந்துவிட்டுச் சுலபமாக காலை வீசிக் கொண்டு நடந்து வந்திருக்கிறேனோ, அவ்வளவு இலேசாகப் பதவியையும் என்னால் கழற்றி எறிந்து விட முடியும்."
"எறிந்து விட முடியுமானால் நீங்கள் இதற்குள் கழற்றி எறிந்திருக்க வேண்டுமே? ஏன் அப்படிச் செய்யவில்லை?" துணிவை வரவழைத்துக் கொண்டு எதிர்த்துக் கேட்டு விட்டார் கழற்கால் மாறனார்.
"நல்ல கேள்வி கேட்டீர்கள், கழற்கால் மாறனாரே! உங்களைப் போல், 'தமிழவேள் பாண்டிய மூவேந்த வேளார்' பட்டம் பெற்ற ஒருவரால் தான் இந்தக் கேள்வி என்னிடம் கேட்க முடியும்! அதற்காகப் பாராட்டுகிறேன். தங்களுடைய கால்களின் அளவுக்குப் பொருந்துமோ பொருந்தாதோ! மற்றவர்களுடைய பாதக் குறடுகளைத் திருடிக் கொண்டு போக ஆசைப்படுகிறவர்கள் நிறைய இருக்கிறார்கள். அதே மாதிரி, மற்றவர்களுடைய பதவிகளைத் தங்கள் தகுதிக்குப் பொருந்தாவிட்டாலும் அடையத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள் பலர். ஆனால் நான் என்ன செய்வது? என்னுடைய காலுக்கு அளவான பாதக் குறடுகளை நான் தானே அணிந்து கொள்ள முடியும்! நீங்கள் ஆசைப்படுகிறீர்கள் என்பதற்காக என் பாதக்குறடுகளை உங்களிடம் நான் எப்படிக் கொடுக்கலாம்?"
மகாமண்டலேசுவரர், கழற்கால் மாறனாரைச் செருப்புத் திருடுகிறவனோடு ஒப்பிட்டு மறைமுகமாகக் குத்திக் காட்டிப் பேசிய போது வானவன் மாதேவிக்குச் சிரிப்பு வந்துவிட்டது. வாய்விட்டுச் சிரித்துப் பழக்கமில்லாத அவர் அப்போது அடக்க முடியாமல் சிரித்து விட்டார்.
"தானாகக் கனியாவிட்டால் தடி கொண்டு அடித்துக் கனிய வைப்போம். எங்களுடைய ஒப்புரவு மொழி மாறா ஓலை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இனி நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்." கழற்கால் மாறனார் ஆத்திரத்தோடு இரைந்தார்.
"உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள். சரியான எதிரிகள் பக்கத்தில் இல்லாத காரணத்தால் சிறிது காலமாக என் சிந்தனைக் கூர்மை மழுங்கிப் போயிருக்கிறது. நீங்களெல்லாம் கிளம்பினால் அதைக் கூர்மையாக்கிக் கொள்ள எனக்கு வசதியாக இருக்கும்."
"அறிவின் திமிர் உங்களை இப்படி என்னை அலட்சியமாக எண்ணிக் கொண்டு பேசச் செய்கிறது!"
"ஆசையின் திமிர் உங்களை இப்படி ஒப்புரவு மொழி மாறா ஓலையோடு ஓடி வரச் செய்கிறது!" கன்னத்தில் அறைவது போல் உடனே பதில் கூறினார் மகாமண்டலேசுவரர்.
"உங்கள் ஆட்சியின் மேல் எனக்குள்ள வெறுப்பைக் காட்டுவதற்காக மகாமன்னர் பராந்தக பாண்டியர் காலத்தில் எனக்கு அளிக்கப்பட்ட 'தென்னவன் தமிழவேள் பாண்டிய மூவேந்த வேளான்' என்ற பட்டத்தையும் அதற்கு அறிகுறியாக என் விரலில் அணிவிக்கப்பட்ட ஏனாதி மோதிரத்தையும் இப்போதே கழற்றி எறியப் போகிறேன் நான்." கொதிப்போடு கத்தினார் கழற்கால் மாறனார்.
"தாராளமாகக் கழற்றி எறியுங்கள். அவைகளை நீங்கள் கழற்றி எறிந்து விட்டால், உங்களைச் சார்ந்திருந்த காரணத்தால் அந்தப் பட்டத்துக்கும் மோதிரத்துக்கும் ஏற்பட்டிருந்த களங்கமாவது நீங்கும். ஒரு காலத்தில் தென்பாண்டி நாட்டிலேயே சிறந்த வீரர்களுக்கு அளிக்கப்பட்ட ஏனாதி மோதிரம் என்ற மரியாதைப் பரிசு இப்போது உங்களைப் போல் ஒரு பதவி ஆசை பிடித்த கிழட்டு மனிதரின் கைவிரலில் கிடப்பதை யாருமே விரும்பமாட்டார்கள்" என்று மகாமண்டலேசுவரர் சொல்லி முடிப்பதற்குள் அவருடைய காலடியில் 'ணங்'கென்று சொல்லி அந்த அந்த மோதிரம் கழற்றி வீசி எறியப்பட்டு வந்து விழுந்தது. கழற்றி வீசி எறிந்தவர் கழற்கால் மாறனார்.
மகாமண்டலேசுவரர் கீழே குனிந்து அந்த மோதிரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு நிமிர்ந்த போது கழற்கால் மாறனார் கோபத்தோடு வேகமாக அந்த இடத்திலிருந்து வெளியேறிப் போய்க் கொண்டிருந்தார்.
"பாவம்! முதிர்ந்த வயதில் முதிராத மனத்தோடு பதவி ஆசைக்கு ஆளாகி என்னென்னவோ பேசுகிறார்" என மகாமண்டலேசுவரரை நோக்கிக் கூறினார் மகாராணி.
"ஆமாம்! வீடு போ போ என்கிறது. காடு வா வா என்கிறது. இந்த வயதில் இப்படிக் கேட்பார் பேச்சைக் கேட்டுக் கொண்டு கெட்டலைய வேண்டாம் இவர்! மகாராணி! இந்த ஓலையும் இந்த மோதிரமும் என்னிடமே இருக்கட்டும். நான் உங்களை அப்புறம் வந்து பார்க்கிறேன்" என்று கூறிவிட்டு அவர் அங்கிருந்து புறப்பட்ட போது, "நீங்கள் இந்தச் சிறுபான்மையாளர்களின் செயலை மனத்தில் வைத்துக் கொண்டு புண்படக்கூடாது" என்று உபசாரமாகச் சொன்னார் மகாராணி.
"அந்தக் கவலை தங்களுக்கு வேண்டாம், மகாராணி!" என்று சுருக்கமாகப் பதில் சொல்லிவிட்டு நடந்தார் மகாமண்டலேசுவரர். அவர் போகும் போது வெளி வாசலில் ஒரு புறமாக நின்று கொண்டிருந்த புவன மோகினியை அருகில் கூப்பிட்டு, "தொடர்ந்து இது மாதிரியே இங்கு யார் வருகிறார்கள், போகிறார்கள் என்பதை நீதான் அவ்வப்போது எனக்கு வந்து சொல்ல வேண்டும்! கவனமாக நடந்து கொள்" என்று சொல்லிவிட்டுப் போனார். பயபக்தியோடு அப்படியே செய்வதாக ஒப்புக் கொண்டாள் அவள்.
நாளுக்கு நாள் மகாமண்டலேசுவரரின் எண்ணங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறி வந்த சமயம் அது. கொற்கையிலும், கரவந்தபுரத்துப் பகுதிகளிலும் கலவரமும், குழப்பமும் ஓய்ந்து அமைதி நிலவியது. முத்துக்குளிப்பு ஒழுங்காக நடைபெற்றது. அவர் செய்த இரகசிய ஏற்பாட்டின்படி குழல்வாய்மொழியும் சேந்தனும் கடல் கடந்து போய் இளவரசன் இராசசிம்மனையும் அரசுரிமைப் பொருள்களையும் மீட்டுக் கொண்டு வந்து விடுவார்கள். அவர் மெய்க்காவற் படையிலிருந்து தேர்ந்தெடுத்து அனுப்பிய ஐம்பது ஒற்றர்களும் வடக்கே கொடும்பாளூர்ப் பகுதியில் சென்று பயனுள்ள வேலைகளை மறைந்திருந்து செய்து கொண்டிருந்தார்கள். வடதிசைப் படையெடுப்புப் பயமுறுத்தல் தற்காலிகமாக நின்று போயிருந்தது. அந்த நிலையில்தான் கழற்கால் மாறனாரின் ஒப்புறவு மொழி மாறா ஓலை வந்து அவரைச் சிறிது அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதற்கு மறுநாள், கொடும்பாளூரில் உளவறிய முயன்ற போது அன்று ஒருநாள் அழகாகப் பொய் சொல்லி அவரை மகிழ்வித்த வீரன் அகப்பட்டுக் கொண்டு கழுவேறி இறந்த செய்தி அவருக்கு வந்தது. சீவல்லப மாறனை விட்டுக் கோட்டாற்றிலிருந்த அந்த வீரனின் மனைவியையும், மகனையும் வரவழைத்து ஆறுதல் கூறினார் அவர். கழற்கால் மாறனார் திருப்பிக் கொடுத்த ஏனாதி மோதிரத்தை இறந்த வீரனுக்கு செலுத்தும் மரியாதைப் பரிசாக அவன் மகனுக்கு அளித்தார் மகாமண்டலேசுவரர். அன்று மாலை இடையாற்று மங்கலம் நிலவறையிலிருந்து இரவோடு இரவாக யாரோ ஆயுதங்களைக் கடத்திக் கொண்டு போய்விட்டார்கள் என்று அம்பலவன் வேளான் வந்து புதிதாக ஒரு செய்தியைச் சொன்ன போது அவர் பலவாறு சந்தேகப்பட்டார்.
------
2.32. பழைய நினைவுகள்
"சக்கசேனாபதி! மனத்தையும் கண்களையும் திறந்து வைத்துக் கொண்டு எழிலுணர்ச்சியோடு பார்க்கிறவனுக்கு உலகம் எவ்வளவு அழகாயிருக்கிறது பார்த்தீர்களா?"
கையில் வலம்புரிச் சங்கும், உடலில் கடற் காய்ச்சலுமாகக் கப்பல் மேல் தளத்தில் நின்று கொண்டிருந்த இராசசிம்மன் தன் பக்கத்தில் நின்று கொண்டிருந்த சக்கசேனாபதியை நோக்கி இப்படிக் கேட்டான்.
"பார்த்தேன் இளவரசே! நன்றாகப் பார்த்தேன். இந்த அழகின் தூண்டுதலால் நீங்கள் சற்று முன் கவிதையே பாடி விட்டீர்களே? உங்கள் கவிதையின் இனிய ஒலியிலிருந்து என் செவிகள் இன்னும் விடுபடவில்லை. அதைக் கேட்ட வியப்பிலேயே இன்னும் ஆழ்ந்து போய் நின்று கொண்டிருக்கிறேன் நான்."
"என்னவோ மனத்தில் தோன்றியது; நாவில் வார்த்தைகள் கூடித் திரண்டு வந்து எங்களை முறைப்படுத்தி வெளியிடு என்று துடித்தன. பாடினேன்."
"இப்படி ஏதாவது தத்துவம் பேசிக் குமார பாண்டியர் என்னை இவ்வளவு எளிதாக ஏமாற்றிவிட முடியாது. உங்களை கவிஞராக மாற்றிய அழகின் வனப்பு நீங்கள் கப்பலில் நின்று பார்க்கும் இந்தக் கடலிலும் வானத்திலும் மட்டும் இல்லை."
"வேறு எங்கு இருக்கிறதாம்?"
"எனக்குத் தெரியும். நேற்று உறக்கத்தில் எத்தனை முறை அந்தப் பெயரைப் பிதற்றினீர்கள்! உங்களைக் கவியாக மாற்றிப் பாடவைக்கும் அழகு செம்பவழத் தீவில் இருக்கிறது. அந்த அழகுக்குப் பெயர் மதிவதனி."
சக்கசேனாபதி மேற்கண்டவாறு உண்மையைக் கூறியதும், 'இந்த வயதான மனிதர் நம் மனத்தில் உள்ளதைச் சொல்லி விட்டாரே!' என்று வெட்கமடைந்தான் இராசசிம்மன்.
"ஏன் வெட்கப்படுகிறீர்கள் இளவரசே! நான் உள்ளதைத்தானே கூறினேன்? சில மலைகள், சில நதிகளுக்குத் தொடர்ந்து தண்ணீரை அளித்துப் பல நிலங்களைக் காப்பது போல் இயற்கை சில பேருக்கு அளவிட முடியாத அழகைக் கொடுத்துப் பல கவிகளை உண்டாக்கி விடுகிறது. பெண்களின் வனப்பும், மலைமகளின் வளமும், மலர்களின் மணமும், கடலின் பரப்பும் இல்லாமலிருந்தால் இந்த உலகத்தில் கவிதையே உண்டாகியிருக்காது. செம்பவழத் தீவில் சந்தித்த அந்தப் பெண்ணின் அழகு உங்களைக் கவியாக்கியிருக்கிறது."
"உங்கள் புகழ்ச்சியை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். நீங்கள் சொல்வது போல நான் கவியில்லை."
"நீங்கள் இல்லையென்று சொன்னால் எனக்கென்ன? என்னுடைய கருத்தின்படி அழகை உணரும் நெஞ்சின் மலர்ச்சி இருந்தாலே அவன் முக்கால் கவியாகிவிடுகிறான். நீங்களோ அந்த மலர்ச்சியை வார்த்தைகளாக்கி வெளிப்படுத்தி விட்டீர்கள்" என்று சக்கசேனாபதி தம்முடைய அபிப்பிராயத்தை வற்புறுத்தினார்.
அவருக்குப் பதில் சொல்லாமல் கையில் வைத்திருந்த வலம்புரிச் சங்கை மேலும் கீழுமாகத் திருப்பிப் புரட்டி வலது கை விரல்களை மெல்ல வருடிக் கொண்டிருந்தான் இராசசிம்மன். ஒன்றிரண்டு முறை விளையாட்டுப் பிள்ளை ஆர்வத்தோடு செய்வது போல் அந்தச் சங்கை ஊதி ஒலி முழக்கினான்.
"போதும், நன்றாக இருட்டி விட்டது. இவ்வளவு நேரம் காய்ச்சல் உடம்போடு கடற்காற்றுப் படும்படி இங்கு நின்றாகிவிட்டது. உங்கள் பிடிவாதம் பொறுக்க முடியாமல் தான் இங்கு அழைத்துக் கொண்டு வந்தேன். இனிமேலும் இப்படி நிற்பது ஆகாது. வாருங்கள், கீழே போய் விடலாம்" என்று இங்கிதமாகச் சொல்லி, அவனைக் கீழ்த்தளத்துக்கு அழைத்துக் கொண்டு போய்விட்டார் அவர்.
சிறு சிறு தீபங்கள் எரிந்து கொண்டிருந்தாலும் கப்பலில் கீழ்த்தளத்தில் இருளே மிகுதியாக இருந்தது. சக்கசேனாபதியின் வற்புறுத்தலுக்காகச் சிறிது 'உணவு உட்கொண்டோம்' என்று பேர் செய்துவிட்டுப் படுத்துக் கொண்டான் இராசசிம்மன்.
பசித்தவன் பழங்கணக்குப் பார்ப்பது போல் முன் நினைவுகள் அவனை மொய்த்துக் கொண்டன. இருந்தாற் போலிருந்து, 'நான் யார்? எங்கே பிறந்தேன்? எதற்காகப் பிறந்தேன்? ஏன் இப்படி நிலையில்லாமல் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறேன்? இப்போது எங்கே போய்க் கொண்டிருக்கிறேன்? ஏன் போய்க் கொண்டிருக்கிறேன்?' என்பது போல் தன் நிலை மறந்த, தன் நினைப்பற்ற வினாக்கள் அவன் மனத்தில் எழுந்தன. சோர்ந்த மனநிலையும் தன் மேல் தனக்கே வெறுப்பும் உண்டாகிற சில சமயங்களில் சில மனிதர்களுக்கு இத்தகைய கேள்விகள் நினைவுக் குமிழிகளாய் மனத்தில் முகிழ்த்து மனத்திலேயே அழியும். வளர்ச்சியும், தளர்ச்சியும், இன்பமும், துன்பமும் நிறைந்த தன் வாழ்க்கையின் நாட்களை விலகி நின்று எண்ணிப் பார்க்கும் போது சோகத்தின் வேதனை கலந்த ஒருவகை மகிழ்ச்சி அவனுக்கு ஏற்பட்டது. அந்த இருளில் காய்ச்சலோடு படுக்கையில் கிடந்தவாறே மனத்தின் நினைவுகளைப் பின்னோக்கிச் செலுத்தினான் அவன். வெற்றிப் பெருமிதத்தோடு வாழ்ந்த பழைய நாட்களை இப்போதைய தோல்வி நிலையில் எண்ணிப் பார்க்கும் போது வேதனையாக இருந்தது.
தூரில் தொடங்கிச் சாப்பிட்டுக் கொண்டு போகிற கரும்பு முடிவில் உப்புக்கரிக்கிற மாதிரிச் செல்வத்தோடும், செல்வாக்கோடும் அரச குடும்பத்து வாழ்க்கை வாழ்ந்து விட்டு இன்றைய நிலையில் அந்தப் பழைய சிறப்பை நினைக்கிற போது வெறுப்பளிக்கிறது. பழகப்பழக, அநுபவிக்க அநுபவிக்க வெறுப்பைக் கொடுக்கிறது என்ற காரணத்தாலோ என்னவோ தமிழ் மொழியில் செல்வத்துக்கு 'வெறுக்கை' என்று ஒரு பெயர் ஏற்பட்டு விட்டது. அநுபவிக்கிறவன் ஞானமுள்ளவனாக இருந்தால் செல்வத்தின் சுகங்களை வெறுத்துவிட்டு அதைவிடப் பெரியதைத் தேடிக் கொண்டு ஓடும் நிலை ஒரு நாள் வந்துதான் தீரும்.
இராசசிம்மன் நினைத்துப் பார்த்தான். பேரரசராகிய சடையவர்ம பராந்தக பாண்டியருக்கும், பேரரசியாகிய வானவன்மாதேவிக்கும் புதல்வனாகப் பிறந்து மதுரை மாநகரத்து அரண்மனையில் தவழ்ந்த நாட்களை நினைத்தான். தந்தையின் தோள் வலிமையும், வாள் வலிமையும், ஆள் வலிமையும் அன்றையப் பாண்டிய நாட்டைப் பெரும் பரப்புள்ளதாகச் செய்திருந்தன. அப்போது மதுரை கோநகரமாக இருந்தது. அவன் சிறுவனாக இருந்த போது, அரசகுல வீர வழக்கத்தின்படி, சங்கு, சக்கரம், வில், வாள், தண்டு என்னும் ஐந்து ஆயுதங்களையும் போல் சிறிதாகப் பொன்னிற் செய்து நாணில் தொடுத்து அவனுடைய கழுத்தில் தம் கையாலேயே கட்டினார் அவனுடைய தந்தை. வீரத்துக்குச் சின்னமாகச் சிறுவர்களுக்கு அரச குலத்தில் கட்டப்படும் 'ஐம்படைத்தாலி' அது. ஒரு நாள் தந்தை பராந்தகரும், தாய் வானவன்மாதேவியும் அருகில் இருக்கும் போது அவன் எதற்காகவோ முரண்டு பிடித்துக் கொண்டே கழுத்தில் கிடந்த ஐம்படைத் தாலியை அறுத்துச் சிதற விட்டான். அப்போது பராந்தகர் தம் மனைவியை நோக்கி, "மாதேவி, இந்தப் பயல் எதிர்காலத்தில் நாட்டையும் ஆட்சியையும் கூட இப்படித்தான் அறுத்துச் சிதறவிட்டுத் திரிந்து கொண்டிருக்கப் போகிறான். எனக்கென்னவோ இவன் என்னைப் போல் இவ்வளவு சீராக ஆளமாட்டான் என்று தான் தோன்றுகிறது!" என்றார். மாதேவிக்கு அதைக் கேட்டதும் தாங்கமுடியாமல் கோபம் வந்துவிட்டது.
"நீங்களாகவே வேண்டுமென்று இவனைக் குறைவாக மதிப்பிடுகிறீர்கள். உங்களை விடப் பெரிய வீரனாக எட்டுத் திசையும் வென்று ஆளப்போகிறான் இவன்" என்று கணவனுக்கு மறுமொழி கிடைத்தது வானவன்மாதேவியிடமிருந்து.
இன்னொரு சம்பவம். இராசசிம்மனுக்கு ஆறாண்டுகள் நிறைந்து முடிந்து ஏழாவது ஆண்டின் 'நாண்மங்கலம்' (பிறந்த நாள்) வந்தது. பிறந்த நாளைக் கொண்டாடும் நாண்மங்கல விழாவன்று காலையில் அவனைப் புனித நீராட்டிப் புத்தாடை அணிவித்துப் பொன்முடி சூட்டி வழிவழி வந்த பொற்சிம்மாசனத்தில் உட்கார்த்தி, ஒரு கையிலே திருக்குறள் ஏட்டுச் சுவடியையும், மற்றொரு கையிலே வீரவாளையும் கொடுத்தார்கள். சிம்மாசனத்தின் இருபுறமும் பராந்தக பாண்டியரும் வானவன்மாதேவியும் நின்று நாண்மங்கலத் திருக்கோலத்தில் தங்கள் செல்வனை அழகு பார்த்துப் பூரித்துக் கொண்டிருந்தனர். அப்போது இராசசிம்மன் கை தவறி வாளைக் கீழே போட்டுவிட்டான். இசைவு பிசகாமல் கீழே விழுந்த அந்த வாளின் நுனியின் ஒரு சிறு பகுதி உடைந்து விட்டது.
"அபசகுனம் போல் நல்ல நாளும் அதுவுமாக இப்படிச் சிம்மாசனத்தில் உட்கார்ந்ததும் வாளைக் கீழே போட்டு உடைத்து விட்டானே" என்று கவலையோடு கூறினார் பராந்தக பாண்டியர். "போதும்! உங்களுக்கு எது நடந்தாலும் அபசகுனமாகத்தான் படுகிறது. சிறு குழந்தை கை தவறிப் போட்டு விட்டான்" என்று மகாராணி கூறிய சமாதானத்தினால் தான் பராந்தகர் திருப்தியடைந்தார்.
தந்தை பராந்தக பாண்டியரின் வீரக்களை பொருந்திய அந்த முகத்தைக் கப்பல் தளத்தின் இருட்டில் படுத்துக் கொண்டு நினைத்துப் பார்க்க முயன்றான் இராசசிம்மன். தந்தை உயிரோடிருந்த காலத்தில் அலங்காரத்தோடு கூடிய தன் அன்னையின் 'வாழுங்கோல'த்தை நினைத்துப் பார்த்தான். அன்று தங்களுக்குச் சொந்தமாக இருந்த மதுரைப் பெருநகரத்தைப் பகுதி பகுதியாக நினைத்துப் பார்த்தான். மதுரை நகரத்து அரண்மனையையும், இளமையில் தான் அங்கே கழித்த நாட்களையும் நினைத்தான். கடைசியாக தந்தையின் மரணத்துக்குப் பின் நடந்த நிகழ்ச்சிகள் அவன் நினைவைப் பற்றிக் கொண்டு வரிசையாகத் தொடர்ந்து உள்ளத்தில் ஓடின.
'தந்தை காலமாகும் போது கோனாட்டின் தென் பகுதியிலிருந்து குமரி வரை பரந்து விரிந்த பாண்டிய நாட்டை எனக்கு வைத்து விட்டுப் போனார். நான் என்ன செய்தேன். என் கண் காணக் கரவந்தபுரத்திலிருந்து குமரி வரை குறுகிவிட்டதே அந்த நாடு! தந்தை காலஞ்சென்ற சிறிது காலத்துக்குப் பின் நானும் வீராவேசமும், உரிமை வேட்கையும் கொண்டு சில போர்களில் வெற்றி பெறத்தான் செய்தேன். உவப்பிலி மங்கலத்தில் நடந்த போரில் இருவர் மூவராகச் சேர்ந்து கொண்டு வந்த வடதிசையரசர்களைக் கூட வென்றேன். அப்போது பாண்டி மண்டலப் பெரும்படை மிகப் பெரியதாகவும் வலுவுள்ளதாகவும் இருந்தது. தஞ்சாவூர் சோழன் வைப்பூரில் நடந்த போரிலும், நாவற் பதியில் நடந்த போரிலும் இரண்டு முறை என் தலைமையில் பாண்டி மண்டலப் படைக்குத் தோற்றோடியிருக்கிறான். இப்பொழுது கொழுத்துப் போய்த் திரியும் இந்தக் கொடும்பாளூர்க்காரனும் ஒரு முறை என்னிடம் தோற்றிருக்கிறான்.
'அன்று என் வெற்றிகளைப் புகழ்ந்து மெய்க்கீர்த்திகளையும், பாமாலைகளையும் புலவர்கள் பாடினார்கள். நீள நீளமான சிறப்புப் பெயர்களை எனக்குக் கொடுத்தார்கள். சடையன் மாறன், இராசசிகாமணி, சீகாந்தன், மந்திர கௌரவ மேரு, விகட பாலன் என்றெல்லாம் புகழ்ந்தார்கள். தந்தையின் காலத்திற் செய்தது போலவே நானும் அன்னையையும் கலந்தாலோசித்துக் கொண்டு எண்ணற்ற தேவதானமும் (கோயில்களுக்கு மானியம்), பள்ளிச்சந்தமும் (சமணப் பள்ளிகளுக்கு மானியம்), பிரமதேயமும் (அந்தணர்களுக்கு மானியம்) அளித்தேன். மதுரை வட்டாரத்தில் இருக்கும் நற்செய்கை புத்தூர் என்னும் சின்னமனூர் முழுவதையுமே ஒழுக்கத்திலும், கல்வியிலும் சிறந்த ஓர் அந்தணருக்குப் பிரம்மதேயமாகக் கொடுத்தேன். அதனால் என் சிறப்புப் பெயரோடு மந்தர கௌரவ மங்கலம் என்றே அவ்வூர் பெயர் பெற்று விட்டது. அந்த நாளில்தான் முதன்முதலாக இலங்கைக் காசிப மன்னரின் நட்பு எனக்குக் கிடைத்து. பின்பு என் போதாத வேளை என் வரலாற்றையே மாற்றிவிட்டது. வடக்கே சோழன் வலுவான கூட்டரசர்களைச் சேர்த்துக் கொண்டு நானும் அன்னையும் வடபாண்டி நாட்டை இழக்கச் செய்தான். தென்பாண்டி நாடும் அதன் திறமையான மகாமண்டலேசுவரரும் இல்லையானால் நான் தோற்று ஓடும் போதெல்லாம் அன்னையையும் அழைத்துப் போக வேண்டியதாயிருந்திருக்கும். மகாமண்டலேசுவரரும், கடமையில் கருத்துள்ள தளபதி வல்லாளதேவனும் அவ்வப்போது அன்னைக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்கள்! வடதிசைப் பகை வலுப்பதற்கு முன் நான் பெற்ற வெற்றிகளையெல்லாம் மறந்து விட்டு இரண்டு மூன்று முறை தோற்று இலங்கைக்கு ஓடியதுமே 'போர்த்திறமும், அநுபவமும் இல்லாத இளைஞன்' என்று என்னைக் கேவலமாகப் பேசத் தொடங்கி விட்டார்களே! பழைய புகழை விடப் புதிய பழியே வேகமாக நிலைத்து விடுகிறது. எஞ்சியுள்ள தென்பாண்டி நாட்டுக்காவது என்னை அரசனாக்கி முடிசூட்டி மணவினை முடிக்க வேண்டுமென்று அன்னைக்கு முன் மகாமண்டலேசுவரருக்கும் தாங்காத ஆசை. மகாமண்டலேசுவரர் யாருக்குமே தெரியாமல் என்னை இரகசியமாக இலங்கையிலிருந்து வரவழைத்து மாறுவேடத்தில் இடையாற்று மங்கலத்தில் வைத்துக் கொண்டார். நான் அவரிடமும் தங்கவில்லை. நான் தங்காமற் போனது மட்டுமில்லாமல் என் முன்னோரின் அரசுரிமைச் சின்னங்களையும் தங்கவிடாமல், அவரிடமிருந்து எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டேன். ஆழ்ந்து சிந்தித்துப் பார்க்காமல் எதையெதையோ திடீர் திடீரென்று செய்து பெயரைக் கெடுத்துக் கொள்ளப் போகிறேன் நான். அருமை அன்னையாரையும் மகாமண்டலேசுவரரையும் தென்பாண்டி நாட்டு மக்களையும் மட்டுமா நான் ஏங்க வைத்து விட்டுப் போகிறேன்? இடையாற்று மங்கலத்திலும் செம்பவழத் தீவிலுமாக இரண்டு பெண் உள்ளங்களை வேறு ஏங்க வைத்துவிட்டுப் போகிறேன். அதே ஏக்கங்களின் மொத்தமான எதிரொலி என் உள்ளத்திலும் உருவெடுத்துப் பேரொலி செய்கிறதே! இடையாற்று மங்கலத்துப் பெண்ணாவது தன்னளவில் அதிகமாக ஏங்கியிருப்பாள். செம்பவழத் தீவின் செல்வியோ என்னையே ஏங்கச் செய்து கொண்டிருக்கிறாள். என் உயிரையே காப்பாற்றி எனக்கு வாழ்வு கொடுத்த பெண் அல்லவா மதிவதனி! சந்திரனுடைய ஒளியில் உலகத்துக்குக் குளிர்ச்சியளித்து மயங்குகின்ற மென்மையைப் போல் மதிவதனியின் சிரிப்பில் மாபெரும் காவியங்களின் அலங்கார நளினங்களை ஒளித்துக் கொண்டிருக்கும் ஏதோ ஒரு கவர்ச்சி இருந்து என்னை மயக்கிக் கொண்டிருக்கிறது. அவளுடைய மோகனச் சிரிப்பு வந்து முடியுமிடத்தில் இதழோரத்தில் அழகாகச் சுளி விழுகிறதே1 அந்தச் சுளியில் என் உள்ளம் சுழலுகிறது. நான் செம்பவழத் தீவில் அந்தப் பெண்ணைப் பார்த்த பின் கவிஞனாக மாறிவிட்டேனென்று சக்கசேனாபதி கூறியது எவ்வளவு பொருத்தமான வார்த்தை! அவர் அப்படிச் சொன்னபோது வீம்புக்காக அவரை மறுத்தேனே நான். உண்மைதான்! சில பெண்களின் கண்களும், சிரிப்பும், சில ஆண்களைக் கவியாக்கி விடுகின்றன. தம்மை மோந்து பார்க்கும் போதே மேலான எண்ணங்களை உண்டாக்கும் ஆற்றல் சில பூக்களுக்கு உண்டு. சில பெண்களின் கண்ணியமான அழகுக்கும் இந்த ஆற்றல் உண்டு போலும்.'
எண்ண அலைகளின் கொந்தளிப்பில் இராசசிம்மன் நெட்டுயிர்த்தான்.
அழகையும், கவிதையையும், அரசாட்சியையும், போரில் வெற்றி தோல்விகளையும் சேர்த்து நினைத்த போது அவனுக்கு ஒன்று தோன்றியது. 'வீரனாகவும் தீரனாகவும் வேந்தனாகவும் வாழ்ந்து செல்வம் பெறுவதை விட விவேகியாகவும், கவிஞனாகவும் வாழ்ந்து ஏழையாகச் செத்துப் போகலாம். பார்க்கப் போனால், எது செல்வம்? எது ஏழ்மை? நுண்ணுணர்வும் அறிவும் தான் செல்வம், அவை இல்லாமல் இருப்பதுதான் ஏழைமை!'
இப்படி எதை எதையோ எண்ணிக் குமுறிக் கொண்டு அந்த இரவின் பெரும்பகுதியைத் தூங்காமல் கழித்தான் இராசசிம்மன். மறுநாள் பொழுது விடிந்தது. கடற் காய்ச்சல் தணிவதற்கு மாறாக அதிகமாயிருந்தது. சக்கசேனாபதி இரவில் தூங்காமல் இருந்ததற்காக அவனை மிகவும் கண்டித்தார்.
"அநேகமாக நாம் நாளைக்கே இலங்கைக் கரையை அடைந்து விடலாம். உங்கள் உடம்பு நாளுக்கு நாள் இப்படிப் போய்க் கொண்டிருக்கிறதே. கூடிய வரையில் பயணத்தை நீட்டாமல் சுருக்க வேண்டுமென்று நினைக்கிறேன் நான். நாம் மாதோட்டத்தில் போய் இறங்க வேண்டாம். அது மிகவும் சுற்றுவழி. அனுராதபுரத்துக்கு மேற்கே புத்தளம் கடல் துறையிலேயே இறங்கி விடுவோம். ஏற்கெனவே நாம் விழிஞத்தில் புறப்பட்டதால் மிகவும் சுற்றிக் கொண்டு பயணம் செய்கிறோம். கோடியக்கரையிலிருந்தோ, நாகைப்பட்டினத்திலிருந்தோ புறப்பட்டிருந்தால் தொண்டைமானாற்றுக் கழிமுகத்தின் வழியே விரைவில் ஈழ மண்டலத்தின் வடகரையை அடைந்துவிடலாம். சேதுக்கரையிலிருந்து புறப்பட்டால் மாதோட்டம் மிகவும் பக்கம். நான் இதற்கு முன்பெல்லாம் உங்களை இலங்கைக்கு அழைத்து வந்த போது கடலில் வடக்கே நீண்ட வழி சுற்றாக இருந்தாலும் மாதோட்டம் வழியாகத்தான் அழைத்துச் சென்றிருக்கிறேன். இம்முறை அப்படி வேண்டாம். உங்கள் உடம்புக்கு நீண்ட பயணம் ஏற்காது. புத்தளத்தில் இறங்கி அனுராதபுரம் போய் விடுவோம். அரசர் கூடப் பொலன்னறுவையிலிருந்து இப்போது அனுராதபுரத்துக்கு வந்திருப்பார்" என்று சக்கசேனாபதி கூறிய போது இராசசிம்மனுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது.
"சக்கசேனாபதி! சோழமண்டலக் கடற்கரையாகிய நாகைப்பட்டினத்திலிருந்தும் கோடியக்கரையிலிருந்தும் அவ்வளவு விரைவாக இலங்கையை அடைந்து விடலாமென்று நீங்கள் சொல்கிறீர்கள். ஆனால் சோழனின் புலிச் சின்னமும் கொடும்பாளூர்ப் பனைமரச் சின்னமுமுள்ள கொடியோடு அன்றிரவு செம்பவழத் தீவில் நான் ஒரு கப்பலைப் பார்த்தேன். அவர்கள் கூட ஈழநாட்டுக்குப் போகிறவர்கள் போல் தான் தெரிந்தது. ஆனால் தொண்டைமானாற்றுக் கழிமுகத்தையும், மாதோட்டத்தையும் விட்டுவிட்டு ஏன் அவர்கள் தெற்கே வந்தார்கள் என்பது எனக்கு விளங்கவில்லை!" - அந்த ஆட்கள் தன் மேல் வேல் எறிந்து துரத்திக் கொல்ல முயன்றதையும், அப்போது மதிவதனி தன்னைக் காப்பாற்றியதையும் மட்டும் அவரிடம் இராசசிம்மன் கூறவில்லை.
"அது சோழ நாட்டுக் கப்பலானால் அப்படிச் சுற்றி வளைத்து வந்தது ஆச்சரியந்தான். ஒரு வேளை அவர்களுக்கு விழிஞத்தில் ஏதாவது காரியம் இருந்திருக்கும். அதை முடித்துக் கொண்டு இலங்கை வருவதற்குப் புறப்பட்டிருப்பார்கள். அப்படி அந்தக் கப்பல் இலங்கை வருவதாயிருந்தால் நம் கப்பலுக்குப் பின்னால் தானே வரவேண்டும்? அப்படியும் காணவில்லையே!" என்று சந்தேகத்தோடு பதில் சொன்னார் சக்கசேனாபதி.
"நாகைப்பட்டினத்துக்கே திரும்பி விட்டார்களோ, என்னவோ? அப்படியானாலும் நம் கப்பல் செல்லும் திசையிலேயே வந்துதானே வடமேற்கு முகமாகத் திரும்ப வேண்டும்?" என்று மீண்டும் கேட்டான் இராசசிம்மன்.
"யாரோ! என்ன காரியத்துக்காக வந்தார்களோ? ஒருவேளை கீழ்க்கரையை ஒட்டிப் பாம்பனாறு வழியாகவும் போயிருக்கலாம். நீங்கள் சொல்வதையெல்லாம் சிந்தித்தால் எனக்குப் பல வகைகளில் சந்தேகங்கள் ஏற்படுகின்றன இளவரசே! இப்படி ஒரு கப்பலைப் பார்த்தேன் என்று நீங்கள் அன்றே செம்பவழத் தீவில் என்னிடம் கூறியிருக்கலாமே! தாங்கள் கூறாமல் மறைத்துவிட்டது ஏனோ?" சக்கசேனாபதி சற்றே சினந்து கொள்வது போன்ற குரலுடன் இவ்வாறு கேட்ட போது இராசசிம்மன் விழித்தான்.
"சரி! அவர்கள் பேச்சு நமக்கு எதற்கு? அந்தக் கப்பல் எக்கேடு கெட்டு வேண்டுமானாலும் போகட்டும். நாம் நம்முடைய காரியத்தைக் கவனிப்போம். நீங்கள் கூறுகிறபடி புத்தளத்திலேயே இறங்கிவிடலாம்" என்று பேச்சை மாற்றினான் இராசசிம்மன்.
-----------
2.33. நினைப்பென்னும் நோன்பு
தன் உள்ளக் கருத்து நிறைவேறுமா, நிறைவேறாதா என்று அறிவதற்காகத் தான் கூடல் இழைத்ததை அத்தை பார்த்துவிட்டாளே என்ற வெட்கம் கூடிய மகிழ்ச்சியில் சிறிது சிறிதாகப் புதைந்து விட்டாள் மதிவதனி. தன் எண்ணங்களை நோன்புகளாக்கி வலிமையான அன்புத் தவத்தை உறுதியாக நோற்றுக் கொண்டிருந்தாள் அவள். செம்பவழத் தீவில் நாட்கள் வழக்கம் போலத்தான் கழிந்து கொண்டிருந்தன. மதிவதனி கவலையே இல்லாதவளைப் போல மகிழ்ச்சியோடு துள்ளித் திரிந்து கொண்டிருந்தாள். இடையில் சில நாட்களாக அவளுக்கு ஏற்பட்டிருந்த சோர்வு இப்போது இல்லை. தன் நினைவுக்குத் தன் உள்ளத்தைக் கேள்விக் களமாக்கி, இடைவிடாமல் தான் இயற்றிக் கொண்டிருக்கும் நினைவாகிய வேள்வி நோன்பிற்குப் பயன் உண்டு என்ற திடநம்பிக்கை அவளுக்குத்தான் அன்றே வந்துவிட்டதே.
உற்சாகமாகக் கடையில் போய் உட்கார்ந்து கொண்டு சங்குகளையும் பவழங்களையும் விற்றாள். தந்தை கடையைப் பார்த்துக் கொண்ட சமயங்களில் தனது சிறிய தோணியைச் செலுத்திக் கொண்டு தீவின் கரையோரமாகக் கடலைச் சுற்றி வந்தாள். இன்னும் சில சமயங்களில் ஏழு கன்னிமார் கோயில் புன்னை மரத்தடியில் போய்ப் பெரிய முனிவர் போல் கண் மூடி உட்கார்ந்து தியானம் செய்தாள். பைத்தியக்காரப் பெண் போல் தன் அருகில் யாருமில்லாத தனிமையான சமயங்களில் 'நினைப்பதை அடைவது ஒரு தவம்' என்று மெதுவாகத் தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.
மதிவதனி அன்று மாலையில் ஒருவிதமான மகிழ்ச்சியோடு தோணியில் ஏறிக்கொண்டு கரையோரமாகவே அதைச் செலுத்திக் கொண்டிருந்தாள். அப்போது அலங்காரமான சிறிய கப்பல் ஒன்று தீவை நோக்கி வந்து கொண்டிருப்பதை அவள் கண்டாள். அதில் வருவது யாரென்று அறிந்து கொள்ள வேண்டும் என்று இயல்பாக அவள் மனத்தில் ஓர் ஆசை உண்டாயிற்று. தற்செயலாகச் செலுத்திக் கொண்டு போகிறவளைப் போல் அந்தக் கப்பலுக்கு அருகில் தன் தோணியைச் செலுத்திக் கொண்டு போனாள் மதிவதனி.
முன் குடுமியும், பருத்த உடம்பும், குட்டைத் தோற்றமுமாக ஓர் ஆள் அந்தக் கப்பலின் தளத்தில் நின்று கொண்டிருப்பதை மதிவதனி தோணியில் நின்று பார்த்தாள். அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கப்பலின் தளத்தில் அரசகுமாரி போன்ற அலங்காரத்தோடு அழகிய இளம்பெண் ஒருத்தியும், பெண்மைச் சாயல்கொண்ட முகமுடைய இளைஞன் ஒருவனும் வந்து அந்த முன் குடுமிக்காரருக்குப் பக்கத்தில் நின்றார்கள். மதிவதனி கடலில் துணிவாகத் தோணி செலுத்திக் கொண்டு வரும் காட்சியை ஏதோ பெரிய வேடிக்கையாக எண்ணிப் பார்க்கிறவர்களைப் போல் அந்த மூன்று பேரும் கப்பல் தளத்தில் நின்று பார்த்தார்கள்.
முன்குடுமிக்காரர் அவளை நோக்கிக் கைதட்டிக் கூப்பிட்டு ஏதோ விசாரித்தார். கடல் அலைகளின் ஓசையில் அவர் விசாரித்தது மதிவதனியின் செவிகளில் விழவில்லை. தோணியை இன்னும் பக்கத்தில் கொண்டு போய் நிறுத்திக் கொண்டு, "ஐயா! என்ன கேட்டீர்கள்? காதில் விழவில்லை" என்று அண்ணாந்து நோக்கி வினவினாள் அவள்.
"தோணிக்காரப் பெண்ணே! இதோ அருகில் தெரியும் இந்தத் தீவுக்குப் பெயர் என்ன? கப்பலோடு இரவில் தங்குவதற்கு இங்கே வசதி உண்டா?" என்று முன்குடுமிக்காரர் அவளிடம் இரைந்து கேட்டார்.
"ஆகா! தாராளமாகத் தங்கிவிட்டுப் போகலாம். இந்தத் தீவுக்குப் பெயர் செம்பவழத் தீவு! பார்த்தாலே உங்களுக்குத் தெரியுமே!" என்று மதிவதனி பதில் சொன்னாள். அந்தக் குட்டையான முன்குடுமிக்காரரைப் பார்க்கப் பார்க்க வேடிக்கையாக இருந்தது அவளுக்கு.
"கூத்தா! இடையாற்று மங்கலத்தில் எங்கள் மாளிகைக்கும் அக்கரைக்கும் இடையிலுள்ள பறளியாற்றைப் படகில் கடப்பதற்கே எனக்குப் பயமாக இருக்கும். தண்ணீரை மொத்தமாகப் பரப்பாகப் பார்க்கும் போது அவ்வளவு தூரம் பயப்படாமல் இவ்வளவு பெரிய கடலில் சிறிய தோணியைச் செலுத்திக் கொண்டு எவ்வளவு உரிமையோடு சிரித்துக் கொண்டே மிதந்து வருகிறாள் பார்த்தாயா எனக்கு வியப்பாக இருக்கிறது!" என்று கப்பலின் தளத்தில் நின்ற பெண் தன் அருகில் இருந்த பெண் முகங்கொண்ட இளைஞனிடம் கூறினாள். தோணியிலிருந்த மதிவதனி அதைக் கேட்டுப் பலமாகச் சிரித்தாள்.
"பெண்ணே! நீ ஏன் சிரிக்கிறாய்?" என்று அந்த இளைஞன் மதிவதனியைப் பார்த்துக் கேட்டான். அந்தக் குரல் அசல் பெண் குரல் போலிருப்பதை எண்ணி வியந்து கொண்டே, "ஒன்றுமில்லை, உங்கள் பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் அம்மையார் சற்று முன் உங்களிடம் கூறிய வார்த்தைகளைக் கேட்டேன். சிரிப்பு வந்தது. இவ்வளவு தூரம் தண்ணீருக்குப் பயப்படுகிறவர்கள் கப்பலில் வர எப்படித் துணிந்தார்களென்று எனக்குத் தெரியவில்லை!" என்று பதில் கூறினாள் மதிவதனி.
"அதற்கென்ன செய்வது? எதற்கெல்லாம் பயப்படுகிறோமோ, அதை வாழ்வில் செய்யாமலா இருந்து விடுகிறோம்? பயப்படுவது வேறு, வாழ்க்கை வேறு!" என்று சொல்லிவிட்டுச் சிரித்தான் இளைஞன். அந்த இளைஞனுடைய உதடுகள் பெண்ணினுடையவை போல் சிவப்பாகச் சிறிதாய், அழகாய் இருப்பதை மதிவதனி கவனித்தாள்.
அவர்களுடைய கப்பலுடனேயே தன் தோணியையும் செலுத்திக் கொண்டு கரைக்குத் திரும்பினாள் அவள். அந்தக் கப்பலில் வந்தவர்கள் யார் என்பதை நேயர்கள் இதற்குள் புரிந்து கொண்டிருப்பார்கள். விழிஞத்திலிருந்து புறப்பட்ட நாராயணன் சேந்தனும், குழல்வாய்மொழியும் அவர்களிடம் வம்பு செய்து அந்தக் கப்பலிலேயே தனக்கும் இடம் பிடித்துக் கொண்ட கூத்தன் என்னும் வாலிபனும் தான். இப்போது செம்பவழத் தீவை நெருங்கிக் கொண்டிருந்தார்கள். கப்பலை நிறுத்திவிட்டுக் கரையில் இறங்கியதும், "பெண்ணே! உன்னோடு கூட வந்தால் எங்களுக்கு இந்தத் தீவை சுற்றிக் காண்பிப்பாய் அல்லவா" என்று மதிவதனியைப் பார்த்துக் கேட்டான் நாராயணன் சேந்தன். "ஆகட்டும்" என்று புன்னகையோடு பதில் சொன்னாள் மதிவதனி. கப்பலைக் கவனமாகப் பார்த்துக் கொள்ளுமாறு ஊழியர்களிடம் சொல்லிவிட்டுச் சேந்தனும், குழல்வாய்மொழியும், கூத்தனும் மதிவதனியோடு ஊர் சுற்றிப் பார்க்கக் கிளம்பினார்கள்.
எல்லா இடங்களையும் சுற்றிக் காண்பித்து விட்டு இறுதியாகத் தீவின் கடைவீதிக்கு அவர்களை அழைத்து வந்தாள் மதிவதனி. அணிகலன்களிலும், அலங்காரத்திலும் அதிகம் பிரியமுள்ளவளாகிய குழல்வாய்மொழி நவரத்தின நவமணிகளும், பொன்னும், புனைபொருள்களும் விற்கும் ஒரு பெரிய கடைக்குள் எல்லாரையும் அழைத்துக் கொண்டு ஆவலோடு நுழைந்தாள். செம்பவழத் தீவிலேயே பெரிய கடை அது.
சாத்ரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூநதம் என்னும் நால்வகைப் பொன்னும், வயிரம், மரகதம், மாணிக்கம், புருடராகம், வயிடூரியம், நீலம், கோமேதகம், பவழம், முத்து - என்னும் ஒன்பது வகை மணிகளும் நிறைந்திருந்தன அங்கே.
ஆடவர் அணிந்து கொள்ளும் தாழ்வடம், கண்டிகை, கரி, பொற்பூ, கைக்காறை, திருப்பட்டிகை, குதம்பை, திருக்கம்பி, கற்காறை, சுருக்கின வீர பட்டம், திருக்கு தம்பைத் தகடு, திரள்மணி வடம் ஆகியவைகள் ஒரு புறம் இலங்கின. பெண்கள் அணிந்து கொள்ளும் திருக்கைக்காறை மோதிரம், பட்டைக்காறை, தாலி, திருக்கம்பி, திருமகுடம், வாளி, உழுத்து, சூடகம், திருமாலை, வாகுவலயம், திருக்கைப்பொட்டு, பொன்னரிமாலை, மேகலை ஆகியவை மற்றொரு புறம் இலங்கின.
வயிரத்தின் பன்னிரு குற்றமும் ஐந்து குணமும், மரகதத்தின் எட்டுக் குற்றமும் எட்டுக் குணமும், மாணிக்கத்தின் பதினாறு குற்றமும் பன்னிரு குணமும், நீலத்தின் எட்டுக் குற்றமும் பதினாறு குணமும், முத்துகளின் இரண்டு குணமும் நான்கு குற்றமும் தெரிந்து சொல்லவல்ல இரத்தினப் பரிசோதக வித்தகர்கள் அங்கு நிறைந்திருந்தனர். குழல்வாய்மொழி அந்தக் கடையில் வெகுநேரம் நின்று நிதானித்து ஒவ்வொரு பகுதியாகச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தது சேந்தனுக்குப் பிடிக்கவில்லை. வெறுப்போடு முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு ஒரு மூலையில் ஒதுங்கி நின்று விட்டான் அவன். மதிவதனியும், குழல்வாய்மொழியும், கூத்தனும், சுற்றிப் பார்த்து விட்டு நாராயணன் சேந்தன் நின்று கொண்டிருந்த மூலைக்குத் திரும்பி வந்தனர்.
"இந்த மாபெரும் செல்வக் களஞ்சியம் போன்ற கடையைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என்று வியப்பு நிறைந்த குரலில் சேந்தனை நோக்கிக் கேட்டாள் குழல்வாய்மொழி.
"பெண்களின் நகை ஆசையால் உலகம் எப்படிக் குட்டிச்சுவராய்ப் போய்க் கொண்டிருக்கிறதென்று நினைக்கிறேன். இவைகளால், ஏழைகளாகப் போனவர்களின் தொகையை நினைக்கிறேன்" என்று சேந்தன் கடுகடுப்போடு பதில் சொன்னான். அவனுடைய முரட்டுத் தனமான பதிலைக் கேட்டுக் கூத்தன் உட்பட மற்ற மூவரும் முகத்தைச் சுளித்தார்கள்.
"அம்மணி! நீங்கள் ஏன் முகத்தைச் சுளிக்கிறீர்கள்? சில பேர்கள் தங்களுக்குக் கிடைக்காத பொருள்களைக் கிடைக்கவில்லையே என்பதற்காகக் கிடைக்கிற வரை பொறுத்துக் கொண்டிருப்பார்கள். இந்த மனிதர் கூறிய கடுமையான பதிலிலிருந்து இவர் திருமணமாகாதவர் என்று நினைக்கிறேன்" என்று அந்தக் கடையின் வணிகர் சேந்தனைக் கேலி செய்தார். சேந்தன் அவரை வெறுப்போடு பார்த்தான்.
"சகோதரி! நம் ஐயாவுக்கு நகை என்றால் ஏன் இவ்வளவு வெறுப்போ? தெரியவில்லையே?" என்று குழல்வாய்மொழியிடம் நாராயணன் சேந்தனைக் குறிப்பிட்டு நகைத்துக் கொண்டே கேட்டான் கூத்தன்.
அவனை அடிப்பதற்குக் கையை ஓங்கிக் கொண்டு பாய்ந்து விட்டான் சேந்தன். அவனைச் சமாதானப்படுத்துவதற்குள் மதிவதனிக்கும் குழல்வாய்மொழிக்கும் போதும் போதும் என்றாகிவிட்டது. கடைவீதியில் தங்களுடைய கடைக்கும் அவர்களைக் கூட்டிக் கொண்டு போய்க் காண்பித்தாள் மதிவதனி.
"ஐயா! பெண்கள்தான் ஆடம்பரத்துக்காக கைமீறிச் செலவு செய்வார்கள் என்று நீங்கள் தவறாகக் கருதுவதாகத் தெரிகிறது. அது தவறு. உதாரணமாக நான் ஒன்று சொல்கிறேன். கேளுங்கள்; சில தினங்களுக்கு முன் செல்வச் செழிப்புள்ள அழகிய இளைஞர் ஒருவர் ஒரு முதியவரோடு இலங்கைக்குப் போகிற வழியில் கப்பலை நிறுத்தி இந்தத் தீவில் இறங்கியிருந்தார். எங்கள் கடையில் வந்து ஆயிரம் பொற்கழஞ்சுகள் விலை மதிப்புள்ள ஒரு வலம்புரிச் சங்கை வீண் பெருமையைக் காட்டுவதற்காக இரண்டாயிரம் பொற்கழஞ்சுகளைக் கொடுத்து வாங்கிக் கொண்டு போனார். எங்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. இப்போதாவது ஒப்புக் கொள்ளுங்கள் ஆடவர்களிலும் கைமீறிய செலவு செய்பவர்கள் இருக்கிறார்கள்" என்று அந்த மூவரையும் கப்பலில் கொண்டு போய் விடுவதற்காகத் திரும்பிச் சென்ற போது மதிவதனி சேந்தனிடம் ஒரு பேச்சுக்காகச் சொன்னாள். உடனே, "அந்த இளைஞர் எப்படியிருந்தார்? அவரை நீ பார்த்ததிலிருந்து ஏதாவது அடையாளம் கூறமுடியுமா, பெண்ணே?" என்று மூன்று பேருமாக மதிவதனியைத் துளைத்தெடுத்து விட்டார்கள். அவர்களிடம் அதை ஏன் கூறினோம் என்றாகிவிட்டது அவளுக்கு.
"ஐயா! எனக்கு அவருடைய அடையாளம் ஒன்றும் நினைவில்லை. சும்மா பார்த்த நினைவுதான்" என்று கூறி மழுப்பிவிட்டு, அதற்குமேல் அவர்களோடு தங்கியிருக்க விரும்பாமல் விடைபெற்றுக் கொண்டு வீட்டுக்குப் போய்விட்டாள் அவள்.
மறுநாள் காலை அவள் கடற்கரைக்கு வந்த போது புறப்படத் தயாராயிருந்த கப்பலிலிருந்து முன் குடுமிக்காரர் மீண்டும் அவளைத் தூண்டிக் கேட்டார். அவள் தனக்குத் தெரியாதென்று கூறிவிட்டாள்.
----------
2.34. தளபதி திடுக்கிட்டான்
இடையாற்று மங்கலத்து நிலவறையிலிருந்து ஆயுதங்களை யாரோ கடத்திக் கொண்டு போய்விட்டதாகச் செய்தி தெரிவிப்பதற்கு அரண்மனைக்கு வந்த அம்பலவன் வேளானை நிதானமாகத் தங்கச் செய்து மறுநாள் காலை வரை நிறுத்தி வைத்து விவரமாகச் சொல்லும்படி கேட்டார் மகாமண்டலேசுவரர். இத்தகைய சந்தர்ப்பங்களில் ஆழமாகச் சிந்திப்பவருக்கே உரிய இயல்பான நிதானம் அவருக்கு வந்துவிடும்.
"அப்பா! மற்றவர்கள் அரைக்கால் நாழிகையில் உண்டு முடித்துவிடக்கூடிய ஓர் உணவுப் பொருளை நீங்கள் சாப்பிட்டால் அரை நாழிகை உட்கார்ந்து நிதானமாக மென்று தின்கிறீர்களே?" என்று அவருக்கு உணவு பரிமாறும் போதெல்லாம் அவரது செல்வக் குமாரி குழல்வாய்மொழி அவரைக் கேட்பாள். அவர் அப்போது தம் புதல்வியை நிமிர்ந்து பார்த்துக் கொண்டே ஒரு விதமாகச் சிரித்தவாறு மறுமொழி கூறுவார்:
"குழல்வாய்மொழி! உணவை மட்டுமல்ல; காதிலும், கண்ணிலும், மனத்திலும் படுகிற விஷயங்களைக் கூட இப்படி மென்று தின்று உண்டால் தான் சீரணமாகிறது எனக்கு. அறிவும் சிந்தனையும் உள்ளவர்களுக்கு இந்த நிதானம் ஒரு பலவீனம் தான், அம்மா! ஆனால் எங்களுடைய ஒரே பலமும் இந்த நிதானத்தில் தான் அடங்கியிருக்கிறது."
அடுத்தடுத்துத் தொடர்ந்து இடையாற்று மங்கலத்தில் கொள்ளையும், திருட்டும் நடப்பது பரபரப்பூட்டக் கூடியதொரு செய்தியானாலும் அவர் பரபரப்படைகிற மாதிரி வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.
"வேளான்! பதற்றப்படாதே! நடந்ததையெல்லாம் ஆர அமரச் சிந்தித்து நிதானமாக எனக்குச் சொல்" என்று அவனைக் கேட்டார் அவர்.
"சுவாமி ஆயுதங்களைக் கடத்திக் கொண்டு போக வந்தவர்கள் யார்? அவர்கள் எப்போது தீவின் எல்லைக்குள் பிரவேசித்தார்கள் என்ற விவரங்களெல்லாம் எங்களுக்குத் தெரியாது. ஆயுதங்களையெல்லாம் படகில் ஏற்றிப் பறளியாற்றைக் கடந்து சென்று கொண்டிருந்த போது தற்செயலாகக் கரைப் பக்கம் வந்த யவனக் காவல் வீரர்கள் பார்த்து விட்டனர். உடனே அவர்கள் ஓடி வந்து தோணித்துறைக்கு அருகில் குடிசையில் படுத்துக் கொண்டிருந்த என்னை எழுப்பி, ஆற்றில் போகும் படகு யாருடையதென்று விசாரித்தார்கள். நான் எனக்குத் தெரியாது என்றேன். உடனே எல்லோருமாக ஓடிப் போய்ப் பார்த்தோம். நிலவறை, விருந்து மாளிகை எல்லாம் திறந்து கிடந்தன. அவசரம் அவசரமாக உள்ளே நுழைந்து பார்த்தோம். என்ன நடந்திருக்க வேண்டுமென்று எங்களுக்குப் புரிந்து விட்டது. விரைவாக இரண்டு படகுகளில் ஏறிக் கொண்டு சென்று, அந்தப் படகு நடு ஆற்றைக் கடப்பதற்குள் அதை வளைத்துக் கொண்டோம். படகில் ஆயுதங்களை ஏற்றிக் கனம் உண்டாக்கிக் கொண்டிருந்ததால் அவர்களால் வேகமாகச் செலுத்தித் தப்பிக் கொண்டு போக முடியவில்லை. அந்தத் திருட்டுப் படகில் இரண்டே ஆட்கள் தான் இருப்பது போல் தெரிந்தது. நாங்கள் அருகில் நெருங்கிப் பிடிப்பதற்குள் ஆயுதங்களோடு படகை ஆற்றில் கவிழ்த்து விட்டுத் தாங்களும் குதித்து நீந்தித் தப்பி விட்டார்கள் அந்த ஆட்கள்."
"வேளான்! அவர்கள் யாராயிருக்க முடியுமென்று உனக்குத் தோன்றுகிறது? வந்து போனவர்களை இன்னாரென்று கண்டு கொள்வதற்கு ஏற்ற அடையாளங்கள் எவற்றையாவது அவர்கள் விட்டுச் சென்றிருக்கிறார்களா?" இப்படிக் கேட்டுக் கொண்டே வேளானுடைய முகத்தை உற்றுப் பார்த்தார் மகாமண்டலேசுவரர்.
"சுவாமி! ஆயுதங்களைத் திருடிக் கொண்டு போக வந்தவர்கள் மிகவும் சாமர்த்தியமுள்ளவர்களாக இருக்க வேண்டும். தங்களை இனம் தெரிந்து கொள்வதற்கேற்ற எந்த அடையாளங்களையும் அவர்கள் விட்டுச் செல்லவில்லை. வந்தவர்களில் யாரோ ஒருவர் இடுப்புக் கச்சையாக அணிந்த வெண்பட்டுத் துணி ஒன்று மட்டும் நீரிலும், சேற்றிலும் நனைந்து விருந்து மாளிகைப் பின்புறமுள்ள பறளியாற்றுப் படித்துறையில் கிடைத்தது. அதை அடையாளமாக வைத்துக் கொண்டு எதையும் கண்டுபிடிக்க முடியுமென்று தோன்றவில்லை."
மகாமண்டலேசுவரர் மெல்லச் சிரித்தார். "வேளான்! அந்த வெண்பட்டுத் துணியை இப்போது இங்கே கொண்டு வந்திருக்கிறாயா?" என்று அவர் கேட்டவுடன் வேளான் தன் அங்கியில் மறைத்து வைத்துக் கொண்டிருந்த அந்த வெண்பட்டுத் துணியை எடுத்து அடக்க ஒடுக்கமாக அளித்தான். அவர் அதை விரித்துப் பார்க்க முயன்றார். ஆற்று நீரோடு செம்மண் சேறும் படிந்து உலர்ந்து போயிருந்ததால் அதில் ஒன்றுமே தெளிவாகத் தெரிந்து கொள்ள முடியவில்லை.
"சிறிது நேரம் நீ இங்கேயே காத்துக் கொண்டிரு" என்று வேளானிடம் கூறிவிட்டு அந்தப் பட்டுத் துணியுடன் உள்ளே சென்றார் அவர். வேளான் வியப்பும் பயமும் போட்டியிடும் மன உணர்ச்சியோடு அங்கேயே காத்திருந்தான்.
அரை நாழிகைக்குப் பின் மகாமண்டலேசுவரர் மறுபடியும் சிரித்துக் கொண்டே அவன் முன் தோன்றினார்.
"வேளான்! யார், எவருடைய தூண்டுதலால் ஆயுதங்களைத் திருடுவதற்கு வந்தார்கள் என்ற விவரம் எனக்குத் தெரிந்து விட்டது. இதில் கவலைப்படுவதற்கோ, பயப்படுவதற்கோ ஒன்றுமே இல்லை. நீ உடனே இடையாற்று மங்கலத்துக்குத் திரும்பிப் போய் நான் சொல்கிறபடி செய். பறளியாற்றில் எந்த இடத்தில் படகு கவிழ்க்கப்பட்டதோ, அங்கே ஆட்களை மூழ்கச் செய்து ஆயுதங்களைக் கிடைத்த வரையில் வெளியே எடுத்து விட வேண்டும். ஆற்றின் வேகத்தினால் இழுத்துக் கொண்டு போகிற அளவுக்கு இப்போது வெள்ளம் கடுமையாக இராது. ஆகவே கவிழ்ந்து மூழ்கிய ஆயுதங்களைப் பெரும்பாலும் குறைவின்றி எடுத்து விடலாம். அவ்வாறு எடுத்த ஆயுதங்களையும், இப்போது நான் உன்னிடம் எழுதிக் கொடுக்கப் போகும் ஓலையையும் கொண்டு போய் நேரே கோட்டாற்றுப் படைத்தளத்தில் இருக்கும் தளபதி வல்லாளதேவனிடம் சேர்த்து விட வேண்டும்."
"அப்படியே செய்துவிடுகிறேன் சுவாமி!"
"செய்வது பெரிதில்லை, வேளான்! நான் சொல்கிறபடி கவனமாக நடந்து கொள்ள வேண்டும். என் ஓலையையும் ஆயுதங்களையும் தளபதியிடம் கொடுத்த பின் அங்கே ஒரு நொடிப்போது கூட அநாவசியமாக நீ தாமதிக்கக் கூடாது. தளபதி உன்னிடம் தூண்டித் துளைத்து ஏதாவது கேட்க முயன்றாலும் நீ அவற்றுக்கு மறுமொழி கூறாமல் உடனே நழுவி வந்து விட வேண்டும்."
வேளான் பயபக்தி நிறைந்த முகத்தில் மிரண்ட பார்வையோடு 'ஆகட்டும்' என்பதற்கு அறிகுறியாக மகாமண்டலேசுவரருக்கு முன் தலையசைத்தான்.
"சரி, அப்படியானால் நீ இப்போதே புறப்பட வேண்டியதுதான்" என்று அவர் விடை கொடுத்த பின்பும் அவன் தயங்கி நின்றான். எதையோ அவரிடம் கேட்கலாமா, வேண்டாமா என்று தனக்குள்ளேயே எண்ணப் போராட்டத்துடன் அவன் தயங்கி நிற்பதாகத் தோன்றியது.
"வேளான்! ஏன் தயங்கி நிற்கிறாய்? மனத்தில் பட்டதைக் கேள்!"
"சுவாமீ! அந்தப் பட்டுத் துணியிலிருந்து ஏதாவது அடையாளம் புரிந்ததா?" என்று மென்று விழுங்கும் வார்த்தைகளோடு பயந்து கொண்டே கேட்டான் அவன்.
"அடையாளமெல்லாம் நன்றாகத்தான் புரிந்திருக்கிறது. ஆனால் அதை நீ இப்போது தெரிந்து கொள்ள வேண்டுமென்கிற அவசியமில்லை" என்று புன்னகையோடு பதில் கூறினார் மகாமண்டலேசுவரர். வேளான் மறுபேச்சுப் பேச வாயின்றித் தளபதிக்காக அவர் எழுதிக் கொடுத்த ஓலையை வாங்கிக் கொண்டு சென்றான். அம்பலவன் வேளானை இடையாற்று மங்கலத்துக்கு அனுப்பிய பின்பு வண்ணமகள் புவனமோகினியைத் தம்முடைய இருப்பிடத்துக்கு வரவழைத்தார் அவர்.
புவனமோகினி வந்து வணங்கினாள். "பெண்ணே! உன்னிடம் ஒரு செய்தி விசாரித்துத் தெரிந்து கொள்வதற்காகக் கூப்பிட்டேன். ஆபத்துதவிகள் தலைவன் மகரநெடுங்குழைக்காதன் இங்கே அரண்மனையில் தான் இருக்கிறானா? உனக்குத் தெரிந்திருக்குமே?" என்று அவர் அந்தப் பெண்ணிடம் கேட்டார். ஆபத்துதவிகள் தலைவனின் பெயரை அவருடைய வாயிலிருந்து கேள்விப்பட்ட உடனே அந்தப் பெண்ணின் முகத்தில் பயத்தின் உணர்ச்சியலைகள் குமிழியிட்டுப் பரவுவது போன்றதொரு சாயல் பரவியது.
"பயப்படாமல் சொல் அம்மா!" மீண்டும் அவளைத் தூண்டினார் அவர்.
"சுவாமி! சென்ற சில நாட்களாக அந்த முரட்டு மனிதரை அரண்மனை எல்லையிலேயே நான் காணவில்லை. ஆனால் மறுபடியும் இன்று காலையில் இங்கு பார்த்தேன்" என்று மருண்ட பார்வையோடு முன்னும் பின்னும் திரும்பிப் பார்த்துக் கொண்டே மெல்ல அவருக்குப் பதில் சொன்னாள் வண்ணமகள்.
"இவ்வளவுதான் உன்னிடமிருந்து எனக்குத் தெரிய வேண்டும். இனிமேல் நீ போகலாம்."
புவன மோகினி மறுபடியும் அவரை வணங்கிவிட்டு வந்த சுவடு தெரியாமல் திரும்பிச் சென்றாள். அவள் சென்ற பின் சிறிது நேரம் இரண்டு கைகளையும் பின்னால் கட்டிக் கொண்டு அளவாக அடிபெயர்த்து வைத்து குறுக்கும் நெடுக்குமாக நடந்தார் அவர். மனத்தில் அளவாகத் தெளிவாக வேகமாகச் சிந்தனைகள் ஓடும் போது இப்படி நடந்து கொண்டே திட்டமிடுவது அவரது வழக்கம். சிறிது நேரத்தில் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவராக அங்கிருந்த காவலன் ஒருவனைக் கைதட்டி அழைத்தார். அவன் அருகில் வந்ததும், "இதோ பார்! நான் சொல்வதைத் தெளிவாகக் கேட்டுக் கொள். இன்னும் கால் நாழிகைக்குள் ஆபத்துதவிகள் தலைவன் இந்த அரண்மனையின் எந்த மூலையில் இருந்தாலும் தேடி அழைத்துக் கொண்டு வா. இதை உடனே செய்" என்றார்.
கருங்கல்லின் மேல் வரிசையாக நிறுத்தி நிறுத்தித் தாளகதி பிழையாமல் உளியை அடித்தாற் போல் ஒலித்த அந்த வார்த்தைகளின் கம்பீரத்துக்குத் தலைவணங்கி நடந்தான் அவன். மீண்டும் அளவாக அடியெடுத்து வைத்து குறுக்கும் நெடுக்குமாக நடந்தார் அவர். ஆபத்துதவிகள் தலைவனைக் கூட்டிக் கொண்டு வர எவ்வளவு நேரமாகுமென்று அவர் எதிர்பார்த்தாரோ அவ்வளவு நேரம் ஆகவில்லை. அவரால் அனுப்பப்பட்ட காவலன் மிகச் சில விநாடிகளுக்குள்ளேயே மகரநெடுங்குழைக்காதனை அழைத்துக் கொண்டு வந்து அவர் முன் நிறுத்தி விட்டான். வேங்கைப் புலி போல் வாட்ட சாட்டமான தோற்றத்தையுடைய அந்த மாவீரன் துணிவு ஓய்ந்து ஒடுங்கித் தலைதாழ்த்தி நாணத்தோடு அவர் முன் வந்து நின்றான். தம்முன் வருகிற பெண்களையெல்லாம் நாணப் புன்னகை பூக்கச் செய்யும் ஆற்றல், அழகும் வீரமும் உள்ள சில ஆண்களுக்கு உண்டு. அதைப் போலவே அறிவும் அறமும் ஒழுக்கமும் உள்ள சில பெரியவர்கள் தமக்கு முன் நிற்கும் ஆண்களைக் கூட ஒடுங்கிப் பெண் தன்மை எய்தச் செய்து விடுவார்கள். கைகளைப் பின்புறம் கட்டிக் கொண்டு இமையா விழிப்பார்வையுடன் நிமிர்ந்து தன்னையே பார்த்துக் கொண்டு நிற்கும் அந்த மனிதருக்கு முன்னால் ஆபத்துதவிகள் தலைவன் பெண் தன்மை எய்தினாற் போல் தான் நாணி நின்றான்.
காவலனை அங்கிருந்து வெளியேறுமாறு சைகை செய்தார் மகாமண்டலேசுவரர். அவன் வெளியேறினான்.
"குழைக்காதா! இதோ, என் கையிலிருக்கும் இந்தப் பொருளைக் கொஞ்சம் பார்" என்று சொல்லிக் கொண்டே பின்புறம் இருந்த கையை உயர்த்தி அவன் முகத்துக்கு நேர் எதிரே கொண்டு வந்து நீட்டினார் அவர். அவருடைய கையிலிருந்து விரிந்த வெண்பட்டுத் துணியைப் பார்த்த போது அவன் முகம் ஏன் அப்படிப் பயந்து வெளிறிப் போகிறது? அழுக்கும் சேறுமாக இருந்த அந்தத் துணி நீரில் நன்றாகக் கழுவப்பட்டிருந்தது. இப்போது ஆபத்துதவிகளின் அடையாளச் சின்னங்கள் அதில் தெளிவாகத் தெரிந்தன. அவருடைய கையில் அந்தத் துணி ஆடி அசைந்து நடுங்கினாற் போல் அவனுடைய உடல் விதிர் விதிர்ப்புற்று நடுங்கியது.
"இம்மாதிரிச் சின்னங்களோடு கூடிய வெண்பட்டுத் துணியை ஆபத்துதவிகள் தம் இடுப்புக் கச்சையில் அணிவது வழக்கமல்லவா?"
"ஆம் சுவாமி! வழக்கம் தான்."
அவனுடைய பதிலைக் கேட்டு அவர் சிரித்தார். சிரித்துக் கொண்டே "கொஞ்ச நாட்களாகவே ஆபத்துதவிகளுக்கெல்லாம் ஞாபக மறதி அதிகமாகிவிட்டது போலிருக்கிறது. இடுப்பில் அணிந்து கொள்வதற்குப் பதிலாக எங்கெங்கோ நினைத்த இடங்களிலெல்லாம் இந்தத் துணியைப் போட்டு விட்டுப் போய்விடுகிறார்கள்" என்று குத்தலாகச் சொன்னார். அவருடைய குத்தல் அவனுக்குப் புரிந்தது. முன்பு ஒரு முறை அந்தத் துணியைத் தவற விட்டு விட்டு அவர் கையில் அகப்பட நேரும்படி இடங்கொடுத்த தன் முட்டாள்தனத்தை நொந்து கொண்டு நின்றான் அவன். அவ்வளவு விரைவாக அது கண்டுபிடிக்கப்பட்டு அவருடைய இடத்தைத் தேடி எப்படி வந்து சேர்ந்ததென்பதுதான் அவனுக்கு விளங்கவில்லை. திகைப்போடு வெட்கி விழித்துக் கொண்டு நின்றான் அவன்.
"பரவாயில்லை! உனக்கு உரிமையான பொருள் என் கையில் கிடைத்தால் உடனே உன்னைக் கூப்பிட்டு அதை உன்னிடம் ஒப்படைக்க வேண்டியது என் கடமையல்லவா? அதனால் தான் உன்னை வரவழைத்தேன். வேறொன்றுமில்லை. இந்தா இதைக் கொண்டு போ. இனிமேல் இப்படி நடக்காமல் பார்த்துக் கொள்!" - ஒன்றுமே நடவாதது போல் சர்வசாதாரணமாக அவனைக் கூப்பிட்டு அதைக் கொடுத்து எச்சரித்து அனுப்புபவர் போல் தான் பேசினார் அவர். அந்தச் சூழ்நிலையில் அப்படியொன்றும் தெரியாதது போல் நடந்து கொள்வதுதான் நல்லதென்று அவருக்குப் பட்டது. 'அரசியல் வாழ்வில் ஒன்றும் தெரியாதவன் எல்லாம் தெரிந்தது போல் நடித்தால் ஈரம் புலராத பச்சை மண்குடத்தில் வைத்த தண்ணீர் போல் பலவீனங்கள் விரைவில் வெளிப்பட்டுத் தோற்றுவிடுவான். எல்லாம் தெரிந்தவன் ஒன்றும் தெரியாதது போல் நடித்தால் இறுதிவரை வெற்றியை உறுதிப்படுத்திக் கொண்டு விடுவான். இந்தத் தத்துவத்தில் மகாமண்டலேசுவரருக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. எண்ணங்களையும் அனுபவங்களையும் நான்கு மடங்கு தற்பெருமையோடு கலந்து காண்பவர்களிடமெல்லாம் அளந்து கொண்டு திரியும் சாமானிய மனித ஆசாபாசங்களுக்கு அப்பாற்பட்டவர்.
ஆபத்துதவிகள் தலைவன் கையில் அவர் அந்தப் பட்டுத் துணியைக் கொடுத்த போது ஒன்றுமே தெரியாதவர் போல் சிரித்துக் கொண்டு கொடுத்தார். ஆனால் அவனோ அதிர்ச்சியடைந்து கூனிக் குறுகி நடுங்கி அதை வாங்கிக் கொண்டு விடைபெற்றுச் சென்றான். பகைவர்களிடமும் அநாகரிகமாகப் பகைத்துக் கொள்ளும் பழக்கம் அவருக்கு இல்லை. யார் யாரெல்லாம் பொறாமையால் தமக்கே குழிபறித்துக் கொண்டிருப்பதாக அவர் உணர்கிறாரோ, அவர்களிடம் கூட நாகரிகமாக நடந்து கொள்ளும் பண்பை அறிவு அவருக்குக் கற்பித்திருந்தது. பொன்மனைக் கூற்றத்துக் கழற்கால் மாறனார் ஒப்புரவு மொழி மாறா ஓலையோடு வந்ததை அறிந்த போது கூட நாகரிகமாகவே நடந்து கொண்டார் அவர். தன் கழுத்தை அறுக்க வாளை ஓங்கி வருபவனிடம் கூட "போர் இலக்கணப்படி வாளை ஓங்க வேண்டிய முறை இது" என்று முறையைச் சொல்லிக் கொடுத்து விட்டு அதன்பின் எதிர்ப்பதற்குத் தயாராகும் அறிவின் நாகரிகம் அது! வாளின் கூர்மைக்கு இருப்பதைக் காட்டிலும் அதிக ஆற்றல் அந்த நாகரிகத்துக்கு உண்டு!
மகாமண்டலேசுவரரிடம் விடைபெற்றுக் கொண்டு இடையாற்று மங்கலம் திரும்பிய படகோட்டி அம்பலவன் வேளான் உடனே பறளியாற்றில் மூழ்கிய ஆயுதங்களை வெளியேற்ற ஏற்பாடு செய்தான். அவைகளை முறையாக வெளியேற்றி ஒழுங்குபடுத்த இரண்டு நாட்கள் ஆயின அவனுக்கு. மறுநாளே ஆயுதங்களையும், மகாமண்டலேசுவரர் தளபதிக்கென்று கொடுத்து அனுப்பிய ஓலையையும் கோட்டாற்றுப் படைத்தளத்தில் கொண்டு போய்ச் சேர்த்து விட்டான் அவன். அவருடைய கட்டளைப்படியே தளபதியிடம் அதிகம் பேசாமல் ஆயுதங்களை அளித்த கையோடு ஓலையையும் அளித்து விட்டுத் திரும்பினான் அம்பலவன் வேளான்.
'குழைக்காதன் கடத்திக் கொண்டு வர முயன்று முடியாமற் போய்ப் பறளியாற்றில் கவிழ்க்கப்பட்ட ஆயுதங்களை மகாமண்டலேசுவரரே சிரத்தையாக எடுத்துத் தனக்கு அனுப்பிய நோக்கமென்ன?' - என்று புரியாமல் பயமும் திகைப்பும் கொண்டு, அவர் தனக்குக் கொடுத்தனுப்பியிருந்த ஓலையைப் பிரித்தான் தளபதி.
"அன்புள்ள தளபதி வல்லாளதேவனுக்கு, இடையாற்று மங்கலம் நம்பி எழுதும் திருமுகம். இடையாற்று மங்கலம் நிலவறையிலிருந்த ஆயுதங்களை இரகசியமாகக் கடத்திக் கொண்டு போவதற்காகக் குழைக்காதன் மூலம் நீ இவ்வளவு பெரிய காரியங்கள் செய்திருக்க வேண்டாம். உனக்கு அவற்றில் விருப்பம் இருப்பதாக எனக்கு ஒரு வார்த்தை தெரிவித்திருந்தால் நானே மூட்டை கட்டி உனக்கு அனுப்பியிருப்பேன். என்னுடைய பலம் கேவலம் அந்த வாள்களின் நுனியில் அடங்கியிருப்பதாக நீ கணக்கிட்டிருந்தால் அது தப்புக் கணக்கு என்பதை இப்போதாவது உணர்ந்து கொள். வாளும், வேலும் எதிரிகளைத் தேடிச் சென்று தன் நுனியால் குத்த வேண்டும். ஆனால், தளபதி! அறிவின் நுனியில் எதிரிகள் தாமாகவே வந்து தங்களைக் குத்திக் கொண்டு மாய்கிறார்கள். இதை உனக்கு இப்போது கூறி வைக்கிறேன். கொள்ளைக் கூட்டத்தார் செய்வது போல் இப்படி ஒரு காரியத்தைத் தென்பாண்டி நாட்டுத் தளபதி செய்திருக்க வேண்டாம் என்பது என் கருத்து."
திருமுகத்தைப் படித்தவுடன் தளபதி திடுக்கிட்டான். அதிலிருந்த வார்த்தைகளெல்லாம் தேள்களாக மாறி அவனை ஒரே சமயத்தில் கொட்டுவது போலிருந்தது.
---------
2.35. போர் முரசு முழங்கியது
கொற்கை, கரவந்தபுரம் பகுதிகளில் வடதிசை அரசர்களால் இரகசியமாக ஏவப்பட்ட ஆட்கள் என்னென்ன செயல்களைச் செய்தார்களோ, இதே வகையைச் சேர்ந்த செயல்களை மகாமண்டலேசுவரரால் தேர்ந்தெடுத்து அனுப்பப் பெற்ற ஆட்கள் வடக்கே செய்தனர். கோனாட்டு ஊர்ப்புறங்களிலும், கீழைப்பழுவூரைச் சேர்ந்த இடங்களிலும், சோழ மண்டலத்து எல்லைப் புறங்களிலும், பலப்பல மாறு வேடங்களில் சுற்றி வந்தனர் தென்பாண்டி நாட்டு ஆட்கள். தங்களைச் சேர்ந்த வீரன் ஒருவன் கொடும்பாளூர் அரண்மனையில் உளவறியும் போது பிடிபட்டு உயிர் இழக்க நேர்ந்த செய்தியைக் கேள்விப்பட்ட பின்பும் அவர்கள் தளர்ச்சியோ, பயமோ அடையவில்லை. அடிக்கடி மகாமண்டலேசுவரருக்குச் செய்தியனுப்பிக் கொண்டிருந்தனர் அவர்கள்.
இந்த நிலையில் கொடும்பாளூரில் ஒன்று கூடித் தங்கியிருந்த வடதிசையரசர்கள் நன்றாக விழிப்படைந்து விட்டார்கள். தென்பாண்டி நாட்டின் மேல் படையெடுப்பது பற்றி உண்மையிலேயே அவர்களுக்கு இப்போது பயமும், மலைப்பும் ஏற்பட்டிருந்தன. இலங்கைப் படை உதவியும், சேரர் படை உதவியும் தென்பாண்டி நாட்டுக்குத் கிடைத்தால் தங்கள் படையின் கூட்டணி என்ன ஆவதென்ற அச்சம் அவர்களுக்கு மெல்ல மெல்ல உண்டாகியிருந்தது. தேவராட்டியின் கொற்றவைக் கூத்தைக் கண்டுகளித்த மறுநாள் காலை தென் திசை ஒற்றனைக் கழுவேற்றிக் கொன்ற பின் அவர்கள் பலத்த சிந்தனையில் ஆழ்ந்தனர்.
மூன்றாம் முறையாகப் போர்த் திட்டங்களைப் பற்றிக் கலந்து பேச ஒன்று கூடிய போது முதல் இரண்டு கூட்டங்களிலும் இருந்த சுறுசுறுப்பும், ஆவலும் குன்றிச் சோர்ந்து தென்பட்டனர் அவர்கள். அந்த விதமான சோர்வையும் அதனால் உண்டாகும் தாழ்வு மனப்பான்மையையும் வளர விடக் கூடாதென்று கவலைப்பட்டவன் சோழன் ஒருவன் தான். தென் திசைப் படையெடுப்புக்கு வசதியாக இருக்குமென்று முன்பு உறையூரில் நடந்த முதற் கூட்டத்தில் தான் கூறிய வழிகள் அறவே தோற்று விட்டதனால் கொடும்பாளூரான் கூடத் தளர்ந்து ஒடுங்கியிருந்தான். அந்த நிலையில் சோழன் அவர்களுக்கு ஊக்கமூட்டிப் பேசத் தொடங்கினான்.
"நண்பர்களே! என் பாட்டனார் விஜயாலய சோழர் தொண்ணூற்றாறு விழுப்புண்களைத் தம் திருமேனியில் தாங்கிப் புகழ் பெற்றார். எந்தையார் ஆதித்த சோழர் பொன்னிவள நாட்டில் பாண்டியர்களையும், பல்லவர்களையும் களையென நீக்கித் தனிப்பெருஞ் சோழமண்டலங் கண்டு மகிழ்ந்தார். என்னுடைய ஆட்சிக் காலத்துக்குள் 'மதுரை கொண்ட கோப்பரகேசரி' என்ற சிறப்புப் பெயரை அடைய விரும்பினேன். ஓரளவு அடைந்தும் விட்டேன். மதுரை நகரத்தை வென்றது மட்டும் போதாது; பாண்டிய நாடு முழுவதும் வென்றால் தான் எனக்குப் பெருமை; என்னைச் சூழ்ந்துள்ள உங்களுக்கும் பெருமை. பின்னால் ஒரு சமயம் நமது வலிமையும், சூழ்நிலையும் இடங்கொடுக்குமானால் ஈழநாடு வரை படையெடுத்துச் செல்ல வேண்டும் என்று கூட எனக்கு ஆவல் இருக்கிறது. சில காரியங்களை நாம் எதிர்பார்த்தபடி நடத்தி வெற்றி பெற முடியவில்லை என்பதற்காக இப்படிச் சோர்ந்து போய்விடக் கூடாது. நாம் ஐந்து பேரும் யாருக்கு எந்த வகையில் குறைந்தவர்கள்? கீழைப்பழுவூர்ச் சிற்றரசரிடமும், கொடும்பாளூர் குறுநில மன்னரிடமும் வலிமையும் திறமையும் வாய்ந்த படைகள் இருக்கின்றன. இவற்றுடன் எனது சோழ மண்டலப் பெரும் படையும் சேர்ந்தால் நாம் பெருகி விடுகிறோம். அரசூருடையானும், பரதூருடையானும் படைத் தலைமை பூண்டு அருமையாகப் போர் புரிவதில் இணையற்றவர்கள். தென்பாண்டி நாட்டாருக்கு எவ்வளவுதான் படையுதவி கிடைக்கட்டுமே! நமக்கென்ன கவலை? நம்முடைய படைக் கூட்டுறவின் முன் அவர்கள் என்ன செய்ய முடியும்? மேலும் தென்பாண்டி நாட்டிலிருந்து நமக்குக் கிடைக்கும் செய்திகளால் அங்கும் நிலைமை அவ்வளவு தெளிவாக இருப்பதாகத் தெரியவில்லையே? இடையாற்று மங்கலம் மகாமண்டலேசுவரர் மாளிகையிலிருந்த பாண்டிய ம்ரபின் அரசுரிமைச் சின்னங்கள் கொள்ளை போய்விட்டதாக நேற்று கொற்றவைக் கூத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது கொடும்பாளூரார் வந்து ஒரு செய்தி சொன்னார். நேற்றைக்குப் பிடிபட்ட அந்த ஒற்றனிடமிருந்து எவ்வளவோ இரகசியங்களைத் தெரிந்து கொள்ளலாமென்று நினைத்திருந்தேன். அவனோ கழுமரத்தில் உயிரைப் பலி கொடுக்கிற வரை ஒரு வார்த்தை கூட நமக்குச் சொல்லவில்லை. இராசசிம்மன் இலங்கையிலும், தாய்வழி மூலம் சேரர்களிடமும் படை உதவி பெறலாமென்று நம் காதில் செய்திகள் விழுகின்றன. அது எப்படியானாலும் நம்முடைய படையெடுப்பை நாம் உறுதி செய்து கொண்டு விட வேண்டியதுதான். உங்கள் கருத்துகளையும் மனம் விட்டுச் சொல்லிவிடுங்கள்."
சோழன் முகத்தையே பார்த்தவாறு பேச்சை உற்றுக் கேட்டுக் கொண்டிருந்த நால்வரும் பேச்சு நின்றதும் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
"நேற்று நடந்த சம்பவத்திலிருந்து நம்முடைய ஆட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் பாண்டி நாட்டு ஒற்றர்கள் போதுமான அளவு நடமாடிக் கொண்டிருக்கிறார்கள் என்றே என்னால் அநுமானிக்க முடிகிறது" என்றான் கண்டன் அமுதன்.
"அதில் என்ன சந்தேகம்? நமது வசதிக்காக நாம் நம்முடைய ஒற்றர்களைத் தெற்கே அனுப்பியிருக்கிறோமல்லவா? அவர்களும் அதே வசதிக்காக ஒற்றர்களை இங்கே அனுப்பத்தானே செய்வார்கள்?" என்று சோழன் பதில் கூறினான்.
"இளவரசன் இராசசிம்மன் படை உதவி கோரி இலங்கைக்குப் போயிருக்கிறானா? அல்லது வஞ்சி மாநகரத்துக்குப் போய் மலைநாட்டுச் சேரர் படையைக் கொண்டு வரச் சென்றிருக்கிறானா? இரண்டுமே இல்லாமல் தான் தங்கியிருப்பது வெளியே பரவிவிடாமல் தென் பாண்டி நாட்டிலேயே தங்கியிருக்கிறானா?" என்று அரசூருடையான் கேட்டான்.
"எப்படியும் குமாரபாண்டியன் தென்பாண்டி நாட்டு எல்லைக்குள் இருக்க முடியாது! ஏனென்றால் நாம் அனுப்பிய ஆட்கள் இலங்கை போகும் வழியில் செம்பவழத் தீவில் அவனைச் சந்தித்துக் கொல்ல முயன்றிருக்கிறார்கள். ஒன்று அவன் இலங்கைக்குப் போய்க் கொண்டிருக்க வேண்டும் அல்லது இலங்கையிலிருந்து திரும்பி செம்பவழத் தீவிலேயே தங்கி மறைந்து வசிக்க வேண்டும்" என்று கொடும்பாளூரான் தன் அநுமானத்தைச் சொன்னான்.
"நாம் இன்னும் அநுமானங்களிலேயே உழன்று கொண்டிருப்பதில் பயனில்லை. சிந்தித்துக் கொண்டே இருக்கும் வரையில் அநுமானங்கள் பயன்படும். செயலில் இறங்கும் போது தீர்மானங்களுக்கு வந்து விட வேண்டும். இப்போது நாம் முடிவான திட்டத்துக்கு வந்து எண்ணங்களாலும் செயல்களாலும் ஒருமுகமாக ஒன்றுபடுகிற நேரம். எப்படியானாலும் படையெடுத்துச் சென்று பாண்டி நாட்டின் தென் கோடி வரை வென்றே தீருவது என்பது நம் நோக்கமாகிவிட்ட பின் தயங்குவதற்கு இடமில்லை. என் தீர்மானத்தை இப்போதே உங்களிடம் சொல்லி விடுகிறேன். தஞ்சையிலும், பழையாறையிலும், உறையூரிலுமாகப் பிரிந்திருக்கும் மூன்று பிரிவான சோழ நாட்டுப் படைகளும் இன்னும் சிறிது காலத்தில் கொடும்பாளூருக்கு வந்து சேர்ந்து விட ஏற்பாடு செய்யப் போகிறேன். முடிந்தால் இந்தப் படைகளில் ஒரு பகுதியைக் கடல் வழியாக விழிஞத்துக்கு அனுப்பித் தெற்கே இருந்தும் திடீர்த் தாக்குதலைச் செய்யலாம். அதைப் பற்றிப் பின்பு யோசிக்கலாம். கீழைப்பழுவூர்ச் சேனைகளையும் விரைவில் கொடும்பாளூருக்குக் கொண்டு வந்து விட வேண்டும். நமது வடதிசைப் பெரும்படை முதலில் ஒன்று கூடுமிடம் கொடும்பாளூராக இருப்பதில் உங்களில் யாருக்கும் ஆட்சேபணை இருக்க முடியாது. படைகளெல்லாம் கொடும்பாளூரில் வந்து கூடிய பின் அவைகளை இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்க வேண்டும். படையெடுப்பின் போது மொத்தமாக எல்லாப் படைகளையும் ஒரே வழியாகச் செலுத்திக் கொண்டு போய்ப் பாண்டி நாட்டில் நுழையக் கூடாது. கிழக்கு வழியாக ஒரு படையும், மேற்கு வழியாக ஒரு படையும் - இயன்றால் தெற்கே கடல் வழியாக ஒரு படையுமாக ஒரே சமயத்தில் போய் வளைத்துக் கொள்ள வேண்டும்" என்று சோழ மன்னன் திட்டத்தை விவரித்தான்.
"அப்படியானால் பறம்பு நாட்டில் தொடங்கித் திருவாதவூர் வழியாக ஒரு பகுதிப் படையையும், சிறுமலை, திருமால்குன்றம் வழியாக மற்றொரு பகுதிப் படையையும் அனுப்பலாம். இருபகுதிப் படைகளும் மதுரையில் சந்தித்துக் கலந்து பேசிக் கொண்டு மீண்டும் கிழக்கிலும், மேற்கிலுமாகப் பிரிந்து தென்பாண்டி நாட்டுக்குள் பிரவேசிக்கலாம்" என்று கண்டன் அமுதன் சோழனின் திட்டத்தையே மேலும் விளக்கினான்.
"செய்யலாம்! ஆனால் தென் பாண்டிப் படைகளும், நம் படைகளும் எந்த இடத்தில் சந்திக்குமென்று உறுதி சொல்வதற்கில்லை. எந்த இடத்திலும் திடீரென்று எதிர்ப்பட்டு நம்மைத் தாக்கலாம் அவர்கள்!" - இப்படிக் கூறியவன் பரதூருடையான். "மதுரையை நாம் வென்றிருந்தாலும் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து அந்த நகரைக் காக்கவில்லை. ஆகவே அவர்கள் படை வலிமையால் மதுரையையும் கடந்து வந்து நம்மை எதிர்த்தாலும் அதைச் சமாளிக்க நாம் தயாராகத்தான் இருக்க வேண்டும்" என்று சோழன் மீண்டும் வற்புறுத்தினான்.
எல்லோரும் தம் படைகளைக் கொடும்பாளூருக்குக் கொண்டு வர ஒப்புக் கொண்டனர். உடனே அரண்மனை நிமித்தக்காரரை வரவழைத்துப் படை கொண்டு வருவதற்கு நல்ல நாளும், கோளும், வேளையும், குறித்துக் கொண்டனர் அவர்கள் ஐவரும். எல்லாப் படைகளும் வந்து தங்குவதற்கு வேண்டிய வசதிகளைச் செய்யுமாறு சோழன் கொடும்பாளூர் மன்னனை வேண்டிக் கொண்டான்.
எப்படியும் சில வாரங்கள் அல்லது சில தினங்களுக்குள் படையெடுப்பை ஆரம்பித்து விட வேண்டுமென்று உறுதி செய்து கொண்டனர். இரண்டு மண்டல காலம் என்று காலத்தை எல்லை கட்டி வரையறுத்தான் கண்டன் அமுதன். இரண்டு பிரிவாகப் பிரிந்து தென் திசை செல்லும் படைகளுக்கு அரசூருடையானும், பரதூருடையானும் தளபதிகளாக இருக்க வேண்டுமென்று மற்ற மூவரும் வேண்டிக் கொண்டனர். அவர்களும் மறுக்காமல் ஒப்புக் கொண்டார்கள்.
"நம் படையெடுப்பில் வெற்றி கிடைக்கும் என்பதற்கு எடுத்த எடுப்பிலேயே நமக்கு நல்ல சகுனந்தான் கிடைத்திருக்கிறது. நம்முடைய கழுமரம் போர் தொடங்கு முன்பே தென் பாண்டி நாட்டு வீரனொருவனைப் பலி வாங்கிவிட்டது!" என்று சொல்லிச் சிரித்தான் கொடும்பாளூர் மன்னன்.
"இந்த ஒரு பலி மட்டும் போதாது, இன்னும் எத்தனை தென் பாண்டி நாட்டு ஒற்றர்கள் சிக்கினாலும் உங்கள் கழுமரத்துக்குப் பலி கொடுக்கலாமே!" என்றான் அரசூருடையான்.
"படையெடுப்புத் தொடங்குவதற்கு முன் தெற்கே திரியும் நம் ஆட்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்களை இங்கே வரவழைத்து விட வேண்டும்" என்று சொல்லிக் கூட்டத்தைக் கலைத்தான் சோழ மன்னன்.
அன்று மாலை கொடும்பாளூர்க் கோட்டையின் முன் புறத்து வாயிலுக்கு மேலே மதிலின் மாடத்தில் போருக்கு வீரர்களைச் சேர்த்துக் கொள்வதற்கு அடையாளமான முரசம் இடி போல் ஒலித்தது. 'சேர வாரும் போர் வீரர்களே!' என்று அந்த முரசொலி அறை கூவிய போது கொடும்பாளூர் நகரை வியப்பில் ஆழ்த்தியது. மக்கள் கூட்டமாகக் கோட்டையைச் சுட்டிக்காட்டி நின்று அந்த முரசு ஒலிப்பதை வேடிக்கைப் பார்த்தனர்.
-------------
2.36. கூற்றத் தலைவர்கள் குறும்பு
மகாராணியாரிடமும், மகாமண்டலேசுவரரிடமும் அவமானப்பட்டு, ஒப்புரவு மொழி மாறா ஓலை ஏற்றுக் கொள்ளப்படாமல் ஊர் திரும்பிய பொன்மனைக் கூற்றத்துக் கழற்கால் மாறனார் தம் குறும்புகளைத் தொடங்கினார்.
ஒரு மனிதன் தன்னிடம் இருக்கும் பண்புகளையும், செல்வத்தையும் கெடுத்துக் கொண்டு, தன்னையும் தீயவழியில் ஈடுபடுத்திக் கொள்கிற அளவு பொறாமை அவனைக் கெடுத்துவிடும்.
'அழுக்காறு என ஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.'
என்று குறளாசிரியர் பாடியதற்கு இலக்கியமாக மாறியிருந்தார் கழற்கால் மாறனார். தம்முடைய சதிக்கு உடந்தையான கூற்றத் தலைவர்களை மறுபடியும் பொன்மனைக்கு வரவழைத்தார் அவர். அருவிக்கரைக் கூற்றத்து அழகிய நம்பியார், பாகோட்டுக் கூற்றத்துப் பரிமேலுவந்த பெருமாள், தோவாழைக் கூற்றத்து நன்கணிநாதர் ஆகிய மூவரும் இரண்டாம் முறையாகப் பொன்மனைக்கு வந்தார்கள்.
கழற்கால் மாறனாருக்குச் செல்வாக்கைக் காட்டிலும் செல்வம் அதிகமாக இருந்தது. ஒளியும் அழகும் நிறைந்து ஊருக்கே தனிக் கவர்ச்சி பூட்டிக் கொண்டிருக்கும் அவருடைய மாளிகைக்கே அந்த ஊரின் பெயரை இட்டுச் சொல்லலாம் போலிருந்தது. அத்தகைய ஒளி நிறைந்த மாளிகையில் கூடி இருள் நிறைந்த எண்ணங்களைச் சிந்தித்தார்கள் கூற்றத் தலைவர்கள்.
"நான் அப்போதே நினைத்தேன்; பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது. இடையாற்று மங்கலம் நம்பி நம்முடைய எதிர்ப்பை ஒரு பொருட்டாகவே மதிக்கமாட்டார் என்று முன்பே எனக்குத் தெரியும்" என்று பரிமேலுவந்த பெருமாள் பேச்சைத் தொடங்கினார்.
"அது பெரிய மலை ஐயா! அதைச் சரிய வைக்க வேண்டுமானால் பூகம்பத்தைப் போல் வலிமையான பெரிய எதிர்ப்புகள் ஒன்று கூடி வீழ்த்த வேண்டும். நாம் நான்கு பேர்கள் அந்த மலைக்கு முன் எந்த மூலையோ!" என்றார் நன்கணிநாதர்.
"இப்படி வெளிப்படையாக ஒப்புரவு மொழி மாறா ஓலையைக் கொண்டு போய் மகாராணியாரிடம் கொடுத்து அவர் ஏற்றுக் கொள்ள மறுத்தது நமது பெரும் பலவீனம். நாம் யாரை எதிர்க்கிறோமோ அவருக்கே நம்முடைய எதிர்ப்புத் தெரிந்து விட்டது. இப்படியெல்லாம் வருமென்று தெரிந்திருந்தால் வெளிப்படையாக எதையும் செய்யாமல் மறைமுகமாக எதிர்ப்பு வேலைகளைச் செய்திருக்கலாம் நாம்" என்றார் அழகிய நம்பியார்.
எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டே வீற்றிருந்த கழற்கால் மாறனாருக்கு எரிச்சல் வந்தது. மகாமண்டலேசுவரரைப் பற்றி அப்போது யாராவது வாய் ஓயாமல் தூற்றிப் பேசினால் அவருக்கு ஆறுதலாக இருக்கும் போலிருந்தது. ஆனால் எல்லாரும் அவரைத் தூற்றுவதாக எண்ணிக் கொண்டு அவருடைய பெருமையை உயர்த்திப் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பேச்சினால் தான் அவருடைய மனத்தில் கொதிப்பு மூண்டது. கொதிப்போடு பேசலானார் அவர்: "முதலில் மகாமண்டலேசுவரருக்கு வேண்டாதவர்கள் எல்லோரையும் நம்மோடு சேர்த்துக் கொள்ள வேண்டும். கட்சி கட்டிக் கொண்டு கிளம்பினால் தான் எதையும் திடமாக எதிர்க்க முடியும். தளபதி வல்லாளதேவனுக்கும், மகாமண்டலேசுவரருக்கும் ஏதோ சில பிணக்குகள் இருப்பதாகத் தெரிகிறது. தென்பாண்டி நாட்டின் படைத் துறையைச் சேர்ந்த வேறு சிலருக்கும் இதே போல் அவர் மேல் ஒரு விதமான வெறுப்பு இருக்கும் போலும். அவற்றையெல்லாம் நாம் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்."
"மாறனாரே! நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் எனக்கு ஒரு சந்தேகம். தளபதி வல்லாளதேவன் மகாமண்டலேசுவரரை வெறுக்கிறான் என்பதற்காக நம்மை ஆதரிப்பான் என்று நாம் எதிர்பார்ப்பது தவறு. மகாமண்டலேசுவரர் என்ற பதவியையும் வளைந்து கொடுக்காத அறிவையும் தான் அவன் வெறுக்கிறான். நாமோ அந்தப் பதவியையும், அந்த மனிதரையும், அந்த அறிவையும் எல்லாவற்றையுமே வெறுக்கிறோம். வல்லாளதேவன் சூழ்ச்சிகளையும் அதிகாரத்தையும் எதிர்ப்பவனாக இருந்தாலும் கடமையையும் நேர்மையையும் ஓரளவு போற்றுகிறவனாக இருப்பான்" என்று பரிமேலுவந்த பெருமாள் கழற்கால் மாறனாருக்கு மறுமொழி கூறினார்.
"நான் சொல்லுவது என்னவென்றால் எட்டுத் திசையிலிருந்தும் ஒரே குறியில் கூர்மையான அம்புகளைப் பாய்ச்சுவது போல் மகாமண்டலேசுவரர் மேல் எதிர்ப்புகளையும், துன்பங்களையும் பாய்ச்ச வேண்டும். அவற்றைத் தாங்க முடியாமல் அவராகவே பதவியிலிருந்து விலகி ஓட வேண்டும்."
"மாறனாரே! அவர் அப்படித் தாங்க முடியாமல் விலகி ஓடிவிடுவாரென்று நீங்கள் நினைப்பதே பிழையான நினைவு. நாமெல்லாம் சில சந்தர்ப்பங்களில் விழித்துக் கொண்டிருக்கும் போதே தூங்கிவிடுவோம். ஆனால் அவரோ தூங்கிக் கொண்டிருக்கும் போதும் விழித்திருப்பார். அவரை ஏமாற்றுவது அவ்வளவு எளிதில்லை" என்று நன்கணிநாதர் மறுபடியும் மகாமண்டலேசுவரரின் புகழ் பாடத் தொடங்கிய போது கழற்கால் மாறனாரின் முகம் சுருங்கிச் சிறுத்தது. அந்த முகத்தில் கடுமையான வெறுப்புப் பரவியது.
"முதல் காரியமாக எதிரியின் பெருமையைப் புகழும் இந்த ஈனத்தனம் நம்மிடமிருந்து ஒழிய வேண்டும்" என்று உரத்த குரலில் எரிந்து விழுந்தார் பொன்மனைக் கூற்றத் தலைவர். அந்தக் குரலிலிருந்த வெறுப்பின் வேகம் மற்ற மூன்று பேரையும் நடுங்கச் செய்தது. மூன்று பேரும் தாங்கள் பேசுவதை நிறுத்திக் கொண்டு மௌனமாக இருக்கத் தலைப்பட்டனர். கழற்கால் மாறனாரும் அந்த மௌனத்தைத்தான் விரும்பினார். அம்மூன்று பேரும் தமக்கு அடங்கியிருந்து தாம் சொல்பவற்றை மட்டும் கட்டளைகளைப் போல் கேட்க வேண்டுமென்றே அவர் விரும்பினார். அவர்கள் பதில் சொல்வதையோ சொந்த அபிப்பிராயங்களைச் சொல்வதையோ அவர் விரும்பவில்லை.
"'ஒப்புரவு மொழி மாறா ஓலையை ஏற்றுக் கொள்ள மாட்டேன்' என்று கூறியதுமே நாம் ஒத்துழையாமையும் எதிர்ப்பும் புரிவோம் என்பதை மகாராணியிடம் சொல்லிவிட்டுத்தான் வந்தேன். நான் மகாமண்டலேசுவரரையும் அருகில் வைத்துக் கொண்டே முன்பு எனக்கு அளிக்கப்பட்டிருந்த 'தென்னவன் தமிழ்வேள் பாண்டிய மூவேந்த வேளார்' என்ற பட்டத்தையும், ஏனாதி மோதிரத்தையும், திருப்பியளித்து விட்டேன். அப்போது அந்த இடையாற்று மங்கலத்து மனிதர் என்னைக் கேவலப்படுத்திப் பேசிய பேச்சுக்களை நினைத்தால் இப்போது கூட என் இரத்தம் கொதிக்கிறது" என்று சொல்லிக் கொண்டே வந்தவர், பேச்சை நடுவில் நிறுத்திக் கொண்டே அந்த மூன்று பேருடைய முகங்களையும் பார்த்துக் கொண்டார்.
பின்பு மேலும் தொடர்ந்து கூறலானார்: " இனிமேல் மகாமண்டலேசுவரருக்கு எதிராக நாம் செய்ய வேண்டிய காரியங்களைச் சொல்கிறேன். தென்பாண்டி நாடு முழுவதும் பரவலாக அவர் மேல் ஒரு விதமான அதிருப்தி உண்டாகும்படி செய்ய வேண்டும். பாண்டிய மரபின் அரசுரிமைப் பொருள்கள் காணாமல் போனதற்கு மகாமண்டலேசுவரருடைய கவனக் குறைவுதான் காரணமென்று எல்லோரும் நினைக்கும்படி செய்ய வேண்டும். இளவரசன் இராசசிம்மன் நாட்டுக்கு வந்து மகாராணியாரைச் சந்திக்க விடாமல் அவனை எங்கோ கடல் கடந்து போகும்படி துரத்தியிருப்பவரும் அவர்தானென்று செய்தியைத் திரித்துப் பரப்பவேண்டும். அவருடைய கவனக்குறைவால் தான் கொற்கையில் குழப்பம் விளைந்தது, அவருடைய கவனக் குறைவால் தான் பகைவர் படையெடுப்பு நிகழப் போகிறது, அவருடைய கவனக் குறைவால் தான் மகாராணியின் மேல் யாரோ வேலெறிந்து கொல்ல முயன்றார்கள் என்று எல்லாச் செய்திகளையும் அவர் மேல் அதிருப்தி உண்டாக்குவதற்கு ஏற்ற விதத்தில் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். போர் ஏற்பட்டு அதற்காகப் படை வீரர்கள் திரட்டுவதற்கு நம்முடைய கூற்றங்களுக்கு மகாமண்டலேசுவரரின் பிரதிநிதிகளாக எவரேனும் வந்தால், படைவீரர்களை அவர்களோடு சேர விடாமல் நாம் தடுக்க வேண்டும். அந்தத் துணிவு எனக்கு இருக்கிறது. உங்களுக்கும் இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்."
"மாறனாரே! எங்களுக்கு அந்தத் துணிவு இதுவரையில் ஏற்படவில்லை. இப்போது நீங்கள் வற்புறுத்திச் சொல்கிறீர்கள். அதனால் நாங்களும் அந்தத் துணிவை ஏற்படுத்திக் கொள்கிறோம். போராடத் துணிந்த பின் தயங்கிக் கொண்டிருக்க முடியாதல்லவா?" என்று நிதானமாக மறுமொழி கூறினார் பரிமேலுவந்த பெருமாள்.
"முடிந்தால் உங்களில் யாராவது ஒருவர் தளபதி வல்லாளதேவனையும் இரகசியமாகச் சந்தித்துப் பேசிப் பாருங்கள். அவனும் மகாமண்டலேசுவரரை எதிர்க்கும் ஒரு காரியத்திலாவது நம்மோடு சேருவானா இல்லையா என்பது தெரிந்துவிடும்" என்று கழற்கால் மாறனார் சொன்ன போது, வேறு வழியின்றி ஒப்புக் கொள்ளுகிறார் போல் அந்த மூன்று பேருடைய தலைகளும் மெல்ல அசைந்தன.
அன்று பொன்மனைக் கூற்றத் தலைவர் மாளிகையில் மற்ற மூன்று கூற்றத் தலைவர்களுக்கும் பிரமாதமான விருந்து உபசாரம் நடைபெற்றது. நால்வகை உண்டிகளும், அறுசுவைப் பண்டங்களும், முக்கனிகளுமாக அப் பெருவிருந்தை உண்டபோது மற்ற மூன்று கூற்றத் தலைவர்களுக்கும் அந்த வயதான மனிதர் மேல் நன்றி சுரக்கத்தான் செய்தது. அவ்வளவு உபசாரங்களைச் செய்கிறவருக்காக நன்றியோடு உழைக்க வேண்டுமென்ற ஆவலும் எழுவது இயற்கைதானே? கழற்கால் மாறனாரைச் சில நாட்களாவது மகாமண்டலேசுவரர் பதவியில் இருக்கச் செய்து பார்க்க ஆசைப்பட்டார்கள் அவர்கள்.
அந்தக் கூட்டம் நடந்த சில தினங்களுக்குப் பின் சூரியோதயத்துக்கு முன் நாய்கள் குரைப்பது போல், ஒவ்வொரு கூற்றத்திலும் மக்கள் மதிப்புக்குரியவராயிருந்த மகாமண்டலேசுவரரைப் பற்றிக் குறும்புத்தனமான கெடுதல் பிரசாரங்கள் இரகசியமாக ஆரம்பமாயின.
---------
2.37. காலப் பெருவெளியிற் சில கனவுப் பறவைகள்
எதிலும் மனம் பொருந்தாமல், எண்ணங்கள் ஒட்டாமல் அந்த அரண்மனைக்குள் அதே நிலையில் நாட்களைக் கடத்த முடியாது போல் தோன்றியது மகாராணி வானவன்மாதேவிக்கு. நான்கு புறமும் நீந்தி மீளமுடியாதபடி பொங்கிப் பெருகும் வெள்ளப் பிரவாகத்தினிடையே அகப்பட்டுக் கொண்ட நீந்தத் தெரியாத மனிதனைப் போல் சிறுமை நிறைந்த சாமானிய மனிதக் குணங்களுக்கு நடுவே திகைத்து நின்றார் அவர். கழற்கால் மாறனார் ஒப்புரவு மொழி மாறா ஓலையோடு வந்து பயமுறுத்திவிட்டுப் போனதிலிருந்து மனத்தின் சிறிதளவு நிம்மதியையும் இழந்து தவித்தார் அவர். அரண்மனைக்கு வெளியே போய்க் கோவில், குளம் என்று விருப்பம் போல் சுற்றவும் முடியவில்லை. உள்ளேயும் நிம்மதியாக இருக்க முடியவில்லை.
மாலையில் புவனமோகினியையும் உடன் அழைத்துக் கொண்டு அரண்மனை நந்தவனத்தில் போய்ச் சிறிது நேரம் உலாவினார் மகாராணி. பூக்களையும், செடி கொடிகளையும் பார்க்கும் போதெல்லாம் மகாராணியின் மனத்தில் சற்றே உற்சாகத் தென்றல் வீசியது. ஒவ்வொரு பூவைப் பார்க்கும் போதும் ஓர் அழகான குழந்தையின் புன்முறுவல் பூத்த முகம் நினைவு வந்தது அவருக்கு. அடடா! அந்தப் பூக்களைப் பார்க்கும் போது இன்னும் எத்தனை எத்தனையோ நினைவுகள் அவர் மனத்தில் பொங்குகின்றனவே! எல்லையற்றுப் பரந்த பேருலகத்தில் அங்கங்கே மனித வாழ்க்கையில் தென்படும் சிறுமைகளைக் காணாதது போல் கண்டு அளவிலும், உருவிலும் அடங்காத இயற்கைப் பெருந்தாய் இப்படிப் பல்லாயிரம் பல்லாயிரம் மலர்களாக மாறி ஏளனச் சிரிப்புக்களை எங்கும் வாரி இறைக்கின்றாளோ? அவை வெறும் பூக்களல்ல. பிரகிருதியின் அர்த்தம் நிறைந்த புன்னகைகள்!
நந்தவனத்துத் தடாகத்தில் இருந்த சில பெரிய செவ்வல்லிப் பூக்களையும் மூடும் நிலையிலிருந்த கமலங்களையும் பார்த்த போது மழலை மொழி பேசிக் கன்னங்குழியச் சிரிக்கும் குழந்தைப் பருவத்து இராசசிம்மனின் முகம் நினைவு வந்தது அவருக்கு. தடாகம் நிறைய மலர்ந்து தெரிந்த அத்தனை மலர்களும் குழந்தைப் பருவத்து இராசசிம்மனின் முகங்களாக மாறிச் சிரிப்பன போல் அவருக்கு ஒரு பிரமை ஏற்பட்டது. நெஞ்சத்து உணர்வுகளைக் கனிச் சாறாகப் பிழிந்து களிப்பூட்டும் அந்த இனிய பிரமையில் தம்மை முற்றிலும் மூழ்கச் செய்து கொண்டு பூக்களையே பார்த்தவாறு சிறிது நேரம் நின்றார் மகாராணி. புவனமோகினியும் அருகில் நின்றாள். அப்போது ஒரு பணிப்பெண் ஓடி வந்து, "தேவி! கோட்டாற்றிலிருந்து அந்தச் சமணப் பண்டிதர்கள் தங்களைத் தேடிக் கொண்டு வந்திருக்கிறார்கள்" என்று தெரிவித்தாள்.
"அவர்களையும் இங்கேயே நந்தவனத்துக்கு அழைத்துக் கொண்டு வா, அம்மா!" என்றார் மகாராணி. பணிப்பெண் போய் அழைத்துக் கொண்டு வந்தாள்.
"அடிகளே, வாருங்கள்! பயிர் வாடுகிற போதெல்லாம் தானாகவே வந்து பெய்கிற மழை மாதிரி வெளியே சொல்ல முடியாத ஊமைக் கவலைகளால் நான் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிற சமயங்களிலெல்லாம் நீங்கள் காட்சியளித்து எனக்கு நம்பிக்கையளிக்கிறீர்கள்" என்று அவர்களை வரவேற்றார் மகாராணி.
"துன்பத்தைப் போக்குவதற்கு நான் யார் தாயே? உலகில் பிறந்து வாழ்வதே பெருந் துன்பம். நடக்கத் தெரிகிற வரை எழுவதும் விழுவதுமாகத் தள்ளாடும் குழந்தையைப் போலப் பிறவியை வென்று வீட்டையடைய பழகுகிற வரையில், பிறப்பும் வாழ்வும் துன்பங்களே தரும்.
'பிறந்தோர் உறுவது பெருகி துன்பம்
பிறவார் உறுவது பெரும் பேரின்பம்
பற்றின் வருவது முன்னது, பின்னது
அற்றோர் உறுவது...'
என்று புலவர் சீத்தலைச் சாத்தனார் மணிமேகலைக் காப்பியத்தில் எவ்வளவு அழகாக இந்தத் தத்துவத்தைச் சொல்லியிருக்கிறார்!" என்று சொல்லிக் கொண்டே, உடன் வந்த மற்றொரு துறவியோடு புல்தரையில் உட்கார்ந்தார் கோட்டாற்று பண்டிதர். மகாராணியும், புவன மோகினியும் அதே புல்தரையில் சிறிது தூரம் தள்ளி அடக்க ஒடுக்கமாக அமர்ந்து கொண்டனர்.
"அந்தப்புரத்துக் கட்டடங்களுக்குள்ளேயே அடைந்து கிடக்கப் பொறுக்காமல் நந்தவனத்துக்கு வந்தேன். அடிகளே! நல்லவேளையாக நீங்களும் வந்தீர்கள். இன்று உங்களைக் காணும் பேறு கிட்டுமென்று நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை."
"எங்கே அடைந்து கிடந்தால் என்ன அம்மா? இது சிறிய நந்தவனம். உலகம் பெரிய நந்தவனம். இங்கே செடிகளின் கிளைகளில் நாட்களை எல்லையாகக் கொண்டு பூக்கள் பூத்து உதிர்கின்றன. அங்கேயோ காலத்தின் கிளைகளில் விதியை எல்லையாகக் கொண்டு உயிர்ப் பூக்கள் பூத்து உதிர்கின்றன. இன்று உதிர்ந்துள்ள பூக்களே நாளை உதிரப் போகும் பூக்களுக்கு உரமாகும். இந்த உயிர்ப் பூக்களின் நந்தவனத்தில் எதையும் நடுவராக நின்று பார்த்துக் கொண்டே நடந்து போய்விட வேண்டும். இல்லாவிட்டால் துன்பம் தான்!" என்று சிரித்துக் கொண்டே சொன்னார் கோட்டாற்றுப் பண்டிதர்.
"என்னைப் போன்றவர்களால் ஆசைகளையும் பாசங்களையும் சுமந்து கொண்டு அப்படி நடுவாக நடந்து போய்விட முடிவதில்லையே அடிகளே!"
"முடிகிற காலம் ஒன்று வரும், தாயே! அப்போது நானே உங்களைச் சந்தித்து நினைவூட்டுவேன். இன்று நான் இங்கே வந்தது உங்களைச் சந்தித்து உரையாடிக் கொண்டிருப்பதற்காக அல்ல. நானும் இதோ உடன் வந்திருக்கும் இந்தத் துறவியும் மறுபடியும் வடதிசையில் யாத்திரை போகிறோம். அதற்கு முன் உங்களிடம் ஒரு வார்த்தை சொல்லிக் கொண்டு போகலாமென்று வந்தேன்."
"அடிகள் திரும்ப எவ்வளவு காலமாகுமோ?"
"யார் கண்டார்கள்? நான் திரும்புவதற்குள் எங்கெங்கே எத்தனை மாறுதல்களோ? தாயே! எப்போதும் நாளைக்கு நடப்பதை எண்ணித் திட்டமிடுகிற வழக்கமே எனக்கு இல்லை. நீரின் வேகத்தில் விழுந்த துரும்பு போல் கால ஓட்டத்தில் என்னைத் தள்ளிக் கொண்ட பின் என்னை இழுத்துச் செல்ல வேண்டியது அதன் பொறுப்பு. நாளைய தினத்தைப் பற்றிப் பெரிதாக எண்ணாதீர்கள். அது உங்கள் நினைப்பைப் போல் இல்லாமலும் போகலாம்!" எதையோ சுருக்கமாக மறைத்துச் சொல்லிச் சிரிப்பவர் போல் சிரித்தார் அவர்.
"அடிகளே! இன்றைய தினத்தைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரிந்து விட்டது. அதனால் அதைப் பற்றி எண்ணுவதற்கு ஒன்றும் மீதமில்லை. நாளைய தினம் தான் எனக்கு தெரியாதது. என் கற்பனைகளுக்கு இடமளிப்பது. என் நினைவுகளைத் தாங்கிக் கொண்டு இன்பம் தருவது. நான் எப்படி அதை நினையாமல் இருக்க முடியும்?"
இந்தக் கேள்விக்கு அவர் பதில் சொல்லாமல் சிரித்தார். சிறிது நேரம் மௌனமாக இருந்தார். பின்பு விடைபெற்றுக் கொண்டு உடன் வந்தவரோடு திரும்பிப் போய்விட்டார். அந்தச் சில விநாடிகளில் இன்னதென்று புரியாத ஏதோ ஒரு பேருண்மையைத் தனக்குத் தெரியாமல், தனக்கு விளங்காமல், தானறிந்து கொள்ள முடியாமல் தன் மனத்தில் அவர் பதித்து விட்டுப் போய்விட்டது போல் மகாராணிக்கு ஓர் உணர்வு ஏற்பட்டு வளர்ந்தது.
இருட்டி நெடுநேரமாகி நந்தவனத்திலிருந்து திரும்பி இரவு உணவு முடித்துப் படுத்துக் கொண்ட பின்னும் அந்தச் சிந்தனை மகாராணியை விட்டு நீங்க மறுத்தது. முன்னும் பின்னும் தொடர்பற்ற, பல சிந்தனைகள், பல முகங்கள், பலருடைய பழக்கங்கள் எல்லாம் அவருக்கு நினைவு வந்தன. கழற்கால் மாறனாரின் பதவி ஆசை, மகாமண்டலேசுவரரின் கம்பீரம், சுசீந்திரத்தில் சந்தித்த திருவட்டாற்றுச் சோழியப் பெண்ணின் தாய்மை கனிந்த முகம், காந்தளூர் மணியம்பலத்தில் அந்த முதுபெரும் புலவர் மாணவர்களுக்குக் கூறிய அறிவுரை - எல்லாம் அவர் நினைவில் தோன்றி மறைந்தன. நினைவுகளின் வெள்ளத்தில் அவர் மனம் நீந்தத் தொடங்கியது.
நந்தவனத்துக் குளத்தில் பார்த்த செவ்வல்லிப்பூ சிறிது சிறிதாக விரிந்து, வடிவு பெருகி ஓர் அழகிய ஆண் குழந்தையின் முகமாக மாறிச் சிரிக்கிறது. சிரித்துக் கொண்டே கொஞ்சம் கொஞ்சமாக மாறி மாறி வளர்ந்து அது ஒரு இளைஞனின் முகமாக விரிவடைகிறது. அந்த முகத்துக்குக் கீழே கைகளும், கால்களும், உடம்பும் உண்டாகி, ஒரு வாலிபன் எழுந்து நிற்கிறான். அந்த வாலிபன் வேறு யாருமில்லை, குமார பாண்டியன் இராசசிம்மன் தான்.
'அம்மா! உங்கள் எண்ணங்களை நான் நிறைவேற்றுவேனா, மாட்டேனா என்று கவலைப்படாதீர்கள். என்னுடைய வலிமை வாய்ந்த கைகள் அவற்றை நிறைவேற்றுவதற்காகவே இருக்கின்றன' என்று இராசசிம்மன் அருகில் வந்து கைகூப்பி வணங்கிக் கொண்டே சொல்கிறான்.
'குழந்தாய்! நான் அவநம்பிக்கையடைந்து விடக் கூடாதென்பதற்காக நீ இப்படிக் கூறுகிறாய். நாளைக்கு நடக்கப் போவதைப் பற்றிச் சொல்ல உன்னால் எப்படி அப்பா முடியும்? அது நினைப்பைப் போல் இல்லாமலும் போகலாம். உனக்குப் பல பொறுப்புகள் இருக்கின்றன. நீயோ ஒரு பொறுப்பும் நினைவில்லாமல் மனம் போன போக்கில் திரிந்து கொண்டிருக்கிறாய். முதலில் நீ தாய்க்கு மகனாக இருப்பதற்குத் தெரிந்து கொள்ள வேண்டும். பின்பு நாட்டுக்கு அரசனாக இருப்பதற்குத் தெரிந்து கொள்ள வேண்டும். அதன் பின் ஒரு பெண்ணுக்கு நாயகனாக இருப்பதற்குத் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கெல்லாம் அப்பால் குழந்தைகளுக்குத் தந்தையாகத் தெரிந்து கொள்ள வேண்டும். பிறந்தும் ஆண்டும் பெற்றும் பெறுவித்தும் முடிவதுதான் வாழ்க்கை. தாயைக் கூடச் சந்திக்காமல் சுற்றிக் கொண்டிருக்கும் நீ பொறுப்புக்களை உணர்ந்து கொள்வது எப்போது? பொறுப்புகளை உணர்வதற்கே தெம்பில்லாத நீ அவற்றைச் சுமப்பது என்றைக்கோ? மகாமண்டலேசுவரர் நல்லெண்ணத்துடன் உன்னை இடையாற்று மங்கலத்துக்கு அழைத்து வந்து இரகசியமாகத் தங்க வைத்தால், நீ அவர் கண்களிலேயே மண்ணைத் தூவி விட்டு அரசுரிமைப் பொருள்களைக் கடத்திக் கொண்டு போய்விட்டாய். இலங்கை இலங்கை என்று நினைத்த போதெல்லாம் அங்கே ஓடி விடுகிறாய். அப்படி உனக்கு என்னதான் வைத்திருக்கிறதோ அங்கே? காசிப மன்னன் உனக்கு வேண்டியவனாக இருக்கலாம். அதற்காக எப்போதும் அவன் நிழலிலே போய் ஒதுங்கலாமா? முயற்சியும் ஊக்கமும் உள்ள ஆண் மகனுக்குப் பிறருடைய நிழலில் போய் ஒதுங்குவது என்பது இழுவு அல்லவா? வெளியில் யாருக்கும் தெரியாமல் உன்னையும் அரசுரிமைப் பொருள்களையும் தேடி அழைத்து வருவதற்கு அந்தரங்கமாக ஏற்பாடு செய்திருப்பதாக மகாமண்டலேசுவரர் கூறினார். அதனால் தான் ஆசைகளையும், பாசங்களையும் மனத்திலிருந்து களைந்தெறிந்து அழித்து விடாமல் வைத்துக் கொண்டு இன்னும் காத்திருக்கிறேன். 'உலகம் உயிர்ப் பூக்களின் நந்தவனம்! அங்கே எல்லாவற்றையும் பார்த்தும் பார்க்காதது போல் நடுவாக நடந்து போய்விட வேண்டும்' என்று கோட்டாற்றுப் பண்டிதர் எனக்குச் சொல்லுகிறார். குழந்தாய், உன் மேலும், உன் எதிர்காலத்தின் மேலும், நான் கண்டு கொண்டிருக்கும் கனவுகளாலும் நம்பிக்கையாலும் அவருடைய தத்துவத்தைக் கூட என்னால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. அதற்காக மகாமேதையான அந்தப் பண்டிதரைக் கூட எதிர்த்து வாதம் புரிந்தேன் நான். நீ இங்கு இல்லாததால் அரசாங்கக் கவலைகளும் என்னிடமே வந்து சேர்கின்றன. உன்னைக் காண முடியாமல் படும் கவலைகளோடு சேர்த்து அந்தக் கவலைகளையும் நானே பட வேண்டியிருக்கிறது. நம்முடைய மகாமண்டலேசுவரர் தென்பாண்டி நாட்டின் அறிவு வளத்துக்கும் சிந்தனைச் செழுமைக்கும் எடுத்துக் காட்டாகத் திகழ்பவர். பொறாமையின் காரணமாக அவரை அந்தப் பெரும் பதவியிலிருந்து கீழே இறக்கி விடுவதற்குச் சிலர் முயற்சி செய்கிறார்கள். பொன்மனைக் கூற்றத்துக் கிழவர் ஒப்புரவு மொழி மாறா ஓலையோடு என்னிடம் வந்து, மகாமண்டலேசுவரரைப் பற்றி என்னென்னவோ புறங் கூறினார். நான் ஏற்றுக் கொள்ளவில்லை. மகாமண்டலேசுவரரைப் பற்றி அவ்வளவு கேவலமாகப் புறங்கூறிய அந்தக் கிழட்டு மனிதர் அவரையே நேரில் பார்த்ததும் எப்படி நடுங்கிப் போனார் தெரியுமா? இராசசிம்மா! இடையாற்று மங்கலத்துப் பெரியவருக்கு மட்டும் அந்த இணையற்ற ஆற்றல் இருக்கிறது. அவரை எதிர்ப்பவர்களும், வெறுப்பவர்களும் கூட அவருடைய கண்களின் சால்பு நிறைந்த பார்வைக்கு முன்னால் அடங்கி ஒடுங்கி நின்று விடுகிறார்கள். பகைவரையும் பிணிக்கும் பேராற்றல் அந்தப் பார்வைக்கு இருக்கிறது. தென்பாண்டி நாட்டு அரசியல் தொடர்புடைய எல்லோருக்குமே காரணமற்ற ஒரு வகை அசூயை மகாமண்டலேசுவரர் மேல் இருக்கிறது. குழந்தாய்! அவரைப் போல் ஒரு திறமையான மனிதர் இல்லாவிட்டால் உடனடியாக நேர இருந்த வடதிசைப் பகைவர் படையெடுப்பைக் காலந்தாழ்த்தியிருக்க முடியாது. அவர் மகாமண்டலேசுவரராயிருக்கிற காலத்திலேயே நீ வந்து முடிசூட்டிக் கொண்டு பொறுப்பேற்றால் உனக்கு எத்தனையோ வகையில் பயன்படும். உலகம் நிலையாதது, நம்முடைய எண்ணங்களின் படியே எதுவும் நடப்பதில்லை என்பதையெல்லாம் நான் உணர்கிறேன், குழந்தாய்! ஆனால் உன்னைப்பற்றி நினைவு வரும் போது மட்டும் என்னால் அவற்றை நம்ப முடிவதில்லை. 'உலகம் நிலையானது. என் அருமைப் புதல்வனைப் பொறுத்த வரையில் நான் எண்ணியிருக்கிற படியே எல்லாம் நடைபெறும்' என்றே நினைத்து வருகிறேன் நான். நீ என்னை ஏமாற்றி விடாதே. என் நினைவுகளையும் கனவுகளையும் ஏமாற்றி விடாதே.' யாரோ கூப்பிடுவது போலிருந்தது.
"தேவி! இதென்ன? என்னென்னவோ பிதற்றுகிறீர்களே! நீங்களாகவே பேசிக் கொள்கிறீர்களே! உங்களுக்கு ஏதாவது உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறதா? ஒரு வேளை மாலையில் குளிர்ந்த காற்றுப் படும்படி நந்தவனத்தில் உலாவியது ஒத்துக் கொள்ளவில்லையா?" என்று கேட்டுக் கொண்டே புவன மோகினி கட்டில் அருகே நின்றாள். மகாராணிக்கு நாணமாக இருந்தது. இராசசிம்மனிடம் பேச நினைத்தவைகளையெல்லாம் தூக்கத்தில் வாய் சோர்ந்து உளறி விட்டிருக்கிறோம் என்று அவருக்கு அப்போதுதான் புரிந்தது.
புவன மோகினி மகாராணிக்கு துணையாகக் கட்டிலுக்குக் கீழே தரையில் பக்கத்தில் படுத்துக் கொண்டாள். மகாராணிக்கு மறுபடியும் கோட்டாற்றுப் பண்டிதர் கூற்று நினைவுக்கு வந்தது.
'நாளைக்கு நடப்பதைப் பற்றி இன்றைக்கே திட்டமிடாதீர்கள். நாளைய தினம் என்பது இனிமேல் வருவது. நீங்கள் நினைக்கிற மாதிரி இல்லாமலும் போகலாம் அது!'
மகாராணியின் அறிவுமயமான உள்ளம் இந்தத் தத்துவத்தை ஒப்புக் கொண்டது. ஆனால் உணர்வு மயமான உள்ளமோ ஒப்புக் கொள்ள மறுத்தது. 'நாளை என்ற ஒன்று இல்லாவிட்டால் அப்புறம் இந்த உலகத்தில் என்ன இருக்கிறது? அறிய முடியாத உண்மைகளும், தெரிய முடியாத எதிர்காலமும் இருப்பதனால் அல்லவா வாழ்க்கை சாரமாக இருக்கிறது? தாம் சுமக்கின்ற பொருள்களின் உயர்வும் பெருமையும் தெரியாமல் குங்குமமும், கற்பூரமும் சுமக்கும் கழுதைகளைப் போல் வாழ்வதனால் தான் சாதாரண மனிதர்களால் வாழ்க்கையின் நாளைய தினங்களைக் கற்பனை செய்ய முடிகிறது.'
இப்படி என்னென்னவோ எண்ணிக் கொண்டு படுக்கையில் புரண்டார், மகாராணி. சிந்தனைகளைத் தனக்குச் சாதகமாகத் தன் எண்ணங்களுக்கு ஏற்றாற் போல் வளைத்துச் சிந்திக்கத் தொடங்கும் போது மனத்துக்கு ஒருவிதமான போலி உற்சாகம் மகிழ்ச்சி மயக்கமாக ஏற்படும். மகாராணியின் மனத்தில் அப்படி ஓர் உற்சாகம் அப்போது ஏற்பட்டிருந்தது. மறுநாள் பொழுது விடிந்ததுமே இராசசிம்மன் ஓடி வந்து விடப் போகிற மாதிரியும், உடனே அவனுக்கு முடிசூட்டிக் கண்டு மகிழப் போவதாகவும், தன் மனம் கற்பனை செய்கிற எல்லா நிகழ்ச்சிகளுமே உடனே நடந்து விடப் போவது போலவும் ஒரு மனநிலை ஏற்பட்டது. கண்களை விழித்துக் கொண்டே கட்டிலில் படுத்திருந்தவருக்கு எதிரே சிறிதாக மங்கலாக எரிந்து கொண்டிருந்த தூண்டா விளக்கின் சுடர் தெரிந்தது. இருட்டில் மலர்ந்த தங்க மலர் ஒன்றின் ஒற்றைத் தனி இதழ் காற்றில் அசைவது போல் கண்ணுக்கு அழகாகத் தெரியும் அந்தச் சுடரையே பார்ப்பது இன்பமாக இருந்தது மகாராணிக்கு. சுடரா அது? நெருப்புத் தாயின் பெண் குழந்தை. நெருப்பில் ஏதோ தெய்விக ஆற்றல் இருக்கிறது. அதனால் தான் அதை வணங்குவதற்கு ஏற்ற பொருளாக முன்னோர்கள் தேர்ந்திருக்க வேண்டுமென்று அவருக்குத் தோன்றியது. பார்த்துக் கொண்டிருக்கும் போதே அந்தச் சுடர் பெரிதாக எரிவது போல் அவருக்கு ஒரு தோற்றம் உண்டாயிற்று.
பயத்தால் அவர் முகம் வெளிறுகிறது. கண்களை மூடிக் கொள்கிறார். ஆருயிர்க் கணவர் பராந்தக பாண்டியரின் சிதையில் அடுக்கிய சந்தனக் கட்டைகள் எரிந்த காட்சியை அவர் கண்களில் அவருடைய விருப்பமின்றியே நினைவுக்குள் கொண்டு வந்து தள்ளுகிறது ஏதோ ஒரு சக்தி. எட்டுத் திசையும் புகழ் மணக்கச் செங்கோல் நடத்திய அந்த மாபெரும் உடலை நெருப்புச் சூழ்ந்த போது, வானவன்மாதேவி நெருப்பைத் திட்டியிருக்கிறார்; தெய்வங்கள் தன்னை வஞ்சித்து ஏமாற்றியதாகத் தூற்றியிருக்கிறார். அதே நெருப்பின் சுடரையா இப்போது தெய்வமாக எண்ணினேன் என்று நினைக்கும் போதே உடல் புல்லரித்தது அவருக்கு. கண்களில் தன்னுணர்வு இல்லாமலே ஈரம் கசிந்து விட்டது. எத்தனை ஈமச் சிதைகளில் எத்தனை மனித உடல்களின் இரத்தத்தைக் குடித்த கொழுப்போ? அதனாலல்லவோ இந்தச் சுடர் இப்படிச் சிவப்பாக இரத்தத்தில் நனைந்த வெண்தாமரை இதழ் போல் எரிகிறது. அந்தத் தூண்டா விளக்கின் சுடரில் அழகு தெரியவில்லை அவருக்கு; தெய்வமும் தெரியவில்லை. அப்படியே எழுந்து பாய்ந்து அந்தச் சுடர்ப் பிழம்பைக் கைவிரல்களால் அமுக்கி நசுக்கி அழித்து விட வேண்டும் போல் வெறி உண்டாயிற்று. அந்த நெருப்பின் சவலைக் குழந்தையைக் கழுத்தை நெரித்து விட வேண்டும் போல் இருந்தது.
இப்படி ஏதேதோ சம்பந்தா சம்பந்தமின்றி நினைத்துக் கொண்டே தூங்கிப் போனார் மகாராணி. தூக்கத்தில் எத்தனையோ வேண்டிய, வேண்டாத கனவுகள் கவிழ்ந்தன. அகல - நீளங்களுக்குள் அடங்காமல் விளிம்பும் வேலியுமற்றுப் பரந்து கிடக்கும் காலம் என்னும் பெரு வெளியில் தம் கனவுப் பறவைகளைப் பறக்கச் செய்தார் மகாராணி. அலுப்பின்றிச் சலிப்பின்றிக் காலப் பெருவெளியின் தொடமுடியாத உயரத்தில் தூக்கம் கலைகிற வரை அந்தப் பறவைகள் பறந்து கொண்டே இருந்தன.
இராசசிம்மன் எட்டுத் திசையும் வெற்றி வாகை சூடித் திரிபுவனச் சக்கரவர்த்தியாகிறான். திருமணம் புரிந்து கொள்கிறான். அழகான ஆண் குழந்தை பிறக்கிறது. வானவன்மாதேவி தம் பேரனைக் கொஞ்சுகிறார். 'இராசசிம்மா! நீ குழந்தையாக இருந்த போது சிரித்ததைப் போலவே உன் மகனும் சிரிக்கிறான்' என்று புதல்வனிடம் வேடிக்கையாகச் சொல்கிறார் மகாராணி. 'அம்மா! என் மகனை என்னைக் காட்டிலும் பெரிய வீரனாக்கப் போகிறேன் பாருங்கள். ஈழத்தையும் கடாரத்தையும் கூட அவன் வென்று வாகை சூடுவான்' என்று மகனைப் பற்றிப் பெருமையடித்துக் கொள்கிறான் இராசசிம்மன்.
'செய்தாலும் செய்வான், அப்பா! வாளாலும் வேலாலும் வெல்வதற்கு முன் சிரிப்பாலேயே அவைகளை வென்று விடுவான் போலிருக்கிறது உன் மகன்' என்று புன்னகையோடு பதில் சொல்கிறார் மகாராணி...
இவ்வளவில் மகாராணி கண் விழித்தார். விடிந்து வெயில் பரவி வெகு நேரமாயிருந்தது. படுத்த நிலையிலேயே கட்டிலில் கண் விழித்த அவர் பார்வையில் எதிரேயிருந்த அந்தத் தீபம் தான் பட்டது. அவர் திடுக்கிட்டார். அந்த ஒளியின் குழந்தை அணைந்து அழுது புகையாகி, நூலிழைத்துக் கொண்டிருந்தது. என்றுமே அணையாத விளக்கு அது. அன்று அணைந்திருந்தது. கண்ட கனவுக்கும் அதற்கும் பொருத்தமில்லாமல் பட்டது. மனத்தின் வேதனை அலைகளை அடக்கிக் கொண்டு அந்த அன்னை காலத்தின் அலைகளில் மிதப்பதற்காக எழுந்தாள். நீராடிய ஈரக் கூந்தலோடு கையில் பூக்குடலையுடன் புவன மோகினி அப்போது அங்கே வந்தாள்.
"பெண்ணே! இன்றைக்கு இந்த அணையா விளக்கு அணையும்படி விட்டு விட்டாயே! நீ பார்க்கவேயில்லையா?" என்று கேட்டார் மகாராணி.
"ஐயோ! அணைந்து விட்டதா? நான் பார்க்கவே இல்லையே?..." என்று பதறி, அதை ஏற்றுவதற்காக ஓடினாள் வண்ணமகள்.
பிரமை பிடித்தவர் போல் சூனியத்தை வெறித்து நோக்கியபடி மறுபடியும் கட்டிலிலேயே உட்கார்ந்து கொண்டார் மகாராணி.
"இரவில் எண்ணங்கள் உற்சாகமாக, நம்பிக்கையளிப்பவையாக, விரும்பத்தக்கவையாக இருந்தன. பகல் விடிந்ததுமே ஒளியின்றிப் புகைகிறது" என்று மெல்ல தமக்குத் தாமே சொல்லிக் கொண்டார் அவர். சாளரத்தின் வழியே நுழைந்த ஒளிக்கதிர்கள் அவருடைய நெற்றியில் படிந்து மினுமினுப்புக் காட்டின.
அன்றைய நாளின் விடிவு காலத்தின் வேகமான அலைகளில் தன்னை வேறொரு திசையில் இழுப்பதற்காக விடிந்தது போல் ஏதோ மனத்தில் அவருக்கு ஒரு குழப்பம் எழுந்தது. அப்போது கோட்டாற்றுப் பண்டிதர் பதில் பேசாமல் சிரித்து விட்டுப் போன அந்தச் சிரிப்பு அவருக்கு நினைவு வந்தது. முன்பொரு சமயம் அவர் ஓலையில் எழுதிக் கொடுத்துவிட்டுப் போன பாட்டு நினைவு வந்தது.
"மகாராணி! வெயில் ஏறி வெப்பம் அதிகமாகிக் கொண்டே போகிறதே" என்று நீராடுவதற்கு நினைப்பூட்டும் நோக்கத்தோடு ஒரு பணிப்பெண் கூறினாள்.
"ஆமாம்! 'வெப்பம்' அதிகமாகிக் கொண்டுதான் போகிறது" என்று அதே வார்த்தைகளை வேறு பொருள் தொனிக்கத் திருப்பிச் சொல்லிக் கொண்டே எழுந்திருந்தார் மகாராணி வானவன்மாதேவி.
பாண்டிமாதேவி - இரண்டாம் பாகம் முற்றிற்று
------------
This file was last updated on 1 April 2015.
Feel free to send corrections to the webmaster.