சீவக சிந்தாமணி - சுருக்கம்
உரைக் குறிப்புக்களுடன் - பாகம் 1
ஔவை துரைசாமிப்பிள்ளை தொகுப்பு
cIvaka cintAmaNi - curukkam, with notes -part 1
by auvai turaicAmi piLLai
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Digital Library of India for providing a scanned image version
of this work for the e-text preparation. This e-text has been prepared via the Distributed
Proof-reading implementation and we thank the following volunteers for their assistance:
Anbu Jaya, R. Navaneethakrishnan, P. Thulasimani, V. Ramasami, A. Sezhian, Thamizhagazhvan,
P. Sukumar, SC Tamizharasu, V. Jambulingam and V. Devarajan
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2015.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
சீவக சிந்தாமணி - சுருக்கம் /உரைக் குறிப்புக்களுடன் - பாகம் 1
ஔவை துரைசாமிப்பிள்ளை தொகுப்பு
Source:
"சீவகசிந்தாமணி - சுருக்கம்
உரைக் குறிப்புக்களுடன்"
செங்கம் போர்டு உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரியரும்,
ஐங்குறுநூறு உரையாசிரியரும் ஆகிய வித்துவான்
ஓளவை. சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் தொகுத்தெழுதியது
திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட்,
திருநெல்வேலி :: சென்னை.
விசு – மார்கழி - வெளியீடு--325
[Copy-right]
Published by: The South India Saiva Siddhanta Works Publishing Society,
Tinnevelly, Ltd, Tirunelveli and Madras.
December 1941.
The Jupiter Press, Madras. 820/12-41
பதிப்புரை
செந்தமிழ் மொழியிற் சிறந்து விளங்குகின்ற பழைய பெருங் காப்பியங்கள் ஐந்து. அவற்றுள் சீவக சிந்தாமணி ஒன்று.
சமண சமயத்தவனான சீவகன் என்னும் அரசனது வரலாற்றை இது விளக்குகின்றது. சொற்சுவை பொருட்சுவை வாய்ந்து நனி சிறந்த இலக்கியமாகப் பண்டுதொட்டே அறிஞர்களால் யாண்டும் மேற்கோளளாக வழங்கப்படும்
பெருமை கனிந்தது. இந்நூல் ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகட்குமுன் இயற்றப்பட்டதாயினும், இது முன்னைச் சங்க நூல்களின் தமிழ் நலம் நன்கு வாய்ந்து திகழ்கின்றது. பிள்ளைக் காப்பிய நூல்கட்கும் பலகைகளில் இது வழி திறந்து உதவி யிருக்கின்றது.
மக்கள் வாழ்க்கைக்குப் பயன்படக்கூடிய சிறந்த அறவுணர்வுகள் பலவும் இதன்கண் நன்கு விளக்கப்பட்டிருக்கின்றன. சமண சமயக் கொள்களை அறிந்துகொள்ளுதற்கும்
இந்நூல் உதவும்.
இதனை இயற்றியருளிய ஆசிரியர், திருத்தக்கதேவர் என்னும் சமண சமயப் பெரியார். உரையாசிரியர் நச்சினார்க்கினியர் இதற்கு அரியதோர் உரை எழுதியிருக்கின்றார்.
இனிக்குந் தீங் காப்பியமான இத்தகைய அரியநூல் மூவாயிரத்துக்கு மேற்பட்ட செய்யுட்களுடையதாயிருக்கின்றது. ஆதலால், நூல் முழுமையும் படித்து நலம்நுகர
மலைவுறுவோர்க்கு அதன் கதைத் தொடர்பும் இனிமைகளுங் குறையாத முறையில் ஒரு ‘சுருக்கப் பதிப்பு’ இருப்பின், எல்லோரும் எளிதில் படித்தறிந்துகொள்ள உதவியாயிருக்கும். ஆங்கிலம் முதலிய மொழிகளில் இத்தகைய சுருக்கப்
பதிப்புக்கள் பல வெளிவந்திருக்கின்றன. தமிழ் மொழியிலும் அம் முறை பின்பற்றப்படுவதனால் தமிழ் மொழிக் கல்வி பெருகப் பரவுவதற்கும், முழுநூலைக் கற்க ஆர்வமெழுதற்கும் இடமுண்டாகும்.
இச் சுருக்கப் பதிப்பு, முழு நூலில் ஏறக்குறையக் காற்பங்களவாக வெளிவருகின்றது; இதனால், அம் முழுநூற் கருத்தை எல்லாரும் இதன்முகமாக எளிதிற் படித்தறிந்து
கொள்ளலாம்.
கதைப் போக்குக் கெடாமல் இனிய செய்யுட்களைத் திரட்டிக் கோத்து, இடையிடையே விடுக்கப்பட்ட பாட்டுக்களின் தொடர்பைச் சுருக்கமாக அங்கங்கும் எளிய உரைநடையில் எழுதிச்சேர்த்து, ஒவ்வொரு பக்கத்திலும் அடியில் தெளிவான உரைக் குரிப்புக்களுங் கொடுத்து விளக்கமான ஓர் ஆராய்ச்சி முன்னுரையோடு இந்நூல் பதிப்பிக்கப்பட்டிருக்கின்றது. பாட்டுக்கள் சீர்பிரித்தும் சந்திபிரித்தும் உரிய
தலைப்புக்களுடன் அமைக்கப்பட்டிருக்கின்றன. நச்சினார்க்கினியர் உரையோடு வைத்துப் பயில்வதற்கும் இந்நூலும் உரையும் உதவும்.
இதனை இத்தனை நலம்பெறத் தொகுத்தியற்றியவர், செங்கம் போர்டு உயர்நிலைப் பள்ளித் தமிழாசிரியரும் சங்கநூற் புலவருமான வித்துவான் திரு. ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள். அவர்கட்குத் தமிழுலகம் பெரிதுங் கடமைப் பட்டிருக்கின்றது: அவர்கட்கு எங்கள் அகமார்ந்த நன்றியைப் புலப்படுத்திக் கொள்கின்றோம்.
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.
---------------------------------
பொருளடக்கம்
ஆராய்ச்சி முன்னுரை
கடவுள் வாழ்த்து
1. நாமகள் இலம்பகம்
2. கோவிந்தையார் இலம்பகம்
3. காந்தருவதத்தையார் இலம்பகம்
4. குணமாலையார் இலம்பகம்
5. பதுமையார் இலம்பகம்
6. கேமசரியார் இலம்பகம்
7. கனகமாலையார் இலம்பகம்
8. விமலையார் இலம்பகம்
9. சுரமஞ்சரியார் இலம்பகம்
10. மண்மகள் இலம்பகம்
11. பூமகள் இலம்பகம்
12. இலக்கணையார் இலம்பகம்
13. முத்தி இலம்பகம்
பாட்டு முதற்குறிப்பகராதி
முன்னுரை
பொது
சீவக சிந்தாமணி யென்பது சமண முனிவர்கள் தமிழில் செய்துள்ள காவியங்களுள் தலையாயது. தமிழில் வழங்கும் காவியங்களுள் பெருங்காவியம், சிறுகாவியம் என இருவகை யுண்டு. இவை வகைக்கு ஐந்து காவியங்களாகக் கூறப்படும். பெருங்காவியம் ஐந்தனுள், வளையாபதி, குண்டலகேசி என்ற இரண்டொழிய, சிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை யென்ற மூன்றும் அச்சாகி வெளிவந்திருக்கின்றன. சிறு காவியம் ஐந்தனுள் நாககுமார காவியம், யசோதர காவியம் என்ற இரண்டொழிய, ஏனை, சூளாமணி, நீலகேசி, உதயணன் பெருங்கதை என்ற மூன்றும் அச்சாகி வெளிவந்துள்ளன; யசோதர காவியம் நெடுநாட்களுக்கு முன்பு அச்சாகி வெளிவந்ததுண்டு; இப்போது கிடைப்பது அரிது; நாக குமார காவியம் கிடைக்கவேயில்லை.
தமிழ்மொழிப் பயிற்சிக்கண் இருந்த ஆர்வக்குறைவாலும் தமிழ் படிப்பவர் தொகை குன்றி யிருந்ததுடன் தமிழ் நூல் ஆராய்ச்சி மக்கள் மனக் கண்ணிற்கு உயர்வாகத் தோன்றாமையாலும் தமிழ் நூல்கள் பல வெளிவரத் தடையுற்றன; வெளி வந்தவை மறுபதிப்பு எய்த மாட்டாது மடியலாயின.
இக்காலத்தே தமிழ் நூலாராய்ச்சி சிறிது உயர்வு பெற்று வருகிறது; தமிழ் கற்போரும் பெருகுகின்றனர்; மக்கட்கும் தமிழிடத்தும் தமிழ் நூல்களிடத்தும் பற்று உண்டாகி வருகிறது. திங்கள் வெளியீடுகளும், கிழமை வெளியீடுகளும், நாள் வெளியீடுகளும் பல்கி யிருப்பதொன்றே, யாம் கூறிய கருத்தை வலியுறுத்துவதாம்.
இப்போது, இனிய தமிழ் நூல்கள் பல எளிய விலையில் அழகுற அச்சிட்டு வெளியிடப்படுகின்றன. பதினைந்தாண்டுகட்கு முன் இருந்த தமிழ் நூல்ளின் தொகையினும் இப்போது அத்தொகை பன்மடங்கு பெருகி இருக்கிறது. படிப்போர் திரளும் மிகுந்தே யிருக்கிறது. இந்நிலையில், உண்மையாகவே தமிழ்த்தொண்டு புரியும் நன்மக்களும், கழகங்களும் மேற்கொண்டு புரியத்தக்க பணியொன்றே உளது; அஃதாவது, உயரிய நூல்களை யாவரும் பெறத்தக்க முறையில் வெளியிடுவதும், அவற்றின் அரிய கருத்துக்களை எளிய வகையில் சுருக்கியும் வடித்தும் உரைப்படுத்தும் மொழி பெயர்த்தும் மக்கள் தமிழ்வேட்கை மிகக் கொள்ளுமாறு செய்வதுமாம். இத்துறையில் பல கழகங்கள் வேலை செய்கின்றன. அவற்றுள் இச் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் அவ்வெல்லாவற்றிற்கும் முற்பட்டிருக்கிறது என்பது ஒருதலை. இக் கழகம் இப்போது சீவக சிந்தாமணியைச் சுருங்கிய வடிவில் தமிழுலகிற்கு வழங்குகிறது.
நூலாசிரியர்
சீவகசிந்தாமணியை யியற்றிய ஆசிரியர், திருத்தக்க தேவர் என்னும் சமண முனிவராவர். நரி விருத்தம் என நிலவும் சிறுநூலும் இவர் இயற்றியதே யென்பர். சீவக சிந்தாமணி பதின்மூன்று இலம்பகங்களாக வகுக்கப்பெற்று * மூவாயிரத்து நூற்று நாற்பத்தைந்து செய்யுட்களைக் கொண்டுள்ளது; சீவகன் என்னும் அரசகுமரன் வரலாறு கூறும் வாயிலாகச் சமண் சமயக் கருத்துக்களையும் உடன் உரைக்கும் திறம் உடையது.
இந்நூலாசிரியரான திருத்தக்க தேவர் பிறந்த ஊர், குலம், காலம் முதலியன வெளிப்படையாக ஒன்றும் தெரியவில்லை. சைனர் மட்டில் கேள்வி வழியாகப் பெற்ற ஒரு குறிப்பை யுரைக்கின்றனர்.
----------
* திருத்தக்கதேவர் செய்தவை இரண்டாயிரத்து எழுநூறு என்றே சிந்தாமணியின் ஓம்படைச் செய்யுள் உரை தெரிவிக்கின்றது; மிகுந்த நானூற்று நாற்பத்தைந்து செய்யுட்களும் கந்தியாரால் செய்யப்பட்டவை யென்பர்.
"திருத்தக்க தேவர் சோழர் குலத்திற் பிறந்தவர். இளமையிலேயே தென்மொழி, வடமொழியென்ற இரு மொழியிலும் நிரம்பிய புலமை பெற்றவர். அப்போதே, துறவு பூண்டு சமண்சமயத்துக்குரிய நூல் பலவும் கற்றுச் சீரிய சமண முனிவராய் விளங்கினவர். இவர் காலத்தே மதுரையிலிருந்த சங்கப் புலவருடன் இவர் நட்புற்றுப் பழைய தமிழ் நூல்களை இனிதாராய்ந்தனர். அச் சங்கப் புலவர், "சமண் சமயத்துப் புலவர் பலர்க்கும் துறவினை வியந்து பாடத் தெரியுமேயன்றி, இன்பச் சுவை கனியப் பாடல் இயலாது போலும்" என்றனர். அதுகேட்ட இவர் இச் சீவகசிந்தாமணியை யெழுதி அவர் கருத்து மாறச் செய்தனர்."
இக் கேள்வி வரலாற்றை நோக்கின் இவர் சோழநாட்டவர் என்றும், சோழர் குலத்தவர் என்றும், பாண்டிநாட்டில் தம் புலமை நிரம்பப்பெற்று, இவ்வினிய தமிழ்க் காவியத்தை யியற்றினர் என்றும் ஓராற்றால் உணரலாம். இவர் காலத்திருந்த மதுரைத் தமிழ்ச் சங்கம், சிலப்பதிகாரம் இறையனார் அகப்பொருள் என்ற இவற்றுட் கூறப்படும் கடைச்சங்கம் அன்று என்பது, இந்நூற்கு உரைகண்ட நச்சினார்க்கினியரது உரைக் குறிப்பால் தெரிகின்றது. அவர் இந்நூலை "பின்னுள்ளோர் செய்த சிந்தாமணி முதலியனவாம்" என்று குறிக்கின்றார். இனி, இத் திருத்தக்க தேவரது காலத்தை ஆராய்ந்து காண முயன்ற ஆராய்ச்சியாளர் "இவருடைய காலம் கி.பி.900- அல்லது அதற்கு பிந்தியதாக இருக்கலாம்"* என்று கூறுகின்றனர்.
---------
*PP.375 Ancient India By Dr. S.K.Iyengar.
நூல் வரலாறு
தமிழ் நாடில் சமண சமயத்தவருள், இச்சிந்தாமணியேயன்றிச் சத்திரசூடாமணி, கத்திய சிந்தாமனி, சீவந்தர நாடகம், சீவந்தர சம்பு என்பன வடமொழியிலும், மகாபுராணம், ஸ்ரீபுராணம் என்பன மணிப்பிரவாள நடையிலும் உள்ளன என்பர். இவற்றுள் தேவரியற்றிய சிந்தாமணிக்குக் காலத்தால் முற்பட்டன இவை, பிற்பட்டன இவை என்பது நன்கு காணப்படவில்லை. சைனருட் சிலர் கத்திய சிந்தாமணி இதற்கு முதல் நூல் என்கின்றனர். மற்று, இதனைத் தேவரும் எடுத்தோதவேயில்லை. "சிந்தாமணியின் சரிதம் சிதர்ந்தேன்", இதனைத் "தெருண்டார்" ஏற்றுக் கொண்டனர் என்றே கூறுதலால், சீவகன் வரலாறு தேவர் காலத்தே சமணருலகத்தில் பயில வழங்கிய தென்பதுமட்டில் இனிது தெரிகின்றது.
சீவகன் பிறப்பு
கோடாத செங்கோல் குளிர்வெண்குடைக் கோதை வெள்வேல்
ஓடாத தானை உருமுக்குரல் ஓடை யானை,
வாடாத வென்றிமிகு சச்சந்தன் என்ப மன்னன்;
வீடாத கற்பின் அவன்தேவி விசயை யென்பாள்.
இதன்கட் கூறிய சச்சந்தனுக்கும் விசயைக்கும் பிறந்த மகன் சீவகன். இவன் பிறந்த அன்றே சச்சந்தன் இறந்தான்; இவனும் தன்னைப் பெற்ற தாயை விட்டுப் பிரிந்து கந்துக் கடன் என்பவனால் வளர்க்கப்பட்டான். அச்சணந்தி என்ற பெரியோன்பால் எல்லாக் கலைகளும் கற்றான்; ஒப்பாரும் மிக்காரும் இல்லாத உயர்தனித் தோன்றலாய்ச் சீவகன் விளக்கமுற்றான். விசயை தெய்வமொன்றின் துணையால் தண்டக வனத்துத் தவப்பள்ளியில் தன் மகன் வாழ்க என நோன்பு நோற்கலுற்றாள்.
வளர்ப்பு
சீவகன் கலைபலவும் கற்றபின், ஆசிரியனால் தன் பிறப்பு வரலாறு உணர்ந்தான். ஆசிரியன் பணித்ததனால், ஏற்ற காலம் வருமளவும், தன் பிறப்பு உண்மையினை வெளிப்படாவாறு மறைத்துக் கொண்டான். தந்தையாய் வளர்த்த கந் துக்கடன்பாலும், அவன் மனைவி சுநந்தைபாலும் மாறா அன்பு பூண்டொழுகினான். இவனுக்குரிய அரசுரிமையைத் தனக்கே யாக்கிக்கொண்ட கட்டியங்காரனே ஆட்சி செலுத்தி வந்தான். அந்த நகரின்கண்ணே சீவகனும் வளர்ந்து சிறப்புற்றான்.
கோவிந்தை திருமணம்
சீவகன் சிறப்புற்று வரும் நாளில், இராசமாபுரத்து ஆயர் நிரைகளைக் கவர்ந்து சென்ற வேடர் கூட்டத்தை அரசன் தானை வீரர் வெல்லமாட்டாது முதுகிட்டோட, சீவகன் தன் தோழருடன் சென்று, "ஆளற்ற மின்றி" வேடருடன் பொருது துரத்திவிட்டு, ஆனிரையை மீட்டுத் தந்து, ஆயர் தலைவனான நந்தகோன் என்பவன் மகள் கோவிந்தை யென்பவளைத் தன் தோழருள் ஒருவனான பதுமுகனுக்குத் திருமணம் செய்வித்தான்.
காந்தருவதத்தை திருமணம்
அவ்விராசமாபுரத்தே வாழ்ந்த சீதத்தன் என்னும் வணிகன், தன்பால் கலுழவேகன் என்னும் விஞ்சையர் வேந்தன் அடைக்கலப்படுத்திய அவன் மகள் காந்தருவதத்தையை இசைப்போர் செய்து வெற்றி பெறுவோனுக்குத் திருமணம் செய்து தருவதாகத் தெரிவிப்ப, அப்போரில் அரசர் பலரும் தோற்றது கண்டு, சீவகன் சென்று அவளைத் தோல்வியுறுவித்து மணம் செய்து கொண்டான்.
குணமாலை திருமணம்
அந் நகரமாந்தர் வேனிற்காலத் தொருநாள் பொழில் விளையாடிப் புனலாட்டயர ஒரு பூம்பொழிலுக்குச் சென்றிருந்த பொழுது, குணமாலை சுரமஞ்சரி என்ற இரண்டு செல்வ மங்கையர், சுண்ணப்பொடி காரணமாகத் தம்முள் நட்பு மாறுபட்டுப் பிரிந்தேகினர். அவருள் சுண்ணத்தால் மேம்பட்ட குணமாலை நீராடிவிட்டு வரும்போது, அசளிவேகம் என்னும் அரச யானை, மதம் மிக்க அவளைக் கொல்ல ஓடிவரவே, அது கண்ட சீவகன், அவ் யானையை அடர்த்து, அவளை உயிருய்வித்தான். பின்பு அவன் அவள் மீதும் அவள் அவன்மீதும் கருத்தைப் போக்கிக் காதல் மிகுந்து மணம் செய்துகொண்டனர். இதற்குள் அரசன் யானை அடர்க்கப்பட்டது தெரிந்து, சீவகனைப் பற்றிக் கொணருமாறு வீரரைப் பணிப்ப, அவர் போந்து, அவனைக் கொண்டேகுங்கால், பெரும்புயலும் மழையும் வந்து மோதிப் பேதுறுப்ப, அதனிடையே வந்த சுதஞ்சணன் என்னும் நன்றி மறவாத் தேவன், சீவகனைத், தான் வாழும் மலை முடிக்குக் கொண்டுபோயினன்.
பதுமை திருமணம்
பின்னர், சீவகன், அத் தேவன்பால் சிலநாள் தஞ்கிப் பின்வேறு நாடுகளைக் காண வேட்கைகொண்டு, விடைபெற்றுப் பல மலைகளையும், காடிடையிட்ட நாடுகளையும் கடந்து, பல்லவ தேயத்துச் சந்திராபமென்னும் தலை நகரையடைந்தான். அந் நகரவேந்தன் மகன் உலோகபாலன் என்பானுடன் நட்புற்றான்; அவன் தங்கை பதுமை என்பவளைப் பாம்பு தீண்ட, அவள் அறிவுசோர்ந்தாள். பலரும் பலவகையால் முயன்றும் ஒருபயனும் எய்தவில்லை. முடிவில் சீவகன் நஞ்சினைப் போக்கி அவட்கு நலம் செய்து, அவளை மணந்து கொண்டான். சின்னாள் கழிந்ததும், சீவகன் ஒருவருக்கும் சொல்லாமல், வேற்றுருக்கொண்டு, அந்நாட்டை விட்டுப் போய்விட்டான்.
கேமசரி திருமணம்
போனவன், தக்க நாட்டையடைந்தான். அந்த நாட்டுக் கேமமாபுரத்தில் வாழ்ந்த சுபத்திரன் என்னும் வணிகன் நாடோறும் செய்துவந்த விருந்துக்குச் சென்றான். அவனுக்குக் கேமசரி என்று ஒரு மகளிருந்தாள். அவள் பிறந்த நாளைக் குறித்த காலக் கணக்கர் "இவட்குக் கணவனாவான் எவனோ அவனன்றிப் பிற ஆடவர் எவரும் இவள் கண்ணிற்கு ஆடவராகத் தோன்றமாட்டார்" என்று உரைத்திருந்தனர். சீவகனைக் கண்டதும் அவள் நாணித் தலை கவிழ்ந்து நிற்ப, இவனும் அவள்பால் வேட்கை கொண்டான்; இருவர்க்கும் திருமணம் இனிது நடந்தது. அங்கே சிலநாளிருந்த சீவகன் அவளிடத்தும் பிறர் எவரிடத்தும் கூறாமல், பிரிந்தேகி, எதிர்ப்பட்ட ஒருவனுக்குத் தன் அணிகலனை ஈந்து அறம் சில பகர்ந்து ஏகினான்.
கனகமாலை திருமணம்
பின்பு சீவகன் மத்திமதேயத்து ஏமமாபுரத்தை யடைந்து அந் நகரத்து வேந்தன் மக்கட்குப் படைக்கலம் பயில்விக்கும் ஆசிரியனாய் அமர்ந்து, வில் வாள் முதலிய படைப் பயிற்சி நல்கிவந்ததோடு, அவ்வப்பொழுது அறநெறியும் அறிவுறுத்தி வந்தான். அவ்வரசன் மகள் கனகமாலை என்பாளுக்கும் சீவகனுக்கும் கருத்தொருமை எய்த, அரசன் தன் மக்கட்கு இவன் வழங்கியுள்ள பயிற்சிச் சிறப்புக்கண்டு வியந்து, தன் மகளை மணம் செய்துகொடுத்தான்; இங்கேயும் சீவகன் சின்னாளே தங்கினான். இதற்கிடையே இவன் உயிரோடிருப்பதை இராசமாபுரத்தே யிருந்த காந்தருவத்தை தன் விஞ்சையாலுணர்ந்து, சீவகன் தம்பியான நந்தட்டன் என்பவனை விஞ்சையால் ஏமமாபுரத்தை அடையுமாறு செய்தனள். நந்தட்டன் சீவகனுடன் இருந்து வந்தான். பதுமுகன் முதலிய (சீவகன்) தோழர்கள் இவனைத் தேடிவருங்கால், தண்டக வனத்துத் தவப்பள்ளியில் விசயையைக் கண்டு அளவளாவிக்கொண்டு இவ் வேமமாபுரத்தை யடைந்து, நிரை கவர்வார்போல் போர் தொடங்கிச் சீவகனையடைந்து தாம் விசையையைக் கண்ட செய்தியைக் கூறினர். சீவகன் அவர் அனைவரையும் அரசனுக்கும், அவன் மக்கட்கும், கனகமாலைக்கும் அறிவித்து அவர்பால் விடைபெற்றுவந்து விசயை யடி வீழ்ந்து வணங்கினன்.
விமலை திருமணம்
மகனைக் கண்டு மனம் மிக மகிழ்ந்த விசயை, சீவகனை உடனே விரைந்து சென்று, மாமனான கோவிந்தராசனைக் கண்டு, அவன் துணைபெற்றுக், கட்டியங்காரனை வெல்ல வேண்டுமெனப் பணித்தனள். அப் பணியை மேற்கொண்டணம், ஸ்ரீபுராணம் என்பன மணிப்பிரவாள நடையிலும் உள்ளன என்பர். இவற்றுள் தேவரியற்றிய சிந்தாமணிக்குக் காலத்தால் முற்பட்டன இவை, பிற்பட்டன இவை என்பது நன்கு காணப்படவில்லை. சைனருட் சிலர் சத்திய சிந்தாமணி இதற்கு முதல் நூல் என்கின்றனர். மற்று, இதனைத் தேவரும் எடுத்தோதவேயில்லை. "சிந்தாமணியின் சரிதம் சிதர்ந்தேன்", இதனைத் "தெருண்டார்" ஏற்றுக் கொண்டனர் என்றே கூறுதலால், சீவகன் வரலாறு தேவர் காலத்தே சமணருலகத்தில் பயில வழங்கிய தென்பதுமட்டில் இனிது தெரிகின்றது.
சீவகன் பிறப்பு
கோடாத செங்கோல் குளிர்வெண்குடைக் கோதை வெள்வேல்
ஓடாத தானை உருமுக்குரல் ஓடை யானை,
வாடாத வென்றிமிகு சச்சந்தன் என்ப மன்னன்;
வீடாத கற்பின் அவன்தேவி விசயை யென்பாள்.
இதன்கட் கூறிய சச்சந்தனுக்கும் விசயைக்கும் பிறந்த மகன் சீவகன். இவன் பிறந்த அன்றே சச்சந்தன் இறந்தான்; இவனும் தன்னைப் பெற்ற தாயை விட்டுப் பிரிந்து கந்துக்கடன் என்பவனால் வளர்க்கப்பட்டான். அச்சணந்தி என்ற பெரியோன்பால் எல்லாக் கலைகளும் கற்றான்; ஒப்பாரும் மிக்காரும் இல்லாத உயர்தனித் தோன்றலாய்ச் சீவகன் விளக்கமுற்றான். விசயை செய்வமொன்றின் துணையால் தண்டக வனத்துத் தவப்பள்ளியில் தன் மகன் வாழ்க என நோன்பு நோற்கலுற்றாள்.
வளர்ப்பு
சீவகன் கலைபலவும் கற்றபின், ஆசிரியனால் தன் பிறப்பு வரலாறு உணர்ந்தான். ஆசிரியன் பணித்ததனால், ஏற்ற காலம் வருமளவும், தன் பிறப்பு உண்மையினை வெளிப்படாவாறு மறைத்துக்கொண்டான். தந்தையாய் வளர்த்த கந்துக்கடன்பாலும், அவன் மனைவி சுநந்தைபாலும் மாறா அன்பு பூண்டொழுகினான். இவனுக்குரிய அரசுரிமையைத் தனக்கே யாக்கிக்கொண்ட கட்டியங்காரனே ஆட்சி செலுத்தி வந்தான். அந்த நகரின்கண்ணே சீவகனும் வளர்ந்து சிறப்புற்றான்.
கோவிந்தை திருமணம்
சீவகன் சிறப்புற்று வரும் நாளில், இராசமாபுரத்து ஆயர் நிரைகளைக் கவர்ந்து சென்ற வேடர் கூட்டத்தை அரசன் தானை வீரர் வெல்லமாட்டாது முதுகிட்டோட, சீவகன் தன் தோழருடன் சென்று, "ஆளற்ற மின்றி" வேடருடன் பொருது துரத்திவிட்டு, ஆனிரையை மீட்டுத்தந்து, ஆயர் தலைவனான நந்தகோன் என்பவன் மகள் கோவிந்தை யென்பவளைத் தன் தோழருள் ஒருவனான பதுமுகனுக்குத் திருமணம் செய்வித்தான்.
காந்தருவதத்தை திருமணம்
அவ்விராசமாபுரத்தே வாழ்ந்த சீதத்தன் என்னும் வணிகன், தன்பால் கலுழவேகன் என்னும் விஞ்சையர் வேந்தன் அடைக்கலப்படுத்திய அவன் மகள் காந்தருவ தத்தையை இசைப்போர் செய்து வெற்றி பெறுவோனுக்குத் திருமணம் செய்து தருவதாகத் தெரிவிப்ப, அப்போரில் அரசர் பலரும் தோற்றது கண்டு, சீவகன் சென்று அவளைத் தோல்வியுறுவித்து மணம் செய்து கொண்டான்.
குணமாலை திருமணம்
அந் நகரமாந்தர் வேனிற்காலத் தொருநாள் பொழில் விளையாடிப் புனலாட்டயர ஒரு பூம்பொழிலுக்குச் சென்றிருந்த பொழுது, குணமாலை சுரமஞ்சரி என்ற இரண்டு செல்வ மங்கையர், சுண்ணப்பொடி காரணமாகத் தம்முள் நட்பு மாறுபட்டுப் பிரிந்தேகினர். அவருள் சுண்ணத்தால் மேம்பட்ட குணமாலை நீராடிவிட்டு வரும்போது, அசனிவேகம் என்னும் அரச யானை, மதம் மிக்க அவளைக் கொல்ல ஓடிவரவே, அது கண்ட சீவகன், அவ் யானையை அடர்த்து, சீவகன், இராசமாபுரத்தை யடைந்து, தோழரை ஓரிடத்தே இருக்கவைத்துத் தான் வேற்றுருக்கொண்டு நகர்க்குள் நுழைந்தான். நுழைந்தவன், அந் நகரத்துச் சாகரதத்தன் என்னும் வணிகன் கடையை அண்மினான். அப்போது, அவ் வணிகன் மகள் விமலை யென்பவள், பந்தாடிக்கொண் டிருந் தவள், சீவகனைக்கண்டு வேட்கை கொண்டாள். இவனும் அவள்பால் வேட்கை மிகுந்தான். இதற்குள் அவன் கடை யில் விலையாகாமலிருந்த சரக்கு விலையாகிவிட்டது. "மகட் குக் கணவன் வருங்கால் விலையாகாப் பண்டம் விலையாகி விடும்" என்று சாகரதத்தன் மகளது குறிப்புக் குறித்தோர் கூறியிருந்தமையின், அவன் சீவகனுக்கு அவளை மணம் செய்துவைத்தான். சீவகன் அவளுடன் இரண்டு திங்கள் இருந்தான்.
சுரமஞ்சரி திருமணம்
பின்பு அவன் தன் தோழரை யடைந்தான். அவர்கள், குணமாலையுடன் பிணங்கி நீங்கிய சுரமஞ்சரி "ஆடவர் முகத்தையும் பாரேன், அவர் பெயரையும் செவிகொடுத்துக் கேளேன்" என்று நோன்பு பூண்டிருப்பதைத் தெரிவித்து அவளை மணந்து வருமாறு தூண்டினர். சீவகன் முதியவொரு வேதியன் வடிவுகொண்டு சுரமஞ்சரியின் கன்னிகா மாடம் அடைந்து, கவர் பொருள்பட இனிய சொல்லாடி, பாட்டிசைத்து, அவளைக் காமன் கோட்டத்துக்குச் செல்வித்துத் தானும் உடனே சென்று தோழர் சூழ்ச்சியால் மணந்து கொண்டான்.
இலக்கணை திருமணம்
பின்பு, சீவகன் குதிரை வாணிகன் வடிவுபூண்டு விதைய நாட்டினையடைந்து, தன் மாமன் கோவிந்தராசனைக் கண்டு, கட்டியங்காரனை வெல்லற்கு வேண்டியதைச் சூழலுற்றான். கோவிந்தராசனும் கட்டியங்காரன் தனக்கு வஞ்சனையாக விடுத்திருந்த ஓலையைக்காட்டினான். பின்னர் திரிபன்றியொன்றை நிறுவி, "இதனை அம்பெய்து வீழ்த்துபவர்க்கு என் மகள் "இலக்கணை உரியள்" என்று கோவி்ந்தராசன் அரசர்கட்கும் கட்டியங்காரனுக்கும் ஓலை விடுத்தனன். அரசரும் கட்டியங்காரனும் அவன் மக்கள் நூற்றுவரும் வந்து கூடி அத் திரிபன்றியை வீழ்த்தமாட்டாராய் மெலிவுற்றனர். சீவகன் அதனை வீழ்த்தி வென்றிகொண்டான். அவன் இன்னான் என்பதைக் கோவிந்தராசன் வேந்தர் பலருக்கும் அறிவித்தான். வானிடத்தே, ஓர் இயக்கன் தோன்றி, "சீவகன் என்னும் அரிமா கட்டியங்காரன் என்னும் யானையின் உயிரைச் செகுக்கும்" என்று கூறினான். கட்டியங்காரன் சினங்கொண்டு போருக்கு எழுந்தான். அவன் படையெழுந்தது; மக்கள் எழுந்தனர். போர் மிகக் கடுமையாக நடந்தது. போரில் கட்டிங்காரன் பட்டழிந்தான். அவன் தானை பட்டது. மக்களும் பட்டனர். விசயை கேட்டு மிக்க மகிழ்ச்சி எய்தினாள்.
பின்பு சீவகன் ஏமாங்கத நாட்டுக்கு அரசனாய் மணிமுடி புனைந்துகொண்டு தம்பியர்க்கும் தோழர்க்கும் செய்தற்குரிய சிறப்புகளைச் செய்தான். கோவிந்தராசன் மகள் இலக்கணையாரையும் அரசற்குரிய முறைப்படியே திருமணம் புரிந்தான்.
சீவகன் துறவு
சீவகன் நாடாட்சி புரிந்து வருகையில் விசயமாதேவி துறவு பூண்டாள். சீவகன் மனைவியரான காந்தருவதத்தை முதல் இலக்கணை ஈறாக உள்ள மனைவியர்பலரும் முறையே நன்மக்களைப் பயந்தனர். அவர்களும் செவ்வியராக வளர்ந்து சிறப்பெய்தினர். சீவகனுக்கும் முதுமை யெய்தலுற்றது. ஒருநாள் சோலைபுக்கு இனிதிருந்த சீவகன் ஆங்கு நிகழ்ந்த நிகழ்ச்சி யொன்றைக் கண்டு துறவு பூணத் தொடங்கினான். தன் மூத்தமகன் சச்சந்தனை அரசனாக்கி, ஏனைத் தம்பியரை அவனுக்கு உரியராக்கினான். பின்பு முனிவர்களைக் கண்டு நல்லறம் கேட்டு, நற்றுறவு மேற்கொண்டு, நோன்பு பல ஆற்றி, கடையிலா இன்ப நிலையாகிய சிவகதி பெற்றான். அவன் மனைவியரும் அவன் பிரிவு ஆற்றாது வருந்திப் பின்பு துறவு பூண்டனர்.
நூலின் நோக்கம்
இனி, இந்நூலாசிரியர் இந்நூலைச் செய்தற்குக்கொண்ட நோக்கம் இஃது எனக் காண்டல் வேண்டும். திருத்தக்க தேவர் இந்நூலைத் தொடங்குங் காலத்தே, தம் ஆசிரியர் அருள் பெற்றுப் பாடி, முடிவில் அவர்கட்குக் காட்ட, அவர் இந்நூலின் சொற்பொருள் நலங் கண்டு வியந்து, "சிந்தா மணி யோதியுணர்ந்தார் கேட்டார் இந்நீரராய் உயர்வர்" "பூந்தாமரையாள் காப்பாளாம்" என்று பாராட்டினர். தேவரும் "ஐயனே நின்பாதம் ஏத்தி, சிந்தாமணியின் சரிதம் சிதர்ந்தேன்; தெருண்டவர் நன்றென்று மேற் கொண்டனர்" என்று கூறினர். நூன்முடிவில் இவ்வாறு தேவருக்கும் அவர்தம் ஆசிரியருக்கும் இன்பவுரையாட்டு நிகழக் காண்கின்றேம். நூலின் தொடக்கத்தும் நூல்செய்யும் தம் கருத்தையும் தேவர் இனிது விளங்கக் கூறுகின்றாரில்லை.
கேள்வி வழியாக வழங்கும் வரலாறு "சமண முனிவர் காமச்சுவை முற்றும் கனியக் கவிபாடும் வன்மையுடை யார்" என்பதனை நிலைநாட்டுவது கருத்தாகக் கொண்டு தேவர் இந்நூலினை எழுதினார் என்று கூறுகின்றது. இதுவே தேவர்க்குக் கருத்தென்பதனை அவர் தாமே எவ் விடத்தும் இனிது விளங்கக் கூறினாரில்லை. நூற் புணர்ப்பும் அக் கருத்தை வற்புறுத்தவில்லை.
நூற்புணர்ப்பு ஆராய்ச்சி
சச்சவந்தன் விசயைபாலும், கட்டியங்காரன் அநங்கமாலை என்னும் பரத்தைபாலும் சீவகன் காந்தருவத்தை முதலிய மகளிர்பாலும் தேசிகப் பாவை முதலிய பரத்தையர்பாலும் காமவின்பம் துய்த்த செய்தியே இச் சிந்தாமணிக்கண் காணப்படும் காமப் பகுதிகளாகும். காமக் காதலுற்ற இருவர், ஒருவரையொருவர் காண்டலும் காதல் கொளலும் இடையீடின்றிக் கூடலும் நிகழ்த்துவரேல் அவரது இன்பம் கேட்போருக்கும் கற்றறிவோருக்கும் சீரிய இன்பம் தருவதாகாது. காதலிருவர் தம்மிற்கூடி இன்பம் சிறத்தலும்,. இடையீடுபட்டுத் துயருறுதலும், பின்னர் அது நீங்கலும், இருவரும் கூடி இன்புறுதலும், காமச்சுவை கனிய யாக்கும் நூல் யாப்புக்குச் சிறந்தனவென்பது யாவரும் கண்ட நூற் புணர்ப்பாகும். இப்பெற்றித்தாய நூற்புணர்ப்பு இந் நூற்கண் யாண்டும் இல்லை. காம வயப்பட்ட காதலர் ஒருவரும் தம் காதலொழுக்கம் இடையீடுபட்டதாக இந் நூல் கூறுகின்றதில்லை. காதற்காம நெறியாகிய கள வொழுக்கத்தே பல முட்டுப்பாடு நிகழாதவழி, இன்பம் சிறவாது என்ற மெய்ம்மை நெறியைத் தமிழ் இலக்கணம் இற்செறிப்பு, சேட்படை முதலியவற்றை இடையீடாகத் தொடுத்துக் கூறுகிறது. "பல்முட்டின்றால் தோழிநம் கனலே" எனப் பரணர் முதலாயினாரும் விளக்கியுள்ளனர். மேனாட்டு ஜான்ஸன் முதலிய பேராசிரியர்களும் இக் கருத்தே இன்பச் சுவை மிகவுரைக்கும் நூற் புணர்ப்புக்கு இன்றியமையாததென இயம்பியிருக்கின்றனர். * தமிழ் நூல் துறையும் பிர வடமொழித் துறையும் நன்கு உணர்ந்த தேவர்க்கு, இந்நெறி தெரியாததன்று. ஆகவே, திருத்தக்க தேவர், " சமணமுனிவர்க்குக் காமச்சுவை கனியப்பாடும் திறனுண்டு" என்பதை நிலைநாட்டப் பாடினார், என்னும் செய்தி சிறிதும் பொருந்துவதன்று. அஃது உண்மையாயின், திருத்தக்கத்தேவர் "காமச்சுவை கனியத் தொடர்நிலைச் செய்யுள் யாக்கும் துறையில் படுதோல்வி எய்தினார்" என்பதே துணிவாம். சீவகன், சச்சந்தன், பதுமுகன், கட்டியங்காரன் முதலாயினார் காமவின்பம் துய்த்தநெறி கூறுமிடத்தும் தேவரது புலமைத்திறம் கற்பார் அறிவிற்கு அறிவின்பம் தரும் நெறியில் அமையவில்லை. இதனாலும் தேவர் காமச் சுவை கனியப் பாடவேண்டுமென இந்நூலைப் பாடினர் என்பது பொருந்தாமை இனிது துணியப்படும். ஈண்டு அப் பொருந்தாமையினை எடுத்தோதின் பெருகும்.
---------
* Johnson's preface to Shakespeare.
மணநூல் என்னும் கொள்கை
இனி, இந்நூலை, " மணநூல்" என்று அறிஞர் வழங்குவர். சீவகன் காந்தருவதத்தை முதலிய மகளிரைத் திருமணம் செய்து கொண்ட செய்தி பெரிதும் கூறப்படுவதேயன்றி, அவன் கல்விபயின்று சிறந்த செய்தி கூறுமிடத்தும்; சிவநெறி பெற்ற செய்தி கூறுமிடத்தும், அவற்றைத் திரு மணமாகவே கூறியுள்ளனர். சீவகன் கல்வியறிவு பெற்ற செய்தியை, "குழைமுக ஞான மென்னும் குமரியைப் புணர்க்கலுற்றார்" என்றும், அவன் ஏமாங்கத நாட்டின் அரசேற்று முடிபுனைந்து கொண்ட செய்தியை, "பொருவில் பூமகட் புணர்ந்தனன்" என்றும் அவன் சிவநெறிக்குரிய பரி நிருவாண மெய்திய செய்தியை
"கேவல மடந்தை யென்னும் கேழ்கினர் நெடிய வாட்கன்
பூலவர் முல்லைக் கண்ணிப் பொன்னொரு பாக மாகக்
காவலன் தானொர் கூறாக் கண்ணிமை யாது புல்லி
மூவுல குச்சி யின்பக் கடலினுள் மூழ்கி னானே"
என்றும் கூறியிருத்தலால், இதனை "மணநூல்" என அறிஞர் வழங்கும் பெயர் மிகப் பொருத்தமாகவே யுளது.
இல்லிருந்து செய்தற்குரிய இல்லறத்தையும், அதனைத் துறந்து செய்தற்குரிய துறவறத்தையும் காமக்கூட்டமாக வைத்துப் புணர்த்த திறத்தால் காமச்சுவை கனியப் பாடினார் திருத்தக்க தேவர் என்பது கருத்தாயின், காமக் கூட்டத்தின் சிறப்பை அவர் நன்கறிந்து பாடினாரில்லை என்பதே துணிபாம். இடையீடில் வழிக் காமம் சிறவாசென்பது, "அலரிற் றோன்றும் காமத்திற் சிறப்பே" என்ற நூற்பாவினை துணுகி நோக்கியவழிப் புலனாகும்.
சமயநுண் பொருள் கூறல்
இனி, தேவரது கருத்துத்தான் யாதோ வெனின் கூறுதும்: தேவர் காலத்தே வேத வழக்கொடு பட்ட வைதிக சமயம் தமிழ் நாட்டில் நன்கு வேரூன்றி வேற்றுச் சமயங்கள் இடம் பெறாவகையில் தகைந்துகொண்டிருந்தது. மக்கள் மனத்தே அவ்வைதிகநெறி பற்றிய வரலாறுகளும் கொள்கை களுமே பதிந்திருந்தன. அகப்பாட்டாராய்ச்சியும், அதன் வழிப்பெறு மின்பமும் அறிஞர் அறிவைப் பணிகொண் டொழிழுன. அவரைத் தம் வயமாக்கி அவருள்ளத்தே தாமுணர்த்தக் கருதிய சமண்சமயக் கருத்துக்களை யுணர்த்துதற்கு வேறு வாயில் காணாது, இந்நூற் புணர்ப்பினைத் தேவர் மேற்கொண்டனர் என்பது துணிபாம்.
இனி, தேவர், இத் தொடர்நிலைச்செய்யுள் யாப்பின்கண் இடையிடையே பல்வகை நிலையாமைகளையும் வினைத்தொடர் பின் வீறுபாட்டினையும் தெளித்துச்சென்று சீவகன் முத்தி பெற்ற செய்தி கூறும் இலம்பகத்தே அவற்றை நன்கு வற்புறுத்திச் சமண் சமயக் கருத்துக்களை இனிய பாக்களால் அரிய சொற்பொழிவு செய்து முடிக்கின்றார்.
மணிமேகலையில் ஆதிரை என்பானது கணவன் சாதுவன் என்போன் நாகர்வாழ் மலைப்பக்கம் சார்ந்து அவர் பான்மையனாகியபோது நாகர் தலைவனுக்கும் சாதுவனுக்கும் கள்ளும் ஊனும் உண்டலைப் பற்றியதொரு சொல்லாட்டு நிகழ்கின்றது. அவ்வாறே சீவகன் சுதஞ்சணன்பால் விடை பெற்றுப் பல்லவ நாட்டை நோக்கி வருங்கால், காட்டிடையே வேட்டுவர் தலைவன் ஒருவனைக் கண்டு,அவனோடு கள்ளுண்டல், ஊனுண்டல் என்பவற்றைப் பேசி அவனைத் தெருட்டுகின்றான்.
கிளைக் கதைத் தொடர்பு
இவ்வாறு, இந்நூற்கண் கிளைக் காதைகள் சில வருகின்றன. நாய் தேவனானது, வேட்டுவர் தலைவனைக் கண்டது, அரங்கமாவீனை அலமந்து தெருண்டது, தேசிகப்பாவை அனங்கமாலைபால் தோழியாய் அமைவது முதலியனவாகும். இவற்றைச் சீவகன் வரலாற்றுடன் இணைக்கும் திறம் ஆசிரியரது புலமை நலத்தை மிகுவிக்கின்றது. நாய் தேவனான கதை சுதஞ்சணனால் சீவகன் கட்டியங்காரன் கையகப்படாது நீங்கி ஏனை மகளிரை மணத்தற்கு வாயிலமைக்கின்றது. அசனிவேகம் மதம்பட்டது, குணமாலைக்கும் சீவகற்கும் காதலுண்டாக்கியதோடு , கட்டியங்காரற்குச் சீவகன்பால் செற்றம் நிகழ்விக்கிறது. வேட்டுவர் தலைவனைச் சீவகன் காண்பதும், அனங்கமாவீணை அலமந்து தெருள்வதும் சீவகன் வரலாற்றிற்கு நயம்பயக்கும் இயைபுடையதல்ல. சீவகன் பதுமையாரை மணந்த கதைக்கு, ஆசிரியர் சீவகனைக் கூத்தரரங்கத்தே கண்டு நிறுத்தி, தேசிகப்பாவையின் சிந்தையை நெகிழ்வித்து, அதுவாயிலாக, சீவகற்கும் உலோகபாலற்கும் தொடர்பு உண்டுபண்ணுகின்றார். இன்றேல், சீவகன் பதுமையை மணத்தற்கு ஏது அமையாது போலும்! அநங்கமாலை சீவகன்பால் காதலுற்றாளை வலிதிற் பற்றிக் கூடினான் கட்டியங்காரன் என்றவர், தேசிகப் பாவை சீவகன்பாற் கொண்ட காதற்பெருக்கை, பதுமையை மணந்திருந்த ஞான்று காவிற்கூடிக் கரைகண்டு, சீவகன் மணி முடி சூடி அரசிருந்த நாளில்அநங்கமாலையின் தோழியாய்ப் போந்து அவனைக் கூடித் தணித்துக்கொள்ளச் செய்கின்றார். பல்வேறு கதை நிகழ்ச்சிகளால் எடுத்த வரலாற்றைச் சிக்குப் படுத்தி, படிப்படியாக அச் சிக்கலையறுத்து முடிவெய்துவிக்கும் நூற்புணர்ப்பு முறை இக் காவிய காலங்களிலாதல், பின் வந்த புராண காலங்களிலாதல் நம் நாட்டில் புலவர் மனத்தே இடம் பெறவில்லை. சங்க காலத்திருந்த இடையீட்டுச் சிக்கல் நெறி எதனால் இவற்றுள் இல்லாதாயிற்று என்பது விளங்கவில்லை. இடையூறு படுதலும் அது நீங்கித் தெளிவுறுதலும் அறிவுக்கு இன்பந்தருவன வென்பது காவிய ஆராய்ச்சியாளர் கருத்து.
ஆடவர் பெண்டிர்களின் குணஞ்செயல் காண்டல்
இக் காவியத்தின்கண் வரும் சிறப்புடைய ஆடவர் பெண்டிர்களின் பண்பினைச் சிறிது காண்பாம்.
சச்சந்தன்:
சச்சந்தன் என்பான் சீவகனுக்குத் தந்தை. இவன்,
"தருமன் தண்ணளி யால்; தனது ஈகையால்
வருணன்; கூற்றுஉயிர் மாற்றலில்; வாமனே
அருமையால்; அழ கில்கணை யைந்துடைத்
திருமகன்; திரு மாநில மன்னனே"
அருமையால் இவன் வாமனேயாயினும், பெண்ணின்பத்துள் மூழ்கி, அரசியற்றும் தன் உறுதொழிலைத் தாங்கமாட்டாது, அமைச்சன்பால் வைத்து உயிர் துறக்கின்றான். அமைச்சனான கட்டியங்காரனை அரசனாக்குதற்கெண்ணி, அவன்பால் தன் கருத்தைச் சொல்லுங்காலும், பெண்ணின்பத்தையே பெரிதும் நினையும் நினைவால், தன் மனைவி விசயை,
"வசையிலாள் வரத்தின் வந்தாள்;
வான்சுவை யமிர்தம் அன்னாள்;
விசையையைப் பிரித லாற்றேன்"
என்றே விதந்தோதி, "நீ வேந்தனாகி வையம் காத்தல் வேண்டும்" என்கின்றான். இவனை, ஏனை யமைச்சர் தெருட்டிய காலத்தில், காமச் செருக்கால் கருத்திழந்து,
"எனக்குயி ரென்னப் பட்டான் என்னலால் பிறரை யில்லான்
முனைத்திறம் முருக்கி முன்னே மொய்யமர் பலவும் வென்றான்
தனக்குயான் செய்வ செய்தேன் தான்செய்வ செய்க ஒன்றும்
மனக்குஇன்னா மொழிய வேண்டா வாழியர் ஒழிக"
என்று கூறுகின்றான். பின்பு விசயை கனவு கண்டு கூறியது கேட்டு, "எந்திர வூர்தி யியற்றுமின்" என ஏற்பாடு செய்த இவனது அறிவு, இப்போது மழுங்கியதற்கு, அவனது காமக் களிப்பே காரணமாகின்றது. "காதல் மிக்குழிக் கற்றவும் கைகொடா வாதல் கண்ணகத் தஞ்சனம் போலுமால்" (சீவக. 1632) எனப் பிறிதொரு காலத்தே சீவகன் தெளிந்து தனக்குள் உரைத்துக்கொள்ளும் இலக் கணத்துக்கு இவன் இலக்கியமாகின்றான். ஆயினும் இதற்கு ஏதுக் கூறப்போந்த திருத்தக்கதேவர்,
"இனமா மென்றுரைப் பினும்ஏ தமெணான்,
முனமா கியபான் மைமுளைத் தெழலால்;
புனமா மலர்வேய் நறும்பூங் குழலாள்
மனமா நெறியோ டியகா வலனே"
என்கின்றார்.
இவ்வாறு முதற்கண் மழுங்கிய சச்சந்தன் அறிவு, விசயை கண்டு கூறிய கனவால் எந்திரவூர்தி இயற்றச் செய்ததே யன்றிக் கட்டியங்காரனை விலக்கி அரசுரிமை அடைவியா தொழிகின்றது. கட்டியங்காரன் வளைத்துக்கொண்ட போதுதான் சச்சந்தன் தெளிவடைகின்றான். செல்வம், யாக்கை இளமை முதலியவற்றின் நிலையாமை அவற்குப் புலனாகின்றது. "நங்கைநீ நடக்கல் வேண்டும்; நன்பொருட் கிரங்கல் வேண்டா", "உரிமைமுன் போக்கி யல்லால் ஒளியுடை மன்னர் போகார்; கருமம் ஈது" என்றெல்லாம் கழறிக் கூறுகின்றான்.
சீவகன்:
இனி, சச்சந்தனது காமக் கள்ளாட்டின் பயனாகத் தோன்றிய சீவகன் வரலாறு முழுதும் அக்காமக் கூத்தே பெரிதும் நடைபெறுகிறது. சீவகனை வளர்த்த கந்துக்கடன் தன் மனைவி சுநந்தையுடன் கூடிச் சீவகற்குக் கல்வி கற்பித்த செய்தியையும், காமக் குறிப்பே நிலவத் திருத்தக்கதேவர் "மழலையாழ் மருட்டுந் தீஞ்சொல் மதலையை, மயிலஞ் சாயல் குழைமுக ஞான மென்னும் குமரியைப் புணர்க்க லுற்றார்" என்றே கூறுகின்றார். இவ்வாறு கல்வி பெற்ற சீவகன் காந்தருவதத்தையை வென்று மணந்து, "அலமரல் இலாத இன்பக் கடலகத் தழுந்தி" னவன், குணமாலையை அசனி வேகத்தினின்றும் காத்து உயிர் வழங்கித் தன் மனையேகி அவனது உருவமெழுதிக் காமக் கனலால் வெதும்புகின்றான். ஆண்டுப் போதரும் தத்தை அவ் வுருவு கண்டு புலந்த போது,
"பாவைநீ புலவியில் நீடல் பாவியேற்கு
ஆவியொன்று இரண்டுடம் பல்லது"
எனப்பொய்யும் கவர் பொருளும் எய்தப் பேசுகின்றான். பின்பு, பதுமையை நோக்கி, அவளுற்ற விடநோய் நீக்கி நலஞ் செய்தவன், அவள் பார்வையால் காமக் கொதிப் பெய்தி,
போது லாஞ்சிலை யோபொரு வேற்கணோ
மாது லாமொழி யோமட நோக்கமோ
யாதும் நானறி யேன்அணங் கன்னவன்
காத லால்கடை கின்றது காமமே.
என்று தன்னுட் கதறுகின்றான். இவ்வண்ணமே சென்ற விடமெங்கும் பல மகளிரை மணந்து கூடியவன், சுரமஞ்சரி என்பவளையும் தன் தோழரால் "காம திலகன்" என்ற சிறப்புப்பெய ரெய்துவதற்காக, வேற்று வடிவம் கொண்டு சென்று காதற்காமம் சிறந்து கடிமணம் செய்துகொள்ளுகின்றான். முடிவில் சீவகன், பரி நிருவாணமென்னும் கேவல ஞானத்தை யெய்தியதையும் ஆசிரியர் கேவல மடந்தை யென்னும் மங்கையைக் "கண்ணிமையாது புல்லி, மூவுலகுச்சி யின்பக் கடலினுள் மூழ்கி னானே" என்கின்றார்.
இவ்வாறு காமமே கன்றிய உருவினனாக வரும் சீவகன் பால் அறம் திறம்பிய காமம் சிறிதும் இல்லை யென்பது அநங்கமா வீணையென்பாள் வரலாற்றாலும், கோவிந்தை யாரைப் பதுமுகனுக்கு மணம் செய்த வரலாற்றாலும் விளங்குகின்றது. மேலும், அந்தணர்க்காக்கிய சோற்றை நாய் கதுவிற்றென அவர்கள் அதனைப் புடைத்துக் கொன்றதும்; அதற்குரிய களிமகன் அந்தணரை அலைத்ததும் சீவகன் கண்டு, அந்தணரைக் காத்தும், களிமகனை விலக்கி யும், நாய்க்கு அருமறை வழங்கியும் தன் உயர் குணத்தை வெளிப்படுக்கின்றான். கேமசரியை மணந்து அவளிடம் சொல்லாது பிரிந்து சென்ற சீவகன் வழிப்போக்கன் ஒருவற்கு அறம் கூறித், தன் ஆடையணிகலன்களைக் கொடுத்து நீங்குகின்றான். இவற்றாலெல்லாம் இவனது அறவுணர்ச்சி விளங்கு மேனும், சித்திரகூடத்துத் தவப்பள்ளியில் மகளிரொடு வாழ்ந்த துறவிகட்கும், வழிப்போக்கனுக்கும், பவதத்தனுக்கும் மகளிரின் மனப்புன்மை கூறித் தெருட்டிய இச் சீவகன், தான் மட்டில் பலமகளிரைக் கண்டு காமத்தால் நயந்து மணந்து கூடிச் சிலர்பால் சொல்லியும், சிலர்பால் சொல்லாமலும் பிரிந்தேருகின்றான். இவன் மனப் புன்மையை ஆசிரியர் எடுத்தோதாதொழிவது என்னோ? நூலுடைத் தலைமகன்பால் குற்றம் காண்டல் கூடாது என்பது பற்றிப் போலும்!
இனி, சீவகனது போர்வன்மை மிக இனிதாகக் கூறப்படுகிறது. குணமாலையை யழித்தற்குச் சென்ற அசனிவேகம் என்கிற யானையைச் சீவகன் அடர்த்த திறம்,
மல்லல் நீர்மணி வண்ணனைப் பண்டொர்நாள்
கொல்ல வோடிய குஞ்சரம் போன்றதுஅச்
செல்வன் போன்றனன் சீவகன் தெய்வம்போல்
பில்கு மும்மத வேழம் பெயர்ந்ததே.
எனக் கண்ணன் மேல் வந்த குவலையாபீடமென்னும் களிற்றை அவன் வென்ற செய்தியால் உவமித்துக் காட்டப் படுகிறது.சீவகனது வில்வன்மையை வியந்த விசயன் என்பான், "மராமர மேழு மெய்த வாங்குவில் தடக்கை வல்வில், இராமனை வல்லனென்பது இசையலாற் கண்டதில்லை; உராமணம் இவன்கண் இன்றி உவக்குமா செய்வல்" எனத் தனக்குள் கூறிக் கொள்வதனாலும், நிரை கவர்ந்த வேட்டுவரைச் சீவகன் "ஆளற்றமின்றிப்" புறங்காண்பதனாலும், கட்டியங்காரனை, "மையார் விசும்பின் மதி வீழ்வதுபோல" வீழ்த்தலாலும் அவனது வில்வன்மை விளக்கப்படுகிறது. இவை தவிர, ஒரு காவியத் தலைவற்குரிய தலைமைப் பண்புகள் பலவும் பல்லாற்றாலும் உரைக்ப்கபடுகின்றன்.
சீவகன் விசயமாதேவி துறவு பூண்டு தண்டாரணியத்துத் தவப்பள்ளியி லிருத்தலைத் தோழரா லுணர்ந்து, ஆங்குச் சென்று கண்டு வணங்கி நின்றபோது, விசயைக்குத்
தேற்றரவு கூறுவான்:
"கெடலருங் குரைய கொற்றம்
கெடப்பிறந் ததுவு மன்றி
கடலையுள் அடிகள் வைக
நட்புடை யவர்கள் நைய
இடைமகன் கொன்ற இன்னா
மரத்தினேன் தந்த துன்பக்
கடலகத் தழுந்த வேண்டா
களைக இக்கவலை யென்றான்"
இதனைக் கேட்ட விசயை, ஒருவாறு தேறி,
"யானலன் ஒளவை யாவாள் சுநந்தையே ஐயற் கென்றும்
கோனலன் தந்தை கந்துக் கடன்எனக் குணத்தின் மிக்க
பானிலத் துறையுந் தீந்தேன் அளையவாய் அமிர்த மூற
மானலங் கொண்ட நோக்கி மகன்மனம் மகிழச் சொன்னாள்"
என்று கூறியதைத் தெளிவுறக்கேட்டு உளம்கொண்ட சீவகன், பின்பு, விசயையுடன் சுநந்தையும் துறவு பூண்டு அவனை நீங்கியபோது, அவன் சுநந்தையை நோக்கி,
"அடிகளோ துறக்க ஒன்றும் உற்றவர் யாது மல்லர்;
சுடுதுயர் என்கட் செய்தாய், சுநந்தைநீ ஓளவை யல்லை
கொடியைநீ கொடிய செய்தாய், கொடியைஓ கொடியை என்னா
இடருற்றோர் சிங்கம் தாய்முன் இருந்தழு கின்றது"
போலக் கூறினான்.
சீவகன் தன் மனைவியர் ஊடல் தீர்த்தற்கும், பிறவற்றிற்குமாக நிகழ்த்தும் சொற்கள் மிக்க இன்பம் பயப்பனவாகும். அவற்றுள், சீவகன் கேமசரியைப் பிரியக்கருதிய அன்று, அவன் கூறும் சொற்களும், விமலையைக் கூடியிருந்த ஞான்று வேட்கை மேலிட்டுரைப்பதும், சுரமஞ்சரியுடன் சொல்லாட்டயர்தலும், பிறவும் படிக்குந்தோறும் மிக்க இன்பந் தருவன வாகும்.
இன்பத் துறையின் கண்ணே யன்றி, வேறு துறையின் கண்ணும், அஃதாவது அறவுரை வழங்கல், துயருற்றாரைத் தெளிவித்தல், உயர்ந்தோரை வழிபடல், தோழரை யளித்தல்
முதலிய துறையின்கண்ணும் சீவகனது தெளிந்த அறிவு நலம் இன்பம் பயக்கின்றது.
நந்தட்டன்:
சீவகனுடன் கந்துக்கடன் மனையில், அக் கந்துக்கடற்கு மகனாய்ச் சீவகன் வந்தடைந்த பின் பிறந்த நந்தட்டனென் பான் ஒள்ளிய தம்பியர்க்குரிய உயர்குணனும், கடமையுணர்வும் மிகக்கொண்டு விளங்குகின்றான்.
குணமாலையை மணந்தபின் சீவகன் காணாமற்போனது கண்டு, அவன் தம்பியரும் தோழரும் கலக்கமுற் றிருக்கையில், நந்தட்டன் காந்தருவத்தை மனையை யடைந்து சீவகனிருப்பை அறியக் கருதியபோது, அவன், கவலையின்றியிருப்பது கண்டு வியப்பும் மருட்கையும் கொண்டு, மூன்று விற்கிடை நீளத்தே நின்று, உயரிய உணர்வும் ஒழுக்கமும் தோன்ற,
"பொறிகுலாய்க் கிடந்த மார்பின் புண்ணியன் பொன்றி னானேல்
வெறிகுலாய்க் கிடந்த மாலை வெள்வளை முத்தம் நீக்கி
நெறியினால் நோற்றல் ஒன்றோ நீள்எரி புகுதல் ஒன்றோ
அறியலென் கொழுநன் மாய்ந்தால் அணிசுமந் திருப்பது?"
என்று வினவுகின்றான். இவன் தம்பிமாரான நபுல விபுலர்களும் போரற நெறியினும் பிறவற்றினும் நிகரின்றி விளங்குகின்றனர்.
சீவகன் தோழர்:
சீவகன் தோழன்மாருள் பதுமுகன், புத்திசேனன் என்ற இருவரும் சீவகனைக் காண்டற்குச் செய்யும் சூழ்ச்சிகளும், போர் செய்யுந் திறங்களும் படிக்கின்றவர் உள்ளத்தே பெருமிதத்தைப் பயக்கின்றன.
கட்டியங்காரன்:
இனி, கட்டியங்காரன் சச்சந்தனுக்கு உயிர்த்துணைவனாய் இருந்தவனென்பது "எனக்குயிர் என்னப்பட்டான் என்னலால் பிறரையில்லான்" என்று அவனால் போற்றப் படுதலால் தெரிகிறது. இவனது "வெளிறிலாக் கேள்வி" சச்சந்தனைக் கொல்லற்குச்செய்யும் சூழ்ச்சியில் அத்துணைச் சீரிதாகத் தோன்றவில்லை.
"மன்ன வன்பகை யாயதோர் மாதெய்வம்
என்னை வந்திடல் கொண்டு அஃது இராப்பகல்
துன்னி நின்று செகுத்திடு நீயெனும்
என்னை யான்செய்வ! கூறுமின்"
என்று கட்டியங்காரன் சச்சந்தனைக் கோறற்கு ஏதுக்காட்டுகின்றான். இவ்வாறே, சீவகன் குணமாலையை மணந்திருக்கு ஞான்று, அவனைப் பற்றிக் கொணருமாறு மதனனைப் பணித்த காலையில், யானைப்பாகன், அசனிவேகம் சுளித்து வருந்தி நிற்றற்கு ஏது "இற்றென உரைத்தல் தேற்றேன், இறைவநின் அருளி னாங்கொல், செற்றமிக் குடைமையால் கொல், சீவக னின்ன நாளால், மற்றிதற்கு உடற்சி செய்ய மதமிது செறித்தது" என்றதுவே கொண்டு,
"மாண்டதில் செய்கை சூழ்ந்த
வாணிகன் மகனை வல்லே
ஆண்திறன் களைவன் ஓடிப்
பற்றுபு தம்மின்"
என்று கூறுகின்றான். சீவகன் தத்தையை மணந்த காலத்தும், "வானினான் மலைந்து கொள்ளின் வாழ்கதும் கலையு மாதோ" என்று ஏனை யரசரைக் கட்டியங்காரன் தூண்டிவிடுகின்றான். இவ்வண்ணம் சீவகன் பிறப்பு வரலாறு அறியா முன்பே இவன் சீவகன்பால் பகைமை கோடற்குக் காரணம் வேண்டுமன்றோ? அதற்கு நூலாசிரியர் அநங்கமாலையை அவன் வலிதிற் பற்றிக் கற்பழித்த காலத்தே, அவள் "சீவக சாமியோ" என வாய்வெருவினாள்; அதுகொண்டே அவற்குச் சீவகன்பால் பகைமை பிறப்பதாயிற் றென்றும், சீவகன் வேடரைப் புறங்கண்டு அவர் கவர்ந்த ஆனிரையை மீட்டது கேட்டு அழுக்காறு மிக்கு, அரசினை "இழந்தனன்" போலக் கருதி "என்னை வௌவும் வாயில்தான் என்னும் சூழ்ச்சி" யே கொண்டிருந்தானென்றும் கூறுகின்றார்.
கட்டியங்காரன் சச்சந்தனைக் கொன்றபின் விசயை இருப்பை நாடா தொழிகின்றான்,. அவனைப்பற்றி ஒரு சிறிதும் எண்ணுகின்றானிலலை. அவள் உடன்பிறந்தவனும் விதையநாட்டரசனுமான கோவிந்தராசனுக்கு ஒரு திருமுகம் விடுக்கின்றனன். அதன்கண், அசனிவேகம் மதம்பட்டுப் பாகர் நூற்றுவரைக் கொன்றோடியகாலை சச்சந்தன் அதனை யடக்கிக் கந்திற் பிணிக்குப்போது அவ் யானையாற் குத்துண்டு இறந்தான் என்பவன், "இனி நீயே இந்நாட்டிற்கு இறைவனாதல் வேண்டும்.; யான் உயிரும் ஈவேன்; நீ வரின் பழியும் நீங்கும்; வருக" என்று எழுதுவதனால் இவனது மனப்புன்மையும் தெளிவின்மையும் இனிது விளங்கும்.
இவன் சீவகனோடு பொரநின்றபோது அவனது சின மிகுதியும் தன் மக்கள் மாண்டதுங் கண்டு கட்டியங்காரன், அறிவு, தெளிவுடையவன்போல்
"நல்வினை யுடைய நீரார் நஞ்சுணின் அமுத மாகும்
இல்லையேல் அமுதும் நஞ்சாம்; இன்னதால் வினையினாக்கம்"
என்றும் "அகப்படு பொறியினாளா ஆக்குவர் யாவர்?" "மிகப்படு பொறியினாரை வெறியராச் செய்யலாமோ?" என்றும் "இருவினை சென்று தேய்ந்தால் பரிவுற்றுக்
கெடாமல் செல்வம் பற்றி யார் வைப்பார்?" என்றும் கூறுவது வியப்புத் தருகின்றது. இதனை நன்கறிந்த சீவகன், எயிறு தோன்ற எள்ளி நகைத்து, "நீ அஞ்சினாய்" என்கின்றான். இச்சொல்லாட்டால், கட்டியங்காரன் "மொய்யமர் பலவும் வென்றான்" எனச் சச்சந்தன் பாராட்டிய பாராட்டையும் பொய்ப்படுத்திவிடுகின்றான்.
மதனன்:
இனி, மதனன் என்னும் வீரன் கட்டியங்காரற்கு மைத்துனன். சச்சந்தனைக் கொல்லக் கருதுவது முறையன்றெனத் தருமதத்தன் கூறக்கேட்டதும், இவன் சினம் மிகுந்து, "தோளினால் வலியராகித் தொக்கவர் தலைகள் பாற, வாளினால் பேசலல்லால் வாயினால் பேசல் தேற்றேன்" என இயை பின்றிப் பிதற்றுகின்றான். சீவகனைப் பற்றிக் கொணரப் போந்த மதனன், அவனைக் குணமாலை மனையிலிருந்து கொணர்கையில், தேவனால் காணாமற் போனதால் கலங்கி, வெறிது சொல்லின் அரசன் வெகுள்வன் என வேறொருவனைக் கொன்று பொய் சொல்வது அவனது வழுக்குடைய வீரத்திற்குச் சான்று பகருகின்றது.
ஏனையோர்:
இனி, சீவகனை வளர்த்த தந்தையான கந்துக்கடன், தாய் மாமனான கோவிந்தராசன், சீவகற்கு மகட்கொடை நேர்ந்தவர் முதலியோர் நலங்களும் இவ்வண்ணமே பலதிறத்த
வாய்ப் பகுத்து நோக்குதற்கண் இன்பந் தருகின்றன.
விசயை:
இனி, பெண்மகளிருள் விசயை முதலாயினாருடைய குண நலங்களைச் சிறிதே காண்பாம். விசயை இளமையிலேயே நல்ல அறிவு நூல்களை ஆராய்ந்துள்ளாள். தான் கண்ட கனவைத் தன் கணவற்கு உரைக்கப் போங்கால், அவள் வாமனை வணங்கிச் செல்வது அவளது சமய வொழுக்கத்தைப் புலப்படுத்துகின்றது. கட்டியங்காரன் கொலை கருதி வந்தது கேட்டு, அவள் நடுங்கக்கண்ட சச்சந்தன், "வாமனால் வடித்த நுண்ணூல் உண்டு வைத்தனைய நீ" என்றும், "ஒண்டொடி நீ வருந்துவது தகுவதன்று" என்றும் கூறக்கேட்டுத் தெளிந்தமைகின்றாள்.
சீவகன் சுடுகாட்டில் பிறந்தபோது அவள் புலம்பும் புலம்பல் கல்லும் உருக்கும் கனிவுடையவை.; அவள் தவப் பள்ளியில் இருந்தபோது சீவகன் மறைந்ததும், தோழர் தேடி வந்ததும் கேட்டுப் புலம்பும் புலம்பலை ஒருங்கு வைத்து நோக்கின், ஆங்கே அவனது உள்ளம் இடச்சார்பால் துறவுப் பான்மை கதுவி நின்றமையின் அத்துணைக் கனிவு இல்லை. சீவகனைக் கண்டபோது "நினக்குத் தாய் சுநந்தையே; தந்தை கந்துக்கடனே" என்பவை இராமாயணத்தே, சுமித்திரை இலக்குவனை இராமனுடன் காட்டிற்கு விடுத்தபோது, "மாகாதல் இராகவன் அம்மன்னவன், போகா உயிர்த்தாயர் பூங்கழற் சீதை" என்ற சொற்களை நினைவுறுத்துகின்றன. பின்பு அவள் சீவகன் பிறந்த சுடுகாட்டை அறக்கோட்டமாக்கியதும், சீவகனுக்கும் அவன் மனைவியர்க்கும் கூறுவனவும் மிக்க உருக்க முடையனவாகும். தத்தை முதலாயினாரை நோக்கி "சிறுவர்ப் பயந்து இறைவற் றெளிவீர்" என்பதும், பிறவும் இறும்பூது பயக்கின்றன.
சீவகன் மனைவியர்:
சீவகன் மனைவியருள் குணமாலையின் திறமே சிறிது விரியக் கூறப் பெறுகின்றது. முதல் மனைவியாகிய காந்தருவதத்தை விஞ்சை வன்மையும், எதுவரினும் ஏற்றுத் தாங்கிச் செய்வன செய்தற்கண் ஊக்கம் குன்றாமையும் உருவாகக் கொண்டு விளங்குகின்றாள். கனகமாலைபால் மகிழ்ந்திருந்த சீவகற்கு அவள் விடுக்கும் திருமுகம் உண்மைக் காதன்மை ஒருபுறம் புலப்படுக்கினும், அவளது மான உணர்ச்சியை மறைத்திலது.
"பட்டபழி வெள்ளிமலை மேல்பரத்த லஞ்சித்
தொட்டுவிடுத் தேன் அவனைத் தூதுபிற சொல்லிப்
பட்டபழி காத்துப்புக ழேபரப்பி னல்லால்
விட்டலர்ந்த கோதையவ ரால்விளைவ துண்டோ!"
என்ற இச் சொற்கள் அவளது உள்ளப்பான்மையை ஒளியாது தெரிவிக்கின்றன. குணமாலையின் பிரிவாற்றாமையை இத்தத்தையே எடுத்துரைப்பதை நோக்கின் குணமாலையின் குணச் சிறப்பும், தத்தை ஏனை மகளிர்பால் கொண்டிருந்த அன்பும் நாம் நன்குணர விளக்குகின்றன. இவர்கள் ஒவ்வொருவருடைய குணநலன்களைத் தனித்தனியே எடுத்து நோக்க விரும்பின், இந் நூற்கண் நுழைந்து கண்டு இன்புறுதல் தக்கதேயன்றி வேறில்லை.
இறுதியாக, இந்நூற்கண், திருத்தக்கதேவர் தம் சமய நூற் பொருளை வற்புறுத்துவதே பெரு நோக்கமாகக் கொண்டுளார் எனினும், பெண்கட்கு ஆடவர் ஏற்புழித்தக்க துணைபுரிய வேண்டுமென்பதைப் பலவிடங்களில் வற் புறுத்துகின்றார். சீவகன்பால் கட்டியங்காரன் செற்றங் கொண்டதை யறிந்து அவனுள்ளத்தை மாற்ற நினைந்த கந்துக்கடன், நாண்மெய்க்கொண் டீட்டப் பட்டார் நடுக்குறு நவையை நீக்கல், ஆண் மக்கள் கடன்" என்று கூறுகின்றான். குணமாலை அசனி வேகத்தின் முற்பட்டதைக் கண்ட சீவகன் "பெண்ணுயி ரவலம் நோக்கிப் பெருந்தகை வாழ்விற் சாதல்" என்று எண்ணுகின்றான்.
தேவரும் பெண்மையும்:
இவ்வண்ணம் தேவர் கருதினாரெனினும், பெண்மனம் புன்மையுடையதென்றும், பெண்ணால் ஆண் மகன் காக்கப் படுதல் உயர்வன்றென்றும் குறிப்பிக்கின்றார். இவ்விரு கருத்தையும், பெண்ணின்பமே பெரிதும் விரும்பி நின்ற சீவகன் வாயிலே வைத்து வழங்குகின்றார். பவதத்தனைத் தெருட்டியபோது சீவகன், "பெண்ணெனப்படுவ கேண்மோ பீடில பிறப்பு நோக்கா, உண்ணிறை வுடைய வல்ல ஒராயிரம் மனத்த வாரும்." என்றும், பிறிதோரிடத்தில் "பெண்இடர் விடுப்ப வாழ்விற் சாதலே பெரிது நன்று" என்றும் கூறுகின்றான்.
இவ்வண்ணமே ஏனையோர் குணஞ்செய்கைகளையும் எடுத்து வகுத்தோதின், இம் முன்னுரை மிக விரியும் என அஞ்சி அறிஞர் அவற்றை இந் நூற்கண் நுழைந்து
கண்டின்புறுமாறு விடுத்து, இந் நூலை யாத்தற்குத் தேவர் துணைக்கொண்ட நூல்களுட் சிலவற்றைக் கூறி இரண்டோ ரெடுத்துக்காட்டுகளை வழங்குவேன். திருக்குறளும், எட்டுத்தொகையும், பத்துப்பாட்டும் இந்நூலின் ஆக்கத்திற்குச் சொல்லும் சொற்றொடரும் கருத்தும் உதவியிருக்கின்றன; பல கருத்துக்களை விளக்குதற்குச் சங்க இலக்கியத்துக் கருததுக்கள் சில உவமமாகவும் துணை செய்துள்ளன.
நூலின் ஆக்கத்திற்குத் துணை செய்த தமிழ் நூல்கள்:
'பானை சோற்றுக்கு ஒரு சோறு' பதம் காண்பது போல் இனத்துக்கு ஓரொன்று காட்டுதும்:
'செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எஃகுஅதனில் கூரியது இல்'
என்பது திருக்குறள். இதனைத் தேவர் 'செய்த பொருள் யாரும் செறுவாரைச் செறுகிற்கும், எஃது பிறிதில்லை இருந்தே உயிரும் உண்ணும், ஐயமிலை இன்பம் அறனோடு அலையும் ஆக்கும், பொய்யில் பொருளே பொருள் மற்றல்ல பிறபொருளே' என அமைத்துக் கொள்ளுகின்றார்.
'தொழுதகை உள்ளும் படைஒடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து'
என்ற திருக்குறள், 'தொழுததங் கையி லுள்ளுந் துறுமுடி யகத்துஞ்சோர, அழுதகண்ணீரி னுள்ளு மணிகல த்தகத்து மாய்ந்து, பழுதுகண்ணரிந்து கொல்லும் படையுட னொடுங்கும் பற்றா, தொழிகயார் கண்ணுந் தேற்றம் தெளிகுற்றார். விளிகுற் றாரே' என இழைத்துக்கொள்ளப்படுகின்றது. இவ்வண்ணம் பல உள.
'காய்நெல் அறுத்துக் கவனங் கொனினே
மாநிறை வில்லதும் பன்னாட் காகும்;
நூறுசெறு வாயீனும் தமித்துப்புக் குணினே
வாய்புகு வதனினுங் கால்பெரிது கெடுக்கும்."
என வரும் புறப்பாட்டு, 'வாய்ப்படுங் கேடு மின்றாம் வரிசையினரிந்து நாளுங், காய்த்தநெற் கவளந் தீற்றிற் களிறுதான் கழனி மேயின், வாய்ப்பட லின்றிப் பொன்றும் வல்லனாய் மன்னன் கொள்ளி, னீத்தநீர் ஞால மெல்லா நிதிநின்று சுரக்கு மன்றோ' என்றும்,
கால்பார் கோத்து ஞாலத் தியக்குங்,
காவற் சாகா டுகைப்போன் மாணின்
ஊறின் றாகி யாறினிது படுமே,
உய்த்த றேற்றா னாயின் வைகலும்,
பகைக்கூழ் அன்னற்பட்டு
மிகப்பல் தீநோய் தலைத்தலத் தருமே".
என்னும் புறப்பாட்டு "ஆர்வலஞ் சூழ்ந்த வாழியனைமணித் தேரை வல்லா, னேர்நிலத் தூரு மாயி னீடுபல் காலஞ் செல்லு, மூர்நில மறிதல் தேற்றா தூருமேன் முறிந்து வீழுந்தார்நில மார்ப வேந்தர் தன்மையு மன்னதாமே " என்றும் உதவி யிருக்கின்றன.
பழமொழிகள், வழக்காறுகள்:
இனி, "பழம்பகை நட்பாதல் இல்லை", "குன்றின் மேலிட்ட விளக்கு" என்பன முதலிய பழமொழிகள், "பாட்டினைக்கேட்ட லோடும் பழம்பகை நட்பு மாமே" எனவும் "தோன்றினான் குன்றத் துச்சிச் சுடர்ப்பழி விளக்கிட்டன்றே" எனவும் இந்நூலின்கண் கையாளப்படுகின்றன. கார்த்திகை விளக்கீடு, வேனில் விழா முதலிய வழக்காறுகள் பல ஆங்காங்கு விளக்கப்படுகின்றன. மகளிர் பந்தாடுதல், நீராடுதல், முல்லைக்கொடி முதலியன வைத்து வளர்த்து அவை தலைப்பூ மலர்ந்தவிடத்துச் சிறப்புச் செய்தல், சிறுவர்க்கு எழுத்தறிவித்தல் முதலிய செய்கைகள் அவ்வவ் விடங்களில் நன்கு சிறப்பிக்கப் பெறுகின்றன.
கதைக்குரியோர் நிலைக்கேற்பச் சொல் வழக்கம் செய்தல்:
மக்களின் வாழ்க்கை நிலைக்கேற்ப அவர் வழங்கும் சொற்களும் அமைந்திருக்கும். அவர் சொற்களில் வரும் உவமமும் அவர் பயிலும் பொருள்களே யாகும். இந்நெறி முற்றும் பாவலர் பாக்களில் சிறந்து நிற்கும். திருத்தக்க தேவர் நூலும் இவ் வுண்மைக்குச் சான்று காட்டுகின்றது. சீவகன் வேட்டுவர் தலைவனைக்கண்டு நீ வாழும் மலை யாது என்று வினவ, அவற்கு அத் தலைவன் "இதா தோன்றுகின்ற சோலை சூழ்மலை" என்கின்றான். நந்தகோன் தன் மகள் கோவிந்தையின் நலம் கூறலுற்று,
"வெண்ணெய்போன்று ஊறிணியள் மேம்பால்போல் தீஞ்சொல்லள்
உண்ண உருக்கிய ஆன்நெய்போல் மேனியள்
வண்ண வனமுலை மாதர் மடநோக்கி
கண்ணும் கருவிளம் போதிரண்டே கண்டாய்"
என்று சொல்கின்றான். இவன் சொல்லில் வெண்ணெயும் பாலும், நெய்யும், கருவிளம்பூவுமே உவமங்களாக வருதல் காண்க. இவன் சொல்லை ஏற்றுச் சீவகன் விடையிறுத்தற்குள்ளே விரைந்து இவனே,
"குலம் நினையல் நம்பி கொழுங்கயற்கண் வள்ளி
நலன்நுகர்ந்தா னன்றே நறுந்தார் முருகன்;
நிலமகட்குக் கேள்வனும் நீள்நிரைநப் பின்னை
இலவலர்வாய் இன்னமிர்தம் எய்தினா னன்றே"
என்று பேசுகின்றான். இவ்வாறெல்லாம் பேசுவதும் பிறவும் அவர்தம் வாழ்க்கைப்பண்பெனக் காட்டும் புலமைநலத்துக்கு எடுத்துக் காட்டாம். இவ்வாறு வருவன பல இந்நூற் கண் மிளிர்கின்றன.
இன்னோரன்ன நலம்பலவும் விளக்கிக் கற்பார்க்குக் கழிபேரின்பம் நல்கும் செந்தமிழ் இன்பக் கருவூலமாக , இச் சிந்தாமணி நந்தா வளங்கொண்டு திகழ்கின்றது. சோழன் அநபாயன் என்பான் இந் நூலின் தமிழ் நலம் பெருக உண்ணும் விருப்பினால் அல்லும் பகலும் இதனையே படித்து வந்தான் என்றும் அவன் கருத்தை மாற்றவே சேக்கிழார் பெரியபுராணத்தைச் செந்தமிழ் நலம் சிறக்கச் செய்தனர் என்றும் நுவலுங்கதை ஒன்று தமிழ்நாட்டில் வழங்குவ துண்டு. அஃது உண்மையாயின், இதன் பெருமை அளவிட்டுரைப்பதென்பது அரிதாம். கம்பனது இராமாயணமும் தணிகைப்புராணம், சேதுபுராணம் முதலிய தமிழ்நலங் கெழுமிய தல புராணங்களும் தோன்றி நம்மனோர்க்கு இன்பம் சுரந்து வருதற்கு வழிகாட்டியாகிய ஏற்றம் இச் சிந்தாமணிக்கு உண்டு என்பதை ஈண்டு நாம் நினைவு கூர்தல் வேண்டும்.
முடிப்புரை:
இனி இச் சிந்தாமணிக்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர் அழகியதொரு நல்லுரை எழுதியுள்ளார். அவ்வுரையை வியந்து மகிழ்ந்த துறைமங்கலம் சிவப்பிரகாச அடிகள் "சிந்தாமணியும், திருக்கோவையும் எழுதிக்கொளினும் நந்தா உரையை எழுதல் எவ்வாறு நவின்றருளே" என்று பாராட்டியுள்ளார்.
இத்தகைய சிறப்புமிக்க பெருங்காவியமாகிய இச் சீவக சிந்தாமணியின் பெருநலனை மக்களனைவரும் அறிந்து துய்த்து இன்புறுதற்கு வாயிலாக வரும் இதனைத் தமிழுலக
மேற்றுப் பயன் கொள்ளுமாக!
"தென்த மிழ்க்கலை தெரிந்தவர் பொருந்திய தேவூர்
அன்பன் சேவடி யடைந்தனம் அல்லல்ஒன் றிலமே.
--------------
சீவகசிந்தாமணி - சுருக்கம்
சீவக சிந்தாமணி - கடவுள் வாழ்த்து
சித்தர் வணக்கம்
மூவா முதலா உலகம் ஒரு மூன்றும் ஏத்தத்
தாவாத இன்பம் தலை ஆயது தன்னின் எய்தி
ஓவாது நின்ற குணத்து ஒள் நிதிச் செல்வன் என்ப
தேவாதி தேவன் அவன் சேவடி சேர்தும் அன்றே. 1
அருகர் வணக்கம்
செம்பொன் வரை மேல் பசும் பொன் எழுத்து இட்டதே போல்
அம் பொன் பிதிர்வின் மறு ஆயிரத்து எட்டு அணிந்து
வெம்பும் சுடரின் சுடரும் திருமூர்த்தி விண்ணோர்
அம் பொன் முடி மேல் அடித்தாமரை சென்னி வைப்பாம். 2
-----
புள்ளி. வெம்பும் சுடரின் சுடரும் - மேல் செல்லச் செல்ல வெதுப்பும்
ஞாயிற்றினும் மிக விளங்கும். வெம்பும் சுடர் - இள ஞாயிறு.
செம்பொன் மலையில் பச்சை நிறப் பொன்னால் எழுதிட்டதுபோல்
வண்ண வேறுபாடு கொள்ளக் கூடாதென்பர் நச்சினார்க்கினியர்.
தன்ம சரணம்; சாது சரணம்
பன்மாண் குணங்கட்கு இடனாய்ப் பகைநண்பொடு இல்லான்
தொல்மாண் பமைந்தபுனை நல்லறம் துன்னி நின்ற
சொல்மாண் பமைந்த குழுவின்சரண் சென்று தொக்க
நன்மாண்பு பெற்றேன் இது நாட்டுதல் மாண்பு பெற்றேன். 3
-------
3. துள்ளி நின்ற - மேற்கொண்டிருந்த. சொன் - புகழ். குழு - ஆசிரிய உபாத்தியாய சாதுக்கள். தொக்க நன்மாண்பு - சேர்ந்ததனால் உளதாகும் நல்வினைப் பேறு. நாட்டுதல் - கூறுதல். நாட்டுதல் மாண்பு - நாட்டுதலாகிய நல்வினைப் பேறு.
இல்லாதான் கூறிய குணங்கட்கு இடனாய், அறம் துள்ளி நின்ற, குழுவின் சரண் என்று இயையும். பன்மான் குணமாவன, எண்பத்துநான்கு இலக்கம் குணவிரதம், நூறுகோடி மகா விரதம், ஆயிரத்தெண்ணூறு சீலாசாரம் என்பர்.
அவையடக்கம்
கற்பால் உமிழ்ந்த மணியும் கழுவாது விட்டால்
நற்பால் அழியும்; நகைவெண் மதிபோல் நிறைந்த
சொற்பால் உமிழ்ந்த மறுவும் மதியாற் கழூஉவிப்
பொற்பா இழைத்துக் கொளற்பாலர் புலமை மிக்கார். 4.
--------
4. கற்பால் - கல்லின் பகுதி. உமிழ்ந்த - தந்த. நற்பால் - அதன்
நன்மைப் பகுதி. என்றது ஒளி. அழியும் - கெடும். நிறைந்த - கலை
நிறைந்த. பொற்பா - அழகாக. இழைத்துக் கொளற்பாலர் - அமைத்துக்
கொள்ளுதற்குரியர்.
---------------------------
1. நாமகள் இலம்பகம்:
நாமகள் இலம்பகம்: நாமகள் - கலைமகள்; இலம்பகம் - நூலின் ஓர் உறுப்பு; சீவகன் நாமகளைக் கூடின இலம்பகம் என்பது பொருள்.
( இதன்கண், சீவகன் தந்தையான சச்சந்தன், விசயையை மணந்து, இராசமாபுரத்தேயிருந்து, ஏமாங்கத நாட்டை ஆண்டுவந்த தன் ஆட்சியைக் கட்டியங்காரன் என்னும் அமைச்சன்பால் வைத்துப் பின் அவன் சூழ்ச்சியால் இறந்து பட்டதும், அவனால் மயிற் பொறியில் ஏற்றிவிடுக்கப்பட்ட விசயை சுடுகாட்டில் நள்ளிரவில் சீவகனைப் பெற்று, தோழி வடிவிற்போந்த தெய்வம் துணையாகத் தண்டகாரணியத் தவப்பள்ளி யடைந்ததும், சீவகனை இராசமாபுரத்துக் கந்துக்கடன் என்பான் எடுத்துச்சென்று வளர்த்ததும், அச்சணந்தி யென்பவன்பால் சீவகன் கலைத்துறை பலவும் கற்றுத் தேர்ந்ததும் பிறவும் கூறப்படுகின்றன. )
ஏமாங்கத நாட்டு வளம்
காய்மாண்ட தெங்கின் பழம்வீழக் கமுகின் நெற்றிப்
பூமாண்ட தீந்தேன் தொடைகீறி வருக்கை போழ்ந்து
தேமாங் கனிசிதறி, வாழைப் பழங்கள் சிந்தும்
ஏமாங் கதம்என்று இசையால் திசை போய துண்டே. 5
இந்த நாட்டில் வேண்டுங்காலத்துப் பொய்யாது வேண்டுமளவு தெரிந்து பொழியும் மழைக் கூட்டம், கடல் நீரை முகந்து சென்று மலையுச்சியில் தங்கியது.
5. தெங்கின் பழம் - தெங்கின் முற்றிய காய். வீழ - வீழ்ந்ததனால், கமுகு - பாக்கு மரம். பூமாண்ட தீந்தேன் தொடை -அழகிய மாட்சி மைப்பட்ட தேன்போல இனிய நீரையுடைய தாறு (குலை). கீறி - கிழித்து. வருக்கை - பலாவின் பழம். போழ்ந்து - பிளந்து. என்று - என்று பெயர் கூறப்பட்டு. இசையால் - புகழால். திரை போயது - எல்லாத் திசையிலும் பெயர் பரவியது.
மழை பெய்தல்
தேன்நி ரைத்துயர் மொய்வரைச் சென்னியின்
மேல்நி ரைத்து விசும்புற வெள்ளிவெண்
கோல்நி ரைத்தன போல்கொழுந் தாரைகள்
வான்நி ரைத்து மணந்து சொரிந்தவே. 6
இவ்வாறு பெய்த மழையால் மலைகளில் அருவிகள் பெருகி இழிந்தோடின.
6. தேன் நிரைத்து - தேன் இறால் வரிசைப்படக் கிடந்து; வரைச் சென்னி - மலையுச்சி. வெள்ளி வெண்கோல் - வெள்ளியால் செய்த வெண்மையான கோல். நிரைத்தன போல் - வரிசையாக நாட்டியது போல. தாரை - மழைத்தாரை. மணந்து - தம்மில் கூடி ; வான் - மழை.
வெண்கோல்களை விசும்புற நிரைத்தன போல் வான் தாரைகளை நிரைத்து மணந்து மொய்வரைச் சென்னியின் மேல் நிரைத்துச் சொரிந்தன என்க.
அருவிகள் வீழ்தல்
குழவி வெண்மதித் தோடுழக் கீண்டுதேன்
முழவின் நின்றதிர மொய்வரைச் சென்னியின்
இழியும் வெள்ளரு வித்திரன் யாவையும்
குழுவின் மாடத் துகிற்கொடி போன்றவே. 7
மலையடியைச் சேர்ந்த அருவிநீர், பல கால்களாய்ச் சென்றுகூடி, சிற்றாறுகளாயும் பேரியாறுகளாகியும் ஏமாங்கத நாட்டில் படர்ந்தது.
7. குழவி வெண்மதிக் கோடு - பிறைத் திங்களின் கோடு. உழ - கிழிப்பதால். கீண்டு - கிழிப்புண்டு. முழவின் - முழவின் முழக்கம் போல, அதிர் - முழங்கும். மொய்வரை - அடுக்கடுக்காய் நிற்கும் மலைக்கூட்டம். குழுவின் மாடம் - கூட்டமாய் உள்ள மாட மாளிகைகள்.
மலையிலிருந்து இழியும் அருவிகள் யாவும். பிறைத் திங்களால் கிழிப்புண்டு இழியும் தேனருவியும், உயரிய மாடங்களில் தொங்கும் வெண்துகிற் கொடியும் செந்துகிற் கொடியும் போல இருந்தன.
யாறு நாட்டிற் பாய்தல்
வீடில் பட்டினம் வௌவிய வேந்தெனக்
காடு கையரிக் கொண்டு கவர்ந்துபோய்
மோடு கொள்புனல் மூரி நெடுங்கடல்
நாடு முற்றிய தோஎன நண்ணிற்றே. 8
இவ்வண்ணம் நண்ணிய பெருநீர் ஏமாங்கத நாட்டிற் பாயும் சரயு நதியிற் கலந்தது.
8. வீடில் பட்டினம் - விடுதல் இல் பட்டினம்; குடிகள் விட்டு நீங்குவதில்லாத பட்டினம், வீடு - முதனிலை திரிந்த தொழிற் பெயர். வௌவிய - கொள்ளைகொண்ட, கையரிக்கொண்டு - கையால் அரித்துக் கொண்டு. மோடு கொள் புனல் - பெருமை (மிகுதி, பெருக்கு) கொண்ட அருவி நீர். மூரி - வலிய. முற்றியதோ என – வளைத்துக்கொண்டதோ என்று கண்டோர் சொல்லுமாறு..
பட்டினமொன்றைக் கொள்ளை கொண்ட வேந்தன் ஒருவனைப் போல, காட்டைக் கவர்ந்து, அதனுட் கிடந்த பொருள்களை வாரிக்கொண்டு சென்று, கடல் நாட்டை வளைத்துக்கொண்டதோ என்னுமாறு அருவி நீர் பெருகிச் சென்றது என்க.
அந்த நீரைச் சரயு நதி கொண்டு செல்லுதல்
திரைபொரு கனைகடற் செல்வன் சென்னிமேல்
நுரையெனு மாலையை நுகரச் சூட்டுவான்,
சரையெனும் பெயருடைத் தடங்கொள் மெம்முலைக்
குரைபுனற் கன்னிகொண்டு இழிந்த தென்பவே. 9
சரயு கொணர்ந்த வெள்ளம் நாட்டில் பாய்வதால், உழவர்கள், நெல்லும் கரும்பும் விளைவிக்கலாயினர்.
9. திரை -அலை. கனை கடல் - முழங்குங் கடல், செல்வன் - கணவன். சூட்டுவான் - வானீற்று வினையெச்சம். சரயு என்பது சரை என வந்தது. சரையெனும் பெயருடைத் தடங்கொள் வெம்முலைக் குரை புனற் கன்னி - சரையென்னும் பெயர்களையும், தடமாகிய விரும்பிய முலையினையுமுடைய ஒலிக்கின்ற புனலாகிய கன்னி. தடம் - மடு. தடம் முலைபோற் சுரத்தலின் முலையாயிற்று. கன்னி யென்னுஞ் சொல்லைப் புனல் என்பது இணைந்து அஃறிணையாக்குதலால், இழிந்தது என அஃறிணை விகுதி கொடுத்தார். என்ப - அசை. சரயு என்னும் பெயருடைய புனற்கன்னி, கடற்செல்வனாகிய தன் கணவன் சென்னிமேல் நுரையென்னும் மாலையைச் சூட்டுவதற்காக, அருவிநீர் கொணர்ந்த பொருள்களையும் நுரையையும் சுமந்துகொண்டு சென்றது என்க.
உழவர் உழவு செய்ய ஒருப்படுதல்
நெறிமருப் பெருமையின் ஒருத்தல் நீளினம்
செறிமருப் பேற்றினம் சிலம்பப் பண்ணுறீஇப்
பொறிவரி வராலினம் இரியப் புக்குடன்
வெறிகமழ் கழனியுள் உழுநர் வெள்ளமே. 10
10. நெறிமருப்பு - அறல்பட்ட கொம்பு, ஒருத்தல் - கடா. செறி மருப்பு - நெடிது செறிந்த கொம்பு. ஏற்றினம் - எருதுகளின் கூட்டம். சிலம்ப - முழங்க, பண்ணுறீஇ - ஏரில் பூட்டி, இரிய - நீங்க, வெறி - மணம்.
எருமை யினத்தையும் எருதினத்தையும் எரிற் பூட்டிக் கழனியிலேவரால் மீனினம் நீங்கியோட உழுவோர் தொகை வெள்ளமென்னும் எண்ணாம் என்க.
நாற்று விடுதல்
சேறமை செறுவினுள் செந்நெல் வான்முளை
வீறொடு விளைகஎனத் தொழுது வித்துவார்
நாறிது பதமெனப் பறித்து நாட்செய்வார்:
கூறிய கடைசியர் குழாங்கொண் டேகுவார். 11
11. சேறமை செறு - சேறு பதம்பட்ட வயல். வீறொடு விளைக - சிறப்புற விளைக. தொழுது - நிலமகளைத் தொழுது. நாறு - நாற்று நடுதல்.நாட் செய்வார் - நாள் பார்த்து நடுவார். கூறிய கடைசியர் - இத்துணை நிலத்திற்கு இத்துணைப் பேர் என்று கொண்டு, முன்னாளே சொல்லி வைத்த நடவுமகளிர்.
வயலில், 'நன்கு விளைக' என விதைப்பவர், நடுதற்குப் பதமிது எனத் தெரிந்து பறித்து, நடவுக்குரிய நாள் கருதி வைப்பர்; உழவர் மகளிர் கூட்டங் கொண்டு சென்று வயலில் நடுவார் என்க.
களை யெடுத்தல்
கண்ணெனக் குவளையும் கட்ட லோம்பினார்;
வண்ணவாள் முகமென மரையின் உள்புகார்;
பண்ணெழுத் தியல்படப் பரப்பி யிட்டனர்;
தண்வயல் உழவர்தம் தன்மை யின்னதே. 12
12. ஓம்பினார் - நீக்கினார். உள்புகார் - அருகுஞ் செல்வார். வண்ணம் - அழகு. வான் - ஒளி. பண் - இராகம்; இதனை வடநூலார் சம்பூரண ராகம் என்பர். எழுத்தியல் பட - எழுத்தின் வடிவு தோன்ற. கட்டல் - களை யெடுத்தல். களையெடுக்கச் சென்றவர், குவளை காதலியின் கண்போல் மலர்ந்தமையின், அதனையும் தாமரை அவர்தம் முகம்போல இருந்தமையின் அதனையும் களையாராய்ப், பண்ணை எழுத்தின் வடிவுதோன்ற இனிது பாடினர்; உழவர் செய்கை இது என்க.
நெல் விளைதல்
சொல்லரும் சூற்பசும் பாம்பின் தோற்றம்போல்
மெல்லவே கருவிருந் தீன்று, மேலலார்
செல்வமே போல்தலை நிறுவித், தேர்ந்தநூல்
கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே. 13.
காய்த்த நெல்லை உழவர்கள் அரிந்து மலைபோலப் போரிட்டனர்.
13. சொல் -நெல். சூல் - கரு. அருஞ் சூல் - சூலுண்டு என்று சொல்லுதற்கு அரிய. தேர்ந்த - மெய்ப்பொருளை யாராய்ந்த. காய்த்த - விளைந்தன.
நெல், சூற்பாம்புபோல் கருத்தாங்கி, செல்வம்பெற்ற கீழோர்போல் தலை நிமிர்ந்து நின்று, கற்ற நல்லோர்போல் விளைந்து வளைந்து கிடந்தன என்க.
நெற் பெருமை
ஈடுசால் போர்பு அழித்து எருமைப் போத்தினால்
மாடுறத் தெழித்து, வை களைந்து, காலுறீஇச்
சேடுறக் கூப்பிய செந்நெற் குப்பைகள்
கோடுயர் கொழும்பொனின் குன்றம் ஒத்தவே. 14.
விளைந்த நெல்லை இது செய்தாராக, விளைந்து முற்றிய கரும்பை ஆலையில் இட்டு ஆட்டிச் சாறு கொண்டனர்.
14. போர்பு - கட்டுப்போர். ஈடு - இடுதல். போத்து - கடா. மாடு - பக்கம். தெழித்து - உரப்பி. வை - வைக்கோல். கால் உறீஇ - காற்றில் தூற்றி. சேடு - பெருமை. கோடு - உச்சி. குப்பை - குவியல்கள்.
போரிட்ட நெற்சூட்டைத் தள்ளி, எருமையால் புணையடித்து, வைக் கோலைக் களைந்து, காற்றில் தூற்றிக் குவித்த நெற்குவியல் பொற்குன்றம் போன்று இருந்தன.
கரும்படுதல்
கரும்புகண் உடைப்பவர் ஆலை தோறெலாம்
விரும்பிவந் தடைந்தவர் பருகி விஞ்சிய
திருந்துசா றடுவுழிப் பிறந்த தீம்புகை
பரந்துவிண் புகுதலின் பருதி சேந்ததே. 15
பண்படுத்திய நெல்லையும் கரும்பட்ட கட்டியையும் பல்வேறு பண்டிகளில் ஏற்றி மிக்க ஆரவாரத்துடன் ஊர்களுக்குக் கொண்டு போயினர். பல்லாறாகத் துய்த்தற்குரிய வளம் பலவும் மல்கியிருத்தலால், ஊர்கள் மிக்க சிறப்புற்றிருந்தன.
15.கரும்பு கண் உடைப்பவர். - கரும்பைக் கணுவிலே வெட்டிவெட்டி ஆலையிலிட்டுச் சாறு காண்போர். விஞ்சிய - உண்டது போக மிக்கு நின்ற. அடுவுழி - காய்ச்சுமிடத்தில். தீம் புகை - இனிய புகை. பரந்து - விரிந்து. விண் புகுந்து பரத்தலின் என இயைக்க. சேந்தது - சிவந்தது.
கரும்பாலை தோறும் வந்தடைந்தவர் பருக., மிக்கு நின்ற சாற்றைப் பாகு செய்யுமிடத்தே எழும் புகை விண்ணிலே சென்று பரத்தலால், ஞாயிறு சிவந்தது என்க.
ஊர்ச் சிறப்பு
விலக்கில் சாலை யாவர்க்கும் வெப்பின் முப்ப ழச்சுனைத்
தலைத்தணீர் மலரணிந்து சந்தனம்செய் பந்தரும்,
கொலைத்தலைய வேற்கணார் கூத்துமன்றி, ஐம்பொறி
நிலைத்தலைய துப்பெலாம் நிறைதுளும்பு மூர்களே. 16
16. யாவர்க்கும் விலக்கு இல்சாலை - இன்ன சாதியார்க்கே உரியவை என வரையறுத்துப் பிறரை விலக்குவது இல்லாத உணவுச் சாலை. வெப்பு - வெப்பம். சுனைத்தலைத் தண்ணீர் - சுனையிற் கொணர்ந்த தண்ணீர். கொலைத்தலைய வேற்கண்ணார் - கொல்லும் வேல் போன்ற கண்களையுடைய நாடக மகளிர். கூத்து - கூத்தாடுமிடம். துப்பு - நுகர்பொருள். நிறை துளும்பும்- நிறைந்து ததும்பும்.
யாவர்க்கும் விலக்குதல் இல்லாத அட்டிற் சாலை, தண்ணீர்ப் பந்தர், மகளிர் கூத்தாடு மிடம் என்ற இவை யொழிய, ஏனைய எவ்விடத்தும் ஐம் பொறிகளாலும் நுகரப்படும் பொருள் பலவும் ஊர்களிடத்தே நிரம்பி யிருந்தன என்க.
அடிசில் வைகல் ஆயிரம், அறப்புறமும் ஆயிரம்,
கொடிய னார்செய் கோலமும் வைகல் தோறும் ஆயிரம்,
மடிவில் கம்மி யர்களோடு மங்கலமும் ஆயிரம்,
ஒடிவி லைவெ றாயிரம் ஓம்பு வாரின் ஓம்பவே. 17
17. வைகல் அடிசில் - எப்போதும் உணவுள்ள உணவுச்சாலை. அறப்புறம் - அறச்சாலைகளும் அறத்திற்கு விட்ட இறையிலி நிலங்களும். கொடியனார் - கொடிபோலும் மகளிர். கோலம் - கோலம் செய்துகொள்ளுமிடம். மடிவில் கம்மியர் - தொழிலில் மடிதல் இல்லாத கம்மியர் , மங்கலம் - திருமணம். ஓம்புவாரின் ஓம்ப - பாதுகாப்பார் காத்தலைச் செய்ய. வேறு ஆயிரம், வெறாயிரம் என வந்தது. ஓடிவில்லை - தவிர்தல் இல்லை.
அடிசிற் சாலைகளும், அறச்சாலைகளும், மகளிர் கோலம் செய்துகொள்ளுமிடங்களும், கம்மியரும், திருமணமும், இவை போல்வன வேறும் ஆயிரமாயிரம் ஊர்க்கண் உண்டு என்க.
இராசமாபுரத்தின் சிறப்பு
நற்ற வம்செய் வார்க்கிடம் தவம்செய் வார்க்கு மஃதிடம்;
நற்பொ ருள்செய் வார்க்கிடம், பொருள் செய்வார்க்கு மஃதிடம்;
வெற்ற வின்பம் விழைவிப்பான் விண்ணு வந்து வீழ்ந்தென
மற்ற நாடு வட்டமாக வைகும் மற்ற நாடரோ. 18.
இவ்வினிய நாட்டின் தலைநகரான இராசமாபுரத்தின் சிறப்பு இனிக் கூறப்படுகிறது. இந்த நகரம் புறநகர், அக நகர் என இரு கூறாய் விளங்கும். புறநகர்க்கண் நால்வகைப் படை வீரரும், யானை, குதிரை முதலியனவும் உள்ளன. இது கடந்து செல்லின், அகழும் மதிலும் காணப்படுகின்றன. அகழின்கண் நீர்நிரம்பி முதலை முதலிய நீர் வாழ் வனவும் புள்ளினமும் செறிந்திருக்கும்.
18. நற்றவம் - வீடு பேறு குறித்த தவம். தவம் - மறுமை குறித்த இல்லறம். நற்பொருள் - நற்பொருளைப் பயக்கும் கல்வி. பொருள் -இம்மையில் பெரும்பயன் பயக்கும் செல்வம். வெற்ற இன்பம் - வெற்றியால் வரும் இன்பம். விண்ணு - விண்ணவருலகம். உவந்து வீழ்ந்தென - மகிழ்ந்து நிலவுலகின் மேலே வீழ்ந்து கிடந்த தென்னுமாறு. வட்டமாக - எல்லையாக. வைகும் - இருந்து விளங்கும். வீழ்ந்ததென - வீழ்ந்தென விகாரமாயிற்று.
விண் உவந்து வீழ்ந்ததென வைகும் நாடு. நற்றவம் முதலியவற்றைச் செய்வார்க்கு இடம் என்க.
இராசமாபுரத்துக் கிடங்கின் சிறப்பு.
கோட்சுறா இனத்தொடு முதலைக் குப்பைகள்
ஆட்பெறா திரிதர அஞ்சிப் பாய்வன,
மோட்டிறாப் பனிக்கிடங்கு உழக்க மொய்த்தெழுந்து
ஈட்டறாப் புள்ளினம் இரற்று மென்பவே. 19
19. கோட் சுறா - கொல்லுதலையுடைய சுறாமீன். முதலைக் குப்பை - முதலைக் கூட்டம். ஆட்பெறா - ஆட்கள் எதிர்ப்படப்பெறாது. திரிதர - திரிவதால். மோட்டு இறா - பெரிய இறால் மீன். உழக்க - கலக்க. ஈட்டறா - கூட்டம் குறையாத, இரற்றும் - ஒலிக்கும்.
நிரைகதிர் நித்திலம் கோத்து வைத்தபோல்
விரைகமழ் கமுகின்மேல் விரிந்த பாளையும்,
குரைமதுக் குவளைகள் கிடங்கிற் பூத்தவும்
உரையின்ஓர் ஓசனை உலாவி நாறுமே. 20
இனி, அதன் அருகே நிற்கும் மதில் பலவகைப் பொறிகளைக் கொண்டு விண்தொட உயர்ந்துள்ளது. நூற்றுவரைக் கொல்லி, விற்பொறி, கற்பொறி, அரிநூல் முதலிய பல எந்திரங்கள் வைக்கப்பெற்றுள்ளன.
20. நிரைகதிர் நித்தியம் - வரிசையுற ஒளிவிட்டு விளங்கும் முத்து. விரை - நறு மணம். விரை கமழ் பானை என இயைக்க. குரை கிடங்கில் பூத்த மதுக்குவளை - ஒலிக்கின்ற அகழியில் பூத்த தேன் நிறைந்த குவளை. உரையின் - புகழினால். நாறும் - மணம் கமழும்.
மதிற் சிறப்பு
வயிரவரை கண்விழிப்ப போன்று மழையுகளும்,
வயிரமணித் தாழ்க்கதவு வாயில் முகமாக,
வயிரமணி ஞாயில்முலை, வான்பொற் கொடிக்கூந்தல்,
வயிரக் கிடங்காடை மதிற்கன்னி யதுகவினே. 21
இவ் வகநகர்க்கண் மிகப் பலவாகிய செல்வ வீதிகளில் உள்ள செல்வர் மனைச் சிறப்பு
21. வயிரவரை - வயிரம் பொருந்திய மலை. மழையுகளும் - மேகம் தவழும். வயிரமணித் தாழ் - வயிரமணியால் செய்த தாழ். வான் பொற்கொடி - வானளாவியசையும் அழகிய துகிற்கொடி. வயிரக் கிடங்கு - வன்மை பொருந்திய கிடங்கு. கவின் - அழகு.
மழையுகளும் வாயில் முகமாக. ஞாயில் முலையாக, பொற்கொடி கூந்தலாக, கிடங்கு ஆடையாக, மதிலாகிய கன்னியது கவின் இருந்தது என்க.
நறையும் நானமும் நாறும் நறும்புகை
விறகின் வெள்ளி யடுப்பின்அம் பொற்கலம்
நிறைய ஆக்கிய நெய்பயில் இன்னமுது
உறையு மாந்தர் விருந்தொடும் உண்பவே. 22
22. நறை - நறைக்கொடி, நானம் - புழுகு. விறகின் - நறும் புகை கமழும் விறகுகளால். வெள்ளியடுப்பு - வெள்ளியாலான அடுப்பு. பொற்கலம் - பொன்னாற் செய்யப்பட்ட அட்டிற்கலம். நிறைய - மடை நூல் விதியிற் குறைபடாமல். விருந்தொடும் உண்ப - விருந்து பெறற்கு அருமை தோன்ற நிற்றலின், உம்மை சிறப்பும்மை.
அருகன் கோயில் உண்மை
திங்கள் முக்குடை யான்திரு மாநகர்
எங்கும் இங்கும் இடந்தொறும் உண்மையால்,
அங்கண் மாநகர்க் காக்கம் அறாததோர்
சங்க நீள்நிதி யால்தழைக் கின்றதே. 23
23 திங்கள் முக்குடையான் - திங்களைப்போலும் குடை மூன்று டைய அருகன். குடை மூன்றுமாவன: சந்திராதித்தம், நித்திய வினோதம், சகலபாசனம் என்பன. எங்கும் - தெருவெங்கும். இங்கும் - மனையிடத் தும். இடந்தொறும் - நகரின் தக்க இடந்தோறும். நிதியால் - நிதியோடு. நிதியோடு அறாததோர் ஆக்கம் தழைக்கின்றது என்க. சங்கநிதி - சங்கம் என்னும் எண்ணளவான நிதி.
இராசமாபுரத்தின் பொது வனப்பு
தேன்தலைத் துவலை மாலை, பைந்துகில், செம்பொன் பூத்து,
ஞான்றன வயிர மாலை, நகுகதிர் முத்த மாலை,
கான்றமிர் தேந்தி நின்ற கற்பகச் சோலை, யார்க்கும்
ஈன்றருள் சுரந்த செல்வத்து இராசமா புரம தாமே. 24
இந்நகரின் நடுவே அரசனது கோயிலுளது. அதனைச் சுற்றி அகழும் மதிலும் இருப்ப, மதிலிற் கட்டிய கொடிகள் வானத்தே விளங்குகின்றன.
24. தேன்தலைத் துவலைமாலை - தேனைத் தலையிலே துவலையாக வுடைய மாலை. ஞான்ற வயிர மாலை - தொங்குகின்ற வயிர மாலை. கான்று -தோற்று வித்து. அமிர்து - போகம். அருள் - ஈன்று. செல்வம் சுரந்த இராசமா புரம் என இயையும்.
இராசமாபுரம் என்னும் பெயரையுடைய இவ்வூர், மாலையும் துகி லும் பொன்னும் பூத்து, வயிரமாலையும் முத்த மாலையும் கான்று, அமிர் தேந்தி நின்ற கற்பகச் சோலையாகும் என்க.
அரசன் கோயிலின் கொடி வனப்பு
இஞ்சி மாக நெஞ்சுபோழ்ந்து எல்லை காண ஏகலின்,
"மஞ்சு சூழ்ந்து கொண்டணிந்து மாக நீண்ட நாகமும்,
அஞ்சும் நின்னை" என்றலின் ஆண்டு நின்று நீண்டதன்
குஞ்சி மாண்கொ டிக்கையால் கூவி விட்ட தொத்ததே. 25
25 இஞ்சி - மதில். மாகம் - விண். எல்லை - விண்ணுலகின் எல்லை. மஞ்சு - மேகம். மாகம் நீண்ட நாகம் - வானுலகத்தே உயர்ந்த நாகருல கம். ஆண்டு நின்று - மேக மண்டலத்திலிருந்தே. நீண்ட கொடிக் கையால் - நீண்ட கொடியாகிய கையால். குஞ்சி மாண் கொடிக்கை - குழியிடத்தே நின்று மாட்சிமைப் பட்ட கொடி. குஞ்சி - மதிலிடத்தே கொடிநாட்டும் குழி. கூவியிட்டது ஒத்தது - கூவியிட்ட தன்மையை யொத்தது.
அரசன் கோயில் இந்திரன் கோயில்போல் சிறத்தல்
கந்து மாம ணித்திரன் கடைந்து செம்பொன் நீள்சுவர்ச்
சந்து போழ்ந்தி யற்றிய தட்டு வேய்ந்து வெண்பொனால்
இந்தி ரன்தி ருநகர் உரிமை யோடும் இவ்வழி
வந்தி ருந்த வண்ணமே அண்ணல் கோயில் வண்ணமே. 26
26 கந்து - தோண். சந்து - சந்தனம். தட்டு - நெடுங்கை. தூண் மணித்திரளால் கடையப்படுதலாலும். சுவர் பொன்னாலாகி யிருத்தலாலும் சந்தனத்தைப் பிளந்து நெடுங்கை செய்து பொன்வேய்ந் திருத்தலாலும், கோயில் வண்ணம், இந்திரன் திருநகர் வந்திருந்தவண்ணம் என்க. உரிமை - இந்திரனுடைய உரிமை மகளிர்.
சச்சந்தன் என்ற அரசன் சிறப்பு
நச்சு நாகத்தின் ஆரழற் சீற்றத்தன்
அச்ச முற்றடைந் தார்க்கமிர் தன்னவன்
நச்சு லாம்முலை யார்க்கணங் காகிய
சச்சந் தன்எனும் தாமரைச் செங்கணான். 27.
27. நச்சு நாகம் - நஞ்சையுடைய பாம்பு. ஆர் அழல் - மிக்க வெம்மை. அமிர்து அன்னவன் - அமிர்து போல நலம் செய்பவன். அணங்காகிய - காம வருத்தத்தைச் செய்யும். தாமரைச் செங்கணான் - தாமரைப் பூப் போல இயல்பாகவே சிவந்த கண்ணையுடையவன்.
தருமன் தண்ணளி யால், தன தீகையால்
வருணன் கூற்றுஉயிர் மாற்றலின் வாமனே
அருமை யால் அழ கில்கணை ஐந்துடைத்
திரும கன் திரு மாநில மன்னனே. 28
இவ்வாறு அரசன் வாழ்ந்து வருநாளில், விதைய நாட்டரசனுக்கு விசயை என்ற மகளொருத்தி உருவும் திருவும் பிற நலங்களும் மிகவுடையளாய் இருந்து வந்தாள். அவ்வரசன் சச்சந்தனுக்கு மாமன். விசயையின் அழகும் குணமும் பிறநலங்களும் கேள்வியுற்ற சச்சந்தன் அவள் மீது பெருங்காதல் கொண்டு திருமணம் செய்துகொள்ள நினைத்தான். சான்றோர் சிலரை அவன்பாற் செலுத்தி மணம் பேசுவித்தான்.
28. தருமன் - அறக்கடவுள். கூற்று - எமன். உயிர் மாற்றலின் - செற்றார் உயிரைத் தப்பாமல் கொல்லுதலால். வாமன் - அருகன். திரு மகன் - திருமகட்கு மகனாகிய காமன். உரை கூறுமிடத்துத் தருமனை யொப்பன்; வருணனை யொப்பன் என இவ்வாறு கூறுக.
சச்சந்தற்குத் திருமணம் செய்தல்
மருமகன் வலந்ததும், மங்கை யாக்கமும்
அருமதிச் சூழ்ச்சியின் அமைச்சர் எண்ணிய
கருமமும் கண்டு, அவர் கலத்தற் பான்மையில்,
பெருமகற் சேர்த்தினார் பிணைய னாளையே. 29.
29. மருமகன் - சச்சந்தன். வலந்தது - கூறியது. ஆக்கம் - சச்சந் தன்பால் கொண்டுள்ள அன்பு. அருமதிச் சூழ்ச்சியின் - பிறரால் காணற் கரியவற்றை நுனித்தறியும் அறிவும் ஆராய்ச்சியுமுடைய. கருமம் - விசயை யின் உடன் பிறந்தவனான கோவிந்தராசனுக்கு இச் சச்சந்தன் துணையாதல். கலத்தற் பான்மை - பெண் கொடுத்தற்குரிய முறை. பிணை - பெண்மான்.
சச்சந்தனும் விசயையும் இன்பவாழ்வு நடாத்துதல்
தன்னமர் காத லானும் தையலு மணந்த போழ்தில்
பொன்னனாள் அமிர்த மாகப் புகழ்வெய்யோன் பருகி யீட்டான்
மின்னவிர் பூணி னானை, வேற்கணார்க் கியற்றப் பட்ட,
மன்னிய மதுவின் வாங்கி மாதரும் பருகி யிட்டாள். 30
30. அமர் - விரும்புகின்ற. பொன்னனாள் - திருவை யொக்கும் விசயை. பருகியிட்டாள் - பருகினாள். ஒரு சொல். மின்னவிர் - ஒளி விளங்கும். பூணினானை - பூண் அணிந்த சச்சந்தனை. மன்னிய மது - மிக்க மது. வாங்கி - அவன் காட்டக் கண்டு.
துறுமலர்ப் பிணையலும், சூட்டும் சுண்ணமும்,
நறுமலர்க் கண்ணியும், நாறுசாந்தமும்,
அறுநிலத் தமிர்தமும், அகிலும், நாவியும்
பெறுநிலம் பிணித்திடப் பெரியர் வைகினார். 31
இவ்வாறு வைகும் நாளில் விசயைபால் பிறந்த ஆராக் காதலால், சச்சந்தனுக்கு அவள் இருக்கும் உவளகத்தை விட்டு, அரசிருக்கை மண்டபத்திற்குப் பிரிந்து போவதும் நெடும்பிரிவாய்த் தோன்றிற்று. அவளோடு இடையறவின்றிக் கூடியிருந்து நுகரும் இன்பமே சிறந்து தோன்ற, அவன், அரசாளுதலைக் கருத்திற் கொள்ளானாயினான்.
31. துறுமலர்ப் பிணையல் - பூக்கள் நெருங்கத் தொடுத்த மாலை. சூட்டு - நெற்றிக்கட்டு. ஒருவகை யணி. கண்ணி - முடிமாலை. சாந்தம் -சந்த னம். அறுநிலத் தமிர்தம் - அறுசுவை யமுதம். நாவி - கத்தூரி. பெறு நிலம் - போகம் நுகரும் இடமாகிய ஐம்பொறிகளையும். மிக்க இன்பம் நுகர்தலின். "பெரியர்" என்றார். பெருமை, மிகுதி.
சச்சந்தன் அரசாட்சியில் கருத்தூன்றாமை
மண்ணகம் காவலில் வழுக்கி, மன்னவன்,
பெண்னருங் கலத்தொடு பிணைந்த பேரருள்,
விண்ணகம் இருள்கொள விளங்கு வெண்மதி
ஒண்ணிற வுரோணியோ டொளித்த தொத்ததே. 32
சச்சந்தன் விசயையின் காதலின்பத்தில் மூழ்கித்திளைத்தற்கு அரசு புரியும் தொழில் தடையாக இருக்கிறதென்று நினைந்து, அவ்வரசினைத் தன் அமைச்சருள் தலைவனான கட்டியங்காரன்மேல் வைத்து, தான் பெண்ணின்பத்தில் இடையீடின்றித் திளைத்திருக்கத் துணிந்தான்.
32. காவலின் - காத்தலிலிருந்து. வழுக்கி - தவறி. நாடு காத்தலில் கருத்தைச் செலுத்தாது என்றவாறு. பெண்ணருங்கலம் - விசயை. பிணைந்த - கலந்து மயங்கிக்கிடந்த. பேரருள் - கழிகாமம். விண்ணகம் -வானம். ஒண்ணிற உரோணியோடு - ஒள்ளிய நிறம் படைத்த உரோகிணியோடே கூடி. திங்கள் உரோகிணியோடு கழி காமங் கொண்டொழுகிய காரணத்தால் தேய்வுற்றான் என்பது கதை. உரோகிணி – உரோணியென வந்தது விகாரம்.
சச்சந்தன் கட்டியங்காரனைத் தனியாக அழைத்துத் தன் கருத்தை யுரைத்தல்
"அசைவிலாப் புரவி வெள்ளத்து அரிஞ்சயன் குலத்துள் தோன்றி,
வசையிலாள் வரத்தின் வந்தாள் வான்சுவை அமிர்த மன்னாள்
விசையையைப் பிரித லாற்றேன், வேந்தன்நீ யாகி வையம்
இசைபடக் காத்தல் வேண்டும் இலங்குபூண் மார்ப!" என்றான். 33
கேட்ட கட்டியங்காரன், முதற்கண் உடன்படான் போல் நடித்து, "யானையின் கழுத்தின்மேல் வைத்தற்குரிய தவிசினை நாயின்மேல் வைப்பது கிடையாது; அதுபோலவுளது அடியேன்மேல் தேவரீர் சுமந்து போந்த அரசினை
வைப்பது" என்று கூற, அரசன் "நீ மறுத்து மொழியற்க" என்றான்.
33. அரிஞ்சயன் அசைவிலாக் குலத்துள் - அரிஞ்சயன் என்பானது குற்ற மற்ற குலத்தில் பிறந்து. அரிஞ்சயன் - விசயையின் பாட்டன். புரவி வெள்ளம் - குதிரைகளை வெள்ளக் கணக்கில் உடைய, வசை - குற்றம். வரத்தின் வந்தான் - முற் பிறப்பில் என் வேண்டுகோட்கு இரங்கி இப் பிறப்பில் எனக்கு மனைவியாக வந்தாள். இசைபட - புகழ் உண்டாக. இலங்கு பூண் - விளங்குகின்ற பூண்.
கட்டியங்காரன் உடன்பட்டுரைத்தல்
எழுதரு பருதி மார்பன் இற்றென இசைத்த லோடும்
தொழுதடி பணிந்து சொல்லும்: "துன்னலர்த் தொலைத்த வேலோய்!
கழிபெருங் காத லாள்கண் கழிநலம் பெறுக; வையம்
பழிபடா வகையிற் காக்கும் படுநுகம் பூண்பல்" என்றான். 34
34. எழுதரு பருதி மார்பன் - எழுகின்ற ஞாயிறு போன்ற விளக்க
மமைந்த மார்பையுடைய சச்சந்தன். இற்றுஎன - தன் கருத்து இன்னது
என்று, துன்னலர் - பகைவர். தொலைத்த வேலோய் என்றதனால், தன்பால் அரசு வைப்பின் தான் துன்னி நின்று நன்றி மறவாது ஒழுகுவதாகக் கட்டியங்காரன் தன் உடன்பாட்டுக் குறிப்பு நன்கு எய்தக் கூறுதல் காண்க. கழிபெரு-ஒரு பொருட் பன்மொழி. இனி, துன்னவர்த் தொலைத்த வேலோய் என்றதற்கு, " பகை யென்று கூறப்படும் பகைவரை யெல்லாம் கொன்ற வேலோய்" என்று நச்சினார்க்கினியர் கூறினார்.
இதனையறிந்து நிமித்திகன் முதலிய அமைச்சர்கள் தடுத்துரைத்தல்
வலம்புரி பொறித்த வண்கை மதவலி விடுப்ப ஏகிக்
கலந்தனன் சேனை காவல் கட்டியங்காரன் என்ன,
"உலந்தரு தோளினாய்! நீ ஒருவன்மேல் கொற்றம் வைப்பின்
நிலம்திரு நீங்கும்" என்றோர் நிமித்திகன் நெறியிற் சொன்னான். 35
35. வலம்புரி-சங்க ரேகை, பொறித்த-பிறவியிலே பொறிக்கப்பட்ட, மதவலி-மிக்க வலிமையுடைய சச்சந்தன், விடுப்ப- கையாலே காட்டி விடுப்ப, என்ன-என்று அனைவரும் சொல்ல, உலந்தரு தோளினாய்-தூண் போல் உயர்ந்த தோளையுடையாய், கொற்றம்- அரசியல், நிலந்திரு-நிலமும் திருவும், என்று ஓர்-என்று அறிவாயாக என, நெறியின்-நீதியால்.
சச்சந்தன் கூறல்
"எனக்குயிர் என்னப் பட்டான்: என்னலால் பிறரை யில்லான்;
முனைத்திறம் முருக்கி முன்னே மொய்யமர் பலவும் வென்றான்;
தனக்குயான் செய்வ செய்தேன்; தான்செய்வ செய்க; ஒன்றும்
மனக்கினா மொழிய வேண்டா; வாழியர், ஒழிக" என்றான், 36
36. என் அலால் பிறரை இல்லான்-என்னை யொழியப் பிறரை
உயிர்த்துணைவராக இல்லாதவன், முனைத் திறம்-பகைவர் போர் முனைக்
கண் செய்யும் சூழ்ச்சி வகை. முருக்கி-கெடுத்து, முன்னே-யான் இச்
சிறப்பைச் செய்வதற்கு முன்னே, மொய்யமர்-நெருங்கிய போர், தனக்கு-அவன் றனக்கு; அவனுக்கு, செய்வ-செய்யக்கூடியவை, ஒன்றும்-சிறிதும், மனக்கு-மனத்திற்கு, இன்னா-பொறாமை, வாழியர்-நீயும் நின் நிலையில் வாழ்க, ஒழிக-இனி, இவ்வாறு கூறுவதைத் தவிர்க
நிமித்திகன் மேலும் கூறல்
"காவல! குறிப்பன் றேனும் கருமம் ஈது, அருளிக் கேண்மோ;
நாவலர் சொற்கொண் டார்க்கு நன்கலால் தீங்கு வார?
பூவலர் கொடிய னார்கண் போகமே கழுமி, மேலும்
பாவமும் பழியு முற்றார் பற்பலர்; கேள்இது" என்றான் 37
என்றவன் பிரமன் திலோத்தமை பொருட்டு நான் முகனாகியதும், அரன் மங்கை பங்கனாகியதும், மாயோன் கோவியர் துகில் கவர்ந்து குருந்தொசித்துச் சிறு சொல் பெற்றதும், புத்தன் பெண் கழுதையாகி இழிக்கப்பட்டதும் எடுத்துக் கூறினான்.
37 குறிப்பன்றேனும் - திருவுள்ளமன்றாயினும். கருமம் ஈது - செய்யத்தக்க கருமம் இதுவே; அஃதாவது ஒருவன்மேல் கொற்றம்வைத்தலாகாது. கேண்மோ - கேட்க. நாவலர் - அமைச்சர். நன்கு - நலம். பூவலர் கொடியனார் - பூக்கள் பூத்துள்ள கொடி போலும் மகளிர். போகமே கழுமி - போகத்திலே மூழ்கி மயங்கி, பாவமும் பழியும் உற்றோர் - மறுமையில் பாவமும், இம்மையில் பழியும் கொண்டவர்.
பெண்ணின்பத்தால் அரசாட்சியை நெகிழ்த்தல் நன்றன்று
என அவனே வற்புறுத்திக் கூறல்.
"படுபழி மறைக்க லாமோ? பஞ்சவர் அன்று பெற்ற
வடுவுரை யாவர் பேர்ப்போர்? வாய்ப்பறை அறைந்து தூற்றி,
இடுவதே யன்றிப் பின்னும் இழுக்குடைத் தம்ம; காமம்
நடுவுநின் றுலக மோம்பல் நல்லதே போலும்" என்றான். 38
38 படுபழி - காமத்தால் பிறந்த பழி. பஞ்சவர் - பாண்டவர். வடுவுரை - பழிமொழி; ஒருத்தியை ஐவர் மனைவியாக்கிக் கொண்டனர் என்பது. பேர்ப்பார் - நீக்குவார். வாய்ப்பறை யறைந்து – பலரும் நன்கு அறியும்படி வெளிப்படச் சொல்லி. தூற்றியிடுவதேயன்றி - தூற்றுவதே யன்றி. பின்னும் - மறுமையிலும். இழுக்குடைத்து – நரகம் முதலியவற்றை எய்துவிக்கும் குற்றமுடைத்து. நடுவுநின்று - நடுநிலையில்
நின்று. போலும் - ஒப்பில் போலி.
உருத்திரதத்தன் கூறல்
ஆரறி விகழ்தல் செல்லா
ஆயிரம் செங்க ணானும்,
கூரறி வுடைய நீரார்
சொற்பொருள் கொண்டு செல்லும்;
பேரறி வுடையை நீயும்;
பிணையனாட்கு அவலம் செய்யும்
ஓர்அறி வுடையை என்றான்
உருத்திர தத்தன் என்பான். 39
39. ஆர் அறிவு இகழ்தல் செல்லா - பெரிய அறிவுடைமையால் பிறரால் இகழப்படாத. ஆயிரஞ் செங்கணன் - இந்திரன். கூர் அறிவுடைய நீரார் - கூர்த்த அறிவு படைத்த அமைச்சர். நீயும் - இந்திரனைப் போல நீயும். பிணையனாட்கு - விசயைக்கு. அவலம் - பின்னர் நிகழ்வதாகிய துன்பம். தன் கணவன் தன் பொருட்டால் அரசு காவலில் இழுக்கினான் என எழும் பழியால் உளதாகும் வருத்தமுமாம். ஓரறிவு - சிறு புல்லறிவு.
சச்சந்தன் விடையிறுத்தல்
அளந்துதாம் கொண்டு காத்த அருந்தவ முடைய நீரார்க்கு
அளந்தன போக மெல்லாம்; அவரவர்க்கு அற்றை நாளே
அளந்தன வாழும் நாளும்; அதுஎனக் குரையல் என்றான்
விளங்கொளி மணிகள் வேய்ந்து விடுசுடர் இமைக்கும் பூணான். 40
40. தாம் அளந்துகொண்டு காத்த அருந் தவம் - தம்மால் இயல்வது
என வரைந்துகொண்டு காத்த அரிய தவம். அற்றை நாளே - கருவில்
பதிநின்ற பொழுதே. அளந்தன - அறுதியிடபட்டு உள்ளன. அது - அந்த நிலையாமை. "நிலந்திரு நீங்கும்" (34) என நிமித்திகன் கூறிய செல்வ நிலையாமையையும், உருத்திரதத்தன் கூறிய யாக்கை நிலையாமையையும் நிலை யாமை யென ஒருமையாக்கி, "அது" என்று ஒருமையாற் கூறினான். உரையல் என்றான். நிமித்திகனை நோக்கி; அவன் உரியனாதலின். உரையல் - சொல்லற்க.
நிமித்திகன் துறவு
"மூரித்தேந் தாரி னாய்!நீ, முனியினும், உறுதி நோக்கிப்
பாரித்தேன் தரும நுண்ணூல்; வழக்குஅது வாதல் கண்டே;
வேரித்தேங் கோதை மாதர் விருந்துனக் காக இன்பம்
பூரித்தேந் திளைய கொங்கை புணர்க; யான் போவல்" 41
என்றான்
அமைச்சர்கள் நீங்கிச் செல்ல, கட்டியங்காரன் அரச பாரத்தைத் தான் சுமந்து ஆட்சி புரிந்து வருகின்றான். சச்சந்தன் தன் மனைவி விசயையின் காதலின்பத்தில் மூழ்கிக் களித்திருக்கின்றான். இவ்வாறு நாட்கள் செல்ல, விசயை ஒருநா ளிரவு தீக்கனவு காண்கின்றாள்.
41. மூரித் தேந் தாரினாய் - மூரித் தாரினாய் என இயைத்து,
வன்மையுடைய தாரினாய் என்று கொள்க. தேந் தார் - தேன் பொருந்திய மாலை. முனியினும் - வெகுளினும். பாரித்தேன் - விரித்துக் கூறினேன். தரும நுண்ணூல் - தருமத்தைச் சொல்லும் நுண்ணிய கருத்துக்களை யுடைய நூல். வழக்கு - அமைச்சர் இயல்பு. வேரி - மணம்.
மாதர் இன்பம் உனக்கு விருந்தாக. கொங்கை புணர்க என்று முடிக்க.
இன்பம் கூடுந்தோறும் புதிது படுதலின் "விருந்தாக" என்றான். "புணர்ந்தால் புணருந்தொறும் பெரும் போகம் பின்னும் புதிதாய். மணந்தாழ் புரி குழலாள் அல்குல் போல வளர்கின்றதே" என்று திருக்கோவை யார் கூறுதல் காண்க. பூரித்து - பருத்து. ஏந்து - உயர்ந்த. அரசன் போ என்னாமல், தானே போவே னென்றல் நீதியன்மையின், துறவு உட்கோளாயிற்று.
விசயை தீக்கனாக் கண்டு சச்சந்தன்பால் உரைத்தற்கு எழுதல்
பஞ்சி யடிப்பவ ளத்துவர் வாயவள்,
துஞ்சு மிடைக்கன மூன்றவை தோன்றலின்,
அஞ்சி நடுங்கினள் ஆயிழை; ஆயிடை
விஞ்சுடர் தோன்றி விடிந்ததை யன்றே. 42
42. பஞ்சியடி - பஞ்சி போலும் மெல்லிய அடி. பவளத் துவர் வாய் - பவளம்போற் சிவந்த வாய். அடியையும் வாயையுமுடைய விசயை. கனா மூன்று - கண்ட கனாக்கள் மூன்று. அவை - அம் மூன்றும். தோன்றலின் -
நெஞ்சில் நின்று நனவில் தோன்றுதலால். ஆயிடை - அக்காலத்தே. வெஞ்சுடர் - ஞாயிறு. விடிந்ததை - விடிந்தது. வினைத் திரிச்சொல். விடியவில் தோன்றுங் கனா பயன் செய்யும் என்ப. "இவை பிற்பயக்குங் கனவாதலின், பின்னும் நெஞ்சில் தோன்றின"
அருகனைப் பரவுதல்
பண்கெழு மெல்விர லால்பணைத் தோளிதன்
கண்கழூஉச் செய்து கலைநல தாங்கி
விண்பொழி பூமழை வெல்கதிர் நேமிய
வண்புகழ் மாலடி வந்தனை செய்தாள். 43
43. பண்கெழு மெல்விரல் - யாழ் பயிலும் மெல்விரல். பண், ஆகு
பெயர். பணைத்தோளி - மூங்கில் போலும் தோளையுடைய விசயை. கண்
கழூஉச் செய்து - கண்ணைக் கழுவி. கலை - உடை. நல தாங்கி - நல்லவை
யுடுத்து. விண் - விண்ணோர்கள். வெல் கதிர் நேமி - தீவினையை வெல்லும்
அறவாழி. நேமிய - குறிப்புப் பெயரெச்சம். வண்புகழ் மால் - வளவிய
புகழையுடைய அருகன். குலமகளிர் தம் கணவனைத் தவிர வேறு தெய்வம்
பரவாராயினும். "தெய்வ மஞ்சல்" என்னும் மெய்ப்பாட்டியற் சூத்திரம்.
அதற்கும் ஓராற்றால் விதியாதலால் அமையும் என அறிக.
சச்சந்தனை யடைந்து வழிபடுதல்
இம்பரி லாநறும் பூவொடு சாந்துகொண்டு
எம்பெரு மானடிக் கெய்துக என்றேத்தி
வெம்பரி மான்நெடுந் தேர்மிகு தானைஅத்
தம்பெரு மானடி சார்ந்தன ளன்றே. 44
44. இம்பர் இலா - இவ்வுலகில் நிகரில்லாத. நறும்பூ - மணமிக்க பூ.
எம்பெருமான் - விளி. எய்துக - பொருந்துவனவாக. வெம் பரி மான் -
கடிய செலவையுடைய குதிரை. அத் தம் பெருமான் - தம்முடைய அப்
பெருமானான அரசன். அ - உலகறிசுட்டு.
தானமர் காதலி தன்னொடு, மாவலி
வானவர் போல்மகிழ் வுழற்றபின், வார்நறும்
தேனெனப் பாலெனச் சில்லமிர் தூற்றெனக்,
கானமர் கோதை கனாமொழி கின்றாள். 45
45. தான் அமர் காதலி - தான் மேவுகின்ற காதலி. மாவலி - மிக்க
வலி படைத்த சச்சந்தன். அன்மொழித் தொகை. மதவலி என்றாற்
போல. வானவர்போல் மகிழ்வுற்றபின் - தேவர் நோக்கத்தால் நுகர்ந்
தாற்போல இவனும் கண்ணாலே பார்த்து மனமகிழ்ச்சியுற்ற பின்பு, வார்
நறுந்தேன்; ஒழுகுகின்ற நறிய தேன். கான் - மணம். கோதை - மாலை
ஈண்டு, அக் கோதை யணிந்த விசயை மேற்று. தேன் - முன்னே இனிமை
விளைத்துப் பின் தீங்கு விளைவிப்பது. பால் - தூய்மை காட்டுவது.
அமிர்து - உயிர்காப்பது.
கனாவை யுரைத்தல்
தொத்தணி பிண்டி தொலைந்தற வீழ்ந்ததுஎண்
முத்தணி மாலை முடிக்கிட னாக,
ஒத்ததன் தாள்வழி யேமுனை யோங்குபு
வைத்ததுபோல வளர்ந்ததை யன்றே. 46
46 தொத்து அணி பிண்டி - பூங்கொத்துகளால் அழகு கொண்ட
அசோகமரம். தொலைந்து - கெட்டு. அற வீழ்ந்தது. தானும் நேராக
வீழ்ந்தது. எண் மாலை - எட்டு மாலை. முத்தணி மாலை - முத்துப்போன்ற
வெள்ளிய மாலை. முடி இடனாக - முடிக்கு இருப்பிடமாக. ஓங்குபு -
ஓங்கி. வைத்தது - நட்டு வைத்தது. "பிண்டி... வீழ்ந்தது" -
இதைச் சொல்லுங்கால் அவன் சொல்லுக்குத் தேன் உவமையாயிற்று.
"எண் ... மாலை" - இதற்குப் பால் உவமம். சீவகனுக்குப் பின்னுண்டாகும் ஆக்கத்திற்கு அமிர்து உவமையாயிற்று. இதனால் அரசற்கும் சுற்றத்திற்கும் கேடுண்டாதல் எய்திற்று.
பிண்டி தொலைந்து அற வீழ்ந்தது. அதன் தாள் வழியே எண் மாலை முடிக்கிடனாக நட்டு வைத்தது போல ஒரு முனை ஓங்குபு வளர்ந்தது என்க.
சச்சந்தன் கனாவின் பயன் கூறல்
நன்முடி நின்மக னாம்; நறு மாலைகள்
அன்னவ னால்அம ரப்படுந் தேவியர்;
நன்முளை நின்மக னாக்கம தாம்;எனப்
பின்னத னாற்பயன் பேசலன் விட்டான். 47
47. நின் மகனாம் - நினக்குப் பிறக்கும் மகனாம். அமரப்படும் -
காதலிக்கப்படும். ஆக்கமதாம் - ஆக்கமாம். அது. பகுதிப் பொருள் விகுதி. பின்னது - பிண்டி தொலைந்து அறவே வீழ்ந்த செய்தி. பேசலன் - பேசலனாய்.
"இற்றத னாற்பயன் என்? என "ஏந்திழை!
உற்றதுஇன் னேஇடை யூறுஎனக்கு" என்றலும்,
மற்றுரை யாடல ளாய்,மணி மாநிலத்து
அற்றதோர் கோதையின் பொற்றொடி சோர்ந்தாள். 48
இவ்வாறு சோர்ந்து வீழ்ந்த விசயையைச் சச்சந்தன் தகுவன கூறித் தேற்றினன். அவள் காதலன் அன்பால்தேறி இனிதிருக்கையில், கருக்கொண்டாள்.
48. ஏந்திழை - விளி. எனக்கு இன்னே இடையூறு உற்றது -
இதன்கண் "இன்னே யென்றது உதாசீனம்போல் நின்றது" உற்றது என இறந்த காலத்தாற் கூறினான். தெளிவுபற்றி; "இல்லை, கனா முந்துறாத வினை" என்பது பழமொழி. உரையாடலனாய் - ஒன்றும் பேச மாட்டாது. கோதையின் - கோதை போல. மணி மா நிலத்து - மணி நிலத்தில். பொற்றொடி - தொடி, வளை; தொடியையுடைய விசயை.
விசயையின் கருப்பநிலை
கரும்பார் தோள்முத்தம் கழன்று, செவ்வாய்
விளர்த்துக், கண்பசலை பூத்த, காமம்
விரும்பார் முலைக்கண் கரிந்து, திங்கள்
வெண்கதிர்கள் பெய்திருந்த பொற்செப் பேபோல்
அரும்பால் பரந்து, நுசுப்பும் கண்ணின்
புலனாயிற்று; ஆய்ந்த அனிச்ச மாலை,
பெரும்பார மாய்ப்பெரிது நைந்து, நற்சூல்
சலஞ்சலம் போல், நங்கை நலம்தொலைந் ததே. 49
விசயை கண்ட கனவின்படியே தனக்கு ஏதம் வரும் என்னும் எண்ணத்தனாய்ச் சச்சந்தன் இருந்து வருகையில், தான் அமைச்சர் காட்டிய நெறியை மேற்கொள்ளா தொழிந்த சிறுமை நினைந்து வருந்தும் அவனது அறிவில் ஒரு விறகு தோன்றிற்று. தீங்கு நேர்ந்தபோது தன் காதலி விசயையை அப்புறப்படுத்த எண்ணி, ஓர் எந்திரத்தைச் சமைக்கத் துணிந்தான்.
49. கரும்பார் தோள் - கரும்பு போலும் தோள்; கரும்பெழுதிய தோள் என்றுமாம். விளர்த்து - வெளுத்து. பூத்த, வினைமுற்று. விரும்பு ஆர் முலைக்கண் - விரும்புதற்குப் பொருந்திய காரணமான முலைக்கண். பெய்து இருந்த - பெய்து வைத்திருந்த . நுசுப்பு - இடை.. கண்ணுக்குப் புலனாகாதிருந்த இடை. இதுபோது கண்ணின் புலனாயிற்று என்க. ஆய்ந்த - நுண்ணியதாய் ஆய்ந்து தொடுத்த. பாரமாய் - பாரமாக. பெரிதும் - மிகவும். சூற் சலஞ்சலம் - சூல்கொண்ட சலஞ்சலம் என்னும் சங்கு.
தோள் கழன்று, வாய் விளர்த்து, கண் பசலை பூத்தன; முலைக்கண் கரிந்து, பால் பரந்து, நுசுப்பும் புலனாயிற்று; நலம் நைந்து தொலைந்தது என முடிக்க.
மயிற்பொறி சமைத்தல்
அந்தரத் தார்மய னேஎன ஐயுறும்
தந்திரத் தால்தம நூல்கரை கண்டவன்
வெந்திற லான்,பெருந் தச்சனைக் கூவி,"ஓர்
எந்திர வூர்திஇ யற்றுமின்" என்றான். 50
50. அந்தரத்தார் மயனே என ஐயுறும் - தேவர்களும் தொழில் கண்டு தம்முலகத்துத் தச்சனாகிய மயனே எனத் துணிந்து, வடிவுகண்டு
வேறே எவனோ என ஐயமுறும். தந்திரத்தால் - தொழிலோடு. தம நூல் - தம் தச்சு வேலைக்குரிய நூல். (நூல் - Theory; தந்திரம் - Practice.) கரைகண்டவன் - முற்றக் கற்றவன். கூவி - அழைத்து. எந்திர வூர்தி - எந்திரத்தால் வானத்தே செல்லக்கூடிய ஓர் ஊர்தி. இயற்றுமின் - இயற்றுக. ஒருமை பன்மை மயக்கம்.
பல்கிழி யும்,பயி னும்,துகில் நூலொடு
நல்லரக் கும்,மெழு கும்,நலம் சான்றன,
அல்லன வும்,அமைத்து ஆங்குஎழு நாளிடைச்,
செல்வதொர் மாமயில் செய்தனன் அன்றே. 51
51 கிழி - சீலை. பயின் - பிசின் (ஒட்டுப் பொருள்) துகில் நூல் - வெள்ளிய நூல். நலஞ்சான்றன -நல்லன. அமைத்து -கூட்டி. எழுநாளிடைச் செய்தனன் - ஏழு நாட்களில் செய்து முடித்தான்.
செய்யப்படு மயில் தானே செல்லாதன்றே; இது தானே செல்வது ஒன்றற்குச் "செல்வதோர் மாமயில்" என்றார். ஒருத்தரை நன்கு சுமக்க வேண்டியதாகலின், "மாமயில்" எனப்பட்டது. மா, பெருமை.
நன்னெறி நூல்நயந் தான்நன்று நன்றிது;
கொன்நெறி யிற்பெரி யாய்!இது கொள்கென,
மின்எறி பல்கலம் மேதகப் பெய்ததொர்
பொன்னறை தான்கொடுத் தான்,புகழ் வெய்யோன். 52
52. நன்னெறிநூல் - தச்சுத் தொழிற்குரிய நற்பொருளை யுணர்த்தும் நூல். நயம் - நுட்பம். கொல் நெறியிற் பெரியோய் - கொற்றொழிலில் பெரியோனே. மின் எறி - மின்னொளியைக் கெடுக்கும். பொன்னறை - பொன் நிறைந்த அறையிற் கிடந்த பொன் முழுதும். புகழ் வெய்யோன் - புகழை விரும்பும் சச்சந்தன்.
சச்சந்தன் விசயைக்கு மயிற்பொறி ஊர்ந்து செல்லும் வகையைக் கற்பித்தல்
ஆடியல் மாமயி லூர்தியை, அவ்வழி
மாடமும் காவும் மடுத்தொர்சின் னாள்செலப்,
பாடலின் மேன்மேல் பயப்பயத், தான்துரந்து
ஓட முறுக்கி உணர்த்த வுணர்ந்தாள். 53
இஃது இங்ஙனமிருக்க, அரசு மேற்கொண்டிருந்த கட்டியங்காரன் அவ்வரசுரிமை முற்றும் தானே கவர்ந்துகொள்ளக் கருதி, அதற்குத் தடை சச்சந்தன் உயிரோடிருப்பதே
என்றெண்ணி அவனைத் தொலைத்துவிட ஒரு சூழ்ச்சி செய்யலுற்றான்.
53. ஆடு இயல் - பறந்து விளையாடுதற்கு இயன்ற. மாடமும் காவும் அடுத்து - மாடத்துக்கும் காவிற்கும் பறந்து சென்று பயின்று. பாடலின் - பாட்டு மேன்மேல் எழுதல் போல. துரந்து - செலுத்தி.
கட்டியங்காரன் அமைச்சர்கட்குத் தன் சூழ்ச்சியை யுரைத்தல்
மன்ன வன்பகை யாயதொர் மாதெய்வம்
என்னை வந்திடங் கொண்டு அஃது இராப்பகல்
துன்னி நின்று, செகுத்திடு நீஎனும்;
என்னை யான்செய்வ? கூறுமின் என்னவே. 54
54. மன்னவன் பகை - மன்னவனுக்குப் பகை. இடங்கொண்டு - இருப்பிடமாகக் கொண்டு. துன்னி - நெருங்கி. எனும் - என்றுசொல்லுகின்றது. என்ன - என்று கட்டியங்காரன் அமைச்சரைக் கேட்க.
இச்சொற்களைக் கேட்டு உளம் நடுங்கிய அமைச்சர்களுள்
தருமதத்தன் என்னும் அமைச்சன் கழறுதல்
"தவளைக் கிண்கிணித் தாமரைச் சீறடிக்
குவளை யேயள வுள்ள கொழுங்கணாள்,
அவளை யே,அமிர் தாகஅவ் வண்ணலும்
உவள கம்தன தாக ஒடுங்கினான்; 55
55. அவ்வண்ணல் - சச்சந்தன். சீறடி - சிறிய அடி. கொழுங் கண்ணாள் - கொழுவிய கண்ணையுடையளாகிய அவ் விசயை. அமிர்தாக - அமிர்தாகக் கொண்டு. உவளகம் - அந்தப்புரம். ஒடுங்கினான். –பிறநாடு காவல் முதலியவற்றின் வேட்கையின்றிச் சுருங்கினான்.
"தன்னை யாக்கிய தார்ப்பொலி வேந்தனைப்
பின்னை வௌவின் பிறழ்ந்திடும் பூமகள்;
அன்ன வன்வழிச் செல்லின்இம் மண்மிசைப்
பின்னைத் தன்குலம் பேர்க்குநர் இல்லையே; 56
56. தார்ப்பொலி வேந்தன் - தாரால் பொலிவுற்ற வேந்தன் அறிவினால் பொலிவுறுகின்றா னல்லன் என்பது குறிப்பு. வௌவின் - உயிரைக் கவர்ந்தால். பூமகள் - தாமரைப்பூவில் இருக்கும் திருமகள் பிறழ்ந்திடும் - நீங்கிவிடுவாள். அவன் - தன்னை அரசு காவற் குரியனாக்கிய அவ்வேந்தன். பேர்க்குநர் - பெயர்ப்பவர்.
"தீண்டி னார்தமைத் தீச்சுடும்; மன்னர்தீ
ஈண்டு நும்கிளை யோடும் எரித்திடும்;
வேண்டில் இன்னமிர் தும்நஞ்சு மாதலால்
மாண்ட தன்றுநின் வாய்மொழித் தெய்வமே; 57
57 ஈண்டும் - திரண்ட. கிளை - சுற்றத்தார். வேண்டில் - அரசன் விரும்புவானாயின். நஞ்சுமாதலால் -விரும்பானாயின். தன் பகைமையாகிய நஞ்சினால் தன்னால் விரும்பப்படாதவரை யழிப்பனாதலால். மாண்டது - மாட்சிமைப்பட்டது. வாய்மொழி தெய்வம் - உறுதி கூறுதலையுடைய தெய்வம்.
"வேலின் மன்னனை விண்ணகம் காட்டி,இஞ்
ஞால மாள்வது நன்றெனக் கென்றியேல்
வாலி தன்று" எனக் கூறினன். வாள்ஞமற்கு
ஓலை வைத்தன்ன ஒண்டிற லாற்றலான். 58
58. விண்ணகம் காட்டி - கொன்றுயிட்டு. என்றியேல் - என்று
சொல்வாயாயின். வாலிது அன்று - நன்றன்று. வாள் நமற்கு ஓலை
வைத்தன்ன ஒண்திறலாற்றலான் - வாள் வன்மையால் "வல்லவனாயினும் வந்து ஒருகை பார்க்கட்டும்" என்று எமனுக்கும் ஓலை விடுக்கும் ஒள்ளிய திறல் படைத்தவனான தருமதத்தன்.
"பிறையது வளரத் தானும் வளர்ந்துடன் பெருகிப் பின்னாள்
குறைபடு மதியம் தேயக் குறுமுயல் தேய்வ தேபோல்,
இறைவனாத் தன்னை ஆக்கி யவன்வழி யொழுகின் என்றும்
நிறைமதி இருளைப் போழும் நெடும்புகழ் விளைக்கும்" என்றான். 59
59 பிறையது வளரத் தானும் வளர்ந்து - பிறைவளர, அது தானும் வளர்ந்து. அது - முயலாகிய களங்கம். குறைபடு மதியம் -
தேய்தற்குக் காலமுண்டான முழுத் திங்கள். குறுமுயல் - சிறிய முயலாகிய களங்கம். ஆக்கியவன் - சச்சந்தன். இருளைப் போலும் நிறைமதி என மாற்றி. இருளைப் போக்கும் முழு மதி போல என முடிக்க. அவ்வொழுக்கம் புகழ் விளைக்கும் என்று உரைக்க.
மதனன் கூறல்
தார்ப்பொலி தரும தத்தன் தக்கவா றுரைப்பக் குன்றில்
கார்த்திகை விளக்கிட் டன்ன கடிகமழ் குவளைத் பைந்தார்
போர்த்ததன் அகல மெல்லாம் பொன்னென வியர்த்துப் பொங்கி
நீர்க்கடல் மகரப் போழ்வாய் மதனன்மற் றிதனைச் சொன்னான். 60
60 தார்ப் பொலி தருமதத்தன் - வாகை மாலையால் பொலியும்
தருமதத்தன். தக்கவாறு - அமைச்சர்க்கும் அரசர்க்கும் தக்க முறைப்படி.
குன்றில் கார்த்திகை விளக்கிட்டாற்போல என்றது, மதனன் அணிந்திருந்த
குவளைப் பைந்தாருக்கு உவமை. குவளைப் பைந்தார் - குவளைப் பூவால்
தொடுக்கப்பட்ட பசிய மாலை. போர்த்த - சூடிய. அகலம் - மார்பு. பொன்ளென வியர்த்து - கடுக வியர்த்து. பொள்ளென - குறிப்பு மொழி. (குறள்: 487) நீர்க்கடல் மகரப் பேழ்வாய் மதனன் - நீர் நிரம்பிய கடலில் உள்ள மகர மீனின் பிளந்த வாயிடத்தெழும் முழக்கம் போலும் சொல்லையுடைய மதனன். மகரவாய் போலும் பெரிய வாயையுடைய மதனன் என்றுமாம்.
:
"தோளினால் வலிய ராகித் தொக்கவர் தலைகள் பாற
வாளினால் பேச லல்லால், வாயினால் பேசல் தேற்றேன்;
காளமே கங்கள் சொல்லிக் கருனையாற் குழைக்குங் கைகள்
வாளமர் நீந்தும் போழ்தில் வழுவழுத் தொழியு மென்றான்" 61
61. தொக்கவர் - பலராய்ச் சேர்ந்து வரும் பகைவர்.பாற - சிதற. வாளினால் பேசல் - வாளினால் வெட்டி வீழ்த்திச் செய்கையில் காட்டுவதன்றி. தேற்றேன் - அறியேன்; இது தன்வினை; "தேற்றாய் பெரும பொய்யே" (புறம்.19) என்றாற் போல. காளமேகங்கள் சொல்லி - இருண்ட மேகம் போல முழக்கமிட்டுச் சொல்லி. கருணையால் - பொரிக் கறிகளோடு. குழைக்கும் - சோற்றைப் பிசையும். அமர் நீந்தும் போழ்து - போராகிய கடலைக் கடக்கும் காலத்தில். வாள் வழு வழுத் தொழியும் - வாள் வழுக்கி வீழும். இக் கவி முன்னிலைப் புறமொழி; முன்னிற்பாரைப் படர்க்கையில் வைத்துப் பேசுதல்.
இவற்றைக் கேட்டுக் கட்டியங்காரன் வெகுண்டு கூறுதல்
"என்னலால் பிறர்கள் யாரே
இன்னவை பொறுக்கும் நீரார்?
உன்னலால் பிறர்கள் யாரே
உற்றவற்கு உறாத சூழ்வார்?
மன்னன்போய்த் துறக்கம் ஆண்டு
வானவர்க் கிறைவ னாக,
பொன்னெலாம் விளைந்து பூமி
பொலிய யான் காப்பல்" என்றான். 62
62 இன்னவை - கடிய சொற்கள். உற்றவற்கு - சச்சந்தனுக்கு. உறாத - போக நுகர்ச்சிக்குரிய பொன்னுலகைத் தாராது, துன்பத்துக்குரிய மண்ணுலக நுகர்ச்சிகள். ஆக - ஆகுக. பூமியெல்லாம் பொன் விளைந்து பொலிய யான் காப்பல் என இயைக்க.
மதனன் முதலியோர் அஞ்சி அமைந்து மொழிதல்.
விளைக; பொலிக; அஃதே; உரைத்திலம்; வெகுளல் வேண்டா;
களைகம், எழுகம் இன்னே; காவலற் கூற்றம் கொல்லும்;
வளைகய மடந்தை கொல்லும்; தான்செய்த பிழைப்புக் கொல்லும்;
அளவறு நிதியம் கொல்லும்; அருள் கொல்லும்; அமைக, என்றான். 63
அமைச்சர் பலரும் தன் கருத்துக்கு இசைந்தது கண்டு கட்டியங்காரன் பல்வகைப் படையேந்திய நால்வகைத் தானை சூழச் சச்சந்த னிருந்த திருநகரை வளைந்து கொண்டான்.
63. விளைக, பொலிக - நீ கூறியவாறே பொன்னே விளைக, பொலிக.
அஃதே - எமக்கு நினைவும் அதுவே. களைகம் எழுகம் - அரசனைக்; கொன்று
களைதற்கு எழுவேம். அரசன் செய்யும் கொலை. "களைகட்டதனோடு நேர்..-
ஆதலின் "களைகம்" என்றான். வளை கய மடந்தை - சங்கு வாழும் குளத்தில் பூக்கும் தாமரையில் இருக்கும் திருமகள். காவலனைக் கொல்லும் கூற்றம் என மாற்றி, மடந்தையாய், பிழைப்பாய். நிதியமாய், அருளாய்க் கொல்லும் என முடிக்க. மடந்தை - விசயை. பிழைப்பு - அரசு காவல் வழுக்கியது; நிதியம் - அரச போகம். அருள் – கட்டியங்காரன்பாற் காட்டிய பேரருள்.
கட்டியங்காரன் போர்க்கெழுந்ததை வாயிலோன் சச்சந்தனுக்குக் கூறல்
"நீணில மன்ன, போற்றி;
நெடுமுடிக் குருசில், போற்றி;
பூணணி மார்ப, போற்றி;
புண்ணிய வேந்தே, போற்றி;
கோன்நினைக் குறித்து வந்தான்
கட்டியங் காரன்" என்று
சேண்நிலத் திறைஞ்சிச் சொன்னான்
செய்யகோல் வெய்ய சொல்லான். 64
64. கோள்- கொலை. சேண் நிலத்து - சேய்மையான இடத்தே நின்று. செய்ய கோல் - நேரிய கோல். வெய்ய சொல்லான் –வெய்ய சொல்லைக் கூறுதலை யுடைய வாயிலோன். போகத்திலே மூழ்கிக் கிடக்கின்றமை "பூணணி மார்பம்" கூறப்பட்டது. இனி, பகைவர் தம் மார்பிற் கவசமணிதற்குக் காரணமான மார்ப என்றுமாம். இப் போகம் முற்பிறப்பிற் செய்த புண்ணியத்தின் பயனாதலின் "புண்ணிய வேந்தன்" எனப்படுகின்றான். நீணில முதலாக நான்கு கூறியது. நிலத்திற்கும் குலத்திற்கும் வீரத்திற்கும் அறத்திற்கும் நின்னை யொழிய இல்லை யென்று இரங்கியது என்பர்.
சச்சந்தன் கோயில் வீரர்க்கு உரைத்தல்
"திண்ணிலைக் கதவ மெல்லாம்
திருந்துதாழ் உறுக்க; வல்லே
பண்ணுக பசும்பொன் தேரும்
படுமதக் களிறும் மாவும்;
கண்ணகன் புரிசை காக்கும்
காவலர் அடைக" என்றான்.;
விண்ணுரும் ஏறு போன்று:
வெடிபட முழங்கும் சொல்லான்,. 65
65 திண்ணிலைக் கதவம் - திண்மையான நிலையினையுடைய கதவுகள். தாழ் உறுக்க - தாழிடுக. வல்லே - விரைந்து. கண் அகல் புரிசை - இடமகன்ற தலை யகலமுடைய மதில். உரும் ஏறு - இடி. வெடிபட - வெடித்தலுண்டாக.
அவன் விசயைக்கு வேண்டுவ கூறி வெளியேற்றல்
"நங்கைநீ நடக்கல் வேண்டும்:நன்பொருட் கிரங்கல் வேண்டா;
கங்குல்நீ அன்று கண்ட கனவெலாம் விளைந்த" என்னக்
கொங்கலர் கோதை மாழ்கிக் குழைமுகம் புடைத்து வீழ்ந்து
செங்கயற் கண்ணி வெய்ய திருமகற்கு அவலம் செய்தாள். 66
66. கனவெலாம் - கனவு முற்றும். விளைந்த - பலிக்கலுற்றன. நன் பொருள் - தனக்குளதாகிய கேடு. மங்கல மொழியாற் கூறினான் விசயை சோர்வு எய்தாமைக்கு. இனி, வயிற்றிலிருக்கும் பிள்ளை என்றுமாம். கொங்கு- தேன். மாழ்கி - மயங்கி. முகம் குழையப் புடைத்து. கோதை - கோதை போல. வெய்ய - விரும்பிய. திருமகற்கு - அரசனுக்கு. இனி, வயிற்றிலிருக்கும் பிள்ளைக்கு என்றுங் கூறுப. அவலம் - வருத்தம்.
சாதலும் பிறத்தல் தானும்
தம்வினைப் பயத்தி னாகும்;
ஆதலும் அழிவு மெல்லாம்
அவைபொருட் கியல்பு கண்டாய்
நோதலும் பரிவு மெல்லாம்
நுண்ணுணர் வின்மை யன்றே!
பேதைநீ; பெரிதும் பொல்லாய்;
பெய்வளைத் தோளி! என்றான். 67
67. வினைப்பயத்தினாகும் - வினைப் பயனால் உண்டாம். நோதலும் - அழிவுக்கும் சாதற்கும் வருந்துதலும். பரிதல் - மகிழ்தல். பேதை - அறிந்திலை. பொல்லாய் - அவலம் செய்கின்றாய். பேதை, தோளி இரண்டையும் விளியாக்கலும் உண்டு. அப்போது பொல்லாய் என்றதற்கு அறி விலியாய் இருந்தாய் என்று பொருள் கூறுக.
தொல்லைநம் பிறவி யெண்ணில்
தொடுகடல் மணலும் ஆற்றா
எல்லைய; அவற்று ளெல்லாம்
ஏதிலம் பிறந்து; நீங்கிச்
செல்லுமக் கதிகள் தம்முள்
சேரலம்; சேர்ந்து நின்ற
இல்லினுள் இரண்டு நாளைச்
சுற்றமே; இரங்கல் வேண்டா; 68.
68 தொல்லை - பழைய. பிறவி - மக்கட் பிறப்பு. ஆற்றா - எண் ணிடப்பட்டுச் சிறு தொகையாகும். எல்லைய - அளவினவாம்.பிறந்தும் ஏதிலம் - பிறந்தும் வேறுபட் டிருந்தேம். நீங்கி -இவ்வுடம்பை நீங்கி. சேரலம் - சேரமாட்டேம். இரண்டு நாள் - சிறிது நாளென்னும் பொருட்டு. சுற்றம் - உறவு.
வண்டுமொய்த் தரற்றும் பிண்டி வாமனால் வடித்த நுண்ணூல்
உண்டுவைத் தனைய நீயும் உணர்விலா நீரை யாகி,
விண்டுகண் ணருவி சோர விம்முயிர்த் தினையை யாதல்
ஒண்டொடி தகுவ தன்றால்; ஒழிகநின் கவலை யென்றான். 69
69. வடித்த - தெளிவுரைக்கப்பட்ட. நுண்ணூல் - நூலின் நுண் பொருள். உண்டுவைத்த அனைய - முற்றவும் உணர்ந்துள்ள; நீரையாகி - தன்மையை யுடையளாய். விண்டு - என்னின் வேறுபட்டு. இனையையாதல் - இவ்வாறு அறிவிலார் போல அழும் தன்மை யுடையளாதல்.
உரிமைமுன் போக்கி யல்லால் ஒளியுடை மன்னர் போகார்,
கருமமீது எனக்கும் ஊர்தி சமைந்தது; கவல வேண்டா;
புரிநரம் பிரங்கும் சொல்லாய்! போவதே பொருள்மற்று என்றான்,
எரிமுயங் கிலங்கு வாட்கை யேற்றிளஞ் சிங்க மன்னான். 70
70. உரிமை - உரிமைமகளிர் ஒளி - விளக்கம். இது - இப்போது. நின்னைப் போக்குதல். எனக்கும் என்ற உம்மையால் விசயைக்கும் போதல் கருமம் என்றானாயிற்று. சமைந்தது - உன*து. மற்று - தாழ்ப்பது தீது என்று உணர்த்தி நின்றது. எரி முயங்கு இலங்கு வான் - நெருப்புக் கலந்து விளங்கும் வாள். ஏற்றிளஞ் சிங்கம் - இளஞ் சிங்க வேறு; இளைய ஆண் சிங்கம். பிள்ளையால் கதிபெறுதலும், பகை வேறலும் கருதி இருவர்க்கும் கரும மென்றான். கவலை - இருதலைக் கொள்ளியிடத்து எறும்புபோல் கணவனையும் மகனையும் நோக்கிக் கவலுதல்.
விசயை வெளியேறல்
என்புநெக் குருகி உள்ளம் ஒழுகுபு சோர, யாத்த
அன்புமிக் கவலித் தாற்றா ஆருயிர்க் கிழத்தி தன்னை,
இன்பமிக் குடைய சீர்த்தி இறைவன தாணை கூறித்
துன்பமில் பறவை யூர்தி சேர்த்தினன், துணைவி சேர்ந்தான். 71
71. என்பு நெக்குருகி - எலும்பு குழைந்து உருகும்படி, யாத்த - பிணித்த. ஆற்றாத - பிரிவாற்றாத, கிழத்தி - மனைவியாகிய, இன்பம் மிக்குகைய சீர்த்தி இறைவன் - அனந்த சுகம் மிகுதலாலே சீர்த்தியையுடைய அருகன். சீர்த்தி - மிகு புகழ். ஆணை - ஓம் நமோ அரஹந்தாணம் என்னும் மறை மொழி. துன்பமில் - துன்பம் பயத்தல் இல்லாத. திடீரென இறங்கினும். "தோகை கண்டவர் மருள வீழ்ந்து கால்* குவித்திருக்கும்" (சிந்தா. 239) ஆதலின், "துன்பமில் பறவை" யென்றார். இனி, தீதற்ற பறவை என்றுமாம். கூறி - கூற. ஆணை கூறச் சேர்ந்தான் என்க. சேர்ந்த விரைவு தோன்ற. சேர்ந்த திறம் கூறிற்றிலர்.
சச்சந்தன் வீழ்ச்சி
விசயை சென்ற பிரிவுத் துயரை ஒருவாறு ஆற்றிக் கொண்ட வேந்தன் போர்க்கோலம் பூண்டு, படை வீரர் சூழ்ந்துவரப் போர்க் களம் புகுந்து பெரும் போர் உடற்றுகின்றான்.
இருதிறத்தும் பலர் மாண்டு வீழ்கின்றனர்; குருதி வெள்ளம் பெருக்கிட் டோடுகிறது. முடிவில் கட்டியங்காரனும் சச்சந்தனும் நேர் நின்று பொருகின்றனர். இறுதியாக, கட்டியங்காரன் எறிந்த நெடுவேல் மார்பிற் பட்டுருவ, வேந்தன் வீழ்கின்றான்.
தோய்ந்த விசும்பென்னும் தொன்னாட் டகம்தொழுது
புலம்பெய்தி மைந்தர் மாழ்க,
ஏந்து முலையார் இனைந்திரங் கக்கொடுங்கோல்
இருள்பரம்ப, ஏஎ, பாவம்!
ஆய்ந்த குருகுலமாம் ஆழ்கடலி னுள்முளைத்த
அறச்செங்கோல் ஆய்கதிரினை,
வேந்தர் பெருமானைச் சச்சந்தனை மந்திரி
மாநாகம் உடன்விழுங்கிற் றன்றே. 72
72. தோய்ந்த - மக்கள் செறிந்த. விசும்பென்னும் தொன்னாட்டகம் - விண்ணுலகேயெனச் சிறப்பித் துரைக்கப்படும் ஏமாங்கத மென்னும் பழைய நாட்டகத்துச் சான்றோர். ஏந்து முலையார் - கற்புடைய மகளிர். கொடுங்கோல் இருள் - கொடுங்கோலாகிய இருள். பரம்ப - பரவ. அறச் செங்கோல் - அறத்தைச் செய்யும் செங்கோன்மை. ஆய்கதிர் - இளஞாயிறு. ஆய்கதிர் - இருளை யாய்ந்து கெடுக்கும் ஞாயிறு. ஆய்தல் – சுருங்குதலு மாதலின், இருள் குன்றச் செய்யும் கதிருமாம். மந்திரி மா நாகம் - மந்திரியாகிய கரு நாகம். மா - கருமை. உடன் விழுங்கிற்று - அரச வுரிமையெல்லாம் கொண்டான்; நாகத்திற்கேற்ப, "விழுங்கிற்று" என்றார். ஏஎ - குறிப்புமொழி. இதனால் அவன் ஆண்டகைமை குறைந்ததற்கு இரங்கினார்.
கட்டியங்காரன் அரசுரிமை எய்துதல்
செங்கண் குறுநரி ஓர்சிங்க வேற்றைச்
செகுத்தாங்கு அதனிடத்தைச் சேர்ந்தா லொப்ப,
வெங்கண் களியானை வேல்வேந்தனை
விறலெரியின் வாய்ப்பெய் தவன்பெயர்ந் துபோய்,
பைங்கண் களிற்றின்மேல் தன்பெயரினால்
பறையறைந்தான் வேல்மாரி பெய்தா லொப்ப,
எங்க ணவரும் இனைந்திரங்கினார்.
இருள்மனத்தான் பூமகளை எய்தி னானே. 73
73. ஓர் - நிகரில்லாத. செகுத்து - கொன்று. ஆங்கு - அப் பொழுதே. சேர்ந்தால் ஒப்ப - சேர்ந்தால், அச்சிங்கத்தின் தொழிலைச் செய்யாது தன் தொழிலையே செய்வது போல, வெங்கண் களியானை வேய் வேந்தனை - வெய்விய கண்களையும் மதக் களிப்பினையுமுடைய யானைப் படையும் வேற்படையுமுடைய வேந்தனான சச்சந்தனை. பெயர்ந்து போய் - சுடுகாட்டினின்றும் போய். வேல்மாரி -வேலாகிய மழை. எங்கணவரும் - எவ்விடத்து மக்களும். இனைந்து - அழுது. இருள் மனத் தான் - கட்டியங்காரன். பூமகள் - நாட்டரசு.
நரி சிங்கவேற்றைச் செகுத்து - அதனிடத்தைச் சேர்ந்தா லொப்ப, வேந்தனை எரியின்வாய்ப்பெய்து. பெயர்ந்துபோய், பூமகளை யெய்தினான். தன் பெயரினால் பறை சாற்றினான். எங்கணவரும் வேல் மழைக்கு இரங் கினாற்போல இனைந்து இரங்கினார் என முடிக்க.
சீவகன் பிறப்பு.
இனி, மயிலூர்தி இவர்ந்து சென்ற விசயை கட்டியங்காரனது பறையோசை கேட்டதும் திடுக்கிட்டு மனம்கலங்கி, அறிவு சோர்ந்து அப் பொறிமீதே சாய்ந்தனள். அப்பொறியும் மேலே பறத்தலை விட்டு மெல்ல இறங்கி நிலத்தை யடைந்தது. அவ்விடம், அந் நகர்ப் புறத்துச் சுடுகாடாகும்.
ஆயினும் அவ்விடத்தை யடைந்த விசயைக்கு மகப்பெறு வேதனை யுண்டாயிற்று; சிறிது போழ்தில் ஓர் ஆண் மகவு பிறந்தது. வருத்தம் சிறிது நீங்கியதும், விசயை அக் குழந்தையைக் காண்கின்றாள்.
பூங்கழல் குருசில் தந்த
புதல்வனைப் புகன்று நோக்கித்
தேங்கம ழோதி திங்கள்
வெண்கதிர் பொழிவ தேபோல்
வீங்கிள முலைகள் விம்மித்
திறந்துபால் பிலிற்ற ஆற்றாள்,
வாங்குபு திலகம் சேர்த்தித்
திலகனைத் திருந்த வைத்தாள். 74
74 பூங்கழல் - பூத் தொழில் அமைந்த கழல். குருசில் - சச்சந்தன். புதல்வனை - மகனை. புகன்று - விரும்பி. "புதல்வன் பொருட்டு இவளைப் போக்குதலின், குருசில் தந்த புதல்வனை யென்றார். ஓதி - கூந்தல்; ஈண்டு ஓதியையுடைய விசையைமேற்று. திங்கள்....ஆற்றாள் - முலைகள் திங்களின் கதிரைத் தாம் பொழிவதுபோலப் பால் சொரியும் பருவத்தளவும் பொறாளாய்ப் பாலை வாங்கி யென்க" என்றது மகப் பெறுவார்க்குப் பெறும்பொழுது பால் சுரவாதாதலால் , வாங்குபு - வாங்கி திலகம் சேர்த்தி - திலகமிட்டு. திலகனை - சிறந்தவனான சீவகக் குழவியை திருந்த - சீர் செய்து.
கிடத்திய மகனது நிலை நினைந்து விசயை புலம்புதல்
அரும்பொற் பூணும் ஆரமும் இமைப்பக்
கணிகள் அகன்கோயில்
ஒருங்கு கூடிச் சாதகம்செய் தோகை
யரசர்க் குடன் போக்கி
கருங்கைக் களிறும் கம்பலமும் காசும்
கவிகள் கொளவீசி
விரும்பப் பிறப்பாய். வினைசெய்தேன்
காண இஃதோஒ பிறக்குமா. 75
75. அரும் பொற்பூண் - பெறற்கரிய பொன்னாலாகிய அணிகள். இமைப்ப - ஒளி செய்ய. கணிகள் - சோதிடர்கள். ஒருங்கு - சேர. சாதகம் செய்து - சாதகம் குறித்தலைச் செய்ய. ஓகை - உவகை. போக்கி - ஓலை போக்கி. கருங்கைக் களிறு - பெரிய கையினையுடைய யானை. காசி - பொற்காசு. கவிகள் - மங்கலம் பாடும் கவிஞர்கள். வீசி - கொடுத்து. விரும்ப - அரசன் மகிழ்ச்சி மிகுந்து இவற்றை விரும்பிச் செய்ய. பிறப் - பாய்- பிறக்கும் நீ. வினை செய்தேன் - தீவினை செய்த யான். இஃதோ பிறக்குமா - இதுவோ பிறக்குமாறு. விகாரம் . ஓஓ இரக்கக் குறிப்பு.
வெவ்வாய் ஓரி முழவாக, விளிந்தார் ஈமம் விளக்காக,
ஒவ்வாச் சுடுகாட் டுயர் அரங்கில் நிழல்போல் நுடங்கிப் பேயாட
எவ்வாய் மருங்கும் இருந்திரங்கிக் கூகை குழறிப் பாராட்ட
இவ்வா றாகிப் பிறப்பதோ? இதுவோ? மன்னர்க்கியல், வேந்தே! 76
76 வெவ்வாய் ஓரி - கொடிய வாயையுடைய நரியின் கூப்பீடு. விளிந்தார் - இறந்தவர். ஈமம் - சுடுகாட்டு எரி. ஒவ்வா - பிறப்பார்க்கு ஒவ்வாத. உயர் அரங்கில் - உயர்ந்த மேட்டிடத்தே. நுடங்கி - அசைந்து. எவ்வாய் மருங்கும் எவ்விடத்தும். கூகை - பேராந்தை. "இவ்வாறு என்றது தந்தை விரும்புமாறு நல்வினையுடைய தன்மையை; இது என்றது செயலின்றித் தாய் வருந்தும்படி தீவினையுடைய தன்மையை.
பற்றா மன்னர் நகர்ப்புறமால்; பாயல் பிணம்சூழ் சுடுகாடால்;
உற்றார் இல்லாத் தமியேனால்; ஒதுங்க லாகத் தூங்கிருளால்
மற்றுஇஞ் ஞால முடையாய்! நீ, வளரு மாறும் அறியேனால்;
எற்றே இதுகண் டேகாதே, இருத்தி யால், என் இன்னுயிரே. 77
77. பற்றா மன்னர் - பகை வேந்தர். பாயல் - படுத்துக் கிடக்கு மிடம். உற்றார் - உசாவுதற்குத் துணையாவார். இல்லா - இல்லாமல். ஒதுங்கலாகா - நின்னைக் கொண்டுபோகக் கருதின் போகவொண்ணாத. தூங்கிருள் - மிக்க இருள். இஞ்ஞாலம் - இந்த ஏமாங்கத நாடு. இது கண்டு - இச் செய்தி கண்டும். ஏகாது - நீங்காமல். என் - இதற்குக் காரணம் என்னோ. மற்று - வினை மாற்று. எற்றே - இதுவும் அறிந்தே. உயிரொன்று தவிரத் துணை பிறிதின்மையின், அதனை, இன்னுயிரே யென்றான்.
பிறந்த நீயும் பூம்பிண்டிப் பெருமா னடிகள் பேரறமும்
புறந்தந் தென்பால் துயர்க்கடலை நீந்தும் புணைமற் றாகாக்கால்
சிறந்தா ருளரேல் உரையாயால்; சிந்தா மணியே கிடத்தியால்;
மறங்கூர் நுங்கோன் சொற்செய்தேன் மம்மர் நோயின் வருந்துகோ. 78.
78. பிறந்த நீயும் - என் வருத்தம் நீக்கப் பிறந்த நீயும். பெருமானடிகள் - அருகன். புறந்தந்து - பாதுகாத்து. நீந்தும் புணை - நீந்துதற்குரிய புணை (தெப்பம்). ஆகாக்கால் - ஆகாதபோது. சிறந்தார் - துணை யாவதற்குச் சிறந்தவர். சிந்தாமணியே, விளி. கிடத்தி - உரையாடாது கிடக்கின்றாய். மறம் - வீரம். சொல் - சொல்லிய கருமம். மம்மர் மயக்கம். வருந்துகுஓ - வருந்துவேன்.
ஒரு தெய்வம் சண்பகமாலை யென்னும் கூனியது வடிவில் வந்து துணை செய்தல்
விம்முறு விழும வெந்நோய் அவணுறை தெய்வம் சேரக்
கொம்மென உயிர்த்து நெஞ்சில் கொட்புறு கவலை நீங்க:
எம்மனை! தமியை யாகி இவ்விடர் உற்ற தெல்லாம்
"செம்மலர்த் திருவின் பாவாய்! யான்செய்த பாவம்" என்றாள். 79
79. விம்முறு - மீகும். விழும வெந்நோய் - தேவியது விழுமத் தாலே நோயை யுடையதாகிய தெய்வம். கொம்மென - பொருக்கென. கொட்புறு கவலை - கலகத்தைச் செய்யும் கவலை. எம் அனை - எம் அன் னாய். தமியையாகி - தனிமைப்பட்டு. செம்மலர் - செந்தாமரை. நீங்க - வியங்கோள் வினைமுற்று. திருவின் -இன், அசை. தெய்வம் கூனியாய் நிற்றலின் உயர்திணையாற் கூறினார்.
பூவினுற் பிறந்த தோன்றற் புண்ணியன் அனைய நம்பி
நாவினுள் உலக மெல்லாம் நடக்கும்; ஒன் றாது நின்ற
கோவினை அடர்க்க வந்து கொண்டுபோம் ஒருவன்; இன்னே
காவியங் கண்ணினாய்! யாம் மறைவது கருமம் என்றாள். 80.
கேட்ட பின்பு, விசயை அக் குழந்தையை ஓரிடத்தே செவ்விதாக வைத்து, அரசன் பெயர் பொறித்த மணியாழியை அதனோடு சேர்த்து, கண் கலுழ, உள்ளம் துடிக்க உடல் பனிப்ப, கூனி வடிவில் நின்ற தெய்வத்தோடு ஒரு பக்கத்தே மறைந்து நிற்கலானாள்.
80. பூவினுள் - தாமரைப் பூவில். தோன்றல் - தலைமை. புண் ணியன் - முருகன். நாவினுள் - சொல்லும் சொல்லிலே. ஒன்றாது நின்ற கோவினை - அவ்வாறு நடத்தற்குப் பொருந்தாது நின்ற கட்டியங்காரனை. அடர்க்க - பின்னே கொல்லும்படியாக. காவி - நீலமலர்.
கந்துக்கடன் வரவு
இவன் இராசமாபுரத்தே அரசரால் சிறப்புற மதிக்கப் பெற்ற பெருவணிகன். அன்று பிறந்து இறந்த தன் மகனை வைத்தற்குச் சுடுகாட்டிற்கு வருகின்றான்.
நாளொடு நடப்பது வழுக்கி மின்னொடூர்
கோளொடு குளிர்மதி வந்து வீழ்ந்தெனக்
கானக வுடையினன் கந்து நாமனும்
வாளொடு கனையிருள் வந்து தோன்றினான். 81
வந்தவன் தன் மகனைப் புதைத்துவிட்டு நீங்குங்கால், அச் செறி யிருளில் கிடந்த அரசக் குழவியைக் கண்ணுற்றான்.
81. நாள் - நாண்மீன். ஊர்கோள் - ஊர்கின்ற (செல்கின்ற) மேகம். கந்து நாமன் - கந்துக்கடன். உம்மை, சிறப்பு.கானக யுடை - கருமையை இடத்தேயுடைய உடை. கனையிருள் - மிக்க இருள். திங்கள் நாண் மீன்களோடு நடப்பது விடுத்து, கோளோடு வந்து வீழ்ந்தது போலக் கந்துக்கடன் தோன்றினான் என்க.
கந்துக்கடன் சீவகக் குழவியைக் காண்டல்.
அருப்பின முலையவர்க் கனங்க னாகிய
மருப்பினம் பிறைநுதல் மதர்வை வெங்கதிர்
பரப்புபு கிடந்தெனக் கிடந்த நம்பியை
விருப்புள மிகுதியின் விரைவின் எய்தினான். 82
82 அருப்பு - அரும்பு. அனங்கன் - மன்மதன். மருப்பு - கோடு. மதர்வை - மயக்கம். வெங்கதிர் - இள ஞாயிறு. பரப்புபு - கதிர் தன் கிரணங்களைப் பரப்பாநின்று. கிடந்ததென என்பது கிடந்தென என விகாரமாயிற்று. விருப்பு உளம் மிகுதியின் - விருப்பத்தோடு கூடிய உள்ளத்தின் மிகுதியினால். கண்ட மாத்திரத்தே விருப்பு உள்ளத்தே மிகுந்ததென்க.
சீவகனது அடையாள மோதிரத்தை மறைத்துக்கொண்டு குழவியை எடுத்தல்
புனைகதிர்த் திருமணிப் பொன்செய் மோதிரம்
வனைமலர்த் தாரினான் மறைத்து வண்கையால்
துனைகதிர் முகந்தென முகப்பத் தும்மினான்;
சினைமறைந் தொருகுரல் சீவ என்றதே. 83
83. புனை கதிர்த் திருமணிப் பொன்செய் மோதிரம் - அழகிய கதிர்களையுடைய உயர்ந்த மணி யிழைத்த பொன்னாற் செய்யப்பட்ட மோதிரம். வனை மலர் - கையால் ஒப்பனை செய்த மலர். தாரினான் - கந்துக்கடன். துனை கதிர் - இருளை நீக்குதற்கு விரைகின்ற கதிர். முகப்ப - எடுப்ப. "எல்லாப் புலன்களுக்கும் விருப்பம் சேறலின் முகப்ப என்றார்" தும்மினான் - "தும்முதல் நன்னிமித்தம்" சினை - ஒரு மரத்தின் கிளையிலே. சீவ - சீவிப்பாயாக. "தேவி அச்சத்தால் தன்னுள்ளே வாழ்த்துதலின் "ஒரு குரல்" என்றார்.
விசயை மகனை வாழ்த்தல்
என்பெழுந் துருகுபு சோர ஈண்டிய
அன்பெழுந் தரசனுக் கவலித் தையனை
நுன்பழம் பகைதவ நூறு வாயென
இன்பழக் கிளவியின் இறைஞ்சி யேத்தினாள். 84
84. என்பெழுந் துருகுபு சோர ஈண்டிய அன்பு - "எலும்புக் குள்ளே யெழுந்து உடலுருகி அவசமாக வளர்ந்த அன்பு" அரசனுக்கு அவலித்து - அரசனுக்கு மகன் முகங்காணும் நல்வினை யின்மை கண்டு வருந்தி. நுன் - திசைச்சொல். தவ - கெட; மிக என்றுமாம். நூறு வாய் - அழிப்பாய். இன் பழக் கிளவியின் - இனிய பழம் போலும் இனிய சொல்லால். அன்பு எழுந்ததனால், அவலித்து, நூறுவாயென ஏந்துனாள் என்க.
கந்துக்கடன் குழவியைத் தான் கொண்டேகுதல்
ஒழுக்கிய வருந்தவத் துடம்பு நீங்கினார்
அழிப்பரும் பொன்னுடம் படைந்த தொப்பவே
வழுக்கிய புதல்வனங் கொழிய மாமணி
விழுத்தகு மகனொடும் விரைவின் ஏகினான். 85
85. ஒழுக்கியல் அருந்தவம் - ஒழுக்கத்தால் இயன்ற அழிக்க முடி யாத தவம். அழிப்பரும் - அழியாத. பொன்னுடம்பு - நல்வினையாற் பெற்ற உடம்பு. வழுக்கிய புதல்வன் - இறந்த மகன். மாமணி விழுத் தகு மகன் - மாமணிபோல விழுத்தக்க (மேம்பட்ட) சீவகனாகிய மகன்,. தவ வுடம்பைக் கந்துக்கடன் மகனுக் குவமை கூறினார். அவனாலே சீவ கனைப் பெறுதலின்.
கந்துக்கடன் மகவிழந்து வருந்தும் தன் மனைவி சுநந்தைக்குக்
குழந்தையைத் தந்து அவள் உளம் களிப்பித்தல்
பொருந்திய உலகினுள் புகழ்கள் கூடிய
அருந்ததி அகற்றிய ஆசில் கற்பினாய்
திருந்திய நின்மகன் தீதின் நீங்கினான்
வருந்தல்நீ, எம்மனை! வருக என்னவே. 86
86. பொருந்திய - உலகினுள் பொருந்திய. புகழ்கள் கூடிய - புகழெல்லாம் கூடிய. அகற்றிய - கற்பால் நிகரில்லை யென விலக்கிய. ஆசில் - குற்றமில்லாத. திருந்திய - நல்வினை திருந்திய. தீதின் - சாக் காட்டினின்று. வருந்தல் - வருந்தற்க. எம்மனை - எம்மில்லாளே.
கள்ளலைத் திழிதரும் களிகொள் கோதைதன்
உள்ளலைத் தெழுதரும் உவகை யூர்தர
வள்ளலை வல்விரைந் தெய்த நம்பியை
வெள்ளிலை வேலினான் விரகின் நீட்டினான். 87
கந்துக்கடன் தனக்குப் புதல்வன் பிறந்தனனென மங்கலம் முழங்க. பெருஞ் சிறப்புச் செய்ய, அரசனாகிய கட்டியங்காரன் கேட்டுத் தானும் அக் கந்துக்கடனுக்குப் பெரு நிதி
நல்கிச் சிறப்பித்தான். கந்துக்கடன் மனையில் அக் குழந்தை வளர்ந்து வரலாயினான்.
87. கள் அலைத்து இழிதரும் களிகொள் கோதை - தேன் இதழை யலைத்து இழிதற்குக் காரணமான களிப்பினைக் கொண்ட மாலையையுடைய சுநந்தை. உள் அலைத்து - உள்ளத்தே நிறைந்து அலைகொண்டு. ஊர்தர - மிக்கு வழிய. வள்ளலை - சீவகனாகிய குழவியை. வல் விரைந்து எய்த - சுநந்தை மிக விரைந்து வாங்கச் செல்ல. நம்பியை - சீவகனை . வெள்ளிலை வேல் - வெள்ளிய இலை வடிவிற்றான வேல். விரகு – தேவியிட்ட திலகத்தை மாற்றினது.
தெய்வம் தண்டாரணியத்துக்கு விசயையைக் கொண்டேகக் கருதி யுரைத்தல்.
மகப் பிரிவாற்றாது தளரும் விசயைக்குத் தெய்வம் அக் குழந்தைக்கு எதிர்வில் நிகழவிருக்கும் சிறப்புக்களைக் கூறித் தேற்றித் தாம் செல்லவிருக்கும் நெறியின் இயல்பு
கூறலுற்றது.
மணியறைந் தன்ன வரியறல் ஐம்பால்
பணிவரும் கற்பின் படைமலர்க் கண்ணாய்.
துணியிருட் போர்வையில் துன்னுபு போகி,
அணிமணற் பேர்யாற் றமரிகை சார்வாம்; 88
88. மணிவரி அறல் அறைந்துள்ள ஐம்பால் - நீலமணியிலே வரி பொருந்திய கருமணலை அழுத்தினா லொத்த கூந்தல். பணிவரும் கற்பு + உலகிலாம் தனது ஏவலில் வருதற்குக் காரணமான கற்பு. படை மலர்க் கண் - வேற்படை போலும் மலரொத்த கண். துணியிருள் போர்வை - திரண்ட இருளாகிய போர்வைக்குள் மறைந்து. துன்னுபு - நெருங்கி. பகை நிலமாதலின் இருட் போர்வையில் மறைந்து செல்வாம் என்கின்றான். அணிமணல் - அழகிய மணல். சார்வாம் - சார்ந்து அயர்ச்சி தீரலாம்.
அமரிகைக் கோசனை ஐம்பது சென்றால்
குமரிக் கொடிமதில் கோபுர மூதூர்
தமரிய லோம்பும் தரணி திலகம்
நமரது மற்றது நண்ணல மாகி. 89
89 ஓசனை - யோசனை. வடசொற் சிதைவு. குமரிமதில் - பிறரால் பற்றப்படாத மதில். தமர் இயல் ஓம்பும் - உலகிற் கெல்லாம் தமராகும் இயல்பைக் கொண்டிருக்கும். நமரது - நம் தமர்க்கு உரியது. "தேவி நோற்றற்குத் தாபதப்பள்ளி வேண்டுதலாலும், அரசனை அமரில் நீத்து, புதல்வனைப் புறங்காட்டில் நீத்து, தமரிடத்துச் சேறல் ஆகாமையானும் 'நண்ணலமாகி' என்றான்".
வண்டார் குவளைய வாவியும் பொய்கையும்
கண்டார் மனம்கவர் காவும் கஞலிய
தண்டா ரணியத்துத் தாபதப் பள்ளியொன்று
உண்டு; ஆங் கதனுள் உறைகுவம் என்றாள். 90
அவட்கு விசயை உடன்படவே, இருவரும் அமரிகை யாற்றில் தங்கி மறுநாள் புறப்பட்டுத் தண்டாரணியஞ் சென்று ஆங்கே இருந்த தவமகளிர் பள்ளியை எய்தினர்.
90. குவளைய - குவளைகளையுடைய. வாவி - ஆற்றில் இருக்கும் ஓடை. பொய்கை - மக்களால் செய்யப்படாத இயற்கை நீர்நிலை. கா - சோலை. கஞலிய - நெருங்கிய. தண்டாரணியம் - தண்டகாரணியம். ஆங்கு - அதனுள் தாபதர் உறைகுவது போல.
தவமகளிர் விசயையைத் தவத்திற் படுத்தல்.
வாளுறை நெடுங்க ணாளை மாதவ மகளி ரெல்லாம்
தோளுறப் புல்லு வார்போல் தொக்கெதிர் கொண்டு புக்குத்
தாளுறு வருத்த மோம்பித் தவநெறிப் படுக்க லுற்று
நாளுறத் திங்க ளூர நல்லணி நீக்கு கின்றார். 91
91. வான் உறை நெடுங்கணாள் - வாளின் தன்மை முன்னே தங்கின நீண்ட கண்ணை யுடையளான விசயை; முன்னே தங்கின எனவே, இப் போது இல்லை யென்க. வினைத்தொகை இறந்த காலத்தில் வந்தது. உற - பொருந்த. புல்லுவார் போல் - தழுவுவார் போல. மாதவம் செய்வார்க்குப் புல்லுதல் ஆகாமையின் "புல்லுவார் போல்" என்றார். தான் உறு வருத்தம் - நடந்து சென்ற அடிகளுக்கு உண்டான வருத்;தம். தவ நெறிப்படுக்கலுற்று - மேல் தலத்தில் செறற்குரிய நெறியாகிய நோன்பை உண்டாக்கி, தவம் - கணவனை இழந்ததற்கும், புதல்வன் வாழ்தற்கும் பொருந்திய நோன்பு . நா*ள் உற - நல்ல நா*ள் வந்து பொருந்த. திங்கள் ஊர - நாடோறும் திங்கள் ஒரு கலை ஏறிவர. நீக்கு கின்றார். "தேவி நீக்குகின்ற வற்றை அவர் மேலேற்றினார். ஏவினாரைக் கருத்தாவாக; "அரசரெடுத்த தேவ குலம்" போல.
பூணொழித்துத் தவநெறி பூண்ட விசயையின் நிலை
பாலுடை யமிர்தம் பைம்பொன் கலத்திடைப் பாவையன்ன
நூலடு நுசுப்பின் நல்லார் ஏந்தவும் நேர்ந்து நோக்காச்
சேலடு கண்ணி காந்தள் திருமணித் துடுப்பு முன்கை
வாலட கருளிச் செய்ய வனத்துறை தெய்வ மானாள். 92
92. பாலுடையமர்தம் - பால் கறந்த அடிசில். நூலடு நுசுப்பு - நூலை வென்ற நுண்ணிய இடை. நேர்ந்து ஏந்தவும் - உணவு மறுத்தாளென வலிய எடுத்தேந்தவும்; நோக்காத - ஏறிட்டுப் பார்க்காத. சேலடு கண்ணி - சேல் மீனை வென்ற கண்ணையுடையளா யிருந்த விசயை; காந்தன் துடுப்பு கை - காந்தட் பூப்போன்ற கை. காந்தள் மலர் துடுப்புப். போதலின்., 'துடுப்பு' என்றார். முன் திருமணி கை - முன்பெல்லாம் திருமணி பூண்டிருந்தகை. வால் அடகு - தூய இலைக்கறி. அருளி - அருள. செய்ய - சிவந்த.
தவநெறி நிற்புழியும், விசயை தன் மகன் நினைவு அறாதிருத்தல்.
மெல்லிரல் மெலியக் கொய்த குனநெல்லும் விளைந்த ஆம்பல்
அல்லியும் உணங்கும் முன்றில் அணில்விளித் திரிய ஆமான்
புல்லிய குழவித் திங்கள் பொழிகதிர்க் குப்பை போலும்
நல்லெழிற் கவரி ஊட்ட நம்பியை நினைக்கு மன்றே. 93
கூனி வடிவில் நின்றொழுகிய தெய்வம் விசயையைத் தவமகளிர்பால் அடைக்கலமாக வைத்துத் தான் நீங்கிப் போகலுற்றது.
93. ஆம்பல் அல்லி - ஆம்பலரிசி. உணங்கும் - உலரும். விளித்திரிய - கத்திக்கொண்டு நீங்கியோட. குழவி - கன்று. கதிர்க் குப்பை போலும் நல்லெழில் கவரி - கதிர்களின் திரட்சி போலும் நல்ல மயிரால். அழகு பெற்ற கவரிமான்.
கவரிமான் தன்னைப் பு*ல்லிய (சேர்ந்த) ஆமான் கன்றுக்கு முலையூட்டும் என்க. அதுகண்டு விசயையும் சீவகன் பிறர் முலையுண்டு வளர்தலை நினைக்கின்றாள் என்பது. "குஞ்சரம் பெறுமே குழவிப் பெயர்க்கொடை (தொல். மரபு. சூ.19) என்றதனுள் "கொடை" யென்றதனால், ஆமான் குழவியும் கொண்டவாறுணர்க" என்பர் நச்சினார்க்கினியர்;.
தெய்வம் விடை பெறுதல்
பெண்மைநாண் வனப்புச் சாயல் பெருமட மாது பேசின்
ஒண்மையின் ஒருங்கு கூடி உருவுகொண் டனைய நங்கை
நண்ணிய துங்கட் கெல்லாம் அடைக்கலம் என்று நாடும்
கண்ணிய குலனும் தெய்வம் கரந்துரைத் தெழுந்த தன்றே. 94
94. பெண்மை - அமைதித்தன்மை. நாணம் -- இயல்புக்கும் தகு திக்கும் ஒவ்வாத சொல்லும் செயலும் காணுமிடத்து உள்ளம் சுருங்குதல். வனப்பு - அழகு. சாயல் - மென்மை. மடம் - கொளுத்தக்கொண்டு கொண்டது விடாமை. பேசின் - கூற நினைந்தோமாயின். ஒண்மையின் ஒருங்குகூடி உருவுகொண்டனைய நங்கை. - விளக்கம் காரணமாகச் சேரக் கூடி ஒரு வடிவு கொண்டதுபோலும் நங்கை. எல்லாம் நண்ணிய நுங்கட்கு - நற்குணமெல்லாம் பொருந்திய நுங்கட்கு. கண்ணிய - கருதிய. கரந்து உரைத்து - மறைத்து வேறு பெயர் படக் கூறிவிட்டு.
கூனிக்கு விசயை விடை யீதல்
உறுதி சூழ்ந்தவண் ஓடலின் ஆயிடை
மறுவில் வெண்குடை மன்னவன் காதலஞ்
சிறுவன் தன்மையைச் சேர்ந்தறிந் தில்வழிக்
குறுக வம்மெனக் கூனியைப் போக்கினாள். 95.
கூனிவடிவிற் போந்த தெய்வம் இராசமாபுரத்தே வந்து அடைந்தது. அதன் வரவை நினைந்து விசயையும் தவப்பள்ளியில் இருந்து வருவானாயினள்.
95. உறுதி சூழ்ந்து - விசயைக்கு உறுதியானவற்றை அத்தெய்வத்தின் உள்ளம் ஆராய்ந்து செய்து, அவண் ஓடலின் - இவ்விடத்தை விட்டுத்தான் உறையுமிடத்துக்குச் செல்லுதலால், ஆயிடை - இராசமாபுரத்தில். மறு - குற்றம். மன்னவன் - சச்சந்தன். தன்மையை - செய்தியை, குறுகவம்மென - சுருக்காக வருக என்று. சேடியை வம்மென்று உயர்த்துக் கூறினாள். தான் நிற்கின்ற தவநிலைக்கு அது தகுதியாகலின்.
கந்துக்கடன் குழந்தைக்குச் சீவகன் எனப் பெயரிடல்.
கூற்றம் அஞ்சும் கொன்நுனை யெஃகின் இனையானும்
மாற்றம் அஞ்சும் மன்னிய கற்பின் மடவாளும்.
போற்றித் தந்த புண்ணியர் கூடிப் புகழோனைச்
சீற்றத் துப்பின் சீவகன் என்றே பெயரிட்டார். 96
96. கொல் நுனை எஃகின் - எதிர்த்தாரைக் கொல்லுகின்ற நுனை யையுடைய வேல்; வாளுமாம். இனையான் - கந்துக்கடன். மாற்றம் அஞ்சும் மன்னிய கற்பு - சொல்லப்புகின் சொல்லும் ஒன்று சொல்லற்கு அஞ்சக்கூடிய நிலைபெற்ற கற்பு. மடவாள் - இளையளாகிய சுநந்தை. போற்றித் தந்த - விரும்பி யழைத்துப் போந்த. புகழோன் - புகழை யுடையவன். சீற்றத் துப்பு - சீற்றமும் வலியும். சீவகன் , சீவித்தலையுடைய வன் என்று தெய்வம் வாழ்த்தினமையின், அதுவே பெயராயிற்று.
சீவகன் வளர்ந்து வருதல்
மேகம் ஈன்ற மின்னனை யாள்தன் மிளிர்பைம்பூண்
ஆகம் ஈன்ற அம்முலை யின்பால் அமிர்தேந்தப்
போகம் ஈன்ற புண்ணியன் எய்த கணையேபோல்
மாகம்ஈன்ற மாமதி யன்னான் வளர்கின்றான். 97
97. மேகம் ஈன்ற மீன் - மேகம் தான் பயந்த மின்னற்கொடி. ஆகம் - மார்பு. இன் பால் - இனிய பாலாகிய. யோகம் ஈன்ற புண்ணியன் - தான் சத்தியும் சிவனுமாய் உலகத்துக்கெல்லாம் போகத்தை யுண்டாக்கின சிவபெருமான். "புண்ணியன் என்றார், திரிபுரத்தை யழித்தும் அலைகடல் நஞ்சுண்டும் பல்லுயிர்களையும் காத்தலின். எய்த கணை - எய்த அம்பாகிய திருமால்." கணை வளருமாறு வளர்கின்றானெனவே, அவன் ஆய்ப்பாடியிலே நந்தகோன் மனையிலே ம,றைய வளர்ந்தது உவமையாம். மாகம் - விசும்பு. மா மதி - அழகிய பிறைத்திங்கள்.
சீவகனுக்குக் கல்வி கற்பித்தல்
முழவெனத் திரண்ட திண்டோள் மூரிவெஞ் சிலையி னானும்
அழலெனக் கனலும் வாட்கண் அவ்வனைத் தோளி னாளும்
மழலையாழ் மருட்டுந் தீஞ்சொல் மதலையை மயிலஞ் சாயல்
குழைமுக ஞான மென்னும் குமரியைப் புணர்க்க லுற்றார். 98
98. முழவென - முழவுபோல. சிலை - வில். சிலையினான் - கந்துக் கடன்,. அழல் எனக் கனலும் வாட்கண் - அழல்போல நெருப்புக் கக்கும் வாளைப்போன்ற கண்,. அழலெனக் ககனலும் - வாளுக்கு அடை. யாழ் மருட்டும் மழலைத் தீஞ்சொல். மருட்டும் - ஒக்கும். மழலை - நிரம்பா மொழி. மதலை - சீவகன்,. மதலைபோல் குடியைத் தாங்குதலின் மகனை "மதலை" யென்றார். குழைமுக ஞானமென்னும் குமரி - "குழையப் பண்ணுகின்ற முகமுடைய ஞானமென்னும் குமரி. வேறு தன் கருத்தை யறிவாரின்றி இவனே தன் கருத்தறியத் தான் அழியாதிருத்தலின் குமரி யென்றார்."
அரும்பொனும் மணியும் முத்தும் காணமும் குறுணி யாகப்
பரந்தெலாப் பிரப்பும் வைத்துப் பைம்பொன்செய் தவிசி னுச்சி
இருந்துபொன் ஓலை செம்பொன் ஊசியா லெழுதி யேற்பத்
திருந்துபொற் கண்ணி யாற்குச் செல்வியைச் செலுத்தினாரே . 99
99 காணம் - பொற்காசு . குறுணியாக - குறுணியளவாக. பிரப்பு - பிரப்பரிசி. வைத்து - வைக்க. பரந்து - பரந்த; விகாரம். தவீசின் உச்;சியிலிருந்;து - ஆசிரியன் தவீசின்மேல் இருந்து. ஓலை - ஓலையிலே. பொன்னூசி - எழுத்தாணி. ஏற்ப - பொருந்தும்படி. செல்வியை - கல்வியாகிய நாமகளை.
ஆசிரியனாகிய அச்சணந்தியென்பவன் சீவகற்கு
அறமும் பிறப்பு வரலாறும் கூறல்
நூனெறி வகையி னோக்;கி நுண்ணுதி னுழைந்து தீமைப்
பானெறி பலவும் நீக்கிப் பரிதியங் கடவு ளன்ன
கோனெறி தழுவி நின்ற குணத்தொடு புணரின் மாதோ
நானெறி வகையில் நின்ற நல்லுயிர்க் கமிர்தம் என்றான். 100
100 நூல்நெறி - ஆகமம் கூறிய வழி. வகை - நன்மை தீமை. நுண்ணிதின் நுழைந்து - கூரிய பொருளிடத்தே நெஞ்சு சென்று. தீமைப் பால் நெறி - தீய வழி. பருதியங் கடவுள் - ஞாயிறு. நிறத்தாலும் இருள் நீக்கத்தாலும் உவமை. கோன் - அருகன்,. குணம் -நன்ஞானம், நற்காட்சி, நல்லொழுக்கம் நால்நெறி - நால்வகைக் கதி. நரகர். விலங்கு, - மக்கள், தேவர்.
அறிவினாற் பெரிய நீரார் அருவினை கழிய நின்ற
நெறியினைக் குறுகி இன்ப நிறைகட லகத்து நின்றார்;
பொறியெனும் பெயர ஐவாய்ப் பொங்கழ லரவின் கண்ணே
வெறிபுலங் கன்றி நின்றார் வேதனைக் கடலுள் நின்றார். 101
இவ்வகையால் அறம்பலவும் பொதுவாய்க்கூறி, வீடு பேற்றுக்கு உரிய அறமும் இல்வாழ்வுக்குரிய அறமும் சிறப் புறச் சொல்லி, சீவகனைத் தனியிடத்தே கொண்டு சென்று, ஆசிரியன் அவன் பிறப்பு வரலாறு கூறுகின்றான். நாட்டரசனான சச்சந்தன் விசயைபால் ஆராக்காதலில் அழுந்தியதும், கட்டியங்காரன் எழுச்சியும், அரசன் வீழ்ச்சியும் , விசயை சீவகனை ஈன்றதும், வணிகன் அச்சிறுவனைக் கொண்டுசென்று வளர்த்ததும் பிறவும் கூறப்பட்டன.
101. நீரார் - தன்மையுடையவர். அருவினை கழிய நின்ற நெறி - தீவினை கழிய நின்ற நெறி; சன்மார்க்கம். இன்ப நிறைகடல் - அனந்த சுகம். பொறி...கன்றி நின்றார் - வேட்கையாகிய நஞ்சையுடைய உடம் பென்னும் பாம்பிடத்தில் பொறி நென்னும் பெயரையுடையவாகிய ஐந்து வாயிடத்தே களிப்பைச் செய்கின்ற விடயங்களிலே அடிப்பட்டு நின்றார். நின்றார் எனவே, அவர் துன்பத்திலிருந்து நீங்குதலின்மை பெற்றாம்.
சீவகன் அச் சிறுவன் யாவன் என அறிய விழைதல்
கரியவன் கன்னற் கன்று
பிறப்பினைத் தேற்றி யாங்கப
பெரியவன் யாவன்? என்ன
நீஎனப் பேச லோடும்
சொரிமலர்த் தாரும் பூணும்
ஆரமும் குழையும் சோரத்
திருமலர்க் கண்ணி சிந்தத
தெருமந்து மயங்கி வீழ்ந்தான். 102
102. கரியவன் - கண்வான். தேற்;றியாங்கு - உணர்த்தியதுபோல. அப் பெரியவன் - அறிவாற் பெரிய அச் சிறுவன். என்ன - என்று சீவகன் வினவ. எனப் பேசவோடும் - என்று ஆசிரியன் கூறியவுடன். - இது உடனிகழ்ச்சி. சொரிமலர் - தேனைச் சொரியும் மலர். குழை - காதணி. சோர - வீழ. திரு - அழகு. கண்ணி - தலைமாலை. தெருமந்து - கலங்கி.
மயங்கி வீழ்ந்த சீவகன், ஆசிரியன் தேற்றத் தேறல்
இனையைநீ யாய தெல்லாம் எம்மனோர் செய்த பாவம்;
நினையல் நீ. நம்பி! என்று நெடுங்கண்நீர் துடைத்து நீவிப்
புனையிழை மகளிர் போலப் புலம்பல்; நின் பகைவன் நின்றான்.
நினைவெலாம் நீங்கு கென்ன நெடுந்தகை தேறினானே. 103
தேறிய சீவகன் சினம் மிகுந்து கட்டியங்காரனை இன்னே சென்று பொருது அழிப்பேன் எனக் கிளர்ந்து நிற்க, அச்சணந்தி யாசிரியன் அவனை மெல்லத் தடுத்து விட்டான்.
103 நீ இனையையாயது - நீ இத் தன்மையனாகியது. எம்மனோர் - எம்போல்வார். செய்த பாவம் நீங்குவது காரணமாக ஆகும். நம்பி - விளி. இழைபுனை மகளிர் போல - இழையால் தம்மைப் புனைந்து கொள்ளும் மகளிரைப் போல. புலம்பல் நினையல் - புலம்புவதை இனி நினையாதே. நின் பகைவன் நின்றான் - நின் பகைவனான கட்டியங்காரன்; கெடாது இன்னமும் உள்ளான். நீவி - உடம்பைத் தடவி., நெடுந்தகை - சீவகன், "நீர் துடைத்து" என்றது அரற்று என்னும் மெய்ப்பாடு. நினைவெலாம் என்றது அவலம்.
சீவகன் ஆசிரியன் ஆணை மேற்கொள்ளல்
"வேண்டுவன், நம்பி, யான்ஓர்
விழுப்பொருள்" என்று சொல்ல,
"ஆண்டகைக் குரவிர்! கொண்மின்:
யாதுநீர் கருதிற்" றென்ன,
"யாண்டுநேர் எல்லை யாக
அவன்திறத் தழற்சி யின்மை
வேண்டுவல்" என்று சொன்னான்;
வில்வலான் அதனை நேர்ந்தான். 104
104. விழுப்பொருள் - இடும்பையைத் தருவதொரு காரியம். வேண்டுவல் - அல்லீற்றுத் தன்மைச் சொல்; சந்தியால் னகரம் வந்தது. குரவீர் என வரற்குரியது, "குரவிர்" என இர் ஈறு கொண்டது; "கேளிர் வாழியோ," (குறுந். 280) என்றாற்போல. "ஆண்டகைமை கூறிற்று, கொலையை விலக்குவரோ என்று கற்பித்த முகத்தான்; அரசன் என்று உணர்ந்தான்," அவன் திறத்து - கட்டியங்காரனது குலத்தின்பால். அழற்சி - வெளிப்படத் தோன்ற நிற்கும் வெகுளி. இன்மை - இல்லா. அச்சணந்தி தன் பிறப்பு வரலாறு கூறல்
வெள்ளிவெற்பைச் சார்ந்த வாரணவாசி என்னும் பேரூரிலிருந்து அரசுபுரிந்த உலோகபாலன் என்னும் வேந்தன், தன் மகனுக்கு அரசு தந்து தான் தவவேடம் பூண்டு துறவறம் செய்யத் தலைப்பட்டான். சின்னாளில் அவனுக்குப் பாவம் வந்து சேர, அதன் பயனாக அவன் யானைத் தீ என்னும் நோய்வாய்ப் பட்டுச் சோறு வேண்டி நாடெங்கும் திரிந்து இவ்வூரை யடைந்தான்; (உடனே சீவகன், அப்பெரியவன் யாவன்? என்று வினவ, ஆசிரியன், "யானே" என்றான். என்றலும் மகிழ்ச்சி மிக்க சீவகன், "மேலே சொல்லுக" என்றான். அச்சணந்தி நகை மகிழ்ச்சி முகத்திற் கொண்டு சொல்லலுற்றான்.) அவ்வாறு போந்த யான் இக் கந்துக்கடன் பெருமனையை அடைகின்றபோது, அவன் உண்டற்கிருந்தான். என்னைக் கண்டதும், அவன் எனக்கும் பெருஞ்சோறு படைக்குமாறு பணித்தான். எனக்கும் இட்டனர். தான் போல ஒழுகுந் தன்மை. வில்வல்லான் - விற் போரில் வல்லுநனாகிய சீவகன். நேர்ந்தான் - நேர்தற்கரிய அதனை நேர்ந்து உடன்பட்டான்.
அச்சணந்தி கந்துக்கடன் மனையில் தான் அமுதுண்டது கூறல்
கைகவி நறுநெய் பெய்து
கன்னலங் குடங்கள் கூட்டிப்
பெய்பெய்என் றுரைப்ப யானும்
பெருங்கடல் வெள்ளிக் குன்றம்
பெய்துதூர்க் கின்ற வண்ணம்
விலாப்புடைப் பெரிதும் வீங்க
ஐயன தருனி னால்யான்
அந்தணர் தொழிலே னானேன். 105
105. கைகவி நெய்பெய்து - அமையும். இனியும் வேண்டா எனக் கையை விரித்துக் கவிக்கு மளவு நெய்யைச் சொரிந்து. கன்னல் - சருக் கரை; கண்ட சர்க்கரை. தேவர் காலத்தே பாகுபோல் இளகி மணல் போல் இருக்கும் குழைபாகு குடங்களில் வைத்திருக்கும் வழக்கு உண்டு என்க. என்று உரைப்ப - என்று கந்துக்கடன் கூற; வெள்ளி..... வண்ணம் - வெள்ளிமலையை அள்ளி யெறிந்து கடலைத் தூர்க்கின்றது போல. விலாப்புடை - விலாப்பக்கம் ; வீங்க - பெருக்க. ஐயனது அருளினால் - ஐயனாகிய நின்னருளாலே. அந்தணர் - அறவோர். தொழிலேனானேன் – தொழிலை-யுடையவனாயினேன்.
தான் சீவகனைக் கண்டது கூறல்
நிலம்பொறுக் கலாத செம்பொன் நீள்நிதி நுந்தை யில்லம்
நலம்பொறுக் கலாத பிண்டி நான்முகன் தமர்கட் கெல்லாம்
உலம்பொறுக் கலாத தோளாய்! ஆதலா லூடு புக்கேன்,
கலம்பொறுக் கலாத சாய லவருழை நின்னைக் கண்டேன். 106
106. பொறுக்காத - சுமக்கமாட்டாத. நீள்நிதி - நீண்டதிரள். இல்லம் - பெரிய மனை. நலம் பொறுக்கலாத - தன் நலத்தையே தானே பொறுக்கமாட்டாத. "எல்லா மூர்த்தமும் இவனாதலின், 'நான்முகன், என்றார்; 'ஆதி வேதம் பயந்தோய் நீ' (சீவக. 1242) "மலரேந்து சேவடிய மாலென்ப' (1610) என்ப மேலும்." தமர் - துறந்தவர். உலம் - தூண். ஊடு - உள்ளே. கலம் - அணிகலம். சாயலவர் - சாயலையுடைய மகளிர் - உழை - ஏழாம் வேற்றுமைப் பொருள்பட வந்த இடைச் சொல்.
தான் யானைத் தீ நீங்கப்பெற்றது கூறல்
ஐயனைக் கண்ணிற் காண யானைத்தீ அதகம் கண்ட
பையணல் நாகம் போல வட்கயான் பெரிதும் உட்கித்
தெய்வம்கொல் என்று தேர்வேற் கமிர்துலாய் நிமிர்ந்த தேபோல்
மொய்குரல் முரசம் நாணும் தழங்குரல் முழங்கக் கேட்டேன். 107
107. ஐயனை - ஐயனாகிய நின்னை. காண - கண்டேனாக. அதகம் - மருந்து. பையணல் நாகம் - படத்தை யுயர்த்தும் பாம்பினது நஞ்சு. நாகம், ஆகுபெயர். வட்க - முற்றவும் கெடுதலால். உட்கி - அஞ்சி. தேர்வேற்கு - மனத்தின்கண்ணே ஆராயும் எனக்கு. அமிர்து நிமிர்ந்த போல் உலாய் என இயையும். உலாய் - உலாவப்பட்டு. மொய் குரல்; முரசம் - நெருங்கிய குரலையுடைய முரசு. தழங்கு குரல் - ஒலிக்கின்ற குரலோசை. தழங்கு குரல், தழங் குரல் என விகாரம்.
கோளியங் குழுவை யன்ன கொடுஞ்சிலை யுழவன் கேட்டே
"தானியல் தவங்கள் தாயாத் தந்தைநீ யாகி என்னை
வாளியங் குருவப் பூணோய்! படைத்தனை வாழி" என்ன
"மீளியங் களிறினாய்! யான் மெய்ந்நெறி நிற்பல்" என்றாள். 108
108. கோன் இயங்கு உழுவை - கொலைத் தொழிலிலே நடக்கின்ற புலி. சிலை யுழவன்; - வில் வல்லுநனாகிய சீவகன், தான் இயல் தவங்கள் - முயற்சியால் பிறந்த தவங்கள். நீ தந்தையாகி என மாறுக. வாள் - ஒளி. படைத்தனை - "நல்வினையால் இக் கலைகளைக் கற்றுத் தான் வேறொரு பிறப்பானமை கூறினான்" என்ன - என்று சீவகன் கூற, மீளி - வலிமை. மெய்ந்நெறி - தவநெறி.
சீவகன் விடையளித்தல்
மறுவற மனையின் நீங்கி மாதவம் செய்வல் என்றால்
பிறவறம் அல்ல பேசார் பேரறி வுடைய நீரார்;
துறவறம் புணர்க என்றே தோன்றல்தாள் தொழுது நின்றான்;
நறவற மலர்ந்த கண்ணி நன்மணி வண்ணன் அன்னான். 109
அச்சணந்தி பின் கந்துக்கடனுக்கும் அவன் மனைவி சுநந்தைக்கும் சீவகனது கல்வியும் தீக்கையும் சொல்லித், தான் துறவு மேற்கொண்டதையும் உரைத்து விடைவேண்டினன்.
109. மறு - குற்றம். நீங்கி - நீங்கிச்சென்று. அறமல்லபிற - அறமல்லனவாகிய பிறவற்றை; செலவு விலக்கும் சொற்களை. துறவறம் புணர்க - துறவறத்தைக் கூடுக. தோன்றல் - சீவகன். நறவு அற மலர்ந்த கண்ணி - நறுமணம் அறவே தன்னிடத்துக் கொண்ட கண்ணி.
சுநந்தை விடையளித்தல்
அழலுறு வெண்ணெய் போல அகம்குழைந்து உருகி யாற்றான்
குழலுறு கிளவி சோர்ந்து, "குமரனைத் தமிய னாக
நிழலுறு மதியம் அன்னாய்! நீத்தியோ? " எனவும் நில்லான்,
பழவினை பரிய நோற்பான் விஞ்சையர் வேந்தன் சென்றான்,. 110
110. குழலுறு கிளவி குழல்போலும் இனிய சொற்களைப் பேசும் சுநந்தை. தமியனாக - தனிமைப்படும்படி. நிழலுறு மதியம் - குளிர்ந்த ஒளி முழுதுமுடை திங்கள்; கலை முழுதும் நிரம்பிய முழுத் திங்கள். தன் மகனுக்குக் கற்பித்த கலைத் தொகை கண்டும் கேட்டுமுள்ளாளாதலின் , ஆசிரியனை இவ்வாறு கூறினாள். நீத்தியோ - நீங்கிச் செல்கின்றாய் போலும். நில்லான் - அச்சணந்தி யாசிரியன் நில்லானாகி. பரிய - கெடும்படி. நோற்பான் - தவம் செய்ய வேண்டி. விஞ்சையர் வேந்தன் - அச்சணந்தி யாசிரியன்.
---------------------------
2. கோவிந்தையார் இலம்பகம்
(கோவிந்தையார் இலம்பகம்: இது சீவகன் தோழர்களில் ஒருவனான பதுமுகன் என்பான் கோவிந்தை என்னும் ஆயர் மகளை மணந்துகொண்டதைக் கூறும் இலம்பகம்.)
இதன்கண், இராசமாபுரத்துக்கு அருகிருந்த குன்றுகளில் வாழ்ந்த வேட்டுவர், நகரத்து ஆயருடைய ஆனிரைகளைக் கவர்ந்தேகியதும், ஆயர் முறையீடு கேட்டுக் கட்டியங் காரன் தன் வீரரை விடுப்ப அவர் நிரைமீட்க ஆற்றாது புறமிட்டோடியதும் பின்பு நிரைமீட்டானுக்குத் தன் மகளைத் திருமணம் செய்து கொடுப்பதாக நந்நகோன் வெளியிடுவதும், சீவகனும் தோழரும் சென்று வேடர்க்குச் சிறிதும் தீங்கு நிகழாத வகையில் வென்று நிரை மீட்டதும், பதுமுகனுக்கு அந்த நந்தகோன் தன் மகள் கோவிந்தையைத் திருமணம் செய்விப்பதும், பிறவும் உரைக்கப்படுகின்றன.
அச்சணந்தி யாசிரியன் தேவனாதல்
ஆர்வ வேர் அரிந் தற்ற ணந்திபோய்
வீரன் தாள்நிழல் விளங்க நோற்றபின்
மாரி மொக்குளின் மாய்ந்து விண்தொழச்
சோர்வில் கொள்கையான் தோற்றம் நீங்கினான். 111
111. ஆர்வவேர் - ஆசை யென்கிற ஒபிறவி வேர். அரிந்து - நீக்கி. வீரன் - ஸ்ரீ வர்த்தமான சுவாமிகள் . தாள் நிழல் - சமவசரவணம். மாரி மொக்குளின் - மாரிக் காலத்தே மழை பெய்யுங்கால் நீரில் உண்டாகும் குமிழிபோல. வீடு பெறுங்கால் திருமேனியுடனே மறைவதற்கு மொக்குள் மறைதல். மாய்ந்து - மறைந்து. சோர்வில் கொள்கையான் - வழுவுதல் இல்லாத நோன்புடையவன். தோற்றம் - பிறவி.
இப்பால் சேவகன் கலைநலம் பலவும் கொண்டு விளங்குதல்
கலையின தகலமும் காட்சிக் கின்பமும்
சிலையின தகலமும் வீணைச் செல்வமும்
மலையினின் அகலிய மார்ப னல்லது இவ்
வுலகினில் இலையென ஒருவ னாயினான். 112
இராசமாபுரத்துக்குப் புறம்பே யிருந்த குன்றுகளில் உறையும் வேடர், இந்நகரத்து ஆயர்களின் ஆனிரைகளைக் கவர்வது குறித்து ஒருங்குகூடிச் சூழ்வாராயினர்.
112. கலையினது அகலம் - கல்வி காரணமாகப் பிறக்கும் ஞானம். காட்சிக்கு இன்பம் - அப்பருவத்தில் பிறக்கும் அழகு. சிலையினது அகலம் - படைக்கலம் பயின்றதனால் அப்போது பிறக்கும் வீரம். வீணை - தாளத்தோடு கண்டத்திலும் கருவியிலும் பிறக்கும் பாட்டு. இசை நாடகம் காமத்தை விளைத்தலின், அவற்றால் பிறக்கும் காமத்தை "வீணைச் செல்வம்" என்றார். மலையினின் - மலைபோல. அகலிய - விரிந்த. இலை -
இந்நான்கிற்கும் உறைவிடம் வேறே இல்லை. என - என்னும்படி
இதனால் சீவகனுக்குப் பதினைந்தாண்டு சென்றபின் நல்வினையால் பிறக்கின்ற குணங்களைக் கூறுகின்றார்.
ஒருவன் புள் நிமித்தம் கண்டு கூறல்.
"அடைதும் நாம்நிரை; அடைந்த காலையே
குடையும் பிச்சமும் ஒழியக் கோன்படை
உடையும்; பின்னரே ஒருவன் தேரினால்;
உடைதும், சுடுவில்தேன் உடைந்த வண்;ணமே" 113.
113. நாம் நிரை அடைதும் - நாம் ஆனிரையை அடித்துக் கவர்ந்துகொள்வோம்,. அடைந்த காலை, கோன் படை வந்து பொருது. குடையும் பிச்சமும் ஒழிய உடையும் என இயைக்க. கோன் - அரசன். குடை - கொற்றக்குடை. பிச்சம் - பீலியால் கட்டுவது. உடையும் - தோற்றோடும். உடைதும் - தோல்விஇடைவோம். சுடுவில் - சுடுதலால். நெருப்பு மூட்டிப் புகையெழுப்புதலால். தேன் உடைதல் - தேனையீட்டியிருந்த ஈக்கள் தேனடையை விட்டு நீங்குவது. வண்ணம் - போல. சுடு - முதனிலைத் தொழிற்பெயர். தேனினம்போலக் கெடுவோம் எனவே வேடுவராகிய தமக்குப் பாடின்மை கூறினான்.
வேடர் கூறல்
என்று கூறலும் "ஏழை வேட்டுவீர்!
ஒன்று தேரினால் ஒருவன் கூற்றமே
என்று கூறினும், ஒருவன் என்செயும்?
இன்று கோடும் நாம்? எழுக" என் றேகினார். 114
114. ஏழை வேட்டுவீர் - இகழ்ச்சிக் குறிப்பு. ஒன்று தேர் - ஒற்றைத் தேர். ஒருவன் கூற்றமே என்று கூறினும் - ஒருவனை எமன் என்றே உலகத்தார் கூறுவதாயிருப்பினும், கோடும் – ஆனிரையைக் கொள்வோம்.
இராசமாபுரத்து ஆயர் கூட்டத்து, நிமித்தம் நிகழ்தல்
பூத்த கோங்குபோல் பொன்சு மந்துளார்
ஆய்த்தி யர்நலக்கு ஆசெல் தூணனான்;
கோத்த நித்திலக் கோதை மார்பினான்.,
வாய்த்த அந்நிரை வள்ளு வன் சொனான். 115
115. பூத்தகோங்கு - புக்களை நிரம்பப் பூத்திருக்கும் கோங்குமரம். பொன் - பொன்னாலாகிய பணிகள். நலக்கு - நலம் நுகர்தற்கு. ஆ செல் தூண் - ஆ தீண்டு குற்றி; ஆனினம் தினவு தேய்த்துக் கோடற்காக நாட்டப்படும் தூண். நித்திலம் - முத்து. கோதை - பூமாலை. நித்திலமார்பன் - கோதைமார்பன் என இயையும். இவன் - நந்தகோன். வாய்த்த - தப்பாத.
நிமித்தம் கூறல்
"பிள்ளை யுள்புகுந் தழித்த தாதலால்
எள்ளன் மின்நிரை இன்று நீர்" என,
வெள்ளி வள்ளியின் வினங்கு தோன்நலார்
முள்கும் ஆயரும் மொய்ம்பொடு ஏகினார். 116
116 பிள்ளை - காரியென்னும் பறவை. அழித்தது - தீங்குண்டெனத் தெரிவித்து மனவமைதியைக் கெடுத்தது. என்னன்மின் – மிக்க விழிப்புடனேயிருந்து காப்பீராக. வெள்ளி வன்னி - வெள்ளியாற் செய்த வளைகள். நல்லார் - மகளிர். மூள்கும் ஆயர் - கூடும் புதுமணவாளப் பிள்ளைகள்.
நிரையொடு சென்ற ஆயர் வேடர்க்கு ஆற்றாது நிரையிழந்து பின்னிடல்
காய மீன்எனக் கலந்து கான்நிரை
மேய வெந்தொழில் வேடர் ஆர்த்துடன்
பாய மாரிபோல் பகழி சிந்தினார்,
ஆயர் மத்தெறி தயிரி னாயினார். 117
117 காயமீன் - ஆகாயத்திலுள்ள மீன்கள். கான் - காட்டில். இரைமேய - இரையை ஆனிரைகள் மேய்ந்துகொண்டிருக்கவே. வெந் தொழில் வேடர் - வெவ்விய கொலைத் தொழிலையுடைய வேடர். பாய மாரி - பரந்த மழைத்தாரை. பகழி - அம்பு. மத்து எறி தயிரின் - மத்தால் கடையப்பட்ட தயிர்போல. ஆயினார் - சிதறியோடினர்,.
தாயிழந்தலறும் கன்றினங்களைக் கண்டு ஆயர்; மகளிர் அழுது அரற்றுதல்
எம்மனை மார்! இனி எங்ஙனம் வாழ்குவிர்?
நும்மனை மார்களை நோவல துக்கி,
வெம்முனை வேட்டுவர் உய்த்தனர் ஓஎனத்
தம்மனைக் கன்றொடு தாம்புலம் புற்றார். 118
118. எம் அனைமார் - எம் அன்னை மாரே, (கன்றுகளை விளித்துக் கூறுதல்) நும் அனைமார் - நும்முடைய தாய்மாரை. நோவ அதுக்கி - நோவும்படி அடித்துக்கொண்டு. வெம்முனை வேட்டுவர் - வெவ்விய போரைச் செய்யும் வேடர். உய்த்தனர் - கொண்டுய்த்துச் சென்றனர். மனைக்கன்று - மனை யிடத்தேயுள்ள ஆண்கன்று. உவப்பின்கண் அஃறி ணையை உயர்திணையாற் கூறினார்.
அரசனுக்கு நிரையிழந்தமை தெரிவித்துவரும் ஆயர் நகரவர்க்கும் தெரிவித்தல்
கொடுமர எயினர் ஈண்டிக் கோட்டிமில் ஏறு சூழ்ந்த
படுமணி நிரையை வாரிப் பைந்துகில் அருவி நெற்றி
நெடுமலை அத்தஞ் சென்றார் என்றுநெய் பொதிந்த பித்தை
வடிமலர் ஆயர் பூசல் வளநகர் பரப்பி னாரே 119
119. கொடுமரம் - வில். எயினர் - வேடர். கோட்டு இமில் ஏறு - கொம்பும் கொண்டையுமுடைய ஆனேறு. படுமணி நிரை - ஒலிக்கின்ற மணிகட்டிய ஆனிரையை. வாரி - சேரக் கொண்டு. பைந்துகில் அருவி நெற்றி - பசிய துகில் போன்ற அருவி யிழியும் உச்சியையுடைய. அத்தம் - சுரத்துவழி. பித்தை - தலைமயிர். வடிமலர் - அழகிய பூ. பூசல் - ஆனிரை யிழந்த பூசல்.
ஆயர், முறையீடு கேட்ட கட்டியங்காரன் நிரைமீட்க எனத் தன் வீரர்களை ஏவுதல்
கூற்றின் இடிக்கும் கொலைவேலவன், கோவலர்வாய்
மாற்றம் உணர்ந்து, மறங்கூர் கடல் தானை நோக்கி
காற்றின் விரைந்து தொறுமீட்க எனக் காவல்மன்னன்
ஏற்றை யரிமான் இடிபோல இயம்பினானே. 120
120. இடிக்கும் - வெருளும். மாற்றம் - நிரையிழந்த செய்தி மறம்கூர் கடல்தானை- வீரம் மிகுந்த கடல்போன்ற தானை. காற்றின்- காற்றினும் கடுக. தொறு - ஆனிரை. காவல் மன்னன் - கட்டியங்காரன். ஏற்றையரிமான் - சிங்கலேறு. இடி - முழக்கம்.
சீவகன் சென்ற தேர் முழக்கமும், துகட்படலமும்மிகுந்து வேடர் கூட்டத்தைத் திகைப்பிக்கவே, அவர்கள் வேறொரு புறத்தே கூடி அம்புகளை மழைபோல எய்தனர்.
அவற்றையெல்லாம் விலக்கி, அவர்களுள் ஒருவர்க்கும் உயிரிறுதி எய்தாவகையில் சமர் செய்து சீவகன் வெருட்டவே, அவர்கள் ஆனிரைகளைக் கைவிட்டு நீங்கினர்.
வேடர் சிதறி யோடுதல்
ஐந்நூறு நூறு தலையிட்ட ஆறா யிரவர்
மெய்ந்நூறு நூறு நுதிவெங்கணை தூவி வேடர்
கைந்நூறு வில்லும் கணையும் மறுத்தான்; கணத்தின்
மைந்நூறு வேற்கண் மடவார் மனம்போல மாய்ந்தார். 126
126. ஐந்நூறு நூறு தலையிட்ட ஆறாயிரவர் - ஐம்பத்தாராயிரம் பேர். மெய் நூறு நூறும் - நூறுபேர் மெய்யை ஒரு தொடுப்பில் அழிக்கும். நுதி - கூர்மை. கணை - அம்பு. தூவி - அவ்வாறு நூறாதபடி எய்து; மிகச் சொரிந்து. கை நூறு வில்லும் - கையிடத்தே யிருந்து பிறரை யழிக்கும் வில்லும். அறுத்தான் - அற்றுவிழச் செய்தான். மைந் நூறு வேற்கண் - மௌ தீட்டிய வேல் போன்ற கண்; மையாகிய நூறு. (நூறு - பொடி) "மனம்போல" என்றார். நிலை நில்லாது கெடுதலின். மாய்ந்தார் - ஓடி யொளித்தனர் . "தம் உயிர்க்கு ஊறு செய்யாது, அம்பு எய்தமை கண்டு கீழே போட்டுவிடுதலின், தூவுதலால் அறுத்தான் " என்றார்.
சீவகனது வெற்றி கேட்ட கட்டியங்காரன் உள்ளத்தே பகைமை கொள்ளுதல்
ஆளற்ற மின்றி யலர்தாரவன் தோழ ரோடும்
கோளுற்ற கோவன் நிரைமீட்டனன் என்று கூற
வாளுற்ற புண்ணுள் வடிவேலெறிந் திட்ட தேபோல்
நாளுற் றுலந்தான் வெகுண்டான்; நகர் ஆர்த்த தன்றே. 127
127 அற்றமின்றி - உயிரிழத்தலின்றி. தோழர்க்குப் போர் இல்லை யாயினும் கூட நின்றதனால் "தோழரோடும்" என்றார். கோன் உற்ற - வேடரால் கொள்ளப்பட்ட. கோவன் - ஆயனாகிய நந்தகோன். வாளுற்ற புண் - வாளால் உண்டான புண். வடிவேல் - வடித்த வேல். வடிவேல் கூறியது ஆழமாகப் பாயும் என்றற்கு. தான் தோற்றதன்மேல் சீவகன் வெற்றி நிலைநின்றது. கட்டியங்காரனுக்குப் புண்ணுள் வடிவே லெறிந் திட்டதுபோல் ஆயிற்று. நாளுற்றுவந்தான் - கட்டியங்காரன். சீவகன் அரசவுரிமை எய்தும் நாள் வந்துறுதலால், அவனை அவ்வாறு கூறினார். வெருண்டது - கேட்டிற்கு அறிகுறி.
:
வெற்றித் திருவுடன் மீளும் சீவகனைக் கண்ட நகரமகளிர் பேசிக்கொள்ளுதல்
கொடையுளும் ஒருவன்; கொல்லும் கூற்றினும் கொடிய வாட்போர்ப்
படையுளும் ஒருவன் என்று பயங்கெழு பனுவல் நுண்ணூல்
நடையுளார் சொல்லிற் றெல்லாம் நம்பிசீ வகன்கட் கண்டாம்
தொடையலங் கோதை யென்று சொல்லுபு தொழுது நிறபார். 128.
128. கூற்றினும் - கூறுபாட்டிலும். எமனினும் என்றுமாம். படையுள் - படுக்கும் வீரருள் . பயம் கெழு - பயன் பொருந்திய. பனுவல் - ஆராய்ச்சி. நடை - ஒழுக்கம். ஒன்றல்லனவெல்லாம் பலவாதல் பற்றி "எல்லாம்" என்றார்.. தொடையலங்கோதை - கட்டுதலையுடைய அழகிய மாலை யுடையாய். மகடூஉ முன்னிலை: நூலார் கூற்று.
கொடையிலும் ஒருவனே கொடுப்பன்; படையிலும் ஒருவனே கெடுப்பன்; இவ்விரண்டும் ஒருவனிடத்தே நில்லா; ஆயினும் இவை யிரண்டும் சேவகனிடத்தே கண்டேம் என்று சொல்லித் தொழுது நிற்பா ராயினர். உம்மை, சிறப்பு.
விண்ணகத் துளர்கொல் மற்றிவ் வென்றிவேற் குருசில் ஒப்பார்.
மண்ணகத் திவர்கள் ஒவ்வார்; மழகளி றனைய தோன்றல்,
பண்ணகத் துறையும் சொல்லார் நன்னலம் பருக வேண்டி
அண்ணலைத் தவத்தின் தந்தார் யார்கொலோ அனியர் என்பார். 129
129 குருசில் - தோன்றலாகிய சீவகன். விண்ணகம் - தேவருலகம். மற்று, வினைமாற்று. இவர்கள் - மக்களாய்ப் பிறந்தார். மழகளிறு - இளைய களிறு. பண்ணகத் துறையும் சொல்லார் - பண்போல இனிய சொற்களைச் சொல்லும் மகளிர். நன்னலம் - இவனது பெறுதற்கரிய நலம். தவத்தின் - தவத்தால்.. யார் கொலோ அனியர் – அவர் யாவராயினும் அளிக்கத் தக்காராவர்.
சீவகனைக் கந்துக்கடனும் சுநந்தையும் வரவேற்றல்
தாயுயர் மிக்க தந்தை வந்தெதிர் கொண்டு புக்குக்
காய்கதிர் மணிசெய் வெள்வேல் காளையைக் காவ லோம்பி.
ஆய்கதிர் உமிழும் பைம்பூண் ஆயிரச் செங்க ணான்தன்
சேயுயர் உலக மெய்தி யன்னதோர் செல்வ முற்றார். 130
130 உயர் மிக்க தந்தை.- பிள்ளை யுயர்ச்சி மிகுதற்குக் காரணமான தந்தை; - கந்துக்கடன். காய் - விளங்குகின்ற. காவல் ஓம்பி - ஆலத்தி முதலியவற்றால் கண்ணேறு கழித்து. ஆய்கதிர் - இனிய ஒளி. ஆயிரச் செங்கணான் - இந்திரன் . சேய் உயர் உலகம் - மிக்க சேய்மையிலுள்ள துறக்கம். எய்தியன்னது- அடைந்தாற் போல்வது. ஓர் - சிறந்த.
நந்தகோன் போந்து சீவகற்குச் சச்சந்தன் வரலாறு கூறித் தன் வரலாறு கூறுதல்
கோலிழுக்குற்ற ஞான்றே கொடுமுடி வரையொன் றேறிக்
காலிழுக் குற்று வீழ்ந்தே கருந்தலை களைய லுற்றேன்;
மால்வழி யுளதன் றாயின் வாழ்வினை முடிப்பல் என்றே
ஆலம்வித் தனைய தெண்ணி அழிவினுள் அகன்று நின்றேன். 131
131. கோல் இழுக்குற்ற ஞான்றே - செங்கோல் வேந்தனான சச்சந் தன் இறந்த அன்றே. கொடுமுடி - நெடிய உச்சி. கால் இழுக்குற்று வீழ்ந்து - கால் சரிந்து வீழ்ந்தேனென்று பிறர் கூறுமாறு தலைகீழாக வீழ்ந்து. கருந் தலை - பெரியதலை. அரசனோடு இறவாமையால் பயனில்லாத என் தலையை. களையலுற்றேன் - போக்கிக் கொள்ளலுற்ற யான். மால்வழி - அரசற்கு வழித் தோன்றல். உளதன்றாயின் - இருப்பது இன்றாகுமாயின்; "தேவிக் குப் பிள்ளையுண்மை யறிவானாகலின் இது கூறினான். "முடிப்பல் - அழிப் பேன்; ஆலம் வித்தனையது - ஆலம் விதை போல்வதொரு சிறு நினைவு. அழிவினுள் அகன்று - உயிர் விடுதலிலிருந்து விலகி.
குலத்தொடு முடிந்த கோன்தன் குடிவழி வாரா நின்றேன்
நலத்தகு தொறுவி னுள்ளேன். நாமம்கோ விந்த னென்பேன்
இலக்கண மமைந்த கோதா வரிஎன இசையிற் போந்த
நலத்தகு மனைவி பெற்ற நங்கைகோ விந்தை யென்பாள். 132
குலம் தோன்றுத லருமை பற்றிப் பின்னும் "முடிந்த" என்றான். தன் குலமெல்லாம் தானாய் நிற்றலின், வாராநின்றேன் என்றான்.
132 நலத்தகு தொறுவின் - நலம்பொருந்திய இடையரிடையே. இலக்கணம் - பெண்மைக்குரிய இலக்கணங்கள். இசையிற் போந்த – கற் பால் எய்தும் புகழ் பரவிய. நலத்தகு நங்கை - நலத்துக்குத் தக்க நங்கை.
நந்தகோன் தன் மகள் நலம்கூறிச் சீவகனை மணம் செய்துகொள்ளுமாறு வேண்டல்
வெண்ணெய்போன் றூறினியள், மேம்பால்போல் தீஞ்சொல்லள்;
உண்ண உருக்கிய ஆனெய்போல் மேனியள்;
வண்ண வனமுலை மாதர் மடநோக்கி;
கண்ணும் கருவிளம்போ திரண்டே கண்டாய். 133
133. ஊறு இனியள் - பரிசத்தால் இனியள். மேம் பால் - உண்டற்கு மேவும் இனிய பால். உண்ண - சிவக்கக் காய்ச்சிய. வண்ணம் - அழகு. கருவிளம் போது - கருவிளம் பூக்களை நிகர்க்கும்.
சேதா நறுநெய்யும் தீம்பால் சுமைத்தயிரும்
பாதால மெல்லாம் நிறைத்திடுவல், பைந்தாரோய்!
போதார் புனைகோதை சூட்டுஉன் அடித்தியை;
யாதாவ தெல்லாம் அறிந்தருளி என்றான். 134
134. சேதா - செம்மையான ஆ. சுமைத் தயிர் - ஆடைத் தயிர். பாதலமெல்லாம் - பாதாளமட்டும். போது - பூ. கோதை சூட்டு - மண மாலையைச் சூட்டுக. அடித்தி - அடியான். யாது ஆவது - இதனால்வரும் குறை என்னை?
குலம்நினையல் நம்பி, கொழுங்கயற்கண் வள்ளி
நலன்நுகர்ந்தா னன்றே நறுந்தார் முருகன்;
நிலமகட்குக் கேள்வனும் நீள்நிரை நப்பின்னை
இலவலர்வாய் இன்னமிர்தம் எய்தினா னன்றே. 135
135. நிலமகட்குக் கேள்வன் - கண்ணன். கேள்வன் - கணவன். நீள்நிரை நப்பின்னை - மிக்க ஆனிரைகளையுடைய நப்பின்னை என்பவள், "பின்னை, அவள் பெயர்; ந.சிறப்புப் பொருளுணர்த்துவதோர் இடைச் சொல்; நச்செள்ளை, நப்பாலத்தன், நக்கீரன் என்றாற்போல." இலவு அலர் - இலவம் பூ.
கோவிந்தை பதுமுகனுக்குத் தக்கவள் எனத் தன் மனத்தில் எண்ணிய சீவகன் நந்தகோனிடம் இரட்டுறமொழிந்து மணவினைக்கு இசைவு கூறிவிடல்
கோட்டிளங் களிறு போல்வான் நந்தகோன் முகத்தை நோக்கி,
மோட்டிள முலையி னாள்நின் மடமகள் எனக்கு, மாமான்!
சூட்டொடு கண்ணி யன்றே! என்செய்வான் இவைகள் சொல்லி
நீட்டித்தல் குணமோ? என்று நெஞ்சகம் குளிர்ப்பச் சொன்னான். 136
நந்தகோன் கோவிந்தையை மங்கல நீராட்டி மணவணி புனைந்து கொணர்ந்து, ஆயரும் பிறரும் சூழநின்று சீவகன் கையில் பதுமுகனுக்காக நீர் பெய்து கொடுத்தல்.
இனி, "மாமான் எனக்குச் சூட்டொடு கண்ணியன்றே என்றது, தனக்கு ஆகாமையின் புலாலும், பதுமுகற்கு ஆதலின் பூவுமாகக் கருதினா னென்றுமாம். இனி, ஆமான் சூட்டுமாம்; இனி, மா, வட சொல்லாக்கி ஆகாதென்றும் உரைப்பர். கோட்டிளங்களிறு - கொம்புகளையுடைய இளய யானை. மோடு - பெருமை. மடமகன் - இளயவன். மாமான் - விளி. மாமன் - பெயர். "சூட்டொடு கண்ணியன்றே என்பது. இடுந்தன்மையன்றிச் சூட் டுந்தன்மையோடு கூடிய கண்ணியல்லவோ என்றும், நெற்றிச் சூட்டும் கண் ணியுமல்லவோ என்றும் இரண்டு பொருளுணர்த்தும்; உணர்த்தவே, மார்பிற்கு மாலையிடுக என்றும், தலைக்கு மாலை சூட்டுக என்றும் பெரும்பான்மையும் வழக்கு நடத்தலின், தலைமேல் வைக்கப்படும் கண்ணியென்றானாக நந்தகோன் கருதினானாம். நெற்றி சுட்டு ஆடவர்க் காகாத தன்மையும், கண்ணி ஆடவர்க்கு ஆம் தன்மையும் போல, தன்குலத் திற்கு ஆகாமையின் சூட்டின் தன்மையும், பதுமுகன் குலத்திற்குச் சிறிது பொருந்துதலின் கண்ணியின் தன்மையும் உடையனென்று சீவகன் கூறினா னாம்." இடையரினும் வணிகம் செய்பவர் உண்டு. செய்வான் என் என்று மாறுக. நீட்டித்தல் - காலம் கடத்தல். விரையப் பதுமுகனுக்கு மணம் செய்வாம் என்றானாயிற்று.
கோவிந்தையைப் பதுமுகனுக்குத் திருமணம் செய்வித்தல்
ஏறங்கோள் முழங்க ஆயர் எடுத்துக்கொண் டேகி மூதூர்ச்
சாறெங்கு மயரப் புக்கு நந்தகோன் தன்கை யேந்தி
வீறுயர் கலச நன்னீர் சொரிந்தனன்; வீரன் ஏற்றான்,
பாறுகொள் பருதி வைவேல் பதுமுக குமரற்கு என்றே. 137
137. ஏறங்கோள் - ஏறுகோட் பறை. எடுத்துக்கொண்டு - கோவிந்தையை எடுத்துக்கொண்டு. சாறு - உலா. புக்கு – கந்துக்கடன் மலையிற் புகுதலால். வீரன் ஏற்றான் - வீரனாகிய சீவகனும் பதுமுகனுக்கு என்று ஏற்றான். “வீறு - வேறொன்றற்கில்லா அழகு”
பதுமுகன் மகிழ்தல்
கள்வாய் விரிந்த கழுநீர்பிணைந் தன்ன வாகி
வெள்வேல் மிளிர்ந்த நெடுங்கண்விரை நாறு கோதை
முள்வாய் எயிறூ றமிர்தம்முனி யாது மாந்திக்
கொள்ளாத இன்பக் கடற்பட்டனன், கோதை வேலான். 138
138. கள்வாய் விரிந்த - தென் வாயிலே பரந்த. பிணைந்தன்னயாகி - சேர்ந்தாற் போன்ற தன்மையுடையவாய். வேல் மிளிர்ந்த - வேல்போல் பிறழ்ந்த. விரை - மணம் முள்வாய் எயிறு - முள்ளைப்போல் கூரிய பற்கள். முனியாது - வெறுப்பின்றி. மாந்தி - உண்டு. கொள்ளாத இன்பக்கடல் - உள்ளிடம் கொள்ளாது கரை புரண்டோடுகின்ற இன்பக்கடல்.
கோவிந்தையார் இலம்பகம் முற்றும்.
------------------
3. காந்தருவதத்தையார் இலம்பகம்
[காந்தருவதத்தையார் இலம்பகம்: சீவகன் காந்தருவதத்தை யென்பாளைக் கூடின இலம்பகம் என விரியும்.]
[இதன்கண், இராசமாபுரத்து வணிகருள் ஒருவனான சீதத்தன் என்பான், கெட்ட தன் பொருளை ஈட்டுதற் பொருட்டு, மரக்கல மமைத்துத் திரைகடலிற் சென்றதும், தரன் என்னும் விஞ்சையன் சூழ்ச்சியால் மயங்கிக் கலுழ வேகன் என்னும் விஞ்சை வேந்தன்பால் அவன் செல்லுதலும், கலுழவேகன் மகன் காந்தருவதத்தைக்கு இராசமாபுரத்தே திருமணம் நடக்குமெனச் சோதிடர் கூறக் கேட்டிருந்தமையின், சீதத்தன்பால் அவளை யொப்புவித்து அவளை வீணையில் வெல்வானுக்கு மணம் செய்து தருமாறு பணித்து மணியும் பொன்னும் மிதப்ப நல்கி விடுத்ததும், தரனால் அச் சீதத்தன் தன் கலத்தையும் தோழரையும் கண்டு அவருடன் திரும்பப் போந்து அரசன் உடன்பாடு பெற்று வீணைப்போர் வெளியிடலும், மன்னர் பலர் அப் போரில் வென்றி யெய்தமாட்டா தொழியச் சீவகன் வெல்லுதலும், கட்டியங்காரன் பொறாமைகொண்டு சீவகனை அடர்க்குமாறு மன்னர்க்குப் பணிப்ப அவரும் பொருது தோற்றோடியதும், சீவகன் தத்தையைத் திருமணம் செய்துகோடலும், பிறவும் விரித்துக் கூறப்படுகின்றன.]
இராசமாபுரத்து வணிகருள் யவதத்தன் என்பானது வழியின் சீதத்தன் என்றொரு வணிகன் பதுமை யென்பாளை மணந்து இல்லிருந்து அறம் செய்துவரும் நாளில், தன்பால் பொருள் கெட்டதாக, தன் குடி கெட்டதென்னும் சொல் நிகழாமைப் பொருட்டுத் திரைகடலோடிச் செல்வம் ஈட்டி வரக் கருதினான்.
சீதத்தன் போதல்
தூங்குசிறை வாவலுறை தொன்மரங்க ளென்ன
ஓங்குகுலம் நைய,அத னுட்பிறந்த வீரர்,
தாங்கல்கட னாகும்; தலை சாய்க்கவரு தீச்சொல்
நீங்கல்மட வார்கள்கடன் என்றெழுந்து போந்தான். 139
139. தூங்கு வாவல் - தலை கீழாகத் தொங்கும் வௌவால். தொன்மரம் - பழைமையுடைய ஆலமரம். ஓங்கு குலம் - உயர் குலம். நைய - தளர. அதனுள் - அக்குடியில். தாங்கல் கடனாகும் - ஆல் தான் தளர, அதன் விழுது தாங்குவதுபோகக் குடியைத் தாங்குவது கடனாகும். தலை சாய்க்க - நாணத்தால் தலை கவிழ. தீச்சொல் - இவன் பிறந்து இக் குடி கெட்டது என்னும் பழிமொழி. நீங்கல் - நைந்த குடியைத் தாங் காது போய்விடுதல். மடவார்கள் - பேதைகள். கடன் - செயல். என்று - பொருள் வயிற் செல்வதே கடன் என்று நினைந்து.
சீதத்தனது மரக்கலம் கடலிற் செல்லுதல்
திரைகள்தரும் சங்குகலம் தாக்கித்திரள் முத்தம்
கரைகடலுட் காலக்கணை பின்னொழுக முந்நீர்
வரைகிடந்து கீண்டதெனக் கீறிவளர் தீவின்
நிரையிடறிப் பாய்ந்திரிய ஏகியது மாதோ. 140.
140. திரைகள் தரும் சங்கு - அலையிடத்தே மிதக்கும் சங்குகள். கலம் தாக்கி - மரக்கலம் தாக்குவதால். கரை கடலுள் திரள் முத்தம் கால - ஒலிக்கின்ற கடலில் அச் சங்குகள் தம்மிடத்தே திரண்ட முத்துக்களைச் சொரிய. கணை - கலத்தின் பின்னே கதவுபோல் நின்று நெறிப்படுத்தும் கணையம் (Rudder). கடற்கரையில் வாழ்நர் இன்னும் இதனைக் கணையம் என்றே வழங்குகின்றனர். கணையொழிய என்று கொண்டு, மேலிருந்து எய்த அம்பு பின்னே கழியக் கலம் முன்னே சென்றது; இதனால் கடுகின விசை கூறினார் என்பர் நச்சினார்க்கினியர். வரை முந்நீர் கிடந்து நீண்டது என - மலையானது கடலிடத்தே நில்லாதே கிடந்து கிழித்த தென்னும்படி. தீவின் நீரை இடறிப் பாய்ந்து - சிதறிக் கிடக்கும் தீவுகளின் ஒழுங்கை இடறிக் குதித்து. இரிய - பிற்பட்டு நீங்க. மாது, ஓ அசை.
அவனது கலம் பொன்விளை தீப மடைதல்
மின்னுமிளிர் பூங்கொடியு மென்மலரு மொப்பார்,
அன்னமொடு தோகைநடை சாயலமிர் தன்னார்
துன்னியினி தாகவுறை துப்புரவின் மிக்க
நன்மையுடை நன்பொன்விளை தீபமடைந் தஃதே. 141
இத் தீபத்தின்கண் ஆறு திங்கள் இருந்து தான் கொண்டு போந்த பண்டங்களை மிக்க பொன்னுக்கும் மணிக்குமாக மாறி, பின்பு அத் தீபத்து அரசன்பால் விடைபெற்றுத்
தன்னூர்க்கு வரவேண்டித் தன் வங்கத்தைச் செலுத்திக் கொண்டு வருவானாயினன். அத் தீபத்தை நீங்கி ஐஞ்ஞூறு யோசனை கடந்ததும், பெருமழையும் இடியும் விரவிப் பெரும் புயல் வந்து மோதுவதாயிற்று; கலமும் நிலைகலங்க, கலத்தவர் உள்ளம் கலங்கலாயினர். சீதத்தன் அவர்கட்குத் தேறுதல் கூறலுற்றான்.
141. மின்னும் மிளிர்பூங் கொடியும் மென் மலரும் ஒப்பார் - மின்னல் விளக்கத்துக்கும், கொடி அசைதற்கும், மலர் மென்மைக்கும் உவமை. தோகை - மயில். அன்ன நடை; மயில் போன்ற சாயல், துன்னி - நெருங்கி. துப்புரவு - நுகர்தற்குரிய பொருள்கள். அடைந்தஃது - அடைந்தது; "செய்வஃதே முறை" என்றாற் போல.
சீதத்தன் தெளியத்தகுவன கூறல்
இடுக்கண்வந் துற்றகாலை எரிகின்ற விளக்குப் போல
நடுக்கமொன் றானு மின்றி நடுகதாம்; நக்க போழ்துஅவ்
விடுக்கணை அரியும் எஃகாம்; இருந்தழுது யாவர் உய்ந்தார்;
வடுப்படுவ தென்னை யாண்மை? வருபவந் துறுங்கள் அன்றே. 142
142. விளக்குப்போல - விளக்கு அசைவதுபோல, ஒன்றானும் - சிறிதும், தாம் - அசை. இடுக்கணை அரியும் எஃகு ஆம் - துன்பமாகிய வலையை அரிந்து தள்ளும் வாளாகும். இருந்து - நகாமல் இருந்து. உய்ந்தார் - இடுக்கண் நீங்கினவர். ஆண்மை வடுப்படுத்து என்னை - இருந்தழுது ஆண்மைக்கு மாசு தேடிக் கொள்வதால் உண்டாகும் பயன் யாது? வருப - வருபவை. வந்துறுங்கன் - வந்தே தீரும். கள், விகுதி மேல் விகுதி; அசை யென்றும் கூறுப.
சீதத்தன் அருகனை நினைந்து அஞ்சாமை மேற்கொண்மின் என்றல்
வினையது விளைவின் வந்த வீவருந் துன்ப முன்னீர்க்
கனைகட லழுவம் நீந்திக் கண்கனிந் திரங்கல் வேண்டா;
நனைமலர்ப் பிண்டி நாதன் நலங்கிளர் பாத மூலம்
நினையுமின் நீவி ரெல்லாம்; நீங்குமின் அச்சம் என்றான். 143
143 விளைவின் - பயனாகி. வீவரும் துன்பம் - நீக்குதற்கரிய துன்பம். முன் நீர்க் கனை கடல் அழுவம் - பழைய நீரையுடைய ஒலிக்கின்ற கடற் பரப்பு. கண் கனிந்து - கண் குழைந்து. நனை - தேன்; அரும்புமாம். நலம் கிளர் பாத மூலம் - நலம் பயக்கும் பாதமாகிய மூலப்பொருளை. துன்பம் நீங்குதற்குக் காரணமாதலின், மூலம் என்றார்.
குறிப்பு:--- நலம் படுவதாகவும், அவர் வருந்துவதாகவும் சீதத்தனுக்குத் தோன்றியதன்றி, உண்மையன்று. "அச்சமே கீழ்களது ஆசாரம்" (குறள்) என்பவாகலின் "அச்சம் நீங்குமின்" என்றான்.
கலம் சிதைந்து கடலுள் மறைதல்
பருமித்த களிற னானும் பையெனக் கவிழ்ந்து நிற்ப
குருமித்து மதலை பொங்கிக் கூம்பிறப் பாய்ந்து வல்லே
நிருமித்த வகையி னோடி நீர்நிறைந் தாழ்ந்த போதில்
உருமிடித் திட்ட தொப்ப உள்ளவர் ஒருங்கு மாய்ந்தார். 144
144 பருமித்த - ஆயத்தம் செய்யப்பட்ட. பை யென - மெல்லென. குருமித்து - முழங்கி. ஒடிந்துவிழும் ஓசை குருமித்தல் எனப்படும் . கூம்பு - பாய் மரம். இற - முறிய. நிருமித்த - ஏற்படுத்தின. மாய்ந்தார் - மறைந்தனர். உரும் - இடி.
சீதத்தன் கூம்பின் துண்டத்தைப்பற்றி மிதந்து சென்று மணல்திட்டு ஒன்றைச் சேர்தல்
நாவாய் இழந்து நடுவாருமில் யாமம் நீந்திப்
போவாய், தமியே, பொருளைப்பொரு ளென்று கொண்டாய்;
வீவாய் என்முன் படையாய் படைத்தாய் வினையென்
பாவாய்! எனப்போய்ப் படுவெண்மனல் திட்டை சேர்ந்தான். 145
145 நாவாய் - மரக்கலம். ஆரும் இல் நடுயாமம் – துணையாரும் இல்லாத நள்ளிரவில். பொருளைப் பொருள் - பொருளை உறுதிப்பொருள். கொண்டாய் வீவாய் என முன் படையாய் படைத்தாய் - கொண்ட நீ இறப்பாயாக என முன்னே படைக்காமல் இப்போது படைத்தாய். வினையென் பாவாய் - வினையென்று சொல்லப்படும் பாவையே. படு மணல் திட்டை - கொழிக்கின்ற மணல் மேடு. இது கடலலையால் ஒதுக்கப்பட்டுக் கிடந்த கரையின் மேடு.
சீதத்தன் மணல் திட்டையின் நன்னிமித்தம் கண்டு உள்ளம் தெளிதல்
ஓடுந் திரைகள் உதைப்ப உருண்டுருண்டு
ஆடும் அலவனை அன்னம் அருள்செய,
நீடிய நெய்தலங் கானல் நெடுந்தகை
வாடி யிருந்தனன் வருங்கலம் நோக்கா. 146
இவ்வாறிருக்கையில், தோள்வலி படைத்த காளையொருவன் அங்கே தோன்றச் சீதத்தன் அவனைக் கண்டு, அவன்பால் தனக்குற்ற தீங்குகளை யுரைத்தான். அது
கேட்ட தரன் என்னும் பெயரையுடைய அவ்வீரன் உரைக்கலுற்றான்.
146. ஓடும் திரைகள் - கரையை மோதிவிட்டு நீங்கும் அலைகள்: ஒன்றன்பின் ஒன்றாய்ச் சுருண்டோடும் அலையுமாம். உதைப்ப - தள்ள. ஆடும் - அலைக்கப்படும். அலவன் - நண்டு. நீடிய - நெடிதாய்க் கிடந்த. நெய்தல் அம் கானல் - நெயதல் நிலத்துக் கானற் சோலை. வாடி - வருந்தி. வருங்கலம் - அவ்வழியே கலமேதேனும் வரும் என, நோக்கா - நோக்கி. காணாமையால் வாடியிருந்தான் என்க. "அன்னம் கொல்லா திருந்தமை, தான் பற்றுக்கோடாக வாழ்வாரைக் காலால் உதைத்துக் கடல்
நம் முன்னே தள்ளவும், போக்கற்றுப் பின்னும் அதனிடத்தே செல்லா நின்றதென்று நோக்கி அதற்கு அருளினாற்போலே யிருந்ததென்க." அன்னத்தின் செயல் நன்னிமித்தமாகக் கருதுதிச் சீதத்தன், வரும் கலம் நோக்கியிருந்தான்.
தரன் உரைத்தல்
விஞ்சைகள் வல்லேன்; விளித்தநின் தோழரோடு
எஞ்சிய வான்பொருள் எல்லாம் இமைப்பினுள்
வஞ்சமொன் றின்றி மறித்தே தருகுவன்,
நெஞ்சிற் குழைந்து நினையன்மின் என்றான். 147
என்றவன், மேலும் தகுவன சில கூறிச் சீதத்தனைத் தெளிவித்துத் தன்னோடு வருமாறு கூட்டிக்கொண்டு சேணில் தோன்றிய மலைச்சாரலுக்குக் கொண்டேகினான்.
197. விஞ்சை - வித்தை. விளிந்த - மாய்ந்த. எஞ்சிய - ஒழிந்த. வான்பொருள் - மிக்க பொருள். மறித்து - உண்டான கெடுதியை நீக்கி. குழைந்து - பலகாலும் நினைந்து கலங்கி. "நினையன்மின் – ஒருவரைக் கூறும் பன்மை."
சீதத்தன் பசிநீங்கிக் குளிர்தல்
கண்டால் இனியன காண்டற் கரியன
தண்டா மரையவள் தாழும் தகையன
கொண்டான் கொழுங்கனி கோட்டிடைத் தூங்குவ;
உண்டான் அமிழ்தொத்து உடம்பு குளிர்ந்தான். 148
அவ்விடத்திற்கு ஒரு காதத்தில் தோன்றிய அழகிய நகரத்தே அத் தரனுடைய பெருமனை யிருந்தமையின், அதனை இருவரும் சென்றடைகின்றனர்.
148 தாழும் தகையன - விரும்பும் தன்மையுடையன. கோட்டிடை அமிழ்து ஒத்துத் தூங்குவ - கொம்பிலே அமிழ்தின் திரள்போல் தொங்குகின்ற கனிகள். பசியாலும் வருத்தத்தாலும் உடம்பு வெதும்பியிருந்தமையின் "உண்டான் உடம்பு குளிர்ந்தான்" என்றார்.
தரன் விருந்து செய்தல்.
நன்னகர் நோக்கி நாய்கன் நாகம்கொல் புகுந்த தென்னப்
பொன்னகர் பொலியப் புக்குப் பொங்குமா மழைகள் தங்கும்
மின்னவிர் செம்பொன் மாடத் திருவரும் இழிந்து புக்குப்
பின்னவன் விருந்து பேணிப் பேசினன் பிறங்கு தாரான். 149
விருந்துண்டு இனிதிருந்த சீதத்தனுக்குத் தரன் "இந்நகரத்தரசனான கலுழவேகனுக்குக் காந்தருவதத்தை யென்றொரு மகள் உளள். அவள் பிறந்தநாளில் சாதகம்
கணித்த கணிகன் அவட்கு எய்தக் கடவ நல்வினைப் பயன்களெல்லாம் இராசமாபுரத்தேயாம் என்று கூறியுளர். அதனால் அரசனையடைந்து அவன் திறம் அறியலாம். வருக" என, அவனைக் கலுழவேகன் கோயிலுக்கு அழைத்தேகினன். அரசன் சீதத்தனை வரவேற்று அவனது தந்தை தாய், மனைவி, மக்கள் முதலியோர் நலம் வினவி மகிழ்வித்தான்.
149 நாய்கன் - மரக்கல வணிகனான சீதத்தன். நாகம் கொல் - தேவருலகத்து அமராவதியோ. என்ன - என்று தரனைக் கேட்க. பொன்னகரோ என ஐயுற்றவன், இது பொன்னகர் போல்வதன்று, பொன்னகரே எனக் கருதினமை தோன்ற. நன்னகரென்றவர் "பொன்னகர்" என்றார். இனி, வாளா சுட்டாக்கினுமாம். மழைகள் தங்கும் மாடம் - மேகம் தங்கும் உயரிய மாடம். "வெள்ளி மலை மேகபதத்துக்குமேல் என்றாரேனும். மேகம் எங்கும் உளது". மழைகள் தங்கும் இருவர் என இயைத்து, "தரன்
கதியால் தங்குதலும், சீதத்தன் கொடையால் தங்குதலும்" எனக் கொள்ளலும் ஒன்று. பின் - பின்பு. அவன் - தரன். பேணி - செய்து, பிறங்கு தார் - உயர்ந்த மாலையணிந்த தரன். பேசினன் - ஒரு மொழி உரைத்தான்.
கலுழவேகன் மேலும் கூறல்
இன்றையதன்று கேண்மை எமர்நுமர் எழுவர் காறும்
நின்றது கிழமை, நீங்கா வச்சிர யாப்பி னூழால்;
அன்றியும் அறனும் ஒன்றே அரசன்யான்; வணிகன் நீயே
என்றிரண் டில்லை; கண்டாய்; இதுநின தில்லம் என்றான். 150
150. இன்றையது - இன்று உண்டானது. கேண்மை - நட்பு. எழுவர் - ஏழு தலைமுறையினர். கிழமை - நட்புரிமை. வச்சிரயாப்பின் நீங்கா ஊழால். - என இயைக்க. வச்சிரயாப்பு - வச்சிரத்தால் தலையில் இட்ட எழுத்து. அறன் - சமயம் (Religion) என்று இரண்டு இல்லை - என்று உயர்வு தாழ்வு இல்லை.
சீதத்தன் இதுவே என் தந்தைக்குத் தந்தை கூறினான் என்று அவன் கூறிய துரைத்தல்;
வெள்ளிவே தண்டத் தங்கண் வீவில்தென் சேடிப் பாலில்,
கள்ளவிழ் கைதை வேலிக் காசில்காந் தார நாட்டுப்
புன்னணி கிடங்கின் விச்சாலோகமா நகரிற் போகா
வென்னிவேற் கலுழ வேகன் வேதண்ட வேந்தர் வேந்தன். 151.
151. வெள்ளி வேதண்டம் - வெள்ளி மலை. வீவில் – கெடுதல் இல்லாத . தென்சேடி - தென்பகுதியிலுள்ள சேடிக்கூற்று. இக்கூற்றில் உள்ளது காந்தாரநாடு. புன்னணி கிடங்கு - புன்னினம் நீங்காமையால் அழகு பொருந்திய அகழி. போகா - நகரினின்று நீங்காது நிலைபெற்றுள்ள.
சங்குடைந் தனைய வெண்டா மரைமலர்த் தடங்கள் போலும்
நங்குடித் தெய்வம், கண்டீர்! நமரங்காள்! அறிமின் என்னக்
கொங்குடை முல்லைப் பைம்போதிருவடம் கிடந்த மார்ப
இங்கடி பிழைப்ப தன்றால் எங்குலம் என்று சொன்னான். 152
இது கேட்டு உவகை மிக்க கலுழவேகன் சீதத்தனுக்குத் தன் மனைவி தாரணியையும், மகள் காந்தருவதத்தையையும் காட்டிச் சிறப்பித்துப் பின்பு, தன் மகள் பிறப்பு வரலாற்றைக் கூறினன்.
152. சங்கு உடைந்தனைய வெண்டாமரை - சங்கு பாதியாக உடைந்தாற்போல மலரும் வெண்டாமரை. சங்கு தாமரைக்கும், தாமரையோடு கூடிய தடம் குடிக்கும் உவமை. அடுத்துவரலுவமையன்று. இனி, உரைகாரர் "தடங்களிலே உடைந்த தன்மையவாகிய மலரும் சங்கும் போலும் நம் குடி; இஃது தூய்மைக்கு உவமை; இனி சங்கு சுட்டாலும் நிறம் கெடாததுபோலக் கெட்டாலும் தன் தன்மை கெடாத குடியுமாம்; நத்தம்போற் கேடும் (குறள், 235) என்ப" என்பர். நமரங்காள் - நம்
மவர்களே. ---- இது சீதத்தன் பாட்டன் கூற்று. கொங்கு - தேன். இரு வடம் - அரசமுல்லையும் காவல்முல்லையுமாகிய இரு மாலை. அடி - நின் திருவடி. சொன்னான் சீதத்தன் என்க.
கலுழவேகன் சீதத்தன்பால் காந்தருவதத்தையின் பொருட்டுச் செய்ய வேண்டுவன கூறல்
நின்மகள் இவ*ளை நீயே நின்பதி கொண்டு போகி,
இன்னிசை பொருது வெல்வான் யாவனே யானு மாக
அன்னவற் குரிய ளென்ன அடிப்பணி செய்வல் என்றான்,
தன்னமர் தேவி கேட்டுத் தத்தைக்கே தக்க தென்றாள். 153
153. யாவனேயானுமாக - யாவனாயினுமாக. உரியன் என்ன - உரியவனாவன் என்று கலுழவேகன்சொல்ல, அடிப்பணி – அடிமைப் பணி. என்றான் - என்று சீதத்தன் சொன்னான். தன்னமர் தேவி - கலுழ வேகனால் காதலிக்கப்பட்ட தாரணி யென்னும் மனையாட்டி. தத்தைக்கே தக்கது - தத்தைக்குத் தக்கதே என ஏகாரம் பிரித்துக் கூட்டுக.
தாரணி இவ்வாறு செய்வதே தக்கது என்றது கேட்ட கலுழவேகன் மீட்டும் சில கூறுகின்றான்.
கலுழவேகன் தத்தை திருமணம் குறித்துச் சொல்லுதல்
முனிவரும் போக பூமிப் போகமுட் டாது பெற்றும்
தனியவ ராகிவாழ்தல் சாதுய ரதனி னில்லை;
கனிபடு கிளவி யார்தம் காதலர் கவானில் துஞ்சின்,
பனியிரு விசும்பிற் றேவர் பான்மையிற் றென்று சொன்னான். 154
154. முனிவு அரும் - யாவரும் வெறுத்தற்கரிய. போக பூமிப் போகம் - போக பூமியில் பெறுகின்ற பெரும் போகம். முட்டாது - குறையாது. பெற்றும் - பெற்ற வழியும். தனியவராகி - மணமின்றித் தவித்து. சா துயர் - (மகளிர்க்கு) இறக்கும்போதுதுண்டாகும் நோய். "சாதலின் இன்னாததில்லை" என்பர் திருவள்ளுவர். அதனின் இல்லை - அச் சா துயரும் மகளிர் தனித்து வாழ்தல்போலத் துயர் தருவதில்லையாம். கனிபடு கிளவியார் - இனிமை நிறைந்த சொற்களைப் பேசும் மகளிர். கவான் - துடை. சுஞ்சின் - துஞ்சுதலைப் பெறுவாராயின். பனி - குளிர்ச்சி. இருவிசும்பு - பெரிய வானம். வானத்தில் உயரச் செல்லச் செல்ல குளிர்ச்சி மிகுதலின். "பனியிரு விசும்பு" என்றார். தேவர் பான்மையிற்று – மகளிர்க்கு அவ்வாறு துஞ்சுதலால் பிறக்கும் இன்பம் தேவரின்பத்தின் பகுதியை யுடைத்து.
கலுழவேகன் தன் உட்கோள் கூறுதல்
நூற்படு புலவன் சொன்ன நுண்பொருள் நுழைந்தி யானும்
வேற்கடல் தானை வேந்தர் வீழ்ந்திரந் தாலும் நேரேன்;
சேற்கடை மதர்வை நோக்கின் சில்லரித் தடங்கண் நங்கை
பாற்படு காலம் வந்தால் பான்மையார் விலக்கு கிற்பார். 155
155. நூற்படுபுலவன் - சோதிட நூலிலே கண்ணும் கருத்தும் உள்ளவனாகிய புலவன். நுழைந்து - கருத்தைச் செலுத்தித் துணிந்தமையின். வேற்கடல் தானை - கடல்போல வேலேந்திய தானை. வீழ்ந்து – அடியில் வணங்கி. நேரேன் - மகன் கொடுத்தற்கு உடன்படேனாயினேன். சேற்கடை மதர்வை நோக்கின் சில்லரித் தடங்கன் - சேலின் கடைபோன்ற கடையினையும், மதர்த்த நோக்கினையும், சிலவாகிய அரிகளையுமுடைய கண். நங்கை - காந்தருவதத்தை. பாற்படுகாலம் - ஒருவன் பகுதியிலே படும் காலம். பான்மை - விதி.
பின்பு தத்தையைச் சீதத்தனுடன் இராசமாபுரத்துக்குச் செலுத்தக்கருதிய கலுழவேகன், தத்தைக்குத் தோழியாகிய வீணாபதி யென்பாளையும் உடன்செல்ல விடுக்கின்றான்.
விடுப்பவன் வீணாபதிக்குக் கூறல்
உடம்பினோ டுயிரிற் பின்னி யொருவயின் நீங்கல் செல்லா
நெடுங்கணும் தோளும் போலும் நேரிழை யரிவை! நீநின்
தடங்கணி தனிமை நீங்கத் தந்தையும் தாயு மாகி;
அடங்கல ரட்ட வேலான் ஆணையி ராமின் என்றான். 156
சீதத்தனுக்கு அளவிறந்த பொன்னும் மணியும் தந்து, தத்தைக்கு வேண்டும் வீணைகள் பலவும் பிறவும் கொடுத்து மிக்க சிறப்புடன் விடுப்ப, விடைபெற வணங்கிய தத்தையின் பிரிவாற்றாத தாரணிக்குக் கலுழவேகன் தேற்றரவு கூறிநின்றான்.
156. உடம்பினோடு உயிரின் பின்னி - உடம்போடு உயிர் பின்னுமாறு பின்னி. ஒருவயின் - ஓரிடத்தும். நீங்கல் செல்லா அரிவை - நீங்காத அரிவையே. அரிவையே - விளி. கண்ணும் தோளும் போலும் அரிவை. அறிவால் கண்ணும் உதவியால் தோளும் போலும் அரிவை. தடங்கணி - பெரிய கண்ணையுடைய தத்தை. ஆதி - ஆகுக. அடங்கலர் - பகைவர். ஆணைக்கு அடங்காமையின். பகைவர் அடங்கலர் எனப்பட்டனர். அட்ட வேலான் - அழித்த வேலையுடையனான சீதத்தன். ஆணையீராயின் – ஆணைவழி நிற்பீராக.
கலுழவேகன் தன் மனைவிக்குக் கூறுதல்
வலம்புரி யீன்ற முத்தம் மண்மிசை யவர்கட் கல்லால்
வலம்புரி பயத்தை யெய்தாது. அனையரே மகளிர் என்ன
நலம்புரிந் தனைய காதல் தேவிதன் நவையை நீங்கக்
குலம்புரிந் தனைய குன்றிற் கதிபதி கூறி னானே. 157
157. வலம்புரி - வலம்புரி யென்னும் ஒருவகைச் சங்கு. மண்மிசையவர் - மண்ணில் வாழும் மக்கள். வலம்புரிச் சங்கு கடலில் வாழ்வது. வலம்புரி - அந்த வலம்புரிச் சங்கு. பயத்தை - சங்கினாலாகும் பயனை. மகளிர் அனையர் - பெண்களும் தம்மைப் பெற்ற தாயருக்கு அம் முத்துப் போல்வர். நலம் புரிந்தனைய தேவி - நலமெல்லாம் திரண்டு வடிவு கொண்டாற்போன்ற தேவி. குலம் புரிந்தனைய அதிபதி - குலம் வடிவு கொண்டாற்போன்ற அதிபதி. (கலுழவேகன்).
தத்தையுடன் பெருஞ் செல்வமும் பெற்றவரும் சீதத்தனோடு தரன் என்பான் வந்தான். கடற்கரையை நெருங்கியபோது அவன் சீதத்தனுக்கு முன்பு அவன் கலம் கவிழ்ந்து துன்புற்றது தன் வஞ்சமென்று கூறி நிகழ்ந்தது சொல்லலுற்றான்: "காந்தருவதத்தையின் பொருட்டு நாளும் பல மன்னர் வந்து இரத்தலால் கலுழவேகன் மனம் அலைப்புண்டு, கணி சொன்ன வண்ணமே இராசமாபுரத்திற்கே அவளை அனுப்பிவிடத் துணிந்திருக்கையில் நீ கடலின்கண் வந்துகொண்டிருப்பதை யுணர்ந்து நின்னைக் கொணர்க என என்னைப் பணித்தான்; யான் என் விஞ்சையால் நின் தோழர்களை இன்புறுத்தி நின்னைத் துன்புறுத்திப் பற்றினேன்" என்றான்.
தரன் கூறுதல்
துன்ப முற்ற வர்க்கலால்
இன்ப மில்லை யாதலின்
அன்ப! மற்று யான்நினைத்
துன்பத் தால்தொ டக்கினேன். 158
158. துன்ப முற்றார்க்கு அலால் இன்பமில்லை – தொடக்கத்தில் துன்பம் அடைபவர்க்குப் பின்பு இன்பமுண்டாகும். ஆதலால் – இந்த உலகுரைப்படியே, நினைத் துன்பத்தால் தொடக்கினேன். – உனக்குத் துன்பம் செய்து பிணித்தேன். உன்னை யொழிந்தவர்க்கு இன்பமே செய்துள்ளேன் என்க.
ஆழ்ந்த மரக்கலத்தைச் சீதத்தனுக்குக் காட்டுதல்
பீழைசெய்து பெற்றனன்
வாழியென்று மாக்கடல்
ஆழ்வித்திட்ட அம்பியைத்
தோழர்ச் சுட்டிக் காட்டினான். 159
பின்பு சீதத்தன் தன் துணைவரைக் கலத்தோடு கண்டு மிக்க மகிழ்ச்சிகொண்டு அவர்களிடம் நிகழ்ந்தது கூறினான்; அவர்கள் அறிவு மயங்கியிருந்தமையால் நிகழ்ந்தது
உணராராய், "நாங்கள் கண்டது நாடகம்" எனக் கைகொட்டி மகிழ்ந்தனர். விரைவில் அவர் சென்ற வங்கமும் இராசமா புரத்தை யடைந்தது. சீதத்தன் தத்தையுடன் தன் பெருமனை யடைந்து நிகரற்ற செல்வமுடையவனாய்த் திகழலுற்றான். சீதத்தன் மனைவியும் தத்தையைத் தன்மகளே போல் காதலித்து ஓம்பினள். மறுநாளே சீதத்தன் கட்டியங்காரனைச் சிறப்புடன் கண்டு காந்தருவதத்தையின் மணம் குறித்துக் கன்னிமாடம் சமைத்துக்கொள்ளக் காப்புவிடை பெற்றுப் போந்து, நன்னாளில் மாடம் புனைவித்து அரிய காவலும் ஏற்படுத்தி அதன்கண் தத்தையை இனி திருக்கச் செய்து நகரமாந்தர் அறிய முரசறைவித்தான்.
159. பீழை - துன்பம். பெற்றனன் - நின் நட்பைப் பெற்றேன். அம்பியை - மரக்கலத்தை. தோழர் - தோழர்களையும். உம்மை தொக்கது. ஆழ்வித்திட்ட - சீதத்தனுடைய கண்ணிற்கு ஆழ்ந்துவிட்டது போலத் தோன்றுமாறு மறைத்திருந்த. சுட்டி - இதோ மரக்கலம். இவர்கள் நின்தோழர்கள் என்று.
வள்ளுவன் முரசறைதல் - வாழ்த்து
வான்தரு வளத்த தாகி வையகம் பிணியீல் தீர்க;
தேன்தரு கிளவி யாரும் கற்பினில் திரித லின்றி,
ஊன்றுக; ஊழி தோறும் உலகினுள் மாந்த ரெல்லாம்
ஈன்றவர் வயத்த ராகி இல்லறம் புணர்க நாளும். 160
160. வான்தரு வளத்ததாகி - மழைதரும் எல்லா வளங்களையும் உடையதாகி. பிணியில் தீர்க - பிணி முதலியவற்றினின்று நீங்குக. தேன்தரு கிளவியார் - தேன்போல் இனிய சொற்களையுடைய மகளிர். ஊன்றுக - நிலைபெறுக. ஈன்றவர் வயத்தராகி - பொற்றோர் சொல்வழி நின்று.
அறவுரை
தவம்புரிந் தடக்கி நோற்கும் தத்துவர்த் தலைப்பட் டோம்பிப்
பவம்பரி கெமக்கு மென்று பணிந்தவ ருவப்ப வீமின்;
அவம்புரிந் துடம்பு நீங்கா தருந்தவம் முயல்மின் யாரும்
சிவம்புரி நெறியைச் சேரச் செப்புமிப் பொருளும் கேண்மின். 161
161. அடக்கி - புலன்களை யடக்கி. தத்துவர் தலைப்பட்டு - தத்துவவுணர்வுடைய பெரியோர்களை யடுத்து. எமக்கும் பவம் பரிக - எங்கட்கும் பிறப்பு அறுதல் வேண்டும். உவப்ப ஈமின் - அவர் விரும்புவனவற்றை நல்குக. அவம் புரிந்து – பிறப்பு அறாமைக்குரிய வீண் செயல்களைச் செய்து. நீங்காது - கெடாது. உடம்பு அருந்தவம் முயல்மீன் - உடம்பைக்கொண்டு அரிய தவத்தைச் செய்க. சிவம்புரி நெறி – வீடு பேற்றைத் தரும் நன்னெறி.
முரசு மொழியும் பொருள்
அம்மல ரனிச்சத் தம்போ தல்லியோ டணியின் நொந்து
விம்முறு நுசுப்பு நைய வீற்றிருந் தணங்கு சேர்ந்த
வெம்முலைப் பரவை யல்குல் மிடைமணிக் கலாபம் வேய்த்தோன்
செம்மலர்த் திருவின் சாயல் தேமொழி தத்தை யென்பாள்; 162
162. அம் மலர் - அழகிய மலர்களையுடைய. அல்லியோடு அணிந்து - உள்ளிதழ் உதிரா வண்ணம் அணிந்து. விம்முறு நுசுப்பு - மிக வருந்தும் இடை. அணங்கு வீற்றிருந்து சேர்ந்த வெம்முலை - அழகுத் தெய்வம் சிறப்பாக வீற்றிருந்தருளும் விருப்பத்தைச் செய்யும் முலை. பரவை - பரந்த. கலாபம் - மேகலை. செம்மலர் - செந்தாமரை. தத்தை - காந்தருவதத்தை.
மற்றவள் தந்தை நாய்கன் வண்கைச்சீ தத்தன் என்பான்,
கொற்றவன் குலத்தின் வந்தான்; கூறிய பொருள்இ தாகும்;
முற்றவ முடைய ளாகி முரிநூற் கலைக ளெல்லாம்
கற்றவன் கணங்கொள் நல்யாழ் அனங்கனைக் களிக்கும் நீராள். 163
163. கொற்றவன் - கலுழவேகனுடைய. முற்றவம் - முற்பிறப்பில் செய்த தவம். மூரி நூல் கலைகள் - பெரிய இசைநூலில் கூறப்பட்ட கலைகள்;. கணங்கொள் நல்யாழ் - நரம்புகளின் கூட்டம் கொண்ட நல்ல யாழ். யாழ் - யாழால்; அனங்கனையும் - உம்மை வருவிக்க.
தீந்தொடை மகர வீணைத் தென்வினி எடுப்பித் தேற்றிப்
பூந்தொடி யரிவை தன்னிற் புலமிகுத் துடைய நம்பிக்கு
ஈந்திடும்; இறைவ ராதி மூவகைக் குலத்து ளார்க்கும்
வேந்தடு குருதி வேற்கண் விளங்கிழை தாதை என்றான். 164
இச்செய்தி நாடெங்கும் பரவவே அத்தினபுரத்து அரச குமாரன் காம்பீலி நாட்டுப் பாலகுமாரன், வாரணவாசி மன்னன் முதலாக அயோத்தி யரசன் ஈறாகப் பல அரச குமரர் இராசமாபுரத்தே வந்து நிரம்பினர். ஏனைச் செல்வ மக்கள் எண்ணிறந்தோரும் ஈண்டினர்.
164. தீந்தொடை - இனிய இசையைச் செய்யும் நரம்பு. மகர வீணை - பத்தொன்பது நரம்பு கட்டின மகர யாழ். தெள் விளி – தெளிந்த இசை. எடுப்பி - எழுப்பி. பூந்தொடி யரிவை - பூத்தொழில் சிறந்த வளையை அணிந்த தத்தை. புலம் மிகுத்துடைய நம்பி - அறிவு மிகவுடைய ஆடவனுக்கு. இறைவராதி மூவகைக் குலத்துள்ளார் - அரசர், அந்தணர், வணிகர் என்ற மூவகைக் குலத்துட் பிறந்தவர். வேந்தடு குருதி வேல் -
பகை வேந்தரைக் கொல்லும் குருதிபடிந்த வேலைப் போன்ற. விளங்கு இழை - விளங்குகின்ற இழையணிந்த தத்தை.
காந்தருவதத்தை இசையரங்குக்கு வருதல்
பைம்பொன் இமிர்கொடி பாவை
வனப்பென்னும் தளிரை ஈன்று,
செம்பொன் மலர்ந்து இளையார் கண்ணென்னும்
சீர்மணி வண்டுழலச் சில்லென்று
அம்பொன் சிலம்பரற்ற அன்னம்போல்
மெல்லவே ஒதுங்கி யம்பூஞ்
செம்பொற் புரிசை யடைந்தாள்செந்
தாமரைமேல் திருவொ டொப்பாள். 165
165 பொன்இமிர் கொடி - பொன்னாய் வளர்ந்த ஒரு பூங்கொடி. உழல - உலவ. அரற்ற - ஒலிக்க,. ஒதுங்கி - நடந்து. புரிசை – மதிற்புறம். கொடி, தளிரை யீன்று, பொன்மலர்ந்து. வண்டு உழல, சிலம்பு அரற்ற ஒதுங்கி, புரிசையடைந்தாள். திருவொடு - ஓடு எண்ணொடு. கொடியொடும், பாவையொடும், திருவொடும் ஒப்பாள் என இயையும்.
அவைப் பரிசாரம் பாடுதல்
பட்டியன்ற கண்டத் திரை வளைத்துப்
பன்மலர்நன் மாலை நாற்றி
விட்டகலாச் சாந்தின் நிலமெழுகி
மென்மலர்கள் சிதறித் தூமம்
இட்டுஇனை*ய ரேத்த இமையார்
மடமகன்போல் இருந்து நல்யாழ்
தொட்டெழீஇப் பண்ணெறிந்தாள் கின்னரரும்
மெய்ம்மறந்து சோர்ந்தா ரன்றே. 166
166 பட்டு இயன்ற - பட்டாலாகிய. கண்டத்திரை – பல்வகை வண்ணமுடைய திரை. விட்டகலா சாந்து - மணம் விட்டு நீங்குதல் இல்லாத சந்தனம். தூமம் - அகிற்புகை. தொட்டு எழீஇ - எடுத்துப் பண்ணை யெழுப்பி. அவைப் பரிசாரம் - கூடியிருக்கும் அவைக்கு முகமனாகப் பாடும் பாட்டு.
பாட்டு
புன்காஞ்சித் தாதுதன் புறம்புதையக் கிளியெனக்கண்டு
அன்புகொள் மடப்பெடை அலமந்து ஆங் ககல்வதனை
என்புருகு குரலழைஇ இருஞ்சிறகர் குலைத்துகுத்துத்
தன்பெடையைக் குயில்தழுவத் தலைவந்த திளவேனில்; 167
167. புறம் - முதுகு. புதைய - மறைதலால். காஞ்சியின் பச்சைத் தாது படிதலால். குயிற் கருமை மறைந்து பச்சை நிறத்தால் கிளியெனத் தோன்றிற்று. அலமந்து - அறிவு மருண்டு. என்புருகு குரல் - என்புருக எழுந்த அன்பு கனிந்த குரலால். அழைஇ - அழைத்து. சிறகர் குலைத்து - சிறகை யசைத்து. உகுத்து - காஞ்சித் தாதுகளை யுதிர்த்து.
தண்காஞ்சித் தாதாடித் தன்நிறம் கரந்ததனைக்
கண்டானா மடப்பெடை கிளியெனப்போய்க் கையகல,
நுண்தூவி யிளஞ்சேவல் நோக்கோடு விளிபயிற்றித்
தண்சிறகால் பெடைதழுவத் தலைவந்த திளவேனில்; 168
168. கரந்ததனை - மறைந்த குயிற் சேவலை. ஆனா - பொறாத. கையகல - கைவிட்டு நீங்கவே. நோக்கோடு - இனிய பார்வையுடன். விளிபயிற்றி - அன்பு குழைய அழைத்து.
குறுத்தாட் குயிற்சேவல் கொழுங்காஞ்சித் தாதாடி
வெறுத்தாங்கே மடப்பெடை விழைவகன்று நடப்பதனை
மறுத்தாங்கே சிறகுளர்ந்து மகிழ்வானாக் கொளத்தேற்றி
உறுப்பினா லடிபணியத் தலைவந்த திளவேனில் 169
திரைக்குள்ளே யிருந்து தத்தை இப் பாட்டைப் பாடி முடித்ததும், வீணாபதி யென்னும் பேடி அரங்கில் நின்று, "இங்கே வீற்றிருக்கும் வீரர் இனி யாழ்வகையைப் பாடுவார்களாக; அதற்கு இயையாராயின், இக்காந்தருவதத்தை யாழ் இசைப்ப, அதற்கேற்பப் பாடுவார்களாக" என்று முன்மொழிந்து திரைக்குட் சென்றான். சிறிது போதில், தத்தை திரையை நீக்கி, வெளியே அரங்கிற் போந்து, ஓரிடத்தே யமர்ந்து பாடத் தொடங்கினாள்.
169. குறுத் தாள் - குறுகிய கால். விழைவு - கூடற்கினிய அன்பு. மறுத்து - தடுத்து. உளர்ந்து - உதறி. மகிழ்வு ஆனா கொள – மகிழ்ச்சி குன்றாமல் கொள்ளுமாறு. உறுப்பினால் - தலையால்.
இம் மூன்றும் நிலை யென்னும் இசை வகையைச் சேர்ந்தவை. மணத்துக்குரிய காலவரவும், தலைவியது வேறுபாடும் சுட்டித் தோழி தலைவனை வரைவு கடாவுதற் பொருளில் வந்த கொச்சக வொருபோகு.
பாட்டின் பயன்
சிலைத்தொழில் சிறுநுதல் தெய்வப் பாவைபோல்
கலைத்தொழில் பட எழீஇப் பாடி னாள்;கனிந்து
இலைப்பொழில் குரங்கின; ஈன்ற தூண் தளிர் ;
நிலத்திடைப் பறவைமெய்ம் மறந்து வீழ்ந்தவே. 170
170. சிலைத்தொழில் சிறுநுதல் - அம்பு ஏறிவிட்ட வில்லைப் போன்ற சிறு நெற்றி. தெய்வப்பாவை - தெய்வத்தால் செய்யப்பட்ட கொல்லிப்பாவை. கலைத்தொழில் - பண்ணல், பரிவட்டணை, ஆராய்தல், தைவரல், செலவு, விளையாட்டு, கையூழ், குறும்போக்கு என்ற எட்டு. இலைப்பொழில் - இலைகள் செறிந்த சோலை. குரங்கின - வளைந்தன. தூண் தளிர் ஈன்றன - தூண்களும் துளிர்த்தன. பறவை - கின்னர
மிதுனங்கள்.
கருங்கொடிப் புருவ மேறா; கயல்நெடுங் கண்ணு மாடா?
அருங்கடி மிடறும் விம்மாது; அணிமணி எயிறும் தோன்றா;
இருங்கடற் பவளச் செவ்வாய் திறந்திவள் பாடி னாளோ!
நரம்பொடு வீணை நாவின் நவின்றதோ! என்று நைந்தார். 171
171. கொடிப் புருவம் - ஒழுங்குடைய புருவம். ஏறா- நெறியா, அருங்கடி மிடறு - அரிய விளக்கம் அமைந்த கழுத்து. விம்மா – பெருக்காது. வீணை நரம்பொடு நாவின் நவின்றதோ - யாழே தனக்குரிய நரம்போடே சாரீர வீணைக்குரிய நாவாலும் பாடிற்றோ. நைந்தார் - வருந்தினார்.
இசைப் போர்
இசைத்திறத் தனங்கனே யனைய நீரினார்
வசைத்திற மிலாதவர் வான்பொன் யாழ்எழீஇ
இசைத்தவர் பாடலின் வெருவிப் புள்ளெலாம்
அசிப்பபோன் றிருவிசும் படைந்த என்பவே. 172
172. இசைத்திறத்து -இசைபாடும் துறையில். நீரினார் - தன்மையுடையவர். வசைத்திறம் இலாதவர் - குற்றமில்லாதவர். நீரனாராகிய வசையில்லாதார். வான் - பெருமை. இசைத்து அவர் பாடவே , அப்பாட்டிசையால். புள் - கின்னர மிதுனம். வெருவி - அஞ்சி. அசிப்ப போன்று - சிரிப்பதுபோல. பரிகசிப்பதுபோல என்றுமாம். அசித்தல் - வடசொற் சிதைவு.
மாதர்யாழ் தடவர வந்த; மைந்தர்கைக்
கீதத்தால் மீண்டன கேள்விக் கின்னரம்;
போதரப் பாடினாள்; புகுந்த போயின,
தாதலர் தாரினார் தாங்கள் பாடவே. 173
இவ்வகையால் முதற்கண் அரசரும், பின்பு மறைய வரும், முடிவில் வணிகரும் பாடித் தோல்வி எய்தினர்.
173. மாதர் - காந்தருவதத்தை. தடவர - இசைக்க. வந்த - வந்தன. மீண்டன - திரும்பப் போய்விட்டன. போதர - திரும்ப வருமாறு. புகுந்த - அவள் பாடலால் உள்ளே புகுந்த அப் பறவைகள். தாதலர் தார் - தேனுடைய பூவால் தொடுத்த மாலை.
கட்டியங்காரன் கூறல்
"தேனுயர் மகர வீணைத் தீஞ்சுவை யிவளை வெல்வான்,
வானுயர் மதுகை வாட்டும் வார்சிலைக் காம னாகும்;
ஊனுயர் நுதிகொள் வேலீர்! ஒழிக; ஈங் கில்லை" என்றான்;
கானுயர் அலங்கல் மாலைக் கட்டியங் காரன் என்பான். 174
174. தேன் உயர் மகரவீணைத் தீஞ்சுவை யிவளை - தேனினும் மிக்க இன்பம் தரும் மகர வீணையால் தீவிய இசையமுது வழங்கும் இத்தத்தை யென்பவளை. வான் உயர் மதுகை - வானோரது உயர்ந்த அறிவு வன்மை. வாட்டும் - கெடுக்கும். வார் சிலை - நீண்ட வில். ஊனுயர் நுதி கொள் வேலீர் - பகைவர் தசை மிக்க நுனியைக்கொண்ட வேல் ஏந்தும் வீரர்காள் . கான் - மணம். அலங்கல் மாலை - அலங்கலாகிய மாலை.
இவ்வாறு, இவ் விசைப்போர் ஆறுநாள்காறும் நடந்தது. இச்செய்தி சீவகனுக்கு எட்டவே அவன் தன் தோழருள் ஒருவனான புத்திசேனன் என்பானைக் கந்துக்
கடன்பால் செலுத்தித் தன் கருத்தைத் தெரிவித்து வரச்சொன்னான். புத்திசேனன் அவ்வாறே கந்துக்கடன்பால் தெரிவிப்ப, அப்போழ்தில் அவன் மனம் இசையானாக, நாகமாலை யென்பாள் ஒருத்தி ஓலை கொணர்ந்தாள். அதன்கண், "சீவகன்பால் கட்டியங்காரன் பெருஞ் சினங்கொண்டு அவனைக் கொல்லுதற்குக் கருதி யிருக்கின்றான்; ஆதலால் அவனைக் காத்துக்கோடல் வேண்டும்" என்றொரு குறிப்
பிருந்தது. நாகமாலை முகத்திலும் ஏதோ உரைக்கலுறும் குறிப்பும் இருந்தது. அதனை யுணர்ந்த கந்துகன் புத்தி சேனனுக்கு அதனைச் சொல்லெனப் பணிக்க, அவள் உரைக்கத் தொடங்கி, - "முன்பொருநாள் அனங்கமாலை என்னும் நாடகமகள் அரங்கேறியபோது, அவ்வரங்கிற்கு, அரசர் குலத்தவனாதலின் சீவகனும் வந்திருந்தான். அனங்கமாலைக்குச் சீவகன்பால் காதல் பிறந்தது; அதனைச் சீவகன் அறிந்திலன். கட்டியங்காரன் அவள்பால் வேட்கை மிகக்கொண்டு, அவட்குத் தன்பால் காதலின்மை யுணர்ந்தும் வலிதிற்கொண்டுசென்று கன்னியழித்தான். அக்காலத்தே அவள் 'சீவக சாமியோ' என்று வாய்வெருவினாள்; அருகிருந்தவர் அவனது அருளும், வலியும், அழகும் எடுத்தோதிப் பாராட்டினர்; அதுமுதல் அவன் சீவகன்பால் கறுவுகொண்டுள்ளான்" என்று சொல்லி முடித்தாள். கந்துக்கடன் அவட்கு வேண்டும் பொன்னும் மணியும் பெருகத் தந்து, பின்பு நிகழ்வதையும் ஒற்றிருந்து அறிந்துவருமாறு விடுத்தான்.
கந்துக்கடன் புத்திசேனற் குரைத்தல்
இன்னன் என்ன இன்புறான்; இழந்த னன்அ ரசுஎன
என்னை வெளவும் வாயில்தான் என்னும் சூழ்ச்சி தன்னுளான்;
அன்ன தாதல் அரில்தப அறிந்து கூத்தி கூறினாள்
இன்ன தால்ப டையமைத்து எழுமின் என்றியம்பினான். 175
இது கேட்டுச் சீவகன் முதற்கண் நகைத்துப் பின்பு தந்தை சொற்படி, புலிக்குழாம்போலத் தோழரும் வீரரும் சூழ்வர அழகிய யானை மீதேறி இசையரங்கிற்குச் சென்றான்.
175.இன்னன் என்ன - சீவகன் மிக்க வலியன்; உதவியும் செய்தான் என்று பலரும் கட்டியங்காரனுக்குச் சொல்ல. அவன் இன்புறான் - அவன் அதனால் இன்புறானாய். என- என்று நினைத்துக் கொண்டு. வெளவும் வாயில்தான் என்னை - சீவகன் உயிரைக் கவரும் வழிதான் யாது சூழ்ச்சிதன் னுளான் - ஆராய்ச்சிக்கண்னே யாழ்ந்திருக்கின்றான்.அன்னது ஆதல் - அவன் கருத்து அதுவாதலை. அரில் தப - குற்றமற. இன்னதால் - இக்காரியம் இத்தன்மையாக இருக்கின்றது. எனவே, இசைப் போரில் தோற்றோரும் கட்டியங்காரனும் பகைப்பார்போலவே இருந்தது என்றானாம். படையமைத்து - போர்க்குரிய படையமைத்துக்கொண்டு. எழுமின்- செல்க.
சீவகனைக் கண்ட மகளிர் தம்முட் பேசிக்கொள்ளுதல்
தோற்றனள் மடந்தை நல்யாழ் தோன்றலுக் கென்று நிற்பார்;
நோற்றனள் நங்கை மைந்தன் இளநலன் நுகர்தற் கென்பார்;
கோற்றொடி மகளிர் செம்பொன் கோதையும் குழையு மின்ன
ஏற்றன சொல்லி நிற்பார் எங்கணு மாயி னாரே. 176
176. மடந்தை - காந்தருவதத்தை. சீவகனது கல்வி யுணர்வு மிகுதி யாவரும் அறிந்ததாதலால், "தேற்றனள் " எனத் தெளிவுபற்றி இறந்த காலத்தாற் கூறினார். தோன்றல் - சீவகன். நோற்றனள் - முற்பிறப்பில் தவம் செய்துள்ளாள். கோல் தொடி - திரண்ட வளை யணிந்த. செம்பொன் குழையும் கோதையும் மின்ன என இயையும். ஏற்றன - தங்கள் தங்கள் மனதுக்கு ஒத்தவற்றை.
இசையரங்கில் சீவகன் வந்திருந்ததைக் கண்ட காந்தருவதத்தை காதல் மிகல்
கண்ணெனும் வலையி னுள்ளான் கையகப்பட் டிருந்தான்;
பெண்ணெனும் உழலை பாயும் பெருவனப் புடைய நம்பி ,
எண்ணின்மற்று யாவ னாங்கொல்? என்னிதிற் படுத்த ஏந்தல்
ஒண்ணிற உருவச் செந்தீ யுருவுகொண் டனைய வேலான்: 177
177. கண்ணெனும் வலையினுள்ளான் - ஞானக்கண் என்கின்ற வலையை வீசிக் குல முதலியவெல்லாம் நோக்கும்படி அவ் வலைக்குள்ளேயிருந்தான். அந்த ஞானத்தால் எல்லாம் உணர்தலின். "கையகப்பட்டிருந்தான்" என்றாள். பெண்ணெனும் உழலை பாயும் - பெண்மை யென்னும் உழலை மரத்தைக் கடந்து உள்ளே பாயும். உழலை - கிட்டி. வழிகளில் குறுக்கே இடப்பெறும் மரம். எண்ணின் - ஆராயின். என் இதிற்படுத்த
ஏந்தல் - என்னை இவ் வருத்தத்திலே அகப்படுத்தின உயர்ந்தோனாகிய இவன். ஒள் நிற உருவச் செந்தீ - ஒள்ளிய நிறத்தையுடைய சிவந்த நெருப்பு. தீ உருவு கொண்டனைய வேலான்- நெருப்பு வேலின் வடிவு கொண்டாற்போன்ற வேலையுடையவன்.
யாவனே யானு மாக அருநிறைக் கதவம் நீக்கிக்
காவல்என் நெஞ்ச மென்னும் கன்னிமா டம்பு குந்து
நோவஎன் உள்ளம் யாத்தாய்; நின்னையும் மாலை யாலே
தேவரிற் செறிய யாப்பன் சிறிதிடைப் படுக என்றாள். 178
178 .யாவனேயானும் - யாவனாயினும்; தேவனாயினும் மகனாயினுமாக. அருநிறைக் கதவம் - திறப்பதற்கு அரிய நிறை யென்னும் கதவு. காவல் நெஞ்சம் - காக்கப்படும் நெஞ்சம். யாத்தாய் – பிணித்து விட்டாய். தேவரிற் செறிய யாப்பன் - தேவரைப்போல இமையாது நோக்கும்படி செறியப் பிணிப்பேன். சிறிது இடைப்படுக - சிறிதுபொழுது கழிக.
பின்பு, தத்தை தோழிவாயிலாக யாழொன்றைச் சீவகனிடம் கொடுத்தாள். அவன் அதன்கண் குற்றம் காட்டினான்; இவ்வாறே பல யாழ்கள் தரப்பட்டன; அவனால்
அவை குற்றமுடையவை என நாட்டப்பட்டன. முடிவில் நல்லயாழொன்றை நல்கினாள் தத்தை; அதனிடையும் குற்றமுண்டெனக் காட்டுவான், சீவகன் அதனையுடைத்து, அதனுள் மயிர் இருத்தலைக் காட்டினான். இறுதியாக அவன் தன் தம்பி நவுலன் வைத்திருந்த நரம்பு கொண்டு யாழைத் திருத்தி இசைக்கலுற்றான்.
சீவகன் பாட்டு
கன்னி நாகம் கலங்க மலங்கி
மின்னும் இரங்கு மழையென் கோயான்;
மின்னு மழையின் மெலியும் அரிவை
பொன்னாண் பொருத முலையென் கோயான்; 179
179.கன்னி நாகம் - கன்னியாகிய நாகம். மலங்கி - மயங்கி. மழை மின்னும் - மழை மேகம் மின்னாநிற்கும்; இரங்கும் - முழங்கும். பொன்நாண் - பொற்கச்சு. மின்னு மழையின் - மின்னலோடு கூடிய மழையால். மெலியும் - மெலிவாள்.
இது முதல் மூன்றும், கூதிர்ப்பருவம் குறித்துப் பிரியக்கருதிய தலைவனைத் தோழி செலவழுங்குவித்தல்.
கருவி வானம் கான்ற புயலின்
அருவி யரற்று மலையென் கோயான்;
அருவி யரற்று மலைகண் டழுங்கும்
மருவார் சாயல் மனமென் கோயான்; 180
180. கருவி வானம் - ஒருங்கு தொக்க மேகங்கள். கான்ற புயல் - பெய்த மழை. அருவியரற்றும்-அருவிகள் முழங்கும். மருவார் சாயல் மனம் அழுங்கும் - மருவுதல் நிறைந்த சாயலையுடைய தலைவி மனமழுங்குவாள்.
வான மீனின் அரும்பி மலர்ந்து
கானம் பூத்த காரென் கோயான்;
கானம் பூத்த கார்கண் டழுங்கும்
தேனார் கோதை பரிந்தென் கோயான்; 181
181. வானமீனின் - வானத்து மீன்களைப்போல. கார் - கார்வரவால். கானம் - காட்டிடத்தே பூக்கள். பூத்த - பூத்துள்ளன. தேனார் கோதை- தேன் சொரியும் பூவாலாகிய மாலைபோல்வாள். பரிந்து - வருந்தி. அழுங்கும் - வருந்துவள்.
பாட்டின் பயன்
விண்ணவர் வியப்ப விஞ்சை வீரர்கள் விரும்பி யேத்த
மண்ணவர் மகிழ வான்கண் பறவைமெய்ம் மறந்து சோர,
அண்ணல்தான் அனங்கன் நாணப் பாடினான்; அரச ரெல்லாம்
பண்ணமைத் தெழுதப் பட்ட பாவைபோ லாயினாரே. 182
182. விஞ்சை வீரர் - வித்தியாதரர். வான்கண் பறவை - வானத்திற் படிந்துகொண்டிருந்த கின்னர மிதுனங்கள்; பண்ணமைத் தெழுதப் பட்ட பாவை - எழுதும்படிஅமர்வித்து எழுதப்பட்ட பாவைபோல.
காந்தருவதத்தை பாடத் தொடங்குதல்
கோதை புறந்தாழக் குண்டலமும் பொற்றோடும்
காதி னொளிர்ந்திலங்கக் காமர் நுதல்வியர்ப்ப
மாதர் எருத்தம் இடம்கோட்டி மாமதுர
கீதம் இடையிலாள் பாடத் தொடங்கினாள். 183
183.புறந் தாழ - முதுகிடத்தே கிடந்தசைய. ஒளிர்ந்திலங்க - மிக விளங்க. காமர் - அழகிய. வியர்ப்ப - வேர்வையரும்ப. மாதர் - தத்தை. எருத்தம் இடம் கோட்டி - கழுத்தை இடப்பக்கத்தே வளைத்து. இடையிலாள் - ஒப்பில்லாத அவள்.
பாட்டு
இலையார் எரிமணிப்பூண் ஏந்து முலையும்
சிலையார் திருநுதலும் செம்பசலை மூழ்க,
மலையார் இலங்கருவி வாள்போல மின்னும்;
கலையார் தீஞ் சொல்லினாய்! காணார்கொல் கேள்வர். 184
184.இலையார் பூண்,எரிமணிப் பூண். இலையார் பூண் – இலைத் தொழில் செய்யப்பட்ட பூண். எரிமணிப் பூண்- விளங்குகின்ற ஒளியினையுடைய மணிகள் வைத்து இழைக்கப்பெற்ற பூண். செம்பசலை - செவ்விய பசலை, மலையார் இலங்கு அருவி - மலையிடத்தே விளங்கும் அருவிகள். மின்னும் - ஒளிவிடும். கலையார் தீஞ்சொல் - இசைக்கலை நிறைந்த சொல்.
தலைமகள் குறித்த இளவேனில் வரவு கண்டு ஆற்றாளாய தலைவி தோழிக்குக் கூறியது பொருளாக இது முதல் மூன்று பாட்டுக்களும் வருகின்றன.
பிறையார் திருநுதலும் பேரம ருண்கண்ணும்
பொறையார் வனமுலையும் பூம்பசலை மூழ்க,
நிறைவாள் இலங்கருவி நீள்வரைமேல் மின்னும்;
கறைவேலுண் கண்ணினாய்! காணார்கொல் கேள்வர். 185
185.பிறையார் - பிறைபோல். உண்கண் - மைதீட்டிய கண். பொறையார் - கனம் பொருந்திய. வாள் நிறை இலங்கருவி – ஒலி நிறைந்த விளங்குகின்ற அருவி. கறைவேல் - குருதிக்கறை படிந்தவேல்.
அரும்பேர் வனமுலையும் ஆடமைமென் றோளும்
திருந்தேர் பிறைநுதலும் செம்பசலை மூழ்க
நெருங்கார் மணியருவி நீள்வரைமேல் மின்னும்;
கரும்பார் தீஞ்சொல்லினாய்! காணார்கொல் கேள்வர். 186
186.அரும்பேர் - அரும்பு போன்ற. ஆடமை மென்றோள் - அசைகின்ற மூங்கில் போன்ற மெல்லிய தோள். திருந்து ஏர் பிறை நுதல் - திருந்திய அழகிய பிறை போன்ற நுதல். நெருங்கு ஆர்மணி அருவி - நெருங்கக் கோத்த முத்துமாலை போலும் அருவி. கரும்பார் தீஞ்சொல் - கரும்பு போன்ற தீவிய சொல்.
காந்தருவதத்தை இசையில் தோல்வியுறல்
பண்ணொன்று, பாடலதுவொன்று; பல்வளைக்கை
மண்ணொன்று மெல்விரலும் வாணரம்பின் மேல்நடவா;
விண்ணின் றியங்கி மிடறு நடுநடுங்கி
எண்ணின்றி மாதர் இசைதோற் றிருந்தனளே. 187
187. பண்ணொன்று பாடல் ஒன்று - அவள் பாடின பாட்டும் அதற்கேற்ற யாழும் ஒரு திறம். அதுவொன்று - அவன் பாடின பாட்டும் யாழும் வேறொன்று. மண்ணொன்று மெல்விரல்- யாழ் இசைத்தற்குப் பொருந்தப் பண்ணிய மெல்விரல். வாள் நரம்பு - ஒளியுடைய நரம்பு. நடவா - யாழும் பாட்டும் இசைய நடந்தில. விண்ணின்று- விண்ணிலே நின்று. மிடறு நடுநடுங்கி - கழுத்திலே கம்பித்தலால், எண் இன்றி - கருத்தை யிழந்து. இசைதோற்று - இசையிலே சிறிது குறைந்து தோற்று.
இச் செய்தி கண்டு யாவரும் வியப்புற்றிருக்க, தத்தை பொன்மாலை யொன்றை யெடுத்துச் சீவகற்குச் சூட்டி அவன் அடியில் வீழ்ந்து இறைஞ்சினாள். சீவகன் அவளது வடிவழகு முற்றும் பருகுவான்போல நோக்கிப் பெருவேட்கை யெய்தினான்.
தோழியர் திரை வீழ்த்தல்
கோதையும் தோடு மின்னக் குண்டலம் திருவில் வீச
மாதரம் பாவை நாணி மழைமினின் ஒசிந்து நிற்பக்
காதலந் தோழி மார்கள் கருங்கயற் கண்ணி னாளை
ஏதமொன் றின்றிப் பூம்பட்டு எந்திர வெழினி வீழ்த்தார். 188
188.தோட்டின் ஒளி கோதையிலே விளங்குதலால், "கோதையும் தோடும் மின்ன" என்றார். திரு வில் - அழகிய ஒளி. மாதரம்பாவை - மாதராகிய பாவைபோலும் காந்தருவதத்தை. மழை மின்னின் - முகிலிடத்தே தோன்றும் மின்னலைப் போல, ஒசிந்து நிற்ப - துடங்கி நிற்க. ஏதம் ஒன்று இன்றி - இறந்துபடுவது இன்றி. எந்திர எழினி – எந்திரத்தால் விழும் திரை.
கட்டியங்காரன் பொறாமையுற்று அரசகுமாரர்க்கு உரைத்தல்
வடதிசைக் குன்ற மன்ன வான்குலம் மாசு செய்தீர்
விடுகதிர்ப் பருதி முன்னர் மின்மினி விளக்க மொத்தீர்;
வடுவுரை யென்று மாயும் வாளமர் அஞ்சினீரேல்
முடிதுறந் தளியிர் போகி முனிவனம் புகுமின் என்றான். 189
189.வடதிசைக் குன்றமன்ன வான் குலம் - வடதிசைக் கண்ணதாகிய மேருமலைபோல் நிலைகுலையாத பெரிய அரசகுலம். அரசன் மகளை வணிகன் கொண்டான் என்ற குற்றம். விடுகதிர்ப் பருதி - மிக்க ஒளிவிடும் கதிர்களையுடைய ஞாயிறு. வடுவுரை - இகழ்ச்சி பயந்த சொல். அளியிர்- அளிக்கத் தக்கீர்; விளி. முனி வனம் புகுமின் - முனிகளாய்க் காட்டிலே சென்று வாழ்மின்.
திருமக ளிவளைச் சேர்ந்தான் தெண்திரை யாடை வேலி
இருநில மகட்கும் செம்பொன் நேமிக்கும் இறைவனாகும்;
செருநிலத் திவனை வென்றீர்! திருவினுக் குரியீர் என்றான்:
கருமனம் நச்சு வெஞ்சொல் கட்டியங் காரன் அன்றே. 190
190.திரு - கண்டார் விரும்பும் அழகு. தென்திரை ஆடை வேலி - தெளிந்த அலைகளையுடைய கடலைச் சூழவுடைய. நேமி - நேமிமால் வரை. (சக்கரவாள மலை). செரு நிலத்து -போர்க்களத்தில். திருவினுக்கு - திருமகளாகிய இக் காந்தருவதத்தைக்கு. கருமனம் - கொடிய மனம். நச்சு வெஞ்சொல்- நஞ்சாகிய கொடுஞ்சொல்.
அதுகேட்டுச் சினம் மூண்ட அரசர்கள் தத்தம் பெருஞ்சேனையுடன் சீவகனோடு பொருதற் கெழுந்தனர். இதனை முன்னரே எண்ணிச் சீவகன் தோழர் பலரும் வந்திருந்தனர். அவருள் பதுமுகன் என்பான் அரசர்கட்குச் சில சொல்லலுற்றான்.
பதுமுகன் நெடுமொழி
இசையினில் இவட்குத் தோற்றாம் யானையால் வேறும் என்னின்
இசைவதொன் றன்று; கண்டீர்; இதனையான் இரந்து சொன்னேன்;
வசையுடைத் தரசர்க் கெல்லாம்; வழிமுறை வந்த வாறே
திசைமுகம் படர்க வல்லே; தீத்தொட்டால் சுடுவதன்றே. 191
191. தோற்றாம் - தோற்ற நாம். யானையால் வேறும் - இசைக்குத் தோற்கும் யானையால் வெல்லுவோம். என்னின் - என்று கருதின். வசை - பிறர்க்கு உரியவளாகிய இவளை இனி நீவீர் விரும்புவதாகிய குற்றம். வழிமுறை - அடைவே. வல்லே படர்க - விரையச் சென்று சேர்க.
மத்திரிப் புடைய நாகம் வாய் வழி கடாத்த தாகி
உத்தமப் பிடிக்கண் நின்றால் உடற்றுதல் களபக் காமோ?
பத்தினிப் பாவை நம்பி சீவகன் பால ளானால்,
அத்திறம் கருதியூக்கல் அரசிர் காள்! நுங்கட் காமோ? 192
192. மத்திரிப்பு - செற்றம். நாகம் - யானை. உத்தமப் பிடிக்கண் - உயர்ந்த பிடியானைகட்கு இடையே. உடற்றுதல் - அதனைக் கெடுப்பது. களபக்கு - யானைக் கன்றிற்கு. அத் திறம் - அவ*னைப் பெறுமாறு. கருதி யூக்கல் - கருதிப் போர் முயலுதல். ஆமோ - தகுமோ. "அரசராதலின் இவளைப் பெறுதற்குறியீ ராயினும் கலைகளாலும் ஆண்மை முதலியவற்றாலும் குறைபாடுடைமையின் பெறலரிது என்றான்."
இச் சொற்களைக் கேட்டும் அடங்காத அரசர் தானை நன்கு சூழ்ந்துகொண்டது; அதுகண்ட சீவகன் காந்தருவதத்தையைத் தேற்றி அவள் தோழியுடன் இருத்திவிட்டு
அவளுக்குக் காவலாகப் பதுமுகனை நிறுத்தினான். ஏனைப் புத்திசேனன் முதலிய தோழரும், நபுல விபுலர் என்ற தம்பிமாரும் தன்னோடு வரச் சீவகன் போர்க்களம் புகுந்தான்.
அரசர்கள் சீவகனை எள்ளுதல்
வாணிக மொன்றும் தேற்றாய்; முதலொடும் கேடு வந்தால்,
ஊணிகந் தீட்டப் பட்ட வூதிய வொழுக்கின் நெஞ்சத்து
ஏணிகந் திலேசு நோக்கி இருமுதல் கெடாமை கொள்வார்;
சேணிகந் துய்யப் போகின் செறிதொடி யொழிய வென்றார். 193
193. வாணிகம் - வணிகன் சிறுவனாகிய நினக்குரிய வாணிக முறை. ஊண் இகந்து ஈட்டப்பட்ட ஊதிய ஒழுக்கின் - நல்ல உணவும் கொள்ளாது ஈட்டப்படும் ஊதியத்தையே கருதிய ஒழுக்கமுடைய. நெஞ்சத்து எண் இகந்து - நெஞ்சின் திண்மையைக் கைவிட்டு. இலேசு - சிறு ஊதியம். இரு முதல் - பெரிய முதல். ஊதியத்துக்கேயன்றி முதலுக்கும் கேடு வந்தால். ஊதியத்தைக் கருதும் கருத்தை முதல்மேல் ஊன்றி அது கெடாதவாறு பாதுகாப்பது வணிக முறை.”ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை, ஊக்கார் அறிவுடையார்” (குறள்: 468) உடம்பு, முதல்:
ஊதியம், தத்தை. ஊதியமாகிய தத்தையைக் கைவிட்டு, முதலாகிய உடம்பைக்கொண்டு உய்ந்து போ என்றார் என்பது.
சீவகன் மாற்றம் கூறல்
தம்முடையப் பண்டந் தன்னைக்கொடுத்து அவ ருடமை கோடல்
எம்முடை யவர்கள் வாழ்க்கை; எமக்குமஃ தொக்கு மன்றே:
அம்முடி யரசிர்க் கெல்லாம் என்கையில் அம்பு தந்து
நும்முடித் திருவும் தேசும் நோக்குமின் கொள்வல் என்றான். 194
194. எம்முடையவர்கள் - எம் குலத்தோர். வாழ்க்கை – வாழ்க்கை முறை. அம் முடி யரசிர்க்கு எல்லாம் - அழகிய முடி சூடிய அரசராகிய நுங்கட்கெல்லாம். திரு - வீரத்திரு. தேசு - புகழ். நோக்குமின் - வன்மையிருப்பின் உங்களைக் காத்துக்கொண்மின்.
போர்த் திறம்
கலந்தது பெரும்படை கணைபெய்ம் மாறி தூய்;
இலங்கின வாட்குழாம்; இவுளி ஏற்றன;
விலங்கின தேர்த்தொகை; வேழம் காய்ந்தன;
சிலம்பிய இயமரம்; தெழித்த சங்கமே. 195
195. கணை தூய் - அம்புகளைச் சொறிந்து. வாட் குழாம் - வாளினது கூட்டம். இவுளி ஏற்றன - குதிரைகள் ஒன்றையொன்று போரேற்றன.விலங்கின - குறுக்கிட்டுத் தடுத்தன. இயமரம் - ஒருவகை இசைக் கருவி. தெழித்த - ஒலித்தன.
தேவதத்தன், கபுல விபுலர், சீதத்தன் முதலியோர் ஒருபுடை நின்று போர் செய்யப் புத்திசேனனும் அவருடன் கலந்து பெரும்போ ருடற்றினன். மற்றொரு பக்கத்தே
சீவகன் நந்தட்டனுடன் கூடிப் போர் செய்யுங்கால், அவனுக்கு வீரமந்திரம் இரண்டு கற்பித்துப் போர்க்குச் செலுத்தினான். அவன் தேர் ஒருபுறம் செல்ல, சீவகன் தேரும்
கறங்கெனத் திரிந்து அம்புகளைச் சொரியலுற்றது.
சீவகன் போர்
நுங்களை வீணை வென்ற நூபுர வடியி னான்தன்
வெங்களித் தடங்கண் கண்டீர் விருந்தெதிர் கொண்மின் என்னா,
அங்களி யரசர்க் கெல்லாம் ஓரொன்றும் இரண்டு மாகச்
செங்களிப் பகழி யொப்பித் துள்ளவா றுட்டினானே. 196
196. வீணை - வீணையால். நூபுரம் - சிலம்பு. வெங்களித் தடங்கண் - யான் விடும் இவ்வம்புகள் அம்பல்ல: வெவ்விய களிப்பு மிக்க பெரிய கண்களாம். விருந்து எதிர் கொண்மின் - இவற்றை விருந்தாக வந்து ஏற்றுக் கொண்மின். என்னா - என்று சொல்லி. செங்களிப் பகழி - சிவந்த செருக்கிவரும் அம்புகளை. ஒப்பித்து - விழுக்காடிட்டு. ஊட்டினான் - உடலில் பட்டு ஊடுருவச் செலுத்தினான்.
"விருந்து" என்றதற் கேற்ப "ஊட்டினான்" என்றார்.
நன்மன வேந்தர் தங்கள் நகைமணி மார்பம் நக்கிப்
புன்மன வேந்தர் தங்கள் பொன்னணி கவசம் கீறி
இன்னுயிர் கவர்ந்து தீமை யினிக்கொள்ளு முடம்பி னாலும்
துன்னன்மின் என்ப வேபோல் சுடுசரம் பரந்த வன்றே. 197
197. பிறர்மனை நயத்தல் நன்மனவேந்தர் தங்கட்கு நகையாம்: இவர் பிறர்மனை நயக்கும் புன்மன வேந்தரைக்கண்டு எள்ளி நகையாடுவர் என்பதாம். நல்வேந்தர்க்கு நகையாய்த் தோன்றலின், இனிக்கொள்ளும் உடம்பிலும் இத்தீமை துன்னன்மின் என்பது போல், சீவகன் விட்ட சுடுசரம், புன்மன வேந்தரது மணிமார்பம் நக்கி, கவசம் கீறி, உயிர் கவர்ந்து பரந்தோடின. நக்கி - தீண்டி. துன்னன்மின் - பொருந்தாதீர்கள்.
சுடுசரம் -சுடுகின்ற தீயைக் கக்கிவரும் அம்புகள். புன்மனம் – பிறர் மனையை மயக்கும் இழிநினைவு கொண்ட மனம்: நன் மனம் அஃதில்லாத நல்ல மனம்.
இவ்வாறு நிகழ்ந்த இப் போரின்கண் அனைவரும் தத்தமக்கு இயன்ற திறமெல்லாம் இடையீடின்றிப் போர் செய்து, எதிர்த்த அரசர் தானையைக் கொன்று அவ்வரசர்களையும் பிறக்கிட்டோடச் செய்தனர்.
போர் முடிவு
குழையுடை முகத்தி னான்கண் கோணைப்போர் செய்த மன்னர்
மழையிடை மின்னின் நொய்தர மறைந்தனர்; விஞ்சை வேந்தர்
முழையிடைச் சிங்க மன்னான் மொய்யம ரேத்தி யார்த்தார்;
விழவுடை வீதி மூதூர் விருப்பொடு மலிந்த தன்றே. 198
198. முகத்தினான் கண் - முகத்தினையுடைய காந்தருவதத்தை பொருட்டாக. கோணைப்போர் - மாறுபாட்டையுடைய போர். மழை- முகில். நொய்தா மறைந்தனர் - புகுந்தவிடத் தெரியாதவாறு மறைந்தனர். முழையிடைச் சிங்கம் - முழைஞ்சில் வாழும் அரிமா. மொய்யமர்- நெருங்கிச் செய்யும் போர்த்திறம். மூதூர் - மூதூரிலுள்ளவர். விருப்பொடு- சீவகனைக் காணும் விருப்பத்துடன்.
பின்பு சீவகன் காந்தருவதத்தையை யழைத்துச் சென்று மனையகம்புக்கான்; தோழரும் தம்பியரும் உடன் போந்தனர்; பதுமுகன் புண்ணுற்ற தன் மார்பில் சீலையிட்டு
எலி மயிர்ச் சட்டை யணிந்துகொண்டான். மனைக்கட் புகுந்த சீவகன், போர்ச் செயலால் பிறந்த பாவம் போக, பொன்னால் உருவம் செய்து தானம் செய்தான். பின்பு கோயிற்குச் சென்று வழிபட்டு மனையடைந்தான்.
சீவகன் தத்தையை மணத்தல்
இன்னிய முழங்கி யார்ப்ப ஈண்டெரி திகழ வேதம்
துன்னினர் பலாசிற் செய்த துடுப்பின்நெய் சொரிந்து வேட்ப,
மின்னியல் கலச நன்னீர் சொரிந்தனன்; வீர னேற்றான்.;
முன்னுபு விளங்கு வென்னி முளைத்தெழ முருக னன்றான். 199
199 இன் இயம் - இனிய மண இயங்கள். எரி திகழ - வேள்வித் தீ எரிய. வேதம் துன்னினர் - வேத முணர்ந்த பார்ப்பனர். பலாசிற் செய்த துடுப்பு - பலாசக் கொம்பினால் செய்த வேள்வித் துடுப்பு. மின்னியல் கவசம் - மின் போல் ஒளிவிடும் கலம். சொரிந்தனன் –சீதத்தன் நீர் வார்த்தான். வீரன் - சீவகன். முன்னுபு - கருதி. வெள்ளி - வெள்ளியாகிய கோள்.
கலுழவேகன் ஓலை விடுத்தல்
சீவகன் தத்தையுடன் கூடி இனிதிருக்கும் நாளில் ஒரு நாள் அவளுடன் அவன் இளமரக்கா ஒன்றிற்குச் செல்ல, அங்கே ஒருவன் தோன்றி, சீவகன்பால் ஓலையொன்றை நீட்டினான். அதன்கண் சீவகன் தத்தையை வீணையால் வென்றதும், கட்டியங்காரனால் போர்நிகழ்ந்ததும், பின்பு மணம் நடந்ததும் தரன் என்பானால் தனக்குச் சொல்லப் பட்டன எனக் கலுழவேகன் பாராட்டி எழுதியிருந்தான். மேலும்,
எள்ளுநர்கள் சாயஎன தோளிரண்டும் நோக்கி
வெள்ளிமுழு துங்கொடி எடுத்ததுஇக லேத்தி
கள்செய்மலர் மார்பன்உறு காப்பிகழ்த லின்றி
உள்ளுபொருள் எம்முணர்த்தி யன்றியுன் வேண்டா; 200
200. எள்ளுநர்கள் - இகழ்ந்திருக்கும் பகைவர். சாய - கெடும்படி. இகல் ஏத்தி - போரைப் பாராட்டி. கொடி எடுத்தது - விழா எடுத்தது. கள்செய் மலர்மார்பன் - சீவகனுக்கு விளி. உறுகாப்பு - மிக்க காவல். இகழ்தல் இன்றி - சோர்ந்திருப்பதின்றி. உள்ளு பொருள் – கருதும் பொருள். எம் உணர்த்தியன்றி உளவேண்டா - எமக்கு முன்னர் உணர்த்தியன்றிச் செய்யக் கருத வேண்டா.
ஆம்பொருள்க ளாகும்அது யார்க்குமொழிக் கொண்ணா;
போம்பொருள்கள் போகுமவை பொறியின்வகை வண்ணம்;
தேம்புனலை நீர்க்கடலும் சென்றுதர லின்றே;
வீங்குபுனல் யாறுமழை வேண்டியறி யாதே. 201
என்று இவ்வாறு எழுதியிருந்த ஓலையைப் படித்த சீவகன் மிக மகிழ்ந்து அக் கலுழவேகனான மாமன் அடியைத்திசை நீக்கி விணங்கி, அன்பு மிகவுடையனாய் நின்ற தரனுக்கு விடை கொடுத்தான். பின்பு கலுழவேகன் விடுத்த இனிய பொருள் பலவற்றையும் சீவகன் காந்தருவதத்தைக்குத் தந்து களிப்பித்தான்.
201. அது - அழிக்க வொண்ணாது ஆகும் தன்மை. அவை – ஆவனவும் போவனவுமாகிய அவை. பொறியின்வகை வண்ணம் – இருவினையின் கூறாகிய இயல்பு. தேம்புனலை...இன்றே - உப்பு நீரையுடைய கடல் இனிய நீரைத் தானே உலகிற்குப் போந்து கொடுப்பதில்லை; என்றது தீயோர் பிறர்க்கு இனிமை செய்யார் என்பது. வீங்குபுனல் யாறு..... அறியாதே - மேகம் யாற்றுக்கு மிக்க நீரைக்கொடுக்க விரும்பி யறியாது; என்றது, "உவர்த்த நீரை நன்னீராக்கி யாற்றுக்குக் கொடுப்பே னென்றும் கருத்து" முகிலுக்கு இல்லாமை அதற்கு இயல்பு.
----------------
4. குணமாலையார் இலம்பகம்
[ குணமாலையார் இலம்பகம்: இது குணமாலையைச் சீவகன் மணந்துகொண்ட செய்தியைக் கூறும் இலம்பகம். குணமாலையும் சுரமஞ்சரியும் நீர் விளையாடச் சென்றதும், அவர்கள் இருவரும் சுண்ணம் காரணமாகப் பிரிந்து நீங்கியதும், குணமாலை நீராடி வருங்கால் அசனிவேகம் என்னும் அரசுவா மதம்கொண்டு அவளைக் கொல்லச் சென்றதும், சீவகன் அதனையடர்த்து அவளைக் காத்ததும், அதுவே வாயிலாக அவள் சீவகன்பால் கருத்தைப் போக்கியதும், கிள்ளையைத் தூதுவிட, சீவகன் மணத்துக்கு இசைந்ததும், குணமாலை மணமும், கட்டியங்காரன் சினம் கொண்டு சீவகனைப் பற்றி வருமாறு மதனனை ஏவியதும், மதனன் முதலாயினார் அவனைக் கொண்டேகுங்கால் தேவன் இடியும் மழையும் காற்றும் வருவித்து மயக்கி, சீவகனைக் கொண்டேகியதும், பிறவும் இதன்கண் கூறப்படுகின்றன.]
இராசமாபுரத்தே சீவகன் காந்தருவதத்தையுடன் இனிது இருந்து வருநாளில் வேனிற்காலம் வந்தது.
காசறு துறவின் மிக்க கடவுளர் சிந்தை போல
மாசறு விசும்பின் வெய்யோன் வடதிசை யயண முன்னி
ஆசற நடக்கும் நாளுன் ஐங்கணைக் கிழவன் வைகிப்
பாசறைப் பரிவுதீர்க்கும் பங்குனிப் பருவம் செய்தான். 202
202. காசறு துறவு - குற்றமற்ற துறவறத்தில் சிறந்த முனிவரர். மாசறு விசும்பின் - மாசற்ற வானத்தில். வெய்யோன் - ஞாயிறு.வடதிசை அயனம் - வடதிசைச் செலவு (உத்தராயணம்). முன்னி - கருதி. ஆசற- குற்றமற. ஐங்கணைக் கிழவன் - காமன். வைகி - வைக; தங்கும்படி. பாசறைப் பரிவு - பாசறைக்கண் தங்கும் வருத்தம். கூதிர்
தொடங்கிப் பாடி வீட்டிலிருந்து இளவேனிற்கண் இன்ப நுகர்தற்கு மீள் வராதலின் "பாசறைப் பரிவு தீர்க்கும்" என்றார். பங்குனிப் பருவம் - இளவேனில்.
பொழில்களில் மரமும் செடியும் கொடியும் இனிய பூக்களைப் பூத்து நறுமணம் கமழ்ந்தன; புதுத் தளிரும் இலையும் தழைத்து இனிய நீழல் செய்தன; தென்றல்
பொழில்களில் நுழைந்து போந்து வேனில் வெப்பத்தை மாற்றித் தண்மை பயந்து மெல்லென வீசலுற்றது. குயிலோசையும், வண்டிசையும் மாலைப் போதில் மக்கட்குப்
பேரின்பம் தந்தன.
நகர மக்கள் பொழிற் கேகுதல்
நாக நாண்மலர் நாறு கடிநகர்
ஏக வின்பத் திராச புரத்தவர்,
மாக நந்து மணங்கமழ் யாற்றயல்
போக மேவினர் பூமரக் காவினே. 203
203. நாகம் - புன்னை, நாறும் - மணம் கமழும். ஏக இன்பத்து இராசமாபுரத்தவர் - இணையிலா வின்பத்தையுடைய இராசமாபுரத்து மக்கள். மாகம் நந்தும் - வானளவும். மாகநந்து பூமரக்கா என இயையும். போகம் மேவினர் - போக நுகர்ச்சியை மனத்தால் பொருந்தினர்.
வாச வெண்ணெயும் வண்டிமிர் சாந்தமும்
பூசு சுண்ணமும் உண்ணும் அடிசிலும்
காசில் போகக் கலப்பையும் கொண்டவண்
மாசில் மாசனம் வாயில் மடுத்தவே. 204
204. வாச வெண்ணையும் - நறுமணம் ஊட்டிய எண்ணெயும். இமிர் - ஒலிக்கும். சாந்தம் - சந்தனம். அடிசில் - சோறு. போகக் கலப்பை - போகத்திற்குரிய யாழ் முதலியவற்றைப் பெய்த பெட்டி. மாசனம் - மிக்க மக்கள். காசு, மாசு - குற்றம்.
பாட லோசையும் பண்ணொலி யோசையும்
ஆட லோசையும் ஆர்ப்பொலி யோசையும்
ஓடை யானை யுரற்றொலி யோசையும்
ஊடு போய்யர் வானுல குற்றவே. 205
205. பாடலோசை - பாடுதலால் பிறந்தஓசை. பண்ணொலி - யாழ் ஓசை. ஆர்ப்பொலி - ஆரவாரம். ஓடை யானை - முகப்பட்ட மணிந்த யானை. உரற்றொலி - பிளிறும் ஓசை. ஊடுபோய் - தம்மிற் கலந்து போய்.
மகளிர் இருந்த பொழிற் சிறப்பு
குவளையும் தாமரையும் நிரம்பித் தெளிந்த நீர் பொருந்திய குளம் ஒரு புறம் விளங்க, பூவும் தளிரும் சுமந்து புதர்கள் அழகு செய்ய, வாழையும் பலாவும் மாவும் பிறவும்
இனிய கனிகளைச் சுமந்து இன்பம் செய்ய, நகர மகளிர் பொழில் உள்ளும் புறமும் நிறைந்திருந்தனர்.
கூறப் பட்டவக் கொய்ம்மலர்க் காவகம்
ஊறித் தேன்துளித் தொண்மது வார்மணம்
நாறி நாண்மலர் வெண்மணல் தாய்நிழல்
தேறித் தெண்கயம் புக்கது போன்றதே. 206
206. கூறப்பக்க - முன்னே கூறிய. கொய்ம்மலர் – கொய்யப்படும் மலர். காவகம் - காவின் உள்ளாகிய இடம். தேன் ஊறித் துளித்து - தேன் சுரந்து துளியாகச் சொரிந்து. வார் ஒண் மது - ஒழுகுகின்ற ஒள்ளிய தேன். மணல் தாய் - மணல் பரவி. காவகம், கயம்புக்கது போன்றது என்க.
குணமாலையும் சுரமஞ்சரியும் மேவியிருத்தல்
காவிற் கண்டத் திரைவளைத் தாயிடை
மேவி விண்ணவர் மங்கையர் போன்றுதம்
பூவை யும்கிளி யும்மிழற் றப்புகுந்து
ஆவி யந்துகி லாரமர்ந் தார்கனே. 207
207. காவில் - அக் காவகத்தில். கண்டத் திரை - பல்வண்ணத்திரை. ஆயிடை - அந்த உள்ளாகிய காவிலே. மிழற்ற - பேச. ஆவியந்துகிலார் - பாலாவி போலும் துகிலையுடைய மகளிர். இவர்கள் சுரமஞ்சரியும் குணமாலையுமாவர். துகிலார், காவில், திரைவளைத்து ஆயிடை மேவி, மிழற்ற, புகுந்து, மங்கையர் போன்று அமர்ந்தார்கள் என்க.
பௌவ நீர்ப்பவ ளக்கொடி போல்பவன்
மௌவ லங்குழ லாள்சுர மஞ்சரி
கொவ்வை யங்கனி வாய்க்குண மாலையோடு
எவ்வந் தீர்ந்திருந் தாள்இது கூறுவாள். 208
208. பவளக்கொடி போல்பவளும், மல்லிகை மலர் சூடிய குழலாளுமான சுரமஞ்சரி என்க. எவ்வம் தீர்ந்திருந்தாள் - முன்பு ஒரு வெறுப்பும் இன்றியிருந்தவள். இது - இதனை மேற் கூறுகின்றார்.
குணமாலை, குபேரமித்திரன் என்னும் நாய்கனுக்கு அவன் மனைவி விநயமாலை என்பாட்குப் பிறந்த மகள்; சுரமஞ்சரி என்பவள் குபேரதத்தன், சுமதி என்ற இருவர்க்கும் பிறந்த மகள்; இவளும் குணமாலை மரபைச் சேர்ந்தவள்;
குணமாலையும் சுரமஞ்சரியும் இளமை தொட்டே பிரியா நண்பர்கள். வேனில் விளையாட்டுக்குறித்து, இருவரும் சுண்ணம் செய்து கொணர்ந்துள்ளனர்.
சுரமஞ்சரி குணமாலை சுண்ணத்தை இகழ்தல்
சுண்ண மென்பதோர் பேர்கொடு சோர்குழல்
வண்ண மாலை நுசுப்பு வருத்துவான்
எண்ணி வந்தன கூறிவை யோவென
நண்ணி மாலையை நக்கன ளென்பவே. 209
209. பேர்கொடு - பெயரை ஏறட்டுக்கொண்டு. நக்கனள் - இகழ்ந்தாள். சோர் குழல் வண்ண நுசுப்புமாலை, விளி. சோர் குழல் - தாழ்ந்த கூந்தலும். வண்ண நுசுப்பு மாலை - அழகிய இடையுமுடைய மாலையே. என்ப - அசை. நக்கனள் சுரமஞ்சரி.
குணமாலை உளம் கொதித்துக் கூறல்
பைம்பொன் நீளுல கன்றியிப் பார்மிசை
இம்ப ரென்சுண்ணம் ஏய்ப்ப உளவெனில்
செம்பொற் பாவையன் னாய்!செப்பு நீஎனக்
கொம்ப னாளும் கொதித்திது கூறினாள். 210
210. பைம்பொன் நீளுலகு - தேவருலகு. பொன் என்றதற் கேற்பப் "பைம்பொன்" என விசேடிக்கப்பட்டது. இம்பர் - இவ்விடத்தே. ஏய்ப்ப - ஒப்பன. உள - வேறு சில உண்டு. எனில் -அறிவுடையோர் கூறுவாராயின். என - என்று குணமாலை சொல்ல. கொம்பனாள் - பூங்கொம்பு போன்றவளாகிய சுரமஞ்சரி. பொற்பாவை - பொன்னாற் செய்த கொல்லிப்பாவை.
இவை சுண்ணம் என்பதோர் பேர்கொடு வருத்துவான் எண்ணி வந்தனவோ கூறு என நண்ணி நக்கனள் என்க.
சுரமஞ்சரி சினந்து கூறல்
சுண்ணம் தோற்றனம் தீம்புன லாடலம்
எண்ணில் கோடிபொன் ஈதும்வென் றாற்கென
வண்ண வார்குழ லேழையர் தம்முளே
கண்ணற் றார்கமழ் சுண்ணத்தின் என்பவே. 211
211. தோற்றனம் - தோற்போமாயின். புனல் ஆடலம் – நீரில் விளையாடக் கடவேமல்லேம். வென்றாற்கு - புலன்களை வென்றோனாகிய அருகன் கோயிலுக்கு. கோடி பொன் -கோடி யென்னும் எண்ணளவாகிய பொன். எண்ணில் - மாற்றில்லாத. என -என்று சுரமஞ்சரி கூறியமைந்தாளாக. வார்குழல் - நீண்டகூந்தல். ஏழையர் -மகளிர். சுண்ணத்தின் - சுண்ணம் காரணமாக. கண்ணற்றார் - நட்புக் குலைந்தனர்.
தோற்றனம் - முற்றெச்சம்.
இருவர் தோழியரும் தனித்தனியே இருவர் சுண்ணத்தையும் எடுத்துக்கொண்டு, இவற்றுள் நல்லது தெரிதல் வேண்டி ஆடவர் இருக்கும் சூழலுக்குச் சென்று காட்டுகின்றனர். அவர்கள் அத்துறையில் புலமை மிக்கவன் சீவகனே; அவன்பாற் காட்டுமின் என விடுக்க, அவனைச் சென்றடைகின்றனர்.
சீவகன் தேர்ந்து குணமாலை சுண்ணம் நன்றென உரைத்தல்
"சுண்ணம் நல்லன சூழ்ந்தறிந் தெங்களுக்கு
அண்ணல்! கூறடி யேம்குறை" என்றலும்
கண்ணிற் கண்டு "இவை நல்ல; கருங்குழல்
வண்ண மாலையி னீர்!" எனக் கூறினான். 212
212. சூழ்ந்து - ஆராய்ந்து. கூறு -கூறுக. அடியேம் குறை- இதுவே அடிச்சிமார்களாகிய எமது வேண்டுகோள். கண்டு-கூர்ந்து நோக்கி. இவை நல்ல -(குணமாலையினுடைய) இச் சுண்ணம் நல்லனவாம். மாலையினீர் - மாலையினை யுடையீர்
சுரமஞ்சரியின் தோழி கூறல்
"மற்றிம் மாநகர் மைந்தர்கள் யாவரும்
உற்றும் நாறியும் கண்டும் உணர்ந்திவை
பொற்ற சுண்ணம் எனப்புகழ்ந் தார்; நம்பி
கற்ற தும்அவர் தங்களொ டேகொலோ. 213
213. உற்றும்- மெய்யால் தொட்டும். நாறியும் -மணம் பார்த்தும், இவை -(சுரமஞ்சரியினுடைய) இச் சுண்ணத்தையே. பொற்ற சுண்ணம் - சிறந்த சுண்ணம். நம்பி -நம்பியாகிய நீ. அவர்தங்களொடே கொலோ - அவர்களோடேயன்றோ. அவரின் வேறுபடுவ தென்னை என்பதாம்.
ஐய னேஅறி யும்என வந்தனம்
பொய்ய தன்றிப் புலமை நுணுக்கிநீ
நொய்தின் தேர்ந்துரை, நூற்கடல்" என்றுதம்
கையி னால்தொழு தார்கமழ் கோதையார். 214
214. அறியும் - வேறுபாட்டை யறிகுவன். ஐயன் –ஐயனாகிய சீவகன். என -என்று பிறர் சொல்லக் கேட்டு. பொய்யதன்றி –பொய்யாகாமல் மெய்யாமாறு. புலமை நுணுக்கி -அறிவைக் கூரிதாக்கி. நொய்தின் - விரைவாக. நூற்கடல் -விளி. நூற்பொருள் பலவும் நிரம்பிய கடல் போன்றவனே. கோதையார் -கோதையணிந்த தோழியர்.
சீவகன் அவர்களைத் தெளிவித்தல்
நல்ல சுண்ணம் இவை; இவற் றிற்சிறிது
அல்ல சுண்ணம்; அதற்கென்னை யென்றிரேல்
புல்லு கோடைய, பொற்புடைப் பூஞ்சுண்ணம்;
அல்ல சீதம்செய் காலத்தி னாயவே. 215
215. என்னை யென்றிரேல் - காரணம் என்னை என்று கேட்பீராயின். புல்லு கோடைய -சுண்ணமிடித்தற்குப் பொருந்திய கோடைக் காலத்தில் இடித்தவை யாகும். அல்ல -நல்லவல்லாத இச் சுண்ணம், சீதம் செய் காலம் -மாரிக்காலம். சீதம் -குளிர்.
சுரமஞ்சரி தோழி மீட்டும் கூறல்
"வாரம் பட்டுழித் தீயவும் நல்லவாம்
தீரக் காய்ந்துழி நல்லவும் தீயவாம்;
ஓரும் வையத் தியற்கையன் றோ?"எனா
வீர வேல்நெடுங் கண்ணி விளம்பினாள். 216
216. வாரம் பட்டுழி - ஒருவர்மேல் அன்புற்ற காலத்தே. தீரக் காய்ந்துழி - அன்பு இலதாகிய வழி. ஓரும் - நீரே நினைந்து பாரும். ஓரும் என்னும் முற்றுச்சொல் நிகழ்கால உம்மீறன்றி எதிர்காலமுணர்த்தும் முன்னிலைப் பன்மை; இஃது ஒருவரைக் கூறும் பன்மைக் கிளவி. வீரவேல்- வீரம் பொருந்திய வேல் போன்ற.
சீவகன் மறுபடியும் வண்டுண்ணக் காட்டிச் சுண்ணம் தெரிவித்தல்
மங்கை நல்லவர் கண்ணும் மனமும்போன்று
எங்கும் ஓடி இடறும் சுரும்புகாள்!
வண்டு காள்! மகிழ் தேனினங் காள்!மது
உண்டு தேக்கிடும் ஒண்ஞிமி றீட்டங்காள். 217
217. மங்கை நல்லவர்.....சுரும்புகாள் - கண்ணும் மனமும்போன்று சேர்ந்து எங்கும் கடிதாக ஓடித் திரியும் சரும்புகளே. சரும்பு- வண்டு. தேன், மிஞிறு -வண்டின் வகை. மகிழ்தேன் - கள்ளால் மயங்கிய தேன் வண்டு. மது உண்டு தேக்கிடும் ஒன்ஞிமிறு - மதுவை நிரம்பவுண்டு தேந்நெறியும் ஒள்ளிய ஞிமிறுகளே. ஈட்டம் -கூட்டம்.
சோலை மஞ்ஞை சுரமைதன் சுண்ணமும்
மாலை யென்னும் மடமயில் சுண்ணமும்
சால நல்லன தம்முளும் மிக்கன
கோலமாகக் கொண் டுண்மின் எனச்சொன்னான். 218
இவ்வாறு சொல்லிச் சீவகன் இருவர் சுண்ணத்தையும் அள்ளி விண்ணிலே தூவினான்; சுரமஞ்சரி சுண்ணம் கீழே வீழ்ந்தொழிய குணமாலை சுண்ணத்தை வண்டினம் உண்டொழிந்தன. அதைக் கண்டதும் சீவகன் சுரமஞ்சரியின் தோழியை நோக்கி, "இதனைச் சென்று நும் தலைவியர்க்கு உரைமின்" என்றான். இச்செய்தி கேட்ட சுரமஞ்சரி பெரிதும் அவலமுற்று வேறு உரையொன்றும் ஆடாது வாளா இருந்தொழிந்தாள். அவள் துயரங்கண்ட குணமாலை மனம் பொறாது, அச் சுரமஞ்சரியைத் தேற்ற நினந்து தகுவது
செய்யலுற்றாள்.
218. மஞ்சை - மயில். சுரமை - சுரமஞ்சரி. மஞ்சைபோன்ற சுரமஞ்சரி என்க. மாலை - குணமாலை. சால நல்லன - மிகவும் நல்லவேயாயினும். தம்முளும் - இவற்றிலும். கோலமாக - நன்றாக. "வெறாதிருத்தற்கு இருவரையும் மயில்" என்றான்.
குணமாலை இரத்தல்
திங்க ளங்கதிர் செற்றுழக் கப்பட்ட
பங்க யப்படு வொத்துளை, பாவாய்!
நங்கை யென்னொ டுரையாய்; நனியொல்லே
இங்கண் என்றடி வீழ்ந்திரந் திட்டாள். 219
219.செற்றுழக்கப்பட்ட - பகைத்துக் கலக்கப்பட்ட. பங்கயப் படு - தாமரைமடு. ஒத்துளை - போல உள்ளாய். ஒல்லே - கடுக. இங்கண் - இவ்விடத்து. இனி, ஒத்துளை பாவாய் - போல வருந்துகின்ற பாவையே என்றுமாம்.
சுரமஞ்சரி கூறல்
மாற்ற மொன்றுரை யாள்,"மழை வள்ளல்என்
ஏற்ற சுண்ணத்தை ஏற்பில என்றசொல்
தோற்று வந்தென் சிலம்படி கைதொழ
நோற்பன்; நோற்றனை நீ" என ஏகினாள். 220
220.மாற்றம் - மறுமாற்றம். மழை வள்ளல் - மழை போல வன்மையினைச் செய்யும் சீவகன். ஏற்ற சுண்ணம் - நல்ல சுண்ணம். ஏற்பில - நல்லவையல்ல. கை தொழ - கைதொழுது ஏத்தும்படியாக. நோற்றனை - முன்னே நோற்றிருகின்றாய்.
இவ்வாறு சென்ற சுரமஞ்சரி தன்மனையகத்தே வாடியிருந்தனள்; அவள் வாட்டத்துக்குக் காரணமாராய்ந்த பெற்றோர் செய்வது யாதென ஆராயுமளவில், சுரமஞ்சரி தனக்கோர் கன்னிமாடமமைத்து அதனருகே ஆடவர் எவரும்
குறுகாதவாறு காவலமைத்தல் வேண்டும் என வேண்டினள். இதைக் கேட்ட குபேரதத்தனும், கட்டியங்காரனது ஆணை பெற்று, அவள் வரும்பியவண்ணமேஆடவர் குறுகாஅருங்கடியமைந்த கன்னிமாடம் கடிதிற் சமைத்துத் தந்தான்.
சுரமஞ்சரி நோன்பு
சென்று காலம் குறுகினும் சீவகன்
பொன் துஞ் சாகம் பொருந்தில் பொருந்துக;
அன்றி என்நிறை யார்அழிப் பாரெனா
ஒன்று சிந்தைய ளாகி யொடுங்கினாள். 221
221. காலம் சென்று குறுகினும் - வாழ்நாள் எல்லை முற்றிக் குறைந்த போழ்தும். பொன் துஞ்சு ஆகம் - திருமகள் தங்குகின்ற மார்பு. அன்றி - அவனையன்றி. ஒன்று சிந்தையளாகி - ஒரு மனத்தையுடையளாய். ஒடுங்கினாள் - அமைந்தொழிந்தாள்.
குணமாலை சுரமஞ்சரி பிரிவாற்றது வருந்துதல்
இன்பக் காரண மாம்விளை யாட்டினுள்
துன்பக் காரண மாய்த்துறப் பித்திடும்
என்ப தேநினைந் தீர்மலர் மாலைதன்
அன்பி னால்அவ லித்தழு திட்டாள். 222
222. துறப்பித்திடும் - கெடுத்தொழித்துவிடும். இன்பக் காரணம் - இன்பத்துக்கு முதலாகிய கடுநட்பு. விளையாட்டினுள் - சிறு விளையாட்டு வாயிலாக. துன்பக் காரணம் - பகை. ஆய் - தோன்றி. என்பதே - கடுநட்புப் பகையாக்கும் என்ற பழமொழியையே. விளையாட்டே வினையாம் என்ற பழமொழி கொண்டு அமைக்கினுமாம். ஈர் மலர் - குளிர்ந்த மலர். அவலித்து - வருந்தி.
குணமாலை, பிரிவாற்றாமையால் தன் தீவினைக்குக் கழுவாய் செய்தல்
தண்ணம் தீம்புன லாடிய தண் மலர்
வண்ண வார்தளிர்ப் பிண்டியி னானடிக்கு
எண்ணி யாயிர மேந்துபொற் றாமரை
வண்ண மா மலர் ஏற்றி வணங்கினாள். 223
223.தண்ணம் தீம்புனல் - குளிர்ந்த இனிய நீர். ஆடிய - ஆட வேண்டி. வார் தளிர் - ஒழுகிய தளிர். எண்ணி- சுரமஞ்சரியுடன் தன்பால் இருந்த நட்பினைப் பிரித்த தீவினை நீங்கும் வழி இது என்று எண்ணி, ஆயிரம் தாமரை. ஏந்து பொற்றாமரை - உயர்ந்த பொற்றாமரைப்பூ. வண்ண மலர் - அழகிய பூ. இவை ஆயிரத்தின் ஒழிந்த பூக்கள்.
ஏற்றி -தூவி.
இஃதிங்ஙனமிருக்க, வேனில் விருப்பால் பொழில் விளையாடப் புகுந்த நகர மக்கள், பொழில் விளையாட்டிற் பொழுது போக்கி, நீர் விளையாடலைக் கருதினர். பலர் பல
வகைத் தானங்களைச் செய்தனர், நந்தட்டன், புத்திசேனன் முதலியோர், தம்மிடையேஇருந்த சீவகனைத் தனிப்பவிட்டு, விளையாட்டுக் காண விரும்பி வேறிடங்கட்குச் சென்றனர். ஒரு பக்கத்தே மைந்தரும் மகளிரும் பொழிலிலும் நீரிலும்
விளையாட் டயர்கையில், ஒருபக்கத்தே அந்தணர் பொருட்டுவேதியர் சிலர் சோறு சமைத்து வைத்திருந்தனர். அதனை ஒரு நாய் வந்து தொட்டதாக, அவர்கள் அதனைத் துரத்தியடித்துக் கொண்டோடினர். அஃது அவர்களால் தாள் முறிந்து கயத்துநீரில் விழுந்தது; அம் மூர்க்கர் அதனை வளைத்துக்கொண்டனர்.
களிமகன் வரவு
மட் குடம் அல்லன மதியின் வெள்ளிய
கட்குடக் கன்னியர் இருவ ரோடுடன்
துட்கென யாவரும் நடுங்கத் தூய்மையில்
உட்குடைக் களி மகன் ஒருவன் தோன்றினான். 224
224.மதியின் வெள்ளிய குடம்- திங்கள்போல் வெண்ணிறத் தனவாகிய வெள்ளியாற் செய்த குடம். இக் குடம் கட் குடம். இவை மட்குடமல்ல. கள்ளின் கடுமை பொறுத்தற்கு வெள்ளியாற் சமைத்த குடம். குடக்கன்னியர் - குடம் தாங்கிய மனைவியர். யாவரும் துட்கென நடுங்க - காண்போர் அனைவரும் துண்ணென அஞ்சி நடுங்க. தூய்மையில் உட்குடை - தூய்மையில் உள்வாங்கிய; தூய்மையில்லாத. தூய்மையில்லாத உருவினையுடைய என்றுமாம்.
களிமகன் கூறல்
புடைத்தென் நாயினைப் பொன்றுவித் தீர்; உயிர்
கடுக்கப் பேர்த்தனிர்; தம்மின்; கலாய்க்குறின்
தடக்கை மீனிமை தாங்குமின்; அன்றெனின்
உடைப்பென் கட்குடம் என்றுரை யாடினான். 225
இவ்வாறு இவன் வருத்தக் கண்டதும், சீவகன் விரைந்து அவனிடம் போந்து நாயிழந்து நிற்கும் அவனது துயரைத் தேற்றி, அந்தணர்க்குத் துணைசெய்து அகற்றினான். பின்பு
அச் சீவகன் தன் தோழருடன் நாய் கிடந்தவிடம் அணுகி, அதன் மனத்தே மறம் இல்லாமை யுணர்ந்து, அதன் செவியில் மந்திரமோதலுற்றான்.
225. புடைத்து - அடித்து. பொன்றுவித்தீர் - உயிர்போக்கினீர். பேர்த்தனிர் தம்மின் - மீட்டுத் தருவீராக. கலாய்க்க உறின் – கலாம் செய்ய நினைக்கின். தடக்கை மீளிமை - பெரிய கையினது வலி. கட்குடம் உடைப்பென் - கட்குடத்தைப் போட்டு உடைப்பேன்.
நாய் தேவனாதல்
"நாயுடம் பிட்டிவண் நந்திய பேரொளிக்
காய்கதிர் மண்டலம் போன்றொளிக் கால்வதோர்
சேயுடம் பெய்துவை; செல்கதி மந்திரம்
நீயுடம் பட்டுநி னைமதி" என்றான். 226
226. இட்டு - நீங்கி. நந்திய - வளர்ந்த. காய்கதிர் மண்டலம் - நிலவு காயும் கதிர்களையுடைய திங்கள். கால்வது ஓர் - விளங்குவதாகிய ஒரு. சேயுடம்பு - பெரியவுடம்பு. செல்கதி மந்திரம் – உயர்கதிக்கு உய்ப்பதொரு மந்திரம். உடம்பட்டு - ஒருப்பட்டு.
இது கூறக்கேட்ட அந்த நாய் வால்குழைத்துத் தன் உள்ளத்து உவகையைப் புலப்படுத்திற்று. அதன் செவியில் ஐந்துமொழிகளாலாகிய மந்திரத்தை ஓதிப் பின் வருமாறு கூறினான்.
உறுதிமுன் செய்த தின்றி யொழுகினேன் என்று நெஞ்சின்
மறுகல்நீ; பற்றொடு ஆர்வம் விட்டிடு; மரண அச்சத்து
இறுகல்நீ; இறைவன் சொன்ன ஐம்பத அமுத முண்டால்
பெறுதிநற் கதியை என்று பெருநவை அகற்றினானே. 227
227. முன் உறுதி செய்ததின்றி - முன்பு உயிர்க்கு உறுதி தரும் வினைசெய்யாதே. மறுகல் - மனத்தே கலக்கம்கொள்ள வேண்டா. பற்று - உள்ள பொருள்மேற் செல்லும் ஆசை. ஆர்வம் - பெறக்கடவ பொருள் மேற்செல்லும் ஆசை. விட்டிடு -.விட்டொழிக. மரணவச்சத்து இறுகல் - இறத்தற்கண் உள்ள நோய்வாய் வீழ்ந்து நிலைபெறாதே. இறைவன் - அருகன். ஐம் பத வமிர்தம் - ஐந்து பதமாகிய அமிர்தம்; பஞ்சாஸ்தி
காயம் என்னும் மந்திரம். பெறுதி - பெறுக. நவை - துன்பம்.
மனத்திடைச் செறும்பு நீங்கி மறவலை யாகி ஐந்தும்
நினைத்திடு; நின்கண் நின்ற நீனிற வினையின் நீங்கி,
எனைப்பகல் தோறும் விள்ளா இன்பமே பயக்கும் என்றாற்கு
அனைப்பத வமிர்தம் நெஞ்சின் அயின்றுவிட் டகன்ற தன்றே. 228
228.செறும்பு -செற்றம். நீங்கி - நீக்கி. மறவலையாகி -மறவாமல். நீனிற வினை - கரிய தீவினை. எனைப் பகல்தோறும் – உள்ளநாள் எத்துணை அத்துணை நாளெல்லாம், விள்ளா - நீங்காத, அனைப் பத வமிர்தம் - அந்த ஐந்து பதமாகிய மந்திரம். அயின்று - நினைத்து. விட்டு- நாயுடம்பை விட்டு.
நாயுடம்புவிட்டு நீங்கித் தேவவடிவு பெற்றதும், அத்தேவன் சீவகன் முன்னே தோன்றித் தன் நன்றி கூறுமுகத்தால் தான் சுதஞ்சணன் என்னும் தேவன் என்றும், தன்னுலகும்
உலகிற் போகமும் சீவகன் அடியில் வைப்பதாகவும் சொன்னான். அவனைக் கண்டும் உரையைக் கேட்டும் வியப்பும் நன்மதிப்பும் கொண்டு சீவகன், தனக்குப் பிறவாற்றால்
ஒரு குறையும் இல்லையென்றும், ஒருகால் தன்னைப் பகைவர் வளைத்துக் கொள்ளுமிடத்துத் தனக்குத் துணை செய்வது அமையும் என்றும் விடையிறுத்தான்.
தேவன் விடைபெற்றேகல்
இன்னிழல் இவரும் பூணான் இருவிசும் பிவர்த லுற்றுப்
பொன்னெழு வனைய தோளாற் புல்லிக்கொண் டினிய கூறி
"நின்னிழல் போல நீங்கேன்; இடர்வரின் நினைக்க" என்று
மின்னெழூஉப் பறப்ப தொத்து விசும்பிவர்ந் தமரன் சென்றான். 229
229. இன்நிழல் இவரும் பூணான் - இனிய ஒளி திகழும் பூண்களை யணிந்து தோன்றும் சுதஞ்சனன். இது தேவ வுடம்பின் பொலிவு. இவர்தலுற்று - போகக் கருதி. பொன் எழு அனைய தோளான் - பொற்றூண் போலும் தோளையுடைய சீவகன். நினைக்க - என்னை நினைக்க. எழூஉப்பறப்பது - மறையாமல் எழுந்து பறப்பது. இவர்ந்து - உயர்ந்து.
தேவன் சென்றதும் சீவகனும் அவனுடைய தோழரும் அவ்விடத்து நின்றும் போய்விட்டனர். நகரமக்கள் நீர் விளையாட்டு முடிந்ததும் நகரத்திற்குச் செல்லலுற்றனர். சிவிகையூர்ந்து செல்வார் பலர்; தேர்மீது செல்வார் பலர்;
வேறு பலர் ஏனை ஊர்தி இவர்ந்தும் ஏகலுற்றனர்.செல்லும் பொழுது அரசனது பட்டத்து யானையாகிய அசனிவேகம் என்பது மதம்பட்டுப் பாகர் அடக்க அடங்காது பிளிறிக் கொண்டு ஓடலுற்றது. கூடியிருந்த ஆடவரும் மகளிரும் நாற்றிசையும் வீற்று வீற்றாக ஓடி உயிர் தப்புவாராயினர். அவ் யானை குணமாலையும் அவளது தோழியும் இருந்த பக்கத்தை நோக்கி வரத்தொடங்கி விரைந்து நெருங்குவதாயிற்று. இந் நெருக்கடியில் விரைந்தோட மாட்டாது குணமாலை நெஞ்சு கலங்கினாள்.
குணமாலையின் தோழி யானைமுன் நிற்றல்
கருந்தடங் கண்ணி தன்மேல் காமுகர் உள்ளம் போல
இருங்களி றெய்த வோடச் சிவிகைவிட் டிளைய ரேக
அரும்பெற லவட்குத் தோழி, ”ஆடவர் இல்லை யோ?" என்று
ஒருங்*கை யுச்சிக் கூப்பிக் களிற்றெதிர் இறைஞ்சி நின்றாள். 230
230.கருந்தடங் கண்ணி - கரிய பெரிய கண்களையுடைய குண மாலை. எய்த ஓட - அணுகச் சென்றதாக. இளையர் - சிவிகை சுமந்து வந்த ஆட்கள். விட்டு - கீழே வைத்துவிட்டு. அரும் பெறல் அவட்கு - சீவகனையன்றிப் பிறர்க்குப் பெறுதற்கரியவளாகிய அக் குணமாலைக்கு. என்று - என்று கூப்பாடு இட்டு. இறைஞ்சி - தலை கவிழ்ந்து.
நின்றவளது கருத்து இதுவென்றல்
"என்னைக்கொன் றிவள்க ணோடும் எல்லையில், ஒருவன் தோன்றி
இன்னுயிர் இவளைக் காக்கும்; அன்றெனில் என்கண் மாய்ந்தால்
பின்னைத்தான் ஆவ தாக" என்றெண்ணிப் பிணைகொள் நோக்கி
மின்னுப்போல் நுடங்கி நின்றாள், வீததை கொம்பொ டொப்பாள். 231
231. இவன்கண் ஓடும் - இவனிடத்தே யோடும். எல்லையில் - அமயத்தில். இன் உயிர் இவளைக் காக்கும் - இனிய உயிர்போலும் இக் குணமாலையைக் காப்பான். என் கண் மாய்ந்தால் - என் உயிர் மாயுமாயின். ஆவதாக - ஆவது ஆகுக; அது பற்றிக் கவலையில்லை. பிணை கொல் நோக்கி - மான்பிணை போலும் பார்வையையுடைய தோழி. நுடங்கி - நடுங்கிக்கொண்டு. வீ ததை கொம்பு - பூக்கள் நிறைந்த கொம்பு.
குணமாலை நிலையைச் சீவகன் காண்டல்
மணியிரு தலையும் சேர்த்தி வான்பொனின் இயன்ற நாணால்
அணியிருங் குஞ்சி யேறக் கட்டியிட் டலங்கல் சூழ்ந்து
தணிவரும் தோழர் சூழத் தாழ்குழை திருவில் வீசப்
பணிவரும் குரிசில் செல்வான் பாவையது இடரைக் கண்டான். 232
232. இருதலையும் மணிசேர்த்தி - இருபக்கத்திலும் மணியழுத்தி. வான்பொனின் இயன்ற நாண் - உயர்ந்த பொன்னால் செய்யப்பட்ட கயிறு, குஞ்சி - தலைமயிர். ஏறக்கட்டி - தூக்கிக்கட்டி. தணிவரும் தோழர் - அன்பு குறையாத தோழர். வில் - ஒளி. பணிவரும் குரிசில் – பிறரால் வணக்கலாகாத சீவகன்.
சீவகனது உட்கோள்.
பெண்ணுயிர் அவலம் நோக்கிப் பெருந்தகை வாழ்விற் சாதல்
எண்ணினன் எண்ணி நொய்தா இனமலர் மாலை சுற்றா,
வண்ணப்பொற் கடகம் ஏற்றா, வார்கச்சில் தானை வீக்கா,
அண்ணலங் களிற்றை வையா ஆர்த்துமேல் ஓடினானே. 233
233. பெண் உயிர் அவலம் - பெண்ணொருத்தி உயிர் இழப்பது நோக்கி, வாழ்வின் சாதல் எண்ணினன் - பார்த்துப்பின் இருந்து வாழ்தலினும் தான் சாவதே பெருந்தகைமை என எண்ணினான். அவன் பெருந்தகையாதலின். நொய்தா - உடனே (விரைவாக) பொற்கடகம் - ஆடவரணியும், பொன்னால் செய்த ஒருவகைத் தொடி. வார் கச்சின் – நீண்ட கச்சினால். தானை - உடை. வீக்கா - இறுகக் கட்டிக்கொண்டு. வையா - வைதுகொண்டு. ஆர்த்து - ஆர்ப்பரித்து. மேல் - களிற்றின்மேல்.
குணமாலை மேலும் அவள் தோழிமேலும் பார்வைவைத்துச் செல்லும் யானை வேறுபக்கம் திரும்புமாறு அதன் மத்தகத்திற் பாய்ந்து அவர்களைச் சீவகன் உய்வித்தல்
படம்விரி நாகம் செற்றுப் பாய்தரு கலுழன் போல
மடவர லவளைச் செற்று மதக்களிறு இறைஞ்சும் போழ்தில்,
குடவரை நெற்றி பாய்ந்த கோளரி போன்று வேழத்து
உடல்சினம் கடவக் குப்புற்று உருமென உரறி யார்த்தான். 234
234 நாகம் - நாகப்பாம்பு. செற்று - சிதைத்து. கலுழன் - கருடன். மடவரலவளை - இளையளாகிய தோழியை. செற்று – செறுத்து இறைஞ்சும் போழ்தில் - சிறிது தலை குனியும்பொழுது. குடவரை - ஞாயிறு மேற்றிசையில் மறையும் மலை. நெற்றி - உச்சி. கோளரி - சிங்கம். உடல் சினம், வினைத்தொகை. குப்புற்று - குதித்து. உரும்- இடி. உரறி - முழங்கி.
கூற்றென முழங்கிக் கையால் கோட்டிடைப் புடைப்பக் காய்ந்து
காற்றென வுரறி நாகம் கடாம்பெய்து கனலின் சீறி
ஆற்றலங் குமரன் தன்மேல் அடுகளி றோட, அஞ்சான்
கோற்றொடிப் பாவை தன்னைக் கொண்டுய்யப் போமின் என்றான். 235
235 கோட்டிடைப் புடைப்ப - இரு கொம்புகட்கும் இடையே கையால் புடைக்க. காய்ந்து - (களிறு) சினந்து. காற்றென –சூறைக் காற்றுப்போல. நாகம் - யானை. கடாம்- மதநீர். கனலின் – நெருப்புப் போல. ஆற்றல் அம் குமரன் - வலிமிக்க இளையனான சீவகன். அஞ்சான் -அஞ்சானாய். முற்றெச்சம். கோற்றொடிப் பாவை - குணமாலை.
தோழிமேலும் குணமாலை மேலும் செல்கின்றதென்று அஞ்சினவன், அக் களிறு தன்னை நோக்கித் திரும்பிவிட்டமையின் அஞ்சானாயினன், குணமாலையைக் கொண்டு செல்வார் அவள் தோழியையும் உடன்கொண்டு போவராதலின் கோற்றொடிப் பாவையைக் கூறினான்.
சீவகன் யானையொடு பொருது அதனைக் கொல்லாது நெடுந்தொலைவு செல்லவிடுத்தல்
மதியினுக் கிவர்ந்த வேக மாமணி நாகம் வல்லே
பதியமை பருதி தன்மேல் படம்விரித் தோடி யாங்குப்
பொதியவிழ் கோதை தன்மேல் பொருகளி றகன்று பொற்றார்க்
கதியமை தோளி னாளைக் கையகப் படுத்த தன்றே. 236
236. மதியினுக்கு - திங்களைக் கையகப்படுத்தற்கு. இவர்ந்த- விரும்பிய. மாமணி நாகம் - கரும்பாம்பு. வல்லே - சட்டென. பதியமை பருதி - போகின்ற ஞாயிறு; இருத்தல் தவிர்ந்த பருதி, பொதியவிழ்கோதை - அரும்பவிழ்ந்த பூவால் தொடுத்த மாலையணிந்த குணமாலை. அகன்று - போவது நீங்கி. கதி அமை தோளினான் - வன்மைக்கு இடமாய் அமைந்த தோளினையுடைய சீவகன். கையகப்படுத்தது - கைக்குள்ளே அகப்படுத்திற்று.
கையகப் படுத்த லோடும் கார்மழை மின்னி னொய்தா
மொய்கொளப் பிறழ்ந்து முத்தார் மருப்பிடைக் குளித்துக் காற்கீ
ழையென அடங்கி வல்லான் ஆடிய மணிவட் டேய்ப்பச்
செய்கழற் குரிசி லாங்கே கரந்துசேண் அகற்றி னானே. 237
237. கார்மழை மின்னின் நொய்தா - கார் முகிலில் மறையும் மின்னலைப்போல விரைவாக. மொய்கொளப் பிறழ்ந்து – உடம்பு மென்மைகொண்டு வளைந்து புரிந்து. மருப்பிடைக் குளித்து – கொம்புகளின் இடையே நுழைந்து. ஐயென அடங்கி - கண்டோர் வியப்பெய்துமாறு ஒடுங்கி. வல்லான் - வட்டாடுவதில் வல்லவன். ஏய்ப்ப - ஒப்ப.செய்கழல் குரிசில் -செவ்விய கழலணிந்த குரிசிலாகிய சீவகன். ஆங்கே -
அப்பொழுதே. சேண் - தொலைவிலே. வட்டேய்ப்பக் கரந்து போய்ச் சேணகற்றினான் என்க.
இங்ஙனம் யானை சேணிற் சென்றதும் சீவகன் குணமாலையை நேரிற் கண்டு அவளது அழகில் தன் கருத்தை யிழந்து தனியே உய்யானத்தை யடைந்தான். இப்பால் குணமாலையையும் அவள் தோழியர் தம் கடி மனைக்குக் கொண்டேகினர். அவள் மனத்தும் சீவகன்மேல் பெருங் காதல் எழுந்து வாட்டலுற்றது. இதன் உண்மையறியாத அவள்
தாய் விநயமாலை " நெடிது விளையாடியதனால் இவட்கு இம் மெலிவு உளதாயிற்றுப்போலும்" என்று நினைந்து தகுவன பல கூறி, குணமாலை வளர்த்த கிளியை அவட்குக் காட்டி, "நின்னை நின் கிளி அழையாநின்றது; சென்று பாலூட்டுக" என்று சொல்லிவிட்டுச் சென்றாள். தனித்திருந்த குணமாலை யுள்ளத்தே சீவகன் பொருட்டு எழுந்த வேட்கைத் தீ அவளது உள்ளத்தையும் உயிரையும்உடலையும் வெதுப்ப, அவள் பெரிதும் ஆற்றாளாயினள். பின்பு அவள் தனக்குள்ளே பலவாறு நினைக்கலுற்றாள்.
குணமாலை பெண் பிறப்பைப் பழித்தல்
கையி னால்சொலக் கண்களிற் கேட்டிடும்
மொய்கொள் சிந்தையின் மூங்கையு மாயினேன்;
செய்த வம்புரி யாச்சிறி யார்கள்போல்
உய்ய லாவதோர் வாயிலுண் டாங்கொலோ. 238
238. கையினால் சொல்ல- கையாற் காட்டும் சைகையால் மனக் குறிப்பை வெளிப்படுத்த. அவற்றைக் கண்ணாற் கண்டே அறிய வேண்டுதலால், "கண்களில் கேட்டிடும்" என்றார். மொய் கொள் சிந்தை – குறையெல்லாம் செறிவு கொண்ட மனம். மூங்கை - ஊமை. செய்தவம் புரியா- செய்தற்குரிய தவத்தைச் செய்யாத. சிறியார் - சிறுமையுடையவர். சிறியார்கள்போல் மூங்கையுமாயினேன் என முடிக்க. வாயில் - நெறியுணர்த்தித் துணை செய்பவர்.
கண்ணும் வாள் அற்ற; கைவளை சோருமால்;
புண்ணும் போன்று புலம்பும்என் நெஞ்சரோ;
எண்ணில் காமம் எரிப்பினும் மேற்செலாப்
பெண்ணின் மிக்கது பெண்ணலது இல்லையே. 239.
239.வாள் அற்ற - ஒளியிழந்தன. புண்ணும் போன்று புலம்பும் - நெஞ்சம் புண்ணுற்றது போல வருந்தும். எண்ணில் – ஆராய்ந்து பார்க்குமிடத்து. எரிப்பினும் - முழுக்க நின்று சுட்டுக் கொளுத்தினாலும். மேற் செலாத - மேலொன்றும் செய்தற்கில்லாத. பெண்ணின் மிக்கது - பெண் பிறப்பினும் கொடியது. பெண் பிறப்பின் கொடுமைக்கு ஒப்பதும் மிக்கதும் வேறொன்றும் இல்லை என்பதாம்.
இவ்வாற்று எண்ணமிட்டுக்கொண்டிருந்த இக்குண மாலைக்கு ஒரு நினைவு தோன்றிற்று: தன் கிளியைச் சீவகன் பால் தூதுவிட நினைத்தாள். அதனை அக் கிளியிடம் உரைப்ப, அதுவும் அதற்குடன்பட்டு அவன் இருக்குமிடம் சென்றது.
ஆங்கே, சீவகன் அரசவாமுன் அஞ்சி நடுங்கித் துவண்ட குணமாலை வடிவே அவன் முதன்முதலாகப் பெற்ற காட்சியாதலால், அதனையே மனக்கண்ணிற் கண்டு பெருவேட்கை யுற்று, மேனி மெலிந்து, அவ்வுருவினைத் தானே ஒரு கிழியில் எழுதி அதன் அழகிடை யீடுபட்டிருந்தான். அதுபோது அவன்பால் அழகொழுகும் வடிவினளாய காந்தருவதத்தை வந்தாள். அவளைக் கிளி கண்டது.
கிளி தனக்குள் எண்ணுதல்
"சிலம்பொடு மேகலை மிழற்றத் தேனினம்
அலங்கலுண்டு யாழ்செயும் அம்பொற் பூங்கொடி
நலம்பட நன்னடை கற்ற தொக்கும்இவ்
விலங்கரித் தடங்கணாள் யாவ ளாங்கொலோ. 240
240. மிழற்ற - ஒலிக்க. தேன் இனம் - வண்டினம் அலங்கல் உண்டு - மாலையிலுள்ள தேனைக் குடித்து. யாழ் செயும் – யாழ்போல் முரலும். பூங்கொடி நடை கற்றது போல நடந்தேகும் இத் தடங்கணாள் யாவளோ என்பது. விலங்கு அரித் தடங்கணாள் - குறுக்கிட்டுப் பரந்த செவ்வரிகளையுடைய பெரிய கண்ணினையுடையாள்.
யாவளே யாயினுமாக; மற்றிவள்
மேவிய பொருளொடு மீண்ட பின்னலால்
ஏவலாற் சேர்கலேன்" என்று பைங்கிளி
பூவலர் சண்பகம் பொருந்திற் றென்பவே. 241
241. மேவிய பொருளொடு - வந்த செய்தியை முடித்துக்கொண்டு பின்னலால் - பின்னே யன்றி. ஏவலால் - குணமாலை ஏவியவாறே உடனே. பூவலர் சண்பகம் - பூமலர்ந்துள்ள சண்பக மரம்.
காந்தருவதத்தை சீவகன் எழுதி மகிழும் ஓவியத்தைக் கண்டு புலந்து அவனோடு உரையாடுதல்
"இதுஎன உரு?"என, "இயக்கி" என்றலும்,
"புதிதுஇது, பூந்துகில் குழல்கள் சோர்தலால்;
மதுவிரி கோதையம் மாலை நின்மனம்
அதுமுறை இயக்கலின் இயக்கி யாகுமே." 242
242. என உரு என - என்ன உருவம் என்று காந்தருவதத்தை கேட்க. என்றலும் - இயக்கியின் உருவம் என்று சீவகன் சொன்னவுடன், புதிது - புதுமையுடையதாகவுளது. இயக்கிக்குத் துகிலும் குழலும் சோர்வது கிடையாது. மது - தேன். அம் மாலை - அக் குணமாலை. மனம் முறை இயக்கலின் - மனத்தை முறையே ஆற்றாமை மிகும்படி இயக்குதலால். இயக்கியாகுமே - இயக்கியே யாகும்: ஆகும் - ஆவாள். சீவகன்
கூறிய இயக்கி என்னும் சொல் வடசொற் சிதைவு. யஷி தேவதை. தத்தை கூறியது தமிழ்ச்சொல்.
சீவகன் அவள் சினம் தணிவிப்பான் கூறுதல்
பாவைநீ புலவியில் நீடல்; பாவியேற்கு
ஆவியொன்று இரண்டுடம் பல்லது; ஊற்றுநீர்க்
கூவல்வாய் வெண்மணல் குறுகச் செல்லுமே
மேவிப்பூங் கங்கையுள் விழைந்த அன்னமே? 243
243. புலவியில் நீடல் - புலத்தலை நீட்டியாதே. பாவியேற்கு – பாவியாகிய எனக்கு. ஆவியொன்று - நின் உயிரே எனக்கும் உயிராவது. நம்மிருவர்க்கும் உயிரொன்று: உடம்பு இரண்டு. கங்கையுள் மேவி விழைந்த அன்னம் - கங்கை யாற்றை மேவி அதனை விரும்பி யுறையும் அன்னம். கூவல்வாய் வெண்மணல் ஊற்று நீர் - குளத்திடத்து வெண்மணலில் சுரந்து நிற்கும் ஊற்று நீர். செல்லுமே - ஏகாரம் வினா.
அக் கூற்றால் அவள் புலவி மிகுதல்
பேரினும் பெண்டிரைப் பொறாது சீறுவாள்,
நேர்மலர்ப் பாவையை நோக்கி, நெய்சொரி
கூரழல் போல்வதோர் புலவி கூர்ந்ததே,
ஆர்வுறு கணவன்மாட் டமிர்தின் சாயற்கே. 244
244. பெண்டிரைப் பேரினும் - வேறு பெண்டிரின் பெயர் சொன்னாலும். சீறுவாள் - சீறுகின்றவளாகிய தத்தை. நேர் மலர்ப் பாவையை - ஒத்த மலர் சூடிய பாவை போன்ற குணமாலை வடிவத்தை. நோக்கி - பார்த்ததனால். நெய் சொரி கூரழல் - நெய் சொரிவதால் மிக்கு எழும் நெருப்பு. ஆர்வுறு கணவன்- மிக்க காதலுடைய கணவனாகிய சீவகன். அமிர்தின் சாயல் - அமிழ்தம் போலும் மென்மையினையுடைய காந்தருவதத்தை.
இது கண்டு சீவகன் ஆற்றாது பல பணிமொழிகள் இரந்து கூறினன்; அவள் சினம் தணியாது அவனைத் தனிப்பவிட்டுத் தன் உறையுளை யடைந்தாள். "இதுவே
தக்க காலம்" என வுணர்ந்த அக் கிளி அவனை யடைந்தது. அவனும் அதனை அன்போடு வரவேற்று, வரவின் காரணம் வினவினன்.
கிள்ளை விடை யிறுத்தல்.
மையலங் களிற்றொடு பொருத வண்புகழ்
ஐயனைச் செவ்விகண் டறிந்து வம்மேனப்
பையர வல்குலெம் பாவை தூதொடு
கையிலங் கெஃகினாய்! காண வந்ததே. 245
245.மையலங்களிறு - மதம்பட்டு மயங்கிப் போந்த யானை. வண்புகழ் ஐயன் - வளவிய புகழ் படைத்த சீவகன். செவ்வி - காலம். வம் என - வருக என்று. பை அரவு அல்குல் - படத்தையுடைய பாம்பின் படம் போன்ற அல்குல். இலங்கு எஃகினாய் - விளங்குகின்ற வேலையுடையாய்.
சீவகன் வினவுதல்
வெஞ்சின வேழ முண்ட வெள்ளிலின் வெறிய மாக
நெஞ்சமும் நிறையும் நீல நெடுங்கணாற் கவர்ந்த கள்வி
அஞ்சனத் துவலை யாடி நடுங்கினாள் நிலைமை யென்னை?
பைஞ்சிறைத் தத்தை! என்னப் பசுங்கிளி மொழியு மன்றே. 246
246. வேழமுண்ட ...........வெறியமாக - யானைத்தீ யென்னும் நோயுற்ற விளாம்பழம் உள்ளகம் வெறுவிதாவதுபோல நெஞ்சம் நிறைமுதலியன இன்றி வெறுவிதமாறு. நீலம் - கருமை. பிறர் அறியாமல் கண்ணினால் கவர்ந்துகொண்டாளாதலின் "கள்வி" யென்றான். யானைமுன் குணமாலை நடுங்கி நின்ற காலத்தில், அவள் கண் கலுழ்ந்து நீர் அரும்ப மெய் வியர்வை பொடிப்பக் கண்டது நினைவில் இருப்பதால்,
"அஞ்சனத் துவலையாடி நடுங்கினாள் " என்றான். பைஞ்சிறைத் தத்தை- பசிய சிறகுகளையுடைய கிளியே.
குணமாலையின் வேட்கைமிகுதியும் ஆற்றாமையும் சொல்லி, மேலும் அக் கிளி கூறல்
"கன்னிய ருற்றநோய் கண்ண னார்க்கும்அஃது
இன்னதென் றுரையலர், நாணி னாதலான்;
மன்னும்யான் உணரலேன்; மாதர் உற்றநோய்
துன்னி நீ அறிதியோ தோன்றல்!" என்றதே. 247
247. உற்ற நோய் - தாம் உற்ற காம நோயை. கண்ணனார்க்கும் - கண்போன்ற தோழியர்க்கும். இன்னது - இத்தன்மைத்து. நாணின் ஆதலால் - உயிரினும் சிறந்த நாணம் தோன்றித் தடுப்பதனால். மன்னும்- மிகவும். துன்னி - நெருங்கிச் சென்று. அறிதியோ - அறிவாயோ.
சீவகன் கூறுவது கேட்டுக் கிளி கூறல்
சொல்ம ருந்துதந் தாய்! சொல்லும் நின்மனத்து
என்அ மர்ந்தது உரைத்துக் கொள் நீ" என,
"வில்நி மிர்ந்தநின் வீங்கெழில் தோள்,அவட்கு
இன்ம ருந்து; இவை வேண்டுவல்" என்றதே. 248
248.சொல் மருந்து - சொல்லாகிய மருந்து. குணமாலை சொல்லும் சொல்லை மருந்தென்றான். சீவகனும் வேட்கையுற்று மெலிந்திருக்கின்றானாதலின். அமர்ந்தது என் உரைத்துக்கொள் – பொருந்தியது எதுவோ அதனை உரைத்துக்கொள். என - என்று சீவகன் மொழியவே. வில் நிமிர்ந்த நின் வீங்கு எழில் தோள் - வில் சுமந்துயர்ந்த நின்னுடைய பெரிய அழகிய தோளே. இவை வேண்டுவல் - சொல் வேண்டா; இத்
தோள்களையே அவட்கு வேண்டுமென வேண்டுவேன்.
சீவகன் தன் உடன்பாடு உரைத்தல்
"பொற்குன் றாயினும் பூம்பழ னங்கள்சூழ்
நெற்குன் றாம்பதி நேரினும் தன்னையான்
கற்குன் றேந்திய தோளிணை கண்ணுறீஇச்
சொற்குன் றா;புணர் கேன்;சொல்லு போ" என்றான். 249*
249.பொற்குன்று - குன்றளவாகிய பொன். பூம் பழனங்கள் - பூக்கள் நிரம்பிய நீர் நிலைகள். நெல் குன்றாம் பதி - நெல் குன்றளவாகக் குவியுமாறு விளையும் ஊர். நேரினும் - தரவேண்டுமெனினும். கற்குன்று ஏந்திய தோள் இணை - மலைபோல் உயர்ந்த இரு தோள்கள். கண்ணுறீஇ - சேர்த்தி. புணர்கேன் - புணருவேன். சொல்குன்றா - இச் சொற்கள் தவறமாட்டா.
கிளி ஓலை பெற்றுப் போதல்
"சேலை வென்றகண் ணாட்குஇவை செப்பரிது;
ஓலை யொன்றுஎழு திப்பணி நீ" என,
மாலை மார்பன் கொடுப்பத் தினைக்குரல்
ஓலை யோடுகொண் டோங்கிப் பறந்ததே. 250
250.சேலை வென்ற - சேல் மீனை ஒத்த; செப்பு அரிது – கூறு தல் முடியாது. எழுதிப் பணி- எழுதித் தந்தருள்க. என - என்று கிளி கேட்கவே. தினைக்குரல் ஓலையோடு - திணைக்கதிரில் வைத்துச் சுருட்டித் தந்த ஓலையுடன். ஓங்கி - உயர்ந்து.
கிளி நீங்கிய பின் சீவகன் தத்தையிருந்த பெருமனைக்குச் சென்று காண, அவள் பூம்புடவை யொன்றால் தன் "கிழவி முன்னர்த் தற்புகழ் கிளவி, வி*ளைவயின் உரிய வென்ப" (தொல்.கற்பு,40) என்பதன் கருத்தால், சீவகன் தன் தோளைக் "கற்குன்றேந்திய தோள்" என்றது அமையும்.
மேனி முழுவதும் போர்த்துக்கொண்டு புலவியால் கண்மூடாது விழித்துக் கிடந்தாள். அவன் அவளது புலவி தீர்த்து மகிழ்வித்தான். இப்பால்,
கிளியைத் தூதுவிடுத்துக் குணமாலை வருந்தி நிற்றல்
தன் துணைவி கோட்டியினில் நீங்கித் தனியிடம்பார்த்து
இன்துணைவற் சேர்வான் இருந்ததுகொல்! போந்ததுகொல்!
சென்றதுகொல்! சேர்ந்தது கொல்! செவ்வி யறிந்துஉருகும்
என்துணைவி மாற்றம்இஃது என்றதுகொல்! பாவம்!! 251
251. கோட்டியினில்-கூடியிருக்கும் இருப்பிலிருந்து, சேர்வான், இடம் பார்த்து இருந்ததுகொல் என இயையும். துணைவி-காந்தருவதத்தை. போந்தது கொல்-செவ்வி பெறாமையால் வறிதே வந்து விட்டதோ. சென்றது கொல்-காலம் பார்த்துப் பொறுத்துச் சென்றதோ. உருகும்-காமத்தீயால் உருகும். துணைவி-ஈண்டு குணமாலை மேற்று.
பாவம்-என் கிளிப்பிள்ளையும் யானும் பட்டது என் என்றும் குறிப்பு.
செந்தார்ப் பசுங்கிளியார் சென்றார்க்கோர் இன்னுரைதான்
தந்தாரேல் தந்தார்என் இன்னுயிர்: தாம் தாராரேல்
அந்தோ குணமாலைக்கு ஆ!தகாது என்று உலகம்
நொந்துஆங்கு அழமுயன்று நோற்றானும் எய்துவனே. 252
252. செந் தார்-கிளியின் கழுத்தில் தோன்றும் வரைகள். கிளியார், உயர்த்தற்கண் வந்தது. என் இன் உயிர் தந்தார்-நீங்கும் நிலையிலுள்ள என் இனிய உயிர் நீங்கா வகையைத் தந்தாராம். தகாது-குண மாலைக்கு இவ் விறந்துபாடு தகாதே என்று. நொந்து அழ-உளம் வருந்தி அழ இறப்பேன். ஆங்கு முயன்று நோற்றானும் எய்துவன்-சரமஞ்சரிபோல முயன்று தவஞ்செய்தாயினும் அவரை எய்துவேன்.
கூடலிழைத்தல்
சென்றார் வரைய கருமம் செருவேலான்
பொன்தாங் கணியகலம் புல்லப் பொருந்துமேல்,
குன்றாது கூடுகஎனக் கூறிமுத்த வார்மணல்மேல்
அன்றுஆங்கு அணியிழையாள் ஆழியிழைத் தாளே. 253
253. சென்றார் வரைய கருமம்-ஒரு வினையின் விளைவு அதனை முடிக்கப் போனாருடைய அறிவின் அளவாயிருக்கும். செருவோன்-சீவகன். பொன் தாங்கு அணி-பொன்னாற்செய்த பூண். அகலம்-மார்பு. புல்லப் பொருந்துமேல்-தழுவுதல் கூடுமாயின், முத்த வார் மணல்- முத்துக்களாகிய ஒழுகிய மணல்மேல். அன்று ஆங்கு- அன்றே அப்பொழுதே. ஆழி-வட்டம் (கூடல் வட்டம்).
கிளி வருதல்
பாகவரை வாங்கிப் பழுதாகில் பாவியேற்கு
ஏகுமால் ஆவி; எனநினைப்பப் பைங்கிளியார்
மாகமே நோக்கி மடவாளே அவ்விருந்தா
ளாகும்யான் சேர்வல் எனச்சென் றடைந்ததே. 254
254. பாகவரை வாங்கி - வட்டத்தில் பாதியளவில் கீறி. பழுதாகில் -இக் கூடல் கூடாதாயின். நினைப்ப - குணமாலை நினைக்கையில். மாகம் - வானம். நோக்கி அவ்விருந்தாள் – பார்த்துக்கொண்டிருந்த அவள். மடவாளே - மடப்பம் பொருந்திய குணமாலையே. நான் நீங்கிய காலத்தினும் திரும்ப வருங்காலத்தில் அவள் மேனி மிக வேறுபட்டிருந்தமையின், கிளி இவ்வாறு ஐயுற்றடைவதாயிற்று.
கிளியை இனிது வரவேற்றவள் அது கொணர்ந்த ஓலையைக் காண்டல்.
தீம்பா லமிர்தூட்டிச் செம்பொன் மணிக்கூட்டில்
காம்பேர் பணைத்தோளி மென்பறவை கண்படுப்பித்து
ஆம்பால் மணிநாம மோதிரந்தொட் டையென்னத்
தேம்பா எழுத்தோலை செவ்வனே நோக்கினாள். 255
255. தீம்பால் - இனிய பால். காம்பு ஏர் பணைத்தோளி – மூங்கில் போலும் பருத்த தோளையுடைய குணமாலை. ஆம் பால் - ஆகும் பகுதியினையுடைய. நாம மோதிரம் - சீவகன் பெயர் பொறித்த கணையாழி. ஐயென்ன - விரைவாக. தேம்பா எழுத்து ஓலை - தேம்பாமைக் (வருந்தாமைக் ) கேதுவாகிய எழுத்துகளையுடைய ஓலை.
சீவகன் விடுத்த ஓலை
கொடுஞ்சிலையான் ஓலை: குணமாலை காண்க!
அடுந்துயரம் உள்சுடவெந்து ஆற்றாதேன் ஆற்ற
விடுந்த சிறுகிளியால் விம்மல்நோய் தீர்ந்தேன்;
நெடுங்கணாள் தானும் நினைவகல்வா ளாக. 256
256. கொடுஞ்சிலையான் - இவ்வாறு சீவகன் தன்னைக் கூறுதற்கு அமைதி "பொற்குன்றாயினும் " (செய். 249) என்புழிக் கூறினாம். இன்னார் ஓலை இன்னார் காண்க என்றல் முறை. அடுந்துயரம் - வருத்தும் காமநோய். ஆற்றாதேன் - ஆற்றேனாகிய யான். விடுந்த- விடுத்த. ; விகாரம் விம்மல் மிக்க நினைவு - மிக்க வருத்தம்.
ஈட்டஞ்சால் நீள்நிதியும் ஈர்ங்குவளைப் பைந்தடஞ்சூழ்
மோட்டு வளம்சுரக்கும் ஊரும் முழுதீந்து
வேட்டார்க்கு வேட்டனவே போன்றினிய வேய்மென்றோள்
பூட்டார் சிலைநுதலாட் புல்லா தொழியேனே. 257
257.ஈட்டம் சால் - அறநெறியே ஈட்டுதற்கமைந்த. நீள்நிதி - மிக்க செல்வம். ஈர்ங் குவளை - குளிந்த குவளைகள். பைந் தடம்- பசிய நீர்நிலை. மோட்டு வளம்* - பெரிய வளம். முழுது ஈந்து – விரும்புமாறே குறைவறக் கொடுத்து. வேட்டார்க்கு ............... மென்றோள்- அரிய பொருள்களை விரும்பினாருக்கு விரும்பியவாறே அவற்றைப் பெற்றாற்போல இனிய வாகிய மெல்லிய தோள். பூட்டார் சிலைநுதல் - நாணால் பூட்டப்பட்ட வில்போலும் நுதல்.
குணமாலை மனந்தேறித் தெய்வம் பரவுதல்
"பாலவியும் பூவும் புகையும் படுசாந்தும்
காலவியாப் பொன்விளக்கும் தந்தும்மைக் கை தொழுவேன்;
கோலவியா வெஞ்சிலையான் சொற்குன்றா னாகஎனவே
நூலவையார் போல்நீங்கள் நோக்குமினே" என்றாள். 258
258.பாலவி - பாற் பொங்கல். சாந்து - சந்தனக் கலவை. கால் அவியா விளக்கு - காற்றால் அவியாத விளக்கு: மணி விளக்கு. உம்மை- எழுத்துக்களாகிய தெய்வங்களை. கோல் அவியா வெஞ்சிலை- அம்பு இடைவிடாமல் எய்கின்ற கொடிய வில். சொற் குன்றானாக - எழுத்துக்களாகிய தஞ்சொல் தவறானாயினும். நூலவையார் போல் - அற நூல்களை யோதிய பெரியோர்போல. நோக்குமின் - இடையூறின்றிச் சொல்லியவாறே செய்வானாக வென்று கருதி நோக்குமின். "நீங்கள் என்றது எழுத்துக்களை; அவற்றின் தன்மையும் வடிவும் ஆசிரியர்க்கல்லது உணரலாகாமையின், நூலில் (இலக்கண நூலில்) விளங்கக் கூறிற்றிலரேனும், சமய நூலகளிற் கூறுதலின், அவ்வெழுத்துக்களைத் தெய்வமென்றே கொள்க." இவ்வெழுத்துக்கள் சீவகன் ஓலையில் எழுதிய எழுத்துக்கள். அவற்றைப் பார்த்தே இது கூறுகின்றாள்.
இஃது இவ்வாறாக, குணமாலையின் பெற்றோர், அவளது தாய்க்கு மூத்த தமையன் மகனுக்கு அவளை மணம் புணர்க்கக் கருதினர்; இச் செய்தியை யறிந்த செவிலித்தாய் குணமாலைக்குக் கூறினள். இதனைக் கேட்கப்பொறாத குணமாலை தன் இருகையாலும் இருகாதுகளையும் பொத்திக்கொண்டு வருந்தினாள்.
குணமாலை மறுத்துரைத்தல்
"மணிமதக் களிறு வென்றான் வருத்தச்சொற் கூலி யாக
அணிமதக் களிற னானுக்கு அடிப்பணி செய்வ தல்லால்,
துணிவதென்? சுடுசொல் வாளால் செவிமுதல் ஈரல்' என்றாள்.
பணிவரும் பவளப் பாவை பரிவுகொண் டனைய தொப்பாள். 259
259. மணி மதக் களிறு - பக்கத்தே மணி கட்டிய மத யானை, வென்றவன் - வென்ற சீவகன். வருத்தச் சொல் கூலியாக – யானையை அடர்த்த காலத்தில் இவனைக் "கொண்டுய்யப் போமீன்" (செய். 235) என்ற சொல்லிற்குக் கூலியாக. அடிப்பணி - தாழ்ந்து ஏவல் செய்வது. சுடு சொல் வாள் - சுடு சொல்லாகிய வாளால். செவி முதல் ஈரல் - செவியிடத்தே அறுக்க வேண்டா. பணி........ஓப்பான் - சீவகனைத் தவிரப்
பிறர் எவரையும் பணிதல் இல்லாத, பவளத்தாற் செய்த பாவை வருத்தம் கொண்ட தன்மையை யொத்தவளான குணமாலை.
"கந்துகப் புடையிற் பொங்கும் கலினமா வல்லன் காளைக்கு
எந்தையும் யாயும் நேரா ராய்விடின் இறத்தல் ஒன்றோ,
சிந்தனை பிறிதொன் றாகிச் செய்தவம் முயறல் ஒன்றோ,
வந்ததால் நாளை" என்றாள் வடுவெனக் கிடந்த கண்ணாள். 260
260. கந்துகப் புடையில் - பந்தினது புடைத்தல் பொன்று. கலின மா - வார் கட்டிய குதிரை. வல்லன் - வல்லுநனான, நேராராய் விடின் - மணம் செய்து தாராராயின். பிறிதொன்று - வேறொன்று. ஆகி - ஆக. வந்ததால் - இரண்டில் ஒன்று எய்திவிட்டது. வடு - மாவடு. பிறிது ஒன்றாதலாவது பெற்றோர் நினைவு கைகூடாது வேறாய்ப் போவது. தவம் முயறல், தான் சீவகனைப் பெறுதற்கு.
குணமாலையின் முதுக்குறைவு கேட்ட செவிலி, மகளின் கற்பு நலத்தை வியந்து மகிழ்ந்து அவளது பெற்றோர்க்குச் சொல்ல, அவர்களும் அவள் விரும்பியவாறே சீவகனுக்குக் குணமாலையை மணம்புரிவிக்கத் தொடங்கிச் சான்றோர் நால்வரை மகட்கோள் உரைத்தற்குக் கந்துக்கடன்பால் விடுத்தனர். கந்துக்கடன் முதற்கண் அவர்களை இனிது வரவேற்று மிக்க சிறப்புச் செய்தான்.
சான்றோர் மகட்கொடை நேர்ந்து உரைத்தல்
"யாம்மகள் ஈதும்; நீர்மகட் கொண்மீன் எனயாரும்
தாம்மகள் நேரார்; ஆயினும் தண்ணென் வரைமார்பில்
பூமகள் வைகும் புண்ணியப் பொற்குன் றனையானுக்கு
யாம்மகள் நேர்ந்தோம் இன்று" என நாய்கற் கவர்சொன்னார். 261
261.மகட்கொண்மின் - எம் மகளை மணம் செய்து கொண்மின், நேரார் - வலியக் கொடுப்பது இல்லை. தாம் மகள் - தம்மகள்; விகாரம். வரைமார்பு - மலைபோல் உயர்ந்த மார்பு. பூமகள் - திருமகள். புண்ணியக் குன்று - புண்ணியமாகிய மலை. இன்று நேர்ந்தேம் - இன்று புது முறையாகத் தந்தோம். நாய்கன் - கந்துக்கடன். அவர் - சென்ற சான்றோர். அவர் கூறியவாறே இச் செய்யுள் கூறுகின்றது.
கந்துக்கடன் மகிழ்ந்துரைத்தல்
"சுற்றார் வல்வில் சூடுறு செம்பொன் கழலாற்குக்
குற்றேல் செய்தும் காளையும் யானும்; கொடியாளை
மற்சேர் தோளான் தன்மரு மானுக் கருள்செய்யப்
பெற்றேன்" என்னப் பேசினன் வாசம் கமழ்தாரான். 262
262. சுற்றார் வல் வில் - வரிந்து கட்டப்பெற்ற வலிய வில். சூடுறு - நன்கு காய்ச்சப்பட்ட. குற்றேல்- குற்றேவல். செய்தும் – செய்யக் கடவேம். கொடியாளை - கொடிபோன்ற குணமாலையை. மல் சேர் தோளான் - மற்போர் பயின்ற தோளையுடைய குபேரமித்திரன். அருள் செய்யப் பெற்றேன் - கொடுக்கப் பெற்றேன். வாசம் - நறுமணம். தாரான் - தாரையுடைய கந்துக் கடன்.
குபேரமித்திரன் தானே மகட்கொடை நேர்தலாலும், கொள்வார் தாழவே வேண்டுதலாலும் இங்ஙனம் கூறினார்.
பின்பு அச் சான்றோர் கந்துகனுக்குச் சீவகன் யானையை அடர்த்துக் குணமாலையைக் காத்ததும், அவள் அவன்பால் கருத்துற்றதையும் விளங்கக் கூறி விடைபெற்றுக் குபேரமித்திரனையடைந்து நிகழ்ந்தவனைத்தும் மொழிந்தனர். பின்பு மணம் நேர்ந்த செய்தி சீவகற்கும் குணமாலைகும் தெரியவரவே, இருவரும் பெரு மகிழ்வெய்தினர். மண நாள்
குறிக்கப்பெற்றது
திருமணம்.
.
கரைகொன் றிரங்கும் கடலின்கலி கொண்டுகல்லென்
முரசம் கறங்க முழவிம்மவெண் சங்கமார்ப்பப்
பிரசம் கலங்கிற் றெனமாந்தர் பிணங்கவேட்டான்
விரை சென் றடைந்த குழலாளைஅவ் வேனிலானே. 263
263. கரைகொன்று இரங்கும் - கரையை யலைத்து முழங்கும். கலி கொண்டு - ஆரவாரம் கொண்டு; கறங்க - முழங்க.முழவிம்ம - முழவோசை மிக. வெண் சங்கம் - தவளச் சங்கு; இது மங்கல முழக்கம். பிரசம் கலங்கிற்றென - வண்டின் கூட்டம் கலங்கியது போல. பிணங்க - நெருங்க. விரை - மணம். அவ் வேனிலான்- நுதல் விழிக்கு அழியாத காமன் போன்ற சீவகன்; அழிந்த காமனுக்கு உருவில்லையாதலின் இங்ஙனம் கூறினார்.
புலவி நுணுக்கம் சீவகன் மகிழ்ந்துரைத்தல்
பூவார் புனலாட்டினுள் பூநறுஞ் சுண்ணம்
பாவாய் பணைத்தோள் சுரமஞ்சரி தோற்றாள்;
காவாதவள் கண்ணறச் சொல்லிய வெஞ்சொல்
ஏவோ அமிர்தோ எனக்குஇன்று? இது சொல்லாய். 264
264. பூவார் புனல் - பூக்கள் மிதக்கும் தண்ணீர். பூ - அழகிய. பணை - மூங்கில். காவாது - சொற்பயன் நோக்காது. கண் அற - இரக்கமின்றி. வெஞ்சொல் - வெவ்விய சொல். ஏவோ - துன்பம் தருவதோ, அமிர்தோ - இன்பம் தருவதோ. வென்றவரே புனலாடுக என்றதனால், குணமாலை புனலாடியதும், யானை யெதிர்ப்பட்டதும், சீவகனைக் காண்பதுவும், பின்பு கூட்டமும் பெறுதலின், "காவாது அவள் சொல்லிய" என்றான்.
குணமாலை புலத்தல்
நற்றோள வள்சுண் ணநலம் சொலுவான்
உற்றீர், மறந்தீர்; மனத்துள் உறைகின்றாள்;
செற்றால்அரி தால்; சென்மின்; போமின் தீண்டாது;
எற்றேஅறி யாதஓர் ஏழையெ னோயான்? 265
265. நற்றோளவள் - நல்ல தோளையுடைய சுரமஞ்சரி.சொலுவான் உற்றீர் - சொல்லுதற்கே முதற்கண் கருதினீர். உறைகின்றாள் - இருக்கின்றாள். செற்றால் அரிது - அவன் சினங் கொண்டால் அதனைத் தீர்ப்பது அரிது. சென்மின் - இவ்விடத்தைவிட்டுச் செல்லுமின். இவ்வாறு சொன்னதும் சீவகன் அவளைத் தீண்டலுற்றமையின், " தீண்டாது போமின்" என்றாள். எற்றே - என்னே. அறியாத - நுமக்கு வரும் வருத்தம் நினந்து வருந்தாத. ஏழை - அறிவிலி.
தூமம்கமழ் பூந்துகில் சோர அசையாத்
தாமம்பரிந் தாடுதண் சாந்தம் திமிர்ந்திட்டு
ஏமன்சிலை வாணுதல் ஏற நெருக்காக்
காமன்கணை யேர்கண் சிவந்து புலந்தாள். 266
266. தூமம் - அகிற்புகை. சோர - சிறிது நெகிழ. அசையா - இறுகவுடுத்து. தாமம் - மாலை. பரிந்து - அறுத்து. ஆடு சாந்தம்- பூசிய சாந்தம். ஏமன் சிலை - அம்பு தொடுக்கப்படும் வில். நுதல்-ஈண்டுப் புருவத்தின் மேற்று. காமன் கணையேர் - மலர் அம்பு போலும்.
சீவகன் புலவி தீர்த்தல்
மின்னேர் இடையாள்அடி வீழ்ந்தும் இரந்தும்
சொல்நீர் அவள் அற்பழ லுட்சொரிந் தாற்ற,
இந்நீரன கண்புடை விட்டகன்று இன்பம்
மன்னார்ந்து மதர்ப்பொடு நோக்கினள் மாதோ. 267
267. இரந்தும் - வேண்டியும். சொல்நீர் - சொல்லாகிய தண்ணீர். அன்பு அழலுள் - அன்பாகிய நெருப்பிடத்தே. ஆற்ற - ஆறும்படி செய்ய. இந் நீரன - இத்தன்மையான புலவிகளை. கண்புடை விட்டகன்று- கண்களின் மதர்ப்போடு பக்கத்தே நோக்கிக் கைவிட்டு. கண் மதர்ப்போடு கைவிட்டு என இயைக்க. மன் ஆர்ந்து - மிக நிறைதலால்.
அன்று நீர்விளையாட்டுக் காலத்தே மதம் மிக்குக் குணமாலையைக் கொல்லப்போந்த அசனிவேகம் என்னும் அரசுவா, தான் சீவகனுக்குத் தோற்றோடி வந்த மானத்தால், மதம் தணிந்து, உணவு கொள்ளாது நாளும் மெலிவதாயிற்று. அதனை யறிந்த வேந்தனாகிய கட்டியங்காரன், "உற்றது என்?" என்று பாகரை வினவ, அவன் குறிப்பறிந்து அப் பாகர், "நீர் விளையாடிய நாளில் சீவகன் இதற்குச் சினமுண்டாக்கி யடர்த்தான்., அன்றுமுதல் இஃது இவ்வாறு மெலிவதாயிற்று." என்றனர். வேடுவரை வெருட்டி அவர் கவர்ந்து சென்ற ஆனிரையைச் சீவகன் மீட்டதுமுதல் கட்டியங்காரனுக்குச் சீவகன்பால் பகைமையுண்டா யிருந்தமையின், தன் வீரரை விளித்துச் "சீவகனை இன்னே பிணித்துக் கொணர்மின்" என்று பணித்தான். வீரர் பலர்
சீவகன் இருந்த மனையை நோக்கி வந்தனர்.
வீரர் வரவைச் சீவகன் அறிதல்
திங்கள்சேர் முடியி னானும் செல்வியும் போன்று செம்பொன்
இங்குவார் கழலி னானும் கோதையும் இருந்த போழ்தில்,
சிங்கவே றெள்ளிச் சூழ்ந்த சிறுநரிக் குழாத்திற் சூழ்ந்தார்;
அங்கது கண்ட தாதி ஐயனுக் கின்ன தென்றாள். 268
268. திங்கள் சேர் முடியினான் - பிறைத் திங்களைச் சூடிய முடியுடைய சிவன். செல்வி - பார்வதி. பொன் இங்கு கழல் - பொன்னாலாகிய கழல். எள்ளி - மதியாது இகழ்ந்து. குழாத்தின் - கூட்டம்போல. இன்னது - இவ்வாறு சூழ்ந்து கொண்டனர்.
சீவகன் வீரரை வினாதல்
கடுகிய இளையர் நோக்கும் கண்ணிய பொருளும் எண்ணி
அடுசிலை யழல வேந்தி ஆருயிர் பருகற் கொத்த
விடுகணை தெரிந்து தானை வீக்கற விசித்து வெய்தாத்
தொடுகழல் நரல வீக்கிச் "சொல்லுமின் வந்தது" என்றான். 269
269. கடுகிய இளையர் - அரசனேவலால் கடுகி வந்த வீரர். கண்ணிய பொருளும் - அரசன் எண்ணிவிடுத்த செய்கையும். எண்ணி- சீவகன் தான் எண்ணி. அடு சிலை - பகைவரைத் தப்பாது கொல்லும் வில். அழல - சினந்து. தானை வீக்கற விசித்து - இறுகாதென்றும் உடையைக் கட்டி. வெய்தா - வெய்தாக. நரல - ஒலிக்க. வீக்கி - கட்டி.
வீரர் தலைவனான மதனன் தான் வந்தது சொல்லுதலும் அது கேட்டுச் சீவகன் சினந்துரைத்தலும்
"அடிநிழல் தருக என்றெம் ஆணைவேந் தருளிச் செய்தான்;
வடிமலர்த் தாரி னாய்நீ வரு"கென வானின் உச்சி
இடியுரு மேற்றின் சீறி யிருநிலம் சுடுதற் கொத்த
கடிமதில் மூன்று மெய்த கடவுளின் கனன்று சொன்னான்: 270
270. அடிநிழல் தருக - வீரர் தம் அரசன் கொணர்க என்றானென்கின்றமையின் "அடி நிழல்" என்றனர். ஆணையருளிச் செய்தான்- ஆணையிட்டுள்ளான். வடிமலர் - தேன் சொரியும் மலர். இடியுருமேறு - இடியேறு. சுடுதற் கொத்த - வானத்தே பரந்து திரிந்து சுடுவதற்குப் பொருந்தின. கடவுளின் - சிவனைப்போல. கனன்று - வெகுண்டு.
"வாளிழுக் குற்ற கண்ணாள் வருமுலை நயந்து வேந்தன்
கோளிழுக் குற்ற பின்றைக் கோத்தொழில் நடாத்து கின்றான்;
நாள்இழுக் குற்று வீழ்வ தின்றுகொல்? நந்த! திண்தேர்
தோள்இழுக் குற்ற; மொய்ம்ப! பண்ணெனச் சொல்லி னானே." 271
271. வாள் இழுக்குற்ற கண்ணாள் - தன் ஒளி மிகுதியால் வாள் ஒளியின்றி இழுக்குமாறு அமைந்த கண்ணையுடைய விசயை. நயந்து - விரும்பி. கோள் இழுக்குற்ற பின்றை - சூழ்ந்து கொள்ளப்படு உயிரிழந்த பின்பு. கோத் தொழில் - அரசாட்சி. நடாத்துகின்றான் - நடத்தும் கட்டியங்காரன். நாள் இழுக்குற்று - வாழ்நாள் முடிந்து. நந்த - விளி. நந்தட்டன் சீவகன் தம்பி; சுநந்தைக்கு மகன். தோள் இழுக்குற்ற - இனிக்
கட்டியங்காரன் தோள்கள் கெட்டன. பண் - தேர் பண்னமைப்பாயாக.
இவ்வாறு சொல்லக் கேட்ட நந்தட்டன் முதலிய தோழர்கள் சீவகனைக் காத்தற்குச் சிங்கவேறுபோலப் படை பண்ணலுற்றனர். இதனைப் பார்த்திருந்த கந்துக்கடன் தன்
மனத்தே வேறு நினைக்கலானான்.
கந்துக்கடன் உட்கோள்
"வேந்தொடு மாறு கோடல் விளிகுற்றார் செயல தாகும்;
காய்ந்திடு வெகுளி நீக்கிக் கைகட்டி இவனை யுய்த்தால்,
ஆய்ந்தடும் அழற்சி நீங்கும்; அது பொருள்" என்று நல்ல
சாந்துடை மார்பன் தாதை தன்மனத் திழைக்கின் றானே. 272
272. மாறு கோடல் - பகைத்துக்கொண்டு மாறுபடுதல்.விளிகுற்றார் - கெடுதலுற்றோர். கைகட்டி யுய்த்தால் - கையைப் போர்த் தொழில் செய்யாதபடி விலக்கிப் போகவிட்டால். ஆய்ந்து அடும் அழற்சி - வேந்தன் ஆராய்ந்து வருந்துதற்குரிய வெகுளி. பொருள் - செய்யத் தக்கது. மார்பன் - சீவகன். இழைக்கின்றான் - நுணுகி யெண்ணினான்.
இக் கருத்தைச் சீவகற்குரைப்ப, அவன் உட்கொண்ட போது, அச்சணந்தி யாசிரியன் உரைத்ததும் நினைவிற்கு வந்தது. பின்பு சீவகன் வீரர்கைப் படுவதே தக்கதென
வுணர்ந்து அடங்கி நின்றான்.
சீவகன் வீரர்கை யகப்படல்
ஈன்றதாய் தந்தை வேண்ட இவ்விட ருற்ற தென்றால்
தோன்றலுக்கு ஆண்மை குன்றாது என்றசொல் இமிழிற் பூட்டி
மூன்றனைத் துலக மெல்லாம் முட்டினு முருக்கு மாற்றல்
வான்தரு மாரி வண்கை மதவலி பிணிக்கப் பட்டான். 273
273.வேண்ட- கேட்டுக்கொள்ள. இடர் - வீரர் கையகப் படுதல். தோன்றலுக்கு - சீவகனுக்கு. சொல்லிமிழிற் பூட்டி – சொல்லாலே கயிறுபோலப் பிணிக்கப்பட்டு, மூன்றனைத் துலகம் - மூன்றாகிய உலகமனைத்தும். முட்டினும் - எதிர்த்தாலும். எல்லாம் முருக்கும் - அவற்றை யெல்லாம் கெடுக்கும். வான்தரும் மாரி - மழையைப் பொழியும் முகில். மதவலி - சீவகன்.
கண்டிருந்த மக்கள் புலம்புவதொருபுறமாக, சுநந்தை வருந்துதல்
தோளார் முத்தும் தொன்முலைக் கோட்டுத் துயல்முத்தும்
வாளார் உண்கண் வந்திழி முத்தும் இவைசிந்தக்
காளாய்! நம்பி! சீவக சாமி!! என நற்றாய்,
மீளாத் துன்ப நீள்கடல் மின்னின் மிசைவீழ்ந்தாள். 274
274.தோளார் தொன்முத்து - தோளிடத்தே எய்தும் முத்து. மகளிர் கழுத்திடத்தும் முத்துப் பிறக்கும் என்ப. கோடு - முனை. துயல் - அசையும். இழிமுத்து - இழிகின்ற கண்ணீர்த் துளியாகிய முத்து. காளாய் - காளையே. நற்றாய் - நல்ல தாயாகிய சுநந்தை. மின்னின் - மின்னற்கொடி போல.
குணமாலை துயருறுதல்
பாலா ராவிப் பைந்துகி லேந்திப் படநாகம்
போலா மல்குற் பொற்றொடி பூங்கண் குணமாலை
"ஏலாது ஏலாது எம்பெரு மானுக்கு இஃது" என்னா
நூலார் கோதை நுங்கெரி வாய்ப்பட் டதுஒத்தாள். 275
275.பாலாராவிப் பைந்துகில் - பாலாவி போன்ற பசிய துகில். நாக படம் போலாம் - நாகத்தின் படம்போல வுள்ள. என்னா - என்று கூறி. நூல் ஆர் கோதை - நூலால் கோக்கப்பட்ட மாலை. நுங்கு எரி - விழுங்குகின்ற நெருப்பு. குணமாலை, கோதை, எரிவாய்ப்பட் டது ஒத்தாள் என்க.
கந்துக்கடன் மகளிரைத் தெளிவித்தல்
கண் துயி லனந்தர் போலக் கதிகளுள் தோன்று மாறும்;
விட்டுயிர் போகு மாறும் வீடுபெற் றுயரு மாறும்
உட்பட வுணர்ந்த யானே யுன்குழைந் துருகல் செல்லேன்;
எட்பக வனைத்தும்ஆர்வம் ஏதமே; இரங்கல் வேண்டா. 276
276. கண்துயில் அனந்தர்போல - கண்ணுறக்கமும் உணர்வும் போல. கதி - பிறப்பு. உள் குழைந்து - மனம் கசிந்து. உருகல் செல்லேன் - உருகுதலில் செல்லேன். எட்பக வனைத்தும் - என்னின் ஒருபாதி யளவும். ஆர்வம் - பற்றுவைத்தல். ஏதம் -குற்றம்.
சீவகன் செல்வதனைக்கண்டோர் கூறிக்கொள்ளுதல்
வினையது விளைவு காண்மின் என்றுகை விதிர்த்து நிற்பார்;
இனையனாய்த் தெளியச் சென்றால் இடிக்குங்கொல் இவனை யென்பார்;
புனைநலம் அழகு கல்வி பொன்றுமால் இன்றோ டென்பார்:
வனைகலத் திகிரிபோல மறுகும்எம் மனங்கள் என்பார். 277
277. வினை - தீவினை. கைவிதிர்த்து - கைம்முறித்து. இனையனாய் - கையகப்பட்டுச் சென்றான்போலப் போருந்தன்மையனாய். தெளிய - அரசன் தெளியுமாறு. இடிக்கும் கொல் - கொல்லுவானோ. புனைநலம் - செயற்கையழகு. பொன்றும் - கெடும். வனைகலத் திகிரி – மட்கலம் செய்யும் சக்கரம். மறுகும் - மயங்குகின்றது.
நோற்றிலர் மகளிர் என்பார்; நோம்கண்டீர் தோள்கள் என்பார்;
கூற்றத்தைக் கொம்மை கொட்டிக் குலத்தொடு முடியும் என்பார்;
ஏற்றதொன் றன்று தந்தை செய்தஇக் கொடுமை என்பார்;
ஆற்றலள் சுநந்தை என்பார்; ஆதகாது அறனே என்பார். 278
278. கொம்மை கொட்டி - தட்டியழைத்து. ஏற்றது - தக்கது. தந்தை - கந்துக்கடன். ஆற்றலன் - பொறுக்கமாட்டான். ஆ, அறனே தகாது - ஆ, அறமே! இது நினக்குத் தக்கதன்று.
சீவகன் வீரரிடையே அவருடன் போதல்
நீரகம் பொதிந்த மேக நீனிற நெடுநல் யானைப்
போர்முகத் தழலும் வாட்கைப் பொன்னெடுங் குன்ற மன்னான்,
ஆர்கலி யாணர் மூதூர் அழுதுபின் செல்லச் செல்வான்,
சீருறு சிலம்பி நூலால் சிமிழ்ப்புண்ட சிங்க மொத்தான். (279)
279. நீர் அகம் பொதிந்த மேகம் - நீரை முகந்துகொண்டுள்ள கருமுகில். நீல் நிற யானை - கரிய நிறத்தையுடைய யானை. யானையும் வாட்கையுமுடைய குன்றம் போல்வானாகிய சீவகன். போர் முகத்து அழலும் வாட்கை - போர்க்களத்தே நெருப்பென விளங்கும் வாளேந்திய கை. ஆர்கலி - மிக்க ஆரவாரம். யாணர் - புதுவருவாய். சிலம்பி -சிலந்தி. சிமிழ்ப்புண்டது - கட்டுண்டது.
கந்துக்கடன் விரைந்து அரசனை யடைந்து பன்னிரு கோடிப் பசும் பொன்னைத் தந்து அவனது சீற்றத்தைத் தணிக்க முயல்வானானான்.
கத்துக்கடன் அரசற்குக் கூறல்.
மன்னவ, அருளிக் கேண்மோ மடந்தையோர் கொடியை மூதூர்
நின்மதக் களிறு கொல்ல நினக்கது வடுவென் றெண்ணி,
என்மகன் அதனை நீக்கி இன்னுயி ரவளைக் காத்தான்;
இன்னதே குற்ற மாயின், குணமினி யாது? வேந்தே! (280)
280. மடந்தை ஓர் கொடியை - மடந்தையாகிய ஒரு கொடி போன்ற குணமாலை யென்பவளை. கொல் - கொல்வதற்குச் செல்ல. வடு - பழியாம். அவனை இன்னுயிர் காத்தான் - அவனை உயிர் தப்புவித்தான். இன்னது - இது.
நாண்மெய்க்கொண் டீட்டப் பட்டார் நடுக்குறு நவையை நீக்கல்
ஆண்மக்கள் கடனென் றெண்ணி யறிவின்மை துணிந்த குற்றம்
பூண்மெய்க்கொண் டகன்ற மார்ப பொறுமதி என்று பின்னும்
நிண்மைக்கண் நின்று வந்த நிதியெலாம் தருவல் என்றான். 281
281. நான்மெய்க் கொண்டு ஈட்டப்பட்டார் - நாணம் முதலாகியவற்றால் மெய்யும் உருவுமாகச் சமைக்கப்பட்ட மகளிர். நவை - துன்பம். எண்ணி - களிற்றினைத் தான் பெயர்த்த ஆனிரைபோலக் கருதி. அறிவின்மை - அறியாமையால். மெய்க்கொண்டு - மெய்யிலே யணிந்து. நீண்மைக்கன் நின்று வந்த நிதி - தொன்றுதொட்டு வந்த நிதியனைத்தும்.
இதனோடமையாது, வேட்டுவரை வெந்நிட்டோடச் செய்து அவர் கவர்ந்து சென்ற ஆனிரைகளை மீட்டு அரசற்கு நிகழவிருந்த வடுவைச் சீவகன் மாற்றியதையும் கந்துகன் விதந்தோதினன்.
கட்டியங்காரன் சினம் தணியாது செய்வது கூறல்
ஆய்களிற் றசனி வேகம் அதன்மருப் பூசி யாகச்
சீவகன் அகன்ற மார்பம் ஓலையாத் திசைகள் கேட்பக்
காய்பவன் கள்வ ரென்ன எழுதுவித் திடுவல்; இன்னே
நீபரி வொழிந்து போய்நின் அகம்புகு; நினையல்; என்றான். 282
282. ஆய்களிறு - வருந்திய யானை. ஊசி - எழுத்தாணி. திசைகள் கேட்ப - எல்லாதிசையினுமுள்ள அரசரும் வெள்ளிமலையி லுள்ளாரும் கேட்குமாறு. கள்ளரென்னக் காய்பவன் - கள்வர் கொல்லப்படுமாறுபோல என்னால் கொல்லப்படுவானாவன். பிரிவு - வருத்தம். நினையேல் - இதனை நினையாதே. "கொல்லுதலை எழுதுவிப்பேன் என்றான். இதனால் தனக்குப் புகழ் நெடுங்காலம் நிற்குமென்று கருதி."
இச் சொற்களால் மனம் புண்பட்டு ஆற்றானாய்க் கந்துகன் தன் மனைக்கு மீண்டான். அவன் முயற்சி பயன் தாராமை கண்டு சுநந்தையும் ஆறாத் துயருறுவாளாயினள்.
அப்போழ்தில், கந்துகன் பண்டு நிகழ்ந்ததொரு நிகழ்ச்சியைக் கூறலுற்று, "சுநந்தாய், பண்டு உனக்குப் பல குழந்தைகள் பிறந்து பிறந்து இறந்தன; ஒருகால், யான் கருக்கொண்டிருக்கும் இம் மகவு இறப்பின் யான் உயிர்தரியேன் என்று உட்கொண்டனை; அப்போது ஒரு முனிவன் வந்தான்; அவற்குப் பசி தீர உணவளித்து உற்ற குறையைத்
தெரிவிக்க அவன், "நீவிர் கவலல் வேண்டா; நீவிர், ஒரு மகனைப் பெறுவீர். அவனை ஒரு காலத்தே அருளிலான்
ஒருவன் கைக்கொண்டு செல்வன்; அதுகண்டு ஊரவர் அஞ்சுவர்; நீவிரும் வருந்துவிர். ஆனால் அவனை ஓர் இயக்கன் கொண்டு சென்று காப்பான்; சிலபகல் கழிந்தபின் அவனைக் காண்பீர் என்று கூறினன். ஆதலால் நின் மனக்கவலை நீங்குவாயாக" என்று சொன்னான்.
பதுமுகன் முதலிய தோழர் செய்தியறிந்து செய்வது சூழ்தல்
நட்டவற் குற்ற கேட்டே பதுமுகன் நக்கு மற்றோர்
குட்டியைத் தின்ன லாமே கோட்புலி புறத்த தாக,
கட்டியங்கார னென்னும் கழுதைநம் புலியைப் பாய
ஒட்டியிஃ துணர லாமே யுரைவல்லை அறிக என்றான். 283
283 நட்டவற்கு உற்ற - நட்புச் செய்தவனாகிய சீவகனுக்கு நேர்ந்தவற்றை. நக்கு - சிரித்து. புலி புறத்ததாக , கழுதை, புலிக்குட்டியைத் தின்னல் ஆமே என்க. புறத்ததாக - புறத்தேயிருக்க. ஆமே – ஆகாது என்க. மற்று, வினைமாற்று. தான் பாதுகாக்கும் தொழிலுடைமையின் சீவகனைக் குட்டி யென்றான். நம் புலியைப் பாய - நம் புலியைப் பாய்தற்கு. இஃது ஒட்டியுணரலாமே - சீவகன் வீரர் கைப்பட்டான் என்னும்
இச்சொல் உண்மையாகாது. இதனை ஒற்றினால் ஒற்றியறியலாம். வல்லையறிக - இது ஒற்றற்குக் கூறுவது. விரைவில் இவ்வுரையின் உண்மையை யறிந்து வருக.
சென்ற ஒற்றன் முன்பு சீவகற்கு நிகழ்ந்த வனைத்தும் ஒன்றுவிடாது அறிந்து வந்துரைத்தான். சீவகன் வீரர் கைப்படுதற்குக் கந்துக்கடனும் ஓராற்றால் துணையானான் என்றறிந்து மதிமயங்குகையில், புத்திசேனன் என்பான் ஒரு சூழ்ச்சி சொல்லலுற்றான்.
புத்திசேனன் கூறல்
நிறைத்திங்கள் ஒளியொ டொப்பான் புத்திசேன் நினைந்து சொல்லும்;
மறைத்திங்கண் நகரை வல்லே சுடுதும்நாம்; சுடுத லோடும்
இறைக்குற்றேல் செய்த லின்றி எரியின்வாய்ச் சனங்கன் நீங்கச்
சிறைக்குற்றம் நீக்கிச் செற்றாற் செகுத்துக்கொண் டெழுதும் என்றான். 284
284 நிறைத் திங்கள் - கலைநிரம்பிய திங்கள். ஒப்பான் புத்தி சேனன் - ஒப்பவனாகிய புத்திசேனன். இங்கண் மறைத்து – இங்கே மறைந்திருந்து. சுடுதும் - சுடுவேம். இறைக்குற்றேல் செய்தலின்றி- இறைவனுக்குக் குற்றேவல் செய்வதை விடுத்து. எரியின்வாய் - எரியினிடம் அதனை அவித்தற்கு. செற்றான் - சிறையாகப்பற்றிய மதனன். செருத்து - கொன்று. சிறைக்குற்றம் நீக்கிக் கொண்டெழுதும் என
முடிக்க, மறைந்து, மறைத்தென விகாரம்.
இவன் இவ்வாறு கூற, இதனைத் தக்கதெனத் துணிந்த ஏனையோரும் மேலே செய்யக் கடவவற்றைப் பேசிக் கொண்டிருக்குமளவையில், நந்தட்டனும் நபுல விபுலர்களும், குபேரமித்திரனும், அவன் பகுதியினரும் பிறரும் வந்து ஈண்டினர். பதுமுகன் அவரவர் இருக்கவேண்டும் இருப்பும் வகுப்பும் காட்ட, எல்லோரும் அவ்வாறே இருந்தனர். இச் செய்தி காந்தருவதத்தைக்குத் தெரிந்தது.
தத்தை தனக்குப் பாதுகாவலாகத் தெய்வங்களை வருவித்தல்
பொன்னணி மணிசெ யோடை நீரின்வெண் சாந்து பூசித்
தன்னுடை விஞ்சை யெல்லாம் தளிரியல் ஓத லோடும்
மின்னுடை வாளும் வேலும் கல்லொடு தீயும் காற்றும்
மன்னுட னேந்தித் தெய்வம் மாதரைச் சூழ்ந்த வன்றே. 285
285 பொன் அணிமணி செய்ஓடை - பொன்னாலும் அழகிய மணியாலும் செய்த சாந்து மடல். நீரின் - நீருடன். தளிரியல் – தளிரினது இயலை (அழகை) யுடைய காந்தருவதத்தை. மின் அடு வாள் - மின்னலையும் தகர்க்கும் வாள். கல் - ஆலங்கட்டி. மன் - மிகுதி. தெய்வம் - தெய்வங்கள்.
தத்தை தன் விஞ்சையால் சீவகனைச் சிறைமீட்பின் வரும் பழி நினைந்து இரங்குதல்
மன்னன் செய்த சிறைமா கடலுட் குளித்தாழ்வுழித்
தன்னை யெய்திச் சிறைமீட்டனன் தன்மனை யாள்எனின்.,
என்னை யாவது இவன் ஆற்றலும் கல்வியு மென்றுடன்
கொன்னும் வையம் கொழிக்கும் பழிக்குஎன் செய்கோ, தெய்வமே 286*
286. சிறைமாகடல் - கைப்படுதலாகிய பெரிய கடல். முற்றவும் பற்றப்படுதலின், "குளித்தாழ்வுழி" யென்றார். எய்தி - சேர்ந்து. தன் மனையாள் - ஈண்டுக் காந்தருவதத்தை. என்னையாவது என்பதனத் தனிதனியே கூட்டி ஆற்றல் என்னையாவது, கல்வி யென்னையாவது என முடிக்க. என்னை, ஐ அசை. என்று வையம் கொன்னும் கொழிக்கும் - என்று உலகத்தார் பெரிதும் தூற்றும். செய்கோ - செய்வேன்.
ஆவதாக; புகழும் பழியும் எழுநாள் அவை
தேவர்மாட் டும்உள; மக்களுள் இல்வழித் தேர்கலேன்;
நோம்என் நெஞ்சம் என நோக்கி நின்றாள் சிறைப்பட்டதன்
காவற் கன்றின் புனிற்றாவன கார்மயிற் சாயலே. 287.
287. இல்வழித் தேர்கலேன் - இல்லாதாரைக் காண்கிலேன். சிறைப்பட்ட காவற்கன்றின் புனிற்றா - ஒரு சிறையிலேயுள்ள தன் காவலையுடைய கன்றை ஈன்றினமை தீராத ஆ. அனகார் மயிற்சாயல் - அந்த ஆவின் நோக்கினைப் போன்ற நோக்கினையுடைய, சாயலால் மயிலொத்த காந்தருவதத்தை. ஆ விடுவிக்க நோக்கிநின்றாற் போல நின்றான். இது பயவுமம்.
சீவகன் நினைவு
இனி, வீரர் குழாத்திடையே மதனனுடன் செல்லும் சீவகன் தன் உள்ளத்தே வெகுளித்தீப் பொங்கப் பல பொருள்களை நினைக்கலுற்றான்.
மா நகர் சுடுத லொன்றோ, மதனனை யழித்த லொன்றோ,
வானிக ரில்லா மைந்தர் கருதியது; அதுவும் நிற்க
வேய்நிக ரில்ல தோளி விஞ்சையால் விடுத்துக் கொள்ளப்
போயுயிர் வாழ்தல் வேண்டேன் எனப்பொருள் சிந்திக் கின்றான். 288
288. வான் நிகர் இல்லா மைந்தர் - வானமும் நிகர்க்கமாட்டாத வீரரான தோழன்மார். நிற்க - தாழ்வில்லை. வேய் - மூங்கில். இல்ல - இல்லாத, போய் - பிழைத்துப் போய். பொருள் - வேறே செய்யத்தக்கது.
கட்டியங்காரனைக் கோறற்கு ஒது காலமன்றெனத் தெளிந்து சுதஞ்சணனை நினைத்தல்
மின்னிலங் கெயிற்று வேழம் வேழத்தாற் புடைத்துத் திண்தேர்
பொன்னிலங் கிவுளித் தேரால் புடைத்துவெங் குருதி பொங்க
இன்னுயி ரவனை யுண்ணும் எல்லைநாள் வந்த தில்லை;
"என்னைஇக் கிருமி கொன்று?" என் தோழனை நினைப்ப லென்றான். 289
289. மின் இலங்கு எயிறு - ஒளிதிகழும் கொம்பு. வேழம் வேழத்தால் புடைத்து - யானையை யானையால் மோதித் தாக்கி. பொன்னிலங்கு இவுளித் தேர் - பொன்னணி யணிந்த குதிரை பூட்டிய தேர். எல்லைநாள் - கட்டியங்காரனுக்கு இறுதிக் காலமாகிய நாள். இக் கிருமி- சிறு பூச்சிகளையொத்த இப் படைவீரர்களை. கொன்று பெறுவது என்னை என முடிக்க. மக்கள் என்கிற கருத்தின்மையின் "கிருமி" என்றான்.
தோழன் - சுதஞ்சணன்.
இடியும் மின்னும் முழக்கமும் கலந்த பெரு மழையுடன் சுதஞ்சணன் வந்து சீவகனைக் கொண்டேகல்
விண்ணும் மண்ணும் அறியாது விலங்கொடு மாந்தர்தம்
கண்ணும் வாயும் இழந்தாம் கடல்கொண்டது காண்கெனப்
பெண்ணும் ஆணும் இரங்கப் பெருமான்மகன் சாமியை
அண்ண லேந்தி யகலம் புலிக்கொண்டெழுந் தேகினான். 290
290. அறியாது - அறியாதவாறு. இழந்து - இழப்ப. ஆம் கடல் - மேல் ஊழிக்காலத்தே வரும் கடல். விலங்குகள் மேயாமையின், "வாயிழந்தன." காண்க என - காண்கென. பெருமான் - சச்சந்தன். சாமி - சீவகன். சீவகனைச் சீவகசாமியென்றும் வழங்குப. அண்ணல் - பெருமையையுடைய சுதஞ்சணன். அகலம் புலிக்கொண்டு - மார்பில்
தழுவிக்கொண்டு. எழுந்து - மேனோக்கி யெழுந்து.
அதனைத் தன் விஞ்சையால் காந்தருவதத்தை யுணர்ந்து அவற்கு "நன்றுண்டாக" என்று வாழ்த்தினளாயினும், அவனை மறுவலும் காணும் நாள் என்றோ எனக் கலக்கமுற்றாள்.
பின்பு ஒருவாறு தேறி, தனக்குத் துணை செய்த தெய்வங்கட்கு அவள் விடை கொடுத்தனுப்பினள்.
சீவகன் மறைந்தது கண்ட மதனன் முதலாயினார் செய்வது சூழ்தல்
மலைத்தொகை யானை மன்னன் மைத்துனன் மதனன் என்பான்
கொலைத்தொகை வேலி னானைக் கொல்லிய கொண்டு போந்தான்
நலத்தகை யவனைக் காணான் நஞ்சுயிர்த் தஞ்சி நோக்கி
சிலைத்தொழில் தடக்கை மன்னற்கு இற்றெனச் செப்பு கின்றான். 291
291. கொலைத் தொகை வேலினான் - பல கொலைகளைச் செய்து சிறந்த வேலையுடைய சீவகன். கொல்லிய - கொல்லுதற்கு. நலத்தகையவன் - நல்ல அழகையுடைய சீவகன். நஞ்சுயிர்த்து - வெய்துயிர்த்து. சிலைத்தொழில் தடக்கை - விற்றொழிலில் வல்ல பெரிய கை. இற்று - இத்தன்மைத்து.
மன்னனாற் சீறப் பட்ட மைந்தனைக் கொல்லப் போந்தாம்;
என்னினிச் சொல்லிச் சேறும், என்செய்தும் யாங்க ளெல்லாம்;
இன்னது பட்ட தென்றால் எரிவிளக் குறுக்கும் நம்மைத்
துன்னுபு சூழ்ந்து தோன்றச் சொல்லுமின் செய்வ தென்றான். 292
292. மைந்தனை - சீவகனை. போந்தாம் - கைக்கொண்டு போந்த நாம். சொல்லிச் சேறும் - சொல்லிச் செல்வேம். பட்டது இன்னது - நேர்ந்தது இது; பட்டதுன்பம் இது என்றுமாம். எரி விளக்கு உறுக்கும் - நடை விளக்கு நம்மை எரிக்கும். நடைவிளக்கு - தலையிலும் தோளிலும் விளக்கேற்றிவைத்து. கைகளிலே துகிலைச் சுற்றி நெய்யில் தோய்த்து எரித்தல்.இது கல்வெட்டுக்களில் காணப்படுவது. துன்னுபு - நெருங்கி.
சூழ்ந்து - ஆராய்ந்து. தோன்ற - சூழ்ச்சி விளங்க.
அவர்கள் தங்களுள் ஒருவனைக் கொன்று, கட்டியங் காரனிடம் சீவகனைக் கொன்றதாகப் பொய்யே சொல்லி விடத் துணிந்து சென்றனர்.
மதனன் அரசற்குக் கூறல்
காய்சின வெகுளி வேந்தே களிற்றொடும் பொருத காளை,
மாசனம் பெரிது மொய்த்து மழையினோ டிருளும் காற்றும்
பேசிற்றான் பெரிதும் தோன்றப் பிழைத்துய்யப் போத லஞ்சி
வாசங்கொள் தாரி னானை மார்புபோழ்ந் துருட்டி யிட்டேம். 293
293. மாசனம் - மிக்க மக்கள் கூட்டம். மொய்த்து - மொய்த்த அளவிலே. பெரிதும் தோன்ற - மிகத் தோன்றுதலாலே. பிழைத்து உய்யப்போதல் அஞ்சி - எங்களைத் தப்பி அவன் உய்யப்போய் விடுவனென்று அஞ்சி. போழ்ந்து - பிளந்து. உருட்டியிட்டோம் - தள்ளி விட்டோம்.
அரசன் அதுகேட்டு மகிழ்ந்து சிறப்புச் செய்தல்
அருள்வலி யாண்மை கல்வி அழகறி விளமை யூக்கம்
திருமலி ஈகை போகம் திண்புகழ் நண்பு சுற்றம்
ஒருவர்இவ் வுலகில் யாரே சீவகன் ஒக்கும் நீரார்;
பெரிதரிது இவனைக் கொன்றாய் பெறுகஎனச் சிறப்புச் செய்தான். 294
294. வலி - மெய்வலி. ஆண்மை - ஆளுந்தன்மை. அறிவு - இயற்கையறிவு, திருமலி யீகை - செல்வம் மிகுகின்ற கொடை. போகம் - எல்லாவறையும் நுகரவல்லனாதல். ஒக்கும் நீரார் ஒருவர் யாரே என்க. ஏகாரம் எதிர்மறை. பெரிது அரிது - சீவகனைக் கொல்வது மிகவும் அரிது. பெறுக - யான் தரும் இவற்றைப் பெறுக.
குணமாலையார் இலம்பகம் முற்றும்.
--------
5. பதுமையார் இலம்பகம்.
[பதுமையார் இலம்பகம்: சீவகன் பதுமையை மணந்து கொண்ட செய்தியைக் கூறும் இலம்பகம். இதன்கண்,சீவகன் தேவனுடன் சில நாளிருந்து பின் பல நாடுகளையும் காண்டற்கு விரும்பி, அவன் காட்டிய நெறியைக் கடைப்பிடித்துப் பல்லவ
தேயத்தையடைந்து அரச குமாரனான உலோகபாலனைக் கண்டதும், அவன் தங்கை பதுமையென்பாள் பூக் கொய்யுமிடத்து அரவு தீண்டப்பெற்று உயிர் சோர்ந்ததும், அரசன் மகள் விடந் தீர்த்தார்க்கு அவளை மணம் செய்து கொடுப்பேனெனத் தெரிவித்ததும், சீவகன் விடந் தீர்த்ததும், அவளை மணந்து சின்னாள் தங்கியிருந்து, அவட்கு அறிவியாமலே நீங்கிச் சென்றதும், பதுமை தோழியொருத்தி தேற்றத் தேறியிருந்ததும், பிறவும் உரைக்கப்படுகின்றன.]
சுதஞ்சணனால் சிறை வீடு பெற்ற சீவகனது மன நிலை
விலங்கிவில் லுமிழும் பூணான் விழுச்சிறைப் பட்ட போழ்தும்
அலங்கலந் தாரி னான்வந் தருஞ்சிறை விடுத்த போழ்தும்
புலம்பலும் மகிழ்வு நெஞ்சில் பொலிதலும் இன்றிப் பொன்னார்ந்து
உலம்கலந் துயர்ந்த தோளான் ஊழ்வினை யென்று விட்டான். 295
295. விலங்கி வில் உமிழும் பூண் - ஒளி குறுக்கிட்டு ஒளிரும் அணி. விழுச்சிறை - நீக்குதற்கரிய சிறை. சீவகன் முற்பிறவியில் அன்னத்தைச் சிறைசெய்த நிகழ்ச்சியை யுட்கொண்டு, இது "விழுச்சிறை" எனப்பட்டது என்பர். அலங்கலாகிய தாரினான். அம், அவ்வழிக்கண் வந்தது. தாரினான் - சுதஞ்சணன். பொலிதலும் இன்றி - தோன்றுதல் இன்றி. உலம் கலந்து - தூண் போன்று. என்று விட்டான் - என்றே கருதி மனத்தில் கொள்ளானாயினான்.
சுதஞ்சணன் சீவகனைச் சுமந்துகொண்டு தன் மலைக்குக் கொண்டு சென்று, தூய நீராட்டி, மங்கலவணியணிந்து தன் னுரிமை மகளிர் முன் நிறுத்தி, "இவன் ஒரு பவித்திர குமரன்" என்று கூறிப் பாராட்டினன். அவர்களும் சீவகன்பால் பேரன்பு காட்டி அவனை மகிழ்வித்தனர். இந் நிலையில், அவர்கள் சுதஞ்சணனை நோக்கி, "நினக்கும் இவற்கும் எவ்வாறு தொடர்புண்டாயிற்று?" என்று வினவ, அவன் தான் கொண்டிருந்த நாயுடம்பு நீங்குதற்குச் சீவகன் செய்த மந்திரவுதவியைச் சொல்லிப் பாராட்டினன்.
தெய்வ மகளிர் கூறல்
கடற்சுற வுயரிய காளை யன்னவன்
அடற்கரும் பகைகெடுத் தகன்ற நீணில
மடத்தகை யவளொடும் வதுவை நாட்டிநாம்
கொடுக்குவம் எனத்தெய்வ மகளிர் கூறினார். 296.
296. கடற்சுறவு உயரிய காளை - கடலிடத்தே வாழும் சுறாமீனின் கொடியையுடைய காமன். அடற்கு அரும்பகை - வெல்லுதற்கு அரிய பகைவனான கட்டியங்காரனை. நீள் நில மடத் தகையவள் - நிலமாகிய பெண்ணை. நிலத்தை மகளாக உருவகம் செய்யலின், மடத்ததகையவள் என்றார். மடம், இளமை; தகை - அழகு. வதுவை நாட்டி - திருமணம்
செய்து, இனி, நிலத்தொடும், திருமகளாகிய மடத்தகையளொடும் என்றும் கூறலாம்.
சீவகன் அம் மகளிர்க்குக் கூறல்
செருநிலத் தவனுயிர் செகுத்து மற்றெனக்கு
இருநிலம் இயைவதற் கெண்ணல் வேண்டுமோ?
திருநிலக் கிழமையும் தேவர் தேயமும்
தரும்நிலத் தெமக்கெனில் தருகும் தன்மையீர். 297
297. நிலக்கிழமையும், தேயமும் நிலத்தே தாரும் என்னில் தரத்தக்கதன்மை யுடையீர். விளி. செருநிலம் - போர்க்களம். அவன் கட்டியங்காரன். இருநிலம் - ஏமாங்கதநாட்டு அரசியல். அத்தாயின்றோ எண்ணல் வேண்டும்; அரிதன்று என்பான், "எண்ணல் வேண்டுமோ" என்றான். தாரும் என்பது தரும் என்றும், தரும் என்றது தருகும் என்றும்
வந்தது விகாரம்.
அவன் சுதஞ்சணற்குத் தன் கருத்தையுரைத்தல்
மண்மிசைக் கிடந்தன மலையும் கானமும்'
நண்ணுதற் கரியன நாடும் பொய்கையும் .
கண்மனம் குளிர்ப்பன ஆறும் காண்பதற்கு
எண்ணமொன் றுளதெனக்கு, இலங்கு பூணினாய்! 298
298. கிடந்தன - உள்ளனவாகிய. கண் மனம் குளிர்ப்பன ஆறும் - காண்பார் கண்ணும் மனமும் குளிரச் செய்யும் யாறுகளும். எண்ணம் – விருப்பம்
"ஊற்றுநீர்க் கூவலுன் உறையும் மீனனார்
வேற்றுநா டதன்சுவை விடுத்தல் மேயினார்;
போற்றுநீ; போவல்யான்" என்று கூறினாற்கு
ஆற்றின தமைதியங் கறியக் கூறினான். 299
299. ஊற்று நீர்க் கூவல் - பிறிதோரிடத்தே ஊறி வருதலால் நிரம்புதலின்றி நிலையூற்றால் நிரம்பிய நீரையுடைய குளம். நாடது - "அது" பகுதிப்பொருள். விகுதி. விடுத்தல் மேயினார் - விரும்புவதிலர். போற்று - இவ்விடத்தே காத்துக்கொண்டிரு. ஆறு - வழி. அமைதி - இயல்பு.. அறிய - விளங்க.
சீவகன் செல்லுதற்கு நெறி கூறலுற்ற சுதஞ்சணன், "இம்மலைக்கு இரண்டு காதம் செல்லின் அரணபாதமென்றொரு மலை தோன்றும். அதனடிவாரத்தில் சாரணர் பலர்
உளர்; அவரை வழிபடின் இயக்கி யொருத்தி தோன்றி இனிய விருந்தூட்டுவள்; உண்டபின் அச்சாரலிலே செல்; இருபத்தைங் காதம் மிக்க யானை செறிந்த காடொன்று கங்கைக் கரையில் உண்டு. அதன்கண் இரண்டு காதம் சென்றால்
பேய்வனம் ஒன்று காணப்படும். அங்கே பேய்கள் அழகிய மகளிர் உருக்கொண்டு போந்து வஞ்சம் செய்யும்; அவ்வஞ்சனைக்கு இடந்தராது மேலே ஒரு காதம் செல்லின், பல்லவ தேயம் காணப்படும். அந்நாட்டில் வழி வருத்தம் தீர இரு திங்கள் இருந்து பின், போகலுறின் நெடுஞ்சுரம் கடத்தல் வேண்டும். அதன் கொடுமை பெரிது; அங்கே நெறியின் நீங்கிய தாபதரும் இருப்பர். அதனைக் கடந்து செல்லின், சித்திரகூட மலையைக் காணலாம். அதனருகே அஞ்சனமா நதி யோடுகின்றது. அது மிக இனிய இடமாகும். அங்கே,
இதுபள் ளி இடம் பனிமால் வரைதான்;
அதுதெள் ளறல்யாறு; உவைதே மரமாக்;
கதிதள் ளியிரா துகடைப் பிடிநீ;
மதிதன் னியிடும் வழைசூழ் பொழிலே. 300
300. பள்ளி - தவப்பள்ளி. இடம் - இடப்பக்கம். மால்வரை - பெரிய மலை. தெள் அறல் - தெளிந்த நீர். உவை - முன்னும் பின்னும். கதி - செல்கை. தள்ளியிராது - தாமதிக்காது. மதி தள்ளியிடும் - அறிவைக் கெடுத்துவிடும். வழை - சுர புன்னைமரம்.
இவ்விடத்தின் நீங்கிச்சென்றால் பன்னிரு காதப் பரப்பும் விளைநிலமேயாம். அந்த நாடு தக்க நாடு எனப்படும். அதற்குப்பின் பேர் யாறு ஒன்று காண்பாய். அதனை நீந்திச் செல்லின் கானவர் வாழும் பெருங்காடு ஒன்று தோன்றும்; அதனுள்ளே நான்கு வாவிகள் உள்ளன. அவற்றைப் பொருள் செய்து நோக்காது, மேலும் ஓர் ஐங்காதம் மிக்க மலர் செறிந்த இனிய காடொன்றைக்; காணலாம். அதனைக் கண்டு செல்லின் எதிரே வனகிரி என்னும் மலை தோன்றும். அதனைக் கடத்தற்கு வேண்டிய வழிகள் மிக அரியனவாகும். ஆயினும் கடந்தேகின் கவர்த்த வழிகட் பல காணப்படும். அங்கே ஒரு சுனை தோன்றும். அதனருகே ஒரு சிலாவட்டம் உண்டு; அதன் மருங்கே வேங்கை மரம் நிற்கும்; அதன் பக்கத்தே ஒரு செவ்விய நெறி செல்கின்றது. அதனைத் தொடர்ந்து சென்றால் மத்திம தேயத்தையடைவாய். அவ்வரசன் நினக்குத் தன் மகளைத் தந்து "இங்கே உறைக" என விழைவன். நின் தோழர்களும் அங்கே வந்து
சேர்வர். இவ்வாறு நெறியும், நெறிக்கண் நிகழ்வனவும் கூறிய அத் தேவன், இனிய இசைக்குரிய குரல் தருவதும் பாம்பு முதலியவற்றின் விட மொழிப்பதும், வேற்றுடம்பு
தருவதுமாகிய மூன்று மறைமொழிகளை யோதிக் கொடுத்தான். அவன்பால் விடைபெற்றுக்கொண்டு சீவகனும் புறப்பட்டான். புறப்படும்போது அவன் மனத்தே தன் மனைவியரைக் கூடுங் காலம் என்றோ என ஓர் எண்ணந் தோன்ற,
அத் தேவன் அதனையுணர்ந்து "பன்னிரண்டு திங்களுள் அவர்களை நீ சேர்வை"; பகைவனை வென்று அரசுரிமையும் எய்துவை" என்றான்.
தேவன் சீவகனை மலையடிக்குக் கொணர்தல்
அழல்பொதிந்த நீளெஃகின் அலர்தார் மார்பற் கிம்மலைமேல்
கழல்பொதிந்த சேவடியால் கடக்க லாகா தெனவெண்ணிக்
குழல்பொதிந்த தீஞ்சொல்லார் குழாத்தின் நீங்கிக் கொண்டேந்தி
நிழல்பொதிந்த நீண்முடியான் நினைப்பிற் போகி நிலத்திழிந்தான். 301.
301. அழல் பொதிந்த நீள் எஃகின் - நெருப்பின் வெம்மை நிரம்பப் பொதிந்த நீண்ட வாளையுடைய, கழல்பொதிந்த சேவடி - வீர கண்டை யணிந்த சேவடி. குழல் பொதிந்த தீஞ்சொல்லார் – குழல்போலும் இனிமை பொருந்திய மகளிர். நிழல் - ஒளி. நினைப்பில் போகி – நினைவு போல விரைந்து சென்று.
அவன்பால் சீவகன் விடைகொண்டேகுதல்
வண்தளிர்ச் சந்தனமும் வாழையு மாவும் வான்தீண்டி
விண்டொழுகு தீங்கனிகள் பலவு மார்ந்த வியன்சோலை
மண்கருதும் வேலானை "மறித்தும் காண்க" எனப்புல்லிக்
கொண்டெழுந்தான் வானவனும் குரிசில் தானே செலவயர்ந்தான். 302
302. வண்தளிர்ச் சந்தனம் - வளவிய தளிர்களையுடைய சந்தனம். வான் தீண்டி - வானளாவ. விண்டு - விரிந்து. ஒழுகு தீங்கனி- தேனொழுகும் கனிகள். ஆர்ந்த - நிறைந்த.மண் கருதும் வேலானை- ஏமாங்கத நாட்டை யெய்துதற்குரிய வேற்படையுடைய சீவகனை. மறித்தும் - மீட்டும். சீவகன் வீடுபெற்ற காலத்தே சுதஞ்சணனைக் காண்பது முத்தியிலம்பகத்தே காண்க. கொண்டு - விடைகொண்டு. எழுந்தான் – வானத்தே சென்றான். இதற்குமுன் சீவகன் தனியே போனது இன்மையின்,
" தானே செலவயர்ந்தான்" எனத் தேவர் இரங்கிக் கூறுகின்றார்.
சீவகன் மலைச்சாரலில் செல்லுதல்
தோடேந்து பூங்கோதை வேண்டேம்: கூந்தல், தொடேல்; எம்மில்
பீடேந் தரிவையர்இல் பெயர்கென்றூடு மடவார்போல்.
கோடேந்து குஞ்சரங்கள் தெருட்டக் கூடா பிடிநிற்கும்
காடேந்து பூஞ்சாரல் கடந்தான் காலில் கழலானே. 303
303. தோடு - பூவிதழ். தொடேல் - தீண்டாதே. பீடு - பெருமை. அரிவையர் இல் பெயர்க - மகளிர் வீட்டிற்குச் செல்க. கோடு -கொம்பு. குஞ்சரம் - களிறு. தெருட்ட - ஊடல் தணிவிக்க. கூடா - கூடாவாய். பிடி - பெண் யானைகள். நிற்கும் - ஊடிநிற்கும். காடேந்து பூஞ்சாரல் - காடு செறிந்த அழகிய மலைச்சாரல். காலின் - கால்களால் நடந்து.
சீவகன் வேட்டுவர் தலைவனைக் காண்டல்
காழக மூட்டப் பட்ட காரிருள் துணியு மொப்பான்
ஆழளை யுடும்பு பற்றிப் பறித்துமார் பொடுங்கி யுள்ளான்
வாழ்மயிர்க் கரடி யொப்பான் வாய்க்கிலை யறிதல் இல்லான்
மேழகக் குரலி னானோர் வேட்டுவன் தலைப்பட் டானே. 304
304. காழகம் - கருமை. காரிருள் துணி - கரிய இருள்துண்டம். ஆழ் அளை - ஆழ்ந்த வளையிலே வாழும். பறித்து - பறித்தலால். ஒடுங்கி - உட்குழிந்து. இலையறிதல் இல்லான் - வெற்றிலை மென்றறியாதவன். மேழகக் குரலினான் - ஆட்டின் குரல் போலும் குரல் உடையவன். தலைப் பட்டான் - எதிர்ப்பட்டான்.
அவன், தழையுடுத்த பெண்களோடு மரவுரியாடை யுடுத்து, காலிற் செருப்பும் தோளில் வில்லும் அம்புக் கூடும் சுமந்துவரக் கண்டு அவனை "நீ எம் மலையில் உறைகின்றாய்?" என வினவினன்.
வேடன் விடை
மாலைவெள் ளருவி சூடி மற்றிதா தோன்று கின்ற
சோலைசூழ் வரையின் நெற்றிச் சூழ்கிளி சுமக்க லாற்றா
மாலையந் தினைகள் காய்க்கும் வண்புன மதற்குத் தென்மேன்
மூலையங் குவட்டுள் வாழும் குறவருள் தலைவன் என்றான். 305
305. வெள்ளருவி மாலை சூடி - தெளிந்த நீர் சொரியும் அருவியை மாலைபோலக் கொண்டு. இதா - எதிரிலே. நெற்றி - உச்சி. சுமக்கலாற்றா - சுமக்கமாட்டாதவாறு கனக்க காய்த்த. வன்புனம் - வளவிய தினைப்புனம். மூலையங் குவடு - மூலையிலுள்ள உச்சியில்.
வேடன் ஊனும் கள்ளுமே தனக்கும் இனத்தவர்க்கும் உணவென்றும், அவை யில்வழித் தாம் வாழ்தல் அரிதென்றும் கூறக் கேட்டுச் சீவகன், ஊனுணவை விலக்குமாறு கூற
லுற்றான்.
ஊன்சுவைத் துடம்பு வீக்கி நரகத்தில் உறைதல் நன்றோ?
ஊன்தினா துடம்பு வாட்டித் தேவராய் உறைதல் நன்றோ?
ஊன்றிஇவ் விரண்டி னுள்ளும் உறுதிநீ யுரைத்தி டென்ன,
ஊன்தினா தொழிந்து புத்தே னாவதே உறுதி யென்றான். 306
306. சுவைத்து - உண்டு. வீக்கி - பெருக்கவைத்து. வாட்டி - மெலிவித்து. ஊன்றி - நன்கு ஆராய்ந்து. உறுதி - தக்கது. புத்தேன் - தேவர்.
சீவகன் வேடற்கு உறுதி கூறல்
உறுதிநீ யுணர்ந்து சொன்னாய் உயர்கதிச் சேறி; ஏடா!
குறுகினாய் இன்ப வெள்ளம் கிழங்குணக் காட்டுள் இன்றே;
இறைவனூற் காட்சி கொல்லா ஒழுக்கொடூன் துறத்தல் கண்டாய்;
இறுதிக்கண் இன்பந் தூங்கும் இருங்கனி இவைகொள் என்றான். 307
307. சொன்னாய் - சொன்னாயாதலால். சேறி - செல்வாய். காட்டுள் கிழங்கு உள, இன்றே இன்ப வெள்ளம் குறுகினாய் - காட்டிலுள்ள கிழங்கு முதலியவற்றை உண்ணத் தலப்படவே, இன்றே இன்பவெள்ளத்தைச் சேர்ந்தாயாம். இறைவன் நூல் காட்சி - இறைவனாகிய அருகன் கூறிய நூல் முடிவு. ஒழுக்கு - ஒழுக்கம். இவை இன்பம் தூங்கும் இருங்கனி - இவ்வொழுக்கங்களே பேரின்பம் செறியும் பெரிய கனிகளாகும்.
வேடன் விடைபெற்று நீங்கியபின், சீவகன் அரண பாதம் என்ற மலையையடைந்து, அதன் அடிக்கண் உறைந்த மாதவர் அடியில் வீழ்ந்து வணங்கினான். பின்பு அங்குள்ள
கோயிலுக்குட் சென்று வலம் வந்து கடவுளைப் பரவிப் பாட லுற்றான்.
சீவகன் பாட்டு, இறைவனைப் பாடியது.
தேவபாணிக் கொச்சக ஒருபோகு
ஆதி வேதம் பயந்தோய்நீ அலர்பெய்ம் மாரி யமைந்தோய்நீ
நீதி நெறியை யுணர்ந்தோய்நீ நிகரில் காட்சிக் கிறையோய்நீ
நாத னென்னப் படுவோய்நீ நவைசெய் பிறவிக் கடலகத்துன்
பாத கமலம் தொழுவேங்கள் பசையாப் பவிழப் பணியாயே. 308
308. ஆதி வேதம் - கொலை முதலியன இல்லாத வேதம். அலர்மாரி - பூமழை. நீதிநெறி - சன்மார்க்கம். காட்சி - ஞானம். பசையாப்பு அவிழ - பற்றாகிய கட்டு நீங்க. பணியாய் - அருள்வாய்.
இன்னாப் பிறவி யிகந்தோய்நீ இணையி லின்ப முடையோய்நீ
மன்னா வுலக மறுத்தோய்நீ வரம்பில் காட்சிக் கிறையோய்நீ
பொன்னார் இஞ்சிப் புகழ்வேந்தே பொறியின் வேட்கைக் கடலழுந்தி
ஒன்னா வினையி னுழல்வேங்கள் உயப்போம் வண்ண முரையாயே. 309
309. இகந்தோய் - கடந்தோய். இணையில் இன்பம் - கடையிலாவின்பம். மறுத்தல் - அதில் பெறும் இன்ப நுகர்ச்சியைத் தவிர்த்தல். பொன்னார் இஞ்சி - பொன்னெயில் வட்டம். பொறியின் - ஐம்பொறிகளால். ஒன்னாவினை - பொருந்தாத தீவினை. உய - உய்ய. மன்னா - நிலைபெற்ற.
உலக மூன்று முடையோய்நீ ஒண்பொ னிஞ்சி யெயிலோய்நீ
திலக மாய திறலோய்நீ தேவ ரேத்தப் படுவோய்நீ
அலகை யில்லாக் குணக்கடலே யாரு மறியப் படாயாதி;
கொலையி லாழி வலனுயர்த்த குளிர்முக் குடையி னிழலோய்நீ. 310
310. திலகமாகிய திறன் - கடையிலா வீரம். அலகை - அளவு, அறியப்படா யாதி - அறியப்படுவாயாக. "செய்யா யென்னும் சொல் செய்யென் கிளவியாய் நின்றது" கொலையில் ஆழி - அறவாழி, வலனுயர்த்த - கொடியாக உயர்த்திய;
சாரணரைப் பாடியது
அடியுலக மேத்தி யலர்மாரி தூவ
முடியுலக மூர்த்தி யுறநிமிர்ந்தோன் யாரே;
முடியுலக மூர்த்தி யுறநிமிர்ந்தோன் மூன்று
கடிமதிலும் கட்டழித்த காவலன்நீ யன்றே. 311
311. முடியுலகமூர்த்தி - முடிந்த உலகத்தின் மூர்த்தி. உற - உறும்படி. நிமிர்ந்தோன் - முத்தியடைந்தவன். மூன்று கடிமதில் - காமம். வெகுளி. மயக்கம் என்ற மூன்று மதில். கட்டு - காவல்.
முரணவிய வென்றுலக மூன்றினையு மூன்றில்
தரணிமேல் தந்தளித்த தத்துவந்தான் யாரே?
தரணிமேல் தந்தளித்தான் தண்மதிபோல் நேமி
அரணுலகிற் காய அறிவரனீ யன்றே. 312
312. முரண் - காமம் முதலியவற்றின் மாறுபாடு. மூன்றில் - அங்கம், பூர்வம், ஆதியென்ற மூன்று ஆகமத்தாலும். தரணி - நிலவுலகம். நேமி - அறவாழி, உலகிற்கு அரணாய அறிவரன் என்க. அறிவரன் அறிவுக்கு வரனா யுள்ளவன்.
தீரா வினைதீர்த்துத் தீர்த்தம் தெரிந்துய்த்து
வாராக் கதியுரைத்த வாமன்தான் யாரே?
வாராக் கதியுரைத்த வாமன் மலர்ததைந்த
காரார்பூம் பிண்டிக் கடவுள்நீ யன்றே. 313
313. தீராவினை - நீங்காத தீவினை. தீர்த்தம் - ஆகமம். வாராக் கதி - மேல் வருதல் இல்லாத வீடு. காரார் பிண்டி - கார்காலத்தே மலரும் அசோக மரம்.
பின்பு அங்கே இருந்த இயக்கி அவனுக்கு விருந்து செய்ய, அதனையேற்றுக்கொண்டு விடைபெற் றெழுந்த சீவகன் விரையச்சென்று பல்லவதேயத்தை யடைந்தான். அதன்
தலைநகரம் சந்திராபம் என்பது. வழியில் வயலில் களைபறித்துக் கொண்டிருந்த கடைசியர் இருவரை நெறிவினவிச் சீவகன் அந் நகர்க்கண் நுழைந்தான். அங்கே அழகிய தொரு சோலையிலே அமைந்திருந்த நாடகவரங்கில் ஆடவரும் மகளிரும் குழுமியிருந்தனர். உலோகபாலன் என்னும் அரசகுமரன் அவ்வரங்கில் வீற்றிருந்தான். தேசிகப்பாவை யென்னும் நாடக மகள் ஆடலுற்றாள்.
தேசிகப்பாவை கூத்தாடல்
பாடலொ டியைந்த வாடல் பண்ணமை கருவி மூன்றும்
கூடுபு சிவணி நின்று குழைந்திழைந் தமிர்த மூற
ஒடரி நெடுங்க ணம்பால் உளங்கிழிந் துருவ வெய்யா
ஈடமை பசும்பொற் சாந்தம் இலயமா ஆடு கின்றாள். 314
314. பண்ணமை கருவி - பாடலாடல்கட்கு அமைந்த இசைக்கருவி. கூடுபு சிவணி - கூடிப் பொருந்தி. குழைந்து இசைந்து அமிர்தம் ஊற - மெல்கிக் கலங்கி இனிமை மிக. ஓடரி நெடுங்கண் - அரிபரந்த நெடியகண்;. உருவ எய்யா - ஊடுருவிச் செல்லுமாறு எய்து. ஈடு அமை – இடுதல் அமைந்த. இலயமா - அழிய.
அப்பாவை சீவகனைக் கண்டு மனம் திரிதல்
கருஞ்சிறைப் பறவை யூர்திக் காமரு காளை தான்கொல்;
இருஞ்சுற வுயர்த்த தோன்றல் ஏத்தருங் குரிசில் தான்கொல்;
அரும்பெறற் குமரன் என்றாங் கறிவயர் வுற்று நின்றாள்,
திருந்திழை யணங்கு மென்றோள் தேசிகப் பாவை யன்னாள். 315
315. கருஞ்சிறைப் பறவை - கரிய சிறகுகளையுடைய மயில். சுறவுயிர்த்த தோன்றல் - சுறாமீன் கொடியையுடைய காமன் தோன்றலாகிய குரிசில். குமரன் - இளையனாகிய சீவகன். அயர்வுற்று - சோர்ந்து. அன்னான் - அத்தன்மையுடையவன். தேசிகப் பாவை - பெயர்.
உலோகபாலன் சீவகனைக் காண்டல்
போதெனக் கிடந்த வாட்கண் புடைபெயர்ந் திமைத்தல் செல்லாது
யாதிவன் கண்ட தென்றாங் கரசனும் அமர்ந்து நோக்கி
மீதுவண் டரற்றும் கண்ணி விடலையைத் தானும் கண்டான்
காதலில் கனித்த துள்ளம்; காளையைக் கொணர்மின் என்றான். 316
316. போது எனக் கிடந்த வாட்கண் - பூப்போல் உள்ள பொருந்திய கண். இமைத்தல் செல்லா - இமைப்பதில்லை. கண்ணிவிடலை –கண்ணியணிந்த விடலையாகிய சீவகன். காதலில் - அன்பினால். உள்ளம் - அரசன் உள்ளம்.
இருவரும் தோழராதல்
மந்திரம் மறந்து வீழ்ந்து மாநிலத் தியங்கு கின்ற
அந்தர குமர னென்றாங்கு யாவரு மமர்ந்து நோக்கி,
இந்திர திருவற் குய்த்தார்க் கிறைவனு மெதிர்கொண் டோம்பி
மைந்தனை மகிழ்வ கூறி மைத்துனத்தோழ னென்றான். 317
317. மந்திரம் - வானத்தில் இயங்கும் மந்திரம். அந்தர குமரன் விஞ்சையன். அமர்ந்து நோக்கி - பொருந்திப் பார்த்து. இந்திர திருவற்கு இந்திரன் திருவைப்போன்ற திருவையுடைய உலோகபாலனுக்கு. உய்த்தார்க்கு - தெரிவிப்ப என்றற்கு. இறைவன் - அவ் வுலோகபாலன். மைந்தனை - சீவகனுக்கு. மைத்துனத் தோழன் - விளையாடும் முறைமையை யுடைய தோழன்.
தவறிய இலயம் மீட்டும் பொருந்தத் தேசிகப்பாவை யாடல்
போதவிழ் தெரிய லானும் பூங்கழற் காலி னானும்
காதலி னொருவ ராகிக் கலந்துட னிருந்த போழ்தில்
ஊதுவண் டுடுத்த மாலை யுணர்வுபெற் றிலயம் தாங்கிப்
போதுகண் டனைய வாட்கண் புருவத்தால் கலக்கு கின்றாள். 318
318. போதவிழ் தெரியல் - அலர்ந்த பூக்களால் தொடுக்கப்பட்ட மாலை. ஊறு வண்டு உடுத்த மாலை - ஒலிக்கின்ற வண்டு சூழ்ந்த தேசிகப் பாவை. மாலை - பெண்,. இலயம் தாங்கி - நீங்கின இலயத்தைத் தப்பாமல் தாங்கி. வாட்கண் புருவத்தால் - வாட்கண்ணாலும் புருவத்தாலும்.
அப்போது, காவலன் ஒருவன் போந்து அரசன் மகள் பதுமை யென்பாள் தான் பேணி வளர்த்த முல்லைக்கொடி அரும்பீனக் கண்டு, அதற்குச் சிறப்புச் செய்யச் சென்று, சோலையில் விளையாட்டயரும் காலத்தில், புதரொன்றில் பூத்திருந்த பூவைப் பறிக்கக் கையை நீட்ட, ஆங்கிருந்த விட நாகமொன்று அவளைத் தூண்டியதனால், அறிவு மயங்கி வீழ்ந்தாள் என்று சொன்னான். அதுகேட்ட அரசகுமரன் திடுக்கிட்டுச் சீவகனை இருக்கப் பணித்துவிட்டுத் தான் தனியே சென்று விடம் தீருதற்குரிய மந்திரம் பலவும் செய்தான்.
விடம் மிகுதல்
வள்ளல்தாள் வல்ல வெல்லாம் மாட்டினன்; மற்று மாங்கண்
உள்ளவ ரொன்ற லாத செயச்செய ஊறு கேனாது
அன்னிலைப் பூணி னாளுக்கு ஆவிஉண் டில்லை யென்ன
வெள்ளெயிற் றரவு கான்ற வேகம்மிக் கிட்ட தன்றே. 319
319. வள்ளல் - உலோக பாலன். மாட்டினன் - செலுத்தினான். ஒன்றலாத செயச் செய - பொருந்தாதவற்றைச் செய்யச்செய்ய. ஊறு- விட நோய்க்கு இடையூறாகிய மந்திரமும் மருந்தும். அன்னிலைப் பூணினாள் - கூரிய இலைத்தொழி லமைந்த பூண்களையணிந்த பதுமை. வெள்ளெயிற்றரவு - வெள்ளிய பற்களையுடைய பாம்பு. வேகம் - நஞ்சு,.
விடம் தீர்த்தாற்கு மகள் தருவேன் என வேந்தன் முரசறைவிக்க வள்ளுவன் முரசறைதல்
பைங்கதிர் மதிய மென்று பகையடு வெகுளி நாகம்
நங்கையைச் செற்றது; ஈங்குத் தீர்த்துநீர் கொண்மின்; நாடும்
வங்கமா நிதியும் நல்கி மகள்தரும்; மணிசெய் மான்தேர்
எங்களுக் கிறைவன் என்றாங் கிடிமுர செருக்கி னானே. 320
320. பைங்கதிர்...சென்றது: நங்கையின் முகத்தை மதியமென்று கருதி, அம் மதி தனக்குப் பகையாதலின், அதனைத் தாக்கற்குக் கொண்ட வெகுளியால் நாகம் இவளைத் தீண்டிற்று. வங்கமாநிதி – மரக் கலங்களில் வந்த பெருநிதி, மான் தேர் - குதிரை பூட்டிய தேர். எருக்கினான் - முழக்கினான்.
விடந்தீர்ப்பான் வந்தோர் தம் முயற்சி பயன் படாமை கண்டு கூறுதல்
மண்டலி மற்றி தென்பார், இராசமா நாக மென்பார்;
கொண்டது நாக மென்பார் குறைவளி பித்தொடு ஐயின்
பிண்டித்துப் பெருகிற் றென்பார், பெருநவை யறுக்கும் விஞ்சை
எண்தவப் பலவும் செய்தாம் ஏன்றுகே னாதி தென்பார். 321
321. மண்டலி - சீதமண்டலி. இராசமாநாகம் – கருவழலை யென்னும் பாம்பு. வளிபித்தமொடு ஐயில் பிண்டித்துப் பெருகிற்று - வாதமும் பித்தமும் சிலேத்துமத்தினும் திரண்டு பெருகின. பெருநவை - பெருந்துன்பம். அறுக்கும் என்று - நீக்குமென்று கருதி. எண் தவ - எண் இறக்க. இது கேளாது - இது நீங்காது.
உறவினர் கையற்றுப் புலம்பல்
கையொடு கண்டம் கோப்பார், கனைசுடர் உறுப்பின் வைப்பார்,
தெய்வதம் பரவி யெல்லாத் திசைதொறும் தொழுது நிற்பார்,
உய்வகை யின்றி யின்னே யுலகுடன் கவிழும் என்பார்,
மையலங் கோயில் மாக்கன் மடைதிறந் திட்ட தொத்தார். 322
322. இதன் பொருள்: கையையும் கண்டத்தையும் உழலை கோப்பார்: மருமங்களிலே விளக்கையெரிப்பார்; தொழுது நிற்பார்: இது காரணத்தான் அரசன் இறந்துபடின் உலகு இன்னே கவிழுமென்பாராய், மாக்கள் ஆரவாரத்தாலே மடைதிறந்த தன்மையை யொத்தாரென்க. மக்கட்கு உரிய மனனின்றி அறிவுகெட்டமையின், ஐயறிவுடையாரென்று மாக்கள் என்றார்.
ஒருவன் கணி கூறியது
நங்கைக்கின் றிறத்தல் இல்லை நரபதி நீயும் கேண்மோ:
கொங்கலர் கோங்கின் நெற்றிக் குவிமுகிழ் முகட்டி னங்கண்
தங்குதேன் அரவ யாழின் தான்இருந் தாந்தை பாடும்,
இங்குநம் இடரைத் தீர்ப்பான் இளையவன் உளன்மற் றென்றான். 323
323. நங்கைக்கு - பதுமைக்கு. நரபதி - அரசே; விளி. கொங்கவர் கோங்கு - தேன் சொரிகின்ற மலரையுடைய கோங்கமரம். நெற்றி - உச்சி. முகிழ்முகட்டில் - அரும்பின் தலையில். அரவயாழ் - இசையினைச் செய்யும் யாழ். ஈண்டு மிதுனராசிமேற்று. ஆந்தையாடும் - ஆந்தை யலறுகிறது. மிதுனராசி யுச்சமுற்றிருக்கும் இந்நேரத்தே ஆந்தை அலறுகிறது என்பது. இளையவன் உளன் - இளையவன் ஒருவன் இங்கு உளன்.
இதுகேட்டதும், தனபதியின் மகனாகிய உலோகபாலன் சீவகன் வந்திருத்தலை நினைவுகூர்ந்து, ஏவலரை விடுத்துக் கடுக வருவித்தான்; அவனும் அவ்விடம் வந்து பதுமையுணர் வின்றிக் கிடப்பது கண்டான். கண்டவன் சித்தராரூடம் என்னும் நூலிற் கண்டவண்ணம் பாம்பின் சாதி, கடிக்கும் திறம், எயிறுகளின் வகை முதலிய பலவும் கூறி, பதுமையைக் கடித்த நாகம் கன்னி யென்றும், அஃது அரசர் மரபிற்றென்றும், தைத்தழுந்திய பல் யமதூதி யொழிந்த காளி, காளத்திரி, யமன் என்று மூன்றுமே யென்றும் பிறவும் கூறினன்.
சீவகன் மந்திரம் செய்தல்
குன்றிரண் டனைய தோளான் கொழுமலர்க் குவளைப் போதங்கு
ஒன்றிரண் டுருவ மோதி யுறக்கிடை மயிலன் னாள்தன்
சென்றிருண் டமைந்த கோலச் சிகழிகை யழுத்திச் செல்வன்
நின்றிரண் டுருவ மோதி நேர்முகம் நோக்கி னானே. 324
324. குவளைப்போது - குவளைப்பூ. ஒன்றிரண்டு உருவமோதி - ஒன்றும் இரண்டுமாகிய உருவோதி. உறக்கு இடை - உறக்க்த்திடத்தே. இருண்டு அமைந்த கோலச் சிகழிகை - கரிதாய் அமைந்த அழகிய முடி. அழுத்தி - வைக்த்து. நின்று - சிறிது நீங்கிநின்று. முகம் நேர் நோக்கினான் என்க.
பதுமை விடம் நீங்கத் தெளிந்து சீவகனைக் கண்ணுறுதல்
நெடுந்தகை நின்று நோக்க நீள்கடல் பிறந்த கோலக்
கடுங்கதிர்க் கனலி கோப்பக் காரிருள் உடைந்த தேபோல்
உடம்பிடை நஞ்சு நீங்கிற்று. ஒண்டொடி யுருவ மார்ந்து
குடங்கையின் நெடிய கண்ணான் குமரன்மேல் நோக்கி னாளே. 325
325. நெடுந்தகை - சீவகன். கோலக் கடுங்கதிர்க் கனலி – அழகிய மிக்க கதிர்களையுடைய ஞாயிறு. கோப்ப - கதிர்களைச் செலுத்தி யெதிர்க்க. உருவம் ஆர்ந்து - அழகைக் கண்ணாரக் கண்டு மகிழ. குடங்கையின் - உள்ளங்கை போல. குமரன் - சீவகன்.
இவ்வாறு நோக்கிய பதுமைக்கு விட நோய் நீங்கலும் சீவகன் பொருட்டு வேட்கை நோய் எழுந்து வருத்துவதாயிற்று. அதனால் அவள் உள்ளமுடைந்து மறுபடியும் மெலிவுற்றாள். தோழியர் அவனை நோக்கி, "ஐயனே, நீ நின் கையால் இவள்; மேனியைத் தீண்டித் தைவருவையேல், இவ்விட மயக்கம் இனிது தெளியும்" என்ன, அவன் அவ்வாறே செய்தல்.
கண்ணிற் காணினும் கட்டுரை கேட்பினும்
நண்ணித் தீண்டினும் நல்லுயிர் நிற்கும்என்று
எண்ணி யேந்திழை தன்னை யுடம்பெலாம்
தண்ணென் சாந்தம்வைத் தாலொப்பத் தைவந்தாள். 326
326. கண்ணில் காணினும் - காதலித்தோரைக் கண்ணில் காணினும். ஏந்திழை தன்னை - பதுமையை. தைவந்தான் தடவிக்கொடுத்தான்.
இச் செய்கையால் சீவகனுக்கும் பதுமைபால் காதல் பிறந்தது. இருவரும் தம் காதற் குறிப்பைத் தெரிவித்துக் கொள்வார்போல, ஒருவரையொருவர் சிறப்புற நோக்கி
வேட்கையால் வெய்துறலாயினர். சீவகன் விட நோய் நீக்கிய சிறப்புக் கண்டு தனபதி அவனைத் தன் மனைக்கண்ணே கொண்டுசென்று அங்கே இருக்கச் செய்து, உண்டி முதலிய தந்து ஓம்பிவந்தான். சீவகனது சொல்லும் செயலும் கண்ட தனபதி "இச் சீவகன் கலை பலவும் கற்றுத் துறைபோகியவன்; இவனுக்கு நிகராவார் இந் நிலவுலகில் எவரும் இல்லை" என்று தேர்ந்து அவன்பால் பேரன்பு காட்டினன். இது நிற்க. சீவகனுக்குப் பதுமை பொருட்டுப் பிறந்த காதல் சிறந்து மிகுவதாயிற்று. இரவுப்போது வந்தது; இருவர்க்கும் வேட்கை நோய் எல்லையின்றிப் பெருகிற்று.
சீவகன் வேட்கை நிலை
போது லாம்சிலை யோபொரு வேற்கணோ
மாது லாமொழி யோமட நோக்கமோ
யாதும் நான் அறி யேன்: அணங் கன்னவள்
காதலால் கடை கின்றது காமமே. 327
327. சிலை - காமன் வில்போலும் நுதல். வேற்கண் – வேல் போன்ற கண். மாது உலாம் மொழி - பதுமை சொல்லும் சொல். மடநோக்கம் - மடப்பம் பொருந்திய பார்வை. அணங்கன்னவள் – கண்டார்க்கு வருத்தம் செய்யும் அணங்கு போல்பவள். கடைகின்றது - மிகுகின்றது.
அண்ணல் அவ்வழி ஆழ்துயர் நோயுற
வண்ண மாமலர்க் கோதையும் அவ்வழி,
வெண்ணெய் வைங்கனல் மீமிசை வைத்ததுஒத்து
உன்கை யாஉரு காஉள ளாயினாள். 328
328. அண்ணல் - சீவகன். ஆழ் துயர் நோய் உற – அழுந்துதல் உறுகின்ற வருத்த நோய் மிகுதிப்பட. கோதை - பதுமை. மீமிசை - மேலே. உள் நையா - உள்ளம் வருந்தி. உருகா - உருகி.
பதுமை வாய் வெருவுதல்
வணங்கு நோன்சிலை வார்கணைக் காமனோ
மணங்கொள் பூமிசை மைவரை மைந்தனோ
நிணந்தென் நெஞ்சம் நிறைகொண்ட கள்வனை
அணங்கு காள்! அறி யேன்உரை யீர்களே. 329
329. வணங்கு நோன் சிலை - எல்லாரும் மனம் குழைதற்குக் காரணமான வலிய சிலை. மைவரை மைந்தன் - முருகன். நிணந்து – பிணித்து அணங்குகாள் - தெய்வங்களே. ஏகாரம், வினா.
சீவகன், தான் முதலில் பதுமையை விடம் தீர்த்தபோது கண்ட பூங்காவிற்குச் சென்று, அஃது அவள் பயின்றவிடமாதலின், அதனைக் காணின், அவளைக் கண்டாற்
போல்வதோர் இன்பம் செய்யும் என்று கருதினான்; அவ்வாறே எழுந்து, ஒரு நாள் மாலைப்போதில் அக் காவிற்குட் சென்று உலவலானான்.
சோலைக்காட்சி
மயிலி னாடலும் மந்தியின் ஊடலும்
குயிலின் பாடலும் கூடி மலிந்து அவண்
வெயிலின் நீங்கிய வெண்மணல் தண்நிழல்
பயிலும் மாதவிப் பந்தரொன் றெய்தினான். 330
330. கூடி மலிந்து - கூடிமிகுந்து. வெயிலின் - வெயிலினின்று. நிழல் பயிலும் மாதவிப் பந்தர் - நிழல் பரந்த குருக்கத்திக் கொடி படர்ந்த பந்தர்.
சீவகனைப்போலவே பதுமையும் வேட்கைத் தீயால் வெந்து ஆற்றாளாய் அச் சோலையில் அவ்விடத்தே வந்திருந்தாள். இருவர் வரவும் ஒருவரொருவர்க்குத் தெரியாமே நிகழ்ந்தது. வந்தவள், தோழியர் விளையாட்டுக் குறித்து வேறு வேறிடம் செல்ல, மாதவிப் பந்தர் அருகே தனியே நின்றுகொண்டிருந்தாள். சீவகன் அவளைக் காண்கின்றான்.
காட்சி
கறந்த பாலினுட் காசில் திருமணி
நிறம்கி ளர்ந்துதன் நீர்மைகெட் டாங்கவண்
மறைந்த மாதவி மாமை நிழற்றலின்,
சிறந்த செல்வனும் சிந்தையின் நோக்கினான். 331
331. கறந்த பால் - ஆனிடத்தே கறந்து கொண்ட ஆன்பால். காசு - குற்றம். திருமணி - அழகிய நீலமணி, கிளர்ந்து - கிளர. கெட்டாங்கு - கெட்டாற்போல. மாமை நிழற்றலின் - மாமை நிறம் ஒளிவிடுதலால். மாதவி - மாதவிப் பூ. சிந்தையின் நோக்கினான் – மனத்தால் ஆராய்ச்சியோடே பார்த்தான்.
முன்பே அவளைக் கண்டுளானாயினும் வேட்கை மிகுதியால் சீவகன் அவளைக் கண்டு ஐயுறுதல்
வரையின் மங்கைகொல், வரங்கிருந் தூங்குநீர்த்
திரையின் செல்விகொல், தேமலர்ப் பாவைகொல்,
உரையின் சாயல் இயக்கிகொல், யார்கொல்இவ்
விரைசெய் கோலத்து வெள்வளைத் தோளியே. 332
332. வரையின் மங்கை - வரையாமகள். வாங்கு இரும் தூங்கு நீர்த் திரையின் செல்வி - வளைந்த பெரிய அசைகின்ற நீர் பொருந்திய கடலில் வாழும் நீரரமகள். மலர்ப்பாவை - திருமகள். உரையின் சாயல் - உரைத்தற்கினிய சாயலையுடைய. விரை செய் கோலம் - மணம் கமழும் கோலம்.
பதுமையே எனத் தெளிதல்
மாலை வாடின; வாட்கண் இமைத்தன;
காலும் பூமியைத் தோய்ந்தன; காரிகை
பாலின் தீஞ்சொல் பதுமைஇந் நின்றவள்
சோலை வேய்மருள் சூழ்வளைத் தோளியே. 333
333. காரிகை - அழகு. பாலின் தீஞ்சொல் பதுமை – பால் போல் இனிய தீவிய சொற்களையுடைய பதுமை. மருள் - உவமவுருபு. வேய், தோளிற்கு உவமம்.
இவ்வாறு தெளிந்தவன் அவளையடைந்து கந்தருவ மணம் செய்துகொள்ளக் கருதி அவளருகே சென்று குறிப் பறிந்து வண்டோச்சுவான்போல மருங்கணைந்து, தன் பெருநயப்புரைத்துக் கூடினன்.
சீவகன் அவளது கோலம் திருத்தித் தன் அன்பை வற்புறுத்துதல்
கண்ணி வேய்ந்து கருங்குழல் கைசெய்து,
வண்ண மாலை நடுச்சிகை யுள்வளை இச்
செண்ண வஞ்சிலம் பேறு துகளவித்து
அண்ணல் இன்புறுத் தாற்றலின் ஆற்றினாள். 334
334. கைசெய்து - ஒப்பனை செய்து. மாலை - பூமாலை. நடுச்சிகையுள் - பின்னிய கொண்டை நடுவே. வளைஇ - வளையமாகவைத்து. செண்ண அஞ்சிலம்பும - நுண்ணிய வேலைப்பாடமைந்த சிலம்பு. ஏறு துகள் அவித்து - படிந்த பூந்தாதுகளாகிய துகளைத் துடைத்து.
திங்க ளும்மறு வும்எனச் சேர்ந்தது
நங்கள் அன்புஎன நாட்டி வலிப்புறீஇ
இங்கொ ளித்திடு வேன்,நுமர் எய்தினார்,
கொங்கொ ளிக்குழ லாய்!எனக் கூறினான். 335
335. திங்களும் அதன்பாலுள்ள மறுவும்போல அன்பு சேர்ந்தது; எனவே, வாழ வாழ்தலும், சாவச் சாதலும் செய்யும் உழுவலன்பு கூறி வற்புறுத்தியவாறு. எய்தினாராகலின் ஒளித்திடுவேன்; நீ செல்க என்றானாம். ஒளிக்குழல் - ஒளியையுடைய கூந்தல்.
சீவகன் அவளைச் செல்லவிடுத்துத் தான் ஒருபுறத்தே மறைந்தான். பதுமையும், தன்னைத் தனிப்பவிட்டுச் சென்ற ஆயத்தோர் வந்து சேர அவருடன் கூடிச் சிறிது போது விளையட்டயர்ந்தபின் தத்தம் இருக்கையடைந்தனர். சீவகன் சென்று தன் தோழனான உலோகபாலனையடைந்தான்.
இஃது இங்ஙனமாக, பதுமையின் தந்தையான தனபதி மதிதரன் என்னும் தன் அமைச்சனை நோக்கித் தன் கருத்தைத் தெரிவித்தல்
பூமியை யாடற் கொத்த பொறியின னாத லானும்
மாமக ளுயிரை மீட்ட வலத்தின னாத லானும்
நேமியான் சிறுவ னன்ன நெடுந்தகை நேரு மாயின்,
நாம்அவற்கு அழகி தாக நங்கையைக் கொடுத்தும் என்றான். 336
336.ஆடற்கொத்த - ஆளுதற்குரிய. பொறி - உயரிய இலக்கணம். வலத்தினன் - வெற்றியுடையான். நேமியான் - திருமால். சிறுவன் - காமன். நேருமாயின் - உடன்படுவானாயின். அழகிது - நன்று.
மந்திரி உடன்பட்டுரைத்தல்
மதிதரன் என்னும் மாசில் மந்திரி சொல்லக் கேட்டே
உதிதர வுணர்வல் யானும் ஒப்பினும் உருவி னானும்
விதிதர வந்த தொன்றே விளங்குபூண் முலையி னாளைக்
கொதிதரு வேலி னாற்கே கொடுப்பது கருமம் என்றான். 337
337. மாசில் மந்திரி - குற்றமில்லாத மந்திரி. குற்றம் - அமைச்சர்க்கு ஆகாவென விலக்கிய குற்றங்கள். உதிதர வுணர்வல் - விளங்க வுணர்வேன். உதிதரல் - அறிவில் தோன்றல். ஒப்பு - பிறப்பு, குடிமை, ஆண்மை, யாண்டு, உரு முதலியன. "உரு - உட்கு; அது விடந்தீர்த்தார்க்குக் கொடுப்போம் என்ற மொழி பிறழாமல் காக்க வேண்டு மென்னும் அச்சம். கொதிதருவேல். வெம்மையால் பகைவரை வெதுப்பும் வேல்.
பின்பு, மந்திரி சீவகனைக் கண்டு அவன் கருத்தறிந்து போந்து, தளபதிக்குக் கூற அவன் மனைவி திலோத்தமையின் இசைவு கண்டு மகிழ்ந்து திருமணத்துக்குரிய நாள்
குறிக்குமாறு ஏற்பாடு செய்தான்.
திருமணம்
கணிபுனைந் துரைத்த நாளால் கண்ணிய கோயில் தன்னுள்
மணிபுனை மகளிர் நல்லார் மங்கல மரபு கூறி
அணியுடைக் கமல மன்ன அங்கைசேர் முன்கை தன்மேல்
துணிவுடைக் காப்புக் கட்டிச் சுற்றுபு தொழுது காத்தார். 338
338. கண் - சோதிடன். கண்ணிய கோயில் - நன்றென்று கருதிய கோயில். மங்கல மரபு - மங்கலவாழ்த்து முறை. அணியுடைக் கமலம் - வளை முதலிய அணிபுனைந்த தாமரை. துணிவுடைக் காப்பு - மணநூலுள் துணிபாகக் கூறப்படுதலையுடைய காப்புநாண். கட்டி -கட்ட.
மழகளிற் றெருத்திற் றந்த மணிக்குட மண்ணு நீரால்
அழகனை மண்ணுப் பெய்தாங் கருங்கடிக் கொத்த கோலம்
தொழுதகத் தோன்றச் செய்தார் தூமணிப் பாவை யன்னார்
விழுமணிக் கொடிய னாளும் விண்ணவர் மடந்தை யொத்தான். 339
339. மழகளிற்றெருத்தின் - இளங்களிற்றின் கழுத்தின்மேல் ஏற்ற. மண்ணுநீர் - மங்கலநீர். நீராட்டத்திற்கு வேண்டியது. மண்ணுப் பெய்து - நீரால் குளிப்பாட்டி. கடி - திருமணம். தொழுதக - கண்டோர் நன்கு மதிக்குமாறு. தூமணிப் பாவையன்னார் – தூயமணியாற் செய்த பாவை யொத்த மகளிர். விழுமணி - உயரிய மணி. விண்ணவர்
மடந்தை - தேவர் மகள்.
கயற்க ணானையும் காமனன் னானையும்
இயற்றி னார்மண மேத்தரும் தன்மையார்
மயற்கை யில்லவர் மன்றலில் மன்னிய
இயற்கை யன்புடை யார்இயைந் தார்களே. 340
மணம் முடிந்தபின், சீவகன் பதுமையுடன் இனிதுறைந்து வருகையில், அவன்பால் தன் கருத்தையிழந்துவேட்கை நோய் மிகுந்து மெலிந்துவந்த தேசிகப் பாவையென்னும் பரத்தை ஒரு நாள் பூங்காவையடைந்து தன் தனிமை தீர்வது குறித்து இன்பமுறப் பாடிக்கொண்டிருந்தாள்.
340. கயற்கண் - கயல்மீன் போலும் கண். மணம் இயற்றினார் - திருமணம் செய்தனர். ஏத்தரும் தன்மை - யாவரும் பாராட்டும் தன்மை; இவர், பெற்றோர் முதலாயினார். மயற்கையில்லவர் - மயக்கமில்லாத இருவரும், மன்னிய - முன்பே நிலைபேறு கொண்ட. இயற்கை யன்பு - இயற்கைப் புணர்ச்சியால் கொண்ட அன்பு.
சீவகன் அவளைத் தலைப்படல்
வார்தளிர் ததைந்து போது மல்கிவண் டுறங்கும் காவில்
சீர்கெழு குரிசில் புக்கான், தேசிகப் பாவை யென்னும்
கார்கெழு மின்னு வென்ற நுடங்கிடைக் கமழ்தண் கோதை
ஏர்கெழு மயில னாளை இடைவயின் எதிர்ப்பட் டானே. 341
341. ததைந்து -நிறைந்து. போது - பூக்கள். கா - சோலை.
சீர்கெழு குரிசில் -சீவகன். நுடங்கு இடை - நுண்ணியதாய் அசையும்
இடை. ஏர்கெழு - அழகு திகழும். இடைவயின் -சோலையிடத்தே. பாவை
யென்னும் இடையும் கோதையுமுடைய மயிலன்னாள் என்க.
தீரா வேட்கையால் மெலிந்து வருந்திய தேசிகப் பாவைக்கும் இன்பம் தந்து மகிழ்வித்து ஒழுகிய சீவகன், பதுமையுடன் இரண்டு திங்கள் கழித்தான்.
கண் விழித்த பதுமை சீவகனைக் காணாது, தான் வளர்த்த கிளி, பூவை, அன்னம், மயில் முதலியவற்றை வினவி விடையொன்றும் பெறாது, மிகு துயர் உற்றனள். பிறகு, பள்ளியறையில் எரிந்த விளக்கை வினவினாள்.
சீவகன் பிரிந்து போதல்
தயங்கிணர்க் கோதை தன்மேல் தண்ணென வைத்த மென்றோள்
வயங்கிணர் மலிந்த தாரான் வருத்துறா வகையின் நீக்கி
நயங்கினர் உடம்பு நீங்கி நல்லுயிர் போவ தேபோல்
இயங்கிடை யறுத்த கங்குல் இருளிடை யேகி னானே. 342
342. தயங்கிணர்க்கோதை - விளங்குகின்ற பூங்கொத்துக்களால் தொடுக்கப்பட்ட மாலையணிந்த பதுமை. தன்மேல் - சீவகன் தோள்மேல். மென்றோள் - மெல்லிய கை. ஆகுபெயர். கோதையென்றதற் கேற்பத் தாரான் என்றார். வருத்துறா வகை - பிணங்கி வருந்தா வண்ணம். நயங்கினர் உடம்பு - விருப்பம் செய்யும் உடம்பு. "துன்பம் உழத்
தொறும் காதற்றுயிர்" (குறள்.) நல்லுயிர் - ஆன்மா. "அது கனவிடைப்போய் நுகர்ந்து மீண்டும் அவ்வுடம்பின்கண் வருமாறுபோல. இவனும் பலரையும் நுகர்ந்து பின்பு கூடுவன் என்று உணர்க" இயங்கு இடையறுத்த - இயங்குதலைச் செய்யாதபடி கெடுத்த.
விளக்கை வினவி நொந்துரைத்தல்
வளர்த்த செம்மையை; வாலியை; வான்பொருள்
விளக்கு வாய்விளக் கே!விளக் காய்; இவண்
அளித்த காதலொ டாடும்என் ஆருயிர்
ஒளித்தது எங்கு? என ஒண்சுடர் நண்ணினாள். 343
343. பிள்ளைகளுக்கு விளக்கைக் காவலாக இடுபவாதலின், "எங்களை வளர்த்த மனக்கோட்டம் இன்மையுடைய" என்பாள், வளர்த்த செம்மையை என்றாள். செம்மை - செப்பம். வாலியை - தூய்மையுடையை. வான்பொருள் - நல்லபொருள். விளக்காய் - கண்ணிற் காணக் காட்டுவாய். ஆடும் - நடந்து திரியும். ஆருயிர் - பெறற்கரிய உயிராகிய சீவகன். நண்ணினாள் - நெருங்கி வினவினாள்.
பருகிப் பாயிருள் நிற்பின் அறாதெனக்
கருகி யவ்விருள் கான்றுநின் மெய்யெலாம்
எரிய நின்று நடுங்குகின் றாய்எனக்கு
உரிய தொன்றுரைக் கிற்றியென் றூடினாள். 344
344. பாயிருள் பருகி - பரந்த இருளைப் பருகி. நிற்பின் - வயிற்றிலே நிற்பின். அறாது என - அறாது என்று கருதி. கருகி - முகம் கருகி. நடுங்குகின்றாய் - அசைகின்றாய். உரைக்கிற்றி - உரைக்க மாட்டுவை. ஊடினாள் - சினந்தாள்.
விளக்காமையின் அதனை இழித்துக் கூறுகின்றாள்: உரைக்கிற்றி. இகழ்ச்சி.
பிரிவாற்றாத பதுமை மேலும் வாய்விட்டுப் புலம்புதல்
நிரைவீ ழருவிந் நிமிர்பொன் சொரியும்
வரையே! புனலே! வழையே! தழையே!
விரையார் பொழிலே! விரிவெண் ணிலவே!
உரையீர் உயிர்கா வலன்உன் வழியே! 345
345. நிரை - வரிசை. உயிர் காவலன் - உயிரை நீங்காமற் காக்கும் சீவகன். அவன் உயிர் நீங்கின் இவன் உயிர் நீங்குமாதலின், "உயிர் காவல" னானான்.
அமரரை நோக்கிப் புலம்புதல்
எரிபொன் னுலகின் உறைவீர்! இதனைத்
தெரிவீர், தெரிவில் சிறுமா னிடரின்
பரிவொன் றிலரால், படர்நோய் மிகுமால்,
அரிதால் உயிர்காப் பமரீர்! அருளீர் 346
346. எரி - விளங்குகின்ற. உறைவீர் - உறையும் தேவர்களே. தெரிவீர் - தெரிந்திருப்பீர். பரிவொன் றிலிரால் - அருளின்றியுள்ளீர். உயிர் காப்பு - உயிரைக் காத்துக்கொள்வது. அமரீர்- காவாத் தன்மையுடைய தேவர்களே.
அமரர் மகளிர்க்குச் சொல்லி யரற்றுதல்
புணர்வின் இனிய புலவிப் பொழுதும்
கணவன் அகலின் உயிர்கை யகறல்
உணர்வீர், அமரர் மகளீர்! அருளிக்
கொணர்வீர், கொடியேன் உயிரைக் கொணர்வீர். 347
347. புணர்வின் இனிய - புணர்தலினும் இனிய. உயிர் கையகறல் உணர்வீர் - உயிர் கைவிட்டு நீங்குவதை யறிவீர். புலவியால் கணவன் சிறிது நீங்கினும், உயிர் நீங்குவதுபோலக் கொள்வர் நன்மகளிர் என்பது.
சீவகனையே நினைந்து அரற்றுதல்
அருள்தேர் வழிநின் றறனே மொழிவாய்;
பொருள்தேர் புலன்எய் தியபூங் கழலாய்!
இருள்தேர் வழிநின் றினைவேற் கருளாய்;
உருள்தேர் உயர்கொற் றவன்மைத் துனனே. 348
348. பொருள் தேர் புலன் எய்திய நின்று - தத்துவத்தை யாராயு மறிவைப் பெறவேண்டி நின்று. அறனே மொழிவாய் - வேண்டி நின்ற அவர்கட்கு அறத்தையுரைப்பாய். எய்திய - செய்யியவென்னும் வினையெச்சம். அருள் தேர் வழி - தளபதி, உலகபாலன் என்பாரிடத்து நின் அருள் இருக்கும் திறத்தை ஆராயுமிடத்து. இருள் தேர் வழி – இருள் செறிந்தவிடத்தே. கொற்றவன் - தளபதி; உலோகபாலனுமாம்,
மிகவா யதொர்மீ னிமைசெய் தனனோ?
உகவா வுனதுள் ளமுவர்த் ததுவோ?
இகவா விடர்என் வயின்நீத் திடநீ
தகவா; தகவல் லதுசெய் தனையே. 349
இவ்வாறு மிக அரற்றிச் சோர்ந்த பதுமையின் நிலையினைத் தோழியறிந்து போந்து, நிகழ்ந்தது உணர்ந்து அவளைத் தெளிவித்தற் பொருட்டுச் சில கூறலானாள்.
349. மிகவாயதோர் மிளிமை - பிறரிடத்துச் செல்லாதே என்னிடத்தே மிகச் செய்ய வேண்டி மிக்கதொரு வன்மை. உகவா – அன்பு மிகுந்து. உவர்த்தது - வெறுத்தது. இகவா இடர் – போறுக்கலாகாத இடர். நீத்திட - பெருகிட. தக - தகும்படி. வர - வந்து முயங்குக.
மக்கட் பிறப்பின் சிறுமை கூறித் தேற்றல்
பேதைமை யென்னும் வித்திற் பிறந்துபின் வினைகளென்னும்
வேதனை மரங்கன் நாறி வேட்கைவேர் வீழ்த்து முற்றிக்
காதலும் களிப்பு மென்னும் கவடுவிட் டவலம் பூத்து
மாதுயர் இடும்பை காய்த்து மரணமே கனிந்து நிற்கும். 350
350. வேதனை மரங்கள் - துன்பமாகிய மரங்கள். நாறி - தோன்றி. மாதுயர் இடும்பை - மிக்க வருத்தத்தைச் செய்யும் துன்பம்.
காதலன் பொருட்டுக் கவலலாகாமை கூறித் தேற்றல்.
பிரிந்தவற் கிரங்கிப் பேதுற் றழுதநம் கண்ணின் நீர்கள்
சொரிந்தவை தொகுத்து நோக்கின் தொடுகடல் வெள்ள மாற்றா;
முரிந்தநம் பிறவி மேனாள்; முற்றிழை இன்னும் நோக்காய்;
பரிந்தழு வதற்குப் பாவாய்! அடியிட்ட வாறு கண்டாய். 351
351. நீர்கள் - கள். அசை. மாற்றா - உறையிடவும் ஆற்றாது. முரிந்த - தெட்ட. முற்று இழை - தொழிற்பாடு முற்றவுமுடைய இழையுடையாய். பரிந்து - வருந்தி. அடியிட்டவாறு - தொடங்கினவாறு.
அன்பினின் அவலித் தாற்றா தழுவதும் எளிது; நங்கள்
என்பினின் ஆவி நீங்க இறுவதும் எளிது; சேர்ந்த
துன்பத்தால் துகைக்கப் பட்டார் துகைத்தவத் துன்பம் தாங்கி
இன்பமென் றிருத்தல் போலும் அரியதிவ் வுலகில் என்றாள். 352
352. என்பினின் - உடம்பிலிருந்து. இறுவறும் - இறப்பதும். துகைக்கப்பட்டார் - வருத்தப்பட்டவர். இன்பம் என்று – இவ்வருத்தம் நமக்கு இன்பமாம் என்று கருதி.
மேலும் தோழி நிமித்தம் கண்டு தெளிவித்தல்
முத்திலங் காகம் தோய்ந்த மொய்ம்மலர்த் தாரி னான்நம்
கைத்தலத் தகன்ற பந்தின் கைப்படும்; கவல வேண்டா;
பொத்திலத் துறையு மாந்தை புணர்ந்திருந் துரைக்கும் பொன்னே
நித்தில முறுவ லுண்டான் நீங்கினான் அல்லன் கண்டாய். 353
353. பந்தின் -பந்துபோல. பொத்து இலம் - பொந்தாகிய இல்லம். ஆந்தை புணர்ந்து இருந்து - ஆந்தை பெடையொடு கூடியிருந்து. உரைக்கும் - அவன் வரவைக் கூறும்.
வடிமலர்க் காவின் அன்று வண்தளிர்ப் பிண்டி நீழல்
முடிபொருள் பறவை கூற முற்றிழை நின்னை நோக்கிக்
கடியதோர் கௌவை செய்யும் கட்டெயிற் றரவி னென்றேன்
கொடியனாய்! பிழைப்புக் கூறேன்; குழையலென் றெடுத்துக் கொண்டான். 354
354. முடிபொருள் - முடியும் செய்கை. முற்றிழை - விளி. கடியதோர் கௌவை செய்யும் - அச்சந்தரும் ஒரு கௌவையைசச் செய்யும், கட்டெயிறு - வலிய பற்கள். பிழைப்பு - பொய். குழையல் - வருந்தாதே.
பதுமை ஒருவாறு தேறியிருந்தாளாக, பொழுது விடிந்தது அவள் தாயாகிய திலோத்தமையும் பிறரும் வந்து சூழ்ந்துகொண்டு உற்றது கேட்டு வருந்தினர். திலோத்தமை, "நெருநல் இரவில் சீவகன் கூறியது என்னை?” என்று வினவப், பதுமை நிகழ்ந்தது கூறல்.
வினைக்கும் செய்பொருட் கும்வெயில் வெஞ்சுரம்
நினைத்து நீங்குதல் ஆண்கடன்; நீங்கினனால்,
கனைத்து வண்டுணும் கோதையர் தம்கடன்
மனைக்கண் வைகுதல் மாண்பொடு எனச்சொனான். 355
355. வெயில் வெஞ்சுரம் நீங்குதல் - வெயில் மிக்கு வருத்தும் கொடிய சுரத்தைக் கடந்து போகுதல். நினைத்து - பிரிவருமை நினைத்து வருந்திப் பின் வினை மாண்பும், செய்பொருட் சிறப்பும் நினைத்து. கனைத்து - ஒலித்து. வைகுதல் - இறந்துபடாது இருத்தல்.
விரைசெய் தாமரை மேல்விளை யாடிய
அரைச வன்னம் அமர்ந்துள வாயினும்
நிரைசெய் நீலம் நினைப்பில என்றனன்
வரைசெய் கோல மணங்கமழ் மார்பினான். 356
356. அரைசலன்னம் - அரச அன்னம். அமர்ந்து உளவாயினும் - நீல மலர்கள் பயின்று உளவாயினும். நினைப்பில - நினையா. வரை மார்பி னான் - மலைபோன்ற மார்பன். செய்கோலம் - செயற்கையழகு. தாமரை குலமகளிரையும், நீலம் பரத்தையரையும் உள்ளுறுத்து நின்றன. எனவே, குலமகளிரையே நுகர்வேன் எனச் சீவகன் கூறினான் என்றாளாயிற்று.
இவ்வாறு பதுமை கூறக்கேட்டுத் திலோத்தமை மகிழ்ந்து தேற்றுதல்
அன்னம் தான் அவன்; தாமரைப் போதுநீ;
நின்னை நீங்கினன்; நீங்கலன் காதலான்;
இன்ன தாலவன் கூறிற்று எனச்சொனான்,
மன்ன னாருயிர் மாபெருந் தேவியே. 357
357. நீங்கினன் - செய்வினையுண்மையால் இப்போது நீங்கினன். நீங்கலான் - நின்பால் குன்றாக் காதல் உண்மையான் அற நீங்குவா னல்லன். மாபெருந்தேவி - பதுமையின் நற்றாயாகிய திலோத்தமை. "இவள் இறந்துபடுவள் என்று திலோத்தமை நீலத்தின் கருத்தைக் கூறவில்லை"
இது சொல்லித் தேற்றிய திலோத்தமை சொல்லால், "சீவகன் வருவன்" என்று உட்கொண்ட பதுமை உள்ளத்தே உவகை மிகுந்து தனக்குள்ளே கூறிக்கொள்ளுகிறாள்.
பதுமையின் உட்கோள்
நஞ்சினை யமுத மென்று நக்கினும் அமுத மாகாது,
அஞ்சிறைக் கலாப மஞ்ஞை யணங்கர வட்ட தேனும்
அஞ்சிறைக் கலுழ னாகும் ஆட்சியொன் றானு மென்றே;
மஞ்சனுக் கிளைய நீரேன் வாடுவ தென்னை யென்றாள். 358
358. நக்கினும் - உண்டாலும். அணங்கு அரவு - வருத்தும் பாம்பு. கலுழனாகும் மாட்சி - கருடனாகும் தன்மை. ஒன்றானும் - சிறிதும்; மஞ்சன் - மைந்தன்; சீவகன். மைந்து - வலைமை. இளைய நீரேன் - நஞ்சும் மயிலும் போலும் நீர்மையை யுடைய யான்.
ஞாயிறு தோன்றுதல்
பொய்கையுள் கமலத் தங்கண் புள்ளெனும் முரச மார்ப்ப
வெய்யவன் கதிர்க ளென்னும் வினங்கொளித் தடக்கை நீட்டி
மையிருட் போர்வை நீக்கி மண்ணக மடந்தை கோலம்
பையவே பரந்து நோக்கிப் பணிவரை நெற்றி சேர்ந்தான். 359
இரவு நிகழ்ந்த நிகழ்ச்சி முற்றும் அரசன் அறிந்து மிக்க வருத்தமுற்று ஏவலர் பலரை விடுத்துச் சீவகனைத் தேடியறிந்து வருமாறு விடுத்தான்.
359. கமலத் தங்கண் - தாமரைப் பூவிடத்தே. புள் - வண்டு. தடக் கை - பெரிய கை. மையிருட் போர்வை - மிகக் கரிய இருளாகிய போர்வை. பனிவரை நெற்றி - ஞாயிறெழும் கிழக்கு மலையுச்சி. சேர்ந்தான் - தோன்றினான்.
சீவகன் புதுவடிவு கொண்டு வடதிசை நோக்கிச் செல்வானை, அரசன் ஏவலர் கண்டு வினவல்
வேந்தனால் விடுக்கப் பட்டார் விடலையைக் கண்டு சொன்னார்
ஏந்தலே பெரிதும் ஒக்கும் இளமையும் வடிவும் இஃதே,
போந்ததும் போய கங்குல் போம்வழிக் கண்ட துண்டேல்
யாம்தலைப் படுதும் ஐய, அறியின்ஈங் குரைக்க என்றார். 360
சீவகன் விடை யிறுத்தல்
நெய்கனிந் திருண்ட வைம்பால் நெடுங்கணாள் காத லானை
ஐயிரு திங்க ளெல்லை யகப்படக் காண்பிர்; இப்பால்,
பொய்யுரை யன்று, காணீர்; போமினம், போகி நுங்கன்
மையலங் களிற்று வேந்தன் மைந்தனுக் குரைமின் என்றான். 361
361. விடுக்கப்பட்டார் - தேடுமாறு விட்ட ஏவலர். விடலை - காளையாகிய சீவகன். ஏந்தலே - ஏந்தலாகிய நின்னையே. இஃதேயென்பதை இளமைக்கும் கூட்டுக. போய கங்குல் - போன இரவே. ஈங்கு - இவ்விடத்தே எமக்கு.
361. நெடுங்கணாள் - பதுமை. ஐயிரு திங்கள் எல்லை யகப்பட - பத்துத் திங்களுள் ஒன்று குறைய ஒன்பதாந் திங்களிலே. இன்பால் காணீர்; இது பொய்யுரையன்று என்க. போமின் - அம் சாரியை. மையல் அங் களிறு - மதம்பட்ட யானை. வேந்தன் மைந்தனுக்கு - வேந்தனுக்கும் மைந்தனுக்கும்.
பதுமையார் இலம்பகம் முற்றும்
--------
This file was last updated on 6 May 2015.
Feel free to send corrections to the Webmaster.