சீவக சிந்தாமணி - சுருக்கம்
உரைக் குறிப்புக்களுடன் - பாகம் 2
ஔவை துரைசாமிப்பிள்ளை தொகுப்பு
cIvaka cintAmaNi - curukkam, with notes -part 2
by auvai turaicAmi piLLai
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Digital Library of India for providing a scanned image version
of this work for the e-text preparation. This e-text has been prepared via the Distributed
Proof-reading implementation and we thank the following volunteers for their assistance:
Anbu Jaya, V. Devarajan, R. Navaneethakrishnan, P. Thulasimani,
V. Ramasami, A. Sezhian, P. Sukumar, SC Thamizharasu, V. Jambulingam and Mithra.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2015.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
சீவக சிந்தாமணி - சுருக்கம் /உரைக் குறிப்புக்களுடன் - பாகம் 2
ஔவை துரைசாமிப்பிள்ளை தொகுப்பு
Source:
"சீவகசிந்தாமணி - சுருக்கம்
உரைக் குறிப்புக்களுடன்"
செங்கம் போர்டு உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரியரும்,
ஐங்குறுநூறு உரையாசிரியரும் ஆகிய வித்துவான்
ஓளவை. சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் தொகுத்தெழுதியது
திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சிந்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட்,
திருநெல்வேலி :: சென்னை.
விசு – மார்கழி - வெளியீடு--325
[Copy-right]
Published by: The South India Saiva Siddhanta Works Publishing Society,
Tinnevelly, Ltd, Tirunelveli and Madras.
December 1941.
The Jupiter Press, Madras. 820/12-41
சீவக சிந்தாமணி - சுருக்கம்
6. கேமசரியார் இலம்பகம்
6. கேமசரியாரிலம்பகம்-கேமசரியென்பவளைச் சீவகன் மணந்துகொண்ட செய்தியைக் கூறும் இலம்பகம்.
[சீவகன் பலவிடங்கட்கும் சென்று சித்திரக்கூடம் அணைந்து தாபதர் சிலரைக் கண்டு அவர்கட்கு நன்னெறி காட்டித் திருத்தியதும், தக்கநாடு சென்றதும் கேமமாபுரத்துச் சுபத்திரனென்னும் வணிகன் மகள் கேமசரியென்பவள் நலம் கனிந்திருந்ததும், அவ் வணிகன் தன் மகட்குரிய கணவனைப் பெறும்பொருட்டு நாளும் விருந்தாற்றிவந்ததும், சீவகன் அவளைக் கண்டு வேட்கைகொண்டதும், அவளை மணந்து இரு திங்கள் தங்கியிருந்து வேறிடம் செல்லக் கருதி அவள்பால் சொல்லாது பிரிந்ததும், எதிரே போந்த ஒருவனுக்குச் சீவகன் அறவுரை கூறித்தான் அணிந்திருந்த கலன்களை ஈந்து அப்பாற் சென்றதும், பிறவும் கூறப்படுகின்றன.]
வடக்கு நோக்கித் தனியே காலால் நடந்தேகும் சீவகன் சுதஞ்சணன் முன்பு கூறிய சித்திரகூடத்தைக் குறித்துச் சென்றுகொண்டிருந்தான். வழியில், காடுகளும் குன்றுகளும் அவனுக்கு இனிய காட்சி வழங்கின. அவற்றைக் கண்டு செல்பவன், எதிரில் நின்ற குன்றில், சுனை நீராடி, இனிய பூக்களைக் கொண்டு, அங்கேயிருந்து அருகன் கோயிலை யடைந்து வழிபட்டு, அதற்கு முன்னே இருந்த சித்திர கூடத்தை யடைந்தான். அங்கே வாழ்ந்த தாபதர் அவனை வரவேற்றனர்.
சித்திரகூடத் தாபதர் இயல்பு
அரிய கொள்கையர் ஆரழ லைந்தினுள்
மருவி வீடு வலைக்குறு மாட்சியர்;
விரிய வேதம் விளம்பிய நாவினர்;
தெரிவில் தீத்தொழில் சிந்தையில் மேயினார். 362
362. அரிய கொள்கையர் - பிறரால் கொள்ளற்கரிய எண் வகைத் தாபத ஒழுக்கம். அவை நீர் பலகால் மூழ்கல், நிலத்திருத்தல். தோலுடுத்தல் முதலாக வரும் எட்டு. அழல் ஐந்து - ஐவகை வேள்வி; அவை, தென்புலத்தார் முதலாகவுள்ள ஐவரையும் ஓம்புதல். மருவி - பொருந்தி. வீடு வளைக்குறு மாட்சியர் - வீடுபெறுதற்கு முயலும் முயற்சியினர். தீத் தொழில் - காமவேட்கை.
விருந்தோம்பல்
வன்னி யின்னமு தும்வரை வாழையின்
தெள்ளு தீங்கனி யும்சில தந்தபின்
வெள்ள மாரிய னாய்விருந் தார்கென
உள்ள மாட்சியி னாருவந் தோம்பினார். 363
363. வள்ளி இன்னமுது - வள்ளிக் கிழங்கு. தெள்ளிய – முதிரக் கனிந்த. வெள்ள மாரியனாய் - பெருநீர் பொழியும் மழைபோலப் பலர்க்கும் பயன்படுகின்றவனே. ஆர்க - உணர்க.
தாபதர் சீவகனை அளக்கக் கருதுதல்
பாங்கின் மாதவர், "பான்மதி போன்றிவன்
வீங்கு கல்வியன்; மெய்ப்பொருட் கேள்வியின்
ஆங்கு நாமும் அளக்குவம்" என்றுதம்
ஓங்கு கட்டுரை ஒன்றிரண் டோதினார். 364
364. பாங்கு - நல்லிடம். பால்மதி - முழுமதி, வீங்கு - விரிந்த. மெய்ப்பொருள் - தத்துவம். அளக்குவம் - அறிவின் திட்பத்தைக் காண்பேம்.
சீவகன் கூறுதல்
ஐயர் கூறலும் அண்ணலும் கூறுவான்;
சையம் பூண்டு சமுத்திரம் நீந்துவான்
உய்யு மேல்தொடர்ப் பாட்டின் இங்கு யாவையும்
எய்தி னார்களும் உய்ப்பஎன் றோதினான். 365
365. சையம் பூண்டு - கல்லைக் கட்டிக்கொண்டு. தொடர்ப் பாட்டின் - காம நுகர்ச்சியாகிய கட்டுடன். யாவையும் - எல்லா நுகர்ச்சிகளையும்.
தாபதர் வினவல்
ஏம நன்னெறி எம்நெறி; அல்நெறி
தூய்மை யில்நெறி; யாமும் துணிகுவம்;
காமன் தாதை நெறியின்கட் காளைநீ
தீமை யுண்டெனில் செப்பெனச் செப்பினான். 366
366. ஏம நன்னெறி - அழிவில் இன்பந்தரும் நல்வழி. அல்நெறி - யாம் கொண்டுள்ளதல்லாத நீ கூறிய நெறி. துணிகுவர் - தெளிந்துள்ளோம். தாமன் தாதை நெற்யின்கண் - காமனுக்குத் தந்தையாகிய திருமால் கூறிய இந் நெறியின்கண். செப்பு என - கூறுக என்று கேட்க.
சீவகன் அவர்களைத் தெருட்டுதல்
நீட்டிய சடைய மாகி நீர்மூழ்கி நிலத்திற் சேர்ந்து
வாட்டிய வுடம்பின் யாங்கள் வரகதி விளைத்து மென்னிற்
காட்டிடைக் கரடி போகிக் கயமூழ்கிக் காட்டி னின்று
வீட்டினை விளைக்க வேண்டும்; வெளிற்றுரை விடுமின் என்றான். 367
367. வாட்டிய உடம்பின்-வருத்திய உடமபினாலே. வர கதி -மேலான கதி. வினைத்தும் - பெற முயல்கின்றேம். வீட்டினை விளைக்க - வீடுபேறு எய்த. வெளிற்றுரை - பயனில்லாத சொல்.
நோய்முதிர் குரங்கு போல நுகர்ச்சிநீர் நோக்கல் வேண்டா
காய்முதிர் கனியி னூழ்த்து விழுமில் யாக்கை யின்னே
வேய்முதிர் வனத்தின் வென்றான் உருவோடு விளங்க நோற்றுப்
போய்முதிர் துறக்கத் தின்பம் பருகுவ புரிமின் என்றான் 368
368. நுகர்ச்சி - காம நுகர்ச்சி. காய் முதிர் கனியின் - காய் முற்றிப் பழுத்து விழும் பழ்ம்போல. வேய் முதிர் வனம் - மூங்கிற்காடு. வென்றான் - அருகன். உருவொடு - வேடத்தை மேற்கொண்டு, பருகுவ - நுகர்தற்குரிய தவங்களை.
மெய்வகை தெரித்ல் ஞானம் விளங்கிய பொருள்கள் தம்மைப்
பொய்வகை யின்றித் தேறல் காட்சியையும் பொறியும் வாட்டி
உய்வகை யுயிரைத் தேயா தொழுகுதல் ஒழுக்க மூன்றும்
இவ்வகை நிறைந்த போழ்தே யிருவினை கழியு மென்றான். 369
369. ஞானம் - உண்மையறிதல்; காட்சி - பொய்யின்றாகத்
தெளிதல்; ஒழுக்கம் - உயிர் உய்யும்வகையொழுகுதல். தேயா - கெடாமலே.
இது கேட்டுத் தெளிவுகொண்ட அத் தாபதர் மகிழ்ந்து அவ்வாறே யொழுகி மேம்படலாயினர். சீவகனும் அன்றிரவு அவர் பள்ளியிடத்தே தங்கி மறுநாட்காலையே புறப்பட்டுச் சென்று தக்க நாட்டை யடைந்தான். அந்நாட்டின் தலைநகரமான கேமமாபுரத்தைச் சீவகன் சென்று சேர்ந்தான். அந்த நாட்டை நரபதி தேவன் என்பவன் ஆட்சி புரிந்து வந்தான்.
கேமசரி வரலாறு
அந்நகர்க் கரசனே யனைய ஆண்டகை
மெய்ந்நிக ரிலாதவன்; வேத வாணிகன்;
கைந்நிக ரமைந்தவேல் கமழுந் தாரினான்;
மைந்நிகர் மழைக்கணார் மருட்ட வைகுவான். 370
370. மெய் நிகர் இல்லாதவன் - வடிவால் ஒப்பில்லாதவன். வேத வாணிகன் - வேதத்தையுடைய வாணிகன். கைநிகர் அமைந்த வேல் -கைக்கு ஒப்ப அமைந்த வேல்.
வார்சிலை வடிப்ப வீங்கி வரையெனத் திரண்ட *தோளான்
சோர்புயல் தொலைத்த வண்கைச் சுபத்திரன் மனைவி பெற்ற
சீர்நலம் கடந்த கேம சரியெனத் திசைக ளெல்லாம்
பேர்நலம் பொறித்த பெண்மைப் பெருவிளக் காகி நின்றாள். 371
371. வடிப்ப -பயிலுவதால். வரையென - மலைபோல. சேரர் புயல் தொலைத்த - பெய்யும் முகிலை யொத்த. தோளான் - சுபத்திரன். மனைவி - நிப்புதி. நலம் கடந்த - நலம் மிகுந்த. பேர் ...நின்றாள் - பெயரையும் அழகையும் எழுதினதொரு பெண்மையையுடைய விளக்கெனவாகி நின்றாள்.
கேமசரியின் தந்தையான சுபத்திரன் விருந்தோம்பும் கடமை மேற்கொள்ளுதல்
*மாசிலாள் பிறந்த ஞான்றே *மதிவலரன் விதியின் எண்ணிக்
காசிலான் கண்ட போழ்தே கதுமென நாணப் பட்டான்
தூசுலாம் அல்கு லாட்குத் துணைவனாம்; புணர்மின் என்று
பேசினான்; அன்று கொண்டு பெருவிருந் தோம்பு கின்றான். 372
372. மதிலவான் - சோதிடன். விதியின் – நூல்களைக்கொண்டு காசு - குற்றம். கதுமென நாணப்பட்டான் - சட்டென இவள் நாணமெய்தப் பண்ணுவோன். காணப்பட்டவன் எவன் அவன் துணைவனாம் என்க. துணைவன் - கணவன். புணர்மின் - அவனுக்கு மணம்செய்ம்மின். தனக்குக் கணவராகும் பான்மையில்லாதார் அவளுக்கு ஆடவராய்த் தோன்றார்; அதனால் அவள் பலரையும் காண்பள்; அக் காட்சியால் கபற்றமிலள் என்றற்கு, "மாசிலாள்" "காசிலாள்" என்று கூறினார்.
இவ்வாறு பன்னிரண்டு யாண்டுகள் கழிந்தன. கேமசரியும் மணத்துக்குரிய செவ்வி யெய்தி நலம் கனிந்து விளங்குவாளாயினள். அவளைப் பெற்ற தாயாகிய நிப்புதி
யென்பாள், தன் மகட்குரிய கணவன் வந்கிலனே எனக் கவன்றாளாக, அவளைச் சுபத்திரன் தேற்றி வந்தான். கேமசரியின் கண்ணெதிரே விருந்துண்ணப் போந்த ஆடவரனைவரும் பேடிகளாகவே தோன்றி நின்றனர்.
கேமசரி தன்னை மணத்தற்குரிய காதலனை நோக்கி நிற்றல்
தாழ்தரு பைம்பொன் மாலைத் தடமலர்த் தாம மாலை
வீழ்தரு மணிசெய் மாலை இவற்றிடை மின்னின் நின்று
சூழ்வளைத் தோளி செம்பொன் தூணையே சார்ந்து நோக்கும்
ஊழ்படு காத லானை யொருபிடி துசுப்பி னாளே. 373
373.தாமம் - மாலை. பொன்மாலை. பூமாலை. மணிமாலை என்ற இவற்றிடை என இயையும். ஊழ்படு காதலானை - தனக்குத் தொன்றுபட்டு வருகின்ற காதலானை. பிடி துசுப்பு - பிடியளவற்றாகிய இடை.
சீவகன் இக் கேமமாபுரத்தைச் சேரவந்து ஓர் ஆலமரத்தின் நிழலில் இருத்தல்.
பொன்னிலத் தெழுந்தோர் பொருவில் பூங்கொடி
மின்னுவிட் டெரிவதோர் நலத்தள் வீங்கிருள்
பின்னிவிட் டனகுழல் பெருங்கண் பேதையூர்
துன்னினன் தொடுகழல் குரிசில் என்பவே. (374)
374. பொன்நிலம் - பொன்னுலகம். பொருவில் பூங்கொடி - ஒப்பில்லாத காமவல்லிக் கொடி. மின்னுவிட்டு - ஒளிவிட்டு. வீங்கிருள் பின்னு விட்டு அனகுழல் - மிக்க இருளைப் பின்னிவிட்டது போலும் குழல். பேதையூர் - பேதையாகிய இக் கேமசரி வாழும் ஊர். என்ப - அசை.
தென்றிசை முளைத்ததோர் கோலச் செஞ்சுடர்
ஒன்றிமற் றுத்தரம் வருவ தொத்தவண்
மன்றல்கொள் மார்பினான் வந்துஓர் ஆல்நிழல்
நன்றுவந் திருந்தனன் நாதற் சிந்தியா. (375)
375. கோலச் செஞ்சுடர் - அழகிய ஞாயிறு. உத்தரம் - வடதிசை. மன்றல் - நறுமணம். ஆல் நிழல் - ஆலமரத்தின் நிழலில். நன்று உவந்து - மிக மகிழ்ந்து. நாதன் - அருகன். சிந்தியா - நமோ அரஹந்தாணம் என்று கூறி மந்திரத்தைச் சிந்தித்து.
சீவகனை நெடுந் தொலைவிலே கண்டான் சுபத்திரன். அவனது வடிவழகு கண்டு முதற்கண் திருமாலோ என ஐயுற்று, அருகே சென்று, மகனெனத் தெளிந்து இன் சொற்கள் பல சொல்லி, அவனைத் தன் தேர்மீதுகொண்டு தன் பெருமனை நோக்கி வரலானான். அதுபோழ்து, கேமசரி வீணையை யிசைத்துக் கடவுளைப் பரவத் தொடங்கினான்.
கேமசரி பாட்டு
வீங்கோத வண்ணன் விரைததும்பு பூம்பிண்டித்
தேங்கோத முக்குடைக்கீழ்த் தேவர் பெருமானைத்
தேவர் பெருமானைத் தேனார் மலர்சிதறி
நாவின் நவிற்றாதார் வீட்டுலகம் நண்ணாரே. (376)
376. ஓதவண்ணன் - கடல் நிறம் கொண்ட நேமிநாதசாமி. விரை - நறுமணம். தேங்கு ஓதம் - தேங்கிநிற்கும் கடல்போல.
அடல்வண்ண வைம்பொறியும் அட்டுயர்ந்தோர் கோமான்
கடல்வண்ணன் முக்குடைக்கீழ்க் காசின்றுணர்ந்தான்;
காசின் றுணர்ந்தான் கமல மலரடியை
மாசின்றிப் பாடாதார் வானுலகம் நண்ணாரே. 377
377. அடல்வண்ண ஐம்பொறி - உயிரை வருத்துவதே இயல்பாகவுடைய பொறிகள் ஐந்து. அட்டு - வென்று. காசின்று – குற்றமின்றி மாசு - நெஞ்சில் அழுக்கு.
பூத்தொழியாப் பிண்டிப் பொங்கோத வண்ணனை
நாத்தழும்ப வேத்தாதார் வீட்டுலகம் நண்ணாரே;
வீட்டுலகம் நண்ணார் வினைக்கள்வர் ஆறலைப்ப
ஓட்டிடுப எண்குணனும் கோட்பட் டுயிராவே. 378
378. பூத்து ஒழியா - பூத்து மாராத. தழும்ப - தழும்பேறும்படி. ஆறலைப்ப - வழிபறித்தவாறே. என்குணம் - கடையிலா அறிவு முதலிய எண்குணம்.
இப்பாட்டிசை கேட்டுப் பரிவுமிக்க நிப்புதி, "இத் துணைக் கடவுட்பற்றும் இயல்நலமும் உடைய இவட்கு ஏற்ற கணவன் வந்திலனே" என ஏங்கி, அத்தகையோன் ஒருவன் விரைய வருதல் வேண்டுமெனத் தானும் கடவுளைப் பரவினாள் *. அக்காலையில் சுபத்திரன் சீவகனுடன் தன் மனைக் கண் வந்தடைந்தான்.
கேமசரியும் சீவகனும் ஒருவரை யொருவர் நோக்குதல்.
நிலந்தினக் கிடந்தன நிதிய நீள்நகர்ப்
புலம்பறப் பொலிவோடு புக்க காலையே,
இலங்குபூங் கொடியன ஏழை நோக்கமும்
உலங்கொல்தோ ளுறுவலி நோக்கும் ஒத்தவே. 379
" இவனை வணங்காதார்க்கு நுகரப் பெறாமையால் உளதாம் பற்று ஒழிவின்றாய் வருவதன்றி நுகர்ச்சி யெய்திப் பற்றற்று வீடுபெறுதல் கூடாதாயிருந்தது என்பது கருத்து."
379. நிலம்தினக்கிடந்த நிதி - மண் தினக்கிடந்தனவாகிய நிதி. புலம்பு அற - தனிமை வருத்தம் நீங்கும்படி. ஏழை - கேமசரி. உறுவலி - மிக்க வலிமையுடையவனான சீவகன்.
கேமசரியின் காதல் நிகழ்ச்சி
கண்ணுறக் காளையைக் காண்டலும் கைவளை
மண்ணுறத் தோய்ந்தடி வீழந்தன மாமையும்
உண்ணிறை நாணும் உடைந்தன வேட்கையும்
ஒண்ணிறத் தீவினை தான், உருக்குற்றாள். 380
380. கண்ணுறக் காண்டதும் - கண் நோக்கம் பொருந்தப் பார்த்ததும், தோய்ந்து - செறிந்து. ஒண்ணிறத் தீ விளைத்தான் – ஒன்னிய நிறம் கொண்ட வேட்கைத் தீயும் வளர்த்துக்கொண்டாள். உருக்குற்றாள் - அத் தீயினால் உருகலானாள்.
சீவகன் மண நிகழ்ச்சி
வாக்கணங் கார்மணி வீணைவல் லாற்கவள்
நோக்கணங் காய்மனம் நோய்செய நொந்தவன்
வீக்கணங் கார்முலை வேய்நெடுந் தோளியொர்
தாக்கணங் கோ?மக ளோ?எனத் தாழ்ந்தான். 381
381. வாக்கு அணங்கார் அணி வீணை வல்லான் - திருத்தத்தையுடைய தெய்வத் தன்மை நிறைந்த அழகிய யாழ் வல்லுநனான சீவகன். நோத்து அணங்காய் - சோக்கம் வருத்தம் செய்வதாய். கொத்து – நோய் செய்வதால். வீக்கு - கச்சணிந்த. தாக்கணங்கோ - தன்னாற் காணப்பட்டாரைத் தீண்டி வருந்தும் தெய்வமகளோ. மகளோ - மண்ணவர் மகளோ.
கேமசரியின் காதற் குறிப்பறிந்த தோழியர் சீவகனது மெய்வனப்பு நோக்கி அவனைச் சூழ்ந்து கொண்டனர். இது தெரிந்து நிப்புதி ஆங்கே போந்து அவனது அழகு கண்டு மன மகிழ்ந்தாள்.
நிப்புதி சீவகனைக் காண்டல்
நினைப்பரு நீணிறை நிப்புதி சேர்ந்தாங்கு
இனத்திடை யேறனை யான்எழில் நோக்கிப்
புளக்கொடி பொற்பொடு புண்ணிய நம்பி
வனப்பிடை யேகண்டு வாட்கண் அகன்றான். 382
382. நினைப்பரும் நீள்நிறை - நினைத்தற்கரிய மிக்க நிறையையுடைய. நிப்புதி - நிஸ்ப்ருதி என்னும் வடசொற் சிதைவு. இனத்திடை ஏறு - சிங்கக்கூட்டத்தின் இடையே நின்ற ஆண்சிங்கம். புளக்கொடி - முல்லைக்கொடி போலும் கேமசரி. பொற்பொடு - ஏறனையான் எழில் நோக்கி என்று இயைக்க. வனப்பு- - அழகு மிகுதி. கண் அகன்றாள் - உடம்பெல்லாம் கண்ணாயினாள்.
திருந்து மல்லிகைத் தேங்கமழ் மாலையான்
புரிந்து சூடினும் பூங்கொடி நுண்ணிடை
வருந்து மான்மட வாயெனும் வஞ்சநீ
கரிந்தி யானையக் காண்டலும் வல்லையோ. 383
383. திருந்து - அழகிய. யான்புரிந்து சூடினும் - யான் விரும்பி யணிந்து கொள்ளினும். நுண்ணிடைவருந்துமால் - நுண்ணிய இடையானது முரிந்துவிடும். எனும் வஞ்சம் - என்று பொய்யாகப் பாராட்டும் வஞ்சனை. கரிந்து நைய - கருகிவருந்த.
கேமசரி இறந்து பாடு தவிர்தல்
முயங்கினான் சொன்ன வண்டாய் முகிழ்முலைத் தெய்வம் சேர
உயங்குவாள் உணர்ந்து கேள்வற் கூனமும் பிரிவு மஞ்சி
இயங்குவாள் நின்று ஆவி தாங்கினன் என்ப போலும்
வயங்குபொன் ஈன்ற நீல மாமணி முலையி னாளே. 384
384. முயங்கினான் - முயங்கியவனான சீவகன். முகிழ் - கோங்கரும்பு. உயங்குவான் - வருந்துபவன். உணர்ந்து - ' துணை வண்டு துஞ்சின் நீயும் துஞ்சுவை' என்று முன் கூறியதை நினைத்து. ஊனம் - பழி. பிரிவு - இறந்துபாடு. இயங்குவான் நின்ற - போவதற்கு ஒருப்பட்டு நின்ற தாங்கினன் - போகாதே தடுத்துக் கொண்டான். பொன் - பாலை.
கேமசரி வண்டுகட் குரைத்தல்
வஞ்சவாய்க் காமன் சொன்ன மணிநிற வண்டு காணீர்
துஞ்சுவேன் றுயரந் தீரத் தொழுதகு தெய்வ மாவீர்
மஞ்சுதோய் செம்பொன் மாடத் தென்மனை தன்னு ளென்றாள்
பஞ்சிமேன் மிதிக்கும் போதும் பனிக்குஞ்சீ றடியி னாளே. 385
385. வஞ்சவாய்க் காமன் - வஞ்சம் கலந்த சொல்லையுடைய காமன். மணிநிறம் - நீல மணியின் நிறம். ஆவீர் - ஆவீர்களாக. மஞ்சு - மேகம். பனிக்கும் - வருந்தும். சீறடி - சிறிய அடி.
மிகவருந்தி, ஒருவாறு தெளிந்து தக்க ஆறுதல் கூறலுற்றாள்.
திப்புதி தேற்றுதல்
விழுத்திணைப் பிறந்து வெய்ய வேட்கைவே ரரிந்து மெய்ந்நின்று
இழுக்கமொன் றானு மின்றி யெய்திய தவத்தின் வந்து
வழுக்குத லின்றி விண்ணோன் வச்சிர நுதியின் இட்ட
எழுத்தனான் தந்த இன்பம் இன்னும்நீ பெறுதி யென்றாள். 386
386. விழுத்திணை - உயர்ந்த குடி. வேட்கைவேர் – ஆசையாகிய பிறவியின் வேரை. மெய் - சன்மார்க்க நெறி. இழுக்கம் - தப்பு. எய்திய தவம் - முற்பிறவியில் செய்த தவம். விண்ணோன் -அயன். வச்சிர நுதி- வச்சிரவூசி. எழுத்தனான் - எழுத்துப்போலத் தவறாதவன்.
எரிதலைக் கொண்ட காமத் தின்பநீர்ப் புள்ளி யற்றால்;
பிரிவின்கண் பிறந்த துன்பம் பெருங்கட லனைய தொன்றால்;
உருகிநைந் துடம்பு நீங்கின் இம்மையோ டும்மையின்றி
இருதலைப் பயனும் எய்தார் என்றுயாம் கேட்டு மன்றே. 387
387. எரிதலைக் கொண்ட - வெதுப்புதலையுடைய. நீர்ப்புள்ளி - நீர்த்துளி. அற்று - போல்வதாம். காமத்தின்பம் - கூட்டத்தால் பிறக்கும் இன்பம். உருகிநைந்து - பிரிவாற்றாது நெஞ்ருகி வருந்தி. இம்மை யோடு உம்மையின்றி - இம்மை மறுமை யின்பம் இன்றி. இருதலைப்பயனும் - இரண்டன் உறுதிப் பயனும்.
மன்னுநீர் மொக்கு ளொக்கு மானிட ரிளமை யின்ப
மின்னினொத் திறக்குஞ் செல்வம் வெயிலுறு பனியி னீங்கு
மின்னிசை யிரங்கு நல்யா ழிளியினு மினிய சொல்லா
யன்னதால் வினையி னாக்க மழுங்குவ தென்னை யென்றாள். 388
388. மன்னும் - மிகவும், இறக்கும் - கெடும். வெயில் உறு பனியின் - வெயிலைக் கண்ட பனி போல. இசைகறங்கும் நல்யாழ் இளியினும் - இசையைச் செய்யும் நல்லயாழின் இளியென்னும் நரம்பினும். வினையின் ஆக்கம் - தீவினையின் செயல்வன்மை. அமுங்குவது - வருந்துவது.
வாசமிக் குடைய தாரான் வண்டினுக் குரைத்த மாற்றப்
பாசத்தா லாக்கப் பட்ட வாவிய ளல்ல தெல்லாம்
பேசினார் பிணையன் மாலை பிசைந்திடப் பட்ட தொத்தா
தூசுலாம் பரவை யல்குல் தூமணிப் பாவை யன்னாள். 389.
389. வாசம் - நறுமணம். மச*ற்றப் பாசத்தால் – சொல்லாகிய பிணிப்பாலே அன்பு மிகுதலால். ஆக்கப்பட்ட - உண்டாக்கப்பட்ட. அல்லதெல்லாம் பேசின் - உயிரொழிந்த உடம்பின் தன்மை யெல்லாம் சொல்லின். பிணையல் மாலை - பிணையலாகிய மாலை, பூமாலை. பரவை -- பரந்த.
சீவகனைத் தேடிக் காணாமையால் ஒருவாறு தெளிந்திருத்தல்
பையர விழுங்கப் பட்ட பசுங்கதிர் மதிய மொத்து
மெய்யெரி துயரின் மூழ்க விதிர்விதிர்த் துருகி நையும்
மையிருங் குழலி னான்தன் மைந்தனை வலையிற் சூழ்ந்து
கையரிக் கொண்டும் காணான்; காளையும் காலிற் சென்றான். 400
400. பையர - படத்தையுடைய பாம்பு; அரா என்பதன் விகாரம். எரி துயரின் மூழ்க - எரியுந் துயரத்திலே மூழ்கி. வலையிற் சூழ்ந்து - வலையால் வளைத்துக்கொண்டு. கையரிக் கொண்டும் - கையால் அலைத்து அரித்துத்தேடியும்.
எவ்வூரீர் ரெப்பதிக்குப் போந்தீர்நும்
மனைவியர்தா மெனைவர் மக்க
ளொவ்வாதார் தாமெனைவ ரொப்பார்மற்
றெனைவர்நீ ருரைமி னென்றாற்
கிவ்வூரே னிப்பதிக்குப் போந்தேனென்
மனைவியரு நால்வர் மக்க
ளொவ்வாதார் தாமில்லை யொப்பா
னொருவனென வுரைத்தான் சான்றோன். 401
401. போந்தீர் - வந்தீர். ஏனைவர் - எத்துணைபேர் . ஒவ்வாதார் - ஒழுக்கமில்லாதவர். ஒப்பர் - ஒழுக்கமுடையவர். சீவகன் தன் உடம்பை ஊர் என்றும் பதியென்றும் குறித்து, இவ்வுடம்பீடத்தேன் – இவ்வுடம் பெடுத்தற்குப் போந்தேன் என்றும் கூறினான். சான்றோன் – உணர்வுடைய சீவகன்.
நள்ளிருளில் சீவகன் சென்றுகொண்டிருக்கையில், அவ்விருள் புலந்து கெடுமாறு திங்கள் வானத்தில் தோன்றிற்று. அதன் ஒளியால் இனிதே அவன் நெறியறிந்து சென்றான். பின்பு சில நாழிகை கழிந்ததும் பொழுது விடிந்தது; ஞாயிறு எழுந்து தன் ஒள்ளொளியைப் பரப்பிற்று. அதுகேட்ட அவன் மனைவையர் நால்வர் வயிற்றில் ஒரு
மகன் பிறந்துளான் என்ற சொல்லால் வியப்புக்கொண்டு அஃது எங்ஙனம் கூடுமென்று கேட்டான்.
சீவகன் தனக்கு மனைவியர் முதலாயினார் இவர் என வுரைத்தல்
நல்தானம் சீலம் நடுங்கரத்
தவம் அறிவர் சிறப்பு இந்நான்கும்
மற்றாங்குச் சொன்ன மனைவியர்; இந்
நால்வர் அவர் வயிற்றுன் தோன்றி
உற்றான் ஒரு மகனே; மேற்கதிக்குக்
கொண்டுபோம் உரவோன் தன்னைப்
பெற்றார் மகப்பெற்றார்; அல்லாதார்
பிறர் மக்கள் பிறரே கண்டீர். 402
402 அறிவர் சிறப்பு - இறைவர் பூசனை. கடுங்கரத் தவம் - அசைவில்லாத் தவம், தானம் முதலிய நான்கும் மனைவியர். உற்றாள் – உற்றவனாகிய நல்வினை. ஒருமகன் - ஒப்பற்ற மகன். உரவோன் - திண்ணியோன். அல்லாதார் பிறர் - நல்வினையாகிய மகனைப் பெறாதார் மகப்பெறாராவர். மக்கள் பிறரே - நல்வினையில்லாதவர் பெற்ற மக்களும் மக்களாகார்.
7. கனகமாலையார் இலம்பகம்
தானம், சீலம், தவம், இறைவர் வழிபாடு என்ற நான்குமே மனைவியர் என்றும், நல்வினையே மகன் என்றும்
குறிஞ்சி யெல்லையி னீங்கிக்
கொடிமுல்லை மகண்மொழிந் தாடச்
செறிந்த பொன்னிதழ்ப் பைந்தார்க்
கொன்றையஞ் செல்வதற்குக் குரவ
மறிந்து பாவையைக் கொடுப்பத்
தோன்றி யஞ்சுட ரேந்து
நிறைந்த பூங்குருந் துகுதே
னீர்பெய் தார்த்தன சுரும்பே. 410
410 மகன் மொழிந்தாட - மகட்பேசிச் செல்லுதலால். பைந்தார்க்கொன்றை - கொன்றை மாலைபோல மலர்வதால், பைந்தார்க் கொன்றையென்றார். குராமரத்தின் பூந்துணர் பாவையெனப்படுதலின் "பாவை கொடுப்ப" என்றார். தோன்றி - தோன்றிமரத்தின் ஒளிதிகழும் வெண்பூ. குருந்து - குருந்தமரம். தேன்நீர் - தேனாகிய நீர். சுரும்பு
தேனீர்பெய்து ஆர்த்தன என்க.
சீவகன் இக்காட்சியைக் கண்டு மகிழ்ச்சி மிகுந்து செல்ல, அவனெதிரே வானுலகிற்குச் செல்லும் வழி காட்டுவதுபோல வனகிரி யென்னுமொரு மலை தோன்றிற்று. அதனடியில் தாமரையும் கழுநீரும் நீலமும் ஆம்பலும் நிறைந்த நீர்நிலையொன்றை அகத்தேயுடைய பொழிலொன்றிருந்தது. சீவகன் அதன்கட் சென்று தங்கினான்.
அநங்கமாவீணை அவ்விடத்திற்கு வருதல்
கானத்தினேகு கின்றான் கடிபொழில் கவின்கண் டெய்தித்
தானத்தி லிருத்த லோடும் தையலாள் ஒருத்தி தானே
வானத்தின் இழிந்து வந்த வானவர் மகளு மொப்பாள்.
நானமும் பூவும் சாந்தும் நாறவந் தருகு நின்றாள். 411
411 கானத்தி னேகுகின்றான் - சீவகன். தானத்தில் - ஓரிடத்தே. மகளும் - உம்மை. இசைநிறை. நானம் - புழுகு. நாற – மணம் கமழ.
சீவகன் அவளைக் காண்டல்
அணிகல வரவத் தாலும் அமிழ்துறழ் நாற்றத் தாலும்
பணிவரும் சிங்க நோக்கின் பணையெருத் துறழ நோக்கி,
மணிமலர் நாகம் சாந்து வழையொடு மரவ நீழல்
துணிவருஞ் சாயல் நின்றாள் தோன்றல்தன் கண்ணிற் கண்டான். 412
412 அரவம் - ஓசை. பணிவரும் - பிறரால் வணங்குதற்கரிய. நோக்கின் - நோக்குவதைப்போல. பணையேருத்து உறழ – பருத்த கழுத்து மாறுபட. மணிமலர் - மணிபோலும் பூ. வழை - சுரபுன்னை. மரவம் - கடம்புமரம். துணிவரும் சாயல் - வானவர் மகளோ மண்ணவர் மகளோ எனத் தெளிதற்கரிய சாயல். உறழநோக்கி மரவநிழலில் நாகத்தைச் சார்ந்து நின்ற அநங்கவீணையைக் கண்டான் என்க.
அநங்கமாவீணை அவன்மேல் வேட்கை கொளல்
முறுவல்முன் சிறிய தோற்றா முகைநெறித் தனைய வுண்கண்
குறுநெறி பயின்ற கூந்தல் குறும்பல்கா லாவிக் கொள்ளாச்
சிறுநுதற் புருவ மேற்றாச் சேர்துகில் தானை சோர
அறியுநர் ஆவி போழும் அனங்கன்ஐங் கணையு மெய்தான். 413
413 தோற்றா - தோற்றி. முகை நெறித்தனைய உண்கண் - அரும்பை அலர்த்தினாலொத்த மைதீட்டிய கண். குறும்பல்கால் ஆவிக் கொள்ளா - அணுகிப் பல்கால் ஆவிக்கொண்டு . சேர்துகில் தானைசோர - மேற்போர்த்த துகிலொடு உடுத்த தானை ( முந்தானை) நெகிழ. அனங்கன் ... எய்தான் - வேட்கை கிளரச் செய்தான்,.
சீவகன் அவள் செயலைக்கண்டு மனத்தே அருவருப்புற்றுப் பெண்பிறப்பின் இயல்பையே வெறுத்தவனாய், மகளிர் மனம் வேறுபடுந் திறத்தைத் தனக்குள்ளே எண்ணியிருந்தான். அவன் கருத்தை யுணரமாட்டாத அவள், அவன் தன் வரலாற்றை யறியும் கருத்தால் வெளிப்பட வினவ மாட்டாது தடுமாறுகின்றான் எனப் பிறழ நினைந்து அதனைக் கூறலுற்றான்.
அநங்கமாவீணை தன் வரலாறு கூறல்.
தோன்றலே, யான் என் தோழியருடன் வனத்திலே விளையாடுகையில் விஞ்சைய னொருவன் போந்து என்னைத் தன்பாற் படுத்திக்கொண்டு சென்றான். ஆங்கே அவன்
மனைவி என்னைப் போகவிட யான் இங்கே வந்தடைந்தேன் என்பெயர் அநங்கமாவீணை யென்பது.
தாயிலாக் குழவி போலச் சாதுய ரெய்து கின்றென்
வேயுலாம் தோளி னார்தம் விழுத்துணைக் கேள்வ! நிற்கண்டு
ஆயினேன் துறக்கம் பெற்றேன்; அளித்தரு ளாது விட்டால்
தீயினுள் அமிர்தம் பெய்தாங் கென்னுயிர் செருப்ப லென்றாள். 414
414 சாதுயர் - சாதற்குரிய வருத்தம். விழுத்துணைக் கேள்வ - சீரிய துணைவனாகிய கேள்வனே. பெய்தாங்கு - சொரிந்து கெடுப்பது போல. செருப்பல் - கெடுப்பேன். வேயுலாம் - உலாம்; உவமவுருபு.
அது கேட்ட சீவகன் அவள் கருத்தை மாற்றக் கருதி, மக்களுடம்பின் புன்மையைப் பலவகையால் விளக்கிக்கூறி அவள் செயலில் அவட்கே அருவருப்புப் பிறக்குமாறு
பேசினான்.
அந்நிலையில் அவள் கணவனான பவதத்தன் அவளைத் தேடிக்கொண்டு வருதல்
காதல் மாமன் மடமகளே
கருங்குழல்மேல் வண்டிருப்பினும்
ஏத முற்று முரியும் நுசுப்
பென் றுன்னியல் பேத்துவேன்;
ஓதம் போல உடன்றுடன்று
நைய நீ, ஒண் தாமரைக்
கோதை போல்வாய், ஒளித்தொழிதல்
கொம்பே! குண னாகுமே? 415
415 குழல்மேல் வண்டு இருப்பினும் நுகப்பு முரியும் என்று இயல்பு ஏத்துவேன் என இயைக்க. vஏதம் - துன்பம். ஓதம் – கடல் உடன்று உடன்று கைய - மறுகி நையும்படி .நீ ஒளித்தொழிதல் குணனாகுமே என்க. ஏகாரம் , வினா. தாமரைக்கோதை - திருமகள்.
இவ்வாறு அழுதுகொண்டு போந்த பவதத்தனை எதிர்சென்று கண்ட சீவகன் "நீ யார்? நினக்கு உற்றது என்னை? என்று வினவ அவன் நிகழ்ந்தது கூறலுற்றான்.
பவதத்தன்கூறல்
"என்னை கேளீர்? என்னுற்றீர்? என்ன பெயரீர்?" என்றாற்குப்
"பொன்னங் குன்றிற் பொலிந்ததோள் நம்பி! ஒருபொற் பூங்கொடி
யென்னும் நீரா ளைஈங்கே கெடுத்தேன் என் பாவத்தால்
பன்னூற் கேள்வி யுடையேன், யான் பவதத் தன்என் பேன்" என்றான். 416
416. என்றாற்கு - என்று வினவிய சீவகனுக்கு. பொன்னங் குன்றின் - பொற்குன்றுபோல. கொடியென்னும் நீராளை – கொடிபோலும் தன்மை யுடையவளை. பாவத்தால் கெடுத்தேன் என்க.
இப் பவதத்தன் "யான் மத்திமதேயத்துப் பதுமபுரத்தில் கீர்த்திதத்தன் என்பானுக்கும் சினதத்தையென்பாளுக்கும் மகனாவேன்; என் மாமன் சீமானுக்கும் மாமி சித்திரை மாலைக்கும் பிறந்த மகள் என் மனைவி. அவள் தன் ஆயத்தோடு பந்தாடக்கண்டு அவள் அழகில் ஈடுபட்ட யான் அயர்ந்தேன். என் அயர்ச்சி யறிந்த அவளும் உடன்வர
இருவேமும் இங்கே வந்தேம்., அவள் உண்ணுநீர் வேட்டாள்; கொண்டுவருதற்கு யான் சென்றேன்; சென்ற யான் தாமரையிலையை வளைத்து நீர் கொணர்ந்தேன். அவளைக் காணேன்; என் செய்வேன்" என்று ,மேலும் கூறினான்.
பன்னூற் கேள்வியுடையேன் யான் என்றதுகொண்டு பவதத்தற்குச் சீவகன் கூறல்
கைப்பொருள் கொடுத்தும் கற்றல் கற்றபின் கண்ணு மாகும்
பெய்ப்பொருள் விளைக்கும் நெஞ்சின் மெலிவிற்கோர் துணையு மாகும்
பொய்ப்பொருள் பிறகள்; பொன்னாம், புகழுமாம், துணைவி யாக்கும்;
இப்பொருள் எய்தி நின்றீர்! இரங்குவ தென்னை? என்றான். 417
417. கைப்பொருள் - தனக்கு இடுக்கண் நேர்ந்தால் உதவும் பொருள். கண்ணும் ஆகும் - கல்வியறிவால் ஞானக்கண்ணும் உண்டாகும். மெய்ப்பொருள் - தத்துவவறிவு. பிறகள் - கல்வியல்லாத பிற பொருள்கள். பொன்னாம் - பொருளை எய்துவிக்கும். புகழுமாம் துணைவி –புகழாகிய திருமகள். எய்தி - பெற்று. இரங்குவது - அறியாதாரைப்போல வருந்துவது.
இவ்வாறு கூறிய சீவகன் தீயமகளிர், நன்மகளிர் என்ற இரு திறத்தாரது இயல்பு கூறி அவனைத் தெருட்ட நினைந்தான்.
தீப்பெண்டிர் இயல்புகூறல்
அன்புநூ லாக இன்சொல் அலர்தொடுத் தமைந்த காதல்
இன்பம்செய் காமச் சாந்தின் கைபுனைந் தேற்ற மாலை
நன்பகற் சூட்டி விள்ளா தொழுகினும், நங்கை மார்க்குப்
பின்செலும் பிறர்கண் உள்ளம் பிணையனார்க் கடிய தன்றே. 418
418 இவ்சொல் அலர் - இனிய சொற்களாகிய பூ. காமச் சாந்தின் - காதலாகிய சாந்தாலே. ஏற்ற இன்பம் செய்மாலை - ஏற்ற இன்பத்தைச் செய்கின்ற காமமாகிய மாலை. பகல் சூட்டி - பகற் காலத்திலும் அணிந்து. விள்ளாது - நீங்காது. கண் உள்ளம் பிறர் பின் செல்லும் - கண்ணும் மனமும் பிறர்பால் செல்லும். பிணை - பெண்மான். அடிய தன்றே - மனத்தின் அடியிலே யுள்ளதன்றோ.
நற்பெண்டிர் இயல்பு கூறல்
சாமெனில் சாதல்; நோதல்; தன்னவன் தணந்த காலைப்
பூமனும் புனைத லின்றிப் பொற்புடன் புலம்ப வைகிக்
காமனை யென்றும் சொல்லார் கணவற்கை தொழுது வாழ்வார்
தேமலர்த் திருவோ டொப்பார் சேர்ந்தவன் செல்லல் தீர்ப்பார். 419
419 தன்னவன் - தன் கணவன். தணந்த காலை - நீங்கினால், பூமனும் -மிகவும் பூவும். புலம்ப வைகி - தனிப்ப இருந்து. காமனை யென்னும் சொல்வார் - காமன் என்று பெயரும் கூறாராய். செல்லல் –துன்பம் காமனை- ஐ, அசை.
"இக்கூறிய நற்பெண்டிர் இயல்பே என் மனையாளும் உடையள்; அவளை இழந்து யான் எவ்வாறு வாழ்வேன்?" என்று பவதத்தன் சொல்லிப் புலம்பினான்.
சீவகன் அநங்கமாவீணையைக் காணும் திறம் கூறக்கேட்டு அவன் அவளைச் வென்று காண்டல்.
"இனையல் வேண்டா; இம்மந்திரத்தை யொருவில் லேவளவு
அனைய எல்லை சென்றால் இயக்கி கொணர்ந்த ருளும்;நீ
புனைசெய் கோல்வளை யைக்கைப் படுதி" என்றுஆங் கவன் போதலும்
அனைய மாதரைக் கண்டாங்கு அடிபுல்லி வீழ்ந்த ரற்றினான். 420
420 இனையல் - வருந்துதல். ஒருவில் ஏ அளவு அனைய எல்லை - ஒரு வில்லினது அம்பு சென்ற அளவை யொத்த எல்லை. கொணர்ந்தருளும் - கொண்டுவந்துதரும். கைப் படுதி-காண்பாய். அனைய மாதரை- சீவகனைக்கண்டு வேட்கை மிக்கு வருந்திநின்ற அவளை, கண்டாங்கு – ஆங்குக் கண்டு. மந்திரம் - மகளிர் மனத்தைக் கவர்வதொரு மந்திரம்.
சீவகன் கற்பித்த மந்திரத்தை யோதியவதனால் பவதத்தன்பால் அநங்கணமாவீணை
நீங்காக் காதலுடையளாதல்
பட்ட வெல்லாம் பரியா துரைத்தான் அவளும் கேட்டாள்
விட்டா ளார்வம் அவன் கண் இவன்மேல் மைந்து றவினால்.
மட்டார் கோதை மனைது றந்தான் மைந்தனும் மங்கைமேலே
ஒட்டி வின்னா ஆர்வத்தனாகி யுருவம் ஓதினான். 421
421. பட்டவெல்லாம் - பட்ட வருத்தமெல்லாம். பரியாது -வருந்தாமல். அவன்கண் ஆர்வம் விட்டாள் - சீவகனாகிய வழிப்போக்கன்மேல் செலுத்திய வேட்கையை விடுத்தாள். இவன் - பவதத்தன். மைந்துறவினால் -வலியுற்றபடியினால். மனை துறந்தாள் - மனைக்குரிய அறத்தைக் கெடுத்துக்கொண்டவள். ஒட்டி -ஒன்றி. வின்னா -நீங்காத. மனை துறந்தாள். 'ஆர்வம் விட்டாள்.; உருவமோதினான் உரைத்தான்
கேட்டாள்.
பின்பு சீவகன் வனகிரியை யடைந்து ஆங்குள்ள அருகக் கடவுளின் திருவடியை வணங்கிப் பாடுதல்
முனிமை முகடாய மூவா முதல்வன்
தனிமைத் தலையை தனதுதான் என்ப;
தனிமைத் தலைமை தனதுதான் என்றால்
பனிமலர் தூய்நின்று பழிச்சாவா றென்னே. 422
422 முனிமை - முனிவனாம் தன்மை. முகடாய - மேலாகியதனிமைத் தலைமை - ஒப்பில்லாத தலைமை. பழிச்சாவாறு - துதிக்காதவாறு.
இவ்வாறு பாடிப் பரவிய சீவகன் மேலும் செல்லத் தொடங்கி, எதிரே தோன்றிய நெடுஞ்சுரமொன்றைக்கண்டு, அதனையும் விரைவில் கடந்து, மருதவனம் நிறைந்த மத்திமநாட்டு ஏமமாபுரம் என்னும் நகரத்தை முரசறையும் நல்லோரையில் சென்று சேர்ந்து ஒரு பொழிலகத்தையடைந்தான். அங்கே அவன் மணமகன் ஒருவனைக்கண்டு அந்த நாட்டின் பெயரும் நகரத்தின் பெயரும் அறிந்துகொண்டான். அம்மகன் சீவகனை உண்டற்கழைப்ப, சீவகன் பின்னர்க் காண்பதாகச் சொல்லி ஆங்கிருந்த பொய்கைக் கரையை யடைந்தான்.
சீவகன் பொய்கையிற் கண்டகாட்சி பெடையன்னம் ஊடுதல்
வண்சிறைப் பவளச் செவ்வாய்ப் பெடையன்னம் மடமை கூரத்
தண்கய நீருட் கண்ட தன்னிழல் பிறிதென் றெண்ணிக்
"கண்டனம் கள்வ! மற்றுன் காதலி தன்னை நீர்க்கீழ்ப்
பண்டைய மல்லம்; வேண்டா படுக்க" என்று ஊடிற் றன்றே. 423
423.மடமை கூர - அறியாமை மிகுதலால். பிறிது – வேறொரு பெடையன்னம். கள்வ - (சேவலன்னத்தை நோக்கிக்) கள்வனே நீர்க்கீழ் கண்டனம் என்க. பண்டையமல்லம் - யாம் முன்புபோல் தேற்றினும் தேறேம். படுக்க வேண்டா - அகப்படுக்க வேண்டா.
சேவலன்னம் ஊடல் தீர்த்தல்
செயிர்ப்பொடு சிவந்து நோக்கிச் சேவலின் அகலச் சேவல்
அயிர்ப்பதென்? நின்னை யல்லால் அறியலேன்; அன்றி மூக்கின்
உயிர்ப்பதுன் பணியி னாலே; ஊடல் நீ" என்று பல்கால்
பயிர்ப்பறச் சிறகாற் புல்லிப் பணிந்துபாண் செய்த தன்றே. 424
424.செயிர்ப்பொடு - குற்றத்தோடு. சேவலின் - சேவலன்னத்தின் நீங்கி. அயிர்ப்பது - ஐயுறுவது. அறியலேன் - வேறொன்றையறியேன். மூக்கின் உயிர்ப்பது - மூக்கினால் உயிர்த்து உயிர்தாங்கி யிருப்பது. ஊடல் - ஊடுதலைச் செய்யாதே. பயிர்ப்பு - அருவருப்பு. அற - நீங்க. பாண் செய்தது - தாழ்ந்து நின்றது.
இவ்வன்னங்களைக் கண்ணுற்ற சீவகனுக்கு அவற்றின் செய்கை, அவன் தத்தையை நினைப்பித்தது. அவன் அவளை நினைத்து வேட்கையால் உள்ளம் மெலிந்து பலபட
வருந்தலுற்றான்.
வண்டு வாழ்பயில் கோதை மணமுதல்
கண்ட ஞான்றுதன் கண்ணெனும் கைகளால்
நொண்டு கொண்டு பருகிய நோக்கமொன்று
உண்டெ னாவி யுருக்கி யிடுவதே. 425.
425. வண்டுவாழ் பயில்கோதை - வண்டு வாழ்க்கை பயின்ற கோதையையுடைய காந்தருவதத்தை. மணமுதல் - கூடுதற்கு முன்னே. நொண்டுகொண்டு - முகர்ந்துகொண்டு.பருகிய நோக்கம், ஆவியுருக்குவதாகிய நோக்கம் என்க. அந்த நோக்கம் இப்பொழுதும் உண்டு.
தத்தை தன் பிரிவாற்றியிருப்பள் எனச் சீவகன் தெளிதல்
காத லாளுடல் உள்ளுயிர் கைவிடின்
ஏத மென்றுயிர் எய்தி யிறக்கும்; மற்று
ஆத லால்,அழி வொன்றிலள் அல்லதூஉம்
மாதர் விஞ்சையும் வல்லளு மல்லளோ? 426
426. உடல் உள் உயிர் - உடலிடத்தே இருக்கும் உயிர். காதலான் உயிர் கைவிடின் என் உயிர் ஏதம் எய்தி இறக்கும் என்க. விஞ்சை- வித்தை. அல்லதூஉம் - அன்றியும்.
தான் வேட்கை நினைத்து மெலிதல் தகாது என்று தெளிந்து சீவகன் தன் கல்வியறிவை நோதல்
காதல் மிக்குழிக் கற்றவும் கைகொடா
ஆதல் கண்ணகத் தஞ்சனம் போலுமால்;
தாது துற்றுபு தங்கிய வண்டனார்க்கு
ஏதம் இற்றென எண்ணும்என் நெஞ்சரோ. 427
427.மிக்குழி - மிக்கவிடத்து. கைகொடாவாதல் – கைகொடுத்து உதவாதொழிதல். கண்ணகத்து அஞ்சனம் போலும் – கண்ணிடத்தே கிடந்த அஞ்சனம் அதற்குப் பயன்கொடாதது போல; (கல்வி நெஞ்சிற் கிடந்தும் பயன் தந்ததில்லை.) தாது துற்றுபு - தாது உண்டு. ஏதம் இற்று - காதலால் வரும் ஏதம். இன்று, இற்றென விகாரம்.
மெலித்த தன் நெஞ்சினைச் சீவகன் தன் வயமாக்கிக் கொளல்
வேட்கை யூர்தர விம்முற வெய்திய
மாட்சி யுள்ளத்தை மாற்றி மலர்மிடை
காட்சிக் கின்பொய்கைக் காமர் நலனுண்டு
மீட்டும் அங்கிருந் தான் விடை யேறனான். 428
428.ஊர்தர - மேலிடுதலால். மாட்சி யுள்ளம் - மாய்தலையுடைய உள்ளம். மாற்றி - கெடுத்து. பொய்கைக் காமர் நலம் – பொய்கையின் அழகிய நலம்.
"வருத்தத்திற்குக் காரணமாகின்றவிடத்து இருத்தலருமை தோன்ற 'மீட்டும்' என்றார்."
அப்போழ்து அந்நாட்டரசனான தடமித்தனுக்கும் அவன் மனையாட்டி நளினைக்கும் தலைமை நலம் கனியப் பிறந்த விசயனென்பான்,,அரண்மனைச் சோலைக்குச் சென்றான். வழியில் பொய்கைக் கரையில் சீவகன் இருக்கக் கண்டு அவன்பால் வந்து நின்றான்.
விசயன் சீவகனை வரலாறு வினவி யறிதல்
"இந்நாட் டிவ்வூர் இவ்விட மெய்தார் இவண் வாழ்வார்;
எந்நாட் டெவ்வூர்? எப்பெய ராய்நீ; உரை" என்றாற்கு
அந் நாட் டவ்வூர் அப் பெய ரல்லாப் பெயர்சொன்னான்.
பொய்ந்நாட் டேனும் பொய்யல வரற்றால் புகழ்வெய்யோன். 429
429. வாழ்வார் - வாழ்பவர். என்றாற்கு - என்று கேட்ட விசயனுக்கு. பொய்ந் நாட்டேனும் - சொல்லால் பொய்யாக நாட்டிக் கொள்ளப் பட்டதாயினும், பொய்யலவாற்றால் பெயரல்லாப் பெயர் சொன்னான் - பொருளால் பொய்யல்லாததொரு வழியாலே ஏமாங்கத மென்னும் நாட்டில் இராசமாபுரத்தில் சீவகனென்னும் பெயரையன்றிப் பொருளால் அப்பெயரேயாகக் கூறினான்.
சீவகனது உரையாலும் உடல் வனப்பாலும் விசயன் உள்ளம் கவரப்பட்டான். சீவகனது தோழமையைப் பெறுதற்கு அவனுக்கு விருப்பமுண்டாயிற்று.
விசயன் சீவகனைத் தோழமை கொள்ளல்
பூங்கழ லானைப் புண்ணிய நம்பி முகம்நோக்கி
ஈங்கிது நின்னாடு; இப்பதி நின்னூர்; இதுநின் இல்;
வீங்கிய திண்டோள் வெல்புக ழாய்! நின் கிளை என்றாற்கு
ஆங்கது எல்லாம் அண்ணலும் நேர்ந்துஆங்கு அமைக என்றான். 430
430. வீங்கிய திண்தோள் - உயர்ந்த திண்ணிய தோள் - அது எல்லாம் - உபசாரம் பலவும். அண்ணல் - சீவகன். "இவனை யெதிர்ப்படுதலின், விசயனைப் புண்ணிய நம்பி என்றார்."
பின்பு, விசயன் அருகிலிருந்த மாமரத்தில் பழுத்திருந்த கனியொன்றை வீழ்த்த எண்ணி, அம்பு எய்தானாக, அது தவறிவிட்டது; சீவகன் அதனை வாங்கி, தான் இருந்த
விடம் பெயராதே எய்தான். அக் கனியும் தவறின்றி, காம்பு அறுப்புண்டு அவன் கையெட்டும் எல்லைக்கண் வர, சீவகன் அதனைக் கையில் ஏந்தி விசயன்பால் தந்தான். அவனது விற்றிறத்தைக் கண்ட விசயன் மிக்க வியப்புற்றான்.
விசயன் வியந்து சீவகனைத் தன் அரண்மனைக்குக் கொண்டேகுதல்
“மராமரம் ஏழும் எய்த வாங்குவில் தடக்கை வல்வில்
இராமனை வல்லன் என்பது இசையலால் கண்ட தில்லை
உராமனம் இவன்க ணின்றி யுவக்குமா செய்வல்” என்று
குராமலர்க் காவின் நீங்கிக் கோயிலே கொண்டு புக்கான். 431
431. வாங்கு - தேவி பொருட்டு வளைத்த. இசையலால் சொல்லாலன்றி. உராமனம் - நீங்கிப் போகும் உள்ளம். இன்றி – இல்லையாக. குராமலர்க் காவின் நீங்கி - குரவம் பூ நிறைந்த சோலையிலிருந்து நீங்கி.
அங்கே, விசயன் தன் தந்தைபால் சீவகன் திறத்தை இனிதெடுத்துக் கூறினன். அரசனும் சீவகனது உருவவிலக் கணங்களை உற்று ஆராய்ந்து இவன், “ஏவினுக்கு அரசன்; வில்வன்மையில் துரோணனுக்கு நிகராவார் விஞ்சையருலகத்தும் மண்ணுலகத்தும் ஒருவரும் இலர் என்பார் வாய்மடங்கஇவன் வந்துளான்” என்று துணிந்து பெரு மகிழ்வு கொண்டான்.
தடமித்தன் தன் மக்கட்கு விற்பயிற்சி நல்குமாறு சீவகனை வேண்டுதல்
விற்றிறல் நம்பி தேற்றான் விருந்தினன் இவனும் அன்றி
மற்றுமோர் நால்வ ருள்ளார் மாண்பினால் வளர்ந்த தில்லை
கொற்றம்நீ கொடுக்கல் வேண்டும் குறைஎனக் குரிசில் நேர்ந்தான்
அற்றைநா ளாதி யாக அவர்களும் பயிற்று கின்றார். 432
432 விற்றிறல் - வில்லின் வன்மை. தேற்றான் - அறியான். நம்பி - விசயன். மற்றும் - வேறும். மாண்பினால் – மாட்சியோடு கொற்றம் - கல்வி. குறை - பொருள். பயிற்றுகின்றார் - பயிலுகின்றார்.
சீவகன் அரச குமரற்கு வில்லாசிரியனாக இருந்து விற்பயிற்சியும், யானை, குதிரை, தேர் முதலிய ஏறும் பயிற்சியும், பிற படைக்கலப் பயிற்சியும் நல்கி வந்தான். வருங்கால், ஒரு நாள், கோயிற் சோலைக்குச் சென்றான். அங்கே, வேங்கை, அழிஞ்சில், புன்கு, மகிழ், சண்பகம், பாதிரி, முல்லை, காந்தள், குரவம், தளவம், பிறவும் இனிது மணங்கமழ மலர்ந்திருந்தன. அவற்றைக்கண்ட சீவன் அழகியதொரு மாலை தொடுத்தான். அதொகுப்பு ஓர் ஓலைப் பாசுர மாலையாக அமைந்தது. அப்போது அங்கே போந்த கூனியொருத்தி அவனை வணங்கினாள். அவனும் அதனை அவட்கு ஈந்தான்.
அதனைப்பெற்றுச் சென்று அவள் அரசன் மகளான கனகமாலையிடம் அதனைத் தந்தாள்; அவள் அத் தொழிலில் வல்லுநளாதலின், அதனை நோக்கினாள். அதன்கண் "மனக்கினிய மகளிரொடு கூடி இன்புற்று வாழாத வாழ்வு ஆடவர்க்கு வேடர் வாழ்வுபோல்வதாகும்; இவ்வாழ்வைப் பெறாதார், அது பெறுவது குறித்துத் தவம் செய்வதே அவரது ஆண்மைக்கு அழகாம்" என்ற கருத்தமைந்த பாசுரம் அமைந்திருந்தது. அதனைப் படித்தறிந்த அக் கனகமாலையின் உள்ளம் அவன்பாற் படுவதாயிற்று.
கனகமாலை வேட்கைமிக் கிருத்தல்
பின்னிவிட்ட பிடித்தடக்கை யிரண்டு போன்று திரண்டழகார்
கன்னிக் கலிங்க மகிலார்ந்து கவ்விக் கிடந்த குறங்கினாள்
மின்னுக் குழறையும் பொற்றோடும் மிளிர எருத்தம் இடம்கோட்டி
என்னும் இமையாள் நினைத்திருந்தாள். இயக்கி யிருந்த எழில்ஒத்தாள். 433
433 பின்னிவிட்ட சேர்த்துவிட்ட. பிடித்தடக்கை – பெண் யானையினுடைய பெரிய கை. போன்று - ஒத்து. கன்னிக் கலிங்கம் - கணவன் தீண்டாத உடை. கவ்வி - விரும்பி.. இடங்கோட்டி – இடப் பக்கம் சாய்த்து. "இயக்கியும் தனக்கு மேலாய இறைவனைத் தியானித்து இமையா திருப்பாளென்றுணர்க."
இந் நிலையில் பொழுது மறைவதாயிற்று. வேனிற்காலமாதலின், தீவிய மணம் விரவித் தென்றல் வந்துலவும் மாலைப்போது வந்தது. வேட்கை நோயுற்றார்க்கு மிக்க துயர் செய்யும்காலம் அதுவாதலால், கனகமாலைக்கு வேட்கை மிகுவதாயிற்று.
கனகமாலை நெஞ்சுகலுழ்ந்து வருந்துதல்
ஒன்றே யெயிற்ற தொருபெரும்பேய் உலகம் விழுங்க அங்காந்து
நின்றாற் போல, நிலவுமிழ்ந்து நெடுவெண் திங்கள் எயிறிலங்க
இன்றே குருதி வானவாய் அங்காந் தென்னை விழுங்குவான்
அன்றே வந்தது இம்மாலை! அளியேன் ஆவி யாதாங்கொல்? 434
434 ஒன்றே எயிற்றது ஒரு பெரும் பேய் - ஒரே பல்லையுடைய தொரு பெரிய பேய். அங்காந்து - வாயைத் திறந்துகொண்டு. திங்கள் எயிறு - திங்களாகிய பல். குருதி வான வாய் - செவ்வானமாகிய வாய். இம்மாலை எயிறிலங்க. அங்காந்து, விழுங்குவான் வந்தது அன்றே. அளியேன் - அளிக்கத்தக்க என்.
குயிலொடு தொந்து கூறல்
வருந்தி யீன்றான் மறந்தொழிந்தாள்
வளர்த்தாள் சொற்கேட் டில்கடிந்தாள்
முருந்தின் காறும் கூழையை முனிவரர்
நின்னை யென்முனிவார்.
பொருந்திற் றன்றால் இதுஎன்னாய் பொன்றும்,
அளித்து இவ் வுயிர் என்னாய்
திருந்து சோலைக் கருங்குயிலே!
சிலம்ப விருந்து கூவுதியால். 435
435. ஈன்றாள் - ஈன்றெடுத்த தாய்க்குயில். மறந்து – உறவைக் கைவிட்டு. வளர்த்தாள் - வளர்த்த கரக்கை. சொல் - குயிலின்ஓசை. முருந்து - எலும்பு. கூழையை -மயிர் நிரம்பியுள்ளாய்.. முனிவார் - பெறுப்பவர். என் - பிறப்பு, வளர்ப்பு. வடிவு - இவற்றுள் எதனை? பொன்றும் - சாரும். திருந்து - அழகிய. சிலம்ப - முழங்க.
"கருங்குயிலே யென்றது சோலைக்கு மறுவே என்ற தன்மைத்து; இது செறலின்கண் திணைமயக்கம்."
தனக்கு உற்றன கண்டு தானே புலம்புதல்
வேம்என் நெஞ்சம் மெய்வெதும்பும்
விடுக்கும் ஆவி வெய்துயிர்க்கும்
பூமென் குழலார் புறநோக்கி
நகுவார் நகுவ தாயினேன்
தாம மார்பன் தான்புனைந்த
தண்ணென் மாலை புணையாக
யாமக்கடலை நீந்துவேன்
யாரு மில்லாத் தமியனே. 436
436. வேம் - வேகும். விடுக்கும் ஆவி - உடம்பைக் கைவிட்டுப் போகும். புறம்நோக்கி - பொல்லாங்கைப் பார்த்து. நடுவதாயினேன் - நகப்படும் பொல்லாங்கின் வடிவேயாயினேன்; "அவள் கையால் புனைதலின், அது கொண்டு நீந்தலாமோ என நினைத்து அதனை மறுத்தான்"
இவ்வாறு வருந்தியவள் தன் கிளி தேற்றத் தேறித் தானும் ஒரு மாலை தொடுத்து மறுநாளே தன் தோழியாகிய அனங்கவிலாசினி யென்பாளிடம் கொடுத்தனுப்பினாள்.
அவள் சென்று அதனைச் சீவகற்கு நீட்டினாள். அவன் அதனை முதற்கண் ஏற்க மறுத்தான். உடனே "என் தலைவிக்கு மாலை தொடுப்பவனும் நீயே; அவள் தோள் மெலிவிற்கு மருந்தும் நீயே; உயிரும் நீயே; ஏல்" என்றுசொன்னாள்.
சீவகன் மாலையை ஏற்றல்
"மன்னர் கோயில் உறைவார் பொறிசெறித்த மாண்பினரே"
என்ன, "அஞ்சினாய்" என்று அவனை நக்காட்கு "அஃதன்று கோதாய்!
இன்ன கொள்கையேற்கு ஏலாது" என்ன இலங் கெயிற்றினாள்,
"அன்னம் அன்ன நடையினாள் தான்வருந்தும்" எனநேர்ந்தான். 437
437. பொறி செறுத்த மாண்பினர் - ஐம்பொறியையும் அடக்கியாள வேண்டும். என்ன - என்று சீவகன் சொல்ல. நக்காட்கு – இகழ்ந்து நகைத்த தோழிக்கு. இன்ன கொள்கையாற்கு - இவ்வாறு ஆசிரியனாம் தம்மையில் நின்ற எனக்கு. எயிற்றினாள் - தோழி. நடையினாள் – கனகமாலை. என -என்று சொல்லவே. நேர்ந்தான் - மாலையை ஏற்றான். வருந்தும் (இறந்துபடும்) எனவே, அதற்கஞ்சி ஏற்றானாயிற்று.
பின்பு அநங்கவிலாசினி கனகமாலைபாற் சென்று நிகழ்ந்தது கூறி மகிழ்வித்தாள். கனகமாலைக்கு வேட்கை பெருகி அவளை வருத்தத் தொடங்கிற்று. தோழியர் தேற்றத்
தேறி, அவள் ஒருவாறு ஆற்றியிருப்பாளாயினள்.
இது நிற்க. அரசனாகிய தடமித்தன் தன் மக்கட்குப் படைக்கலப் பயிற்சி நிரம்பிவிட்டதெனச் சீவகனால் தெரிந்தான். ஒருநாள் அவரது பயிற்சிச் சிறப்பை அறிய விரும்ப, அவ்வண்ணமே அவர்களும் தங்கள் விற்றிற முதலாய படைப்பயிற்சித் திறத்தை யாவரும் வியப்பக் காட்டினர். அது கண்டோர் அவர்களைப் புகழ்ந்து பாராட்டினர்.
பாராட்டுரை.
"விசயனே விசயன் விற்போர்க்
கதம்பனே முருகன் வேற்போர்த்
திசையெலாம் வணக்கும் வாட்போர்க்
கந்தணன் செம்பொ னாமன்
அசைவிலான் யானைத் தேர்ப்போர்க்
கசலனே அசல கீர்த்தி.
வசையிலான் புரவிச் சேனென்
றியாவரும் புகழப்பட்டார். 438
438 விற்போர்க்கு விசயன் விசயனே - விற்போரில் இவ்விசயனென்பான் அருச்சுனனை நிகர்ப்பன். கதம்பன் முருகனை யொப்பன்; அசவ கீர்த்தி யென்பான் அசலனை நிகர்ப்பன்; புரவிசேனன், வசையிலானாகிய நகுலனை நிகர்ப்பன். யாவரும் - யாவராலும்.
இது கண்டு பெருமகிழ்வு கொண்ட வேந்தன் "இவ்வாசிரியன் ஒன்று அரசனாதல் வேண்டும்; இன்றேல் அந்தணனாதல் வேண்டும்; ஏனையோர்க்கு இவ்வுண்மை யுண்டாகாது; ஆதலால் இவனை நீங்காச் சிறையிடல் வேண்டும்; இவனைக் கொணர்மின் " என ஏவினான். அவன் கருத்தறியாத அவன் பரிசனத்தாரும் பிறரும் அவன் கூறியது கேட்டு மிகவும் வருத்தமுற்றனர். ஏவலர் சென்று சீவகனை
அரசன்பால் கொண்டுவந்தனர். சீவகன் வந்ததும் அவனை அரசன் வரவேற்றுத் தனியே ஓரிடரத்தி்ற்குக் கொண்டு சென்றான்.
தடமித்தன் சீவகற்குக் கூறல்
புள்முழு திறைஞ்சுங் கோட்டுப்
பொருகளி றனைய தோன்றல்
மண்முழு தன்றி வானும்
வந்துகை கூடத் தந்தாய்
கண்முழு துடம்பிற் பெற்றேன்
காளை! கைம்மாறு காணேன்
பண்முழு துடற்றும் தீஞ்சொல்
பாவைநின் பால ளென்றான். 439
439 புள் முழுது இறைஞ்சும் கோட்டுப் பொருகளிறு - பறவைகளெல்லாம் வந்து படியும் கோட்டையுடைய யானை. மண்...தந்தாய்; மண் முழுதும் வந்து கைகூடுதலேயன்றி மறுமையில் வானும் வந்து கைகூடும்படி ஞான நெறியையும் தந்தாய். கண் பெற்றேன் – நல்வினை செய்தவருடைய உடம்பிலுள்ள கண்போலக் கண் முழுதும் பெற்றேன்;
அஃதாவது இவர் போர்த் தொழில் காண்பதால் ஊனக்கண்ணும்,இவரை நன்னெறியில் சேர்வித்தலின் ஞானக்கண்ணும் பெற்றேன் என்பது. பண்முழுது உடற்றும் - பண்ணெல்லாம் முழுதும் ஒக்கும்.
சீவகன் மறுப்ப அவன் மேலும் கூறல்
முடிகெழு மன்னன் சொல்ல
மொய்கொள்வேற் குரிசில் தேற்றான்
வடிவமை மனன்ஒன் றாக
வாக்கொன்றா, மறுத்த லோடும்
தடிசுவைத் தொளிறும் வேலான்
தன்கையால் முன்கை பற்றி
இடிமுர சனைய சொல்லால்
இற்றென விளம்பு கின்றான். 440
440. மொய் கொள் வேல் குரிசில் தேற்றான் - வலிமை பொருந்திய வேலையுடைய குரிசிலாகிய சீவகன் தெளி*விக்கானாய். வடிவமை மனன் - கனகமாலையின் வடிவுபொருந்திய மனம். ஒன்றாக - வேட்கை வயத்ததாக வாக்கு ஒன்றா - வாய்ச்சொல் வேட்கை யில்லாதவன் போலாக. தடிசுவைத்து ஒளிறும் வேல் - ஊன் படிந்து விளங்கும் வேல். இடி முரசு - இடி முழக்கத்தையுடைய முரசு.
கணிகள் கூறியது கூறிச் சீவகனை மணம் நேர்வித்தல்
பூவியல் கோயில் கொண்ட
பொன்னனாள் அனைய நங்கை
காவியங் கண்ணி வந்து
பிறத்தலும் கணிகள் ஈண்டி
மூவியல் திரித லின்றிச்
சாதக முறையிற் செய்தார்
ஏவியல் சிலையி னாய்க்கே
உரியள்என் றுரைப்ப நேரந்தான். 441
441. புவியில் கோயில் கொண்ட பொன்னனான் – தாமரைப் பூவைக் கோயிலாகக் கொண்ட திருமகள். நங்கையாகிய கண்ணி என்க. காவி - நீலமலர். மூவியல் - சிரோதயம், பூபதனம், தெரியுங்காலம். திரிதல் இன்றி - தப்பில்லாதபடி. முறையில் - நினக்கேயுரிய முறைமையால். சாதகம் செய்தார் என்க. ஏவியல் சிலை - அம்பு தொடுக்கும் வில்.
பின்பு சான்றோர் குறித்த நாளில், மண்ணவர் அறிய விண்ணவர் காப்ப, சீவகன் கனகமாலைக்கு மாலை சூட்டி மணம் புரிந்துகொண்டான்.
மணமக்களின் இன்பநிலை
திரையிடைக் கொண்ட இன்னீ ரமுதுயிர் பெற்ற தென்னும்
உரையுடைக் கோதை மாதர் ஒளிநல நுகர்ந்து நாளும்
வரையுடை மார்பன் அங்கண் வைகின னென்ப மாதோ
கரைகட லனைய தானைக் காவலன் காத லானே. 442
442 திரை - கடல். இன்னீர் அமுது - இனிய தன்மையுடைய அமிர்தம். உயிர் பெற்றது என்னும் உரை -தனக்கு ஓர் உயிரைப் பெற்றது என்று உலகம் கூறும் உரை. வரையுடை மார்பன் - மலை தோற்கின்ற மார்பனான சீவகன். அங்கண் - அவ்விடத்தே. காதலான் - காதலால். காதலால் வைகினன் என்க.
இஃது இவ்வாறாக, இராசமாபுரத்தே சீவகனைப் பிரிந்த நந்தட்டன் முதலிய தம்பிமார்கள் அவனைக் காணாமையால் மிகவும் வருந்திக் குணமாலையின் மனையை அடைந்து அவளை வினவினர். அவளால் ஒன்றும் உணர முடியாது போகவே, அவர்கள் காந்தருவதத்தையின் மனையையடைந்து சீவகனைப் பற்றிய குறிப்புக்களை யறிதற்குச் சென்றனர். அப்போது காந்தருவதத்தை தண் வீணையைப் பண்ணிச்
சீவகனை நினைந்து பாடிக்கொண்டிருந்தாள்.
காந்தருவ தத்தையின் பாட்டு.
இறுமருங்குல் போதணியின் என்றினைந்து கையில்
நறுமலர்கள் சிந்துவார் நண்ணார் துறந்தார்;
நண்ணார் துறப்ப நனிவனையும் தோள்துறப்பக்
கண்ணோவா முத்துறைப்பத் தோழி! கழிவேனோ. 443
443 மருங்குல் இறும் - இடை முரியும். இணைந்து -வருந்தி. வளைதோள் துறப்ப - வளைகள் கையினின்றும் கழன்று நீங்க. கண் ஓவர முத்து உறைப்ப - கண்கள் நீங்காது நீர்த்துளியைச் சொரிய.
இவ்வாறு பாடியிருந்தவள் சீவகன் பிரிவுநோய் தன்னை மிக வருத்த ஆற்றாளாய், இனித் தான் அவனைக் கூடும் நாள் என்றோ என ஏங்கி வாடியிருந்தாள். அவள் மனைக்குப் போந்த நந்தட்டன் மிக்க அன்பும் நன்மதிப்பும் உடையனாய்
மூன்றுவில் தொலைவில் நின்று, வாய்புதைத்துக் கைகட்டிப் பணிவாய் "நம் அடிகளாகிய சீவகனார் எங்குள்ளார்?" என்று வினவி மேலும் சில மொழிகளை விளம்பலுற்றான்.
நந்தட்டன் விளம்புதல்
"பொறிகுலாய்க் கிடந்த மார்பின் புண்ணியன் பொன்றி னானேல்
வெறிகுலாய்க் கிடந்த மாலை வெள்வளை முத்தம் நீக்கி
நெறியினால் நோற்ற லொன்றோ நீளெரி புகுத லொன்றோ;
அறியலென்; கொழுநன் மாய்ந்தால் அணிசுமந் திருப்ப " தென்றான். 444
444. பொறிகுலாய்க்கிடந்த மார்பின் புண்ணியன் - ஆணிலக்கனமான மூன்று வரிகள் பொருந்திய மார்பினையுடைய சீவகன். பொன்றினானேல் - இறந்துவிட்டானாயின்; வெறி - மணம். மாலையும் வளையும் முத்தமும் நீக்கி நோற்றலோ, எரி புகுதலோ இரண்டிலொன்று செய்யத் தக்கதாம். அறியலென் - (மகளிர் அணிசுமந்திருப்பது உண்டு என ) யான் கேட்டறியேன்.
அவன் கருத்தை யுய்த்துணர்ந்த காந்தருவதத்தை கூறல்
மதுமுகத் தலர்ந்த கோதை மாற்றம்மைந் தற்கு ரைப்பாள்;
கொதிமுகக் குருதி வைவேல் குரிசிலோ நம்மை யுள்ளான்;
விதிமுக மணங்கள் எய்தி வீற்றிருந் தின்பம் உய்ப்ப
மதிமுக மறியும் நாமே வாடுவ தென்னை யென்றாள். 445
445 மது.....கோதை - தேன் வழிய மலர்ந்த பூவால் தொடுக்கப்பட்ட மாலையணிந்த காந்தருவதத்தை, மாற்றம் -- மறுமொழி. கொதிமுகக் குருதி வைவேல் குரிசில் - கொதிக்கின்ற குருதி படிந்த கூரிய வேலையுடைய சீவகன். உள்ளான் - நினையான். விதிமுக மணம் – விதிப்படி செய்யும் திருமணம். மதிமுகம் அறியும் நாமே - மதிமுகம் என்னும் மந்திரத்தை யறிந்திருக்கின்ற நாமே, வாடுவது - அவனுக்குத் தீங்குண்டா
மென்று வருந்துவது.
தத்தை ஒரு விஞ்சையை யோதித் தன் முகத்தைத் தன் கையால் தடவிக்கொண்டு நந்தட்டன் சீவகனைக் காணுமாறு செய்தாள்.
நந்தட்டன், விஞ்சையால் சீவகனைக் காண்டல்
பொற்புடை யமளி அங்கள் பூவணைப் பள்ளி மேலால்
கற்பக மாலை வேய்ந்து கருங்குமற் கைசெய் வானை,
முற்படக் கண்டு நோக்கி முறுவல் கொள் முகத்த னாகி
விற்படை நிமிர்ந்த தோளான் தொழுதுமெய் குளிர்ந்து நின்றான். 446
446. பொற்பு - அழகு. பள்ளியாகிய அமளி யென்க. அழகிய கள்ளையுடைய பூவணைப் பள்ளியாகிய பொற்புடையமளியென விசேடித்து நின்ற இருபெயரொட்டு. கற்பகம் - தேவர் நாட்டுக் கற்பகம். மண்ணுலகத்துக்குக் கொண்டுவரப்பட்டபோது, தேவர் சாபத்தால் பூமலர்வதன்றிப் பிற தன்மைகளை யிழந்தது. இப் பூமாலை, கற்பகமாலை எனப்பட்டது. கைசெய்யான் - ஒப்பனை செய்யும் சீவகனை. விற்படை - வில்லாகிய படை. தோளான் - நந்தட்டன்.
பின்பு காந்தருவதத்தை தன் விஞ்சையை மாற்றினான். நந்தட்டன் தெளிந்து "அன்னாய், யான் சீவகன் திருவடியைச் சென்று கூடக் கருதுகின்றேன்; விடை கொள்வேன்"
என வேண்டி நின்றான். அதற்கு உடன்பட்ட தத்தை நந்தட்டன் கிடந்த பள்ளியை மெழுகி மாலைநாற்றிப் புகையிட்டு விஞ்சையொன்றை யோதினாள். உடனே ஒரு தெய்வம் போந்து நந்தட்டனை அவன் கிடந்த அப் பள்ளியுடன் கொணடுசென்று ஏமமாபிரத்து அரசன் கோயிலுக்குள் வைத்தகன்றது. பொழுது விடிந்தது; ஞாயிறு வானத்தே கீழ்க்கடலிலே எழுந்தது; இதற்குள் நந்தட்டன் துயிலுணர்ந்தெழுந்தான். அவன் வடிவும் சீவகன் வடிவு போல் தோன்றக் கண்ட வசுந்தரியென்னும் தோழி, விசயற்குத் தெரிவிப்ப, அவன் போந்து, நந்தட்டனை நோக்கி, "நீ யார்" என்று வினவ, அவன் ஒரு விடையும் கூறானாயினன். இச்செய்தியை விசயன் சென்று சீவகற்குத் தெரிவித்தான். அவன், " வந்தவன் நந்தடட்னேயாகும்" என்று கருதி, நந் தட்டன்பால் வந்தான். நந்தட்டன் சட்டென எழுந்து சீவகன் திருவடியில் வீழ்ந்து வணங்கினன்.
சீவகன் நந்தடட்னை ஏற்றுக்கோடல்.
தாமரைத் தடக்கை கூப்பித் தாள்முதற் கிடந்த தம்பி
தாமரைத் தடத்தை யொத்தான்; தமையனும் பருதி யொத்தான்;
தாமரைக் குணத்தி னானை மும்முறை தழுவிக் கொண்டு
தாமரைச் செங்க ணானும் தன்னுறு பரிவு தீர்ந்தான். 447
447 தாமரைத் தடக்கை - தாமரைப் பூப்போலும் பெரிய கை. தாள்முதல் - காலடியில். கண்ணும் வாயும், முகமும் கையும் தாமரை யொத்தலின், "தாமரைத் தடம்;" என்றார். தாமரைக் குணத்தினான் - தாமரை யென்னும் எண்ணாகிய குணம் உடையவன். தாமரைச் செங்கணான் - சீவகன். பரிவு - வருத்தம். "யான் போந்த பின்பு இருமுது
குரவர் உற்றது என்னென்று தனக்கு உற்றுக் கிடந்த வருத்தத்தை இவன் வாய்க் கேட்டுத் தீர்ந்தான் என்க."
சீவகன் சொல்லுதல்
என்னுறு நிலைமை யோராது எரியுறு தளிரின் வாடிப்
பொன்னுறு மேனி கன்றிப் போயினீர்; பொறியி லாதேன்
முன்னுற இதனை யோரேன்; மூரிப்பே ரொக்க லெல்லாம்
பின்னுறு பரிவு செய்தேன் பேதையேன், கவலல் என்றான். 448
448 என்னுறு........ஓராது; யான் தேவனால் கொண்டுபோகப்பட்ட நிலைமையை யறிந்தும் உண்மையென்று உணராமல். எரியுறு – நெருப்பில் இட்ட. கன்றிப் போயினீர் - வாடினீர். பொறியிலாதேன் – பிரியாதேயிருந்து இருமூது குரவர் முதலாயினார்க்குத் தொண்டு செய்யும் நல்வினை யில்லாத யான். முன்னுற - தீவினை வந்து முன் நிற்றலால். இதனை - குணமாலையின் ஓருயிர்க்காகப் பல உயிருக்கும் தீங்கு வருகின்ற இதனை, ஒக்கல் - உறவினர். பின்னுறு பரிவு - பின்பு முடிய நுகரும் துன்பம், கவலல் - வருந்தாதே.
இவ்வாறு சீவகன் வருந்திகக் கூறக் கேட்டதும் நந்தட்டன் ஆற்றாது புலம்ப, அவனைத் தேற்றிக் கனகமாலையிடம் கொண்டு சென்று அவனை அவற்குச் சீவகன் காட்டினன்.
நந்தட்டன் அவள் தாளில் வீழ்ந்து வணங்க, அவள் சீவகனை "இவன் யார்?" என்று வினவ, சீவகன் "இவன் நினக்கு முத்துனன் அனையன்" என்னலும், அவள் இருவர்க்கும் விருந்து செய்தாள் விருந்துண்டபின் இருவரும் தனித்ததோர் இடத்திலிருந்து, சீவகன் சுதஞ்சணனால் கொண்டு போகப்பட்டபின் இராசமாபுரத்து நிகழ்ந்தவற்றைப்பற்றிப் பேசலாயினர்.
"அண்ணலே, மதனன் வீரர் நின்னைச் சூழ்ந்து கொண்ட அளவில் வந்த பெருங்காற்று மழை யடங்க பொழுதும் மறைந்தது. பதுமுகன் புத்திசேனன் முதலானோருடன் யாங்ள் அனைவரும் நகர்ப்புறத்தே கூடினோம்; அக்காலை, பதுமுகன் உளங்கொதித்து "இனிச் செய்வது கூறுமின்" என்னப் புத்திசேனன், "யாம் சீவகனைக் காணோமாயின், கட்டியங்காரனைக் கொன்று, நகரத்தையும் அழித்துவிட்டுச் சீவகனையடைதல் வேண்டும்" என்றான். தேவதத்தன் எழுந்து, " இக் கூறியது செய்தல் எளிது; சீவகன் உயிரோடிருப்பதும் இல்லாமையும் முதற்கண் அறிதல் வேண்டும்" என்றானாக, சீதத்தன் "புத்திசேனன் சொல்லியவாறே செய்க" என்றான். பதுமுகன் என்னை நோக்கி
"நீ இங்கேயிருந்து நம் குரவர்க்குக் கடன் செய்க; யாங்கள் இம் முயற்சிக்கண் செல்கின்றேம்" என்றான். யான் அதற்குடன்படானாயினேன். அக்காலை, பருவமன்றின்று தலைவியை யாற்றுவித்துத் தூது செல்கின்ற பாணன் கூற்றாக
அமைந்த பாட்டொன்றையொருவன் பாடயாங்கள் அனைவரும் நன்னிமித்தமாகக் கேட்டோம். அதன்பின் தேவதத்தன் கூறிய வண்ணமே செய்யக் கருதி நாடெங்கும் தனித்தும் தொக்கும் நின்னைத் தேடிக் காணாது அலமந்தேம். யான் குணமாலை மனைக்குச் சென்றேன். அவள் எனக்கு விருந்து நல்கினபின், "அடிகளை இன்றி நீரே உண்ணவும் வல்லீரானீர்; கடியிர் நீர்." என்று சொல்லிப் புலம்பினள். பின்பு தத்தை மனைக்குச் சென்றேன். அவன் பிரிவாற்றாமையால் வருந்திப் பாடியிருந்ததைப் பிறழக்கொண்டு கடிந்து கூறினேன். அற்றைப்போது மறையவே, அன்றிரவு தன் விஞ்சையால் என்னை இங்கே எய்துவித்தாள்" என்று கூறி முடித்தான்.
பின்பு சீவகன் தான் சுதஞ்சணனை நினைத்ததும், அவனோடு சென்றதும் முதலாகக் கனகமாலையை மணந்திருப்பதுவரை நிகழ்ந்தவையனைத்தையும் ஒன்றுவிடாது நிரல்பட உரைத்தான். மேலும் சீவகன் "நாம் நம் குரவரை நெடுநாளாய்க் கண்டிலமே" எனக் கதறி வருந்த, நந்தட்டனும் சீவகன் பொருட்டு அழத் தொடங்கினான்.
சீவகன் நந்தட்டனைத் தேற்றல்
"திண்பொருள் எய்த லாகும் தெவ்வரைச் செருக்க லாகும்
நண்பொடு பெண்டிர் மக்கள் யாவையும் நண்ண லாகும்
ஒண்பொரு ளாவ தையா உடன்பிறப்பு ஆக்க லாகா
எம்பியை ஈங்குப் பெற்றேன் என்எனக் கரியது"? என்றான். 449
449. திண் பொருள் - அழியாச் செல்வம். தெவ்வர் - பகைவர். ஒண் பொருளாவது உடன் பிறப்பு - ஒள்ளிய பொருளாவது உடன்பிறப்பு. ஆக்கலாகா - வேறே எவ்வாற்றாலும் செய்து கொள்ளலாகாத அவ்வொண்பிறப்பாகிய.
இருவர்க்கும் இங்கே நாட்கள் பல கழிந்தன. இராசமாபுரத்தே சீவகனது தோழர் பெரிதும் உளம் வருந்தி, காந்தருவதத்தை வருத்தமுறாது இருத்தலையறிந்து அவள்
பாலடைந்து, சீவகன் வேற்றுருக்கொண்டு கனகமாலையுடன் இருத்தலை அறிந்துகொண்டனர்.
அவர்கள் அது கேட்டுச் சீவகனைத் தாம் காண்டல் கூடும் என்ற உவகையால் தத்தையை வணங்கிக் கூறல்.
"ஐயனை யாமவண் எய்துவம்; ஆயிழை
நொய்தின் உரைபொருள் உண்டெனின் நொய்து" என
மையெழுத் தூசியின் மாண்டதொர் தோட்டிடைக்
கைவளர் கோதை கரந்தெழுத் திட்டாள். 450
450. நொய்தின் -கடிது சென்று கண்டவிடத்து. பொருள் உண்டெனின் நொய்து உரை - யாம் கூறத்தக்க பொருள் உண்டாயின் விரைவிற் கூறுக. என - என்று வேண்ட. மாண்டதொர் தோட்டிடை - அழகியதோர் ஓலையில். கைவளர் கோதை - கையால் புனைந்த மாலையையுடைய தத்தை. கரந்து - எழுத்துத் தெரிந்தாலும் பிறர் படித்தறிய
லாகாவண்ணம்.
அதன்மேல் அவள் தன் பொறி யொற்றித் தர அவர்கள் பெற்று ஏகுதல்
ஆங்குருக் காரரக் கிட்டுஅதன் மீமிசைப்
பூங்குழை யாற்பொறி யொற்றுபு நீட்டத்
தேங்குழ லாள்தொழு தாள்திசை; செல்கெனப்
பாங்கர்அங் குப்படர் குற்றன ரன்றே. 451.
451.ஆங்கு - அவ்வோலையில். உருக்கு ஆர் அரக்கு - உருக்கிய அரக்கு. பொறி ஒற்றுபு நீட்ட - குறி (முத்திரை) யிட்டுக் கொடுக்க' திசை தொழுதாள் - அவள் இருக்கும் திசை நோக்கித் தொழுது. செல்க என - இத்திசையே நோக்கிச் செல்க என்று ஏவ. பாங்கர் - தோழன்மார். படர்குற்றனர் - செல்லலுற்றனர்.
சீவகன் தாய் விசயமாதேவி தவம் பூண்டிருந்த பொழிலின் சிறப்பு
வண்டுதுயில் கொண்டுகுயி லாலிமயி லகவி
விண்டுமது விட்டுவிரி போதுபல பொதுளிக்
கொண்டுதளிர் வேய்ந்துசினை தாழ்ந்துநனை யார்ந்தொன்று
உண்டுபொழில் இமையவர்க ளுலகமுறு வதுவே. 452
452. துயில்கொண்டு- உறங்க. ஆலி - கூவ. அகவி - அகவ. விண்டு - சொரிய. விட்டு விரிபோது - முறுக்குவிட்டு மலர்ந்த பூக்கள். பொதுளி - செறிந்து. தளிர்வேய்ந்து- தளிர்களைப் பரப்பி. ந*னை - அரும்பு. உலகம் உறுவது - உலகத்தை யொப்பது. இடத்து நிகழ்பொருளின்வினை இடத்தின் மேலும், சினைவினை முதன்மேலும் நின்றன.
அப்பொழிலிடத்தே தங்கிய (சீவகன்) தோழர்கள் விசையைக் காண்டல்
ஐயருறை பள்ளியிடம் ஆண்டுஅழகர் காணச்
செய்கழலர் தாரரவர் எங்கும்திரி கின்றார்;
கொய்தகைய பூம் பொதும்பர்க் குளிருமரப் பலகைச்
செய்யவளிற் சிறிதுமிகை சேயவளைக் கண்டார். 453
453. ஐயர் - தாபதர்; இருடிகள். இடம் காண , அழகராகிய சீவகன் தோழன்மார் கழலும் தாரும் உடையராய் எங்கும் திரிகின்றனர் என்க. கொய்தகை - கொய்யப்படும் அழகு. பொதும்பர் - சோலை. குளிரும் - இருக்கும்: திசைச் சொல். செய்யவளின் சிறிது மிகை - திருமகளினும் சிறிது மேம்பட்டவளான. சேயவள் - விசயை.
விசயையின் நோன்புச் சிறப்பு
மாசொடு மிடைந்துமணி நூற்றனைய வைம்பால்
பூசுதலு மின்றிப்பிணி கொண்டுபுறந் தாழ
வாசமலர் மறைந்தவழி வாமனடிக் கேற்றித்
தோசமறத் துதிகள்மனத் தோதித்தொழு திருந்தாள். 454
454. மாசு - புழுதி. மணி நூற்றனைய ஐம்பால் – நீலமணியைக் கம்பியாக்கினாற் போன்ற தலைமயிர். பூசுதல் - கழுவுதல். பிணி கொண்டு -சிக்குற்றுச் சடையாக்கி வாசமலர் அடிக்கேற்றி, தோசமற, மறைந்த துதிகள் *னத்தே ஓதித் தொழுது இருந்தாள் என்க. வாமன் - அருகன். வழி - நன்னெறி. தோசம் - குற்றம்; சிதைவு. அவள் கருத்து சீவகன் வாழ்வே கருதலின் "மறைந்த" என்றார்.
அவளைக் கண்ட தோழர்கள், இன்னாரென அறியாது திகைத்தல்
வரையுடுத்த பள்ளியிட மாகஅதில் மேயோள்
விரையுடுத்த போதுறையும் வேல்நெடுங்க ணாள்கொல்?
உரையுடுத்த நாவுரையும் ஒண்ணுதல்கொல்? அன்றித்
திரையுடுத்த தேமொழிகொல்? என்றுதெரி கல்லார். 455
455. உடுத்த - அருகேயுள்ள. மேயோள் - இருந்தவள். விரை - மணம். போது - தாமரைப் பூ. உரை - உரைத்தல். ஒண்ணுதல் – கலை மகள். திரை - கடல். தேமொழி - மண்மகள்.
விசயையை அண்மி வினவுதல்
"மங்கல மடிந்ததிரு மாமகளை யொப்பீர்!
இங்குவர வென்னை? குலம் யாது? அடிகட்கு?" என்ன
"எங்குலமும் எவ்வரவும் வேண்டில்எளி தன்றே;
நுங்குலமும் நும்வரவும் நீர்உரைமின்" என்றாள். 456
456. மடிந்த - கெட்ட. என்ன - என்று தோழன்மார் வினவ. எளிதன்றே - கூறல் எளிதாயினும் இவ்வேடத்தோடு கூறல் ஆகாது. என்றாள் - என்று விசயை கேட்டாள்.
அவளுக்குத் தேவதத்தன், தம் வரலாறு கூறத் தொடங்கித் தாம் ஏமாங்கத நாட்டு இராசமாபுரத்தவர் என்று மொழிந்து பின்பு, "இவன் சீதத்தன், சாகரன் என்னும் அமைச்சன் மகன்; சச்சந்த வேந்தனது அந்தணனாகிய அசலன் மகன் இப் புத்திசேனன்; இவன், அரசனுக்குரிய செட்டியாகிய தனபாலன் மகனான பதுமுகன்; சச்சந்தனால்
சிறப்புப் பட்டம் பெற்று அவற்கு ஒரு கவசமாக இருந்த விசயதத்தன் மகனான தேவதத்தன் யான்” என்று சொல்லி முடித்தான்.
இவர்கள் சீவகற்குத் தோழராளமை கூறல்
எங்கன்வினை யால்இறைவன் *வீடியவஞ் ஞான்றே
எங்களுயிர் நம்பியொடு யாங்கன்பிறந் தேமா
எங்கள்தமர், “நம்பிக்கிவர் தோழர்” என ஈந்தார்;
எங்கெழில்என் ஞாயிறென இன்னணம் வளர்த்தோம். 457
457. இறைவன் - சச்சந்தன். வீடிய - இறந்த. உயிர் நம்பி - உயிர்போன்ற நம்பியாகிய சீவகன். பிறந்தேமா - பிறந்தேமாக. எங்கு எழில் என் ஞாயிறு என - ஒரு குறையும் கவலையுமின்றி
இவ்வாறு கூறியவர், கந்துக்கடன் மக்களான நந்தட்டன், நபுலவிபுலர்களையும் கூறி உடன்வந்து, கல்வியும் படைக்கலமும் பயின்று தேர்ந்தமை தெரியச் சொல்லி முடிவில்
சீவகற்கு நேர்ந்ததும், தாங்கள் வந்த வரலாறும் சொல்லத் தொடங்கினர். சொல்லுகையில், “சீவகனை ஒரு நாள் கட்டியங்காரன் கொல்லற்கெனத் தன் வீரரை யேவி அவனைப் பற்றிக் கொண்டு செல்ல” என்று கூறி முடிப்பதற்குள் விசயை “ஆ” எனக் கதறி வீழ்ந்து அறிவு சோர்ந்தாள். சீதத்தன் முதலியோர் திகைத்து ஒன்றும் அறியாராய் அவளை ஒருவாறு தேற்றினர். ஆனால், அவர் மனத்தே அவளொரு அருள் மிக்கவள் என்றே கொண்டனர்.
விசயை புலம்புதல்
“கைம்மாண் கடற்படையுள் காவலனை யாண்டொழியப்
பொய்ம்மா மயிலூர்ந்து போகிப் புறங்காட்டுள்
விம்மாந்தி யான்வீழ வீழ்ந்தேன் துணையாகி
எம்மானே தோன்றினாய், என்னை யொளித்தியோ! 458
458. கைம்மாண் கடற்படை - அணிவகுப்பால் மாட்சிமைப்பட்ட கடல்போலும் படை. காவலனை - ஐ, அசை. ஒழிய - இறந்து படவே. பொய்ம்மயில் - மயிலாகிய எந்திரம். விம்மாந்து - பொரும். துணையாகித் தோன்றினாய் என்க. என்னை - யான் காணாதவாறு.
"முன்னொருகால் என்மகனைக் கண்டேன்என் கண்குளிரப்
பின்னொருகால் காணப் பிழைத்ததென்? தேவிர்காள்!
என்னொப்பார் பெண்மகளிர் இவ்வுலகில் தோன்றற்க என்று
அன்னப் பெடைநடையாள் ஆய்மயில்போல் வீழ்ந்தனளே! 459
459. கண் குளிரக் கண்டேன் - கண்குளிர்ப்பெய்தக் கண்ட யான். காணப் பிழைத்ததென் - காணாதபடி செய்த தீவினை யாது? நடையால் அன்னப்பெடை யொப்பவள் வருந்தின மயில்போல வீழ்ந்தாள் என்க.
இவள் அழுகையால், தாம் சீவகன் வரலாறு அறிந்து கொண்டதேயன்றி அவள் தாயையும் காணப்பெற்ற பேறு குறித்து, அவர்கள் பெருமகிழ்ச்சியும் பெருமிதமும்
கொண்டு, அவளையும் இனிது தேற்றி, சீவகன் தேவனால் காக்கப்பட்டதை விளங்கக் கூறி மகிழ்வித்தனர்.
அவர்கள் மேலும் கூறுதல்
"பூவுடைத் தெரியலான் போர்வை நீத்துஇனிக்
கோவுடைப் பெருமக னாதல் கொண்டனம்;
சேவடி சேர்ந்தனம் தொழுது சென்றுஎன
மாவடு நோக்கியுள் மகிழ்ந்திது சொல்லுவாள். 460
460. தெரியலான் - மாலையையுடைய சீவகன். போர்வை - வணிகனென்று தன்னை மறைத்த போர்வை. கோவுடைப் பெருமகன் - அரசுரிமையுடைய சச்சந்தன் மகன். தொழுது சென்று - தொழுது செல்வதற்கு. நோக்கி - கண்களையுடைய விசயை.
விசயை சொல்லுதல்
தரணி காவலன் சச்சந்த னென்பவன்
பரணி நாட்பிறந் தான்; பகை யாவையும்
அரணி லான்,என்கண் தங்கிய அன்பினால்;
இரணி யன்பட்ட தெம்மிறை யெய்தினான். 461
461. சச்சந்தனென்பவன் பரணி நாளிலே பிறந்தவன். அன்பினால் அரணிலான் - அன்பினால் தன்னைக் காவானாய். இரணியன் பட்டது - இரணியன், இடிக்கும் துணையாராகிய சான்றோர் அமைச்சர் முதலாயினார் கூறிய அறிவுரைகளை ஏலாது கெட்டது.
விசயை யென்றுல கோடிய வீறிலேன்;
பசையி னால்துஞ்சி யான்பட்ட தீதெலாம்;
இசைய நம்பிக் கெடுத்துரைத் தென்னுழை
அசைவின் றையனைத் தம்மின் எனச்சொனாள் 462
462. வீறு-நல்வினை. ஓடிய-பரந்த. பசையினால்-பற்றினால். யான் பட்டது ஈதெலாம்-யான் உற்ற தீங்கெல்லாம். அசைவின்று- வருந்தாதபடி. தம்மின்-அழைத்து வருக.
இச் செய்தியைச் சீவகற் கன்றிப் பிறர் எவர்க்கும் உரையன்மின் என அவள் விளம்புதல்
கோதை வேல்நம்பிக் கல்லதை யிப்பொருள்
யாதும் கூறன்மின்; யாரையும் தேறன்மின்;
ஏதம் இன்னன இன்னணம் எய்தலால்
பேதை யாரொடும் பெண்ணொடும் பேசன்மின். 463
463. தேறன்மின்-தெளியாதீர், இன்னன-யான் பிறப்புணர்த்திய இதனை. இன்னணம்-தன் நினைவின்றி அரற்றியபோது கூறிய அதனை. பேதையார்-அறிவிலாதார்.
அவர்கள் விசயைபால் விடைபெற்றுப் போதல்
"வணக்கருஞ் சிலையி னானை யொருமதி யெல்லை நாளுள்
குணத்தொடு மலிந்த பாதம் குறுகயாம் கொணர்ந்த பின்றைப்
பணித்ததே செய்து பற்றார் பகைமுதல் அடர்த்தும் என்றார்;
மணிக்கொடி மாசுண் டன்னாள் "மற்றதே துணிமின்" என்றாள் 464
464. குணத்தோடு மலிந்த பாதம்-குணம் பலவும் நிறைந்ததிருவடி. பணித்தது-தாங்கள் அருளிச்செய்யும் செய்கை. முதல் அடர்த்தும்-முற்பட அழிப்போம். மாசுண் டன்னாள்-மாசு படிந்தாற்போன்ற விசயை. பற்றார் பகை-அடிப்பட்ட பகை, கட்டியங்காரன்.
பின்பு, அவர்கள் விசயை இட்ட விருந்துண்டு, குன்றும் காடும் மிடைந்த நாடுகளைக் கடந்து சீவகன் இருந்த மத்திம தேசத்துக் கேமமாபுரத்துப் புறத்தேயிருந்த இனியதொரு பொழிலில் தங்கிச் சீவகன் உண்மையை அறிவதற்குரிய நெறியை நாடலாயினர். மூன்று ஒற்றர்களை நகர்க்குள் விடுத்துச் செய்தியறிந்துவர விட்டனர். ஒற்றர் சென்றபின்பதுமுகன் எழுந்து "முதற்கண் இந் நகரத்துக் கோவலருடைய ஆனிரையை நாம் கவர்வோம்; போர் தொடரும்; அதன்கண் சீவகனைக் காண்டல் கூடும்" என்றான். அது கேட்ட புத்திசேனன் "சீவகன் இல்லையேல் இச் செயல் குற்றமில்லாத பலர் உயிர்க்குக் கேடாய் முடியும்; இதனை ஆராய்ந்து செய்ம்மின்" என்று உரைத்தான். அப்போழ்து ஒற்றர் போந்து, சீவகன் அந் நகரிடத்தே வளையசுந்தரம் என்னும் யானையொன்றை அடக்கிய செய்தியைக் கூறலுற்றனர்.
வளையசுந்தரம் என்னும் யானை மதம் படுதல்
வளையசுந் தரமெனும் வாரணம் மால்வரை
முனையிளந் திங்கள்போல் முத்துடைக் கோட்டது;
கிளையிளம் பிடிகள்ஐந் நூற்றிடை கேழரக்கு
அளையவஞ் சனவரை யனையதுஅக் களிறரோ. 465
465. வாரணம் - யானை. முனையிளந் திங்கள் - பிறைத் திங்கள். கேழ் அரக்கு அளைய - செவ்வரக்குப் பூசிய. அஞ்சனவரையனையது - அஞ்சனமலை போன்றது.
கடுமதக் களிப்பினால் காரென முழங்கலின்
விடுகலார் பாகரும், வெருவரக் கொன்றிடப்
பிடியொடுங் கந்தணை வின்றிநீர் உருள்பிளந்து
அடுகளி றந்தப்போ திகைபரிந் தழன்றதே. 466
466. கடுமதக் களிப்பினால் - மதம் மிகுந்தெழுந்த மயக்கத்தால். விடுகலார் - விடாராய். பிடியொடும் கந்து அணைவின்றி - பிடியும் தூணும் நெருங்காது. நீருருள் - வட்டமாகப் பண்ணித் தண்ணீர் ஏற்றி யுருட்டுவதொன்று. அந்தப் போதிகை - பின்னங்கால் சங்கிலி. பிரிந்து - அறுத்து.
யானையைச் சீவகன் அடக்குதல்
கண்ணுமிழ் தீயினால் சுடநிறங் கரிந்தபோல்
பண்ணுமிழ் வண்டுலாய்ப் பரத்தரா நின்றசீர்
அண்ணலங் களிற்றினை யடக்கினான் சீவகன்
வண்ணமே கலையினார் மனமெனப் படிந்ததே. 467
467. கரிந்த போல் - நிறம் கரிதாயது போல். பண்ணுமிழ் வண்டு - பண்பாடும் வண்டு. உலாய் - உலாவ. பரத்தராநின்ற நீர் - பரந்த சீரையுடைய, மனமென - மனம் தாழ்ந்து படிவது போல.
அதுகண்ட அரசன் பெரு மகிழ்ச்சியுடன் சீவகனை வரவேற்க, சீவகன் தன் தம்பியான நந்தட்டனுடன் அரசன் கோயிலையடைந்தான். பின்பு அரசன் மொழிந்த அன்பு
மொழிகளை ஏற்றுத் தங்கட்கென வகுக்கப்பெற்றிருந்த மனையை இருவரும் அடைந்தனர்.
சீவகன் மனையடைந்ததை ஒற்றர் கூறல்
பிண்டமுண் ணும்பெருங் களிறுபூட் டிய்யவண்
வண்டரும் மோவரும் பாடமா நகர்தொழக்
கொண்டதன் தம்பியும் தானும்கோ யில்புகக்
கண்டனம் கண்ணினே யென்றுகண் டவர்சொனார். 468
468. பிண்டம் - கவளம். பெருங்களிறு எனவே பட்டத்துயானை யென்பது பெற்றாம். பூட்டி - கம்பத்தில் சேர்த்துக் கட்டி. வண்டர் - கடிகையார். ஓவர் - ஏத்தாளிகள். கொண்ட - தனக்கென வகுக்கப்பட்ட கொண்ட கோயில் என்க. கண்டவர் - ஒற்றுக் கண்டவர். கண்ணினே - கண்ணாலே.
சீவகன் இருப்பதையுணர்ந்த அவன் தோழர் நிரை கோடல் குறித்து எழுந்தனர். கோவலரும் தம் ஆனிரைகளைக் காத்தற்கு வேண்டுவனவற்றைச் செய்யலுற்றனர்.
ஒரு பூசல் நிகழ்ந்தது. கோவலர் தம் ஆனிரையைக் காக்க மாட்டாராய் அரசற்குத் தெரிவிக்க ஓடினர். அப்போழ்து அரசனாகிய நரபதி, நந்தட்டனை யழைத்து, அவனுடைய நாடு முதலியவற்றைக் கேட்டிருந்தான்.
நரபதி நந்தட்டனை வினாதல்
தேர்த்தொகைத் தானை மன்னன் சீவகற் கிளைய நம்பி
வார்த்தொகை முழவம் விம்ம மல்லுறழ் தோளி னானை
நீர்த்தொகைக் கழனி நாடு நெடுநகர்ப் பெயரும் நுங்கள்
சீர்த்தொகைக் குலனு மெல்லாம் தெரிந்தெமக் குரைமோ என்றான். 469
469. தேர்த்தொகைத் தானை - எண்ணிறந்த தேர்முதல் படை பலவும் தொக்க தானை. வார்த்தொகை முழவம் – வார்க்கட்டமைந்த முழவு. மல் உறழ் தோள் - மற்போரில் மேம்படும் தோள். தெரிந்து - தெரிய.
அவன் நரபதிக்குத் தன் ஏமாங்கத நாட்டையும் இராசமாபுரத்தையும் கூறித் தன்குல முறை கூறத் தொடங்குகையில், ஆனிரையிழந்த கோவலர் நிகழ்ந்தது முற்றும் அர
சற்கு உரைத்தனர்.
நரபதி நிரை மீட்கவென ஆணையிடல்
நாற்கடல் பரப்பும் வந்து நன்னகர்க் கண்ணுற் றென்ன
வேற்கடல் தானை பாய்மா விளங்கொளி யிவுளித் திண்டேர்
கூற்றென முழங்கு மோடைக் குஞ்சரக் குழாத்தோ டேகிப்
பாற்கடல் பரப்பின் வல்லே படுநிரை பெயர்க்க வென்றான். 470
470 கண்னுற்றென்ன - கூடின என்னும்படி. பாய்மா - குதிரை. இவுளித் திண்டேர் - குதிரை பூட்டிய வலிய தேர். ஓடைக் குஞ்சரம் - பட்டம் அணிந்த யானை. பாற்கடல்...படுநிரை - பாற்கடல் பரப்புப் போலப் பாலுண்டான மிக்க ஆனிரை.
நந்தட்டனுடன் தேரேறிய சீவகன் வஞ்சினம் கூறல்
மன்னவன் நிரைகொண் டாரை வனநகர்த் தந்து மன்னன்
பொன்னவிர் கழலில் தங்கள் புனைமுடி யிடுவி யேனேல்
இன்னிசை யுலகந் தன்னுள் என்பெயர் சேற லின்றாய்க்
கன்னிய மகளிர் நெஞ்சிற் காமம்போல் கரக்க என்றான். 471
471 நிரைகொண்டாரை - நிரைகவர்ந்த பகைவரை. தந்து- கொண்டுவந்து. இன்னிசை யுலகம் - இனிய புகழ் நிலைபெறுதற்கு இடமாகிய. சேறலின்றாய் - நிலைபெறாமல். கன்னிய மகளிர் - கன்னியராகிய மகளிர். கரக்க - மறைக.
இப்பால், நிரை கவர்ந்து கொண்டருள் பதுமுகன் சிலை யெடுத்தல்.
பார்மலி பரவைத் தானைப் பரப்பிடைப் பறப்ப தேபோல்
நீர்மலி கடாத்த கொண்மூ நெற்றிமேல் மின்னின் நொய்தாத்
தார்மலி மார்பன் திண்டேர் தோன்றலும் தறுகண் மைந்தன்
சீர்மலி பகழி யேந்திப் பதுமுகன் சிலைதொட்டானே. 472
472 பார்மலி பரவைத் தானை - நிலத்திலே நிறைந்து பரந்த தானை. நீர்மலி...தோன்றலும் - கடல்போல் நிறைந்த மதத்தையுடைய மேகத்தின் தலையில் தோன்றுவதொரு மின்னினும் கடிதாகத் தேர் தோன்றிற்று. மேகம் - யானை. பகழி - அம்பு. தொட்டான் - எடுத்தான்.
பதுமுகன் தங்கள் வரவு குறிக்கும் குறிப்பெழுதிய ஓலை விடுத்தல்
"குடைநிழற் கொற்ற வேந்தன் ஒருமகற் காணக் குன்றா
அடிநிழ லுறைய வந்தேம்; அடியம்யாம்" என்ன எய்த
விடுகணை சென்று தேர்மேல் பின்முனா வீழ்த லோடும்
தொடுகழல் குரிசில் நோக்கித் தூத்துகில் வீசினானே. 473
473 கொற்ற வேந்தன் - சச்சந்தன். ஒரு மகற் காண – ஒப்பற்ற மகனாகிய நின்னைக் காணவே. எய்த விடுகணை - எழுதி விடுத்த ஓலை சென்று சீவகனை எய்துமாறு விட்ட அம்பு,. பின்முனா - மாறாக. தூத்துகில் வீசினான் - போரை நிறுத்தவேண்டி, வெள்ளிய துகிற்கொடியை வீசிப்படையைப் போர் செய்யாதவாறு விலக்கினான்.
போர் நின்றது. சீவகன் பதுமுகன் முதலிய தன் தோழர் பலரையும் கண்டு பெருமகிழ்வு கொண்டு அவரவர் தகுதிக்கேற்பச் சிறப்புச் செய்தான். தோழரும் சீவகனைக்
காணாமையால் கொண்டிருந்த அவல நோய் தீர்ந்தனர்.
:
சீவகன் தன் தோழருடன் நரபதியூர்க்குச் செல்லுதல்
கழலவாய்க் கிடந்த நோன்றாட் கானைதன் காத லாரை
நிழலவா யிறைஞ்சி நீங்கா நெடுங்களிற் றெருத்த மேற்றி
அழலவாய்க் கிடந்த வைவேல் அரசிளங் குமரர் சூழக்
குழலவாய்க் கிடந்த கோதை தாதையூர் கொண்டு புக்கான். 474
474 கழல் அவாய்க் கிடந்த நோன்றான் காளை - கழல் பொருந்திக் கிடந்த வலிய தானையுடைய சீவகன். நிழல் அவாய் இறைஞ்சி – தன் நிழலைப் பகையென்று அவாவித் தாழ்ந்து. அழல் அவாய்க் கிடந்த வைவேல் - கொல்லன் உலையை விரும்பின வேல். குழலவாய்க் கிடந்த கோதை - மொழியை வங்கியமென்னும் இசைக்கருவி விரும்பிக் கிடத்தற்குக் காரணமான கனகமாலை. தாதை - நரபதி.
சீவகனுடன் அரசன் கோயிலை யடைந்த அவள் தோழர்; அரசன் முன் சென்று பணிதல்
வல்லானம் புனைந்த வயிரக்குழை வார்ந்து வான்பொன்
பல்லூ ணெருத்தின் பரந்தஞ்சுடர் கால மன்னன்
மல்லார் திரடோன் மருமான்முக நோக்க "மைந்தர்
எல்லாம் அடிகள்! எனக்கின்னுயிர்த்தோழ" ரென்றான். 475
475 வார்ந்து - விளங்க. வான் பொன் பூண் பரந்து சுடர்கால என்க. சுடர்கால - ஒளி திகழ. முகம் நோக்க - இவர் யார் என்னும் குறிப்புப்படப் பார்க்க. மைந்தர் எல்லாம் - இவ் வீரர் எல்லாம்.
பின்பு அரசன் பணித்தவாறு தோழர்கள் கனகமாலையை வணங்குதல்
தழுமுற்றும் வாராத் திரன்தாமங்கள் தாழ்ந்த கோயில்
முழுமுற்றும் தானே விளக்காய் மணிக் கொம்பின் நின்றாள்
எழுமுற்றும் தோளார் தொழுதார்; இன்ன ரென்று நோக்கக்
கழுமிற்றுக் காதல் கதிர்வெள்வளைத் தோளினாட்கே. 476
476. முற்றும் தழுவாரா-முற்றவும் தழுவொண்ணாத, தாமம்- மாலை, தாழ்ந்த-தொங்கவிடப்பட்ட, முழு முற்றும்-முழுதும் முற்றும்; ஒருபொருட் பன்மொழி. இனி, முழுதும் தானே விளக்காய், முற்றுமணிக்கொம்புபோல என இயைப்பினுமாம், எழுமுற்றும்-தூண்போலும், கனகமாலை நோக்க, இன்னரென்று சீவகன் குறிக்க, காதல் கழுமிற்று என்க. கழுமிற்று-நிறைந்தது.
கனகமாலை அவர்கட்கு விருந்து செய்தல்
துறக்கம் இதுவே யெனும்தொன்னகர் மன்னன் மங்கை
"தொறுக் கொண்ட கள்வர் இவரோ?" எனச் சொல்லி நக்காங்கு
"ஒறுக்கப் படுவார் இவர்" என்று அசதி யாடி
வெறுக்கைக் கிழவன் மகளென்ன விருந்து செய்தாள். 477
477. மங்கை-மகளாகிய கனகமாலை, தொறு-ஆனிரை. ஆங்கு-அப்பொழுது, அசதியாடி-நகையாடி, வெறுக்கைக் கிழவன்- அளகைக்கோன்(குபேரன்), என்ன-போல.
பின்பு, சீவகன் தனித்திருப்பது கண்டு புத்திசேனன் தான் காந்தருவதத்தை கொடுப்பக் கொணர்ந்த ஓலையைத் தந்தான். அதனைச் சீவகன் வாங்கிப் படித்தான்.
காந்தருவத்தையின் ஓலை
மற்றடிகள் கண்டருளிச் செய்க,மல ரடிக்கீழ்ச்
சிற்றடிச்சி, தத்தை,யடி வீழ்ச்சி, திரு வடிகட்கு
உற்றடிசில் மஞ்சனத்தை யுள்ளுறுத்த காப்பும்
பொற்புடைய வாகவெனப் போற்றியடி வீழ்ந்தேன் 478
478. சிற்றடிச்சி-சிறியளகிய அடியேன், அடிவீழ்ச்சி-அடியிலே வீழ்பவன், உள்ளுறுத்த காப்பு-உள்ளிட்ட ஏனை காப்புக்களும். நுகருவனவற்றைக் காப்பு என்றல் மரபு. கண்டருளிச் செய்க-நெஞ்சாலே கண்டருளுக.
வெள்ளி மலையிலிருந்து கலுழவேகன் மணிக்கலன், கற்பகமாலை, எலிமயிர்ப் போர்வை முதலியவற்றைத் தரன்பால் வரவிட்டான். அவனுக்குய், "ஏழு திங்கட்குமுன் அடிகள், ஏமமாபுரத்தே அகன்றாய்' என்று கூறினேன். மேலும்,------
பட்டபழி வெள்ளிமலை மேற்பரத்த லஞ்சித்
தொட்டுவிடுத் தேனவனைத் தூது பிற சொல்லிப்
பட்டபழி காத்துப்புக ழேபரப்பி னல்லால்
விட்டலர்ந்த கோதையவ ரால்விளைவ துண்டோ. 479
479. பட்ட பழி - கட்டியங்காரன் சிறை செய்தான் என்று பிறந்த பழி, பரத்தல் - வெள்ளிமலையில் பரவுவதற்கு, தொட்டுவிடுத்தேன் - எவர் பாலும் சொல்லாதபடி சூளுறவு பெற்றுக்கொண்டு விட்டேன். அவன் - தான், பழிகாத்து - பழியை மறைத்து, விட்டலர்ந்த- முறுக்கவிழ்ந்து மலர்ந்த, கோதையவரால்-மகளிரை மணந்துகொண்டு
போதலால், விளைவது - விளையக்கூடியதொரு புகழ்.
குணமாலை திறம் கூறல்
அல்லதுவும் எங்கைகுண மாலையவ ளாற்றாள்
செல்லுமதி நோக்கிப்பக லேசிறியை யென்னும்
பல்கதிரை நோக்கிமதி யேபெரியை யென்னும்
எல்லியிது காலையிது என்பதறி கல்லாள் 480
480. அல்லதுவும் - அன்றியும், ஆற்றாள் - பின்னும் ஒரு பழி விளைப்பாள் போல ஆற்றானாயினள். திங்களை ஞாயிறென்றும், ஞாயிற்றைத் திங்களென்றும், பகலிது இரவிது என்றறியாமலும் திகைகின்றாள் என்பது.
நாளைவரு நையலென நன்றென விரும்பி
நாளையெனு நாளணிமைத் தோபெரிதும் சேய்த்தோ
நானையுரை யென்றுகிளி யோடுநகச் சொல்லும்
நாளினும்இந் நங்கைதுயர் நாளினுமற் றிதுவே. 481
481. வரும்-சீவகன் வருவன், என - என்று கிளிசொல்ல, கிளியோடு நகச் சொல்லும் - கிளிகேட்டு நகுமாறு வினவுகின்றாள். நானினும் - நாடோறும்.
காந்தருவதத்தை தன் திறம் கூறல்
நோக்கவே தளிர்த்து நோக்கா திமைப்பினும் நுணுகு நல்லார்
பூக்கம ழமளிச் சேக்கும் புதுமண வாள னார்தாம்;
நீப்பிலார் நெஞ்சி னுள்ளார்;ஆதலான் நினைத்தல் செய்யேன்;
போக்குவல் பொழுதும் தாம்தம் பொன்னடி போற்றி யென்றாள். 482
482. நோக்காது இமைப்பினும் -பார்க்காதே கண்ணை இமைத்தாலும். நுணுகும் - மெலிகின்ற. புதுமணவாளனார் - நாளும் புது மணம் புணரும் காதலர். நீப்பிலர் - நீங்குதலின்றி. நெஞ்சின்- நெஞ்சிடத்தே. தாம் தாம் பொன்னடி போற்றி - தாம் தம்மைப் பாதுகாப்பாராக.
இவ் வோலையைப் படித்து மகிழ்ச்சி மிக்கவனாய்ச் சீவகன் போந்து தோழரோடு கூடினவளவில், அவன் தோழர்களை நோக்கி, "என் திறத்தை எங்கே கேள்வியுற்றீர்?"
என்று கேட்டான்.
தோழர்கள் தாம் விசயையைக் கண்ட செய்தி கூறல்
எங்கோமற் றென்திறம்நீர் கேட்ட
தென்றாற் கெரிமணிப்பூட்
செங்கோன் மணிநெடுந்தேர்ச் செல்வன்
காதல் பெருந்தேவி
தங்காத் தவவுருவம் தாங்கித்
தண்டா ரணியத்துள்
அங்காத் திருந்தாளைத் தலைப்பட்டு,
ஐய! அறிந்தோமே. 483
483. என்றாற்கு - என்று வினவிய சீவகற்கு. செங்கோலும் நெடுந் தேருமுடைய செல்வனாகிய சச்சந்தன் தேவி யென்க. தங்காத் தவ வுருவம் - தனக்கு ஏலாத தவவடிவம். அங்கு ஆத்து இருந்தாளை – ஆசையால் பிணிக்கப்பட்டுத் துறவிகள் உறையும் அவ்விடத்தே இருந்த அவளை. இனி, தண்டாரணியத்து உளம் காத்து இருந்தாளை என்றும் கூறுப. உளம் - உயிர்; "அறிவிக்க அன்றி அறியா உளங்கள்" என்றாற் போல.
சீவகன் அது கேட்டுக் கண்ணீர் சிந்தி மனம் வருந்தி மேலும் கூறல்
அஃதேயெம் மடிகளும் உளரோ என்றாற் கருளுமாறு
இஃதா இருந்தவா றென்றாற் கென்னைப் பெறவல்லார்க்கு
எய்தா இடருளவே; எங்கெங் கென்றத் திசைநோக்கி
வெய்தா அடிதொழுது வேந்தன் கோயிற் கெழுந்தானே . 484
484. என்றாற்கு - என்று வினவிய சீவகனுக்கு. அருளுமாறு இஃதா இருந்தவாறு - நல்வினையாகிய தெய்வம் நமக்கு அருளும் நெறி இருந்தவாறு இத் தன்மைத்து என எய்தா இடர் உளவே - அடையாத துன்பம் வேறே இல்லை. வெய்தா - விரைவாக.
அரசன் நந்தட்டனால் சீவகனுடைய நாடும் ஊரும் அறிந்து தோழரால் குலமும் பிறவும் அறிந்து இன்புறச். சீவகன் தன் தாயைக் காணவேண்டியிருத்தலைக் கூறி விடைபெற்றுச் சென்று கனகமாலையைக் கண்டான். அவளும் அவனைப் பிரிய ஆற்றாது வருந்த அவட்குத் தகுவன கூறித்தேற்றிவிட்டுப் புறப்பட்டான்.
கனகமாலையார் இலம்பகம் முற்றும்.
------------------
8. விமலையார் இலம்பகம்
[சீவகன் தண்டாரணியஞ் சென்று விசயையைக் கண்டதும், இராசமாபுரஞ் சென்று விமலையை மணந்ததுங் கூறுகின்றது.]
கனகமாலையை நீங்கித் தண்டாரணியத்தை நோக்கிப் புறப்பட்ட சீவகன் சீரியதொரு குதிரையேறிச் செல்ல, அவன் தம்பியாகிய நந்தட்டனும், பதுமுகன் முதலிய
தோழர்களும் தாம்தாம் ஒவ்வோர் ஊர்தியில் சென்றனர். அப்போழ்து, நந்தட்டன் பதுமுகனைச் சீவகனுக்கு மெய் காவலனாயிருந்து பாதுகாக்கவேண்டிச் சில கூறலுற்றாண்.
சீவகன் வரலாறு வெளியாய் விட்டமையின், அவனைப் பாதுகாக்கும் செயலின் சிறப்புரைத்தல்.
விழுமணி மாசு மூழ்கிக் கிடந்ததிவ் வுலகம் விற்பக்
கழுவினீர்; பொதிந்து சிக்கக் கதிரொளி மறையக் காப்பின்
தழுவினீர் உலக மெல்லாம்; தாமரை யுறையும் செய்யாள்
வழுவினார் தம்மைப் புல்லாள்; வாழ்கநும் கண்ணி மாதோ. 485
485. மணிமாசு மூழ்கி உலகம் விற்பக் கிடந்தது கழுவினீர் - உலகை விலையாகப் பெறுவதொரு பெருமணி மாசுபடிந்து கிடந்தது; அதைக் கழுவி வெளியாக்கினீர். சிக்கப் பொதிந்து - அகப்படப் பொதிந்து. தழுவினீர் - கைக்கொண்டீராவீர். வழுவினார் – காவாது இகழ்ந்தவர்.
பகைவரை தெளியும் அருமை கூறல்
தொழுததம் கையி னுள்ளும் துறுமுடி யகத்தும் சோர
அழுதகண் ணீரி னுள்ளும் அணிகலத் தகத்து மாய்ந்து
பழுதுகண் ணரிந்து கொல்லும் படையுட னொடுங்கும் பற்றாது
ஒழிகயார் கண்ணும் தேற்றம்; தெளிகுற்றார் விளிகுற் றாரே. 486
486. கையினுள்ளும், முடியகத்தும், கண்ணீரினுள்ளும், கலத்தகததும் கொல்லும் படை உடனொடுங்கும் என்க. பழுது ஆய்ந்து - பழுதுண்டோ என ஆராய்ந்து. தேற்றம் பற்றாது ஒழிக - தெளிதலைச் செய்யா தொழிக. கண் அரிந்து - அன்பு அறவேயின்றி. விளிகுற்றாரே - உயிரிழந்தாரேயாவர்.
உண்டிக்கண் வேண்டும் பாதுகாவல் கூறல்
வண்ணப்பூ மாலை சாந்தம்
வாலணி கலன்க ளாடை
கண்முகத் துறுத்தித் தூய்மை
கண்டலால் கொள்ள வேண்டா;
அண்ணலம் புள்ளோ டெல்லா
ஆயிரம் பேடைச் சேவல்
உண்ணு நீ ரமிழ்தம் காக்க
யூகமோ டாய்க என்றான். 487
487. பூமாலையைப் புள்ளின்கண்ணிலும், சாந்தத்தைச் சேவலின் முகத்தும் உறுத்தித் தூய்மை கண்டபின்னன்றிக் கொள்ளவேண்டா என்க. உண்ணும் நீரிலும் அமிழ்தத்திலும் தீங்குண்டாகாதவாறு காக்க வேண்டின் கருங்குரங்கிற்கு இட்டு ஆராய்க. அண்ணலம்புள் - அரசவன்னம். குற்றமுள்ளதாயின், அன்னம் கண் குருதி காலும்; சேவல் - சக்கரவாகம்; இது முகம் கடுக்கும்: கருங்குரங்கு உண்ணாது.
பகை சிறிதெனக் கண்டு எள்ளலாகாது என்றல்
அஞ்சனக் கோலி னாற்றா
நாகம்ஓர் அருவிக் குன்றிற்
குஞ்சரம் புலம்பி வீழக்
கூர் நுதி எயிற்றிற் கொல்லும்;
பஞ்சியின் மெல்லி தேனும்
பகைசிறி தென்ன வேண்டா;
அஞ்சித்தற் காத்தல் வேண்டும்
அரும்பொரு ளாக என்றான். 488
488.அஞ்சனக்கோலின் ஆற்றாநாகம் - அஞ்சனக்கோலால் தாக்கினும் உயிர் தாங்குதலாற்றாத சிறு நாகப்பாம்பு. குன்றின் - குன்றுபோல. என்ன வேண்டா - என்று கருதி இகழவேண்டா. அரும் பொருளாக அஞ்சி - வேறற்கரிய பொருளாகக் கருதி யஞ்சி.
பாதுகாத்து ஒழுகும் திறம் கூறுதல்
பொருந்தலால் பல்லி போன்றும் போற்றலால் தாய ரொத்தும்,
அருந்தவர் போன்று காத்தும், அடங்கலால் ஆமை போன்றும்,
திருந்துவேல் தெவ்வர் போலத் தீதற வெறிந்தும், இன்பம்
அருந்தினால் மனைவி யொத்தும் மதலையைக் காமின் என்றான். 489
489. பொருந்தலால் - விடாது சேர்ந்திருத்தலால். காத்தும்- இவன்பாலும் சீலம் முதலியன கெடாமல் காத்தும். தீதுஅற எறிந்தும்- தீதுண்டாயின் அது வேரறக் கெடும்படி இடித்தும், அருந்தினால்-உணவு நுகர்விப்பதில். மதலை-பற்றுக்கோடான சீவகன்.
அது கேட்டுப் பதுமன் இருத்தற்கு ஒருப்பட்டான். சீவகனும் தன் தோழர்மாரை முறைப்படியே நெஞ்சால் ஆராய்ந்து, அப் பதுமுகனையே தனக்கு மெய் காவலனாகக் கொண்டான். அவனும் அவ்வண்ணமே ஒழுகலானான். அனைவரும் வழியில் பல இனிய காட்சிகளைக் கண்டு மகிழ்வுற்றுத் தண்டாரணியத்தை யடைந்தனர்.
சீவகன் விசயையைக் காணலாம் செவ்வியறிந்து வரப் பதுமுகனை விடுத்தல்
பொறிமயி லிழியும் பொற்றார் முருகனிற் பொலிந்து மாவின்
நெறிமையி னிழிந்து மைந்தன் மணிக்கைமத் திகையை நீக்கி
வெறுமையி னவரைப் போக்கி வெள்ளிடைப் படாத நீரால்
" அறிமயி லகவுங் கோயில் அடிகளைச் செவ்வி" யென்றான். 490
490. பொறி மயில்-புள்ளிகளையுடைய மயில். இழியும்-இறங்கும். முருகனின் -முருகன் போல.நெறிமை-இழிதற்குரிய முறைமை, மத்திகை - மாவைச் செலுத்தும் கோல். வெறுமையினவர் - அறிவில்லாதவர். வெள்ளிடைப்படாத நீரால் - தான் இன்னானென்பது பிறர்க்குப் புலனாகாத முறையால். அடிகளைச் செவ்வி அறி என்றான்.
பதுமுகன் தேவிக்கு உரைத்தல்
"எல்லிருட் கனவிற் கண்டேன் கண்ணிடனாடும்; இன்னே,
பல்லியும் பட்ட பாங்கர்; வருங்கொலோ நம்பி" யென்று
சொல்லினள் தேவி நிற்பப், பதுமுகன் தொழுது சேர்ந்து,
நல்லடி பணிந்து, "நம்பி வந்தனன், அடிகள்!" என்றான். 491
491. எல் இருள் - விடியற்காலத்தே. பாங்கர் - நல்ல இடம்.பட்ட - ஒலித்தன. சொல்லினள் - முற்றெச்சம். சேர்ந்து தொழுது அடிபணிந்து என்க. நம்பி - சீவகன். நம்பி, நம் என்னும் முதனிலையாக நமக்கு இன்னானென்னும் பொருள்பட வருவதோர் உயர்ச்சிச் சொல்.
சீவகன் விசயையைக் காண்டல்
"எங்கணான் ஐயன்?" என்றாட்கு "அடியன்யான், அடிகள்" என்னப்
பொங்கிவில் லுமிழ்ந்து மின்னும் புனைமணிக் கடக மார்ந்த
தங்கொளித் தடக்கை கூப்பித் தொழுதடி தழுவி வீழ்ந்தான்;
அங்கிரண் டற்பு முன்னீர் அலைகடல் கலந்த தொத்தார். 492
492. எங்கணான் - எவ்விடத்தே யுள்ளான். என்ன - என்று சீவகன் சொல்லி. வில் - ஒளி, கடகம் - வீரரணியும் கையணி, முன்னீர் – முன்னைய தன்மை; அஃதாவது பிறர்க்கு இன்னாரென்பது புலப்படாத வகையில் ஒழுகும் தன்மை. அற்பு அலைகடல் - அன்பாகிய அலைகடல்.
விசயை சீவகனைத் தழுவிக் கொள்ளுதல்
காளையாம் பருவ மோரான் காதல்மீக் கூர்த லாலே,
வாளையா நெடிய கண்ணாள் மகனைமார் பொடுங்கப் புல்லித்
"தாளையா முன்பு செய்த தவத்து விளைவி லாதேன்,
தோளயாத் தீர்ந்த" தென்றாள் தொழுதகு தெய்வ மன்னாள். 493
493. காதல் - மகன்பாற் சென்ற அன்பு, வாளை ஆம் நெடிய கண்ணாள்- வாளை நிகர்க்கும் நெடிய கண்களையுடைய விசயை. ஐயா - ஐயனே. முன்பு தான் செய்த - முற்பிறப்பிலே முயன்று செய்த. வினைவு - பயன். தோள் அயர - தோள் வருத்தம். "அரசனைக் கோறலின் வாளையொக்கும் நெடிய கண்ணாள் என்று விசயைக்குப் பெயராயிற்று." வயிற்றிற் சுமந்த வருத்தம் உண்டு; பெற்றபின் தோளிற் சுமக்கும் வருத்தம் நுகராமையின், "தோள் அயரத் தீர்ந்தது" என்றான்.
விசயை சீவகற்குக் கூறல்
"வாட்டிறள் குரிசில் தன்னை வானம ரகத்துள் நீத்துக்
காட்டகத் தும்மை நீத்த கயத்தியேற் காண வந்தீர்;
சேட்டிளம் பரிதி மார்பின் சீவக சாமி யீரே!
ஊட்டரக் குண்ட செந்தா மரையடி நோவ" என்றாள். 494
494. வாள் திறல் - வாட்போர் வன்மை. குரிசில் - சச்சந்தன், காட்டகத்து - சுடுகாட்டில். கயத்தியேன் - நெடியேன். சேடு - பெருமை. பருதி மார்பு - பருதிபோலும் மார்பு. ஊட்டரக்கு......தாமரை - இயல்பாகவேயுள்ள செம்மை நிரம்பாமையின் செவ்வரக்கு ஊட்டப்பட்ட தொரு தாமரைப் பூ. அடிநோவ, கயத்தியேற் காணவந்தீர் என இயைக்க.
சீவகன் உரைத்தல்
"கெடலருங் குரைய கொற்றம் கெடப்பிறந் ததுவு மன்றி
கடலையுள் அடிகள் வைக, நட்புடை யவர்கள் நைய,
இடைமகன் கொன்ற இன்னா மரத்தினேன் தந்த துன்பக்
கடலகத் தழுந்த வேண்டா, களைகஇக் கவலை" என்றான் 495
495. கெடலருங் குரைய கொற்றம் - கெடாத கொற்றம். (அரசன்). குரைய - அசை. நடலையுள் - மிக்க வருத்ததிலே, நட்புடையவர்கள் - சச்சந்தன் நண்பரும், சீவகன் தோழன்மார்களுடைய தந்தையருமாகியவர். இடை.....மரத்தினேன் - இடையன் தழை கழித்த துன்புற்ற மரத்தின் தன்மையுடைய யான், (பழமொழி, 314 பார்க்க), உயிருடனிருந்தும் பகைமை வென்றேனுமில்லை; உயிரை நீத்தேனுமில்லை என்றற்கு" இன்னா மரத்தினேன்" என்றான்.
விசயை நந்தட்டன் முதலியோரைக் குறித்துப் பேசுதல்
"யானலன் ஔவை யாவாள் சுநந்தையே யையற் கென்றும்
கோனலன் தந்தை, கந்துக் கடன்" எனக் குணத்தின் மிக்க
மானிலத் துறையுந் தீந்தேன் அனையவா யமிர்த மூற
மானலங் கொண்ட நோக்கி மகன்மன மகிழச் சொன்னாள். 496
496. ஔவை - அன்னை. பால் நிலத்துறையும் தீந்தேன் அனையவாய் - பாலிடத்தே சொரிந்து கலந்த தேன்போன்றனவாகிய. அமிர்தம் ஊற - இனிமையூறும் சொற்களை, நலம் - அழகு. நோக்கி - கண்களையுடைய விசயை.
"எனக்குயிர்ச் சிறுவ னாவான் நந்தனே, ஐய னல்லை;
வனப்புடைக் குமரன் இங்கே வரு" கென மருங்கு சேர்த்திப்
புனக்கொடி மாலை யோடு பூங்குழல் திருத்திப் பொற்றார்
இனத்திடை யேற னானுக் கின்னளி விருந்து செய்தாள். 497
497. சிறுவன் - மகனாவான், ஐயன், அண்மைவிளி, மருங்கு - பக்கம். புனக்கொடி - விசயை, இனத்திடையேறு – ஆனினத்தின் இடையே நின்ற காளை. இன் அளிவிருந்து - இனிய தண்ணளியாகிய விருந்து.
அவரனைவரும் அங்கே விருந்துண்டு இனிதிருந்தனர். ஆறு நாட்கள் சென்றன. அக் காலத்தே விசயை தன் மகனுக்கு அரச நீதிகள் சிலவற்றை உரைக்கலானாள்.
விசயை சீவகனை, "இனி நீ செய்யலுற்றது என்?" என வினவுதல்.
நிலத்தி னீங்கி நிதியினும் தேய்ந்துநங்
குலத்திற் குன்றிய கொள்கையம் அல்லதூஉம்
கலைக்க ணாளரு மிங்கில்லை; காளை நீ
வலித்த து என்?என வள்ளலும் கூறுவான். 498
498.நிலத்தின் நீங்கி - நமக்குரிய நாட்டிலிருந்து நீங்கி. தேய்ந்து - குறைந்து. குன்றிய - தாழ்ந்த. கொள்கையம் - நிலையில் உள்ளோம். கலைக்கணாளரும் - அமைச்சரும். வலித்தது - துணிந்த செயல்.
சீவகன் விடை யிறுத்தல்
எரியொடு நிகர்க்கு மாற்றல்
இடிக்குரற் சிங்க மாங்கோர்
நரியொடு பொருவ தென்றால்
சூழ்ச்சிநற் றுணையோ டென்னாம் ;
பரிவொடு கவல வேண்டா;
பாம்பவன், கலுழ னாகும்
சொரிமதுச் சுரும்புண் கண்ணிச்
சூழ்கழல் நந்தன் என்றான். 499
499.இடிக்குரல்- இடிபோன்ற முழக்கம். பொருவதென்றால் - போர் செய்யலுறின். ஆங்கு சூழ்ச்சியும் துணையும் என்னாம்? வேண்டா என்பது கருத்து. பரிவு - வருத்தம். அவன் பாம்பு, கலுழன் நந்தட்டனாகும். சொரிமதுச் சுரும்புண் கண்ணி - சொரிகின்ற தேனை வண்டுண்ணும் கண்ணி. கண்ணியும் கழலுமுடைய நந்தன் என்க.
விசயை நந்தட்டனை வியந்து கூறல்
கெலுழனோ நந்த னென்னாக்
கிளரொளி வனப்பி னானைக்
கலுழத்தன் கையாற் றீண்டிக்
காதலிற் களித்து நோக்கி ,
வலிகெழு வயிரத் தூண்போல்
திரண்டுநீண் டமைந்த திண்டோள்
கலிகெழு நிலத்தைக் காவா
தொழியுமோ காளைக் கென்றாள். 500
500. கிளரொளி வனப்பினானை - விட்டு விளங்குகின்ற ஒளி பொருந்திய அழகிய நந்தட்டனை. கலுழ - மனமுருகும்படி. கலிகெழு நிலத்தை - துன்பம் செய்யும் கட்டியங்காரன் ஆளும் ஏமாங்கத நாட்டை (நினக்குத் தந்து). காளை - சீவகன்.
இவ்வாறு நந்தட்டனைச் சிறப்பித்துரைத்துப் பின் சீவகன் தோழர்கள் அறியுமாறு வீரமொன்றையே பொருளாகக் கொள்ளாது வினை செய்தற்கு வேண்டும் வலி, இடம், காலம் முதலியவற்றை நன்கு அறிந்து செய்தல்வேண்டுமென உரைத்தனன். அதுகேட்ட பதுமுகன் முதலியோர் பிறர் துணையின்றித் தாம் எவ் வினையையும் வென்றியெய்த
முடிக்கும் விறலுடையரென விளங்கவுரைத்தனர்.
விசயை சீவகனை அவன் மாமன் கோவிந்தராசன் துணைபெற்று வினை செய்யுமாறு பணித்தல்
கார்தோன்ற வேமலரு முல்லை, கமலம் வெய்யோன்
தேர்தோன்ற வேமலரும், செம்மல்நின் மாமன் மற்றுன்
சீர்தோன்ற வேமலரும்; சென்றவன் சொல்லி னோடே
பார்தோன்ற நின்றபகை யைச்செறற் பாலை யென்றாள். 501
501.செம்மல் -விளி. உன் சீர் தோன்றவே நின் மாமன் அகம் மலரும் என்க. சொல்லினோடு - சொல்லும் வகைப்படியே. பார் தோன்ற - பார் நின்னாலே விளங்க. நின்ற - நிலைபெற்று நின்ற. செறற்பாலை - கொல்லும் பான்மையுடையை: கொல்வாயாக என்பது.
சீவகன் விசயையைத் தன் மாமனிடம் சென்று இருத்தல் வேண்டுமென இரந்து உரைத்தல்
நன்று;அப் பொருளே வலித்தேன் ;மற்றடிகள் நாளைச்
சென்றப் பதியு ளெமர் க்கேயென துண்மை காட்டி
யன்றைப் பகலே அடியேன்வந்தடைவன்; நீமே
வென்றிக் களிற்றானுழைச் செல்வது வேண்டு மென்றான். 502
502. நன்று - கூறியது நன்று. வலித்தேன் - துணிந்தேன். அப்பதியுள் சென்று - இராசமாபுரதிற்குச் சென்று. எமர்க்கு - என் சுற்றத்திற்கு. உண்மை - இருந்தபடி. நீம் - நீவீர். தும் என்னும் சொல் நீயீர் என முழுவதும் திரியாது மகரம் நிற்பத் திரிந்து நீம் என நின்றது. ஏகாரம், பிரி நிலை. வென்றிக் களிற்றானுழை - மாமனாகிய கோவிந்தராசனிடத்து.
விசயை அதற்குடன்படலும் சீவகன் அவட்குக் காவலாக ஒரு படையை விடுப்ப, அவளும் தனக்கு மெய் காவலாகத் தன்னோடொப்ப நோற்கும் தவ மகளிர் நூற்றுவரோடு சென்றாள். பின்பு சீவகன் குதிரையி*வர்ந்து தோழர் உடன்வர இரசமாபுரத்தை நோக்கிச் செல்வானாயினன். சென்றவர்கள் ஏமாங்கத நாட்டையடைந்து இராசமாபுரத்துக்கு அருகேயுள்ளதொரு சோலையில் இளைப்பாறி உணவு கொண்டனர். இரவுப்போது வந்தது. சீவகன் தனக்கென அமைந்த இருக்கையில் கண் வளர்ந்தான். பொழுது விடிந்தது.
சீவகன் வழிபாடு செய்தல்
கனைகதிர்க் கடவுள்கண் விழித்த காலையே
நனைமலர்த் தாமரை நக்க வண்கையால்
புனைகதிர்த் திருமுகம் கழுவிப் பூமழை
முனைவனுக் கிறைஞ்சினான் முருக வேளனான். 503
503. கனை கதிர்க் கடவுள் - ஞாயிறு. கண் விழித்த - உலகம் கண் விழித்த, தாமரை நக்க - தாமரைப் பூவை யொத்த. பூ மழை பெய்து என்க; பூவால் அருச்சித்து என்றவாறு. முனைவன் - அருகன்.
வேற்றுருக் கொண்டு நகர்க்குட் செல்லுதல்
நாட்கடன் கழித்தபின் நாம வேலினான்
வாட்கடி யெழினநகர் வண்மை காணிய
தோட்பொலி மணிவளைத் தொய்யின் மாதரார்
வேட்பதோர் வடிவோடு விரைவி னெய்தினான். 504
504. நாட் கடன் - நாட் காலத்தே செய்யும் கடன்கள். வாள்கடி - ஒளி மிக்க. வண்மை - வளம். காணிய - கான்பதற்கு. தொய்யில் மாதரார் - தொய்யிலணிந்த மகளிர். வேட்பது - விரும்புவது.
சீவகன் நகர் வண்மையை வீதிதோறும் சென்று மகிழ்ந்து வருகையில், அவனது வனப்பைக் கண்டு மகளிர் பலரும் வியப்புற்றனர். அவ் வேளையில் விமலை பந்தாடிக்
கொண்டிருந்தாள். சாகரதத்தன் என்னும் வணிகனுக்கு அவ்விமலை இனிய மகளாவாள்.
விமலை பந்தாடுதல்
வேனெடுங் கண்க ளம்பா விற்படை சாற்றியெங்கும்
தேநெடுங் கோதை நல்லார் மைந்தனைத் தெருவில் எய்ய
மானெடு மழைக்க ணோக்கி வானவர் மகளு மொப்பாள்
பானெடுந் தீஞ்சொ லாளோர் பாவைபந் தாடு கின்றாள். 505
505. வேல் நெடுங் கண்கள் - வேல்போல் நீண்ட கண்கள். விற்படை சாற்றி - புருவமாகியா வில்லை அமைத்து. தேம் - தேன். எய்ய – கண் பார்வையாகிய அம்பை எய்ய; பார்க்க என்றவாறு. மான் நெடும் மழைக் கண் நோக்கி - மான்போன்ற நீண்ட குளிந்த கண்ணும் பார்வையுமுடைய விமலை. பால் நெடுந் தீஞ்சொல் - பால்போலும் பெருமை பொருந்திய தீவிய சொல். நோக்கியும், ஒப்பாளும் சொல்லானா*மாகிய ஒர் பாவை யென்க.
பந்தின் சுழற்சி
மாலை யுட்க ரந்த பந்து வந்து கைத்த லத்தவாம்
ஏல நாறி ருங்கு ழற்பு றத்த வாண்மு கத்தவாம்
நூலி னேர்நு சுப்பு நோவ வுச்சி மாலை யுள்ளவாம்
மேலெ ழுந்த, மீநி லத்த, விரல, கைய வாகுமே. 506
506. கரந்த - மறைந்த. கைத்தலத்தவாம் - கையிடத்தவாம். முகத்திடத்தே வந்த பந்து குழற் புறத்தவாம். நூலின் நேர் நுசுப்பு – நூல் போல நுண்ணிதாகிய இடை. உச்சி மாலையுள்ளவாம் - உச்சியிற் போன பந்து மீண்டும் மாலைக்குள்ளதாம். மீ நிலம் - மேல் நிலம்.
பந்து ஓடிவர அதன் பின்னே அவள் போந்து ஆங்குவந்த சீவகனைக் கண்டு வேட்கை கொள்ளல்
மந்தார மாலைமலர் வேய்ந்து மகிழ்ந்து தீந்தேன்
கந்தாரஞ் செய்து களிவண்டு முரன்று பாடப்
பந்தார்வஞ் செய்து குவளைக்கண் பரப்பி நின்றாள்
செந்தா மரைமேல் திருவின்னுரு வெய்தி நின்றான். 507
507. களி வண்டு, மாலையை மொய்த்து, தீந்தேனை யுண்டு மகிழ்ந்து, காந்தாரம் செய்து, முரன்று பாட, பந்திலே ஆர்வம் செய்து; திருவின் உருவெய்தி நின்ற விமலை, சீவகனைக் காண்டலால். கண் பரப்பி நின்றாள் என்க. முரன்று - இசைத்து. திருவின் உரு - திருமகளின் வடிவு.
விமலை வேட்கையால் வேறுபாடெய்தல்
நீர்தங்கு திங்கண்மணி நீணிலந் தன்னு ளோங்கிச்
சீர்தங்கு கங்கைத் திருநீர்த்தண் துவலை மாந்திக்
கார்தங்கி நின்றகொடி, காளையைக் காண்ட லோடு
பீர்தங்கிப் பெய்யா மலரிற்பிறி தாயி னாளே. 508
508. திங்கள் மணி - சந்திர காந்தக் கல். ஓங்கி - வளர்ந்து. தண் துவலை மாந்தி - குளிர்ந்த நீர்த் துளியையுண்டு. கார் - பசுமை. கொடி - கொடியையொத்த விமலை. காண்டலோடு - கண்டவுடனே. பீர் தங்கி - பசலை பூத்து. பெய்யா மலரின் - பழம் பூப் போல (வாடிய பூ). பிறிதாயினாள் - உள்ளமும் மேனியும் வேறுபட்டாள்.
சீவகனும் வேட்கை மிகுதல்
பூவுண்ட கண்ணாள் புருவச்சிலை கோலி யெய்ய
ஏவுண்ட நெஞ்சிற் கிடுபுண் மருந் தென்கொ லென்னா
மாவுண்ட நோக்கின் மடவாளை மறித்து நோக்கிக்
கோவுண்ட வேலான் குழைந்தாற்றல னாயி னானே. 509
509. பூவுண்ட கண் - பூப்போலும் கண். எய்ய - கண்ணாகிய அமபை எய்ய. ஏவுண்ட நெஞ்சு - அம்பால் தைப்புண்டு புண்ணுற்ற நெஞ்சு. மாவுண்ட நோக்கின் - வண்டொத்த கட்பார்வையால். மறித்து - மீண்டும். கோவுண்ட வேல் - பகைவரது தலைமையைக் கெடுத்த வேல். குழைந்து - மனம் கலங்கி.
சீவகன் வேட்கை மிக்கு ஆற்றானாய் மேலே செல்ல மாட்டாது சாகரதத்தன் கடையிலே இருந்துகொண்டு, விமலையை நினத்திருந்தான்.
சீவகனது வேட்கைப் பெருக்கம்.
பைங்கண் மணிமகர குண்டலமும் பைந் தோடும்
திங்கண் முகத்திலங்கச் செவ்வா யெயி றிலங்கக்
கொங்குண் குழல்தாழக் கோட்டெருத்தம் செய்தநோக்கு
எங்கெங்கே நோக்கினும் அங்கங்கே தோன்றுமே. 510
510.மகர குண்டலம் - மகர மீன் வடிவாகச் செய்த குழை. கொங்குண் குழல்- தேன் நிறைந்த கூந்தல். கோட்டெருத்தம் - சாய்ந்த கழுத்து. தோன்றுமே - தோன்றுகிறதே என்றான்.
சாகரதத்தன் சீவகனைக் கண்டு அன்புற்றுத் தன்மனைக்கண் கொண்டேகுதல்
"திருமல்க வந்த திருவே" யெனச் சேர்ந்து நாய்கன்,
"செருமல்கு வேலாய்க்கிட மாலிது"என்று செப்ப;
வரிமல்கி வண் டுண் டறைமாமலர்க் கண்ணி மைந்தன்
எரிமல்கு செம்பொன் நிலம் மாமனொ டேறி னானே. 511
511.திருமல்க வந்த திரு - செல்வம் மிகுமாறு வந்த திரு. சீவகனைத் திருவேயென்றான்; உவப்பின்கண் வந்த பால் மயக்கம். வேலாய்க்கு - வேலையுடைய நினக்கு. செரு மல்கு வேல் - போரில் வெற்றி நிரம்ப நல்கும் வேல். வரி மல்கி....கண்ணி - வண்டுகள் மதுவையுண்டு வரியென்னும் பண்ணை அறைகின்ற கண்ணி. மாமன் - சாகரத்தத்தன்.
பின்பு சாகரதத்தன் சீவகனை நோக்கி, " நம்பி, இது கேள்: என் மனைவி கமலைக்குப் பிறந்த மகள் விமலையாவாள். இவள் பிறந்த நாள் போந்த அறிவர், இவட்குக் கணவன்
வருநாள் வரையும் நின் பண்டம் விலையாகாது. தூம்பில்லாத குளத்துட்பட்ட நீர்போலத் தேங்கி நிற்கும் என்றனர். அவர் கூறியவாறே இன்று நீ என் கடையேறலும் விலையாகது கிடந்த பண்டமுற்றும் விலையாகிவிட்டன; ஆதலால் நீ என்மகள் விமலையை மணந்துகொள்க. இவட்கும் அகவை பதிணொன் றற்றுப் பன்னிரண்டாயிற்று" என்றான்.
சீவகன் அவன் சொல்லைத் தேறி மணத்துக்குடன்பட விமலையும் அவனைக் கண்டு தெளிதல்
ஏற்ற கைத்தொடி வீழ்ந்தென, ஏந்தலைத்
தேற்றி னான்திரு மாநலம் செவ்வனே;
தோற்ற மாதரும் தோன்றலைக் காண்டலும்
ஆற்றி னாள், தன தாவியும் தாங்கினாள். 512
512. ஏற்ற கை.....வீழ்ந்தென - எடுத்த கையிலே ஒரு தொடிதானே வந்து வீழ்ந்த தன்மைபோல. திருமா நலம் தேற்றினான் - நின்வரவு திருநலம் சூழ்க என்று தேற்றினான். தோற்ற மாதர் - வேட்கையால் உயிர் நீத்தற்கு அமைந்த விமலை, நலம் சூழ்க என்று தந்தை கூறியதைக் கெட்டலின், ஆவியும் தாங்குவானாயினாள்.
சீவகன் விமலையை மணத்தல்
அம்பொற் கொம்பனை யானையும் வார்கழற்
செம்பொற் குன்றனை யானையும் சீர் பெறப்
பைம்பொ னீணகர்ப் பல்லிய மார்த்தெழ
இம்ப ரில்லாதொ ரின்ப மியற்றினார். 513
513. நின் நகர் - நெடிய பெருமனை. பல்லியம் - பல்வகை மணவரச்சியங்கள். இம்பர் - இவ்வுலகில், இன்பம் - திருமணம்.
திருமண வாழ்க்கை
கட்டி லேறிய காமரு காளையும்
மட்டு வாயவிழ் மாமலர்க் கோதையும்
விட்டு நீங்குத லின்மையின் வீவிலார்
ஒட்டி யீருடம் போருயி ராயினார். 514
514. கட்டில் - திருமணக் கட்டில். காமரு - அழகிய. மட்டு - தேன் வீவிலார் - கெடுதல் இல்லாதவர். ஒட்டி - ஒன்றுபட்டு. உயிர் ஒன்றெனவே மனமும் ஒன்றாதல் பெற்றாம்.
இவ்வாறு சில நாட்களைக் கழித்த சீவகன் விமலைபால் விடைபெற்று பிரிதல்
பூவினுன் தாழ் குழற் பொன்செய் ஏந்தல்குல்
மாவினுள் தாழ்தளிர் மருட்டு மேனியாய்!
காவினுள் தோழரைக் கண்டு போதர்வேன்
ஏவினுள் தாழ்சிலை யெறிந்த கோலினே 515
515. குழலுன் அல்குலும் மேனியும் உடையாய் என்க. பொன்னால் செய்யப்பட்டு உயர்ந்த மேகலை. மாவினுள் தாழ் தளிர் - மாமரத்திடத்தே தளிர்த்த தளிர். மருட்டும் - ஒக்கும். போதர்வேன் - மீள்வேன். "தாழ் சிலையெறிந்த கோலின்" என்றதனால், தூரிதன்றி, அணியவிடத்தே போய் வருவேன் என்றான் என்று அவன் கருதினான். வலியில்லாத அம்பு இலக்கிற் பட்டுவைத்து மீண்டும் வந்ததேனும் எய்தவனிடத்து வாராது மாறிப்போமாறுபோல, யானும் நின்னிடத்து வாராது இந்நகரிலே மீண்டு
வருவேன் என்று அவன் கருதினான்.
பிரியாவிடை பெற்றுப் பிரிதல்
என்றவன் உரைத்தலும் எழுது கண்மலர்
நின்றநீ ரிடைமணிப் பாவை நீந்தலின்
மன்றல்நா றரிவையைத் தெருட்டி மாமணிக்
குன்றனான் கொடியவன் குழைய வேகினாள். 516
516. எழுது கண் - மை தீட்டிய கண், நின்ற நீர் – ததும்பி வீழாது நிறைந்து நின்ற கண் நீர். தெருட்டி - தேற்றி. கொடியவன் - கொடிபோல்பவளாகிய விமலை.
----------------------
9. சுரமஞ்சரியார் இலம்பகம்
(சீவகன் சுரமஞ்சரியை மணந்த வரலாறு கூறுவது)
விமலையிற் பிரிந்து போந்த சீவகன் சோலைக்கண் புத்திசேனன் முதலிய தோழரைச் சேர்ந்தான். நாட்கள் இரண்டு சென்றன. விமலைக்கு அவன் பிரிவு மிக்க நோய் செய்து வருத்திக்கொண்டிருந்தது. சீவகனது மணக்கோலத்தைக் கண்ட தோழர் "நீ மணந்துகொண்ட நங்கையின் பெயர் யாது?" என்று வினவ, சீவகன், "அவள் பெயர் விமலை யென்பது" என்று அவர்கட்கு கூறினான்.
புத்திசேனன் நகையாடிக் கூறல்
அம்பொ ரைந்து டைய்ய காம னைய்ய னென்ன வந்தணன்
நம்பு நீர ரல்லர் நன்கு ரங்கு நீர ராயினும்
தங்கு ரவ்வர் தாங்கொ டுப்பின் நெஞ்சு நேர்ந்து தாழ்வர்தாம்
பொங்க ரவ்வ வல்கு லார்எனப்பு கன்று சொல்லினான். 517
517. உடைய்ய, ஐய்யன், குரவ்வர், அரவ்வ என்பன விகாரம். ஐயன், அம்பு ஐந்துடைய காமன் என்க. என்ன - என்று வியந்தாராக. அந்தணன் - புத்திசேனன். நம்பும் நீரர் - விரும்பும் அழகுடையர். குரங்கு நீரர் - குரங்கின் தன்மையுடையர். குரவர் - பெற்றோர். தாழ்வர் - வழிபடுவர். அரவ அல்குலார் - பாம்பின் படத்தையொத்த அல்குலை யுடைய மகளிர்.
சீவகன் உரைத்தல்
அற்று மன்று கன்னி யம்மடந்தை மார ணிநலம்
முற்றி னாரை நீடு வைப்பின் முன்கும் வந்து பாவமும்;
குற்ற மற்று மாகு மென்று கோதை சூழ்ந்து கூறினார்க்
குற்ற டுத்த யாவுயிர்த் தொழிதல் யார்க்கு மொக்குமே. 518
518. அற்றும் அன்று - அத்தன்மையதும் அன்று. அணி நலம் முற்றினார் - பெண்மை நலம் முற்றும் கனிந்தவர். நீடு வைப்பின் - நெடுநாள் மணம்புரியாது செறித்துவைப்பின். மூள்கும் - மூண்டுவிடும். குற்றம் - குடிக்குப் பழி. சூழ்ந்து - மகட்கொள்ள நினைந்து. உற்று அடுத்து - சென்று கொடுத்து. அயர்வுயிர்த்தல் - இளைப்பாறுதல். ஒக்கும் - ஒத்ததாம்.
இவ்வாறு சொல்லி, இதுவே முறையாகத் தான் விமலையை மணந்ததாகச் சீவகன் கூறக்கேட்ட புத்திசேனன் முதலியோர், "நீ செல்லும் ஊர்தொறும் புதுமணம் செய்து
வருகின்றனை; ஆயினும் இவ்வூரிடத்தே சுரமஞ்சரி என்றொரு நங்கை யுள்ளாள்" என்று சொல்லினர்.
புத்திசேனன் சுரமஞ்சரியின் இயல் கூறல்
ஆடவர் தனதிடத் தருகு போகினும்
நாடிமற் றவர்பெயர் நயந்து கேட்பினும்
வீடுவ லுயிரென வெகுளும் மற்றவள்
சேடியர் வழிபடச் செல்லும் செல்வியே. 519
519. நயந்து நாடிக் கேட்பினும் - விரும்பி நாடிக் கேட்பினும். வீடுவல் - விடுவேன். செல்வி - செல்வமகள்.
புத்திசேனன் சீவகனை நோக்கி, மேலும் சொல்லத் தொடங்கி, "நீ இச் சுரமஞ்சரியை மணப்பின், நின்னை யாங்கள் அநங்கதிலகன் என்று உரைப்பேம்." என்று கூறல்
காமனே செல்லினும் கனன்று காண்கிலாள் ;
வேம்எனக் குடம்பெனும் வேய்கொள் தோளியை
ஏமுறுத் தவள்நலம் நுகரின், எந்தையை
யாமெலாம் அநங்கமா திலக னென்றுமே. 520
520. கனன்று காண்கிலாள் - வெகுண்டு கண்ணெடுத்துப் பாராள். வேம் - வேகும். வேய்கொள் தோளி - மூங்கில் போலும் தோளையுடைய இவளை. ஏமுறுத்து - மயக்கி. எந்தையை - எந்தையாகிய நின்னை. உயர்த்தற்கண் வந்தது. அனங்கனுக்குத் திலகன் என்பேம். மா, அசைநிலை.
அதுகேட்ட சீவகன், "யான் அவ்வண்ணமே செய்வேன்; அது தப்பின், சிறிதும் அன்பில்லாத ஒருத்தியைக் கூடிய குற்ற முடையேனாவேன்" என்று சூள் செய்து மேலும் சொல்லலுற்றான்.
சீவகன் உரைத்தல்
"வண்டுதேன் சிலைகொ ணாணா மாந்தளிர் மலர்க ளம்பாக்
கொண்டவன் கோட்டந் தன்னுட் கொடியினைக் கொணர்ந்து நீல
முண்டது காற்றி யாண்பே ரூட்டுவ லுருவக் காமன்
கண்டபொற் படிவம் சார்ந்து கரந்திரு நாளை" யென்றான். 521
521. வண்டும் தேனும் சிலைக்கு நாணாக, மலர்கள் அம்பாகக் கொண்டவன் என்க. இவன் காமன். கோட்டம் - கோயில். கொடி - சுரமஞ்சரி. நீலமுண்டது காற்றி - நீலமூட்டிய நூல் பிறவண்ணம் ஏலாதாயினும் ஏற்பித்து. அவள் புதிதாகக்கொண்ட இக் கோட்பாட்டை நீக்கி, ஆண்பேர் ஊட்டுவல் - ஆடவர் பெயரை ஏற்கச் செய்வேன்; காமன் கண்ட பொற்படிவம் - காமன் வடிவாகச் செய்த பொற்சிலை.
சீவகன் சுரமஞ்சரி மனைக்கு ஓர் அந்தண முதியோன் உருவிற் செல்ல நினைத்தல்
"சில்லரிக் கிண்கிணி சிலம்புஞ் சீறடிச்
செல்விதன் திருநலம் சேரும் வாயில்தான்
அல்லலங் கிழவனோ ரந்த ணாளனாய்ச்
செல்லல்யான்; தெளிதக வுடைத் " தென் றெண்ணினான். 522
522. சில் அரிக் கிண்கிணி - சில பரல்களைப் பெய்த கிண்கிணி யென்னும் அணி. சிலம்பும் - ஒலிக்கும். வாயில் - வழி. அல்லலங் கிழவன் - பசித்துன்பம் உற்று வருந்தும் முதியோன். செல்வல் - செல்வதே. சேரும் வாயில்; யான் செல்வல்; தெளிதகவு - அவள் ஐயுறாமல் ஏற்றுக்கொள்ளும் தகுதிப்பாடு.
சீவகன் வேதியனுருக் கொளல்
அணங்கர வுரித்ததோ லனைய மேனியன்
வணங்குநோன் சிலையென வளைந்த யாக்கையன்.
பிணங்குநூல் மார்பினன் பெரிதொர் பொத்தகம்
உணர்ந்துமூப் பெழுதின தொப்பத் தோன்றினான். 523
523. அணங் கரவு - நஞ்சுடைய பாம்பு. வணங்கு*நன் சிலை - வளைந்த வலிய வில். பிணங்கு - மேலாடையுடன் பின்னிக் கிடக்கும். பெரிது ஓர் பொத்தகம் - மூப்பு வடிவ மெழுதுதற்குரிய நெறி முற்றும் எழுதப்பட்டதொரு புத்தகம். மூப்பு எழுதினது ஒப்ப – மூப்பை எழுதியதுபோல.
சீவக வேதியன் சுரமஞ்சரி மனையடைதல்
நற்றொடி மகளிரும் நகர மைந்தரும்
எற்றிவன் மூப்பென இரங்கி நோக்கவே,
பொற்றொடி வளநகர் வாயில் புக்கனன்
பற்றிய தண்டொடு பைய வென்பவே. 524
524. (இப்பாட்டு சில பிரதிகளில் இல்லை) எற்று – இரக்கப் பொருட்டு.; இரங்கி நோக்க - மனமிரங்கிப் பார்க்க. பொற்றொடி - சுரமஞ்சரி. நகர் - கன்னிமாடம். பைய - மெல்ல. என்ப, அசை.
காவலர் தடுப்ப அவர்க்குச் சீவகன் கூறல்
தண்டுவலி யாகநனி தாழ்ந்துதளர்ந் தேங்கிக்
கண்டுகடை காவலர்கள் கழறமுகம் நோக்கிப்
"பண்டையினங் காலுவப்பன் பாலடிசில்; இந்நாள்
கண்டுநயந் தார்தருவ காதலிப்பன்" என்றான். 525
525. வலியாக - பற்றுக் கோடாக. ஏங்கி - இளைத்து நின்று. இளங்கால் இளமைக் காலத்தில். பாலடிசில் - பாற் சோறு ஒன்றையே. நயந்தார் - என்னால் விரும்பப்பட்ட மகளிர். தருவ - தருவனவெல்லாம். கேட்ட காவலர், இவன் பசியையே கூறினன் என்று உணர்ந்தார்; கண்டு ... காதலிப்பன் - இப்பொழுது என்னைக் கண்டு நயந்தவர் தரும்
உணவைக் கொள்வேன். இது வெளிப்படை.
இவன் செவி கேளாத முதியோன்; பசி மிகவுடையன் என இரங்கி விடுப்ப; சீவகன், மகளிர் காக்கும் வாயிலை யடைதல்
கோதையொடு தாழ்ந்துகுழல் பொங்கிஞிமி றார்ப்ப
ஓதமணி மாலையொடு பூண்பிறழ வோடி
"ஏதம் இது; போமின்" என என்றுமுரை யீயான்
ஊதவுகு தன்மையினொ டொல்கியுற நின்றான். 526
526. ஞிமிறு பொங்கி யார்ப்ப - வண்டுகள் எழுந்து ஒலிக்க. ஓதமணிமாலை - கடலிற்பிறந்த முத்துமாலை. ஓடிவந்து, என. உரையீயான் என முடிக்க. இது ஏதம் - இவ் வரவு குற்றம். என - என்று சொல்லி விலக்க. என்னும் - சிறிதும். உரை - மறுமொழி. ஊத உரு தன்மை - வாயால் ஊதிய வழி ஆற்றாது கீழே விழும் மென்மை. ஒங்கி - தளர்ந்து. உற - மிக நெருங்கி.
வேறு சில மகளிர் அவளைச் சூழநின்று கடிய சொற்களைச் சொல்லி அச்சுறுத்த,
அவருட் சிலர் கூறல்
"பாவமிது, நோவவுரை யன்மின்; முது பார்ப்பார்
சாவர்தொடி ளேகடிது; கண்டவகை வண்ணம்
ஓவியர்தம் பாவையினோ டொப்பரிய நங்கை
ஏவல்வகை கண்டறிது" மென்றுசிலர் சொன்னார். 527
527. இது பாவம் - நோவவுரைக்கும் இது பாவமாதலால். தொடின் - தீண்டித் தள்ளுவேமாயின். ஓவியர் தம் பாவை – ஓவியர் அரிது முயன்று எழுதிய பாவை. ஒப்பரிய - ஒப்பாகமாட்டாத.
இச் செய்தியறிந்த சுரமஞ்சரி மேல் மாடத்திலிருந்து இழிந்து சீவகன் எதிரே வருதல்
சீறடிய கிண்கிணி சிலம்பொடு சிலம்ப
வேறுபடு மேகலைகள் மெல்லென மிழற்றச்
சேறுபடு கோதைமிசை வண்டுதிசை பாட
நாறுமலர்க் கொம்பர்நடை கற்பதென வந்தாள். 528
528. அடிய - அடியிடத்தனவாகிய. குறிப்புப் பெயரெச்சம். சிலம்ப - ஒலிக்க. மிழற்ற - கபீர் என ஒலிக்க. சேறு - தேன். திசை பாட - திசைதோறும் எழுந்து பாட. நாறும் - மணம் கமழும். கொம்பர் - கொம்பு. கற்பதென - கற்கின்றதுபோல,. துகிலின் உள்ளும் புறமும் கிடந்து அசைதலின் "வேறுபடு மேகலை" யென்றார்.
இருவரும் சொல்லாடல்
"வந்தவர வென்னை" யென, "வாட்கண்மடவாய், கேள்;
சிந்தைநலி கின்றதிரு நீர்க்குமரி யாட"
"அந்திலதி னாயபய னென்னைமொழி" கென்றாள்.
"முந்திநலி கின்றமுது மூப்பொழியு" மென்றாள். 529
529. என - என்று சுரமஞ்சரி கேட்ப, திருநீர்க் குமரியாட - அழகிய தன்மையையுடைய நின்னைக்கூட; அழகிய நீரையுடைய குமரியாற்றில் நீராட (இரு பொருள்) அந்தில் - அசைநிலை. ஆய பயன் – குமரியாற்றில் நீராடலால் உண்டாகும் பயன். முந்தி நலிகின்ற - வருங் காலத்து வாராது முன்பே வந்து வருத்துகின்ற. முந்தி - நின்கண் முன்னாக - (வேறு பொருள்) முது மூப்பு - மிக்க முதுமை.
நறவிரிய நாறுகுழ லாள்பெரிது நக்குப்
"பிறருமுள ரோபெறுநர்? பேணிமொழி" கென்னத்
"துறையறிந்து சேர்ந்துதொழு தாடுநரில்" என்றாற்கு
"அறிதிர்பிற நீவிர்" என, "ஐயமிலை" யென்றான்,. 530
530. நறவு இரிய - பூமணங்களெல்லாம் தோற்க. பெரிது - மிகவும். பெறுநர் பிறரும் உளரோ - இவ்வாறு குமரியாடி இளமையைப் பெறு வார் பிறர்தாமும் உண்டோ. பேணி - ஆராய்ந்தறிந்து. துறையறிந்து - மூப்பைப் போக்கும் நெறி. நீ கொண்ட கொள்கையைக் கெடுத்துக்கூடும் துறை இம் மூப்பு வடிவந் தாங்கிவந்து கூடுவது என்பதை யறிந்து – இது சீவகன் கருதும் பொருள். என - நீவிர்தான் இதனை அறிவீர்போலும் என்று இகழ்ந்து கூற.
சுரமஞ்சரி சீவகனையொரு பித்தனெனக் கருதி மேன்மாடம் கொண்டுசென்று, அடிசில் கொணருமாறு தோழியர்க்குப் பணித்தல்
"வடிவமிது மூப்பளிது வார்பவள வல்லிக்
கடிகைதுவர் வாய்கமலங் கண்ணொடடி வண்ணம்;
கொடிது; பசி கூர்ந்துளது; கோல்வளையி னீரே!
அடிசில்கடி தாக்கியிவ ணேகொணர்மி" னென்றாள். 531
531. வடிவம் இது மூப்பு அறிது - இம் முதுமை வடிவம் நம்மால் அளிக்கத்தக்கது. வார் பவள வல்லிக் கடிகை - ஒழுகிய பவளக்கொடியினது துண்டம். துவர் - சிவப்பு. வாய். கடிகை எனவும். கண்ணும் அடியும் கமலம் எனவும் இயைக்க. கொடிது - நாம் அளி செய்யாவிடின் கொடிதாம். கோல் - திரட்சி. கடிது - விரைய.
பின்பி சீவக வேதியனை நறிய நீர்கொண்டு நீராட்டி, நல்ல வெள்ளிய உடை தந்து புதிய பூணூலணிவித்து ஓர் ஆசனத்தில் இருத்தினர். அடிசில் கொணர்ந்ததும் அவனுக்குப் பொற்கலத்தையும் பக்கத் தட்டும் பரப்பி அறுசுவையுண்டி வட்டிக்க, அவன், "இத்தகைய சுவைமிக்க உணவு எங்கும் இல்லை" என்று சொல்லி அயின்று, வாய்பூசி யமர்ந்து அவர் தந்த வெற்றிலைச் சுருளை மென்று வாயில் ஒரு பக்கத்தே அடக்கிக் கொண்டான்.
மேலும் சிறிது சொல்லாடல்
"வல்லதினை" யென்ன "மறை வல்லன், மடவாய்!* யான்;
"எல்லையெவ" னென்னப் "பொரு ளெய்திமுடி காறும்;"
"சொல்லுமினு நீவிர்கற்ற கால" மெனத் "தேன்சோர்
சில்லென்கிளிக் கிளவி!* யது சிந்தையில" னென்றான். 532
532. வல்லது - கற்று வல்லது. என்ன - என்று சுரமஞ்சரி வினவ, மறை - வேதம். மறைந்து உருமாறி வருதல். யான் என்றானாக என முடிக்க. எல்லை - கற்றதன் எல்லை. என்ன - என்று மேலும் வினவ. பொருள் எய்தி முடிகாறும் - நினைத்தபொருள் முடியும்வரை. மறைகூறும் முடி பொருள் முற்றவுணர்த்த உணரும் எல்லை - இது சுரமஞ்சரி கொண்ட பொருள். சொல்லும் - ஏவற் பொருண்மைக் கண்வந்த உம்மீற்று முன்னிலை முற்று வினை. காலம் - காலவெல்லை. சில்லென் கிளிக் கிளவி - சிலவாகிய கிளிபோலும் சொற்களையுடையாய். சிந்தை - நினைவு.
சீவகன் தன்னை வெளியே போமாறு அவர்கள் கூறாதபடி உறங்கி விழுதல்
"இன்னவர்க ளில்லைநிலத்" தென்றுவியந் தேத்தி
அன்னமென மென்னடையி னாளமர்ந்து நோக்கப்
பின்னையிவள் போகுதிறம் பேசு" மென வெண்ணித்
தன்னஞ்சிறி தேதுயின்று தாழஅவள் நக்காள். 533
533 இன்னவர்கள் - இத் தன்மையையுடையவர்கள். அமர்ந்து - விரும்பி. போகுதிறம் பேசும் - மனையினின்றும் போய்விடுமாறு சொல்லுவன். தன்னம் சிறிது - மிகவும் சிறிது. துயின்று தாழ – தூங்கினனான்போலத் தலை தாழ்ந்து விழ.
நகைத்த சுரமஞ்சரிக்குச் சீவகன் மொழிதல்
கோலமணி வாய்க்குவளை வாட்கண்மட வாளைச்
சாலமுது மூப்புடைய சாமிமுக நோக்கிக்
காலுமிக நோஞ்சிறிது கண்ணுந்துயில் குற்றே
ஏலங்கமழ் கோதையிதற் கென்செய்குரை" யான்றான். 534
534 கோலமணி - அழகிய முத்து. சாமி - சீவகன். முகம் - சுரமஞ்சரியின் முகத்தை. காலும் மிக - வாடைக்காற்று மிகுவதால். நோம் - நெஞ்சு வருந்துகின்றது. கண் - பொழுது. துயில்குற்றேன் - சாக்காடு எய்தியுள்ளேன். காலும்-நோகும். கண்ணும் துயில்கொள்ளும் என்று சீவகன் கூறியதாக அவள் கருதினாள். என் செய்கு - என் செய்வேன்.
அதுகேட்ட சுரமஞ்சரி தான் கிடந்துறங்கும் கட்டிலிலே அவனைக் கிடந்து உறங்குமாறு பணித்தாள். அவனும் அதன் மேல் கிடந்து மெல்ல உறங்குவான் போன்றான். இரவுப்போது வந்தது. மகளிர் தாமும் உணவுண்டு இனிய பாட்டுக்களைப் பாடி மகிழ்தலுற்றனர்.
சீவகன் பாடுதல்
பொன்னறையுள் இன்னமளிப் பூவணையின் மேலான்
முன்னியதன் மன்றலது முந்துற முடிப்பான்
மன்னுமொரு கீதமது ரம்பட முரன்றாற்கு
இன்னமிர்த மாகஇளை யாருமது கேட்டார். 535
535 அமளிப்பூவணை - அமளியாகிய பூம் படுக்கை. முன்னிய - கருதியிருந்த. மன்றல் - கந்தருவமணம். மன்னும் -நிலைபெற்ற. முரன்றான் - பாடினான்.
கேட்ட மகளிர் அவனது இசைச் சிறப்பை நினைந்து வியப்பெய்தி "இது சீவகன் இசைபோலுளது" என எண்ணி மகிழ, சீவகன் மேலும் ஒரு பாட்டை இனிது பாடினன்.
மகளிர் அவன்பால் ஓடிவருதல்
கள்ள மூப்பின் அந்தணன் கனிந்த கீத வீதியே
வள்ளி வென்ற நுண்ணிடை மழைம லர்த்த டங்கணார்
புள்ளு வம்ம திமமகன் புணர்த்த வோசை மேற்புகன்று,
உள்ளம் வைத்த மாமயிற் குழாத்தின் ஓடி எய்தினார். 536
536 கள்ள மூப்பின் - பொய்யான முதுமை வடிவையுடைய. வீதியே - வழிநயாக. வள்ளி - கொடி. தடங்கண் - பெரியகண். புள்ளுவமகன் - புட்களைப்போல ஓசையெழுப்பி அவற்றைப் பிடிக்கும் பறவை வேட்டுவன். மதி புணர்த்த - அறிவால் எழுப்பிய. புகன்று - விரும்பி. குழாத்தின் - கூட்டத்தைப்போல.
அவருடன் சுரமஞ்சரியும் ஓடிவரக்கண்ட சீவக வேதியன் "பெரிதும் மூப்புடைய என்பால் போந்து நீவிர் பெறுவது என்னை?" என்று சொல்ல சுரமஞ்சரி நாணித் தன் தோழியின் பின்னே மறைந்து நின்றாள்.
சீவகன் சொல்லாடல்
"இளையவற் காணின் மன்னோ என்செய்வீர், நீவிர்" என்ன
"விளைமதுக் கண்ணி மைந்தர் விளி" கெனத் தோழி கூற
"முளையெயிற் றிவனை* யாரும் மொழிந்தன ரில்லை யென்றோ,
உளைவது பிறிது முண்டோ ஒண்டொடி மாதர்க்" கின்றான். 537
537 இளையவற் காணின் -முதியோனாகிய என்பால் இவ்வண்ணம் ஓடி வரும் நீவிர் இளமை நலம் மிகவுடையான் ஒருவன் வரக் காண்பீராயின். என்ன - என்று சீவகன் சொல்ல. மது விளை கண்ணி – தேன் சொரியும் கண்ணி (தலையிலணியும் பூத்தொடை) விளிக - கெடுக. அவர் பெயர் இங்கே நிலவாது கெடுக. முளையெயிற்றிவளை - முனைபோலும் பற்களையுடைய இச் சுரமஞ்சரியை. பிறிது - அவ் வினையோர் செய்த வேறு தீங்கு. உளைவது - வருந்துவது.
தோழியர் விடைவிளம்பல்
"வாய்ந்தஇம் மாதர் கண்ணம் சீவகன் பழித்த பின்றைக்
காய்ந்தன" ளென்று கூற "காளைமற் றிவட்குத் தீயான்
மாய்ந்தனன் போலு"மென்ன, மாதரா ரொருங்கு வாழ்த்தி
"ஆய்ந்தனம் ஐய னுய்ந்தான் அறிந்தனம் அதனை" யென்றார். 538
538. வாய்ந்த - வாய்த்த, விகாரம், செய்த என்பது பொருள் தீயானாகிய அக் காளை. என்ன - என்று சீவகன் சொல்ல. அறிந்தனம் - தெளிந்துகொண்டோம்.
பின்னர், அவர்கள் சீவகன் உயிருய்ந்த செய்தியைத் தத்தையால் கிளியைத் தூதனுப்பித் தெரிந்தவற்றைச் செப்பினர்.
தோழியர் சீவகனைப் பாடுமாறு வேண்டல்
"அன்பொட்டி யெமக்கோர் கீதம் பாடுமின், அடித்தி யாரும்
முன்பட்ட தொழிந்து நுங்கண் முகவியர் முனிவு தீர்ந்தார்;
பொன்கொட்டேம்; யாமும் நும்மைப் போகொட்டேம் பாடல் கேளாது
என்பட்டு விடினு" மென்றார் இலங்குபூங் கொம்பொ டொப்பார். 539
539. ஒட்டி - பொருந்தி. அடித்தி - சுரமஞ்சரி. மூத்த அந்தண நாதலின், தலைவியை "அடித்தி" என்றனர். முன்பட்டது – ஆடவரைக் காணேன் என்று கொண்டிருந்த கொள்கை.முகவியர் - முகங்கொடுத்துப்பேசி, முனிவு - ஆடவர்பால் இருந்த வெறுப்பு, பொன் தொட்டேன் - தலைவிபேரால் ஆணையிட்டேம். போகொட்டேம் - போகவிடேம். இலங்கு - விளங்குகின்ற.
சீவகன், "யாம் பாவை பொற்பையே பாடுவேம்; அவளை நமக்கு நல்குவதாக ஒட்டுமின்" என்னும் கருத்தை யுள்ளுறுத்துக் கவர்பொரு ளெய்தப் பேசினன். அஃதுணராத அப் பேதையர் "பொற்பாவை தருதும்" என ஒட்டினர். பின்பு அவன் சுரமஞ்சரி முகநோக்கி, மாலைப்போது கண்டு ஆற்றாத தலைவி கூற்றாகத் தாழிசைகள் மூன்று பாடினன்.
பாட்டிசையால் சீவகனை நினைந்த சுரமஞ்சரி காமனை வணங்கி வரம்பெறக் கருதுதல்
பாடினான் தேவ கீதம் பண்ணினுக் கரசன்; பாடச்
சூடக மகளிர் சோர்ந்து செருக்கிய மஞ்ஞை யொத்தார்;
ஆடகச் செம்பொற் பாவை அந்தணற் புகழ்ந்து "செம்பொன்
மாடம்புக் கநங்கற் பேணி வரங்கொள்வல் நாளை' யென்றாள். 540
540. தேவகீதம் - தேவனால் கற்பிக்கப்பெற்ற பாட்டு. அரசன் - சீவகன். சூடகம் - கைவளை. செருக்கிய - மயங்கிய. மஞ்ஞை - மயில். ஆடகம் - நால்வகைப் பொன்னில் ஒருவகை. மாடம் - காமன் கோயில். வரம் - இப்பாட்டையுடைய சீவகனைப் பெறுதற்குரிய வரம்.
இதற்குள் இரவுப்போது நெடிது கழிந்தது. திங்கள் எழுந்து மிக்க ஒளியைச் செய்யலுற்றது. சுரமஞ்சரி காமன் கோட்டம் செல்ல எழுந்தாள்.
சுரமஞ்சரி வண்டி யேறுதல்
பொன்னியன் மணியுந் தாரும் கண்ணியும் புனைந்து, செம்பொன்
மின்னியற் பட்டஞ்சேர்த்தி, ஆனெய்யால் வெறுப்ப வூட்டி,
மன்னியற் பாண்டில் பண்ணி மடந்தைகோல் கொள்ள, வையம்
இன்னியற் பாவை யேற்பத் தோழியோ டேறி னாளே. 541.
541. ஒருமடந்தை, மணியும் தாரும் கண்ணியும் புனைந்து, பட்டம் சேர்த்தி. பால் ஊட்டி பாண்டில் பண்ணிக் கோல் கொள்ள என்க. வெறுப்ப - மிகவும். பாண்டில் - வண்டி. இன்னியல் பாவை – இனிய இயல்புடைய பாவை போன்ற சுரமஞ்சரி. ஏற்ப - ஆடவர் காணாமல் போவதற்கு ஏற்ப.
உடன்வந்த சீவகனை அக்கோட்டத்தில் ஒருபுறத்தே மறையவைத்துத் தான் உள்ளே செல்லுதல்
ஆடவ ரிரிய ஏகி யஞ்சொல்லார் சூழக் காமன்
மாடத்து ளிழிந்து மற்றவ் வள்ளலை மறைய வைத்துச்
சூடமை மாலை சாயந்தம் விளக்கொடு தூப மேந்திச்
சேடியர் தொழுது நிற்பத் திருமகள் பரவு மன்றே. 542
542. இரிய - நீங்க. வள்ளலை - சீவக வேதியனை. சூடு அமை மாலை - சூடுதற்கமைந்த மாலை. திருமகள் - சுரமஞ்சரி.
சுரமஞ்சரி காமனை வழிபட்டு, இட முழந்தாளை நிலத்தே ஊன்றி தன் தலையை வலத்தே சாய்த்து இருகையும் கூப்பி வணங்கி நின்றாள்.
சுரமஞ்சரி வரம் வேண்டல்
"தாமரைச் செங்கட் செவ்வாய்த் தமனியக் குழையி னாய்! ஓர்
காமமிங் குடையேன்; காளை சீவக னகலம் சேர்த்தின்
மாமணி மகர மம்பு வண்சிலைக் கரும்பு மான்றேர்
பூமலி மார்ப! ஈவ லூரொடும் பொலிய" என்றாள். 543
543. தாமரை போலும் கண்ணும் வாயும் பொற் குழயுமுடையாய். காமம் - வரம். அகலம் - மார்பு. மணி மகரம் - மணி புனைந்த மகரக்கொடி. ஈவல் - தருவேன்.
புத்திசேனன் உள்ளிருந் துரைத்தல்
"மட்டவிழ் கோதை! பெற்றாய் மனமகிழ் காத லானை
இட்டிடை நோவ நில்லா தெழு" கென வேந்தல் தோழன்
பட்டிமை யுரைத்த தோராள்; பரவிய தெய்வந் தான், வாய்
விட்டுரைத் திட்ட தென்றே வேற்கணாள் பரவி மீண்டாள். 544
544 மட்டவிழ் கோதை - தேன் சொரியும் பூமாலையை யுடையாய். இட்டிடை - நுணுகிய இடை. தோழன் - புத்திசேனன். பட்டிமை -வஞ்சனை. பரவி - பின்னும் தொழுது.
மீண்டவள் எதிரே சீவகன் தன் உண்மைவடிவுடன் நிற்கக் காண்டல்
அடியிறை கொண்ட செம்பொ னாடகச் சிலம்பி னாள்அக்
கடியறை மருங்கி னின்ற மைந்தனைக் கண்டு நாணி
வடியுறு கடைக்க ணோக்க நெஞ்சுதுட் கென்ன வார்பூங்
கொடியுற ஒசிந்து நின்றாள் குழைமுகத் திருவோ டொப்பாள். 545
545. அடி இறை கொண்ட - காலிலே அணியப்பட்டுக் கிடக்கின்ற. கடி யறை - மன வறை. வடியுறு கடைக்கண் – மாவடுபோலும் கடைக்கண். துட் கென்ன - துண்ணென. கொடியுற ஒசிந்து – கொடி போலத் தளர்ந்து.
சுரமஞ்சரி வேட்கைமிக்கு உருகி நிற்றல்
இலங்குபொன் னோலை மின்ன இன்முகஞ் சிறிது கோட்டி
அலங்கலும் குழலுந் தாழ அருமணிக்க குழையோர் காதிற்
கலந்தொளி கான்று நின்று கதிர்விடு திருவில் வீச
நலங்கனிந் துருகி நின்றாள் நாமவேற் காமர் கண்ணாள். 546
546. கோட்டி - சாய்த்து. அலங்கல் - மாலை. ஒளி கான்று - ஒளி விட்டு. வில் - ஒளி*. நயம் - அன்பு. நாம வேல் - அச்சந் தரும் வேல். காமர் - அழகு.
சீவகன் சுரமஞ்சரியை நயந்து கோடல்
"தேறினேன் தெய்வ மென்றே; தீண்டிலே னாயி னுய்யேன்
சீறடி பரவ வந்தே னரு " ளெனத் தொழுது சேர்ந்து
நாறிருங் குழலி னாளை நாகணை விடையிற் புல்லிக்
கோல்தொடுத் தநங்க னெய்யக் குழைந்துதார் திவண்ட தன்றே. 547
547. தேறினேன் - தெளிந்தேன். நாகு - இளம் பசு. விடை - காளை. புல்லி - புல்ல. கோல் - அம்பு . தார் குழைந்து - மாலை குழைந்து. திவண்டது - வாடிற்று.
சீவகன் சுரமஞ்சரியைத் தேற்றி அவள் மனைக்குச் செல்ல விடுத்தல்
இறங்கிய மாதர் தன்னை யெரிமணிக் கடகக் கையால்
குறங்கின்மேல் தழுவி வைத்துக் கோதையங் குருதி வேலான்
அறந்தலை நீங்கக் காக்கு மரசன்யா னாக நாளைச்
சிறந்தநின் நலத்தைச் சேரே னாய்விடின் செல்க என்றான். 548
548 இறங்கிய மாதர் - நாணித் தாழ்ந்த சுரமஞ்சரி. எரிமணிக் கடகம் - ஒளிதிகழும் மணிவைத் திழைத்த கடகம். குறங்கு - துடை. அறம் தலை நீங்க - அறம் கெட்டொழிய. சேரேனாய் விடின் – கூடா தொழிவேனாயின். செல்க - இனி நீ செல்வாயாக.
சுரமஞ்சரி செல்லுதல்
வில்லிடு மணிசெய் ஆழி மெல்விரல் விதியிற் கூப்பி
நல்லடி பணிந்து நிற்ப "நங்கை ! நீ நடுங்க வேண்டா;
செல்" கெனச் சிலம்பு செம்பொற் கிண்கிணி மிழற்ற ஒல்கி
அல்குற்கா சொலிப்ப ஆயம் பாவைசென் றெய்தி னாளே. 549
549. மணிசெய் ஆழி மெல்விரல் - மணி யிழைத்த ஆழியணிந்த மெல்லிய விரல். விதியின் - விதியாதலால். நிற்ப - சுரமஞ்சரி பணிந்து நிற்ப. மிழற்ற - ஒலிக்க. ஒல்கி - அசைந்து. அல்குற் காசு - மேகலை. ஆயம் தோழியர் கூட்டம்.
சீவகன் சென்று தன் தோழரைக் கூடினன்; அவர்களும் முன்பு மொழிந்தவாறே சீவகனைக் காம திலகன் எனப் பாராட்டினர். பின்பு, மகள் பேசுதற்குரியாரைச்
சுரமஞ்சரியின் தந்தையான குபேரதத்தன்பால் விடுத்தனர். சென்ற சான்றோரும் அவளைச் சிவகற்கு மகட்கொடை நேருமாறு வேண்டினர். குபேர தத்தனுக்குச் சுரமஞ்சரியின் நோன்பு, வருத்தம் செய்யலுற்றது.
குபேரதத்தன் சுரமஞ்சரியின் கருத்தறிய நினைத்தல்
ஐயற்கென் றுரைத்த மாற்றங் கேட்டலு மலங்க னாய்தன்
வெய்யதேன் வாய்க்கொண் டாற்போல் விழுங்கலோ டுமிழ்தல் தேற்றான்
"செய்வதென் நோற்றி லாதேன் நோற்றிவான் திறத்தின்" என்று
மையல்கொண் டிருப்ப அப்பாற் குமரிதன் மதியிற் சூழ்ந்தாள். 550.
550. ஐயற்கு - சீவகனுக்கு. உரைத்த மாற்றம் - சீவகன் பொருட்டு. மகள் கேட்க வந்த சான்றோர் சொல்லிய சொல். நாய்கன் – வணிகனான குபேரதத்தன். வெய்ய...தேற்றான் - வெய்ய தேனை வாயிடத்தில் கொண்டால் நஞ்சென்று விழுங்காமலும் இனிமையால் உமிழாமலும் இருப்பதுபோல இவன் விரதத்தால் உடம்படாமலும் சீவகனாதலின் மறுமலும் இருந்தான். நோற்றிலாதேன் - நல்வினையில்லாத யான். மையல் கொண்டு - மயங்கி. மதியில் சூழ்ந்தான்* - அறத்தொடு நிற்க நினைத்தான்*.
இஃது இங்ஙனமிருக்கச் சுரமஞ்சரி தான் சீவகனை மணக்க விரும்பிய விருப்பத்தைத் தன் தோழிக்குரைத்தாள்; அவள் அதனைத் தன் அன்னைக்குச் சொன்னாள். அவ்வன்னையாகிய செவிலித்தாய் சுரமஞ்சரியின் நற்றாயாகிய சுமதிக்கு உரைத்தாள்; அவள் குபேரதத்தனுக்குக் கூற அவனும் உளம் மகிழ்ந்து சீவகற்கு மகட்கொடை நேர்ந்தான்.
திருமணம் செய்தல்
கேட்பது விரும்பி நாய்கன் கிளைக்கெலா முணர்த்தி யார்க்கும்
வேட்பன அடிசி லாடை விழுக்கலன் மாலை சாந்தம்
கோட்குறை வின்றி யாக்கிக் குழுமியங் கறங்கி யார்ப்ப
நாட்கடி மாலை யாற்கு நங்கையை நல்கி னானே. 551
551 கிளைக்கெலாம் - சுற்றத்தார்க்கெல்லாம். வேட்பன – விரும்பப்படுவனவாகிய. கோன் குறைவின்றி - கொள்ளக்குறைவின்றி. குழும் இயம் - பலவாகிய வாச்சியம். நாட் கடி - நல்ல நாளில் மணம் செய்து.
சீவகன் சுரமஞ்சரியுடன் இன்புற்றிருக்கையில் ஒரு நாள் தான் அவளிற் பிரிந்து செல்லவேண்டி யிருத்தலைத் தெரிவித்தான்.
சுரமஞ்சரி பிரிவிற்குடன்படல்
"கருமம்நீ கவல வேண்டா கயற்கணாய்! பிரிவல் சின்னாள்
அருமைநின் கவினைத் தாங்க லதுபொருள்" என்று கூறப்
"பெரும,நீ வேண்டிற் றல்லால் வேண்டுவ பிறிதொன் றுண்டோ?
ஒருமைநின் மனத்திற் சென்றே னுவப்பதே யுவப்ப" தென்றாள். 552
552 தாங்கல் - தாங்குவாயாக. அது பொருள் - அஃது அருமையுடைய பொருள். வேண்டிற்று - வேண்டியது எதுவோ அது தவிர. ஒருமை - ஒரு நெறிப்பட்ட. சென்றேன் - ஒழுகினேன்.
சீவகன் பிரிந்து சென்று தன் மனையை யடைதல்.
நாணொடு மிடைந்த தேங்கொள் நடுக்குறு கிளவி கேட்டே
பூண்வடுப் பொறிப்பப் புல்லிப் புனைநலம் புலம்ப வைகேன்;
தேன்மிடை கோதை! யென்று திருமக னெழுந்து போகி
வாண்மிடை தோழர் சூழத் தன்மனை மகிழ்ந்து புக்கான். 553
553. மிடைந்த - செறிந்த. தேங் கொள் - இனிமை கொண்ட. வடுப் பொறிப்ப - வடுவைச் செய்ய. புலம்ப - தனிமைப்பட. வைகேன்- பிரிந்திரேன். வாள்மிடை தோழர் - வாளேந்திய தோழர்.
சீவகன் வரவு கண்ட சுநந்தை பெரிதும் வருந்தி மெலிந்தாள். கந்துக்கடன் ஒருவாறு ஆற்றினான். சீவகன் பிரிவாலுண்டாய துன்பத்தை நினைந்து சுற்றத்தார் பலரும் புலம்பித் தேறினர், இந்த ஆராவாரத்தால் சீவகன் வரவு அரசனுக்குப் புலனாகிவிடும் என்று அஞ்சிய கந்துக்கடன் "இன்று என் தந்தை இவ்வுலகு நீத்த நாள்" என்று வெளியார்க்குத் தெரிவித்தான். பின்பு அனைவரும் மகிழ்ச்சி யெய்தினர். முதற்கண் சீவகன் காந்தருவதத்தை யிருந்த மனையை யடைந்து அவளைக் கண்டான். அவனுக்கு அவள் குணமாலையின் ஆற்றாமையை எடுத்து இயம்பினாள். உடனே, சீவகன் குணமாலையைச் சென்று எய்தினான்.
குணமலை தன்னை நொந்துரைத்தல்
தீவினை யுடைய வென்னைத் தீண்டன் மின் அடிகள் வேண்டா;
பாவியேன் என்று நொந்து பரிந்தழு துருகி நையக்
காவியங் கண்ணி யொன்றுங் கவலல்யான் உய்ந்த தெல்லாம்
நாவியே நாறு மேனி நங்கைநின் தவத்தி னென்றான். 554
554. பரிந்து - அன்புற்று. நைய - வருந்த. ஒன்றும் கவலல்- சிறிதும் வருந்தாதே. நாவி - கத்தூரி.*(**பொருள் அகராதியில் சரி பார்க்கப்படது.**) "இவளைத் தீண்டிச் சீவகன் கொலையுண்டான் என்று உலகம் கூறலின் 'தீவினையுடைய என்னை' என்றான். தான் விலக்கவும் இவன் தீண்டலின் பின்னும் "வேண்டா" என்றான். இவனைப் பெற்று வைத்தும் இங்ஙனம் நீக்கிக் கூறவேண்டலின் 'பாவியேன்' என்றான்.
சீவகன் அவளைத் தேற்றிவிட்டுப் பிரிதல்
இளையவள் மகிழ்வ கூறி இன்துயி லமர்ந்து பின்னாள்
விளைபொரு ளாய வெல்லாம் தாதைக்கே வேறு கூறிக்
கிளையவர் சூழ வாமான் வாணிக னாகிக் கேடில்
தளையவிழ் தாம மார்பன் தன்னகர் நீங்கி னானே. 555
555.இனையவள் - குணமாலை. துயிலமர்ந்து - கூடியிருந்து. விளை பொருள் - மேல்முடியத் தகுவனவற்றை. வாமான் வாணிகன் - தாவும் குதிரை வாணிகன்.
---------------------
10. மண்மகள் இலம்பகம்
மண்மகள் இலம்பகம்: ஏமாங்கத நாட்டை விட்டுக் குதிரை வாணிகன் உருக்கொண்டு விதைய நாடு அடைந்து, தன் மாமன் கோவிந்தராசனைக் கண்டு வணங்கி, நிகழ்ந்தது கூறி இனிதிருந்தான். கோவிந்தராசன் தன் மகன் சீதத்தனுக்கு அரசளித்து தான் எல்லோரோடுமிருந்து கட்டியங்காரனது சூழ்ச்சி யறிந்து அவனை வஞ்சனையால் விதைய நாட்டிற்கு வருவிக்க எண்ணி, தன்பாலுள்ள திரிபன்றி எந்திரத்தை எய்து வீழ்ப்பவனுக்குத் தன் மகள் இலக்கணையை மணம் செய்து தருவதாக ஓலை போக்கினன். பல நாட்டிலுமிருந்து அரசகுமரர் போந்து அப்பன்றியை எய்ய மாட்டாது இளைத்தனர். கட்டியங்காரனும் அப்போழ்து தன் மக்களுடன் வந்திருந்தான். முடிவில் சீவகனே அப் பன்றியை எய்து யாவரும் புகழும் ஏற்றம் எய்தினான். அவன் இன்னானென்று கோவிந்தராசன் ஆங்கிருந்த அரசர்க்கு அறிவிப்ப, வானில் இயக்கனொருவன் தோன்றி "கட்டியங்காரனாகிய கரியைச் சீவகனென்னும் கரிமா கொல்லும்" என்றுரைத்துப் போயினன். உடனே கட்டியங்காரன் போருக்கு எழுந்தான். இருதிறத்தார் தானையும் கடும்போர் புரிந்தன. கட்டியங்காரன் சீவகன் அம்பால் உயிர் துறந்தான். அவன் மக்களும் போரில் பட்டனர். விசயை இச் செய்தி யறிந்து மிக்க மகிழ்ச்சி கொண்டாள்.
இராசமாபுரத்தை விட்டு நீங்கிய சீவகனும் அவன் தோழரும் பலவகை நிலங்களையும் கடந்து ஆங்காங்கே தோன்றும் இயற்கைக் காட்சிகளைக்கண்டு மகிழ்வுற்று விதைய நாட்டை யடைந்து யாற்றங் கரையில் தங்கி இளைப் பாறலாயினர்.
விதையநாட் டரசனான கோவிந்தராசனுக்குச் சீவகன் தன் வரவைத் தெரிவித்தல்
அள்ளிலைப் பலவி னளிந்து வீழ் சுளையும்
கனிந்துவீழ் வாழையின் பழனும்
புள்ளிவா ழலவன் பொறிவரிக் கமஞ்சூல்
நெண்டினுக் குய்த்துநோய் தணிப்பான்
பள்ளிவாய் நந்து மாமையும் பணித்துப்
பன்மலர் வழிபடக் குறைக்கும்
வெள்ளநீர்ப் படப்பை விதையம்வந் தடைந்ததே
வேந்தனுக் குணர்த்தமுன் விடுத்தார். 556
556. அன்னிலை - செறிந்த இலை. அனிந்து - நன்கு பழுத்து. புள்ளி வாழ் அலவன் - புள்ளி பொருந்திய நண்டு. கமஞ்சூல் நெண்டு –நிறைந்த சூல்கொண்ட பெடை நண்டு. பள்ளி - இடம். பணித்து - மிதித்து. வழிபட - வழியுண்டாகுமாறு. படப்பை - தோட்டம்; வயலுமாம். விடுத்தார் - ஆள் விட்டார். அலவன் நெண்டுக்குச் சுனை முதலியவற்றை உற்று, நோய் தணிப்பான் வழிபடக் குறைக்கும் படப்பையையுடைய விதையம்
என்க.
சீவகனது வரவறிந்த கோவிந்தராசன் நகரத்தை அணி செய்து சீவகனைச் சிறப்பாக வரவேற்குமாறு நகரமக்கட்குப் பணித்தான். நகரமக்கள் அவ்வண்ணமே நகரத்தைத் தேவருலகுபோல அணிசெய்து சிறப்பித்தனர்.
நகரமக்கள் சீவகனை வரவேற்றல்
மின்தோய் வரைகொன்ற வேலோன் புகுதக;
இன்தேன் கமழ்தார் இயக்கன் புகுதக;
வென்றோன் புகுதக, வீரன் புகுதக,
என்றே நகரம் எதிர்கொண் டதுவே. 557
557. மின் தோய்வரை - முகில் தவழும் மலை. வென்றோன் - அருகன். புகுதக - புகுதுக; ஒருசொல். நகரம் - நகரில் உள்ளவர்.
சீவகன் யானை யிவர்ந்து சென்று மன்னன்கோயிலை யடைதல்
விளங்குபாற் கடலிற் பொங்கி வெண்டிரை யெழுவ வேபோல்
துளங்கொளி மாடத் துச்சித் துகிற்கொடி நுடங்கும் வீதி
உளங்கழிந் துருவப் பைந்தார் மன்னவன் கோயில் சேர்ந்தான்
இளங்கதிர்ப் பருதி பௌவத் திறுவரை யிருந்த தொத்தான். 558
558. துளங்கொளி மாடத்து - ஒளி விளங்குகின்ற மாடங்களின். உளங்கழித் துருவப்பைந்தார் - மார்பிடத்தே கிடந்து அழகு செய்யும் பசிய மாலை. இளங்கதிர்ப் பருதி - இளஞாயிறு. இறுவரை – எழுந்து தங்கும் மலை.
சென்ற சீவகன் வழியில் அரசன் மகள் இலக்கணையிருந்த கன்னி மாடத்தைக் கடந்து வருகையில் அவளைக் கண்டு நீங்கினான். இலக்கணையும் அவனைக்கண்டு கருத்திழந்து நின்றாள்.
இலக்கணை சீவகனைக் காண்டல்
தாமரைப் போதிற் பூத்த தண்ணறுங் குவளைப் பூப்போல்
காமரு முகத்திற் பூத்த கருமழைத் தடங்கண் தம்மால்
தேமலர் மார்பி னானை நோக்கினான்; செல்வன் மற்றப்
பூமலர்க் கோதை நெஞ்ச மூழ்கிப்புக் கொளித்திட் டானே. 559
559. போது - பூ. கருமழைத் தடங்கண்கள் - கரிய குளிர்ந்த பெரிய கண்கள். பூமலர்க்கோதை - இலக்கணை. மூழ்கிப் புக்கு – புக்கு மூழ்க என இயைக்க. அவள் நெஞ்சிலே புகுந்து மறைய.
சீவகன் தன் மாமனைக் கண்டு வணங்குதல்
மைதோய் வரையி னிழியும்புலி போல மைந்தன்
பெய்தாம மாலைப் பிடியின்னிழிந் தேகி மன்னர்
கொய்தாம மாலைக் கொழும்பொன்முடி தேய்த்தி லங்கும்
செய்பூங் கழலைத் தொழுதான் சென்னி சேர்த்தினானே. 560
560. மை தோய் வரை - முகில் தவழும் மலை. பெய்தாம மாலைப் பிடியின் - பெய்யப்பட்ட பொன்னரிமாலை யணிந்த பிடியின்மேலிருந்து. கொய் தாம மாலை - கொய்த ஒழுங்குபட்ட மாலை. மன்னர் முடி தேய்த்திலங்கும் கழலைத் தொழுது சென்னி சேர்த்தினான் என்க.
கோவிந்தராசன் சீவகனைத் தழீஇக் கொளல்
பொன்னங் குவட்டிற் பொலிவெய்தித் திரண்ட திண்டோள்
மன்னன் மகிழ்ந்து மருமானை விடாது புல்லித்
தன்னன்பு கூரத் தடந்தாமரைச் செங்கண் முத்தம்
மின்னும் மணிப்பூண் விரைமார்பம் நனைப்ப நின்றான். 561
561. குவட்டின் - குவடுபோல. செங்கண் முத்தம் - செங்கண்ணில் சொரிந்த நீர்த்துளி. விரை மார்பம் - மணம் கமழும் மார்பு.
கோயிலவர் சச்சந்தனை நினைந்து புலம்பல்
ஆனாது வேந்தன் கலுழ்ந்தானெனக் கோயி லெல்லாம்
தானாது மின்றி மயங்கித்தடங் கண்பெய் மாரி
தேனார் மலரீர்த் தொழுகச் சிலம்பிற் சிலம்பும்
கானார் மயிலின் கணம்போற் கலுழ்வுற்ற தன்றே. 562
562. ஆனாது - அமையாது. தானாது மின்றி – தானென்கிற தன்மை யாதுமின்றி. கண் பெய் மாரி - கண்களிற் சொரிந்த கண்ணீர். சிலம்பில் சிலம்பும் - மலையிடங்களில் ஒலிக்கும். கணம் - கூட்டம். கலுழ்வுற்றது -- அழுதது. கோயிலெல்லாம் கலுழ்வுற்றது என்க.
விசயை போந்து தேற்றுதல்
பகைநரம் பிசையுங் கேளாப் பைங்கதிர்ப் பசும்பொன் கோயில்
வகைநலம் வாடி யெங்கும் அழுகுரல் மயங்கி முந்நீர்
அகமடை திறந்த தேபோல் அலறக்கோக் கிளைய நங்கை
மிகைநலத் தேவி தானே விலாவணை நீக்கி னாளே. 563
563. நரம்பு இசை பகையும் கேளா நரம்பிசையில் பகையும் கேட்டறியாத. நலம் வகை வாடி - நலத்தின் வகை பலவும் வாடி. மூந்நீரகம் - கடலிடம். கோக்கு - கோவிந்தராசனுக்கு. மிகை நலந் தேவி - மிகையாகிய குணத்தையுடைய தேவி. விலாவணை - அழுகை.
பின்பு கோவிந்தராசன் தன் அமைச்சருடன் சீவகன் உடனிருப்பத் தன் மகன் சீதத்தனுக்கு முடி சூட்டல்
உலந்தநா ளவர்க்குத் தோன்றா தொளிக்குமீன் குளிக்கும் கற்பிற்
புலந்தவே னெடுங்கட் செவ்வாய்ப் புதவிநாட் பயந்த நம்பி
சிலம்புநீர்க் கடலந் தானைச் சீதத்தற் கரசு நாட்டிக்
குலந்தரு கொற்ற வேலான் கொடிநகர் காக்க வென்றான். 564
564. நாள் உலந்தவர்க்குத் தோன்றாது ஒளிக்கும் மீன் – வாழ் நாள் அற்றவர் கண்ணுக்குத் தோன்றாது மறையும் அருந்ததி மீன். குளிக்கும் - தோற்கும். புலந்த வேல் - சினக்கின்ற வேல். புதவி - கோவிந்தராசன் மனைவி. நம்பி - சீதத்தன். குலந் தருதல் புதல்வரைப் பயந்து மேலும் குலத்தை வளர்த்தல்.
கோவிந்தராசன் சீவகன் தோழர்க்குச் சிறப்புச் செய்தல்
மாற்றவ னொற்ற ரொற்றா வகையினின் மறைய நம்பிக்கு
ஆற்றின தோழர்க் கெல்லா மணிகல மடிசி லாடை
வேற்றுமை யின்றி வேண்டூட் டமைத்தன னருளி யிப்பால்
ஏற்றுரி முரச நாண எறிதிரை முழக்கிற் சொன்னான். 565
565. மாற்றவன் - பகைவனான கட்டியங்காரன். ஒற்றாவகை - ஒற்றியறியாதவாறு. ஆற்றின தோழர்க்கு - உதவியாகிய தோழன்மார்க்கு. வேண்டூட்டு அடிசில் - தாம் தாம் விரும்பும் பொருள்களையுடைய அடிசில். ஏற்று உரி - ஏற்றினுடைய தோல் போர்த்த. "நீ கொன்ற சீவகன் தோழர்க்குக் கோவிந்தன் சிறப்புச் செய்தானென்று ஒற்றர் கட்டியங் காரனுக்குக் கூறினால் மேல் கூறவாகி யாம் கொலை சூழ்கின்றது தவறு
மென்று கருதி மறையக் கொடுத்தான்." சீவகன் குதிரை வாணிகன் வேடத்தில் இருந்ததால் அவனை ஒற்றர் அறிவது முடியாது.
அரசன் பணிப்ப விரிசிகன் என்னும் அமைச்சன் கட்டியங்காரன் விடுத்திருந்த ஓலையைப் படித்தல்
விதையத்தார் வேந்தன் காண்க, கட்டியங் கார னோலை;
புதையவிப் பொழிலைப் போர்த்தோர் பொய்ப்பழி பரந்த தென்மேற்
கதையெனக் கருதல் செய்யான் மெய்யெனத் தானுங் கண்டான்
சிதையவென் னெஞ்சம் போழ்ந்து தெளிப்பினும் தெளிநர் யாரே. 566
566. பொய்ப்பழி புதையப் பரந்தது - பொய்யாக ஒரு பழி முழுதும் பரந்தது. பொழில் - உலகம். சிதையப் போழ்ந்து – சிதையும்படி பிளந்து. தெளிப்பினும் - தெளிவித்தாலும்.
இவ்வாறு முன்னுரை மொழிந்துகொண்ட கட்டியங் காரன், சச்சந்தனைத் தான் கொன்றதை மறைத்து "அசனி வேகமெனும் அரசுவா மதம்பட்டுப் பாகர் நூற்றுவரைக்
கொன்று திரிய, அரசன் சச்சந்தன் அதனை யடக்கிக் கந்திற் பிணிக்குங்கால் அவனை அது வீழ்த்துக் கொன்றது; இனெ, நீயே போந்து இவ் வரசுரிமையை ஏற்று என்மீது படரும் பழியைப் போக்குதல்வேண்டும். நின் பொருட்டு யான் என் உயிரையும் ஈகுவன்" என்று எழுதி யிருந்தான்.
சீவகன் உரைத்தல்
ஓலையுட் பொருளைக்கேட்டே யொள்ளெயி றிலங்க நக்குக்
காலனை யளியன் தானே கையினால்; விளிக்கு மென்னா
நூல்வலீர்! இவனைக் கொல்லும் நுண்மதிச் சூழ்ச்சி யீதே
போல்வதொன் றில்லை யென்றான் புனைமணிப் பொன்செய் பூணான். 567
567 அளியன் - இகழ்ச்சிக் குறிப்பு. விளிக்கும் - அழைக்கின்றான். நூல் வலீர் - நூல் பலவும் கற்ற வல்லோர்களே. நுண்மதிச் சூழ்ச்சி - நுண்ணிய மதியால் செய்த வஞ்சம். ஈது - நட்பாய்ப் போதுகின்ற இது. பூணான் - சீவகன்.
கோவிந்தராசன் கூறல்
கள்ளத்தால் நம்மைக் கொல்லக் கருதினான்; நாமும் தன்னைக்
கள்ளத்தா லுயிரை யுண்ணக் கருதினேம்; இதனை யாரும்
உள்ளத்தா லுமிழ வேண்டா; வுறுபடை வந்து கூட
வள்ளுவர் முரச மூதூர் அறைகென அருளி னானே. 568
568. உள்ளத்தால் உமிழவேண்டா - உள்ளத்திலிருந்து எவரும் வெளியே புலப்படுத்தவேண்டா. உறுபடை - மிக்கபடை. வள்ளுவார் முரசம் - வளவிற வார்க்கட்டமைந்த முரசு. வள்ளுவர் முடிக்கும் முரசு எனினுமாம்.
போர்க் குறிப்பின்றி நட்பு முறையில் பெரும்படை திரள்க என்று அரசன் பணித்தவாறே பதினாயிரத் தறுநூறு யானைப்படையும் அறுபதினாயிரம் குதிரைப் படையும் இருபதினாயிரத் தறுநூறு தேர்ப்படையும் நான்கு நூறாயிரம் காலாட்களுமாகிய பெரும்படை திரண்டது. இங்ஙனம் எழுந்த இக் கடல் போலும் தானை இராசமாபுரத்தை நோக்கிச் சென்று, அந் நகர்ப்புறத்தே இறுத்தது. கோவிந்தராசனும் புரிசைப்புறமே தனக்குக் கோயிலாகக் கொண்டான்.
கட்டியங்காரன் கோயிலில் துந்நிமித்தம் தோன்றல்
போக மகளிர் வலக்கண்கள் துடித்த; பொல்லாக் கனாக்கண்டார்;
ஆக மன்னற் கொளிமழுங்கிற்று; அஞ்சத் தக்க குரலினால்
கூகை கோயிற் பகற்குழறக் கொற்ற முரசம் பாடவிந்து
மாக நெய்த்தோர் சொரிந்தெங்கும் மண்ணும் விண்ணும் அதிர்ந்தவே. 569
569. போகமகளிர் - உரிமை மகளிர். மன்னற்கு ஆகம் ஒளி மழுங்கிற்று - கட்டியங்காரனது மேனி ஒளி கெட்டது. பகற் குழற - பகற்போதிலே கூவ. பாடவிந்து - ஒலி அவிய, மாகம் - விண்ணினின்று. நெய்த்தோர் - குருதி. சொரிந்து - சொரிய,
இதனை யறியாத கட்டியங்காரன் கோவிந்தன் வரவு கேட்டு இவனையும் கொன்றுவிட்டதாகவே மகிழ்ந்து நட்புக் குறியாக இருநூறு யானைகளும் ஆயிரம் குதிரைகளும் நூறு தேரும் விடுப்ப, கோவிந்தனும் வாரி மணாளனென்னும் யானையும் விசயமென்னும் தேரும் பவன வேகமென்னும் குதிரையும் கட்டியங்காரனுக்கு விடுத்தான். இவ்வகையால் இருவரும் நட்புடையராய் இருந்து வரலாயினர்.
கோவிந்தராசன் தன்பாலுள்ள திரிபன்றி வென்றியுற எய்தார்க்கு என் மகள் இலக்கணையுரியள் என முரசறைவித்தல்
"பெருமகன் காதற் பாவைப் பித்திகைப் பிணையல் மாலை
யொருமகள் நோக்கி னாரை யுயிரொடும் போகொ டாத
திருமகள் அவட்குப் பாலான், அருந்திரி பன்றி யெய்த
அருமக னாகு" மென்றாங் கணிமுர சறைவித் தானே. 570
570. பெருமகன் - கோவிந்தராசன். பித்திகைப் பிணையல் - பித்திகைப் பூவால் தொடுத்த மாலை. பித்திகை - பிச்சியென்னும் ஒருவகைப் பூ; இது பித்திகம் எனவும் வழங்கும். "பைங்காற் பித்திகத் தாயிதழலரி" (குறிஞ்சி) என வருதல் காண்க. போகொடாத – போக விடாத. பாலான் - கணவனாவான். அருமகன் - அரிய ஆண்மகன்.
இச் செய்தி ஏனையரசர் பலர்க்கும் தெரிவிக்கப்பட்டது. பல்வேறு நாட்டு அரசகுமரர் அனைவரும் நகரத்திடத்தே வந்து நிறைந்தனர். கட்டியங்காரனும் ஆங்கே வந்திருந்தான். அரசகுமரர் அனைவரும் அத் திரிபன்றியை எய்வதற்கு முயன்று தம் முயற்சி முற்றாராயினர். இவ்வாறு ஆறுநாட்கள் சென்றன.
சீவகன் யானையிவர்ந்து அங்கே வருதல்
காரின் முழங்குங் களிறும் கடலின் முழங்குந் தேரும்
போரின் முழங்கும் புரவிக் கடலும் புகைவாட் கடலும்
சீரின் முழங்க முழங்கும் நீல யானை யிவர்ந்தான் 571
571. காரின் - மழை முகில்போல. போரின் - போர்த்தொழிலால்; புகைவாள் - நெருப்புப் புகையும் வாள். சீரின் - சீரோடு. நீரின் முழங்க - நீர்மையுடன் முழங்க. நீல யானை - கரிய யானை.
கட்டியங்காரன் சீவகனைக் கண்டு துணுக்குறல்
கல்லார் மணிப்பூண் மார்பிற் காம னிவனே யென்ன
வில்லார் கடலந் தானை வேந்தர் குழாத்துட் டோன்றப்
புல்லான் கண்ணி னோக்கிப் புலிகாண் கலையிற் புலம்பி
ஒல்லா னொல்லா னாகி யுயிர்போ யிருந்தான் மாதோ. 572
572. கல்லார் மணி - கல்லிடத்தே பெற்ற மணி. வில்லார் கடலந்தானை - வில்லேந்திய கடல்போலும் தானை. ஒல்லான் - மனம் பொருந்தாமல். புல்லான் - தான் நிற்கும் முறைமையில் நிற்கமாட்டாது. உயிர்- அறிவு. புலம்பி - உளைந்து.
சீவகன் திரிபன்றி யெய்து வீழ்த்தல்
அருந்தவக் கிழமை போல இறாதவில் லறாத நாண் வாய்த்
திருந்தினார் சிந்தை போலும் திண்சரம் சுருக்கி மாறாய்
இருந்தவன் பொறியும் பன்றி யியற்றரும் பொறியு மற்றாங்கு
ஒருங்குட னுதிர வெய்தா னூழித்தீ யுருமோ டொப்பான். 573
573. இறாத - முறியாத. திருந்தினார் - முனிவர். சுருக்கி - வில்லுள்ளேயாகும்படி தொடுத்து. மாறாய் இருந்தவன் பொறி - கட்டியங்காரனது நல்வினை. இயல்தரும் பொறி - திரியும் பொறி. ஒருங்குடன்- ஒரு சேர. ஊழித் தீ யுரும் - ஊழித்தீயும் இடியும். தவக்கிழமை – தவம் தன் பயனைத் தரும் உரிமை.
கோவிந்தன் எல்லாருமறியச் சீவகனது குலமுறை எடுத்துக் கூறல்
இலங்கெயிற் றேனமேவுண் டிருநிலத் திடித்துவீழக்
கலங்குதெண் டிரையும் காருங் கடுவளி முழக்கு மொப்ப
உலம்புபு முரசங் கொட்டி யொய்யெனச் சேனை யார்ப்பக்
குலம்பகர்ந் தறைந்து கோமான் கோவிந்தன் கூறினானே. 574
574. ஏனம் - பன்றி. ஏவுண்டு - அம்பால் அறுப்புண்டு. தெண்திரை - தெளிந்த அலையையுடைய கடல். உலம்புபு - முழக்கஞ்செய்து. குலம் பகர்ந்து அறைந்து - சீவகன் குலத்தை முதற்கண் கட்டியங்காரனுக்கு உரைத்துப் பின் ஏனை யெல்லோருக்கும் அறிவித்து.
வானிடத்தே இயக்கன் தோன்றிக் கூறல்
வானிடை யொருவன் தோன்றி மழையென முழங்கிச் சொல்லும்:
தேனுடை யலங்கல் வெள்வேல் சீவக னென்னுஞ் சிங்கம்
கானுடை யலங்கல் மார்பிற் கட்டியங் கார னென்னும்
வேன்மிடை சோலை வேழத் தின்னுயிர் விழுங்கு மென்றான். 575
575. அலங்கல் - மாலை. கான் - மணம். வேல்மிடை சோலை வேழத்து - வேலாகிய சோலையில் நிற்கின்ற யானையினுடைய. இன்னுயிர் - தன்னை யொழிந்த மற்றையோர்க்குத் தீதாய் நிற்கும் உயிர். ஒருவன் - இயக்கன்.
கட்டியங்காரன் சினந்து கூறல்
விஞ்சையர் வெம்படை கொண்டுவந் தாயென
அஞ்சுவ லோவறி யாயென தாற்றலை
வெஞ்சம மாக்கிடின் வீக்கறுத் துன்னொடு
வஞ்சனை வஞ்ச மறுத்திடு கென்றான். 576
576 வெம்படை - கொடும்படை. அறியாய் - நீ யறியாய்.; நின் தந்தை அறிவன் என்றவாறு. வீக்கு - பெருமை. வஞ்சனை - வஞ்சனையாக வருவித்த கோவிந்தராசனை. அறுத்திடுகு - அறுத்திடுவேன்.
மதனன் வெகுளுதல்
சூரியற் காண்டலுஞ் சூரிய காந்தமஃது
ஆரழ லெங்ஙனங் கான்றிடும் அங்ஙனம்
பேரிசை யானிசை கேட்டலும் பெய்ம்முகிற்
காரிடி போன்மத னன்கனன் றிட்டான். 577
577. சூரிய காந்தம் - சூரிய காந்தக் கல். ஆர் அழல் - அரிய தீ. பேரிசையான் - சீவகன். இசை - வெற்றி. கார் இடி - கார் மழையில் முழங்கும் இடி. கனன்றான் - வெகுண்டான்.
கட்டியங்காரன் மக்கள் நூற்றுவரும் எழுதல்
காற்படை யுங்களி றுங்கலி மாவொடு
நூற்படு தேரும் நொடிப்பினிற் பண்ணி
நாற்படை யுந்தொகுத் தான்மக்கள் நச்சிலை
வேற்படை வீரரொர் நூற்றுவர் தொக்கார். 578
578. காற்படை- காலாட்படை. கலிமா - கலிக்கின்ற குதிரைப் படை. நூல் படு தேர் - நூல்வழிப் பட்ட தேர். நொடிப்பு – ஒரு நொடிப்பொழுதில். நூற்றுவர் - கட்டியங்காரன் மக்கள் நூற்றுவரும்; முற்றும்மை தொக்கது.
சீவகனது படைத் தொகை
பார்நனை மதத்த பல்பேய் பருந்தொடு பரவச் செல்லும்
போர்மதக் களிறு பொற்றேர் நான்கரைக் கச்ச மாகும்;
ஏர்மணிப் புரவி யேழா மிலக்கமேழ் தேவ கோடி,
கார்மலி கடலங் காலாள் கற்பகத் தாரி னாற்கே. 579
579. பார் நனை - நிலமெல்லாம் நனைந்து ஈரமாக்கும். நான்கரைக் கச்சம் - நாலரைக் கச்சம். ஏர் - அழகிய. கற்பகத் தாரினான் –கற்பகமாலை யணிந்த சீவகன். "கச்சம், தேவகோடி வென்பன சில எண்ணுப் பெயர்" கார் - கருமை.
கட்டியங்காரனது படைத் தொகை.
நிழன்மணிப் புரவித் திண்டேர் நிழறுழாய்க் குனிந்து குத்தும்
அழல்திகழ் கதத்த யானை யைந்தரைக் கச்ச மாகும்;
எழின்மணிப் புரவி யேழா மிலக்கமேழ் தேவ கோடி
கழன்மலிந் திலங்குங் காலாள் கட்டியங் காரற் கன்றே. 580
580. நிழல் மணி - ஒளி திகழும் மணி. நிழல் துழாய்க் குனிந்து குத்தும் அழல் திகழ் கதத்த யானை - தன் நிழலைப் பகை யென்று மருண்டு கையால் துழாவிக் குனிந்து கோட்டால் குத்திச் சினம் சிறக்கும் யானை. தேரும் யானையும் தனித்தனி ஐந்தரைக் கச்சம் என்க.
விசயனொடு பொருது மதனன் வீழ்தல்
காளமா கிருளைப் போழ்ந்துகதிர்சொரி கடவுட் டிங்கள்
கோளரா விழுங்க முந்நீர்க் கொழுந்திரைக் குளித்த தேபோல்
நீளம ருழக்கி யானை நெற்றிமேற் றத்தி வெய்ய
வாளின்வாய் மதனன் பட்டான் விசயன் போர் விசயம் பெற்றான். 581
581. கானமாகு இருள் - கருமை மேன்மேலும் பெருகும் இருள். போழ்ந்து - கெடுத்து. விழுங்க - விழுங்கவர அதற்கு அகப்படாதே உயரப் போய்ப் பின்பு. முந்நீர் - கடல். நீளமர் - நெடிய போர். போர்- போரிலே. விசயம் - வெற்றி.
திங்கள் அரா விழுங்க உயரப்போய்ப் பின்பு முந்நீர்த்திரையுள் குளித்ததுபோல், மதனன், யானை நெற்றிமேல் தத்தி, விசயன் வாளின் வாய்ப் பட்டான் என்க.
மதனன் தம்பியாகிய மன்மதன் பொருது மடிதல்
தோளினா லெஃக மேந்தித் தும்பிமே லிவரக் கையால்
நீளமாப் புடைப்பப் பொங்கி நிலத்தவன் கவிழ்ந்து வீழக்
கீளிரண் டாகக் குத்தி யெடுத்திடக் கிளர்பொன் மார்பன்
வாளினாற் றிருகி வீசி மருப்பின்மேற் றுஞ்சி னானே. 582
582. தும்பி - விசயன் ஏறியிருந்த யானை. இவர – மன்மதன் பொங்கி வர. நீளமா - சேய்மைக்கட் செல்லுமாறு. புடைப்ப – தண்டா வடிக்க. இரண்டு கீளாக - இரண்டு கூறாக. திருகி - உடம்பைத் திருகி. துஞ்சினான் - இறந்தான்.
தேவதத்தன் மகத வேந்தனை வெல்லுதல்
செண்பகப் பூங்குன் றொப்பான் தேவமா தத்தன் வெய்தா
விண்புக வுயிரைப் பெய்வான் வீழ்தரு கடாத்த வேழ
மண்பக இடிக்குஞ் சிங்க மெனக்கடாய் மகதர் கோமான்
தெண்கடற் றானை யோட நாணிவேல் செறித்திட் டானே. 583
583. பொன்னணிதலால் சண்பகம் பூத்த மலையை யொப்பவனான தேவதத்தன். பெய்வான் - புகும்படியாக. வீழ்தரு கடாத்த - பொழிகின்ற மதத்தையுடைய. மண் பக - நிலம் பிளக்கும்படி. கடாய் - வேழத்தைச் செலுத்தி. தானை ஓட - தானை வீரர் முதுகிட்டோட. செலுத்திட்டான் - எறியாது மீண்டான்.
சீதத்தன் கலிங்கர் கோனை வீழ்த்துதல்
சின்னப்பூ அணிந்த குஞ்சிச் சீதத்தன் சினவு பொன்வாள்
மன்னருட் கலிங்கர் கோமான் மத்தகத் திறுப்ப மன்னன்
பொன்னவிர் குழையும் பூணும் ஆரமும் சுடர வீழ்வான்
மின்னவிர் பருதி முந்நீர்க் கோளொடும் வீழ்வ தொத்தான். 584
584 சின்னப்பூ - விடுபூக்கள். பொன் வாள் -இரும்பாலாகிய வாள். மத்தகத்து இறுப்ப - தலையில் தங்கிற்றாக. பொன்னயிர் குழை- பொன்னாலாகிய குழை. வீழ்வான் - வீழ்கின்ற அக் கலிங்கர்கோன்,. பருதி கோனொடு முந்நீர்க்கண் வீழ்வ தொத்தான். பருதிக்கு அவனும் கோளுக்குக் குழை முதலியனவும் கொள்க.
கோவிந்தன் மாரட்டனென்னும் வேந்தனை வீழ்த்துதல்
கொடுஞ்சிலை யுழவன் மான்தேர்க் கோவிந்த னென்னும் சிங்கம்
மடங்கருஞ் சீற்றத் துப்பின் மாரட்ட னென்னும் பொற்குன்று
இடந்துபொற் றூளி பொங்கக் களிற்றொடு மிரங்கி வீழ
அடர்ந்தெரி பொன்செய் அம்பின் அழன் றிடித் திட்ட தன்றே. 585
585 கொடுஞ்சிலை யுழவன் - கொடிய வில்வீரன். மான் தேர் - குதிரை பூட்டிய தேர். மடக்கரும் சீற்றத் துப்பின் - மடக்குதற்கு அரிய சினமும் வன்மையுமுடைய. மடக்கரு - விகாரம். இடந்து - பிளந்து. பொற்றூளி - மலையென்றதற்கு ஏற்பப் பொன்துகள் கூறினார். இறங்கி- தாழ்ந்து. அடர்ந்து - மண்டிச் சென்று, சிங்கம் இடித்திட்டது என்க.
இவ்வாறே நபுலன் மகதையார் வேந்தனொடு பொருங்கால், அவன் அஞ்சிக் கண் இமைப்ப, அவனொடு பொருதற்கு நாணி மீண்டான். அது கண்டு வீறுகொண்டு சென்ற விபுலன் தன்னொத்த வீரன் ஒருவனொடு பொருது அவனை விண்ணுலகேற்றினான். பதுமுகன் காமுகன் என்பானொடு போர்செய்து அவனை வீழ்த்தி அவன் தம்பி கோமுகன் என்பானையும் வென்று மீண்டான். இவ்வண்ணம் சீவகன் தோழரும் தம்பியரும் பிறரும் கட்டியங்காரனுடைய தானைத் தலைவர் முதலாயினாருடன் பொருது வென்றி யெய்தினர்.
சீவகன் தேரேறுதல்
எரிமணிக் குப்பை போல இருளற விளங்கு மேனித்
திருமணிச் செம்பொன் மார்பிற் சீவகன் சிலைகை யேந்தி
அருமணி யரச ராவி அழலம்பிற் கொள்ளை சாற்றி
விரிமணி விளங்கு மான்தேர் விண்தொழ ஏறினானே. 586
586. குப்பை - குவியல். செம்பொன் - செம்பொன்னாலாகிய பூண்.; திருமகளுமாம். அரிமணியரசர் -அரிய மணி வைத்திழைத்த முடியுடைய மன்னர். கொள்ளை சாற்றி - கொள்ளை கொள்ளும் தன்மையைத் தன்நெஞ்சிலே அமையப்பண்ணி. விண் தொழ - பார்த்து நின்ற விஞ்சையர் கைதொழ.
சீவகன் வில் குனித்துப் போருடற்றல்
அரசர்தம் முடியும் பூணும் ஆரமும் வரன்றி யார்க்கும்
முரசமும் குடையுந் தாரும் பிச்சமுஞ் சுமந்து மாவும்
விரைபரித் தேரு மீர்த்து வேழங்கொண் டொழுகி வெள்ளக்
குரைபுனற் குருதி செல்லக் குமரன்விற் குனிந்த தன்றே. 587
587. குருதியாறு, முடி முதலியவற்றை வரன்றி, முரசு முதலியவற்றைச் சுமந்து, மாவும் தேரும் ஈர்த்து, வேழம் கொண்டு ஒழுகிச் செல்லும்படி வில் வளைந்தது. குரை - முழங்குகின்ற. பிச்சம் – பீலியால் அமைத்த குடை.
இதுகண்டு அஞ்சியோடிய வீரர்க்குக் கட்டியங்காரன் அமைச்சனாகிய அரிச்சந்தன் கூறுதல்
தற்புறந் தந்து வைத்த தலைமகற் குதவி வீந்தார்
கற்பக மாலை சூட்டிக் கடியர மகளிர்த் தோய்வர்
பொற்றசொன் மாலை சூட்டிப் புலவர்கள் புகழக் கன்மேல்
நிற்பர்தம் வீரம் தோன்ற நெடும்புகழ் பரப்பி யென்றான். 588
588. தற்புறந் தந்து - தம்மைப் பாதுகாத்து. வைத்த –உற்ற விடத்து உதவுவரென்று வைத்த. வீந்தார் - புகழ் நிற்க இறந்த வீரர். அரமகளிர் - துறக்கத்து மகளிர். தோய்வர் - கூடுவர். பொற்ற - அழகிய. புகழ - வெற்றியை வியந்து பாட. கன்மேல் நிற்பர் - நடு கல்லாய் வீரர் பரவ விளங்குவர்.
அது கேட்டு வீரத் தீ யெரியப்போந்த வீரர் மண்டொழிய கட்டியங்காரன் மைந்தர் நூற்றுவரும் போரிடை எதிர்தல்
திங்க ளோடுன் குன்றெலாந் துளங்கி மாநிலஞ் சேர்வபோல்
சங்க மத்தகத் தலமரத் தரணி மேற்களி றழியவும்
பொங்கு மானிரை புரளவும் பொலங்கொள் தேர்பல முறியவும்
சிங்கம் போற்றொழித் தார்த்தவன் சிறுவர் தேர் மிசைத் தோன்றினார். 589
589. குன்றெலாம் - குன்றுகளெல்லாம். துளங்கி - நிலை கலங்கி. சங்கம் மத்தகத்து அலமர - சங்குகள் மத்தகத்திலே அசைய. மா யிரை - குதிரைப் படை. பொலம் - பொன். தொழித்து - வெகுண்டு.
நூற்றுவரும் மடிதல்
கங்கை மாக்கடற் பாய்வதே போன்று காளைதன் கார்முகம்
மைந்த ரார்த்தவர் வாயெலாம் நிறைய வெஞ்சரம் கான்றபின்
நெஞ்சம் போழ்ந்தழ லம்புண நீங்கி னாருயிர் நீண்முழைச்
சிங்க வேறுகள் கிடந்த போல் சிறுவர் தேர்மிசைத் துஞ்சினார். 590
590. மாக் கடல் - கரிய கடல். காளை - சீவகன். கார்முகம் - வில். மைந்தர் ஆர்த்தவர் வாய் - ஆரவாரம் செய்த மைந்தர் வாயெல்லாம். கான்றபின் - செலுத்திய பின்பு. நெஞ்சம் - மார்பு. அம்பு உண – அம்பு உயிரை யுண்பதால். முழை - முழஞ்சு (Caves). துஞ்சினர் – பட்டுக் கிடந்தனர்.
தாமரைப்படை வகுத்திருந்த கட்டியங்காரன்மேல் சீவகன் செல்லுதல்
பொய்கை போர்க்களம் புறவிதழ் புலவு வாட்படை புல்லிதழ்
ஐய கொள்களி றகவித ழரச ரல்லிதன் மக்களா
மையில் கொட்டையம் மன்னனா மலர்ந்த தாமரை வரிசையால்
பைய வுண்டபின் கொட்டைமேல் பவித்தி ரத்தும்பி பறந்ததே. 591
591. போர்க்களம் - பொய்கை; புறவிதழ் - வாட்படை; கொல் களிறு - புல்லிதழ்; அரசர், அகவிதழ்; கட்டியங்காரன் மக்கள் – பூவின் அல்லி. அரசன் - கொட்டை. இது தாமரைப் பூவணி; (பதுமவியூகம்) பவித்திர தும்பி - குலனும் குணமும் தூயனென்பது தோன்ற, 'பவித்திரத் தும்பி' என்றார்.
வந்த சீவகனை நோக்கி அசனி வேகத்தின்மே லிருந்த கட்டியங்காரன் கூறல்
நல்வினை யுடைய நீரார் நஞ்சுணி னமுத மாகும்
இல்லேயே லமுதும் நஞ்சாம்; இன்னதால் வினையி னாக்கம்
கொல்வல்யா னிவனை யென்றும் இவன்கொல்லும் என்னை யென்றும்
அல்லன நினைத்தல் செல்லா ரறிவினாற் பெரிய நீரார். 592
592. நீரார் - தன்மையினை யுடையவர். இல்லையேல் - நல்வினையில்லையாயின். வினையின் ஆக்கம் - வினையினா லுண்டாகும் பெருக்கம்; பயன் அல்லன - பொருளல்லாத பேச்சுக்களை.
அகப்படு பொறியினாரை யாக்குவா ரியாவ ரம்மா
மிகப்படு பொறியினாரை வெறியராச் செய்ய லாமோ
நகைக்கதிர் மதியம் வெய்தா நடுங்கச்சுட் டிடுத லுண்டே
பகைக்கதிர்ப் பருதி சந்து மாலியும் பயத்தலுண்டே. 593
593. அகப்படு பொறியினார் - பகைவர் கைப்படும் தீவினையாளர். தீவினை நீக்கி மேம்படுப்பவர். அரியர் - இல்லை. மிகப்படு பொறியினார் - மிக்குள்ள நல்வினைப் பயனை எய்துதற்கு உரியவர். வெறியா – வெற்றுடம் புடையராவார். மதியம் - திங்கள். வெய்தா - விரைவாக. பருதி - ஞாயிறு. ஆலி - ஆலங்கட்டி. பயத்தல் - விளைவித்தல்.
புரிமுத்த மாலைப் பொற்கோல் விளக்கினுள் பெய்த நெய்யும்
திரியுஞ்சென் றற்ற போழ்தே திருச்சுடர் தேம்பி னல்லால்
எரிமொய்த்துப் பெருக லுண்டோ; இருவினை சென்று தேய்ந்தால்
பிரிவுற்றுக் கெடாமற் செல்வம் பற்றியா ரதனை வைப்பார 594
594. புரி - வடம். கோல் - தண்டு. சென்றற்றபோழ்து - எரிந்துபோன பிறகு. தேம்பினல்லால் - தேம்பிக் கிடப்பதொன்று தவிர, தேய்ந்தால் - மாண்டால். பரிவு - ஆதரவு, கெடாமல் - கெடாதபடி, பற்றிவைப் பார் - பிடித்துவைப்பவர்.
இவ்வாறு பேசும் இவற்குச் சினம்பிறத்தல் வேண்டிச் சீவகன் நீ அஞ்சினாய் என்றல்
நல்லொளிப் பவளச் செவ்வாய் நன்மணி யெயிறு கோலி
வில்லிட நக்கு வீரன் "அஞ்சினாய்" என்ன, வேந்தன்
"வெல்வது விதியி னாகும்; வேல்வரி னிமைப்பே னாயிற்
சொல்லிநீ நகவும் பெற்றாய், தோன்றல்மற் றென்னை" யென்றான். 595
595. எயிறு கோலி - பல் வரிசை தோன்றி. வில்லிட நக்கு - ஒளி திகழ நகைத்து. வீரன் - சீவகன். வேந்தன் - கட்டியங்காரன். சொல்லி - அஞ்சினாய் என்ற சொல்லைச் சொல்லி. நகவும் பெற்றாய் - சிரிக்கக் கடவாய். பெற்றாய் கால மயக்கம்.
கட்டியங்காரன் வஞ்சின முரைத்தல்
இல்லாளை யஞ்சி விருந்தின்முகங் கொன்ற நெஞ்சின்
புல்லாள னாக மறந்தோற்பி னெனப்புகைந்து
வில்வா னழுவம் பிளந்திட்டு வெகுண்டு நோக்கிக்
கொல்யானை யுந்திக் குடைமேலுமோர் கோல்தொ டுத்தான். 596
596. இல்லாளையஞ்சி - மனைவிக்கு அஞ்சி. கொன்ற – மகிழ்வியாது விட்ட. புகைந்து - சினந்து. வில்லான் அழுவம் - வில் வீரர் கடல். உந்தி - சீவகன்மேல் கடவி. கோல் - அம்பு.
அவ்வம்புகளைச் சீவகன் அறுத்துக்கெடுத்தல்
தொடுத்தாங்க அம்பு தொடைவாங்கி விடாதமுன்ன
மடுத்தாங்க அம்புஞ் சிலையும் மதனாணு மற்றுக்
கடுத்தாங்கு வீழக் கதிர்வான்பிறை அம்பி னெய்தான்
வடித்தாரை வெள்வேல் வயிரம்மணிப் பூணினானே. 597
597. ஆங்குத் தொடுத்த அம்பு - கட்டியங்காரன் அங்கே தொடுத்த அம்பை. தொடை வாங்கி - அம்பை விசைத்து வாங்கி. மடுத்து- அம்புகளை நிறைத்து. ஆங்க -அசை. கடுத்து - கடுகி. பிறையம்பின்-பிறைபோல வாயினையுடைய அம்பினாலே. வடித்தாரை வேல் -கூரிய நீண்ட வேல். பூணினான் - சீவகன்.
கட்டியங்காரன் சினந்து சீவகன் தேர்மேற் பாய்தல்
அம்புஞ் சிலையு மறுத்தானென் றழன்று பொன்வாள்
வெம்பப் பிடித்து வெகுண்டாங்கவன் தேரின் மேலே
பைம்பொன் முடியான் படப்பாய்ந்திடு கென்று பாய்வான்
செம்பொன் னுலகி னிழிகின்றவொர் தேவ னொத்தான். 598
598. அழன்று - சினம் பொங்கி. வெம்ப - வெம்பும்படி. அவன் - சீவகன். பட - பட்டுக் கிடக்கும்படி. பாய்ந்திடுகு- பாய்ந்திடுவேன். பாய்வான் - பாய்புவனான கட்டியங்காரன். பொன்.. ஒத்தான் - நல்வினை யுலந்து தேவருலகத்திலிருந்து விழுமொரு தேவனையொத்தான்.
கட்டியங்காரன் வீழ்தல்
மொய்வார் குழலார் முலைப்போர்க்கள மாய மார்பிற்
செய்யோன் செழும்பொற் சரம்சென்றன; சென்ற தாவி;
வெய்தா விழியா வெருவத் துவர்வாய் மடியா
மையார் விசும்பின் மதிவீழ்வது போல வீழ்ந்தான். 599
599. முலைப் போர்க்களம் - கொங்கைக்குப் போர்க்களம். செய்யோன் - செய்பவனாகிய சீவகன். சரம் - அம்புகள். வெய்தா விழியா - வெவ்விதாகப் பார்த்து. வெருவ - கண்டோர் அஞ்ச. மடியா - மடித்து. மை - முகில்.
வெற்றிமுரசு முழங்குதல்
கட்டியங் கார னென்னும் கலியர சழிந்தது; ஆங்குப்
பட்டவிப் பகைமை நீங்கிப் படைத்தொழி லொழிக வென்னாக்
கொட்டினார் முரசம்; மள்ளர் ஆர்த்தனர்; குருதிக் கண்ணீர்
விட்டழு தவன்க ணார்வ மண்மகள் நீக்கி னாளே. 600
600. கலியரசு - கலியாகிய அரசு. படைத்தொழில் – போர்த் தொழில். மள்ளர் - வீரர். குருதிக்கண்ணீர் - குருதியாகிய கண்ணீர். மண்மகள் கட்டியங்காரன்பால் ஆர்வம் நீக்கினாள் என்க.
வென்றி யெய்திய சீவகன் நிலை
ஒல்லைநீ ருலக மஞ்ச வொளியுமிழ் பருதி தன்னைக்
கல்லெனக் கடலி னெற்றிக் கவுட்படுத் திட்டு நாகம்
பல்பகல் கழிந்த பின்றைப் பன்மணி நாகந் தன்னை
வல்லைவாய் போழ்ந்து போந்தோர் மழகதிர் நின்ற தொத்தான். 601
601. ஒல்லை - விரைய. பருதி - ஞாயிறு. கடலின் நெற்றி - கடலிடத்தே. கவுட்படுத்திட்டு - விழுங்குவதாலே. நாகம் பல்கலைக் கழித்த பின்பு. பன்மணி நாகந் தன்னை - அதனை. வல்லை - கடுக. போழ்ந்து போந்து - பிளந்து போந்து. நின்றது - நின்ற தன்மையை.
விசயை கண்டு கண் குளிர்தல்.
கோட்டுமீன் குழாத்தின் மள்ள ரீண்டினர்; மன்னர் சூழ்ந்தார்;
மோட்டுமீன் குழாத்தி னெங்குந் தீவிகை மொய்த்த; முத்தம்
ஆட்டுநீர்க் கடலி னார்த்த தணிநகர்; வென்றி மாலை
கேட்டுநீர் நிறைந்து கேடில் விசயைகண் குளிர்ந்த வன்றே. 602
602. கோட்டுமீன் - சுறாமீன். மோட்டு மீன் - விண்மீன். தீவிகை - விளக்கு. முத்தம் ஆட்டு நீர்க்கடலின் - முத்தை அலைக்கின்ற நீர் நிரம்பிய கடல் போல. மாலை - ஒழுங்கு. "அவன் புதல்வரைக் கொன்று பின் அவனைக் கொல்லுதலை ஒழுங்கு என்றார்."
------------------
11. பூமகள் இலம்பகம்
[பூமகள் இலம்பகம்: வென்றி யெய்திய சீவகன் தனக்குரிய இராசமாபுரத்தை யடைந்து, கட்டியங்காரன் உரிமை மகளிர்க்கு வேண்டுவன நல்கினான்; அவனுக்குரியார்க்கு அடைக்கலம் உதவிப் பிற உதவிகளும் புரிந்தான். அரசர்க்குரிய முறைப்படி,
இடம் பலவற்றிலும் இலச்சினையும் காப்புமிட்டுப் போர் வீரர்க்கு ஓய்வு நல்கி இளைப்பாறுவித்தான். பின்பு வேத்தவை யடைந்து நல்லோரையில் சீவகன் அரசு கட்டில் ஏறினான்; கட்டியங்காரனால் துன்புற்றவர்களை இன்புறுவித்து அரசியலை இனிது நடத்தி வருவானாயினன்.]
கட்டியங்காரனையும் அவன் மக்களையும் கொன்று வென்றி யெய்திய சீவகன் தன் பரிசனங்கள் பின்தொடர, மைத்துனவரசர் உடன்வர நகருக்குட் சென்றான். நகர மக்கள் மிக்க சிறப்புடன் அவனை வரவேற்றனர். அக்காலத்தே கட்டியங்காரனுடைய உரிமை மகளிர் அஞ்சி நடுங்கி, புலியைக் கண்ட மான்போல் மருண்டனர். அவனது பட்டத் தரசியும் இறந்துபட்டாள். இச் செய்தியைக் கேவிள்வியுற்றதும் சீவகன், "கட்டியங்காரன் உயிர் போகியதும் என் வெகுளியும் போய்விட்டது; இனி நீவிர் அஞ்சவேண்டா" என்று அம்மகளிரைத் தேற்றினான்.
சீவகன் அம் மகளிர்க்குக் கூறல்
"என்னுங்கட் குள்ள மிலங்கீர்வளை கையினீரே!
மன்னிங்கு வாழ்வு தருதும்அவற் றானும் வாழ்மின்;
பொன்னிங்குக் கொண்டு புறம்போகியும் வாழ்மி"னென்றான்
வின்னுங்க வீங்கு விழுக்கந்தென நீண்ட தோளான். 603
603. உள்ளம் - கருத்து, ஈர் வளை - அரத்தால் அறுக்கப்பட்ட வளை. இலங்கு - விளங்குகின்ற, மன் - அசை. வாழ்வு - வாழ்க்கைக்கு வேண்டியவை. புறம் போகியும் - புறத்தே வேறிடம் சென்றேனும், வில் நுங்க வீங்கி விழுக் கந்து எனத் திரண்ட தோள் - வில்லை வலிக்க வீங்கிச் சிறந்த தூண் போலத் திரண்டு நீண்ட தோள்.
அது கேட்ட மகளிர் தம் பதிசென்று கைம்மை வாழ்க்கை மேற்கொள்ளல்
தீத்தும்மு வேலான் திருவாய்மொழி வான்மு ழக்கம்
வாய்த்தங்குக் கேட்டு மடமஞ்ஞைக் குழாத்தி னேகிக்
காய்த்தெங்கு சூழ்ந்த கரும்பார்தம் பதிகள் புக்கார்
சேய்ச்செந் தவிசு நெருப்பென்றெழுஞ் சீற டியார். 604
604. தீத் தும்மு வேலான் - நெருப்பனலைக் கக்கும் வேலையுடைய சீவகன். மொழியாகிய வான் முழக்கம் என்க. அங்கு வாய்த்துக் கேட்டு - அவ்விடத்தே வாய்மையாகக் கேட்டு. மஞ்ஞைக் குழாம் - மயிற் கூட்டம். சேய்ச் செந்தவிசு - மிகச் சிவந்த தவிசு. எழும் - எழுந்து நீங்கும்.
காதார் குழையுங் கடற்சங் கமும்குங் குமமும்
போதா ரலங்கற் பொறையும் பொறையென்று நீக்கித்
தாதார் குவளைத் தடங்கண்முத் துருட்டி விம்மா
மாதார் மயிலன்னவர் சண்பகச் சாம்ப லொத்தார். 605
605. அலங்கல் - பூமாலை. பொறை - சுமை. முத்துருட்டி - முத்துப்போலக் கண்ணீரை அழுது சொரிந்து. விம்மி - துயர் மிகுந்து. சண் பகச் சாம்பல் - சண்பகத்தின் வாடிய பூ.
இதற்குள் வீரர்கள் அரண்மனையை ஆராய்ந்து தூய்மை செய்து, சீவகற்குப் பள்ளியிடத்தை அணிசெய்து வைத்தனர். சீவகன் பள்ளி புகுவதன் முன் தன் மாமனை வணங்கிப் புண்பட்ட வீரரைப் போற்றுமாறு வேண்டிக் கொண்டான்.
சீவகன் பள்ளி கொள்ளல்
எண்கொண்ட ஞாட்பி னிரும்பேச்சிற் படுத்த மார்பர்
புண்கொண்டு போற்றிப் புறஞ்செய்கெனப் பொற்ப நோக்கிப்
பண்கொண்ட சொல்லார் தொழப்பாம்பணை யண்ணல் போல
மண்கொண்ட வேலா னடிதைவர வைகி னானே. 606
606. எண் கொண்ட குரட்பு - தேவாசுரப் போர். இராமாயணப் போர், பாரதப் போர் என்ற இவற்றோடு வைத்து எண்ணத்தகும் போர். இரும்பு - வேலும் வாளும் பிறவுமாம். எச்சிற்படுத்த - புண்பட்ட. புண் போற்றிக்கொண்டு புறஞ் செய்க - புண்ணை ஆற்றும் வழியை மேற்கொண்டு காப்பீராக. வியங்கோன் வேண்டிக்கோடற் பொருட்டு.
பொற்ப - இனிது. பண்கொண்ட சொல்லார் - மகளிர். பாம்பணையண்ணல் - திருமால். மண்கொண்ட வேல் - மண்ணை வென்றுகொண்ட வேல்.
வீரர் அயரவு யிர்த்தல்
வாள்க ளாலே துகைப்புண்டு வரைபுண் கூர்ந்த போல்வேழம்
நீள்கால் விசைய நேமித்தேர் இமைத்தார் நிலத்திற் காண்கலாத்
தாள்வல் புரவி, பண்ணவிழ்த்த யானை யாவித் தாங்கன்ன
கோள்வா யெஃக மிடம்படுத்த கொழும்புண் மார்ப ரயரவுயிர்த்தார் 607
607. துகைப்புண்டு - தாக்கப்பட்டு. வரை, துகைப்புண்டு புண் கூர்ந்தபோலும் வேழம். நீள்கால் விசைய நேமித் தேர் - நெடுங் காற்றுப் போலும் விசையையுடைய தேர். நேமி - ஆழி. இமைத்தார் நிலத்திற் காண்கலா தான்வல் புரவி - நிலத்திருப்பக் கண்டு கண்ணிமைத்தவர், பின்பு காணமாட்டாத நெடுந் தொலைவு சென்று மறையும் தாள் வன்மையுடைய புரவி. ஆவித்தாங்கு - கொட்டாவி விட்டாற்போல, எஃகம் - வாள்.
சீவகன் கண் துயிறல்
கொழுவாய் விழுப்புண் குரைப்பொலியுங்
கூந்தன் மகளிர் குழைசிதறி
அழுவா ரழுகைக் குரலொலியும்
அதிர்கண் முரசின் முழக்கொலியும்
குழுவாய்ச் சங்கின் குரலொலியுங்
கொலைவல் யானைச் செவிப்புடையும்
எழுவார் யாழு மேத்தொலியு
மிறைவன் கேளாத் துயிலேற்றான். 608
608. விழுப்புண் - துன்பம் தரும் புண். குரைப்பொலி -காற்றைப் புறப்படவிடும் ஒலி. அதிர் கண் முரசு - அதிர்கின்ற கண்ணையுடைய முரசு. செவிப்புடை- செவியினது அசைப்பொலி. இறைவன் - சீவகன். கேளா - கேட்டு, பொழுது விடிந்தது. சீவகன் தம்பியும் தோழரும் கோவிந்தராசனும் நகரத்தவரும் வந்து கோயிலுள் நிறைந்தனர். சிறிது போதில், வெள்ளி மலையில் வாழும் கலுழ வேகனொழிய விஞ்சையர் பலரும் வந்து ஈண்டினர்.
சீவகற்குத் திருமுடி சூட்டுதற்கு அமைச்சர் சூழநின்ற அனைவரும் தகுவன செய்தல்
எண்ண மென்னினி யெழில்முடி யணிவது துணிமின்
கண்ண னாரொடு கடிகையும் வருகென வரலும்
பண்ணி னார்முடி பழிச்சிய மணிபொனிற் குயிற்றி
அண்ண லாய்கதி ரலம்வரப் புலமகள் நகவே. 609
609. கண்ணனார் -புரோகிதர். கடிகை -நன்னாழிகை யறிந்து கூறும் கணக்கர். வருக என - வருவார்களாக என அழைப்ப. பழிச்சிய- புகழப்பட்ட. அண்ணல் - தலைமை. அலம்வர - விளங்க. புல மகள் நக- நாமகள் மகிழ. "முடியமைத்தற்குரிய நூலெல்லாம் முற்ற முடித்தலின் நாமகள் மகிழ என்றார்."
சுதஞ்சணன் வருதல்
விரியு மாலையன் விளங்கொளி முடியினன் துளங்கித்
திருவில் மால்வரைக் குலவிய தனையதோர் தேந்தார்
அருவி போல்வதோ ராரமு மார்பிடைத் துயல
எரியும் வார்குழை யிமையவ னொருவன்வந் திழிந்தான். 610
610. வானவில் மலையின் குறுக்கே கிடந்தாற் போலத் தேன் சொரியுந் தார் மார்பிடைக் கிடந்தது என்க. அருவி –அம்மலையிடத்து அருவி. துயல - அசைய. எரியும் -ஒளி வீசும். ஒருவன் -ஒப்பற்ற சுதஞ்சணன். துளங்கி - அசைந்து. பின்னர், அவனுடைய தேவியர் பலரும் வந்து சேர்ந்தனர்; விஞ்சையர் ஆடவரும் பெண்டிருமாய் மிகப் பலர் வந்து நகரத்தை யடைந்தனர். நகர் முழுவதும் பேரணி திகழ்ந்தது.
சுதஞ்சணன் சீவகற்கு முடி சூட்டுதல்
வெருவி மாநகர் மாந்தர்கள் வியந்துகை விதிர்ப்பப்
பருதி போல்வன பாற்கட னூற்றெட்டுக் குடத்தாற்
பொருவில் பூமழை பொன்மழை யொடுசொரிந் தாட்டி
எரிபொ னீண்முடி கவித்தனன் பவித்திரற் றொழுதே. 611
611.வெருவிக் கை விதிர்ப்ப - அஞ்சிக் கை விதிர்க்கும்படி. சொரிந்து - சொரியா நிற்க. பருதி போல்வனவாகிய குடம். பூமழை சொரிய. குடத்தால் பாற்கடலில் முகந்து வந்து ஆட்டி, விதிர்க்கும்படி, தொழுது முடி கவித்தனன் என்க. பவித்திரன் - சீவகன். தனக்கு ஆசிரியனாதலின், தேவன் தொழுதான்.
சுதஞ்சணன் விடைபெற்றுப் போதல்
திருவ மா மணிக் காம்பொடு திரள்வடந் திளைக்கும்
உருவ வெண்மதி யிதுவென வெண்குடை யோங்கிப்
பரவை மாநில மளித்தது; களிக்கயல் மழைக்கண்
பொருவில் பூமகட் புணர்ந்தனன்; இமையவ னெழுந்தான். 612
612. திருவமாமணி - அழகிய மணி. அ - அசை. காம்பும் வடமும் திளைக்கும் மதி - இல்பொருளுவமை. குடை- கொற்றக் குடை. பரவை - பரந்த. பொருவில் பூமகள் - ஒப்பில்லாத நிலமகளை. இமையவன் - சுதஞ்சணன்.
முடி சூடிக்கொண்ட சீவகவேந்தன் திருநிலமிதித்தல் வேண்டித் திருவுலா வருதல்.
மின்னுங் கடற்றிரையின் மாமணிக்கை
வெண்கவரி விரிந்து வீசப்
பொன்னங் குடைநிழற்றப் பொன்மயமாம்
உழைக்கலங்கள் பொலிந்து தோன்ற
மன்னர் முடியிறைஞ்சி மாமணியங்
கழலேந்தி அடியீ டேத்தச்
சின்ன மலர்க்கோதைத் தீஞ்சொலார்
போற்றிசைப்பத் திருமால் போந்தான். 613
613. கடல் திரையின் - கடலின் அலைபோல. நிழற்ற - நிழலைச் செய்ய. பொன்னங் குடை- உலாவுக்குரிய குடை. உழைக்கலம் – அரசர் பக்கத்தே இருக்கும் மங்கலங்கள். அடியீடு - அடியிடுதல். "அடுத்து இரண்டு பவனி அரசர்க் காகாமையின். "கல்யாணத்திற்குப் பின்பு பவனி கூறுவார். ஈண்டு நன்னில மிதித்து மண்டபத்தே புகுந்தமை தோன்ற அடியீடேத்த" என்றார். சின்ன மலர் - விடுபூ. "காத்தற் றொழிலாலும் வடிவாலும் திருமாலென்றே கூறினார்."
சீவகன் அறியனைக்கண் அமர்ந்திருத்தல்
பைங்கண் உளையெருத்தின் பன்மணி
வாளெயிற்றுப் பவள நாவிற்
சிங்கா சனத்தின்மேல், சிங்கம்போல்
தேர்மன்னர் முடிகள் சூழ,
மங்குல் மணிநிற வண்ணன்போல்,
வார்குழைகள் திருவில் வீசச்
செங்கட் கமழ்பைந்தார்ச் செஞ்சுடர்போல்
தேர்மன்ன னிருந்தா னன்றே. 614
614. உளை - பிடரி மயிர். மங்குல் மணி - நீலமணி. செஞ்சுடர் - ஞாயிறு. சீவகன் சிங்காசனத்தின்மேல், மன்னர் முடிகள் சூழ. வண்ணன் போல் *குழையில் வீச, செஞ்சுடர்போல் இருந்தான் என்க. "மங்குல் - திசை: எனவே, தந்தையைப்போல் இருந்தான் என்றார்."
வேந்தன் திருவுள்ளத்தே குறித்துரைத்த வண்ணம் நகர்க்கண் முரசறைவித்தல்
"ஒன்றுடைப் பதினை யாண்டக்
குறுகட னிறைவன் விட்டான்;
இன்றுளீ ருலகத் தென்று
முடனுளீ ராகி வாழ்மின்;
பொன்றுக பசியும் நோயும்
பொருந்தலில் பகையு" மென்ன
மன்றல மறுகு தோறு
மணிமுர சார்த்த தன்றே. 615
615. ஒன்றுடைப் பதினையாண்டு - பதினாறு யாண்டு. விட்டான் - சிறையின்றி விட்டான். இன்றேபோல் என்றும் செல்வ நலமுடையீராய் வாழ்மின். பொன்றுக - இல்லையாகுக. மன்றல மறுகு - மன்றல் விளங்கும் தெரு. அன்றே - அப்பொழுது.
--------------
12. இலக்கணையார் இலம்பகம்
(இலக்கணையார் இலம்பகம்: அரசுகலட்டிலேறி ஆட்சி புரியலுற்ற சீவகன் பதுமை முதலிய தன் மனைவியரை வருவித்து அவர்கட்குத் தலையளி செய்தான். கோவிந்தராசன் தன் மகள் இலக்கணையைச் சீவகற்கு மணம் செய்விக்கக் கருதி நல்லோரை தெளிந்து அதன்கண் திருமணம் செய்வித்தான். மணம் முடிந்ததும் சீவகன் ஊருலாப் போந்து ஸ்ரீ கோயிலையடைந்து அருகனை வணங்கி அக்கடவுட்கு நூறு ஊர்களை இறையிலியாகத் தந்து தன் மாளிகை யடைந்து தன்னை வளர்த்த கந்துக்கடன் தாயான சுநந்தை முதலியோர்க்கு அரசுரிமை வழங்கிச் சிறப்பித்தான். நந்தட்டனை இளவரசனாக்கி இவ்வண்ணமே ஏனைத் தோழன் மார்க்கும் தம்பியர்க்கும் அவரவற்கேற்ற வரிசையும் சிறப்பும் நன்கு வழங்கினன். தன்னை அளித்து உதவிய சுதஞ்சணனுக்குக் கோயிலெடுத்து அவன் வரலாற்றை நாடகமாக எழுதி இன்புற்றான். அவன் இளமைப்போதில் விளையாடற்கு நிழல் பயந்த ஆலமரத்திற்கும் மேடையும் ஏனைய சிறப்பும் செய்தான் எனின், வேறு கூறுவது மிகையாம்)
அரசு கட்டிலேறி இனிதிருந்த சீவகன் தம்பியரையும் தோழரையும் நோக்கி, "நீவிர் விரைந்து சென்று என் ஏனை மனைவியரைக் கொண்டு வருக" எனப் பணித்தனன். அவரும் அவ்வண்ணமே சென்று அவர்களைக் கொணர்ந்தனர்.
மனைவிமார் வந்து அவன் அடிவீழ்ந்து வணங்குதல்
அன்று சூடிய மாலைய ராடிய சாந்தர்
பொன்றி வாடிய மேனியர், பொன்நிறை சுருங்கார்:
சென்று காதலன் திருவிரி மரைமல ரடிமேல்
ஒன்றி வீழ்ந்தனர் குவளைக்கண் உவகைமுத் துகவே. 616
616 அன்று - சீவகன் பிரிந்த அன்று. பொன்றி - கெட்டு. பொன் நிறை - பொன்போல் பெறுதற்கரிய நிறையில் கெடாதவர்.திருவிரி மரைமலர் - அழகு திகழும் தாமரைப் பூ. உவகை முத்து -உவகைக் கண்ணீர்.
சீவகன் அவர்களது பிரிவுத்துயர் நீக்கி இன்புறக் கூடி யிருத்தல்
நஞ்ச மேய்ந்திளங் களிக்கயன் மதர்ப்பன போல
அஞ்சி வாட்கண்கள் மதர்த்தன அலர்ந்துடன் பிறழப்
பஞ்சு சூழ்மணி மேகலை பரிந்தவை சொரிய
வஞ்சி நுண்ணிடை கவின்பெற வைகினன் மாதோ. 617
617. மதர்ப்பன போல - செருக்குவனவற்றைப்போல. மதர்த்தன அலர்ந்து - செருக்கி மலர்ந்து. பரிந்தவை - அற்று. சொரிய - உதிர.
இவ்வாறு சின்னாட்கள் கழிந்ததும், சீவகற்கும் இலக்கணைக்கும் திருமணம் நிகழ்த்தல் வேண்டி பெருங்கணி போந்து, இற்றை ஏழாம்நாள் மணவினை யாற்றுதல் வேண்டுமெனக் கணித்துரைத்தான். உடனே இச்செய்தி நகரமாக்கட்கு முரசு முழக்கித் தெரிவிக்கப்பெற்றது. ஏனை நாட்டவர்க்கும் மணவோலை செல்வதாயிற்று. நகரமெங்கும் பெருவிழா பொலிவுற்றது.
ஆறுநாள் கழிதல்
முரச மார்ந்தபின் மூவிரு நாள்கள்போய்
விரைவொ டெங்கணும் வெள்வளை விம்மின;
புரையில் பொன்மணி யாழ்குழல் தண்ணுமை
அரவ வானி னதிர்ந்த அணிமுழா. 618
618. ஆர்ந்த - ஆர்த்த. போய் - போக. வளை - சங்கு. புரையில் - குற்றமில்லாத. அரவவான் -முழங்குதலையுடைய முகில்.
விழாவணி விளங்கும் நகரச் சிறப்பு
சுந்த ரத்துகள் பூந்துகள் பொற்றுகள்
அந்த ரத்தெழு மின்புகை யாலரோ
இந்தி ரன்னகர் சாறயர்ந் திவ்வுழி
வந்தி ருந்தது போன்மலி வுற்றதே. 619
619. சுந்தரத் துகள் -செந்தூரத் தூள். அந்தரத்து - வானத்தே. சாறு - திருவிழா. இவ் வழி -ஈண்ட. மலிவுற்றது - மிகுதியுற்றது.
மணவணி திகழும் கோயிற் சிறப்பு
கொடியெழுந் தலமருங் கோயில் வாயில்கள்
மடலெழுந் தலமருங் கமுகும் வாழையும்
மடியிருந் துகிலுடை மாக்க ணாடியும்
புடைதிரள் பூரண குடமும் பூத்தவே. 620
620 அலமரும் - அசையும். எழுந்து அலமரும் - விரிந்து அசையும். மடியிருந் துகில் - மடித்த துகில். புடை திரள் - பக்கம் திரண்ட. பூத்த- பொலிந்தன.
கடிமலர் மங்கையர் காய்பொற் கிண்கிணி
உடைமணி பொற்சிலம் பொலிக்குங் கோயிலுள்
குடைநிழன் மன்னர்தங் கோதைத் தாதுவேய்ந்து
அடிநிலம் பெறாததோர் செல்வ மார்ந்ததே. 621
621 மணியுடை பொற் சிலம்பு - மணியைப் பரலாகவுடைய பொன்னாலான சிலம்பு. தாது - தேன். அடி நிலம் பெறாத – மங்கையர் அடி நிலத்தைத் தீண்டாத.
மணவினை தொடங்குதல்
மங்கலப் பெருங்கணி வகுத்த வோரையான்
மங்கல மன்னவன் வாழ்த்த வேறலும்
மங்கல வச்சுதம் தெளித்து வாய்மொழி
மங்கலக் கருவிமுன் னுறுத்தி வாழ்த்தினார். 622
622 மங்கலப் பெருங் கணி -மங்கலநாளைக் கூறும் பெரிய கணி; சோதிடர். மங்கல அச்சுதம் - மங்கலமாகிய அறுகும் அரிசியும் முதலாயின. வாய்மொழி - அபிமந்திரித்த. கருவி - மயிர் குறை கருவி.
இலக்கணையாருக்கு மயிர்வினைத் திருமணம் செய்தல்
பாற்கடன் முளைத்தோர் பவளப் பூங்கொடி
போற்சுடர்ந் திலங்கொளிப் பொன்செய் கோதையை
நாட்கடி மயிர்வினை நன்பொற் றாமரைப்
பூக்கடி கோயிலாள் புலம்ப வாக்கினார். 623
623 சுடர்ந்து இலங்கு - விட்டு விளங்குகின்ற. கோதை - இலக்கணை. மயிர் வினை நாட் கடி -மயிரொதுக்கும் திருமணம். பூக்கடி கோயிலாள் - பூவாகிய சிறந்த கோயிலையுடைய திருமகள். புலம்ப – இவட்கு ஒவ்வேமென்று கருதி வருந்த. ஆக்கினார் - செய்தனர்.
சீவகனை நெய் முழுக்காட்டுதல்
இழைத்தபொன் னகரின் வெள்ளி யிடுமணை மன்ன ரேத்தக்
குழைப்பொலிந் திலங்கு காதிற் கொற்றவ னிருந்த பின்றை
மழைக்கவின் றெழுந்த வார்கொண் மணிநிற வறுகை நெய்தோய்த்
தெழுற்குழை திருவில் வீசமகளிர்நெய் யேற்று கின்றார். 624
624. நகர் - அரண்மனை. வெள்ளியிடு மணை - வெள்ளியால் செய்த மணை. கொற்றவன் - சீவகன். மழைக் கவின்று எழுந்த -மழையால் கிளைத்துத் தழைத்த. அறுகை - அறுகம் புல்.
நெய்யேற்றியமகளிர் வாழ்த்துதல்
"மின்னுமிழ் வைரக் கோட்டு விளங்கொளி இமய மென்னும்
பொன்னெடுங் குன்றம் போலப் பூமிமேல் நிலவி வையம்
நின்னடி நிழலின் வைகநேமியஞ் செல்வ னாகி
மன்னுவாய் திருவோ" டென்று வாழ்த்திநெய் யேற்றி னாரே. 625
625. நேமியம் செல்வனாகி - சக்கரவாள சக்கரவர்த்தியாய். அடி நிழல் - ஆட்சியின் கீழ். திருவோடு - இலக்கணையோடு.
இவ்வாறு சீவகனைத் திருமுழுக்காட்டியபின், மங்கல மணவணி யணிந்து சிறப்பித்தல்
அறுகு வெண்மல ரளாய வாசநீர்
இறைவன் சேவடி கழுவி யேந்திய
மறுவின் மங்கலங் காட்டி னார்மணக்
குறைவில் கைவினைக் கோல மார்ந்ததே. 626
626. அறுகு வெண்மலர் அளாய - அறுகையும் வெள்ளிய மலரையும் கலந்த. மறுவில் - குற்றமில்லாத. கைவினைக் கோலம் – புனைதலமைந்த மணக்கோலம்.
இவ்வண்ணமே மகளிர் யானைமேற் கொணர்ந்த தூநீரும் நறுநெய்யும் கொண்டு இலக்கணையை நெய் முழுக்காட்டினார். மங்கலவணி கொணர்ந்து அழகு திகழ அணிந்து ஒப்பனை செய்தார்.
இலக்கணை வேள்விச் சாலைக்கு வரக்கண்ட வேந்தர் தம்முட் கூறிக் கொள்ளல்
அரத்தக மருளிச் செய்த சீறடி யளிய தம்மாற்
குரற்சிலம் பொலிப்பச் சென்னிக் குஞ்சிமேன் மிதிப்ப நோற்றான்
திருக்குலாய்க் கிடந்த மார்பிற் சீவகன்; நாங்க ளெல்லாம்
தரித்திலந் தவத்தை யென்று தார்மன்ன ரேமுற் றாரே. 627
627. அரத்தகம் - செம்பஞ்சி. மருளி - மருள. கண்டோர் மருள என்க. சிலம்பு குரலெடுத்து ஒலிப்ப. திருக்குலாய்க் கிடந்த மார்பின் சீவகன் - திருமேவி வீற்றிருக்கும் மார்பினையுடைய சீவகன். தரித்திலம் - செய்திலேம். ஏமுற்றார் - மயக்கமுற்றனர்.
இலக்கணை வேள்விச் சாலை யடைதல்
கோவிந்த னென்னும் செம்பொற் குன்றின்மேற் பிறந்து, கூர்வேற்
சீவக னென்னுஞ் செந்நீர்ப் பவளமா கடலுட் பாய்வான்
பூவுந்தி யழுத யாறு பூங்கொடி நுடங்கப் போந்து
தாவிரி வேள்விச் சாலை மடுவினுள் தாழ்ந்த தன்றே. 628
628. செந்நீர் - புதுநீர். பூ உந்தி - பூப்போலும் கொப்பூழ். நுடங்க - அசைய. தாவிரி வேள்வி - கெடாத மணவேள்வி. தாழ்ந்தது- தங்கிற்று. அமுதயாறு குன்றிற் பிறந்து. கடலுட் பாய்வான், பூவுந்தி, கொடி நுடங்கப் போந்து மடுவினுள் சிறிது தங்கிற்று.
வேள்விக்கண் தீயோம்புதல்
தண்டிலத் தகத்திற் சாண்மே லெண்விரற் சமிதை நானான்கு
எண்டிசை யவரு மேத்தத் துடுப்புநெய் சொரித லோடும்
கொண்டழற் கடவுள் பொங்கி வலஞ்சுழன் றெழுந்த தென்ப
தெண்டிரை வேலி யெங்குந் திருவிளை யாட மாதோ. 629
629. சாண்மேல் எண்விரல் - ஒருசாண் எண்விரலகமாகப் பரப்பிய. தண்டிலத்தகத்தில் - இங்கு, அரிசியிலே. சமிதை நானான்கு –சமிதை பதினாறு. துடுப்பு - துடுப்பால். கொண்டு - கைக்கொண்டு. வலமாகச் சுழன்றெழுந்தது, நாட்டில் திருமிக்கு விளையாடும் என்றற்கு அறிகுறி. தெண்டிரை - கடல்.
தீயோம்பியபின் நீரேற்றலும் முறையாதலால் சீவகன் நீரேற்றல்
கரையுடைத் துகிலிற் றோன்றுங் காஞ்சன வட்டின் முந்நீர்த்
திரையிடை வியாழந் தோன்றத் திண்பிணி முழவுஞ் சங்கும்
முரசொடு முழங்கி யார்ப்ப மொய்கொள்வேன் மன்ன ரார்ப்ப
அரசரு ளரச னாய்பொற் கலசநீ ரங்கை யேற்றான். 630
630. காஞ்சனவட்டின் - பொன் வட்டுப் போல. அரசருள் அரசன் - அரசரின் தலைவனான சீவகன். அங்கை - அகங்கை. வியாழன்- பிருகற்பதி.
இலக்கணையின் கைப்பற்றிச் சீவகன் தீ வலம்வந்து கட்டிலேறல்
குளிர்மதி கண்ட நாகங் கோள்விடுக் கின்ற தேபோல்
தளிர்புரை கோதை மாதர் தாமரை முகத்தைச் சேர்ந்த
ஒளிர்வளைக் கையைச் செல்வன் விடுத்தவ ளிடக்கை பற்றி
வளரெரி வலங்கொண் டாய்பொற் கட்டில்தா னேறி னானே. 631
631. கோள் விடுக்கின்றதே போல் - கொண்டதை விடுக்கின்றது போல. தளிர் புரை கை - தளிர்போலும் கை. தாமரை முகத்தைச் சேர்ந்த கை. ஒளிர்வளை - விளங்குகின்ற வளை. விடுத்து - விடுக்க. கட்டில் - "விவாகம்பண்ணி யெழுந்திருந்து சாந்தியான கூத்தும் ஆலத்தியும் கண்டு " அருந்ததி காணப்போமளவும் இருக்கும் கட்டில் - இஃது
அரசியல்"
அருந்ததி காட்டி மணவறைபுக்கு மணவமளி ஏறியிருத்தல்
விளங்கொளி விசும்பிற் பூத்த அருந்ததி காட்டி யான்பால்
வளங்கொளப் பூத்த கோல மலரடி கழீஇய பின்றை
இளங்கதிர்க் கலத்தி னேந்த அயினிகண் டமர்ந்தி ருந்தான்;
துளங்கெயிற் றுழுவை தொல்சீர்த் தோகையோ டிருந்த தொத்தான். 632
632 ஆன்பாலால் திருவடியைக் கழுவிய பின்பு. அயினி- பாலடிசில். துளங்கெயிற்றுழுவை - விளங்குகின்ற பற்களையடைய பலி. தோகை - மயில். புலிமயிலோ டிருந்ததுபோல இருந்தான் என்பது.
நாலாம் நாள் சீவகனுக்கு மயிர்வினைத் திருமணம் செய்தல் சீவகன் இலக்கணையோடு இருத்தல்
பானுரையி னொய்யவணைப் பைங்கதிர்கள் சிந்தித்
தானிரவி திங்களொடு சார்ந்திருந்த தேபோல்
வேனிரைசெய் கண்ணியொடு மெல்லென விருந்தான்
வானுயர வோங்குகுடை மன்னர்பெரு மானே. 633
633 பால்நுரையின் நொய்ய அணை - பால்நுரைபோல் நொய்தாகிய அணை. இரவி கதிர்களைச் சிந்தித் திங்களோடு இருந்தது போல. வேல் நிரை செய்கண்ணி - வேலை நிரையாக வைத்தது போலும் கண்ணையுடைய இலக்கணை.
அழகு திகழும் மணக் கூடத்தே சீவகன் இலக்கணையோடிருப்ப மங்கல மகளிரும் மங்கலம் கொண்டு தென் மேற்கிலும் தென்கிழக்கிலும் நின்றனர்.
நாவிதனது பழம் பிறப்பு
குளநென் முன்றிற் கனிதேன்சொரி சோலைக் குளிர்மணி
வளமை மல்கி யெரியம்மட மந்திகை காய்த்துவான்
இளமை யாடி யிருக்கும்வனத் தீர்ஞ்சடை மாமுனி
கிளையை நீங்கிக் கிளர்சாபத்தின் நாவித னாயினான். 634
634 குளநெல் முன்றில் - குளநெல் உணங்கும் முற்றம். சோலை- சோலையிடத்தே. மணி எரிய - மணி ஒளி செய்ய. கை காய்த்து –தீயென்று கருதிக் குளிர் காய்வதற்கு. இளமையாடி - விளையாடி. சாபத்தின் - சாபத்தால். கிளை - முனிவர் சுற்றம்.
அவனது சிறப்பு
ஆய்ந்த கேள்வி யவன்கான் முளையாய்த் தோன்றினான்
தோய்ந்த கேள்வித் துறைபோயலங் காரமும் தோற்றினான்.
வேந்தன் றன்னாற் களிற்றூர்தி சிறப்பொடு மேயினான்
வாய்ந்த கோல முடையான் மஞ்சிகர்க் கேறனான். 635
635. கேள்வியவன் - கேள்வியினையுடைய அம்முனிவன். கான் முனை - பிள்ளை. தோய்ந்த கேள்வி -பலவாய்த் தொக்க நூற்கேள்வி. துறைபோய் - முற்றக் கற்று. அலங்காரமும் தோன்றினான் –அலங்கார மென்னும் ஒரு நூலையும் தோற்றுவித்தான். மேயினான் - பெற்றான். கோலம் -அழகு.
அந்த நாவிதன் முதற்கண், ஒரு நங்கை நீர்வார்க்க அதனால் தன் வாய்பூசி அரசனை வணங்கினான். பின்பும் அறுகும் அரிசியும் கொண்டு அரசன் திருவடியிலும் திருமுடியிலும் தெளித்து வாழ்த்தி, இலக்கணை முடியிலும் தெளித்தான்.
மயிரொதுக்குதல்
வாக்கினிற் செய்த பொன்வரண் மங்கல விதியி னேந்தி
ஆக்கிய மூர்த்தத் தண்ணல் வலக்கவு ளுறுத்தி யார்ந்த
தேக்கணின் னகிலி னாவி தேக்கிடுங் குழலி னானை
நோக்கல னுனித்து நொய்தா இடககவு ளுறுத்தி னானே. 636
636. வாக்கினில் செய்த - நூல்விதியோடு வாக்குண்டாக. பொன்வாள் - பொன்னாற் செய்த கத்தி. ஆக்கிய மூர்த்தத்து – பொருந்தக் குறித்த நாழிகையில். வலக்கவுன் - வலக்கன்னம். தேக்கண்...குழலினான் - நெய்யை இடத்தேயுடைய அகிற்புகையை யுண்டு தேக்கிடும் குழலையுடையான். நுனித்து - குறித்து. நொய்தா நோக்கி - சிறிதே நோக்கி.
சீவகற்கு மயிரொதுக்கு மணம் முடித்தல்
ஆய்ந்தபொன் வானை நீக்கியவிர்மதிப் பாகக் கன்மேற்
காய்ந்தவான் கலப்பத் தேய்த்துப் பூநிறீஇக் காமர் பொன்ஞாண்
தோய்ந்ததன் குறங்கில் வைத்துத் துகிலினிற் றுடைத்துத் தூய்தா
வாய்ந்தகைப் புரட்டி மாதோ மருடகப் பற்றி னானே. 637
637. காய்ந்த வாள் - இரும்பும் எஃகும் ஒரு நீர்மையாகக் காய்ந்த மயிர்க் கத்தி. *அவிர்மதிப் பாகக் கல் -விளங்குகின்ற திங்களின் பிளவு போலும் கல். பூ நிறீஇ - கத்திவாயில் உள்ள பூவைத் தட்டி. குறங்கு- துடை. துகில் -துணி. மருள் தக-- உற்றது தெரியாதபடி.
சீவகன் முக விளக்கம்
ஏற்றி யுமிழித் துமிடை யொற்றியும்
போற்றிச் சந்தனம் பூசுகின் றானெனக்
கூற்ற னான்முகக் கோலஞ்செய் தான்கடற்
றோற்றுஞ் செஞ்சுடர் போலச் சுடர்ந்ததே. 638
638. பூசுகின்றான் என - பூசுகின்றதுபோல. ஏற்றியும்,...சுற்றியும்- ஏற ஒதுக்கியும் இழிய ஒதுக்கியும் நடுவு திறத்தும். கோலம் - அழகு. சுடர்ந்தது - விளங்கிற்று.
இலக்கணை புருவமொதுக்கப் படுதல்
உருவச் செங்கய லொண்ணிறப் புள்வெரீஇ
இரிய லுற்றன போன்றிணைக் கண்மலர்
வெருவி யோட விசும்பிற் குலாவிய
திருவிற் போற்புரு வங்கள் திருத்தினான். 639
639. ஒண்ணிறப் புள் - ஒள்ளிய நிறம் படைத்த சிச்சிலிப் பறவைக்கு. வெரீஇ - அஞ்சி. இரியலுற்றன போன்று – நீங்கியோடுவது போன்று. கண் வெருவி யோடும்படியாக. திருவில் - வானவில் "கண்கள் அஞ்சிப் பார்க்க விசும்பில் வளைத்த" வில்.
நாவிதன் போதல்
ஆர மின்னவ ருங்குயர்ந் தான்களைந்து
ஒரு மொண்டிறற் கத்திரி கைத்தொழில்
நீரிற் செய்தடி யேத்துபு நீங்கினான்
தாரன் மாலைத் தயங்கிணர்க் கண்ணியான். 640
640. குயம் - மயிர் குறை கத்தி. கத்திரிகைத் தொழில் - கத்திரிக்கும் தொழில். நீரில் - நீர்மையுடன். ஏத்துபு - வாழ்த்தி. தாரும் மாலையும் கண்ணியுமுடையான். தயங்கிணர் - விளங்குகின்ற பூங்கொத்து.
சீவகன் இலக்கணையோடு கூடி இனிது உறைகையில் ஊடலொன்று நிகழ்கின்றது.
இலக்கணை வெகுளுதல்
மாதர்தன் வனப்பு நோக்கி மகிழ்ந்துகண் ணிமைத்தல் செல்லான்
காதலித் திருப்பக் கண்கள் கரிந்துநீர் வரக்கண் "டம்ம
பேதைமை பிறரை யுள்ளி யழுபவர்ச் சேர்த" லென்றாள்;
வேதனை பெருகி வேற்கண் தீயுமிழ்ந் திட்ட வன்றே. 641
641. மாதர் -இலக்கணை. இமைத்தல் செல்லான் -இமையானாய். உள்ளி- நினைந்து. சேர்தல் பேதைமை என்றாள். வேதனை பெருகி - வருத்தம் மிகுந்ததனால். தீயுமிழ்ந்திட்ட - வெகுளியால் சிவந்தன.
அதுகண்டு ஆற்றாது வணங்கிக் கிடந்த சீவகனைக் கண்ட
அவளது கண்களில் நீர் உருகுதல்
"இற்றதென் னாவி" யென்னா எரிமணி யிமைக்கும் பஞ்சிற்
சிற்றடிப் போது புல்லித் திருமகன் கிடப்பச், சேந்து
பொற்றதா மரையிற் போந்து கருமுத்தம் பொழிய வேபோல்
உற்றுமை கலந்து கண்கள் வெம்பனி யுகுத்த வன்றே. 642
642. இற்றது - அழிந்தது. என்னா -என்று. இமைக்கும் -விளங்கும். பஞ்சின் சிற்றடி-செம்பஞ்சி யூட்டிய சிறிய அடி. திருமகன் -திருவுக்கு மகனாகிய காமனையொப்பவன்; சீவகன். சேந்து பொற்ற-சிவந்து பொற்புடைத்தாகிய . தாமரையினின்றும் புறப்பட்டுச் சிறிது கரிய நீர்மையுடைய முத்தம் சிந்துவனபோல கண்கள் மை கலந்து வெய்யவாகிய பனியை யுகுத்தன. ஊடல் முழுதும் தீராமையின் வெம்பனியாயிற்று.
சீவகன் வண்டுகளை இரந்து நிற்றல்
"கொண்டபூ ணின்னைச் சார்ந்து குலாய்க்கொழுந் தீன்ற கொம்பே
கண்டுகண் கரிந்து நீராய் உகுவது காக்க லாமே?
பண்டுயான் செய்த பாவப் பயத்தையார்க் குரைப்பன்; தேன்காள்!
வண்டுகாள்! வருடி நங்கை வரந்தர மொழிமின்" என்றான் 643
643. கொண்ட பூண் - நீ அணிந்துகொண்டுள்ள பூணும். சார்ந்து -அருள் வடிவாகிய நின்னைச் சார்ந்ததனால். குலாய் -தழைத்து. கொழுந்து ஈன்ற -கொழுந்தையீனுவதற்குக் காரணமான. கண்டு- நின்னழகை விடாமல் பார்த்ததனால். கரக்கலாமே -மறைக்கமுடியாதன்றோ. பாவப் பயம் - தீவினையின் விளைவு. வருடி - இந் நங்கையின் காலை வருடி. வரந்தர - வரந் தருமாறு.
பூவையும் கிளியும் தம்முட் கூறிக்கொள்ளல்
பூவையும் கிளியுங் கேட்டுப் புழைமுகம் வைத்து நோக்கிக்
"காவலன் மடந்தை யுள்ளம் கற்கொலோ இரும்பு கொல்லோ?
சாவம்யாம் உருகி; யொன்றும் தவறிலன்; அருளா, நங்கை,
பாவையென் றிரத்து" மென்ற பறவைகள் தம்முள் தாமே. 644
644. புழை - கூட்டின் வாயிலில். காவலன் - கோவிந்தராசன். யாம் உருகிச் சாவம் - நம் சேவல் நம்மை இவ்வாறு ஊடல் தீர்க்கலுறின் நாம் மனமுருகி இறந்துபடுவேம். ஒன்றும் தவறிலன் - சிறிதும் தவறு இலன். இரத்தும் - இரந்து வேண்டுவேம்.
பூவை கிளியை வாயடக்குதல்
பெற்றகூ ழுண்டு நாளும் பிணியுழந் திருத்தும்; பேதாய்!
முற்றிமை சொல்லி னங்கை மூன்றுநா ளடிசில் காட்டாள்:
பொற்றொடி தத்தை யீரே பொத்துநும் வாயை யென்றே
கற்பித்தார் பூவை யார்தம் காரணக் கிளவி தம்மால். 645
645. கூழ் - சோறு. பிணியுழந்து இருத்தும் – பிணிப்புண்டு வருந்தியிருப்பேம். முற்றிமை - அறிவுரை. பொற்றொடி நங்கை எனக் கூட்டுக. தத்தையீரே - கிளியாரே. பொத்து - மூடிக்கொள்மின். காரணக் கிளவி - காரணத்தோடு கூட்டிச் சொல்லும் சொல்.
அடங்காது கிளி கூறக் கேட்டுச் சீவகன் அவன் நலம் பாராட்டல்
"ஈன்றதா யானு மாக இதனைக்கண் டுயிரை வாழேன்;
நான்றியான் சாவ" லென்றே நலக்கிளி நூலின் யாப்ப
மான்றவள் மருண்டு நக்காள் வாழிய வரம்பெற் றேனென்று
ஆன்றவ னாரப் புல்லி யணிநலம் பரவி னானே. 646
646. இதனை - இவன் இறந்துபட்டால் இவட்குஎதாம் பழியை. யான் - இவட்குப் பிள்ளையாகிய யான். நான்று - தூக்கிட்டுக்கொண்டு. நலம் - நற்குணம். நூலின் யாப்ப - நூலாலே தன் கழுத்தைக் கட்டிக் கொள்ள. மான்றவள் - உணர்ப்புவயின் வாராவூடலால் மயங்கி யிருந்த இலக்கணை. மருண்டு - வியந்து. வாழிய - கிளியை வாழ்த்தியது. ஆன்றவன் - கூடற்கமைந்த சீவகன்.
இலக்கணை கூட்டத்துக் கிசைதல்
"பாண்குலாய்ப் படுக்கல் வேண்டா; பைங்கிளி பூவை யென்னு
மாண்பிலா தாரை வைத்தா ரென்னுறார்" என்று நக்கு
நாண்குலாய்க் கிடந்த நங்கை நகைமுக வமுத மீந்தாள்;
பூண்குலாய்க் கிடந்த மார்பிற் பொன்னெடுங் குன்ற னாற்கே. 647
647.பாண் - பாணன் வாயில் நேர்விக்குந் துறையில் கூறும் சொல். குலாய் - சொல்லி வளைத்து. படுக்கல் - அகப்படுத்தல். வைத்தார் - வளர்த்து வைத்தவர். என் - என்ன இனி வரவு. நகை முக வமுதம் - நகைத்த முகத்திடத்து வாயமுதம். நகை முகம் காட்டி மகிழ்வித்தலுமாம்.
இவ்வாறு இலக்கணையுடன் இன்புற்றிருந்த சீவகன், சூளாமணி யென்னும் பட்டத்து யானையின்மீதேறி நகர வீதிக்கண் திருவுலாச் செய்யலுற்றான். சிற்றரசர் பலர் அவனைப் பின் தொடர்ந்தனர். நால்வகைப் படைகளும் சூழவந்தன. பல்வகை இயங்கள் முழங்கின. தெருக்களிலே மகளிர் கூட்டம் மிகுந்திருந்தது. அவர்களுள் வேட்கை பிறவாதாரும், பிறக்கின்றவரும், பிறந்தவரும் என மூவகைச் செவ்வியை யுடையார் இருந்தனர். இவர் பரத்தைய ரினத்தைச் சேர்ந்தவராவர்.
சீவகனைக் கண்ட மகளிருள் வேட்கை பிறவாத பேதை மகளிரின் நிலைமை கூறல்
வெள்ளைமை கலந்த நோக்கிற் கிண்கிணி மிழற்றி யார்ப்பப்
பிள்ளைமை காதல் கூரப் பிறழ்ந்துபொற் றோடு வீழத்
துள்ளுபு செலீஇய தோற்றந் தொடுகழற் காமன் காமத்து
உள்ளுயி ரறியப் பெண்ணாய்ப் பிறந்ததோர் தோற்ற மொத்தார். 648
648. வெள்ளை மை கலந்த நோக்கின் - உள்ளத்தே கள்ளமில்லாத நோக்கத்தோடு. மிழற்றி யார்ப்ப - ஒலிக்க. பிள்ளைமை - பிள்ளைத் தன்மையால். காதல் கூர - காண்டற்குக் காதல் மிக. துள்ளுபு செலீஇய - துள்ளிச் சென்ற. காமத்து உள்ளுயிர் அறிய - காமத்தின் இன்பத்தை நுகர்ந்தறியும் பொருட்டு. நோக்கின் செலீஇய தோற்றம் என இயைக்க.
வேட்கை பிறக்கின்ற மகளிர் நிலைமை
அணிநிலா வீசு மாலை யரங்குபுல் லென்னப் போகித்
துணிநிலா வீசு மாலைப் பிறைநுதல் தோழி சேர்ந்து
மணிநிலா வீசு மாலை மங்கையர் மயங்கி நின்றார்.
பணிநிலா வீசும் பைம்பொற் கொடிமணி மலர்ந்த தொத்தார். 649
649. அணிநிலா வீசும் மாலை யரங்கு- அழகிய ஒளி வீசும் பல மாலைகளை நாற்றிப் புனைந்த ஆடரங்கு. புல்லென்ன -பொலிவிழப்ப. துணி நிலா வீசும் பிறை - தெளிந்த ஒளிவீசும் பிறைத்திங்கள். மாலையில் தோன்றலின். மாலைப்பிறை யென்றார். பிறைபோலும் நெற்றி, மயங்கி- வேட்கையில் கலங்கி. நிலா வீசும் பைம்பொன் பனி கொடி ஒளி - விளங்கும் பசிய பொன்னாலியன்ற பரந்த கொடி; தாழ்ந்த கொடியுமாம்.
பொற்கொடி மணியைப் பூத்ததை நிகர்த்தனர்.
வேட்கை பிறந்த மகளிர் நிலைமை
குறையணி கொண்ட வாறே கோதைகால் தொடர வோடிச்
சிறையழி செம்பொ னுந்தித்தேன்பொழிந் தொழுக வேந்திப்
பறையிசை வண்டு பாடப் பாகமே மறைய நின்றார்
பிறையணி கொண்ட வண்ணல் பெண்ணொர்பால் கொண்ட தொத்தார். 650
650 குறையணி கொண்டவாறு - பாதி குறையாகப் பூண் அணிந்த அளவில். கால் தொடா - அடியிலே தம்மில் பிணங்க. சிறையழிதேன் - சிறையழிந்த தேன்,.தேன் உந்தியிலே பொழிந்தொழிக என்க. ஏந்தி -அணியாத மாலையை ஏந்திக் கொண்டு. பறையிசை வண்டு - பறத்தலையுடைய இரைவண்டு. பாதியே யணிந்த நாணத்தால் மறைய நின்றார். அண்ணல் - சிவபெருமான்.
கற்புடை மகளிர் பூமழை தூவி வாழ்த்துதல்
பெண்பெற்ற பொலிசை பெற்றார் பிணையனார் பெரிய யாமும்
கண்பெற்ற பொலிசை பெற்றா மின்றெனக் கரைந்து முந்நீர்
மண்பெற்ற வாயுள் பெற்று மன்னுவாய் மன்ன என்னாப்
புண்பெற்ற வேலி னான்மேல் பூமழை தூவி னாரே. 651
651 பொலிசை - இலாபம். பிணையனார் –மான்பிணைபோலும் வீரமகளும் திருமகளும். பெரிய யாமும் - கற்பினால் பெருமை மிக்க யாங்களும். முந்நீர் மண் பெற்ற ஆயுள் பெற்று - கடலுலகும் மண்ணுலகும் பெற்ற வாழ்நாளைப்பெற்று. என்னாக் கரைந்து- என்று வாயால் வாழ்த்தி. "உப்பும் உலகும் உள்ள அளவும் வாழ்வீர்" என்னும் உலக வழக்கு.
இவ்வாறு நகரத்து மகளிரும் ஆடவரும் நெருங்கித் தெருவில் உலாவரும் சீவகனைப் பாராட்டியும் வாழ்த்தியும் மகிழ்ச்சி மீக்கூர்ந்தனர்.
சீவகன் பெற்றோரை வியத்தல்
கொழித்திரை யோத வேலிக் குமரனைப் பயந்த நங்கை
விழுத்தவ முலக மெல்லாம் விளக்கிநின் றிட்ட தென்பார்;
பிழிப்பொலி கோதை போலாம் பெண்டிரிற் பெரியள் நோற்றாள்
சுழித்துநின் றறாத கற்பின் சுநந்தையே யாக என்பார். 652
652. கொழித்து இரை ஓத வேலி -முத்து முதலியவற்றைக் கொழித்து முழங்கும் கடலை வேலியாகவுடைய நிலவுலகில். நங்கை - விசயை. விழுத்தவம்- பெரிய தவம். பின்றிட்டது - நிலைபெற்றது. பிழி - வடித்த தேன்,. ஆக என்பதைப் பிரித்துப் பெரியள் என்புழிக் கூட்டிப் பெரியளாக நோற்றாள் சுநந்தையே என்பார் என்க. சுழித்து நின்று-
வேறோரிடம் செல்லாது நின்று. அறாத கற்பு - வற்றாத அருட் கற்பு.
அவன் மெய் யழகை வியத்தல்
இடம்பட அகன்று நீண்ட இருமலர்த் தடங்க ணென்னும்
குடங்கையி னொண்டு கொண்டு பருகுவார் "குவளைக் கொம்பின்
உடம்பெலாங் கண்க ளாயி னொருவர்க்கு மின்றி யேற்ப
அடங்கவாய் வைத்திட் டாரப் பருகியிட் டீமி" னென்பார். 653
653. தடங்கண் - பெரியகண். குடங்கை - அகங்கை. நொண்டு- முகந்து. குவளைக் கொம்பின் -முழுதும் குவளையே பூத்த கொம்பு போல. இன்றி - இல்லையாமாறு. ஆர - நிரம்ப. பருகியிட் டீமின் - பருகுமின். இரண்டு கண்கள் அமையா என்பதாம்.
சீவகனது தவம் நினைந்து வியத்தல்
இந்நகரப் புறங்காட்டி லிவன்பிறந்த வாறும்
தன்னிகரில் வாணிகனில் தான்வளர்ந்த வாறும்
கைந்நிகரில் வேந்தர்தொழப் போந்ததுவும் கண்டால்
என்னைதவம் செய்யா திகழ்ந்திருப்ப! தென்பார். 654
654. புறங்காடு- சுடுகாடு. வாணிகன் இல் - கந்துக்கடன் என்னும் வணிகன் மனையில். கைநிகரில் - ஒழுக்கத்தாலும் ஒப்பில்லாத. மேலைத் தவமே இத் திருவுடமைக்கு ஏது என்றாராம்.
மேலைத் தவமுடையார்க்கே செல்வமாம் என்றல்
பெருமுழங்கு திரைவரைக ணீந்திப்பிணி யுறினும்
திருமுயங்க லில்லையெனின் இல்லைபொரு ளீட்டம்
ஒருமுழமுஞ் சேறலில ரேனும், பொரு ளூர்க்கே
வரும்வழிவி னாயுழந்து வாழ்கதவ மாதோ. 655
655. முழங்கு பெருந்திரை பொருந்திய கடலும் மலையும் கடந்து. நீந்தியெனவே. கடத்தற்கருமை சுட்டியதாயிற்று. பிணியுறினும் - வருந்தினும். திரு முயங்கல் - நல்வினை வந்து கூடுதல். பொருள் ஈட்டம்-பொருளை மிகுதியாக ஈட்டுதல். சேறலிலரேனும் - சென்றிலராயினும். பொருள் நல்வினையுடைய அவர் உறையும் ஊருக்கு வழி வினாய் உழந்துவரும் என்க. "ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும்" (குறள்) என்றார் திருவள்ளுவனார்.
இவ்வண்ணம் நகரத்தின் மாடவீதியில் உலாப்போந்தவன் அருகன் கோயிலுக்குச் செல்ல வெழுந்தான். படைகளும் உடன்வந்தனவன்றோ. அவற்றைச் சோலையிலே நிறுத்திவிட்டுத் தான் மட்டும் கோயிற்குச் சென்றான்.
சீவகன் அருகனைத் தொழுதல்
திறந்த மணிக்கதவம்; திசைக ளெல்லாம் மணம்தேக்கி
மறைந்த அகிற்புகையான்; மன்னர் மன்னன் வலஞ்செய்து
"பிறந்தேன் இனிப்பிறவேன்; பிறவா தாயைப் பெற்றேன்" என்று
இறைஞ்சி முடிதுளக்கி யேத்திக் கையால் தொழுதானே. 656
656. அரசன் வருங்காலத்தே பிறர் புகுதாமல் கதவடைத்து அவனுக்குத் திறத்தல் இயல்பாதலால் கதவம் திறந்தன. அகிற்புகையால் மணம் நிரம்பித் திசைகள் மறைந்தன. துளக்கி - வணங்கி.
சீவகன் பாட்டு
மறுவற வுணர்ந்தனை, மலமறு திகிரியை
பொறிவரம் பாகிய புண்ணிய முதல்வனை;
பொறிவரம் பாகிய புண்ணிய முதல்வ, நின்
நறைவிரி மரைமலர் நகுமடி தொழுதும். 657
657. மறுவற - குற்றமற முற்றும். திகிரி - அறவாழி. பொறி வரம்பு -இந்திரியங்களுக்கு எல்லையாகிய. நறை -தேன். நகும் - நிகர்க்கும்.
பின்பு அவன் அருகனுக்கு விளக்குப் புறமாக நூறூரையும் பூசனைக்கு நான்குகோடி பொன்னும் கொடுத்துச் சேவித்தற் சிறப்பாக நூறுகளிறும் நூறு தேரும் சேர்த்தினான்.
சீவகன் அரண்மனையடைந்து திருவோலக்க மிருத்தல்
உலமரு நெஞ்சி னொட்டா மன்னவ ரூர்ந்த யானை
வலமருப் பீர்ந்து செய்த மணிகிளர் கட்டிலேறி
நிலமகள் கணவன் வேந்தர் குழாத்திடை நிவந்தி ருந்தான்
புலமகள் புகழப் பொய்தீர் பூமகட் புணர்ந்து மாதோ. 658
658. உலமரும் - கலங்கிச் சுழலும். ஒட்டா மன்னவர் – பகை வேந்தர். வலமருப்பு - வெற்றி தரும் கொம்பு. கட்டில் - அரசு கட்டில். நிவந்து -உயர்ந்து. அரசரில் மேலாயிருத்தலால் நிவந்தென்றார். புல மகள் - தலைமகள். பொய்தீர் - மெய்யான. (நித்தியமான)
இங்ஙனம் திருவோலக்க மிருந்த சீவகன் தன்னைப் புறந் தந்து ஓம்பிய கந்துக்கடனுக்கு அரசுரிமை தந்து நாடும் தந்து சிறப்பித்தான்.; அவன் மனைவியும் தன்னை வளர்த்தாளுமாகிய சுநந்தைக்கு அரசமாதேவி யென்னும் பட்டமும் தந்தான். நந்தட்டனை இளவரச னாக்கினான். ஏனைத் தம்பியரான நபுல விபுலர்க்குக் குறுநில மன்னர் மகளிரை மணம் செய்வித்து "இனிதுறைக" என நாடு பல நல்கினான். தன்னோடு உடனுழைத்த தோழர்கட்கும் பழைய அரசையும் ஏனாதி முதலிய பட்டமும் தந்து சீர் செய்தான். ஏனையோர்க்கு நிதியும் நாடும் பிறவும் நிரம்பக் கொடுத்தான். இம்முறையே தன் மைத்துனன்மார்க்கும் தக்காங்குப் பெருஞ் சிறப்புச் செய்த சீவகன் தன் மாமன் கோவிந்தனுக்குக் கட்டியங்காரனுடைய செல்வ முழுதும் தந்தான்.
சீவகன் சுதஞ்சணற்குச் சிறப்புச் செய்தல்
பேரிடர் தன்க ணீக்கிப் பெரும்புணை யாய தோழற்கு
ஓரிடஞ் செய்து பொன்னா லவனுரு வியற்றி யூரும்
பாரிடம் பரவ நாட்டி யவனது சரிதை யெல்லாம்
தாருடை மார்பன் கூத்துத் தான்செய்து நடாயி னானே. 659
659. பேரிடர் -பெரிய இடராகிய கடல். புணை-தெப்பம் இடம் - கோயில். பாரிடம் - நிலவுலகத்தவர். நடாயினான் -நடத்தினான்.
சீவகன் தான் சிறுபோதில் இருந்து விளையாடிய ஆலமரத்திற்குச் சிறப்புச் செய்தல்.
ஊன்விளையாடும் வைவே லுறுவலி சிந்தித் தேற்பத்
தான்விளை யாடி மேனா ளிருந்ததோர் தகைநல் லாலைத்
தேன்விளை யாடுமாலை யணிந்துபொற் பீடஞ் சேர்த்தி
ஆன்விளை யாடு மைந்தூ ரதன்புற மாக்கி னானே. 660
660. உறுவலி -மிக்க வலியுடைய சீவகன். தகை - அழகு. ஆலை - ஆலமரத்திற்கு. தேன் - வண்டு. பீடம் சேர்த்தி - மேடையமைத்து. அதன் நிழலிலே பசுக்கள் கிடத்தல் அதற்கு அறமாகுமென்றும், அவற்றின் பாலை அதற்குச் சொரிதல் தகுமென்றும் கருதி. ஆன் விளையாடு மைந்தூர் என்றார்."
பின்பு தன் மனைவியர் எண்மருக்கும் அரசமாதேவியர் எனும் பட்டமளித்து நாட்டை இனிதே சீவகன் ஆண்டு வருவானாயினன்.
நாடு நலமெய்திய சிறப்பு
ஆனை மும்மத மாடிய காடெலாம்
மானை நோக்கியர் வாய்மது வாடின;
வேனல் மல்கிவெண் டேர்சென்ற வெந்நிலம்
பானல் மல்கிவெண் பாலன்னம் பாய்ந்தவே. 661
661. மான் கை நோக்கியர் - மான் நிகராகாமையால் வருந்துகின்ற பார்வையுடைய மகளிர். மது ஆடின - தேன் கொப்புளிக்கப் பட்டன. வெண் தேர் - கானல். பானல் - செங்குவளை. பால் அன்னம் - பால்போலும் நிறமுடைய அன்னம்.
ஆட்சி நலம்
வலையவர் முன்றிற் பொங்கி வாளென வாளை பாயச்
சிலையவர் குரம்பை யங்கிண் மானினஞ் சென்று சேப்ப
நிலைதிரிந் தூழி நீங்கி யுத்தர குருவு மாகிக்
கொலைகடிந் திவற லின்றிக் கோத்தொழில் நடத்து மன்றே. 662
662. வலையவர் - செம்படவர். சிலையவர் - வில் வேட்டுவர். குரம்பை - வீடு. செப்ப - தங்க. இவறல் - பேராசை. "இவ்வூழியிலே உலகம் தன் நிலை திரிந்து நீங்கி உத்தர குருவுமாக எனத் திரித்து நடாத்தும்" என முடிக்க.
(பதுமையார் இலம்பகத்தில் சீவகன் தேசிகப்பாவை யென்பாள் கூத்தாடியபோது ஆடரங்கிற்குச் செல்ல அவள் அவனைக்கண்டு வேட்கைமிக்குக் கருத்திழந்தாள் எனக்
கண்டோமன்றோ; அவள் சீவகன் தன்னை மறந்தானெனக் கருதி ஈண்டுத் தானே வந்தாள். வந்தவள் கட்டியங்காரனால் வலிதில் நலந்துய்க்கப் பெற்றும், சீவகன்பால் வேட்கை குன்றாது அவனையே நினைந்து சாம்பியிருந்த அநங்கமாலை யென்பாளைக் கண்டு அவட்குத் தோழியாகி யிருந்தாள். அவள் சீவகனைக் காண வரும் செய்தி, இனிக் கூறப்படுகிறது)
தேசிகப்பாவை சீவகனைக் காணக் கோயில் வாயிலில் வந்து நின்று காவலர் வழியாக அவனுக்குத் தெரிவிக்க அவனும் அவளை உடனே வரவிடுக என்றான்.
தேசிகப்பாவை அநங்கமாலை தந்த ஓலையைக் கொடுத்தல்
அருவிலய நன்கலஞ்செய் போர்வை
அன்னநாண அடியொதுங் கிச்சென்று
உருவ மொவ்வா நொசியுநுகப்
பொல்கிக் கோமா னடிதொழுதபின்
மருவின் சாயல் மணிமெல்லிரல்
கூப்பி யோலை மரபினீட்ட
இரவி யென்ன விளங்குமொளி
யிறைவன் கொண்டாங் கதுநோக்குமே. 663
663. அருவிலை - மிக்க விலையையுடைய. நன்கலம் செய் போர்வை - நல்ல கலத்தைப் புறத்தே காட்டும் போர்வை. ஒதுங்கி - நடந்து. ஒசியும்- முறியும். நுசுப்பு - இடை. ஒங்கி - வளைந்து. மரபு - முறைமை.
அவ்வோலையில் அநங்கமாலை தன்னைக் கட்டியங்காரன் வலிதிற் கொண்டு சென்று வைத்திருப்பவும் தான் சீவகனையே நினைந்து புலம்பி வாய்வெருவக் கண்டு அவன் விடுத்தவாறும் தான் சீவகன் திருவுரு வெழுதி வழிபட்டு வந்தவாறும் தான் இப்போது கண் துயிலின்றிக் கலுழ்தலும், வளையிழத்தலும் மேனி பசத்தலு மெய்தி வருந்து மாறும், ஓலை கொணரும் தன் தோழி வரமலேகை (இது தேசிகப்பாவை தானே வைத்துக்கொண்ட பெயர்) வருந்தாமல் இனிது கூறி விடுமாறும் எழுதியிருந்தாள். ஓலையுடன் அது கொணர்ந்த தோழியையும் உணர்ந்துகொண்ட சீவகன் உவகை மிகுந்து தேசிகப்பாவையைத் தன் தோளாற் புல்லிச் சிறப்புச் செய்தான்.
தேசிகப் பாவைக்குச் சீவகன் கூறல்
"அருளுமா றென்னை யநங்கமாலை
யடித்தி தோழி யன்றோ" என
"தெருளலான் செல்வக் களிமயக்கினால்
திசைக்குமென்னறி வளக்கிய கருதி
மருளிற் சொன்னாய் மறப்பேனோ
யானின்னை" யென்ன மகிழைங்கணை
உருளு முத்தார் முகிழ்முலையினா
ளுள்ளத் துவகை தோற்றினாளே. 664
664. அடித்தி தோழி - அடியளாகிய தோழி. என - என்று தேசிகப்பாவை சொல்ல. தெருளலான் - தெளியான். செல்வக் களி மயக்கினால்- செல்வத்தால் பிறந்த களி மயக்கத்தால். திசைக்கு என் அறிவு அளக்கிய - நாற்றிசையும் என் அறிவை அளந்து காட்டவேண்டி. மருளில் – பேதைமையால். என்ன - என்று சீவகன் சொல்ல. உருளும் முத்தார்-உருளும் முத்துமாலை பொருந்திய.
சீவகற்கு இன்பந் தந்த தேசிகப்பாவை நாடகத்தாலும் இன்பம் தருதல்
நரம்புமீ திறத்தல் செல்லா நல்லிசை முழவும் யாழும்
இரங்குதீங் குழலு மேங்கக் கிண்கிணி சிலம்பொ டார்ப்பப்
பரந்தவா ணெடுங்கட் செவ்வாய்த் தேசிகப் பாவை கோல
அரங்கின்மே லாடல் காட்டி யரசனை மகிழ்வித் தாளே. 665
665. மீது இறத்தல் செல்லா - தப்பிச் செல்லாத. நரம்பு –நரம் போசை. ஏங்க - இசைக்க. நரம்போசையின் மேற்பட்டுச் செல்லாத முடிவு முதலியன.
சீவகன் இன்ப வாழ்வு சிறத்தல்
இளமையங் கழனிச் சாய லேருழு தெரிபொன் வேலி
வளைமுயங் குருவ மென்றோள் வரம்புபோய் வனப்பு வித்திக்
கிளைநரம் பிசையுங் கூத்துங் கேழ்த்தெழுந் தீன்ற காம
வினைபய னினிதிற் றுய்த்து வீணைவேந் துறையு மாதோ. 666
666. இளமையாகிய கழனி, வளை முயங்கு - வளையணிந்த. உருவமென்றோள் - அழகிய மெல்லிய தோள். கேழ்த்து - நிறம்கொண்டு. விளைபயன் - விளையும் பயனாகிய காமம். வீணை வேந்து - வீணை வேந்தனாகிய சீவகன். "தோளாகிய வரம்பு சூழ் போகா நிற்க உழுதென்க. தனது சாயலால் விளைந்த அழகைக் கண்ட அளவில் காம வேட்கை விளைவித்தற்குக் கூத்தையும் பாட்டையும் நடத்துதலின் பிறந்தது காமம் என்க.
------------------------
13. முத்தியிலம்பகம்
(முத்தியிலம்பகம்: சீவகனது ஆட்சிக்காலத்தில் அவன் தாயான விசயை தண்டாரணியத்துத் தவப்பள்ளியிலிருந்து துணை செய்து போந்த தாபத மகளிர்க்குத் தான் அருகன் கோயிலொன்று எடுப்பித்து நல்ல பூசனை செய்து அதன் பயனை நல்கினள்; சுடுகாட்டில் தனக்குத் தோழியாய் வந்து துணைபுரிந்த தெய்வத்துக்கும் ஒரு கோயில் சமைப்பித்தாள். சுடுகாட்டை அறக்கோட்டமாக்கி நாடோறும் ஐந்நூற்றைந்து பிள்ளைகட்குப் பாலும் சோறும் அளிக்குமாறு செய்தாள். தான் உறையுமிடத்தே மயிற்பொறியின் வடிவமெழுதி மனம் மகிழ்ந்தாள். முடிவில் அவள் துறவு பூணற்கெண்ணி, சீவகன்பால் விடை பெற்றுப் பம்மை யென்னும் அடிகளை யடைந்து துறவறம் மேற்கொண்டாள். சின்னாள் கழிந்ததும் சீவகன் தன் மனைவியருடன் துறவியாகிய விசயையைக் கண்டு பணிந்து தன் நகரம் போந்து சோலை நுகர்வு, நீர் விளையாட்டு முதலிய பல இன்பத் துறைகளில் எனியனாய் இனிதிருந்து வந்தான். அவன் மனைவியரும் முறையே சச்சந்தன், சுதஞ்சணன், தரணி, கந்துக்கடன், விசயன், தத்தன், பரதன், கோவிந்தன் என்ற மக்களைப் பெற்று மகிழ்ச்சி மிகுந்தனர்.)
மேலே கூறியவாறு சீவகன் இனிதே நாடாட்சி செய்து வரும் நாளில் விசயை அவனை, அருகனுக்கு மிகச் சீரியதொரு கோயிலை எடுக்குமாறு பணிக்க, அவனும் அத்தகைய
கோயிலொன்றை எடுப்பித்தான்.
அருகன் கோயிற் சிறப்பு
விண்பாற் சுடர்விலக்கி மேகம் போழ்ந்து விசும்பேந்தி
மண்பாற் றிலகமாய் வான்பூத் தாங்கு மணிமல்கிப்
பண்பால் வரிவண்டுந் தேனும் பாடும் பொழிற்பிண்டி
எண்பால் இகந்துயர்ந்தாற் கிசைந்த கோயி லியன்றதே. 667
667. விண்பால் சுடர் - விண்ணில் உள்ள ஞாயிறும் திங்களும். வீசும்பேந்தி - தேவருலகுக்கு மேலாய். மண்பால் - மண்ணிலுள்ள கோயில்களுக்கு. வான் பூத்தாங்கு - வானம் மின்பூத்தாற்போல. மல்கி – நிறைய விருத்தலால், மேகம் போழ்ந்து. சுடர் விலக்கி, பூத்தாங்கு மல்குதலால், விசும்பேந்தி, திலகமாய் இயன்றது என்க. பண்பாய் – பண்பாடும் பான்மையுடைய, எண்பால் இகந்து உயர்ந்தாற்கு - எண் குணங்களால் உயர்ந்த அருகனுக்கு.
கோயிலெடுத்த நல்வினைப்பயனை விசயை தனக்குத் துணைசெய்து உதவிய தவமகளிர்க்கு நல்கல்
அல்லி யரும்பதமும் அடகுங் காயுங் குளநெல்லும்
நல்ல கொழும்பழனுங் கிழங்குந் தந்து நவைதீர்த்தார்க்கு
இல்லையே கைம்மாறென் றின்ப மெல்லா மவர்க்கீந்தாள்
வில்லோன் பெருமாட்டி விளங்கு வேற்கண் விசயையே. 668
668. அல்லி யரும்பதம் - அல்லி யுணவு: ஆம்பலரிசியாலாகிய உணவு. அடகு - இலைக்கறி. நவை - இடுக்கண். இன்பம் – கோயிலெடுப்பித்த வினைப்பயன். வில்லோன் பெருமாட்டி - சச்சந்தன் தேவியாகிய.
சுடலையில் தனக்குத் துணைசெய்த தெய்வத்துக்கும் தன்னைச்
சுமந்து செய்த மயிற்கும் சிறப்புச் செய்தல்
தனியே துயருழந்து தாழ்ந்து வீழ்ந்த சுடுகாட்டுள்
இனியா ளிடம்நீக்கி யேமஞ் சேர்த்தி யுயக்கொண்ட
கனியார் மொழியாட்கு மயிற்குங் காமர் பதிநல்கி
முனியாது தான்காண மொய்கொண் மாடத் தெழுதுவித்தாள். 669
669. உழந்து - வருந்தி. இனியாள் - இனியளாகிய விசயை. ஏமம் - பாதுகாப்பான இடம்; தாபதப்பள்ளி. உயக்கொண்ட - பிழைப்பித்துக்கொண்ட. கனியார் மொழியாள் - கனிபோலும் மொழியினையுடைய கூனிவடிவில் வந்த தெய்வம். பதி - கோயில். முனியாது - இடையறயின்றி. தெய்வத்துக்குக் கோயிலும் மயிலுக்குத் தன் மாடமும் நல்கினாளாம். பரிவு -இவ்வேற் பாடுகளைச் செய்யவேண்டுமென நினைத்திருந்த வருத்தம்.
சுடுகாட்டை ஆன்பால் அளிக்கும் அறச்சாலை யாக்குதல்
அண்ணல் பிறந்தாங் கைஞ்ஞூற் றைவர்க் களந்தான்பால்
வண்ணச் சுவையமுதம் வைக நாளுங் கோவிந்தன்
வெண்ணெய் உருக்கிநெய் வெள்ள மாகச் சொரிந்தூட்டப்
பண்ணிப் பரிவகன்றாள் பைந்தார் வேந்தற் பயந்தாளே. 670
670. பிறந்தாங்கு - பிறந்த விடமாகிய சுடுகாடு. ஆன்பால் அளந்து தோழர் ஐஞ்ஞூற்று நால்வர் சீவகன் ஆக ஐஞ்ஞூற்றைவர் பொருட்டு, நாளும் ஐஞ்ஞூற்றைவர்க்கு அடிசில் அமைதியாம். வண்ணவமுதம் - பருப்புச் சோறு. கோவிந்தன் – நந்தகோன்
பின்பு தன்பால் வந்து அடிபணிந்த சுநந்தையை நோக்கி "சீவகனைப் பயந்த செல்வியே! வருக" என இனியன கூறிச் சிறப்பித்த விசயை, காந்தருவதத்தை முதலிய எண்மரும் வந்து பணிந்து நிற்க, அவர்களையும் புல்லியரு கிருத்தி "உலகாளும் சிறுவரைப் பயந்து தெளிவீர்களாக" என்று சிறப்பித்து முடிவில் சீவகனைத் தன்பால் வருமாறு பணித்தாள்.
சீவகன் வந்து பணிந்து இருத்தல்
சிங்க நடப்பதுபோற் சேர்ந்து பூத்தூய்ப் பலர்வாழ்த்தத்
தங்கா விருப்பிற்றம் பெருமான் பாத முடிதீட்டி
எங்கோ பணியென்னா அஞ்சா நடுங்கா இருவிற்கண்
பொங்க விடுதவிசி லிருந்தான் போரே றனையானே. 671
671. சேர்ந்து - நடந்து சென்று. தங்காவிருப்பின் - மிக்க விருப்பத்துடன். பெருமாள் - தாய். "னஃகானொற்று மகடூஉவை யுணர்த்திற்று". மூடி குட்டி - முடிபொருந்த வணங்கி. "அவன் கூறிய அறமெல்லாம் தான் செய்து முடித்தலின் இன்னும் அவை உளவோ என்பது தோன்ற எங்கோ பணி என்றான்". இருவிற் கண் - இரண்டு விற்கிடை நீளம். ஏறனையான்-சீவகன்.
விசயை சீவகனுக்குச் சச்சந்தன் மாண்ட செய்தியைத் தானே தன் வாயாற் கூறலுற்று அவன் பெண்ணின்பமே பெரிதெனக் கருதி அமைச்சர் சொல்லைக் கேளாதொழிந்ததும் கட்டியங்காரனால் கொடுமை செய்யப் பெற்றதும் மயிற் பொறியில் தன்னை விண்ணிற் போக்கியதும் பிறவும் கூறி முடித்தாள். சேவகன் அதுகேட்டு மயங்கி உணர்வற்றுக் கீழே வீழ்ந்தான். அருகிருந்தவர் பின்பு தெளிவிக்கத் தெளிய அவனுக்கு விசயை செல்வம், இளமை யாக்கை முதலியவற்றின் நிலையாமையை எடுத்து மொழிந்தாள்.
இவற்றைக் கேட்டுக்கொண்டிருந்த சுநந்தையும் உள்ளத்தே துறவுணர்வு போதர, இவையனைத்தும் தனக்குக் கூறிய உறுதியாகத் தேர்ந்து துறவுபூணத் துணிந்தாள்.இதனைச் சீவகற்கும் அவள் சொல்லிவிட்டாள். சீவகன் உற்ற துயர்க்கு அளவில்லை.
இருவரும் பம்மை யென்னும் துறவி இருந்த சூழலுக்குச் செல்லுதல்
ஓருயி ரொழித்திரண் டுடம்பு போவபோல்
ஆரிய னொழியவங் கௌவை மார்கடாஞ்
சீரிய துறவொடு சிவிகை யேறினார்
மாரியின் மடந்தைமார் கண்கள் வார்ந்தவே. 672
672. ஓருடம்பை விட்டு ஓருயிர் போதல் போலாது, ஓருயிரை விட்டு இரண்டு உடம்பு செல்வதுபோல். ஆரியன் - அரியவனாகிய சீவகன்; இது தமிழ்ச்சொல்; வடசொல்லென வாய் வதறுவாரு முளர். ஒளவைமார் - தாய்மார். துறவொடு - துறவு மேற்கொண்டு. மடந்தைமார் - சீவகன் தேவிமார். வார்ந்த - கண்ணீரைச் சொரிந்தன.
விசயை சுநந்தையுடன் பம்மையைப் பணிதல்
அருந்தவக் கொடிக்குழாஞ் சூழ வல்லிபோல்
இருந்தறம் பகர்வுழி யிழிந்து கைதொழுது
ஒருங்கெமை யுயக்கொண்மின் அடிகள் என்றனள்,
கருங்கய னெடுந்தடங் கண்ணி யென்பவே. 673
673. கொடிக்குழாம் - மகளிர் கூட்டம். அல்லி - பூவின்நடு. இருந்து - பம்மை அவர் நடுவே யிருந்து. பகர் வுழி - கூறும் இடம். ஒருங்கு - சேர. கண்ணி - விசயை. தாமரைப்பூவின் புறவிதழ் போல். மகளிர் சூழ விருப்ப, பம்மை அல்லிபோல் நடுவே யிருந்து அறம் பகர்ந்தாளாம்.
பம்மை கூறல்
"ஆரழன் முளரி யன்ன அருந்தவ மரிது; தானஞ்
சீர் கெழு நிலத்து வித்திச் சீலநீர் கொடுப்பிற் றீந்தேன்
பார்கெழு நிலத்து ணாறிப் பல்புக ழீன்று பின்னால்
தார்கெழு தேவ ரின்பம் தையலாய்! விளைக்கு" மென்றாள். 674
674. முளரி - விறகு. சீல நீர் - சீலமாகிய நீர். பார் கெழு நிலத்துள் - உத்தர குருவில். நாறி - முளைத்து. தீந்தேன் தார் கெழு தேவர் - தீவிய தேன் நிறைந்த மாலை அணிந்த தேவர்.
இது கேட்ட விசயை மீண்டும் வணங்கி, "யாம் அறவுரை பின்னர்க் கேட்போம்; இப்போது எமக்குத் துறவு தந்தருள்க" என வேண்டினள்; அவளும் அதனை யிசையத் தவமகளிர் துறவுக் குரியன செய்யலுற்று முதற்கண், விசயை, சுநந்தையாகிய இருவருடையையும் மாற்றி, பாலால் அடி கழுவி நூலானாகிய வெண்கோடி யுடுப்பித்தனர்.
இருவரும் மயிர் பறிப்புண்டல்
மணியியல் சீப்பிடச் சிவக்கும் வாணுதல்
அணியிருங் கூந்தலை யௌவை மார்கடாம்
பணிவிலர் பரித்தனர் பரமன் சொன்னநூல்
துணிபொருள் சிந்தியாத் துறத்தல் மேயினார். 675
675. மணியியல் சீப்பு - மணியால் செய்த சீப்பு. நுதல் அணி - நெற்றியைச் சேர்ந்துள்ள. பணிவு - தாழ்வு. பரமன்- இறைவன். நூல் - ஆகமம். துணி பொருள் - துணியும் பொருள்.
தவத்திற்குரிய குணம் பலவும் நிறைதல்
பொற்குடந் திருமணி பொழியப் பெய்தபோல்
எற்புடம் பெண்ணிலாக் குணங்க ளால்நிறைத்து
உற்றுட னுயிர்க்கருள் பரப்பி யோம்பினார்
முற்றுட னுணர்ந்தவ னமுத மோம்பினார். 676
676. பொழிய - நிரம்பி வழிய. எற்புடம்பை – எலும்பொடு கூடிய இவ்வுடம்பை. உற்று ....... பரப்பி - பல்லுயிர்க்கும் வந்த துன்பங்களைத் தாமும் உடனேயுற்று அவ்வுயிர்களுக்கு அருளைப் பரப்பி. அமுதம் - ஆகமப் பொருள். "தவம் புரிந்து அடங்கத்தக்க நல்வினையுடைமையின் பொற்குடத்தோடு உவமித்தார்."
இருவரும் தவத்தால் மேம்படுதல்
புகழ்ந்துரை மகிழ்ச்சியும் பொற்பில் பல்சனம்
இகழ்ந்துரைக் கிரக்கமு மின்றி யங்கநூல்
அகழ்ந்து கொண்டரும் பொருள்பொதிந்த நெஞ்சினார்
திகழ்ந்தெரி விளக்கெனத் திலக மாயினார். 677
677. புகழ்ந்துரை - ஒருவர் தம்மைப் புகழ்ந்துரைத்தற்கு. பொற்பில் பல்சனம் - தெளிந்த அறிவுச் சிறப்பில்லாத பல மக்களும். இரக்கம் - வருத்தம். அங்க நூல் - பல அங்கங்களையுடைய ஆகமம். அகழ்ந்துகொண்டு - கல்லியெடுத்துக்கொண்டு. பொதிந்த - நிறைந்த. திகழ்ந்து - ஒளிவிட்டு. விளக்கென - விளக்குப்போல.
இவ்வண்ணம் இவர்கள் தவத்தால் மேம்படவே, இவர்களைக் காண்டல் வேண்டிச் சீவகன் தன் மனைவியர் உடன்வரப் போந்து இவர்கள் அடிவீழ்ந்து வணங்கினன். இவர்கள் அவனுடைய வணக்கத்தையோ வாழ்த்தையோ பொருள் செய்திலர். விசயை பாவை போன்றிருந்தாள்.
பம்மை சீவகற்குக் கூறல்
"காதல னல்லை நீயும்; காவல! நினைக்கி யாமும்
ஏதிலம் என்று கண்டாய் இருந்தது நங்கை" யென்னத்
தாதலர் தாம மார்ப னுரிமையுந் தானு மாதோ
போதவிழ் கண்ணி யீர்த்துப் புனல்வரப் புலம்பினானே. 678
678. காதலன் - காதலிக்கப்படுபவன். ஏதிலம் - சுற்றமல்லேம். என்று கண்டாய் - என்று அறிவாய். என்ன - என்று பம்மை கூற. தாதவர் தாமம் - தேன் விரியும் மாலை. போதவிழ் கண்ணி - தான் குடியிருந்த மலர்ந்த பூக்களால் தொடுத்த கண்ணியை. புனல்வர-கண்ணில் நீர் பெருகி வழிய.
அதுகண்டு பம்மை முதலிய தவமகளிர், சீவகனுடன் பேறுமாறு விசயையை வற்புறுத்தினர். அதன்மேல் அவள் கண் திறந்து நோக்கினாள்.
விசயை கூறல்
திரைவளை இப்பி யீன்ற திருமணி யார மார்பின்
வரைவளர் சாந்த மார்ந்த வைரக்குன் றனைய திண்டோள்
விரைவள் கோதை வேலோய் வேண்டிய வேண்டி னேம்என்று
உரைவினை வித்து ரைப்பக் காளையுன் னகம்கு ளிர்ந்தான். 679
679. திரை - கடல். மணியாரம் - மணிகலந்து கோத்த முத்து மாலை. வரை - மலை. சாந்தம் - சந்தனம். விரை - நறுமணம். வேண்டிய வேண்டினேம் - நீ விரும்புவனவற்றையே யாமும் விரும்பினேம். உரை விளைத்து - உரையைத் தாமே வலிய எழுப்பி. வேண்டிய என்றது, அவன் "உறைக" என்றதும் "யான் நும் காதலன்" என்றதும் வேண்டிக் கூறியவை.
சீவகன் சுநந்தைக்குச் சொல்லுதல்
அடிகளோ துறக்க வொன்று முற்றவர் யாது மல்லர்;
சுடுதுய ரென்கட் செய்தாய்; சுநந்தைநீ யௌவை யல்லை;
கொடியைநீ கொடிய செய்தாய் கொடியையோ கொடியை யென்னா
இடருற்றோர் சிங்கந் தாய்மு னிருந்தழு கின்ற தொத்தான். 680
680. யாது ஒன்றும் உற்றதும் அல்லர் - யாதொரு வருத்தமும் உற்றவரல்லர். அடிகள் - விசயமாதேவி. ஔவை - தாய். இடர் - துன்பம்.
சுநந்தை விடை யிறுத்தல்
"சென்றதோ செல்க; விப்பால் திருமக ளனைய நங்கை
இன்றிவ டுறப்ப யானின் னரசுவந் திருப்பே னாயின்
என்றெனக் கொழியு மம்மா பழி" யென விலங்கு செம்பொற்
குன்றனான் குளிர்ப்பக் கூறிக் கோயில்புக் கருளு கென்றான். 681
681. சென்றதோ செல்க -"தன் கணவனை யிழந்து புதல்வன் அரசை உவந்திருந்தானென்று இதற்கு முன்னர் உலகத்து நிகழ்ந்த பழி நிகழ்ந்ததே போக" இவள் - விசயை. மா பழி-பெரும்பழி.
பின்பு நந்தட்டன் அடிபணிந்து வணங்க அவனை நோக்கி "நும்மை யாம் துறந்திலம்; அதனாலே நீ மனம் நொந்து வெறுக்க வேண்டா" என்று மொழிய அவனும் மனம் தேறிச் சென்றான். அனைவரும் கோயிலை யடைந்தனர். இருவரும் தவநெறியில் நின்று இலகுவாராயினர்.
இந் நிகழ்ச்சிகளைக் கண்டிருந்த அமைச்சர், சீவகனும் துறவு மேற்கொள்வானோ என்ற அச்சத்தால், அவன் மனத்தை அரச போகத்திலே அமிழ்த்தற் கெண்ணி, நீர் விளையாடற் கேற்ப, அரசுரிமையும் அரசனும் படிந்தாடற்குரிய இனிய நீர் வாவிகளைப் பண்ணி, அவற்றைக் கண்டருளுமாறு அரசனை வேண்டினர். அவனும் அதற் கிசைந்தான்.
நீர் விளையாட்டு
கணமலை யரசன் மங்கை கட்டியங் காரனாகப்
பணைமுலை மகளி ரெல்லாம் பவித்திரன் படையதாக
இணைமலர் மாலை கண்ண மெரிமணிச் சிவிறி யேந்திப்
புணைபுறந் தழுவித் தூநீர்ப் போர்த்தொழில் தொடங்கி னாரே. 682
682. கணமலை - கூட்டமான மலை. அரசன் - கலுழவேகன். மங்கை - காந்தருவதத்தை. பணை - பருத்த. பவித்திரன் - சீவகன். இணைமலர் - ஒத்த மலர். புணைபுறம் - தெப்பத்தின் புறத்தை. "வேறொரு பகையரசைத் தாம் கேட்டறியாமையாலும் கட்டியங்காரன் கொடுமை தம் மனத்து நிகழ்தலாலும் கட்டியங்காரனாக" என்றார்.
தத்தையின் போர்த்திறம்
அரக்குநீர்ச் சிவிறி யேந்தி யாயிரந் தாரை செல்லப்
பரப்பினாள் பாவை தத்தை; பைந்தொடி மகளி ரெல்லாம்
தரிக்கில ராகித் தாழ்ந்து தடமுகிற் குளிக்கு மின்போல்
செருக்கிய நெடுங்கண் சேப்பச் சீதநீர் மூழ்கி னாரே. 683
683. அரக்கு நீர் - இங்குலிகம் கலந்த நீர்; தடத்து நீர். சிவிறி - பீச்சுங் குழல்.தரிக்கிலராகி - எதிர்நிற்க மாட்டாராய். முகில் குளிக்கும் மின்போல் - வெண்முகிலுள் மறையும் மின்னலைப்போல. செருக்கிய - மதர்த்த. சேப்ப - சிவக்க. சீதம் - குளிர்ச்சி.
சீவகன் சேனையுடைய அவன் சிவிறியேந்திப் பொருதல்
கூந்தலை யொருகை யேந்திக் குங்குமத் தாரை பாயப்
பூந்துகி லொருகை யேந்திப் புகுமிடங் காண்டல் செல்லார்
வேந்தனைச் சரணென் றெய்த விம்முறு துயரம் நோக்கிக்
காய்ந்துபொற் சிவிறி யேந்திக் கார்மழை பொழிவ தொத்தான். 684.
684. குங்குமத் தாரை - குங்குமம் கலந்த நீர்த்தாரை. காண்டல் செல்லார் - காணாராய். விம்முறு துயரம் - மிகுகின்ற வருத்தம். காய்ந்து - விளையாட்டாய்ச் சினந்து. கார் - கார்முகிலே; நின்று.
தத்தையின் சேனையுடைதல்
அன்னங்க ளாகி யம்பூந் தாமரை யல்லி மேய்வார்
பொன்மயி லாகிக் கூந்தல் போர்த்தனர் குனிந்து நிற்பார்;
இன்மலர்க் கமல மாகிப் பூமுகம் பொருந்த வைப்பார்;
மின்னுமே கலையுந் தோடும் கொடுத்தடி தொழுது நிற்பார். 685.
685. அல்லி மேய்வார் - அல்லியில் முகத்தை மறைப்பார். பொன் மயில் - பொன்னிறமுடைய தொரு மயில். இன்மலர்க்கமலம் - இனிய பூவாகிய தாமரை. பொருந்த - பூவொடு முகம் பொருந்த. மேகலையும் தோடும் கொடுத்தது, கெட்டார் திறையிடுவது போல்வது.
தன் படையுடையக் கண்ட காந்தருவதத்தை சந்தனத்தாரை கொண்டு சீவகன் மேல் பாய்ந்தான். இடைநின்ற மகளிர் கூட்டம் எதிரே சிவிறி கொண்டு தாரை வீச ஆற்றாராய் உடைந்தோடினர்.
சீவகன் வறிதே நிற்றல்
"மெய்ப்படு தாரை வீழி னோமிவட்" கென்ன வஞ்சிக்
கைப்படை மன்ன னிற்பக் கதுப்பயல் மாலை வாங்கிச்
செப்படை முன்கை யாப்பத் திருமகன் தொலைந்து நின்றான்;
பைப்புடை யல்கு லாளைப் பாழியாற் படுக்க லுற்றே. 686
686. மெய்ப்படு தாரை - மெய்யிலே சென்று தாக்கும் தாரை. கைப்படை மன்னன் - கையிலே சிவிறி யேந்திய சீவகன். நிற்ப – தாரை தூவாமல் வாளா நிற்ப. கதுப்பயல் மாலை - கூந்தலில் கிடந்த மாலை. செப்புட - செவ்விதாக. யாப்ப - கட்ட. தொலைந்து - தோற்று. பைப்புடை யல்குல் - படத்தின் பக்கத்தையுடைய அல்குல். பாழி - வலி.
படுக்கலுற்று - கைப்படுக்கக் கருதி.
தத்தை தோற்றோடிச் சீவகனைத் தழீஇக் கொளல்
அடுத்தசாந் தலங்கல் சுண்ண மரும்புனல் கவர வஞ்சி
உடுத்தபட் டொளிப்ப வொண்பொன் மேகலை யொன்றும் பேசா
கிடப்ப மற்றரச னோக்கிக், "கெட்டதுன் துகில்மற்" றென்ன
மடத்தகை நாணிப் புல்லி மின்னுச்சேர் பருதி யொத்தான். 687
687. சாந்தும் அலங்கலும் சுண்ணமும் கவரும் புனல். அவன் உடுத்திருந்த வெண்பட்டினைக் கவர. பேசா - ஒலி செய்யாது. கிடப்ப – புடவையொடு கிடப்ப. என்ன - என்று சீவகன் சொல்லிக் காட்ட. மடத்தகை - காந்தருவதத்தை. புல்லி - அவனைப் புல்லிக்கொள்ள. பருதி - ஞாயிறு.
இவ்வாறு நீராட் டயர்ந்து சீவகன் இனிதிருக்கும் நாளில் முதுவேனிற் பருவம் வந்தது. அப்போதில் அவன் மகளிரின் ஆடலும் பாடலும் கண்டும் கேட்டும் மகிழ் வெய்தினான். பின்பு கார்ப்பருவம் வந்து இனிதே கழிந்தது. அதன்பின் கூதிர் வந்தது. அக்காலத்தே ஒருநாள் குணமாலை சீவகற்கென ஒரு வள்ளத்தே தேறல் கொணர்ந்தாள். அதனுள் அவளது முகந் தோன்ற, அதனைத் திங்களெனக் கருதியதோடு நில்லாமல் தன் முகத்துக்குப் பகையாமென நினைத்துப் பருகிவிட்டாள். பின்னர் தன் கண்ணைத் திறந்தவள் வானத்தே திங்கள் இருப்பக் கண்டு ஊடலுற்றாள்.
குணமாலை யூடல்
"பருகினேற் கொளித்துநீ பசலை நோயொடும்
உருகிப்போ யின்னுமற் றுளை" யென் றுள்சுடக்
குருதிகண் கொளக்குண மாலை யூடினாள்;
உருவத்தா ருறத்தழீஇ யுடற்றி நீக்குவான்; 688
688. பருகினேற்கு - பருகின எனக்கு. நெஞ்சில் தட்டுப்படாமையின் "உருகிப் போய்" என்றான். உள் - உள்ளம் பொறாது. கண் குருதி கொள - கண் சிவப்ப. தார் உற - மாலை பொருந்த. உள்சுட உடற்றி எனக் கூட்டிக்கொள்க.
சீவகன் ஊடல் தீர்த்துக் கூடல்
"நங்கைநின் முகவொளி யெறிப்ப நன்மதி
அங்கதோ உள்கறுத் தழகிற் றேய்ந்தது;
மங்கைநின் மனத்தினால் வருந்தல்" என்றவள்
பொங்கிள வனமுலை பொருந்தி னானரோ. 689
689. உள் கறுத்து - உள்ளகம் கரிதாகி. (களங்கத்தைச் சுட்டியது.) தேய்ந்தது - கலையினது தேய்வு.
முன் பனியும் பின் பனியுமாகிய பருவங்களும் இன்பமாகவே கழிந்தன. இவர்களும் கீழ்நிலை மாடத்தேயிருந்து இனிது கழித்தனர்; குளிரும் எலிமயிர்ப் போர்வையால் நீக்கப்பட்டது. முடிவில் இளவேனிற் காலம் வந்தது. எங்கணும் இயற்கை இனிய காட்சி வழங்கத் தொடங்கிற்று. தென்றலும் மலர் மணம் கமழ்ந்து மெல்ல அசைந்து போந்தது.
இயற்கை யழகு
குரவம் பாவை கொப்புளித்துக் குளிர்சங் கீர்ந்த துகளேபோல்
மரவம் பாவை வயிறாரப் பருகி வாடை யதுநடப்ப
விரவித் தென்றல் விடுதூதா வேனி லாற்கு விருந்தேந்தி
வரவு நோக்கி வயாமரங்க ளிலையூழ்த் திணரீன் றலர்ந்தனவே. 690
690. கொப்புளித்து - காற்றுச்சிதற அடித்து. மரவம் பாவை - மரவம் பூ. வயிறார - நிரம்ப. பருகி - கவர்ந்து. தென்றல் விரவி வரவு நோக்கி - தென்றல், வாடை போகா நிற்க விரவி வருகின்ற வரவைக் குறித்து. வேனிலான் - காமன். வேனிலானுக்கு விருந்தேந்தி இணரீன்று அலர்ந்தன - காமனுக்கு விருந்திடுதலை ஏறட்டுக்கொண்டு பூங்கொத்துக்களையீன்று அலர்ந்து விருந்திட்டன. வயா - வேட்கை.
இக்காலத்தே சீவகன் மகளிருடன் நாட்டிலுள்ள பல்வேறு இனிய இடங்கட்குச் சென்று இன்பம் நுகர்ந்தான்.
மகளிர் இன்புறுதல்
எண்ணற் கரிய குங்குமச்சேற் றெழுந்து நான நீர்வளர்ந்து
வண்ணக் குவளை மலரளைஇ மணிக்கோல் வள்ளத் தவனேந்த
உண்ணற் கினிய மதுமகிழ்ந்தா ரொலியன் மாலை புறந்தாழக்
கண்ணக் கழுநீர் மெல்விரலாற் கிழித்து மோந்தார் கனிவாயார். 691.
691. குங்குமச் சேறு - குங்குமக் குழம்பு. நான நீர் - கத்தூரி கமழும் நீர். மலர் அளைஇ - மலர் விரவி. மணிக்கோல் வள்ளம் – மணியழுத்தி விளிம்பு பிரம்பு கட்டின வட்டில், வள்ளத்தில் மதுவையேந்த. ஒலியல் மாலை - பூமாலையும் முத்தமாலையும். கண்ண - தம் கருத்து இதுவென்பது அவன் கருதும்படி. கனிவாயார் - மகளிர். *"இப் பூவடுப்படுத்தி மோந்தும் இனிய நாற்றத்தவே யாயினாற்போல எம்மையும் உகிர் முதலியவற்றால் சிறிது வடுப்படுத்தி நுகர்தல் எமக்கு வருத்தமென்று அஞ்சினையாயினும் அஃது எமக்கு மிக்க இன்பமே யாதலின் உனக்கும் இன்பம் செய்யுமென்பது உணர்த்துதற்குக் கிழித்து மோந்தார் என்க; இளமைச் செவ்வி மிக்க வழி மகளிர்க்கு இங்ஙனம் வடுப்படுத்தி நுகர்தல் இன்பம் செய்யுமென்று காம நூலிற் கூறுதலின் அதனையீண்டுக் கூறினார்."
இவ்வண்னம் சில யாண்டுகள் கழிய மகளிர் அனை வரும் கருவிருந்து ஆண் மக்களைப் பயந்தனர். அவர்கள் பிறப்பிற்குரிய சிறப்புக்கள் பலவும் நிகழ்ந்தன. அவர்கட்கு முறையே சச்சந்தணன், சுதஞ்சணன் தரணி கந்துக்கடன், விசயன், தத்தன், பரதன், கோவிந்தன் எனப் பெயர்கள் இடப்பட்டன.
சீவகன் மக்கள் கலைபயிறல்
ஐயாண்டெய்தி மையாடி யறிந்தார் கலைகள் படைநவின்றார்
கொய்பூ மாலை குழன்மின்னும் கொழும்பொற் றோடும் குண்டலமும்
ஐயன் மார்கள் துளக்கின்றி யாலுங் கலிமா வெகுண்டூர்ந்தார்
மொய்யா ரலங்கள் மார்பற்கு முப்ப தாகி நிறைந்ததே. 692
692. மையாடி - மையோலை பிடித்து. படை - படைப் பயிற்சி. துளக்கின்றி - அசையாமல். மாலையும் குழலும் தோடும் குண்டலமும் அசையாமல் ஊர்தல் பிறர்க்கு அரிதாகலின் துளங்காமலூர்ந்தார் என்றார். வெகுண் டூர்ந்தார் - அடித்தேறினார். மொய்யார் - செறிந்துள்ள.
இவ்வாறு இன்புற்றிருக்கும் நாளில் வேனிற் காலம் வந்தது. சோலை யெங்கும் பூவும் கனியும் சிறந்து பொற்பு விளங்க நிலவின.
மல்லிகை மாலை யென்னும் தோழி சோலை காண்க என அரசனை வேண்டல்
தடமுலை முகங்கள் சாடிச் சாந்தகங் கிழிந்த மார்பிற்
குடவரை யனைய கோலக் குங்குமக் குலவுத் தோளாய்!
தொடைமலர் வெறுக்கை யேந்தித் துன்னினன் வேனில் வேந்தன்
இடமது காண்க என்றாள்; இறைவனு மெழுக என்றான். 693
693. குடவரை - ஞாயிறு மறையும் மேற்கு மலை. குவவு - திரண்ட. தொடை மலர் - கொத்தாகிய பூ. வெறுக்கை - பாற்குடம். கையுறைப் பொருள். இடம் அது - அவளைக் காண்டற்கு இடம் அது.
சீவகன் தன்னுரிமை மகளிருடன் சென்று சோலை யின்பம் நுகர்தல்
இலங்குபொன் னார மார்பி னிந்திர னுரிமை சூழக்
கலந்தபொற் காவு காண்பான் காமுறப் புக்க தேபோல்
அலங்குபொற் கொம்ப னாரு மன்னனு மாட மாதோ
நலங்கவின் கொண்ட காவு நல்லொளி நந்திற் றன்றே. 694
694. பொற்கா - கற்பகச் சோலை. காமுற-விருப்பம் மிக. அலங்கு-அசைகின்ற. ஆட -விளையாட. நந்திற்று-சிறந்தது.
அரசன் விரும்பியவாறு மகளிர் வேறு வேறாகச் சென்று விளையாட்டயர்தல்
வானவர் மகளி ரென்ன வார்கயிற் றூச லூர்ந்தும்
கானவர் மகளி ரென்னக் கடிமலர் நல்ல கொய்தும்
தேனிமிர் குன்ற மேறிச் சிலம்பெதிர் சென்று கூயும்
கோனமர் மகளிர் கானிற் குழாமயில் பிரிவ தொத்தார். 695
695. வார் கயிற்றூசல்-நீண்ட கயிறு கட்டிய ஊசல். கடிமலர்- மணமிக்க பூ. தேன் இமிர் குன்றம்-தேனினம் ஒலிக்கும் குன்றம். சிலம்பு-மலை. கோனமர் மகளிர்-அரசன் காதலிக்கும் மகளிர். கானில்- காவில்.
சோலைக் காட்சிகளைக் கண்டுவந்த சீவகன் உள்ளம் துறவின்மேற் செல்லுதல்
இன்கனி கவரு மந்தி கடுவனோ டிரிய வாட்டி
நன்கனி சிலத னுண்ண நச்சுவேன் மன்ன னோக்கி
என்பொடு மிடைந்த காம மிழிபொடு வெறுத்து நின்றான்
அன்புடை யரிவை கூட்டம் பிறனுழைக் கண்ட தொத்தே. 696
696. கடுவன்-ஆண் குரங்கு. இரிய வாட்டி-நீங்குமாறு அலைத்து. சிலதன்-சோலைக் காவலன். நச்சு வேல்-நஞ்சு தீற்றிய வேல். என்பொடு மிடைந்த காமம்-உடம்பொடு உடன் தோன்றிய ஆசை. இழிபு-ஈண்டு மூப்பின் மேலது. அரிவை-மனைவி.
"கைப்பழ மிழந்த மந்தி கட்டியங் கார னொத்தது
இப்பழந் துரந்து கொண்ட சிலதனு மென்னை யொத்தான்;
இப்பழ மின்று போகத் தின்பமே போலு" மென்று
மெய்ப்பட வுணர்வு தோன்றி மீட்டது கூறினானே. 697
697. துரந்து-ஓட்டிவிட்டு. போகத்து இன்பம்-அரசபோகத்து எய்தும் இன்பம். மெய்ப்பட-உண்மையாக, மீட்டு.
சீவகன் உள்ளம் துறவின்கண் உறைத்து நிற்றல்
மெலியவர் பெற்ற செல்வம் வேரொடுங் கீழ்ந்து வௌவி
வலியவர் கொண்டு மேலை வரம்பிகந் தரம்பு செய்யுங்
கலியது பிறவி கண்டாங் காலத்தா லடங்கி நோற்று
நலிவிலா வுலக மெய்தல் நல்லதே போலு மென்றான். 698
698. கீழ்ந்து-அகழ்ந்துகொண்டு. அரம்பு-குறும்பு. கலி- நுகரும் பொருள் இல்லாமையால் அதன்மேலே செல்லும் ஆசையால் பிறக்கும் வருத்தம். காலத்தால்-துறவுக்குரிய காலத்தே. நலிவிலாவுலகம்-வருந்துதலில்லாத வீட்டுலகம்.
இவ்வாறு போகநுகர்ச்சிக்கண் சென்ற தன் உள்ளத்தைச் சீவகன்; துறவு நெறியிலே செலுத்தி வினையின் விளைவும் வேட்கையின் தன்மையும் நினைந்து தனக்கெனச் சமைக்கப் பட்டிருந்த கட்டிலை யடைந்தான்.
சீவகன் துறவு நெறியை வியந்து சென்று கட்டிலை யடைதல்
"வேட்கைமை யென்னு நாவிற் காமவெந் தேறல் மாந்தி
மாட்சியொன் றானு மின்றி மயங்கினேற் கிருளை நீங்கக்
காட்டினார் தேவ ராவர் கைவிளக் கதனை" யென்று
தோட்டியாற் றொடக்கப் பட்ட சொரிமதக் களிற்றின் மீண்டான். 699
699. வேட்கைமை-வேட்கைத் தன்மை. காம வெந்தேறல்- காமமாகிய வெவ்விய கள். மாட்சி-நற்செய்கை. ஒன்றானும் –சிறிதும் இருளை-மயக்கத்திலிருந்து. கைவிளக்கு- கைவிளக்காகிய துறவுநெறி. தோட்டி-அங்குசம்.
மகளிர் மயக்க அவன் மயங்காது நிற்றல்
மெள்ளவே புருவங் கோலி விலங்கிக்கண் பிறழ நோக்கி
முள்ளெயி றிலங்கச் செவ்வாய் முறுவல்தூ தாதி யாக
அள்ளிக்கொண் டுண்ணக் காமங் கனிவித்தார் பனிவிற் றாழ்ந்த
வன்னிதழ் மாலை மார்பன் வச்சிர மனத்த னானான். 700
700. கோலி-நெரித்து. முறுவல் தூது -முறுவல் நகையாகிய தூது. இது காமக் குறிப்பு. கனிவித்தார்-மிகுவித்தார். பனிவில்- முத்துவடம். வள்ளிதழ்-வளவிய இதழ். வச்சிரமனத்தனானான்-காமத்திற்கு நெகிழாத வைரம் பொருந்திய மனமுடையனானான்.
சீவகன் நூற்றுலா மண்டபம் புகுந்து நீராடி உணவுண் டிருத்தல்
நெய்வளங் கனிந்த வாச நிறைந்துவான் வறைக ளார்ந்து
குய்வளங் கழுமி வெம்மைத் தீஞ்சுவை குன்ற லின்றி
ஐவரு ளொருவ னன்ன அடிசில்நூன் மடைய னேந்த
மைவரை மாலை மார்பன் வான்சுவை யமிர்த முண்டான். 701
701. வறை-வறுவல். குய்-தாளிப்பு. கழுமி- நிறைந்து. ஐவரு ளொருவன் -வீமன். மடையன் சோறாக்கி. வான் சுவை- மிக்க சுவை.
உணவுண்டு சந்தனம் பூசி முகவாசம் தின்று இனிதிருந்த சீவகன் அருகன் கோயிற்கு மகளிருடன் சென்று வழிபடுதல். பாட்டு.
கடிமலர்ப் பிண்டிக் கடவுள் கமலத்து
அடிமலர்சூடி யவர்உலகில் யாரே
அடுமலர்சூடி யவர் உலக மேத்த
வடிமலர் தூவ வருகின்றா ரன்றே. 702
702. கடிமலர் - எக்காலமும் புதிதாகிய மலர். கமலத்து அடிமலர் - கமலத்தே அடியாகிய மலர். யாரே - யாவராய். இன்புறுவரென்றால். வடிமலர் - வடித்த மலர். வருகின்றார் - இவ்வுலகில் வருகின்றவர்.
அப்போது ஸ்ரீநாதன் கோயிலை வணங்க வந்த சாரணர் பளிங்கின்மேலிருக்கக் கண்ட சீவகன் அவர்களை வணங்கி வாழ்த்துதல்.
இலங்கு குங்கும மார்ப னேந்துசீர்
நலங்கொள் சாரணர் நாதன் கோயிலை
வலங்கொண் டாய்மலர்ப் பிண்டி மாநிழற்
கலந்த கன்மிசைக் கண்டு வாழ்த்தினான். 703
703. இலங்கு குங்கும மார்பன்- விளங்குகின்ற குங்குமச் சேறுபூசிய மார்பையுடைய சீவகன். ஏந்து சீர்-உயர்ந்த புகழ்,. சாரணர் கோயிலை வலங்கொண்டு கன்மிசை யிருந்தாரை மார்பன் கண்டு வாழ்த்தினான்.
சாரணர் இருவருள் மூத்தவனும் மணிவண்ணனு மாகிய இரத்தினப் பிரபை யென்பான் சீவகற்கு அறமுரைக்கத் தொடங்குதல்
தேனெய் தோய்ந்தன தீவிய திருமணி யனைய
வானி னுய்ப்பன வரகதி தருவன, மதியோர்
ஏனை யாவரு மமுதெனப் பருகுவ, புகல்வ,
மான மில்லுயர் மணிவண்ணன் நுவலிய வலித்தான். 704
704. தீவிய - இனிய. அருமணி - பெறுதற்கரிய மணி. வரகதி - வீடு. ஏனை யாவரும் - ஏனை அறிவுடையோர் யாவரும். புகல்வ – தெளிவில்லோர் தெளிவு கருதி நாளும் ஓதுவன. மானம் - ஒப்பு. உயர் மணிவண்ணன் - சாரணர் இருவருள் ஒருவன். உயர்ந்த மணி போலும் நிறமுடைய இரத்தினப் பிரபை என்பவன்.
தொகுத்துக் காட்டல்
அருமையின் எய்தும் யாக்கையும் யாக்கைய தழிவும்
திருமெய் நீங்கிய துன்பமும் தெளிபொருட் டுணிவும்
குருமை யெய்திய குணநிலை கொடைபெறு பயனும்
பெருமை வீட்டோடும் பேசுவல் கேளிது பெரியோய் 705
705.அருமையின் - அரிதாக. திரு - நல்வினை. நீங்கிய – நீங்கப் பட்டனவாகிய. தெளிபொருட் டுணிவு - தெளியப்படும் பொருளும் தெளியும் தெளிவும். குருமை - நல்ல நிறம்.
மக்கள் யாக்கையிந் அருமை
பரவைவெண்டிரை வடகடற் படுநுகத் துளையுள்
திரைசெய் தென்கட லிட்டதோர் நோன்கழி சிவணி
அரச, அத்துளை யகவலிற் செறிந்தென வரிதால்
பெரிய யோனிகள் பிழைத்திவண் மானிடம் பெறலே. * 706
706. பரவை - பரத்தல். படு - உண்டான. சிவணி – சென்று சேர்ந்து. அத் துனையகவயின் - வட கடலில் கிடந்த நுகத்தின் துளையிலே. செறிந்தென - கோத்தாற்போல. நோன்கழி - வலிய கழி. பெரிய யோனிகள் - பெரிய பிறப்புகள். பிழைத்து - தப்பி.
அவ் யாக்கையின் நிலையாமை கூறலுற்றுக் கருவிற் கெடுவது கூறல்
இன்ன தன்மையி னருமையி னெய்திய பொழுதே
பொன்னும் வெள்ளியும் புணர்ந்தென வயிற்றகம் பொருந்தி
மின்னுமொக்குளு மெனநனி வீயினும் வீயும்
பின்னை வெண்ணெயிற் றிரண்டபின் பிழைக்கவும் பெறுமே 707
707. பொன்-சுக்கிலம். வெள்ளி-கரோணிதம். வயிற்றகம்- கருப்பை. வீயினும் வீயும் -அழியினும் அழிந்து விடும். கருத்தோன்றிய இருதிங்களில் வெண்ணெய்போல் திரண்டிருக்கும் என்ப. பிழைக்கவும் பெறும்-கெடும்.
இளமையிற் கெடுவது கூறல்
கெடுத லவ்வழி யில்லெனிற் கேன்விக டுறைபோய்
வடிகொள் கண்ணியர் மனங்குழைந் தநங்கனென் றிரங்கக்
கொடையுங் கோலமுங் குழகுந்தம் மழகுங்கண் டேத்த
விடையிற் செல்வுழி விளியினும் வினியுமற் றறிநீ. 708
708. கேள்விகள் துறைபோய்-நூற்கேள்வி பலவும் கேட்டும் கற்றும் துறைபோகி. வடிகொள்-மாவடுபோன்ற. இரங்க-வேட்கையால் மெலிய. குழகு-இளமை. விடையின்-காளைபோல. செல் வுழி-செல்லுங் காலத்தே. விளியும்-இறக்கும்.
முதுமையிற் கெடுவது கூறல்
காமம் பைப்பயக் கழியத்தங் கடைப்பிடி சுருங்கி
ஊமர் போலத்தம் உரையவிந் துறுப்பினி லுரையாத்
தூய்மை யில்குளந் தூம்புவிட் டாம்பொரு ளுணர்த்தி
ஈம மேறுத லொருதலை இகலமர் கடந்தோய். 709
709. பைப்பய -மெல்ல. கடைப்பிடி-கொள்கை. உரையவிந்து-சொல்லுந்தன்மை குன்றி. உறுப்பினில் உரையா-கையால் குறித்து. தூய்மையில் குளம்-தூயதல்லாத உடம்பாகிய குளம். தூம்பு விட்டு-ஒன்பதாகிய வாயில்களைத் திறந்து. ஆம் பொருள் உணர்த்தி- முடிவில் ஆகும் பொருள் இதுவே என்று அறிவித்து. ஈமம்-சுடுகாடு. இகலமர்-மாறுபட்டோடி கூடிய போர்.
நிறுத்த முறையே நாற்கதித் துன்பம் கூறலுற்று முதற்கண் நரககதித் துன்பம் கூறுதல்
வெவ்வினை செய்யு மாந்தர் உயிரெனு நிலத்து வித்தி
அவ்வினை விளை*யு ளுண்ணு மவ்விடத் தவர்க டுன்பம்.
இவ்வென வுரைத்து மென்று நினைப்பினும் பனிக்கு முள்ளம்
செவ்விதிற் சிறிது கூறக் கேண்மதி செல்வ வேந்தே. 710
710. வித்தி-விதைத்து. அவ்விடத்து-நரகத்தில். இவ்வெள- இத்தன்மையவென. பனிக்கும்-நடுங்கும்.
ஊழ்வினை துரப்ப வோடி யொன்றுமூழ்த் தத்தி னுள்ளே
சூழ்குலைப் பெண்ணை நெற்றித் தொடுத்ததீங் கனிக ளூழ்த்து
வீழ்வன போல வீழ்ந்து வெருவரத் தக்க துன்பத்து
ஆழ்துய ருழப்ப; ஊணு மருநவை நஞ்சு கண்டாய். 711
711. துரப்ப-செலுத்த. ஒன்று மூழ்த்தம்- ஒரு வினாடி. பெண்ணை நெற்றி- பனைமரத்தின் தலையில். ஊழ்த்து-மிகப்பழுத்து. வெருவரத் தக்க -அஞ்சத்தக்க. உழப்ப-வருந்துவர். ஊணும்- உயிரை வாழச் செய்யும் நல்லுணவும். அருநவை நஞ்சு-அதனை இறக்கப் பண்ணும் கொடிய நஞ்சாம்.
விலங்குகதித் துன்பம்
எரிநீர வேநரகம்; அந்நரகத் துன்பத்து
ஒருநீர வேவிலங்கு தாமுடைய துன்பம்;
பெருநீர வாட்டடங்கண் பெண்ணணங்கு பூந்தார்
அருநீர வேந்தடர்த்த வச்சணங்கு வேலோய்! 712
712. எரிநீர் -எரியினது தன்மையையுடையனவாம். ஒருநீ ரவே- ஒரு தன்மையவே. பெருநீர...வேலோய்-பெரிய நீரவாகிய கண்ணையுடைய பெண்களை வருத்தும் தாரினையும். அடர்த்தற்கரிய தன்மையனவாகிய வேந்துகளை யடர்த்த வலியினையும்.வருத்தத்தைச் செய்யும் வலியினையுமுடைய அரசே.
மக்கட்கதித் துன்பம்
தம்மை நிழனோக்கித் தாங்கார் மகிழ்தூங்கிச்
செம்மை மலர்மார்ப மட்டித் திளையார்தோன்
கொம்மைக் குழகாடுங் கோல வரைமார்பர்
வெம்மை மிகுதுன்பம் வேந்தே சிலகேளாய். 713
713. நிழல் நோக்கி-கண்ணாடியிலே நிழலைப் பார்த்து. தாங்கார்- தாங்கமாட்டாராய். மகிழ் தூங்கி-மகிழ்ச்சி செறிந்து. மட்டித்து-பூசப்படுவனவற்றைப் பூசி. கொம்மை-பெரிய. குழகாடும்- இளமையால் காமக் களியாட்டயரும். வெம்மை -வருத்தம்.
வேட்டமை பெறாமை துன்பம் விழைநரைப் பிரித றுன்பம்
மோட்டெழி லிளமை நீங்க மூப்புவந் தடைத றுன்பம்
ஏட்டெழுத் தறித லின்றி யெள்ளற்பா டுள்ளிட் டெல்லாம்
சூட்டணிந் திலங்கும் வேலோய் துன்பமே மாந்தர்க் கென்றார். 714
714. வேட்டன - விரும்பிய பொருள். விழைநர்-காதலர். மோட்டெழில் -மிக்க அழகு. ஏட்டெழுத்து-ஏட்டி லெழுதப்படும் எழுத்து.; கல்வி. எள்ளற்பாடு-இகழ்ச்சி. சூட்டு -மாலை.
தேவகதித் துன்பம்
தேவரே தாமுமாகித் தேவராற் றொழிக்கப் பட்டும்
ஏவல்செய் திறைஞ்சிக் கேட்டு மணிகமாப் பணிகள் செய்தும்
நோவது பெரிதுந் துன்பம்; நோயினுட் பிறத்த றுன்பம்
யாவதுந் துன்ப மன்னா! யாக்கைகொண் டவர்கட் கென்றான். 715
715. தொழிக்கப்பட்டும்-வெகுளப்பட்டும். அணிகம்- அணிகள். அணி என்பது திரிந்து அணிகமாயிற்று. மாப் பணிகள்-பெரிய பூண்கள். யாவதும்-எத்தகைய பிறப்பை எடுத்தாலும்.
நிறுத்த முறையே நால்வகைக் கதித்துன்பம் கூறியபின் தெளிபொருள் கூறுதல்
மன்றல் நாறு மணிமுடிமேன் மலிந்த சூளா மணிபோலும்
வென்றோர் பெருமா னறவாழி வேந்தன் விரிபூந் தாமரைமேல்
சென்ற திருவா ரடியேத்தித் தெளியும் பொருள்க ளோரைந்தும்
அன்றி யாறு மொன்பானு மாகு மென்பா ரறவோரே. 716
716. மன்றல்-நறுமணம். மலிந்த-நிறைந்த. போலும் பெருமான் என்க. வென்றோர்-முனிவர். சென்ற-நடந்த. திருவார்-சிறப்புப் பொருந்திய. ஐந்தேயன்றி ஆறும் ஒன்பதுமாகும் என்று அறவோர் கூறுவர். இவை முறையே பஞ்சாத்திகாயம் சட்திரவியம் நவபதார்த்தம் என்பர். ஐந்து-சீலம். புற்கலம், தருமம், கருமம், ஆகாசம். ஆறு: சீவன் முதலாக ஐந்துடன் காலம் ஒன்றுசேர ஆறு. ஒன்பது. சீவம், அசீவம்,
புண்ணியம் பாவம் ஆசிரவம் சம்வரை நிர்ச்சரை பந்தம் வீடு.
அப்பொருளைத் துணியுந் துணிவு கூறல்
பெரிய வின்பத் திந்திரனும் பெட்ட செய்கைச் சிறுகுரங்கும்
உரிய செய்கை வினைப்பயத்தை யுண்ணு மெனவே யுணர்ந்தவனை
அரிய ரென்ன மகிழாது மெளிய ரென்ன விகழாதும்
இருசார் வினையுந் தெளிந்தாரே யிறைவ னூலுந் தெளிந்தாரே. 717
717. பெரிய இன்பத்திந்திரன்-பெறும் இன்பத்துள் பெரிது இஃதெனத் தன் மனவுணர்வாலாராய்ந்து பெறும் இந்திரன். பெட்ட செய்கை-அவ்வாறின்றி மனம்போன போக்கில் செய்து திரியும் செய்கை. வினைப் பயம்-வினைப் பயன். இருசார் வினை-நல்வினை தீவினை. இறைவன் நூல்- அங்காகமம்*, பூருவாகமம். பரு -சுருதியாகமம்.
உறுவர்ப் பேண லுவர்ப்பின்மை
யுலையா வின்பந் தலைநிற்றல்
அறிவர் சிறப்பிற் கெதிர்விரும்ப
லழிந்தோர் நிறுத்த லறம்பகர்தல்
சிறியா ரினத்துச் சேர்வின்மை
சினங்கை விடுதல் செருக்கவித்தல்
இறைவ னறத்து ளார்க்கெல்லா
மினிய ராத, லிதுதெளிவே. 718
718. உறுவர்-மிக்கோர். உவர்ப்பு-வெறுப்பு. உலையாவின்பம்- வீட்டின்பம். அறிவர் சிறப்பு-அறிவர்க்குச் செய்யும் சிறப்பு. அழிந்தோர்-தளர்ந்தவர். அவித்தல்-கெடுத்தல். இறைவன் அறம்-இச் சமயத்தவர் அனைவர்க்கும்.
குணநிலை (சீலம் ) கூறல்
ஒழுக்கமே யன்றித் தங்க ளுள்ளுணர் வழிக்கு மட்டும்
புழுப்பயி றேனுமன்றிப் பிறவற்றின் புண்ணு மாந்தி
விழுப்பய னிழக்கு மாந்தர் வெறுவிலங் கென்று மிக்கார்
பழித்தன வொழித்தல் சீலம் பார்மிசை யவர்கட் கென்றான். 719
719. ஒழுக்கத்தையும் உள்ளத்துணர்வையும் அழிக்கும். மட்டு- கள். புழுப் பயில் தேன்-புழு நிரம்பிய தேன். புண்-ஊன்; புலால். விழுப் பயன்-வீடுபேறு. வெறு விலங்கு- உணர்வில்லாத விலங்கு. பழித்தன-கூடாவென விலக்கியவை. பார்மிசையவர்-நிலவுலகத்தே அறஞ் செய்பவர்.
கொடைநிலை (தானம்) கூறல்
ஒன்பது வகையி னோதிற் றுத்தமர்க் காகு மார்ந்த
இன்பத மருளியீத லிடையென மொழிப யார்க்கும்
துன்புற விலங்கு கொன்று சொரிந்துசோ றூட்டி னார்க்கும்
நன் பொருள் வழங்கி னார்க்கும் பயனமக் கறிய லாகா. 720
720. ஒன்பது வகைக் கொடைஉத்தமர்க்காகும். இன் பதம் - இனிய சோறு. இடை - இடை நிலைக் கொடை. யார்க்கும் - இழிந்தோர்க்கும்; ஊட்டினார்க்கும் உண்டார்க்கும். வழங்கினார்க்கும் – அவ்விரு திறத்தார்க்கும் ஊண் பொருட்டு நல்ல பொருளைத் தந்தார்க்கும். கொடை ஒன்பது: "எதிர்கொளல், இடம் நனி காட்டல், கால்
கழீஇ அதிர்பட அருச்சனை அடியில் வீழ்தரல் மதுர நன்மொழியொடு மனம் மெய் தூயராய் உதிர்க நம் வினையென உண்டி ஏந்தினார்,"
கொடைப் பயன் கூறல்
பூமுற்றுந் தடங்க ணாளும் பொன்னெடுங் குன்ற னானும்
காமுற்று நினைந்த வெல்லாங் கற்பக மரங்க ளேந்தத்
தாமுற்றுக் கழிப்பர்; தான மிடையது செய்த நீரார்
ஏமுற்றுக் கரும பூமி யிருநிதிக் கிழமை வேந்தே. 721
721.பூமுற்றும் - பூவைப்போலும். காமுற்று - விரும்பி. உற்று - நுகர்ந்து. ஏமுற்று - செல்வக் களிப்புற்று. கரும பூமி - மண்ணுலகு. கடை நிலைக் கொடைக்குப் பயன் நரகமாதலின், ஈண்டுக் கூறப்படவில்லை.
அடங்கலர்க் கீந்த தானப் பயத்தினா லலறு முந்நீர்த்
தடங்கட னடுவுட் டீவு பலவுள; அவற்றுட் டோன்றி
உடம்பொடு முகங்க ளொவ்வா ரூழ்கனி மாந்தி வாழ்வர்
மடங்கலஞ் சீற்றத் துப்பின் மானவேன் மன்ன ரேறே. 722*
722. அடங்கலர்க்கு - தகுதியில்லாதார்க்கு. அலறும் - முழங்கும். முந்நீர் - ஆக்கல் அளித்தல் அழித்தல் மூன்றும் செய்யும் கடல். மக்களுடம்பும், விலங்கு முகமும் உடைய குரங்கு. ஊழ் கனி - உதிரும் பழம். மடங்கல் - சிங்கம். துப்பு - வலி.
ஏனைச் சீலம் தெளிவு என்ற இரண்டன் பயன் கூறல்
செப்பிய சீல மென்னுந் திருமணி மாலை சூழ்ந்தார்
கப்பத்து ளமர ராவர்; காட்சியி னமிர்த முண்டார்
ஒப்பநீ ருலக மெல்லா மொருகுடை நிழற்றி யின்பம்
கைப்படுத் தலங்க லாழிக் காவல ராவர் வேந்தே. 723
723. திருமணி - மாணிக்கமணி. சூழ்ந்தார் - அணிந்தவர். கப்பத்துள் - கற்பகாலத்து. அமிர்தம் - பயன். உலகமெல்லாம் ஒப்ப - குடை நிழற்றி என்க. கைப்படுத்து - கைக்கொண்டு. ஆழிக்காவலர் - சக்கரவர்த்தி.
வீடுபேறு கூறல்
உள்பொரு ளிதுவென வுணர்தல் ஞானமாம்;
தெள்ளிதி னப்பொருள் தெளிதல் காட்சியாம் ;
விள்ளற விருமையும் விளங்கத் தன்னுளே
ஒள்ளிதிற் றரித்தலை யொழுக்க மென்பவே. 724
724 .உள்பொருள் - உண்மைப் பொருள். தெள்ளிதின் - தெளிவாக. விள்ளற - நீக்கமற. இருமை ஞானம் காட்சி என்ற இரண்டு. ஒள்ளிதின் - ஒட்பமாக. தரித்தல் - நிலைபெறக் கொள்ளுதல்.
கூடிய மும்மையுஞ் சுடர்ந்த கொந்தழல்
நீடிய வினை மர நிரைத்துச் சுட்டிட
வீடெனப் படும்வினை விடுதல் பெற்றதங்கு
ஆடெழிற் றோளினாய் அநந்த நான்மையே. 725.
725. மும்மை - ஞானம், காட்சி, சீலம் என்ற மூன்று. கொந்தழல் - மூண்ட நெருப்பு. வினை மரம் - வினையாகிய மரம். நிரைத்து - முறையாக. விடுதல் பெற்றது - விட்டதாம். ஆடு எழில் தோளினாய் - பகைவரை அடுகின்ற உயர்ந்த தோளையுடையாய். அநந்த நான்மை - அனந்த சதுட்டயம். அவை, கடையிலா ஞானம், கடையிலாக் காட்சி, கடையிலா வீரியம், கடையிலா இன்பம்.
கடையிலா வறிவொடு காட்சி வீரியம்
கிடையிலா வின்பமுங் கிளந்த வல்லவும்
உடையதங் குணங்களோ டோங்கி விண்தொழ
அடைதலான் மேலுல கறியப் பட்டதே. 726
726. கிடையிலா - ஒப்பில்லாத. ஓங்கி - மிகுந்து. அடைதலால் - சேருதலால். மேலுலகு என்பது ஒன்று உண்டென அறியப்பட்டது.
இவ்வாறு கூறப்பெற்ற அறவுரையைக் கேட்டதும் சீவகற்கு எல்லையில்லாத இன்ப முண்டாயிற்று. அதனால் அவன் அம் மெய்ம்மொழிகளைப் பெறலரும் அமுதெனக் கொண்டு பெரிதும் பேணுவானாயினன். அக்காலை அவன் தன் பழம் பிறப்பை அறிந்துகொள்ள விரும்பி அச் சாரணர் அடிகளை மீட்டும் வணங்கி வேண்டினான். அவர் அது கூறலுற்று "நீ முற்பிறப்பில் தாதகி யென்னும் நாட்டின் பூமி திலகமென்ற நகரத்திருந்து ஆட்சிபுரிந்த பவண தேவனென்பானுக்கும் சயமதி யென்பாட்கும் பிறந்த அசோதரன் என்னும் மகனாவாய். நினக்கு மனைவியர் பலருண்டு. ஒரு நாள் அவருடன் நீர் விளையாடச் சென்றபோது பொய்கைக் கண்ணிருந்த அன்னக் கூட்டம் விண்ணிலே பறக்க அவற்றுட் சில மேலும் பறக்க மாட்டாவாய் அப் பொய்கைத் தாமரையில் தங்கின. நின் மனைவிமாருள் ஒருத்தி விரும்பி யாங்கு ஒன்றைப் பற்றித் தந்தாய். அவள் அதனைக் கூட்டிலிட்டு வளர்த்து வந்தாள். இதனை யறிந்த அரசன் நின்னை யழைத்து,
பூவைகிளி தோகைபுண ரன்னமொடு பன்மா
யாவையவை தங்கினையி னீங்கியடி வாங்கிக்
காவல்செய்து வைத்தவர்கள் தாம்கிளையி னீங்கிப்
போவர்புகழ் நம்பியிது பொற்பிலது கண்டாய். 727
என்று சொல்லி மேலும் பல அறங்களையு முரைத்தான். அது கேட்டு நீ துறத்தற் கெண்ணினை. அரசன் ஒருவாறு விடை யீந்தான். நீ மனையினை நீங்கிப் போய்த் தவம் செய்து முடிவில் சாசார னென்னும் இந்திரனாகி யின்புற்றிருந்தனை. நீ பிரிந்தபின், பவணதேவனும் சயமதியும் தவம் நோற்றுத் தேவராயினர்." என்று சொல்லி முடித்தான்.
இதைக் கேட்ட சீவகன் முறுவலித்துச் சாரணர் அடிவீழ்ந்து வணங்குதல்
727 பூவை-நாகணவாய்ப் புள். (மைனா). தோகை-மயில் பல் மா-பல விலங்கு. வாங்கி-பிரித்து. காவல் செய்து-கூட்டிலடைத்து. பொற்பிலது -சிறப்புடைத்தன்று.
வாரணி மணித்துடி மருட்டு நுண்ணிடைக்
காரணி மயிலனார் சூழக் காவலன்
ஏரணி மணிமுடி யிறைஞ்சி யேத்தினான்
சீரணி மாதவர் செழும்பொற் பாதமே. 728
728. வார் அணி மணித் துடி-வார்கட்டிய அழகிய துடி. மருட்டும் -ஒக்கும். காரணி மயில்-கார்முகிலால் அழகு சிறக்கும் மயில். ஏரணி- அழகு. இறிஞ்சி-தாழ்ந்து.
அவனுக்கும் பிறர்க்கும் அவர் வாழ்த்துக் கூறிவிட்டு வானத்தே ஞாயிறும் திங்களும் போலச் சென்றனர். எங்கும் அவரது மெய்யொளி விரிந்து விளங்கிற்று. இனி தம் கணவன் துறவு பூணலுற்றான் என்று காந்தருவதத்தை முதலியோர் மனம் கலங்கி முகம் பசந்து, கண்கலுழ்ந்து பின்வரச் சீவகன் தன் கோயிலை யடைந்தான். ஆங்கு அவன் மனைவியர் கொண்டிருந்த துயரத் தோற்றம், அவன் மன வுறுதியைச் சிதைக்கும் ஆற்றல் இலதாயிற்று.
சீவகன் அழைப்ப நந்தட்டன் வந்து வணங்குதல்
கொடியணி யலங்கன் மார்பிற்குங்குமக் குன்ற மன்னான்
அடிபணிந்து "அருளு, வாழி யரசரு ளரச" வென்னப்
படுசின வெகுளி நாகப் பைத்தலை பனித்து மாழ்க
இடியுமிழ் முரச நாண இன்னண மியம்பி னானே. 729
729. கொடியணி -ஒழுங்காக அணிந்த. அலங்கல்-மாலை. குன்ற மன்னான்-நந்தட்டன். அடிபணிந்து-சீவகன் அடியைப் பணிந்து. படுசின.......முரசம்; பாம்பின் தலை நடுங்கி மயங்க இடிக்கும் இடியோசையைப் பிறப்பிக்கும் முரசம்.
நந்தட்டனை நாடாட்சி மேற்கொள்ளுமாறு சீவகன் கூறல்
ஊனுடைக் கோட்டு நாகான் சுரிமுக வேற்றை யூர்ந்து
தேனுடைக் குவளைச் செங்கேழ் நாகிளந் தேரை புல்லிக்
கானுடைக் கழனிச் செந்நெற் கதிரணைச்*த் துஞ்சு நாட
வேன்மிடை தானைத் தாயம் வீற்றிருந் தாண்மோ என்றான். 730
730. சுரிமுக வேற்றை-சுரிந்த முகத்தையுடைய நத்தை. ஊனையுடைய கொம்பையுடைய இளமைபொருந்திய ஆன். செங்கேழ் நாகு இளந்தேரை-செவ்விய நிறம்படைத்த மிக்க இளமையையுடைய தேரை. கானுடைக் கழனி-காட்டின் தன்மையை யுடைய கழனி. கதிரணை- கதிராகிய அணையில். தாயம்-அரசமுறை. ஆண்மோ-ஆளுக.
நந்தட்டன் மறுத்துரைத்தல்
கரும்பலாற் காடொன் றில்லாக் கழனிசூழ் பழன நாடுஞ்
சுரும்புலாங் கண்ணி விண்ணோர் துறக்கமும் வீடும் வேண்டேன்;
அரும்புலா யலர்ந்த வம்மென் தாமரை யனைய பாதம்
விரும்பியான் வழிபட் டன்றோ வாழ்வதென் வாழ்க்கை யென்றான். 731
731. கரும்பு-கருப்பங் காடு. பழனநாடு-நீர்நில முடைய நாடு. கரும்பு-வண்டு. அரும்பு உலாய் அமர்ந்த-அரும்பு நெகிழ்ந்து மலர்ந்த. அனைய-போன்ற. வழிபட்டு வாழ்வதன்றோ என் வாழ்க்கை என்க.
இது கேட்ட சீவகன், காந்தருவதத்தை பயந்த மகனான சச்சந்தனை வருவித்து அவற்கு முடிசூட்டக் கருதினான்; அவனே அவன் மக்களுள் மூத்தவன்.
சீவகன் சச்சந்தற்கு முடிசூட்டி அரசநீதி பலமொழிந்து பொய்யாமையை வற்புறுத்துதல்
குடிபழி யாமை யோம்பிற் கொற்றவேன் மன்னர் மற்றுன்
அடிவழிப் படுவர் கண்டாய் அரும்புகழ் கெடுத லஞ்சி
நொடியலோ ரெழுத்தும் பொய்யை, நுண்கலை நீத்த நீந்திக்
கொடியெடுத் தவர்க்கு நல்கு கொழித்துணர் குமர வென்றான். 732
732. குடி-குடிமக்கள். பழியாமை -பழிக்காமல். ஓம்பின்- காவல்புரியின். அடிவழிப்படுவர்- அடியிலே நின்று வாழ்வர். நொடியல்- சொல்லற்க. கலை நீத்தம்- கலைகளாய வெள்ளம். கொடி யெடுத்தவர்- வெற்றிக்கொடி யெடுத்த அமைச்சர். நல்கு-அருள் செய்க. கொழித்துணர்- தீங்கு நீக்கி நல்லது தேர்ந்தறியும்.
குணமாலை மகனான சுதஞ்சணனை இளவரசாக்குதல்
சேல்நடந் தாங்கு மோடிச் சென்றுலாய்ப் பிறழும் வாட்கண்
மான்மட நோக்கின் மாதர் மாலைநாட் பயந்த மைந்தன்
கானடந் தனைய மான்றேர்க் காளையைக் காவன் மன்னன்
தானுட னணிந்து தன்போ லிளவர சாக்கி னானே. 733
733. சேல் நடந்தாங்கு-சேல்மீன் பிறழ்வது போல, நோக்கின்- நோக்கத்தையுடைய. மாலை-குணமாலை. நாட் பயந்த-முதலில் பெற்ற. கால் நடந்தனைய மான் தேர்-காற்றுவிசை கொண்டு நடந்தாற் போன்ற குதிரை பூட்டிய தேர். காளை-சுதஞ்சணன். உடன் அணிந்து- தத்தை மகனான சச்சந்தனுடன் இருந்து. தன்போல்- தான் இளவரசனாயிருந்தது போல.
பின்பு சச்சந்தனுக்குப் பின் அரசுரிமை கோவிந்தனுக் காதல் வேண்டுமெனப் பணித்து, ஒழிந்த குமரர்க்கு ஏற்றவாறு தேரும் யானையும் நிதியும் நாடும் பெருக நல்கினான். தன் தோழர் மக்கள் அனைவரும் சச்சந்தனுக்கு மந்திரச் சுற்றமாக அமைத்தான்.
சீவகன் கோயிற்குட் சென்று, மனைவியரைத் தருவித்து அவர்கட்குப் பல்வேறு நிலையாமையும் அறநெறியின் உயர்வும், தவத்தின் சிறப்பும் பிறவும் எடுத்தியம்பினான்.
சீவகன் தான் துறவு மேற்கொண்டதை அவர்கட்கு உரைத்தல்
குஞ்சர மயாவுயிர்த் தனைய குய்கமழ்
அஞ்சுவை யடிசிலை யமர்ந்துண் டார்கடாம்
இஞ்சிமா நகரிடும் பிச்சை யேற்றலால்
அஞ்சினேன் துறப்பல்யான் ஆர்வ மெல்லையே. 734
734. அயா வுயிர்த் தனைய-இளைப்பால் உயிர்த்தாற்போன்ற. குய்- தாளிப்பு. உண்டார்- உண்டவர்கள். இஞ்சிமா நகர்-மதில் சூழ்ந்த பெரிய நகரம். ஏற்றலால்-ஏற்கின்றதனைக் காண்கின்றே னாதலால். ஆர்வம் இல்லை -செல்வத்தில் ஆசை யில்லை.
இதுகேட்டதும் மகளிர் வாய்விட்டுப் புலம்புதல்
காதலங் கழிந்தநா ளிதனி னிப்புறம்
ஏதில மென்றசொற் செவிச்சென் றெய்தலும்
மாதரார் மழைமலர்த் தடங்கண் மல்குநீர்
போதுலா மார்பின்வாய்ப் பொழிந்து வீழ்ந்தவே. 735
735. கழிந்த நாள்-சென்ற நாட்களில். காதலம்-இல்லறத்தில் காதல் கொண்டிருந்தேம். இதனின் இப்புறம் - அறம் கேட்ட இதற்கு மேல். ஏதிலம்-கைவிட்ட தன்மையுடையேம். என்ற-என்று சீவகன் சொன்ன. மல்கு நீர்-மிகுந்த கண்ணீர். மார்பின் வாய்- மார்பின் கண்.
பின்பு அம் மகளிர் அவன் அடிமுதல் முடிகாறும் ஒவ்வோ ருறுப்பினையும் நோக்கி நோக்கிப் பலவாறு நயமொழி கூறிப் புலம்பினர். அவன் நெஞ்சம் துறவு பூண்டமையின் அவரது அழுகுரல் அவற்கு அசைவு பிறப்பிக்கவில்லை.
சீவகன் துறவு கோலம் பூண்டு வெளிவரலும் அவன் தேவியர் ஒருவர் ஒருவரைக் காட்டிப் புலம்புவார், காந்தருவதத்தையைக் காட்டிப் புலம்புதல்
விண்ணோர் மடமகள்கொல் விஞ்சைமக ளேகொல்
கண்ணார் கழிவனப்பிற் காந்தருவ தத்தை யென்று
எண்ணாய வாணெடுங்கண் மெய்கொள்ள வேமுற்றுப்
பண்ணாற் பயின்றீர்! இனியென்பயில் வீரே. 736
736. கண்ணார் கழி வனப்பு-கண்களைக் கவரும் மிக்க அழகு,. எண்ணாய-எண்ணும் தன்மையுண்டாய. மெய் கொள்ள-அறிவைக் கவர்ந்து கொள்ளவே. ஏமுற்று-மயங்கி. பண்ணால் பயின்றீர்- யாழ் வித்தையால் வென்று கொண்டீர். என் பயில்வீர்-என்ன உறவு கொண்டாடுவீர்.
குணமாலையைக் காட்டிப் புலம்புதல்
கொல்வே னெடுங்கட் குணமாலை குஞ்சரத்தால்
அல்லனோ யுற்றாளுக் கன்று களிறடர்த்துப்
புல்லிப் புணர்முலையின் பூங்குவட்டின் மேலுறைந்தாய்
எல்லேமற் றெம்பெருமாற் கின்றிவளு மின்னாளோ. 737
737. கொல் வேல் - கொல்லும் வேல். அல்லல் நோய் - மிக்க வருத்தம். உற்றாளுக்கு - உற்ற அவள் பொருட்டு. அடர்த்து - அடக்கி. குவடு - உச்சி. எல்லே - இரக்கக் குறிப்பு.
பதுமையைக் காட்டிப் பரிதல்
தூம்புடைய வெள்ளெயிற்றுத் துத்தி யழனாகப்
பாம்புடைய நோக்கிப் பதுமை பவழவாய்
தேம்புடைய வின்னமுதாச் சேர்ந்தாய்க் கினியதுவே
ஆம்புடைய நஞ்சடங்கிற் றின்றூறிற் றாகாதே. 738
738. தூம்புடைய வெள்ளெயிறு - உள்ளே புழையுடைய வெள்ளிய நச்சுப்பல். துத்தி - புள்ளி. பாம்பு - பாம்பின் நஞ்சு. உடைய - நீங்கும்படி. தேம்புடைய பதுமை - தேம்புதலையுடைய பதுமை. ஆம்... ஆகாதே - "மேல் வளரும் கூற்றினையுடைய நஞ்சு ஒரு புறத்தே யடங்கித் தீராமல் நின்றது; அதுவே இன்று ஊறிற்றாகாதோ என்க."
கேமசரியைக் காட்டிப் புலம்புதல்
தாழ்ந்துலவி மென்முலைமேற் றண்ணாரம் வில்விலங்கப்
போழ்ந்தகன்ற கண்ணினா லேப்பெற்றுப் போகலாய்
தாழ்ந்தமர ரின்னமிர்தந் தக்கநாட் டாகாதே
வீழ்ந்ததென வீழ்ந்தாய்நீ யின்றதுவும் விட்டாயோ. 739
739. வில் விலங்க - ஒலி குறுக்கிடும்படி. போழ்ந்து - போழ. எப் பெற்று - பார்வையம்பால் தைப்புண்டு. அமரர் இன்னமிர்தம் - தேவர் கொண்டுபோகின்ற அமுதம்; தாழ்ந்து நிலத்தே வீழ்ந்தது. வீழ்ந்தாய் - விரும்பினாய். அது - அவ்விருப்பம்.
கனகமாலையைக் காட்டிப் புலம்புதல்
கண்ணோ கயலோ கழுநீரோ காவியோ
பெண்ணோ வமுதோ பிணையோ வெனப் பிதற்றித்
துண்ணென் சிலைத்தொழிலுங் காட்டிமுன் னின்புற்றீர்
புண்மேற் கிழிபோற் றுறத்தல் பொருளாமோ. 740
740. பிணையோ - வெண் மானோ. சிலைத்தொழில் - வில்வன்மை. புண்மேல் கிழிபோல் - புண்மீது பட்ட சீலையை மெல்ல எடுப்பதுபோல்.
விமலையைக் காட்டிப் புலம்புதல்
பொன்னகர வீதி புகுந்தீர் பொழிமுகிலின்
மின்னி னிடைநுடங்க நின்றாடன் வேனெடுங்கண்
மன்ன னகரெல்லாம் போர்ப்பவலைப் பட்டீர்க்கு
இன்னே யொளியிழந்த வின்னா விடுகினவோ. 741
741. பொன்னகர வீதி-இராசமாபுரத்துத் தெரு. மின்னின்- மின்னலைப்போல. நுடங்க-அசைய. மன்னன்-சீவகன் தந்தையான சச்சந்தன். வலைப்பட்டீர்-அவள் கண்வலையில் அகப்பட்டீர். இன்னே-இப்போது. இன்னா இடுகினவோ-அவள் கண்கள் இன்னாவாய் ஒளி குறைந்தனவோ.
சுரமஞ்சரியைக் காட்டிப் புலம்புதல்
செங்கச் சிளமுலையார் திண்கறையூர் பல்லினார்
மங்கையர்கள் காப்ப மகிழ்ந்தாளை நீமகிழ்ந்து
பங்கயமே போல்வாளைப் பார்ப்பானாய்ப் பண்ணணைத்துத்
தங்கினாய் கோவே துறத்தல் தகவாமோ. 742
742. கறையூர் பல்-அழுக்குப்போக விளக்கமாட்டாத பல். பங்கயமே போல்வான்-தாமரை ஞாயிற்றையே நோக்குமாறுபோல நின்னையே நோக்கிக் கற்புக்கடம் பூண்டவள். பண்ணணைத்து-பாட்டாலே வசப்படுத்திச் சேர்த்து.
இலக்கணையைக் காட்டிப் புலம்புதல்
புல்லா ருயிர்செகுத்த பொன்னந் திணிதோளாய்
மல்லா ரகன்மார்ப மட்டேந்தி வாய்மடுத்திட்டு
எல்லாருங் காண விலக்கணையோ டாடினாய்
அல்லாந் தவள் நடுங்க வன்பி னகல்வாயோ. 743
743. புல்லார்-பகைவர். பொன்-வெற்றித் திருமகள். திணி- வலிமை. மல்-மற்போர். மட்டு-தேன். வாய் மடுத்திட்டு-வாயிலே உண்பித்து. ஆடினாய்- இன்புற்றாய். அல்லாந்து-அறிவு கலங்கி. அன்பின்- அன்பிலிருந்து.
கோயில் புலம்புறுதல்
பண்ணார் பணைமுழவம் பாடவிந்து
பன்மணியாழ் மழலை நீங்கிப்
புண்ணார் புணைகுழலு மேங்கா புனைபாண்டி
லிரங்கா வான்பூங்
கண்ணா ரொலிகவுள கிண்கிணியு மஞ்சிலம்புங்
கலையு மாரா
மண்ணார் வலம்புரியும் வாய்மடங்கிக் கோன்கோயில்
மடிந்த தன்றே. 744
744. பண்ணார்-பாடற்கமைந்த. பணை முழவம்-பெரிய முழவு. பாடு -ஒலிப்பு. மழலை-இசை. புண்ணார்-துளையமைந்த. ஏங்கா-இசை செய்யா. பாண்டில்-கஞ்சதானம். இரங்கா-ஒலிசெய்யா. பூங்கண்ணார்- பூப்போலும் கண்ணையுடைய மகளிர். ஆரா-நிரம்பா. மண்ணார் வலம்புரி- அரக்கிட்டாடிய வலம்புரி. மண்ணார்கோன் என மாற்றினுமாம்.
இவ்வாறே நகரத்திடத்தும் இன்ப நிகழ்ச்சிகள் இலவாயின. இன்னிசை முழக்கம் எங்கும் கேட்டிலது. புலம்பு குரலே பொலிந்தது.
சீவகன் துறந்து செல்வது கண்டமகளிரும் துறவுபூண விரும்புதல்
காதலஞ் சேற்றுட் பாய்ந்த மதியெனுங் கலங்கனீரை
ஊதுவண் டுடுத்த தாரா னுவர்ப்பினி னுரிஞ்சித் தேற்ற
மாதரார் நெஞ்சந் தேறி மாதவஞ் செய்து மென்றார்,
காதலான் காத லென்று நிகள*த்தா னெடுங்கணாரே. 745
745. காதலஞ் சேற்றுள் -காமக் காதலென்னும் சேற்றில் பாய்ந்த-பாய்ந்து நின்ற. மதி-அறிவு. உவர்ப்பின்-வெறுப்புடன். தேற்ற-தெளிவிக்க. தாரானாகிய காதலான் தன் மனைவியர்மேல் வைத்த காதலென்னும் பிணிப்பினாலே தேற்ற என்க. காதல்-இவர் பிறப்பற்று வீடு பெறவேண்டுமென்ற காதல்.
சீவகன் அவர்கட் குரைத்தல்
தூமஞ்சால் கோதை யீரே தொல்வினை நீத்த நீந்தி
நாமஞ்சால் மதியி னீங்கி நன்பொன்மே லுலகி னுச்சி
ஏமஞ்சா லின்பம் வேண்டி னென்னொடும் லம்மி னென்றான்
காமஞ்சாய்த் தடர்த்து வென்ற காஞ்சனக் குன்ற மன்னான். 746
746. தூமம்-அகிற்புகை. வினை நீத்தம்-வினைக்கடல். நாமம்- அச்சம். ஏமம் சால் இன்பம்-வீட்டின்பம். காஞ்சனக் குன்றம்- பொன்மலை.
துறத்தற்குத் துணிந்தமை சொல்லிய அம்மகளிர் தம் வழிபாடு ஏற்கவேண்டுமெனத் தொழுதல்
சாந்தங் கிழிய முயங்கித் தடமலரால்
கூந்தல் வழிபட்ட கோவேநீ செல்லுலகில்
வாய்ந்தடியேம் வந்துன் வழிபடுநா ளின்றேபோல்
காய்ந்தருளல் கண்டாய் எனத்தொழுதார் காரிகையார். 747
747. வாய்ந்து-தவம் வாய்த்து. உன்-உன்னுடைய அடியை. காய்ந்து அருளல்-வெறுத்து நீக்காதருளல்வேண்டும். சாந்தம்..,கோவே- முயக்கத்தால் வருத்தம் நிகழ்ந்ததாகக் கருதி மலரால் கூந்தலை வழிபட்டு வருத்தம் தீர்த்த கோவே, என்றது. எமக்கு வருத்தமில்லா-ததனை வருத்த மாகக்கொண்ட நீ ஈண்டு வருத்தமுள்ளதனைத் தீர்க்கின்றிலை என்றதாம்.
சீவகன் அவர்களை விசயைபால் அடைக்கலந் தந்து துறவு நெறி யொழுகச் செய்ய, அவர்களும் தம் அணியும் பட்டுடையும் துறந்து துறவு கோலம் பூண்டு அவ்வற நெறியே யொழுகுவா ராயினர்.
சீவகன் துறவு முற்றல்
பூந்துகில் புனைகல மாலை பூசுசாந்து
ஆய்ந்துல குணவுவந் தருளி மாமணி
காந்திய கற்பகக் கான மாயினான்
ஏந்திய மணிமுடி யிறைவ னென்பவே. 748
748. மாலை -முத்துமாலை. உலகுணவு வந்து-உலகம் நுகரும்படி. காந்திய-ஒளி விளங்குகின்ற. ஏந்திய-உயர்ந்த.
சீவகன் தேவரொடு செல்லுதல்
தேய்பிறை யுருவக் கேணித் தேறுநீர் மலர்ந்த தேனார்
ஆய்நிறக் குவளை யஞ்சிக் குறுவிழிக் கொள்ளும் வாட்கண்
வேய்நிறை யழித்த மென்றோள் விசயையைத் தொழுது வாழ்த்திச்
சேய்நிறச் சிவிகை சேர்ந்தான் தேவர்கொண் டேகி னாரே. 749
749 தேய்பிறை-நுதல். தேறு நீர்-தெளிந்த நீர். ஆய் நிறக் குவளை-அழகிய நிறத்தையுடைய குவளை. குறுவிழிக் கொள்ளும்-மீண்டும் குவியும். வேய் நிறை மூங்கிலின் வடிவழகு. சேய்-முருகனையொத்த சீவகன். சேர்ந்தான்-ஏறினான்.
சச்சந்தன் பட்டபின் தன்னுறுப்புக்கள் பொலிந்திருத்தல் ஆகாதென்று உட்கொண்டு அவற்றின் பொலிவினைக் கடிந்தமை தோன்ற நிறையாலழித்த என்றார்.
சீவகன் தேவருடன் சமவசரணம் என்னும் திருக்கோயிலை யடைதல்
விளங்கொளி விசும்பறுத் திழிந்து மின்னுதார்த்
துளங்கொளி மணிவணந் தொழுது துன்னினான்
வளங்கெழு மணிவரை நெற்றிப் பாற்கடல்
இளங்கதிர்ப் பரிதியொத் திறைவன் தோன்றினான். 750
750 விசும்பறுத்து-விசும்பை ஊடறுத்து. மணிவணன்- மாணிக்க மணிபோலும் நிறமுடைய சீவகன். வரை நெற்றி-மலையுச்சி. இறைவன்-ஸ்ரீ வர்த்தமான சுவாமிகள். இவர் இருபத்துநான்காம் தீர்த்தங்கரர்.
திருக்கோயில் ஆரவாரம்
பிண்டியின் கொழுநிழற் பிறவி நோய்கெட
விண்டலர் கனைகதிர் வீரன் தோன்றினான்
"உண்டிவ ணறவமிர் துண்மி னோ" வெனக்
கொண்டன கோடணை கொற்ற முற்றமே. 751
751 நோய்கெட-நோய் கெடும்படி. விண்டு அலர்-விரிந்து விளங்கும். வீரன் - இறைவன். இவண் -இக் கோயிலிடத்தே. அறவமிர்து-அறமாகிய அமுது. கோடணை-தெய்வ ஆரவாரம். கொற்றம்- கோயில்.
சீவகன் கோயிற்குள் அணைதல்
வானவர் மலர்மழை சொரிய மன்னிய
ஊனிவர் பிறவியை யொழிக்கு முத்தமன்
தேனிமிர் தாமரை திளைக்குஞ் சேவடி
கோனமர்ந் தேத்திய குறுகி னானரோ. 752
752. ஊண் இவர் பிறவி-உடம்புகளிலே பரக்கின்ற பிறப்பு. தேன் இமிர் தாமரை திளைக்கும் சேவடி -ஒலிக்கும் தேனினம் தாமரை யென்று திளைக்கும் சேவடி. ஏத்திய-ஏத்துதற்கு.
அப்போது பக்கலிருந்தவர் சீவகன் குருகுலத்தான் காசிப கோத்திரத்தான் என்று கூற, அவனும் துதித்துத் தன் துறவுக் கருத்தைச் சொல்லித் துதித்தான். தேவனும் "நீ துறத்தலே மாட்சி" யென்று சொல்லியருளினான். சீவகன் மறுவலும் அவன் திருவடியில் வீழ்ந்து இறைஞ்சித் துறவு குறித்துச் சுதன்மர் என்னும் கணதரரிருந்த இடத்திற்குப் போந்தான்.
சீவகன் உடை முதலியன துறத்தல்
மணியுறை கழிப்பது போல மங்கலப்
பணிவரு பைந்துகி னீக்கிப் பாற்கடல்
அணிபெற வரும்பிய வருக்க னாமெனத்
திணிநிலத் தியன்றதோர் திலக மாயினான். 753
753. மணி உறை கழிப்பதுபோல- மணியை மறைத்திருந்த உறையை நீக்குவதுபோல. பணிவரு-குறை கூறுவதற்கரிய. அணிபெற அரும்பிய-அழகுறத் தோன்றிய. அருக்கன் நிலத்து இயன்றதாம் என என்று இயைக்க. என -என்று கூறும்படி.
மயிர் பறித்தல்
திருந்திய கீழ்த்திசை நோக்கிச் செவ்வனே
இருந்ததோ ரிடிகுரற் சிங்கம் பொங்கிமேற்
சுரிந்ததன் உளைமயிர் துறப்ப தொத்தனன்
எரிந்தெழு மிளஞ்சுட ரிலங்கு மார்பினான். 754
754. செவ்வனே-நேராக. சுரிந்த உளை-சுருண்டு கிடந்த பிடரி மயிர். எரிந்தெழும் இளஞ்சுடர்-ஒளிமிக்குத் தோன்றுதற்குக் காரணமான இளஞாயிறு.
அவன் பறித்த அளவில் வண்டினம் முரன்றன; சுதஞ்சணன் என்னும் தேவன் அம் மயிரைக் கொண்டு சென்று பாற்கடலில் வீழ்த்திவிட்டுத் தன் கோயிலை யடைந்தான். சீவகனுக்கும் சுருதஞானங்கள் வந்து நிறைந்தன. நந்தட்டனும் தோழர்களும் இவ்வண்ணமே சுருதஞானம் நிறைந்தனர்.
சீவகன் முனிவர் குழாத்துட் புகுதல்
கோமா னடிசாரக் குஞ்சரங்கள் செல்வனபோல்
பூமாண் திருக்கோயிற் புங்கவன்றாள் சேர்ந்தேத்தித்
தாமார்ந்த சீலக் கடலாடிச் சங்கினத்துள்
தூமாண் வலம்புரியின் றோற்றம்போற் புக்காரே. 755
755. கோமான்-பரதராச சக்கரவர்த்தி. புங்கவன்-வர்த்தமான சுவாமி. சீலக்கடல்-ஒழுக்கமாகிய கடல். தூமாண் வலம் புரி –தூய மாட்சிமையுடைய வலம்புரிச் சங்கு. சங்கினம்-முனிவர் கூட்டம்.
இவ்வாறிருக்கும் நாளில், மகதநாட்டில் நகரமாகிய இராசகிருகத்தில் இருந்து ஆட்சிபுரிந்திருந்த சேணிக மன்னன் ஒருநாள் வெண்பட்டுடுத்துப் பூசனைக்குரிய பலி சுமந்து அபிராவணமேறிச் சமவசரணமடைந்து முனிவர் கூட்டத்தே அழகும் ஒளியும் திகழவிருந்த சீவகமுனிவனைக் கண்டு வியப்புற்றுக் சுணதர முனிவரை வினவி இம் மாதவனுடைய முற்பிறப்பிற் செய்த தவங்களையும் துறந்த வண்ணத்தையும் அறியவிரும்பினன். ஏனை முனிவரும் அதனையே விழைந்தனர். அவரும் அவர் விரும்பியவாறே சீவகனது பெருமையை எடுத்துக் கூறினார். சேணிகன் முதலிய முனிவர்கள் தாமும் அவ்வண்ணமாதல் வேண்டி நாத்தழும்பேற ஏத்திச் சென்றனர்.
சீவகன் குன்றேறி நிற்றல்
முழுது முந்திரி கைப்பழச் சோலைத்தேன்
ஒழுகி நின்றசும் பும்முயர் சந்தனத்
தொழுதிக் குன்றந் துளும்பச்சென் றெய்தினான்
பழுதில் வாய்மொழிப் பண்ணவ னென்பவே. 756
756. முழுதும்-முற்றவும். அசும்பும்-அடிவழுக்கும். தொழுதி- கூட்டம். துளும்ப-தவத்தின் கனத்தால் இளக. பழுது-குற்றம். பண்ணவன்-சீவகசாமி.
வெயிற்கும் மழைக்கும் பனிக்கும் அஞ்சாது சீவகன் குன்றின் உச்சியில் நின்று தவம் முற்றுதல்
நளிசிலம் பதனி னுச்சி நாட்டிய பொன்செய் கந்தின்
ஒளியொடு சுடர வெம்பி உருத்தெழு கனலி வட்டம்
தெளிகடல் சுடுவ தொத்துத் தீயுமிழ் திங்க ணான்கும்
விளிவருங் குரைய ஞான வேழமேற் கொண்டு நின்றான். 757
757 நளிசிலம்பு-பெரியமலை. கந்தின்-தூண்போல. கனலி வட்டம்-ஞாயிறு. சுடுவ தொத்து-கவறப் பண்ணுவது போல. தீயுமிழ் திங்கள் நான்கு-நெருப்பைப் பொழியும் சித்திரை முதலிய நான்கு திங்களும். விளிவரும் குரைய -கெடாத. குரை-அசை. சீவகனைக் கந்தென்றமையின். அவன் மேற்கொண்டிருந்த ஞானத்தை யானை யென்றார்.
இவ்வாறு ஓர் யாண்டு உணவின்றித் தவம் செய்து உயிர்தாங்கிய சீவகன் மேலும் வீடுபேற்றுக்குக் காரணமான தவத்தையும் செய்து முடித்தான். அப்போது தேவர்கள் போந்து அவன் தாளைக் கோயிலாகக் கொண்டு வழிபட்டனர். பின்பு விஞ்சை வேந்தரும் வியனில வேந்தரும் வந்து அவன் திருவடியை வாழ்த்தினர்.
அவனுக்கு ஆசனமும் குடையும் வருதல்
குளித்தெழு வயிர முத்தத் தொத்தெரி கொண்டு மின்ன
அளித்துல கோம்பு மாலை யகன்குடை கவித்த தாங்கு
வளிப்பொர வுளருந் திங்கட் கதிரெனக் கவரி பொங்கத்
தெளிந்துவில் லுமிழும் செம்பொ னாசனம் சேர்ந்த தன்றே. 758
758 நீருட் குளித்து எடுப்ப எழும் முத்துக்கொத்தும் வயிரமணியும் கொண்டு ஒளிவிளங்க என்க. உவகை அருள் செய்து புரக்கும் இயல்பினையுடைய விரிந்த குடை வந்து கவித்தது. வளி பொர-காற்று ஒன்றோடொன்று பொரும்படி. உளரும்-அசையும். கதிர் என –கதிர் போல. தெளித்து-தெளிந்து. வில் -ஒளி.
இதுகண்டு தேவரும் விஞ்சையரும் போந்து முறையே அவன் திருமுன் வணங்கி வாழ்த்தினர்.
தேவியராய்த் துறந்தோர் வாழ்த்துதல்
தீவினைக் குழவி செற்ற மெனும்பெயர்ச் செவிலி கையுன்
வீவினை யின்றிக் காம முலையுண்டு வளர்ந்து வீங்கித்
தாவினை யின்றி வெந்நோய்க் கதிகளுள் தவழ மென்ற
கோவினை யன்றி யெந்நாக் கோதையர்க் கூறலுண்டே. 759
759. வீவினையின்றி-கொடுந்தொழில் இன்றி. காம முலை-காமமாகிய முலை. வீங்கி-பருத்து. தாவினை யின்றி-குதித்துப் போவதின்றி. கோவினை -இறைவனை. கோதையர்-கோதாகிய பொருளை யுடையவர்,
நல்வினைக் குழவி நன்னீர்த் தயாவெனும் செவிலி நாளும்
புல்லிக்கொண் டெடுப்பப் பொம்மென் மணிமுலை கவர்ந்து வீங்கிச்
செல்லுமாற் றேவர் கோவா யெனுமிருள் கழிந்த சொல்லால்
அல்லிமேல் நடந்த கோவே யச்சத்து ணீங்கி னோமே. 760
760. நன்னீர்த் தயா-நல்ல நீர்மையுடைய அருள். பொம்மென் மணி முலை-பெருத்த அழகிய முலை. புல்லிக்கொண்டு -தழுவிக்கொண்டு. கோவாய்ச் செல்லுமால்-இந்திரனாய்ச் செல்வான். இருள் கழிந்த சொல்- குற்றமில்லாத சொல். அல்லி-தாமரைப் பூ.
அவர்கள் பின்னரும் "இறைவ, நின் திருவடி பழவினையை யறுக்கும் வாளாம்" என்று புகழ்ந்தனர்.
சீவகன் அவர்கட்கு உறுதி கூறல்
இன்பமற் றென்னும் பேரா னெழுந்தபுற் கற்றை தீற்றித்
துன்பத்தைச் சுரக்கு நான்கு கதியெனுந் தொழுவிற் றோன்றி
நின்றபற் றார்வ நீக்கி நிருமலன் பாதஞ் சேரின்
அன்புவிற் றுண்டு போகிச் சிவகதி யடைவ லாமே. 761
761. மற்று-அசை. பேரான்-பெரிய பசு. சுரக்கும்-செய்யும். தொழுவில்-மாட்டுத் தொழுவில். திற்றி-ஊட்டி. பற்றார்வம்-பற்றும் ஆர்வமும். புற்கற்றை மனவெழுச்சியாகிய புற்கற்றை. நிருமலன்-மலமற்றவன். சேரின்-நினைந்து அடைவராயின். அன்பு விற்று உண்டு-அன்பைக் கொடுத்து . சிவகதி-வீட்டுலகு.
சீவகன் வீடு பெறுதல்
உழவித்தி யுறுதி கொள்வார்
கொண்டுய்யப் போகல் வேண்டித்
தொழுவித்தி யறத்தை வைத்துத்
துளங்கிமி லேறு சேர்ந்த
குழவித்தண் திங்க ளன்ன
விருக்கைய னாகிக் கோமான்
விழவித்தாய் வீடு பெற்றான்
விளங்கிநால் வினையும் வென்றே. 762
762. உழவித்தி-உழவுத் தொழிலைப் பரப்பி. கொண்டுய்யப் போகல் வேண்டி-கொள்ள வல்லார் கொண்டு பிறவியைத் தப்பப் போகலை விரும்பி. தொழு-சமவசரணம். இமில் ஏறு-கொண்டையையுடைய ஏறு. குழவித் தண் திங்கள்-பிறைத்திங்கள். விழவித்தாய்-விழவுக்குக் காரணமாய். ஏறு சேர்ந்த திங்கள் -இடபவிராசியைச் சேர்ந்த திங்கள். உழவு- வழிபாடு. நால்வினை- வேதநீயம், ஆயுசியம், நாமம், கோத்திரம்.
அப்போதில் தேவர்கள் ஊர்திகளிற் போந்து சாந்தணிந்து பூச்சொரிந்து புகையெழுப்பி வணங்கினர். விண்ணவரும் மண்ணவரும் பரிநிர்வாண மென்னும் திருமணத்தை விதிப்படி செய்து வலஞ்செய்துகொண்டு போயினர்.
வீடுபேற்றின்பம்
கேவல மடந்தை யென்னுங் கேழ்கினர் நெடிய வாட்கண்
பூவலர் முல்லைக் கண்ணிப் பொன்னொரு பாக மாகக்
காவலன் வானோர் கூறாக் கண்ணிமை யாது புல்லி
மூவுல குச்சியின் பக் கடலினுள் மூழ்கி னானே. 763
763. கேவல மடந்தையென்னும், கண்ணும் கண்ணியுமுடைய பொன். பூவலர் முல்லைக் கண்ணி-முல்லைப்பூவால் தொடுத்த கண்ணி.கேழ்- நிறம். காவலன்-சீவகன். கூறு-பங்கு, புல்லி-சேர்ந்து. இன்பக் கடல்- சிவபோகம் என்னும் இன்பக் கடல்.
சீவகனுடைய தேவிமாராகிய காந்தருவதத்தை முதலியோர் ஓர் எறும்பிற்கும் ஏதம் வாராவகையில் இருந்தும், நடந்தும் கிடந்தும் தாம் மேற்கொண்ட தவம் முற்றினார்.
சீவகன் தேவிமார் பெண்பிறப்பு நீங்க நோற்றல்
சூழ்பொற் பாவையைச் சூழ்ந்து புல்லிய
காழகப் பச்சை போன்று கண்டெறூஉம்
மாழை நோக்கினார் மேனி மாசுகொண்டு
ஏழைப் பெண்பிறப் பிடியச் சிந்தித்தார். 764
764. காழகப் பச்சை-கருஞ்சேற்றையுடைய தோல். கண்தெறும்-கண்ணைக் கூசும். மாழை-இளமை. ஏழைப்பெண்-தாழ்ந்த பெண் பிறப்பு. இடிய-கெடவேண்டுமென்று.
அவர்கள் இந்திரராய்த் துறக்க மெய்துதல்
ஆசை யார்வமோ டைய மின்றியே
ஓசை போயுல குண்ண நோற்றபின்
ஏசு பெண்ணொழித் திந்தி ரர்களாய்த்
தூய ஞானமாய்த் துறக்க மெய்தினர். 765
765. ஆர்வம் - இரதி கன்மம். ஓசை யுலகு - புகழ் பொருந்திய தேவருலகம். உண்ண - அவ்வுலக போகத்தை நுகர. ஏது பெண் - பொல்லாதென்று பேசும் பெண் பிறப்பு. ஞானமாய் - ஞானம் பெற்று.
அவர்கள் துறக்க வின்ப மார்தல்
காம வல்லிகள் கலந்து புல்லிய
பூமென் கற்பகப் பொன்ம ரங்கள்போல்
தாம வார்குழற் றைய லார்முலை
ஏம மாகிய வின்ப மெய்தினார். 766
766. காமவல்லி - காமவல்லிக் கொடி. இது தேவருலகத்துக் கற்பக மரத்தில் பற்றிப் படர்வது என்பர். தாம வார் குழல் - மாலையணிந்த நீண்ட கூந்தல். ஏமம் - உயிர்க்கு ஏமமாகச் சிறந்த.
நந்தட்டனும் தோழன்மார்களும் ஐம்பொறியையும் தம் வயமாமாறு நோற்றுத் தவம்செய்தல்
பாவ னைமரீஇப் பட்டி னியொடுந்
தீவி னைகழுஉந் தீர்த்தன் வந்தியாப்
பூவுண் வண்டன கொட்பிற் புண்ணியர்
நாவின் வேட்கையும் நஞ்சி னஞ்சினார். 767
767. பாவனை - பதினாறுவகைப் பாவனை; இவை தரிசன விசுத்தி முதலாக, பிரவசனவற்சலத்துவம் ஈறாக உள்ளவை. இவற்றின் விரிவை ஸ்ரீபுராணத்துட் காண்க. பட்டினி - உண்ணா நோன்பு. தீர்த்தன் - இறைவனை. கொட்பின் - மனக்கொட்பினால். பூவுண் வண்டன நாவின் வேட்கை - பூவை யுண்கின்ற வண்டையொத்த நாவினால் மொண்ட உணவு; அஃதாவது வண்டுபோலச் சிறிதாகக் கொள்ளும் உணவு. வேட்கை, ஆகுபெயர். நஞ்சின் - நஞ்சு போல.
இவர்கள் தேவராதல்
கருவிற் கட்டிய காலம் வந்தென
உருவ வெண்பிறைக் கோட்டி னோங்கிய
அருவிக் குன்றின்மேன் முடித்திட் டைவரும்
திருவின் றோற்றம்போற் றேவ ராயினார். 768
தேவரின்பம் நுகர்தல்
மண் கனிந்த பொன்முழவ மழையின் விம்ம
மாமணியாழ் தீங்குழல்க ளிரங்கப் பாண்டில்
பண்கனியப் பாவைமார் பைம்பொற் றோடுங்
குண்டலமுந் தாம்பதைப்ப விருந்து பாட
விண்கனியக் கிண்கிணியுஞ் சிலம்பு மார்ப்ப
முரிபுருவ வேனெடுங்கண் விருந்து செய்யக்
கண்கனிய நாடகங்கண் டமரர் காமக்
கொழுந்தீன்று தந்தவந்தாம் மகிழ்ந்தா ரன்றே. 769
769. மண் கணிந்த - மண்ணுதல் முற்றவும் அமைந்த. விம்ம - முழங்க. பண்டில் - கஞ்சதானம். பண்கனிய - பண் முற்றுப் பெறப் பாட. பதைப்ப - அசைய. விண் கனிய - விண்ணவர் மனம் உருக. விருந்து - தேவ மகளிர் காமக் கொழுதீன்று செய்யும் இன்பம்.
நூலாசிரியர் அவையடக்கம் கூறல்
செந்தா மரைக்கு செழுநாற்றங் கொடுத்த தேங்கொள்
அந்தா மரையா ளகலத்தவன் பாத மேத்திச்
சிந்தா மணியின் சரிதஞ் சிதர்தேன் தெருண்டார்
நந்தா விளக்குச் சுடர்நன்மணி நாட்டப் பெற்றே 770
770. அந் தாமரை - இறவன் திருவடி. தாமரைக்கு மணம் தந்த தாமரை யென்றார். ஆன் அகலத்தவன் - அத் தாமரையை யாளும் விரிந்த ஞானத்தையுடைய சீவகன். சிதர்ந்தேன் - பரக்கக் கூறினேன். தெருண்டார் - அறிஞரும் இதனை நன்றென்ரு தெளிந்தார். நன்மணி - விளி. நந்தா - அவியாத. சுடர் நண்மணி - உள்ளத்தே நின்றெரியும் நன்மணி. நன்மணி - குருக்கள்
தோன்றுமாறு போல, இவரும் இவ்வுடம்பினை நீக்கித் தேவர் உடம்பு பெற்றனர்.
இது நூலாசிரியர் தம் குருக்கட்கு கூறியது.
குருக்கள் வணக்கம்
செய்வினை யென்னு முந்நீர்த் திரையிடை முளைத்துத் தேங்கொள்
மைவினை மறுவி லாத மதியெனுந் திங்கண் மாதோ
மொய்வினை யிருள்கண் போழு முக்குடை மூர்த்தி பாதம்
கைவினை செய்த சொற்பூக் கைதொழு தேத்தி னேனே. 771.
771. செய்வினை - முன்னெ செய்த நல்வினை. மைவினை மறு - தீவினையாகிய களங்கம். மதி - அறிவு. மொய்வினை யிருள் – செறிந்த வினையாகிய இருள். கண் போழும் - கட்குப் புலனாகாவாறு அறக் கெடுக்கும். கைவினை செய்த - ஆராய்ந்த.
சீவக சிந்தாமணி - சுருக்கம் முடிந்தது.
This file was last updated on 6 May 2015.
Feel free to send corrections to the webmaster.