தொல்காப்பியம் -எழுத்ததிகாரம் - பாகம் 2
நச்சினார்கினியர் உரை
tolkAppiyam - ezuttatikAram, part 2
naccinArkiniyar urai
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Digital Library of India providing a scanned image copy
of this work. The e-version has been prepared via the Distributed Proof-reading implementation
and we thank the following volunteers for their assistance:
Anbu Jaya, Karthika Mukundh, CMC Karthik, R. Navaneethakrishnan,
V. Ramasami, A. Sezhian, P. Sukumar, SC Tamizharasu
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2015.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
தொல்காப்பியம் -எழுத்ததிகாரம் - பாகம் 2
நச்சினார்கினியர் உரை
Source:
தொல்காப்பியம் - எழுத்ததிகாரம் - நச்சினார்க்கினியம்
தொல்காப்பியம் : எழுத்ததிகாரம்
நச்சினார்க்கினியர் உரை
புலவர் ஞா. தேவநேயப் பாவாணர் அவர்கள் B.O.L. அடிக்குறிப்புடன்
திருநெல்வேலித் தென்னிந்திய
சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட்,
திருநெல்வேலி & சென்னை.
கழக வெளியீடு - 17
Copy-right, May 1944
Published by: The South India Saiva Siddhanta Works: Publishing Society, Tinnevelly, Ltd.
Tirunelveli & Madras.
Printed at the Rajen Electric Press, Madras.
---------
7. உயிர்மயங்கியல்
(உயிரீறுகளின் புணர்ச்சி யிலக்கணம் உணர்த்துவது)
7.1. அகர ஈறு
அல்வழியில் அகர ஈற்றுப் பெயர் புணருமாறு
203. அகர இறுதிப் பெயர்நிலை முன்னர்
வேற்றுமை யல்வழிக் கசதபத் தோன்றின்
தத்தம் ஒத்த ஒற்றிடை மிகுமே.
என்பது சூத்திரம்,. உயிரீறு நின்று வன்கணத்தோடுஞ் சிறுபான்மை ஏனைக் கணங்களோடும் மயங்கிப் புணரும் இயல்பு உணர்த்தினமையின் இவ் வோத்து உயிர்மயங்கிய லென்னும் பெயர்த்தாயிற்று. மேற் பெயரோடு உருபு புணருமாறு கூறிப் பெயர்வருவழி உருபு தொக்குநின்ற பொருட்புணர்ச்சி கூறுகின்றமையின் உருபியலோடு இயைபுடைத்தாயிற்று.
இச் சூத்திரம் அகர ஈற்றுப்பெயர் அல்வழிக்கண் வன்கணத்தோடு புணருமாறு கூறுகின்றது.
இ-ள்: அகர இறுதிப் பெயர்நிலை முன்னர்-அகரமாகிய இறுதியையுடைய பெயர்ச்சொன் முன்னர், வேற்றுமை யல்வழிக் கசதபத் தோன்றின்-வேற்றுமை யல்லாத விடத்துக் கசதப முதன் மொழிகள் வருமொழியாய்த் தோன்றுமாயின், தத்தம் ஒத்த ஒற்று இடைமிகும் -தத்தமக்குப் பொருந்திய அக் கசத பக்காளாகிய ஒற்று இடைக்கண் மிகும்; எ-று
எ-டு: விளக்குறிது நுணக்குறிது அதக்குறிது சிறிது தீது பெரிது என ஒட்டுக. இவை அஃறிணை இயற்பெயராகிய1 எழுவாய் வினைக் குறிப்புப் பண்பாகிய பயனிலையோடு2 முடிந்தன.
ஒத்த வென்றமையாது தத்தமொத்த என்றதனான் அகர ஈற்று உரிச்சொல் வல்லெழுத்து மிக்கும் மெல்லெழுத்து மிக்கும் முடியும் முடிபும் அகரந் தன்னை உணர நின்றவழி வன்கணத்தோடு மிக்கு முடியும் முடிபுங் கொள்க. தடக்கை தவக்கொண்டான் வயக்களிறு வயப்புலி குழக்கன்று எனவும், தடஞ்செவி கமஞ்சூல் எனவும் அக்குறிது சிறிது தீது பெரிது எனவும் வரும். இனி இடைச்சொல் வல்லொற்றுப் பெற்று வருவன உளவேல் அவற்றையும் இவ்விலேசினான் முடித்துக் கொள்க. (1)
----------
1 இயற்பெயர்-இயல்பாக இடப்பட்ட பெயர்
2. வினைக்குறிப்புப் பண்பாகிய பயனிலை-பண்படியாகப் பிறந்த குறிப்புவினைமுற்று
-----------
அகர ஈற்று வினைச்சொல்லும் இடைச்சொல்லும்
204. வினையெஞ்சு கிளவியும் உவமக் கிளவியும்3
எனவென் எச்சமும் சுட்டின் இறுதியும்
ஆங்க என்னும் உரையசைக் கிளவியும்
ஞாங்கர்க் கிளந்த வல்லெழுத்து மிகுமே
---------
3 போல என்னும் உவமக்கிளவியும் குறிப்புவினையெச்சமாய் வினையெஞ்சு குளவியுள் அடங்குமேனும், உவமைப்பொருள் தருதல்பற்றித் தனித்துக் கூறப்பட்டது.
இஃது அகர ஈற்று வினைச்சொல்லும் இடைச்சொல்லும் புணருமாறு கூறுகின்றது.
இ-ள்: வினையெஞ்சு கிளவியும்-வினையை ஒழிபாகவுடைய அகர ஈற்று வினைச்சொல்லும், உவமக் கிளவியும்-உவமவுருபாய் நின்ற அகர ஈற்று யிடைச் சொல்லும், எனவென் எச்சமும் -என வென்னும் வாய்ப்பாட்டால் நின்ற அகர ஈற்று இடைச் சொல்லும், சுட்டின் இறுதியும் -சுட்டாகிய அகர ஈற்று இடைச் சொல்லும், ஆங்க என்னும் உரையசைக் கிளவியும்-ஆங்க வென்னும் அகர ஈற்று உரையசை யிடைச் சொல்லும், ஞாங்கர்க் கிளந்த வல்லெழுத்து மிகும்-முன்னர்க் கூறிய வல்லெழுத்து மிக்கு முடியும்; எ-று
எ-டு: உண தாவ சாவ என நிறுத்திக்கொண்டான் சென்றான் தந்தான் போயினான் என வல்லெழுத்துக் கொடுத்து முடிக்க. இவ் வினையெச்சம் ஒழிந்தன எல்லாம் இடைச்சொல் லென்று உணர்க. புலி போலக் கொன்றான் சென்றான் தந்தான் போயினான் எனவும், கொள்ளெனக் கொண்டான் சென்றான் தந்தான் போயினான் எனவும், அக்கொற்றன் சாத்தன் தேவன் பூதன் எனவும், ஆங்கக் கொண்டான் சென்றான் தந்தான் போயினான் "ஆங்கக் குயிலு மயிலுங் காட்டிக் கேசவனை விடுத்துப் போகியோளே" எனவும் வரும். உவமம் வினையெச்ச வினைக்குறிப்பேனும் ஒன்றனோடு பொருவப் படுதல் நோக்கி உவமவியலின்கண் ஆசிரியர் வேறுபடுத்திக் கூறினார். எனவென்னும் எச்சமும் இருசொல்லையும்1 இயைவிக்கின்ற நிலைமையான் இடைச் சொல்லோத்தினுள் வேறோதினார். ஆங்க என்பது ஏழனுருபின் பொருள்பட வந்ததல்லாமை "ஆங்க வென்னு முரையசை" என்றதனானும் "ஆங்கவுரையசை" என்னும் இடையியற் சூத்திரத்தானும் உணர்க. இவை இயல்பு கணத்துக்கண் முடியும் முடிபு "ஞநமயவ" (எழு-144) என்புழிக் கூறியதேயாம். அவை தாவ புலிபோல கொள்ளென ஆங்க என நிறுத்தி ஞநமயவ முதலிய மொழி ஏற்பன கொணர்ந்து புணர்த்தி இயல்பாமாறு ஒட்டிக் கொள்க. சுட்டு மேற் கூறுப. (2)
----------------
1 இருசொல்-எச்சப்பகுதியும் முற்றும், அல்லது முன்னும் பின்னும் வருஞ் சொற்கள்
எ-டு: கொள்ளெனக் கொண்டான். காற்றெனச் சென்றான்.
-----------
சுட்டின் முன் ஞநம மெய்
205. சுட்டின் முன்னர் ஞநமத் தோன்றின்
ஒட்டிய ஒற்றிடை மிகுதல் வேண்டும்
இது "ஞநமயவ" (எழு-144) என்னுஞ் சூத்திரத்தான் மென்கணம் இயல்பாகும் என முற்கூறியதனை விலக்கி மிக்கு முடிக என்றலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது.
இ-ள்: சுட்டின் முன்னர் ஞநமத் தோன்றின்-அகரச் சுட்டின் முன்னர ஞநமக்கள் முதலாகிய மொழிவரின், ஒட்டிய ஒற்று இடை மிகுதல் வேண்டும்-தத்தமக்குப் பொருந்தின ஒற்று இடை மிகுதலை விரும்பும் ஆசிரியன்; எ-று
அஞ்ஞாண் அந்நூல் அம்மணி எனவரும். ஒட்டிய வென்றதனான் அஞ்ஞெளிந்தது அந்நன்று அம்மாண்டது என அகரந் தன்னை யுணர நின்றவழியும் மிகுதல் கொள்க. (3)
-------------
சுட்டின் முன் யவ மெய்
206. யவமுன் வரினே வகரம் ஒற்றும்
இதுவும் அது.
இ-ள்: யவ முன்வரின்-யகர வகர முதன்மொழி அகரச்
சுட்டின் முன்னே வரின் வகரம் ஒற்றும்-இடைக்கண் வகரம்
ஒற்றாம்; எ-று
எ-டு: அவ்யாழ் அவ்வளை என வரும்.
வருமொழி முற்கூறியவதனால் அகரந் தன்னை யுணர நின்றவழியும் வகரம் மிகுதல் கொள்க. அவ்வளைந்தது என வரும். (4)
-----------
சுட்டின் முன் உயிர்
207. உயிர்முன் வரினும் ஆயியல் திரியாது
இதுவும் அது
இ-ள்: உயிர் முன் வரினும் ஆயியல் திரியாது- உயிர்கள் அகரச்சுட்டின்முன் வரினும் முற்கூறிய வகரம் மிக்கு வரும் இயல்பிற் றிரியாது; எ-று
அ என நின்ற சுட்டின் முன்னர் அடை என வருவித்து வகரம் ஒற்றித் தன்னுரு இரட்டி உயிரேற்றி அவ்வடை அவ்வாடை அவ்விலை அவ்வீயம் அவ்வுரல் அவ்வூர்தி அவ்வெழு அவ்வேணி அவ்வையம் அவ்வொழுக்கம் அவ்வோடை அவ்வௌவியம் என ஒட்டுக.
"நெடியதன் முன்னர்" (எழு-160) என்பதனுள் "நெறியியல்" என்றதனான் இரட்டுதல் கூறினமையின், அது நிலைமொழித் தொழிலென்பது பெறப்பட்டது. வருமொழி முற்கூறியவதனான் அகரந் தன்னை உணரநின்ற வழியும் வகரம் மிகுதல் கொள்க. அவ்வழகிது என வரும். திரியா தென்றதனான் மேற் சுட்டு நீண்டவழி வகரக்கேடு கொள்க. (5)
-----------
செய்யுளில் சுட்டு நீளுதல்
208. நீட வருதல் செய்யுளுள் ளுரித்தே
இஃது எய்தியது விலக்கிச் செய்யுட்கு ஆவதோர் விதி கூறுகின்றது.
இ-ள்: நீட வருதல் செய்யுளுள் உரித்து-அகரச் சுட்டு
நீட வருதல் செய்யுளிடத்து உரித்து; எ-று
எ-டு: "ஆயிருதிணையி1 னிசைக்குமன சொல்லே" (சொல். 1) "ஆயிருபாற்சொல்" (சொல் - 3) என வரும். இது வருமொழி வரையாது கூறலின் வன்கணம் ஒழிந்தகணம் எல்லாவற்றோடுஞ் சென்றது. அவற்றிற்கு உதாரணம் வந்தவழிக் காண்க. இந்நீட்சி இருமொழிப் புணர்ச்சிக்கண் வருதலின் "நீட்டும்வழி நீட்டல்" ஆகாமை உணர்க. (6)
--------------
---------
"சாவ" என்னுஞ் சொல்
209. சாவ என்னுஞ் செயவென் எச்சத்
திறுதி வகரங் கெடுதலும் உரித்தே.
இது மேல் வினையெஞ்சு கிளவி என்ற எச்சத்திற்கு எய்தாத தெய்துவித்தது.
இ-ள்: சாவ என்னுஞ் செயவென் எச்சத்து இறுதி வகரம்- சாவ வென்று சொல்லப்படுஞ் செயவெ னெச்சத்து இறுதிக்கண் நின்ற அகரனமும் அதனாற் பற்றப்பட்ட வகரமும், கெடுதலும் உரித்து-கெட்டு நிற்றலுங் கெடாது நிற்றலும் உரித்து;எ-று
எ-டு: கோட்டிடைச் சாக்குத்தினான் என வரும். சீறினான் தகர்த்தான் புடைத்தான் என ஒட்டுக. கெடாதது முன்னர் முடித்தாம்.
இதனை "வினையெஞ்சு கிளவி" (எழு-204) என்றதன்பின் வையாததனான் இயல்புகணத்தும் இந் நிலைமொழிக்கேடு கொள்க. சாஞான்றான் நீண்டான் மாண்டான் யாத்தான் வீழ்த்தான் அடைந்தான் என ஒட்டுக. (7)
-----------
இயல்பாகும் அகர ஈற்றுச் சொற்கள்
210. அன்ன வென்னும் உவமக் கிளவியும்
அண்மை சுட்டிய விளிநிலைக் கிளவியுஞ்
செய்ம்மன வென்னுந் தொழிலிறு சொல்லும்
ஏவல்கண்ணிய வியங்கோட் கிளவியுஞ்
செய்த என்னும் பெயரெஞ்சு கிளவியும்
செய்யிய என்னும் வினையெஞ்சு கிளவியும்
அம்ம என்னும் உரைப்பொருட் கிளவியும்
பலவற் றிறுதிப் பெயர்க்கொடை உளப்பட
அன்றி அனைத்தும் இயல்பென மொழிப.
இஃது அகர ஈற்றுள் ஒருசார் பெயர்க்கும் வினைக்கும் இடைக்கும் முன்னெய்தியது விலக்கியும் எய்தாத தெய்துவித்தும் இலக்கணங் கூறுகின்றது,
இ-ள்: அன்ன என்னும் உவமக் கிளவியும்-அன்ன என்று சொல்லப்படும் உவமவுருபாகிய அகர ஈற்று இடைச்சொல்லும் அண்மை சுட்டிய விளிநிலைக் கிளவியும்-அணியாரைக் கருதின விளியாகிய நிலைமையினையுடைய அகர ஈற்று உயர்திணைப் பெயர்ச்சொல்லும் செய்ம்மன என்னுந் தொழிலிறு சொல்லும்- செய்ம்மன என்று சொல்லப்படுந் தொழிற்சொற் பொருள் தருங்கால் உம் ஈற்றான் இறுஞ் சொல்லும், ஏவல் கண்ணிய வியங் கோட் கிளவியும்--ஒருவரானன் ஏவற்றொழின்மை கருதிக் கூறப் பட்ட ஏவற் பொருண்மையை முற்ற முடித்தலை உணர்த்தும் அகர ஈற்று வினைச்சொல்லும், செய்த என்னும் பெயரெஞ்சு கிளவியும் செய்த என்று சொல்லப்படும் பெயரெச்சமாகிய அகர ஈற்று வினைச்சொல்லும், செய்யிய என்னும் வினையெஞ்சு கிளவியும்-- செய்யிய என்று சொல்லப்படுகின்ற வினையெச்சமாகிய அகர ஈற்று வினைச்சொல்லும், அம்ம என்னும் உரைப்பொருட் கிளவியும்--அம்ம என்று சொல்லப்படும் எதிர்முக மாக்கிய அகர ஈற்று இடைச் சொல்லும், பலவற்று இறுதிப் பெயர்க்கொடை உளப்பட--பன்மைப் பொருளை உணர்த்தும் அகர ஈற்றுப் பெயர்கள் ஐந்தினையும் முற் கூறியவற்றோடு கூட்டிக் கொடுத்தல் உள்ளிட்டு, அன்றி அனைத்தும் இயல்பென மொழிப--அவ் வெட்டுச் சொல்லும் இயல்பாய் முடியு மென்று கூறுவர் ஆசிரியர்; எ - று.
எ - டு.: பொன்னன்ன குதிரை செந்நாய் தகர் பன்றி என இது 'வினை யெஞ்சு கிளவி (எழு - 204) என்பதனான் மிக்குமுடிதலை வில்க்கிற்று. ஊர் கேள் செல் தா போ என ' உயிரீறாகிய வுயர்திணை' என்னுஞ் சூத்திரத்தான் இயல்பாய் முடிவது ஈண்டு னகரங் கெட்டு அகர ஈறாய் விளி யேற்று முடிந்தமையின் எய்தாத தெய்துவித்தது. உண்மனகுதிரை செந்நாய் தகர் பன்றி என்பனவற்றிற்கு உண்ணுமென விரித்தும் யானுண்மன நீயுண்மன அவனுண்மன என நிறுத்திக் கூழ் சோறு தேன் பால் என வருவித்தும் முடிக்க. இவற்றிற்கும் அவ்வாறே விரித்துக் கொள்க. இங்ஙனஞ் செய்யு மென்பதன் பொருட்டாகிய மனவெ னிறுதிச்சொல் அக்காலம் வழங்கிய தாதலின் ஆசிரியர் அதனையும் வேறாக எடுத்தோதினார். யானும் நின்னோடுடன் வருக அவன் செல்க அவள் செல்க அவர் செல்க என நிறுத்திக் காட்டின்கண் செறுவின்கண் தானைக்கண் போரின்கண் என வருவித்து முடிக்க. இவை ஏவற்பொருண்மையை முற்ற முடித்தன. ஏவல் கண்ணிய எனவே ஏவல் கண்ணாதனவும் உளவாயின. அவை நீ செல்க அது செல்க அவை செல்க என நிறுத்தி முற்கூறிய காடு முதலியவற்றை வருவித்து முடிக்க. இவை ஏவற்பொருண்மையை முற்ற முடியாதன. 1 அஃறிணை ஏவற் பொருண்மையை முற்ற முடியாமை வினையியலுள் வியங்கோட்கண்ணே பொருளியலுஞ் செய்யுளியலும்பற்றிக் கூறுதும். மனவும் வியங்கோளும் எய்தாததெய்துவித்தது. உண்ட குதிரை செந்நாய் தகர் பன்றி இதுவும் அது. இதற்கு உரிய உண்ணாத குதிரை யென்னும் எதிர்மறையும் நல்லகுதிரை யென்னுங் குறிப்புங் கொள்க. உண்ணிய கொண்டான் சென்றான் தந்தான் போயினான் இது முன்னர் வினையெச்சம் வல்லெழுத்துப் பெறுக என்றலின் எய்தியது விலக்கிற்று. அம்ம கொற்றா சாத்தா தேவா பூதா என்பது இடைச்சொல்லாதலின் எ.ய்தாத தெய்துவித்தது. இது கேளாய் கொற்றனே என எதிர்முக மாக்கியவாறு காண்க. பல்ல குதிரை பல குதிரை சில்ல குதிரை சில குதிரை உள்ள குதிரை இல்ல குதிரை செந்நாய் தகர் பன்றி என ஒட்டுக. இக்காலத்துப் பல்ல சில்ல என்பன வழங்கா. இதுவும் விளக்குறிது என்றாற்போலப் பலக் குதிரை யென வல்லெழுத் தெய்தியதனை விலக்கிற்று. விளிநிலைச் கிளவியாகிய பெயர் முற்கூறாததனானே செய்யு மென்பதன் மறையாகிய செய்யாத வென்பதற்கும் இவ்வியல்பு முடிபு கொள்க. அது வாராத கொற்ற னென வரும். இவ்வியல்பு முடிபிற்குச் செய்ம்மன சிறத்தலின் வியங் கோட்கு முன் வைத்தார்.. ஏவல் கண்ணிய என்பதனான் ஏவல் கண்ணாததும் உளதென்று கூறி 'மன்னிய பெருமநீ' (புறம் - 91) என் உதாரணங் காட்டுக வெனின், அது பொருந்தாது; கூறுகின்றான் அவன் நிலைபெற்றிருத்தல் வேண்டுமென்றே கருதிக் கூறுதலின் அதுவும் ஏவல்கண்ணிற்றேயாம். எல்லாவற்றினு|ஞ் சிறந்த பலவற்றிறுதி முற்கூறுக வெனின், அது வழக்கிற்குஞ் செய்யுட்கும் வேறுவேறு முடிபுடைத் தென்றதற்குஞ் செய்யுண் முடிபு இவ்வியல்புபோற் சிறப்பின்றென்றற்கும் அகர ஈற்றுள் முடிபு கூறாது நின்ற முற்றுவினையும் வினைக்குறிப்பும் இவ்வியல்பு முடிபு பெறு மென்றற்கும்பின் வைத்தார். உண்டன குதிரை இது முற்றுவினை. கரியன குதிரை இது முற்றுவினைக் குறிப்பு. இஃது இயல்புகணத்து முடிபு 'ஞநமயவ' (எழு - 144) என்புழிப் பொருந்துவன வெல்லாங் கொள்க. (8)
----
1 அஃறிணை யுயிர்கள் ஒருவனுடைய ஏவலை யுணர்ந்து செய்ய மாட்டாமையின் அவற்றை நோக்கி இடும் ஏவல்களை எவல் கண்ணாதன் என்றார்.
-------------
'வாழிய' என்னுஞ் சொல்
211. வாழிய என்னுஞ் செயவென் கிளவி
இறுதி அகரங் கெடுதலும் உரித்தே.
இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி வகுத்தது.
இ - ள்: வாழிய என்னுஞ் செய என் கிளவி -- வாழுங்காலம் நெடுங்காலமாகுக என்னும் பொருளைத் தரும் வாழிய வென்று சொல்லப்படுஞ் செயவெனெச்சக் கிளவி, இறுதி யகரங் கெடுதலும் உரித்து -- இறுதிக்கண் அகரமும் அதனாற் பற்றப்பட்ட யகர வொற்றுங் கெட்டு முடிதலும் உரித்து; எ - று.
கெடுதலு மெனவே, கெடாது முடிதலே பெரும்பான்மை யென்றவாறு, வாழிகொற்றா சாத்தா தேவா பூதா என வரும். வாழிய என்பதே பெரும்பான்மை. வாழிய யான் நீ அவன் அவள் அவர் அது அவை என இது மூன்றிடத்துஞ் சேறலின் 'உயிரீறாகிய முன்னிலைக் கிளவியும்' (எழு- 151) என்புழி முன்னிலையியல்பாம் என்றதன்கண் அடங்கா தாயிற்று. இது குறிப்புவியங்கோள்.
ஒன்றென முடித்தலான் இஃது இயல்புகணத்துங் கொள்க. வாழி ஞெள்ளா என வரும்.இவை வாழ்த்தப்படும் பொருள் வாழ வேண்டு மென்னுங் கருத்தினனாகக் கூறுதலின் ஏவல்கண்ணிற்றேயாம். அல்லாக்கால் 'வாழ்த்தியல் வகையே நாற்பாற்கு முரித்தே' (செய்யுளியல் - 109) என்பதற்கும் வாழ்த்தியலாகச் சான்றோர் கூறிய செய்யுட்களுக்கும் பயனின்றாமென்று உணர்க. (9)
----------
'அம்ம' என்னுஞ் சொல்லுக்கு மேலும் ஒரு விதி
212. உரைப்பொருட் கிளவி நீட்டமும் வரையார்,
இஃது அம்ம வென்பதறகு எய்தாத தெய்துவித்தது.
இ - ள்: உரைப்பொருட் கிளவி--எதிர்முக மாக்கும் பொருளையுடைய அம்மவென்னுஞ் சொல், நீட்டமும் வரையார் -- அகரமாகி நிற்றலேயன்றி ஆகாரமாய் நீண்டு முடிதலையும் நீக்கார்; எ - று.
அம்மா கொற்றா சாத்தா தேவா பூதா என வரும். உம்மையால் நீளாமையே பெரும்பான்மையாம். வரையாது கூறினமையின் நீட்சி இயல்பு கணத்துங் கொள்க. அம்மா ஞெள்ளா நாகா மாடா வடுகா ஆதா என ஒட்டுக.
-------------
'பல' என்னுஞ் சொல்
213. பலவற் றிறுதி நீடுமொழி உளவே
செய்யுள் கண்ணிய தொடர்மொழி யான.
இது முற்கூறிய பலவற்றிறுதிக்கண் சிலவற்றிற்குச் செய்யுண்முடிபுகூறுகின்றது.
இ -ள்: பலவற்று இறுதி நீடும் மொழி உள -- பலவற்றை உணர்த்தும் ஐவகைச் சொல்லின் இறுதி அகரம் நீண்டு முடியும் மொழிகளுஞ் சில உள, செய்யுள் கண்ணிய தொடர்மொழி ஆன-- யாண்டுள வெனிற் செய்யுளாதலைக் கருதிய ஒன்றோ டொன்று தொடர்ச்சிப்படுஞ் செய்யுண் முடிபுடைய மொழிகளின்கண்; எ - று.
உடைத்தென்னாது உள என்ற பன்மையான் வருமொழிக்கண் சில என்பது வந்து நீடு மென்று கொள்க. செய்யுளான என்னாது செய்யுள் கண்ணிய தொடர்மொழியான என்றதனால், பல என்பதன் இறுதி அகரம் நீண்டுழி நிலை மொழி அகரப்பேறும் வருமொழி ஞகரமாகிய மெல்லெழுத்துப் பேறும், வரு மொழியிறுதி நீண்டவழி அகரப்பேறும் மகரமாகிய மெல்லெழுத்துப்பேறுங் கொள்க.
எ - டு: ' பலாஅஞ் சிலாஅ மென்மனார் புலவர்', இதன் சொன்னிலை பல சில என்னுஞ் செவ்வெண்.1 (11)
-----------
1. செவ்வெண் - எண்ணும்மை தொக்கு வருவது.
--------
'பல' 'சில' என்னுஞ் சொற்கள்
214. தொடரல் இறுதி தம்முன் தாம்வரின்
லகரம் றகரவொற் றாகலு முரித்தே.
இது பல சில என்பனவற்றிற்கு இயல்பேயன்றித் திரிபும் உண்டென எய்தியதன் மேற் சிறப்புவிதி கூறுகின்றது.
இ - ள்: தொடர் அல் இறுதி -- தொடர்மொழி யல்லாத ஈரெழுத் தொருமொழியாகிய பல சில என்னும் அகர ஈற்றுச்சொல், தம்முன் தாம் வரின் -- தம் முன்னே தாம் வருமாயின், லகரம் றகரவொற்று ஆகலும் உரித்து -- தம் ஈற்றில் நின்ற லகர
வொற்று றகரவொற்றாகத் திரிந்து முடிதலும் உரித்து; எ - று.
உம்மையாற் றிரியாமையும் உரித்தென்றார்.
எ - டு: பற்பல கொண்டார் சிற்சில வித்தி என வரும். அகர ஈற்றுச்சுட்டல்லாத குற்றெழுத்து ஓரெழுத் தொருமொழி யாகுவன இன்மையின்தொடரலிறுதி யெனவே ஈரெழுத் தொருமொழியே உணர்த்திற்று. தன்முனென்னாது தம்முனென்ற பன்மையாற் பல சில என நின்ற இரண்டுந் தழுவப்பட்டன.
தம்முன்வரி னென்னாது தாமென்றதனாற் பலவின்முன் பல வருதலுஞ்சிலவின்முன் சிலவருதலுங் கொள்க. லகரம் றகரவொற்றா மென ஒற்றிற்குத்திரிபு கூறி அகரங்கெடுதல் கூறிற்றுல ரெனின், அது வாராததனால் வந்ததுமுடித்த லென்னும் உத்தி1 பெறவைத்த தென்று உணர்க. இதனை ஞாபகமென்பாரும் உளர். அருந்தாபத்தியால்2 தம்முன் தாம்வரி னெனவே தம்முன் பிற வரின் லகரம் றகர வொற்றாகாது அகரங் கெடு மென்று கொள்ளப்படும்.
எ-டு: பல்கடல் சேனை தானை பறை எனவும், பல்யானை பல்வேள்வி எனவும், சில்காடு சேனை தானை பறை எனவும், சில்யானை சில்வேள்வி எனவும் வரும். உரித்தென்றது அகர ஈற் றொருமை பற்றி. (12)
---------
1. வாராததனால் வந்ததுமுடித்தல்- ஒரு பொருண்மைக்கு வேண்டும் இலக்கணம் நிரம்ப வாராததோர் நூற்பாவானே அப்பொருண்மைக்கு வேண்டும் முடிபுகொள்ளச் செய்தல்.
2. அருத்தாபத்தி - ஒருபொருளுக்கு ஓர் இயல்பு கூறின*, அதன் மறுகலையான பொருளுக்கு அவ்வியல்பில்லை யென்று கொள்ளும் முறைமை.
----------
அவற்றிற்கு, மேலும் ஒரு முடிபு
215. வல்லெழுத் தியற்கை உறழத் தோன்றும்.
இது முற்கூறிய இரண்டற்கும் உள்ளதோர் முடிபு வேற்றுமை கூறுகின்றது.
இ - ள். வல்லெழுத்து இயற்கை -- முற்கூறிய பல சில வென்னும் இரண்டற்கும் அகர ஈற்றுப் பொது விதியிற் கூறிய வல்
லெழுத்து மிகும் இயல்பு உறழத் தோன்றும் -- மிகுதலும் மிகாமையுமாய் உறழ்ந்துவரத் தோன்றும்; எ - று.
எ - டு: பலப்பல பலபல சிலச்சில சிலசில என வரும். ஈண்டுந் தம்முன் தான் வருதல் கொள்க. இயற்கை யென்றதனான் அகரங் கெட லகரந்திரிந்துந் திரியாதும் உறழ்ந்தும் முடிதலுங் கொள்க. பற்பல பல்பல சிற்சிலசில்சில என வரும். தோன்று மென்றதனான் அகரங் கெட லகரம் மெல்லெழுத்தும் ஆய்தமுமாகத் திரிந்து முடிதலுங் கொள்க. பன்மீன் வேட்டத்துபன்மலர் பஃறாலி பஃறாழிசை சின்னூல் சிஃறாழிசை யென வரும். இது முன்னர்த் தோன்று மென்று எடுத்தோதிய சிறப்பு விதியால் அகரங் கெட நின்றலகர வொற்றின் முடிபாகலின் தகரம் வருவழி ஆய்த மென்பதனான் முடியாது.
-----------
வேற்றுமையின் அகர ஈறு
216. வேற்றுமைக் கண்ணும் அதனா ரற்றே.
இஃது அகர ஈற்றிற்கு அல்வழிமுடிபு கூறி வன்கணத்தோடு வேற்றுமை
தொக்கு நின்ற முடிபு கூறுகின்றது.
இ - ள்: வேற்றுமைக் கண்ணும் அதனோரற்று--அகர ஈற்றுப்பெயர்
வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக் கண்ணும் முற்கூறிய அல்வழியோடு ஒரு தன்மைத்தாய் க ச த ப முதன் மொழி வந்துழித் தத்தம் வொற்று
இடைமிக்கு முடியும்; எ- று.
எ-டு: இருவிளக் கொற்றன் சாத்தன் வேந்தன் தேவன் பூதன் என வரும்.இருவிளக் குறுமை சிறுமை தீமை பெருமை எனக் குணவேற்றுமைக்கண்ணுங்கொள்க. இருவிள வென்பது ஓலை; வேணாட்டகத்து ஓரூர்; கருவூரினகத்து ஒரு சேரியுமென்ப. இருவிளவிற் கொற்றன் என விரிக்க. (14)
-------------
மரப் பெயர்க்குப் பிறிது விதி
217. மரப்பெயர்க் கிளவி மெல்லெழுத்து மிகுமே.
இஃது அகர ஈற்று மரப்பெயர்க்கு எய்தியது விலக்குப் பிறிது விதி வகுத்தது.
இ - ள் : மரப்பெயர்க் கிளவி மெல்லெழுத்து மிகுக் - அகர ஈற்று மரப்பெயராய சொல் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக் கண் மெல்லெழுத்து மிக்கு முடியும்; எ - று.
எ - டு : அதங்கோடு விளங்கோடு செதிள் தோல் பூ என வரும்.
இது 'கசதப முதலிய' (எழு - 143) என்பதனான் முடியும். (15)
-------------
218. மகப்பெயர்க் கிளவிக் கின்னே சாரியை.
இஃது அகர ஈற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது.
இ - து: மகப்பெயர்க் கிளவிக்கு இன்னே சாரியை-- அகர ஈற்று மக என்னும் பெயர்ச்சொல்லிற்கு வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண் வருஞ் சாரியை இன் சாரியை; எ - று.
எ - டு: மகவின்கை செவி தலை புறம் என வரும். சாரியைப் பேறு வரையாது கூறியவழி நான்கு கணத்துக்கண்ணுஞ் செல்லு மென்பது ஆசிரியர்க்குக் கருத்தாகலின் மகவின்ஞாண் நூல் மணி யாழ் வட்டு அடை என ஒட்டுக.
மேல் அவண் என்றதனான் இன்சாரியை பெற்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க. (16)
-------------
219.. அத்தவண் வரினும் வரைநிலை இன்றே.
இஃது ஈற்று வல்லெழுத்தும் அத்தும் வகுத்தலின் எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது..
இ-ள்: அவண்-முற்கூறிய மகவிடத்து, அத்து வரினும்,வரைநிலை இன்று-இன்னேயன்றி அத்துச் சாரியையும் ஈற்று வல்லெழுத்தும் வந்து முடியினும் நீக்கும் நிலைமையின்று; எ-று.
எ-டு: மகத்துக் கை செவி தலை புறம் என வரும்.
அவண் என்றதனால் மகப்பால்யாடு என வல்லெழுத்துப் பேறும், மகவின் கை என மேல் இன்சாரியை பெற்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்வும், விளவின்கோடு என உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்வுங் கொள்க. நிலை யென்றதனால் மகம் பால்யாடு என மெல்லெழுத்துப் பேறுங் கொள்க. (17)
-----------
அகர ஈற்றுப் பன்மைச் சொற்கள்
220. பலவற் றிறுதி உருபியல் நிலையும்.
இஃது ஈற்று வல்லெழுத்தும் வற்றும் வகுத்தலின் எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது.
இ-ள்: பலவற்றிறுதி- பல்ல பல சில உள்ள இல்ல என்னும் பலவற்றை யுணர்த்தும் அகர ஈற்றுச் சொற்களின் இறுதி, உருபியல் நிலையும்-உருபியற்கண் வற்றுப்பெற்றுப் புணர்ந்தாற்போல உருபினது பொருட் புணர்ச்சிக் கண்ணும் வற்றுப் பெற்றுப் புணரும்; எ-று.
ஈற்று வல்லெழுத்து அதிகாரத்தாற் கொள்க.
எ-டு: பல்லவற்றுக்கோடு பலவற்றுக்கோடு சிலவற்றுக்கோடு உள்ளவற்றுக்கோடு, இல்லவற்றுக்கோடு, செதிள் தோல் பூ என ஒட்டுக. உருபு விரிந்துழி நிற்குமாறுபோ லன்றி அவ்வுருபு தொக்கு அதன் பொருள் நின்று புணருங்கால் வேறுபாடு உடைமையின் அவ் வேறுபாடுகள் ஈண்டு ஓதினார் இத்துணையு மென்று உணர்க. (18)
-------------
7.2. ஆகார ஈறு
அல்வழியில் ஆகார ஈற்றுப் பெயர்
221. ஆகார இறுதி அகர இயற்றே.
இஃது ஆகார ஈற்றுப்பெயர் அல்வழிக்கண் முடியுமாறு கூறுகின்றது.
இ-ள்: ஆகார இறுதி அகர இயற்று-ஆகார ஈற்றுப் பெயர் அல்வழிக்கண் அகர ஏற்று அல்வழியது இயல்பிற்றாய் வல்லெழுத்து வந்துழித் தத்தம் ஒத்த ஒற்று இடைமிகும்; எ-று.
எ-டு: மூங்காக்கடிது தாராக்கடிது சிறிது தீது பெரிது என ஒட்டுக.
------------------
ஆகார ஈற்று வினை
222. செய்யா என்னும் வினையெஞ்சு கிளவியும்
அவ்வியல் திரியா தென்மனார் புலவர்.
இஃது ஆகார ஈற்று வினைச்சொன் முடிபு கூறுகின்றது.
இ- ள்: செய்யா என்னும் வினையெஞ்சு கிளவியும்—செய்யா வென்னும் வினை யெச்சமாகிய சொல்லும் உம்மையாற் பெயரெச்ச மறையாகிய சொல்லும், அவ்வியல் திரியாது என்மனார் புலவர் -- வல்லெழுத்து மிக்கு முடியும் அவ்வியல் பிற்றிரியாதென்று சொல்லுவார் புலவர்; எ - று.
எ - டு: உண்ணாக் கொண்டான் சென்றான் தந்தான் போயினான் எனவும் உண்ணாக் கொற்றன் சாத்தன் தேவன் பூதன் எனவும் வரும் (20)
----------
உம்மைத் தொகை முடிபு
223. உம்மை எஞ்சிய இருபெயர்த் தொகைமொழி
மெய்ம்மை யாக அகரம் மிகுமே.
இஃது ஆகார ஈற்று அல்வழிக்கண் உம்மைத் தொகை முடிபு கூறுகின்றது.
இ - ள்: உம்மை எஞ்சிய இருபெயர்த் தொகை மொழி--உம்மை தொக்கு நின்ற இரு பெயராகிய தொகைச் சொற்கள், மெய்ம்மையாக அகரம் மிகும் --மெய்யாக நிலைமொழி யீற்று அகரம் மிக்கு முடியும்; எ - று.
எ - டு; உவாஅப்பதினான்கு இராஅப்பகல் என வரும். மெய்ம்மையாகஎன்பதனான் வல்லெழுத்துக் கொடுக்க. இஃது எழுவாயும் பயனிலையுமன்றிஉம்மைத் தொகையாதலின் மாட்டேற்றான் வல்லெழுத்துப் பெறாதாயிற்று.1
உம்மை தொக்க என்னாது எஞ்சிய என்ற வாய்பாட்டு வேற்றுமையான் அராஅப்பாம்பு என பண்புத் தொகைக்கும் இராஅக்கொடிது என எழுவாய் முடிபிற்கும் இராஅக்காக்கை எனப் பெயரெச்ச மறைக்கும் அகரப் பேறு கொள்க. வருமொழி வரையாது கூறினமையின் இயல்பு கணத்துக் கண்ணும் அகரப்பேறு கொள்க. இறாஅவழுதுணங்காய் என வரும். இஃது உம்மைத் தொகை. அராஅக்குட்டி என்பது பண்புத்தொகையும்2 வேற்றுமைத் தொகையுமாம். உவாஅப்பட்டினி என்பது வேற்றுமைத்தொகை.
---------
1 மாட்டேற்றான் வல்லெழுத்துப் பெறாதாயிற்று -- விளக்குறிது என்று அகரவீறு புணர்வது போல மூங்காக கடிது என ஆகார ஈறு புணர்தலின், ' ஆகார விறுதி அகர வியற்றே' என்று மாட்டேறறிக கூறினார் ஆசிரியர். ஆனால், உவாஅப் பதினான்கு என்னும் உம்மைத் தொகை மூங்காக்கடிது என்பதைப்போல எழுவாயும்பயனிலையும் அன்மையின், மாட்டேற்றான் வல்லெழுத்துப் பெறாது வேறுவகையில் வல்லெழுத்துப் பெற்றது என்பது கருத்து.
2 அரா அக்குட்டி என்பது அராவாகிய குட்டி என்று பொருள்படின் இருபெயரொட்டுப்
பண்புத் தொகையாம்.
-----------
இயல்பாகும் ஆகார ஈற்றுச் சொற்கள்
224. ஆவும் மாவும் விளிப்பெயர்க் கிளவியும்
யாவென் வினாவும் பலவற் றிறுதியும்
ஏவல் குறித்த உரையசை மியாவுந்
தன்தொழில் உரைக்கும் வினாவின் கிளவியோ
டன்றி அனைத்தும் இயல்பென மொழிப.
இஃது எய்தியது விலக்கலும் எய்தாத தெய்துவித்தலும் உணர்த்துகின்றது.
இ - ள்: ஆவும்--ஆவென்னும் பெயரும், மாவும்--மாவென்னும் பெயரும், விளிப்பெயர்க் கிளவியும்--விளித்தலை யுடைய பெயராகிய உயர்திணைச் சொல்லும், யாவென் வினாவும்--யாவென்னும் வினாப்பெயரும், பலவற்று இறுதியும்--பன்மைப் பொருளை உணர்த்தும் ஆகார ஈற்றுப் பெயரெச்ச மறையாகிய முற்றுவினைச்சொல்லும், ஏவல் குறித்த உரையசை மியாவும்--முன்னிலை யேவல் வினையைக் கருதிவரும் எதிர்முகமாக்குஞ் சொல்லினைச் சேர்ந்த மியாவென்னும் ஆகார ஈற்று இடைச்சொல்லும், தன்தொழில் உரைக்கும் வினாவின் கிளவியொடு-- தனது தொழிலினைச் சொல்லும் ஆகார ஈற்றுத் தன்மையாகிய வினாச் சொல்லோடு கூட, அன்றி யனைத்தும்--அவ் வெழு வகையாகிய சொல்லும், இயல்பென மொழிப-- இயல்பாய் முடியுமென்று சொல்லுவர் புலவர்; எ - று.
எ - டு: ஆகுறிது மாகுறிது சிறிது தீது பெரிது குறிய சிறிய தீய பெரிய என ஒட்டுக. இஃது ஆகார ஈற்றுப் பெயராகலின் மிக்கு முடிவன மிகாவென எய்தியது விலக்கிற்று. ஊராகேள் செல் தா போ என இஃது இயல்பாமென்ற உயர்திணைப் படர்க்கைப் பெயர் திரிந்து முன்னிலையாய் விளியேற்றலின் எய்தாத தெய்துவித்தது. யா குறிய சிறிய தீய பெரிய என இதுவும் பெயராகலின் எய்திய இயைபு வல்லெழுத்து விலக்கியதாம். உண்ணா குதிரைகள் செந்நாய்கள் தகர்கள் பன்றிகள் என இஃது எய்தியது விலக்கிற்று, செய்யா வென்னுஞ் சூத்திரத்து உம்மையாற் பெற்ற வல்லெழுத்தினை விலக்கலின். கேண்மியா கொற்றா சாத்தா தேவா பூதா எனவும், உண்கா கொற்றா சாத்தா தேவா பூதா எனவும் இவ்விடைச் சொற்கள் முடியாமையின் எய்தாத தெய்துவித்ததுமாம். உண்கா என்பது யானுண்பேனோ என்னும்பொருட்டு. இயல்பு கணத்துக் கண்ணாயின் 'ஞ ந ம ய வ' (எழு - 144) என்பதனான் முடிபெய்தும். (22)
------------
வேற்றுமையில் ஆகார ஈறு
225. வேற்றுமைக் கண்ணும் அதனோ ரற்றே.
இஃது ஆகார ஈறு வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் முடியுமாறு கூறுகின்றது.
இ -ள்: வேற்றுமைக் கண்ணும்--ஆகார ஈற்றுப் பெயர் அல்வழிக்கண்ணே யன்றிவேற்றுமைப்பொருட் புணர்ச்சிக் கண்ணும், அதனோரற்று--அகர ஈற்று அல்வழியோடுஒரு தன்மைத்தாய் வல்லெழுத்து வந்துழி அவ்வல்லெழுத்து மிக்குமுடியும்; எ - று.
எ - டு : தாரா மூங்கா வங்கா என நிறுத்திக் கால் செவி தலை புறம் என வருவித்து வல்லெழுத்துக் கொடுத்து ஒட்டுக. (23)
------------
குறிற்கீழ் ஆகாரமும் தனி ஆகாரமும்
226. குறியதன் முன்னரும் ஓரெழுத்து மொழிக்கும்
அறியத் தோன்றும் அகரக் கிளவி.
இஃது அவ் வீற்றிற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது, அகரமும் வல்லெழுத்தும் பெறுதலின்.
இ - ள்: குறியதன் முன்னரும் -- குற்றெழுத்தின் முன்னின்ற ஆகார ஈற்றிற்கும், ஓரெழுத்து மொழிக்கும் -- ஓரெழுத் தொரு மொழியாகிய ஆகார ஈற்றிற்கும், அகரக்கிளவி அறியத் தோன்றும் -- நிலைமொழிக்கண் அகரமாகிய எழுத்து விளங்கத் தோன்றும்; எ - று.
எ - டு: பலா அக்கோடு செதிள் தோல் பூ எனவும், காஅக்குறை செய்கை தலை புறம் எனவும் வரும். ஓரெழுத் தொருமொழி அகரம் பெறுதல் சிறுபான்மை யென்றற்கு அதனைப் பிற்கூறினார். இது நிலைமொழிச் செய்கையாதலிற் பலாஅவிலை பலாஅநார் என இயல்பு கணத்துங் கொள்க. அறிய என்றதனான் அவ் வகரம் ஈரிடத்தும் பொருந்தினவழிக் கொள்க.
இன்னும் இதனானே அண்ணாஅத்தேரி திட்டாஅத்துக்குளம் என அத்துக் கொடுத்தும், உவாஅத்து ஞான்று கொண்டான் என அத்தும் ஞான்றுங் கொடுத்தும், உவாஅத்தாற்கொண்டான் என அத்தும் ஆனுங் கொடுத்தும் இடாவினுட் கொண்டான் என இன்னும் ஏழனுருபுங் கொடுத்துஞ் செய்கை செய்து முடிக்க.
இன்னும் இதனானே மூங்காவின்கால் மூங்காவின்றலை என உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றுழி இயைபு வல்லெழுத்துக் கேடுங் கொள்க. (24)
-----------
'இரா' என்னுஞ் சொல்
227. இராவென் கிளவிக் ககரம் இல்லை.
இஃது ஆகார ஈற்றுப்பெயர்க்கு ஒருவழி எய்தியது விலக்குகின்றது.
இ - ள்: இராவென் கிளவிக்கு--இராவென்னும் ஆகார ஈற்றுச் சொல்லிற்கு, அகரம் இல்லை--முற்கூறிய அகரம் பெறுதலின்றி வல்லெழுத்துப்பெற்று முடியும்; எ - று.
எ - டு: இராக்கொண்டான் சென்றான் தந்தான் போயினான் என வரும். இராஅக்காக்கை இராஅக்கூத்து எனப் பெயரெச்சமறைப்பொருள் தாராது இராவிடத்துக் காக்கை இராவிடத்துக் கூத்து என வேற்றுமை கருதியவழி இராக்காக்கை இராக்கூத்து என அகரம் பெறாதென்று உணர்க.1 (25)
--------------
1 இரா என்னுஞ் சொல் இராத என்று பொருள்பட்டு, வினையைக் குறிப்பின் அகரம் பெறும்; இராவில் என்று பொருள்பட்டுக் காலத்தைக் குறிப்பின் அகரம் பெறாது.
----------
' நிலா ' என்னுஞ் சொல்
228. நிலாவென் கிளவி அத்தொடு சிவணும்.
இஃது அகரம் விலக்கி அதிகார வல்லெழுத்தினோடு அத்து வகுத்தலின் எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது.
இ - ள்: நிலா வென் கிளவி அத்தொடு சிவணும் – நிலா வென்னுஞ் சொல் அத்துச்சாரியையோடு பொருந்தி முடியும்; எ - று.
எ - டு : நிலா அத்துக்கொண்டான் சென்றான் தந்தான் போயினான் என வரும். நிலைமொழித் தொழில் நிலைமொழித் தொழிலை விலக்குமாதலின் அத்து வகுப்ப அகரம் வீழ்ந்தது1. இதற்கு ஏழனுருபு விரிக்க, நிலாஅக்கதிர் என்பது 'வேற்றுமைக்கண்ணும்' (எழு - 225) என்பதனான் ஈற்று வல்லெழுத்துப் பெற்றது. நிலாஅ முற்ற மென்பது 'ஒட்டுதற்கொழுகிய வழக்கு' அன்மையின் அத்துப் பெறாததாயிறறு. ஈண்டு வருமொழி வரையாதுகூறினமையின் நிலாஅத்து ஞான்றான் என இயல்பு கணத்துக் கண்ணும் ஏற்பன கொள்க. (26)
---------
1. நிலைமொழித் தொழில் அத்துப் பேறு, நிலை மொழித் தொழிலை விலக்கல், 24-ம் நூற்பாவில் விதித்த அகரத்தை விலக்கல்.
------------
சில மரப்பெயர்கள்
229. யாமரக் கிளவியும் பிடாவுந் தளாவும்
ஆமுப் பெயரும் மெல்லெழுத்து மிகுமே.
இது வருமொழி வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து வகுத்தலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது.
இ- ள்: யாமரக் கிளவியும் --யாவென்னும் மரத்தை உணர நின்ற சொல்லும், பிடாவும்--பிடாவென்னுஞ் சொல்லும், தளாவும்--தளாவென்னுஞ் சொல்லும், ஆம் முப்பெயரும் மெல்லெழுத்து மிகும்--ஆகிய மூன்று பெயரும் வல்லெழுத்து மிகாது மெல்லெழுத்துமிக்கு முடியும்: எ- று.
எ - டு: யாஅங்கோடு பிடாஅங்கோடு தளாஅங்கோடு செதிள் தோல் பூ என வரும். வருமொழித் தொழிலாகிய மெல்லெழுத்து வகுப்பவே வல்லெழுத்து விலக்கிற்றாம், இதற்கு விலக்காமையின் அகரம் பெற்றது. (27)
----------
அவற்றிற்கு, மேலும் ஒரு முடிபு
230. வல்லெழுத்து மிகுனும் மான மில்லை.
இஃது எய்தியது இகந்துபடாமற் காத்தது, அகரத்தோடு மெல்லெழுத்தே யன்றி வல்லெழுத்தும் பெறு மென்றலின்.
இ - ள்: வல்லெழுத்து மிகினும் மானம் இல்லை - முற் கூறிய மூன்று பெயர்க்கும் மெல்லெழுத்தே யன்றி வல்லெழுத்து மிக்கு முடியினும் குற்றமில்லை; எ - று.
எ - டு: யாஅக்கோடு பிடாஅக்கோடு தளாஅக்கோடு செதிள் தோல் பூ என வரும். மானமில்லை என்றதனால் இம் மூன்றற்கும் உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க. யாவின்கோடு பிடாவின்கோடு தளாவின்கோடு என வரும். சாரியை பெறவே அகரம் வீழ்ந்தது.
இன்னும் இதனானே யாஅத்துக்கோடு பிடாஅத்துக்கோடு தளாஅத்துக்கோடு என அத்துப் பெறுதலுங் கொள்க. அகரமும் வல்லெழுத்தும் பெறுதலின்1.
யாமரக் கிளவி யென்பதனைக் 'குறியதன் முன்னர்' (எழு - 226) என்பதன்பின் வையாதவதனான் இராவிற் கொண்டான் நிலாவிற்கொண்டான் என உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கண் சென்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க. (28)
---------
1 அகரமும் வல்லெழுத்தும் பெறுதலின் -- அத்துப் பேற்றில் 27 - ம் நூற்பாவிற்கேற்ப
அகரமும் 28 - ம் நூற்பாவிற் கேற்ப வல்லெழுத்தும் இருத்தலின், அகரம் அத்தின் முதலெழுத்து, வல்லெழுத்துப்பேறு அத்திற்கும் வருமொழிக்கும் இடைப்பட்டது.
---------
'மா' என்னும் மரப் பெயரும் 'ஆ' 'மா' என்னும் விலங்கின் பெயர்களும்
231. மாமரக் கிளவியும் ஆவும் மாவும்
ஆமுப் பெயரும் அவற்றோ ரன்ன
அகரம் வல்லெழுத் தவையவண் நிலையா
னகரம் ஒற்றும் ஆவும் மாவும்.
இஃது எய்தியது விலக்கி எய்தாத தெய்துவித்தது. இம்மூன்றும் வல்லெழுத்துப் பெறா என்றலின் எய்தியது விலக்கிற்று. மாமரத்துக்கு அகரமும் ஙஞநம ஒற்றும் ஏனையவற்றிற்கு னகர ஒற்றும் எய்தாத தெய்துவித்தது.
இ -ள்: மாமரக் கிளவியும் ஆவும் மாவும் ஆம் முப் பெயரும் அவற்றோரன்ன -- மாமரமாகிய சொல்லும் ஆவென்னுஞ் சொல்லும் மாவென்னுஞ் சொல்லுமாகிய மூன்று பெயரும் யாமரம் முதலிய மூன்றோடும் ஒரு தன்மையவாய் மெல்லெழுத்துப் பெற்று முடியும், ஆவும் மாவும் அகரம் அவண் நிலையா னகரம் ஒற்றும் -- அவற்றுள் ஆவும் மாவும் புணர்ச்சியிடத்து அகரம் நிலை பெறாவாய் னகர ஒற்றுப் பெற்று முடியும். எனவே அருத்தாபத்தியான் மாமரத்திற்கு அகரம் நிலைபெற்று ஙஞநம ஒற்றும் பெறுமாயிற்று; அவை வல்லெழுத்து அவண் நிலையா -- அம் மூன்று பெயரும் முற்கூறிய வல்லெழுத்துப் புணர்ச்சியிடத்து நிலைபெறாவாய் வரும்; எ - று.
அவணிலையா என்றதனை இரண்டிடத்துங் கூட்டுக.
எ - டு: மா அங்கோடு செதிள் பூ ஆன்கோடு மான்கோடு செவி தலை புறம் என வரும்.
ஆவும் மாவும் அவற்றோரன்ன என்று ஞாபகமாகக்1 கூறியவதனால் மாங்கோ டென அகர மின்றியும் வரும்.
இனி, அவண் என்றதனாற் காயாங்கோடு நுணாங்கோடு ஆணாங்கோடு என்றாற் போலப் பிறவும் மெல்லெழுத்துப் பெறுதலும், அங்காக் கொண்டான் இங்காக் கொண்டான் உங்காக் கொண்டான் எங்காக் கொண்டான் என இவற்றுள் ஏழாம் வேற்றுமை யிடப்பொருள் உணர நின்ற இடைச் சொற்கள் வல்லெழுத்துப் பெறுதலும், ஆவின் கோடு மாவின் கோடு எனச் சிறுபான்மை இன் பெறுதலும், பெற்றுழி வல்லெழுத்து வீழ்வுங் கொள்க.
மாட்டேற்றான் மூன்று பெயரும் வல்லெழுத்துப் பெறாது மெல்லெழுத்துப் பெற்றவாறும் மாமரம் அகரம் பெற்றவாறும் இச் சூத்திரத்தின் கண்ணழிவான்2
உணர்க. (29)
-------------
1. ஞாபகம் - ஞாபகங் கூறல் என்னும் உத்தி. அதன் விளக்கத்தைப் புணரியல் 22-ம்நூற்பா அடிக்குறிப்பிற் காண்க. இங்கு ஞாபகமாகக் கூறிய தென்றது, மா ஆ மா என்னும் முப்பெயரும் யா பிடா தளா என்னும் முப்பெயர் போலப் புணரா விடினும்புணர்வதுபோல 'அவற்றோரன்ன' என மாட்டெறிந்ததை.
2. கண்ணழிவு - புணர்ச்சி பிரித்துச் சொற்பொருள் கூறல்.
-----------
'ஆன்' என்னுஞ் சொல்.
232. ஆனொற் றகரமொடு நிலையிடன் உடைத்தே.
இஃது அவற்றுள் ஆனென்றதற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது.
இ - ள்: ஆனொற்று - ஆவென்னுஞ் சொன் முன்னர்ப் பெற்று நின்ற னகரவொற்று, அகரமொடும் நிலையிடன் உடைத்து – அகரத்தோடு கூடி நிற்கும் இடனும் உடைத்து; எ - று.
இடனுடைத் தென்ற வதனால் வன்கண மொழிந்த கணத்து இம் முடிபெனக் கொள்க.
எ - டு : 'ஆனநெய் தெளித்து நான நீவி' 'ஆனமணிகறங்குங் கானத்தாங்கண்' என வரும். அகரமொடும் என்ற உம்மையால் அகரமின்றி வருதலே பெரும்பான்மை. ஆனெய் தெளித்து ஆன்மணி ஆன்வால் என வரும். (30)
----------
233. ஆன்முன் வரூஉம் ஈகார பகரந்
தான்மிகத் தோன்றிக் குறுகலும் உரித்தே.
இஃது ஆனென்பதற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி கூறுகின்றது.
இ - ள் : ஆன்முன் வரூஉம் ஈகார பகரம் - ஆனென்னுஞ் சொன் முன்னர் வருமொழியாய் வருகின்ற ஈகாரத்தோடு கூடிய பகரமாகிய மொழி. தான் மிகத் தோன்றி - அப் பகரமாகியதான் மிக்கு நிற்ப நிலைமொழி னகரத்திற்குக் கேடு தோன்றி, குறுகலும் உரித்து - ஈகாரம் இகரமாகக் குறுகி நிற்றலும் உரித்து; எ - று.
எ - டு : ஆப்பி என வரும்.
உம்மை எதிர்மறை யாகலான் ஆன்பீ என்றுமாம். (31)
-----------
சிலவற்றிற்கு உகரப் பேறு
234. குறியதன் இறுதிச் சினைகெட உகரம்
அறிய வருதல் செய்யுளுள் உரித்தே.
இஃது ஆகார ஈற்றுட் சிலவற்றிற்குச் செய்யுண் முடிபு கூறுகின்றது.
இ - ள் குறியதன் இறுதிச் சினைகெட – குற்றெழுத்தின் இறுதிக்கண் நின்ற ஆகாரத்தினது இரண்டு மாத்திரையில் ஒரு மாத்திரை கெட்டு அஃது அகரமாய் நிற்ப, உகரம் அறிய வருதல் செய்யுளுள் உரித்து -- ஆண்டு உகரம் புலப்பட வருதல் செய்யுளிடத்து உரித்து; எ - று.
எ - டு:
'இறவுப்புறத் தன்ன பி்ணர்படு தடவுமுதற்
சுறவுக்கோட் டன்ன முன்னிலைத் தாழை' (நற் - 19)
' புறவுப்புறத் தன்ன புன்காயுகாய்' (குறு - 274)
என வரும். உகரம் வகுப்பவே நிலைமொழி அகரங் கெட்டது. அதிகார வல்லெழுத்து விலக்காமையின் நின்று முடிந்தது. இனி நிலைமொழித் தொழில்வரையாது கூறினமையின் இயல்பு கணத்திற்கும் இவ் விதி எய்திற் றாகலின்,ஆண்டு வரும் உகரம் புலப்பட வாராமையும் உணர்க. சுறவுயர்கொடி அரவுயர்கொடி முழவுறழ்தோள் என இவை குறியதனிறுதிச் சினை கெட்டு வருமொழிஉயிர் முதன் மொழியாய் வருதலின் வகர உடம்படுமெய் பெற்று உகரம்பெறாது முடிந்தன. இவற்றிற்கு இராண்டா முருபு விரிக்க1; மூன்றாவதுமாம்.2
------
1 சுறவை உயர்த்திய கொடி - இரண்டாம் வேற்றுமை.
2 சுறவால் உயர்த்தப்பட்ட அல்லது சுறவுடன் உயர்ந்த கொடி - மூன்றாம் வேற்றுமை.
--------
7.3. இகர ஈறு
வேற்றுமையில் இகர ஈற்றுப் பெயர்
235. இகர இறுதிப் பெயர்நிலை முன்னர்
வேற்றுமை யாயின் வல்லெழுத்து மிகுமே
இஃது இகர ஈற்றுப் பெயர்க்கு அல்வழி முடிபுதொகைமரபிற் கூறி ஈண்டு வேற்றுமை முடிபு கூறுகின்றது.
இ - ள்: இகர இறுதிப் பெயர்நிலை முன்னர் -- இகர ஈற்றுப் பெயர்ச்சொன் முன்னர் அதிகாரத்தாற் கசதப முதன்மொழி வந்துழி, வேற்றுமையாயின் வல்லெழுத்து மிகும் -- வேற்றுமைப் பொருட்புணர்ச்சியாயின் தமக்குப் பொருந்தின வல்லெழுத்து மிக்கு முடியும்; எ - று.
எ - டு: கிளிக்கால் சிறகு தலை புறம் என வரும். புலி நரி என்றாற் போல்வனவும் அவை.
இனிக் கிளி குறுமை கிளிக் குறுமை எனக் குணம்பற்றி வந்த உறழ்ச்சி முடிபு மேல் 'வல்லெழுத்து மிகினும்' (எழு - 246) என்னுஞ் சூத்திரத்து 'ஒல்வழி யறிதல்' என்பதனாற் கொள்க. (33)
------------
இகர ஈற்று வினைச்சொல்லும் இடைச்சொல்லும்
236. இனி அணி என்னுங் காலையும் இடனும்
வினையெஞ்சு கிளவியுஞ் சுட்டு மன்ன.
இஃது எய்தாத தெய்துவித்தது, இவ் வீற்று இடைச் சொற்கும் வினைச் சொற்கும் முடிபு கூறுதலின்.
இ - ள்; இனி அணி என்னுங் காலையும் இடனும் -- இனி யென்றும் அணி யென்றுஞ் சொல்லப்படுகின்ற காலத்தையும் இடத்தையும் உணரநின்ற இடைச்சொல்லும், வினையெஞ்சு கிளவியும் -- இவ்வீற்று வினையெச்சமாகிய சொல்லும், சுட்டும் -- இவ் வீற்றுச் சுட்டாகிய இடைச்சொல்லும், அன்ன -- முற் கூறியவாறே வல்லெழுத்து மிக்கு முடியும்; எஃறு.
எ - டு: இனிக் கொண்டான் அணிக் கொண்டான் தேடிக் கொண்டான் சென்றான் தந்தான் போயினான் எனவும், இக்கொற்றன் சாத்தன் தேவன் பூதன் எனவும் வரும். இவ் விடைச்சொல் மூன்றும் இப்பொழுது கொண்டான் அணிய இடத்தே கொண்டான் இவ்விடத்துக் கொற்றன் என உருபின் பொருள்பட வந்த வேற்றுமையாதலின் வேறோதி முடித்தார். (34)
-----------
'இன்றி' என்னுஞ் சொல்
237. இன்றி என்னும் வினையெஞ் சிறுதி
நின்ற இகரம் உகர மாதல்
தொன்றியல் மருங்கின் செய்யுளுள் உரித்தே.1
இஃது இவ்வீற்று வினை யெச்சத்துள் ஒன்றற்குச் செய்யுண் முடிபு கூறுகின்றது.
இ - ள்; இன்றி என்னும் வினையெஞ்சு இறுதி நின்ற இகரம் உகரம் ஆதல் -- இன்றி யென்று சொல்லப்படும் வினை யெச்சக் குறிப்பின் இறுதிக்கண் நின்ற இகரம் உகரமாகத் திரிந்து முடிதல், தொன்றியல் மருங்கின் செய்யுளுள் உரித்து -- பழக நடந்த கூற்றையுடைய செய்யுளுள் உரித்து; எ - று.
-------
1 இன்று என்னும் சொல் இன்றி என்பதன் திரிபாகாமலே குறிப்பு வினையெச்சமாயிருக்க முடியும். சொல்லாது (சொல்லாமல்) என்னும் தெரிநிலை வினையெச்சத்தையொத்த இல்லாது (இல்லாமல்) என்னும் குறிப்புவினையெச்சமே இன்று எனக்குறுகி வழங்குகின்றதென்று கொள்ளலாம். இல்+ ஆது= இல்லாது, இல்+அது=இல்லது. இல்+து= இன்று. ஆது -- அது -- து. அன்று என்னும் எச்சமும் இங்ஙனமே. அல்+து= அன்று. அறிஞர் இதை ஆராய்க. இன்று என்னும் எச்சமும்இன்றி என்பதன் திரிபாயின், இயலாது என்னும் எச்சமும் ஓர் இகர வீற்றுச்சொல்லின் திரிபா யிருக்க வேண்டும், அங்ஙன மின்மை நோக்குக.
எ - டு: 'உப்பின்று புற்கை யுண்கமா கொற்கையோனே.'
நின்ற என்றதனால் வினையெச்சத்திற்கு முன் எய்திய வல்லெழுத்து வீழ்க்க.
தொன்றியன் மருங்கின் என்றதனான் அன்றி யென்பதூஉஞ் செய்யுளில் இம் முடிபு எய்துதல் கொள்க. 'இட னன்று துறத்தல் வல்லியோரே' 'வாளன்று பிடியா வன்கணாடவர்' 'நாளன்று போகி' (புறம் - 124) என வரும். முற்றியலிகரந் திரிந்து குற்றியலுகரமாய் நின்றது.1 (35)
------
1 அன்றி என்பதன் இகரம் முற்றியலிகரம்; அன்று என்பதன் உகரம் குற்றியலுகரம்.
------------
சுட்டுப் பெயர்
238. சுட்டி னியற்கை முற்கிளந் தற்றே.
இஃது இகர ஈற்றுச் சுட்டுப்பெயர் இயல்பு கணத்தோடு முடியுமாறு
கூறுதலின் எய்தாத தெய்துவித்தது.
இ - ள்: சுட்டின் இயற்கை -- இகர ஈற்றுச் சுட்டின் இயல்பு, முன் கிளந்தற்று -- முன் அகர ஈற்றுச் சுட்டிற்குக் கூறிய தன்மைத்தாம்; எ - று.
என்றது 'சுட்டின் முன்னர் ஞநமத் தோன்றின்' (எழு - 205) என்பது முதலிய நான்கு சூத்திரத்தானுங் கூறிய இலக்கணங்களை; அவை மென்கணத்து மெல்லெழுத்து மிகுதலும் இடைக்கணத்தும் உயிர்க்கணத்தும் வகரம் பெறுதலுஞ் செய்யுட்கண் வகரங் கெட்டுச் சுட்டு நீடலுமாம்.
இஞ்ஞாண் நூல் மணி எனவும், இவ்யாழ் இவ்வட்டு எனவும், இவ்வடைஇவ்வாடை இவ்விலை இவ்வீயம் இவ்வுரல் இவ்வூர்தி இவ்வெழு இவ்வேணிஇவ்வையம் இவ்வொடு இவ்வோக்கம் இவ்வௌவியம் எனவும், ஈவயினான்எனவும் வரும்.
'ஈ2காண் டோன்றுமெஞ் சிறுநல் லூரே'
என்றதும்,
'கள்வனோ வல்லன் கணவனென் காற்சிலம்பு
கொள்ளும் விலைப்பொருட்டாற் கொன்றாரே யீதொன்று'
(சிலப் - ஊர்சூழ்வரி - 7)
என்றதும் இதுவென்னுஞ் சுட்டு முதல் உகர ஈறாதலின் அது செய்யுளத்துப் புறனடையான் முடியு மென உணர்க. (36)
--------
2 ஈ -- இதோ, ஈ என்பதே அண்மைச் சுட்டின் முதல் வடிவம். இத்தகைய முதல் வடிவங்கள் சில, செய்யுளில் அருமையாய்ப் போற்றப்பட்டுள.
----------
' தூணி' முன் 'பதக்கு'
239. பதக்குமுன் வரினே தூணிக் கிளவி
முதற்கிளந் தெடுத்த வேற்றுமை யியற்றே.
இஃது இவ்வீற்று அல்வழிகளுள் அளவுப்பெயருள் ஒன்றற்குத் தொகை
மரபினுள் எய்திய ஏயென் சாரியை விலக்கி வேறு முடிபு கூறுகின்றது.
இ - ள்: தூணிக் கிளவிமுன் பதக்கு வரின் – தூணியாகிய அளவுப்பெயரின் முன்னர்ப் பதக்கு என்னும் அளவுப்பெயர் வருமாயின், முதற் கிளந்து எடுத்த வேற்றுமை இயற்று -- முன்பு விதந்தெடுத்த வேற்றுமை முடிபின் இயல்பிற்றாய் வல்லெழுத்து மிக்கு முடியும்; எ - று.
எ - டு: தூணிப்பதக்கு என வரும். இஃது உம்மைத் தொகை.
வருமொழி முற்கூறிய வதனான் அடையொடு வந்துழியும் இவ் விதி கொள்க. இரு தூணிப் பதக்கு முத்தூணிப் பதக்கு என ஒட்டுக. கிளந்தெடுத்த வென்றதனால் தூணிக்கொள் சாமை தோரை பாளிதம் எனப் பொருட்பெயர் முன் வந்துழியும், இரு தூணிக்கொள் என அதுதான் அடையடுத்துழியுந், தூணித்தூணி தொடித்தொடி காணிக்காணி பூணிப்பூணி எனத் தன் முன்னர்த் தான் வந்துழியும் இவ் விதி கொள்க.
இன்னும் இதனானே தன் முன்னர்த் தான் வந்துழியும் அதுதான் அடையடுத்து வந்துழியும் இக்குச்சாரியை பெறுதலுங் கொள்க. தூணிக்குத் தூணி இரு தூணிக்குத் தூணி என வரும். இவற்றுட் பண்புத்தொகையும் உள.(37)
--------------
'நாழி' முன் 'உரி'
240. உரிவரு காலை நாழிக் கிளவி
இறுதி இகரம் மெய்யொடுங் கெடுமே
டகர மொற்றும் ஆவயி னான.1
இதுவும் அது.
இ - ள்: உரிவரு காலை -- நாழி முன்னர் உரி வருமொழியாய் வருங்காலத்து, நாழிக் கிளவி -- அந்நாழி யென்னுஞ் சொல், இறுதி இகரம் மெய்யொடுங் கெடும், ஆவயின் ஆன டகரம் ஒற்றும்-- அவ்விடத்து டகரம் ஒற்றாய் வரும்; எ - று.
எ - டு: நாடுரி என வரும் இதனான் யகாரமும் விலக்குண்டது.
வருமொழி முற்கூறிய வதனான் இரு நாடுரி முந் நாடுரி எனவும் ஒட்டுக.
இறுதி யிகர மென முன்னும் ஓர் இகரம் உள்ளது போலக் கூறியவதனான் ஈண்டை நிலைமொழியும் வருமொழியும் நிலைமொழியாய் நின்று பெயரோடு வல்லெழுத்து மிக்கு முடிதலுங் கொள்க. நாழிக்காயம் உரிக்காயம் சுக்கு தோரை பாளிதம் என வரும். (38)
----------
1 நாழி+உரி= நாழுரி--நாடுரி (மரூஉ அல்லது போலி) என்று கொள்ளவும் இடமுண்டு.
---------------
'பனி' என்னுங் காலச்சொல்
241. பனியென வரூஉங் கால வேற்றுமைக்
கத்தும் இன்னுஞ் சாரியை யாகும்.
இஃது இகர ஈற்று வேற்றுமையுள் ஒன்றற்கு வல்லெழுத்தினோடு சாரியை பெறுமென எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது.
இ - ள்: பனியென வரூஉங் கால வேற்றுமைக்கு--பனியென்று சொல்ல வருகின்ற நோயன்றிக் காலத்தை உணர நின்ற வேற்றுமை முடிபுடைய பெயர்க்கு, அத்தும் இன்னுஞ் சாரியை ஆகும் -- அத்தும் இன்னும் சாரியையாக வரும்; எ - று.
எ - டு: பனியத்துக் கொண்டான் பணியிற் கொண்டான் சென்றான் தந்தான் போயினான் என வரும்.
வேற்றுமை யென்றதனான் இன்பெற்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க.
--------------
'வளி' என்னும் பூதச்சொல்
242. வளியென வரூஉம் பூதக் கிளவியும்
அவ்வியல் நிலையல் செவ்வி தென்ப.
இதுவும் அது.
இ - ள்; வளியென வரூஉம் பூதக் கிளவியும் -- வளியென்று சொல்ல வருகின்ற இடக்கரலல்லாத ஐம்பெரும் பூதங்களில் ஒன்றை உணரநின்ற சொல்லும்,1 அவ்வியல் நிலையல் செவ்விதென்ப -- முன்னைக் கூறிய அத்தும் இன்னும் பெறும் அவ்வியல் பின்கண் நிற்றல் செவ்விதென்று கூறுவர் புலவர்; எ - று.
எ - டு: வளியத்துக்கொண்டான் வளியிற்கொண்டான் சென்றான் தந்தான் போயினான் என வரும்.
செவ்விதென்றதனான் இன்புற்றுழி இயைபுவல்லெழுத்து வீழ்க்க. (40)
-----------
1 இடக்கரலல்லாத சொல்லும் என்று இயையும், இடக்கா என்றது மலவாயக் காற்றை.
-----------
'உதி' என்னும் மரப்பெயர்
243. உதிமரக் கிளவி மெல்லெழுத்து மிகுமே.
இது மரப்பெயரில் ஒன்றற்கு வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து விதிக்கின்றது.
இ - ள்: உதிமரக் கிளவி -- உதித்த லென்னுந் தொழிலன்றி உதியென்னும் மரத்தினை உணர நின்ற சொல், மெல்லெழுத்து மிகும் -- வல்லெழுத்து மிகாது மெல்லெழுத்து மிக்கு முடியும்; எ - று.
எ - டு: உதிங்கோடு செதிள் தோல் பூ என வரும்.
அம்முச்சாரியை விதிக்கின்ற புளிமரத்தினை இதன்பின் வைத்தமையான் உதியங்கோடு என இதற்கும் அம்முப்பெறுதல் கொள்க. இஃது இக்காலத்து ஒதியென மருவிற்று. (41)
-------------
'புளி' என்னும் மரப்பெயர்.
244. புளிமரக் கிளவிக்கு அம்மே சாரியை.
இது வல்லெழுத்து விலக்கி அம்மு வகுத்தலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது.
இ - ள்: புளிமரக் கிளவிக்கு அம்மே சாரியை -- சுவை யன்றிப் புளி யென்னும் மரத்தினை உணர நின்ற சொல்லிற்கு அம்மென்னுஞ் சாரியை வரும்; எ - று.
எ - டு: புளியங்கோடு செதிள் தோல் பூ என வரும். சாரியைப் பேற்றிடை முன்னர்ச் சூத்திரத்து எழுத்துப்பேறு1 கூறிய வதனால் அம்முப்பெற்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க. (42)
-----------
1 எழுத்துப்பேறு-- இவ்வியல் 40-ம் நூற்பாவில் 'மெல்லெழுத்து மிகுமே' என்றது.
-------------
'புளி' என்னும் சுவைப்பெயர்
245. ஏனைப் புளிப்பெயர் மெல்லெழுத்து மிகுமே.
இது வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து விதித்தலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது.
இ - ள்: ஏனைப் புளிப்பெயர் மெல்லெழுத்து மிகும் -- அம்மரப் பெயரன்றிச் சுவைப்புளி உணர நின்ற பெயர் வல்லெழுத்து மிகாது மெல்லெழுத்து மிக்கு முடியும்; எ - று.
எ - டு: புளிங்கூழ் சாறு தயிர் பாளிதம் என வரும். பாளிதம் – பாற்சோறு. இவற்றிற்கு இரம்டாமுருபு விரிக்க. (43)
----------
அதற்கு, மேலும் ஒரு முடிபு
246. வல்லெழுத்து மிகினும் மான மில்லை
ஒல்வழி யறிதல் வழக்கத் தான.
இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது.
இ - ள்: வல்லெழுத்து மிகினும் மானமில்லை—சுவைப்புளி மெல்லெழுத்தே யன்றி வல்லெழுத்து மிக்கு முடியினும் குற்றமில்லை, ஒல்வழி அறிதல் வழக்கத்து ஆன--பொருந்தும் இடம் அறிக வழக்கிடத்து; எ -று.
எ - டு: புளிக்கூழ் சாறு தயிர் பாளிதம் என வரும்.
ஒல்வழி என்றதனாற் புளிச்சாறு போல ஏனைய வழக்குப் பயிற்சி இலவென்று கொள்க.
வழக்கத்தான் என்றதனான் இவ் வீற்றுக்கண் எடுத்தோத்தும் இலேசுமின்றி வருவன எல்லாவற்றிற்கும் ஏற்குமாறு செய்கையறிந்து முடித்துக் கொள்க. அவை இன்னினிக் கொண்டான் அண்ணணிக் கொண்டான் என்பன அடையடுத்தலின் 'இனியணி' (எழு - 236) என்றவழி முடியாவாய் வல்லெழுத்துப் பெற்றன. கப்பிதந்தை சென்னிதந்தை என்பன 'அஃறிணை விரவுப்பெயர்' (எழு - 155) என்பதனுள் இயல்பெய்தாது ஈண்டு வருமொழித் தகர அகரங் கெட்டுக் கப்பிந்தை சென்னிந்தை என முடிந்தது.
கூதாளி கணவிரி என்பனவற்றிற்கு அம்முக் கொடுத்து இகரங் கெடுத்துக் கூதாளங்கோடு கணவிரங்கோடு செதிள் தோல் பூ என முடிக்க , 'கூதளநறும்பூ' எனக் குறைந்தும் வரும். இனி இவை மகர ஈறாயும் வழங்கும். அது 'வெண்கூதாளத்துத் தண்பூங்கோதையர்' (பட்டி - 85) என அத்துப்பெற்று மகரங்கெட்டுங் 'கணவிரமாலை யிடூஉக்கழிந்தன்ன' (அகம் - 31) என மகரங்கெட்டுங் கணவிரங்கோடு என மெல்லெழுத்துப் பெற்றும் நிற்கும்.
கட்டி என நிறுத்தி இடி அகல் எனத் தந்து டகரத்தில் இகரங்கெடுத்துக் கட்டிடி கட்டகல் என முடிக்க. பருத்திக்குச் சென்றானென ஈற்று வல்லெழுத்தும் இக்குங் கொடுத்து முடிக்க. துளியத்துக் கொண்டான் துளியிற் கொண்டான் என அத்தும் இன்னுங் கொடுத்து முடிக்க. புளிங்காய் வேட்கைத்தன்று எனவும் புளிம்பழ்ம் எனவும் அம்முப்பெறாது மெல்லெழுத்துப் பெற்று முடிதலுங் கொள்க. இன்னும் இதனானே உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட்சென்றுழி இயைபு வல்லெழுத்துக் கெடுத்துக் கிளியின் கால் புளியின்கோடு உதியின்கோடு என முடிக்க. (44)
-----------
நாட் பெயர்
247. நாள்முன் தோன்றுந் தொழில்நிலைக் கிளவிக்கு
ஆன் இடை வருதல் ஐய மின்றே.
இஃது ஈற்று வல்லெழுத்து விலக்கி ஆன் சாரியை விதிக்கின்றது.
இ - ள்: நாள் முன் தோன்றுந் தொழில் நிலைக் கிளவிக்கு -- இகர ஈற்று நாட்பெயர்களின் முன்னர்த் தோன்றுந் தொழிற்சொற்கு, ஆன் இடை வருதல் ஐயமின்று -- ஆன் சாரியை இடைவந்து முடிதல் ஐயமின்று; எ - று.
எ - டு: பரணியாற் கொண்டான் சோதியாற்கொண்டான்1 சென்றான் தந்தான் போயினான் என வரும். ஐயமின்றென்றதனால் இயைபு வல்லெழுத்து வீழ்க்க. இதற்கு கண்ணென் உருபு விரிக்க. (45)
---
1 நச்சினார்க்கினியர் காட்டியுள்ள சோதி முதலிய பெயர்கள் நாட்பெயர்களாய்த் தொல்காப்பியர் காலத்திலிருந்தனவா என்பது ஆராயத்தக்கது.
--------------
திங்கட் பெயர்
248. திங்கள் முன்வரின் இக்கே சாரியை.
இஃது இயைபு வல்லெழுத்தினோடு இக்கு வகுத்தலின் எய்தியதன் மேற்
சிறப்பு விதி வகுத்தது.
இ - ள்: திங்கள்முன் வரின் இக்கே சாரியை – திங்களை உணரநின்ற இகர ஈற்றுப் பெயர்களின் முன்னர்த் தொழினிலைக் கிளவி வரின் வருஞ் சாரியை இக்குச் சாரியையாம்; எ - று.
எ - டு: ஆடிக்குக்கொண்டான், 2 சென்றான், தந்தான் போயினான் என இயைபு வல்லெழுத்துக் கொடுத்து முடிக்க. இதற்குங் கண்ணென் உருபு விரிக்க. (46)
--------
2. நாட்பெயர்க்குக் கூறியதை இதற்குங் கொள்க.
-----------
7.4. ஈகார ஈறு
அல்வழியில் ஈகார ஈற்றுப் பெயர்
249. ஈகார இறுதி ஆகார இயற்றே.
இஃது ஈகார ஈற்றுப்பெயர் அல்வழிக்கண் முடியுமாறு கூறுகின்றது.
இ -ள்; ஈகார இறுதி ஆகார இயற்று -- ஈகார ஈற்றுப் பெயர் அல்வழிக்கண் ஆகார ஈற்று அல்வழியின் இயல்பிற்றாய் வல்லெழுத்து வந்துழி அவ் வல்லெழுத்து மிக்கு முடியும். எ - று.
எ - டு: ஈக்கடிது தீக்கடிது சிறிது தீது பெரிது என வரும். (47)
-----------
'நீ' 'மீ' முதலிய சொற்கள்
250. நீ என் பெயரும் இடக்கர்ப் பெயரும்
மீஎன மரீஇய இடம்வரை கிளவியும்
ஆவயின் வல்லெழுத் தியற்கை யாகும்.
இஃது எய்தியது விலக்கலும் எய்தாத தெய்துவித்தலுங் கூறுகின்றது.
இ - ள்: நீ என் பெயரும் இடக்கர்ப் பெயரும் -- நீ யென்னும் பெயரும் இடக்கர்ப் பெயராகிய ஈகார ஈற்றுப்பெயரும், மீயென மரீஇய இடம் வரை கிளவியும் -- மீயென்று சொல்ல மருவாய் வழங்கின ஓரிடத்தை வரைந்து உணர்த்துஞ் சொல்லும், ஆவயின் வல்லெழுத்து இயற்கை யாகும் -- புணருமிடத்து முற்கூறிய வல்லெழுத்துப் பெறாது இயல்பாய் முடியும்; எ - று.
எ - டு; நீகுறியை சிறியை தீயை பெரியை எனவும், பீகுறிது சிறிது தீது பெரிது எனவும் இவையிவற்றுக்குப் பொதுவான் எய்திய வல்லெழுத்து விலக்குண்டன. மீகண் செவி தலை புறம் இஃது இலக்கணத்தோடு பொருந்திய மருவாதலின் எய்தாத தெய்துவித்தது.
நீயென்பது அஃறிணை விரவுப்பெயருள் அடங்காதோ வெனின் மேல் நின்கை யெனத் திரிந்து முடிதலின் அடங்காதாயிற்று. மீகண் என்பது மேலிடத்துக் கண்ணென வேற்றுமை யெனினும் இயல்புபற்றி உடன் கூறினார். (48)
-------------
'மீ' என்னுஞ் சொல்லுக்கு மேலும் ஒரு முடிபு
251. இடம்வரை கிளவிமுன் வல்லெழுத்து மிகூஉம்
உடனிலை மொழியும் உளவென மொழிப.
இது வல்லெழுத்து மிகுக என்றலின் எய்திய திகந்துபடாமற் காத்தது.
இ - ள்: இடம் வரை கிளவிமுன் வல்லெழுத்து மிகூஉம் -- இடத்தை வரைந்து உணர்த்தும் மீயென்னுஞ் சொல்லின் முன்னர் இயல்பாய் முடிதலே யன்றி வல்லெழுத்து மிக்கும் முடியும், உடனிலை மொழியும் உள என மொழிப -- தம்மில் ஓசை யியைந்து நிற்றலை யுடைய மொழிகளும் உளவென்று கூறுவர் ஆசிரியர்; எ - று.
எ - டு: மீக்கோள் மீப்பல் என வரும்.
உடனிலையென்றதனான் மீங்குழி மீந்தோல் என மெல்லெழுத்துப் பெற்று முடிவனவுங் கொள்க. (49)
-----------
வேற்றுமையில் ஈகார ஈற்றுப் பெயர்
252. வேற்றுமைக் கண்ணும் அதனோ ரற்றே.
இஃது ஈகார ஈற்றுப்பெயர் வேற்றுமைக்கண் முடியுமாறு கூறுகின்றது.
இ - ள்: வேற்றுமைக்கண்ணும் அதனோரற்று -- ஈகார ஈற்றுப் பெயர் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக் கண்ணும் ஆகார ஈற்று அல்வழிபோல வல்லெழுத்து வந்துழி அவ் வல்லெழுத்து மிக்கு முடியும்; எ - று.
எ - டு: ஈக்கால் சிறகு தலை புறம், தீக்கடுமை சிறுமை தீமை பெருமை என வரும். (50)
-------------------
'நீ' என்னும் பெயர்
253. நீஎன் ஒருபெயர் உருபியல் நிலையும்
ஆவயின் வல்லெழுத் தியற்கை யாகும்.
இஃது எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது, வல்லெழுத்து விலக்கி னகரவொற்றே பெறுக என்றலின்.
இ - ள்: நீயென் ஒரு பெயர் உருபியல் நிலையும் – நீயென்னும் ஓரெழுத்தொருமொழி உருபு புணர்ச்சிக்கண் நெடுமுதல் குறுகி னகரம் ஒற்றி நின்றாற்போல ஈண்டுப் பொருட்புணர்ச்சிக் கண்ணும் முடியும், ஆவயின் வல்லெழுத்து இயற்கையாகும் -- அவ்வாறு முடிபுழி இயைபு வல்லெழுத்து மிகா; எ - று.
எ - டு: நின்கை செவி தலை புறம் என வரும்.
இஃது ஈகார ஈறு இகர ஈறாய் இகர ஈறு னகர ஈறாய் நின்றுழியும் 'நீயெனொருபெயர்' என்றலிற் றிரிந்ததன் றிரிபதுவே1 யாயிற்று. இயற்கையாகுமெனவே நிலைமொழித்தொழில் அதிகார வல்லெழுத்தை விலக்காதாயிற்று. (51)
---------
1 திரிந்ததின் திரிபதுவே - நீ என்பது நீ என்றும் நி என்பது நின் என்றும் திரிந்தவிடத்தும் அது நீ என்னும் பெயரே என்பது; திரிந்தது நி: திரிந்ததன் திரிபு நின், அது நீ, இனி, இங்ஙனமின்றி நீன் என்னும் பெயரே நின் எனக் குறுகியது என்பது மிகப் பொருந்தும். நின் (நீ) என்பது இன்னும் தென்னாட்டில் வழக்கிலுள்ளது.
-------------
7.5. உகர ஈறு
அல்வழியில் உகர ஈற்றுப்பெயர்
254. உகர இறுதி அகர இயற்றே.
இஃது உகர ஈற்றுப்பெயர் அல்வழிக்கண் முடியுமாறு கூறுகின்றது.
இ -ள்: உகர இறுதி அகர இயற்று--உகர ஈற்றுப் பெயர் அல்வழிக்கண் அகர ஈற்று இயல்பிற்றாய் வல்லெழுத்து வந்துழி அவ் வல்லெழுத்து மிக்கு முடியும்; எ - று.
எ - டு; கடுக்குறிது சிறிது தீது பெரிது என வரும். (52)
--------
உகரச் சுட்டு
255. சுட்டின் முன்னரும் அத்தொழிற் றாகும்.
இஃது உகர ஈற்றுச் சுட்டு வன்கணத்தோடு முடியுமாறு கூறுகின்றது.
இ - ள்: சுட்டின் முன்னரும் அத்தொழிற்று ஆகும் – உகர ஈற்றுச் சுட்டின் முன்னும் வல்லெழுத்து வந்துழி அவ் வல்லெழுத்து மிக்கு முடியும்; எ - று.
எ - டு: உக்கொற்றன் சாத்தன் தேவன் பூதன் என வரும். (53).
-------------
சுட்டின்முன் மென்கணம் முதலியன
256. ஏனவை வரினே மேல்நிலை இயல.
இஃது உகர ஈற்றுச் சுட்டு ஒழிந்த கணங்களோடு முடியுமாறு கூறுகின்றது.
இ - ள்: ஏனவை வரின் -- உகர ஈற்றுச் சுட்டின் முன் வல்லெழுத் தல்லாத மென்கணம் முதலிய மூன்றும் வரின், மேல்நிலை இயல -- அகர ஈற்றுச் சுட்டு முடிந்தாற்போல ஞநமத் தோன்றின் ஒற்று மிக்கும் யவ்வரினும் உயிர் வரினும் வகரம் ஒற்று ஒற்றியுஞ் செய்யுளில் நீண்டு முடியும்; எ - று.
எ - டு: உஞ்ஞாண் நூல் மணி எனவும், உவ்யாழ் உவ்வட்டு எனவும்,
உவ்வடை உவ்வாடை எனவும், ஊவயினான எனவும் வரும். (54)
------------
சுட்டின் முன் வலி இயல்பாதல்
257. சுட்டுமுதல் இறுதி இயல்பா கும்மே
இஃது இவ் வீற்றுட் சிலவற்றிற்கு வல்லெழுத்து விலக்கி இயல்பு கூறுகின்றது.
இ - ள்: சுட்டு முதல் இறுதி -- சுட்டெழுத்தினை முதலாகவுடைய உகர ஈற்றுப் பெயர், இயல்பாகும் -- முற்கூறிய வல்லெழுத்து மிகாது இயல்பாய் முடியும். ; எ - று.
எ - டு: அதுகுறிது இதுகுறிது உதுகுறிது சிறிது தீது பெரிது என வரும்.
முற்கூறியவை சுட்டுமாத்திரை, இவை கூட்டுப்பெயராக உணர்க (55)
-----------
செய்யுளிற் சுட்டுப்பெயர்
258. அன்றுவரு காலை ஆவா குதலும்
ஐவரு காலை மெய்வரைந்து கெடுதலும்
செய்யுள் மருங்கின் உரித்தென மொழிப.
இஃது இவ் வீற்றுச் சுட்டுமுதற் பெயர்க்கு ஓர் செய்யுண்முடிபு கூறுகின்றது.
இ - ள்: அன்று வருகாலை ஆஆகுதலும் -- அதிகாரத்தால் நின்ற சுட்டு முதல் உகர ஈற்றின் முன்னர் அன்றென்றும் வினைக்குறிப்புச்சொல் வருங்காலத்து அத் தகரவொற்றின்மேல்* ஏறி நின்ற உகரம் ஆகாரமாய்த் திரிந்து முடிதலும், ஐ வருகாலை மெய் வரைந்து கெடுதலும் -- அதன் முன்னர் ஐயென்னுஞ் சாரியை வருங்காலத்து அத் தகரவொற்று நிற்க அதன்மேல் ஏறிய உகரங் கெடுதலும், செய்யுண் மருங்கின் உரித்தென மொழிப--செய்யுட் கண் உரித்தென்று சொல்லுவர் ஆசிரியர; எ - று.
எ - டு: அதாஅன்றம்ம இதாஅன்றம்ம உதாஅன்றம்ம 'அதாஅன்றென்ப வெண்பா யாப்பே' எனவும், அதைமற்றம்ம இதைமற்றம்ம உதைமற்றம்ம எனவும் வரும்.
மொழிந்த பொருளோடொன்ற வவ்வயின் முடியாததனை முட்டின்றி முடித்த லென்பதனால் அதன்று இதன்று உதன்று என உகரங்கெட்டுத் தகரவொற்று நிற்றல் கொள்க. (56)
----------
வேற்றுமையில் உகர ஈற்றுப் பெயர்
259. வேற்றுமைக் கண்ணும் அதனோ ரற்றே.
இஃது இவ் வீற்றுப்பெயர் வேற்றுமைக்கண் முடியுமாறு கூறுகின்றது.
இ - ள்: வேற்றுமைக் கண்ணும் -- உகர ஈற்றுப் பெயர் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக் கண்ணும், அதனோரற்று -- அகர ஈற்று அல்வழியோடு ஒருதன்மைத்தாய் வல்லெழுத்து வந்துழி அவ் வல்லெழுத்து மிக்குமுடியும்; எ - று.
எ - டு: கடுக்காய் செதிள் தோல் பூ எனவும், கடுக்கடுமை எனவும் வரும். (57)
----------
'எரு' 'செரு' என்னுஞ் சொற்கள்
260. எருவும் செருவும் அம்மொடு சிவணித்
திரிபிட னுடைய தெரியுங் காலை
அம்மின் மகரம் செருவயின் கெடுமே
தம்மொற்று மிகூஉம் வல்லெழுத் தியற்கை.
இஃது அவ் வீற்றுள் ஒன்றற்கு வல்லெழுத்து விலக்கிச் சாரியைவிதியும் ஒன்றற்கு வல்லெழுத்தினோடு சாரியைவிதியுஞ் சாரியை பெறாதவழி வல்லெழுத்து மெல்லெழுத்து பேறுங் கூறுகின்றது.
இ - ள்: எருவும் செருவும் அம்மொடு சிவணி -- எருவென்னுஞ் சொல்லும் செருவென்னுஞ் சொல்லும் அம்முச் சாரியையோடு பொருந்தி, திரிபு இடனுடைய தெரியுங் காலை -- அதிகார வல்லெழுத்துப் பெறாமல் திரியும் இடனுடைய ஆராயுங் காலத்து, அம்மின் மகரஞ் செருவயிற் கெடும் --ஆண்டு அம்முச் சாரியையினது ஈற்றின் மகரஞ்செருவென்னுஞ் சொல்லிடத்துக் கெட்டு முடியும், வல்லெழுத்து மிகூஉம் -- ஆண்டுச் செருவின்கண் வல்லெழுத்து மிக்கு முடியும், இயற்கைத் தம் ஒற்று மிகூஉம் -- அம்முப் பெறாதவழி இரண்டிற்குந் தமக்கு இனமாகிய வல்லொற்றும் மெல்லொற்றும் மிக்கு முடியும்; எ -று.
எ -டு: எருவென நிறுத்திக் குழி சேறு தாது பூழி எனத் தந்து அம்முக்கொடுத்து 'அம்மினிறுதி கசதக்காலை' (எழு - 129) என்பதனால் எருவங்குழி சேறு தாது பூழி யென முடிக்க. செருவென நிறுத்திக் களம் சேனை தானை பறை எனத் தந்து இடை அம்முக்கொடுத்து மகரங் கெடுத்து வல்லெழுத்துக் கொடுத்துச் செருவக்களம் சேனை தானை பறை யென முடிக்க. இனி அம்முப் பெறாதவழி எருக்குழி எருங்குழி என வல்லெழுத்தும் மெல்லெழுத்துங் கொடுத்து முடிக்க. இனிச் செருவிற்கு ஏற்புழிக்கோட லென்பதனாற் செருக்களமென வல்லெழுத்தே கொடுத்து முடிக்க.
தெரியுங்காலை என்றதனான் எருவின்குறுமை செருவின்கடுமை என உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றுழி வல்லெழுத்து வீழ்தலும் எருவஞாற்சி செருவஞாற்சி என இயல்பு கணத்துக்கண் அம்முப்பெறுதலுங் கொள்க. மகரம் "மென்மையு மிடைமையும' (எழு - 130) என்பதனாற் கெடுக்க.
தம்மொற்றுமிகூஉம் என உடம்பொடு புணர்த்துச் சூத்திரஞ் செய்தலின் உகரம் நீடவருதலுங் கொள்க. வரூஉம் தரூஉம் படூஉம் என வரும். (58)
-----------
ழகர வுகர ஈறு
261. ழகர உகரம் நீடிடன் உடைத்தே
உகரம் வருதல் ஆவயி னான.
இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி வகுத்தது, வல்லெழுத்தினோடு உகரம்
பெறுதலின்.
இ -ள்: ழகர உகரம் நீடிடன் உடைத்து -- உகர ஈற்றுச் சொற்களுள் ழகரத்தோடு கூடிய உகர ஈற்றுச்சொல் நீண்டு முடியும் இடனுடைத்து, ஆவயின் ஆன உகரம் வருதல் – அவ்விடத்து உகரம் வந்து முடியும்; எ - று.
எ - டு: எழூஉக்கதவு சிறை தானை படை என வரும்.
நீடிடனுடைத்து என்றதனான் நீளாதும் உகரம் பெறாதும் வருமாயிற்று.
குழுத்தோற்றம் என வரும்.
இன்னும் இதனாற் பழுக்காய் என அல்வழிக்கண்ணும் இவ் விதியன்றி
வருதல் கொள்க.
----------
1 ழகர வுகரம் நீடும் என்றது செய்யுள் வழக்குப்பற்றி.
ஆவயினான என்றதனாற் பெரும்பான்மை செய்யுட்கண் நீண்டு உகரம் பெற்று
' எழூஉத்தாங்கிய கதவுமலைத்தவர்
குழூஉக்களிற்றுக் குறும்புடைத்தலின்' (புறம் - 97)
எனவும்,
' பழூஉப்பல்லன்ன பருவுகிர்ப்பாவடி' (குறுந் - 180)
எனவும் வருதல் கொள்க. (59)
-----------
' ஒடு"என்னும் மரப்பெயர்
262. ஒடுமரக் கிளவி உதிமர இயற்றே
இஃது அவ் வீற்றுப் மரப்பெயருள் ஒன்றற்கு வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து விதித்தது.
இ - ள்: ஒடு மரக் கிளவி -- ஒடுவென்னும் மரத்தினை உணர நின்ற சொல், உதிமர இயற்று -- உதியென்னும் மரத்தின் இயல்பிற்றாய் மெல்லெழுத்துப் பெற்று முடியும்; எ - று.
எ - டு: ஒடுங்கோடு செதிள் தோல் பூ என வரும். மர மென்றார் ஒடுவென்னும் நோயை நீக்குதற்கு. முன்னர் உதிமரத்தின் பின்னர் அம்முப் பெறுகின்ற புளிமரம் வைத்த இயைபான் இதற்கு அம்முப்பேறுங் கொள்க. ஒடுவங் கோடு என வரும். (60)
-----------
சுட்டுப் பெயர்க்குச் சாரியை
263. சுட்டுமுதல் இறுதி உருபியல் நிலையும்
ஒற்றிடை மிகாஅ வல்லெழுத் தியற்கை.
இது சுட்டுப் பெயர்க்கு வல்லெழுத்து விலக்கிச் சாரியை வகுத்தது.
இ - ள்: சுட்டுமுதல் இறுதி உருபியல் நிலையும் -- சுட்டெழுத்தினை முதலாகவுடைய உகர ஈற்றுச் சொற்கள் பொருட்புணர்ச்சிக்கண்ணும் உருபுணர்ச்சியிற் கூறிய இயல்பிலே நின்று அன்சாரியை பெற்று உகரங் கெட்டு முடியும், வல்லெழுத்து இயற்கை ஒற்று இடைமிகாஅ -- வல்லெழுத்து இயற்கையாகிய ஒற்று இடைக்கண் மிகா; எ - று.
எ - டு: அதன் கோடு இதன் கோடு உதன் கோடு செதிள் தோல் பூ என வரும். ஒற்றிடை மிகா எனவே சாரியை வகுப்ப வல்லெழுத்து வீழாவென்பது பெற்றாம்.
வல்லெழுத் தியற்கை யென்றதனான் உகர ஈற்றுள் எருவுஞ் செருவும் ஒழித்து ஏனையவற்றிற்கும் உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றுழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க. கடுவின்குறை ஒடுவின்குறை எழுவின்புறம் கொழுவின்கூர்மை என வரும். இன்னும் இதனானே உதுக்காண் என்ற வழி வல்லெழுத்து மிகுதலுங் கொள்க. (61)
-----------------
7.6. ஊகார ஈறு
அல்வழியில் ஊகார ஈற்றுப் பெயர்
264. ஊகார இறுதி ஆகார இயற்றே.
இது நிறுத்த முறையானே ஊகார ஈறு அல்வழிக்கண் புணருமாறு
கூறுகின்றது.
இ -ள்: ஊகார இறுதி ஆகார இயற்று -- ஊகார ஈற்றுப் பெயர் அல்வழிக்கண் ஆகார ஈற்று அல்வழியின் இயல்பிற்றாய் வல்லெழுத்து வந்துழி அவ் வல்லெழுத்து மிக்கு முடியும்; எ - று.
எ - டு: கழூஉக் கடிது1 கொண்மூக் கடிது சிறிது தீது பெரிது என வரும். (62)
------------
1 கழூஉக் கடிது என்பது "ழகர வுகரம் நீடிட னுடைத்தே" என்னும் நூற்பாவிற்-கேற்றதாய்த் தெரிகின்றது.
------------
ஊகார ஈற்று வினைச்சொல்
265. வினையெஞ்சு கிளவிக்கும் முன்னிலை மொழிக்கும்
நினையுங் காலை அவ்வகை வரையார்.
இஃது இவ் வீற்று வினையெச்சத்திற்கு மிக்கு முடியும் என்றலின், எய்தாத தெய்துவித்ததூஉம் முன்னிலை வினைக்கு இயல்பும் உறழ்பும் மாற்றுதலின் எய்தியது வில்கியதூஉம் நுதலிற்று.
இ - ள்: வினையெஞ்சு கிளவிக்கும் -- ஊகார ஈற்று வினையெச்சமாகிய சொற்கும், முன்னிலை மொழிக்கும் -- முன்னிலை வினைச்சொற்கும், நினையுங் காலை அவ்வகை வரையார் -- ஆராயுங் காலத்து அவ் வல்லெழுத்து மிக்கு முடியுங் கூற்றினை நீக்கார்; எ - று.
எ - டு: உண்ணூக் கொண்டான் சென்றான் தந்தான் போயினான் எனவும்,
கைதூக்கொற்றா சாத்தா தேவா பூதா எனவும் வரும்.
நினையுங்காலை என்றதனான் இவ் வீற்று உயர்திணைப் பெயர்க்கும் அல்வழிக்கண் வல்லெழுத்து கொடுத்து முடிக்க. ஆடூஉக்குறியன் மகடூஉக்குறியன் என வரும். உயர்திணைப்பெயர் எடுத்தோதி முடிப்பா ராதலின் முடிபு பெறாமை ஈற்றுப் பொதுவிதியான்2 முடியாது இலேசான் முடித்தாம்.
----------
2. ஈற்றுப்பொதுவிதி -- 'ஊகார விறுதி ஆகார வியற்றே' என்பது.
---------
வேற்றுமையில் ஊகார ஈறு
266. வேற்றுமைக் கண்ணும் அதனோ ரற்றே.
இஃது ஊகார ஈறு வேற்றுமைக்கண் முடியுமாறு கூறுகின்றது.
இ - ள்: வேற்றுமைக்கண்ணும் அதனோரற்று -- ஊகார ஈறு வேற்றுமைப்பொருட் புணர்ச்சிக்கண்ணும் ஆகார ஈற்று அல்வழிபோல வல்லெழுத்து மிக்கு முடியும்; எ - று.
எ - டு: கழூஉக் கடுமை சிறுமை தீமை பெருமை, கொண்மூக் குழாம் செலவு தோற்றம் மறைவு என வரும். (64)
----------
குறிற்கீழ் ஊகாரமும் தனிமொழி ஊகாரமும்
267. குற்றெழுத் திம்பரும் ஓரெழுத்து மொழிக்கும்
நிற்றல் வேண்டும் உகரக் கிளவி.
இஃது இயைபு வல்லெழுத்தினோடு உகரம் வகுத்தலின் எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது.
இ -ள்: குற்றெழுத்து இம்பரும் – குற்றெழுத்தின்பின் வந்த ஊகார ஈற்று மொழிக்கும், ஓரெழுத்து மொழிக்கும் -- ஓரெழுத் தொருமொழியாகிய ஊகார ஈற்று மொழிக்கும், உகரக் கிளவி நிற்றல் வெண்டும் -- உகரமாகிய எழுத்து நிற்றலை விரும்பும்
ஆசிரியன்; எ - று.
எ - டு: உடூஉக் குறை செய்கை தலை புறம் எனவும், தூஉக்குறை செய்கை தலை புறம் எனவும் வரும்.
நிற்றல் என்றதனான் உயர்திணைப் பெயர்க்கும் வல்லெழுத்தும் உகரமுங் கொடுக்க. ஆடுஉக்கை மகடூஉக்கை செவி தலை புறம் என வரும். இவை தொகைமரபினுள் இயல்பாதல் எய்தியவற்றை1 ஈண்டு இருவழிக்கண்ணும் முடித்தார், ஈற்றுப் பொது ஒப்புமை கண்டு. (65)
----------
1 இயல்பாதல் எய்தியவற்றை -- தொகைமரபினுள் 11 - ம் நூற்பாவில் 'எல்லா வழியும்
இயல்பென மொழிப' என்ற விதியால் இயல்பானவற்றை.
------------
'பூ' என்னும் பெயர்
268. பூஎன் ஒருபெயர் ஆயியல் பின்றே
ஆவயின் வல்லெழுத்து மிகுதலும் உரித்தே.
இஃது ஊகார ஈற்றுள் ஒன்றற்கு உகரமும் இயைபு வல்லெழுத்தும் விலக்கிப் பெரும்பான்மை மெல்லெழுத்துஞ் சிறுபான்மை வல்லெழுத்தும் பெறு மென எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது.
இ -ள்: பூவென் ஒரு பெயர் அ இயல்பு இன்று – பூவென்னும் ஊகார ஈற்றையுடைய ஒரு பெயர் மேற்கூறிய உகரமும் வல்லெழுத்தும் பெற்று முடியும் அவ்வியல்பின்மையை உடைத்து, ஆவயின் வல்லெழுத்து மிகுதலும் உரித்து-- அவ்விடத்து மெல்லெழுத்து மிக்கு முடிதலேயன்றி வல்லெழுத்து மிக்கு முடிதலும் உரித்து.; எ - று.
எ - டு: பூங்கொடி சோலை தாமம் பந்து எனவும், பூக்கொடி செய்கை தாம் பந்து எனவும் வரும்.
பூ வென்பது பொலிவென்னும் வினைக் குறிப்பை உணர்த்தாது நிற்றற்கு
ஒருபெய ரென்றார்.
-------------
'ஊ' என்னும் பெயர்
269. ஊஎன் ஒருபெயர் ஆவொடு சிவணும்.
இஃது எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது, உகரமும் வல்லெழுத்தும் விலக்கி னகரம் விதித்தலின்.
இ - ள்: ஊவென் ஒரு பெயர் - ஊவெனத் தசையை உணர்த்திநின்ற ஓரெழுத்தொருமொழி, ஆவொடு சிவணும் - ஆகாரஈற்றில் ஆவென்னுஞ்சொல் வல்லெழுத்துப் பெறாது னகரஒற்றுப் பெற்று முடிந்தாற்போல னகர ஒற்றுப் பெற்று முடியும்; எ - று.
எ- டு: ஊவென நிறுத்தி னகர ஒற்றுக் கொடுத்து ஊன் குறை செய்கை தலை புறம் என முடிக்க. ஊ வென்பது தசையை உணர்த்திநின்ற வழக்கு ஆசிரியர் நூல் செய்த காலத்து வழக்கு. அன்றித் தேய வழக்கேனும் உணர்க. (67)
-------------------
இதுவும் அது
270. அக்கென் சாரியை பெறுதலும் உரித்தே
தக்கவழி அறிதல் வழக்கத் தான.
இஃது எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது.
இ - ள்: அக்கென் சாரியை பெறுதலும் உரித்து - அதிகாரத்தான் நின்ற ஊவென்னும் பெயர் முற்கூறிய னகரத்தோடு அக்கென்னுஞ் சாரியை பெற்று முடிதலும் உரித்து, வழக்கத்தான தக்கவழி அறிதல் - அம்முடிபு வழக்கிடத்துத் தக்க இடம் அறிக; எ - று.
தக்க வழி யறிதல் என்றதனாற் சாரியை பெற்றுழி னகரம் விலக்குண்ணாது நிற்றலும் முன் மாட்டேற்றால் விலக்குண்ட வல்லெழுத்துக் கெடாது நிற்றலுங் கொள்க.
எ - டு: ஊனக்குறை செய்கை தலை புறம் எனவரும்.
வழக்கத்தான என்றதனான் ஊகார ஈற்றுச் சொல்லிற்கு உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றுழி இயைபுவல்லெழுத்துக் கெடுக்க. கொண்மூவின்குழாம் உடூஉவின்றலை ஊவின்குறை என வரும். (68)
------------
'ஆடூஉ' 'மகடூஉ' என்னும் பெயர்க
271. ஆடூஉ மகடூஉ ஆயிரு பெயர்க்கும்
இன்இடை வரினும் மான1 மில்லை.
-------
1. மானம் - அளவு, வரை. வரைதல் - நீக்குதல். 'உருவு கொளல் வரையார்' (எழு-140) என்றும் 'அவ்வகை வரையார்' (எழு - 265) என்றும் ஆசிரியர் கூறுதல் காண்க. மானமில்லை - வரைவில்லை, விலக்கில்லை.
இது 'குற்றெழுத்திம்பரும்' (எழு - 267) என்பதனுள் நிற்றலென்ற இலேசான் எய்திய வல்லெழுத்தேயன்றிச் சாரியையும் வகுத்தலின் எய்தியதன்மேற் சிறப்புவிதி உணர்த்தியது.
இ - ள்: ஆடூஉ மகடூஉ ஆயிரு பெயர்க்கும் -- ஆடூஉ மகடூஉவாகிய உயர்திணைப் பெயர் இரண்டிற்கும், இன் இடைவரினும் மானம் இல்லை - முன்னெய்திய வல்லெழுத்தே யன்றி இன்சாரியை இடையே வரினுங் குற்றமில்லை; எ - று.
எ - டு: ஆடூஉவின்கை மகடூஉவின்கை செவி தலை புறம் என வரும்.
மானமில்லை என்றதனான் இன் பெற்றுழி மேல் எய்திய வல்லெழுத்து வீழ்க்க. (69)
--------------
7.7. எகர ஒகர ஈறு
அல்வழியில் எகர ஒகர ஈறுகள்
272. எகர ஒகரம் பெயர்க்கீ றாகா
முன்னிலை மொழிய என்மனார் புலவர்
தேற்றமும் சிறப்பும் அல்வழி யான.
இஃது எகர ஒகரம் ஈறாம் இடம் உணர்த்துகின்றது.
இ - ள்: தேற்றமுஞ் சிறப்பும் அல்வழி ஆன - தெளிவு பொருளுஞ் சிறப்புப் பொருளும் அல்லாத வேற்றுமைப் பொருண்மையிடத்து அளபெடுத்துக் கூறுதலின் உளவாகிய, எகர ஒகரம் பெயர்க்கு ஈறாகா - எகர ஒகரங்கள் பெயர்க்கு ஈறாய் வாரா வினைக்கு ஈறாய் வரும், முன்னிலை மொழிய என்மனார் புலவர் - அவைதாந் தன்மையினும் படர்க்கையினும் வாரா, முன்னிலைச்சொல்லிடத்தனவாமென்று கூறுவர் புலவர்; எ - று.
எனவே, தெளிவுபொருளினுஞ் சிறப்புப்பொருளினும் வந்து பெயர்க்கு ஈறாம் இடைச்சொல்லாகிய எகர ஒகரம் மூன்றிடத்திற்கும் உரியவாமென்று பொருளாயிற்று. என இங்ஙனம் அருத்தாபத்தியாற் கொண்டதற்கு இலக்கணம் மேலைச் சூத்திரத்தாற் கூறுப.
எ - டு: ஏஎ1க்கொற்றா ஓஒ2க்கொற்றா சாத்தா தேவா பூதா எனவரும்.
இவை எனக்கு ஒரு கருமம்பணி எனவும், இங்ஙனஞ் செய்கின்றதனை ஒழி யெனவும் முன்னிலையேவற் பொருட்டாய் வந்தன. இதற்கு வல்லெழுத்துப் பெறுமாறு மேலே கூறுப. (70)
------
1. ஏ - ஏவு. 2. ஓ - நீங்கு.
----------
எகர ஒகர இடைச்சொற்கள்
273. தேற்ற எகரமும் சிறப்பின் ஒவ்வும்
மேற்கூ றியற்கை வல்லெழுத்து மிகா.
இஃது எய்தியது இகந்துபடாமற் காத்து எய்தாத தெய்துவித்தது.
இ - ள்: தேற்ற எகரமுஞ் சிறப்பின் ஒவ்வும் மேற் கூறு இயற்கை - முனனர் அருத்தாபத்தியாற் 1பெயர்க்கண் வருமென்ற தேற்றப்பொருண்மையில் எகரமுஞ் சிறப்புப்பொருண்மையில் ஒகரமும் மூன்றிடத்தும் வருமென்ற இலக்கணத்தனவாம், வல்லெழுத்து மிகா - வல்லெழுத்து மிக்கு முடியா, எனவே முன்னிலைக்கண் வருமென்ற எகர ஒகரங்கள் வல்லெழுத்து மிக்கு முடியும்; எ - று.
எ - டு: யானேஎகொண்டேன் நீயேஎகொண்டாய் அவனேஎகொண்டான் எனவும், யானோஒகொடியன் நீயோஒகொடியை அவனோஒகொடியன்2 எனவும் பெயர்க்கண் ஈறாய் இயல்பாய் வந்தவாறு காண்க. இது முன்னர் எய்திய இலக்கணம் இகவாமற் காத்தார். முன் நின்ற சூத்திரத்தின் முன்னிலைக்கும் வல்லெழுத்து மிகுத்து எய்தாத தெய்துவித்தார். இச் சூத்திரத்திற்கு அளபெடுத்தல் 'தெளிவினேயும்' (சொல் - 261) என்னுஞ் சூத்திரத்தாற் கொள்க. எனவே முடிவுபெற்றுழி இங்ஙனம் இடைச்சொல்லும் எடுத்தோதிப் புணர்ப்பரென்பதூஉம் பெற்றாம். (71)
----
1. அருத்தாபத்தி - இருவகைப் பொருள்களில் ஒருவகைக்கு விதந்து கூறியதை
இன்னொருவகைக்கு இல்லையென்று கொள்ளுதல். முந்தின நூற்பாவில், தெளிவு
பொருளினும் சிறப்புப் பொருளினும் வராது வினைக்கு ஈறாகும் எகர ஒகரம்
முன்னிலைக் குரியவாம் எனவே தெளிவு பொருளினும் சிறப்புப் பொருளினும் வந்து
பெயர்க்கு ஈறாம் இடைச்சொல்லாகிய எகர ஒகரம் மூன்றிடத்திற்கும் உரியவாம்
என்று கொண்டது அருத்தாபத்தி. இவ் வெடுத்துக்காட்டுகள் செய்யுள் வழக்கு.
.
-------------
7.8. ஏகார ஈறு
அல்வழியில் ஏகார ஈற்றுப் பெயர்
274. ஏகார இறுதி ஊகார இயற்றே.
இது நிறுத்தமுறையானே ஏகார ஈறு அல்வழிக்கண் புணருமாறு கூறுகின்றது.
இ - ள்: ஏகார இறுதி - ஏகார ஈற்றுப்பெயர் அல்வழிக்கண், ஊகார இயற்று - ஊகார ஈற்று அல்வழியின் இயல்பிற்றாய் வல்லெழுத்துவந்துழி அவ் வல்லெழுத்து மிக்கு முடியும்; எ - று.
எ - டு: ஏக்கடிது சேக்கடிது சிறிது தீது பெரிது என வரும். (72)
--------
ஏகார இடைச்சொற்கள்
275. மாறுகோள் எச்சமும் வினாவும் எண்ணும்
கூறிய வல்லெழுத்து இயற்கை யாகும்.
இஃது இடைச்சொற்கள் இயல்பாய்ப் புணர்கவென எய்தாத தெய்துவித்தது.
இ - ள்: மாறுகோள் எச்சமும்-- மாறுகோடலை யுடைய எச்சப்பொருண்மைக்கண் வரும் ஏகார ஈற்று இடைச்சொல்லும்,
வினாவும் - வினாப்பொருண்மைக்கண் வரும் ஏகார ஈற்று இடைச் சொல்லும், எண்ணும் - எண்ணுப் பொருண்மைக்கண் வரும் ஏகார ஈற்று இடைச்சொல்லும், கூறிய வல்லெழுத்து இயற்கையாகும் - முற்கூறிய வல்லெழுத்துப் பெறாது இயல்பாய் முடியும்; எ - று.
எ - டு: யானேகொண்டேன் சென்றேன் தந்தேன் போயினேன் என்புழி யான்கொண்டிலேனென மாறுகொண்ட ஒழிபுபட நின்றது. நீயேகொண்டாய் சென்றாய் தந்தாய் போயினாய் எனவும், நிலனே நீரே தீயே வளியே கொற்றனே சாத்தனே எனவும் வரும்.
கூறிய என்றதனாற் பிரிநிலை ஏகாரமும் ஈற்றசை ஏகாரமும் இயல்பாய் முடிதல் கொள்க. அவருள் இவனே கொண்டான் எனவும், 'கழியே, சிறு குரனெய்தலொடு பாடோவாதே - கடலே, பாடெழுந்தொலிக்கும்' எனவும் வரும். (73)
----------
வேற்றுமையில் ஏகார ஈறு
276. வேற்றுமைக் கண்ணும் அதனோ ரற்றே.
இஃது இவ் வீற்று வேற்றுமை முடிபு கூறுகின்றது.
இ - ள்: வேற்றுமைக்கண்ணும் - ஏகார ஈற்று வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண்ணும், அதனோரற்று - ஊகார ஈறு அல்வழிபோல வல்லெழுத்து வந்துழி அவ்வல்லெழுத்து மிக்கு முடியும்; எ - று.
எ - டு: ஏக்கடுமை சிறுமை தீமை பெருமை எனவும், வேக்குடம் சாடி தூதை பானை எனவும் வரும்.
வேக்குடம் வேதலையுடைய குடமென விரியும். (74)
--------------
அதற்கு, மேலும்ஒரு முடிபு
277. ஏயென் இறுதிக்கு எகரம் வருமே.
இது வல்லெழுத்தினோடு எகரம் விதித்தலின் எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது.
இ - ள்: ஏயென் இறுதிக்கு எகரம் வரும் - அவ் வேற்றுமைக்கண் ஏயென்னும் இறுதிக்கு எகரம் வரும்; எ - று.
எ - டு: ஏஎக்கொட்டில் சாலை துளை புழை என வரும்.
வருமொழி வரையாது கூறினமையின் இயல்புகணத்துக்கண்ணும் வரு மெனக் கொள்க. ஏஎஞெகிழ்ச்சி நேர்மை என வரும். உரையிற் கோடலால் எகாரம் ஏற்புழிக் கொள்க. (75)
-----------
'சே' என்னும் மரப்பெயர்
278. சேஎன் மரப்பெயர் ஒடுமர இயற்றே.
இஃது அவ் வீற்றுள் ஒன்றற்கு வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து விதித்தது.
இ - ள்: சே என் மரப்பெயர் - பெற்றமன்றிச் சேவென்னும் மரத்தினை உணரநின்ற பெயர், ஒடுமர இயற்று – ஒடுமரம் போல மெல்லெழுத்து மிக்கு முடியும்; எ - று.
எ - டு: சேங்கோடு செதிள் தோல் பூ என வரும். (76)
------------
'சே' என்னும் விலங்கின் பெயர்
279. பெற்றம் ஆயின் முற்றஇன் வேண்டும்.
இஃது இயைபு வல்லெழுத்து விலக்கி இன் வகுத்தது.
இ - ள்: பெற்றம் ஆயின் - முற்கூறிய சேவென்பது பெற்றத்தினை உணர்த்திய பொழுதாயின், முற்ற இன் வேண்டும் - முடிய இன்சாரியை பெற்று முடியவேண்டும்; எ - று.
எ - டு: சேவின்கோடு செவி தலை புறம் என வரும்.
முற்ற என்றதனானே முற்கூறிய சேவென்னும் மரப் பெயர்க்கும் ஏவென்பதற்கும் உருபிற்கு எய்திய சாரியை பொருட்கட் சென்றுழி இயைபுவல்லெழுத்து வீழ்தல் கொள்க. சேவின்கோடு செதிள் தோல் பூ எனவும், ஏவின்கடுமை சிறுமை தீமை பெருமை எனவும் வரும்.
சாரியைப்பேறு வருமொழி வரையாது கூறினமையின் இயல்புகணத்தும் இன்பெறுதல் கொள்க. சேவினலம் மணி வால் சேவினிமில் சேவினடை சேவினாட்டம் என வரும்.
இன்னும் இதனானே இயல்புகணத்துக்கண் இன் பெறாது வருதலுங் கொள்க. செய்யுட்கண் 'தென்றற்கு வீணைக்குச் சேமணிக்குக் கோகிலத்திற் - கன்றிற்கு' என வரும். (
---------------
7.9. ஐகார ஈறு
வேற்றுமையில் ஐயீற்றுப் பெயர்
280. ஐகார இறுதிப் பெயர்நிலை முன்னர்
வேற்றுமை யாயின் வல்லெழுத்து மிகுமே.
இஃது ஐகார ஈறு வேற்றுமைக்கண் முடியுமாறு கூறுகின்றது. தொகை மரபினுள் 'வேற்றுமையல்வழி இஐயென்னும்' (எழு - 158) என்பதன்கண் அல்வழி முடித்தார்.
இ - ள்: ஐகார இறுதிப் பெயர்நிலை முன்னர் - ஐகார ஈற்றுப் பெயர்ச்சொன் முன்னர் அதிகாரத்தாற் நசதப முதன்மொழி வந்துழி, வேற்றுமையாயின் வல்லெழுத்து மிகும் – வேற்றுமைப் பொருட் புணர்ச்சியாயின் தமக்குப் பொருந்தின வல்லெழுத்து மிக்கு முடியும்; எ - று.
எ - டு: யானைக்கோடு செவி தலை புறம் என வரும்.
வேற்றுமையாயின் என்றதனான் உருபு புணர்ச்சிக்கண்ணும் யானையைக் கொணர்ந்தானென வல்லெழுத்து மிகுதல் கொள்க. (78)
--------------
சுட்டுப்பெயர்
281. சுட்டுமுதல் இறுதி உருபியல் நிலையும்.
இது வல்லெழுத்தினோடு வற்று வகுத்தலின் எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுகின்றது.
இ - ள்: சுட்டுமுதல் இறுதி - சுட்டெழுத்தினை முதலாகவுடைய ஐகார ஈற்றுப்பெயர், உருபியல் நிலையும் – உருபு புணர்ச்சியிற் கூறிய இயல்புபோலப் பொருட் புணர்ச்சிக்கண் வற்றுப்பெற்று முடியும்; எ - று.
எ - டு: அவையற்றுக்கோடு இவையற்றுக்கோடு உவையற்றுக்கோடு செவி
தலை புறம் என வரும். இதனை 'வஃகான்மெய்கெட' (எழு - 122) என்பதனான் முடிக்க. (79)
-------------
'விசை' 'ஞெமை' 'நமை' என்னும் மரப்பெயர்கள்
282. விசைமரக் கிளவியும் ஞெமையும் நமையும்
ஆமுப் பெயரும் சேமர இயல.
இது வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து விதித்தலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது.
இ - ள்: விசைமரக் கிளவியும் - விசைத்தற்றொழிலன்றி விசையென்னும் மரத்தை உணரநின்ற சொல்லும், ஞெமையும் - ஞெமை யென்னும் மரத்தினை உணரநின்ற சொல்லும், நமையும் - நமை யென்னும் மரத்தினை உணரநின்ற சொல்லும், ஆ முப்பெயரும் - ஆகிய அம்மூன்று பெயரும், சேமர இயல - வல்லெழுத்து மிகாது சேமரம்போல மெல்லெழுத்து மிக்கு முடியும்; எ - று.
எ - டு: விசைங்கோடு ஞெமைங்கோடு நமைங்கோடு செதிள் தோல் பூ என வரும். இவை கசதப முதலிய மொழிமேல் தோன்றும் மெல்லழுத்து1 என்று உணர்க. (80)
------
1. 'கசதப முதலிய மொழிமேல் தோன்றும் மெல்லெழுத்து' என்பது தொகைமரபு. 1-ம் நூற்பாவின் முற்பகுதி.
------------
'பனை' 'அரை' 'ஆவிரை' என்னும் மரப்பெயர்கள்
283. பனையும் அரையும் ஆவிரைக் கிளவியும்
நினையுங் காலை அம்மொடு சிவணும்
ஐயென் இறுதி அரைவரைந்து கெடுமே
மெய்அவண் ஒழிய எனமனார் புலவர்.
இஃது இயைபுவல்லெழுத்து விலக்கி அம்மு வகுத்தது.
இ -ள்: பனையும் அரையும் ஆவிரைக்கிளவியும் - பனையென்னும் பெயரும் அரையென்னும் பெயரும் ஆவிரையென்னும் பெயரும், நினையுங் காலை அம்மொடு சிவணும் – ஆராயுங்காலத்து வல்லெழுத்து மிகாது அம்முச்சாரியையொடு பொருந்தி முடியும். ஐயென் இறுதி அரை வரைந்து கெடும் - அவ்விடத்து ஐ யென்னும் ஈறு அரையென்னுஞ் சொல்லை நீக்கி ஏனை இரண்டிற்குங் கெடும், மெய் அவண் ஒழிய என்மனார் புலவர் – தன்னான் ஊரப்பட்ட மெய்கெடாது அச்சொல்லிடத்தே நிற்க என்று கூறு வர் புலவர்; எ-று
எ-டு: பனை ஆவிரை என நிறுத்தி அம்மு வருவித்து ஐகாரங் கெடுத்து ஒற்றின்மேலே அகரமேற்றிப் பனங்காய் ஆவிரங்கோடு செதிள் தோல் பூ என வரும். அரையென நிறுத்தி அம்முக் கொடுத்து ஐகாரங் கெடாது அரையங்கோடு செதிள் தோல் பூ என முடிக்க. வல்லெழுத்துக்கேடு மேலே 'கடிநிலையின்று' (எழு-285) என்றதனாற் கூறுதும்.
நினையுங்காலை யென்றதனால் தூதுணை வழுதுணை தில்லை ஓலை தாழை என நிறுத்தி அம்முக்கொடுத்து ஐகாரங்கெடுத்துத் தூதுணங்காய் வழுதுணங்காய் தில்லங்காய் ஓலம்போழ் தாழங்காய் என முடிக்க. (81)
-------------
'பனை' முன் 'அட்டு'
284. பனையின் முன்னர் அட்டுவரு காலை
நிலையின் றாகும் ஐயென் உயிரே
ஆகாரம் வருதல் ஆவயி னான.
இது நிலைமொழிச் செய்கை நோக்கி எய்தாத தெய்துவித்தது.
இ-ள்: பனையின் முன்னர் அட்டு வருகாலை-முற்கூறியவாறன்றிப் பனையென்னுஞ் சொன்முன்னர் அட்டென்னுஞ்சொல் வருமொழியாய் வருங்காலத்து, நிலையின்று ஆகும் ஐயென் உயிர் - நிற்றலில்லையாகும் ஐயென்னும் உயிர். ஆவயின் ஆன ஆகாரம் வருதல் - அவ்விடத்து ஆகாரம் வந்து அம்மெய்ம் மேலேறி முடிக; எ-று
எ-டு: பனாஅட்டு என வரும். இதற்கு மூன்றாவதும் ஆறாவதும் விரியும்.
ஆவயினான என்றதனால் ஓராநயம் விச்சாவாதி என்னும் வேற்றுமை முடிபுங் கேட்டாமூலம் பாறாங்கல் என்னும் அல்வழிமுடிபுங் கொள்க. இவற்றுள் வடமொழிகளை1 மறுத்தலும் ஒன்று. (82)
------------
1. வடமொழிகள் விச்சாவாதி கேட்டாமூலம் என்பன.
-------------
'பனை' முன் 'கொடி'
285. கொடிமுன் வரினே ஐயவண் நிற்பக்
கடிநிலை யின்றே வல்லெழுத்து மிகுதி.
இது மேல் ஐகாரங் கெடுத்து அம்முப்பெறுக என்றார், ஈண்டு அது கெடாதுநிற்க என்றலின் எய்தியது இகந்து படாமற் காத்தது. அம்மு விலக்கி வல்லெழுத்து விதித்தலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்ததுமாம்.
இ-ள்: முன் கொடி வரின் - பனையென்னுஞ் சொன்முன்னர்க் கொடியென்னுஞ் சொல் வரின், ஐ அவண் நிற்ப – கேடு ஓதிய ஐகாரம் ஆண்டுக் கெடாது நிற்ப, வல்லெழுத்து மிகுதி கடிநிலையின்று - வல்லெழுத்து மிக்கு முடிதல் நீக்கு நிலைமையின்று; எ-று.
எ-டு: பனைக்கொடி என வரும். இதற்கு இரண்டாவதும் மூன்றாவதும் விரியும்.
கடிநிலையின்று என்றதனான் ஐகார ஈற்றுப்பெயர்களெல்லாம் எடுத்தோத்தானும் இலேசானும் அம்முச்சாரியையும் பிறசாரியையும் பெற்றுழி அதிகார வல்லெழுத்துக் கெடுத்துக் கொள்க.
இன்னும் இதனானே உருபிற்குச்சென்ற சாரியை பொருட்கட்சென்றுழி இயைபுவல்லெழுத்து வீழ்க்க. பனையின்குறை அரையின்கோடு ஆவிரையின் கோடு விசையின்கோடு ஞெமையின்கோடு நமையின்கோடு எனவும், தூதுணையின்காய் வழுதுணையின்காய் உழையின்கோடு வழையின்கோடு எனவும் வரும்.
பனைத்திரள் பனைந்திரள் என்னும் உறழ்ச்சிபுமுடிபு தொகை மரபினுட் புறனடையாற் கொள்க; அல்வழியு மாதலின். அன்றி ஈண்டு அவணென்றதனாற் கொள்வாரும் உளர். (83)
------------
திங்கட்பெயரும் நாட்பெயரும்
286. திங்களும் நாளும் முந்துகிளந் தன்ன.
இஃது இயைபு வல்லெழுத்தினோடு இக்குச் சாரியையும் வல்லெழுத்து விலக்கி ஆன்சாரியையும் வகுத்தலின் எய்தியதன்மேற் சிறப்புவிதியும் எய்தியது விலக்கிப் பிறிதுவிதியுங் கூறுகின்றது.
இ-ள்: திங்களும் நாளும் - ஐகார ஈற்றுத் திங்களை உணர நின்ற பெயரும் நாளை உணரநின்ற பெயரும், முந்து கிளந்தன்ன - இகர ஈற்றுத் திங்களும் நாளும்போல இக்கும் ஆனும் பெற்று முடியும்; எ-று
எ-டு: சித்திரைக்குக்கொண்டான் கேட்டையாற்கொண்டான் சென்றான் தந்தான் போயினான் என வரும். சித்திரை நாளாயின் ஆன்சாரியை கொடுக்க. வல்லெழுத்துக்கேடு முன்னர்க் 'கடிநிலையின்று' (எழு-285) என்றதனாற் கொள்க.
திங்கள் முற்கூறிய முறையன்றிக் கூற்றினால் உழைங்கோடு அமைங்கோடு உடைங்கோடு என மெல்லெழுத்துக் கொடுத்துங் கலைங்கோடு கலைக்கோடு என உறழ்ச்சி எய்துவித்துங் கரியவற்றுக்கோடு குறியவற்றுக்கோடு நெடியவற்றுக்கோடு என ஐகார ஈற்றுப் பண்புப்பெயர்க்கு வற்றுக்கொடுத்து ஐகாரங்கெடுத்து வற்றுமிசை யொற்றென்று ஒற்றுக்கெடுத்தும் அவையத்துக் கொண்டான் அவையிற்கொண்டான் என அத்தும் இன்னுங் கொடுத்தும் பனையின் மாண்பு கேட்டையினாட்டினானென இயல்புகணத்துக்கண் இன்சாரியை கொடுத்தும் முடிக்க. ஐகார ஈறு இன்சாரியை பெறுதல் தொகை மரபினுட் கூறாமையின் ஈண்டுக்கொண்டாம். (84)
-------------
'மழை' என்னுஞ் சொல்
287. மழையென் கிளவி வளியியல் நிலையும்
இது வல்லெழுத்தினோடு அத்து வகுத்தலின் எய்தியதன்மேற் சிறப்பு விதியும் இயைபுவல்லெழுத்து விலக்கி இன் வகுத்தலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதியுங் கூறுகின்றது.
இ-ள்: மழையென் கிளவி - மழையென்னும் ஐகார ஈற்றுச்சொல், வளியியல் நிலையும் - வளியென்னுஞ் சொல் அத்தும் இன்னும் பெற்றுமுடிந்த இயல்பின்கண்ணே நின்று
முடியும்; எ-று.
எ-டு: மழையத்துக் கொண்டான் மழையிற்கொண்டான் சென்றான் தந்தான் போயினான் என வரும்.
ஈண்டு இன்பெற்றுழி வல்லெழுத்துக்கேடு 'கடிநிலை யின்று' (எழு - 285) என்றதனாற் கொள்க. சாரியைப் பேறு வருமொழி வரையாது கூறினமையின் இயல்புகணத்துக் கண்ணுங் கொள்க. மழையத்து ஞான்றான் மழையின் ஞான்றான் நிறுத்தினான் மாட்டினான் வந்தான் அடைந்தான் என ஒட்டுக. (85)
-------------
'வேட்கை' முன் 'அவா'
288. செய்யுள் மருங்கின் வேட்கை என்னும்
ஐயென் இறுதி அவாமுன் வரினே
மெய்யொடுங் கெடுதல் என்மனார் புலவர்
டகாரம் ணகார மாதல் வேண்டும்1.
இது வேற்றுமைக்கண் செய்யுண் முடிபு கூறுகின்றது.
இ-ள்: செய்யுள் மருங்கின் வேட்கை என்னும் ஐயென் இறுதி - செய்யுளிடத்து வேட்கையென்னும் ஐகார ஈற்றுச்சொல், அவா முன் வரின்-அவாவென்னுஞ் சொற்கு முன்னர்வரின், மெய்யொடுங் கெடுதல் என்மனார் புலவர் – அவ்வைகாரம் தான் ஊர்ந்த மெய்யோடுங் கூடக் கெடுமென்று கூறுவர் புலவர், டகாரம் ணகாரம் ஆதல் வேண்டும் - அவ்விடத்து நின்ற டகார ஒற்று ணகார ஒற்றாய்த் திரிதல்வேண்டும்; எ-று.
எ-டு: 'வேணவாநலிய வெய்யவுயிரா' என வரும்.
வேட்கையாவது பொருள்கள்மேல் தோன்றும் பற்றுள்ளம். அவாவாவது அப் பொருள்களைப் பெறவேண்டு மென்று மேன்மேல் நிகழும் ஆசை. எனவே, வேட்கையா லுண்டாகிய அவாவென மூன்றனுருபு விரிந்தது. இதனை வேட்கையும் அவாவு மென அல்வழி யென்பாரும் உளர். இங்ஙனங் கூறுவார் பாறாங்கல் என்பதனை அம்முக் கொடுத்து ஈண்டு முடிப்பர். (86)
---------------
1. இந் நூற்பாவின்படி, வேட்கை+அவா = வேணவா என்று முடிக்காமல் வேண+அவா = வேணவா என்றே முடிக்கவும் கூடும். வேள் - வேண், ஒ.நோ: பெள் - பெண்.
---------------
7.10. ஓகார ஈறு
அல்வழியில் ஓகார ஈற்றுப் பெயர்
289. ஓகார இறுதி ஏகார இயற்றே.
இஃது ஓகார ஈற்று அல்வழிமுடிபு கூறுகின்றது.
இ-ள்: ஓகார இறுதி ஏகார இயற்று - ஓகார ஈற்றுப் பெயர்ச்சொல் ஏகார ஈற்று அல்வழியின் இயல்பிற்றாய் வல்லெழுத்து வந்துழி அவ் வல்லெழுத்து மிக்கு முடியும்; எ-று.
எ-டு: ஓக்கடிது சோக்கடிது சிறிது தீது பெரிது என வரும். (87)
------------
ஓகார இடைச்சொல்
290. மாறுகொள் எச்சமும் வினாவும் ஐயமும்
கூறிய வல்லெழுத் தியற்கை யாகும்.
இஃது இடைச்சொல்முடிபு கூறலின் எய்தாத தெய்துவித்தது.
இ-ள்: மாறுகொள் எச்சமும் – மாறுபாட்டினைக்கொண்ட எச்சப்பொருண்மையை ஒழிபாகவுடைய ஓகாரமும், வினாவும் - வினாப்பொருண்மையை யுடைய ஓகாரமும், ஐயமும் – ஐயப் பொருண்மையையுடைய ஓகாரமும், கூறிய வல்லெழுத்து இயற்கையாகும் - முற்கூறிய வல்லெழுத்தின்றி இயல்பாய் முடியும்; எ-று.
எ-டு: யானோ கொண்டேன் எனவும், நீயோ கொண்டாய் எனவும், பத்தோ பதினொன்றோ புற்றோ புதலோ எனவும் வரும்.
கூறிய என்றதனான் 'யானோ தேறே னவர்பொய் வழங்கலரே' (குறு - 21) எனப் பிரிநிலையும் நன்றோ தீதோ கண்டது எனத் தெரிநிலையும் ஓஒ கொண்டான் எனச் சிறப்புங் 'குன்றுறழ்ந்த களிறென்கோ கொய்யுளைய மாவென்கோ' (புறம்-387) என எண்ணுநிலையும் வல்லெழுத்து மிகாது இயல்பாய் முடிதல் கொள்க. இதனானே ஈற்றசை, வருமேனும் உணர்க. (88)
--------------
இதுவும் அது
291. ஒழிந்ததன் நிலையும் மொழிந்தவற் றியற்றே.
இதுவும் அது.
இ-ள்: ஒழிந்ததன் நிலையும் மொழிந்தவற்று இயற்று - ஒழியிசை ஓகாரத்தினது நிலையும் முற்கூறிய ஓகாரங்களின் இயல்பிற்றாய் இயல்பாய் முடியும்; எ-று.
எ-டு: கொளலோ கொண்டான்1 செலலோ சென்றான் தரலோ தந்தான் போதலோ போயினான் என ஓசை வேற்றுமையான் ஒருசொல் தோன்றப் பொருள் தந்து நிற்கும். (89)
-------------
1. கொளலோ கொண்டான் - கொண்டிலன். இங்ஙனமே பிறவும்.
-----------
வேற்றுமையில் ஓகார ஈற்றுப் பெயர்
292. வேற்றுமைக் கண்ணும் அதனோ ரற்றே
ஓகரம் வருதல் ஆவயி னான்.
இஃது ஓகார ஈற்று வேற்றுமைமுடிபு கூறுகின்றது.
இ-ள்: வேற்றுமைக்கண்ணும் அதனோரற்று – ஓகார ஈறு வேற்றுமைக்கண்ணும் அவ் *வோகார ஈற்று அல்வழியோடு ஒத்து வல்லெழுத்து மிக்குமுடியும். ஆவயினான *ஒகரம் வருதல் - அவ்விடத்து ஒகரம் வருக; எ-று.
எ-டு:ஓஒக்கடுமை கோஒக்கடுமை சிறுமை தீமை பெருமை என வரும். (90)
-------------
'கோ' 'முன்' 'இல்'
293. இல்லொடு கிளப்பின் இயற்கை யாகும்.
இஃது எய்தியது விலக்கிற்று. என்னை? முன்னர் வன்கணம் வந்துழி ஒகரம் பெறுகவென வரைந்து கூறாதும் நிலைமொழித்தொழில் வரையாதுங் கூறலின் நான்கு கணத்துக்கண்ணுஞ் சேறலின்.
இ-ள்: இல்லொடு கிளப்பின் இயற்கையாகும் – ஓகார ஈற்றுக் கோவென்னும் மொழியினை இல்லென்னும் வருமொழியோடு சொல்லின் ஒகரம் மிகாது இயல்பாய் முடியும்; எ-று.
எ-டு: கோவில் என வரும். கோவென்றது உயர்திணைப் பெயரன்றோ வெனின், கோவந்ததென்று அஃறிணையாய் முடிதலின் அஃறிணைப்பாற் பட்டதென்க1. (91)
---------
1. அஃறிணைப்பாற் படுதலாவது சொல்லால் அஃறிணையாயும் பொருளால் உயர்திணையாயு மிருத்தல்.
----------
சில ஈறுகட்குச் சாரியை
294. உருபியல் நிலையும் மொழியுமா ருளவே
ஆவயின் வல்லெழுத் தியற்கை யாகும்.
இது வல்லெழுத்து விலக்கிச் சாரியை வகுத்தலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது.
இ-ள்: உருபியல் நிலையும் மொழியுமாருள - ஓகார ஈற்றுச் சில பொருட்புணர்ச்சிக்கண் உருபுபுணர்ச்சியது இயல்பிலே நின்று ஒன்சாரியை பெற்று முடியும் மொழிகளும் உள, ஆவயின் வல்லெழுத்து இயற்கையாகும் - அவ்விடத்து வல்லெழுத்தின்றி இயல்பாய் முடியும்; எ-று.
எ-டு: கோஒன்கை செவி தலை புறம் என வரும்.
சாரியைப்பேறு வருமொழி வல்லெழுத்தை விலக்காமை இதனானும் பெற்றாம். (92)
--------------
7.11. ஔகார ஈறு
இரு வழியிலும் ஔகார ஈற்றுப்பெயர்
295. ஔகார இறுதிப் பெயர்நிலை முன்னர்
அல்வழி யானும் வேற்றுமைக் கண்ணும்
வல்லெழுத்து மிகுதல் வரைநிலை யின்றே
அவ்விரு ஈற்றும் உகரம் வருதல்
செவ்வி தென்ப சிறந்திசி னோரே.
இஃது ஔகார ஈறு இருவழியும் முடியுமாறு கூறுகின்றது.
இ-ள்: ஔகார இறுதிப் பெயர்நிலை முன்னர் - ஔகாரம் இறுதியாகிய பெயர்ச்சொன் முன்னர் வல்லெழுத்து முதன்மொழி வருமொழியாய் வரின், அல்வழியானும் வேற்றுமைக்கண்ணும் - அல்வழிக்கண்ணும் வேற்றுமைக்கண்ணும், வல்லெழுத்து மிகுதல் வரைநிலையின்று - வல்லெழுத்து மிக்கு முடிதல் நீக்கு நிலைமையின்று, அவ்விரு ஈற்றும் உகரம் வருதல் செவ்விதென்ப சிறந்திசினோர் - அவ்விருகூற்று முடிபின்கண்ணும் நிலைமொழிக்கண் உகரம்வந்து முடிதல் செவ்விதென்று சொல்லுவர் சிறந்தோர்; எ-று.
எ-டு: கௌவுக்கடிது சிறிது தீது பெரிது எனவும், கடுமை சிறுமை தீமை பெருமை எனவும் வரும்.
செவ்விதென்றதனான் மென்கணத்தும் இடைக்கணத்தும் உகரம் பெறுதல் கொள்க. கௌவுஞெமிர்ந்தது ஞெமிர்ச்சி எனவும், வௌவு வலிது வலிமை எனவும் வரும்.
நிலைமொழி யென்றதனாற் கௌவின்கடுமை என உருபிற்குச்சென்ற சாரியை பொருட்கட்சென்றுழி இயைபுவல்லெழுத்து வீழ்வுங் கொள்க.
இன்னும் இதனானே ஐகாரமும் இகரமும் வேற்றுமைக்கண் உருபு தொகையாயுழி இயல்பாதல் கொள்க. (93)
உயிர்மயங்கியல் முற்றிற்று.
--------
8. புள்ளிமயங்கியல்
[மெய்யீறுகளின் புணர்ச்சி யிலக்கணம் உணர்த்துவது]
8.1. மெல்லொற்று ஈறுகள்
இருவழியிலும் ஞகார ஈற்றுத் தொழிற்பெயர்
296. ஞகாரை ஒற்றிய தொழிற்பெயர் முன்னர்
அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும்
வல்லெழுத் தியையின் அவ்வெழுத்து மிகுமே
உகரம் வருதல் ஆவயி னான.
என்பது சூத்திரம்
நிறுத்த முறையானே உயிரீறு புணர்த்துப் புள்ளியீறு வன்கணத்தோடுஞ் சிறுபான்மை ஏனைக்கணத்தோடும் புணருமாறு கூறலின் இவ்வோத்துப் புள்ளி மயங்கியலென்னும் பெயர்த்தாயிற்று.
இச்சூத்திரம் ஞகார ஈறு வன்கணத்தோடு இருவழியும் புணருமாறு கூறுகின்றது.
இ-ள்: ஞகாரை ஒற்றிய தொழிற்பெயர் முன்னர் - ஞகாரம் ஈற்றின்கண் ஒற்றாகநின்ற தொழிற்பெயரின் முன்னர், அல்லது கிளப்பினும் வேற்றுமைக்கண்ணும் - அல்வழியைச் சொல்லு மிடத்தும் வேற்றுமையைச் சொல்லுமிடத்தும், வல்லெழுத்து இயையின் அவ்வெழுத்து மிகும் - வல்லெழுத்து முதன்மொழி வருமொழியாய் வரின் அவ்வல்லெழுத்து வருமொழிக்கண் மிக்கு முடியும், ஆவயின் ஆன உகரம் வருதல் - அவ்விடத்து உகரம் வருக; எ-று.
எ-டு: உரிஞுக்கடிது சிறிது தீது பெரிது எனவும், உரிஞுக்கடுமை சிறுமை தீமை பெருமை எனவும் வரும். (1)
------
அதற்கு மேலும் ஒரு முடிபு
297. ஞநமவ இயையினும் உகரம் நிலையும்.
இஃது அவ் வீறு மென்கணத்தோடும் இடைக்கணத்து வகரத்தோடும் முடியுமென எய்தாத தெய்துவித்தது.
இ-ள்: ஞநமவ இயையினும் உகரம் நிலையும் – அஞ்ஞகர ஈறு வன்கணமன்றி ஞநமவ முதன்மொழி வருமொழியாய் வரினும் நிலைமொழிக்கண் உகரம் நிலைபெற்று முடியும்; எ-று.
எ-டு: உரிஞுஞான்றது நீண்டது மாண்டது வலிது எனவும், ஞாற்சி நீட்சி மாட்சி வலிமை எனவும் வரும்.
யகரத்தோடும் உயிரோடும் புணருமாறு தொகைமரபினுள் 'உகரமொடு புணரும்' (எழு-163) என்பதனாற் கூறினார். (2)
----------
அல்வழியில் நகர ஈறு
298. நகர இறுதியும் அதனோ ரற்றே.
இது நகர ஈறு முற்கூறிய கணங்களோடு அல்வழிக்கண் முடியுமாறு கூறி எய்தாத தெய்துவிக்கின்றது.
இ-ள்: நகர இறுதியும் - நகரஈற்றுப் பெயரும் முற்கூறிய கணங்களோடு புணரும்வழி, அதனோரற்று - அஞ் ஞகரஈற்றுத் தொழிற்பெயர் இயல்பிற்றாய் வல்லெழுத்து வந்துழி அவ் லெழுத்து மிக்கு உகரம் பெற்றும் ஞநமவ வந்துழி உகரம்பெற்றும் முடியும்; எ-று.
எ-டு: பொருநுக்கடிது வெரிநுக்கடிது சிறிது தீது பெரிது எனவும் ஞான்றது நீண்டது மாண்டது வலிது எனவும் வரும். முடிபு ஒப்புமை நோக்கி நகர ஈறு ஈண்டுப் புணர்த்தார். ஈண்டு வேற்றுமை யொழித்து மாட்டேறு1 சென்றதென்று உணர்க. (3)
-------------
1. வேற்றுமை யொழித்து மாட்டேறு சென்றது - முந்தின நூற்பாக்களில் ஞகர விறுதிக்கு இருவழியும் கூறப்பட்டன. ஆகையால், அதனோரற்றே என்னும் மாட்டேறு நகர விறுதிக்கும் இருவழியும் கொள்ளவைத்தல் வேண்டும். ஆனால் பிந்தின நூற்பாவில் வேற்றுமை வழியை விதந்து கூறியிருப்பதால், அம்மாட்டேறு வேற்றுமை வழியை விலக்கிற்றென்பது.
-------------
வேற்றுமையில் நகர ஈறு
299. வேற்றுமைக்கு உக்கெட அகரம் நிலையும்.
இது நிலைமொழி உகரம் விலக்கி அகரம் வகுத்தலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது.
இ-ள்: வேற்றுமைக்கு - அந்நகர ஈறு வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கு, உக்கெட அகரம் நிலையும் - மேலெய்திய உகரங்கெட அகரத்தோடு நிலைபெற்றுப் புணரும்; எ-று.
எ-டு: பொருநக்கடுமை வெரிநக்கடுமை சிறுமை தீமை பெருமை ஞாற்சி நீட்சி மாட்சி வன்மை என வரும், அகரநிலையுமென்னாது உகரங்கெட என்றதனான் உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றுழி இயைபுவல்லெழுத்து வீழ்வுஞ் சிறுபான்மை உகரப்பேறுங் கொள்க. வெரி நின்குறை பொருநின்குறை உரிஞின்குறை எனவும், 'உயவல்யானை வெரிநுச் சென்றனன்' (அகம்-65) எனவும் வரும். யானையினது முதுகின்மேற் சென்றனன் என விரிக்க.
பொருந் என்பது ஒரு சாதிப்பெயரும் பொருந்துத லென்னும் வினைப் பெயருமாம். (4)
-------------
'வெரிந்' என்னுஞ் சொல்
300. வெரிந்என் இறுதி முழுதுங் கெடுவழி
வருமிடன் உடைத்தே மெல்லெழுத் தியற்கை .
இஃது அந்நகர ஈற்றுள் ஒருமொழிக்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது.
இ-ள்: வெரிந் என் இறுதி - வெரிநென்று சொல்லப்படும் நகர ஈற்றுமொழி, முழுதுங் கெடுவழி - தன் ஈற்று நகரம் முன்பெற்ற உகரத்தோடு எஞ்சாமைக் கெட்ட இடத்து, மெல்லெழுத்து இயற்கை வரும் இடன் உடைத்து – மெல்லெழுத்துப் பெறும் இயல்பு வந்து முடியும் இடனுடைத்து; எ-று.
எ-டு: வெரிங்குறை செய்கை தலை புறம் என வரும். மெல்லெழுத்து வருமொழி நோக்கி வந்தது. 'வெயில்வெரி நிறுத்த பயிலிதழ்ப் பசுங்குடை' (அகம்-37) என்பதில் நகர இகரமே இட்டெழுதுப.1 (5)
-------------
1. "வெயில் வெரி நிறுத்த...இட்டெழுதுப." என்பது ந ன ண என்னும் மூன்று இனவெழுத்துக்களுள் முதலதே முந்தினது என்பதை உணர்த்தும்.
-----------
அதற்கு, மேலும் ஒரு முடிபு
301. ஆவயின் வல்லெழுத்து மிகுதலும் உரித்தே.
இஃது அதற்கு எய்தாத தெய்துவித்தது.
இ-ள்: ஆவயின் - அவ்வெரிந் என்னுஞ் சொல் அவ்வாறு ஈறு கெட்டு நின்ற இடத்து, வல்லெழுத்து மிகுதலும் உரித்து - மெல்லெழுத்தேயன்றி வல்லெழுத்து மிக்கு முடிதலும் உரித்து; எ-று.
எ-டு: வெரிக்குறை செய்கை தலை புறம் என வரும். (6)
----------
வேற்றுமையில் ணகர ஈறு.
302. ணகார இறுதி வல்லெழுத் தியையின்
டகார மாகும் வேற்றுமைப் பொருட்கே.
இது நிறுத்த முறையானே ணகார ஈறு வேற்றுமைப் பொருட்கண் புணருமாறு கூறுகின்றது.
இ-ள்: ணகார இறுதி - ணகார ஈற்றுப் பெயர், வல்லெழுத்து இயையின் - வல்லெழுத்து முதன்மொழி வந்து இயையின், டகாரமாகும் வேற்றுமைப் பொருட்கு - டகாரமாகத் திரிந்து முடியும் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண்; எ-று.
எ-டு: மட்குடம் சாடி தூதை பானை என வரும். மண்கை புண்கை என்பன இரண்டாவதன் திரிபின்2 முடிந்தன.
கவண்கால் பரண்கால் என்பன மேல் முடித்தும். (7)
------
2. இரண்டாவதன் திரிபு - தொகை மரபு 15-ம் நூற்பாவிற் கூறிய 2-ம் வேற்றுமைத் திரிபு.
-----------
'ஆண்' 'பெண்' என்னுஞ் சொற்கள்
303. ஆணும் பெண்ணும் அஃறிணை இயற்கை.
இஃது இவ் வீற்று விரவுப்பெயருள் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது.
இ-ள்: ஆணும் பெண்ணும் -ஆணென்னும் விரவுப்பெயரும் பெண்ணென்னும் விரவுப் பெயரும், அஃறிணை இயற்கை- தொகை மரபினுள் "மொழி முதலாகும்: (எழு-147) என்பதன்கண் அஃறிணைப்பெயர் முடிந்த இயல்புபோலத் தாமும் வேற்றுமைக்கண் இயல்பாய் முடியும்;எ-று
எ-டு: ஆண்கை பெண்கை செவி தலை புறம் என வரும்.
இது தொகைமரபினுள் "அஃறிணை விரவுப்பெயர்"(எழு-155) என்பதனுள் முடிந்த இயல்பன்றோவெனின், இவை ஆண்டு முடிந்தனபோலத் தத்தம் மரபின் வினையாற் பாலறியப்படுவன அன்றி இருதிணைக்கண்ணும் அஃறிணையாய் முடிதலின்1 அஃறிணைப் பெயரது இயல்போடு மாட்டெறிந்து முடித்தா ரென்க. ஆண்கடிது பெண்கடிது என்னும் அல்வழிமுடிபு "மொழி முதலாகும்" (எழு-147) என்பதன்கண் வருமொழி முற்கூறியவதனான் முடிக்க. (8)
-------------
1. இருதிணைக் கண்ணும் அஃறிணையாய் முடிதல்-ஆண் வந்தது என முடிதல்.
----------
"ஆண்" என்னும் மரப்பெயர்
304 ஆண்மரக் கிளவி அரைமர இயற்றே.
இது திரிபுவிலக்கிச் சாரியை வகுத்தலின் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது.
இ-ள்: ஆண்மரக் கிளவி-ஆண்பாலை உணர்த்தாது ஆணென்னும் மரத்தினை உணரநின்ற சொல், அரை மர இயற்று -அரை யென்னும் மரம் அம்முப்பெற்ற இயல்பிற்றாய்த் தானும் அம்முப்பெறறு முடியம்;எ-று
எ-டு: ஆணங்கோடு செதிள் தோல் பூ என வரும்
ஒன்றென முடித்தலான் இயல்புகணத்துங் கொள்க. ஆணநார் இலை என வரும்.
விரவுப்பெய2 ரன்றென்றற்கு மரமென்றார். (9)
----------
2 விரவுப்பெயர்-ஆண் என்னும் திணைப்பொதுப் பெயர்.
------------
"விண்" என்னுஞ் சொல்.
305. விண்ணென வரூஉங் காயப் பெயர்வயின்
உண்மையு முரித்தே அத்தென் சாரியை
செய்யுள் மருங்கின் தொழில்வரு காலை
இது செய்யுளுள் திரிபு விலக்கிச் சாரியை வகுத்தது.
இ-ள்: விண் என வரூஉங் காயப் பெயர்வயின்-விண்ணென்று சொல்லவருகிற ஆகாயத்தை உணரநின்ற பெயர்க்கண், அத்து என் சாரியை மிகுதலும் உரித்து-அத்தென்னுஞ் சாரியை உண்டாதலும் உரித்து இல்லையாதலும் உரித்து, செய்யுள் மருங்கில் தொழில் வருகாலை-செய்யுளிடத்துத் தொழிற்சொல் வருங் காலத்து; எ-று
எ-டு: "விண்ணத்துக்கொட்கும் வண்ணத்தமரர்" "விண்ணத்துக் கொட்கும் விரைசெல்லூர்தியோய்" எனவும் , "விண்குத்து நீள்வரைவெற்பகளைபவோ" (நாலடி-226) எனவும் வரும். விண்ணென்னுங் குறிப்பினை நீக்குதற்குக் காயமென்றார்.
விண்வத்துக்கொட்கும் என உடம்படுமெய் புணர்ந்து நிற்றலுங் கொள்க. அதிகார வல்லெழுத்தன்மையிற் சாரியை வல்லெழுத்துக் கொடுக்க.1 (10)
---------
1 அதிகார...கொடுக்க-முந்தின நூற்பாக்களில் இயல்பும் மெலிமிகலுமே விதிக்கப் பட்டிருப்பதால், வல்லெழுத்துப்பேறு அதிகாரப்படவில்லை. அதனால் சாரியைக்குரிய வல்லெழுத்துக் கொடுக்க.
-----------
ணகர ஈற்றுத் தொழிற்பெயர்.
306. தொழிற்பெய ரெல்லாந் தொழிற்பெய ரியல.
இஃது இவ் வீற்றுட் சிலவற்றிற்குத் திரிபு விலக்கி உகரமும் வல்லெழுத்தும் விதிக்கின்றது.
இ-ள்: தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெயர் இயல- அல்வழிக்கண்ணும் வேற்றுமைக்கண்ணும் ஞகார ஈற்றுத் தொழிற்பெயரது இயல்பிற்றாய் வன்கணம் வந்துழி வல்லெழுத்தும் உகரமும் பெற்றும் மென்கணத்தும் இடைக்கணத்து வகரத்தும் உகரம் பெற்றும் முடியும்;எ-று
எ-டு: மண்ணுக்கடிது2 பண்ணுக்கடிது சிறது தீது பெரிது ஞான்றது நீண்டது மாண்டது வலிது எனவும், மண்ணுக்கடுமை சிறுமை தீமை பெருமை ஞாற்சி நீட்சி மாட்சி வன்மை உனவும் வரும்.
எல்லாமென்றதனால் தொழிற்பெயரல்லனவும் உகரமும் வல்லெழுத்தும் பெற்றும் இன்சாரியை பெற்றும் புணர்வன கொள்க. வெண்ணுக்கரை3 "தாழ்பெயல் கனைகுரல் கடுப்பப் பண்ணுப்பெயர்த்து" (மதுரை 560) எண்ணுப்பாறு4 வெண்ணின்கரை என வரும். (11)
------
2. மண்ணுதல்-நீராடுதல் கழுவுதல் அலங்கரித்தல் வெட்டுதல் மண் பண் என்பன முதனிலைத் தொழிற்பெயர்.
3 வெண்-வெண்ணாறு (சோழநாட்டின் ஓர் ஆறு)
4 எண்ணுப்பாறு-எள்ளேற்றிய மரக்கலம், எண-எள், பாறு-தோணி
-------------
ணகர ஈற்றுக் கிளைப்பெயர்
307 கிளைப்பெய ரெல்லாங் கொளத்திரி பிலவே.
இஃது இவற்றுட் சிலவற்றிற்குத் திரிபு விலக்கி இயல்பு கூறுதலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி கூறுகின்றது.
இ-ள்: கிளைப்பெயரெல்லாம்-ணகார ஈற்றுள் ஓரினத்தை உணரநின்ற பெயரெல்லாம், கொளத் திரிபு இல-திரிபுடைய வென்று கருதும்படியாகத் திரிதலின்றாய் இயல்பாய் முடியும்; எ-று
எ-டு: உமண் என நிறுத்திக் குடி சேரி தோட்டம் பாடி எனத் தந்து முடிக்க.
இனி எல்லாமென்றதனாற் பிற சாரியைபெற்று முடிவனவும் இயல்பாய் முடிவனவுங் கொள்க. மண்ணப்பத்தம்1 எண்ணகோலை2 எனவும் கவண்கால் பரண்கால் எனவுங் கொள்க.
கொள என்றதனால் ஏழாம்வேற்றுமையைப் பொருண்மை உணரநின்ற இடைச்சொற்கள் திரிந்து முடிவனவுங் கொள்க. அங்கட்கொண்டான் இங்கட் கொண்டான் உங்கட்கொண்டான் எங்கட்கொண்டான் எனவும், ஆங்கட் கொண்டான் ஈங்கட்கொண்டான் ஊங்கட்கொண்டான் யாங்கட்கொண்டான் எனவும் அவட்கொண்டான் இவட்கொண்டான் உவட்கொண்டான் எவட் கொண்டான் எனவும் ஒட்டுக (12)
-------
1 மண்ணப்பத்தம்-மண்ணுருண்டை
2 எண்ண நோலை-எள்ளுருண்டை நோலை என்பதே எள்ளுருண்டையைக் குறிக்கு மாதலால், எண்ணநோலை என்பது நாண்கயிறு என்றாற்போல ஓரளவுமிகைபடக் கூறலாம்
-------
அல்வழியில் "எண்" என்னும் உணவுப்பெயர்
308. வேற்றுமை யல்வழி எண்ணென் உணவுப்பெயர்
வேற்றுமை யியற்கை நிலையலு முரித்தே
இஃது அவ் வீற்றுள் ஒன்று அல்வழியுள் வேற்றுமை முடிபுபோலத் திரிந்து முடியுமாறு கூறுகின்றது.
இ-ள்: வேற்றுமை அல்வழி-வேற்றுமையல்லாத இடத்து, எண்ணென் உணவுப்பெயர்-வரையறைப் பொருண்மை உணர்த்தாது எண்ணென்று சொல்லப்படும் உணவினை உணர்த்தும் பெயர், வேற்றுமை இயற்கை நிலையலும் உரித்து-வேற்றுமையது திரிந்து முடியும் இயல்பு நிற்றலும் உரித்து;எ-று
எ-டு: எட்கடிது சிறிது தீது பெரிது என வரும். உம்மையால் தொகைமரபினுள் "மொழிமுதலாகும்" (எழு-147) என்றதனாற் கூறிய இயல்பு பெரும்பான்மை யாயிற்று.
அஃது எண்கடிது என வரும். (13)
----------
இருவழியிலும் "முரண்" என்னுந் தொழிற்பெயர்
309. முரணென் தொழிற்பெயர் முதலியல் நிலையும்
இஃது இவ் வீற்றுள் தொழிற்பெயருள் ஒன்றற்குத் தொழிற்பெயர்க்கு எய்திய உகரமும் வல்லெழுத்தும் விலக்கி இவ் வீற்று அல்வழி முடியும் வேற்றுமை முடிபும் எய்துவித்தது.
இ-ள்: முரண் என் தொழிற்பெயர்-மாறுபாடு உணர்த்தும் முரணென்னுந் தொழிற்பெயர், முதலியல் நிலையும்-தொகை மரபிற் கூறிய அல்வழிக்கண் திரியாது முடிந்த இயல்பின்கண்ணும்3 ஈண்டு வேற்றமைக்கண் திரிந்து முடிந்த இயல்பின்கண்ணும்4 நிலைபெற்று முடியும்; எ-று
-------
3 தொகைமரபில் அல்வழிக்கண் இயல்பு கூறியது. 5-ம் நூற்பா
4 இவ்வியலில் வேற்றுமைக்கண் திரிபு கூறியது. 7-ம் நூற்பா
எ-டு: முரண்கடிது சிறிது தீது பெரிது ஞெகிழ்ந்தது நீண்டது மாண்டது வலிது எனவும், முரட்கடுமை சேனை தானை பறை எனவும், முரண்ஞெகிழ்ச்சி நீட்சி மாட்சி வலிமை எனவும் வரும். இதனைத் "தொழிற் பெயரெல்லாம்" (எழு-306) என்றதன்பின் வையாத முறை யன்றிக் கூற்றினான் முரண்கடுமை முரட்கடுமை அரண்கடுமை அரட்கடுமை என்னும் உறழ்ச்சியுங் கொள்க. (14)
----------
வேற்றுமையில் மகர ஈறு
310. மகர இறுதி வேற்றுமை யாயின்
துவரக் கெட்டு வல்லெழுத்து மிகுமே
இது முறையானே மகர ஈற்றுப்பெயர் வேற்றுமைக்கட் புணருமாறு கூறுகின்றது.
இ-ள்: மகர இறுதி வேற்றுமை ஆயின்-மகர ஈற்றுப் பெயர் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண்ணாயின், துவரக்கெட்டு வல்லெழுத்து மிகும்-அந் நிலைமொழி மகரம் முற்றக்கெட்டு வருமொழி வல்லெழுத்து மிக்கு முடியும்;எ-று
எடு: மரக்கோடு செதிள் தோல் பூ என வரும். முண்டகக்கோதை எனவும் வரும்
துவர என்றதனான் இயல்புகணத்துக்கண்ணும்1 உயர்திணைப் பெயர்க் கண்ணும் விரவுப்பெயர்க்கண்ணும்2 மகரக்கேடு கொள்க. மரஞாண் மரநூல் இவற்றிற்கு நான்கனுருபு விரிக்க. மரமணி யாழ் வட்டு அடை ஆடை என ஒட்டுக. நுங்கை எங்கை செவி தலை புறம் எனவுனம், தங்கை செவி தலை புறம் எனவும் வரும். ஈண்டு மகரக்கேடே கொள்க; முடிபு மேற் கூறுப (எழு-320) (15)
----------
1 இயல்புகணம்-மென்கணம் இடைக்கணம் உயிர்க்கணம் என்பன
2 விரவுப்பெயர்-இருதிணைப் பொதுப்பெயர். இங்கு நும் என்பது விரவுப் பெயர்
---------
அதற்கு, மேலும் இரு முடிபுகள்
311. அகர ஆகாரம் வரூஉங் காலை
ஈற்றுமிசை அகரம் நீடலு முரித்தே
இஃது அவ் வீற்று முடிபு வேற்றுமையுடையன கூறுகின்றது.
இ-ள்: அகர ஆகாரம் வரூஉங்காலை-அகர முதன்மொழியும் ஆகாரமுதன்மொழியும் வருமொழியாய் வருங்காலத்து, ஈற்றுமிசை அகரம் நீடலும் உரித்து-மகர ஒற்றின்மேல் நின்ற அகரம் நீண்டு முடிதலும் உரித்து நீடாமையும் உரித்து;எ-று
எ-டு: மரம் குளம் என நிறுத்தி மகரங்கொடுத்து அடி ஆம்பல் எனத்தந்து ரகர ளகரங்களில் நின்ற அகரம் ஆகாரமாக்கி மராஅடி குளாஅம்பல் என முடிக்க.
மேற் "செல்வழி யறிதல் வழக்கத் தான" (எழு-312) என்பதனாற் குளாஅம்பல் என்புழி ஆகாரத்தை அகர மாக்குக;
உம்மையான் மரவடி குளவாம்பல் என நீடாமையுங் கொள்க.
வருமொழி முற்கூறியவதனான் இவ் வீற்றுப் பிறவும் வேறுபட முடிவன கொள்க. கோணாகோணம் கோணாவட்டம் என வரும். இவற்றி்ற்கு உள்ளென்னும் உருபு விரிக்க.
கோணாகோணத்திற்கு வல்லெழுத்துக்கேடு மேலைச் சூத்திரத்து இலேசாற் கொள்க. (16)
-------
312. மெல்லெழுத் துறழும் மொழியுமா ருளவே
செல்வழி அறிதல் வழக்கத் தான.
இது மகரங்கெட்டு வல்லெழுத்து மிகுதலோடு மெல்லெழுத்தும் உறழ்க என்றலின், எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது.
இ-ள்: மெல்லெழுத்து உறழும் மொழியுமாறுள-மகர ஈற்றுள் வல்லெழுத்தினோடு மெல்லெழுத்துப் பெற்று உறழ்ந்து முடியும் மொழிகளும் உள. வழக்கத்து ஆன செல்வழி அறிதல்- வழக்கத்தின் கண்ணும் வழங்கும் இடம் அறிக;எ-று
எ-டு: குளங்கரை குளக்கரை சேறு தாது பூழி என வரும், இவற்றுட் குளங்கரை குளக்கரைபோல அல்லன ஒத்த உறழ்ச்சியாய் வழங்கா வென்றற்குச் செல்வழி யறிதலென்றார்.
வழக்கத்தான என்றதனான் கு*ளித்துக்கொண்டான் ஈழத்துச்சென்றான் குடத்துவாய் பிலத்துவாய் என்றாற் போல்வன மகரங்கெட்டு அத்துப்பெற்றன. இவை "அத்தேவற்றே" (எழு-133) என்பதனான் ஒற்றுக் கெடா தாயிற்று. அஃது அல்வழிக்குக் கூறுதலின். மழகளிறு என்பது "மழவுங் குழவு மிளமைப் பொருள" என்ற உரிச்சொல். அது மகர ஈறன்று. சண்பகங்கோடு என்பது வழக்கிடத்துச் செல்லாது.
இன்னும் இதனானே மகரங் கெடாது நிற்பனவுங் கொள்க. "புலம்புக் கன்னே" (புறம்-258) "கலம்பெறு கண்ணுள ரொக்கற் றலைவ" (மலைபடு- 50) என வரும். (17)
-----------
"இல்லம்" என்னும் மரப்பெயர்
313. இல்ல மரப்பெயர் விசைமர இயற்றே
இஃது இவ் வீற்றுள் ஒன்றற்கு வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து விதித்தது.
இ-ள்: இல்ல மரப் பெயர்-புக்கு உறையும் இல்லன்றி இல்லமென்னும் மரத்தினை உணரநின்ற சொல், விசைமர இயற்று-விசையென்னும் மரத்தின் இயல்பிற்றாய் மெல்லெழுத்து மிக்கு முடியும்;எ-று
எ-டு: இல்லங்கோடு செதிள் தோல் பூ என வரும்
மேலைச்சூத்திரத்து "வழக்கத்தான" (எழு-312) என்றதனான் மகரக்கேடு கொள்க. (18)
-----------
அல்வழியில் மகர ஈறு
314. அல்வழி யெல்லாம் மெல்லெழுத் தாகும்
இது மகரம் அல்வழிக்கண் திரிக என முற்கூறாமையின் எய்தாத் தெய்துவித்தது.
இ-ள்: அல்வழி யெல்லாம் மெல்லெழுத்தாகும் - மகர ஈறு அல்வழிக்கணெல்லாம் மெல்லெழுத்தாய்த் திரிந்து முடியும்; எ-று.
எ-டு: மரங்குறிது சிறிது தீது பெரிது என வரும். மகரம் பெரிது என்புழித் திரிபின்றென்பது ஆணைகூறலென்னும் உத்தி.1
இனி எல்லா மென்றதனால் அல்வழிக்கண் மகர ஈறு பிறவாற்றான் முடி வனவெல்லாம் முடிக்க. வட்டத்தடுக்கு, சதுரப்பலகை, ஆய்தப் புள்ளி, வேழக்கரும்பு; கலக்கொள் சுக்கு தோரை பயறு; நீலக்கண் என்னும் பண்புப் பெயர்கள் மகரங்கெட்டு வல்லெழுத்து மிக்கு முடிந்தன. ஆய்த வுலக்கை அகரமுதல இவை இயல்புகணத்துக்கண் மகரங்கெட்டு முடிந்தன. எல்லாருங் குறியர் நாங்குறியேம் இவை உயர்திணைப்பெயர் மகரந் திரிந்து மெல்லெழுத்தாய் முடிந்தன. கொல்லுங்கொற்றன் உண்ணுஞ்சாத்தன் கவளமாந்து மலைகெழுநாடன் பொருமாரன் தாவுபரி பறக்குநாரை ஓடுநாகம் ஆடுபோர் வருகாலம் கொல்லும்யானை பாடும்பாணன் என இவை மகரந் திரிந்துங் கெட்டும் நிலைபெற்றும் வந்த பெயரெச்சம்.
இன்னும் இதனானே இயல்பு கணத்துக்கண்ணும் மகரங் கெடுதலுங் கெடாமையுங் கொள்க. மரஞான்றது நீண்டது மாண்டது எனவும், மரம்யாது வலிது அடைந்தது எனவும் வரும். இன்னும் இதனானே பவளவாயென உவமத்தும் நிலநீரென எண்ணிடத்துங் கேடு கொள்க. (19)
---------
1. ஆணை கூறல் - இவ்வாசிரியன் கருத்து இது வெனக் கொள்ள வைத்தல். மகரம்
பகரத்திற்கு இன மெல்லெழுத்தாதலின் அதன்முன் திரியாது என்பது கருத்து.
--------
'அகம்' முன் 'கை'
315. அகமென் கிளவிக்குக் கைமுன் வரினே
முதனிலை யொழிய முன்னவை கெடுதலும்
வரைநிலை யின்றே ஆசிரி யர்க்க
மெல்லெழுத்து மிகுத லாவயி னான.
இது மகர ஈற்று அல்வழிக்கண் இம்மொழி இம்முடிபு எய்துக என்றலின் எய்தாத தெய்துவித்தது.
இ-ள்: அகம் என் கிளவிக்குக் கை முன்வரின் - அகமென்னுஞ் சொல்லிற்குக் கையென்னுஞ் சொல் முன்னே வருமாயின், முதனிலை ஒழிய முன்னவை கெடுதலும் - முன்னின்ற அகரங் கெடாது நிற்ப அதன் முன்னின்ற ககரமும் மகர வொற்றுங் கெட்டு முடிதலுங் கெடாதுநின்று முடிதலும், வரை நிலை இன்றே யாசிரியர்க்க - நீக்கு நிலைமையின்று ஆசிரியர்க்கு, ஆவயின் ஆன மெல்லெழுத்து மிகுதல் - அவை கெட்டவழி மெல்லெழுத்து மிக்கு முடியும்; எ-று.
எ-டு: அங்கை எனவரும். அகங்கை எனக் கெடாது முடிந்தவழி 'அல்வழியெல்லாம்' (எழு - 314) என்றதனான் மகரந் திரிந்து முடிதல் கொள்க. இது பண்புத்தொகை. அதிகாரத்தானும் பொருணோக்கானும் வேற்றுமைத் தொகையன்மை உணர்க. (20)
----------
'இலம்' முன் 'படு'
316. இலமென் கிளவிக்குப் படுவரு காலை
நிலையலு முரித்தே செய்யு ளான.
இஃது இலமென்பது முற்றுவினைச் சொல்லாகாது குறிப்பாகிய உரிச் சொல்லாய் நிற்குங்கால் அல்வழிக்கண் முடியுமாறு கூறுகின்றது.
இ-ள்: இலம் என் கிளவிக்கு - இல்லாமை யென்னுங் குறிப்பாகிய உரிச்சொற்கு, படு வரு காலை - உண்டாதலென்னும் வினைக்குறிப்புப்பெயர்1 வருமொழியாய் வருங்காலத்து, செய்யுளான நிலையலும் உரித்து - செய்யுளிடத்து மகரக்கேடுந் திரிபுமின்றி நிற்றலும் உரித்து; எ-று.
எனவே, உம்மையாற் பிறசொல் வருங்காலத்துக்குக் கேடுந் திரிபும் பெற்று நிற்றலும் உரித்தெனக் கொள்க.
எ-டு: 'இலம்படு புலவ ரேற்றகை நிறைய' (மலைபடு - 576) இதற்கு இல்லாமை உண்டாகின்ற புலவரெனப் பொருள் கூறுக. 'இலம்பாடு நாணுத் தரும்' என்கின்றதோவெனின், இல்லாமை உண்டாதல் நாணுத் தருமென்று பொருள் கூறுக. இதனை *நெற்பாடு பெரிதென்றாற்போலக் கொள்க. இது பொருளிலமென முற்றுவினைச் சொல்லாமாறும் உணர்க. இலநின்றதெனக் கெட்டவாறும், இலங்கெடவியந்தான் இலஞ்சிறிதாக இலந்தீதென்று எனக் கசதக்கள் வரும்வழித் திரிந்தவாறுங் காண்க.
'எல்லா' (எழு - 314) மென்றதனான் இலம்வருவது போலும் இலம் யாரிடத்து என வகர யகரங்களின் முன்னர்க் கெடாதுநிற்றல் கொள்க.
இதனை இலத்தாற் பற்றப்பட்ட புலவரென வேற்றுமையென்றாரால் உரையாசிரியரெனின், பற்றப்பட்ட புலவரென்பது பெயரெச்சமாதலிற் பற்ற வென்னுந் தொழில் தோற்றுவிக்கின்ற முதனிலைச் சொல்லைச் சூத்திரத்து ஆசிரியர் எடுத்தோதிற்றிலராதலானும் படுவென்பதுதானும் புலவரென்னும் பெயரோடு முடியுங்கால் இரண்டுகாலமுங் காட்டும் ஈறுகள் தொக்க முதனிலைச் சொல்லாய் நிற்றலின், அதனை எடுத்தோதினாராதலானும் ஆசிரியர்க்கு அங்ஙனங் கூறுதல் கருத்தன்மை உணர்க.
அன்றியும் பற்றப்பட்ட என்புழி இரண்டு முதனிலை கூடி ஒன்றாய் நின்று பற்றுதலைச் செய்யப்பட்ட எனப் பொருள் தாராமையானும் அல்வழி யதிகார மாதலானும் அது பொருளன்மை உணர்க. (21)
---------
1. படு என்பது தெரிநிலை வினைப்பகுதியே யன்றி வினைக்குறிப்புப் பெயரன்று. படுதல் - உண்டாதல். படு என்னும் பகுதி
----------
'ஆயிரம்' என்னும் எண்ணுப்பெயர்
317. அத்தொடு சிவணும் ஆயிரத் திறுதி
ஒத்த எண்ணு முன்வரு காலை
நீண்டு பாடு என முதனிலை திரிந்த தொழிற் பெயராதல்போல இலம்படு என்னும் பகுதியும் இலம்பாடு என்றாகும். 'இலம்பாடொற்கம் ஆயிரண்டும் வறுமை" (தொல். 843) என்றார் ஆசிரியரும். இலம்படு என்பது எழுவாய்த்தொடர். இலம்படு புலவர் என்பது வினைத்தொகை.
இஃது இவ் வீற்றுள் எண்ணுப்பொருள் ஒன்றற்குத் தொகைமரபினுள் "உயிரும் புள்ளியு மிறுதி யாகி" (எழு-164) என்பதனான் எய்திய ஏயென்சாரியை விலக்கி அத்து வகுக்கின்றது.
இ-ள்: ஆயிரத்து இறுதி-ஆயிரமென்னும் எண்ணுப் பெயரின் மகரம், ஒத்த எண் முன்வருகாலை-தனக்கு அகப்படும் மொழியாய்ப் பொருந்தின எண்ணுப்பெயர் தன்முன் வருங்காலத்து, அத்தொடு சிவணும்-தொகைமரபிற்கூறிய ஏயென்சாரியை ஒழித்து அத்துச்சாரியையோடு பொருந்தி முடியம்; எ-று
எ-டு: ஆயிரத்தொன்று ஆயிரத்தொன்பது என ஒன்றுமுதல் ஒன்பதின்காறும் ஒட்டுக. மகரத்தை அத்தின்மிசை யொற்றென்று கெடுத்து "அத்தி னகர மகரமுனை யில்லை" (எழு-125) என்று முடிக்க. ஆயிரத்தொருபது என்றாற்போல்வனவற்றிற்கும் ஒட்டுக.
நிலைமொழி முற்கூறாததனான் ஆயிரத்துக்குறை கூறு முதல் என்பனவுங் கொள்க. இன்னும்இதனானே ஆயிரப்பத்தென்புழி மகரங்கெடுத்து வல்லொற்று மிகுத்து முடிக்க. (22)
---------
அடையடுத்த ஆயிரம்
318. அடையொடு தோன்றினும் அதனோ ரற்றே
இஃது "அடையொடு தோன்றினும் புணர்நிலைக் குரிய" (எழு-110) என்றமையின் அவ்வெண்ணுப் பெயரை அடையடுத்து முடிக்கின்றது.
இ-ள்: அடையொடு தோன்றினும்-அவ்வாயிர மென்னும் எண்ணுப்பெயர் அடையடுத்த மொழியோடு வரினும்; அதனோரற்று-முற்கூறியதனோடு ஒருதன்மைத்தாய் அத்துப்பெற்று முடியும்; எ-று
எ-டு: பதினாயிரத்தொன்று இரண்டு இருபதினாயிரத்தொன்று ஆறாயிரத்தொன்று நூறாயிரத்தொன்று முந்நூராயிரத்தொன்று ஐந்நூறாயிரத்தொன்று என ஒட்டுக. முன்னர் இலேசினான் முடிந்தவற்றையும் அடையடுத்து ஒட்டுக. பதினாயிரத்துக்குறை புறம் கூறு முதல் எனவும், நூறாயிரப்பத்து எனவும் வரும் (23)
-----------
அதன்முன் அளவுப்பெயரும் நிறைப்பெயரும்
319. அளவும் நிறையும் வேற்றுமை யியல
இஃது அவ்வெண்ணின் முன்னர் அளவுப்பெயரும் நிறைப்பெயரும் வந்தால் முடியுமாறு கூறுதலின் எய்தாத தெய்துவித்தது.
இ-ள்: அளவும் நிறையும்-அதிகாரத்தால் ஆயிரந் தானே நின்றுழியும் அடையடுத்து நின்றுழியும் அளவுப்பெயரும் நிறைப் பெயரும் வந்தால், வேற்றுமை இயல-மகர ஈற்று வேற்றுமையோடு ஒத்து வல்லெழுத்து வந்துழி மகரங்கெட்டு வல்லெழுத்து மிக்கும் இயல்புகணம் வந்துழித் 'துவர' (எழு-310) என்னும் இலேசான் எய்திய மகரங் கெட்டும் புணரும்; எ-று.
எ-டு: ஆயிரம் பதினாயிரம் நூறாயிரம் என நிறுத்திக் கலம் சாடி தூதை பானை நாழி மண்டை வட்டில் அகல் உழக்கு எனவும், கஃசு கழஞ்சு தொடி துலாம் பலம் எனவுந் தந்து ஒட்டுக.
வேற்றுமையியல எனவே தாம் வேற்றுமையல்ல வாயின. (24)
----------
வேற்றுமையில் உயர்திணைப்பெயரும் விரவுப்பெயரும்
320. படர்க்கைப் பெயரும் முன்னிலைப் பெயரும்
தொடக்கங் குறுகும் பெயர்நிலைக் கிளவியும்
வேற்றுமை யாயின் உருபியல் நிலையும்
மெல்லெழுத்து மிகுத லாவயி னான.
இஃது உயர்திணைப்பெயரும் விரவுப்பெயரும் உருபியலுள் முடிந்தவாறே ஈண்டுப் பொருட்புணர்ச்சிக்கண்ணும் முடிகவென எய்தாத தெய்து வித்தது.
இ-ள்: படர்க்கைப் பெயரும் முன்னிலைப் பெயரும் - எல்லாருமென்னும் படர்க்கைப்பெயரும் எல்லீருமென்னும் முன்னிலைப் பெயரும், தொடக்கங் குறுகும் பெயர்நிலைக் கிளவியும் - கிளைத் தொடர்ச்சிப் பொருளவாய் நெடுமுதல் குறுகிமுடியுந் தாம் நாம் யாமென்னும் பெயராகிய நிலைமையையுடைய சொல்லும், வேற்றுமையாயின் உருபியல் நிலையும் - வேற்றுமைப் பொருட் புணர்ச் சிக்கண்ணாயின் உருபுபுணர்ச்சிக்குக் கூறிய இயல்பின்கண்ணே நின்று முடியும். ஆவயின் ஆன மெல்லெழுத்து மிகுதல் - மேல் நெடுமுதல் குறுகும் மொழிக்கண் மெல்லெழுத்து மிக்கு முடியும்; எ-று.
எல்லாருமென்பதனை மகரஒற்றும் உகரமுங் கெடுத்து ரகரப்புள்ளியை நிறுத்திக் கை செவி தலை புறம் எனத் தந்து இடையிலே தம்முச்சாரியையும் இறுதியிலே உம்முச்சாரியையுங் கொடுத்து எல்லார்தங்கையும் செவியும் தலையும் புறமும் என முடிக்க. இதற்கு 'அம்மினிறுதி' (எழு-129) என்னுஞ் சூத்திரத்துள் 'தன்மெய்' என்றதனாற் பிறசாரியைக்கண் மகர ஒற்றுத் திரிந்து 'ஙஞநவாகும்' எனச் செய்கைசெய்து முடிக்க. எல்லீரு மென்பதற்கு இடையிலே நும்முச்சாரியையும் இறுதியிலே உம்முச்சாரியையுங் கொடுத்து முற்கூறிய செய்கைகளெல்லாஞ் செய்து எல்லீர்நுங்கையும் செவியும் தலையும் புறமும் என முடிக்க. தாம் நாம் என்பனவற்றை 'ஏனையிரண்டு நெடுமுதல்குறுகும்' (எழு-188) எனக் குறுக்கி 'மகரவிறுதி' (எழு-310) என்பதனான் மகரங் கெடுத்துத் தங்கை நங்கை செவி தலை புறம் என முடிக்க. யாம் என்பதனை ஆகாரத்தை எகரமாக்கி யகர ஒற்றைக்கெடுத்து 'மகர விறுதி' (எழு-310) என்றதனால் மகரங்கெடுத்து எங்கை செவி தலை புறம் என முடிக்க. தொடக்கங் குறுகுவனவற்றிற்கு இச் சூத்திரத்தான் மெல்லெழுத்து மிகுக்க.
உறுபியல் நிலையும் என்பதனான் வேற்றுமையாதல் பெறாநிற்கவும் பின்னும் வேற்றுமையாயினென்ற மிகையானே படர்க்கைப்பெயரும் முன்னிலைப்பெயரும் இயல்புகணத்து ஞகாரமும் நகாரமும் வந்துழித் தம்முச் சாரியையும் நும்முச் சாரியையும் பெறுதலும் மகரங்கெட்டு உம்முப்பெறுதலும் ஆவயினான என்றதனான் ஒற்று இரட்டுதலுங் கொள்க. எல்லார்தஞ் ஞாணும் எல்லீர்நுஞ் ஞாணும் நூலும் என வரும்.
இனித் தொடக்கங் குறுகுவனவற்றிற்கும் அவ்விரண்டு இலேசானும்1 மகரங்கெடுதலும் ஒற்று இரட்டுதலுங் கொள்க. தஞ்ஞாண் நஞ்ஞாண் எஞ்ஞாண் நூல் என வரும்.
இன்னும் ஆவயினான என்றதனானே எல்லார்தம் எல்லீர்நும் என நின்றவற்றின் முன்னர் ஏனை மணி யாழ் வட்டு அடை என்பன வந்துழி மகரங்கெடாமையும் உம்முப்பெறுதலுங் கொள்க.
இன்னும் இதனானே தொடக்கங் குறுகுவனவற்றிற்குந் தம்மணி யாழ்வட்டு அடை என மகரங் கெடாமையுங் கொள்க.
இன்னும் இதனானே தமகாணம் நமகாணம் எமகாணம் நுமகாணம் என உருபீற்றுச் செய்கைகளுங் கொள்க.
இன்னும் இதனானே நும் என்பதற்கு மகரத்தை மெல்லொற்றாக்கி நுங்கை செவி தலை புறம் என வருதலும், நுஞ்ஞாண் என ஒற்றிரட்டுதலும், நும்வலி என மகரங் கெடாது நிற்றலுங் கொள்க.
இன்னும் இதனானே எல்லார்கையும் எல்லீர்கையும் எனத் தம்மும் நும்மும் பெறாது நிற்றலுங் கொள்க. (25)
----------
1. இரண்டு இலேசு (1) வேற்றுமையாயின, (2) ஆவயினான என்பன,
--------
அல்வழியில் அவை
321. அல்லது கிளப்பின் இயற்கை யாகும்.
இது முற்கூறிய மூன்றுபெயர்க்கும் அல்வழிமுடிபு கூறுகின்றது.
இ-ள்: அல்லது கிளப்பின் இயற்கையாகும் – அம்மூன்று பெயரும் அல்வழியைச் சொல்லுமிடத்து இயல்பாய் முடியும்; எ-று.
ஈண்டு இயற்கையென்றது சாரியை பெறாமை நோக்கி. இவற்றின் ஈறுதிரிதல் 'அல்வழியெல்லாம்' (எழு-314) என்பதனுள் எல்லாமென்றதனாற் கொள்க.
எ-டு: எல்லாருங்குறியர் சிறியர் தீயர் பெரியர் எனவும், எல்லீருங்குறியீர் சிறியீர் தீயீர் பெரியீர் எனவும், தாங்குறியர் சிறியர் தீயர் பெரியர் எனவும், தாங்குறிய சிறிய தீய பெரிய எனவும், நாங்குறியம் சிறியம் தீயம் பெரியம் எனவும், யாங்குறியேம் சிறியேம் தீயேம் பெரியேம் எனவும் வரும்.
இன்னும் எல்லா மென்றதனானே இவற்றின் முன்னர் ஞகார நகாரம் வந்தால் அவை அவ்வொற்றாய்த் திரிதல் கொள்க. எல்லாருஞ் ஞான்றார் நீண்டார், எல்லீருஞ் ஞான்றீர் நீண்டீர் எனவும் தாஞ் ஞான்றார் நீண்டார் எனவும், நாஞ் ஞான்றாம் நீண்டாம் எனவும் யாஞ் ஞான்றேம் நீண்டேம் எனவும் வரும்.
இனி எல்லாரும்வந்தார் யாத்தார் அடைந்தார், எல்லீரும்வந்தீர் யாத்தீர் அடைந்தீர் எனவும், தாம்வந்தார் யாத்தார் அடைந்தார் எனவும் நாம்வருதும் யாத்தும் அடைதும், யாம்வருவேம் யாப்பேம் அடைவேம் எனவும் ஏனைக் கணங்களின் முன்னர் மகரந் திரியாது நிற்றலும் 'உயிரீறாகிய உயர்திணைப் பெயரும்' (எழு-153) என்பதனான் முடியும். (26)
-----------
'எல்லாம்' என்னும் விரவுப் பெயர்
322. அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும்
எல்லா மெனும்பெயர் உருபியல் நிலையும்
வேற்றுமை யல்வழிச் சாரியை நிலையாது.
இஃது இவ் வீற்றுள் விரவுப்பெயருள் ஒன்றற்கு அல்வழிக் கண்ணும் வேற்றுமைக் கண்ணும் உருபியலோடு மாட்டெறிந்து எய்தாத தெய்துவித்தது.
இ-ள்: அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும் – அல்வழிக்கட் சொல்லினும் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கட் சொல்லினும், எல்லா மெனும் பெயர் உருபியல் நிலையும் - எல்லாமென்னும் விரவுப் பெயர்1 உருபு புணர்ச்சியின் இயல்பிலே நின்று முடியும், வேற்றுமை யல்வழிச் சாரியை நிலையாது – அப்பெயர் வேற்றுமைப் பொருட் புணர்ச்சியல்லாத இடத்து வற்றுச் சாரியை நில்லாதாய் முடியும்; எ-று.
உருபியல் நிலையும் என்ற மாட்டேறு அல்வழிக்கண் உம்முப் பெற்று நிற்றலும் பொருட் புணர்ச்சிக்கண் வற்றும் உம்மும் பெற்று நிற்றலும் உணர்த்திற்று.
உம்முச்சாரியை ஒன்றுமே பெற்று முடிகின்ற வேற்றுமையோடு உடனோதி அதுவும் வற்றுப் பெறுமாறுபோல மாட்டெறிந்த மிகையானே வன் கணத்து அல்வழிக்கண் நிலைமொழி மகரக்கேடும் வருமொழி வல்லெழுத்துப் பேறும் மென் கணத்து மகரங் கெட்டு உம்முப் பெற்றும் பெறாதும் வருதலும் ஏனைக் கணத்து மகரங் கெட்டு உம்முப் பெற்றும் மகரங் கெடாது உம்முப் பெறாதும் வருதலுங் கொள்க.
எ-டு: எல்லாக்குறியவும் சிறியவும் தீயவும் பெரியவும் எனவும், எல்லா ஞாணும் நூலும் மணியும் எனவும், எல்லாஞான்றன நீண்டன மாண்டன எனவும் எல்லாயாழும் வட்டும் அடையும் எனவும், எல்லாம்வாடின ஆடின எனவும் வரும். இனி வேற்றுமைக்கண் எல்லாவற்றுக்கோடும் செவியும் தலையும் புறமும் என இவை வற்றும் உம்மும் பெற்றன.இவற்றிற்கு மகரம்வற்றின் மிசை யொற்றென்று கெடுக்க. இனி மென்கணத்துக்கண் எல்லா வற்று ஞாணும் நூலும் மணியும் எனவும், ஏனைக் கணத்துக்கண் எல்லாவற்றி யாப்பும் வலியும் அடையும் எனவும் வரும். ஏனைக் கணமும் வற்றும் உம்மும் பெற்றன. (27)
---------------
1. எல்லாம் என்பது, எல்லா மாந்தரும் எல்லா மரமும். மாந்தரெல்லாம் மரமெல்லாம் என நிலைமொழியாயும் வருமொழியாயும் இரு திணையிலும் செல்லுதலின் விரவுப் பெயராயிற்று. எல்லாம் என்னும் தன்மைப் பன்மைப் பெயரும் எல்லாம் என்னும் விரவுப் பெயரும் வெவ்வேறு.
--------
அதற்கு, மேலும் ஒரு முடிபு
323. மெல்லெழுத்து மிகினும் மான மில்லை.
இஃது ஒரு சார் வல்லெழுத்தை விலக்கி மெல்லெழுத்து விதித்தலின் எய்தியதன் மேற் சிறப்பு விதி கூறுகின்றது.
இ-ள்: மெல்லெழுத்து மிகினும் மான மில்லை - அவ்வெல்லா மென்பது அல்வழிக்கண் மேல் இலேசினாற் கூறிய வல்லெழுத்தே யன்றி மெல்லெழுத்து மிக்கு முடியினுங் குற்றமில்லை; எ-று.
எனவே வல்லெழுத்து மிகுதலே பெரும்பான்மை யாயிற்று. முற் கூறிய செய்கை மேலே இது கூறினமையின் மகரக் கேடும் உம்முப் பேறுங் கொள்க.
எல்லாங்குறியவும் சிறியவும் தீயவும் பெரியவும் என வரும்.
மானமில்லை என்றதனான் உயர்திணைக்கண் வன்கணத்து மகரங் கெட்டு வல்லெழுத்து மிக்கு இறுதி உம்முப் பெற்று முடிதலும் இயல்பு கணத்துக் கண் மகரங் கெட்டு உம்முப்பெற்று முடிதலுங் கொள்க. எல்லாக்கொல்லரும் சான்றாரும் தச்சரும் பார்ப்பாரும் குறியரும் சிறியரும் தீயரும் பெரியரும் எனவும், எல்லாஞான்றாரும் நாய்கரும் மணியகாரரும் வணிகரும் அரசரும் எனவும் வரும்.
இன்னும் இதனானே உயர்திணைக்கண் எல்லாங்குறியரும் சிறியரும் தீயரும் பெரியரும் என மகரங் கெட்டு மெல்லெழுத்து மிக்கு உம்முப் பெறுதலும் எல்லாங் குறியர் சிறியர் தீயர் பெரியர் எனவும், குறியீர் குறியம்1 எனவும், உம்முப் பெறாது வருதலுங் கொள்க.
இன்னும் இதனானே இடைக்கணத்தும் உயிர்க்கணத்தும் மகரங் கெடாது உம்மின்றி வருதலுங் கொள்க. எல்லாம் வந்தேம் அடைந்தேம் என வரும். (28)
-------------
1. எல்லாங் குறியீர் எல்லாங் குறியம் என ஒட்டுக. குறியீர் முன்னிலை; குறியம் தன்மை.
----------
அதற்கு, உயர்திணை முடிபு
324. உயர்திணை யாயின் உருபியல் நிலையும்.
இஃது எல்லா மென்பதற்கு உயர்திணைமுடிபு கூறுகின்றது.
இ-ள்: உயர்திணையாயின் உருபியல் நிலையும் - எல்லாமென்பது உயர்திணையாய் நிற்குமாயின் உருபு புணர்ச்சியின் இயல்பிற்றாய் இடைக்கண் நம்மும் இறுதிக்கண் உம்மும்பெற்று முடியும்; எ-று.
உருபியலுள் 'எல்லா மென்னு மிறுதி முன்னர் - வற்றென்சாரியை' (எழு-189) வகுத்ததனான் வற்றின் மிசை யொற்றென்று மகரங்கெடுத்த அதிகாரத்தான் 'உயர்திணை யாயி னம்மிடை வரும்' (எழு-190) என நம்மின் முன்னும் மகரங்கெடுத்தார், அதனோடு ஈண்டு மாட்டெறிதலி்ன் அது கொண்டு ஈண்டும் மகரங் கெடுக்க. 'அம்மினிறுதி'(எழு-129) என்புழித் 'தன்மெய்' என்றதனான் நம்முச்சாரியையினது மகரந்திரிதல் கொள்க.
எல்லாநங்கையும் செவியும் தலையும் புறமும் என ஒட்டுக.
வருமொழி வரையாது கூறலின் எல்லாநஞ்ஞாற்சியும் நீட்சியும் என ஏற்பனவற்றோடு முடிபு அறிந்து ஒட்டுக. (29)
--------------
வேற்றுமையில் 'நும்' என்னும் பெயர்
325. நும்மெ னொருபெயர்1 மெல்லெழுத்து மிகுமே.
இது மகர ஈற்றிற்கு வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்து விதித்தது.
இ-ள்: நும்மென் ஒருபெயர் மெல்லெழுத்து மிகும் - நும்மென்று சொல்லப்படுகின்ற விரவுப்பெயர் பொருட்புணர்ச்சிக் கண் மெல்லெழுத்து மிக்கு முடியும்; எ-று.
நுங்கை செவி தலை புறம் என வரும். 'மகரவிறுதி' (எழு-310) என்பதனான் மகரங்கெடுக்க.
ஒன்றென முடித்த லென்பதனான் உங்கை என வருவதூஉங் கொள்க.
'துவர' (எழு-310) என்றதனான் ஞகர நகரங்கள் வந்துழி மகரங்கெடுதலும் ஒருபெயர் என்றதனான் ஒற்று மிகுதலுங் கொள்க. நுஞ்ஞாண் நூல் என வரும். இன்னும் ஒருபெயர் என்றதனான் நும்மணி யாழ் வட்டு அடை என மகரங் கெடாமையும் கொள்க. (30)
--------
அல்வழியில் 'நும்' என்னும் பெயர்
326. அல்லதன் மருங்கிற் சொல்லுங் காலை
உக்கெட நின்ற மெய்வயின் ஈவர
இஇடை நிலைஇ ஈறுகெட ரகரம்
நிற்றல் வேண்டும் புள்ளியொடு புணர்ந்தே
அப்பான் மொழிவயின் இயற்கை யாகும்.1
இது நும்மென்பதற்கு அல்வழி முடிபு கூறுகின்றது.
இ-ள்: அல்லதன் மருங்கிற் சொல்லுங்காலை - நும்மென்பதனை அல்வழிக்கண் கூறுமிடத்து, உ கெட நின்ற மெய்வயின் ஈ வர - நகரத்துள் உகரங்கெட்டுப் போக ஒழிந்து நின்ற நகர வொற்றிடத்தே ஈகாரம் வந்து நிற்ப, இ இடைநிலைஇ ஈறுகெட- ஓர் இகரம் இடையிலே வந்து நிலைபெற்று மகரமாகிய ஈறு கெட்டுப்போக, புள்ளி ரகரம் நிற்றல் வேண்டும் – ஆண்டுப் புள்ளி பெற்று ஒரு ரகரம் வந்து நிற்றலை விரும்பும் ஆசிரியன், அப்பால் மொழிவயின் - அக்கூற்றினையுடைய நிலைமொழியிடத்து, இயற்கையாகும் - வருஞ்சொல் இயல்பாய் முடியும்; எ-று.
எ-டு: நீயிர்குறியீர் சிறியீர் பெரியீர் என வரும்.
சொல்லுங்காலை யென்றதனானே நீயிர் ஞான்றீர் நீண்டீர் மாண்டீர் யாத்தீர் வாடினீர் அடைந்தீர் என ஏனைக்கணத்திலும் ஒட்டுக. (31)
---------------
1. நும் என்பது நூம் என்னும் வழக்கற்ற பழம்பெயரின் வேற்றுமைக் குறுக்கம். எம் தம் என்னும் பிறவிடக் குறுக்கங்கள் போன்றே நும் என்பதும் உருபு பெற்றும் பெறாதும் ஆறாம் வேற்றுமைப் பொருள் தரும்.
2. நும் என்னும் வேற்றுமைத் திரிபுப்பெயர் எழுவாய் வேற்றுமையில் நீயிர் என்றாகும் என இந்நூற்பாவிற் கூறியிருப்பது தமிழியல்புக்கும் உத்திக்கும் பொருந்தாது. 'நும்' வேறு, 'நீயிர்' வேறு. நீன் என்னும் முன்னிலை யொருமைப் பெயர் ஈறுகெட்டு நீ என வழங்குவதே இர் ஈறு பெற்று நீயிர் என்னும் பன்மைப் பெயராகும்.
-----------
மகர ஈற்றுத் தொழிற்பெயர்
327. தொழிற்பெய ரெல்லாந் தொழிற்பெய ரியல.
இது வேற்றுமைக்கண் மகரங்கெட்டு வல்லெழுத்து மிக்கும் அல்வழிக்கண் மெல்லெழுத்தாய்த் திரிந்தும் வருமென எய்தியதனை விலக்கி ஞகர ஈற்றுத் தொழிற்பெயர் போல நிற்குமெனப் பிறிது விதி வகுத்தது.
இ-ள்: தொழிற்பெயரெல்லாம் - மகர ஈற்றுத் தொழிற் பெயரெல்லாம், தொழிற்பெயர் இயல - ஞகார ஈற்றுத் தொழிற்பெயர் போல அல்வழியினும் வேற்றுமையினும் வன்கணத்து உகரமும் வல்லெழுத்தும் இயல்புகணத்து உகரமும் பெற்று முடியும்; எ-று.
எ-டு: செம்முக்கடிது சிறிது தீது பெரிது ஞான்றது நீண்டது மாண்டது வலிது எனவும், செம்முக்கடுமை சிறுமை தீமை பெருமை ஞாற்சி நீட்சி மாட்சி வலிமை எனவும் வரும். 'தும்முச் செறுப்ப' (குறள்-1318) என்பதும் அது. இவை 'குறியதன் முன்னர்த் தன்னுரு விரட்டல்' (எழு-160).
எல்லா மென்றதனான் உகரம்பெறாது நாட்டங்கடிது ஆட்டங்கடிது என மெல்லெழுத்தாய் அல்வழிக்கண் திரிதலும் நாட்டக்கடுமை ஆட்டக்கடுமை என வேற்றுமைக்கண் வல்லெழுத்து மிகுதலுங் கொள்க. (32)
----------
'நம்' 'கம்' 'உரும்' என்னும் பெயர்கள்
328. ஈமுங் கம்மும் உருமென் கிளவியும்
ஆமுப் பெயரு மவற்றோ ரன்ன.
இது பொருட்பெயருட் சில தொழிற்பெயரோடு ஒத்துமுடிக என எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது.
இ-ள்: ஈமுங் கம்மும் உருமென் கிளவியும் ஆ முப்பெயரும் - ஈமென்னுஞ் சொல்லுங் கம்மென்னுஞ் சொல்லும் உருமென்னுஞ் சொல்லுமாகிய அம்மூன்று பெயரும், அவற்றோரன்ன - முற்கூறிய தொழிற்பெயரோடு ஒருதன்மையவாய் வன்கணத்து உகரமும் வல்லெழுத்தும் இயல்புகணத்து உகரமும் பெற்றுமுடியும்; எ-று.
ஈம் என்பது சுடுகாடு; கம்-தொழில்.
எ-டு: ஈமுக்கடிது கம்முக்கடிது உருமுக்கடிது சிறிது தீது பெரிது ஞான்றது நீண்டது மாண்டது வலிது எனவும், ஈமுக்கடுமை கம்முக்கடுமை உருமுக்கடுமை சிறுமை தீமை பெருமை ஞாற்சி நீட்சி மாட்சி வலிமை எனவும் ஒட்டுக.
கிளவியென்றதனான் வேற்றமைக்கண்ணும் அல்வழிக்கண்ணும் உயிர் வருவழி உகரம்பெறாது ஈமடைவு ஈமடைந்தது என நிற்றலுங் கொள்க.
தன்னினமுடித்த லென்பதனான் அம்மு தம்மு நம்மு எனச் சாரியைக் கண்ணும் உகரம் வருதல் கொள்க. (33)
----------
'ஈம்' 'கம்' என்னும் இருபெயர்க்கும் சாரியை
329. வேற்றுமை யாயின் ஏனை யிரண்டும்
தோற்றம் வேண்டும் அக்கென் சாரியை.
இது மேல் முடிபுகூறிய மூன்றனுள் இரண்டிற்கு வேற்றுமைக்கண் வேறோர் முடிபு கூறுகின்றது.
இ-ள்: வேற்றுமையாயின் - வேற்றுமைப் பொருட்புணர்ச்சியாயின், ஏனை இரண்டும் தோற்றம் வேண்டும் அக்கென் சாரியை - இறுதியில் உருமொழிந்த இரண்டும் அக்கென்னுஞ் சாரியை தோன்றி முடிதலை வேண்டும் ஆசிரியன்; எ-று.
எ-டு: ஈமக்குடம் கம்மக்குடம் சாடி தூதை பானை எனவும், ஞாற்சி நெருப்பு மாட்சி விறகு எனவும் ஒட்டுக.
அக்கு வகுப்பவே நிலைமொழித் தொழிலாகிய உகரங்கெட்டு முற்கூறிய வல்லெழுத்து விலக்கப்படாமையின் நின்று முடிந்தது.
வன்கணத்திற்கு முன்னின்ற சூத்திரத்திற் கூறியது குணவேற்றுமைக் கென்றும் ஈண்டுக் கூறியது பொருட்புணர்ச்சிக் கென்றுங் கொள்க. (34)
----------
மகரம் குறுகுமிடம்
330. வகார மிசையும் மகாரங் குறுகும்.
இது முன்னர் 'அரையளவு குறுகல்' (எழு-13) எனவும், 'னகாரை முன்னர்' (எழு-52) எனவுங் கூறிய மகரம் இருமொழிக்கண்ணும் குறுகுமென அதன் ஈற்றகத்து எய்தாத தெய்துவிக்கின்றது.
இ-ள்: வகாரமிசையும் மகாரங் குறுகும் - மகாரம் ஒரு மொழிக்கண்ணேயன்றி வகாரத்தின்மேலுங் குறுகும்; எ-று.
எ-டு: நிலம்வலிது வரும்வண்ணக்கன் என வரும். (35)
-------
மகர ஈற்று நாட்பெயர்
331. நாட்பெயர்க் கிளவி மேற்கிளந் தன்ன
அத்தும் ஆன்மிசை வரைநிலை யின்றே
ஒற்றுமெய் கெடுதல் என்மனார் புலவர்.
இஃது இவ் வீற்று நாட்பெயர்க்கு வேற்றுமை முடிபு கூறுகின்றது
இ-ள்: நாட் பெயர்க் கிளவி மேற் கிளந்தன்ன - மகர ஈற்று நாட்பெயர் இகர ஈற்று நாட்பெயர் போல ஆன் சாரியை பெற்று முடியும், அத்தும் ஆன்மிசை வரைநிலை இன்று - அத்துச்சாரியை ஆன்சாரியை மேலும் பிறசாரியை மேலும் வருதல் நீக்கு நிலைமையின்று, ஒற்று மெய்கெடுதல் என்மனார் புலவர் - ஆண்டு நிலைமொழி மகர ஒற்றுக் கெடுக என்று கூறுவர் புலவர்; எ-று.
உம்மையை ஆன்மிசையுமென மாறுக.
எடு: மகத்தாற்கொண்டான் ஓணத்தாற்கொண்டான் சென்றான் தந்தான் போயினான் என்க. ஏனைநாட்களோடும் ஒட்டுக. மகர ஒற்றுக் கெடுத்து 'அத்தினகர மகர முனையில்லை' (எழு-125) என அகரங் கெடுத்துக் 'குற்றியலுகரமுமற்றென' (எழு-15) என ஆனேற்றி 'ஆனினகரமும்' (எழு-124) என்றதனான் றகரமாக்கி முடிக்க. மகத்துஞான்று கொண்டான் சென்றான் தந்தான் போயினான் என ஞான்றென்னுஞ் சாரியைமேல் அத்து வந்தது.
வரையாது கூறினமையின் இம்முடிபு நான்கு கணத்துங் கொள்க. மகத்தான் ஞாற்றினான் நிறுத்தினான் மாய்ந்தான் வந்தான் அடைந்தான் என வரும். (36)
------------
வேற்றுமையில் னகர ஈறு
332. னகார இறுதி வல்லெழுத் தியையின்
றகார மாகும் வேற்றுமைப் பொருட்கே.
இது நிறுத்த முறையானே னகர இறுதி வேற்றுமைக்கண் புணருமாறு கூறுகின்றது.
இ-ள்: னகார இறுதி வல்லழுத்து இயையின் றகாரமாகும் - னகார ஈற்றுப்பெயர் வல்லெழுத்து முதன்மொழி வருமொழியாய் வந்து இயையின் றகாரமாகும், வேற்றுமைப் பொருட்கு - வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண்; எ-று.
எ-டு: பொற்குடம் சாடி தூதை பானை எனவரும். (37)
------------
சில னகர ஈற்றுச் சொற்கள்
333. மன்னுஞ் சின்னும் ஆனும் ஈனும்
பின்னும் முன்னும் வினையெஞ்சு கிளவியும்
அன்ன இயல என்மனார் புலவர்.
இஃது அவ் வீற்று அசைநிலை இடைச்சொற்களும் ஏழாம்வேற்றுமை இடப்பொருள் உணரநின்ற இடைச்சொற்களும் வினையெச்சமும் முடியுமாறு கூறுகின்றது.
இ-ள்: மன்னுஞ் சின்னும் ஆனும் ஈனும் பின்னும் முன்னும் வினையெஞ்சு கிளவியும் - மன்னென்னுஞ் சொல்லுஞ் சின்னென்னுஞ் சொல்லும் ஆனென்னுஞ் சொல்லும் ஈனென்னுஞ் சொல்லும் பின்னென்னுஞ் சொல்லும் முன்னென்னுஞ் சொல்லும் வினையெச்சமாகிய சொல்லும், அன்ன இயல என்மனார் புலவர் - முற்கூறிய இயல்பினையுடையவாய் னகரம் றகரமாய் முடியு மென்று சொல்லுவர் புலவர்; எ-று.
எ-டு: 'அதுமற்கொண்கன் றேரே' 'காப்பும் பூண்டிசிற் கடையும் போகலை' (அகம்-7) எனவும், ஆற்கொண்டான் ஈற்கொண்டான் பிற்கொண்டான் முற்கொண்டான் சென்றான் தந்தான் போயினான் எனவும், வரிற்கொள்ளும் செல்லும் தரும் போம் எனவும் வரும்.
பெயராந்தன்மையவாகிய ஆன்1 ஈன்2 என்பனவற்றை முற்கூறாததனான் ஆன்கொண்டான் ஈன்கொண்டான் எனத் திரியாமையுங் கொள்க.
பின் முன் என்பன பெயரும் உருபும் வினையெச்சமுமாய் நிற்றலின் பெயர் ஈண்டுக் கூறினார். ஏனைய உருபியலுள்ளும் வினையெஞ்சு கிளவியென்பதன் கண்ணும் முடியும். அப்பெயரை முற்கூறாததனாற் பின்கொண்டான் முன்கொண்டான் எனத் திரியாமையுங் கொள்க.
இயலவென்றதனான் ஊன்3 என்னுஞ் சுட்டு ஊன் கொண்டானென இயல்பாய் முடிதல் கொள்க. (38)
---------------
*1. ஆன்-அங்கு. 2. ஈன்-இங்கு 3. ஊன்-உங்கு, உவ்விடம்
------------
'வயின்' என்னுஞ் சொல்
334. சுட்டுமுதல் வயினும் எகரமுதல் வயினும்
அப்பண்பு நிலையும் இயற்கைய என்ப.
இஃது இவ் வீற்றுள் ஏழாம்வேற்றுமை இடப்பொருள் உணர்த்தும் இடைச்சொற்கு முடிபு கூறுகின்றது.
இ-ள்: சுட்டு முதல் வயினும் - சுட்டெழுத்தினை முதலாகவுடைய வயினென்னுஞ் சொல்லும், எகர முதல் வயினும் - எகரமாகிய முதல் வினாவினையுடைய வயினென்னுஞ் சொல்லும், அப்பண்பு நிலையும் இயற்கைய என்ப - மேல் னகரம் றகரமாமென்ற தன்மை நிலைபெற்று முடியும் இயல்பையுடையவென்று கூறுவார் ஆசிரியர்; எ-று.
எ-டு: அவ்வயிற்கொண்டான் இவ்வயிற்கொண்டான் உவ்வயிற் கொண்டான் எவ்வயிற்கொண்டான் சென்றான் தந்தான் போயினான் எனவரும்.
இயற்கை என்றதனால் திரியாது இயல்பாய் முடிவனவுங் கொள்க. (39)
----------
'குயின்' என்னுஞ் சொல்
335. குயினென் கிளவி இயற்கை யாகும்.
இது னகரந் திரியாது இயல்பாக என்றலின் எய்தியதுவிலக்கிப் பிறிது விதி வகுத்தது.
இ-ள்: குயினென் கிளவி இயற்கை யாகும் – குயினென் னுஞ் சொல் திரியாது இயல்பாய் முடியும்; எ-று.
எ-டு: குயின்குழாம் செலவு தோற்றம் பறைவு என வரும். குயினென்பது மேகம். அஃது அஃறிணைப் பெயர்.
தொகைமரபினுள் உயர்திணைப்பெயரும் விரவுப்பெயரும் இயல்பாக வென்றார்.
குயின் வினையுமாம்.1
இயற்கை என்றதனாற் கான்கோழி கோன்குணம் வான்கரை என வரு வனவுங் கொள்க. (40)
------------------
------------
'எகின்' என்னும் மரப் பெயர்
336. எகின்மர மாயின் ஆண்மர இயற்றே.
இது திரிபு விலக்கி அம்மு வகுத்தலின் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது.
இ-ள்: எகின் மரமாயின் - எகினென்பது புள்ளன்றி மரப்பெயராயின், ஆண்மர இயற்று - ஆண்மரத்தின் இயல்பிற்றாய் அம்முப்பெற்று முடியும்; எ-று.
எகினங்கோடு செதிள் தோல் பூ என வரும். (41)
------------
'எகின்' என்னும் பிற உயிரி (பிராணி)யின் பெயர்
337. ஏனை எகினே யகரம் வருமே
வல்லெழுத் தியற்கை மிகுதல் வேண்டும்.
இதுவும் அது. திரிபு விலக்கி அகரம் விதித்தலின்.
இ-ள்: ஏனை எகினே அகரம் வரும் - மரமல்லாத எகின் நிலைமொழிக்கண் அகரம்பெற்று முடியும், வல்லெழுத்தியற்கை மிகுதல் வேண்டும் - ஆண்டு வருமொழி வல்லெழுத்தியல்பு மிக்கு முடிதலை வேண்டும் ஆசிரியன்; எ-று.
எ-டு: எகினக்கால் செவி தலை புறம் என வரும்.
மேலைச் சூத்திரத்தோடு இதனை ஒன்றாக ஓதாததனான் இயல்பு கணத்தும் அகரப்பேறு கொள்க. எகினஞாற்சி நீட்சி மாட்சி வலிமை யாப்பு அடைவு என வரும்
இயற்கை யென்றதனான் அகரத்தோடு மெல்லெழுத்துப் பேறுங் கொள்க. எகினங்கால் செவி தலை புறம் என வரும்.
இனிச் சிறுபான்மை எகின் சேவல் எகினச் சேவல் பெடை என்பன ஆறனுருபு விரிவுழி ஈண்டை இலேசான் முடிக்க. பண்பு கருதிய வழி2 இவ்வோத்தின் புறனடையான் முடிக்க. (42)
----------
2. எகினாகிய சேவல், எகினமாகிய சேவல் என விரிப்பின், இரு பெயரொட்டுப் பண்புத் தொகையாம்.
-------------
கிளைப் பெயர்
338. கிளைப்பெய ரெல்லாங் கிளைப்பெய ரியல.
இது னகரந் திரிதலை விலக்கி இயல்பாக என்றலின் எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தது.
இ-ள்: கிளைப்பெயரெல்லாம் - னகர ஈற்றுக் கிளைப்பெயரெல்லாம், கிளைப்பெயர் இயல - ணகர ஈற்றுக் கிளைப்பெயர் போலத் திரியாது இயல்பாய் முடியும்; எ-று.
எ-டு: எயின்குடி சேரி தோட்டம் பாடி என வரும். எயின் வந்தது என்று அஃறிணைக்கும் எய்துதலின் தொகை மரபினுள் முடியாதாயிற்று, ஆண்டு உயர்திணைக்கே கூறுதலின்.
இனி எல்லா மென்றதனானே எயினக்கன்னி பிள்ளை என அக்கும் வல்லெழுத்தும் பெறுதலும், எயின வாழ்வு என வல்லெழுத்துப் பெறாமையுங் கொள்க.
இன்னும் இதனானே பார்ப்பனக்கன்னி குமரி சேரி பிள்ளை என ஆகாரங் குறுகி அக்கும் வல்லெழுத்துங் கொடுத்தும், பார்ப்பன வாழ்க்கை என வல்லெழுத்துக் கொடாதும் முடிக்க.
இன்னும் இதனானே நான்கு கணத்துக் கண்ணும் வெள்ளாள னென நின்றதனை அன்கெடுத்துப் பிரித்து னகார வொற்றினை ணகார வொற்றாக்கி வெள்ளாண்குமரி பிள்ளை மாந்தர் வாழ்க்கை ஒழுக்கம் என முடிக்க.
இன்னும் இதனானே முதலெழுத்தை நீட்டி ளகார வொற்றினைக் கெடுத்து வேளாணென முடிக்க.
இதனானே பொருந வாழ்க்கையும் முடிக்க. வேட்டுவக் குமரி யென்பது மரூஉ வழக்கு.1 (43)
-----------
1. வேடக்குமரி என்பது வேட்டுவக் குமரி என மருவிற்று.
------------
'மீன்' என்னுஞ் சொல்
339. மீனென் கிளவி வல்லெழுத் துறழ்வே.
இதுவும் அது. தன் திரிபு வல்லெழுத்தினோடு உறழ்க என்றலின்.
இ-ள்: மீனென்கிளவி வல்லெழுத்து உறழ்வு - மீனென்னுஞ் சொல் திரிபு வல்லெழுத்தினோடு உறழ்ந்து முடியும்; எ-று.
எ-டு: மீன்கண் மீற்கண், மீன்சினை மீற்சினை, மீன்றலை மீற்றலை, மீன்புறம் மீற்புறம் என வரும். (44)
------------
'தேன்' என்னுஞ் சொல்
340. தேனென் கிளவி வல்லெழுத் தியையின்
மேனிலை ஒத்தலும் வல்லெழுத்து மிகுதலும்
ஆமுறை யிரண்டும் உரிமையு முடைத்தே
வல்லெழுத்து மிகுவழி இறுதி யில்லை.
இதுவும் அது. மேலதனோடு மாட்டெறிதலின்.
இ-ள்: தேன் என் கிளவி வல்லெழுத்து இயையின் - தேனென்னுஞ்சொல் வல்லெழுத்து முதன்மொழி வருமொழியாய்வரின், மேல்நிலை ஒத்தலும் - மீனென்பதற்குக் கூறிய திரிபுறழ்ச்சி நிலை ஒத்து முடிதலும், வல்லெழுத்து மிகுதலும் - வருமொழி வல்லெழுத்து மிக்கு முடிதலுமாகிய, ஆமுறை இரண்டும் உரிமையும் உடைத்து – அம்முறைமை-யினையுடைய இரண்டினையும் உரித்தாதலையும் உடைத்து, வல்லெழுத்து மிகுவழி இறுதியில்லை - வல்லெழுத்து மிக்கு வருமிடத்து இறுதியில் நின்ற னகரங் கெடும்; எ-று.
உரிமையுமென்னும் உம்மை 'மெல்லெழுத்து மிகினும்' (எழு-341) என மேல் வருகின்றதனை நோக்கிற்று.
எ-டு: தேன்குடம் தேற்குடம் சாடி தூதை பானை என மேனிலை ஒத்தன. தேக்குடம் சாடி தூதை பானை என னகரங்கெட்டு வல்லெழுத்து மிக்கன. (45)
------------
அதற்கு, மேலும் முடிபுகள்
341. மெல்லெழுத்து மிகினும் மான மில்லை.
இதுவும் அது. உறழ்ச்சியும் வல்லெழுத்தும் விலக்கி மெல்லெழுத்து விதித்தலின்.
இ-ள்: மெல்லெழுத்து மிகினும் மானமில்லை – முற்கூறிய தேனென்கிளவி வல்லெழுத்து வந்தால் அவ்வல்லெழுத்து மிகுதலேயன்றி மெல்லெழுத்து மிகினுங் குற்றமில்லை; எ-று.
னகரக்கேடு அதிகாரத்தாற் கொள்க.
எ-டு: தேங்குடம் சாடி தூதை பானை எனவரும். (46)
-----------
342. மெல்லெழுத் தியையின் இறுதியொ டுறழும்.
இது தொகைமரபினுள் 'வேற்றுமைக் கண்ணும் வல்லெழுத் தல்வழி' (எழு-148) என்பதனாற் கூறிய இயல்பை விலக்கி உறழுமென்றலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது.
இ-ள்: மெல்லெழுத்து இயையின் - அத் தேனென் கிளவி மெல்லெழுத்து முதன்மொழி வந்து இயையின், இறுதியொடு உறழும் - நிலைமொழியிறுதியின் னகர வொற்றுக் கெடுதலுங் கெடாமையுமாகிய உறழ்ச்சியாய் முடியும்; எ-று.
எ-டு: தேன்ஞெரி தேஞெரி தேனுனி தேநுனி தேன்மொழி தேமொழி என வரும்.
மேல் 'ஆமுறை' (எழு-340) என்றதனால் தேஞெரி தேஞ்ஞெரி தேநுனி தேந்நுனி தேமொழி தேம்மொழி என னகரங் கெட்டுத் தத்தம் மெல்லெழுத்து மிக்கும் மிகாதும் முடிந்தனவுங் கொள்க.
இனி மேல் 'மானமில்லை' (எழு-341) என்றதனான் ஈறு கெட்டு மெல்லெழுத்து மிகாது இயல்பாய் முடிவனவுங் கொண்டு தேஞெரி தேநுனி தேமொழி என்பன காட்டின் அவை முற்கூறியவற்றுள் அடங்குமென்க. (47)
--------------
'தேன்' முன் 'இறால்'
343. இறாஅல் தோற்றம் இயற்கை யாகும்.
இஃது அத் தேனென்பதற்கு உயிர்க்கணத்து ஒரு மொழிமுடிபு வேற்றுமை கூறுகின்றது.
இ-ள்: இறாஅல் தோற்றம் - தேனென்னுஞ் சொல் இறாலென்னும் வருமொழியது தோற்றத்துக்கண், இயற்கையாகும் - நிலைமொழியின் னகரங் கெடாதே நின்று இயல்பாய் முடியும்; எ-று.
எ-டு: தேனிறால் என வரும் (48)
------------
அதற்கு, மேலும் ஒரு முடிபு
344. ஒற்றுமிகு தகரமொடு நிற்றலு முரித்தே.
இதுவும் அதற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது.
இ-ள்: ஒற்றுமிகு தகரமொடு நிற்றலும் உரித்து – அத் தேனென்பது இறாலொடு புணருமிடத்துப் பிறிதுமோர் தகரத்தோடு நின்று முடிதலும் உரித்து; எ-று.
'வல்லெழுத்து மிகுவழி யிறுதி யில்லை' (எழு-340) என்றதனான் நிலைமொழி ஈறு கெடுக்க. தகரம் மிகுமென்னாது ஒற்றுமிகு தகரமென்றதனான் ஈரொற் றாக்குக.
எ-டு: தேத்திறால் என வரும்.
மேலைச் சூத்திரத்தோடு இதனை யொன்றாக ஓதாததனாற் பிற வரு மொழிக்கண்ணும் இம்முடிபு கொள்க. தேத்தடை தேத்தீ என வரும்.
தோற்ற மென்றதனால் தேனடை தேனீ என்னும் இயல்புங் கொள்க.
-----------
'மின்' 'பின்' 'பன்' 'கன்' என்னும் சொற்கள்
345. மின்னும் பின்னும் பன்னும் கன்னும்
அந்நாற் சொல்லுந் தொழிற்பெய ரியல.
இஃது அல்வழிக்கண் இயல்பாயும் வேற்றுமைக்கண் திரிந்தும் வருக என எய்துவித்த முடிபை விலக்கித் தொழிற்பெய ரியல்பாமெனப் பிறிது விதிவகுத்தது.
இ-ள்: மின்னும் பின்னும் பன்னுங் கன்னும் அந்நாற்சொல்லும் - மின்னென்னுஞ் சொல்லும் பின்னென்னுஞ் சொல்லும் பன்னென்னுஞ் சொல்லுங் கன்னென்னுஞ் சொல்லுமாகிய அந்நான்கு சொல்லும், தொழிற்பெயர் இயல - அல்வழியினும்
வேற்றுமையினும் ஞகாரஈற்றுத் தொழிற்பெயர்போல வன்கணத்து உகரமும் வல்லெழுத்தும், மென்கணத்தும் இடைக்கணத்து வகரத்தும் உகரமும் பெற்றுமுடியும்; எ-று.
'மின்னுச்செய் விளக்கத்துப் பின்னுப்பிணி யவிழ்ந்த' (புறம்- 57) எனவும், பன்னுக்கடிது கன்னுக்கடிது சிறிது பெரிது ஞான்றது நீண்டது மாண்டது வலிது எனவும், மின்னுக்கடுமை பின்னுக்கடுமை பன்னுக்கடுமை கன்னுக்கடுமை சிறுமை தீமை பெருமை ஞாற்சி நீட்சி மாட்சி வலிமை எனவும் வரும்.
தொழிற்பெய ரெல்லாந் தொழிற்பெய ரியல என்று ஓதாது கிளந்தோதி னார். இவை தொழினிலைக்கண்ணன்றி வேறு தம்பொரு ளுணரநின்றவழியும் இம்முடிபு எய்து மென்றற்கு.
மின்னென்பது மின்னுதற் றொழிலும் 'மின்னுநிமிர்ந் தன்ன' என மின்னெனப்படுவதோர் பொருளும் உணர்த்தும். ஏனையவும் அன்ன. (50)
-----------
'கன்' என்னும் சொல்லுக்கு மேலும் ஒரு முடிபு
346. வேற்றுமை யாயின் ஏனை யெகினொடு
தோற்ற மொக்குங் கன்னென் கிளவி.
இது நிலைமொழிக்கண் உகரம் விலக்கி அகரம் வகுத்தலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது.
இ-ள்: வேற்றுமையாயின் ஏனை எகினொடு தோற்றம் ஒக்கும் - வேற்றுமைப் பொருட் புணர்ச்சியாயின் ஒழிந்த மரமல்லாத எகினோடு தோற்றம் ஒத்து அகரமும் வல்லெழுத்தும் பெற்று முடியும்; கன் என் கிளவி - கன்னென்னுஞ்சொல்; எ-று.
எ-டு: கன்னக்1குடம் சாடி தூதை பானை ஞாற்சி நீட்சி மாட்சி வலிமை என வரும். கன்னக்கடுமை எனக் குணவேற்றுமையுஞ் சிறு பான்மை கொள்க.
தோற்ற மென்றதனால் அல்வழிக்கண் வன்கணத்து அகரமும் மெல்லெழுத்தும் ஏனைக்கணத்து அகரமுங் கொள்க. கன்னங்கடிது சிறிது தீது பெரிது எனவும், கனனஞான்றது நீண்டது மாண்டது வலிது எனவும் வரும். கன்னங்கடுமை எனக் குணவேற்றுமைக்கண்ணும் இவ்விதி கொள்க.
'பொன்னகர் வரைப்பிற் கன்னந்2 தூக்கி' (ஐங்குறு-247) என்பதோ வெனின், அது மகர ஈற்றுப் பொருட்பெயர். (51)
----------------
1. கன்னம் - கன்னாரத்தொழில்
2. கன்னம் - நோய் தணியும்பொருட்டுக் கோயிற்கு நேர்த்திக்கடனாகச் செய்து கொடுக்கும் சிறு படிமம்.
-----------
இயற்பெயர் முன் 'தந்தை' என்னும் சொல்
347. இயற்பெயர் முன்னர்த் தந்தை முறைவரின்
முதற்கண் மெய்கெட அகரம் நிலையும்
மெய்யொழித் தன்கெடும் அவ்வியற் பெயரே.
இஃது 'அஃறிணை விரவுப்பெய ரியல்புமா ருளவே' (எழு-155) என்றதற்கு ஈண்டுத் திரிபுகூறலின் எய்தாத தெய்துவித்தது.
இ-ள்: இயற்பெயர் முன்னர்த் தந்தை முறைவரின் - இவ்வீற்று விரவுப்பெயருள் இயற்பெயரின் முன்னர்த் தந்தையென்னும் முறைப்பெயர் வருமொழியாய் வருமாயின், முதற்கண் மெய்கெட அகரம் நிலையும் - அத்தந்தை யென்பதன் முதற்கணின்ற தகரவொற்றுக்கெட அதன்மே லேறிநின்ற அகரங் கெடாதுநிற்கும், அவ்வியற்பெயர் மெய்யொழித்து அன் கெடும்-அந்நிலைமொழியாகிய இயற்பெயர் அன்னென்னுஞ் சொல்லில் அகரம்ஏறிநின்ற மெய்யை ஒழித்து அவ்வன் தான் கெட்டு முடியும்; எ-று.
எ-டு: சாத்தந்தை கொற்றந்தை என வரும்.
முதற்கண் மெய்யென்றதனால் சாத்தன் றந்தை கொற்றன் றந்தை என்னும் இயல்பு முடிபுங் கொள்க. (52)
----------
அதற்கு, மேலும் ஒரு முடிபு
348. ஆதனும் பூதனும் கூறிய இயல்பொடு
பெயரொற் றகரம் துவரக் கெடுமே.
இது மேலதற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது.
இ-ள்: ஆதனும் பூதனும் - முற்கூறிய இயற்பெயருள்ஆதனும் பூதனும் என்னும் இயற்பெயர்கள் தந்தை யென்னும்முறைப்பெயரோடு முடியுங்கால், கூறிய இயல்பொடு - முற்கூறிய நிலைமொழி அன் கெடுதலும் வருமொழித் தகரவொற்றுக்கெடுதலுமாகிய செய்கைகளுடனே, பெயரொற்று அகரந் துவரக்கெடும் - நிலைமொழிப்பெயரில் அன்கெட நின்ற தகரவொற்றும்வருமொழியில் தகரவொற்றுக்கெட நின்ற அகரமும் முற்றக் கெட்டு முடியும்; எ-று.
எ-டு: ஆந்தை பூந்தை என வரும்.
இயல்பென்றதனாற் பெயரொற்றும் அகரமும் கெடாதே நிற்றலுங் கொள்க. ஆதந்தை பூதந்தை என வரும்.
இனித் துவர வென்றதனான் அழான் புழான் என நிறுத்தித் தந்தை என வருவித்து நிலைமொழி னகரமும் வருமொழித் தகரமும் அகரமுங் கெடுத்து அழாந்தை புழாந்தை என முடிக்க. (53)
------------------
அதற்கு, வேறொரு முடிபு
349. சிறப்பொடு வருவழி யியற்கை யாகும்.
இஃது எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது.
இ-ள்: சிறப்பொடு வருவழி - அவ்வியற் பெயர் பண்பு அடுத்து வரும்வழி, இயற்கையாகும் - முற்கூறிய இருவகைச் செய்கையுந் தவிர்ந்து இயல்பாய் முடியும்; எ-று.
எ-டு: பெருஞ்சாத்தன்றந்தை பெருங்கொற்றன்றந்தை எனவரும். கொற்றங்கொற்றன்றந்தை சாத்தங்கொற்றன்றந்தை என்றாற்போல்வன பண்பன்றி அடை அடுத்தனவாதலின் புறனடையான் முடிக்க. (54)
----------
இயற்பெயர்முன் 'மகன்' முதலிய பிறபெயர்கள்
350. அப்பெயர் மெய்யொழித் தன்கெடு வழியும்
நிற்றலு முரித்தே அம்என் சாரியை
மக்கள் முறைதொ கூஉம் மருங்கி னான.
இது மேலதற்கு வேறோர் வருமொழிக்கண் எய்தாத தெய்துவித்தது.
இ-ள்: அப்பெயர் மக்கள் ஆன முறை தொகூஉம் மருங்கினும் - அவ்வியற்பெயர் முன்னர்த் தந்தை யன்றி மகனாகிய முறைப்பெயர் வந்து தொகுமிடத்தினும், மெய்யொழித்து அன் கெடுவழி அம்மென் சாரியை நிற்றலும் உரித்து - அவ்வியற்பெயரில் தான்ஏறிய மெய்நிற்க அன்கெட்டு அம்முச்சாரியை வந்து நிற்றலும் உரித்து; எ-று.
ஆன என்பதனை மக்களோடும், உம்மையை மருங்கினோடுங் கூட்டுக. முறைதொகூஉ மருங்கினென்றது இன்னாற்கு மகனென்னும் முறைப் பெயராய்ச் சேருமிடத் தென்றவாறு.
எ-டு: கொற்றங்கொற்றன் சாத்தங்கொற்றன் என நிலைமொழி அன்கெட்டுழி அம்மு வந்தது. இவற்றிற்கு அதுவெனுருபு விரியாது அதன் உடைமைப்பொருள் விரிக்க. இது முறைப்பெயர்.
இனி உம்மையாற் கொற்றங்குடி சாத்தங்குடி எனப் பிறபெயர் தொக்கனவுங் கொள்க.
மெய்யொழித் தென்றதனானே கொற்றமங்கலம் சாத்தமங்கலம் என்பன வற்றின்கண் அம்மின் மகரங்கெடுதலும் வேட்டமங்கலம்1 வேட்டங்குடி என்பனவற்றின் நிலைமொழியொற்று இரட்டுதலுங் கொள்க. (55)
----------
'தான்' 'பேன்' 'கோன்' என்னும் இயற்பெயர்கள்
351. தானும் பேனுங் கோனு மென்னும்
ஆமுறை யியற்பெயர் திரிபிட னிலவே.
இது மேலதற்கு ஒருவழி எய்தியதுவிலக்கிப் பிறிதுவிதி வகுத்தது.
இ-ள்: தானும் பேனுங் கோனும் என்னும் ஆமுறை இயற்பெயர் - அவ்வியற்பெயருள் தானும் பேனுங் கோனுமென்னும் அம்முறையினையுடைய இயற்பெயர்கள் தந்தையொடும் மக்கள் முறைமையொடும் புணரும்வழி, திரிபிடனில - முற் கூறிய திரிபுகளின்றி இயல்பாய் முடியும்;எ-று.
எ-டு: தான்றந்தை பேன்றந்தை கோன்றந்தை எனவும், தான்கொற்றன் பேன்கொற்றன் கோன்கொற்றன் எனவும் வரும். பேன் கோன் என்பன முற்காலத்து வழக்கு. இவை தொகைமரபினுள் 'அஃறிணை விரவுப் பெயர்' (எழு-155) என்புழி இயல்பாயினவேனும் ஈண்டு இவ்வீற்றிற்குத் திரிபு கூறுதலின் அதனையும் விலக்கி இயல்பாமென்பதூஉங் கூறினார். (56)
-------------
1. வேட்டமங்கலம்-வேடமங்கலம் என்பது நிலைமொழியொற்று இரட்டித்தது.
-----------
'தான்' 'யான்' என்னும் சொற்கள்
352. தான்யா னெனும்பெயர் உருபியல் நிலையும்.
இஃது எய்தியதுவிலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. தொகை மரபினுள் 'அஃறிணைவிரவுப்பெயர்' (எழு-155) என்பதனானே இயல்பாய் நின்றதான் என்பதனையும் 'உயிரீறாகிய' (எழு-153) என்பதனால் இயல்பாய் நின்ற யானென்பதனையும் அவ்வியல்புவிலக்கி உருபியலோடு மாட்டெறிதலின்.
இ-ள்: தான் யான் எனும் பெயர் - தானென்னும் விரவுப் பெயரும் யானென்னும் உயர்திணைப்பெயரும், உருபியல்நிலையும் - உருபியலிற்கூறிய இயல்பிலே நிலைபெற்றுத் தானென்பது நெடு முதல் குறுகித் தன்னென்றும் யானென்பது ஆகாரம் எகரமாய் யகரங்கெட்டு என்னென்றும் முடியும்; எ-று.
எ-டு: தன்கை என்கை செவி தலை புறம் என வரும்.
வருமொழி வரையாது கூறினமையின் இயல்புகணத்துக்கண்ணுந் தன் ஞாண் என்ஞாண் நூல் மணி யாழ் வட்டு அடை ஆடை என வரும். (57)
-----------
அல்வழியில் அச்சொற்கள்
353. வேற்றுமை யல்வழிக் குறுகலுந் திரிதலுந்
தோற்ற மில்லை யென்மனார் புலவர்.
இஃது அல்வழிக்கண் இயல்பாக என்றலின் எய்தாத தெய்துவித்தது.
இ-ள்: வேற்றுமை அல்வழி - முற்கூறிய தான் யானென்பன வேற்றுமைப் புணர்ச்சியல்லாதவிடத்து, குறுகலுந் திரிதலுந் தோற்றமில்லை என்மனார் புலவர் - தானென்பது நெடுமுதல் குறுகுதலும் யானென்பது அவ்வாறு திரிதலுந் தோற்றமின்றி இயல்பாய் முடியுமென்று கூறுவர் புலவர்; எ-று.
எ-டு: தான்குறியன் சிறியன் தீயன் பெரியன் ஞான்றான் நீண்டான் மாண்டான் வலியன் எனவும், யான் குறியேன் சிறியேன் தீயேன் பெரியேன் ஞான்றேன் நீண்டேன் மாண்டேன் வலியேன் எனவும் வரும்.
தோற்ற மென்றதனான் வேற்றுமைக்கண் அவ்வாறன்றி னகரந்திரிதலுங் கொள்க. தற்புகழ் தற்பாடி, எற்புகழ் எற்பாடி என வரும். (58)
---------
'அழன்' என்னுஞ் சொல்
354. அழன்என் இறுதிகெட வல்லெழுத்து மிகுமே .
இது வேற்றுமைக்கண் அகரந் திரியாது கெடுக என்றலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது.
இ-ள்: அழன் என் இறுதி கெட - அழனென்னுஞ் சொல் தன் ஈற்று னகரங் கெட, வல்லெழுத்து மிகும் – வல்லெழுத்து மிக்கு முடியும்; எ-று.
எ-டு: அழக்குடம் சாடி தூதை பானை என வரும். அழக்குட மென்பது பிணக்குடத்தை. (59)
------------
'முன்' என்பதற்கு முன் 'இல்'
355. முன்னென் கிளவி முன்னர்த் தோன்றும்
இல்லென் கிளவிமிசை றகர மொற்றல்
தொல்லியல் மருங்கின் மரீஇய மரபே.
இது 'மருவின்றொகுதி' (எழு-111) என்பதனாற் கூறிய இலக்கண மரூஉக்களில் ஒன்றற்கு முடிபு கூறுகின்றது.
இ-ள்: முன் என் கிளவி முன்னர்த் தோன்றும் இல் என் கிளவிமிசை - முன்னென்னுஞ் சொல்லின்முன்னே வரும் இல்லென்னுஞ் சொல்லின்மேலே, றகரம் ஒற்றல் - ஒரு றகரவொற்று வந்துநின்று முடிதல், தொல்லியல் மருங்கின் மரீஇய மரபு- பழையதாகிய இயல்பினையுடைய வழக்கிடத்து மருவி வந்த இலக்கண முடிபு; எ-று.
எ-டு: முன்றில் என வரும். இன்முன் என நிற்கற்பாலது முன்றிலென்று தலை தடுமாறுதலின் மரூஉவாயிற்று. முன்னென்பதற்கு ஒற்றிரட்டுதல் இலக்கணமேனும் அதுவன்றித் தனக்கு இனமாயதோர் றகரவொற்றுப் பெறுதலின் வேறு முடிபாயிற்று. (60)
-----------
'பொன்' என்னுஞ் சொல்
356. பொன்னென் கிளவி யீறுகெட முறையின்
முன்னர்த் தோன்றும் லகார மகாரம்
செய்யுள் மருங்கில் தொடரிய லான.1
இஃது அவ் வீற்றுப்பெய ரொன்றற்குச் செய்யுள்முடிப கூறுதலின் எய்தாத தெய்துவித்தது.
இ-ள்: பொன் என் கிளவி ஈறுகெட - பொன்னென்னுஞ் சொல் தன்னீறாகிய னகரங்கெடாநிற்க, முன்னர் லகார மகாரம் முறையிற் றோன்றும் - அதன் முன்னர் லகரமும் மகரவொற்றும் முறையானே வந்து நிற்கும், செய்யுள் மருங்கில் தொடரியலான - அங்ஙனம் நிற்பது செய்யுளிடத்துச் சொற்கள் தம்முன் தொடர்ச்சிப்படும் இயல்பின்கண்; எ-று.
முறையினென்றதனான் மகரம் ஒற்றாதல் கொள்க.
எ-டு: 'பொலம்படப் பொலிந்த கொய்சுவற்புரவி' (மலைபடு-574) என வரும். தொடரிலான என்றதனானே வன்கணத்துக்கண்ணும் லகரம் நிற்க மகரம் வல்லெழுத்திற்கேற்ற மெல்லெழுத்தாகத் திரிதல் கொள்க. 'பொலங் கலஞ்சுமந்த பூண்டாங்கிளமுலை' (அகம்-16) 'பொலஞ்சுட ராழி பூண்ட தேரே' 'பொலந்தேர்க்குட்டுவன்' என வரும்.
இன்னும் இதனானே 'பொலனறுந்தெரியல்' (புறம்-29) 'பொலமலராவிரை'(கலி-138) என்றாற்போல மகரங்கெட்டுப் பிறகணத்து முடிதலுங் கொள்க. (61)
-----------
1 பொல-பொன் = அழகு. அழகிய உலோகம் என்றுமாம். பொல+அம் = பொலம். பொல+பு = பொற்பு = அழகு. பொல்லுதல் = பொருந்துதல். அழகாயிருத்தல். ஒ.நோ: ஒப்பித்தல் = பொருந்தச் செய்தல், அலங்கரித்தல். பொல்லாத - பொல்லா = பொருந்தாத, அழகில்லாத. "பொல்லாக் கருங்காக்கை" என்று காரிகையாசிரி யருங் கூறுதல் காண்க.
-----------
8.2. இடையொற்று ஈறுகள்
வேற்றுமையில் யகர ஈறு
357. யகர இறுதி வேற்றுமைப் பொருள்வயின்
வல்லெழுத் தியையின் அவ்வெழுத்து மிகுமே.
இது முறையானே யகர ஈற்றிற்கு வேற்றுமைமுடிபு கூறுகின்றது.
இ-ள்: யகர இறுதி வேற்றுமைப் பொருள்வயின் – யகர ஈற்றுப்பெயர் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண், வல்லெழுத்து மிகும் - வல்லெழுத்து முதன்மொழி வந்து இயையின் அவ் வல்லெழுத்து மிக்குமுடியும்; எ-று.
எ-டு: நாய்க்கால் செவி தலை புறம் என வரும். (62)
-----------
'தாய்' என்னும் சொல்
358. தாயென் கிளவி யியற்கை யாகும்.
இது விரவுப்பெயருள் ஒன்றற்கு எய்திய வல்லெழுத்து விலக்கிப் பிறிது விதி வகுத்தது.
இ-ள்: தாயென் கிளவி இயற்கையாகும் – தாயென்னுஞ் சொல் வல்லெழுத்து மிகாது இயல்பாய் முடியும்; எ-று.
எ-டு: தாய்கை செவி தலை புறம் என வரும்.
மேலைச் சூத்திரத்தான் மிகுதியுங் கூறுதலின் அஃறிணை விரவுப் பெயருள் அடங்காதாயிற்று. (63)
-----------
அதற்கு, மேலும் ஒரு முடிபு
359. மகன்வினை கிளப்பின் முதனிலை யியற்றே.
இஃது எய்தாத தெய்துவித்தது, தாயென்பது அடையடுத்துழி வல்லெழுத்து மிகுக என்றலின்.
இ-ள்: மகன் வினை கிளப்பின் - தாயென்னுஞ் சொல் தனக்கு அடையாய் முன்வந்த மகனது வினையைப் பின்னாக ஒருவன் கூறுமிடத்து, முதல் நிலை இயற்று - இவ் வீற்றுள் முதற்கட் கூறிய நிலைமையின் இயல்பிற்றாய் வல்லெழுத்து வந்துழி அவ் வல்லெழுத்து மிக்கு முடியும்; எ-று.
எ-டு: மகன்றாய்க்கலாம் செரு துறத்தல் பகைத்தல் என வரும். மகன் தாயோடு கலாய்த்த கலாம் என விரியும். ஏனையவற்றிற்கும் ஏற்கும் உருபு விரிக்க. வினை ஈண்டுப் பகைமேற்று. (64)
--------------
யகர ஈற்றிற்கு வேறு முடிபு
360. மெல்லெழுத் துறழும் மொழியுமா ருளவே.
இஃது எய்தாத தெய்துவித்தது.
இ-ள்: மெல்லெழுத்து உறழும் மொழியுமாருள – யகர ஈற்றுள் அதிகார வல்லெழுத்தினோடு மெல்லெழுத்து மிக்கு உறழ்ந்து முடிவனவும் உள; எ-று.
எ-டு: வேய்க்குறை வேய்ங்குறை செய்கை தலை புறம் என வரும். (65)
அல்வழியில் யகர ஈறு
361. அல்வழி யெல்லாம் இயல்பென மொழிப.
இஃது அவ் வீற்று அல்வழிக்கு எய்தாத தெய்துவித்தது.
இ-ள்: அல்வழி எல்லாம் இயல்பென மொழிப – யகர ஈற்று அல்வழியெல்லாம் இயல்பாய் முடியும் என்று கூறுவர் புலவர்; எ-று.
எ-டு: நாய்கடிது சிறிது தீது பெரிது என வரும்.
எல்லாமென்றதனால் அவ்வாய்க்கொண்டான் இவ்வாய்க்கொண்டான் உவ்வாய்க்கொண்டான் எவ்வாய்க்கொண்டான் சென்றான் தந்தான் போயினான் என உருபின் பொருள்பட முடிவனவும், தாய்க்கொண்டான் தூய்ப்பெய்தான் என்றாற்போலும் வினையெச்சமும், பொய்ச்சொல் மெய்ச்சொல் எய்ப்பன்றி என்றாற்போலும் பண்புத்தொகையும், வேய்கடிது வேய்க்கடிது என்னும் அல் வழி யுறழ்ச்சிமுடிவுங் கொள்க. (66)
-----------
வேற்றுமையில் ரகார ஈறு
362. ரகார இறுதி யகார இயற்றே.
இது நிறுத்தமுறையானே ரகார ஈற்று வேற்றுமை முடிபுகூறுகின்றது.
இ-ள்: ரகார இறுதி - ரகார ஈற்றுப்பெயர் வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண், யகார இயற்று - யகார ஈற்று இயல் பிற்றாய் வல்லெழுத்து வந்துழி அவ் வல்லெழுத்து மிக்கு முடியும்; எ-று.
எ-டு: தேர்க்கால் செலவு தலை புறம் என வரும்.
இம் மாட்டேற்றினை யகர ஈற்று வேற்றுமை அல்வழி யென்னும் இரண்டையுங் கருதி மாட்டெறிந்தாரென்பார் அல்வழிமுடிபும் ஈண்டுக் காட்டுவர். யாம் இவ்வோத்தின் புறனடையாற் காட்டுதும்.
இது ழகர ஈற்றிற்கும் ஒக்கும்.
மாட்டேற்றான் உறழ்ச்சியுங் கொள்க. வேர்ங்குறை வேர்க்குறை என வரும். (67)
------------
'ஆர்' 'வெதிர்' 'சார்' 'பீர்' என்னுஞ் சொற்கள்
363. ஆரும் வெதிருஞ் சாரும் பீரும்
மெல்லெழுத்து மிகுதல் மெய்பெறத் தோன்றும்.
இஃது இவ் வீற்றிற்கு எய்தியதுவிலக்கிப் பிறிதுவிதி வகுத்தது.
இ-ள்: ஆரும் வெதிருஞ் சாரும் பீரும் - ஆரென்னுஞ் சொல்லும் வெதிரென்னுஞ் சொல்லுஞ் சாரென்னுஞ் சொல்லும் பீரென்னுஞ் சொல்லும், மெல்லெழுத்து மிகுதல் மெய்பெறத் தோன்றும் - மெல்லெழுத்து மிக்குமுடிதல் மெய்ம்மைபெறத் தோன்றும்; எ-று.
எ-டு: ஆர்ங்கோடு வெதிர்ங்கோடு சார்ங்கோடு பீர்ங்கொடி செதிள்
தோல் பூ என வரும்.
பீர் மரமென்பார் பீர்ங்கோடென்பர். 'பீர்வாய்ப் பிரிந்த நீர் நிறை முறைசெய்து' என்றாற்போலச் சான்றோர் பலருஞ் செய்யுள் செய்தவாறு காண்க.
மெய்பெற என்றதனான், 'ஆரங்கண்ணியடுபோர்ச் சோழர்' (அகம்-93) என ஆர் அம்முப்பெறுதலும் 'மாரிப்பீரத்தலர் சிலர்கொண்டே' (குறு-98) எனப் பீர் அத்துப்பெறுதலுங் கொள்க. இதனை அதிகாரப் புறனடையான் முடிப்பாரும் உளர்.
இன்னும் இதனானே கூர்ங்கதிர்வேல் ஈர்ங்கோதை என்றாற்போலவுங் குதிர்ங்கோடு விலர்ங்கோடு அயிர்ங்கோடு துவர்ங்கோடு சிலிர்ங்கோடு என்றாற் போலவும் மெல்லெழுத்து மிகுவன கொள்க.
இன்னும் இதனானே துவரங்கோடு என அம்முப் பெறுதலுங் கொள்க. (68)
-----------
'சார்' முன் 'காழ்'
364. சாரென் கிளவி காழ்வயின் வலிக்கும்.
இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி வகுத்தது.
இ-ள்: சார் என் கிளவி காழ்வயின் வலிக்கும் - சாரென்பது காழென்பதனோடு புணருமிடத்து வல்லெழுத்து மிக்குப் புணரும்; எ-று.
எ-டு: சார்க்காழ் என வரும். சாரினது வித்தென்பதே பொருள். இதனை வயிரமெனிற் கிளந்தோதுவா ரென்று உணர்க. (69)
-----------
'பீர்' என்னுஞ் சொற்கு, மேலும் ஒரு முடிபு
365. பீரென் கிளவி அம்மொடுஞ் சிவணும்.
இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி வகுத்தது.
இ-ள்: பீர் என் கிளவி அம்மொடுஞ் சிவணும் - பீரென்னுஞ்சொல் மெல்லெழுத்தேயன்றி அம்முப்பெற்றும் முடியும்; எ-று.
எ-டு: பீரங்கொடி செதிள் தோல் பூ எனவும், 'பொன்போற் பீரமொடு பூத்த புதன்மலர்' (நெடுநல்வாடை-14) எனவும் வரும். உம்மை இறந்தது தழீஇயிற்று. (70)
------------
வேற்றுமையில் லகார ஈறு
366. லகார இறுதி னகார இயற்றே.
இது முறையானே லகார ஈற்றை வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் புணர்க்கின்றது.
இ-ள்: லகார இறுதி னகார இயற்று - லகார ஈற்றுப் பெயர் வன்கணம் வந்துழி னகார ஈற்று இயல்பிற்றாய் லகரம் றகரமாய்த் திரிந்துமுடியும்; எ-று.
எ-டு: கற்குறை சிறை தலை புறம், நெற்கதிர் சோறு தலை புறம் என வரும். (71)
------------
அதற்கு, மேலும் ஒரு முடிபு
367. மெல்லெழுத் தியையின் னகார மாகும்.
இது னகாரமாமென்றலின் அவற்றிற்கு எய்தாத தெய்துவித்தது.
இ-ள்: மெல்லெழுத்து இயையின் னகார மாகும் - அவ்வீறு மென்கணம் வந்து இயையின் னகாரமாகத் திரிந்து முடியும்; எ-று.
எ-டு: கன்ஞெரி நுனி முரி என வரும்.
இச் சூத்திரத்தினை வேற்றுமை யிறுதிக்கண் அல்வழியது எடுத்துக் கோடற்கட் சிங்கநோக்காக வைத்தமையான் அல்வழிக்கும் இம்முடிபு கொள்க. கன்ஞெரிந்தது நீண்டது மாண்டது என வரும். (72)
-----------
அல்வழியில் லகார ஈறு
368. அல்வழி யெல்லாம் உறழென மொழிப.
இஃது அவ் வீற்று அல்வழி முடிபு கூறுகின்றது.
இ-ள்: அல்வழியெல்லாம் உறழென மொழிப - இவ் வீற்று அல்வழிகளெல்லாந் தந்திரிபு வல்லெழுத்தினோடு உறழ்ந்து முடியுமென்று கூறுவர் புலவர்; எ-று.
எ-டு: கல்குறிது கற்குரிது சிறிது தீது பெரிது என வரும்.
எல்லா மென்றதனாற் கல்குறுமை கற்குறுமை சிறுமை தீமை பெருமை எனக் குணம்பற்றி வந்த வேற்றுமைக்கும் உறழ்ச்சி கொள்க.
இன்னும் இதனானே வினைச்சொல்லீறு திரிந்தனவும் உருபுதிரிந்தனவுங் கொள்க. வந்தானாற் கொற்றன் பொருவானாற் போகான் எனவும் அத்தாற் கொண்டான் இத்தாற் கொண்டான் உத்தாற் கொண்டான்1 எத்தாற் கொண்டான் எனவும் வரும்.
அக்காற் கொண்டான் என்றாற்போலப் பிறவும் முடிபு உள்ளன வெல்லாம் இதனான் முடித்துக் கொள்க. (73)
-----
1 அத்தால் இத்தால் உத்தால் என்பன முறையே அஃது இஃது உஃது என்பனவற்றின் திரிபான அத்து இத்து உத்து என்பனவற்றின் மூன்றாம் வேற்றுமை.
-----------
லகார மெய் ஆய்த மாதல்
369. தகரம் வருவழி ஆய்தம் நிலையலும்
புகரின் றென்மனார் புலமை யோரே
இது லகரம் றகரமாய்த் திரிதலேயன்றி ஆய்தமாகத் திரியுமென்றலின் எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது.
இ-ள்: தகரம் வருவழி ஆய்தம் நிலையலும்-தகரம் முதலாகிய மொழி வந்தால் லகரம் றகரமாய்த் திரிதலேயன்றி ஆய்தமாகத் திரிந்துநிற்றலும், புகர் இன்று என்மனார் புலமையோர்- குற்றமின்றென்று சொல்லுவார் ஆசிரியர்; எ-று
எ-டு: கஃறீது கற்றீது என வரும்
புகரின் றென்றதனால் "நெடியதனிறுதி" (எழு-370) என்பதனுள் வேறீது வேற்றீது என்னும் உறழ்ச்சி முடிபுங் கொள்க. (74)
----------
லகார ஈற்றிற்கு வேறு முடிபு
370. நெடியதன் இறுதி இயல்புமா ருளவே
இஃது "அல்வழியெல்லாமுறழ்" (எழு-368) என்றதனை விலக்கி இயல்பாக என்றலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகத்தது,
இ-ள்: நெடியதன் இறுதி இயல்புமாருள-நெட்டெழுத்தின் ஈற்று லகார ஈறு குறியதன் இறுதிக்கண் நின்ற லகாரம் போலத் திரிந்து உறழ்தலேயன்றி இயல்பாய் முடிவனவும் உள; எ-று
எ-டு: பால்கடிது சிறிது தீது பெரிது என வரும். இயல்பாகாது திரிந்தன வேற்கடிது என்றாற் போல்வன. (75)
-----------
"நெல்" முதலிய சொற்கள்
371. நெல்லுஞ் செல்லுங் கொல்லுஞ் சொல்லும்
அல்லது கிளப்பினும் வேற்றுமை யியல.
இஃது அல்வழிக்கண் உறழ்ந்துமுடிக என்றதனை வேற்றுமை முடிபென்றலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்து.
இ-ள்: நெல்லுஞ் செல்லுங் கொல்லுஞ் சொல்லும்-நெல்லென்னுஞ் சொல்லுஞ் செல்லென்னுஞ் சொல்லுங் கொல்லென்னுஞ் சொல்லுஞ் சொல்லென்னுஞ் சொல்லுமாகிய இந்நான்கு சொல்லும், அல்லது கிளப்பினும் வேற்றுமை இயல-அல்வழியைச் சொல்லுமிடத்துந் தாம் வேற்றுமைமுடிபின் இயல்பிற்றாய் லகரம் றகரமாய்த் திரிந்து முடியும்; எ-று
உம்மை சிறப்பு
எ-டு: நெற்காய்த்தது செற்கடிது கொற்கடிது சொற்கடிது சிறிது தீது பெரிது என வரும் (76)
-----------
"இல்" என்னும் இன்மைச் சொல்
372. இல்லென் கிளவிஇன்மை செப்பின்
வல்லெழுத்து மிகுதலும் ஐயிடை வருதலும்
இயற்கை யாதலும் ஆகாரம் வருதலும்
கொளத்தகு மரபின் ஆகிட னுடைத்தே.
இஃது இவ் வீற்று வினைக்குறிப்புச் சொல்லுள் ஒன்றற்கு எய்தாத தெய்துவித்தது.
இ-ள்: இல்லென் கிளவி இன்மை செப்பின்-இல்லென்னுஞ்சொல் இருப்பிடமாகிய இல்லை உணர்த்தாது ஒரு பருளினது இல்லாமையை உணர்த்தும் இடத்து, வல்லெழுத்து மிகுதலும்-வல்லெழுத்து முதன்மொழி வந்துழி அவ்வல்லெழுத்து மிக்குமுடிதலும், ஐ இடை வருதலும்-ஐகாரம் இடையே வருதலும், இயற்கையாதலும்-இரண்டும் வாராது இயல்பாய் முடிதலும், ஆகாரம் வருதலும்-ஆகாரம்வந்து முடிதலுமாகிய இந்நான்கு மடிபும், கொளத்தகு மரபின்-சொற்குமுடிபாகக் கொளத்தகும் முறையானே, ஆகிடனுடைத்து-தன் முடிபாம் இடன் உடைத்து; எ-று
கொளத்தகு மரபினென்றதனான் வல்லெழுத்து முதன்மொழி வந்துழி ஐகாரம் வருதலும், ஐகாரம் வந்துழி வல்லெழுத்து மிகுதலும் மிகாமையும், ஆகாரம்வந்துழி வல்லெழுத்து மிக்குமுடிதலுங் கொள்க.
எ-டு: இல்லெனநிறுத்திக் கொற்றன் சாத்தன் தெளிவு பொருள் எனத் தந்து வல்லெழுத்தும் ஐகாரமுங் கொடுத்து, இல்லைக் கொற்றனென ஏனையவற்றோடும் ஒட்டுக.
இன்னும் அவ்வாறே நிறுத்தி ஐகாரமே கொடுத்து இல்லை கொற்றன் சாத்தன் தெளிவு பொருள் என வல்லெழுத்து மிகாது முடிக்க.
இன்னுங் கொளத்தகு மரபினென்றதனான் ஏனைக்கணத்தின் முன்னும் ஐகாரமே கொடுத்து இல்லைஞாண் நூல் மணி வானம் ஆடை என ஒட்டுக.
இஃது இல்லென்பதோர் முதனிலை நின்று வருமொழியோடு இங்ஙனம் புணர்ந்ததென்பது உணர்தற்கு இல்லென்கிளவியென்றும் இயற்கையாதலு மென்றுங் கூறினார். இம்முடிபு வினையியலுள் விரவுவினைக்கண் "இன்மை செப்பல்" , என்புழி "இல்லை இல்" (எழு-222) என்று உரை கூறியவதனானும், அவனில்லை என்றார்போல்வன உதாரணமாக எல்லா ஆசிரியருங் காட் டியவாற்றானும் உணர்க.
இதனானே இங்ஙனம் புணர்த்தசொல்லன்றி இல்லை என ஐகார ஈறாய் நிற்பதோர் சொல் இன்மையும் உணர்க. ஆயின், இன்மை முதலியவற்றையும் இவ்வாறே புணர்க்க எனின் அவை வருமொழியின்றி ஒரு சொல்லாய் நிற்றலின் புணர்க்காராயினார்.
இனி இயல்பு வருமாறு:-- எண்ணில் குணம் செய்கை துடி பொருள் எனவும், பொய்யில் ஞானம் மையில் வாண்முகம் எனவும் வரும்.
இனி ஆகாரம் வருமாறு:-- இல்லாக்கொற்றன் சாத்தன் தேவன் பொருள் என ஆகாரம் வல்லெழுத்துப்பெற்றன.
பிற்கூறிய இரண்டும் இல்லென்னும் வினைக்குறிப்பு முதனிலையடியாகத் தோன்றிய பெயரெச்சமறை தொக்கும் விரிந்தும் நின்றன 1.
இயல்பு முற் கூறாததனால் இம்முடிபிற்கு வேண்டுஞ் செய்கை செய்க. தாவினீட்சி என்றாற்போல வேறுபட வருவனவற்றிற்கும் வேண்டுஞ் செய்கை செய்து முடிக்க. (77)
---------
1 பிற்கூறிய இரண்டும் என்றது இல்குணம் இல்லாக்கொற்றன் என்பவற்றின் நிலை மொழிகளை. இவையிரண்டும் இல என்னும் குறிப்புவினைப்பகுதியடியாய்ப் பிறந்தவை. இல்லாத என்னும் எதிர்மறைப் பெயரெச்சம் இலகுணம் என்பதில் தொக்கும். இல்லாக்கொற்றன் என்பதில் ஓரளவு விரிந்தும் நின்றது.
-----------
"வல்" என்னும் சொல்
373. வல்லென் கிளவி தொழிற்பெய ரியற்றே.
இஃது இருவழியுந் திரிந்தும் உறழ்ந்தும் வருமென எய்தியதனை விலக்கித் தொழிற் பெயரோடு மாட்டெறிதலின் பிறிதுவிதி வகுத்தது.
இ-ள்: வல் என் கிளவி-வல்லென்னுஞ் சொல் அல்வழிக் கண்ணும் வேற்றுமைக் கண்ணும், தொழிற்பெயர் இயற்று- ஞகார ஈற்றுத் தொழிற்பெயர் இயல்பிற்றாய் வன்கணத்து உகமும் வல்லெழுத்தும், மென்கணத்தும் இடைக்கணத்து வகாரத்தும் உகரமும் பெற்று முடியும்; எ-று
எ-டு: வல்லுக்கடிது சிறிது தீது பெரிது ஞான்றது நீண்டது மாண்டது வலிது எனவும், வல்லுக்கடுமை சிறுமை தீமை பெருமை ஞாற்சி நீட்சி மாட்சி வன்மை எனவும் வரும் (78)
------------
அதற்கு, வேறொரு முடிபு
374. நாயும் பலகையும் வரூஉங் காலை
ஆவயின் உகரங் கெடுதலு முரித்தே
உகரங் கெடுவழி அகரம் நிலையும்.
இஃது எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது.
இ-ள்: நாயும் பலகையும் வரூஉங்காலை-வல்லென்பதன் முன் நாயென்னுஞ்சொல்லும் பலகையென்னுஞ் சொல்லும் வருமொழியாய் வருங்காலத்து, ஆவயின் உகரங் கெடுதலும் உரித்து -அவ்விடத்து உகரங் கெடாது நிற்றலேயன்றிக் கெட்டு முடியவும் பெறும், உகரங் கெடுவழி அகரம் நிலையும்-அவ்வுகரங் கெடுமிடத்து அகரம் நிலைபெற்று முடியும்; எ-று
எ-டு: வல்லநாய் வல்லப்பலகை என வரும்.
உம்மை எதிர்மறையாகலான் உகரங் கெடாதேநின்று வல்லுநாய் வல்லுப் பலகை என வருதலுங் கொள்க.
அகரம் நிலையுமென்னாது உகரங்கெடு மென்றதனாற் பிற வருமொழிக் கண்ணும் இவ்வகரப்பேறு கொள்க. வல்லக்கடுமை சிறுமை தீமை பெருமை என வரும் (79)
---------------
"பூல்" "வேல்" "ஆல்"
375. பூல்வே லென்றா ஆலென் கிளவியொடு
ஆமுப் பெயர்க்கும் அம்இடை வருமே
இஃது எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது.
இ-ள்: பூல் வேல் என்றா ஆலென்கிளவியொடு ஆமுப் பெயர்க்கும்-பூலென்னுஞ் சொல்லும் வேலென்னுஞ் சொல்லும் ஆகலென்னுஞ் சொல்லுமாகிய அம்மூன்று பெயர்க்கும், அம் இடை வரும்-வேற்றுமைக்கண் திரிபின்றி அம்முச்சாரியை இடை வந்து முடியும் ; எ-று
எ-டு: பூலங்கோடு வேலங்கோடு ஆலங்கோடு செதிள் தோல் பூ என வரும்.
வருமொழி வரையாது கூறினமையின் இயல்புகணத்தும் ஒட்டுக. பூலஞெரி வேலஞெரி ஆலஞெரி நீழல் விறகு என வரும். என்றா என எண்ணிடை யிட்டமையாற் பூலாங்கோடு பூலாங்கழி என ஆகாரம் பூலுக்குக் கொள்க. (80)
--------------
லகர ஈற்றுத் தொழிற்பெயர்
376. தொழிற்பெய ரெல்லாந் தொழிற்பெய ரியல
இஃது இவ் வீற்றுத் தொழிற்பெயர்க்கு அல்வழிக்கண்ணும் வேற்றுமைக் கண்ணுந் திரிபும் உறழ்ச்சியும் விலக்கித் தொழிற்பெயரோடு மாட்டெறிதலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது.
இ-ள்: தொழிற்பெயரெல்லாம் -லகார ஈற்றுத் தொழிற் பெயரெல்லாம், தொழிற்பெயரியல-ஞகார ஈற்றுத் தொழிற் பெயரின் இயல்பினவாய் இருவழியும் வன்கணத்து உகரமும் வல்லெழுத்தும், மென்கணத்தும் இடைக்கணத்து வகரத்தும் உகரமும் பெற்று முடியும்; எ-று
எ-டு: புல்லுக்கடிது கல்லுக்கடிது வல்லுக்கடிது சிறிது தீது பெரிது ஞான்றது நீண்டது மாண்டது வலிது எனவும், வல்லுக்கடுமை சிறுமை தீமை பெருமை ஞாற்சி = நீட்சி மாட்சி வன்மை எனவும் வரும்,. இவற்றிற்குப் புல்லுதல் கல்லுதல் வல்லுதல் எனப் பொருளுரைக்க.
இனி எல்லாமென்றதனாற் றொழிற்பெயர்விதி எய்தாது பிற விதி எய்துவனவுங் கொள்க. கன்னல்கடிது பின்னல்கடிது கன்னற்கடுமை பின்னற்கடுமை எனவும் வரும். இதனானே மென்கணம் வந்துழிப் பின்னன் ஞான்றது நீண்டது மாண்டது, பின்னன் ஞாற்சி நீட்சி மாட்சி என ஒட்டுக.
இனி ஆடல் பாடல் கூடல் நீடல் முதலியனவும் அல்வழிக்கண் இயல்பாயும் வேற்றுமைக்கண் திரிந்தும் முடிதல் இதனாற் கொள்க. (81)
-----------
'வெயில்' என்னுஞ் சொல்
377. வெயிலென் கிளவி மழையியல் நிலையும்.
இது திரிபுவிலக்கி அத்தும் இன்னும் வகுத்தலின் எய்தியது விலக்கிப்
பிறிதுவிதி வகுத்தது.
இ-ள்: வெயில் என் கிளவி மழையியல் நிலையும் - வெயிலென்னுஞ் சொல் மழையென்னுஞ் சொற்போல அத்தும் இன்னும் பெற்றுமுடியும்; எ-று.
மழையென்பதனை 'வளியென வரூஉம்' (எழு - 242) என்பதனுடனும் வளியென்பதனைப் 'பனியென வரூஉம்' (எழு - 241) என்பதனுடனும் மாட்டெறிந்தவாறு காண்க.
எ-டு: வெயிலத்துக் கொண்டான் வெயிலிற் கொண்டான் சென்றான் தந்தான் போயினான் என வரும். இஃது அத்துமிசை யொற்றுக் கெடாது நின்ற இடம். இஃது 'அவற்றுமுன் வரூஉம் வல்லெழுத்து' (எழு - 133) மிக்கது அதிகார வல்லெழுத்தின்மையின்.1 இயல்புகணத்துங்கொள்க. சாரியை, வருமொழி வரையாது கூறினமையின்.2
-------------
1. அதிகாரப்பட்ட வல்லெழுத்தின்மையால், வெயிலத்துக்கொண்டான் என்பது 133-ம் நூற்பாவில் 'அவற்றுமுன் வரூஉம் வல்லெழுத்து மிகுமே' என்று கூறிய விதிப்படி வல்லெழுத்து மிக்கது.
2. வருமொழி வரையாது கூறினமையின் சாரியை இயல்புகணத்துங் கொள்க என மாறிக் கூட்டுக.
------------
வேற்றுமையில் வகர ஈறு
378. சுட்டுமுத லாகிய வகர இறுதி
முற்படக் கிளந்த உருபியல் நிலையும்.
இது முறையான வகர ஈறு வேற்றுமைக்கண் புணருமாறு கூறுகின்றது.
இ-ள்: சுட்டு முதலாகிய வகர இறுதி - வகர ஈற்றுப் பெயர் நான்கனுள் சுட்டெழுத்தினை முதலாகவுடைய வகர ஈற்றுப்பெயர் மூன்றும், முற்படக் கிளந்த உருபியல் நிலையும் - முற்படக்கூறிய உருபு புணர்ச்சியின் இயல்பிற்றாய் வற்றுப் பெற்று முடியும்; எ-று.
எ-டு: அவற்றுக்கோடு இவற்றுக்கோடு உவற்றுக்கோடு செவி தலை புறம் என வரும்.
முற்படக்கிளந்த என்றதனானே வற்றினோடு இன்னும் பெறுதல் கொள்க. அவற்றின்கோடு இவற்றின்கோடு உவற்றின்கோடு செவி தலை புறம் என ஒட்டுக. இஃது ஏனைக் கணத்தோடும் ஒட்டுக.
-----------
அதற்கு, அல்வழி முடிபு
379. வேற்றுமை யல்வழி ஆய்த மாகும்.
இது மேலனவற்றிற்கு அல்வழிமுடிபு கூறுகின்றது.
இ - ள்: வேற்றுமையல்வழி ஆய்தமாகும் – அச்சுட்டுமுதல் வகரம் வன்கணத்துக்கண் வேற்றுமையல்லாத இடத்து ஆய்தமாய்த் திரிந்து முடியும்; எ - று.
எ - டு: அஃகடிய இஃகடிய உஃகடிய சிறிய தீய பெரிய என வரும்.
இவ்வழக்கு இக்காலத்து அரிது. (84)
-------------
அதற்கு, வேறு முடிபுகள்
380. மெல்லெழுத் தியையின் அவ்வெழுத் தாகும்.
இஃது எய்தாத தெய்துவித்தது.
இ - ள்: மெல்லெழுத்து இயையின் அவ்வெழுத்தாகும் – அவ்வகர ஈறு மென்கணம்வந்து இயையுமாயின் அவ் வகரவொற்று அவ்வம் மெல்லெழுத்தாய்த் திரிந்துமுடியும்; எ - று.
எ - டு: அஞ்ஞாண் இஞ்ஞாண் உஞ்ஞாண் நூல் மணி என வரும் (85)
381. ஏனவை புனரின் இயல்பென மொழிப.
இதுவும் அது, அவ் வீறு ஏனைக் கணங்களோடு புணருமாறு கூறுதலின்.
இ - ள்: ஏனவை புணரின் - அச்சுட்டுமுதல் வகர ஈற்றோடு இடைக்கணமும் உயிர்கணமும் வந்து புணருமாயின், இயல்பென மொழிப - அவ்வகரந் திரியாது இயல்பாய்முடியுமென்று கூறுவர் புலவர் ; எ - று.
எ - டு: அவ்யாழ் இவ்யாழ் உவ்யாழ் வட்டு அடை ஆடை என ஒட்டுக.
ஈண்டுக் கூறியது நிலைமொழிக்கென்றும் ஆண்டு 'நின்றசொன்முனியல்
பாகும்' (எழு - 144) என்றது வருமொழிக்கென்றும் உணர்க. (86)
-----------
வகர ஈற்று உரிச்சொல்
382. ஏனை வகரந் தொழிற்பெய ரியற்றே.
இஃது எய்தாத தெய்துவித்தது.
இ - ள்: ஏனை விகாரம் - 'வகரக்கிளவி நான் மொழி யீற்றது' (எழு - 81) என்றதனுள் ஒழிந்துநின்ற உரிச்சொல்லாகிய வகரம் இருவழியும், தொழிற்பெயர் இயற்று - ஞகர ஈற்றுத் தொழிற்பெயர் இயல்பிற்றாய் வன்கணத்து உகரமும் வல்லெழுத்தும் மென்கணத்தும் இடைக்கணத்து வகரத்தும் உகரமும் பெற்று முடியும்; எ-று
எ-டு: தெவ்வுக்டிது சிறிது தீது பெரிது ஞான்றது நீண்டது மாண்டது வலிது எனவும், தெவ்வுக்கடுமை சிறுமை தீமை பெருமை ஞாற்றி நீட்சி மாட்சி வன்மை எனவும் வரும்
உரையிற் கோடலென்பதனால் தெம்முனை என வகரவொற்று மகரவொற்றாகத் திரிதல் கொள்க. (87)
-----------
வேற்றுமையில் ழகார ஈறு
383. ழகார இறுதி ரகார இயற்றே
இது நிறுத்த முறையானே ழகார ஈற்று வேற்றுமை முடிபு கூறுகின்றது.
இ-ள்: ழகார இறுதி ரகார இயற்று-ழகார ஈற்றுப் பெயர் வன்கணம் வந்தால் வேற்றுமைக்கண் ரகார ஈற்றின் இயல்பிற்றாய் வல்லெழுத்து மிக்கு முடியும்; எ-று
எ-டு: பூழ்க்கால் சிறகு தலை புறம் என வரும். (88)
------------
"தாழ்" என்னுஞ் சொல்
384. தாழென் கிளவி கோலொடு புணரின்
அக்கிடை வருதல் உரித்து மாகும்.
இஃது இவ் வீற்றுள் ஒன்றற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகினறது. வல்லெழுத்தினோடு அக்கு வகுத்தலின்.
இ-ள்: தாழ் என் கிளவி கோலொடு புணரின்-தாழென்னுஞ்சொல் கோலென்னுஞ் சொல்லோடு புணரும் இடத்து, அக்கு இடை வருதலும் உரித்தாகும்-வல்லெழுத்து மிகுதலே யன்றி அக்குச்சாரியை இடையே வந்து நிற்றலும் உரித்து; எ-று
எனவே அக்குப்பெறாது வல்லெழுத்து மிகுதல் வலியுடைத்தாயிற்று.
எ-டு: தாழக்கோல் தாழ்க்கோல் என வரும்
இது தாழைத் திறக்குங் கோல் என விரியும். (89)
-----------
"தமிழ்" என்னுஞ் சொல்
385. தமிழென் கிளவியும் அதனோ ரற்றே
இதுவும் அது.
இ-ள்: தமிழ் என் கிளவியும் -தமிழென்னுஞ் சொல்லும், அதனோர ற்று-வல்லெழுதது மிக்கு முடிதலேயன்றி அக்குச் சாரியையும் பெற்று முடியும்; எ-று
அதனோரற்றே என்றதனால் இதற்குத் தமிழ்க்கூத்தென வல்லெழுத்து மிகுதலே வலியுடைத்து.
எ-டு: தமிழ்க்கூத்து சேரி தோட்டம் பள்ளி என வரும். தமிழையுடைய கூத்து என விரிக்க. தமிழவரையர் என்றாற்போல வல்லெழுத்துப் பெறாது அக்குப் பெற்றன, 'உணரக்கூறிய' (எழு - 405) என்னும் புறனடையாற் கொள்க. தமிழநாடு தமிழ்நாடு என ஏனைக்கணத்து முடிபு 'எப்பெயர் முன்னரும்' (எழு - 128) என்பதனுள் 'முற்ற' என்றதனான் முடித்தாம்.
-------------
'குமிழ்' என்னும் மரப்பெயர்
386. குமிழென் கிளவி மரப்பெய ராயின்
பீரென் கிளவியொ டோரியற் றாகும்.
இது வல்லெழுத்து விலக்கி மெல்லெழுத்தும் அம்மும் வகுத்தலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி கூறுகின்றது.
இ-ள்: குமிழ் என் கிளவி மரப்பெயர் ஆயின் - குமிழென்னுஞ் சொல் குமிழ்த்தலென்னுந் தொழிலன்றி மரப்பெயராயின், பீர் என் கிளவியொடு ஓர் இயற்று ஆகும் - பீரென்னும் சொல்லோடு ஓரியல்பிற்றாய் ஒருவழி மெல்லெழுத்தும் ஒருவழி அம்மும் பெற்று முடியும்; எ-று.
எ-டு: குமிழ்ங்கோடு குமிழங்கோடு செதிள் தோல் பூ என வரும்.
ஓரியற்றென்றதனாற் பிறவற்றிற்கும் இம்முடிபு கொள்க. மகிழ்ங்கோடு
மகிழங்கோடு என ஒட்டுக. (91)
------------
'பாழ்' என்னுஞ் சொல்
387. பாழென் கிளவி மெல்லெழுத் துறழ்வே.
இது வல்லெழுத்தினோடு மெல்லெழுத்துப் பெறுக என்றலின் எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது.
இ-ள்: பாழ் என் கிளவி மெல்லெழுத்து உறழ்வு - பாழென்னுஞ் சொல்லீறு வல்லெழுத்தினோடு மெல்லெழுத்துப் பெற்று உறழ்ந்து முடியும்; எ-று.
எ-டு: பாழ்க்கிணறு பாழ்ங்கிணறு சேரி தோட்டம் பாடி என ஒட்டுக. இது பாழுட்கிணறு என விரியும், பாழ்த்தகிணறு என வினைத்தொகை முடியாமையின். (92)
----------
'ஏழ்' என்னும் எண்ணுப்பெயர்
388. ஏழென் கிளவி யுருபிய னிலையும்.
இஃது எண்ணுப்பெயர் இவ்வாறு முடிக என்றலின் எய்தாத தெய்துவித்தது.
இதன் பொருள் : ஏழ் ஏன் கிளவி - ஏழென்னும் எண்ணுப்பெயர் இறுதி, உருபியல் நிலையும் - உருபு புணர்ச்சிக்கட் கூறிய இயல்பின்கண்ணே நிலைபெற்று அன்பெற்று முடியும் என்றவாறு.
அஃது 'அன்னென் சாரியை யேழ னிறுதி' (எழு - 194) என்பதாம்.
உதாரணம் : ஏழன்காயம் சுக்கு தோரை பயறு என வரும். இயைபு வல்லெழுத்து ஓத்தின் புறனடையான் வீழ்க்க. இஃது ஏழனாற் கொண்ட காயம் என விரியும். (93)
----------
389. அளவு நிறையு மெண்ணும் வருவழி
நெடுமுதல் குறுகலு முகரம் வருதலுங்
கடிநிலை யின்றே யாசிரி யற்க.
இது மேலதற்கு எய்தாத தெய்துவித்தது.
இதன் பொருள் : அளவும் நிறையும் எண்ணும் வருவழி – அவ்வேழென்பதன் முன்னர் அளவுப்பெயரும் நிறைப் பெயரும் எண்ணுப்பெயரும் வருமொழியாய் வருமிடத்து, நெடுமுதல் குறுகலும் உகரம் வருதலுங் கடிநிலையின்றே ஆசிரியற்க – முன்னின்ற நெட்டெழுத்தின் மாத்திரை குறுகலும் ஆண்டு உகரம் வருதலும் நீக்கு
நிலைமையின்று ஆசிரியற்கு என்றவாறு.
உதாரணம் : எழுகலம் சாடி தூதை பானை நாழி மண்டை வட்டி எனவும், ஏழுகழஞ்சு தொடி பலம் எனவும், எழுமூன்று எழுநான்கு எனவும் வரும்.
நிலையென்றதனான் வன்கணத்துப் பொருட்பெயர்க்கும் இம்முடிபு கொள்க. எழுகடல் சிலை திசை பிறப்பு என வரும். (94)
-----------
390. பத்தென் கிளவி யொற்றிடை கெடுவழி
நிற்றல் வேண்டு மாய்தப் புள்ளி.
இது மேலதற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி வகுத்தது, வருமொழி நோக்கி விதித்தலின்.
இதன் பொருள் : பத்து என் கிளவி ஒற்றிடை கெடுவழி - அவ்வேழனோடு பத்தென்பது புணருமிடத்து அப்பத்தென் கிளவி இடையொற்றுக் கெடுவழி, ஆய்தப்புள்ளி நிற்றல்வேண்டும் – ஆய்தமாகிய புள்ளி நிற்றலை விரும்பும் ஆசிரியன் என்றவாறு.
உதாரணம் : எழுபஃது என எரும். (95)
------------
391.ஆயிரம் வருவழி யுகரங் கெடுமே.
இது நெடுமுதல் குறுகிநின்று உகரம்பெறாது என்றலின் எய்தியது ஒருமருங்கு மறுத்தது.
இதன் பொருள் : ஆயிரம் வருவழி - ஏழென்பதன் முன் ஆயிரமென்னும் எண்ணுப்பெயர் வருமொழியாய் வருமிடத்து, உகரங்கெடும் - நெடுமுதல் குறுகிநின்று உகரம்பெறாது முடியும் என்றவாறு.
உதாரணம் : ஏழாயிரம் என வரும் (96)
----------
392 நூறூர்ந்து வரூஉம் ஆயிரக் கிளவிக்குக்
கூறிய நெடுமுதல் குறுக்க மின்றே
இஃது எய்தியது முழுவதூஉம் விலக்கிற்று, உகரங்கெட்டு அதன் மேலே நெடுமுதல் குறுகாது என்றலின்.
இ-ள்: நூறு ஊர்ந்து வரூஉம் ஆயிரக் கிளவிக்கு-அவ்வேழென்பது நூறென்னுஞ் சொன்மேல் வரும் ஆயிரமென்னுஞ் சொல்லிற்கு, கூறிய நெடுமுதல் குறுக்க மின்று-முற்கூறிய நெடுமுதல் குறுகி உகரம் பெறுதலின்று; எ-று
எ-டு: ஏழ்நூறாயிரம் என வரும்
கூறிய என்றதனான் நெடுமுதல்குறுகி உகரம்பெற்று எழுநூறாயிர மெனவும் வரும்.
இதனானே ஏழாயிரமென மேல் முதனிலை குறுகாமையுங் கொள்க.
இதனானே எழுஞாயிறு எழுநாள் எழுவகை என இயல்புகணத்து நெடு முதல் குறுகி உகரம்பெறுதலுங் கொள்க. (97)
---------
393. ஐஅம் பல்லென வரூஉ மிறுதி
அல்பெய ரெண்ணினும் ஆயியல் நிலையும்.
இதுவும் அது.
இ-ள்: ஐ அம் பல் என வரூஉம் இறுதி-அவ் வேழன் முன்னர் ஐயென்றும் அம்மென்றும் பல்லென்றும் வருகின்ற இறுதிகளையுடைய, அல்பெயர் எண்ணினும்-பொருட்பெயரல் லாத எண்ணுப்பெயராகிய தாமரை வெள்ளம் ஆம்பல் என்பன வந்தாலும், ஆ இயல் நிலையும்-நெடுமுதல் குறுகி உகரம்பெறாது அவ்வியல்பின்கண்ணே நின்று முடியும்; எ-று
எ-டு: ஏழ்தாமரை ஏழ்வெள்ளம் ஏழாம்பல் என வரும் (98)
-------------
394. உயிர்முன் வரினும் ஆயியல் திரியாது.
இதுவும் அது.
இ-ள்: உயிர்முன் வரினும்-அவ்வேழென்பதன் முன்னர் அளவுப்பெயரும் எண்ணுப்பெயருமாகிய உயிர்முதன்மொழி வரினும், ஆ இயல் திரியாது-நெடுமுதல் குறுகி உகரம்பெறாது முடியும் இயல்பிற் றிரியாது முடியும்; எ-று
எ-டு: ஏழகல் ஏழுழக்கு ஏழொன்று ஏழிரண்டு என வரும். (99)
---------
"கீழ்" என்னுஞ் சொல்
395. கீழென் கிளவி உறழத் தோன்றும்
இஃது இவ் வீற்றுள் ஒன்றற்கு வேற்றுமைக்கண் உறழ்ச்சி கூறுகின்றது.
இ-ள்: கீழ் என் கிளவி உறழத் தோன்றும்-கீழென்னுஞ் சொல் உறழ்ச்சியாய்த் தோன்றி முடியும்; எ-று
தோன்றுமென்றதனான் நெடுமுதல் குறுகாது வல்லெழுத்துப் பெற்றும் பெறாதும் வருமென்ற இரண்டும் உறழ்ச்சியாய் வருமென்று கொள்க. இயைபு வல்லெழுத்து அதிகாரத்தாற் கொள்க.
எ-டு: கீழ்க்குளம் கீழ்குளம் சேரி தோட்டம் பாடி என வரும் (100)
-----------
வேற்றுமையில் ளகர ஈறு
396. ளகார இறுதி ணகார இயற்றே
இது நிறுத்தமுறையானே ளகார ஈற்றுச்சொல் வேற்றுமைக்கண் புணருமாறு கூறுகின்றது.
இ-ள்: ளகார இறுதி ணகார இயற்று-ளகார ஈற்றுப் பெயர் ணகார ஈற்றின் இயல்பிற்றாய் வன்கணம் வந்துழி டகாரமாய்த் திரிந்துமுடியும்; எ-று
எ-டு: மட்குறை சிறை தலை புறம் என வரும். (101)
--------
அதற்கு, வேறு முடிபு
397. மெல்லெழுத் தியையின் ணகார மாகும்.
இது மேலதற்கு மென்கணத்துமடிபு கூறுகின்றது.
இ-ள்: மெல்லெழுத்து இயையின் ணகாரமாகும்-ளகார ஈறு மெல்லெழுத்து முதன்மொழி வருமொழியாய் வந்து இயையின் ணகாரமாய்த் திரிந்து முடியும்; எ-று
முண்ஞெரி நுனி மரம் என வரும்.
இதனை வேற்றுமையிறுதிக்கண் அல்வழியது எடுத்துக் கோடற்கண் சிங்கநோக்காக1 வைத்தலின் அல்வழிக்கும் இம்முடிபு கொள்க. முண் ஞெரிந்தது நீண்டது மாண்டது என வரும். (102)
-------
1 சிங்கநோக்கு-சிங்கம் முன்னும் பின்னும் பார்த்தாற்போல முன்னும் பின்னும் நோக்கும் நூற்பாநிலை.
--------
அல்வழியில் ளகர ஈறு
398. அல்வழி யெல்லாம் உறழென மொழிப.
இது மேலதற்கு அல்வழிமுடிபு கூறுகின்றது.
இ-ள்: அல்வழி யெல்லாம்-ளகார ஈறு அல்வழிக்கணெல்லாம், உறழென மொழிப-திரியாதும் டகரமாய்த் திரிந்தும் உறழ்ந்துமுடியுமென்று சொல்லுவர் புலவர்; எ-று
எ-டு: முள்கடிது முட்கடிது சிறிது தீது பெரிது என வரும்,.
எல்லாமென்றதனால் குண வேற்றமைக்கண்ணும் இவ் வுறழ்ச்சி கொள்க. முள்குறுமை முட்குறுமை சிறுமை தீமை பெருமை எனவும், கோள்கடுமை கோட்கடுமை வாள்கடுமை வாட்கடுமை எனவும் ஒட்டுக.
இதனானே அதோட்கொண்டான் இதோட்கொண்டான் உதோட்கொண்டான் எதோட்கொண்டான்2 சென்றான் தந்தான் போயினானென உருபு வாராது உருபின் பொருள்பட வந்தனவுங் கொள்க. (103)
-----------
2 அதோள் இதோள் முதலியன அவ்விடத்து இவ்விடத்து எனச் சுட்டு வினாவிடப் பொருள்படுவன.
-----------
அதற்கு, வேறு முடிபு
399. ஆய்த நிலையலும் வரைநிலை யின்றே
தகரம் வரூஉங் காலை யான.
இது மேலதற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது, தகரம் வருவழி உறழ்ச்சியேயன்றி ஆய்தமாகத் திரிந்து உறழ்க என்றலின்.
இ-ள்: தகரம் வரூஉங் காலையான-தகர முதன்மொழி வருமொழியாய் வருங்காலத்து, ஆய்தம் நிலையலும் வரை நிலையின்று-ளகாரம் டகாரமாய்த் திரிதலேயன்றி ஆய்தமாகத் திரிந்த நிற்றலும் நீக்கும் நிலைமையின்று; எ-று
எ-டு: முஃடீது முட்டீது என வரும். (104)
--------
அதற்கு, மேலும் ஒரு முடிபு
400. நெடியத னிறுதி இயல்பா குநவும்
வேற்றுமை யல்வழி வேற்றுமை நிலையலும்
போற்றல் வேண்டும் மொழியுமா ருளவே.
இது மேலதற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது.
இ-ள்: நெடியதன் இறுதி இயல்பு ஆகுநவும்-அவ் வீற்று நெடியதன் இறுதி திரியாது இயல்பாய் முடிவனவற்றையும், வேற்றுமை அல்வழி வேற்றுமை நிலையலும்-வேற்றுமையல்லாத யிடத்து வேற்றுமையின் இயல்பை யுடையவாய்த் திரிந்து முடிதலையும், போற்றல் வேண்டும் மொழியமாருள-போற்றுதல் வேண்டுஞ் சொற்களும் உள; எ-று
எ-டு: கோள்கடிது வாள்கடிது சிறிது தீது பெரிது எனவும், "புட்டேம்பப் புயன்மாறி" பட்டினப்பாலை-4) எனவும் வரும்.
போற்றல்வேண்டும் என்றதனால் உதளங்காய் செதிள் பூ தோல் என அம்முப் பெறுதலுங் கொள்க. உதளென்பது யாட்டினை உணர்த்துங்கால் முற்கூறிய முடிபுகள் இருவழிக்கும் ஏற்றவாறே முடிக்க. உதட்கோடு உதள் கடிது உதணன்று என ஒட்டுக. "மோத்தையுந் தகரு முதளு மப்பரும்" (மரபியல்-47) என்றார் மரபியலில், (105)
---------
னகர ஈற்றுத் தொழிற் பெயர்
401. தொழிற்பெய ரெல்லாந் தொழிற்பெய ரியல.
இஃது இவ் வீற்றுத் தொழிற்பெயர்க்கு இருவழியும் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது.
இ-ள்: தொழிற்பெயரெல்லாம்-ளகார ஈற்றுத் தொழிற் பெயரெல்லாம் இருவழியும், தொழிற் பெயர் இயல-ஞகார
ஈற்றுத் தொழிற் பெயர்போல வன்கணத்து உகரமும் வல்லெழுத்தும், மென்கணத்தும் இடைக்கணத்து வகரத்தும் உகரமும் பெற்று முடியும்; எ-று
எ-டு: துள்ளுக்கடிது சிறிது தீது பெரிது ஞான்றது நீண்டது மாண்டது வலிது எனவும், துள்ளுக்கடுமை சிறுமை தீமை பெருமை ஞாற்சி நீட்சி மாட்சி வன்மை எனவும் வரும்.
எல்லா மென்றதனானே இருவழியுந் தொழிற்பெயர்கள் உகரமும் வல்லெழுத்தும் பெறாது திரிந்துந் திரியாதும் முடிவனவுங் கொள்க. கோள்கடிது கோட்கடிது, கோள்கடுமை கோட்கடுமை என்பன போல்வன பிறவும் வரும்
இனி வாள்கடிது வாட்கடிது சிறிது தீது பரிது எனவும் வாள்கடுமை
வாட்கடுமை எனவுங் காட்டுக. வாள்-கொல்லுதல். (106)
----------
"இருள்" என்னுஞ் சொல்
402. இருளென் கிளவி வெயிலியல் நிலையம்
இது திரிபுவிலக்கி அத்தும் இன்னும் வகுத்தலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது.
இ-ள்: இருள் என் கிளவி-இருளென்னுஞ் சொல் வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண், வெயிலியல் நிலையும்-வெயிலென்னுஞ் சொற்போல அத்தும் இன்னும் பெற்று முடியும்;
எ-று
எ-டு: இருளத்துக்கொண்டான் இருளிற்கொண்டான் சென்றான் தந்தான் போயினான் என வரும்
சாரியை வரையாது கூறினமையின் இயல்புகணத்தும் ஒடள்டுக. இருளத்து ஞான்றான் நீண்டான் மாண்டான் இருளின்ஞான்றான் நீண்டான் மாண்டான் என வரும். (107)
-----------
"புள்" "வள்" என்னுஞ் சொற்கள்
403. புள்ளும் வள்ளுந் தொழிற்பெய ரியல.
இதுவும் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. திரிபும் இயல்பும்
விலக்கித் தொழிற்பெயர்விதி வகுத்தலின்.
இ-ள்: புள்ளும்வள்ளும்-புள்ளென்னுஞ் சொல்லும் வள்ளென்னுஞ் சொல்லும் இருவழிக் கண்ணும், தொழிற்பெயர் இயல-ஞகார ஈற்றுத் தொழிற்பெயர் போல வன்கணத்துஉகரமும் வல்லெழுத்தும், மென்கணத்தும் இடைக்கணத்து வகரத்தும் உகரமும் பெற்று முடியும்; எ-று
எ-டு: புள்ளுக்கடிது வள்ளுக்கடிது சிறிது தீது பெரிது ஞான்றது நீண்டது மாண்டது வலிது எனவும், புள்ளுக்கடுமை வள்ளுக்கடுமை சிறுமை தீமை பெருமை ஞாற்சி நீட்சி மாட்சி வன்மை எனவும் வரும்.
இதனைத் "தொழிற் பெயரெல்லாம்" (எழு-401) என்பதன்பின் வையாததனால் இருவழியும் வேற்றுமைத்திரிபு எய்தி முடிவனவுங் கொள்க. புட்கடிது வட்கடிது சிறிது தீது பெரிது எனவும், புட்கடுமை வட்கடமை சிறுமை தீமை பெருமை எனவும், புண்ஞான்றது நீ்டது மாண்டது எனவும், புண்ஞாற்சி நீட்சி மாட்சி எனவும் வரும். புள்ளு வலிது புள்வலிது புள்ளுவன்மை புள்வன்மை என வகரத்தின் முன்னர் உகரம் பெற்றும் பெறாதும் வருதலின் "நின்றசொன்மு னியல்பாகும்" (எழு-144) என்றதனான் முடியாமை உணர்க. இது வள்ளிற்கும் ஒக்கும். (108)
----------
"மக்கள்" என்னுஞ் சொல்
404. மக்க ளென்னும் பெயர்ச்சொ லிறுதி
தக்கவழி அறிந்து வலித்தலு முரித்தே
இஃது எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது. "உயிரீறாகிய உயர் திணைப்பெயர்" (எழு-153) என்பதனுட் கூறிய இயல்பு விலக்கித் திரிபு வகுத்தலின்.
இ-ள்: மக்கள் என்னும் பெயர்ச் சொல் இறுதி-மக்களென்னும் பெயர்ச் சொல்லிறுதி இயல்பேயன்றி, தக்கவழி அறிந்து வலித்தலும் உரித்து-தக்க இடம் அறிந்து வல்லொற்றாகத் திரிந்து முடிதலும் உரித்து; எ-று
தக்கவழியென்றார் பெரும்பான்மை மக்கள்உடம்பு உயிர்நீங்கிக் கிடந்த காலத்தின் அஃது இம்முடிபுபெறும் என்றற்கு.
எ-டு: மக்கட்கை செவி தலை புறம். "இக்கிடந்தது மக்கட்டலை" என்பதனான் அவ்வாறாதல் கொள்க. மக்கள் கை செவி தலை புறம் எனத் திரியாது நின்றது உயிருண்மை பெற்று
இனிச் சிறுபான்மை மக்கட் பண்பு மக்கட்சுட்டு எனவும் வரும் (109)
----------
8.3. புறனடை
இவ்வயலின் புறனடை
405. உணரக் கூறிய புணரியல் மருங்கிற்
கண்டுசயற் குரியவை கண்ணினர் கொளலே
இஃது இவ்வோத்தின்கண் எடுத்தோத்தானும் இலேசானும் முடியாது நின்றவற்றிற்கெல்லாம் இதுவே ஓத்தாகக் கொண்டு சாரியை பெறுவனவற்றிற்குச் சாரியையும் எழுத்துஒப் பெறுவனவற்றிற்கு எழுத்துங் கொடுத்து முடித்துக்கொள்க என்கின்றது.
இ-ள்: உணரக் கூறிய புணரியன் மருங்கின்-உணரக் கூறப்பட்ட புள்ளியீறு வருமொழியோடு புணரும் இயல்பிடத்து, கண்டு செயற்கு உரியவை-மேல் முடித்த முடிபன்றி வழக்கினுட் கண்டு முடித்தற்கு உரியவை தோன்றியவழி, கண்ணினர் கொளல்-அவற்றையுங் கருதிக்கொண்டு ஏற்றவாறே முடிக்க; எ-று
எ-டு: மண்ணப்பத்தம் என அல்வழிக்கண் ணகர ஈறு அக்குப் பெற் றது. மண்ணங்கட்டி என அம்முப்பெற்றது. பொன்னப்பத்தம் என னகர ஈறு அக்குப் பெற்றது. பொன்னங்கட்டி என அம்முப் பெற்றது. கானங் கோழி என வேற்றுமைக்கண் அம்முப்பெற்றது. மண்ணாங்கட்டி கானாங் கோழி என்பன மரூஉ. வேயின்றலை என யகர ஈற்று உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றுழி வல்லெழுத்துக் கெடுக்க. நீர்குறிது என ரகர ஈறு அல்வழிக்கண் இயல்பாயிற்று. வேர்குறிது வேர்க்குறிது இது ரகர ஈறு அல்வழி உறழ்ச்சி. வடசார்க்கூரை மேல்சார்க்கூரை இவை வல்லெழுத்து மிக்க மரூஉ முடிபு. அம்பர்க்கொண்டான் இம்பர்க் கொண்டான் உம்பர்க்கொண்டான் எம்பர்க்கொண்டான் என இவ் வீறு ஏழனுருபின் பொருள்பட வந்தன வல்லொற்றுப்பெற்றன. தகர்க்குட்டி புகர்ப்போத்து என்பன பண்புத்தொகை கருதிற்றேல் ஈண்டு முடிக்க. வேற்றுமையாயின் முன்னர் முடியும். விழலென்னும் லகர ஈறு வேற்றுமைக்கண் றகரமாகாது னகரமாய் முடிதல் கொள்க. விழன்காடு செறு தாள் புறம் என வரும். கல்லம்பாறை உசிலங்கோடு எலியாலங்காய் புடோலங்காய் என அவ் வீறு அம்முப்பெற்றது கல்லாம்பாறை என்பது மரூஉ. அழலத்துக் கொண்டான் என அவ் வீறு அத்துப்பெற்றது. அழுக்கற்போர் புழுக்கற்சோறு என்பன அவ் வீற்று அல்வழித்திரிபு. யாழ்குறிது என்பது ழகர ஈற்று அல்வழி யியல்பு. வீழ்குறிது வீழ்க்குறிது என்பன அவ் வீற்று அல்வழியுறழ்ச்சி. தாழப்பாவை என்பது அவ் வீற்று அல்வழி அக்குப்பெற்றது. யாழின்கோடு செய்கை தலை புறம் என அவ் வீற்று உருபிற்குச் சென்றசாரியை பொருட் கட் சென்றுழி வல்லெழுத்து வீழ்க்க. முன்னாளை வாழ்வு முன்னாளைப்பரிசு ஒருநாளைக்குழவி ஒரு திங்களை*க்குழவி என்றாற் போல்வன ளகார ஈறு ஐகாரமும் அதனோடு வல்லெழுத்தும் பெறுதல் கொள்க. பிறவும் இவ்வோத்தின் வேறுபட வருவன வெல்லாங் கொணர்ந்து இதனான் முடிக்க. குளத்தின் புறம் மரத்தின்புறம் என உருபிற்கு எய்திய அத்தோடு இன்பெறுதலுங் கொள்க.
இனிக் "கடிசொல்லில்லை"(சொல்-452) என்பதனான் வழக்கின்கண் ணுஞ் செய்யுட்கண்ணும் வந்து திரிந்து முடியுஞ் சொற்களும் உள. அவற்றைக் கண்ணினர் கொளவே என்பதனான் மண்ணுக்குப்போனான் பொன்னுக்குவிற்றான் பொருளுக்குப்போனான் நெல்லுக்குவிற்றான் கொள்ளுக்குக் கொண்டான் பதினேழு என்றாற்போல வழக்கின்கண் உகரம் பெபறுவனவும் "விண்ணுக்குமேல்" "மண்ணுக்கு நாப்பண்"
"பல்லுக்குத் தோற்ற பனிமுல்லை பைங்கிளிகள்
சொல்லுக்குத் தோற்றின்னுந் தோற்றனவால்-நெல்லுக்கு
நூறோஒஒ நூறென்பாள் நுடங்கிடைக்கும் வன்முலைக்கு
மாறோமா லன்றளந்த மண்"
என்றாற்போலச் செய்யுட்கண் உகரம்பெறுவனவும், பிறவும் முடிக்க.
பற்கு நெற்கு என்பன முதலியவுங் கொள்க. இவை உருபின் பொருள் பட வாராது உருபின்கண் வந்தனவேனும் ஈண்டுக் காட்டினாம். ஆண்டப் "புள்ளியிறுதியும்" (எழு-202) என்னும் உருபியற்சூத்திரத்து இலேசு கோடற்கு இடனின்றென்று கருதி. இனி அச்சூத்திரத்துத் "தேருங்காலை" என்றதனான் முடித்தலும் ஒன்று. (110)
புள்ளிமயங்கியல் முற்றிற்று.
---------------------
9. குற்றியலுகரப்புணரியல்
(குற்றியலுகர ஈறுகட்குரிய புணர்ச்சி யிலக்கணம் உணர்த்துவது.)
9.1. குற்றியலுகரத்தின் இயல்பு
குற்றியலுகரத்தின் பெயர், திறை, தொகை
406 . ஈரெழுத் தொருமொழி உயிர்த்தொட ரிடைத்தொடர்
ஆய்தத் தொடர்மொழி வன்றொடர் மென்றொடர்
ஆயிரு மூன்றே உகரங் குறுகிடன்.
என்பது சூத்திரம். இவ்வோத்துக் கற்றியலுகர மென்று கூறப்பட்ட எழுத்துப் பொருட்பெயரோடும் எண்ணுப்பெயர் முதலியவற்றோடும் புணரும் முறைமை உணர்த்தினமையிற் குற்றியலுகரப் புணரியலென்னும் பெயர்த்தாயிற்று. இது "மெய்யேயுயிரென்றாயீரியல"(எழு-103) என்றவற்றுள் உயிரினது விகாரமாய்நின்ற குற்றுகரத்தை இருமொழிக் கண்ணும் புணர்க்கின்றமையின் மேலை ஓத்தினோட இயைபுடைத்தாயிற்று. இத்தலைச்சூத்திரம் மொழிமரபினகத்து இருவழிய என்ற குற்றுகரம் இதனகத்து இனைத்து மொழியிறுதி வருமென்று அவற்றிற்குப் பெயரும் முறையுந் தொகையும் உணர்த்தகின்றது. அப்பெயர் பெயர், அம்முறை முறை, அத்தொகை தொகை, "தொடர்மொழியீற்று" (எழு-36) வருமென்று ஆண்டுக் கூறியவதனை ஈண்டு ஐந்துவகைப்படுத்தி அதனோடு "நெட்டெழுத்திம்பரும்" (எழு-36) என்றது ஒன்றசே யாதலின் அதனையுங் கூட்டி அறுவகைத்தென்றார்,.
இ-ள்: ஈரெழுத் தொருமொழி -இரண்டெழுத் தானாகிய ஒருமொழியும், உயிர்த் தொடர்-உயிர்மேல்வரும் மெய்யைத் தொடர்ந்து நின்ற சொல்லும், இடைத் தொடர்-இடை யொற்று மேல்வரும் மெய்யைத் தொடர்ந்து நின்ற சொல்லும், ஆய்தத் தொடர்மொழி -ஆய்தமாகிய எழுத்து மேல்வரும் மெய்யைத் தொடர்ந்து நின்ற சொல்லும், வன்றொடர்-வல்லொற்று மேல்வரும் மெய்யைத் தொடர்ந்து நின்ற சொல்லும், மென்றொடர்-மெல்லொற்று மேல்வரும் மெய்யைத் தொடர்ந்து நின்ற சொல்லும், ஆயிரு மூன்றே-ஆகிய அவ்வாறு சொல்லுமே, உகரங் குறுகு இடன்-குற்றியலுகரங் குறுகிவரும் இடன்; எ-று
எ-டு: நாகு வரகு தெள்கு எஃகு கொக்கு குரங்கு என வரும். இதனை ஏழென்று1 கொள்வார்க்குப் பிண்ணாக்கு சுண்ணாம்பு ஆமணக்கு முதலியன முடியாமை உணர்க. (1)
---------
1 எழுவகை இடமாவன:- 1 நெடிற்கீழும், 2 நெடிலொற்றின் கீழும் 3 குறிலிணைக் கீழும் 4 குறிவிணை யொற்றின்கீழும் 5 குறினெடிற் கீழும் 6 குறினெடிவொற்றின் கீழும் 7 குற்றொற்றின் கீழு ம ன இவை; இவற்றுக்கு எடுத்துக்காட்டு: முறையே: 1நாகு 2 நாக்கு 3 வரகு 4 அரக்கு 5 பலாசு 6 பனாட்டு 7 காசு என்பன. இவற்றுக்கு நூற்பா:
"நெடிலே குறிலிணை குறினெடி லென்றிவை
யொற்றொடு வருதலொடு குற்றொற் றிறுதியென்
றேழ்குற் றுகரக் கிடனென மொழிப"
என்பது.
---------
அவற்றுள், ஈரொற்றுத் தொடர்கள்
407. அவற்றுள் ,
ஈரொற்றுத் தொடர்மொழி இடைத்தொட ராகா.
இஃது அவ்வாறனுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுத்தது.
இ-ள்: அவற்றுள்-அவ்வாறனுள், ஈரொற்றுத் தொடர் மொழி-இரண்டொற்று இடைக்கண் தொடர்நது நிற்குஞ் சொல்லிற்கு இடையின ஒற்று முதல் நின்றால், இடைத் தொடராகா-மேல் இடையினந் தொடர்ந்து நில்லா, வல்லினமும் மெல்லினமுந் தொடர்ந்து நிற்கும்; எ-று
எ-டு: ஆர்க்கு ஈர்க்கு நொய்ம்பு மொய்ம்பு என வரும். (2)
-----------
இருவழியினும் குற்றுகரம் வருமாறு
408. அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும்
எல்லா இறுதியும் உகர நிலையும்.*
இஃது "இடைப்படிற்குறுகு மிடனுமாருண்டே" (எழு-37) என்றதனாற் புணர்மொழிக்கண் அரைமாத்திரையினுங் குறுகுமென எய்தியதனை விலக்கி "அவ்வியல் நிலையு மேனை மூன்றே" (எழு-12) என்ற விதியே பெறு மென்கின்றது.
இ-ள்: அல்லது கிளப்பினும்-அல்வழியைச் சொல்லுமிடத்தும், வேற்றுமைக் கண்ணும்-வேற்றுமைப் புணர்ச்சிக் கண்ணும், எல்லா இறுதியும் உகரம் நிலையும்--ஆறு ஈற்றின்
கண்ணும் உகரந் தன் அரை மாத்திரையைப் பெற்று நிற்கும்; எ-று
வருமொழியானல்லது அல்வழியும் வேற்றுமையும் விளங்காமையின் "அல்லது கிளப்பினும் வேற்றுமைக்கண்ணும்" எனவே இருமொழிப் புணர்ச்சி என்பது பெற்றாம். இவ்விருமொழிக்கட் பழைய அரைமாத்திரை பெற்றே நிற்குமென்றார். அன்றி இருமொழிப் புணர்ச்சிக்கண் ஒரு மாத்திரை பெறு மென்றார்க்குப் பன்மொழிப் புணர்ச்சியாகிய செய்யுளிலக்கணங் குற்றுகரத்தான் நேர்பசை நிரைபசை கோடலும் அவற்றான் அறுபது வஞ்சிச்சீர்கோடலும் பத்தொன்பதாயிரத் திருநூற்றுத் தொண்ணூற்றொரு தொடை கோடலும் இன்றாய், முற்றியலுகரமாகவே கொள்ள வேண்டுதலின் மாறு கொளக் கூறலென்னுங் குற்றந் தங்குமென்று உணர்க.
எ-டு: நாகுகடிது வரகுகடிது நாகுகடுமை வரகுகடுமை என வரும். இவைதம் அரைமாத்திரை பெற்றன. ஏனையவற்றோடும் ஒட்டுக.
-------
* நிறையும் எனவும் பாடம். இப்பாடத்தையே இளம்பூரணரும் பேராசிரியரும் கொண்டனர், குற்றியலுகரம் மெய்யெழுத்துப்போல அரைமாத்திரை யொலிப் பினும் தனித்து நிற்கும்போது தனித்தொலிக்கும் உயிர்த்தன்மை நிரம்பியதே என்பது பேராசிரியர் கருத்து.
இனி இது 'மால்யாறுபோந்து கால்சுரந்துபாய்ந்து' எனத் தொடர் மொழிக்கண்ணும் அரைமாத்திரை பெற்றது என்னாக்கால் வஞ்சிச்சீ ரின்றாமாறு உணர்க. (3)
----------
அதற்கு, மேலும் ஒரு முடிபு
409. வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வருவழித்
தொல்லை இயற்கை நிலையலு முரித்தே.
இது முன்னின்ற சூத்திரத்தான் அரைமாத்திரை பெறும் என்றதனை விலக்கி 'இடைப்படிற் குறுகுமிடனும்' (எழு - 37) என்றதனான் அரை மாத்திரையினுங் குறுகுமென்று ஆண்டு விதித்தது ஈண்டு வல்லொற்றுத் தொடர்மொழிக்கண்ணே வருமென்கிறது.
இ - ள் : வல்லொற்றுத் தொடர் மொழி -- வல்லொற்றுத் தொடர் மொழிக் குற்றுகரம், வல்லெழுத்து வருவழி -- வல்லெழுத்து முதன்மொழி வருமொழியாய் வருமிடத்து, தொல்லை இயற்கை நிலையிலும் உரித்து -- 'இடைப்படிற் குறுகும்' (எழு-37) என்பதனாற் கூறிய அரை மாத்திரையினுங் குறுகி நிற்கும் என்ற இயல்பிலே நிற்றலும் உரித்து; எ - று.
உம்மை எதிர்மறை.
எ - டு: கொக்குக்கடிது கொக்குக்கடுமை என அரைமாத்திரையிற் குறைந்தவாறு குரஙகுகடிதென்பது முதலியவற்றோடு படுத்துச் செவிகருவியாக உணர்க.
முன்னின்ற சூத்திரத்து* உகரநிறையுமென்று பாடம் ஓதி அதற்கு உகரம் அரைமாத்திரையிற் சிறிது மிக்கு நிற்குமென்று பொருள் கூறி இச் சூத்திரத்திற்குப் பழைய அரைமாத்திரைபெற்று நிற்குமென்று கூறுவாரும் உளர். (4)
-------------
9.2. குற்றியலிகரம்
குற்றியலிகரம் வருமாறு
410. யகரம் வருவழி இகரங் குறுகும்
உகரக் கிளவி துவரத் தோன்றாது.
இது குற்றியலிகரம் புணர்மொழியகத்து வருமாறு கூறுகின்றது.
இ - ள் : யகரம் வருவழி உகரக்கிளவி துவரத் தோன்றாது-- யகர முதன்மொழி வருமொழியாய் வருமிடத்து நிலைமொழிக் குற்றுகர வெழுத்து முற்றத் தோன்றாது, இகரங் குறுகும்-- ஆண்டு ஓர் இகரம் வந்து அரை மாத்திரைபெற்று நிற்கும்; எ - று.
எ - டு : நாகியாது வரகியாது தெள்கியாது எஃகியாது கொக்கியாது குரங்கியாது எனவரும். 'துவர' என்றார், ஆறு ஈற்றின்கண்ணும் உகரங் கெடுமென்றற்கு (5)
-----------
* சீரநிலை கோடறகண இலவாசிரியரும் நிறையுமென்றாளுப.
-----------
9.3. குற்றுகரப் பொதுப் புணர்ச்சி
நெடிற்றொடர், உயிர்த்தொடர்
411. ஈரெழுத்து மொழியும் உயிர்த்தொடர் மொழியும்
வேற்றுமை யாயின் ஒற்றிடை இனமிகத்
தோற்றம் வேண்டும் வல்லெழுத்து மிகுதி.
இது முற்கூறிய ஆறனுள் முன்னர்நின்ற இரண்டற்கும் வேற்றுமைப் பொருட்புணர்ச்சி முடிபு கூறுகின்றது.
இ-ன்: ஈரெழுத்து மொழியும் உயிர்த்தொடர் மொழியும்--- ஈரெழுத்தொருமொழிக் குற்றுகர ஈற்றிற்கும் உயிர்த்தொடர் மொழிக் குற்றுகர ஈற்றிற்கும், வேற்றுமையாயின்---வேற்றுமைப் பொருட்புணர்ச்சியாயின், இன ஒற்று இடை மிக---இனமாகிய ஒற்று இடையிலே மிக, வல்லெழுத்து மிகுதி தோற்றம் வேண்டும்---வல்லெழுத்து மிகுதி தோன்றி முடிதலை விரும்பும் ஆசிரியன்; எ-று.
எ-டு: யாட்டுக்கால் செவி தலை புறம் எனவும், முயிற்றுக்கால் சினைதலை புறம் எனவும் வரும். கயிற்றுப் புறம் வயிற்றுத்தீ என்பனவுமாம்.
தோற்றம் என்றதனான் ஏனைக்கணத்தும் இம்முடிபு கொள்க. யாட்டு ஞாற்சி நிணம் மணி வால் அதள் எனவும், முயிற்றுஞாற்சி நிணம் முட்டைவலிமை அடை ஆட்டம் எனவும் வரும். (6)
------------
அதற்கு, வேறு முடிபு
412. ஒற்றிடை இனமிகா மொழியுமா ருளவே
அத்திறத் தில்லை வல்லெழுத்து மிகலே.
இஃது எய்தியது ஒருமருங்கு மறுக்கின்றது.
இ-ள்: ஒற்று இடை இனம் மிகா மொழியுமாருள—முற் கூறிய இரண்டனுள் இனவொற்று இடைமிக்கு முடியாத மொழி களும் உள, வல்லெழுத்து மிகல் அத்திறத்தில்லை—வல்லொற்று மிக்குமுடிதல் அக்கூற்றுளில்லை; எ-று.
எ-டு: நாகுகால் செவி தலை புறம் எனவும், வரகு கதிர் சினை தாள்
பதர் எனவும் வரும்.
அத்திறமென்றதனான் உருபிற்கு எய்திய சாரியை பொருட்கட் சென்ற வழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க. யாட்டின்கால் முயிற்றின்கால் நாகின்கால் வரகிங்கதிர் என வரும்.
அத்திறமென்றதனான் ஏனைக்கணத்தும் ஒற்றிடை மிகாமை கொள்க. நாகுஞாற்சி நீட்சி மாட்சி வலிமை என ஒட்டுக. (7)
-----------
இடைத்தொடர் ஆய்தத்தொடர்
413. இடையொற்றுத் தொடரும் ஆய்தத் தொடரும்
நடைஆ இயல என்மனார் புலவர்.
இஃது இடைநின்ற இரண்டற்கும் முடிபு கூறுகின்றது.
இ - ள்: இடையொற்றுத் தொடரும் ஆய்தத்தொடரும் - இடையொற்றுத் தொடர்மொழிக் குற்றுகர ஈறும் ஆய்தத் தொடர்மொழிக் குற்றுகர ஈறும், நடை ஆ இயல என்மனார் புலவர் - நடைபெற நடக்குமிடத்து முற்கூறிய அவ்வியல்பு முடிபினையுடைய என்று கூறுவர் புலவர்; எ - று.
எ - டு: தெள்குகால் சிறை தலை புறம் எனவும், எஃகுகடுமை சிறுமை தீமை பெருமை எனவும் வரும். (8)
--------
வன்றொடர், மென்றொடர்
414. வன்றொடர் மொழியும் மென்றொடர் மொழியும்
வந்த வல்லெழுத் தொற்றிடை மிகுமே
மெல்லொற்றுத் தொடர்மொழி மெல்லொற் றெல்லாம் வல்லொற் றிறுதி கிளையொற் றாகும்.
இது பின்னின்ற இரண்டிற்கும் முடிபு கூறுகின்றது.
இ - ள்: வன்றொடர் மொழியும் மென்றொடர் மொழியும் - வன்றொடர்மொழிக் குற்றுகர ஈறும் மென்றொடர் மொழிக் குற்றுகர ஈறும், வந்த வல்லெழுத்து ஒற்று இடை மிகும் - வருமொழியாய் வந்த வல்லெழுத்தினது ஒற்று இடையிலே மிக்கு முடியும், மெல்லொற்றுத் தொடர்மொழி மெல்லொற்றெல்லாம் - அவ்விரண்டனுள் மெல்லொற்றுத் தொடர்மொழிக்கண் நின்ற மெல்லொற்றெல்லாம், இறுதி வல்லொற்று - இறுதிக்கணின்ற வல்லொற்றும், கிளை ஒற்று ஆகும் - கிளையாகிய வல்லொற்றுமாய் முடியும்; எ - று.
இறுதி வல்லொற்று வருதலாவது குற்றுகரம் ஏறிநின்ற வல்லொற்றுத்தானே முன்னர்வந்து நிற்றலாம். கிளைவல்லொற்று வருதலாவது ணகாரத்திற்கு டகாரமும் னகாரத்திற்கு றகாரமும் புணர்ச்சியும் பிறப்பும் நோக்கிக் கிளையாமாதலின், அவை முன்னர் வந்து நிற்றலாம்.
எ - டு: கொக்குக்கால் சிறகு தலை புறம், குரங்குக்கால் செவி தலை புறம், குரக்குக்கால் செவி தலி புறம், எட்குக்குட்டி செவி தலை புறம், எற்புக்காடு சுரம், தலை புறம் என வரும்.1 அற்புத்தளை என்பது அன்பினாற் செய்த தளையென வேற்றுமையும் அன்பாகிய தளையென அல்வழியுமாம்.
வந்த என்றதனான் இவ்விரண்டிற்கும் உருபிற்குச் சென்ற சாரியை பொருட்கட் சென்றவழி இயைபு வல்லெழுத்து வீழ்க்க. கொக்கின்கால் குரங்கின்கால் என வரும்.
எல்லாமென்றதனாற் பறம்பிற்பாரி குறும்பிற்சான்றார் என மெல்லொற்றுத் திரியாமையுங் கொள்க.
----------
1. கொக்குக்கால் - வன்றொடர்க் குற்றியலுகரம் வந்த வல்லெழுத்து மிக்குமுடிந்தது. குரங்குக்கால் - மென்றொடர்க் குற்றியலுகரம் வந்த வல்லெழுத்து மிக்குமுடிந்தது. குரக்குக்கால் - மென்றொடரின் இடையில் நின்ற மெல்லொற்று இறுதி வல்லொற்றாய்த் திரிந்தது. எட்டுக்குட்டி - மென்றொடரின் இடையில் நின்ற மெல்லொற்று இன வல்லொற்றாய்த் திரிந்தது.
ஒற்றென்ற மிகுதியான் இயல்புகணத்துக்கண்ணும் குரக்குஞாற்சி நிணம் முகம் விரல் உகிர் என மெல்லொற்றுத் திரிந்துவருமாறு கொள்க. சிலப்பதிகாரமென்பதும் அது.
வன்றொடர்மொழி இயல்புகணத்துக்கண் வருதல் 'ஞநமயவ' (எழு - 144) எனபதனான் முடியும். (9)
---------
மரப்பெயர்
415. மரப்பெயர்க் கிளவிக் கம்மே சாரியை.
இஃது எய்தியது விலக்கிப் பிறிதுவிதி கூறுகின்றது, அம்மு வகுத்தலின்.
இ - ள்: மரப்பெயர்க் கிளவிக்கு அம்மே சாரியை – குற்றிய லுகர ஈற்று மரப்பெயர்க்கு வருஞ் சாரியை அம்முச்சாரியை; எ - று.
எ - டு: தேக்கங்கோடு செதிள் தோல் பூ என வரும்.
கமுகங்காய் தெங்கங்காய் சீழ்கம்புல் கம்பம்புல் பயற்றங்காய் என்றாற் போலும் புல்லினையும் மரமென அடக்கி மாறுகொளக் கூறலெனத் தழீஇக் கொண்ட சிதைவென்பதாம் இச் சூத்திரமென்று உணர்க. (10)
---------------
அதற்கு, மேலும் ஒரு முடிபு
416. மெல்லொற்று வலியா மரப்பெயரு முளவே.
இது மென்றொடர்மொழிக்கு எய்தியது ஒருமருங்கு மறுக்கின்றது.
இ - ள்: மெல்லொற்று வலியா மரப்பெயரும் உள -
மெல்லொற்று வல்லொற்றாகத் திரியாது மெல்லொற்றாய் முடியும்
மரப்பெயரும் உள; எ - று.
எ - டு: புன்கங்கோடு செதிள் தோல் பூ எனவும், குருந்தங்கோடு செதிள்
தோல் பூ எனவும் வரும்.
வலியா மரப்பெயருமுள எனவே வலிக்கும் மரப்பெயரும் உளவென்று கொள்க. வேப்பங்கோடு கடப்பங்காய் ஈச்சங்குலை என வரும். (11)
-------
நெடிற்றொடர், வன்றொடர்
417. ஈரெழுத்து மொழியும் வல்லொற்றுத் தொடரும்
அம்மிடை வரற்கு முரியவை உளவே
அம்மர பொழுகும் மொழிவயி னான.
இஃது ஈரெழுத் தொருமொழிக்கும் வன்றொடர் மொழிக்கும் எய்தாத தெய்துவித்தது, முன்னர் எய்தியதனை விலக்கி அம்மு வகுத்தலின்.
இ - ள்: ஈரெழுத்து மொழியும் வல்லொற்றுத் தொடரும் - ஈரெழுத்தொருமொழிக் குற்றியலுகரமும் வன்றொடர்மொழிக் குற்றியலுகரமும், அம் இடை வரற்கும் உரியவை உள - முன் முடித்துப்போந்த முடிபுகளன்றி அம்முச்சாரியை இடையேவந்து முடிதற்கு உரியனவும் உள; யாண்டெனின், அம் மரபு ஒழுகும்.
மொழிவயினான-அவ்விலக்கணம் நடக்கும் மொழியிடத்து; எ-று
எ-டு: ஏறங்கோள் சூதம்போர் வட்டம்போர் புற்றம்பழஞ்சோறு என வரும்,.
உம்மை எதிர்மறையாதலின், அம்முப்பெறாதன நாகுகால் கொக்குக்கால் என முன்னர்க் காட்டினவேயாம்.
அம்மரபொழுகும் என்றதனால் அரசக்கன்னி முரசக் கடிப்பு என அக்கும் வல்லெழுத்துங் கொடுத்தும் அரசவாழ்க்கை முரசவாழ்க்கை என அக்குக்கொடுத்தும் முடிக்க1.
இன்னும் அதனானே இருட்டத்துக்கொண்டான் விளக்கத்துக்கொண்டான் என அத்தும் வல்லெழுத்துங் கொடுத்தும் மயிலாப்பிற்கொற்றன் பறம் பிற்பாரி என இன் கொடுத்துங் கரியதன்கோடு நெடியதன்கோடு என அன்கொடுத்தும் முடிக்க. (12)
------------
சில மென்றொடர் மொழிகள்
418. ஒற்றுநிலை திரியா தக்கொடு வரூஉம்
அக்கிளை மொழியு முளவென மொழிப.
இது மென்றொடர்மொழியுட் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுக்கின்றது.
இ-ள்: ஒற்று நிலை திரியாது அக்கோடு வரூஉம்-ஒற்று முன்னின்ற நிலைதிரியாது அக்குச்சாரியையோடும் பிற சாரியையோடும் வரும், அக்கிளை மொழியும் உள என மொழிப-அக்கிளையான சொற்களும் உள என்று சொல்லுவர் ஆசிரியர்; எ-று
இதற்கு உம்மையை முன்னர் மாறுக.
எ-டு: குன்றக்கூகை மன்றப்பெண்ணை என வரும். உம்மையாற் கொங்கத்துழவு வங்கத்துவாணிகம் என அத்தும் பெற்றன.
நிலையென்றதனான் ஒற்று நிலைதிரியா அதிகாரத்துக்கண் வருஞ் சாரியைக்கு இயைபு வல்லெழுத்து வீழ்க்க. அக்கிளை யென்றார், இரண்டு சாரியை தொடர்ந்து முடிவனவும் உளவென்றற்கு. பார்ப்பனக்குழவி சேரி தோட்டம் பிள்ளை என அன்னும் அக்கும் வந்தன. இவற்றிற்கு உடைமை விரிக்க. பார்ப்பினுட்குழவி என்றுமாம். பார்ப்பானாகிய குழவி என்றால் ஈண்டு முடியாதென்று உணர்க1. பார்ப்பனமகன் பார்ப்பனவனிதை என்பனவும் பார்ப்பான்சாதி உணர்த்தின.
--------
1 அரசக்கன்னி அரசவாழ்க்கை முதலிய தொடர்களின் இடையில் வந்துள்ளது அக்குச்சாரியை என்பதைவிட அகரச் சாரியை என்பதே பொருத்தமாம்.
---------
எண்ணுப்பெயர்
419. எண்ணுப்பெயர்க் கிளவி உருபியல் நிலையும்
இது குற்றுகர ஈற்று எண்ணுப்பெயரொடு பொருட் பெயர் முடிக்கின்றது.
1 இவ்வியல் குற்றியலுகரப் புணரியலாதலால், பார்ப்பு என்னுஞ் சொல்லன்றிப் பார்ப்பான் என்னுஞ்சொல் இங்கு
நிலைமொழியாகாது என்பது கருத்து.
இ-ள்: எண்ணுப்பெயர்க் கிளவி-எண்ணுப்பெயராகிய சொற்கள் பொருட்பெயரோடு புணருமிடத்து, உருபியல் நிலையும்-உருபுபுணர்ச்சியின் இயல்பின்கண்ணே நின்று அன்பெற்றுப் புணரும்; எ-று
எ-டு: ஒன்றன்காயம் இரண்டன்காயம் சுக்கு தோரை பயறு என ஒட்டுக. ஒன்றனாற்கொண்டள காயமென விரியும். வருமொழி வரையாது கூறினமையின், இயல்பு கணத்துக்கண்ணுங் கொள்க. ஒன்றன் ஞாண் நூல் மணி யாழ் வட்டு அடை என வரும். மேலைச் சூத்திரத்து "நிலை" (எழு- 418) என்றதனான் இயைபு வல்லெழுத்து வீழ்க்க. (14)
-------------
9.4. குற்றுகரச் சிறப்புப் புணர்ச்சி
"வண்டு" "பெண்டு" என்னுஞ் சொற்கள்
420. வண்டும் பெண்டும் இன்னொடு சிவணும்.
இது மென்றொடர் மொழியுட் சிலவற்றிற்குப் பிற முடிபு கூறுகின்றது.
இ-ள்: வண்டும் பெண்டும் இன்னொடு சிவணும்-வண்டென்னுஞ் சொல்லும் பெண்டென்னுஞ் சொல்லும் இன்சாரியையொடு பொருந்தி முடியும்; எ-று
எ-டு: வண்டின்கால் பெண்டின்கால் என வரும். இதற்குமுற்கூறிய இலேசினான் வலலெழுத்து வீழ்க்க. (15)
--------
"பெண்டு" என்னுஞ் சொல்லுக்கு மேலும் ஒரு முடிபு.
421. பெண்டென் கிளவிக் கன்னும் வரையார்,
இது மேற்கூறியவற்றுள் ஒன்றற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது.
இ-ள்: பெண்டு என் கிளவிக்கு அன்னும் வரையார் -- பெண்டென்னுஞ் சொற்கு இன்னேயன்றி அன்சாரியை வருதலையும் நீக்கார் ஆசிரியர்; எ-று
எ-டு: பெண்டன்கை செவி தலை புறம் என வரும் (16)
-------------
வினாப்பெயர், சுட்டுப்பெயர்.
422. யாதென் இறுதியுஞ் சுட்டுமுத லாகிய
ஆய்த இறுதியும் உருபியல் நிலையும்.
இஃது ஈரெழுத்தொருமொழிக் குற்றியலுகரத்துள் ஒன்றற்குஞ் சுட்டு முதலாகிய ஆய்தத் தொடர்மொழிக் குற்றியலுகரத்திற்கும் வேறு முடிபு
கூறுகின்றது.
இ-ள்: யாது என் இறுதியுஞ் சுட்டு முதலாகிய ஆய்த இறுதியும்-யாதென்னும் ஈறுஞ் சுட்டெழுத்து முதலாகிய ஆய்தத்தொடர்மொழிக் குற்றியலுகர ஈறும், உருபியல் நிலை
யும்-உருபு புணர்ச்சியின் இயல்பின்கண்ணே நின்று அன்பெற்
றுச் சுட்டுமுதலிறுதி ஆய்தங்கெட்டு முடியும்; எ-று
எ-டு: யாதன்கோடு அதன்கோடு இதன்கோடு உதன்கோடு செவிதலை புறம் என வரும். ஆய்தங்கெடாமுன்னே அன்னின் அகரத்தைக் குற்றுகரத்தின் மேல் ஏற்றுக, ஆய்தங்கெட்டால் அது முற்றுகரமாய் நிற்றலின். (17)
---------------
அல்வழியிற் சுட்டுப் பெயர்
423. முன்உயிர் வருமிடத் தாய்தப் புள்ளி
மன்னல் வேண்டும் அல்வழி யான.
இது முற்கூறியவற்றுட் சுட்டுமுதலுகரத்திற்கு ஒருவழி அல்வழிமுடிப கூறுகின்றது.
இ-ள்: முன்னுயிர் வருமிடத்து-சுட்டுமுதலாகிய ஆய்தத் தொடர்மொழிக் குற்றுகர ஈற்றின்முன்னே உயிர்முதன் மொழி வருமிடத்து, ஆய்தப்புள்ளி மன்னல் வேண்டும்-ஆய்தவொற்று முன்போலக் கெடாது நிலைபெற்று முடிதலை விரும்பும் ஆசிரியன்; அல்வழியான -அல்வழிக்கண் ; எ-று
எ-டு: அஃது இஃது உஃது என நிறுத்தி அடை ஆடை இலை ஈயம் உரல் ஊர்தி எழு ஏணி ஐயம் ஒடுக்கம் ஓக்கம் ஔவியம் என ஒட்டுக.
முன்னென்றதனான் வேற்றுமைக்கண்ணும் இவ் விதி கொள்க. அஃ தடைவு அஃதொட்டம்1 என ஒட்டுக. இவற்றிற்கு இரண்டாமுருபு விரிக்க. இன்னும்இதனானே ஏனை இலக்கணம் முடியுமாறு அறிந்து முடிக்க. (18)
---------
1 அஃதொட்டம்-அதனை யொட்டுதல்
-------------
அல்வழியில் அதற்கு மேலும் ஒரு முடிபு.
424. ஏனைமுன் வரினே தானிலை இன்றே
இது மேலவற்றிற்குப் பிறகணத்தோடு அல்வழி முடிபு கூறுகின்றது.
இ-ள்: ஏனை முன் வரின்-முற்கூறிய ஈறுகளின் முன்னர் உயிர்க்கணமல்லன வருமாயின், தான் நிலையின்று-அவ்வாய்தங் கெட்டு முடியும்; எ-று
எ-டு: அதுகடிது இதுகடிது உதுகடிது சிறிது தீது பெரிது ஞான்றது நீண்டது மாண்டது யாது வலிது என ஒட்டுக. (19)
----------
பொதுவாக அல்வழியிற் குற்றிகர ஈறுகள்
425. அல்லது கிளப்பின் எல்லா மொழியுஞ்
சொல்லிய பண்பின் இயற்கை யாகும்.
இஃது ஆறு ஈற்றுக் குற்றுகரத்திற்கும் அல்வழி முடிபு கூறுகின்றது.
இ-ள்: அல்லது கிளப்பின்-அல்வழியைச் சொல்லுமிடத்து, எல்லாமொழியும் -ஆறு ஈற்றுக் குற்றுகரமும்,சொல்லிய பண்பின் இயற்கையாகும்-மேல் ஆசிரியன் கூறிய குணத்தையுடைய இயல்பாய் முடியும்; எ-று.
எ-டு: நாகுகடிது வரகுகடிது தென்குகடிது எஃகுகடிது குரங்குகடிது சிறிது தீது பெரிது என வரும். ஏனைக் கணத்துக்கண் "நின்றசொன்முனியல்பாகும்" (எழு-144) என்றதனாற் கொள்க.
எல்லாமொழியும் என்றதனால் வினைச்சொல்லும் வினைக்குறிப்புச் சொல்லும் இயல்பாய்முடிதல் கொள்க. கிடந்ததுகுதிரை கரிதுகுதிரை என வரும்.
சொல்லிய என்றதனான் இருபெயரொட்டுப்பண்புத்தொகை வன்கணத்துக்கண் இனவொற்றுமிக்கு வல்லெழுத்துப்பெற்று முடிதலும் இயல்புகணத்துக்கண் இனவொறறுமிக்கு முடிதலுங் கொள்க. கரட்டுக்காணம் குருட்டுக் கோழி திருட்டுப் புலையன் களிற்றுப்பன்றி வெளிற்றுப்பனை எயிற்றுப்பல் எனவும், வரட்டாடு குருட்டெருது எனவும் வரும்.
பண்பினென்றதனால் மெல்லொற்று வல்லொற்றாய் ஐகாரம் பெற்று முடிவனவும், மெல்லொற்று வல்லொற்றாய் ஐகாரமும் வல்லெழுத்தும் பெற்று முடிவனவும், மெல்லொற்று வல்லொற்றாகாது ஐகாரமும் வல்லெழுத்தும் பெற்றுமுடிவனவுங் கொள்க. ஓர்யாட்டையானை ஐயாட்டையெருது எனவும், அற்றைக்கூத்தர் இற்றைக்கூத்தர் எனவும், மன்றைத்தூதை மன்றைப்பானை பண்டைச்சான்றோர் எனவும் வரும். (20)
----------------
வன்றொடர்
426. வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து மிகுமே.
இஃது அவ்வாறு ஈற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிது வகுத்தது,
இ-ள்: வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து மிகும் -வல்லொற்றுத் தொடர்மொழிக் குற்றுகர ஈறு வல்லெழுத்து வருவழி வல்லெழுத்து மிக்கு முடியும்; எ-று.
எ-டு: கொக்குக்கடிது பாக்குக்கடிது பட்டுக்கடிது சிறிது தீது பெரிது என வரும். (21)
"ஆங்கு" "யாங்கு" முதலிய மென்றொடர் மொழிகள்
-------------
427. சுட்டுச்சினை நீடிய மென்றொடர் மொழியும்
யாவினா முதலிய மென்டொடர் மொழியும்
ஆயியல் திரியா வல்லெழுத் தியற்கை.
இதவும் அவ் ஆறு ஈற்றுள் ஒன்றன்கண் ஏழாம் வேற்றுமை இடப்பொருள் உணரநின்ற இடைச்சொற்கு முடிபுகூறுகின்றது.
இ-ள்: சுட்டுச் சினை நீடிய மென்றொடர் மொழியும்- சுட்டாகிய சினையெழுத்து நீண்ட மென்றொடர்க் குற்றுகர ஈறும், யாவினா முதலிய மென்றொடர் மொழியும்-யாவென்னும் வினா முதலாகிய மென்றொடர்மொழிக் குற்றுகர ஈறும், வல்லெழுத்தியற்கை ஆ இயல் திரியா-வல்லெழுத்துப்பெற்று முடியுந்தன்மையாகிய அவ் வியல்பிற் றிரியாது முடியும்; எ-று.
எ-டு: ஆங்குக்கொண்டான் ஈங்குக்கொண்டான் ஊங்குக்கொண்டான் யாங்குக் கொண்டான் சென்றான் தந்தான் போயினான் என வரும்.
இயற்கையென்றதனான் மென்றொடர்மொழிக் குற்றியலுகர ஈற்று வினையெச்சம் இயல்பாயும் வன்றொடர்மொழிக் குற்றியலுகர ஈற்று வினையெச்சம் மிக்கும் முடிவன கொள்க. இருந்து கொண்டான் ஆண்டு சென்றான் தந்து தீர்ந்தான் வந்து போயினான் எனவும், செத்துக்கிடந்தான் செற்றுச்செய்தான் உய்த்துக்கொண்டான் நட்டுப்போனான் எனவும் வரும். (22)
-------------
யாங்கு என்பதற்கு மேலும் ஒரு முடிபு.
428. யாவினா மொழியே இயல்பு மாகும்.
இது மேலனவற்றுள் ஒன்றற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது. வல்லழுத்துவிலக்கி இயல்பா மென்றலின்.
இ-ள்: யாவினா மொழியே இயல்புமாகும்-அவற்றுள் யாவென்னும் வினாவையுடைய சொல் முற்கூறியவாறன்றி இயல்பாயும் முடியும்; எ-று.
எ-டு: யாங்குகொண்டான் சென்றான் தந்தான் போயினான் என வரும். இஃது எப்படியென்னும் வினாப்பொருளை உணர்த்திற்று. உண்மையான் மிக்குமுடிதலே வலியுடைத்து. ஏகாரம் பிரிநிலை. (23)
--------
அவற்றிற்கு நிலைமொழிச் செய்கை
429. அந்நான் மொழியந் தந்நிலை திரியா
இது மேலனவற்றிற்கு நிலைமொழிச் செய்கை கூறுகின்றது.
இ-ள்: அந்நான்மொழியும்-சுட்டு முதன் மூன்றும் யாமு தன் மொழியுமாகிய அந்நான்கு மொழியும், தம் நிலை திரியா- தம் மெல்லொற்றாய தன்மை திரிந்து வல்லொற்றாகாது முடியும்; எ-று.
எ-டு: முற்காட்டியவே. தந்நிலை யென்றதனான் மெகல்லொற்றுத் திரியாது வல்லெழுத்து மிக்குமுடிவன பிறவுங் கொள்க. அங்குக்கொண்டான் இங்குக்கொண்டான் உங்குக்கொண்டான் எங்குக்கொண்டான் சென்றான் தந்தான் போயினான் என வரும்.
இனி முன்னர் யா மொழியென்னாது வினாவென்றதனான் ஏழாவதன் இடப்பொருட்டாகிய பிறவும் இயல்பாய் முடிவனவுங் கொள்க. முந்து கொண்டான் பண்டுகொண்டான் இன்றுகொண்டான் அன்றுகொண்டான் என்றுகொண்டான் என வரும். (24)
----------
"உண்டு" என்னுஞ் சொல்
430. உண்டென் கிளவி உண்மை செப்பின்
முந்தை இறுதி மெய்யொடுங் கெடுதலும்
மேனிலை யொற்றே ளகார மாதலும்
ஆமுறை யிரண்டும் உரிமையு முடைத்தே
வல்லெழுத்து வரூஉங் காலை யான.
இது மென்றொடர் மொழியுள் வினைக்குறிப்பாய் நின்றதோர் சொற்பண்பை உணர்த்துங்கால் வேறுமுடிபு பெறுதல் கூறுகின்றது.
இ-ள்: உண்டென்கிளவி உண்மை செப்பின்-உண்டென்னுஞ் சொல் வினைக்குறிப்பை யுணர்த்தாது ஒரு பொருள் தோன்றுங்கால் தோன்றி அது கெடுந்துணையும் உண்டாய்நிற்கின்ற தன்மையாகிய பண்பை உணர்த்திநிற்குமாயின், முந்தை இறுதி மெய்யொடுங் கெடுதலும்-முன்னர் நின்ற குற்றுகரம்தான் ஏறி நின்ற மெய்யொடுங் கெடுதலும், மேனிலை ஒற்றே ளகாரமாதலும்- அதற்கு மேல் நின்ற ணகார ஒற்று ளகார ஒற்றாதலுமாகிய, ஆ முறை இரண்டும் உரிமையும் உடைத்து-அம்முறை யினையுடைய இரண்டு நிலையும் உரித்து அஃது உரித்தன்றி முன்னர் நின்ற நிலையிலே கேடுந் திரியும் இன்றி நிற்றலும் உடைத்து, வல்லெழுத்து வரூஉங் காலை யான-வல்லெழுத்து முதன்மொழியாய் வருங்காலத்து; எ-று.
வல்லெழுத்து அதிகாரத்தால் வாராநிற்ப வல்லெழுத்து வரூஉங்காலை என்றதனான் அவ்விருமுடிபும் உளது பண்பை யுணர்த்தும் பகரம் வரும் மொழிக்கண்ணே யென்பதூஉம் ஏனைக் கசதங்களிலும் இயல்புகணத்தினும் உண்டென நின்று வினைக்குறிப்பாயுஞ் சிறுபான்மை பண்பாயும் நிற்கு மென்பதூஉங் கொள்க.
எ-டு: உள்பொருள் உண்டுபொருள் என வரும். இது பொருண்மை சுட்டாது உண்மைத் தன்மைப் பண்பை ஈண்டு உணர்த்திற்று. இனி உண்டு காணம் உண்டுசாக்காடு உண்டுதாமரை உண்டுஞானம் நூல் மணி யாழ் வட்டு அடை ஆடை என வருவனவெல்லாங் கேடுந் திரிபுமின்றி வினைக்குறிப்பாயுஞ் சிறுபான்மை பண்பாயும் நின்றன. இவற்றின் வேறுபாடு வினையியலுள் வினைக்குறிப்பு ஓதும் வழி உணர்க.
உள்பொருளென்பது பண்புத்தொகை முடிபன்றோ வெனின், அஃது ஓசை ஒற்றுமைபடச் சொல்லும் வழியது போலும். இஃது ஓசை இடையறவுபடச் சொல்லும் வழிய தென்க. (25)
----------
திசைப்பெயர்
431. இருதிசை புணரின் ஏயிடை வருமே.
இது குற்றுகர ஈற்றுத் திசைப்பெயர்க்கு அல்வழி முடிபு கூறுகின்றது.
இ-ள்: இரு திசை புணரின்-இரண்டு பெருந்திசையுந் தம்மிற் புணரின், ஏ இடை வரும்-ஏயென்னுஞ் சாரியை இடை நின்று புணரும்; எ-று.
எ-டு: தெற்கேவடக்கு கிழக்கேமேற்கு இவை உம்மைத் தொகை. (26)
-------------
திசைப்பெயர் முன் திசைப்பெயர்
432. திரிபுவேறு கிளப்பின் ஒற்று முகரமுங்
கெடுதல் வேண்டும் என்மனார் புலவர்
ஒற்றுமெய் திரிந்து னகார மாகும்
தெற்கொடு புணருங் காலை யான.
இது பெருந்திசைகளோடு கோணத்திசைகள் புணர்ததலின் எய்தாத தெய்துவித்தது.
இ-ள்: திரிபுவேறு கிளப்பின்-அப்பெருந் திசைகளோடு கோணத் திசைகளை வேறாகப் புணர்க்கு மிடத்து, ஒற்றும் உகரமுங் கெடுதல் வேண்டும் என்மனார் புலவர்-அவ்வுகரம் ஏறி நின்ற ஒற்றும் அவ் வீற்று உகரமுங் கெட்டுமுடிதல் வேண்டுமென்று சொல்லுவர் புலவர். தெற்கொடு புணருங் காலை -அது தெற்கென்னந் திசையொடு புணருங் காலத்து, ஆன ஒற்று மெய் திரிந்து னகாரமாகும்-அத்திசைக்குப் பொருந்திநின்ற றகார ஒற்றுத் தன் வடிவு திரிந்து னகர ஒற்றாய் நிற்கும்; எ-று.
திரிந்தென்றதனான் வடக்கென்பதன்கண் நின்ற ககர ஒற்றுக்கெடுத்து முடித்துக் கொள்க.
எ-டு: வடகிழக்கு வடமேற்கு தென்கிழக்கு தென்மேற்கு எனவரும்.
வேறென்றதனால் திசைப்பெயரோடு பொருட்பெயர் வரினும் இம்முடிபு கொள்க. வடகடல் வடசுரம் வடவேங்கடம் தென்குமரி தென்சுரம் தென்னிலங்கை என வரும்.
மெய்யென்றதனான் உயிர் கெட்டுந் திரிந்தும் மெய் கெட்டும் முடிவனவும் உள. திசைப்பெயர்முன்னர்ப் பொருட்பெயர் வந்துழி யென்று உணர்க. கிழக்கு என்பது கரை கூரை என்பவற்றோடு புணருமிடத்துக் கீழ்கரை கீழ்கூரை என நிலைமொழியிறுதி உகரம் மெய்யொடுங் கெட்டு அதன்மேல்நின்ற ககர ஒற்றும் ழகரத்தில் அகரமுங் கெட்டு முதலெழுத்து நீண்டு முடிந்தன. மேற்கு, கரை கூரை, மீகரை மீகூரை என நிலைமொழி ஈற்று உகரம் மெய்யொடுங்கெட்டு அதன்மேல்நின்ற றகர ஒற்றுங் கெட்டு ஏகாரம் ஈகாரமாகி முடிந்தன. இன்னும் இதனானே மேன்மாடு மேல்பால் மேலைச்சேரி என்றாற் போல்வனவுஞ் செய்கையறிந்து முடிக்க. (27)
--------
9.5. குற்றுகர எண்ணுப் புணர்ச்சி
பத்தொடு எண்ணுப்பெயர்
433. ஒன்றுமுத லாக எட்ட னிறுதி
எல்லா வெண்ணும் பத்தன் முன்வரிற்
குற்றிய லுகரம் மெய்யொடுங் கெடுமே
முற்றஇன் வரூஉம் இரண்டலங் கடையே.
நிறுத்தமுறையானே ஆறு ஈற்றுக் குற்றுகரமும் புணருமாறு உணர்த்தி இனி அவ் வீற்று எண்ணுப்பெயர் முடிக்கின்றார்: இஃது அவற்றுட் பத்தென்னும் எண்ணுப்பெயரோடு எண்ணுப்பெயர்வந்து புணருமாறு கூறுகின்றது.
இ-ள்: ஒன்று முதலாக எட்டன் இறுதி எல்லா எண்ணும்- ஒன்றென்னும் எண் முதலாக எட்டென்னும் எண்ணீறாயுள்ள எல்லா எண்ணுப் பெயர்களும், பத்தன் முன் வரின்-பத்தென்னும் எண்ணுப் பெயரின் முன் வரின், குற்றியலுகரம் மெய்யொடுங் கெடும்-அப்பத்தென்னுஞ் சொல்லிற் குற்றுகரந் தான் ஏறி நின்ற மெய்யோடுங் கெடும், இரண்டலங்கடை முற்ற இன் வரூஉம்-ஆ்ண்டு இரண்டல்லாத எண்ணுப் பெயர்களிடத்து முடிய இன்சாரியை இடைவந்து புணரும்; எ-று.
எ-டு: பதினொன்று பதின்மூன்று பதினான்கு பதினாறு பதினேழு பதினெட்டு என வரும்.
நிலைமொழி முற்கூறாததனாற் பிறவெண்ணின் முன்னர்ப் பிறபெயர் வந்துழியும, இன்பெறுதல் கொள்க. ஒன்பதின்கூறு ஒன்பதின்பால் என வரும். முற்றவென்றதனாற் பதினான்கென்புழி வந்த இன்னின் னகரம் வருமொழிக்கட் கருவிசெய்து கெடுத்து முடிக்க. (28)
------------
பத்தின் முன் இரண்டு
434. பத்தனொற் றுக்கெட னகாரம் இரட்டல்
ஒத்த தென்ப இரண்டுவரு காலை.
இது மேல் இன்பெறாதென்று விலக்கிய இரண்டற்குப் பிறிதுவிதி கூறுகின்றது.
இ-ள்: பத்தன் ஒற்றுக் கெட னகாரம் இரட்டல்-பத்தென்னுஞ் சொல்லின் நின்ற தகர ஒற்றுக்கெட னகர ஒற்று இரட்டித்து வருதல், இரண்டு வருகாலை ஒத்ததென்ப- இரண்டென்னுமெண் வருங்காலத்திற் பொருந்திற் றென்பர் ஆசிரியர்: எ-று.
எ-டு: பன்னிரண்டு என வரும்.
"குற்றியலுகர மெய்யொடுங்கெடும்" (எழு-433) என்ற விதி இதற்கும் மேலனவற்றிற்குங் கொள்க. (29)
-----------
பத்தின் முன் ஆயிரம்
435. ஆயிரம் வரினும் ஆயியல் திரியாது.
இஃது ஆயிரமென்னும் எண்ணுப்பெயர்வரின் வரும் முடிபு கூறு கின்றது.
இ-ள்: ஆயிரம் வரினும் ஆயியல் திரியாது-முற்கூறிய பத்தன் முன்னர் ஒன்று முதலியனவேயன்றி ஆயிரமென்னுமெண் வந்தாலும் ஈறுகெட்டு இன்பெற்று முடியும் இயல்பில் திரியாது; எ-று.
எ-டு: பதினாயிரம் என வரும்.
உம்மை இறந்தது தழீஇயற்று. (30)
-----------
பத்தின்முன் நிறை அளவுப் பெயர்கள்
436. நிறையு மளவும் வரூஉங் காலையுங்
குறையா தாகும் இன்னென் சாரியை.
இஃது எண்ணுப்பெயரோடு நிறைப்பெயரும் அளவுப்பெயரும் புணர்கின்ற புணர்ச்சி கூறுகின்றது.
இ-ள்: நிறையும் அளவும் வரூஉங் காலையும்-முற்கூறிய பத்தென்பதன் முன்னர் நிறைப்பெயரும் அளவுப்பெயரும் வருங்காலத்தும், இன்னென் சாரியை குறையாதாகும்-அவ்வின்னென்னுஞ் சாரியை குறையாது வந்து முடியும்; எ-று.
எ-டு: பதின்கழஞ்சு தொடி பலம் எனவும், பதின்கலம் சாடி தூதை பானை நாழி மண்டை வட்டி எனவும், பதிற்றகல் பதிற்றுழக்கு எனவும் வரும்.
குறையாதாகு மென்றதனாற் பொருட்பெயரும் எண்ணுப்பெயரும் நிறைப்பெயரும் வந்துழியும் இன் கொடுத்து வேண்டுஞ்செய்கை செய்து முடிக்க. பதிற்று1 வேலி யாண்டு அடுக்கு முழம் எனவும், பதின்றிங்கள் எனவும், பதிற்றுத்தொடி எனவும் வரும். பதிற்றொன்று என்பதுபோல இரண்டுமுதற் பத்தளவும் ஒட்டுக.
இவ் வீற்றின் னகரம் றகரமாதல் 'அளவாகுமொழிமுதல்' (எழு-121) என்பதனுள் 'நிலைஇய' என்றதனால் முடிக்க. இவற்றிற்கு ஒற்றிரட்டுதலும் உகரம்வருதலும் வல்லெழுத்துப்பெறுதலும் 'ஒன்றுமுதலாக' (எழு-433) என்பதனுள் 'முற்ற' என்றதனாற் கொள்க. (31)
-----------
1 பதிற்று என்பதில் இற்று சாரியை என்பர் பவணந்தியார்.
2. ஒன்பான் என்பது ஒன்பது என்பதன் மறுவடிவம். இஃது இன்று குறிக்கும் 9 என்னும் எண்ணுக்கு முதலாவது வழங்கின பெயர் கொண்டு என்பது.
----------
எண்ணுப் பெயரொடு பத்து
437. ஒன்றுமுத லொன்பான்2 இறுதி முன்னர்
நின்ற பத்த னொற்றுக்கெட ஆய்தம்
வந்திடை நிலையும் இயற்கைத் தென்ப
கூறிய இயற்கை குற்றிய லுகரம்
ஆற னிறுதி அல்வழி யான.
இஃது எண்ணுப்பெயரோடு பத்தென்னும் எண்ணுப் பெயர்க்கு முடிபு கூறுகின்றது.
இ-ள்: ஒன்றுமுதல் ஒன்பான் இறுதிமுன்னர்-ஒன்று முதல் ஒன்பது ஈறாகக் கூறுகின்ற எண்ணுப் பெயர்களின் முன்னர், நின்ற பத்தன் ஒற்றுக்கெட-வருமொழியாக வந்து நின்ற பத்தென்னுஞ் சொல்லினது தகர ஒற்றுக் கெட, ஆய்தம் வந்து இடை நிலையும் இயற்கைத் தென்ப-ஆய்தமானது வந்து இடையே நிலைபெறும் இயல்பை யுடைத்தென்று கூறுவர் ஆசிரியர, ஆறன் இறுதி அல்வழியான-அவற்றுள் ஆறென்னும் ஈறல்லாத விடத்து, குற்றியலுகரங் கூறிய இயற்கை-குற்றியலுகரம் முற்கூறிய இயற்கையாய் மெய்யொடுங்கெட்டு முடியும்; எ-று.
இங்ஙனம் வருமாறு மேற்சூத்திரங்களுட் காட்டுதும். வந்தென்றதனால் ஆய்தமாகத் திரியாது தகர ஒற்றுக்கெட்டு ஒருபது என்று நிற்றலுங்கொள்க. (32)
-----------
அதன்கண், ’ஒன்று’ இரண்டு என்னுஞ் சொற்கள்
438. முதலீ ரெண்ணினொற்று ரகர மாகும்
உகரம் வருத லாவயி னான.
இது மேற்கூறியவற்றிற் சிலவற்றிற்கு நிலைமொழிச்செய்கை கூறுகின்றது.
இ-ள்: முதலீ ரெண்ணி னொற்று ரகரம் ஆகும்-அவற்றின் முதற்கண் நின்ற இரண்டெண்ணினுடைய னகர ஒற்றும் ணகர ஒற்றும் ரகர ஒற்றாகத் திரிந்து நிற்கும், ஆவயினான உகரம் வருதல்-அவ்விடத்து உகரம் வருக; எ-று.
எ-டு: ஒருபஃது என வரும். ஒன்றென்பதன் ஈற்றுக் குற்றுகரம் மெய்யொடுங் கெடுத்து னகர ஒற்றினை ரகர ஒற்றாக்கி உகர மேற்றி ஒருவென நிறுத்தி நின்ற பத்தென்பதன் தகர ஒற்றுக் கெடுத்து ஆய்தமாக்கிப் பஃதென வருவித்து ஒருபஃது என முடிக்க. மேல் வருவனவற்றிற்குஞ் சூத்திரங்களாற் கூறுஞ் சிறப்புவிதி ஒழிந்தவற்றிற்கு இதுவே முடிபாகக் கொள்க. (33)
------------
’இரண்டு’ என்பதற்கும் மேலும் ஒரு முடிபு
439. இடைநிலை ரகரம் இரண்டென் எண்ணிற்கு
நடைமருங் கின்றே பொருள்வயி னான .
இதுவும் அது.
இ-ள்: இரண்டெ னெண்ணிற்கு இடைநிலை ரகரம்- இரண்டென்னு மெண்ணிற்கு இடைநின்ற ரகரம், பொருள்வயினான- அம்மொழி பொருள் பெறும் இடத்து, நடைமருங்கின்று -நடக்கும் இடமின்றிக் கெடும்; எ-று.
எ-டு: இருபஃது என வரும். இதற்கு ரகரவுயிர்மெய் இதனாற் கெடுத்து ஏனைய கூறியவாறே கூட்டிமுடிக்க.
பொருளெனவே எண்ணல்லாப் பெயருங் கொள்க. இருகடல் இருவினை இருபிறப்பு என வரும். (34)
---------------
’மூன்று’ ’ஆறு’
440. மூன்று மாறும் நெடுமுதல் குறுகும்.
இதுவும்அது.
இ-ள்: மூன்றும் ஆறும் நெடுமுதல் குறுகும்-மூன்றென்னு மெண்ணும் ஆறென்னு மெண்ணும் நெடுமுதல் குறுகி முடியும்; எ-று.
அறு எனக் குறுக்கிப் பஃது என வருவித்து அறுபஃது என முடிக்க. (35)
------------
மூன்று என்பதற்கு மேலும் ஒரு முடிபு.
441. மூன்ற னொற்றே பகார மாகும்.
இதுவும் அது.
இ-ள்: மூன்றன் ஒற்றே பகாரமாகும்-மூன்றென்னும் எண்ணின்கண் நின்ற னகர ஒற்றுப் பகர ஒற்றாய் முடியும்; எ-று.
எ-டு: முப்பஃது என வரும். (36)
---------
"நான்கு" என்னுஞ் சொல்
442. நான்க னொற்றே றகார மாகும்.
இதுவும் அது.
இ-ள்: நான்கன் ஒற்றே றகாரமாகும்-நான்கென்னும் எண்ணின்கண் நின்ற னகர ஒற்று றகர ஒற்றாய் முடியும்; எ-று.
எ-டு: நாற்பஃது என வரும். (37)
----------
"ஐந்து" என்னுஞ் சொல்
443. ஐந்த னொற்றே மகார மாகும்.
இதுவும் அது.
இ-ள்: ஐந்தனொற்றே மகாரமாகும்-ஐந்தென்னு மெண்ணின்கண் நின்ற நகர ஒற்று மகர ஒற்றாய் முடியும்; எ-று.
எ-டு: ஐம்பஃது என வரும்.
ஏழு குற்றியலுகர ஈறன்மை உருபியலுட் காண்க. (38)
---------
"எட்டு" என்னுஞ் சொல்
444. எட்ட னொற்றே ணகார மாகும்.
இதுவும் அது.
இ-ள்: எட்டனொற்றே ணகாரமாகும்-எட்டென்னு மெண்ணின்கண் நின்ற டகர ஒற்று ணகர ஒற்றாய் முடியும்; எ-று.
எ-டு: எண்பஃது என வரும். (39)
------------
"ஒன்பது" என்னுஞ் சொல்
445. ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும்
முந்தை யொற்றே ணகாரம் இரட்டும்
பஃதென் கிளவி ஆய்தபக ரங்கெட
நிற்றல் வேண்டும் ஊகாரக் கிளவி
ஒற்றிய தகரம் றகர மாகும்.
இஃது எய்தாத தெய்துவித்தது,.
இ-ள்: ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும்- ஒன்பது என நிறுத்திப் பஃது என வருவித்து முடிக்குங்கால், நிலைமொழியாகிய ஒன்பதென்னும் எண்ணினது ஒகரத்திற்கு முன்னாக ஒரு தகர ஒற்றுத் தோன்றி நிற்கும். முந்தை ஒற்றே ணகாரம் இரட்டும்-முன் சொன்ன ஓகாரத்திற்கு முன்னர் நின்ற னகர ஒற்று ணகர ஒற்றாய் இரட்டித்து நிற்கும், பஃதென் கிளவி ஆய்த பகரங்கெட-வருமொழியாகிய பஃதென்னுஞ் சொல் தன்கண் ஆய்தமும் பகரமுங் கெட்டுப்போக, ஊகாரக் கிளவி நிற்றல் வேண்டும்-நிலைமொழியியல் இரட்டிய ணகரத்தின் பின்னர் ஊகாரமாகிய எழுத்துவந்து நிற்றலை ஆசிரியன் விரும்பும்,ஒற்றிய தகரம் றகரமாகும்-வருமொழியாகிய பத்தென்பதன் ஈற்றின்மேலேறிய உகரங் கெடாது பிரிந்துநிற்ப ஒற்றாய் நின்ற தகரம் றகர ஒற்றாய் நிற்கும்; எ-று.
-------------
1 இந்நூற்பா ஒன்பது+பஃது = தொண்ணூறு என முடிக்கின்றது. இம்முடிபு எவ்வகையிலும் பொருந்தாத தொன்றாம். ஒன்பது என்னும் எண்ணுக்குப் பழம்பெயர் தொண்டு என்பது. "தொண்டு தலையிட்ட" (தொல். 1358) என்று ஆசிரியரும் "தொண்டுபடு திவவு" (மலைபடு, 21) என்று பெருங்குன்றூர்ப் பெருங் கௌசிகனாரும் கூறுதல் காண்க. தொண்டு என்னுஞ் சொல் தொல்காப்பியர் காலத்திலேயே வழக்கற்றுப் போய்விட்டது. அவர் காலத்திற்கு முன், தொண்டு தொண்பது தொண்ணூறு தொள்ளாயிரம் என்பன முறையே 9, 90, 900, 9000 என்னும் எண்களைக் குறிக்கும் பெயர்களாயிருந்தன. "தொண்டு" என்னும் ஒன்றாமிடப்பெயர் வழக்கறவே, தொண்பது என்னும் பத்தா மிடப்பெயர் ஒன்றாமிடத்திற்கும், தொண்ணூறு என்னும் நூறா மிடப்பெயர் பத்தா மிடத்திற்கும், தொள்ளாயிரம் என்னும் ஆயிரத்தா மிடப்பெயர் நூறா மிடத்திற்குமாக வழங்கத் தலைப்பட்டன.
தொண்பது என்னும் பெயர் முறையே தொன்பது ஒன்பது என மருவிற்று. ஆயிரத்தா மிடப்பெயர் நூறாமிடத்திற்கு வழங்கவே, 9000 என்னும் எண்ணைக் குறிக்க ஒன்பது என்னும் பெயருடன் ஆயிரம் என்னும் பெயரைச் சேர்க்க வேண்டியதாயிற்று. முதற் பத்து எண்ணுப் பெயர்களில் ஒன்பது என்பதைத் தவிர மற்றவையெல்லாம் ஒரு சொல்லா யிருப்பதையும், ஒன்பது என்பது இரு சொல்லாய்ப் பது(பத்து) என்று முடிவதையும் தொண்ணூறு என்பது நூறு என்றும் தொள்ளாயிரம் என்பது ஆயிரம் என்றும் முடிவதையும் நோக்குக. தொண்பது என்பதின் திரிபான ஒன்பது என்னும் சொல்லுக்குப் பொருந்தப் புகலும் முறைபற்றி, ஒன்று குறைந்த பத்து என்று பொருள் கூறுவா் சிலர். அதுவே அதன் பொருளாயின் தொண்ணூறு தொள்ளாயிரம் என்பவற்றிற்கும் அப்பொருள் ஏற்கவேண்டும். அங்ஙனம் ஏலாமையின் அது போலியுரையென மறுக்க, ஆகவே, தொண்டு+பத்து=தொண்பது, தொண்டு+நூறு =தொண்ணூறு, தொண்டு+ஆயிரம்=தொள்ளாயிரம் என்று புணர்ப்பதே முறையென்றும், தொண்டு என்னும் எண்ணுப்பெயர் வழக்கற்றதினால் அதன் மேலிடப் பெயர்கள் மூன்றும் ஒவ்வோரிடமாய்த் தாழ்ந்துவந்து வழங்கின என்றும் அறிந்துகொள்க.
எ-டு: தொண்ணூறு என வரும். இதனை ஒற்றாய் வந்துநின்ற தகர ஒற்றின்மெல் நிலைமொழி ஒகரத்தை ஏற்றித் தொவ்வாக்கி ணகர ஒற்று இரட்டி அதன்மேல் வருமொழிக்கட் பகரமும் ஆய்தமுங்கெட வந்த ஊகார மேற்றித் தொண்ணூவாக்கிப் பகரவாய்தமென்னாத முறையன்றிக் கூற்றினான் நிலைமொழிக்கட் பகரமும் ஆய்தமுங் கெடுத்துக் குற்றியலுகரம் மெய்யொடுங் கெடுத்து வருமொழி இறுதித் தகர ஒற்றுத் திரிந்துநின்ற றகர ஒற்றின்மேலே நின்ற உகரமேற்றித் தொண்ணூறென முடிக்க. (40)
-----------
அவ்வெண்ணுப் பெயர்கள் முன் அளவு நிறைப்பெயர்கள்
446. அளந்தறி கிளவியும் நிறையின் கிளவியுங்
கிளந்த இயல தோன்றுங் காலை.
இது மேற்கூறிய ஒன்றுமுதல் ஒன்பானெண்களோடு அளவுப்பெயரும் நிறைப்பெயரும் முடியுமாறு கூறுகின்றது.
இ-ள்: அளந்தறி கிளவியும் நிறையின் கிளவியுந் தோன்றுங் காலை-முற்கூறிய ஒன்றுமுதல் ஒன்பான்களின் முன்னர் அளந்தறியப்படும் அளவுப்பெயரும் நிறைப்பெயரும் வந்து தோன்றுங்காலத்து, கிளந்த இயல-ஆறன் ஈறு அல்வழிக் குற்றுகரம் மெய்யொடுங்கெட்டு முதலீரெண்ணினொற்று ரகரமாய் உகரம் வந்து இடைநிலை ரகரங்கெட்டு மூன்றும் ஆறும் நெடு முதல் குறுகி நான்கனொற்று வன்கணத்து றகரமாய் எட்டனொற்று ணகரமாய் முடியும்; எ-று.
எ-டு: ஒருகலம் இருகலம் சாடி தூதை பானை நாழி மண்டைவட்டி எனவும், ஒருகழஞ்சு இருகழஞ்சு கஃசு தொடி பலம் எனவும் வரும். அகல் உழக்கு என்பன முன்னர் முடித்தும். இவை முதலீரெண்ணின் செய்கை.
தோன்றுங்காலையென்றதனான் இவ்வெண்ணின் முன்னர் எடுத்தோத்தானும் இலேசானும் முடியாதுநின்ற எண்ணுப்பெயர்களெல்லாம் இவ்விதியும் பிறவிதியும் எய்துவித்து முடித்துக்கொள்க. ஒருமூன்று ஒருநான்கு இருமூன்று இருநான்கு ஒருகால் இருகால் ஒருமுந்திரிகை இருமுந்திரிகை ஒருமுக்கால் இருமுக்கால் என்பன பிறவுங் கொணர்ந்து ஒட்டுக. இனிப் பிறவிதி எய்துவன ஓரொன்று ஓரிரண்டு ஓரைந்து ஓராறு ஓரேழு ஓரெட்டு ஓரொன்பது எனவும், ஈரொன்று ஈரிரண்டு ஈரைந்து ஈரேழு ஈரெட்டு ஈரொன்பது எனவும், மூவொன்று மூவிரண்டு மூவைந்து மூவாறு மூவேழு மூவெட்டு மூவொன்பது எனவும், "முதலீரெண்ணின் முனுயிர்" (எழு-455) என்னுஞ் சூத்திரத்தான் உயிர்க்கு எய்திய பிறவிதியும் "மூன்றன் முதனிலை நீடலுமுரித்து" (எழு-457) என்ற பிறவிதியும் பெற்றுப் பிறசெய்கைகளும் பெற்று முடிந்தன. நாலொன்று நாலிரண்டு நாலைந்து நாலாறு நாலேழு நாலெட்டு நாலொன்பது என்பன "நான்கனொற்றே லகாரமாகும்" (எழு-453) என்ற விதி பெற்று முடிந்தன. பிறவும் இவ்வாறேயன்றி அளவும் நிறையுமணன்றி வருவனவெல்லாம் இவ்விலேசான் முடிக்க. (41)
---------
அதன்கண் "மூன்று" என்னுஞ் சொல்
447. மூன்ற னொற்றே வந்த தொக்கும்.
இது மேல் மாட்டேற்றோடு ஒவ்வாததற்கு வேறு முடிபு கூறுகின்றது.
இ-ள்: மூன்றனொற்றே வந்ததொக்கும்-மூன்றாமெண்ணின்கணின்ற னகர ஒற்று வருமொழியாய் வந்த அளவுப்பெயர் நிறைப்பெயர்களின் முன்னர் வந்த வல்லொற்றோடு ஒத்த ஒற்றாய்த் திரிந்து முடியும்; எ-று.
எ-டு: முக்கலம் சாடி தூதை பானை எனவும், முக்கழஞ்சு கஃசு தொடி பலம் எனவும் வரும்,.
"நான்கனொற்றே றகாரமாகும்" (எழு-442) என்ற முன்னை மாட்டேறு நிற்றலின் நாற்கலம் சாடி தூதை பானை எனவும், நாற்கழஞ்சு தொடி பலம் எனவும் வரும். (42)
---------
"ஐந்து" என்னுஞ்சொல்
448. ஐந்த னொற்றே மெல்லெழுத் தாகும்.
இதுவும் அது.
இ-ள்: ஐந்தனொற்றே மெல்லெழுத்தாகும்-ஐந்தாவதன் கண் நின்ற நகர ஒற்று வருமொழி வல்லெழுத்துக்கு ஏற்ற மெல்லெழுத்தாகத் திரிந்து முடியும்; எ-று.
எ-டு: ஐங்கலம் சாடி தூதை பானை எனவும், ஐங்கழஞ்சு தொடி பலம் எனவும் வரும். ஏகாரம் ஈற்றசை. (43)
------------
அவ்விரண்டின் மேன் முடிபுகட்கு வரையறை
449. கசதப முதன்மொழி வரூஉங் காலை.
இது முற்கூறிய மூன்றற்கும் ஐந்தற்கும் வருமொழி வரையறுக்கின்றது.
இ-ள்: கசதப முதன்மொழி வரூஉங் காலை-மூன்றனொற்று வந்ததொப்பதூஉம் ஐந்தனொற்று மெல்லெழுத்தாவதூஉம் அவ்வளவுப்பெயர் ஒன்பதினும் வன்கணமாகிய கசதபக்கள் முதன் மொழியாய் வந்த இடத்து; எ-று.
அது முன்னர்க் காட்டினாம். ஆறு "நெடுமுதல் குறுகும்" (எழு-440) என்ற மாட்டேற்றானே ஆறு நெடுமுதல் குறுகிநின்றது.
எ-டு: அறுகலம் சாடி தூதை பானை நாழி மண்டை வட்டி எனவும், அறுகழஞ்சு தொடி பலம் எனவும் வரும். அகல் உழக்கு என்பன மேற்காட்டினாம். ஏழு குற்றுகர ஈறன்மையின் மாட்டேறு ஏலாதாயிற்று. (44)
---------
"எட்டு" என்னுஞ் சொல்
450. நமவ என்னும் மூன்றோடு சிவணி
யகரம் வரினும் எட்டன்மு னியல்பே.
இது வேண்டாதுகூறி 1வேண்டியது முடிக்கின்றது. 2"ஞநமயவ" (எழு-144) என்னுஞ் சூத்திரத்துட் குறியவற்றைக் கூறுதலின்.
இ-ள்: எட்டன்முன்-எட்டென்பதன் முன்னர். நமவ என்னும் மூன்றோடு சிவணி அகரம் வரினும்-அளவுப்பெயர்களின் முன்னர் மென்கணத்து இரண்டும் இடைக்கணத்து ஒன்றுமாகிய நமவ என்னும் மூன்றனோடு பொருந்தி உயிர்க்கணத்து அகரம் வரினும், உம்மையான் உயிர்க்கணத்து உகரம் வரினுங் கூறாத வல்லெழுத்துக்கள் வரினும், இயல்பு-முற்கூறியவாறே டகாரம் ணகாரமாய் வேறோர் விகாரமின்றி இயல்பாய் முடியும்; எ-று.
நமவவென்னும் மூன்றும் வந்தாற்போல அகரம்வரினு மென்பது பொருள்.
எ-டு: எண்ணாழி மண்டை வட்டி எனவும் எண்ணகல் எண்ணுழக்கு எனவும், எண்கலம் சாடி தூதை பானை எனவும் வரும்.
ஒன்றென முடித்தலான் வன்கணத்து நிறைப்பெயருங் கொள்க. எண்கழஞ்சு தொடி பலம் என வரும்.
இவ் வேண்டா கூறலான் எண்ணகலெனக் குற்றுகர ஈறாய்க் கேடுந் திரிவும் பெற்று உயிர்வருமொழியான தொடர்மொழிக்கண் ஒற்றிரட்டுதல் கொள்க. (45)
-----------
1 வேண்டாது கூறல்-ஞநமவய (எழு-144) என்னும் நூற்பாவிற் கூறியதைக் கூறல்
2 வேண்டியது முடித்தல்-உயிர்முதன்மொழி வருமிடத்து நிலைமொழியீற்று மெய்
இரட்டுதலைக் கொள்ளுதல்.
---------
"ஐந்து" "மூன்று" என்னும் இரண்டு சொற்களுக்கும் ஒத்த முடிபு
451. ஐந்தும் மூன்றும் நமவரு காலை
வந்த தொக்கும் ஒற்றியல் நிலையே.
இதுவும் மேல் மாட்டேற்றோடு ஒவ்வாமுடிபு கூறுகின்றது.
இ-ள்: ஐந்தும் மூன்றும் நம வருகாலை-ஐந்தென்னு மெண்ணும் மூன்றென்னுமெண்ணும் நகர முதன்மொழியும் மகர முதன்மொழியும் வருமொழியாய் வருங்காலத்து, ஒற்றியல் நிலை-நிலைமொழிக்கண் நின்ற ஒற்று நடக்கும் நிலைமைகூறின், வந்தது ஒக்கும்-மேற் கூறியவாறே மகரமும் பகரமுமாகாது வருமொழி முதல் வந்த ஒற்றோடு ஒத்த ஒற்றாய் முடியும்; எ-று.
எ-டு: ஐந்நாழி ஐம்மண்டை முந்நாழி மும்மண்டை என வரும்.
மூன்றும் ஐந்தும் என்னாத முறையன்றிக் கூற்றினால் நானாழி நான் மண்டை என்புழி நிலைமொழி னகரம் றகரமாகாது நின்றவாறே நின்று முடிதலும் வருமொழி முதனின்ற நகரம் னகரமாகத் திரிய நிலைமொழி நகரங் கெடுதலுங் கொள்க. (46)
----------
"மூன்று" "நான்கு" "ஐந்து" முன் வகரமுதன் மொழி
452. மூன்ற னொற்றே வகரம் வருவழித்
தோன்றிய வகரத் துருவா கும்மே.
இதுவும் அது.
இ-ள்: மூன்றனொற்று-மூன்றாமெண்ணின்கணின்ற னகர ஒற்று, வகரம் வருவழி-வகரமுதன்மொழி வருமிடத்து, தோன்றிய வகரத்து உருவாகும்-அவ்வருமொழியாய்த் தோன்றிய வகரத்தின் வடிவாய் முடியும்; எ-று.
எ-டு: முவ்வட்டி என வரும்.
தோன்றிய என்றதனானே முதல் நீண்டு வகர ஒற்றின்றி மூவட்டி என்றுமாம். (47)
-----------
453. நான்க னொற்றே லகார மாகும்.
இதுவும் அது.
இ-ள்: நான்கனொற்று-நான்காமெண்ணின்கணின்ற னகர ஒற்று, லகாரமாகும்-வகரமுதன்மொழி வந்தால் லகர ஒற்றாகத் திரிந்து முடியும்; எ-று.
எ-டு: நால்வட்டி என வரும். (48)
-----------
454. ஐந்த னொற்றே முந்தையது கெடுமே.
இதுவும் அது.
இ-ள்: ஐந்தனொற்று-ஐந்தாமெண்ணின்கணின்ற நகர ஒற்று, முந்தையது கெடும்-வகரமுதன்மொழி வந்தால் முன்னின்ற வடிவு கெட்டு முடியும்; எ-று.
எ-டு: ஐவட்டி என வரும்
முந்தை யென்றதனால் நகர ஒற்றுக் கெடாது வகர ஒற்றாகத் திரிந்து ஐவ்வட்டியெனச் சிறுபான்மை வரும். (49)
------------
'ஒரு' 'இரு' முன் உயிர்முதன் மொழி
455. முதலீ ரெண்ணின் முன் உயிர்வரு காலைத்
தவலென மொழிப உகரக் கிளவி
முதனிலை நீட லாவயி னான.
இது மாட்டேற்றான்1 எய்திய உகரத்திற்குக் கேடுகூறி முதனீள்க என்றலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி கூறுகின்றது.
இ - ள்: முதலீரெண்ணின் முன் உயிர் வருகாலை - ஒரு இரு என முடிந்துநின்ற இரண்டெண்ணின் முன்னர் உயிர் முதன் மொழி வருமொழியாய் வருங்காலத்து, உகரக்கிளவி தவலென மொழிப - நிலைமொழி யுகரமாகிய எழுத்துக் கெடுதலாமென்று சொல்லுவர் புலவர். ஆவயினான முதனிலை நீடல் - அவ்விரண்டெண்ணின்கணின்ற முதலெழுத்துக்கள் நீண்டு முடியும்; எ-று.
எ - டு : ஓரகல் ஈரகல் ஓருழக்கு ஈருழக்கு என்வரும். (50)
-------------
1 மாட்டேறு 'அளந்தறிகிளவியும்' (41) என்னும் நூற்பாவிற் கூறியது.
---------
"மூன்று' 'நான்கு' 'ஐந்து' முன் உயிர்முதன் மொழி.
456. மூன்றும் நான்கும் ஐந்தென் கிளவியுந்
தோன்றிய வகரத் தியற்கை யாகும்.
இதுவும் அது.
இ - ள் : மூன்றும் நான்கும் ஐந்தென் கிளவியும் - மூன்றென்னுமெண்ணும் நான்கென்னுமெண்ணும் ஐந்தென்னுமெண்ணும், தோன்றிய வகரத்து இயற்கையாகும் - முன்னர்த்தோன்றி நின்ற வகரம் வருமொழிக்குக் கூறிய இயல்பாக மூன்றின்கண் வகர ஒற்றாயும், நான்கின்கண் லகர ஒற்றாயும், ஐந்தின்கண் ஒற்றுக்கெட்டும் முடியும்; எ - று.
எ - டு : முவ்வகல் முவ்வுழக்கு என இதற்குத் தோன்றிய என்றதனால் ஒற்றிரட்டுதல் கொள்க. நாலகல் நாலுழக்கு ஐயகல் ஐயுழக்கு எனவரும்.
தோன்றிய என்றதனால் மேல் மூன்றென்பது முதல் நீண்ட இடத்து நிலைமொழி னகரவொற்றுக் கெடுத்துக்கொள்க. இயற்கை யென்றதனால் தொடர்மொழிக்கண் ஒற்றிரட்டுதல் கொள்க. 'மூன்றனொற்றே' முதலிய மூன்று சூத்திரமுங் கொணர்ந்து முடிக்க. (51)
அவற்றுள் 'மூன்று' என்பதற்கு, மேலும் ஒரு முடிபு.
-----------
457. மூன்றன் முதனிலை நீடலு முரித்தே
உழக்கென் கிளவி வழக்கத் தான.
இது முன்னர்க் குறுகுமென்றதனை நீண்டுமுடிக என்றலின் எய்தியது விலக்கிற்று.
இ - ள் : மூன்றன் முதனிலை நீடலும் உரித்து – மூன்றென்னு மெண்ணின் முதனின்ற எழுத்து நீண்டுமுடிதலும் உரித்து, அஃதி யாண்டெனின், உழக்கு என் கிளவி வழக்கத்தான-உழக்கென்னுஞ் சொல் முடியும் வழக்கிடத்து; எ-று.
எ-டு: மூவுழக்கு என வரும்.
வழக்கத்தான என்பதனான் அகலென்கிளவிக்கு முதனிலை நீடலுங் கொள்க. மூவகல் என வரும். இன்னும் அதனானே நிலைமொழி னகர ஒற்றுக் கெடுக்க.
மூழக்கு மூழாக்கென்னும் மருமுடிபு இவ்வோத்தின் புறனடையான் முடிக்க. (52)
-------------
"ஆறு" என்பதற்கும் அம் முடிபு
458. ஆறென் கிளவி முதல்நீ டும்மே.
இதுவும் அது.
இ-ள்: ஆறென் கிளவி-ஆறென்னு மெண்ணுப்பெயர் அகல் உழக்கு என்பன வரின், முதல் நீடும்-முன்னர்க் குறுகி நின்ற முதலெழுத்து நீண்டு முடியும்; எ-று.
அறுவென்னாது ஆறென்றார். திரிந்ததன்றிரிபது என்னும் நயத்தால்.
எ-டு: ஆறகல் ஆறுழக்கு என வரும். (53)
---------
"ஒன்பது" என்னுஞ் சொல்
459. ஒன்பா னிறுதி உருபுநிலை திரியா
தின்பெறல் வேண்டுஞ் சாரியை மொழியே.
இது குற்றுகரம் மெய்யொடுங் கெடாது நின்று இன் பெறுக என்றலின் எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது.
இ-ள்: ஒன்பான் இறுதி உருபுநிலை திரியாது-அளவும் நிறையும் வருவழி ஒன்பதென்னும் எண்ணின் இறுதிக் குற்றுகரந்தன்வடிவு நிலைதிரியாது நின்று, சாரியைமொழி இன்பெறல்வேண்டும்- சாரியைச்சொல்லாகிய இன் பெற்று முடிதலை விரும்பும் ஆசிரியன்; எ-று.
எ-டு: ஒன்பதின்கலம் சாடி தூதை பானை நாழி மண்டை வட்டி அகல் உழக்கு எனவும், கழஞ்சு தொடி பலம் எனவும் வரும்.
சாரியைமொழி யென்றதனான் இன்னோடு உகரமும் வல்லெழுத்துங் கொடுத்துச் செய்கைசெய்து முடிக்க. ஒன்பதிற்றுக்கலம் சாடி என எல்லாவற்றோடும் ஒட்டுக.
உருபென்பதனான் ஒன்பதிற்றென ஒற்றிரட்டுதல் எல்லாவற்றிற்குங்கொள்க.
இன்னும் இதனானே ஒன்பதி னாழியென்புழி வந்த இன்னின் னகரக் கேடுங் கொள்க. "அளவாகுமொழி முதல்" (எழு-121) என்பதனானும் "நிலைஇய" என்னும் இலேசானும் இன்னின் னகரம் றகரமாதல் கொள்க. (54)
-----------
ஒன்று முதல் ஒன்பது எண்முன் நூறு
460. நூறுமுன் வரினுங் கூறிய இயல்பே.
இஃது ஒன்றுமுதல் ஒன்பான்களோடு நூறென்பதனைப் புணர்க்கின்றது.
இ-ள்: முன்-ஒன்றுமுதல் ஒன்பான்களின் முன்னர், நூறு வரினும்-நூறென்னு மெண்ணுப்பெயர் வந்தாலும், கூறிய இயல்பு-மேற் பத்தென்பதனோடு புணரும்வழிக்கூறிய இயல்பு எய்தி முடியும்; எ-று.
அது குற்றுகரம் மெய்யொடுங்கெட்டு மூன்றுமா ஆறும் நெடுமுதல் குறுகி முதலீரெண்ணி னொற்று ரகரமாய் உகரம் பெற்று இடைநிலை ரகரம் இரண்டன்கட் கெட்டு முடிதலாம்.
எ-டு: ஒருநூறு இருநூறு அறுநூறு எண்ணூறு என வரும். இவை மாட்டேற்றான் முடிந்தன. மாட்டேறு ஒவ்வாதன மேற்கூறி முடிப்ப. (55)
--------------
அதன்கண் "மூன்று" என்னுஞ் சொல்
461. மூன்ற னொற்றே நகார மாகும்.
இது மாட்டேற்றோடு ஒவ்வாததற்கு வேறுமுடிபு கூறுகின்றது.
இ-ள்: மூன்றனொற்றே நகாரமாகும்-மூன்றாமெண்ணின் கணின்ற னகரவொற்று நகரவொற்றாகும்; எ-று.
எ-டு: முந்நூறு என வரும். (56)
------------
அதன்கண் "நான்கு" "ஐந்து"
462. நான்கும் ஐந்தும் ஒற்றுமெய் திரியா.
இதுவும் அது.
இ-ள்: நான்கும் ஐந்தும் ஒற்று மெய் திரியா-நான்கென்னு மெண்ணும் ஐந்தென்னுமெண்ணுந் தம்மொற்றுக்கள் நிலைதிரியாது முடியும்; எ-று.
எ-டு: நானூறு ஐந்நூறு என வரும்.
மெய்யென்றதனான் நானூறென்புழி வருமொழி நகரத்துள் ஊகாரம் பிரித்து "லனவென வரூஉம்" (எழு-149) என்பதனான் னகரவொற்றாக்கி ஊகாரமேற்றி நிலைமொழி னகரங் கெடுத்துக் கொள்க. (57)
-------------
அதன்கண் "ஒன்பது" என்னுஞ் சொல்.
463. ஒன்பான் முதனிலை முந்துகிளந் தற்றே
முந்தை யொற்றே னகாரம் இரட்டும்
நூறென் கிளவி நகார மெய்கெட
ஊஆ வாகும் இயற்கைத் தென்ப
ஆயிடை வருதல் இகார ரகாரம்
ஈறுமெய் கெடுத்து மகர மொற்றும்.1
இதுவும் அது.
இ-ள்: ஒன்பான் முதனிலை முந்து கிளந்தற்று-ஒன்ப தென்னுமெண்ணின் முதனின்ற ஒகரம் மேற் பத்தென்பதனோடு புணரும்வழிக் கூறியவாறு போல ஒரு தகரம் ஒற்றி அதன்மேல் ஏறிமுடியும், முந்தை ஒற்றே ளகாரம் இரட்டும்-அவ்வொகரத்தின் முன்னின்ற னகர ஒற்று ளகர ஒற்றாய் இரட்டித்து நிற்கும், நூறென்கிளவி நகார மெய்கெட ஊ ஆவாகும் இயற்கைத் தென்ப-வருமொழியாகிய நூறென்னுமெண்ணுப்பெயர் நகரமாகிய மெய்கெட அதன்மேல் ஏறிய ஊகாரம் ஆகாரமாம் இயல்பையுடைத்தென்பர் புலவர், ஆயிடை இகர ரகரம் வருதல் -அம்மொழியிடை ஓர் இகரமும் ரகாரமும் வருக, ஈறு மெய் கெடுத்து மகரம் ஒற்றும்-ஈறாகிய குற்றுகரத்தினையும் அஃது ஏறிநின்ற றகர ஒற்றினையும் கெடுத்து ஓர் மகர ஒற்று வந்து முடியும்; எ-று.
மெய்யென்பதனான் நிலைமொழிக்கட் பகரங் கெடுக்க.
எ-டு: தொள்ளாயிரம் என வரும்.
இதனை ஒன்பதென்னும் ஒகரத்தின்முன்னர் வந்த தகர ஒற்றின்மேலே ஒகரத்தையேற்றிப் பகரங் கெடுத்துக் குற்றியலுகரம் மெய்யொடுங் கெடுத்து நின்ற னகர ஒற்றினை இரண்டு ளகர ஒற்றாக்கி நூறென்பதன் நகரங்கெடுத்து ஊகாரம் ஆகாரமாக்கி ளகரத்தின் மேலேற்றி இகரமும் ரகரமும் வருவித்து விகாரப்பட்ட உயிராகிய ஆகாரத்தின்முன் உடம்படுமெய் யகாரம் வருவித்து றகர உகரங் கெடுத்து மகர ஒற்று வருவித்து முடிக்க. (58)
-------------
1 மாட்டேறு 'அளந்தறிகிளவியும்' (41) என்னும் நூற்பாவிற் கூறியது.
------------
ஒன்று "இரண்டு" முன் ஆயிரம்
464. ஆயிரக் கிளவி வரூஉங் காலை
முதலீ ரெண்ணின் உகரங் கெடுமே.
இஃது அவ்வொன்றுமுதல் ஒன்பான்களோடு ஆயிரம் முடியுமாறு கூறுகின்றது.
இ-ள்: ஆயிரக்கிளவி வரூஉங் காலை-ஆயிரமென்னுஞ் சொல் ஒன்றுமுதல் ஒன்பான்கள் முன் வருங்காலத்து, முதல் ஈரெண்ணின் உகரம் கெடும்-ஒரு இரு என்னும் இரண்டெண்ணின்கட் பெற்று நின்ற உகரங் கெட்டு முடியும்; எ-று.
உகரங்கெடுமெனவே ஏனையன முன்னர்க் கூறியவாறே நிற்றல் பெற்றாம்.
எ-டு: ஒராயிரம் இராயிரம் என வரும். (59)
இந் நூற்பா, ஒன்பது+நூறு=தொள்ளாயிரம் எனப் புணர்க்கின்றது. "ஒன்பானொகரமிசை" (எழு-445) என்னும் நூற்பாவிற்குக் கூறிய அடிக்குறிப்பை இதற்குங் கொள்க.
----------------
அவற்றிற்கு மேலும் ஒரு முடிபு
465. முதனிலை நீடினும் மான மில்லை.
இஃது எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறுகின்றது.
இ-ள்: முதனிலை நீடினும் மானமில்லை-அம்முதலீரெண்ணின் முதற்கணின்ற ஒகார இகாரங்கள் நீண்டுமுடியினுங் குற்றமில்லை; எ-று.
எ-டு: ஓராயிரம் ஈராயிரம் என வரும். (60)
-------------
"மூன்று" முன் ஆயிரம்
466. மூன்ற னொற்றே வகார மாகும்.
இது மூன்றென்னுமெண் ஆயிரத்தோடு புணருமாறு கூறுகின்றது.
இ-ள்: மூன்றனொற்றே வகாரமாகும்-மூன்றென்னு மெண்ணின்கணின்ற னகர ஒற்று வகர ஒற்றாகத் திரிந்து முடியும்; எ-று.
எ-டு: முவ்வாயிரம் என வரும்.
முன்னிற் சூத்திரத்து நிலை என்றதனான் இதனை முதனிலை நீட்டி வகர ஒற்றுக் கெடுத்து மூவாயிரம் என முடிக்க. (61)
--------------
"நான்கு" முன் ஆயிரம்
467. நான்க னொற்றே லகார மாகும்.
இது நான்கென்னுமெண் அதனோடு புணருமாறு கூறுகின்றது.
இ-ள்: நான்கனொற்றே லகாரமாகும்-நான்கென்னுமெண்ணின்கணின்ற னகர ஒற்று லகர ஒற்றாகத் திரிந்து முடியும்; எ-று.
எ-டு: நாலாயிரம் என வரும். (62)
-----------
"ஐந்து" முன் ஆயிரம்
468. ஐந்த னொற்றே யகார மாகும்.
இஃது ஐந்தென்னுமெண் அதனோடு புணருமாறு கூறுகின்றது.
இ-ள்: ஐந்தனொற்றே யகாரமாகும்-ஐந்தென்னு மெண்ணின்க ணின்ற நகர ஒற்று யகர ஒற்றாகத் திரிந்து முடியும்; எ-று.
ஐயாயிரம் என வரும். (63)
-------------
"ஆறு" முன் ஆயிரம்
469. ஆறன் மருங்கிற் குற்றிய லுகரம்
ஈறுமெய் ஒழியக் கெடுதல் வேண்டும்.
இஃது ஆறென்னு மெண் அதனோடு புணருமாறு கூறுகின்றது.
இ-ள்: ஆறன் மருங்கிற் குற்றியலுகரம்-ஆறென்னு மெண்ணின்க ணின்ற குற்றியலுகரம் நெடுமுதல் குறுகி அறுவென முற்றுகரமாய் நிற்றலின், மெய் ஒழிய ஈறு கெடுதல் வேண்டும்- அது தானேறிய மெய்யாகிய றகர ஒற்றுக் கெடாது நிற்ப முற்றுகரமாகிய ஈறு தான் கெட்டுப் புணர்தலை விரும்பும் ஆசிரியன்; எ-று.
எ-டு: அறாயிரம் என வரும்.
முன்னர் "நெடுமுதல் குறுகும்" (எழு-440) என்ற வழி அறுவென நின்ற முற்றுகரத்திற்கே ஈண்டுக் கேடு கூறினாரென்பது பெற்றாம். என்னை? குற்றியலுகரமாயின் ஏறிமுடிதலின். இது குற்றுகரந் திரிந்து முற்றுகரமாய் நிற்றலின் ஈண்டு முடிபுகூறினார். முற்றியலுகரம் ஈறுமெய்யொழியக் கெடுமெனவே குற்றுகரங் கெடாது ஏறிமுடியு மென்பது அருத்தாபத்தியாற் பெறுதும். ஆறாயிரம் என வரும்.
மருங்கென்றதனாற் பிறபொருட் பெயர்க்கண்ணும் நெடுமுதல் குறுகாது நின்று முடிதல் கொள்க. ஆறாகுவதே என வரும். (64)
------------
"ஒன்பது" முன் "ஆயிரம்"
470. ஒன்பா னிறுதி உருபுநிலை திரியா
தின்பெறல் வேண்டுஞ் சாரியை மரபே.
இஃது ஒன்பதென்னுமெண் அதனோடு புணருமாறு கூறுகின்றது.
இ-ள்: ஒன்பான் இறுதி- ஒன்பதென்னு மெண்ணின் இறுதிக் குற்றுகரம், உருவுநிலை திரியாது-தன் வடிவுநிலை திரிந்து கெடாது, சாரியை மரபு இன் பெறல் வேண்டும்- சாரியையாகிய மரபினையுடைய இன் பெற்ற முடிதலை ஆசிரியன்; எ-று.
எ-டு: ஒன்பதினாயிரம் என வரும்.
உருவென்றும் நிலையென்றுஞ் சாரியை மரபென்றுங்கூறிய மிகையால் ஆயிரமல்லாத பிறவெண்ணின்கண்ணும் பொருட் பெயரிடத்தும் இன்னும் உகரமும் வல்லெழுத்தும் பெற்று முடியும் முடிபு கொள்க. ஒன்பதிற்றுக் கோடி1 ஒன்பதிற்றொன்பது ஒன்பதிற்றுத்தடக்கை ஒன்பதிற்றெழுத்து என வரும்.
இன்னும் இவ்விலேசானே வேறொரு முடிபின்மையிற் கூறாதொழிந்த எண்ணாயிர மென்றவழி ஒற்றிரட்டுதலும் ஈண்டுக் கூறியவற்றிற்கு ஒற்றிரட்டுதலுங் கொள்க. "அளவாகு மொழிமுதல்" (எழு-121) என்பதனுள் "நிலைஇய" என்றதனான் னகரம் றகரமாதல்2 கொள்க. (65)
---------
1 இலக்கம் கோடியென்னும் எண்ணுப் பெயர்கள் இவ்வியலிற் கூறப்படாமையால் பழந் தமிழர்க்கு 99999 வரைதான் எண்ணத் தெரிந்திருந்தது என்று சிலர் கொள்வர். இலக்கம் கோடி என்பன குற்றியலுகரச் சொற்களல்ல வென்றும், குற்றுகரச் சொற்களே இவ்வியலிற் புணர்த்துக் காட்டப்படுவன வென்றும், இலக்கத்தின் மறுபெயரான நூறாயிரம் என்னும் சொல்லும் பத்து நூறாயிரம் வரை புணர்த்தற்கிடமும் அடுத்த (எழு-471) நூற்பாவிற் கூறப்பட்டுளவென்றும், இலக்கம் கோடி என்னும் பெயர்கள் முறையே பெரிய இலக்கம கடைசியென என்று பொருள்படும் தனித் தமிழ்ச் சொற்களே என்றும் அறிந்து கொள்க.
2 னகரம் றகரமாதல் ஒன்பதிற்றுக்கோடி ஒன்பதிற்றொன்பது முதலியவற்றில்.
-----------
ஒன்று முதல் ஒன்பது எண் முன் "நூறாயிரம்"
471. நூறா யிரமுன் வரூஉங் காலை
நூற னியற்கை முதனிலைக் கிளவி.
இஃது ஒன்றுமுதல் ஒன்பான்களோடு நூறென்னுமெண் அடையடுத்த ஆயிரம் முடியுமாறு கூறுகின்றது.
இ-ள்: நூறாயிரம் முன் வரூஉங் காலை-நூறாயிரமென்னும் அடையடுத்தமொழி ஒன்றுமுதல் ஒன்பான்கள் முன் வருமொழியாய் வருங்காலத்து, முதனிலைக் கிளவி நூறன் இயற்கை- ஒன்றென்னும் முதனிலைக் கிளவி ஒன்று முன் நூறென்னு மெண்ணோடு முடிந்தாற்போல விகாரமெய்தி முடியும். எனவே வழி நிலைக் கிளவியாகிய இரண்டு முதலிய எண்கள் விகாரமெய்தியும் எய்தாது இயல்பாயும் முடியும்; எ-று.
எ-டு: ஒரு நூறாயிரம் என வரும். ஏனையன இருநூறாயிரம் இரண்டு நூறாயிரம், முந்நூறாயிரம் மூன்று நூறாயிரம், நானூறாயிரம் நான்குநூறாயிரம் ஐந்நூறாயிரம் ஐந்து நூறாயிரம், அறுநூறாயிரம ஆறு நூறாயிரம், எண்ணூறாயிரம் எட்டு நூறாயிரம், ஒன்பதுநூறாயிரம் எனவரும். இவ்விகாரப் பட்டனவற்றிற்குக் குற்றுகரம் மெய்யொடுங் கெடுத்து முதலீரெண்ணி னொற்று ரகரமாக்கி உகரம் வருவித்து மூன்றும் ஆறும் நெடுமுதல் குறுக்கி மூன்றனொற்று நகாரமாக்கி நான்கும் ஐந்தும் ஒற்றுமெய்திரியா வாக்கி எட்ட னொற்று ணகாரமாக்கி இலேசுகளாற்கொண்ட செய்கைகளில் வேண்டுவனவுங் கொணர்ந்து முடிக்க.
ஏற்புழிக்கோட லென்பதனால் தொள்ளாயிரமென்ற முடிபுனோடு மாட்டேறு சென்றதேனும் அவ்வாறு முடியாதென்று கொள்க. முன்னென்பதனான் இன் சாரியை பெற்று ஒன்பதினாயிரம் என்றுமாம். நிலையென்றதனான் மூன்றும் ஆறும் இயல்பாக முடிவுழி நெடுமுதல் குறுகாமை கொள்க. (66)
--------
நூறு முன் ஒன்று முதல்ஒன்பது எண்கள்
472. நூறென் கிளவி ஒன்றுமுத லொன்பாற்
கீறுசினை யொழிய இனவொற்று மிகுமே.
இது நூறென்பதனோடு ஒன்றுமுதல் ஒன்பான்களைப் புணர்க்கின்றது.
இ-ள்: நூறு என் கிளவி-நூறென்னு மெண்ணுப்பெயர், ஒன்று முதல் ஒன்பாற்கு-ஒன்றுமுதல் ஒன்பான்களோடு புணருமிடத்து, ஈறு சினையொழிய-ஈறாகிய குற்றுகரந் தன்னாற் பற்றப்பட்ட மெய்யொடுங் கெடாதுநிற்ப, இன ஒற்று மிகும்-அச்சினைக்கு இனமாகிய றகர ஒற்று மிக்கு முடியும்; எ-று.
எ-டு: நூற்றொன்று என வரும். இரண்டுமுதல் ஒன்பது அளவுஞ் செய்கை யறிந்து ஒட்டுக.
ஈறுசினை என்று ஓதிய மிகையான் நூறென்பதனோடு பிற எண்ணும் பிறபொருட் பெயரும் இவ்விதியும் பிறவிதியும் எய்திமுடிதல் கொள்க. நூற்றுப்பத்து நூற்றுக்கோடி நூற்றுத்தொண்ணூறு எனவும், நூற்றுக்குறை நூற்றிதழ்த்தாமரை நூற்றுக்காணம் நூற்றுக்கான்மண்டபம் எனவும் இன ஒற்று மிக்கன கொள்க. இன்னும் இதனானே இருநூற்றொன்று இரண்டு நூற்றொன்று என நூறு அடையடுத்தவழியுங் கொள்க. (67)
------------
நூறு முன் "ஒருபஃது" முதலியன.
473. அவையூர் பத்தினும் அத்தொழிற் றாகும்.
இஃது அந்நூறென்பதனோடு ஒன்றுமுதல் ஒன்பான்கள் அடையடுத்த வழிப் புணருமாறு கூறுகின்றது.
இ-ள்: அவை ஊர்பத்தினும்-அந்நூறென்பது நின்று முற்கூறிய ஒன்றுமுதல் ஒன்பான்களை ஊர்ந்து வந்த பத்தென்பதனோடு புணருமிடத்தும், அத்தொழிற்றாகும்-ஈறு சினையொழிய இன ஒற்று மிக்கு முடியும்; எ-று.
எ-டு: நூற்றொருபஃது இருபஃது முப்பஃது நாற்பஃது ஐம்பஃது அறுபஃது எழுபஃது எண்பஃது என வரும். மற்று நூற்றொன்பது அவை ஊரப்பட்டு வந்தது அன்மை உணர்க.
ஆகுமென்றதனான் ஒருநூற்றொருபஃது இருநூற்றொருபஃது என நிலைமொழி அடையடுத்து முடியும் முடிபுங் கொள்க. (68)
----------
நூறு முன் அளவுப்பெயர் நிறைப்பெயர்
474. அளவும் நிறையும் ஆயியல் திரியாது
குற்றிய லுகரமும் வல்லெழுத் தியற்கையும்
முற்கிளந் தன்ன என்மனார் புலவர்.
இது நூறென்பதனோடு அளவுப்பெயரும் நிறைப்பெயரும் முடியுமாறு கூறுகின்றது.
இ-ள்: அளவும் நிறையும் ஆயியல் திரியாது-நூறென்பதனோடு அளவுப்பெயரும் நிறைப்பெயரும் புணருமிடத்து முற்கூறிய இயல்பிற் றிரியாது இன ஒற்று மிக்குமுடியும், குற்றியலுகரமும் வல்லெழுத்தியற்கையும்-அவ்விடத்துக் குற்றியலுகரங் கெடாமையும் இன ஒற்று மிக்கு வன்றொடர்மொழியாய் நிற்றலின் வருமொழி வல்லெழுத்து மிகும் இயல்பும், முற்கிளந்தன்ன என்மனார் புலவர்-"வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து மிகுமே" (எழு-426) என வன்றொடர்மொழிக்குக் கூறிய தன்மையவாய் முடியுமென்று கூறுவர் புலவர்; எ-று.
எ-டு: நூற்றுக்கலம் சாடி தூதை பானை நாழி மண்டை வட்டி அகல் உழக்கு எனவும், கழஞ்சு தொடி பலம் எனவும் வரும். திரியாதென்றதனால் நூறென்பது அடையடுத்த வழியும் இவ்விதி கொள்க. அஃது ஒருநூற்றுக்கலம் இருநூற்றுக்கலம் என வரும். (69)
-----------
"ஒரு பஃது" முதலியவற்றின் முன் ஒன்று முதல் ஒன்பது எண்கள்
475. ஒன்றுமுத லாகிய பத்தூர் கிளவி
ஒன்றுமுத லொன்பாற் கொற்றிடை மிகுமே
நின்ற ஆய்தங் கெடுதல் வேண்டும்.
இஃது ஒன்றுமுதல் எட்டு ஈறாகிய எண்கள் அடையடுத்த பத்தனோடும் ஒன்றுமுதல் ஒன்பான்களைப் புணர்க்கின்றது.
இ-ள்: ஒன்று முதலாகிய பத்து ஊர் கிளவி-ஒன்றுமுதல் எட்டு ஈறாகப் பத்தென்னும் எண் ஏறி ஒருசொல்லாகி நின்ற ஒரு பஃது முதலிய எண்கள், ஒன்றுமுதல் ஒன்பாற்கு-ஒன்றுமுதல் ஒன்பான்கள் வருமொழியாய் வந்து புணரும் இடத்து, நின்ற ஆய்தங் கெடுதல் வேண்டும்-பஃதென்பதன்கண் நின்ற ஆய்தங் கெட்டு முடிதலை விரும்பும் ஆசிரியன், ஒற்று இடைமிகும்- ஆண்டு இன ஒற்றாகிய ஒரு தகர ஒற்று இடைமிக்கு முடியும்; எ-று.
எ-டு: ஒருபத்தொன்று இருபத்தொன்று ஒருபத்திரண்டு இருபத்திரண்டு என எல்லாவற்றோடும் ஒட்டுக. இவற்றுள் ஒருபத்தொன்று ஒருபத்திரண்டு என்னும் எண்கள் அதிகாரத்தால் நின்ற நூறென்பதனோடு அடுத்து வருமென்று1 உணர்க. (70)
----------
1 நூறென்பதனோடு அடுத்துவருதல்-நூற்றொருபத்தொன்று நூற்றொருபத்திரண்டு என வருதல்.
-------------
அவற்றின்முன் "ஆயிரம்"
476. ஆயிரம் வரினே இன்னென் சாரியை
ஆவயி னொற்றிடை மிகுத லில்லை.
இஃது ஒருபஃது முதலியவற்றோடு ஆயிரத்தைப் புணர்க்கின்றது.
இ-ள்: ஆயிரம் வரின் இன்னென் சாரியை-அவ்வொன்று முதலாகிய பத்து ஊர் கிளவி ஆயிரத்தோடு புணரும் இடத்து இன்சாரியை பெறும், ஆவயின் ஒற்று இடை மிகுதல் இல்லை- அவ்விடத்துத் தகர ஒற்று இடைவந்து மிகாது; எ-று.
எ-டு: ஒருபதினாயிரம் இருபதினாயிரம் என எண்பதின்காறும் ஒட்டுக. இவை நூற்றொருபதினாயிரம் எனவு் வரும்.
ஆவயின் என்றதனால் நூறாயிரத்தொருபத்தீராயிரம் என்றாற்போல அத்துப் பெறுதலும் பிறவுங் கொள்க. (71)
-------------
அவற்றின்முன் அளவுப் பெயர் நிறைப் பெயர்
477. அளவும் நிறையும் ஆயியல் திரியா.
இஃது ஒன்று முதலாகிய பத்து ஊர் கிளவி முன்னர் அளவுப்பெயரும் நிறைப்பெயரும் புணர்க்கின்றது.
இ-ள்: அளவும் நிறையும் ஆயியல் திரியா-ஒருபஃது முதலிய எண்களின் முன்னர் அளவுப்பெயரும் நிறைப்பெயரும் வந்தால் ஒற்று இடைமிகாது இன்சாரியை பெற்று முடியும்; எ-று.
எ-டு: ஒருபதின்கலம் சாடி தூதை பானை நாழி மண்டை வட்டி அகல் உழக்கு எனவும், ஒருபதின்கழஞ்சு தொடி பலம் எனவும் வரும். இவற்றிற்கு நூறு அடையடுத்து ஒட்டுக.
திரியா என்றதனான் ஒருபதிற்றுக்கலம் இருபதிற்றுக்கலம் என்னுந் தொடக்கத்தனவற்றின்கண் இன்னின் அகரம் றகரமாகத் திரிந்து இரட்டுதலும் உகரமும் வல்லெழுத்தும் பெறுதலுங் கொள்க. இன்னும் இதனானே ஒருபதினாழி என்றவழி வருமொழி நகரந் திரிந்துழி நிலைமொழி னகரக்கேடுங் கொள்க.
அளவு நிறையு மதனோ ரன்ன என்று பாடம் ஓதுவார் முன்னர்ச் சூத்திரத்து "ஆவயின்" என்றதனானும் அதன் முன்னர்ச் சூத்திரத்து "நின்ற" என்றதனானும் இவற்றை முடிப்பார். (72)
-------------
ஒன்றுமுதல் எண்முன் பொருட் பெயர்
478. முதனிலை எண்ணின்முன் வல்லெழுத்து வரினும்
ஞநமந் தோன்றினும் யவவந் தியையினும்
முதனிலை யியற்கை என்மனார் புலவர்.
இஃது ஒன்றுமுதல் ஒன்பான்களோடு பொருட்பெயரைப் புணர்க்கின்றது.
இ-ள்: முதனிலை எண்ணின்முன் வல்லெழுத்து வரினும்- ஒன்றென்னும் எண்ணின்முன் வல்லெழுத்து முதன் மொழி வரினும், ஞநம தோன்றினும்-ஞநமக்களாகிய மெல்லெழுத்து முதன்மொழி வரினும்; யவவந்து இயையினும்-யவக்களாகிய இடை யெழுத்து முதன் மொழி வரினும், முதனிலை இயற்கை என்மனார் புலவர்-அவ்வொன்றுமுதல் ஒன்பான்கள் முன்னெய்திய முடிபு நிலைமை எய்தி முடியுமென்று கூறுவர் புலவர்; எ-று.
எனவே வழிநிலையெண்ணாகிய இரண்டு முதலாகிய எண்கள் அம்மூன்று கணமும் முதன்மொழியாய் வரின் முதனிலை முடிபாகி விகாரம் எய்தியும் எய்தாது இயல்பாயும் முடியும்.
எ-டு: ஒருகல் சுனை துடி பறை ஞாண் நூல் மணி யாழ் வட்டு எனவும், இருகல் இரண்டுகல் சுனை துடி பறை ஞாண் நூல் மணி யாழ் வட்டு எனவும் ஒட்டுக. இவ்வெண்களிற் குற்றியலுகரம் மெய்யொடுங் கெட்டு முதலீரெண்ணின் ஒற்று ரகாரமாய் உகரம் வந்தது, இருகல் முதலியவற்றிற்கு இடைநிலை ரகாரங் கெடுக்க. முக்கல் மூன்றுகல் சுனை துடி பறை ஞாண் நூல் மணி யாழ் வட்டு என ஒட்டுக. இதற்கு நெடுமுதல் குறுக்கி "மூன்றனொற்றே வந்த தொக்கும்" (எழு-447) என்பதனான் முடிக்க. முன்னர் எண்ணுப் பெயரும் அளவுப்பெயரும் நிறைப்பெயரும் வருவழிக் கூறிய விகாரங்களிற் பொருட்பெயர்க்கும் ஏற்பன கொணர்ந்து முடித்து எல்லாவற்றிற்கும் நிலை யென்றதனான் ஒற்றுத் திரிந்து முடிக்க. அவை மூன்றற்கும் ஐந்தற்கும் ஞகரம் வருவழி ஞகர ஒற்றாதலும் மூன்றற்கு யகரம் வருவழி வகர ஒற்றாதலுமாம். நாற்கல் நான்குகல் சுனை துடி பறை, நான்ஞாண் நான்குஞாண் நூல் மணி யாழ் வட்டு; ஐங்கல் ஐந்துகல் சுனை துடி பறை, ஐஞ்ஞாண் ஐந்து ஞாண் நூல் மணி, ஐயாழ் ஐந்துயாழ் ஐவட்டு ஐந்துவட்டு; அறுகல் ஆறுகல் சுனை துடி பறை ஞாண் நூல் மணி யாழ் வட்டு; எண்கல் எட்டுக்கல் சுனை துடி பறை எண்ஞாண் எட்டுஞாண் நூல் மணி யாழ் வட்டு; ஒன்பதுகல் சுனை துடி பறை ஞாண் நூல் மணி யாழ் வட்டு என ஒட்டுக. ஒன்பதின்கல் எனச் சென்றதேனும் வழக்கின்மையின் ஒழிக்க. இன்னும் மாட்டேறின்றி வருவனவற்றிற்கெல்லாம் முடிபுநிலை யென்றதனான் முடிக்க. (73)
------------
அவற்றுடன் உயிர் முதல் மொழியும் யகரமும்
479. அதனிலை உயிர்க்கும் யாவரு காலை
முதனிலை ஒகரம் ஓவா கும்மே
ரகரத் துகரந் துவரக் கெடுமே.
இஃது ஒன்றுமுதல் ஒன்பான்களோடு பொருட்பெயருள் உயிர்முதன் மொழி முடியுமாறும் மேற்கூறிய யகாரம் வேறுபட முடியுமாறுங் கூறுகின்றது.
இ-ள்: முதனிலைக்கு-ஒன்றென்னும் எண்ணின் திரிபாகிய ஒரு என்னும் எண்ணிற்கு, உயிரும் யாவும் வருகாலை -உயிர் முதன்மொழியும் யாமுதன்மொழியும் வருமொழியாய் வருங்காலத்து, அதன் நிலை-அம்முதனிலையின் தன்மை இவ்வாறாம், ஒகரம் ஓவாகும்-ஒகரம் ஓகாரமாய் நீளும், ரகரத்து உகரந் துவரக் கெடும்-ரகரத்து மேனின்ற உகரம் முற்றக்கெட்டு முடியும்; எ-று.
நான்காவதனை முதனிலையோடு கூட்டி அதன்கண் நின்ற உம்மையை உயிரோடும் யாவோடுங் கூட்டுக. எனவே வழிநிலை யெண்கள் உயிர் முதன் மொழி வந்த இடத்து முற்கூறியவாறே இருவாற்றானும் முடியும்.
எ-டு: ஓரடை ஓராகம் ஓரிலை ஓரீட்டம் ஓருலை ஓரூசல் ஓரெழு ஓரேடு ஓரையம் ஓரொழுங்கு ஓரோலை ஓரௌவியம் என வரும். குற்றியலுகரம் மெய்யொடுங் கெடுத்து முதலெண்ணினொற்று ரகரமாக்குக. ஓர் யாழ் ஓர் யானை என வரும். துவர என்றதனான் இரண்டென்னும் எண்ணின் இகரத்தை நீட்டி ரகரத்துள் உகரத்தைக் கெடுத்து ஈரசை ஈர்யானை எனவும், மூன்றென்னும் எண்ணின் னகரவொற்றுக் கெடுத்து மூவசை மூயானை எனவும் முடிக்க. இவை செய்யுண் முடிபு. இன்னும் இதனானே இங்ஙனம் வருவன பிறவும் அறிந்து முடித்துக் கொள்க. (74)
-------------
இரண்டு முதல் ஒன்பது எண்முன் 'மா' என்னுஞ் சொல்.
480. இரண்டுமுத லொன்பான் இறுதி முன்னர்
வழங்கியல் மாவென் கிளவி தோன்றின்
மகர அளவொடு நிகரலு முரித்தே.
இஃது இரண்டுமுதல் ஒன்பான்களின் முன்னர் அளவு முதலிய
மூன்றற்கும் உரிய மாவென்பது புணருமாறு கூறுகின்றது.
இ-ள்: இஃது இரண்டுமுதல் ஒன்பான் இறுதி முன்னர் - இரண்டென்னுமெண் முதலாக ஒன்பதென்னுமெண் ஈறாக நின்ற எண்ணுப்பெயர்களின் முன்னர், வழங்கு இயல் மா என் கிளவி தோன்றின் - வழக்கின் கண்ணே நடந்த அளவு முதலியவற்றிற்கு உரிய மா வென்னுஞ் சொல் வருமொழியாய் வரின், மகர அளவொடு நிகரலும் உரித்து - அவ்வெண்ணுப் பெயர்களின் முன்னர்த் தந்து புணர்க்கப்படும் மண்டையென்னும் அளவுப் பெயரோடு ஒத்து விகாரப்பட்டு முடிதலும் உரித்து; உம்மையான் விகாரப்படாது இயல்பாய் முடிதலும் உரித்து; எ - று.
வழக்கியல் வழங்கியலென விகாரம், மகர அளவு மகரமுதன் மொழியாகிய அளவுப்பெயரெனப் பண்புத்தொகை. அஃது 'அளந்தறி கிளவியும்' (எழு - 446) என்பதனுள் ஒரு மண்டை என முடித்ததாம்.
எ - டு : இருமா மும்மா நான்மா ஐம்மா அறுமா எண்மா ஒன்பதின்மா என முன்னர்க்கூறிய சூத்திரங்களான் விகாரப்படுத்தி முடிக்க. இனி உம்மையன் விகாரப்படுத்தாது இரண்டுமா மூன்றுமா நான்குமா ஐந்துமா ஆறுமா எட்டுமா ஒன்பதுமா என்று முடிக்க. புள்ளிமயங்கியலுள் 'அளவுநிறையும்' (எழு - 389) என்னுஞ் சூத்திரத்தான் நெடுமுதல் குறுகி உகரம் வந்து புணருமாறு கூறினார். அதனான் ஈண்டு எழுமா என முடிக்க, ஏழ்மாவென முடிதல் வழக்கின்று.
இரண்டுமுதல் ஒன்பானென்று எடுத்தோதினமையுன், ஒன்றற்கு ஒருமாவென்னும் முடிபேயன்றி ஒன்றுமா வென்னும் முடிபு இல்லையாயிற்று.
வழங்கியன்மா என்றார் விலங்குமாவை நீக்குதற்கு. (75)
-----------
9.6. அதிகாரப் புறனடை
புள்ளி மயங்கியலுள் ஒழுந்துநின்ற மெய்யீறுகளின் செய்யுள் முடிபு
481. லனவென வரூவும் புள்ளி யிறுதிமுன்
உம்முங் கெழுவும் உளப்படப் பிறவும்
அன்ன மரபின் மொழியிடைத் தோன்றிச்
செய்யுட் டொடர்வயின் மெய்பெற நிலையும்
வேற்றுமை குறித்த பொருள்வயி னான.
இது புள்ளிமயங்கியலுள் ஒழிந்துநின்ற செய்யுண்முடிபு கூறுகின்றது.
இ - ள் : லன என வரூவும் புள்ளி இறுதி முன் – லகார னகாரமென்று கூற வருகின்ற புள்ளியீற்றுச் சொற்களின் முன்னர், உம்முங் கெழுவும் உளப்பட-உம்மென்னுஞ் சாரியையுங் கெழுவென்னுஞ் சாரியையும் உட்பட, பிறவும் அன்ன மரபின் மொழியிடைத்தோன்றி-பிறசாரியையும் அப்பெற்றிப்பட்ட மரபினையுடைய மொழியிடத்தே தோன்றி, செய்யுள் தொடர்வயின் மெய்பெற நிலையும்-செய்யுட்சொற்களைத் தொடர்பு படுத்திக் கூறுமிடத்துப் பொருள்பட நிற்கும். வேற்றுமை குறித்த பொருள்வயினான-வேற்றுமையைக் குறித்த பொருட் புணர்ச்சிக்கண்; எ-று.
எ-டு: "வானவரி வில்லுந் திங்களும் போலும்" இதற்கு உம்மென்னுஞ் சாரியையின் மகரத்தை "அம்மினிறுதி" (எழு-129) என்னுஞ் சூத்திரத்துள் "தன்மெய்" என்றதனாற் பிறசாரியையந் திரியுமென நகர ஒற்றாக்கி நிலைமொழி லகர ஒற்றின்மேல் உயிரேற்றி முடிக்க. வில்லுந்திங்களும் போலுமென்பதற்கு வில்லிடைத்திங்கள் போலுமென ஏழனுருபு விரித்துப் பொருளுரைக்க. "கல்கெழு கானவர் நல்குறு மகளே: (குறுந்-71) இதற்குக் கல்லைக் கெழீஇயன என உரைக்க. "மாநிதிக்கிழவனும் போன்ம்" (அகம்- 66) இதற்குக் கிழவனைப்போன்மென உரைக்க, இவ் வும்மை சிறப்பன்று. "கான்கெழுநடு" (அகம்-98) இதற்குக் கானைக்கெழீஇய என உரைக்க.
இனி அன்னமரபின் மொழியிடை என்றதனாற் கெழுவென்றது பிற சொல்லிடத்தே "பணைகெழு பெருந்திறற் பல்வேன்மன்னர்" "துறைகெழு மாந்தை" (நற்றிணை-35) என இயல்பாக வருவனவும், "வளங்கெழு திருநகர்" (அகம்-17) "பயங்கெழு மாமழை" (பறம்-266) என நிலைமொழி யீற்றெழுத்துத் திரிய வருவனவுங் கொள்க.
இன்னும் இதனானே இச்சாரியையது உகரக்கேடும் எகர நீட்சியுங் கொள்க. "பூக்கேழ் தொடலை நுடங்க வெழுந்து " (அகம்-28) "துறைகேழூரன் கொடுமை நாணி" (ஐங்குறு-11) இவற்றிற்கு இரண்டாவதும் ஏற்புழி மூன்றாவதும் விரிக்க. "செங்கேழ் மென்கொடி" (அகம்-80) என்புழிக் கெழுவென்னும் உரிச்சொல் "எழுத்துப் பிரிந்திசைத்தல்" (சொல்-395) என்பதனான் நீண்டதென்று உணர்க. மெய் யென்றதனாற் பூக்கேழென்புழி வல்லொற்று மிகுதல் கொள்க.
இன்னுஞ் சான்றோர் செய்யுட்கட் பிறசாரியை பெற்று விகாரங்கள் எய்தி முடிவனவற்றிற்கெல்லாம் இச்சூத்திரமே விதியாக முடித்துக் கொள்க. (76)
---------
எழுத்ததிகாரத்திற் புணர்க்கப்படாத சொற்கள்.
482. உயிரும் புள்ளியும் இறுதி யாகிக்
குறிப்பினும் பண்பினும் இசையினுந் தோன்றி
நெறிப்பட வாராக் குறைசசொற் கிளவியும்
உயர்திணை அஃறிணை ஆயிரு மருங்கின்
ஐம்பா லறியும் பண்புதொகு மொழியுஞ்
செய்யுஞ் செய்த என்னுங் கிளவியின்
மெய்யொருங் கியலுந் தொழில்தொகு மொழியும்
தம்மியல் கிளப்பின் தம்முன் தாம்வரூஉம்
எண்ணின் தொகுதி உளப்படப் பிறவும்
அன்னவை யெல்லாம் மருவின் பாத்திய
புணரியல் நிலையிடை உணரத் தோன்றா.
இஃது இவ்வதிகாரத்திற் புணர்க்கப்படாத சொற்கள் இவையென அவற்றை எடுத்து உணர்த்துகின்றது.
இ-ள்: உயிரும் புள்ளியும் இறுதியாகி-கூறுங்கால் உயிரும் புள்ளியும் ஈறாக நிற்பதோர் சொல்லாகி, குறிப்பினும் பண்பினும் இசையினுந் தோன்றி-குறிப்பினானும் பண்பினானும் இசையினானும் பிறந்து, நெறிப்பட வாராக் குறைச்சொற் கிளவியும்- ஒருவழிப்பட வாராத சொற்றன்மை குறைந்த சொற்களாகிய உரிச்சொற்களும், உயர்திணை அஃறிணை ஆயிரு மருங்கின் -உயர்திணை அஃறிணை யென்னும் அவ்விரண்டிடத்தும் உளவாகிய, ஐம்பாலறியும் பண்புதொகு மொழியும்-ஒருவன் ஒருத்தி பலர் -ஒன்று பல என்னும் ஐந்துபாலினையும் அறிதற்குக் காரணமாகிய பண்புகொள்பெயர் தொகுந் தொகைச்சொல்லும், செய்யுஞ் செய்த என்னுங் கிளவியின்-செய்யுஞ் செய்த என்னும் பெயரெச்சச் சொற்களினுடைய, மெய் ஒருங்கு இயலுந் தொழில் தொகுமொழியும் காலங்காட்டும் உம்மும் அகரமும் ஒருசொற் கண்ணே சேர நடக்கும் புடைபெயர்ச்சி தொக்கு நிற்குஞ் சொற்களும், தம்இயல் கிளப்பின்-தமது தன்மை கூறுமிடத்து, தம் முன் தாம் வரூஉம் எண்ணின் தொகுதி உளப்பட-நிறுத்தசொல்லுங் குறித்துவரு கிளவியுமாய் வாராது தம்முன்னர் தாமே வந்து நிற்கும் எண்ணுப்பெயரினது தொகுதியும் உளப்பட. அன்ன பிறவும் எல்லாம்-அத்தன்மையாகிய பிறவுமெல்லாம், மருவின் பாத்திய-உலகத்து மருவி நடந்த வழக்கினது பகுதியைத் தம் இலக்கண மாகவுடைய, புணரியல் நிலை இடை யுணரத்தோன்றா- ஒன்றடோனொன்று புணருதல் நடந்த தன்மை இடம் விளங்கத் தோன்றா; எ-று.
எ-டு: கண் விண்ணவிணைத்தது விண்விணைத்தது இவை குறிப்புரிச் சொல்; ஆடை வெள்ள விளர்த்தது வெள்விளர்த்தது இவை பண்புரிச்சொல்; கடல் ஒல்ல வொலித்தது ஒல்லொலித்தது இவை இசை யுரிச்சொல். "ஒல்லொலிநீர் பாய்வதே போலுந் துறைவன்" என்றார் செய்யுட்கண்ணும். இவை உயிரீறாயும் புள்ளியீறாயும் நிற்றலின் ஒன்றன்கண் அடக்கலாகாமையின் நெறிப்படவாரா என்றார். விண்ணவிணைத்தது தெறிப்புத்தோன்றத் தெறித்த தென்றும் விண்விணைத்தது தெறிப்புத்தெறித்த தென்றும் ஆம். ஏனையவற்றிற்கும் இவ்வாறே உணர்க. இங்ஙனம் நிற்றலிற் றன்மை குறைந்த சொல்லாயிற்று. "வினையே குறிப்பே" (சொல்-258) என்னுஞ் சூத்திரத்திற் கூறிய என என்பதனை இவற்றோடு கூட்டியவழி இடைச்சொல்லாதலின் விண்ணெனவிணைத்தது எனப் புணர்க்கப்படுமாறு உணர்க.
இனிக் கரும்பார்ப்பான் கரும்பார்ப்பனி கரும்பார்ப்பார் கருங்குதிரை கருங்குதிரைகள் என வரும். இவற்றுட் கரியனாகிய பார்ப்பான் கரியளாகிய பார்ப்பனி கரியராகிய பார்ப்பார் கரியதாகிய குதிரை கரியனவாகிய குதிரைகள் என ஐம்பாலினையும் உணர்த்தும் பண்புகொள்பெயர் தொக்கவாறு காண்க. இவற்றுட் கருமை என்னும் பண்புப்பெயர் தொக்கதேற் கருமையாகிய பார்ப்பானென விரித்தல் வேண்டும்; அங்ஙனம் விரியாமையிற் பண்புகொள் பெயர் தொக்கதென்று உணர்க.
வெற்றிலை வெற்றுப்பிலி வெற்றடி வெற்றெனத்தொடுத்தல் என்றாற் போல்வனவற்றுள் வெறுவிதாகிய இலையென்பது பாக்குங் கோட்டு நூறுங் கூடாததாய பண்புணர்த்தி ஈறு தொகுதலின் மருவின் பாத்தியவாய் நின்று ஒற்றடுத்தது. வெறுவிதாகிய உப்பிலியென்றது சிறிதும் உப்பிலியென நின்றது. ஏனையவும் அன்ன. இங்ஙனம் ஐம்பாலுந் தொகுத்தற்கு உரிய முதனிலையாதலிற் பணர்த்தலாகாமை கூறினார்.
இனி ஆடரங்கு செய்குன்று புணர்பொழுது அரிவாள் கொல்யானை செல்செலவு என நிலம் முதலாகிய பெயரெச்சந்தொக்க வினைத்தொகைகளை விரிக்குங்கால், ஆடினவரங்கு எனச் செய்த என்னும் பெயரெச்சத்து ஈறு விரிந்த அகர ஈறு இறப்பு உணர்த்தியும், ஆடாநின்றவரங்கு ஆடுமரங்கு எனச் செய்யுமென்னும் பெயரெச்சத்து ஈறு விரிந்த உம்மீறு நிகழ்வும் எதிர்வும் உணர்த்தியும், அவற்றானாய புடைபெயர்ச்சியைத் தோற்றுவித்து இரண்டு பெயரெச்சமும் ஒருசொற்கண் ஒருங்கு தொக்கு நிற்றலின் அதனை ஒரு பெயரெச்சத்தின்கண் அடக்கிப் புணர்ககலாகாமையிற் புணர்க்கலாகாதென்றார். உம்மிறுதி நிகழ்வும் எதிர்வும் உணர்த்துமாறு "வினையின்தொகுதி" (சொல்-415) என்னம் எச்சவியற் சூத்திரத்துட் கூறுதும். இவ் வும் ஈறு இரண்டு காலமும் ஒருங்குணர்த்துதற் சிறப்பு நோக்கிச் செய்த என்பதனை ஆசிரியர் முற்கூறாராயினர்.
இனிப் பத்து என நிறுத்திப் பத்தெனத் தந்து புணர்க்கப்படாது பப்பத்தெனவும்
பஃபத்தெனவும் வழங்குமாறு உணர்க. ஒரோவொன்றென்பதும் அது. அதுதானே ஓரொன்றோரொன்றாகக் கொடு என்றாற் புணர்க்கப்படும்.
இனி அன்னபிறவும் என்றதனானே உண்டானென்புழி உண்ணென்னும் முதனிலையுங் காலங்காட்டும் டகரமும் இடனும்பாலும் உணர்த்தும் ஆனும் ஒன்றடோனொன்று புணர்க்கப்படா. அவை நிறுத்தசொல்லுங் குறித்துவரு கிளவியும் அன்மையின். கரியனென்புழிக் கருவென நிறுத்தி அன்னெனத் தந்து புணர்க்கப்படா, அது இன்னனென்னும் பொருள் தருதலின்.ஏனைவினைச் சொற்களும் இவ்வாறே பிரித்துப் புணர்க்கலாகாமை உணர்க. இன்னும் அதனானே கொள்ளெனக்கொண்டான் என்புழிக் கொள்ளென்பதனை என என்பதனோடு புணர்க்கப்படாமையும் ஊரன் வெற்பன் முதலிய வினைப்பெயர் களும்1 பிறவும் புணர்க்கப்படாமையும் கொள்க. இவ்வாசிரியர் புணர்க்கப் படாத இச்சொற்களையும் வடநூற்கண்முடித்த அனகன் அனபாயன் அகளங்கன் முதலிய வடசொற்களையும் பின்னுள்ளோர்2 முடித்தல் முதனூலோடு மாறிகொளக் கூறலாமென்று உணர்க. (77)
------
1 ஊரன் வெற்பன் என்னும் திணைத்தலைவர் பெயர்களை வினைப்பெயர்களென்று
இங்குக் கூறியிருப்பது பொருந்தாது.
2 பின்னுள்ளோர்-நன்னூலார் சின்னூலார் வீரசோழியகாரர் முதலியோர்.
----------
எழுத்ததிகாரத்திற்குப் புறனடை
483. கிளந்த அல்ல செய்யுளுள் திரிநவும்
வழங்கியல் மருங்கின் மருவொடு திரிநவும்
விளம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின்
வழங்கியல் மருங்கி னுணர்ந்தனர் ஒழுக்கல்
நன்மதி நாட்டத் தென்மனார் புலவர்
இஃது இவ் வதிகாரத்து எடுத்தோத்தானும் இலேசானும் முடியாது நின்றவற்றை யெல்லாம் இதனானே முடிக்க என அதிகாரப்புறனடை கூறுகின்றது.
இ-ள்: கிளந்த அல்ல செய்யுளுள் திரிநவும்-முன்னர் எடுத்தோதப்பட்டன அல்லாத சொற்கள் செய்யுளிடத்துத் திரிந்து முடிவனவும், வழங்கியல் மருங்கின் மருவொடு திரிநவும்- நால்வகை வழக்கும் நடக்குமிடத்து மருவுதலோடு திரிந்து முடி வனவும், விளம்பிய இயற்கையின் வேறுபடத் தோன்றின்- முன்னர்க் கூறிய இலக்கண முறைமையினின்றும் வேறுபடத் தோன்றுமாயின் அவற்றை, நன்மதி நாட்டத்து-நல்ல அறிவி னது ஆராய்ச்சியாலே, வழங்கியன் மருங்கின்-வழக்கு முடிந்து நடக்குமிடத்தே, உணர்ந்தனர் ஒழுக்கல் என்மனார் புலவர்- முடிபு வேறுபாடுகளை அறிந்து நடாத்துக என்று கூறுவர் புலவர்; எ-று
எ-டு: "தடவுத்திரை" என உகரமும் வல்லெழுத்தும் பெற்றுந்" தடவு நிலை" (புறம்-140) என உகரம் பெற்றும் அகர ஈற்று உரிச்சொல் வந்தது. அதவத்தங் கனி என வேற்றுமைக்கண் அகர ஈறு அத்துப் பெற்றது. கசதபத் தோன்றின் என அகர ஈற்றின்முன்னர்த் தகரங் கொடுக்க.
"நறவங் கண்ணி நற்போர்ச் செம்பியன்
குரவ நீடிய கொன்றையங் க.னல்"
என ஆகார இறுதி குறியதனிறுதிச் சினைகெட்டு இருவழியும் அம்முப்
பெற்றன.
"முளவுமா தொலைச்சிய பைந்நிணப் பிளவைப்
பிணவுநாய் முடுக்கிய தடியொடு விரைஇ" (மலைபடு-176)
என அவ்வீறு அல்வழிக்கண் அம்முப் பெறாத முடிபுபெற்றன. "திண் வளி விசித்த முழவொ டாகுளி" (மலைபடு-3) "சுறவெறிமீன்" "இரவழங்கு சிறுநெறி" (அகம்-318) இவை உகரம் பெறாமல் வந்தன. "கள்ளியங் காட்ட புள்ளியம் பொறிக்கலை" (அகம்-97) என இகர ஈறு வேற்றுமைக்கண் அம்முப் பெற்றன. "தீயினன்ன வொண்செங் காந்தள்" (மலைபடு-145) என ஈகார ஈறு வேற்றமைக்கண் இன்பெற்றது. "நல்லொழுக்கங் காக்குந் திருவத்தவர்" (நாலடி-57) என உகர ஈறு வேற்றுமைக்கண் அத்துப்பெற்றது. "ஏ*ப் பெற்ற மான்பிணை போல" (சிந்தா-2965) என ஏகார ஈறு வேற்றுமைக் கண் எகரம் பெறாது வந்தது. "கைத்துண்டாம் போழ்தே" (நாலடி-19) 'கைத்தில்லர் நல்லர்' (நான்மணிக்கடிகை - 69) எனவும், 'புன்னையங்கானல்' (அகம் - 80) 'முல்லையந்தொடையல்' எனவும் ஐகார ஈறு வேற்றுமைக்கண் அத்தும் அம்மும் பெற்றன. 'அண்ணல்கோயில் வண்ணமே' (சிந்தா - நாமகள்- 126) என ஓகார ஈறு யகர உடம்படுமெய் பெற்றது.
இனி 'அஞ்செவி1நிறையவாலின' (முல்லைப் - 89) என அல்வழிக்கட் ககரமும் அகரமுங் கெட்டன. 'மரவம் பாவை வயிறாரப் பருகி' 'மரவநாகம் வணங்கி மாற்கனம்' என இருவழியும் மகரம் விகாரப்பட்டு அம்முப் பெற்றன. 'காரெதிர் கானம் பாடினே மாக' (புறம் - 144) 'பொன்னந்திகிரி முன் சமத்துருட்டி' 'பொன்னங் குவட்டிற் பொலிவெய்தி' என னகர ஈறு இருவழியும் அம்முப்பெற்றன. 'வேர்பிணி வெதிரத்துக் கால்பொரு நாலிசை' (நற்றி - 62) என ரகர ஈறு வேற்றுமைக்கண் அத்துப் பெற்றது. 'நாவலந் தண்பொழில்' (பெரும்பாண் - 465) 'கானலம் பெருந்துறை' (ஐங்குறு - 158) என லகர ஈறு வேற்றுமைக்கண் அம்முப் பெற்றன. 'நெய்தலஞ் சிறுபறை' இஃது அல்வழிக்கண் அம்முப் பெற்றது. 'ஆயிடையிருபே ராண்மை செய்த பூசல்' (குறுந் - 43) என்புழி ஆயிடையென்பது உருபாதலின் 'நீட வருதல்' (எழு - 208) என்பதனான் முடியாது நீண்டு வகர ஒற்று வேறுபட முடிந்தது. தெம்முனை எனத் தெவ்வென்புழி வகரங்கெட்டு மகர ஒற்றுப் பெற்று முடிந்தது. அ என்னுஞ் சுட்டு 'அன்றியனைத்தும்' எனத் திரிந்தது. 'முதிர்கோங்கின் முகை' (குறிஞ்சிக்கலி - 20) எனவுங் 'காய்மாண்ட தெங்கின் பழம்' (சிந்தா - 31) எனவுங் குற்றுகர ஈறு இன்பெறுதலுங் கொள்க. 'தொண்டுதலையிட்ட பத்துக்குறை' என ணகரம் இரட்டாது தகர ஒற்று டகர ஒற்றாய்க் குற்றியலுகரம் ஏறி முடிந்தது.2
இங்ஙஞ் செய்யுளுட் பிறவுந் திரிவன உளவேனும் இப் புறனடையான் முடிக்க: அருமருந்தானென்பது ரகரவுகரங் கெட்டு அருமந்தானென முடிந்தது. சோழனாடு சோணாடு என அன் கெட்டு முடிந்தது. பாண்டிநாடும் அது. தொண்டைமானாடு தொண்டை நாடென ஈற்றெழுத்துச் சில கெட்டு முடிந்தது. மலையமானாடு மலாடு என முதலெழுத்தொழிந்தன பலவுங் கெட்டு முடிந்தது. பொதுவி லென்பது பொதியிலென உகரந் திரிந்து இகரமாய் யகர உடம்படுமெய் பெற்று முடிந்தது. பிறவும் இவ்வாறே திரிந்து மருவி வழங்குவன எல்லாம் இப் புறனடையான் அமைத்துக்கொள்க. (78)
---
1. அகம் + செவி = அஞ்செவி
2. ஒன்பது என்னுஞ் சொல் தொண்டு எனத் திரிந்தது என்பது நச்சினார்க்கினியர்
கருத்து. இதன் தவறு முன்னர்க் காட்டப்பட்டது.
-------
குற்றியலுகரப் புணரியல் முற்றிற்று.
எழுத்ததிகாரம் முற்றிற்று.
நூலின் மரபு மொழிமரபு நுண்பிறப்பு
மேலைப் புணர்ச்சி தொகைமரபு - பாலாம்
உருபியலின் பின்னுயிர் புள்ளி மயக்கந்
தெரிவரிய குற்றுகரஞ் செப்பு.
எழுத்ததி காரத்துச் சூத்திரங்க ளெல்லாம்
ஒழுக்கிய ஒன்பதோத் துள்ளும் - வழுக்கின்றி
நானூற் றிருநாற்பான் மூன்றென்று நாவலர்கள்
மேனூற்று வைத்தார் விரித்து.
--------------
பின்னிணைப்பு.
2. குற்றியலுகரம் உயிரீறே
(புலவர் ஞா. தேவநேயனார் B.O.L.)
"எழுத்தெனப்படுப,
அகரமுதல் னகரஇறுவாய்
முப்பஃதென்ப;
சார்ந்துவரல் மரபின் மூன்றலங் கடையே." (தொல். 1)
"அவைதாம்
குற்றியலிகரம் குற்றிய லுகரம்
ஆய்தம் என்ற
முப்பாற் புள்ளியும் எழுத்தோரன்ன." (தொல். 2)
என்றார் தொல்காப்பியர்.
இரண்டாம் நூற்பாவில், குற்றியலிகரமும் குற்றியலுகரமும் ஆய்தம் என்ற முப்பாற்புள்ளியும் எனப் பிரித்துக் கூறாது "குற்றியலிகரம் குற்றியலுகர்ம ஆய்தம் என்ற முப்பாற்புள்ளியும்" என்று 'முப்பாற் புள்ளி' என்பது மூவெழுத்தையும் பொதுப்படத் தழுவுமாறு உம்மைத் தொகையாய்ச் சேர்த்துக் கூறியிருத்தலின், குற்றியலிகர குற்றியலுகரங்களும் ஆய்தம்போலப் பண்டைக்காலத்திற் புள்ளிபெற்றன என்பதுணரப்படும்.
நூற்பாவில் 'முப்பாற்புள்ளி' யென்பது, புள்ளிபெற்ற மூவெழுத்துக்களையும் முப்புள்ளி வடிவான ஆய்தத்தையும் ஒருங்கே குறிப்பது "ஆமாகோனவ் வணையவும் பெறுமே" என்னும் நன்னூல் நூற்பாவின் 'ஆமா' என்பதுபோன்ற இரட்டுறலாகும்.
தொல்காப்பிய மரபியல் நூற்பா 110-ல், 'வாராததனான் வந்தது முடித்தல்' என்னும் உத்தியுரையில்,
"குற்றிய லிகரத்தைப் புள்ளி யென்றாலும் ஆட்சியுங் குறியீடும் ஒருங்கு நிகழ்ந்தனவாகலின் அவையும் இனி வாராமையான் வந்துழி அவ்வாறு ஆண்டானென்பது. இனிப் புள்ளியென மேல் ஆள வாராததனைப் புள்ளி யென்று ஆள்வனவற்றோடு மயக்கங் கூறுதலென்பது, 'அவைதாங் குற்றியலிகரங் குற்றிய லுகர - மாய்தமென்ற - முப்பாற் புள்ளியு மெழுத்தோரன்ன (தொல் - எழுத் - நூன் 2) என்புழிக் குற்றியலிகரம் புள்ளியென்று யாண்டும் ஆள வாராமையானும் அதுதான் அவ்வழி வரவேண்டுதலானும் அங்ஙனம் புள்ளியென்று ஆளவருங் குற்றுகரத்தோடும் ஆய்தத்தோடும் உடன் கூறுதலாயிற்று; இங்ஙனம் உடன் கூறாக்காற் புள்ளியுங் குற்றிகரமுமெனச் சூத்திரம் பெறுதல் வேண்டுவதாவான் செல்லுமென்பது." என்றுரைத்தார் பேராசிரியர்.
சிவஞான முனிவர் தம் தொல்காப்பிய முதற் சூத்திரவிருத்தியில்,
"ஒரு மொழியைச் சார்ந்துவரு மியல்பன்றித் தனித்தியங்கு மியல்பு தமக்கிலவென்றலின், அவை தம்மையே யெடுத்தோதிக் காட்டலாகாமையின், வருஞ் சூத்திரத்தான் அவற்றிற்கு வேறுவேறு பெயரிட்டு 'அவைதாங்' - குற்றிய லிகரங் குற்றியலுகர - மாய்தம்' என்றும், அம் மூன்றும் புள்ளி பெறுதல் பற்றிப் பொதுப்பெயராக 'முப்பாற்புள்ளியும்' என்றும், அவை தனித் தெழுதப்படாவாயினும் மொழியொடு சார்த்தி யெழுதப்படுதலின் எழுத்தென்னுங் குறியீட்டிற்குரிய வென்பார் "எழுத்தோரன்ன" என்றும் ஓதினார்." என்றார்.
நச்சினார்க்கினியரும் "அவைதாம்...எழுத்தோரன்ன" என்னும் சார்பெழுத்து நூற்பாவுரையின் இடையில்,
"ஆய்தமென்ற ஓசைதான் அடுப்புக்கூட்டுப்போல மூன்றுபுள்ளி வடிவிற்றென்பது உணர்த்தற்கு ஆய்தமென்ற முப்பாற்புள்ளியுமென்றார். அதனை இக்காலத்தார் நடுவு வாங்கியிட்டெழுதுப. இதற்கு வடிவுகூறினார், ஏனை யொற்றுக்கள்போல உயிரேறாது ஓசை விகாரமாய் நிற்பதொன்றாகலின். எழுத்தியல் தழா ஓசைகள் போலக் கொள்ளினுங் கொள்ளற்க என்றற்கு எழுத்தேயாமென்றார். இதனைப் புள்ளிவடிவிற்றெனவே ஏனை யெழுத்துக்களெல்லாம் வரிவடிவினவாதல் பெற்றாம்." என்று கூறினாரேனும் தொடக்கத்தில்,
"அவைதாம்-மேற்சார்ந்து வருமெனப்பட்டவைதாம், குற்றியலிகரங் குற்றியலுகரம் ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும்-குற்றியலிகரமுங் குற்றியலுகரமும் ஆயதமுமென்று சொல்லப்பட்ட மூன்று கூற்றதாகிய புள்ளி வடிவுமாம்; எழுத்தோரன்ன-அவையும் முற்கூறிய முப்பதெழுத்தோடு ஒரு தன்மையாய் வழங்கும் என்றவாறு" என்று மூவெழுத்தும் புள்ளி பெறுமென ஒருதன்மைப்படவே உரைத்தார்.
மயிலைநாதர் "தொல்லைவடிவின" என்னும் நன்னூல் நூற்பாவுரையில்,
"ஆண்டு, என்ற மிகையானே தாது, ஏது என்றற்றொடக்கத்து ஆரிய மொழிகளும், எட்டு, கொட்டு என்றற்றொடக்கத்துப் பொது மொழிகளும், குன்றியாது, நாடியாது, எட்டியாண்டுளது என்றற்றொடக்கத்துப் புணர்மொழிப் பொருள்வேறுபாடுகளும், அறிதற்பொருட்டுக் குற்றுகரக் குற்றிகரங்களுக்கு மேற் புள்ளிகொடுப்பாரும் உளரெனக் கொள்க." என்று உரைத்தனர்.
"குற்றியலிகரமுங் குற்றியலுகரமும் புள்ளி பெற்று நிற்கும்; என்னை?
’குற்றிய லிகரமுங் குற்றிய லுகரமு
மற்றவை தாமே புள்ளி பெறுமே’
என்பது சங்கயாப்பாகலின்" என்பது யாப்பருங் கலவிருத்தி. (பக்கம் 27)
மேற்கூறியவற்றால், குற்றியலிகர குற்றியலுகரங்கள் பண்டைக்காலத்தில் புள்ளியிட்டெழுதப்பட்டன வென்றும் அங்ஙனம் எழுதினது அவற்றின் ஒலிக்குறுக்கத்தையும் "நாடியது" "எட்டியாண்டு" முதலிய புணர்மொழிப் பொருள் வேறுபாட்டையும் காட்டற்கு என்றும் அறியப்படும்.
’நாடியது’ ’எட்டியாண்டு’ என்பன, நாடி யாது எட்டி ஆண்டு, என்றும் பொருள்படுமாதலின் அவை நாடு+யாது, எட்டு+யாண்டு என்னும் புணர்மொழிகள் என்று காட்டற்குக் குற்றியலிகரத்தின் மேற் புள்ளியிடப்பட்டதென்க.
குற்றுகரத்தை மேற் சுன்னமிட்டுக் காட்டுவது இன்றும் மலையாள (சேர) நாட்டு வழக்கம். குற்றிகர குற்றுகரங்கள் புள்ளி பெறுமென்று நன்னூலிற் கூறப்படாமையால் 12-ம் நூற்றாண்டிற்கு முன்பே இவ்வழக்கு சோழபாண்டிய நாடுகளில் ஒழிந்தது என்பதை அறியலாம். எகர ஏகாரங்கட்டும் ஒகர ஓகாரங்கட்கும் அவை சேர்ந்துள்ள உயிர்மெய்கட்கும் வரிவேறுபாடு தொல்காப்பியத்திலேயே கூறப்பட்டிருப்பினும், 17-ம் நூற்றாண்டில் அவ்வெழுத்துக்கள் குறில் நெடில் வேறுபாடின்றி எழுதப்பட்டாற்போல குற்றியலுகரமும் வேறுபாடின்றி யெழுதப்பட்டதென்க.
ஒரு பொருள் குறுகின் அப்பொருளேயன்றி வேறு பொருளாகாது; அதன் குறுக்கம் அளவு வேறுபாடேயன்றிப் பொருள் வேறுபாடன்று, அதுபோல், குற்றியலுகரமும் முற்றியலுகரம் போல உயிரேயன்றி மெய்யாகாது. இதனாலேயே,
"இகர உகரங் குறுகிநின்றன, விகாரவகையாற் புணர்ச்சி வேறுபடுதலின், இவற்றை இங்ஙனங் குறியிட்டாளுதல் எல்லார்க்கும் ஒப்பமுடிந்தது. சந்தனக்கோல் குறுகினாற் பிரப்பங்கோலாகாது. அதுபோல உயிரது குறுக்கமும் உயிரேயாம். இவற்றைப் புணர்ச்சி வேற்றுமையும் பொருள் வேற்றுமையும் பற்றி வேறோர் எழுத்தாக வேண்டினார்" என்றார் நச்சினார்க்கினியரும். பொருள் வேற்றுமை யென்றது, பண்டைக்காலத்தில் கட்டு கொட்டு முதலிய சொற்கள் ஏவல் வினையாம்போது முற்றுகர வீறாயும் முதனிலைத் தொழிற் பெயராம்போது குற்றுகரவீறாயும் ஒலிக்கப்பட்டமை நோக்கி. "தருக்கு அணுக்கு என்பன வினைக்கண் வந்த முற்றுகரம்." (தொல்.36, உரை). "காது கட்டு கத்து முருக்கு தெருட்டு என்பன முற்றுகரமும் குற்றுகரமுமாய்ப் பொருள் வேறுபட்டு நின்றாற்போல" (தொல்.68, உரை) என்று நச்சினார்க்கினியர் கூறுதல் காண்க. தொல்காப்பியர், தம் காலத்தில் குற்றுகரமும் மெய்போலப் புள்ளி பெற்றதினாலேயயே, புணரியலில்,
"மெய்யீ றெல்லாம் புள்ளியொடு நிலையல்" (தொல்.104)
"குற்றிய லுகரமும் அற்றென மொழிப" (தொல்.105)
என்று மாட்டேற்றிக் கூறினார்.
இம்மாட்டேற்றத்தைக் கவனியாது, "குற்றிய...மொழிப," என்னும் நூற்பாவிற்கு "ஈற்றிற் குற்றியலுகரமும் (புள்ளியீறுபோல உயிரேற இடம் கொடுக்கும்) அத்தன்மைத்து என்று சொல்லுவர்" என்று இளம் பூரணரும், "ஈற்றுக் குற்றியலுகரமும் புள்ளியீறுபோல உயிரேற இடங்கொடுக்குமென்று கூறுவர் புலவர்." என்று நச்சினார்க்கினியரும் உரைகூறுவது பொருந்தாது. "அற்றென மொழிப" என்னும் மாட்டேறு "புள்ளியொடு நிலையல்" என்பதையே தழுவுமாதலின் இவ்விருவரும் இங்ஙனம் உரைத்தற்கு, இவர் காலத்திற்குமுன்பே குற்றியலுகரம் புள்ளிபெறும் வழக்கு வீழ்ந்தமையே காரணமாகும். இவர் கூறிய உரை இங்குப் பொருந்துமாயின், தொல்காப்பியர் நூன்மரபில்,
"மெய்யி னியற்கை புள்ளியொடு நிலையல்” (தொல்.15)
”எகர ஒகரத் தியற்கையும் அற்றே" (தொல்.16)
என்று கூறியவிடத்தும் பொருந்தவேண்டும்.
எகர ஒகரம் புள்ளியீறு போல உயிரேற இடங்கொடுத்த லின்மையானும், "எகர...அற்றே" என்னும் நூற்பாவிற்கு, "எகர ஒகரங்களது இயல்பும் அவ்வாறு புள்ளி பெறும் இயல்பிற்று," என்று இளம்பூரணரும், "எகர ஒகரங்களினது நிலையும் மெய்போலப் புள்ளி பெறும் இயல்பிற்று," என்று நச்சினார்க்கினியரும் உரை கூறுவதானும், "குற்றிய.....மொழிப" என்னும் நூற்பாவிற்கும் குற்றுகரமும் மெய்போலப் புள்ளி பெறும் என்பதே உரையாகக் கோடல் பொருத்தமாம்.
இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும், ஈற்றுக் குற்றியலுகரமும் புள்ளி யீறுபோல உயிரேற இடங்கொடுக்கு மென்று உரைத்தவிடத்தும், மாத்திரைக் குறுக்கத்தால் அங்ஙனம் இடங்கொடுக்குமென்னும் கருத்தினரே யன்றி மெய்யீறா யிருத்தலால் இடங்கொடுக்கும் என்னுங் கருத்தினரல்லர். "குற்றுகரத்திற்கு முன்னர் வந்த உயிரேறி முடிய அரை மாத்திரையாய் நிற்றலும், முற்றுகரத்திற்கு முன்னர் வந்த உயிரேறி முடியாமையுந் தம்முள் வேற்றுமை," (தொல்.36, உரை) என்று நச்சினார்க்கினியர் கூறுதல் காண்க.
இனி, தொல்காப்பியர் கருத்தை நோக்கின், அவர் குற்றியலுகரத்தை மெய்யீறென்று கொண்டார் என்று கொள்ளுதற்கு எள்ளளவும் இடமில்லை. அவர்,
"குற்றிய லுகர முறைப்பெயர் மருங்கின்
முற்றிய நகரமிசை நகரமொடு முதலும். (தொல். 67.)
எனக் குற்றியலுகரம் மொழிமுதல் வருமென்றும் கூறினார். நுந்தை என்னும் சொல்லின் முதலில் (தொல்காப்பியர் கருத்தின்படி) உள்ள குற்றியலுகரம் மெய்யீறாயின், அச்சொல் ந்ந்தை என்று எழுதப்படல் வேண்டும். அங்ஙன மெழுதப்படாமையும், குற்றியலுகரத்தைத் தொல்காப்பியர் மெய்யென்று கொண்டிருப்பாராயின், அது,
"பன்னீ ருயிரும் மொழிமுத லாகும்." (தொல். 59)
"உயிர்மெய் அல்லன மொழிமுத லாகா." (தொல். 60)
என்று அவர் கூறியவற்றோடு முரணுதலும் நோக்குக.
மேலும், ஒரே யுகரம் ஓரிடத்துக் குற்றுகரமாகவும் ஓரிடத்து முற்றுகரமாகவும் ஒலிக்கப்படும். அங்ஙனம் ஒலிக்கப்படுபவற்றுள், சிலவற்றிற்குக் குற்றுகர முற்றுகரப் பொருள் வேறுபாடுண்டு, சிலவற்றிற்கில்லை.
"முற்றிய லுகரமொடு பொருள்வேறு படாஅ
தப்பெயர் மருங்கின் நிலையிய லான" (தொல். 68)
என்னும் நூற்பாவையும், அதன் உரையில்,
"காது கட்டு கத்து முருக்கு தெருட்டு என்பன முற்றுகரமும் குற்றுகரமுமாய்ப் பொருள் வேறுபட்டு நின்றாற்போல, நுந்தை யென்று இதழ் குவித்து முற்றக் கூறியவிடத்தும் இதழ் குவியாமற் குறையக் கூறியவிடத்தும் ஒரு பொருளே தந்தவாறு காண்க. நுந்தா யென்பதோ வெனின், அஃது இதழ் குவித்தே கூறவேண்டுதலிற் குற்றுகரமன்று. இயலென்றதனான் இடமும் பற்றுக்கோடும் இரண்டிற்கும் வேறுபாடின்றென்று கொள்க" என்று நச்சினார்க்கினியர் உரைத்திருப்பதையும் நோக்குக. இதனால் குற்றியலுகரம் மெய்யீறாயின் முற்றியலுகரமும் மெய்யீறாய் உகரம் என்னும் உயிரே தமிழுக்கில்லை யென்று பெறப்படுதலும் அங்ஙனமின்மையும் அறிக.
செய்யுளியலில் இருவகை யுகரமு மொன்றாகக் கொண்டே,
"இருவகை யுகரமோ டியைந்தவை வரினே
நேர்பு நிரையு மாகு மென்ப. " (தொல். செய். 4)
என்றார் தொல்காப்பியர்.
இதன் உரையில், "இருவகை யுகர மென்பன, குற்றுகர முற்றுகரங்கள். அவற்றோடு மேற்கூறிய நேரசையும் நிரையசையும் ஒருசொல்விழுக்காடுபட இயைந்துவரின் நிறுத்த முறையானே நேரசையோ டொன்றிவந்த குற்றுகரமும் அதனோடு ஒன்றிவந்த முற்றுகரமும் நேர்பசை யெனப்படும்; நிரைபசையோ டொன்றிவந்த குற்றுகரமும் அதனோடொன்றிவந்த முற்றுகரமும் நிரைபசை எனப்படும் என்றவாறு...
"முன்னர் நேரசை நான்கும் நிரையசை நான்குமென எண் வகையான் அசைகூறி அவற்றுப்பின் இருவகை யுகரமும் வருமெனவே, அவை குற்றுகரத்தோடு எட்டும் முற்றுகரத்தோடு எட்டுமாகப் பதினாறு உதாரணப் பகுதியவாய்ச் சென்றதேனும் அவற்றுட் குற்றெழுத்துப் பின் வரும் உகரம் நேர்பசையாகா தென்பது ’குறிலிணை யுகர மல்வழி யான’ (தொல். செய். 5) என்புழிச் சொல்லுதும்; ஒழிந்தன குற்றுகர நேர்பசை மூன்றும் நிரைபசை நான்குமாயின. உதாரணம்: வண்டு, நாகு, காம்பு; வரகு, குரங்கு, மலாடு மலாட்டு; இவை குற்றுகரம் அடுத்து நேர்பும் நிரைபும் வந்தவாறு" என்று உரைத்தார் பேராசிரியர். இதனால் குற்றுகரமும் முற்றுகரம்போல அலகு பெறுமென்றும் அசைக் குறுப்பாமென்றும் அறியப்படும்.
சொற்கள் இலக்கண முறையிலும் இலக்கிய முறையிலும் பலவகையாகத் திரிந்து முன்பு முற்றுகரவீறா யிருந்தவை அல்லது உகரமல்லாத ஈறா யிருந்தவை பின்பு குற்றுகரவீறாகின்றன. அவ்வகைகளாவன:-
1. தொழிற்பெயர்:- முதனிலைதிரிந்த தொழிற்பெயர்:- எ-டு: படு-
பாடு, சுடு - சூடு.
விகுதிபெற்ற தொழிற் பெயர்:- எ-டு: படி+பு=படிப்பு, முடி+சு=முடிச்சு.
2. வெற்றுமைப் பெயர்:- எ-டு: யான்+கு=எனக்கு, அவர்+கு= அவர்க்கு.
3. குறிப்புவினை முற்று:- எ-டு: தாள்+து= தாட்டு கண்+து=கட்டு பால்+து= பாற்று, அன்+து= அற்று.
4. பிறவினை:- எ-டு: படு+து= படுத்து, நட+து=நடத்து, வாழ்+ து=வாழ்த்து, பாய்+சு=பாய்ச்சு.
5. போலி:- எ-டு: அடைவு-அடவு-அடகு.
6. சொல் திரிபு:- எ-டு: திரும்-திரும்பு, பொருந்-பொருந்து, உரிஞ் - உரிஞ்சு, உடன் (உடல்)-உடம்-உடம்பு, பண்-பாண்-பாடு, குள்-கொள்-கோள்-கோண்-கோடு, ஒளி-ஒளிர்-ஒளிறு, போ-போது.
மேற்காட்டிய பாடு படிப்பு எனக்கு தாட்டு படுத்து முதலிய சொற்கள், குற்றுகர வீற்றை மெய்யீறாகக் கொள்ளின், முறையே பாட் படிப்ப் எனக்க் தாட்ட் படுத்த் என்ற முதல் வடிவங்களினின்று தோன்றின வாகவன்றோ கொள்ளல் வேண்டும்! இது எத்துணைப் பேதைமையாகும்! மேலும், ஆட்டு பாட்டு கலக்கு விளக்கு முதலிய பிறவினைகளும் தொழிற் பெயர்களும் முதனிலையீற்று வலியிரட்டியும் முதனிலை யிடைமெலி வலித்தும் முறையே ஆடு பாடு கலங்கு விளங்கு என்னுஞ் சொற்களினின்று திரிந்திருக்கவும், அவற்றை ஆட்ட் பாட்ட் கலக்க் விளக்க் என்னும் வடிவங்களினின்று பிறந்தனவாகக் கொள்ளல் இளஞ்சிறாரும் எள்ளிநகையாடத் தக்கதொன்றன்றோ? ஒரு சில ஒலியடிச் சொற்களொழிந்த எல்லாச் சொற்களும் ஓரசையான வேர்ச் சொற்களினின்றே பிறந்தவை யாதலின், குற்றியலுகரத்தை மெய்யீறாகக் கொள்வாரெல்லாம் சொற்பிறப்பியலை எட்டுணையும் தாமறியாதிருத்தலை முற்றுறக் காட்டுபவரே யாவர்.
குற்றுகரவீறு மெய்யீறாயின், அறுவகைக் குற்றியலுகரத் தொடர்களும் வல்லின மெய்யீற்றனவாதல் வேண்டும்.
"ஞணநம னயரல வழள என்னும்
அப்பதி னொன்றே புள்ளி யிறுதி." (தொல். 78)
என்று தொல்காப்பியர் பிரிநிலையேகாரங் கொடுத்துக் கூறினமையானும், குற்றுகரவீறு தமிழ்ச்சொல்லில் ஓரிடத்தும் மெய்யீறாக எழுதப்படாமையானும், அஃதுண்மையன்மை வெள்ளிடை மலை.
கண்+யாது = கண்ணியாது என்பது போன்றே சுக்கு+யாது = சுக்கியாது என்று குற்றுகரமும் புணர்வதால், குற்றியலுகரத்தை மெய்யீறாகக் கொள்ளலாமே யெனின், கதவு+யாது=கதவியாது என்று முற்றுகரமும் அங்ஙனம் புணர்வதால் அதுவும் மெய்யீறாகக் கொள்ளப்பட்டு உகரவுயிரே தமிழுக்கில்லையென்றாகும் என்று கூறிவிடுக்க. தொல்காப்பியர் மொழிமரபில்,
"உச்ச காரம் இருமொழிக் குரித்தே."
"உப்பகாரம் ஒன்றென மொழிப." (தொல். 75, 76.)
என்று வரையறுத்தது உசு முசு தபு என்னும் மூன்று முற்றுகரவீற்றுச் சொற்களையே யன்றிக் குற்றுகரவீற்றுச் சொற்களையன்று. சு, பு, என்னும் இரு முற்றுகர ஈறுகளைக்கொண்ட சொற்கள் எத்தனையென்று வரையறுப்பதே மேற்கூறிய நூற்பாக்களின் நோக்கம். கு, டு, து, று என்னும் நான்கு முற்றுகரவீற்றுச் சொற்களும் அறுவகைக் குற்றுகர வீற்றுச் சொற்களும் அளவிறந்தன வாதலின், அவற்றை வரையறுத்திலர் தொல்காப்பியர். இகு உகு செகு தகு தொகு நகு நெகு பகு புகு மிகு வகு விகு எனக் குகரவீறும், அடு இடு உடு எடு ஒடு கடு கெடு கொடு சுடு தடு தொடு நடு நெடு நொடு படு பிடு மடு வடு விடு என டுகரவீறும் கொண்ட முற்றுகர வீற்றுச் சொற்கள் பெருந்தொகையினவாயும் எண் வரம்பு படாதனவாயு மிருத்தல் காண்க. பிற முற்றுகர வீற்றுச் சொற்களும் இங்ஙனமே. குற்றுகர வீற்றுச் சொற்களோ வெனின் அகராதிகளாலும் வரையறுக்கப்படாத பல்லாயிரக் கணக்கின.
மேற்கூறிய நூற்பாக்களின் உரையில்,
"உகாரத்தோடு கூடிய சகாரம் இரண்டுமொழிக்கே
ஈறாம் என்றவாறு"
"எ-டு: 26, இஃது உளுவின் பெயர். முசு, இது குரங்கினுள் ஒரு சாதி. பசு என்பதோவெனின், அஃது ஆரியச் சிதைவு. கச்சு குச்சு என்றாற் போல்வன குற்றுகரம். உகரம் ஏறிய சகரம் இருமொழிக்கு ஈறாமெனவே ஏனை உயிர்கள் ஏறிய சகரம் பன்மொழிக்கு ஈறாமாயிற்று" (தொல்.75, உரை) என்றும்,
"உகரத்தோடு கூடிய பகரம் ஒருமொழிக்கல்லது பன்மொழிக்கு
ஈறாகாதென்று கூறுவர் புலவர். "
"எடு; தபு எனவரும்,....உப்பு கப்பு என்றாற் போல்வன குற்றுகரம், உகரத்தோடுகூடிய பகரம் ஒன்றெனவே ஏனையுயிர்களோடுகூடிய பகரம் பன்மொழிக்கு ஈறாய்ப் பல பொருள் தருமென்றாராயிற்று" (தொல். 76 உரை) என்றும் நச்சினார்க்கினியர் கூறியிருத்தலை நோக்குக.
இதுகாறுங் கூறியவற்றால் குற்றியலுகரம் உயிரீறே யென்றும், தொல்காப்பியர் ஓரிடத்தும் குற்றியலுகரத்தை மெய்யீறாகக் கொண்டிலரென்றும், இயற்கையும் எளிமையும் தனிமையும் தாய்மையும் சான்ற தமிழியல்பை யறியாத ஆரியவழியயலாரே தம் மொழியைப் போன்றே தமிழும் ஆரிய வழித்தென்று மயங்கி, தமிழை வடமொழி வழித்தாகக் காட்டக் கருதி அதற்கு முதற்படியாகக் குற்றுகரவீற்றை மெய்யீறாகக் கூறி யிடர்ப்பட்டுப் பின்பு அவ்விடர்ப்பாட்டினின்று நீங்கப் பண்டைத் தமிழ்ச்சொற்கள் வல்லின மெய்யிலும் இற்றன வென்றும், வலியிரட்டல் என ஒரு திரிவு முறையும் அரவு என ஒரு தொழிற்பெயர் விகுதியும் இல்லையென்றும், சொல்லியல் நூலுக்கும் மொழி நூலுக்கும் முற்றும் மாறாகத் தத்தம் உளந்திரிந்தவாறே உரைப்பரென்றும் தெற்றெனத் தெரிந்துகொள்க.
---------------------
நச்சினார்கினியர் இளம்பூரணரொடு மாறுபடும் இடங்கள்
1 சிறப்புப்பாயிரம்
வட வேங்கடந் தென்குமரி
ஆயிடைத்
தமிழ்கூறு நல்லுலகத்து
வழக்குஞ் செய்யுளு மாயிரு முதலின்.
இளம்பூரணர்:
(இ-ள்:) வடவேங்கடம் தென்குமரி அ இடைத் தமிழ் கூறும் நல் உலகத்து வழக்கும் செய்யுளும் அ இரு முதலின்- வடக்கின்கண் ணுளதாகிய வேங்கடமும் தெற்கின்கண் ணுளதாகிய குமரியுமாகிய அவற்றை எல்லையாக வுடைய நிலத்து வழங்கும் தமிழ்மொழியினைக் கூறும் நன்மக்களான் வழங்கும் வழக்கும் செய்யுளுமாகிய இரு காரணத்தானும்.
நச்சினார்க்கினியர்:
வட வேங்கடந் தென்குமரி ஆயிடை-வடக்கின்கண் வேங்கடமுந் தெற்கின்கட் குமரியுமாகிய அவ்விரண்டெல்லைக்குள்ளிருந்து, தமிழ்கூறும் நல் உலகத்து வழக்குஞ் செய்யுளும் ஆ இரு முதலின்-தமிழைச் சொல்லும் நல்லாசிரியரது வழக்குஞ் செய்யுளுமாகிய அவ்விரண்டையும் அடியாகக் கொள்ளுகையினாலே.
-----------
2. நூற்பா 22
அம்மூ வாறும் வழங்கியன் மருஙகின்
மெய்ம்மயக் குடனிலை தெரியுங் காலை.
இளம்பூரணர்:
இது, தனிமெய் மயக்கத்திற்குப் பெயரும் முறையும் தொகையும் உணர்த்துதல் நுதலிற்று.
(இ-ள்:) அ மூ ஆறும் -மேற் சொல்லப்பட்ட (மூவாறு) பதினெட்டு மெய்யும், வழங்கு இயல் மருங்கின்-தம்மை மொழிப்படுத்தி வழங்கும் இயல்பு உளதாமிடத்து, மெய் மயக்கு-மெய் மயக்கம் என்றும், உடன் நிலை-உடனிலை மயக்கம் என்றும் இருவகைய, தெரியும் காலை-(அவை மயங்கு முறைமை) ஆராயும் காலத்து.
நச்சினார்க்கினியர்:
இது தனிமெய் பிறமெய்யொடுந் தன் மெய்யோடுந் மயங்கும் மயக்கமும் உயிர்மெய் உயிர்மெய்யொடுந் தனிமெய்யோடும் மயங்கும் மயக்கமும் கூறுகின்றது.
(இ-ள்): அம்மூவாறும்-அங்ஙனம் மூன்று கூறாகப் பகுத்த பதினெட்டு மெய்யும், வழங்கியல் மருங்கின்-வழக்கிடத்துஞ் செய்யுளிடத்தும் எழுத்துக்களைக் கூட்டி மொழிப்படுத்த வழங்குதல் உளதாமிடத்து, மெய் மயங்கும் நிலை-தனிமெய் தன் முன்னர் நின்ற பிறமெய்யோடுந் தன்மெய்யோடும் மயங்கும் நிலையும், உடன் மயங்கும் நிலை-அப்பதினெட்டும் உயிருடனே நின்று தன்முன்னர் நின்ற உயிர்மெய்யோடுந் தனிமெய்யோடும் மயங்கும் நிலையுமென இரண்டாம், தெரியுங்காலை-அவை மயங்கும் மொழியாந் தன்மை ஆராயுங்காலத்து எ-று.
------------
3. 27
ஞநமவ வென்னும் புள்ளி முன்னர்
யஃகா னிற்றின் மெய்பெற் றன்றே.
இளம்பூரணர்:
இது மெய்மயக்கம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.
(இ-ள்): ஞந மவ என்னும் புள்ளி முன்னர்-ஞநமவ என்று சொல்லப்படுகின்ற புள்ளிகளின் முன்னர். யஃகான் நிற்றல் மெய்பெற்றன்று-யகரம் மயங்கி நிற்றல் பொருண்மை பெற்றது ஏகாரம் ஈற்றசை.
எ-டு: உரிஞ்யாது பொருந்யாது திரும்யாது தெவ்யாது எனவரும்.
நச்சினார்க்கினியர்: (பக். 32)
இங்ஙனம் ஆசிரியர் சூத்திரஞ் செய்தலின் அக்காலத்து ஒரு மொழியாக வழங்கிய சொற்கள் உளவென்பது பெற்றாம். அவை இக்காலத்து இறந்தன.
இனி உரையாசிரியர் உரிஞ்யாது பொருந்யாது திரும்யாது தெவ்யாது என இருமொழிக்கண் வருவன உதாரணமாகக் காட்டினாரா லெனின், ஆசிரியர் ஒரு மொழியாமாறு ஈண்டுக் கூறி, இருமொழி புணர்த்தற்குப் புணரியலென்று வேறோர் இயலுங்கூறி, அதன்கண் "மெய்யிறு சொன்முன் மெய் வரு வழியும்" என்று கூறினார். கூறியவழிப் பின்னும் "உகரமொடு புணரும் புள்ளியிறுதி" என்றும் பிறாண்டும் ஈறுகடோறும் எடுத்தோதிப் புணர்ப்பர். ஆதலின் ஈண்டு இருமொழிப் புணர்ச்சி காட்டிற் கூறியது கூற லென்னுங் குற்றமாம். அதனால் அவை காட்டுதல் பொருந்தாமை உணர்க.
4. 34
குற்றிய லிகர நிற்றல் வேண்டும்
யாவென் சினைமிசை யுரையசைக் கிளவிக்
காவயின் வரூஉ மகர மூர்ந்தே.
இளம்பூரணர்:
(இ-ள்:) குற்றியலிகரம்-ஒரு மொழிக் குற்றியலிகரம், உரையசைக் கிளவிக்கு-உரையசைச் சொல்லாகிய மியா என் முதற்கு, ஆவயின் வரூஉம்-(சினையாக) அச்சொற்றன்னிடத்து வருகின்ற, யாஎன் சினைமிசை-யா என் சினைமிசை, மகரம் ஊர்ந்து நிற்றல் வேண்டும்-மகர ஒற்றினை ஊர்ந்து நிற்றலை வேண்டும் (ஆசிரியன்.)
எ-டு: கேண்மியா எனவரும். மியா என்னும் சொல் இடம். மகரம் பற்றுக்கோடு. யாஎன்னும் சினையும் மகரம்போலக் குறுகுதற்கு ஒரு சார்பு.
நச்சினார்க்கினியர்:
(இ-ள்) உரையசைக் கிளவிக்கு வரூஉம்-தான் கூறும் பொருளைக் கோடற்கு ஒருவனை எதிர்முகமாக்கும் சொல்லிற்குப் பொருந்தவரும், ஆவயின்-அம் மியாவென்னும் இடைச்சொல்லைச் சொல்லுமிடத்து, யாவென் சினைமிசை மகரம் ஊர்ந்து- யாவென்னும் உறுப்பின் மேலதாய் முதலாய் நின்ற மகரவொற்றினை யேறி, குற்றியலிகரம் நிற்றல் வேண்டும்-குற்றியலிகரம் நிற்றலை விரும்பும் ஆசிரியன் எ-று.
எ-டு: கேண்மியா சென்மியா எனவரும், கேளென்றது உரையசைக் கிளவி; அதனைச் சார்ந்து தனக்கு இயல்பின்றி நின்றது மியா வென்னும் இடைச்சொல். அவ்விடைச்சொல் முதலும் அதனிற் பிரியும் யா அதற்கு உறுப்பு மாமென்று கருதி யாவென் சினை யென்றார். மியா இடம்; மகரம் பற்றுக்கோடு. யாவும் இகரம் அரைமாத்திரை யாதற்குச் சார்பு.
------------
5. 40.
உருவினு மிசையினு மருகித் தோன்று
மொழிக்குறிப் பெல்லா மெழுத்தி னியலா
ஆய்த மஃகாக் காலை யான.
இளம்பூரணர்:
(இ-ள்:) உருவினும்-ஒரு பொருளினது உருவத்தின்கண்ணும், இசையினும்-ஓசையின் கண்ணும், அருகித் தோன்றும்- சிறுபான்மையாய்த் தோன்றும்; குறிப்பு மொழி யெல்லாம்- குறிப்பு மொழிகளெல்லாம், எழுத்தின் இயலா-ஆய்த எழுத்தானிட்டு எழுதப்பட்டு நடவா. (அஃது எக்காலத்துமோ வெனின், அன்று.) ஆய்தம் அஃகா காலையான-அவ்வாய்தம் தன் அரை மாத்திரை அளபாய்ச் சுருங்கி நில்லாது (அவ்வுருவும் இசையது மிகுதியும் உணர்த்துதற்கு) நீண்ட காலத்து அந்நீட்சிக்கு.
எ-டு: "கஃறென்றது" என்பது உருவு. "சுஃறென்றது" என்பது இசை.
நச்சினார்க்கினியர்:
(இ-ள்.) உருவினும் இசையினும் அருகித் தோன்றும் குறிப்பு மொழியும்-நிறத்தின்கண்ணும் ஓசையின்கண்ணும் சிறுபான்மை ஆய்தந்தோன்றும் பொருள் குறித்தலையுடைய சொல்லும், எல்லா மொழியும்-அவை யொழிந்த எல்லா மொழிகளும், எழுத்தினியலா-ஒற்றெழுத்துக்கள் போல அரை மாத்திரையின் கண்ணும் சிறுபான்மை மிக்கும் நடந்து, ஆய்தம் அஃகாக் காலையான-ஆய்தஞ் சுருங்காத இடத்தான சொற்களாம் எ-று.
எனவே...பெற்றாம்
எழுத்தினென்ற...வினையெச்சம்.
இவ்வாறன்றி இக்குறிப்புச் சொற்கள் ஆய்தம் இரண்டிட்டு எழுதப்படாவென்று பொருள்கூறிற் செய்யுளியலோடு மாறுபட்டு மாறுகொளக் கூறலென்னுங் குற்றந்தங்குமென்று உணர்க.
6. 45
ஓரெழுத் தொருமொழி யீரெழுத் தொருமொழி
இரண்டிறந் திசைக்குந் தொடர்மொழி யுளப்பட
மூன்றே மொழிநிலை தோன்றிய நெறியே.
இளம்பூரணர்:
எ-டு: ஆ-ஓரெழுத் தொருமொழி மணி-ஈரெழுத் தொருமொழி வரகு, கொற்றன்-மூவெழுத் தொருமொழி
நச்சினார்க்கினியர்:
எ-டு: ஆ, கா, நா-ஓரெழுத் தொருமொழி
மணி வரகு கொற்றன்-ஈரெழுத் தொருமொழி
குரவ அரவ-மூவெழுத் தொருமொழி
கணவிரி-நாலெழுத் தொருமொழி
அகத்தியனார்-ஐந்தெழுத் தொருமொழி
திருச்சிற்றம்பலம்-ஆறெழுத் தொருமொழி
பெரும்பற்றப்புலியூர்-ஏழெழுத் தொருமொழி
குறிப்பு: நச்சினார்க்கினியர் ஒற்றையும் குற்றுகரத்தையும் எண்ணவில்லை.
-------------
7. 47
தம்மியல் கிளப்பி னெல்லா வெழுத்து
மெய்ந்நிலை மயக்க மான மில்லை.
இளம்பூரணர்:
இது, மெய்ம் மயக்கத்திற்கு ஓர் புறனடை உணர்த்துதல் நுதலிற்று.
(இ-ள்: எல்லா எழுத்தும் தம் இயல் கிளப்பின்-எல்லா மெய்யெழுத்தும் மொழியிடை யின்றித் தம் வடிவின் இயல்பைச் சொல்லுமிடத்து, மெய்மயக்க நிலை மானம் இல்லை-மெய்ம் மயக்க நிலையின் மயங்கி வருதல் குற்றம் இல்லை.
எ-டு: "வல்லெழுத்தியையின் டகாரமாகும்" எனவரும்.
இதனை அம்மெய்ம்மயக்கத்து வைக்க வெனின், இது வழுவமைதி நோக்கி மொழிமரபின்கண்ண தாயிற்று.
நச்சினார்க்கினியர்:
இது முன்னர் மெய்க்கண் உயிர் நின்றவாறு கூறி அவ்வுயிர் மெய்க்கண் ஏறி உயிர்மெய்யாய் நின்றகாலத்து அம்மெய்யாற்பெயர் பெறுமாறு கூறுகின்றது.
(இ-ள்: எல்லா எழுத்தும் -பன்னீருயிரும், மெய்ந்நிலை தம் இயல் மயக்கங் கிளப்பின்-மெய்யின் தன்மையிலே தம்முடைய தன்மை மயங்கிற்றாகப் பெயர் கூறின், மானமில்லை-குற்றமில்லை எ-று.
மெய்யின் தன்மையாவது...........கூறினார்.
இஃதன்றிப் பதினெட்டு மெய்யின் தன்மை கூறுமிடத்து மெய்ம்மயக்கம் கூறிய வகையானன்றி வேண்டியவாறு மயங்குமென்று கூறி "அவற்றுள் லளஃகான் முன்னர்" என்பதனைக்காட்டில் அஃது இருமொழிக் கண்ணதென மறுக்க.
---------
8. 48
யரழ வென்னு மூன்றுமுன் னொற்றக்
கசதப ஙஞநம வீரொற் றாகும்.
இளம்பூரணர்:
(இ-ள்) யரழ என்னும் மூன்று-யரழ என்று சொல்லப்படுகின்ற மூன்றனுள் ஒன்று, முன்ஒற்ற -(குறிற்கீழும் நெடிற்கீழும்) முன்னே ஒற்றாய் நிற்ப (அவற்றின் பின்னே) கசதப ங ஞ ந ம ஈர் ஒற்றாகும்-க ச த ப க்களிலொன்றாதல் ங ஞ ந மக்களினொற்றாதல் ஒற்றாய் வர அவை ஈரொற்றுடனிலையாம்.
எ-டு: வேய்க்குறை, வேய்ங்குறை, வேர்க்குறை, வேர்ங்குறை வீழ்க்குறை வீழ்ங்குறை, சிறை, தலை, புறம் என ஒட்டுக.
இவ்விதி மேல் ஈற்றகத்து உணர்ந்துகொள்ளப் படுமாலெனன், இது "ஈர்க்கு" "பீர்க்கு" எனஒருமொழியுள் வருதலானும் இரண்டு மொழிக்கண் வருதல் விகாரமாதலானும் ஈண்டுக் கூறப்பட்டது. அஃதேல், இதனை நூன்மரபினகத்து மெய்ம்மயக் கத்துக்கண் கூறுகவெனின், ஆண்டு வேற்றுமை நயம் கொண்டதாகலின் மூவொற்று உடனிலையாதல் நோக்கி ஒற்றுமை நயம்பற்றி ஈண்டுக் கூறப்பட்டது.
நச்சினார்க்கினியர்:
எ - டு : வேய்க்க வாய்ச்சி பாய்த்தல் வாய்ப்பு எனவும், பீர்க்கு நேர்ச்சி வார்த்தல் ஆர்ப்பு எனவும், வாழ்க்கை தாழ்ச்சி தாழ்த்தல் தாழ்ப்பு எனவும், காய்ங்கனி தேய்ஞ்சது காய்ந்தனம் காய்ம்புறம் எனவும், நேர்ங்கல் நேர்ஞ்சிலை நேர்ந்திலை நேர்ம்புறம் எனவும் வரும். ழகாரத்திற்கு வாழ்ந்தனம் என இக்காலத்து நகர வொற்று வரும். ஏனைய மூன்றும் இக்காலத்து வழங்குமெனின் உணர்க.
இனித் தாழ்ங்குலை தாழ்ஞ்சினை தாழ்ந்திரள் வீழ்ம்படை என அக்காலத்து வழங்குமென்று இத்தொகைச் சொற்கள் காட்டலும் ஒன்று. உரையாசிரியரும் இருமொழிக்கட் காட்டியவற்றிற்கு அவ்வீறுகடோறும் கூறுகின்ற சூத்திரங்கள் பின்னர்
வேண்டாமை உணர்க. இஃது ஈரொற்றுடனிலை யாதலின் ஈண்டு வைத்தார்.
-----------
9. 50
குறுமையு நெடுமையு மளவிற் கோடலிற்
றொடர்மொழி யெல்லா நெட்டெழுத் தியல
இளம்பூரணர்:
(இ-ள்) குறுமையும் நெடுமையும் அளவின் கோடலின் - உயிரெழுத்திற்குக் குறுமையும் நெடுமையும் அளவிற் கொள்ளப்படுதலில், தொடர்மொழிக்கீழ் நின்ற ரகார ழகாரங்கெள்ளலாம் நெடிற்கீழ் நின்ற ரகார ழகாரங்களின் இயல்பையுடைய (என்று கொள்ளப்படும்).
எ-டு : அகர், புகர், அகழ், புகழ் எனக் கொள்க.
'புலவர்' என்றாற்போல இரண்டு மாத்திரையை இறந்ததன் பின்னும் வருமாலெனின், அவையும் "தன்னின முடித்தல்" என்பதனால் 'நெடிற்கீழ் ஒற்று' எனப்படும். எல்லாம் என்றதனான், ரகார ழகாரங்களேயன்றி, பிற ஒற்றுக்களும் 'நெடிற்கீழ் ஒற்று' எனப்படும். இதனானே, விரல் தீது என்புழி லகரம் 'நெடிற்கீழ் ஒற்று' என்று கெடுக்கப்படும்.
நச்சினார்க்கினியர்:
(இ - ள்.) குறுமையும் நெடுமையும் - எழுத்துக்களது குறிய தன்மையும் நெடிய தன்மையும், அளவிற் கோடலின் - மாத்திரை யென்னும் உறுப்பினைச் செவி கருவியாக அளக்கின்ற அளவு தொழிலாலே செய்யுட்குக் கொள்ளப்படுதலின், தொடர்மொழி யெல்லாம்-அம் மாத்திரை தம்முள் தொடர்ந்துநிற்கின்ற சொற்களெல்லாம், நெட்டெழுத்தியல-நெட்டெழுத்து மாத்திரை மிக்கு நடக்கும்படியாகத் தொடர்ந்த சொல்லாம் எ-று.
எ-டு: "வருவர்கொல் வயங்கிழா அய்" எனவும் "கடியவே கனங்குழா அய்" எனவுங் குற்றெழுத்துக்களெல்லாம் நெட்டெழுத்தினை மாத்திரை மிகுத்தற்குக் கூடியவாறு உணர்க. ஏனைச்செய்யுட்களையும் இவ்வாறே காண்க. எனவே, மாத்திரை அளக்குங்கால் நெட்டெழுத்தே மாத்திரைபெற்று மிக்கு நிற்கும் எனறமையான், எதிரது போற்றலென்னும் உத்திபற்றிச் செய்யுளியலை நோக்கிக் கூறியதாயிற்று. ஈண்டுக் கூறினார், நெட்டெழுத்து இரண்டு மாத்திரையின் இகந்து வருமென்பதறிவித்தற்கு.
........இனி உரையாசிரியர் புகர் புகழ் எனக் குறிலிணைக் கீழ் ரகார ழகாரங்கள் வந்த தொடர்மொழிக ளெல்லாம் தார் தாழ் என்றாற்போல ஓசையொத்து நெட்டெழுத்தின் தன்மையவாம் என்றாராலெனின், புகர் புகழ் என்பனவற்றை நெட்டெழுத்தென்றே எவ்விடத்தும் ஆளாமையானும் நெட்டெழுத்தாகக் கூறிய இலக்கணத்தால் ஒரு பயன் கொள்ளாமையானுஞ் செய்யுளியலுள் இவற்றைக் குறிலிணை ஒற்றடுத்த நிரையசையாகவும் தார் தாழ் எனபனவற்றை நெட்டெழுத்து ஒற்றடுத்த நேரசையாகவும் கோடலானும் அது பொருளன்மை உணர்க.
-----------
10. 53
மொழிப்படுத் திசைப்பினும் தொரிந்துவேறிசைப்பினும்
எழுத்தியல் திரியா வென்மனார் புலவர்.
இளம்பூரணர்:
இது எழுத்துக்கட்கு மொழிக்கண் மாத்திரை காரணமாகப் பிறப்பதோர் ஐயம் தீர்த்தல் நுதலிற்று.
(இ-ள்) மொழிப்படுத்து இசைப்பினும்-மொழிக்கண் படுத்துச் சொல்லினும், தெரிந்து வேறு இசைப்பினும்-தெரிந்து கொண்டு வேறே சொல்லினும், எழுத்து இயல் திரியா என்மனார் புலவர்-உயிரும் மெய்யுமாகிய எழுத்துக்கள் (பெருக்கம் சுருக்கம் உடையனபோன்று இசைப்பினும்) தத்தம் மாத்திரை இயல்பில் திரியா என்று சொல்லுவர் புலவர்.
எ-டு: அஃகல் அ எனவும்; ஆல், ஆ எனவும்; கடல், க எனவும்; கால், கா எனவும் கண்டுககொள்க.
வேறு என்றதனான் எடுத்தல் படுத்தல் முதலிய ஓசை வேற்றுமைக் கண்ணும் எழுத்தியல் திரியாவென்பது கொள்க.
நச்சினார்க்கினியர்:
(இ-ள்: தெரிந்து-ஒற்றுங் குற்றுகரமும் பொருள் தரு நிலைமையை ஆராய்ந்து, மொழிப்படுத்து இசைப்பினும்-சொல்லாகச் கோத்துச் சொல்லினும், வேறு இசைப்பினும்-செய்யுளியலுள் ஒற்றுங் குற்றுகரமும் பொருள்தருமேனும் மாத்திரை குறைந்து நிற்கும் நிலைமையை நோக்கி எழுத்தெண்ணப்படா வென்று ஆண்டைக்கு வேறாகக் கூறினும், எழுத்தியல் திரியா என்மனார் புலவர்-அவ்விரண்டிடத்தும் அரை மாத்திரை பெற்று நிற்கும் குற்றுகரமும் முற்கூறிய எழுத்தாந் தன்மை திரியாவென்று கூறுவர் புலவர் எ-று
எ-டு; அல் இல் உண் எண் ஒல் எனவும் கல் வில் முள்செல் எனவும் ஆல் ஈர் ஊர் ஏர் ஓர் எனவும் கால் சீர் சூல் தேன்கோன் எனவும் உயிரும் உயிர்மெய்யுமாகிய கற்றெழுத்தையும் நெட்டெழுத்தையும் ஒற்றெழுத்துக்கள் அடுத்து நின்று பொருள் தந்தவாறு காண்க. கடம் கடாம் உடையான் திருவாரூர் அகத்தியனார் என ஈரெழுத்தையும் மூவெழுத்தையும் நாலெழுத்தையும் ஐயெழுத்தையும் இறுதியிலும் இடையிலும் ஒற்றடுத்து நின்று பொருள் தந்தவாறு காண்க. எஃகு தெள்கு கொக்கு குரங்கு என்பனவும் எழுத்தெண்ணவும் அலகிடவும் பெறாத குற்றுகரம் அடுத்து நின்று பொருள் தந்தவாறு காண்க.
இனி இச் சூத்திரத்திற்கு எழுத்துக்களைச் சொல்லாக்கிக் கூறினும். பிறிதாகக் கூறினும் மாத்திரை திரியாதென்று பொருள் கூறி, அகரம் என்புழியும் அ என்புழியும் ஆலம் என்புழியும் ஆ என்புழியும் ககரம் என்புழியும் க என்புழியும் காலம் என்புழியும் கா என்புழியும் ஓசை ஒத்து நிற்குமென்றால் அது முன்னர்க் கூறிய இலக்கணங்களாற் பெறப்படுதலிற் பயனில் கூற்றாமென்க.
-----------------
11. 83
எல்லா வெழுத்துஞ் சொல்லுங்காலைப்
இளம்பூரணர்:
(இ-ள்: எல்லா எழுத்தும் நெறிப்பட நாடி சொல்லுங் காலை-தமிழெழுத்துக்களெல்லாம் ஒருவன் முறைப்பட ஆராய்ந்து தம்மைச் சொல்லுங் காலத்து.
நச்சினார்க்கினியர்:
(இ-ள்) எல்லா எழுத்தும் பிறப்பின் ஆக்கம் சொல்லுங் காலை-தமிழெழுத்து எல்லாவற்றிற்கும் ஆசிரியன் கூறிய பிறப்பினது தோற்றரவை யாங் கூறுமிடத்து.
-----------
12 111.
மருவின் றொகுதி மயங்கியன் மொழியும்
உரியவை யுளவே புணர்நிலைச் சுட்டே.
112. இளம்பூரணர்:
(இ-ள்) மருவின் தொகுதி மயங்கு இயல் மொழியும்- (இலக்கண வழக்கேயன்றி) மரூஉத்திரளாகிய தலை தடுமாறாக மயங்கின இயல்பையுடைய இலக்கணத்தோடு பொருந்தி மரூஉ வழக்கும், உரியவை உள புணர்நிலைச் சுட்டு-உரியன உள புணரும்
நிலைமைக்கண்.
நச்சினார்க்கினியர்:
(இ - ள்) மருமொழியும் - இருவகையாகிய மருவிய சொற்களும், இன்றொகுதி மயங்கியன் மொழியும் - செவிக்கினிதாகச் சொற்றிரளிடத்து நிறுத்த சொல்லுங் குறித்துவரு கிளவியுமாய் ஒட்டினாற்போல நின்று பொருளுணர்த்தாது பிரிந்து பின்னர்ச் சென்று ஒட்டிப் பொருளுணர்த்த மயங்குதல் இயன்ற சொற்களும், புணர்நிலைச் சுட்டு உரியவை உள - புணரும் நிலைமைக் கருத்தின்கண் உரியன உள, எ - று.
-------------
13. 210
செய்ம்மன வென்னுந் தொழிலிறு சொல்லும்
ஏவல் கண்ணிய வியங்கோட் கிளவியும்
இளம்பூரணர்:
'உரையிற் கோடல்' என்பதனால், வியங்கோள்முன் வைக்கற்பாலதனை முன்வையாது செய்மமன என்பதனை முன் வைத்ததனான், இவ் வியல்பு முடிபின்கண் செய்மமன என்பது சிறப்புடைத்தெனப் பெறப்பட்டது. அதனால் ஏவல் கண்ணாத வியங்கோளும் இவ் வியல்பு முடிபு உடைத்தெனக் கொள்க. அது, "மன்னிய பெரும நீ" என வரும்.
நச்சினார்க்கினியர்:
எ-டு : ..ஏவல் கண்ணிய என்பதனான் ஏவல் கண்ணாததும் உளதென்று கூறி 'மன்னியபெரும நீ' என உதாரணங் காட்டுகவெனின், அது பொருந்தாது; கூறுகின்றான அவன் நிலைபெற்றிருத்தல் வேண்டுமென்றே கருதிக் கூறுதலின் அதுவும் ஏவல் கண்ணிற்றேயாம்.
---------
14. 233
ஆன்முன் வரூஉ மீகார பகரம்
தான்மிகத் தோன்றிக் குறுகலு முரித்தே.
இளம்பூரணர்:
(இ - ள்.) ஆன்முன் வரும் ஈகார பகரம் ஆன் என்னும் சொல்முன்னர் வருமொழியாய் வருகின்ற ஈகாரத்தொடு கூடிய பகரமாகிய மொழி, தான் மிகத் தோன்றி குறுகலும் உரித்து - அப்பகரமாகிய தான் மிகத்தோன்றி அவ் வீகாரம் இகரமாகக் குறுகி முடிதலையும் உடைத்து.
'தோன்றி' என்றதனால், நிலைமொழிப்பேறாகிய னகரவொற்றின் கேடு கொள்க.
நச்சினார்க்கினியர்:
(இ-ள்.) ஆன் முன் வரூஉம் ஈகார பகரம் – ஆனென்னுஞ் சொன்முன்னர் வருமொழியாய் வருகின்ற ஈகாரத்தோடு கூடிய பகரமாகிய மொழி, தான் மிகத் தோன்றி-அப்பகரமாகிய தான் மிக்கு நிற்ப நிலைமொழி னகரத்திற்குக் கேடு தோன்றி, குறுகலும் உரித்து - ஈகாரம் இகரமாகக் குறுகி நிற்றலும் உரித்து எ - று.
-----------
15. 316.
இலமென் கிளவிக்குப் படுவரு காலை
நிலையலு முரித்தே செய்யு ளான.
317. இளம்பூரணர்:
(இ-ள்.) இலம் என் கிளவிக்கு படு வரு காலை - இலம் என்னும் சொல்லிற்குப் படு என்னுஞ் சொல் வருமொழியாய் வருங்காலத்து, நிலையலும் உரித்து செய்யுளான் - முன் 'மகரவிறுதி' என்பதனாற் கெட்ட ஈறு கெடாது நின்று முடிதலும் உரித்துச் செய்யுட்கண்.
எ-டு: "இலம்படு புலவ ரேற்றகை நிறைய" என வரும்.
உரிச்சொல்லாகலான் உருபு விரியாதெனினும் இலத்தாற் பற்றப்படும் புலவரென்னும் பொருள் உணர நிற்றலின், வேற்றுமை முடிபாயிற்று. உம்மை மகரவீறு என்னும் சாதி
யொருமை பற்றி வந்த எதிர்மறை.
316. நச்சினார்க்கினியர்:
இதனை இலத்தாற் பற்றப்பட்ட புலவரென வேற்றுமை யென்றாரால் உரையாசிரியரெனின், பற்றப்பட்ட புலவரென்பது பெயரெச்சமாதலிற் பற்றவென்னுந் தொழில் தோற்றுவிக்கின்ற முதனிலைச் சொல்லைச் சூத்திரத்து ஆசிரியர் எடுத்தோதிற்றிலராதலானும் படுவென்பது தானும் புலவரென்னும் பெயரோடு முடியுங்கால் இரண்டு காலமும் காட்டும் ஈறுகள் தொக்க முதனிலைச் சொல்லாய் நிற்றலின், அதனை எடுத்தோதினாராதலானும் ஆசிரியர்க்கு அங்ஙனங் கூறுதல் கருத்தன்மை உணர்க.
அன்றியும் பற்றப்பட்ட என்புழி இரண்டு முதனிலை கூடி ஒன்றாய் நின்று பற்றுதலைச் செய்யப்பட்ட எனப் பொருள் தாராமையானும் அல்வழி யதிகாரமாதலானும் அது பொருளன்மை உணர்க.
409 இளம்பூரணர்:
அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும்
எல்லா விறுதியு முகர நிறையும்.
இஃது எய்தியது ஒருமருங்கு மறுத்தல் நுதலிற்று.
(இ-ள்.) அல்லது கிளப்பினும் - அல்வழியைச் சொல்லும் இடத்தும், வேற்றுமைக் கண்ணும் - வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண்ணும், எல்லா இறுதி உகரமும் நிறையும். ஆறு ஈற்றுக் குற்றியலுகரமும் நிறைந்தே நிற்கும்.
எ-டு: நாகு கடிது, நாகு கடுமை; வரகு கடிது, வரகு கடுமை என வரும்.
408. நச்சினார்க்கினியர்:
அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும்
எல்லா இறுதியும் உகர நிலையும்.
இஃது 'இடைப்படிற் குறுக மிடனு மாறுண்டே' என்றதனாற் புணர்மொழிக்கண் அரைமாத்திரையினுங் குறகுமென எய்தியதனை விலக்கி 'அவ்விய னிலையு மேனை மூன்றே' என்ற விதியே பெறுமென்கின்றது.
(இ-ள்.) அல்லது கிளப்பினும் - அல்வழியைச் சொல்லுமிடத்தும், வேற்றுமைக் கண்ணும் - வேற்றுமைப் புணர்ச்சிக் கண்ணும், எல்லா இறுதியும் உகரம் நிலையும் - ஆறு ஈற்றின்கண்ணும் உகரம் தன் அரை மாத்திரையைப் பெற்று நிற்கும் எ - று.
-----
17. 409.
வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வருவழி
தொல்லை யியற்கை நிலையலு முரித்தே.
410. இளம்பூரணர்:
இஃது எய்தியது ஒருமருங்கு மறுக்கின்றது.
(இ - ள்.) வல்லொற்றுத் தொடர்மொழி - (அவவீற்றுள்ளும்) வல்லொற்றுத் தொடர்மொழி, வல்லெழுத்து வருவழி – வல்லெழுத்து முதல்மொழி (வருமொழியாய்) வரும் இடத்து, தொல்லை இயற்கை நிலையிலும் உரித்து - முன் (கூறிய) இயற்கை நிற்றலும் உரித்து.
எ-டு: கொக்குக் கடிது, கொக்குக் கடுமை என வரும்.
409. நச்சினார்க்கினியர்:
இது முன்னின்ற சூத்திரத்தான் அரை மாத்திரை பெறும் என்றதனை விலக்கி 'இடைப்படிற் குறுகு மிடனும்' என்றதனான் அரைமாத்திரையினும் குறுகுமென்று ஆண்டு விதித்தது ஈண்டு வல்லொற்றுத் தொடர்மொழிக்கண்ணே வருமென்கின்றது.
(இ-ள்.) வல்லொற்று தொடர்மொழி - வல்லொற்றுத் தொடர்மொழி குற்றுகரம், வல்லெழுத்து வருவழி - வல்லெழுத்து முதன்மொழி வருமொழியாய் வருமிடத்து, தொல்லை இயற்கை நிலையலும் உரித்து - 'இடைப்படிற் குறுகும்’ என்பதனாற் கூறிய அரை மாத்திரையினும் குறுகி நிற்கும் என்ற இயல்பிலே நிற்றலும் உரித்து எ-று.
எ-டு: கொக்குக் கடிது கொக்குக் கடுமை என அரைமாத்திரையிற் குறைந்தவாறு குரங்கு கடிதென்பது முதலியவற்றோடு படுத்துச் செவிகருவியாக உணர்க.
முன்னின்ற சூத்திரத்து உகர நிறையுமென்று பாடம் ஓதி அதற்கு உகரம் அரை மாத்திரையிற் சிறிது மிக்கு நிற்குமென்று பொருள் கூறி இச் சூத்திரத்திற்குப் பழைய அரை மாத்திரை பெற்று நிற்குமென்று கூறுவாரும் உளர்.
------
தொல்காப்பியம் - எழுத்ததிகாரம்
அருஞ்சொற் பொருள் விளக்கம்.
அகத்தோத்து - ஓர் இலக்கணத்தைத் தனிப்படக் கூறும் நூற்பா
அகப்பாட்டெல்லை - நாட்டிற்கு உட் பட்ட எல்லை; புறப்பாட்டெல்லைக்கு எதிர்
அகல் - ஒரு முகத்தலளவு
அகளங்கன் - களங்கமற்றவன்
அண்ணணி - மிக அண்மையில்
அண்ணாஅத்தேரி - ஓர் ஊர்
அதங்கோடு - திருவிதாங்கூர்
அதோளி - அங்கு
அந்தை-ஒரு நிறை (1/1075200)
அம்பர் - அங்கு, அவ்விடம்
அமை - கல் மூங்கில்
அரை - ஒரு மரம்
அலகு - அசைக்குரிய எழுத் தெண்ணிக்கை
அழன் - பிணம்
அழான் - ஓர் இயற்பெயர்
அழுக்கல் - வருந்துதல்
அனகன் - குற்றமற்றவன்
அனபாயன் - அபாயத்தைத் தவிர்ப்பவன்
ஆசீவகப்பள்ளி - சமணத் துறவிகளின் மடம்
ஆம்பல் - ஒரு பேரெண்
ஆர் - ஆத்திமரம்
ஆவிரை - ஒரு செடி
இங்கு - பெருங்காயம்
இடக்கர் - உயர்ந்தோர் சொல்லத்தகாத இழிபொருட்சொல்
இடா - இறைகூடை, ஓலைப் பட்டை
இடா - ஓரளவு
இடைக்கணம் - இடையினம்
இதழ் - உதடு
இதோளி - இங்கு
இம்பர் - இங்கு, இவ்விடம்
இம்மி - ஒரு நிறை
இமில் - திமில்
இயல்பு கணம் - வலி மிக்கு முடியாதவை
இயைபு வல்லெழுத்து - இசைந்த வல்லினமெய்
இலதை- ஓர் ஒலி, சிலர் குலவை என்பர்
இலம்படுதல் - வறுமை யடைதல்
இலம்பாடு - வறுமை
இலேசு - நூற்பாவில் மிகையாக வேனும் வேறாக வேனும் வந்துள்ள எழுத்தும் சொல்லும் சொன்முறையும்
இறாஅ வழுதுணங்காய் - இறாட் டும் கத்தரிக்காயும்
இறாஅல் - தேன்கூடு
இறுவாய் - இறுதி, எழுவாய்க்கு எதிர்
இன்னினி - இப்பொழுதே
ஈழம் - இலங்கை
உடனிலை மயக்கம் - உயிர்மெய் உயிர்மெய்யோடும் தனிமெய் யோடும் கூடி நிற்றல் (நச். கருத்து)
உடூஉ - விண்மீன்
உத்தி-பொருந்து முறை, நூலிலும் உரையிலும் கடைப்பிடிக்கும் நெறிமுறை
உதோளி - உங்கு
உந்தி - கொப்பூழ்
உம்பர் - உங்கு, மேலிடம்
உரி - அரை நாழி
உரிஞ் - உராய்தல்
உருபு புணர்ச்சி – பெயர்கள் வேற்றுமை யுருபுகளோடு புணரும் புணர்ச்சி
உருமு - இடி
உவாஅத்து - அமாவாசையின்
உவாஅப் பட்டினி-அமாவாசைப் பட்டினி நோன்பு
உழக்கு- 2 ஆழாக்கு(1/4படி)
உழை- மான்,ஒரு மரமுமாம்
உளு-புழு
உறழ்ச்சி பெறுதல்-ஒரு புணர் மொழியே இயல்பாயும் திரி பாயும்(விகாரமாயும்) ருதல்
உறழ்வு-உறழ்ச்சி
ஊ-ஊன்
எஃகிய-எஃகு கருவியால் எற்றி நொய்தாக்கப்பட்ட
எடுத்தல்-உயர்த்தி யொலித் தல்
எதோளி-எங்கு
எயின்-எய்நர், வேடர்
எரு-காய்ந்த சாணம்
எழு-கோட்டை வாயிலிற் குறுக்காகப் போடப்படும் மரம்
ஏ-அம்பு
ஏது-காரணம்
ஏறு-காளை
ஒட்டுப் பெயர்-தொடர்ச் சொற் பெயர்
ஒருஞார்-ஓர் அளவு
ஒருதுவலி-ஓர் அளவு
ஒருபுடைச் சேறல்-ஒரு மருங்கு தழுவுதல்
ஒழிந்த செய்திகள்
ஒழிபு-நூலில் அல்லது நூற்பகுதியிற் சொல்லப்படாத ஒழிந்த செய்திகள்
ஒற்ற-பொருந்த
ஒற்றளபெடை-மெய்யெழுத்து நீண்டொலித்தல்
ஒற்று-மெய்
ஒன்றியற் கிழமைப்பட்டு நிற்றல், உடையவனித்தினின்று பிரிக்கப்படாத உடைமையாயிருத்தல்
ஓ - மதகு நீர் தாங்கும் பலகை
ஓணம்-ஒரு நாள்
ஓத்து-இலக்கணநூலின் சிறு பிரிவு
ஓத்து-விதி
ஓ-மதகு நீர் தாங்கும் பலகை
ஓரடை-ஓரளவு
ஓரா-ஒருவகை மீன்
ஓலம் போழ்-வார்ந்த அல்லது கிழித்த ஓலை
கஃசு-1/4 பலம்
கடா - வினா
கடி சூத்திரம்-தாலி
கடி சொல்-விலக்கப்படுஞ் சொல்
கருவி-புணர்ச்சசிக்கு ஏதுவான இலக்கணம்
கலம்-12 மரக்கால்
கலாம் - சண்டை
கலை-ஆண் மான்
கழஞ்சு-20 மஞ்சாடி (1/6 அவுன்சு)
கழல்-கழற்சிக்காய்
கன்-கன்னார்தொழில்
கன்னல்- தோண்டல், நாழிகை வட்டில்
கா-100 பலம்
காண்டிகை-சுருக்கவுரை
காணி-ஓர் எண் (1/80), 100 குழிநிலம், ஒரு மஞ்சாடி
காந்தருவம்-இன்னிசை
காழ்-விதை, வயிரம்
கிளவி-சொல்
குண்டிகை-குடுக்கை
குமரி-கன்னி, இளைஞை
குமிழ்-ஒரு மரம்
குரீஇ -குருவி
குறிச்சி-மலைநாட்டூர்
குறியிட்டாளுதல்-பெயரிட்டு வழங்குதல்
கூதாளி-ஒரு மரம்
கூறை-ஆடை, சேலை
கேட்டா மூலம்-கேட்டையும் மூலமும்
===
கொண்மூ-மேகம்
கொழு-கலப்பைக்காறு, கொழுப்பு
கொள்-காணம், ஒரு நிறை
கோட்டுநூறு -சங்குச் சுண்ணாம்பு
கோட்பட்டான்-பிடிக்கப்பட் டான், கொல்லப்பட்டான்
கோடு-தனித்தெழுதப்படும் கொம்பு
கோலிகக்கருவி-கோலிகர் என்னும் நெசவாளரின் கருவி
சந்தம்-வண்ணம்
சாடி-ஒரு முகத்தலளவு
சார்-ஒரு மரம்
சிங்கநோக்கு-சிங்கம் முன்னும் பின்னும் நோக்கிச் செல்லுதல்போல,
ஒரு நூற்பா முன்னும் பின்னும் உள்ள நூர்பாக்களைத் தழுவுதல்
சினை-சொல்லுக்குறுப்பாகிய எழுத்து
சீரகம்-ஒரு நிறை
சூத்திரம்-நூற்பா
சூர்-அச்சம்
செதிள்-மரப்பட்டை
செப்பலோசை-வெண்பாவிற் குரிய ஓசை
செம்மு-தூர்த்தல், புடமிடும் மருந்தைப் பொதிதல், வயிற்றுப் பொருமல், பைநிறைத்த மூட்டுதல்
செய்கை-புணர்ச்சி
செரு-போர்
செவிடு-1/5 ஆழாக்கு
செற்று-சினந்து, தடுத்து, அழித்து
சென்னி-சோழன், ஒருவனது இயற் பெயருமாம்
சே-மரம், காளை
சோ-ஒருவகை அரண்
சோதி-ஒரு நாள்
ஞாயிறு-கதிரவன்
ஞெகிழி-கொள்ளிக்கட்டை
ஞெமை-ஒரு மரம்
தகர்-ஆட்டுக்கடா
தசை-சதை
தரங்கம்-அலை
தளா-ஒரு மரம்
தாது-நீறு, பூந்தாது
தாமம்-மாலை
தாமரை-ஒரு பேரெண்
தாய்-தாவி
திங்கள்-நிலா
திங்கள்-மாதம்
திட்டாஅத்துக்குளம்-ஓர் ஊர்
திரும்-திரும்புதல்
தில்லை-ஒரு செடி
தீர்த்தம்-திருநீர் நிலை
துலாம் -ஒரு நிறை (100 அல்லது 200 பலம்)
துவராபதி - துவாரகை
துன்னூசி-கலப்பைக்குத்தி, தையலூசி
தூக்கு-பாக்களைத் துணித்து நிறுக்குஞ் செய்யுளுறுப்பு
தூணி-4 மரக்கால்
தூதுணை-ஒரு செடி
தூதை-ஒரு முகத்தலளவு
தூதை-ஒருவகைக் கலம்
தூய்-தூவி
தெவ்-பகை
தெள்கு-தெள்ளுப்பூச்சி
தென்புலத்தார் - இறந்த முன்னோர்
தேற்றம்-உறுதி, நிச்சயம்
தொடி-ஒரு பலம்
தோரை-ஒருவகை மலை நெல், மூங்கிலரிசி
நமை-ஒரு மரம்
நலிதல்-இடைத்தரமா யொலித்தல்
நாழி-படி
நாள்-உடு, விண்மீன்
நானம்-வாசனைப் பண்டம், கத் தூரி, புனுகு
நிக்கந்தக் கோட்டம்-அருகன் கோயில்
நிரைபசை - நிரையசையும் உகர வீறுங்கொண்ட ஈரசைச் சீர்
நிலங்கடந்த நெடுமுடியண்ணல் – கண்ணபிரான்
நிறை - 100 பலம்
நீட்டும்வழி நீட்டல் - நீட்டல் விகாரம்
படுத்தல் - தாழ்த்தி யொலித்தல்
பணி - கட்டளையிடு
பணை - முள்ளில்லா மூங்கில், பருமை
பதக்கு - பத்துப்படி
பரசு - கோடரி
பரணி - ஒரு நாள்
பலம் - ஒரு நிறை
பற்றுக்கோடு - சார்பு
பறைவு - தேய்வு, அழிவு, ஒலிப்பு
பற்றுக்கோடு - சார்பு
பன் - பன்னுதல் (கொய்தல் பஞ் செஃகுதல்).
பனை - ஒரு பேரளவு
பாடு - ஓசை
பானை - ஒரு முகத்தலளவை, 4 செம்பு (எண்ணையளவு)
பிடா - ஒரு மரம்
பின் - பின்னுதல்
பீர் - பீர்க்கு
புகர் - கபிலமாடு, புள்ளிமான் புழன்
புழான் - ஓர் இயற் பெயர்
புழுக்கல் - புழுங்கலரிசி
புள் - பறவை, பறவையால் அறியும் நிமித்தம்
புற்கை - கஞ்சி, கரைத்தகூழ்
புறனடை - நூலில் அல்லது
புன்கு - புனமுருங்கை
பூணி - ஓர் அளவு
பூல் - ஒரு மரம்
பூழி - புழுதி
பெயர்ப் பெயர் - தனிச் சொற்பெயர்
பெற்றம் - மாடு, காளை, எருமை
பெற்றி - தன்மை
பொருட் புணர்ச்சி - தனித்துவரும் சொற்கள் ஒன்றோடொன்று பொருட்
பொருத்தமுறப் புணரும் - புணர்ச்சி
பொருந் - பொருந்துதல்
போத்து - மாடு, மரை, புலி, புல்வாய் இவற்றின் ஆண்
போழ் - நறுக்கு, துண்டு, கிழிப்பு
மகம் - ஒரு நாள்
மண்டை - ஒரு முகத்தலளவை
மா - ஒரு நிறை, 100 குழிநிலம்
மாட்டெறிதல் - ஒன்றன் இலக்க ணத்தை இன்னொன்று தழுவு மாறு மாட்டிக் கூறுதல்
மாட்டேற்றல் - ஒன்றன் இலக்க ணத்தை இன்னொன்றும் தழுவு மாறு மாட்டிக் கூறுதல்
மிகை - மிகைபடக் கூறிய பகுதி
மிசை - முன்னெழுத்து
முந்திரிகை - 1/320
முற்கு - குமுறல் (கர்ச்சனை), பல்லி செய்வதுபோல் நாவாற் கொட்டும் ஒலியுமாம்.
மூங்கா - கீரி
மூலம் - ஒரு நாள்
மூலாதாரம் - ஆறாதாரங்களுள் குய்யத்துக்கும் குதத்துக்கும் இடையில் நாலிதழ்த்தாமரை
போலுள்ள நரம்புப் பின்னல்
மெய்ம்மயக்கம் - மெய் தன்மெய் யோடும் பிற மெய்யோடும் கூடி நிற்றல்
மென்கணம் - மெல்லினம்
மொழி மாற்று - செய்யுளின் ஓரடி யிலுள்ள சொற்கள் முறைமாறி நிற்றல்
யா - ஒரு மரம்
வங்கா - வளைந்த தாரை ஊது கொம்பு
வட்டி - 1 படி
வரட்டாடு - வறட்டாடு (பல கறவாத ஆடு)
வருட - தடவ
வரை - ஆட்காட்டி விரற் கணுவிடை
வரைநிலை - விலக்கும்நிலை
வல் - ஒரு வகைத் தாய விளையாட்டு, சூதாடு கருவி
வழை - சுரபுன்னை
வள் - வார், கூர்மை
வளி - காற்று
வளி - காற்று, மூச்சு
வன்கணம் - வல்லினம்
விகற்பித்தல் - உறழ்தல், பெருக்கல்
விச்சாவாதி - வித்தையால் திறமையாக வாதிப்பவன்
விசும்பு - வெளி
விரவுப் பெயர் - இருதிணைப் பொதுப் பெயர்
விலங்கு - எழுத்தோடு சேர்த்தெழுதப்படும் வளைவு
வீளை - சீழ்க்கை
வெதிர் - மூங்கில்
வெரிந் - முதுகு
வெள்ளம் - ஒரு பேரெண்
வேட்கை - விருப்பம்
தொல்காப்பியம் - எழுத்ததிகாரம்
நூற்பா முதற் குறிப்பு - அகர வரிசை
சூத்திரத்தின் முதல் வரி - சூத்திரம் எண்
அத்தே வற்றே ஆயிரு மொழிமேல் 133.
அத்தொடு சிவணும் ஆயிரத் திறுதி 317.
அதனிலை உயிர்க்கும் யாவரு காலை 479.
அந்நான் மொழியந் தந்நிலை திரியா 429.
அப்பெயர் மெய்யொழித் தன்கெடு வழியும் 350.
அம்மின் இறுதி கசதக் காலைத் 129.
அம்மூ வாறும் வழங்கியல் மருங்கின் 022.
அரையளவு குறுகல் மகரம் உடைத்தே 013.
அரையென வரூஉம் பால்வரை கிளவிக்குப் 165.
அல்லதன் மருங்கிற் சொல்லுங் காலை 326.
அல்லது கிளப்பின் இயற்கை யாகும் 321.
அல்லது கிளப்பின் எல்லா மொழியுஞ் 425.
அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும் 322.
அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும் 408.
அல்வழி யெல்லாம் இயல்பென மொழிப. 361.
அல்வழி யெல்லாம் உறழென மொழிப. 368.
அல்வழி யெல்லாம் உறழென மொழிப. 398.
அல்வழி யெல்லாம் மெல்லெழுத் தாகும் 314.
அவ்வழிப் பன்னீ ருயிரும் தந்நிலை திரியா 084.
அவ்வா றெழுத்தும் மூவகைப் பிறப்பின 092.
அவ்வியல் நிலையும் ஏனை மூன்றே. 012.
அவற்றுவழி மருங்கிற் சாரியை வருமே 118.
அவற்றுள் , ஈரொற்றுத் தொடர்மொழி 407.
அவற்றுள், ரகார ழகாரங் குற்றொற் றாகா. 049.
அவற்றுள், அ இ உ எ ஒ என்னும் 003.
அவற்றுள், இகர இறுபெயர் திரிபிட னுடைத்தே 154.
அவற்றுள், இன்னின் இகரம் ஆவின் இறுதி 120.
அவற்றுள், கரமுங் கானும் நெட்டெழுத் திலவே. 135.
அவற்றுள், ண னஃகான் முன்னர்க் 026.
அவற்றுள், நிறுத்த சொல்லின் ஈறா கெழுத்தொடு 108.
அவற்றுள், மெய்யீ றெல்லாம் புள்ளியொடு நிலையல் 104.
அவற்றுள், மெல்லெழுத் தியற்கை உறழினும் வரையார் 145.
அவற்றுள், லள ஃகான் முன்னர் ய வ வுந் தோன்றும். 024.
அவற்றுள், அ ஆ ஆயிரண் டங்காந் தியலும். 085.
அவைதாம், இயற்கைய வாகுஞ் செயற்கைய என்ப. 197.
அவைதாம், இன்னே வற்றே அத்தே அம்மே 119.
அவைதாம், குற்றிய லிகரம் குற்றிய லுகரம் 002.
அவைதாம், மெய்ப்பிறி தாதல் மிகுதல் குன்றலென்று 109.
அவைதாம், முன்னப் பொருள புணர்ச்சி வாயின் 142.
அவையூர் பத்தினும் அத்தொழிற் றாகும். 473.
அழன்என் இறுதிகெட வல்லெழுத்து மிகுமே . 354.
அழனே புழனே ஆயிரு மொழிக்கும் 193.
அளந்தறி கிளவியும் நிறையின் கிளவியுங் 446.
அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும் 033.
அளவாகும் மொழிமுதல் நிலைஇய உயிர்மிசை 121.
அளவிற்கும் நிறையிற்கும் மொழிமுத லாகி 170.
அளவு நிறையு மெண்ணும் வருவழி 389.
அளவும் நிறையும் ஆயியல் திரியா. 477.
அளவும் நிறையும் ஆயியல் திரியாது 474.
அளவும் நிறையும் வேற்றுமை யியல 319.
அன்றுவரு காலை ஆவா குதலும் 258.
அன்ன வென்னும் உவமக் கிளவியும் 210.
அன்னென் சாரியை ஏழ னிறுதி 194.
ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔ என்னும் 004.
ஆ எ ஒ என்னும் மூவுயிர் ஞகாரத் துரிய. 064.
ஆ ஏ ஓ அம் மூன்றும் வினா. 032.
ஆகார இறுதி அகர இயற்றே 221.
ஆடூஉ மகடூஉ ஆயிரு பெயர்க்கும் 271.
ஆண்மரக் கிளவி அரைமர இயற்றே. 304
ஆணும் பெண்ணும் அஃறிணை இயற்கை 303.
ஆதனும் பூதனும் கூறிய இயல்பொடு 348.
ஆய்த நிலையலும் வரைநிலை யின்றே 399.
ஆயிரக் கிளவி வரூஉங் காலை 464.
ஆயிரம் வரினும் ஆயியல் திரியாது. 435.
ஆயிரம் வரினே இன்னென் சாரியை 476.
ஆயிரம் வருவழி யுகரங் கெடுமே. 391.
ஆரும் வெதிருஞ் சாரும் பீரும் 363.
ஆவயின் வல்லெழுத்து மிகுதலும் உரித்தே 301.
ஆவும் மாவும் விளிப்பெயர்க் கிளவியும் 224.
ஆவோ டல்லது யகர முதலாது, 065
ஆறன் உருபின் அகரக் கிளவி 115.
ஆறன் உருபினும் நான்கன் உருபினுங் 161.
ஆறன் மருங்கிற் குற்றிய லுகரம் 469.
ஆறென் கிளவி முதல்நீ டும்மே. 458.
ஆன்முன் வரூஉம் ஈகார பகரந் 233.
ஆனின் னகரமும் அதனோ ரற்றே 124.
ஆனொற் றகரமொடு நிலையிடன் உடைத்தே. 232.
இ ஈ எ ஏ ஐயென இசைக்கும் 086.
இக்கின் இகரம் இகரமுனை யற்றே. 126.
இகர இறுதிப் பெயர்நிலை முன்னர் 235.
இகர யகரம் இறுதி விரவும் 058.
இடம்வரை கிளவிமுன் வல்லெழுத்து மிகூஉம் 251.
இடைநிலை ரகரம் இரண்டென் எண்ணிற்கு 439.
இடைப்படிற் குறுகும் இடனுமா ருண்டே 037.
இடையெழுத்தென்ப ய ர ல வ ழ ள. 021.
இடையொற்றுத் தொடரும் ஆய்தத் தொடரும் 413.
இதழியைந்து பிறக்கும் பகார மகாரம். 097.
இயற்பெயர் முன்னர்த் தந்தை முறைவரின் 347.
இரண்டுமுத லொன்பான் இறுதி முன்னர் 480.
இராவென் கிளவிக் ககரம் இல்லை 227.
இருதிசை புணரின் ஏயிடை வருமே. 431.
இருளென் கிளவி வெயிலியல் நிலையம் 402.
இல்ல மரப்பெயர் விசைமர இயற்றே 313.
இல்லென் கிளவிஇன்மை செப்பின் 372.
இல்லொடு கிளப்பின் இயற்கை யாகும் 293.
இலமென் கிளவிக்குப் படுவரு காலை 316.
இறாஅல் தோற்றம் இயற்கை யாகும். 343.
இன்றி என்னும் வினையெஞ் சிறுதி 237.
இன்னிடை வரூஉம் மொழியுமா ருளவே 186.
இன்னென வரூஉம் வேற்றுமை யுருபிற் 131.
இனி அணி என்னுங் காலையும் இடனும் 236.
ஈகார இறுதி ஆகார இயற்றே 249.
ஈமுங் கம்மும் உருமென் கிளவியும் 328.
ஈரெழுத் தொருமொழி உயிர்த்தொட ரிடைத்தொடர் 406 .
ஈரெழுத்து மொழியும் உயிர்த்தொடர் மொழியும் 411.
ஈரெழுத்து மொழியும் வல்லொற்றுத் தொடரும் 417.
ஈறியல் மருங்கின் இவையிவற் றியல்பெனக் 171.
ஈறியல் மருங்கினும் இசைமை தோன்றும் 039.
உ ஊ ஒ ஓ ஔ என இசைக்கும் 087.
உ ஊ காரம் நவவொடு நவிலா,. 074.
உஊ ஒஓ என்னும் நான்குயிர் 063.
உகர இறுதி அகர இயற்றே 254.
உகரமொடு புணரும் புள்ளி யிறுதி 163.
உச்ச காரம் இருமொழிக் குரித்தே 075.
உச்ச காரமொடு நகாரஞ் சிவணும். 079.
உட்பெறு புள்ளி உருவா கும்மே. 014.
உண்டென் கிளவி உண்மை செப்பின் 430.
உணரக் கூறிய புணரியல் மருங்கிற் 405.
உதிமரக் கிளவி மெல்லெழுத்து மிகுமே 243.
உந்தி முதலா முந்துவளி தோன்றித் 083.
உப்ப காரம் ஒன்றென மொழிப 076.
உப்ப காரமொடு ஞகாரையும் அற்றே 080.
உம்மை எஞ்சிய இருபெயர்த் தொகைமொழி 223.
உயர்திணை யாயின் உருபியல் நிலையும் 324.
உயர்திணை யாயின் நம்மிடை வருமே 190.
உயர்திணைப் பெயரே அஃறிணைப் பெயரென் 117.
உயிர்ஔ எஞ்சிய இறுதி யாகும் 069.
உயிர்முன் வரினும் ஆயியல் திரியாது 207.
உயிர்முன் வரினும் ஆயியல் திரியாது. 394.
உயிர்மெய் அல்லன மொழிமுத லாகா. 060.
உயிர்மெய் ஈறும் உயிரீற் றியற்றே. 106.
உயிரிறு சொல்முன் உயிர்வரு வழியும் 107.
உயிரீ றாகிய உயர்திணைப் பெயரும் 153.
உயிரீ றாகிய முன்னிலைக் கிளவியும் 151.
உயிரும் புள்ளியும் இறுதி யாகி 164.
உயிரும் புள்ளியும் இறுதி யாகிக் 482.
உரிவரு காலை நாழிக் கிளவி 240.
உருபியல் நிலையும் மொழியுமா ருளவே 294.
உருவினும் இசையினும் அருகித் தோன்றும் 040.
உரைப்பொருட் கிளவி நீட்டமும் வரையார், 212.
ஊஎன் ஒருபெயர் ஆவொடு சிவணும் 269.
ஊகார இறுதி ஆகார இயற்றே 264.
எ என வருமுயிர் மெய்யீ றாகாது. 071.
எகர ஒகரத் தியற்கையும் அற்றே. 016.
எகர ஒகரம் பெயர்க்கீ றாகா 272.
எகின்மர மாயின் ஆண்மர இயற்றே 336.
எஞ்சிய வெல்லாம் எஞ்சுதல் இலவே 077.
எட்ட னொற்றே ணகார மாகும். 444.
எண்ணின் இறுதி அன்னொடு சிவணும் 198.
எண்ணுப்பெயர்க் கிளவி உருபியல் நிலையும் 419.
எப்பெயர் முன்னரும் வல்லெழுத்து வருவழி 128.
எருவும் செருவும் அம்மொடு சிவணித் 260.
எல்லா மென்னும் இறுதி முன்னர் 189.
எல்லா மொழிக்கும் உயிர்வரு வழியே 140.
எல்லா வெழுத்தும் வெளிப்படக் கிளந்து 102.
எல்லாரு மென்னும் படர்க்கை யிறுதியும் 191.
எழுத்தெனப் படுப, 001.
எழுத்தோ ரன்ன பொருள்தெரி புணர்ச்சி 141.
ஏ ஓ எனும் உயிர் ஞகாரத் தில்லை. 073.
ஏகார இறுதி ஊகார இயற்றே 274.
ஏயென் இறுதிக்கு எகரம் வருமே 277.
ஏழ னுருபிற்குத் திசைப்பெயர் முன்னர்ச் 201.
ஏழென் கிளவி யுருபிய னிலையும். 388.
ஏனவை புனரின் இயல்பென மொழிப. 381.
ஏனவை வரினே மேல்நிலை இயல 256.
ஏனை எகினே யகரம் வருமே 337.
ஏனை வகரந் தொழிற்பெய ரியற்றே. 382.
ஏனை வகரம் இன்னொடு சிவணும் 184.
ஏனைப் புளிப்பெயர் மெல்லெழுத்து மிகுமே 245.
ஏனைமுன் வரினே தானிலை இன்றே 424.
ஐ ஔ என்னும் ஆயீ ரெழுத்திற் 042.
ஐஅம் பல்லென வரூஉ மிறுதி 393.
ஐஒடு குஇன் அதுகண் என்னும் 113.
ஐகார ஔகாரங் கானொடுந் தோன்றும் 137.
ஐகார இறுதிப் பெயர்நிலை முன்னர் 280.
ஐந்த னொற்றே மகார மாகும். 443.
ஐந்த னொற்றே முந்தையது கெடுமே. 454.
ஐந்த னொற்றே மெல்லெழுத் தாகும். 448.
ஐந்த னொற்றே யகார மாகும். 468.
ஐந்தும் மூன்றும் நமவரு காலை 451.
ஐயின் முன்னரும் அவ்வியல் நிலையும். 127.
ஒடுமரக் கிளவி உதிமர இயற்றே 262.
ஒவ்வும் அற்றே நவ்வலங் கடையே 072.
ஒழிந்ததன் நிலையும் மொழிந்தவற் றியற்றே 291.
ஒற்றிடை இனமிகா மொழியுமா ருளவே 412.
ஒற்றுநிலை திரியா தக்கொடு வரூஉம் 418.
ஒற்றுமிகு தகரமொடு நிற்றலு முரித்தே. 344.
ஒன்பா னிறுதி உருபுநிலை திரியா 459.
ஒன்பா னிறுதி உருபுநிலை திரியா 470.
ஒன்பான் ஒகரமிசைத் தகரம் ஒற்றும் 445.
ஒன்பான் முதனிலை முந்துகிளந் தற்றே 463.
ஒன்றுமுத லாக எட்ட னிறுதி 433.
ஒன்றுமுத லாகப் பத்தூர்ந்து வரூஉம் 199.
ஒன்றுமுத லாகிய பத்தூர் கிளவி 475.
ஒன்றுமுத லொன்பான்2 இறுதி முன்னர் 437.
ஓகார இறுதி ஏகார இயற்றே 289.
ஓகார இறுதிக் கொன்னே சாரியை 180.
ஓரள பாகும் இடனுமா ருண்டே 057.
ஓரெழுத் தொருமொழி ஈரெழுத் தொருமொழி 045.
ஔகார இருவாய்ப் 008.
ஔகார இறுதிப் பெயர்நிலை முன்னர் 295.
ஔவென வரூஉம் உயிரிறு சொல்லும் 152.
ககார ஙகாரம் முதல்நா அண்ணம் 089.
கசதப முதலிய மொழிமேற் றோன்றும் 143.
கசதப முதன்மொழி வரூஉங் காலை. 449.
கண்ணிமை நொடியென அவ்வே மாத்திரை 007.
கதந பமஎனும் ஆவைந் தெழுத்தும் 061.
கவவோ டியையின் ஔவு மாகும் 070.
காரமுங் கரமுங் கானொடு சிவணி 134.
கிளந்த அல்ல செய்யுளுள் திரிநவும் 483.
கிளைப்பெய ரெல்லாங் கிளைப்பெய ரியல. 338.
கிளைப்பெய ரெல்லாங் கொளத்திரி பிலவே 307
கீழென் கிளவி உறழத் தோன்றும் 395.
குமிழென் கிளவி மரப்பெய ராயின் 386.
குயினென் கிளவி இயற்கை யாகும். 335.
குற்றிய லிகரம் நிற்றல் வேண்டும் 034.
குற்றிய லுகரக் கின்னே சாரியை. 167.
குற்றிய லுகரத் திறுதி முன்னர் 195.
குற்றிய லுகரம் முறைப்பெயர் மருங்கின் 067.
குற்றிய லுகரமும் அற்றென மொழிப. 105.
குற்றெழுத் திம்பரும் ஓரெழுத்து மொழிக்கும் 267.
குற்றெழுத் தைந்தும் மொழிநிறை பிலவே. 044.
குறியதன் இறுதிச் சினைகெட உகரம் 234.
குறியதன் முன்னர் ஆய்தப் புள்ளி 038.
குறியதன் முன்னரும் ஓரெழுத்து மொழிக்கும் 226.
குறுமையும் நெடுமையும் அளவிற் கோடலின் 050.
குறையென் கிளவி முன்வரு காலை 166.
குன்றிசை மொழிவயின் நின்றிசை நிறைக்கும் 041.
கொடிமுன் வரினே ஐயவண் நிற்பக் 285.
ஙஞண நமன எனும்புள்ளி முன்னர்த் 025.
சகரக் கிளவியும் அவற்றோ ரற்றே 062.
சகார ஞகாரம் இடைநா அண்ணம் 090.
சார்ந்துவரி னல்லது தமக்கியல் பிலவெனத் 101.
சாரென் கிளவி காழ்வயின் வலிக்கும். 364.
சாவ என்னுஞ் செயவென் எச்சத் 209.
சிறப்பொடு வருவழி யியற்கை யாகும். 349.
சுட்டி னியற்கை முற்கிளந் தற்றே. 238.
சுட்டின் முன்னர் ஞநமத் தோன்றின் 205.
சுட்டின் முன்னரும் அத்தொழிற் றாகும் 255.
சுட்டுச்சினை நீடிய மென்றொடர் மொழியும் 427.
சுட்டுமுத லாகிய இகர இறுதியும் 159.
சுட்டுமுத லாகிய ஐயென் இறுதி 177.
சுட்டுமுத லாகிய வகர இறுதி 378.
சுட்டுமுத லுகரம் அன்னொடு சிவணி 176.
சுட்டுமுதல் இறுதி இயல்பா கும்மே 257.
சுட்டுமுதல் இறுதி உருபியல் நிலையும் 263, 281
சுட்டுமுதல் வகரம் ஐயும் மெய்யுங் 183.
சுட்டுமுதல் வயினும் எகரமுதல் வயினும் 334.
செய்யா என்னும் வினையெஞ்சு கிளவியும் 222.
செய்யுள் இறுதிப் போலி மொழிவயின் 051.
செய்யுள் மருங்கின் வேட்கை என்னும் 288.
சேஎன் மரப்பெயர் ஒடுமர இயற்றே 278.
ஞ ண ந ம ன ய ர ல வ ழ ள என்னும் 078.
ஞ ந ம வ என்னும் புள்ளி முன்னர் 027
ஞகாரை ஒற்றிய தொழிற்பெயர் முன்னர் 296.
ஞநஎன் புள்ளிக் கின்னே சாரியை. 182.
ஞநம யவவெனும் முதலாகு மொழியும் 144.
ஞநமவ இயையினும் உகரம் நிலையும். 297.
ட ற ல ள என்னும் புள்ளி முன்னர்க் 023.
டகார ணகாரம் நுனிநா அண்ணம் 091.
ணகார இறுதி வல்லெழுத் தியையின் 302.
ணளவென் புள்ளிமுன் டணவெனத் தோன்றும். 150.
ணனவென் புள்ளிமுன் யாவும் ஞாவும் 146.
தகரம் வருவழி ஆய்தம் நிலையலும் 369.
தத்தம் திரிபே சிறிய என்ப. 088.
தம்மியல் கிளப்பின் எல்லா எழுத்தும் 047.
தமிழென் கிளவியும் அதனோ ரற்றே 385.
தாம்நாம் என்னும் மகர இறுதியும் 188.
தாயென் கிளவி யியற்கை யாகும். 358.
தாழென் கிளவி கோலொடு புணரின் 384.
தான்யா னெனும்பெயர் உருபியல் நிலையும். 352.
தான்யான் என்னும் ஆயீ ரிறுதியும் 192.
தானும் பேனுங் கோனு மென்னும் 351.
திங்கள் முன்வரின் இக்கே சாரியை 248.
திங்களும் நாளும் முந்துகிளந் தன்ன. 286.
திரிபுவேறு கிளப்பின் ஒற்று முகரமுங் 432.
தேற்ற எகரமும் சிறப்பின் ஒவ்வும் 273.
தேனென் கிளவி வல்லெழுத் தியையின் 340.
தொடரல் இறுதி தம்முன் தாம்வரின் 214.
தொழிற்பெய ரெல்லாந் தொழிற்பெய ரியல 306, 376, 327, 401
நகர இறுதியும் அதனோ ரற்றே. 298.
நமவ என்னும் மூன்றோடு சிவணி 450.
நாட்பெயர்க் கிளவி மேற்கிளந் தன்ன 331.
நாயும் பலகையும் வரூஉங் காலை 374.
நாவிளிம்பு வீங்கி யண்பல் முதலுற 096.
நாள்முன் தோன்றுந் தொழில்நிலைக் கிளவிக்கு 247.
நான்க னொற்றே லகார மாகும். 453.
நான்க னொற்றே லகார மாகும். 467.
நான்க னொற்றே றகார மாகும். 442.
நான்கும் ஐந்தும் ஒற்றுமெய் திரியா. 462.
நிலாவென் கிளவி அத்தொடு சிவணும். 228.
நிறுத்த சொல்லுங் குறித்துவரு கிளவியும் 110.
நிறையு மளவும் வரூஉங் காலையுங் 436.
நீ என் பெயரும் இடக்கர்ப் பெயரும் 250.
நீஎன் ஒருபெயர் உருபியல் நிலையும் 253.
நீட்டம் வேண்டின் அவ்வள புடைய 006.
நீட வருதல் செய்யுளுள் ளுரித்தே 208.
நீயென் ஒருபெயர் நெடுமுதல் குறுகும் 179.
நும்மெ னொருபெயர் மெல்லெழுத்து மிகுமே 325.
நும்மென் இறுதி இயற்கை யாகும் 187.
நும்மென் இறுதியும் அந்நிலை திரியாது 162.
நுனிநா அணரி அண்ணம் வருட 095.
நூறா யிரமுன் வரூஉங் காலை 471.
நூறுமுன் வரினுங் கூறிய இயல்பே. 460.
நூறூர்ந்து வரூஉம் ஆயிரக் கிளவிக்குக் 392.
நூறென் கிளவி ஒன்றுமுத லொன்பாற் 472.
நெட்டெழுத் திம்பர் ஒற்றுமிகத் தோன்றும் 196.
நெட்டெழுத் திம்பருந் தொடர்மொழி யீற்றுங் 036.
நெட்டெழுத் தேழே ஓரெழுத் தொருமொழி 043.
நெடியத னிறுதி இயல்பா குநவும் 400.
நெடியதன் இறுதி இயல்புமா ருளவே 370.
நெடியதன் முன்னர் ஒற்றுமெய் கெடுதலுங் 160.
நெல்லுஞ் செல்லுங் கொல்லுஞ் சொல்லும் 371.
படர்க்கைப் பெயரும் முன்னிலைப் பெயரும் 320.
பத்தனொற் றுக்கெட னகாரம் இரட்டல் 434.
பத்தென் கிளவி யொற்றிடை கெடுவழி 390.
பதக்குமுன் வரினே தூணிக் கிளவி 239.
பல்லவை நுதலிய அகர இறுபெயர் 174.
பல்லித ழியைய வகாரம் பிறக்கும். 098.
பலரறி சொன்முன் யாவ ரென்னும் 172.
பலவற் றிறுதி உருபியல் நிலையும் 220.
பலவற் றிறுதி நீடுமொழி உளவே 213.
பன்னீ ருயிரும் மொழிமுத லாகும். 059.
பனியென வரூஉங் கால வேற்றுமைக் 241.
பனையின் முன்னர் அட்டுவரு காலை 284.
பனையும் அரையும் ஆவிரைக் கிளவியும் 283.
பனையென் அளவுங் காவென் நிறையும் 169.
பாழென் கிளவி மெல்லெழுத் துறழ்வே. 387.
பீரென் கிளவி அம்மொடுஞ் சிவணும். 365.
புணரியல் நிலையிடைக் குறுகலும் உரித்தே 035.
புள்ளி ஈற்றுமுன் உயிர்தனித் தியலாது 138.
புள்ளி யில்லா எல்லா மெய்யும் 017.
புள்ளி யிறுதியும் உயிரிறு கிளவியும் 156, 202
புள்ளும் வள்ளுந் தொழிற்பெய ரியல. 403.
புளிமரக் கிளவிக்கு அம்மே சாரியை 244.
பூஎன் ஒருபெயர் ஆயியல் பின்றே 268.
பூல்வே லென்றா ஆலென் கிளவியொடு 375.
பெண்டென் கிளவிக் கன்னும் வரையார், 421.
பெயருந் தொழிலும் பிரிந்தொருங் கிசைப்ப 132.
பெற்றம் ஆயின் முற்றஇன் வேண்டும் 279.
பொன்னென் கிளவி யீறுகெட முறையின் 356.
மஃகான் புள்ளிமுன் அத்தே சாரியை. 185.
மஃகான் புள்ளிமுன் வவ்வுந் தோன்றும் 028.
மக்க ளென்னும் பெயர்ச்சொ லிறுதி 404.
மகப்பெயர்க் கிளவிக் கின்னே சாரியை 218.
மகர இறுதி வேற்றுமை யாயின் 310.
மகரத் தொடர்மொழி மயங்குதல் வரைந்த 082.
மகன்வினை கிளப்பின் முதனிலை யியற்றே. 359.
மரப்பெயர்க் கிளவி மெல்லெழுத்து மிகுமே. 217.
மரப்பெயர்க் கிளவிக் கம்மே சாரியை. 415.
மருவின் தொகுதி மயங்கியல் மொழியும் 111.
மழையென் கிளவி வளியியல் நிலையும் 287.
மன்னுஞ் சின்னும் ஆனும் ஈனும் 333.
மாமரக் கிளவியும் ஆவும் மாவும் 231.
மாறுகொள் எச்சமும் வினாவும் ஐயமும் 290.
மாறுகோள் எச்சமும் வினாவும் எண்ணும் 275.
மின்னும் பின்னும் பன்னும் கன்னும் 345.
மீனென் கிளவி வல்லெழுத் துறழ்வே. 339.
முதலா ஏன தம்பெயர் முதலும் 066.
முதலீ ரெண்ணின் முன் உயிர்வரு காலைத் 455.
முதலீ ரெண்ணினொற்று ரகர மாகும் 438.
முதனிலை எண்ணின்முன் வல்லெழுத்து வரினும் 478.
முதனிலை நீடினும் மான மில்லை. 465.
முரணென் தொழிற்பெயர் முதலியல் நிலையும் 309.
முற்றிய லுகரமொடு பொருள்வேறு படாஅ 068.
முன்உயிர் வருமிடத் தாய்தப் புள்ளி 423.
முன்னென் கிளவி முன்னர்த் தோன்றும் 355.
மூவள பிசைத்தல் ஓரெழுத் தின்றே. 005.
மூன்ற னொற்றே நகார மாகும். 461.
மூன்ற னொற்றே பகார மாகும். 441.
மூன்ற னொற்றே வகரம் வருவழித் 452.
மூன்ற னொற்றே வகார மாகும். 466.
மூன்ற னொற்றே வந்த தொக்கும். 447.
மூன்றன் முதனிலை நீடலு முரித்தே 457.
மூன்று மாறும் நெடுமுதல் குறுகும். 440.
மூன்றுதலை யிட்ட முப்பதிற் றெழுத்தி்ன் 103.
மூன்றும் நான்கும் ஐந்தென் கிளவியுந் 456.
மெய்உயிர் நீங்கின் தன்னுரு வாகும்.1 139.
மெய்ந்நிலை சுட்டி னெல்லா வெழுத்துந் 030.
மெய்யின் அளவே அரையென மொழிப. 011.
மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும் 046.
மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல். 015.
மெய்யின் வழிய துயிர்தோன்று நிலையே. 018.
மெய்யோ டியையினும் உயிரியல் திரியா. 010.
மெல்லெழுத் தாறும் பிறப்பி னாக்கஞ் 100.
மெல்லெழுத் தியையின் அவ்வெழுத் தாகும். 380.
மெல்லெழுத் தியையின் இறுதியொ டுறழும். 342.
மெல்லெழுத் தியையின் ணகார மாகும். 367, 397.
மெல்லெழுத் துறழும் மொழியுமா ருளவே 312, 360
மெல்லெழுத் தென்ப ங ஞ ண ந ம ன. 020.
மெல்லெழுத்து மிகினும் மான மில்லை. 323.
மெல்லெழுத்து மிகினும் மான மில்லை. 341.
மெல்லெழுத்து மிகுவழி வலிப்போடு தோன்றலும் 157.
மெல்லொற்று வலியா மரப்பெயரு முளவே. 416.
மென்மையும் இடைமையும் வரூஉம் காலை 130.
மொழிப்படுத் திசைப்பினுந் தெரிந்துவே றிசைப்பினும் 053.
மொழிமுத லாகும் எல்லா எழுத்தும் 147.
ய ர ழ என்னும் புள்ளிமுன்னர் 029.
ய ர ழ என்னும் மூன்றும் ஒற்றக் 048.
யகர இறுதி வேற்றுமைப் பொருள்வயின் 357.
யகரம் வருவழி இகரங் குறுகும் 410.
யவமுன் வரினே வகரம் ஒற்றும் 206.
யாதென் இறுதியுஞ் சுட்டுமுத லாகிய 200.
யாதென் இறுதியுஞ் சுட்டுமுத லாகிய 422.
யாமரக் கிளவியும் பிடாவுந் தளாவும் 229.
யாவினா மொழியே இயல்பு மாகும். 428.
யாவென் வினாவின் ஐயென் இறுதியும் 178.
யாவென் வினாவும் ஆயியல் திரியாது 175.
ரகார இறுதி யகார இயற்றே. 362.
லகார இறுதி னகார இயற்றே. 366.
லனவென வரூஉம் புள்ளி முன்னர்த் 149.
லனவென வரூவும் புள்ளி யிறுதிமுன் 481.
வஃகான் மெய்கெடச் சுட்டுமுதல் ஐம்முன் 122.
வகரக் கிளவி நான்மொழி ஈற்றது. 081.
வகார மிசையும் மகாரங் குறுகும். 330.
வண்டும் பெண்டும் இன்னொடு சிவணும். 420.
வரன்முறை மூன்றுங் குற்றெழுத் துடைய. 136.
வல்லெழுத் தியற்கை உறழத் தோன்றும். 215.
வல்லெழுத் தென்ப க ச ட த ப ற. 019.
வல்லெழுத்து மிகினும் மான மில்லை 230, 246.
வல்லெழுத்து முதலிய வேற்றுமை யுருபிற் 114.
வல்லென் கிளவி தொழிற்பெய ரியற்றே. 373.
வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து மிகுமே. 426.
வல்லொற்றுத் தொடர்மொழி வல்லெழுத்து வருவழித் 409.
வளியென வரூஉம் பூதக் கிளவியும் 242.
வன்றொடர் மொழியும் மென்றொடர் மொழியும் 414.
வாழிய என்னுஞ் செயவென் கிளவி 211.
விசைமரக் கிளவியும் ஞெமையும் நமையும் 282.
விண்ணென வரூஉங் காயப் பெயர்வயின் 305.
வினையெஞ்சு கிளவிக்கும் முன்னிலை மொழிக்கும் 265.
வினையெஞ்சு கிளவியும் உவமக் கிளவியும் 204.
வெயிலென் கிளவி மழையியல் நிலையும். 377.
வெரிந்என் இறுதி முழுதுங் கெடுவழி 300.
வேற்றுமை குறித்த புணர்மொழி நிலையும் 112.
வேற்றுமை யல்வழி ஆய்த மாகும். 379.
வேற்றுமை யல்வழி இ ஐ யென்னும் 158.
வேற்றுமை யல்வழி எண்ணென் உணவுப்பெயர் 308.
வேற்றுமை யல்வழிக் குறுகலுந் திரிதலுந் 353.
வேற்றுமை யாயின் ஏனை யிரண்டும் 329.
வேற்றுமை யாயின் ஏனை யெகினொடு 346.
வேற்றுமை வழிய பெயர்புணர் நிலையே. 116.
வேற்றுமைக் கண்ணும் அதனா ரற்றே 216, 225, 252, 259, 266, 276, 292
வேற்றுமைக் கண்ணும் வல்லெழுத் தல்வழி 148.
வேற்றுமைக்கு உக்கெட அகரம் நிலையும் 299.
ழகர உகரம் நீடிடன் உடைத்தே 261.
ழகார இறுதி ரகார இயற்றே 383.
ளகார இறுதி ணகார இயற்றே 396.
னஃகான் றஃகான் நான்கனுரு பிற்கு. 123.
னகார இறுதி வல்லெழுத் தியையின் 332.
னகார இறுவாய்ப் 009.
னகாரை முன்னர் மகாரங் குறுகும். 052.
This file was last updated on 5 August 2015.
Feel free to send corrections to the webmaster.