குமாரசாமி முனிவர் அருளிய
ஞானவந்தாதியும், நான்மணிமாலையும்
njAna antAti and nAnmanimAlai
of kumAracAmi munivar
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Tamil Virtual Academy for providing a source of this work.
This work has been prepared using the Distributed Proof-reading implementation and
we thank the following volunteers for their assistance in the preparation of this work.
Anbu Jaya, R. Navaneethakrishnan, V. Ramasami, A. Seyzhian, CMC Karthik,
Vijayalakshmi Periapoilan and SC Tamizharasu
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2016.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
ஸ்ரீ குமாரசுவாமி முனிவரால் அருளிச்செய்யப்பட்ட
ஞானவந்தாதியும், நான்மணிமாலையும்
Source:
திருக்கைலாசபரம்பரைத் திருவண்ணாமலையாதீனத்துப்
பிரதமசற்குரு மூர்த்தியாகிய ஸ்ரீமத். தேவசிகாமணி தேசிகர்மீது
அவ்வாதீனத்து ஸ்ரீ குமாரசுவாமி முனிவரால்
அருளிச்செய்யப்பட்ட "ஞானவந்தாதி"யும், "நான்மணிமாலை"யும்.
இவை மேற்படி ஆதீனத்து ஸ்ரீமத். ஆறுமுகதேசிக சுவாமிகள்
கட்டளையிட்டருளியபடி, யாழ்ப்பாணத்துப் புலோலியோம்பதி
ம.தில்லைநாத பிள்ளையால் பரிசோதித்து
சென்னபட்டணம்: கலாரத்நாகர அச்சுக்கூடத்திற்
பதிப்பிக்கப்பட்டன.
சர்வசித்து வைகாசி 1887
------------------------------------
ஞானவந்தாதி
உ
கணபதி துணை - திருச்சிற்றம்பலம் - சிவமயம்.
சிறப்புப்பாயிரம்.
திருவாவடுதுறை யாதீன வித்துவான் ஆறுமுக சுவாமிகள்
இயற்றியருளியது.
கல்லாலின் மோனமுற்றன் றெல்லாமு
முணர்ந்தவர்க்குக் காட்டு மொன்றைத்,
தொல்லாக மத்தடைவே பல்லாரு
நன்குணரச் சொல்வானெண்ணி,
மல்லாரு மதில்புடைசூழ் திருவண்ணா
மலையிலருள் வடிவொன் றேந்தி,
நல்லார்கள் தொழப் பொலியுந் தெய்வசிகாமணிக்
குரவர் நாதன்றாளில். (1)
மனமொழிமெய் யவனடிக்கே யுறுத்தியரு
ளொருங்குபெற்ற வரதன் சைவத்,
தனமெனுஞ் சித்தாந்தகலை தெளிந்துநிட்டை
கைவந்த தகையனோட்டிற்,
கனமுறு பொன்னுங் கருதுந்தறவின
னாரியனையன்றிக் கனவினும்வே,
றுனமருவா வுளக்குமரசாமி
முனிவரனெமக்கு முறுதியோர்ந்து. (2)
உளநிறைந்த சிவானந்த முவட்டெடுத்து
வழிந்ததென வுரைப்பதன்றி,
வளநிறைந்த வேறுவமை யாமெடுத்துப்
புகலவொணா மகத்துவஞ்சால்,
களநிறைந்த பிறந்தையறுத் திடுஞான
வந்தாதி கருதுவாருட்,
குளநிறைந்த நான்மணிமாலையுஞ்
சாத்தியருட் புணரி குளித்தானன்றே. (3)
அன்னவற்றி னருணயமும் பொருணயமுஞ்
சொன்னயமு மார்ந்து தேக்கி,
மன்னுலகிற் புலவர்களும் புதுவிருந்தாச்
செவிவாயான் மாந்துமாறு,
தன்னிகரிலனைய தெய்வசிகாமணி
தேசிகன்மரபு தனக்கோர் பானு,
வென்னவுரை தரவமாவோன் கருணையொரு
வடிவெடுத்தா லேய்க்கு மெய்யான். (4)
எத்தகைவாய் வல்லவரும் வார்த்தையொன்றி
லுளமுருக வினிதுபேசு,
முத்தமனற் கொடையினரின் முன்னிற்போ ரவன்
கரத்தாலுணர்மாணாக்கர்,
தத்தருவிக் கொடுங்குன்றத் தமாந்தெதிர்ந்தோர்
வினைசாடுஞ் சதுரன்ஞான,
வித்தகனல் லாறுமுக தேசிகனச்
சிடுவித்து விளக்குகென்ன. (5)
அன்னவன் கட் டளைசிரமேற் கொண்டெழுத்துப்
பிழையற நன்றாராய்ந் தென்று,
மின்னறவி ரெழுதாத வெழுத்தினியை
வித்தனன்மற் றிவன்யாரென்னி,
லென்னவள முலகினுள வவைமுழுது
மொருங்கியைந்த யாழ்ப்பாணத்து,
மன்னுபுலோ லியம்பதியிற் கார்காத்த
வேளாளர் மரபில்வந்தோன். (6)
இலக்கியமு மிலக்கணமும் வரம்புகண்டோன்
ஞானகலை யெளிதிற் சங்கை,
விலக்கியறிந் தவன்புலவர் மெச்சிடநற்
பிரசங்கம் விரித்துச் செய்வோ,
னலக்கியைந்த நல்லொழுக்கு மெமக்கியைந்த
பெருநட்பு நன்றுவாய்ந்தோன்,
வலக்கியைந்த புகழுலகி னிறுவுதில்லை
நாதநா வலவன்றானே. (7)
-----------------------------------------
உ
கணபதிதுணை - திருச்சிற்றம்பலம்
ஞானவந்தாதி
காப்பு
பாரதந்தந்துசெய்தேவசிகாமணிபாலருணைப்
பாரதந்திகழ்ஞானவந்தாதியைப்பாடுதற்குப்
பாரதந்தந்தனைக்கொண்டுபொன்மேருவின்பாலெழுதிப்
பாரதந்தந்தருண்மால்யானைக்கன்றைப்பரவுதுமே.
விநயம்
நனியருணாசலத்தேவசிகாமணிஞானமதா
மினியசிவாகமசைவசித்தாந்தத்தினையெடுத்தே
தனியனுமோர்செந்தமிழாற்சொல்வேனெனுந் தன்மைகண்மின்
மினியிருள்சீக்குங்கதிரோனைக்காட்டும்விதமொக்குமே.
-------------
நூல்
பூமேவுதாமரைப்போதொன்றுமேருப்பொகுட்டிலங்கண்
மாமேவுதாதுடுவாயல்லிபூச்சக்ரவாளவெற்பாய்ப்
*பாமேவுதேன்புடைபாய்ந்தாலும்விள்ளப்பயப்பட்டதோ
தேமேவுபூவடிக்கண்ணாமெய்த்தேவசிகாமணியே. (1)
-----------------
* பரமேவுதேன்=சிவாகமம்,
ஏர்கொளண்ணாமலைத்தேவசிகாமணியேவளர்த்த
வார்கொள்பைந்தஎோட்டத்தொருசினைவாழைமடலெனச்சூழ்
சீர்கொளண்டம்பதினாறுண்டுபார்முன்சிவாந்தமுத்திச்
சார்கொள* மூன்றுமுந்நூற்றறுபானற் சமயிகட்கே. (2)
---------
*மூன்றுமுந்நூற்றறுபான்=முந்நூற்று அறுபத்து மூன்று என்க. அது, "முந்நூற்றறுபது மூன்றுமெனச் சொலு,
மந்நுற்சமயிக ளாலறிவரிதாய்" என்னுஞ் சதாசிவ ரூபத்திலுங் காண்க.
கட்கினிதாமருணாசலத்தேவசிகாமணியே
யுட்கொள்சித்தானசிவசமவேதையென்றுள்ளதொரு
திட்பமெய்ஞ்ஞானமெனுமாதிதிவ்யசிதாகமமே
நட்புடையாதிதிவ்யசெடாகமநண்ணியதே. (3)
நண்ணியண்ணாமலைத்தேவசிகாமணிநல்கவுறுந்
திண்ணியவாதிபௌதிகமானசெடாகமத்தைக்
கண்ணுறுசாதகர்தம்பரதேகத்திற்காற்று†விண்ணோ
டுண்ணிகழ்நாதமுயர்‡வாக்கெனவெழுந்தோங்குறுமே. (4)
-------
† விண்ணோ டுண்ணிகழ் நாதம் = வியோம பௌதிகத்தொனி.
‡ உயர்வாக்கு=மத்திமை.
ஓங்§காதியான்மிகசெடாகமமென்னுயரிருந்தை
நீங்காதுவந்துபொருந்தழலாயந்நிலைகலந்து
பாங்#காதியான்மிகசிதாகமத்தையிப்பால்விளக்குந்
தேங்காவண்ணாமலைத்தேவசிகாமணிசெப்பிடிலே. (5)
--------
§ ஆதியான்மிக செடாகமம் =தீக்ஷாவான்கள் மனச் சங்கற்பத்தினால் வியோம பௌதிகத் தொனியொடுங்
கிளம்பி மத்திமை வாக்குரூபமா யிருதயத்திற் றோற்றுமது.
#ஆதியான்மிக சிதாகமம்=ஆதிதையிகதிவ்ய சிதாகமத்தினால் விளக்கப்படும் ஆன்மசிற்சத்தி.
செப்பிடிலீனுங்குடிலைநாதத்தையதீனும்விந்து
வப்படிவிந்துவிலம்பிகைதோன்றுமவ்வம்பிகைபா
லொப்பறவாமைபின்சேட்டைரௌத்திரியுண்டருணை
வைப்படியேற்கெனுந்தேவசிகாமணிவாக்குரையே. (6)
உரைவாமைதூங்கரவோர்தண்டுசேட்டைரவுத்திரிகொம்
பரைமாமதியம்பிகைநான்கவ்வம்பிகைபாலருணைத்
தரைமேவுதேவசிகாமணிநண்ணுஞ்சயைவிசயை
நிரைமேவசிதைபராசிதையோடுநிவிர்த்தியதே. (7)
தேரோர்பிரதிட்டையோர்சாந்தியிந்திகைதீபிகைபின்
னோரோசிகைதகுமோசிகைவியோமரூபையுருத்
தாராவனந்தையனாதையனாசிருதைச்சத்தியே
யேராரண்ணாமலைத்தேவசிகாமணியேவுறுமே. (8)
ஏவுறுசத்திமண்ணாதிசிவாந்தமட்டெங்குநிறைந்
தோவுறுமிச்சத்தியிலைம்பத்தோரெழுத்துற்பவிக்கு
மேவுறுமக்கரமெல்லாமுற்பத்திவிதமிவையே
நாவுறுசோணைநந்தேவசிகாமணிநல்வன்னமே. (9)
வன்னமெல்லாம்பதமாம்பதமேவளர்வாக்கியமா
நன்னலவாக்கியமேபொருள்சேர்ந்துநடக்குமன்னுஞ்
செந்நலஞ்சோணகிரீசனந்தேவசிகாமணிசேர்
நன்னலவாக்கியமாகமமாகநடைபெறுமே. (10)
பெறுகாமிகாதிதசாகமமேசிவபேதம்பின்னுங்
குறுகாவுருத்திரபேதம்பதினெண்குழாமறுபத்
தறுபேருங்கேட்டனர்தேவசிகாமணியாலருணை
நறுமாமலர்மணம்போலேவெளிப்பட்டஞானமிதே. (11)
ஞானவந்தாதியுங்கொண்டபுராணஞ்சனாதனமீ
தானபராற்பரந்தற்பதநித்தியஞ்சாத்ததிங்கு
சூனியமவ்வியயமேயசலஞ்சுபமருணை
யானீநந்தேவசிகாமணியாஞ்சச்சிதானந்தமே. (12)
நந்தருணாசலத்தேவசிகாமணிநாதபர
மந்திரமாமந்திராதீதஞ்சிற்கனமன்னுசிவ
மந்தவியாபகமப்பிரமேய*மநௌபமமா
நிந்துதஞ்சுத்தநிராதாரநிட்களநின்மலமே. (13)
--------
* அதௌபமமாநித்திதம்=வடநூன்முடிபு
மலமிலண்ணாமலைத்தேவசிகாமணிவந்தருவா
யுலகையுண்டாக்கலிலோர்காலமொக்குமுயிர்க்குயிராய்ச்
செலவிடர்தீர்த்தலினாலேயுடலுயிர்ச்செய்தியொக்கு
நிலமுதனீக்குதலாலுதராக்கினிநேரொக்குமே. (14)
ஒக்கும்படிக்கொருவமையுண்டோவுயர்ந்தோங்குசம்பு
பக்கந்தணிலயபோகாதிகாரப்பரவைமழை
மைக்கொண்டலாலியொத்தொன்றாமருணையில்வாழ்ந்துபத்துத்
திக்கும்புரந்திடுந்தேவசிகாமணிச்செல்வமொன்றே. (15)
ஒன்றருணாசலத்தேவசிகாமணியோருருவந்
துன்று†பராக்கு‡நடுச்சத்தியோடு§சுயோன்முகியுங்
குன்றலில்லாதகுணகுணிவாதமுங்கோதிலிரண்
டென்றசற்காரியவாதமுமாகமமெங்கெங்குமே. (16)
---------
† பராக்கு=எதிர்முகசிற்சத்தி.
§ நடுச்சத்தி ஒன்றுண்டென்பது பொருந்தா தென்பர் திராவிட பாடியமுனிவர்.
‡ சுயோன்முகி =திரும்பியமுகசிற்சத்தி என ஞானப்பிரகாச முனிவருரைப்பர். இனி இவற்றை முறையே
"புறப்பொருளை நோக்கிநின் றுணர்த்துவதூஉம், புறப்பொருளை நோக்காது அறிவுமாத்திரமாய்த் தன்னியல்பி
னிற்பதூஉம்" என விளக்குவர் திராவிட பரடியமுனிவர்.
எங்குந்திகழ்சமயங்களெல்லாமலரிம்மலர்த்தேன்
றங்குஞ்செந்தேனினிறால்சைவமாமுத்திசாகரமே
செங்குன்றவில்லருணாசலத்தேவசிகாமணியே
துங்கம்பெறுமந்தக்கோற்றேனினியசுவைச்செய்தியே. (17)
செய்திறஞ்சித்தருணாசலத்தேவசிகாமணிபி
னெய்*திருபேரையிள்வைத்தெண்ணுஞானமிலயமிச்சை
யுய்தவஞானந்தொழில்போமிருவரையுள்ளுறுத்து
மெய்தருமிச்சைசங்கற்பாதிகார†விவிர்தமன்றே. (18)
---------------
* இருபேர்=போகர் அதிகாரர்
† விவிர்தம்=வியத்தி
அன்றே தனக்குப்பபயன்குறியா‡தர்த்தமாத்திரநோக்
கொன்றேயுஞ்சுத்தசிவத்தின்சுபாவமுயரருணைக்
குன்றேயுந்தேவசிகாமணிமூவகைக்கோலமெல்லாஞ்
சென்றேபிறர்பிரயோசனப்பார்வைகள்செய்வகைக்கே. (19)
---------
‡ அர்த்தமாத்திர நோக்கு=சொரூப மாத்திரமாகப் பார்த்தல்.
செய்வகைச்சோணகிரிமேவுதேவசிகாமணிபான்
மொய்வகையோர் §பிரமாவிண்டுருத்திரன்மூவகைக்கு
முய்வகையேயதிகாராதிமூவரென்றுள்ளவகை
மெய்வகையேசிவலிங்கமுக்கண்டங்கள்மேவுறுமே. (20)
---------
§அதிகார சிவன்முதலிய மூவரும் முறையே பிரமன் முதலிய மூன்றுபெயரும் பெறுவரென் றறிக.
உறுசிவனோடிலயன்சத்தனிட்களனுத்தியுத்தன்
கறுவில்சதாசிவன்போகன்மகாநிட்களசகளன்
பெறுமுறையீசன்//சகளாதிகாரன்பிரவிருத்தன்
சிறுபேர்முன்னான்கருணாசலத்தேவசிகாமணிக்கே. (21)
------
மணிக்கேழண்ணாமலைத்தேவசிகாமணிமன்னுமுன்னான்
கணிக்கேயுறுஞ்சம்புசத்திமுன்னான்கவ்வளவுவிந்துப்
பணிக்கேபதிதத்துவமுப்பத்தாறுபகுப்பெனலாந்
திணிக்கேள்விவல்லசிவயோகரெண்ணியசின்மயத்தே. (22)
சின்மயமானபரையாதியைந்துதிகழ்கலையைந்
தின்மையில்சாதாக்கியமைந்து*மூர்த்தியைந்திக்கலப்பி
லன்மையிலாமந்திரமைந்துசத்தியைந்தாலல்லவோ
மின்மையண்ணாமலைத்தேவசிகாமணிவேற்றுமையே. (23)
---------
*மூர்த்தி ஐந்து =சதாசிவன், ஈசன், பிரமன், ஈசுரன், ஈசானன், என இவர்.
வேற்றுமைதீர்மண்முதற்குடிலாந்தம்வியாத்தியெனச்
சாற்றுநன்மந்திரஞ்சிங்காசனஞ்சிவசத்தியொன்றே
மாற்றருமூர்த்திசிவமூலமென்றன்புமாமலராற்
போற்றிலண்ணாமலைத்தேவசிகாமணிபொற்பயனே. (24)
பயனாமண்ணாமலைத்தேவசிகாமணிப்பார்த்திபற்கு
நயனாநகர்விந்துநல்லயிராவணநாதமன்ப
ருயர்சேனைமந்திரிவாமாதிகளொன்பதொன்பதுபே
ரயராதவந்தியர்மந்திரமாறுமெய்யாரணியே. (25)
ஆரணியோடுசென்னியுரோதையகக்கரணந்
தாரணியோர்பணியீசானியாகியசத்தியொடு
பூரணியார்த்திபுகழ்வாமைமூர்த்திபுறக்கரணஞ்
சீரணிசோணகிரிமேவுதேவசிகாமணிக்கே. (26)
காமணிசூழருணாசலத்தேவசிகாமணியோர்
தூமணிமேனியையைந்தானபோதுறுதூலமென்ன
லாமணிச்சாதாக்கியமெனிற்சூக்குமமாகுமென்பர்
தேவமணிச்சின்மயமொன்றலவோபரந்தேருதற்கே. (27)
தேரருணாசலத்தேவசிகாமணிசூருலகத்
தேரனந்தேசருட்சத்திகள்கோபிகையேசெனனி
யோரிலுரோதைநங்கோத்திரிநேத்திரியோத்திரியே
நேரறுகின்றதிராணைநல்வாமைநியாமிகையே. (28)
கைக்கொளிரவுத்திரியேபிலாவிகையேசிரத்தை
தக்கதொர்பாலினிதான்சுவாலாப்ரகலாதினியே
யக்குலத்தம்பினியேவிகிராப்பதினாறுசத்தி
மிக்கசிவசத்திகொண்டேயுலகைவியாபிக்குமே. (29)
*வியாபினியாதியைந்தேபரநாதம்விரவு†மிந்தி
கையாதியைந்தேயபரநாதந்தேவசிகாமணிமே
வியாகுமண்ணா‡வதிசூக்குமைமுன்பரவிந்து§நிவிர்த்
தியாதியபரவிந்துச்சிவநான்குபின்சிற்சத்தியே. (30)
சத்தியுள்ளேசெனனிக்கொர்படைப்புத்தகுந்திதியோ
டத்தகுரோதமுரோதைக்கழிப்போடனுக்கிரகம்
வைத்துறுமாரணிக்கிவ்வாறுமூன்றுவகையிலைந்தாய்ச
சுத்தவண்ணாமலைத்தேவசிகாமணிசூழ்தருமே. (31)
---------
* வியாபினியாதியைந்து-வியாபினி, வியோமரூபை, அனந்தை, அனாதை, அனாசிருதை.
† இத்திகையாதிஐந்து-இத்திகை, தீபிகை, ரோசிகை, மோசிகை, ஊர்த்துவகாமினி
‡ அதிசூக்குமை முன்னைந்து-அதிசூக்குமை, சூக்குமை, அமிருதை, மிருதை, வியாபினி.
§ நிவிர்த்தியாதி-நிவிர்த்தி, பிரதிட்டை, வித்தை, சாந்தி, அதீதை,
தருமுந்தயன்மாலுருத்திரனீசன்சதாசிவன்மே
லொருவிந்துநாதம்பராசத்தியோர்சிவமொன்பதின்மேற்
கருதுந்தன்* மத்தியமாநிருத்தானந்தக்காட்சிதருந்
திருமந்திராகமத்தேவசிகாமணிச்சிற்குருவே. (32)
----------
* தன்மத்தியமா நிருத்தானந்தக் காட்சிதரும் - என்றது உன் மனாத்த
வியாபகராகிய நிட்கள நிருத்த மத்திய திலகரை.
குருமாமணிச்சுத்தவித்தையங்கோயில்குளிர்தடமா
யொருநீன்சதாசிவப்பீடம்கிழங்கதிலோமிலையா
யருண்ஞானமொன்றிரண்டாய்ப்பூத்தபூவருணாசலஞ்சேர்
திருஞானத்தேவசிகாமணிதாமரைச்சேவடியே. (33)
அடியார்க்கருள்செயுவாயுருவருவா† யருவாய்
முடியாமுடியிற்குருவாய்க்கறுத்திட்டமும்மலவன்
செடிதீரண்ணாமலைத்தேவசிகாமணிச்செஞ்சடையப்
படிமேனிசெவ்வணிசெந்தார்செஞ்சாந்துசெம்பட்டுடையே. (34)
-----------
† அருவாய் முடியா முடியிற்குருவாய் - என்றது இலையருடைய
முடியில், அனவரத வானந்த நடனரூப நிட்களாதீத சுத்தசிவம்,
ஆன்மாக்களை முத்தயி லுய்க்கவேண்டுமெனத் திருவுளத் தடைத்தவிடம்
குருமூர்த்தமென் றிருத்தலாலென்க.
உடையவுள்ளோமஞ்செய்தாறத்துவாவிட்டுமாபதிபாற்
கடையறவேபிறப்பித்தருட்சோடசகன்மஞ்செய்து
தடையறவேவளரன்பாற்செவிலியந்தாயொக்குமாற்
புடைகொளண்ணாமலைத்தேவசிகாமணிபுத்திரர்க்கே. (35)
கேளாவதிசயமொன்றுண்டுசோணகிரியிலொரு
தோளாமணியெனுந்தேவசிகாமணிச்சோதிவிழி
யாளாம்வகைசெய்தரிசனவேதியொன்றாகுமங்கை
தாளாகமெங்கும்பரிசனவேதிகன்சத்தியமே. (36)
சத்தியம்பூதவுயிரந்தரவுயிர்தத்வவுயிர்
அத்ததகுசீவன்மந்திரான்வொரீஇப் ‡பரமாதல்சுத்தஞ்
சித்தருணாசலத்தேவசிகாமணிசெய்முத்தியீ
*தத்துவிதந்துவிதம்விசிட்டங்களசுத்தங்களே. (37)
----------
‡ பரமாதல்--பரமான்மாவாதல்.
* அத்துவிதம்=மாயாவாதி சொல்லும் கேவலாத்து விதம்.
சுத்தங்கண்மேனின்றதேவசிகாமணிசோணகிரிக்
கொத்துறுதீபக்கொழுந்தேநம்பேருரைக்கூட்டங்களே
வைத்துறு† மேதைமுதலாங்கலைநின்மலவவத்தை
பத்தெனுங்காரியமம்மலைசூழும்பலவழியே. (38)
---------
† மேதைமுதலாங்கலை=மேதைமுதலிய சோடசப்பிராசாத மந்திரகலைகள்.
வழிதேனண்ணாமலைத்தேவசிகாமணிமாதவருக்
கழியாததோழர்பரமுத்தர்பாலரபரமுத்த
ரொழியாதபேரர்‡பரபோகர்போகப்பின்னோருழையர்
மொழியாவுயிரடியார்க்கடியாரின்முறைபலவே. (39)
--------
‡ பாபோகர்=புவனபதிகள். போகப்பின்னோர்=அபர போகர். அவர் புவனவாசிகள்.
பலசத்தகோடியெட்டைந்தைந்துநான்கொன்றென்பாரருணா
சலர்வித்தைகள்வித்தையீசர்சதாசிவஞ்சத்திசிவங்
கலனிற்கழல்பதக்கங்குழைபட்டங்கதிர்முடியாய்
நலனுற்றழகுறுந்தேவசிகாமணிநாயகமே. (40)
மேலேவிளங்கியதேவசிகாமணிமேவருணைப்
பாலேநெய்பெற்றியயிக்கமுந்தீபம்பனிவெண்ணிலாக்
காலேயுந்தானவயிக்கமுங்காண்பவர்கண்ணொளிக
ளாலேதடையற்றஞானைக்கியங்களுமாதனன்றே. (41)
நன்றருணாசலத்தேவசிகாமணிநாயகருக்
கென்றுமிடைபிங்கலையாமிராப்பகலிற்றபொழு
தொன்றுஞ்சுழுனையெனுந்திருக்கோயிலொன்றுண்டிதனைக்
கன்றுமனத்தினர்காணாக்கதையென்னகாரணமே. (42)
காரணமாமருணாசலத்தேவசிகாமணியாம்
பூரணபானுவுதயங்கண்டென்னைப்புடைத்தெழுப்பி
யாரணமேற்கொண்மகாமாயைக்கூட்டிலடைத்திருந்த
வாரணங்கூவவிடிந்ததுகாணிந்தவல்லிருளே. (43)
இருளிலண்ணாமலைத்தேவசிகாமணியென்றியல்பாய்த்
தெருளுமனாதிமுத்தன்னாதிமுத்தன்பின்செப்புதற்கா
முருவபரமுத்தன்சீவன்முத்தன்சிற்றுயிரென்னவே
மருவுமொன்றோடைவகையாகுஞ்சித்தென்னுமாமணியே. (44)
மாமணிதேவசிகாமணிசோணமலையொளிபோ
னீமணியென்றுள்ளநீண்மாசறுத்தநிரஞ்சனனுக்
காமணியீரெண்கலைதந்தைவன்னஞ்செய்தன்னமிட்டுத்
தூமணிமாவுரைவித்தையஞ்சாமையிற்சூழ்தருமே. (45)
சூழ்தருரேசகபூரகமாமிருசூதகம்விட்
டூழ்தருகும்பகத்தூடேமுழுகியுயரருணை
வாழ்தருதேவசிகாமணிவாழ்வைவணங்கியன்பாய்
வீழ்வதுள்ளேயுமுண்டாவாகனாதிவிதிமுறையே. (46)
விதிமுறைச்சித்துவியத்தியாவாகனமேலிவ்வண்ணம்
வதிவதுதாபனந்தேவசிகாமணிவாழருணை
நிதியெனுமான்மசிவசாநித்யஞ்சந்நிதானமிதைப்
பொதிவுறச்செய்யுந்தடைசந்நிரோதனம்பூசகர்க்கே. (47)
சகர்க்கேசர்வஞ்ஞந்திருத்தி*யனாதிபோதத்தெள்ளறி
வகத்தேநிகழுஞ்சுதந்தரத்தோடுமலுத்தசத்தி
மிகத்தேறனந்தசத்தித்தொழிலாறும்விளங்கவண்ணா
முகத்தேமெய்த்தேவசிகாமணிநீக்குமிம்மொய்யிருளே (48)
------
*அனாதிபோதத் தெள்ளறிவு=அனாதிபோதமாகிய வியற்கை யறிவு.
அனாதிபோதம் அனாதிமுத்தத்தன்மையென்று சாதிப்பர் திராவிட
பாடியகாரர். சமவாதவுரை மறுப்பிற் காண்க.
மொய்யிருண்மூலமலமொன்றனாதியின்மூடவுள்ள
மெய்யறிவின்றியருவாகியெங்கும்வியாபகமாய்ச்
செய்யருணாசலத்தேவசிகாமணிச்சித்தளித்தற்
கையமிலாவியகர்த்தாவுமாய்ப்பலவாய்நிற்குமே. (49)
நிற்குமண்ணாமலைத்தேவசிகாமணிநீடுலக
முற்கொளவேநின்றமாயையுள்ளாதிமுடிவினுள்ள
வற்கமொர்மூன்றுவகையாகு*மாயைவயிற்றுயிர்கள்
சொற்குலவும்பிரளயாகலரெனச்சோர்வுறுமே. (50)
---------
*மாயைவயிறு, மாயையின் மத்தியபாகம், அது பௌட்கரத்துங்காண்க.
சோர்வுறவேவித்தையின்கீழிருமலத்தொல்லையற்றுக்
காருறுமோர்மலமுள்ளார்†விஞ்ஞானகலரருணைச்
சீருறுசோணகிரிமேவுதேவசிகாமணிபா
னாருறமும்மலநாசஞ்செய்யாவிகணால்வகையே. (51)
----------
†விஞ்ஞானாகலர், விஞ்ஞானகலரென மரீஇயிற்று.
நால்வகையப்பிராத்தவாகியமெய்யுறுநர்கள்பின்னு
மேல்வகையாரும்பிரநட்டவாகியமெய்யரண்ணாப்
பால்வகைத்தேவசிகாமணியாளப்படும்வகையாற்
றோல்வகையற்றதிரிபந்தியோடுதுவிபந்தியே. (52)
பந்திக்கும்பாசமொருகாமரூபியும்பார்க்கிலுயிர்
சந்திக்குந்தோகையுமாய்நின்றவாவன்பர்தாமருணை
வந்திக்குந்தேவசிகாமணிதன்னைமனத்துட்கொண்டு
சிந்திக்கும்போதந்த‡மூர்ச்சையுந்தீர்ந்தொளிசேர்வனவே. (53)
--------
‡மூர்ச்சையும்-மூர்ச்சாமோகமும். உம்மையினால் பிரஞ்ஞாமோகமும் தீருமெனக் கொள்க.
சேர்வனஞ்சூழருணாசலத்தேவசிகாமணியாற்
கார்வனமாமலக்கட்டறுமட்டுங்கலாதியினா
லார்வனவாய்ச்சிற்றறிவானவாவியவத்தைகளாற்
சோர்வனவாகுமவத்தையின்பான்மைகள்சொல்லிடினே. (54)
சொல்லிடிற்கேவலத்தோடேசகலமுஞ்சுத்தமுமாய்ச்
செல்லிடுங்காரணமூன்றாகுந்தேவசிகாமணிவாழ்
வில்லிடுஞ்சோணகிரிபோலனவற்றமேன்மையுண்டாய்ப்
புல்லிடுமைவகையாங்காரியாவத்தைபுற்கலர்க்கே. (55)
கலர்க்கரிதாமருணாசலத்தேவசிகாமணியாற்
பிலப்படுங்கீழொடுமேன்மத்தியம்பின்பிரேரகமேற்
சொலப்படுநின்மலமென்னவைந்தாமித்தொகையைந்திலே
புலப்படுமேயவத்தாபஞ்சகங்கள்பொலிவுறவே. (56)
பொலிவுறு*சாக்கிரசாக்கிரமேமுதற்போதமெல்லா
மலிவுறுசாயுச்சியாந்தவரைபத்துமற்றொன்றுமே
கலியிறுஞ்சோணகிரிமேவுதேவசிகாமணியாற்
பலியுறமூவைந்துபேதங்களாய்ச்செயும்பான்மைகளே. (57)
-----------
* சாக்கிர சாக்கிரமுதல் சாயுச்சியவரை பதினொன்றாவன, சாக்கிர
சாக்கிரம், சாக்கிர சொப்பனம், சாக்கிர சுழுத்தி, சாக்கிர துரியம்,
காலபரம், அதீதம், பரதரிசனம், விசுவக்கிராசம், உபசாந்தம்,
சிவதரிசனம், சிவசாயுச்சியம்.
பான்மையினாவிகளிற்பூதசீவனிப்பாரினிலுண்
டானபுசிப்பன்னசாரத்தினாற்கருவாகியன்னை
யீனமிலாதுயிர்த்திட்டதென்றாகுமியலருணைத்
தானநந்தேவசிகாமணியிந்திரசாலமொன்றே. (58)
சாலவங்கந்தனிலுள்ளொலிநாதச்சதுர்விதவாக்
கேலவங்குள்ளபிராணனபானனியைந்துளதாஞ்
சீலாந்தாவருணாசலத்தேவசிகாமணிதன்
பாலியைந்தோரந்தரவுயிராகப்பகருவரே. (59)
பகர்மாத்திரைகள்மனமகங்காரம்பரவுபுத்தி
யகமேவுமெண்குணமுக்குணமூலமென்றான*மகா
னிகழவாங்கலாதிசுத்தஞ்செறிதத்துவநேரணுவாந்
திகழசீரண்ணாமலைத்தேவசிகாமணிசேட்டிப்பதே. (60)
--------------
*மகான்=பிரகிருதி.
சேட்டிக்குந்தேவசிகாமணிமேவித்திகழருணை
வீட்டிற்புகாதெங்குமாய்நுண்ணிதாயென்றுமேயுனதாய்
நாட்டிற்பெறுந்தத்துவந்தொறும்வேற்றுமைநண்ணிமலங்
காட்டிப்பல்யோனிதொறுஞ்சூழுஞ்சீவகதியணுவே. (61)
அணுவகையோரொன்றுக்காறெழுத்தேழிரண்டாமெழுத்துத்
திணைதருவிந்துநாதந்திகழ்நாமாத்தியக்கரஞ்சேர்ந்
தணைவுறுமேமந்திரான்மாச்சடங்கமங்காமருணைத்
துணையின்மெய்த்தேவசிகாமணிநீக்குந்துகளுறுமே. (62)
துகளுறுமைவகையான்மாமிவ்வாறுதுவக்குறுமித்
தகவுயிர்தத்தமிற்சேர்ந்திடும்யானிந்தத்தாழ்வொழிந்து
திகழ்வனென்றேபரமான்மாவிளங்குந்திருவருணை
நிகழ்தருதேவசிகாமணி யாற்பெற்றுநின்மலமே. (63)
மலங்கன்மமாயைமாயேயந்திரோதமிவ்வாறைந்தினாற்
கலங்கும்பிறவுயிர்தேவசிகாமணிகாவருணை
யிலங்குலகாயதனாதிவேதாந்திமட்டின்பமெனும்
பலங்கொளும்புற்கலவாதிகள்பேறுபலபலவே. (64)
பலவாய்மைத்தேவசிகாமணிசோணையம்பாரினிற்சீ
ருலகாயதன்கவுளன்†பிரதீபநிர்வாணனொடு
வலகன்மிசோதிடன்சூரியனக்கினிவாதியர்க
ளலகிலர்காண்பஞ்சபூதப்புவனத்தமர்பவரே. (65)
------
†பிரதீபநிர்வாணன்=புத்தரில் ஒருசாரான்.
பவமில்பிரமத்தைப்பூதாண்டகாரணப்பாவனையாய்த்
தவநினைமார்த்தர்கள்தன்மாத்திரைமுத்திசார்ந்திருப்ப
ரிவரிந்திரியான்மஞானலோகாயதரிந்திரியப்
புவனரண்ணாமலைத்தேவசிகாமணிபோந்தினிதே. (66)
இனிதாமனான்மஞானோபாயலோகாயதரிவர்க்குத்
தனியாமனோபுவனந்தனின்முத்திதயங்கருணைக்
கனியானதேவசிகாமணிசீரகங்காரத்துள்ளே
*செனியாவிடமகங்காரான்மஞானவைசேடிகர்க்கே. (67)
--------
* செனியாவிடம்=முத்தித்தானம்.
சேடிகத்தேதருந்தேவசிகாமணிசீரருணை
நாடியபுத்தியான்மாஞானமென்னுநையாயிகர்க்கு
வீடியல்புத்திவிருத்தியான்மாவுள்விவேகபுத்தர்க்
கீடியல்புத்திப்புவனப்பிராத்தியெழின்முத்தியே. (68)
முத்தியண்ணாமலைத்தேவசிகாமணிமூட்டுதலாற்
சத்தசத்தான்மவிவேகத்தருகர்தமக்குமுத்தி
யொத்தகுணப்புவனத்தேபிராத்திபின்னோர்பிரம
சித்தமெய்ஞானப்பரிணதிவேதாந்திகளடைவே. (69)
அடைவுறுநாராயணப்பிரகிர்தியான்மாவெனவே
நடைபெறுமோர்பாஞ்சராத்திரிபேறுநகுமருணை
யிடையமர்தேவசிகாமணியேயமைத்திட்டதென்பர்
தடைதீர்பிரகிருதிப்புவனந்தனிற்சார்வதுவே. (70)
சார்தருசத்தப்பிரமங்கிரீடைதரும்பிரமம்
பேர்தருசித்ரப்பிரமஞ்சொல்வாதப்பிரமுகர்கட்
கேர்தருதேவசிகாமணிசோணகிரீசனல்குஞ்
சீர்தருகின்றபுவனம்பிரகிருதிக்குள்ளதே. (71)
திக்குளண்ணாமலைத்தேவசிகாமணிசெப்புமியோ
கக்குறிப்பாதஞ்சலன்மான்புருடனையுற்றறியத்
தக்கநற்சாங்கியன்விவர்த்தவேதாந்தஞ்சொல்சந்நியசி
புக்கான்மவாதஞ்சொல்லாற்புருடப்புவனத்தரே. (72)
புவனமெய்த்தேவசிகாமணிதீக்கைசெய்புண்ணியராய்ப்
பவமில்சாகாரசிவபாவனைசெய்பரிவுடைய
சிவவாதியரிற்பவுராணிகர்முத்திசீரருணை
இவர்சொல்லிராகபுவனத்திலேசென்றமர்தரலே. (73)
அமர்தருசரகாரநிராகாரத்திலரனையெண்ணு
நமர்*சோமசித்தாந்திகள்கலாராகத்தைநண்ணுகெற்பத்
துமருவுவித்யாபுவனத்துவாழ்வர்கள்சோணகிரி
யெமரெனுந்தேவசிகாமணியேசெய்திடுங்கதியே. (74)
---------------
*சோமசித்தாந்திகளுக்கு, கலாராக கெற்பவித்தியா புவனப்
பிராப்தியே முத்தியென்க.
கதிசிவாவேசஞ்சொல்காபாலியர்க்குக்கலாபுவனந்
துதிகொள்காலேசுரவாதிகாலத்தத்துவப்புவனம்
பதியுறுசங்கிராந்தஞ்சொன்னபாசுபதர்க்கருணை
வதியுறுந்தேவசிகாமணிசெய்முத்திமாயையிலே. (75)
மாயாபுவனத்துளார்பாசுபதங்கொள்வைதிகரு
மீயார்சமுற்பத்தியோர்மாவிரதவிசேடருமே
தூயாரண்ணாமலைத்தேவசிகாமணிச்சோதியருள்
சேயார்கலாதத்துவாந்தங்கொள்சோதினிதீக்கையுண்டே. (76)
தீக்கையுண்டாகில்விஞ்ஞானகைவல்லியத்தேபொருந்த
மோக்கமுண்டாஞ்சர்வஞத்துவமாத்திரமோக்கமெனத்
தேக்குமகாவிரதர்க்கொருசுத்தவித்தியாபுவனங்
காக்குமண்ணாமலைத்தேவசிகாமணிகற்பனையே. (77)
கற்பனைப்பேறருணாசலத்தேவசிகாமணியா
னற்பிரயோச்சியமேகர்த்திருத்துவநாட்டவல்ல
சொற்பிரவாகேசுரர்க்குமனேகேச்சுரர்க்குமுத்தி
பொற்புறலாமீசுரபுவனத்திற்புகுமிசைவே. (78)
இசைவாஞ்சதாசிவசாமியவாதியெனுமுயர்வால்
வசைதீர்சிவசமவாதிசதாசிவபுவனத்தின்
மிசையாமணாமலைத்தேவசிகாமணிமெய்யருளால்
நசை*மாசில்சாத்தர்சத்திப்புவனம்பெறநல்லவரே. (79)
--------
*மாசில்சாத்தர்= சுத்தசாத்தர்.
நல்வாமதக்கிணகாருடபூதத்தினாடுதந்த்ரர்
செல்வாழ்வுசத்திகலாபுவனத்திற்றிருவருணைச்
சொல்வாய்மைத்தேவசிகாமணிதீக்கையிற்றோய்ந்திருந்து
மொல்வாச்சிவவியத்திக்குளுறாருக்குமுண்டொருங்கே. (80)
உண்டோர்வைந்தவதேகஞ்சிவனுக்கிதுண்மையெனுந்
தொண்டர்சாமானியசைவர்சிவதத்துவபுவனங்
கண்டவர்சோணகிரிமேவுதேவசிகாமணியைக்
கொண்டறிவோர்தத்துவாதீதரேதுங்குறைவிலரே. (81)
குறைவிலண்ணாமலைத்தேவசிகாமணிகொள்கையெல்லா
நிறைதருதுல்லியசைவசித்தாந்தநிகழ்ச்சித்தியா
யறைதருசாத்தியயிக்கமுமாய்ச்சச்சிதானந்தமாய்
முறையுறுசீர்ச்சிவசுத்தாத்துவைதமெய்முத்தியொன்றே. (82)
ஒன்றேயுஞ்சத்திபலவாய்ப்பொருளென்றுமோர்தத்வ
மன்றாகிக்கன்மமொப்பாய்க்கன்மமாயைக்கடங்குதல்போ
னன்றாகியபசுதத்துவத்தேவந்துநண்ணுமலந்
தொன்றாமண்ணாமலைத்தேவசிகாமணிதுட்டதன்றே. (83)
தொட்டுயிர்ச்சத்தியைத்தோய்மலசத்தித்தொகையிரண்டா
மட்டறுமாவாரகசத்தியொன்றுமறைக்குமந்தக்
கட்டறவேசெயுந்தேவசிகாமணிகாணருணைச்
சிட்டருக்கீசர்செறாதுநஞ்சாதித்திறமென்னவே. (84)
என்விதிதேவசிகாமணிசோணவெற்பெய்திலெய்தா
முன்னையதோநியாமிகாசத்தியேதுவின்மோகமதந்
துன்னியராகம்விடாதமொர்தாபமெய்ச்சோபமொடு
மன்னுவிசித்திரமென்றெழுமாயையிம்மன்னுயிர்க்கே. (85)
உயிரைமறைத்தணுவாக்கியவொண்புகழோர்மலத்தை
யயிரறமூன்றுகலைமேலறுத்ததன்வாசனையை
மயிருண்மனாந்தவரைதீர்த்தருணையில்வாழ்ந்தடியார்
செயிரறச்செய்திறந்தேவசிகாமணிசித்திரமே. (86)
சித்திரரோதைசெடானுக்கிரகந்திகழ்மலரூ
பத்துறுசத்வபரிணதிநெல்லிப்பழம்விதைமா
யைத்திறம்*ரூபாந்தரபரிணாமம்வயங்கருணைச்
சித்தெனுந்தேவசிகாமணியால்வினைதீர்தரமே. (87)
-----------
*சொரூபரந்தாபரிணாமம்=தொகுத்தல்
தரமிகுந்தேவசிகாமணிசோணத்தலந்தனின்மா
சருகும்விஞ்ஞானகலர்க்கேதனுகரணாதியெல்லாம்
வருவதுநால்வகைவாக்காதியார்க்கும்வழங்கவுரை
தருவதுமோர்சுத்தமாயையென்றேசொல்லத்தக்கதுவே. (88)
தக்கதொர்சூக்குமநாதங்கலைக்கொருதாரகமா
மக்குலத்தூலநாதங்காலமாதியைந்தும்பரிக்கு
மிக்கருணாசலத்தேவசிகாமணிமேயவிந்து
கைக்கொண்மகான்முன்னகங்காரமட்டெய்தக்கற்பித்ததே. (89)
கற்பித்ததேவருணாசலத்தேவசிகாமணிசொன்
னற்புத்திசேர்தரும்பாவப்பிராத்தியநாடகந்தை
யிற்பற்றுமோர்மனத்தோடேயிருவகையிந்திரியஞ்
சொற்பெற்றதாரகமாயேதரிபடுஞ்சுல்லிடிலே. (90)
சொல்லிடிற்சாதாக்கியமேதன்மாத்திரைதொக்கவைந்தைப்
புல்லிடுந்தாரகம்வித்தேசர்சூக்குமபூதமைந்தை
மல்லருணாசலத்தேவசிகாமணிமந்திரங்கட்
கொல்லுறுதாரகமாந்தூலபூதமுறுந்தொகையே. (91)
தொகையாமுலகுக்கொர்காரணமாமென்றுஞ்சொல்லருவாய்
மிகையாமசுத்தமுமேகமுமாகிவியாபகமாம்
வகையாயண்ணாமலைத்தேவசிகாமணிமாற்றில்வந்து
தகையாதுநித்தியமாய்நிற்குமாயைசகலருக்கே. (92)
சகலர்தங்கன்மபரியந்தம்பந்தஞ்செய்தன்மையினா
லகலருந்தேவசிகாமணிமேவருணாசலத்திற்
புகலுறுந்தீபம்புருடன்மாயேயம்பொருந்துதிரி
மிகலுறுங்கன்மநறுநெய்யுமாகிவிளக்கிட்டதே. (93)
கிட்டருந்தேவசிகாமணிசோணகிரீசனருண்
மட்டில்புரியட்டகமாதலபூதந்தன்மாத்திரைகள்
கட்டுறுகன்மேந்திரியம்பொறிகரணங்கள்குண
மிட்டமகான்பின்கலாதிகள்மாயையி*லெண்வகையே. (94)
---------
*எண்வகை=எட்டுக்கொத்து.
வகைசூழுடல்பரஞ்சூக்குமந்தூலம்வைந்தவமுந்
தொகைசூழ்புரியட்டகமுமைம்பூதத்தொகுதியாமாந்
திகைசூழண்ணாமலைத்தேவசிகாமணிதீர்செனக
மிகைசூழுந்தாரகம்போக்கியமாகும்வினைப்பலமே. (95)
பலமேவருணைநந்தேவசிகாமணிபற்றறச்செய்
மலமேயனாதிபின்னாகந்துகமதுமாயைகன்ம
முலவாதுசெய்யும்பிரவாகமேசெய்யுரோதசத்தி
பலர்பாலனுக்கிரகப்பார்வைசத்திநிபாதமதே. (96)
சத்திநிபாதம்பெறத்தீக்கைசெய்துதகவருணைச்
சித்தெனுந்தேவசிகாமணிமூவகைசெய்தவரை
ருத்ரமந்த்ரபதீசானத்துய்க்குமுயர்பதமேல்
வித்தைமகேச்சுரந்தேகநிவிர்த்திப்பின்மேவுறுமே. (97)
மேலாகும்வித்தைநற்சாந்தியதீதையைமேவல்சிவ
சாலோகசாமீபசாரூபமாமிவைசத்திசிவம்
பாலாமண்ணாமலைத்தேவசிகாமணிபண்ணுமுத்தி
நாலாவதிச்சிவசாயுச்சியத்தினண்ணாதிருளே. (98)
இருளில்சதாசிவமாம்பதஞ்சாலம்பயோகியெய்தும்
புரிகிரியாவான்காலாக்கிராந்தபுவனமெய்தும்
பிரகிருதியக்கிராந்தப்புவனம்பெறுஞ்சரியைக்
கருணைநந்தேவசிகாமணியாற்பெறலாமருளே. (99)
ஆமருணாசலத்தேவசிகாமணியாகமமென்
றேமுளைத்தோங்கியுத்தேசக்கவர்கொண்டிலக்கணமாம்
பாமருவுந்தழையெல்லாந்தழைத்துப்பரீக்கைநறும்
பூமலராய்ப்பலமெல்லாம்பழுத்ததிப்பூவினுமே. (100)
பரவுஞ்சிவபத்தரெல்லாரும்வாழியிப்பத்திவர
விரவுஞ்சிவதருமத்திறம்வாழியிம்மெய்த்தருமந்
தரவருமாகமம்வாழியிவ்வாகமந்தந்தருணை
வரவருணாசலத்தேவசிகாமணிவாழியவே. (101)
ஞானவந்தாதி முற்றியது.
ஸ்ரீமத் தேவசிகாமணிதேசிகர் திருவடிவாழ்க.
--------------------
உ
கணபதிதுணை - திருச்சிற்றம்பலம்
நான்மணிமாலை
காப்பு
தேன்மணி மாலையொடுந் தேவ சிகாமணிமே
னான்மணி மாலை நயந்தணிய-மேன்மணிக்கேழ்
வட்கருணைக் கோன்மிடற்றில் வான்றமிழோ டீன்றசிறு
கட்கருணைக் கும்பமுனி காப்பு.
வெண்பா.
பூமலிசெங் காவி பூத்ததடம் போலருணைத்
தேமலி தேவ சிகாமணியே-யேமச்
சகிதாதி கும்பகாந் தத்தேசிற் சத்திச்
சகிதாதி போகந் தரும். (1)
கலித்துறை
தருமாதி மூன்று சமுத்திர நீந்தித் தடைபுரிந்த
கருமாதி மூன்று மலைநீங்கி முக்குணக் காடகன்றே
யருமாதி மாயை யடைந்த கபாட* மகன்றுறலாந்
திருமாதிய லருணாசலத் தேவ சிகாமணியே. (2)
--------
* அகன்று என்பது செயவெனெச்சத்திரிபு.
அகவல்.
மணியினங் குயின்றென வணிமலர் பொதுளிய
பத்திரப் பைம்பொழிற் சித்திரப் படாஞ்சூ
ழன்னம் பொலிந்த நன்னெடுஞ் சிகரக்
கன்னசா லைகளுங் கன்னகூ டமுமா
யருவித் தொங்கன் மருவித் தூங்க
மாமுடித் தீப மணிக்குடந் தாங்கித்
தீபத் தான்முகில் செவ்வா னாகித்
தங்கத் தகட்டிற் பொங்கொளி பரப்பத்
தடந்திகழ் கொடிஞ்சி நெடுந்தேர் போலுந்
திருவரு ணாசலக் குருவரு ணாசலச்
சைவசி காமணி தெய்வசி காமணி
யமேய மநிச்சய மநௌபம மனாமயஞ்
சூக்குமஞ் சருவக நித்தியந் துருவ
மவ்யய மீச மதீந்தியஞ் சூன்ய
நிர்க்குண மென்று நிகழ்கா ரணப்பெய
ரந்தமி லாமையா லமேய மாகியு
மமரிட மின்மையி னநிச்சய மாயு
மதுல மாதலி னநௌபம மாயு
மமல மாதலி னனாமய மாயுஞ்
சூழ லின்மையிற் சூக்கும மாயுந்
தான்வியா பகத்தாற் சருவக மாயு
நிட்கா ரணத்தா னித்திய மாயுஞ்
சேராசை யின்மையிற் றுருவ மாயு
மறிபூ ரணத்தா லவ்யய மாயு
மிறைமை யெய்தலி னீச மென்று
மரும்பசி தாக மளந்தறி வதுபோ
லறிவரி தாகு மதீந்திய மாயுஞ்
சேர்சட மல்லது சித்துரு வாதலிற்
சோர்வி லாத சூனிய மாயும்
வீங்குசாத் துவிக விந்து வைந்தவ
நீங்கநின் றமையா னிர்க்குண மென்றுஞ்
சத்தா மாத்திர மாந்தனிப் பொருளைக்
*காரக மென்னும் பாரமத் திட்டு
நெய்போன் முத்தியி னெய்தநீ செய்த
நன்றிக் கெதிர்செய் யேனிச் சித்தே. (3)
---------
*காரகம்=தீக்ஷாநுக்கிரகம்.
விருத்தம்.
சித்துரு வருணைத்தேவ சிகாமணிச் சித்துவாரி
நத்துரு வலஞ்சூழ்ந்த நத்தினு ளுதித்தநல்ல
முத்துரு முத்தர்வேண்டின் முத்திநன் குதவும்போது
சத்துரு வாகும்பாசந் தனக்குமா தவர்க்குந்தானே. (4)
வெண்பா.
தானே தனக்கிணை யாய்த் தாவிலரு ணாசலமாய்
ஞானமய மாகியே நன்றாகி-வானோருஞ்
சேவிக்குந் தேவ சிகாமணினீய யேதரித்தா
லாவிக் கலங்கார மாம். (5)
கலித்துறை.
ஆமாம்புன் மாயை யடைத்து நன்மாயை யதனுளொரு
பூமா நிலமென்று போட்டுர மாக்கிப் புரந்தணுவை
மாமா விதையென வைத்ததெல்லாம் வளமா மருணைப்
பாமாலைத் தேவ சிகாமணிச சோதி பயிர்செய்யவே. (6)
அகவல்.
செய்யசிந் தூரச் செழுநதிக் கிடந்தங்
கோர்பதி னறுநான் குகத்தினும் விளைந்த
வுதயா சலமணி சிதையமேல் விளங்குந்
திருவரு ணாசலத் தேவசி காமணி
யருணா சலேசமி லருணா சலேசன்
குருபரன் பால குமாரன் விருத்தனென்
றொருவ னெய்து பருவம் போலப்
பொருந்து மிலய போகா திகாரமென்
றிருந்தியல் செய்தி யியம்பலோ வரிதே
யிருபரு வந்தன் னிடத்துநீங் காத
வொருபரு வத்தி னுதாசீ னரூபி
தானொரு பொருளைத் தான்விரும் பாம
லான்மா விளங்கு மரும்பய னோக்கி
யானசு பாவத் தனைவரு முறங்கினுந்
தானுறங் காத தனிக்குடி வாழ்க்கையில்
ஞான மாத்திர மான போதும்
ஆக்கிய மாயா சத்தி வியத்தி
யோக்கியப் பார்வை யுயர்படைப் பாகவுஞ்
சேர்தரு மாயே யந்திதி யோக்கியப்
பார்வை தானே பகர்திதி யாகவுங்
கன்ம பரிபா கம்படச் செய்த
லன்மையி லாச்சங் கார மாகவுந்
திகழ்மலஞ் செலுத்த றிரோத மாகவு
கிளர்கா ரகமனுக் கிரக மாகவு
நினைவா லைந்தொழி னிகழ்த்துந் திதியிற்
றேசிகர் யோசனை செய்யினுஞ் சிவத்துவ
மேசி லாதுறு மிலயத் தானத்
திலயா வத்தையி னிலங்கிய சோதியை
மலைவற வுரைப்பின் வானினும் பெரிதே
யின்மையின் மனோலய மெய்துவர்
சின்மயத் தோர்தினஞ் சிந்தனை செய்தே. (7)
விருத்தம்.
செய்யசீரரு ணாசலத்தேவசி காமணிச் செழுஞ்சோதியை
யனே செயுமைந் தொழிலையும் விளையாட்டென்ப ரறியாதார்,
கையதாகிய காரணங் கரணமோர் காரியம் பயனலலாற்,
பையல்செய்தொழில் பரமகாரணர் செயார் பகர்வது பரிவன்றே. (8)
வெண்பா.
அன்றன்று முந்நூற் றறுபத்து முச்சமயத்
தொன்றன்று வெவ்வே றுளமுத்தி-நன்றென்ற
சித்தாந்த மாமருணைத் தேவ சிகாமணிசெய்
சுத்தாத்து வைதச் சுகம். (9)
கலித்துறை.
சுகமெறிந்தேகுற மாதரு மாதவத் தோர்களுங்கண்
ணகமுறுந் தேவ சிகாமணி யாலங் கவணடுத்தே
தகவுறைந் தைவனங் காத்தரு ணாசலச் சாரலிலே
யிகமுறு போகமு மின்பா போகமு மெய்துவரே. (10)
அகவல்.
எய்தருங் காலாக் கினியெழுந் தடர்ந்த
செஞ்சுடர்ச் சுவாலை விஞ்சுகா லத்து
நரக முதலா நலம்பெறு சுவர்க்கத்
தளவுஞ் சராசர மடங்கலுந் தகிக்கும்
பிரதமப் பிரளயம் வரவருந் தோறும்
பிரமாப் படைப்பப் பிரமகற் பத்திற்
பிரமாண் டத்திலிவ் விருநிலப் பரப்பே
சத்துவ மாகத் தான்முன் பொருந்தலி
னன்னிலை பிளந்த பொன்னிற வண்டத்
திருகபா லங்களும் பரமாணு வாகப்
பிரமாண் டாதி பிராகிரு தாந்தத்
திருநான் கண்டமும் வருமுறை பெயர்ந்து
காரியந் தத்தங் காரணத் தொடுங்க
வுய்த்தசீ கண்ட வுருத்திர ரருளால்
மத்திமப் பிரளய வகையிலிம் முறையே
யேழி லக்கத் திருபதி னாயிரம்
பிரம ரிறந்திட வருமா லையிலே
முறைபெறு மூர்த்தா மூர்த்த மாகியு
மறையாத் தந்திர மந்திர மாயும்
பரவும் பரம பரங்க ளாகியு
மேற்படு சுத்த மிச்சிர மசுத்தமென்
றார்ப்புறு தத்துவ மாறா றாயுங்
காலாக் கினிமுதற் கருதுசி வாந்தம்
பேரா தடுக்கிய பிரக்கிரி யாண்டத்
திருவகை மாயே யங்களு மிடிந்து
காரியந் தத்தங் காரணத் தொடுங்க
வடுமகாப் பிரளய மாரணி முடிப்பச்
சுத்த காலந் தோன்றிய சமயத்
திலயப் பருவத் திதம்பெறு பதார்த்தப்
பாலனப் போகர் சீல நோக்கி
லியல்சேர் நியாமிக விச்சா சத்தியு
ஞாபக மான ஞான சத்தியு
முத்தி யோகத் துயர்ந்த கிரியையு
மென்னு மூவகைச் சின்னம் படைத்து
நால்வகைப் பேருடை மேல்வகை யொருவ
னண்ணா மலையிற் கண்ணா ரமுதத்
தேவசி காமணித் தேசிகன்
மேவிய செய்கை விளையாட் டலவே. (11)
விருத்தம்.
வேதாகம ஞானவிபூதிம னோதீதம னோரத மாநிதி
மேதாதிக லாதிசு கோதய மேலான
நாதாதிய னாதிபராபர ஞானாதிய னாமய பூரண
நானாவித மான சதாசிவ நீள்சோதி
யாதாரமெ னாவரிதேடிய பாதாள மெலாமடி யாய்நெடி
தாகாயமே லாமுடியாயய னோர வோர்
சீதாடவி சேரருணாசல மீதேயுறை தேவசிகாமணி
சீர்பாதம் விடாதவ ரேகதிசேர்வாரே. (12)
வெண்பா.
சேரியலி னீளருணைத் தேவசிகா மணிசெய்
காரியமே லாகியசற் காரியமே-யோரில்
விருத்தி பரிணதி விவர்த்தா ரம்பத்திற்
பருத்திகலை பாறயிரொப பாம். (13)
கலித்துறை.
பாமாலைத் தேவ சிகாமணி வாழும் பதியருணைத்
தூமாலை வெள்ளரு வித்தொங்கல் வாய்க்கண்ட சோலையிறபோய்த்
தேமா மரமென்று வெவ்வேறு கண்டவர் செய்தியைப்போ
லாமாக மத்திற் குணகுணி வாதமென் றாவதுவே. (14)
அகவல்.
ஆவது மழிவது மாக்குதற் கிடமாந்
தாவில் காரண தத்துவங் கடந்து
மும்முத் திரையுறு முத்தத் துவங்களி
னம்முத் திரைதிறந் தறிவ தாகியும்
வீசொளி பரந்து வியாபக மாய்நிறைந்
தீசர் கணயன கோசரங் கடந்து
மேழைய ரழைப்பினு மெதிர்மொழி கொடுத்தரு
ளருணா சலம்போற் கருணா லயநிதி
சீரரு ணாசலத் தேவ சிகாமணி
யியற்றுதற் கருத்தா வென்ப தாகலி
ணயர்ப்பருஞ் சத்திக ளாங்கர ணத்தா
லீறி லைந்தொழி லேவுங் கருத்தாத்
தூல மானவைந் தொழிலவா யோக்கியச்
சூக்கும மானவைந் தொழிலின் வழாத
விந்துவை நீங்கா விலய முத்தியும்
விந்துவை நீங்கிய விலயவி யத்தியும்
ஆந்தொழில் சாந்தி யாதிநாற் கலையினுஞ்
சாந்தி யதீதத் தனிக்கலை தனிலு
மிக்கலை யைந்தா வியல்பரை யாதியிற்
றக்க சிவமுதற் சாதாக் கியங்களு
மீசான னாதியைந் தெழின்மூர்த் திகளுஞ்
சேர்ந்த கலப்பின்மந் திரங்க ளைந்து
மீசானி யாதியைந் தியல்சத் திகளுமென்
றளவில்சத் திகளிவ் வாறுண் டாக
மூர்த்திக ளைந்து முடியைந் தாக
வைந்துசா தாக்கிய மைம்முக மாகப்
பிரம மைந்துந் திருமேனி யாக
அணுசதா சிவரீ சானரா தியர்கள்
பஞ்சவன் னத்துறும் பாவனை யதனா
லிந்திர சிலைபோ லுந்திரு மேனியன்
மறைப்பாற் கோம்பி வடிலென லன்றி
நிறத்தி னானு நிகழ்பரஞ் சோதி
யிலக்குறு மிலய போகநெய் திரண்டென
வுலப்பி லாத வொருதனு மூர்த்தி
மதுவை யூட்டிப்பின் வல்வினை தீர்க்கும்
பண்டிதர் போலருள் கொண்ட சங்கற்பன்
சீமான் வைந்தவ தேகியென் றுரைக்குஞ்
சாமான்ய சைவர் சாராக் கடவுள்
இலகிய சுத்த வித்தியா புவனங்
குலவிய சத்த கோடி மந்திரத்து
ளியல்வச் சிராதிய ரிந்திரா தியர்க
ளுயர்நந் தியாதிய ருள்ளுறச் சூழ்ந்தே
யைந்து நான்கு மூன்றா யெதிரா
யமர்ந்த மூவகை யாவர ணத்து
ளீசுரத் தினிலனந் தேசரா தியர்சூ
ழாசி லாத்துவி தாவர ணத்துட்
டங்குசா தாக்கியந் தன்னிற் பிரம
மங்க முதலா வரணஞ் சூழத்
திருமுடி யைந்துந் திருமுக மைந்து
மருள்புரி யிதயமு மங்க மாகக்
கண்கள்மூ வைந்தொளிர் கன்னநாசி
யொண்களி வாய்கள்பத் துயர்தோள் கைவிர
லுரந்த னம்வயி றுந்தி யூருச்சா
னுசங்கந் தாள்பிரத் தியங்க மாக
வெண்மை பொன்மை கருமை செம்மையென்
றெண்மை நிறங்களு முள்ளசின் னங்களு
மாயுதா திகளுஞ் சாங்க மாக
வுடையா பரணாதி யுபாங்க மாக
நவசத் திகளு நலங்கொள்முப் பானெண்
சிவசத் திகளுஞ் சிறந்துட னிருப்பப்
பொருவி லெண் சத்திகள் புகழாய்ப் பொலிய
வைந்து நீளமு மாறுன் னதமுஞ்
சிறுக னான்குஞ் சிவப்போ ரேழுங்
கூர்நேர்மை யைந்துங் குழிவு மூன்று
மகல மிரண்டு மாயழ குடனே
யண்ண லருள்வடி வான மேனியி
லெண்ணான் கென்னு மிலக்கண மிலங்க
வீறிலா துயர்ந்த விருதய முதலா
மாறுமந் திரங்க ளடங்கலும் புரக்கத்
தந்திரந் திகழ்சத் தியாதிசத் தியந்த
மந்திர சிங்கா சனத்துறை வள்ளல்
தத்துவ மூர்த்தி தனிப்பிர பாவமென்
றுத்தம மாக வுயர்திரு வுருவ
னரிபிர மாதியர்க் கரிய ராகிய
யோகா யோகீச் சுரர்க்குஞ் *சாமி
மோக நித்திரையின் முயன்றோர்த் தொடாம
லெண்கையி லெடுத்த வீரெண் கோலால்
விழுப்பந் தோன்ற வெழுப்புந் தேசிகன்
ஞானஞா திருவென் றானதே யல்லா
லேனை வடிவென் றிலாத சதாசிவன்
சுத்த மாயைத் துறையைக் கலக்கிச்
சத்த மருத்தந் தந்தரு ளீசன்
மன்னர் பாரமு மந்திரி தாங்கலி
னின்ன வாறுள வீசனு மிவ்வழி
நின்ன தாக நிகழ்த்துத லின்றேல்
மலமா யாதியில் மறைந்தோ ரவத்தையுஞ்
செறிவுறு தன்னையுஞ் சிவனையு
மறிவுறு மறிவெப் படியா வாரே. (15)
-----------
* சாமி-பிராகிருதம் என்பர் நச்சினார்க்கினியர்.
அது சிந்தாமணி யுரையிற் காண்க.
விருத்தம்.
ஆவாரக மலமானா லணுவிபு வாமோ வாகாதே
யோவாதறிவை மறைத்தா லறிவற்றுயி ரென்பதுமுண்டோ
தாவாஞா திருஞானம் ஞெத்தி தணந்திட லாகாதே
தேவா வருணைத் தேவசிகாமணி தேசிக தேர்வோர்க்கே. (16)
வெண்பா.
கேவலான் மாவைமலங் கிட்டியதன் றேயருணைத்
தேவசிகா மணியைத் தீண்டியதோ-பாவங்
கடிதன்றே செம்பு களிம்புற்ற தல்லாற்
படிகங் கொளுமோ பழுது. (17)
கலித்துறை.
பழுதான கங்குலிற் பாயிருள் சீக்கும் பருதிவரும்
பொழுதா ரிருள்புல ராமலிராது புகழருணைத்
தொழுதாதை தேவ சிகாமணிச் சூரியன் றோன்றமல
முழுதா ரிருள்புலர்ந் தம்போ ருகக்கண்முகிழ் விள்ளுமே. (18)
அகவல்.
விள்ளருங் கருணை வெள்ள மான
வுண்ணா முலைப்பெண் ணுமையொடு வதிந்து
மாறா துதவும் வசந்தத் தியாகர்
நினைவருள் புழுகு நெய்ப்பிர தாபர்
வடவா முகமும் வாரியின் மறையக்
காலாக் கினியுங் கதிரொளி மழுங்கப்
பகலோன் வடிவும் பகன்மதி யாகத்
தருபே ரொளிவிளங் கருணாச லேச
தேவ சிகாமணித் தேவ தேவே
சிவாக மத்துள்ளே தெரிவ தல்லா
லவாகமச் சமயிக ளறியாத தாகிக்
கேவலம் பஞ்சக் கிலேசத் தவிச்சை
போல்வி வேகத்திற் போகா தாகித்
திகழிதஞ் சேராச் செம்பிற் களிம்புங்
கதகஞ் சேர்ந்த கலங்கலு மணிசே
ருடலிற் பொல்லா விடமும் போல
பயில்சிவ சத்தி பதிந்த காலத்
துயிரொழி யாதுதா னொழிவ தாகிக்
கருவியிற் றீர்ந்திடு கட்பட லம்போற்
கிரியா தீக்கையிற் கிடைப்ப தல்லா
லொருஞா னத்து மொழியாத தாகித்
தூமங் காட்டுஞ் சுடர்போல் வாஞ்சைசெய்
போகங் காட்டப் பொலிவ தாகி
பொருசிவன் போல வுயர்சுதந் தரனை
பரதந் திரியம் படுத்துவ தாகி
யாசறு சகச னாகிய வணுவைப்
பாசிய னாக்கும் பசுத்துவ மாகிப்
பிணியொன் றில்லாப் பேரறி வோனை
யணுவென் றாக்கு மஞ்சன மாகி
யொழிவி லாதுயர்ந் தோங்குசிற் சத்தி
விழிதரும் போதி லொழிவ தாகித்
தானொன் றாகிச் சத்திகள் பலவா
யான்மாத் தோறு மாவ தாகிப்
பலவகைப் பட்ட *விருவகைச் சத்தி
யொருமல பதார்த்த மொழிப்பதோ வரிதே
தருவாகீ சுவரி தான்கீ ழரணியு
மிகுவா கீசுரர் மேலர ணியுமா
யோம்பழ லுயிராப் போம்புகை மலமாய்
விறகனல் போல மெய்யறி வுதிப்ப
முறுகக் கடைந்த வுறுதி நன்றே
யைவகைப் புகையெனு மலோபா திநீங்க
விவ்வகை நீசெய் திடா விடில்
மெய்வகை விறகனல் வெளிப்பட லுறாதே. (19)
----------
*இருவகைச்சத்தி=ஆவாரகசத்தி-அதோநியாமிகா சத்தி.
விருத்தம்.
உறவொடு பகையை யொழித்தரு ளுருவா
யோங்கிய குரவனு மரசு
மறலியு மெனவே மன்னுயிர்பாவ மாற்றுதற்
கமைத்தமூ வரினுந்
திறலுறுதேவ சிகாமணியாலே தீதெலாந்
தீர்ந்திடி லினிதா
மறமுடை யரசன் செயலினுங் கொடிதா
மளப்பரு நிரயவேத னையே. (20)
வெண்பா.
வேதனைசேருள்ளந்தான் மெய்யறிவுமோவருணைச்
சேதனமாந்தேவ சிகாமணியைப் - போதநிறை
மாத்தவர்தம்பாசமெலா மாய்ந்தசமனாந்தத்தே
சாத்தமனங் காட்சிதரும். (21)
கலித்துறை.
தருமாயையென்னுமிரண்டு மிப்பாசத்தளையுமுறு
கருமாயைவாழ்க்கையணுவ வைதானுங்கருணைபுரி
திருமாநிதியருணாசலத்தேவ சிகாமணியு
மருமாவியாபகநித்தியமா மைந்தனாதிகளே. (22)
அகவல்.
அனாதி பரானந் தப்பெருஞ் சோதியை
யாதி யோடந்தஞ் சோதனை குறித்தலின்
மாய வராகங் காயஞ் சேந்து
குமரன் வேலாற் சமர்செயு முன்னும்
புண்படச் சிவந்த பண்பு காட்ட
வந்த முறாதே நொந்தவெள் ளன்னமு
மாவேள் கொடிச் செஞ் சேவலாகச்
செஞ்சுடர் விரிக்குந் திருவருணா சலத்
தேவ சிகாமணிச் சீமா னருளிற்
பாரந் தாங்கிய சீரனந் தேசர்
சுவதாய்ப் போகந் துய்ப்பித் திடுதலின்
மோகினி யெனும்பே ராகிய மாயையிற்
பாய பாளையிற் பூவிரி தோன்றப்
பூவிரி் பழுக்கா யாவிரிவது போல்
மிச்சிர மசுத்த மெனவிரி தத்துவஞ்
சாதா ரணமு மசாதா ரணமுஞ்
சாதா ரணாசா தாரண வடிவும்
படைத்தினி தளிக்கும் பான்மைத் திதியி
லசாதா ரணத்தினு ளாந்திரி பந்தி
பௌவன போகஞ் செவ்விதி னுகர
வருபிர நட்ட வாகிய தேகியு
மருவப் பிராப்த வாகிய தேகியுந்
தூலதே கங்கொடு துய்க்கச் சமைந்திட
நற்றுவி பந்திவிஞ் ஞான கலரா
யற்று மலத்தோ டதீதத் திருப்பஞ்
சுவாப காலத்துமுன் சொல்லிய மூவகை
யனைவரும் பிரள யாகல ராகத்
தோற்ற மொடுக்கந் தோறுஞ் சுழன்று
மாயா பந்தத் தாயான் மாக்கள்
உறுதுயர் யாவையு மொழியுங் காலம்
பாசவாலிலை பழுத்த பக்குவ மாய்ச்
சொல்லுஞ் சொருபசத் துவ பரிணதியு
மாயையால் விதையில் வளர்ந்தென வெழுந்து
தோன்றிய சொரூபாந் தரபரி ணதியுங்
கன்ம நாசமென் றிம்மூ வகையின்
பரிபா கமனுக் கிரக மாகவும்
பாக முறாவிப் பான்மூ வகைக்கு
மனுக்கிர கந்திரோ தான மாகவு
மரனறிந் தியற்றுவ தல்லா
லரிதரி தறிவ தான்மா திகளே. (23)
விருத்தம்.
திகழுமன மிந்திரிய மொன்றைச் செலுத்திடத் தேரினிரு விகற்ப வித்தே,
சேர்ந்தறிய ராகம் விகற்பமா யிச்சையைச் செய்யமன மையஞ்செய்தே,
நிகழகங் காரமதி யேவவொன் றறிவலென நிற்பவொன் றுறுபதார்த்த,
நிச்சயஞ் செய்யமுக் குணமீன்ற புத்தியி னிறைந்தசுக துக்கமோகம்,
புகல்நியதி நியமிக்க வோர்கால மேவப் புகழ்கலை புசிப்பதாக்கப்,
புத்தியிற்போகம் புசிக்கவுன் முகனாய்ப் புகுந்தபுரு டன்றனக்கோர்,
மகனெனுஞ் சீவனிவ் வாறுமோ கினியான் மயங்கிப் புசிக்கவூட்டி,
வருதுயி லுறச்செயு மருணைவாழ் தெய்வ சிகாமணி மறாதடுத்தே. (24)
வெண்பா.
அடுத்தருணைத் தேவ சிகாமணியா லன்றோ
வடுத்தனைநீத் தங்கனகம் வாய்ந்தேன் - றொடுத்த
வலகுடைய தங்கமினி யாகேனப் பாலு
மிலகுடைய தங்கமா வேன். (25)
கலித்துறை.
வேனிலுந் தண்ணெனத் தென்றலு லாம்பொழின் மேகமென்னத்
தேனின் மழைபெய் யருணைநந் தேவ சிகாமணிகண்
மீனினமேனி யனகனஞ் சிந்தனை வேறல்லவே
யீனினந்தேடுந் துளியின மாகும் மியாவர்க்குமே. (26)
அகவல்.
யாவருங் காண வேபசுந் தோகை
காவின்மே லிருந்து கண்ணொளி பரப்பத்
தாதையே துதைந்து பேதைவண் டூதுங்
கூதள மலர்வெண் கோடென விசைப்ப
முத்தள வருவி மத்தள முழங்கக்
கின்னர மிதுனங்க ளின்னிசை பாட
வாயு வாய்துளை வேய்தா னிசைப்பக்
குருவரு ணாசலக் கொழுஞ்சுட ராடுந்
திருவரு ணாசலத் தேவ சிகாமணி
நிருமல வாழ்க்கை நீதோய்ந் தறியாக்
கருமல வாழ்க்கையெங் காதை கேட்டி.
யுலக மேழு மலேகம தாக
விழுத்தகு மேரு வெழுத்தா ணியாகப்
பலநா ளெழுதினுந் தொலையாப் பாரத
மாயினுஞ் சிலசில தீயினுங் கொடியன
மாயா தேகத் தாயமுக் குணஞ்செய்
புத்தி யென்றது பத்தியொன் றறியா
தெட்டுக் கோணல் பட்டசக்கரத்
தாறுநூற் றீரா றாய பாவச்
சூறா வளியிற் சுழலுந் தோறுந்
தேடிய கன்மங் கோடி கோடி
சீரண வுலகிற் காரண மின்மையி
லாதி யோவன் றனாதி பந்த
முலந்தபின் மாயையி லுறைந்துபக் குவமாய்ப்
புலர்ந்தபி னணுக்கள் புந்தியின் முளைத்து
மனவாக் காயத் தனுதினம் வளர்ந்தே
யக்கினிட் டோம மந்தணர் தாந்தஞ்
செய்தலிற் கன்மமென் றெய்து பெயர்த்தாகிச்
சஞ்சித முதலா விஞ்சு மூன்றி
லார்த்த மாய்வந் தடைந்த கன்மஞ்
சாதி யாயுப் போக மென்றுஞ்
சனகந் தாரகம் போக்கிய மென்று
மதிட்டந் திட்ட மனியத மென்றுஞ்
செம்பொ னிரும்பிற் செய்விலங் கிரண்டெனத்
தன்மா தன்ம மென்னுமீ ருருவாய்த்
துக்க மோகஞ் சுகமெனப் பலவாய்ப்
புக்குழிப் புக்குப் பொருந்து மாதலி
னிறந்திறந் துலகிற் பிறந்திடுந் தோறும்
பாபபீ டைப்பெரும் பாதகஞ் செய்தலி
னரக நூற்று நாற்பதிற் பயின்றபின்
விலங்குரு வாயித் தலந்தனிற் பிறந்துந்
தரும நியாயந் தப்பிய தீமைக்
கருமந் தன்னா லுருமீ னாயும்
வாக்கு நான்கால் வருபவந் தொடரப்
பறவை யாகும் பிறவியாயு
நாத்திகம் பேசலி னயனிலாப் பாலையிற்
பூத்துப் பயன்படாப் புன்மர மாயும்
பவமுறப் பிறர்க்குப் பயஞ்செய் திடலாற்
சருவமுண் டுழலுஞ் சாதி யாயும்
வெய்துறு பயஞ்செய்து மெய்யனா சாரஞ்
செய்துநாய் முதலாந் தீப்பிறப் பெய்தியுந்
தழைத்திடுங் கிரக தானாப கார
மிழைத்தலிற் பரதந் திரிய மெய்தியுங்
கருணையொன் றில்லாக் கருத்தொன் றுடைமையி
னிருணணி பயக்கு மிழிபிறப் பேய்ந்து
நிறைகுண மினமையி னேசத் தாற்றிரு
முறைகரந் திடுதலின் மூங்கை யாயுந்
துன்னெறி யாலுயிர்த் தொகைக்கிடர் செய்தலி
னன்னெறிக் கண்செவி நாசி குறைந்து
மலைவுறு கொலையா லற்பாயு வாயு
முலவாக் கால முழந்தன னெந்தாய்
வரமுறு நல்லுப வாசய மத்தாற்
பரதகண் டத்திப் பான்மையிற் பிறந்தேன்
பவமுறு பவ்வப் படுதிரைத் துயருழந்
தவமுறு மழுவத் தழுந்தி னேனை
யுபாய பதார்த்தமென் றோர்புணை யேறறி
ஞானபா தத்தி னற்கரை யேற்றினை
பிறவா வாழ்க்கையும் பெற்றே
னறவா பேறினி யாவரு வனவே. (27)
விருத்தம்.
யாவரும் பரவு மேன்மை யெய்துமிவ் வருணைதானே
தேவரும் புகழ்செய் தேவ சிகாமணி சேருமூதூர்
தாவரு மகங்கா ராண்டத் தலேச்சுரத் தனிப்பேர்மன்னு
நீவரு நினைக்கமுத்தி நிகழ்மனோ புவனமாமே. (28)
வெண்பா.
மேவரிய வெண்மதியின் மேலேநன் னூலினுறத்
தேவ சிகாமணியைச் சேர்த்தணிந்தா-லோவாத
நல்லலங் காரமா நள்ளிர வெலாம்பகலா
மல்லலங் காரவரி தாம். (29)
கலித்துறை.
அரியா குறையு மருணையுமென்னித யாம்புயமும்
பிரியா துறைதரு தேவ சிகாமணி பேதைமைபோற்
றெரியா தயர்த்த வடியார் தினந்தினஞ் செய்தபிழை
பரியா தறுத்துச் சுடுவதெல் லாமவர்பாசத்தையே. (30)
அகவல்.
பாசத் தளையாற் பலபகுப் பாதலிற்
காரா வினத்தினு ளோரா வேறாய்
விசாதியிற் பிரிந்து சாதியி னீங்கிச்
சுகத பேதச் சொரூப நீங்காமையி
னன்னது போலு மன்னுயி ரொன்றே
யூகமனு பவத் தோரி ரண்டாகி
மூவகைச் சத்தியாய் நால்வகைக் குலமாய்ப்
பஞ்சவன் னங்கொளும் படிகம் போல
வாறத் துவாவினை வேறு வேறுருவா
யெழுவகைத் தோற்றத் தெண்வகை மலத்தொடு
நவமுறு கன்மத் தவமுற லொழித்துத்
தசகாரி யத்தின் வசமுற விருத்தி
வரமும் போகமு மருட்கையு முடைய
மேல்கீழ் நடுவென விளங்கவத் தையினி
லிருதை யாதிசாக் கிராதியைந் தின்கண்
டொகுபிர மாதியிற் றோய்சுத்த வித்தையிற்
றிகழைந் தெழுத்தொடு சிவமந்திரஞ் சொல
விவ்வகை யின்றிச் செய்வகை மயங்கிப்
புருவ நடுமுதற் புகல்கீ ழவத்தையி
லிருவகை யிந்தியம் விடய மிருபது
முட்கரணங் களைந் தொடு கால்பத்து
மென்றையே முறல்சாக் கிரமென் றாக
வாயு வசனாதி நால்வாயி லிருபது
மனாதி புருடன் வகையைந் துடனே
யையைந் துறல்சொப் பனமென் றாகச்
செந்நெறிப் பிராணனுஞ் சித்தமும் புருடனுஞ்
சொன்ன மூன்றுறல் சுழுத்தி யாகப்
புருடன் பிராணனோர் துரிய மாகப்
புருடனி லிங்கம் புகச்சீ விப்பது
தெருளறு துரியா தீத மாக
வைவகை யாகு மவத்தை நீங்கிப்
பிரத்தியா காரா திபெறுசாக் ராதியி
லுன்மனாந்த மட் டுயர்தா னத்துச்
சாக்கிர சாக்கிரந் தான் முதலாகச்
சாக்கிர துரியந் தன்னின் மீதே
கால பரமதீ தம்பர தரிசனம்
விசுவக் கிராச முபசாந்தஞ் சிவ
தெரிசனஞ் சாயுச சியம் பன்னொன்று
மைமூன் றாந்துரி யாதீதத் துட்
சிவபோகப் பெருஞ் சிவசா திருச்சியச்
சிவசா யுச்சியச் சிவானந்தந் தனை
சிறியேற் குதவும் பெருமை யாள
தகாத களங்கமுந் தமரு மில்லா
மகாமணி தேவ சிகாமணிச் சோதி
மருணாசஞ் செயு மருணா சலேச
விவவகை யின்றிச் செய்வகை யில்லாப்
பாலர் வாலீசா மாதர் போகியரென்
றென்போ லியர்க்கு மிருங்கதி வேண்டிச்
சில*நிரப்பீச தீக்கையுஞ் செய்தி
பெரியோர் பெறும்பே றெளியோரு மெய்தலி
னின்பெருங் கருணை நீரமை கண்
டன்பி லேனின் னடிபணிந் தேனே. (31)
----------
* நிர்ப்பீசம்=ஆசாரமில்லாதது என்றார் மறைஞானதேசிகர்.
விருத்தம்.
பணிந்திடுஞ் சிவபத்தர் பாலுறுபத்தியும் பவபீதியு
மணிந்தசின்னமுமெய்யடக்கமுமாகமத்திலமைத்தவா
துணிந்தசெய்கையு முத்தியோடு தொடாச்சியும் பலசோணைவாவாய்த்
திணிந்துதேவ சிகாமணிக்குறு செய்தியைப்புகல் சின்னமே. (32)
வெண்பா.
சின்னமா மேசஞ் சிதந்தகித்த வித்தெனலா
யன்னதீக் காங்கத்தா காமியம்போந்-தென்னருணைச்
சித்தேகத் தேவ சிகாமணிசெய் யார்த்த
மத்தேகத் தோடறுமெல் லாம். (33)
கலித்துறை.
எல்லாருந் தீபங் கொழுந்துசெவ்வான மிளந்தளிர்மின்
மல்லார் மலர்நெய் வழிதேன் புகைமென் மகரந்தமாய்ச்
சொல்லாருந் தேவ சிகாமணிசோணைத் துருமமொன்று
பல்லார் விழிவண்டு சூழ்தர முத்திப் பலந்தருமே. (34)
அகவல்.
தருகீழ முத்தித் தலைமை சான்ற
பிரகிரு தியில்வரு புவனம் பேசிற்
சேர்பெரும் பூதஞ் சிறந்ததன் மாத்திரை
வாரிந்திரிய மனமகங் கார
மதிகுண மான்மே லிருபுவ னத்துப்
பிசாசுட னிராக்கதர் பேரா வியக்கர்
யாழோ ரிந்திரன் சோமர் பிரசாபதி
யிவ்வெழு பேர்க்கு மொவ்வொன் றாக
வேறிய சித்தியு மிவர்கள் மேலே
திசைமுக னெண்ணெண் சித்தியும் படைப்பப்
பிரத்திய ரூபப் பிராகிரு தர்களாய்த்
தத்துவம் பத்தினுஞ் சார்தரு மணுக்களை
யான்ம வாதிய ராக நீக்கிப்
பவமில் புருடோ பரிச்சிவ வாதரிற்
சத்தினி பாதத் தன்மை நோக்கிச்
சிவசத் திகளாற் றீக்கை செய்தருளி
யுருமலக் குரம்பையை நிருமல மாக்கி
யிருசெவி யிடத்தி னிந்திராதியரு
மருவுறு துவக்கின் மாதரி தானு
மணிவிழிக் கிரவியும் வாயிடை வருணனுங்
கனிதரு நாசியிற் காசினிதானும்
வாக்கி லங்கியு மேற்கையிந் திரனும்
பாத மாலும் பாயுமித் திரனு
முபத்தம் விதியு மோர்வன மதியு
முறைவ தாகி நிறைவது மன்றிச்
சிந்தனை செய்சிவ மந்திர மாக்கி
யைவகை யுயிரையு மெய்வகை நீக்கிப்
புத்திமுத் தியுமேல் வியத்தியு நோக்கி
மாலயன் பேறும் வறுமையின் வறிதா
வும்பர் வாழ்வுங் கும்பிவாழ் வாக
வராகத் தின்கீ ழானமுத் திகளும்
வாய்த்த கானிற் பேய்த்தே ராக
வளைவில் ஞானத் தளவில்பூ ரணமா
மிருவகை யிருமூன் றின்ப வியோம
வொருபெருஞ் செல்வத் திருவர சாக்கிய
கருணா சலத்திரு வருணாச லேச
மெய்வசி காமணித் தெய்வ சிகாமணி
தானா சாரமெய்ஞ் ஞானா சாரிய
காக்கையைத் தன்னிற மாக்குமே ருப்போ
லென்போ லியரையு நின்போ லாக்கலிற்
றொழற்குறும் விசிட்டாத் துவிதா தியர்போ
லழுக்கா றுறாநின் னருட்பெரு வாரி
வாழி வாழி வாழி
பாழிமா நிலத்துயிர் பலம்பெறப் பலவே. (35)
விருத்தம்.
பலந்தரும்பெரி திகம்பரந்தன்னிற் பரத்தின்மேற் பரமான,
புலந்தருந்தரு மிருவகைப் போகமும் போகத்தின்பொலிவான,
நலந்தகுந்தரு மிருவகை முத்தியு நல்கருணையின் மேவு,
வலந் தரும் புகழ்த்தேவ சிகாமணி வான்மணி தராதொன்றே. (36)
பஃறொடை வெண்பா.
ஒன்றிய சந்தசுதா ளோர்கற்பங் கையாக
வென்றி வியாகரணமே யானனமாக வன்றியுஞ்
சோதிடங் கண்ணா நிருத்தஞ் செவியா
நன்றுடைய சிட்சையே நாசிவடி வாக
நின்றவா றங்கத்தி னீளவேதமா மேனி
கன்றரியவந்தக் கரணஞ் சிவாகம மாச
சென்றருணைத்தேவ சிகாமணிச் சீவன் செலுத்தி
லன்றிவரா துய்வ தருளால். (37)
கலித்துறை.
அருளுண்டெனிலுண்டறங்களெல்லாமவவருளுநல்ல
பொருளுண்டெனிலுண்டுபோகியாக்கேயிவர்போகமல
விருளுண்டெனிலுண்டிங்கெல்லாம்வராமலிருத்துமொரு
தெருளுண்டெனிலுண்டுதேவசிகாமணிச்சிறகுருவே. (38)
அகவல்.
குருவேறு வேறாய்க் குலவான்ம வாதந்
திருவருள் படைத்த சிவவாத மென்றிங்
கிருவகை வாதத் தொருமுதல் வாதத்து
வாகியம் வைதிக மாகிய விரண்டினி
லொருகுரு வுரைத்த வுலகா யதமு
மருகந்தரில் வழங் கார்கத நூலும்
பரமெனுஞ் சுகத பௌத்த நூலுமென்
றானவாகிய ஞான மூன்று
மெய்திய விவேக வைதிக மார்க்கத்
தங்க முபாங்க முபவேத மாகிய
வங்கி யகலா வங்கவேதம் புகல்
வாய்த்த லௌகிகம் வைதிக சாத்திரம்
ஆததியான் மிகமதி மார்க்க மந்திரமென்
றைவகை யாகிய மெய்வகை நூல்களி
லிட்டமாகிய திட்ட பலஞ் செயும்
வைத்தியந் தண்டம் வழங்கு லௌகிகமுந்
திட்டா திட்டங் கிட்டிய பலங்கள்
பிரியா வேதக் கிரியா காண்டத்து
மீமாஞ்சை நியாய மிகுவை சேடிக
மென்னும் வைதிக மன்னு ஞானமு
மதிட்ட பலமெனு மான்ம ஞானத்து
வேதாந்த சாங்கிய மிகுபாதஞ் சலமென்
றளவிலாத் தியான்மிக ஞான முந்
தேர்ந்துற வல்ல சிவவாதத் திற்
சார்ந்துறு சாமா னிய சைவத்துட்
பாசு பதங்கா பாலமா விரதமற்
றாசிலாத வதிமார்க்க ஞானமு
மருளுஞ் சதாசிவ னதோ வத்திரமாந்
தற்புரு டாதியி னிற்பிரே ரிக்கு
மணுதற் புருட ராதியோர் மொழிந்த
வதச் சுரோதசென் றாயமந்திரத் துட்
காருட மேதக்கிணம் வாமம் பூதமென்
றீரிரு சாத்திர மெனலா மிவற்றுட்
புருடமே பொருளாய்ப் புகன்று மந்திரமருந்
துரைசெய் காருட மென்றுள்ள ஞானமு
மகோரமே பிரம மாமப் பிரமமும்
யோகத் துறுமென் றோர்சத் துருசெய
மந்திரஞ் சொல்ல வல்லதக் கிணமும்
வாமமே பொருளென வழுத்தி வசியாதி
மாமந் திரம்புகல் வாமதந் திரமுஞ்
சத்தியோ சாதந் தானே பொருளென
வாய்க்கும்பூ தாதியை மந்திர மருந்தாற்
போக்குதல் புகன்ற பூததந் திரமு
மென்றஞா னமுமிங் கொன்றிமே லுயர்ந்து
முன்னம் பராவச் சொன்ன சதாசிவ
ரந்தமி லருளான் முந்திய படைப்பிற்
சத்த பேதத் தன்மையிற் சமைந்தே
யூர்த்துவ முகந்தனில் வாய்த்தினி தான
சிவசம வேதச் சின்மய மொன்றே
சிவபே தங்களிற் செப்புமீ ரைந்தா
யுருத்திர பேதத் தோர்பதி னெட்டாய்க்
காமிகம் யோகசஞ் சிந்தியங் காரண
மசிதந் தீப்த மரிய சூக்கும
மப்பாற் சகசசிர மஞ்சு மானோடு
சுப்பிர பேதம் விசயநிச் சுவாச
மருட்சுவா யம்புவ மனலம் வீரம்
வரமிகு கௌரவ மகுடம் விமலஞ்
சந்திர ஞானந் தன்னொடு விம்பம்
புரோற்கீ தத்தொடு புகலும் லளிதஞ்
சித்த தந்திரந் திகழ்சந் தானம்
பகர்சரு வோத்தம் பாரமே சுரங்
கிரணம்வா துளமெனக் கிளக்குநா லேழு
போதவா கமங்கள் பாதநால் வகையாய்ச்
சுத்தமா யையில் வைத்த வாறே
யனந்தர்சீ கண்ட ரருளுமை கணபதி
குமர னரியயன் குலிசன் வானோர்
முனிவர் வழிவழி யினிதுணர்ந் ததன்பின்
முனிவர் வழியிம் முதுநிலத் துதிப்ப
வந்த ஞானமுமென் றிந்த ஞானங்க
ளவனி முதலா வனாசி ருதாந்தத்
தேற்றிய விளக்கு மேற்பகுதியு மாய்ச்
செப்பிய சுத்த சிவமே லாதலிற்
றிருவரு ணாசலத் தேவசி காமணி
குருவரு ணாசலக் குளிர்நெடுஞ் சாரலிற்
கார்த்திகை மலர்ந்த காந்தட் பரப்புஞ்
சீர்த்திகொள் சிகரத் தீபமும் போலுங்
குன்றின் மேலிட்ட கொழுஞ் சுடர்
துன்றிய சுத்தாத் துவிதநங் குருவே. (39)
விருத்தம்.
குருமணி யருணைவாழுங் குருமணி குணமேயான
திருமணி தேவதேவ சிகாமணி செம்பொற்றாளே
தருமணி வனசம்போலத் தான்குவி யாதுசான்றோர்
மருமணி மதியுள்ளேயு மலர்தரு வனசப்பூவே. (40)
வெண்பா.
சீர்வாழி தெய்வ சிகாமணி சீரருணை
யூர்வாழி வாழி யுலகில்லாங்-கார்வாழி
சித்தமிழ்த மானசிவ வாகமம் வாழிசெழு
முத்தமிழும் வாழி முறை.
நான்மணிமாலை முற்றியது.
-------------
ஆக்கியோன் பெயர்.
அணிமாலைகாலை யணிமாலை நீர்கொண் டயனுடனே
பணிமாலையாளும் பரனருணேசன் பதத்தை நித்த
மெணிமாலைநீக்கிய தேவசிகாமணிக்கே தமிழ்நான்
மணிமாலைநூலை வனைந்தான் குமார மகாமுனியே.
------------------
உ
கணபதிதுணை.
சிற்குருமாலை.
வருவருதோற்றமெழுவகையாகவகுத்திடுநாற்
கருவருதுன்பக்கடனீந்துவங்கமதாமுலகிற்
கொருவருணாமுலைப்பாகர்பதாம்புயத்துண்மைபெறுந்
திருவருணாசலத்தேவசிகாமணிச்சிற்குருவே. (1)
தருவருணத்துவமீதென்றுணர்ந்துபாசங்கடிந்து
குருவருணித்தமென்னெஞ்சேபிடித்தன்புகூரயன்மா
லிருவருநாடியண்ணாமலையாரையிறைஞ்சுமனத்
திருவருணாசலத்தேவசிகாமணிச்சிற்குருவே. (2)
மருவருபூங்குழன்மானார்களாசைவலைக்குள*ல
மருவருநின்கழற்போதண்ணியெய்துவதாநலமைந்
தருவரும்வேதமுனிவரும்போற்றத்தகுமருள்செய்
திருவருணாசலத்தேவசிகாமணிச்சிற்குருவே. (3)
அருவமிதாம்பரமானந்தச்சோதியனாதியிதென்
றுருவரிதாமெனயாவருங்காணவொண்ணாப்பொருளைப்
பருவமுணர்ந்துநன்மாணாக்கருக்குள்பான்மைதங்குந்
திருவருணாசலத்தேவசிகாமணிச்சிற்குருவே. (4)
பருவழியாஞ்சிவபோகமெய்ஞ்ஞானப்பலனுயிர்க்குங்
கருவழியாமென்க்காணெஞ்சமேயொருகாலையினுந்
திருவழியாதுறுபேரின்பவாழ்வுதினங்கொடுக்குந்
திருவருணாசலத்தேவசிகாமணிச்சிற்குருவே. (5)
கருவடிவாமயமாதியைமாசுகடிந்துமிக்காம்
பொருவறுகாஞ்சனமாக்குங்குளிகையைப்போன்றுலகி
னிருவகையாயதினன்னமைப்பயனன்பர்க்கீட்டவந்த
திருவருணாசலத்தேவசிகாமணிச்சிற்குருவே (6)
செருவுறுமாற்றலராயகங்காரசசினப்புலியை
வெருவுறமாய்த்துமெய்ப்போதக்கலையைவிளக்கியின்பச
சொருவவிவேகச்சுடர்மணியென்னுளத்துந்திருத்துந்
திருவருணாசலத்தேவசிகாமணிச்சிற்குருவே (7)
திருகுறுமான்மனச்சேட்டைக்குரங்கைத்திருத்தியன்பி
னுருகுறுமாறுசெய்தொன்றாஞ்சிவானந்தத்தூறியதேன்
பருகுறவேயடியேற்குமினிதருள்பாலிக்குமெய்த்
திருவருணாசலத்தேவசிகாமணிச்சிற்குருவே. (8)
இருபதின்மேலிருநான்காகமங்களுமீரிரண்டு
சுருதியின்வாக்கியமுந்தவறாதுமெய்த்தொண்டர்மனத்
திருண்மலபாசத்தைநீக்கிமெய்ஞ்ஞானவியற்கைதருந்
திருவருணாசலத்தேவசிகாமணிச்சிற்குருவே. (9)
கருவரியென்னுமிருள்போன்றவன்மனக்காட்டையெல்லாந்
துருவமதாக்கிப்புலக்குறும்பாகியதுட்டவிலங்
கொருவநின்றாண்மலர்க்கேதொண்டுசெய்யவுமுண்மைபெற்றேன்
றிருவருணாசலத்தேவசிகாமணிச்சிற்குருவே. (10)
முற்றிற்று.
-------------------
This file was last updated on 1 Feb. 2016.
Feel free to send corrections to the webmaster.