தமிழர் நாட்டுப் பாடல்கள் - பாகம் 1
தொகுப்பாசிரியர்: நா. வானமாமலை
tamizhar nATTup pATalkaL-part 1
compiled by en. vanamAmalai
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Tamil Virtual Academy for providing a source of this work.
This work has been prepared using the Google Online OCR tool to generate
the machine-readable text and subsequent proof-reading.
We thank the following for their assistance: C. Tamizharasu, Karthika Mukundh,
R. Navaneethakrishnan, P. Sukumar and Anbu Jaya.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2016.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
தமிழர் நாட்டுப் பாடல்கள் - பாகம் 1
தொகுப்பாசிரியர்: நா. வானமாமலை
Source:
தொகுப்பாசிரியர்: நா. வானமாமலை, எம்.ஏ.எல்.டி.,
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்
41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்
அம்பத்தூர், சென்னை- 600 098.
Thamizhar Nattup Padaigai
Ed, N. Vanamaznalai MA., L.T,
Code No : A 519 ISBN : 81-234-0000-4
முதற் பதிப்பு : ஜூன் 1964 ஐந்தாம் அச்சு : மே, 2004
ஆறாம் அச்சு : ஜூன், 2006
© நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
சேகரித்தவர்கள்:
எஸ். எஸ். போத்தையா | எஸ். எம். கார்க்கி |
கவிஞர் சடையப்பன் | கு. சின்னப்ப பாரதி |
வாழப்பாடி சந்திரன் | எம். பி. எம். ராஜவேலு |
குமாரி. பி.சொர்ணம் | டி மங்கை |
அச்சிட்டோர்: சொந்தம் பிரிண்டர்ஸ்,
# 64, மதுரைசாமி மடம் தெரு, செ - 11.
பதிப்பகத்தார் உரை
தமிழக நாட்டார் வழக்காற்றியல் துறையில் தமக்கெனவோர் இடத்தை நிலை நிறுத்திக் கொண்டவர் பேராசிரியர் நா. வானமாமலை. இத்துறையில் அவரது பணிகளில் சிறப்பானது ‘தமிழர் நாட்டுப் பாடல்கள்' எனும் இந்நூலாகும். 1964 இல் வெளியான இதன் முதற்பதிப்பும், 1977 இல் வெளிவந்த இரண்டாம் பதிப்பும் மக்களின் பேராதரவைப் பெற்றன. நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு இம் மூன்றாம் பதிப்பை அழகாக ஆப்செட் முறையில் வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
இத்தருணத்தில் இத்தொகுப்பைக் குறித்துச் சில செய்திகளைக் குறிப்பிட விரும்புகிறோம். இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் அப்பாடலைச் சேகரித்தவரின் பெயரும், அப்பாடல் வழங்கும் பகுதியும் குறிப்பிடப்பட்டுள்ளன.
அடுத்து, இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ள பாடல்களை வகைப்படுத்திய முறை குறிப்பிடத்தக்கதாகும். தமிழக நாட்டார் பாடல்களை வகைப்படுத்துவது குறித்த சிந்தனையை தொடங்கி வைத்த பெருமை இந்நூலுக்கு உண்டு
மேலும், சமூகவியல் - மானிடவியல், வரலாறு போன்ற பல்வேறு அறிவியல் துறைகளின் துணையுடன் பாடல்களுக்கு பேராசிரியர் எழுதியுள்ள குறிப்புகள் முக்கியமானவை ஆகும். நாட்டார் பாடல்களை சமுதாயக் கண்ணோட்டத்தோடு அணுகும் முறையை இத்தொகுப்பு அறிமுகப்படுத்தியது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த நூலினை மீண்டும் தமிழக மக்களுக்கு வழங்குவதில் பெருமை அடைகிறோம்.
பதிப்பகத்தார்
------------------
பொருளடக்கம்
இரண்டாவது பதிப்பிற்கு முகவுரை
முன்னுரை
1. தெய்வங்கள்
2. மழையும் பஞ்சமும்
3. தாலாட்டு
4. விளையாட்டு
5. காதல்
6. திருமணம்
7. குடும்பம்
8. சமூகம்
9. உழவும் தொழிலும்
10. ஒப்பாரி
-----------
இரண்டாவது பதிப்பிற்கு முகவுரை
இது 1964-ல் வெளியான ‘தமிழர் நாட்டுப் பாடலி'ன் மறுபதிப்புத்தான். அச்சுப் பிழைகள், விடுபட்டுப்போன சொற்கள், வரிகள், இவற்றைத் திருத்தி, சேகரிப்பு விவரங்களில் உள்ள குறைகளைப் போக்கி இதனை வெளியிடுகிறேன்.
கடந்த 12 ஆண்டுகளில் இந்த நூல் அழகிரிசாமி போன்ற இலக்கிய ஆர்வலர்களின் போற்றுதலையும், பத்திரிகைகளின் நன்மதிப்பையும் பெற்றுள்ளது. இந்தியன் எஃஸ்பிரஸ் விமர்சகர், இந்நூல் பாமர மக்களின் ஆன்மாவையே நமக்குக் காட்டுவதாக எழுதியிருந்தார். இது தனது நோக்கத்தை இந்நூல் நிறைவேற்றி விட்டதென்ற மன நிறைவு எனக்கு உண்டு.
கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் நடைபெற்றிருக்கும் நாட்டுப்பாடல் வெளியீடுகள், ஆய்வுகள், கருத்தரங்குகள் அனைத்தையும் தொடங்கி வைத்தது இந்த நூல்தான் என்று பெருமையாகக் குறிப்பிடலாம். பல முயற்சிகளுக்கு வழி திறந்து விட்டது இந்த நூல். பல்கலைக் கழகங்களில் ஆய்வு ஆர்வத்தை ஏற்படுத்தி, சில மாணவர்களை இத்துறை ஆய்வுக்குக் கவர்ந்தது ‘தமிழர் நாட்டுப் பாடல்களே.'
இந்நூல் தமிழகப் பல்கலைக் கழகங்களிலும், கேரளப் பல்கலைக் கழகத்திலும், தமிழ்த் துறையில் மூல நூலாக (Source Book) ஆகப் பயன்படுகிறது. ஆசிரியர்களும், ஆய்வாளர்களும், நாட்டுப் பாடல் துறையில் சிறந்த நூல் இதுவென மதிக்கிறார்கள்.
இந்நூல் வெளிவந்த ஒராண்டிற்குள் செலவாகி விட்டது. இந்த நூலின் தாக்கத்தால், நாட்டுப் பாடல் ஆய்வை ஈழத்தில் மேற்கொண்ட பாலசுந்தரம், இதற்கோர் மறுபதிப்பு தேவையென்று எழுதினார். பல்கலைக் கழகங்களில் பழைய பிரதி பழுதாகிப் புதிய பதிப்புக்குத் தேவை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இதனை வெளியிட நியூ செஞ்சுரி புத்தக வெளியீட்டகம் சம்மதித்துள்ளது.
இதற்குப்பின் ஆயிரக்கணக்கான பாடல்களை நாட்டுப் பாடல் பிரியர்கள் திரட்டி அனுப்பிக்கொண்டே இருக்கிறார்கள். வாய்மை நாதன், அரசக்கண்ணு இருவரும் தஞ்சை மாவட்டத்தின் முழுத்தொகுப்பையுமே அனுப்பியுள்ளார்கள். இன்னும், மின்னல் கோவை மாவட்டப் பாடல்களை அனுப்பியுள்ளார். பொன்னீலன் குமரி மாவட்டப் பாடல்களை சேகரித்து வைத்துள்ளார். இவற்றையெல்லாம் வெளியிட வேண்டும்.
இதற்கெல்லாம் ஒரு தீர்வு உலகத் தமிழாராய்ச்சிக் கழகம் ஏற்பாடு செய்திருக்கும் நாட்டுப் பாடல் கருத்தரங்கில் தோன்றலாம். அக் கழகம் மாவட்டந்தோறும் சேகரிப்பாளருக்கு எழுதிப் பாடல்களைச் சேகரித்து, வெளியிட முயன்று வருகிறது. என்னுடைய ஆதரவு அக்கழகத்தின் நாட்டுப் பாடல் வெளியீட்டு முயற்சிகளுக்கு உண்டு.
இதில் சில படிப்பாளிகள், நாட்டுப் பாடல் என்றால் வாய் மொழி இலக்கியம், எழுதப்பட்டால் அது 'வாய் மொழி' அடைமொழியை இழந்து இலக்கியமாகி விடுகிறது என்று சொல்லுகிறார்கள். வாய்மொழிப் பரவலுக்குக் காரணமே, எழுத்தறிவின்மை. 50 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் நாட்டில் எழுத்தறிந்தவர்கள் 9 சதவிகிதம். இப்பொழுது 30 சதவிகிதம். பெண்கள் மட்டும் எடுத்துக் கொண்டால் 18 சதவிகிதம் மட்டும். எழுத்தைப் பயன்படுத்தத் தெரியாமல் உணர்ச்சிகளையும், கருத்துக்களையும், நிகழ்ச்சிகளைப் பற்றிய எதிர் விளைவுகளையும் பேச்சாலேயே அவர்கள் சொன்னார்கள். இதனால் நாட்டுப் பாடல் என்றாலே வாய்மொழிப் பரவல் என்ற நம்பிக்கை தவறாக ஏற்பட்டது.
ஒரு நாட்டுப் பாடல் எப்படி உருவாகிறது? தொழில் களங்களில் ஒரு பாட்டைப் பலர் உருவாக்கலாம். ஏற்றம், நடுகை முதலிய தொழில் பாடல்கள் தொழிலாளரது பொதுவான உணர்ச்சியால் இசையாகி வெளிப்படுவன. அதுவல்லாமல் ஒரு சமூக நிகழ்ச்சியை வருணிக்கவும், சிக்கலான கதையமைப்புடைய கதையைப் பாடலாகப் பாடவும் இந்த முறை உதவாது. சிவகாசிக் கலகத்தை எடுத்துக் கொள்வோம். இத் தொகுப்பிலேயே நாலைந்து பாடல்கள் உள்ளன. அவற்றில் இரண்டில் எழுதியவர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. எழுதப்பட்டதால், எழுதியவர் பெயர் தெரிவதால் மட்டும் அது நாட்டுப் பாடல் தன்மையை இழந்து விடாது.
நாட்டுப் பாடல், ஒரு நிகழ்ச்சியின் மீது நாட்டு மக்களின் பிரதிபலிப்பை வெளியிடுவது. சிவகாசிக் கலகத்தைப்பற்றிய பாடல்களில், ஒன்று கலகத்தில் சம்பந்தப்பட்ட ஒரு கட்சிக்குச் சாதகமானது. மற்றொன்று பொதுவாகக் கலகத்தினால் எவ்வளவு துன்பம் மக்களுக்கு ஏற்படுகிறது என்பதைக் கூறி கலகத்தைத் தடுக்க முயலுவது. இவ்விரண்டுமே யாரோ ஒருவரால் எழுதப்பட்டவைதான். இவை பரவுகின்றன. பாட்டை ஏற்றுக் கொள்ளுகிறவர்கள் அந்த உணர்ச்சியோடு ஒன்றுபடுகிறார்கள். ஒரு சாதிக்காரர்கள் செய்தது நியாயம் என்றோ, அநியாயம் என்றோ, இரு கட்சியாரும் கலகம் செய்தது, எவ்வளவு துன்பகரமானதென்றோ, ஒரு படிப்பினை பாடலில் இருக்கும். இந்தப் பாடலின் ஒவ்வொரு வரியையும் ஒவ்வொருவர் எழுதவில்லை. ஒருவரே பாடல் முழுவதையும் எழுதினார்.
ஏற்றுக்கொள்ளப்பட்ட பாடல், நாட்டார் பண்பாட்டு மதிப்புகளுக்கு ஒத்திருக்கிறது. எனவே பரவுகிறது. எனவே "நாட்டுப் பாடலின் பொதுத் தன்மை, அதன் சிருஷ்டியில் இல்லை, பரவுதலில் தான் இருக்கிறது" என்று Folk Song in England என்ற நூலில் ஆசிரியர் கூறுகிறார்.
இதனைக் குறித்து அறியாமையால் ஒரு ஆய்வாளர் குழம்பிப் போய், அக்குழப்பமே தெளிவான கருத்தென்று எழுதுகிறார். ஒரு பாடலைக் குறிப்பிட்டு இதை நாட்டுப் பாடகரான S..M.. கார்க்கியே எழுதியிருக்கலாம். இது அசல் நாட்டுப் பாடல் அல்ல என்று கூறுகிறார். ஒரு நாட்டுப் பாடலை, முன்பிருந்திராத புதிய செய்தியை வைத்து கார்க்கி எழுதலாம். ஆனால் அதை நாட்டு மக்கள் (Folk) ஏற்றுக்கொள்வதைப் பொறுத்து அது நாட்டுப் பாடலாகும். மேற்கூறிய பாட்டு சிவகிரியில் பாடப்படுகிறது. பக்கத்து ஊர்களில் அவரே பாடி பரப்புகிறார். பரவுதல்தான் Fok Song ஆ இல்லையா என்பதைக் காட்டும். சினிமா பாட்டு, நாட்டு மெட்டு, நாட்டார் மதிப்புகள், அவர்களது பேச்சு வழக்கு இருந்தால் பரவும். இது சிருஷ்டியில், சினிமாப் பாடகருடையது. பரவுதலில் அது ஏற்றுக்கொள்ளப்படுகிறது (adopted). அசல் நாட்டுப் பாடல், நாட்டாரின் பண்பாட்டு மதிப்புகளுக்கேற்ப எழுதி, அது பரவுமானால் நாட்டுப் பாடலாகும். இதுவல்லாமல், வாய்மொழிப் பாடல், எழுதப்படாத பாடல், தூய நாட்டார் பாடல் என்பதெல்லாம், நாட்டுப் பாடலின் சிருஷ்டியையும், பரவுதலையும் பற்றிய அறியாமையால் எழுந்தது. இவை நாட்டுப் பாடலை கற்சிலையாக எண்ணுகிற போக்கு.
நாட்டுப் பாடல் உயிருள்ளதோர் வடிவம். வளருகிறது, மாறுகிறது, தேய்கிறது, சாகிறது. மீண்டும் புதைந்த நிலத்தில் பழைய உருமாறி புனருருவம் கொள்ளுகிறது. உருவத்தைப் பார்த்து, ஐயோ இது போய் விட்டதே என்று அழுகிற வேலை ஆராய்ச்சியாளனுக்கு வேண் டாம். ஒப்பாரி இப்பொழுது வழக்கழிந்து வருகிறது. இன்னும் 50 ஆண்டுகளில் ஒப்பாரியே இராது. அப்பொழுது, இப்பொழுதே எழுதிவைக்கப்பட்டவைதானே மிஞ்சும். இது fossil மாதிரி. அதற்குப் பரவுதல் இல்லை. புதிய எழுச்சி, இயக்கங்கள், பாமர மக்கள் வாழ்வில் உண்டானால், புதிய பாடல்கள் தோன்றும். அவர்கள் வாழ்க்கைக்குப் பயனற்றவை மறையும். மறைவதை எண்ணி ஒப்பாரி பாட வேண்டியதில்லை. புது நிலையை அறிந்து, புதுப் பாடல்களை வரவேற்க வேண்டும். சமூக மாறுதல், சமூக உணர்ச்சிகளுக்கேற்ற பாடல்களைத் தோற்றுவிப்பவன் நாட்டார் கவி. பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் போல. அவர்களுடைய உணர்ச்சி, மதிப்புகள், நலன்களுக்கு ஏற்றாற்போல அவர்கள் ஏற்றுக்கொள்ளத் தகுதியுடையனவற்றை அவர் பாடினார். அது ஏற்றுக்கொள்ளப்பட்டு, நாட்டாரது போர் முழக்கமாயிற்று. அது நாட்டார் ரசனைக்காக மட்டுமல்லாமல், சினிமாப் பார்க்கிற எல்லா வர்க்கங்களுடைய அனுபவத்திற்காவும் எழுதப்பட்டதால், நாட்டார் பண்பாட்டுக் கருவை, நாட்டார் மொழியிலும், சிறிதளவு இலக்கிய மொழியிலும் பாடினார். நாட்டுப் பாடல் எழுத்தறிந்தவர் அனுபவிப்பதற்காக உருமாறுகிறது. இதுவும் நாட்டுப் பாடலே. கலியாணசுந்தரம் பாடல்கள் நாட்டு மக்கள் உணர்வு, நாட்டு மக்கள் பண்பாட்டு மதிப்புக்கள், அவர்கள் ஆர்வங்கள் இவற்றை வெளியிடுகின்றன. ஆனால், மெட்டில் மட்டும் நாட்டுப் பாடலிசை கொண்டு, உள்ளடக்கத்தில் நாட்டு மக்களது உணர்விற்கும், ஆர்வங்களுக்கும் எதிரான கருத்துள்ள சினிமாப் பாடல்கள் எழுதப்படுகின்றன. அவை நாட்டு மக்களிடையே பரவுதல் இல்லை. நடுத்தர மக்களிடையேதான் பரவுகின்றன.
நாட்டு மக்களிடையே பரவும், நாட்டு மக்களின் மதிப்புகள் தாங்கிய பாடல்கள்தான் நாட்டுப் பாடல்கள்.
சிவகாசிக் கலகம் பற்றிய பாடல்கள், கலகம் நடந்த இடத்தில், சிவகாசியிலும், அதனையடுத்த ஊர்களிலும் தோன்றியிருக்கலாம். சிவகாசியில் கலகம் நடப்பதற்கு பக்கத்து ஊர் மறவர்கள் வந்தார்கள். அவர்களில் சிலர் இறந்து போனார்கள். அவ்வூர்களிலும் பாடல்கள் தோன்றியிருக்கலாம். நாடார்களுக்கு ஆதரவாகவும், மறவர்களுக்கு ஆதரவாகவும், இருகட்சிக்கும் பொதுவாகவும் பாடல்கள் தோன்றியுள்ளன. சில பாடல்களைப் பாடியவர்கள் பெயர்கள் தெரிகின்றன. ஆறுமுகம் என்பவர் ஒரு பாடலை எழுதியுள்ளார். இவை எங்கெங்கு கிடைக்கின்றன? சங்கரன் கோவில், சிவகிரி, விளாத்திக்குளம் முதலிய இடங்களில் 30, 40 மைல் தூரத்திலுள்ள ஊர்களில் கிடைக்கின்றன. கலகத்திற்கு பயந்து ஓடி வந்தவர்கள் இப்பாடலைக் கொண்டு வந்திருக்கலாம். இரண்டு மூன்று தலைமுறைகளுக்குப் பாடல் நீடித்திருக்கிறது. கலகம் நடந்தது 1896-ல், எண்பது வருஷங்களாகின்றன. இவை எழுதப்பட்டதால், அச்சிடப்பட்டதால் நிலைத்திருக்கிறது. போத்தையாவிற்குக் கிடைத்தது, ஓலைப் பிரதி. அந்த ஓலையைப் பார்த்துப் பாடுபவரும் வாழ்ந்திருந்தார்.
எனவே நாட்டுப்பாடல் என்றால் ஆராய்ச்சி செய்பவருக்காக யோசனை செய்து பாடப்படுவது அல்லது எழுதப்படுவது அல்ல. நிகழ்ச்சிகளின் தாக்கத்தால் எழுகிற உணர்ச்சியும், சிந்தனையும் பாடல் உருவத்தில் சிருஷ்டிக்கப் படுகின்றன. வாய் மொழிப் பரவுதலின்மூலம் அது நாட்டாரால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. வாய் மொழியால் மட்டும் சிறிது தூரம்தான் பரவும். அது ஒரு Localised Tradition ஆகவே இருக்கும். அச்சில் அதனையே வெளியிட்டால் அதன் பரப்பு தமிழகம் முழுவதும் இருக்கும். உதாரணமாக ஐவர் ராசாக்கள் கதை, ஒரு சிற்றுாரில் மட்டுமே வழங்குகிறது. சில பகுதிகள் வள்ளியூரில் வழங்குகின்றன. எப்படியும் கதை நாஞ்சில் நாட்டுக்கு வெளியே தெரியாது. இதற்குக் காரணம் என்ன? கதை 400 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு போரைப் பற்றியது. அதே வரலாற்று நிலைமைகள் இன்று இல்லை. குலசேகர மன்னனைப் போன்ற மன்னர்களோ கன்னட இளவரசி போன்ற இளவரசிகளோ இன்று இல்லை. எனவே பாத்திரங்களின் கலாச்சார மதிப்பு மாறிவிட்டது. எனவே கதை ஒரு வரலாற்று நினைவுக் கதையாக மட்டுமே எஞ்சி நிற்கிறது. வாழ்க்கைக்கு நேரடி சம்பந்தமில்லாமலிருக்கிறது. அந்த வரலாறும் பரவாமலிருப்பதற்குக் காரணம், வாய் மொழிப் பரவுதல். இப்பொழுது அக்கதை வில்லுப்பாட்டாகப் பாடப் படுவதில்லை. எனவே பரவுதலும் இல்லை: இனி அது மறைய வேண்டியதுதான்; இக்கலைச் சிருஷ்டியை, வரலாற்று மதிப்பை நிலைக்கச் செய்ய என்ன செய்ய வேண்டும்? இதை எழுத்தறிவு வட்டத்திற்குக் கொண்டு வரவேண்டும். அச்சிட்டுப் பரப்பினால், சுருங்கியவட்டம் விரிவடையும். மீண்டும் இது வாய்மொழிச் சுழற்சிக்குச் செல்லாது. இது Fossil ஆகிவிட்டது. ஆய்விற்கும், அறிவதற்குமே பயன்படும்.
இவ்வாறு கதைப்பாடல் காலச் சமூகத்தேவைக்கேற்பத் தோன்றி, நிரந்தர கலைமதிப்புகளை ஏற்படுத்திவிட்டு, உருவழிந்து போய்விடும். நிரந்தர மரபுகளையொட்டியோ, எதிர்த்தோ புதிய கதைப்பாடல் உருவங்கள் தோன்றும்.
கதையுருவங்கள், அச்சானவுடன் பரவல் அதிகமாகிறது. மீண்டும் வாய்மொழிப் பரவலுக்குச் செல்வதுமுண்டு. அது வாழும் மரபாக இருந்தால் வாய்மொழிப் பரவலுக்குச் சென்றுவிடும். இல்லாமல் இருந்தால் ஆவணமாகவும், எல்லோருக்கும் தெரிந்த இறந்துவிட்ட மரபாகவும் ஆகிவிடும். ஆகையால் சிறுகி வருகிற கதைப்பாடல்கள், பாடல்கள், கூத்துக்கள் அனைத்தையும் சேகரித்து வெளியிட வேண்டும்.
எனவே எழுத்தில் பரவுவது, வாய்மொழிப் பரவலைவிட விரிவானது. எழுத்தில் பரவும் நாட்டார் பண்பாட்டுப் படைப்புகள் எல்லாம் மீண்டும் உயிர் பெற்று வழங்கும் என்பதில்லை. வாழுகிற மரபு (Living Tradition) என்பது எந்நாளும் வாழுகிற மரபு அன்று. சமூகப் பண்பாட்டு மாறுதல் ஏற்படும் வரை ஒரு மரபு வாழும். பிறகு சிறுகத் தேய்ந்து புதிதாக உள்ள பண்பாட்டுப் படைப்புகளோடு சேர்ந்து புத்துருவம் கொள்ளும்.
தற்போது செவிவழிப் பரவலுக்குக்கூட முன் நிபந்தனையாக எழுத்துவடிவம் இருக்கிறது. 'கொலைச்சிந்து என்றோர் பாடல் வடிவம் தமிழ் நாட்டின் வட மாவட்டங்களில் உள்ளது. இது ஒரு வாழும் மரபாகும். கொலைகள் சமூகப் பின்னணியில் நடைபெறுகின்றன. நீதிமன்றம் கொலையாளி என்று தீர்ப்பளித்துத் தண்டிப்பவர்களை, நாட்டார், வீரன் என்று போற்றி அவனது தண்டனையைப் பற்றிக் கருத்துச் சொல்லுகின்றனர். கொலைகள் விதிப்படி நிகழுவதில்லை, சமூக காரணங்களால் நிகழ்கின்றன என்று சுட்டிக்காட்டி, அக்காரணங்களை ஆராய்கின்றன. கொலைச் சிந்துகள். நூற்றுக்கணக்கான கொலைச் சிந்துகள் சுழற்சியில் உள்ளன. இவை நாட்டுப் புலவர்களால் பாடப்பட்டு, எழுதப்பட்டு, அச்சடிக்கப்பட்டு 10,000 பிரதிகள் விலையாகின்றன. நாட்டுப்பாடகர்கள், அவற்றை மனப்பாடம் செய்து பாடுகிறார்கள். இது ஒரு நாட்டார் மரபு (Folk Tradition) இங்கு ஒரு மாற்றம் காணப்படுகிறது.
(1) வாய்மொழிப் பரவல் → அச்சிடல் --> (அதிகப் பரவல்) Folk Lore அல்ல.
(2) அச்சிடல் → வாய்மொழிப் பரவல் → அதிகப் பரவல் Folk Lore.
இவை யாவும் வாய்மொழிப்பரவலை அச்சுயந்திரம் பன்மடங்காக்குகிறது, அச்சிடப்படும் கதைப்பொருள் வாழும் மரபாக இருந்தால். குறிப்பிட்ட கதை வாழும் மரபாக இருக்க வேண்டியதில்லை. அந்தக் கதை, எந்த வகை (Type) யைச் சேர்ந்ததோ அது வாழும் மரபாக இருந்தால் போதும். முதலில் அது வாய்மொழி மரபாகத் தோன்றாமல் அச்சில் 10,000 படிகள் தோன்றி, 10,000 பேரையும் பாடவைத்து, வாய்மொழி மரபின் பரப்பை அதிகரிக்கச் செய்கிறது. எழுத்தறிவு வளர, வளர, வாய்மொழி பரவுதலுக்கே, அச்சு அடிப்படையாகிவிடும்.
இந்நூல் ஒரு பாடல் திரட்டுத்தான். பாடல், உணர்ச்சியின் உறுத்தலாலும், ஒரு நிகழ்ச்சி தோற்றுவிக்கும் எண்ணங்களாலும் ஏற்படுவது. கதை (Narrative) சுவையாலும் வாழ்க்கையைத் திருப்புவதுமாயிருக்கும். இவையாவும் அடிநிலையில் பாமரர் இலக்கியமாகும். இவ்விலக்கியம் கல்லாதார் கலைச் செல்வம். அவர்களிடையே எழுத்தறிவு பரவினால், எத்தனையோ படைப்பாளிகள் அவர்களிடமே எழுவார்கள். அவர்கள் எழுத்தினால், பாடல் பாடுவார்கள். எழுத்தறிவில்லாத படைப்பாளி, வாய்மொழியிலே பாடலைப் படைப்பான். இப்பொழுது வாய்மொழி, எழுத்துருவம் பெறும் காலம். எழுத்தறிவு நம்முடைய நாட்டாரிடையே வளர்ச்சி பெற்று வருகிறது. எனவே (Oral Transmission) வாய்மொழிப் பரவுதல் என்று கண்களை மூடிக் கொண்டு, நாட்டார் இலக்கியத்திற்கு வரம்பு விதித்தல் கூடாது.
இப்பாடல்களைப் புரிந்துகொள்ள, சமூகப் பின்னணி, வரலாற்றுப் பின்னணி, சரித்திரப் பின்னணி ஆகிய தெளிவான சூழ்நிலைகளை புரிந்து கொள்ளவேண்டும். இப் பாடல்கள் குறிப்பிடும் தனி நிகழ்ச்சிகளுக்கும் சமூக மாறுதல்களுக்கும் சம்பந்தம் இருக்கும். அதனையொட்டி, குறிப்புரைகள் எழுதும் பொழுது கற்பனையில் இருந்து நிகழ்ச்சிகளை, உணர்ச்சிகளையும் மதிப்பிடாமல், சமூகவியல், மானிடவியல், சரித்திரவியல், இலக்கியம் ஆகிய துறைகளின் அறிவைக் கொண்டே, குறிப்பிட்ட பாடல்களின் நிகழ்ச்சிகளையும், உணர்ச்சியையும் வருணித்துள்ளேன். ஒவ்வொரு தனிப்பாடலும், ஒரு தனி நிகழ்ச்சி பற்றிய கருத்துக்கும், சமூக இயக்கத்திற்குமுள்ள தொடர்பு. ஒவ்வொரு சரித்திரப் பாடலும், நீண்டகால வரலாற்றின் போக்குக்கும், அதில் ஒரு சம்பவத்திற்கும் உள்ள தொடர்பு. இத்தெடர்புகளைக் கவனமாக நான் சுட்டிக் காட்டியுள்ளேன். குறிப்பாக பாடல்கள் சமூக அடிப்படையும், அவ்வடிப்படையில் கருத்துக்கள், உண்ர்ச்சிகளையும் நான் காட்டியுள்ளேன். தனித்தனி நிகழ்ச்சிகளாகவும், தனித்தனிக் கருத்துக்களாகவும் பாடல்கள் நிற்கவில்லை. ஒரு பொதுத் திட்டத்தின் அடிப்படையில் சமூக வாழ்க்கையில் பிரதிபலிப்பாக இவை நிற்கின்றன.
இந்நூலை உருவாக்கிய சேகரிப்பாளர்கள் கு. சின்னப்ப பாரதி, எஸ். எஸ். போத்தையா, கவிஞர் சடையப்பன், எஸ். எம். கார்க்கி, எம். பி. எம். ராஜவேலு, வாழப்பாடி சந்திரன் ஆகியவர்கள் 12 ஆண்டுகளுக்கு முன்னால் மாதிரியே இன்றும் நாட்டுப்பாடலில் ஆர்வம் கொண்டுள்ளார்கள். அவர்களுக்கு எனது நன்றி. இந்நூலின் ஆய்வுக் குறிப்புகள், விவரக் குறிப்புகள், சேகரிப்புக் குறிப்புகள் ஆகியவற்றை எழுதும் பணியில் விடா முயற்சியோடும், சலியாத ஆர்வத்தோடும் பணி புரிந்த செல்வி T. மங்கைக்கு எனது நன்றி. இந்நூலின் இரண்டாவது பதிப்புக்குச் சில புதிய குறிப்புகள் தந்த வ. உ. சி. கல்லூரி தமிழ் விரிவுரையாளர் ஆ. சிவசுப்பிரமணியனுக்கும் எனது நன்றி.
12 ஆண்டுகளுக்கு முன்னர் இதை வெளியிட்டது போலவே, இரண்டாவது முறையும் வெளியிட முன்வந்து, தமது நாட்டுப்பாடல் ஆர்வத்தினையும், கிராமத்து உழைப்பாளி மக்களின் கலைப் படைப்புகளைப் பரப்புகிற ஆசையையும் வெளியிடுகிற வாய்ப்பை மேற்கொண்ட நியூ செஞ்சுரி புக் ஹவுஸை நான் பாராட்டுகிறேன். நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நா.வானமாமலை
தலைவர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்,
முதுநிலை ஆய்வாளர்,
திராவிட மொழி இயல்கழகம்,
கருநாடகப் பல்கலைக்கழகம், தார்வர்.
3-11-76.
----------------
முன்னுரை
ஒவ்வொரு மொழியிலும் எழுத்துத் தோன்றுவதற்கு முன்பு பாடல்களும், கதைகளும் தோன்றத் தொடங்கின. அவற்றில் சில கதை வடிவத்தில் பாடப்பட்டன. இவ்வாறுதான் கிரேக்கக் காவியங்கள் தோன்றின என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். பாரதம், இராமாயணம் என்ற காவியங்களில் முடிவான எழுத்து வடிவம் பெறுவதற்கு முன்பு இவ்வாறே பேச்சு வழக்கில் இருந்து வந்தன. சிறு சிறு குழுவினருடைய நாட்டுப் பாடல்களாக வழங்கிவந்த கதைகள், அக்குழுக்கள் ஒன்றுபட்டு பெரிய இனமாக மாறும் போது இணைப்புப் பெற்று காவிய ரூபம் பெறுகின்றன. சிலப்பதிகாரத்தில் காணப்படும் பல நிழ்ச்சிகளும் பல உபகதைகளும் காவிய காலத்திற்கு முன்பு செவி வழியாக வழங்கி வந்தன. காவியத்தில் காணப்படும் தெய்வ வணக்கமும், குரவைப் பாடல்களும், வரிப்பாடல்களும், அம்மானைப் பாடல்களும், துன்பமாலை என்ற பகுதியும் வெகு காலத்திற்கு முன்பு வழங்கிவந்த நாட்டுப் பாடல்களின் கருத்தையும், அமைப்பையும் தழுவியன என்று உறுதியாகச் சொல்லலாம்.
நாட்டுப்பாடல்கள் முன்பிருப்பவர்கள் கேட்கப் பாடுவது; கேட்பவர்கள் மனத்தில் மகிழ்ச்சி, சோகம், பெருமை, பணிவு, பெருமிதம், ஆர்வம், வியப்பு, வெறுப்பு முதலிய உணர்ச்சிகளை எழுப்பும் நிகழ்ச்சிகளையோ, கதைகளையோ சொல்வது வழக்கமாக இருந்தன. அல்லது வேலை செய்யும் காலத்தில் களைப்பைப் போக்க அவர்கள் கூட்டு முயற்சியை ஊக்குவிக்கப் பாடப்படும் பாடல்களும் உள்ளன. எப்படியும் ஒரு குழுவினரின் மனத்தில் ஏக காலத்தில் சமமான உணர்ச்சியை உண்டுபண்ணுவது பெரும் பான்மையான நாட்டுப் பாடல்களின் நோக்கமாகும்.
நாட்டுப் பாடல்கள் கிராமப்புற வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்புள்ளவை. கதைப் பாடல்கள் தவிர மற்றப் பாடல்கள் நாட்டுப்புற வாழ்க்கையின் அன்றாட சம்பவங்களையே பொருளாகக் கொண்டவை. இதனால்தான் வாழ்க்கையின் சாதாரண சம்பவங்களான பிறப்பு, குழந்தைப் பருவ நிகழ்ச்சிகள், விளையாட்டுகள், காதல், பொருந்தா மணம், குடும்ப விவகாரங்கள், கிராமத் தொழில்கள், பஞ்சம், கிராம தேவதைகள் முதலியனவே
நாட்டுப் பாடல்களின் பொருளாக அமைந்துள்ளன. ஆனால் இவற்றுள்ளும் சமூக அமைப்பின் தன்மையும், அதனால் தனி மனிதன் உணர்வில் ஏற்படும் சிந்தனைகளும் வெளியாகத்தான் செய்கின்றன.
நமது கிராம வாழ்க்கை பன்னெடுங் காலமாக வேலைப் பிரிவினைகளால், முறைப்படுத்தப்பட்டு ஜாதிப்பிரிவினைக்குள் இறுக்கமாக அடைத்து வைக்கப்பட்டது. உற்பத்தி முறையும், கிராமப் பொருளாதாரத்திற்காகவே இருந்ததால், மத்திய அரசில் எவ்வித மாற்றங்கள் ஏற்பட்டாலும் கிராம சமுதாய வாழ்க்கை அதிகமாக பாதிக்கப்படவில்லை. இவ்வாறு கூறுவதால் கிராம சமுதாய அமைப்பு எல்லோருக்கும் சமவாய்ப்பு அளிக்கும் சோஷலிஸ சமுதாயம் என்று நினைத்துவிடக் கூடாது. கிராம சமுதாயத்தில் உயர்வு தாழ்வுகள் அன்றுமிருந்தன. ஊர்க் கோவில்களுக்கு ஊரிலுள்ள நிலத்தில் பெரும்பாகம் சொந்தமாயிருந்தது. அக்கோவிலை நிர்வாகித்த மகாசபையாரும், வாரியத்தாரும், பரிசனங்களும், உழைக்காமல் உண்டவர் ஆவார்கள். அவர்கள் மேல் வர்க்கத்தையும் மேல் சாதியையும் சேர்ந்தவர்கள். இவர்களுக்குச் சொந்தமான உரிமையுடைய நிலங்களும் இருந்தன. நிலங்களில் உழைக்கும் விவசாயிகளில் பெரும்பாலோருக்குச் சொந்த நிலம் இருக்கவில்லை. சிலருக்குக் கோவில் நிலங்கள் குத்தகையாகக் கிடைத்தன. இவர்களில் ஊர் வண்ணான், நாவிதன் முதலியவர்களும் தச்சன், கொல்லன் போன்ற கம்மாளர்களும் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கும், மான்ய நிலங்கள்தான் இருந்தன. உழைக்கும் மக்கள் கோவிலைச் சார்ந்து உழைக்காமல் உண்ணும் மக்களுக்குத் தம் உழைப்பினால் உணவளிக்க வேண்டும்.
வெள்ளையராட்சிக்குமுன் மத்திய அரசு நடப்பதற்கும் பல போர்கள் நடப்பதற்கும் அரசர்கள் கட்டும் கோவில்கள், மடங்கள், தண்ணிர்ப் பந்தல்கள் முதலியவற்றிற்காகும் செலவையும் இக் கிராம அமைப்புதான் கொடுக்க வேண்டும். கிராம நிர்வாகம் மேல் வர்க்கத்தாருடைய கையிலிருந்தது. எனவே உழைக்கும் மக்களுக்கு அவர்கள் விளைவிக்கும் மகசூலில் ஒரு சிறிய பகுதியே ஊதியமாகக் கிடைக்கும். மற்றவை அவர்களிடமிருந்து பறிக்கப்படும்.இவ்வமைப்பில் விவசாயிகள் கொடுமையாகச் சுரண்டப்பட்டனர்.
நெசவு முதலிய தொழில்களும் குடிசைத்தொழில்களாகவே நிகழ்ந்து வந்தன. அயலூர் வியாபாரிகள் தங்களுக்குள் போட்டியல்லாமல் இருப்பதற்காக வணிகர் குழுக்களை ஏற்படுத்தி அவற்றின் மூலம், மிகக் குறைந்த விலைக்குக் கைத்தொழிலில் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களை வாங்கினார்கள். இதனால் கைத்தொழிலாளிகளும் மிகுந்த ஏழ்மையில் உழன்றனர்.
ஏழ்மைநிலை பொறுமையின் எல்லையைத் தாண்டிய போது மக்கள் கிராம சமுதாய அமைப்பை எதிர்த்துப் போராடியுள்ளனர். இத்தகைய போராட்டங்களைப் பற்றி நாட்டுப் பாடல்களிலிருந்தும் கல்வெட்டுகளிலிருந்தும் அறிந்து கொள்கிறோம். இத்தகைய போராட்டங்கள் சிலவற்றைப் பற்றி இங்கு குறிப்பிடுவோம். நாடார்களது சாதி வரலாற்றை 'வலங்கையர் கதை' என்ற நூல் கூறுகிறது. அச்சாதியினர் ஏழ்மையுற்று பஞ்சத்தால் வாடிய காலத்தில் காவிரி அணை கட்டக் கூலியில்லாமல் வேலை செய்யும்படி உத்தரவிடப்பட்டார்கள். அரசனுடைய ஆணைப்படி கூலியில்லாமல் வேலை செய்யும் முறைக்கு 'வெட்டி' என்ற பெயர் வழங்கப்பெற்று வந்தது. ‘வெட்டி' முறையை எதிர்த்து ஏழு சகோதரர்கள் போராடினார்கள். அரசன் கரிகால் வளவன் ஆறு சகோதரர்களின் தலைகளைத் துண்டித்துவிட்டான். ஏழாவது சகோதரனும் கூடை எடுத்து மண் சுமக்க மறுத்தான். அவன் சிறுவனானதால் அரசன் அவனை நாடுகடத்தி விட்டான். அவன் தென்பாண்டி நாட்டிற்கு வந்து பனை மரத்தைப் பராமரித்துப் பெருஞ் செல்வம் அடைந்தான். இது நாட்டுக் கதைப் பாடல் ஒன்றில் காணப்படும், ஒருபோராட்ட நினைவு.
பிற்காலத்தில் ஏழ்மையால் வருந்திய மக்கள் பற்பல இடங்களில் தங்களது உரிமையை நிலைநாட்டிக்கொள்ள இயலாமல், கோவிற் சுவர்களை இடித்தும் பத்திரங்களைத் தீக்கிரையாக்கியும் சுரண்டல் முறைக்கு எதிராகத் தங்களது எதிர்ப்பைக் காட்டியுள்ளார்கள். ஏனெனில் கோயில் மதில் சுவர்களில்தான் அவர்களை அந்நிலையில் வைத்திருந்த நிலமான்யமுறையின் பிரமானப் பத்திரங்கள் எழுதி வைக்கப்பட்டிருந்தன. கோயில் சாசனங்களின் முகவுரையில் பின்வரும் குறிப்பு காணப்படுகிறது. "மூன்றாம் ராஜராஜ சோழனுடைய ஆட்சியில் ஐந்தாம் ஆண்டிலும் பரவிய கலகத்தில் ஊரில் உள்ளோருடைய நிலங்களின் மூல பத்திரங்கள் அழிந்து போயினமையால் நான்காம் ஆண்டு அளவில் உள்ள அனுபோக முறைப்படி நிர்ணயித்துப் புதிய பத்திரங்கள் வழங்க வேண்டிவந்ததென்று தஞ்சை ஜில்லா உடையாரூர்ச் சாசனம் கூறுகிறது.'
அவனது ஐந்தாம் ஆண்டில் நடந்த கலகங்களால் பழைய கணக்குகள் அழிந்து போயினமையால் அனுபோகப் பற்றொழுகை ஒட்டி ஆதாரச் சீட்டுக்களைப் புதுப்பிக்க வேண்டியிருந்தது என்னும் செய்தி தலைச்செங்காடு மூன்றாம் ராஜ ராஜனது பத்தொன்பதாம் ஆண்டு கல்வெட்டொன்று கூறுகிறது. இவ்வாறு நடந்த கலகங்களை ஜாதிக் கலகங்கள் என்று காட்ட வரலாற்று ஆசிரியர்கள் முயன்றுள்ளார்கள். இக்கலகங்கள் இடங்கை, வலங்கை ஜாதியினரிடையே நடைபெற்றதென்று கூறுகிறார்கள். நிலத் தொடர்புடைய ஜாதியார்கள் வலங்கைப் பிரிவினர் என்றும், கொல்லர், தச்சர், தட்டார் முதலிய தொழிலாளர்களும், வாணியர், கொத்தர், சுண்ணாம்புக்காரன், வலையன், அளவர் முதலியோர் இடங்கைப் பிரிவினர் என்றும் பல கல்வெட்டுகள் கூறுகின்றன. கிராமத்திலுள்ள மேல் வர்க்கத்தார் இவ்விரு ஜாதியினரையும், தங்கள் ஆதிக்கத்தில் வைத்திருந்தார்கள். தங்களுடைய கொடுமைகளால் ஏதாவது ஒரு வகைப் பிரிவினர் தங்களுக்கு எதிராகப் போராட முன் வந்தால், அடுத்த பிரிவினரைத் தங்களோடு சேர்த்துக் கொண்டு அவர்களை அடக்குவதே வழக்கமாயிருந்தது. பெரும்பாலும் இவர்கள் இடங்கைப் பிரிவினரோடு சேர்ந்து கொண்டு வலங்கைப் பிரிவினரை எதிர்த்து வந்தார்கள். இடங்கைப் பிரிவினரில் மிகவும் ஏழ்மையில் உழன்றவர்கள் வலங்கைப் பிரிவினரது போராட்டங்களில் கலந்து கொண்டதுமுண்டு. அக்காலங்களில் இருவருக்கும் சில சலுகைகள் செய்து தங்களது சுயநல அமைப்பு முறையை மேல் வர்க்கத்தார் காப்பாற்றிக் கொண்டனர்.
கோயில் சாசனங்களின் முகவுரையில், மேற்குறித்த உண்மைக்குச் சான்றாக ஒரு செய்தி காணப்படுகிறது. திருச்சிராப்பள்ளி, ஆடுதுறைக் கல்வெட்டு ஒன்று அச்செய்தியைத் தெரிவிக்கின்றது. 'அரசாங்க அதிகாரிகளின் உதவியுடன் வன்னியர்களும், வேளாளர், பிராமணர் முதலிய நிலச்சொந்தக்காரர்களும் சேர்ந்து இடங்கைப் பிரிவில் அடங்கிய 98 வகைச் சாதியினருக்கு இழைத்த அநீதிகளை இக்கல்வெட்டு கூறுகிறது. இதே போல் இடங்கை வகுப்பர்; அக்காலத்தில் ஏற்கவேண்டி வந்த வரிச்சுமைகளைத் தெரிவிக்கும் கல்வெட்டுகள், நாட்டில் பல பாகங்களிலிருந்தும் கிடைத்துள்ளன. ஆவணியிலிருந்து கிடைத்துள்ள ஓர் கல்வெட்டு அரசன் ஆணைக்கிணங்கக்கூடிய பெரிய சபையாரின் முடிவைத் தெரிவிக்கிறது. நிகரிலிலாச் சோழமண்டலத்து 78 நாடுகளும் ஜயங்கொண்ட சோழமண்டலத்து 3000 பூமியும், உள்ளிட்ட நாடுகளில் சோழ வம்சம் தோன்றிய நாள் முதல் பசு, எருமை முதலியவைகளுக்கு வரி விதிக்கப்பட்டதில்லை என்றும், அதனால் அதிகாரிகள் சோழ மூவேந்த வேளான் விதித்த இவ்வரிகளைக் கொடுக்க வேண்டியதில்லை என்று முடிவு கட்டினார்கள். அன்றியும் 18 விஷயங்களிலுமுள்ள (நிலப் பகுதி) வரிவிகிதங்களையும் நிர்ணயித்து நிச்சயித்தார்கள். இக் கல்வெட்டுக்களில் காணப்படும் செய்திகளால் ஒவ்வொரு சமயம், நிலச் சுரண்டல் முறையையும், வரிச்சுமைகளையும், அதிகாரிகளின் கொடுமைகளையும், இடங்கை வலங்கைப் பிரிவினரில் ஏழை எளிய மக்கள் எதிர்த்து நின்று வெற்றி பெற்றுள்ளார்கள் என்பதைக் காட்டுகிறது.
ஊரின் வாழ்க்கை முழுவதும், சோழ வம்சம் வீழ்ச்சி யடைந்த காலம்வரை கோயில்களைச் சார்ந்தும், உழவுத் தொழிலைச் சார்ந்தும், சிறுதொழில்களைச் சார்ந்துமே இருந்தன. கோயில் நிர்வாகத்திலிருந்தவர்கள், ஊரிலுள்ள எல்லாப் பகுதி மக்களின் வாழ்க்கையையும், கட்டுப்படுத்தும் வல்லமை பெற்றிருந்தார்கள். இவ் வல்லமைக்குக் காரணம் கோயில் நிலங்களின் மீது அவர்களுக்கிருந்த ஆதிக்கமே. நிலவுடைமைக்காரர்களைத் தவிர மற்றவர்கள் கோவிலுக்கு சொந்தமான மான்ய நிலங்களைப் பயிரிட்டே வாழ்க்கை நடத்தினர். சிற்சில சமயங்களில் இம் மான்ய நிலங்களை அதிகாரிகளின் உதவியோடு பெரிய நிலச் சொந்தக்காரர்கள் கைப்பற்றிக் கொள்ள முயன்றனர். நிலத்தை இழந்தவர்கள் தங்களுடைய எதிர்ப்பை உயிர்த் தியாகம் செய்து காட்டிக் கொண்டனர். இதற்குச் சான்றாகப் பல கல்வெட்டுகள் இருக்கின்றன. தஞ்சாவூர் ஜில்லா, புஞ்சை என்ற ஊரில் கிடைத்த கல்வெட்டு ஒன்று சில நிலங்கள் கோயிலுக்கே உரியன என்று நிரூபிப்பதற்காகச் சில கோயில் வேலைக்காரர்கள் தீக்குளித்து உயிரைத் தியாகம் செய்து கொண்டனர் என்று கூறுகிறது.
தங்கள் உரிமைகளை நிலைநாட்ட கோபுரத்தின் மீதேறிக் கீழே விழுந்து உயிர்நீத்த செய்திகளும் கோயில் சாசனங்களிலிருந்து தெரிய வருகிறது. கோயில் காரியங்கள் நடைபெறாது போனால் கோயில் வேலைக்காரர்களுக்கு ஊதியம் கிடைக்காது. அவ்வாறு கோயிற் காரியங்களை நடத்தாமல் நிர்வாகிகள் வருமானத்தைத் தாங்களே சுவீகரித்துக் கொண்டபோது வேலைக்காரர்களது உரிமைகளை நிலைநாட்ட கோபுரத்தின் மேலேறி கீழே விழுந்து அப்பாவு அய்யங்கார் என்பவர் உயிர்நீத்த செய்தியை இரண்டு கோயிற் சாசனங்கள் கூறுகின்றன.
இவ்வாறு கிராம நல அமைப்பு முறையை எதிர்த்துச் சிற்சில போராட்டங்கள் கடந்த ஆயிர வருஷ காலமாக நடைபெற்றிருந்த போதிலும், அயல் நாட்டு வியாபாரிகளின் வருகைக்கு முன்பு கிராம சமுதாய முறை பெரிய மாறுதல் எதுவுமின்றி நிலைத்திருந்தது. போர்த்துகீசியர், டச்சுக்காரர் வருகைக்குப் பின் கடற்கரைப் பகுதியிலுள்ள சமுதாய அமைப்பு மாறத் தொடங்கிற்று. வெளி நாட்டு வியாபாரத்திற்காகத் துணி, மீன், தானியங்கள் முதலியவற்றை ஏற்றுமதி செய்யும் வியாபாரத்தில் அவர்கள் ஈடுபட்டனர். கடற்படை வலிமையால் கீழ்க்கடற்கரைத் துறைமுகங்களை ஐரோப்பியர்கள் பிடித்துக் கொண்டனர். இலங்கை, இந்தோனேஷ்யா முதலிய நாடுகள் அவர்கள் கைவசப்பட்டிருந்ததால் கடல் வியாபாரத்தில் அவர்களுடடைய ஆதிக்கம் ஓங்கியிருந்தது. மதுரை நாயக்கர்களது அரசு உள் நாட்டில் அரசியல் ஆதிக்கம் பெறுவது கடினமாக இருந்தது. ஆனால் கடற்கரைப் பகுதிகளில் கிராம சமுதாய வாழ்க்கை அழிந்து போயிற்று. கிராமங்களை விட்டு மக்கள் துறைமுகங்களுக்குக் குடியேறினர். ஆனால் உள்நாட்டில் குறிப்பிடத்தக்க சமூக மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை.
அயல் நாட்டினர் வியாபாரப் போட்டியில் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர். ஆங்கில நாட்டில் தொழில் வளர்ச்சி மிகுதிப் பட்டதால் பல பொருள்களை இந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய முடிந்தது. அவர்களுடைய கப்பல் படை வலிமையும் அதிகரித்தது. தமிழ் நாட்டில் மத்திய அரசு பலவீனப்பட்டது. ஆற்காட்டில், நவாபு பதவிக்குப் போட்டி ஏற்பட்டது. இதனைப் பயன்படுத்திக் கொண்டு ஆங்கிலேயர் நாடு பிடிக்கத் தொடங்கினர். பாளையக்காரர்கள் பலர் பல சமயங்களில் எதிர்த்து நின்றனர். ஆயினும், வளர்ந்து வரும் தொழில் வளமுள்ள நாட்டினர் ஆனதாலும், கப்பற்படை மிகுதியும் உடையவர்களாதலாலும், புது முறைப் போர்க் கருவிகள் உடைவர்களாதலாலும் ஆங்கிலேயர் வெற்றி பெற்றனர்.
அவர்களுடைய வியாபார முறைகளால் கிராம சமுதாயம் சீரழிந்தது. நிலச்சுவான்தார் முறை அமுலாக்கப்பட்டது. பாளையக்காரர்கள் நிலச்சொந்தக்காரர். ஆனார்கள். முன்பிருந்ததைவிடக் கிராமப் பகுதி மக்கள் கடுமையாகச் சுரண்டப்பட்டனர். ஜாதிப் பிரிவினைகள் தூண்டிவிடப்பட்டு மக்கள் பிரித்து வைக்கப்பட்டனர். ஆங்கில ஆட்சியில் மிகப் பெரிய சமுதாய மாற்றங்கள் தொடங்கின. நிலபிரபுத்துவ முறை வலுப்பெற்றது. பெரிய தொழில்கள் முதன் முதலில் துவங்கின. இயந்திரத் தொழிலாளர் வர்க்கம், ஒரு புதிய சக்தியாக இந்திய சமுதாயத்தில் தோன்றிற்று. தொழில்கள் வளர ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்து நிற்க வேண்டிய தேசீயத் தொழிலாளி வர்க்கமும் தோன்றிற்று. பெரு நிலச்சுவான்களைத் தவிர, ஆங்கில ஆதிக்கத்துக்கு எதிராக, எல்லா வர்க்கங்களும் ஒன்று சேரும் வாய்ப்பு ஏற்பட்டது. இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி தேசீய இயக்கம் வளர்ந்தது. ஆயினும் நமது அடிப்படையான சமுதாய அமைப்பு இன்னும் சுரண்டல் அடிப்படையிலே இருக்கிறது. கிராமப்புற மக்களது வாழ்க்கையில் பல மாறுதல்கள் ஏற்பட்டிருப்பினும் அவர்கள் தாங்கள் வாழ்க்கை நடத்துவதற்கு நிலச்சுவான்களுடைய நிலத்தில் உழைக்கும் நிலையில்தான் இருக்கிறார்கள். பஞ்சாயத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கிருந்தாலும், அவ்வுரிமையை, சுதந்திரமாக நிறைவேற்ற வழி இல்லாமல் பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் குறுக்கே நிற்கின்றன.
ஆங்கிலேய ஆட்சியில் கொடுஞ் சுரண்டல் காரணமாக நிலத்தை இழந்த விவசாயிகள் புதுத்துறைகளில் நுழைந்து வாழ்க்கை நடத்தி வருகிறார்கள். அவர்கள் நகரங்களில் தொழிலாளராகவும் மலைத் தோட்டங்களில், தோட்டத் தொழிலாளராகவும் பணியாற்றுகிறார்கள். அங்கும் அவர்கள் சுரண்டலுக்கு உட்படுத்தப்படுகிறார்கள்.
நாடு விடுதலை பெற்ற பதினைந்து ஆண்டுகளில் அடிப்படைத் தொழில்கள் வளர்ச்சிப் பெற்றுள்ளன. நமது சுதந்திரம் பலமடைந்துள்ளது. உற்பத்தி பெருகி உள்ளது. ஆயினும், இவற்றின் பயன்களனைத்தும், உழைக்கும் மக்களுக்கு அதிகமாகக் கிடைக்கவில்லை. நாட்டில் தொழில் வளர்ச்சியுற, தமது வாழ்வும் வளம் பெற வேண்டும் என்று உழைப்பாளி மக்கள் விரும்புகிறார்கள்.
இந்த சமூகச் சரித்திரப் பின்னணியில் உழைப்பாளி மக்களது படைப்புக்களான நாட்டுப் பாடல்களையும், கதைகளையும், நாடகங்களையும், கூத்துக்களையும் நாம் நோக்க வேண்டும்.
நமது மக்களிடையே வழங்கிவரும் கதைப்பாடல்கள் எண்ணற்றவை. அவற்றை நான்கு விதமாகப் பிரிக்கலாம், 1. இதிகாசத் துணுக்குகள், 2. கிராம தேவதைகளின் கதைகள், 3. சமூகக் கதைகள், 4. வரலாற்றுக் கதைகள், இதிகாசங்களான இராமாயணம், பாரதம் ஆகிய இரண்டில், பாரதக் கதையோடு தொடர்புடைய நிகழ்ச்சிகளைக் கருப்பொருளாகக் கொண்டு பல கதைப் பாடல்கள் இருக்கின்றன. இன்னும் கிராம மக்கள் இராமாயணத்தை விட பாரதத்தையே அதிகமாக விரும்பிக் கேட்கிறார்கள். அதற்குக் காரணம் பஞ்ச பாண்டவர்களில் அர்ஜுனனும், வீமனும் மக்களுக்கு தம்மோடு உறவுடைய வீரர்களாகத் தோன்றுகிறார்கள். கண்ணன் உற்ற நண்பனாகவும், ஆபத்தில் உதவுபவனாகவும், மனிதப் பண்புகள் நிறைந்தவனாகவும் காணப்படுகிறான். கண்ணன் தனது சுயகாரியத்திற்காக எதனையும் செய்யவில்லை. தனது நண்பர்களுக்கு உதவவே கதையில் பங்கு பெறுகிறான். எனவே அவன் பாமர மக்களின் சிந்தனையைக் கவருகிறான்.
பாரத கதா பாத்திரங்களைக் கொண்டு பாரதத்தில் காணப்படாத நிகழ்ச்சிகளைக் கதைகளாகப் பின்னிய நாட்டுப் பாடல்கள் அல்லியரசாணிமாலை, பவளக்கொடி மாலை, ஏணியேற்றம், பொன்னுருவி மசக்கை முதலியன. பாரதக் கதையின் கதா பாத்திரங்கள் தமிழ் நாட்டின் நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளுவதாக இக்கதைகள் கூறுகின்றன. பாண்டியனின் மகள் அல்லி, பெண்ணாதிக்க சமுதாயத்தின் தலைவியாக வாழ்கிறாள். அர்ச்சுனன் தலைமறைவு வாழ்க்கையின் போது மதுரைக்கு வருகிறான். அல்லி மீது காதல் கொள்ளுகிறான். அல்லி அவனைக் காணவே மறுக்கிறாள். அவனைச் சிறைப்படுத்துகிறாள். கண்ணனது உதவியால் அல்லியை அர்ச்சுனன் மணம் புரிந்து கொள்ளுகிறான். இக்கதையில் இரு சமுதாயங்களின் உறவு உருவகமாகச் சித்தரிக்கப் பட்டுள்ளது. இக் கதைக்கு ஆதாரமெல்லாம் பாரதத்தில் வரும் அர்ச்சுனன்-சித்திராங்கதை சந்திப்பு மாத்திரமே.
இக் கதையின் தொடர்ச்சியே பவளக்கொடி மாலை. அல்லியோடு சிறிதுநாள் தங்கியிருந்துவிட்டு அர்ச்சுனன் பாரதப் போர் நடத்தப் போய் விடுகிறான். போர் முடிந்து வெற்றி பெற்றுச் சில ஆண்டுகளுக்குப் பின், அல்லியிடமிருந்து, குழந்தை புலந்திரனைப் பார்க்க வர வேண்டுமென்று அவனுக்கு அழைப்பு வருகிறது. அவன் குழந்தையைக் காண மதுரைக்கு வருகிறான். குழந்தை பவளத்தேர் வேண்டுமென்று அழுகிறான். அர்ச்சுனன் பவளம் தேடி பவளக் கொடி காட்டிற்குச் செல்லுகிறான். பவளக்காட்டின் ராணி பவளக்கொடியை பார்க்கிறான். காதல் கொள்ளுகிறான். பல இடையூறுகளைச் சமாளித்துப் பவளம் பெற்று வருகிறான். பின் அவளையும் மணந்து கொள்ளுகிறான். ருசிகரமாகக்கதை செல்லுகின்றது. இடையில் பவளக்கொடியோடு போராடி விஜயன் இறந்து போகிறான். தருமரும், கிருஷ்ணனும் தமிழ் நாட்டிற்கு வருகிறார்கள். பவளக்காட்டில் இறந்து கிடக்கும் விஜயனை உயிர்ப்பிக்கிறார்கள். கடைசியில் பவளக்கொடி விஜயனை மணந்து கொள்ளுகிறாள்.
மூன்றாவது கதை பொன்னுருவி மசக்கை. கருணனது மனைவிக்கும் கருணனுக்கும் நடக்கும் குடும்பச் சண்டையைப் பொருளாகக் கொண்டது. நிகழ்ச்சிகள் இந்திரப் பிரஸ்தத்திலும், தமிழ் நாட்டிலும் நடைபெறுகின்றன. கடைசியில் கருவங் கொண்ட மனைவியை கருணன் அடி உதையால் பணிய வைக்கிறான்.
நான்காவது கதை ஏணியேற்றம். இது அஞ்ஞாதவாச காலத்து நிகழ்ச்சி ஒன்றை பொருளாகக் கொண்டது. அர்ச்சுனன் மனைவி சுபத்திரை மீது துரியோதனன் இச்சை கொள்ளுகிறான். அவனுடைய தீய எண்ணத்தை அறிந்த சுபத்திரை மதுரையிலுள்ள அவனது சகமனைவி அல்லியிடம் சரண் புகுகிறாள். அவள் மதுரை சென்றதையறிந்து துரியோதனன் அங்கு வருகிறான். அவனைத் தண்டிக்க வேண்டுமென்ற முடிவில் அல்லி அவனை வரவேற்று சுபத்திரையிடம் அனுப்பி வைப்பதாகச் சொல்லுகிறாள். காமத்தால் மதியிழந்த துரியோதனன் அவளது சூழ்ச்சியை உணராமல் அவள் சொற்படி நடக்கச் சம்மதிக்கிறான். அல்லி தமிழ் நாட்டுத் தச்சர்களின் திறமையைப் பயன்படுத்தி ஏணி எந்திரமொன்று செய்யச் சொல்லுகிறாள். அந்த ஏணி ஏறுமாறு துரியோதனனை வேண்டுகிறாள். ஏணியின் கடைசிப் படியில் சுபத்திரையைப்போல பதுமையொன்று பொருத்தப்பட்டிருந்தது. துரியோதனன் ஏணியில் ஏறியதும் ஆணிகள் அவன்மீது பாய்ந்தன. பிரம்புகள் அவனை அடித்தன. இறங்க முடியாதபடி சில கம்பிகள் அவனைப் பிணைத்தன. அல்லி ஏணியைப் பாண்டியர்களிடம் செல்லுமாறு கட்டளையிட்டாள். அங்கே அவன் அவமதிக்கப்பட்டான். பின்பு அங்கிருந்து நாகலோகத்திற்கு ஏணியை அனுப்பினார்கள். ஆதிசேஷன் துரியோதனனை அவமதித்து, மேகராஜனிடம் அனுப்பினான். அங்கிருந்து பல உலகங்கள் சுற்றிக் கடைசியில் கிருஷ்ணனிடம் ஏணி வந்து சேர்ந்தது. கண்ணன் அவனைப் போற்றுவதுபோல் துற்றி ஏணியை ஐவரிடத்தில் அனுப்பி வைத்தான். ஐவர் அவனைக் கண்ட பொழுது, பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் அவனைக் கொல்ல வேண்டுமென்று சொல்லுகிறார்கள். தருமர் அவனுடைய தவறுக்கு உரிய தண்டனையை நம் நாட்டுப் பெண்களே கொடுத்து நிறைவேற்றி விட்டார்கள் என்று கூறிக் கதையின் நீதியை விளக்குகிறார்.
"இவன் பெண்ணை அழிக்க வந்தான் பெண்களால் சீர்குலைந்தான்
நெருப்புக்கு முன்னெதுவும் நில்லா விதம் போல
கற்புக் குறை சிறிதும் காசினியில் நேராது
கற்பே பெரு நெருப்பாம் கற்பே பெரும் புகழாம்
பெண்களிது செய்தார் பேருலகம் தன்னை வாழ்த்த
புருஷர் பழிதுடைக்க பூவையர்கள் செய்தார்கள்
கற்புடை நமது பெண்கள் பொற்புடனே செய்தஇது
போது மிவனை இன்னும் என்ன செய்யப் போகின்றீர்"
என்று தருமர் கேட்கிறார்.
இவை அனைத்திலும், அல்லி ஏற்றம் பெறுகின்றாள். அல்லியைப் பற்றிய கதைகள், செவி வழியாகப் பல வழங்கியிருக்க வேண்டும். அவற்றிலிருந்து சிலவற்றைத் தொகுத்துப் பிற்காலப் பாடகர்கள், நாட்டுப் பாடல்களாக எழுதி வைத்திருக்க வேண்டும். இக் கதைகளில் மகாபாரத கதாபாத்திரங்கள் இடம் பெறுகின்றன என்றாலும், கதையின் கருத்துக்கள் பழம் தமிழ் நாட்டில் நிலவியவைதாம்.
இவற்றைப் போன்ற பாரதத்தோடு தொடர்புடைய கதைகள் சில நாட்டுப்பாடல் வடிவத்தில் வழங்கி வருகின்றன. அவை இக் கதாபாத்திரங்களின் தன்மைகளில் எவற்றை மக்கள் விரும்புகின்றார்கள், எவற்றை வெறுக்கின்றார்கள் என்பதைத் தெளிவாகக் காட்டுகின்றன. புராணக் கதா பாத்திரங்களைவிட தமிழ்நாட்டுக் கற்பனைக் கதாபாத்திரங்களுக்கே இப்பாடல்களில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த நான்கு கதைப் பாடல்களிலும், அல்லி ஒரு முக்கிய கதாபாத்திரமாகத் திகழ்கிறாள். புராணக் கதாபாத்திரங்களும் கதையில் உரிய இடம் பெறுகின்றனர். ஆனால் புராணக் கதாபாத்திரங்கள் தமிழ் நாட்டுப் பண்பாட்டுக்கு ஏற்றபடி தன்மை மாறி உருவாக்கப் பட்டுள்ளன.
சமூகக் கதைப் பாடல்கள் இன்னும் தமிழ் மக்களிடையே வழங்கி வருகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கவை முத்துப்பட்டன் வில்லுப்பாட்டு, சின்னத்தம்பி வில்லுப் பாட்டு, சின்ன நாடான் கதை, வெங்கல ராஜன் கதை, கள்ளழகர் கதை, நல்லதங்காள் கதை, கெளதல மாடன் கதை முதலியவை. இவை யாவும், தமிழ் நாட்டு உழைப்பாளி மக்களையும், தமிழ் நாட்டுத் தலைவர்களையும் கதைத் தலைவர்களாகக் கொண்டது. இக்கதைகளை விரிவாகக் கூறுவதற்கு இம் முகவுரையில் இடமில்லை. ஆயினும் கதைகளின் கருப்பொருளை மட்டும் சுருக்கமாகக் கூறுவோம்.
முத்துப்பட்டன் பிராமணன் பொம்மக்கா, திம்மக்கா என்ற இரு சக்கிலியப் பெண்களை மணந்து கொள்வதற்காக குல உயர்வையும், சொத்து சுகத்தையும் தியாகம் செய்தான். உழைப்பாளி மக்களைக் காப்பதற்காகவும் பொதி மாட்டு வியாபாரிகளுடைய வாணிபத்தைப் பாதுகாப்பதற்காகவும் கள்ளர்களை எதிர்த்துப் போராடி உயிர் விட்டவன். அவனுடைய மனைவிமார் இருவரும் உடன்கட்டையேறி உயிர் நீத்தார்கள். இக்கதையின் சரித்திரப் பின்னணி பற்றியும், கதா பாத்திர அமைப்பு பற்றியும், தென்பாண்டி நாட்டில் அவன்புகழ் வளர்ந்ததைப் பற்றியும் பல தொடர் கட்டுரைகள் எழுதி சரஸ்வதி என்ற பத்திரிகையில் வெளியிட்டுள்ளேன். அதனைப் படித்த செக் தமிழறிஞர் டாக்டர் கமில் சுவலபில், "உலகிலேயே மிகச் சிறந்த கதைப் பாடல்களுள் இது ஒன்று" என்று அபிப்பிராயம் தெரிவித்து அதனையும் எனது கட்டுரைகளையும், செக் மொழியிலும், ஆங்கில மொழியிலும் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார். தமிழ் நாட்டுக் கதைப் பாடல்களில் பிறமொழியில் வெளியான கதைப் பாடல் இது ஒன்றே.
சின்னத்தம்பி என்ற சக்கிலியச் சிறுவன் மலைவிலங்குகளின் சல்லியத்தினால் வேளாண்மைக்கு இடையூறு நேர்ந்த பொழுது அவற்றைக் கொன்று விவசாயிகளுக்கு நன்மை செய்தான். அவன் புகழ் பெற்று உயர்வடைவதைக் கண்ட மேல் சாதிக்காரர்கள் புதையல் எடுப்பதற்காக அவனைப் பலி கொடுத்து விட்டார்கள்.
இக்கதை சாதியால் உயர்ந்தவர்கள், சாதியில் தாழ்ந்தவர்களை முன்னுக்கு வரவிடாமல் கொடுமைப்படுத்தி அழித்ததைக் கூறுகிறது. கொடுமையைக் கண்டித்தும் கொடுமைகளுக்கு உள்ளானவர்களைப் புகழ்ந்தும் பாடுகிறது. இப்பாடல்.
நல்லதங்காள் கதை, நாடகங்களின் மூலம் தமிழ் நாடு முழுவதும் சிறிது காலத்திற்கு முன்னர்வரை பரவியிருந்தது. பெண்களுக்குப் பிறந்தகத்தின் சொத்துரிமை இல்லாததால் வரும் அவதிகளை அது வருணிக்கிறது.
சின்ன நாடான் கதை, சொத்துரிமை சமுதாயத்தில், வாரிசு உரிமையைப் பாதுகாப்பதே முதன்மையானதென்று அதைப் பாதுகாக்க மகனைக் கொல்லவும் தந்தை துணிவான் என்பதைப் புலப்படுத்துகிறது.
சமூகக் கதைகளில் பெரும்பாலானவை உண்மை நிகழ்ச்சிகளே. இந்நிகழ்ச்சிகளுக்குக் கற்பனையால் கலையுருவம் கொடுக்கப்பட்டுள்ளது. இவையாவும் சோக முடிவுடையனவாக இருக்கின்றன. அதற்குக் காரணம் தமிழ் நாட்டின் கிராம சமுதாயத்தின் மாற்றமுடியாத ஜாதிப் பிரிவினைகளுக்குள் சமூக வாழ்க்கை ஒடுக்கி வைக்கப்பட்டிருந்ததுதான். இப்பிரிவினைகளை ஒழிக்கும் முயற்சி சிறிதளவு தலைதூக்கினாலும், அத்தகைய முயற்சிகள் முளையிலேயே கிள்ளியெறியப்பட்டன. தோல்வியுற்றாலும் அவை கலையில் இடம் பெற்று இன்னும், சமூக மாற்றத்தை விரும்புகின்ற இளைஞர்களுக்கு ஊக்கம் அளிப்பனவாக உள்ளன.
வரலாற்றுக் கதைப் பாடல்கள் கிடைப்பது அரிதாக உள்ளன. ஆயினும் கிடைப்பனவற்றைக் கொண்டு பார்த்தால், சுமார் நானூறு வருஷ காலமாக பாமர மக்கள் சரித்திர நிகழ்ச்சிகளைப் பற்றிய தங்கள் கண்ணோட்டத்தைப் பாடல்கள் மூலம் வெளியிட்டுள்ளார்கள் என்று நிச்சயமாகச் சொல்லலாம். இவற்றுள் பல ஏட்டிலேயே மங்கிக் கிடக்கின்றன. இவற்றுள் மிகப் பழமையானது ‘பஞ்சபாண்டவர் கதை' அல்லது ‘ஐவர் ராஜாக்கள் கதை' பாண்டியர் பேரரசு வலிமை குன்றி சிற்றரசுகளாகப் பிரிந்த காலத்தில் இஸ்லாமியப் படையெடுப்பைத் தடுத்து நிறுத்துவதற்காக விஜயநகரப் பேரரசு தமிழ் நாட்டை தனது ஆட்சிக்குள் கொணர முயன்றது. விசுவநாத நாயக்கன் ராணுவ காரிய கர்த்தனாகவும், அரியநாதமுதலி தளவாயாகவும் மதுரையில் அரசப் பிரதிநிதிகளாக நியமனம் பெற்றார்கள். தென் பாண்டி நாட்டில் பாண்டியர் வம்சத்தைச் சேர்ந்த ஐந்து அரசர்கள், நாயக்கரது மேலாதிக்கத்தை ஏற்க மறுத்தனர். அரியநாத முதலி படை கொண்டு தெற்கே வந்தான். கயத்தாறில் பெரும் போர் நிகழ்ந்தது. தோற்றுப் பின் வாங்கிய பாண்டியர்கள் பணியாமல் போராடிக் கொண்டேயிருந்தனர். வள்ளியூரில் நடந்த போரில், நான்கு பாண்டியர்கள் இறந்து போனார்கள். எல்லோரிலும் இளையவனான குணசேகர பாண்டியன் சிறைப்பட்டான். விசுவநாதனது மகளை அவனுக்கு மணம் செய்வித்துவிட்டால் பாண்டியன் எதிர்ப்பு அடங்கும் என்று அரியநாத முதலி எண்ணினான். ஆனால் அந்தத் திருமணம் நடக்கவில்லை. குலசேகரன் வைரம் தின்று இறந்து விட்டான். அவனையே மணப்பதென்று எண்ணியிருந்த கன்னட இளவரசி உடன்கட்டை ஏறினாள். இக்கதையே இருப்பதற்குள் மிகவும் பழமையானதாகத் தோன்றுகிறது. இக்கதையின் நிகழ்ச்சிகள் சுமார் 450 வருஷங்களுக்கு முன் நடைபெற்றவை. கதை நிகழ்ச்சிகளில் போர் நிகழ்ந்ததென்பது உண்மை. குலசேகர பாண்டியன், கன்னட இளவரசி இவர்களைக் குறித்த நிகழ்ச்சிகள் உண்மையா என்றறிய வழியில்லை. ஆனால் இது மக்களைக் கவர்ந்துவிட்டதோர் கற்பனையாக இருக்கலாம்; திருமணத்தாலும் அடிமைத்தனத்தை வரவேற்கக் கூடாது என்ற உணர்ச்சியின் உருவமாக நாட்டுப் பாடல் குலசேகரனைச் சித்திரிக்கிறது. தமிழ் நாட்டு மரபின்படி கன்னட இளவரசி தனக்கு மணம் பேசிய மணமகன் இறந்ததும் வேறொருவரை மணம் செய்து கொள்ள விருப்பமில்லாமல் இறந்து விடுவதாகக் கதை சொல்லுகிறது. இக்கதை மனிதப் பண்பின் இரண்டு உயர்ந்த அம்சங்களை எடுத்துரைக்கிறது.
அதற்குப் பிற்காலத்தில் தோன்றிய கதைகள், ராமப் பையன் அம்மானை, இரவிக்குட்டிப் பிள்ளை போர் முதலியன. இவற்றுள் முன்னையது ராமநாதபுரம் சேதுபதிக்கும் ராமப் பையனுக்கும் நடந்த போரை வருணிக்கிறது. இரவிக் குட்டிப் பிள்ளை போர் ராமப் பையனுக்கும், திருவனந்தபுரம் தளவாய் இரவிக் குட்டிப் பிள்ளைக்கும் நடந்த போரை வருணிக்கிறது. இவை இரண்டும் திருமலை நாயக்கர் காலத்தில் நடந்த நிகழ்ச்சிகள். நாயக்கர் ஆட்சிக் காலத்தில் தோன்றிய கதைகள் பல இருக்கலாம். மேற்கூறிய கதைகள் மூன்றும் முறையே திருநெல்வேலி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் வழங்கி வந்தவை. மதுரை, திருச்சி மாவட்டங்களில் நாயக்கர் ஆட்சி கால நிகழ்ச்சிகளைப் பொருளாகக் கொண்ட கதைப் பாடல்கள் கிடைக்கலாம்.
மதுரை வீரன் கதை, வரலாற்றுப் பின்னணியில் எழுந்த கற்பனைக் கதையாகும். அவை போலல்லாமல் சரித்திர நிகழ்ச்சிகளைப் பிரதான ஆதாரமாகக் கொண்ட கதைகள் கிடைக்கின்றனவா என்று தேடிப் பார்த்தல் அவசியம்.
நாயக்கர் ஆட்சிக் காலத்திற்குப் பின்னர் முகலாயப் படையெடுப்பு நடந்த காலத்தில் முகலாயப் பேரரசை எதிர்த்து செஞ்சியின் சிற்றரசன் தேசிங்கு போராடினான். அவன் பத்து மாதங்கள்தான் ஆட்சி புரிந்தான். நீண்ட நாள் அரசாண்ட மன்னர்களின் பெயர் தன் மக்களின் மனத்தில் இடம் பெறாமல் போயின. ஆனால் பத்து மாதங்கள் ஆண்ட தேசிங்கின் பெயர் தெரியாதவர் தமிழ் நாட்டில் இல்லை. ஏன்? லட்சம் படை வீரர்களும், நானூறு பீரங்கிகளும் கொண்ட முகலாயர் படையை, முன்னுறு குதிரை வீரர்களைக் கொண்டு எதிர்த்தான் தேசிங்கு முகலாயப் படைத் தலைவன் சதகுத்துல்லாவைக் கொன்றுவிட்டான்; தானும் உயிர் நீத்தான். பணியாது போராடிய தேசிங்கின் நண்பன் ஒரு முஸ்லிம். அவன் நண்பனுக்காகத் தன் மதத்தினரை எதிர்த்தான்; அவனும் உயிர் நீத்தான். முரட்டு வீரமாயினும், தேசிங்கின் அஞ்சாமைக்குத் தமிழகம் தலை வணங்குகிறது.
இதற்குப் பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போராடிய கட்ட பொம்முவைப் பற்றிய பல கும்மிகளும், சிந்துகளும் இருப்பதாகத் தெரிகிறது. அவற்றில் ஒன்றை, சென்ற ஆண்டு நான் வெளியிட்டுள்ளேன். மருது சகோதரர்களைப் பற்றி 'சிவகங்கை அம்மானை', 'சிவகங்கைக் கும்மி' என்ற இரண்டு நாட்டுப் பாடல்களை ஓரியண்டல் மானுஸ்கிரிப்ட்ஸ் லைப்ரரிக்காகத் தமிழக அரசாங்கம் வெளியிட்டுள்ளது. கான் சாகிப் பற்றியும் பூலித்தேவனைப் பற்றியும் கதைப்பாடல்கள் ஏட்டுப் பிரதிகளாக இருக்கின்றன என்று தெரிகிறது. அவை கிடைத்து வெளியிடப்படுமானால் தொடர்ச்சியாக முன்னூறு, நானூறு வருஷங்களுக்கு இடையில் நிகழ்ந்த வரலாற்று நிகழ்ச்சிகளைப் பற்றித் தமிழ் நாட்டு உழைப்பாளி மக்களின் கருத்துக்களை அறிவதற்கு வழி கிடைக்கும். தமிழ் நாட்டு வரலாற்றில் ஆர்வமுள்ளவர்கள், இக்கதைப் பாடல்கள் தங்கள் பகுதிகளில் கிடைக்குமானால் எனக்கு அனுப்பி வைக்க வேண்டிக் கொள்கிறேன். அவை அனைத்தையும் சேகரித்து வெளியிடுவது தமிழ் நாட்டுப் பண்பாட்டு வரலாற்றைத் தொடர்ச்சியாக அறிந்து கொள்வதற்கு மிகவும் உதவியாக இருக்கும்.
இனிக் கதைப்பாடல்களில் பாமர தெய்வங்களைப் பற்றிய வில்லுப்பாடல்களும், அம்மானைகளும் அடங்கும். வில்லுப்பாட்டுகள் நெல்லை, குமரி மாவட்டங்களில் இன்னும் பாடப்படுகின்றன. அவற்றில் சொல்லப்படும் கதை பாமரர் வணங்கும் தெய்வங்களின் வரலாறுகளே. இவற்றை இரு வகையாகப் பிரிக்கலாம்.
தேவியரைப் பற்றிய கதைகள் பழமையானவை. மாடன் முதலிய தேவர்களைப்பற்றிய கதைகள் இடைக்காலத்தவை.
திரு. கி. வா. ஜகந்நாதன் அவர்கள் அலையோசை என்ற நாட்டுப்பாடல் திரட்டில் பாமரர் வணங்கும் தெய்வங்களின் அட்டவணையொன்று கொடுத்துள்ளார். அவற்றுள் வேதக்கடவுளரை நீக்கி விட்டால் 60 தெய்வங்கள் இருக்கின்றன. இத்தெய்வங்கள் மாவட்டத்திற்கு மாவட்டம் வேறுபடுகின்றன.
தேவியரில் பெரும்பாலானவை மூர்க்க தேவதைகளே. பரட்டைத்தலை, கொட்டை விழி, கோரப்பற்கள் முதலிய அசுர அம்சங்கள் எல்லாத் தேவதைகளுக்கும் பொதுவானவை. இவை பெண்ணாதிக்க சமுதாயத்தின் எச்சமாக நிற்கின்றன. இவற்றுள் முத்தாரம்மன், குமரி, செல்வி முதலிய தேவியர் தென்பாண்டி நாட்டில் பிரபலமானவை. இவை மணம் புரிந்து கொள்ளாத தேவியர். இவற்றை பயத்தோடுதான் மக்கள் வழிபட்டனர். இவை தமக்குக் கொடுக்க வேண்டியதைப் பக்தர்கள் தராவிட்டால் பெருந்துன்பம் விளைவிக்கக்கூடியவை என்று நம்பினார்கள். 'யக்ஷி' என்று சமண மதத்தவரது சாந்த தேவதை, பாமர மக்களின் இசக்கியாக மாறிவிட்டது. காளி, மாரி முதலியன வங்கத்திலிருந்தும், கருநாடகத்திலிருந்தும் பண்பாட்டுத் தொடர்பின் காரணமாக இங்கு குடியேறியவை. சக்கம்மாள், ராஜ கம்பள நாயக்கர்களது தெய்வம், கொத்துபல்லாரியிலிருந்து அவர்கள் வருகிற காலத்தில் அதனையும் கூடவே கொண்டு வந்து விட்டார்கள்.
தேவியரில் பல வேதக் கடவுளரோடு இணைப்புப்பெற்று விட்டன. காளி தனியாகவே வணங்கப்பட்டது. அது சைவ சமயத்தில் பார்வதியோடு சேர்ந்து ஒரு அம்சமாகிவிட்டது. பெரும்பாலும் பழமையான தேவதைகள் சிவனது மனைவிகளாக மாறிவிட்டன. ஆயினும் சிவன், விஷ்ணு கோயில்கள் இல்லாத சிறு கிராமங்களிலும் ஒரு தேவியின் கோயில் இருக்கும். இக்கோயிலுக்கு சிறப்பான நாட்களில் கொடை கொடுப்பார்கள். நவராத்திரியின்போது திருவிழாவும் நடைபெறும். சிறு கோயில்களில் ஒருநாள் மட்டுமே கொடை நடைபெறும்.
பாமர மக்கள் தேவி கோயில்களுக்கு வாசல் காவலர்கள் என்று மாடன் முதலிய தெய்வங்களை வணங்குகிறார்கள். ஆரம்பகாலத்தில் மாடன் முதலிய தெய்வங்களுக்கு உருவம் இல்லை. செங்கல்லால் கட்டப்பட்ட தூண் ஒன்றுதான் அத்தெய்வத்தைக் குறிக்கும். மாடன் முதலிய தெய்வங்கள், போரிலோ, கலகத்திலோ அல்லது சதிக்குள்ளாகியோ உயிர் விட்டவர்களது நினைவுச் சின்னங்களே. சின்னத்தம்பிக்கு, திருக்குறுங்குடி, பாப்பாக்குடி ஆகிய இடங்களில் கோயில்கள் இருக்கின்றன. அவை தனிக் கோயில்கள் அல்ல; பிற கோயில்களைச் சார்ந்தே இருக்கும். சுடலைமாடனுக்கு ஊர் தோறும் பல கோயில்கள் உண்டு. அவற்றில் உருவச் சிலைகள் இல்லை. சில தெய்வங்களுக்கு உருவச் சிலைகள் இருக்கின்றன. கருப்பசாமி, சங்கிலி பூதத்தான், முத்துப்பட்டன் ஆகிய தெய்வங்களுக்கு சிலைகள் உள்ளன. இவை பிற்காலத்தில் ஏற்பட்டவை.
மாடன் போன்ற தெய்வங்கள் சில குடும்பங்களுக்குக் குலதெய்வமாக இருக்கும். ஒன்று தெய்வமாகக் கருதப்படுகிற அம்மனிதனது வழிவந்தவர்களுக்கு அவன் குலதெய்வமாக இருக்கலாம், அல்லது அவனைக் கொன்றவர்களுக்குக் குலதெய்வமாக இருக்கலாம்.
இவை யாவும் பயத்தினால் வணங்கப்படும் தெய்வங்களே. வேதக்கடவுளரின் சிவன், நாராயணன் முதலியோரை பாமர மக்கள் வணங்குவது உண்டு. எனினும், அவர்கள் வீர சைவர்களோ, வீர வைணவர்களோ அல்ல. லக்ஷ்மி, சரஸ்வதி முதலிய தேவியர்களை அவர்கள் வணங்குவது அபூர்வம். முருக வணக்கம் பழங்காலம் முதல் தமிழ் நாட்டில் நிலவி வந்தது. இன்று உருவமில்லாமல் வேலினை மட்டும் பாமர மக்கள் வணங்குகிறார்கள். அது ஆயுத வணக்கமாக இருக்கலாம்.
பெளத்த, சமணச் சிறு தேவதைகளும் அம் மதங்கள் அழிந்த பின்னர், பாமரர் வணக்கத்திற்குரியவையாயின. ஆனால் அவை உருமாறி இந்துமத தெய்வங்களோடு ஒன்றி விட்டன. இவற்றுள் ஒன்று விநாயகர். இப்பெயர் புத்தருடைய பெயர்களுள் ஒன்று. வேசாந்தர ஜாதகத்தில் புத்தர் யானைப் பிறவியெடுத்தார் என்ற கதை கூறப்பட்டுள்ளது. எனவே புத்தர் பீடங்களிலிருந்த சிலைகளை அகற்றி விட்டுப் பிற்காலத்தார் யானைமுகக் கடவுளை வைத்து விட்டனர். அவை அரசமரத்தடியில் இருப்பதும் இக் கூற்றை மெய்ப்பிக்கும் சான்று. 'சாஸ்தா' சிறு தெய்வங்களுக்குள் உயர்ந்தவராகக் கருதப்படுகிறார். இவர் சிவனுக்கும் மோகினி உருவத்திலிருந்த திருமாலுக்கும் பிறந்தவர். சாத்தன் என்ற பெயரும் புத்தர் பெயர்களுள் ஒன்று. பிற்காலத்தில் புத்தனும், இந்துத் தெய்வங்களுள் ஒன்றாகக் கலந்தபோது சாஸ்தாவுக்கு பல ஊர்களில் கோயில்கள் தோன்றின. அவர் சாந்த தெய்வம்.
பாமரர் தெய்வங்கள் அதீத சக்தியுடையனவாவென்று அவர்களால் கருதப்படவில்லை. மனிதனைவிடச் சிறிது அதிகமான சக்தியுடையவை. அவ்வளவுதான். அவை புராணங்களில் சொல்லுவதுபோல சத்திய லோகம், கைலாசம், வைகுண்டம் முதலியவற்றில் வாழ்வன அல்ல. இவ்வுலகிலேயே, கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருக்கும் இயற்கைச் சக்திகளைப் போன்றவையே. அவை மனிதர் உடலுள் நுழைந்து பேசும் என்றும் மக்கள் நம்பினார்கள். இதனால் வஞ்சகர்களால் ஏமாற்றவும் பட்டார்கள்.
இத்தொகுப்பில் சில தெய்வ வணக்கப் பாடல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றின் முன்னுரையில் மேல் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
பாமரர் படைப்பிலேயே உணர்ச்சிமிக்க பாடல்கள் தாலாட்டும், ஒப்பாரியும். ஒன்று வாழ்க்கையின் தொடக்கம் பற்றியது, மற்றொன்று முடிவு பற்றியது; ஒன்று தாயின் இன்பத்தை வெளியிடுவது. மற்றொன்று உறவினர் துன்பத்தை வெளியிடுவது. அப்பகுதிகளின் நீண்ட முன்னுரைகளில் இவ்வின்பமும், துன்பமும் சமூக வாழ்க்கையோடு தொடர்புடையவை என்பதைக் காட்ட முயன்றுள்ளேன்.
எனது முதல் தொகுப்பில் இருப்பவற்றைக் காட்டிலும் பலவகைப்பட்ட பாடல்கள் தொழில் என்ற துறையில் இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. உப்பளம், மீன் பிடித்தல், ஆலை, தேயிலைத் தோட்டம், வண்டியோட்டுதல் முதலிய தொழில்களைப் பற்றிய பாடல்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. எல்லாப் பாடல்களிலும் தொழிலும், காதலும் இணைந்தே காணப்படுகின்றன.
காதல் பகுதியில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த அழகான பாடல்கள் காணப்படுகின்றன. நெல்லை மாவட்டப் பாடல்கள் மட்டுமே சென்ற தொகுப்பில் இருந்தன. பிறவகைப் பாடல்களை விடக் காதல் பாடல்களே பெரிதும் கிடைக்கின்றன. தமிழ்நாடு காதலை மறந்து விடவில்லை என்று தோன்றுகிறது.
உழைக்கும் இளைஞரும் இளநங்கையரும் வயலிலும், பருத்திக் காட்டிலும், தேயிலைத் தோட்டங்களிலும், ரோடு வேலை செய்யும் போதும், மலைச்சாரலில் விறகு வெட்டும் போதும் கூடிப் பழகுகிறார்கள். எனவே வீட்டிலடைப்பட்டுக் கிடக்கும் உயர்ந்த வர்க்கப் பெண்களை விட, இளைஞர்களை அறிந்து காதல் கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு உண்டு. ஆனால் சாதிப் பிரிவினைகளும், பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும் அவர்கள் இல்லற வாழ்க்கைக்குத் தடையாக உள்ளன.
ஒரு ஜாதியினருக்குள்ளேயே மணமுறை வழக்கங்கள் காதல், கற்பு மணமாக முடிவதற்குத் தடையாக நிற்கின்றன. ஆயினும் இத் தடைகளை மீறி மனித உணர்வு சிற்சில சமயங்களில் வெற்றி பெறுகிறது. சங்க காலத்து குறிஞ்சி நிலக் களவொழுக்க மரபுகளை இன்னும் பாமரர் நாட்டுப் பாடல்களில் காண்கிறோம்.
பாமர மக்களின் குடும்ப வாழ்க்கை சமூக வாழ்க்கைக்குட்பட்டது. ஆணும் பெண்ணும் உழைத்தும் அவசியத் தேவைகளுக்குப் பணம் இல்லாத ஏழ்மை நிலையில்தான் அவர்கள் வாழ்கிறார்கள். சராசரி மனித வாழ்க்கைக்குத் தேவையான வசதிகள் அவர்களுக்கு இல்லை. ஆயினும் மனித உணர்வின் மென்மையான அம்சங்கள் குடிசைகளிலும் ஒளி விடுகின்றன. அன்பும் தியாகமும் அவர்களது வாழ்க்கையின் அடித்தளம். இவ்வடித்தளத்தின் மீது குடும்ப இன்பம் என்னும் உறுதியான கட்டிடம் எழுப்பப்படுகிறது.
ஆயினும் சமூக வாழ்க்கையினால் தோன்றும் பண ஆசையும், அந்தஸ்துப் பற்றும் குடிசைவாழ் மக்களையும் பீடிக்கிறது. அதனால் இளைஞரது காதல் பாதைக்குத் தடைகள் உண்டாகின்றன. பொருந்தா மணங்கள் நிகழ்கின்றன. கிழவனுக்குப் பணம் இருந்தால் 30 வயது இளம் பெண்ணை மனைவியாகப் பெற முடிகிறது. அவள் தாலிச் சிறையினுள் அடங்கி தனது உணர்ச்சிகளைக் கொன்றுவிட முயன்று நடைப் பிணமாக வாழ வேண்டி வருகிறது. உணர்ச்சியை அடக்க முடியாதவர்கள், திருமணக் கட்டிற்கு வெளியே காதல் இன்பம் நாடுகிறார்கள். அதுபோலவே சொத்துரிமை காரணமாகக் குமரி, குழந்தைக்கு வாழ்க்கைப் படுவதும் உண்டு. அவர்கள் முறை மாப்பிள்ளைகளோடு களவு ஒழுக்கம் கொள்ள சமூகப் பழக்கம் அனுமதிக்கிறது. குடும்ப இன்பத்தை பொருளாதார ஏற்றத் தாழ்வும், நிலப்பிரபுத்துவக் கொள்கையும் சீரழிக்கின்றன. இந்நிலைமை முழுவதும் பல நாட்டுப் பாடல்கள் மூலம் சித்தரிக்கப்படுகின்றன. குடும்பவாழ்க்கையில் ஆண் ஆதிக்கம் கூடாது; இருவரும் ஒருவரையொருவர் உணர்ந்து, குற்றங் குறைகளைப் பொறுத்துச் செல்ல வேண்டும் என்ற கருத்தைப் பல பாடல்கள் எடுத்துக் காட்டுகின்றன. 'ஆக்கத் தெரியாத அணங்கு என்ற பாடல் இதற்கோர் நல்ல உதாரணம்.
சொந்தத் தொழிலில் உழைப்போடும், பிறர் நிலங்களில் உழைப்போடும் கிராமத்தில் வாழ்கின்றனர். உழைப்புக்கேற்ற ஊதியத்தை எதிர்பார்த்தல் நியாயம். ஆனால் சோம்பேறித்தனமும், ஏமாற்றுதலும் கூடாது என்று நாட்டுப் பாடல்கள் போதிக்கின்றன. உழைப்பின் உயர்வைப் பல பாடல்கள் போற்றுகின்றன. சோம்பேறிக் கணவனைத் திருத்தி உழைப்பாளியாக்க முயலும் மனைவியரை நாட்டுப் பாடல்களில் அடிக்கடிச் சந்திக்கிறோம். நியாயமாகக் கூலி கொடுக்கும் முதலாளியைப் புகழ்வதும், கொடுமைக்கார முதலாளியை இகழ்வதும், தொழிலாளியின் இயற்கை. இவ்வுணர்ச்சியையும் நாட்டுப் பாடல்களில் காண்கிறோம். உழைப்பின் கூட்டுறவில் காதல் துளிர்த்து வளர்கிறது. உப்பளத்திலும், தேயிலைத் தோட்டத்திலும், நடுகைநடும் வயலிலும், களத்து மேட்டிலும், தோட்டத்திற்கு நீர் பாய்ச்சும் போதும், களையெடுக்கும் போதும், தொழிலில் கூட்டுறவு கொள்ளும் ஆணும் பெண்ணும், வாழ்விலும், குடும்பத்திலும் கூட்டுறவு கொள்ள ஆசைப் படுகிறார்கள். தொழில்களைப்பற்றியும் உழைக்கும் மக்களது கண்ணோட்டத்தை நாடோடிப் பாடல்கள் புலப்படுத்துகின்றன.
சமூக வாழ்க்கையின் பல நிகழ்ச்சிகள் கிராம மக்களின் உணர்வில் எதிரொலி கிளப்புகின்றன. சில நிகழ்ச்சிகளில் அவர்களுக்குப் பங்கு இருக்கும்.
நேரடியாகக் கிராமத்தைப் பாதிக்கும் நிகழ்ச்சிகளில் எல்லோரும் பங்கு கொள்வர். உதாரணமாகக் கிராமத்திற்குக் கொள்ளைக்காரர்கள் வந்தால், ஜாதி வித்தியாசமின்றி அவர்களை ஒன்றுபட்டு விரட்டுவார்கள். ஆனால் ஜாதிக் கலகங்கள் வந்தாலோ நியாய அநியாயத்தை ஓர்ந்து நோக்காமல் ஜாதிப் பற்றில் மூழ்கி வேற்று ஜாதியர்களை வெட்டித் தள்ளுவார்கள். வெறியடங்கியதும் தங்கள் செய்கையை நினைத்து வருந்துவார்கள். சிவகாசிக் கலகம், கழுகுமலைக் கலகம் இவை இதற்கு உதாரணமானவை.
இத்தொகுப்பில், சிவகாசிக் கலகத்தின் சமூகப் பின்னணியை விளக்கியுள்ளேன். இக்கலகத்தில் பங்கு கொண்டவர்களின் கருத்துக்களும், இரு கட்சியிலும் சேராது, இருவரையும் சமாதானப்படுத்த முயன்ற நல்லவர்களின் கருத்துக்களையும், நாம் இப்பாடல்களில் காண்கிறோம். கிராம ஒற்றுமையைச் சிதைத்து அதில் லாபம் காண முயலும் பெரிய மனிதர்களின் சூழ்ச்சிகளையும், ஒழுக்கமின்மையும், நாடோடிப் பாடல்களில் வெளியாகின்றன. ஆட்சியாளர்களில் நன்மை செய்பவர்களைப் புகழ்ந்தும் தீமை செய்பவர்களை இகழ்ந்தும் பாடல்கள் தோன்றியுள்ளன. நாட்டுப் பாடல்களில் அரசியல் உணர்வு அதிகமாகக் காணப்படுவதில்லை. ஏனெனில் சுமார் முப்பது வருஷங்களுக்கு முன் தேசிய உணர்வு நமது கிராம மக்களிடம் அதிகமாகப் பரவவில்லை.
நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு, பணக்காரர் எதிர்ப்பு, சாதி அகம்பாவ எதிர்ப்பு முதலிய உணர்ச்சிகள் நாடோடிப் பாடல்களில் அதிகமாகக் காணப்படுகின்றன. இவற்றை இணைக்கும் சமூகக் கண்ணோட்டப் பாடல்கள் தோன்றிய காலத்தில் உருவாகாததால், பணக்காரர்களுக்கு எதிர்ப்பு எவ்வுருவத்தில் வந்தாலும், அவை அவ்வப்பொழுது வரவேற்கப் படுகின்றன. இவ்வாறுதான் பணக்காரர்களைக் கொள்ளையடித்த ஜம்புலிங்கம், சந்தனத்தேவன், மணிக்குறவன் முதலியவர்கள் நாட்டுப் பாடலில் இடம் பெற்றுள்ளார்கள். அதனால் கொள்ளைகளை, நாட்டுப் பாடகர்கள் ஆதரிக்கிறார்கள் என்பதல்ல. பணக்கார எதிர்ப்பு உணர்ச்சியே ஜம்புலிங்கத்தையும் சந்தனத் தேவனையும் வீரர்களாகக் கருதச் செய்கின்றன. கதைப் பாடல்களில் தன்னலம் கருதாமல், கிராம மக்களின் நலனுக்காக உயிர் துறந்த வீரர்களே, போற்றுதலுக்கு உரியவர்களானதைக் கண்டோம். கொள்ளைக்காரர்கள் அவ்விதப் போற்றுதலுக்கு உரியவராக மாட்டார்கள். கிராம மக்கள் பணக்காரர்களுக்குப் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கும் பொழுது துணிவாக அவர்கள் வீட்டை உடைத்துக் களவு செய்யும் திருடர்கள்கூட மக்களுக்கு வீரர்களாகத் தோன்றினார்கள். களவும், கொலையும் சுய நலத்தோடு செய்யப்படுவன. சுயநலமின்றி கிராமச் சுரண்டல் முறையை எதிர்த்து நின்ற வீரர்களைக் கிராம மக்கள் தெய்வப் பிறவிகளெனப் போற்றுவர். அவ் வீரர்களுக்குக் கொடுத்த மதிப்பு கொள்ளைக்காரர்களுக்கும், திருடர்களுக்கும் என்றுமே கிடைத்ததில்லை.
ஆங்கில நாட்டுப் பாடல்களில் ராபின்ஹூடைப் பற்றி நூற்றுக்கணக்கான பாடல்கள் இருக்கின்றன. அவன் ஒரு கொள்ளைக்காரன். ஆனால் அவன் காலத்தில் அரசாண்ட அரசன் மக்களைக் கொள்ளையடித்து ஆடம்பரச் செலவு செய்தான். ராபின்ஹூட் காடுகளில் மறைந்திருந்து, அரசனுடைய உடமைகளைக் கொள்ளையிட்டான். கொள்ளையிட்டதைத் தான் வைத்துக் கொள்ளவில்லை. மக்களுக்குப் பகிர்ந்தளித்தான். அநியாயத்தை எதிர்த்து அவன் கொள்ளை செய்தான். மக்கள் உள்ளத்தில் அவன் இடம் பெற்றான். மக்கள் அவனை மறந்து விடாமல் நாட்டுப்பாடல்களில் அவன் நினைவை நிலைநிறுத்தினர்.
அமெரிக்காவில் 'Cow boys' என்ற சட்ட விரோதமான வேட்டைக்காரர்கள் இருந்தார்கள். அவர்கள் சர்க்கார் காடுகளில் நுழைந்து காட்டு எருமைகளையும், மாடுகளையும் வேட்டையாடி, தோலுரித்து தோலைக் கொண்டு வந்து விற்பனை செய்வார்கள். போலீசார் எதிர்த்தால், அவர்களும் எதிர்த்துச் சுடுவார்கள். இவர்கள் சட்டத்தின் பிடிக்குள் அகப்படாமல் காட்டு ஓரங்களில் இருந்த சிற்றூர்களில் தலை மறைவாக இருந்துவிட்டுப் போய் விடுவார்கள். இவர்கள் துணிவு மிக்க இளைஞர்கள். ஊர்களில் வாழும்போது மனித உறவை பெரிதும் நாடுவார்கள். கன்னிப் பெண்கள் அவர்களை மிகவும் விரும்புவார்கள். அவர்கள் உறவு காட்டு வெள்ளம் போல் வேகம் மிக்கதாய் இருக்கும்.
இவ்வுறவுகள் நெடுநாள் நிலைக்காதென்று இருவருக்கும் தெரியும். பிரிவச்சமும் அதில் கலந்திருக்கும். அமெரிக்க நாட்டுப் பாடல்களில் பெண்கள் பாடும் வேட்டைக்காரன் பாடல்கள் (Cow boys song) விறு விறுப்பான உணர்ச்சிக் கொந்தளிப்பையும் அதற்கு அணைபோலக் காணப்படும். பிரிவச்சத்தையும் சித்திரிக்கின்றன. இப்பெண்கள், வேட்டைக்காரர்களின் துணிவையும் உணர்ச்சி வெள்ளத்தையும் விரும்பினார்களேயன்றி, சுயநலத்தையும் கொள்ளை குணத்தையும் அல்ல.
எனவே நமது நாட்டுப் பாடகர்களும், கொள்ளைக்காரர்களின் துணிச்சலைக் கண்டு வியப்புறுகிறார்களேயன்றி அவர்களைத் தாம் பின்பற்றக்கூடிய வீரர்களாக கற்பனை செய்து காட்டவில்லை.
இதுவரை கிராமக் குடும்ப வாழ்க்கையிலும், சமுதாய வாழ்க்கையிலும் நிகழும் நிகழ்ச்சிகளை நாடோடிப் பாடல்கள் எத்தகைய கண்ணோட்டத்தில் காட்டுகின்றன என்று பார்த்தோம். இனி சாவினால் இறந்தவரது குடும்பத்தாருக்கு ஏற்படும் விளைவுகளை நாடோடிப்பாடல்கள் எப்படிக் காட்டுகின்றனவென்று பார்ப்போம். இறந்தவர் மீது நெருங்கிய உறவினர் பாடும் பாடல் ஒப்பாரி எனப்படும். தாலாட்டைப் போலவே ஒப்பாரியும் தமிழ் நாட்டுப் பெண்களின் படைப்பாகும். தாலாட்டு தாயன்பின் வடிவம். தாய்க்குலத்தின் படைப்பு தாலாட்டு. ஆண்மகன் ஒருவன் இறந்தால் குடும்பத்தைத் தாங்கி நின்ற நடுத் தூண் சாய்ந்தது போல, அவன் மனைவி பாதுகாப்பு இழக்கிறாள். சமூக நன்மைகளை இழக்கிறாள். அவளது வருங்காலமே வறண்டு போகிறது. ஒருவர் இறந்தால் மனைவிக்கு விளைவது இழப்புத் துன்பம் மட்டுமல்ல, வருங்காலம் முழுவதிலும் அவள் கவலைப்பட வேண்டியதாகிறது. அவனுடைய சாவோடு கணவன், மனைவி உறவு அறுந்து போனாலும், குடும்ப உறவுகளில் அவளுடைய பொறுப்பு அதிகமாகிறது. கூட்டுக் குடும்பமாக இருந்தால் அவளுடைய குழந்தைகள் வளரும் வரையிலும், அவர்களுடைய உடமைகளைக் காக்க அவள் போராட வேண்டியிருக்கிறது. மலடியாக இருந்தாலோ, அவள் வீட்டு வேலைக்காரியின் அந்தஸ்திலும் தாழ்ந்து விடுவாள். கணவன் வீட்டிலிருக்கும் சிறு உரிமை கூட தாய் வீட்டில் கிடையாது. அங்கு அண்ணிகளின் ஆதிக்கம் நடைபெறும். எனவே கணவனை இழந்த மனைவியின் பிரச்னை, சொந்தப் பிரச்னையாக மட்டுமில்லாமல் பெண்களின் சொத்துரிமைப் பிரச்னையோடும் தொடர்புடையதாய் இருக்கிறது.
இச் சிக்கலான உணர்ச்சிகளனைத்தையும் மனைவி ஒப்பாரிகளில் காணலாம். நெல்லை ஜில்லாவில் பாடப்படும் ஒப்பாரிகள் வாழ்க்கையின் பல அம்சங்களையும் சுட்டிக்காட்டி மனைவியின் தீர்க்க முடியாத பிரச்னைகளை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.
தாய், தந்தை இறக்கும்போது மகள் பாடும் ஒப்பாரிகள் முக்கியமாக சொத்துரிமைப் பிரச்சினையும், தாய் தந்தையர் காலத்திற்குப் பின் பிறந்த வீட்டில் உரிமையின்றிப் போவதையும் சொல்லுகின்றன. மதினி, நாத்தனார் உறவுகளையும் இந்த அடிப்படையிலே அவை காட்டுகின்றன.
இவ்வொப்பாரிகளில் காணப்படும் உணர்ச்சிகளை நல்லதங்காள் கதையிலும் காணலாம். அண்ணனைப் பற்றி பாடும் ஒப்பாரிகள் மிகக் குறைவு. பொதுவாகத் தந்தை இறந்தபோது பாடும் பாடல்களையே அவை ஒத்திருக்கும்.
குழந்தை இறந்து தாய் புலம்புவது மிகவும் சோகமானது. அவற்றிலும் பிரிவுத் துன்பத்தோடு சொத்துரிமை பெற இருந்த மகன் போய்விட்டானே என்ற உணர்வும் சேர்ந்து வரும் துக்கவுணர்வை ஆங்கிலத்தில் Elegiac Spirit என்று சொல்வார்கள். ஆங்கில நாட்டுப் பாடல்களில் இவ்வுணர்ச்சி மிகுதியாக உண்டு. வாழ்க்கையில் ஏமாற்றமடைந்த மக்களுடைய உணர்ச்சி துக்கமாகத் தோன்றும், ஒப்பாரியிலும் பெண்ணினத்தின் சமூக நிலைமை முழுவதும் ஆணின் வாழ்க்கையைப் பொறுத்திருப்பதால், அவனுடைய சாவுக்குப் பின் ஏக்கம் தோன்றுகிறது. மனைவி இறந்தால் கணவன் துக்கப்படுகிறான். ஆனால், ஏக்கம் கொள்வதில்லை. ஆண் சார்பு கொண்டு வாழ்க்கை நடத்தும் பெண்களின் சமூக நிலைமைதான் இந்த ஏக்கத்திற்குக் காரணம்.
இத் தொகுப்பில் தமிழ்நாட்டு உழைக்கும் மக்களின் வாழ்க்கையின் பல கோணங்களையும், அவர்களது சிந்தனைகளையும் உணர்ச்சிகளையும் பிரதிபலிக்கும் பாடல்கள் கிடைத்த மட்டில் சேர்க்கப்பட்டுள்ளன. இப் பாடல்கள் நெல்லை மாவட்டத்திலும் வழங்கி வருபவை. மற்ற மாவட்டங்களிலுள்ள நாட்டுப் பாடல்கள் கிடைத்தால் நமது கிராம மக்களின் கலையையும் பண்பாட்டையும் கண்ணோட்டத்தையும் முழுமையாக அறிந்து கொள்ளமுடியும். மற்ற மாவட்டங்களிலுள்ள கலை அன்பர்கள் நாட்டுப் பாடல்களைச் சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்களானால், தமிழ் நாட்டின் பல படைப்புக்களைத் தமிழகம் அறிய வழி செய்யலாம்.
நெல்லை, சேலம் மாவட்டங்களில் உள்ள நாட்டுக் கலைத் தொண்டர்களின் கூட்டு முயற்சியில் இந்நூல் உருவாகியுள்ளது. அவர்களுடைய முயற்சிக்குத் தமிழகம் கடமைப்பட்டுள்ளது. இந் நூலில் இடம் பெறும் நாட்டுப் பாடல்களைச் சேகரித்து அனுப்பிய நண்பர்களைப் பற்றித் தனியாகச் சில வார்த்தைகள் அடுத்த பகுதியில் கூறுவேன்.
முன்னர் வெளியிடப்பட்ட நாட்டுப்பாடல் நூல்களுக்குக் கிடைத்த ஆதரவு இந்நூலுக்கும் கிடைக்குமென நம்புகிறேன்.
பாளையங்கோட்டை நா. வானமாமலை
8-4-1964
---------------
அறிமுகம்
1. S.S. போத்தையா: இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியான தமிழ் நாட்டுப் பாமரர் பாடல்களில் பெரும்பாலானவை இவர் சேகரித்து அனுப்பியவை. இந் நூலில் சேர்க்கப்பட்டுள்ள பாடல்களில் அம்பாப்பாட்டு, கோணங்கி பாட்டு போன்ற அபூர்வப் பாடல்களை இவர் சேகரித்து அனுப்பியுள்ளார். இவர் என் பழைய மாணவர். தங்கம்மாள்புரத்தில் ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.
பாடல்களைச் சேகரிக்க இவருக்கு உதவியவர்கள்:
மேல் மந்தை ---- பெத்தையா
மீனாட்சிபுரம் ---- வித்துவான் ராமசாமி
உச்சிநத்தம் ---- கே. ராமசாமி
உச்சிநத்தம் - நாகம்மாள் முதலியோர்
2. S.M.கார்க்கி: இவர் சிவகிரியைச் சேர்ந்த வில்லுபாட்டுக் கலைஞர், கணீரென்ற குரலில் நாட்டுப் பாடல்களைப் பாடும் திறமை படைத்தவர். சிவகிரி வட்டாரத்தில் கிராம மக்கள் பாடும் நாட்டுப் பாடல்கள் பலவற்றை சேகரித்து அனுப்பியுள்ளார். ஒப்பாரிப் பாடல்களில் மிகப் பல அவர் சேகரித்து அனுப்பியவையே. சிவகாசிக் கலகத்தைப் பற்றியும், செந்தட்டிக் காளை வரலாறு பற்றியும் இத்தொகுப்பில் வெளியாகும் அபூர்வமான பலபாடல்கள் அவர் அனுப்பி வைத்தவை.
3. M.P.M. ராஜவேலு: இவர் தூத்துக்குடிக்கருகிலுள்ள மீளவிட்டான் கிராமத்தைச் சேர்ந்தவர். தூத்துக்குடி கடற்கரையில் வாழும் மக்கள் வாழ்க்கையும், பனை மரக் காடுகளின் நடுவிலுள்ள சிற்றூர்களில் வாழும் மக்களது வாழ்க்கையையும் சித்திரிக்கும் பாடல்கள் பலவற்றையும் திரட்டி அனுப்பி யுள்ளார்.
4. குமாரி P. சொரணம்: பி. ஏ. முதல் வருட வகுப்பில் படிக்கும் மாணவி. ஒப்பாரிப் பாடல்கள் சிலவும், தாலாட்டுப் பாடல்கள் சிலவும், மாரியம்மன் பாடலொன்றும் தனது தாயாரிடம் கேட்டு எழுதி அனுப்பி வைத்தார். இவர் எனது பழைய மாணவி.
மேற்குறித்த நால்வரும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.
5. கவிஞர் S.S. சடையப்பன்: தருமபுரி, அரூர் தாலுகாவிலுள்ள சக்கிலிப் பட்டியைச் சேர்ந்தவர். நாட்டுப் பாடல்களை இசையோடு பாடக்கூடியவர். நெல்லை மாவட்டத்தில் காணப்படும் தப்பை போன்ற தோற்கருவியை இவர் உபவாத்தியமாகப் பயன் படுத்துகிறார். ஒப்பாரிப் பாடல்களில் மிகப் பல இவர் சேகரித்து அனுப்பியவை. தெய்வம், காதல், குடும்பம் ஆகிய பகுதிகளிலும் இவர் திரட்டி அனுப்பியுள்ள பாடல்கள் இடம் பெறுகின்றன.
6. கு. சின்னப்ப பாரதி. இவர் சேலம் மாவட்டம் நாமக்கல்லைச் சேர்ந்த பரமத்தி என்னும் ஊரைச் சேர்ந்தவர். பல கவிதைகளும், சிறு கதைகளும் எழுதி வெளியிட்டுள்ளார். இவர் சேகரித்தனுப்பிய கொங்கு நாட்டுப் பாடல்கள் பல இத்தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. அவற்றை உதவியவர்களின் பெயர்கள் பாடலுக்கு அடியிலேயே குறிப்பிடப்பட்டுள்ளன.
7. வாழப்பாடி சந்திரன்: இவர் ஓர் ஓவியர் எழுத்தாளரும் கூட. சேலம் மாவட்டம், வாழப்பாடியைச் சேர்ந்தவர். மலை வாழ் மக்களின் வாழ்க்கையைப் பற்றி ஆராய்ந்து வருகிறார். அவர்கள் பாடும் பாடல்களைச் சேகரிக்க முயன்று வருகிறார்.
8 . மங்கை: முதல் தொகுப்பின் குறிப்புரைகள், ஆய்வுரைகளை எழுதத் துணை செய்தவர். நாட்டுப் பாடல்களை தொகுப்பதற்கும், அவற்றை வகைப் படுத்துவதற்கும் உழைத்தவர். சேகரித்தவர்களோடு கடிதப் போக்குவரத்து நடத்தி வட்டார வழக்குகளைப் பற்றியும் சமூகவியல் பழக்கங்கள் பற்றியும் அறிந்து நூலில் எழுதியவர். ஆராய்ச்சியிலும், தமிழாராய்ச்சி நிறுவனம் மார்ச்சு 26, 27ந் தேதிகளில் நடத்திய நாட்டுப்புற இலக்கியக் கருத்தரங்கிற்கும் கட்டுரைகள் எழுதியவர்.
9. நா. வானமாமலை: 15 ஆண்டுகளாக நாட்டுப்புற இயல்
தொகுப்பாளராகவும், ஆய்வாளராகவும் பணிபுரிகிறார். நியூ செஞ்சுரி வெளியீட்டாளர்கள் இத் துறையில் இவரது நூல்கள் மூன்றை வெளியிட்டுள்ளார்கள். மதுரைப் பல்கலைக்கழகம் இவர் தொகுத்து, ஆராய்ச்சி குறிப்புகள், முகவுரை எழுதிய ஆறு நாட்டுப்புறக் கதைப் பாடல்களை வெளியிட்டுள்ளார்கள். திராவிட மொழியியல் கழகம் (கேரளா) இவரை நாட்டுப்புறவியல் முதுநிலை ஆய்வாளராக ஓராண்டிற்கு (1965-66) நியமித்தது. இவர் பதவிக்காலத்தில் ஆய்வுகள் நிகழ்த்தி (Fellowship thesis) ஆய்வு நூல் ஒன்றை எழுதியுள்ளார். பல நாட்டுப்புறவியல் கருத்தரங்குகளில், கட்டுரைகளை படித்தும், தலைமை வகித்தும் பணிபுரிந்துள்ளார். தமிழாராய்ச்சி நிறுவனம் (அடையாறு) நடத்திய நாட்டுப்புற இலக்கியக் கருத்தரங்கில் Keynote paper படித்தும், ஒரு அமர்வுக்கு தலைமை வகித்தும் பங்குப் பெற்றார். ஆராய்ச்சி, தாமரை, Social Scientist, Folk Lore, Nova Orientalani (செக் மொழி) முதலிய பத்திரிகைகளில் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.
வேண்டுகோள்
இவர்கள் அனைவரையும் சந்தித்து இப் பணியில் இறங்குமாறு தூண்டுவதற்குத் தமிழ் இலக்கியப் பெரு மன்றத்தின் அமைப்புக் கூட்டம் வாய்ப்பளித்தது. இவர்களில் பெரும்பாலோரை உறுப்பினராகவும் என்னைச் செயலாளராகவும் கொண்ட நாட்டுப் பாடல் ஆராய்ச்சிக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அக் குழுவின் முயற்சியாலும், பெரு மன்றத்தின் செயலாளர் தோழர் தா. பாண்டியன் அவர்கள் உதவியாலும், பாடல்கள் சேகரிக்கும் வேலை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்றது. தோழர் ப. ஜீவானந்தம் இம்முயற்சிக்கு அளித்த உதவி மிகப் பெரிது. பல்வேறு வகையான பாடல்களைக் கேட்டு நான் இந்த நண்பர்களைத் தொந்தரவு செய்தபோதும் அவர்கள் முகம் கோணாமல் மகிழ்ச்சியோடும் இது ஒர் கலைப்பணி என்ற உற்சாகத்தோடும் பாடல்களை அனுப்பிக் கொண்டேயிருந்தார்கள். 'தமிழ் நாட்டுப் பாமரர் பாடல்கள்' எனும் நூல் அநேகமாக போத்தையா ஒருவரின் தனி முயற்சியினால்தான் உருவாயிற்று. ஆனால் இது அவ்வாறில்லாமல் ஒரு குழுவினருடைய முயற்சியினாலும், அவர்களுக்கு உதவி புரிந்த மற்ற கலை அன்பர்களது உதவியாலும் முழு வடிவம் பெறுகின்றது.
இது மிகப் பெரிய வெற்றியாயினும், நாம் திருப்தியடைவதற்கில்லை. தமிழ் நாட்டின் எல்லா மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு நாட்டுப் பாடல் திரட்டை அம்மாவட்டங்களிலுள்ள கலை அன்பர்களது உதவியோடு வெளியிட்டால்தான் நாம் திருப்தியடைய முடியும். இக் குழு அம் முயற்சியை மேற்கொள்ளும். அம் முயற்சிக்கு ஆதரவளிக்குமாறு தமிழ்நாடு முழுவதும் பரவிக் கிடக்கும், கலை மன்றங்களையும் கலைத் தொண்டர்களையும் நான் மிகவும் பணிவாக வேண்டிக் கொள்கிறேன்.
நா. வானமாமலை
-------------
தமிழர் நாட்டுப் பாடல்கள்
1. தெய்வங்கள் : பிள்ளையார்
பண்டைக்கால இலக்கியங்களில் பிள்ளையார் பேச்சையே காணோம். மிகவும் பிற்பட்ட காலத்தில்தான் பிள்ளையார் வணக்கம் தமிழ் நாட்டில் தொடங்கியது. வட நாட்டில் பல பகுதிகளில் பாமர மக்கள் விக்கினேசுவரர் என்ற பெயரில், அவரை வணங்கி வந்தார்கள். ஆரம்ப காலத்தில் மனித முயற்சிகளுக்கு, கேடு விளைவிக்கும் ஒரு தெய்வமாகத்தான் அவர் கருதப்பட்டார். மக்கள் தமக்குக் கேடு வராமல், இருத்தற் பொருட்டு அவரைத் திருப்திப்படுத்த விரும்பினார்கள். பிற்காலத்தில், பாமரர் தெய்வங்கள் வேதக் கடவுளரோடு தொடர்பு படுத்தப்பட்டபொழுது விக்கினேசுவரர் சிவனின் மகனாகவும், இடையூறுகளை நீக்கும் வல்லமை படைத்தவராகவும் மாறி விட்டார்.
வேதக் கடவுளரோடு தொடர்புபடுத்தப்பட்ட போதிலும், அவரைச் சந்திகளிலும், குளக்கரைகளிலும், வாய்க்கால் கரைகளிலும், அரசமரத்தடியிலுமே காணலாம். வங்காள ராஜ்யத்தில் இன்னும் உழத்தியரது அபிமான தெய்வமாக விநாயகர் விளங்குகிறார். உழவுத் தொழிலின் பல செயல்களிலும், அவர் தொடர்பு பெறுகிறார். செழிப்பின் உருவமாக விளங்குகிறார். விநாயகச் சதுர்த்தசியன்று பூமி மழையின் வரவால் கருக்கொள்ளுமாறு செய்வதற்காக, விநாயகரை வேண்டி பெண்கள் விரதம் இருக்கிறார்கள்.
பொதுவாக, செழிப்பைக் குறிக்கும் தெய்வம் பெண் தெய்வமாக இருக்கும். பல புராதன நாகரிக வரலாறுகளிலும் தேவியரே, செழிப்பு, வளப்பம், இனப்பெருக்கம், செல்வவளம் இவற்றின் அதி தேவதைகளாகக் கருதப்பட்டிருப்பதை நாம் காணலாம். ஆனால், செழிப்பளிக்கும் சக்தியுடையவராக பிள்ளையார் ஒருவரே ஆண் தெய்வமாகக் கற்பனை செய்யப்பட்டிருப்பது நமக்கு வியப்பளிக்கிறது. ஆனால், பெண்ணுருவமான விநாயகர் கற்சிலைகள் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தோற்ற காலத்தில் இத் தெய்வம் பெண்ணாகவே இருந்ததென்று கொள்ளலாம். ஆனால், முடிவாகச் சொல்லிவிடப் போதிய சான்றுகள் இல்லை. உழவர்கள் பிள்ளையார் ஏர்ச்சாலும், மண்ணும் கலந்தக் கூட்டத்திலே பிறந்தார் என்று கருதினார்கள்.
இதனோடு சீதை பிறந்த கதையை ஒப்பிட்டுப் பார்க்கலாம், உழைப்பிற்கும், மண்ணிற்கும் பிறந்த பிள்ளையாருக்கு அவர்கள் நன்றி தெரிவித்தார்கள். தாங்கள் படைத்த பண்டங்களை முதலில் அவருக்குப் படைத்து அருள் வேண்டுகிறார்கள்.
பாமரர் பார்வையில் பிள்ளையார் உழைப்பவருக்கு உதவி செய்யும் தெய்வம். இத்தெய்வத்தை ஒவ்வொரு செயலிலும், தொடர்புபடுத்தி அவர்கள் வணங்குகிறார்கள்.
பிள்ளையார் பிறந்தார்
வடக்கே தெற்கே ஒட்டி,
வலது புறம் மூரி வச்சு
மூரி ஒழவிலே
முச்சாணி புழுதி பண்ணி
சப்பாணி பிள்ளையார்க்கு
என்ன என்ன ஒப்பதமாம்!
முசிறி உழவிலே
மொளைச்சாராம் பிள்ளையாரு,
ஒடு முத்தும் தேங்காயை
ஒடைக்கறமாம் பிள்ளையார்க்கு,
குலை நிறைஞ்ச வாழைப்பழம்
கொடுக்கறமாம் பிள்ளையார்க்கு,
இத்தனையும் ஒப்பதமாம்
எங்கள் சப்பாணி பிள்ளையார்க்கு!
வட்டார வழக்கு: முச்சாணி புழுதி = சாணம் + புழுதி, ஒடு
முத்தும் - ஒடு முற்றிய: கொடுக்கறமாம் - கொடுக்கிறோம்.
குறிப்பு:- பிள்ளையார் பிறப்பில் அவருடைய தாய் தந்தையர்கள் யார் என்று சொல்லப்படவில்லை. விநாயகர் சிவகுமாரனென்றோ, உமையாள் மகனென்றோ அழைக்கப்படவில்லை. உழவன் உழும்போது புழுதியிலிருந்து தோன்றுகிறார் பிள்ளையார். இது நாட்டார் நம்பிக்கை. முதல் விளைச்சலை பிள்ளையாருக்குக் கொடுக்கிறார்கள்.
சேகரித்தவர்: கவிஞர் சடையப்பன்:
இடம் சக்கிலிப்பட்டி, தருமபுரி மாவட்டம்.
-------------
பிள்ளையார் பூசை
உழவர்கள், ஏர்கட்டி உழுமுன் சாணத்தைப் பிடித்து வைத்து அதன் உச்சியில் அருகம் புல்லைச் செருகி வைத்து அதனைப் பிள்ளையாராக வழிபடுவார்கள். அவருக்குப் பூவும், சந்தனமும் சாத்துவார்கள். ஒரு வாழையிலையில் தேங்காயும், விதை நெல்லும், பழமும் படைப்பார்கள். விநாயகர் பூமியின் சாரமாதலால், இப்பொழுது படைத்ததைப் போன்று பதின்மடங்கு நிலத்தில் விளைய அருள் சுரக்குமாறு அவரிடம் வேண்டுவார்கள். இது கூட்டு வணக்கம். விநாயகர் விவசாயி கையில் பொருளிருந்தால் பூசை பெறுவார். இல்லையேல் அவர்களைப் போல் பட்டினி கிடப்பார். இவர் சிவனையும், விஷ்ணுவையும் போலப் பணக்காரத் தெய்வமல்ல. இப்பாட்டில் பிள்ளையார் முக்கண்ணனார் மகன் என அழைக்கப்படுகிறார்.
காளையே ஏறு...
முந்தி முந்தி வினாயகனே!
முக்கண்ணனார் தம் மகனே!
கந்தருக்கு முன் பிறந்த
காளைக் கணபதியே!-(காளையே)
வேலருக்கு முன் பிறந்த
விக்கினரே முன் நடவாய்,
ஊருக்கு மேற்காண்டே
ஒசந்த தொரு வெப்பாலை.
வெப்பாலை மரத்தடியில்
சப்பாணி பிள்ளையாராம்.
சப்பாணிப் பிள்ளையார்க்கு,
என்ன என்ன ஒப்பதமாம்!
நீரு முத்தும் தேங்காயாம்,
நிமித்தியமாம் பிள்ளையார்க்கு,
கொத்தோடு தேங்காயாம்
குலைநிறைய வாழைப்பழம்
இத்தனையும் ஒப்பதமாம்-எங்க
சப்பாணி பிள்ளையார்க்கு- (காளையே)
வண்டு மொகராத-ஒரு
வண்ண லட்சம் பூ வெடுத்து
தும்பி மொகராத
தொட்டு லட்சம் பூவெடுத்து
எறும்பு மொகராத
எண்ணி லட்சம் பூவெடுத்து
பாம்பு மொகராத
பத்து லட்சம் பூவெடுத்து
வாரி வந்த பூவையெல்லாம்
வலப்புறமாய்க் கொட்டி வச்சேன்
கொண்டு வந்த பூவை யெல்லாம்
கோபுரமா கொட்டி வச்சேன்
குளத்திலே ஸ்நானம் பண்ணி
கோலு போல நாமமிட்டு
ஆத்துலே ஸ்நானம் பண்ணி
அருகு போல நாமமிட்டு
பொழுதேறிப் போகுதிண்ணு
வெள்ளி யொறைச்சி நாமமிட்டு
இத்தனையும் ஒப்பதமாம்-எங்க
சப்பாணிப் பிள்ளையார்க்கு
வட்டார வழக்கு: மேற்காண்டே-மேற்கில்; வெப்பாலை-வேம்பு; நிமித்தியம்-நைவேத்தியம்; மொகராத-முகராத; ஒரைச்சி-உரைத்து.
பூவும் பழமும் பொங்கலும் படைப்பது தமிழர் பூசனை முறை. தீ வளர்த்து 'ஓமம்' வளர்த்து அவற்றில் நிவேதனம் படைப்பது வேதமுறை. ஆகமங்களும் வேத முறைகளும் கலந்து விட்டன. ஆனால், தமிழ் உழவர் பெரு மக்கள் பண்டைப் பூசனை முறையை மறக்கவில்லை.
சேகரித்தவர்: கவிஞர் சடையப்பன்
இடம்: கொங்க வேம்பு, அரூர் வட்டம், தர்மபுரி மாவட்டம்.
-----------------------
ஆண்டிற்கொரு விழா
நிலம் விளைந்து நல்ல மேனி கண்டு ஆண்டு முழுதும் உழவன் செய்த முயற்சி பயன் கொடுத்தது. உழவன் இடையூறு வராமல் பயிரைப் பாதுகாத்து அளித்த தெய்வங்களுக்குக் கொடை கொடுக்கிறான். பிள்ளையாரும் அத் தெய்வங்களுள் ஒருவர். இவர் மற்றைக் கிராம தேவதைகளைப் போல இறைச்சி தின்பவரல்ல. இவர் வகை வகையாக பணியார பண்டங்களை ருசியாக உண்பவர். நல்ல மேனி கண்ட மனநிறைவோடு, உழவர்கள் அரச மரத்தடிப் பிள்ளையார்க்கு, மாவுருண்டையும், எள்ளுருண்டையும், கொழுக்கட்டையும் பண்ணிப் படைக்கிறார்கள்.
மாட்டுக் கொளப்படையில்
மாவுருண்டை ஆயிரமாம்,
எருதுக் கொளப்படையில்
எள்ளுருண்டை ஆயிரமாம்
ஆட்டுக் கொளப்படையில்
அதிரசம் ஆயிரமாம்.
கண்ணுக் கொளப்படையில்
கடலுருண்டை ஆயிரமாம்.
குட்டிக் கொளப்படையில்
கொழுக்கட்டை ஆயிரமாம்.
பண்ணிக் கொளப்படையில்
பணியாரம் ஆயிரமாம்
இத்தனையும் ஒப்பதமாம்-எங்க
சப்பாணிப் பிள்ளையார்க்கு.
வட்டார வழக்கு: கொளப்படை – கொட்டகை; பண்ணி-பன்றி; கண்ணுக் கொளப்படை - கன்று கட்டும் கொட்டகை; கடலுருண்டை-கடலை உருண்டை.
சேகரித்தவர்: கவிஞர் சடையப்பன்
இடம்: சக்கிலிப்பட்டி, அரூர் வட்டம், தருமபுரி மாவட்டம்.
--------------------
மாரியம்மன்
வைசூரி மிகக் கொடியதொரு வியாதி. அதைத் தடுக்கவோ, குணப்படுத்தவோ, பண்டை வைத்தியர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஊரில் ஒருவருக்கு வியாதி கண்டால் அது பலருக்கும் பரவுவதை ஊரார் கண்டனர். வியாதியின் காரணம் தெரியாமல் வலிமை வாய்ந்ததொரு தெய்வத்தின் கோபத்தால்தான் இந் நோய் பரவிற்று என்று அவர்கள் நினைத்தனர். இந்த தெய்வத்திற்கு மாரி, மாரிமுத்து, மாரியம்மன், முத்துமாரி என்று பல பெயர்களிட்டு அழைத்தனர். தங்கள் குழந்தைகள் மீது இத் தெய்வத்தின் கோபம் தாவாமலிருக்க அவர்களுக்கு மாரியப்பன், மாரியம்மை என்று பெயரும் இட்டனர். இவ்வாறு வணங்கப்பட்ட மாரியம்மன் தமிழ் நாட்டிலுள்ள சில ஊர்களிலே மிகப் பிரபலமடைந்து, சுற்று மதிலோடும், கோபுரங்களோடும் அமைக்கப்பட்ட கோயில்களிலே குடிகொண்டிருக்கிறாள். இக்கோயில்களில் தினசரிப் பூஜையும், பத்து நாள் திருவிழாவும், தேரோட்டமும் இத் தெய்வத்திற்குக் கிடைத்துள்ளன. இத்தெய்வம் முதன் முதலில் மைசூர் பிரதேசத்தில் கோயில் கொண்டிருந்ததென்றும், கன்னடியப் படையெடுப்பின் போது இத்தெய்வ வணக்கம் தமிழ்நாட்டிலும் பரவியதென்றும் சில சமூகவியல் ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இப்பொழுது இத்தெய்வம் பார்வதியின் ஒரு அம்சமாகவும், பத்ரகாளியின் அம்சமாகவும் கருதப்படுகிறாள்.
மாரியம்மனைக் குறித்த பாடல்கள் நம்முள்ளத்தில் இனம் தெரியாத பயங்கர உணர்ச்சியை எழுப்புகின்றன. வைசூரி நோயைத் தடுக்க முடியும் என்று தெரிந்துள்ள இக்காலத்திலேயே, மாரியம்மன் பற்றிய வருணனை அச்சத்தை எழுப்பக் கூடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த, விஞ்ஞான வளர்ச்சியேயறியாத பாமரர் உள்ளங்களில் எத்தகைய பயத்தை உண்டாக்கியிருக்கும் என்று நம்மால் அறிவது கடினம்.
ஊரில் வைசூரி பரவியதும், மாரியம்மனுக்குப் பல விதமான நேர்த்திக்கடன்கள் செய்ய மக்கள் நேர்ந்து கொள்வர். மாவிளக்கு ஏற்றுவதாகவும், கரகம் எடுப்பதாகவும், கயிறு சுற்றுவதாகவும், பொங்கல் இடுவதாகவும், தீச்சட்டி எடுப்பதாகவும் சபதம் ஏற்றுக் கொள்வர். மனிதனது கோபத்தைத் தணிப்பதற்காகக் கையாளும் முறைகளையே தெய்வங்களின் கோபத்தைத் தணிப்பதற்கும் பயன்படுத்தலாம் என்று மக்கள் நம்பினர்.
அவ்வாறு விழாக் கொண்டாடும்போது உடுக்கடித்து மாரியம்மன் புகழைப் பாடிக்கொண்டு தலையில் தீச்சட்டி தாங்கிக் கொண்டு சிலர் வருவர். அவர்கள் பாடும் பாடல்கள் ஊருக்கு ஊர் மாறுபடும். உடுக்குத் தாளத்தோடு சேர்ந்துவரும் பாட்டு மாரியம்மனின் பக்தர்களைப் பரவசப்படுத்தும்.
மாரியம்மன் பாட்டு -1
தோட்டம் துறந்தல்லோ-மாரிக்கு
தொண்ணுறு லட்சம் பூவெடுத்து,
வாடித் துறந்தல்லோ-ஆயிரம் கண்ணாளுக்கு
வாடா மலரெடுத்து,
கையாலே பூ வெடுத்தா-மாரிக்கு
கம்பழுகிப் போகுமிண்ணு
விரலாலே பூ வெடுத்தா
வெம்பிடு மென்று சொல்லி
தங்கத் துரட்டி கொண்டு-மாரிக்கு
தாங்கி மலரெடுத்தார்
வெள்ளித் துரட்டி கொண்டு
வித மலர்கள் தானெடுத்தார்
எட்டாத பூ மலரை-மாரிக்கு
ஏணி வைத்துப் பூ வெடுத்தார்
பத்தாத பூ மலரைப் பரண்
வைத்துப் பூ வெடுத்தார்
அழகு சுள கெடுங்க-மாரிக்கு
அமுது படி தானெடுங்க
வீசும் கள கெடுங்க-மாரிக்கு
வித்து வகை தானெடுங்க
உப்பாம் புளி முளகா-ஆயிரம் கண்ணாளுக்கு
ஒரு கரண்டி எண்ணெய் அமுது
கடலைச் சிறு பயறு
காராமணி மொச்சையம்மா
அவரை, துவரை முதல்-ஆயிரங் கண்ணாளுக்கு
ஆமணக்கங் கொட்டை முதல்
காடைக் கண்ணி பருத்தி விதை-மாரிக்கு
பாங்கான வித்து வகை
இட்டுச் செய்தவர்க்கு
எம காளி துணை செய்வாள்
மக்களைப் பெற்றவர்கள்
மாரி கதை தானறிவார்
அறிந்தோர் அறிவார்கள்
அம்மன் திருக் கதையை
தெரிந்தோர்க்குத் தெரியுமம்மா!
- ஆயிரங்கண்ணா
தேவி திருக் கதையை
ஒரு கண்ணு ரெண்டு கண்ணு
உலகத்து மானிடர்க்கு
ஆயிரம் கண்ணுடையா
அழகில் சிறந்த கண்ணு
பதினாயிரம் கண்ணுடையா
பாதகத்தி நீலியவ
இருசி வயத்திலேயும்,
எமகாளி பிறந்திடுவாள்
மலடி வயத்திலேயும்
மாகாளி பிறந்திடுவாள்-மாரிக்கு
ஆறு வண்டி நூறு சட்டம்
அசையா மணித் தேருகளாம்.
தேரை நடத்தியல்லோ-மாரி
சித்தரங்கள் பாடி வாரா-மாரிக்கு
பூட்டுன தேரிருக்கப்
புறப்பட்டாள் வீதியிலே
நாட்டுன தேரிருக்க-ஆயிரம் கண்ணா
நடந்தானே வீதியிலே
வீதி மறித்தாளம்மா-மாரி
வினை தீர்க்கும் சக்தியல்லோ!
பிறந்தா மலையாளம்-அவ
போய் வளர்ந்தா-ஆள்பாடி
இருந்தாள் இருக்கங்குடி-மாரி
இனி இருந்தா லாடபுரம்
சமைந்தால் சமயபுரம், -மாரி
சாதித்தாள் கண்ணாபுரம்
கண்ணா புரத்தில்-மாரி
காக்கும் பிரதானி-மாரிக்கு
உடுக்குப் பிறந்ததம்மா!
உத்திராட்சப் பூமியிலே
பம்பை பிறந்ததம்மா-மாரிக்கு
பளிங்கு மா மண்டபத்தில்
வேம்பு பிறந்ததம்மா-மாரிக்கு
விசய நகர்ப் பட்டணத்தில்
ஆடை பிறந்ததம்மா-மாரிக்கு
அயோத்திமா நகர்தனிலே
சிலம்பு பிறந்ததம்மா-மாரிக்கு
பிச்சாண்டி மேடையிலே
சாட்டை பிறந்ததம்மா-மாரிக்கு
சதுர கிரி பூமியிலே
சாட்டை சலசலங்க ------
சதுர மணி ஓசையிட
கச்சை கலகலங்க
கருங்கச்சை குஞ்சம் விட
பதினெட்டுத் தாளம் வர
பத்தினியா சித்துடுக்கு
இருபத்தொரு தாளம் வர
எமகாளி சித்துடுக்கு
சித்துடுக்கைக் கைப்பிடித்து
சிவ பூணணிந்தவளாம்.
(மாரி ஸ்தலங்களாக ஆறு ஊர்கள் சொல்லப்படுகின்றன.)
சேகரித்தவர்: S.S. போத்தையா
இடம்: சூரங்குடி, விளாத்திகுளம் தாலுகா, நெல்லை மாவட்டம்.
----------
மாரியம்மன் பாட்டு -2
சின்ன முத்தாம் சிச்சிலுப்பைச்
சீரான கொப்பளிப்பான்
வண்ண முத்தாம் வரகுருவி
வாரிவிட்டா தோணியிலே,
மாரியம்மா தாயே, நீ
மனமிரங்கித்தந்த பிச்சை,
தற்காத்து நீகொடும்மா உன்
சன்னதிக்கே நான் வருவேன்.
வடக்கே யிருந்தல்லோ மாரியம்மா,
இரண்டு வடுகரோட வாதாடி
தனக்கிசைந்த எல்லை என்று மாரி
தனித்து அடித்தாள் கூடாராம்.
உச்சியிலே போட்ட முத்தை மாரி
உடனே இறக்கிடுவாள்,
முகத்திலே போட்ட முத்தை மாரி
முடிச்சா இறக்கிடுவாள்.
கழுத்திலே போட்ட முத்தை மாரி
காணாமல் இறக்கிடுவாள்.
பதக்கத்து முத்துக்களை மாரி
மாறாமல் இறக்கிடுவாள்.
நெஞ்சில் போட்ட முத்தை மாரி
உடனே இறக்கிடுவாள்.
தோளிலே போட்ட முத்தை மாரி
துணிவாக இறக்கிடுவாள்.
வயிற்றிலே போட்ட முத்தை மாரி
வரிசையாய் இறக்கிடுவாள்.
முட்டுக்கால் முகத்தை மாரி
முடித்திருந்து இறக்கிடுவாள்.
கரண்டக் கால் முத்தை மாரி
காணாமல் இறக்கிடுவாள்
பாதத்து முத்தை மாரி
பாராமல் இறக்கிடுவாள்.
ஐந்து சடை கொஞ்சிவர, மாரி
அழகு சடைமார் பிறழ,
கொஞ்சும் சடையிலேயே மாரிக்கு இரண்டு
குயில் இருந்து தாலாட்ட.
உன் பம்பை பிறந்ததம்மா
பளிங்குமாம் மண்டபத்தில்,
உன் உடுக்குப் பிறந்ததம்மா
------------
உத்திராட்ச மேடையிலே,
கரகம் பிறந்ததம்மா,
கண்ண நல்லூர் மேடையிலே,
சூலம் பிறந்ததம்மா
துலுக்க மணி மண்டபத்தில்,
நாகம் குடைப்பிடிக்க, மாரியாத்தாளுக்கு
நல்லபாம்பு தாலாட்ட,
முத்து மணி விளக்காம் மாரியாத்தாளுக்கு
முதல் மண்டபமாம்.
சக்தி உடையவளே! சாம்பிராணி வாசகியே!
நாழியிலே முத்தெடுத்து மாரியம்மா
நாடெங்கும் போட்டுவந்தாள்.
உழக்கிலே முத்தெடுத்து மாரி
ஊரெங்கும் போட்டு வந்தாள்.
எல்லை கடந்தாளோ
இருக்கங்குடி மாரியம்மா,
முக்கட்டுப் பாதைகளாம்,
மூணாத்துத் தண்ணிகளாம்,
மூணாத்துப் பாதையிலே இருந்து
மாரியம்மா வரங் கொடுப்பாள்.
தங்கச் சரவிளக்காம் மாரிக்குத்
தனித்திருக்கும் மண்டபமாம்,
எண்ணெய்க் கிணறுகளாம் மாரிக்கு
எதிர்க்கக் கொடிமரமாம்.
தண்ணீர்க் கிணறுகளாம் மாரிக்குத்
தவசிருக்கும் மண்டபமாம்
சப்பரத்து மேலிருந்து
சக்தி உள்ள மாரி அவ.
சரசரமாமாலை, மாலை கனக்குதுணு
மயங்கிவிட்டாள் மாரி.
ஆத்துக்குள்ள அடைகிடக்கு
அஞ்சு தலை நாகம்
அது ஆளைக் கண்டால் படமெடுக்கும்
அம்மா சக்தி
வேப்ப மரத்தவே தூருங்கடி, மாரிக்கு
வெத்திலைக் கட்டவே பறத்துங்கடி.
வேர்த்து வார சந்தன மாரிக்கு
வெள்ளிக் குஞ்சம் போட்டு வீசுங்கடி
பாசிப் பயிறு எடுத்து
பத்தினியாள் கையெடுத்து
உழுந்தம் பயறெடுத்து
உத்தமியாள் கையெடுத்து
சேகரித்தவர்: குமாரி P. சொரணம்
இடம்: சிவகிரி, நெல்லை மாவட்டம்.
-------------
மாரியம்மன் பாட்டு -3
தேசமாளும் முத்தம்மா
முத்தாரம்மன் தென் பாண்டி நாட்டில் உழவர் பெரு மக்களால் வணங்கப்படும் தெய்வம். சில சிற்றுர்களில் இவருக்குப் பெரிய கோவிலும், தேரும் திருவிழாவும் உண்டு. இவள் பிறப்பு முத்தாரம்மன் வில்லுப்பாட்டில் சொல்லப்படுகிறது. ஏழ்கடலுக்கும் அப்பாலுள்ள, மணி நாகபுற்றிலுள்ள நாகம் மூன்று முட்டைகளிட்டது. பார்வதியின் அருளால் முட்டைகளிலிருந்து மூன்று பெண்கள் தோன்றினர். அவர்கள் பிரம்மராக்கு சக்தி, சின்னமுத்தார், பெரிய முத்தார் என்பவர்கள். அவர்கள் மூவரும் தவம் செய்து சக்தி முனியின் அருளால் குழந்தையைப் பெற்றார்கள். அனைவரையும் அழைத்துக் கொண்டுபோய் கயிலையில் சிவபெருமானை வணங்கினர். நாட்டிலுள்ள கொடுமைகளை அழிப்பதற்கு, மூவரும் கொடும் வியாதிகளை வரமாகக் கேட்டார்கள். பிரம்மராக்கு-சக்திக்குக் குணமாகாத பல நோய்களையும், சின்ன முத்தாருக்கும், பெரிய முத்தாருக்கும், சின்னம்மை, பெரியம்மை என்ற வியாதிகளையும் கயிலையங் கடவுள் வரமாக அளித்தார். இவ்வாறு கொடிய நோய்களை உண்டாக்கும் சக்திபெற்ற மூன்று சகோதரிகளும் தமிழ் நாட்டிலே வந்து குடியேறி, கொடியவர்களைத் தண்டிக்கப் பரமசிவனுடைய வரங்களைப் பயன்படுத்தி வருகிறார்களாம்.
இப்பொழுது பிரம்ம ராக்கு சக்திக்கு சிற்சில ஊர்களிலேயே கோயில்கள் உள்ளன. முத்தாரம்மன் தென் பாண்டி நாட்டிலுள்ள ஒவ்வொரு ஊரிலும் கோயில் கொண்டிருக்கிறாள். இவள் தீயவர்களைக் கொடுநோயால் தண்டிப்பாள். நல்லவர்களை வாழ்த்தி வரம் கொடுப்பாள்.
பிற்காலத்தில் கன்னடியர் ஆந்திரர் படையெடுப்புகளின் போது தமிழ்நாடு புகுந்த மாரியம்மன் சிற்சில ஊர்களில் இவளோடு ஐக்கியமாகி விட்டாள். இவள் பார்வையால் உடலில் முத்துக்கள் ஆயிரக் கணக்கில் தோன்றுவதால் இவளுக்கு ஆயிரத்தாள் என்றும், மாரியோடு கலந்து விட்டதால் முத்து மாரியென்றும், தேசம் முழுவதும் பரவி இருப்பதால் தேச முத்துமாரி என்றும் பல பெயர்கள் வழங்குகின்றன.
நவராத்திரி உற்சவத்தின்போது இவள் சிம்ம வாகனத்தில் ஏறி வருவாள். பெண்கள், இவள் புகழ் பாடிக் கும்மியடிப்பார்கள்.
கீழ் வரும் பாட்டு சேலம் மாவட்டத்தில் வழங்குகிறது.
நாலு காலச் சட்டம்
நடு நிறுத்தி
நட்சத்திரம் போலே
ஒரு தேர் எழுப்பி
தேருக்கு ஒடையாளி
தேசமாளும் முத்தம்மா
தேரேறி வருவதைப் பாருங்கடி
ஓலைப் பொட்டி
தலை மேலே
ஒம்பது மக்களும்
கக்கத்திலே
மக்களைப் பெத்த மாரியம்மன்
மவுந்து வருவதைப் பாருங்கடி.
சேகரித்தவர்: வாழப்பாடி சந்திரன்
இடம்: வாழப்பாடி, சேலம் மாவட்டம்.
----------------
தெய்வ கணங்கள்
கிராம மக்கள் நூற்றுக்கணக்கான தெய்வங்களை பெயர் கொடுத்து அழைக்கிறார்கள். ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு குறிப்பிட்ட சக்தி உண்டென்று நம்புகிறார்கள். கோயில்பட்டி அருகிலுள்ள சிற்றூர்களில் மக்களால் வணங்கப்படும் தேவதைகளின் பெயர்களை இப்பாட்டில் நாம் காண்கிறோம். முனியசாமி, ஐயனார், கண்ணாத்தா, பாப்பாத்தி, உலகம்மன், பெத்தனாட்சி ஆகிய பெயர்களை இப்பாட்டிலிருந்து நாம் அறிகிறோம்.
கிராம மக்கள், மேலே குறிப்பிட்ட தேவதைகளை மட்டுமின்றி முஸ்லிம் தர்க்காக்களுக்கும் நேர்ந்து கொள்வது முண்டு. விசேஷக் காலங்களில் முஸ்லிம்களது யாத்திரை ஸ்தலங்களுக்கும் போவதுண்டு.
முத்து முனிய சாமி
மூர்க்கமுள்ள தேவதையே
சத்தத்தை நீ கொடய்யா
சரளி விட்டு நான் பாட
ஊருக்கு நேர் கிழக்கே
உறுதியுள்ள ஐயனாரே
சத்தத்தை நீ கொடய்யா!
சரளி விட்டு நான் படிக்க.
நாட்டரசன் கோட்டையிலே
நல்ல தொரு பாப்பாத்தி
வயித்தவலி தீர்த்தாயானால்
வந்திருவேன் சன்னதிக்கு
ஒட்டப் பிடாரத்திலே
உலகம்மன் கோயிலிலே
பூக்கட்டிப் பார்த்தேன்
பொருந்தலையே என் மனசு
கண்ணுலே அடிச்சுத்தாரேன்
கண்ட சத்தியம் பண்ணித் தாரேன்.
சிக்கந்தர் மலைக்கு வாங்க
சேலை போட்டுத் தாண்டித் தாரேன்.
பூப்பூக்கும் புளியமரம்
பொன்னிலங்கும் ஐயனாரு
நாட்டி லங்கும் பெத்தனாச்சி
நல்லவரம் தருவா.
ஏழுமலை கடந்து
எடுத்து வந்தேன் சண்பகப்பூ
வாடாமல் சாத்தி வாரும்
வட மதுரைக் கந்தனுக்கு.
வட்டார வழக்கு: பாப்பாத்தி-பிரம்ம ராக்கி சக்தி; ஐயனாரு-சாஸ்தா.
சேகரித்தவர்: S.S. போத்தையா
இடம்: விளாத்திக்குளம், திருநெல்வேலி.
---------
நாட்டு அரசன் கோட்டையிலே
நல்லதொரு கண்ணாத்தா
வயித்தவலி தீர்த்தியானா
வந்திருவேன் சன்னதிக்கே.
வட்டாரவழக்கு: கண்ணாத்தா-கண்ணகியைக் குறிக்கும்.
சேகரித்தவர்: S.P.M. ராஜவேலு
இடம்: மீளவிட்டான்
----------------
வருணன்
மனித உழைப்பில் குறைவில்லை. உழுதான், கடலை விதைத்தான். மழை வருவதுபோன்ற அறிகுறி வானத்தில் தோன்றியது. ஆனால், திடீரென்று வானம் வெளிறிற்று. வந்த மழை பெய்யாது போய்விட்டது. அவன் மனம் ஏங்குகிறது. இனி அவனால் என்ன செய்ய முடியும்? நினைத்த நேரத்தில் மழை பெய்யவைக்கக்கூடிய கற்பரசி அவன் பக்கத்தில்தான் இருக்கிறாள். அவளைப் பார்த்து, வருணன் செயலை நினைத்து வருந்துகிறான். அவளால் என்ன செய்ய முடியும்? விஞ்ஞானம் இன்னும் வருணனைப் பணிய வைக்கவில்லையல்லவா? இத் துறையில் முயற்சி நடப்பதையே நமது உழவன் அறிந்திருக்க மாட்டானே!
வாகை மரத்துப் புஞ்சை
வட்டாரச் சோளப் புஞ்சை
தங்கம் விளையும் புஞ்சை
தரிசாக் கிடக்குதடி.
காட்டை உழுது போட்டேன்,
கடலை போடப் பட்டம் பார்த்தேன்,
வந்த மழை போகுதில்ல
வருணனே உனது செயல்.
வட்டார வழக்கு: போகுதில்ல-போகிறதல்லவா?
சேகரித்தவர். கார்க்கி
இடம்: சிவகிரி வட்டாரம், நெல்லை மாவட்டம்.
------------
கணபதி பூசை
வேண்டும் வரம் தரும் பிள்ளையாருக்குப் பூசை போடுவதற்கு கிராமப்பெண்கள் தயார் செய்கிறார்கள். அவர்களுக்கு இந்த ஆண்டில் நல்ல விளைச்சல், மங்கல வாழ்வு கொடுத்த பிள்ளையாருக்கு மங்களமாகப் பூசை போட அவர்கள் விரும்புகிறார்கள். நிலவு காயும் நேரத்தில் பிள்ளையார் பிடித்துவைத்து அவரைச் சுற்றிக் கும்மியடித்துப் பாடுகிறார்கள். கும்மியில் பிள்ளையார் பூசனைமுறை பற்றி பெண்கள் பாடுகிறார்கள்.
ஒரு மிளகாயாம்-ஏலேலோ
கணபதியாம்
ஒரு ஆயிரம் திருவிளக்காம்-ஏலேலோ
கணபதியாம்
திருவிளக்கு ஏலேலோ
கணபதியாம்
சிவனே என்று பொழுதெறங்க-ஏலேலோ
கணபதியாம்
பொழுதெறங்கும் வேளையிலே-ஏலேலோ
கணபதியாம்
பொங்கலுக்கு தண்ணி கொண்டு-ஏலேலோ
கணபதியாம்
நீராடி நீர் குளித்து-ஏலேலோ
கணபதியாம்
பட்டுடுத்தி பணியுடுத்தி-ஏலேலோ
கணபதியாம்
பதினெட்டு நெல் வகையும்-ஏலேலோ
கணபதியாம்
கொறித்தெடுப்போம்-ஏலேலோ
கணபதியாம்
சேகரித்தவர்:கு. சின்னப்பபாரதி
இடம்: பரமத்தி, சேலம் மாவட்டம்.
------------
பிள்ளையார் துதி
பிள்ளையார் முன்னிலையில் ஒரு பெண் வரங் கேட்கிறாள்.
நத்தத்துப் பிள்ளையாரே
நான் நடந்தேன் மாதாந்தம்
கைக்குழந்தை தந்தியானா-உனக்கு
கடைவிளக்கு நான் விடுவேன்.
சேகரித்தவர்: கார்க்கி
இடம்: சிவகிரி.
--------------
கோடங்கிப் பாட்டு
கோணங்கிகள் குறி சொல்லுவார்கள். கிராமத்தில் உடல் நோய் கண்டவர்கள் கோணங்கியை வருவித்து குறி கேட்பார்கள். இவர்கள் மாடன், கறுப்பன், முனியன், காளி, மாரி போன்ற சிறு தெய்வங்களின் தெய்வங்கொண்டாடிகளாக இருப்பார்கள்.
சிறு நோயாக இருந்தால், கோணங்கி திருநீறு மந்திரித்துப் பூசுவார்கள். கடுமையான நோயாக இருந்தால் வெள்ளி, செவ்வாய்க் கிழமைகளில் பூசைபோட்டுக் குறி கேட்டு பரிகாரம் சொல்லுவார்கள்.
பூசையில் ஒரு வாழையிலை விரித்து, அவல் பொரிகடலை பரப்பி, விளக்கேற்றி, தேங்காய் உடைத்து, உடுக்கடித்து 'சாமி' வருத்துவார்கள்.
கையில் பிரம்பு அல்லது வேப்பங்குழை ஏந்தி, நோயாளியை உட்கார வைத்து அதை அவன் முன்வீசிப் பாட்டுப் பாடுவார்கள்.
பாட்டின் முதல் பகுதியில் சாமியை வீட்டுக்கு வர வேண்டுமென வேண்டிக் கொள்ளுவார்கள். சாமி வந்ததும், உடல் நடுங்கி ஆடிக் கொண்டே, சுவாமி சொல்லுவதாக நோய்க்குக் காரணத்தைச் சொல்லுவார்கள். பின்னர் சாமி நோயைக் குணப்படுத்த ஒரு சேவலோ, தங்கநகையோ, சுங்கடிச்சேலையோ தர வேண்டுமெனக் கேட்கும். சில நாள் பூசைபோட வேண்டுமெனவும் கேட்கும்.
மதுவிலக்குச் சட்டம் வருமுன் சாராயம் கேட்பதுமுண்டு. சட்டம் வந்ததும் குடி வழக்கத்தை சாமிகளும் கைவிட்டு விட்டனர் போலும். ஏனெனில், இப்பொழுது சாராயம் கேட்பதில்லை. இடையிடையே யாராவது பதில் சொல்ல முடியாத கேள்வி கேட்டுவிட்டால், சாமி உடனே எல்லை தாண்டி மலையேறிப் போய்விடும்.
இத்தகைய நம்பிக்கை இன்னும் மறையவில்லை. விஞ்ஞானக் கருத்துகள் கிராம மக்களிடம் பரவினால்தான் இவ்வழக்கங்கள் ஒழியும். சுவாமி வருத்துவதையும், சுவாமி குறி சொல்லுவதையும், நிவாரணம் சொல்லுவதையும் பாட்டில் கோணங்கி சொல்லுவான்.
இப்பாட்டின் உருவத்தை மேற்கொண்டே பாரதி 'புதிய கோணங்கி'ப் பாட்டு பாடியுள்ளார். இந்தியாவின் வருங்காலத்தையே பாரதி குறியாகச் சொல்லுகிறார். அத்தகைய கோணங்கிகள் நமது வருங்காலத்தைச் சொல்ல இன்றும் வருகிறார்கள். அவர்கள் பழைய உடைகளையே கூலியாகக் கேட்கிறார்கள். நம்மைப் புகழ்ந்து, வருங்காலத்தில் சீரும் சிறப்பும் உண்டாகும் என்று கூறியவுடனே, நாம் உச்சி குளிர்ந்து அவர்கள் கேட்டதைக் கொடுத்து விடுகிறோம்.
தெய்வ வணக்கம்
பாரோர்கள் நற்புகழும்
பட்டண மருதூர் வாழும்
பதி னெட்டாம் படிக் கறுப்பா!
பதி னெட்டாம்படிக் கறுப்பா!
ஊருக்கு மேல் புரமாம்:
ஒத்த உடை மரமாம்
உடை மரத்தின் கீழிருக்கும்,
உத்தமனே வாருமையா!
சாலைப் பாதை மேல்புரமாம்
சமர்த்தா குடியிருக்கும்
கொத்தளத்து வாழ் கறுப்பா, கூவியழைத்தேனையா
துண்டிக் கறுப்பா;
துடியான வாள் வீரா
சுற்றி வர கம்மாக் கரை;
சூழ வர கம்மாக் கரை;
சூழ வர உடங்காடு
உடங்காட்டு மத்தியிலே
உத்தமனே தனியிருக்கும்
எண்ணெய்த் தலையழகும்;
எழுத்தாணி மூக்கழகும்
கையிலே வீச்சறுவா;
காலுலே வீரத் தண்டை
நெத்தியில் பொட்டுமிட்டு,
நீல வர்ணப் பட்டுடுத்தி
பட்டு பளபளென
பாடகக்கால் சேராட;
தோள் மேலே பச்சைக் கிளி
தோழனழைத் தேனிப்பம்
கரு நாயும் சங்கிலியும்;
கைப்பிடித்து வாருமிப்போ,
வெள்ளக் குதிரை ஏறி
வெடி வாலும் சீனிமட்டம்
நெத்தியிலே சுட்டு கட்டி;
நீல வர்ணப் பூச்சூடி
மத்தியான வேளையிலே
மாதர்களைத் தானடக்கும்
பக்தியுள்ள ஏ கறுப்பா
பதினெட்டாம் படியோனே.
ஏமமும், சாமமும்
எந் நேர வேளையிலும்
அந்தி சந்தி வேளை யெல்லாம்
ஐயா துணையிருந்து
கேட்ட வரம் நீ கொடுக்கும்
கிருவையுள்ள ஏ கறுப்பா!
வாலைக் கறுப்பா
வாருமையா இது வேளை.
முன்னோடி ஏ கறுப்பா
முன்னிலையில் வாருமிப்போ
ஏழை அழைத்தேனையா
இது சமயம் வாருமிப்போ
பாலன் அழைத் தேனையா
பாரும் குழந்தை முகம்
அஞ்சிலே ரெண்டறியேன்
அடியேன் சிறுகுழந்தை
பத்திலே ரெண்டறியேன்
பாலன் சிறு குழந்தை
பாடம் படிப்பறியேன்
பாட்டின் வகை நானறியேன்.
ஏடும் எழுத்தறியேன்
எழுத்து வகை நானறியேன்.
எண்ணாது எண்ணுகிறேன்
எண்ணி மனம் வாடுகிறேன்.
கார்மேக என்பெருமான்
காத்தாய்ப் பறந்து வாரும்
மன்றுக்கு நானழைத்தேன்
மன்னவரே வாருமிப்போ.
அண்ணாவே என் குருவே
ஆசானே நீர் துரையே
ஏழை அழைத்தேனைய்யா
என்னிடத்தில் வாருமிப்போ,
கோர்ட்டில் வழக்காடும்
கொத்தளத்து வாழ் கறுப்பா
ஐகோர்ட் சட்சி ஐயா
அதிகாரி வாருமிப்போ
கேட்ட குறி தனக்கு
கிருபையுள்ள ஏ கறுப்பா
வாக்குத் தவறாமல்
வன் பிணிகள் வாராமல்
ஏவல் பில்லி சூனியங்கள்
என்னை வந்து சேராமல்
மாற்றானுட வஞ்சனைகள்
மன்னவனே சாடாமல்
தன்னந்தனியிருக்கும்
தற்பரனே வாருமையா!
ஐயப்பன் மலை மேலே
அதிகாரம் கொண்டவரே
ஐயா அழைத் தேனிப்போ
அதிகாரி வாருமிப்போ
வாவூர் மலை மேலே
வழக்காடும் புண்ணியரே
சன்யாசி ஏ கறுப்பா
சமர்த்தனழைத் தேனிப்போ
குறிக்கு அழைத் தேனிப்போ
குறி முகத்தில் வாரதெப்போ
ஈப்போல் வடிவு கொண்டு
என் இருதயத்தினுட் புகுந்து
சொன்ன சொல் தவறி டாமல்
சொற் குற்றம் வந்திடாமல்
சாஸ்திரத்தை நீரெடுத்து
சமர்த்தா வருவ தெப்போ!
பக்கங் குறி கேட்பவர்க்குப்
பதிலே உரைப்ப தெப்போ
வைத்த குறிகேட்பவர்க்கு
உடைத் தெறியும் சட்டமதை
சட்டம் நிலைக்க வேணும்
சன்யாசி ஏ கறுப்பா
கேட்ட கேட்ட கேள்விக்கெல்லாம்
கிருபையுடன் சொல்லுமையா
பூசை முடியும் மட்டும்
புண்ணியனே உன் காவல்
மண்டு முடிய மட்டும்
மன்னவனே உன் காவல்
வாழை இலை விரித்தேன்
வைத்தேன் இலை பாக்கு
கொளுத்தினேன் நற் சூடம்
கொண்டேன் சிறு அமுது
பால் பழமும் நற்தேங்காய்
படைத்தேனிது வரைக்கும்
தட்சணையும் முன்னே வைத்து
தேவா உமையழைத்தேன்
வைத்ததொரு தட்சனைக்கு
வகை பிரித்துச் சொல்லுமிப்போ
சொல்லி வரங் கொடுக்கும்
சுந்திரனே ஏ கறுப்பா
எண்ணாத எண்ணமெல்லாம்
எண்ணி மனம் வாடுகிறேன்
ஆறு பிழை நூறு குற்றம்
அடியேன் செய்த போதிலுமே
குற்றம் பிழை பொறுத்து
குடியிருக்க வாருமிப்போ
சின்னஞ் சிறு மதலை
சிறுவனுமதடிமை
மன்னாதி மன்னவரே
மகா தேவா என் பெருமாள்
அண்ணாவே வாருமிப்போ
அதிகாரி ஏ கறுப்பா
எல்லை கடந்து வாரும்
எல்லை கல்லு தாண்டி வாரும்
ஆறு கடந்து வாரும்
அதிகாரி ஏ கறுப்பா
ஊறுதடம் பிடித்து
உத்தமனே வாருமிப்போ
தெற்கு பார்த்த வீட்டிற்கு
தேவா உமையழைத்தேன்
வடக்கு பார்த்த எல்லைக்கு
வல்லவனே உமையழைத்தேன்.
மேற்க பார்த்த தன் பதிக்கு
மேக 'உமையழைத்தேன்'
கிழக்க பார்த்த எல்லைக்கு
கிளி மொழியே நானழைத்தேன்
குறிப்பு: வீடு எந்தப்பக்கம் பார்த்திருக்கிறதோ அதற்கேற்றாற்போல்,
தெற்கு, வடக்கு, மேற்கு, கிழக்கு என்று சொல்லுவார்கள்.
--------------
தெய்வம் கூறுவது
என்னடா சிறுபயலே
என்னை அழைத்ததென்ன
பம்பை பதனமடா
பாலன் சிறு குழந்தை
உடுக்கு பதனமடா
உடையவன் வந்தேனிப்போ
சொன்ன சொல் தவறமாட்டேன்
சொற் பிழைகள் இல்லாமல்
நாவில் குடியிருந்து
நானே குறி பாடுரண்டா
இந்த மனை தனக்கு
எடுத்தேன் சிறு ஏட்டை
ஏட்டை விரித்துப் பார்த்தேன்,
இந்த வகை சொல்வதற்கு
இந்த மனைதனிலே
இருக்குமொரு கன்னியற்கு
மாலைப்பொழுதினிலே
மங்கையவள் சென்றபோது
இருளோ கருத்த நேரம்
எல்லைக்குப் பின்புறமாம்
கண்டு பயந்தாளப்பா
கன்னியந்தப் பெண் கொடியும்
உடலே நடுங்கியவள்
மேலது மேதான் சிலுத்து
மதியோதான் கலங்கி
மங்கையவள் விடு வந்தாள்
பின்னே தெடர்ந்தானப்பா அந்தப்
பேயாண்டி மாமுனியன்
இப்ப வந்து வழக்காடுறான் அந்த
வல்லவனு மாமுனியன்
நானே பிடித்தேனென்று அவன்
நாதன் முன் சொல்லுறான் போ
(உண்டா) இதற்கும் பதில் கேளு
இன்னும் உரைத்து வாரேன்.
அதுலே இருந்து மவள்
படுத்தாளே பாய் தனிலே
மேல் வலியும் கால் வலியும்
மெல்லியற்கும் உண்டுமப்போ.
கண் கட்டும், தலை சுற்றும்
கன்னியற்கு உண்டுமப்போ
நெஞ்சு வலி மாரடைப்பும்
நீதி துரை கண்டேனிப்போ
உண்டுமா இல்லையா
இதற்கும் பதில் கேளு
ஆனாலும் மன்னவனே
அதிகாரி என்னிடத்தில்
கேட்டதற்கு நானுரைத்தேன்
கிருபையுடன் சொல்லிவந்தேன்
(அந்த) வால் முனியை விரட்டுதற்கு
வகை விபரம் சொல்லி வாரேன்
வெள்ளை ஒரு சாவலைத்தான்
வெள்ளி நல்ல கிழமையிலே
நள்ளிரவு வேளையிலே
நடுச்சாம நேரத்திலே
மன்னவனே கேக்குராண்டா
மாதர் துன்பம் தீர்ப்பதற்கு
இன்னையிலே இருந்து
வன்பிணிகள் தீர்ப்பதற்கு
கொடுத்தேன் திருநீறு நான்
கொத்தளத்து வாழ் கறுப்பன்
நெற்றியிலே நீறு பூசி
நினைந்து வா எந்தனைத்தான்
உந்தன் நோய் அகற்றி வாரேன்
உண்மையுள்ள கறுப்பனிப்போ
சொன்னபடி நடந்தாயானால்
துன்ப வினை தீர்த்துத்தாரேன்
என்னப்பா மன்னவனே
இதற்கும் பதில் கேளு
எந்தனுடன் அட்சரத்தை
ஏழை வரிந்து தாரேன்
மண்டலத்துப் பூசைக்குத்தான் மங்கை
எந்தனுக்குப் பூசை செய்ய
ஏழை கொடுத்தாயானால்
முக்காலும் சத்தியமாய்
முன்னின்று காத்துத்தாரேன்.
----------
பூசை முடிவு
அண்ணாவி ஏ கறுப்பா
அடியேன் சிறு குழந்தை
பூசை முடித்தேனிப்போ
போய்ச் சேரும் புண்ணியனே
மன்று முடித்தேனிப்போ
மன்னவரே போய்ச் சேரும்
உள்ளூருத் தேவதைகள்
உங்கள் எல்லை போய்ச் சேரும்
பக்கத்துத் தேவதைகள்
பதி தனக்குப் போய்ச் சேரும்
அண்ணாவி என் குருவே,
அடியேன் மனதிலெண்ணி
பூசை முடித்து விட்டேன்
புண்ணியரே உமதடிமை
குறிப்பு: தெய்வம் கூறுவது என்பது தெய்வ ஆவேசம் வந்தவன் குறி கூறுகிறான். குறிப்பிட்ட வீட்டிற்குக் குறி கேட்கிறான். பெண் அந்தி மயக்கத்தில் பயந்து விட்டாள் அவளை பேயாண்டி முனியன் என்ற பிசாசு பற்றிக் கொண்டது உடல்வலியெடுத்தது. வெள்ளிக்கிழமை, நள்ளிரவு வேளையில் பலி கொடுத்தால் முனியன் போய்விடும்.
இது கருப்பன் ஆவேசம் வந்த மனிதன் கூறுவது. இதன் பின் தெய்வம் மலையேறிவிடும்.
சேகரித்தவர்: இடம்:
S.S. போத்தையா தங்கம்மாள்புரம், நெல்லை மாவட்டம்.
-----------------
2. மழையும் பஞ்சமும்
மழை பொழியவில்லையே!
மழைக்காகப் பூசை செய்யும் வழக்கமும் தமிழ் நாட்டில் எல்லாப் பகுதிகளிலும் இருந்து வந்தது. சில வேளைகளில் பல நாட்கள் பூசை செய்தும் மழை பெய்யாது போய் விடும். அப்பொழுது மன வேதனையோடு மக்கள் நாராயணனை நோக்கிக் கதறுவார்கள். நாராயணன் என்ற சொல்லுக்கு நீர் என்பது பொருள். அவர்கள் கண்ணீரைக் கண்டு நாராயணன் இளகி மழையைப் பொழிவான் என்பது மக்களது நம்பிக்கை. மழையின் தோற்றத்தைப் பற்றிய விஞ்ஞான விளக்கம் இன்று பல விவசாயிகளுக்குத் தெரியாது.
ஒருநாள் பூசை செஞ்சேன்
நாராயணா, ஒரு
ஒளவு மழை பெய்யலியே
நாராயண!
ஒளவு பேயாமே நாராயணா
மொளைச்ச
ஒருபயிரும் காஞ்சு போச்சே
நாராயணா!
மூணு நாளாப் பூசை செஞ்சேன்
நாராயணா! ஒரு
முத்து மழை பேயலியே
நாராயணா
முத்து செடி காஞ்சு போச்சே
நாராயனா,
அஞ்சு நாளாப் பூசை செஞ்சேன்
நாராயணா ஒரு
ஆடி மழை பேயலியே
நாராயணா!
ஆடி மழை பேயாமல்
நாராயணா!
ஆரியமெல்லாம் காஞ்சு போச்சே
நாராயணா!
வட்டார வழக்கு: ஒளவு-உழவு: காஞ்சு-காய்ந்து; முத்து செடி-அழகான செடி; ஆரியம்-நாடு.
சேகரித்தவர்: S. சடையப்பன்
இடம் கொங்கவேம்பு, அரூர்வட்டம், தருமபுரி மாவட்டம்.
---------------
பஞ்சமும் மழையும்
பஞ்சத்தில் ஆடு, மாடு, நகை, நட்டு எல்லாம் விற்றாகி விட்டது. காடு தேடிப் போய் கிடைக்கிற இலை தழைகளை அவித்துத் தின்னும் நிலைமை வந்து விட்டது. கம்பு விதைத்து மண்ணோடு மண்ணாகிக் கிடக்கிறது. மழையின் ரேகை சிறிதும் காணோம். மக்கள் உள்ளம் வெதும்பி வருணதேவனிடம் முறையிட்டுக் கொள்கிறார்கள்.
வருண தேவன் கருணையால், மழை பொழியத் தொடங்குகிறது. மின்னல் மின்ன இடி இடித்து மழை பெய்யும் போது பூமி குளிர்கிறது. மழையில் நனைந்து கொண்டே உழவர்கள் மழையை வரவேற்கிறார்கள்.
ஆடு வித்து, மாடு வித்து
ஐயோ வருண தேவா!
அத்தனையும் கூட வித்து
ஐயோ வருண தேவா!
காது கடுக்குவித்து
ஐயோ வருண தேவா!
கை வளையல் கூடவித்து
ஐயோ வருண தேவா!
இச் சிக்காய் தின்ன பஞ்சம்
ஐயோ வருண தேவா!
இன்னும் தெளியலையே
ஐயோ வருண தேவா!
காரைக்காய்த் தின்ன மக்கள்
ஐயோவருணதேவா!
காதடைச்சு செத்த மக்கள்
ஐயோ வருண தேவா!
மக்க வெதச்ச கம்பு
மச்சு வந்து சேரணுமே!
ஓடி வெதச்ச கம்பு
ஊடுவந்து சேரணுமே
கலப்பை பிடிக்குந் தம்பி
கை சோந்து நிக்கிறாங்க!
அதுக்கே மனமிரங்கு
ஐயோ வருண தேவா!
ஏர் பிடிக்குந் தம்பி யெல்லாம்
எண்ணப்பட்டு நிக்கிறாங்க
அதுக்கே இறங்க வேணும்
ஐயோ வருண தேவா!
பேயுதையா பேயுது
பேய் மழையும் பேயுது
ஊசி போல காலிறங்கி
உலகமெங்கும் பேயுது
உலக மெங்கும் பேஞ்ச மழை
ஊரிலெங்கும் பேயலே
பாசி போல காலிறங்கி
பட்டணமே பேயுது
பட்டணமே பேஞ்ச மழை,
பட்டியிலே பேயிலே
துட்டு போல மின்னி
சீமையெங்கும் பேயுது
சீமை யெங்கும் பேஞ்ச மழை
செல்ல மழை பேயுது.
வட்டார வழக்கு: வித்து-விற்று, கடுக்கு-கடுக்கன், ஊடு-வீடு.
உதவியவர்: பாவாயி.
இடம்: செருக்கலைப்பாளையம், புதுப்பாளையம்
சேகரித்தவர். கு. சின்னப்ப பாரதி
----------------
பஞ்சம்
தேளாச் சுருண்டழுதோம்
ஊரையடுத்த புளியமரத்தடியில் இளைஞர்கள், பந்தாடி, மகிழ்ச்சியாக நேரம் போக்குவார்கள். பஞ்சத்தால் உடல் நலிந்த இளைஞர்கள் எழுந்து நடக்கவும் சக்தியின்றி மெலிந்திருக்கிறார்கள். அவர்கள் உள்ளத்தில் மகிழ்ச்சியில்லை. அவர்களது வேதனையை "பாம்பாச் சுருண்டழுதோம், தேளாச் சுருண்டழுதோம் என இரண்டு உவமைகளின் மூலம் விளக்குகிறார்கள்.
பரட்ட புளிய மரம்
பந்தாடும் வில்ல மரம்
பந்தாடும் நேர மெல்லாம்
பகவானை பார்த் தெழுதோம்.
பாம்புக்கோ ரெண்டு கண்ணு
பகவான் கொடுத்த கண்ணு
பாவிப் பய சீமையிலே
பாம்பா சுருண்ட ழுதோம்.
தேளுக்கோ ரெண்டு கண்ணு
தெய்வம் கொடுத்த கண்ணு
பாவிப்பய தேசத்திலே
தேளா சுருண்ட ழுதோம்.
சேகரித்தவர்: எம். பி. எம். ராஜவேலு
இடம்: மீளவிட்டான், துத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டம்.
------------
மானம் விடிவதெப்போ?
பருவ மழையின்றி வானம் பொய்த்து விட்டால் ஏற்படும் உண்மையான தாக்குதலுக்கு எல்லோரையும் விட முதலில் பலியாகிறவன், மண்ணை நம்பி நிற்கும் விவசாயிதான். மழையைக் கண்டால் அவனுக்கு தெய்வத்தைக் கண்டது போல். பசித்த வயிற்றில் பால் வார்த்தது போல்.
மழை பொய்த்து விட்டால் வருண தேவனுக்குப் பொங்கல் வைப்பார்கள். கோழி பலி கொடுப்பார்கள். நிலவுபொழியும் இரவில் கன்னிப் பெண்கள் உப்பில்லாத கூழ் குடித்து பிள்ளையார் சிலையைப் பிடுங்கி கரைத்த சாணியை அதன் மேலே ஊற்றி வைப்பார்கள். மழைக் கடவுளை வேண்ட வருண பகவான் மழை பெய்து பிள்ளையாரைச் சுத்தப்படுத்துவதாக ஐதிகம். மழை பெய்த பின் பிள்ளையாரைப் பிரதிஷ்டை செய்து பூஜிப்பார்கள்.
அப்படி மழையில்லாத காலத்தில் கன்னிப் பெண்கள் வருணனை வேண்டிப் பாடும் பாக்கள் இவை.
பூமியை நம்பி
புத்திரரைத் தேடி வந்தோம்,
பூமி பலியெடுக்க
புத்திரர் பரதேசம்,
மானத்தை நம்பி
மக்களைத் தேடி வந்தோம்
மானம் பலியெடுக்க
மக்களெல்லாம் பரதேசம்
ஏர் பிடிக்கும் தம்பியெல்லாம்
பின்னப் பட்டுநிக்கிறாங்க
அந்தக் குறை கேட்டு
வந்திறங்கு வர்ணதேவா
மேழி பிடிக்கும் தம்பியெல்லாம்
முகஞ் சோந்து நிக்கிறாங்க
அந்தக் குறை கேட்டு
வந்திறங்கு வர்ண தேவா,
காட்டுத் தழை பறித்து
கையெல்லாம் கொப்புளங்கள்
கடி மழை பெய்யவில்லை
கொப்புளங்கள் ஆறவில்லை.
வேலித் தழைபறித்து
விரலெல்லாம் கொப்புளங்கள்
விரைந்து மழை பெய்யவில்லை
வருத்தங்கள் தீரவில்லை,
மானம் விடிவதெப்போ, எங்க
மாட்டுப் பஞ்சம் தீர்வதெப்போ?
பூமி செழிப்ப தெப்போ, எங்க
புள்ளைப் பஞ்சம் தீர்வதெப்போ?
ஓடி வெதச்ச கம்பு
ஐயோ! வருண தேவா
ஊடுவந்து சேரலையே
பாடி வெதச்ச கம்பு
ஐயோ வருண தேவா
பானைவந்து சேரலையே.
உதவியவர் : முத்துசாமி சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி
இடம்: வாழநாயக்கன் பாளையம், சேலம் மாவட்டம்.
-------------
மழையே வா
ஊசி போல் மின்னல் மின்ன,
ஊரிக் கிணறு தண்ணிவர,
பாசி போல மின்னல் மின்ன,
பாங்கிணறு தண்ணிவர,
சட்டியிலே மாகரைத்து
சந்தை யெல்லாம் கோலமிட்டு,
கோலம் அழிய வில்லை;
கொள்ளை மழை பெய்ய வில்லை;
கிண்ணியிலே மாகரைத்து
கங்கை யெல்லாம் கோலமிட்டு,
கோலம் அழியவில்லை;
கொள்ளை மழை பெய்ய வில்லை;
மேழி பிடிக்கும் தம்பி
முகம் சோர்ந்து போகு தம்மா!
கலப்பை பிடிக்கும் தம்பி
கை சோர்ந்து நிக்கு தம்மா
உதவியவர்: ம. கிருஷ்ணன்
சேகரித்தவர். கு.சின்னப்ப பாரதி
இடம்: முத்துகாபட்டி, நாமக்கல் வட்டம், சேலம் மாவட்டம்.
--------------
பஞ்சம்
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அடிக்கடி பஞ்சங்கள் தோன்றின. பசியால் பதறிய மக்கள் முகம் கண்டு தாய்மார் பதறினர். மக்களைக் கொல்ல வரும் பஞ்சத்தில், தங்களைப் படைத்த கடவுளை நோக்கி மழை வரம் வேண்டுகிறார்கள்.
வானத்தை நம்பியல்லோ
மக்களைத் தேடி வந்தோம்
மானம் பலியெடுக்க மக்கள் பரதேசம்-
மன்னரெல்லாம் தன் நாசம்,
பூமியைத் தேடியல்லோ
புத்திரரைத் தேடி வந்தோம்,
பூமி பலியெடுக்க புத்திரர் பரதேசம்
புண்ணியரும் தன்னாசம்
சோறு சோறு என்று சொல்லி
துள்ளுது பாலரெல்லாம்
அன்னம் அன்னம் என்று சொல்லி
அழுகுது பாலரெல்லாம்
கோடை அழிய வேணும்,
கொள்ளை மழை பெய்ய வேணும்,
மாவு கொதிக்க வேணும்,
குழந்தை பசியாற வேணும்,
பூமி விளைய வேணும்
புள்ளை பசியாற வேணும்.
உதவியவர்: ஜானகி
சேகரித்தவர்: கு.சின்னப்ப பாரதி
இடம்: முத்துகாபட்டி, நாமக்கல் வட்டம், சேலம் மாவட்டம்.
----------------
ஆற்று நீர் -
தண்ணிக்குத் தீட்டில்லை
மேல் ஜாதிக்காரர்களுக்குக் குடி தண்ணீர் எடுக்க ஒரு கிணறும், கீழ் ஜாதிக்காரர்களுக்குத் தண்ணீர் எடுக்க ஒரு கிணறுமாக ஒதுக்கி வைத்திருப்பதை நாம் இன்றும்- ஒரு காந்திஜியும், வினோபாஜியும் தங்கள் வாழ்நாளை தீண்டாமை ஒழிப்புக்காகச் செலவு செய்த பின்னரும் அப்படியே இருப்பதைக் காண்கிறோம். மனிதன் செயற்கையாகச் செய்து கொண்ட கிணற்றில்தான் இந்தத் தீண்டாமை இருக்கிறது. அதேபொழுது இயற்கை படைத்த ஆறுகளில் எவ்விதத் தடையுமின்றி எல்லோரும் நீர் எடுப்பதையும் பார்க்கிறோம்.
தண்ணிருக்குத் தீட்டில்லை. பார்ப்பனர் முதல் பறையர் வரை, தோட்டி முதல் தொண்டைமான் வரை தெய்வமாகத் தொழுவதும் பச்சைத் தண்ணீரையே. ஆனால், அந்தப் பச்சைத் தண்ணீரே சில சமயங்களில் தீராத பகையை மூட்டுவதற்குக் காரணமாகி விடுகிறது-எப்பொழுது? அது கிணற்றில் கிடக்கும் பொழுது. ஆற்றில் ஓடும்பொழுதோ அது எல்லோருக்கும் தெய்வமாக, தீண்டாமைத் தீயைக் கடக்கும் பாலமாக அமைந்து விடுகிறது. இதைப் பற்றி, காதலன் காதலிக்குக் கூறுவது போல் இப்பாடல் அமைந்துள்ளது. இதில் சித்தர்களின் ஜாதி மறுப்புக் கொள்கையுடன் ஒப்புமையுள்ள கருத்துக்கள் கூறப்படுவதைக் காணுகிறோம்.
கரை புரண்டு ஓடுதம்மா-அந்த
காவிரியில் தண்ணி யெங்கும்
நெளி நெளியா ஓடுதம்மா-அந்த
நீல வண்ணத் தண்ணி யெல்லாம்
சுழி சுழியா ஓடுதம்மா-அந்த
சுத்தமான ஆத்துத் தண்ணி
வெயிலடிக்கும் நேரமெல்லாம்-தண்ணி
வெள்ளி போல மின்னுதடி.
குடிதண்ணியும் குளி தண்ணியும்-கண்மணியே
குடம் குடமா எடுப்பாங்களாம்.
தண்ணிக்கொரு தீட்டு மில்லை-கண்ணே யதைத்
தடுக்க ஒரு நாதியில்லை
பாப்பானுக்கு பச்சைத்தண்ணி-கண்மணியே
பறையனுக்கும் பச்சைத்தண்ணி
பட்டிக்காட்டில் பல சாதியாம்-கண்மணியே
பறையன் முதல் பாப்பான் வரை
தோட்டி முதல் தொண்டமான் வரை-கண்மணியே
தொழுந் தண்ணி பச்சைத்தண்ணி
சண்டையிழுப்பதுவும்-கண்மணியே
சாதிக்குள்ளே பச்சைத் தண்ணி
தெய்வம்போல இருக்குந்தண்ணி-கண்மணியே
திசையோடும் பச்சைத் தண்ணி
உதவியவர்: பாவாயி
சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி
இடம்: செருக்கலைப்புதூர், சேலம் மாவட்டம்.
-----------------
தாது வருடப் பஞ்சம்
இந்தியாவில் பஞ்சம் என்கிறபோது எப்படி வங்கப் பஞ்சம், ராயல சீமாப் பஞ்சம் என்று சொல்கிறோமோ, அது போல, தாதுவருஷப் பஞ்சமென்பது நூற்றிருபது வருடங்கட்கு முன்பு தமிழகத்தில் ஏற்பட்ட, கொடிய பஞ்சமாகும். இன்றைக்கும் கூட நமது கொள்ளுப்பாட்டன், பாட்டிமார்களுடன் உட்கார்ந்து கதை கேட்போமேயானால் தாது வருஷப் பஞ்சத்தைப் பற்றி கதை கதையாகச் சொல்லுவார்கள். அந்தப் பஞ்சம் சரித்திரப் பிரசித்தமான ஒரு முக்கிய சோக நிகழ்ச்சியாக இருந்தது. உள்ளத்தை உலுக்கும் அவ்வளவு பெரிய நிகழ்ச்சியாக இருந்துங்கூட, அன்று வாழ்ந்த தமிழகப் பெரும் புலவர்கள், கவிஞர்களின் சிந்தையை ஏனோ தொடாமற் போய்விட்டது. ஒரு பேரிலக்கியத்தைப் படைப்பதற்கு வேண்டிய கருவைத் தன்னுள் கொண்டிருந்த அந்தக் கொடிய பஞ்ச நிகழ்ச்சிகள் அவர்களின் கண்ணில் படாமற்போனது விந்தையே. நாம் இன்று அதைப்பற்றித் தெரிந்து கொள்ள உதவுவதெல்லாம் சில நாடோடிப் பாடல்களே. ஒவ்வொரு பிரதேசவாரியாகத் தேடினால், அவை கிடைப்பது திண்ணம். தாது வருடப் பஞ்சத்தை அனுபவித்து கொடுமைக்கும், கொதிப்புக்கும் ஆளான யாரோ ஒரு பாமரன் ஆற்றாமையை ஆற்றிக் கொள்ளப் பாடிய அந்தப் பாடலைச் சற்று ஆழ்ந்து படித்துப் பாருங்கள். வசதி படைத்தவர்களும், வாழ வழியின்றி பிழைப்புநாடி வெளியே சென்ற பின்னர் தங்கள் போலிக் கவுரத்தைக் காப்பாற்ற நினைத்து ஏளனத்துக்கு உள்ளாவதை நகைச்சுவை ததும்ப சுட்டிக்காட்டுவதையும் அதே பொழுதில் அதன் கோரப் பிடிப்பில் ஜனங்கள் சிக்கி, சித்திரவதைப்பட்டு மடிவதையும், உள்ளம் உருகும் வகையில் எடுத்துரைக்கும் பாடல் இது:
(குறிப்புரை: சின்னப்ப பாரதி)
பூரணமாகவே தாது வருஷமும் பிறந்ததுவே
பஞ்சமும் அப்போதே காரணமாகத் தொடர்ந்ததுவே
கும்மியடிக்கிறேன் கந்தன் கணபதி காப்பாரே
சத்தியவாக்கருளாய்
பால் நகர் சந்திரன் எத்திசை சேரும் நடராஜன்*
அம்மன் சொல்படி பந்தியாய் நின்று
பாடுவோமே கும்மி தாது வருஷத்தை
தலை விதிப்படியேதான் மழையெங்கும் இல்லாமல்
கன்னி மாதத்தில் ஓர் மழை பேயவும்
கண்டெடுத்த ஒரு புதையலைப் போலவே
----------
*நடராஜன்-எழுதியவர் பெயர்.
தானியம் விதைத்தார்கள் தாதுவருஷத்தில்
சீமையில் மழைமாரி பூச்சிய மாகவே
தீய்ந்து பயிரெல்லாம் காய்ந்ததையா
அரைக்கீரை சோளம் சிறு நெல்லு கம்புக்கு
காரண மானதோர் புதன் சந்தையில்லை
எட்டு வள்ளம் விற்று இரண்டு வள்ள மாகி
துட்டமான பேர்களை மட்டடக்கி
தட்டுப்படாதுதைத்து வள்ளத்தில் வைத்து
கொட்டுப் பட்டாற் போல நிறுத்திற்றுமே
மாதமாம் தீபாவளிப் பண்டிகை வந்தது
ஆன பேர் களிப்புடன் கொண்டாட முடியாமல்
நோம்புகள் போச்சுதே, ஐயையோ கம்பு
கார்த்திகை மாதத்தில் முக்கால் வள்ளம் கூட
காணமுடியாமல் நாங்களும் தெம்பற்றோம்
காட்டை புழுது பயிரிடும் காராளக்
கவுண்டரெல்லாம் கவலேத்தமாட் டினை
தேடியே கட்டை வண்டியில் கட்டி
ஓடரோம் துரதேசமும் என்றாரே
போயங்கு தவசம் பிடித்திடக் கையில்
ஈயக் காசுக்கும் ஏதும் வழியில்லை
பூமியைக் கொதவு வைத்தாலும் ஆங்கே
பூரண காசுகள் தந்திடுவாரில்லை
காப்புக் கடகமும் தோள் வெண்டயமும்
காதுக் கொப்பு சில்லரை தாலியெல்லாம் விற்றாலும்
கட்டாது அந்த ரூபாயெல்லாம் உமக்கு
கவலை ஏத்த மாட்டு தீனிக்கே மட்டும்
பத்தாததிற்கு பணம் வேண்டும் என்றுமே
ஆடு மாடெல்லாம் விற்றெடுத்துக் கொண்டு
ஆறுபேர் ஏழுபேர் நாம் சேர்ந்து நல்ல
கும்பகோணம் தஞ்சாவூர் போவது என்றால்
புழுத்த சோளம் கம்பு புளிச்ச கீரை தின்ன
புடிச்சுமே காலரா போகும் எட்டுப் பேரில்
மூன்றுபேர் இரண்டுபேர் மூச்சுப் பிழைப்பார்கள்
எல்லாம் சிவன் செயல் என்றிடு வாரெல்லாம்
தினுசு வேலைகள் எட்டுமே செய்குவார்
சீமைகள் எங்கும் சுற்றித் திரிகுவார்
சோளச்சோறு வாயுக்கு சேராதென்று சொன்ன
சொகுசான மகராச மக்களுகளெல்லாம்
மழுங்கலாய் துட்டுக்கு புண்ணாக்கு வாங்கியே
மறைவுக்குப் போவாராம் உண்பதற்கே
புழுங்கலரிசிச் சாதம் சேராதுன்னு சொன்ன
புண்ணிய மகராச மக்களுகளெல்லாம்
மலைக் கத்தாழைக் குருத்தினைப் பிடுங்கியே
மண்திட்டு மறைவிலே மடுக்கிண்ணு கடிப்பாராம்
எப்பத்தான் நமக்கு காலம் செழிக்குமோ
உப்போ பணத்துக்கு இரண்டு படிவிலை
ஊருக்கிணத்திலே தண்ணியில்லை
நமக்கு எப்பவேகாலம் செழிக்குமென்றால்-துரைக்கு
அப்பவே விண்ணப்பம் போடலா மென்றார்.
வட்டார வழக்கு: கவுண்டர்-பயிரிடும் சாதியார்; கொதவு -ஒத்தி, அடைமானம்.
குறிப்பு: கடிப்பாராம்-நல்ல உணவைக் குறை கூறியவர்கள், புண்ணாக்கும் கற்றாழையும் தின்பார்கள்.
உதவியவர்: சின்னப்ப கவுண்டர் சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி
இடம்: மாடகாசம்பட்டி, சேலம் மாவட்டம்.
---------------
பஞ்ச காலம்
அவருக்கு அருமையான தலைச்சன் குழந்தை பிறந்திருக்கி றது. வயலில் விதைத்த விதை முளைத்துப் பயன்தராதே என்று குழந்தையின் தந்தையும், பாட்டனும் தலை கவிழ்ந்து உட்கார்ந்திருக்கிறார்கள். ஒரு வீட்டில் குழந்தை பிறந்தால் ஏற்படும் மகிழ்ச்சி அந்த வீட்டில் இல்லை. பெற்றவன்கூடக் குழந்தையை மதிக்கவில்லையே என்று தாய் கவலைப்படுகிறாள், மணப்புறா போலவும், நீலப்புறா போலவும் உள்ள குழந்தையை அள்ளி எடுத்து அணைப்பதற்கு, உறவினர் முன் வராத நிலையைப் பஞ்சம் சிருஷ்டித்து விட்டதே என்று அவள் கவலைப் படுகிறாள்.
(குறிப்புரை:சின்னப்ப பாரதி)
மானம் கவுந்து வரும்
மாடமணப்புறா மேஞ்சு வரும்
மணிப் புறா குஞ் சென்று
மதிப்பாரே பஞ்சமையா!
நீலம் கவுந்து வரும்
நீலப் புறா மேஞ்சு வரும்
நீலப் புறா குஞ்சென்று
நெனைப் பாரே பஞ்சமையா!
வட்டார வழக்கு: கவுந்து-கவிழ்ந்து-(மேகம் தாழ்ந்து வருவதைக் குறிக்கும்); மேஞ்சு-மேய்ந்து; நெனைப்பாரே- நினைப்பாரே.
உதவியவர்: சி. செல்லம்மாள் சேகரித்தவர். கு. சின்னப்ப பாரதி
இடம்: நாமக்கல் வட்டம், சேலம் மாவட்டம்.
-------------------
3. தாலாட்டு
தாலாட்டு
தாயின் அன்பையும், சேயைச் சுற்றி எழும் கற்பனையையும் பாடலாக வழங்கும் பாட்டுருவம் தாலாட்டாகும். பணக்காரர் வீட்டிலும் தாய் குழந்தையைத் தாலாட்டுகிறாள். ஏழை எளியவரான மீன் பிடிப்பவரும், உழவரும், பண்டாரமும், தட்டாரும், கருமாரும், தச்சரும், கொத்தரும் தங்கள் இல்லங்களில் பிறந்த குழந்தைகளுக்குத் தமிழிசையால் அமுதுட்டித் தாலாட்டுகிறார்கள். காட்டு வெள்ளம்போல் வரும் தாயின் மன எழுச்சியைத் தாலாட்டில் கண்ட ஆழ்வார்கள் பிற்கால கவிஞர்கள் முதலியோர் இப்பாடல் வகைக்கு மெருகேற்றி, பிள்ளைத் தமிழாகவும், தேவர் தேவியர் தாலாட்டுகளாகவும், யாப்பிலக்கணக் கட்டுக்கோப்பில் அடக்கிப் பாடல்கள் இயற்றியுள்ளனர். தெய்வத் தாலாட்டிற்கு விளைநிலம் மக்கள் தாலாட்டுக்களே.
சில தாலாட்டுப் பாடல்களில் உண்மையான குழந்தையையும், அதில் தாலாட்டும் தாயும் நம் கண் முன்னே வருகிறார்கள்.
பச்சை இலுப்பை வெட்டி
பவளக்கால் தொட்டிலிட்டு
பவளக்கால் தொட்டிலிலே
பாலகனே நீயுறங்கு
கட்டிப் பசும் பொன்னே-கண்ணே நீ
சித்திரப் பூந்தொட்டிலிலே
சிரியம்மா சிரிச்சிடு-கண்ணே நீ
சித்திரப் பூந் தொட்டிலிலே
இன்னும் சில தாலாட்டுப் பாடல்களில் உறவினரின் பெருமைகள் எல்லாம் வருகின்றன. இவற்றில் மாமன் பெருமையைக் கூறும் பாடல்களே அதிகம். மாமனைக் கேலி செய்து பாடும் நகைச்சுவைப் பாடல்களும் உள்ளன.
உசந்த தலைப்பாவோ
‘உல்லாச வல்லவாட்டு'
நிறைந்த தலை வாசலிலே
வந்து நிற்பான் உன் மாமன்
தொட்டிலிட்ட நல்லம்மான்
பட்டினியாப் போராண்டா
பட்டினியாய் போற மாமன்-உனக்கு
பரியம் கொண்டு வருவானோ?
தனது அண்ணன் தம்பிமார்களை ஏற்றிப் போற்றுவதும், கேலி செய்து மகிழ்வதும், தமிழ்ப் பெண்களின் தாலாட்டு மரபு. பாமரர் தாலாட்டில் தொட்டில் செய்த தச்சனையும் காப்புச் செய்து தந்த தட்டானையும் இன்னும் இவர் போன்ற பிற தொழிலாளர்களையும் பாராட்டிப் பாடும் வழக்கமும் உள்ளது.
அது போலவே பூக்கொண்டுவரும் பண்டாரமும், போற்றுதலுக்கு உரியனாவான்.
தாலாட்டுகளில் உறவினர் முறையை உறுதிப்படுத்திக் கொள்ளும் சடங்கு அன்று ஒவ்வொருவரும் குழந்தைக்கு அளிக்கும் பரிசுகள் வரிசையாகக் கூறப்படும்.
பால் குடிக்கக் கிண்ணி,
பழந்திங்கச் சேணாடு
நெய் குடிக்கக் கிண்ணி,
முகம் பார்க்கக் கண்ணாடி
கொண்டைக்குக் குப்பி
கொண்டு வந்தான் தாய்மாமன்
ஆனை விற்கும் வர்த்தகராம்-உன் மாமன்
சேனைக் கெல்லாம் அதிகாரியாம்
சின்னண்ணன் வந்தானோ கண்ணே-உனக்கு
சின்னச் சட்டை கொடுத்தானோ உனக்கு
பட்டு ஜவுளிகளும் கண்ணே உனக்குப்
பல வர்ணச் சட்டைகளும்
பட்டுப் புடவைகளும் கண்ணே-உனக்கு
கட்டிக் கிடக் கொடுத்தானோ!
பொன்னால் எழுத்தாணியும்-கண்ணே உனக்கு
மின்னோலைப் புஸ்தகமும்
கன்னாரே! பின்னா ரேன்னு-கண்ணே
கவிகளையும் கொடுத்தானோ!
வட்டார வழக்கு: கன்னாரே, பின்னாரே-பொருள் விளங்கா மொழி-(ஆங்கிலம்).
இவ்வாறு தாயின் உறவினர்கள் சிறப்புச் செய்யாவிட்டால் மாமியார் முகம் கோணலாகிவிடும்.
எனவே உறவினர் பரிசுகளைத் தாலாட்டு விடாமல் சொல்லி வரும். வங்காளத்தில் "பாரோ மாசி" என்ற நாடோடிப் பாடல் வகை உள்ளது. அதில் பன்னிரெண்டு மாதங்களிலும் நிகழும், கால மாறுபாடுகளையும் உழவு வேலைகளையும் ஒரு கதையோடு தொடர்புபடுத்திப் பாடுவார்கள். இவற்றுள் எல்லா வகைகளைப் பற்றியும் "தூசன்ஸ்பக்விட்டல்" என்ற செக்கோஸ்லோவேகியப் பேராசிரியர் ஒரு கட்டுரையில் ஆராய்ந்துள்ளார். அவற்றுள் ஒருவகையில் ஒவ்வொரு மாதத்திலும் நாம் செய்யவேண்டிய காரியங்கள் வரிசையாகக் கூறப்படுகின்றன. உதாரணமாக எந்த மாதத்தில் ஆடு வாங்க வேண்டும், எந்த மாதத்தில் ஊர்த் தேவதைக்குத் திருவிழாக் கொண்டாட வேண்டும் என்பனவெல்லாம் வரிசைக் கிரமமாகக் கூறப்படும். பொதுவாக இவை உழவு வேலையைப் பற்றியதாக இருக்கும். உழவர் 'பாரோ மாசி' தான் இவ்வகைப் பாடல்களிலேயே புராதனமானது.
அவற்றிலிருந்து கதைப் பாடல்களும், பக்திப் பாடல்களும் தோன்றியிருக்கின்றன. வங்காளத்துப் 'பாரோ மாசி'யைப் போல, தாலாட்டிலும் வருங்காலத்தில் தன் மகன் ஒவ்வொரு மாதத்திலும் செய்ய வேண்டிய கடமைகளைத் தாய் அறிவுறுத்துவாள். இவ்வறிவுரை மகளைப் பார்த்துக் கூறுவதாகவும் இருக்கலாம்.
மார்கழி மாசத்திலேதான்-கண்ணே நீ
மாராசாவைப் பார்க்கையிலே
தைப் பொங்கல் காலத்திலே-கண்ணே நீ
தயிரும், சோறும் திங்கையிலே
மாசி மாசக் கடைசியிலே-கண்ணே நீ
மாமன் வீடு போகையிலே
பங்குனி மாசத்திலே-கண்ணே நீ
பங்குச் சொத்தை வாங்கையிலே
சித்திரை மாசத் துவக்கத்திலே-கண்ணே நீ
சீர் வரிசை வாங்கையிலே,
வைகாசி மாசத்திலே-கண்ணே நீ
வயலைச் சுற்றிப் பார்க்கையிலே
ஆனி மாசக் கடைசியிலே-கண்ணே நீ
அடியெடுத்து வைக்கயிலே
அகஸ்மாத்தா ஆவணியில்-கண்ணே தீ
அரண்மனைக்குப் போகையிலே
ஐப்பசி மாசமெல்லாம் கண்ணே-நீ
அப்பன் விடு தங்கையிலே
கார்த்திகை மாசத்திலும்-கண்ணே
கடவுளுக்குக் கையெடடி.
தாயின் குடும்பம் எத்தொழிலைச் செய்து வாழ்கிறதோ அத்தொழில் தாலாட்டில் பெருமையாகக் கூறப்படுகிறது. மீனவர் குலத்தைச் சேர்ந்த தாய் மீன் பிடித்து, விற்றதைப் பற்றியும், விற்ற பணத்தில் அரைமூடி செய்ததைப் பற்றியும் பாடுகிறாள்.
ஐரை மீனும், ஆரமீனும்-கண்ணே
அம்புட்டுதாம் அப்பனுக்கு
வாளை மீனும், வழலை மீனும்-கண்ணாட்டி
விதம்விதமாஅம்புட்டிச்சாம்,
அரண்மனைக்கு ஆயிரமாம்
ஆயிரமும் கொண்டுபோய்-கண்ணாட்டி
அப்பன் விற்று வீடுவர
அண்டை விடும், அடுத்த விடும்-கண்ணாட்டி
ஆச்சரியப் பட்டார்களாம்,
பிரித்த மீனு ஆயிரத்தில்-கண்ணே நான்
பிரியமாக ஆறெடுத்தேன்
அயலூரு சந்தையிலே-கண்ணே நான்
ஆறு மீனை விற்றுப் போட்டேன்.
அரைச் சவரன் கொண்டுபோய்-கண்ணே அதை
அரை மூடியாய்ச் செய்யச் சொன்னேன்.
அரை மூடியை அரைக்குப் போட்டு கண்ணே நான்
அழகு பார்த்தேன், ஆலத்தியிட்டு
அத்தை மாரும் அண்ணி மாரும்-கண்ணே
உன் அழகைப் பார்த்து அரண்டார்களே.
அத்திமரம் குத்தகையாம்
ஐந்துலட்சம் சம்பளமாம்
சாமத்தலை முழுக்காம்-உங்கப்பாவுக்குச்
சர்க்கார் உத்தியோகமாம்
இவ்வாறு தாய் குடும்பத் தொழிலின் பெருமையைப் பாடுவாள். சர்க்கார் உத்தியோகம் மிக மேன்மையானது என்ற நம்பிக்கை இங்கே வெளியிடப்படுகிறது.
தந்தையின் பயணத்தைச் சொல்லுகிற தாலாட்டும், வேட்டையைப் பற்றிச் சொல்லுகிற தாலாட்டும், திருவிழாக்களைப் பற்றிச் சொல்லுகிற தாலாட்டும், தாய் மனத்தில் மகிழ்ச்சியை உண்டாக்கும் எந்த விஷயமும் தாலாட்டில் பொருளாகச் சேர்க்கப்படக் கூடும்.
தாலாட்டு குழந்தைப் பாசத்தை முதன்மைப்படுத்துவதாயினும், சமூகச் சித்திரம் என்னும் பின்னணியில்தான் பல்வேறு வகைப்பட்ட பின்னல்களாக எழுகின்றன.
இப்பாடல்கள் தாய்மாரின் செல்வநிலை, ஜாதி இவை பொறுத்து வேறுபடும்.
------------
செட்டியார் தாலாட்டு
தமிழ் நாட்டு செட்டிகுலம், பரம்பரையாக வாணிபத் தொழில் செய்து வளர்ச்சியுற்றது. சிலப்பதிகார காலத்தில் அரசரோடு சமமாக வாழ்ந்த பெருங்குடி வணிகர்களைப்பற்றி இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார். பிற்காலத்திலும், வெளி நாட்டோடு வாணிகத் தொடர்புகொண்ட வணிகர்கள் அவர்கள் குலத்தினரே. அக்குலத்தில் பிறந்த குழந்தையைத் தாலாட்டும் பொழுது அரண்மனையில் பிறந்த குழந்தைக்குச் சமமாக உயர்த்திப் பாடுகிறார்கள்.
செட்டியார் தாலாட்டு-1
ஆராரோ ஆரிரரோ
ஆறு ரண்டும் காவேரி,
காவேரி கரையிலயும்
காசி பதம் பெற்றவனே!
கண்ணே நீ கண்ணுறங்கு!
கண்மணியே நீ உறங்கு!
பச்சை இலுப்பை வெட்டி,
பவளக்கால் தொட்டிலிட்டு,
பவளக்கால் தொட்டிலிலே
பாலகனே நீ உறங்கு!
நானாட்ட நீ தூங்கு!
நாகமரம் தேரோட!
தேரு திரும்பி வர!
தேவ ரெல்லாம் கை யெடுக்க!
வண்டி திரும்பி வர!
வந்த பொண்கள் பந்தாட!
வாழப் பழ மேனி!
வைகாசி மாங்கனியே!
கொய்யாப் பழ மேனி!-நான் பெத்த
கொஞ்சி வரும் ரஞ்சிதமே!
வாசலிலே வன்னிமரம்!
வம்மிசமாம் செட்டி கொலம்!
செட்டி கொலம் பெத்தெடுத்த!
சீராளா நீ தூங்கு!
சித்திரப் பூ தொட்டிலிலே!
சீராளா நீ தூங்கு!
கொறத்தி கொறமாட!
கொறவ ரெல்லாம் வேதம் சொல்ல!
வேதஞ் சொல்லி வெளியே வர!
வெயிலேறி போகுதையா!
மாசி பொறக்கு மடா!
மாமன் குடி யீடேற!
தையி பொறக்குமடா-உங்க
தகப்பன் குடி யீடேற!
ஆராரோ! ஆரிரரோ
கண்ணே நீ கண்ணுறங்கு!
வட்டார வழக்கு: கொறத்தி - குறசாதிப் பெண்; கொறவர் - வேதம் பாடுவோர்.
சேகரித்தவர்: S. சடையப்பன்
இடம்: அரூர் வட்டம், தருமபுரி மாவட்டம்.
------------------
செட்டியார் தாலாட்டு-2
ஆறாம் பெரியேரி
அக்கரையும் பொன்னேரி
பொன்னேரி போய் திரும்ப
பொழுது இல்லா புண்ணியராம்.
நல்ல மாங்கொல்லையிலே
புள்ளி மான் மேயுதடா.
புள்ளி மான் புடிச்சிக் கட்ட
புடி கவறு பொன்னாலே!
காசி யளப்பான் செட்டி மகன்
முத்தாளப்பன் வேவாரி,
வச்சியளக்கச் சொல்லி,
வரிசையிட்டான் தாய்மாமன்,
அஞ்சு கிளி மையெழுதி-உங்க
ஐயனார் பேர் போட்டு,
கொஞ்சுக் கிளி போகுதப்பா!
கோவக் கனி கொண்டுவர.
அன்னக் கிளி போகுதையா-உனக்குத்
தின்னுங்கனி கொண்டுவர,
துங்கற கண்ணுக் கெல்லாம்
துரும்புகிள்ளி மையெழுத
கன்னான் மகனாம் நீ!
காசித் தட்டான் தன் மகனாம்!
செட்டி மகனாம் நீ!
சென்னு செட்டி பேரனாம். நீ!
மானத்து மீனாம் நீ!
மச்சி செட்டி தான் மகனாம்!
தோட்டத்து மீனோ நீ!
தொரைங்க கிளாமணியோ!
வண்டு கொடஞ்ச மரம்!
வாசலுக்கு ஏத்த மரம்!
தும்பி தொளைச்ச மரம்!
தூணாகுமோ தொட்டிலுக்கு?
ஏறாத மலையேறி,
இளவாரை மூங்கைவெட்டி,
எட்டாத தொட்டிலிட்டு
எட்டாத தொட்டிலிலே,
தொட்டாடும் கண்மணியே!
தொட்டிலிட்ட நல்லம்மான்,
பட்டினியாய்ப் போராண்டா,
பட்டினியாய்ப் போன மாமன்-உனக்குப்
பரியங் கொண்டு வருவானோ?
வட்டார வழக்கு: வம்மிசம்-வம்சம்; பெத்த-பெற்ற; வேவாரி-வியாபாரி, கொறம்-குறம், புடிச்சுக்கட்ட-பிடித்துக்கட்ட; மானத்து மீன்-வானத்துமீன்; தொளைச்ச-துளைத்த; தொரைங்க-துரைகள்; பரியம்-பரிசம். காசி அளப்பான் செட்டிமகன்-காசி பதம் என்ற குறிப்புரையில் காண்க.
துரைங்க கிளாமணியோ!-துரைகளது கிளர்மணியோ என்று படிக்கவும்.
குறிப்பு: காசிபதம்-நாட்டுக் கோட்டைச் செட்டியர்களை நகரத்தார் என்று அழைப்பது வழக்கம். பண்டைக் காலத்தில் கூட்டாக வாணிபம் செய்யும் குழுக்களுக்கு நகரம் என்று பெயர் உள்ளன. இதனைச் சோழர் காலத்திய கல்வெட்டுக்களால் அறிகிறோம். வடநாட்டு நகரங்களால் காசியைத் தமிழர் அறிந்திருந்தனர். அவ்வளவு தொலைவிலுள்ள நகரத்திற்குச் சென்று இக் குழந்தை பெரியவனான பின்பு வியாபாரம் செய்வான் என்பது தாயின் கருத்து.
தேர்-அரசனைப் போல இவன் வருங்காலத்தில் தேரில் செல்லுவான்.
கொறத்தி கொறமாட-குறத்தி குறமாட குறம் குறத்தியர் பாடும் ஒரு கூத்தைக் குறிக்கும்.
கொறவர்-குரவர், வேதம் பாடுவோர்; பழங்காலப் பண்டிதர்கள் குரவர் என அழைக்கப் பட்டார்கள். அது பேச்சு வழக்காக வந்துள்ளது.
தை பிறந்தால் வழி பிறக்கும்" என்ற பழமொழி இங்கு பயின்று வந்துள்ளது.
சேகரித்தவர்: S. சடையப்பன்
இடம்: சேலம் மாவட்டம்.
------------------
தாலாட்டு : தாயின் கனவுகள்
பின் வரும் தாலாட்டுப் பாடல்கள் நெல்லை மாவட்டத்திலுள்ள சிவகிரி முதல் குற்றாலம் வரையுள்ள பகுதிகளில் பாடப்படுகிறது. இந்நிலப் பரப்பு செழிப்பான நன்செய்ப் பிரதேசம் ஆகும். பல சிற்றாறுகள் இந்நிலப் பகுதியை வளப்படுத்துகின்றன. இப்பாடல்கள் நில வளத்தால் உழவனுக்கு ஏற்படும் பெருமிதத்தைச் சொல்லுகிறது. மலை சார்ந்த இப்பகுதியில் பல மலைக் கோயில்கள் உள்ளன. குறிஞ்சித் தெய்வமான வேலன் வள்ளி, தெய்வயானையோடு பல சிற்றூர்களில் கோயில் கொண்டிருக்கிறான். இப்பகுதியிலுள்ள நிலத்தின் வளத்தைத் தன் குழந்தைக்கு எடுத்துச் சொல்லுகிறாள் தாய். மலையில் விளையும் பொருள்களான ஏலக்காயும், ஜாதிக்காயும், அவனுடைய மூத்த மாமன் கொல்லையில் விளைகின்றனவாம். மாமன் பெருமை புதிய முறையில் சொல்லப்படுகிறது. மருதமும், குறிஞ்சியும், இயற்கையில் தம்முள் மயங்கி இருவகை நிலங்களின் விளை பொருள்களை யெல்லாம் தன் செல்வ மகனுக்கு அளிப்பதாகத் தாய் கனவு காண்கிறாள்.
ஆராரோ, ஆரிரரோ,
ஆராரோ, ஆரிரரோ
மலட்டாறு பெருகிவர,
மாதுளையும் பூச்சொரிய,
புரட்டாசி மாதம்
பிறந்த புனக் கிளியோ
அஞ்சு தலம் ரோடாம்!
அரிய தலம் குத்தாலம்!
சித்திரத் தேர் ஓடுதில்ல!
சிவ சங்கரனார் கோயிலுல:
காடெல்லாம் பிச்சி!
கரையெல்லாம் செண்பகப்பூ,
நாடெல்லாம் மணக்குதில்ல!
நல்ல மகன் போற பாதை.
வண்டாளப் பட்சி,
வயலெறங்கி மேயுதிண்ணு
சிங்கார வில்லெடுத்து-நீ
சிற கொடிக்க வந்த வனோ?
மதுரைப் பெரும்பாதை-ரெண்டு
மங்கை திண்ணு கோலமிட,
குதிரைப் பதி போட்டு-சொக்கர்
கோல மழிச்சாரே.
காடெல்லாம் ஒடி,
கதறி அலை மோதி,
காலெல்லாம் நோகுதையா,
கனியே உனைத் தேடி
வண்டடையும் சோலை,
மயிலடையும் குற்றாலம்,
வண்டடைஞ்ச சோலையிலே-நீ
வந்தடைஞ்ச வான்மயிலே.
ஊருணியும் வெட்டி,
உசந்த மடமும் கட்டி,
தாரணியார் பூசை செய்ய-நீ
தர்ம குல வம்முசமோ!
கடலோரம் கோயில் கட்டி,
கந்த னென்று பேர் விளங்கி,
அலையடிக்கு நேரமெல்லாம்-வேலவர்
ஆண்டி வேஷம் கொண்டாரோ?
------
மாமன் பெருமை
செக்கச் சிவப்பரோ-உங்க மாமா
சீமைக்கோர் அதிபதியோ
அழகு சிவப்பரோட-ஐயா நீ
அருமை மருமகனோ?
சின்னக் கிணறு வெட்டி
சிங்கார கல் பரவி
துவை வேட்டி போட்டு வரும்
துரை ராஜா உங்கள் மாமா
ஏலக்காய் காய்க்கும்,
இலை நாலு பிஞ்சு வரும்
ஜாதிக்காய் காய்க்கும்
உன் தாய் மாமன் வாசலிலே
கல்லில் எலுமிச்சை காய்க்கும்
கதலிப் பழம் பழுக்கும்
முல்லைப் பூ பூக்குதில்ல
உன் தாய் மாமன் கொல்லையிலே
தங்கக் குடை பிடிச்சு
தாசிமாரை முன்ன விட்டு - உன் மாமன்
தாசிக்கே விட்ட பணம்-ரெண்டு
தங்க மடம் கட்டலாமே
வெள்ளிக் குடை பிடிச்சு
வேசிகளை முன்ன விட்டு - உன் மாமன்
வேசிக்கே விட்ட பணம்-ரெண்டு
வெள்ளி மடம் கட்டலாமே!
முத்தளக்க நாழி
முதலளக்க பொன்னாழி
வச்சளக்கச் சொல்லி
வரிசை யிட்டார் தாய் மாமன்.
-------
தெய்வமே காப்பு
வாருமையா கந்தா
வரங் கொடுமே வேலவரே
தீருமையா இவன் பிணியை
திருச்செந்தூர் வேலவரே
பச்சை நிறம் வள்ளி
பவள நிறம் தெய்வானை
சோதி நிறம் வேலவரு
சொன்ன வரம் தந்தாரே!
புங்கக் கட்டை வெட்டி-திரபதைக்கு
புளியந் தணல் உண்டு பண்ணி;
பூவே றங்கும் நேரமெல்லாம் திரெளபதை
பொன்னிற மாய் வந்தாளே.
---------
யாரடித்தார்?
ஆரடிச்சா நீ யழுத?
அடிச்சாரச் சொல்லியழு
பேரனடிச் சாரோ
பிச்சிப்பூ கைனால?
மாமன் அடிச்சாரோ
மல்லிகைப்பூ கைனால?
மாமன் கைச் சிலம்போ
மச்சி னமார் கைச்சிலம்போ?-நீ
பேரனார் கொண்டைக்கு
வாடா மருக் கொழுந்தோ?
---------
மகன் பெருமை
பட்ட மரம் பாலூறும்,
பாவல்காய் தேனூறும்,
உளித்தமரம் தான் தழையும்,
உத்தமியாள் வாசலிலே,
வடக்கே ஒரு மூங்கில்
வளருதில்ல கல்மூங்கில்
வில்லுக்கு வில்லாகும்
விஜயனுக்கு அம்பாகும்
சொற் கேளா அர்ச்சுனர்க்கு
கண்டு வில்லு அம்பாகும்
வடக்கே மழை பேஞ்சு
வாசலெல்லாம் தண்ணி
தண்ணி வந்தன சயலிலே-நீ
தங்கி வந்த தாமரையோ?
வடக்கே மழை பேஞ்சு
வார்ந்த மணல் ஓடிவர
நடந்து போ பாலகனே-உன்
நல்ல தடம் நான் பார்க்க
வடக்கே ஒரு தாள்
வர்ணலட்சம் பூப்பூக்கும்
வாடை யடியாதோ
வரிசை மகன் கண்ணயர
தெற்கு ஒரு தாழை
தென் லட்சம் பூப்பூ க்கும்
தென்றல் அடியாதோ
செல்ல மகன் கண்ணயர?
வைகை பெருகிவர
வாளை மீன் துள்ளிவர
துள்ளி வந்த மீனுக் குல்ல-வேலவா
தூண்டி வலை போட்டாரே
பத்து வருஷமோ
பாலனில்லா வாசலிலே
கைவிளக்கு கொண்டு
கலி தீர்க்க வந்தவனோ?
விளக்கிலிட்ட எண்ணெய் போல
வெந்துருகி நிக்கயில
கலத்திலிட்ட பால்போல
கைக்குழந்தை தந்தாரே
மலடி மலடி என்று
மானிடர்கள் ஏசுகிறார்
மலட்டுக் குலமதையே-நீ
மறப்பிக்க வந்தவனோ!
மலடி புழுங்கலை-ரெண்டு
மான் வந்து திங்குதின்னு
மாதாளங்கம்பு வெட்டி-நீ
மான் விரட்ட வந்தவனோ
கொல்லையிலே தென்னை வச்சு
குறுத்தோல கொட்டாஞ் செஞ்சு
சீனி போட்டுத் திங்க
செல்வமே பிறந்தவனோ!
வில்வப் பொடி மணக்கும்
விரிச்ச தலைப் பூமணக்கும்
கதம்பப் பொடி மணக்கும்
கட்டழகன் கடந்தலிலே.
வட்டார வழக்கு: மணக்குதில்ல - மணக்கிறதல்லவா?
அழிச்சாரே-அழித்தாரே; வந்தடைஞ்ச-வந்தடைந்த, துவை வேட்டி-துவைத்த வேட்டி, வச்சளக்க-வைத்தளக்க: பூ வெறங்கும்-பூ இறங்கும்; பேஞ்சு-பெய்து
குறிப்பு: மலட்டாறு-திருவெண்ணெய் நல்லூர் அருகில் ஓடுவது, இவ்வாற்றில் நீரோடுவது அபூர்வம். தண்ணீர் ஓடாததைப்பொதுவாக இச்சொல் குறித்தது. "பட்டமரம்" "பாலுறும்" முதலியன.
மலடியாகவிருந்தால் தொட்டதெல்லாம் துலங்காது என்ற நம்பிக்கை பெண்ணுள்ளத்தில் வேரூன்றி நிற்கிறது. மலடி என்ற பகுதியில் காணப்படும் பாடலில் இதனைக் காணலாம். இவளுக்கு மகன் பிறந்துவிட்டதால் செத்தமரமும் தளிர்த்து விடுமாம். கல்யாண பாகற்காய் இனிப்பாகி விடுமாம். உளுத்த மரமும் தழைத்து விடுமாம். மாமன் தாசிக்குச் செலவழித்த பணம் பெருமையாகப் பேசப்படுகிறது.
சேகரித்தவர்: கார்க்கி
இடம்: சிவகிரி வட்டாரம்,
-------------
தாலாட்டு : வா, பசுவே வா
தாய் தன் மகனது வருங்காலப் புகழில் ஈடுபடுகிறாள். இவன் வருங்காலத்தில் துரைமகனாவானோ கைநிறைந்த புத்தகத்தைக் கையில் எடுத்துப் போதிக்கும் ஆசிரியனாவானோ? எப்படியாவது புகழ் பெற்று வாழப் போகும் இவனுக்கு பால் கொடுக்கும் பசுவிற்கும் பெருமை உண்டல்லவா? அப்பெருமையைத் தேடிக்கொள்ள பொழுதிறங்க ஓடிவாவென்று தாய் பசுவை அழைக்கிறாள்; முதற் பாடல் நெல்லை மாவட்டத்தில் பாடப்படுவது. இரண்டாம் பாடல் சேலம் மாவட்டத்தில் பாடப்படுவது. இரண்டாம் பாடலில் மருமகன் பால்குடிக்க மாமன் தங்கச் சங்கு செய்தளித்த விவரம் கூறப்படுகிறது தமிழ்நாட்டில் இப்பொருள் பரவலாக பாடப்படுகிறது.
கண்ணே கண்மணியே
கண்ணுறங் காயோ!
காரவீடோ கச்சேரியோ,
கைநிறைந்த புத்தகமோ!
ஸ்ரீ வில்லிபுத்தூர் கச்சேரியோ,
செல்லத் துரைமகனோ!
மானுறங்கும் மெத்தை, நீ
மயில் உறங்கும் பஞ்சுமெத்தை
தான் உறங்கா என் கண்ணே
தவம் பெற்று வந்தவனோ!
பட்டால தொட்டில்,
பவளக் கிலுகிலுப்பை
முத்தாலா பரணம்
முடியப் பிறந்தவனோ!
மலையேறிப் பசுமேய
மலைக்கெல்லாம் ஓசையிட
பொழுதிறங்க வா பசுவே என்
பொன்னு மகன் பால்குடிக்க
மலை மேலே பசு மேயும்
மலைமுடியும் ஓசை விடும்
காலையிலே வா பசுவே
கண்ணு மகன் பால் குடிக்க
பொழுதுறங்க வா பசுவே
என் பொன்னு மகன் பால் குடிக்க
மாட்டுப் பால் போட்டால்
மறுவழிஞ்சு போகுமின்னு:
ஆட்டுப்பால் போட்டா
அறிவழிஞ்சு போகுமின்னு:
கலையம் கழுவி
காராம் பசுக் கறந்து
அடுப்பு மொழுவி
அரும்பரும்பாக் கோலமிட்டு
செம்பு வெளக்கி
சிறு உமி பரப்பி
தங்க வெற கொடிச்சு
வெங்கலத்தால் பால் காச்சி
பொன்னு சங்கெடுத்து
போட்டாராம் உன் மாமன்
இத்தனையும் செய்வதற்கு
என்ன வெகுமதியோ
கிண்ணத்திலே சந்தனமாம்
கிளிமூக்கு வெத்திலையாம்
சருகைத் தலைப்பாவாம்
ஜாடை செய்யும் சால்வையாம்
வட்டார வழக்கு: மொழுவி-மெழுகு போட்டா-புகட்டினால்.
சேகரித்தவர் ம. கிருஷ்ணன்
இடம்: போத்தனூர், சேலம் மாவட்டம்.
அனுப்பியவர்: கு. சின்னப்ப பாரதி
-----------
தாலாட்டு : வேட்டை
சிறுவன் சிவகிரியில் பிறந்தவன். மலைச்சாரலில் மான், பன்றி, முயல் போன்ற விலங்குகள் உண்டு. மலைச்சாரல் பயிரைக் காப்பதற்கும், இறைச்சி பெறுவதற்காகவும் சிவகிரி இளைஞர்கள், கடிநாய் பிடித்து வேட்டைக்குச் செல்லுவார்கள். இவர்களுள், சிறுவனது மாமன்மாரும் இருக்கிறார்கள். சிறுவனது தாய் அவர்களைப் பற்றித் தனது தாலாட்டில் கூறி, அவனது வீர உணர்வுக்கு உரமிடுகிறாள். அவர்கள் வேட்டையாடித் திரும்பும்போது அவர்களை வரவேற்க தலைப்பாகை அணிந்து, வல்லவாட்டுப் போட்டு மருமகனை வாசலில் நிற்கச் சொல்லுகிறாள்.
மானல்ல ஒடுது,
மறிடா நல்ல தம்பி
மான் ஓடும் நேரமெல்லாம்
தானோடி வந்தவனோ
காட்டக் கலைத்து உன்மாமன்
கடி நாயை ஏவிவிட்டு
வேட்டைக்குப் போராக,
வீரபுலி உங்கமாமன்,
பன்றி படுமோ,
பதினெட்டு மான் படுமோ,
சிங்கம் புலி படுமோ, உங்க
சின்ன மாமன் வேட்டையில
வண்டாடிப் பூமலர,
வையகத்தார் கொண்டாட-என் கண்ணே
உன்னைக் கொண்டாடிப் பூமுடியும்
உன் கோலத்திருமுடிக்கு
ஏலக்காய் காய்க்கும்;
இலை நாலு பிஞ்சுவிடும்
சாதிக்காய் காய்த்து இறங்கும்-உன்
தாய் மாமன் வாசலிலே
பச்சை நிறம் வள்ளி,
பவள நிறம் தெய்வானை
சோதிநிறம் சுப்பையா
சொன்ன வரம் தந்தாரோ!
உசந்த தலைப்பாவோ,
உல்லாச வல்லவட்டு
நிறைந்த தலைவாசலிலே
நீ நிற்பாய் மருமகனே!
வட்டார வழக்கு: மானல்ல-மானல்லவா, போராகபோகிறார்கள்; தலைப்பா-தலைப்பாகை.
சேகரித்தவர்: குமாரி பி. சொரணம்
இடம்: சிவகிரி, நெல்லை மாவட்டம்.
----------
பெண் தாலாட்டு
பெண் குழந்தை நடை பயிலுகிறது; தாய் அதன் தளர் நடையைக் கண்டு மகிழ்கிறாள். அவள் மனத்தில் சில சித்திரங்கள் தோன்றுகின்றன. தன்மகள் பக்கத்து வீதிகளுக்குச் செல்லும்பொழுது அவள் வயதுப்பெண் குழந்தைகள் அவளோடு சேர்ந்து விளையாட ஆசைப்பட்டு அவளுடைய பந்தையும், செண்டையும் மறைப்பதை மனக் கண்முன் காண்கிறாள். குழந்தைக்கு இரண்டு அத்தைமார்கள் உண்டு; அவர்களுடைய தெரு
வழியே செல்லும்பொழுது அவளைக் கண்டு அத்தை மக்கள், அவளது அழகில் ஈடுபட்டு அவள் வாயை முத்தமிடுகிறார்களாம். அத்தை மகன் பெண்ணுக்கு மாப்பிள்ளை முறையாவான். பல கணவர் முறை நிலவியிருந்த காலத்தில் கூட்டு மண முறைக்கு அத்தைமகன், மாமன் மகன் இவர்கள் மாப்பிள்ளை முறையாக இருந்தார்கள். சொத்துரிமை தந்தை வழியாக இறங்கத் தொடங்கிய பின்பு கூட்டு மணமுறை படிப்படியாக மறைந்துவிட்டது. அப் பழைய வழக்கத்தின் எச்சமாகவே முறைமாப்பிள்ளை முறைப்பெண் என்ற வழக்கம் இன்னும் நிலைத்து நிற்கிறது.
பாப்பார வீதிக்கு-எங்க பொன்னு
பந்தாடப் போனாலும்......
பாப்பாரப் பொன்னுகண்டா
பந்தெடுத்து மறைச்சிடுவா
செட்டித் தெரு வீதிக்கு
செண்டாடப் போனாலும்
செட்டிச்சி பொண்ணு கண்டா
செண் டெடுத்து மறைச்சிடுவா,
கடலையே திண்ணுக் கிட்டு
கட வீதி போனாலும்
கட கெட்ட அத்தை மவன்
கட வாயே முத்த மிட்டான்
வெல்லத்தே திண்ணுக்கிட்டு
வீதியிலே போனாலும்
வெக்கங் கெட்ட அத்த மவன்
வெறு வாயே முத்தமிட்டான்.
வட்டார வழக்கு: திண்ணுக்கிட்டு-தின்று கொண்டு
சேகரித்தவர். முத்துசாமி
இடம்: நாமக்கல் வட்டம், சேலம் மாவட்டம்.
------------
சீட்டெழுதி விட்டாளாம்
சின்னாத் தங் கரையோரம்-எஞ்சின்னையா நீ
சிறு மணலுக் கொழிக் கையிலே-உன்
சின்ன அத்தைக் கண்டாளாம்-உனக்குச்
சீட்டெழுதி விட்டாளாம்!
பெரி யாத்தங் கரையோரம்-எஞ் சுப்பையா நீ
பெரு மணலுக் கொழிக் கையிலே-உன்
பெரிய அத்தைக் கண்டாளாம்- உனக்குப்
பேரெழுதி விட்டாளாம்!
பனை பிடிங்கிப் பல் விளக்கி-நீ
பயிர் போல நாமமிட்டால்
நாமத்தின் அழகுகண்டு
நச்சுவாளாம் அத்தை மகன்.
குறிப்பு: பல் விளக்கும் குச்சி பனைமரம்-உயர்வு நவிற்சி.
உதவியவர்: புலவர் இராம ராசன்
இடம்: வேலூர், சேலம் மாவட்டம்.
சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி
-----------
தாலாட்டு : சாய்த்தாள் திருமுகத்தை
"வாணர மதுரை என்னும் மானாமதுரையை தங்கள் புராதனப் பிறப்பிடமாக தேவர், கள்ளர் என்னும் சாதியினர் கருதுகிறார்கள். தாங்கள் "பாண்டியன்" உறவினர் என்றும் நம்புகிறார்கள்.
இத் தாலாட்டுப் பாடலில் தாய் வருங்காலம் பற்றி காணும் கனவொன்றைச் சித்திரமாகத் தீட்டுகிறாள். மானாமதுரையில் பிறந்த இச் சிறுவன் தனது தங்கைக்குச் சீதனமாக பிறந்த ஊரையும், வென்று கொண்ட மதுரையில் பாதியையும் விட்டுக் கொடுத்தான். மதுரைக்கருகே தல்லா குளம் என்றோர் ஏரி உள்ளது. அதனையும் சேர்த்து தனக்குச் சீதனமாகத் தரவில்லையே என்று தங்கை சிணுங்கிக் கொண்டு திருமுகத்தைச் சாய்த்துக் கொண்டாளாம். "அண்ணன் எது கொடுத்தாலும், இன்னும் அதிகமாகக் கொடுக்கமாட்டானா என்று ஏங்கும் தங்கை உனக்குப் பிறக்கப் போகிறாள். அவள் ஆசையை நிரப்புமளவுக்கு, நிறையப் பொருள் சேர்க்கவேண்டும்" என்று பேச்சுப் புரியாத குழந்தைக்குத் தாய் போதிக்க முயலுகிறாள்.
உச்சிமலைக் கந்தா,
உயர்ந்த மலை வேல்முருகா
சாய்ந்த மலைக்கந்தா
என் சஞ்சலத்தைத் தீருமய்யா
சீரார் சிலம்போசை, என்
செல்வ மகன் காலோசை
பாரச் சிலம்போசை, நீ
பைய வா பாலகனே!
மழை பெய்து தண்ணிர் வர,
வாந்த மணல் ஓடிவர,
நீ நடந்து வா பாலகனே!
உன் தடம் நான் பார்க்க
ஐந்து தலையாண்டி,
ஆறு முக வேலாண்டி
பிச்சைக்கு வந்தாண்டி,
பிள்ளைக்கலி தீர்த்தாண்டி
மலட்டு ஆறு பெருகிவர,
மாதுளையே பூ சொரிய
புரட்டாசி மாத்தையிலே பொன்
பெட்டகம் போல் வந்தவனோ!
தாழை ஒரு மடலோ, உன்
தாயாருக்கோ ஒரு மகனோ!
தாழை மடல் ஓலை கொண்டு
தமிழ் படிக்க வந்தவனோ!
மானா மதுரை விட்டு தங்கை மீனாளுக்கு
மதுரையிலே பாதி விட்டு
தல்லா குளம் தரவில்லைண்ணு தங்கை மீனா
சாய்த்தாள் திருமுகத்தை.
சேகரித்தவர்: குமாரி பி. சொரணம்
இடம்: சிவகிரி, நெல்லை மாவட்டம்.
-------------
காது குத்தக் காணிக்கை
குழந்தைக்குக் காது குத்தப் போகிறார்கள். அதற்கு மாமன் என்ன சீர் கொண்டு வருவான் என்று தாய் அனுமானம் செய்து பார்க்கிறாள். ஆசாரியை அழைத்துக் காதுக்குக் கடுக்கண் செய்யச் சொல்லுகிறாள்.
தோழியரை அழைத்துப் பாலனுக்குக் கண்திருஷ்டி வராமல் திருஷ்டி சுற்றச் சொல்லுகிறாள்.
பிறர், குழந்தையின் அழகைக் கண்டு ரசித்து விட்டால் அதற்கு நோய் வரும் என்று தமிழ்த் தாய்மார்கள் நம்புகிறார்கள். இந்த நம்பிக்கை புராதன மந்திரவாதத்தின் அடிப்படையில் எழுந்தது. சில கண்களுக்குத் தீமையை விளைவிக்கும் சக்தியுண்டென்பது மந்திரவாதக் கருத்து. கண்பட்டால் நோய் நொடி வரும் என்பது நம்பிக்கை.
காது குத்துவதும் குழந்தை உடலில் ஏதாவது சிறுகாய மொன்றை ஏற்படுத்துவதும் எமனை ஏமாற்றச் செய்யும் தந்திரங்கள். அழகான குழந்தைகளைக் கண்டு எமன் ஆசைப் பட்டு விடுவானாம். அதனால் குழந்தைகள் இறந்துபோகும். எமனை ஏமாற்ற உடலில் சிறுகாயம் ஏற்படுத்திவிட்டால் போதுமாம். இந்த நம்பிக்கை தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல், மத்திய ஆசியாவிலும், உலகமெங்கும் நிலவி வந்தது.
குழந்தையின் ஆயுளைப் பாதுகாக்கும் சடங்கு ஆகையால், இதனைப் பெண்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடுவர். இன்று இவ்வழக்கத்தின் உட்பொருள் நமது தாய்மாருக்குத் தெரியாது.
சீதைக்கும் இராமருக்கும்
சிறந்த கலியாணம்
சீரான மேளம் வரும்
சிதம்பரத்து சங்கு வரும்
காசியிலே மாலைவரும்
கண் குளிர்ந்த இராமருக்கு
பால் போல் நில வடிக்க,
பரமசிவர் பந்தடிக்க
பரமசிவர் பந்தை நீ
பார்த்தடிக்க வந்தவனோ!
ஈக்கி போல் நிலவடிக்க,
இந்திரனார் பந்தடிக்க
இந்திரனார் பந்தை நீ
எதிர்த்தடிக்க வந்தவனோ!
முத்தளக்கும் நாழி!
முதலளக்கும் பொன் நாழி
வச்சளக்கச் சொல்லி
வரிசையிட்டார் தாய்மாமன்
மாம்பிஞ்சு கொண்டு,
மதுரைச் சிமிக்கி கொண்டு
காது குத்த வாராக
கனக முடி உங்களம்மான்
மானா மதுரையிலே
மாட்டையும் மந்தையிலே
மாட்டு விலை கூற வந்த
மன்னன் மருமகனே!
என் அரசன் காது குத்த
என்ன செல்லும் ஆசாரி
பாக்கு பதக்கு
பச்சரிசி முக்குறுணி
எள்ளு இரு நாழி
இளந் தேங்காய் முந்நூறு
அள்ளி விளம்புங்க நான் பெற்ற
அருமை மகன் காதரிசி
சிந்தி விளம்புங்க
செல்ல மகன் குத்த
பச்சை மூங்கில் வெட்டி
பவள மூங்கில் நார் உரித்து
சொச்ச மூங்கில் வெட்டங் குள்ள சுப்பையா
சொன்ன வரம் தந்தாரோ!
ஏறய்யா இராவணா!
இறங்கய்யா மேடவிட்டு
பாரய்யா இராவணா! இராமர்
படை போகிற பாவனையே
பொட்டல்ல பொய்பலவா துரோபதைக்கு
அத்தனையும் சாதிலிங்கம்,
சாதிலிங்கம் மேலிருந்து
துரோபதை தருமர் கதைகேட்டாளோ!
பத்து வருஷமா என் கண்ணே-நீ
பாலனில்லா வாசலிலே!
கை விளக்குக் கொண்டு நீ
கலி தீர்க்க வந்தவனோ!
கண்ணே நீ உறங்கு என் கண்ணே
கான மயில் நீ உறங்கு
கண்ணுக்குக் கண்ணெழுதி-உன்
கடைக் கண்ணுக்கு மையெழுதி
கண்ணான கண்ணுக்கு என் ஐயா!
உனக்குக் கண்ணேறு தையாமல்
சுண்ணாம்பு மஞ்சளும்
கத்தி யெறி சூரியர்க்கு
வட்டார வழக்கு: கண்ணேறு; தையாமல்-கண்பட்டு விடாமல்.
சேகரித்தவர்: குமாரி பி. சொரணம்
இடம்: சிவகிரி, நெல்லை மாவட்டம்.
--------------
தாலாட்டு : தந்தையும் மாமனும்
சிவகிரி ஜாமீனில் வேலை பார்த்து வருகிறார் தந்தை. சிறுவனிடம் அவர் பெருமையைப் பற்றிப் பேசுகிறாள் தாய். அரைக்காசு சம்பளமென்றாலும் அரண்மனை சேவகமல்லவா? கைகட்டி வாய் பொத்தி ஜமீன்தாரிடம் ஊழியம் செய்யும் வேலைக்காரர் மனைவியின் கற்பனையில்,
"கோர்ட்டுத் துறந்து குறிஞ்சிமேல் உட்கார்ந்து,
கேஸை விசாரிக்கும் கவர்னரோ உங்களப்பா"
கவர்னராகி விடுகிறார். அது போலவே அவளது சகோதரன் வில்லைச் சேவகனாக இருந்த போதிலும் அவளுடைய கற்பனையில்,
'தங்க வில்லைச் சேவுகரோ, உங்க மாமா
தரும துரை வைத்தியரோ?
பூமியில் உள்ளவர்க்குப்
பிணிதீர்க்கும் வைத்தியரோ?'
இவ்வாறு உயர்ந்து விடுகிறான். தந்தையும், மாமனும் குழந்தைக்குப் பால் குடிக்க வாங்கும் சங்கு, தேய்த்துக் குளிக்க வாங்கும் எண்ணெய், காது குத்துச் சடங்குக்குக் கொண்டு வரும் வரிசைகள் இவையெல்லாம் அவள் கற்பனைத் திரையில் விரிகின்றன.
"என்னரசே என் கனியே என் ஐயா
இது நாளும் எங்கிருந்தாய்!
மாசி மறை விருந்தேன்
மழைமேகம் சூழ்ந்திருந்தேன்
மாதம் சென்றவுடன்
மாதாவைப் பார்க்க வந்தேன்
ஸ்ரீரங்கம் செந்திமலை நீ
சேவிக்கும் பழனி மலை
பழனிமலைக் கந்தனோ நீ
பாதம் பணிந்த வனோ
சங்கரலிங்கம் என் ஐயா நீ
தனிக்கோடி இராமலிங்கம்
பூரிலத்து லிங்கத்தை நீ
பூசை செய்ய வந்தவனோ!
மான் கண்டேன் உன்னைப் போல் ஒரு
மயில் கண்டேன் கானலிலே
தேன் கண்டேன் கூட்டிலே
உன்னைப் போல்
ஒரு சிலை கண்டேன் கோயிலே
தொந்தி குலுங்க
துடை குலுங்க வேட்டி கட்டி
அந்தி நடை நடந்து உங்களப்பா
அதிகாரி வந்திறங்கி
கோட்டுத் துறந்து
குறிஞ்சிமேல் உட்கார்ந்து
கேசை விசாரிக்கும்
கவர்னரோ உங்களப்பா!
அரைக்குகந்த துயிலுடுத்தி
அரண்மனைக்குப் போகையிலே
துரைக் கிசைந்த வார்த்தை சொல்லும்
உங்களப்பா ஜோதிக்கிளி வாயாலே.
வேட்டி நயமோ உங்களப்பாவுக்கு
வெளுக்க வண்ணான் கை மெதமோ,
சல்லா மெதமோ உங்களப்பா
சாமி கெட்டும் துப்புரவோ
சீராட்டு நோம்பு
சிவ நோம்பு நாளையிலே
உனக்குத் தாலாட்ட வாராக
மதுரைத் தாசிமார் எல்லோரும்
வட்டார வழக்கு: பூரியத்து- பூர்வீகமான.
சேகரித்தவர்: குமாரி P. சொரணம்
இடம்: சிவகிரி
------------
தாலாட்டு : ஆசாரி, வாரும்
குழந்தைக்கு இப்பொழுது தொட்டில் வேண்டும். நல்ல தொட்டிலாக ஆக்கமுள்ள தொட்டிலாகச் செய்ய வல்லவர் கழுகுமலை ஆசாரி. அவரை அழைத்து தொட்டில் செய்ய வேண்டிக் கொள்ளுகிறாள் தாய்.
தொட்டிலில் கிடக்கும் இவன், அடுத்த வருஷம் நடை பயிலுவான் கால் முளைத்தால் அடுத்த தெருவிற்கு ஓடுவான், பந்தடிப்பான். அடுத்த தெருக்களிலுள்ள வேறு சாதி நண்பர்கள் இவனை அருமையாகக் கொண்டாடுவார்கள். அவர்கள் இவனை மதிக்க வேண்டுமானால் கை, காது, கழுத்து இவற்றில் ஏதாவது ஒன்றிரண்டு அணிந்திருக்க வேண்டாமா? அதற்காகச் செட்டியாரிடம் ஆபரணங்கள் வாங்குகிறாள் தாய். தந்தை வந்ததும் பணம் கொடுத்து அனுப்புகிறார்.
ஆசாரி, ஆசாரி கழுகுமலை ஆசாரி
கழுகுமலை ஆசாரி நான் பெத்தானுக்கு
ஒரு நல்லூஞ்சல் கொண்டு வாரும்
அடித்த கைக்கு மோதிரமும்
அள்ளி விடச் சந்தனமும்
செட்டிமார் தெருவிலே என் கண்ணே
நீ சென்று விளையாடயிலே
நான் பெத்தான்,
செட்டிமார் பெண்களெல்லாம்
உன் செண்டு விலை மதிப்பார்.
பாப்பார தெருவிலே நான் பெத்தான்
பந்து விளையாடயிலே
பாப்பாத்திப் பெண்களெல்லாம்
உன் பந்தை விலை மதிப்பார்
வெள்ளி மலைத் தெக் கொதுங்கி
வேடர் எல்லாம் தானோடி
வேடர் அறியாம
வேங்கை மரம் ஏது வள்ளி
காசி விசுவரோட, மனம்
கலங்காத கண்டனோட
பேசும் கிளி ராஜனோட
பின் துணையா வந்த கண்ணோ!
மங்களா கட்டி
மாமரங்கள் உண்டு பண்ணி!
மங்களா முன்னாலே நீ
மல்கோவா மாம்பழமோ!
கொல்லையிலே தென்னை வைத்து
குருத் தோலை பெட்டி செய்து
சீனி போட்டுத் திங்க-நீ
செல்லமாய்ப் பிறந்தவனோ!
பட்டெடுத்தாலும் தொட்டி கெட்ட
பசும் பொன்னெடுத்து பொட்டுரைக்க
ஆட்டுங்க தாதியரே
என் அன்னக்கிளி கண்ணயர
வாருமய்யா வளையல் செட்டி,
வந்திறங்கும் பந்தலிலே
கோல வளையல் தொடும்
குணத்துக்கொரு வளையல் தொடும்
நீல வளையல் தொடும்
நான் பெத்தானுக்கு
நிறத்துக்கொரு பச்சை தொடும்
வளையல் தொட்ட செட்டி
வயிறு எரிந்து போகாம
அள்ளிப்பணம் கொடுத்து
அனுப்பி வைத்தார் உங்களப்பா
கல்லெடுத்து கனி சொறிஞ்சு
கம்சனையே மார் வகுத்து
ரூபம் செய்யும் மாயன் பெருமாளோ!
பச்சை முடிமன்னரோ
பவழமுடி இராவணரோ
அச்ச மெல்லாம் தீர்க்க வந்த
ஆதி நாராயணரோ
பால் குடிக்கக் கிண்ணி,
பழம் திங்க சேனோடு
நெய் குடிக்கக் கிண்ணி,
நிலம் பார்க்கக் கண்ணாடி
கொண்டைக்குக் குப்பி
கொண்டு வந்தார் தாய்மாமன்
கல்லெடுத்துக் கனி யெறிந்து உங்க மாமா
காளி யோட வாதாடி,
வில்லெடுத்து படை திரட்டும் நீ
வீமன் மருமகனோ!
தவளை குலவையிட கோந்த மூர்த்தி
தாமரையும் பூமலர
தவளைச் சத்தம் கேட்டு இராமர்
தள்ளி நடகொண்டாரோ!
காத்தடியா மூலையிலா
கர்ணனுக்குத் தொட்டி கட்டி
காத்தடிக்க நேர மெல்லாம்
கர்ணன் தொட்டில் வீணை இசையாம்
வெயிலடியா மூளையிலே
வீமனுக்குந் தொட்டி கட்டி
வெயிலடிக்க நேர மெல்லாம்
வீமன் தொட்டில் தானாட
தங்க வில்லை சேவுகரோ, உங்கமாமா
தரும வைத்தியரோ
செங்கல் சிகப்பரோ உங்கமாமா
சீமைக்கு அதிபதியோ!
அதிக சிகப்பரோட ஆசை மருமகனோ!
காஞ்சிவரத் தெண்ணை
கண்ணே கரிக்குதிண்ணு
தென் காசி எண்ணெய்க்கு உங்கப்பா
சீட்டெழுதி விட்டாக
வாசலிலே வண்ணமரம் உங்களப்பா!
வம்சமே இராச குலம்
இராச குலம் பெற்றெடுத்த
இரதமணியே கண்ணசர
பூனைப் பால் பீச்சி
புலிப்பால்ல உறையூத்தி
ஆனைப்பால் காயுதில்ல உங்களப்பா
அதிகாரி வாசலிலே
வெள்ளி முழுகி என் கண்ணே உன்னை
வெகு நாள் தவசிருந்து
சனி முழுகி நோம்பு இருந்து
நீ தவம் பெற்று வந்தவனோ!
பால் சங்கு போட்டி
பவள வாய் நோவுதின்னு
பொன் சங்கு வாங்க
போராக உங்களப்பா
கடைக்குக் கடைபார்த்து
கல் பதித்த சங்கு பார்த்து
எடைக்கு எடைபார்த்து
எதிர் எடைக்குப் பொன் வார்த்து
வாங்கி வந்தார் தாய்மாமன்!
எண்ணெய்க் கிணறுகளாம்,
எதிரே கொடிமரமாம்
தண்ணீர்க் கிணறுகளாம்
தட்டான் குளத்தா
தங்கி இருக்கும் மண்டபமாம்
மண்டபத்துக் குள்ளிருந்து
தட்டான் குளத்தா
மடிக் குழந்தை தந்தாளாம்
தங்க விளக்கெரிய
உங்க தாத்தா வாசலிலே
விடி லாந்தல் நிண்ணெறிய
வீம ராஜா வாசலிலே
நீ விளையாட வந்த கண்ணோ!
மட்டம் சிறு குழந்தை உங்கள்
மாமனார் தேசமெங்கள்
அன்னா தெரியுதில்லா உங்க மாமன்மார்
அன்னக் களஞ்சியங்கள்
முட்டாயிப் பெட்டி கொண்டு
முதல் தரத்துச் சீனி கொண்டு
பன்னிருச் செம்பு
பார்க்க வாராக உங்களம்மான்
வட்டார வழக்கு: மங்களா-பங்களா; தொட்டி-தொட்டில்; கெட்ட-கட்ட;
மார்-மார்பு; தட்டான் குளத்தா-நாட்டார் தெய்வம்.
குறிப்பு: தட்டான்குளத்தா-இது தாயின் பரம்பரை ஊர். அம்மனாகவோ, அல்லது குலதெய்வமாகவோ இருக்கும். ஒரு ஊரில் வசிப்பவர்கள் தூரத்து ஊர்களில் குலதெய்வம் இருப்பதுண்டு.
சேகரித்தவர்: P. சொரணம்
இடம்: நெல்லை மாவட்டம்
-----------
தாலாட்டு : கோயிலுக்கு என்ன செய்வோம்?
குழந்தை, தாய் தந்தையர் மனம் குளிர வளர்ந்து வருகிறான். அவர்கள் மகிழ்ச்சி தாங்காமல் இவ்வரத்தைத் தனக்களித்தற்காக, திருப்பதி வெங்கடாசலபதிக்கும், மதுரை மீனாட்சிக்கும், உள்ளுர் திரெளபதியம்மனுக்கும் என்னென்ன நிறைவேற்றுதல்கள் செய்ய வேண்டுமென எண்ணியிருக்கிறார்களோ, அதனை மகனிடம் சொல்லுகிறாள்.
கட்டைக் களஞ்செதுக்கி,
கருமலையைச் சூடேத்தி
பொன்னைப் பொலி போடும்
புண்ணியனார் பேரரசோ?
சாலை பதிப்பமோ,
சத்திரங்கள் கட்டுவேமா!
மதுரைக்கும், திருப்பதிக்கும்,
வகுப்போமே பூஞ்சோலை,
கடலுக்கு சம்சாரி,
கப்பலுக்கு வியாபாரி,
இனி வார கப்பலுக்கு,
உங்க தாத்தா தீர்த்த கணக்காளி!
செங்கல் அறுத்து நான் பெத்தாக்கு,
சித்திரம் போல் வீடு கட்டி
அண்ணாந்து பாரய்யா நம்ம தாத்தா
அன்னக் களஞ்சியத்தை
அரண்மனைக்கு மேற்கே
ஆரவல்லி நாடகமாம்
குறிஞ்சி போட்டுக் கூத்துப் பார்க்கும்
கோர்டார் உங்களப்பா!
அவரமணி, துவரமணி,
அரண்மனைக்கே ஒத்த மணி!
துவரமணி பெற்றெடுத்த
துரைமகனே நித்திரைசெய்.
மானத்து மீனோ!
மேகத்துப் பன்னீரோ!
தாகத்தைத் தீர்க்க வந்த
தங்க ரதக் கிளியோ
வெள்ளி வளையோடி
மேகத்து மின்னோடி
தங்க வளை ஒடுதில்ல உங்க தாத்தா
அதிகாரி வாசலிலே
பட்டணத்து வில்லையோ,
பணம் பெற்ற பன்னீரோ,
நித்தம் நித்தம் பூசி வரும்
உத்தியோகஸ்தர் உங்களப்பா
அத்திமரம் குத்தகையாம்,
ஐந்து லட்சம் சம்பளமாம்,
சாமத்தலை முழுக்கமாம், உங்களப்பாவுக்கு
சர்க்கார் உத்தியோகமாம்
நாலு தலை வாசல் நல்ல பெரும்பாதை
பெரும்பாதை மேலிருந்து துரோபதை
பெரும் பூசை கொண்டாளோ,
செங்கல் அறுத்து துரோபதைக்கு
சிமிழ் போல் வீடுகட்டி
பாக்கு மரமறுத்து துரோபதைக்கு
பல்லக்கலங்காரிச்சு
பொன்னிலும் தங்கமோ,
பூவிலும் அதிமணமோ!
முன் ராசாக்கள் நீ
முடிக்கும் பரிமளமோ!
நாரிக்கு அழுதவனோ! நீ
ராஜயோகம் கேட்டவனோ!
தூரிக்கு அழுதவனோ! நீ
சொக்கர் தவம் கேட்டவனோ!
ராரிக்கோ, ராரி மெத்தை, நீ
இராமருக்கோ பஞ்சு மெத்தை
என் ஐயா! நீ பஞ்சு மெத்தை
மேலிருந்து பஞ்சாங்கம் கேட்டவனோ!
என்னரசன் என் கண்ணுக்கு
இசைந்த புருவத்துக்கோ,
தங்கப் பூக் கண்ணாடி
சமைத்து வாரும் ஆசாரி,
வண்டாடும் பட்சி,
மலரும் இருவாட்சி,
கொண்டாடிச் சூடுங்க,
கோலத் திரு முடிக்கு
கொல்லையிலே முல்லை,
கொடி யோடிப் பூக்குது
கொண்டைக்கு இசைந்த முல்லை
கொண்டு வாரும் பண்டாரம்!
வட்டார வழக்கு: நான் பெத்தான்-நான் பெற்றவன்
சேகரித்தவர்: P. சொரணம்
இடம்: சிவகிரி, நெல்லை மாவட்டம்.
--------------------
அழுகையமர்த்தல்
அழுகிற குழந்தை மானாமதுரைப் பிரம்பு கேட்டு அழுகிறான். தாய் தன் கணவன் பெருமையைக் கூறி பிரம்பு மட்டுமா, ஊரையே பெயர்த்துக் கொண்டு வர வேண்டுமானாலும், கொண்டு வரச் சொல்லுவோம் அழாதே என்று கூறுகிறாள். ஆனைக் கட்டிச் சூடடிக்கும் உன் ஐயாவிற்குப் பிரம்பா பெரிது? கேள், கொடுப்பார் என்று தாய் தன் குழந்தையைப் பேசத் தூண்டுகிறாள்.
மானாமதுரையிலே
மணிப்பிரம்பு வித்த திண்ணு
வாங்கித் தரலையிண்ணு-எங்கட்டி நீ
ஏங்கித் தவிப்ப தேனோ!
மதுரைக்கும் கிழக்க
மழை பேயாக் கானலில
தரிசாக் கிடக்குதுண்ணு உன்னய்யா!
தனிச் சம்பா விட்டெரிஞ்சு
மதுரைக்களம் செதுக்கி
மாணிக்கச் சூடேத்தி
ஆனை கட்டிச் சூடடிக்கும் உன்னய்யா
அதிகாரி பேசுராரே
மதுரை மீனா
மன்னவர் தங்கை உனக்கு
என்ன, என்ன சீதனங்கள்
மானாமதுரை விட்டார்
மல்லியில பாதி விட்டார்
தல்லா குளமும் விட்டார்-தங்கச்சி
சொக்கர் மீனாவுக்கு
ஆனை அசைஞ்சு வர உன்னய்யாவோட
ஆயிரம் பேர் சூந்துவர!
சேகரித்தவர்: S.M. கார்க்கி
இடம்: சிவகிரி, நெல்லை மாவட்டம்.
-------------
மாமன் பெருமை
ஆறு வண்டி நூறு சட்டம்
அம்பத் தெட்டு குத்துக் காலாம்
குத்துக்கால் பண்ணினவன்
கொல்லி மலைத் தட்டானாம்
அம்பக்கால் பண்ணினவன்
அரியமலை தட்டானாம்
மானத்திலே பூப்பரிச்சு
மந்தையிலே தேர் சோடிச்சி
தேரும் திரும்புதையா
தேவாதிங்க கையெடுங்க
கூனர் குருட ரெல்லாம்
கோல் போட்டு ஏறு மலை
சப்பாணி தாத ரெல்லாம்
தவுந் தேறும் பொன்னு மலை
தீத்த மலை நதி யளகும்
திருணமலை ஜனத்தழகும்
மதுரையிலே அம்மானாம்-கண்ணே
மாலை கோக்கும் வன்னியனாம்
சேலத்திலே அம்மானாம்
செலம்பு கோக்கும் தட்டானாம்
மாசிப் பெரையோ நீ-நான் பெத்த
தவுந்து எழும் சூரியனே
சேலத்தான் சந்தையிலே என் கண்ணே
சித்தாடை விக்குதடா
சித்தாடை வெலை மதிக்கும்
சேனை பேர் அம்மானாம்
பட்டணத்தான் சந்தையிலே
பட்டு வந்து விக்குதடா
பட்டு விலை மதிக்க
பத்து பேர் அம்மானாம்
நாகம் கொடை பிடிக்க-கண்ணே
நல் பாம்பு தாலாட்ட
வெள்ளி வட தேராம்-உனக்கு
வெப்பாலம்-பூந் தேராம்
கள்ளிக் கடைத் தேராம்
கத்தாளைப் பூத் தேராம்
அஞ்சிமலைக் கொஞ்சி வர-உனக்கு
அழகுமலைத் தேரோட
கண்ணே மலையழகா
கண்மணியே நீ உறங்கு
குறிப்பு: அம்மான்-வன்னியன், தட்டான், சித்தாடை விலை மதிக்கும் அம்மான் என பலபேர் மாமன் முறையாக வருணிக்கப் படுகிறார்கள். குழந்தைக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுப்பவர்கள், சமூக உறவுடையவர்கள்.
----------
வளர்ப்பு மகன்
தாய் தந்தையரை இழந்த குழந்தையை அத்தை தாலாட்டுகிறாள். பெற்றோர் இல்லாத குறையைப் போக்கத் தன்னையே அவனுக்குத் தாய் என்று கூறிச் செல்லமாகக் கொஞ்சுகிறாள்.
ஆத்திலே வண்ட லோட
அக்கரையில் கதிர் மறைய
மாலை மசுங்கையிலே
மாமரம் சோலையிலே
அண்ணன் மகனே நீ
அருமையான மருமகனே
எனக்குமே மகந்தாண்டா
என்னருமை பாலகனே
பெத்தவன் ஆத்தோட
பேரு வச்சான் உகரோட
கத்தவனே உவராஜா
கண்ணே நீ கண்ணுறங்கு
கண்ணுறங்கு
ஆராரோ ஆரிரரோ-சாமி
ஆறு லட்சம் வண்ணக் கிளி,
செம்பவளத் தொட்டிலிலே-என்
சீராளா நீ தூங்கு
பச்சை வண்ணக் கட்டிலிலே
பாலகனே நீ தூங்கு
குருத்து வாழை போல-தொட்டிலிலே
குதித் தாடும் பாலகனே
மாம்பழ மேனியனே
மயங்கி நீ கண்ணுறங்கு
மேலிரண்டு பாடல்களை சேகரித்தவர்: S. சடையப்பன்
இடம்: அரூர் வட்டம், தருமபுரி மாவட்டம்.
--------------
தாலாட்டு
இத் தாலாட்டில் குழந்தையைப் பார்த்தவரும் மாமனைப் புகழ்ந்தும், சிற்றப்பனை இகழ்ந்தும் பேசுகிறாள் தாய், தனது சகோதரன் போன் பேசும் மந்திரியாகவும், தந்தி பேசும் மந்திரியாகவும் அவளுக்குத் தோன்றுகிறான். வராத சிற்றப்பன் இன்று வந்து விட்டதால் காகம் கரைகிறதாம்; செம்போத்து கத்துகிறதாம். விருந்தினர்கள் வந்தால் காகம் கரையுமென்பது, சகுன நம்பிக்கை. காகம் கரைந்ததும் யார் வருகிறார்கள்? "உங்கப்பா கூடப்பிறந்த கருங்குறவர் வாராகோ," செம்போத்துக் கத்தியதும் யார் வருகிறார்கள்? "உங்கப்பா கூடப்பிறந்த செம்படவர் வாராகோ," தன் குழந்தையைப் பெருமையாகப் பேசும் தாய், தங்கள் குலத்துதித்து, ஆழ்வார் என்று வைணவர்களால் போற்றப்படும் திருமங்கை ஆழ்வாருக்கு ஒப்பிட்டுப் பேசுகிறார்கள்.
ஆரிரரோ, ஆராரோ, கண்ணே
ஆரிரரோ, ஆராரோ
கண்ணே நவமணியே
கற்பகமே முக்கனியே
பால் போல் நிலவடிக்க கண்ணே
பரமசிவர் பந்தாட
பரம சிவரடித்த பந்தை
பார்த்தடிக்க வந்த கண்ணோ!
ஈக்கி போல் நிலவடிக்க-கண்ணே
இந்திரனார் பந்தாட,
இந்திரனார் அடித்த பந்தை
எதிர்த்தடிக்க வந்த கண்ணோ!
பாலால் படி யெழுதி கண்ணே-நாங்கள்
பல நாள் தவமிருந்தோம்.
நெய்யால் படி யெழுதி கண்ணே-நாங்கள்
நெடு நாள் தவமிருந்தோம்,
நெடு நாள் தவமிருந்து பெற்ற-நித்திலமே
நித்திரை போ
நித்திரை செய்; நித்திரை செய்,
நெடிய புவி மன்னவனே
சித்திரைப் பூந் தொட்டிலிலே
சிகா மணியே நித்திரை போ
யாரடித்தார் நீ யழுக
அடித்தாரைச் சொல்லியழு
சீரடிக்கும் கையாலே என்
சிகா மணியே நித்திரைபோ,
அம்மா அடித்தாளோ, கண்ணே
அமுதுTட்டும் கையாலே
அக்கா அடித்தாளோ கண்ணே
அள்ளி எடுக்கும் கையாலே
பாட்டி அடித்தாளோ கண்ணே
பால் வார்க்கும் கையாலே
மாமா அடித்தானோ கண்ணே
மல்லிகைப்பூச் செண்டாலே
மாமி அடித்தாளோ கண்ணே
உனக்கு மைதீட்டும் கையாலே
தங்க மிதியடியாம் கண்ணே அது
தாலுகா கச்சேரியாம்
தாலுகா கச்சேரியில் உன் மாமன்
தந்தி பேசும் மந்திரியோ!
செட்டிமார் தெருவிலே என் கண்ணே
செண்டு விளையாடப் போகையிலே
செட்டிமார் பெண்டுக உன்
செண்ட விலைமதிப்பார்
பாப்பார் தெருவிலே
பந்து விளையாடயிலே என் கண்ணே
பாப்பார் பெண்டுக உன்
பந்தை விலைமதிப்பார்.
சேகரித்தவர்: குமாரி P. சொரணம்
இடம்: சிவகிரி.
------------
தாலாட்டு : உங்கள் அப்பா
இத் தாலாட்டில் தாய், "தன் கணவன் பெருமையையும், மாமனார் பெருமையையும் பற்றி குழந்தைக்கு எடுத்துரைக்கிறாள. சிவகிரி ஜமீனில் கணக்கராக வேலை செய்யும் அவளுடைய கணவரை அவள்,
"கோடு திறந்து குரிச்சிமேல் உட்கார்ந்து
கோட்டார் வழக்குப் பேசும்
குமாஸ்தா உங்களாய்யா."
என்று படம் தீட்டிக் காட்டுகிறாள்.
தனித்தமிழில் புதிய சொற்களைப் படைக்கும் பிரம்மாக்கள் இவளுடைய தமிழை பின்வருமாறு திருத்தி விடுவார்கள்: கோடு(ஆங்கிலம்)-அறங்கூறவையம், குரிச்சி-(அரபு) நாற்காலி, கோட்டார்-நடுவர், குமாஸ்தா-(பெர்ஸியன்) எழுத்தர். இவற்றுள் நாற்காலி தவிர, பிற சொற்கள் நமது தமிழ்ப் பெண்களுக்கு விளங்காது. அச்சொற்கள் என்ன மொழி சொற்கள் என்று தாலாட்டுப் பாடும் தாய்மாரைக் கேட்டால், அவர்கள் தமிழென்றே சொல்லுவார்கள். தமிழினியற்கை மாறாமல் பிறசொற்களைப் பெண்கள் திரித்து வழங்கி தமிழ்ச் சொற்களஞ்சியத்தை பெருக்கி வருகிறார்கள். இம்முறைகளை மொழி இயலார் ஆராயவேண்டுமேயன்றி, இப்படித்தான் பேச வேண்டும் என்று உத்திரவிட எவர்களுக்கும் உரிமையில்லை. உத்திரவிட்டாலும் பேச்சு வழக்கை அவர்களால் கட்டுப்படுத்த முடியாது.
இந்தத் தாய் குழந்தையின் முன்னோர் செய்து வைத்திருக்கும் தான தருமங்களை எல்லாம் கூறி, ஒளவையின் முதல் அறிவுரையான "அறஞ்செய விரும்பு" என்னும் கருத்தை மகனுக்குப் புகட்டுகிறாள். தந்தை, தமது குழந்தைக்குப் பால் புகட்ட வாங்கிய சங்கின் அருமை பெருமைகளை அழகாக வருணித்துச் சொல்லுகிறாள்.
ஒசந்த தலைப்பாவாம்
உல்லாச வல்லவட்டாம்
நிறைஞ்ச சபையில்
நிப்பாக உங்களய்யா,
கோடு திறந்து
குரிச்சிமேல் உட்கார்ந்து
கோட்டார் வழக்குப் பேசும்
குமாஸ்தா உங்களய்யா,
அத்திமரம் குத்தகையாம்
அஞ்சு லக்ஷம் சம்பளமாம்
அய்க்கோடு வேலைக்கு
அநேகம் பேர் வந்தாக
காஞ்சி வனத் தண்ணே,
கண்ணே கரிக்குதுண்ணு
தெங்காஞ்சி எண்ணெய்க்கே
சீட்டெழுதி விட்டாக
பால் சங்கு போட்டு,
பவளவாய் நோகுதிண்ணு,
பொன் சங்கு வாங்க
போராக பொன் மருத,
மருதக்கட திறந்து
மனசுக் கேத்த சங்கெடுத்து,
சுத்தி வர சிகப்பு வச்சு,
துருக்கோர் பச்சை வச்சு
வாயிக்கு வர்ணம் வச்சு
வாங்கி வந்தாக ஒங்களய்யா!
மருத அழகரோ
வாழ் மருத சொக்கரோ,
திருமால் அழகரோட
சேதிக்கோ வந்தவனோ
கல்லிய நெல் விளையும்
கானலெல்லாம் பூமணக்கும்
புல்லிள நெல் விளையும்
புண்ணியனார் போற பாதை
குளிக்கக் கிணறு வெட்டி
கும்பிட வோர் கோயில் கட்டி
படிக்க மடம் கட்டி வைக்க
பாண்டியனார் பேரனோ-
வட்டார வழக்கு: அய்க்கோடு-ஹைக்கோர்ட்; காஞ்சிவனம்-காஞ்சிபுரம்;
மருத-மதுரை; தென்காஞ்சி-தென்காசி; போராக, வந்தாக-போகிறார்கள், வந்தார்கள்.
குறிப்பு: கிணறு வெட்டுதல், கோயில் கட்டுதல், மடம் கட்டுதல் என்பது தான தருமங்களாகும்.
சேகரித்தவர்: கார்க்கி
இடம்: சிவகிரி.
-------------------
தாலாட்டு : நச்சிரையா கண்ணுறங்கு
சொந்த நிலத்தில் பாடுபட்டுச் சீராக வாழ்ந்த குடும்பத்தில் வாழ்ந்தவள் அவள். அவளுக்குத் தலைச்சன் குழந்தை பிறந்ததும் நாட்டில் பஞ்சம் தோன்றியது. வயிற்றுப் பிழைப்பிற்காக, பிறந்த ஊரை விட்டு மலைச் சரிவில் உள்ள தேயிலைத் தோட்டத்திற்கு அக் குடும்பத்தார் வேலை தேடி வந்தவர்கள். காட்டு விலங்குகள் பயங்கரமாக கர்ஜிக்கும் இரவு நேரத்தில், களைப்பால் கண்ணயர வழியில்லை. குழந்தை வேறு கதறிக் கொண்டு தொல்லை கொடுக்கிறான். நச்சரவு போலத் தாயை உறங்க விடாமல் தொந்தரவு செய்கிறான். தனது மனவேதனையை வெளிப்படுத்தி அவனைச் செல்லமாகக் கடிந்து கொண்டு தாலாட்டுப் பாடிக் கொண்டு தொட்டிலை ஆட்டுகிறாள் தாய்.
சீரான அயோத்தி
சீமை விட்டுக் காடு வந்தோம்
காடு மலைகளிலே
கரடி புலி ஆளி சிங்கம்
கூடி வாழு மிந்த
கொடு வனத்தே நித்திரைபோ
அச்ச மில்லை என்று சொல்லி
அரசாண்டு வீற்றிருந்தோம்
நச்சரவு போல வந்த நச்சிரையா கண்ணுறங்கு
வட்டார வழக்கு: ஆளி-யாளி.
குறிப்பு: நமது கோயில்களில் நாயக்கர் கட்டிய மண்டபங்களில் சிங்க முகமும், துதிக்கையும் கொண்ட கற்பனை மிருகம் ஒன்றைச் செதுக்கி வைத்திருக்கிறார்கள். இது சிங்கத்தைவிட வலிமையுடையது என்று காட்ட சிங்கம் அதன் கால்களிடையே பதுங்கியிருப்பது போல் செதுக்கியிருப்பார்கள். இதற்கு யாளி என்று பெயர். அதனைத்தான் 'ஆளி' என்று பாட்டில் குறிப்பிட்டிருக்கிறது.
சேகரித்தவர்: சந்திரன்
இடம்: வாழப்பாடி, சேலம் மாவட்டம்.
--------------------
ஆசாரிக்கு என்ன தந்தார்?
தொட்டிலின் மேல் பகுதியில் அழகான பறவை உருவங்களைத் தொங்க விடுவார்கள். தொட்டில் ஆடும்பொழுது அப்பறவைகளும் அசைந்தாடும். வண்ணத் துணியில் பஞ்சு அல்லது உமி அடைத்து அழகிய கிளிப் பொம்மைகள் செய்யும் பலதொழில் வல்லவர்கள் தமிழ் நாட்டில் இருந்தார்கள். முதன் முதலில் குழந்தையைத் தொட்டிலிடும் தினத்தன்று ஊர்த்தச்சர் சிற்ப வேலைப்பாடமைந்த தொட்டில் ஒன்றைக் கொண்டுவந்து கொடுப்பார். தையல்காரன் வண்ணத்துணிகளால் கிளி செய்து கொடுப்பான். இக் கலைஞர்களுக்குப் பெண்ணின் உற்றார் உறவினர்கள் பரிசுகள் கொடுத்தனுப்புவார்கள். தமிழ்நாட்டில் இத்தகைய கலைகள் இப்பொழுது அழிந்து வருகின்றன. அழகற்ற இரப்பர் பொம்மைகளையும், கலைச்சிறப்பற்ற இரும்புத் தொட்டில்களையும் நம் வீடுகளில் வாங்கி வைக்கிறோம். தமிழரின் அழகுணர்ச்சி குறைந்து விட்டதைத்தான் இது காட்டுகிறது. இப்பாடலில், மாமன் செய்த வரிசைகளைத் தாய் மகிழ்ச்சியோடு புகழ்ந்து கூறுகிறாள்.
அஞ்சு கிளி ரெண்டெழுதி
அம்மா எனும் பேரெழுதி
கொஞ்சு கிளி ரெண்டெழுதி
கொண்டு வந்தார் ஆசாரி
கொண்டு வந்த ஆசாரிக்கு
என்ன தந்தார் ஏது தந்தார்?
வெளையாடப் போன பக்கம்
வெயில் படும் என்று சொல்லி
வெள்ளியாலே கால் நிறுத்தி
வெத்திலையால் பந்தலிட்டு
பொன்னாலே கால் நிறுத்தி
பூவாலே பந்தலிட்டு
கமுகாலே கால் நிறுத்தி
கரும்பாலே பந்தலிட்டு
தங்கத்தால் கால் நிறுத்தி
தாமரையால் பந்தலிட்டு-அதிலே
பிள்ளை விளையாடுமென்று
அறிக்கை உட்டார் உன் மாமன்
பாட்டனார் எல்லையிலே
பட்டு வந்து விக்கி தென்று
பட்டு விப்பார் செட்டி மவன்
பணம் கொடுப்பார் உன் மாமன்
முப்பாட்டான் எல்லையிலே
முத்து வந்து விக்கி தென்று
முத்து விப்பார் செட்டி மவன்
முடி கவுப்பார் உன மாமன்
வட்டார வழக்கு: உட்டார்-விட்டார்; விக்கிது-விற்கிறது; விப்பார்-விற்பார்; முடி கவுப்பார்-முடி கவிழ்ப்பார்.
உதவியவர்: புலவர் ராமராசன்
இடம்: வேலூர், சேலம் மாவட்டம்.
சேகரித்தவர்: கு. சின்னப்ப பாரதி
-------------
விளையாட்டு
விளையாட்டு : சிறு வீடு
மார்கழி மாதம் சிறுவர்கள் சிறுவீடு கட்டி விளையாடுவார்கள். அங்கே செங்கல் அடுப்புபோட்டு சிறு பொங்கல் பொங்குவார்கள். திருமணம், குடும்ப விவகாரங்கள் எல்லாம் இங்கே நடக்கும். வீட்டில் நடந்த தகராறுகள் இங்கே நாடகமாக நடிக்கப்படும். ஒரு சிறுமி தனது கணவனான சிறுவன், சோறு இல்லை என்ற காரணத்தால், தன்னை அடிக்க வந்ததைத் தோழியிடம் கூறுகிறாள்: நண்டு ஒன்று பிடித்து துகையல் அரைத்து வைத்து கணவன் வரவை எதிர்நோக்கிக் காத்திருந்தாளாம். அவன் நெடு நேரம் வராததால் அவள் சாப்பிட்டு விட்டாளாம். அவள் சாப்பிட்டவுடன் அவன் வந்தானாம். உணவு இல்லை. அவன் அவளை அரட்டுவதையும் மிரட்டுவதையும் அவளே சொல்லட்டும்.
நண்டே நண்டே சிறு
செங்கால் நண்டே,
உசிரிருக்க ஓடிருக்க
உன்னைப் பிளந்து,
ஒரு குத்துப் புளியங்கா
தொவையல் வச்சி,
கன்னாங் கலத்தையும்
கழுவி வச்சி,
வருவான் வருவான்னு
வழி பார்த்தேன்
வராது போகவும்
வழிச்சுக்கிட்டேன்.
வந்தாண்டியம்மா மலை வயித்தன்,
குத்தக் குத்த வந்தாண்டி
குரங்குமூச்சி,
ஏலகிரி யெல்லாம் கிடுகிடுக்க
எடுத்தாண்டி சிலுக்குத் தடியை
அடிக்க அடிக்க வந்தாண்டி
ஆனைவயித்தன்,
அடிச்சிட்டுப் போகச் சொல்லு-
ஙொப்பன் மவனை!
வட்டார வழக்கு: வழிச்சுக்கிட்டேன்-தின்றுவிட்டேன்; வயித்தன்-வயிற்றான் (வயிறு உடையவன்); ஙொப்பன்-உங்கள் அப்பன்.
சேகரித்தவர். S. சடையப்பன்
இடம்: அரூர் வட்டம், தர்மபுரி மாவட்டம்.
----------
கண்ணாமூச்சி
இவ்விளையாட்டிற்குத் தலைவன் ஒருவன் வேண்டும். அவனை "தாச்சி" என்று அழைப்பார்கள். சில சிறுவர்களில் ஒருவனைத் தேர்ந்தேடுத்து அவன் கண்களிரண்டையும் தாச்சி பொத்திக் கொள்வான். மற்றவர்கள் ஓடிச் சென்று ஒளிந்து கொள்வார்கள். எல்லோரும் ஒளிந்து கொண்டபின் தலைவன் கண்களைத் திறந்துவிடுவான். அவன் தேடிச் சென்று யாரையாவது தொடவேண்டும், அதற்குள் ஒளிந்து கொண்டவர்கள் ஓடிவந்து தலைவனைத் தொடவேண்டும். எல்லோரும் தொட்டு விட்டால் தேடிச் சென்றவனே மறுபடி கண்களைப் பொத்திக் கொள்ள வேண்டும். இவ்விளையாட்டில் முதலில் கண்ணைப் பொத்திக் கொள்வதற்கு யாரும் இணங்க மாட்டார்கள். முதலில் யார் பொத்திக் கொள்ள வேண்டும் என்பதைத் தீர்மானிக்க ஒரு வழி கையாளப்படுகிறது. தாச்சி எல்லோரையும் வரிசையாக நிறுத்துவான் ஒரு பாட்டைத் தொடர் தொடராகப் பிரித்து ஆளுக்கு ஒரு சொல் வீதம் சொல்லி, தொட்டுக் கொண்டு வருவான். பாட்டின் கடைசிச் சொல் வந்ததும் யாரை அவன் தொடுகிறானோ, அவன் விலகிக் கொள்வான். மீண்டும் பாட்டைச் சொல்லி முன் போலவே ஒவ்வொருவராகத் தொட்டு வருவான். இவ்வாறாகக் கடைசியாக மீதமிருப்பவன் கண்களைப் பொத்திக் கொள்ள வேண்டும். அப்பாட்டின் ஒரு பகுதி கீழே கொடுக்கப்படுகிறது.
கண்ணைக் கட்டவேண்டியவனை வேறொரு முறையிலும் தேர்ந்தெடுப்பதுண்டு. பலர்
வட்டமாக உட்கார்ந்து கொள்வர். அவர்கள் ஒரு கையைத் தலைமேல் வைத்துக் கொள்வர். விளையாட்டுத் தலைவன் ஒரு பாட்டின் சொற்றொடர்களைச் சொல்லிக்கொண்டே தொட்டுக் கொண்டு வருவான். கடைசியில் 'கையெடு' என்று சொல்லிக் கொண்டு யாரைத் தொடுகிறானோ அவன் விலகிக்கொள்வான். கடைசியில் ஒருவன் மீதம் இருக்கும் வரை இது நடைபெறும்.
மீதமிருப்பவன் விலகியவர்கள் ஒவ்வொருவருடைய கையையும், பிடித்துத் தன் கன்னத்தில் வைத்துக் கொண்டு சுடுகிறது, சுடுகிறது என்று சொல்வான். யாராவது ஒருவனுடைய கையைக் கன்னத்தில் வைத்துக் கொள்ளும் போது குளிர்கிறது. என்று சொல்வான். அவன்தான் கண்ணைப் பொத்திக் கொள்ள வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு பாடல்களும் கீழே தரப்பட்டுள்ளன.
(குறிப்புரை S.S. போத்தையா)
பச்சத் தவக்காட பளபளங்க
பழனி பச்சான்-மினு மினுங்க
செங்கரட்டி-சிவத்தப்பிள்ளை
கிண்ணா வந்தான்-கிணுக்கட்டி
உடும்பு-துடுப்பு
மகா-சுகா
பால்-பறங்கி
எட்டுமன்-குட்டுமன்-ஜல்
ஒருப்பத்தி-இருப்பத்தி
ஒரிய-மங்கலம்
சீப்பு-சினுக்கவலி
உங்கையா-பேரன்ன?
முருக்கந் தண்டு-திண்ணவரே,
முள்ளிச் சாறு-குடிச்சவரே
தார் தார்-வாழைக்காய்
தாமரைக் குத்தி-வாழைக்காய்
புதுப் புது மண்டபம்
பூமா தேவி கையெடு
சேகரித்தவர் S.S. போத்தையா:
இடம் நெல்லை மாவட்டம்.
------------------
சிறுவர் பாடல்கள்
குழந்தைக்குப் பேச்சுக் கற்றுக் கொடுப்பதற்குச் சில எளிய சொற்களைச் சேர்த்துப் பாடும் பாடல்கள் ஒருவகை. இவற்றைப் பிறர் பாட, குழந்தைகள் திருப்பிச் சொல்வார்கள். தமிழ் நாட்டில் பலவகையான குழந்தை விளையாட்டுகள் உள்ளன. ஒவ்வொரு விளையாட்டிற்கும் ஒரு பாட்டு உண்டு. இவற்றில் கோஷ்டி விளையாட்டுக்களில் ஒரு கோஷ்டியார் ஒரு பாட்டைப் பாட, எதிர் கோஷ்டியார் அதற்குப் பதில் பாட்டுப் பாடுவார்கள். இத்தகைய பாடல்களில் சடு குடு, கழங்கு முதலியவற்றை தமிழ் நாட்டுப் பாமரர் பாடல்களில் சேர்த்துள்ளோம். இப் பகுதியில் மேலும் சில பாடல்களை வெளியிடுகிறோம். இவற்றில் பொருளை விட சந்தப் பயிற்சியும், சொற்பயிற்சியுமே முக்கியமாகக் காணப்படுகிறது.
---------
சடு குடு
உடற் பயிற்சிக்கும், சுவாசப் பயிற்சிக்கும், இவ் விளையாட்டு மிகவும் சிறந்தது. இதனை விளையாடும் முறை அனைவருக்கும் தெரியும். எதிர்கட்சிக்குள் உப்பைத் தாண்டிச் செல்லும் சிறுவன் சடு குடுப் பாடலைப் பாடிக் கொண்டே செல்வான். இப்பாடல் ஊருக்கு ஊர் வித்தியாசப்படும். இரண்டு பாடல்கள் இத் தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.
நான்தான் வீரன்
நல்ல முத்து பேரன்
வெள்ளிப் பிரம்பு எடுத்து
விளையாட வாரேண்டா
தங்கப் பிரம்பு எடுத்து
தாலிகட்ட வாரேண்டா, வாரேண்டா,
குடு குடு சல்லி
குப்பன் சல்லி
ராவூத்தன் சல்லி
ரவ்வாச் சல்லி
வேத்து வடியும் சாராயம்
காத்து இருந்து பூசை பண்ணும்
காவடிப் பண்டாரம்
சடு குடு என்பது
சாட்டை என்பது
மேட்டுப் பத்திரி
முத்தையா நாடான்
செத்துக் கிடக்கான்
சம்புருக் கொண்டாடா
சம்புருக் கொண்டாடா
சேகரித்தவர்: எம். பி. எம். ராஜவேலு:
இடம் மீளவிட்டான், தூத்துக்குடி வட்டம், திருநெல்வேலி மாவட்டம்.
---------------
விளையாட்டு - ஐயன் கொம்பு
தரையில் உட்கார்ந்து கால் பெருவிரலைக் கையினால் பிடித்துக் கொண்டு ஒருவன் கேள்வி கேட்பான். மற்றவர்கள் பதில் சொல்லுவார்கள். இப்பாடலுக்குப் பொருள் எதுவும் இல்லை.
கே: இதாரு கொம்பு?
ப: ஐயன் கொம்பு
கே: ஐயன் எங்கே?
ப: பூப்பறிக்கப் போயிட்டான்
கே: பூவெங்கே?
ப: தண்ணியிலே கிடக்கு
கே: தண்ணி எங்கே?
ப: ஆடு மாடு குடிச்சிடுச்சு
கே. ஆடு மாடு எங்கே?
ப: கள்ளன் கொண்டு போயிட்டான்
கே: கள்ளன் எங்கே?
ப: மரத்தில் இருக்கான்
கே: வெட்டவா குத்தவா,
வெண்ணித்தண்ணி ஊத்தவா?
குறிப்பு: குழந்தைகளுக்கு கேள்விகளுக்கு சட், சட்டென்று பதிலளிக்கும் பழக்கத்தை இவ்விளையாட்டு உண்டாக்கும். திடீரென்று கேள்வியும் பதிலும் புதிது, புதிதாகத் தோன்றலாம்.
சேகரித்தவர் : S.S. போத்தையா
இடம்: விளாத்திகுளம் வட்டம், திருநெல்வேலி மாவட்டம்.
-------------
விளையாட்டு : ஆடும்-ஓநாயும்
வரி*சையாக ஒருவன் இடுப்பை மற்றவன் பிடித்தபடி சிறுவர்கள் நிற்பார்கள். இவர்கள் ஆடுகள். ஒருவன் மட்டும் சுற்றிவந்து கூட்டத்திலிருந்து பிரிபவனைப் பிடிக்க முயலுவான். அவன் ஓநாய். ஆடுகளும், ஓநாயும் பாட்டுப் பாடிக் கொண்டே விளையாடும் இந்தப் பாடல் விளாத்திகுளம் பகுதியில் பாடப்படுவது.
ஓநாய்: என்னாட்டைக் காணோமே
ஆடு: தேடிப் பிடிச்சுக்கோ
ஓநாய்: அடுப்பு மேலே ஏறுவேன்
ஆடு: துடுப்பைக் கொண்டு சாத்துவேன்
ஓநாய்: நெல்லைக் கொறிப்பேன்
ஆடு: பல்லை உடைப்பேன்
ஓநாய்: வடிதண்ணியைக் கொட்டுவேன்
ஆடு: வழிச்சு வழிச்சு நக்கிக்கோ
ஓநாய்: கோட்டை மேலே ஏறுவேன்
ஆடு: கொள்ளி கொண்டு சாத்துவேன்
ஓநாய் என்னாட்டைக் காணோமே?
ஆடு: தேடிப் பிடிச்சுக்கோ.
சேகரித்தவர்: S. S. போத்தையா
இடம்: விளாத்திகுளம் வட்டம், திருநெல்வேலி மாவட்டம்.
--------------
குச்சி குச்சி ராக்கம்மா
இரண்டு பக்கங்களிலும் இரண்டிரண்டு பெண்கள், கையைத் தோளின்மேல்
போட்டுக் கொண்டு நிற்பார்கள். ஒருபக்கத்திலுள்ள கட்சியார் கேள்வி கேட்பார்கள். மற்றொரு பக்கத்திலுள்ளவர்கள் பதிலுரைப்பார்கள்.
கேள்வி: குச்சிக் குச்சி ராக்கம்மா
பெண்ணுண்டோ?
கூடசாலி ராக்கம்மா
பெண்ணுண்டோ?
சாதி சனமெல்லாம்
பெண்ணுண்டோ?
சம்பந்த வழியெல்லாம்
பெண்ணுண்டோ?
பதில்: குச்சி குச்சி ராக்கம்மா
பெண்ணில்லை
கூசாலி ராக்கம்மா
பெண்ணில்லை
சாதிசனமெல்லாம்
பெண்ணில்லை
சம்பந்த வழியெல்லாம்
பெண்ணில்லை
கேள்வி: குச்சி குச்சி ராக்கம்மா
நூறு ரூபாய்
கூசாலி ராக்கம்மா
நூறு ரூபாய்
சாதிசனமெல்லாம்
நூறு ரூபாய்
சம்பந்த வழியெல்லாம்
நூறு ரூபாய்
பதில்: குச்சி குச்சி ராக்கம்மா
அது வேண்டாம்
கூசாலி ராக்கம்மா
அது வேண்டாம்
சாதி சனமெல்லாம்
அது வேண்டாம்
சம்பந்த வழியெல்லாம்
அது வேண்டாம்
குறிப்பு: இப்படியே, ''சாயச்சேலை", "சரிப்பளி" என்று பலபொருள்களையும் சொல்லிப் பெண் கேட்பார்கள். எதிர்க்கட்சியினர் வேண்டாம், வேண்டாம் என்பார்கள்.
சேகரித்தவர்: S.S. போத்தையா
இடம்: தங்கம்மாள்புரம், விளாத்திகுளம் வட்டம், திருநெல்வேலி மாவட்டம்.
------------
உச்சரிப்பு விளையாட்டுக்கள்
உச்சரிப்புத் திருந்துவதற்காகச் சில வாக்கியங்களை விரைவாகச் சொல்லிப் பழகவேண்டும். அவற்றுள் 'ர', 'ற' கரங்களும், ன, ண கரங்களும், ல, ள, ழ கரங்களும் விரவி வரும். விரைவாகவும் சரியாகவும் அவ் வாக்கியங்களைச் சொன்னால் உச்சரிப்பு திருந்தும்.
ஓடுகிற நரியிலே ஒரு நரி சிறுநரி, சிறு நரி முதுகிலே ஒரு பிடி நரை மயிர்
(திரும்பத் திரும்ப)
கடலலையிலே ஒரு உரல் உருளுது, பெரளுது தத்தளிக்குது, தாளம் போடுது
சேகரித்தவர்: S.S. போத்தையா
இடம்: தங்கம்மாள்புரம், விளாத்திகுளம் வட்டம், திருநெல்வேலி மாவட்டம்.
-------------
காதல்
காதல் - ஏன் வேலை செய்ய முடியவில்லை
நிலம் தரிசாகக் கிடக்கிறது. அவனுடைய காதலி வயலுக்கு வருகிறாள். அவளிடம் அவன் ஏன் வேலை ஓட வில்லை? என்று சொல்லுகிறான். அவளும் தனக்கு வேலை ஓட வில்லை யென்றும், அதற்குக் காரணம் என்னவென்றும் சொல்கிறாள்.
ஆண் பாடுவது
வண்டாளம் மரத்துக் காடு
வண்ணமுத்து உழுகும் காடு
தங்கம் விளையும் காடு
தரிசாய்க் கிடக்கிறது.
மஞ்சள் பூசியல்லோ
மதுரைப் பாதை போற புள்ளே
ஒம் மஞ்சள் வாடை தட்டி
வரப்பு வெட்டக் கூடலியோ?
பச்சிலை கழுத்தில் வச்சி
பாதை வழி போற புள்ளே-ஒம்
பச்சிலை வாடை தட்டி
வரப்பு வெட்டக் கூடலியோ?
அரிசி குத்தி மடியில் வைத்து
ஆவாரம் பூப் பொட்டும் வச்சு
சொருகு கொண்டை வெள்ளையம்மா-நீ
சோறு கொண்டு வாரதெப்போ?
பெண்கள் பாடுவது
கார வீட்டுத் திண்ணையில
கரிக்கு மஞ்சள் அரைக்கியல
எந்தப்பய தூத்துனானோ-எனக்கு
இழுத்தரைக்கக் கூடலியே
கேப்பைக் கருது போல
கிளி போல பெண்ணிருக்க
எனக்குண்ணு இருக்கானே
எண்ணங் கெட்ட பாவி மகன்
புல்லு அறுக்கையிலே
புளியம் பூவும் கொண்டு போனேன்
புளியம் பூ வாட தட்டி-நான்
புல்லறுப்ப மறந்து விட்டேன்
வாய்க்கா வரப்பு சாமி!
வயக்காட்டு பொன்னு சாமி!
களை எடுக்கும் பொம்பளைக்கு
காவலுக்கு வந்தவனே!
சேகரித்தவர்: S.S. போத்தையா
இடம்: விளாத்திகுளம், நெல்லை மாவட்டம்.
-----------------
எதிர்ப் பாட்டு
ஆத்தாள் அறியாமல் தன்னுடன் வந்து விடும்படி கூறுகிறான் காதலன். அவள் அவனுக்கு பதில் சொல்கிறாள். அதன்படி அவனால் செய்ய முடியுமா? இவ்வாறே பாட்டும் எதிர்ப்பாட்டுமாக உரையாடல் செல்லுகிறது.
ஆண் :
அஞ்சு ரூபா தாரேன்
அரக்கு போட்ட சேலை தாரேன்-உன்
ஆத்தாள் அறியாம நீ
வாக்கப்பட்டு வந்திரடி
பெண்:
அஞ்சு ரூபா வேண்டாம்
அரக்குபட்டு சேலை வேண்டாம்
தட்டான் அறியாம-நீ
தாலி பண்ணி வந்திரடா
ஆண :
தட்டான் அறியாம
தாலி பண்ணி நானும் வந்தா
அடுப்பங் கட்டு இல்லாமல்-நீ
பருப்புச் சோறு பொங்கி வாடி
பெண் :
அடுப்பங்கட்டி மூணில்லாம
பருப்புச் சோறு பொங்கி வந்தா
நாவுல பட்டிராம-நீ
நவட்டி முழுங்கிரணும்.
சேகரித்தவர். S.M. கார்க்கி
இடம்: சிவகிரி, திருநெல்வேலி மாவட்டம்.
-------------
அத்தை மகன் முறை
அவளுக்கு அவன் அத்தை மகன் முறை. இருவரும் காதலித்துக் கூடுகிறார்கள். அத்தைமகன் அவளோடு கொஞ்சிப் பேசுகிறான். கிண்டலும் கேலியும் கலந்து அவளை வாயடைத்து வெட்கித் தலைகுனிய வைத்துவிட முயலுகிறான். பேச்சில் அவனுக்கு அவள் அடங்கவில்லை. அத்தைமகன் முறையாலே சற்று வாயை அடக்கிக்கொள்ளுவதாகச் சொல்லிக் கொண்டே அவன் வாயை அடக்கப் பார்க்கிறாள். போட்டியில் வெற்றி இருவருக்கும்தான்!
ஆண்:
ரோட்டோரம் தோட்டக்காரி
மல்லியப்பூ சேலைக்காரி
நீ இறைக்கும் தண்ணியிலே
மல்லியப்பூ மணக்குதடி!
பெண்:
அஞ்சு கிணத்துத் தண்ணி
அரைக் கிணத்து உப்புத்தண்ணி
செம்புக் குடத்துத் தண்ணி சேருறது எந்தக் காலம்?
ஆண் :
பொலி போடும் காட்டுக்குள்ள
பொதுக் கடை போடயில
நீ வாடி செவத்தப் புள்ள
உனக்குழக்கு நெல் தாரேன்
பெண்:
நிலக்கடலை நாழி வேணும்
நேரான பாதை வேணும்
ஜோடி மட்டம் ரெண்டு வேணும்
சொகுசா வழி நடக்க
ஆண் :
மஞ்சக் கிழங்கு தாரேன்
மார்புக் கேத்த ரவிக்கை தாரேன்
கொஞ்சி விளையாடி உனக்கு
குழந்தை கையிப் புள்ள தாரேன்
பெண்:
காடைக் கண்ணி மாவிடிச்சு
கருப்பட்டியும் சேர்த்திடிச்ச
தின்னு ருசி கண்டவரே
தின்னக் கூலி கட்டிடுவேன்
ஆண்:
ஆத்துல கடலைச் செடி
அதுல ரெண்டு செவலக் காளை
செவலக் காளை விலை பெறுமோ
குமரிப் புள்ள கைவிளைவி?
பெண்:
குத்துக்கல்லு மேலிருந்து
குறும்பு பேசும் மச்சானே
அத்தை மகன் முறையாலே
அடக்கிக் கொண்டேன் மையலிலே
ஆண்:
கண்டப் பழமே-நீயே!
சுங்கொடிச் சேலைக்காரி
கண்டு என்னப் பாராமல்
சூதமாகிப் போனாயடி
பெண்:
மச்சானே மன்னவரே
மனசிலயும் எண்ணாதிங்க
சூதமாகிப் போறாமிண்ணு
சூசகமாச் சொல்லாதிங்க
ஆண்:
ஆத்தோரம் நாணலடி
அதன் நடுவே செய்வரப்பு
செய்வரப்புப் பாதையிலே
தேனமிர்தம் உண்கலாமோ?
பெண்:
முத்துப்பல்லு ஆணழகா!
மெத்த மையல் கொண்டவரே!
ஆத்தில் தலைமுழுகி-உங்க
ஆத்திரத்தை நான் தீர்ப்பேன்.
வட்டார வழக்கு : சூதமாகி-கள்ளத்தனமாய்.
சேகரித்தவர்: S.M. கார்க்கி
இடம்: சிவகிரி, திருநெல்வேலி மாவட்டம்.
-----------------
காதலில் போட்டி
கிணற்றில் இறங்கி அவள் குளித்துக் கொண்டிருக்கிறாள். சில நாட்களாக அவளையே பின் தொடரும் அத்தை மகன் அங்கு வந்து நின்று கண்ணைச் சிமிட்டுகிறான். இவனுடைய அன்பில் வீரம் பிறக்குமா, அல்லது எதிர்ப்பைக் கண்டு அச்சம் பிறக்குமா என்று சோதிக்க அவள் விரும்புகிறாள். அவளுக்கு மாமன் பிள்ளைகள் பலர் உண்டு. அவர்கள் முறை மாப்பிள்ளைகள் அல்லவா? அவர்களுடைய குத்தகை மாந்தோட்டம் மலையில் இருந்தது. அங்கே அவர்கள் அடிக்கடி போவார்கள். அவர்களை அழைப்பது போலப் பாவனை செய்கிறாள். அவன் பயந்து நடுங்காமல் தன்னோடு தூரக்காட்டிற்கு வரும்படி அழைக்கிறான். சோதனையில் அவன் வெற்றி பெற்று விட்டானா?
பெண்:
இரும்பால கிணத்துலயோ
இருந்து தலை முழுகயிலே
கரும்பான அத்தை மகன்
கண்ணைக் கண்ணைச் சிமிட்டுறானே
மலையிலொரு மாமரமாம்
மாமன் மகன் குத்தகையாம்
இடையிலொரு சொல்லு வந்தா
ஏத்துக் கொங்க மாமன் மக்கா!
ஆண் :
ஏத்தமடி கோட்ட மலை
இறக்கமடி சடையாறு
தூரமடி நம் காடு
தொயந்து வாடி நாம் போவோம்.
வட்டார வழக்கு: ஏத்துக்கொங்க-ஏற்றுக்கொள்ளுங்கள்; தொயந்து-தொடர்ந்து.
சேகரித்தவர். S.M. கார்க்கி
இடம்: சிவகிரி, திருநெல்வேலி மாவட்டம்.
-----------------
மழையில்!
மழையில் ஆறு தாண்ட முயன்ற காதலன் பாட்டைக் கேட்டோம். அதே போல் மார்பளவு தண்ணில் செல்லும் காதலனது பாட்டைக் கேட்போம்.
காதலன் பாடுவது
மழைக்கா இருட்டுக்குள்ள
மாரளவு தண்ணியிலே
பாதை தெரியலியே
பாதகத்தி உன் வீடு
பக்கத்து வீட்டுக்காரி
பழைய உறவுக்காரி
பழயுறவும் மங்குதடி
பாதகத்தி உன்னாலே
மழைக்கா இருட்டிலேயே
மாரளவு தண்ணியிலே
குடைபோட்டு நான் வருவேன்
குணமயிலே துரங்கிராத
ஏல முகத்தாளே
ஒட்ட வச்ச காத்தாளே
ஒட்ட வச்ச காத்துக்கில்லோ-நான்
இட்டனடி தங்க நகை
மழையே வருகுதடி
மய்யல் குய்யல் ஆகுதடி
தலையே நனையுதடி
தண்டிப் புள்ள உன் மையலிலே
நெத்திலி வத்தல் போல
நெஞ்சடர்ந்த செவத்தப் புள்ள
நெஞ்சில் படுத்துறங்கும்-நீ
பஞ்சணை மெத்தையடி.
வட்டார வழக்கு: மய்யல் குய்யல்-குழப்பம்; தண்டிப் புள்ள-பருத்த பெண், நெத்திலி-ஒருவகை மீன்.
குறிப்பு : ஒட்டவச்ச காது-பாம்படம் போடுவதற்காக காது வடித்திருக்கும் பெண்கள் அது அநாகரிகம் என்று காதை வெட்டி ஒட்ட வைத்தார்கள். 30 வருஷத்துக்கு முன் இது நடைபெற்றது. சில டாக்டர்கள் இத் தொழிலில் நல்ல ஊதியம் பெற்றார்கள்.
சேகரித்தவர்: S.M. கார்க்கி
இடம்: சிவகிரி.
-----------------
வழிப் பேச்சு
அறுவடை முடிந்து வீடு திரும்புகிறார்கள் உழவர்களும், உழத்தியரும். காதலனும் காதலியும் பின்தங்கி வழி நடக்கிறார்கள். காதலன் மனத்தில் என்ன கவலையோ, பேசாமல் வருகிறான். அவள் அவனைப் பேசவைத்துவிட என்ன முயற்சியெல்லாமோ செய்து பார்க்கிறாள் முடியவில்லை. கடைசியில் கொஞ்சம் சூடாகவே சொல் கொடுத்து அவன் மனத்தைக் கரைத்து விடுகிறாள். காதலியின் பேச்சில் அன்பும், அவனோடு உறவாட ஆர்வமும், அவன் கவலையைப் போக்குவதிலுள்ள கருத்தையும் இதில் காண்கிறோம்.
காதலி பாடுவது
நெல்லுக் கதிரானேன்
நேத்தறுத்த தாளானேன்
தாள் மடங்குக்குள்ளே-அந்தத்
தருமருக்கோ பெண்ணானேன்
தண்ணியில தடமெடுத்து
தருமரோட வழி நடந்து
வாய் பேசா தருமரோட
வழியும் தொலையலியே!
பருத்திக்காட்டுப் பொழி வழியே!
பாவனையாய் போறவரே!
கல்லுமே தட்டிராமே-ஒங்க
கல் மனகம் இளகிராம!
சேகரித்தவர்: S.M. கார்க்கி
இடம்: சிவகிரி, திருநெல்வேலி மாவட்டம்.
-----------
மேல் விலாசம்
அவள் மலையடிவாரக் கிராமத்தில் வசிப்பவள். வடக்கேயிருந்து வந்த பாண்டியனைக் காதலித்தாள். அவன் திருமணத்திற்கு நாள் கடத்தினான். அவள் அவனைக் கண்டித்தாள். அவன் தேனும், தினைமாவும், மாம்பழமும் கொண்டு வந்து கொண்டு வந்து கொடுத்துக் கோபத்தைப் போக்கினான். அவன் மலைக்கு வேட்டைக்குச் செல்லும் போது போலீசுக்காரன் மாதிரி அரைக்கால் சட்டையணிந்து துப்பாக்கி கொண்டு செல்லுவான். அவள் அவனுடைய கால் சட்டையில் தனது விலாசத்தை எழுதி விட்டாள். அதுதான் திருமணம் உறுதியாகும் என்ற அவளுடைய நம்பிக்கைக்கு அடையாளம்.
பெண்:
நறுக்குச் சவரம் செய்து
நடுத் தெருவே போறவரே!
குறுக்குச் சவளுறது
கூப்பிட்டது கேட்கலையோ?
சந்தணவாழ் மரமே
சாதிப்பிலா மரமே
கொழுந்தில்லா வாழ் மரமே
கூட இருக்கத் தேடுதனே
உருகுதனே உருகுதனே
உன்னைக் கண்ட நேரமெல்லாம்
கண்டிட்டு உருகுதனே
நிண்ணு சொல்ல மாட்டாம
நில்லுங்க ராஜாவே
நிறுத்துங்க கால் நடய
சொல்லுங்க ராஜாவே
சோலைக்கிளி வாய்திறந்து
வடக்கிருந்து வந்தவரே
வருச நாட்டுப் பாண்டியரே
தொட்டிட்டு விட்டியானா
துன்பங்களும் நேர்ந்திடுமே
தேனும் தினைமாவும்
தெக்குத் தோப்பு மாம்பழமும்
திரட்டிக் கொடுத்திட்டில்ல
தேத்துதாரே எம் மனசை
போலீசு வேட்டி கட்டி
புதுமலைக்குப் போறவரு
போலீசு வேட்டியில
போட்டு விட்டேன் மேவிலாசம்
கோடாலிக் கொண்டைக்காரா
குளத்துருக் காவல்காரா
வில்லு முறுவல் காரா
நில்லு நானும் கூடவாரேன்
துத்தி இலை புடுங்கி
துட்டுப் போல் பொட்டுமிட்டு
ஆயிலிக் கம் பெடுத்து
ஆளெழுப்ப வாரதெப்போ?
வட்டார வழக்கு: வருசநாடு-மதுரையில் மலைச்சரிவில் உள்ள ஒரு ஊர்; கொடுத்திட்டில்ல-கொடுத்துவிட்டு அல்லவா?; மேவிலாசம் -மேல் விலாசம்.
சேகரித்தவர்: S.M.கார்க்கி
இடம்: சிவகிரி, திருநெல்வேலி மாவட்டம்.
--------------
சத்தியம்
ஒரு பாடலில் காதலி தன் காதலனது அன்பையும் உறுதியையும், மீனாட்சி கோவில் தூணிலடித்து சத்தியம் செய்து காட்டச் சொல்லுகிறாள். இங்கு காதலன் துணி போட்டுச் சத்தியம் செய்து தருகிறேன் என்று சொல்லுகிறான். இவன் சத்தியத்தை மீறுவானானால் துணிக்குக் கூட விதியில்லாத தரித்திரனாகி விடுவான் என்பது நம்பிக்கை.
பெண்:
சாஞ்ச நடையழகா!
சைக்கிள் ஓட்டும் சாமி!
ஒய்யாரச் சேக்குகளாம்
ஒலையுதில்ல சைக்கிளிலே
வட்டமிடும் பொட்டுகளாம்
வாசமிடும் சோப்புகளாம்
சாமி கிராப்பு களாம்
சாயந்திரம் நான் மடிப்பேன்
அரக்கு லேஞ்சிக்காரா
பறக்க விட்டாய் சண்டாளா!
ஆண்: மறக்கல என்னு சொல்லி
வலக்கையும் தந்திடுவேன்
வலக்கையும் தந்திடுவேன்
வருண சத்தியம் செஞ்சிருவேன்
மீனாட்சி கோயிலுல வேட்டி போட்டுத் தாண்டித் தாரேன்
வட்டார வழக்கு: காஞ்ச-காய்ந்த; சேக்கு-கிராப்பு; ஒலை-உலை.
சேகரித்தவர்: S.M. கார்க்கி
இடம்: சிவகிரி, திருநெல்வேலி மாவட்டம்.
-------------
ஆசைவைத்தேன் ரத்தினமே!
அரூர் சந்தையில் தனது காதலியை அவன் கண்டு கொண்டான். வேலை முடிந்ததும் அவள் ஊருக்குப் புறப்பட்டாள். அவனும் பின் தொடர்ந்தான். வழியில் யாரும் இல்லை. அவன், அவள் மீது கொண்டுள்ள அன்பைப் புலப்படுத்திப் பாடுகிறான்.
அரூருப் பேட்டையிலே
அழகான சந்தையிலே
ஆலமரத்தடியில்-சின்னத்தங்கம்-நீ
ஆய்ந்தெடுத்த ரத்தினமோ?
சொன்னாலும் ஆகாது
சொல்லவும் கூடாது
கண்டாலே போதுமடி-சின்னத்தங்கம் என்
கருமமெல்லாம் தொலைஞ்சி போகும்
கட்டாணி முத்தோ-நீ?
கற்கண்டோ சர்க்கரையோ?
தொட்டாலே போதுமடி-சின்னத்தங்கம் என்
தொந்திரவு நீங்குமடி
ஆசைக் குகந்தவளே
ஆசார மானவளே
நேசித்தால் எந்தனுக்கு-சின்னத்தங்கம்
நினைவு தடுமாறுதடி
பதினாறு பக்கத்துக்கும்
மதிவு நிலா உன் முகமோ?
அதனாலே உந்தன் மேலே-சின்னத்தங்கம்
ஆசை வச்சேன் ரத்தினமே!
சேகரித்தவர்: S. சடையப்பன்
இடம்: அரூர் வட்டம், தருமபுரி மாவட்டம்.
-------------
வேலனும் வள்ளியும்
வேலன் வள்ளியை அடைய பல வேஷங்கள் போட்டு பட்ட பாட்டையெல்லாம் நாமறிவோம். இப்பாடலின் பாத்திரங்கள் தெய்வங்களல்ல; ஒரு கிராமத்து இளைஞனும், இளநங்கையுமே. வள்ளியிடம் திருமணத்துக்குச் சம்மதம் கேட்க, வேலன் அவள் நின்றிருந்த ஒற்றைப் புளிய மரத்தடிக்குச் சென்றான். அவன் அருகில் நெருங்கியதும் வள்ளிக்கு அங்கம் பதறிற்று. "அங்கம் சருக்கிண்ணிச்சாம்" என்கிறார் பாடகர்; நெஞ்சு படபடத்ததாம். "நெஞ்சு நெருக்கெண்ணிச்சாம்" என்று சுருக்கமாகச் சொல்லுகிறார் பாடகர். வெட்கம் மேலிட்டு வள்ளி வீட்டுக்கு ஒடி வந்து விட்டாள். வேலன் வீட்டுக்கு அவளைத் தொடர்ந்து வருகிறான். அவள் வீடு மெழுகுவது போல நடிக்கிறாள். அவனை அவள் எதிர்பார்த்துக் கொண்டு தானிருக்கிறாள். அவன் அவளருகில் வந்து தன்னை மணம் செய்துகொள்ள வேண்டும் என்று சத்தியம் கேட்கிறான். அவள் என்ன சொல்லியிருப்பாள்?
ஊருக்கு நேர் கிழக்கே-வள்ளிக்கு
ஒத்தைப் புளியமரம்-வேலவா!
ஒத்தைப் புளியமரம்
அங்கம் சருக்கிண்ணிச்சாம்-வள்ளிக்கு
நெஞ்சு நெருக்குண்ணிச்சாம்
கிள்ளு கொசகணமாம்-வள்ளிக்கு
கீழ்மடி வெத்திலையாம்-வேலவா!
கீழ்மடி வெத்தலையாம்
வெள்ளிக் கிழமையிலே-வள்ளியும்
வீடு மெழுகையிலே-வேலவா!
வீடுமெழுகையிலே
தண்ணியும் சேந்தும் போது-வள்ளியைச்
சத்தியம் கேட்டானாம்-வேலவன்
சத்தியம் கேட்டானாம்.
வட்டார வழக்கு: ஒத்தை-ஒற்றை; ‘சருக்'-பதற்றம்; ‘நெருக்'-படபடப்பு; கொசகணம்-கொசுவம்; சேந்தும்-அள்ளும்.
சேகரித்தவர்: S. சடையப்பன்
இடம்: அரூர் வட்டம், தருமபுரி மாவட்டம்.
-------------
வரக் காணலியே
காதலன் சில நாட்களாக வேலைக்கு வரவில்லை; அவள் அவனை நினைந்து பாடுகிறாள்.
ஆளுலயும் குட்டை!
அழகுலயும் பூஞ்சிவப்பு
நடையிலேயும் நைச் சிவப்பை
நடுத் தெருவில் காணலியே!
பூசரம் பழுப்பளகே
புவன சுந்தர நடையழகே
சிருப்பாணிக் கேத்த தங்கம்
தினம் வருமா இந்த வழி?
படுத்தா உறக்க மில்ல
பாய்விரிச்சா தூக்கம் வல்ல
சண்டாளன் தலைமயித்த
தலைக்கு வச்சா தூக்க முண்டு.
கரும்பா இணங்குனனே
கருத்த மத யானையிடம்
துரும்பா உணருரனே
துடிக்காரா உன்னாலே
வந்திராதோ இந்த வழி?
வாச்சி ராதோ தங்கக் கட்டி?
குடுத்திராரோ வெத்தலையை?
போட்டுறுவேன் வாய்சிவக்க
மேலத் தெருவுங் கண்டேன்
மேகம் போல வீட்டைக் கண்டேன்.
தருமர் மகனை நான்
தனியே வரக் காணலையே?
கீழத் தெருவுங் கண்டேன்,
கீழ மேலு ரோடுங் கண்டேன்,
தாவரப் பத்தி கண்டேன்,
தருமர் மகன் தலை காணேன்
பெரிய கம்மா திருகு கள்ளி
பேர் போன ரட்ன கள்ளி
மாமன் மகன் மந்திர கிளி
வந்திராதோ இந்த வழி?
வட்டார வழக்கு: நைச் சிவப்பு-நைச் சிவப்பு (Nice) (வ. வ.); விரிச்சா-விரித்தால்; வச்சா-வைத்தால்; ரட்ன-ரத்தின
சேகரித்தவர்: S.S. போத்தையா
இடம்: தங்கம்மாள்புரம், விளாத்திகுளம்.
------------------
நான் வருவேன் நடுச்சாமம்
காதலியின் கிராமத்திற்கும், காதலனின் கிராமத்திற்கும் இடையில் பொருனையாறு ஓடுகிறது. மழைக்காலம் ஆற்றில் கழுத்தளவு தண்ணீர் வருகிறது. கரையிறக்கத்தில் கிடந்த தோணி தண்ணீரோடு போய் விட்டது. அன்றிரவு அவன் அவளிடம் வருவதாகச் சொல்லியிருந்தான். அச் சொல்லைக் காப்பாற்ற வெள்ளத்தை நீந்தியே சென்று விடுவதென முடிவு செய்கிறான். அக்கரையிலிருந்தே அவன் பாடுகிறான். இக்கரையிலிருந்த காதலிக்கு அது கேட்டதோ இல்லையோ?
ஆத்துல தோணிவிட
ஆளிறங்காத் தண்ணி வர
நான் வாரேன் நீச்சலில்
நினைவாப் படுத்திரடி
சடசடணு மழை பேய
சாமம் போல இடி விழுக
கொடை பிடிச்சு நான் வாரேன்
குணமயிலே தூங்கிராத
இடி விழுந்து மழை பெய்ய
கொடை பிடிச்சு நான் வாரேன்
குண மயிலே தூங்கிராத
நாராங்கி வீட்டுக்காரி
நடுத் தெருவு வெள்ளையம்மா
நான் வருவேன் நடுச் சாமம்
நாயை விட்டு ஏவிராத
வட்டார வழக்கு: ஆளிறங்கா-ஆளிறங்க முடியாத; இடி விழும்-இடிவிழ; தூங்கிராத-துங்கி விடாதே; ஏவிராத-ஏவி விடாதே.
சேகரித்தவர்: S.S. போத்தையா
இடம்: நெல்லை மாவட்டம்
---------------
சத்தியம்
தினந்தோறும் அவளைக் காண வரும் காதலன் சில நாட்கள் வரவில்லை. ஒரு நாள் அவள் வயலில் வேலை செய்யும் பொழுது அவன் வந்து நிற்கிறான். அவளுக்குக் கோபம். எனவே சிறிது நேரம் பேசவில்லை. அவன் கெஞ்சுகிறான். வராமலிருந்ததற்குக் காரணங்கள் கூறுகிறான். அக்காரணங்கள் நியாயமென்று தோன்றிய போதிலும், அவன் தன்னை மறப்பதில்லை என்று சத்தியம் செய்து கொடுக்கும்படி அவள் கேட்கிறாள். சத்தியம் செய்வதில் பலவகைகள் உண்டு. உறவினர் தலையிலடித்துச் சத்தியம் செய்தல், சூடமனைத்துச் சத்தியம் செய்தல், கையிலடித்துச் சத்தியம் செய்தல், கோயில் கொடி மரத்தைத் தொட்டுச் சத்தியம் செய்தல், வெற்றிலை, அன்னம் முதலியவற்றைத் தொட்டுச் சத்தியம் செய்தல், துணிபோட்டுத் தாண்டிச் சத்தியம் செய்தல் முதலியன. சத்தியம் செய்து மீறினால் தெய்வ தண்டனை கிடைக்கும் என்பது பாமர மக்களது நம்பிக்கை.
எலுமிச்சம் போல
இரு பேரும் ஒரு வயது
சரியாக இருப்ப மிண்ணு
சத்தியமும் கூறினமே
அரக்கு லேஞ்சுக் காரா நீ
பறக்க விட்ட சண்டாளா!
மறக்கலைண்ணு சொல்லி
வலக்கை போட்டுத் தாடா
மீனாட்சி கோயிலுல
முன்னம் ஒரு கம்பம் உண்டு
கம்பத்தைத் தொட்டுத் தந்தா
களங்கம் இல்லை உன் மேலே.
சேகரித்தவர்: S.S. போத்தையா
இடம்: விளாத்திகுளம், திருநெல்வேலி மாவட்டம்.
--------------
விறகுக்காரி
மலையில் விறகு வெட்டும் கூட்டத்திலிருந்து தனித்து விட்ட காதலர்களின் உரையாடல் இது.
பெண்: கோடாலி கொண்டல்லவோ
கொடி விறகு தானெடுத்து
தலைவிறகு மாத்த வந்த-என்
தங்கத்தையே வரச் சொல்லுங்க
ஆண்: தோப்புலயோ சாவக்கட்டு
தோகை மயில் போயிருக்கு
கண்டா வரச் சொல்லுங்க
கான மயில் தேடுதிண்ணு
பெண்: நெடு நெடுண்ணு வளர்ந்தவரே
நீலக் குடை போட்டவரே
பச்சைக்குடை எஞ்சாமி
பாதையில் காணியளோ?
தூக்குச் சட்டி கொண்டல்லவோ
தூர வழி போனவரே
தூக்குச் சட்டி கீழே வச்சு
துயரம் தீர்த்தால் ஆகாதோ?
மந்தையில் பந்தடிக்கும்
மாற்றத்துப் புள்ளையாண்டா
ஓடி யடியாதங்க
உங்க மேலே தூசி படும்
இருவரும்: கரும்பு கசக்கிறதும்
கண்ட கனா சொக்கிறதும்
இரும்பு இளகுறதும்
இருவருமே கண்ட கனா.
வட்டார வழக்கு: மாத்த-மாற்ற, காணியளோ-காணீர்களோ?; அடியாதங்க-அலையாதீர்கள்.
சேகரித்தவர்: எஸ். எம். கார்க்கி
இடம்: சிவகிரி, திருநெல்வேலி மாவட்டம்
------------
திருச்செந்தூர் பாலம்
காதல் உறவில் ஊடலும் கூடலும் நிகழும். அவைதான் உறவை இறுக்கமாகப் பிணிக்கும். காதலனும் காதலியும் பிணங்கிப் பின் கூடுவதை இவ்வுரையாடல் காட்டுகிறது.
பெண்: திருச்செந்தூர் ஓரத்திலே
விரிச்சதலைப் பாலத்திலே
விரும்பிச் சொன்ன சத்தியங்கள்
வீணாகப் போனதய்யா
அஞ்சு மணி நேரத்திலே
ஆறு கண்ணுப் பாலத்திலே
குளுந்த மணலுல நாம்
கூடுறது எந்த விதம்?
முக்கட்டுக் கல்லுலயே
மூணு விதப் பச்சக் கல்லு
நானெடுத்த பச்சக் கல்லு
யாரெடுத்துக் கொஞ்சினாக?
ஆண்: அஞ்சுகிளி ரஞ்சிதமே
அனேககிளி சினேகிதமே
கொஞ்சும் கிளி ரத்தினத்தை-நான்
குத்தப்பட என்ன சொன்னேன்?
இடை வழிக் கெட்டி
ஏழுகுளம் தலைமுழுகி
கொண்டாடி தலை முடியை
கொடங்கையில் போட்டுறங்க.
சேகரித்தவர்: S.S. போத்தையா
இடம் விளாத்திகுளம் வட்டம், திருநெல்வேலி மாவட்டம்.
------------
பழகினவள் எங்கே போவாள்
இரு காதலர்களுக்கு அண்மையில் மணம் நடக்கவிருக்கிறது. அதுவரை, தன்னைச் சுற்றிச் சுற்றி வர வேண்டாமென்றும், தனது குறும்புகளை நிறுத்தி வைத்துக் கொள்ளுமாறும், நடை உடைகளை மாற்றிக் கொள்ளுமாறும், அவனிடம் அவள் கூறுகிறாள்.
தெற்குத் தெருவிலே
தெல் தெறிக்கும் புள்ளையாண்டா
ஓடித் திரியாதய
ஒங்க மேல தூசு படும்
சாய வேட்டி கட்டாதிய-ஒங்க
சதிரத்துக்கோ நல்லால்லே
வெள்ளை வேட்டி கட்டி வாங்க
வெளுப்பாருந்தா நல்லாருக்கும்
கந்தை வேட்டி கட்டாதிய
கடைக் கெதுக்கே நிக்காதிய
மல்லு வேட்டி வாங்கித் தாரேன்
மெல்லுதமா கட்டி வாங்க
நீல வர்ணப் பொட்டுக்காரா
நிறத்துக் கேத்த சட்டைக்காரா
கண்ணாடி வேண்டாமய்யா
தன்னழகே போது மையா
ஆசை வச்சேன் ஒங்க மேல
ஆளான மாசி மாசம்
பேச நல்ல ஆசை ஐயா
பிறருக்கிடம் வையாதிய
சாய வேட்டி கட்டாதிய
சாயலுல பாராதிய
மல்லு வேட்டி வாங்கித்தாரேன்
மற்ற முகம் பாராதிய
முக்குல நில்லாதிய
முழி சுருட்டிப் பாராதிய
சுத்தி யுமுள்ள வுக
சூதாக எண்ணுவாக
கொல்லையிலே நில்லாதிய
கொடி அரளி சூடாதிய
மதி லெட்டிப் பாராதிய
மதினி வார நேரமாச்சு
ஒத்த வேட்டி கட்டாதிய
உதறி நடக்காதிய
பரக்க முழியாதிய
பழகின எங்க போவா?
வட்டார வழக்கு: சதுரம்-சரீரம்; கட்டாதிய-கட்டாதீர்கள்; நிக்காதிய-நிற்காதீர்கள் என்ற எதிர்மறை வினைகள்; சாயலுல-கோணலாக; பரக்க-அகல விழித்து; முக்கு -சந்தி.
சேகரித்தவர் இடம்:
S.S. போத்தையா விளாத்திகுளம் பகுதி,
திருநெல்வேலி.
-------------
மறக்க மனம் கூடுதில்லை
ராமனைக் கண்டு காதல் கொண்ட சீதை தனித்திருந்த போது கீழ்வருமாறு சிந்திக்கிறாள்;
பெண் வழி நலனொடும் பிறந்த நாணொடும்
எண் வழி உணர்வும், நான் எங்கும் காண்கிலேன்
மண் வழி நடந்து அடி வருந்தப் போனவன்
கண் வழி நுழையுமோர் கள்வனே கொலாம்.
இந்திர நீலமொத்திருண்ட குஞ்சியும்
சந்திர வதனமும் தாழ்ந்த கைகளும்
சுந்தர மணி வரைத் தோளுமே அல;
முந்தி என் உயிரை அம் முறுவல் உண்டதே.
(கம்பன்)
சீதையின் நிலைமையில், கிராமப் பெண்ணொருத்தி தன் மனத்தினுள் நுழைந்த இளைஞனை மனதிற்பதித்து அவனை மறக்க முடியவில்லையே என்று இன்ப வேதனையால் கேட்கிறாள்.
வெத்திலைத் தீனழகா
நித்தம் ஒரு பொட்டழகா
மைக் கூட்டுக் கண்ணழகா
மறக்க மனம் கூடுதில்லை
இஞ்சி இடுப்பழகா
எலுமிச்சங்காய் மாரழகா
மஞ்சச் சிவப்பழகா
மறக்க மனம் கூடுதில்லை
ஆலிலை போல் அடி வயிறு
அரசிலை போல் மேல் வகிடும்
வேப்பிலை புருவக்கட்டும்
விடவும் மனம் கூடுதில்லை
காத்தடிச்சுத் தாழை பூக்க
காத வழி பூ மணக்க
பூவார வாசத்துல
போக மனம் கூடுதில்லை
சுத்திச் சிவப்புக்கல்லு
சூழ் நடுவே வெள்ளைக்கல்லு
வெள்ளைக் கல்லும் பாவனையும்
வெறுக்க மனம் கூடுதில்லை
தெற்கத்திக் கும்பாவாம்
திருநெல்வேலி வெங்கலமாம்
மதுரைச் சர விளக்கை
மறக்க மனம் கூடுதில்லை
ஆருக்கு ஆளானேன்
ஆவரைக்குப் பூவானேன்
வேம்புக்கு நிழலானேன்
வெறுக்குதில்லை உங்க ஆசை
கம்பம் பூவே கமுகம் பூவே
காத்தடிச்சா உதிரும் பூவே
மாதுளம் பூ என் கனியை
மறக்க மனம் கூடுதில்லை
கம்மங் கருதிருக்க
கருத்தூரணி தண்ணிருக்க
புங்க நிழலிருக்க
போக மனம் கூடுதில்லை
வட்டார வழக்கு: கும்பா-சரவிளக்கு.
சேகரித்தவர்: S.S. போத்தையா
இடம்: விளாத்திகுளம் பகுதி, திருநெல்வேலி.
----------------------
ஆளுக்கொரு தேசமானோம்
பஞ்ச காலத்தில், வேலை தேடித் தேயிலைத் தோட்டத்திற்கு ஒரு இளைஞன் சென்றான். மழை பெய்து பயிர் செய்யும் காலம் வந்ததும் திரும்புகிறேன் என்று சொல்லிச் சென்றான். மழை வந்தது. புஞ்சைக்காட்டு வேலைகளும் தொடங்கி விட்டன. அவள் அவனது வாக்குறுதியை எண்ணி வருந்துகிறாள்.
கழுகு மலைக் குருவி குளம்
கண்டெடுத்தேன் குண்டு முத்து
குண்டுமுத்தைக் காணாமல்
சுண்டுதனே கண்ணீரை
வேப்பம்பூ பூராதோ
விடிந்தால் மலராதோ
நேற்று வந்த நேசருக்கு
நேரந் தெரியாதோ!
வேம்பு தளுக்காதோ
வீசுங் கொம்பு ஓடாதோ!
வீசுங் கொம்பு மேலிருந்து
வெள்ளை தெரியாதோ
எலுமிச்சம் பழம் போல
இருபேரும் ஒரு வயது
யாரு செய்த தீவினையோ
ஆளுக்கொரு தேசமானோம்.
வட்டார வழக்கு: சுண்டுதனே-சுண்டுகிறேனே; பூராதோ -பூக்காதோ; தளுக்காதோ-தளிர்க்காதோ.
சேகரித்தவர்: S.S. போத்தையா
இடம்: நெல்லை மாவட்டம்.
-------------
நெருப்புத் தணலாகுதடா!
பிரிந்திருக்கும் காதலி காதலனைச் சேரும் காலத்தை எண்ணி ஏங்குகிறாள். இப்பாடலில் அடுக்கடுக்காக உவமைகள் வருகின்றன; இவையாவும் உழவர் வாழ்க்கையிலிருந்து எடுத்தாளப்பட்டவை.
மதுரை மரிக் கொழுந்தே
மணலூறு தாழம் பூவே
சிவ கெங்கைப் பன்னீரே
சேருறது எந்தக் காலம்
கட்டிலுச் சட்டம் போல
கடைஞ் செடுத்த விட்டம் போல
உத்திரத்துத் துணு போல
முத்து இருந்து வாடுறனே!
ஆசை மனம் கூசுதையா
அம்புருவிப் பாயுதையா!
நேச மனம் நெஞ்சினிலே
நெருப்புத் தணலாகுதடா
ஏக்கம் பிடிக்குதையா!
என்னுசுரு போகுதையா!
தூக்கம் குறைஞ்சதையா
துரைமகனைக் காணாமல்
நிறை குடத்துத் தண்ணிபோல
நிழலாடும் என் சதுரம்
குறை குடத்துத் தண்ணீராய்
குறைஞ்சதய்யா உன்னாலே
குறிப்பு: முத்து இருந்து -தன் பெயரையே குறிப்பிடுறாள்.
சேகரித்தவர்: S.S. போத்தையா
இடம்: நெல்லை மாவட்டம்.
---------------
கிளியம்மா
சில நாள் பிரிவுக்குப் பின்னர் ஒருவன் தன் காதலியைக் காணுகிறான். ஆசை மேலீட்டால் என்னென்னவோ பிதற்றுகிறான். அப்பிதற்றுதலில் எழுந்த பாடல் தான் இது.
கன்னங் கருத்த புள்ளே
கை மோதிரம் தோத்த புள்ளே
உள்ளங்கைத் தேனா
உருகரண்டி உன்னாலே
இடியிடித்து மழை பொழிய
இருண்ட வெள்ளம் திரண்டுவர
குடை பிடித்து நான் வருவேன்
குயிலாளே தூங்கிடாதே
ஓட்டைக் கரண்ட கமாம்
ஓசையிடும் வெண்கலமாம்-உன்
காட்டு மரிக் கொளுந்தை-கொஞ்சம்
காட்டி விட்டா லாகாதா?
ஆலமரத்தைப் பாரு
அடிமரத்து வேரப்பாரு
குண்டஞ் சம்பா நெல்லப் பாரு-
புள்ள கிளியம்மா
குட்டிபோர சோக்கப் பாரு-
போடு தின்னாக்கு
ஆத்துக்கு அந்தாண்ட
அத்தைமகள் ரெண்டு பேரு
கொட்ட மரம் வெட்டயிலே-
புள்ள கிளியம்மா
போட்டாண்டி பொட்டுத்தாலி-
போடு தின்னாக்கு
வட்ட வட்டப் பாறையிலே
வர கரிசித் தீட்டயிலே
ஆர் கொடுத்த சாயச் சீலே-
புள்ளக் கிளியம்மா
ஆலவட்டம் போடுதடி-
போடு தின்னாக்கு
கூடமேலே கூட வச்சு
கோயிலுக்கு போர பொண்ணே
கூடை அரப் பணமா?-உன்
கொண்டப் பூ காப்பணமா?
சட்டி மேலே சட்டி வச்சு
சந்தைக்குப் போரப் புள்ளே
சட்டி அரப்பணமா?-உன்
சாமந்திப்பூ காப்பணமா?
வட்டார வழக்கு: தோத்த-தோற்ற; வேரப்பாரு-வேரைப்பாரு; அந்தாண்ட-அந்தப் பக்கம்; பத்துலன்னு-பற்றவில்லை என்று; வெளுக்கரண்டி-உதைக்கிராண்டி.
உதவியவர்: சந்திரன்
இடம்: வாழப்பாடி, சேலம் மாவட்டம்.
---------------
காதலியைக் கொன்ற தகப்பன்
மலையோரங்களில் தோட்டங்கள் உள்ள வெள்ளாமையைக் காட்டுப் பன்றி, காட்டெருமை முதலிய மிருகங்கள் நாசம் செய்யாவண்ணம் காக்க, கண்ணி வைத்தல், அம்பு எய்தலும் உண்டு. அப்படி மலையோரம் உள்ள தோட்டத்தில் ஒரு இளைஞன் காவல் காத்து வந்தான். அவன் தினமும் இரவு வேளையில் தனது காதலியைச் சந்திக்க மகுடி வாசிப்பான். அவளும் அவனைத் தேடிவந்து கூடிய பின்னர் திரும்புவாள். மகுடிச் சத்தம் இல்லையேல் அவள் வரமாட்டமாள்.
ஒருநாள் தன் தகப்பனின் உத்தரவுப்படி அவன் வேற்றுாருக்குச் சென்றான். செல்லும் பொழுது மகுடியை வேறு யாரும் ஊதாமலிருக்க அதை உடைத்து வைத்து விட்டுச் சென்றான். அன்று இரவு கொல்லைக்கு வந்த அவன் தகப்பன் யாரோ போக்கிரிகள் அதை உடைத்து விட்டதாக எண்ணி ஒட்டவைத்து ஊதினான். இச்சத்தத்தைக் கேட்டதும் அவன் காதலி தன் காதலன் மகுடி வாசிப்பதாக எண்ணி அங்கு வருகிறாள். அப்பொழுது அவன் தகப்பன் யாரோ திருடன் என எண்ணி அவள் மீது அம்பு விடுகிறான். அவள் சத்தமிட்டபடி கீழே விழுகிறாள். அவள் அருகில் வந்ததும் விஷயத்தைப் புரிந்து கொள்கிறான். மறுநாள் அவள் காதலன் அங்கு வந்து பார்த்துப் புலம்புகிறான். தகப்பனைத் திட்டுகிறான். தகப்பனும் தான் தெரியாமல் செய்ததாக வருந்துகிறான். இச்சம்பவத்தை விவரிப்பதுதான் இந்தப் பாடல்கள்.
காதலன்:
மழையா கருக்கலாடி
மாமயிலே பெண்ணரசே
வழி தேடி வந்தே
காதலி:
அத்தி நார்ப் பட்டெடுத்து
அழகு கன்னிப் பால் பிடித்து
உன்னிலும் உன்னிதமாய்
ஊதினார் உன் தகப்பன்
மகன்:
சாதா குருடா
சண்டாளா என் தகப்பா
சந்தன மாமரத்தை
தாளுருவக் கொல்ல லாமா?
தகப்பன்:
உன்னானை என்னானை
உன் தேவின்னு நானறியேன்
காவலை அழிக்க வந்த
கள்ளன்னு அம்பு போட்டேன்
பக்கத்துக் கிராமங்களில் தகப்பனுக்கும் மகனுக்கும் நடக்கும் விவாதங்கள் வேறு உருவத்தில் பாடலாகப் பாடப்படுகிறது. அதையும் பார்ப்போம்.
மகன்:
மழைக்கால் இறங்கி
மாமழை மின்னல் மின்ன
சாதா குருடா
சண்டாளா என் தகப்பா
ஓரக் கண்ணா உனக்கு
ஒரு கண்ணும் நொள்ளையா
காவல் பறி போகுதின்னு-
என் காதலியே கொன்னாயா?
இதைக் கேட்டதும் அருகில் உயிருக்கு மன்றாடிக் கொண்டிருந்த அவன் காதலி கூறுகிறாள்.
காதலி:
சீந்திக் கொடி பிடுங்கி
சீலப் பேன் மெழுகடைத்து
உன்னிலும் உன்னிதமாய்
ஊதினார் உன் தகப்பன்.
வட்டார வழக்கு: உன்னிதமாய்-உன்னதமாய்: கள்ளன்னு -கள்ளன் என்று.
குறிப்பு: சீலைப்பேன் மெழுகு நிறம் இருக்கும். இறுகிய மெழுகு மேலே ஒட்டுவது போல் அது ஒட்டிக்கொள்ளும், இது ஒரு சிறுகதைப்பாடல்.
உதவியவர்: சந்திரன்
இடம்: வாழப்பாடி, சேலம் மாவட்டம்.
---------------
கூப்பிட்டது கேட்கலியா?
அவள் குளித்து விட்டு சோலையில் மயிர் உலர்த்திக் கொண்டிருந்தாள்; அப்பொழுது அவள் காதலன் கோபுரத்தின் மேலேறிக் கூப்பிடுகிறான். அதற்கு அவள் பேசவில்லை. பிறகு அவள் அருகில் சென்று தான் கூப்பிட்டதிற்கு ஏன் பேசவில்லை எனக் கேட்கிறான். அதற்கு அவள் நீங்களா கூப்பிட்டீர்கள். அத்தச் சத்தம் குயில் சத்தம் என்றல்லவா இருந்தேன் என்று சொல்லுகிறாள்.
(குறிப்புரை-T. மங்கை)
காதலன்:
மாமரத்து சோலைக்குள்ளே
மயிருணத்தும் குள்ளப் பெண்ணே
கோபுரத்து மேலேறி
கூப்பிட்ட சச்சம் கேக்கலியா?
காதலி:
கூப்பிட்ட சச்ச மெல்லாம்
குயிலுன்னு நானிருந்தேன்
ஆளுச் சச்ச மின்னிருந்தா
அச்சணமே வந்திருப்பே
வட்டார வழக்கு: சச்சம்-சத்தம்; அச்சணமே-அக்கணமே.
உதவியவர்: சந்திரன்
இடம்: வாழப்பாடி, சேலம் மாவட்டம்.
---------------
காத்திருந்து வீணாச்சு!
அவர்கள் உறவு சிறு வயது சேர்க்கையில் பிணைக்கப்பட்டது. இருந்தாலும், அவள் இன்று வேறொருவனுக்கு மனைவி, குடும்பத்தின் நிர்ப்பந்தத்தால் அவள் உரிமை இன்னொருவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தாலும் அவள் உள்ளம் மட்டும் தனது காதலனிடமே குடிகொண்டிருந்தது.
தேங்காய் மூடியின் உள்பரப்புப் போன்ற பள்ளமான இடம். காதலர் களித்து மகிழ ஏற்ற இடம். வாய்க்கால் ஓடுகிறது. தண்ணீர் எடுக்க அவன் காதலி அங்கு தினம் வருவது வழக்கம். ஒருநாள் அவளை அவன் சந்திக்கிறான். அவன் பேரில் அவளுக்கு ஒரே ஆசை. மாற்றான் மனைவி என்னும் உரிமை அவனைத் தடுக்கிறது. இருந்தாலும் பழைய உறவு அவனை உசுப்புகிறது.
'தாகமாயிருக்கிறது. தண்ணீர் கிடைக்குமா?'என்று அவளைக் கேட்கிறான்.
அவனைப் போன்றே அவள் உள்ளத்திலும் போராட்டம். அவன் என்ன கேட்கிறான் என்பதை பார்வையின் மூலம் புரிந்து கொள்கிறாள். "நீருண்டு, வீட்டுக்கு வந்தால் நல்ல தண்ணீர் கிடைக்கும்" என்று வீட்டின் அடையாளத்தைக் காட்டிவிட்டு சென்று விடுகிறாள். இரவு நேரம். அடையாளம் குறிப்பிட்ட தென்னை மரத்தடியில் அவன் வந்து அமர்ந்திருக்கின்றான். தனது வருகையை ஏதோ குறிப்பு மூலம் அவளுக்குத் தெரியப்படுத்துகிறான்.
அவளுக்கு என்ன செய்வதென்று புலப்படவில்லை. ஒரு பக்கம் தனது கள்ளக் காதலனை திருப்திப்படுத்த வேண்டும். மறுபுறம் அழும் குழந்தையையும், அடுப்பில் காயும் பாலையும் கவனிக்க வேண்டும். போதாக் குறைக்கு பாலகனைப் பெற்ற பாட்டனார் வேறு தூங்காமல் படுத்திருக்கிறார். தனது காதலனைச் சந்திக்க முடியுமென்ற நம்பிக்கையை இழக்கிறாள். குழந்தைக்குத் தாலாட்டுச் சொல்வது போல தான் வர முடியாத நிலையை உணர்த்துகிறாள்.
அவனுக்கு இதெல்லாம் காதில் விழவில்லை போலும் அவள் வரவை எதிர்பார்த்துக் கொண்டே அமர்ந்திருக்கிறான். கிழக்கு வெளுத்தது. அவனுக்கு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது. விரகதாபம் அவனை ஏது சொல்வதென்றே தெரியாமல் சொல்ல வைக்கிறது. என்னவென்று?
காதலன்:
ஓடற ஒட்டத்திலே
ஒட்டாங் குச்சிப் பள்ளத்திலே
கஞ்சாக் குடிக்கையிலே
கையூனி நிக்கையிலே
தங்கக் குடம் கொண்டு
தண்ணிக்குப் போற பொண்ணே!
தங்கக் கையினாலே
தண்ணி குடுத்தா ஆகாதோ?
காதலி:
வாய்க்காலுந் தண்ணியிலே
வண்டு வரும் தூசு வரும்
குப்பத்துக்கு வந்திருந்தா
குளுந் தண்ணி நாத் தருவேன்
காதலன்:
வீடுந் தெரியாது வாசலுந் தெரியாது
காதலி:
ஒரு பத்தாஞ் செட்டி வீட்டோரம்
ரெண்டு தென்னம்புள்ளை அடையாளம்
அதுக் கடியில் உட்கார்ந்திரு நாவாரே
வந்தபின்னர்
காதலி:
பாலும் அடுப்பிலே தான்
பாலகனும் தொட்டிலிலே
பாலகனைப் பெத்தெடுத்த
பாட்டனாரும் கட்டிலிலே
போவச் சொன்னா பொல்லாப்பு
நிக்கச் சொன்னா நிட்டூரம்
காதலன்:
கிழக்கு வெளுத்துப் போச்சு
கீழ் வானம் கூடிப் போச்சு
கண்ணாத்தா வாசலிலே
காத்திருந்து வீணாச்சு!
வட்டார வழக்கு: நாவாரே-நான் வாரேன்.
குறிப்பு: "பாலகனைப் பெத்தெடுத்த பாட்டனாரும் கட்டிலிலே, இந்த அடியில் ஒரு சமூக உண்மை பொதிந்திருக்கிறது. கொங்கு நாட்டில் கடந்த இரண்டு தலைமுறைக்கு முன்னர் வரையிலும் தன் வீட்டுக்கு வரக்கூடிய மருமகளுக்கு மாமனார் தான் கணவனாக இருப்பான். கோவில் குளங்களுக்கோ, ஊர் சேதிகளுக்கே போவதானாலும், மாமனாரும், மருமகளும்தான் சேர்ந்து போவார்கள். இது சமூகத்தின் முன்னால் இழிவாகக் கருதப்பட்டதில்லை. ஒரு கெளரவமாகவே கருதப்பட்டு வந்தது. பொதுவாக கொங்கு வேளாளர் குடும்பங்களில் தந்தையை அண்ணன் என்றும், பாட்டனாரை அப்பன் என்றும் இந்தத் தலைமுறையில் கூட கூப்பிட்டு வருவது இதற்கு ஒரு சான்றாக அமையலாம். மருமகளை மாமனார் ஆண்டு வருவதை பின்தங்கிய கிராமங்களில் இன்னும் கூடப் பார்க்கலாம்.'
(குறிப்புரை - கு. சின்னப்பபாரதி)
உதவியவர்: பொன்னுசாமி
இடம்: ஓலப்பாளையம்.
-------------------
புத்தி கெட்ட அண்ணா!
பெண்கள் பெரிய மனுசி (புஷ்பவதி) ஆனால் தீட்டுக் காலம் தாண்டும் வரையில், தங்குவதற்கென்று ஒரு பச்சைக் குடிசை கட்டுவார்கள். அந்தக் குடிசையை மாமன்மார்கள் கட்டிவைத்து அழித்து விடுவார்கள். வீட்டுக்கு அழைக்கும் போது சுற்றத்தாரையெல்லாம் அழைத்து விருந்து நடத்துவார்கள். இந்த நிகழ்ச்சியின் மூலம் "எங்கள் வீட்டில் திருமணத்திற்குப் பெண் தயாராகி விட்டது"என்று வெளியாருக்கு சொல்லாமல் சொல்லித் தெரிவிக்கப்படும்.
ஒரு ஏழை வீட்டுப் பெண், கூலி வேலைக்குச் சென்றவள். வேலைமுடிந்து ஒரு தோப்பில் அமர்ந்திருக்கிறாள். தன்னைப் பெண் கேட்கச் சிலர் வந்து போனது அவளுக்குத் தெரியும். அவளைக் கட்டிக் கொடுக்க பெற்றோர் கையில் காசில்லை. இதை நினைத்து தனது குடும்பத்தைச் சேர்ந்த தன்னொத்த வாலிபனிடம் கூறுகிறாள். (ஒரே குலதெய்வத்திற்கு-அதாவது கோயிலுக்குப் போகிறவர்கள் அனைவரும் அண்ணன், தம்பி, தங்கை முறைதான். கொள்வினை கொடுப்பனை கிடையாது.) அப்பொழுது செங்காத்தும் செம்மழையும் வருகிறது. குலம் கோத்திரம் பார்க்காத இந்தக் காலத்து மைனர் ஒருவன் தனக்குத் தங்கை முறை ஆகிற அப்பெண்ணைப் பார்த்து, "மாமரம் பூஞ்சோலை இருக்கும், வாடி, போயி ஒண்டிக்கலாம்" என்று முறை வைக்காமல் கூப்பிடுகிறான். இதைக் கேட்ட அவளுக்கு ஆத்திரம் பிரிட்டு வருகிறது. "புத்தி கெட்டவனே குலம் கோத்திரம் கூட உனது மோகவெறியில் மறைந்து விட்டதா? இதைப் பூமாதேவி கேட்டாளென்றால் புலம்பிக் கண்ணிர் விடுவாள்"என்று அவனுக்குச் சூடு கொடுக்கிறாள். அதை அவள் வாயாலேயே சொல்லக் கேளுங்கள்.
(குறிப்புரை - சடையப்பன்)
பெண்:
ஒரு கட்டு மூங்கில் வெட்டி
மலையோரம் சாத்தி
அதுக்கு ரெண்டு மலையாளத்தா
ஏலங் கூறி வருவா
அதுக்கு ரெண்டு காசு பணம்
நாங்கள் எங்கு போவோம்
செங்காத்தும் செம்மழையும்
வருகுதடி அம்மா
ஆண்:
மாமரந்தான் பூஞ்சோலை
ஒண்டிக்கலாம் பொண்ணே
பெண்:
பொண்ணே பொண்ணே! எங்காடாதே
புத்தி கெட்ட அண்ணா
பூமா தேவு கண்டா லென்றால்
புலம்பிடுவாள் இப்போ
வட்டார வழக்கு: மூங்க-மூங்கில்; ரெண்டு - இரண்டு; ஒண்டிக்கலாம்-ஒளிந்து கொள்ளலாம்.
உதவியவர்: C. செல்லம்மாள்
சேகரித்தவர்: சடையப்பன்
இடம்: பொன்னேரிப்பட்டி, அரூர், தருமபுரி மாவட்டம்.
---------------
சேர்ந்த கிளி
நெடு நாட்கழித்து காதலர்கள் மகிழ்ச்சியோடு உரையாடுகிறார்கள்.
ஆண்:
செட்டி கடை வெட்டி வேரு
சிவகாசிப் பன்னீரு
கட்டி மருக் கொழுந்தே
கம்மாயில கூடினமே
பெண்:
கூடினதில் குற்றமில்லை
குலத்துக் கொரு ஈனமில்லை
ஊராரு சொல்லையிலே
ஊடுருவிப் பாயுதையா
ஆண்:
நந்தட்டம் பாதை வழி
நான் போவேன் ஒத்தவழி
மின்னிட்டான் பூச்சி போல
முன்னே வந்தா லாகாதோ
பெண்:
கல்லுரலு மேலி ருந்தது
கனிவாய நீ திறந்தா
செம்பங் கிளி வாய் திறந்தா
சேர்ந்த கிளி வந்திருமே
சேகரித்தவர்: S.S. போத்தையா
இடம்: விளாத்திகுளம் பகுதி, திருநெல்வேலி மாவட்டம்.
---------------
கூடப் புறப்பட்டாள்
கணவனும் மனைவியும் காலையில் அயலூர் செல்ல முடிவு செய்திருந்தார்கள். அவன் நன்றாக உறங்கி விட்டான். அவள் எழுந்து காலை உணவு தயாரித்து அவனை எழுப்பச் செல்லுகிறாள். அவன் அருகில் நின்றுகொண்டு பள்ளியெழுச்சி பாடுகிறாள். அவனும் துயிலுணர்ந்து அவள் பயணத்திற்குத் தயாராயிருப்பதைக் கண்டு மகிழ்ந்து அவள் பாட்டிற்குப் பதில் பாட்டுப்பாடுகிறான்.
மனைவி:
பாம்புக் கண்ணு கட்டிலிலே
படுத்து நித்திரை செய்யயிலே
சொல்லி உறங்கி விட்ட
சுந்தரமே எந்திரிங்க
தேக்கம் பலகை வெட்டி
தெக்குப் பாத்த மச் சொதுக்கி
மச்சுக்குள்ள நித்திரை போம்
மந்திரியே எந்திரிங்க
மகிழ மரக் கட்டிலுல
மதி கிளி படுத்திருக்க
நானும் உசுப்பரேனே
நல்ல உறக்கம் தானோ?
சொளகு பின்னல் கட்டுலல
சொகுசா நித்திரை செய்யயிலே
கால் கடுக்க நிக்குறனே
கவலை யத்த நித்திரையோ?
கணவன்:
பஞ்சணை மெத்தையிலே
படுத்து நித்திரை செய்யயிலே
தாளம் பூக் கையாலே
தட்டி உசுப்புனாளே
பாம்புக் கண்ணு கட்டுலிலே
படுத்து நித்திரை செய்யலிலே
சோலைக் குயில் போலச்
சொல்லி உசுப்புனாளே
சாலையான சாலையிலே
சாரட்டுப் போடையிலே
குங்குமப் பட்டுடுத்தி
கூடப் புறப்பட்டியே
வட்டார வழக்கு: உசுப்பரேனே-எழுப்புகிறேனே; சாரட்டு-Chariot என்ற ஆங்கிலச் சொல்லின் திரிபு.
சேகரித்தவர்: S.S. போத்தையா
இடம்: நெல்லை மாவட்டம்.
--------------------
தூது
காதலனைப் பிரிந்திருக்கும் காதலி கிளியையும், குயிலையும் மேகத்தையும் தூதனுப்புவது தமிழிலக்கிய மரபு. பார்ப்பானும், தோழனும், பாங்கியும், பாணனும் காதலர்களிடையே தூது செல்ல தகுதி வாய்ந்தவர்களென்று தொல்காப்பியம் கூறுகிறது. இம்மரபைப் பின்பற்றி நாட்டுப் பாடலிலும் தூது அனுப்புவது வாழ்க்கையின் மரபாகக் கருதப்படுகிறது.
ஓலை யெழுதி விட்டேன்
ஒன்பதாளு தூதுவிட்டேன்
சாடை எழுதி விட்டேன்
சன்னக் கம்பி வேட்டியிலே
அம்பார மேடையிலே
அன்பு ஊஞ்சலாடயிலே
யாரிட்ட சொல்லி விட
அன்புள்ள துரை மகனே?
ஓடுற தண்ணியிலே
ஒரைச்சு விட்டேன் சந்தனத்தை
சேர்ந்ததுவோ சேரலையோ
செவத்தச் சாமி நெத்தியிலே
சேகரித்தவர்: S.S. போத்தையா
இடம்: சூரன்குடி, விளாத்திகுளம் வட்டம், திருநெல்வேலி மாவட்டம்.
--------------
கிளியம்மா
திருவிழாவுக்கு ஊரே திரண்டு போகிறது. ஒரு இளம் பெண், தனது காதலனுக்கு வழியில் கொடுப்பதற்கென்று பிட்டு வாங்கி மறைத்து வைத்திருந்தாள். அவன் ஆண்கள் கூட்டத்தில் சேர்ந்து போய்க் கொண்டிருந்தான். வழிநெடுக பிட்டைக் கொடுக்க முடியவில்லை. அவனுக்குக் கொடுக்காமல், தான் தின்னலாமா? அவளுடைய தோழி கிளியம்மாவுக்கு இது தெரியும். அவள் வேடிக்கையாகப் பிட்டைக் கேட்கிறாள். அப்பொழுது தனது கவலையை அவளுக்குத் தெரிவிக்கிறாள் காதலி.
ஆத்துல எடுத்த கல்லாம்
புள்ளே கிளியம்மா
அழகா குழவிக்கல்லாம்
புள்ளே கிளியம்மா
மஞ்சள் ஒரைக்கும் கல்லாம்
புள்ளே கிளியம்மா
ஆசைக்குத்தான் புட்டு வாங்கி
புள்ளே கிளியம்மா
குடுக்கனெண்ணும் நானிருந்தேன்
புள்ளே கிளியம்மா
கூட்டத்திலே போறானடி
புள்ளே கிளியம்மா
குடுக்க முடியலியே
புள்ளே கிளியம்மா.
பலவிதமானக் கல்லைக் குறிப்பிடுவது, ஒரு கல்லில் தனித்து உட்காரும்படி காதலனுக்குக் குறிப்பால் உணர்த்துவது. அவன் தனித்தால் பிட்டைக் கொடுத்து விடலாம் அல்லவா?
சேகரித்தவர்: சடையப்பன்
இடம்: அரூர், தருமபுரி மாவட்டம்.
--------------
இடம்
காதலர்கள் கணவன் மனைவியராகி விட்டனர். ஒரு நாள் ஊரையடுத்துள்ள ஓரிடத்துக்குப் போகிறார்கள். அங்கே அவர்களுடைய காதல் கேளிக்கைகளுக்குச் சாட்சியாகவிருந்த இடமும், மரங்களும் எதிர்ப்படுகின்றன. இருவரும் மகிழ்ச்சியோடு அவ்விடங்களைப் பார்த்து பாடத் தொடங்குகிறார்கள். இன்று அவர்கள் இணைபிரியாத இல்லறத்தாராகி விட்டார்கள். ஆனால், அவர்களைப் பிணைத்து வைத்த தோட்டம் பாழாகக் கிடக்கிறது. அதன் கடமை முடிந்துவிட்டது. இனி அவர் வாழ்க்கையில் அந்த இடம் ஒரு புனித நினைவாக மட்டுமே எஞ்சி நிற்கும்.
கணவன்:
பூசர மரத்துத் தோட்டம்
பொன்னுங்கிளி பார்க்கும் தோட்டம்
அன்னா தெரியுது பார்
அன்னக் கிளி காக்கும் தோட்டம்
மனைவி: ஏழு புளிய மரம்
எதிராகவே வேப்பமரம்
சந்து புளிய மரம்
சாமி வந்து நிற்கும் மரம்
இருவரும்:
கூடி இருந்த இடம்
கும்மச் சரம் போட்ட இடம்
வாழப்பழம் தின்ன இடம்
பாழாக் கிடக்குது பார்
வட்டார வழக்கு: பூசர மரம்-பூவரச மரம் (நெல்லைப் பேச்சு); பார்க்கும்-காவல் காக்கும்; கும்மச்சரம்-கும்மாளம்; அன்னா-அதோ.
சேகரித்தவர்: S.S. போத்தையா
இடம்: விளாத்திகுளம் வட்டம், திருநெல்வேலி மாவட்டம்.
--------------
அச்சு மட்டம் !
தீபாவளியன்று புதிது உடுத்தி முல்லைச்சரம் சூடி வெளியே வருகிறாள் பொன்னி. அவளின் முகம் காண வெளியே புத்தாடையணிந்து காத்திருக்கிறான். அவளுக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. அவனையும் தன்னையும் மனக்கண்ணில் சேர்த்து நிறுத்தி பொருத்தம் நோக்குகிறாள். அவள் முடிவு என்ன? கேளுங்கள்.
(பெண் பாடுவது)
கொண்டைக்கு ஒத்த
கொல்லைப்பட்டி முல்லைச்சரம்
அவருக்கு ஒத்த
அச்சு மட்டம் நானலவோ?
நாட்டுக்கு நாட்டு மட்டம்
நாமரெண்டும் சோடி மட்டம்
கோர்ட்டுக்குப் போனாலும்
கோடி சனம் கையெடுக்கும்
கருப்புககு ஏத்த
கோயமுத்துர் மல்பீசு
அவருக்கு ஏத்த
அச்சு மட்டம் தானல்லவோ?
குறிப்பு: கோர்ட்-ஜனங்கள் கூடியிருக்கும் இடங்களுள் கோர்ட்டும் ஒன்று. கோயிலுக்கு என்று மேல் சாதிக்காரர்கள் பாடுவார்கள். ஆனால் தாழ்த்தப்பட்டோருக்கு கோயிலில் நுழையும் உரிமை இல்லாதிருந்ததால் அவர்கள் பாட்டில் கோயில் பொதுவாக இடம் பெறுவதில்லை.
சேகரித்தவர்: S.S. போத்தையா
இடம்: நெல்லை மாவட்டம்.
-------------
போவதில்லை!
காதலர் உறவு வெளிப்பட்டது. அவளை வீட்டில் அடைத்துப் போட்டனர். சுடுசொல் பொழிந்தனர். உறவினர் எல்லோரும் கடுகடுத்தனர். சில நாட்களுக்குப் பின்னர் அவள் வயலுக்குச் செல்லுகிறாள். அவன் அவளைப் பின் தொடருகிறான். அவள் பேசாமலேயே முன் செல்லுகிறாள். அவன் பேச்சுக் கொடுக்கிறான்; அவள் கடுகடுப்பாக ‘என் முகத்தைப் பாராதே' என்று கூறுகிறாள். அவனோ அவளை விடுவதாக இல்லை. அவள் வேலை செய்யும் நேரமெல்லாம் வரப்பிலுள்ள கல்லின் மேல் உட்கார்ந்திருக்கிறான். கடைசியில் அவள் நிமிர்ந்து "உன்னால் பகை உண்டாகிறது போய் விடு" என்று சொல்லுகிறாள். அவனோ "என்ன பகையாகி விட்டாலும், உன்னை மணம் செய்து கொண்டுதான் ஊரைவிட்டுப் போவேன்" என்று சத்தியாக்கிரகம் செய்கிறான்.
ஆண்:
ஒத்தடிப் பாதையிலே
உன்னதமாப் போற புள்ளே
ஒன்பது வகைப் பூத்தாரேன்
என் முகத்தைப் பாரேண்டி
பெண்:
பார்த்தனடா உன் முகத்தை
பகைச்சனடா என் ஜனத்தை
கேட்டனடா உன்னாலே
கேளாத கேள்வியெல்லாம்
கல்லோரம் காத்திருக்கும்
கருத்தக் கொண்டை சிவத்தச்சாமி
ஏனையா காத்திருக்கே?
ஏகப்பகை ஆகுதையா!
ஆண்:
ஏகப்பகை ஆனாலென்ன?
எதிராளி வந்தாலென்ன?
உன்னை மணம் செய்யாமல்
ஊரை விட்டுப் போவதில்லை
சேகரித்தவர்: S.S. போத்தையா
இடம்: தங்கம்மாள்புரம்.
---------------
சக்களத்தி
கிராமப்புறங்களில் சொத்து சுகமில்லாதவர்கள் சில வசதிகளுக்காகவோ, அல்லது உழைப்பின் ஊதியம் தனக்கு வரும் என்று கருதியோ, ஒரு மனைவி உயிர் வாழும்பொழுதே மறுமணம் செய்து கொள்வதும், தன்னைவிட வசதியுள்ள பெண்களை வைப்பாக வைத்துக் கொள்ளுவதும் ஓரளவு வழக்கமாயிருந்தது. சொத்துரிமை முறையால், கிழவனைக் கட்டிக்கொண்ட குமரிகள் விதவைகளாக வாழ்வது சாதாரணமாகக் காணப்படுகிறது. இதனால் கணவனை இழந்த மனைவிமார்கள் வாய்விட்டு அரற்றுவார்கள். அதற்குக் காரணம் என்று தமது சக்களத்திமாரைச் சபிப்பார்கள். சமண சமயத்தினளான கண்ணகி, கோவலனைச் சபிக்கவில்லை. ஏனெனில் "தெய்வம் தொழாள், கொழு நற்றொழு தெழுவாள்" என்ற சைன மறையைப் பின் பற்றியவள் அவள். அவள் பெண்ணாகையால் அவளுக்கு 'காதிகா பூமி' என்ற சுவர்க்கம் கிட்டாது. அடுத்த பிறவியில் ஆணாகப் பிறக்க வேண்டும். அதற்கு அவள் இப் பிறவியில் கணவனைத் தெய்வமாக வணங்க வேண்டும். தவறு செய்தால் விதி தண்டிக்கும். ஆனால் நமது கிராமத்துப் பெண்ணோ சமண வேதம் தெரிந்தவளல்ல. ஆகவே தனது உள்ளத்தின் கோபதாபங்களைத் தடிப்பாகவே வெளியிடுகிறார்கள்.
(முதல் மனைவி அல்லது காதலி பாடுவது)
மதுரைக்குப் போகாதிய
மாங்கா தேங்கா வாங்காதிய
மதுரைக் கடைச் சக்களத்தி
மறக்கப் பொடி போட்டிடுவா
வருவாரு போவாரு
வாசலுல நிப்பாரு
சிரிச்சாலும் பேசமாட்டார்
சிறுக்கி போட்ட மையலாலே
குதிரை வாலிக் கருது போல
குறிச்ச பொண்ணு நானிருக்கேன்
கூறு கெட்ட அத்தை மகன்
குறத்தியோட சகவாசம்
முளகாப் பழம் போல
முத்தத்துல வந்து நிக்கேன்
மூதேவி அத்தை மகன்
முண்டச்சியிடம் சகவாசம்
பதினெட்டுப் பணியாரம்
மதிலெட்டிக் கொடுத்தாலும்
இரவலடி என் புருஷன்
எனக்குத் தான் சொந்தமடி
அத்தாப்பு வீடு கட்டி
அதுல ரெண்டு ஜன்னல் வச்சி
எட்டி எட்டிப் பார்த்தாலும்
என் புருஷன் தானேடி
செட்டிக் கடை வெட்டி வேரு
சிவகாசிப் பன்னீரு
மதுரைக் கடைச்சக்களத்தி
மறக்கப் பொடி போட்டா
குதிரைவாலிக் கருது போல
குறிச்ச பொண்ணு நானிருக்கேன்
சரவட்டைக் கருதுக்காக
சாம வழி போகலாமா?
பூசணிக் கீரை தாரேன்
புத்தி கெட்ட சக்களத்தி
சாரணத்தி கரை தாரேன்
சாமியத்தான் விட்டுரடி
காலுரெண்டும் வட்டக்காலு
கண்ணுரெண்டும் இல்லிக்கண்ணு
இல்லிக்கண்ணு சக்களத்தி
ஏசுராளே சாடையிலே
-------------
வாசமில்லாப் பூ
வள்ளியின் காதலன் முருகன். அவன் அக்கரைச் சீமைக்கு போய்விட்டான். அடுத்த ஆண்டில் வள்ளிக்கு மணமாகி விட்டது. முருகன் சிறிது பணத்தோடு ஊர் திரும்பினான். அவளை மணம் செய்து கொள்ள வேண்டுமென்றுதான் அவன் வந்திருந்தான். அவளுக்கு மணம் ஆனது அவனுக்குத் தெரியாது. புல்லறுக்கச் சென்ற வள்ளியை அவன் கண்டான். அவளிடம் பேசினான், அவன். அவள் திருமணத்தைப் பற்றி அவனிடம் சொல்லாமல் மறு நாள் சந்திப்பதாகச் சொல்லிவிட்டு ஓடிப்போய் விட்டாள். அவன் காத்திருந்தான். அன்று அவளை விடுவதில்லை என்று அவன் துணிந்திருந்தான். அவள் வந்தாள். அவன் அணைத்துக் கொள்ள ஓடினான். ஆனால் அவள் உண்மையைக் கூறினாள். அவனும் "வாசனையில்லாத பூ என்று யாரும் என்னிடம் சொல்லவில்லையே" என்று சொல்லி அவள் பாதையினின்றும் விலகிக் கொண்டான்.
ஆண்:
ஓடுத ஓட்டத்திலே
ஓலப் பொட்டி கக்கத்திலே
ஓலப் பொட்டி போனாலும்
ஒன்னை விடப் போரதில்லை
பெண்:
சந்தனப் பொட்டழகே
சவுக்கம் சேந்த முகத்தழகே
குங்குமப் பொட்டழகே-உன்னை
கும்பிடுறேன் கையெடுத்து
ஆண்:
சிக்கினியே புல்லறுத்து
சிந்துனியே கண்ணீர
நாளை வருவேண்ணு-நீ
நயந்து மெத்தப் போனயடி
பெண்:
மோட்டாரு வேகத்துக்கும்
எம்புருஷன் கோபத்துக்கும்
இந்தளவு துன்பத்துல
இறந்தாலும் குத்தமில்ல
ஆண்:
செங்கச் செவப்பழகே
செந்தாமரைப் பூவழகே
வாசமில்லாப் பூவினுமே
வந்தவுக சொல்லலியே!
சேகரித்தவர். S.M. கார்க்கி
இடம்: சிவகிரி, நெல்லை மாவட்டம்.
------------------
சட்டம் பொருந்தவில்லை
முறை மாப்பிள்ளை, முறைப்பெண்ணை சற்று வரம்புமீறியே கேலி பேசிக்கொள்ள உரிமை இருந்து வந்தது. இதற்குக் காரணம் முன்னர் ஒரு குறிப்பில் கூறியுள்ளோம்.
ஒரு முறை மாப்பிள்ளை வயதில் இளையவன் உருவத்திலும் பெண்ணைப் பார்க்கிலும் சிறியவன். அவன் விளையாட்டாக அவளிடம் காதல் குறிப்புணர்த்தும் பாடல்கள் பாடுகிறான். அவளும் "மீசை முளைக்காதவன் என் உயரத்தை மீறாதவன். என்னைவிடச் சிறுவன் நீ எனக்கு மட்டமா?"
பெண்:
சோளக் காட்டு மூளையிலே
ஜோடிப் புறா மேயயிலே
ஆளக் கண்டா சச்சம் போடும்
அழகான மாடப்புறா
ஆண்:
கரையிலே கமுக மரம்
கம்மாக் குள்ள வேப்பமரம்
தலையிலே தண்ணிக் குடம்-நீ
தனிச்சு வந்தா லாகாதோ
பெண்:
அருப்பம் இறங்கலியே
ஆளுக் கொஞ்சம் மீறலியே
சட்டம் பொருந்தலையே-நம்ம
சரியான மட்டத் தோட
வட்டார வழக்கு: சச்சம்-சப்தம்.
சேகரித்தவர்: S.M. கார்க்கி
இடம்: நெல்லை மாவட்டம்.
-------------
நான்தானடி உன் புருஷன்
அவன் அவளுக்கு முறை மாப்பிள்ளை. அவளை மணம் செய்து கொள்ள விரும்புகிறான். ஒருமுறை அவளுக்கு ஒரு மோதிரம் பரிசளித்தான். அம்மோதிரம் அவர்கள் உறவை அலராக்கியது. எல்லோரும் கேலி பேசத் தொடங்கினர். புருஷன் என்று சொல்லிவிட்டால் போதுமா? நாலு பேரறிய தாலி கட்ட வேண்டாமா? இப்படி அவள் நினைத்துக்கொண்டே வேலைக்குச் செல்லுகிறாள். அவன் எதிர்ப்படுகிறான். அவள்
பேச்சுக் கொடாமல் விரைவாகச் செல்லுகிறாள். அவனே அவளை அழைத்துப் புருஷன் உறவு கொண்டாடுகிறான். மோதிரம் தந்து உள்ளத்தைக் குலைத்துவிட்ட அவனைப் பார்த்து "இதுதானே என் பெருமை குலையக் காரணம்! உருவிக் கொள் இதனை" என்று கூறுகிறாள். அவன் நயந்து பேசுகிறான். அவள் தன்மேல் மையலுண்டா என்று கேட்கிறாள். அவன் உறுதியாக "நான் தானடி உன் புருஷன்" என்று பதில் சொல்லுகிறான். இருவரும் மகிழ்ச்சியோடு நடந்து செல்லுகிறாகள்.
ஆண்:
வெத்திலை போட்ட புள்ளே
விறுவிறுனு போற புள்ள
நாக்குச் செவந்த புள்ள
நாந்தானடி ஒம் புருஷன்
பெண்:
கருத்தக் கருத்தத் துரை
கைக்கி மோதிரம் தந்தவரே
உருவைக் குறைச்சவரே
உருவிக் கோரும் மோதிரத்தை
ஆண்:
ஜோடி பிரிச்சுராதே-என்
ஜோக்கு நடை மாதரசே
ஆடித் தவசு பார்க்க-நாம்
அழகாய்ப் போய் வருவோம்
பெண்:
கரையிறங்கி வந்தவரே
கன்னி மையல் கொண்டவரே
மாடப்புறா சையலிலே
மையல் உண்டோ எம்மேலே
ஆண்: மூக்குச் செவந்த புள்ள
முக்காத் துட்டுப் பொட்டுக் காரி
நாக்குச் செவத்த புள்ள
நாந்தாண்டி ஒம் புருஷன்
வட்டார வழக்கு: முக்காத்துட்டுப் பொட்டு-முக்காத்துட்டு அகலம் பொட்டு,
சேகரித்தவர்: எஸ்.எம். கார்க்கி
இடம்: நெல்லை மாவட்டம்.
------------
நம்ம துரை
காதலியின் கண்களுக்கு காதலன் உலகத்திலேயே சிறந்தவனாகத் தோன்றுவான். உருவத்திலும், பண்பு நலன்களிலும் அவனே இணையற்றவன் என அவள் நினைப்பாள். காவியங்களில் வரும் காதலனைக் காதலி வருணிக்கும் முறைகளை நாம் கண்டிருக்கிறோம்.
கீழ்வரும் பகுதியில் காதலியர், தமது காதலர்களின் மேன்மையை வியந்து வருணிக்கும் பாடல்கள் தொகுத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இவை யாவும் ஒருவனைக் குறிப்பதில்லை; பாடுபவளும் ஒருத்தியல்ல. ஆகவே பாட்டுக்குப் பாட்டுச் சில முரண்பாடுகள் காணப்படும். ஆனால் பொதுவில் காதலி காதலனிடம் எதிர்பார்க்கும் நலன்கள் யாவும் இப்பாடல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
சேக்கு ஒதுக்கி விட்டுச்
செந்துருக்கப் பொட்டு வச்சி
சோக்கு நடை நடந்தாச்
சொக் குதையா உங்க மேலே
மலையிலே நிழ லோட்டம்
மலைக்குக் கீழ் நீரோட்டம்
ஒங்க மேலே கண்ணோட்டம்
ஓடு தில்ல ஒரு வேலை
நறுக்குச் சவரம் செய்து
நடுத் தெருவிலே போறவரே
குறுக்குச் சவளுதையா
கடந்த லொரு பாகத்துக்கு
கண யாழி மோதிரமே
நிழலாடும் பச்சைக் கல்லு
பச்சைக் கல்லும் பாவனைக்கும்
இச்சை கொண்டே(ன்) உங்க மேலே
ஆளும் சிகப்பல்லோ
அவரு நிறம் தங்க மல்லோ
குணமே சரஸ்வதியோ உங்க
குண மிருந்தாப் போதுமையா
புளிய இலை போல
புள்ளித் தேமல் விழுந்தவரே
அணை வாரு மில்லாமல்
அழியுதையா உங்க தேமல்
ஏடு படிச்ச வரை
எழுத்தாணி தொட்டவரை
பாரதம் படிசசவரை
பார்த்து வெகு நாளாச்சி
முன்னங்கையில் தங்கக் காப்பு
முகம் நெறஞ்ச அருப்பக்கட்டு
காதவழி வந்தாலும்
கைவீச்சில் நானறிவேன்
அச்சடிப் புத்தகமே
அரும் பரும்பாப் பேனாக் குச்சி
பேனாக் குச்சி தொட்டெழுதும்
பேர்ப் போன என் சாமி
பல்லிலே இடை காவி
பணத்திலே செலவாளி
மேவரத்து நெல்லளக்க
மெத்தச் செலவாளி
ஒரு பாகம் தலைமுடியாம்
ஒதுக்கி விட்ட புருவக் கட்டாம்
புருவக் கட்டை நேர் பார்த்து
பூசுமையா திரு நீற்றை
இரும்படிச்சா கல கலங்கும்
ஏலந் திண்ண வாய் மணக்கும்
கரும்பு திண்ண வாயினிக்கும்
கண்ணாளன் தந்த ஆசை
ஈனாத வாழை போல
இளவாழைக் கண்ணு போல
காலையிலே காங்கலைண்ணா
கண்ணு ரெண்டும் சோருதையா
வந்தா வழி மணக்கும்
வாச லெல்லாம் பூ மணக்கும்
கட்டி அணைஞ்ச கையி
எட்டு நாளும் பூமணக்கும்
மதுரையிலே குதிரை வாங்கி
மல்லிகைப் பூக் குஞ்சம் கட்டி
அடித்து வரும் எம் பெருமான்
ஆத்து மணல் தூள் பறக்க
சிந்துதையா சீனிப் பொடி
சிதறுதையா பூ மலரு
அள்ளுதையா தன்னழகு
ஆளோடி நிற்கும் போது
அஞ்சு வயசிலேயே
அழகு தேமல் விழுந்தவரே
பற்றிப் படருதையா
பச்சைக் கிளி தேகத்துலே
நானும் நடந்திருப்பேன்
நடப்பாரைக் கண்டிருப்பேன்
அந்தச் சாமி நடையைப் போல
சைகையிலே காணலியே
மொச்சிச் செடியே நீங்க
முழக்கமுள்ள தாமரையே
பிச்சி மலர்க் கொடியை
பிரிய மனம் கூடுதில்லை
ஒத்தத் தட்டு வேட்டிகளாம்
உல்லாசத் துண்டுகளாம்
பக்கத்துல நிக்கயிலே
பத்து தையா என் மனசு
பட்டு அரை ஞாண் கொடி
பாவி மகன் வாயருமை
விட்டிட்டி ருந்தாலும்
வேறொருத்தி லாவிருவா
குறுக்குச் சிறுத்தவரே
கூத்தாடி மன்னவரே
நாக்குத் திருத்தத்துக்கு
நானுமில்ல ஆசை கொண்டேன்
வந்திருவார் இந்த வழி
வாச்சிருவார் தங்கக்கட்டி
தந்திருவார் வெற்றிலையும்
தயவு வார்த்தை சொல்லிடுவார்
பச்சைக்கல்லு மேமுருகு
பதினெட்டு வானப் பச்சை
மலங்காட்டு மாசிப் பச்சை
மணக்குதையா உங்க மேலே
ஆல மரத்துக் கிளி
ஆசாரம் பேசுங் கிளி
நான் வளர்த்த பச்சைக் கிளி
நாளை வரும் இந்த வழி
கம்பி போட்ட வேட்டிக்காரா
கம்பளத்துப் பிள்ளையாண்டா
கடைக் கண்ணுப் புருவத்திற்கு
கான மயில் ஆசை கொண்டேன்
பல்லு விலை பெறுமே
பணம் ஐந்து சொல் பெறுமே
சொல்லு விலை பெறுமே
சோலைக் கிளி வாய் திறந்தால்
பூகம் பொடியுண்டு
பொடியடைக்க கம்பியுண்டு
நாசிப் பொடியுண்டு
நான் இணங்குஞ் சாமியிட்ட
புதன் கிழமை தலை முழுகி
போக வரச் சிக்கெடுத்து
கண்ணு ரெண்டும் சோரவிட்டு
கடைக்கி மின்ன நிக்காக
வில்வ மரத் தோரம்
விரிச்ச தலைப் பூ மணக்கும்
கருத்தப் பொடி மணக்கும்
கருத்தச் சாமி போற வழி
ஓடையிலே ஒரணேறு
ஒருத்தி மகன் கருத்தாற
கருத்தாற வாய் திறந்தா
கனக மணி ஓசையிடும்
மஞ்சள் எடைக் கெடையாம்
மரிக் கொழுந்து ரெண்டெடையாம்
நானெ ணங்கும் சாமியிட்ட
நல் குணங்கள் நாலெடையாம்
அருணாக் கொடி அஞ்சி ரூவா
அதுக் கெசஞ்ச ஓடாணி
ஓடாணி மின்னலுல
ஒளி விடுதே உங்க தேகம்
மஞ்சனத்திப் பலகை போல
மார்படந்த என் சாமி
நெஞ்சில் படுத்துறங்க
நினைவு மெத்தத் தோணுதையா!
மலையிலே பிரம்பு வெட்டி
மலைக்குக் கீழே சிலம்படிச்சி
தெரு மறிச்சுச் சிலம்படிக்கும்
செல்லச் சாமி நம்மதுரை
கம்பத்துத் துண்டு களாம்
கலர் கொடுத்த நேரியலாம்
மலையாளத் துண்டுகளாம்
மறக்க மனம் கூடுதில்லை
மார்பிலே சந்தணமாம்
மணிக்கையிலே தங்கக் காப்பாம்
தங்கக் காப்பு போட்ட சாமி
தய விருந்தாப் போதுமையா
வட்டுக் கருப்பட்டிய
வாசமுள்ள திப்பிலிய
சில்லுக் கருப்பட்டிய
சினந்தாலும் மறப்பதில்லை
உங்க உயரத்துக்கு
உங்க காலு கெச்சத்துக்கு
தங்கக் கைத்தானத்துக்கு
தானாசை கொண்டனையா
சாரட்டு வண்டியிலே
சிகரெட்டுக் குடிக்கையிலே
சிகரெட்டு வெளிச்சத்துலே
தெரியுதையா உங்க முகம்
எண்ணைத் தலையழகா
எழுத்தாணி மூக்கழகா
கோயில் சிலையழகா
கொல்லுதடா உன்னாசை
முழிக ரெண்டும் கிளியப் போல
முளிப்புருவம் கத்தி போல
உருட்டி முழிக்கையிலே
ஊடுருவிப் பாயுதடா
கல்லுரலு வீதியிலே
கனக ரட்ன மேடையிலே
இன்பமுள்ள ரதிக்கிளியே
இருங்களேன் சாவடியில்
கடலாடிக் கடை துறந்து
காரிக்கன் மல்லெடுத்து
மெல்லுசமாப் போட்டுவரும்
மிதந்த முளி நம்ம துரை
மண் வெட்டி கொண்டு
மடை திறக்கப் போற சாமி
மடையைத் திறந்து விடும்
மஞ்ச நீராடி வாரேன்
எழுதிய ஓடு போல
எழுத்தாணிச் சட்டம் போல
வாரிய ஓலை போல
வளையுதே ஒங்க மேனி
பட்டுக் கவரிலங்க
பாளையத்து முத்திலங்க
ஒட்டுக் கடுக்கனுக்கு
ஒளி விடுதே ஒங்க தேகம்
வீசினார் கையல்லலோ
விரிச்சார் தலைமுடியை
பூசினார் திரு நீற்றை
புருவக் கட்டை நேர் பார்த்து
அள்ளி எறிஞ்சது போல்
அஞ்சாறு தேமலுண்டு
பருத்தி இலை போல
படருதையா தேகமெல்லாம்
கம்மங் கருதிலேயோ
கணுவுக் கொரு கோணலுண்டு
என் சாமி தேகத்துல
எள்ளளவு கோணலில்லே
தூத்துக்குடி யிலேயோ
துரை மாரு ஆபீஸிலே
பஞ்சு விலை மதிக்கும்
வஞ்சிக் கொடி என் சாமி
பெரிய கம்மா பரவு தண்ணி
அதிலொரு நாள் ஸ்னானம் பண்ணி
செங்க மங்கத் தண்ணியிலே
தெரியுதையா உங்க முகம்
மிஞ்சியோ மின்னுறது
மேல் முருகோ கொஞ்சுறது
தங்கத் துரைகளுக்கு
தாயத்தோ மின்னுறது
மருவு படர்ந்த கிளி
மனித ரோட பேசுங்கிளி
தேமல் விழுந்த கிளி
தினம் வருமாம் இந்த வழி
எண்ணைத் தலை முழுகி
என் தெருவில் போற மன்னா
வண்ணத் தலை மயிரு
கண்ணைப் பறிக்குதையா
கட்டக் கம்பு கையிலெடுத்து
காரணமா வார சாமி
சினந்து வழி நடந்தா
சிங்க முடி போலிருக்கும்
வட்டார வழக்கு: லாவிருவா-சேர்த்துக் கொள்வாள்.
(பல பாடல்களின் தொகுப்பு)
சேகரித்தவர்: S.S. போத்தையா
இடம்: நெல்லை மாவட்டம்.
-----------
கணவன் பெருமை
நாட்டுப் பாடல்களில் கணவனது பெருமையைப் பாடும் பாடல்கள் பல இருக்கின்றன. கணவன் செய்யும் தொழிலின் பெருமை, அவனது குணநலன்கள், உருவச் சிறப்பு, அறிவுக் கூர்மை, வாக்குவன்மை, தயாள குணம் முதலியவற்றைப் புகழ்ந்து மனைவி பாடுவாள். தன்னைக் கணவன் பாராட்டும் முறைகளையும், பெருமையாகக் குறிப்பிடுவாள்.
சாப்பிட்டுக் கைகழுவி
சகுனம் பார்த்து நடை நடந்து
நினைச்சா எடுப்பாக
நெருஞ்சிப்பூ அச்சடியை
சாத்தூரு போவாக
சவுளிக் கடை பாப்பாக
நினைச்சா எடுப்பாக
நெருஞ்சிப்பூ அச்சடியை
சட்டை மேலே சட்டை போட்டு
சரிகை குட்டை மேல போட்டு
போராக எங்க மச்சான்
பொழுதடைஞ்ச நேரத்துல
கோர்ட்டாரு முன்பாக
குரிச்சி போட்டுத் துரைகளோட
வாதாடி வழக்குத் தீர்க்கும்
வஞ்சிக் கொடி என் சாமி
இருக்கக் குரிச்சி உண்டு
எந்திரிக்கச் சோடு உண்டு
நடக்கக் குடையு முண்டு
நான் வணங்கும் சாமிக்கு
எல்லோரும் பல் விளக்க
ஆலங்குச்சி அத்திக்குச்சி
அவரும் நானும் பல் விளக்க
ரங்கத்துத் தங்கக் குச்சி
வட்டார வழக்கு: அச்சடி –அச்சுப் போட்ட சேலை; எடுப்பாக, போவாக-எடுப்பார்கள், போவார்கள் (சிறப்பு பன்மை); குரிச்சி-நாற்காலி (அராபியச் சொல்); சோடு-செருப்பு; ரங்கம்-ரங்கூன்.
சேகரித்தவர்: இடம்
S.S. போத்தையா: நெல்லை மாவட்டம்.
-------------
காவல் கடுமை
காதலர்களின் உறவு காதலியின் பெற்றோர்களுக்குத் தெரிந்து விட்டது. அவளை வெளியில் விடாமல் காவல் காக்கிறார்கள். அவள் வெளியே சென்றாலும் யாராவது துணைக்குச் செல்லுகிறார்கள். காதலன் அவளைச் சந்திக்கச் சுற்றிச் சுற்றி வருகிறான். அவள் தனக்குத் தானே பாடுவது போல் அவனை நோக்கிப் பாடுகிறாள்.
பெண்: லேஞ்சி வர்ணப் பூஞ்சிவப்பு
நிழல்ல வந்து நிக்கி
வீட்டுக் கொடுமையாலே
வெளியேற நேரமில்ல
காட்டானை கட்டியிருக்க
கரடி புலி தானிருக்க
ஏழண்ணமார் இருக்க
எப்ப வந்த மன்னவனே?
ஆண்: கட்டானைக் கண்ணக் கட்டி
கரடி புலி வாயக் கட்டி
ஏழண்ணமார் கண்ணயர
ஏறி வந்தேன் கற்கோட்டை
கருதோ ஒரு கருது
காவலோ பத்து லட்சம்
இந்த விதம் காவலில
எந்த விதம் நான் வருவேன்
ஆடியிருட்டுக்குள்
அமாவாசைக் கம்மலில
தேடி வருமுன்னே
தெரு வெல்லாம் காவலில்லா
பெண்: தரும பட்டர ஓரத்துல
சதிராடும் பொன்னுச்சாமி
வீட்டுக் கொடுமையாலே
வெளியே வர நீதியில்ல
வட்டார வழக்கு: நிக்கி-நிற்கிறாங்க, எப்ப - எப்பொழுது; காவலில்லா-காவல் அல்லவா; வந்த-வந்தாய்; கருது-கதிர்; நீதி-நியதி.
சேகரித்தவர்: S.S. போத்தையா
இடம்: விளாத்திகுளம் வட்டம்,, நெல்லை மாவட்டம்.
-------------
விட்டானே ஒற்றை வழி
கிராமப் பெண்களில் சிலர் காதலித்தவனால் கைவிடப்படுவதுமுண்டு. இதற்கு மிகவும் முக்கியமான காரணம் பணத்தோடு வேறு பெண் கிடைப்பதுதான். அவ்வாறு ஏமாற்றப்பட்டவள் ஏமாற்றியவனை வயிறெரிந்து சபிப்பாள். சமூகத்தில் சொத்துக்கு மதிப்பிருக்கும்வரை அவள் சாபம் அவனை என்ன செய்யும்? நெஞ்சில் குத்துவதுபோல் கூர்மையான சொல் பிரயோகங்களை இப்பாடல்களில் காணலாம்.
கட்டப் பய குட்டப்பய
கட்ட மண்ணு தாண்டிப்பய
விசு வாசம் கெட்ட பய;
விட்டானே ஒத்த வழி
எலுமிச்சம் பழமிண்ணு
எடுத்தேன் கைநிறைய
கச்சக் குமிட்டுக் காயுண்ணு
கண்டவுக சொல்லலையே
காப்புக் கழண்ட தய்யா
கைவளையல் கழண்ட தய்யா
கோப்பு குலைஞ்ச தய்யா
கோல மொழிப் பாவியால
ஏசல் கயிறானேன்
எருமை கட்டும் தும்பானேன்
பாவி மகனால
பரதேசிக் கோலமானேன்
என்னைக் கெடுத்தவனை
எனக்கு மதி சொன்னவனை
சொகுசைக் குலைத்தவனை
சுத்தாதோ என் பாவம்?
பாம்பு கடியாதோ?
பாவம் உனைப் பிடியாதோ?
சாபம் பிடியாதோ?
சர்ப்பம் உன்னைத் தீண்டாதோ?
தண்ணியிலே தலைகவுந்து
தருமர் கூட வழி நடந்து
நம்புன சாமியாலே
நனையுறனே தூத்தலில
என்னைக் கெடுத்தமிண்ணு
எக்காளம் பேசாதே
உன்னைக் கெடுத்துருவா
உறுதியுள்ள பெத்தனாச்சி
வேப்ப மரத்தை நம்பி
வெள்ளரளிப் பூ வெடுத்தேன்
காஞ்சிரங் காய நம்பி
கொழுந்து அரைக்கீரை
அறுக்கறுக்கப் பூ வாசம்
விசுவாச கெட்ட வண்ட
என்ன சகவாசம்?
கத்தரி காய்க்காதோ
கமலைத் தண்ணி பாயாதோ
கிழக்க வரும் சூரியன போல்
எனக் கொருத்தன் கிடையாதோ?
காசிப் பயறடிச்சான்
பத்தினியச் சீரழிச்சான்
என்னைக் குல மழிச்சான்
எஞ்சனத்தை ஈனம் வச்சான்
ஆசை கொண்டேன் தேசத்துல
அகப் பட்டேன் கண்ணியிலே
வேசை மகனாலே
வெளிப்பட்டேன் இத்தூரம்
வட்டார வழக்கு: தும்பு - கட்டும் கயிறு; கழண்டது - கழன்றது; கோப்பு-உருவம்; சொகுசு-நலம்; தூத்தல்-சிறு மழை.
சேகரித்தவர்: S.S. போத்தையா
இடம். நெல்லை மாவட்டம்
-------------------
அந்த ஆசை வேண்டாம்
பெரிய இடத்துப் பையன் அவளைச் சுற்றிச் சுற்றி வருகிறான். அவன் பல மலர்தேடும் வண்டென்று அவளுக்குத் தெரியும்; அவன் முகத்திலடித்தாற்போல் அவள் பாடுகிறாள்!
பேரீச்சம் பழமே-நீ
பெரிய இடத்துக்கிரீடமே
ஏனையா காத்திருக்க?
ஏலரிசி வாசகமே
வள்ளத்தான் குருவி போல
வட்டம் போட்டு வந்தாலும்
ஆப்பிடு வாண்ணு சொல்லி
அந்த ஆசை வய்யாதே
வட்டார வழக்கு: ஆப்புடுவா-அகப்படுவாள்; ஏலரிசி வாசகமே-விளிச் சொல்.
சேகரித்தவர்: S.S. போத்தையா
இடம்: நெல்லை மாவட்டம்
-----------------
சந்தேகம்
குடும்ப வாழ்க்கைக்குச் சந்தேகம் எதிரி! அது குடும்ப ஒற்றுமையைச் சிதைத்துவிடும். ஆயினும், தமது சமூக வாழ்க்கையில் தவறுகள் நிறைந்து இருப்பதால் தம்பதிகளிடையே ஒருவர் மீது ஒருவருக்குச் சந்தேகம் ஏற்படுவது சகஜமாக இருக்கிறது. அதுவும் பெண்கள் தங்கள் கணவர்கள் குறித்த நேரம் தவறி வந்தால் சந்தேகப்படுகிறார்கள். 'இரவு திரும்புகிறேன்' என்று சொல்லிச் சென்ற கணவன் இரவில் வராவிட்டால், அவனை 'எந்தப் பெண் கைப்பற்றி விட்டாளோ?' என்று கற்பனைக் கவலைகளால் மூழ்கிவிடுகிறாள்.
போனா இருக்க மாட்டார்
பொழுதிருக்கத் தங்க மாட்டார்
என்ன மனசி லெண்ணி
இருந்தாரோ ராத்தங்கி
துரையே துரை மகனே
தோக்கலவார் வம்முசமே
இடை சிறுத்தச் செல்லச் சாமி
எவளெடுத்துக் கொஞ்சிறாளோ?
மொச்சிக் கொழுந்தே நீ
முழக்க முள்ள தாமரையே
அல்லி மலர்க் கொடியே
யாராலே தாமுசமோ
தெற்குத் தெருவிலேயோ
தேமலக்கா வீட்டிலேயோ
செங்கக் கட்டி திண்ணையிலோ
தங்கக் கட்டி நித்திரையே?
குலை வாழை நெல்லுக் குத்தி
குழையாமல் சோறு பொங்கி
இலை வாங்கப் போனசாமி
எவளோட தாமுசமோ?
நாலு மகிழம் பூவு
நாற் பத்தெட்டு ரோஜாப் பூவு
நானெடுத்துக் கொஞ்சும் பூவை-இப்ப
எவளெடுத்துக் கொஞ்சுறாளோ?
இருட்டை இருட்டடிக்க
ஈச்ச முள்ளு மேலடிக்க
இருட்டுக் கஞ்சா கொடிப்புலியை
எவளெடுத்துக் கொஞ்சுறாளோ?
எண்ணைத் தலைமுழுகி
எள்ளளவு பொட்டுமிட்டு
இலை வாங்கப் போனசாமி
எவ பிடிச்சு லாத்துறாளோ?
பொட்டு மேலே பொட்டு வச்சி
புறப்பட்டுப் போன சாமி
பொட்டு அழிஞ்ச தென்ன
போய் வந்த மர்ம மென்ன?
சேகரித்தவர்: S.S. போத்தையா
இடம்: நெல்லை மாவட்டம்.
------------
எட்டு நாளாய்ப் பேசவில்லை
இரண்டு பெண்கள் கிணற்றுக்குள்ளிருந்து குளித்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்களுள் ஒருத்தியின் காதலன் அவர்களைக் கண்டும் காணாதது போலப் போகிறான். அதைப் பார்த்த காதலி தனது தோழியிடம் தனியாகப் பருத்தி
விளைக்குள்ளிருந்த தன்னை அவன் மெல்ல அழைத்ததை கூறுகிறாள். தோழி, அப்படியானால் இப்பொழுது அவன் கோபித்துக்கொண்டு செல்வதேன்?' என்று கேட்கிறாள். அது பெரிய விஷயமல்ல. சிறு சச்சரவினால் ஏற்பட்ட ஊடல்' என்கிறாள் காதலி.
காதலி:
பால் போல் நிலாவடிக்க
பருத்திக்குள்ள நானிருக்க
மின்னுவெட்டான் பூச்சி போல-அவன்
மெல்ல வந்து கூப்பிட்டானே
தோழி:
இரும்பாலே கிணறு வெட்டி-நீ
இருந்து குளிக்கையிலே
கரும்பான அத்தை மகன்
கையலைச்சுப் போராண்டி
காதலி:
ஆத்துல ஊத்துத் தோண்டி
அவரும் நானும் பல் விளக்க
எச்சித்தண்ணி பட்டுதுன்னு-என்னோட
எட்டு நாளாப் பேசலியே
வட்டார வழக்கு : மின்னுவெட்டான் பூச்சி-மின் மினி; கையலைச்சு-கைவீசி; ஆத்துல, ஊத்து-ஆற்றில், ஊற்று.
சேகரித்தவர்: S.M. கார்க்கி
இடம்: சிவகிரி, திருநெல்வேலி மாவட்டம்
-----------
சொற் போட்டி
காதலர் ஒருவரையொருவர் மிஞ்சும் வகையில் வாது கவிகள் பாடுவார்கள்! அப்பாட்டுகளில் ஒருவரையொருவர் திட்டிக் கொள்வதும், குறைவாகப் பேசிக் கொள்ளுவதும், வழக்கம். முதலில் காதலனைக் கிண்டலாகப் பேசுகிறாள். செருப்புக்கும் காசில்லாமல் தும்புச் செருப்புப் போட்டிருக்கிறானாம் அவன். அப்படியானால் தும்பைப் பூப்போல வெள்ளை வேட்டி அவனுக்கு ஏது? அவன் பதிலடி கொடுக்கிறான். கடைசியில் இருவரும் ரங்கூனுக்குப் போய்விடுவதாக முடிவு செய்கிறார்கள்.
பெண்:
தும்புச் செருப்பு மாட்டி
தொழு திறக்க போற மன்னா
தும்பைப் பூ வேட்டியிலே
துவண்ட மஞ்சள் நான் தானா?
ஆண்:
மஞ்சள் மணக்கப் பூசி
மரிக்கொழுந்தை நெருக்க வச்சு
மந்தையிலே நிண்ணாலும்-உன்ன
மடை நாயும் தீண்டாதடி
பெண்:
கட்டக்கருத்த மச்சான்
வட்டப்பொட்டு போட்ட மச்சான்
எந்தப் பொட்டு வச்சாலும்
ஏறணுமே ஏலங்கடை
ஆண்:
சாலை கடந்து வாடி
சந்தைப் பேட்டை கடந்து வாடி
ஓடை கடந்து வாடி
ஓடிப் போவோம் ரங்கூனுக்கே
-----------
உறங்கிட்டியே சண்டாளி!
இரவில் சந்திப்பதென காதலர் இருவர் முடிவு செய்திருந்தனர். காதலி மெதுவாக வந்து திண்ணையில் இருந்தாள். வீடு பூட்டியே இருந்தது. எதிர் வீட்டில் இருந்த காதலன் குறித்த நேரத்துக்கு மேடை மீது வந்து பார்த்தான். எதிர் வீட்டுக் கதவு பூட்டியிருந்தது; வெகு நேரம் நின்று பார்த்தான். கதவு திறக்கவில்லை. ஆத்திரத்தில் ஒரு கல்லை விட்டெறிந்தான். கலகலப்பு ஏற்பட்டது. வீட்டில் உள்ளோர் விழித்திருக்க வேண்டும். அவள் வீட்டினுள் நுழைந்து கொண்டாள். காலையில் தனியாக அவளைக் கண்ட காதலன் "உறக்கம் பெரிதென்று உறங்கி விட்டாயா?" என்று கேட்கிறான். அவளோ, திண்ணையில் நானிருக்க கல்லை விட்டெறிந்தது உன் உடல் கொழுப்பா?" என்று சுடச்சுடப் பதிலுக்கு கேட்கிறாள்.
காதலன்:
கார வீட்டு மேலிருந்து
கல்லை விட்டு நானெறிய
உறக்கம் பெருசின்னு
உறங்கிட்டியே சண்டாளி!
காதலி:
செங்கட்டித் திண்ணையிலே
தங்கக்கட்டி நானிருக்க
கரியோட மூர்க்கமில்லை
கல்ல விட்டு நீ எறிஞ்சே
வட்டார வழக்கு: கரியோட மூர்க்கம்-உடல் கொழுப்பு;
கல்ல-கல்லை; எறிஞ்சே-எறிந்தாய்.
சேகரித்தவர்: S.M. கார்க்கி
இடம்: சிவகிரி
----------------
சேலையில் குறைவு
கணவன் எத்தகைய சேலை எடுத்தாலும் மூக்கால் அழும் மனைவி இவள் கருப்புச் சேலை எடுத்துக் கொடுத்தான்-குறை சொன்னாள் பச்சைச் சேலை எடுத்தான்-குறை சொன்னாள். 18 முழம் சேலை எடுத்தான். சுற்றுக்குப் பற்றாது என்றாள். 22 முழம் எடுத்தான். அப்பொழுதும் ஏதோ குறை சொன்னாள். கணவன் பொறுமைசாலிதான். அவளைத் தேற்றி திருவிழாப் பார்க்க அழைக்கிறான்.
கணவன்:
எள்ளுக் கருப்புச் சீலை
எடுத்துடுத்தும் சாயச்சீலை
சுத்துக்கு எட்டலனு
சுண்டுதாளே கண்ணீரை
எள்ளுக் கருப்புச் சீலை
இருபத்திரண்டு முழம்
உடுத்திப் புறப்படடி
உள்ளூருச் சாமி பார்க்க
பாசிப் பயத்தஞ் சேலை
பத்துலட்சம் பெத்த சேலை
சுத்துக்கு எட்டலண்ணு
சுண்டுதாளே மேமுழிய
முந்திப்பச்சையடி
முழுநிறம் நீலமடி
ஊதாக கருப்புச் சீலை
உட்காரடி பக்கத்தில்
வட்டார வழக்கு: எட்டலணு-எட்டவில்லை என்று; மேமுழிய-மேல் விழியை.
சேகரித்தவர்: S.M.கார்க்கி
இடம்: சிவகிரி, நெல்லை மாவட்டம்
-------------
ஒரு மச்சமுண்டு
காதலி மலைக்குப் புல்லறுக்கச் செல்லுகிறாள். அவன் விறகு வெட்ட அதே பாதையில் செல்லுகிறான். இருவரும் எப்படியோ சேர்ந்து நடக்கிறார்கள். உள்ளத்தின் உவகை பாட்டாக வெளிப்படுகிறது.
ஆண்:
கல்லருகாம், புல்லருகாம்
கடலருகாம் பூந்தோட்டம்
புல்லறுக்கப் போற பிள்ளை-நீ
பூமுடிஞ்சாலாகாதோ?
பெண்:
நத்தத்து மேட்டு வழி
நான் போறேன் ஒத்த வழி
பிச்சிச்சரம் போலே-நீ
பின்னே வந்தாலாகாதோ?
ஆண்:
கண்டாங்கிச் சீல கட்டி
கரை வழியே போற புள்ள,-உன்
கண்டாங்கிச் சீலையிலே-நான்
வண்டாய்ச் சுழலுதனே
குளத்திலொரு அல்லியுண்டு
கூந்தலொரு பாக முண்டு
இடை சிறுத்த அல்லிக்கு
இடையில் ஒரு மச்ச முண்டு
வட்டார வழக்கு: புள்ள-பிள்ளை.
சேகரித்தவர்: S.M. கார்க்கி
இடம்: சிவகிரி
-------------------
மூத்தவள் வயிற்றெரிச்சல்
மூத்தவள் வாழ்ந்திருக்கும்போது அவள் கணவன் இளைய தாரத்தை மணந்தான். பல நாட்களுக்குப்பின் மூத்த மனைவியைச் சந்திக்கிறான். அவர்களிடையே நடக்கும் உரையாடல் வருமாறு:
கணவன்:
செம்புச் சிலை எழுதி
செவத்தப் புள்ள பேரெழுதி
வம்புக்கு தாலி கட்டி
வாழுறது எந்த விதம்?
மனைவி:
மாமன் மகளிணுல்ல
மறிச்சு வச்சுத் தாலிக் கட்டி
மந்தை யோரம் வீட்டைக் கட்டி
மாடடையப் போட்டாரில்ல
கணவன்:
கல்லு அடுப்புக் கூட்டி
செடிய மறவு வச்சு
பொங்கலிட்டுப் பார்த்தாலும்
பொருந்தலையே உன்னழகு
மனைவி:
கூடுணமே ரெண்டு பேரும்
குமர கோயில் அன்னம் போல
இன்னிப் பிரிந்தாயனா
இறப்பதும் நிச்சயம் தான்
என்னைய விட்டுட்டு நீ
இளையதாரம் கட்டினியே
போற வழியிலியே-உன்ன
பூ நாகம் தீண்டிராதோ?
சேகரித்தவர்: S.M. கார்க்கி
இடம்: சிவகிரி, நெல்லை மாவட்டம்
--------------
கன்னிக் களவு
காதலன் கஞ்சிக்கலயம் கொண்டு காட்டுக்குப் போகும் காதலியை கை தட்டிக் கூப்பிடுகிறான். அவள் அவன் மீது சற்றுக் கோபத்தோடு இருக்கிறாள். அத்தை மகனாகிய அவன் ஊரில் இருக்கும்பொழுதே, சொத்துள்ள ஒருவன் அவளைப் பெண் பேசி வரத் துணிந்து விட்டான். இதை அவள் அவனிடம் கூறுகிறாள். அவன் மணம் பேசி வர நேரமில்லை, வேலை அதிகம் என்று சொல்லுகிறான். களவு செய்பவன் நினைத்தால் நேரமா கிடைக்காது? இது கன்னிக் களவுதானே! அவனுக்கு இன்னும் மனம் உறுதிப்படவில்லை. இவ்வாறு அவனுக்கு உறுதியேற்படும்படி சூடு கொடுத்துவிட்டு சந்திரனைப் பார்த்து "நீ மறைந்து கொண்டு என் மச்சானுக்குக் களவு செய்யக் கற்றுக் கொடு" என்று சொல்லித் தனது காதலனைக் கேலி செய்கிறாள்.
காதலி:
கஞ்சிக் கலயம் கொண்டு
காட்டுக்கு போகையிலே
கையலைச்சுக் கூப்பிட்டது
காரணத்தைச் சொல்லு மச்சான்
காதலன்:
பேரீச்சம் பழமே நீயே
பெரியடத்துக் கிரீடமே
அஞ்சாறு ஆளோட-உன்ன
யாரை விட்டுக் கூப்பிடட்டும்?
காதலி:
மணந்திடுவேன் என்று சொல்லி
மாதக் கணக்காயிருச்சு
கழுத்தில் தாலி கட்ட லேனா-நான்
கயத்தப் போட்டுச் செத்திடுவேன்
காதலன்:
இடுப்பே ஒரு பிடியே
இன்பமான ரதி கிளியே
மதியான கண்ணே-உன்ன
மறக்க மனம் கூடலியே
காதலி:
மாமன் மகனிருக்க
மாலையிடும் சாமியிருக்க
சொத்துக் கையி சாமிபய
சொந்தமிண்ணு வாரானில்ல
காதலன்:
காரமுள்ள சுண்ணாம்பாம்
கலயத்தில நீத்தி வச்சேன்
நீத மற்ற சிவகிரில
நிண்ணு போக நேரமில்லை
காதலி:
வெள்ளி நிலாவே, நீயே
விடி நிலா ராஜாவே
கன்னி களவு செய்ய
கண் மறைஞ்சால் ஆகாதோ?
காதலன்:
செவந்திப்பூப்போல உன் திரேகம்
வாழுத வயதிலேயே
வாடி பொண்ணே ஓடிப் போவோம்
இலுமிச்சங்கனி போல
இருவருமே ஒரு செகப்பு
வாழுத வயதிலேயே
வாடி பொண்ணே
ஓடிப் போவோம் !
சேகரித்தவர்: S.M. கார்க்கி இடம்: சிவகிரி, நெல்லை மாவட்டம்
-------------
போட்டோவும் சினிமாவும்
காதலன் பல நாட்களாக காதலியோடு சேர்ந்து போட்டோ எடுத்துக் கொள்ளலாம் என்று சொல்லி வருகிறான். அது போலவே சினிமாவுக்குப் போகலாம் என்றும் ஆசைகாட்டி வருகிறான். ஆனால் பல மாதங்களில் இரண்டில் ஒன்றும் நடக்கவில்லை. அவள் அவனைச் செல்லமாகக் கோபிக்கிறாள். அவன் அவளை அழைத்துச் செல்லப் பயப்படுகிறான். அவர்களுக்குத் திருமணமாகச் சில மாதங்களே இருக்கின்றன. யாரேனும் கேலி செய்து விடுவார்களோ என்று பயம். ஒருமட்டும் மனத்தை திடப்படுத்திக் கொண்டு போவதற்கு முயலும்போது அவனது நண்பன் ஒருவன் அப்பொழுது நடக்கும் சினிமா நன்றாக இல்லை என்று சொல்லி விட்டான். அவனைத் திட்டிக்கொண்டே காதலன் "நல்ல படம் இல்லை யினு, நாசகாரன் சொல்லுதானே" என்று காதலியிடம் சொல்லுகிறான். அவளோ, உறுதியாக, "கருங்காலி பேச்சுக் கேட்டு கலங்க வேண்டாம், போவோம் மச்சான்" என்று பிரச்னையைத் தீர்த்து விடுகிறாள். தற்காலத்திலும் ரசமான நாட்டுப் பாடல் எழுகின்றன. தமது கவிதையூற்று வற்றிவிட வில்லை என்பதற்கு இப்பாடல் சான்றாகும். இது கார்க்கியே எழுதியதாக இருக்கலாம். அவ்வாறானாலும், நாட்டாரால் ஒப்புக் கொள்ளப்பட்ட பாடலாகும்.
காதலன்:
உச்சி வகுத்த புள்ள
ஊரு தேசம் பாத்த புள்ள
மெத்தப் படிச்ச புள்ள
புத்தி கெட்டுப் போயிராத
உருகி உருகியல்லோ
ஒன்னால நான் உருகி
கல்லான மேனியெல்லாம்
கயிறாய் உருகுறேனே
காதலி:
போட்டோ எடுப்பமிண்ணு
பல நாளும் சொன்ன மச்சன்,
போட்டோ எடுக்காம-என்னப்
பொய் சொல்லி ஏய்க்கலாமா?
சினிமாவுக்குப் போவமிண்ணு
பல நாளும் சொன்ன மச்சான்
சினிமாவுக்கு போகலாமே
பாதையும் தெரியுதாமே
காதலன்:
செத்துப் பிழைச்சு நம்ம
சினி மாவுக்குப் போகையிலே
நல்ல படம் இல்லையிண்ணு
நாசகாரன் சொல்லுதானே
காதலி:
கருத்துள்ள படமாருக்கும்
கஷ்டங்கள் நிறைஞ்சிருக்கும்
கருங்காலி பேச்சு கேட்டு
கலங்க வேண்டாம் போவோம் மச்சான்
வட்டார வழக்கு: கருங்காலி-சேர்ந்திருப்பதைக் கெடுப்பவன்.
சேகரித்தவர்: S.M. கார்க்கி இடம்: நெல்லை மாவட்டம்.
--------------------
பிரிந்தவர் கூடினர்
கிராமத்தில் ஆண்டு முழுவதும் விவசாயத் தொழிலாளருக்கு வேலையிராது. எனவே ஒவ்வொரு குடும்பத்திலும் இரண்டொருவர் வேலை தேடிப் பலவிடங்களுக்கும் செல்வதுண்டு. அவ்வாறு செல்லும் இளைஞர்கள் தம் காதலியரைப் பிரிந்திருக்க வேண்டும். மழை தண்ணீர் உண்டானால் ஊருக்குத் திரும்பி நிலத்தைப் பயிர் செய்வார்கள். வேலை தேடிச் சென்ற இளைஞன் ஊர் திரும்பினான். தன்னிடம் சொல்லாமலேயே சென்றுவிட்டான் என்று அவளுக்கு அவன் மீது கோபம். புஞ்செய் நிலத்தில் அவன் வேலைக்கு வருவதை அவள் காண்கிறாள். அவள் முகத்தைத் திருப்பி கொள்கிறாள். உள்ளுர மகிழ்ச்சிதான். அவன் அவள் ஊடல் தீரப் பசுமையான நினைவுகளைக் கிளறி காதல் ஊற்றைச் சுரக்குமாறு செய்கிறான்.
காதலன்:
வட்ட வளவிக் காரி
வளத்தட்டு சீலக்காரி
கோதுமை பச்சக்காரி
கோபம் உண்டோ என்மேலே
நாணத்தட்ட சோளத்தட்ட
நாலுகைக் கம்மந்தட்ட
கம்மந்தட்ட வீட்டுக்காரி
காட்டம் உண்டோ எம் மேலே
பல்லு வரிசைக் கல்லோ
பட்டுக்கரை நேத்திக் கரை
சொல்லு வரிசைக்கில்லோ-உன்னை
சொந்தமின்னு எண்ணி ருந்தேன்
ஆனை நடையாளே
அமிர்த மொழியாளே
செல்ல நடையாளே-நான்
சில காலம் பிரிஞ்சிருந்தேன்
படுத்தா உறக்கம் வல்லே
பாய் விரிச்சாத் தூக்க மில்லே
உறக்கச் சடவுலயே-கண்ணே
உன் உருவம் தோணுதடி
உன்னைய நம்பி யல்லோ
உட்காந்தேன் திருணையிலே
என்னைய மறந்தியானா-நீ
ஈடேறப் போறதில்லை
வேலி அழிஞ்சுதுண்ணு
விறகுக்கு நீ வாடி
காளை ஒண்ணு தப்புச் சுண்ணு
காட்டு வழி நானும் வாரேன்
இண்டு தழையாதோ?
இண்டம் நிழல் சாயாதோ?
இண்டு நிழலிலேயே-நாங்க
இருந்து கவி பாட
மலையிலே மாட்டக் கண்டேன்
மலைக்கும் கீழே தடத்தக் கண்டேன்
செவத்தப் புள்ள கொண்டையிலே
செவ்வரளிப் பூவைக் கண்டேன்
பழைய உறவுக்காரி
பாதையிலே கண்டுக்கிட்டு
அவளழுக, நானழுக
அன்னக்கிளி ஒண்டழுக
வட்டார வழக்கு: சடவு-அகதி; இண்டு-முள் மரம்; அழுக-அழ; திருணை-திண்ணை.
குறிப்பு: கம்மந்தட்ட வீடு-கூரை, கம்மந்தட்டையால் வேய்ந்திருக்கும் இத்தகைய வீடுகள் கோவில்பட்டி தாலுக்காவிலும் சங்கரன் கோவில் தாலுக்காவிலும் சில கிராமங்களிலும் காணலாம். .
சேகரித்தவர். S.M. கார்க்கி இடம்: சிவகிரி.
---------------
வழி நடப்போம்!
மலையில் மாடு மேய்க்கும் இளைஞன் தனது புல்லாங்குழலை எடுத்து ஊதுகிறான். அவனுடைய காதலியை அழைக்கும் சங்கேதப் பாட்டை ஊதுகிறான். அவள் வருகிறாள். அவன் ஊதுவதை நிறுத்திப் பேச்சுக் கொடுக்கிறான். அவள் பதில் சொல்லுகிறாள். உரையாடல் மலை நீரோடை போல வளைந்து சென்று காதலின்பமென்னும் விளை நிலத்தில் பாய்கிறது.
ஆண்:
வெள்ளை வெள்ளைப் பாறை
வெள்ளாடு மேயும் பாறை
சீங் குழல் சத்தம் கேட்டு
திரும்பலயோ உந்தன் முகம்?
பெண்:
மாங்கா மரமானேன்
மறுவருஷம் பெண்ணானேன்
தேங்காய் மரமானேன்
தெரிச்ச கொண்டைக்காரனுக்கே
ஆண்:
மூணு சட்டி உயரத்தில்
முட்டைக் கோழி பருவத்தில்
சாதிக்கோழி சாயலோட
சம்பிராயம் போடாதடி
பெண்:
செவத்த லேஞ்சுக் கார மாமா,
சீல வாங்கித் தாங்க மாமா
சிலுக்குச் சீல வந்தாத் தான்
சிரிச்சுமே பேசிடுவேன்
ஆண்:
கல்லு இடுவலில
கவுந்து தலை பாக்கும் புள்ள
பல்லு இடுவலில-எனக்குப்
பாதரவா தோணுதடி
பெண்:
ஓடையிலே ஒரு மரமே
ஒதுக்கமான மாமரமே
தங்கக் கொழுந்தனுக்கு
தலைபாக்க ஏத்த ஓடை
ஆண்:
தாளம் பூ தலையில் வச்சு
தனி வழியே வந்தவளே
எவன் இருப்பான் என்று சொல்லி
இங்க வந்த பெண்மயிலே!
ஒருத்திக்கு ஒரு மகனாம்
உன்னை நம்பி வந்தவண்டி
கையை விட்டுத் தவறவிட்டா
கருமம் வந்து சேருமடி
பெண்:
நெலக்கடலை நாழி வேணும்
நேரான பாதை வேணும்
ஜோடி மட்டம் ரெண்டு வேணும்
சொகுசா வழி நடக்க
வட்டார வழக்கு: சிங்குழல்-சீவிய குழல், புல்லாங்குழல்; முட்டை என்பது-காதலியை; சாவல் என்பது-காதலனை; சம்பிராயம்-வீண் பெருமை; இடுவல்-இடைவெளி; ஜோடி மட்டம்-தங்களிருவரும்.
சேகரித்தவர்: S.M. கார்க்கி இடம்: சிவகிரி.
---------------
கலியாண மாதத்தில் கவலை
மருதியின் அத்தை மகன் மருதன். இருவரையும் கணவன் மனைவியென்று, ஐந்து வயதிலேயே விளையாட்டாகப் பெற்றோர்கள் கேலி செய்வார்கள். இருவரும் பெரியவர்களாயினர். ஊரில் கொஞ்சம் பணம் படைத்த குடும்பத்தில் பல ஆண்டுகள் மணமாகாத ஒரு பெண்ணிருந்தாள். அவளை, மருதனுக்கு மணம் பேசி திருமணத்துக்கு நாள் குறித்தார்கள். பெரியவனான பிறகு மருதியோடு பேசிப் பழக மருதனுக்கு வாய்ப்பு இல்லை. ஆனால், மணச்செய்தி கிடைத்ததும் மருதி அவனை நாடி ஓடிவந்தாள். அவனிடம் வாதாடிப் பார்க்கிறாள். பணத்தைவிட பழைய நினைவு பெரிதென்று மருதன் எண்ணுவானா? அவர்கள் பேச்சிலேயே இக்கேள்விக்கு விடை கண்டு கொள்ளுங்கள்.
மருதன்:
ஆத்துக்குள்ள ஆத்தாள்
அவளும் நானும் கவிபாட
வாதாடி வாதாடி
வலுவைக் குறைச்ச பொண்ணை
மருதி:
சாமைக்கருது போல
செவத்த புள்ள நானிருக்க
பாழாய்போன அத்தை மகன்
கிழவி மேல் கையைப் போட்டான்
மருதன்:
சிரிச்ச முகத்தோட
சீதேவி போல வந்து
அழுத முகத்தோட
ஆரத்தேடி நிக்கே பொண்ணே?
மருதி:
அஞ்சு வயதிலேயே
அறியாப் பருவத்திலே
கொஞ்சு வயசுலேயே
கூடினது மோசந்தானே
மருதன்:
வாக்கப்பட நல்லாசை
வளவி போடப் பேராசை
கலியாண மாத்தையிலே
கவலை வந்து நோந்ததென்ன?
வட்டார வழக்கு: சாமைகருது-சாமைக்கதிர்; நிக்கே-நிற்கிறாய்; மாத்தையிலே-மாதத்தில்.
சேகரித்தவர்: S.M. கார்க்கி
இடம்: சிவகிரி, நெல்லை மாவட்டம்.
---------------
சின்னத் தாயே தங்கம்
ஏரிக்கரையிலே அவன்தன் காதலியைப் பார்க்கிறான். ஏரியில் நீர் நிறைந்திருப்பது போல் அவன் உள்ளமும் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கிறது. அவன் காதல் குறிப்புணர்த்திப் பாடுகிறான். அவனை மறுத்து அவளும் ஒவ்வொரு சொல் சொல்லுகிறாள். அவர்களது உரையாடலைப் பார்ப்போம்.
ஆண்:
வத்தனத்தான் ஏரியிலே
சின்னத் தாயே தங்கம்--ரண்டு
வர்ண பொறா மேயக் கண்டேன்
சின்னத் தாயே தங்கம்
பெண்:
வத்தனாலும் குத்தமில்லை
சின்னத் தாயே தங்கம்
நானுனக்கு பொண்ணு மில்லே
சின்னத் தாயே தங்கம்
ஆண்:
இண்ணடித்தான் ஓரத்திலே
சின்னத் தாயே தங்கம்-ரண்டு
கோயில் பொறா மேயக் கண்டேன்
சின்னத் தாயே தங்கம்
காடாலே ஒரு மயிலு
சின்னத் தாயே தங்கம்-அது
கட்டுப் பட்டு நிக்கு தோடி
சின்னத் தாயே தங்கம்
செடியாலே ஒரு மயிலு
சின்னத் தாயே தங்கம்-அது
சிக்குப்பட்டு நிக்குதோடி
சின்னத் தாயே தங்கம்
பெண்:
ஆலா உளுது போல
சின்னத் தாயே தங்கம்-நான்
அவித்து விட்டேன் தலை மயிரே
சின்னத் தாயே தங்கம்
முணு காசு முட்டாயா
சின்னத் தாயே தங்கம்-இங்கே
முட்டுக் காட்டுக் கச்சேரியா
ஆண்:
முட்டுக் காட்டுக் கச்சேரிக்கு
சின்னத் தாயே தங்கம்
முடிவு சொல்லக் காத்திருந்தேன்
சின்னத் தாயே தங்கம்
வட்டார வழக்கு: பொறா-புறா; உளுது-விழுது.
சேகரித்தவர்: கவிஞர் சடையப்பன்
இடம்: சேலம் மாவட்டம்.
---------------
முறைப் பாட்டு - அத்தை மகள் பேசவில்லை!
அவன் நிலக்கடலை விதைத்திருக்கிறான். கடலை மகசூல் கண்டதும் கையில் பணமிருக்கும். அத்தை மகளைக் கலியானம் செய்து கொள்ளுவான். இது அவன் கனவு.
ஆனால் மழை பொய்த்து கடலை காய்ந்து விட்டது. அவன் கவலை தேங்கிய முகத்தோடு வயலருகே உட்கார்ந்திருந் தான். அத்தைமகள் அவ்வழியே போனாள். அவன் மேல் அவளுக்கு ஆசைதான். இன்று அவள் வயலருகில் போனதை அவன் பார்க்கவில்லை. அவளுக்கு கோபம் வந்து விட்டது, நேராகப் போய்விட்டாள். பின்னர்தான் அவன் நிமிர்ந்து பார்த்தான். அவள் தன்னிடம் பேசாமமல் போவதையும் அதன் காரணத்தையும் உணர்ந்தான். தன் அன்பையும் தெரிவிக்க வேண்டும். தன் கவலைக்குக் காரணத்தையும் தெரிவிக்க வேண்டும். உடனே அவள் காதில் கேட்கும்படி பாடத் தொடங்குகிறான்.
ஆண்:
பண்டாரம் தோட்டத்திலே
பருத்திக் களை வெட்டயிலே
ஒத்த வழி ஓடி வர
அத்தை மக பேசலியே
ஆமணக்குத் தோட்டத்திலே
பூமணக்கப் போற புள்ளே
பூமணக்கும் வாடையிலே-நானும்
புருஷமினு வந்துட்டேனே
வாகை மரத்துப் புஞ்ச
வட்டாரச் சோளப் புஞ்ச
தங்கம் விளையும் புஞ்ச
தரிசாக் கிடக்குதடி
காட்ட உழுது போட்டேன்
கடலை போட பட்டம் பாத்தேன்
வந்த மழை போகுதில்லை
வருணனே உனது செயல்
சேகரித்தவர் S.M. கார்க்கி
இடம்: நெல்லை மாவட்டம்.
------------
குளிர்ந்த முகம் தந்திடுவேன்
தண்ணீர் இறைத்துக் கொண்டிருக்கிறாள் காதலி. காதலன் அருகில் சென்று தண்ணீர் கொடு என்று கேட்கிறான். ஊர்ப் பொதுவிடத்தில் பேசுகிறோமே என்ற நாணம் அவனுக்கில்லை. அவனுக்கு புத்தி புகட்ட எண்ணி "கூடத்துக்கு வந்தியானா குளிர்ந்த முகம் தந்திடுவேன்" என்று அவள் பதில் சொல்லுகிறாள். கூடத்திற்கு அவன் எப்படிப் போவான்? பலரறியக் கூடத்திற்குள் போக வேண்டுமானால், அவளை மணம் செய்துகொள்ள வேண்டுமல்லவா? அவள் மறைவாக அவனிடம் சொல்லுவதும் அதுதான்.
ஆண்:
ஆழக்கிணத்துக்குள்ளே
நீளக் கயிறு விட்டு
தண்ணி எடுக்கும் புள்ள-எனக்கு
தண்ணீரும் கொடுத்திடம்மா
பெண்: தண்ணிரும் கொடுத்திடுவேன்
தாகமது தீர்த்திடுவேன்
கூடத்துக்கு வந்தியானா
குளிந்த முகம் தந்திடுவேன்
வட்டார வழக்கு: புள்ள-பிள்ளை (பெண்பால்); வந்தியானா-வந்தாயானால்.
சேகரித்தவர்: S.M. கார்த்தி
இடம்: திருநெல்வேலி மாவட்டம்.
----------------
வாருமையா சாவடிக்கு
மலைச்சாரலில் காதலன் காதலியை அடிக்கடிச் சந்திக்கிறான். எப்பொழுதும் உன் நினைவுதான் என்று அவன் அடிக்கடி கூறுகிறான். அவள் அவன் பேச்சையெல்லாம் கேட்டுக் கொண்டு என் தலையில் பூ முடிக்க ஊர்ச்சாவடிக்கு வா என்கிறாள். "மணம் செய்து கொள்ள சீக்கிரம் வா" என்பது குறிப்பு.
பெண்:
நந்த வனத் தழகு
நானிருக்கும் ஊரழகு
கஞ்சாச் செடியழகு
கறுத்த மன்னன் காலழகு
பொட்டி லிடும் பூப் போல
பொழுது விட்ட ராமம் போல
இப்ப விட்ட பூப் போல
இருக்கனையா நானுனக்கு
ஆண்:
மலையடி ஓரத்துல
மானு வேட்டை ஆடயில
மானெல்லாம் மலை மேலே
மன மெல்லாம் ஒம்மேலே
மலையடி ஓரத்துல
மழையிறங்கிப் பேயயிலே
மின்னுதடி ஒன்னால
பொன்னால கொங்காணி
பெண்:
ஐயா வருகுறதும்
கைய வளையறதும்
இடதுபுறம் கெடியாரம்
எழுத்தாணி மின்னுறதும்
ஆண்:
செங்கல் ஒளியாளே
சிவந்த கனி வாயாளே
மின்னல் ஒளியாளே
மேனி மெலியுதனே
பெண்:
கீறி மயிருணர்த்தி
தெந்தம் போல முடிக்க
வாருமையா சாவடிக்கு
வாசமுள்ள பூ முடிக்க
சேகரித்தவர்: S.M. கார்க்கி
இடம்: சிவகிரி, நெல்லை மாவட்டம்.
-----------
பதினான்கு வருஷங்கள்
அவளது காதலன் தண்டிக்கப்பட்டு சிறைக்குபோய் விட்டான். பதினான்கு வருஷம் தண்டனை. அவள் மணம் செய்துகொள்ளாமலே இருந்தாள். அவள் சோறு தண்ணிர் இல்லாமலே சுக்குப்போல் உலர்ந்து விட்டாள். அவன் கவலையில்லாமல் மதுரைச் சிறையில் வாழ்ந்து வருகிறான். அவனுக்கு எட்டுமாறு என்ன பாட்டுப் பாடுவது என்று அவள் யோசிக்கிறாள்.
சாமி எனக்காகுமா?
சதுரகிரி பொட்டாகுமா?
நெலாவும் பொழுதாகுமா?
நெனச்ச சாமி எனக்காகுமா?
ஆசை தீர அணைஞ்ச கையி
அவரு மேல போடும் கையி
பன்னீரளைஞ்ச கையி
பதினாலுவருஷ மாச்சே!
சுக்குப் போல நானுலர்ந்து
சோறு கறி செல்லாம-மதுரையில
கொக்குப் போல் அவரிருக்க-நானு
சோலக் கிளி வாடுதனே!
சாலையில சமுத்திரமே
சாமி கையில் புஸ்தகமே
என்னத் தொட்ட மன்னவர்க்கு
என்ன கவி பாடட்டும்?
சேகரித்தவர்: S.M. கார்க்கி
இடம்: சிவகிரி, நெல்லை மாவட்டம்.
--------------
வைப்பாட்டி
ஒரு உயர் ஜாதி வாலிபன் பள்ளர் ஜாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்தான். சாதிக் கட்டுப்பாடுகளால் அவளை மணம் செய்து கொள்ள முடியவில்லை. ஆனால் இருவரும் குடும்பங்களைத் துறந்து ஒரு குடிசை கட்டிக் கொண்டு தனியாக வாழ ஆரம்பித்தனர். இருவரும் கருத்தொருமித்துக் கணவன் மனைவியுமாக வாழ்ந்தனர்.
ஒரு நாள் அவனுடைய முறைப் பெண் அவனைப் பார்க்கிறாள். "நாட்டில் மழை பெய்யவில்லை. நீதி தவறினால் மழை பெய்யாது அல்லவா? நீ வைப்பாட்டி வைக்கப்போய் ஊருக்கே பஞ்சம் வந்து விட்டது" என்று சொல்லுகிறாள். அவன் தனது செய்கையை நீதியற்ற செய்கை என்று நினைக்கவில்லை. அவளை வைப்பாட்டி என்றும் கருதவில்லை. அவளைத் தன் மனைவியாகவே அவன் நினைக்கிறான். 'அவளை விட்டு நான் வரப்போவதில்லை" என்று சொல்கிறான்.
பெண்: மழைக்கே அதிகாரி
மார்க்க முள்ள சுக்கிரரே
வப்பாட்டி தேடப் போயி
வாடுதையா நம்ம தேசம்
ஆண்: வாடுனா வாடுதடி
வரப்பு வசங்குதடி
ஓடிவரவும் மாட்டேன்
தேவேந்திரப் பெண்ணை விட்டு
சாதிப் பிரிவு தானா
சாத்திர மெல்லாம் ஒண்ணுதானே
மருவில்லா மாங்கனிய
மறக்கமனம் கூடுதில்ல
வட்டார வழக்கு : தேவேந்திரப் பெண்-பள்ளர் சாதிப் பெண்.
சேகரித்தவர்: S.M. கார்க்கி
இடம்: நெல்லை மாவட்டம்.
--------------
பெண்குடம் போனால்!
அவன் என்ன கேட்கிறான், அவள் என்ன பதில் சொல்கிறாள் என்று நீங்களே தெரிந்து கொள்ளுங்கள். தமிழ் மகளின் பண்பாட்டுப் பெருமையை காதல் விளையாட்டில் கூட அவள் நிலைநாட்டுகிறாள்.
ஆண்: மண் குடம் கொண்டு
மலையோரம் போற புள்ளே!
மண் குடம் வச்சுப் போட்டு-உன்
பெண் குடம் ரெண்டும் விலை சொல்லடி
பெண்: மண் குடம் போனால்
மறு குடம் வாங்கலாம்
பெண் குடம் போனால்
உலகம் பொருந்துமா மன்னவரே?
சேகரித்தவர்: S.M. கார்க்கி
இடம்: சிவகிரி, நெல்லை மாவட்டம்.
-----------------------
கண்டதுண்டோ?
காட்டுக்குச் சென்று மாடு மேய்க்கும் காதலனை அடிக்கடி காதலியால் காண முடிவதில்லை. அவனும் அவளைக் கண்டு பல நாட்கள் ஆயின. ஒரு நாள் காலையிலேயே எழுந்து மந்தை கிளம்பு முன், காதலி அவனைக் காண்பதற்கு ஊரின் எல்லையில் போய் நின்றாள். அவன் வந்ததும் அவனிடம் "பாலகனைக் கண்டதுண்டோ?" என்று கேட்கிறாள். அவன் அவளை "யாராவது அயலூர் ரோடுகளிலே பார்த்ததுண்டோ?" என்று கேட்கிறான். ஊரில் காண முடியவில்லையல்லவா? அவன் பதிலாக ஒரு பாட்டும் உள்ளது.
காதலி: கொத்துக் கடை மத்தாளமாம்
கொரங்குக் கல்லாம் கரடிக்கடை
பசு மேயும் பாரமலை-ஒரு
பாலகனைக் கண்டதுண்டோ?
காதலன்:சேத்துரு சிமின்டு ரோடு
சிவகிரி தாரு ரோடு
புளியங்குடி மண்ணு ரோடு-ஒரு
பெண் மயிலைப் பார்த்தியளா?
வட்டார வழக்கு : பார்த்தியளா?-பார்த்தீர்களா?
குறிப்பு: முதல் இரு அடிகளில் வருவன, மலைச்சாரலில் குறிப்பிட்ட இடங்களின் பெயர்கள்.
சேகரித்தவர்: S.M. கார்க்கி
இடம்: சிவகிரி.
-----------
போக மனம் கூடலியே?
மாமன் மகன் புங்கமர நிழலில் உட்கார்ந்திருக்கிறான். கஞ்சிக்கலயம் கொண்டு அத்தை மகள் அவ்வழியே செல்லுகிறாள். அவன் அவளோடு பேச்சுக் கொடுக்கிறான். "அவசரம் போலிருக்கிறது. போ, போ, ஆனால் நீ கஞ்சி குடிக்கும் போது என்னை நினைத்துக் கொள்" என்கிறான். அவளுக்கோ அவன் மேல் ஆசை. நின்று பேச விருப்பம்தான். ஆனால் சோளம் அறுவடையானதும் தாலி கட்டுவதாகச் சொன்னவன், அறுவடை முடிந்து ஒரு வாரமாகியும் எவ்விதப் பேச்சும் கொடுக்க வில்லை. தானாகப் பேச்செடுக்காமல் வழியும் இல்லை. ஆகவே ஒருவழியாக இந்தப் பேச்சைச் சொல்லிவிட வேண்டுமென முடிவு செய்து குளிர்ச்சியாகவே பேச்சைத் தொடங்கி பேச்சை முடித்து விடுகிறாள்.
கொழுந்தன்: கஞ்சிக் கலயம் கொண்டு
கரை மேலே போற புள்ள
கஞ்சி குடிக்கையிலே
என்னக் கொஞ்சம்
கண்ணே நினைச்சுக் கோடி
கொழுந்தி: மாமன்மகனிருக்க
மாலையிட்ட சாமியிருக்க
புங்க நிழலிருக்க
போக மனம் கூடலியே
கொழுந்தன்: கருசக் காட்டு புழுதியிலே
கால் நடையாப் போற புள்ள
கால் நடையும் கைவீச்சும்
காரணமாத் தோணுதடி
கொழுந்தி: சோளம் விதைக் கையிலே
சொல்லி விட்டுப் போன மச்சான்
சோளமும் பயிராச்சே-
நீ சொன்ன சொல்லும்
பொய்யாச்சே
சேகரித்தவர் : S.M. கார்க்கி
இடம்: நெல்லை மாவட்டம்.
----------------
கண்ணுக்கு உகந்த கனி
ஊரில் பல இளைஞர்கள் அவளைப் பெண் கேட்டு அவளுடைய பெற்றோர்களிடம் வருகிறார்கள். ஆனால் அவள் ஓர் இளைஞனைக் காதலிக்கிறாள். ஊரையெல்லாம் மறந்து அவனையே நினைத்துக் கொண்டிருக்கும் அவள் நிலையைப் பற்றி அவன் நினைத்துப் பார்க்கவில்லையென்று அவள் குத்திக் காட்டுகிறாள். தெரு வழியே செல்லும் தன் காதலன் காது கேட்க அவள் தனது மன வருத்தத்தை வெளியிடுகிறாள்.
பெண்: மார்க்கத் துண்டு போட்டு
மேக்காம போற சாமி-ஒம்ம
மார்க்கத் துண்டுலயே
மாயப் பொடி மணக்கும்
காய விட்டேன் கரும் புழுதி
கனிய விட்டேன் இனிய பழம்
மேய விட்டேன் என் கோழி
மேலத் தெருச் சாவலோட
ஊர உறவெழந்தேன்
ஒத்தமரம் தோப்பெழந்தேன்
பேரான சிவகிரிய
பிறப்பிலயும் நான் மறந்தேன்
கடல பொரி கடல
கை நெறஞ்சு என்ன செய்ய?
கண்ணுக்கு உகந்த கனி
ஒண்ணு தின்னால் போதாதோ?
சேகரித்தவர்: S.M. கார்க்கி
இடம்: சிவகிரி, நெல்லை மாவட்டம்.
--------------
காதல்
இனி காத்திருக்க முடியாது
முத்தம்மாள், முத்தையாவின் மீது காதல் கொண்டாள். அவர்கள் அடிக்கடி சந்தித்தார்கள். இவர்கள் நட்பு ஊரில் அம்பலமாயிற்று. வீட்டில் கட்டுக்காவல் அதிகமாயிற்று. அவனது வீட்டார் முறையோடு வந்து பெண் கேட்டால், அவளை அவனுக்கு மணம் செய்து வைக்க சம்மதமே. அவன் வெட்கப்பட்டுக் கொண்டு தன் வீட்டில் சொல்லாமலே இருந்தான். அவனைச் செயலுக்குத் தூண்டுவதற்காக முத்தம்மாள் அவன காது கேட்கப் பாடுகிறாள். அவன் சாலை வழி வருவதைக் கண்டும் காணாதவள் போல அவனிடம் சொல்ல வேண்டியவைகளை எல்லாம் பாட்டில் சொல்கிறாள். இன்னும் காத்துக் கொண்டிருந்தால், மண உறவு முறிந்து பகையாகிவிடும் என்று எச்சரிக்கிறாள்.
ஈக்கிக் கம்பி வேட்டியில
ஏலரிசிமுடிஞ்சிவிட்டேன்
தின்னாமப் போராரே
திண்டுக்கல்லு வாய்தாவுக்கு
திண்டுக்கல்லாம் சங்கதியாம்
தேசங் கோட்டு வாயிதாவாம்;
வாய்தாவை தீத்துப் போட்டு
வந்திருவார் இந்த வழி
வந்திருவார் இந்த வழி
வாச்சிருவார் தங்க குணம்
தந்திருவார் வெத்திலைய
போட்டிருவேன் வாய் செவக்க
வருவாரு போவா ருண்ணு
வழியெல்லாம் கிளி யெழுதி
இன்னும் வரக் காணலியே-இந்த
இண்டழிஞ்ச பாதையிலே
கல்லுரலு காத்திருக்க
கருத்தக் கொண்டை செவத்தசாமி!
ஏனையா காத்திருக்கே
எல்லாம் பகையாக?
வட்டார வழக்கு: கிளியெழுதி-கிளிப்படம் போட்டு, இது காதலுக்கு அடையாளம்; ஏலரிசி- வரகரிசி; வாச்சிடுவார்-வாய்த்திடுவார்.
குறிப்பு: வாய் செவக்க-ஒருவன் கொடுத்த வெற்றிலையை ஒரு பெண் போட்டுக் கொள்வது இணக்கத்தை குறிக்கும். அதை மென்று தின்னும்போது அவள் வாய் சிவந்தால் கொடுத்தவனுடைய அன்பு மாறாது என்பது நம்பிக்கை. இண்டழிஞ்ச-முட் செடிகள் அழிந்து முள் சிதறி கிடக்கிற பாதை.
சேகரித்தவர்: S.M. கார்க்கி
இடம்: சிவகிரி.
--------------
தலை கவிழ வைத்தாயே
காதலர்களது நட்பு குடமுடைந்து பூச் சிதறியது போல ஊராருக்கெல்லாம் தெரிந்துவிட்டது. அவளுடைய தந்தைக்கும் தெரிந்து அவளிடம் கடும் கோபத்தோடு விசாரிக்கிறார். அவள் பதில் பேசாமல் தலை கவிழ்கிறாள். இந்த நிலை ஏற்படும் முன்பே தலை நிமிர்ந்து ஊரில் நடக்கும்படியாக அவளை அவன் மணம் செய்து கொண்டிருக்க வேண்டாமா? மதயானையிடம் கரும்பு வளைந்து கொடுப்பதுபோல அவள் அவனுக்கு ஆட்பட்டு விட்டாள். கரும்புச் சாறை உறிஞ்சிய யானை சக்கையை எறிவது போல் அவனும் பிரிந்து விடுவானா? இந்த ஏக்கத்தையும், சந்தேகத்தையும் அவள் காது கேட்க வெளியிடுகிறாள்.
கரும்பு வெட்டி மொழி நறுக்கி
மொழிக்கு மொழி தேனடைச்சு
கரும்பு திங்கற நாளையிலே
நமக்குக் கசப்பு வந்து நேர்ந்ததென்ன?
கரும்பா வணங்கினனே
கருத்த மதம் யானையிடம்
துரும்பா உணருதேனே
துன்பப் பட்ட பாவியாலே
நானா விரும்பலையே
நைக் கரும்பு திங்கலையே
தானா விரும்பினையே-என்னை
தலை கவுர வச்சுட்டையே!
கூடினமே கூடினமே
குடத்திலிட்ட பூப் போல
குடமுடைஞ்சி பூச்சிதற
கூடறது எக்காலம்?
ஒரு நாள் ஒரு பொழுது
ஒம் முகத்தை பாராட்ட
ஓடைக்கரை மண்ணெடுத்து
உன் உருவம் செய்து பார்த்திடுவேன்
சேகரித்தவர்: S.M. கார்க்கி
இடம்: நெல்லை மாவட்டம்.
--------------
மூங்கில் அடி பட்டேன்
கன்னியம்மை புல் அறுக்க மலைக்குப் போகிறாள். கன்னியப்பன் நேரம் பார்த்து அவளைப் பின் தொடருகிறான். காட்டுப்பூவொன்றையும் பறித்து வைத்துக்கொண்டு "இப் பூவை உன் கூந்தலில் முடியட்டுமா?" என்று கேட்கிறான். அவர்கள் காதலர்கள். அவர்கள் உறவு அவளுடைய தந்தைக்குத் தெரிந்துவிட்டது. அவருக்க வந்த கோபத்தில் காட்டு மூங்கில் கம்பால் அவளை நன்றாக அடித்து விட்டார். எனவே அவள் சாமர்த்தியமாகப் பதில் சொல்லுகிறாள், "எல்லோரும் அறிய பாய் விரித்து என்னை உட்கார்த்தி யாரும் குற்றம் சொல்லாத முறையில் என் தலையில் பூச் சூட்டும் காலத்தில் பூ சூட்டலாம். அதுவரை காத்திரு" என்கிறாள்.
ஆண்: கல்லருகே தண்ணிருக்க
காட்டச் சுத்திப் புல்லிருக்க
புல்லறுக்கப் போரபுள்ளே-நீ
பூ முடிஞ்சாலா காதோ?
பெண்:மொழுகின திருணையில
எழுதின பாய் விரிச்சு
வாங்க திருணைக் கய்யா
நம்ம வாச முள்ள பூ முடிய
கிடுகு கட்டி திருணையில
கிளியும் நானும் பேசயிலே
கிளிக்கு மதி சொன்னவுக-எனக்கு
மதி சொல்லலையே.
முழியா முழிக்கிறதோ
முத்துப் பல்லு சோருறதோ
அரும்பும் துடிக்கிறதோ
எனக்குப் பய மாகுதையா
ஆக்கை அடியும் பட்டேன்
அவராலே சொல்லும் கேட்டேன்
மூங்கி அடியும் பட்டேன்
முழி சுருட்டிச் சாமியாலே
வட்டார வழக்கு : திருணை-திண்ணை, கிடுகு - தென்னோலைத்தட்டி; மூங்கி-மூங்கில்.
சேகரித்தவர்: S.M. கார்க்கி
இடம்: சிவகிரி, நெல்லை மாவட்டம்.
------------
அலுக்கி நட என் சாமி
உழுது முடித்து விட்டு வீட்டுக்கு உழவன் வருகிறான். அவன் களைப்பைப் போக்கி உற்சாகமூட்டுவதற்காக அவன் மனைவி அவனைப் புகழ்ந்துப்பாடி, நிமிர்ந்து நடந்து தங்களுடைய அரண்மனைக்கு வரும்படி அழைக்கிறாள். அவர்களுடைய வீடு சிறு குடிசையாயினும் அவர்களுக்கு அது அரண்மனைதான். அவளுக்கு அவன் ராஜா. அவனுக்கு அவள் ராணிதானே!
வெள்ளிக் கலப்பைகளாம்
வெங்கலத்து மேழிகளாம்
வட காடு உழுது வரும்
வஞ்சிக் கொடி என் சாமி
மத்தியானம் மாடு விட்டு
மாட்டுக் கெல்லாம் கூளம் போட்டு
சாட்டக் கம்பு தோளிலிட்டு-என்
சாமி வரக் காணியளோ?
கிறிச்சு மிதியடியாம்
கீகண்ணுப் பாருவையாம்
அலுக்கி நட எஞ்சாமி-நம்ம
அரண்மனைக்குக் கெச்சிதமே
சேகரித்தவர்: S.M. கார்க்கி
இடம்: சிவகிரி, நெல்லை மாவட்டம்.
---------------
நாளைப் பயணமடி
காதலரிருவர் அன்பு மிகுதியால் ஒருவருக்கொருவர் உரையாடிக் கொள்கிறார்கள். கடைசியில் அவன் நாளைப் பயணம் என்கிறான். அவள் நானும் வருகிறேன் என்கிறாள். ஆனால் நடககுமா?
பெண்: ஆல மரமுறங்க
அடி மரத்துக் கொப்புறங்க
பாதையிலே நானிருக்க-நீங்க
பக்க வழி போகலாமா?
ஆண்: வாழையடி உன்கூந்தல்
வைரமடி பல்காவி
ஏழையடி நானுனக்கு
இரங்கலையோ உன்மனசு?
பெண்:சந்திரரே சூரியரே
தலைக்கு மேலே வாரவரே
இந்திரர்க்கு இளையவரே-நான்
என்ன சொல்லிக் கூப்பிடட்டும்
ஆண்: அத்தை மகளே-நீ
அருவங் கொடி வாயழகி
கோவம் பழத்தழகி-என்னை
கொழுந்தனிண்ணு கூப்பிடடி
மேற்கே சூலமடி
மே மலையும் கோணலடி
நாளைப் பயணமடி
பெண்: நானும் வாரேன் கூடப் போவோம்
சேகரித்தவர்: S.M. கார்க்கி
இடம்: சிவகிரி.
------------
விரட்டப்பட்ட மான்
காதலர் உறவு ஊரில் தெரிந்த பின்னும் மணம் செய்து கொள்ள அவசரப்படாத காதலன் தன் காதலியைச் சந்திக்கிறான். அவளிடம் காதல் பேச்சுகள் பேசுகிறான். தனது தவறையும், இலைமறை காயாக ஒப்புக் கொள்ளுகிறான். திருமண ஏற்பாடுகளை உடனே செய்யும்படியாக அவனைத் தூண்ட வேண்டும் என்று நினைத்த அவள் அவனைக் கடிந்து கொள்கிறாள். "உன்னால் சந்தியில் என் பெயர் இழுபட்டது. என் உறவினர்களைப் பகைத்துக் கொண்டேன். விரட்டப்பட்ட மான் போலாகி விட்டேன்" என்று கூறுகிறாள். இச் சுடு சொற்களால் அவன் திருமணத்திற்கு முனைவான் என்பது அவள் கருத்து.
ஆண்: கட்டக் கருத்தப்புள்ள
காலுத் தண்ட போட்ட புள்ள
உதடு செவத்த புள்ள
மெலியுதனே ஒன்னால
நாட்டுக்கு நாடு மட்டம்
நாம ரெண்டும் ஜோடி மட்டம்
கோட்டுக்குப் போனாலுமே-நம்ம
கோடி ஜனம் கையெடுக்கும்
கிள்ளிய கொசுவத்துக்கோ
கீழ் மடியின் வெத்திலைக்கோ
அள்ளிய தேமலுக்கோ
ஆசை கொண்டேன் பெண் மயிலே!
மலையிலே மாட்டக் கண்டேன்
மலைக்கும் கீழ தடத்தக் கண்டேன்
செவத்தப் புள்ள கொண்டயிலே
செவ்வரளிப் பூவக் கண்டேன்
வெட்டின கட்டயில
வீரியமா பூத்த பூவே
வக்கத் தெரியாம
வாட விட்டேன் தேசவழி
பெண்: எலுமிச்சம் பழ மிண்ணு
எடுத்தேன் கை நெறைய
பச்சக் குமிட்டியல்ல
பாத்தவுக சொல்லலியே
படர்ந்த நெஞ்சாம் பருமுழியாம்
பாவிக்கல்லோ ஆசை கொண்டேன்
இலந்த முள்ள தலைமுடிய
இழுபடுதேன் சந்தியில
பாத்தனய்யா உன் முகத்த
பகச்சனய்யா எஞ்சனத்த
விட்டுப் பிரிஞ்சேனய்யா
விரட்டப் பட்ட மானப்போல
வட்டார வழக்கு : முள்ள-முள்ளை.
சேகரித்தவர்: S.M. கார்க்கி
இடம்: சிவகிரி, நெல்லை மாவட்டம்.
------------------
உன் மயக்கம்
ஓரிளைஞனும், ஒரு இளமங்கையும் காதல் மயக்கத்தில் ஆழ்ந்து உரையாடுகிறார்கள்.அவர்களுடைய உள்ளக் கிளர்ச்சிகளை வெளியிடப் பயன்படுத்தும் உவமைகளும் ஒருவரையொருவர் அழைத்துக் கொள்ளப் பயன்படுத்தும் விளிச்சொற்களும் சுவையாக இருக்கின்றன.
ஆண்: எண்ணெய் தேய்த்தல்லோ
எனக்கு முன்னே போரபுள்ள
எண்ணெய்ப் பளபளப்பு-என்
கண்ணை மிரட்டுதடி
எண்ணெய்க்குடம் போல
எழும்பி வந்த மேகம் போல
தண்ணிக்குடம் போல
தளும்புதடி என் மனசு
பெண் : உங்க மேனிக்குள்ள
ஊதாக் கலர் சட்டைக்குள்ள
தோளிலிடும் லேஞ்சுக்குள்ள
தோகைமயில் ஆசை கொண்டேன்
ஆண்: வாழைக் கொடிக்காலே
வட கொடிக்கால் வெத்திலையே
போட்டா செவக்குதில்ல
பெண்மயிலே உன் மயக்கம்
பெண் : சத்தனக்கும்பாவில
சாதம் போட்டு உண்கையில
உங்களை நினைக்கையிலே
உண்ணுறது சாதமில்லை.
குறிப்பு: வாழைக் கொடிக்கால், வட கொடிக்கால் வெற்றிலை, பெண்ணின் அழகுக்கும் செழிப்பான மேனி வளத்துக்கும் உவமை. வெத்திலை போட்டால் சிவப்பது
பற்றிய நம்பிக்கை முன்னரே குறிப்பிடப்பட்டது.
சேகரித்தவர்: S.M. கார்க்கி
இடம்: சிவகிரி.
------------------
கொழுந்தன் முகம் வாடிடாதோ?
ஏர் கொண்டு உழச் சென்ற தன் கணவன், உச்சி வேளையாகியும் வீடு திரும்பவில்லை என்பதைக் கண்ட மனைவி கவலை கொள்ளுகிறாள். ஒரு வேளை சீக்கிரமே உழுது முடித்து விட்டுத் தழை உரத்துக்காக வண்டி கட்டிக் கொண்டு காட்டுக்குப் போய்விட்டானோ? வேலை செய்து அலுத்துப் போனால் வீடு வந்து ஓய்வு கொண்டு பின்னர் செல்லக்கூடாதா?அவளுக்கு வீட்டில் இருப்புக் கொள்ளவில்லை.காட்டுக்குப் போகும் பாதையில் கணவனது நண்பர்களை வழியில் காண்கிறாள்.அவர்களைப் பார்த்து அவள் கவலையை வெளியிட்டுக் கீழ் வரும் பாடலைப் பாடுகிறாள்.
மத்தியானம் ஏரவிழ்த்து
மாடு ரெண்டும் முன்னே விட்டு
சாட்டக்கம்பு தோளிலிட்டு
சாமிவரக்கண்டியளோ?
இடை வாரு போட்டவரே
இட கொஞ்சம் சிறுத்தவரே
பாதம் சிறுத்தவரே-பெரும்
பாதையிலே கண்டதுண்டோ?
கொழிஞ்சி குழை புடுங்கி
கொழுந்தன் வண்டிப் பாரமேத்தி
கொழிஞ்சிக் குழை வாடினாலும்
கொழுந்தன் முகம் வாடிராதோ?
வாடக்கொடி புடுங்கி
வடகாடு சுத்திவந்து
தேடிக் குழை புடுங்கும் எந்தன்
தேன் மொழியை கண்டதுண்டோ?
வட்டார வழக்கு : சாட்டக்கம்பு - சாட்டைக்கம்பு; போட்டவரே - போட்டவரை, சிறுத்தவரே – சிறுத்தவரை; புடுங்கி-பிடுங்கி; வாடிராதோ - வாடிடாதோ, தேன்மொழி-பொதுவாக பெண்முன்னிலை ஆண்முன்னிலையாயிற்று.
சேகரித்தவர்: S.M. கார்க்கி
இடம்: சிவகிரி, நெல்லை மாவட்டம்.
----------------
அத்தை மகன் முத்துச்சாமி
முத்துச்சாமி, முத்தம்மாளின் முறைமாப்பிள்ளை.கேலி செய்யும் போக்கில் அவள் தலையில் சூடியிருந்த பிச்சிச்சரத்தை அறுத்தெறிந்தான். மலர் சூடுவதற்கு பதில் மலரைச் சிதைப்பது அமங்கலமென அவள் எண்ணினாள். பொய்க்கோபமுகங்காட்டி அவனைக் கடிந்து கொள்கிறாள். 'என்னை விரும்பாத உன்னை விட்டு வேறொரு இளஞனைத் தேடிச் செல்லுகிறேன், என்று கூறி அவனுக்குப் பொறாமையூட்ட முயலுகிறாள். அவன் முன்னைய இன்ப நிகழ்ச்சிகளை நினைவூட்டி அவளைச் சமாதானப்படுத்த முயலுகிறான். முடிவு நமது ஊகத்துக்கு விடப்பட்டுள்ளது.
முத்தம்மாள்: கொத்த மல்லித் தோட்டத்திலே
குளிக்கப் போயி நிக்கையிலே
அத்தை மகன் முத்துசாமி
அத்தெரிந்தான் பிச்சிச்சரம்
முத்துச்சாமி: சத்திரத்துக் கம்மாயிலே
மொச்சி நெத்-தெடுக்கையிலே
குத்துக் கல்லு மேலிருந்து-நான்
கூப்பிட்டது கேக்கலியோ?
கூடைமேலே கூடை வச்சு
குமரிப் புள்ளே எங்க போற
முத்தம்மாள்: ஏழுமலை கழிச்சு-ஒரு
எள வட்டத்தைத் தேடிப்போறேன்
முத்துச்சாமி பாக்குத் துவக்குதடி
பழய உறவு மங்குதடி
ஏலம் கசக்குதடி
என்னை விட்டுப் போறதுக்கோ?
வட்டார வழக்கு : நிக்கையிலே - நிற்கையிலே; மொச்சி- மொச்சை; அத்து - அறுத்து.
சேகரித்தவர்: S.M. கார்க்கி
இடம்: சிவகிரி.
--------------
மருமகனாய் ஆனதென்ன?
அடுத்த வீட்டுப் பையன் தன்னை 'அம்மா, அம்மா என்று அருமையாக அழைப்பவன். அவளுக்கு ஒரே ஒரு மகள். காட்டுக்கு ஈச்சஞ் சுள்ளி பொறுக்கப் போனவள் வெகுநேரம் கழித்துத் திரும்பினாள். கண்னெல்லாம் சிவந்திருந்தது.எதையோ மறைப்பவள் போல சட்டென்று வீட்டினுள் போய்விட்டாள். தாய் மகளது தோற்ற மாறுதலைக் கண்டு கொண்டு அவளிடம் காரணம் கேட்கிறாள். அவள் வெட்கத்தோடு பதில் சொல்லுகிறாள். ஒரு புறம் அதிர்ச்சி ஏற்பட்ட போதிலும் அவள் தன் அண்டை வீட்டு அருமைப் பையன் மருமகனான விந்தையை எண்ணி உள்ளுக்குள் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது.
தாய்: ஏழு மலை கழித்து
ஈஞ்சறுக்க போற மக்கா- உன்
கண்ணு செவந்த தென்ன
களவு மெத்த ஆனதென்ன?
மகள்: கண்ணு செவக்கவில்லை
களவு மெத்த ஆகவில்லை-உன்
ஆசை மகனாலே-நான்
அருமை கொறைஞ் சேனம்மா
தாய் : ஆசை மகனே நீயே
அருமையுள்ள புத்திரனே
மாய மகனே நீயே-இப்போ
மரு மகனாய் ஆனதென்ன?
சேகரித்தவர். S.M. கார்க்கி
இடம்: நெல்லை மாவட்டம்
------------
திரிஞ்சநாள் போதுமையா
பல நாட்களாகக் காதலர்கள் சந்திப்பதற்கு இடையூறு ஏற்பட்டது. ஒருநாள் வேலைக்குப் போகிறவழியில் அவள் அவனைக் கண்டு விட்டாள். அவள் தனது அன்பையும், பிரிவுத் துன்பத்தையும் விளக்கி அவனிடம் சொல்லுகிறாள். எத்தனை காவல் இருந்தாலும், குண்டு போட்டுச் சுட்டாலும் அத்தனையும் மீறிக்கொண்டு அவனிடம் வந்து
சேர்ந்து விடுவதாகச் சொல்லுகிறாள்.ஆனால் அவன் அவளை வெளியூருக்கு அழைத்துச் செல்ல விரும்பவில்லை. நடுச் சாமத்தில் அவள் வீட்டிற்கு வருவதாகச் சொல்லுகிறான். ஆனால் அவளோ "திரிந்த நாள் போதும்" என்று ஒரே வார்த்தையில் சொல்லுகிறாள். இருந்து வாழ வழிபார்க்க வேண்டும் என்பதைச் சொல்லாமல் உணர்த்துகிறான் இப் பாடலில்.
காதலி : நறுக்குச் சவரம் செய்து
நடுத் தெருவே போறவரே
குறுக்குச் சவளுதையா
கூந்த லொரு பாகத்துக்கு
சேக்குத் தலை சீவி
செந்துருக்குப் பொட்டு வச்சு
சோக்குப் போல நட நடந்தா-நான்
துரைகளுண்ணு மதிச் சிருவேன்
தேக்கம் பலகையில
தேனொழுகும் மெத்தையில
மன்னவர் கொடங்கையில
மத்தவர் அணைஞ்சிராம
நிறை பானைத் தண்ணிபோல
நிணலாடும் என் சதுரம்
குறை பானத் தண்ணி போல
குறை யுதனே ஒம்மாலே.
காவலிருந்தாலென்ன?
கல்லு வெடி போட்டா லென்ன?
இமுசு படுத்திட்டாலும்-நான்
எஜமானிடம் வந்திருவேன்
பச்ச மயங்குதனே
பவளக்காடு வாடுதனே-நான்
இச்ச பட்ட நேரமெல்லாம்
ஏங்கி முகம் வாடுதனே
காதலன்: ஆத்துத் தண்ணி சேந்திருக்க
அமிர்த குணம் பாத்திருக்க
சேந்த கிளி இங்கிருக்க
தேச வழி போக வேண்டாம்
சட சடனு மழை பொழிய
சாமம் இடி விழுக
குடை போட்டு நானும் வாரேன்
குண மயிலே தூங்கிராத
காதலி: ஆசை யெல்லாம் அவருமேலே
அவரு இங்க வரவேண்டாம்
தேசமோ தில்லு முல்லு-நம்ம
திரிஞ்ச நாள் போதுமையா
ஓடுத தண்ணியில
ஓட விட்டேன் பம்பரத்த
பம்பரத்த நம்பியல்லோ-நான்
வெம்பரப்பா ஆனேனே
குறிப்பு: பச்ச, பவளக்காடு-பெண் நலத்திற்கு உவமைகள்.
சேகரித்தவர்: S.M. கார்க்கி இடம்: சிவகிரி.
-----------------
தேசமெங்கும் பேராச்சு
அவள் மணமாகாதவள். அவளுக்குக் காதலன் இருக்கிறான் என்று ஊரெல்லாம் பெயராகிவிட்டது. அவனை அவள் விரும்புகிறாள். ஆனால், அவனை பார்த்துப் பழகி இன்பம் துய்க்கவில்லை. ஆனாலும் ஊரில் அவனையும் அவளையும் சேர்த்துப் பல கதைகள் பேச ஆரம்பித்தனர். ஒரு புறத்தில் அவளுக்கு அச்செய்தி மகிழ்ச்சியைக் கொடுத்த போதிலும், மறுபுறம் இல்லாததைச் சொல்லுகிறார்களே என்று வருத்தமும் உண்டாகிறது.
பூவரசம் பூவு நீயி
பொழுதிருக்கப் பூத்த பூவே
நாசமத்த பூவாலே
நானும் ஒருசொல் கேட்டேன்
பருத்தி பலன் பிடிக்க
பக்கமெல்லாம் சில் வெடிக்க
ஒருத்தி சமைஞ்சிருக்க
உலகமெல்லாம் பேராச்சே
வட்டுக் கருப்பட்டியை
வாசமுள்ள ரோசாவை
திண்ணு செழிக்கு முன்னே
தேசமெங்கும் பேராச்சு
பட்டு அருணாக் கொடி
பாவி மகன் தங்கக்கொடி
தங்கக் கொடி சாமியாலே
தலைபொறுக்காச் சொல் கேட்டேன்
வெத்தலைக் காம்பறியேன்
வேத்துமுகம் நானறியேன்
சுப்பையாவாலே ஒரு
சொல்லுமல்லோ தான் கேட்டேன்
கீழத்தெருவிலேயோ
சிலுக்குப் போட்ட கருணைப்புறா
மேலத் தெருவில போய்
மேயுதுண்ணுகேள்விப்பட்டேன்
ராமக் கரும்பு நீயே
ராவு திண்ண சருக்கரையே
சீனிப் பிலாச் சுனையை
தின்னணுண்ணு பேரெத்தேன்
பூசணிப் பூவே நீ
பொழுதிருக்கப் பூத்த பூவே
நாதியத்த பூவாலே
நான் ஒரு நாச் சொல் கேட்டேன்
வட்டார வழக்கு: நாசமத்த-நாசமுற்ற, சமைஞ்சிருக்க-ருதுவாகியிருக்க, அருணாக்கொடி-அரை நாண் கொடி; ராமக்கரும்பு-நாமக்கரும்பு.
சேகரித்தவர். S.S. போத்தையா:
இடம், விளாத்திகுளம், நெல்லை மாவட்டம்.
----------
உலகம் பொறுக்குதில்லை
முன் பாடலில் வரும் காதலி பாடுவதைப் போலவே இப் பாடலிலும் ஒர் காதலி தன் காதல் ஊரில் வெளியாகி விட்டதை எண்ணி வருந்துகிறாள். காதலன் காதில் எட்டும்படி தனது கவலையைப் பாட்டில் கூறுகிறாள். அவனும் தன்னைப் பற்றியும் பிறர் தூற்றுவதை அவளுக்குத் தெரிவிக்கும் முறையில் பாடுகிறான்.
பெண்.: எண்ணெய்த் தலை முழுகி
என் தெருவே போறவரே
பாராதீரு என் முகத்தை
பழிகள் வந்து சேர்ந்திருமே
ஆலமரமுறங்க
அடி மரத்து வண்டுறங்க
உன்னோட நானுறங்க
உலகம் பொறுக்குதில்லை
கல்லோட கல்லுரச
கடலுத் தண்ணி மீனுரச
உன்னோட நானுரச
உலகம் பொறுக்கலையே
வெத்தலை தந்தவரே
வினையிழுத்து வச்சவரே
போயிலை தந்தவரே
போதுமையா உம்முறவு
ஆண்: பார்த்தனடி உன் முகத்த
பகைச்சனடி என் சனத்த
கேட்டனடி கேவலங்கள்
கிளிமொழியாள் உன்னாலே
அருகுபத்திப் பிஞ்சையிலே
ஆகுருவி விரட்டையிலே
சொருகு கொண்டை வெள்ளையம்மா
சொல்லுக் கிடம் வச்சவளே
வட்டார வழக்கு: அருகுபத்தி-அருகம்புல் படர்ந்த; வச்சவரே-வைத்தவரே; வச்சவளே-வைத்தவளே: ஆகுருவி-புஞ்சைக்கு வரும் குருவி.
சேகரித்தவர்: S.S. போத்தையா
இடம்:, தங்கம்மாள்புரம், விளாத்திகுளம், நெல்லை மாவட்டம்.
------------
ஒரு பலனும் நானறியேன்
"பலனறியாமல் பழி மட்டும் சுமந்தேன். உன் மேல் ஆசை வைத்ததுண்டு. ஆனால், ஊரார் பேசுவதுபோல் ஒன்றும் நடக்கவில்லையே! பூவைப் பார்த்து பறிக்க எண்ணியதுண்டு. ஆனால் பூவை பறித்து முகரவில்லையே! பூவைப் பறித்துச் சூடிக் கொண்டதாக ஊரார் பழி சொல்லுகிறார்களே" என்று இப்பெண் வருந்துகிறாள்.
நந்தவனம் துறக்க வில்லை
நானொரு நாள் போகவில்லை
பூவாத முல்லைப் பூவை
பூத்ததென்று சொல்லவில்லை
வட்ட ஓடையைக் கண்டேன்
வடக்கே போற கொப்பைக் கண்டேன்.
மோதிரக்கையைக் கண்டேன்
முகத்தழகை நானும் காணேன்.
நந்தவனம் துறந்து
நானொரு நாள் பூவெடுத்து
சூடல்லியே அந்தப்பூவை
சும்மாவில்ல சொல்லுறாக
தலையிலே தண்ணிக் குடம்
தாகமெல்லாம் உங்கமேலே
ஊரெல்லாம் ஓமலிப்பு
ஒரு பலனும் நானறியேன்
ஒரு மேனி ஒரு சிகப்பு,
ஊரெல்லாம் ஓமலிப்பு,
ஓமலிப்புக் கேட்டதுண்டு;
ஒருபலனும் நானறியேன்.
வட்டார வழக்கு: ஒமலிப்பு- பரபரப்பு.
சேகரித்தவர்: S.S. போத்தையா
இடம்: நெல்லை.மாவட்டம்
-------------
ஒன்றாகப் போவோம்
கிராமத்திலுள்ள இளைஞர்கள் மேல்காட்டுக்கு வேலைக்குச் செல்லுகிறார்கள். அவர்களில் ஒரு காதல் ஜோடி இரண்டு பேர் பின்தங்கிச் சென்றால், உற்றார் உறவினர் கேலி செய்வார்கள். எனவே அவர்கள் தனித்தனியே செல்லுகிறார்கள். நெருங்கி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே செல்ல வேண்டுமென்று இருவருக்குமே ஆசை. அவள் அவனை தனக்கு முன் போகும்படி சொல்லுகிறாள். அவனோ சேர்ந்து போனால் என்னவென்று கேட்கிறான். ஆனால் அவளுக்கு வெட்கமாக இருக்கிறது.
பெண்: சீரிய சந்தனமே
கிழக்கிருக்கும் சூரியரே
வாங்களேன் மேகாட்டுக்கு
வாசமுள்ள பூமுடிய
ஆண்: மதுரை மருக்கொழுந்து
மணலூருத் தாழம்பூவு
சேத்துரு செவந்திப் பூவு
சேர்ந்து வந்தால் ஆகாதோ?
பெண்: ஒத்தடிப் பாதையிலே
ஒத்த வழிப் பாதையிலே
மின்னிட்டான் பூச்சி போல
முன்னே வந்தால் ஆகாதோ?
ஆண்: கோடாலிக் கொண்டைக்காரி
குளத்தூருக் காவல்காரி
வில்லு முதுகுக்காரி
நில்லேண்டி ஒண்ணாப்போவோம்.
வெட்கம் பறந்து விட்டது. அவளும் அவன் தன்கூடவே வரச் சம்மதிக்கிறாள். ஆனால் அவன் பாதையை விட்டு கீழே இறங்கும்படி அழைக்கிறான். அவள் மறுத்து, 'திருமணமாகட்டும் உன்னோடு தட்டாங்கல் விளையாட எங்கழைத்தாலும்வருகிறேன்' என்கிறாள்.
பெண்: சாயவேட்டி நிறச்சிவப்பு
என்னைக் கண்டால் குறுஞ்சிரிப்பு
குறுஞ்சிரிப்பும் தலையசைப்பும்
கூட வந்தால் ஆகாதோ?
ஆண் லோலாக்கு போட்ட புள்ளே
ரோட்டு வழி போற புள்ளே
ரோட்டை விட்டுக் கீழிறங்கு
கேட்ட தெல்லாம் வாங்கித்தாரேன்
பெண்: உன் மனசு என் மனசு
ஒரு மனசா ஆனாக்கால்
சதுரகிரி மலையோரம்
தட்டாங்கல்லு வெளையாடலாம்
ஆண்: கூடை இடுப்பில் வச்சு,
கோகிலம் போல் போற பொண்ணே
பேடை மயிலன்னமே
பேசாயோ வாய்திறந்து?
பெண்: வாய்க்காலுத் தண்ணியிலே
வண்டு வரும் தூசி வரும்
கூடத்துக்கு வாங்களையா
குளிந்த தண்ணி நான் தாரேன்
வைகையாத்தங்கரை தனிலே
வச்சிருக்கேன் தீங்கரும்பு
தீவிரமாப் போற சாமி
திண்ணு பாத்தாலாகாதோ?
மொழுகிய திருணையிலே
எழுதிய பாய் போட்டு
வாருமையா திருணைக்கு
வாசமுள்ள பூ முடிக்க
சேகரித்தவர். S.S. போத்தையா
இடம்: விளாத்திகுளம், நெல்லை மாவட்டம்
-----------
நிற்கிறதும் சாமி தானோ?
கணவன் சொல்லாமல் சென்று விட்டான். எதிர் பார்த்து பல தடவை ஏமாந்து விட்டாள் மனைவி. இன்று வருவார் என்றெண்ணி சோறும் கறியும் சமைத்துவிட்டு பலவிடங்களிலும் அவனைத் தேடிச் செல்லுகிறாள். தூரத்தில் எந்த ஆண்மகனைப் பார்த்தாலும், அவளுடைய தவிப்பில் அவனாக இராதா என்றெண்ணுகிறாள்.கடைசியில் வீட்டுக்குச் சென்றதும் தலைவாசலில் அவன் வந்து நிற்கிறான். அவள் கவலையெல்லாம் மறைந்து போகிறது.
கிறிச்சி மிதியடியாம்
கீழ் கண்ணுப் பார்வையாம்
அருச்சலுல போறவரை
யாருண்ணும் தெரியலையே.
படர்ந்த புளிக் கம்மாயிலே
பாலன் தலை முழுகையிலே
நிறைந்த தலை வாசலிலே
நிக்கிறதும் சாமிதானா?
சின்னச் செடியசைய
சின்னச் சாமி நடையசைய
வருணச் செடி குலுங்க
வந்த சாமி நீங்க தானா?
கருவ மரத்துப் புஞ்செய்
கன்னி மூலை நேருக்கு
நெல்லி மரத்தடியில்
நிக்கிறதும் சாமி தானா?
ஆட்டுக் கிடா சோறிருக்க
அழுதுகிட்டு நானிருக்க
வாடா விளக்கிருக்க
வந்தவனத் தெரியலியே!
புளிய மரத்தடியில்
புள்ளையார் கோவிலோரம்
சத்திரத்தின் வேம்போரம்
சாமி தானோ நிக்கிறது?
உயர்ந்த தலைவாசல்
உல்லாச வல்ல வாட்டு
நிறைந்த தலை வாசலில
நிக்கிறதும் சாமிதானோ?
வட்டார வழக்கு: அருச்சல்-Urgent-அவசரமாக (திரிபு); கம்மாய்-பாசனக் குளம்(நெல்லை, ராமநாதபுரம் வழக்கு); நிக்கிறது -நிற்கிறது.
சேகரித்தவர்: S.S. போத்தையா
இடம்: நெல்லை மாவட்டம்.
-----------
கண்டீர்களா?
காதலனைச் சில நாட்கள் காணாவிட்டால் காதலி தேடுவாள். காதலியைக் காணாவிட்டால், காதலன் தேடுவான். இவர்கள் மறுபடி சந்திக்கும்போது காணாமல் போனவன் அல்லது போனவளைத் தேடி அலைந்தது போல கற்பனைப் பாடல்கள் ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்ளுவார்கள். எல்லோரும் அறிய ஒருவரையொருவர் தேடி அலைய முடியுமா? ஆயினும் கற்பனையில் எங்கெல்லாமோ தேடி அலுத்ததாக மறு சந்திப்பின்போது ஒருவருக்கொருவர் கூறிக்கொள்ளுவார்கள். இவ்வகைப் பாடல்கள் ஆண்கள் பாடும் பாடல், பெண்கள் பாடும் பாடல் என இருவகையுண்டு. அவற்றுள் சில கீழே காண்க.
(ஆண்கள்பாடுவது)
வட்டம் போடும் வடக்குத்தெரு
வந்து நிற்கும் தெற்குத்தெரு
கூட்டம் போடும் கல்லுரலு
குயிலும் வரக் காணலியே!
எண்ணைக் கருப்பே
என்னிலும் ஏ கருப்பே
தண்ணிக் கருப்பை
தனியே வரக்காணலியே!
கண்டாங்கிச் சேலைக்காரி
கைநிறைஞ்ச வளையல்காரி
கண்டா வரச் சொல்லுங்க
ரெண்டாம் நம்பர் தோட்டத்துக்கு
மாரளவு கருதுப் புஞ்சை
மதிகிளி காக்கும் புஞ்சை
கூட்டக் கருதுக்குள்ளே
குயிலும் வரக் கண்டியளா?
சாலை இருபுறமும்
சந்தனவாழ்மரமே
கொழுந்து மாமரத்தை
கூடுதற்குத் தேடுறனே
கிழக்கே விளாத்திகுளம்
கிளிக்குஞ்சு போயிருக்கு
கண்டா வரச் சொல்லுங்க
கல்யாண வாசலுக்கு
(பெண்கள் பாடுவது)
ஆளுலேயும் குட்டை
அழகுலயும் பூஞ்சிவப்பை
நடையிலயும் நைச்சிவப்பை
நடுத் தெருவில் காணலியே!
புதுப்பானைக் கருப்பழகை
புத்திரன் போல் நடையழகை
சிரிப்பாணி மன்னரையும்
தெருவில் வரக் கண்டியளா?
தோப்பிலயோ சேவல் கட்டு
தோகைமயில் போயிருக்கு
கண்டா வரச் சொல்லுங்க
கானமயில் வாடுரண்ணு
ஊருகத்திக் காளை எங்கே
உள்ளுரு மட்டத் தெங்கே
நாடு சுத்திக் காளைஎங்கே
நடக்க விட்டு நான் பார்க்க
பெருநாழிப் பாதைக்கு
பேசுங்கிளி போயிருக்கு
கண்டா வரச் சொல்லுங்க
கம்மந் தட்டை குச்சிலுக்கு
காலு வளர்ந்த கிளி
கல்லுரலுகாத்தகிளி
தோகை வளர்ந்த கிளி
தோப்பிலயும் காணியளோ?
வட்டார வழக்கு: சிரிப்பாணி-சிரிப்பு (நெல்லை பேச்சு வழக்கு); பெருநாழி-முதுகுளத்தூர் தாலுகாவில் ஒரு ஊர்; காணியளோ-கண்டீர்களோ? (பேச்சு வழக்கு); ஊரு கத்திதக் காளை, உள்ளுருமட்டம்-இவை காதலனைக் குறிக்கும் குறியீட்டுச் சொற்கள்.
சேகரித்தவர்: S.S. போத்தையா
இடம்: விளாத்திகுளம், நெல்லை மாவட்டம்.
-------------
முறிவு
உழைக்கும் மக்களில் சில ஜாதிப் பிரிவினரில் விவாகரத்து சமூக வழக்கமாக நெடுநாளாக இருந்து வருகிறது. குடும்பத்தில் ஒற்றுமை குறைவதாலோ குழந்தை இல்லாததாலோ, ஆணோ பெண்ணோ, துர்நடத்தையுடையவராயிருப்பதாலோ, சமூக வழக்கப்படி விவாகரத்துச் செய்து கொள்ளலாம். விவாகரத்து கோருபவர் ஊருக்குத் தீர்வை செலுத்த வேண்டும். விவாகரத்து செய்து கொண்டவர்கள் மறுமணம் செய்து கொள்ளலாம். சில வேளைகளில் பொய்க் காரணம் கூறி ஆண்கள் விவாகரத்து கோருவதும், பெண் சமூக ஆதிக்கத்துக்கு அஞ்சி சம்மதிப்பதும் உண்டு. விவாகரத்து செய்துகொள்ள சம்மதிக்காத ஒருத்தி, தனது கணவனின் கொடுமையை விவரித்து ஒரு பாடலைப் பாடுகிறாள்.
(பெண் பாடுவது)
காடைக் கண்ணி மாவிடிச்சு
கருப்பட்டியும் சேர்த்திடிச்சு
திண்ணு ருசி கண்ட பய
தீருவையும் கேட்கிறானே
கூடுனமே கூடுனமே
கூட்டுவண்டிக் காளை போல
விட்டுப் பிரிஞ்சமையா
ஒத்த வண்டிக்காளை போல
பின்கல்லு மோதிரமே
பிரியாத சினேகிதமே
பிரியிறகாலம்வந்து
பேரு சொல்லிக்கூப்பிடுறேன்.
தொட்டேன் சிவத்தாளை
தூது விட்டேன் தன்னாளை
மறந்தேன் சிவத்தாளை
மாசம் பன்னிரண்டாச்சே
அச்சடிச் சேலை வாங்கி
அஞ்சு மாசம் வச்சுடுத்தி
முந்தி கிழிய முன்னே
முறிஞ்சதையா நம்முறவு
கருத்தக் கருத்த சாமி
கைக்கு மோதிரம் தந்தசாமி
உருவங் குலைத்த சாமி
உருவிக்கோடா மோதிரத்தை
முத்துப் பல்லு நல்லாளு
முகத்திலேயும் சித்தாளு
பாக்குத் திங்கும் நல்லாளு
பகைத்தேனே சொல்லாலே
சேர்ந்து இருந்தோமையா
சேலத்துக் கொண்டை போல
நாரை வந்து மீனைத் தொட
நைந்ததையா நம்முறவு
வெள்ளை உடுப்பிழந்தேன்
வெத்தலைத் தீன் மறந்தேன்
வஞ்சிக் கொடி போனண்ணிக்கு
கஞ்சிக்குடி நான் மறந்தேன்
லோட்டா விளக்கிவச்சேன்
ரோசாப்பூ தட்டி வச்சேன்
லோட்டா உடைஞ்சிருச்சு
ரோசாப்பூ வாடி நிக்கேன்
சோளத்துக் குச்சிலிலே
ஜோடிப் புறா மேயிலே
ஜோடி பிரிஞ்சவுடன்
சோர விட்டேன் கண்ணிரை
வட்டார வழக்கு: நாரைவந்து மீனைத் தொட-புதிய பெண் வாழ்க்கையில் தலையிட்டு என் ஜோடிமீனைக் கொத்தி விட்டாள் தீன்-தீனி, தின்னுவது: போனண்ணிக்கு - போன அன்றைக்கு.
சேகரித்தவர். S.S. போத்தையா
இடம்:, சூரங்குடி, விளாத்திகுளம் வட்டம், நெல்லை மாவட்டம்.
-----------
தூண்டில் மீன்
காதல் பாட்டாயினும் தொழிலின் மணம் அதில் வீசுவதைக்காணலாம். களை பிடுங்கும்போதும், அறுவடையின்போதும், ஏருழும்போதும், மலையேறி விறகொடிக்கும்போதும், புல்லறுக்கும்போதும், முகிழ்த்து மலரும் காதலை வெளியிடும் பாடல் சூழ்நிலையின் பின்னணியையும் சித்திரிக்கிறது. நாட்டுப் பாடலின் சிறப்பு அம்சம் அதுதான். தொழிலும் காதலும் இணைந்து செல்லுகின்றன.
இங்கு மீன் பிடிக்கும் தொழில் செய்யும் குடும்பத்தில் தோன்றிய இளநங்கை தனது காதலை வெளியிடுகிறாள். காதல், கற்பனையோடு கலந்து தொழிலின் உவமைகளை மேற்கொண்டு பாட்டாகப் பிறக்கிறது.
இப்பாடலில் தொழிலின் மணம் வீசுவதைக் காணலாம். இது தோணிப்பாட்டாகவும் அமைந்திருக்கிறது.
ஏரியும் பெரியேரியாம்
ஏலேலோசாமிஏலேலோ
அக்கரையும் பொன்னேரியாம்
ஏலேலோ சாமி ஏலேலோ
பொன்னேரிக் கரையின் மேலே
ஏலேலோ சாமி ஏலேலோ
போட்டானாம் தூண்டி முள்ளு
ஏலேலோ சாமி ஏலேலோ
தூண்டிக்கும் துண்டாவேன்
ஏலேலோ சாமி ஏலேலோ
தொடை வாளை நானாவேன்
ஏலேலோ சாமி ஏலேலோ
கூட்டிக் கூட்டி எடுப்பாங்க
ஏலேலோ சாமி ஏலேலோ
குள்ளாங் கொண்டை நானாவேன்
ஏலேலோ சாமி ஏலேலோ
சேத்திச் சேத்தி எடுப்பாங்க
ஏலேலோ சாமி ஏலேலோ
சேலு கெண்டை நானாவேன்
ஏலேலோ சாமி ஏலேலோ
சேகரித்தவர்: சடையப்பன்
இடம் அரூர், தருமபுரி மாவட்டம்.
-------------
சின்ன மாமா
செலவில்லாமல், காதலியை அழைத்துக் கொண்டு போய் மணம் செய்து கொள்ள விரும்புகிறான், மாமன் முறையுடைய உறவினன். அவள் பலரறிய மனம் செய்து கொள்ள வேண்டுகிறாள். அவனோ கருமி, அதற்கு மனம் வரவில்லை. அவனிடம் அவள் கண்டிப்பாகப் பேசுகிறாள். "மாட்டைக் கொண்டு போவதானாலும் தலைக்கயிறு வாங்க கால் பணம் செலவு செய்ய வேண்டும். பெண்ணை அழைத்துப் போக அதுகூட செலவு செய்ய மாட்டாயா," என்று அவள் கேட்கிறாள்.
கட்டுக் கவுறு காப்பணமா
டே-சின்ன மாமா
கட்டிப் போடப் பாக்கிறயா
டே-சின்ன மாமா
ஒட்டாங்கச்சியா ஒரு பணமா
டே-சின்ன மாமா! என்னை
ஒட்டிப் போய்ட பாக்கறியா
டே-சின்ன மாமா
வட்டார வழக்கு: கவுறு-கயிறு, ஒட்டாங்கச்சி-ஒட்டுத்துண்டு; போய்ட-போய் விட.
சேகரித்தவர்: சடையப்பன்
இடம்:. சேலம் மாவட்டம்
----------------------
எப்பொழுது திரும்புவாயோ?
காதலன் நெல் அறுத்துக் கொண்டிருக்கிறான். காதலிஅவனைத் தாண்டி வேறு வயலுக்கு அறுவடைக்குச் செல்லுகிறாள். அறுவடை முடிந்ததும் அவளை எங்கே எப்பொழுது பார்க்கலாம் என்று அவன் கேட்கிறான்.
கட்டுக் கொடிப் பள்ளத்திலே
கஞ்சிக் கொண்டு போறவளே
கஞ்சு அலும்பு தோடி
கன்னி மோகம் வளருதோடி
பச்சை வளையலிட்டுப்
பயிரறுக்கப் போறவளே-உன்
பச்சை வளையல் மின்னல்
பயிரு வழி சோருதடி
நீல வளையலிட்டு-என் அமுதம்
நெல்லறுக்கப் போறவளே-உன்
நீலவளையல் மின்ன
நெல்லறுப்புச் சோருதடி
நெல்லறுப்பு அறுத்துவிட்டு-என் கண்ணே
எப்ப திரும்பு வையோ?-நான்
ஏங்கிக் கிடக்கறண்டி
வட்டார வழக்கு அலும்பு-அலம்புதல், ததும்புதல்.
சேகரித்தவர். சடைகப்பன் :
இடம், அரூர், தருமபுரி மாவட்டம்.
-----------
வண்டிக்காரன்
அவன் வண்டி வைத்திருக்கும் சிறு பணக்காரரிடம் வண்டியோட்டுகிறான். ஒவ்வொரு நாள் ஒவ்வொரு பாரம் ஏற்றி அனுப்புகிறார்கள். ஒரு நாள் பாக்கு ஏற்றி அனுப்புகிறார்கள் மற்றொரு நாள் புகையிலை. இவ்வாறு பல பல பொருள்களை, வண்டியில் பாரமேற்றிப் பல ஊர்களுக்கு அனுப்புகிறார்கள் அவை விலையாகின்றன. பணமும் அவன் கையில் கொடுக்கிறார்கள். ஆனால் அந்தப் பணம் அவனுக்குச் சொந்தமா? இல்லையே. அவனுக்குக் கூலி மட்டும்தானே மிஞ்சும். அக்கூலி அவன் வயிற்றுக்கே பற்றாது. காதலிக்கு வாயாலாவது தங்க நகை செய்துபோட்டு மகிழ்கிறான் வண்டிக்காரன். அவளுக்கும் தெரியும். ஆனால் அன்பு மிகுதியால் ஏற்பட்ட ஆசையை அவன் வெளியிடும்போது அவளுக்குப் பெருமையுண்டாகிறது. அவன் நகைகளைச் செய்து தனக்கு அணிவித்தது போன்ற மனநிறைவு பெறுகிறாள்.
தெற்குச் சாயல் வண்டி ஏறலையா-என்
சின்னப் பெண்ணே கண்ணே கோகிலமே
தெற்குச் சாயல் வண்டி ஏறலியோ?
பட்டணம் டவுனாம்
பாக்குக் கடை வியாபாரமாம்
பாக்கு விலையானால்
பதக்கம் செய்து போடுறண்டி
போளூரு டவுனாம்
பொகலை வியாபாரமாம்
பொகலை விலையுமானால்
பொகிடி செய்து போடுறண்டி
மஞ்சாக்குப்பம் டவுனாம்
மஞ்சாக் கடை வியாபாரமாம்
மஞ்சா விலையுமானால்
மாட்டல் செய்து போடுறண்டி
அரக்கோணம் டவுனாம்
அரிசிக்கடை வியாபாரமாம்
அரிசி விலையுமானால்
அட்டிகை செய்து போடுறண்டி
காஞ்சிபுரம் டவுனாம்
கத்திரிக்காய் வியாபாரமாம்
கத்திரிக்காய் விலையுமானால்
கம்மல் செய்து போடுறண்டி
கோவிலுரு டவுனாம்
கோழிக்கடை வியாபாரமாம்
கோழி விலையுமானால்
கொப்புச் செய்து போடுறண்டி
பாசிலுரு டவுனாம்
பாலுக்கடை வியாபாரமாம்
பாலு விலையுமானால்
பீலி செய்து போடுறண்டி
வட்டார வழக்கு: பொகலை-புகையிலை; பொகிடி-ஒரு அணி; மஞ்சா-மஞ்சள்.
சேகரித்தவர்: சடையப்பன்
இடம்: அரூர்.
-----------
இது போன்ற வண்டிக்காரன் பாட்டுகள் துத்துக்குடியருகிலும் பாடப்படுகிறது. அவற்றுள் ஒன்று வருமாறு:
மூடை பிடிக்கும் வண்டி
முதலூர் போகும் வண்டி
மூடை விலை ஆனவுடன்
மூக்குத்தி பண்ணிப் போடுறேனே
தகரம் பிடிக்கும் வண்டி
சாத்தான்குளம் போகும்வண்டி
தகரம் விலை ஆனவுடன்
தாலி பண்ணி போடுறேனே
வெங்காயம் பிடிக்கும் வண்டி
வெள்ளூர் போகும் வண்டி
வெங்காயம் போனவுடன்
வெள்ளிக் காப்பு போடுறண்டி,
சேகரித்தவர்: M.P.M. ராஜவேலு
இடம் : மீளவிட்டான், தூத்துக்குடி வட்டாரம்,, நெல்லை மாவட்டம்.
-------------
சிவத்தக் கிளி
வேலை முடிந்து தனியாகவரும் இளமங்கை ஒரு பாட்டை முணு முணுத்துக் கொண்டு நடக்கிறாள்.எதிரே அவள் காதலன் வருகிறான். அவனைப் பார்த்ததும் அவள் நாணம் கொண்டு பாட்டை நிறுத்திவிட்டு தலைகவிழ்ந்து நிற்கிறாள். அவன் அவளை நோக்கிப் பாடுகிறான்.
ஆத்துக்குள்ளே ரெண்டரளி
ஆறுமுகம் வச்சரளி
கத்திவந்து பூவெடுக்கும்
சுத்தமுள்ள பத்தினியே!
வளைவு ரோட்டுப் பக்கத்திலே
வருகுதையா செவத்தக் கிளி
சலசலன்னு வந்த கிளி
தலை கவிழ்ந்த மாயமென்ன?
கட்ட கட்ட உச்சி நேரம்
கடுவா புலி வார நேரம்
ஒருத்தன் கையிப் பத்தினியே
ஒத்தையிலே நிக்குறாளே!
ரோட்டோரம் வீட்டுக் காரி
ரோசாப்புச் சேலைக்காரி
காத்தோரம் கொண்டக்காரி
கண்ணக் கண்ண வெட்டுறாளே!
புள்ளி ரவுக்கைக்காரி
புளியம்பூச் சேலைக்காரி
புள்ளி ரவுக்கை மேலே
புதுமணம் வீசுதடி
நடைபலகை மிதிகிணறு
நாணயமா போறபிள்ளா
பொடி நடையும் புருவக்கட்டும்
போகமனம் கூடுதில்ல
மாங்கா நிறத்துப் பிள்ளா
மாநிறத்துப் பள்ளப் பிள்ளா
தேங்கா நிறத்துப்பிள்ளா
தேடுறனே உம் புருசன்
வட்டார வழக்கு: தேடுறனே-தேடுகிறேனே ரெண்டரளி-இரண்டரளி, கவிந்த-கவிழ்ந்த காத்தோரம்-காதோரம்; பிள்ளா-பெண்(நாடார்சாதி வழக்கு)
சேகரித்தவர்: M.P.M. ராஜவேலு
இடம்: தூத்துக்குடி வட்டாரம்.
----------------------
எம் புருஷன்
மணமானவுடன் கணவன் அயலூர் சென்று விட்டான். மனைவியின் தோழிமார் அவளுடைய புருஷன் உருவத்தைப் பற்றிக் கேலிப் பேச்சுப் பேசுகிறார்கள். அனேகமாக இவ்விதப் பேச்சுகளுக்கு புதுமணப் பெண், நாணத்தால் பதில் கூறாமல் இருந்து விடுவாள். ஆனால் தைரியமிக்க இப்பெண் தன் புருஷனின் பெருமையை தோழியரிடம் விளக்கிக் கூறுகிறாள்.
ஆளுலேயும் கட்டயாளு
அழகிலேயும் பூஞ்சிவப்பு
மார்வு அடர்ந்த எம்மச்சான்
மறக்க மனம் கூடுதில்ல
ஈத்தம் குருத்து போல
இடை சிறுத்த எம்மச்சான்
வாழைக்குருத்து போல
வாச்சாரே, எம்புருஷன்
சேகரித்தவர்: M.P.M. ராஜவேலு
இடம் தூத்துக்குடிவட்டாரம்.
------------
சொந்தக் கணவன்
காதலனை உடனடியாகத் தாலி செய்து கொண்டு வந்து பெண் கேட்கச் சொல்லுகிறாள் காதலி. அவன் அசட்டையாக இருக்கவே அவள் கடிந்து கொள்ளுகிறாள். மறுநாள் அவனை அவள் சந்திக்க குறிப்பிட்ட இடத்துக்கு வந்ததும், பேசாமல் கோபமாயிருப்பது போல நடிக்கிறாள். அவன் நயமும், பயமுமாகத் தன் உணர்ச்சிகளை அவளிடம் கூறுகிறான். 'சொந்தக் கணவன்' என்று அவன் தன்னை வருணித்துக் கொள்ளும் வரை அவள் பேசவில்லை. அதன்பின் அவள் முகம் மலர்ந்திருக்குமா? கடைசிவரை படியுங்கள்.
பருத்தி எல பிடுங்கி
பச்சரிசி மை சேர்த்து
சேர்ந்துதோ சேரலியோ
செவத்தப் பிள்ள நெத்தியிலே,
இருப்பான கிணத்துக் குள்ளே
இருந்து தலை முழுகும்போது
கரும்பான கருத்தக் குட்டி
கைகடந்த மாயமென்ன?
காலாங்கரை ஓடையிலே
கண்டெடுத்த குண்டுமுத்து
குண்டு முத்தைப் போட்டுவிட்டு
சுண்டி முகம் வாடுறாளே
வாளு போல அருவா கொண்டு
வரப்புப் புல்லு அறுக்கும் போது
நீ தெம்பாச் சொன்ன சொல்லு
ரம்பம் போட்டு அறுக்குதடி
தண்டட்டி போட்ட பிள்ளா
தயவான சொல்லுக் காரி
இந்திர சாலக் காரி
என்ன மறந்திட்டியே!
பூவோசரம் பூவே
பொழுதிருக்கப் பூத்தபூவே
நா மோந்த பூவாலே
நான் ஒரு சொல் கேட்டேன்
கம்மங் கதிரறுக்க
கருத்தூருணி தண்ணிருக்க
புங்க நிழலிருக்க
புருஷன் மட்டும் என்ன பயன்?
தூத்துக்குடி ஓரத்தில
தொன்னூர் கட வீதியில
போட்டுட்டுத் தேடுறாளே
பொன் பதித்த மோதிரத்தை
கருத்தக் கருத்த பிள்ளா
கைமசக்கம் தந்த பிள்ளா
என் உசிரக் குறைச்ச பிள்ளா
உருவிக்கோடி மோதிரத்தை
வேப்ப மரத்துக்கிளி
வித விதமாப் பேசுங்கிளி
நான் வளர்த்த பச்சக்கிளி
நாளை வரும் கச்சேரிக்கு
வேப்ப மரத்தோரம்
வெட்டரிவாள் சாத்திவச்சேன்
வேப்பமரம் பட்டதிண்ணு
விட்டதடி உன்னாசை
பாக்கப் பகட்டுதடி
பல்வரிசை கொஞ்சுதடி
கேக்க பயமாயிருக்கே
கிளிமூக்கு மாம்பழமே!
வெள்ள வெள்ள சீலைக்காரி
வெள்ளரிக்கா கூடைக்காரி
கோம்ப மலை வெள்ளரிக்கா
கொண்டு வாடி தின்னுபாப்போம்
தங்கத்துக்கு தங்கம் இருக்க
தனித் தங்கம் இங்க இருக்க
பித்தளத் தங்கத்துக்கு
பேராசை கொண்டாயடி!
ஆல விளாறு போல
அந்தப் பிள்ள தலை மயிராம்
தூக்கி முடிஞ்சிட்டாலும்
தூக்கணாங் கூடு போல
கொண்ட வளர்த்த பிள்ளா
கோத கண்ணி மாதரசி
கொண்டாடி தலை மயித்தை
கொடுங்கையிலே போட்டுறங்க!
நில்லடி கட்டப் பிள்ளா
நிறுத்தடி கால் நடைய
சொல்லடி வாய்திறந்து
சொந்தக் கணவனிடம்
ஆத்துக்குள்ள ரெண்டு முட்டை
அழகான கோழி முட்டை
கோழி முட்டைவாடுனாலும்
குமரி முகம் வாடுதில்ல.
வட்டார வழக்கு: அருவா-அரிவாள் (பேச்சு); பூவோசரம்பு-பூவரசம்பூ (பேச்சு); தண்டட்டி-காலணி, கைமசக்கம்-மிகுந்த மயக்கம், பிள்ளா-பிள்ளை, பெண்; கோதகண்ணி-கோதை, மாலை; கண்ணி-பூச்சரம்.
சேகரித்தவர்: M.P.M. ராஜவேலு
இடம். தூத்துக்குடி வட்டாரம்
-------------
தென்னைமரம் அடையாளம்
நாற்று நடும்போது பிறரிடமிருந்து விலகி நிற்கும் தனது காதலியின் கையை காதலன் பிடித்துக்கொள்ளுகிறான். அங்குமிங்கும் பார்த்துவிட்டு அவள் கையை விடுவித்துக்
கொள்ளுகிறாள். அவன் பிறர் நிற்பதை எண்ணாமல் தன்னை மறந்தது ஏனென்கிறாள். அவள் அவனைக் கண்டிப்பது போலப் பேசி, தனியாகச் சந்திக்க இடத்தையும் குறிப்பிடுகிறாள்.
காதலன்: தோழி துணை இருக்க
தொட்ட கையி பூமணக்க
எட்டிப் புடிச்ச கையி
எட்டு நாளும் பூமணக்க!
காதலி: ஆத்துக்கு அந்தப் பக்கம்
ஐயரு புஞ்செய் நாத்துக்குள்ளே
ஐயோ மச்சான் கையைவிடும்
கை வளைய சேதமாகும்
காதலன்: அத்தை மகளையின்னு
பச்சை குத்தி நான் வளர்த்தேன்
பச்சை அழிஞ்சுதுண்ணு
பக்கம் கையி போட்டதென்ன?
காதலி: ஆடி மழை ஜோடி மழை
அம்மாசி மின்னிருட்டு
தேடி வரவும் வேண்டாம்
தென்னைமரம் அடையாளம்.
குறிப்பு: தென்னைமரம் அடையாளம் நேரே வாருங்கள். தேடி வரவேண்டாம் என்பது குறிப்பு.
சேகரித்தவர்: M.P.M. ராஜவேலு
இடம் தூத்துக்குடி வட்டாரம் நெல்லை மாவட்டம்.
------------
இரும்பாய் உருக வேண்டாம்
காதலர்கள் சந்திக்கிறார்கள். தன்னுடைய பெற்றோர்கள் சொத்துக்கு ஆசைப்பட்டு ஒரு பணக்காரனுக்கு தன்னைக் கட்டிக் கொடுக்கப் போவதாக காதலி சொல்லுகிறாள். பருவ காலத்தில் தானே பயிரிட வேண்டும். இல்லாவிட்டால் அறுவடைப் பருவம் தவறிவிடும். காதலித்தால் உரிய காலத்தில் கலியாணம் செய்து கொள்ளவேண்டும் என்று இலைமறை காயாக அவள் அவனுக்கு உணர்த்துகிறாள். அவளை நினைத்து உருகும் அவளுக்கு அவன் என்ன உறுதி சொல்லுவான்? 'தூரக்காரனை' கலியாணம் செய்து கொள்ள வேண்டாம் என்று சொல்லுகிறான். எப்படியாயினும் அவளுக்கு வாழ்வளிக்க அவன் உறுதி கொண்டு விட்டான்.
ஆண்: பட் பட்டென்று நிலாவடிக்க
பாலத்திலே நான் நிக்க
மின்னுட்டான் பூச்சி போல
மின்ன வந்தால் ஆகாதோடி?
பெண்: ஆசையிருக் குதையா
அழகு திரு மேனிமேலே
சீவம் கிடக்குதையா-எங்கப்பனுக்கு
ஸ்ரீ ராமர் பச்சை மேலே
மானாமதுரையிலே
மரிக்கொழுந்து நாத்துப்பாவி
அறுக்கப் பருவம் தப்பி
இருப்பு இருந்து வாடுறனே!
ஆண்: காரவீட்டு மேடை மேலே
காகிதம் எழுதையிலே
மாஞ்சோலை மசக்கத்திலே
மறந்திட்டேன் ரெண்டெழுத்தை
பெண்: ஒட்டுத் திண்ணையிலே
ஒரு நாள் பழக்கத்திலே
கட்டிச் சதுர மெல்லாம்
கயறாக உருகுதையா!
ஆண்: பாதையிலேபரட்டைச்செடி
பதக்குழக்கு பூப்பூக்கும்
நீ வாடி சிவத்தக் குட்டி
உனக்கு ரெண்டு பூத்தாரேன்
பச்ச மாங்கா ஒண்னு தாரேன்
பழுத்த மாங்கா ரெண்டு தாரேன்
கூந்தப் பனங்கா தாரேன்
கொண்டு வாடி சோத்துக் கட்டை
மஞ்சக் கிழங்கு தாரேன்
மலங்காட்டு நொங்கு தாரேன்
கொழும்பு ரூவா ஒண்ணு தாரேன்
கொண்டு வாடி சோத்துக் கட்டை
பெண்: கரும்புத் தோட்டத்திலே மச்சான்-நீ
கரும்பு வெட்டையிலே
இருப்புக் கொள்ளுதில்லே-நான்
இரும்பா உருகிட்டேனே
ஆண்: இரும்பா உருக வேண்டாம்
இடுப்பிலே கையும் வேண்டாம்
துரும்பா உருக வேண்டாம்-நீ
துரக்காரனுக்கு வாக்கப்பட வேண்டாம்
வட்டார வழக்கு: சிவம்-சீவன்; பச்சை-வயல் காடு; மசக்கம்-மயக்கம்; சதுரம்-சரீரம்; கயறாக-கயிறாக (பேச்சு); கொண்டுவாடி சோத்துக்கட்டை-அயலூர் போக ஏற்பாடு.
சேகரித்தவர்: M.P.M. ராஜவேலு
இடம்: தூத்துக்குடி வட்டாரம், திருநெல்வேலி மாவட்டம்.
---------
மேல் வட்டம் போடுகிறாள் <
தனது காதலனுக்கு கீழத்தெருவில் ஒரு பெண்னை அவனது பெற்றோர்கள் மணம் பேசுகிறார்கள் இவனுக்கு மேலத்தெரு.மணம் பேசினார்களே தவிர முடிவாகவில்லை. ஆயினும் அப்பெண் இரை பிடிக்கக் கழுகு மேல் வட்டம் போடுவது போல இவனைப் பிடிக்க மேலத் தெருவிற்கு அடிக்கடி வேலையில்லாமலேயே போய்வர ஆரம்பித்தாள். அவனுடைய காதலி இச் செய்திகளையெல்லாம் அறிவாள். அவள் தனது தகப்பனுக்குத் கஞ்சிக்கலயம் கொண்டு குளத்தங்கரை வழியே செல்லுகிறாள். அவனை அங்கே கண்டும் முகங் கொடுத்துப் பேசவில்லை. அவன் அவளை பேச்சுக்கு இழுக்க முயலுகிறான். அவள் சுருக்கமாகப் பதில் சொல்லிவிட்டு திரும்பாமல் போகிறாள்.
ஆண்: கஞ்சிக்கலயம் கொண்டு
கரை வழியே போற புள்ளா
காக்கா அலம்புதடி
கருத்தக் குட்டி உன் கலயம்
வட்டுக் கருப்பட்டியே
வடநாட்டு மே மயிலே
சில்லுக் கருப்பட்டியே
தின்னாமல் போறேனடி
கண்ட கரம்பப்பொடி
காசி ராஜன் தந்த பொடி
உன் மாயக் கரம்பப் பொடி
என்னை மாறாட்டம் பண்ணுதடி
வெள்ள ரவுக்கக் கார்
வெகுநாளா உறவுக்காரி
ரவ்வு சொன்ன சொல்லாலே
ரம்பம் போட்டு அறுக்குதடி
மான்னேரு வெத்திலை
மதுரைக் கழிப்பாக்கு
தேனூரு சுண்ணாம்பு
தெகட்டுதடி தேன் கரும்பே!
கீழத் தெருவிலே
கிழவி மவ
மேலத் தெருவிலே
மேவட்டம் போடுதாளே!
குறிப்பு: இப்பாட்டில் உவமைகள், பனையேறி கருப்பட்டி காய்ச்சும் தொழிலாளர்களான நாடார்களின் வாழ்க்கையிலிருந்து எடுத்தாளப்பட்டன.
பொடியென்பது-வசியப்பொடி முன்னரே வசிய மருந்து பற்றிய நம்பிக்கையைக்குறிப்பிட்டோம்.
சேகரித்தவர். M.P.M. ராஜவேலு
இடம். தூத்துக்குடி வட்டாரம்.
----------
தாளம் போட்டு நடக்கிறாளே!
அடிக்கடி அவன் வெளியே போகும்பொழுது அவனுடைய நண்பர்கள் அவனோடு போகிறார்கள். அவனுடைய காதலி அவனைத் தனிமையில் சந்திக்க விரும்புகிறாள். முடியவில்லை. ஒரு நாள் அவனைத் தனியே சந்திக்கிறாள். கூட்டத்தில் போகும் பொழுது எப்படி அவனை அழைப்பதென்று அவனைக் கேட்கிறாள். அவன் அதற்குப் பதில் சொல்லாமல் அவள் மீது அவனுக்கிருக்கும் ஈடுபாட்டையும், காதலையும் வெளிப்படையாகச் சொல்லுகிறான். அவள் நாணமடைந்து முகஞ் சிவக்கிறாள்.
காதலி:
ஆளு கருத்தாளு
அரமனைக்கு ஏத்த ஆளு.
ஆளோடு போகும் போது-நான்
ஆரை விட்டுக் கூப்பிடட்டும்?
வெத்தலையைக் கையிலெடுத்து
வெறும் பாக்கை வாயில் போட்டு
சுண்ணாம்பு இல்லையின்னு
சுத்தி வந்தால் ஆகாதா?
காதலன்:
சாலையடி ரோட்டுப்பாதை
காலு கையை வீசிப்போட்டு
தங்கப் பானைகுடம்
தவல பானை தலையில
தாழமடம் கொண்ட குப்பி
சாலையிலே என்னைக்கண்டு
தாளம் போட்டு
நடக்கிறாளே நடையிலே!
களைபிடுங்கி கைகழுவி
கரைப் பாதை போற பொண்ணே
முகம் கழுவி முத்தம் தந்தால்
மூவாயிரம் பொன் தருவேன்
சிரகி பறக்குதடி
சீனாவானா கம்மாயிலே
சீவன் கிடக்குதடி
செண்டு மலர் ஒண்ணுலேயும்.
வட்டார வழக்கு: சிரகி-குருவி; சீனாவானா கம்மாய்குளத்தின் பெயர் (சீனாவானா என்பவர் தூத்துக்குடியில் பெரிய பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்), செண்டு மலர் ஒண்ணு-காதலியைக் குறிப்பிடும்.
சேகரித்தவர்: M.P.M. ராஜவேலு
இடம்: தூத்துக்குடி வட்டாரம்.
---------
ஊடல் வேம்பாச்சே!
குடும்பப் பகையால் காதலர்கள் பிரிக்கப்படுகிறார்கள். காதலன் பகையைப் பொருட்படுத்தாமல் அவள் காட்டுக்குவரும்பொழுது அவளிடம் பேச்சுக் கொடுக்கிறான். "சிறிதுகாலம் நமது உறவை முறித்துக் கொள்ள வேண்டும், இல்லாவிடில் விபரீதம் விளையும்" என்று எச்சரிக்கிறான்.
ஆண்: சின்னச் செருப்பு மாட்டி
சிறு கலயம் கஞ்சி கொண்டு
வருண முழி முழிச்சு
வாராளையா வடகாடு
பெண்: பாதை பிரிவாச்சே!
பக்கப் புளி ஒண்டாச்சே
ஊடாலே வேம்பாச்சே
உனக்கும் எனக்கும் பகையாச்சே
வட்டாரவழக்கு: ஊடாலே-நடுவில்; புளி-புளியமரம்; ஒண்டு-ஒன்று.
சேகரித்தவர்: M.P.M. ராஜவேலு
இடம்: தூத்துக்குடி வட்டாரம்.
--------
பயல்களைப் பார்ப்பாளாம்!
சிற்றூர்களில் கூட உழைத்துப் பிழைக்காமல் வேசித்தொழில் செய்து இழிவான வாழ்க்கை வாழும் பெண்கள் இருக்கிறார்கள். அவர்களை எதிர்த்து வள்ளுவர் முதல் பல நீதி நூலாசிரியர்கள் போதனை செய்து வந்திருக்கிறார்கள். ஆயினும் சமூக நிலைமைகள் காரணமாக, அவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். அத்தகைய வேசி ஒருத்தியின் வலையில் அகப்பட்டு அவள் மீது மோகங்கொண்டு திரிகிறான் ஒரு வாலிபன். அவனைத் திருத்துவதற்காக உழைத்து நல்வாழ்க்கை வாழ ஆசைப்படும் பெண்கள் அவளது வாழ்க்கையின் இழிவைப் புலப்படுத்திப் பாடுகிறார்கள்.
ஆசை விசுவாசம்
அந்தப் புள்ளே பூவாசம்
என்ன விசுவாசமோ
இனி மறக்கக் கூடுதில்லை
குறு குறு வென்று பாராதடி
குறுஞ்சிரிப்பு சிரியாதடி
உன் குறு குறுப்பும் குறுஞ்சிரிப்பும்
என் குடியைக் கெடுக்குதடி
கருத்த கருத்தப் புள்ளா
கண்ணுக்குள்ளே சுழட்ட
மாறிச் சுழட்டாதடி
மாயப்பொடி போடாதடி
காத்தடிச்சு தாழை பூத்து
காத வழி பூ மணக்க
எருக்கலம்பு வாடை தட்டி-நீ
தெருக்கடந்து போகலாமோ?
தட்டக்காட்டு விட்டிப் போல
சாலைக்காட்டு மந்தி போல
வேலைக்காட்டு குன்னாய் போல
விலகி நல்லாப் போறானடி
எல்லோரும் கொண்டையிலே
ஈரிருக்கும் பேனிருக்கும்
தட்டுவாணி கொண்டையிலே
தப்பாமல் பூவிருக்கும்
அஞ்சாறு வீட்டுக்காரி
அதிலே ஒரு பாட்டுக்காரி
பாட்டுப் படிப்பாளாம்
பயல்களைப் பார்ப்பாளாம்
கண்டியிலே பெண்டாட்டி
கடலோரம் வைப்பாட்டி
தூத்துக்குடி மந்தையிலே
துட்டுக்கொரு பெண்டாட்டி
வட்டாரவழக்கு: வேலைக்காட்டு - வேலிக்காடு; குன்னாய்-
குறுநாய் (அது மறைந்து மறைந்து செல்லும்); துட்டு – பழைய நான்கு காசுகள்.
குறிப்பு: மனமொத்த மனைவி கிடைப்பது கடினம். வைப்பாட்டி மலிவாகக் கிடைப்பாள் என்று குலப்பெண்கள் இழிவாகப் பேசுகின்றனர்.
சேகரித்தவர்: M.P.M. ராஜவேலு.
இடம்: தூத்துக்குடி வட்டாரம், நெல்லை மாவட்டம்.
-----------
ஓடிட்டாலும் குத்தமில்லை!
காதலன் அவசரக்காரன். அவனுடைய திடீர் நடவடிக்கைகளால் காதலர் உறவு வெளிப்பட்டுவிடுகிறது. அவள் அடிக்கடி வெளியே வர முடியவில்லை. வந்தாலும் யாரையாவது கூட அனுப்பிவைக்கிறார்கள். அவன் அதற்குப் பிறகும் அவளை மணந்து கொள்ளும் வழியை நாடாமல் கதவைத் தட்டுவதும், கல்லெறிவதுமாக அலைகிறான். அவள் ஒடிப்போகலாம். அதற்காவது தைரியமுண்டா? என்று அவனைக் கேட்கிறாள்.
சோளபுரத்திலேயோ-இரண்டு
ஜோடிப் புறா தான் வளர
அருகிலுள்ள மாடப் புறா-இப்போது
ஆளைக் கண்டு கூவுதடி
ஒருத்திக்கு ஒரு மகன்டி
உன்னை நம்பி வந்தவன்டி
கைதவற விட்டியானால்
கடுமோசம் வந்திடுமே
வெள்ளி நிலா வடிக்க
விட்டுக்குள்ளே நான் படுக்க
தள்ளிக் கதவடைக்கச்
சம்மதமா உன் மனசு?
கல்லால் எறிஞ்சு பாத்தேன்
கதவையும் தட்டிப் பாத்தேன்
உறக்கம் பெரியதுன்னு
உறவை மறந்திட்டியே
பெண்:
நீ கருப்பு நான் சிவப்பு
ஊரெங்கும் ஒமலிப்பு
ஓமலிப்புப் பொறுக்காமல்
ஒடிட்டாலும் குத்தமில்லை
வட்டாரவழக்கு: ஒமலிப்பு-ஊர்வம்பு.
சேகரித்தவர்: M.P.M. ராஜவேலு
இடம்: மீளவிட்டான், தூத்துக்குடி வட்டம், நெல்லைமாவட்டம்.
--------
ஆசாரக்கூடம்
நடுத் தெருவில் தண்ணீர் கேட்கும் காதலனுக்கு காதலி கூறும் விடையை முன்னர் வந்த பாடல்களில் நாம் கண்டிருக்கிறோம். இப்பாடலில் அலங்காரம் செய்யப்பட்ட மணமேடைக்கு வந்து தண்ணீர் கேட்கச் சொல்லுகிறாள் காதலி. பாடல் காதலர்களின் உரையாடல்.
காதலன்: நீளக் கயிறு போட்டு
நின்னு தண்ணி யிறைக்கும்
தாளம் போட்ட கையாலே
தண்ணி தந்தால் ஆகாதோ?
காதலி: தண்ணியும் தான் தருவேன்
தாகமதைத் தீர்த்திடுவேன்
கூடத்துக்கு வந்தியானா
குளிர்ந்த ஜலம் நான் தருவேன்
காதலன்: கூடமும் தானறியேன்
குளிர்ந்த சாலை நானறியேன்
அடையாளம் சொன்னியானால்
அங்கு வந்து சேர்ந்திடுவேன்
காதலி: கெண்டை கொண்டு தூண் நிறுத்தி
கெளிறு கொண்டு வளைபரப்பி
அயிரை கொண்டு மேஞ்சிருக்கும்
ஆசாரக் கூடமது
வட்டாரவழக்கு: ஆசாரக்கூடம்- மணமேடை
குறிப்பு: கடற்கரையில் வாழும் மக்களின் வாழ்க்கையிலிருந்து உவமைகள் எடுத்தாளப்பட்டன. ஆகவே கடற்கரை மக்களின் படைப்பாக இப்பாடல் இருக்கலாம். கெண்டை, கெளிறு, அயிரை மீன் வகை. மீன் போல் தோரணம் கட்டுவது தமிழ் நாட்டு வழக்கம்.
சேகரித்தவர்: M.P.M. ராஜவேலு
இடம்: தூத்துக்குடி வட்டம், நெல்லை மாவட்டம்.
----------
நான் ஆசை கொண்டேனையா!
காதலர்கள் அடுத்து இருக்கும் இரு வீடுகளில் வசிப்பவர்கள். தனியாகச் சந்தித்து உறவாடும் வாய்ப்புகள் பல கிட்டின. அவர்கள் சந்திப்பின் போது உரையாடுகிறார்கள். காதல் கிறுகிறுப்பில் பேசும் பேச்சுகளில் ஆழ்ந்த பொருளைக் காணமுடியுமா?
ஆண்: கரும்பைத் துரும்பாக்கி
கல்தூணை வில்லாக்கி
விரும்பாமப் போற பொண்ணே
வேலி எட்டிப் பாக்கலாமோ
உலக்கை போடும் கைதனிலே
ஓசையிடும் வளையல் சத்தம்
சண்டான வனையல் சத்தம்
சாடை சொல்லிக் கூப்பிடுது
பெண்: கொண்டது குடுமித்தலை
கொஞ்சினது பம்பைத்தலை
அள்ளி முடியுமுன்னே
ஆளைக் காண முடியலியே
ஆண்: ஒட்டுச் சுவருன்னு
ஒரு நாள் ஒதுங்கப் போயி
கட்டிச் சதுரமெல்லாம்
கசறாக உருகுதடி
செம்பாதி நேரத்திலே
சேர்ந்து நீ வந்த புள்ளே-இப்போ
வம்பான வார்த்தை பேசி
வார்த்தைக்கிடம் பண்ணாதே
கண்டு உறவானோம்
கண்டொரு நாள் பேசினோம்
இன்னொரு நாள் பேசுதற்கு
இரங்கலியே உன் மனசு
பெண்: கருப்போ கருப்பழகு
கந்தசாமி தன்னழகு
அருப்பம் அழகுக்கல்லோ
ஆசை வெச்சேன் உன் பேரில்
ஆண்: கன்னம் புருவத்துக்கும்
கண்ணுருக்கும் தேமலுக்கும்
சின்ன முகத்துக்கும்
சிறியாள் வணக்கினாளாம்
பெண்: வயக்காட்டைப் பாத்துவிட்டு
வரப்போரம் வார சாமி
வரப்பு வழுக்கிச்சின்னு
வகை மோசம் வந்ததையா
ஆண்: எப்படி வழுக்கினாலும்
என்ன செய்யப் போகுதடி
உன் மனசு இருக்கும் போது
ஊக்கத்தைக் கை விடாதே
பெண்: வேப்பம்பூ பூக்காதோ
விடிந்தால் உதிராதோ
நேற்று வந்த தோழனுக்கு
நேரம் தெரியாதோ
ஆண்: மாலையிலே மாட்டைக் கண்டேன்
மலைக்குக் கீழே புல்லைக்கண்டேன்
சாமி மவ கொண்டையிலே
செவ்வரளிப் பூவைக் கண்டேன்
பெண்: மறந்தாலும் மறந்திடுவேன்
மருந்து தின்னா ஆறிடுவேன்
நல்ல நாள் ஆசைவச்சேன்
நான் மறக்கப் போறதில்லை
எண்ணைத் தலையழகா
எழுத்தாணி மீசைக்காரா
கோவில் பிறையழகா
கொல்லுதையா உன் ஆசை
பொட்டுக்கடுக்கத்துக்கும்
ஒதுக்கி விட்ட சிமிட்டாவுக்கும்
ஒட்டிய கிராப்புகளுக்கும்
நான் ஆசை கொண்டேனையா
வட்டாரவழக்கு: கசறு-கயிறு; அரும்பம்-மீசை; வணக்கினாள்-வணக்கம் செய்தாள்.
குறிப்பு: 1. தன் மனத்தை கரும்புக்கும் கல்தூணுக்கும் ஒப்பிட்டு கரும்பை துரும்பாக இளைக்கவும் கல்தூணை வில்லாக வளைக்கவும், காதலிக்குச் சக்தியுண்டு என்கிறான். சண்டாள வளையல்-வளையல் ஒலி தன்னை வேதனைக்குள்ளாக்குவதால் அதனை சண்டாள வளையல் என்று திட்டுகிறான். குடுமித்தலை அவிழ்ந்து விட்டது.
2. காதல் களிப்பில் நேரம் போனது காதலனுக்குத் தெரியவில்லை. பூத்த வேப்பம் பூ உதிர்ந்து விட்டது. அது பூத்திருந்த காலமெல்லாம் அவர்கள் காதல் இன்பத்தில் திளைத்திருந்தனர்.
சேகரித்தவர்: M.P.M. ராஜவேலு
இடம் துரத்துக்குடி வட்டாரம், நெல்லை மாவட்டம்.
---------
வாசல்படி காக்கிறேன்!
தனது காதலனைக் கண்டு சீக்கிரம்த ன்னை மணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்ய வேண்டுமென அவள் சொல்ல விரும்புகிறாள். ஆனால் அவன் தெரு வழியே வரக் காணவில்லை. ஒருநாள் அவள் அவனைக் காண்கிறாள். அவன் காதில் எட்டும்படி பாடுகிறாள்.
அஞ்சு பனையோரம்
ஆனைசெடி காட்டோரம்
காட்டு வழி வாரதெப்பம்
கண்டு துயரம் சொல்ல
சந்திர ரதமேறி
சாலிகுளம் வேட்டையாடி
இந்திரரே எங்க சாமி
எந்த வழி வாராரோ?
வருவாரோ இந்த வழி
தருவாரோ வெத்திலையை
தின்னுவேனோ வாய் சிவக்க
தேகமெல்லாம் பூ மணக்க
ஏறினேன் கல் கோட்டை
எடுத்தேன் மணி உருண்டை
வாங்கின மாங்கனியை
வாய் ருசிக்கத் திங்கலியே
பிறக்கின பூப்போல
பொட்டிக்குள்ள நானிருக்கேன்
வாடின பூப்போல
வாசப்படி காக்குறனே
நனையா பச்சரிசி
நார் உரியா வாழைப்பழம்
உடையாத தேங்கா கொண்டு
உறவிருக்க வாரதெப்போ?
வட்டாரவழக்கு: பிறக்கின-பொறுக்கின; சந்திரரதம்-சூரியனுக்குத்தான் ரதம் உண்டு. சந்திரன் ரதம் இவளது கற்பனை.
சேகரித்தவர்: M.P.M ராஜவேலு
இடம்: தூத்துக்குடி, நெல்லைமாவட்டம்.
-----------
என்னாலே முடியாதய்யா!
காதலி தன் தனிமையைப் போக்க இல்லறத்தில் ஈடுபடுவதற்காகத் தன்னை உடனே மணம் செய்து கொள்ள வேண்டுமெனக் காதலனைப் பல வகையாலும் வற்புறுத்துகிறாள்.
சந்திரரே சூரியரே
சாமி பகவானே
இந்திரருக்கு இளையவரை
என்ன சொல்லிக் கூப்பிடட்டும்?
படுத்தாப் பல நினைவு
பாயெல்லாம் கண்ணீரு
சண்டாளன் உன் நினைவால்
நான் சருவா உருகுறனே
வேப்ப மரத்தோரம்
வெட்டரிவாள் சாத்தி வச்சேன்
வெட்டருவா சாஞ்சன்னைக்கு
விட்டேனையா உன் உறவு
பொட்டலிட்ட பூபோல
பொருந்தி விட்ட நாமம் போல
இப்பம் விட்ட பூப்போல
இருந்து மடியுதனே
ஆவரம்பு பூப் போல
ஆறு வருஷம் சிறையிருந்தேன்
இன்னும் சிறை யிருக்க
என்னாலே முடியாதையா
சேகரித்தவர்: M.P.M. ராஜவேலு
இடம்: தூத்துக்குடி வட்டாரம், நெல்லைமாவட்டம்.
--------------
கிடைக்குமுண்ணு எண்ணாதீங்க
காதலன் ஆடம்பரக்காரன். அவனை மணந்து அவள் சுகம் பெறப் போவதில்லையென்று வேண்டியவர்கள் சொல்லுகிறார்களாம். காதலி அவனிடம் இவ்வாறு கூறுகிறாள்.
அவள்: அரைக்கீரை சிறு பாத்தி
காலரையும் தூக்கிவிட்டு
நிக்காங்க எங்க மச்சான்
இன்பமாய் தலைப்பாக்கட்டி
பொட்டிடுமோ உங்க நேர்த்தி
பொருந்திடுமோ என் சதுரம்
விட்டுவிடு என்று சொல்லி
வேணவர்கள் சொல்லுதாங்க
அவன்: வெட்டுறாங்க குத்துறாங்க
வேணவர்கள் சொன்னால் என்ன
கம்படி விழுந்தாலும்
கனியை விடப் போறதில்லை
அவள்: கொண்டையிலே பூவிருக்க
குளத்துத் தண்ணீர் நிலம்பாய
கங்கையிலே விழுந்த பூவை
கிடைக்குமின்னு எண்ணாதீங்க
வட்டாரவழக்கு: வேணவர்கள்-வேண்டியவர்கள்.
குறிப்பு: கங்கையில் விழுந்த பூ-'எனக்கு மணம் பேசி முடிக்கு முன் என்னை மணம் செய்து கொள் என்ற பொருள் தோன்றப் பேசுகிறாள்.
சேகரித்தவர்: M.P.M. ராஜவேலு
இடம்: தூத்துக்குடி வட்டாரம்.
-----------
சாக்குப் போக்கு!
ஒருவரையொருவர் சந்திக்க வீட்டில் பெற்றோர்களிடம் பல சாக்குப் போக்குகள் சொல்லிவிட்டு வரவேண்டுமெனக் காதலி அவனுக்கு பாடம் சொல்லுகிறாள். அவன் அவளுக்கு இளைத்தவனல்ல என்று அவன் பேச்சால் தெரிகிறது.
காதலி: சலுப்பச்சட்டி ஊசி கொண்டு
சாக்குத்தைக்கப் போறவரே
சாக்குத்தைக்க நீங்க வாங்க
சாலைப்பாதை நான் வாரேன்
காதலன்: தூக்குச்சட்டி சோறு கொண்டு
சூச்சியமா வார புள்ள
தூக்குச்சட்டி சோறு கொண்டு
சூட்சியமா நான் வருவேன்
காதலி: மண்வெட்டி தோளில் போட்டு
மடை திறக்கப் போறவரே
மடையைத் திறந்திடுங்க
மயில் வந்து நீராட
சேகரித்தவர்: M.P.M. ராஜவேலு
இடம்: தூத்துக்குடிவட்டாரம்.
----------------
செல்வக்குணம்
சிலநாட்கள் தன்னைப் பார்க்க வராமல் இருந்தமைக்காகக் காதலி, தன் காதலன் மீது கோபங் கொள்ளுகிறாள். அவன் அவளைச் சமாதானப்படுத்துகிறான். அவளும் கோபம் மாறி அவனைச் "செல்வக்குணம் எங்க மச்சான்" என்று அழைத்துக் கொஞ்சுகிறாள்.
காதலி: ஊதாக் கலர் சட்டை
உன்னிதமா நடை நடந்து
எந்தச் சட்டை போட்டாலும்
ஏறிட்டுப்பார்ப்பதில்லை
ஆக்கை அடியும் பட்டேன்
அவராலே சொல்லும் கேட்டேன்
மூங்கில் தட்டை பூசை பட்டேன்
மூதேவி மகனாலே
சின்னப்பல்லுக் காரரோடு
சிநேகிதம் வைக்கப் போனேன்
கொஞ்சப் புத்திக் காரரோடு
கூடினது மோசம் தானே
காதலன்: ஓநாய் முகத்தழகி
ஒட்ட வச்ச காதழகி
ஒட்ட வச்ச காதுக்குள்ளே
விட்டனடி தங்க நகை
காதலி: ஆரம் பண்ணிப் போட்ட மச்சான்
கழுத்தழகு பார்த்த மச்சான
சீலை வாங்கித் தந்த மச்சான்
செல்ல மச்சான் நீங்க தானே
மலையேறி மூங்கில் வெட்டி
மலைக்கும் கீழே ரோட்டுப்போட்டு
தெரு மறிச்சு சிலம்பம் செய்யும்
செல்வக்குணம் எங்க மச்சான்
சேகரித்தவர்: M.P.M. ராஜவேலு
இடம்: தூத்துக்குடி வட்டாரம்
-----------
கன்னிக் களவு
காதலன் ரோட்டுக்கூலி. அவன் போட்ட ரோட்டு வழியே அவள் செல்லுகிறாள். அவன் ரோட்டோரம் மறைந்திருக்கிறான். அவள் அவனைக் காணவே வந்திருந்ததால், அவனைக் கடந்து அவள் சென்றதும் அவன் பாடுகிறான்; அவனுடைய பாடல் கேட்டு அவள் மகிழ்ச்சியோடு திரும்புகிறாள். அவனுடைய பேச்சில் மனம் பறிகொடுத்து அவள் அவன் உறவில் மகிழ்ச்சி கொள்ளுகிறாள்.
ஆண்: நான் போட்ட ரோட்டு வழி
நாணயமா போற குட்டி
கல் முனை தட்டிராதா?
கல் மனசு இளகிராதா?
நீல வளையக் காரி
நித்தம் ஒரு பொட்டுக்காரி
தோளு வலயக்காரி
தொடுத்திடுவாய் மல்லிகைப் பூ.
வாழை வடக்கே வச்சேன்
வாழ் கரும்பைத் தெக்கே வச்சேன்
ஊரைக் கிழக்க வச்சேன்
வருகிறேண்டி உன்னாலே
பட்டமரம் பட்டணம்தான்
பறந்தமரம் தூத்துக்குடி
குளுந்த தேசம் நம்ம ஊரு
கூடிடுவோம் ரெண்டுபேரும்
ஆசை கிடக்குதடி
ஆத்துக்கு அக்கரையில்
சீவன் கிடக்குதடி
சிந்து பொடி வாசலிலே
வெள்ளி நிலாவே
விடியக்காலப் பெருநிலாவே
கள்ளி களவாண
கண் மறைய மாட்டாயோ?
உள்ளூரு ரத்தினமே
உல்லாசத் தங்கமே
என்னை விட்டுப் பிரிந்தாயானால்
இட்டிடுவேன் கை விலங்கு
சாயச் சருக்குச் சேலை
சாத்தனூருக் கம்பிச் சேலை
ஊதாக் கருப்புச் சேலை
உருக்குதடி என் மனசை
கத்தாழைப் பள்ளத்திலே
கண்ணெருமை மேய்க்கையிலே
அன்று சொன்ன வார்த்தை யெல்லாம்
அழிக்காதே பெண் மயிலே.
மஞ்சள் அழிந்திடாமே-உன்
மாறாப்பு மசங்கிடாமே
கொண்டை உலஞ்சிடாமே
கொண்ட பூ வாடிடாமே
பெண்: மஞ்சள் அழிஞ்சிடுமே
மாறாப்பு மசங்கிடுமே
கொண்டை உலஞ்சிடுமே
கொண்டவன் கையினாலே
வாசமுள்ள ரோஜாவே
வாடா மரிக்கொழுந்தே
தேசமதில் உங்களைப் போல
தேடினாலும் கிட்டுமோ?
வட்டார வழக்கு: சிந்து பொடி-செந்தூரம்; வலயம்-ஆபரணம்; களவாண-களவாட.
சேகரித்தவர்: M.P.M. ராஜவேலு
இடம்: தூத்துக்குடி வட்டாரம், நெல்லை மாவட்டம்.
----------------
பச்சைக்குடம் கரையாதா?
அத்தை மகன் மீது காதல் கொண்டாள். அத்தைக்கும் அவர்களை மணமக்களாகப் பார்க்க ஆசை. தாய் சொல்லைத் தட்டாதவன் அவன். ஆயினும் காதலி கொஞ்சிப் பேசும்பொழுது குறும்பாக வேறு பெண்களை சிறையெடுக்கச் செல்லும் வீரனாகத் தன்னைக் குறித்துப் பேசுகிறான். அவள் கோபத்தில் பச்சை மண்ணில் சட்டி வனையும் குசவன் என்று அவனைத் திட்டுகிறாள். அவனோ தாய் சொல்லைத் தட்டாத மகன் என்று அவளுக்கு உறுதி கூறுகிறான்.
அவள்: மொழுவிய திருணையிலே
எழுதிய பாய் போட்டு
பாயிலே உக்காருங்க
பல விதமாப் பேசிடலாம்
அவன்: நண்டுகுழி மண்ணெடுத்து
நாகசுரம் உண்டுபண்ணி
போறானாம் சிங்கக்குட்டி
பெண்களைச் சிறையெடுக்க
அவள்: அரிசி அரிக்கையிலே
அரளிப் பூ தந்த மச்சான்
சோறு வடிக்கையிலே
சொக்குதையா உங்க ஆசை
முல்லை அரும்பின்னில்லா
முடிஞ்சேன் தலை நிறைய
பாக்குரண்டி முல்லையின்னு
பாத்தவங்க சொல்லலியே.
கொடிக்கால் மண்ணெடுத்து
கோலவர்ணக் குடம் செய்து
பச்சக் குடம் தான் செய்யும்
பாவி குசவன் அவன்
அவன்: பச்சைக்குடம் சமைக்கலியே
பாவத்தையும் ஏற்கவில்லை
தாயார் சொன்ன சொல்லை
தப்பாமல் செய்வேனடி
வட்டார வழக்கு: பச்சைக்குடம்-பலமில்லாதது. உடைந்து போகும் (காதல் உறுதியற்றது).
குறிப்பு: பாவத்தையும் ஏற்கவில்லை-காதலை முறித்து அவளுக்குத் துன்பத்தை விளைவிக்கும் பாவத்தை அவன் ஏற்றுக்கொள்ளவில்லை.
சேகரித்தவர் : M.P.M. ராஜவேலு
இடம் : தூத்துக்குடி வட்டாரம், நெல்லை மாவட்டம்.
------------
கையை விடு !
அவன் அயலூர் செல்லுகிறான். காதலி அவன் அயலூரில் பல நாள் தங்கிவிடுவானோ என்று ஐயப்படுகிறாள். அவன் தினம் தவறாமல் அவளைச் சந்திப்பதாக உறுதி கூறுகிறான். அதற்குமேல் அவளுக்குப் பேசுவதற்கு ஒன்றும் தோன்றவில்லை. அவனுக்கும் பேசுவதற்குப் பொருள் கிடைக்கவில்லை. அவளே மீண்டும் பேச்சைத் தொடங்குறாள். அவன் உணர்ச்சி வெறியில் அத்து மீறுகிறான். அவள் “கழுத்தில் தாலியேறட்டும், இப்பொழுது கருவமணிப் பாசி மட்டும் தானே கழுத்தில் இருக்கிறது? உனக்கு நான் சொந்தமில்லையே! ” என்று காட்டி அவனை வழிப்படுத்துகிறாள்.
காதலி: அஞ்சாறு பேர்களோடு
பஞ்சாயம் பேசயிலே
மின்னுதையா உங்க லேஞ்சி
மூணுமைல் தூரத்துக்கு
காதலன்: வாடின பூப்போல
வழிகாத்து நிக்கவேண்டாம்
தேடாதே எங்கனியே
தினம் வருவேன் இந்த வழி
காதலி: போனா வருவீரோ
பொழுது ஒரு நாள் தங்குவீரோ
என்னை மறந்து இன்னு
இருப்பீரோ இராத்திரிக்கு
காதலன் : இருப்பிலும் இருப்பேனோ
இன்னும் கண்டாப் பேசுவனோ
பாதையிலே கண்டவுடன்
பாவி மனம் கல்லானேன்
காதலி : மருத அறிஞ்சவரே
மாமருத பார்த்தவரே
கொட்டு எறிஞ்சவரே
கோபமென்ன என்மேலே
காதலன் : புள்ளி ரவிக்கக்காரி
புளியம் பூச் சேலைக்காரி
மானு நிறத்துக்காரி
மறப்பது எக்காலம்
மின்னல் வேகத்துக்கும்
மீளவிட்டான் தூரத்துக்கும்
அன்ன நடை அழகுக்கும்
ஆலவட்டம் போடுதடி
காதலி : இருந்தா குழல் சரியும்
எந்திரிச்சாப் பூச்சரியும்
நடந்தா நாடிளகும்
நான் வணங்கும் சாமிமேலே
காதலன் : கேட்டனடி ஒரு வருஷம்
கெஞ்சினனே நெஞ்சுருக
மாட்டேன்னு சொன்னவளை
மலத்தினனே காட்டுக்குள்ளே
காதலி : கட்டி அழுத்துதையா
கருவமணி விம்முதையா
தோகை அழுத்துதையா
தொரை மகனே கையை விடு.
சேகரித்தவர் : M.P.M. ராஜவேலு
இடம் : மீளவிட்டான்,தூத்துக்குடி வட்டாரம், நெல்லை மாவட்டம்.
-------------
போய் விடுவேன்
ஆடு மேய்க்கும் காதலியை, மலையில் மாடு மேய்க்கும் காதலன் இரவு தங்கிப் போகச் சொல்லுகிறான். அவள் மறுக்கிறாள். “மலைக்கும் ஊருக்கும் இடையில் ஓடும் ஆற்றில் வெள்ளம் வந்து விட்டால் என்ன செய்வாய்?” என்று கேட்கிறான். அப்பாவிடம் செல்லி கப்பல் வரவழைப்பேன் என்கிறாள். திருமணம் செய்து கொள்ளாமல் அவனோடு இணங்கியிருப்பது தமிழ் மரபல்ல என்று அவனுக்கு நினைவூட்டுகிறாள். தந்தையின் சம்மதத்தைப் பெற்று மணம் செய்து கொள்ள வேண்டுமென்பதைத்தான் உடனே அப்பாவிடம் சொல்லி கப்பல் செய்யச் சொல்லுவேன் என்று குறிப்பாகச் சொல்லுகிறாள்.
மாடு மேய்ப்பவன் : ஆத்துக்கு அந்தப் பக்கம்
ஆடு மேய்க்கும் சின்னப்புள்ளா
ஆத்தில தண்ணி வந்தா
அப்பொழுது என் செய்வா?
ஆடு மேய்ப்பவள் : ஆத்திலே தண்ணி வந்தா
அப்பாவிடம் சொல்லியல்லோ
அப்பொழுதே கப்பல் செய்து
அக்கரையே போய் விடுவேன்.
சேகரித்தவர் : M.P.M. ராஜவேலு
இடம் : மீளவிட்டான்,தூத்துக்குடி வட்டாரம், நெல்லை மாவட்டம்.
-------------
மானங் கெட்ட மச்சாவி
மாமன் மகனுக்கு அவளை மணம் செய்து கொடுக்க நிச்சயித்திருந்தார்கள். அறுவடை முடிந்ததும் திருமணம் நடை பெற வேண்டும். இதற்கிடையில் அவன் நகரத்தில் வேசியரோடு உறவு கொண்டிருக்கிறான் என்று அவள் அறிந்து கொள்ளுகிறாள். மேலும் நகரத்தில் சாமான்கள் வாங்குவதற்கென்று அவளிடம் அவன் நகைகளை வாங்கிச் சென்று வேசியருக்கு கொடுத்து விடுகிறான். கண்ணகியைப் போல “சிலம்புள கொண்ம்” என்று கூறாமல் அவள் அவனை இடித்துக் கூறித் திருத்த முயலுகிறாள். முயற்சியில் வெற்றியும் அடைகிறாள்.
காதலி : கணையாழிக் குச்சிபோல
கடும்உறவா நாமிருந்தோம்
மூக்குத்தித் தட்டுபோல
முறிந்ததடா நம் உறவு !
காதலன் : கோதி முடிந்த கொண்டை
கொத்தமல்லிப் பல்லழகி
நாகச் சிகப்பியடி-உன்னை
நம்பியே நான் கெட்டேனடி !
குடம் எடுத்து இடுப்பில் வைத்து
கோல வர்ணப் பட்டுடுத்தி
பறக்க முழிக்காதடி
படமெடுத்த நாகம் போல
மழைக்கால இருட்டிலே
மாரளவு நாணலிலே
ஒத்தையிலே போவாயோடி
ஒருவன் கைப் பத்தினியே?
கடுவு உறவானோம்
கண்டொரு நாள் பேசினோமே
இன்னொரு நாள் பேசுதற்கு
இரங்கலையே உன் மனசு !
காதலி : கானம் கருத்த கானம்
கறிக் கேத்த கொத்தமல்லி
மானங் கெட்ட மச்சாவிக்கு
மாதம் ஒரு வைப்பாட்டியா?
காத்துட்டுக்குக் கடலை வாங்கி
கழுகுமலை திருனாப் பாத்து
மிச்சக் கடலை இருக்கு-நம்ம
மச்சாவியக் கூப்பிடுங்க
பாக்குத் துவக்குதடா
பழமை உறவு மங்குதடா
ஏலம் கசக்குதடா-நம்ம
இருவரும் போற பாதை
மருதையிலே தேவதாசி
மான் மயிர் சேலைக்காரி
ஆனைமேலே கும்பம் வச்சு
ஆடுறாளே தேவதாசி
காதலன் : லேஞ்சு விரிச்சலடி
நேரே தலை வச்சுறங்கி
என்ன விட்டுக் கண்ணசர
என்ன மனம் கொண்டியடி
படுத்தா பல நினைவு
பகல் நிறைஞ்சாக் கண்ணீரு
உறக்கச் சடவிலயும்
உன் நினைவாத் தோணுதடி
படுப்பேன் எந்திருப்பேன்
பாதவத்தி உன்னாலே
காலு ரெண்டும் கல்லுத் தூணு-உன்
மேலு ரெண்டும் எண்ணெய்க்குடம்
காதலி : எண்ணெய்க் குடம் எஞ்சாமி
எண்ணமெல்லாம் உங்கமேலே
காதுக் கடுக்கன் வித்தேன்
கை காப்பு ரெண்டு வித்தேன்
மேலூருப் பிள்ளையாலே
மேமுருகு ரெண்டு வித்தேன்
வாழப்பழமும் போச்சே
வச்சிருந்த பணமும் போச்சே
வேசி தல வாசலிலே
வெற்றி வேரா நாமுளச்சேன்
தாசி தல வாசலிலே
தாழம் பூவா நாமுளச்சேன்
தாசி அறிவாளோ-இந்தத்
தாழம்பூ வாசனையை
காதலன் : அவஞ்சி முத்தாலே
அவ குணத்தை நான் மறந்தேன்
தங்க வச்ச பச்சக்கல்லு
தாங்கி வச்ச ஓடாணி
அரக்க வச்ச சுத்துமணி
ஆளை மிரட்டுதடி
வம்பனென்னும் பெயராகி
வயிரி எனும் சொல் கேட்டேன்
வங்கம் கொங்கு தேசம்
மலையாளம் ராப்பயணம்
வாழ வடக்கே வச்சி
வாழ் கரும்பைத் தெக்க வச்சி
ஊரைக் கிழக்க வச்சி
உருகுரண்டி உன்னாலே
ஒத்த மரம் தெரியுதே
உன்னிதமா ஊர் தெரியுதே
படர்ந்த மரம் தெரியுதே
பாசம் உள்ள உன் ஊரு
சேகரித்தவர் : M.P.M. ராஜவேலு
இடம் : தூத்துக்குடி வட்டாரம்.
-------------
ஒரு கதை
இசைக்கு மயக்கும் சக்தி உண்டு. இசை மயக்கத்தில் நாம் விரும்பாத செயல்களைக் கூடச் செய்து விடுவோம்.
ஒரு குருட்டுப் பாடகனுக்கு ஒரு பெண்ணின் மீது காதல். அவள் அவனை மணம் செய்து கொள்ள இசையவில்லை. அவளுக்கு வேறொரு வாலிபன் கணவனாக வாய்த்தான். இருவரும் மகிழ்ச்சியோடு வாழ்ந்தனர். குருடனுக்குப் பொறாமை மிகுந்தது. தன்னை துன்பத்தில் ஆழ்த்திய அப்பெண்ணை இன்பமாக வாழவிடக் கூடாதென்ற நச்சு எண்ணம் அவனுக்குத் தோன்றியது. ஒரு நாள் தம்பதிகள் இருவரும் ஒரு கிணற்று துவளத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். குருடன் மறைவில் நின்று பாடினான். இன்னிசை அவளை மயக்கி உணர்விழக்கச் செய்தது. கணவன் அவளை அணைத்து இன்னிசை மயக்கத்தை கலைக்க முயன்றான். அவள் கோபமுற்று தன்னையறியாமல் அவனை உதறி விட்டாள். அவன் கிணற்றுள் விழுந்து விட்டான். அவள் மயக்கம் கலைந்து உண்மையை உணர்ந்தாள். எப்படியாவது தன் கணவனை உயிரோடு கரை சேர்க்க வேண்டுமென்று தெய்வத்தை வேண்டுகிறாள். அற்புதமான மிதவையொன்றை அனுப்புமாறு பிரார்த்திக்கிறாள்.
குருவி இருந்த மலை தனிலே
குருடர் கவி பாடயிலே
அருகிருந்த தோழனையோ-நான்
அருங்கிணற்றில் தள்ளி விட்டேன்
சங்கு மிதவை
சமுத்திரத்துத் தான் மிதவை-என்
தாலிக்கு உடையவரை
தள்ளிக் கரை சேராயோ?
சேகரித்தவர் : M.P.M. ராஜவேலு
இடம் : தூத்துக்குடி வட்டாரம், நெல்லை மாவட்டம்.
------------
ஒரு கதை
இசைக்கு மயக்கும் சக்தி உண்டு. இசை மயக்கத்தில் நாம் விரும்பாத செயல்களைக் கூடச் செய்து விடுவோம்.
ஒரு குருட்டுப் பாடகனுக்கு ஒரு பெண்ணின் மீது காதல். அவள் அவனை மணம் செய்து கொள்ள இசையவில்லை. அவளுக்கு வேறொரு வாலிபன் கணவனாக வாய்த்தான். இருவரும் மகிழ்ச்சியோடு வாழ்ந்தனர். குருடனுக்குப் பொறாமை மிகுந்தது. தன்னை துன்பத்தில் ஆழ்த்திய அப்பெண்ணை இன்பமாக வாழவிடக் கூடாதென்ற நச்சு எண்ணம் அவனுக்குத் தோன்றியது. ஒரு நாள் தம்பதிகள் இருவரும் ஒரு கிணற்று துவளத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர். குருடன் மறைவில் நின்று பாடினான். இன்னிசை அவளை மயக்கி உணர்விழக்கச் செய்தது. கணவன் அவளை அணைத்து இன்னிசை மயக்கத்தை கலைக்க முயன்றான். அவள் கோபமுற்று தன்னையறியாமல் அவனை உதறி விட்டாள். அவன் கிணற்றுள் விழுந்து விட்டான். அவள் மயக்கம் கலைந்து உண்மையை உணர்ந்தாள். எப்படியாவது தன் கணவனை உயிரோடு கரை சேர்க்க வேண்டுமென்று தெய்வத்தை வேண்டுகிறாள். அற்புதமான மிதவையொன்றை அனுப்புமாறு பிரார்த்திக்கிறாள்.
குருவி இருந்த மலை தனிலே
குருடர் கவி பாடயிலே
அருகிருந்த தோழனையோ-நான்
அருங்கிணற்றில் தள்ளி விட்டேன்
சங்கு மிதவை
சமுத்திரத்துத் தான் மிதவை-என்
தாலிக்கு உடையவரை
தள்ளிக் கரை சேராயோ?
சேகரித்தவர் : M.P.M. ராஜவேலு
இடம் : தூத்துக்குடி வட்டாரம், நெல்லை மாவட்டம்.
------------
பழைய காதலி
அவன் அழகான நங்கை ஒருத்தியைக் காதலித்தான். அவள் குடும்பத்தார் எளியவர்கள். இடையில் அவனைவிட மூத்த பெண்ணொருத்தியை அவனுக்கு மணம் பேசினார்கள். அவளிடம் சொத்திருந்தது. அவன் இருந்து சாப்பிடலாம். இப்பாதுகாப்பை எண்ணி அவன் மணத்திற்குச் சம்மதித்தான். மணமாயிற்று. அவன் மனைவி வீட்டிற்குப் போய் விட்டான். அவளுடைய நிழலில் வாழ்ந்தான். அவளைக் கண்டு பயந்து அவள் சொற்படி நடந்து வந்தான். அவர்களுக்கு குழந்தை ஒன்று பிறந்தது. ஒருநாள் கணவனும் மனைவியும், கணவனது ஊருக்கு வந்தார்கள். பழைய காதலி அவனைச் சந்திக்கிறாள். மனைவி சற்று தூரத்தில் தெரு மறைவில் வந்து கொண்டிருக்கிறாள். பழைய காதலிக்கும் இவனுக்கும் பின்வரும் உரையாடல் நிகழ்கிறது.
காதலி : ஆத்தோரம் நாணலடா
அதுக்கடுத்துச் செய்வரப்பு
செய்வரப்புப்பாக்க வந்த நீ
தேனமிர்தம் உண்கலையோ?
அவன் : நல்ல நல்ல துயிலுடுத்தி
நல் துயிலு மேலணைஞ்சு
குஞ்சரமே புள்ளை தூக்கி
குயிலாளும் வாராளடி
காதலி : என்னிலேயும் நல்லவளோ
இடையும் சிறுத்தவளோ
கைக்கு அணைவாயிருந்தா
போயிவாங்க மன்னவரே
அவன் : பருவம் பருவம் தாண்டி
பலாக்கா நெல்லுடையாள்
புருவத்து அழகுடையாள்
போயி வரக் கட்டாதடி
வட்டார வழக்கு: துயில்-துகில் ; செய்-வயல் ; பலாக்கா-பாலாக்காய். (தோட்டம் வயல் உடையவள்).
சேகரித்தவர் : S.M. கார்க்கி
இடம் : நெல்லை மாவட்டம்.
-------------
சைக்கிள் ஓட்டும் சாமி
சைக்கிளில் வேகமாகச் செல்கிறான். சில நாட்களாக அவனைப் பார்க்க முடியாத காதலி, அவனைப் பார்த்து விடுகிறாள். அவன் சைக்கிளிலிருந்து இறங்குகிறான். அவள் அவனை நோக்கி தன்னை மறக்கவில்லையென்று சத்தியம் செய்ய வேண்டுகிறாள். அவனும் அப்படியே சத்தியம் செய்யத் தயாராக இருப்பதாகச் சொல்லுகிறான். அவள் வேட்டி தாண்டி சத்தியம் செய்யச் சொல்லுகிறான். அவனோ மீனாட்சி கோவிலில் வேட்டி தாண்டி சத்தியம் செய்து தருவதாக சொல்லுகிறான்.
பெண் : சாஞ்ச நடையழகா !
சைக்கிள் ஓட்டும் சாமி
ஒய்யார சேக்குகளாம்
ஒலையுதில்ல சைக்கிளிலே
சட்ட மேலே சட்டப் போட்டு
சரிகைச் சட்ட மேல போட்டு
சைக்கிளிலே போறவரே
சாயாதிரும் பள்ளங்கண்டு
வட்டமிடும் பொட்டுகளாம்
வாசமிடும் தைலங்களாம்
சாமி கிராப்புகளாம்
சாயந்திரம் நான் மடிப்பேன்
அரக்கு லேஞ்சுக் காரா
பறக்க விட்டேன் சண்டாளா
மறக்கல என்று சொல்லி
வலக்கையுமே தந்திடுவாய்
ஆண் : வலக்கையும் தந்திருவேன்
வருண சத்தியம் செஞ்சிருவேன்
மீனாட்சி கோவிலிலே
வேட்டிப் போட்டுத் தாண்டித் தாரேன்.
வட்டார வழக்கு : சட்ட-சட்டை ; சாயாதிரும்-சாய்ந்து விடாதேயும் ; செஞ்சிடுவேன்-செய்து விடுவேன்.
சேகரித்தவர் : S.M. கார்க்கி
இடம் : சிவகிரி, நெல்லை மாவட்டம்.
--------------
முறைப் பாட்டு : கை கடந்த மாயமென்ன?
அவளுடைய மச்சான் ஊர் வெளிப்புறம் சாயாக்கடையில் உட்கார்ந்திருக்கிறான். அவனை வம்புக்கிழுத்துப் பேச்சுத் தொடங்குகிறாள் மாமன் மகள். அவன் விடுவானா? அவன் பதில் பேச, இவளும் பேசுகிறாள்.
அவள் : சாயாக் கடையிலே
சமுக்கம் விரித்த பெஞ்சியிலே
இருக்காங்க எங்க மச்சான்
இன்பமாகத் தலைப்பாக் கட்டி
அவன் : நேராக வளர்ந்த புள்ள நித்திரைக்கு ஏத்த புள்ள
கொண்டாடி தலை முடியை
கொடுங்கையில் போட்டுறங்க
மானத்திலே ரோட்டுப் போட்டு
மாதுளம் பூப் பாய் விரிச்சு
அங்கே இருந்து பேசுறாளே
அரக்கு லேஞ்சுக் காரனோடே
களை எடுத்துக் கை கழுவி
காலாங்கரைப் பாதை கூடி
முகங் கழுவி முத்தம் தந்தால்
மூணு லட்சம் பொன் தருவேன்
ஒன்னையே நம்பி யல்ல
ஒரு வருஷம் தலை வளர்த்தேன்
கலியாண மாத்தையிலே
கை கடந்த மாயமென்ன?
கட்டப்புள்ள குட்டப்புள்ள
கருவ மணி போட்ட புள்ள
என்னைக் கெடுத்த புள்ள
அன்னா போறா சின்ன புள்ள
அவள் : கொத்த மல்லித் தோட்டத்திலே
குளிக்கப் போயி நிக்கயிலே
கொத்தோடு பூவெடுத்து
விட்டெறிஞ்சான் அத்தை மகன்
அத்தை மகனின்னு
செத்த மனம் பொறுத்தேன்
மத்தவன் ஒருத்தனானால்
மாட்டிருவேன் கைவிலங்கு
பச்சச் சிகப்புக் கல்லு
பளிங்கு நிறம் உங்க பல்லு
பல்லு அழகுக்காக-நான்
மாறாத ஆசை கொண்டேன்
வட்டார வழக்கு : அரக்குலேஞ்சுக்காரன்-வேறோர் முறை மாப்பிள்ளை ; தலை வளர்த்தேன்-சிரைக்காமல் முடியை வளர விட்டேன் ; மாத்தையிலே-மாதத்திலே.
குறிப்பு : கருவமணி-இது தெலுங்கு பேசுபவர்கள் அணிவது. தமிழ் நாட்டில் செட்டியார்கள் தவிர மற்ற தெலுங்கர்கள் அணிவார்கள். அவர்களுடைய பாட்டுக்களும் தமிழ் பாட்டுக்களே. தெலுங்குப்பாட்டு, தெலுங்கு நாட்டில் உறவுடையவர்களுக்கே தெரியும்.
சேகரித்தவர் : M.P.M. ராஜவேலு
இடம் : தூத்துக்குடி வட்டாரம், நெல்லை மாவட்டம்.
------------
கை மருந்து
அவன் ஏழை. கூரை வீட்டில் வாழ்பவன். காரை வீட்டு முறைப் பெண் மீது காதல் கொண்டான். அவளும் அவனைக் காதலித்தாள். இருவரும் தீவிரமாகப் போராடிப் பெற்றோரின் சம்மதத்தைப் பெற்றனர் ; பெண் ஓடிவிடுவதாகச் சொன்னதற்குப் பிறகே தாய் திருமணத்துக்குச் சம்மதித்தாள். தாயை மறக்கும்படி என்ன மருந்து போட்டானோ அத்தை மகன்? காரை வீட்டுக்காரியை கூரை வீட்டிற்கு வருமாறு செய்து அங்கிருந்து ரங்கூனுக்கு அழைத்துச் செல்ல அவன் செய்த வசியமென்ன? அவன் காதில் விழ அவள் பேசுகிறாள்.
முக்கூட்டுப் பாதையிலே
மூணுபேரும் போகையிலே
தாயை மறக்கச் சொல்லி
தந்தானே கை மருந்து
காரை வீட்டு மேலிருந்து
மஞ்சள் அறைக்கையிலே
கூரை வீட்டு அத்தை மகன்
கூப்பிட்டானே ரங்கூனுக்கு
தாயை மறந்தனடா
தண்டிப் புள்ளையே மறந்தேன்
ஊரை மறந்தேனடா
ஒரு பணத்துத் தாலிக்காக
வட்டார வழக்கு: மூணுபேர்-தான், தங்கை, தாய்; தண்டிப்புள்ளை-பெரியவளான தங்கை.
சேகரித்தவர் : M.P.M. ராஜவேலு
இடம் : தூத்துக்குடி வட்டாரம்.
------------
முறைப்பாட்டு
முறைப்பாட்டு பற்றி முன்னரே குறிப்பிட்டோம்.
பின் வரும் பகுதியில் ஆண்கள் பாடும் முறைப்பாட்டும் பெண்கள் பாடும் முறைப்பாட்டும் தனித்தனியாக கொடுக்கப்படுகின்றன.
(ஆண்கள் பாடுவது)
சந்தை இரைச் சலுக்கும்
தாளிச்ச சுண்டலுக்கும்
சீமை மொச்சைப் பயத்துக்கும்
சிறுக்கி வட்டம் போடுராளே
அரைக்கால் ரூவா தாரனடி
ஆரஞ்சுப் பழமும் தாரனடி
பூப் போட்ட ரவுக்க தாரனடி
புருஷனுண்ணு கூப்பிடடி
மூக்குத்திப் போட்ட புள்ள
முடி மனூர் கம்மாப் புள்ள
நாக்குச் சிவந்த புள்ள
நாந்தாண்டி ஒம் புருஷன்
மானா மதுரையிலே
மாடுமேய்க்கும் சின்ன புள்ள
தேங்கா நிறத்துப் புள்ள
தேடு ராண்டி ஒம் புருஷன்
ரோட்டோரம் வீட்டுக்காரி
ரோசாப் பூச் சேலைக்காரி
காத் தோரம் கொண்டைக்காரி
கையலைப்புக் கெட்டிக்காரி
தெல்லுத் தண்டி கொண்டைக்காரி
தேங்காத் தண்டி பூ முடிச்சு
பூவே மலரே நீ
போர் மன்னர் தன்னழகே
கோடாலிக் கொண்டைக்காரி
குளத்தூரு காவல்காரி
வில்லு முருகுக் காரி
நில்லேண்டி ஒண்ணாப் போவோம்
புளிய மரத்து வீட்டுக்காரி
புள்ளி போட்ட லவுக்கக்காரி
புல்லறுக்கப் போகையிலே
பூ முடிந்தா லாகாதோடி
வெள்ள வெள்ளச் சீலைக்காரி
வெள்ளரிக்காய் கூடைக்காரி
கோம்பை மலை வெள்ளரிக்காய்
கொண்டு வாடி திண்ணு பார்ப்போம்
மஞ்சள் அறைக்கும் புள்ள
மதி லெட்டிப் பாக்கும் புள்ள
கொஞ்சம் வளர்ந்தையானா
கொண்டு போவேன் ரெங்கத்துக்கு
அலுக்கு குத்தி துலக்க புள்ள
ஆபரணம் போட்ட புள்ள
அலுக்கக் கழுத்துனாலும்
துலுக்கத்தனம் போகுதில்லை
ஆல மரத்தைப்பாரு
அதுக்குத் தெக்க கிணத்தப் பாரு
செப்புக் குடத்தைப் பாரு
சிறுக்கி போற ஒயிலைப் பாரு
(பெண்கள் பாடுவது)
எண்ணைத் தலையழகா
எழுத்தாணி மூக்கழகா
கோயில் சிலை யழகா
கொல்லுதடா உன்னாசை
வாழைப் பழமும் போச்சு
வச்சிருந்த வைப்பும் போச்சு
தலையைச் சிரைக்கப் போயி
தாழம்பூ வாசம் போச்சு
காணம் கருங் காணம்
கறிக் கேத்த கொத்தமல்லி
மானங் கெட்ட அத்தானுக்கு
மதுரையில வைப்பாட்டி
அஞ்சாறு வீடுகளாம்
அதுல ரெண்டு இள வட்டமாம்
நாயடிக்க ஏலாட்டியும்
நாணயங்க ரொம்ப உண்டாம்
இந்த நடை ஏது?
இடுப்பிலொரு கையேது?
மையேது போட்டேது
மதி குலைந்த மன்னவர்க்கு?
காத்துட்டுக்கு லேஞ்சி வாங்கி
கன்ன மெல்லாம் சுங்கு விட்டு
சுங்குக்கு மேலாக
சுத்துதடா சீலைப் பேனு
மானா மதுரைச் சட்டி
வாசலுல போட்ட சட்டி
எங்க மச்சான் குடிச்ச சட்டி
எடுத்துவுக கொடுத்திருங்க
பாதையிலே போற வனே
படர்ந்த காவிப் பல்லுக்காரா
நீல முழிக்காரிக்கு
நீ தாண்டா மாப்பிள்ளை
சேகரித்தவர் : M.P.M. ராஜவேலு
இடம் : விளாத்திக்குளம், நெல்லை மாவட்டம்.
-----------
முறைப்பாட்டு : சிறு மிளகாய் உறைக்கலையோ?
மாப்பிள்ளை பெண் முறையுடையவர்கள் கேலி செய்து பேசம் பேச்சுக்கள் கொண்ட பாடல்களை முன்னர் கண்டோம். அவை நெல்லை மாவட்டத்தில் கிடைத்தவை. சேலம் மாவட்டத்திலும் இத்தகைய பாடல்கள் பாடப்படுகின்றன.
ஆண் : தன்னந் தனியாகவே தான்
தட வழியே போற புள்ளே
தாலி கட்டப் போறேண்டி
தடை ஒன்றும் சொல்லாதேடி
பெண் : முன்கைப் பலமுமில்லை
முகத்தில ரும்பு மீசையி்ல்லை
நானுனக்குப் பெண்டாட்டியா?
நாடெங்கும் சொல்லாதேடா
ஆண் : சிறு கத்திரி காய்க்கலையா?
சிறு மிளகாய் உறைக்கலையா?
சிறு பையன் கொடுத்த பணம்
செல்லலையா உந்தனுக்கு.
சேகரித்தவர் : வாழப்பாடி சந்திரன்
இடம் : வாழப்பாடி,சேலம்.
-----------
முறைப்பாட்டு : உன்னாலே நான் கெட்டேன்
கீழ்வரும் சிறிய பாட்டு சேலம் மாவட்டத்தில் பாடப்படுகிறது.
ஆண் : ஒரு கரண்டி முளகு தாரேண்டி
ராசாத்தி, ராசா மகளே
ரத்தினக் கிளியே, முத்துக்கண்ணே
ரவிக்கை யோடு சீல தாரேண்டி
பெண் : குடுத்தாலும் வாங்க மாட்டண்டா
மாமங்கு சின்னத்தம்பி
மாதளங்காப் பேச்சுக்காரா
உன்னாலே நானும் கெட்டேண்டா
மதினி
முறை மாப்பிள்ளை தனது வயதுக்கு மூத்த முறைப் பெண்ணைக் கேலி செய்து பாடுகிறான். இது தூத்துக்குடியருகில் பாடப்படுவது.
புங்கங் குளத்து மதினி
கஞ்சி குடிப்பாளாம்
கண்ணாடி பாப்பாளாம்
ஆட்டுத்தலை போல
கொண்டை முடிவாளாம்
ஆவரைப் பூப்போல்
மஞ்ச குளிப்பாளாம்
மச்சானைக் கண்டா
மயங்கி நடப்பாளாம்
கொழுந்தனைக் கண்டா
குலுக்கி நடப்பாளாம்
சேகரித்தவர் : M.P.M. ராஜவேலு
இடம் : மீளவிட்டான்,தூத்துக்குடி வட்டம், நெல்லை மாவட்டம்
-----------
சரடு பண்ணித்தாரேன்
மாமன், மச்சான் முறையுள்ளவர்கள் கிராமங்களிலே கல்யாணமாகாத பருவப் பெண்களையோ, கல்யாணமான வாலிபப் பெண்களையோ, கிள்ளுவது, கூச்சம் உண்டாக்குவது போன்ற விளையாட்டுகள் செய்வது வழக்கம். பெண்களும் அது போலவே சாணியைக் கரைத்து ஊற்றுவது போன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவது வழக்கம். இவ்விளையாட்டுக்கள் “விளையாட்டுக்கார முறையுள்ளவர்கள்” என்று கொங்கு நாட்டில் கூறுவார்கள். அதுபோல முறையுள்ள ஒருவன் கல்யாணமாகாத ஒரு பெண்ணைப் பார்த்துப் பாடுகிறான்.
பழங்காலத்தில் ‘குழு மணமுறை’ வழக்காயிருந்தது. ஒரு குழுவில் உள்ள எல்லாப் பெண்களுக்கும், முறையுள்ள ஆண்களுக்கும் மண உறவு இருந்தநிலை அது. அதன் எச்சம், உறவுமுறைக் கேளிக்கைகளாக இன்றும் நிலவுகின்றன. அது போல முறையுள்ள ஒருவன் கல்யாணமாகாத ஒரு பெண்ணைப் பார்த்துப் பாடுகிறான்.
“என்னை நீ, எப்போ கண்ணாலம் பண்ணிக்கொள்ளப் போகிறாய்” என்று கேட்கிறான். அதற்கு அந்தப் பெண் “எனக்கு நீ கொப்பும், சரடும் பண்ணிப் போட கையில் காசு வைத்திருக்கிறாயா?” என்று குத்தலாகக் கேட்கிறாள்.
“கூடலூருச் சந்தைக்கும் சமயவரம் சந்தைக்கும், கூடையும், சரடும் எடுத்துக்கொண்டு விற்கப் போகிறாய்ல்லவா? அது விற்பனையாகட்டும். உனக்கு நகை பண்ணிப் போடுகிறேன்” என்று அவன் பாடுவதைக் கேளுங்கள்.
(குறிப்பு : கு. சின்னப்ப பாரதி)
கூடமேல கூட வெச்சு
கூடலூரு போற பொண்ணே
கூட வேலையானா உனக்கு
கொப்புப் பண்ணித் தாரேன்
சாட்டு மேல சாடு வெச்சு,
சமயவரம் போற பொண்ணே
சாட்டு வெலையானா உனக்கு
சரடு பண்ணித் தாரேன்
வட்டார வழக்கு : கொப்பு-மேல்காதில் அணியப்பெறும் நகை ; சரடு-கழுத்திலணியும் ஆபரணம் ; சாடு-கூடையை விட இருமடங்கு பெரிதாயுள்ள கூடை.
உதவியவர் : C. செல்லம்மாள சேகரித்தவர் : கு. சின்னப்ப பாரதி
இடம் : பொன்னேரிப்பட்டி, சேலம் மாவட்டம்.
-----------
நான் போறேன்
முறைப் பெண், முறைமாப்பிள்ளை என்ற உறவு ஒருவருக்கு மணமான பின்பும் நீடிக்கலாம். அப்பொழுது நெருக்கமான காதல் பேச்சுக்கள் பேசிக்கொள்ளும் உரிமை அவர்களுக்கு உண்டு. ஆனால் உடலுறவு கொள்வதே தவறெனக் கருதப்படும்.இப்பேச்சுக்கள் மனைவி முன்போ, கணவன் முன்போ நடை பெறலாம். இவ்வழக்கம் இப்பொழுது மறைந்து வருகிறது.ஏனெனில் மணம், உறவு முறைகளை மீறி சொத்துரிமையின் அடிப்படையிலே நடைபெறுகிறது.
பெண்ணும் குடுத்துடுவா...’நான் உனக்குக் கணவனாகும் பேறு இல்லை. உன் மகனுக்கு எங்கள் பெண்ணைக் கொடுப்போம். என் மகனுக்கு உன் பெண்ணை எடுப்போம்’ என்ற உறவு வகையில் பாடல் அமைந்துள்ளது.
முறைப்பெண் :
எண்ணெய்த்தேச்சி தலைமுழுகி
என் தெருவே போற மச்சான்
ஆசைக்கு ஒரு நாளைக்கு
அனுப்புவாளோ உன் தேவி
முறை மாப்பிள்ளை :
பெண்களும் குடுத்துடுவா
பெண் குடுத்து வாங்கிடுவா
என்னைக் கொடுத்துவிட்டு
இருப்பாளோ என் தேவி
அவன் மனைவி :
குலைவாழை நெல் உருவி
குழையாமல் சோறு பொங்கி
இலை வாங்கப் போனவரை
இன்னும் வரக் காணலியே
சாமியக் காணலன்னு
சபைகளெல்லாம் தேடிப்பார்த்தேன்
சக்களத்தி மடிமேலே
சாஞ்சிருக்கும் வேளையிலே
முறை மாப்பிள்ளை :
தேங்காய் முழி அழகி
தெய்வக்கனி வந்து நிக்கா
மாங்கா முழியழகி
மடியவிடு நான் போறேன்
மனைவி :
என்னையக் கண்டொடனே
கால்பதறி, கைபதறி
வீட்டுக்கு வந்தொடனே
விளக்கேத்தி நான் பார்த்தேன்
சேகரித்தவர் : M.P.M. ராஜவேலு
இடம் : மீளவிட்டான்.தூத்துக்குடி வட்டம், திருநெல்வேலி மாவட்டம்.
-------------
This file was last updated on 3 March 2016.
Feel free to send corrections to the webmaster.