"சிரிக்கும் பூக்கள்"
சிறுவர்களுக்கான பாடல்கள் தொகுப்பு
குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
cirikkum pUkkaL
by kuzantaik kavinjar aza. vaLLiyappA
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Tamil Virtual Academy for providing a scanned image
version of this work for the etext preparation. This work has been prepared using the
Google Online OCR tool to generate the machine-readable text and subsequent proof-reading.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2016.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
"சிரிக்கும் பூக்கள்"
சிறுவர்களுக்கான பாடல்கள் தொகுப்பு
குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
Source:
"சிரிக்கும் பூக்கள்"
குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா
விற்பனை உரிமை: பாரி நிலையம், சென்னை-600 018
--------------
"sirikkum pookal"
(smiling flowers - Poems for Children)
Language: Tamil
Author: Al. Valliappa
Publisher: Kulandai Puthaka Nilayam, Chennai -600 040
Sole Distributors: Paari Nilayam, Chennai - 600 018.
First Edition: June 1986; Third Edition: Nov 2007.
Printer: Raviraja Offset Printers, Chennai- 600 014.
Price: Rs. 60
-----------------
சிரிக்கும் பூக்கள் - அணிந்துரை
உயர்திரு சிலம்பொலி சு. செல்லப்பன்,
எம்.ஏ., பி.டி., பி.எல். அவர்கள்
குழந்தை இலக்கியம்-புதுவரவு
குழந்தை இலக்கியம் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒரு புதுவரவு. அவ்வாறாயின், தமிழில் இதற்கு முன்னர்க் குழந்தை இலக்கியம் இருந்ததில்லையா? தொல்காப்பியம் 'பிசி’ என்னும் ஓர் இலக்கிய வகையைக் குறிப்பிடுகிறது.
'பிசி’ என்பது விடுகதை. "விடுகதை சிறுவர்களுக்குரியது. எனவே, சங்க காலத்திற்கு முன்பிருந்தே குழந்தைப் பாடல்களிருந்தன” என்பர் ஆய்வாளர். விடுகதைகள் குழந்தைகட்கு விருப்பமூட்டுவன என்றாலும் அவை குழந்தைகட்கே உரியன என்று கூற முடியாது.
கிரேக்கப் பழங்கதையில் 'ஸ்பிங்ஸ்’ எனும் மனிதத் தலையும் சிங்க உடலும் கொண்ட ஒரு விலங்கு இடம் பெற்றுள்ளது. அது ஒடிபசு என்னும் வீரனிடம், "முதலிலே நான்கு கால்; இடையிலே இரண்டு கால்; முடிவிலே மூன்று கால் கொண்டவர் யார்?” என்று கேட்டபோது ஒடிபசு 'மனிதன்’ எனச் சரியான விடை கூறியதால், தன் விடுகதைக்கு மனிதன் ஒருவன்
விடையளித்து விட்டானே என்ற வருத்தத்தால் அவ்விலங்கு உயிரை விட்டுவிட்டதாம். கிரேக்கப் பெருங்கவிஞர் ஹோமர், தாம் ஒரு விடுகதையை விடுவிக்க முடியாததற்காக நாணமுற்று உயிர் துறந்தார் எனக் கூறப்படுகிறது. எனவே, விடுகதைகள் முற்றிலும் குழந்தைகட்காகவே உரிய இலக்கியவகை எனக் கூறமுடியாது.
கி.பி.16-ஆம் நூற்றாண்டளவில் ஒளவையார் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், மூதுரை, நல்வழி என்ற நூல்களையும், அதிவீரராம பாண்டியன் வெற்றிவேற்கை எனும் நூலையும் பாடியுள்ளனர். 18-ஆம் நூற்றறாண்டின் பிற்பகுதியில் தோன்றிய உலகநாதர் உலக நீதியைப் பாடினார். இவை குழந்தைகட்குக் கற்பித்து வரப்படுகின்றன என்றாலும், இன்று நாம் கண்டுவரும் குழந்தை இலக்கிய வகையில் இவை அடங்குமெனக் கூறுதற்கில்லை.
குழந்தை இலக்கியத் தோற்றம்
குழந்தைகட்கே உரிய, குழந்தைகள் பாடியும் ஆடியும் பயன்கொள்ளத் தக்க கவிதைகள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் எழுந்தன. கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளையவர்கள் கி.பி. 1901-இல் குழந்தைகட்கெனத் தனித்த கவிதைகளை எழுதினார். அவர் ஆசிரியராயிருந்ததால், மேனாட்டில் இருந்தது போன்ற தனித்த குழந்தைக் கவிதைகள் தமிழில் இல்லையென்ற குறையை உணர்ந்து, அக்குறை நீங்கும் வண்ணம் அருமையான பாடல்களை இயற்றினார்.
மேனாடுகளில் குழந்தை இலக்கியம்
இங்கிலாந்தில் கி.பி. ஆறாம் நூற்றாண்டளவிலேயே பாதிரிமார்களும் கற்றறிந்தோரும் குழந்தைகட்கெனத் தனியே பாடநூல்கள் எழுதலாயினர். ஆல்ட்கெல்ம் (Aldhelm) (604-709) என்னும் பாதிரியாரே இங்கிலாந்தில் முதன் முதல் குழந்தைகட்குப் பாடநூல் எழுதியவர். அது வினா-விடைக் கவிதை களாக அமைந்திருந்தது. அல்குயின் (Alcuin) என்பார் எட்டாம் நூற்றாண்டில் எழுதிய பாடநூல் உரையாடல் முறையிலிருந்தது. பத்தாம் நூற்றாண்டினராய ஏயெல்பிரிக் (Aelfric) எனும் கல்வியாளர் குழந்தைகள் அன்றாடம் வாழ்வில் பயன்படுத்தும் பொருள்களைப் பாடு பொருளாகக் கொண்டு வினா-விடை முறையில் எழுதினார். பதினொன்றாம் நூற்றாண்டில் குழந்தைகட்கான கலைக் களஞ்சியம் முதன்முதல் வெளிவந்தது.
எலூசிடாரியம் (Elucidarium) எனப் பெயர் பெற்ற இக்களஞ்சியத்தைக் காண்டர்பரியின் தலைமைப் பாதிரியாரான ஆன்செல்ம் (Anselm) (1033- 1109) என்பார் எழுதியுள்ளார். ஜான் அமோஸ் முகானமிஸ் என்பவரால் எழுதப்பட்டு 1751-இல் வெளியிடப்பட்ட நூலே ஐரோப்பாவில் முதன்முதலாகப் பட விளக்கங்கள் கொண்ட பாட நூலாக அமைந்தது. குழந்தைகளின் விருப்புவெறுப்புகளை அறிந்து அவர்களின் மன உணர்வுகளை நிறைவு செய்யும் வண்ணம் பதினெட்டாம் நூற்றாண்டில் ஜான் நியூபெர் (1713-1767) என்னும் புத்தக விற்பனையாளர் குழந்தைகட்கெனத் தொடர் வெளியீடாகப் பல நூல்களை வெளியிட்டார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் குழந்தைகட்கெனப் படைப் பிலக்கியங்களும் தோன்றலாயின.
தமிழில் குழந்தை இலக்கிய வளர்ச்சி
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஆங்கிலக் கல்வி முறையும் நம்நாட்டில் நுழைக்கப்பட்டதால் அவர்களுடைய பாடநூல்களையொப்பத் தமிழ்நாட்டுக் குழந்தைகட்கும் பாடநூல்கள் எழுதப்படலாயின. தொடக்கப்பள்ளி மாணவர் கட்கென எழுதப்பட்ட நூல்களில் இடையிடையே பாடல்கள் இடம்பெற்றன. 'அ இது ஓர் அத்திப்பழம்....’ என்பது போன்ற பாடல்களை முதன்முதலில் எழுதி வெளியி்ட்டவர் திரு.கா. நமசிவாய முதலியார் ஆவர். அவரையொட்டி மணிமங்கலம் திருநாவுக்கரசு அவர்களும், மயிலை சிவமுத்து அவர்களும், பாடநூல்களில் பாடல்கள் எழுதினர்.
ஆணிவேர் அழ. வள்ளியப்பாவே
இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியிலிருந்துதான் பாடநூல்கள் அல்லாத குழந்தைகட்கென்றே தனியாக எழுதப்பட்ட பாடல் நூல்கள் வெளிவரலாயின. இவ்வகையில் முன்னோடியாக விளங்கியவர் அழ. வள்ளியப்பா அவர்களே! அவர் எழுதிய குழந்தைக் கவிதைகள் அடங்கிய 'மலரும் உள்ளம்’ (முதற்றொகுதி) 1954இல் வெளிவந்தது.
பின்னர், 1961இல் 'மலரும் உள்ளம், (இரண்டாம் தொகுதி) வெளிவந்தது. இன்று நூற்றுக்கணக்கானோர் அவர் நடையைத் தம் நடையாகவும், அவர் கருத்தைத் தம் கருத்தாகவும், அவர் உத்தியைத் தம் உத்தியாகவும் கொண்டு கவிதைகள் எழுதி வருகின்றனர். ஊரென்றாலே 'உறையூர்’, பூவென்றாலே 'தாமரை’ என்பதுபோல 'குழந்தைக் கவிஞர்’ என்றாலே அது அழ. வள்ளியப்பாவைக் குறிப்பதாகவே அமைந்துவிட்டது. கவிமணி குழந்தை இலக்கியத்திற்கு வித்திட்டார்; முளைத்து வளர்ந்துள்ள குழந்தைக் கவிதையெனும் ஆலின் அடிமரமாகவும்-ஆணிவேராகவும் இருப்பவர் அழ. வள்ளியப்பாவே ஆவர். இன்று நூற்றுக்கணக்கில் அந்த ஆலின் விழுதுகள் நிலத்திலூன்றிக் கவின் செய்கின்றன.
"குழந்தைகட்கு எழுதுபவர்கள் தம் அறிவாற்றல் புலமைகளையெல்லாம் ஒருபுறம் ஒதுக்கி விட்டு, தாமும் குழந்தையாகி, குழந்தைகளின் மன இயல்புகளை ஓர்ந்து அவர்கள் சுவைக்கும் விதத்தில் கவிதைகளைப் படைக்கவேண்டும்” என்பதை முற்றிலும் கடைப்பிடித்து எழுதியவர்-எழுதி வருபவர் திரு அழ. வள்ளியப்பா ஆவர்.
கற்பிக்கும் ஆசிரியர்
எதையும் நேரடியாகக் கற்பிப்பதைவிடக் கதை வாயிலாகவோ, பாடல் வாயிலாகவோ கற்பிக்கும்போது குழந்தைகள் அவற்றை எளிதில் கற்றுக் கொள்ளுகின்றன. கவிஞர் அழ. வள்ளியப்பா,
அ, ஆ என்றேனே
அத்தை வீடு சென்றேனே
இ, ஈ என்றேனே
இட்டலி எட்டுத் தின்றேனே...
என அகர வரிசையையும்,
எங்கள் வீட்டில் குழந்தைகள்
என்னைச் சேர்த்து நான்கு பேர்
தங்கைப் பாப்பா ஒன்று
சமர்த்துப் பையன் இரண்டு
சின்னக் கண்ணன் மூன்று
சிரிக்கும் முருகன் நான்கு
என எண்களையும்,
ஏழும் ஏழும் பதினாலாம்
எலியாருக்கு முழம் வாலாம்
எனக் கணக்கையும்,
கண்டங் களிலே மிகவும் பெரிய
கண்டம் ஆசியா...
என நில நூலையும்,
தாஜ் மகாலைக் கட்டியவர்
யார்? யார்? யார்?
சக்ரவர்த்தி ஷாஜகானாம்
கேள், கேள், கேள்
என வேடிக்கைப் போக்கில் வரலாற்றுச் செய்திகளையும்,
வண்ண வண்ணப் பூக்கள்-நல்ல
மணம் நிறைந்த பூக்கள்...
நீலம் பச்சை சிவப்பு-இன்னும்
நிறங்கள் பலவும் உண்டு
என நிறங்களையும்,
பூவன் மொந்தன் ரஸ்தாளி
பேயன் நேந்திரம் மலைவாழை...
எனப் பழவகைகளையும்,
சம்பத்துக்கு வீடு உண்டு
தாம்ப ரத்திலே
பட்டுவுக்கு வீடு உண்டு
பல்லா வரத்திலே
எனச் சென்னை நகரப் பகுதிகளையும்,
கங்கை சிந்து பிரம்ம புத்ரா
பிறக்கும் இமயமாம்
என இமயத்தையும் அதில் தோன்றும் நதிகளையும் பாட்டுப் போக்கிலேயே
குழந்தைகள் நெஞ்சில் பதியவைத்து விடுகிறார்;
கூட்டம் கூட்ட மாகவே
குருவி பறந்து சென்றிடும்
எனத் தொடங்கும் பாடலில் கற்கள் குவியல் குவியலாகக் கிடக்கும்; பழங்கள்
கூறு கூறாய் விற்கும்; திராட்சைகள் குலை குலையாய்த் தொங்கும் என அடுக்குத் தொடர்களை அழகுறக் கற்பிக்கிறார்.
ஒலி நய உத்தியர்
பொருளுக்கு முக்கிய இடமின்றி ஓசை நயத்தை மட்டுமே கருத்திற்கொண்டு குழந்தைப் பாடல்கள் இயற்றப்படுவதுண்டு. அவை பொருளிலிப் பாடல்கள் (Nonsense Rhymes) எனப்படும். நம் குழந்தைக் கவிஞரோ ஒலி நயத்தோடு பொருளுக்கும் இடந்தந்து இனியபாடல்கள் பலவற்றைப் படைத்துள்ளார்.
அண்ணாமலை அண்ணாமலை
என்ன சொன்னானாம்?
ஆனை முதுகில் ஏறிச்செல்ல
ஆசை என்றானாம்!
கத்திக் கப்பல் செய்து வைத்தேன்
கால்வாய் கூடத் தோண்டி வைத்தேன்
வா, மழையே, வா
வா, மழையே, வா
எனும் பாடல்கள் சான்றாம். சொன்ன சொற்களே மீண்டும் மீண்டும் வருமாறு
பாடுவது குழந்தைகளை எளிதில் கவரும் தன்மையதாம். அவ்வுத்தி
இப்பாடல்களிலும் இன்னும் இவையொத்த வேறுசில பாடல்களிலும்
கையாளப்பட்டுள்ளது.
சின்னச் சின்னக் குழந்தையம்மா
எங்கள் பாலமுருகன்-புன்
சிரிப்புக் காட்டி மயக்கிடுவான்
எங்கள் பாலமுருகன்
எனும் முதல் பாடல் தொடங்கி நூல் முழுதும் நிறைந்துள்ள ஒலி நயப்
பாடல்கள் நம்மை முருகனின் புன்சிரிப்பினும் மயக்குவதைக் காண்கிறோம்!
நாட்டுப் பற்றாளர்
'நான் இந்தியன்’ என்று சொல்வதில் ஒவ்வொருவரும் பெருமைகொள்ள வேண்டும். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையுள்ள ஒவ்வொருவரும் உடன் பிறந்தவர் என்ற உணர்வு வேண்டும். நாட்டுக்காக உழைத்த நல்லவர்கள் என்றும் நெஞ்சில் நிலைபெற்றிருக்க வேண்டும். சாந்தமூர்த்தியும் சத்தியவடிவுமான காந்தி வழியே நாம் வாழும் வழி என்ற செய்திகளைக் கூறி இளம் உள்ளங்களில் நாட்டுப் பற்றைக் கவிஞர் ஊட்டுகிறார். இந்த எண்ணம் இணையப் பெற்ற குழந்தைகள்,
இன்று நேரு வாழ்வது
எங்கள் பிஞ்சு நெஞ்சிலே
எனப் பாடிக் களிப்பதைப் பார்த்துப் பரவசம் கொள்கிறார்.
'அது அந்தக் காலம், இது இந்தக் காலம்’ என நகைச்சுவை மன்னர் என். எஸ். கிருஷ்ணன் பாணியில் உள்ள ஒரு பாடலில், நாடு அன்றிருந்ததைவிட இன்று பல்வகையிலும் முன்னேறியுள்ளதைச் சுட்டிப் பெருமை கொள்கிறார்.
சொந்த நாடு என்பது போலவே 'சொந்த ஊர்’ என்பது ஒரு சுகமான உணர்வைத் தோற்றுவிப்பது இயல்பே. அவ்வகையில் கவிஞர் தம் சொந்த ஊரான இராயவரத்தையும், இளமையில் அங்கு அவர் செய்த நாட்டு விடுதலைத் தொண்டினையும் எண்ணி இறும்பூதெய்துகிறார்.
சீரிய சிந்தனையாளர்
பாடல் வாயிலாகப் பல சீரிய சிந்தனைகளைக் குழந்தைகட்குப் பாலில் தேன் கலந்தது போலச் சுவையுடன் தருவதில் வல்லவராக விளங்குகிறார் நம் கவிஞர். செடி நட்டு வளர்க்க வேண்டும். விண்கலத்தில் ஏறி நிலாவுக்குச் செல்லும் விஞ்ஞான அறிவு வளர வேண்டும். எண்ணம், வாக்கு, செய்கையிலே இனிமை இருந்தால் வாழ்வே இன்பமாம். ஆண்டவன் தந்த கையால் அனுதினமும் வேலை செய்து அனைவர்க்கும் உதவி செய்யவேண்டும். கட்டியணைத்து வளர்த்த அன்னையின் கை கடவுள் போன்றது. ஆசிரியரை மதிக்க வேண்டும் என்றெல்லாம் சிந்தனைகளைப் பக்கந்தோறும் பெய்து செல்கிறார்.
பிறந்த நாள் என்றால் குழந்தைகட்குத் தின்பண்டங்களும், புத்தாடைகளும், பரிசுப் பொருள்களுந்தான் நினைவுக்கு வரும். நம் கவிஞரோ அந்நாளை,
அன்பு காட்டி வாழவும்
அறிவை வளர்த்துக் கொள்ளவும்
என்றும் நன்மை செய்யவும்
எண்ணிப் பார்க்கும் நல்லநாள்
என்கிறார். பள்ளிக்கூட மணி, பலரும் போற்ற நல்லபெயர் எடுக்கச்
சொல்லியும், படித்தபடி வாழ்க்கையிலே நடக்கச் சொல்லியும் 'டாண் டாண்’
என ஒலிக்கிறதாம்!
உயரிய உவமையாளர்
உவமை வாயிலாகச் சொல்லப்படும் செய்திகள் உள்ளத்தே நன்கு பதியும். 'பாய்ந்தான்’ என்பதையே 'புலி போலப் பாய்ந்தான்’ என்னும்போது பொருள் அழுத்தம் பெறுகிறது. உவமையைப் பொருத்தமுறக் கூறுவதில் அழ. வள்ளியப்பா தனித்த திறம் காட்டுகிறார்.
கொக்கின் மூக்கிற்கு ஈட்டியையும், அன்னத்தின் நிறத்திற்குப் பாலையும் உவமையாக்குகிறார். எட்டு மாடிக் கட்டடத்தின் மேலே நின்று கீழே சாலையைப் பார்க்கும்போது அது 'தலையில் வகிடு எடுத்ததைப்போல்’ இருப்பதாகக் கூறுவது அருமையான உவமை.
தட்டில் இருந்த சோளப் பொரியை
விட்டு எறிந்த தார்? - பின்
நட்ட நடுவே அந்த வெள்ளித்
தட்டை வைத்தது யார்?
என உடுக்களைச் சிதறிக்கிடக்கும் சோளப் பொரியாகவும் நிலவை அவற்றினிடையே கிடக்கும் வெள்ளித் தட்டாகவும் சுட்டிக் குழந்தைகட்கு உருவகத்தையும் அறிமுகப்படுத்தி விடுகிறார். குழந்தைகள் அறிந்தும் உணர்ந்துமுள்ளவற்றையே கவிஞர் பயன்படுத்தியுள்ளது குறிப்பிடத் தக்கது.
நயமிகு நகைச் சுவையாளர்
அனைவர்க்குமே நகைச்சுவை இனிமை பயப்பது. குழந்தைகட்கோ அது கொள்ளை இன்பம் தருவது. அழ. வள்ளியப்பா அவர்கள் வேடிக்கைப் பாடல்கள் என்றும், நகைச்சுவைப் பாக்கள் என்றும் பல கவிதைகள் புனைந்துள்ளார்.
சுப்பு வுடைய பாட்டி வயது
தொண்ணூற் றொன்பது-அவள்
சுறுசுறுப்பைப் பார்க்கும் போது
இருபத் தொன்பது!
தொண்ணூற்றொன்பதும், இருபத்தொன்பதும் செய்யும் வேடிக்கை பெரு
வேடிக்கை. தாடிச் சாமியார் நம்மைக் குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைக்கிறார். இப்பாடல்களுக்கு வரையப்பட்டுள்ள படங்கள் அவற்றின் வேடிக்கைத் தன்மைக்கு மேலும்
மெருகேற்றுகின்றன. பாம்பும், மீனும் கண்மூடித் தூங்குவதில்லை; ஏன்
தெரியுமா? என்ற வினாவை எழுப்பி அவற்றுக்கு இமை இல்லை என்ற
விடையளிப்பது நயமாக உள்ளது.
மீன், பசு, குரங்கு இவற்றுக்கு வால்கள் ஒவ்வொரு வகையில் துணை செய்கின்றன என்று சொல்லி நமக்கு வாலிருந்தால் எப்படி? என்ற கேள்வியைக் கவிஞர் எழுப்பியிருப்பது நயமான நகைச்சுவையாம். பத்துப்பைசா பலூனை பையன் பையப் பைய ஊத அது வெடிப்பதைப் படம் பிடிக்கிறது ஒருபாடல்! எதையும் 'பைய, பைய’ என்றில்லாமல் 'துறு, துறு’ என்று துடிக்கும் குழந்தைக்குப் பையன் என்று ஏன் பெயர் வந்ததோ தெரியவில்லை.
கவின்மிகு கதையாளர்
அரிய நீதிகளைக் கதைகள் மூலம் குழந்தைகட்குப் புகட்டுவது எளிது. சிவாஜி வீரனானது, தாய் சொன்ன கதைகளால்தானே! நித்தம் உழைத்துப் புதுமை காண வேண்டும்; பிறர்க்குதவுவதே பெருமகிழ்ச்சி; உண்மை பேசுதலே உயர்வு தரும்; ஒருவர்க்கொருவர் சண்டையிட்டால் உள்ளதையும் இழப்போம்; பிறரது உரிமையை மதிப்பதே சுதந்திரம் என்பன போன்ற அரிய நீதிகளை எளிய கதைகள் வாயிலாகக் கவிஞர் குழந்தைகட்குப் புகட்டுவது போற்றுதற்குரியது.
நன்னம்பிக்கையாளர்
குழந்தைகளை ஊக்கப்படுத்தி உயர்நிலைக்கு அவர்களைக் கொண்டுவர கவிஞர் பெரிதும் முயல்கிறார்.
ஏடு தூக்கிப் பள்ளியில்
இன்று பயிலும் சிறுவரே
நாடு காக்கும் தலைவராய்
நாளை விளங்கப் போகிறார்!
என்பது அழ. வள்ளியப்பாவின் அமுத மொழி. அதேபோல இந்நூலுள்ளும்
ஏழைக் குடிசையில் பிறந்தாலும்
எத்தனை துன்பப் பட்டாலும்
நாளைய தலைவர் ஆவதற்கு
நாளும் முயற்சி செய்திடுவேன்!
எனும் இப்பாடல் 'இன்று குழந்தைகளேயாயினும் இனி இந்த நாட்டினை
ஆளப்பிறந்தவர் குழந்தைகளே’ என நம்பிக்கை கொண்டவர் கவிஞர்
என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
சுவைத்தேன் கவியாளர்
படிக்கப் படிக்க நெஞ்சில் சுவையேற்றும் பாத் தொகுப்பே சிரிக்கும் பூக்கள் என்னும் இந்நூல். அழ. வள்ளியப்பாவின் பாடல் 'அப்படியிருக்கிறது, இப்படியிருக்கிறது’ என்று நான் சொல்ல முயல்வது பிள்ளையே பெறாதவள், பல பிள்ளை பெற்றவளுக்கு மருத்துவம் பார்ப்பது போலாகும்! குழந்தைக் கவிதைத் துறையில் ஒப்பாரும் மிக்காருமின்றி ஓங்கி வளர்ந்துள்ள இமயம் அவர்! அதன் அடிவாரத்தில் நின்று எவ்வளவு நிமிர்ந்தாலும் உச்சியை எவ்வாறு காணமுடியாதோ, அது போன்ற நிலையதே என்னுடைய இவ்வுரை! நெஞ்சில் குறிஞ்சித் தேனைப் பாய்ச்சும் நம் குழந்தைக் கவிஞர் வாழ்க! அவர்தம் கவிதைத் தொண்டு வளர்க!
அன்பன்,
சு. செல்லப்பன்
20-5-86
---------------
FOREWORD
by
Prof. K. R. SRINIVASA IYENGAR M.A.,D. Litt.
Vice-Chancellor, Andhra University (Retd)
Fellow, Sahitya Akademi
The reason behind Tiru Al. Valliappa’s request that I should write a Foreword to his new collection of Songs for Children, SIRIKKUM POOKKAL, can only be that, since I have myself reached that stage in life called 'second childhood’, I am duly qualified for the role assigned to me. So be it, then. It is, indeed, a pleasure to wish Godspeed to this volume, 'Smiling Flowers’, by a writer who has made 'children’s literature’ his own elected field and cultivated it with love, dedication and perseverance over a period of several decades.
While opting for the Banking profession to earn his everyday bread and butter, Al. Valliappa nevertheless chose, for the health of his heart and soul, to feed on the honeydew and milk of Paradise so readily accessible in the world of children, part make-believe and part quintessential reality. Lisping in numbers at the age of thirteen, Valliappa hasn’t looked back, and his books for children (prose and verse) number almost sixty. He has also been a force, a movement, a trend-setter, and as early as 1950 he brought into being the Association of Tamil Writers for Children, and has served the cause of children’s literature in Tamil Nadu and all India in many significant ways.
Valliappa’s MALARUM ULLAM-his first get-together of 23 songs-came out in 1944, and with its simplicity of diction, elevating thoughts and rhythmical ease and adequacy proved an instant success. Valliappa had no doubt had his predecessors and pathfinders in poets like Subramania Bharati and Kavimani Desiga Vinayakam Pillai, and after the first taste of success, he pursued his vocation with seasoned expertise as well as sustained diligence. A fuller collection of MALARUM ULLAM-comprising 135 songs-appeared in 1954, and an equally sumptuous Second Series in 1961. Both volumes carried numerous illustrations, encouraging the child to shift from the visual to the audible, and to fusion the double appeal in the flowering sensibility within. Then, in coming years, more and more choice reading-poetry, fiction, biography-for the expectant children, and now this latest, SIRIKKUM POOKKAL, an ensemble of longer and shorter pieces, and lively matching illustrations in black and white. It is the same tested vintage, refreshing, stimulating, and manna for the growing child.
MALARUM ULLAM, 'Flowering Sensibility’; SIRIKKUM POOKKAL, 'Smiling Flowers’; buds, and blossoms, and flowers, and the splendour of full efflorescence, and the dedication of this ardour and beauty and love to the Sun. Aren’t children-in very truth-Flowers in God’s Garden of New Consciousness?
It was Kavimani who greeted. Al.Valliappa’s 1954 volume with this warm benediction:
May, Valliappa, magician - laureate,
thrive evermore, enabling
children to read and enjoy his songs
morn and eve everyday!
And R. P. Sethu Pillai, in his Foreword, lauded Valliappa for his uncanny evocation of the values and verities in apt and mellifluous everyday language. Introducing the Second series in 1961, Mu. Varadarajanar made particular reference to the story- poems and the humorous verse, for these too insinuate their lessons in human deportment. For example-
Sinnasamy, as he walked
along the street,
ate a plantain, and cast
the skin on the road.
He fared forward awhile, and
on his brisk return walk,
stepped on the soft skin
and fell tumbling down.
Again, there is the dialogue between a Greek King and a Vedantin. The ambitious King plans to overrun Egypt, Persia and all other lands; and back at home at last, he would build a small house in a garden, and live contentedly there. Thus, then, the Vedantin’s all-sufficing comment that clinches the dialogue:
If what you look for in the end
is but a small garden-house,
why are you now driven by the desire
to conquer all the world?
Here, now, prepare to live
in sweet-contentment
in a garden-sanctuary:
and joy will soon be yours.
Like the two earlier volumes, the latest-SIRIKKUM POOKKAL-is also structured with 5 sections of children’s verse, and a section each of story-poems and humorous verse. The highest values, the sublimest verities, achieve recordation in the simplest possible 'living language of the tribe’. Yes, this our right hand, these our two hands, are God’s gifts of Grace-but to what end?
What’s this God-given hand for?
For gathering food and eating it.
What’s this God-given hand for?
For bathing and keeping the body clean.
What’s this God-given hand for?
For wearing clothes with elegance.
What’s this God-given hand for?
For writing fair and for reading.
What’s this God-given hand for?
For hand-labour day after day.
What’s this God-given hand for?
For rendering service to others.
What’s this God-given hand for?
For ardent worship of the Lord.
These seven hills of ascent, from the material to the spiritual, from ANNAMAYA to ANANDA MAYA, comprehend the whole philosophy of useful and wise living, and the child learns it with a lilt, and no trace of tears. Here is another piece, now on 'national integration’;
Crores and crores are my kith and kin;
they live between Himavant and Kumari.
Their twin eyes are Rights and Duties;
their hand-labours uplift the land.
They speak several languages,
but live in amity together.
That the land may win largesse and fame,
they plan and execute good works.
And so on: the songs are many, and make a sweep of a variety of emotions, Rasas, ethical imperatives, legendary and recent history, everyday life, situations humorous and grave, anecdotage, fabulistic diversions-all earth and heaven and the realm between. The sublime is rendered in familiar terms, and the trivial is seen at a slant to tremble with the undertones of serious intent. With children’s songs, it is rather like shower in the sunshine, smiles and tears teasing one another.
Contrary to the usual assumption that one who writes for children should 'stoop’ to their level, it is actually a question of rising to THEIR much higher and purer levels of consciousness. The four elements constituting the child’s birthright of instinctive or intuitive knowledge are (in Ernest Raymond’s words) eternal Wisdom, temporal Vision, healing touch and poignant humour. It is surely significant that the superlatively gifted ones of the BHAGAVATA- apila, Dhruva, Prahlad, Vamana, Gokula Krishna-are all boys five years of age (or not much older), yet sovereign in their understanding. "Heaven lies about us in our infancy”, says wordsworth, and addresses a child as "mighty seer, prophet blest”. And there is a good deal of truth in all this, and hence it asks for a special gift of percipience and directness of utterance to rise high enough in the spiral of consciousness to reach the child’s native altitudes of comprehension. The child CAN vision infinity in a grain of sand, the Apocalypse in a familiar toy, and omnipresent Reality in seeming make-believe.
The child’s 'intimations of immortality’ and clairvoyant gifts add up sometimes to the kind of illumination that is the settled wisdom of saints like Ramakrishna Paramahamsa, and what is important in children’s songs is the use of everyday langauge to serve as the 'Open Sesame’ leading the child to explore on his own the interior countries of the Spirit. Aids like assonance, alliteration, initial and terminal rhyme, bold metaphor, suggestive imagery, repetition and refrain, all can come handy, but the secret of secrets is the power of the song to reach the deeper listening of the child’s soul. A fair example is the title-piece, 'Smiling Flowers’:
Flowers with colours mainfold,
and varied fragrances;
they give me their smiles,
my dear sweet flowers.
Sapphire, green, red,
and other hues as well;
I come at daybreak and feel
enchanted by their sight.
Nodding and swinging flowers,
I draw near to pluck them
and fill my basket-
and the flowers smile!
They smile as I view them,
and also as I pluck them;
and they smile on when I weave
of them a garland.
For Krishna’s image,
I’ve made this garland;
and like my younger brother,
it smiles at me.
It was with a unfailing instinct that Valliappa has chosen all along to make 'flowers’ the key image of his children’s songs, for as the Mother of Sri Aurobindo Ashram has explained and exhorted:
"Be like a flower...open, frank, equal, generoua and kind....
A flower is open to all that surrounds it.... It exerts a spontaneous influence on all that is around it. It radiates a joy and a beauty. It is frank: it hides nothing of its beauty, and lets it flow frankly out of itself...
It is equal: it has no preferences.....
Then generous:.... it sacrifices itself entirely for our pleasure.
And then, kind: it has such a tenderness... its presence fills us with joy...
each flower symbolises an aspect, an emanation, an aspiration and a progress in the evolution...”
(from SWEET MOTHER: HARMONIES OF LIGHT, Part II, words recollected by Mona Sarkar,, 1979, pp.57-8)
May I hope that each 'smiling flower’ in this latest garner from Tiru Al. Valliappa’s Garden of Poesy will help the children of Tamil Nadu and India in their adventure of aspiration, awakening and steady progress in self-growth and self-realisation. And my best wishes to the children’s laureate: More power and Grace to his elbow!
K. R. SRINIVASA IYENGAR
'Sydney House’
277-B, J.J.Road (off Mowbray’s Road)
Alwarpet, Madras-600 018
29-4-1986
--------------
சிரிக்கும் பூக்கள் - காணிக்கை
மழலைமொழி பேசுகின்ற
வண்ணச் சுடர்களுக்குப்
பழகுதமிழ் நான்பாடப்
பலவகையில் துணைநின்றார்
குழந்தை இலக்கியத்தைக்
கோயிலெனக் கொண்டுழைத்தார்
அழகப்ப - ரத்தினமாம்
அன்னவர்க்குக் காணிக்கை
-----------
சிரிக்கும் பூக்கள்
ஆசிரியர் முன்னுரை
காரைக்குடியில் நாங்கள் வசித்த வீட்டிற்கு எதிர் வீட்டில் அண்ணாமலை என்ற ஆறு வயதுச் சிறுவன் இருந்தான். பள்ளிக்கூட நேரம் தவிர, மற்ற வேளைகளில் அவன் எங்கள் வீட்டிற்கு வந்து மற்றக் குழந்தைகளுடன் ஆடிப் பாடி ஆனந்தமாக இருப்பான். அண்ணாமலையைப் பார்த்தவுடனே எல்லாக் குழந்தைகளும்,
அண்ணாமலை, அண்ணாமலை,
அண்ணாந்து பார்த்தால்
ஒண்ணுமி்ல்லை
என்று பாடி அவனைக் கேலி செய்வார்கள். இதைக் கவனித்துக் கொண்டிருந்த நான், ஒருநாள், "அண்ணாந்து பார்த்தால் ஒண்ணுமி்ல்லையா?” என்று கேட்டுவிட்டு,
அண்ணாமலை அண்ணாமலை
அண்ணாந்து பார்த்தான்;
ஆடி ஆடிப் பறக்கும் பட்டம்
அண்ணாந்து பார்த்தான்.
என்று தொடங்கி,
அண்ணாமலை முன்னாலே என்ன பார்த்தான், பின்னாலே என்ன பார்த்தான் என்று விவரித்து ஒரு பாட்டைப் பாடினேன். அந்தப் பாட்டை அங்கிருந்த குழந்தைகளிடம் நான் ஒரு முறை பாடியவுடனே அவர்கள் அதைத் திருப்பிப் பாடத் தொடங்கி விட்டார்கள்!
நாளடைவில், 'அண்ணாமலை, அண்ணாமலை, அண்ணாந்து பார்த்தால் ஒண்ணுமில்லை' என்ற பழைய வரிகளை அவர்கள் மறந்து விட்டார்கள்.
* * *
என் பேரன் அரவிந்தனுக்கு அப்போது வயது மூன்று. அவனுக்கு யாரேனும் ஊட்டி விட்டால்தான் சாப்பிடுவான். ஒருநாள், நான் அவனைப் பார்த்து, "அரவிந்த், தினமும் யாராவது ஊட்டிவிடணுமா? சாதத்தை நீயே உன் கையால் அள்ளிச் சாப்பிடக்கூடாதா? ஆண்டவன் நமக்குக் கை கொடுத்திருக்கிறாரே, எதுக்காக?” என்று கேட்டேன்.
"எதுக்காக?”- திருப்பிக் கேட்டான் அரவிந்தன்.
'ஆண்டவன் கொடுத்த கை எதற்கு?
அள்ளிச் சோறு தின்பதற்கு’
என்று பாட்டிலே பதிலளித்தேன்.
அரவிந்தன் அந்த வரிகளையே மீண்டும் மீண்டும் பாடிக்கொண்டு ஒழுங்காக உண்டு முடித்தான்.
இதற்குப் பிறகு அவன் எப்போது ஊட்டிவிடச் சொல்லி அடம் பிடித்தாலும், "ஆண்டவன் கொடுத்த கை எதற்கு?” என்று முதல் வரியைச் சொன்னால் போதும்; "அள்ளிச் சோறு தின்பதற்கு” என்று அடுத்த வரியைக் கூறிவிட்டு அவனே யார் உதவியும் இல்லாமல் உண்பான்.
ஒருநாள் நான் வெளியே புறப்பட்டுக் கொண்டிருந்தேன்.
"நானும் வருவேன்” என்றான் அரவிந்தன்.
"வெகுதூரம் நடக்கணும், கால் வலிக்கும்”.
"வலிக்காது, நான் நடப்பேன்”
அவனும் நானும் நடந்தோம். சிறிது தூரம் சென்றதும், நின்று விட்டான். "ஏன் நின்று விட்டாய்?” என்று கேட்டதற்கு, "கால்...வலிக்குது...” என்று இழுத்தான்.
உடனே நான்,
ஆண்டவன் கொடுத்த கால் எதற்கு?
என்று கேட்டேன்.
ஆண்டவன் கொடுத்த கால் எதற்கு?
கால் எதற்கு?
என்று கூறியவன் திடீரென்று,
அரவிந்த் ஜோராய் நடப்பதற்கு
என்று கூறிவிட்டு, உற்சாகமாக என்னையும் முந்திக் கொண்டு நடந்தான்.
'ஆண்டவன் கொடுத்த கை அள்ளிச் சோறு தின்பதற்கு மட்டும்தானா!’ என்று நினைத்த நான், கைகளின் பயன்களை எடுத்துக் கூறும் சில வரிகளை மேலும் சேர்த்துப் பாடலாக்கினேன்.
சின்னஞ்சிறு குழந்தைகளுக்காக நான் எழுதியுள்ள பல பாடல்கள் இவ்வாறு குழந்தைககளின் கூட்டுறவால் உருவானவை என்பதை எடுத்துக் காட்டவே மேற்கண்ட இரு நிகழ்ச்சிகளைக் கூறினேன்.
சிரிக்கும் பூக்கள் - இந்தப் பெயரை இந்நூலுக்கு எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சூட்டியவர், என் ஆருயிர் நண்பர், இன்று அமரராகிவிட்ட ரத்னம் அவர்கள்தான். நான் எந்த நன்முயற்சியில் ஈடுபட்டாலும் பெயருக்கோ புகழுக்கோ ஆசைப்படாமல் முப்பது ஆண்டுகளுக்குமேல் எனக்குத் தொடர்ந்து துணை நின்றவர் அவர். அவரே ஒரு நல்ல குழந்தை எழுத்தாளர். தமிழில் குழந்தை இலக்கியம் தழைக்க வேண்டுமென அரும்பாடுபட்டவர்,
நான் எழுதிய பாடல்களில் சுமார் நூறு பாடல்களை இத்தொகுப்பில் சேர்ப்பதற்காக நானும் நண்பர் ரத்னமும் தேர்ந்தெடுத்து அவற்றிற்குத் தமிழகத்தின் சிறந்த ஓவியர்களைக் கொண்டு படங்கள் வரைய ஏற்பாடு செய்தோம்.
புத்தகத்தை அச்சுக்குக் கொடுக்கவிருந்த சமயத்தில், நான் பணியாற்றிய இந்தியன் வங்கி என்னைச் சென்னையிலிருந்து காரைக்குடிக்கு மாற்றியது. அப்போது தலைமைப் பொறுப்பில் இருந்தவர்களிடம் நான் முறையிட்டிருந்தால், அவர்கள் என்னைச் சென்னையிலே தொடர்ந்து பணிபுரிய அனுமதித்திருக்கக் கூடும். ஆயினும், நான் வங்கியில் சேர்ந்தநாள் முதலாக என்னை வேறு எந்த ஊருக்கும் மாற்றாமல், நான் என் இலக்கிய முயற்சிகளைச் சென்னையில் தொடரவும், இலக்கிய உலகிற்கு ஓரளவு அறிமுகமாகவும் வாய்ப்பளித்ததை நினைத்து, "இனியும்தொடர்ந்து இங்கே இருக்க ஆசைப்படுவது சரியன்று” எனக்கருதி, காரைக்குடிக்குச் சென்றேன். காரைக்குடிக்குச் சென்ற இரண்டு ஆண்டுகள் வரை எனக்கு ஓய்வு இல்லை. வங்கிப் பணியில் மிகுதியாக ஈடுபட நேர்ந்தது. அதன் பின்னர் -
என் அருமை நண்பர் ரத்னம் அவர்களுக்கு உடல் நலம் குன்றியது. அவர் விரைவில் குணமடைவார், அவரது உதவியுடன் புத்தகத்தைச் சிறந்த முறையில் கொண்டுவந்து விடலாமென நினைத்தேன். அவர் விரைவில் குணம் பெற வேண்டுமென, அவருடைய எண்ணற்ற இனிய நண்பர்களுடன் சேர்ந்து நானும் ஆண்டவனிடம் வேண்டினேன். ஆயினும், எங்கள் வேண்டுதலுக்கு ஆண்டவன் செவிசாய்க்கவில்லை. உடல் நலம் குன்றிய ஈராண்டுகளில் அவரை இழக்க நேரிட்டது.
ரத்னம் அவர்களின் மறைவு என்னைப் பெரிதும் பாதித்தது. புத்தகம் வெளியிடும் முயற்சியில் இருந்த ஆர்வம் நாளுக்கு நாள் குறைந்தது. 'சிரிக்கும் பூக்கள்’ எப்போது வெளிவரும் என்று கேட்ட நண்பர்களுக்கு 'விரைவில் வெளிவரும்’ எனக் கூறிக் கொண்டிருந்தேனே தவிர, எவ்வித முயற்சியிலும் ஈடுபடத் தோன்றவில்லை.
சென்ற ஆண்டு திடீரென ஒருநாள் நான் ஒரு முடிவுக்கு வந்தேன். 'ரத்னம் பெயர் சூட்டிய ஒரு புத்தகம் வெளிவராமல் இருப்பதா? நிச்சயம் வெளி வரவேண்டும். அவருக்கு இப்புத்தகத்தைக் காணிக்கையாக்க
வேண்டும்’ என்பதே அந்த முடிவு.
முன்பு அச்சுக்குக் கொடுக்க நண்பர் ரத்னமும் நானும் தேர்ந்தெடுத்த பாடல்களுடன் மேலும் சில பாடல்களைப் பின்னர்ச் சேர்த்தேன். அவற்றில் பெரும்பாலானவை மிகச் சிறு குழந்தைகளுக்கானவையே.
என் பாடல்களில் சில மொழிபெயர்க்கப்பட்டு Children’s World, (New Delhi) போன்ற ஆங்கில இதழ்களிலும், இந்தி, குஜராத்தி, மராத்தி, கன்னடம் முதலிய மொழிகளில் சில இதழ்களிலும் வெளி வந்துள்ளன. தெலுங்கிலே பல பாடல்களை டாக்டர் சல்லா இராதாகிருஷ்ணசர்மா மொழி பெயர்த்து அவை நூலாக வெளிவந்துள்ளன. பிற மாநிலங்களில் நடைபெறும் கருத்தரங்குகளிலும், மாநாடுகளிலும் நான் கலந்துகொள்ளும்போது அங்கு வருபவர்கள் என் பெயரை ஓரளவு அறிந்துள்ளனரே தவிர, என் பாடல்கள் எத்தகையன என்பதை அவர்கள் அறிய வாய்ப்பில்லை.
எனவே, இந்நூலுக்குத் தமிழுடன் ஆங்கிலத்திலும் ஓர் அணிந்துரை இருந்தால் நன்றாயிருக்குமே என்று எண்ணினேன். உடனே மதிப்பிற்குரிய கே. ஆர். ஸ்ரீனிவாச அய்யங்கார் அவர்களின் நினைவுதான் வந்தது.
ஆங்கில அறிஞர் உலகம் பெரிதும் மதித்துப் போற்றுகின்ற பேராசிரியர் அவர். ஆந்திரப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக விளங்கியவர்; சாகித்ய அகாதமியின் துணைத் தலைவராய்த் திகழ்ந்தவர். தற்போது சாகித்ய அகாதமியின் fellowவாக இருப்பவர்.
நான் ஆங்கிலத்தில் அணிந்துரை கேட்டதும், "தமிழ் நூலுக்கு ஆங்கிலத்தில் அணிந்துரையா!” என்று வியப்புடன் கேட்டார். பிற மொழிகளில் என் பாடல்கள் வெளிவந்திருப்பதையும், பிறமொழி எழுத்தாளர்கள் பலர் எனக்கு அறிமுகமாயிருப்பதையும் கூறி, "தங்களைப் போன்று இந்தியா முழுவதும் அறிந்த ஓர் அறிஞர் ஆங்கிலத்தில் அணிந்துரை வழங்கினால், அவர்கள் என்னைப் பற்றியும் என் படைப்புகளைப் பற்றியும் ஓரளவு தெரிந்து கொள்ளக் கூடும் என நினைக்கிறேன்” என்றேன்.
பல்லாண்டுகளாக என் பாடல்களைப் படித்து என்னைப் பாராட்டி ஊக்கமளித்து வருபவர் அவர். அவரைப் போலவே, அவருடைய அருமை மகள் திருமதி பிரேமா நந்தகுமாரும் (யுனெஸ்கோவிற்காக பாரதியார் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வெளியி்ட்டவர்) என் பாடல்களைப் பாராட்டி வருபவர்.
என்னைப் பற்றியும் என் பாடல்களைப் பற்றியும் முன்பே அறிந்திருந்ததால், என் வேண்டுகோளை ஏற்று, சிந்தனையைத் தூண்டும் வகையில் சிறந்த ஓர் அணிந்துரையை அவர் வழங்கியுள்ளார்.
இன்றுள்ள தமிழறிஞர்களில் மிகவும் பரந்த மனம் கொண்ட பண்பாளர் திரு. சிலம்பொலி செல்லப்பன் அவர்கள். இவருடைய நினைவாற்றல் வியப்புக்குரியது. 'நடமாடும் கவிதைக் களஞ்சிய’ மாகவே இவர் விளங்குகிறார்.
தொல்காப்பிய சூத்திரத்திலிருந்து, புதிதாக எழுதத் தொடங்கியுள்ளவர்களில், பெரும்பாலானவர்களின் கவிதைகள்வரை இவர் நன்கறிவார். அறிந்திருப்பதோடு அவற்றில் நல்லனவற்றை மேடைகளிலும் எடுத்துக்கூறி அவர்களுக்கு ஏற்றம் தருபவர்.
பல விழாக்களில் என்னைப் பாராட்டிப் பேசியதோடு, பலவகையிலும் எனக்கு ஊக்கமூட்டிவரும் இவரது அணிந்துரை இந்நூலுக்குச் சிறப்பளிக்கிறது. அணிந்துரை என்று சொல்வதைவிட இதை ஓர் ஆராய்ச்சி உரை என்றே கூறவேண்டும். மேனாட்டில் குழந்தை இலக்கியம் வளர்ந்த வரலாற்றையும், தமிழில் குழந்தை இலக்கியம் வளர்ந்து வரும் நிலையையும் மிகத் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறார்.
அணிந்துரை வழங்கியுள்ள இரு பேரறிஞர்களுக்கும் நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன்.
இத்தொகுப்பிலுள்ள பாடல்கள் அனைத்தையும் படித்துப் பார்த்து, அவை திருத்தமுற அமைவதற்கு அரிய பல யோசனைகளைக் கூறியவர்களில், நல்லாசிரியர் விருது பெற்றவரும், சிறந்த கவிஞரும், புலவரும், வானொலி சிறுவர் சங்கப் பேரவையின் தலைவருமாகிய திரு. தணிகை உலகநாதன் அவர்கள் குறிப்பிடத்தக்கவர். 1954க்குப் பிறகு நான் எழுதிய கவிதை நூல்கள் அனைத்தும் அவர் பார்வையிட்ட பின்னரே வெளிவந்துள்ளன.
சிறந்த கவிஞரும் வானொலியில் பல்லாண்டுகள் திறம்படப் பணியாற்றியவரும், தற்போது அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சிப் பேராசிரியராக விளங்குபவருமாகிய திரு. மீ. ப. சோமு அவர்கள்,
என் முயற்சிகளுக்கெல்லாம் பேருதவி புரிந்து வருபவரும், குழந்தைகளுக்குப் புதிய புதிய பொருள்கள் குறித்து, கற்பனை நயத்துடன் பல பாடல்களை இயற்றி வருபவரும், தற்போது சாகித்ய அகாதமியின் மண்டலச் செயலாளராகச் சென்னையில் பணியாற்றுபவருமாகிய திரு. தம்பி சீனிவாசன் அவர்கள்,
குழந்தைப் பாடல்கள் எழுதுவதில் சிறந்து விளங்குபவரும், காரைக்குடி குழந்தை இலக்கியச் சங்கத்தின் பொதுச் செயலாளரும், என் மேல் அளவுக்கு மீறிய பற்றும் பாசமும் வைத்துள்ளவருமாகிய திரு. பொன்ராசன் அவர்கள்,
இந்நூல் உருவாகப் பல வகையிலும் உதவி புரிந்துள்ளவரும், குழந்தை எழுத்தாளர் சங்கப் பொதுச் செயலாளருமாகிய திரு. எச். கிருஷ்ணமூர்த்தி அவர்கள், ஆகியோருக்கும் இன்னும் இத் தொகுப்பு நன்முறையில் வெளிவரப் பல்வேறு கட்டங்களிலும் ஆர்வமுடன் உதவிய அன்பர்கள் பலருக்கும் என் மனங்கனிந்த நன்றியைத் தரிவித்துக்கொள்ளுகிறேன்.
குழந்தைகளின் கண்ணையும் கருத்தையும் கவரும் வகையில் இந்நூலுக்குப் பொருத்தமான ஓவியங்களை வரைந்து தந்துள்ள புகழ்மிக்க ஓவியர்களான திருவாளர்கள் உமாபதி, லதா, சுப்பு, விஜயன், ஆழி. வே. ராமசாமி ஆகியோருக்கும் என் நன்றி.
இத்தொகுப்பிலுள்ள பாடல்களில் சிலவற்றைத் தவிர மற்றவையாவும் அவ்வப்போது பத்திரிகைகளில் வெளிவந்தவையே. கல்கி தீபாவளி மலர்களிலும், விடுமுறை மலர்களிலும், கண்ணன், கோகுலம், ரத்னபாலா, கலைமகள், குமுதம், ஆனந்த விகடன், அமுதசுரபி முதலிய இதழ்களிலும் இடம் பெற்றவை. வண்ணப் படங்களுடன் அப்பாடல்களை வெளியிட்ட பத்திரிகை ஆசிரியர்களுக்கும் வானொலி, தொலைக் காட்சி வாயிலாக என்னுடைய சில பாடல்களை ஒலி/ஒளி பரப்பிய நிலையத்தாருக்கும் நான் என்றென்றும் நன்றியுடையவனாயிருப்பேன்.
இத் தொகுப்பிலுள்ள பாடல்களை நன்முறையில் அச்சிட்டுத் தந்த ஜீவன் அச்சகத்தாருக்கும், வண்ணப் படங்களை அழகுற அச்சிட்ட நியோ ஆர்ட் பிரஸ் நிர்வாகிகளுக்கும் என் நன்றி.
நான் முன்பு வெளியிட்ட 'மலரும் உள்ளம்’ என்னும் இரு தொகுதிகளிலுமுள்ள பாடல்களைப்பாடி இன்புற்றதைப் போலவே, இந்த 'சிரிக்கும் பூக்கள்’ தொகுப்பிலுள்ள பாடல்களையும் குழந்தைகள் உலகம் படித்து, பாடி இன்புற்றால், அதுவே நான் அடையும் பேரின்பமாகும்.
'உமா இல்லம்’
ஏ. எல். 183 அழ. வள்ளியப்பா
அண்ணாநகர், சென்னை-40
------------
முதல் பகுதி
1. பால முருகன்
2. ஒன்று சேர்தல்
3. பார், பார்!
4. அருமை நேரு
5. அ.ஆ.
6. பத்துப் பைசா பலூன்
7. எங்கே செல்லலாம்?
8. வாழைப் பழம்
9. என்ன கொண்டு வந்தேன்?
10. அண்ணாமலையின் ஆசை
11. செடி வளர்ப்போம்
12. வா, மழையே வா
13. தங்கமும் சிங்கமும்
14. ஆண்டவன் தந்த கை
15. சங்கு சக்கரச் சாமி
----------
1. பால முருகன்
சின்னச்சின்னக் குழந்தையம்மா
எங்கள் பாலமுருகன்-புன்
சிரிப்புக்காட்டி மயக்கிடுவான்
எங்கள் பாலமுருகன்
வண்ணமயில் மீதிருப்பான்
எங்கள் பாலமுருகன்-கையில்
வடிவேலும் வைத்திருப்பான்
எங்கள் பாலமுருகன்
பிள்ளையாரின் நல்லதம்பி
எங்கள் பாலமுருகன்-சிறு
பிள்ளைகளின் இனியதோழன்
எங்கள் பாலமுருகன்
கள்ளமில்லா உள்ளங்கொண்டால்
எங்கள் பாலமுருகன்-நம்மைக்
காத்தருள்வான், காத்தருள்வான்
எங்கள் பாலமுருகன்
----------
2. ஒன்று சேர்தல்
கூட்டம் கூட்ட மாகவே
குருவி பறந்து சென்றிடும்.
குவியல் குவிய லாகவே
கொட்டிக் கற்கள் கிடந்திடும்.
கூறு கூறாய்ச் சந்தையில்
கொய்யாப் பழங்கள் விற்றிடும்.
குலைகு லையாய்த் திராட்சைகள்
கொடியில் அழகாய்த் தொங்கிடும்.
வரிசை வரிசை யாகவே
வாழை தோப்பில் நின்றிடும்.
மந்தை மந்தை யாகவே
மாடு கூடி மேய்ந்திடும்.
சாரை சாரை யாகவே
தரையில் எறும்பு ஊர்ந்திடும்.
நேரில் தினமும் பார்க்கிறோம்
நீயும் நானும் தம்பியே!
------------
3. பார் பார்
தரையின் மேலே
தொட்டி பார்
தொட்டி மேலே
செடியைப் பார்
செடியின் மேலே
பூவைப் பார்
பூவின் மேலே
வண்டைப் பார்
வண்டின் மேலே
பளபளக்கும்
வர்ணம் உண்டு;
அதையும் பார் !
----
4. அருமை நேரு
அருமை நேரு பிறந்தது
அலகா பாத்து நகரிலே
இளைஞர் நேரு படித்தது
இங்கி லாந்து நாட்டிலே.
தீரர் நேரு வாழ்ந்தது
தில்லி நகரம் தன்னிலே.
இன்று நேரு வாழ்வது
எங்கள்
பிஞ்சு
நெஞ்சிலே !
----------
5. அ, ஆ
அ, ஆ என்றேனே.
அத்தை வீடு சென்றேனே.
இ, ஈ என்றேனே.
இட்டலி எட்டுத் தின்றேனே.
உ, ஊ என்றேனே.
உடனே காபி குடித்தேனே.
எ, ஏ என்றேனே.
ஏப்பம் நன்றாய் விட்டேனே.
ஐ என்று சொன்னேனே.
அங்கே நீட்டிப் படுத்தேனே.
ஒ, ஓ என்றேனே.
ஒருமணி சென்று எழுந்தேனே.
ஒள என்று சொன்னேனே.
ஆடிப் பாடிக் குதித்தேனே.
ஃ என்று சொன்னேனே.
அக்கக் காவெனச் சிரித்தேனே!
----------
6. பத்துப் பைசா பலூன்
பத்துப் பைசா விலையிலே
பலூன் ஒன்று வாங்கினேன்.
பலூன் ஒன்று வாங்கினேன்.
பையப் பைய ஊதினேன்.
பையப் பைய ஊதவே
பந்து போல ஆனது.
பந்து போல ஆனபின்
பலமாய் நானும் ஊதினேன்.
பலமாய் ஊத ஊதவே
பானை போல ஆனது.
பானை போல ஆனதைக்
காண ஓடி வாருங்கள் !
விரைவில் வந்தால்
பார்க்கலாம்.
அல்லது,
வெடிக்கும் சத்தம்
கேட்கலாம் !
----------------
7. எங்கே செல்லலாம்?
சைக்கிள் ஏறிக் கொள்ளலாம்;
சைதாப் பேட்டை செல்லலாம்.
காரில் ஏறிக் கொள்ளலாம்;
காரைக் குடிக்குப் போகலாம்.
ரயிலில் ஏறிக் கொள்ளலாம்;
ராமேஸ் வரம் செல்லலாம்.
கப்பல் ஏறிக் கொள்ளலாம்;
கல்கத் தாவை அடையலாம்.
பறவைக் கப்பல் ஏறலாம்;
பாரிஸ் நகரம் போகலாம்.
மனோ ரதத்தில் ஏறலாம்;
வைய மெல்லாம் சுற்றலாம்!
-------------
8. வாழைப் பழம்
வாழைப் பழத்தில் பல உண்டு
வகைவகை யான பெயர் உண்டு.
பூவன், மொந்தன், ரஸ்தாளி,
பேயன், நேந்திரம், மலைவாழை
என்றே வகைகள் பலஉண்டாம்.
எல்லாம் எனக்குப் பிடித்தவையே.
தினமும் மிகவும் நான்விரும்பித்
தின்பது வாழைப் பழமேதான்!
-------------
9. என்ன கொண்டு வந்தேன் ?
பழநி மலைக்குச் சென்று வந்தேன்;
பஞ்சா மிர்தம் கொண்டு வந்தேன்.
காசி நகரம் சென்று வந்தேன்;
கங்கை நீரைக் கொண்டு வந்தேன்.
திருப்ப திக்குச் சென்று வந்தேன்;
தித்திப்பு லட்டுக் கொண்டு வந்தேன்.
இராமேஸ் வரம் சென்று வந்தேன்;
என்ன நானும் கொண்டு வந்தேன் ?
----
ஊ...ஊ...ஊ
ஊ...ஊ...ஊ..
ஊது கின்ற சங்கில்
ஒன்று வாங்கி வந்தேன்!
--------
10. அண்ணாமலையின் ஆசை
அண்ணா மலை, அண்ணா மலை,
என்ன சொன்னானாம் ?
ஆனை முதுகில் ஏறிச் செல்ல
ஆசை என்றானாம்.
அண்ணா மலை, அண்ணா மலை,
என்ன சொன்னானாம் ?
ஆற்றுக் குள்ளே படகு விடவே
ஆசை என்றானாம்.
அண்ணா மலை, அண்ணா மலை,
என்ன சொன்னானாம் ?
ஆகாயத்தில் விமானம் ஓட்ட
ஆசை என்றானாம்.
அண்ணா மலை, அண்ணா மலை,
என்ன சொன்னானாம் ?
அமெரிக் கர்போல் நிலவில் இறங்க
ஆசை என்றானாம் !
-----------
11. செடி வளர்ப்பேன்
"தாத்தா வைத்த தென்னையுமே
தலையால் இளநீர் தருகிறது.
பாட்டி வைத்த கொய்யாவும்
பழங்கள் நிறையக் கொடுக்கிறது.
அப்பா வைத்த மாஞ்செடியோ
அல்வா போலப் பழம்தருது.
அம்மா வைத்த முருங்கையுமே
அளவில் லாமல் காய்க்கிறது.
அண்ணன் வைத்த மாதுளையோ
கிண்ணம் போலப் பழுக்கிறது.
சின்னஞ் சிறுவன் நானும்ஒரு
செடியை நட்டு வளர்ப்பேனே
---------
12. வா, மழையே வா
கத்திக் கப்பல் செய்து வைத்தேன்.
கால்வாய் கூடத் தோண்டி வைத்தேன்.
வா, மழையே, வா.
வா, மழையே, வா.
சின்னச் செடியை நட்டு வைத்தேன்.
செப்புக் குடத்தை எடுத்து வைத்தேன்.
வா, மழையே, வா.
வா, மழையே, வா.
வீதிப் பக்கம் வந்து நின்றேன்.
மேலே மேலே பார்த்து நின்றேன்.
வா, மழையே, வா.
வா, மழையே, வா.
-------------------
13. தங்கமும் சிங்கமும்
எங்கள் வீட்டுப் பூனை அம்மா
இரண்டு பிள்ளை பெற்றாள்.
இரண்டு பிள்ளை பெற்றாள்-அவள்
என்ன பேரு வைத்தாள் ?
தங்கம் என்றோர் பிள்ளை பெயராம்.
தவிட்டு நிறத்துப் பிள்ளை.
தவிட்டு நிறத்துப் பிள்ளை-அது
தப்பே செய்வ தில்லை.
சிங்கம் என்றோர் பிள்ளை பெயராம்.
தீரம் உடைய பிள்ளை.
தீரம் உடைய பிள்ளை-அது
தீங்கே செய்வ தில்லை.
தங்கம், சிங்கம் இரண்டும் அந்தத்
தாய்க்கு நல்ல பிள்ளை.
தாய்க்கு நல்ல பிள்ளை - இதில்
சற்றும் ஐயம் இல்லை !
---------------
14. ஆண்டவன் தந்த கை
ஆண்டவன் தந்த கை எதற்கு ?
அள்ளிச் சோறு தின்பதற்கு.
ஆண்டவன் தந்த கை எதற்கு ?
அழுக்குத் தேய்த்துக் குளிப்பதற்கு.
ஆண்டவன் தந்த கை எதற்கு ?
ஆடை ஒழுங்காய் அணிவதற்கு.
ஆண்டவன் தந்த கை எதற்கு ?
அழகாய் எழுதிப் படிப்பதற்கு.
ஆண்டவன் தந்த கை எதற்கு ?
அனுதினம் வேலை செய்வதற்கு.
ஆண்டவன் தந்த கை எதற்கு ?
அனைவருக் குதவி செய்வதற்கு.
ஆண்டவன் தந்த கை எதற்கு ?
அவரை நன்றாய்த் தொழுவதற்கு.
-------------
15. சங்கு சக்கரச் சாமி
சங்கு சக்கரச் சாமியாம்;
சாய்ந்து படுத்துக் கிடக்குமாம்;
எங்கே, எங்கே, தெரியுமா?
எங்கள் ஊருக் கோயிலில்.
நீட்டிப் படுத்துக் கிடக்குமாம்;
நீல வண்ணச் சாமியைப்
பாட்டுப் பாடி எழுப்பலாம்.
கூட்ட மாக வாருங்கள்.
---------------
இரண்டாம் பகுதி
16 யார்? யார்? யார்?
17. நிலா, நிலா
18. தெரியுமா தம்பி?
19. கொய்யாப் பழம்
20. உதவும் கத்தி
21. வால்
22. புகை விடாத ரயில்!
23. வெள்ளைக் கொக்கு
24. அன்னம்
25. எட்டு மாடிக் கட்டடம்
26. 7+7=14
27. தூங்கும் விதம்
-----
16. யார்? யார்? யார்?
தொங்க விட்ட சட்டையைத்
தூக்கிக் கீழே போட்டவன்
யார், யார், யார் ?
எழுதி வைத்த தாள்களை
இங்கும் அங்கும் இறைத்தவன்
யார், யார், யார் ?
சன்னல் கதவைப் பட்டெனச்
சாத்தி விட்டுச் சென்றவன்
யார், யார், யார் ?
அருகில் நிற்கும் மரங்களை
அசைத்தே ஆடச் செய்தவன்
யார், யார், யார் ?
'உஸ் உஸ்’ என்று மெல்லவே
ஊதி ஊதிச் செல்பவன்
யார், யார், யார் ?
கண்டு பிடிக்க முடியுமா ?
காண முடியாக் காற்றேதான் !
----------
17. நிலா நிலா
'நிலா, நிலா, ஓடிவா.
நில்லாமல் ஓடிவா’
பல காலம் இப்படிப்
பாடிப் பயன் இல்லையே !
மலை மேலே ஏறி நீ
வருவாய் என்றே எண்ணினோம்.
மல்லி கைப்பூக் கொண்டுநீ
தருவாய் என்றும் பாடினோம்.
எத்த னைநாள் பாடியும்
ஏனோ நீயும் வரவில்லை.
சத்தம் போட்டுப் பாடியும்
சற்றும் நெருங்கி வரவில்லை.
உன்னை விரும்பி அழைத்துமே
ஓடி நீ வராததால்
விண்க லத்தில் ஏறியே
விரைவில் வருவோம் உன்னிடம் !
-----------
18. தெரியுமா தம்பி ?
நெட்டை யான காலுடனே
நீள மான கழுத்துடனே
சுட்டுப் பொசுக்கும் மணலில்கூடச்
சுமையைத் தூக்கிச் செல்லும்அது
என்ன தெரியுமா ? -தம்பி என்ன தெரியுமா ?
முறத்தைப் போன்ற காதுடனே
முகத்தில் ஒற்றைக் கையுடனே
உரலைப் போன்ற காலுடனே
ஊர்வ லத்தில் வருமேஅது
என்ன தெரியுமா ? தம்பி என்ன தெரியுமா ?
பட்டுப் போன்ற உடலுடனே
பலநி றத்தில் இறகுடனே
கட்டை யான குரலுடனே
களித்து நடனம் ஆடும்அது
என்ன தெரியுமா ? தம்பி என்ன தெரியுமா ?
வட்ட மான முகத்துடனே
வளைந்தி ருக்கும் மூக்குடனே
முட்டை போன்ற கண்ணுடனே
வேட்டை ஆடும் இரவில் அது
என்ன தெரியுமா ? தம்பி என்ன தெரியுமா ?
விடைகள் : ஒட்டகம், யானை, மயில், ஆந்தை
-----------
19. கொய்யாப் பழம்
ஐயா வீட்டுக்
கொய்யாப் பழம்
ஆசை யாகத்
தந்த பழம்.
கையில் எடுத்து
வாயில் வைத்துக்
கடிக்கக் கடிக்க
இனிக்கும் பழம்.
ஐயா வீட்டுக்
கொய்யாப் பழம்
ஆசை யாகத்
தந்த பழம்.
நெய்யில் செய்த
லட்டுப் போல
நேர்த்தி யாக
இருக்கும் பழம்
வெயில் நேரம்
தின்னத் தின்ன
மிகவும் சுவை
கொடுக்கும் பழம்.
ஐயா வீட்டுக்
கொய்யாப் பழம்
ஆசை யாகத்
தந்த பழம்.
-----------
20. உதவும் கத்தி
பென்சில் சீவ உதவிடும்
பெரிய பழத்தை நறுக்கிடும்
மரத்துப் பட்டை சீவிடும்
வாழை இலையை அறுத்திடும்
ஓலை நறுக்க உதவிடும்
உடைத்த தேங்காய் கீறிடும்
கயிற்றை அறுக்க உதவிடும்
காய் கறிகள் நறுக்கிடும்
நன்மை செய்ய நித்தமும்
நமக்கு உதவும் கத்தியால்,
கவனக் குறைவி னாலேநாம்
காயப் படுத்திக் கொள்வதா ?
-----------
21. வால்
ஈயை ஓட்ட என்றும் உதவும்
பசுவின் வால்.
எதிர்த்து நீந்தத் துடுப்பாய் உதவும்
மீனின் வால்.
குளிரில் உடம்பைச் சூடு படுத்தும்
அணிலின் வால்.
கிளையில் மாட்டித் தொங்கிட உதவும்
குரங்கின் வால்.
கொடிபோல் ஆட்டி ஆபத்து உணர்த்தும்
முயலின் வால்.
கோபம் வந்தால் சிலிர்த்து நிற்கும்
பூனை வால்.
நன்றியைக் காட்ட நன்றாய் உதவும்
நாயின் வால்.
நமக்கும் இருந்தால் எப்படி உதவும் ?
எண்ணிப் பார்.
----------------
22. புகை விடாத ரயில் !
சம்பத்துக்கு வீடு உண்டு
தாம்ப ரத்திலே.
பட்டுவுக்கு வீடு உண்டு
பல்லா வரத்திலே.
பாலுவுக்கு வீடு உண்டு
பரங்கி மலையிலே.
மாலதிக்கு வீடு உண்டு
மாம்ப லத்திலே.
கோமதிக்கு வீடு உண்டு,
கோடம் பாக்கத்தில்.
குமரனுக்கு வீடு உண்டு
குரோம் பேட்டையில்.
மீனாவுக்கு வீடு உண்டு
மீனம் பாக்கத்தில்.
சௌந்தருக்கு வீடு உண்டு
சைதாப் பேட்டையில்
இவர்கள் வீடு செல்லவே
ஏறு ஏறு ரயிலிலே.
புகைவி டாத ரயிலிலே
போக லாமே விரைவிலே !
-------------
23. வெள்ளைக்கொக்கு
ஆட வில்லை; அசைய வில்லை.
அடடே, பளிங்குச் சிலைபோல்
ஆற்றின் ஓரம் நிற்கும் அந்த
அழகுக் கொக்கைப் பாராய் !
நீண்ட கால்கள், நீண்ட கழுத்து,
நிறமோ வெள்ளை யாகும்.
காண்ப தற்குச் சாது. ஆனால்
கவன மாக நோக்கும்.
ஈட்டி போன்ற அலகை முன்னால்
நீட்டிக் கொண்டு நிற்கும்.
இரையைக் கண்ட வுடனே அதுவும்
எட்டி விரைந்தே பிடிக்கும்.
மீன்கள், நண்டு, தவளை, பூச்சி
விரும்பிப் பிடித்துத் தின்னும்.
மெல்ல நாமும் நெருங்கிச் சென்றால்
விரைந்து மேலே பறக்கும் !
------------
24. அன்னம்
பாலைப் போன்ற வெள்ளை நிற
அன்னத்தைப் பாராய்-அது
படகு போலே அசைந்தி டாமல்
நீந்துது பாராய்.
நீள மாக வளைந்தி ருக்கும்
கழுத்தி னைப் பாராய்-அதோ
நீரில் தலையை விட்டு மீனைப்
பிடிக்குது பாராய்.
அன்னை முதுகில் ஏறிச் செல்லும்
குஞ்சுகள் பாராய்-அவை
அச்சம் வந்தால் சிறகுக் குள்ளே
ஒளிவதைப் பாராய்.
கன்னங் கரிய நிறத்தில் கூட
அன்னம் இருக்குதே!-அதைக்
காண லாமே மிருகக் காட்சி
சாலை தன்னிலே !
----------
25. எட்டு மாடிக் கட்டடம்
எட்டு மாடிக் கட்ட டத்தில்
ஏறி நிற்கிறேன்
இங்கி ருந்தே சென்னை முழுதும்
நன்கு பார்க்கிறேன்
கற்ப காம்பாள் கோயில் அதோ
கண்ணில் தெரியுது
கடற் கரையில் சின்னச் சின்ன
உருவம் தெரியுது
கோட்டை முன்னால் கம்பம் ஒன்றில்
கொடி பறக்குது
கூவம் ஆறு குறுக்கும் நெடுக்கும்
வளைந்து செல்லுது
தலையில் வகிடு எடுத்த தைப்போல்
சாலை தெரியுது
தவழும் குழந்தை போல மோட்டார்
வண்டி நகருது
நிறையக் கப்பல் துறை முகத்தில்
நின்றி ருக்குது.
நிமிர்ந்து நிற்கும் கோபு ரங்கள்
எங்கும் தெரியுது
உயர்ந்த கூண்டு நாலு புறமும்
மணியைக் காட்டுவது
உச்சி யிலே சிலுவை கூட
நன்கு தெரியுது
புகையில் லாத ரயிலும் ஊரில்
புகுந்தே ஓடுது
பொம்மை ரயில் போலே அதுவும்
எனக்குத் தோணுது
மரங்கள் எல்லாம் வீடுகளை
மறைத்து நிற்குது
மாமா வீடு எங்கே? எங்கே?
மனசு தேடுது!
-------------
26. 7 + 7 = 14
ஏழும் ஏழும் பதினாலாம்.
எலியா ருக்கு முழம்வாலாம்.
அறைக்குள் எலியார் புகுந்தாராம்
அங்கும் இ்ங்கும் பார்த்தாராம்.
இரண்டு தட்டில் பணியாரம்
இருந்தது கண்டு மகிழ்ந்தாராம்.
கடித்துக் கடித்துத் தின்றாராம்
கணக்கைக் கூட்டிப் பார்த்தாராம்.
ஏழும் ஏழும் பதினாலாம்
எலியார் ஏப்பம் விட்டாராம் !
----------
27. தூங்கும் விதம்
ஒட்டைச் சிவிங்கி நின்று கொண்டே
நன்கு தூங்கிடும்.
உயரே வௌவால் தலைகீ ழாகத்
தொங்கித் தூங்கிடும்.
சிட்டுக் குருவி மரத்தின் கிளையைப்
பற்றித் தூங்கிடும்.
சின்னப் பாப்பா தொட்டி லுக்குள்
படுத்துத் தூங்கிடும்.
கண்ணை மூடி நாமெல் லாரும்
நன்கு தூங்குவோம்.
கண்ணைத் திறந்த படியே மீனும்
பாம்பும் தூங்கிடும்.
என்ன கார ணத்தி னாலே
என்று தெரியுமா ?
இவைக ளுக்குக் கண் ணைமூட
இமைகள் இல்லையே !
--------------
மூன்றாம் பகுதி
28. இப்படி நேரம் ஒதுக்கிடுவேன்
29. நல்ல ஆசிரியர்
30. கை
31. தாய்மொழி
32. பத்து நண்பர்கள்
33. பாடுவேன், ஊதுவேன்
34. ஒரு வரம்
35. அண்ணாமலை, அண்ணாமலை
36. தாத்தாவின் கைத்தடி
37. கறுப்பும் வெள்ளையும
38. நான் இந்தியன்
39. சின்னச் சின்னக் கோபுரம்
40. மரவட்டை
-------
28. இப்படி நேரம் ஒதுக்கிடுவேன்!
ஓடி ஆட ஒருநேரம்.
உணவை உண்ண ஒருநேரம்.
பாடம் படிக்க ஒருநேரம்.
படுத்துத் தூங்க ஒருநேரம்.
பெற்றோ ருக்கு ஒருநேரம்.
பிறருக் காக ஒருநேரம்.
இப்படி நேரம் ஒதுக்கிடுவேன்.
என்றும் இன்பம் பெற்றிடுவேன்.
------
29. நல்ல ஆசிரியர்
'அ’ 'ஆ’ எனக்குச் சொல்லித் தந்த
ஆசிரியர், நல்ல ஆசிரியர்.
அப்பா வுக்கும் கற்றுக் கொடுத்த
ஆசிரியர் நல்ல ஆசிரியர்.
'அ’ 'ஆ’ எனக்குச் சொல்லித் தந்த
ஆசிரியர், நல்ல ஆசிரியர்.
அம்மா வுக்கும் கற்றுக் கொடுத்த
ஆசிரியர், நல்ல ஆசிரியர்.
எத்தனை பேர்கள் எழுதப் படிக்க
இவரிடம் கற்றுக் கொண்டனரோ !
அத்தனை பேரும் அன்புடன் மதிக்கும்
ஆசிரியர், நல்ல ஆசிரியர் !
-------------
30. கை
அன்னம் எனக்கே
ஊட்டிய கை.
அன்பாய்த் தொட்டில்
ஆட்டிய கை.
வண்ணப் பறவை
காட்டிய கை.
மலர்கள் தலையில்
சூட்டிய கை.
கண்கவர் சட்டை
மாட்டிய கை.
கண்ணில் மையைத்
தீட்டிய கை.
கட்டி அணைத்துப்
போற்றிய கை.
கடவுள் போன்ற
அன்னையின் கை !
------------
31. தாய்மொழி
தாய்சொல்லித் தந்த மொழி.
தாலாட்டில் கேட்ட மொழி.
சந்திரனை அழைத்த மொழி.
சாய்ந்தாடிக் கற்ற மொழி.
பாட்டிகதை சொன்ன மொழி.
பாடிஇன்பம் பெற்ற மொழி.
கூடிஆட உதவும் மொழி.
கூட்டுறவை வளர்க்கும் மொழி.
மனந்திறந்து பேசும் மொழி.
வாழ்க்கையிலே உதவும் மொழி.
எங்கள் தாய்மொழி-மிக
இனிய தமிழ்மொழி.
இனிய தமிழ்மொழி-அது
எங்கள் தாய்மொழி.
-----------
32. பத்து நண்பர்கள்
மொத்தம் நண்பர்கள் பத்துப்பேர்
நித்தம் எனக்கே உதவிடுவார்.
நித்தம் உதவும் அவர்களுமே
நிற்பார் இரண்டு வரிசைகளில்.
பல்லைத் துலக்க ஒருநண்பர்.
பாடம் எழுத இருநண்பர்.
உணவை ஊட்ட ஐவர்களாம்.
உடலைத் தேய்க்கப் பத்துப்பேர்.
இப்படி உதவும் நண்பர்களை
எப்படி நானும் பிரிந்திருப்பேன் ?
என்னை விட்டுப் பிரியாமல்
இருக்கும் அந்த நண்பர்கள்போல்
உங்களி டத்தும் பத்துப்பேர்
ஒட்டிக் கொண்டே இருப்பார்கள்.
அவர்கள் யார்யார் தெரிகிறதா ?
அவசியம் நீங்கள் அறிந்திருப்பீர்.
இருகை விரித்துக்
காட்டுகிறேன்.
எண்ணிப் பார்த்தால்
பத்துப்பேர் !
-----------
33. பாடுவேன், ஊதுவேன்
பாட்டுப் பாடுவேன்-நான்
பாட்டுப் பாடுவேன்.
பலரும் புகழ, இனிய தமிழில்
பாட்டுப் பாடுவேன்.
கேட்டு மகிழவே-நீங்கள்
கேட்டு மகிழவே,
கிளியின் மொழிபோல் இனிய தமிழில்
கீதம் பாடுவேன்-நான்
கீதம் பாடுவேன்.
குழலை ஊதுவேன்-புல்லாங்
குழலை ஊதுவேன்.
கோகு லத்துக் கண்ணன் போலக்
குழலை ஊதுவேன்-நான்
குழலை ஊதுவேன்.
அழகாய் ஊதுவேன்-மிக்க
அழகாய் ஊதுவேன்.
அனைவர் மனமும் மகிழும் வகையில்
அழகாய் ஊதுவேன்-நான்
அழகாய் ஊதுவேன்.
-----------
34. வரம்
இறைவா, எனக்கொரு வரம்தருவாய்.
இனியதை நினைக்க அருள்புரிவாய்.
இறைவா, எனக்கொரு வரத்தருவாய்.
இனியதைப் பேச அருள்புரிவாய்.
இறைவா, எனக்கொரு வரம்தருவாய்.
இனியதைச் செய்ய அருள்புரிவாய்.
எண்ணம், வாக்கு, செய்கையிலே
இனிமை இருந்தால் வாழ்க்கையிலே,
இன்பம், இன்பம், இன்பம்தான்.
இல்லா விட்டால் துன்பம்தான் !
---------
35. அண்ணாமலை, அண்ணாமலை
அண்ணாமலை, அண்ணாமலை
அண்ணாந்து பார்த்தான்.
ஐம்பதடி உயரத்திலே
அண்ணாந்து பார்த்தான்.
அண்ணாமலை, அண்ணாமலை
அண்ணாந்து பார்த்தான்.
ஆடிஆடிப் பறக்கும்பட்டம்
அண்ணாந்து பார்த்தான்.
அண்ணாமலை, அண்ணாமலை
முன்னாலே பார்த்தான்.
ஐம்பதடி தூரத்திலே
முன்னாலே பார்த்தான்.
அசைந்தசைந்து நடந்துவரும்
ஆனையைப் பார்த்தான்
அண்ணாமலை, அண்ணாமலை
பின்னாலே பார்த்தான்.
ஐம்பதடி தூரத்திலே
பின்னாலே பார்த்தான்.
அண்ணாமலை, அண்ணாமலை
பின்னாலே பார்த்தான்
ஆடிப்பாடி ஓடிவரும்
அலமுவைப் பார்த்தான்.
அண்ணாமலை, அண்ணாமலை
அண்ணாந்து பார்த்தான்
அண்ணாமலை, அண்ணாமலை
முன்னாலே பார்த்தான்.
அண்ணாமலை, அண்ணாமலை
பின்னாலே பார்த்தான்.
அலமு, யானை, பட்டமெல்லாம்
கண்ணாலே பார்த்தான் !
--------
36. தாத்தாவின் கைத்தடி
எங்கள் பூசை அறையிலே
இருக்கும் அழகுக் கைத்தடி
எங்கள் தாத்தா கையிலே
இருந்த நல்ல கைத்தடி
தங்கப் பூணும் பிடித்தது
சந்த னம்தான் மணக்குது
பெங்க ளூரில் இருக்கையில்
எங்கள் தாத்தா பெற்றது
அறுப தாண்டு நிறைந்ததும்
அருமைத் தாத்தா நண்பர்கள்
பிரிய மாகத் தந்தது
பெருமை மிக்க கைத்தடி !
-----------
37. கறுப்பும் வெள்ளையும்
கறுப்பு, வெள்ளை இரண்டு நிறமும்
கலந்தி ருக்கும் எங்கள் பசு.
காலை, மாலை இரண்டு வேளை
பாலைத் தரும் எங்கள் பசு.
கறுப்பும் வெள்ளையும் கலந்த பசுவில்
கறந்து கறந்து வெள்ளைப் பாலை
விரும்பி நாங்கள் குடித்தி டுவோம்;
மிகவும் மகிழ்ச்சி அடைந்திடுவோம்.
------------
38. நான் இந்தியன்
'இந்தியன்’ என்று சொல்லிக் கொள்வதில்
என்றும் பெருமை கொண்டிடுவேன் !
இந்திய னாக இருந்திட நானும்
என்றும் முயற்சி செய்திடுவேன் !
இந்தியர் அனைவரும் ஒன்றென எண்ணி
என்றும் அன்பாய் நடந்திடுவேன் !
இந்திய நாட்டின் பெருமை உயர
இயன்றதை யெல்லாம் செய்திடுவேன் !
-------------
40. மரவட்டை
ஊர்ந்து செல்லும் அட்டையைக்
கூர்ந்து பார்த்தேன் நானுமே.
அடடே, கால்கள் எத்தனை !
யாரால் எண்ண முடியுமோ ?
ஆயி ரந்தான் இருக்குமோ ?
அதற்கு மேலும் போகுமோ ?
இரண்டு கால்கள் உடையநான்
என்ன வேகம் செல்கிறேன்.
ஆயி ரங்கால் இருந்துமே
அதற்கு வேகம் இல்லையே !
கிட்டச் சென்றே அட்டையைத்
தொட்டுப் பார்த்தேன், நானுமே.
சட்டென் றந்த அட்டையும்
வட்ட மாகச் சுருண்டதே !
அம்மா செய்த முறுக்குப்போல்
அழகாய் அட்டை இருக்குது.
அழகாய் அட்டை இருக்குது;
அசைந்தி டாமல் கிடக்குது.
அம்மா செய்த முறுக்கையே
ஆசை யாகத் தின்னலாம்.
சும்மா கிடக்கும் அட்டையைச்
சுவைக்க யாரும் நினைப்பரோ ?
------------
நான்காம் பகுதி
41. என் பிறந்த நாள்
42. ஏணி மேலே ஏணி
43. பாப்பாவின் அழுகை
44. பள்ளிக்கூட மணி
45. அதிசயம்
46. ராஜ கோபுரம்
47. குற்றாலத்துக் குரங்கு
48. கண்ணன் வீட்டுத் தோட்டம்
49. கண்ணன் கையில் கண்டது
50. பெரிய கண்டம்
51. சிரிக்கும் பூக்கள்
52. குரங்குக் குடும்பம்
53. அவர் யார்?
54. கந்தன் சொல்கிறான்
55. ராமனும் கண்ணனும
56. சிரிக்கும் தாத்தா
57. கூடப் பிறந்தவர்
58. புத்தகம் இதோ!
59. என் கடிதம்
-----
41. என் பிறந்த நாள்
இன்று எனக்குப் பிறந்தநாள்
இறைவன் என்னைப் படைத்தநாள்.
அன்பு காட்டி வாழவும்,
அறிவை வளர்த்துக் கொள்ளவும்,
என்றும் நன்மை செய்யவும்
எண்ணிப் பார்க்கும் நல்லநாள்.
இன்று எனக்குப் பிறந்தநாள்
இறைவன் என்னைப் படைத்தநாள்.
உண்மை பேசி உயரவும்,
உயர்ந்தோர் வழியில் செல்லவு ம்,
தன்னம் பிக்கை கொள்ளவும்
சாமி அருளை வேண்டும்நாள்.
இன்று எனக்குப் பிறந்தநாள்
இறைவன் என்னைப் படைத்தநாள்.
-----------
42. ஏணி மேலே ஏணி
ஏணி மேலே ஏணி வைத்து
ஏறப் போகிறேன்.
ஏறி ஏறி எட்டி வானை
முட்டப் போகிறேன்.
வானில் உள்ள மீனை யெல்லாம்
வளைக்கப் போகிறேன்.
வளைத்து வளைத்துச் சட்டைப் பைக்குள்
அடைக்கப் போகிறேன்.
பந்து நிலா அதை எடுத்து
வீசப் போகிறேன்.
பாலு, சோமு உங்கள் சமர்த்தைப்
பார்க்கப் போகிறேன்.
முந்திப் பந்தைப் பிடிப்பவனை
வாழ்த்தப் போகிறேன்.
மூச்சுப் பிடித்துப் பூமிமீது
குதிக்கப் போகிறேன்.
-----------
43. பாப்பாவின் அழுகை
சின்னப் பாப்பா அழுதது;
தேம்பித் தேம்பி அழுதது.
கிட்டு அண்ணன் ஓடி வந்தான்;
அழுகை நிற்க வில்லை.
கிலுகி லுப்பை ஆட்ட லானான்;
அழுகை நிற்க வில்லை !
சின்னப் பாப்பா அழுதது;
தேம்பித் தேம்பி அழுதது.
பொன்னி அக்கா ஓடி வந்தாள்;
அழுகை நிற்க வில்லை.
'பூம்பூம்’ என்றே ஊத லானாள்;
அழுகை நிற்க வில்லை !
சின்னப் பாப்பா அழுதது;
தேம்பித் தேம்பி அழுதது.
சத்தம் கேட்டே அப்பா வந்தார்;
அழுகை நிற்க வில்லை.
தாளம் போட்டுக் காட்டலானார்
அழுகை நிற்க வில்லை!
சின்னப் பாப்பா அழுதது;
தேம்பித் தேம்பி அழுதது.
அம்மா உடனே அருகில் வந்தாள்;
அழுகை நிற்க வில்லை.
'ஆ...ராரோ’ பாட லானாள்
அழுகை பறந்து போச்சு !
------------
44. பள்ளிக்கூட மணி
டாண் டாண், டாண் டாண்
மணி அடிக்குது.
நம்மையெல்லாம் வருகவருக
என்ற ழைக்குது.
சிறுவரோடு சிறுமியரைச்
சேரத்த ழைக்குது.
அவரவர்கள் இடத்தில்வந்தே
அமரச் சொல்லுது.
ஆசிரியர் வந்ததுமே
நிற்கச் சொல்லுது.
அக்கறையாய்ப் பாடமெல்லாம்
கற்கச் சொல்லுது.
படித்தபடி வாழ்க்கையிலே
நடக்கச் சொல்லுது.
பலரும்போற்ற நல்லபெயர்
எடுக்கச் சொல்லுது !
-------------
45. அதிசயம்!
அழகுத் தோகை விரித்து நன்றாய்
ஆடும் மயிலைப் பாராய்.
அந்த மயிலும் ஆண்மயில்தான்
அதனை நீயும் அறிவாய
அமுத மாகக் குயிலும் பாடும்
அதனைக் கேட்டு, மகிழ்வாய்
அந்தக் குயிலும் ஆண்குயில்தான்
அதனை நீயும் அறிவாய்.
அடர்ந்த பிடரி மயிர்இருக்கும்
அழகுச் சிங்கம் பாராய்
அந்தச் சிங்கம் ஆண் சிங்கம்தான்
அதனை நீயும் அறிவாய்.
அழகுத் தோகை, இனிய குரலும்,
அடர்ந்த பிடரி மயிரும்
ஆண்இனத்தில் இருக்கும் இந்த
அதிச யத்தை அறிவாய் !
-------------
46. ராஜ கோபுரம்
பொழுது புலரும் வேளையில்
எழுந்து செல்வேன் வேகமாய்.
அழகு ராஜ கோபுரம்
அருகில் தெரியும், வணங்குவேன்.
ஏழ டுக்குக் கோபுரம்
எங்கள் ஊருக் கோபுரம்
மேலே காணும் கலசங்கள்
மினுமி னுக்கும் பொன்னைப் போல்.
ஆனை முகத்துக் கணபதி
அழகு மயிலில் வேலவன்
வீணை யோடு கலைமகள்
வெற்றி அளிக்கும் திருமகள்
காளை மீது சிவனுடன்
காட்சி அளிக்கும் பார்வதி
மேலும் கடவுள் பலரையும்
வெளியில் காட்டும் கோபுரம்.
தெய்வ மெல்லாம் கூடியே
சேர்ந்து காட்சி தருவதால்
கைகள் கூப்பித் தொழுகிறேன்
காலை எழுந்த உடனேயே.
---------
47. குற்றாலத்துக் குரங்கு
குற்றா லத்து மலையிலே
குரங்கு ஒன்று இருந்ததாம்.
குரங்கு ஒன்று இருந்ததாம்.
குட்டி யோடு வாழ்ந்ததாம்.
அம்மாக் குரங்கும் குட்டியும்
அருவி நீரில் குளிக்குமாம்.
அருவி நீரில் குளிக்குமாம்.
ஆனந் தமாய்க் குதிக்குமாம்.
குளித்த பிறகு இரண்டுமே
குடுகு டென்றே ஓடுமாம்.
குடுகு டென்றே ஓடுமாம்.
கோயில் வாசல் சேருமாம்.
குட்டிக் குரங்கும் தாயுமே
கோயி லுக்குள் செல்லுமாம்,
கோயி லுக்குள் செல்லுமாம்.
குனிந்து வணக்கம் செய்யுமாம்.
பழங்கள் தேங்காய்த் தட்டுடன்
பக்தர் அங்கே வருவராம்
பக்தர் அங்கே வருவராம்.
பார்த்துக் கொண்டே யிருக்குமாம்.
தட்டி லுள்ள பொருள்களைத்
தட்டிப் பறிப்ப தில்லையாம்.
தட்டிப் பறிப்ப தில்லையாம்.
தடங்கல் செய்வ தில்லையாம்.
அர்ச்ச னைகள் நடப்பதை
அம்மாக் குரங்கு காட்டுமாம்.
அம்மாக் குரங்கு காட்டுமாம்.
அதனைக் குட்டி பார்க்குமாம்.
குங்கு மத்தைத் தாயுமே
குனிந்து பணிந்து வாங்குமாம்.
குனிந்து பணிந்து வாங்குமாம்.
குட்டி தன்னை நெருங்குமாம்.
குட்டிக் குரங்கின் நெற்றியில்
பொட்டு வைத்து மகிழுமாம்.
பொட்டு வைத்து மகிழுமாம்.
கட்டி முத்தம் கொடுக்குமாம்.
பக்தர் இரண்டு குரங்கையும்
பார்த்துப் பார்த்து மகிழ்வராம்.
பார்த்துப் பார்த்து மகிழ்வராம்.
பழங்கள் தேங்காய் தருவராம்.
அம்மா குரங்கும் குட்டியும்
அவற்றை வாங்கிக் கொள்ளுமாம்.
அவற்றை வாங்கிக் கொள்ளுமாம்.
ஆசை யாகத் தின்னுமாம்.
தின்ற பிறகு இரண்டுமே
தீர்த்தம் வாங்கிக் குடிக்குமாம்.
தீர்த்தம் வாங்கிக் குடிக்குமாம்.
திரும்பி ஓட்டம் பிடிக்குமாம்
-----------
48. கண்ணன் வீட்டுத் தோட்டம்
கண்ணன் வீட்டுத் தோட்டத்திலே
வண்ண வண்ண மலர்கள் உண்டு.
வண்ண மலர்கள் கூட்டத்திலே
வாச னைகள் அதிகமுண்டு.
வாச னையை அறிந்துகொண்டு
வண்டு தேடி வருவதுண்டு.
வண்டின் பசியைத் தீர்த்திடவே
மலர்கள் தேனைத் தருவதுண்டு.
மலர்கள் தந்த தேனைஉண்டு
வண்டு சுற்றி வருவதுண்டு.
வண்டு சுற்றிச் சுற்றிவந்து
வாழ்த்துப் பாடி மகிழ்வதுண்டு.
----------
49. கண்ணன் கையில் கண்டது....?
கோகு லத்துக் கண்ணன் அதோ
தெருவில் வருகிறான்.
குறும்புச் சிரிப்புச் சிரித்துக் கொண்டே
அருகில் வருகிறான்.
மேக வண்ணக் கண்ணன் அதோ
தெருவில் வருகிறான்.
மெல்ல, மெல்ல நடந்து நடந்தே
அருகில் வருகிறான்.
கையைப் பின்னால் மறைத்துக் கொண்டே
கண்ணன் வருகிறான்.
கள்ளச் சிரிப்புச் சிரித்துக் கொண்டே
கண்ணன் வருகிறான்.
பையப் பைய நடந்து நடந்து
கண்ணன் வருகிறான்.
பார்த்துக் கண்ணைச் சிமிட்டிக் கொண்டே
கண்ணன் வருகிறான்.
ஃ ஃ ஃ
கண்ணன் எதையோ பின்புறம்
கையில் வைத்து மறைக்கிறான்.
என்ன வாக இருக்குமோ?
எட்டிப் பார்த்தேன், ஆவலாய்.
எட்டி எட்டிப் பார்த்துமே
எனக்குத் தெரிய வில்லையே !
சுற்றி வந்தேன் கண்ணனை.
சுற்றி அவனும் ஏய்த்தனன் !
மாயக் காரன் கைகளை
மறைத்து மறைத்து வைத்ததால்,
ஓய்ந்து போனேன். கடைசியில்
உயரே கையைத் தூக்கினான்.
கண்ணன் கையில் இருந்ததைக்
கண்ட வுடனே நானுமே
கொண்டேன் மிகவும் இன்பமே
குதிக்க லானேன், மகிழ்ச்சியில் !
கண்ணன் கையில் இருந்தது
என்ன என்று தெரியுமா ?
வெண்ணெய் இல்லை; குழல் இல்லை.
வேறே என்ன இருந்தது ?
கண்ணன் கையில் இருந்தது
கால மெல்லாம் உதவிடும்
உண்மை கூறும் புத்தகம்
உயர்ந்த பகவத் கீதையாம் !
------------
50. பெரிய கண்டம்
கண்டங் களிலே மிகவும் பெரிய
கண்டம் ஆசியா.
காடு மலை பீட பூமி
நிறைந்த ஆசியா.
பண்டைக் கால ஆதி மனிதர்
பிறந்த ஆசியா.
பழமை யான நாக ரிகம்
சிறந்த ஆசியா.
புத்தர், ஏசு, நபிகள், காந்தி
பிறந்த ஆசியா.
புனித மான மதங்கள் பிறந்து
வளர்ந்த ஆசியா.
மொத்தம் இந்த உலகில் உள்ள
கண்டம் ஐந்திலே
மிகவும் அதிக மக்கள் வாழும்
கண்டம் ஆசியா.
----------
51. சிரிக்கும் பூக்கள்
வண்ண வண்ணப் பூக்கள்-நல்ல
மணம் நிறைந்த பூக்கள்.
என்னைப் பார்த்துச் சிரிக்கும்-அவை
இனிய நல்ல பூக்கள்.
நீலம், பச்சை, சிவப்பு-இன்னும்
நிறங்கள் பலவும் உண்டு.
காலை நேரம் வருவேன்-இந்தக்
காட்சி கண்டு மகிழ்வேன்.
ஆடி அசையும் பூக்கள்-நான்
அருகில் சென்று பறிப்பேன்.
கூடை நிறைந்து போகும்-நான்
கொய்த மலர்கள் சிரிக்கும்.
பார்க்கும் போதும் சிரிக்கும்-நான்
பறிக்கும்போதும் சிரிக்கும்.
சேர்த்துக் கட்டும் போதும்-அவை
சிரித்துக் கொண்டே இருக்கும் !
கண்ணன் சிலைக்குப் போட-நான்
கட்டி வைத்த பூக்கள்
என்னைப் பார்த்துச் சிரிக்கும்-என்
சின்னத் தம்பி போல !
----------
52. குரங்குக் குடும்பம்
(மாமல்லபுரச் சிற்பம்)
அப்பாக் குரங்கு பின்புறத்தில்
அமர்ந்தி ருக்குது;
அம்மாக் குரங்கின் தலையி லிருந்து
பேன் எடுக்குது.
பிள்ளைக் குரங்கு அம்மா மடியில்
படுத்தி ருக்குது.
பிரிய மாக அம்மா அதற்குப்
பால் கொடுக்குது.
அன்பு, பாசம், கடமை யெல்லாம்
கல்லில் காட்டிடும்
அற்பு தத்தைச் செய்த சிற்பி
அவரைத் தெரியுமோ?
இன்று அவரைத் தெரிய வி்ல்லை
என்ற போதிலும்,
இந்தக் காட்சி நமது நெஞ்சில்
என்றும் நிற்குமே !
-------------
53. அவர் யார்?
தட்டில் இருந்த சோளப் பொரியை
விட்டு எறிந்த தார்? -பின்
நட்ட நடுவே அந்த வெள்ளித்
தட்டை வைத்த தார்?
வட்ட மாக நீலத் திரையில்
வெட்டி எடுத்த தார்?- சுற்றிப்
பொட்டுப் பொட்டாய் எங்கும் சரிகைப்
புள்ளி வைத்த தார்?
பட்டுத் துணியில் முத்தை எங்கும்
ஒட்டி வைத்த தார்?-அதன்
நட்ட நடுவே குண்டு விளக்கைக்
கட்டி விட்ட தார்?
பட்டப் பகலாய் ஒளியை வீசும்
வட்ட நிலவைப் பார்-உடன்
வெட்ட வெளிச்ச மாகத் தெரியும்,
இந்தப் பாடல் பார் !
-----------------
54. கந்தன் சொல்கிறான்
ஊரின் கோடியில் ஒருகுடிசை-அந்த
ஓலைக் குடிசை என்குடிசை.
சூறைக் காற்றில் பறக்கும் அது.
சிறுமழை பெய்யினும் ஒழுகும் அது.
யாரும் உள்ளே நுழைந்திடலாம்.
இழுத்துச் சாத்திடக் கதவில்லை.
ஊரின் கோடியில் ஒருகுடிசை-அந்த
ஓலைக் குடிசை என்குடிசை.
அருகில் எந்தத் தெருவுமில்லை.
அந்திபட் டாலோ விளக்குமில்லை.
சிறுஅகல் விளக்கில் படித்திடுவேன்.
தேர்வில் நிச்சயம் வென்றிடுவேன்.
ஊரின் கோடியில் ஒருகுடிசை-அந்த
ஓலைக் குடிசை என்குடிசை.
ஏழைக் குடிசையில் பிறந்தாலும்
எத்தனை துன்பப் பட்டாலும்
நாளைய தலைவன் ஆவதற்கு
நாளும் முயற்சி செய்திடுவேன்.
ஊரின் கோடியில் ஒருகுடிசை-அந்த
ஓலைக் குடிசை என்குடிசை.
-----------
55. ராமனும் கண்ணனும்
ராமன் பிறந்தது நவமியிலே.
நட்ட நடுப்பகல் வேளையிலே.
கண்ணன் பிறந்தது அஷ்டமியில்
காரிருள் நடுநிசி வேளையிலே.
ராமன் பிறந்தது அரண்மனையில்
நன்றாய்ப் பார்த்தனர் மக்களெல்லாம்.
கண்ணன் பிறந்தது கடும்சிறையில்.
கண்டவர் தாயும் தந்தையுமே.
சூரிய குலத்தில் ராமனுமே
தோன்றினன், பெருமை தோன்றிடவே.
சந்திர குலத்தில் கண்ணனுமே
வந்தனன், பெருமை தந்திடவே.
மனிதர் போல இவ்வுலகில்
வாழ்ந்து காட்டினன் ராமனுமே.
மாயா ஜாலம் பலபுரிந்து
வாழ்ந்தனன் நீலக் கண்ணனுமே.
ராமன் வாழ்வைப் பின்பற்றி
நடந்திட நம்மால் முடிந்திடுமே.
கண்ணன் வாழ்வும் அப்படியா?
எண்ணிப் பார்க்கவும் முடியாதே !
ராமன் பெற்ற குணங்களெலாம்
நாமும் பெற்றுச் சிறந்திடுவோம்.
கண்ணன் கீதையில் கூறியதைக்
கற்றே நாமும் உயர்ந்திடுவோம்.
வாழ்ந்து காட்டிய ராமனையும்
வழியைக் காட்டிய கண்ணனையும்
வாழ்வில் என்றும் மறவோமே !
மறவோம், மறவோம், மறவோமே !
------------
56. சிரிக்கும் தாத்தா
எங்கள் வீட்டுக் கூடம் அதிலே
இருக்கும் காந்தித் தாத்தா.
என்றும் என்னைப் பார்த்துப் பார்த்துச்
சிரிக்கும் காந்தித் தாத்தா.
'உண்மை, அகிம்சை, இரண்டும் நமது
கண்கள்’ என்னும் தாத்தா.
'உயிர்கள் யாவும் உறவு’ என்றே
உணர்த்தும் காந்தித் தாத்தா.
உழைத்தி டாமல் உண்ணு வோரைத்
திருடர் என்பார் தாத்தா.
உலகில் உள்ள இருளைப் போக்கும்
ஒளியாய் வந்த தாத்தா.
நமது நாட்டின் சுதந்தி ரத்தைப்
பெற்றுத் தந்த தாத்தா.
நாமெல் லாரும் வாழும் வழியைக்
கற்றுத் தந்த தாத்தா.
----------
57. கூடப் பிறந்தவர்
கோடி கோடி பேர்கள் என்றன்
கூடப் பிறந்தவர்.
குமரி முதலாய் இமயம் வரையில்
வாழ்ந்து வருபவர்.
ஓடி ஓடி உழைத்து நாட்டை
உயரச் செய்பவர்.
உரிமை, கடமை இரண்டும் இரண்டு
கண்கள் என்பவர்.
வேறு வேறு மொழிகள் பேசும்
மக்க ளாயினும்
வெறுப் பில்லாமல் விருப்ப மோடு
கூடி வாழ்பவர்.
சீரும் சிறப்பும் பெற்று நமது
நாடு திகழவே
திட்ட மிட்டு வேலை செய்யும்
திறமை மிக்கவர்.
புத்தர், காந்தி, நேரு பிறந்த
நாட்டில் பிறந்ததைப்
பெருமை யாக எண்ணி மேலும்
பெருமை சேர்ப்பவர்.
இத்த லத்தில் பார தம்போல்
இல்லை எங்குமே
என்று சொல்லும் நல்ல நாளைக்
காணத் துடிப்பவர்.
-----------
58. புத்தகம் இதோ !
புத்தகம் இதோ
புத்தகம் இதோ
நித்தம் நித்தம் உதவுகின்ற
புத்தகம் இதோ !
முத்து முத்துக் கதைக ளெல்லாம்
விரும்பி நாமும் படித்திட
உத்த மர்கள் வாழ்க்கை தன்னை
உணர்ந்து நாமும் நடந்திட
புத்தகம் இதோ
புத்தகம் இதோ
நித்தம் நித்தம் உதவுகின்ற
புத்தகம் இதோ !
குருவைப் போல நல்ல தெல்லாம்
கூறி நம்மை உயர்த்திட
அருமை நண்பன் போல் நமக்கு
அருகில் இருந்து உதவிட
புத்தகம் இதோ
புத்தகம் இதோ
நித்தம் நித்தம் உதவுகின்ற
புத்தகம் இதோ !
மெத்தப் பெரிய கவிஞ ரோடும்
வேண்டும் போது பேசிட
சித்தம் மகிழச் செய்யும் நல்ல
சித்தி ரங்கள் பார்த்திட
புத்தகம் இதோ
புத்தகம் இதோ
நித்தம் நித்தம் உதவுகின்ற
புத்தகம் இதோ !
இரவும் பகலும் எந்த நாளும்
ஏற்ற கல்வி கற்றிட
உரிய முறையில் அறிவு பெற்றே
உயர்ந்து நாமும் சிறந்திட
புத்தகம் இதோ
புத்தகம் இதோ
நித்தம் நித்தம் உதவுகின்ற
புத்தகம் இதோ !
--------
59. என் கடிதம்
அருமை மிக்க நண்ப னுக்குக்
கடிதம் எழுதவே
ஆசை யாக வெள்ளைத் தாளை
எடுத்துக் கொள்ளுவேன்.
'அன்பு மிக்க சோமு வுக்கு,’
என்று தொடங்குவேன்.
அச்ச டித்த எழுத்தைப் போல
அழகாய் எழுதுவேன்.
'வணக்கம்’ என்றே அடுத்த வரியில்
தனியாய் எழுதுவேன்.
வரிசை யாகத் தகவல் யாவும்
புரியக் கூறுவேன்.
ஆசை யாகக் கடிதம் தன்னை
எழுதி முடித்ததும்
'அன்பு நண்பன்,’ என்றே எழுதி
அதற்கும் அடியிலே,
'கண்ணன்’ என்றே கையெ ழுத்தைப்
போட்டு நானுமே,
கடிதம் அதனை உறைக்குள் வைத்துக்
கருத்தாய் ஒட்டுவேன்.
குண்டு குண்டாய் நண்ப னுடைய
விலாசம் எழுதுவேன்.
குறையில் லாமல் அஞ்சல் தலையை
உறைமேல் ஒட்டுவேன்.
அஞ்சல் பெட்டி வாய்க்குள் போட்டு
வீடு திரும்புவேன்.
அருமை நண்பன் பதிலைக் காண
ஆவல் கொள்ளுவேன்.
-----------
ஐந்தாம் பகுதி
60. கொய்யாப் பூவே!
61. மத்தாப்பு
62. சிறுவர் பத்திரிகை
63. அண்ணனின் வேலை
64. பெருமை மிக்க பாரதம்
65. ஆறு சிறுவர்கள்
66. நான்கு குழந்தைகள்
67. நமது இமயம்
68. கண்ணன் மீண்டும் பிறப்பானா ?
69. தம்பி பிறந்த நாள் 115
70. காந்தியைக் காணலாம்
71. தாத்தாவும் பேரனும்
72. எனது ஊர்
73. சேவகரும் சேர்ந்தனர்!
------
60.. கொய்யாப் பூவே !
கொய்யாப் பூவே, கொய்யாப் பூவே,
தரையில் கிடப்பதேன்?
குருவி, காகம் கிளையில் அமர்ந்து
கொத்திப் போட்டதோ?-இல்லை,
பெரிய காற்று விரைந்து வந்து
பிய்த்துப் போட்டதோ?
கொய்யாப் பூவே, கொய்யாப் பூவே,
தரையில் கிடப்பதேன்?
குறும்புப் பையன் எறிந்த கல்லால்
பிரிய நேர்ந்ததோ? - இல்லை,
கொறிக்கும் அணில்தான் உன்னைக் கீழே
பறித்துப் போட்டதோ?
கொய்யாப் பூவே, கொய்யாப் பூவே,
தரையில் கிடப்பதேன்?
ஃ ஃ ஃ
பூவே, நீயே காய்ஆவாய்.
காயி லிருந்து கனிஆவாய்.
கனியை உடனே பறித்திடலாம்
கடித்துக் கடித்துச் சுவைத்திடலாம்
என்றே நானும் சிலநாளாய்
எண்ணி யிருந்தேன். ஆனால்என்
எண்ணத் தினிலே மண்விழவா
இப்படி மண்ணில் நீ விழுந்தாய் ?
------------
61. மத்தாப்பு
(முன்னும் பின்னும்)
கம்பி மத்தாப்பு-அதைக்
கையில் பிடித்ததுமே
தம்பி கொளுத்தினான்-நண்பர்
தாவி வந்தனர்.
நண்பர் அனைவரும்-பார்த்து
நன்கு ரசித்தனர்.
வண்ணப் பொறிகளை-கண்டு
மகிழ்ந்து குதித்தனர்.
"எரிந்த கம்பியை-உடன்
எடுத்துச் சென்றுநீ
தெருவின் ஓரமாய்-போட்டுத்
திரும்பி வந்திடு.
நட்ட நடுவிலே-போட்டால்,
நடப்போர் கால்களைச்
சுட்டுப் பொசுக்கிடும்”-எனச்
சொன்னார் தந்தையும்.
எரியும் போதிலே-'ஓஹோ!'
என்று புகழ்ந்தனர்.
எரிந்து முடிந்ததும்-அந்தோ,
இந்த நிலைமையா!
---------
62. சிறுவர் பத்திரிகை
சிறுவருக் கான பத்திரி கைகள்
நிறைய வேண்டும்.
சித்திரம் எல்லாப் பக்கங் களிலும்
திகழ வேண்டும்.
அருமை யான கதையும் பாட்டும்
இருக்க வேண்டும்.
அறிவைப் புகட்டும் கட்டுரை பலவும்
அமைய வேண்டும்.
தெய்வ பக்தி, தேச பக்தி
ஊட்ட வேண்டும்.
சிரிக்க வைக்கும் செய்தி கூட
இருக்க வேண்டும்.
ஐயம் தீர்க்கக் கேள்வியும் பதிலும்
அவசியம் வேண்டும்.
அறிஞர் வாழ்வை அழகாய் எடுத்துக்
கூற வேண்டும்.
புத்தம் புதிய கலைகள் எல்லாம்
விளக்க வேண்டும்.
புதிர்கள் போட்டு நமது அறிவை
வளர்க்க வேண்டும்.
நித்தம் நமது பண்பை மேலும்
உயர்த்த வேண்டும்.
நிலைத்த புகழைப் பெறவே வழிகள்
காட்ட வேண்டும்.
உற்ற நண்பர் போலே அவையும்
உதவ வேண்டும்.
உதவி, உதவி நமது வாழ்வை
உயர்த்த வேண்டும்.
பெற்றோர் அவற்றைக் காசு கொடுத்து
வாங்க வேண்டும்.
பிள்ளைக ளுக்குப் பிரியத் துடனே
வழங்க வேண்டும்.
---------
63. அண்ணனின் வேலை
எங்கள் அண்ணன் செய்த வேலை
என்ன என்று தெரியுமா?
வேளா வேளை தின்று விட்டு
விழுந்து படுத்துத் தூங்க வில்லை.
பாழாய்ப் போன சினிமாப் பார்க்கப்
பகலில் க்யூவில் நிற்க வில்லை.
கெட்ட நண்பர் கூடச் சேர்ந்து
வட்ட மிட்டுத் திரிய வில்லை.
வெட்டிப் பேச்சுப் பேசிக் கொண்டு
வீம்புச் சண்டை போடவில்லை.
எங்கள் அண்ணன் செய்த வேலை
என்ன என்று தெரியுமா?
பார தத்தைத் தாக்க வந்தார்
பகைவர் என்று தெரிந்ததும்,
வீரம் பொங்கத் தீரத் தோடு
விரைந்து சென்றார் போர்க்களம்.
உறக்கம் இன்றி, உணவும் இன்றி
உயிரை மதித்தி டாமலே,
அரக்க ரான எதிரிப் படையை
அலற அலற விரட்டினார்.
மூர்க்க மான டாங்கிப் படையை
முறிய டித்து நொறுக்கினார்.
தாக்க வந்த விமானம் யாவும்
தவிடு பொடியாய் ஆக்கினார்.
சிங்கம் போல வீரத்தோடு
தேசம் தன்னைக் காக்கவே
எங்கள் அண்ணன் செய்த வேலை
எனக்குப் பெருமை அல்லவோ?
எனக்கு மட்டும் பெருமையில்லை;
இந்தி யர்க்கே பெருமையாம்!
--------
64. பெருமை மிக்க பாரதம்
பெருமை மிக்க பார தத்தில்
பிறந்த குழந்தைகள்-என்ற
பெருமை யோடு நாமெல் லோரும்
வளர்ந்து வருகிறோம்.
சிறந்த குணங்கள் பெற்று நமது
நாடு செழிக்கவே
செயல்கள் பலவும் திருத்த மாகச்
செய்து மகிழுவோம்.
அன்னை, தந்தை மகிழும் வகையில்
கற்று வருகிறோம்-நல்ல
அறிஞர் சொன்ன வழியில் நாளும்
நிற்க முயல்கிறோம்.
உண்மை ஒன்றே கடவுள் என்றே
உணர்ந்து வருகிறோம்.
உழைத்து நாமும் உயர்வோம் என்றே
உறுதி கொள்கிறோம்.
ஏழை யென்றும் எளியோ ரென்றும்.
எண்ணங் கொண்டிடோம்-நாம்
இந்தி யர்கள் அனைவ ருக்கும்
சொந்த மாகிறோம்.
நாளை இந்த நாட்டை நாமே
ஆளப் போகிறோம்-இன்றே
நல்ல முறையில் அடித்த ளத்தை
அமைத்துக் கொள்ளுவோம்
-------------
65. ஆறு சிறுவர்கள்
சின்னஞ் சிறிய ஊரு-இதில்
தென்னை மரங்கள் நூறு.
என்னை சேர்த்து மொத்தம்-இங்கே
இருக்கும் சிறுவர் ஆறு.
கடைகள் இங்கே இல்லை.
கல்விக் கூடம் இல்லை.
நடந்து சென்றே கற்போம்,
நான்கு கிலோ மீட்டர்.
முருகன் முதலாம் வகுப்பு.
மோசஸ் இரண்டாம் வகுப்பு.
கறுப்பன் மூன்றாம் வகுப்பு.
காசிம் நான்காம் வகுப்பு.
நந்தன் ஐந்தாம் வகுப்பு.
நானோ ஆறாம் வகுப்பு.
ஐந்து பேரும் என்னை
அண்ணா என்றே அழைப்பார்.
சுட்டுப் பொசுக்கும் வெயிலில்,
சுழற்றி அடிக்கும் காற்றில்
கொட்டும் மழையில் கூட
கூடி நாங்கள் செல்வோம்.
படித்துப் படித்து மேலும்
பட்டம் பலவும் பெறுவோம்.
படித்து முடித்த பின்னர்
பலரும் போற்ற வாழ்வோம்
------------
66. நான்கு குழந்தைகள்
எங்கள் வீட்டில் குழந்தைகள்
என்னைச் சேர்த்து நான்கு பேர்.
தங்கைப் பாப்பா ஒன்று.
சமர்த்துப் பையன் இரண்டு.
சின்னக் கண்ணன் மூன்று.
சிரிக்கும் முருகன் நான்கு.
உண்மைதான் !
தங்கைப் பாப்பா மீனா.
சமர்த்துப் பையன் நானே.
சின்னக் கண்ணன் எங்கே?
சிரிக்கும் முருகன் எங்கே?
எங்கே என்றா கேட்கிறீர்?
இங்கே வந்து பாருங்கள்.
எங்கள் பூசை அறையிலே
இருக்கி றாரே இருவரும் !
அம்மா தினமும் சொல்லுவாள்
அவர்கள் தெய்வக் குழந்தைகள்!
------------
67. நமது இமயம்
உலகில் மிகவும் உயர்ந்த மலை
நமது இமயமாம்.
உறுதி யோடு என்றும் நிமிர்ந்தே
நிற்கும் இமயமாம்.
பல முனிவர் தவம் இருக்க,
பார்த்த இமயமாம்.
பகைவர் உள்ளே புகுந்தி டாமல்
தடுக்கும் இமயமாம்.
பனியை முதுகில் போர்த்துக் கொண்டு
மின்னும் இமயமாம்.
பயமு றுத்தும் கரடி புலிகள்
வாழும் இமயமாம்.
கனிகி ழங்கு மூலிகைகள்
காணும் இமயமாம்.
கங்கை, சிந்து, பிரம்ம புத்ரா
பிறக்கும் இமயமாம்.
இந்தி யாவின் வடக்கில் உள்ள
எல்லை இமயமாம்.
எவரெஸ்ட் என்னும் உயர்ந்த சிகரம்
இருக்கும் இமயமாம்.
டென்சிங் போல நானும் இமயம்
ஏறப் போகிறேன்.
திடமாய் நமது கொடியை உயரே
ஏற்றப் போகிறேன்.
-----------
68. கண்ணன் மீண்டும் பிறப்பானா?
குழந்தையாக மீண்டும் கண்ணன்
பிறக்க மாட்டானா?-புல்லாங்
குழல்எடுத்தே ஊதிஎன்னை
மயக்க மாட்டானா?
என்னை அவன் தோழனாக
ஏற்க மாட்டானா?-தினம்
வெண்ணெயில்ஓர் பங்குபோட்டு
நீட்ட மாட்டானா?
சின்னஞ்சிறு வாயைக்கொஞ்சம்
திறக்க மாட்டானா?-என்
கண்ணில்இந்த உலகமுழுதும்
காட்ட மாட்டானா?
மாடுகன்றைக் காட்டில்ஓட்டி
மேய்க்க மாட்டானா?-அங்கே
ஓடிஆட என்னைக்கூட்டுச்
சேர்க்க மாட்டானா?
மலைஎடுத்துக் குடையைப்போலப்
பிடிக்க மாட்டானா?-என்
தலையில்மழை விழுவதையும்
தடுக்க மாட்டானா?
கீதைதன்னைத் திரும்பவுமே
கூறமாட்டானா?-அதைக்
காதில்கேட்டுச் சிறந்தவனாய்
மாற மாட்டேனா?-நான்
மாற மாட்டேனா?
-----------
69. தம்பி பிறந்த நாள்
எங்கள் தம்பி பிறந்தநாள்!
இனிய தம்பி பிறந்தநாள்!
திங்கட் கிழமை இன்றுதான்
செல்லத் தம்பி பிறந்தநாள்!
வண்ணச் சட்டை உடலிலே,
மணிகள் தொங்கும் கழுத்திலே.
கொண்டை அணிந்து கண்ணன்போல்
கொஞ்சு கின்றான் மழலையில்.
தோட்டம் நடுவே ஊஞ்சலில்
தூக்கி வைத்தோம் தம்பியை.
ஆட்டி ஆட்டி விடுகிறோம்;
அசைந்தே ஆடி மகிழ்கிறான்.
மாலைத் தென்றல் காற்றுமே
வந்து மெல்ல வீசுது.
நீலம், சிவப்பு, மஞ்சளில்
நிறைய பலூன் பறக்குது!
மலர்கள் தலையை ஆட்டியே
வருவோர் தம்மை அழைக்கவே,
கலகல எனப் பறவைகள்
காது குளிரப் பாடவே,
வட்ட மிட்டு நாங்களும்
வாழ்த்திக் கும்மி அடிக்கிறோம்.
கிட்டச் சென்று தம்பியைத்
தொட்டு முத்தம் கொடுக்கிறோம்.
கன்னங் குழியத் தம்பியும்
கையைத் தட்டிச் சிரிக்கிறான்.
அன்னை, தந்தை, பலரையும்
அணைத்து முத்தம் தருகிறான்.
விசை கொடுத்தால் ஓடிடும்
வித்தை யெல்லாம் காட்டிடும்
இசை முழக்கம் செய்திடும்
இனிய பொம்மைப் பரிசுகள் !
படம் நிறைந்த புத்தகம்
பலகை, பந்து, பலவகை
உடைகள், தின்னும் பண்டங்கள்
உவந்தே பலரும் தருகிறார்.
பட்டுப் போன்ற கைகளால்
பாசத் தோடு தம்பியும்
லட்டு, மிட்டாய், ரொட்டிகள்
நாங்கள் தின்னத் தருகிறான்.
சிறந்த இந்தக் காட்சியைத்
திரண்டு வந்து பாருங்கள்.
பிறந்த நாளில் தம்பியைப்
பெரியோர் கூடி வாழ்த்துங்கள்.
-----------
70. காந்தியைக் காணலாம்
சிறுவன்
காந்தியைப்போல் ஒருமகானைக்
காட்டுவாய் அம்மா-அவர்
கருணைபொங்கும் திருமுகத்தைக்
காணுவேன் அம்மா.
காந்தியைப்போல் ஒருமகானைக்
காட்டுவாய் அம்மா-அவர்
கனியைப் போன்ற இனிய சொல்லைக்
கேட்பேனே அம்மா.
சாந்தமூர்த்தி காந்தியைப்போல்
காண முடியுமா?-அம்மா
சத்தியத்தின் வடிவம்தன்னைக்
காண முடியுமா?
மாந்தருக்குள் தெய்வம்தன் னைக்
காண முடியுமா?-நல்ல
வழியைக்காட்டும் ஒளியைநாமும்
காண முடியுமா?
அம்மா
காந்தியைப்போல் ஒருமகானை
இந்த உலகிலே
காணமுடியும், காணமுடியும்
கண்ணே, கேளடா.
உண்மைபேசும் இடத்தில்காந்தி
குடியிருக்கிறார்.
உறுதிஉள்ள இடத்தில்காந்தி
குடியிருக்கிறார்.
அன்புபொங்கும் இடத்தில்காந்தி
குடியிருக்கிறார்.
அகிம்சைஉள்ள இடத்தில்காந்தி
குடியிருக்கிறார்.
உண்மை, உறுதி, அன்பு, அகிம்சை
உன்னி டத்திலே
உள்ளதென்றால் உன்னிடத்தும்
காந்தி இருக்கிறார்.
என்றும்அவரைக் கண்டுகண்டு
இன்பம் கொள்ளலாம்.
இதயக்கோயில் தன்னில்வைத்துப்
பூசை செய்யலாம்.
-----------
71. தாத்தாவும் பேரனும்
தாத்தா
சோற்று மூட்டை கட்டிக் கொண்டு
தோளில் ஏட்டைச் சுமந்து கொண்டு
ஆற்றைக் கூடக் கடந்து சென்று
அடுத்த நகரில் படித்து வந்தேன்
அந்தக் காலம்-அது
அந்தக் காலம்.
காட்டு வழியைக் கடந்து சென்று
கனத்த மழையில் நனைந்து கொண்டு
வீட்டை நோக்கி இரவில் வருவேன்
விளக்கே இல்லா வீதி வழியே
அந்தக் காலம்-அது
அந்தக் காலம்.
எண்ணெய் விளக்கை ஏற்றி வைத்து
எழுத்தைத் தேடித் தேடிப் பிடித்துக்
கண்கள் எரிய இரவு நேரம்
கல்வி தன்னைக் கற்று வந்தேன்
அந்தக் காலம்-அது
அந்தக் காலம்.
அரிசி வாங்கப் பணமும் இன்றி
அடுப்பு மூட்ட வழியும் இன்றி
இருந்த போதும் சம்ப ளத்தை
எப்ப டியோ கட்டி வந்தேன்
அந்தக் காலம்-அது
அந்தக் காலம்.
ஐந்து வகுப்புப் படிப்ப தற்குள்
அதிகத் தொல்லை அடைந்த தாலே
அந்த வகுப்பில் தேர்வு பெற்றும்
அந்தோ ! படிப்பை நிறுத்தி விட்டேன்
அந்தக் காலம்-அது
அந்தக் காலம்.
பேரன்
அதிக தூரம் நடந்தி டாமல்
அருகி லுள்ள பள்ளி சென்று
மதிய உணவும் உண்டு விட்டு
மகிழ்ச்சி யோடு கற்று வருவேன்
இந்தக் காலம்-இது
இந்தக் காலம்.
சீரு டையை அணிந்து கொண்டு
செல்வர் என்றும் ஏழை என்றும்
வேறு பாடே ஏதும் இன்றி
விருப்ப மோடு படித்து வருவேன்
இந்தக் காலம்-இது
இந்தக் காலம்.
இலவ சமாய்க் கல்வி உண்டு
இருந்து படிக்க வசதி உண்டு
கலக்க மின்றிக் கவலை யின்றிக்
கல்வி கற்றுத் திரும்பி வருவேன்
இந்தக் காலம்-இது
இந்தக் காலம்.
பென்சில், நோட்டு, தேவை யான
புத்த கங்கள் போன்ற வற்றை
அன்ப ளிப்பாய்ப் பெற்று நானும்
ஆர்வத் தோடு கற்று வருவேன்
இந்தக் காலம்-இது
இந்தக் காலம்.
இன்னும் நிறையக் கல்வி கற்று
இனிய முறையில் தொழிலும் கற்று
நன்மை செய்வேன், நமது நாடு
நன்கு வளர, நானும் வளர்வேன்.
இந்தக் காலம்-இது
இந்தக் காலம்.
---------
72. எனது ஊர்
என்றன் ஊரோ இராயவரம்;
இனிமை மிக்க சிறுநகராம்.
மன்னர் ஆண்ட புதுக்கோட்டை
மாவட் டத்தைச் சேர்ந்ததுவாம்.
தென்னை மரங்கள் இருபுறமும்
தென்றல் வீசி வரவேற்கும்.
செந்நெல் விளையும் வயல்களுமே
தெரியும் அந்த வழியெல்லாம்.
ஊரின் உள்ளே நுழைந்ததுமே
உள்ளம் கவரும் கோபுரங்கள்!
நேராய் உள்ள தெருக்களுடன்
நிறைய மாட மாளிகைகள்!
ஊரின் நடுவே சிவன்கோயில்
ஊருணி பலவும் அங்குண்டு.
மாரி யம்மன் திருக்கோயில்
மகிமை மிகவும் உடையதுவாம்.
முத்து மாரி அம்மனுக்கு
மிகமிகச் சீருடன் சிறப்பாகப்
பத்து நாட்கள் திருநாளாம்;
பலரும் பார்த்து மகிழ்வாராம்
கணித மேதை கதிரேசர்
கருத்துடன் பிள்ளைகள் படித்திடவே
புனித மான காந்திமகான்
பெயரில் பள்ளி நிறுவினரே.
பொன்னாச் சியெனும் ஊருணியின்
பொன்னைப் போன்ற நிறமுள்ள
தண்ணீர் உண்டு; ஊர்மக்கள்
தாகம் தீர்க்கும் குணமுண்டு.
வாரச் சந்தை புதன்கிழமை;
வருவார் மக்கள் திரளாக.
கீரை முதலாய் அரிசிவரை
கிடைக்கும் அந்தச் சந்தையிலே!
அம்மன் கோயில் முன்னாலே
ஆடிப் பாடித் தோழருடன்,
சின்ன வயதில் திரிந்ததனை
எண்ணும் போதே இனிக்கிறதே!
கதிரேசர்
-------------
73. சேவகரும் சேர்ந்தனர் !
வெள்ளையர்கள் நம்நாட்டை
ஆண்ட காலம்.
மிகக்கொடுமை மக்களுக்குச்
செய்த காலம்.
தனிஅரசாய்ப் புதுக்கோட்டை
இருந்த காலம்.
தடைகள்பல அரசாங்கம்
விதித்த காலம்.
தேசபக்தர் பலர்சிறையில்
வாழ்ந்த காலம்.
தெருவினிலே கூடுதற்கும்
பயந்த காலம்.
புதுக்கோட்டைத் தனிஅரசில்
அந்த நாளில்
புகழுடனே விளங்கிவந்த
ஊர்க ளுக்குள்
நான்பிறந்த இராயவரம்
என்னும் ஊரில்
நல்லவர்கள் பலர்தொண்டு
செய்து வந்தார்.
பாரதியார் பெயராலே
சங்கம் வைத்துப்
பையன்கள் சிலர்கூடி
நடத்தி வந்தோம்.
அறிஞர்களை வரவழைத்துப்
பேசக் கேட்டோம்.
அரியபல புத்தகங்கள்
படித்து வந்தோம்.
தேசபக்திப் பாடல்களைக்
கற்று வந்தோம்.
தினந்தோறும் நல்லறிவைப்
பெற்று வந்தோம்.
பாரதியார் விழாநடத்த
ஆசைப் பட்டோம்.
பலர்கூடி ஆர்வமுடன்
ஈடு பட்டோம்.
இராயவரம் மாரியம்மன்
கோவில் தன்னில்
எழிலுடைய வாகனங்கள்
பலவும் உண்டு.
கோயில்தனை நிர்வாகம்
செய்த நல்ல
குணமுடையோர் எங்களது
விருப்பம் போல
வெள்ளியிலே செய்தஒரு
கேட கத்தை
விருப்பமுடன் தந்தனரே
விழா நடத்த.
மாடுஇழுக்கும் சகடையிலே
கேட கத்தை
வைத்துஅதிலே பாரதியார்
படத்தை வைத்தோம்.
மலர்களினால் அலங்கரித்தோம்.
கொடிகள் ஏந்தி
"வாழ்க ! வாழ்க ! பாரதியார்
நாமம்” என்றோம்.
சுவாமிவலம் வருகின்ற
தெருக்க ளெல்லாம்
சுற்றிவந்தோம் பாரதியார்
பாட்டுப் பாடி.
இடிமுழக்கம் செய்வதுபோல்
சிறுவர் கூட்டம்
எழுச்சியுடன் பாரதியார்
பாட்டைப் பாட
அரசாங்கச் சேவகர்கள்
அங்கு வந்தார்,
"யார்இதனை நடத்துவது ?
சொல்க” என்றார்.
"ஊர்மக்கள் நடத்துகிறோம்
ஒன்று கூடி.
உயர்கவியைப் போற்றுகிறோம்
பாட்டுப் பாடி”
என்றதுமே அவர்எதுவும்
கூற வில்லை.
எங்களுடன் அவர்களுமே
நடந்து வந்தார்.
பாரதிக்குச் சிலர்தேங்காய்
உடைக்க லானார்.
பக்தியுடன் சூடத்தைக்
கொளுத்த லானார்.
கைகூப்பி வழியெல்லாம்
வணங்க லானார்.
கடவு ளைப்போல் மாகவியைக்
கருத லானார்.
"பாரதத்தாய் நலமுடனே
வாழ்க ! வாழ்க !
பாரதியார் புகழ்வாழ்க !
வாழ்க !” என்றே
குழந்தைகளும் பெரியோரும்
கூடி ஒன்றாய்க்
குரல்எழுப்பி, உணர்ச்சியுடன்
முழங்கும் போது,
"பாரதத்தாய் நலமுடனே
வாழ்க ! வாழ்க !
பாரதியார் புகழ்என்றும்
வாழ்க ! வாழ்க !”
எனஅந்தச் சேவகரும்
உணர்ச்சி யோடே
எங்களுடன் வாய்விட்டுப்
பாட லானார்.
'இந்தியரே நாமும்’ என
அந்த நேரம்
எண்ணியதால் தமைமறந்து
பாடி னாரே !
------------
கதைப் பாடல்கள்
74. ஆண் எலியும் பெண் எலியும்
75. கழுதையும் கட்டெறும்பும்
76. பொன்னை விட உயர்ந்தது
77. கோழியின் பதில்
78. பாம்பைக் கொன்ற வீரன்!
79. மனிதனும் தேனீயும்
80. கிட்டுவின் கீர்த்தி
81. வாழைப் பழத்தின் மகிழ்ச்சி
82. நாயும் நிலவும்
83. உறுதி! உறுதி! உறுதி!
84. நடந்துபோன நாற்காலி
85. பச்சைக் கண்ணன்
86. பல்லில்லாத பாட்டி
87. எட்டுக் கோழிக் குஞ்சுகள்
88. நன்றி
89. கழுகுக் காட்சி
90. விடுதலை
91. கடலும் மழைத் துளிகளும்
92. அவர்கள் தந்த மரம்
93. எது சுதந்திரம்?
94. கந்தனின் மாடு
95. அழுத பிள்ளை சிரித்தது!
96. ராஜாஜியும் சிறுவனும்
97. லண்டனில் தீபாவளி
--------
74. ஆண்எலியும் பெண்எலியும்
ஆண்எலி ஒன்று, பெண்எலி ஒன்று
அன்பாய் வளையில் வசித்தனவே.
ஆண்எலி எதிரே, பெண்எலி எதிரே
அப்பம் பெரிதாய் இருந்ததுவே.
ஆண்எலி தின்றது, பெண்எலி தின்றது.
ஆயினும் ஆசை தீரவில்லை.
ஆண்எலி புகுந்தது, பெண்எலி புகுந்தது
அருகில் இருந்த வீட்டினிலே.
ஆண்எலி பார்த்தது, பெண்எலி பார்த்தது
அருமைப் பண்டம் பொறியினிலே.
ஆண்எலி பாய்ந்தது, பெண்எலி பாய்ந்தது
ஆசை தீரத் தின்றிடவே.
ஆண்எலி கேட்டது, பெண்எலி கேட்டது
அதிரும் சத்தம் பட்டெனவே.
ஆண்எலி திகைத்தது, பெண்எலி திகைத்தது
அந்தோ ! பொறியில் சிக்கினவே.
ஆண்எலி கதையும் பெண்எலி கதையும்
அப்புறம் அறியேன், அறியேனே !
---------------
75. கழுதையும் கட்டெறும்பும்
கட்டெ றும்பு ஊர்ந்து ஊர்ந்து
கழுதை அருகில் சென்றதாம்.
கழுதை காலில் ஏறி ஏறிக்
காதுப் பக்கம் போனதாம்.
காதில் புகுந்து மெல்ல மெல்லக்
கடித்துக் கடித்துப் பார்த்ததாம்.
காள்கா ளென்று கழுதை கத்த
கட்டெ றும்பு மிரண்டதாம் !
காதி லிருந்து தரையை நோக்கிக்
கர்ணம் போட்டுக் குதித்ததாம்.
அந்தச் சமயம் பார்த்துக் கழுதை
அதன்மேல் காலை வைத்ததாம்.
காலில் சிக்கிக் கொண்ட எறும்பின்
கதை முடிந்து போனதாம் !
-----------
76. பொன்னைவிட உயர்ந்தது ?
‘பொன்னை விட உயர்ந்தது
என்ன?’ என்ற கேள்வியை
சின்ன வயதில் காந்தியும்
தேர்வுத் தாளில் கண்டனர்.
‘பொன்னை விட உயர்ந்தது
உண்மை, உண்மை, உண்மைதான்’
என்ற பதிலை காந்தியும்
எழுதி னாரே மகிழ்வுடன்.
சின்ன வயதில் உண்மையின்
சிறப்பை உணர்ந்த காந்திதான்
பின்னர் உலகில் மிகமிகப்
பெரிய மனிதர் ஆயினார் !
-----------
77. கோழியின் பதில்
இட்டு வைத்தேன் முட்டைகள்.
இட்ட முட்டை எட்டையும்
எடுத்துக் கொண்டான் ஒருவனே.
அவயங் காக்க நானுமே
ஆசை கொண்டேன்; ஆயினும்
அபயம் தந்த மனிதனே
அனைத்தும் தின்று தீர்த்தனன் !
குஞ்சு பொரித்துப் பார்க்கவே
கொண்டேன் ஆசை ; ஆயினும்
மிஞ்ச வில்லை முட்டைகள் ;
முழுதும் அவனே தின்றனன்.
எட்டு முட்டை தின்றவன்
என்னை என்ன செய்வனோ?
விட்டு வைக்க வேண்டுமே.
மிஞ்சு வேனோ நானுமே !
----------
78. பாம்பைக் கொன்ற வீரன் !
சாலிக் கிராமம் அருகிலே
சைக்கிள் ஓட்டிச் செல்கையில்,
நாலு மீட்டர் இருக்கலாம்;
நடுவே பாம்பு கிடந்தது.
அஞ்ச வில்லை நானுமே;
அலற வில்லை நானுமே;
கொஞ்ச மேனும் தயக்கமும்
கொள்ள வில்லை நானுமே.
நிலவின் ஒளியில் வேகமாய்
நேராய் எனது சைக்கிளைத்
தலையைப் பார்த்து ஏற்றினேன்;
‘சட்னி’ என்றே எண்ணினேன்.
சிறிது தூரம் சென்றதும்,
திரும்பிப் பார்த்தேன் நானுமே.
சிறுவர் இருவர் என்னிடம்
சிரித்துக் கொண்டே வந்தனர்.
“உண்மைப் பாம்பு என்றுநீ
ஓலைப் பாம்பை எண்ணினாய்.
நன்கு வீரம் காட்டினாய்,
நண்பா” என்றே நகைத்தனர்.
--------
79. மனிதனும் தேனீயும்
மனிதன் :
தேடிச் சென்று பூவிலே
தேனை எடுக்கும் ஈயே வா.
ஜாடி நிறையத் தேனையே
தருவேன்; குடித்துச் செல்லுவாய்.
தேனீ :
என்னைப் போலத் தினம்தினம்
ஈக்கள் தேனை எடுத்தன.
கொண்டு வந்து கவனமாய்க்
கூட்டில் சேர்த்து வைத்தன.
கூட்டைக் கலைத்தே ஈக்களைக்
கொன்று விட்டுத் தேனையே
வீட்டில் சேர்த்து வைக்கிறீர்.
விருந்து தரவா அழைக்கிறீர் ?
எத்திப் பிழைக்க நானுமே
எண்ண மாட்டேன். ஆதலால்,
புத்தம் புதிய தேனையே
பூவில் எடுக்கப் போகிறேன்.
------------
80. கிட்டுவின் கீர்த்தி
பட்டம் ஒன்றைப் பெரியதாய்க்
கட்டி அதனின் நடுவிலே
கொட்டை எழுத்தில் என்பெயர்
பட்டை அடித்து எழுதினேன்.
வெட்ட வெளியில் நின்றுநான்
விட்டேன் நூலில் கட்டியே.
வெட்டி வெட்டி இழுக்கவே
பட்டம் மேலே சென்றதே !
எட்டி வானைத் தொட்டிடும்
இன்ப மான வேளையில்,
பட்டென் றந்த நூலுமே
நட்ட நடுவில் அறுந்ததே !
கட்ட விழ்ந்த காளைபோல்
காற்ற டித்த திசையிலே
பட்டம் பறந்து சென்றதே!
விட்டுத் திரும்ப முடியுமோ?
முட்டு கின்ற மூச்சுடன்
குட்டி மான்போல் ஓடினேன்.
எட்டி டாத தொலைவிலே
ஏய்த்துப் பறந்து சென்றதே !
பட்ட ணத்தை நோக்கிஎன்
பட்டம் பறந்து செல்லுமே.
எட்டு மாடி உள்ளதோர்
கட்ட டத்தில் இறங்குமே !
பட்ட ணத்தில் உள்ளவர்
பலரும் இதனைக் காணுவர்;
வட்ட மாகக் கூடுவர்;
மகிழ்ச்சி யோடு நெருங்குவர்.
பட்டம் நடுவே பெரியதாய்க்
கொட்டை எழுத்தில் என்பெயர்
‘கிட்டு’ என்றே தெரிந்திடும்.
கீர்த்தி அதனால் பெருகிடும் !
----------
81. வாழைப் பழத்தின் மகிழ்ச்சி
ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு
அவற்றுடன் என்னை வைத்தார்கள்.
‘சாப்பிடு வீர்’ என வந்தவர்முன்
தட்டில் வைத்துக் கொடுத்தார்கள்.
வந்தவர் மிகவும் பணக்காரர்.
“வயிற்றில் இல்லை இடம்” என்றார்.
“இந்தப் பைக்குள் வைக்கின்றோம்,
எடுத்துக் காரில் சென்றிடலாம்.”
என்றதும் பையுடன் பணக்காரர்
ஏறினர் தமது காரினிலே.
சென்றிடும் வழியில் திராட்சையுடன்
தின்றனர் ஆப்பிள், ஆரஞ்சை.
‘வாழைப் பழத்தை என்னுடைய
வாழ்க்கையில் தின்றதே இல்லை. இது
ஏழைகள் தின்னும் பழம்’ என்றே
எறிந்தார் என்னைச் சாலையிலே.
காலையில் இருந்து மாலைவரை
கடும்பசி யாலே துடிதுடித்துச்
சாலையில் நின்ற ஒருசிறுவன்
சட்டென என்னைப் பிடித்தானே !
ஏழைச் சிறுவன் பசிதீர்த்தே
இன்பம் மிகமிக நான்பெறுவேன்.
வாழை மரமாம் என் அம்மா
மனசு குளிரச் செய்வேனே!
-----------
82. நாயும் நிலவும்
வட்ட மான வெண்ணி லாவைப்
பார்த்துப் பார்த்துமே
வள்வள் ளென்று எங்கள் வீட்டு
நாய் குரைத்தது.
கிட்டச் சென்றே என்ன சொல்லிக்
குரைக்கு தென்றுநான்
கேட்டு வந்தேன்; அந்தச் செய்தி
கூறப் போகிறேன்:
நிலாவிடம் நாய் சொன்னது:
அமா வாசை இருட்டிலே
ஆகா யத்தில் தேடினேன்.
எங்கே போனாய்? நிலவேநீ
எவரைக் கண்டே அஞ்சினாய்?
அமா வாசை நாளிலே
அண்டங் காக்கை இருளிலே
திருட்டு முனியன் பூனைபோல்
தெருவில் நடந்து வந்தனன்.
பார்த்து விட்டேன் நானுமே.
பாய்ந்தேன் அந்த நிமிடமே.
கோபக் குரலில் கத்தினேன்;
குரைத்துக் கொண்டே துரத்தினேன்.
என்னைப் பார்த்துத் திருடனும்
எடுத்தான் ஓட்டம் வேகமாய்.
தலை தெறிக்க ஓடியே
தப்பிப் பிழைத்து விட்டனன்.
ஆனை போல உருவமும்
ஆட்டுக் கடா மீசையும்
கோவைப் பழத்துக் கண்களும்
கொண்ட திருடன் முனியனைப்
பார்த்துத் தானே நீயுமே
பயந்தே ஓடிப் பதுங்கினாய்?
அமா வாசை இருளிலே
அஞ்சி ஓடி ஒளிந்தநீ
திருடன் போன மறுதினம்
சிறிதே தலையை நீட்டினாய்.
மெல்ல மெல்லத் தினமுமே
வெளியே எட்டிப் பார்த்தநீ
திருடன் இல்லை என்பதைத்
தெரிந்து கொண்டாய் இன்றுதான்.
வாரம் இரண்டு ஆனபின்
வந்து முழுசாய் நிற்கிறாய்.
ஏனோ என்னைப் பார்த்துநீ
இளப்ப மாகச் சிரிக்கிறாய்?
--------
83. உறுதி! உறுதி! உறுதி!
உண்மை பேச நானுமே
உறுதி கொண்டேன். ஆயினும்
சின்னச் சின்னப் பொய்களைத்
தினமும் ஏனோ சொல்கிறேன்.
“என்றன் மாமா லண்டனில்
இருக்கி றாரே, தெரியுமா?”
என்று நானும் புளுகுவேன்.
இதிலே பெருமை கொள்ளுவேன்.
நல்ல பாம்பு, பாம்பென
நண்பர் கூடி இருக்கையில்
சொல்வேன். அவர்கள் யாவரும்
துடித்தே ஓட மகிழுவேன்.
கவனக் குறைவால் நானுமே
கண்ணா டியை உடைத்தபின்
தவறு தங்கை செய்ததாய்த்
தந்தை யிடத்தில் கூறுவேன்.
எனக்குப் படிப்பில் போட்டியாய்
இருக்கும் கோபு, முரளியின்
கணக்கைக் காப்பி அடித்ததாய்க்
கதையும் கட்டி விடுகிறேன்.
அன்னை தூங்கும் வேளையில்
ஆசை யாக லட்டையே
தின்று விட்டு யார்அந்தத்
திருடன் என்று தேடுவேன்.
ஃ ஃ ஃ
தினம் தினம் இப்படி நான்சொன்ன
சிறுசிறு பொய்கள் எத்தனையோ?
கணக்கே இல்லை. இதற்கெல்லாம்
காரணம் என்ன? நானறிவேன்.
பெருமைக் காகப் பொய்சொன்னேன்.
பிறரை ஏய்க்கப் பொய்சொன்னேன்.
அடிக்குப் பயந்து பொய்சொன்னேன்.
ஆத்திரத் தாலே பொய்சொன்னேன்.
ஆசையி னாலும் பொய்சொன்னேன்.
ஐயோ! தினமும் பொய்சொன்னேன்.
ஃ ஃ ஃ
இப்படித் தினம்தினம் பொய்சொன்னால்
எவர்தான் என்னை நம்பிடுவார்?
தப்பிதம் அன்றோ? இதைநானும்
சரியாய் உணர்ந்தேன். எப்பொழுது?
காந்தித் தாத்தா வரலாற்றைக்
கருத்துடன் இன்று படிக்கையிலே,
உண்மை ஒன்றே இவ்வுலகில்
உயர்ந்தது, மிகவும் உயர்ந்ததென
உணர்ந்தேன். இனிமேல் எப்பொழுதும்
உத்தமர் காந்தி வழிநடப்பேன்.
சோதனை பற்பல தோன்றிடினும்,
தொல்லைகள் தொடர்ந்து வந்திடினும்
உண்மை ஒன்றே பேசிடுவேன்.
உறுதி, உறுதி, உறுதி இது !
--------
84. நடந்து போன நாற்காலி !
இரண்டு கால்கள் உள்ள மனிதர்
இங்கும் அங்கும் நடக்கிறார்.
ஏணி மேலே காலை வைத்தே
ஏறி ஏறிச் செல்கிறார்.
குறுக்கே பள்ளம் இருந்தால் உடனே
குதித்துத் தாவிக் கடக்கிறார்.
குடுகு டென்று வேக மாகக்
குதிரை போலச் செல்கிறார்.
இரண்டு கால்கள் உள்ள மனிதர்
இவற்றை யெல்லாம் செய்கையில்
இரண்டு மடங்கு கால்கள் எனக்கு
இருந்தும் சும்மா இருப்பதோ?
இருந்த இடத்தில் இருந்து இருந்து
எனக்குச் சலித்துப் போனதே.
இன்றே நானும் மனிதர் போலே
எங்கும் நடந்து செல்லுவேன்.
இப்படி -
நான்கு கால்கள் கொண்டஒரு
நாற்கா லியுமே நினைத்ததுவே.
நகர்ந்து நகர்ந்து சென்றதுவே;
நலமாய் முகப்பை அடைந்ததுவே.
எட்டுப் படிகள் வாசலிலே
இருந்தன. அவற்றில் இறங்கிடவே
முன்னங் கால்கள் இரண்டையுமே
முதலாம் படியில் வைத்ததுவே.
மடித்துக் காலை வைக்காமல்
வாயிற் படியில் இறங்கியதால்
அடுத்த நிமிடம் தடதடென
அங்கே சத்தம் கேட்டதுவே.
உருண்டு விழுந்தது நாற்காலி !
ஒடிந்தன மூன்று கால்களுமே !
மிச்சம் ஒற்றைக் காலுடனே
முடமாய்க் கிடந்தது நாற்காலி.
நடக்கும் முன்னே நாற்காலி.
நடந்த பிறகோ ஒருகாலி !
இருந்த இடத்தில் இருந்திருந்தால்
இன்னும் அதன்பெயர் நாற்காலி !
--------
85. பச்சைக் கண்ணன்
சீனி மிட்டாய்க் கடையிலே
சின்னச் சின்னப் பொம்மைகள்.
சின்னச் சின்னப் பொம்மைகள்
சீனி மிட்டாய்ப் பொம்மைகள்.
கண்ணன் பொம்மை இருந்தது.
காந்தி பொம்மை இருந்தது.
வண்ண வண்ணப் பொம்மைகள்
வரிசை யாக இருந்தன.
காசு கொடுத்து நானுமே
கண்ணன் பொம்மை வாங்கினேன்.
ஆசை யாக எனதுவாய்
அருகில் கொண்டு போயினேன்.
பச்சை நிறத்துக் கண்ணனோ
பார்க்க அழகாய் இருந்ததால்
எச்சில் படுத்தித் தின்னவே
எனக்கு விருப்பம் இல்லையே!
அறையில் மாடம் இருந்தது.
அதிலே வைத்தேன், கண்ணனை!
உறங்கிப் போனேன், இரவிலே.
ஒன்றும் அறியேன் நானுமே.
காலை எழுந்து பார்க்கையில்
காண வில்லை கண்ணனை.
நாலு புறமும் வீட்டினுள்
நன்கு நானும் தேடினேன்.
அப்பா வந்தார்; கூறினேன்.
அவரும் தேடிப் பார்த்தனர்.
அப்போ தவரின் கண்களோ
அறையின் ஓரம் பார்த்தன.
ஓர மாகச் சென்றுநான்
உற்றுப் பார்த்தேன் அவருடன்.
சாரை சாரை யாகவே
தரையில் கண்டேன், எறும்புகள்.
பச்சை நிறத்துக் கண்ணனைப்
பங்கு போட்டே எறும்புகள்
இச்சை யோடு வாயிலே
எடுத்துக் கொண்டு சென்றன.
---------
நான் :
கண்ணன் பொம்மை முழுவதும்
கடித்துக் கடித்தே எறும்புகள்
கொண்டு செல்லு கின்றன.
கொடுமை கொடுமை, கொடுமையே !
அப்பா :
பச்சைக் கண்ணன் இவைகளின்
பசியைப் போக்கத் தன்னையே
மிச்ச மின்றி உதவினன்.
வீணில் வருத்தம் கொள்வதேன்?
----------
86. பல்லில்லாத பாட்டி
பல்லில் லாத பாட்டிக்குப்
பத்துப் பேரப் பிள்ளைகள்.
எல்லாப் பேரப் பிள்ளையும்
எதிரே ஒருநாள் வந்தனர்.
“பத்துப் பத்துச் சீடைகள்
பாட்டி உனக்கே” என்றனர்.
மொத்தம் நூறு சீடைகள்
முன்னே வைத்துச் சென்றனர்.
ஏக்கத் தோடு பாட்டியும்
எதிரே இருந்த சீடையைப்
பார்க்க வில்லை; சிரித்தனள்;
பைய எழுந்து நின்றனள்.
சின்னத் தூக்கு ஒன்றிலே
சீடை யாவும் வைத்தனள்.
என்ன செய்தாள், தெரியுமா?
எடுத்துச் சொல்வேன், கேளுங்கள்;
தடியை ஊன்றி ஊன்றியே
தன்னந் தனியாய்ப் பாட்டியும்
நடந்து நடந்து சென்றனள்;
நான்கு தெருவைக் கடந்தனள்.
மாவு அரைக்கும் ஓரிடம்
வந்த பிறகே நின்றனள்.
ஆவ லாக நுழைந்தனள்;
“அரைத்துக் கொடுப்பீர்” என்றனள்.
உருண்டைச் சீடை யாவுமே
உடைந்து நொறுங்கிக் கடைசியில்
அருமை மாவாய் மாறின.
ஆஹா ! பாட்டி மகிழ்ந்தனள்.
வீடு வந்து சேர்ந்தனள்
வேக மாகப் பாட்டியும்.
சீடை மாவில் நெய்யுடன்
சீனி சேர்த்துப் பிசைந்தனள்.
தின்னப் போகும் வேளையில்
சேர்ந்து பேரப் பிள்ளைகள்
முன்னே வந்து நின்றனர்.
“என்ன பாட்டி?” என்றனர்.
பாட்டி சீடை மாவினைப்
பத்துப் பேரப் பிள்ளைக்கும்
ஊட்டி ஊட்டி விட்டனள்;
ஒருவாய் அவளும் உண்டனள் !
---------
87. எட்டுக் கோழிக் குஞ்சுகள்
எட்டுக் கோழிக் குஞ்சுகள்
இரையைத் தேடிச் சென்றன.
குட்டை யாக ஒருபுழு
குறுக்கே செல்லக் கண்டன.
பார்த்த வுடனே எட்டுமே
பாய்ந்து கொல்ல முயன்றன.
யார்தான் புழுவைத் தின்பது?
என்று சண்டை போட்டன.
சிறகை அடித்துக் கொண்டன;
சீறித் தாவிக் கொத்தின;
குரலைக் காட்டி வேகமாய்க்
கோபத் தோடு கூவின.
அம்மாக் கோழி குரலுமே
அந்தச் சமயம் கேட்கவே,
வம்புச் சண்டை நிறுத்தின.
மனத்தைக் கட்டுப் படுத்தின.
சண்டை ஓய்ந்து போனதும்
தரையைக் கூர்ந்து நோக்கின.
கண்ணில் அந்தப் புழுவையே
காண வில்லை; இல்லையே !
சண்டை முடியும் வரையிலும்
சாவ தற்கு நிற்குமோ ?
மண்டு அல்ல அப்புழு.
மகிழ்ந்து தப்பி விட்டதே!
-------------
88. நன்றி
மாட்டு வண்டி ஒன்றில் கறுப்பன்
மூட்டை ஏற்றிச் சென்றான்.
மேட்டில் வண்டி ஏறும் போது
மூட்டை விழவே நின்றான்.
உருளைக் கிழங்கு மூட்டை அதனை
ஒருவ னாகத் தூக்கப்,
பெரிதும் கறுப்பன் முயன்ற போது
பெரியார் ஒருவர் வந்தார்.
“இருவர் நாமும் சேர்ந்தால் இதனை
எளிதில் தூக்க முடியும்.
சிரமம் இன்றி இருந்த இடத்தில்
திரும்ப வைத்து விடலாம்”
பெரியார் இதனைக் கூறிவிட்டுப்
பெரிய மூட்டை அதனைக்
கறுப்ப னோடு சேர்ந்து தூக்கிக்
கட்டை வண்டி சேர்த்தார்.
“இந்த ஏழை சிரமம் தீர்க்க
இனிய உதவி செய்தீர்.
எந்த வகையில் நன்றி சொல்வேன்?”
என்று கறுப்பன் கூற,
“வாயால் நன்றி கூற வேண்டாம்.
மகிழ்ச்சி யோடு பிறர்க்கு
நீயும் உதவி செய்தால் எனது
நெஞ்சு குளிரும்” என்றார்.
--------
89. கழுகுக் காட்சி
திருக்கழுக் குன்ற மலையினிலே
தினமும் உச்சி வேளையிலே
அருமைக் காட்சி கண்டிடவே
அங்கே மக்கள் கூடுவரே.
வானை நிமிர்ந்து பார்த்திடுவர்;
வருகை தன்னை நோக்கிடுவர்;
ஏனோ இன்னும் வரவில்லை?
என்றே சிலரும் ஏங்கிடுவர்.
சட்டென வானில் இருகழுகு
வட்டம் போடும் காட்சியினைச்
சுட்டிக் காட்டுவர் சிலபேர்கள்.
துள்ளிச் சிறுவர் குதித்திடுவர்.
வட்டம் போட்ட கழுகுகளும்
வருமே மெதுவாய்க் கீழிறங்கி.
தட்டுடன் அமர்ந்த குருக்களிடம்
தாவித் தாவிச் சென்றிடுமே.
நெய்யும் சர்க்கரைப் பொங்கலுமே
நீட்டிடு வாரே குருக்களுமே.
கையால் அவரும் ஊட்டிடவே
கழுகுகள் உண்டு களித்திடுமே.
உச்சி வேளையில் தினந்தோறும்
ஒழுங்காய்க் கழுகுகள் வருவதையும்
அச்சம் இன்றி உணவருந்தி
அவைகள் பறந்து செல்வதையும்
பற்பல ஆண்டாய் இம்மலையில்
பார்த்தே வருவார் மக்களுமே.
அற்புதக் காட்சி இதைநானும்
அடடா, கண்டேன், கண்டேன் !
-----------
90. விடுதலை
வாட்ட மாகக் கூட்டில் இருந்த
வண்ணக் கிளியைக் காலையில்
கூட்டைத் திறந்து வெளியில் விட்டேன்
குதூக லமாய்ப் பறந்ததே!
விடுதலை ! விடுதலை ! விடுதலை !
கழுத்து நோக இரவு முழுதும்
கட்டிக் கிடந்த கன்றினை
அவிழ்த்து விட்டேன்; விடிந்த வுடனே
ஆனந் தமாய்க் குதித்ததே !
விடுதலை ! விடுதலை ! விடுதலை !
தொட்டிக் குள்ளே நீந்தி நீந்திச்
சோர்ந்து போன மீன்களை
விட்டு வந்தேன் ஆற்று நீரில்
விரைந்து நீ்ந்தி மகிழவே!
விடுதலை ! விடுதலை ! விடுதலை !
முன்பு ஒருநாள் பிடித்து வந்த
மின்னி டும்பொன் வண்டினை
கொன்றை மரத்தில் காலை நேரம்
கொண்டு சேர்த்தேன் மீண்டுமே!
விடுதலை ! விடுதலை ! விடுதலை !
சுதந்தி ரத்தை நாம் அடைந்த
தூய்மை யான நாளிலே
உதவி செய்தேன்; அதனை எண்ணி
உள்ளம் துள்ளு கின்றதே!
விடுதலை ! விடுதலை ! விடுதலை !
----------
91. கடலும் மழைத்துளிகளும்
கடல் :
மழைத் துளிகாள், மழைத் துளிகாள்,
என்னி டத்திலே
வந்து நீங்கள் சேர்ந்த தாலே
மகிமை பெறுகிறீர்.
அழகு, ஆழம், அகலம், நீளம்
என்னைப் போலவே
யாரி டத்தில் உண்டு? நீங்கள்
கூற முடியுமோ?
மழைத் துளிகள்:
ஆறு, ஏரி, குளங்க ளெல்லாம்
அளவில் சிறியவை.
ஆன போதும் அவற்றில் சேர்ந்தால்
அதிகம் மகிழுவோம்.
ஊரில் உள்ளோர் தாகம் தீர
உதவி செய்யலாம்.
உப்புக் கரிக்கு தென்று சொல்லித்
துப்பு வார்களோ?
---------
91. அவர்கள் தந்த மரம்
காகம் ஒன்று ஆல மரத்தில்
வந்து அமர்ந்தது.
கனிந்து சிவந்த பழங்கள் தம்மைக்
கொத்தித் தின்றது.
வேக மாகச் சிறக டித்துப்
பறந்து சென்றது.
வெட்டவெளியில் ஓரி டத்தில்
எச்ச மிட்டது.
எச்சத் துடனே தரையில் வீழ்ந்த
ஆலம் விதைகளில்
இரண்டு வாரம் சென்ற பின்னர்
ஒன்று முளைத்தது.
உச்சி வெய்யில் தலையில் விழவே
நடந்து சென்றவர்
ஒருவர் அந்தச் செடியைக் கண்டே
உள்ளம் மகிழ்ந்தனர்.
ஆடு மாடு கடித்தி டாமல்
வேலி போட்டனர்.
அவரே தினமும் மாலை நேரம்
தண்ணீர் விட்டனர்.
பாடு பட்டே அந்தச் செடியை
வளர்த்து வந்ததால்
பத்தே ஆண்டில் பெரிய மரமாய்
வளர்ந்து விட்டது.
கோடை நாளில் குடையைப் போல
நிழலைத் தந்திடும்.
கூட்டம் நடத்த மண்ட பம்போல்
என்றும் உதவிடும்.
ஆடிப் பாடச் சிறுவ ருக்கும்
அரங்க மாகிடும்.
அருமை யான ஊஞ்ச லாக
விழுது மாறிடும்.
சின்ன விழுது பல்து லக்கத்
தினமும் உதவிடும்.
தேடி வந்து பறவை யெல்லாம்
கூடு கட்டிடும்.
இன்னும் நூறு, நூறு விதத்தில்
நன்மை செய்திடும்
இந்த மரத்தின் பெருமை கூற
எவரால் முடிந்திடும் ?
விதையைப் போட்டுச் சென்ற காகம்
எங்கு திரியுமோ?
வேலி போட்டு வளர்த்த மனிதர்
எங்கு வாழ்வரோ?
உதவி பலவும் செய்யும் மரத்தை
நமக்குத் தந்தவர்
உலகில் எங்கே இருந்த போதும்
வாழ்க, வாழ்கவே !
-----------
92. எது சுதந்திரம் ?
ஒன்பது மணிவரை படுக்கையில் கிடந்தே
உறங்கிடும் பொன்னனை எழுப்பினள் அம்மா.
“இன்றுநம் தேசச் சுதந்திரத் திருநாள்.
எழுந்திரு சீக்கிரம்” என்றனள் அம்மா.
“சுதந்திர நாளில் சுகமாய்த் தூங்கச்
சுதந்திரம் உண்டு. சும்மா போபோ.
மதியம் வரைநான் தூங்கிடு வேன்” என
மறுபுறம் திரும்பிப் பொன்னன் படுத்தான்.
பதினொரு மணிவரை தூங்கிடும் பொன்னனைப்
பார்த்ததும் தந்தை ஆத்திரம் கொண்டார்.
முதுகினில் இரண்டு பலமாய் வைத்தார்.
முணுமுணுத் தவனும் துள்ளி எழுந்தான்.
“அன்னையும் தந்தையும் சுதந்திர நாளில்
அடிமைபோல் என்னை நடத்திடு கின்றார்.
இன்றுநான் என்றன் இஷ்டம் போலவே
எதனையும் செய்வேன்” என்று நினைத்தான்.
கல்லை எடுத்தான்; கருநிற நாயின்
கால்களைப் பார்த்துக் குறிவைத் தெறிந்தான்.
‘ளொள்’என நாயும் சீறிப் பாய்ந்திட
நொடியில் பொன்னன் ஓடி ஒளிந்தான்.
சாலையில் கைகளை வீசி நடந்தான்;
தனக்கே சுதந்திரம் என்றவன் நினைத்தான்;
மாலையில் கார்கள், வண்டிகள் வந்தும்
வழிவிட வில்லை; எதிரில் நடந்தான்.
சட்டென ஒருகார் அவன்மேல் மோத,
தாவிக் குதித்தவன் தவறி விழுந்தான்.
பட்டெனத் தலையில் அடிபட லாச்சே!
பந்துபோல் நெற்றியும் புடைத்திட லாச்சே!
சுதந்திர நாளில் நினைத்ததைச் செய்வதே
சுதந்திரம் என்று பொன்னன் நினைத்தான்.
விதம்வித மான தொல்லைகள் வரவே
மெத்தவும் மனத்தில் வேதனை அடைந்தான்.
சோம்பிக் கிடைப்பது சுதந்திரம் இல்லை.
தொல்லைகள் தருவதும் சுதந்திரம் இல்லை.
வீம்புகள் செய்வதும் சுதந்திரம் இல்லை.
வேறெது உண்மைச் சுதந்திரம் ஆகும் ?
பிறரது உரிமையை மதிப்பது சுதந்திரம்.
பேச்சிலும் செயலிலும் தூய்மையே சுதந்திரம்.
உரிமையும், கடமையும் ஒன்றாய்ச் சேர்வதே
உண்மையில் சுதந்திரம், சுதந்திரமாகும் !
-----------
93. கந்தனின் மாடு
மாட்டு வண்டி ஒன்றிலே
மூட்டை நெல்லை ஏற்றியே
காட்டு வழியாய்ச் சென்றனன்
கந்தன் என்னும் நல்லவன்.
ஒற்றை மாட்டு வண்டியை
ஓட்டி அவனும் செல்கையில்
சட்டென் றெதிரே வேகமாய்த்
தாவி வந்தான் திருடனே !
“மாட்டை இழுத்து நிறுத்திடு.
வண்டிக் குள்ளே இருந்திடும்
மூட்டை நெல்லை இறக்கிடு”
மிரட்ட லானான் திருடனும்.
“என்னை நம்பி மூட்டையை
ஏற்றி ஒருவன் அனுப்பினார்.
என்ன சொல்வேன் அவரிடம்?”
என்றே கந்தன் கலங்கினான்.
கத்தி ஒன்றைக் காட்டியே
“குத்திக் கொன்று போடுவேன்.
செத்துப் போக ஆசையா?”
திருடன் மேலும் மிரட்டினான்.
எந்தப் பேச்சும் பயனில்லை
என்ப தறிந்த கந்தனும்
தந்தி ரத்தின் உதவியால்
தப்பிப் பிழைக்க எண்ணினான்.
“கொண்டு வந்த நெல்லுமே
கொள்ளை போன தென்றுநான்
சொன்னால் ஊரார் நம்பிடார்.
தொழிலும் கெட்டுப் போகுமே!
மூட்டை நெல்லைத் தந்திட
முடிய வில்லை. ஆதலால்
மாட்டை அவிழ்த்துத் தருகிறேன்.
மகிழ்ச்சி யோடு சென்றிடு.
இந்த மாடு என்றனின்
சொந்த மாடு. ஆதலால்
என்றன் உயிரைக் காக்கவே
இதனைத் தருவேன்” என்றனன்.
மூட்டை விலையைப் போலவே
மூன்று மடங்கு இருந்திடும்
மாட்டைப் பெற்றுக் கொள்ளவே
மனம் இசைந்தான் திருடனே.
கந்தன் மாட்டை அவிழ்த்தனன்;
கள்ளன் கையில் கொடுத்தனன்.
அந்த மாடோ புதியவர்
அருகில் வந்தால் பாயுமே !
ஆர்வ மாகத் திருடனும்
அதனைத் தட்டிக் கொடுக்கவே,
கூர்மை யான கொம்பினால்
குத்தித் தொடையைக் கிழித்தது!
தொடையி லிருந்து ரத்தமும்
கொடகொ டென்று கொட்டவே
உடனே பயந்து திருடனும்
ஓட்ட மாக ஓடினான்.
‘ஐயோ! அப்பா!’ என்றவன்
அலறிக் கொண்டே வேகமாய்க்
கையைக் காலை உதறியே
காட்டுக் குள்ளே ஓடினான்.
கந்தன் மாடு துரத்தவே,
கதறித் திருடன் ஓடவே,
கந்தன் அந்தக் காட்சியைக்
கண்டு கண்டு சிரித்தனன்!
----------
94. அழுத பிள்ளை சிரித்தது !
சின்னச் சின்ன அழகுப் பாப்பா
எங்கள் தம்பியாம்.
சிரித்துச் சிரித்து மகிழ்ச்சி யூட்டும்
எங்கள் தம்பியாம்.
அன்று நல்ல நிலவு தன்னில்
திறந்த வெளியிலே
அழகுத் தொட்டில் அதனில் தம்பி
படுத்தி ருந்தனன்.
சிரித்துக் கொண்டே இருந்த எங்கள்
சின்னத் தம்பியும்
திடுதிப் பென்று குரலெடுத்துக்
கதற லாயினன்!
அருமைத் தம்பி வீல்வீ லென்றே
அழுத காரணம்
அறிந்தி டாமல் ஐந்து நிமிடம்
விழிக்க லாயினேன்.
சிறிது நேரம் அழுத பின்னர்
எங்கள் தம்பியோ
சிரித்துக் கொண்டே கையை மேலே
காட்ட லாயினன்.
அருமை யாகக் காட்டு கின்ற
பொருளைக் கண்டதும்
அறிந்து கொண்டேன் கார ணத்தை
அந்தச் சமயமே.
என்ன அந்தக் கார ணம்தான்
என்றா கேட்கிறீர்?
எடுத்து நானும் கூறு கின்றேன்;
கேட்டுக் கொள்ளுவீர்.
சின்னத் தம்பி படுத்துக் கொண்டு
மேலே பார்க்கையில்
தெரிந்த தங்கே முழுமை யான
வெண்ணி லாவுமே!
அழகு மிக்க நிலவைக் கண்டு
மகிழும் வேளையில்
அங்கே வந்த மேகக் கூட்டம்
அதை மறைத்ததால்,
அழுது விட்டான் சின்னத் தம்பி
ஏங்கி ஏங்கியே!
அழுத பிள்ளை சிரித்த தேனோ?
அதையும் சொல்லுவேன்;
மறைந்தி ருந்த மேகம் பின்னர்
கலைந்து போனதால்
வானில் நிலா முன்பு போலத்
தெரிய லானது!
மறைந்த நிலவை வானில் மீண்டும்
கண்ட தம்பியின்
மறைந்த சிரிப்பும் நிலவைப் போலத்
திரும்பி வந்ததே!
-----------
95. ராஜாஜியும் சிறுவனும்
கல்கத் தாவில் ராஜாஜி
கவர்ன ரானபின்
களிப்பை ஊட்டும் செய்தி யொன்று
வெளியில் வந்ததே.
நல்ல அந்தச் செய்தி தன்னை
உங்க ளிடத்திலே
நானிப் போது கூற வந்தேன்;
கேளும் நண்பரே !
சிறுவர் தம்மை மாளி கைக்கு
அவர் அழைத்தனர்.
தித்திப் பான பண்டத் தோடு
விருந்து வைத்தனர்.
விருந்து கவர்னர் அளித்த தாலே
பெருமை கொண்டனர்;
மிக்க மகிழ்ச்சி யோடு சிறுவர்
உண்ண லாயினர்.
அந்தச் சமயம் ராஜாஜி,
சிறுவன் ஒருவனின்
அருகில் சென்று சிரித்துக் கொண்டே
காதைப் பிடித்தனர்.
“உன்றன் காதைப் பிடித்து நானும்
முறுக்கும் போதிலே
உனது மனத்தில் இதனைப் பற்றி
என்ன நினைக்கிறாய்?
அகிம்சை என்று இதனை நீயும்
கருது கின்றாயா?
அன்றி இம்சை என்றே இதனைக்
கூறு கின்றாயா?”
மகிமை மி்க்க தலைவர் இதனைக்
கேட்ட வுடனேயே
மகிழ்ச்சி மிகவும் கொண்ட சிறுவன்
கூற லாயினன்:
“அகிம்சை இல்லை; இம்சை இல்லை;
தாங்கள் காட்டிடும்
அன்பு, அன்பு, அன்பு” என்றே
அவன் உரைத்தனன்.
மிகவும் மகிழ்ச்சி கொண்ட தலைவர்
அவனை மெச்சினார்.
விவரம் அறிந்த சிறுவர் அங்கே
சிரிக்க லாயினர்.
-----------
96. லண்டனில் தீபாவளி
லண்டனில் இந்திய மாணவர்கள்-மிக
நன்றாகத் தீபா வளிதினத்தைக்
கொண்டாடத் திட்டங்கள் போட்டனரே-ஒன்று
கூடிநல் ஏற்பாடு செய்தனரே !
பண்டிகை கொண்டாட வேண்டுமெனில்-அங்கே
பலமாய் விருந்து வேண்டுமன்றோ?
ஒன்றாகச் சேர்ந்து மாணவர்கள்-மிக
உற்சாக மாகச் சமைத்தனரே.
அந்தச் சமயத்தில் அவ்விடத்தே-ஓர்
அப்பாவி இந்தியர் வந்தடைந்தார்.
வந்தவர் யார்என ஒருவருமே-அந்த
மாணவர் கூட்டத்தில் கேட்கவில்லை.
ஏதும் விசாரணை செய்யவில்லை-ஆனால்,
ஏவினர் வேலைகள் செய்திடவே.
சாதுவாம் அந்த மனிதருமே-சற்றும்
தயங்கிட வேண்டுமே! இல்லை, இல்லை!
பாத்திரம் தேய்த்தனர்; பற்றுத் துலக்கினர்;
பம்பர மாய்வேலை செய்தனரே.
வேர்த்து விறுவிறுத் தேஅவரும்-பல
வேலைகள் செய்திடும் வேளையிலே,
வ.வே.சு. ஐயர் எனும்பெரியார்-அங்கு
வந்தனர்; சுற்றிலும் பார்த்தனரே.
ஏவல் புரியும் மனிதரைக் கண்டதும்
ஏனோ துடியாய்த் துடித்தனரே.
“அடடே, இவர்தாம் காந்தி!” யென்றார்-“நம்
அருமை விருந்தினர் இவரே” என்றார்.
உடனே அனைவரும் மன்னிப்புக் கோரிட,
உத்தமர் காந்தி உரைத்திடுவார்:
“ஒன்றாகச் சேர்ந்து சமையல்செய்தோம்-இது
ஒற்றுமை தன்னையே காட்டுமன்றோ?
நன்றாய் உழைத்துநாம் உண்பதிலே-சற்றும்
நாணமே இல்லை; உணர்ந்திடுவோம் !”
-----------
நாட்டிய நாடகம்
97. சண்டையும் சமாதானமும்
கமலா :
என்ன, என்ன, என்ன அதோ
சப்தம் கேட்குதே!-அடே,
எங்கள் வீட்டுத் தோட்டத் திலே
சப்தம் கேட்குதே!
சென்று நாமும் பார்த்து வரலாம்
வருவாய் தோழியே-என்ன
செய்தி என்றே அறிந்து வரலாம்
வருவாய் தோழியே!
விமலா :
வாய்தி றந்து ஏதோ வார்த்தை
சிரித்து வருகுது!
மல்லி கைப்பூ அதோ, அதோ
சொல்ல வருகுது!
மல்லிகைப் பூ :
மல்லி கைப்பூ என்ற வுடனே
மணம ணக்குமே.
மக்க ளுடைய உள்ள மெல்லாம்
மயங்கி நிற்குமே.
உள்ளம் குளிரப் பெண்கள் தலையில்
என்னை அணிவரே.
உருவம் சிறிதே ஆன போதும்
உயர்ந்த வள்நானே !
முத்து வடிவம் கொண்ட என்றன்
உடலைப் பாருங்கள்.
வெள்ளை உள்ளம் போன்ற என்றன்
நிறத்தைப் பாருங்கள்.
இத்த லத்தில் மலர்க ளுக்குள்
சிறப்பு மிக்கவள்
என்னைப் போல ஒருத்தி உண்டோ ?
இல்லை, இல்லையே !
கமலா :
குவிந்தி ருக்கும் தாம ரைப்பூ
அதோ வருகுது!
கோபு ரத்துக் கலசம் போல
அதோ வருகுது!
தாமரைப் பூ :
சின்னப் பூவே மல்லிகை,
என்ன பேச்சுப் பேசினாய்?
என்னைப் போல ஒருத்தியை
எண்ணிப் பார்க்க வில்லையோ?
தண்ணீர் மேலே நிற்பவன்
தட்டைப் போல விரிபவள்
கண்ணுக் கினிதாய்த் தெரிபவள்
கடவுள் பூசைக் குரியவள்!
சிறப்பு மிக்க கலைமகள்
செல்வம் நல்கும் திருமகள்
இருவர் என்மேல் இருப்பரே.
என்போல் உண்டோ சொல்லடி?
விமலா :
தங்க நிறத்து அரளி அதோ
குலுங்கி வருகுது !
சண்டை போடத் தானோ அதுவும்
நெருங்கி வருகுது?
அரளிப் பூ :
மல்லி கையே! தாமரையே!
என்ன சொன்னீர்கள்?
மனித ருக்கே நீங்கள் உதவும்
கதையைச் சொன்னீர்கள்.
எல்லாம் வல்ல இறைவ னுக்கும்
பூசை செய்யவே,
இந்த உலகில் நான் பிறந்தேன்;
தெரிந்து கொள்ளுங்கள்.
அங்கம் முழுதும் மஞ்சள் பூசி
நிற்கும் என்னையே
தங்க அரளி என்றே மக்கள்
புகழ்ந்து கூறுவார்.
இங்கே உள்ள மலர்க ளுக்குள்
நானே சிறந்தவள் !
எதிர்த்துப் பேச எவருக் கேனும்
துணிச்சல் உண்டோடி?
கமலா :
அதோ, அதோ சாமந்தியும்
அருகில் வருகுதே!
அதுவும் இந்தச் சண்டையிலே
குதிக்கப் போகுதோ?
சாமந்திப் பூ :
மல்லிகை, தாமரை, தங்கரளி -
உங்கள்
மகிமையைக் கேட்டுச் சலித்து
விட்டேன்.
இல்லாத நில்லாத பெருமை
யெல்லாம்-நீங்கள்
ஏனோதான் பேசி மகிழுகின்றீர்?
தங்கம் போல் நானும் நிறமுடையேன்-ஈசன்
தலையிலும் கழுத்திலும் விளங்கிடுவேன்.
மங்கல காரியம் யாவிலுமே-என்னை
மக்கள் மறப்பதே இல்லையடி.
ஓரிரு நாள்களே வாழுகின்றீர்-நீங்கள்
உடலெல்லாம் வாடி வதங்குகின்றீர்.
ஆறேழு நாள்களே ஆயிடினும்-மணம்
அள்ளிப் பரப்புவேன் நான்அறிவீர்.
என்னை விரும்பி அணிந்திடுவார்-மிக்க
ஏழை எளியவர் யாவருமே.
பொன்னொளி வீசிடும் என்னைவிட-இந்தப்
பூக்களில் சிறந்தவள் யாரடியோ?
விமலா :
ஆகா ! ஆகா ! அதோ பார்.
அழகு ரோஜா மலரைப் பார் !
வேக மில்லை, கோப மில்லை,
மெல்ல மெல்ல வருகுது பார்!
கமலா :
பட்டுப் போன்ற மலர்இது
பையப் பைய வருகுது.
தொட்டுப் பார்க்கும் ஆசையைத்
தூண்டு கின்ற மலர்இது!
விமலா :
மலர்க ளுக்குள் அரசியாய்,
மணம் பரப்பும் மலரிது!
உலக முழுதும் போற்றிடும்
உயர்ந்த ஜாதி மலரிது!
கமலா :
தெய்வத் திற்குச் சூட்டலாம்;
திரும ணத்தில் அணியலாம்;
கையில் ஏந்தி நுகரலாம்;
களிப்பை ஊட்டும் மலரிது!
விமலா :
நேரு வுக்குப் பிடித்தது;
நெஞ்ச மெல்லாம் கவர்ந்தது;
பாரில் இதனைப் போலவே
பார்த்த துண்டோ ஒருமலர்!
கமலா :
இல்லை இல்லை, ரோஜாவும்
ஏதோ பேசப் போகுதே!
விமலா :
நல்ல தைத்தான் பேசிடும்;
நாமும் அதனைக் கேட்கலாம்.
ரோஜாப் பூ :
அருமைப் பூவே, மல்லிகையே!
அழகுப் பூவே, தாமரையே!
பெருமை யூட்டும் தங்கரளி!
பிரிய மான சாமந்தியே!
உங்களின் சண்டையைப் பார்த்ததுமே-என்
உள்ளம் மிகமிக வாடியதே.
இங்குள நாமெல்லாம் ஓரினமே-இதை
ஏனோ மறந்தீர், தோழியரே?
வண்ணத்தில் வேற்றுமை இருந்திடினும்-நம்
வடிவத்தில் வேற்றுமை இருந்திடினும்
எண்ணத்தில் வேற்றுமை இல்லாமல்-நாம்
இணைந்து வாழுவோம் ஒற்றுமையாய்.
கண்டவர் உள்ளம் கவர்ந்திடவே-நல்ல
காட்சி அளித்து விளங்குகிறோம்.
வண்டுகள் வயிறார உண்டிடவே-நாம்
வாரித் தேனை வழங்குகிறோம்.
திருவிழா, திருமணம், பண்டிககைள்-எல்லாம்
சிறந்திட நாமும் உதவிடுவோம்.
நறுமணம் எங்கும் பரப்பிடுவோம்-என்றும்
நன்மைகள் செய்யவே நாம்பிறந்தோம்.
என்னை விரும்பி அணிபவராம்-நேரு
இந்திய நாட்டின் சுடர்மணியாம்!
சண்டை விரும்பாத உத்தமராம்-அவர்
சாந்த வழியிலே சென்றவராம்.
சாந்த வழியிலே சென்றவராம்-அந்தத்
தங்கத் தலைவரின் சொற்படிநாம்
சாந்த வழியிலே சென்றிடுவோம்-என்றும்
சாந்த வழியிலே சென்றிடுவோம்.
பூக்களின் குரல் :
சாந்த வழியிலே சென்றிடுவோம்-நாம்
சாந்த வழியிலே சென்றிடுவோம்.
கமலாவும் விமலாவும் :
- நாமும்
சாந்த வழியிலே சென்றிடுவோம்.
சாந்த வழியிலே சென்றிடுவோம்.
(பூக்களைத் தொடர்ந்து கமலாவும் விமலாவும் திரைக்குள்ளே போகிறார்கள்.)
-----------
வேடிக்கைப் பாடல்கள்
98. கணபதி
99. நத்தையின் கேள்வி
100. பாட்டியும் மாமாவும்
101. செடியும் சின்னத் தம்பியும்
102. ஓடுவது ஏன் ?
103. கோழியின் வயது ?
104. கட்டியவர் யார் ?
105. சட்டைபோட்ட ஒட்டைச் சிவிங்கி
106. கண்ணனும் அண்ணனும்
107. சந்தைக்குப் போனேன்
108. தாடிச் சாமியார்
109. குப்புசாமி-அப்புசாமி
------------------
98. கணபதி
தொந்தி இல்லாத கணபதியாம்
துதிக்கை இல்லாத கணபதியாம்
தந்தம் இல்லாத கணபதியாம்
என்
தம்பியே
அந்தக்
கணபதியாம்!
----------
99. நத்தையின் கேள்வி
நத்தை என்னைப் பார்த்துப் பார்த்து
முத்து! ஏனோ சிரிக்கிறாய்?
நகர்ந்து நகர்ந்து மெல்ல நானும்
நடப்ப தாகச் சொல்கிறாய்.
வீட்டை முதுகில் தூக்கிக் கொண்டு
விரைந்து செல்லும் மனிதரைக்
காட்டு வாயோ, காட்டு வாயோ,
காட்டு வாயோ, நண்பனே?
--------
100. பாட்டியும் மாமாவும்
சுப்பு வுடைய பாட்டி வயது
தொண்ணுற் றொன்பது-அவள்
சுறுசு றுப்பைப் பார்க்கும் போது
இருபத் தொன்பது!
குப்பு மாமா வயது என்ன?
இப்போ இருபது-அவர்
கூனிக் குறுகி நடக்கும் போது
அறுபத் தொன்பது!
----------
101. செடியும் சின்னத் தம்பியும்
சின்னச் செடியை நட்டுநான்
தினமும் தண்ணீர் ஊற்றினேன்.
நன்கு செடியும் வளர்ந்தது;
நான்கு மீட்டர் உயர்ந்தது!
சின்னத் தம்பி சேகரும்
செடிபோல் வளர வில்லையே!
இன்னும் குள்ள மாகவே
இருக்க லாமோ? ஆதலால்,
சிறுவன் அவனைத் தினமுமே
செடியின் அருகில் நிறுத்தியே
தண்ணீர் விட்டேன் நாலுநாள்.
சளி பிடித்துக் கொண்டதே!
---------
102. ஓடுவது ஏன்?
எலியே, எலியே, ஓடுவதேன்?
என்னைப் பூனை துரத்துவதால்.
பூனையே, பூனையே, ஓடுவதேன்?
பொல்லா வெறிநாய் துரத்துவதால்.
நாயே, நாயே, ஓடுவதேன்?
நாலடிச் சிறுவன் துரத்துவதால்.
சிறுவா, சிறுவா ஓடுவதேன்?
சிறுத்தை பின்னால் துரத்துவதால்.
சிறுத்தையே, சிறுத்தையே, ஓடுவதேன்?
சிங்கம் என்னைத் துரத்துவதால்.
சிங்கமே, சிங்கமே, ஓடுவதேன்?
எங்கோ வேட்டுக் கேட்டதனால்!
-----------
103. கோழியின் வயது
“கோழிகள் எத்தனை
ஆண்டுகள் உலகில்
வாழும் என்பதை
அறிவாயோ?”
“அறிவேன்; அறிவேன்,
மக்கள் அவற்றை
அறுத்துத் தின்றிடும்
நாள் வரைதான் !
------------
104. கட்டியவர் யார் ?
தாஜ்மகாலைக் கட்டியவர்
யார்? யார்? யார்?
சக்ரவர்த்தி ஷாஜகானாம்
கேள், கேள், கேள்.
தஞ்சைக்கோயில் கட்டியவர்
யார்? யார்? யார்?
தரணிபோற்றும் ராஜராஜன்
கேள், கேள், கேள்.
கல்ல ணையைக் கட்டியவர்
யார்? யார்? யார்?
கரிகால மன்னவனாம்
கேள், கேள், கேள்.
குதுப்மினாரைக் கட்டியவர்
யார்? யார்? யார்?
குஷவுபுஷனுனாம் அடிமைமன்னன்
கேள், கேள், கேள்.
முழங்காலைக் கட்டியவன்
யார்? யார்? யார்?
முனியன்எனும் சோம்பேறி
கேள், கேள், கேள்
----------
105. சட்டை போட்ட ஒட்டைச் சிவிங்கி
ஒட்டைச் சிவிங்கி ஒன்றுக்குச்
சட்டை போட்டுப் பார்க்கவே
எட்டுக் குரங்கு கூடின.
என்ன என்ன செய்தன?
ஒருகுரங்கு பாய்ந்து பாய்ந்தே
ஓடிச் சென்றது.
ஊருக் குள்ளே துணிக் கடைக்குள்
புகுந்து விட்டது.
பூக்கள் போட்ட பட்டுத் துணியை
அள்ளிக் கொண்டது.
பிடிக்க வந்தால் ‘உர்உர்’ என்று
கடிக்க வந்தது.
வேல மரத்தில் ஒருகுரங்கு
ஏறிக் கொண்டது.
வேண்டு மட்டும் முள்ளை யெல்லாம்
திரட்டி வந்தது.
காலின் அருகே நாலுகுரங்கு
நின்று கொண்டன.
கர்ணம் போட்டு இரண்டு குரங்கு
முதுகில் ஏறின.
ஒட்டைச் சிவிங்கி உடம்பில் துணியைப்
போர்த்தி விட்டன.
ஒழுங்கு பார்த்து மீதித் துணியைக்
கடித்துக் கிழித்தன.
அந்தத் துணியில் சமமாய் ஐந்து
பங்கு போட்டன.
அவற்றில் நான்கை நான்கு, காலில்
நன்கு சுற்றின.
மீதம் உள்ள துண்டுத் துணியால்
கழுத்தை மூடின.
விரைந்து கூடி எட்டுக் குரங்கும்
வேலை செய்தன.
ஓரம் முழுதும் முட்க ளாலே
பொருத்தி விட்டன.
உடனே எட்டுக் குரங்கும் எதிரே
வந்து நின்றன.
‘ஓஹோ! ஓஹோ!’ என்றே அவைகள்
குதிக்க லாயின.
உடுப்புப் போட்ட சிவிங்கி யாரைப்
பார்த்து மகிழ்ந்தன!
பார்த்துப் பார்த்து மகிழ்ச்சி யாலே
துள்ளிக் குதித்தன!
பாய்ந்து சென்று சிவிங்கி முதுகில்
ஏறிக் கொண்டன.
எட்டுக் குரங்கை முதுகில் ஏற்றிக்
கொண்ட சிவிங்கியும்
இன்ப மாகக் காடு முழுதும்
சுற்றி வந்தது.
ஒட்டைச் சிவிங்கி சட்டை போட்டு
எட்டுக் குரங்குடன்
வெற்றி பெற்ற வீரன் போலச்
சுற்றி வந்ததை,
மற்ற மிருகம் யாவும் பார்த்து
மகிழ்ச்சி கொண்டன.
மரத்தி லிருந்த பறவை யெல்லாம்
வியப்புக் கொண்டன.
----------
106. கண்ணனும் அண்ணனும்
அண்ணன் : கண்ணா, அருகில் வந்திடுவாய்.
கண்ணன் : காலில் சுளுக்கு; முடியாது.
அண்ணன் : கண்ணா, கணக்குப் போட்டிடுவாய்.
கண்ணன் : கையை வலிக்குது; முடியாது.
அண்ணன் : கண்ணா, பாடம் படித்திடுவாய்.
கண்ணன் : கடைவா யில்புண்; முடியாது.
அண்ணன் : கண்ணா, மாடி அறைக்குள்ளே
கறுத்த அட்டைப் பெட்டியிலே,
காசுகள் நிறைய வைத்துள்ளேன்.
கணக்காய் எண்ணிச் சொல்லிடுவாய்.
சரியாய்ச் சொன்னால், அத்தனையும்
தருவேன் உனக்கு, உனக்கேதான்!
சீடை முறுக்கு வாங்கிடலாம்;
தின்று நீயும் மகிழ்ந்திடலாம்.
கண்ணன் : அண்ணா, அண்ணா, இப்பொழுதே
அத்தனை படியும் ஏறிடுவேன்.
எட்டிப் பாய்ந்து பெட்டியிலே
இருக்கும் பணத்தை எண்ணிடுவேன்.
சீக்கிரம் எண்ணிச் சொல்லிடுவேன்.
சீடை முறுக்கு வாங்கிடுவேன்.
ஆசை தீரத் தின்றிடுவேன்.
அண்ணன் சொல்லைத் தட்டுவதா?
----------
107. சந்தைக்குப் போனேன்
சந்தைக்குப் போனேன்; சந்தைக்குப் போனேன்
சாம்பல் பூசணி வாங்கிடவே.
சண்டைக்குப் போனேன், சண்டைக்குப் போனேன்
தாய்த்திரு நாட்டைக் காத்திடவே.
வெல்லத்தைப் பார்த்தேன்; வெல்லத்தைப் பார்த்தேன்
வேலுச் சாமி கடையினிலே.
வெள்ளத்தைப் பார்த்தேன்; வெள்ளத்தைப் பார்த்தேன்
விடாது பெய்த மழையினிலே.
தவளை பார்த்தேன்; தவளை பார்த்தேன்
தரையில் தத்திச் செல்கையிலே.
தவலையைப் பார்த்தேன்; தவலையைப் பார்த்தேன்
தங்கை தூக்கி வருகையிலே.
கொல்லையில் கிடைத்தது; கொல்லையில் கிடைத்தது
கொத்துக் கொத்தாய் மல்லிகையே.
கொள்ளையில் கிடைத்தது; கொள்ளையில் கிடைத்தது
கொடியவ னுக்குத் தண்டனையே!
---------
108. தாடிச் சாமியார்
அக்கரைச் சீமையில்
சர்க்கரைச் சாமி
அவரது தாடி
அரைமைல் நீளம் !
தாடியைப் பிடித்துத்
தாங்கிச் செல்ல
அறுபது சீடர்
அவருக் குண்டு!
தேர்வடம் பிடித்துச்
செல்வது போலே
இருக்கும் அந்த
இனியநல் காட்சி!
சர்க்கரைச் சாமி
சாலையின் குறுக்கே
சிற்சில சமயம்
செல்லுவ துண்டு
சாலையைக் கடக்கச்
சரியாய் அரைமணி
ஆகும். அதனால்
அடடா, அடடா!
அனைவரும் அங்கே
அவதிப் படுவர்
எதிர்எதிர்த் திசையில்
எத்தனை கார்கள்!
எத்தனை வண்டிகள்!
எத்தனை மனிதர்கள்!
‘பாம்பாம்’ சத்தம்
பலமாய்க் கேட்கும்
‘கிணிங் கிணிங்’ எனவே
மணிகள் ஒலிக்கும்.
“எத்தனை நேரம்
இப்படி நிற்பது?”
என்பார் பலபேர.்
எனினும் சிலபேர்,
தாடியின் மேலே
தாண்டிச் செல்வர்;
தாடியின் கீழே
தவழ்ந்தும் போவர்.
குழந்தைக ளெல்லாம்
குடுகுடு என்றே
தாடியின் அடியில்
ஓடிடு வார்கள்.
சர்க்கரைச் சாமி
தாடியின் மகிமை
எடுத்துக் கூறிட
எவரும் முயன்றால்,
தாடிபோல் அந்தச்
சரித்திரம் நீளும்.
வேண்டாம். இத்துடன்
விடைபெறு கின்றேன்.
----------
109. குப்புசாமி-அப்புசாமி
அண்ணன்
குப்புசாமி, குப்புசாமி,
கோடி வீட்டிலே
அப்புசாமி இருந்திடுவார்,
அழைத்து வந்திடு.
தம்பி
அப்பு சாமி வீட்டிலே
அவரைக் காணோம் என்றிடின்...?
அண்ணன்
தெப்பக் குளத்தங் கரையிலே
தேடிப் பார்த்து அழைத்துவா.
தம்பி
தெப்பக் குளத்தங் கரையிலே
தேடிப் பார்த்தும் இல்லையேல்...?
அண்ணன்
சுப்ர மணியர் கோயிலைச்
சுற்றி வருவார்; அழைத்துவா.
தம்பி
சுப்ர மணியர் கோயிலைச்
சுற்றிப் பார்த்தும் இல்லையேல்...?
அண்ணன்
கப்பல் காரன் தெருவிலே
கடையில் இருப்பார்; அழைத்துவா.
தம்பி
கப்பல் காரன் தெருவிலே
கடையில் பார்த்தும் இல்லையேல்...?
அண்ணன்
சும்மா திரும்பி வந்திடு.
துரித மாகச் சென்றிடு.
தம்பி
சும்மா திரும்பி வரவாநான்
இம்மாந் தூரம் அலைவது?
அம்மா டியோ! இங்குநான்
நிம்மதி யாய்த் தூங்குவேன்.
‘குப்புசாமி-அப்புசாமி’ பற்றிய மற்றப் பாடல்களை வேறு ஒரு நூலில் காணலாம்
---------------
குழந்தைக் கவிஞரின் படைப்பும் பணியும்
பிறப்பு : 7-11-1922, இராயவரம், புதுக்கோட்டை மாவட்டம்.
பெற்றோர் : அழகப்பச் செட்டியார், உமையாள் ஆச்சி. கவிதை எழுதத் தொடங்கியது : 13-வது வயதில்.
‘சக்தி’யில் பணி : 1940-ல் வை. கோவிந்தன் அவர்களின் சக்தி அலுவலகத்தில்
பொருளாளராகச் சேர்ந்தார். ‘சக்தி’ இதழின் ஆசிரியர் தி.ஜ.ர. அவர்களின் ஆதரவால் சக்தியில் எழுதத் தொடங்கினார்.
இந்தியன் பாங்கில் பணி : 1941-ல் இந்தியன் பாங்கில் சேர்ந்து, படிப்படியாக உயர்ந்து, பல கிளைகளில் மேலாளராக இருந்தபின், காரைக்குடியில் வட்டார மேலாளராகப் (Area Manager) பணியாற்றி 1982 நவம்பரில் ஓய்வுபெற்றார்.
புத்தகங்கள் : இதுவரை குழந்தைகளுக்காக ஏறத்தாழ 60 புத்தகங்களை எழுதியுள்ளார்.
மத்திய அரசின் பரிசு பெற்றவை :
1. மலரும் உள்ளம்
(முதல் தொகுதி) கவிதைகள்
2. பாட்டிலே காந்தி கதை
தமிழக அரசின் பரிசு பெற்றவை :
1. மலரும் உள்ளம்
(முதல் தொகுதி) கவிதைகள்
2. பாப்பாவுக்குப் பாட்டு
3. நல்ல நண்பர்கள் (கதை)
4. பெரியோர் வாழ்விலே
5. சின்னஞ் சிறு வயதில் வாழ்க்கை நிகழ்ச்சிகள்
6. பிள்ளைப் பருவத்திலே
குழந்தை எழுத்தாளர் சங்க நிறுவனர் : 1950-ல் குழந்தைகளுக்காக எழுதுவோரை ஒன்று சேர்த்து, குழந்தை எழுத்தாளர் சங்கத்தை நிறுவியவர். பல குழந்தை எழுத்தாளர்களை உருவாக்கியவர். தற்போது இதன் தலைவர்.
தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் :
தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் பல்வேறு பதவிகளை வகித்து 1966-ல் அச்சங்கத் தலைவராக ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்கப் பெற்றார்.
தென்மொழிப் புத்தக டிரஸ்டில் பணி : ஃபோர்ட் ஃபவுண்டேஷன் நிறுவிய தென்மொழிப் புத்தக டிரஸ்டில் குழந்தைப் புத்தகத் தனி அலுவலராக (Special Officer for Children’s Books) 51/2 ஆண்டுகள் பணிபுரிந்து, தென்மொழிகள் நான்கிலும் பல நூல்கள் வெளி வரவும்,
அவற்றில் பல பரிசுகளும் பாராட்டுகளும் பெறவும் உதவினார்.
பாராட்டு :
1961 மூன்றாவது குழந்தை இலக்கிய மாநாட்டில் கேடயம் வழங்கியவர் :
குடியரசுத் தலைவர் டாக்டர் ஜாகீர் ஹூசைன் அவர்கள்.
1963 லக்னோவில் நடந்த அனைத்திந்திய குழந்தை இலக்கிய மாநாட்டில் வெள்ளிப் பதக்கம்.
1972 பாரதி இளைஞர் சங்க விழாவில் ‘பிள்ளைக் கவியரசு’ பட்டம் பொறித்த கேடயம்.
1975 தமிழ்க் கவிஞர் மன்றத்தின் முதல் மாநாட்டில் கேடயம்.
1977 குழந்தை எழுத்தாளர் சங்க வெள்ளி விழாவில் கேடயம் வழங்கிப் பொன்னாடை போர்த்தியவர் : குடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அகமத் அவர்கள்.
1979 சர்வதேசக் குழந்தைகள் ஆண்டு விழாவில் ‘மழலைக் கவிச் செம்மல்’ பட்டம் பொறித்த கேடயம்.
1982 மதுரை காமராசர் பல்கலைக் கழகம் நடத்திய சிறப்புப் பட்டமளிப்பு விழாவில் ‘தமிழ்ப் பேரவைச் செம்மல்’ என்ற பட்டமும், ரூ. 5000/- மதிப்புள்ள பொற்பதக்கமும்.
1982 கல்கத்தா தமிழ் எழுத்தாளர் சங்க வெள்ளி விழாவில் குத்துவிளக்கு.
1985 புதுடில்லியில் நடந்த அனைத்திந்திய குழந்தைகள் கல்வி மாநாட்டில் கேடயம்.
மொழி பெயர்ப்பு :
இவரது ‘நம் நதிகள்’ எனும் தென்னாட்டு ஆறுகளைப் பற்றிய நூலை, நேஷனல் புக் டிரஸ்ட் 14 இந்திய மொழிகளில் வெளியிட்டுள்ளது. தெலுங்கில் இவரது பாடல் தொகுப்பு ஒன்றும், பல பாடல்கள் ஆங்கிலத்திலும் பிறமொழிகளி்லும், சில நூல்கள் தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய தென் மொழிகளிலும், வெளிவந்துள்ளன.
கோகுலம்-கௌரவ ஆசிரியர் :
‘கல்கி’ நிறுவனம் வெளியிடும் ‘கோகுலம்’ எனும் மாத இதழின் கௌரவ ஆசிரியராக 1983 முதல் பணியாற்றி வருகிறார்.
குழந்தைக் கவிஞர் தொடர்பான நூல்கள்
குழந்தைக் கவிஞர் வள்ளியப்பா வாழ்க்கை வரலாறு
- டாக்டர் பூவண்ணன்
வானதி பதிப்பகம், சென்னை-17.
குழந்தை இலக்கியத்தில் வள்ளியப்பா ஒரு வழிகாட்டி
- கதி. கணேசன்
அருள் சிவம் நூலகம், காரைக்குடி
குழந்தைக் கவிஞரின் இலக்கியத் திறன்
- வே. கிருட்டிணசாமி
மணிவாசகர் நூலகம், சிதம்பரம்.
கவிதை தந்தவர் கதை
(பாரதியார், கவிமணி, வள்ளியப்பா ஆகியோரின் வாழ்க்கை வரலாறு.
தமிழக அரசின் பரிசு பெற்றது.)
- புலவர் அ. அப்துல் கரீம்
தமிழ் நிலையம், புதுக்கோட்டை
மேலும்,
குழந்தைக் கவிஞரின் நூல்கள் அனைத்தையும் ஆய்வு செய்து தமிழ்க் குழந்தை இலக்கியத்தில் முதல் முதலாக சென்னைப் பல்கலைக் கழக டாக்டர் பட்டம் பெற்றுள்ளார், டாக்டர் அம்புஜம் யுவச்சந்திரா.
குழந்தைக் கவிஞரின் கவிதைகளை ஆய்வு செய்து கேரளப் பல்கலைக் கழகத்தில் எம்.ஃபில். பட்டம் பெற்றுள்ளார் திருமதி ஓ. பத்மகுமாரி.
-----------
This file was last updated on 2 April 2016.
Feel free to send corrections to the webmaster.