அகல் விளக்கு ( நாவல்)
மு. வரதராசனார் எழுதியது.
akal viLakku (novel)- part 1
of mu. vAratarAcanAr
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the ChennaiLibrary.com and Mr. Chandrasekaran for providing a soft copy
of this work and for permission to include it as part of Project Madurai collections.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2016.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
அகல் விளக்கு (முழு நாவல்)
மு.வரதராசனார் எழுதியது.
சாகித்ய அகாதெமி விருது பெற்றது
Source:
அறிமுகம்
சந்திரனும் வேலய்யனும் இளமை நண்பர்கள். இருவரும் இளமையில் ஒரே வகுப்பில் பயின்று, ஒன்றாகவே விளையாடி, ஒன்றாகவே வளர்ந்தவர்கள். ஆனால், பத்தாவது வகுப்புக்குப் பின்னர், அவர்கள் வாழ்வில் பிரிவு ஏற்பட்டது. பிரிவு விரிந்து பரந்து ஒருவரை ஒருவர் எட்டாத அளவிற்குக் கொண்டு சேர்த்துவிட்டது.
சந்திரனுடைய வாழ்வு மேடு பள்ளம் நிறைந்தது. வேலய்யனுடைய வாழ்வு சமவெளியில் அமைதியாகச் செல்லும் பெரிய ஆற்றை ஒத்தது.
சந்திரனுடைய வாழ்க்கை அரளிச் செடியைப் போல், ஒருபுறம் கண்ணைக் கவரும் அழகும் நறுமணமும் உடைய மலர்களைக் கொண்டு, மற்றொருபுறம் அவற்றிற்கு மாறான இயல்புள்ள இலைகளைக் கொண்டிருப்பது. வேலய்யனுடைய வாழ்க்கை துளசிச் செடியைப் போன்றது. துளசிச் செடியில் அழகிய மலர்கள் இல்லை, வெறுக்கத்தக்க பகுதியும் இல்லை. மலரும், இலையும், தண்டும், வேரும் எல்லாம் ஒத்த ஒரே வகையான மணம் கமழ்வது அது.
சந்திரனைப் போல் நல்ல அழகும், கூரிய அறிவும் பெற்று அதனால் செருக்கடைந்து சீரழிந்து தாமும் கெட்டுப் பிறர்க்கும் சுமையாக வாழ்வதைவிட வேலய்யனைப் போல் அறிவு குறைவாக இருந்தாலும் சிறந்த பண்புகளைப் பெற்று அடக்கமான வாழ்வு வாழ்ந்தாலே போதும் என்ற உயர்ந்த வாழ்க்கைக் குறிக்கோள் இக் கதையைப் படிக்கின்றவர்கள் உள்ளத்தில் உருவாகும்.
"ஒரு குடும்பத்தின் தலைவியாக, பல மக்களுக்குத் தாயாக விளங்க வேண்டிய கட்டான உடம்பும், ஈரமான நெஞ்சும் படைத்த ஊழ் அந்த அம்மையார்க்குத் தனிமைத் துன்பத்தையே வாழ்வின் பரிசாக அளித்து விட்டது" என்ற வரிகளைப் படிக்கும்போது துக்கம் நம் நெஞ்சை அடைக்கிறது; வாய்விட்டுக் கதறி அழவேண்டும் என்ற உணர்வு மேலிடுகிறது.
அத்தகைய துக்கத்தைப் பெற்ற பாக்கிய அம்மையார் தம் துன்பங்களை எல்லாம் மறந்து ஆற்றியிருந்து திருக்குறளையும், திரு.வி.க. போன்ற பெரியார்களின் நூல்களையும் படித்துப் பயன்பெற்று ஒளிவிளக்காய்த் திகழ்கிறார். அந்த விளக்கின் ஒளிபட்ட கற்பகமும் கயற்கண்ணியும் மணிமேகலையும் நற்பண்புகள் பல பெற்று வாழ்க்கைச் சிக்கலில் உழலாமல் உயர்கின்றார்கள்.
அறிவொளியை அளிக்கும் கல்வியைப் பயின்றும் மூட நம்பிக்கைகள் பலவற்றை வளர்த்துக் கொண்ட மாலன் குறுக்கெழுத்துப் போட்டியிலும், குதிரைப் பந்தயங்களிலும் பணத்தை இழந்து மனம் ஏங்குகிறான். உழைப்பு இல்லாமலும் எளிதாகவும் செல்வத்தைச் சேர்க்க மனம் எண்ணுகிறது. செம்பைப் பொன்னாக்கும் ரசவாத வித்தை காட்டும் சாமியார்களின் பின் சென்று அலைகிறான். அவன் வாழ்வில் இரக்கம் கொண்ட வேலய்யன் "எனக்கு உழைப்பில் நம்பிக்கை உண்டு, அறத்தில் நம்பிக்கை உண்டு" என்று கூறி மாலனுடைய தவறான நம்பிக்கைகளைப் போக்கும் முயற்சி பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளது.
"என்ன உலகம் இது? பெண்கள் இருவர் பழகினால், உடம்பைக் கடந்து உள்ளத்தின் உறவு கொண்டு பழகவில்லையா? ... ஆண்கள் இருவர் பழகும்போது அப்படி உள்ளத்தால் பழகவில்லையா? ஓர் ஆணும் பெண்ணும் பழகும் போது மட்டும் உள்ளம் இல்லையா? ஏன் இந்தத் தடுமாற்றம், ஏமாற்றம் எல்லாம்?" .... இமாவதியின் ஆழ்ந்த உள்ளத்திலிருந்து எழுந்த இந்தக் கேள்வியை ஒவ்வோர் ஆணும் பெண்ணும் எண்ணி எண்ணி விடை காண முடியுமானால், சமுதாயம் பண்பாடு மிக்கதாய் எளிதில் முன்னேற்றம் எய்தலாம்.
சீரழிந்த சந்திரன் தொழுநோயின் பிணிப்பிலேயே உழன்று வருந்திக் கடைசியாக உணர்வுபெற்று உண்மைகளையெல்லாம் வெளியிட்டு ஆத்திரத்துடன் பேசும் பேச்சுகள் உள்ளத்தை உருக்குகின்றன.
"நீ மண் அகலாக இருந்த காலத்தில் நான் பித்தளை அகலாக இருந்தேன். சிறிது காலம் பளபள என்று மின்னினேன். என் அழகையும், அறிவையும் அப்போது எல்லாரும் விரும்பினார்கள், பாராட்டினார்கள், என்ன பயன்? வர வர எண்ணெயும் கெட்டது, திரியும் கெட்டது, சிட்டமும் பிடித்தது. ஒளி மங்கியது, மங்கிவிட்டேன், நீதான் நேராகச் சுடர்விட்டு, அமைதியாக எரியும் ஒளிவிளக்கு" என்று வேலய்யனிடம் சந்திரன் கூறும் கருத்துகள் கதையின் கருப்பொருளாக அமைகின்றன.
"டே எப்போதும் இதில் வேகம் வேண்டாம்டா, வேகம் உன்னையும் கெடுக்கும், உன்னைச் சார்ந்தவர்களையும் கெடுக்கும்" என்று சைக்கிளில் செல்பவன் கூறும் மொழிகள் நம்மைத் தடுத்தாட் கொள்கின்றன.
"விளையாட்டாக இருந்தாலும் விதிகளுக்குக் கட்டுப்படவேண்டும். தெரியுமா? நீயே அரசன் என்று எண்ணிக்கொண்டு, உன் விருப்பம் போல் ஆட முடியாது, தெரிந்து கொள்" என்று பந்தாட்டக்காரன் சொல்லும் சொற்கள் நமக்கு அறன் வலியுறுத்தலாக எண்ணிக் கொள்ளவேண்டும்.
"படிப்பு எங்கே? பண்பு எங்கே? அழகுக்கு அழகு, அறிவுக்கு அழகு, அன்புக்கு அழகு என்று விலைபோக வேண்டிய நல்ல வாழ்வுகள் பணத்துக்கு அழகு, பணத்துக்கு அறிவு, பணத்துக்கு அன்பு, என்று விலை போகும் கொடுமையை நன்றாக உணர்ந்தேன்... படித்த இளைஞர்களும், பண்புள்ள அழகிகளும் பணத்துக்காக விலைபோகும் கொடுமை வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு மலிந்துள்ளதாகக் கூற முடியாது" என்று வரும் பகுதிகளைப் படிக்கும் போது, இன்று தமிழ்ச் சமுதாயத்தில் வளர்ந்து மூடியுள்ள சீர்கேடுகளை எண்ணி எண்ணிப் பண்புடையார் உள்ளத்தில் பொங்கி எழும் குமுறலையே காண்கின்றோம்.
"கோவலனுடைய தவறு நன்றாகத் தெரிந்திருந்தும் எதிர்த்துப் பிரிந்து வாழ்வதை விட, அந்தத் தவறான வாழ்வுக்கும் துணையாக இருந்து சாவதே நல்லது என்ற துணிவு கண்ணகியிடம் இருந்தது. அதனால்தான், பொருள் இழந்து வருந்திய கணவனுக்குத் தன் கால் சிலம்பைக் கொடுக்க முன் வந்தாள். கணவனைத் திருத்த முடியும் என்ற நம்பிக்கை இல்லாதபோதும் அந்த வாழ்வுக்குத் துணையாக இருந்து விட்டுச் சாகத் துணிந்த மனம் அது. அந்த மனம் எளிதில் வராது. தியாகத்தில் ஊறிப் பண்பட்ட மனம் அது. குடிகார மகனாக இருந்தாலும் அவனுக்குக் கொடுத்துக் கொடுத்துச் செல்வத்தை அழிக்கத் துணியும் தாயின் மனம் அது. அதற்கு எவ்வளவு அன்பு வேண்டும்! எவ்வளவு தியாகம் வேண்டும்!" என்ற பகுதி துறவியான இளங்கோவடிகள் கண்ணகியின் கதையைக் காப்பியமாகப் பாடிய பெருமையைப் பேசுகிறது.
தமிழ் மொழியின் ஒலிவளம், தமிழ் நாட்டின் நான்கு வகை நில அமைப்பு முதலான சிறப்புகளையெல்லாம் ஆசிரியர் எடுத்துச் சொல்லும் போது யாருக்குத்தான் மொழிப்பற்றும் நாட்டுப்பற்றும் உண்டாகாமல் போகும்?
இன்னும் ஆசிரியரின் பொன்னான கருத்துகள் எத்தனையோ, இந்நூலில் கற்கின்றோம். வெறும் பொழுது போக்கிற்காகவே கதைகளைப் படித்துக் காலத்தை வீணாக்கிய தமிழ் மக்களை, படிக்கத் தெரிந்த இளைஞர்களை இத்தகைய கதை நூல்கள் அல்லவோ கருத்துலகத்தில் ஈர்த்து, வாழ்க்கையின் அடிப்படையில் உள்ள சிக்கல்களை எண்ணச் செய்து வருகின்றன?
கா.அ.ச. ரகுநாயகன்
திருப்பத்தூர், வ.ஆ.
31-1-1958
-----------
அத்தியாயம் 1
பாலாற்றங்கரையில் நானும் சந்திரனும் கைகோத்து உலாவிய நாட்கள் எங்கள் வாழ்க்கையிலேயே பொன்னான நாட்கள். நானும் அவனும் ஒரே வயது உள்ளவர்கள்; ஒரே உயரம் உள்ளவர்கள். அந்த வயதில் எடுத்த நிழற் படத்தைப் பார்த்தால் நான் கொஞ்சம் தசைப்பற்று உள்ளவனாக இருந்தது தெரிகிறது. சந்திரன் அப்படி இல்லை, இளங்கன்று போல் இருந்தான். கொழு கொழு என்றும் இல்லாமல் எலும்பும் தோலுமாக இல்லாமல், அளவான வளர்ச்சியோடு இருந்தான். அப்படி இருப்பவர்கள் சுறுசுறுப்பு மிகுந்தவர்களாக இருப்பார்கள் என்று சொல்வார்கள். சந்திரனைப் பொறுத்தவரையில் அது உண்மையாகவே இருந்தது. அவன் மிகச் சுறுசுறுப்பாக இருந்தான்; என் தாய் என்னைப் பார்த்து அடிக்கடி கூறுவது உண்டு. "நீ சோம்பேறி, இந்தக் குடும்பமே அப்படித்தான். சந்திரனைப் பார். எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்கிறான்! அவன் முகத்தில் இரண்டு நாள் விழித்து எழுந்தால் எந்தச் சோம்பேறிக்கும் சுறுசுறுப்பு வந்துவிடுமே. நீ நாள்தோறும் அவனோடு பழகுகிறாய்; உனக்கு ஒன்றும் வரவில்லையே!" என்பார். உடனே நான், "மெய்தான் அம்மா! பழகினால் வராது. நீ சொல்கிறபடி அவன் முகத்தில் இரண்டு நாள் விழித்து எழ வேண்டும். அதற்கு வழி இல்லை. ஒன்று, நானாவது அவன் வீட்டுக்குப் போய், அவன் பக்கத்தில் படுத்திருந்து அவன் தூங்கி எழுவதற்கு முன் எழுந்து அவன் முகத்தில் விழிக்க வேண்டும். அல்லது அவனை இங்கே நம் வீட்டுக்கு வரவழைத்து உறங்கச் செய்து, எனக்குமுன் எழாதபடி செய்ய வேண்டும்" என்று சொல்லிச் சிரிப்பேன்.
என் தாய் சொல்லியபடி உண்மையிலேயே சந்திரனுடைய முகத்தில் தனிக்களை இருந்தது. பால் வடியும முகம் என்பார்களே, அதை சந்திரனிடம் கண்டேன். பள்ளிக் கூடத்துப் பிள்ளைகள் எடுத்த நிழற் படங்களில் சந்திரன் மிக மிக அழகாகத் தோன்றுவான். என் முகமோ, என் பார்வைக்கே அழகாக இருக்காது. அப்போது சந்திரனுக்கு வயது பதின்மூன்று இருக்கும். அந்த வயதில் அவனுடைய முகம் ஒரு பெண்ணின் முகம்போல் அவ்வளவு அழகாக இருந்தது. அவனுடைய தங்கை கற்பகத்தின் முகத்திற்கும் அவனுடைய முகத்திற்கும் வேறுபாடு தெரியாதபடி அவ்வளவு அழகு அவனுக்கு இருந்தது. இரண்டு ஆண்டு கழித்து மீசை கரிக்கோடு இட்டு வளர்ந்த பிறகுதான், சந்திரனுடைய முகத்தில் மாறுதல் தோன்றியது.
அவன் நிறம் சிவப்பு, என் நிறமோ கறுப்பு. அந்த நிற வேறுபாட்டால் தான் அவன் அழகாகத் தோன்றினான் என்று அப்போதெல்லாம் எண்ணினேன். நாம் போற்றுகிற சிவப்புக்கும் தூற்றுகிற கறுப்புக்கும் அவ்வளவு வேறுபாடு இருப்பதாக ஐரோப்பியர் எண்ணுவதில்லை என்பதை வளர்ந்த பிறகு தெரிந்து கொண்டேன். நம் நாட்டுச் செம்மேனியர் கருமேனியர் ஆகிய இரு திறத்தாரையும் சேர்த்துக் கறுப்பர் என்று ஐரோப்பியர் குறிப்பிடுகிறார்கள். இது அந்த இளம் வயதில் எனக்குத் தெரியாது. ஆகையால், அவன் சிவப்பாகப் பிறந்தது அவனுடைய நல்வினை என்று எண்ணிப் பொறாமைப்பட்டேன். நான் என்ன தீமை செய்து கறுப்பாகப் பிறந்தேனோ என்று கவலையும் பட்டேன்.
அவனுடைய அழகுக்குக் காரணம் நிறம் மட்டும் அல்ல, அவனுடைய முகத்தில் இருந்த ஒரு பொலிவு பெரிய காரணம். அந்தப் பொலிவு அவனுடைய பெற்றோர்களின் நோயற்ற நல்வாழ்விலிருந்து அவன் பெற்ற செல்வம் எனலாம். பிற்காலத்தில் அவனுடைய பெற்றோர்களைப் பற்றியும் பாட்டனைப் பற்றியும் பிறர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அவைகள் எல்லாம் இப்போது நினைவுக்கு வருகின்றன. அவர்கள் ஊர்ப் பெரியதனக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள்; காட்டிலும் மேட்டிலும் முரட்டு உழைப்பு உழைக்காமல் நிழலில் இருந்து அளவாக உண்டு அறிவாக வாழ்ந்தவர்கள்; உழுவித்து உண்பவராகையால், மென்மையான உடலுழைப்பு மட்டும் உடையவராய், உடலின் மென்மையும் ஒளியும் கெடாமல் காத்துக் கொண்டவர்கள். பாட்டனார் ஊர் மணியக்காரர். தகப்பனார் ஊர் மன்றத்துத் தலைவர்; நிலபுலத்தை மேற்பார்வை பார்த்தலே தொழிலாகக் கொண்டவர். தாயாரும் அப்படிப்பட்ட ஒரு குடும்பத்தைச் சார்ந்த அழகான அம்மையார். அதனால் அந்தக் குடும்பத்தில் எல்லோருமே அழகாக விளங்க முடிந்தது.
என் குடும்பத்தை அப்படிப்பட்டதாகச் சொல்ல முடியாது. என் தாய்வழிப் பாட்டனார் உழுது பாடுபட்ட உழைப்பாளி, என் தந்தைவழிப் பாட்டனார் செல்வ நிலையில் வாழ்ந்தவர் என்றாலும், இளமையில் ஒழுங்காக வாழ்க்கை நடத்தாமல் குடியிலும் காமக் கொள்ளையிலும் ஈடுபட்டு, பொல்லாத நோய்க்கு ஆளானவர். ஆகையால் குடும்பத்தில் இருந்த அழகும் இழக்கப்படுவதற்குக் காரணம் ஆயிற்று. தவிர, குடும்பம் அவ்வப்போது உற்ற இடுக்கண்கள் பல. அதனால் உடலுக்கு ஏற்ற நல்லுணவு கொடுத்து மக்களை வளர்க்கும் வாய்ப்புப் போயிற்று. இளமையிலேயே அரைகுறை அழகுடன் பிறந்தவர்களைத் தக்க உணவின் மூலமாகவாவது திருத்தலாம். அதுவும் இல்லாமற் போகவே, இட்ட வித்திலும் குறை, வளர்த்த நிலத்திலும் குறை என்ற நிலைமை ஆயிற்று.
இவ்வளவு உண்மைகளையும் உணரக்கூடிய அறிவு எனக்கு அந்த இளமைக்காலத்தில் இல்லை. பதின்மூன்று வயதுள்ள சிறுவனாக இருந்த எனக்கு இவ்வளவு பெரிய உண்மைகளை யாரேனும் சொல்லியிருந்தாலும் விளங்கி இருக்க முடியாது. அதனால், சந்திரனை என் தாய் பாராட்டிய போதும் ஏங்கினேன்; மற்றவர்கள் பாராட்டிய போதும் பொறாமைப்பட்டேன்.
சந்திரன் சுறுசுறுப்பாக இருந்ததாக என் தாய் அடிக்கடி பாராட்டிக் கூறினார். உண்மையான காரணம் சுறுசுறுப்பு அல்ல; என்னுடன் படித்த வேறு சில மாணவர் சுறுசுறுப்பாக இருந்தார்கள். அவர்களும் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்தார்கள். அம்மாவிடம் அவர்களுக்குப் பழக்கம் உண்டு. அவர்களைப் பற்றி அம்மா பாராட்டிக் கூறியதே இல்லை. ஆகையால் சந்திரனுடைய அழகின் கவர்ச்சியே அம்மாவின் பாராட்டுக்குக் காரணம் என்று சொல்ல வேண்டும். அம்மாவுக்கு என்மேல் இருந்த அன்புக்குக் குறைவில்லை. காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது போல், அழகு குறைவாக இருந்தாலும் சுறுசுறுப்புக் குறைவாக இருந்தாலும் என்னைத்தான் தம் உயிர் போல் கருதிக் காப்பாற்றினார்; அன்புமழை பொழிந்தார். சந்திரனுடைய இளமையழகு எவ்வளவு கவர்ச்சியாக இருந்தது, என் தாயின் மனத்தையும் அந்த அழகு எப்படிக் கவர்ந்தது என்பதைப் பிறகு நன்றாக உணர்ந்தேன்.
என் தாய் மட்டும் அல்ல, சந்திரனோடு பழகிய எல்லோருமே அப்படி இருந்தார்கள் என்று சொல்லலாம். ஒருநாள் சந்திரனும் நானும் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பிய போது, வழியில் நெல்லிக்காய் விற்பதைக் கண்டோம். ஓர் ஏழை சாலையோரத்தில் ஒரு கோணிப்பையின் மேல் நெல்லிக்காய்களைக் கூறுகட்டி விற்றுக் கொண்டிருந்தாள். காலணாவுக்கு எட்டுக்காய்கள் என்று விற்றுக்கொண்டிருந்தாள். தோப்பு நெல்லிக்காய்கள் சத்து மிகுந்தது என்று அதற்கு முந்திய வாரம் தான் வகுப்பில் ஆசிரியர் சொல்லியிருந்தார். அது நினைவுக்கு வந்தது. நெல்லிக்காய் வாங்கலாம் என்றேன். சரி என்று சந்திரனும் வந்தான். என் சட்டைப் பையிலிருந்து ஒரு காலணா எடுத்தேன். சந்திரனும் எடுத்து நீட்டினான். கூடைக்காரி என்னிடம் எட்டுக் காய்களை எடுத்துத் தந்தாள்; சந்திரனிடமும் அவ்வாறே கொடுத்தாள். பிறகு ‘கொசுறு’ என்றேன். என் கையில் ஒரு சின்னக் காயைக் கொடுத்தாள். சந்திரன் கேட்கவில்லை, அவனுடைய முகத்தைப் பார்த்தாள் கூடைக்காரி, உடனே தனியே ஒரு மூலையில் மூடி வைத்திருந்த காய்களிலிருந்து ஒரு நல்ல நெல்லிக்காயை - தேறிய காயைப் - பொறுக்கி எடுத்து "இந்தா! குழந்தை!" என்று சந்திரன் கையில் கொடுத்து, அவனுடைய முகத்தைப் பார்த்துப் புன்முறுவல் செய்தாள். "உன்னைப் போல் எவ்வளவு அழகாக இருக்கிறது பார் இந்த நெல்லி" என்று பாராட்டும் மொழிந்தாள். "எனக்கும் அப்படி ஒன்று கொடு" என்றேன். "அய்யோ! விலை கட்டாது அப்பா!" என்றாள்.
திரும்பி வந்தோம். என் வாய் காய்களைத் தின்பதில் ஈடுபட்டபோதிலும், சந்திரனுக்கு ஏற்பட்ட சிறப்பை நோக்கி மனம் வெட்கப்பட்டது. அவனைக் குழந்தை என்று அன்போடு அழைத்த கூடைக்காரி என்னை அப்பா பட்டியலில் சேர்த்து விட்டாள். கேட்டாலும் எனக்குக் கிடைக்கவில்லை. அவனுக்குக் கேளாமலே கிடைத்தது. அதுவும் அருமையான ஒன்று கிடைத்தது. இவற்றை எல்லாம் எண்ணி வெட்கப்பட்டேன்.
மூன்றாம் வீட்டில் பாக்கியம் என்று ஓர் அம்மா இருந்தார். அவருடைய தம்பி பெட்ரோல் கடையில் கணக்கு எழுதுபவர். அந்த அம்மா இளமையிலேயே கணவனை இழந்தவர். குழந்தையும் இல்லை. அதனால் அவர் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வருவார். குழந்தையாக இருந்த என்னோடும் என் தங்கையோடும் அன்பாகக் கொஞ்சுவார். ஆட்டங்களில் கலந்து கொள்வார். வீட்டில் ஏதாவது அடம் பிடித்து அழுதுகொண்டிருந்தால், எங்கள் அழுகுரல் கேட்டு விரைந்து வருவார். எங்களைத் தூக்கிக்கொண்டு கொஞ்சு மொழி பேசித் தேற்றுவார். வீட்டில் ஏதாவது தின்பண்டம் இருந்தால், மறக்காமல் எடுத்துக் கொண்டு வந்து எங்களுக்குக் கொடுப்பார். எங்களுக்காகவே தின்பண்டங்கள் செய்து கொண்டு வருவார் என்று அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன். பாக்கியம் செல்லம் கொடுத்து என்னை கெடுத்து விட்டதாக அம்மா அடிக்கடி சொல்வது உண்டு.
நான் செய்யும் இடக்குக்காக அம்மா என்னை அடித்தால், நான் உடனே பாக்கியத்தின் வீட்டுக்கு ஓடிப் போவேனாம். பாக்கியம் என்னை வழியிலேயே பார்த்துத் தூக்கி கொண்டு வந்து, அம்மாவை அடிப்பது போல் பாசாங்கு செய்வாராம். அதனால் நான் சில சமயங்களில் அம்மாவை எதிர்த்துப் பேசி, "இரு இரு, பாக்கியம்மாவிடம் சொல்லப் போகிறேன்" என்று மிரட்டுவேனாம். இப்படியெல்லாம் என் குழந்தைப் பருவத்தில் ஈடுபட்டிருந்த பாக்கியம், நான் பள்ளிக்கூடம் செல்லத் தொடங்கிய பிறகும் வரும்போதும் போகும் போதும் என்னைக் கண்டு என்னைத் தட்டிக் கொடுத்து அனுப்புவது உண்டு. வளர வளர, நான் போய்ப் பழகுவது குறைந்ததே தவிர. அந்த அம்மாவின் அன்பு குறைந்ததாகத் தெரியவில்லை. "வேலு முன் போல் குழந்தையாகவா இருக்கிறான்? என் மார்மேலும் தோள்மேலும் அழுது தூங்கியது அவனுக்கு நினைவிருக்குமா? எங்கள் வீட்டுத் தயிருக்கும் முறுக்குக்கும் ஆசைப்பட்டு என்னைத் தேடி வந்தது நினைவிருக்குமா? இப்போது பெரியவன் ஆகிவிட்டான். மீசை முளைக்கப் போகிறது. ஆனாலும் நான் மறக்கப்போவதில்லை. வேலுக்குப் பெண்டாட்டி வந்த பிறகு அவளிடமும் இவனுடைய கதையைச் சொல்லப் போகிறேன்" என்று என்னைப் பார்த்துச் சிரிப்பார். நானும் பதிலுக்குச் சிரிப்பது போல் நடித்து வெட்கப்படுவேன். நான் ஏழாம் வகுப்பில் படித்தபோது கொஞ்சம் உயரமாக வளர்ந்து விட்டேன். அந்தக் காலத்தில் பாக்கியம் என்னைப் பார்க்கும்போது புன்சிரிப்புக் கொள்வதோடு நின்றார். தட்டுவதும் பழைய கதையைச் சொல்லிச் சிரிப்பதும் இல்லை. அன்பு கைகளின் அளவில் வரவில்லை; கண்பார்வையளவிலும் புன்சிரிப்பின் அளவிலும் நின்றது. உள்ளத்தில் அன்பு இல்லாமற் போகவில்லை. வீட்டில் எனக்கென்று முறுக்கு முதலிய தின்பண்டங்கள் செய்யாவிட்டாலும், சில நாட்களில் ஏதேனும் சிறப்பான உணவு வகை செய்தால், ஒரு கிண்ணத்தில் வைத்து என் தாயிடம் கொடுத்து. "தம்பி சாப்பிடும்போது மறக்காமல் கொடு அம்மா" என்று சொல்லிவிட்டுப்போவார். அடுத்த ஆண்டில் சந்திரன் எங்கள் தெருவுக்குக் குடிவந்தான். அவன் என்னோடு நெருங்கிப் பழகியதும் அப்போதுதான். சந்திரனும் நானும் ஒன்று சேர்ந்து பள்ளிக்கூடம் போகும் போதும் வரும் போதும், பாக்கியம் எங்களைப் பார்த்துப் புன்முறுவல் கொள்வது உண்டு. வரவர, அந்த அன்பு எங்கள் இருவர் மேலும் பொதுவாக இருந்தது போய், சந்திரன் மேல் மிகுதியாக வளர்ந்தது. சில நாள் மாலையில் எங்கள் இருவரையும் அழைத்து உட்காரவைத்து பேசிக் கொண்டிருப்பார். அப்படிப் பேசும் போதும் சந்திரனைப் பார்த்தே மிகுதியாகப் பேசிக் கொண்டிருப்பார். நானே வலியக் கலந்து கொண்டு பேச வேண்டியிருக்கும். சில நாட்களில் சந்திரன் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு பேசுவார். அவனுடைய தலைமயிரை அடிக்கடிக் கோதுவார்; கன்னத்தைத் தட்டுவார்; கிள்ளுவார்; அவனுடைய கையை எடுத்துத் தன்கையில் வைத்து கொள்வார். அவ்வாறு செய்வன எல்லாம் என்னை அடியோடு புறக்கணிப்பன போல இருக்கும். வேறு யாராவது சந்திரனிடம் அவ்வாறு பழகினால் நான் கவலைப் பட்டிருக்க மாட்டேன். ஆனால் என்னைக் குழந்தைப் பருவம் முதல் பாராட்டிப் போற்றியவர் இப்படி என்னைப் புறக்கணித்து வேறொருவனைப் பாராட்டத் தொடங்கியது எனக்கு மிக்க வருத்தம் தந்தது.
இந்த நிலையில் வேறொருவனாக இருந்தால் அவனை அடியோடு பகைத்துக் கைவிட்டிருப்பேன். ஆனால் சந்திரனை அவ்வாறு பகைக்க முடியவில்லை. அவன் பாக்கியத்தின் பாராட்டுச் சீராட்டுகளுக்கு மகிழ்ந்து என்னைப் புறக்கணிக்கவில்லை. மேன் மேலும் என்னிடம் அன்பு செலுத்தி வந்தான். என்னைப் பிரிந்து ஒரு வேளையும் அவன் பொழுது போக்கியதில்லை. அதனால் அவனுடைய நல்ல பண்பு என் மனத்தை அவனிடம் ஈர்த்து வைத்தது.
நெல்லிக்காய் விற்றவளும் பாக்கியமும் மற்றப் பெண்களும் இவ்வாறு அன்பு செலுத்தியது பற்றி மனம் வருந்தியது ஒரு பக்கம் இருக்க, ஆண்களிலும் பலர் அவனிடம் அன்பு காட்டியதும் எனக்கு வருத்தமாக இருந்தது. சிற்றுண்டிக் கடையில் பரிமாறுபவன் முதல் பஸ் விடுபவன் வரையில், பள்ளிக்கூட ஆசிரியர் முதல் கல்வி அதிகாரி வரையில் சந்திரனிடமே மிக்க அன்பு செலுத்தியதைக் கண்டேன். வந்த சில நாட்களுக்கெல்லாம் சிற்றுண்டிக் கடைக்காரன் அவனுக்கு நண்பன் போல் ஆகிவிட்டான். விளையாடும் இடத்திற்குச் சென்றாலும் அவனுக்கு ஆதரவு மிகுதியாகக் கிடைத்தது. பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களோ அவனிடத்தில் தனிநோக்கம் செலுத்தினர்; சந்திரனுடைய குற்றங்களும் அவரவர்களுக்குக் குணங்களாகவே தோன்றின போலும். போதாக் குறைக்கு அவனுடைய கையெழுத்தும் மிக நன்றாக அச்சுப் போல் அழகாக ஒழுங்காக இருந்தது. என் கையெழுத்துத் திருத்தமாக இருந்தாலும் அவ்வளவு அழகாக இல்லை. அதனாலும் அவனுக்குத் தேர்வுகளில் மிக்க எண்கள் கிடைத்து வந்தன. இவை எல்லாம் ஒருபுறம் இருக்க, ஆண்டுக்கு ஒருமுறை வந்து வகுப்பறையைச் சுற்றிவிட்டுச் செல்லும் கல்வியதிகாரியும் சந்திரனைத் திரும்பி நோக்கினார். வகுப்பறையிலிருந்து வெளியே சென்ற போது, சந்திரனுடைய தோள் மேல் கை வைத்துத் தட்டிக் கொடுத்து, வகுப்பு ஆசிரியரைப் பார்த்து, "இவன் படிப்பில் எப்படி இருக்கிறான்?" என்றார். "மிக நன்றாகப் படிக்கிறான்" என்று ஆசிரியர் மறுமொழி கூறியதும், "பார்த்தீர்களா? நான் அப்படித்தான் நினைத்தேன். பார்த்தாலேயே தெரிகிறது. குடும்பத்தார் நன்றாகப் படித்தவர்களாக இருக்க வேண்டும்" என்றார். "அப்படிக் காணோம்" என்று ஆசிரியர் சொன்னதைக் காதில் வாங்காமலே, சந்திரனை மறுபடியும் பார்த்துப் புன்முறுவல் பூத்துச் சென்றார்.
அதற்கு அடுத்த வாரத்தில் வரலாற்று வகுப்பில் ஆசிரியர் திருமலைநாயக்கன் வரலாற்றைக் கற்பித்துக் கொண்டிருந்தபோது, அதை விட்டுவிட்டுப் பொதுவாக மனிதப் பண்பைப் பேசத் தொடங்கி எங்கெங்கோ சென்றார். இடையில் வடிவழகையும் நிறத்தையும் பார்த்து ஓர் ஆளை விரும்புவதோ வெறுப்பதோ தவறு என்றார். டாக்டர் ஜான்சன் என்ற ஆங்கிலப் புலவரின் தோற்றம் வெறுக்கத்தக்கது என்றும், ஆனால் அவருடைய உள்ளத்தின் அழகைக் கண்டே பாஸ்வெல் முதலான அறிஞர் பலர் அவரை எந்நேரமும் சூழ்ந்து நட்புக் கொண்டு மகிழ்ந்தார்கள் என்றும் கூறினார். அம்பு நேரானது யாழ் வளைவானது. ஆனாலும் யாழையே எல்லாரும் விரும்புகிறார்கள் என்று சொல்லி ஒரு குறளையும் மேற்கோளாகக் காட்டினார். உடலின் அழகைவிட உள்ளத்தின் அழகே போற்றத்தக்கது என்றும், வடிவ அமைப்பைவிட அறிவின் நுட்பமே பாராட்டத் தக்கது என்றும் முடித்தார். கல்வியதிகாரியின் பாராட்டுக்குக் காரணம் என் நினைவுக்கு வந்தது. உடனே எழுந்து ஆசிரியரிடம் குறிப்பிடலாம் என்று எண்ணினேன். ஆனாலும் வாய் திறக்காமல் இருந்தேன். அந்த நினைவோ என்னைவிட்டு நீங்கவில்லை. அதிலேயே சுழன்று கொண்டிருந்தேன். வரலாற்று ஆசிரியரோ மக்கட்பண்பை விட்டுத் திருமலைநாயக்கனின் தொண்டுகளை விளக்கிக் கொண்டிருந்தார். இடையே என் முகத்தைப் பார்த்துப் பாடத்தைக் கவனிக்காமலிருந்ததை உணர்ந்தார் போலும், "வேலய்யன்!" என்றார். நான் அலறி எழுந்தேன். "நான் என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்? எங்கே எந்த சினிமாவைப் பற்றி எண்ணமிட்டுக் கொண்டிருக்கிறாய்?" என்றார். நான் திகைத்தேன்; விழித்தேன். "ஏன்'பா இப்படிக் காசைச் செலவழித்துப் படிக்க வருகிறீர்கள்? இங்கே வந்து சினிமா நட்சத்திரங்களைப் பற்றிக் கனவு காண்கிறீர்கள்?" என்றார். "இல்லை அய்யா!" என்றேன். "எப்படியாவது கெட்டுத் தொலையுங்கள்" என்று எனக்கு ஒரு பொதுவான சாபம் கொடுத்துவிட்டுச் சந்திரனை நோக்கிக் கேட்டார். அவன் திருமலைநாயக்கன் தொண்டுகளை ஒன்றுவிடாமல் கூறி முடித்து, ஆசிரியரின் பாராட்டுகளைக் குறைவில்லாமல் பெற்றான்.
வகுப்பை விட்டு வெளியே வந்ததும், "வேலு, உனக்கு என்ன கவலை? ஏன் பாடத்தைக் கவனிக்கவில்லை?" என்று சந்திரன் கேட்டான்; என் தோள்மேல் கை போட்டவாறு அன்போடு கேட்டான். அதனால் நானும் மறைக்காமல் உண்மையைச் சொன்னேன். சந்திரன் ஒரு பெருமூச்சு விட்டு, "அது நடந்து ஒரு வாரம் ஆச்சே! இன்னும் மறக்காமல் மனத்தில் வைத்திருந்து இவ்வளவு கவலைப் படலாமா? அந்தக் கல்வியதிகாரி என்னுடைய சிவப்புத் தோலைக் கண்டு மயங்கித்தான் அவ்வாறு சொல்லிவிட்டுப் போனார். ஆசிரியரும் அதற்கு ஏற்றாற் போல் தாளம் போட்டார். விட்டுத்தள்ளு" என்று சொல்லி என் தோள்களைப் பற்றிக் குலுக்கினான்.
"இன்றைக்கு ஆசிரியரிடம் சாபமும் கிடைத்தது" என்று வருந்தினேன்.
"ஆசிரியர்கள் என்ன; முனிவர்களா? முனிவர்களே இப்போது வந்து, சாபம் கொடுத்தால் பலிக்குமா? ஆசிரியரின் சாபத்துக்கு வருந்தலாமா? அம்மா திட்டவில்லையா? ‘நாசமாய்ப் போ, பாழாய்ப்போ’ என்று எத்தனை தாய்மார்கள் வைகிறார்கள். அவை பலிக்குமா? உண்மையாகத் தம் பிள்ளைகள் கெட்டுப்போக வேண்டும் என்றா வைகிறார்கள்? இல்லவே இல்லை, ஆசிரியர்களும் இப்படித்தான்" என்று சொல்லி என்னைத் தேற்றினான்.
--------
அத்தியாயம் 2
சந்திரனுடைய தந்தையார் சாமண்ணா, பரம்பரை நிலக்கிழார் குடும்பத்தைச் சார்ந்தவர். சந்திரனுடைய பாட்டனார், இருந்த நிலங்களோடு இன்னும் பலகாணி நிலங்களைச் சேர்த்துக் குடும்பத்திற்குப் பெருஞ்செல்வம் வைத்துச் சென்றார். சாமண்ணா குடும்பத்தில் பெரியபிள்ளை; அவருடைய தம்பி - சந்திரனுடைய சிற்றப்பா - தமக்கு வந்த சொத்தை வைத்துக் காக்கும் ஆற்றல் இல்லாதவர்; நில புலங்களைக் கவனிப்பதை விட்டுவிட்டு, நகரங்களைச் சுற்றி அங்குள்ள ஆடம்பர வாழ்வில் பற்றுக் கொண்டார். வாரத்தில் மூன்று நாட்களாவது நகரத்தில் கழித்துவிட்டு மற்ற நாட்களைத் தம் கிராமத்தில் சலிப்போடு கழிப்பார். அப்போதும் நிலம் எப்படி தோப்பு எப்படி என்று கவனிக்காமல், ஓர் ஆலமரத்தடியில் தம் தோழர்களோடு புலிக்கோடு ஆடிக் கொண்டிருப்பார்; புலிக்கோடு மாறிச் சீட்டாட்டம் வந்தபோது, அவர் கையில் சிகரெட்டும் வந்து சேர்ந்தது. சாராயத்தோடு மேனாட்டுக் குடிவகைகளும் வந்து சேர்ந்தன. சந்திரனுடைய சின்னம்மா நல்லவர் ; நல்லவராக இருந்து பயன் என்ன? பெண் என்றால் கணவன் சொன்னதைக் கேட்டு வாய் திறக்காமல் பணிந்து நடக்க வேண்டுமே தவிர, கணவன் சீரழியும் நிலையிலும் அன்பான இடித்துரையும் சொல்லக்கூடாது; தன் உரிமையை நிலைநாட்டித் தற்காப்பு முயற்சியும் செய்யக்கூடாது. உரிமையே இல்லாத பெண் கணவன் கெடும்போது தானும் சேர்ந்து கெடுவது தவிர, வேறு வழி இல்லாதவளாக இருக்கிறாள். சந்திரனுடைய சின்னம்மா அப்படித்தான் குடும்பம் கெடுவதைப் பார்த்து, உள்ளம் நொந்து கொண்டிருந்தார். நீந்தத் தெரிந்தும், கைகால்களை மடக்கிக் கொண்டு கிணற்றில் மூழ்குவது போல் இருந்தது அவருடைய நிலைமை. கடைசியில் சிற்றப்பாவின் நிலங்கள் ஏலத்துக்கு வந்தபோது, சந்திரனுடைய தகப்பனாரே ஏலத்தில் எடுத்துக் கடன்காரனை அனுப்பிவிட்ட பிறகு தம்பியின் குடும்பத்துக்கென்று ஐந்து காணி நன்செய் நிலங்களை ஒதுக்கிவிட்டு, மற்றவற்றைத் தம் சொத்து ஆக்கிக் கொண்டார். அந்த ஐந்து காணி நிலங்களையும் தம்பியின் பொறுப்பில் விடாமல், தம்பி பெயரில் வைக்காமல், தம்பி மக்கள் இருவர்க்கும் பொதுவாக எழுதி வைத்தார். தம் பொறுப்பில் பயிரிட்டு விளைந்ததை அந்தக் குடும்பத்திற்குக் கொடுத்து வந்தார். அந்தச் செயலைப் பெருந்தன்மையானது என்று ஊரார் போற்றினார்கள். தம்பி மனைவியோ, அந்த உதவிக்காகத் தம் மூத்தவரைத் தெய்வம் போல் போற்றி அவர் கொடுத்ததைக் கொண்டு குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார்.
தம்பி கெட்டுப் போனதற்குக் காரணம் நகரத்துப் பழக்கமே என்பது சாமண்ணாவின் உறுதியான எண்ணம். அந்த எண்ணம் சந்திரனுடைய படிப்புக்கே இடையூறாக நிற்கும் போல் இருந்தது. அந்தக் கிராமத்தில் எட்டாம் வகுப்பு வரையில் படிப்பதற்கே பள்ளிக்கூடம் இருந்தது. சந்திரன் எட்டாவது படித்த ஆண்டில், வீட்டுக்கு வந்தவர்கள் பலர், அவனுடைய தந்தைக்கு மேற்படிப்பைப் பற்றி வற்புறுத்தினார்கள். "இந்தப் படிப்பே போதும், நமக்கு இந்தக் கிராமத்தில் வேண்டியது என்ன? கடிதம் எழுதவும் செய்தித்தாள் படிக்கவும் வரவு செலவுக் கணக்குப் போடவும் தெரிந்தால் போதும். பையன் எட்டாவது படித்து முடித்தால் அதுவே போதும், நல்ல அறிவோடு இருந்தால், இருக்கும் சொத்தை வைத்துக்கொண்டே சீமானாக வாழலாம். நான் நாலாவது வரையில்தான் படித்தேன். அந்தப் படிப்பை வைத்துக் கொண்டே நான் இந்தக் கிராமத்திலும் பக்கத்து ஊர்களிலும் நல்ல மதிப்போடு வாழவில்லையா? இந்தப் படிப்புப் போதும்" என்று அவர் மறுமொழி கூறுவார். அவர்களோ, காலம் மாறிவிட்டது என்பதை வற்புறுத்தி, பக்கத்து நகரத்துக்கு அனுப்பிப் பத்தாவது வரையில் படிக்க வைக்க வேண்டும் என்றும், இந்தக் காலத்தில் அதற்குக் குறைவாகப் படித்த படிப்புக்கு மதிப்பு இல்லை என்றும் சொல்லி வற்புறுத்தினார்கள். நகரம் என்று சொல்லக் கேட்டதும், அவர்க்குத் தம் தம்பியின் சீர்கேடு நினைவுக்கு வரும். உடனே அவர்களைப் பார்த்து, "நீங்கள் சொல்கிறீர்கள், நானும் பார்த்திருக்கிறேன், பட்டணத்துப் பக்கம் போனால் பிள்ளைகள் கெட்டுப்போகாமல் திரும்புவதில்லை. அங்கே போய்ச் சில நாள் தங்கி வந்தால் போதும், சினிமா, ஓட்டல், கச்சேரி, ஆட்டக்காரிகள், குதிரைப் பந்தயம் இப்படிப் படிப்படியாகக் கெட்டுப்போய்க் கடைசியில் ஓட்டாண்டியாவதற்கு வழி தேடிக்கொள்கிறார்கள். அந்தப் பட்டணத்து வாழ்வும் வேண்டா; அதனால் வரும் படிப்பும் வேண்டா" என்று மறுத்துவிடுவார்.
அந்தக் கிராமத்துக்கு ஆபீசர் யாரேனும் வரும்போது இந்தப் பேச்சு, நிகழும்; கிராமத்தார்களின் உறவினராக யாராவது நகரங்களிலிருந்து வரும்போதும் இந்தப் பேச்சு நிகழும். அவர்களில் சிலர் விடாமல், "அப்படியானால் நாங்கள் எல்லாம் நகரங்களில் இருந்து படித்து முன்னுக்கு வரவில்லையா? நாங்கள் கெட்டுப் போய்விட்டோமா? நாங்கள் குடும்பத்தில் அக்கறையாக வாழாமல், ஆட்டக்காரிகளையும் குதிரைப் பந்தயங்களையும் பிடித்துக்கொண்டு அலைகிறோமா?" என்பார்கள். "நீங்கள் எல்லாம் வேறு; குளத்து மீன்கள் கடல் மீன்களைப் பார்த்து வாழ முடியுமா? கடலுக்குப் போனாலும் அந்தப் பெரிய அலைகளில் நீந்திப் பிழைக்க முடியுமா? புலியைப் பார்த்துப் பூனை சூடுபோட்டுக் கொண்ட கதையாய் முடியும்" என்று சாமண்ணா ஒரே அடியாய் மறுத்துவிடுவார்.
இந்த உறுதி நெடுங்காலம் நிலைக்கவில்லை. ஆண்டு முடிவில் எட்டாவது தேர்வு நடத்துவதற்காகப் பள்ளிக்கூடத்துக்கு இன்ஸ்பெக்டர் வந்திருந்தார். அவர் மாணவர்களின் திறமையை ஆராய்ந்தறிவதில் மிக வல்லவர். எட்டாவது வகுப்பு மாணவர்களில் சந்திரன் மிகத் திறமையாக விடைகள் எழுதியதைக் கண்டு வியந்தார் ; சிறப்பாகக் கணக்குத் தேர்வில் சந்திரன் ஒன்றுவிடாமல் போட்டு முடித்து நூற்றுக்கு நூறு எண்கள் வாங்கும் வகையில் எழுதியிருந்ததைக் கண்டு வியந்தார். அன்று மாலையில், பள்ளிக்கூடத் தலைமையாசிரியரிடம் பேசிக் கொண்டிருந்தபோது சந்திரனைப் பற்றியும் அவனுடைய மேற்படிப்பைப் பற்றியும் கேட்டார். ஆண்டுதோறும் இப்படிச் சில பிள்ளைகள் தேர்ச்சி பெற்று வெளியூருக்கும் சென்று மேற்படிப்புப் படித்து உயர்ந்தால்தான் ஒரு கிராமம் முன்னுக்கு வரமுடியும் என்பது அவருடைய நம்பிக்கை. அதன்படியே அவர் தணிக்கைக்குச் சென்ற ஒவ்வொரு கிராமத்திலும் அவருடைய அறிவுரையைக் கேட்டுச் சில பெற்றோர்கள் தம் பிள்ளைகளை மேற்படிப்புப் படிக்கவைத்து மகிழ்ந்தார்கள். இந்த ஆண்டில் சந்திரனைப் பற்றி நல்லெண்ணம் கொண்ட அவர், அவனுடைய மேற்படிப்பைப் பற்றித் தலைமையாசிரியரிடம் கேட்டார். தலைமையாசிரியர் சாமண்ணாவின் மனநிலையைப் பற்றியும் உறுதியைப் பற்றியும் சொன்னார். இன்ஸ்பெக்டர் வியந்தார் ; "கிராமத்தில் பொதுவாக இவ்வளவு அறிவு நுட்பம் வாய்ந்த பிள்ளைகளைக் காண்பதே அரிது. இந்தப் பிள்ளையின் கல்வியைப் பாழாக்குவதா! அது என்ன பிடிவாதம் ! போகலாம் வாருங்கள். நான் போய் அவனுடைய தந்தையிடம் பேசுவேன்" என்று சொல்லி எழுந்தார்.
சந்திரனுடைய தந்தையாரைக் கண்டதும், "உங்கள் குடும்ப நன்மைக்காக வந்திருக்கிறேன். தவறாக எண்ணக்கூடாது. நான் சொல்வதைப் பொறுமையாக எண்ணிப் பார்க்க வேண்டும். ஒன்றும் அவசரம் இல்லை. ஒரு வாரம் இரண்டு வாரம் கழித்து முடிவுக்கு வரலாம்" என்று அடிப்படையிட்டுப் பேசத் தொடங்கினார். தம் நோக்கத்தை எடுத்துரைத்தார்.
சாமண்ணா பொறுமையோடு கேட்டிருந்து, முடிவில் பழையபடி தம் தத்துவத்தை விளங்கினார். இன்ஸ்பெக்டர் சிரித்தார். "கலைமகள் வலிய உங்கள் வீட்டைத் தேடிக்கொண்டு வருகிறாள். நீங்கள் திரும்பிப் போகுமாறு சொல்லி வழியடைக்கிறீர்கள். உங்களுக்குத்தான் இந்த ஊரில் எல்லோரையும்விட நிலபுலம் மிகுதி என்று கேள்வி. நீங்களே இப்படிச் சொல்லிப் பயந்தால்..." என்று நிறுத்தினார்.
"இந்தக் காலத்தில் எப்படி அய்யா நம்புவது? நம் குடும்பத்தில் நம் வசமாக இருக்கும் வரையில்தான் நம்முடைய பிள்ளை. வெளியே போனால் அப்புறம் சொல்ல முடியாது" என்று சாமண்ணா கொஞ்சம் நெகிழ்ந்தாற்போல் பேசினார்.
அவருடைய பேச்சின் நெகிழ்ச்சியைக் கவனித்த இன்ஸ்பெக்டர் அந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டு, "நான் உறுதியாகச் சொல்லுகிறேன், நீங்கள் ஒன்றும் பயப்படவேண்டியதில்லை. அகத்தின் அழகு முகத்தில் தெரியும். பையன் ஒருகாலும் அப்படிக் கெட்டுப் போகமாட்டான். படிப்பு வராத மக்குப் பிள்ளைகள்தான் அப்படிக் கெட்டுப் போவது வழக்கம். உங்கள் பையன் சந்திரன் ஒருநாளும் அப்படிக் கெட்டுப்போக மாட்டான், உறுதியாய்ச் சொல்லுகிறேன். ஆடு மேய்க்கிறவனுக்குத் தான் ஆட்டைப் பற்றித் தெரியும். ஊர் ஊராய்ப் போய்ப் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளின் திறமையைப் பார்க்கிறவன் நான். உங்கள் பிள்ளையைப் பற்றி உங்களுக்குத் தெரியாது, எனக்குத் தான் தெரியும். இந்த ஆண்டில் எத்தனையோ பள்ளிக்கூடங்களைப் பார்த்திருக்கிறேன் ; எத்தனையோ பிள்ளைகளைப் பார்த்து வருகிறேன். அவர்கள் எல்லோரிலும் சந்திரனைப் போல் ஒருவன் இல்லை. அவன் நாக்கில் கலைமகள் வாழ்கிறாள். நான் சொன்னால் நம்புங்கள். தனியே அனுப்பிப் படிக்கவைத்தால் கெட்டுப்போவானோ என்ற பயம் இருந்தால் அப்படி வேண்டா. கடவுள் உங்களை ஏழையாகப் படைக்கவில்லை. செல்வமும் கொடுத்திருக்கிறார். செலவு ஆனால் ஆகட்டும், நகரத்தில் ஒரு சிறு வீடு பார்த்துப் பையனுடைய அம்மாவையோ யாரையோ அனுப்பிச் சமைத்துப் போடச் செய்யுங்கள். அவர்கள் பையனைக்கூட இருந்து கவனித்துக் கொள்வார்கள். எப்படியோ பையன் படிக்க வேண்டும். அதுதான் வேண்டியது. செல்வம் இன்றைக்கு இருக்கும்; நாளைக்குப் போகும். கல்வி அப்படிப்பட்டது அல்ல. யாரோ ஒருவரைத்தான் கலைமகள் தேடி வருவாள். உங்கள் குடும்பத்தை இப்போது தேடிவந்திருக்கிறாள். அவளை அவமதிக்க வேண்டா, சொன்னால் கேளுங்கள். உங்கள் பையன் படித்துப் பட்டம் பெற்று, நாளைக்கு ஒரு கலெக்டராக வந்தால், உங்களுக்கு எவ்வளவு பெருமை! ஊருக்கு எவ்வளவு பெருமை! எவ்வளவு பணம் இருந்தாலும் அதற்கு ஈடு ஆகுமா?" என்று சாமண்ணாவின் நெஞ்சைத் தொடும்படி எடுத்துச் சொன்னார்.
சாமண்ணாவின் நெஞ்சில் ஏதோ புத்துணர்ச்சி பிறந்தது. உடம்பிலே ஒருவகைக் குளுமை நாடி நரம்பெல்லாம் பாய்வதுபோல் உணர்ந்தார். ஒன்றும் பேசாமல் தலை குனிந்திருந்தார். "சரி என்று சொல் அப்பா" என்று தொலைவில் யாரோ ஒரு குடியானவனுடைய குரல் கேட்டது. சாமண்ணா தலை நிமிர்ந்து, அவன் யார் என்று பார்த்தார். இரண்டு ஆட்கள் பேசிக் கொண்டு போவதைக் கண்டார். வீட்டின் முகப்பில் ஒரு பல்லி டிக் டிக் என்றது. அது என்ன திசை என்று கவனித்து உள்ளே எழுந்து சென்று பஞ்சாங்கக் குறிப்பைப் பார்த்தார். அந்த வேளையில் அந்தத் திசையில் பல்லி சொன்னால் என்ன பலன் என்று பார்த்தார். "யோகம்" என்று இருந்தது. தம் மனைவியிடம் சென்று ஒரு பெரிய தட்டில் பழங்களும் வெற்றிலை பாக்கும் கொண்டுவரச் சொன்னார். வேலையாளை அழைத்து நான்கு தேங்காய் உரித்துவரச் சொன்னார். இன்ஸ்பெக்டரை நோக்கிப் புன்முறுவலோடு சென்று அவரெதிரே உட்கார்ந்தார்.
"ஒன்றும் அவசரம் இல்லை. பத்து நாள் பொறுத்து முடிவு செய்யலாம். பையனுடைய படிப்பு உங்களால் கெட்டதாக ஏற்படக் கூடாது. அதைச் சொல்லிவிட்டுப் போகவே வந்தேன். அவ்வளவுதான்" என்று எழுந்தார்.
"இருங்கள், வெற்றிலைபாக்கு எடுத்துக் கொண்டு போக வேண்டும்" என்று சாமண்ணா தடுத்தார். "நீங்கள் தெரிந்துதான் சொல்கிறீர்கள். உங்களைப்போல் பெரியவர்கள் சொன்னால், அதை ஏற்றுக்கொண்டு நடக்க வேண்டியது தான்" என்றார்.
வெற்றிலை முதலியன வந்த பிறகு, இன்ஸ்பெக்டர் அவற்றில் கொஞ்சம் எடுத்துக்கொண்டு, "நான் வந்த காரியம் முடிந்தது என்று தெரிந்து கொண்டேன். பையனுடைய நல்ல காலம்" என்று சொல்லிக் கொண்டே விடைபெற்றார்.
"அப்படியே ஆகட்டும்" என்று சொல்லிச் சாமண்ணா கை கூப்பினார்.
வேனில் விடுமுறை முடிந்தது. ஆனி மாதத்தில் சந்திரனும் அவனுடைய அத்தையும் வேலையாள் ஒருவனுமாக மூவரும் எங்கள் தெருவில் ஒரு வீட்டில் குடிவந்தார்கள்; சந்திரன் கிராமப் பள்ளிக் கூடத்தை விட்டு நகரப் பள்ளிக் கூடத்து மாணவன் ஆனான்.
----------
அத்தியாயம் 3
எங்கள் ஊர் இப்போது ஒருவகைச் சிறப்பும் பொலிவும் இல்லாமற் காணப்பட்டாலும், சிறப்போடு இருந்த பழைய ஊர்களில் அது ஒன்று. முப்பது ஆண்டுகளுக்கு முன் வாலாசாப்பேட்டை என்றால் தென்னிந்தியா முழுவதற்கும் தெரியும். தென்னிந்தியாவில் ஏற்பட்ட பழைய நகராட்சி மன்றங்களில் வாலாசா நகராட்சி மன்றமும் ஒன்று என்றால், அதன் பழைய பெருமை தானே விளங்கும். இன்று உள்ள மிகப் பழைய உயர்நிலைப் பள்ளிகளில் வாலாசாப்பேட்டை உயர்நிலைப் பள்ளியும் ஒன்று. அது ஏற்பட்டு ஒரு நூற்றாண்டுக்கு மேல் ஆகிவிட்டது. அவ்வளவு பழம் பெருமை வாய்ந்த ஊர் எங்கள் ஊர். அதன் பழம் பெருமைக்கு வேறு இயற்கைச் சான்றுகள் வேண்டுமானால், இரண்டு சொல்லலாம், ஒன்று, நெடுங்காலமாக மக்கள் வாழ்ந்த ஊர் ஆகையால் எந்தக் கிணற்றிலும் நீர் உப்பாக இருக்கும். மற்றொன்று, மிகப் பழங்காலத்து ஊரமைப்பு ஆகையால் தெருக்கள் எல்லாம், அகலமாக அமைந்து, ஒவ்வொரு வீட்டின் முன்பும் மிகப் பழைய வேப்பமரங்கள் காலத்தை அளந்து காட்டுவனபோல் பருத்த அடிமரங்களோடு நிற்கும்.
அந்த அழகான ஊரில் எங்கள் தெரு தெற்கு வடக்காக அமைந்திருந்தது. எங்கே இருந்து பார்த்தாலும் வேப்பமரங்கள் வரிசையாய் உயர்ந்து நிற்க, வீடுகள் ஏறக்குறைய ஒரே வகையாய் அமைந்து அழகான காட்சியாக இருந்தன. இப்போது அதே தெரு பாழடைந்த காட்சியைத் தருகிறது. அந்தக் காலத்தில் பட்டு நெசவு எங்கள் ஊரில் மிகுதி. நெய்யும் தொழிலாளர்க்கு நல்ல வருவாய் இருந்தது. வயிற்றுப் பிழைப்பைப் பற்றிக் கவலையே இல்லை. பட்டுநூல்காரர் பெருகிய ஊர் அது. அதன் அடிப்படையில் வியாபாரமும் நன்றாக நடந்து வந்தது. எங்கள் தெருவின் தென்கோடியில் குதிரை வண்டிகள் நாற்பது ஐம்பது நிற்கும். ஒரு பெரிய மண்டபம் ஒன்று உண்டு. அந்த மண்டபம் ஒன்றுதான் இப்போது அழகாக உள்ளது. அதை அடுத்துச் சென்றால், காவேரிப்பாக்கத்திலிருந்து ஆர்க்காட்டுக்குச் செல்லும் பாதை குறுக்கிடும். அதன் மறு பக்கத்தில் தாலுகா நிலையமும் பதிவு நிலையமும் இருந்தன. அதனால் கிராம மக்களும் மணியக்காரர் கணக்கரும் மற்ற ஊழியர்களும் எந்நாளும் எங்கள் தெருப்பக்கம் போய் வருவார்கள். எங்கள் தெரு வழியாகத்தான் வாலாசா ரயில் நிலையத்துக்குச் செல்ல வேண்டும். ஒரே நேர்வழி. அம்மூர், சோழசிங்கபுரம் முதலிய ஊர்களுக்கும் எங்கள் தெரு வழியாகவே வண்டிகள் போகும். அதனால் இரவும் பகலும் ரயிலுக்கும் கிராமங்களுக்கும் செல்லும் மாட்டு வண்டிகளும் குதிரை வண்டிகளும் போனது போனபடி இருக்கும். இப்போது பஸ் போக்குவரத்து மிகுந்துவிட்டபடியால், குதிரை வண்டிகளின் தொகை குறைந்துவிட்டது. வண்டிக்காரர்க்கு இப்போது வருவாய் குறைந்துபோனதால் அவர்கள் குதிரைகளை நன்றாக வைத்திருப்பதில்லை. ஆகையால் இப்போது உள்ள குதிரைகளும் முன்போல் பார்ப்பதற்கு அழகாக இல்லை. தாலுகா நிலையத்துக்கு வருவோரும் பதிவு நிலையத்துக்கு வருவோரும் தவிர, வேறு யாரும் இப்போது எங்கள் ஊர்க்கு வருவதில்லை. நெசவுத் தொழிலும் குன்றிவிட்டது ; அதனால் வியாபாரமும் குறைந்துவிட்டது. இந்தப் பக்கத்தில் இந்த ஊரில் மட்டுமே முன்பு உயர்நிலை பள்ளி இருந்தது. அதனால் வெளியூரிலிருந்து மாணவரும் பெற்றோரும் படிப்பை நாடியும் வந்தார்கள். இப்போது பக்கத்து ஊர்களிலும் உயர்நிலைப்பள்ளிகள் ஏற்பட்டு விட்டபடியால் கல்வி காரணமாக வருவோரும் குறைந்து விட்டார்கள். முன் இந்தக் குறை எல்லாம் இல்லாத படியால், எங்கள் தெரு கண்ணுக்கு இனிய காட்சியோடு பெருமை பெற்று விளங்கியது.
இந்தத் தெருவில் எங்கள் வீடு கிழக்குப் பார்த்து அமைந்திருந்தது. நான் ஒருநாள் காலையில் வேப்பமரத்தை அடுத்த பெரிய திண்ணையின் மேல் உட்கார்ந்து, சில குச்சிகளும் நூலும் காகிதமும் பசையும் வைத்துக்கொண்டு காற்றாடி செய்து கொண்டிருந்தேன். அதற்கு வால் வேண்டுமே என்று எண்ணித் திண்ணையைவிட்டு எழுந்த போது, "தம்பி" என்று யாரோ அழைக்கும் குரல் கேட்டுத் திரும்பினேன்.
ஐம்பது வயது உள்ள ஓர் அம்மையாரும் என் வயது உள்ள பிள்ளைகள் இருவரும் எங்கள் வீட்டெதிரே நின்றிருந்தார்கள். அந்த அம்மையார் என்னைப் பார்த்து, "23ஆம் எண் உள்ள வீடு எது அப்பா!" என்றார்.
"இது 20, இன்னும் மூன்று வீடு கழித்து இதே போல ஒரு வீடு இருக்குது பாருங்கள்" என்று வடக்குப் பக்கம் காட்டினேன்.
"எல்லா வீடும் ஒரே மாதிரி; வேப்பமரம், நீளமான திண்ணைகள் எல்லாம் ஒரே வகையாக இருந்தால் எப்படிக் கண்டு பிடிப்பது?" என்று சொல்லிக்கொண்டே நகர்ந்தார் அந்த அம்மையார்.
"வீட்டு எண் பார்த்தால் தெரியுமே! வா அத்தை, போகலாம்" என்று ஒரு பையன் முன்னே பரபரப்பாகச் சென்றான்.
உடனே நான் வீட்டிற்குச் சென்று ஒரு மூலையில் கொடியில் தொங்கிக் கொண்டிருந்த பழம் புடைவையில் நீளமாக ஒரு துண்டு கிழித்துக் கொண்டு வெளியே வந்தேன். வீடு கேட்டவர்கள் எங்கே என்று பார்த்தேன். நான் காட்டிய நான்காம் வீட்டின் எதிரே ஒரு மாட்டு வண்டி நின்று கொண்டிருந்தது. முன் பேசிய பையன் மட்டும் வெளியே இருந்தான். மற்றொரு பையனும் அந்த அம்மையாரும் வண்டியிலிருந்து சில சாமான்களை எடுத்துச்சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் அந்த வீட்டுக்குப் புதிதாகக் குடிவந்தவர்கள் என்று தெரிந்து கொண்டேன். சரி யாரோ, போகட்டும் என்று நான் காற்றாடிக்குச் சூத்திரம் அமைக்கத் தொடங்கினேன். அளவு பார்த்துச் சூத்திரம் அமைத்த பிறகு, கிழித்து வந்த புடைவைத் துண்டை அதற்கு வாலாகக் கட்டினேன். ஒரு பெரிய வேலையைச் செய்து முடித்ததாகப் பெருமிதம் கொண்டேன்.
உடனே வீட்டிற்குள் சென்று என் வேலைத்திறமையை எல்லோருக்கும் காட்டினேன். என் தம்பி பொய்யாமொழி "அண்ணா ! அண்ணா ! எனக்குக் கொடு அண்ணா" என்று கெஞ்சினான். தங்கை மணிமேகலையோ என் திறமையைப் பாராட்டாமல், "ஓஓ ! அம்மா புடைவையிலிருந்து வால் கிழித்துக் கொண்டாயா? தெரிந்து போச்சு! இரு, அம்மாவிடம் சொல்லிவிடுகிறேன்" என்று என்னை மிரட்டினாள். அதற்குள் அம்மாவே வந்து பார்த்து, புடைவை கிழிக்கப்பட்டிருந்ததையும் பார்த்து, என் முதுகில் இரண்டு வைத்தார். அதைப்பற்றி ஒரு சிறிதும் கவலைப்படாமல் என் பெருமிதம் சிறிதும் குன்றாமல், பெட்டியிலிருந்து நூலுருண்டையை எடுத்துக் கொண்டு காற்றாடியுடன் வெளியே வந்தேன்.
வீட்டுத் திண்ணை மேல் ஏறி நின்று கொண்டு காற்றாடியைச் சிறிது விட்டுப் பார்த்தேன். இரவெல்லாம் அடித்த மேல் காற்று நின்று விட்டிருந்தது. திண்ணையை விட்டு இறங்கித் தெருவில் நின்று காற்றாடியை விட்டு மெல்ல மெல்ல நூலை விட்டவாறே சிறிது ஓடினேன். காற்றாடி உயர எழுந்து பறந்தது. என் உள்ளமும் உயர்ந்து பறந்தது. வடக்கு நோக்கி மெல்ல நடந்து நூலை உயர விட்டுச் சென்றேன். எதிரே ஒரு குதிரை வண்டி வரவே, ஓரமாக ஒதுங்கினேன். ஒதுங்கியபோது காற்றாடியைப் பார்க்கவில்லை. அது ஒரு வேப்பமரத்தின் கிளையில் சிக்கிக்கொண்டது. என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தேன். அந்த வேப்பமரம் 23ஆம் எண்ணுள்ள வீட்டின் முன் புறத்தில் உள்ளது. அங்குத்தான் புதிதாக வந்தவர்கள் இருந்தார்கள். திகைத்துக் கொண்டிருந்தபோது, முன் கண்ட அந்தப் பையன் வெளியே வந்து "காற்றாடியா? கிளையில் அகப்பட்டுக் கொண்டதா?" என்று சொல்லிக்கொண்டே சிறிதும் தயங்காமல் என்னைக் கேட்கவும் கேட்காமல், என் கையில் இருந்த நூலைப் பற்றி வெடுக்கென்று இழுத்தான். நூல் அறுந்ததே தவிர, காற்றாடி வரவில்லை, எனக்குக் கோபம் வந்தது. "யாரடா நீ! உன்னைக் கூப்பிட்டேனா? எனக்கு இழுக்கத் தெரியாதா?" என்று உரக்கச் சொல்லி, "மடையன், கழுதை" என்று எனக்குள் சொல்லிக் கொண்டேன். அதற்குள் அவனுடன் வந்த அம்மையார் வெளியே வந்து, "என்ன அப்பா அது?" என்றார்கள்.
"ஒன்றும் இல்லை. அத்தை! காற்றாடி சிக்கிக் கொண்டது. இழுத்தேன். நூல் அறுந்துவிட்டது" என்றான் அந்தப் பையன்.
"பார்த்தாயா! உன் குணத்தைக் காட்டிவிட்டாயே! அவன் காற்றாடியை நீ ஏன் இழுத்தாய்? எதிலும் இப்படித் தானே முன்னேபோய் விழுந்துவிடுகிறாய்!" என்று பையனைப் பார்த்துச் சொன்னார். என்னைப் பார்த்து, "இரு தம்பி, எங்கள் வீட்டு வேலைக்காரப் பையனையாவது வேறு யாரையாவது கொண்டு எடுத்துத் தரச் சொல்வேன்" என்றார்.
இத்தனையும் கேட்டுக் கொண்டிருந்த வீட்டுக்கார அம்மா வெளியே வந்து, "என்ன? காற்றாடிச் சண்டையா? ஆனிமாதம் பிறந்து விட்டதே! இன்னும் பள்ளிக்கூடம் திறக்கலையா?" என்றார். என்னைப் பார்த்ததும், "ஓ! வேலுவா? சண்டை போடாதேப்பா, இவனும் உன்னைப் போல் உங்கள் பள்ளிக்கூடத்தில் படிக்க வந்தவன்தான்" என்றார். உடனே அந்தப் பையனுடைய அத்தையைப் பார்த்து, "அம்மா! இந்தப் பையன்தான் வேலு. இவனைப் பற்றித்தான் உங்களிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். நாலாம் வீட்டுப் பையன். அந்தப் பள்ளிக் கூடத்தில் தான் படிக்கிறான். போகவரத் துணையாக இருப்பான். நல்ல பையன், ஒரு கெட்ட பேச்சு வாயில் வராது" என்று என்னைப் பற்றி நற்சான்றும் கொடுத்தார்.
இப்படி அவசரப்பட்டு நூலை அறுத்த அந்தப் பையன் தான் சந்திரன். அந்த வீட்டுக்கார அம்மா என்னைப் புகழ்ந்த புகழ்ச்சியால் என் மனத்தில் இருந்த சினம் இருந்த இடம் தெரியாமல் போயிற்று. சந்திரனுடைய அத்தை என்னை பார்த்த கனிவான பார்வையும், பேசிய கருத்தான பேச்சும் என் மனத்தில் அன்பை விளைத்தன. வேலைக்காரப் பையன் மடமட என்று வேப்பமரத்தில் ஏறிக் காற்றாடியை என் கையில் கொடுத்தவுடன், சந்திரன் பக்கத்திலேயே உட்கார்ந்துவிட்டேன். அன்று அந்தத் திண்ணையில் தான் எங்கள் நட்பு மெல்லத் தொடங்கியது. அது ஆயுள் நட்பாக வளர்ந்துவிடும் என்று அப்போது நான் எதிர்பார்க்கவேயில்லை.
சந்திரனுடைய ஊர் பெருங்காஞ்சி என்பதும் ஊரில் எட்டாவது படித்து முடித்தான் என்பதும், உயர்நிலைப்பள்ளியில், சேர்ந்து படிப்பதற்காக வாலாசாவுக்கு வந்தான் என்பதும் நல்ல எண்கள் வாங்கி வகுப்பிலேயே முதல்வனாகத் தேறி இன்ஸ்பெக்டரிடம் நற்சான்று வாங்கி வந்தான் என்பதும் ஆகிய எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். அவர்களோடு வந்த மாசன் என்ற அந்தப் பையனுக்குப் படிப்புத் தெரியாது என்றும் வேலைக்காக அழைத்து வந்தார்கள் என்றும், மரம் ஏறுவதில் கெட்டிக்காரன் என்றும் எல்லாவற்றையும் சந்திரனே சொன்னான். அவனுடைய தந்தை பயிர்த்தொழில் உடையவர் என்பது முதலான குடும்பச் செய்திகளை அவன் சொல்ல, என் தந்தை மளிகைக்கடை வைத்து வியாபாரம் செய்தல் முதலான எங்கள் குடும்பச் செய்திகளை நான் சொன்னேன். அத்தை விதவை என்றும், குழந்தை இல்லாதவர் என்றும் சொன்னான். நான் பேச்சை நிறுத்துவதாக இருந்தாலும் அவன் மேலும் வளர்த்துக் கொண்டிருந்தான். புதிய இடம் புதிய ஆட்கள் என்ற தயக்கமே இல்லாமல் சந்திரன் எல்லாவற்றையும் எடுத்துச் சொன்னான். அதனால் நானும் அவ்வாறு பேசிப் பழகினேன்.
மறுநாள் காலையில் 9 மணிக்குப் பெருங்காஞ்சிப் பள்ளிக்கூடத் தலைமையாசிரியர் வந்து சந்திரனை அழைத்துக் கொண்டு உயர்நிலைப் பள்ளிக்குப் புறப்பட்டார். அன்று உயர்நிலைப்பள்ளி திறக்கும் நாள் ஆகையால், நான் புதிய ஆடை வேண்டும் என்று அம்மாவிடம் போராடிக் கொண்டு வீட்டினுள் இருந்தேன். "வேலு" என்று குரல் கேட்டது. பல நாள் பழகியவன் அழைத்த குரல்போல் இருந்தது. எட்டிப்பார்த்தேன். சந்திரன் அந்தத் தலைமையாசிரியரோடு நின்று கொண்டிருந்தான். "நான்தான் கூப்பிட்டேன். நீயும் வருகிறாயா?" என்றான்.
"இதோ வந்து விடுகிறேன், இரு" என்று சொல்லி, அம்மா கொடுத்த உடையை உடுத்துக்கொண்டு புறப்பட்டேன். பள்ளிக்கூடத்தை நோக்கி நடந்தபோது சந்திரனுடைய கை என் தோள்மேல் இருந்தது. ஆனால் அவ்வாறு அவனுடைய தோள்மேல், கைவைத்துச் செல்லும் அளவிற்கு என் மனம் துணியவில்லை.
----------
அத்தியாயம் 4
சந்திரன் பள்ளியில் சேர்ந்த மறுநாள் அவனுடைய தகப்பனார் சாமண்ணா வாலாசாவுக்கு வந்தார். புத்தகம் முதலியவை வாங்குவதற்குப் பணம் கொண்டு வந்திருந்தார். சந்திரன் எங்கள் வீட்டுக்கு வந்து, "எங்கள் அப்பா வந்திருக்கிறார். உன்னைப் பார்க்கணும் என்றார், வா" என்று கையைப் பிடித்து அழைத்துச் சென்றான்.
சாமண்ணா கூடத்தில் ஒரு பாயின் மேல் உட்கார்ந்திருந்தார். என்னைப் பார்த்ததும், "வா’ப்பா நீயும் நான்காம் பாரம் படிக்கிறாயாமே, நல்லா படி; ஒருவருக்கொருவர் துணையாக இருங்கள்" என்றார். பக்கத்தில் உட்காரச் சொல்லி, முதுகைத் தடவிக் கொடுத்து, "கெட்ட பிள்ளைகளோடு சந்திரன் சேராதபடி பார்த்துக்கொள். பள்ளிக்கூடம் உண்டு, வீடு உண்டு என்று இருக்க வேண்டும். சினிமா, ஓட்டல் என்று அந்தப்பக்கம் இந்தப்பக்கம் நுழையக் கூடாது. படித்து முன்னுக்கு வரவேண்டும். சந்திரன் ஏதாவது தப்பாக நடந்தால், அத்தையிடம் சொல்லிவிடு. நான் பத்துப் பதினைந்து நாளுக்கு ஒருமுறை வருவேன், என்னிடம் சொல்லு" என்றார்.
சாமண்ணா அப்போது நாற்பது வயது உள்ளவராக நல்ல கட்டான உடம்போடு இருந்தார். மாநிறமானவர், நெற்றியை அடுத்து வழுக்கை குடிபுகுந்தபடி இருந்தது. நெற்றியில் சந்தனப்பொட்டும் குங்குமமும் இருந்தன. காலையில் ஊரில் அணிந்த திருநீறு வியர்வையால் மறைந்து போயிருந்தது. வெண்ணிறமான உடையும் மலர்ந்த விழியும் புன்முறுவலும் அவருடைய உள்ளத்தின் தூய்மையை எடுத்துக் காட்டுவனபோல இருந்தன. சிறிது நேரம் தமக்கையாரோடு ஊர்ச்செய்திகளைப் பேசிக்கொண்டிருந்து மறுபடியும் என்னைப் பார்த்தார். "கண்ட பிள்ளைகளோடு சேர்ந்து விளையாட வேண்டா. சந்திரனும் நீயும் வீட்டிலேயே திண்ணையிலேயே விளையாடுங்கள். இவ்வளவு இடம் போதாதா? இனிமேல் படிப்புத்தான் முக்கியம். விளையாட்டு எதற்கு? விளையாடினது போதும், வாத்தியார்கள் கொடுத்த பாடங்களைப் படியுங்கள், எழுதுங்கள், வேளைக்குச் சாப்பிடுங்கள்", என்று எனக்கும் அதே வீட்டில் சாப்பாடு முதலியன ஏற்பாடு செய்துவிட்டவர் போல் பேசினார். சந்திரன் இங்கும் அங்கும் போய்க் கொண்டிருந்தான். நான் சாமண்ணா பக்கத்தில் உட்கார்ந்தவன் சிலைபோல் இருந்தேன். கையும் காலும் மடக்கிக் கொண்டு அவ்வாறு சிறிது நேரம் உட்கார்ந்திருந்தது துன்பமாக இருந்தது. சாமண்ணா அதையும் கவனித்தவர் போல், "டே! அப்பா! சந்திரா! நீ அரை வினாடி சும்மா இருக்கிறாயா? இங்கே போகிறாய், அங்கே போகிறாய், இதை எடுக்கிறாய். அதை வைக்கிறாய், அதோ பார், உன்னைப்போல் பிள்ளை எவ்வளவு அமைதியாக உட்கார்ந்திருக்கிறான். நீ இதை எல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும். தெரியுமா?" என்றார். என் உள்ளத்தில் இருந்த துன்பம் அவருக்கு எப்படித் தெரியும்? உட்கார்ந்தது போதும் என்றும், எப்போது விடுதலை கிடைக்கும் என்றும் என் மனம் ஏங்கியது. அசைந்து, அசைந்து உட்கார்ந்தேன். கடைசியில் எழுந்து நின்று, "போய் வருகிறேன். அம்மா கூப்பிடுவார்கள்" என்றேன். உடனே சாமண்ணா தன் மகனைப் பார்த்து, "பார்த்தாயா! அம்மாவுக்கு எவ்வளவு பயப்படுகிறான்? நீ உன் அம்மாவை ஏய்க்கிறாயே" என்று சொல்லிவிட்டு, என்னைப் பார்த்து, "போய் வா, அப்பா! நல்ல பிள்ளைகளாக நடந்து படிப்பிலேயே கருத்தாக இருக்க வேண்டும். சந்திரனைப் பார்த்துக்கொள்ள வேண்டும்" என்றார். வாயிலைக் கடந்தவுடன், அவிழ்த்துவிட்ட கன்றுபோல் துள்ளிக்கொண்டு வந்துவிட்டேன்.
சந்திரன் படிப்பை நான் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று சாமண்ணா சொன்னார். அந்த நிலையில் அவன் இல்லை. ஆங்கிலம் தவிர, எல்லாப் பாடங்களிலும் அவனே முதன்மையாக இருந்தான். ஆங்கிலத்தில் மட்டும் வரலாற்று ஆசிரியருடைய மகன் சந்திரகுப்தன் என்பவன் வல்லவனாக இருந்தான். அந்த ஒரு பாடத்தில் சந்திரன் அவனோடு போட்டிபோட முடியவில்லை. ஒருநாள் ஆங்கில ஆசிரியர் சந்திரனைப் பார்த்து, "நீ கிராமத்திலிருந்து வந்ததால் உனக்கு ஆங்கிலம் கொஞ்சம் கடினமாக இருக்கிறது. முயற்சியோடு படி, அடுத்த ஆண்டில் சந்திரகுப்தனைவிட நீயே வல்லவன் ஆவாய்" என்றார். அந்தச் சொற்கள் சந்திரனுக்கு ஊக்கம் கொடுத்தன. "நம் நண்பன் சந்திரன் அந்தச் சந்திரகுப்தனைவிடத் திறமையானவன்" என்று நானும் பெருமை கொண்டேன்.
ஆனால், கால் ஆண்டு தேர்வு முடிந்த பிறகு, என் தந்தையார் சந்திரன் பெற்ற எண்களையும் ஒப்பிட்டுப் பார்த்து, "சே இவ்வளவுதானா - நீ! கிராமத்துப் பையன் ஒருவன் வாங்குகிற மார்க்கும் நீ வாங்கவில்லையே, நீ எப்படி முன்னுக்கு வரப் போகிறாய்?" என்று வெறுத்தார்.
"எல்லாவற்றிலும் பாஸ் மார்க் வாங்கியிருக்கிறேன் பார்" என்று சொன்னேன்.
"அதுபோதுமா’டா உனக்கு வேறு என்ன வேலை? மளிகைக் கடைக்கு வரச்சொல்லி ஏதாவது வேலை வைக்கிறேனா? அரிசி பருப்பு அளந்து போடச் சொல்கிறேனா? புளி மிளகாய் நிறுத்தப் போடச் சொல்கிறேனா? அல்லது வீட்டில் உங்கள் அம்மா ஏதாவது வேலை வைக்கிறாளா? உன் படிப்புக்கு என்றே எல்லா ஏற்பாடும் செய்கிறோம். நீ இந்தக் கதியாக இருக்கிறாய், பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வந்தவுடன் காற்றாடி, பம்பரம், புள், கோலி என்று ஆடப் புறப்பட்டுவிடுகிறாய். நான் காலையில் சில்லறைக் கடைக்குப்போய் அங்கே ஆட்களோடு போராடிவிட்டு, இரவு பத்து மணிக்குக் கடையைக் கட்டிக்கொண்டு வீட்டுக்குத் திரும்புகிறேன். அந்தக் காலத்தில் என்னை இப்படிப் படிக்க வைத்திருந்தால், நான் எவ்வளவோ படித்திருப்பேன். எனக்குச் சொல்வார் யாரும் இல்லை. உனக்கு எல்லாம் இருந்தும், உன் தலைவிதி இப்படி இருக்கிறது" என்று ஒரு புராணமே படித்துவிட்டார். அன்றைக்கு எனக்கு அந்தத் தேர்வு எண்களின்மேல் ஏற்பட்ட வெறுப்புக்கு அளவில்லை. இப்படி ‘மார்க்’ என்று சொல்லி ஒரு முறையை எந்தப் பாவிகள் ஏற்படுத்தினார்களோ, அதனால் அல்லவா அப்பாவிடம் வசை கேட்க வேண்டியிருக்கிறது என்று மிக வருந்தினேன்.
அம்மா ஒரு நாளும் என்னை அப்படிக் கண்டித்தது இல்லை. காலையில் நேரத்தோடு விழித்தெழாவிட்டால், அல்லது, மாலையில் விளக்கு வைத்தவுடன் படிக்க உட்காராவிட்டால், அப்போதுதான் அம்மாவின் வசை கேட்கும். சில வீடுகளில் வேளைக்குச் சாப்பிடாவிட்டாலும் தாய்மாரின் வசை கேட்கும். இயற்கை எனக்கு நல்ல பசியைக் கொடுத்திருந்தபடியால், நான் இந்த வசை கேட்கும்படி ஏற்படவில்லை.
சந்திரனுடைய அத்தை என் தாயைவிட நல்லவர். காலையில் படுக்கையை விட்டு ஏழுமணி வரையில் எழாதிருந்தாலும், அந்த அத்தை ஏன் என்று கேட்பதில்லை. விளக்கு வைத்தவுடன் படிக்க உட்காராவிட்டாலும் கேட்பதில்லை. ஆனால் சந்திரன் காலையில் நேரத்தோடு எழாவிட்டாலும், மாலையில் படிக்கத் தவறுவதில்லை, பாடங்களை மிக ஒழுங்காகப் படித்துவந்தான். அதனால் அந்த அத்தை வசை பாடும் வழக்கமே இல்லாமல் இருந்தது.
அத்தைக்கும் அம்மாவுக்கும் சந்திரன் வந்த அந்த வாரத்திலேயே பழக்கம் ஏற்பட்டது. அந்த ஞாயிற்றுக் கிழமை பிற்பகல் 3 மணிக்குச் சந்திரன் தன் அத்தையை அழைத்துக் கொண்டு எங்கள் வீட்டுக்குள் வந்தான். "வாங்க அம்மா, வாங்க" என்று அம்மா முகமலர்ச்சியோடு அந்த அத்தையை வரவேற்றார். பாய் போட்டு உட்கார வைத்தார். "இருக்கட்டும் அம்மா. நமக்கு ஏன் இதெல்லாம்?" என்று அத்தை பாயைச் சுருட்டிவிட்டுக் கம்பத்தின் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார். ஒரு பையில் கொண்டு வந்திருந்த நான்கு தேங்காயையும் ஒரு வெல்ல உருண்டையையும் எடுத்து வைத்து, "எங்கள் ஊரிலிருந்து கொண்டு வந்தவை. எங்கள் தோப்புத் தேங்காய்; எடுத்துக்கொள்ளுங்கள்" என்றார். அவற்றைக் கண்டதும், அம்மாவின் முகமலர்ச்சி முன்னைவிட மிகுதியாயிற்று. ஒரு தட்டுக் கொண்டுவந்து அவற்றை எடுத்து வைத்து எதிரில் உட்கார்ந்து பேசத் தொடங்கினார்.
இப்படிப் பொருள்களை வாங்கிக் கொள்வதில் அம்மாவுக்கு எப்போதும் மகிழ்ச்சி உண்டு. அப்பா வாரத்துக்கு ஒரு முறை இருபது முப்பது ரூபாய் கொண்டுவந்து கொடுப்பார். அந்த நோட்டுகள் அம்மாவின் மனத்துக்குப் பெரிய பொருளாகத் தோன்றுவதில்லை. தம்முடைய தம்பி மாதத்துக்கு ஒருமுறை இரண்டு மூன்று ரூபாய்க்குப் பழங்கள் முதலியன வாங்கிக்கொண்டு வந்து பொருள்களாகக் கொடுப்பார். அவைகளே அம்மாவுக்குப் பெருமையாக இருக்கும். பெண்களுக்கு பொதுவாக உள்ள இந்தப் பண்பைச் சந்திரனுடைய அத்தை எப்படியோ தெரிந்து கொண்டு அன்று முதல்முறையாக வந்தபோதே கை நிறையப் பொருள் கொண்டுவந்தார். அந்த அத்தையும் ஒரு பெண் அல்லவா? பெண்ணின் மனம் நன்றாகத் தெரிந்திருக்கும். தவிர, அவர்கள் குடும்பத்திலேயே கற்ற குடும்பக்கல்வி அது.
பிற்காலத்திலும் அம்மாவிடம் இந்தப் பண்பைக் கவனித்திருக்கிறேன். எனக்கு ஓயாத வேலை; அதனால் சென்னையில் கடைக்குப் போய்ப் பொருள்களை வாங்கிச் சுமந்து கொண்டு ஊர்க்குப் போவதற்கு வாய்ப்பும் இல்லை. அது துன்பமாகவும் இருக்கும். அதனால் ஊர்க்குப் போகும் போதெல்லாம் அம்மாவிடம் பத்து இருபது என்று ரூபாய் நோட்டுகளைக் கொடுத்துவிட்டு இரண்டொரு நாள் இருந்து விட்டுச் சென்னைக்குத் திரும்புவேன். ஆனால் என் தம்பி பொய்யாமொழி அம்மாவின் மனத்தை மகிழ்விக்கும் முறையில் நடந்து கொள்வான். கடைகடையாகத் திரிந்து அம்மாவுக்கு விருப்பமான பொருள்களை வாங்கி இரண்டு மூன்று பைகள் நிறைய எடுத்துக் கொண்டு போய்க்கொடுத்துவிட்டு வருவான். அந்தப் பொருள்களின் மதிப்பு எல்லாம் சேர்ந்து ஐந்து ஆறு ரூபாய் இருக்கும். அவன் செய்வதுதான் அம்மாவுக்கு மிக விருப்பமாக இருக்கும். இப்படி ஐந்து அல்லது ஆறு ரூபாய்க்குப் பொருள்களைக் கொண்டு போய்க் கொடுத்து விட்டு, ஊரிலிருந்து வரும் போது அம்மாவிடமிருந்து பத்துப் பதினைந்து ரூபாய் கேட்டு வாங்கிக் கொண்டு வந்துவிடுவான். ஆனாலும் அவன்தான் அம்மாவுக்கு அன்பான பிள்ளையாக இருந்தான். இந்த உண்மை தெரிந்திருந்தும் ஓய்வு இல்லாத காரணத்தால் என்னால் அப்படி நடக்கவும் நடிக்கவும் முடியவில்லை.
சந்திரனுடைய அத்தை நடிக்கவில்லை; ஏமாற்றவில்லை பெண்களின் உறவு நீடிப்பதற்கு அது ஒரு வழி என்று கடமையாகவே கொண்டார். உண்மையாகவே அம்மாவுக்கும் அந்த அத்தைக்கும் உறவு வளர்ந்து நிலைபெற்றது. எந்த அளவிற்கு உறவு வளர்ந்தது என்றால், சந்திரனுடைய அத்தையை என் தாய் முதலில் அம்மா என்று பொதுவாக அழைத்தாலும், போகப்போகத் தன் தாயை அழைப்பது போலவே அன்புடன் அழைத்துப் பழகிவிட்டார். சந்திரனைப் பார்த்து நானும் அத்தை அத்தை என்றே அழைக்கப் பழகிவிட்டேன். என் சொந்த அத்தை வீட்டுக்கு வந்தபோது மட்டும் வேறுபாடு தெரிவதற்காக நம் அத்தை என்றும் சந்திரன் அத்தை என்றும் வேறுபடுத்திப் பேசுவேன். சொந்த அத்தை வந்து போய்விட்டபிறகு அத்தை என்று என் வாய் சொன்னால், அது சந்திரனுடைய அத்தையையே குறித்தது. அந்த அளவிற்கு எங்கள் பழக்கம் குடும்ப உறவாக வளர்ந்து விட்டது.
இப்படி அத்தை எங்கள் வீட்டுக்கு வந்து பழகிக்கொண்டிருந்தபோது ஒரு நாள் பாக்கிய அம்மையாரின் பழக்கமும் ஏற்பட்டது. பாக்கிய அம்மையாரின் வீடு 18ஆம் எண் உடையது. எங்கள் வீட்டுக்கு தெற்கே மூன்றாம் வீடு. ஆகவே நானும் சந்திரனும் அந்த வழியாகவே பள்ளிக்குப் போய் வரவேண்டும். இரண்டாம் நாளே என்னைப் பார்த்து, "அது யார் வேலு!" என்று கேட்டுத் தெரிந்து கொண்டார். அடுத்த வாரத்தில் ஒரு நாள் மாலையில் அத்தை எங்கள் வீட்டில் பேசிக்கொண்டிருந்தபோது பாக்கியமும் வந்தார். அப்போது அம்மா, அத்தை, பாக்கியம் மூன்று பேரும் உட்கார்ந்து கலகலப்பாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். வரவர பாக்கியம் அத்தை, வீட்டுக்கே நேராகப் போகவும் அத்தை நேராகப் பாக்கியத்தின் வீட்டுக்கே போகவும் பழக்கம் முதிர்ந்தது. இரண்டு நாள் பாக்கியத்திற்கு உடம்பு நலிவாக இருந்தபோது, அத்தையே அங்கே போய்ச் சமையலும் செய்து உதவினார். தம்முடைய ஊரிலும் இப்படிப் பல குடும்பங்களின் பெண்களுக்குத் தாய்போல் இருந்து உதவி செய்து அத்தை பெயர் பெற்றிருப்பதாகச் சந்திரன் சொன்னான். சந்திரனோடு அத்தை நகரத்துக்கு வந்ததனால், பெருங்காஞ்சியில் பல பெண்களுக்குக் கையொடிந்தது போல் இருக்கும் என்றும் சொன்னான்.
பாக்கியம் குழந்தை பெற்றுத் தாயாக விளங்காவிட்டாலும் தாய்மையுள்ளம் நிறைந்த அம்மையார். அதனால் என்னையும் என் தங்கை மணிமேகலையையும் மற்றொரு தாய்போல் இருந்து வளர்த்து அன்பு காட்டினார். ஆனால், இயற்கை பொல்லாதது! வளர வளர நாங்கள் இறக்கை வளர்ந்த குஞ்சுகள் போல், பாக்கியத்தின் அன்புக் கூட்டிலிருந்து பறந்துவிட்டோம். எங்கள் அன்பு மாறுவதைப் படிப்படியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் வேதனை பாக்கியத்தின் மனத்துக்கு இருந்திருக்கும்.
மனம் மட்டும் அல்ல, தோற்றமும் அவ்வளவு அழகாகக் கவர்ச்சியாக இருந்தது. ஒரு குடும்பத்தின் தலைவியாக, பல மக்களுக்குத் தாயாக விளங்கவேண்டிய கட்டான உடம்பும் ஈரமான நெஞ்சும் படைத்த ஊழ், அந்த அம்மையாருக்குத் தனிமைத் துன்பத்தையே வாழ்வின் பரிசாக அளித்து விட்டது. நான் என் தாயின் வயிற்றில் இருந்தபோது பாக்கியத்திற்குத் திருமணம் ஆனதாம். நிறைந்த கர்ப்பமாக இருந்த காரணத்தால் தான் அம்மா அவருடைய திருமணத்திற்குப் போகவில்லை என்று ஒரு பேச்சில் தெரிவித்தார். நான் பிறந்த அன்றுதான், பாக்கியம் கணவனை இழந்தாராம். பிறந்த மகனுடைய முகத்தைக் கண்டு பூரித்து முகமலர்ந்து இருந்த என்தாய், மூன்றாம் வீட்டின் அழுகை ஆரவாரத்தைக் கேட்டுச் செய்தி தெரிந்து கொண்டு கண்ணீர் வடித்தாராம். பாக்கிய அம்மையாரின் உள்ளத்தில் என்னை வளர்த்த பாசம் ஒரு புறம் இருந்தபோதிலும், என்னைப் பார்த்த சில வேளைகளில் தம் கணவனை இழந்த நாள் நினைவுக்கு வந்து கண்ணீர் விடுவது உண்டு. ஆனால் எனக்கு அறிவும் நினைவும் வளர்ந்தபிறகு, அப்படிப் பாக்கியம் கண்ணீர் விட்டதைப் பார்த்ததில்லை. நான் குழந்தையாக இருந்தபோது அப்படிக் கண்ணீர் வடித்திருக்கலாம். அதற்கு நான் என்ன செய்வது?
அம்மா சொன்னது இன்னொன்றும் - அத்தையிடம் பேசிக்கொண்டிருந்தபோது சொன்னதும் - நினைவுக்கு வருகிறது. அம்மாவும் பாக்கியமும் அடுத்தடுத்து உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, நான் அம்மாவின் நெற்றியிலிருக்கும் குங்குமத்தை எடுத்துப் பாக்கியத்தின் நெற்றியில் இடுவேனாம். பாக்கியம் தடுத்துத் தடுத்துக் கண்ணீர் விடுவாராம். "வேண்டா கண்ணு! நான் இடக்கூடாது கண்ணு!" என்று அழுவாராம். "அக்கா மூஞ்சிக்குத்தான் குங்குமம் நல்லா இருக்குது" என்று நான் பிடிவாதம் செய்வேனாம்.
உண்மையாகவே பாக்கியம் அழகான நெற்றியும் கண்களும் உடையவர். அவருடைய கருவிழிகளில் ஒளி மிகுதி. என் தாயின் முகத்தைவிடப் பாக்கியத்தின் முகத்தில் கவர்ச்சி அதிகம். அதனால் என்னுடைய பிஞ்சு நெஞ்சம் இரண்டு முகங்களையும் ஒப்பிட்டுப் பார்த்திருக்கும்; பொட்டு இல்லாத குறையைத் தீர்க்க எண்ணியிருக்கும், பாக்கியம் சொன்ன காரணம், அப்போது என் அறிவுக்கும் பொருந்தாத காரணமாக இருந்திருக்கும். அதனால் நானும் பிடிவாதம் செய்திருப்பேன். ஒரு நாள் என் பிடிவாதத்திற்குப் பாக்கியம் விட்டுக் கொடுத்தாராம். நான் அந்த அளவில் விடாமல், கண்ணாடி கொண்டுவந்து "பாக்கியம்மா, நீயே இப்போ பார். எவ்வளவு அழகாக இருக்கே" என்று கண்ணாடியைக் காட்டினேனாம். பார்க்க முடியாதபடி பாக்கியத்தின் கண்களில் கண்ணீர் பொங்கி வழிந்து கொண்டிருந்ததாம். உடனே என்னைக் கட்டி அணைத்து, "கண்ணே! உனக்கு இருக்கிற அவ்வளவு கருணை கடவுளுக்கு இல்லையே, கண்ணே!" என்று கதறி அழுதாராம்.
இப்படி எல்லாம் பாக்கியத்திடம் அன்பாகக் கொஞ்சியும் உள்ளத்தின் துன்பத்தைக் கிளறியும் பழகிப் பழகி அவருடைய உள்ளத்தில் ஒரு மகனுக்கு உரிய இடத்தைப் பெற்றுவிட்டேன். உணர்ச்சி மிக்க காதலுக்கு உரிய அவருடைய இளமைப்பருவம் என்னுடைய ஆடல் பாடல்களிலும் பிடிவாதங்களிலும் அழுகை ஆரவாரங்களிலும் ஈடுபட்டுக் கழிந்தது. பாக்கியத்திடம் நான் பெற்ற அன்பில் பாதிதான் என்தங்கை மணிமேகலை பெற்றிருப்பாள். தம்பி பொய்யாமொழியோ அதிலும் பாதிதான் பெற்றிருப்பான்.
சந்திரன் எங்கள் தெருவுக்குக் குடிவந்தபோது, பாக்கியத்தின் துயரம் ஒருவாறு ஆறிப்போயிருந்தது எனலாம். கண்ணீரிலும் விம்மலிலும் மூழ்காமல், சிந்தனையிலும் பெருமூச்சிலும் பாக்கியத்தின் துயரம் கழிந்த காலம் அது. கடமையுணர்ச்சியோடு, குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்த காலம் அது. ஆனாலும் என் மேலும் சந்திரன் மேலும் அன்பு இருந்தது; அந்த அன்பு ஒரு தாயின் அன்பு என்று சொல்ல முடியாதபடி குறைந்திருந்தது. என்மேல் பேரன்பு செலுத்தி, நான் விலக விலக, ஏமாற்றம் அடைந்த உள்ளம் ஆகையால், மறுபடியும் அப்படிப்பட்ட பாசம் பிறக்கவில்லை போலும்.
அந்தக் குடும்பம் சிறைபோன்ற குடும்பம்; சிறையிலாவது ஒத்த மனம் உடையவர்கள் இருப்பார்கள்; அதனால் ஆடல்பாடலும் சிரிப்பும் வேடிக்கையும் இருக்கும். பாக்கியத்தின் குடும்பத்தில் அப்படி யாரும் இல்லை. தாய் இல்லாத குடும்பம் அது. பாக்கியம் பருவம் அடைவதற்கு முன்பே அவர் தாய் காலமாகிவிட்டாராம், தந்தையோ அன்று முதல் நொந்த உள்ளத்தோடு குடும்பச் சுமையைத் தாங்கிக் கொண்டிருந்தார். பாக்கியத்திற்கு ஒரு தம்பி உண்டு. அவர் நலிந்த உடல் உடையவர். பதினாறு வயதிலேயே அறுபது வயதுக்கு உரிய அடக்கமும் ஒடுக்கமும் அவரிடம் இருந்தன. விநாயகம் என்பது அவருடைய பெயர். அவர் அக்காவுடன் பேசுவது குறைவு. பத்தாவதில் தேர்ச்சி பெறாமல், கூட்டுறவு மளிகையில் கணக்கராகப் போகுமாறு வற்புறுத்தப்பட்டார். அந்த வேலைக்குப் போவதும் வருவதும், அக்கா நான்கு சொல் சொல்லிக் கேட்டால் இரண்டு சொல் விடையாகச் சொல்வதும், திண்ணையில் ஒரு மூலையில் உட்கார்ந்து கிடப்பதும், படிப்பகத்துக்குப் போய்ச் செய்தித்தாளை மட்டும் படித்து வருவதுமாக இப்படி அவர் வாழ்க்கையைக் கழித்தார். இப்படிப்பட்ட தம்பியோடு ஓர் அக்கா எப்படி உள்ளம் திறந்து சிரித்துப் பழக முடியும்? தந்தையோ மனைவி இறந்த பிறகு இட்ட முக்காட்டை இன்னும் களையாதவர் போல் இருந்தார். தலையில் இட்ட முக்காட்டைக் களைந்துவிட்டாலும், உள்ளம் முக்காடு இட்டபடியே கிடந்தது. "அம்மா இறந்த பிறகு அப்பா சிரித்ததை நான் பார்த்ததே இல்லை" என்று பாக்கியமே ஒருமுறை சொன்னார். கணவனும் மனைவியும் அவ்வளவு அன்பாக வாழ்ந்தார்களாம். காதல் மனைவி இல்லாத சூழ்நிலையில் ஒரு மனிதனுடைய உள்ளத்தில் எப்படிச் சிரிப்புப் பொங்கி எழும்? என்ன வயது ஆனாலும், காதல் மனைவியிடம் தான் மனிதன் சிறு பிள்ளையாக நடந்துகொள்கிறான். மூப்பு என்பதை உடல் கண்டாலும் உள்ளம் காணாத உலகம் அந்தக் காதல் உலகம் ஒன்றுதானே? அன்பான கணவனுக்கும் மனைவிக்கும் வயது அறுபதைக் கடந்தாலும், உள்ளம் இருபதைக் கடப்பதே இல்லை. பத்தைக் கடப்பதும் இல்லை எனலாம். அப்படி அன்பாக இல்வாழ்க்கை நடத்தியவர் ஆகையால், மனைவி இறந்தவுடனே அவருடைய உள்ளம் ஒரே நொடியில் மூப்பு அடைந்து சாக்காடையும் நெருங்கிவிட்டது. அதனால் ஒரு நாளும் தந்தை சிரிக்கப் பார்த்ததில்லை என்று பாக்கியம் சொன்னது உண்மையாக இருக்கலாம். பாக்கியமோ சிரிப்பது குற்றம் என்னும் விதவை வாழ்வை அடைந்துவிட்டாள். இந்தச் சூழ்நிலையில் வளர்ந்த தம்பிக்கு இயற்கையான மனவளர்ச்சி இல்லாமற்போயிற்று. ஆனால் தாயும் தந்தையும் மகிழ்ச்சியோடு வாழ்ந்த காலத்தில் வளர்ந்த பாக்கியத்தின் உள்ளமோ வளர்ச்சி அடைந்த உள்ளம். அந்த உள்ளத்தின் உணர்ச்சிகள் வெளிப்படுவதற்கு ஒரு வகையில் என்னுடைய குழந்தைப் பருவம் உதவியாக இருந்தது. நானோ, குழந்தையாக இல்லாமல் வளர்ந்துவிட்டேன். என் மனமும் வளர்ந்து விட்டது. என் வளர்ச்சி பாக்கியத்தின் ஏமாற்றமாக முடிந்தது.
தை பிறந்தால் எனக்குச் சிரங்கு பிறப்பது வழக்கம். தக்க உணவை அளவாக உண்ணாத காரணத்தாலும் இயல்பாகவே மெலிந்த நுரையீரலாலும் அடிக்கடி சிரங்கு வரும் என்பதைப் பிற்காலத்தில் தெரிந்துகொண்டேன். பள்ளிக் கூடத்தில் எந்தப் பையனோடோ பழகிய காரணத்தால் தொத்திக்கொண்டது என்பது என் பெற்றோர்களின் எண்ணம், சந்திரனும் என்னோடு படித்தான், பழகினான்; அவனுக்குச் சிரங்கு வரவில்லையே என்று நான் சொல்லி வந்தேன். சந்திரனோ, எனக்குச் சிரங்கு வந்துவிட்டதே என்ற காரணத்தால் என்னை விட்டு விலகவில்லை; பழகுவதற்குக் கூசவில்லை. நன்றாகப் பழகினான்; முன்போலவே அணுகியும் தொட்டும் பழகினான்; என் தோள்மேல் கை போட்டுக்கொண்டு பள்ளிக்கு வந்தான்; என் பக்கத்தில் உட்கார்ந்தே பள்ளியில் படித்தான். ஆனாலும் அவனுக்குச் சிரங்கு வரவில்லை. நான் மட்டும் சிரங்கால் வருந்தியது என் மனத்துக்கு வேதனையாக இருந்தது. இந்த ஆண்டில் சிரங்குப் புண் ஒவ்வொன்றும் பெரிதாய்க் காலணா அகலம் இருந்தது. யானைச் சிரங்கு என்று சொன்னார்கள். கந்தகத்தைத் தேங்காய் எண்ணெயில் காய்ச்சி என் உடம்பெல்லாம் அம்மா பூசினாள். கந்தகத்தின் தீமை அப்போது எனக்கு எப்படித் தெரியும்? அதன் நாற்றம் எனக்கு மிக அருவருப்பாக இருக்கும். அய்யோ தலையெழுத்தே என்று பொறுத்திருப்பேன். கோவணம் கட்டிக்கொண்டு கந்தகம் பூசிக்கொண்டிருந்தபோது அம்மா அப்பா தவிர, வேறு யாரும் என்னை அணுகமாட்டார்கள். யாராவது அப்போது வீட்டுக்கு வந்தாலும், நான் அவர்களின் கண்ணில் படாதபடி தோட்டத்துக்கு ஓடிப்போய் ஒளிந்து கொள்வேன். ஒரு முறை அம்மா கந்தக எண்ணெய்க் கிண்ணத்தைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு, அதில் கோழியிறகைத் தோய்த்துத் தோய்த்து என் புட்டத்தில் இருந்த சிரங்குகளில் தடவிக் கொண்டிருந்தார். அப்போது கதவைத் திறந்து கொண்டு பாக்கிய அம்மையார் வந்தார். அவரைப் பார்த்தவுடன் நான் தோட்டத்தை நோக்கி ஓடினேன். "வா’டா யாரும் இல்லை’டா ‘அக்கா’டா; உன்னை வளர்த்தவள்தான். வா’டா. உனக்கு எத்தனை நாள் அக்குளும் அரையும் தேய்த்துத் தண்ணீர் வார்த்திருப்பாள். அக்கா பார்த்தால் என்ன? வாடா" என்று அம்மா எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். நான் தோட்டத்தில் ஒரு மூலையில் ஒளிந்துகொண்டு பாக்கியம் வீட்டை விட்டுப் போகும் வரையில் அந்த இடத்தை விட்டு நகராமல் இருந்தேன்.
இப்போது எண்ணிப் பார்க்கிறேன். தாய்போல் பாசம் காட்டி வளர்த்த அந்த மனம் எவ்வளவு துன்பப்பட்டிருக்கும்? நீ தாய் அல்ல உன் பாசம் வேண்டா என்று மறுப்பதாக அல்லவா என்னுடைய கொடுஞ்செயல் இருந்திருக்கும்.
சிறுவர்களாகக் கூடி விளையாடும்போது, யாராவது ஒருவனுக்குத் தக்க மதிப்பு கொடுக்காவிட்டால் உடனே அவன் எங்கள் குழுவை விட்டு, வேறொரு குழுவில் சேர்ந்து விடுவான். எங்கள் வயிறு எரிய வேண்டும் என்று அந்தக் குழுவைப் புகழ்வான்? அங்கே திறமையாக ஆடிச் சுறுசுறுப்பாக இருப்பான். வளர்ந்த மனிதரிடத்திலும் இந்தப் பண்பைப் பார்த்திருக்கிறேன். ஒரு வீட்டுத் திருமணத்திலோ வேறு அலுவலிலோ ஒருவனுக்கு மதிப்புக் கொடுக்கவில்லையானால், அவன் அவர்களின் பங்காளி வீட்டுக்கோ பகையாளி வீட்டுக்கோ போய் அங்கு நடக்கும் அலுவலைப் பெருமைபடுத்துவான். அந்த மனப்பான்மையை மெல்ல மெல்ல பாக்கிய அம்மையாரிடம் காணத் தொடங்கினேன். அந்த அம்மா வேண்டுமென்று அப்படி நடந்திருக்கமாட்டார்; அந்த மனிதப் பண்பு இயற்கையாகத் தம்மை அறியாமலே அவரிடம் வந்திருக்கும் என்று எண்ணுகிறேன். அதனால் என்னைவிடச் சந்திரனை மிக்க அன்போடு பார்க்கத் தொடங்கினார்; ஆர்வத்தோடு பேசத் தொடங்கினார்; பாராட்டவும் தொடங்கினார். என்மேல் இருந்த அன்பைக் குறைத்துக் கொண்டார் என்று சொல்ல முடியாது; அவனிடம் மிகுதியான அன்பு காட்டியது போல் இருந்தது. சந்திரன் என்னுடைய பங்காளியும் அல்ல; பகையாளியும் அல்ல. என்ன காரணமோ, பாக்கிய அம்மையாரின் போக்கில் அந்த வேறுபாடு ஏற்பட்டதாகத் தோன்றியது. ஆனால் என் தாயிடம் பழகுவதிலும், வீட்டுக்கு அடிக்கடி வந்து போவதிலும், சிறப்பான உணவு வகைகள் செய்தால் எனக்காகக் கொண்டுவந்து தருவதிலும் அந்த அம்மா முன்போலவே இருந்தார். அதனால் சிலநாள் கழித்து எண்ணிப் பார்த்து அந்த அம்மாவுக்கு என்மேல் வெறுப்பு இல்லை என்று உணர்ந்தேன். சந்திரன் என்னைவிட அழகாகவும் அறிவாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பதால், பாக்கியம் மிக்க அன்பு காட்டுகிறார் என்று முடிவுக்கு வந்தேன். என் தாயும் என்னைவிடச் சந்திரனைப் பாராட்டிப் பேசுவதைக் கேட்டு, அதுதான் காரணம் என்று ஆறுதல் அடைந்தேன்.
----------
அத்தியாயம் 5
பங்குனி மாதம் பிறந்தால் எங்கள் ஊர்க்கு ஒரு புத்துயிர் பிறக்கும். பங்குனித் திருவிழா கோயிலில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். அதை ஒட்டித் தேரோடும் தெருக்கள் எல்லாம் மிகவும் அலங்காரம் செய்யப்படும். கடைத்தெரு மிகப் பொலிவாக விளங்கும். வழி எல்லாம் பந்தல்களும் தோரணங்களும் கட்டப்படும். திருவிழாத் தொடங்கியவுடன், வீடுதோறும் ஆட்கள் மூன்று மடங்கு நான்கு மடங்காகப் பெருகிவிடுவார்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் வெளியூரிலிருந்து உறவினர்களும் நண்பர்களும் திருவிழாவைப் பார்ப்பதற்காக வந்து தங்கியிருப்பார்கள். எங்கள் தெருவின் வீடுகளிலும் விருந்தினர் பலர் இருப்பார்கள். அல்லாமலும், எங்கள் தெருத்திண்ணைகள் தோறும் வெளியூரார் முன்பின் அறியாதவர் பலர் கேட்காமலே வந்து தங்கிப் படுத்துக்கொள்வார்கள். வேப்ப மரங்களைச்சுற்றி ஆண்களும் பெண்களும் கட்டுச்சோறு தின்றுகொண்டும் வெற்றிலைபாக்கு மென்று கொண்டும் இருப்பார்கள். திருவிழாக் காலத்தில், யார், ஏன் வந்தீர்கள் என்று வீட்டுக்காரர் வெளியாரைக் கேட்கமாட்டார்கள்; கேட்கவும் கூடாது. எல்லாரும் இறைவனுடைய மக்கள் என்ற மெய்யுணர்வு பெற்றுவிட்டதாகக் கூற முடியாது. ஆனாலும் வழி வழியாக வந்த நாகரிகமாக அதைக் கருதினார்கள். ஆகையால், திருவிழாக் காலத்தில் வீட்டின் உட்பகுதி மட்டுமே வீட்டுக்காரர்க்கும் அவர்களின் உறவினர்க்கும் உரிமையாக இருக்கும்; வீட்டின் வெளிப்பகுதி, திண்ணை முற்றம் முதலியன வெளியார் எல்லார்க்கும் உரிய பொது இடமாகக் கருதப்பட்டு வந்தன. இன்னும் சொல்லப்போனால், திண்ணை முற்றம் முதலியவைகளே அல்லாமல் அந்தந்த வீட்டுக் கிணறுகளும் எல்லார்க்கும் பொதுவுடைமையாக இருந்தன. சென்னை முதலான நகரங்களில் நாள்தோறும் திருவிழாப் போன்ற கூட்டம் இருந்தபோதிலும், இந்தப் பரம்பரை நாகரிகம் பொதுவுடைமை நாகரிகம் அவர்களுக்குத் தெரியாது. சட்டமும் சட்டத்தை மீறும் தந்திரமும் அவர்களுக்குத் தெரியுமே தவிர, இப்படிப்பட்ட பரம்பரை நாகரிகமும் அதன் பெருமையும் அவர்களுக்குத் தெரிவதில்லை.
இந்த ஆண்டில் பங்குனித் திருவிழாவின் போது எங்கள் வீட்டுக்கு வேலம், அம்மூர் முதலான கிராமங்களிலிருந்தும் சென்னையிலிருந்தும் உறவினரும் நண்பரும் வந்திருந்தார்கள். பாக்கிய அம்மையார் வீட்டுக்கும் யாரோ வந்திருந்தார்கள். சந்திரன் வீட்டிற்கு அவனுடைய தாயும் தங்கையும் வந்திருந்தார்கள். எங்கள் வீட்டுக்கு வந்த உறவினரில் முக்கியமானவர்கள் என் சொந்த அத்தையும் அத்தை கணவரும் அத்தை மகள் கயற்கண்ணியும் ஆவார்கள்.
சந்திரனுடைய தாயைப் பார்த்தபோதுதான், சந்திரன் அவ்வளவு அழகாக இருப்பதற்கு காரணம் தெரிந்து கொண்டேன். அந்த அம்மா கடைந்தெடுத்த பதுமை போல் இருந்தார். நல்ல ஒளியான நிறம், அளவான உயரம், மென்மையான உடல், ஓவியம் தீட்டினாற்போன்ற புருவமும் விழியும் நெற்றியும் உடையவர் அவர். சந்திரனுடைய தந்தைக்கும் உடம்பில் ஒரு குறையும் இல்லை. ஆனாலும் அவருடைய தோற்றம் மிக அழகானது என்று கூற முடியாது. சந்திரனுடைய தாய் அழகின் வடிவமாக விளங்கினார். அந்த அழகிற்கு ஏற்ற அமைதியும் அவரிடம் விளங்கியது. சந்திரனுடைய முகத்தில் தாயின் சாயல் நன்றாகப் புலப்பட்டது. அந்த உண்மை அவனுடைய தங்கையைப் பார்த்தபோது தெளிவாயிற்று. தாயின் அழகுக்கும் அண்ணனின் அழகுக்கும் ஒரு பாலம் போல் விளங்கினாள் அவள்.
அவள் பெயர் கற்பகம், பெருங்காஞ்சியிலேயே சந்திரன் படித்த பள்ளிக்கூடத்திலேயே அவள் படித்து வந்தாள். அவள் அப்போது ஏழாவது படித்துவந்தாள். ஏறக்குறைய அவள் வயதாக இருந்தாள் என் அத்தை மகள் கயற்கண்ணி. அவள் ஐந்தாவதுதான் படித்து வந்தாள். அந்த ஊரில் ஐந்தாவதுக்குமேல் படிக்க வகுப்பு இல்லாத காரணத்தால் "என் மகளுடைய படிப்பு இதோடு முடிந்துவிட்டது. நீ சீக்கிரம் படித்து முடித்து இவளைக் கல்யாணம் செய்துகொள்" என்று அத்தை என்னைப் பார்த்துச் சொல்லிச் சிரித்தார். "உன் மகள் படிப்பு முடிந்து போச்சு; அதனால் என் மகனுடைய படிப்பையும் சீக்கிரம் முடிக்கச் சொல்கிறாயா?" என்று அம்மா வேடிக்கையாகக் கேட்டார். அதைக் கேட்ட கயற்கண்ணி, "போதும் மாமி! சும்மா இருங்கள், உங்களுக்கு இதே பேச்சு!" என்பாள்.
கற்பகத்தைப் போலவே கயற்கண்ணி சுறுசுறுப்பாக இருந்தபோதிலும் அவ்வளவு அழகாக இல்லை. வளர்ந்த பிறகும் என் அத்தைபோல் தான் இருப்பாள் என்று எனக்குத் தோன்றியது. அது மட்டும் அல்ல; அவளுடைய வாயாடித் தன்மை எனக்கு எப்போதும் பிடிப்பதில்லை. யாராவது ஒன்று சொன்னால், அவள் இரண்டு மூன்று சொல்வாள். யாரையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று துடுக்காகக் கேட்டு விடுவாள். ஏதாவது அறிவுரை சொன்னாலும், "ஆமாம் உங்களுக்குத்தான் நிரம்பத் தெரியுமோ? போதும் நிறுத்துங்கள்" என்பாள். எனக்கு அந்தப் பேச்செல்லாம் பிடிக்காது. என் தங்கை மணிமேகலையிடமும் அவள் அடிக்கடி வம்பாகப் பேசுவாள். வலுச்சண்டை இழுப்பாள். அதைக் கண்ட நான் உடனுக்குடன் கடிந்து பேசுவேன். அம்மா அவ்வப்போது என்னைத் தடுத்து, "வேலு! சின்னப் பெண் அப்படித்தான் பேசுவாள். கிராமத்தில் பழகி வளர்ந்தவள். அங்கெல்லாம் அப்படித்தான் பேசுவார்கள். நீ கோபித்துக் கொள்ளக்கூடாது" என்று மெல்ல என்னிடம் சொல்வார். தொலைந்து போகட்டும் என்று நான் விட்டு விடுவேன்.
கயற்கண்ணியிடம் எனக்கு எவ்வளவு வெறுப்பு வளர்ந்ததோ, அவ்வளவும் கற்பகத்திடம் விருப்பமாக வளர்ந்தது. அடிக்கடி சந்திரன் வீட்டுக்குப் போய்க் கற்பகம் பேசுவதையும் செய்வதையும் கவனித்தேன். திருவிழாப் பார்க்க அவள், போனால் நானும் போவேன். கடைத்தெருவுக்கு நானும் சந்திரனும் போகும் போது, "கற்பகமும் வருவதாக இருந்தால் வரட்டுமே, வந்து பார்க்கட்டுமே" என்று அழைத்துக் கொண்டு போவேன்.
பொய்க்கால் குதிரை, மயில் நடனம், பொம்மலாட்டம், தெருக்கூத்து முதலியவற்றைப் பார்ப்பதற்குச் சந்திரனுடைய தாயும் கற்பகமும் என் அத்தையும் கயற்கண்ணியும் என் தங்கை மணிமேகலையும் சேர்ந்து போவார்கள். சந்திரன் தேர்வுக்குப் படிக்க வேண்டும் என்று நின்றுவிடுவான். "அவன் போகிறானா, பார், படிப்பில் எவ்வளவு அக்கறையாக இருக்கிறான்! நீ மட்டும் போகலாமா? உள்ளே போய்ப் படி, சாமி ஊர்வலம் வரும் போது கூப்பிடுவேன். அப்போது வா" என்று அம்மா என்னைக் கடிந்து அனுப்பி விடுவார். அப்பா கடையிலிருந்து திரும்பிவரும் நேரம் என்று நானும் போகாமல் நின்றுவிடுவேன்.
திருவிழா முடியும் வரையில் எங்கள் தெரு நிறையக் கூட்டம் போனது போனபடி, வந்தது வந்தபடி இருந்தது. கிராமத்து ஏழைமக்களே பெரும்பாலோராக இருந்தார்கள். ஒருவகையில் ஊரைச் சுற்றி அசுத்தம் செய்யப்பட்ட போதிலும் தெருவெல்லாம் எச்சிலும் எச்சிலையுமாக இருந்தபோதிலும், எல்லோருடைய மனமும் மகிழ்ச்சி நிரம்பியிருந்தது. உழைத்த உழைப்பே உழைத்து, குடித்த கூழே குடித்து, உடுத்த கந்தலே உடுத்து, படுத்த தரையிலேயே படுத்து, ஆடுமாடுகளோடு சேர்ந்து குடிசைகளில் வாழும் ஏழைமக்களுக்கு இந்தத் திருவிழா ஒரு மாறுதல் தந்து நன்மை செய்வதை அவர்களின் மலர்ந்த முகங்களில் கண்டேன். குழந்தைகளையும் கட்டுச் சோற்று மூட்டைகளையும் தூக்கிக்கொண்டு மைல் கணக்காக நடந்து சலிக்காமல் வந்து இந்தத் திருவிழாவில் இன்பம் காண்கிறார்கள் என்றால், அவர்களின் வாழ்க்கை எவ்வளவு பள்ளத்தில் வீழ்ந்து கிடப்பது என்பதை உணர்ந்தேன். புதுச்சேலை உடுத்துவதற்கு அந்தப் பெண்களுக்கு ஒரு வாய்ப்பு, புதுக்காட்சிகளைக் காண்பதற்கு அவர்களின் குழந்தைகளுக்கு ஒரு வாய்ப்பு. புது இடங்களுக்கு செல்வதற்குச் சிறுவர்களுக்கு ஒரு வாய்ப்பு, வயலையும் குடிசையையும் உழைப்பையும் மறந்து ஓய்வாகக் காலம் கழிப்பதற்கு ஆண்களுக்கு ஒரு வாய்ப்பு, பலரோடு பழகியறியாதவர்களுக்கு பழகுவதற்கு ஒரு வாய்ப்பு, குளித்தறியாதவர்களுக்குக் குளிப்பதற்கு ஒரு வாய்ப்பு, காசு கண்டறியாதவர்களுக்குக் காசை இடுப்பில் செருகி வைப்பதற்கும் எடுத்துச் செலவு செய்வதற்கும் ஒரு வாய்ப்பு, தலையில் கூடையும் மூட்டையும் இல்லாமல் நடந்தறியாத பெண்களுக்குக் கடைத்தெருக்களில் கைவீசி நடப்பதற்கு ஒரு வாய்ப்பு; இவ்வாறு பலதிற ஏழைமக்களுக்குப் பலவகை வாய்ப்பைக் கொடுத்து மகிழ்ச்சி அளித்தது அந்தத் திருவிழா. யந்திரம் போல் சுவையற்று இயங்கும் வாழ்வில் எந்த மாறுதல் வந்தாலும் அது வரவேற்கத்தக்க இன்பம் ஆகும். ஆகையால் கிராம மக்களுக்குத் திருவிழா பெரிய இன்ப நாளாகக் கழிந்தது. அவர்களின் கையில் இருந்து வந்த காசுகளால் பெட்டிகள் நிறைவதைக் கண்ட வியாபாரிகளுக்கும் திருவிழா இன்பம் தந்தது. பலவகைத் தொழிலாளர்க்கும் இன்பம் தந்தது. ஆடிய ஆட்டமே ஆடி, படித்த பாடத்தையே படித்து வந்த எங்கள் உள்ளத்திற்கும் அது இன்பம் தந்தது. ஆனால் என் உள்ளத்தில் கற்பகத்தின் நினைவுதான் இனிய புதிய பதிவாக நின்றது.
திருவிழா முடிந்ததும், கூட்டம் எப்படியோ கலைந்தது. எங்கள் ஊரை அடுத்து ஓடும் பாலாற்றில் வெள்ளம் வந்தால் ஏழுநாளுக்குள் முற்றிலும் வடிந்து போவது போல், திருவிழாக் கூட்டமும் வடிந்து போய்விட்டது. என் அத்தையும் கயற்கண்ணியும் மறுநாள் காலையில் விடைபெற்றுச் சென்றார்கள். சந்திரனுடைய தாயும் தங்கையும் அடுத்த நாள் பிற்பகல் விடைபெற்றார்கள். அவர்கள் போகுமுன் எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார்கள். அப்போது பாக்கிய அம்மையார் எங்களோடு இருந்தார். அம்மா கற்பகத்தின் கையில் நான்கு வாழைப் பழங்களும் காலணாவும் கொடுத்து அவளுடைய கன்னத்தைக் கிள்ளி, "போய்வா அம்மா! அடுத்த விடுமுறையில் வந்து போ" என்றார். பாக்கிய அம்மையார் கற்பகத்தைக் கட்டி அணைத்துக் கன்னத்தில் முத்தம் இட்டு விடைகொடுத்தார். நான் பேசாமல் பார்த்தபடி நின்று கொண்டிருந்தேன். வாயிற்படியைத் தாண்டியபோது கற்பகத்தின் சுறுசுறுப்பான கண்கள் திரும்பிப் பார்த்து என்னிடம் விடைபெற்றன. நான் அவளையே பார்த்தபடி நின்றிருந்தேன். "நல்ல பெண்! இல்லையா அண்ணா?" என்ற என் தங்கையின் குரல்கேட்ட பின் திரும்பி வந்தேன்.
சிலருடன் வாழ்நாள் எல்லாம் பழகுகிறோம். ஆனால் பழகிய எல்லா நாட்களும் நினைவில் நிற்பதில்லை. முதலில் கண்டு பேசிய நாள், அதுபோல் முக்கியமான ஒரு சில நாட்கள் மட்டுமே நினைவில் நிற்கின்றன. சந்திரனைப் பொறுத்த வரையில் காற்றாடிக்காக அவனுடன் முதலில் பேசிப் பழகிய நாள் பச்சென்று நினைவில் இருக்கிறது. கற்பகத்தைப் பொறுத்தவரையில், அன்று திருவிழா முடிந்து ஊர்க்குச் சென்றபோது பார்வையாலேயே விடை பெற்ற காட்சி நிலைத்து நிற்கிறது.
அந்த வயதில் எனக்குக் காம உணர்ச்சி இருந்தது என்று கூறமுடியாது. பொதுவாக அழகு எல்லாரையும் - குழந்தைகளையும் - கவரும் அல்லவா? கற்பகத்தின் தோற்றமும் பார்வையும் பேச்சும் அப்படி என்னைக் கவர்ந்தன. வெறுங்களிமண்ணை எடுத்து அணைத்துக் கொள்கின்றவர் யார்? அதுவே நாயாக, பூனையாக, கிளியாக, கொக்காக வடிவு பெறும்போது எந்தக் குழந்தையும், அந்தக் களி மண்ணைத் தனது தனது என்று எடுத்து அணைத்துக் கொள்கிறது. கற்பகத்தினிடம் எனக்கு ஏற்பட்ட கவர்ச்சியும் அப்படிப்பட்டதுதான். கற்பகம் விடைபெற்றபோது பாக்கியம் கட்டி அணைத்து முத்தம் கொடுத்ததற்கும் காரணம் என்ன? அழகை நுகரும் ஆற்றல் அந்த அம்மாவின் உள்ளத்தில் மிகுதியாக இருந்ததுதான் காரணம். இவ்வளவு ஏன்? சந்திரனை என் தாய் அடிக்கடி பாராட்டியதற்கும் கல்வி அதிகாரி முதல் நெல்லிக்காய் விற்பவள் வரையில் எல்லோரும் போற்றியதற்கும் காரணம் அதுதானே.
அதனால், கற்பகம் பிரிந்து சென்று சில நாள் ஆன பிறகும் அவளுடைய அழகு வடிவம் என் மனத்தில் நின்றது. அவளை மீண்டும் காணவேண்டும் என்ற ஆசையும் அரும்பியது. சித்திரை பிறந்ததும் பள்ளிக்கூட முடிவுத் தேர்வு வந்தது. சந்திரனும் நானும் நன்றாகப் படித்து எழுதினோம். கணக்குத் தவிர மற்றப் பாடங்களில் நான் நம்பிக்கையோடு இருந்தேன். ஆங்கிலத்திலும் தனக்கே முதன்மை கிடைக்க வேண்டும் என்று சந்திரன் பெருமைப்பட்டுக் கொண்டான்.
தேர்வு முடிந்ததும் சந்திரனும் அத்தையும் ஊர்க்குச் செல்ல ஏற்பாடு செய்தார்கள். அவர்களோடு பெருங்காஞ்சிக்கு போகவேண்டும் என்றும், கற்பகத்தைப் பார்க்க வேண்டும் என்றும் உள்ளம் தூண்டியது. உபசாரத்துக்காகவாவது சந்திரனும் அத்தையும் அழைப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். அவர் மூட்டை கட்டும் முயற்சியில் இருந்த படியால், என்னை அழைக்க மறந்துவிட்டார்கள். நான் நேரே அம்மாவிடம் போய், "அம்மா! நானும் அத்தையோடு அவர்களுடைய ஊர்க்குப் போய்வரட்டுமா அம்மா" என்றேன்.
"உன்னை வரச் சொன்னார்களா?" என்றார் அம்மா.
"ஆமாம் அம்மா! போன மாதமே சொன்னார்களே"
"அப்படியானால் உன் அப்பாவைக் கேட்டுகொண்டு அவர் போகச் சொன்னால் போ."
இந்த அளவு அனுமதி கிடைத்தது போதும் என்று ஒரு குதி குதித்து, அத்தையிடம் ஓடினேன். மூட்டை கட்டிக் கொண்டிருந்த அவரிடம், "நானும் உங்கள் ஊர்க்கு வரப்போகிறேன் அத்தை!" என்றேன்.
"வா’ப்பா குழந்தை! வா. அம்மா அப்பாவிடம் சொல்லிவிட்டுப் புறப்படு. சாப்பிட்டு முடிந்தவுடன் புறப்படலாம். ஊரிலிருந்தே வண்டிவரும்" என்று அத்தை கனிவுடன் கூறினார்.
இதைக் கேட்டதும் சந்திரனுக்கு எதிர்பாராத மகிழ்ச்சி ஏற்பட்டது. "பலே கெட்டிக்காரன் நீ! உனக்கு எப்படி’டா இந்த யோசனை ஏற்பட்டது? கட்டாயம், கட்டாயம் வர’ணும், தெரியுமா" என்றான்.
மளிகைக் கடையை நோக்கி ஓடினேன். பெருமூச்சு வாங்க அப்பாவின் எதிரே நின்று செய்தியைச் சொன்னேன்.
"இங்கே ஆடினது போதாது என்று அங்கே போய் ஆடப் போகிறாயா? போ, போ. என்னைக் கேட்காதே. உங்கள் அம்மாவைக் கேட்டுக் கொண்டு போ. அப்புறம் நான் அனுப்பிக் கெடுத்துவிட்டதாக அவள் குறை சொல்லக்கூடாது. அவள் பொறுப்பு" என்று சொல்லிக்கொண்டே இரண்டு ரூபாய் எடுத்து என் கையில் கொடுத்தார்.
சொல்ல முடியாத மகிழ்ச்சியோடு அங்கிருந்து விரைந்து வந்தேன். என் மகிழ்ச்சியைக் கெடுப்பதுபோல் கடை வேலையாள் தொடர்ந்து வந்து, வேலு! வேலய்யா! என்றான்.
"ஏன்?" என்று திகைத்து நின்றேன்.
"அப்பா கூப்பிடுகிறார்."
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாதது போல் மயங்கினேன். திரும்பி அப்பாவிடம் சென்றேன்.
"டே! அந்த ஊரிலே பெரிய ஏரி இருக்கிறது. கிணறு குட்டைகள் உண்டு. கண்ட இடமெல்லாம் போகக்கூடாது. தண்ணீரில் கால் வைத்து எந்தக் குட்டையிலாவது இறங்கிவிடாதே. உனக்கு நீந்தத் தெரியாது. எங்கேயும் போகாதே; பச்சைத் தண்ணீரில் குளிக்காதே, சளி பிடிக்கும். இரண்டு நாள் இருந்து விட்டு பேட்டைக்கு யாராவது வரும்போது அவர்களோடு வந்துவிடு" என்றார் அப்பா.
வந்த இடர் நீங்கியது என்று எண்ணி, எல்லாவற்றிற்கும் தலையசைத்துவிட்டுத் திரும்பினேன்.
புறப்பட்டபோது, அப்பாவின் உபதேசத்தைவிட மூன்று மடங்காக இருந்தது அம்மாவின் உபதேசம். எனக்குச் சொன்னது போதாது என்று, எனக்காகச் சந்திரனிடம் அத்தையிடமும் வேண்டுகோள் விடுத்தார்.
---------
அத்தியாயம் 6
பெருங்காஞ்சி என் உள்ளத்திற்குப் பிடித்த ஊராக இருந்தது. கண்ணிற்கு இனிய காட்சிகள் பல அங்கே இருந்தன. முதலாவது, வண்டிகளும் பஸ்களும் செல்லும் சாலையாக நீண்ட ஏரிக்கரை அகலமாக அமைந்திருந்த காட்சியும் கரை நெடுக மரங்கள் உயர்ந்து வளர்ந்திருந்த காட்சியும் அழகாக இருந்தன. இடக்கைப் பக்கம் ஏரியும் வலக்கைப் பக்கம் வயல்களும் எதிரே கரிமலையும் சோழ சிங்கபுர மலையும் கண்டேன். அதுபோன்ற காட்சி எனக்கு - நகரத்தில் சில தெருக்களையே திரும்பத் திரும்பக் கண்டு வந்த எனக்கு - இன்பமாக இருந்தது. என் சொந்த அத்தையின் ஊராகிய வேலூர்க்குப்போய் அங்கே ஏரியையும் வயல்களையும் கண்டிருக்கிறேன். ஆனாலும் அந்த ஊர்க் காட்சி என் மனத்துக்கு அவ்வளவு இன்பமாக இருந்ததில்லை. பெருங்காஞ்சியில் சந்திரனும் கற்பகமும் வாழ்ந்ததே ஒரு வகையில் அதற்குக் காரணமாக இருக்கலாம்.
"இப்போது ஏரியில் தண்ணீர் வற்றிவிட்டது. மழை பெய்து வெள்ளம் வந்து நீர் நிறைந்திருக்கும்போது எங்கள் ஊர் ஏரியை வந்து பார்க்கணும். அப்போதுதான் இதன் உண்மையான அழகு தெரியும்" என்றான் சந்திரன்.
"எந்த மாதத்தில்?"
"அதாவது" என்று சந்திரன் தயங்கினான்.
"புரட்டாசி ஐப்பசியில்" என்றார் அத்தை.
"புரட்டாசி ஐப்பசி என்றால் என்ன மாதம்" என்று நான் கேட்டேன்.
"செப்டெம்பர் அக்டோபர்" என்று சந்திரன் சொன்னான்.
"அப்படியானால் ஒரு முறை அப்போதே வருவேன். கால் தேர்வு முடிந்து செப்டெம்பரில் பதினைந்து நாள் விடுமுறை விடுவார்களே, அப்போது வருவேன்" என்றேன்.
ஏரிக்கரையைக் கடந்து ஊர்க்குள் சென்றோம். ஊர் சின்ன ஊர்தான். சில ஓட்டு வீடுகளும் பல மஞ்சம்புல் வீடுகளும் காணப்பட்டன. அந்த ஊரிலேயே சந்திரனுடைய வீடுதான் எடுப்பாகவும் பெரியதாகவும் இருந்தது. வீட்டின் எதிரே தென்னங்கன்றுகள் ஆறு வரிசையாக வளர்ந்து வந்தன. எதிரே ஒரு மாந்தோப்பும் தென்னந்தோப்பும் காணப்பட்டன. என் பார்வையைக் கண்ட சந்திரன், "இரண்டும் எங்கள் தோப்புகள் தான்" என்றான்.
வீட்டிற்குள் நுழைந்ததும் சந்திரனுடைய தாய் எங்களை - சிறப்பாக என்னை - வரவேற்றார். கற்பகம் இல்லாதது கண்டு காரணம் தெரியாமல் நின்றேன். எங்கோ போயிருந்த அவள் சிறிது நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்து, எதிர்பாராமல் என்னைக் கண்டதும், பல்லெல்லாம் தெரிய முகம் மலர்ந்து நின்றாள். சந்திரனுடைய தாய், அவளைப் பார்த்து, "கற்பகம்! கைகால் அலம்பத் தண்ணீர் மொண்டு கொடு" என்று சொல்லிக்கொண்டே எனக்காக ஒரு பாய் எடுத்து விரித்தார்.
கற்பகத்தின் கையில் இருந்து செம்பை வாங்கி முகம் அலம்பினேன். சந்திரன் அலம்பிக் கொண்டதும் கூடத்துக் கட்டிலில் போய் உட்கார்ந்தோம். நான் பாயில் உட்காரச் சென்றேன். "வேலு! அது யாராவது பெரியவர்களுக்கு, நமக்கு இதோ கட்டில்" என்று அழைத்தான்.
சந்திரனுடைய தாய், பழங்காலத்து வெண்கலச்செம்பு நிறையத் தண்ணீர் கொண்டுவந்து என் கையில் கொடுத்து, "மோர் கொண்டு வரட்டுமா?" என்றார்.
"அம்மா அம்மா! வேண்டாம்’மா என்றான் சந்திரன். "மோரும் இதுவும் அதுவும் கொடுத்து இவனுடைய உடம்பைக் கெடுத்துவிடாதே. இந்த உடம்பு தொட்டாற் சுருங்கி போல. இவனுடைய அம்மா என்னிடம் திரும்பத் திரும்பச் சொல்லியனுப்பினார். அப்புறம் ஏதாவது வந்தால் நான்தான் பழிக்கு ஆளாவேன்" என்றான்.
எனக்குச் சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. பேசாமல் இருந்தேன்.
"தண்ணீரா? வெந்நீரா?" என்று சந்திரன் தன் தாயைக் கேட்டுவிட்டு, என் கையில் இருந்த செம்பை தொட்டுப் பார்த்தான். உடனே அதை வாங்கிக்கொண்டு, "இவனுக்கு இப்படித் தண்ணீர் கொடுக்கவே வேண்டா" என்று எழுந்து போனான். சிறிது நேரத்தில் வெந்நீர் கொண்டு வந்து கொடுத்து, "எங்கள் ஊரில் இருக்கிற வரைக்கும் உடம்புக்கு ஒன்றும் வராமல் காப்பாற்ற வேண்டுமே" என்றான்.
தெற்குப் பார்த்த வீடு அது. நான்கு பக்கமும் தாழ்வாரம் இறக்கி, வடக்குப் பக்கத்தில் பெரிய கூடம் அமைத்திருந்தார்கள். பெரிய பெரிய அறைகளும் அவற்றை அடுத்தாற்போல் களஞ்சியங்களும் இருந்தன. ஒரே வேளையில் நூறு பேர் உட்கார்ந்து உண்ணக்கூடிய அவ்வளவு இடப்பரப்பு இருந்தது. நான் இருந்த அந்தப் பக்கத்து அறையில் எட்டிப் பார்த்தேன். தேங்காய்கள் ஒரு மூலையில் குவிக்கப்பட்டிருந்தன. இன்னொரு மூலையில் அரிசி கொட்டி வைத்திருந்தார்கள். பக்கத்தில் சில மூட்டைகளை அடுக்கி வைத்திருந்தார்கள். எண்ணெய் டின்கள் ஒரு பக்கம் வரிசையாக இருந்தன.
சந்திரனுடைய தந்தை வந்தவுடன் என்னைப் பார்த்து வியப்பு அடைந்தார். "நீயும் வந்தது மிகவும் நல்லது. நான் எதிர்பார்த்தேன். தேர்வு எல்லாம் எப்படி எழுதியிருக்கிறீர்கள்? சந்திரன் தேர்ச்சி பெற்று விடுவானா?" என்று கேட்டார். என்னுடைய விடைகள் அவருக்கு மகிழ்ச்சி அளித்தன.
கற்பகமும் அவளுடைய தாயும் சில தட்டுகளைக் கொண்டுவந்து எங்கள் முன் வைத்தார்கள். மிளகுப் பொங்கலும் முறுக்கும் இருந்தன. சந்திரனும் நானும் தின்றோம். இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என்று அவனுடைய தாய் வற்புறுத்தினார். "வற்புறுத்த வேண்டா அம்மா. உடம்பு கெட்டுவிடும். தேவையானால் என்னைப் போல் கேட்டுச் சாப்பிடட்டும்" என்றான் சந்திரன்.
"சந்திரா! இது என்ன இது? உடம்பு கெட்டுப்போகும், உடம்பு கெட்டுப்போகும் என்று பல்லவி பாடுகிறாய், போதும் போதும்" என்றேன்.
"உங்கள் அம்மா எவ்வளவு கவலைப்பட்டுச் சொல்லியிருக்கிறார்."
"உன்னால் உடம்பைப் பற்றிய கவலையே போய், ஒரு துணிச்சலே வந்து விடும்போல் இருக்கிறதே."
"வரட்டும்; மிக மிக நல்லது."
ஒரு பெரிய நாய் வாலைக் குழைத்துக் கொண்டு எங்களை நோக்கி வந்தது. அதைக் கண்டதும் எனக்கு அச்சமாக இருந்தது. அது சந்திரனிடம் நெருங்கி வாலைக் குழைத்துக் குழைத்து அவனுடைய கையை நக்கியது. என்னை நெருங்கியது. நான் கால்களை மேலே எடுத்துச் சுவர் ஓரமாக நகர்ந்தேன். "பயப்படாதே; ஒன்றும் செய்யாது; பயந்தால் அதற்குச் சந்தேகம் ஏற்படும். நல்ல நாய். காவலுக்காக வளர்க்கிறோம். சும்மா இரு. அசையாதே" என்றான் சந்திரன். நாய் என்னை உற்றுப் பார்த்தது. அதனுடைய பார்வை கடுமையாக இருந்தது. பிறகு, என் எதிரிலேயே படுத்தது. பார்வை மட்டும் என் மேலேயே இருந்தது. "நீ நெருங்கிவா. அது உன்னை முகர்ந்து பார்த்துப் பழகி விட்டால்தான் நல்லது. அதுவரையில் உன்னை அந்நியன் என்றே பார்த்துக் கொண்டிருக்கும்" என்றான் சந்திரன். என் கையைப் பிடித்து இழுத்து அதனிடம் கொண்டு சென்றான். அது வாலைக் குழைத்தபடியே என்னை முகர்ந்து பார்த்துவிட்டுத் தலைவைத்துப் படுத்தது.
தெருப்பக்கம் போய் ஒரு கயிற்றுக் கட்டிலில் உட்கார்ந்தோம். இருபது வயது உள்ளவள் ஒருத்தி சந்திரனைப் பார்த்து, "எப்போ மாமா வந்தே? எங்கள் பெரியம்மாவும் வந்திருக்கிறாங்களா?" என்றாள். அவளுடைய ஆடையும் தோற்றமும் பார்த்தால் வேலைக்காரிபோல் தோன்றினாள். "இப்பத்தான் வந்தேன். அத்தையும் வந்திருக்கிறார்" என்றான் சந்திரன்.
"யார் சந்திரா? உங்கள் சின்ன அத்தை மகளா?" என்றேன்.
"சின்ன அத்தையா? அப்படி யாரும் இல்லையே! இந்த அம்மா அதோ அந்த வீட்டு மருமகள்" என்று நாலைந்து வீட்டுக்கு அப்பால் இருந்த ஒரு வீட்டைச் சுட்டிக் காட்டினான்.
"உனக்கு உறவா?"
"உறவும் இல்லை, ஒன்றும் இல்லை."
"மாமா என்று அழைத்தாளே!"
"எங்கள் ஊரில் அப்படி முறையிட்டு அழைக்கும் வழக்கம் உண்டு. எந்தச் சாதியாக இருந்தாலும் அப்படித்தான். மாமா, மச்சான், அத்தை, பெரியம்மா, அண்ணன், சிற்றப்பா என்று யாரும் ஒருவரை ஒருவர் முறையிட்டுத் தான் பேசுவார்கள், வேடிக்கையாகவும் பேசுவார்கள். இதில் சாதி வேறுபாடு ஒன்றுமே இல்லை."
எனக்கு இது வியப்பாக இருந்தது.
சிறிது நேரத்தில் ஒரு கிழவர் அந்தப் பக்கம் வந்தவர், சந்திரனைப் பார்த்து, "யார் என் மச்சான் பிள்ளையா?" எப்போ வந்தே? மொட்டையம்மாவும் வந்திருக்குதா?" என்றார்.
சந்திரன் ஆம் ஆம் என்று விடை சொன்ன பிறகு, அந்தக் கிழவர் என்னைப் பார்த்து, "யார் அப்பா" என்றார்.
"இவன் பேட்டையில் என்னோடு படிக்கிற பிள்ளை" என்றான் சந்திரன்.
கிழவர் நகர்ந்தபிறகு, சந்திரனைப் பார்த்து, "மொட்டையம்மா யார்? அத்தையா?" என்றேன்.
"ஆமாம். அத்தைதான். இந்த ஊரிலே மொட்டையம்மா என்று சொன்னால்தான் அத்தையைப் பற்றித் தெரியும். சின்ன வயதிலே ஒரு பெரிய காய்ச்சல் வந்து தலைமயிர் உதிர்ந்து போச்சாம். மறுபடியும் முடிவளர நெடுங்காலம் ஆச்சாம். அதனால் அப்படிப் பெயர் வந்துவிட்டது."
"இயற்கையான பெயர் என்ன?"
"சிவகாமி என்று பெயர். ஆனால் அந்தப் பெயரைச் சொன்னால் ஒருவருக்கும் தெரியாது. எனக்கும் போன வருசம் வரையில் தெரியாது. அப்பா ஒரு நாள் சொன்னார். அத்தை அப்பாவை என்ன என்று கூப்பிடுவார், தெரியுமா?"
"என்ன என்று கூப்பிடுவார்?"
"குழந்தை என்று கூப்பிடுவார். தம்பி என்று சொல்வது எப்போதோ ஒரு முறைதான் இருக்கும்."
"இந்த ஊரில் அத்தையையும் முறையிட்டுத்தான் அழைப்பார்களா?"
"ஆமாம். அண்ணி, அத்தை, அக்கா, பெரியம்மா, சின்னம்மா, பாட்டி என்று அவரவர்கள் அந்தந்தக் குடும்பத்து முறை சொல்லித்தான் கூப்பிடுவார்கள்.
"அதிலே ஒரு கணக்கு ஒழுங்கு உண்டா?"
"ஆமாம். பங்காளிகள் முறை உண்டு. சம்பந்தி முறையும் உண்டு. மற்றொன்றாக மாறாது."
எனக்கு எல்லாம் புதுமையாக இருந்தது.
அன்று இரவு ஏழு மணிக்கு நிலாப் புறப்பட்டது. கிழக்கே தென்னந்தோப்பினிடையே ஒரு புதிய ஒளியும் வண்ணமும் கண்டேன். தோப்பை யாரோ அலங்காரம் செய்வதுபோல் இருந்தது. சிறிது நேரத்தில் தோப்புக்கு மேலே வெண்கதிர்கள் மெல்லத் தோன்றின. எழுந்துவரும் நிலாவை வரவேற்பதற்காக வான வழியில் கூடிய கூட்டம் போல், மேகம் பல தலைகளாய்த் தோன்றிக் காட்சி அளித்தது. நிலாவும் மேலே வந்தது. மேகக் கூட்டம் மேலும் சிதைந்து செம்மறியாட்டுக் கூட்டம் போல் தோன்றியது. இன்னும் சிறிது நேரத்தில் அந்த மேகக் கூட்டத்தின் இடையே நிலாத் தோன்ற, கூட்டம் மேலும் கரைந்து, சிறு சிறு மணல் குவியலாக, ஆயிரக்கணக்கான குவியலாகத் தோற்றமளித்தது. அந்த மணல் குவியல்களுக்கிடையே மகிழ்ந்து முகம்காட்டும் பெண் போல் விளங்கியது நிலா. எனக்கு உடனே கற்பகத்தின் முகம் நினைவுக்கு வந்தது. அவளும் அப்போது அங்கே வந்து, "என்ன அண்ணா! அவர் நிலாவை அப்படிப் பார்க்கிறாரே" என்றாள்.
சந்திரனைப் பார்த்துச் சிரித்தேன். "சந்திரா! உண்மையாகவே இவ்வளவு அழகாக நிலா வருவதை நான் எங்கும் எப்போதும் பார்த்ததே இல்லை. சந்திரனுடைய அழகை இங்கே அடிக்கடி அப்பா பார்த்து மகிழ்ந்திருப்பார். அதனால்தான் உனக்குச் சந்திரன் என்று பெயர் வைத்திருப்பார்" என்றேன்.
"அப்படியானால் இவள் பெயர்?" என்று தன் தங்கையைக் காட்டினான் சந்திரன்.
"இந்தத் தோப்பு அவருக்கு அப்போது வானுலகத்துக் கற்பகச் சோலை போல் தோன்றியிருக்கும்" என்றேன்.
"நீ எதிர்காலத்தில் பெரிய புலவன் ஆகப் போகிறாய். இல்லாத புளுகு எல்லாம் புளுகப் போகிறாய்" என்றான் சந்திரன்.
கற்பகம் கைகொட்டிச் சிரித்துக் கொண்டே போய் விட்டாள்.
மறுநாள் காலையில் எழுந்து தோப்புப் பக்கம் சென்றோம். வழியில் நடுத்தர வயது உள்ள ஓர் அம்மா சந்திரனை வழிமறித்து, "என்ன மருமகனே! எப்போது வந்தே? பேசாமல் போறேயே. என் பெண்ணைக் கட்டிக் கொள்ளாவிட்டாலும் வாயைத் திறந்து பேசிவிட்டுப் போகக்கூடாதா?" என்றார். சந்திரன் வெட்கத்தோடு விடை சொன்னான். மறுபடியும் அந்த அம்மா, "பேட்டைக்குப் போனாயே! உன் பெண்டாட்டிக்கு என்ன கொண்டு வந்தே, மாமிக்கு என்ன கொண்டு வந்தே, ஒரு பட்டுச்சேலை வாங்கித் தரமாட்டாயா?" என்றார். சந்திரன் தலைகுனிந்தபடியே என்னுடன் வந்துவிட்டான்.
தோப்பை அணுகியவுடன், "இந்த ஊரார் இப்படித்தான். நாங்கள் இந்த ஊரில் பழைய குடி. செல்வமும் செல்வாக்கும் உள்ள குடும்பம். அதனால் ஆண் பெண் எல்லாரும் இப்படிப் பேசுவார்கள்" என்றான்.
நான் அவனைப் பார்த்துச் சிரித்து, "உன் பாடு யோகம் தான். இந்த ஊரில் உனக்கு எத்தனையோ மாமி வீடுகளும் எத்தனையோ மனைவிமாரும் இருப்பதாகத் தெரிகிறதே! உனக்கு எப்போது திருமணம் ஆச்சு? எத்தனை திருமணம் ஆச்சு?" என்றேன்.
"சரிதான் போ அய்யா! இந்த அம்மா என் மாமியாரா? அவளுடைய மகள் எனக்குப் பெரியவள். என் அக்கா போல வளர்ந்திருக்கிறாள். அவளுக்கு ஓர் எழுத்துக்கூடத் தெரியாது. மாடு போல் உழைக்கத் தெரியும். கூடை கூடையாய்ச் சுமக்கத் தெரியும். குடம் குடமாகத் தண்ணீர் எடுத்துவரத் தெரியும். இதெல்லாம் வெறும் பேச்சுக்கு" என்றான் சந்திரன்.
"எங்கள் வீட்டில் இப்படி யாராவது மருமகன் பெண்டாட்டி என்றெல்லாம் என்னிடம் பேசினால், அம்மாவுக்குப் பிடிக்காது. சின்ன வயசிலே இந்தப் பேச்செல்லாம் தப்பு அல்லவா?" என்றேன்.
"இங்கே இதெல்லாம் பழக்கம் ஆகிவிட்டது. தப்பாக எண்ணமாட்டார்கள்."
"நீயும் பெண்களோடு இப்படி வேடிக்கையாகப் பேசுவாயா?"
"என் வயதுப் பிள்ளைகள் பேசுகிறார்கள். எனக்கு மனம் வரவில்லை. சும்மா கேட்டுக் கொண்டு, சிரித்துக் கொண்டு இருப்பேன்."
"எனக்கு என்னவோ, இது பிடிக்கவில்லை"
"எனக்குப் பழகிப்போச்சு, பெரிய வீட்டுப் பையன் என்று எல்லோரும் அன்பாகப் பேசுகிறார்கள். என்ன செய்வது?" என்றான்.
சந்திரன் தோப்புக் காவலாளை அழைத்துப் பல் துலக்கக் குச்சி ஒடித்துத் தரச் சொன்னான். அவன் கருவேலங்குச்சி இரண்டு கொண்டு வந்து கொடுத்தான். கிணற்றங்கரையில் உட்கார்ந்து பல் துலக்கிக் கொண்டிருந்தோம். காவலாள் எங்கள் எதிரே வந்து, "எப்போ சாமி கலியாணம்? பெண்ணெல்லாம் பெரிசாகி விலையாகிப் போகுது. நீ மட்டும் சும்மா இருந்தால் எப்படி? ஏதாவது இரண்டு மூணு பார்த்துக் கட்டிக்கொள் சாமி" என்றான்.
சந்திரன் அவனுடைய வாயை அடக்கி, "இந்தப் பேச்செல்லாம் இவனுக்குப் பிடிக்காது. நீ போ" என்றான்.
பல் துலக்கியானதும், சந்திரன் எழுந்து, "நீ இங்கேயே இரு. நான் மட்டும் கிணற்றில் இறங்கி இரண்டு சுற்று நீந்திக் குளித்து விட்டு வந்து விடுவேன், உனக்கு அம்மா வெந்நீர் வைத்திருப்பார்" என்று சொல்லிக்கொண்டே ஒவ்வொரு படியாய் இறங்கினான்.
"நீ எப்போதும் தண்ணீரில்தான் குளிப்பதா?" என்றேன்.
"ஆமாம், சனிக்கிழமை தவிர."
"வாலாசாவில் வெந்நீரில் குளித்தாயே."
"என்ன செய்வது? அந்தத் தண்ணீர் ஒரே உப்பு, எனக்குப் பிடிக்கவில்லை. உடம்புக்கும் நல்லது அல்ல. பாலாற்றுக்குப் போய்க் குளித்துவிட்டு வரலாம் என்றால் யாரும் துணை இல்லை. நேரமும் ஆகும்."
உடையைக் கழற்றியதும் சந்திரன் துடும் எனக் குதித்து நீரில் ஆழ்ந்து மேலே வந்தான். எனக்கு அது அரிய பெரிய வித்தையாகத் தோன்றியது. வேலூரில் என் அத்தைமகன் இப்படிக் குதித்து எழுவதை இமைகொட்டாமல் பார்த்து வியந்து பெருமூச்சு விட்டிருக்கிறேன். சந்திரன் குதித்து நீந்திய போதும் அப்படித்தான் வியந்து பார்த்தேன்.
"சந்திரா! ஊர்க்குப் போவதற்குள் நானும் நீந்தக் கற்றுக் கொள்ளட்டுமா?" என்று ஆவலோடு கேட்டேன்.
சந்திரன் பேசுவதற்கு முன், தோப்புக்காவலாளியின் குரல் கேட்டது. "அதற்கு என்ன சாமி! வாங்க இறங்குங்க. ஒரே நாளில் நான் கற்றுத் தருவேன்" என்றான்.
அவனுடைய தன்னம்பிக்கை எனக்குப் பெரிய வியப்பாக இருந்தது.
"இன்றைக்கு வேண்டா, சொக்கான். நாளைக்குப் பார்க்கலாம்" என்றான் சந்திரன் கிணற்றினுள்ளிருந்தே.
காவலாள் சொக்கானும், "சரி, சாமி! நாளைக்குக் காலையில் வந்துவிடு. ஒரு புருடை கொண்டு வந்து வைத்திருப்பேன்" என்றான்.
"புருடை என்றால் என்ன?"
"சுரைக்காய் முற்றி உலர்ந்து போகுமே அது"
"அதை என்ன செய்வது?"
"அதை இடுப்பில் கட்டிக் கொண்டு கிணற்றில் இறங்கினால், மேலேயே மிதக்கலாம், கையால் அடித்து நீந்தலாம்."
இதைக் கேட்டதும் என் மனம் குதித்தது. கிணற்றினுள் நீந்தி வருவது போல் கற்பனை செய்து களித்தேன்.
வீட்டுக்குத் திரும்பியபோது, அத்தை கவலையோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்டோம். "வேலு! நீயுமா கிணற்றில் இறங்கினாய்?" என்று அத்தை கேட்டார்.
"இல்லை, சந்திரன் மட்டும் குளித்தான்."
"வேண்டாம்’பா; உடம்புக்கு ஆகாது. உனக்கு நீந்தவும் தெரியாது."
"எனக்கு ...." என்று நான் வாய் திறந்து நாளைய முயற்சியைச் சொல்வதற்குள் சந்திரன் கண்ணாலேயே என்னைத் தடுத்தான்.
"உனக்கு வெந்நீர் வைத்திருக்கிறேன். வா. குளித்து விடு" என்றார் அத்தை.
சந்திரன் இப்படி அத்தைக்குத் தெரியாமல் மறைத்தது எனக்குத் தவறாகத் தோன்றியது. இருந்தாலும், நீந்தக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆவலால் அந்தத் தவற்றிற்கு உடந்தையாக இருந்தேன். யாருக்கும் சொல்லாமல் மனத்திற்குள் வைத்திருந்தேன்.
சிற்றுண்டி முடிந்த சிறிது நேரத்திற்கெல்லாம் வேலையாள் மாசன் ஒரு கூடை நிறைய எதையோ சுமந்துகொண்டு வந்து எங்கள் எதிரே இறக்கினான். எல்லாம் நுங்காக இருந்தன.
"யார் வெட்டியது?" என்றேன்.
"அவனே வெட்டிக்கொண்டு வந்திருப்பான்" என்றான் சந்திரன்.
"ஆமாம். நான் ஏறாத மரமே இல்லை இந்த ஊரில்" என்றான் மாசன்.
உடனே நுங்கு தின்னத் தொடங்கினோம்.
பகலுணவுக்குப் பிறகு சிறிது படுத்திருந்தோம். மாசன் எங்கள் அருகே வந்து பார்த்து, "தூங்குகிறீர்களோ என்று பார்த்தேன்" என்றான்.
"என்ன செய்தி?" என்று கேட்டேன்.
"இளநீர் தள்ளிக் கொண்டு வரும்படி அப்பா சொன்னார் கொண்டு வந்திருக்கிறேன்" என்றான்.
"எவ்வளவு? காலையில் கொண்டு வந்தது போல் இதுவும் ஒரு கூடை கொண்டு வந்திருக்கிறாயோ?"
இது கூடையில் கொண்டுவர முடியுமா? ஒரு கோணியில் போட்டு வந்திருக்கிறேன்.
சந்திரனைப் பார்த்துச் சிரித்தேன். "சந்திரா! சரிதான் கூடை கூடையாய், மூட்டை மூட்டையாய்த் தின்பதற்கு யாரால் முடியும்," என்றேன்.
"இப்படித்தான், உன் பெயரைச் சொல்லி, நான், மாசன், அம்மா, கற்பகம் எல்லோரும் சாப்பிடுவோம்" என்றான்.
அன்று இரவு உறங்குவதற்கு முன் நாளைக் காலையில் பெரிய வித்தையைக் கற்றுக் கொள்ளபோகிறோம் என்ற குதுகுதுப்பான மனத்தோடு கண்மூடினேன்.
வழக்கமாக விழித்துக் கொள்ளும் நேரத்துக்கு முன்பே விழித்து எழுந்தேன். சந்திரன் தூங்கிக் கொண்டிருந்தான். அத்தை பக்கத்தில் உட்கார்ந்து கொண்டிருந்தார். "வேலு! இந்த ஊர் பிடிக்குதா?" என்று கேட்டார்.
"ஆமாம். நல்ல ஊர்தான்" என்றேன்.
"உன் அம்மா அப்பாவுக்கு உன்னைப் பற்றியே கவலையாக இருக்கும்."
"இருக்காது அத்தை"
"இருக்கும் வேலு! சந்திரன் அப்பா சாமண்ணா சின்னக் குழந்தையாக இருந்தபோது எங்கள் அம்மா செத்து விட்டாள். நான்தான் அவனைப் பாலூட்டிச் சோறூட்டி வளர்த்தேன். அந்தப் பாசம் பொல்லாதது. சாமண்ணா சின்னப் பையனாக இருந்தபோது, இப்படி யாராவது எங்காவது வெளியூர்க்கு அழைத்துக் கொண்டு போனால் தம்பியைப் பற்றியே எனக்குக் கவலையாக இருக்கும்.
"சந்திரன் அப்பாவை நீங்கள் தான் வளர்த்தீர்களா?"
"ஆமாம்’பா."
"அதனால்தான் அவரை நீங்கள் குழந்தை குழந்தை என்று கூப்பிடுகிறீர்களா?"
"ஆமாம் வேலு."
அப்போது சந்திரன் காலை நீட்டி என்மேல் கைகளை வைத்து அழுத்தித் திமிர்விட்டான். "யார்? அத்தையா? ஏன் அத்தை! வெந்நீர் வைத்துவிட்டேன் என்று சொல்கிறாயா? தோப்புக்குப் போய்வந்து அப்புறம் குளிப்பான்" என்றான்.
"இன்றைக்கு" என்று நான் வாயெடுப்பதற்குள், "வேலு! அத்தை சொன்னபடி கேள்; சும்மா இரு" என்று என்னைக் கண்ணாலே உருத்துப் பார்த்தான்.
அவன் கருத்தைத் தெரிந்து கொண்டு நான் பேசாமல் இருந்தேன்.
தோப்புக் காவலாள் சுரைப்புருடை வைத்துக்கொண்டு எங்களுக்காகக் காத்திருந்தான். பல்லை அவசர அவசரமாகத் துலக்கிவிட்டு கிணற்றினுள் இறங்கினேன். காவலாள் எனக்கு முன் இறங்கி அந்தச் சுரையை என் இடுப்பில் கட்டினான். "தயங்காமல் இறங்குங்கள். இறங்கிப் பாருங்கள்" என்றான். மெல்ல மெல்ல முழங்காலளவு நீரிலிருந்து இடுப்பளவிற்கு இறங்கினேன். சுரை என்னைத் தூக்குவதை உணர்ந்தேன். ஒருவகைப் புத்துணர்ச்சியும் நம்பிக்கையும் பிறந்தன. காவலாளும் சந்திரனும் எனக்கு முன் நீரில் சென்றார்கள். துணிந்து வரச் சொன்னார்கள். எனக்குத் துணிவு வரவில்லை. கை கொடு என்று காவலாள் சொக்கான் என் கையைப் பிடித்தான். நீரில் மிதந்தேன். கைகால்களை அடிக்கச் சொன்னார்கள். சிறிது தூரம் சென்று திரும்பி வந்தேன். கொஞ்சம் கொஞ்சமாகத் துணிவு வந்தது. பெற முடியாத ஒரு பேற்றைப் பெற்று விட்டவன் போல் கரை ஏறினேன். திரும்பியபோது சந்திரன் என்னைப் பார்த்து, "அத்தை வெந்நீர் வைத்திருப்பார்கள். பேசாமல் குளித்துவிடு. இல்லையானால் ஒவ்வொரு சொம்பாக மொண்டு கீழே கொட்டிவிட்டு வெளியே வந்துவிடு" என்றான்.
எனக்கு அவனுடைய போக்குப் புதுமையாக இருந்தது. "சந்திரா! நீ பொல்லாதவனாக இருக்கிறாயே" என்றேன்.
"என்ன பொல்லாதவன்! யாரையாவது அடித்தேனா? எங்காவது திருடினேனா?"
"தப்பு இல்லையா? பொய் இல்லையா?"
"அதனால் யாருக்கு என்ன தீங்கு?"
அன்றுதான் அழகான சந்திரனுடைய பண்பில் ஏதோ களங்கம் இருப்பது போல் உணர்ந்தேன். "இருந்தாலும் எனக்குப் பிடிக்கவில்லை. தப்புத்தான்" என்றேன்.
"இருந்து போகட்டுமே" என்று கவலை இல்லாமல் சொன்னான் சந்திரன். அவன் சொன்ன முறையில் களங்கம் மிகுதியாகப் புலப்பட்டது.
"நான் ஒரு நாளும் இப்படிச் செய்யமாட்டேன்."
"அதனால்தான் நான் வேறு, நீ வேறாக இருக்கிறோம். என் பெயர் சந்திரன். உன் பெயர் வேலு!"
வீட்டை நெருங்கிவிட்டோம். சந்திரன் சொன்னபடி செய்தேன். வேறு வழி இல்லை. செய்த பிறகு, குற்றவாளி போன்ற உணர்ச்சியோடு வெளியே வந்தேன். குற்ற உணர்ச்சி மாறுபடுவதற்கு நெடுநேரம் ஆயிற்று.
முன்னமே செய்திருந்த ஏற்பாட்டின்படி அன்று ஒரு வண்டி பூட்டிவரச் சொல்லி, எலுமிச்சம் புளிச்சோறும் வாழைப்பூ வடையும் செய்துகொண்டு சந்திரனும் நானும் வேலத்து மலையடிவாரத்தில் இருந்த தாழை ஓடைக்குப் புறப்பட்டோம். மாசன் எங்களுக்கு துணையாக வந்தான். கற்பகமும் வருவதாகத் தன் தாயையும் அத்தையையும் கேட்டுப் பார்த்தாள்; வற்புறுத்திப் பார்த்தாள். "அறியாத பெண். நீ அங்கெல்லாம் போகக்கூடாது. ஏதாவது காற்று இது அது இருக்கும் இடம். அவர்கள் ஆண்பிள்ளைகள் போய் வரலாம். நீ போகக் கூடாது" என்று சொல்லி அவளைத் தடுத்து விட்டார்கள். என் மனம் கற்பகத்திற்காக இரக்கம் கொண்ட போதிலும், அவர்கள் சொன்ன காரணத்தை எண்ணிப் பேசாமல் இருந்தேன்.
ஆனால் அங்கே போன இடத்தில் கற்பகத்தின் வயது உள்ள பெண்கள் இருவர் ஆடு மேய்த்துக்கொண்டு திரிவதைக் கண்டேன். அவர்கள் அஞ்சாமல் உலவும் இடத்தில் கற்பகம் வந்தால் தீங்கு என்ன என்று எண்ணினேன் அதைச் சந்திரனிடம் சொல்லவில்லை.
தாழை மரங்கள் நல்ல நிழல் தந்து அடர்த்தியாக இருந்தன. அங்கங்கே சில பூக்கள் காணப்பட்டன. அவற்றை ஒருவன் துறடு கொண்டு பறித்துக் கொண்டிருந்தான். மலர்ந்த பூக்களின் மணம் இன்பமாக இருந்தது. இலையெல்லாம் மடலெல்லாம் முள்ளாக உள்ள மரம்; ஒழுங்கும் அழகும் இல்லாமல் வளரும் மரம், இவ்வளவு மணமுள்ள பூக்களைத் தருகிறதே என்று வியந்தேன்.
ஓடையில் தண்ணீர் மிகுதியாக இல்லை. சலசல என்று மெல்லிய ஒலியோடு நீர் ஓடிச் சென்று கொண்டிருந்தது. ஒரு பாறையின் மேல் பரவலாக ஓடியது, அங்கெல்லாம் பாசி மிகுதியாக இருந்தபடியால் கால்வைத்து ஏறுவதற்குத் தயங்கினேன். மாசன் அஞ்சாமல் பாசி இல்லாத இடமாகக் கால்வைத்து அழைத்துச் சென்றான். ஒரு சின்னக் கோயில் காணப்பட்டது. கன்னிக்கோயில் என்று சொன்னான். தேங்காய் நார் அங்கங்கே இருந்தபடியால், யாரோ வந்து பூசை செய்துவிட்டுப் போகிறார்கள் என்று தெரிந்தது. ஒரு பாறை மேல் உட்கார்ந்து மேலே பார்த்தோம். அந்த இரண்டு பெண்களும் அடுத்த பெரிய பாறைமேல் மடமட என்று ஏறிக் கொண்டிருந்தார்கள்.
"நாமும் அங்கே போவோம். அங்கேயிருந்து கூவினால், எதிரே இருக்கும் மலை அப்படியே கூவும்" என்றான்.
சரி என்று சந்திரனும் நானும் எழுந்தோம். ஏறிச் சென்றோம். அவன் சொன்ன இடத்தில் நின்றோம். அங்கிருந்து ஓ என்று கூவினான். எதிரே இருந்த மலைப் பகுதியிலிருந்து ஓ என்ற ஒலி திரும்பக் கேட்டது. சா-மீ என்று கூவினான். அதுவும் அப்படியே எதிரொலியாக கேட்டது. "இங்கே வா" என்று நான் உரக்கக் கூவினேன். எதிரொலியும் அவ்வாறே கேட்டது. உடனே, "வரமாட்டோம்" என்ற குரலும், அதன் எதிரொலியும் கேட்டது. யாருடைய குரல் என்று திரும்பிப் பார்த்தோம். மற்றொரு பாறையில் அந்த இரு சிறுமிகளும் நின்று கொண்டு அப்படிக் கத்தியிருக்க வேண்டும் என்று உணர்ந்தோம். "ஏ பசங்களே!" என்று சந்திரன் கூவினான். எதிரொலியும் கேட்டது. "ஏ அய்யா" என்று அந்தப் பெண்களின் குரலும் அதை அடுத்து எதிரொலியும் கேட்டது.
சிறிது நேரம் அங்கே இருந்தபிறகு, கீழே இறங்கினோம். அந்தப் பெண்களும் இறங்கி வந்தார்கள். அவர்கள் நெருங்கி வந்தபோது சந்திரன் அவர்களைப் பார்த்து, "இங்கே வாங்க" என்றான். கரவு அறியாத அந்தப் பெண்களும் அவ்வாறே வந்தார்கள். "ஏற்றப்பாட்டு, கும்மிப்பாட்டு ஏதாவது பாடுங்கள்" என்றான்.
"ஆடு எங்காவது போய்விடும். நாங்கள் போகணும்" என்றாள் ஒருத்தி. "எங்களுக்கு பாட்டுத் தெரியாது" என்றாள் மற்றவள்.
"அன்றைக்குப் பாடினீர்களே, தெரியும். பாடுங்கள்" என்றான் சந்திரன்.
அவர்கள் மறுத்தார்கள்.
"நான் யார் தெரியுமா? பெருங்காஞ்சி - பெரிய வீட்டு மகன் தெரியுமா?" என்றான் சந்திரன்.
"தெரியும்; இப்போது பாடமாட்டோம்" என்றாள் ஒருத்தி. மற்றொருத்தி, "வாடி போகலாம்" என்று நடந்தாள்.
"பாடாவிட்டால் விடமாட்டோம். இதோ பார், ஆளுக்கு ஓர் அணா தருகிறேன். பாடுங்கள்" என்று சட்டைப்பையிலிருந்து இரண்டு அணா எடுத்து நீட்டினான்.
"பாடுங்கள் சும்மா. வெற்றிலைக்குக் காசு கிடைக்குது" என்றான் மாசன்.
அந்தப் பெண்களும் நாணத்தோடு ஒருத்தி முகத்தை மற்றொருத்தி பார்த்துக்கொண்டு தயங்கித் தயங்கிப் பாடினார்கள். ஒரு பாட்டு முடிந்ததும். இன்னொரு பாட்டு என்று கேட்டான். முதல் பாட்டை விட இரண்டாம் பாட்டை நன்றாகவே பாடினார்கள். ஆனால் நாணம் அவர்களைத் தடுத்தது. சந்திரனிடமிருந்து காசு வாங்கிக் கொண்டு போய் மாசன் அவர்களிடம் கொடுத்தான்.
சந்திரன் நடந்துகொண்ட முறையும், காசு கொடுத்துப் பாடச் செய்ததும் எனக்குப் பிடிக்கவில்லை. ஆனால் என்ன குற்றம் என்றும் சொல்லத் தெரியவில்லை. ஒன்று மட்டும் உணர்ந்தேன். கற்பகத்தையோ மணிமேகலையையோ இப்படி யாரேனும் வழிமறித்துக் காசு காட்டிப் பாட வைத்திருந்தால், சந்திரனும் பொறுக்கமாட்டான்; நானும் பொறுக்கமாட்டேன். இதை நான் உணர்ந்தேன்; சந்திரனுக்கு எப்படி உணர்த்துவது என்று தெரியவில்லை.
கொண்டுபோயிருந்த சோற்றையும் வடையையும் தின்று முடித்தபின், சிறிது நேரம் படுத்திருந்து, எழுந்து வண்டி பூட்டினோம். பொழுதோடு வந்து சேர்ந்தோம். வீட்டில் கற்பகத்தை கண்டபோது அவள் முகத்தில் ஒரு வகை ஏமாற்றம் இருக்க கண்டேன்.
மறுநாள் காலையில் எழுந்ததும் தோப்பை நோக்கி ஆர்வத்தோடு நடந்தேன். முன்போலவே அவசரமாகப் பல் துலக்கிவிட்டு, சுரையைக் கட்டிக் கொண்டு நீரில் இறங்கிச் சுற்றிவந்தேன். சுரையின் கயிறு வயிற்றை இறுக்கினாற்போல் தெரிந்தது. அதை அவிழ்த்து நெகிழ்த்திக் கட்டுமாறு காவாலாளுக்குச் சொன்னேன். அவன் சுரையை அவிழ்த்த சமயம் பார்த்து, சந்திரன் என்னை நீரில் தள்ளிவிட்டான். நான் பயந்து முழுகி இரண்டு விழுங்குத் தண்ணீரும் குடித்து விட்டுக் கரை சேர முடியாமல் தடுமாறினேன். காவலாள் சொக்கன் உடனே பாய்ந்து என்னைத் தாங்கிக் கொண்டான். கரையில் வந்தவுடன், சந்திரனைப் பார்த்து, "என்னைக் கொன்றுவிடப் பார்த்தாயே" என்றேன்.
"பக்கத்திலேயே நானும் சொக்கானும் இருக்கும்போது நீ முழுகிப் போகும்படி விடுவோமா?" என்றான்.
"ஏன் அப்படித் தள்ளினாய்?"
"அப்போதுதான் பயம் போகும்; நீந்த முடியும்."
"அய்யோ! இனிமேல் அப்படிச் செய்யாதே."
"சே! இப்படிப் பயந்தால் எப்போதுதான் நீந்தக் கற்றுக் கொள்ளப் போகிறாய்" என்று சொல்லிக் கொண்டே மறுபடியும் பிடித்துத் தள்ளிவிட்டான்.
இந்த முறையும் முழுகித் தண்ணீர் குடித்து எழுந்தேன். சொக்கான் பாய்ந்து தாங்கிக் கொண்டான்.
"உள்ளே போய் மேலே வந்தாய் அல்லவா? கையை அடித்துக்கொண்டாய்; மேலே வந்துவிட்டாய். அதுதான் நீந்துவதற்கு முதல் பாடம்" என்றான்.
அவன் சொன்னது போல் பயம் ஒருவகையாய்த் தெளிந்தது. ஆனாலும் சுரை கட்டும்படியாக மன்றாடினேன். முந்திய நாளைவிட நன்றாக நீந்தினேன்.
அடுத்தநாள் சுரை இல்லாமலே இறங்கவேண்டும் என்ற ஆசை எனக்கே ஏற்பட்டது. அவ்வாறே செய்தேன். சொக்கானை முன்னே போய் நீரில் நீந்தும்படியாகச் செய்து விட்டுப் பின்னே நான் நீந்தினேன். பயம் இருந்த இடம் தெரியாமல் போயிற்று. தண்ணீரும் தரைபோல் ஆயிற்று. அரிய வித்தை ஒன்றைக் கற்றுக்கொண்ட பெருமிதத்தோடு வீட்டுக்குத் திரும்பினேன்.
அன்று அத்தையைப் பார்த்தவுடன் சந்திரன், "அத்தை! வெந்நீர் வேண்டா, கிணற்றிலேயே குளித்துவிட்டான். நீந்தவும் கற்றுக் கொண்டான்" என்றான்.
அத்தை மோவாய்மேல் வைத்த கையை எடுக்காமல் மரம் போல் நின்றார். "அவனுடைய அம்மா அப்பாவுக்குத் தெரிந்தால்" என்றார்.
"மகன் நீந்தக் கற்றுக் கொண்டதற்காக ஆனந்தப்படுவார்கள்" என்றான் சந்திரன்.
அத்தை என்னுடைய தலையைத் தொட்டுப்பார்த்து, "இன்னும் ஈரம் போகவில்லையே" என்று தன் முந்தானையால் துவட்டினார்.
மேலும் இரண்டு நாள் இருந்துவிட்டு ஊர்க்குப் புறப்பட்டேன். சிலவகைத் தின்பண்டங்கள் செய்து ஒரு புட்டியில் வைத்து, பதிவு நிலையத்துக்கு வருவோர் சிலருடன் சேர்த்து என்னை அனுப்பி வைத்தார்கள்.
புறப்பட்டபோதே, கற்பகம் என்னைப் பார்த்து "இன்னொரு முறை வரும்போது மணிமேகலையை அழைத்துக் கொண்டு வரணும்" என்றாள்.
----------
அத்தியாயம் 7
பள்ளிக்கூடம் திறந்தவுடன் நானும் சந்திரனும் மேல் வகுப்பில் உட்கார்ந்தோம். அங்கே தலைமையாசிரியர் வந்து, 'சந்திரன்!' என்று பெயரைக் கூப்பிட்டு, அவனிடம் வந்து முதுகைத் தட்டிக்கொடுத்தார். "எல்லாப் பாடத்திலும் இவன்தான் முதன்மையான எண்கள் வாங்கியிருக்கிறான். இவன் எதிர்காலத்தில் மிகச் சிறந்து விளங்குவான். நம் பள்ளிக்கூடத்துக்கும் இவனால் நல்ல பெயர் கிடைக்கும். இப்படியே படித்து வந்தால், அடுத்த ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி.யில் மாநிலத்திலேயே முதல்வனாகத் தேறமுடியும். மற்ற மாணவர்கள் இவனைப் போல் பாடுபட்டுக் கற்கவேண்டும்" என்று பாராட்டிவிட்டுச் சென்றார். அந்தப் பாராட்டில் பாதி எனக்குக் கிடைத்ததுபோல் நானும் மகிழ்ந்தேன். சந்திரன் என் பக்கத்தில் உட்காருவது பற்றியும், என் தெருவில் குடியிருப்பது பற்றியும், என் நண்பனாக இருப்பது பற்றியும் பெருமை கொண்டேன்.
அந்த வகுப்பில் வரலாறு, விஞ்ஞானம், கணக்கு ஆகிய மூன்றில் ஒரு பாடத்தைச் சிறப்புப் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், ஒரு வாரத்திற்குள் அதை முடிவு செய்ய வேண்டும் என்றும் தலைமையாசிரியர் கூறிவிட்டுச் சென்றார்.
வீட்டுக்குச் செல்லும் வழியில் எதைச் சிறப்புப் பாடமாக எடுத்துக் கொள்வது என்று எண்ணிக்கொண்டும் அதைப் பற்றிப் பேசிக்கொண்டும் சென்றோம். எங்களால் ஒரு முடிவுக்கும் வர முடியவில்லை. எங்கள் இரண்டு குடும்பங்களிலும் அதற்கு வழிகாட்டக் கூடியவர்கள் யாரும் இல்லை.
பாக்கிய அம்மையாரின் தம்பி பத்தாவது வரையில் படித்தவர். ஆகையால் அவரைக் கேட்டால் தெரியும் என்று அம்மா சொன்னார். உடனே நானும் சந்திரனும் பாக்கியத்தின் வீட்டுக்குச் சென்றோம். அங்கே அவர் இல்லை. "தம்பி வரும் நேரம் ஆயிற்று. வந்ததும் கேட்டு வைத்துச் சொல்’றேன்" என்றார் அந்த அம்மா. சந்திரனைப் பார்த்து, "தலையைச் சரியாக வாரக் கூடாதா? கலைந்து போயிருக்கிறதே" என்றார். பிறகு சந்திரனுடைய தாயைப் பற்றியும் தங்கையைப் பற்றியும் தங்கையின் படிப்பைப் பற்றியும் விரிவாகக் கேட்டுக் கொண்டிருந்தார். என்னைப் பற்றி ஒன்றும் கேட்கவில்லை. இவ்வாறு பேசிக்கொண்டே இருந்தபோது, சிறிது நேரத்தில் அவருடைய தம்பி வந்துவிட்டார். "இந்தப் பிள்ளைகள் என்னவோ கேட்கிறார்கள். சிறப்புப் பாடமாம். எதை எடுத்துக் கொள்ளலாம் என்று உன்னைக் கேட்க வந்திருக்கிறார்கள்" என்றார்.
அந்தத் தம்பியின் குரலிலிருந்து 'ஆ' என்ற ஒலி வந்ததே தவிர, புன்சிரிப்போ முகமலர்ச்சியோ ஒன்றும் காணப்படவில்லை. சிறிது நேரம் கழித்து, "போன தேர்வில் எந்தப் பாடத்தில் நல்ல மார்க் வந்திருக்கிறதோ அதை எடுத்துக்கொள்ள வேண்டும்" என்று அதோடு பேச்சை முடித்துவிட்டார். யாருக்கு எதில் மிகுதியான மார்க் என்றும் கேட்கவில்லை.
"எனக்கு கணக்கில் மிகுதியான மார்க்; நூற்றுக்குத் தொண்ணூற்றைந்து" என்றான் சந்திரன்.
"அதை எடுத்துக்கொள்" என்றார் அவர்.
"இவனுக்கு வரலாற்றில் நாற்பத்தைந்து மார்க். மற்றப் பாடங்களில் அதைவிடக் குறைவு" என்று சந்திரனே என்னைப் பற்றியும் கூறினான்.
"அப்படியானால் வரலாறுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்" என்றார் அவர்.
இதைத் தெரிந்து கொள்வதற்காகவா இந்த ஊமையிடம் வந்தோம் என்று வெறுப்போடு திரும்பினோம். குறைவான என் எண்களைப் பற்றிப் பாக்கிய அம்மையார் தெரிந்து கொள்ளும்படியாகச் சந்திரன் சொன்னது எனக்கு வருத்தமாகவும் இருந்தது.
நாங்கள் அது பற்றி ஒரு முடிவுக்கும் வரவில்லை. மறு நாள் வகுப்பில் ஆசிரியர் கேட்டபோது சந்திரன் கணக்குப் பாடம் எடுத்துக் கொள்வதாகச் சொன்னான். என்னைக் கேட்டபோது நானும் அதுவே சொன்னேன். உடனே ஆசிரியர் என்னை நோக்கி, "கணக்கில் உனக்கு எத்தனை எண்கள்?" என்றார்.
"முப்பத்தாறு" என்றேன்.
"அப்படியானால் உனக்கு எப்படிக் கணக்குக் கிடைக்கும்?" என்றார்.
எனக்குப் பெரிய மனக்குறை ஆகிவிட்டது. அடுத்த வகுப்பில் மற்றோர் ஆசிரியர் வந்து அவ்வாறே கூறினார். சந்திரன் எடுக்கும் பாடமே நானும் எடுக்க வேண்டும் என்று விரும்பினேன். அதற்கு வழி என்ன என்று கலங்கினேன். சந்திரனும் எனக்காக வருந்தினான். "உனக்காக நான் வரலாறு எடுத்துக் கொள்ளட்டுமா?" என்றான்.
அவனுடைய அன்புணர்ச்சியை எண்ணி உருகினேன். "வேண்டா, கணக்கு ஆசிரியரிடம் நாம் இருவரும் நேரே போய்க் கேட்டுப் பார்ப்போம்" என்றேன்.
மறுநாள் கணக்கு ஆசிரியரிடம் போகவில்லை. ஏதோ ஒருவகை அச்சம் எங்களைத் தடுத்தது. கணக்கு ஆசிரியர் அப்படிப்பட்டவர். ஒருவரையும் அடிக்கமாட்டார்; வைய மாட்டார்; வகுப்பில் ஏதாவது தவறு செய்துவிட்டால் பார்வை பார்த்து அமைதியாக இருப்பார்; கணக்கில் ஏதாவது தவறு செய்தால், பக்கத்தில் வந்து நின்று காதைப் பிடித்துக் கொள்வார்; திருகமாட்டார்; தம் கையில் உள்ள சாக்குத் துண்டினால் கன்னத்தில் குத்துவார்; இவ்வளவுதான். மற்ற ஆசிரியர்களோடும் பேசமாட்டார்; பழகமாட்டார்; வகுப்பு இல்லாத நேரத்தில் தம் அறையில் ஒரு மூலையில் சன்னல் ஓரமாக உட்கார்ந்து எதையோ சிந்தித்துக் கொண்டிருப்பார். அவருடைய உயரமான வடிவமும், நீண்ட கறுப்பு அல்பாக்கா சட்டையும், ஒரே நிலையான அமைதியான முகத்தோற்றமும் அப்படி எங்கள் மனத்தில் ஒருவகை அச்சத்தை ஏற்படுத்தின. மற்ற ஆசிரியர்களுக்கெல்லாம் வழக்கம் போல் ஒவ்வொரு குறும்புப் பெயர் வைத்திருப்போம். கணக்கு ஆசிரியர்க்கு மட்டும் அப்படி ஒரு பெயர் வைத்ததில்லை. எங்களுக்கு முன் தலைமுறையைச் சார்ந்தவர்களும் அப்படி ஒரு பெயர் வைத்ததில்லை. வைத்திருந்தால், அந்தப் பெயர் வழிவழியாக மாணவர்களிடையே வழங்கியிருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட ஆசிரியரிடம் எப்படி அணுகிக் கேட்பது என்று இரண்டு நாள் தயங்கினோம். மூன்றாம் நாள் சந்திரன் துணிந்தான். என்னை அழைத்துக்கொண்டு அவர் இருந்த அறைக்குள் நுழைந்தான், எங்களைக் கண்ட கணக்கு ஆசிரியர் வாய் திறக்காமல் தலையை மெல்ல அசைத்தார். வரலாம் என்பது அதற்குப் பொருள். அணுகி நின்றோம். கண்ணால் ஒரு வகையாகப் பார்த்து மறுபடியும் தலை அசைத்தார். "என்ன காரணமாக வந்தீர்கள்?" என்பது அதற்குப் பொருள்.
சந்திரன் வாய் திறந்து, "நான் சிறப்புப் பாடமாகக் கணக்கைத் தேர்ந்தெடுக்க விரும்புகிறேன்" என்றான்.
ஆசிரியர் வாய் திறந்து, "சரி" என்றார். மறுபடியும் சந்திரன், "இவனும் கணக்கு வேண்டும் என்கிறான்" என்றான்.
"மார்க்"
"முப்பத்தாறு"
ஆசிரியர் உதட்டைப் பிதுக்கினார். பயன் இல்லை என்பது அதற்குப் பொருள்.
"நாங்கள் இருவரும் ஒரே தெருவில் பக்கத்துப் பக்கத்தில் இருந்து படிக்கிறோம். அதனால் ஒரே பாடமாக இருந்தால்-" இவ்வாறு சந்திரனே பேசினான்.
நான் வணக்கமாக வேண்டிக்கொள்ளும் முறையில் நின்றேன்.
"நீ சொல்லித் தருவாயோ?" என்றார் ஆசிரியர்.
"சொல்லித் தருவேன்" என்றான் சந்திரன்.
"சரி, போ" என்று சொல்லிவிட்டு ஆசிரியர் என்னைப் பார்த்துக் கண்களை ஒருமுறை மூடித்திறந்து தலையை ஒரு பக்கமாகச் சாய்த்து அசைத்தார்.
நான் வாயைத் திறக்காமலே கைகூப்பி வணக்கம் செலுத்திவிட்டுச் சந்திரனைத் தொடர்ந்து வெளியே வந்தேன்.
அதன் பிறகு இரண்டு மாதம் கழித்து ஒருநாள் வகுப்பில் கணக்கு ஆசிரியரின் கையில் என் காது அகப்பட்டுக் கொண்டது. "கணக்கே வேணும் என்றாயே! விதிகளை மனப்பாடம் பண்ணினாயா? கணக்குகளை நாள்தோறும் காலையிலும் மாலையிலும் போட்டாயா? சந்திரனிடம் கேட்டாயா?" என்று என் கன்னத்தில் சாக்குத் துண்டால் குத்தினார்.
அந்த 'தீட்சை' நிறைவேறிய பிறகு, உண்மையாகவே கணக்குப் பாடத்தில் நான் முன்னேறினேன். முப்பத்தாறு எண்கள் வாங்கியவன். கால் தேர்வில் ஐம்பது வாங்கினேன். அரைத் தேர்வில் ஐம்பத்தைந்து வாங்கினேன். சந்திரன் எனக்கு மிகப் பெரிய துணையாக இருந்து உதவினான். மாலையில் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பும் போதே சில சந்தேகங்களை எல்லாம் தீர்த்து உதவினான். கணக்கு ஒரு கடினமான பாடம் என்ற பயமே பறந்து போயிற்று. ஆனாலும் சந்திரனைப் போல் அவ்வளவு வல்லவனாக விளங்க முடியவில்லை; அவனைப் போல் தொண்ணூறு, தொண்ணூற்றெட்டு, நூறு எண்கள் பெறமுடியவில்லை.
முந்திய ஆண்டைவிட இந்த ஆண்டில் சந்திரனுக்கும் எனக்கும் இருந்த தொடர்பு வளர்ந்தது. அவன் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் பழகிக்கொண்டே எனக்குக் கணக்குக் கற்றுக் கொடுத்த உதவியை நன்றியோடு நினைத்துப் போற்றினேன். சில நாட்களில் மாலையில் நெடுந்தொலைவு நடந்துபோய் வரும் வழக்கத்தை மேற்கொண்டோம். பெரும்பாலும் ரயில் நிலையச் சாலையில், அதாவது வடக்கு நோக்கியே நடந்து போய் வந்தோம். நடக்கும்போது பலவகையான செய்திகளைப் பேசிக்கொண்டு போவோம். தேர்வு உள்ள காலங்களில் நடக்காமல், கையில் புத்தகமோ குறிப்போ எடுத்துக்கொண்டு மெல்லப் பார்த்துக் கொண்டே நடப்போம். அந்தச் சாலையில் இலுப்பை மரங்கள் இரு பக்கத்திலும் நிறைய வளர்ந்திருந்தன. சில சமயங்களில் அவற்றின் பூக்கள் ஒரு புதுமையான நறுமணம் கமழ்ந்து கொண்டிருக்கும். கீழே பழங்கள் போல் வெண்ணிறமாக விழுந்து கிடக்கும். சிறுவனாக இருந்தபோது அவற்றைப் பழங்கள் என்றே எண்ணிக் கொண்டிருந்தேன். ஒரு நாள் மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் அவற்றை எடுத்துச் சுவைத்துக் கொண்டிருந்ததைக் கண்டு, "இந்தப் பழங்களைத் தின்னலாமா?" என்று கேட்டேன். "இவைகள் பழங்கள் அல்ல, பூக்கள்" என்று என்னைப் பார்த்துச் சிரித்தான். அன்று அவனிடமிருந்து அந்த வேறுபாட்டைக் கற்றுக் கொண்டேன். ஒருநாள் சந்திரனுக்கு அதைச் சொன்னபோது "இது எனக்குத் தெரியுமே. இலுப்பைப்பூ பழம் போலவே இருக்கும். அதில் உள்ள தேனை உறிஞ்சிச் சுவைப்பார்கள்" என்றான்.
அந்த இலுப்பைமரச் சாலை ஓரமாகவே பாடத்தில் கேள்விகள் கேட்டுக்கொண்டும் விடைகள் சொல்லிக் கொண்டும் நடப்போம். ஒருநாள் ஒரு தோப்பின் எதிரே உட்கார்ந்து கணக்கு ஒன்றைச் சந்திரனிடமிருந்து கற்றுக் கொண்டிருந்தேன். அவன் ஒரு குச்சியை எடுத்து மண்ணில் கோடுகள் கிழித்து இருசம முக்கோணத்தில் ஒரு வெட்டு வெட்டி, இரண்டு பகுதிகளிலும் உள்ள கோணங்களின் ஒற்றுமை வேற்றுமையை விளக்கிக் கொண்டிருந்தான். அதை முடித்தவுடன், "நேரம் ஆயிற்று போகலாமா?" என்றான்.
"இன்றைக்கு முழுநிலா நாள்போல் இருக்கிறதே. அதோ பார், நிலா எவ்வளவு அழகாக இருக்கிறது. இன்னும் கொஞ்சநேரம் இருந்துவிட்டுப் போகலாம்" என்றேன்.
"உனக்கு நிலா என்றால் மிகவும் விருப்பம்போல் தெரிகிறது.
"ஆமாம். சந்திரன் அல்லவா! உன் பெயர், உன் நிறம், உன் பண்பு எல்லாம் எனக்கு விருப்பம்தான்."
அவ்வாறு நான் சொல்லி முடித்தவுடன் பெருங்காஞ்சியில் கண்ட நிலாவின் காட்சி நினைவுக்கு வந்தது.
"எங்கள் ஊரில் நிலா மிக அழகாக இருந்ததாகச் சொன்னாயே" என்று சந்திரனும் அதையே கூறினான்.
"ஆமாம்" என்று சொல்லிக் கிழக்கு வானத்தை அணி செய்து கொண்டு எழுந்துவந்த முழுநிலாவைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதன் வெள்ளிமேனியும் வட்ட வடிவும், அமிழ்த ஒளியும் பற்றி எண்ணிக் கொண்டிருந்தபோது அதன் உடலில் உள்ள களங்கத்தைப் பற்றிய எண்ணம் வந்தது. என்ன காரணமோ, பெருங்காஞ்சியில் சந்திரனுடைய நடத்தையில் கண்ட மாசு என் நினைவுக்கு வந்தது. கிணற்றில் குளித்த பிறகு வெந்நீரை எடுத்துக் கீழே கொட்டச் சொன்னதும், தாழை ஓடையில் அந்தப் பெண்களுக்குக் காசு கொடுத்து மயக்கிப் பாடச் சொன்னதும் நினைவுக்கு வந்தன. பக்கத்தில் இருந்த சந்திரனைப் பார்த்தேன். புன்முறுவல் கொண்டேன்.
"என்ன அய்யா! அந்தச் சந்திரனைப் பார்த்துவிட்டு என்னையும் பார்த்துச் சிரிக்கிறாயே?" என்றான் சந்திரன்.
"அந்தச் சந்திரனிடத்தில் எவ்வளவு பெரிய களங்கம் இருக்கிறது! உன்னிடத்தில் ஒரு களங்கமும் இல்லை அல்லவா?" என்றேன்.
"போதும் போதும் உன் கதை. எழு, எழு" என்று புறப்பட்டான். நானும் தொடர்ந்து வந்தேன்.
என் நண்பனுடைய உள்ளத்தில் - நடத்தையில் - சிறு களங்கம் இருக்கிறதே. அது இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் மட்டும் என் மனத்தைவிட்டு நீங்கவில்லை.
இந்த ஆண்டில் சந்திரனுடைய வீட்டுக்கு அடிக்கடி விருந்தினர் வந்தார்கள். அத்தைக்கு வேலை மிகுதியாயிற்று. படிப்பதற்கு வேண்டிய அமைதி இல்லை என்று சந்திரன் எங்கள் வீட்டுக்கு வந்துவிடுவான். தேர்வுக் காலத்தில் தனித்தனியே படித்தால் நல்லது என்று எண்ணி அவன் பாக்கியம் அம்மையாரின் வீட்டுக்குப் போய்விடுவான். அந்த வீட்டில் குழந்தைகளின் கூச்சலும் இல்லை; விருந்தினரின் ஆரவாரமும் இல்லை. இருந்த ஒரு தம்பியும் உணவுக்கடையில் உண்பதுபோல் உண்டு முடித்துத் திண்ணையை நாடி அமைதி பூண்டார். உணவுக் கடையிலும், சிலர் பரிமாறுவோரோடும் வேலையாட்களோடும் நெருங்கிப் பழகிச் சிரிப்பும் ஆரவாரமுமாக இருப்பார்கள். இன்னும் சொல்லப்போனால், சிலர் வீட்டில் இருப்பதைவிட, உணவுக்கடையில் மிக மகிழ்ச்சியாக இருப்பார்கள். நெடுநேரம் பாடிக்கொண்டும் சீட்டாடிக் கொண்டும் இருப்பார்கள். பாக்கியத்தின் தம்பியோ, வீட்டை வீடாகவும் கருதவில்லை. உணவு விடுதியாகவும் கருதவில்லை. ஒரு சத்திரமாகக் கருதினார் என்று சொன்னால் ஒரு வகையில் பொருத்தமாக இருக்கும். அப்படிப்பட்ட வீட்டில் தேர்வுக் காலத்தில் தனியே அமைதியாகப் படிப்பது சந்திரனுக்கு உகந்ததாக இருந்தது.
சந்திரன் வீட்டுக்கு விருந்தினர் வந்தபோது நான் அடிக்கடிப் போவதில்லை. அத்தை மட்டும் சில நாட்களில் கேட்பார்: "ஏன் வேலு! நான்கு நாளாக எங்கள் வீட்டுக்கே வரவில்லையே" என்பார்.
"யார் யாரோ வந்திருந்தார்கள். அதனால் நான் வரவில்லை" என்பேன்.
"யார் வந்தால் என்ன? எனக்குக் கூச்சமா? நீ வரலாமே! நீ என்ன, இப்படிப் புதிய ஆட்களைப் பார்த்தால் பழகுவதற்குக் கூச்சப்படுகிறாயே, சந்திரனைப் பார், யார் வந்தாலும் கலகல என்று பேசிப் பழகுகிறான்." என்பார் அத்தை.
அம்மாவும் அதற்குத் தகுந்தாற் போல், ஒருநாள், "அது என்னவோ தெரியவில்லை அம்மா! இவனும் அப்படி இருக்கிறான். இவன் தங்கை மணிமேகலையும் அப்படித்தான் இருக்கிறாள்" என்றார்.
"மணிமேகலை அப்படி இருக்கலாம். அவள் பெண், வேலு ஏன் அப்படி இருக்கணும்?" என்றார் அத்தை.
அப்படி நான் சின்ன வயதில் பழகியதைப் பற்றியும் அத்தை சொன்னதைப் பற்றியும் பிற்காலத்தில் நினைத்துப் பார்த்திருக்கிறேன். அப்படி ஒதுங்கித் தயங்கி வாழ்ந்து வந்த காரணத்தால் நான் எத்தனையோ இடர்களிலிருந்து தப்பியிருக்கிறேன் என்று சொல்லலாம்.
அத்தை வீட்டில் விருந்தினர் வந்தபோதெல்லாம் ஒதுங்கியிருந்த நான், கற்பகம் வந்தபோது அவ்வாறு ஒதுங்கியிருக்கவில்லை. அப்போது மட்டும் அடிக்கடி போய்க் கொண்டிருந்தேன். கற்பகத்தைக் காண்பதற்கென்றே அடிக்கடி போனேன். அவளும் எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து, என் அலமாரியையும், பெட்டியையும் திறந்து புத்தகங்களை எடுத்துப் படங்கள் பார்த்துவிட்டுச் செல்வாள். என் தங்கை மணிமேகலையோ தம்பி பொய்யா மொழியோ அப்படி என் அலமாரியிலும் பெட்டியிலும் கை வைத்தால் எனக்கு உடனே கோபம் வரும். ஆனால் கற்பகம் வந்து எடுத்தால் உவகையோடு இருப்பேன். அவள் பார்க்க வேண்டும் என்றே சில படங்களை நானே எடுத்துக் காட்டுவேன். இது என் தங்கைக்கும் பொறாமையாக இருந்தது. "நான் எடுத்தால் அண்ணன் கோபித்துக் கொள்கிறார். கற்பகம் மட்டும் எடுக்க விடுகிறார்" என்று அம்மாவிடம் குறை சொன்னாள். "நீ எடுத்தால் எல்லாவற்றையும் கலைத்துவிடுகிறாய். கற்பகம் அப்படிக் கலைப்பதே இல்லை" என்றேன் நான்.
கற்பகம் வளர வளர அவளுடைய அழகும் வளர்ந்து வந்தது. முன்னே பாவாடை சட்டை மட்டும் உடுத்தி வந்தவள். இப்போது தாவணியும் உடுத்திவந்தாள். அவளுடைய காதுகளில் திருகாணி இருந்தது போய், வெள்ளைக்கல் தோடு வந்து அழகு செய்தது. மூக்குத்தியும் அணிந்திருந்தாள். அவற்றில் இருந்த கற்கள் அவளுடைய மேனியின் அழகையும் ஒளியையும் எடுத்துக்காட்டுவன போல் இருந்தன.
ஒருநாள் சனிக்கிழமை பிற்பகல், அம்மாவும் தங்கையும் பாக்கியம் வீட்டுக்குப் போய்ப் பேசிக் கொண்டிருந்தார்கள். தம்பியும் எங்கோ விளையாடப் போயிருந்தான். நான் மட்டும் தனியாக இருந்தேன். அப்போது யாரோ உள்ளே வரும் காலடி கேட்டுத் திரும்பினேன். கற்பகம் ஒரு பை நிறையத் தின்பண்டங்கள் கொண்டு வந்து நின்றாள்.
"எப்போது வந்தாய் கற்பகம்" என்றேன்.
"இப்போதுதான். உங்கள் அம்மா இல்லையா?"
"இல்லையே!"
"மணிமேகலை!"
"அவளும் இல்லை" என்று நான் சொன்னவுடன் அந்தப் பையைக் கீழே வைத்து விட்டு நகரத் தொடங்கினாள். "அதைக் கீழே வைத்துவிட்டுப் போகிறாயே, என் கையில் கொடுத்தால் என்ன?" என்று அவளுடைய கையைப் பற்றினேன். அவள் விடுவித்துக்கொண்டு ஓட முயலவே, நான் இறுகப் பற்றினேன். வளையல் இரண்டு நொறுங்கி உடைந்தன. உடனே கையை விட்டேன். "எனக்குக் கோபம் வரும், தெரியுமா?" என்று உடைந்த வளையலைப் பார்த்தாள். அவளுடைய முகம் வாடியது. அந்த வாட்டத்திற்கு இடையே புன்முறுவல் செய்துவிட்டு நகர்ந்தாள். நான் செய்த தவறு உணர்ந்து அவள் முகத்தில் விழிப்பதற்கு வெட்கப்பட்டு, அன்றெல்லாம் சந்திரனுடைய வீட்டுக்குப் போகாமலே நின்றேன். மறுநாள் காலையிலும் போகவில்லை. பிற்பகல் அவளே வந்தாள். அம்மாவோடும் தங்கையோடும் பேசிக் கொண்டிருந்தாள். இடையிடையே அவளுடைய பார்வை என்மேல் இருந்தது. அவளுடைய ஒரு கையில் வளையலே இல்லாததைக் கண்டு மனம் வருந்தினேன். குறும்புக்காரி அவள். அதைப் பொருட்படுத்தாமல் "நீங்கள் ஏன் எங்கள் வீட்டுக்கு வருவதில்லை? அண்ணாவும் நீங்களும் பேசுவதில்லையா? காய் விட்டு விட்டீர்களா?" என்றாள். "இல்லை. உன்னோடுதான் காய் விட்டிருக்கிறேன்" என்றேன். "அப்படியா? நல்லதுதான்" என்று, வலிய வந்து என் பெட்டியைத் திறந்து அதில் இருந்த கைகுட்டையைக் கேளாமலே எடுத்துக் கொண்டு போய்விட்டாள்.
-------
அத்தியாயம் 8
அந்த ஆண்டிலும் இருவரும் தேறி மேல் வகுப்புக்கு வந்தோம். முன்போலவே சந்திரனைத் தலைமையாசிரியர் பாராட்டினார். ஆனால் இந்த முறை அவன் ஆங்கிலத்தில் மட்டும் முதன்மையாக வர முடியவில்லை. அதையும் தலைமையாசிரியர் குறிப்பிட்டார். சந்திரன் ஆங்கிலத்தில் இரண்டாம் தரமாக இருந்தான். அதற்காகக் கவலைப்பட்டான்.
அவனைத் தேற்றுவதற்காக நான் பல முயற்சிகள் செய்தேன். "ஒரே ஒரு பாடத்தில் இன்னொரு பையன் முதன்மை பெற்றுவிட்டானே என்று கவலைப்படுகிறாயே. நான் எல்லாப் பாடத்திலும், நாற்பதும் நாற்பத்தைந்துமாக வாங்கியிருக்கிறேனே? என்னைப் பற்றி எண்ணிப்பார், நான் கவலைப்படுகிறேனா? போனால் போகட்டும் என்று விடு. இந்த ஆண்டில் முயற்சி செய். எஸ்.எஸ்.எல்.சி தான் முக்கியம் அதில் எல்லாப் பாடத்திலும் முதன்மை பெற்று விட்டால் போதும். அதுதான் பெரிய சிறப்பு என்று சொல்லிப் பார்த்தேன். இருந்தாலும் சில நாட்கள் வரையில் ஒரு சிறு சோர்வுடன் இருந்தான்.
பள்ளிக்கூடம் திறந்த மூன்றாம் நாள் காலையில் சந்திரன் வீட்டில் அவனுடைய அப்பா சாமண்ணாவின் குரல் கேட்டது. உள்ளே எட்டிப் பார்த்தேன். சோர்ந்து வாடிய முகத்தோடு கற்பகமும் உட்கார்ந்திருந்தாள். வெளியே பின்வாங்கி வந்து நின்று கேட்டுக் கொண்டிருந்தேன். சாமண்ணா தம் அக்காவிடம் கற்பகத்தைப் பற்றிக் குறை சொல்லிக் கொண்டிருந்தார். "நான் எவ்வளவோ சொன்னேன். அவளுடைய அம்மா எவ்வளவோ சொன்னாள். கேட்காமல் ஒரே பிடிவாதமாக அழுதுகொண்டிருந்தாள். அழுது அழுது முகம் எல்லாம் வீங்கிப் போச்சு. பள்ளிக்கூடத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கிறேன் என்று சொன்ன பிறகுதான் சாப்பிட்டாள். இந்த வயதிலே இவ்வளவு பிடிவாதம் கூடாது. அதற்காகத்தான் பெண்களைப் படிக்க வைக்கக் கூடாது என்று பெரியவர்கள் சொன்னார்கள்" என்றார்.
அத்தை குறுக்கிட்டு, "நாங்கள் எல்லாம் என்ன படித்தோம்? ஓர் எழுத்தும் தெரியாது. கையெழுத்தும் போடமாட்டோம்; உள்ளூரிலே பள்ளிக்கூடம் இருக்கிறது. அங்கே படித்தாய், முடித்தாய், கையெழுத்துப் போட, கடிதம் எழுத, ஒரு புத்தகம் படிக்கத் தெரிந்து கொண்டாய், அது போதாதா, கற்பகம்?" என்றார்.
மறுபடியும் சாமண்ணா, "இப்போதுதான் தெரியுது அந்த அளவுக்கும் படிக்க வைத்திருக்கக் கூடாது. அதுவே என் தப்புத்தான். வீட்டிலே வாய்க்குச் சுவையாகச் சமையல் செய்யக் கற்றுக் கொள்ளணும். பொருள்களை வீடு வாசலைச் சுத்தமாக வைத்திருக்கக் கற்றுக் கொள்ளணும் அதுதான் முக்கியம். நீ படித்துவிட்டு என்ன செய்யப் போகிறாய்? அதைச் சொல். நீ ஒன்பதாவது பத்தாவது படித்தால், மாப்பிள்ளை பி.ஏ., எம்.ஏ., படித்தவனாகப் பார்க்கணும். அவன் தலையோ ஆகாசத்திலே பார்க்கும். தாட் பூட் என்பான். நம் இனத்திலே நம் வட்டாரத்திலே அப்படி எவன் இருக்கிறான்? எங்களுக்கு அல்லவா தெரியும், இந்தத் தொல்லை எல்லாம்? எல்லாம் சொல்லிப் பார்த்துவிட்டேன் அக்கா. நீ வேணுமானால் சொல். கேட்டால் கேட்கட்டும். கேட்காவிட்டால், நாளைக்குக் கொண்டு போய்ப் பள்ளிக் கூடத்தில் சேர்த்துவிட்டுப் போய்விடுவேன். இன்னொன்றும் சொல்லிவிட்டேன். இந்த வருசம் மட்டும்தான் படிக்க வைப்பேன். சந்திரன் எஸ்.எஸ்.எல்.சி. தேறி விட்டானானால், அப்புறம் இங்கே ஒரு குடும்பம் இருக்காது. நீயும் இங்கே படிக்க முடியாது. இந்த வருசம் மட்டும் படித்துவிட்டுச் சந்திரனோடு வீட்டுக்கு வந்து விடணும்" என்றார்.
"சரிதானே அம்மா?" என்று மகளைப் பார்த்துக் கேட்டார். அவளுடைய குரல் கேட்கவில்லை. ஒருகால், தலை மட்டும் அசைத்திருப்பாள்.
"சரி. இருந்து போகட்டும் எனக்கும் ஒரு துணை ஆச்சு" என்றார் அத்தை.
என் உள்ளம் குளிர்ந்தது. வந்தது தெரியாமல் திரும்பிவிட்டேன்.
மறுநாள் கற்பகம் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டாள். பள்ளிக்கூடத்துக்குப் புறப்பட்ட போதும் அவள் முகம் வாடியே இருந்தது. அங்கே சேர்ந்து பெயர் எழுதிவிட்டுத் திரும்பிய பிறகுதான் முகத்தில் மலர்ச்சி இருந்தது. மறுநாள் சாமண்ணா ஊருக்குத் திரும்பிவிட்டார். கற்பகம் அடிக்கடி எங்கள் வீட்டுக்கு வந்து என் தங்கை மணிமேகலையோடு சேர்ந்து விளையாடிக் கொண்டும் பள்ளிக்கூடத்தைப் பற்றிப் பேசிக் கொண்டும் இருந்தாள். மணிமேகலையும் அவளும் ஒரே வகுப்பில் படித்தமையால் நெருங்கிய தொடர்பும் ஏற்பட்டது. ஆனால் சந்திரனும் நானும் என்றும் மாறாத அன்போடு பழகியது போல் அவர்களால் பழக முடியவில்லை. சில நாட்களில் ஒருவரோடு ஒருவர் பேசாமல் தனித்தனியே முன்னும் பின்னுமாகப் பள்ளிக்கூடத்துக்குப் போனார்கள். "பெண்களே, இப்படித்தான். அடிக்கடி சண்டை போடுவார்கள். முறுக்கிக் கொள்வார்கள்" என்றான் சந்திரன்.
அடுத்த மாதத்தில் வேலூரிலிருந்து என் அத்தையும் அத்தை மகள் கயற்கண்ணியும் மகன் திருமந்திரமும் வந்து எங்கள் வீட்டில் பத்துநாள் தங்கியிருந்தார்கள். அப்போது இன்னும் வேடிக்கையாக இருந்தது. சில நாள் என் தங்கை தனியே இருக்க கயற்கண்ணியும் கற்பகமும் ஒரு கட்சியாக இருந்தார்கள். மற்றும் சில நாள் மூன்று பேரும் சேர்ந்து எங்கள் வீட்டையே அமர்க்களம் செய்தார்கள். அது கால் தேர்வின் நெருக்கமாக இருந்தபடியால், எனக்கு ஒரு வகையில் இடையூறாக இருந்தது. ஆனாலும் கற்பகத்தின் ஆடல் பாடல்களைப் பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும் என்று பேசாமல் பொறுத்துக் கொண்டிருந்தேன். கற்பகம் இல்லாமல், என் தங்கையும் கயற்கண்ணியும் மட்டும் சேர்ந்து விளையாடிய போது, அவர்களைக் கடிந்துரைத்தேன். "கயற்கண்ணியின் குரல்தான் வீட்டையே தூக்கிக் கொண்டுபோகுது. அப்பப்பா! படிக்கவே விடமாட்டேன் என்கிறாள்" என்று அவள்மேல் குறை சொல்வேன். கற்பகம் வந்து அவர்களுடைய ஆட்டத்தில் கலந்துகொண்ட பிறகு, எவ்வளவு ஆரவாரம் கேட்டாலும் வாய் திறக்காமல் பொறுமையாக இருப்பேன். என்னுடைய போக்கு எனக்கே வேடிக்கையாக இருந்தது. அந்தப் பெண்கள் என்னைப் பற்றி என்ன பேசிக் கொண்டார்களோ, தெரியவில்லை.
இவ்வளவு மகிழ்ச்சியான கூட்டமும் ஆட்டமும் இருந்த படியால், அத்தைமகள் கயற்கண்ணி இங்கேயே தங்கியிருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாள். அத்தையோடு ஊருக்குப் போகமாட்டேன் என்றும் சொன்னாள். இங்கேயே இருந்து படிக்க விரும்புவதாகவும் சொன்னாள். அத்தை வற்புறுத்தி அழைத்துக் கொண்டு போனதைக் கண்டு என் மனம் மிக மகிழ்ந்தது. "இந்த வருசம் ஊரிலே படித்துப் பரீட்சையிலே தேறிவிடு. அடுத்த வருசம் அப்பாவுக்குச் சொல்லி இங்கே கொண்டு வந்து சேர்க்கச் சொல்வேன்" என்று ஆறுதல் கூறி அத்தை அவளை அழைத்துச் சென்றார். என்னுடைய நல்ல காலம், அவள் அந்த ஆண்டில் முழுத்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. அதனால் இங்கே வந்து படிக்கும் முயற்சிக்கு இடம் இல்லாமற் போயிற்று. பள்ளிக்கூடப் படிப்புப் போய், சமையலறைப் பயிற்சி அவளிடம் உரிமையோடு வந்து சேர்ந்தது.
கற்பகம் சந்திரனைப்போல் அவ்வளவு நுட்பமான அறிவுடையவள் அல்ல; அதனால் எந்தப் பாடத்திலும் முதன்மையாக வரவில்லை. ஆனால் செய்வன திருந்தச் செய்யும் பழக்கம் அவளிடம் இருந்தது. என் தங்கையை விட அழகான கையெழுத்து எழுதினாள். புத்தகங்களை மிக ஒழுங்காக வைத்துப் போற்றினாள். சில நாட்களில் என்னுடைய அலமாரியும் மேசையும் இருக்கும் நிலையைப் பார்த்து, "இதென்ன இப்படிக் கன்னா பின்னா என்று வைத்திருக்கிறீர்களே! மணிமேகலை! நீயாவது உன் அண்ணாவுக்காக அடுக்கி ஒழுங்காக வைக்கக் கூடாதா? பலசரக்குக் கடைகூட நன்றாக வைத்திருக்கிறார்களே" என்று சொல்லிக் கொண்டே எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்துவாள். நான் பார்த்துக்கொண்டே பேசாமல் இருப்பேன். அவளை ஒழுங்குபடுத்த விட்டதனால் எனக்குத்தான் தொல்லை. குறிப்போ புத்தகமோ பொருளோ நான் வைத்த இடம் வேறு; ஒழுங்குபடுத்தியபோது அவள் வைத்த இடம் வேறு. அதனால் எது எங்கே இருக்கிறது என்று தேடிக் காலத்தைப் போக்க வேண்டியிருந்தது. இருந்தாலும், அவளை நான் தடுப்பதே இல்லை.
சில நாட்களில் சந்திரனுடைய வீட்டுக்குப் போனால் வலிய ஏதாவது ஒரு காரணம் பற்றி என்னோடு பேச வருவாள். ஒரு காரணமே இல்லாதபோதும், கணக்குப் புத்தகத்தை எடுத்து வந்து, ஏதாவது ஒன்றைக் காட்டி, "இந்தக் கணக்கைச் சொல்லிக் கொடுங்கள்" என்பாள், "சந்திரன் சொல்லிக் கொடுப்பதில்லையா?" என்று நான் கேட்டால், "அண்ணனுக்கு மூக்கிற்கு மேல் கோபம் வருகிறது. அதனால் நான் கேட்பதில்லை" என்பாள். அந்தக் கணக்கைப் படித்துப் பொறுமையோடு போட்டுக் காட்டுவேன். ஒரு நாள் கணக்குப் போட்டுக் காட்டி முடிந்த பிறகு, முன் பக்கத்தைத் தள்ளிப் பார்த்தேன். அதே கணக்கை அவளே சரியாகப் போட்டு வைத்திருந்தாள். அதை நான் கண்டு கொண்டதால், "அதெல்லாம் நீங்கள் ஏன் பார்க்கிறீர்கள்" என்றாள். "வேறு சுருக்கமான வழி இருக்கிறதா என்று தெரிந்து கொள்வதற்காக உங்களைப் போடச் சொன்னேன்" என்று பொய்யான காரணத்தை சொன்னாள்.
அரைத் தேர்வு நெருக்கத்தில் நானும் சந்திரனும் மும்முரமாகப் படிக்கத் தொடங்கினோம். விளையாட்டையும் பொழுது போக்கையும் குறைத்துக் கொண்டோம். வீட்டில் கற்பகத்தின் ஆரவாரம் கேட்டாலும் முன்போல் பொறுத்திருக்காமல், கடிந்து பேசத் தொடங்கினேன். அவளும் தேர்வு நெருக்கத்தை உணர்ந்து கொண்டாள். முன்போல் ஆரவாரம் செய்யாமல் அமைதியாக வந்து போனாள்.
அரைத்தேர்வில் இருவரும் நன்றாக எழுதினோம். சந்திரன் வரலாறு தவிர மற்றப் பாடங்களில் முதன்மையான எண்கள் பெற்றிருந்தான். வரலாற்று ஆசிரியர் வேண்டும் என்றே கெடுத்ததாகச் சொல்லி அவனே மனத்தைத் தேற்றிக் கொண்டான். ஆனால் ஆசிரியர் ஒருவர் மட்டும் "வரலாற்றில் எண்கள் குறைந்து போனதைப் பற்றிக் கவலைப்படாதே. கணக்கில் வல்லவர்களாக இருப்பவர்களுக்கு அந்தக் குறை இருப்பது உண்டு. கணக்குக்கும் வரலாற்றுக்கும் உறவு இல்லை" என்றார். எனக்கு யாரும் இப்படித் தேறுதல் கூற வேண்டிய தேவையே இல்லை. நான் எதிலுமே ஐம்பதுக்கு மேல் எண்கள் வாங்கவில்லை என்றால், முதன்மையைப் பற்றிய பேச்சு ஏது?
மிகுதியாகப் பாடுபட்டுப் படித்த காரணமோ என்னவோ தெரியவில்லை; முந்திய ஆண்டு வராமல் விலகியிருந்த சிரங்கு இந்த ஆண்டில் தை பிறந்ததும் என்னிடம் குடி புகுந்தது. ஆனால் நல்ல காலம்; அது முன்போல் யானைச் சிரங்காக வராமல் நமட்டுச் சிரங்காக வந்தது. அதுவும் ஒரு வகையில் பொறுக்க முடியாததாக இருந்தது. இப்போதுபோல், நல்ல ஊசி மருந்துகள் அப்போது அதற்குக் கிடைக்கவில்லை. ஆகவே மேற்பூச்சையே நம்பியிருக்க வேண்டியிருந்தது. இரவும் பகலும் நடக்கும் போதும் உட்காரும் போதும் சொரிந்துகொண்டே இருக்க நேர்ந்தது. வீடு, வகுப்பு, தெரு என்ற வேறுபாடு அதற்கு இல்லை. நன்றாக ஆழ்ந்து படிக்கும்போதும் கை சொரிவதில் ஈடுபட்டிருக்கும். எழுதும் போதும் இடக்கை அந்தச் சேவையில் ஈடுபடும்; சில சமையங்களில் வலக்கை எழுதுவதை விட்டு அதில் ஈடுபடும். எங்கே இருக்கிறோம், எதிரில் இருப்பவர் யார் என்ற எண்ணமே இல்லாமல் அதில் ஈடுபடும். மற்றப் பிள்ளைகள் என்னை எள்ளி நகையாடினார்கள். மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படவில்லை. என் நண்பன் சந்திரனே 'சொஞ்சரி சொஞ்சரி' என்று என்னை எள்ளிப் பேசத் தொடங்கினான். எனக்கு அது வருத்தமாகவே இருந்தது. என் தங்கையும் அவ்வாறு நகையாடினாள். அவ்வாறு எள்ளி நகையாடாதவர்கள் என் தாயும் பாக்கிய அம்மையாரும் கற்பகமும்தான்.
மருந்து பூசிப் பூசி அது ஒருவாறு அடங்கியது எனலாம். ஆனால் அடங்கிய நோய்ப்பொருள் உள்ளே அமைதியாய்க் கிடந்த பிறகு வேறு வடிவில் வெளிப்பட்டது போல், நிமோனியாக் காய்ச்சல் வந்துவிட்டது. இருபது நாள் படுக்கையில் கிடந்து வருந்தினேன். அம்மாவும் அப்பாவும் தவிர, வேறு யாரும் என்னை அணுகவில்லை. தங்கையும் தம்பியும் அணுகி வந்தாலும் பெற்றோர் தடுத்து விட்டார்கள். கற்பகம் வந்தாலும் அவ்வாறே தடுத்தார்கள். தொத்தக்கூடிய நோய் என்று தடுத்தார்கள். ஆனாலும் கற்பகம் நாள்தோறும் திண்ணை வரையில் வந்து என் தங்கையிடம் பேசியிருந்து விட்டுச் செல்வாள். படுக்கையில் இருந்த என் செவிகளில் அவளுடைய குரல் நாள்தோறும் விழுந்தது. சில நாட்களில் மெல்ல வந்து ஒரு நொடிப் பொழுதில் எட்டிப்பார்த்துத் தன் முகத்தைக் காட்டிவிட்டுப் போவாள். சந்திரன் சில நாளுக்கு ஒரு முறை வந்து போவான். பாக்கியம்மா மட்டும் காலை மாலை இரு வேளையும் தவறாமல் வந்து எதிரே உட்கார்ந்து அம்மாவிடம் பேசிவிட்டு, 'தம்பி கஞ்சி சாப்பிட்டதா? இரவு தூங்கினதா?' என்று அன்போடு கேட்டுவிட்டுப் போவார். அப்போதுதான் அந்த அம்மாவின் உண்மையான அன்பு எனக்குப் புலப்பட்டது. காய்ச்சல் விட்டுத் தேறிய பிறகு அம்மா ஒருநாள் பாக்கியத்தின் அன்பைப் பற்றிக் குறிப்பிட்டார். "உனக்கு காய்ச்சல் தன்னை மீறி இருந்தபோது இரவில் தூங்கிவிட்டுக் கவனிக்கத் தவறிவிடுவேனோ என்று பயந்து பாக்கியமும் என்னோடு வந்து படுத்துக்கொள்வாள். நான் தூங்கிவிடுவேன். தூங்கி விழித்தபோது பார்த்தால் அவள் உன் பக்கத்தில் உட்கார்ந்து விழித்திருப்பாள். பிறகு நான் பார்த்துக் கொள்வதாகச் சொல்லி அவளை உறங்கும்படி வற்புறுத்துவேன். இப்படி எல்லாம் உன்னைக் காப்பாற்றினாள். உன் தொண்டை வறண்டு போகாதபடி பாலும் கஞ்சியும் கொடுத்துக் காப்பாற்றினாள். வேறு யார் அப்படிக் கண் விழிப்பார்கள்!" என்றார். அதைக் கேட்ட போது என் உள்ளம் உருகியது. ஆனாலும் பாக்கியத்திடம் முன்போல் நெருங்கிப் பழக முடியவில்லை. உள்ளத்தில் மட்டும் அன்பு மிகுதியாயிற்று.
அந்த நோயால், என் முடிவுத் தேர்வு என்ன ஆகுமோ என்று கவலைப்பட்டேன். உடம்பு தேறிய பிறகும் அளவுக்கு மேல் படிக்கக் கூடாது என்று எல்லாரும் சொல்லத் தொடங்கினார்கள். சந்திரன் அவ்வப்போது வந்து அந்த இருபது நாளில் நடந்த பாடங்களைச் சொல்லிக் கொடுத்தான். இரவில் சாப்பிட்ட பிறகு படிக்கவே கூடாது என்று அம்மா கடுமையாகச் சொல்லிவிட்டார்.
தேர்வு நெருக்கத்தில் சந்திரன் பாக்கிய அம்மையாரின் வீட்டில் இரவும் பகலும் தனியாக இருந்து படித்தான். ஒருநாள் காலை பள்ளிக்குச் சென்ற போது அவன் தலை மிக ஒழுங்காக வாரப்பட்டிருந்தது கண்டு, "இன்று மிகச் சீராகத் தலை வாரி வந்திருக்கிறாயே" என்றேன்.
"நான் வாரியது அல்ல. பாக்கியம்மா வாரிவிட்டார்கள்" என்றான்.
அதைக் கேட்டபோது எனக்குச் சிறிது பொறாமை ஏற்பட்டது. என்னிடம் உள்ளத்தில் அன்பு வைத்திருக்கிறாரே தவிர, இவ்வளவு நெருங்கி அன்பு பாராட்டுவதில்லையே என்று எண்ணினேன். உடனே நானே என் மனத்தைத் தேற்றிக் கொண்டேன். அந்த அம்மா நெருங்கி வந்தாலும் நான் நெருங்கிப் பேசாமலும் பழகாமலும் இருந்தது என் குற்றம்தானே என்று உணர்ந்து மனத்தைத் தேற்றிக் கொண்டேன்.
இரவும் பகலும் அந்த அம்மாவின் வீட்டிலேயே இருந்து படித்த அவன், ஒருநாள் நான் போனபோது அங்கே இல்லை. "எங்கே தம்பி வந்தாய். போகிறாய்?" என்று அந்த அம்மா கேட்டார். "சந்திரனைப் பார்க்க வந்தேன்" என்றேன். "அது வீட்டில் இருக்கும்" என்றார். அன்று இரவும் அவன் அங்கே போகவில்லை. கணக்கில் ஒரு சந்தேகம் கேட்பதற்காகத் தான் போயிருந்தேன். அங்கே இல்லாமற் போகவே மறுபடியும் அவனுடைய வீட்டுக்கே போய்ப் பார்த்தேன்.
"பாக்கியம்மா வீட்டுக்குப் போய்ப் பார்த்துவிட்டு வந்தேன். ஏன் அங்கே போகவில்லை?" என்று கேட்டேன்.
"எனக்கு அங்கே இருந்து படிப்பதைவிட இங்கிருந்து படிப்பதே நன்றாக இருக்கிறது" என்றான். அவனுடைய முகமும் வாட்டமாக இருந்தது.
"அண்ணன் போக்கு மனம் போன போக்கு. மறுபடியும் நாளைக்கு அங்கேதான் நன்றாகப் படிக்க முடிகிறது என்று போய்விடுவார்" என்றாள் கற்பகம்.
"சே! உன்னை யார் குறுக்கே பேசச் சொன்னார்கள்" என்று சந்திரன் எரிச்சலோடு கடிந்து கூறினான்.
அதைக் கேட்டவுடன், நான் காரணம் வேறே இருக்க வேண்டும் என்று உணர்ந்தேன். பாக்கியம்மா வீட்டில் சந்திரனுக்கும் அந்த அம்மாவுக்கும் அல்லது சந்திரனுக்கும் அந்த அம்மாவின் தம்பிக்கும் ஏதோ கசப்பு ஏற்பட்டிருக்க வேண்டும் என்று எண்ணினேன். ஆனால், என்ன காரணம் என்று அவனைக் கேட்கவில்லை. எரிச்சலோடு பேசுவதால் இப்போது கேட்கக்கூடாது. நாளை மறுநாள் அவனே சொல்லட்டும் என்று, என் கணக்குச் சந்தேகத்தைத் தீர்த்துக் கொண்டு வந்துவிட்டேன்.
அதன் பிறகு நானும் அவனும் முனைந்து படித்துக் கொண்டிருந்தோம். சில நாட்களில் பள்ளிக்கூடம் போவதும் நின்றது. அப்போதும் அவன் பாக்கியம் வீட்டுக்குப் போனதை நான் பார்த்ததில்லை. அந்த அம்மாவும் அதைப் பற்றி யாரிடமும் குறிப்பிடவில்லை. தேர்வு நெருக்கடியால், நானும் அந்த அம்மாவின் வீட்டுக்குப் போகவில்லை. அவர் மட்டும் எங்கள் வீட்டுக்கும் சந்திரன் வீட்டுக்கும் வந்து போய்க்கொண்டிருந்தார்.
நன்றாகப் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் எனக்கு நிறைய இருந்தது. ஆனால் படிக்க உடம்பு இடம் தரவில்லை. சோர்வு மிகுதியாக இருந்தது. மறுபடியும் காய்ச்சல் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அம்மாவும் அப்பாவும் விழிப்பாக இருந்தார்கள். காலையில் எழாதபடி தடுத்தார்கள்.
அதற்கு நேர்மாறாக சந்திரன் முன்போல் படிக்கவில்லை என்று அத்தை குறை சொன்னார். அவனும் அடிக்கடி சோர்ந்து போவதாகவும், போன ஆண்டில் படித்த அளவும் இந்த ஆண்டில் படிக்கவில்லை என்றும், குணமும் முன்போல் இல்லை என்றும், தாம் கண்டித்து அறிவுரை செய்வதால் தம்மோடு முன்போல் பேசுவதில்லை என்றும் அம்மாவிடம் சொல்லி வருந்தினார். "அப்படித்தான் இருப்பார்கள் சின்னப் பிள்ளைகள். தவிர, படிப்பு பொல்லாதது; பெரிய சுமையாக இருக்கும். அதனால் சரியாகப் பேசவும் மனம் இருக்காது" என்று அம்மா தேற்றியனுப்பினார்.
தேர்வும் வந்தது. இருவரும் எழுதினோம். சந்திரன் இதற்கு முந்திய ஆண்டுகளில் வெற்றிக் களிப்போடு இருந்ததுபோல் இல்லை; சோர்வோடு வாடியிருந்தான். என் நிலைமை எனக்கே நம்பிக்கை இல்லாமல் இருந்தது. எப்போதும் கடிந்து பேசும் அப்பாவே, அதைப்பற்றிக் கவலைப்படாமல், "என் பையன் தேர்வில் தவறிவிட்டாலும் கவலை இல்லை. உடம்பு தான் முக்கியம். சுவர் வைத்துத்தானே சித்திரம் எழுதவேண்டும்" என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
அந்த ஆண்டில் உங்கள் ஊர்ப் பங்குனித் திருவிழா எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிந்த பிறகுதான் வந்தது. அதனால் கவலை இல்லாமல் முழுநேரமும் திருவிழாப் பார்த்து அனுபவித்திருக்கலாம். ஆனால், அதுதான் இல்லை.
திருவிழா அந்த ஆண்டில் மிகச் சிறப்பாக இருந்தது என்றும் சொல்லிக் கொண்டார்கள். புலிவேடம், கரிவேடம், சாமியார் வேடம், குறத்தி வேடம் என்று இப்படிப் பலர் பல வேடம் போட்டுக்கொண்டு வேடிக்கை செய்தார்கள். ஆண் பூதமும் பெண் பூதமும் ஆடிய ஆட்டங்கள் நன்றாக இருந்தன. எல்லாவற்றையும்விடப் பூக்கடைக்காரர்கள் சேர்ந்து நடத்திய வாணவேடிக்கை கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது; வாலாசாவில் இருந்த செவிடர்களின் காதுகளிலும் வாணவெடிகள் கேட்டிருக்கும். பாம்புகள் போலவும், பூமாரி போலவும் வகை வகையான மத்தாப்பு ஒளியோடு வெடித்த வெடிகளுக்குக் கணக்கில்லை. வாண வேடிக்கைக்கு மட்டும் இரண்டாயிரம் ரூபாய் வரையில் செலவாகியிருக்கும் என்றும், அதுபோல் எந்த ஆண்டிலும் நடந்ததில்லை என்றும் எல்லோரும் பேசிக் கொண்டார்கள். திருவிழாவின் பத்தாம் நாள் இரவு ஒருமணி வரையில் வாணம் வெடித்தபடியே இருந்தது. ஊரே அதிர்ந்து போயிற்று. வானுலகம் மண்ணுலகத்தோடு சேர்ந்து கூத்தாடுவதுபோல் இருந்தது, அந்த ஒளியும் ஒலியும். என் தம்பி கடைசி வரையில் கண் விழித்திருந்து ஒவ்வொரு வெடிக்கும் எழுந்து எழுந்து துள்ளித் துள்ளிக் குதித்தான். என் தங்கையும் கற்பகமும் முந்திய ஆண்டில் மகிழ்ந்தது போலவே பார்த்து மகிழ்ந்தார்கள். அத்தை, அம்மா, பாக்கியம், எல்லோரும் எங்கள் வீட்டின் திண்ணையை அடுத்து உட்கார்ந்தபடியே பார்த்துக் களித்தார்கள். பாக்கியத்தின் தந்தையும் தம்பியும் அவர்கள் வீட்டுத் திண்ணைமேல் படுத்திருந்தார்கள். எங்கள் அப்பா எங்கள் திண்ணையில் படுத்துவிட்டார். சந்திரனும் நானும் படுக்காமல், உட்கார்ந்தபடியே நெடுநேரம் பார்த்திருந்தோம். ஆனால் முந்திய ஆண்டில் இருந்தது போன்ற மகிழ்ச்சி எங்களுக்கு இல்லை. மூன்றாம் ஆண்டில் அவன் வந்த புதுமையில் இங்கும் அங்கும் பரபரப்பாகச் சென்று திருவிழாவைப் பார்த்தோம். இந்த ஆண்டில் தேர்வு முடிந்த பிறகும், படிப்புச் சுமை இல்லாத நிலையிலும் எங்கள் மனம் அதில் அவ்வளவாக ஈடுபடவில்லை. நான்கு பேருக்கு இடையில் நாங்களும் கண்விழித்திருந்தோம். சந்திரனுக்கு அடிக்கடி கொட்டாவி வந்தது. எனக்கு உறக்கமே வந்துவிட்டது. காரணம் நோயினால் என் உடம்பு அவ்வளவு சோர்ந்து போயிற்று. அவனுக்கு மகிழ்ச்சி இல்லாத காரணம், தேர்வில் நன்றாக எழுதாத குறையாக இருக்கலாம் என்று எண்ணினேன். அதையும் அவன் என்னிடம் வாய்விட்டுச் சொல்லவில்லை.
---------
அத்தியாயம் 9
வைகாசி முடிவில் தேர்வின் முடிவுகள் வந்தன. நான் தேர்ச்சி பெறவில்லை. இன்னும் ஓர் ஆண்டு அதே வகுப்பில் படிக்க வேண்டுமே என்று எண்ணி மிக வருந்தினேன். அம்மாவும் அப்பாவும் "கவலை வேண்டா. நீ நோயிலிருந்து தப்பிப் பிழைத்ததே போதும்" என்று தேற்றிக் கொண்டிருந்தார்கள்.
சந்திரன் தேர்ச்சி பெற்றான். ஆனால் ஒரு பாடத்திலும் முதன்மையான எண்கள் வாங்கவில்லை. ஆசிரியர்கள் எல்லோருக்கும் உடன்படித்த மாணவர்களுக்கும் - இது பெரிய வியப்பாக இருந்தது. வரலாற்று ஆசிரியரின் மகன் சந்திரகுப்தன் நான்கு பாடங்களில் முதல்வனாக இருந்தான். மற்றொருவன் மற்றப் பாடங்களில் முதன்மையான எண்கள் பெற்றுவிட்டான்.
பெருங்காஞ்சிக்குப் போய்ச் சந்திரனைப் பார்த்துத் தேறுதல் சொல்லவேண்டும் என்று எண்ணினேன். நானே தேர்ச்சி பெறாதபோது நான் போய் அவனுக்குத் தேறுதல் சொல்வது பொருந்தாது என்று எண்ணி நின்றுவிட்டேன்.
ஆனாலும், சந்திரனிடத்தில் எனக்கு நன்றியுணர்ச்சி இருந்தது. ஏன் என்றால், அவன் சொல்லிக் கொடுத்த கணக்கில்தான் நான் நிறைய எண்கள் வாங்கியிருந்தேன். தமிழ்ப்பாடத்திலும் அதற்கு அடுத்த நிலைதான் இருந்தது. ஆங்கிலத்திலும் விஞ்ஞானத்திலும் எண்கள் குறைந்து போயிருந்தன. அந்தப் பாடங்களில் இன்னும் மூன்று மூன்று எண்கள் பெற்றிருந்தால் தேர்ச்சி கிடைத்திருக்கும் என்று தலைமையாசிரியர் சொன்னார்.
சந்திரனுடைய தகப்பனார் ஊரிலிருந்து வந்தார். அவனைச் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்க்கப் போவதாகவும், சென்னையில் உள்ள உறவினர் ஒருவர் அதற்கு வேண்டிய முயற்சி செய்வதாகவும் கூறினார். நான் தேர்ச்சி பெறாததற்காகக் கவலைப்படாமல் தொடர்ந்து படிக்குமாறு தேறுதல் மொழிகள் சொல்லிவிட்டுச் சென்றார். அவன் கல்லூரியில் சேர்வதற்கு முன் அவனைக் காண வேண்டும் என்று விரும்பினேன். அவன் வருவான் வருவான் என்று எதிர்பார்த்தேன். நேராக ரயில் ஏறிச் சென்னைக்குப் போய்ச் சேர்ந்துவிட்டான் என்று பிறகு தெரிந்து கொண்டேன். நானாவது அவனுடைய ஊர்க்குப் போய்ப் பார்க்கத் தவறிவிட்டேனே என்று என்னையே நொந்து கொண்டேன். சென்னையில் அவனுடைய முகவரி தெரிந்தால் கடிதமாவது எழுதலாம் என்று விரும்பினேன். முகவரியும் தெரியவில்லை. இன்னும் சில வாரம் பொறுத்துப் பார்க்கலாம். அதற்குள் அவனிடமிருந்து கடிதம் வரும் என்று நாள்தோறும் அதைப் பற்றியே எண்ணிக்கொண்டிருந்தேன்.
பள்ளி திறந்ததும், முன் படித்த வகுப்பிலேயே மிகச் சோர்வோடு போய் உட்கார்ந்தேன். எனக்குக் கீழ் வகுப்பில் படித்த மாணவர்கள் பலர் என்னோடு வந்து உட்கார்ந்திருந்தார்கள். ஆனால் மூன்று ஆண்டுகளாக என் பக்கத்தில் எனக்குத் துணையாக இருந்த சந்திரன் இப்போது இல்லை. அவன் இல்லாமல் நான் மட்டும் தனியே இருந்தது, எனக்குத் துயரமாக இருந்தது. காலையில் பள்ளிக்குச் செல்லும் போதும் மாலையில் திரும்பும்போதும் அந்தத் தனிமையை நன்றாக உணர்ந்தேன். வீட்டில் உள்ளவர்களோடும் வகுப்பில் உள்ளவர்களோடும் கலகல என்று பேசிப் பழக எனக்கு மனம் இல்லாமற் போயிற்று. ஏறக்குறைய ஒரு மாதத்துக்குப் பிறகுதான் இந்த உணர்ச்சி மெல்ல மெல்ல மாறத் தொடங்கியது.
இரண்டு வாரம் கழித்துச் சந்திரனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. சந்திரனுடைய கையெழுத்தைக் கண்டதும் எனக்கு அளவில்லா மகிழ்ச்சியாக இருந்தது. அதில் தான் சொல்லாமல் சென்னைக்குப் போனது பற்றியும், நான் தேர்வில் தவறிவிட்டது பற்றியும் வருத்தம் தெரிவித்திருந்தான். தனக்கு மனம் நன்றாக இல்லை என்றும், முன்போல் ஊக்கமாகப் படிக்க முடியவில்லை என்றும் சுருக்கமாக எழுதியிருந்தான், அவன் மனநிலையில் அப்படி மாறுதல் நேர்ந்ததற்குக் காரணம், எஸ். எஸ். எல். சி. யில் எண்ணியபடி வெற்றிபெற முடியாமற் போனதுதான் என்று வருந்தினேன். உடனே அந்தப் பழைய குறையை மறந்துவிட்டுப் புதிய ஊக்கத்தோடு முயலும்படியாக எழுதினேன், அந்தக் கடிதத்தைப் பற்றி அம்மாவுக்குச் சொன்னேன். என்ன காரணமோ, புதிய ஊர் பிடித்திருக்காது என்று அம்மாவும் வருந்தினார்.
அதற்குப் பிறகு அவன் பதில் எழுதவில்லை. மறுபடியும் நானே ஒரு கடிதம் எழுதினேன். அதற்கு எழுதிய பதிலும் சுருக்கமாகவே எழுதியிருந்தான். விடுமுறையில் ஊர்க்கு வரப்போவதாகவும் அங்கு வந்தால் தோப்பில் பேசிக் கொண்டிருக்கலாம் என்றும் குறித்திருந்தான். ஆனால், விடுமுறை எப்போது என்பதைத் தெரிவிக்கவில்லை.
எனக்கு கால் தேர்வு வந்தது. அவனுக்கும் அப்போது தேர்வு நடக்கும் என்றும், அதன் பிறகு தான் விடுமுறைக்கு வருவான் என்றும் எண்ணியிருந்தேன். என் தேர்வு முடிந்த பிறகு பெருங்காஞ்சிக்குப் புறப்பட்டுச் சென்றேன். அங்குச் சென்று சேர்ந்ததும் ஏமாற்றம் அடைந்தேன். அவனுடைய விடுமுறைக் காலம் முடிந்து அதற்கு முந்திய நாள் தான் சென்னைக்குப் போய்விட்டதாகக் கூறினார்கள். உடனே திரும்பிவிடலாம் போல் தோன்றியது. சந்திரனுடைய அம்மா, அப்பா, அத்தை மூன்று பேரும் வற்புறுத்தவே சோர்வோடு மூன்று நாள் தங்கியிருந்தேன். அந்தச் சோர்வுக்கு இடையே நான் பெற்ற மகிழ்ச்சி ஒன்று இருந்தது என்றால், அது கற்பகத்தின் முகத்தை இடையிடையே கண்டதில்தான். அவளோ, படிப்புக்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்துவிட்டு, சமையலறையில் பயின்று கொண்டிருந்தாள். என் முன் அடிக்கடி வர நாணினாள். அந்த நாணம் எப்படித்தான் அவளிடம் வந்து சேர்ந்ததோ தெரியவில்லை. ஆறு மாத காலத்தில் அவ்வளவு வேறுபாட்டோடு பழகுவாள் என்று நான் எண்ணவில்லை. ஆனாலும், யாரும் இல்லாதபோது, நடைவழியாகப் போனவள், இரண்டு மூன்று முறை புன்முறுவலும் கடைக்கண் பார்வையும் காட்டிவிட்டுச் சென்றாள்.
வழக்கம் போல் மாசன் இளநீர் வெட்டிக் கொண்டு வந்தான். "நுங்கு இல்லையா?" என்று நான் கேட்ட போது, "அதற்கு இப்போது காலம் இல்லை. வேண்டுமானால், பனம் பழம் இருக்குமா என்று பார்த்து வருவேன்" என்றான்.
தென்னந் தோப்புக்குத் தனியே சென்றேன். காவலாள் சொக்கான் என்னை வரவேற்றான். "சுரைப்புருடை வேண்டுமா சாமி!" என்றான்.
"வேண்டா, நீ பக்கத்தில் இரு. நானே நீந்திப் பார்க்கிறேன்" என்று சொல்லிக் கிணற்றினுள் இறங்கினேன். படித்த வாய்பாடு தவறாமல் நினைவுக்கு வருவது போல், நீரில் இறங்கியவுடன் நீந்தும் திறமை தானே வந்தது. ஒருவகைப் பெருமிதத்தோடு திரும்பத் திரும்பச் சுற்றிச் சுற்றி நீந்தினேன். "சொக்கான்! உன் துணை வேண்டா. இனிமேல் நானே தனியே நீந்துவேன். தண்ணீரும் எனக்குத் தரைபோல் ஆகிவிட்டது. நீ போகலாம்" என்றேன்.
"என்ன சாமி! இது ஒரு வித்தையா? நாய்க்குட்டி பூனைக்குட்டி, ஆட்டுக்குட்டி, கன்றுக்குட்டி எல்லாம் பிறந்த மூன்றாம் நாளில் போட்டாலும் நீந்திக் கரைக்கு வந்து சேருது. மனிதக் குட்டிக்கு இது ஒரு வித்தையா?" என்றான் சொக்கான்.
"நாயும் பூனையும் ஆடும் மாடும் யாரும் கற்றுக் கொடுக்காமலே நீந்துகின்றனவே. மனிதன்தான் கற்றுக் கொடுத்து நீந்த வேண்டியிருக்கிறது" என்றேன்.
வழக்கம்போல் அத்தை வெந்நீர் வைத்துக் காத்திருந்தார். முன் சந்திரன் சொல்லிக் கொடுத்தது போல் பொய் சொல்லி நடிக்க முடியவில்லை. "வேண்டா அத்தை! தண்ணீரிலே குளித்தேன். நன்றாக நீந்துகிறேன். பயமே இல்லை" என்றேன்.
"உடம்புக்கு ஆகுமா? சளி பிடித்துவிட்டால்?"
"ஒன்றும் பிடிக்காது. பூச்சி பூச்சி என்று பயந்து இருந்தால் பயன் இல்லை. துணிந்துவிட்டேன்" என்று சொல்லி முடிப்பதற்குள், கற்பகத்தின் சிரிப்பின் ஒலி கேட்டது.
"தண்ணீரிலே குளிப்பதற்குக்கூட ஒரு பெரிய துணிச்சல் வேண்டுமா என்று சிரிக்கிறாள்" என்று அத்தை விளக்கம் தந்தார்.
நானும் மெல்லச் சிரித்து எட்டிப் பார்த்தேன். புன்முறுவலோடு கற்பகம் போய்க் கொண்டிருந்தாள்.
மூன்று நாள் இருந்துவிட்டுப் புறப்பட்டபோது கற்பகத்தின் முகத்தில் மலர்ச்சி இல்லை. கண்களும் கலங்கியிருந்தன. அந்த நேரத்தில் தபால்காரன் ஒரு கவர் கொண்டு வந்து சாமண்ணாவிடம் கொடுத்தான். அதைப் பிரித்துப் பார்த்த அவர், "தமிழில் எழுதக் கூடாதா? எல்லாரும் சீமையில் பிறந்து வளர்ந்ததாக எண்ணிக் கொள்கிறார்கள். வேலு! இது என்ன, பார்த்துச் சொல்" என்று என்னிடம் கொடுத்தார்.
சந்திரனுடைய கல்லூரித் தலைவரிடமிருந்து வந்த கடிதம் அது. அவன் கால் தேர்வில் பெற்ற எண்களை எழுதி, படிப்புப் போதாது. அக்கறை கொள்ள வேண்டும் என்ற குறிப்பும் சேர்க்கப்பட்டிருந்தது. சாமண்ணாவிடம் சொன்னேன்.
அவர் ஒரு பெருமூச்சு விட்டார். என்னைப் பார்த்தார் "சரி, உனக்கு நேரம் ஆகுது. பணம்தான் தண்ணீர் போல் செலவு ஆகிறது; பயன் ஒன்றும் காணோம். அவனைப் பட்டணத்துக்கு அனுப்பிப் படிக்க வைத்ததே தப்பு. என்னவோ, இவ்வளவு படித்தானே, இன்னும் கொஞ்சம் படித்து முடிக்கட்டும் என்று அனுப்பினேன்" என்று சிறிது நேரம் தரையைப் பார்த்தார். மறுபடியும் என்னைப் பார்த்து, "நீயும் அவனோடு போய்ப் படித்துக் கொண்டிருந்தால் அவன் இப்படிக் கெட்டுப் போயிருக்கமாட்டான். மார்க்கு இவ்வளவு குறைந்திருக்காது. எங்களுடைய போதாக் காலம், உனக்கு நோய்வர, நீ பரீட்சையில் தவறி விட்டாய். என் செய்வது? இந்த வருசம் நீ பரீட்சையில் தேறி, அடுத்த ஆனியில் நீயும் பட்டணத்துக்குப் போய்ப் படிப்பதாக இருந்தால்தான் அவனை அனுப்பிப் படிக்க வைக்கப் போகிறேன். இல்லையானால் நிறுத்திவிடப் போகிறேன்" என்றார்.
அதைக் கேட்டு என் மனம் உருகியது. என்ன சொல்வது என்று தெரியாமல் விடை பெற்றுப் புறப்பட்டேன்.
வந்த வழியில் ஒரு குடிசையிருந்தது. அதன் வாயிலில், ஒரு கிழவனும் கிழவியும் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். கிழவி புகையிலையைக் கிள்ளித் தர, கிழவன் அதை வாங்கி வாயில் வைத்துக் கொண்டு, வலக்கையை நெற்றியருகே வளைத்து என்னை உற்றுப் பார்த்தான். "யார் சாமி போகிறது?" என்றான்.
"இந்த ஊருக்கு வந்தேன். வெளியூர்".
"யார் வீட்டுக்கு வந்தீர்கள்?"
"சந்திரன் வீட்டுக்கு-அதாவது சாமண்ணா வீட்டுக்கு".
"அதுதானே நினைச்சேன். மொட்டையம்மா தம்பி பிள்ளை மாதிரி இருக்குதே, அந்தப் பிள்ளைதான் இரண்டு நாளைக்கு முன்னே பட்டணம் போச்சே, இது யாரு என்று பார்த்தேன்.
"சந்திரனைத்தான் பார்க்கலாம் என்று வந்தேன். அவன் இல்லை" என்று சொல்லிக் கொண்டே நகர்ந்தேன்.
கிழவியின் குரல் கேட்டது: "அந்தப் பிள்ளை படிக்கப் போயிருக்குதாம் பட்டணத்துக்கு."
"போனதே நல்லதுதான். இந்த ஊரில் இருந்தால், கொழுத்துப்போன பெண் கழுதைகள் அதைக் கெடுத்து விடும். அதுவும், பெரிய வீட்டுப் பிள்ளை என்றால் சொல்லத் தேவையில்லை."
கிழவனின் இந்தப் பேச்சைக் கேட்டு, நின்று மெல்ல நடந்தேன்.
"இன்னுமா அந்தப் பிள்ளையைக் கெடுக்காமல் இருக்கிறார்கள்? உனக்குத் தெரிந்தது இவ்வளவுதான். எல்லோரும் உன்னைப்போல என்னைப் போலப் பயந்து நடப்பார்கள் என்று கனவு காண்கிறாயே?" என்று கிழவி சொன்னதைக் கேட்டுத் திடுக்கிட்டு நின்றேன். அங்கு இருந்த மரத்தில் ஏதோ பறிப்பதுபோல நின்றேன்.
"மொட்டையம்மாவின் தம்பி சாமண்ணா நல்லவர். ஒரு தப்புக்கும் போகமாட்டார். எனக்குத் தெரிந்து இல்லை" என்றான் கிழவன்.
"அப்பன் யோக்கியமா இருந்தால், பிள்ளையும் அப்படி இருக்குதா? அதுதான் உலகத்தில் இல்லையே" என்றாள் அவனுடைய அனுபவம் முதிர்ந்த வாழ்க்கைத் துணைவி.
நிழற்படக் கருவி இருந்தால் அந்தக் கணவனையும் மனைவியையும் அவர்களுடைய கற்புள்ள வாழ்க்கைக்கு இடமாக விளங்கிய அந்தக் குடிசையையும் படம் எடுத்து வைத்துப் பூசை செய்யலாமே என்று எனக்குத் தோன்றியது.
சந்திரனுடைய வாழ்க்கையில் உண்மையாகவே களங்கம் தோன்றிவிட்டதோ என்று வருத்தத்தோடு எண்ணியபடியே நடந்து வந்து ஏரிக்கரையில் பஸ் நிற்கும் இடத்தில் நின்றேன்.
அந்த ஏரிக்கரையின் அழகும் சாலையின் ஒழுங்கான மரங்களின் எழிலும் என் கண்களைக் கவரவில்லை. ஏரியில் நீர் நிரம்பியிருந்தது. நீர் நிரம்பிய காட்சியைப் பார்க்க வேண்டும் என்று முதல்முறை வந்தபோது என் மனம் ஆசை கொண்டது. அன்று பஸ் வரும் என்று காத்து நின்றபோது, என் கண் எதிரே அந்த ஏரி நிறைந்த செல்வத்தைக் கண்டேன், ஆயினும் என் மனம் அந்த அழகில் ஈடுபடவில்லை.
நிறைந்த நீரில் கரையோரத்தே வந்து மோதும் அலைகளைக் கண்டேன். என் மனத்திலே சந்திரனுடைய களங்கம் பற்றிய எண்ணங்களே திரும்பத் திரும்ப அலை அலையாக வந்து மோதிக் கொண்டிருந்தன.
மறுபடியும் என் நல்ல மனம் சந்திரனுடைய அறிவையும் அழகையும் பற்றி எண்ணியது. ஒரு கால் அந்தக் கிழவி சொன்னது பொய்யாக இருக்கலாம். கிழவன் அறிவுரையாகச் சொன்ன கருத்தை அவள் மெய்யெனத் திரித்திருக்கலாம். பொதுவாக ஆணும் பெண்ணும் சிறிது நேரம் எங்காவது பேசுவதைப் பார்த்தாலும் அவர்களுக்கு விபசாரப் பட்டம் கட்டித் தூற்றுவது நம் நாட்டு வழக்கம். அதுவும் வேறு செய்திகள் குறைந்த கிராமத்தில் இப்படிப் பழி தூற்றுவது மிகுதி. ஆகையால் சந்திரனைப் பற்றிக் கிழவி சொன்னது நம்பத் தகுந்தது அல்ல. யாரோ சந்தேகப்பட்டுக் கட்டிவிட்ட கதையைக் கேட்டுக் கொண்டு வந்து அவள் கிழவனிடம் சொன்னாள் என்று எண்ணினேன்.
கிழக்கே ஊர்ப்பக்கம் திரும்பி நோக்கினேன், ஏரி நீர் சலசல என்று பல வாய்க்கால்கள் வழியாக ஓடி வயல்களில் பாய்ந்து கொண்டிருந்தது. ஒரு வாய்க்கால் ஓரமாக அரளிச் செடிகள் அடர்ந்து வளர்ந்திருந்தன. பச்சைப் பசேலென்று இலைகளுக்கு இடையே அதே நிறமான விதைகள் பல இருந்தன. உச்சியில் கொத்துக் கொத்தாகப் பூத்திருந்த செந்நிறப் பூக்கள் என் கண்களைக் கவர்ந்தன. கீழே இறங்கிச் சென்று ஒரு பெரிய மலர்க்கொத்தைப் பறித்தேன். சில இலைகளும் சேர்ந்து வந்தன. அதை எடுத்துக் கொண்டு கரைமேல் வந்து நின்றேன். பூக்களின் அழகும் மணமும் இன்பமாக இருந்தன. கூர்மையான முனைகளோடு நீண்டிருந்த இலைகளால் ஒரு பயனும் காணோமே என்று எண்ணினேன். இவ்வளவு அழகான பூக்களுக்கு வரும் சத்து இலைகளுக்கும் வருகிறது. ஆனாலும் இலைகளில் மணம் இல்லை: அழகும் இல்லை. அதனால் இலைகளைப் போற்றுவாரும் இல்லை என்று எண்ணிக் கொண்டே, ஓர் இலையை ஒடித்து முகர்ந்தேன். அதிலிருந்து கசிந்த பால் மூக்கில் ஒட்டிக் கொண்டது. அரளி விதை பொல்லாதது, நஞ்சு உடையது என்று சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். இலையின் பாலும் பழமும் ஏதாவது தீமை செய்யுமோ என்று அஞ்சி மறுபடியும் கீழே இறங்கி வாய்க்காலில் நீரை எடுத்து மூக்கை நன்றாக உள்ளும் புறமும் தேய்த்துக் கழுவிக் கொண்டு வந்தேன். இலைகளை எல்லாம் ஒடித்துப் போட்டுவிட்டு, மலர்களை மட்டும் வைத்துக் கொண்டேன். கீழே உதிர்ந்த அந்த நீண்ட இலைகளை நோக்கினேன். "உங்களுக்கு ஒருவகை மதிப்பும் இல்லையா? பயனும் இல்லையா? அய்யோ! மலர்களோடு பிறந்தும், மலர்கள் பிறப்பதற்குக் காரணமாக இருந்தும், உங்களுக்கு வாழ்வு இல்லையே!" என்று எண்ணினேன். மேற்கே வேலத்து மலையின் சிகரம் சிவலிங்கம் போல் வானளாவி நிமிர்ந்து நின்றது. அதன் அடியில்தான் தாழை ஓடை இருந்தது. சந்திரனும் நானும் அங்கே போய்வந்த இன்ப நாள் நினைவுக்கு வந்தது. அந்தத் தாழை மரங்களை நினைத்தேன். தாழை மரத்திலும் பூக்கள் மட்டுமே மதிப்புப் பெறுகின்றன. முள் நிறைந்த அதன் இலைகளை யார் மதிக்கிறார்கள்? அந்த இலைகள்தான் உழைத்துக் காற்றையும் ஒளியையும் மண்ணின் சத்தையும் நீரையும் உட்கொண்டு மலர்களை உண்டாக்கித் தருகின்றன. ஆயினும் அந்த முள் இலைகளை எவரும் போற்றுவதில்லை. அரளி இலைகளை நின்ற இடத்திலேயே எறிந்தேன். தாழையின் இலைகளை அப்படி எறிவதிலும் துன்பம் உண்டு. நம் காலிலும் படாமல், பிறர் காலிலும் படாமல் அவற்றை எறிய வேண்டும். ஆனால் பூக்களோ மணம் நிறைந்த பூக்கள், அவற்றின் மணத்திற்கு நிகர் ஏது?
இவ்வாறு பல எண்ணிக் கொண்டிருந்தபோது ஆங்கில ஆசிரியர் பைரன் என்னும் ஆங்கிலப் புலவரைப் பற்றி வகுப்பில் கேட்டது நினைவுக்கு வந்தது. பைரனுடைய பாட்டுகளை மட்டுமே எடுத்து நுகர வேண்டுமாம்; அந்தக் கவிஞனுடைய வாழ்க்கைச் செய்திகளை மறந்தொழிக்க வேண்டுமாம்; அவை பயனற்ற நாகரிகமும் அற்ற - மதிப்புக்கு உரியனவல்லாத - செய்திகளாம். உடனே, மனிதரிலும் தாழைபோல், அரளி போல் சிலர் உள்ளனர் என்ற உண்மை விளங்கியது. சந்திரனுடைய அறிவும் அழகும் தவிர, அவனுடைய வாழ்க்கையில் நல்லவை வேறு இல்லை என்று எண்ணினேன்.
கீழிருந்து ஒரு நறுமணம் வந்ததை உணர்ந்தேன். என் இடக்கைப் பக்கம் ஒரு பனைமரத்தின் அடியில் துளசிச்செடி ஒன்று இருந்தது. அதன் மணம்தான் என்று உணர்ந்தேன். அந்தச் செடி அவ்வளவு அழகாகத் தோன்றவில்லை. அதனிடம் கவர்ச்சியான மலர்களும் இல்லை. மலர்களுக்கும் இலைகளுக்கும் நிறத்திலும் அவ்வளவாக வேறுபாடு இல்லை. ஆனால் துளசிமலர்கள் போலவே துளசி இலைகளும் நறுமணம் வீசும் சிறப்பு ஒரு புதுமை என உணர்ந்தேன். குனிந்து ஒரு காம்பை ஒடித்து முகர்ந்தேன். அந்த நறுமணம் மலர்களின் மணமா, இலைகளின் மணமா என்று பகுத்துணர முடியவில்லை. எதைக் கிள்ளி எறிவது, ஏன் கிள்ளி எறிவது என்று வியந்தேன். என்னை அறியாமல், அந்தக் கிளையில் இலை இல்லாத குச்சியை ஒடித்து மூக்கின் அருகே கொண்டு சென்றேன். அது வெறுங் குச்சி: இலை, பூ ஒன்றும் இல்லை. ஆனாலும் துளசியில் அருமையான நறுமணம் வீசியது. ஒருகால் இலைகளைத் தொட்ட என் விரல்களில் இருந்த நறுமணமோ என்று விரல்களை நன்றாக வேட்டியில் துடைத்து அந்தக் குச்சியை மறுபடியும் மூக்கின் அருகே கொண்டு சென்றேன். முன் போல் நறுமணம் கமழவே, துளசிக் குச்சிக்கும், நறுமணம் இருத்தலைத் தெளிந்தேன். என் வியப்பு மிகுந்தது.
அதற்குள் சோழசிங்கபுரத்திலிருந்து பஸ் வரவே, ஏறி உட்கார்ந்தேன். பஸ் ஏறியபோது, அரளிப்பூக் கொத்தை எறிந்துவிட்டுத் துளசியை மட்டும் கையோடு எடுத்துக் கொண்டேன். பஸ்ஸிலும் பழைய எண்ணமே தொடர்ந்து வந்தது. அரளியையும் தாழையையும் படைத்த இறைவனே துளசி போல் எல்லாம் நறுமணம் கமழும் செடியையும் படைத்திருக்கின்றான் என்று எண்ணினேன். புலவர் பைரனைப்போல் நண்பன் சந்திரனைப்போல் ஒரு பகுதி மட்டும் மணம் கமழ்ந்து மற்றப் பகுதியெல்லாம் வெறுத்து ஒதுக்கத்தக்க வகையில் வாழும் வாழ்வைவிடத் துளசி போல் வாழும் தூய எளிய வாழ்வு நல்வாழ்வு என்று எண்ணினேன். அந்த வாழ்வு அடக்கமான வாழ்வாக இருந்தாலும், உள்ளும் புறமும் ஒரே வகையாக மணம் கமழும் நல்ல வாழ்வு அல்லவா?
பஸ் வாலாசா ரயில் நிலையத்தைக் கடந்து இலுப்பை மரங்கள் அடர்ந்த சாலை வழியாக வந்து கொண்டிருந்தது. அந்த இலுப்பை மரங்களின் அடியில் நானும் சந்திரனும் உட்கார்ந்து, சென்ற ஆண்டில் பல நாட்கள் மாலைக் காலத்தில் தரையில் கோடுகள் கிழித்துக் கணக்குப் போட்டது நினைவுக்கு வந்தது. சந்திரன் எவ்வளவு உதவியாக இருந்தான்! அவனுடைய வாழ்வில் என்ன குறை கண்டோம்? யாரோ சொல்லக்கேட்டு அதை நம்பி அவனைப் பழித்து எண்ணலாமா? பைரனுடைய வாழ்வோடு ஒன்றாகச் சேர்க்கலாமா? அவ்வாறு எண்ணக் கூடாது. எண்ணியது குற்றம் என்று உணர்ந்தபடியே பஸ்ஸைவிட்டு இறங்கினேன்.
----------
அத்தியாயம் 10
அந்த ஆண்டு எனக்குத் துணையாக ஒருவரும் இல்லாவிட்டாலும், தனியாகவே எல்லாப் பாடங்களையும் நன்றாகப் படித்து வந்தேன். அரைத் தேர்வில் கணக்கில் முதன்மையான எண்களும், மற்றவற்றில் ஒவ்வொன்றிலும் ஏறக்குறைய ஐம்பது எண்களும் வாங்கினேன். கணக்கில் முதன்மையாக நின்றதற்குக் காரணமாக இருந்த சந்திரனுடைய உதவியை நினைத்துக் கொண்டேன். உடனே அவனுக்கு ஒரு நன்றிக் கடிதம் எழுதினேன். வழக்கத்துக்கு மாறாக அவன் உடனே மறுமொழி எழுதினான். ஊக்கம் ஊட்டி எழுதியிருந்தான். இந்த முறை எஸ். எஸ். எல். சி. யில் தேர்ச்சி பெற்று அடுத்த ஆனியில் தான் படிக்கும் கல்லூரியிலே வந்து சேர்ந்திடுமாறு எழுதியிருந்தான்.
அதற்கு முந்திய கடிதங்களைவிட அந்தக் கடிதத்தில் அவனுடைய மனநிலை நன்றாக இருந்தது. ஒருகால், நான் அவனுடைய உதவியைப் போற்றிப் புகழ்ந்து எழுதியிருந்த காரணத்தால், அவனுடைய நல்ல உள்ளம் வெளிப்பட்டு மகிழ்ச்சியோடு அவ்வாறு எழுதியிருக்கலாம். எப்படியோ அவனுடைய மனநிலையில் நல்ல மாறுதல் ஏற்பட்டிருப்பதை அறிந்து மகிழ்ந்தேன்.
வழக்கமாக வரும் சிரங்கு அந்த ஆண்டு வரவில்லை. அதற்குப் பிறகும் அது என்னைத் திரும்பப் பார்த்ததில்லை. விருந்தினரும் எங்கள் வீட்டுக்கு அந்த ஆண்டில் மிகுதியாக வரவில்லை. ஆகவே ஒருவகை இடையூறும் இல்லாமல் படிக்க முடிந்தது. மாலையில் ஒவ்வொரு நாளும் வடக்கு நோக்கி ஏறக்குறைய இரண்டு மைல் தனியாகவே நடந்து சென்று இலுப்பை மரங்களுக்கு இடையே கால்மணி அல்லது அரைமணி நேரம் உட்கார்ந்திருந்து, பிறகு வந்த வழியே அமைதியாகத் திரும்பி வருவேன். போகும்போதும் வரும் போதும் பாடங்களின் குறிப்புகளைச் சிந்தித்து நடப்பேன். சில நாட்களில் மட்டும் வானத்தின் அழகிய கோலங்களைச் சிறிது நேரம் பார்த்திருப்பேன். மேற்கு வானமும் என்னைப் போலவே நாள்தோறும் புதுப் புதுப் பாடங்களை எழுதிப் பார்த்து நினைவூட்டிக்கொள்வது போல் இருக்கும். முழுநிலா நாட்களிலும் அதற்கு முந்தி இரண்டொரு நாட்களிலும் மட்டும் கிழக்கு வானம் என் கண்ணைக் கவரும். பெருங்காஞ்சியிலும் அந்த இலுப்பைமரச் சாலையிலும் சந்திரனோடு இருந்து முழு நிலாவின் அழகைக் கண்டு மகிழ்ந்த நாட்கள் நினைவுக்கு வந்தன. நிலாவின் வாழ்வை ஒட்டி நாட்களும் மாதங்களும் நகர்ந்து செல்லச் செல்ல முடிவுத் தேர்வு வந்து விட்டது.
அம்மாவும் அப்பாவும் என்னை நன்றாகப் படிக்கும்படியாகவும் வற்புறுத்தவில்லை. படிக்காமல் உடம்பைக் காக்கும் படியாகவும் அறிவுறுத்தவில்லை. என் போக்கில் விட்டு விட்டார்கள். தங்கையையும் தம்பியையும் மட்டும் அடிக்கடி படிக்குமாறு வற்புறுத்தி வந்தார்கள்.
தேர்வில் நன்றாக எழுதினேன். தேர்வு எழுதி முடிந்தவுடன் அத்தையின் மகன் திருமந்திரம் வீட்டுக்கு வந்தான். "தேர்வு எழுதியானவுடன், ஊருக்கு அழைத்து வரும்படியாக அம்மா சொல்லியனுப்பினார்கள்" என்றான். அப்பாவும் போய்வருமாறு சொன்னார். இசைந்து புறப்பட்டேன். அங்கே அத்தையின் மகன் திருமந்திரம் தவிர வேறு யாருடனும் நான் அவ்வளவாகப் பழகவில்லை. அவன் நல்ல பையன்; நுட்பமான அறிவும் அமைதியான பண்பும் உடையவன். அவனோடு மாலையில் உலாவச் செல்வேன். காலையில் கிணற்றில் நீந்தி மகிழ்ந்தேன். பெருங்காஞ்சியில் கற்ற நீந்தல் கல்வியை அந்த ஊரில் பயன்படுத்தினேன். அத்தை மகள் கயற்கண்ணியைப் பற்றி நான் பொருட்படுத்தவே இல்லை. அவளைப் பார்த்த போதெல்லாம், எனக்குக் கற்பகத்தின் நினைவு வந்தது.
இரண்டு வாரம் கழித்து அங்கிருந்து திரும்பினேன். சந்திரன் பெருங்காஞ்சிக்கு வந்திருப்பான்; அங்குச் சென்று அவனைக் காணவேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டு வந்தேன். ஆனால் நான் வந்து கண்ட காட்சி வேறு. அப்பா முதுகுக் கட்டியால் கடைக்குச் செல்ல முடியாமல் வருந்திக்கொண்டிருந்தார். கட்டி ஒன்று போய் மற்றொன்று வரலாயிற்று. கடைக்குக் காலையும் மாலையும் போய்ப் பணப்பெட்டியின் பக்கத்தில் உட்கார்ந்து வரவு செலவைக் கவனிக்குமாறு சொன்னார். இதுவரையில் என் படிப்புக்கு எந்த வகையிலும் இடையூறு நேரக் கூடாது என்று அவர் என்னைக் கடைக்கு வருமாறு சொன்னதே இல்லை; வேறு எந்த வேலையும் வைத்ததில்லை. அவராலும் முடியாமல் வீட்டோடு கிடக்க நேரிட்டபோதுதான் அவ்வாறு சொன்னார். அதனால் தட்டாமல் அவர் சொன்னபடி செய்தேன். கட்டிகளால் அவர் பட்ட துன்பம் நாளுக்குநாள் மிகுதியாயிற்று. டாக்டர் சர்க்கரை இருப்பதாகக் கூறி, அரிசியும் மற்ற மாவுப் பொருளும் இல்லாத உணவு கொள்ளுமாறு வற்புறுத்தினார். வேனிற்காலம் ஆகையால், கட்டி மிக்க துன்பம் கொடுப்பது இயற்கை என்றார். வாரக்கணக்காக அவர் துன்பம் வளர்ந்து வரலாயிற்று. அவருடைய மனம் எல்லாம் கடையிலேயே இருந்தது. கடையில் இருந்த கணக்கர் அடிக்கடி வந்து எல்லா நிலைகளையும் சொல்லி அவருடைய கட்டளைகளைக் கேட்டுக் கொண்டுபோய் அவற்றின்படி பொருள்களை வாங்குவதும் விற்பதும் செய்தார். அப்பா என்னையும் அடிக்கடி கேட்டுத் தக்க வழிகளைச் சொல்வார். சில வேளைகளில் வலி பொறுக்க முடியாமல், மூச்சு விட்டுக்கொண்டே சொல்வார். இப்படி ஏழு வாரங்கள் ஆகிவிட்டன. இந்த ஏழு வாரங்களில் மளிகைக் கடையின் நுட்பங்களை ஒருவாறு தெரிந்து கொண்டேன் என்று சொல்லலாம்.
என் தேர்வு முடிவும் அதற்குள் வந்துவிட்டது. நான் தேர்ச்சி பெற்றேன். தமிழ், கணக்கு இரண்டு பாடங்களிலும் முதன்மை பெற்றேன். அப்பாவுக்கு என்னுடைய தொண்டு முறையைக் கண்டும், கடை வேலையைக் கவனித்ததைக் கண்டும், என்மேல் அன்பு வளர்ந்திருந்தது. ஆகையால், கல்லூரியில் படிக்கவேண்டும் என்று என் வேட்கையைத் தெரிவித்தவுடன், "சரி, உன்விருப்பம் போல் செய். இப்போது ஒன்றும் அவசரம் இல்லையே! இன்னும் இரண்டு வாரம் நான் கடையை முன்போல் கவனிக்க முடியாது. மாலையில் வந்து திரும்பிவிடுவேன். இந்த இரண்டு வாரமும் நீதான் பார்த்துக்கொள்ள வேண்டும்" என்றார். அவ்வாறே செய்தேன்.
தேர்வின் வெற்றியைச் சந்திரனுக்குத் தெரிவித்திருந்தேன். அவன் கல்லூரியில் சேர்வதற்கு உரிய வழிகளைக் காட்டிப் பதில் எழுதினான். தானும் இண்டர்மீடியட் இரண்டாம் வகுப்பில் தேறியுள்ளதாக எழுதியிருந்தான்.
இரண்டு வாரம் கழித்து என்னை அழைத்துச் செல்லச் சந்திரனே வந்திருந்தான். வந்த மறுநாளே புறப்பட்டோம். கல்லூரியில் சேர்ந்தவுடன், விடுதியில் அவனுடைய அறைக்குப் பக்கத்தில் ஒரு அறை ஏற்பாடு செய்தான்.
கல்லூரியின் புதுவாழ்வில் பழகுவதற்கு எனக்கு ஒரு மாத காலம் ஆயிற்று. சந்திரன் அவ்வப்போது எனக்குத் துணையாக வந்து உதவினான். ஆனால் அவன் வகுப்பு வேறு, என் வகுப்பு வேறு; பாடங்களும் வேறு வேறு; ஆகையால் வாலாசாவில் இணைபிரியாமல் இருந்ததுபோல் அங்கே இருக்க முடியவில்லை. ஒவ்வொரு நாளில் ஒருவரை ஒருவர் பார்க்காமலே இருந்ததும் உண்டு. உணவுக்கூடத்திற்குச் செல்லும் வேளையில் ஒவ்வொரு நாள் என் அறையில் நுழைந்து குரல் கொடுத்து அழைத்துச் செல்வான். பெரும்பாலான நாட்களில் என்னை அழைக்காமலே சென்று விடுவான். நான் உணவுக் கூடத்திற்குச் செல்லும்போது அவனை அங்கே காண்பேன். "வேறு வேலை இருந்தது. நேரே வந்துவிட்டேன்" என்பான். சில நாட்களில் அவனை அறையிலும் காண முடிவதில்லை; உணவுக் கூடத்திலும் காண முடிவதில்லை. "எங்கே, காணோமே" என்பேன், "வேறு வேலை இருந்தது" என்பான். சில முறை இப்படி நேர்ந்த பிறகு, நான் கேட்பதும் குறைந்தது; அவனாகச் சொல்வதும் குறைந்தது. இவ்வாறாக, ஒரே கல்லூரியில் படித்து ஒரே விடுதியில் தங்கியிருந்தும், நாளடைவில் எங்கள் தொடர்பு குறைந்து கொண்டே வந்தது. ஒரே வகுப்பில் பக்கத்தில் உட்கார்ந்து படிக்க வாய்ப்பு இல்லாத குறையால், நட்பும் தேய்ந்து போகிறதே என்று வருந்தினேன்.
எனக்கு அவன்மேல் அன்பு குறையவில்லை; அடிக்கடி எண்ணினேன்; அடிக்கடி காண முயன்றேன்; அடுத்தடுத்துப் பழக முயன்றேன்; வாய்ப்பு இல்லாதபோது நான் என்ன செய்வேன்!
சென்னைக்கு வந்த முதல் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று சந்திரன் என்னைக் கடற்கரைக்கு அழைத்துக் கொண்டு போனான். கடற்கரை எனக்கு விருப்பமாக இருந்தது. பெருங்காஞ்சி ஏரி முதலியவை கடலின் இயற்கைப் பெருமிதத்துக்கு முன் நிற்க முடியாதவை என்பதை நன்கு உணர்ந்தேன். தவிர, அங்குக் கண்ட மக்களின் கூட்டமும் என்னைக் கவர்ந்தது. என்ன காரணமோ தெரியவில்லை; சில நாட்களில் சில வேலைகளில் என் உள்ளம் தனிமையை நாடினாலும், பெரிய திரளான மக்களுக்கு இடையில் இருக்கும்போது நான் ஒருவகைக் கிளர்ச்சியை பெற்று மகிழ்கிறேன். திருவிழாக்களும் இப்படிப்பட்ட ஒரு கிளர்ச்சியை அளிப்பதனால்தான் மக்கள் மேலும் மேலும் அவற்றை விரும்புகிறார்கள் எனத் தெரிகிறது. மக்கள் கூட்டத்தை மறந்து கடல் அலைகளின் அருகே சென்று நிற்கும்போது என் மனம் அந்த அலைகளின் எழுச்சியிலும் ஈடுபட்டுத் துள்ளும். இப்படிப் பலவகையிலும் என் உள்ளத்தைக் கவர்ந்த கடற்கரைக்கு வாரந்தோறும் சென்று வர விரும்பினேன். ஆனால், சந்திரனோ முதல் வாரத்தோடு என்னைக் கைவிட்டான். வேறு வேலை, வேறு வேலை என்று சொல்லி வந்தபடியால், கடற்கரைக்கு அழைத்துச் செல்லுமாறு நான் அவனைக் கேட்கவில்லை. அவ்வாறு கேட்பதும் சிறுபிள்ளைத் தன்மைபோல் எனக்குத் தோன்றியது. ஒன்றும் தெரியாத சிறு பையன் என்று மற்றவர்கள் எள்ளி நகையாடுவார்களோ என்று அஞ்சினேன்.
அதனால் என் வகுப்பு மாணவர்கள் யாரேனும் அழைத்தபோது அந்த அழைப்பை மறுக்காமல் ஏற்றுக்கொண்டு கடற்கரைக்குச் சென்றுவந்தேன். சில வாரங்கள் கழிந்த பிறகு அவர்களோடு செல்வதற்கும் தயங்கினேன். காரணம், முதலில் நான் யாரோடு சேர்ந்து சென்றேனோ அவர்களிடம் தீய பழக்கங்கள் இருப்பதைக் கண்டுகொண்டேன். அவர்கள் பெண்களைப் பார்த்துக் காமக்கிளர்ச்சியான பேச்சில் ஈடுபடுவதும், ஆசிரியர்களைப் பற்றி மதிப்புக் குறைவாகப் பேசுவதும் எனக்குப் பிடிக்கவில்லை. உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் சொன்ன அறிவுரை என் மனத்தில் ஊறிப்போயிருந்தபடியால் புகைக்குடியை நான் மிக வெறுத்தேன். அந்தச் சில மாணவர்கள் தாங்கள் புகைத்துக் கெட்டதோடு நிற்காமல், மற்றவர்களையும் கெடும்படியாகத் தூண்டி வற்புறுத்தினார்கள். அதில் அவர்களுக்கு ஒரு தனி ஆர்வம் இருந்தது. நான் தடுத்தும் மறுத்தும் நடந்தது அவர்களுக்குப் பிடிக்கவில்லை. ஆகவே பகையாக முற்றுவதற்கு முன்பே, அளவோடு நின்று பழக்கத்தை வரையறை செய்துகொள்வது நல்லது என்று மெல்ல ஒதுங்கினாற்போல் நடந்தேன்.
சந்திரன் என்னை அழைத்துச் செல்ல முடியாதபடி கடமைகளில் ஈடுபட்டிருந்தால், நான் சிறிதும் வருந்தியிருக்க மாட்டேன். ஒருநாள் அவனுடைய அறையை நெருங்கிச் சென்றபோது, "எங்கே சந்திரா போயிருந்தாய்?" என்று கேட்ட ஒருவனிடம், "வேறு எங்கே! மெரினாவுக்குத்தான்" என்று சந்திரனே சொன்னான். அதைக் கேட்டபோது எனக்கு எப்படி இருக்கும்? என்னை விட்டுத் தனியே கடற்கரைக்குச் செல்லும் அளவிற்கு நட்பு மாறிவிட்டதே என்று வருந்தினேன்.
வாலாசாவில் இருந்தபோது எல்லா வகையிலும் என்னைப் போலவே நடந்து, எனக்கு உற்ற தோழனாக இருந்த சந்திரனிடத்தில் ஏற்பட்ட மாறுதல்களைக் கண்டு என் உள்ளம் நொந்தது. சிலவற்றைக் கடிந்து திருத்த வேண்டும் என்றும் என்மனம் தூண்டியது. ஆனால், சொல்லிப் பயன்படாதபோது ஏன் சொல்லவேண்டும் என்று எண்ணினேன். பெருங்காஞ்சியில் அவனுடைய தந்தை சாமண்ணா, "நீ அடுத்த ஆண்டில் கல்லூரியில் படிப்பதாக இருந்தால்தான் சந்திரனையும் அனுப்புவேன். இல்லையானால் நிறுத்திவிடுவேன்" என்று என்னிடம் சொல்லியது நினைவுக்கு வந்தது. அவனுடைய தந்தை என்னைப் பற்றி இவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தபோது நான் ஒன்றும் கூறித் திருத்தாமல் என்னளவில் அமைதியாக நடப்பது தகாது என்று என் மனச்சான்று சுட்டிக்காட்டியது. அவ்வாறே சொல்லிப் பார்ப்போம் என்று ஒரு நல்ல வாய்ப்பை எதிர்பார்த்திருந்தேன்.
ஒருநாள் நான் படுக்கையை விட்டு எழுந்ததும் அவனுடைய அறைக்குச் சென்று எட்டிப் பார்த்தேன். அவன் கண் விழித்தபடி படுத்திருந்தான். சன்னல் வழியாக என் தலையைக் கண்டதும், "வேலு! என்ன? ஏன் பார்க்கிறாய்?" என்றான். சிறிது அச்சத்தோடு நின்றேன். எழுந்து கதவைத் திறந்து, "வா" என்றான். உள்ளே சென்று உட்கார்ந்தேன். "என்ன! படிப்பு எல்லாம் எப்படி இருக்கிறது?" என்று நல்ல மனநிலையோடு கேட்டான்.
"ஒரு வகையாக இருக்கிறது. நீதான் சொல்லித் தருவதில்லயே, உன்னை இங்கே பார்ப்பதே அரிதாக இருக்கிறதே" என்றேன்.
"எனக்கு எத்தனையோ வேலை!" என்று நேரே என் முகத்தைப் பார்க்காமல் வேறு எங்கோ பார்த்துச் சொன்னான்.
"நாம் இங்கே வந்தது படிப்புக்காகத் தானே? வேறு கடமைகள் எதற்காக?"
"கல்லூரி என்றால் படிப்பு மட்டுமா?"
"அதுதான் முக்கியம். அது நல்லபடி முடிந்தால், ஓய்வு இருந்தால் மற்றவற்றை அளவாகக் கவனிக்கலாம்."
"ஓ! எனக்கு அறிவுரை சொல்ல வந்துவிட்டாயா?"
"உன் நன்மைக்காகத்தானே சொல்கிறேன்?"
"என் நன்மையை நான் கவனித்துக் கொள்வேன், நீ உன் வேலையைப் பார்."
"மார்க்குக் குறைவாக வாங்கினாய் என்று சென்ற ஆண்டில் அப்பா வருத்தப்பட்டார்."
சந்திரன் பேசவில்லை. முகம் ஒரு வகையாகக் கலக்கம் உற்றது.
அவன் மனம் வருந்தியதை உணர்ந்தேன். அதற்குமேல் பேச என்னாலும் முடியவில்லை. அப்போது நிலவிய அந்த அமைதியை, "என்ன சந்திரன்! நாடகத்தில் பெண்ணாக நடிக்கப் போகிறாயாமே!" என்ற குரல் கலைத்தது. புகைபிடித்து வெளியிட்டுக்கொண்டே ஒருவன் உள்ளே நுழைந்தான்.
"இப்போது இவ்வளவு காலையில் என்ன நாடகத்தைப் பற்றி?" என்றான் சந்திரன்.
"அதற்கு அல்ல அய்யா! பெண் வேடம் என்றால் பையன்களின் கிண்டல் மிகுதியாகுமே! அதற்காகச் சொன்னேன்" என்றான் வந்தவன்.
"ஏதோ ஒரு பகுதி நாடகத்தில் நடிக்கலாம் என்று போனேன். ஏதோ ஒன்று கொடுத்தார்கள். சரி என்றேன்."
"நடத்து! உன் பாடு கொண்டாட்டம் தான்" என்று சொல்லியவாறே அவன் என்னைப் பார்த்து, "இவர் உங்கள் ஊர் அல்லவா? தம்பி இருக்கிற இடமே தெரியவில்லையே. இன்னும் கல்லூரி பழக்கம் ஆகவில்லைபோல் தெரிகிறது" என்றான்.
சந்திரன் ஒரு புன்முறுவல் செய்து, "இவன் எப்போதும் அப்படித்தான்" என்றான். "குளித்துவிட்டுப் போக வேண்டும்" என்று சொல்லிக்கொண்டே எழுந்து சட்டையைக் கழற்றினான்.
"உன் முகத்துக்குப் பெண் வேடம் பொருத்தம்தான். ஆனால் உயரமாக இருக்கிறாய். கொஞ்சம் குள்ளமாக இருந்தால் நன்றாக இருக்கும்" என்றான் வந்தவன்.
நான் சந்திரனுடைய முகத்தை நன்றாகக் கவனித்தேன். அவனுடைய முகத்தில் முன் இருந்த ஒளி இல்லை. வாலாசாவில் இருந்தபோது கற்பகத்தின் முகம் போலவே இருந்தது. இப்போது அவ்வளவு சொல்ல முடியாது. முகம் மாறி இருந்தது. வற்றினாற்போல் இருந்தது. மார்பில் எலும்புகள் தெரிந்தன. தசைப்பற்று உடையவன் என்று சொல்ல முடியாவிட்டாலும், எலும்பு தெரியாத மார்போடு அளவான வளர்ச்சியோடு இருந்தான் முன்பு. பெருங்காஞ்சியில் கிணற்றில் குளித்தபோது நன்றாகக் கவனித்திருக்கிறேன். என் மார்பில் எலும்பு தெரிவது உண்டு. அவன் மார்பிலும் முதுகிலும் தசைநார்கள் நன்றாக அமைந்து, எலும்புகள் மறைந்திருந்தன. அந்த நிலைமை எப்படி மாறியதோ தெரியவில்லை. என்ன கெட்ட பழக்கத்தால் உடம்பைக் கெடுத்துக் கொண்டானோ என்று வருந்தினேன். வேளைக்கு உணவு கொள்ளாமல் வீணான வேலைகளை மேற்கொண்டு அலைந்து உடம்பைக் கெடுத்துக் கொண்டானோ, தெரியவில்லை. புகைப் பழக்கம் மேற்கொண்டானோ என்றும் எண்ணினேன். அதற்கு இடம் கொடுக்கமாட்டான் என்று உறுதியாக நம்பினேன். அவனுடைய உதடுகள் வெந்து கறுத்திருக்கின்றனவா என்று கவனித்தேன். அவற்றில் வறட்சி மட்டும் இருந்தனவே தவிர, என்றும் போல் செந்நிறமாக அழகாக இருந்தன. ஆகையால் புகைப்பழக்கத்துக்கு ஆளாகவில்லை என்று மகிழ்ந்தேன்.
அவர்கள் இருவரையும் பேச விட்டுவிட்டு, நான் வெளியே வந்தேன். என் அறைக்கு வந்த பிறகு, படிப்பில் குறை இருக்கும்போது சந்திரன் நாடகத்திற்கு ஏன் இசைய வேண்டும் என்று எண்ணினேன். அவனைத் திருத்துவதற்கு வழி என்ன என்று கலங்கினேன்.
நாடகத்தின் ஒத்திகைகள் நாள்தோறும் மாலையில் நடைபெற்றன. உணவு விடுதியில் விழாவுக்கான நாடகம் அது. ஒத்திகைக்கு நானும் இரண்டு நாள் போயிருந்தேன். சந்திரன் என்னைப் பார்த்துப் புன்முறுவல் செய்தானே தவிர, பேசவில்லை. நாடகத்தில் வரும் பேச்சுப் பகுதிகளைக் கையில் வைத்துப் படித்துக்கொண்டிருந்தான். ஒத்திகையின் போது, நன்றாகவே நடித்தான். பெண்ணைப் போன்ற தோற்றம் அவனுக்கு இன்னும் சிறிது இருந்தது. ஆகவே, அவன் நடிக்கத் தொடங்கியபோது எல்லோரும் போற்றிச் சிரித்து ஆரவாரம் செய்தார்கள். நடக்கும் நடையிலும் குலுங்கும் அசைவிலும் முகத்தின் திருப்பங்களிலும் பெண்ணைப் போலவே நடித்தான். அவன் எப்படித்தான் வெட்கம் இல்லாமல் இவ்வாறு நடிக்கிறானோ என்று நான் வியந்தேன். வாலாசாவில் இருந்தபோது இதற்கு வேண்டிய அறிகுறிகளே அவனிடம் காணப்படவில்லை. சென்னைக்கு வந்தபிறகு இந்த ஒன்றரை ஆண்டில் இந்தக் கலையை எப்படிக் கற்றுக்கொண்டானோ, தெரியவில்லை. பெண்களை நன்றாகக் கவனித்துப் பார்த்துப் பழகினால் தவிர, அவர்களின் நடை உடை பாவனைகளை அவ்வளவு ஒன்றாகக் கற்றுக்கொள்ள முடியாது. ஒருகால், சினிமாவுக்கு அடிக்கடி சென்று பார்த்துப் பெண்களின் நடை முதலியவற்றைக் கற்றுக் கொண்டிருக்கலாம். கல்லூரிப் படிப்பை நன்கு கற்காமல், இதில் பெறும் தேர்ச்சியால் பயன் என்ன என்று எண்ணி வருந்தினேன்.
----------
அத்தியாயம் 11
வேறு பொழுது போக்குஇல்லாமல், மற்றொரு நாளும் ஒத்திகை பார்க்கப் போயிருந்தேன். முந்திய ஒத்திகையை விட அது நன்றாக அமைந்திருந்தது. சந்திரனுடைய பேச்சும் நடிப்பும் எல்லாருடைய உள்ளத்தையும் கவர்ந்தன. பெண் நடிப்பில் அவனுக்கு ஒரு தனித்திறமை இருந்ததை முன்பே கண்டேன். அன்றைய ஒத்திகையின் போது கதைத் தலைவனாக நடிக்கும் மாணவன் வரவில்லை. ஒத்திகை நிறைவேறுவதற்காக யாரேனும் அந்தப் பகுதியைப் படிக்க வேண்டியிருந்தது. சந்திரனையே படிக்கும் படியாகச் சிலர் கேட்டுக்கொண்டார்கள். சந்திரன் இசைந்து படித்தான். அவன் படிக்கவில்லை தலைவனாகவே நடித்தான். அதிலும் அவன் சிறந்து விளங்கினான். சந்திரனுக்கு அந்தப் பகுதியையே கொடுத்திருக்கலாம் என்றும் அதற்கு உரிய மாணவனைவிடச் சந்திரனே நன்றாக நடிக்கிறான் என்றும் எல்லாரும் பேசிக்கொண்டார்கள். கதைத் தலைவனாகவும் தலைவியாகவும் அவன் ஒருவனே மாறி மாறி நடிக்க நேர்ந்தபோது எல்லாரும் வியக்கும்படியாக இருவகை நடிப்பிலும் திறமையாக விளங்கினான். என்னையும் அறியாமல் நானும் ஒருமுறை கைதட்டிப் போற்றி ஆரவாரம் செய்தேன்.
ஒத்திகை முடிந்து வெளியே வந்தபோது ஒரு மாணவன் என்னைத் தொடர்ந்து வந்தான். "கல்லூரியில் சேர்ந்த பிறகு படிப்பைவிட இது போன்ற துறைகளில்தான் அக்கறை மிகுதியாகிறது" என்றான் அவன்.
"உண்மைதான்" என்றேன் நான். அந்த வகையில் எனக்கும் அவனுக்கும் இருந்த கருத்து ஒற்றுமை, எங்களை நெருங்கி வரச்செய்தது. தனித்தனியே முன்னும் பின்னுமாக வந்துகொண்டிருந்த நாங்கள் பக்கம் பக்கத்தில் சேர்ந்து நடக்கத்தொடங்கினோம்.
விடுதியின் கிழக்குப்பகுதியில் ஒரு சிமெண்டுத் திண்ணை இருந்தது. அங்கே அவன் உட்கார்ந்தான்; நானும் உட்கார்ந்தேன்.
"பெற்றோர்கள் எவ்வளவோ துன்பப்பட்டுப் பணம் அனுப்புகிறார்கள். நாம் பொறுப்போடு படிக்க வேண்டாவா?" என்றான்.
"ஆமாம்" என்றேன்.
"அதில் எவ்வளவு பணத்தை வீண் செலவு செய்கிறார்கள்? புகைக்குடிக்கு எவ்வளவு பணம் செலவாகிறது தெரியுமா?"
"அய்யோ! கணக்கே இல்லை. அது மேற்கு நாட்டுக்கு வேண்டுமானால் ஒரு வேளை பொருந்தலாம். அது குளிர்நாடு. அங்கும் பலர் அதை வெறுக்கிறார்களாம். இது வெப்பமானநாடு, இங்கே உடம்புக்குக் கெடுதி அல்லவா?"
"ஆமாம்"
"கவர்னர் மாளிகையில் கல்லூரி மாணவர்களுக்கு ஒரு முறை தேநீர் தரப்பட்டதாம். சிற்றுண்டியும் தேநீரும் முடிந்த பிறகு சிகரெட்டுகளும் வழங்கப்பட்டனவாம்."
"அப்படியா? உண்மையாகவா?"
"மேற்கு நாட்டுப் பழக்க வழக்கங்களில் நல்லவற்றை மட்டும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் நம்மவர்கள் அப்படிச் சலித்து எடுப்பதே இல்லை. சலித்தாலும் மேலே நிற்கும் கப்பியை மட்டுமே எடுத்துக்கொள்கிறார்கள்."
அப்போது என் கை கீழே அழகுக்காக வளர்க்கப்பட்டிருந்த ஒரு செடியிலிருந்து ஓர் இலையைக் கிள்ளி மூக்கின் அருகே கொண்டுவந்தது. அது நாற்றமாக இருக்கவே, "சே!" என்று கீழே எறிந்து, அது என்ன செடி என்று பார்த்தேன்.
என் செயலைக் கவனித்த அவன், "அய்யோ! அதையா முகர்ந்தாய்? கெட்டநாற்றமாக இருக்கும். சீமைச்செடி அது. ஜிரேனியம் என்று பெயர். பக்கத்தில் உள்ளது மெகர்த்தா. பூவைப் பறித்து முகர்ந்து பார் அதுவும் அப்படித்தான் இருக்கும்.
அப்படியே எடுத்து முகர்ந்தேன். அவன் சொன்னது சரியாக இருந்தது.
அந்த மாணவன் உடனே என்னை நோக்கி, "உலகம் இப்படித்தான்; தெரிந்துகொள். இங்கே இருப்பவர்கள் பலர் இப்படித்தான் இருக்கிறார்கள். இந்தப் பூக்களைப் போல் அழகான தோற்றத்தோடு வகை வகையான உடையலங்காரங்களோடு இருப்பார்கள். அவர்களைத் தொலைவில் இருந்து கண்ணால் பார்த்துத்தான் மகிழவேண்டும். இந்தப் பூக்களில் எத்தனை நிறம், எத்தனை அழகு! பாரய்யா. இப்படித்தான் அவர்களும் நெருங்கிப் பழகினால், பொறுக்கமுடியாது. உடனே வெறுப்புக் கொள்வாய்" என்றான்.
இதைக்கேட்ட எனக்குப் பெருங்காஞ்சி ஏரிக்கரையில் நான் ஆராய்ந்து உணர்ந்த அரளிப்பூவும் துளசிச் செடியும் நினைவுக்கு வந்தன. இவ்வளவு கருத்து ஒற்றுமை உடைய இந்த இளைஞனோடு பழக வேண்டும், நட்புக்கொள்ளவேண்டும் என்று விரும்பினேன்.
"பெயர் என்ன?" என்று கேட்டேன்.
"மாலன்"
"எந்த வகுப்பு"
"இண்டர்"
"நான் பார்த்ததில்லையே, நானும் அதே வகுப்பு. பெயர் வேலய்யன்."
"நீயும் அதே வகுப்பா?"
"ஆமாம். ஏ பிரிவு. நீ எந்தப் பிரிவு?"
"சி."
"அதனால்தான் பழக வாய்ப்பு இல்லை. பார்த்திருப்பதாக நினைவு வருகிறது. ஆனால் தெரிந்துகொள்ளவில்லை. ஊர்?"
"சோழசிங்கபுரத்துக்குப் பக்கத்தில்........"
உணவுக்காக விடுதி மணி அடித்தது. உணவுக் கூடத்திற்கு நேரே சென்றோம். சென்றபோது நான் இருந்த அறையைச் சுட்டிக்காட்டிச் சென்றேன். மாலனும் தன் அறை வலப்பக்கக் கோடி என்று முதல் மாடியைச் சுட்டிக்காட்டினான்.
மறுநாள் காலையில் சிற்றுண்டி முடிந்தபிறகு இருந்த ஓய்வு நேரத்தில் மாலனுடைய அறைக்குப் போய்ப் பார்க்கலாம் என்று அந்தப் பக்கமாக நடந்தேன். மாலன் ஏதோ எழுதிக்கொண்டிருந்ததைக் கண்டேன். படிப்பில் மிகுந்த அக்கறை உடையவன் என்று எண்ணினேன். நான் வந்து சன்னல் பக்கம் நின்றதையும் கவனிக்காமல் அவன் எழுதிக்கொண்டிருந்தான். கதவை விரலால் மெல்லத் தட்டினேன். எழுந்து வந்து திறந்து வரவேற்றான். "என்ன பாடம் எழுதுகிறாய்? நான் பார்க்கலாமா?" என்றேன்.
"இது வேறு. இதை ஏன் நீ பார்க்கவேண்டும்?" என்று அதை மறைக்கத் தொடங்கினான்.
"நீ நன்மை கருதித்தானே செய்கிறாய்? நானும் பார்த்தால் நல்லது. கற்றுக்கொள்வேன் அல்லவா?"
"இது பாடம் அல்ல. பாடமாக இருந்தால் காட்டுவேன்."
"சரி விருப்பம் இல்லாவிட்டால் வேண்டா சும்மா வந்தேன்" என்று உட்கார்ந்தேன்.
சிறிது நேரத்தில் மாலன் மனம் மாறி, "சரி பார். உனக்கு ஏன் வருத்தம்?" என்று காட்டினான்.
"எனக்கு ஒன்றும் வருத்தம் இல்லையே" என்று சொல்லிக்கொண்டே அதைப்பார்த்தேன். ஒரு ரிஷியின் பெயரைச் சொல்லி, அவருடைய பெயரைப் பதினேழு முறை வாழ்த்தியிருந்தது. அதன் கீழே இதைப் பார்ப்பவர்கள் இதைப் போல் ஐந்து எழுதித் தமக்குத் தெரிந்த ஐந்து பேருக்கு அனுப்பவேண்டும் என்றும், அவ்வாறு இருபத்துநான்கு மணிநேரத்தில் தபாலில் அனுப்பிவைத்தால் இந்த ரிஷிகுல வட்டத்துக்கு உதவிசெய்த புண்ணியம் உண்டாகும் என்றும், அதனால் எண்ணிய காரியம் கைகூடும் என்றும் குறித்திருந்தது. அவ்வாறு செய்யத் தவறுகிறவர்களை இந்த வட்டத்தை நிறுத்திய பாவம் சேரும் என்றும், அவர்களுக்கு இரண்டு நாட்களில், அல்லது இரண்டு வாரத்தில், அல்லது இரண்டு மாதத்தில் தீமை ஏற்படும் என்றும் தொடர்ந்து குறித்திருந்தது. இந்தக் குறிப்புக்களையும் வாழ்த்துக்களோடு சேர்த்து அனுப்பவேண்டும் என்றும் எழுதியிருந்தது. அதைப் படித்தவுடனே கிழித்துப்போடவேண்டும் என்று எனக்குத் தோன்றியது. ஆனாலும் அவ்வாறு செய்யாமல், "இதை உனக்கு அனுப்பியவர் யார்?" என்று கேட்டேன்.
"யாரோ தெரியாது. பெயர் எழுதத் தேவை இல்லை."
"கவலைப்படாதே. கிழித்துப்போடு. உனக்கு ஏன் இந்த மூடநம்பிக்கை?"
"அய்யோ! அப்படிச் சொல்லாதே யார் கண்டார்கள்? எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ?"
நான் சிரித்தேன் "இப்படி ரிஷி தன் பெயரால் ஒரு வட்டம் ஏற்படுத்த விரும்புவாரா? அதற்காக இப்படி அவாவும் அச்சமும் ஊட்டி மருட்டுவாரா? அப்படி மிரட்டி நம்மிடம் வேலை வாங்குகிறவர் உத்தமராக இருக்கமுடியுமா? அவர் சொன்னபடி சாபம் பலிக்குமா? வெறும் பித்தலாட்டம்."
மாலன் உண்மையாகவே பயந்து போனான். "அப்படிப் பழிக்கவே கூடாது. பெரிய தவறு அது. உனக்குத் தெரியாது" என்றான்.
"எப்படியாவது போ. எனக்கு ஒன்றும் அனுப்பி விடாதே. ஒருவேளை அனுப்பினாலும் நான் கிழித்துத்தான் போடுவேன். அதற்கு மதிப்புக் கொடுக்கவேமாட்டேன்."
மாலன் என் வாய்மேல் கைவைத்துத் தடுத்து, "பழிக்க வேண்டா" என்று கேட்டுக்கொண்டான்.
"இதனால் என்ன நன்மை எதிர்பார்க்கிறாய்?"
"நமக்கு இப்போது வேண்டியது என்ன? தேர்வில் வெற்றி, நல்ல எண்கள், அறிவுவளர்ச்சி; இவைகள்தான்."
"இவைகளுக்காக இப்படிக் காலத்தை வீணாக்குவதைவிடப் பாடங்களையே படித்து எழுதுவது நல்லதல்லவா!" என்றேன்.
"உனக்கு தெரியாது. நான் எஸ். எஸ். எல். சி படிக்கும் போது இப்படி இரண்டு வந்தன. நான் தவறாமல் எழுதி அனுப்பினேன். என்னுடன் படித்தவன் ஒருவன் உன்னைப்போல் பழித்து பேசிக் கைவிட்டான். அவன் என்ன ஆனான் தெரியுமா? தேர்வில் வெற்றிபெறவில்லை."
"படித்திருக்கமாட்டான்; அதனால் வெற்றி பெறவில்லை."
"சரி. உன் விருப்பம். இந்தப் பேச்சை விட்டுவிடு" என்று வேறு பேச்சுத் தொடங்கினான். "நீ என்ன குறிப்புகள் படிக்கிறாய்? யாருடைய உரை வாங்கினாய்?" என்று கேட்டான்.
"இன்னும் வாங்கவில்லை."
"அப்படியானால் பாடப் புத்தகங்களையா படித்துக்கொண்டிருக்கிறாய்?"
"ஆமாம்."
"உனக்கு யாரும் சொல்லவில்லையா?"
"எதைப்பற்றி?"
"பாடப் புத்தகங்களை ஒரு மூலையில் வைத்துவிட்டு குறிப்புகள் வாங்கி படித்தால்தான் தேர்வில் வெற்றி பெற முடியுமாம்."
"குறுக்குவழி இது."
"ஓ ஓ! நாம் என்ன இப்போது நேர் வழியிலா படிக்கிறோம்! நமக்கு ஆசிரியர்கள் நேர் வழியிலா கற்றுக் கொடுக்கிறார்கள்? ஆங்கில நாட்டுப் பல்கலைக்கழகங்களில் ஆங்கில மாணவர்களுக்கு ஆங்கிலத்தின் வாயிலாகவே விஞ்ஞானம் வரலாறு முதலான பாடங்களைக் கற்பிக்கிறார்கள். அதை அப்படியே இங்கே கண்மூடிப் பின்பற்றுகிறார்கள். நம் மூளைக்கு நேர்வழி தமிழ். அதைவிட்டு ஆசிரியர்கள் ஆங்கிலத்தில்தானே கற்றுக் கொடுக்கிறார்கள்? இப்படிக் கற்பிக்கும் வழி தவறாக இருக்கும்போது, நாம் கற்கும் வழியும் தவறாகத்தான் இருக்கும். ஆகையால் குறுக்கு வழிப்பயிற்சி தான் வெற்றி பெறும்" என்று அலமாரியைத் திறந்து தன்னிடம் இருந்த குறிப்புக்களைக் காட்டினான்.
கால் தேர்வில் எனக்கு நிறைய எண்கள் வரவில்லை. பாடுபட்டுத்தான் படித்தேன். ஆயினும் எதிர்பார்த்த பயன் இல்லை. காரணம் அவன் சொன்னதாகவே இருக்கவேண்டும் என்று எண்ணினேன். இனிப் பாடப் புத்தகங்களோடு குறிப்புகளையும் சேர்த்துப் படிக்கவேண்டும் என்று முடிவு செய்தேன். அதனால் எதிர்பார்த்த பயனும் பிறகு கண்டேன்.
ஆனால் இப்படிக் குறுக்குவழி காண்பதில் மாலன் வல்லவனாக விளங்கினான். படிக்கும் முறையில் மட்டும் அல்லாமல், மற்ற வகைகளிலும் அவன் குறுக்கு வழியே நாடினான் என்பதை நாளடைவில் உணர்ந்தேன்.
ஒரு நாள் மாலையில் நானும் அவனுமாகச் சேர்ந்து கடற்கரைக்குச் சென்றபோது வழியில் சாலையோரமாக ஒருவன், "இஷ்ட சித்தி குளிகை" என்று கூவிக்கொண்டிருந்தான். உடனே மாலன் அவனிடம் பயபக்தியோடு சென்று அதைப் பற்றிய விளக்கம் எல்லாம் கேட்டான். மாதத்தின் கடை ஞாயிற்றுக்கிழமைகளில் சூரியன் புறப்படும் நேரத்தில் நன்றாகக் குளித்து விட்டுக் கிழக்குப் பார்த்து நின்றபடியே வலக்கையில் இந்தக் குளிகையைக் கட்டிக்கொண்டால் எண்ணிய காரியம் எல்லாம் கைகூடும் என்று அவன் இன்னும் என்னென்னவோ சேர்த்துச் சொன்னான். அதன் விலை பத்தணா பத்துப் பைசா என்றான். மாலன் அந்த விலை கொடுத்து உடனே வாங்கினான். தடுத்தும் பயன்படாது என்று உணர்ந்து நான் பேசாமல் பார்த்துக்கொண்டிருந்தேன்.
பல வகையில் கருத்து ஒற்றுமை உடைய நண்பன் ஒருவனைக் கண்டுபிடித்ததாக முதலில் மகிழ்ந்தேன். ஆனால் வரவர இவைபோன்ற சில வகைகளில் கருத்து வேறுபாடு மிகுந்து வருவது கண்டேன். அவனோ ஆழ்ந்த நம்பிக்கையோடு இந்தக் குறுக்கு வழிகளை நாடியதால், அவனைத் திருத்துவதும் எளிதாக இல்லை. உயர்நிலைப்பள்ளியில் படித்தபோது மாணவர்களிடையே இவ்வளவு வேறுபாடுகளைக் கண்டதில்லை. வளர்ந்து கல்லூரிக்கு வந்தபின், பலவகையில் வேறுபாடுகள் இருத்தலை உணர்ந்தேன். சந்திரனைத் திருத்த முடியவில்லை; மாலனைத் திருத்த முடியும் என்ற நம்பிக்கை இல்லை. ஆகவே முழுதும் கருத்து ஒற்றுமை எதிர்பார்ப்பதில் பயன் இல்லை என்று கற்றுக்கொண்டேன். அதுவே வாழ்க்கையைப் பற்றிய முதல் பாடமாக இருந்தது எனலாம்.
சந்திரனுக்கும் மாலனுக்கும் ஒரு வகையில் வேறுபாடு கண்டேன். சந்திரன் புறம்பான வழிகளில் ஈடுபட்டுப் படிப்புக்கு உரிய கடமைகளைப் புறக்கணித்தான். மாலனோ படிப்புக்காகவே பலவகைக் குறுக்கு வழிகளை நாடினான். ஆகவே மாலனோடு பழகுவதால் படிப்புக் கெடாது என்ற நம்பிக்கை ஏற்பட்டது.
--------
அத்தியாயம் 12
நாடகம் சிறப்பாக நடைபெற்றது. சந்திரனுடைய நடிப்பு எல்லோரும் போற்றத்தக்க வகையில் இருந்தது. கதைத் தலைவியாகிய சிவகாமி ஆண் உடை உடுத்துவெளியே செல்லவேண்டி நேர்ந்தது. பெண் உடையில் பெண்ணாக நடித்த சந்திரன், அந்த ஆண் உடையிலும் அருமையாக நடித்தான். வெளிக் கல்லூரி மாணவரும் மாணவியரும் பலர் வந்திருந்தார்கள். அவர்கள் சந்திரனுடைய நடிப்பை மிகப் போற்றினார்கள். சந்திரனுடைய நடிப்பு முடிந்து ஒவ்வொரு காட்சியிலும் திரை விடப்பட்டபோதெல்லாம், கைத்தட்டு அரங்கு அதிரும்படியாக இருந்தது. நாடகத்தில் சிறந்த நடிகரைத் தேர்ந்தெடுப்பதற்கு மூவர் நடுவணராக இருந்தனர். அவர்கள் மூவரும் ஒரு முகமாகச் சந்திரனையே முதற் பரிசுக்கு உரியவனாகத் தேர்ந்தெடுத்தனர். பரிசு வழங்கிய தலைவர் சந்திரனை மிகப் பாராட்டி, அவன் கலையுலகத்துத் திங்களாக விளங்க வேண்டும் என்று வாழ்த்திப் பரிசு வழங்கினார். பரிசு வழங்கிய போதும் சந்திரனுக்காகவே, கைத்தட்டு அளவு கடந்திருந்தது.
விழா முடிந்தவுடன் கூட்டம் கலைந்து சென்றது. எல்லோரும் போகட்டும் என்று நான் பின் தங்கினேன். மாலன் என்பின் வந்து தோள்மேல் கைவைத்து, "என்ன வேலு! போகலாமே, இன்னும் என்ன?" என்றான்.
"பரிசு பெற்ற சந்திரன் எனக்கு வேண்டியவன். அவனைப் பார்த்து என் மகிழ்ச்சியைத் தெரிவிக்காமல் போவது நல்லதா?" என்றேன்.
"அவன் வெளியே வர இன்னும் சிறிது நேரம் ஆகுமே" என்றான்.
"ஆகாது, வந்துவிடுவான்" என்று நாடக அரங்கிலிருந்து வரும் வழியில் காத்துக்கொண்டிருந்தோம்.
அங்கே எங்களுக்கு வலப்புறத்தில் நாலைந்து பெண்கள் வெளிக் கல்லூரி மாணவியர் காத்திருக்கக் கண்டேன். அவர்களும், "நேரம் ஆகுமோ என்னவோ" என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.
சிறிது நேரத்தில் சந்திரன் விரைந்து வந்தான். வழியில் நின்ற என்னைப் பார்த்தான். ஆனால் அவனுடைய கண்கள் யாரையோ தேடின. என்னைக் கடந்து அந்தப் பெண்கள் இருந்த இடத்திற்குச் சென்று, "மிகவும் நன்றி! எவ்வளவு நேரம் இருந்தீர்கள்" என்றான். அவர்களுள் ஒருத்தி "மிக மிக நன்றாக இருந்தது உங்கள் நடிப்பு; பெரிய வெற்றி. எங்களுடைய பாராட்டுக்கள். அடுத்த வாரத்தில் எங்கள் நாடகத்திற்கு நீங்கள் தவறாமல் வரவேண்டும்" என்றாள். மற்றப்பெண்களின் முகத்திலும் புன்முறுவல் இருந்தது. அவர்கள் புறப்பட்டார்கள். சந்திரனும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றான்.
"இன்னும் இருக்கவேண்டுமா?" என்று மாலன் கேட்டான்.
"சரி, போகலாம்" என்று ஒரு பெருமூச்சு விட்டு நகர்ந்தேன்.
"இதுதான் காதல்" என்றான் மாலன்.
என் மனம் அதை வேடிக்கையாகக் கொள்ளவில்லை. பெருங்காஞ்சி சாமண்ணா சொன்ன சொல் நினைவுக்கு வந்தது. நம் சந்திரனா இப்படி ஆனான்? என்னைப் பார்த்தும் பேசாமல் அந்தப் பெண்களின் பின் ஓடினானே என்று எண்ணிக் கொண்டே வந்தேன்.
உணவுக் கூடத்திற்குச் சென்று உண்ட பிறகு சந்திரனுடைய அறைப்பக்கம் சென்று எட்டிப் பார்த்தேன். சந்திரன் இருந்தான். பலர் அவனைச் சூழ்ந்து நின்று பாராட்டிக்கொண்டும் சிரித்து ஆரவாரம் செய்துகொண்டும் இருந்தார்கள். நானும் அவர்களோடு சேர்ந்து அவனெதிரில் நின்று புன்முறுவலால் பாராட்டிவிட்டுத் திரும்பினேன்.
நாடகம் முடிந்த பிறகு நாள்தோறும் சந்திரன் இரவில் உட்கார்ந்து படிக்கத் தொடங்கினான். ஆனால் அவனுடைய அறையில் யாரேனும் போய்ப் பேசிக்கொண்டிருந்ததையே பெரும்பாலும் கண்டேன். பகலில் சந்திரனை அவனுடைய அறையில் காண்பது அரிதாயிற்று. மாலையில் நானும் மாலனும் எறிபந்து, உதைபந்து முதலிய ஆட்டங்களில் ஈடுபட்டோம். சந்திரன் அங்கும் வருவதில்லை. இடையிடையே காண நேர்ந்தபோது, என்றேனும் ஒருநாள், "என்ன செய்தி? நன்றாகப் படிக்கிறாயா?" என்று கேட்பான். நானும், "உன் படிப்பு எப்படி இருக்கிறது?" என்று கேட்பேன். அந்த அளவில் எங்கள் உறவு நின்றது. நானாக வலிய அவனுடைய அறைக்குச் சென்றாலும் என்ன பேசுவது என்று தெரியாமல் சும்மா இருந்துவிட்டு வந்தேன். ஏதாவது தொடங்கிப் பேசினாலும், பேச்சில் அவன் அவ்வளவாக ஈடுபடாமல், புறக்கணித்தாற்போல் இருந்தான். இவ்வாறு எங்கள் உள்ளங்களுக்கு இடையே ஏதோ ஒரு திரை இருந்து வந்தது.
ஒரு நாள் காலையில் நான் படுக்கையை விட்டு எழுந்தவுடன் வெளியே மாணவர்கள் இங்கும் அங்கும் பரபரப்பாகப் போய்க்கொண்டிருந்ததைக் கண்டேன். என் அறைப்பக்கம் ஒருவன் தலைநீட்டி "இன்று கல்லூரிக்கு யாரும் போகக்கூடாது. காந்தியடிகள் கைது செய்யப்பட்டார்" என்று சொல்லிவிட்டு விரைந்து பக்கத்து அறைக்குச் சென்று அங்கும் அவ்வாறே சொல்லிவிட்டு விரைந்தான். என் மனம் அமைதி இழந்தது. "எவ்வளவு துன்பம்! காலம் எல்லாம் இப்படிச் சிறைக்குப் போய்க்கொண்டே இருந்தால், அவருடைய வாழ்க்கை என்ன ஆவது?" என்று அவருடைய வாழ்வுக்காக இரக்கப்படுவது போல் கலங்கினேன். என்னுடைய அனுபவமும் காந்தியடிகளைப் பற்றி அறிந்த அறிவும் அந்தக் காலத்தில் அவ்வளவுதான் இருந்தது. அடுத்த ஆண்டில் திரு.வி.க. எழுதிய "காந்தியடிகளும் மனிதவாழ்க்கையும்" என்ற புத்தகத்தைப் படித்த பிறகுதான், அவருடைய உண்மையான பெருமையையும் உயரிய குறிக்கோளையும் உணர்ந்தேன்.
அறையைப் பூட்டிவிட்டு வெளியே சுற்றி வந்து பார்த்தேன். சில மாணவர்கள் கண்கலங்கி உட்கார்ந்திருந்தார்கள். வேறு சிலர், "படிப்பும் வேண்டா, மண்ணாங்கட்டியும் வேண்டா. ஆங்கிலேயனைத் தொலைத்து விட்டுத்தான் மறுவேலை" என்று பேசிக்கொண்டிருந்தார்கள். இன்னும் சில மாணவர்கள், "இன்றைக்கு ஒரு விடுமுறை; நம்பாடு கொண்டாட்டம் தான். நல்ல சினிமாவுக்குப் போகலாம்" என்று திட்டமிட்டுக்கொண்டிருந்தார்கள். மற்றும் சிலர், "நம் தலைமுறையில் ஒரு பெரிய உத்தமரைப் பெற்றிருக்கிறோம். திருவள்ளுவர், புத்தர், ஏசு, திருநாவுக்கரசர் காலத்தில் நாம் இருந்திருந்தால் அவருடைய அடியாராகி அவர் வழியில் நடக்கமாட்டோமா? காந்தியடிகள் காலத்தில் நாம் பிறந்து வாழ்ந்தும், இப்படிப் பயன் இல்லாத கல்லூரிப் பட்டத்துக்காக நல்ல வாய்ப்பை நெகிழவிடலாமா?" என்று வருந்திக் கொண்டிருந்தார்கள். மாணவர் இருவர், பெட்டி படுக்கை எல்லாம் சுருட்டிக்கொண்டு ஊர்க்குச் செல்ல ஆயத்தம் ஆனார்கள். "எங்கள் ஊருக்குப் போய் அங்கே சத்தியாக்கிரக இயக்கத்தில் சேர்ந்து சிறைக்குப் போகப்போகிறோம்" என்று சொன்னார்கள். ஒரு மாணவன் புத்தகம் முதலியவற்றைத் தன் நண்பனிடம் ஒப்படைத்துவிட்டு, சென்னையில் உள்ள சத்தியாக்கிரகக் குழுவை நாடிப் போய்விட்டதாகக் கேள்விப்பட்டேன். அந்த நிலையில் மாலன் வந்து என்னோடு கலந்து கொண்டான். அவனிடம் நான் சில செய்தி சொல்லுமுன்பே அவன் பல செய்திகளைச் சொல்லத் தொடங்கினான். "பெரும்பாலும், தேர்வுக்கு நன்றாகப் படிக்காத மாணவர்கள் தான் இதில் மிகுதியாக ஈடுபடுவார்கள். நீ பார். தேர்வுக்குப் போய்த் தவறிவிட்டுப் பெற்றோரிடம் கெட்ட பெயர் வாங்குவதைவிட இப்படி இயக்கத்தில் ஈடுபட்டுப் பத்திரிகையில் நல்லபெயர் வாங்கலாம் என்பது அவர்களுடைய திட்டம்" என்றான். நான் உடனே மறுத்தேன். அவன் ஆணித்தரமாகப் பேசினான். "பொய்,பொய்" என்று உறுதியாக மறுத்தேன்.
ஒன்பது மணிக்குள் விடுதி மாணவர்கள் கல்லூரியின் எதிரே திரண்டுவிட்டார்கள். இன்று கல்லூரிக்குள் யாரும் நுழையக்கூடாது என்று வெளியே இருந்து மாணவர்களுக்குச் சொல்லித் தடுத்தார்கள். என் வகுப்பில் கற்கும் மாணவர் சிலர் என்னிடம் வந்து, "என்ன செய்வது?" என்று கேட்டார்கள். "நம் நாட்டுப் பெரியவர் இப்படி அடக்குமுறை செய்து அவரைத் தண்டித்தபோது, நாம் வகுப்புக்குப் போய் இருப்பது நல்லது அல்ல. இன்று ஒரு நாளாவது நம்முடைய வருத்தத்தை தெரிவிக்கவேண்டும்" என்றேன்.
ஆனால் மாணவர் பலரிடையே வருத்தம் இருந்ததாகத் தெரியவில்லை. மாணவர்கள் ஆரவாரம் செய்தனர். தம் வேண்டுகோளை மீறிக் கல்லூரிக்குள் சென்றவர்களைப் பார்த்து, "கருங்காலிகள்" என்று கூச்சலிட்டு அவர்கள் திரும்பிப் பார்க்காதவாறு செய்தனர். பலர் முகத்தில் புன்முறுவல் இருந்தது. எள்ளி நகையாடும் மனநிலை அவர்களிடம் இருந்ததை உணர்ந்தேன். காந்தியடிகளுக்காகச் செய்வதைவிட, தங்கள் வாழ்க்கையில் ஒரு மாறுதல் காணவேண்டும் என்று செய்ததாகத் தெரிந்தது. அந்த மாறுதலைக் கட்டுப்பாடாக எல்லோரும் சேர்ந்து செய்ய வேண்டும் என்றும், கட்டுப்பாட்டை மீறுகின்றவர்களை இகழ்ந்து பேசவேண்டும் என்றும் அவர்கள் கருதினார்கள். உண்மையான துயரத்தோடு காந்தியடிகள் துன்பத்தில் பங்கு கொண்டவர்கள் போல் முகம் வாடிச் சோர்ந்து நின்றவர்களும் சிலர் இருந்தார்கள். முதல் வகுப்புக்கு உரிய மணி அடித்தது. மாணவர்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் வகுப்புக்குப் போவது தம் கடமை என்று ஆசிரியர்கள் சென்று உட்கார்ந்திருந்தார்கள். ஊர்வலம் போல் கூட்டமாகக் கல்லூரியைச் சுற்றிவர வேண்டும் என்று சிலர் விரும்பினார்கள். அவ்வாறே எல்லாரும் உடன்பட்டுக் கூடினார்கள். சுற்றி வந்தபோது வகுப்பறைகளில் சில மாணவர்களையும் ஆசிரியர்களையும் கண்டபோது கூட்டத்தில் பலர் ஆரவாரம் செய்தார்கள். குறும்புப் பெயர்களிட்டுக் கூவினார்கள். "கருங்காலிகள் ஒழிக" என்றார்கள். வெள்ளைக்காரர்களின் வால்கள் ஒழிக" என்றார்கள். "ஆங்கிலேயர்களின் அடிமைகள் ஒழிக" என்றார்கள். கூட்டம் சுற்றி வந்து ஒரு மரத்தடியில் நின்றது. உயரமான ஒரு மாணவன் - கதர் அணிந்தவன் - "காந்தியடிகள் வாழ்க" என்று மும்முறை முழங்கினான். "மாணவ நண்பர்களே!" என்று விளித்தான். கூட்டம் அமைதியடைந்தது. "இன்று எந்தப் பெரியவருக்காக - உத்தமருக்காக - தலைவர்க்காக - நாம் வருத்தம் தெரிவிக்கக் கூடியிருக்கிறோமோ, அவருடைய கொள்கைகளை உணராமல் வீண் ஆரவாரம் செய்கிறோம். ஆசிரியர்களையும் சில மாணவர்களையும் எள்ளி நகையாடுகிறோம். ஏதோ மகிழ்ச்சிக் கொண்டாட்டம் போல் முகம் மலர்ந்து முழங்குகிறோம். வெள்ளைக்காரர் அழியவேண்டும் என்று காந்தியடிகள் விரும்பவில்லை. ஆனால் நம்முடைய ஆசிரியர்களும் நம்முடன் படிக்கும் மாணவர்களும் அழியவேண்டும் என்று ஆரவாரம் செய்கிறோம். இந்த ஒரு நாளாவது அவருடைய தூய கொள்கைகளை உணர்ந்து, அமைதியாக இருந்து நம்முடைய வருத்தத்தைத் தெரிவிக்கும் படியாகக் கேட்டுக்கொள்கிறேன்" என்றான்.
சிறிது நேரம் அமைதி நிலவியது. பிறகு மற்றொரு மாணவன் தன் கைகளை உயர்த்தி, "காந்தியடிகள் வாழ்க" என்று சிலமுறை முழங்கியபிறகு, வீரமாகப் பேசினான். முடிவில், "இந்தக் கூட்டம் இப்படியே கடற்கரை வரைக்கும் ஊர்வலமாகச் செல்லவேண்டும்" என்று வற்புறுத்திக் கூறினான். "ஆமாம்", "இப்பொழுதே புறப்படுவோம்" "தயார் தயார்" என்று பல குரல்கள் எழுந்தன.
கூட்டம் கல்லூரி எல்லையைக் கடந்து வெளியே செல்லப் புறப்பட்டது. சில மாணவர்கள் அதில் கலந்து கொள்ளாமல் விடுதியை நோக்கி வந்தனர். முதலில் பேசிய அந்த உயரமான மாணவரும் ஊர்வலத்தில் கலந்து கொள்ளாமல், வாடிய முகத்துடன் விடுதியை நோக்கி நடந்தார். மாலன் என்னைப் பார்த்து, "இதோ பார்த்தாயா? காந்தி பக்தர் போல் பேசினார். ஊர்வலத்தில் கலந்துகொள்ளாமல் விடுதிக்குப் போகிறார் இப்படித்தான் எல்லாம்" என்றான்.
"அதில் தவறு என்ன? அவர் ஊர்வலம் போகவேண்டும் என்று சொன்னாரா? பிறகு அதன்படி நடக்கவில்லையா? அவருக்கு ஊர்வலம் விருப்பம் இல்லை. அதனால் கலந்து கொள்ளவில்லை" என்றேன்.
"நீ ஊர்வலத்தில் கலந்துகொள்ளப் போகிறாயா, இல்லையா?"
"இல்லை?"
"அப்படியா? நான் கலந்துகொள்ளலாம் என்று எண்ணினேன்."
"அப்படியானால் நீ மட்டும் போய்வா"
"இல்லை, நீ வராததால் நான் மட்டும் ஏன் போகவேண்டும்? நானும் விடுதிக்கு வருவேன்."
"வேண்டுமானால், சிறிதுநேரம் சாலையிலிருந்து ஊர்வலத்தைப் பார்த்துவிட்டு வரலாம். அதற்கு வேண்டுமானால் வருவேன்."
இவ்வாறு நான் சொன்னதும், "சரி, அதுதான் வேண்டும். சும்மா பார்த்து வருவதற்குத்தான் போகலாம் என்று இருந்தேன். இல்லையானால், நாம் போவதால் நாட்டுக்குச் சுதந்திரம் வந்துவிடப்போகிறதா?" என்றான்.
நானும் மாலனும் கூட்டத்தின் பின் மெல்லச் சென்று சாலைப்பக்கம் சேர்ந்தோம். அப்போது ஒருவன் சந்திரனைக் கைப்பிடித்து ஊர்வலத்தின் முன்னணிக்கு இழுத்துச் சென்றதைக் கண்டேன். ஒரு துறையில் முன்நின்ற மாணவனை மற்றத் துறையில் பின்தங்கும்படி இளைஞர்கள் விடுவதில்லை. ஆகையால், சந்திரன் கூட்டத்தின் இடையே ஒதுங்கியிருந்தும், மற்றவர்களின் கண்ணில் பட்டபிறகு அவ்வாறு இருக்க முடியவில்லை.
திடீரென்று ஒரு பஸ் நிறைய இரும்புத் தொப்பி அணிந்த போலீசார் கைத்தடியும் துப்பாக்கியுமாக வந்து இறங்கினார்கள். தடிகளை இங்கும் அங்கும் சுழற்றினார்கள். சீழ்க்கை ஊதப்பட்டது, தடிகளைச் சுற்றுவதோடு நிற்காமல் மாணவர்களைத் தாக்கவும் தொடங்கினார்கள். "விடுதிக்கு போய்விடுவோம் வந்துவிடு" என்றான் மாலன். "இப்போது ஓடிப்போகக்கூடாது. இருந்து பார்த்துவிட்டுப் போவோம்" என்று மாலனுடைய கைகளை இறுகப் பற்றிக்கொண்டேன். கூட்டத்திலிருந்து சில மாணவர்கள் மட்டும் பரபரப்பாக நடந்து தொலைவில் போய்விட்டனர். மற்றவர்கள் இங்கும் அங்கும் போவதுபோல் நகர்ந்துகொண்டிருந்தார்களே தவிர கலையவில்லை. "வந்தே மாதரம்! வந்தே மாதரம்!" என்ற குரல்கள் வானளாவின. மற்றுமொரு சீழ்க்கை ஊதப்பட்டது. கண்ணீர்ப்புகை விடப்பட்டது. அப்போதுதான் கூட்டம் சிதறத் தொடங்கியது. நானும் மாலனும் விடுதியை நோக்கிச் சென்றோம். கண்ணீர்ப்புகையும் அதற்குள் எங்கள் கண்களைத் தாக்கியது. கண்ணீர் வழிய நகர்ந்து கொண்டிருந்த எங்கள் மேல் தடிகள் பட்டன. மாலனுடைய முழங்காலிலும் அடிப்பட்டது; என்னுடைய இடது தோளிலும் பட்டது. மாலன், "அப்பாடா" என்று அடிப்பட்ட என் தோளைப் பற்றினான். "அய்யோநோகுது! இந்தத் தோளைப் பற்றிக்கொள்" என்று இப்பக்கமாக வந்து வலது தோளைக் கொடுத்தேன். ஆனால் நன்றாக நடக்கமுடியவில்லை. நொண்டிக்கொண்டே வந்தான். விரைவில் கல்லூரி எல்லைக்குள் நாங்கள் வந்துவிட்டோம். திரும்பிப் பார்த்தோம். சந்திரன் நெற்றியில் பலமான அடிபட்டு இரத்தம் கசிய வந்துகொண்டிருந்தான். அவனிடம் சென்று "என்ன செய்தி" என்று கேட்டேன். கண்ணீர்ப் புகை விட்டபோது, இடர்ப்பட்டு விழுந்து விட்டதாகவும் போலிஸ்காரனுடைய தடி பட்டதாகவும் கூறினான். அவன் கையில் இருந்த கைக்குட்டை முழுவதும் இரத்தத்தால் நனைந்திருந்தது. உடனே என் கைக்குட்டையை எடுத்து வழிந்த இரத்தத்தை ஒற்றினேன். அவனைப் பற்றினேன். "பிடிக்க வேண்டா; கை காலில் ஒன்றும் அடி இல்லை. நன்றாக நடந்து வருவேன்" என்றான்.
சிறிது நேரத்திற்குள் ஆளுக்கு ஒரு வழியாக மாணவர்கள் விடுதிக்கு வந்து சேர்ந்தார்கள். அவர்களில் கண்ணீர்ப் புகைக்கு ஆளானவர் சிலர்; அடிப்பட்டவர் சிலர்; ஒன்றும் இல்லாமலே தப்பி வந்துவிட்டவர் பலர். ஊர்வலம் நடத்தித் தீரவேண்டும் என்று வீர முழக்கம் செய்தவன் முன்னே சென்ற காரணத்தால் போலீசாரிடத்தில் அகப்பட்டு கொண்டிருப்பான் என எண்ணினேன். ஆனால் அவன் சிலரோடு பேசிச் சிரித்தபடியே எங்கள் அறைப்பக்கம் போவதைக் கண்டேன். "போலிசு வண்டி வந்ததோ இல்லையோ, அவர்களை ஏமாற்றிவிட்டுக் கல்லூரி எல்லைக்குள் கால்வைத்துவிட்டேன்" என்று அவன் பெருமையடித்துக் கொண்டான். "எனக்கு அந்தப் பயல்களையும் ஏமாற்றத் தெரியும், அவர்களின் பாட்டனையும் ஏமாற்றத் தெரியும்" என்று சொல்லிக்கொண்டான்.
பிற்பகல் மாற்றுடை அணிந்து கொண்டு போலீசார் சிலர் துப்பறிவதாகக் கேள்விப்பட்டோம். விடுதிக்குள் புதியவர்களாக யார் நுழைந்தாலும், துப்பறியும் போலீசார் என்று ஐயுற்றோம். தங்கள் மகனையோ தம்பியையோ பார்க்க வந்தவர்களையும் அவ்வாறு ஐயுற்றுத் தொடர்ந்து சென்று, நாங்கள் அவர்களைத் துப்பறியத் தொடங்கினோம். விடுதியின் வாழ்வில் ஒருவகைச் சுறுசுறுப்பும் பரபரப்பும் எங்கும் காணப்பட்டன. ஆடலும் பாடலும் சினிமாவும் விருந்தும் விழாவும் இல்லாமலே விடுதி உணர்ச்சிமிக்க சூழ்நிலை பெற்றது.
அன்று மாலை ஐந்து மணிக்கு விடுதி எதிரே போலீசின் வண்டி ஒன்று வந்து நின்றது. நாங்கள் எல்லோரும் பரபரப்பு அடைந்தோம். நேராக ஒரு குறிப்பிட்ட அறையை நோக்கி வருவது போல் போலீசார் வந்தனர். பின்தொடராதபடி எங்களைத் தடுத்துவிட்டு, ஓர் அறைக்குள் நுழைந்தனர். ஒரு மாணவனைப் பற்றிக்கொண்டுவந்தனர். நேரே வண்டியில் ஏற்றிச் சென்றனர். பிறகு மாணவர் சிலர் மிக்க பரபரப்பு அடைந்து, போலீசு நிலையத்துக்குச் சென்று பார்த்தனர். அந்த மாணவன் சிறையில் வைக்கப்பட்டதாகச் செய்தி அறிந்து வந்தனர். அந்த மாணவன் வேறு யாரும் இல்லை; காலையில் கூட்டத்தின்போது ஆசிரியர்களையும் மற்றவர்களையும் இகழாமல் காந்தியடிகளின் கொள்கையை உணர்ந்து அன்பாக அமைதியாக நடந்துகொள்ள வேண்டும் என்று சொல்லி ஊர்வலத்தில் கலந்து கொள்ள விருப்பமில்லாமல் விடுதிக்குச் சென்ற அதே மாணவன் தான். அவன் ஒரு குற்றமும் செய்யக் கூடியவனாகவோ, தீவிரமான நடவடிக்கையில் கலந்து கொள்ளக் கூடியவனாகவோ, இல்லை. அவனைப் போலீசார் பிடித்தது தவறு என்று எல்லோரும் பேசிக்கொண்டார்கள். மாலன் வந்த போது என்ன காரணம் என்று கேட்டேன். போலீசார் துப்பறிய வந்தபோது யாரோ அவனைப் பற்றிச் சொல்லி, அவன்தான் கூட்டத்தில் பேசியதாகவும் எல்லாவற்றிற்கும் காரணமாக இருந்ததாகவும் சொல்லிவிட்டார்களாம். அதனால் அவனைச் சிறைப் படுத்தியிருப்பதாகச் சொன்னான். சிறிது நேரத்தில் வேறொருவன் வாயிலாக ஒரு செய்தி வந்தது. காலையில் இரண்டாவதாகப் பேசி வீர முழக்கம் செய்து ஊர்வலம் வேண்டும் என்று தூண்டிய அந்த மாணவன் தான், போலீசாரிடம் அவனை அப்படிக் காட்டிக் கொடுத்து விட்டதாகச் செய்தி தெரிந்தது. எனக்கு வியப்பாக இருந்தது. அப்படி வீர முழக்கம் செய்தவன் தான் போலீசாரை ஏமாற்றிவிட்டதாகப் பெருமையடித்துக் கொண்டதோடு, இப்படி அடாதபொய் சொல்லி நல்லவனைக் காட்டிக் கொடுத்துச் சிறைப்படுத்திவிட்டானே என்று வருந்தினேன். அந்த மாணவன் வீர முழக்கம் செய்தபோது செடி முழுதும் மணம் கமழும் துளசிபோல் விரும்பத்தக்கவனாகத் தோன்றினான். போலீசாரை ஏய்த்துவிட்டு ஓடி வந்ததாகப் பெருமையடித்துக்கொண்டபோது, பூ மட்டும் மணம் கமழும் அரளிபோல் இருந்தான்; இப்படிக் காட்டிக் கொடுத்து நல்லவனுக்குத் தீமை செய்தான் என்று செய்தி கேட்டபோது, மணம் இல்லாத மலர்களைத் தாங்கும் குரோட்டன் செடியே நினைவுக்கு வந்தது.
இந்தச் செய்தி பரவிய பிறகு, மாணவர் ஒருவரை ஒருவர் கண்டாலும் ஐயுறத்தொடங்கினர். பேசினாலும் பிறர் கண்ணில் படாமல், பிறர் செவியிலும் கேளாமல் மெல்லப் பேசினர். மாலனும் பயந்து, "நாம் இருவர் அடிக்கடி பழகிப் பேசினாலும் வம்பு செய்துவிடுவார்கள். இன்னும் நான்கு நாள் தனித்தனியே இருந்து விடுவோம்" என்று சொல்லித் தன் அறைக்குப் போய்விட்டான்.
விடுதியில் முன்நாள் இருந்த உணர்ச்சியும் எழுச்சியும் மறுநாள் இல்லை. ஏதோ பேய் உலாவும் இடம் என்று சொல்லத்தக்கவாறு இருந்தது. எந்நேரமும் எக்களிப்பும் எள்ளி நகையாடலும் நிறைந்திருந்த உணவுக் கூடத்திலும் அமைதியும் அடக்கமுமே இருந்தன. எல்லோரும் நேரத்தோடு கல்லூரிக்குப் புறப்பட்டுச் சென்றனர். அங்கு வழக்கம் போல் இருந்துவிட்டு வந்தோம். அன்று மாலையும் விடுதி வெறிச்சென்றிருந்தது.
அடுத்தநாள் முதல் மெல்ல மெல்ல விடுதிக்கு உயிர் வந்தது எனலாம். எல்லோரும் கலகல என்று பேசும் குரல் கேட்டது. சீழ்க்கை அடித்தலும் சினிமா பாட்டுப் பாடலும் மெல்லமெல்லத் தொடங்கின. படிக்கும் பழக்கமும் ஏற்பட்டது. அந்த நல்ல மாணவன் மூன்று நாள் சிறையில் வைக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டான். என்ன நடந்தது என்று விரிவாகச் செய்தி வந்தது. கூட்டம் கூட்டியதாகவும் ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்ததாகவும், பேசித் தூண்டியதாகவும் போலீசார் குற்றம் சாட்டினார்களாம். முன் சொன்ன இரண்டிற்கும் தன் தொடர்பு இல்லை என்றும், பேசியது மட்டும் உண்மை என்றும், அந்தப் பேச்சிலும் எந்தச் செயலுக்கும் மாணவரைத் தூண்டியதில்லை என்றும் சொன்னானாம். கல்லூரித் தலைவரின் நற்சான்று கேட்டறிந்து பிறகு விடுதலை செய்து விட்டார்களாம். ஆனால் அந்த நல்லவனைக் காட்டி கொடுத்த குற்றவாளியைப் பற்றிய பேச்சே இல்லை. அவனை எல்லோரும் மறந்துவிட்டார்கள் போலீசாரை ஏய்த்துவிட்டது போலவே அவன் விடுதியில் உள்ளவர்களையும் ஏய்த்துவிட்டுக் கவலை இல்லாமல் இருந்தான்.
அடுத்த வாரத்தில் குறிப்பிடத் தகுந்த ஒரு நிகழ்ச்சி நடந்தது. சிறுநீர் அறைக்குப் பக்கத்தில் ஆரவாரம் கேட்டு உடனே அறையை பூட்டிவிட்டு அங்குச் சென்றேன். அதற்குள் அங்கே ஐம்பது அறுபது மாணவர்கள் கூடிவிட்டிருந்தார்கள். சந்திரன் குரல் உரக்கக் கேட்டது. அவனுடைய குரலில் ஆத்திரமும் இருந்தது. அதனால் உடனே கூட்டத்தின் உள்ளே நுழைந்து சென்றேன். சந்திரனுக்கு எதிரே அந்த நல்லவன் - சிறை சென்ற மாணவன் - அமைதியாகப் பேசிக் கொண்டிருந்ததைக் கண்டேன். விடுதிச் செயலாளரும் வளர்ந்த மாணவர்கள் சிலரும் குழப்பத்தில் தலையிட்டு, "இங்கே வேண்டா, போகவர இடையூறாகவும் இருக்கிறது. தயவு செய்து படிப்பகத்துக்கு வாருங்கள். குழப்பம் இல்லாமல் அமைதியாக அங்கே பேசி ஒரு முடிவுக்கு வருவோம். நமக்குள் இப்படிப் போரிட்டுக்கொண்டால் நல்லதா? விடுதியில் இருப்பவர்கள் ஒரு குடும்பம்போல் வாழ வேண்டாவா?" என்றார்கள்.
சந்திரன் "சரி" என்று அவர்களுக்கு இணங்கினான். அவனுக்கு ஒரு துணை உண்டு என்று காட்டுவதுபோல் நான் அவன் பக்கம்போய் நின்றேன்.
ஆனால் மற்றவன் வரமறுத்தான். "இதோடு விட்டுவிடுங்கள். வேண்டுமானால், நான் சொன்னது தப்பு என்று ஒப்புக்கொள்கிறேன். இனிமேல் அப்படி யாருக்கும் நல்லதும் சொல்வதில்லை. விட்டுவிடுங்கள்" என்றான்.
வளர்ந்த மற்ற மாணவர்கள் அவனை நோக்கி, "அப்படி அல்ல. இந்த அளவில் விட்டுவிட்டால், உங்கள் இருவர்க்கும் மனக்கசப்பு இருந்துவரும், ஒருவரை ஒருவர் பார்க்கும்போது நன்றாக இருக்காது. ஆகையால் தயவு செய்து நாங்கள் சொல்வதைக்கேட்டு, எங்களுக்காக, விடுதியின் நன்மைக்காக எங்களோடு வரவேண்டும்" என்றார்கள்.
அதன் பிறகுதான் அந்த மாணவன் வந்தான். அவன் தூய வெள்ளைக் கதர் உடுத்து, அமைதி பொலியும் முகத்தோடு விளங்கினான். அவனிடத்தில் குற்றம் ஒன்றும் இருக்கமுடியாதே என்று எண்ணினேன். ஆனாலும் என்னோடு உடன் படித்த காரணத்தாலும், எங்கள் ஊர்ப்பக்கத்திலிருந்து வந்தவன் ஆகையாலும், சந்திரன் சார்பாகவே இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. ஆகவே, சந்திரனுக்குப் பக்கத்தில் அவனுடைய வலக்கைபோல் பெருமித உணர்ச்சியோடு நடந்து சென்றேன். மாணவர்களும் கூட்டமாக வந்தார்கள்.
படிப்பகத்தில் உட்கார்ந்தவுடன், செயலாளர் சந்திரனைப் பார்த்து, "ஆத்திரம் இல்லாமல், கோபம் இல்லாமல், நடந்ததைச் சொல்லுங்கள்" என்றார். அந்தக் கதர் மாணவனைப் பார்த்து, "அதுவரையில் நீங்கள் கேட்டிருங்கள். ஏதாவது சொல்ல வேண்டியிருந்தால் பிறகு சொல்லுங்கள்" என்றார்.
உடனே, கதர் மாணவன், "சொல்லாமலே இருக்க முடியும்" என்றான்.
சந்திரன் சொல்லத் தொடங்கியதும் நான் ஆவலுடன் கேட்டேன். "நான் சிறுநீர் அறைக்குப் போயிருந்தேன். சிறுநீர் கழித்துவிட்டு வெளியே வந்தேன். இந்த ஆள் உள்ளே நுழைந்தார். உடனே வெளியே வந்து என்னைக் கூப்பிட்டார். 'ஒன்றுக்குப்போனீர்களே, தண்ணீர் பிடித்துக் கொட்டினீர்களா?’ என்று என்னைக் கேட்டார். "நான் இல்லை என்றேன்" இவ்வாறு அவன் சொன்னதும் கதர் மாணவன் குறுக்கிட்டு "அல்ல, அப்படிச் சொல்லவில்லை. அது என் கடமை அல்ல என்று கோபத்தோடு கூறினார்" என்றார்.
உடனே செயலாளர், "நீங்கள் கடைசி வரையில் பொறுத்திருந்து பிறகு பேசுவதாக ஒப்புக்கொண்டு, இப்போது குறுக்கிட்டீர்களே" என்றார்.
"பிறகு மறந்துவிடுவேனோ என்று இப்போதே சொன்னேன்" என்றான் கதர் மாணவன்.
மாணவர்கள் மேலும் பலர் வந்து சேர்ந்து வழியெல்லாம் நெருங்கி நின்றனர்.
சந்திரன் தொடர்ந்து பேசினான். "நான் அப்படிக் கோபத்தோடு சொல்லவில்லை. அது என்னுடைய கடமை அல்ல என்று சொன்னது உண்மைதான். சிறுநீர் கழித்த பிறகு ஒவ்வொருவரும் தண்ணீர் பிடித்துக் கொட்டிக் கொண்டிருக்க முடியாது. அதனால் என் கடமை அல்ல என்றேன். அதற்கு இந்த ஆள் என்னைப் பார்த்து ஒரு பெரிய சொற்பொழிவு செய்யத் தொடங்கினார். நீங்கள் எல்லாம் பெரிய காந்தி பக்தர்களா? காந்தி சொன்ன வழியில் நடக்கத் தெரியாமல் வீண் ஆரவாரம் மட்டும் செய்கிறீர்கள்; சமுதாய வாழ்க்கையில் பிறர்க்கு எந்த வகையிலும் இடையூறு செய்யாமல் வாழ வேண்டுமானால், சிறுநீர் கழித்த பிறகு தண்ணீர் கொட்டவேண்டும். அது கடமை என்று உணராதவர்கள் கல்லூரியில் படித்துப் பயன் என்ன? நீங்கள்தான் படித்த பிறகு ஆங்கிலேயனுடைய ஆட்சிக்குத் தூணாக இருந்து நாட்டுமக்களைக் காட்டிக் கொடுப்பீர்கள்; நீங்கள்தான் மக்களிடம் லஞ்சம் வாங்கும் வன்னெஞ்சர் ஆவீர்கள்; அடிப்படையான ஒழுக்கங்களைக் கற்றுக் கொள்ளாமல் ஏன் படிக்கீறீர்கள்? உங்களால் கல்லூரிக்கும் கெட்டபெயர்; நாட்டுக்கும் கெட்ட பெயர்; உங்களைச் சேர்த்துப் பட்டதாரிகள் ஆக்கி நாட்டைக் கெடுப்பதைவிடக் கல்லூரியை மூடுவதே நல்லது என்று இப்படிப் பலவகையாக உளறினார். நான் உடனே,' நான்சென்ஸ் வாயை மூடு என்றேன்.'"
இவ்வாறு சந்திரன் சொல்லி நிறுத்தியவுடன் கூட்டத்திலிருந்து பலவகையான குரல்கள் எழுந்தன.
"யாரடா அவன், பெரிய காந்தி பைத்தியம்!"
"பி.ஏ., நான்காம் வகுப்பில் படிக்கும் சாந்தலிங்கமடா."
"அவன் எப்போதும் இப்படித்தான் இடக்குச் செய்வான்."
"ஏன்? வார்தாவுக்குப் போய் வந்து விட்டானோ?"
"அப்படியானால், அந்த மலம் வாருகிறார்களே அப்படி அய்யா இங்கேயும் அந்த வேலையைச் செய்வதுதானே?"
"இவர் இங்கே படிக்க வந்தாரா? சிறுநீர் அறையை மேற்பார்வை பார்க்க வந்தாரா?"
இவ்வாறு பலர் பலவாறு பேசவும், செயலாளர் எழுந்து "அன்புகூர்ந்து அமைதியாக இருக்கும்படியாக வேண்டுகிறேன். இப்படிப் பலர் பலவாறு பேசினால், நாம் கூடிய கடமை ஆகுமா? பாராளுமன்றங்களின் தோற்றம், வளர்ச்சி, விதிகள், பயன்கள் எல்லாவற்றையும் விரிவாகப் படிக்கிறோம். பேசுகிறோம். ஆனால் நம் வாழ்க்கையில் அந்த முறைகளைப் போற்றிக் கையாளாவிட்டால் பயன் என்ன?" என்றார்.
ஆயினும் அவர் பேச்சால் பயன் விளையவில்லை. மறுபடியும் மாணவர்கள் பலவாறு குரல் எழுப்பத் தொடங்கினார்கள். விடுதிச் செயலாளரைப் பற்றியும் தாக்கிப் பேசினார்கள்.
"ஓஓ! செயலாளர் சாந்தலிங்கத்தின் நண்பரோ?"
"கல்லூரியின் பெயரை இவர்தான் காப்பாற்றப் போகிறாரோ?"
"சிறுநீர் அறையைக் காப்பாற்றினால்தான் கல்லூரியின் பெயரைக் காப்பாற்ற முடியுமா? சரிதான்."
"இந்த ஆள் போன பிறவியில் தோட்டியாக இருந்திருப்பான்."
"அய்யாவின் முகவரியை யாராவது முனிசிபாலிடிக்குத் தெரியப்படுத்தினால் ஒரு வேலை கொடுப்பார்களே!"
"வேலையில்லாத் திண்டாட்டம் கொஞ்சம் தீருமே".
விடுதிச் செயலாளர் "அமைதி, அமைதி" என்று பலமுறை எழுந்து கேட்டுக்கொண்டார்.
மறுபடியும் சில குரல்கள் கேட்டன.
"நாங்கள் இனிமேல் தண்ணீர் பிடித்துக் கொட்டப் போவதில்லை, சாந்தலிங்கம்!"
"அவனுடைய அறையிலேயே போய் இனிமேல் சிறுநீர் கழிக்க வேண்டும். அதுதான் வழி"
"இங்கே என்ன பஞ்சாயத்து? வார்டனிடம் போங்கள்".
"சந்திரா! உன்னைக் குற்றவாளியாக்கும் முயற்சி இது. இருக்காதே எழுந்து வா"
"இமாவதி சந்திரன் எழுந்து வா."
அப்போது சிலர் கொல்லென்று சிரித்தனர். என் மனம் ஓர் அதிர்ச்சி உற்றது. இமாவதி என்ற பெயரைக் கேட்டதும், அன்று நாடகத்தின் முடிவில் நான் கண்ட அந்தக் காட்சி நினைவுக்கு வந்தது. சந்திரன் முகம் கவிழ்ந்தபடி இருந்தான்.
"எழுந்து வா? சந்திரன்! எழுந்து வா" என்று தொடர்ந்து சில குரல்கள் கேட்டன.
சந்திரனும் எழுந்தான். செயலாளர் அன்போடு கேட்டுக் கொள்ளவே அவன் மறுபடியும் உட்கார்ந்தான். என் மனம் சாந்தலிங்கம் சொன்னவை சரியென்றும், அவற்றில் தவறு ஒன்றுமே இல்லை என்றும், சந்திரன் தண்ணீர் கொட்டியிருக்கலாம் என்றும், இல்லை என்றாலும் அன்பாகத் தன் குற்றத்தை உடன்பட்டிருக்கலாம் என்றும் பலவாறு எண்ணியது. ஆனாலும், அவனுடைய பழைய தொடர்பையும் குடும்பத் தொடர்பையும் எண்ணிப் பேசாமல் இருந்தேன். இவ்வளவு கூட்டத்தில், மனச்சான்றும் நீதியுணர்ச்சியும் உள்ள மாணவர் சிலராவது இல்லையா? அவர்கள் ஏன் தங்கள் வாயை மூடிக்கொண்டிருக்கிறார்கள்? அநியாயத்துக்கு ஆட்கள் முந்துகிறார்களே, நியாயத்துக்குத் தயங்குகிறார்களே என்று பலவாறு எண்ணி ஏங்கிக் கொண்டிருந்தேன். என் ஏக்கம் தீர ஒரு குரல் துணிவாகத் தெளிவாகக் கேட்டது.
"சாந்தலிங்கம் சொன்னதில் தப்பு என்ன?" என்று அந்தக் குரல் கேட்டதும், என் செவியில் தேன் வார்த்தது போல் இருந்தது.
"எப்படிக் கேட்கலாம்" என்று மற்றொரு குரல்.
மாணவர்கள் ஒரே கூட்டமாக நெருங்கி இருந்தபடியால், குரல் எழுப்பியவர்கள் யார் யார் என்று ஆட்களைக் காணமுடியவில்லை.
"சாலையில் எச்சில் துப்பினால் கேட்கலாம், சுகாதாரத்துக்குத் தீங்கு என்று."
"பஸ்ஸில் சுருட்டுப் பிடித்தால் கேட்கலாம், பலருக்குத் தீங்கு என்று."
"நடுத்தெருவில் காகிதம் கிழித்துப் போட்டால் கேட்கலாம், பொதுவாழ்வின் விதிகள் தெரியவில்லை என்று."
"இது நடுத்தெரு அல்ல, கேட்கக்கூடாது."
"இது பஸ் அல்ல, கேட்கக் கூடாது."
"இது பொது இடம். கேட்கலாம்."
"கேட்க உரிமை உண்டு."
"சொந்த வீடு அல்ல."
"மற்றவர்களோடு சேர்ந்து வாழ வந்திருக்கும்போது மற்றவர்களுடைய நன்மையைக் கவனித்தே நடக்க வேண்டும்."
"சாந்தலிங்கம் தன் நன்மைக்காகக் கேட்கவில்லை."
"சொந்த வீடாக இருந்தாலும், அண்ணன் தம்பி கேட்பதில்லையா?"
"வாழைப்பழத் தோலை நடுத்தெருவில் போடாதே என்று காந்தியடிகள் யங் இந்தியாவில் எழுதவில்லையா?"
"அது பைத்தியம்."
"நீ பைத்தியம்."
"நீதான் பைத்தியம்."
இந்த நிலையில் சாந்தலிங்கம் எழுந்து, "நான் சிறிது நேரம் பேசலாமா?" என்றான். எல்லாரும் அமைதியானார்கள். "என்னால் இவ்வளவு தொல்லை, இவ்வளவு பெரிதாக முடியும் என்று எதிர்பார்த்திருந்தால் நான் வாயைத் திறந்திருக்க மாட்டேன். இன்னும் சில நாளில் பி.ஏ. தேர்வு எழுதி முடித்துவிட்டு நான் விடுதியை விட்டு வெளியேறப் போகிறேன். இரண்டு ஆண்டுகள் வாணியம்பாடியில் இருந்து படித்தேன். இரண்டு ஆண்டுகள் இங்கே இந்த விடுதியில் இருந்தேன். என்னுடைய அனுபவத்தால் - நல்லது செய்யவேண்டும் என்ற ஆர்வத்தால் - அவசரப்பட்டுச் சொல்லிவிட்டேன். மன்னிக்க வேண்டும்" என்று சொல்லிவிட்டு உட்கார்ந்தான்.
"மன்னிப்புக்கு இடமே இல்லை."
"குற்றமே இல்லை."
"மன்னிப்புக் கோரவேண்டிய ஆள் நடிகர் சந்திரன்தான்."
"இல்லை.இல்லை."
இந்தக் குரல்கள் மறுபடியும் வளருமோ என்று அஞ்சினேன். ஆனால் நியாயத்தின் குரல்கள் எழுந்தவுடன், மற்றக் குரல்கள் ஒருவாறு குறைந்தன.
செயலாளர், ஏன் அதைத் தொடங்கினோம் என்று திகைத்து வருந்திய நிலையிலிருந்து மாறிச் சிறிது ஊக்கம் பெற்றவராய்த் தோன்றினார். "போனது போகட்டும். நடந்ததை மறந்து விடுவோம். இனி என்ன செய்வோம் என்பதைப் பற்றிப் பேசுவோம்" என்றார். கூட்டத்தில் இருந்த சிலர் மெல்ல நகர்ந்து தம் தம் அறைக்குச் செல்லத் தொடங்கினர். கூட்டம் போதும் என்று செயலாளர் பேசினார். "மேற்கு நாடுகளில் எங்கேயும் இதைக் கற்றுக்கொடுக்க வேண்டியிருக்காது. இதை எல்லாம் அவர்கள் இளமையிலேயே கற்று வளர்ந்திருப்பார்கள். காரணம் அங்கெல்லாம் இது குடும்பக் கல்வியாக இருக்கிறது. இங்கே குடும்பங்களில் உள்ளவர்களுக்கே இன்னும் இதைக் கற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது. ஒவ்வொருவரும் இரவில் எழுந்து எதிர் வீட்டு ஓரமாகச் சிறுநீர் கழித்து வருவது இங்கே வழக்கம். கண்ட இடமெல்லாம் துப்புவதும், பக்கத்து வீட்டு ஓரமாகக் குப்பையைக் கொட்டுவதும் நம் வீடுகளில் உள்ள பழக்கம். ஆகையால், சந்திரனையோ மற்றவர்களையோ குறை கூறிப் பயன் இல்லை. பொதுவாக நம் நாட்டுக்குறை என்று கருதித் திருத்தவேண்டும்" என்றார்.
அப்போது சாந்தலிங்கம் கொஞ்சம் பேச வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, "மேற்கு நாடுகளில் இந்த ஒழுக்கங்கள் இயல்பாக இருப்பதற்குக் காரணம் உண்டு. இங்கு இல்லாமைக்குக் காரணம் உண்டு. அங்கே பிறர்க்கு உதவி செய்வதே கடவுளுக்கு விருப்பமானது என்ற நம்பிக்கையின் மேல் சமயம் வளர்ந்திருக்கிறது. இங்கே இந்த உண்மை இலைமறை காய்போல் உள்ளதே தவிர, வெளிப்படையாக இல்லை. நேர்மாறாக, பிறர்க்குத் தீமை செய்தாவது பணம் சேர்த்து அருச்சனை, அபிசேகம் செய்வதைக் கடவுள் விரும்புவார் என்ற மூடநம்பிக்கை வளர்ந்திருக்கிறது. அங்கே பிறர்க்குத் தொண்டு செய்த சமயத் தலைவர்கள் பலர், இங்கே காட்டில் ஒதுங்கித் தவம் செய்தவர்களும், உலகம் பொய் என்று சொல்லித் தம்மளவில் மோட்சத்துக்குப் பாடுபட்ட பக்தர்களும் பலர். அங்குள்ள சமய அமைப்புகளில் மடங்களில் பல, பிறருடைய வாழ்வுக்கு உதவி செய்வதற்காக ஏற்பட்டவை. இங்கே விவேகானந்தரின் காலத்துக்குப் பிறகுதான் அப்படிப்பட்டவை சில ஏற்பட்டன. அதனால் இங்கே புண்ணியம் பாவம் என்று சொன்னால்தான் மதிப்பு உண்டு; சமுதாய நன்மை என்று சொன்னால் மதிப்பு இல்லை. சட்டம் என்று சொன்னால்தான் அடங்கி நடக்கிறார்கள்; நாகரிக வாழ்க்கை முறை என்று சொன்னால் கேட்டு நடப்பதில்லை. இதை மாற்றினால்தான் நமக்குச் சுதந்திரம் கேட்க உரிமை உண்டு; ஒருகால் அதற்குமுன் நம் தலைமுறையில் சுதந்திரம் கிடைத்துவிட்டாலும் அதைக் காப்பாற்ற வழி தெரியாமல் வருந்துவோம். இந்த ஆர்வத்தால் ஏதோ பேசினேன். நான் எந்த வகையிலாவது நண்பர் சந்திரனுடைய மனத்தைப் புண்படுத்தியிருந்தால் மன்னிக்கும்படியாக அவரை கேட்டுக்கொள்கிறேன். நீர் கொட்டவில்லை என்பதை மட்டும் கேட்டதாக நண்பர் சந்திரன் சொன்னார். அதுமட்டும் அல்ல. சுவரில் பெய்திருக்கக் கூடாது; பெய்தால் நீர் கொட்ட வேண்டும்" என்று சொன்னேன். சிறுநீர் கழிக்க அதற்கென்று பீங்கான் குழிவு வைக்கப்பட்டுள்ளது. அதில் சிறுநீர் கழிக்காமல், சுவரில் கழிக்கப்பட்டிருந்தது. சுவர் அந்தக் கெட்ட நாற்றத்தை நெடுநேரம் வைத்திருந்து பரப்பும் அல்லவா? எங்கே போனாலும் இந்தக் கொடுமையைக் காண்கின்றேன். இது தவறான பழக்கம் என்று உணர்த்துவதற்காகவே கேட்டேன். நண்பர் சந்திரன் என்னை மன்னிக்க வேண்டும்." என்று சொல்லிச் சந்திரனுடைய கையைப் பற்றி அவனுடைய முகத்தைப் பார்த்தான்.
சந்திரனும் அவனுடைய கைகளைத் தன் கைகளால் ஏற்றுக்கொண்டு தன் பக்கத்தில் உட்காரச் செய்தான்.
"இவ்வளவு தொல்லை இல்லை. மேற்கு நாட்டார் கண்டுபிடித்து அமைத்த மேல் தொட்டி நன்றாக வேலை செய்து வந்தால் போதும். அதில் தொங்கும் சங்கிலியைப் பிடித்து இழுத்தால், தண்ணீர் வேகமாக வந்து சிறுநீரை அடித்துப் போய்விடும்" என்றான் மாணவன் ஒருவன்.
"செயலாளர் கேட்டுக் கொண்டிருக்கிறார். வார்டனுக்குச் சொல்லி, முதலில் அந்த மேல்தொட்டிகளைப் பழுது பார்க்கச் சொல்லுங்கள்" என்றான் மற்றொருவன்.
"அப்படியே செய்தாலும் பீங்கான் குழியை விட்டு விட்டு, சுவரில் பெய்துவிட்டு வருகிறவர்களை எப்படித்தான் திருத்துவது?"
"கடவுள்தான் திருத்தவேண்டும்"
"அது பாவம் என்று புராணங்களில், திருக்குறளில் எழுதி வைத்தால்தான் நடக்கும்."
"அது மட்டும் போதாது. அப்படிச் சுவரில் பெய்தவர்களை மறுபிறவியில் நரகலோகத்தில் கொதிக்கும் இரும்புச் சுவரைத் தழுவுமாறு செய்து யமகிங்கரர் தண்டிப்பார்கள் என்று எழுதினால்தான் ஒழுங்காக நடப்பார்கள்."
"அப்படி எழுதிவிட்டால் மட்டும் போதாது. அந்தப் புத்தகங்களைப் புராணங்களாக்கி, அவற்றைப் பற்றிக் கதாகாலட்சேபங்கள் நடக்குமாறு செய்ய வேண்டும்."
"இப்போது கதா காலட்சேபத்தில் கேட்டறிந்த நல்வழிகளை மக்கள் வாழ்க்கையில் பின்பற்றுகிறார்களா? நாட்டில் பொய் போயிற்றா? விபசாரம் குறைந்ததா? பேராசை தொலைந்ததா? சூதாட்டம் ஒழிந்ததா? அரிச்சந்திர புராணம் முதல் பாரதம் வரையில் படிக்கக் கேட்டும் திருந்தினார்களா?"
"அதனால் புதுவழி காணவேண்டும். சாந்தலிங்கம் போன்றவர்கள் ஊர்தோறும் தெருவுதோறும் வீடுதோறும் பலர் ஏற்பட வேண்டும். அதுதான் வழி."
"அதுமட்டும் போதாது. சாந்தலிங்கம் செய்வது சரி என்று குரல் எழுப்புவதற்கு ஆட்கள் தேவை. ஊர்தோறும் நூற்றுக்கணக்கானவர்கள் தேவை. உண்மையின் சார்பில், நியாயத்தின் சார்பில் தயங்காமல் குரல் கொடுப்பவர்கள் தேவை."
இப்படிப் பலர் பலவாறு பேசினார்கள். அத்தனைக்கும் செயலாளர் இடம் கொடுத்தார். முடிவில் எல்லோருக்கும் நன்றிகூறி, மேல்தொட்டிகளை விரைவில் பழுதுபார்க்க ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தார்.
சந்திரனோடு தொடர்ந்து வந்தேன். "வீண் வம்பு" என்று இரண்டு சொல் சொல்லித் தன் அறையின் வாயிலில் நின்று எனக்கு விடை கொடுத்தான். நான் வந்துவிட்டேன். அவ்வளவு நடந்த பிறகும் அவனுடைய மனம் திருந்தியதாகவோ, மாறியதாகவோ எனக்குத் தோன்றவில்லை. அவன் நிலையில் நான் இருந்திருந்தால் சாந்தலிங்கத்திடம் மன்னிப்புக்கோரி வருந்தியிருப்பேன். அவனுக்கு அந்த எண்ணமே தோன்றியதாகத் தெரியவில்லை.
---------
அத்தியாயம் 13
மாசி மாதம் தொடங்கியது. பொதுவாக எல்லோருமே படிப்பில் முனைந்து நின்றார்கள். பகலும் இரவும் எல்லோரும் புத்தகமும் கையுமாக இருந்தார்கள். சிறப்பாக, இரண்டாம் இண்டர் வகுப்பில் இருந்தவர்களும் பல்கலைக்கழகத் தேர்வுக்குச் செல்லும் மற்ற மாணவர்களும் ஓயாமல் படித்தார்கள். அவர்களின் அறையில் இரவில் நெடுநேரம் விளக்குகளின் ஒளி காணப்பட்டது. சந்திரனும் படித்தான்.
தேர்வு நெருக்கத்தில் ஊக்கம் ஊட்டிச் சந்திரனுடைய தந்தை எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில் சந்திரனைக் கண்டு நன்றாகப் படிக்குமாறு சொல்லவேண்டும் என்று குறித்திருந்தார். அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு அவனுடைய அறைக்குச் சென்றேன். அவன் நாற்காலியில் சாய்ந்தபடியே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். மேசையில் ஆங்கிலப் புத்தகம் திறந்தபடியே இருந்தது. ஒலி செய்யாமல் சென்று மேசைப் பக்கத்தில் உட்கார்ந்தேன். புத்தகத்தின் இடையே புகைப்படம் இருப்பதுபோல் தோன்றியது. குடும்பத்தாரின் படமோ, அல்லது சந்திரனின் படமோ என்று மெல்ல எடுத்துப் பார்த்தேன். ஒரு பெண்ணின் படமாக இருந்தது. கீழே "க. இமாவதி" என்று கையெழுத்தும் இருந்தது. படத்தை உற்று நோக்கினேன். நாடகத்தன்று அவனோடு பேசிய அந்தப் பெண்தானோ என்று எண்ணி மறுபடியும் பார்த்தேன். அவ்வாறுதான் தோன்றியது.
படத்தைப் பழையபடியே வைத்துவிட்டேன். சந்திரன் இன்னும் எழவில்லை. சிறிது நேரம் சிந்தித்தபடி இருந்தேன். மாலன் சொன்னபடி காதலாகத்தான் இருக்குமோ என்று எண்ணினேன். எப்படியாவது போகட்டும். தேர்வு நெருக்கத்தில் நன்றாகப் படித்துக் களைத்துபோய் இப்படித் தூங்குகிறானே, இதுவே போதும் என்றும் எண்ணினேன். அந்தப் புத்தகத்தின் பக்கங்களைத் தள்ளி மறுபடியும் ஒருமுறை அந்தப் படத்தைப் பார்த்தேன். கையெழுத்தையும் பார்த்தேன். பழையபடியே புத்தகத்தின் பக்கத்தைத் திறந்தாற் போல் வைத்தேன். அப்போதும் சந்திரன் தூக்கத்திலிருந்து விழிக்கவில்லை. பிறகு வந்து பார்க்கலாம் என்று எழுந்து வந்தேன். அவன் விழித்துக்கொண்டு "என்ன வேலு" என்றான்.
"ஒன்றும் இல்லை, அப்பா கடிதம் எழுதியிருக்கிறார்."
"எதைப்பற்றி?"
"உன் படிப்பைப் பற்றி"
"எனக்கும் எழுதியிருக்கிறார்" என்று சொல்லி நிறுத்தி, சிறிது பொறுத்து, "சரி" என்றான்.
நான் வந்துவிட்டேன்.
எங்களுக்கும் கல்லூரித் தேர்வுகள் நெருங்கின. சந்திரன் முதலானவர்களுக்கும் பல்கலைக்கழகத் தேர்வுகள் நெருங்கின. மாலனும் நானும் போட்டியிட்டுப் படிப்பது என்று எங்களுக்குள் தீர்மானம் செய்துகொண்டோம். ஒரு நாள் மாலை அவன் என்னிடம் வந்து, "வேலு! கோயிலுக்குப் போய் வருவோம்" என்றான். நான் இசைந்து எழுந்தேன்.
வழியில் அவன், "மற்றவர்கள் யாருக்கும் சொல்லாதே. நான் எப்போதும் தேர்வுக்கு முன் ஓர் அருச்சனை செய்வது வழக்கம். அதோடு ஒரு பிரார்த்தனை செய்து கொண்டு, தேர்வு வெற்றி எனத் தெரிந்தவுடனே போய் அந்தப் பிரார்த்தனையைச் செய்துவிட்டு வருவேன். எஸ்.எஸ்.எல்.சி-யும் அப்படித்தான் தேறினேன். இப்போது அதற்காகத்தான் போகிறேன். நீயும் தேர்வை முன்னிட்டு அருச்சனை செய்; ஒரு பிரார்த்தனையும் செய்துகொள்" என்றான்.
என் மனத்தே பெருஞ்சோர்வு வந்தது. படித்த பையன் இப்படி எண்ணுகிறானே. எண்ணுவதையும் இவ்வளவு உண்மை என எண்ணுகிறானே. இவனிடம் என்ன சொல்வது என்று வருந்தினேன். "கோயிலுக்குப் போகலாம், வழிபாடு செய்யலாம். மனத்தைக் காக்கும்படி வேண்டலாம்; சோர்வைப் போக்கி ஊக்கம் தரும்படியாகவும் வேண்டலாம்; ஆனால் தேர்வில் வெற்றி தருமாறு வேண்டுவதா? அதற்கு லஞ்சமாக அருச்சனையும் பிரார்த்தனையும் செய்வதா? எனக்கு இப்படிப்பட்ட போலி வழிபாடு பிடிக்காது. நான் திரும்பிப் போகிறேன்" என்றேன்.
"நீ நம்பாவிட்டால் போகட்டும், துணைக்காவது என்னோடு வா" என்று என் இரு கைகளையும் பற்றிக் கொண்டான். அவனுடைய அன்புக்காகத் துணையாகப் போய் வந்தேன். திரும்பி வந்தபோது, "உனக்கு இதனுடைய பயன் எல்லாம் இப்போது தெரியாது; போக போகத் தெரியும்" என்றான்.
"பார்த்தாயா? நீ என்னை வென்றுவிட்டதுபோல் பேசுகிறாய்" என்று உற்றுப்பார்த்தேன்.
"சரி, சரி. வா" என்று கைகளைப் பற்றினான்.
"நான் கடவுளை மிகப் பெரிய சக்தியாக எண்ணி வழிபடுகிறேன். ஒழுங்கான ஆட்சித் தலைவராக மதித்து அன்பு செலுத்துகிறேன். சின்ன சின்ன பொருளை எல்லாம் பார்த்து விதிகளை மாற்றி உதவி செய்யும் சிறுமை அவரிடம் இல்லை" என்றேன்.
அவன் அதற்கும் ஒன்றும் விடை கூறாமல், "எப்படியாவது இருக்கட்டும்" என்று நழுவினான்.
தேர்வுகளில் இருவரும் நன்றாகவே எழுதிக்கொண்டு வந்தோம். ஆனால் மாலனிடத்தில் மட்டும் அடிக்கடி ஏக்கமும் சோர்வும் காணப்பட்டன. இருந்தபோதிலும் விடா முயற்சியோடு படித்து எழுதினான்.
சந்திரனுடைய அறைக்கும் அடிக்கடி போய் எட்டிப் பார்த்து வந்தேன். தேர்வு நாட்களில் ஒவ்வொரு நாளும் மாலையில் போய் எப்படி எழுதினான் என்று தெரிந்து வந்தேன். ஆங்கிலத்தில் பாடங்கள் மறந்து போவதாகவும் தமிழில் நன்றாக எழுதலாம் என்றும் கூறினான். கணக்குப் பாடங்களும் விஞ்ஞானப் பாடங்களும் நிறைய இருப்பதாகச் சொன்னான். அவனுக்குத் தேர்வில் உண்மையான ஆர்வம் இருந்ததை உணர்ந்து மகிழ்ந்தேன்.
ஆங்கிலத் தேர்வு நடந்த மூன்று நாட்களும் மாலையில் அவனுடைய அறைக்குப் போய், "எப்படி எழுதினாய்." என்று கேட்டேன். "ஏறக்குறைய எழுதியிருக்கிறேன்" என்று சொல்லி வினாத்தாள்களைக் காட்டினான்.
தமிழ்த் தேர்வு நடந்த இரண்டு நாட்களிலும் கேட்டபோது, "நன்றாக எழுதியிருக்கிறேன்" என்றான்.
கணக்குத் தேர்வு நடந்த இரண்டு நாட்களும் போயிருந்து கேட்டேன். "நூற்றுக்கு ஐம்பது வரும். அவ்வளவுதான்" என்றான்.
"வாலாசாவில் நூற்றுக்கு நூறும் தொண்ணூற்றெட்டுமாக வாங்கிக் கொண்டிருந்த நீ, எனக்குக் கணக்குக் கற்றுக் கொடுத்து என்னை வல்லவன் ஆக்கிய நீயா இப்படிச் சொல்வது?" என்றேன்.
"என்ன செய்வது?" என்று இரண்டு சொற்களில் முடித்தான்.
விஞ்ஞானப் பாடத்துத் தேர்வு அடுத்துத் தொடங்குவதற்கு முன் ஒரு நாள் விடுமுறை தெலுங்கு ஆண்டுப் பிறப்புக்காக வந்திருந்தது. விடுமுறையில் வெளியே போய்ச் சுற்றுகிறானா, ஆழ்ந்து படித்துக் கொண்டிருக்கிறானா பார்க்கலாம் என்று சன்னல் வழியாக எட்டிப் பார்த்தேன். சந்திரன் குப்புறப்படுத்திருந்தான். விம்மி விம்மி அழுவது கேட்டது. கண்களைத் துடைப்பதைக் கண்டேன். பக்கத்தில் ஒரு கவர் ஓரம் கிழிக்கப்பட்டிருந்தது. தனியே ஒரு கடிதம் கிடந்தது. சுவர் ஓரத்தில் பளபளப்பான தாள் ஒன்று இரண்டு துண்டாகக் கிழிக்கப்பட்டிருந்தது. கிழித்த ஒரு துண்டில் ஒரு பெண்ணின் படமும், மற்றொன்றில் ஆணின் படமும் இருந்தன. திருமண அழைப்பிதழோ என்று ஐயுற்றேன். அவனுடைய தங்கை கற்பகத்தின் திருமண அழைப்பிதழோ என்று எண்ணினேன். என் மனம் பகீரென்றது. சந்திரனுக்கும் விருப்பமில்லாத இடத்தில் கற்பகத்தைத் திருமணம் செய்து கொடுக்கிறார்களோ? கற்பகத்தின் திருமணமா? இவ்வாறு எண்ணியவுடன், என் கண்களும் கலங்கின; என் இதயமும் விம்மியது. "சந்திரா?" என்றேன். அவன் திரும்பிப் பார்த்துவிட்டு, "இப்போது வராதே, போய்விடு" என்றான். எனக்கு அழுகை வந்துவிட்டது. "உன் துயரத்தில் எனக்கும் பங்கு உண்டு! சந்திரா! இதற்காகக் கலங்காதே. என்ன செய்வது!" என்றேன்.
அவன் திடுக்கிட்டாற்போல் பார்த்தான். "உனக்கும் தெரியுமா?" என்றான்.
"அதோ தெரியுதே" என்று திருமண அழைப்பிதழைக் காட்டினேன்.
"வேலு! மோசம் செய்து விட்டாளே!" என்று அறையின் கதவைத் திறந்தான். கண்கள் அழுது அழுது சிவந்திருந்தன. முகம் வீங்கியிருந்தது. உடனே படுக்கையில் விழுந்து விம்மி அழுதான். "இதோ, பார்" என்று பக்கத்தில் இருந்த கடிதத்தை எடுத்து நீட்டியபடியே, "படி, படித்துப் பாரடா" என்றான். படித்துப் பார்த்தேன்.
அன்புள்ள அண்ணா,
இத்துடன் என் திருமண அழைப்பிதழ் அனுப்பியுள்ளேன். நேரில் வந்து கொடுக்க எண்ணினேன். ஆனால் தேர்வுக்கு உரிய காலம் அல்லவா? இன்னும் மூன்று நான்கு நாளில் எல்லாம் முடிந்து விடும். பிறகு நான் நேரில் வருவதற்குள் நீங்கள் ஊர்க்குப் புறப்பட்டாலும் புறப்பட்டு விடுவீர்களோ என்று எண்ணியே தபாலில் அனுப்பியுள்ளேன். மன்னிக்க.
தேர்வுகள் நன்றாக எழுதியுள்ளேன். இனி உள்ளவற்றையும் நன்றாக எழுதிவிடுவேன். நீங்களும் அவ்வாறே செய்திருப்பீர்கள்.
உங்கள் அன்புக்குரிய
க. இமாவதி.
கடிதத்தைப் படித்த பிறகு என் உள்ளத்தின் துயரம் போயிற்று. உண்மை விளங்கிற்று. சந்திரனைப் பார்த்தேன். அவன் கண்களைத் துடைத்துக் கொண்டும் விம்மிக் கொண்டும் இருந்தான்.
"தேர்வு முடிந்ததும், ஊர்க்கு உன்னை அழைத்துக் கொண்டுபோய் அப்பாவுக்குச் சொல்லி அவளை மணம் செய்துகொள்ள..." என்று வாக்கியத்தை முடிக்காமலே அழுதான். "இப்படி ஒரு திருமண அழைப்பு அச்சிட எண்ணினேன். அவள் செய்துவிட்டாள்" என்று தான் கிழித்து வீசியதைக் காட்டினான். மறுபடியும் குழம்பிய குரலில், "அவளுடைய வாழ்க்கை தொடங்குகிறது; என் வாழ்க்கை முடிகிறது" என்று கதறினான்.
என்ன சொல்வது என்று தெரியாமல் சிறிது நேரம் பேசாமல் இருந்தேன். கிழிந்த அழைப்பிதழை எடுத்துப் பார்த்தேன். முன் பார்த்த அதே பெண்ணின் படம் இருந்தது. கீழே "இமாவதி" என்று அச்சிட்டிருந்தது. அடுத்த துண்டில் மணமகனின் படம் இருந்தது. அதன் கீழே "சிவசங்கரன்" என்று அச்சிட்டிருந்தது.
"இனிமேல் நான் படிக்க முடியாது. சாகத்தான் முடியும்." என்றான் சந்திரன்.
"பைத்தியம் உனக்கு" என்றேன்.
"உனக்குக் காதல் என்றால் என்ன என்று தெரியாது. நீ ஒரு மண்டு, மக்கு, உணர்ச்சியற்ற மரம்" என்றான்.
"இருக்கலாம். ஆனால் இது காதல் அல்ல. அவள் கலங்கவில்லை. நீ மட்டும் இப்படி அழுகிறாய். இதுவா காதல்? அவள் விரும்பவில்லை. நீ மட்டும்...."
சந்திரனுக்குக் கோபம் வந்தது. அழுது சிவந்த கண்களே கோபக்கண்களாக மாறி, என்னை பார்த்து, "எனக்கு அறிவுரை சொல்ல வந்துவிட்டாயா? எழுந்து போ" என்றான். மறுபடியும் குப்புறப்படுத்து, "பைத்தியமா! நீயா இப்படிச் சொல்கிறாய்?" என்று சொல்லிக்கொண்டே அழுதான்.
இனி என்ன சொல்லியபோதிலும் தவறாகவே கருதுவான் என உணர்ந்தேன். நான் ஓர் ஆண்டு தவறி விடவே, இவன் மேல் வகுப்புக்கு வந்து என்னைப் பற்றிக் குறைவாக எண்ணுகிறான்; அறிவிலும் அனுபவத்திலும் தான் பெரியவன் என்று கருதுகிறான்; அதனால்தான் அறிவுரை கூற எனக்கு உரிமை இல்லை என்கிறான். கல்லூரிக்கு வந்த பிறகு பழகிய பழக்கத்திலும் என்னைச் சிறு பையன் போலவும் தான் வளர்ந்த தமையன் போலவும் கருதி நடத்துகிறான்; அதனால்தான் நானாக நெருங்கிச் சென்ற காலங்களிலும் புறக்கணித்திருக்கிறான்; நான் அன்பினால் பணிந்து போனதை, இவன் தவறாக உணர்ந்து உயர்வு மனப்பான்மை கொண்டு விட்டான்; ஒருகால் எனக்குக் கணக்குக் கற்றுக்கொடுத்த காரணத்தாலேயே நான் அறிவில் சிறியவன் என்றும் தான் அறிவு முதிர்ந்தவன் என்றும் எண்ணிவிட்டானோ; வயதிலும் இவன் என்னைவிட ஓராண்டுதான் மூத்தவன்; அப்படி இருக்க நான் ஏன் இவனிடம் இப்படிப் பணிந்து இந்தச் சிறுமைக்கு ஆளாகவேண்டும் என்று என் உள்ளத்தில் பல எண்ணங்கள் எழுந்தன. எழுந்து வந்துவிடலாமா என்று தோன்றியது. உடனே அவனிடம் நான் கொண்டிருந்த நன்றியுணர்ச்சியும் குடும்பப்பிணைப்பும் என்னைத் தடுத்தன. அழுது கொண்டிருந்த அவன் பக்கத்திலேயே இருந்தேன்.
சிறிது பொறுத்து, "நடந்தது நடந்துவிட்டது. அவள் உன்னை ஏமாற்றிவிட்டாள்; மோசம் செய்துவிட்டாள் என்றே வைத்துக்கொள்ளலாம். அதற்காக இப்போது என்ன செய்வது? அழுது அவளுடைய மனத்தை மாற்றி விடமுடியுமா? எழுந்து முகத்தை அலம்பிக்கொண்டு படிக்க உட்காரு. அல்லது வெளியே எங்காவது போய் வரலாம், வா. இதை மறப்பதற்கு வழி அதுவே" என்றேன்.
அவன் ஒன்றும் கூறாமல், குப்புறப் படுத்தபடியே கிடந்தான்.
எதை நினைத்துக்கொண்டோ, சிறிது நேரத்தில் ஒரு பெருமூச்சு விட்டு விம்மினான். "நீ அப்பாவுக்கு எழுதிவிடு. நான் தேர்வுக்குப் படிக்கப் போவதில்லை; ஊருக்கும் வரப் போவதில்லை என்று எழுதிவிடு" என்றான்.
இப்போது எதைச் சொல்லியும் பயன்படாது போல் இருக்கிறது. அழும் வரையில் அழுது ஓயுமாறு தனியே விட்டு, பிறகு வந்து சொல்லலாம் என்று எண்ணி எழுந்தேன். "இருக்கட்டும், பிறகு வருவேன்" என்று சொல்லிப் புறப்பட்டேன்.
அறைக்கு வந்த பிறகு என் மனம் அமைதியாக இல்லை. அவன் தனியே எங்காவது போய்த் தற்கொலை செய்து கொள்வானோ என்று மனம் அஞ்சியது. அதனால் உட்காருவதும் எழுந்து போய்ப் பார்ப்பதுமாக இருந்தேன். பக்கத்து அறைகளின் கதவின் ஒலி கேட்டாலும் அவன்தான் கதவைச் சாத்துகிறானோ என்று எழுந்து பார்த்தேன். ஏதாவது நஞ்சு வாங்கி வைத்திருந்து அதைக் குடித்துவிட்டுத் தற்கொலை செய்து கொள்வானோ, அப்படியானால் உள்ளே இருக்கிறான் என்று விட்டுவிடுவதிலும் ஆபத்து இருக்கிறது என்று எண்ணி அடிக்கடி எழுந்துபோய்ச் சன்னல் வழியாகப் பார்த்து வந்தேன். அவன் பழையபடி அதே கோலத்தில் கிடந்தான். கடிதம் காலையில்தானே வந்திருக்கிறது. அதற்குள் எப்படி நஞ்சு வாங்கிக்கொண்டு வந்து அறையில் வைத்திருக்க முடியும். வீணாக நம் மனம் அஞ்சுகிறது என்று ஒருவாறு தேறினேன்.
அப்பால் சிறிது நேரத்தில் அவனுடைய அறையில் ஏதோ பேச்சுக் குரல் கேட்டது. எழுந்துப் போய்ப் பார்த்தேன். அவன் படுக்கையில் உட்கார்ந்து இரண்டு மாணவருடன் பேசிக்கொண்டிருந்தான். கிழிந்த அழைப்பிதழையும் கடிதத்தையும் எடுத்து மறைத்துவிட்டிருந்தான். "உடம்பு நன்றாக இல்லை. ஒரே மயக்கம். வயிற்று நோவு. படிக்க முடியவில்லை" என்று பொய்யான காரணத்தை அவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.
"இரவில் நெடுநேரம் கண் விழித்துப் படித்திருப்பாய். அதனால் வந்திருக்கும்" என்றான் ஒருவன்.
"அல்லது, கண்ட வேளையில் எல்லாம் தேநீர் குடிக்கிறாயாமே, அதனால் வந்திருக்கும், சனியன்" என்றான் மற்றொருவன்.
"என்னவோ, தொல்லை" என்று சந்திரன் கண்களைத் தேய்த்து கைத்துண்டினால் முகத்தைத் துடைத்துக் கொண்டு, ஒரு கவலையும் இல்லாதவன் போல் காட்டிக் கொண்டான். சிறிது நேரத்தில் இப்படி நடிக்கக்கூடியவன் இன்னும் சிறிது நேரத்தில் கவலையை மறந்து நடக்கவும் முடியும், படிக்கவும் முடியும் என்று நம்பிக்கை கொண்டேன்.
நண்பர்கள் போனபிறகு சென்று சன்னல் வழியாகப் பார்த்தேன். பழையபடியே படுத்துக்கொண்டிருந்தான். ஆனால் விம்மலும் கண்ணீரும் இல்லைபோல் தெரிந்தது.
நாலைந்து முறை எழுந்து எழுந்து போய்ப்பார்த்தேன். அவன் அதே நிலையில் இருந்தான். மாலைச் சிற்றுண்டிக்கு நேரம் ஆயிற்று. போய் அழைத்தேன். "எனக்கு தேவை இல்லை. வீணாகத் தொந்தரவு செய்யாதே; என் அறைப் பக்கம் வராதே" என்று கடிந்தான்.
பேசாமல் திரும்பினேன். நான் சிற்றுண்டி உண்ட பிறகு வந்து சன்னலருகே நின்று பார்த்தேன். அவன் அங்கே இல்லை. என் நெஞ்சு திடுக்கிட்டது. கதவை மெல்லத் தள்ளிப்பார்த்தேன். பிறகுதான் அது வெளியே பூட்டப்பட்டிருந்ததைக் கவனித்தேன். எங்கே போயிருப்பான் என்று எண்ணிக் கவலைப்பட்டு நின்று கொண்டிருந்த போது, அவன் குளிக்கும் அறைக்குப்போய் முகம் அலம்பிக் கொண்டு திரும்பியதைக் கண்டேன். என் உள்ளம் குளிர்ந்தது. என்னைப் பார்த்ததும் பேசாமல், சாவி எடுத்து அறையைத் திறந்து உள்ளே சென்று தாழிட்டுக் கொண்டான். சிறிது நேரத்தில் நண்பர் சிலர் வந்து, "ஏன் இப்படி அழுமூஞ்சிபோல உட்கார்ந்து கொண்டிருக்கிறாய்? வெளியே சுற்றிவிட்டு வந்து படிக்க உட்காரலாம். வா" என்று அவனை வற்புறுத்தி அழைப்பது கேட்டது. அப்படியாவது அவர்களோடு போனால் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன். அவன் புறப்படுவதாக இல்லை. நண்பர்கள் வெளியே வந்தனர். சிறிது கழித்துப்போய் எட்டிப்பார்த்தேன். கட்டிலின் மேல் படுத்து அந்தப் பக்கமாக முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்தான். இன்னும் சில நண்பர்கள் வந்து கதவைத் தட்டினர். "அட என்னப்பா! இரவெல்லாம் கண் விழித்தாயா? இப்போது தூங்குகிறாயே" என்றார்கள். "ஆமாம்’பா இப்போது எழுப்பித் தொந்தரவு செய்யாதீர்கள். தயவு செய்து போய்வாங்க" என்று படுத்தபடியே அனுப்பி விட்டான். நானும் எங்கும் வெளியே போகவில்லை.
விடுதி முழுதும் விளக்கொளி பரவியது. ஒரே நோக்கமாக மாணவர்கள் எல்லாரும் தம் தம் அறையில் படிக்கத் தொடங்கினார்கள். சந்திரனுடைய அறையில் மட்டும் விளக்கு இல்லை. அந்த வழியே வந்த சிலர், "இது நடிகமணி சந்திரனுடைய அறை அல்லவா? எங்கே சிவகாமி காணோமே! இமாவதியைத் தேடிக்கொண்டு போயிருப்பான்" என்று பேசிக்கொண்டு போனார்கள். அதைக்கேட்டபோது என் மனமே கலங்கியது என்றால், உள்ளே ஒரு மூலையில் படுத்துக்கிடந்த சந்திரனுடைய மனம் எவ்வளவு வருந்தியிருக்குமோ? அந்தப் பாவிப் பெண் இமாவதி அப்படி இவனை ஆசை காட்டி ஏமாற்ற வேண்டுமா?... இல்லை, இல்லை. அவளுடைய கடிதத்தைப் பார்த்தால் அப்படி ஆசை காட்டியவளாகத் தெரியவில்லையே. நண்பன் ஒருவன் மற்றொரு நண்பனுக்குக் கடிதம் எழுதியது போலவே எழுதியிருந்தாள். காதல் செய்து மணந்து கொள்வதாக ஆசைகாட்டியிருந்தால் இப்படி உண்மையான நட்புரிமையோடு திருமண அழைப்பு அனுப்பிருக்க முடியுமா? அழைப்போடு கடிதம் ஒன்று எழுதியிருக்க முடியுமா? கடிதத்தில் கலங்காமல் எழுதியிருக்க முடியுமா? தான் நன்றாகத் தேர்வு எழுதியிருப்பதாகவும், இனியும் அவ்வாறு எழுதிக் குறையை முடிக்கப் போவதாகவும் குறிக்க முடியுமா? அதே கடிதத்தில் சந்திரனும் நன்றாக எழுதி வெற்றி பெறவேண்டும் என்று தன் விருப்பத்தைத் தெரிவிக்க முடியுமா? ஒரு வேளை போலி ஆசைகாட்டி அவனை ஏமாற்றிய வேசித்தனம் உடையவளாக இருந்தால், இப்படி உண்மையன்பு உள்ள ஒரு கடிதம் எழுத முடியுமா? ஏமாற்றியவள் தன் ஏமாற்று வித்தையை வெளிப்படையாகக் காட்டி அழைப்பிதழை அனுப்புவாளா? இருக்கவே இருக்காது. இமாவதி உண்மையாக நல்ல பெண்ணாகவே இருக்க வேண்டும். சந்திரனிடத்தில் அன்பு மிகுந்த பெண்ணேதான். ஆனால் அந்த அன்பை இவன் காதல் என்று எண்ணிவிட்டான், பைத்தியக்காரன். ஆண் ஒருவன் மிகுந்த அன்பு செலுத்தினால் அது நட்புத்தானே? அப்படிப்பட்ட அன்பை ஒரு பெண்ணும் ஒருவனிடம் செலுத்த முடியாதா? அதுவும் நட்புத்தானே? ஆணுக்கும் பெண்ணுக்கும் மனத்தில் அன்பு நட்பு எல்லாம் உண்டு அல்லவா? பெண் அன்பு செலுத்தினால் அதை ஏன் ஆண்கள் காதல் என்று எடுத்துக் கொள்ளவேண்டும். என்னிடம் என் தங்கை அன்பு செலுத்துவதுபோல், ஒரு பெண் உடம்பின் எண்ணம் இல்லாத அன்பைச் செலுத்த முடியாதா? இவ்வளவு கூர்மையான அறிவு உள்ள சந்திரன் இதை உணராமல் அலைகின்றானே! இவனுடைய அறிவையும் அழகையும் கண்டு அந்தப் பெண் அன்பு கொண்டிருப்பாள்! அந்த அன்பை உடம்பின் எண்ணம் இல்லாமல் நட்பாக வளர்த்திருப்பாள்! அவளால் முடிந்தது; இவனால் முடியவில்லை. காதல் என்று கோட்டை கட்டிவிட்டான். இன்று கலங்கி நிற்கிறான் என்று பலப்பல எண்ணினேன்.
உணவு நேரத்தில் சில மாணவர் வந்து கதவருகே நின்று, "எங்கே போயிருக்கிறான். காணோமே" என்றார்கள். அவர்களில் ஒருவன், "இதோ பூட்டு இல்லையே! விளக்கு அணைத்துவிட்டு உள்ளே இருக்கிறான்" என்றான். "சந்திரா! சந்திரா!" என்று கதவைத் தட்டினார்கள். அதற்குள் ஒருவன், "பாமா கதவைத் திறவாய்" என்று பாட்டுப் பாடத் தொடங்கினான். சந்திரன் உள்ளே இருந்து, "எனக்கு உடம்பு நன்றாக இல்லை கொஞ்சம் தூங்கிவிட்டுப் பிறகு வருவேன். தொந்தரவு செய்யாதீர்கள்" என்றான். அவர்கள் அங்கிருந்து உணவுக் கூடத்துக்குச் சென்றார்கள். நான் போய் அழைத்தாலும் அதே போல்தான் சொல்வான் என்று உணர்ந்து நானும் உணவுக்குப் புறப்பட்டேன். புறப்பட்ட நேரத்தில் மாலன் வந்து சேர்ந்தான். "என்ன! பக்கத்து அறையில் உங்கள் ஊர் ஆள் இல்லையே! விளக்கே காணோமே! ஆள் இல்லா விட்டாலும் விளக்குப் போட்டுப் பூட்டிவிட்டு மின்சாரத்தைச் செலவு செய்வது கல்லூரி நாகரிகம் ஆயிற்றே" என்றான். "உஸ்" என்று அவனைத் தடுத்து உணவுக் கூடத்துக்கு அழைத்துச் சென்றேன். வழியில், "அவனுக்கு மனம் நன்றாக இல்லை என்று குறிப்பாகச் சொன்னேன். "ஏன்? ஏதாவது காதல் வந்து முற்றி விட்டதோ? அதுவும் தேர்வு நெருக்கடியிலா? அந்தப் பாழும் காதல் இன்னும் நான்கு நாள் தேர்வு முடிந்த பிறகு வந்து தொலையக் கூடாதா?" என்றான். "எனக்கு ஒன்றும் தெரியாது" என்று மழுப்பினேன்.
உண்டு திரும்பி வந்து பார்த்தபோது, சந்திரனுடைய அறை பூட்டியிருந்தது. உள்ளே விளக்கு இல்லை. மனம் திடுக்கிட்டது. இன்னொரு பக்கம், "அப்படி எங்கும் போயிருக்க மாட்டான். இன்னும் சிறிது நேரத்தில் உணவுக் கூடத்துக்கு வருவதாகச் சொன்னான் அல்லவா? அதன்படி உணவுக்குத்தான் போயிருப்பான். நம் எதிரே வரவில்லை. ஒருகால் தெற்குப்படி வழியாக இறங்கிப் போயிருப்பான்" என்று ஒருவகையில் ஆறுதலும் அடைந்தேன்.
என் முக வாட்டத்தை உணர்ந்த மாலன், "ஏன் அப்படிக் கவலைப்படுகிறாய்? சந்திரனுக்காகவா? உன்னை அவன் ஒரு பொருளாகவே கருதவில்லையே. நீ மட்டும் ஏன் இப்படி உயிரை விடுகிறாய்?" என்றான்.
"இவன் எப்படி இருந்தாலும் இவனுடைய அம்மா, அப்பா அத்தை எல்லாரும் நல்லவர்கள். குடும்பமே நல்ல குடும்பம். இவனும் என்னிடம் மிகமிக அன்பாக இருந்தான். இருவரும் ஓர் உயிர் போல் மூன்று ஆண்டுகள் கழித்தோம்" என்றேன்.
"சந்திரனுடைய ஊர் எது?" என்றான்.
ஊர் முதலியவற்றை எல்லாம் விரிவாகக் கூறினேன். அன்றுதான் மாலனும் தன் ஊரைப் பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் விரிவாகக் கூறினான். சிறிது நேரம் வரையில் அக்கறையோடு கேட்டுக்கொண்டிருந்தேன். பிறகு சந்திரனைப் பற்றிய எண்ணம் வந்துவிட்டது. மாலனை உட்காரவைத்து விட்டே எழுந்து போய்ப் பக்கத்து அறையைப் பார்த்தேன். பழையபடியே கதவு பூட்டியிருந்தது. திரும்பி வந்தேன்.
"இன்னும் வந்திருக்க மாட்டான்" என்றான்.
"வரவில்லை" என்றேன்.
"சரி, சரி படி நம் கடமையைச் செய்யவேண்டும்" என்று அவன் எழுந்து சென்றான்.
நேரம் ஆக ஆக என் கவலை மிகுதியாயிற்று. என் அறையின் வாயிற்படியிலேயே நின்றேன். கால் நோகவே, உள்ளே நாற்காலியைச் சன்னல் பக்கமாக இழுத்துப் போட்டுக்கொண்டு, வழியில் போவோரை எல்லாம் பார்த்திருந்தேன். மணி ஒன்பது அடிக்கும் வரையில் அவ்வாறே இருந்தேன்.
ஒருகால் இமாவதியையே தேடிக்கொண்டு போய் விட்டானோ? திருமண ஏற்பாடு உண்மைதானா என்று கேட்டு வருவதற்காகப் போனானோ? அல்லது வேறு யார் வீட்டுக்காவது போயிருப்பானோ? அவனுக்கு இந்த ஊரில் யார் நண்பர்கள்? யாரும் இருப்பதாகத் தெரியவில்லையே. உணவுக் கூடத்துக்குப் போய் உண்ட பிறகு, தனியே இருப்பதற்குப் பிடிக்காமல், அங்கிருந்து யாரேனும் ஒரு நண்பனுடைய அறைக்குப் போயிருக்கலாம் என்று எண்ணினேன். உடனே எல்லா அறையையும் பார்த்துவர வேண்டும் என்று மனம் தூண்டியது. எழுந்து அறையைப் பூட்டி விட்டு மெல்ல எல்லாப் பக்கத்தையும் சுற்றி வந்தேன். மாலனின் அறைப் பக்கமாக வந்தபோது அவன் என்னைப் பார்த்துவிட்டான்.
"என்ன? எங்கே போய் வருகிறாய்? அவனையா தேடுகிறாய்?" என்றான்.
"இல்லை தூக்கமாக இருந்தது. அதை மாற்றுவதற்காக இப்படி உலாவி வருகிறேன். நீ எழுந்து வரவேண்டா, படி நானும் போய்ப் படிக்கப் போகிறேன்" என்றேன்.
சந்திரனைக் காணாமலே என் அறைக்குத் திரும்பினேன். சரி, வெளியே யாருடைய வீட்டுக்கோ போயிருக்கிறான். காலையில் திரும்பி வந்துவிடுவான் என்று எண்ணி, படிப்பதற்காகப் புத்தகத்தை எடுத்தேன். படித்துக் கொண்டிருந்தபோது கதவு திறக்கும் ஒலி கேட்டு இருமுறை எழுந்து எழுந்து போய்ப் பார்த்தேன். அவனுடைய அறை பூட்டியது பூட்டியபடியே இருந்தது. மணி பத்து அடித்தது. சிறிது நேரம் படிப்பு, சிறிது நேரம் சந்திரன் நினைவு இப்படியே மாறி மாறிக் கழிந்தது. பக்கத்தில் உள்ள மரங்களிலிருந்து ஆந்தையின் ஒலியும் சுவர்க்கோழியின் ஒலியும் கேட்டன. தூக்கம் வந்தது. கடைசியாக எழுந்து போய் ஒரு முறை பார்த்துவந்து உறங்கிவிட்டேன்.
இரவு 2 மணிக்குத் திடீரென்று என் உறக்கம் கலைந்தது. இரவு முன்னேரத்தில் படுத்தால் எப்போதும் விடியற்காலம் வரையில் ஒன்றும் அறியாமல் ஆழ்ந்து உறங்குகின்றவன் நான். தேர்வு நாட்களில் கடிகாரத்தில் 4, 4 1/2 மணிக்கு அலாரம் வைத்துவிட்டுப் படுத்தாலும், அலாரம் அடிக்கும் போது அந்தக் கடிகாரத்தின் மேல் வெறுப்போடும் ஆத்திரத்தோடும் எழுவேன். சில நாட்களில் எழுந்து நிறுத்தியதும் மறுபடியும் படுத்துவிடுவேன். வீட்டில் இருந்த காலங்களில் அம்மா மெல்லத் தட்டிக் கொடுத்து என்னை எழுப்பி உட்கார வைப்பார். அப்படி ஆழ்ந்து உறங்கும் வழக்கம் உடைய நான் அன்று எதிர்பாராமல் 2 மணிக்கு விழித்துக் கொண்டது எனக்கே வியப்பாக இருந்தது என் மனத்தில் இருந்த கவலையும் திகிலும் அதற்குக் காரணமாக இருந்திருக்கும்.
எழுந்து விளக்கிட்டுக் கதவைத் திறந்து வெளியே பார்த்தேன். எங்கும் ஒரே அமைதி நிலவியது. கிழக்குப் பகுதியில் தொலைவில் இரண்டு அறைகளில் மட்டும் விளக்கொளி தெரிந்தது. எம். ஏ. படிக்கும் மாணவர்கள் யாரேனும் இன்னும் உறங்காமல் தேநீர் குடித்துவிட்டுப் படித்துக்கொண்டிருக்கலாம்; அல்லது, முன்னேரத்தில் நன்றாகத் தூங்கிவிட்டு இப்போது விழித்துக் கொண்டிருக்கலாம் என்று எண்ணினேன். ஒருகால் சந்திரன் வந்திருக்கக்கூடும் என்று எண்ணி, கதவருகே போய்ப் பார்த்தேன். பூட்டிய பூட்டு அப்படியே இருந்தது. கொட்டாவி விட்டபடியே வந்து மறுபடியும் படுத்துக்கொண்டேன்.
அன்று அலாரம் 5 மணிக்கு வைத்திருந்தேன். ஆனால் அது அடிக்கவில்லை. அலாரத்துக்குச் சாவி கொடுக்க மறந்துவிட்டேன் என்பதைப் பிறகு கண்டேன். நான் விழித்தபோது மணி 5-30 ஆகியிருந்தது. பரபரப்போடு எழுந்தேன். மாணவர்கள் படிக்கும் குரல் பல கேட்டன. மரங்களில் காக்கை, குருவிகளின் பேச்சும் பாட்டும் கேட்டன. இன்பமான குயில்கள் இரண்டு மாறி மாறிக் கூவும் காதல் பாட்டின் இசையும் கேட்டது. இத்தனை குரல்களையும் கேட்டுக் கைகால் நீட்டித் திமிர்விட்டபடியே சிறிது நேரம் கிடந்தேன். சந்திரன் நினைவு வந்தது; பெருங்காஞ்சியில் அவனுடைய தந்தை அவனுக்காகக் கவலைப்பட்டுப் படிக்க வைத்ததை எண்ணினேன். இன்னும் சில மணி நேரத்தில் அவனுடைய விஞ்ஞானப் பாடத்தின் தேர்வு தொடங்குமே, படிக்காமலே, இருந்தால் அவன் எப்படிப் போய் எழுதுவான் என்று கவலைப்பட்டேன். முந்திய நாள் பகலில் அவன் சொன்னது நினைவுக்கு வந்தது. "இனிமேல் தேர்வு எழுதமாட்டேன்; ஊருக்குப் போகமாட்டேன். அப்பாவுக்கு எழுதிவிடு" என்று சொன்னான். அதை நினைத்தவுடன் என் உள்ளம் திடுக்கிட்டுக் கலங்கியது.
உடனே எழுந்து சந்திரனுடைய அறையைப் பார்த்தேன். ஒரு மாறுதலும் காணப்படவில்லை. பரபரப்போடு திரும்பி வந்தேன். என் அறைக்குள் நுழைந்தபோது சன்னலின் கீழே ஒரு சாவி இருப்பதைக் கண்டேன். அது சந்திரனுடைய அறையின் சாவிபோலவே இருந்தது. அதை எடுத்துச்சென்று அவனுடைய அறையின் பூட்டைத் திறந்தேன் அது திறந்தது. என் மனம் மிகக் கலங்கியது. முந்திய இரவு நான் உணவுக் கூடத்துக்குப் போயிருந்தபோது, தன் அறையை பூட்டிச் சாவியைச் சன்னல் வழியாகப் போட்டுவிட்டு வெளியேறிப் போயிருப்பான் என எண்ணினேன். நொந்தேன். அவனுடைய அறைக்குச் சென்றேன். மேசைமேல் ஏதேனும் கடிதம் வைத்துவிட்டு போயிருக்ககூடும் என்று பார்த்தேன். அங்கு ஒன்றும் இல்லை. அறை வழக்கம் போலவே இருந்தது. அவனுடைய தோல்பை மட்டும் காணோம். பெட்டி முதலியவை அப்படியே இருந்தன. பெட்டி பூட்டப்பட்டுச் சாவி கீழே வைக்கப்பட்டிருந்தது. எல்லாம் திட்டமிட்டுச் செய்திருக்கிறான் என்பது நன்றாகத் தெரிந்தது. அறையைப் பூட்டிவிட்டு, மாலனிடம் விரைந்து சென்றேன். அவனுக்கு எல்லாச் செய்தியும் சொன்னேன். "வா, போகலாம். உடனே தபால் நிலையத்துக்குப் போய் அவனுடைய அப்பாவுக்கு ஒரு தந்தி கொடுப்போம்" என்றேன்.
அவன் ஒன்றும் பேசாமல் வந்தான். தபால் நிலையத்துக்குப் போய்த் தந்தி கொடுத்துவிட்டுத் திரும்பினோம். அதற்குள், நான் மாலனோடு பேசிய செய்தி எப்படியோ விடுதி முழுவதும் பரவியது. நாங்கள் திரும்பியவுடன் மாணவர் பலர் எங்களை நோக்கி வந்து, "என்ன செய்தி" என்று கேட்டார்கள். என் அறையை நோக்கி வந்தபோது சந்திரனுடைய அறைக்கு எதிரே மாணவர் சிலர் கூடியிருந்தது கண்டேன். ஒரு வேளை சந்திரன் திரும்பி வந்துவிட்டானோ? அதனால்தான் கூட்டம் இருக்கிறதோ என்று எண்ணிச் சிறிது மகிழ்ந்தேன். கூட்டத்தில் இருந்த சாந்தலிங்கம் என்னை நோக்கி விரைந்து வந்து, "உண்மையாகவா? நம்பவே முடியவில்லையே! அன்று சிறுநீர் அறையில் ஏற்பட்ட பிணக்கின் போது, அவ்வளவு அஞ்சாமையோடு என்னை எதிர்த்துப் பேசினானே! அவனுடைய தைரியத்தையும் தெளிவையும் நான் மனமாரப் போற்றினேனே! அப்படிப்பட்டவனா மனம் தளர்ந்து இப்படிச் செய்திருப்பான்?" என்று வருந்தினான்.
செய்தி விடுதிக் காப்பாளர்க்கு எட்டியது. அவரும் வந்தார். என்னைக் கேட்டார். நான் சொன்னபிறகு சிறிது சிந்தித்தபடி இருந்து, "ஊருக்குத்தான் போயிருப்பான் பார்க்கலாம். தந்திபோன பிறகு என்ன செய்தி வருகிறது என்று பார்ப்போம்" என்றார்.
திடீரென்று எனக்கு ஓர் எண்ணம் எழுந்தது. எங்காவது போய்க் கடலிலோ வேறு எங்கோ விழுந்து தற்கொலை செய்து கொண்டிருந்தால் என்று எண்ணியதும் மனம் திடுக்கிட்டது. மாலனிடம் சென்று சொன்னேன். அவன் உடனே படிப்பகத்துக்கு அழைத்துச் சென்று, செய்தித் தாளில் விபத்து தற்கொலை முதலான செய்திகளைத் தேடிப் பார்த்தான். ஆங்கிலத்தாள் தமிழ்த்தாள் இரண்டிலும் பார்த்த பிறகு, "கவலையே வேண்டா, அப்படி நடந்திருக்காது, நடந்திருந்தால் உடனே செய்தி வந்திருக்கும்" என்றான்.
அன்றைய தேர்வில் நான் நன்றாக எழுதவில்லை. எழுதும்போது, சந்திரனுடைய தேர்வுபற்றி அடிக்கடி எண்ணம் வந்தது. இரண்டு ஆண்டுகள் இண்டர் படித்துக் கடைசியில் இப்படி எல்லாவற்றையும் வீணாக்கிவிட்டானே என்று வருந்தினேன்.
மாலையில் சந்திரனுடைய வீட்டுக்குக் கடிதம் எழுதினேன். அதில் எல்லாச் செய்திகளையும் விரிவாக எழுதியிருந்தேன்.
அன்று முழுவதும் என் மனம் மிகச் சோர்ந்திருந்தது. அழகன், அறிஞன் என்று நான் போற்றிய நண்பன் இப்படி ஆகவேண்டுமா என்று எண்ணி எண்ணி மனம் களைத்துப் போயிற்று. முதலிலிருந்தே எதையும் என்னிடம் சொல்லாமல் மறைத்து மறைத்து வைத்தான்; என்னை நெருங்கவொட்டாமல் ஒதுக்கினான். என் நட்பைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பவில்லை. அதனால் நான் அன்போடு உதவி செய்ய முடியாமற் போயிற்று; சாமண்ணாவும் அத்தையும் அந்த அம்மாவும் கேட்டு எவ்வளவு வருந்துகிறார்களோ; கற்பகம் தன் அண்ணனை நினைந்து நினைந்து கதறுவாள் என்றெல்லாம் எண்ணிச் சோர்வு மிகுதியாயிற்று. மனத்தின் சோர்வு உடம்பையும் தாக்கவே, அன்றிரவு பத்து மணிக்குள்ளாகவே கொட்டாவி மேல் கொட்டாவி வந்தது. அயர்ந்து படுத்தேன்.
காலையில் எழுந்து பல் துலக்கிக் கொண்டிருந்தபோது "உன்னைத் தேடிக்கொண்டு யாரோ வந்திருக்கிறார்கள்" என்று என் வகுப்பு மாணவன் ஒருவன் வந்து சொன்னான். எதிர்பார்த்தபடி சாமண்ணா வந்திருந்தார். அந்த ஊர்ப் பள்ளியின் தலைமையாசிரியரும் வந்திருந்தார். என் கடிதத்தை அவர்கள் பார்க்கவில்லை. ஆகையால் விரிவாகச் சொன்னேன். சாமண்ணாவின் கண்கள் கலங்கின. அவரால் பேச முடியாமல் நாத்தழுதழுத்தது. "மகன் உயிரோடு வந்து சேர்ந்தால் போதும்; தேர்வு போகட்டும், படிப்பும் போகட்டும், அவனுடைய அம்மாவிடத்தில் இதோ உன் பிள்ளை என்று கொண்டுபோய்ச் சேர்த்தால் போதும். இல்லையானால், நான் அவளை உயிரோடு பார்க்கமுடியாது" என்றார்.
தலைமையாசிரியர் என்னையும் மாலனையும் தனியே அழைத்துப்போய், அந்தப் பெண்ணைப்பற்றிக் கேட்டார். அந்தப் பெண்ணும் அவனும் சேர்ந்து எங்காவது வெளியூர்க்கு ஓடிப்போயிருக்கலாம் என்றார். பெற்றோர்கள் செய்யும் திருமண ஏற்பாட்டை விரும்பாமல், அப்படிக் காதலர்கள் ஓடிப்போவது உண்டு என்று இங்கே நடந்ததும் அங்கே நடந்ததுமாகச் சில நிகழ்ச்சிகளைக் குறிப்பிட்டார். "இப்போது நேரே அந்தப் பெண் இருக்கும் இடத்துக்குப் போய் அங்கே கேட்டுப் பார்ப்பது நல்லது. ஒருவேளை அந்தப் பெண்ணே அங்கே இருந்தால் அவளையே கேட்டு விடுவோம். இதில் தப்பு ஒன்றும் இல்லை" என்றார்.
சாமண்ணாவை விடுதியில் என் அறையில் தனியே விட்டுவிட்டுப் போகலாம் என்றேன். தலைமையாசிரியர் அதற்கு உடன்படவில்லை. தனியே இருந்தால், அவர் மிகத் துயரப்பட்டுக் கலங்குவார் என்றார். அதனால் சாமண்ணாவையும் அழைத்துக் கொண்டு அந்தப் பெண்கள் கல்லூரிக்குச் சென்றோம். அங்கே அந்தப் பெண்ணின் பெயர் சொல்லிக் கேட்டோம். சிறிது நேரத்தில் அவளே வந்து எங்கள் முன் நின்றாள். "என்ன செய்தி? நீங்கள் யார்?" என்றாள்.
நான்தான் பேசினேன். "நான் சந்திரனோடு படிப்பவன் பக்கத்து அறை" என்றேன்.
தொடர்ந்து பேசுவதற்குள், "வேலுவா? வணக்கம், அவர் சொல்லியிருக்கிறார்" என்றாள்.
"அவர் சந்திரனுடைய தந்தையார் சாமண்ணா. இவர் அந்த ஊர் பள்ளிக்கூடத் தலைமை ஆசிரியர்" என்றேன்.
அவள் முகம் வாடியது. "என்ன செய்தி? சந்திரனுக்கு உடம்பு நன்றாக இல்லையா?" என்றாள்.
"சந்திரன் முந்தா நேற்று இரவு போனவன் இன்னும் வரவில்லை; தேடுகிறோம்."
அவள் முகம் வெளிறியது. "அப்படியா? என்ன காரணம்? தேர்வு?" என்று தன் வலக்கைச் சுட்டுவிரலை உதட்டில் சுவைத்தபடி தரையை நோக்கி நின்றாள்.
"காரணம் தெரியவில்லை. உங்களுக்குத் தெரியுமா என்று கேட்பதற்காக வந்தோம்" என்றார் தலைமையாசிரியர்.
"அய்யோ! தெரியாதே! என் மனம் என்னவோ போல் இருக்கிறதே! தேர்வு நன்றாக எழுதவில்லையா? அப்படி இருந்தால் எனக்குத் தெரிவித்திருப்பாரே. இரண்டு நாளைக்கு முன்தான் நான் ஒரு கடிதம் எழுதினேன். என்ன காரணமோ?" என்றாள்.
சாமண்ணா கலங்கிய கண்களோடு அவளைப் பார்த்தார். அவள் அவருடைய கலக்கத்தைக் கண்டதும், "என் நெஞ்சு பகீர் என்கிறதே! நான் அண்ணன் தம்பி இல்லாத பெண். அவர் என்னோடு அன்பாகப் பழகினார். எனக்கு அண்ணன் ஒருவர் கிடைத்துவிட்டார் என்று மகிழ்ந்தேன். படிப்பைப் பற்றியெல்லாம் எனக்குத் தைரியம் சொல்லுவார்" என்றாள். தரையை நோக்கிய அவளுடைய கண்களிலிருந்து நீர்த்துளிகள் விழுந்தன. முந்தானையால் கண்களைத் துடைத்தாள். கலங்கி நின்றாள். முந்தானையை வாயருகே வைத்தபடி என்னை நிமிர்ந்து பார்த்தாள். "அவர் கிடைத்தவுடன் எனக்குத் தெரிவியுங்கள். என் வீட்டு முகவரிக்கு எழுதுங்கள். 10, நடுத்தெரு இராயப்பேட்டை" என்றாள்.
நான் அந்த முகவரியைக் குறித்துக் கொண்டேன்.
"சரி போகலாம். உனக்கு ஏதாவது தெரிந்தால் எழுது அம்மா. சாமண்ணா, பெருங்காஞ்சி, வாலாசா தாலுக்கா" என்று தலைமையாசிரியர் விடைபெற்று நகர்ந்தார். சாமண்ணா ஒன்றும் பேசாமலே கலங்கிய கண்களோடு தொடர்ந்தார்.
நான் விடைபெற்றபோது "விடுதியில் என் முகவரிக்கு எழுதுங்கள். அறை எண் - 90" என்றேன். அவள் வாய் திறந்து ஒன்றும் கூறாமல் கைகூப்பினாள் அவளுடைய கண்கள் இன்னும் கலங்கியிருந்தன.
வழியில் தலைமையாசிரியர் என்னைப்பார்த்து, "பெண் நல்ல பெண்; உண்மையானவள். இவன் தப்பாக எண்ணிவிட்டான். அவள் ஏமாற்றவில்லை. இவன்தான்-" என்று நிறுத்திவிட்டார்.
"அப்படி ஏதாவது சொல்லியிருந்தாலும், கேட்டுப் பார்த்துத் திருமண ஏற்பாடே செய்திருக்கலாமே" என்றார் சாமண்ணா.
கடற்கரையில் எங்காவது திரிகின்றானோ பார்க்கலாம் என்று அன்று மாலை கடற்கரைக்கும் போய், வருவார் போவோரை எல்லாம் பார்த்துக் காத்திருந்தோம். மறுநாள் சாமண்ணாவும் தலைமையாசிரியரும் தங்கள் ஊரார் இருக்கும் இடம் எல்லாம் தேடிப் பார்த்துச் சோர்ந்து போய் சந்திரனுடைய பெட்டியும் படுக்கையும் எடுத்துக்கொண்டு ஊர்க்குச் சென்றார்கள்.
--------
அத்தியாயம் 14
அதற்கு மறுநாள் எங்கள் தேர்வு முடிந்துவிட்டது. அடுத்த நாள் ஊர்க்குப் போகத் திட்டமிட்டோம். மாலையில் மாலனும் நானும் கீழ்ப்புறத்துச் சிமெண்டுத் திண்ணையின் மேல் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அதே திண்ணையில்தான் எங்கள் நட்பு அன்று ஒருநாள் வேர் கொண்டது. அன்று சந்திரனுடைய ஒத்திகையை - பெண்ணாக நடித்த திறமையைப் பார்த்து மனத்தில் பாராட்டிக் கொண்டிருந்தேன். அந்த நாள் நினைவுக்கு வந்தது. சந்திரனிடத்தில் அதுவரையில் கண்டிராத திறமையை அன்று அவனிடம் கண்டேன். அந்தத் திறமை அவனுள் எப்படித்தான் அடங்கிக் கிடந்ததோ என்று வியந்தேன். சிறப்பான கலைத் திறமை எப்படி அவனுள் அடங்கிக் கிடந்ததோ அப்படியே காதலுணர்ச்சியும் அடங்கிக் கிடந்தது போலும் என்று எண்ணினேன். கலைத்திறமை இயல்பாகவே வெளிப்பட்டு விளங்கக் கூடியது; நெடுங்காலம் மறைத்து வைக்க முடியாதது. பாடத் தெரிந்தவன் எங்கேனும் எப்படியேனும் பாடித் தீர்வான்; ஓவியம் வரையத் தெரிந்தவன், தரையிலேனும் விரல்களால் கீறித் தீர்வான்; நடிக்கும் கலைத்திறமையும் அப்படிப்பட்டதுதான். வெளிப்படுத்தாவிட்டால் அது மனித உள்ளத்தைக் கொன்றுவிடக் கூடியது. அதனால் சந்திரன் மேடை ஏறி ஆடிவிட்டான். ஆனால் காதலுணர்ச்சி அப்படிப்பட்டது அல்ல; பிறர்க்குப் புலப்படாமல் மறைப்பதிலேயே காதலர் கருத்தாக இருக்கின்றனர். சந்திரனும் அப்படித்தான் இருந்துவிட்டான். பைத்தியக்காரன். தன் காதலை என்னிடம் மறைத்தது மட்டும் அல்லாமல், தன் காதலியிடமும் தெரிவிக்காமல் மறைத்திருக்கிறான்! இவ்வாறு எண்ணிக்கொண்டிருந்த போது விடுதி வேலையாள் வந்து, "அய்யா! உங்களை யாரோ தொலைபேசியில் கூப்பிடுகிறார்கள்" என்றான். "என்னையா?" என்று மாலன் எழுந்தான். "அவரை, அவர்தானே வேலு" என்றான். நான் எழுந்து சென்றேன். ஒருவேளை சந்திரன் வேறு எங்கிருந்தாவது என்னை அழைத்திருக்கலாம். வேறு யார் என்னைத் தொலைபேசியில் அழைக்கக்கூடும் என்று ஒருவகை மகிழ்ச்சியோடு சென்றேன். மாலனும் உடன் வந்திருந்தான்.
"வேலு பேசுகிறேன்."
"இமாவதி, வணக்கம்."
என் மகிழ்ச்சி குலைந்தது. "வணக்கம்" என்றேன். உடனே ஒரு நம்பிக்கை பிறந்தது. சந்திரனைப் பார்த்ததாகச் செய்தி சொல்லக்கூடும் என்ற நம்பிக்கையோடு "ஏதாவது செய்தி உண்டா?" என்றேன்.
"அதைக் கேட்பதற்குத்தான் உங்களைக் கூப்பிட்டேன். ஒன்றும் தெரியவில்லையா? இன்னும் அவர் வரவில்லையா?"
"இல்லையே!"
"நீங்கள் வந்து சொன்ன அன்று முதல் எனக்கு மனமே நன்றாக இல்லை. பைத்தியம் பிடித்ததுபோல் இருக்கிறது. சந்திரன் நல்லவர்; மிகவும் நல்லவர்; குழந்தை மனம் உடையவர். மிக நல்ல குணம். அவர் மனம் ஏன் இப்படி மாறியதோ, தெரியவில்லை. எனக்கு ஒரு சந்தேகமும் ஏற்பட்டது. நாளைக் காலையில் வீட்டுக்கு வருவீர்களா? நேரில் சொல்வேன். உங்களோடு பேசினால்தான் என் மனம் ஆறுதல் அடையும்."
"வருவேன்."
"வீட்டு முகவரி தெரியுமா?"
"10, நடுத்தெரு, இராயப்பேட்டை."
"அதுதான். தேர்வு முடிந்துவிட்டது அல்லவா? ஓய்வுதானே?
"ஆமாம், வருவேன்."
"அம்மாவும் தங்கைகளும் இருப்பார்கள். அவர்களுக்குச் சொல்லிவைப்பேன்.
"சரி."
"என்னவோ, போங்க. எனக்கு இந்த மூன்று நாளாக மனமே கலங்கிவிட்டது. வரும் ஞாயிற்றுக்கிழமை எனக்குத் திருமணம். வீடெல்லாம் ஒரே அமர்க்களமாக ஏற்பாடுகள் செய்துகொண்டிருக்கிறார்கள். நான் ஒருத்திதான் மகிழ்ச்சி இல்லாமல் இருக்கிறேன். என்னைப் பார்ப்பவர்கள் எனக்குத் திருமணம் விருப்பம் இல்லையா என்று கேட்கிறார்கள். நான் என்ன செய்வது? இப்படி இருக்கிறது என் கதை. போகட்டும். நீங்கள் கட்டாயம் வரவேண்டும்."
"வருவேன்."
"வணக்கம். நன்றி"
"வணக்கம்" என்று சொல்லிப் பேசும் கருவியைக் கீழே வைத்தேன். மாலனைத் திரும்பிப் பார்த்தேன்.
"பெரிய புதிராக இருக்கிறது" என்றான் மாலன்.
"இமாவதிதான்."
"அது தெரிந்து கொண்டேன். அரைகுறையாகத் தெரிந்தது. அவள் நிறையப் பேசினாள். நீ இரண்டொரு சொல்லே சொன்னாய்."
"இப்போது சொல்லமாட்டேன். பிறகு விரிவாகச் சொல்வேன். தவறாக எண்ணவேண்டா. அவள் பேச்சிலிருந்து எனக்கும் விளக்கம் ஏற்படவில்லை. காலையில் வரச் சொல்லியிருக்கிறாள். போய்ப் பேசிய பிறகுதான் விளங்கும்."
"விழிப்பாக நடந்துகொள். இந்தப் பட்டினத்தில் யார் எப்படி என்று இரண்டொரு நாளில் தெரிந்து கொள்ள முடியாது. நம் கெட்ட காலம் எப்படி இருக்குமோ? எங்கும் அகப்பட்டுக் கொள்ளக் கூடாது" என்றான் மாலன்.
காலையில் எழுந்ததும் ராயப்பேட்டைக்குச் செல்லும் பஸ் ஏறி நடுத்தெருவுக்கு வழி கேட்டுச் சென்றேன். பத்தாம் எண்ணுள்ள வீடு சின்ன வீடுதான். மாடியில் இமாவதி வீட்டார் குடியிருந்தார்கள். நான் சென்று அங்கிருந்த ஒரு பெண்ணிடம் என் பெயரைத் தெரிவித்தேன். அவள் என்னை அங்கே ஒரு நாற்காலியில் உட்கார வைத்துவிட்டு உள்ளே சென்றாள். இமாவதி போலவே இருந்தபடியால், அவளுடைய தங்கையாக இருக்கவேண்டும் என்று எண்ணினேன். வீட்டில் பலர் இருந்தார்கள்; பரபரப்பாக இருந்தார்கள். திருமணத்திற்காக வந்த உறவினராக இருக்கவேண்டும் என்று உணர்ந்தேன்.
இமாவதி வந்தாள். வரவேற்றாள். ஆனால் அவளுடைய முகத்தில் புன்முறுவல் இல்லை; மலர்ச்சி இல்லை. ஏதோ வேண்டா வெறுப்போடு வரவேற்பவள் போல் "வாங்க" என்றாள். கூடத்திற்கு அழைத்துச் சென்றாள். அங்கே என்னை உட்காரச் செய்து தானும் உட்கார்ந்தாள். அவளே பேச்செடுப்பாள் என்று எதிர்பார்த்துப் பேசாமல் இருந்தேன். அவளோ தரையைப் பார்த்தபடி சிறிது நேரம் அமைதியாக இருந்தாள். நாம் ஏன் வந்தோம் என்று வருந்தும் அளவிற்கு என் உள்ளம் மாறியது. வரவேண்டும் என்று வற்புறுத்தித் தொலைபேசியில் பேசியவள் இவள்தானா, அல்லது வேறு எந்தப் பெண்ணாவது குறும்புக்கு அப்படிப் பேசி வம்பு செய்தாளா. மாலன் சொன்னது போல் இந்தச் சென்னையில் உண்மையை எளிதில் உணர முடியவில்லையே என்று தடுமாறினேன்.
இமாவதி கற்பகத்தைப் போல் அவ்வளவு அழகானவள் என்று சொல்லமுடியாது. பல ஆண்டுகளாகப் படிப்பின் சுமையும் தேர்வின் தொல்லையும் காரணமாக இமாவதியின் அழகு வற்றிப்போயிருக்கலாம். இருந்தாலும் முகத்தில் கவர்ச்சி இருந்தது. நல்ல சிவப்பு மேனியும் அளவான உடற்கட்டும் உடையவள்; சின்ன நெற்றியும் சுருட்டை மயிரும் அவளுடைய முகத்திற்கு அழகு செய்தன. உழைப்பவரின் உடம்பு போல், தசைப் பெருக்கம் இல்லாமல் கைகள் கடைந்தெடுத்தவை போல் இருந்தன. இருந்தாலும் அவளுடைய கவர்ச்சி, கற்பகத்தின் அழகுபோல் முற்றிலும் இயற்கையழகின் கவர்ச்சி என்று சொல்வதற்கில்லை. அன்று அவள் அணிந்திருந்த ரோசா நிறப் புடைவையும் பொன்னிறச் சோளியும் அவளுடைய அழகுக்குக் கவர்ச்சி ஊட்டின. கோடுகளும் பூக்களும் இல்லாத புடைவையும், மிகச் சிறு புள்ளிகள் அமைந்த சோளியுமாக இருந்தமையால் அவை அழகாக இருந்தன. இன்னும் சிலநாளில் மணப்பெண் ஆவதற்கு இருந்த அவள் சுமையான நகைகளை அணியாமல், காதில் தோடும் கழுத்தில் பொன் சங்கிலியும் கையில் இரண்டு இரண்டு வளையலும் மட்டும் அணிந்திருந்தது எனக்கு வியப்பாக இருந்தது. கையில் கடிகாரமும் காணப்படவில்லை.
அந்த வழியாக யாரோ போனார்கள். "என்ன’மா! கல்யாணப் பெண் இப்படி உட்கார்ந்திருக்கிறாய்?" என்று ஒருத்தி கேட்டுச் சென்றாள். "எனக்கு என்ன வேலை இருக்கிறது, மாமி! எல்லாவற்றிற்கும் நீங்கள் இருக்கிறீர்கள் பார்த்துக் கொள்வீர்கள்" என்று இமாவதி சொன்னபோது, ஒரு சிறு புன்முறுவல் மின்னல்போல் தோன்றி மறைந்தது. அதன் பிறகு என்னைப் பார்த்து, "நீங்கள் எப்போது ஊருக்குப் புறப்படுவீர்கள்?" என்றாள்.
"நாளைக்கு"
"அவரைப் பற்றி ஒன்றுமே தெரியவில்லையா?"
"இல்லை."
"நான் இப்படி எதிர்பார்க்கவே இல்லை."
"இப்படிச் செய்யக்கூடியவன் என்று நான் கனவிலும் கருதவில்லை."
"ஏன் இப்படிச் செய்தார் என்றுதான் தெரியவில்லை. நீங்கள் வந்து போனதுமுதல் நான் நன்றாகப் படிக்கவும் முடியவில்லை. தேர்வு வரையில் எப்படியோ மூச்சுப் பிடித்தேன். தேர்வு நாட்களில் விடுதியிலேயே இருந்து படித்தேன். அங்கே வகுப்புப் பெண்கள் பலருடைய சூழலில் இருந்த காரணத்தால் மனம் எப்படியோ ஒரு வகையாகத் தேறியிருந்தது. இங்கே வந்த பிறகுதான் பைத்தியக்காரி போல் ஆகிவிட்டேன். உனக்குத் திருமணம் விருப்பம் இல்லையா, மாப்பிள்ளை விருப்பம் இல்லையா, அதை முன்னமே சொல்லியிருக்கக் கூடாதா என்று பலரும் கேட்கத் தொடங்கினார்கள். நான் என்ன செய்வது? சொன்னால், உண்மையைத் தெரிந்து கொள்ளக்கூடியவர்களும் அல்ல. அம்மாவுக்கு மட்டும் சொன்னேன். அம்மாவுக்கு அவரைப் பற்றி எல்லாம் தெரியும். அதனால் சொன்னதும் விளங்கிக்கொண்டார்கள்."
இவ்வாறு சொல்லிக் கொண்டிருந்தபோது, நாற்பத்தைந்து ஐம்பது வயது உள்ள ஒருவர், சிறிது வழுக்கையாய் மாநிறமாய் வெள்ளாடை உடுத்தியவராய் அந்தப்பக்கம் வந்தார். அவரைக் கண்டதும், இமாவதி எழுந்து "எங்கள் அப்பா" என்றாள். "இவர் சந்திரனுடைய நண்பர்; அவருடைய ஊரார்; பக்கத்து அறையில் உள்ளவர்" என்று என்னை அறிமுகப்படுத்தினாள்.
அவர் உடனே என்னைப் பார்த்து, "சந்திரன் இன்னும் வரவில்லையா?" என்றார்.
"இல்லை" என்றேன்.
"திருமண வேலைக்கெல்லாம் எவ்வளவோ உதவியாக இருப்பான் என்று மனைவி சொல்லிக்கொண்டிருந்தாள்" என்று சொல்லி, அந்தப் பக்கம் போனவர் ஒருவரைக் கூப்பிட்டு, "சரி வரட்டுமா? கொஞ்சம் வேலை இருக்கிறது" என்று நகர்ந்தார்.
"இந்தப் பிள்ளைக்குக் காப்பி சிற்றுண்டி கொடு அம்மா" என்று தம் மகளுக்குச் சொல்லிக்கொண்டே சென்றார்.
மறுபடியும் நானும் அவளும் உட்கார்ந்தோம்.
"திருமண வேலையாக இருக்கிற வீடு. நீங்கள் வந்த வேளையில் பரபரப்பாக இருக்கிறோம். மன்னிக்கவேண்டும்" என்றாள்.
"அதற்கு என்ன? இருக்கட்டும்."
"அவர் போவதற்கு முன் உங்களிடம் ஒன்றும் சொல்லவில்லையா? கடிதம் ஏதாவது எழுதி வைத்துவிட்டுப்போகவில்லையா?"
"இல்லை."
"அவர் எவ்வளவு நல்லவர் தெரியுமா? குழந்தை போன்ற மனம் உடையவர். அழகாக இருப்பவர்கள் பலர் பொல்லாதவர்களாக, வஞ்சகர்களாக இருக்கிறார்கள். ஆனால் அவர் ஒரு தீமையும் அறியாதவர். எனக்கு மிகவும் பிடித்திருந்தது அவருடைய பேச்சு. ஒரு கெட்ட சொல் அவருடைய வாயிலிருந்து வராது. ஒரு கெட்ட பழக்கமும் அவரிடம் இல்லை. உங்களுக்குத்தான் தெரியுமே நானும் அவரும் ஒரே பாடம் எடுத்திருந்த காரணத்தால், அவர் எழுதி வைத்திருந்த குறிப்பை எல்லாம் என்னிடம் கொடுத்தார். எனக்குக் கணக்கில் அடிக்கடி சந்தேகம். தெரியாத கணக்கை எல்லாம் எனக்குக் கற்றுக்கொடுத்தார். கற்றுக் கொடுக்கும்போது எவ்வளவு பொறுமை. எவ்வளவு எளிமை!"
"எனக்கு உயர்நிலைப் பள்ளியில் அவன்தான் கணக்குக் கற்றுக்கொடுத்தான். அவனுடைய உதவி இல்லாவிட்டால் நான் தேர்வில் வெற்றி பெற்றிருக்கமாட்டேன்."
"எங்கள் ஆசிரியர்க்கும் அவ்வளவு திறமை இல்லை என்று சொல்லலாம். நல்ல வருவாய் மட்டும் கிடைப்பதாக இருந்தால் அவரை ஆசிரிய வேலைக்கே போகச் சொல்வேன்."
"கடைசியில்....." என்று வாய் திறந்து பேசத்தொடங்கி நிறுத்தி விட்டேன்.
"கடைசியில்?"
"ஒன்றும் இல்லை, சொல்லுங்கள்."
"இதை எல்லாம் சொன்னால்தான் மனம் ஆறுதல் அடையும். அம்மாவிடம் சொன்னேன். கொஞ்சம்தான் சொன்னேன். முதலில் அவருடைய பழக்கம் எப்படி ஏற்பட்டது தெரியுமா? கல்லூரியில் இண்டரில் சேர்ந்ததற்கு அடுத்த மாதம் ஒரு நாள் மாலையில் கடற்கரையில் தனியே வந்து கொண்டிருந்தேன். அப்போது கல்லூரியில் பெண்களிடையிலும் எனக்கு நண்பர்கள் குறைவு. என் பக்கத்தில் முரடன் ஒருவன் நடந்து வந்தான். அவன் முன்னே போகட்டும் என்று நான் பின் தங்கினேன். அவன் என்னை ஒரு கண்ணால் பார்த்தபடியே மெல்ல நடந்து ஓர் இடத்தில் நின்றான். நான் பரபரப்பாக நடந்து முன்னே சென்றேன். அவன் தொடர்ந்து என் பக்கத்தில் வந்தான். மறுபடியும் நின்றேன். அவன் முன்போலவே செய்தான். பஸ் நிற்கும் இடத்திற்கு நடந்தேன். அவனும் அங்கே வந்து உராய்வது போல் சென்றான். நான் ஒதுங்கியும் பயன் இல்லை. என்மேல் உராய்ந்து கொண்டு முன்சென்று நின்றான். பஸ் வந்து நின்றது. பெண்கள் முந்திக்கொள்ளட்டும் என்று ஆண்கள் ஒதுங்கினார்கள். எனக்கு முன்னே ஒரு கிழவி ஏறட்டும் என்று வழிவிட்டு, பிறகு நான் ஏறினேன். அந்த முரடன் என் பின்னே வந்து நெருங்கி ஏறி, நான் உட்கார்ந்த இடத்திற்குப் பக்கத்திலேயே நின்றான். "தொலையட்டும், இனிமேல் என்ன?" என்று பேசாமல் இருந்தேன். நல்ல பட்டுச்சொக்காயும் நீலக் கால்சட்டையும் அணிந்திருந்தான். வயது இருபது இருபத்தைந்துதான் இருக்கும். சந்திரன் என்னையும் அவனையும் கடற்கரையிலிருந்தே கவனித்து வந்திருக்கிறார். எங்களைப் பின் தொடர்ந்திருக்கிறார். நான் அவரைக் கவனிக்கவில்லை. நான் ஏறிய பஸ்ஸிலும் ஏறினார். அங்கும் முரடன் நடந்து கொண்டமுறையைக் கவனித்திருக்கிறார். அவன் ஒதுங்காமல், முன்னுக்கும் செல்லாமல் என் பக்கத்திலேயே நின்று கொண்டிருந்தான் அல்லவா? என் பக்கமாகத் தன் கால்களை நகர்த்தி என் கால்கள்மேல் படுமாறு செய்தான். நான் என் கால்களை எவ்வளவோ ஒடுக்கி உட்கார்ந்தும் பயன் இல்லை. எனக்கு அழமட்டாத குறைவாக இருந்தது. ஒரு புறம் கோபமாகவும் இருந்தது. ஆனாலும் யாரிடம் சொல்வது? எப்படிச் சொல்வது? இன்னும் சிறிது நேரத்தில் இறங்கப் போகிறோம் என்று பொறுத்துக் கொண்டிருந்தேன். அவனுடைய பார்வை என் மேலேயே இருந்தது. இந்தப் பாவிகள் எல்லாரும் அக்கா தங்கையோடு பிறக்கவில்லையா? இவர்கள் தங்கள் குடும்பத்தில் பெண்களையே பார்த்ததில்லையா? என்ன நாடு இது! என்ன நாகரிகம் இது என்று வெறுப்போடு இருந்தேன். நான் இறங்கும் இடம் வந்தது. எழுந்தேன். அவன் என் பக்கத்தில் உராய்ந்து நின்றான். வழிவிடுங்கள்" என்றேன். வழிவிடுவது போய் விலகி நான் முன்னே சென்றவுடன், என் பக்கத்தில் நெருங்கி வந்து தானும் இறங்கத் தொடங்கினான். பஸ்ஸை விட்டு இறங்கித் தரையில் கால் வைக்கும் நேரத்தில், என் கையில் இருந்த புத்தகங்களையும் சிறு தகரப் பெட்டியையும் வேண்டும் என்றே தட்டிக் கீழே விழச் செய்தான். பிறகு தானே விரைந்து பரபரப்பாக அவற்றை எடுத்துத்தர முனைந்தான். "வேண்டா விட்டுவிடு. நான் எடுத்துக் கொள்வேன். வேண்டும் என்றே தட்டிவிட்டு இப்போது எடுத்துத் தர வருகிறாயா?" என்று கோபத்தோடு கேட்டேன். 'யார்? நானா? நல்லதற்குக் காலம் இல்லை'மா என்று எதிரே நின்று மீசைமேல் கைவைத்தான். அப்போது அவனுடைய கன்னத்தில் பளீர் பளீர் என்று இரண்டு அறைகள் விழுந்தன. அறைந்தவர் வேறு யாரும் இல்லை, சந்திரன்தான். உடனே முரடன் அவரை அடிக்கக் கை ஓங்கி ஓர் அடி கொடுத்தான். அதற்குள் பஸ்ஸில் இருந்தவர் இருவர் இறங்கி அவனுடைய கையைப் பற்றிக்கொண்டு இருவரையும் விலக்கினார்கள். 'இந்த ஆள் கடற்கரையிலிருந்து என்னைத் தொடர்ந்து வருகிறான்' என்று வழியில் நடந்தவற்றை எல்லாம் நான் சொன்னேன். முதலிலிருந்தே தாம் எல்லாவற்றையும் பார்த்து வருவதாகவும் மனம் கேட்காமல் தாமும் அந்தப் பஸ்ஸில் ஏறி வந்ததாகவும் சந்திரன் கூறினார். 'வேண்டும், வேண்டும், அந்த முரட்டுப் பயலை நன்றாக உதையுங்கள்; நாங்களும் கவனித்தோம். அவன் வேண்டுமென்றே செய்ததுதான்' என்று பஸ்ஸில் இருந்த இரண்டு மூன்று பேர் குரல் கொடுத்தார்கள். 'சரி விட்டுத் தொலையுங்கள்' என்றனர் சிலர். 'அப்படியே கையோடு அழைத்துக்கொண்டு போய்ப் போலீஸ் நிலையத்தில் எழுதி வைக்கவேண்டும்' என்றனர் சிலர். 'விடுங்கள் அவனே பி.ஏ. படித்துப் பிறகு போலீசு இன்ஸ்பெக்டர் வேலைக்கு வந்தாலும் வரலாம். சொல்லிப் பயன் இல்லை. நாகரிகம் வரணும்' என்றார் ஒருவர். அந்த முரடன் சந்திரனை உற்றுப் பார்த்தபடியே அப்பால் நகர்ந்தான். 'சரி நான் போய் வருகிறேன். வணக்கம்' என்றார் சந்திரன். வீட்டு வரைக்கும் வந்து போகுமாறு கேட்டுக்கொண்டேன்.
"சந்திரன் உண்மையாக அடித்தானா?" என்று நான் வியப்போடு கேட்டேன்.
"உண்மையாக, அவருக்கு என்ன துணிச்சல் தெரியுமா" என்று சொன்னதும் அவளுடைய முகம் மாறியது. கண்கள் கலங்கின. "அப்படிப்பட்ட துணிவும் தைரியமும் அவருடைய மென்மையான உடம்பில் அடங்கிக்கிடக்கின்றன. அதனால்தான், இப்படித் துணிந்து படிப்பையும் தேர்வையும் விட்டு விட்டுப் போய்விட்டார். நீங்களும் நானும் இப்படிச் செய்வோமா? துணிச்சல்தான் அவரைக் கடைசியில் கெடுத்து விட்டது."
அது உண்மைதான் என்று எனக்குப்பட்டது.
"ஆமாம், உண்மைதான்" என்றேன்.
"வீட்டுக்கு அழைத்து வந்து அதோ அந்த நாற்காலியில்தான் உட்காரவைத்தேன். உள்ளேபோய் அம்மாவிடம் சொன்னேன். அம்மா வந்து அவரைப் பாராட்டி நன்றி கூறினார். 'உன்னைப்போல் நல்ல பிள்ளைகளும் இருப்பதனால்தான் இந்த நாட்டில் கொஞ்சம் மழை பெய்கிறது' என்று அவருடைய நல்ல பண்பைப் பாராட்டினார். என்னைக் காப்பி வைத்துக் கொண்டு வரச்சொல்லி அனுப்பிவிட்டுச் சந்திரனோடு பேசிக் கொண்டிருந்தார். ஊர், பேர், குடும்பம் முதலிய எல்லாவற்றையும் கேட்டுத் தெரிந்துகொண்டார். நான் காப்பிக் குவளையோடு வந்தபோது, 'உன்னைப்போல் படிக்கிற பிள்ளைதான்'மா. வேறே கல்லூரி; நீ படிக்கும் அதே வகுப்புத்தானாம். இந்தப் பிள்ளையும் கல்லூரியில் சேர்ந்து ஒரு மாதம்தான் ஆச்சுதாம்' என்றார். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த பிறகு அவர் புறப்பட்டபோது, விடுமுறையில் அடிக்கடி வந்து போகும்படியாக அம்மா கூறினார். நானும் சொன்னேன் இப்படித்தான் எங்கள் நட்புத் தொடங்கியது" என்றாள்.
நல்ல வகையில்தான் நட்புத் தொடங்கியது என்று எண்ணினேன்.
அப்போது முதலில் வந்த பெண் வந்து, "அக்கா! உன்னை அம்மா வரச் சொன்னார்கள்" என்றாள்.
"வருவேன். அவசரம் இல்லையே. அவசரமாக இருந்தால் வந்து சொல்" என்று அவளை அனுப்பிவிட்டு "இவள் தான் எனக்கு அடுத்த தங்கை. திருமகள் என்று பெயர். இன்னும் இரண்டு தங்கை உண்டு. உயர்நிலைப் பள்ளியிலும் தொடக்கப் பள்ளியிலும் படிக்கிறார்கள்" என்றாள்.
"அப்புறம்? சந்திரன் உங்களோடு நெருங்கிய நட்புக் கொண்டான் அல்லவா?" என்றேன்.
"அன்று அவருடைய பெயரை நானும் கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை. என்னுடைய பெயரை அவரும் கேட்டுத் தெரிந்து கொள்ளவில்லை. அதனால் அவரைப் பற்றி அடிக்கடி நினைத்தேனே தவிர, கடிதம் எழுதும் வாய்ப்பு இல்லை. நட்பு, ரயில் நட்புப்போல் அன்றே முடிந்து போயிருக்க முடியும். ஆனால் அவர் உண்மையான அன்பு உடையவர். போலி அன்பு, போலி நட்பு எல்லாம் அவருக்குத் தெரியாதவை. இரண்டு வாரம் கழித்து ஒரு ஞாயிற்றுக் கிழமை மாலை ஐந்து மணிக்கு அவர் இதே இடத்தில் வந்து நின்றார். யார் வீட்டுக்கோ போவதற்காக ஒழுங்காக உடுத்துக்கொண்டு புறப்பட்டு வந்த நான், அவரைக் கண்டதும், பெருமகிழ்ச்சி அடைந்தேன். 'எங்கோ புறப்படுவதாகத் தெரிகிறது. போய் வாங்க' என்றார். எனக்கோ அவரை விட்டுப்போக மனம் இல்லை. உட்கார்ந்து பேசினோம். என் படிப்பு முதலியவற்றைப் பற்றிக் கேட்டார். என்ன என்ன பாடங்கள் நடந்தன என்று கேட்டார். நானும் சொன்னேன். இன்னார் இன்னாருடைய குறிப்புகள் நல்லவை என்று சொன்னார். கணக்குகள் எல்லாம் தெளிவாகத் தெரியுமா என்று அவரே கேட்டார். உண்மையில் நான் கணக்குப் பாடத்தில்தான் அரைகுறையாக இருந்தேன். தடுமாறிக் கொண்டிருந்தேன். என் நிலையைச் சொன்னதும் கணக்குப் புத்தகத்தைக் கொண்டுவருமாறு சொல்லி, சந்தேகம் என்ன என்று கேட்டார். என் அறியாமை நீங்குமாறு விளக்கமாகச் சொன்னார். அதன் பிறகுதான் அவருடைய பெயரைக் கேட்டறிந்தேன். என் பெயரைப் புத்தகத்தைப் பார்த்தே தெரிந்து கொண்டார். "போன வாரம் எதிர்பார்த்தேன். நீங்கள் வரவில்லையே" என்று உரிமையோடு கேட்டேன். கடற்கரைக்குச் சென்றுவிட்டதாகக் கூறினார்."
அவர்களின் உறவின் தன்மையைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசை எனக்கு ஏற்பட்டது. ஆனால் எப்படிக் கேட்பது என்று திகைத்தேன்.
அவளே பேசலானாள்: "அது போகட்டும். என் மனத்தில் ஒரு சந்தேகம் ஏற்பட்டு வேதனைப்படுத்தி வருகிறது. அதை உங்களிடம் சொல்லி நான் குற்றம் அற்றவள் என்பதை விளக்கி, ஆறுதல் பெறவேண்டும் என்றே உங்களை இங்கே வரும்படியாகச் சொன்னேன்" என்றாள்.
அப்போது ஓர் அம்மையார் எங்களை நோக்கி வர இமாவதி எழுந்து, "எங்கள் அம்மா" என்றாள். அம்மாவை நோக்கி, "இவர்தான் வேலு, சந்திரன் நம்மிடத்தில் அடிக்கடி சொல்லியிருக்கிறாரே" என்றாள்.
அந்த அம்மா உடனே என்னை ஆர்வத்தோடு பார்த்து "ஆமாம் சந்திரனோடு ஊரில் படித்த பிள்ளையா?" என்றார்.
"ஆமாம் அம்மா" என்றேன்.
"சந்திரன் எங்கே? என்ன இது, கதையாக இருக்கிறதே! என்னால் நம்பவே முடியவில்லையே" என்று சொல்லிக் கொண்டே என் எதிரே உட்கார்ந்தார். நாங்களும் உட்கார்ந்தோம். "அந்தப் பிள்ளை கள்ளம் கரவு இல்லாமல் குழந்தைபோல் பேசும்! என்ன மனக்குறை இருந்தாலும் எங்களிடம் வந்திருக்கக் கூடாதா? நேரில் சொல்லியிருக்கக் கூடாதா? எங்கள் வீட்டு ஆண்பிள்ளைபோல் எண்ணியிருந்தோம். அப்பா பணம் அனுப்பவில்லையானால் கேள் என்று சொல்லி வைத்திருந்தோம். மகன் போல் பழகிவிட்டு, இப்படிச் சொல்லாமல் போனால், மனத்துக்கு வேதனையாக இருக்கிறது. ஒரு சொல் சொல்லியிருக்கக் கூடாதா? நாங்கள் என்ன செய்வது? ஏதாவது சாமியார் பைத்தியம் உண்டா? எங்காவது மலைக்கு, குகைக்கு" - என்றார்.
"அதெல்லாம் இருந்தால் நமக்குத் தெரியாதா அம்மா? அவரைப் பற்றி நமக்குத் தெரியாதது என்ன இருக்கிறது?" என்றாள் இமாவதி.
"இந்தத் தருணத்தில், நம்மவர்கள், நண்பர்கள் ஆகியவர்களின் உணவு முதலிய வசதிகளைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பைச் சந்திரனிடம் ஒப்படைக்க எண்ணியிருந்தோம். திருமணத்துக்குள் வந்து சேர்ந்தால், என் வயிற்றில் பால் வார்த்ததுபோல் இருக்கும். அவனுடைய அப்பா வந்தாராமே; நம் வீட்டுக்கு அழைத்து வந்திருக்கக் கூடாதா?" என்றாள் அந்த அம்மா.
இவர்களின் உறவு முதலியவற்றை எனக்கே தெரிவிக்காமல் மறைத்திருந்தான் சந்திரன். அவன் என்னைவிட்டு ஒதுங்கி நின்ற தன்மையும் இவர்களுக்குத் தெரியாது. ஆனால் அதை எப்படிச் சொல்வது?
"சரி, சரி, தம்பி! எனக்கு வேலை ஏராளமாக இருக்கிறது. யாரோ இமாவதியோடு நெடுநேரமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு வந்தேன். சரி, வரட்டுமா? இமாவதி! தம்பி இருக்கட்டும். அங்கே உறவினர்கள், வந்தவர்கள் தப்பாக நினைக்கக்கூடும். அப்படி வந்து அவர்களோடு கூடிப் பேசிக் கொண்டிருக்கலாமே" என்று சொல்லிச் சென்றார்.
"கொஞ்சம் பேசிவிட்டு வருவேன்’மா" என்று சொல்லி விட்டு, இமாவதி என்னை நோக்கினாள்.
"என்னவோ சொல்லவேண்டும் என்கிறீர்கள்?"
"ஆமாம் என்று சிறிது நேரம் அமைதியானாள். பிறகு அவருடைய மனக்கவலைக்கு என்ன காரணம்? உங்களுக்குத் தெரிந்த காரணம் ஏதாவது இருந்தால் மறைக்காமல் சொல்லுங்கள்" என்றாள்.
உண்மையை எப்படிச் சொல்வது என்று தயங்கினேன். தலை குனிந்தேன்.
"தயவு செய்து உண்மையைச் சொல்லுங்கள். என் திருமண அழைப்பிதழ் வந்தபிறகுதான் கவலைப்பட்டாரா?"
"ஆமாம்" என்று சொல்லித் தலை நிமிர்ந்து பார்த்தேன். அவள் தன் முந்தானையின் ஒரு முனையை வாயில் வைத்தபடியே தன் கால்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
"உங்களிடம் ஏதாவது சொன்னாரா?" என்றாள். அவளுடைய உள்ளத்தின் கலக்கம் குரலில் புறப்பட்டது.
"சொன்னார்."
"ஏமாற்றம் அடைந்ததாகச் சொன்னாரா?"
"ஆமாம்."
முந்தானையால் கண்களைத் துடைத்தாள். யாரோ வருவதைக் கண்டு நிமிர்ந்து உட்கார்ந்தாள். "நான் உண்மையாகச் சொல்கிறேன். நான் குற்றவாளி அல்ல. அவர் தவறாக எண்ணிக்கொண்டு பழகியிருக்கிறார். அவருடைய எண்ணம் இப்படி இருக்கும் என்று நான் சந்தேகப்பட்டதே இல்லை. தங்கையோடு பழகுவதுபோல் என்னோடு பழகினார். நான் அண்ணன் என்று கருதிப் பழகினேன். அதனால்தான் அன்போடு திருமண அழைப்பிதழ் அனுப்பிக் கடிதமும் எழுதியிருந்தேன். அவர் ஏமாற்றம் அடைவார் என்று தெரிந்திருந்தால், தேர்வு முடியும் வரைக்கும் அழைப்பிதழ் அனுப்பியிருப்பேனா? அதை ஏன் அவர் உணரவில்லை?" அப்போது அவளுடைய மனக்கலக்கம் தீர்ந்துவிட்டது. தெளிவாகப் பேசினாள். "எல்லாவற்றிலும் வெளிப்படையாகக் குழந்தை மனத்தோடு பழகியவர் இதில் மட்டும் ஏன் இப்படி மறைத்து நடந்தார்? ஆண்களோடு எப்படிப் பழகினாலும் ஆபத்துக்கு இடம் இருக்கும்போல் தெரிகிறது" என்றாள்.
"ஒரு பெண் திருமணம் ஆனபிறகு இப்படிப் பழகினால் இடர்ப்பாடு இல்லை" என்றேன்.
அவள் உடனே மறுத்துப் பேசினாள்: "அப்போதும் உண்டு. அந்தப் பெண்ணின் கணவன் அப்போது அவள்மேல் சந்தேகப்படுவான்" என்றாள்.
"உண்மைதான்" என்று சிரித்தேன்.
"முதலாம் நாள் சந்திரனைக் கண்டு பழகி வீட்டில் பேசிக் கொண்டிருந்தோமே, அன்று அம்மா ஒன்றும் சொல்லவில்லை. அடுத்தமுறை ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலையில் சந்திரன் வந்து போனார் என்று சொன்னேன் அல்லவா? அன்று இரவு அம்மா என்னைத் தனியே அழைத்து அறிவுரை கூறினார். "நல்ல பிள்ளை அம்மா அதில் எனக்குச் சந்தேகம் இல்லை. இருந்தாலும் ஒத்த வயது உள்ள ஆண் பிள்ளைகளோடு பழகுவதில் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உன் வாழ்வோ தாழ்வோ அதை ஒட்டித்தான் இருக்கிறது. பருவ உணர்ச்சி பொல்லாதது. அதைக் கடந்து பொதுவான அன்போடு அண்ணன் தங்கைபோல் பழக முடியுமானால் பழகு. சந்திரனுக்கே மனம்மாறி உன்னிடத்தில் வேறு வகையாகப் பழகத் தொடங்கினாலும் விலகிவிடு; அல்லது உன் மனமே சந்திரனிடத்தில் வேறு வகையாகச் செல்லுமானாலும் விலகிவிடு. ஏன் என்றால், ஆண் பெண் உறவு என்பது ஒரு நாளில் உங்கள் உணர்ச்சியால் முடிவு செய்யக்கூடியது அல்ல. அது வாழ்க்கை முழுவதையுமே மாற்றக்கூடியது. ஆகையால் அனுபவம் நிறைந்த எங்கள் அறிவுரையும் அதற்கு வேண்டும். அதனால்தான் சொல்கிறேன். கவனித்துப் பொறுப்போடு நட. தங்கைபோல் பழக முடிந்தால் பழகு. இல்லையானால் பழகாதே" என்று கூறினார். அந்த அறிவுரை எனக்குப் பயன்பட்டது. ஆனால் அவருக்கு அப்படி ஒருவர் அறிவுரை சொல்லியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்" என்றாள்.
நான் பேசாமல் இருந்ததைக் கண்டு, "என்மேல் தவறு இருந்தால் சொல்லுங்கள்" என்றாள்.
"நீங்கள் அன்பாகப் பழகியதால் அவன் அப்படி எண்ணிவிட்டான்" என்றேன்.
"அப்படியானால் ஒரு பெண் ஆணோடு நட்புக்கொண்டு பொதுவாகப் பழகவே கூடாதா?"
"கூடாது என்று நான் சொல்லவில்லை. நடைமுறையில் தீமையாக இருக்கிறதே!"
"அதை வெல்லவேண்டும். முன் காலம் வேறு. பெண் வாழ்ந்த எல்லை குறுகிய எல்லை. வீடு, வீட்டைச் சார்ந்த அக்கம் பக்கம் அவ்வளவுதான். இப்போது எந்தக் குடும்பத்துப் பெண்ணும் பல ஆண்களோடு பழகவேண்டியுள்ளது. கடைத்தெரு, மருந்தில்லம், பள்ளிக்கூடம், கலையரங்கம் இப்படி எத்தனையோ இடங்கள்; குடும்பத்திற்காக, குழந்தைகளுக்காக, வியாபாரிகள், டாக்டர்கள், ஆசிரியர்கள், இசைக்கலைஞர் முதலானோர் பலருடன் பழகவேண்டியுள்ளது. தந்தையின் நண்பர்கள், கணவரின் நண்பர்கள் இப்படிப் பலரோடு பழகவேண்டியுள்ளது. ஆகையால் பெண்கள் ஆண்களோடு பழகாமல் வாழ முடியாத காலம் இது. பொது அன்பை வளர்த்து நட்பு முறையில் பழகக் கற்றுக்கொள்ளத்தான் வேண்டும்."
"மெய்தான்."
"நான் குற்றவாளி அல்ல என்று நீங்கள் சொன்னால் போதும். அதுதான் எனக்கு ஆறுதல் அளிக்கும்."
"நீங்கள் குற்றவாளி அல்ல என்பது நன்றாகத் தெரிகிறதே!"
"ஆனால் ஒரு குற்றம் என்மேல் உண்டு. அவருடைய மனம் இப்படி வளர்ந்துவருகிறது என்பதை நான் கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டேன். அது குற்றம்தான். அதற்குக் காரணம், அவர் என்னிடம் அப்படி அண்ணன் போல் பழகினார். சில வேளைகளில் அண்ணன் போல் அதிகாரம் செய்தும் நடத்தியிருக்கிறார். உடம்பு நன்றாக இல்லை. ஆகையால், நாளைக்குக் கல்லூரிக்குப் போகக் கூடாது என்று தடுத்திருக்கிறார். சில பாடங்களில் கேள்விகள் கேட்டுத் தவறு செய்தபோது கடிந்திருக்கிறார். சில பெண்களோடு பழகக்கூடாது என்று தடுத்திருக்கிறார்."
அப்போதுதான் நான் உரிமையோடு சில கேள்வி கேட்டேன். "நீங்கள் இருவரும் தனியே பேசிக்கொண்டு போனது உண்டா?" என்றேன்.
"உண்டு! அம்மாவுக்குச் சொல்லிவிட்டுக் கடற்கரைக்குப் போயிருக்கிறோம். சினிமாவுக்குப் போயிருக்கிறோம். தங்கையை அழைத்துக் கொண்டு போனதும் உண்டு. நாங்கள் இருவர் மட்டுமே போனதும் உண்டு."
சந்திரன் தன் அறையில் இல்லாமல் அடிக்கடி வேறு வேலை. வேறு வேலை என்று வெளியே போய்வந்த காரணம் அப்போதுதான் எனக்குத் தெரிந்தது. தொடர்ந்து சில கேட்டேன்.
"அவனை என்னவென்று அழைப்பீர்கள்?" என்றேன்.
"'சந்திர்' என்று பெயர் சொல்லி அழைப்பேன்."
"யாராவது பார்த்தால் தப்பாக நினைப்பார்களே என்று எண்ணவில்லையா?"
"வெளிப்படையாகப் பழகினோம்; குற்றம் செய்யவில்லை; ஆகையால் மற்றவர்கள் நினைப்பதைப் பற்றிப் பயப்பட்டதில்லை. அண்ணனும் தங்கையும் பழகுவதில்லையா!"
"நான் என் தங்கையோடு நெருங்கிப் பழகுவதில்லையே!"
"அடிக்கடி சண்டையிட்டது உண்டு அல்லவா?"
"உண்டு."
"நானும் சந்திரனும் அப்படி அடிக்கடி சண்டையிட்டிருக்கிறோம். இங்கே வீட்டில், கடற்கரையில் அம்மா அப்பா எதிரில்."
"கல்லூரியில் எங்கள் விடுதியில் மாணவர்கள் சிலர் உங்கள் இருவரையும் காதலர் என்று எண்ணியிருக்கிறார்கள் தெரியுமா?"
"இருக்கலாம். உடன் பிறந்த அண்ணனும் தங்கையும் புதிய ஊரில் ஒரு தெரு வழியாக போனால், அந்த ஊரார் பலர் அவர்களைக் காதலர் என்றுதான் எண்ணுவார்கள். அது உலக இயற்கை! மனிதரின் மனத்தில் பொதுவாக உள்ள காம இச்சை அப்படி எல்லாரையும் பார்த்துச் சொல்லச் செய்கிறது!"
அவளுடைய அறிவின் திட்பத்தைக் கண்டு வியந்தேன். இன்னொன்றும் கேட்கவேண்டும் என்று தோன்றியது; கேட்டேன். "இந்த அனுபவத்திற்குப் பிறகு, நீங்கள் உங்கள் தங்கைக்கு என்ன வழி சொல்வீர்கள்" என்றேன்.
"எதைப்பற்றி?"
"ஆண்களோடு பழகுவதில்!"
"அம்மா எனக்குச் சொன்னதையே சொல்வேன்."
"அதனால் குறை ஏற்படுகிறதே; இப்படி ஒரு வாழ்வு பாழாகிறதே."
இதைச் சொன்னவுடன், அவளுடைய திட்பமும் தெளிவும் பறந்து போயின. "அதை நினைக்கும்போதுதான் எனக்குத் துயரமாக இருக்கிறது. நான் குற்றவாளி அல்ல என்பதை உங்களிடம் சொல்லி, என் மன வேதனையைத் தீர்த்துக்கொண்டேன். ஆனால் என் அன்புக்குரிய சந்திரனுடைய வாழ்வு கெடுவதை நினைத்தபோது எனக்குத் துயரமாக இருக்கிறது" என்று வருந்தினாள். அவளுடைய முகம் வாடியது. ஒரு பெருமூச்சு விட்டாள். "அன்று உங்களுடைய கல்லூரியில் ஒரு நாடகம் நடந்தது. நான் வந்திருந்தேன். அவருடைய நடிப்பைக் கண்டு பெருமகிழ்ச்சி அடைந்தேன். மறுநாள் வீட்டுக்கு வந்திருந்தார். அந்தப் பெண் வேடத்தோடு நான் அவர் பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னேன்; வேண்டாம் என்று மறுத்தார். இயல்பான உடையோடு புகைப்படம் எடுக்கலாம் என்று சொன்னார். அதற்கு நான் இணங்கவில்லை. அதிலிருந்து அவர் தெரிந்து கொண்டிருக்கலாம். தேர்வு தொடங்குவதற்கு முன் இங்கு வந்திருந்தபோது அம்மா வீட்டில் இல்லை. எங்கே என்றார். திருமண வேலையாக என்று சொன்னேன். யாருக்கு என்றார்? எனக்குத்தான், என்று சிரித்தேன். அவரும் சிரித்தார். அன்று அவர் தெரிந்து கொள்ளாமல் போனது வியப்பாக இருக்கிறது" என்றாள்.
"நீங்கள் நாணத்தால் சிரித்திருக்கலாம். வேடிக்கை பேசியதாகக் கருதி அவன் சிரித்திருக்கலாம்" என்றேன்.
சிறிது நேரம் அசையாமல் சிற்பம் போல் இருந்தாள். "உண்மைதான்! அவ்வாறு கருதியிருக்கக் கூடும். என்ன வாழ்க்கை இது!" என்றாள்.
"நம் நாட்டு நாகரிகம்! எல்லாவற்றிலும் வெளிப்படையாகப் பழகிவிடுகிறோம். ஆனால் வாழ்க்கைக்கு அடிப்படையான காதலில் - திருமணப் பேச்சில் மட்டும் வெளிப்படையாகப் பேசி விளக்குவதில்லை. பெற்றோரும் மக்களிடம் அப்படி இருக்கிறார்கள்; மக்களும் பெற்றோரிடம் அப்படி இருக்கிறார்கள். அண்ணன் தங்கையும் அப்படி நடக்கிறார்கள்; நீங்களும் அப்படித்தான்" என்றேன்.
"நான் பெண், அவர் இயல்பாகத் துணிவும் அஞ்சாமையும் உடையவர். அவர் வெளிப்படையாகப் பழகியிருக்கலாமே?"
"நீங்கள் பெண்தான்; ஆனால் பழங்காலப் பெண் அல்லவே? வெளிப்படையாகச் சொல்லியிருக்கலாமே?"
"அவர் சொல்லியிருக்கலாமே!"
"ஆண் பெண் பழக்கம் என்றால் அது காதல் வரையில் நீளக்கூடியது. அதன்படி அவன் இயற்கையாக நடந்து கொண்டான். நீங்கள்தான், இந்தப் பழக்கம் அதுவரையில் செல்லக்கூடாது என்று கட்டுப்பாட்டோடு பழகினீர்கள். அந்தக் கட்டுப்பாட்டையாவது சொன்னீர்களா?"
மறுபடியும் சிறிது நேரம் திகைத்து நின்றாள். "ஆம்! சொல்லவில்லை. என்னுடைய குற்றம்தான். எவ்வளவோ முன்னேறினாலும், இந்த நாட்டில் வழிவழியாக வந்த பழக்கம் - வெளிப்படையாகச் சொல்லாமல், பழகும் பழக்கம் - இது. என் தவறுதான்" என்று வருந்தினாள்.
மறுபடியும் தங்கை வந்து, "அம்மா கூப்பிடுகிறார்கள்" என்றாள்.
"கடைசியில் உங்களுக்கு வருத்தம் உண்டாக்கி விட்டேனா?" என்று நான் எழுந்தேன்.
"அவருடைய வாழ்க்கையே கெட்டுவிட்டது! நான் சிறிது நேரம் வருந்தினால் என்ன?" என்றாள். "சிறிது உட்காருங்கள்; சிற்றுண்டியும் காப்பியும் உண்டு செல்ல வேண்டும்" என்று உள்ளே சென்றாள். தங்கையிடம் அவற்றைக் கொடுத்தனுப்பினாள். விரைவில் திரும்பி வந்து "திருமணத்திற்கு நீங்களாவது வரவேண்டும்" என்றாள்.
"சந்திரனே அதற்குள் திரும்பி வரவேண்டும் என்று விரும்புகிறேன்" என்றேன்.
"அப்படி அவர் வந்தால், அதைவிடப் பெரிய மகிழ்ச்சி வேறு இல்லை. எங்கள் இல்லத்தில் முதல் விருந்து அவருக்கு நடத்துவதாக எண்ணியிருந்தேன். என் எண்ணம் நிறைவேறினால் நன்றாக இருக்குமே" என்று கண் கலங்கினாள்.
அங்கு உள்ள குடும்பப் பொறுப்புகளுக்கு இடையூறாக நிற்கக்கூடாது என்று விரைவில் விடை பெற்றுத் திரும்பினேன்.
---------
அத்தியாயம் 15
விடுதிக்குத் திரும்பிச் சென்றபோது, மாலன் மறுநாள் காலைப் பயணத்துக்காகப் புத்தகங்களைப் பெட்டியில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தான். என்னைக் கண்டவுடன், "நான் தேறிவிடுவேன்" என்று மகிழ்ச்சியான செய்தியைச் சொன்னான். நான் பாராட்டுத் தெரிவித்து விட்டு, "செய்தி எப்படித் தெரிந்தது? இதற்குள் தெரிவதற்கு வழி இல்லயே. ஆசிரியர் சொன்னாரா?" என்றேன். "சோதிடம் கேட்டேன்" என்றான். "சோதிடக்காரனுக்கு நீ எழுதியது எப்படித் தெரிந்தது!" என்று சிரித்தேன். "குருதசை நன்றாக இருக்கிறது வக்கிரம் இல்லாமல்" என்றான். என் முகத்தில் சிரிப்பு மாறாமல் இருக்கவே, "நீ இப்படித்தான் எதிலும் நம்பிக்கை இல்லாமல் அலைகிறாய். போகப் போகத் தெரியும். நான் எஸ்.எஸ்.எல்.சி. படித்த போது சோதிடம் கேட்டேன். அவன் சொன்னது சொன்னபடி நடந்தது. உனக்கு, என்ன தெரியுமய்யா? ஊருக்குப் போனதும், அப்பாவுக்குப் பழக்கமான சோதிடர் ஒருவர் இருக்கிறார். அவரிடத்தில் கேட்கப்போகிறேன்" என்றான். "அவரை ஏன் கேட்கவேண்டும்? நீ எழுதியது உனக்கே தெரியவில்லையா?" என்றேன். "என்ன இருந்தாலும் கிரகம் கெட்டதாக இருந்தால், எழுதும் போது கெடுத்து விடும்; நல்லபடி எழுதியிருந்தாலும் திருத்தும்போது கெடுத்துவிடும்; எண்களைக் குறைத்துவிடும்" என்றான்.
பிறகு, "அது போகட்டும். நீ போய் வந்த செய்தி என்ன? அதை முதலில் சொல்" என்றான். எல்லாவற்றையும் கூறவில்லை. பொதுவாக, இமாவதியின் குடும்பம் நல்ல குடும்பம் என்றும், அவள் நட்பு முறையில் தான் பழகினாள் என்றும், சந்திரனே தவறாக உணர்ந்து தன்னைத்தானே ஏமாற்றிக் கொண்டான் என்றும் கூறினேன். இளைஞர்களான ஆணும் பெண்ணும் பழகும் முறை பற்றி இமாவதியின் கருத்தைச் சொன்னேன்.
"இது எப்படி முடியும்? அழகான ரோசாப் பூவை ஒரு பெண்ணின் கையில் கொடுத்துவிட்டு அதை முகராமல் வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று சொன்னால் பயன் உண்டா? மணமுள்ள மாம்பழத்தை ஒரு சிறுவன் கையில் கொடுத்துவிட்டு அதைத் தின்னாமல் வைத்திருக்க வேண்டும் என்று சொன்னால் பயன் உண்டா? முகராமலும், தின்னாமலும் வைத்திருக்கும் அளவிற்குப் பயத்தாலும் காவலாலும் செய்ய முடியும். ஆனால் அதனால் மனம் கெடும்" என்றான்.
"ஐரோப்பியரும் அமெரிக்கரும் இல்லையா? நாமும் அப்படிப் பழகக்கூடாதா?"
"பழகலாம். அதன் விளைவுகளைப் பற்றி அவர்கள் அவ்வளவாக கவலைப்படுவதில்லை. நாமும் அப்படிக் கவலைப்படாமல் இருந்தால் சரிதான்."
"அவள் நல்ல பெண்."
"நல்ல பெண்ணாக இருந்தும் சந்திரனுடைய மனத்தைக் காப்பாற்ற முடியவில்லையே. அதனால் நீயும் விழிப்பாக இருக்கவேண்டும் என்று சொல்கிறேன். சந்திரன் போல் கலங்கிவிடாதே."
"சே! என்ன பேச்சு பேசுகிறாய்?"
"ஒன்று கேட்கிறேன். உனக்கு அழகுணர்ச்சியே இல்லையா?"
"கொஞ்சம் குறைவுதான். அதுவும் எனக்கு நன்மைதான். சந்திரனைப் போல் எனக்கு அழகும் இல்லை; அழகுணர்ச்சியும் இல்லை. பெண் வேடத்தோடு நடிக்கப் போவதும் இல்லை, பெண்ணின் அன்பால் கலங்கப்போவதும் இல்லை."
"அழகுணர்ச்சி இல்லாத வாழ்வு என்ன வாழ்வு?"
"அது சீர்கெட்ட மட்டமான வாழ்வாக இருந்தாலும் ஒரு வாழ்வாக இருக்கிறது அல்லவா? அதுவே போதும். வாழ்வே அடியோடு கெட்டு அழிவதைவிட ஏதோ ஒரு வாழ்வு இருப்பது மேலானது."
பிறகு, சாப்பிடப் போகலாம். வா" என்று உணவுக் கூடத்திற்கு அழைத்துச் சென்று பேசிக்கொண்டிருந்தேன்.
மறுநாள் காலையில் அவனும் நானும் ஒரே ரயிலில் ஏறினோம். அவன் அரக்கோணத்தில் இறங்கிவிட்டான். நான் வாலாசாவில் இறங்கி வீட்டுக்குச் சென்றேன்.
வீட்டாருக்குச் சந்திரனைப் பற்றி நான் ஒன்றும் எழுதவில்லை. செய்தியைச் சொன்னபோது அவர்கள் திடுக்கிட்டார்கள். "நல்ல பையன்! எவ்வளவு அக்கறையான பையன்! அவனா அப்படிப் போய்விட்டான்" என்று திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இமாவதியைப் பற்றியோ, காதலைப் பற்றியோ நான் அவர்களிடம் ஒன்றும் சொல்லவில்லை.
நான் போய் சேர்ந்த ஒரு மணி நேரத்திற்கெல்லாம், பாக்கிய அம்மையார் வீட்டுக்கு வந்தார். "தம்பி எப்போது வந்தது?" என்றார். "இப்போதுதான்" என்றேன். அம்மா சந்திரனைப் பற்றிய செய்தியைப் பாக்கியத்திடம் சொன்னார். அதைக்கேட்ட பாக்கியம், திடுக்கிட்டு, வாயைத் திறந்தது திறந்தபடியே நின்றார். ஒரு பெருமூச்சு விட்டு, "அய்யோ ஊரில் அந்த அத்தை என்ன பாடுபடும்!" என்றார். உடனே போய்விட்டார்.
சந்திரனுடைய ஊர்க்குப் போய் அவனுடைய பெற்றோர்க்கும் அத்தைக்கும் ஆறுதல் சொல்லி வரவேண்டும் என்று மனம் தூண்டியது. மூன்றாம் நாள் அப்பா அம்மாவிடம் சொல்லிவிட்டுப் புறப்பட்டேன். விரைந்து திரும்பி வருமாறு சொன்னார்கள்.
பெருங்காஞ்சியில் நான் சென்று கண்ட காட்சி துயரவடிவாக இருந்தது. அந்தப் பெரிய வீடு இழவு வீடுபோல் இருந்தது. சாமண்ணா மூலையில் ஒரு கட்டிலிலேயே ஒரு நாளில் இருபத்து மூன்று மணி நேரமும் கழித்தார். சந்திரனின் தாயோ, தேங்காயும் வெல்லமும் இருந்த அறையில் ஓர் ஓரமாகப் பாயும் தலையணையுமாகக் கிடந்தார். அத்தை மட்டும் சமையலறைக்கும் வாசலுக்குமாகத் திரிந்துகொண்டிருந்தார். கற்பகமும் வாடிய கொடிபோல் இருந்தாள். சமையலறையில் உறவினரான ஓர் அம்மா சமைத்துக் கொண்டிருந்தார். என்னைப் பார்த்தவுடனே ஒவ்வொருவரும் அழத் தொடங்கினார்கள். அத்தையின் கண்ணீர் என்னை உருகச் செய்தது. சாமண்ணாவின் பெருமூச்சு வேதனை தந்தது. சந்திரனுடைய தாயின் முகத்தைப் பார்க்கவே முடியவில்லை.
வேலைக்காரன் மாசன், தோட்டக்காரன் சொக்கான், முதல் வருவோர் போவோர் வரையில் அத்தனை பேரும் என்னிடம் துக்கம் விசாரிக்கத் தொடங்கிவிட்டார்கள். இருக்க இருக்க, அவர்கள் கேட்ட கேள்விகள் எனக்குச் சலிப்பையும் தந்தன. திரும்பத் திரும்பக் கேட்ட கேள்விகளையே கேட்டு என்னை வாட்டினார்கள். தலைமையாசிரியர் ஒருவர்தான் பயனுள்ள வகையில் பேசினார். 'இப்படிக் காணாமல் போனவர்களைப் பற்றிச் செய்தித்தாளில் படம் போட்டு அறிக்கை வெளியிடுகிறார்களே, அதுபோல் செய்யலாம்' என்றார். எனக்கும் அது நல்லது என்று தோன்றியது. உடனே இருவரும் உட்கார்ந்து, ஆங்கில இதழ் ஒன்றிற்கும் தமிழ் இதழ் ஒன்றிக்கும் எழுதிப் படங்களும் வைத்து அனுப்பினோம்.
அங்கே இருந்த ஒவ்வொரு மணி நேரமும் எனக்குத் துயரமாகவே இருந்தது. மறுநாளே புறப்படலானேன். தாயும் தந்தையும் பேச்சு இல்லாமல், கண்ணீரும் கம்பலையுமாக விடை கொடுத்தார்கள். அத்தை மட்டும், "எங்கே பார்த்தாலும் கேட்டாலும் கொண்டு வந்து சேர்த்துவிடு வேலு" என்று வேண்டினார். கற்பகம் வழக்கத்துக்கு மாறாக என் எதிரே நின்று கைகூப்பிக் கண் கலங்கி விடை கொடுத்தாள்.
ஊர்க்குத் திரும்பியபோது, வழியில் அந்த இலுப்பை மரங்களைக் கண்டேன். நான் எதையோ சிந்தித்தபடியே குதிரை வண்டியில் போய்க்கொண்டிருந்தேன். ஆனால் இலுப்பைப் பூக்களின் மணம் என்னைக் கவர்ந்தது. சாலையின் இரு பக்கமும் திரும்பித் திரும்பிப் பார்த்தேன். வழக்கமாக நானும் சந்திரனும் உட்கார்ந்து கணக்குப் போட்டுப் பொழுது போக்கிய இடம் வந்தது. அதன் எதிரே இருந்த கிணறு பாழடைந்தாற்போல் தோன்றியது. அந்த மாந்தோப்பும் அவ்வாறே தோன்றியது. மாமரங்களில் காய்கள் நிறையத் தொங்கிக் கொண்டிருந்தன. வேலியோரமாக இருந்த வேப்பமரங்களில் வெண்ணிறப் பூங்கொத்துகள் நிறைய இருந்தன. புன்க மரங்களில் கிளைகள்தோறும் காய்கள் பெருகி, பச்சை நிறக் கிளிஞ்சல்கள் போல் தொங்கிக் கொண்டிருந்தன. எல்லாம் இருந்தும் ஏதோ ஒருவகைக் குறை தோன்றியது. பொலிவே போய் விட்டாற்போல் தோன்றியது. சந்திரனும் நானும் அங்கே மாலைக் காலங்களில் உட்கார்ந்தும் உலாவியும் பழகிய பழக்கம் போய் இரண்டு ஆண்டுகள் ஆய்விட்டன. காலம் எவ்வளவு விரைவில் கழிகிறது என்று வியப்போடு எண்ணினேன். அந்த இலுப்பை மரச்சாலையில் பழகிய பழக்கத்திற்குப் பிறகு சந்திரனும் நானும் கல்லூரி விடுதியில் அடுத்தடுத்து அமைந்த அறைகளில்தான் வாழ்ந்தோம். ஊரில் குடியிருந்தபோதும் அவ்வளவு அடுத்து வாழவில்லை; இரண்டு வீடுகள் கடந்து வாழ்ந்தோம், கல்லூரி விடுதியில் இரவும் பகலும் நெருங்கிப் பழகுவதற்கு வேண்டிய வாய்ப்பு இருந்தது. அவ்வளவு அடுத்துத் தங்கியிருந்தும், எங்கள் உள்ளங்கள் மிக மிகத் தொலைவில் இருந்தன. இவ்வாறு எண்ணியவாறே வீட்டுக்கு வந்து சேர்ந்தேன்.
வீட்டுக்குச் சென்றதும் அம்மா ஆவலோடு கேட்டார்; கடையிலிருந்து வந்ததும் அப்பாவும் கேட்டார். பெருங்காஞ்சியில் சந்திரனுடைய வீட்டார் துயரில் மூழ்கியிருந்த நிலையைக் கேட்டு அவர்கள் மிக வருந்தினார்கள். அம்மாவின் பெருமூச்சு, உள்ளத்தில் பொங்கிய துன்ப உணர்ச்சி வெளிப்படுவதாக இருந்தது. அப்பா சிறிது அமைதியாக இருந்தபிறகு, "எல்லாம் அவரவர்கள் கேட்டு வந்தபடிதான் நடக்கும், சும்மா கவலைப் பட்டுப் பயன் இல்லை. படிக்க வைத்துப் பெரிய உத்தியோகத்துக்கு அனுப்பிப் பெருமையாக வாழலாம் என்று பார்த்தார்கள். என்ன ஆயிற்று, பார்த்தாயா? அதனால்தான் பெரிய படிப்பே வேண்டா என்று ஒவ்வொரு வேளையில் எண்ணிப்பார்க்கிறேன். என்னவோ போ" என்று சுருக்கென்று முடித்தார். அது என் படிப்பைப் பற்றி அவர் கொண்ட வெறுப்பையும் அதற்கு ஒரு முடிவையும் புலப்படுத்துவதுபோல் இருந்தது. இருந்தாலும், அப்பா என் படிப்பைத் தடுக்கமாட்டார். தடுத்தாலும் அம்மாவிடம் அழுது கண்ணீர்விட்டு எண்ணியதை முடித்துக்கொள்ளலாம் என்ற தன்னம்பிக்கை எனக்குள் இருந்தது. அதனால் அவருடைய சொல் என் உள்ளத்தைக் கலக்கவில்லை.
ஆனால் சந்திரனைப் பற்றிய எண்ணம் அடிக்கடி எழுந்து என் உள்ளத்தில் அமைதி இல்லாமற் செய்துவந்தது. மூன்று ஆண்டுகள் எங்கள் தெருவில் அவன் தங்கியிருந்து, குடும்பத்தோடு குடும்பமாய் நெருங்கிப் பழகி, ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் ஒரே பெஞ்சில் இருந்து காலை முதல் மாலை வரையில் தொடர்ந்து பழகிய பழக்கத்தை எளிதில் மறக்க முடியவில்லை. நான் மறந்தாலும் எங்கள் தெருவும், திண்ணையும், வேப்ப மரங்களின் நிழலும் பாக்கிய அம்மையாரின் வீடும், இலுப்பை மரச் சாலையும் அடிக்கடி எனக்குச் சந்திரனையே நினைவூட்டி வந்தன. அந்த நினைவு மகிழ்ச்சியான நினைவாக இருந்தால் கவலை இல்லை. அது என் உள்ளத்தில் வேதனையைத் தூண்டுவதாக இருந்தது. கல்லூரி விடுதியில் பக்கத்து அறையில் இருந்துகொண்டு அவனுக்காகக் கவலைப்பட்டதைவிட, வேப்ப மரத்தடியில் திண்ணையில் சாய்ந்து தனியே இருந்தபடி நான் பட்ட கவலை மிகுதியாக இருந்தது. அவனுடைய அழகும் அறிவும் அன்பும் நட்பும் இப்படித் துன்பத்தை வளர்ப்பதற்குத்தானா பயன்படவேண்டும்.
இந்தத் துன்ப நினைவு ஒருவாறு மாறுவதற்கு இரண்டு வாரங்கள் ஆயின. சித்திரை மாதம் அமாவாசைக்குப் பிறகு திருமணப் பேச்சும், நாதசுர ஒலியும் அடிக்கடி கேட்கும் நிலைமை வந்தது. பாக்கியத்தின் தம்பி விநாயகத்திற்குத் திருமண ஏற்பாடுகள் தொடங்கின. குண்டலேரி என்னும் கிராமத்தில் அவர்களின் பழைய உறவில் ஒரு பெண்ணைப் பார்த்து முடிவு செய்தார்கள். அப்போது திருமணக் கடிதங்கள் எழுதுவதற்கும் அங்கே இங்கே போய் வருவதற்கும் என் உதவியைக் கோரினார்கள். அம்மா பெரும்பங்கான வேலைகளை எடுத்துக்கொண்டு செய்தார். அந்த வீட்டிலும் வந்த உறவினரிலும் வாழ்வரசியாக யாரும் இல்லாத காரணத்தால், அம்மாவின் உதவி அவர்களுக்குத் தேவையாக இருந்தது. திருமணத்திற்கு முன் செய்யும் சில பொங்கல் பூசைகளுக்கும் கோயில் வழிபாடுகளுக்கும் அம்மாவே முன் நின்று, எங்கள் வீட்டு அலுவல் போலவே அக்கறையோடு மேற்கொண்டு செய்துவந்தார். அப்பா மளிகைக் கடையை விட்டு அசையவே இல்லை. பெண் வீட்டாரிடம் உறுதிப் படுத்திக் கொள்வதற்காகப் புறப்பட்டுச் சென்றபோது, பாக்கியமும் அந்த அம்மாவின் தகப்பனாரும் நேரே வந்து அப்பாவிடம் சொல்லி வற்புறுத்தி அழைத்தார்கள். "சில்லறைக் கடையை விட்டு எப்படி வரமுடியும்? சொல்லுங்கள். ஒருநாள் விட்டுவருவதை விட மூடிவருவதே நல்லது. நான் வேண்டாங்க. என் மனைவியை அழைத்துச் செல்லுங்கள். என் பையனை அழைத்துச் செல்லுங்கள். என் குடும்பத்திலிருந்து இரண்டு பேர் வந்தால் போதாதா?" என்று சொல்லிவிட்டார். அதனால் நானும் அம்மாவும் மட்டும் போய் வந்தோம். அது சின்ன கிராமம். உழவுத் தொழில் செய்பவர்கள் நல்ல குடும்பத்தார் பலர் வாழ்ந்த ஊர் அது. எல்லாரும் எளிய ஏழைக் குடும்பத்தாரே. ஒருநாள் இரவு தங்கி உறுதி செய்து கொண்டு விருந்து உண்டு மறுநாள் விடியற்காலையிலேயே புறப்பட்டு வந்துவிட்டோம். ஒப்பந்தத் தாளில் குறித்த நாளிலேயே திருமணத்தை முடிப்பதென்று, வந்தவுடன் பாக்கியமும் அவருடைய தகப்பனாரும் திருமண ஏற்பாடுகளில் முனைந்து ஈடுபட்டார்கள். மாப்பிள்ளை ஆகவேண்டிய விநாயகமோ, ஒரு மாறுதலும் இல்லாமல், பழையபடியே யாருடனும் பேசாமல் கடிகாரம் போல் தொழிலுக்குப் போவதும் வருவதுமாக இருந்தார். தம் வாழ்க்கையில் நடக்கப்போகும் மாறுதலைப் பற்றி ஒன்றும் அறியாதவர் போல் இருந்தார்.
விடுமுறையில் எவ்வளவோ படிக்க வேண்டும் என்று நானும் மாலனும் திட்டமிட்டுப் புறப்பட்டோம். இண்டர் மீடியட் இரண்டாம் ஆண்டு நடைபெற வேண்டிய பாடங்களின் புத்தகங்களையும் வாங்கினோம். மாலன் ஒருவாறு திட்டப்படி படித்து வருவதாகக் கடிதம் எழுதியிருந்தான். எதிர்பார்த்த அளவிற்கு என்னால் படிக்க முடியவில்லை. அமைதியாக இருந்த காலத்தில் சந்திரனைப் பற்றிய கவலையால் என் படிப்புக் கெட்டது. திருமண முயற்சியால் அந்தக் கவலை குறைந்தபோதிலும், திருமண வேலைகளில் ஈடுபட்ட காரணத்தால் மனம் படிப்பில் ஈடுபடவில்லை.
திருமணம் பாக்கியம் வீட்டிலேயே நடைபெற்றது. செல்வம் இல்லாக் குறையால், ஆடம்பரத்திற்கு வழி இல்லை. எளிய முறையில் நடந்தாலும் கூடியவரையில் குறை இல்லாதவாறு நன்றாக நடைபெற வேண்டும் என்று பாக்கியம் பெரிதும் முயன்றார். ஆனால் எண்ணியபடி நடக்கவில்லை. வந்த உறவினர் சிலர் திருமணத்துக்கு முந்திய இரவில் பெண்ணை அழைத்து வந்த போதே சீற்றத்தோடு பேசத் தொடங்கிக் குழப்பத்தில் ஈடுபட்டனர். சிலர் உண்ண மறுத்துவிட்டனர். குழப்பக்காரரில் ஒரு சிலர் நன்றாகக் குடித்திருந்தனர். அதை நான் முதலில் தெரிந்துகொள்ளவில்லை. அவர்கள் கன்னா பின்னா என்று பேசத் தொடங்கியபோது நான் சமாதானம் செய்ய விரும்பி மெல்ல நெருங்கி ஒன்று இரண்டு சொன்னேன். அப்போது எங்கள் பக்கத்து வீட்டுக்காரர் என்னைக் கைப்பற்றி இழுத்து, "என்ன தம்பி! நீ அவர்களிடம் போய்ப் பேசுகிறாயே! குடிகாரரிடம் காரணம் பேசிப் பயன்படுமா?" என்றார். "அப்படியா?" என்று திகைத்து நின்றேன். "கிட்டே போனால் சாராய நாற்றம் மூக்கைத் துளைக்கிறதே, தெரியவில்லையா?" என்றார். அதன் பிறகுதான், அவர்களுடைய முகங்களை நன்றாகக் கவனித்தேன்; குடித்திருக்க வேண்டும் என்று துணிந்தேன். சாராய நாற்றத்தை அறிவதற்காக மறுபடியும் நெருங்கிச் சென்றேன். அந்த நாற்றம் இருந்ததை உணர்ந்தேன். அம்மாவிடம் அதைப் பற்றிச் சொன்னேன். "அப்படித்தான் இருப்பார்கள். கிராமத்தில், படிக்காத மக்கள் அப்படித்தான். நம்முடைய பங்காளிகளும் சிலர் அப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அப்பா அவர்களை வீட்டுப்பக்கமே சேர்ப்பதில்லை. எதற்கும் அழைப்பதும் இல்லை. என்ன செய்வது? படிப்பும் இல்லை, பண்பும் இல்லை" என்றார்.
உள்ளூராரும் வெளியூராரும் சிலரும் சேர்ந்து கடைசியில் இரவு 11 மணிக்குப் பெண் அழைத்து வந்தோம். அதற்கு மேல் நாதசுரம் முழங்க, நலுங்கு வைக்கத் தொடங்கினார்கள். அந்தக் குடிகாரரில் இருவர் அங்கே வந்து உட்கார்ந்து விட்டார்கள். அவர்களை யாரும் அழைத்ததாகவும் தெரியவில்லை. அவர்களே வலிய வந்து பந்தலில் உட்கார்ந்து கொண்டார்கள். மணப்பெண்ணுக்கு நலுங்கு வைக்கப் பெண்கள் ஒவ்வொருவராக வந்து சந்தனம் பூசி ஆரத்தி சுற்றிச் சென்றார்கள். ஒருவர் வடக்குப் பக்கத்தே உட்கார்ந்து, நலுங்கு வைத்த பெண்களுக்கு வெற்றிலை பாக்கு எடுத்துக்கொடுத்துக் கொண்டிருந்தார். இளம் பெண்கள் இருவர் சேர்ந்து பாட்டுப் பாடினார்கள். பாட்டும் நாதசுர இசையும் மாறி மாறி அமைந்து கேட்பதற்கு இனிமையாக இருந்தது. பெண் வீட்டுக்காரரும் பிள்ளை வீட்டுக்காரருமாகக் கலந்து நலுங்கு வைத்துச் சென்றார்கள். அம்மா நலுங்கு வைக்க முன் வந்ததைப் பார்த்து என் மனத்தில் ஊக்கம் ஏற்பட்டது. அம்மா சந்தனத்தை எடுத்து மணப்பெண்ணின் முகத்திலும் கைகளிலும் தடவிவிட்டு ஆரத்தி சுற்றத்தொடங்கியபோது, "போதும் அம்மா! ஒன்பது பேர் ஆகிவிட்டது. நீங்களே கர்ப்பூரம் ஏற்றிச் சுற்றி விடுங்கள், போதும்" என்றார் ஒருவர். இல்லை எட்டுபேர்தான் நலுங்கு வைத்தார்கள். இன்னும் ஒருவர் குறையாக இருக்கிறது" என்றார் அம்மையார் ஒருவர். அவர் வெளியூரார் போல் தெரிந்தது. உடனே, அவரைப் பின்பற்றி, மற்றோர் அம்மையார், "அது என்ன வழக்கம்? சாதியில் இல்லாத வழக்கம். குலத்தில் இல்லாத வழக்கம்! எட்டுப்பேர் நலுங்கு வைப்பது பற்றி நான் இப்போதுதான் கேள்விப்பட்டேன். வேண்டும் என்றே செய்வதாக இருக்கிறதே! முன்னே பின்னே வாழ்ந்த வீடாக இருந்தால் தெரியும்" என்றார். சும்மா உட்கார்ந்திருந்த குடிகாரர் கிளம்பிவிட்டார். "முதலில் இருந்தே இப்படித்தான் செய்து வருகிறார்கள். நானும் பார்த்து வருகிறேன். யாரையும் மதிப்பதில்லை. ஒன்றும் இல்லை. யாரைக் கேட்டுப் பெண் அழைத்தார்கள்? அதற்கு முதலில் பதில் சொல்லட்டும்" என்று மீசையை முறுக்கிக்கொண்டு எழுந்தார்.
"இன்னும் ஒருத்தர் நலுங்கு வைத்து முடித்துவிடலாமே. இந்தச் சின்ன வேலைக்கு ஏன் இவ்வளவு பெரிய பேச்சும் குழப்பமும்?" என்றேன்.
பக்கத்தில் இருந்தவர் என்னைப் பார்த்து, "நீ சும்மா இரு. தம்பி! உனக்கு என்ன தெரியும்? வெற்றிலை பாக்குக் கொடுத்து வருபவர் பெரிய மனிதர். அவர் சொல்கிறார் ஒன்பது பேர் ஆகிவிட்டது என்று, இப்போது இன்னொருவர் வந்து நலுங்கு வைத்தால் பத்து ஆகிவிடுமே! எட்டு ஆகாது என்றால், பத்து மட்டும் ஆகுமா?" என்றார்.
மணப்பந்தல் முழுவதும் ஒரே குழப்பமாக மாறிவிட்டது. எண்குணத்தான் என்று திருவள்ளுவர் கடவுளைச் சொன்னது நினைவுக்கு வந்தது. ஒவ்வோர் அதிகாரத்திலும் அவர் பத்துப் பத்துக் குறள் பாடியிருப்பதும் நினைவுக்கு வந்தது. "எட்டு, பத்து எல்லாம் நல்ல எண்கள்தானே? ஒன்பதாக இருந்தால் என்ன? எட்டு அல்லது பத்தாகவே இருந்தால் தான் என்ன?" என்றேன்.
பக்கத்தில் இருந்தவரின் முகம் மாறியது. "நீ சும்மா இருப்பா, இந்தக் காலத்தில் இளம்பிள்ளைகளே இப்படித்தான். கடவுளே இல்லை என்று சொல்கிறவர்கள் நீங்கள். உங்களுக்கு எட்டு, பத்து எல்லாம் நன்றாகத்தான் இருக்கும். நாளைக்கு இதனால் ஏதாவது கேடு வந்தால் யார் முன்வந்து காப்பாற்றுவார்கள்? செய்கிறவர்கள் சரியாகச் செய்வதுதானே? செய்யத் தெரியாவிட்டால், எங்கள் வீட்டிலே கலியாணம் என்று ஏன் பெருமையோடு ஒப்புக்கொண்டு வந்தீர்கள்?" என்றார்.
குடிகாரனின் மனநிலை மயங்கியது போலவே, அவருடைய மனநிலையும் மயங்கியிருந்ததை உணர்ந்ததும் பேசாமல் அமைதியானேன். மூட நம்பிக்கையும் ஒருவகைப் போதைப் பொருள் என்பது முன்னமே தெரியும். நெருக்கடியான நேரத்தில் அமைதியைக் கெடுப்பதற்கு மூடநம்பிக்கையும் கள்போல் எவ்வளவு பயன்படுகிறது என்பதை அன்று உணர்ந்தேன்.
அந்த நேரத்தில் அப்பா வந்து சேர்ந்தார். எல்லாவற்றையும் கேட்டறிந்த பிறகு உரத்த குரலில் பேசி எல்லாரையும் அமைதிப்படுத்தி, வெற்றிலை பாக்குக் கொடுத்தவர் சொல்லும் எண்ணையே எல்லாரும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும், அம்மாவே கர்ப்பூரம் ஏற்றிப் பெண்ணின் நலுங்கை நிறைவேற்றவேண்டும் என்றும் சொன்னார். அவர் சொல்லி முடித்தவுடன், "அதுதான் சரி" என்றும் "அப்படியே செய்வோம்" என்றும் நாலைந்து பேர் உரக்கச் சொன்னார்கள். பிறகு யாரும் எதிர்த்துப் பேசவில்லை. அப்பாவின் திறமையால் அமைதி ஏற்பட்டது என்று சொல்ல முடியாது. மணி பன்னிரண்டே முக்கால் ஆகிவிட்டது. பேசிப் பேசிக் களைத்துப் போன காரணத்தால், எப்படியாவது முடியட்டும் என்று சோர்ந்துதான், அப்பாவின் தீர்ப்பை ஒப்புக் கொண்டார்கள் என்று சொல்ல வேண்டும். நானும் களைத்துப் போனேன். உடம்பின் களைப்புக்கும் காரணம் இல்லை. உள்ளத்தின் சோர்வால் உடம்பும் சோர்ந்திருந்தது. எழுந்து வீட்டுக்கு வந்தேன்.
மறுநாள் காலையில் திருமணப் பந்தலுக்குப் போன போதுதான் மணப்பெண்ணின் முகத்தை நன்றாகப் பார்க்க முடிந்தது. முந்திய நாள் கவிழ்ந்த முகத்தையே பார்த்தேன். விளக்கொளியில் பார்த்த காரணத்தால் உண்மையான அழகும் தெரியவில்லை. திருமணத்தன்று காலையில் பந்தலைச் சுற்றி வந்தபோது மணப்பெண்ணின் முகத்தை நன்றாகப் பார்த்தேன். முகத்தில் அவ்வளவாக கவர்ச்சி இல்லை. மாநிறமான பெண்கள் பலர் எவ்வளவோ கவர்ச்சியாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட கவர்ச்சியும் காணப்படவில்லை. மூக்கு அளவாக அமையவில்லை. உருண்டு திரண்ட அந்த மூக்கின் கொடியவடிவம் முகத்தின் அழகையே கெடுத்துவிட்டது. கன்னங்களில் தசைப்பற்று இல்லை. ஒரு பெண்ணின் இளமைக்கு அழகு செய்யும் சிறு நெற்றி இல்லை. ஆண்களுக்கு இருப்பது போன்ற பரந்த பெரிய நெற்றி இருந்தது. இவை எப்படியாவது போகட்டும் உடுத்திருந்த உடையிலாவது, அணிந்த நகைகளிலாவது அழகைக் கூட்டியிருக்கலாம். அதுவும் செய்யப்படவில்லை. ஆடம்பரத்தைப் புலப்படுத்தும் முயற்சி இருந்ததே தவிர அழகை எடுத்துக் காட்டும் முயற்சி இல்லை. பொன்னிறப் பட்டுச் சேலையும் சரிகை மிகுந்த சோளியும் மணமகள் உடுத்திருந்தாள். கோயிலில் சாமியின் அழகு புலப்படாதபடி - மார்பும் கழுத்தும் கைகளும் தெரியாதபடி - நகைகளால் மூடி மறைப்பது போல் அந்த மணமகளைப் பலவகை அணிகலன்களால் - காசுமாலை முதல் சிலவகைப் பதக்கங்கள் வரையில் - எல்லாவற்றையும் அணிவித்துப் - போர்த்திருந்தார்கள் என்று சொல்லவேண்டும். அந்த நகைகளில் முக்கால் பங்கு இரவல் வாங்கியனவாக இருக்கவேண்டும் என்பது தானே தெரிந்தது. ஏன் என்றால், பெண் வீட்டார் பெரிய செல்வர் அல்ல என்பது, அவர்களின் வீட்டுக்குப் போய் வந்த எனக்கு நன்றாகத் தெரியும். தவிர, அந்த நகைகளில் சில, காலத்திற்கு ஏற்காத பழைய நகைகள், பொருட்காட்சியில் வைக்கத் தகுந்தவை. ஆகையால் மணமகள் இருந்த அழகும் குறைந்து விளங்கினாள். அந்த வீட்டில் விதவையாக வாழ்ந்த பாக்கியத்தின் இயற்கை அழகில் அரைக்கால் பங்கும் அவளுக்கு இல்லை. ஆனால் மணமகன் விநாயகத்தின் அழகை நோக்கியபோது, அந்தச் சிடுமூஞ்சிக்கு இவள் போதும் என்று தோன்றியது. மணப்பந்தலிலும் அவருடைய முகத்தில் ஒரு பொலிவோ புன்னகையோ இல்லை. வழக்கம் போல் உம்மென்று உட்கார்ந்திருந்தார். சொன்னதைச் செய்து சடங்குகளை முடித்தார். இப்படிப்பட்டவர் புதிய ஒருத்தியோடு பேசிப் பழகி எப்படி வாழ்க்கை நடத்தப் போகிறாரோ என்று எண்ணினேன்.
திருமணம் முடிந்த பிறகும் பகல் விருந்தின் போது சிறு குழப்பம் நடந்தது. தாலி கட்டுவதற்குமுன் எதற்காகவோ யாரையோ கேட்கத் தவறிவிட்டார்கள். அவ்வாறு செய்தது தப்பு என்று சிலர் கோபத்தோடு எதிர்வீட்டுத் திண்ணையில் போய் உட்கார்ந்துகொண்டு அங்கே ஒரு கூட்டத்தைச் சேர்த்துக் கொண்டார்கள். திருமணத்துக்கு வந்த உறவினர்கள், ஆளுக்கு ஒருவகை உதவி செய்து துணையாக இருந்து போவதை விட்டு, ஆளுக்கு ஒரு குழப்பம் செய்து கலகம் விளைவிக்கிறார்களே என்று வருந்தினேன். இவ்வளவு அறியாமை உடைய மக்களுக்கு இடையே வாழ்க்கை நடத்துவது எவ்வளவு துன்பம் என்றும் எண்ணி வருந்தினேன்.
திருமணம் முடிந்ததும் மணமகனும் மணமகளும் ஒரு முறை எங்கள் வீட்டுக்கு வந்து பாலும் பழமும் உண்டார்கள். பிறகு மறுநாள் மாலையில் பெண்வீட்டு மருவுக்குச் சென்றார்கள். அங்கிருந்து திரும்பி வந்தபிறகு, மணமகள் நடத்திய வாழ்க்கையைப் பார்ப்பதற்காகப் பாக்கியத்தின் வீட்டுக்குச் சிலமுறை போயிருந்தேன். பாக்கியம் பழையபடியே தம் கடமைகளைச் செய்துகொண்டிருந்தார். தம்பியின் திருமணத்தை முடித்தது பற்றிய மகிழ்ச்சி அந்தம்மாவின் முகத்தில் இருந்தது. மணமகள் சமையலறையிலேயே பெரும்பாலும் இருந்தபடியால் சரியாகக் கவனிக்க முடியவில்லை. நான் அடிக்கடி அங்கே போய் வருவதைக் கவனித்த என் தாய், "இளம் பெண் - புது மருமகள் வந்திருக்கும் வீட்டுக்கு நீ அடிக்கடி போவது நல்லது அல்ல. எப்போதாவது ஒரு முறை போய்விட்டு வந்தால் போதும்" என்றார். அதன்படியே நான் போவதைக் குறைத்துக் கொண்டேன். பாக்கியம் முன்னைவிட ஓய்வாக எங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்து பேசிக்கொண்டிருந்தார். "இனிமேல் எனக்குக் கவலை இல்லை. குடும்பம் அவர்களுடையது. வேலை இருந்தால் செய்துவிட்டு, சோறு இருந்தால் சாப்பிட்டுவிட்டு, இப்படியே என் காலத்தைக் கழிப்பேன்" என்று சிலமுறை அம்மாவிடம் பேசியபோது குறிப்பிட்டார். அந்தப் பேச்சு அவருடைய மனநிறைவைக் காட்டியதே தவிர, கவலையைக் காட்டவில்லை.
விடுமுறையில் ஒரு பாதி இப்படிக் கழித்துவிட்டது. மறுபாதியில்தான் படிக்கத் தொடங்கினேன். முற்பகுதியின் குறையை ஈடுசெய்யும் அளவிற்கு நன்றாகவே படித்தேன். சந்திரனைப் பற்றிய நினைவு அடிக்கடி வந்தது. ஆயினும் முன்போல் அதனால் சோர்வடையவில்லை.
-------