அகல் விளக்கு ( நாவல்)
மு. வரதராசனார் எழுதியது.
akal viLakku (novel)- part 2
of mu. vAratarAcanAr
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the ChennaiLibrary.com and Mr. Chandrasekaran for providing a soft copy
of this work and for permission to include it as part of Project Madurai collections.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2016.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
அகல் விளக்கு (முழு நாவல்)
மு.வரதராசனார் எழுதியது.
சாகித்ய அகாதெமி விருது பெற்றது
அத்தியாயம் 16
விடுமுறை முடிந்ததும், பெட்டி படுக்கையுடன் சென்னைக்குப் போய்ச் சேர்ந்தேன். அங்குப் போய் விடுதியில் கால் வைத்தவுடன், சந்திரனுடைய நினைவு முன்போல் வந்து வருத்தியது. என்னைப் பார்த்த பழைய மாணவர்கள், "உங்கள் ஊரான் - பெண்ணாக நடித்த அந்தச் சந்திரன் - எங்கே இருக்கிறான்? தேர்வுக்குப் படிக்கிறானா?" என்று பல கேள்விகள் கேட்டு என் மனத்தை மேலும் கலக்கினார்கள்.
நான் சென்ற மறுநாள் மாலன் சோழசிங்கபுரத்திலிருந்து வந்து சேர்ந்தான். அவனும் சந்திரனைப் பற்றிக் கேட்டான். சந்திரனுடைய அறை காலியாக இருந்தது. அந்த அறைக்கு மாற்றிக்கொண்டு வருமாறு மாலனுக்குச் சொன்னேன். "அது கெட்ட அறை, சந்திரனுடைய வாழ்வையே கெடுத்துவிட்டது. நானும் கெடவேண்டுமா?" என்றான்.
"சந்திரன் நாடகத்தால் கெட்டான் என்றாய். பெண்ணால் கெட்டான் என்றாய். இப்போது இந்த அறையால் கெட்டான் என்கிறாய். எதுதான் உண்மை? மூடநம்பிக்கை எதையும் பேசும்போல் தெரிகிறது" என்றேன்.
"நீ இந்த அறையை எடுத்துக் கொண்டு, உன் அறையை எனக்குக் கொடு, பார்க்கலாம்" என்றான் அவன்.
"சந்திரனும் நானும் நெருங்கிப் பழகியவர்கள்" நான் அந்த அறையில் இருந்தால், எனக்கு அடிக்கடி சந்திரனுடைய நினைவே வந்து துன்பப்படுத்தும்" என்றேன்.
"அதுவும் ஒரு மூடநம்பிக்கைதான்" என்று மாலன் குத்தலாகக் கூறினான்.
வேண்டும் என்றே அவன் பேசுவதை உணர்ந்து கொண்டு அந்த முயற்சியைக் கைவிட்டேன். புதிய மாணவன் எவனாவது வந்து பக்கத்து அறையில் இருந்து தொல்லை கொடுப்பதைவிட, பழகிய நண்பன் இருந்தால் நன்மையாக இருக்குமே என்றுதான் அவனை அவ்வாறு வேண்டிப் பார்த்தேன். "உன் அறைக்குப் பக்கத்தில் காலி இருந்தால் சொல். நானாவது அங்கே வந்து இருப்பேன்" என்றேன். அதற்கும் வழி இல்லை என்றான். பழைய அறையிலேயே இருக்கத் துணிந்தேன்.
வழக்கம் போல கல்லூரி தொடங்கியதும், பாடங்கள் நடந்தன. நாங்களும் படிக்கத் தொடங்கினோம். மாணவர்கள் புதிய நண்பர்களைப் பெற்றுப் பழகினார்கள். புதிய பழக்க வழக்கங்களையும் கற்றுக்கொண்டார்கள். நன்மையும் பரவியது. தீமையும் பரவியது. என்னையும் மாலனையும் பொறுத்தவரையில், புதிய நட்பு ஒன்றும் ஏற்படவில்லை. புதியவர்களோடு பழகினாலும் உள்ளம் கலக்காமல் உதட்டளவில் பழகிவந்தோம். மாலனுக்கும் எனக்கும் எவ்வளவோ கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், அவனும் என்னை விடவில்லை. நானும் அவனை விடவில்லை. அவனிடம் மூடநம்பிக்கைகளும் அவற்றிற்குக் காரணமான தன்னலமும் மிகுதியாக இருந்தபோதிலும், கெட்ட பழக்கங்கள் ஒன்றும் இல்லை. படித்து முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் நிறைய இருந்தது. ஆகையால், புதியவர்களோடு பழகிப் பிறகு அந்தப் பழக்கத்தால் வருந்துவதைவிட, பழகிய பழைய நட்பே போதும் என்று இருந்துவிட்டேன். சில மாணவர்கள் தாமே நெருங்கி வந்து பழகினார்கள். சீர்திருத்தமான கருத்து உடையவர்கள் சிலர் பழகினார்கள். கல்வியில் ஊக்கம் மிகுந்தவர்கள் சிலர் முன்வந்து பழகினார்கள். பொது அறிவு நிரம்பியவர்கள் சிலர் நெருங்கிப் பழகினார்கள். அவர்களுடைய சீர்திருத்தமும் கல்வித்திறனும் பொது அறிவும் எனக்குப் பிடித்திருந்தன. ஆனால் சில நாள் நெருங்கிப் பழகியபோது, எனக்குப் பிடிக்காத சில பழக்கங்களும் கொள்கைகளும் அவர்களிடம் இருந்ததை உணர்ந்தேன். அந்த அளவிற்கு மேல் நட்பு வளராதபடி பழக்கத்தை வரையறைப் படுத்திக் கொண்டேன். இப்படித்தான் எல்லாரும் குணமும் குற்றமும் கலந்தவர்களாக இருப்பார்கள் என்று புதியவர்கள் யாரோடும் நெருங்கிப் பழகாமல் காத்துக் கொண்டேன். மாலனுடன் மட்டும் மனம் கலந்து பழகி வந்தேன். அவனுடைய குறைகள் எனக்கு நன்றாகத் தெரியும். தெரிந்த குறைகள் அவ்வளவாகத் தீமை செய்வதில்லை. பழகிய வழியில் உள்ள மேடும் பள்ளமும் கல்லும் முள்ளும் நமக்குத் தீமை செய்வதில்லை. பழகாத வழியில் உள்ள குறைகள்தான் தீமை செய்கின்றன. மாலனும் எப்படியோ என்னிடம் மட்டுமே நெருங்கிப் பழகிவந்தான். என்னுடைய முற்போக்குக் கொள்கைகளும் அவனுடைய மூடநம்பிக்கைகளும் முரண்பட்டன. என்னுடைய இரக்க உணர்ச்சியும் அவனுடைய தன்னல முயற்சியும் மாறுபட்டன. ஆனால் எப்படியோ என் நெஞ்சமும் அவன் நெஞ்சமும் உறவு கொண்டன.
சந்திரனைப் பற்றிய நினைவு எனக்கு அடிக்கடி வந்தது. நன்றியுணர்ச்சியோடு அவனைப் பற்றி நினைந்து நினைந்து வருந்தினேன். என் உள்ளத்தின் வருத்தத்தை மாலனிடம் தவிர வேறு யாரிடம் வெளிப்படுத்தி ஆறுதல் பெறமுடியும். அவனிடம் சொல்வேன். அவனோ, கவலைப்படாமல் இருப்பான். அவனுடைய போக்கு எனக்குப் பிடிக்கவில்லை. முதலில் இருந்தே அவன் சந்திரனிடம் வெறுப்புக் காட்டி வந்தான் என்பது தெரியும். தெரிந்தும் என் மனம் ஆறுதல் பெறவில்லை.
மாலனிடம் சந்திரனைப் பற்றி மனம் கலந்து பேச முடியாதது ஒரு குறையாகவே இருந்து வந்தது. இமாவதியின் நினைவு வந்தது. அவளோடாவது அவனைப் பற்றிப் பேசி அந்தக் குறையைப் போக்கி ஆறுதல் பெற எண்ணினேன். திருமணத்திற்குப் பிறகு அவளைக் காணவும் இல்லை. இப்போது கண்டு பேச விரும்பினேன். அதைப் பற்றி மாலனிடம் சொன்னால் அவன் தடுப்பான் என்பதும் தெரியும். ஆகவே அவனிடம் சொல்லாமல் ஒருநாள் இராயப்பேட்டைக்குச் சென்றேன்.
வீட்டில் இமாவதி இல்லை. அவளுடைய தங்கை திருமகள் வந்து, "யார் நீங்கள்? முன்னே வீட்டுக்கு வந்திருப்பதாகத் தெரிகிறதே" என்றாள். "சந்திரனுடைய நண்பன்" என்று சொன்னேன். சொன்னதும் "சந்திரன் வந்து விட்டாரா? ஊரில் இருக்கிறாரா? படிக்கிறாரா?" என்றாள். "அவரைப் பற்றி ஒன்றும் தெரியாது" என்று நான் சொன்னதும் அவளுடைய ஆர்வம் முழுவதும் மறைந்து விட்டது. "இருங்கள் அம்மாவை வரச் சொல்வேன்?" என்று உள்ளே சென்றாள்.
இமாவதியின் தாய் வந்ததும், "இன்னும் அவன் திரும்பி வரவில்லையாமே! என்ன ஆனான் என்றும் தெரியவில்லையே" என்று வருந்தினார். பிறகு இமாவதி அவளுடைய கணவரின் வீட்டில் இருந்ததைத் தெரிவித்தார்.
"இமாவதியைப் பார்த்துப் பேசிவிட்டுப் போகலாம் என்று வந்தேன்" என்றேன்.
"அடுத்த மாதம் இருவரும் வருவார்கள். அல்லது அவள் மட்டுமாவது வருவாள். வந்ததும் உனக்குத் தெரிவிக்கச் சொல்வேன்" என்றார்.
மறுபடியும் அந்த அம்மாவே சந்திரனைப் பற்றிப் பேச்செடுத்தார். "எவ்வளவு நல்ல பிள்ளை! நல்லபடி முன்னுக்கு வந்திருக்கவேண்டும். இமாவதிக்கு அவனைப் பற்றிக் கவலை உண்டு. ஒருநாள் கனவிலும் வந்தானாம். கடிதத்தில் எழுதியிருந்தாள்" என்றார்.
நானும் என் வருத்தத்தைத் தெரிவித்துவிட்டு விடை பெற்றேன்.
விடுதிக்கு வந்தவுடன் "எங்கே போயிருந்தாய்? சொல்லாமலே போய்விட்டாயே" என்று மாலன் கேட்டான். ஏதாவது பொய் சொல்லி மறைத்து விட வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டு திரும்பினேன். ஆனாலும் முடியவில்லை. உண்மையைச் சொன்னேன். "நீயும் சந்திரனைப் போல் எங்காவது அகப்பட்டுக்கொண்டு ஏமாந்து கெடப்போகிறாயோ என்று எனக்குப் பயமாக இருக்கிறது" என்றான்.
"என்னைப் பற்றி அப்படித் தவறாக எண்ணவேண்டா."
"உன்னை நம்பலாம்; உன் உடம்பை எப்படி நம்ப முடியும்? உடம்பு குறை உடையது."
"சரி, போகப் போகத் தெரியும்" என்றேன்.
பிறகு அங்கு இமாவதியிடம் பேசியதைப் பற்றிக் கேட்டான். அவள் இல்லாதபடியால் திரும்பிவிட்டதைச் சொன்னேன். "உனக்கு என்ன வேலை அங்கே? போகாமலே இருப்பது நல்லது" என்றான்.
"சந்திரனைப் பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டு வரச் சென்றேன்" என்றேன்.
"இன்னும் சந்திரனைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்காதே. உன்னிடம் அவனுக்கு உண்மையான அன்பு இருந்தால் ஒரு கடிதம் எழுதட்டும். அதுவரையிலும் அமைதியாக இரு" என்றான்.
ஆனாலும் என்னால் அவ்வாறு இருக்க முடியவில்லை. பெருங்காஞ்சியில் அவனுடைய பெற்றோரும் அத்தையும் கற்பகமும் என்னைப் பற்றி என்ன எண்ணுவார்கள்? நான் அடியோடு மறந்துபோனதாக எண்ணுவார்களோ என்று சாமண்ணாவுக்கு ஒரு கடிதம் எழுதினேன். கடிதத்துக்கு அவரே கைப்படப் பதில் எழுதியிருந்தார். அதில் பழைய நிகழ்ச்சிகளை எல்லாம் குறிப்பிட்டு எழுதியிருந்தார். அவனை வெளியூரில் படிக்க வைக்கக்கூடாது என்று தாம் பிடிவாதமாக இருந்ததைப் பற்றியும், சந்திரனுடைய சிற்றப்பாவும் அப்படிப் படித்த காரணத்தால் கெட்டுப் போனதைப் பற்றியும், சந்திரனுடைய தாய் மனம் குலைந்து வருந்துவதைப் பற்றியும் குடும்பமே சீர்குலைந்து போனதைப் பற்றியும் குறிப்பிட்டிருந்தார். கடிதத்தைப் படித்தபோது என் நெஞ்சம் உருகியது; கண்கள் கலங்கின.
சிறிது நேரத்தில் மாலன் என்னை நோக்கி வந்தான். வந்ததும், என் மேசைமேல் இருந்த குறிப்புகளைப் புரட்டிப் பார்த்துவிட்டு, "உனக்குத் திருவுளச் சீட்டில் நம்பிக்கை இருக்கிறதா?" என்றான்.
"இல்லை" என்றேன்.
"எனக்கு நம்பிக்கை இருக்கிறது."
"உனக்கு இருக்கும் நம்பிக்கைகளுக்குக் கணக்கே இல்லை."
"உனக்கு ஒரு நம்பிக்கையும் இல்லையா?"
"உண்டு. கடவுளிடத்திலும் கடவுளின் சட்டமாகிய அறத்திலும் நம்பிக்கை உண்டு. அடுத்தபடியாக, என்னிடத்தில் நம்பிக்கை உண்டு. உன்னிடத்தில் நம்பிக்கை உண்டு. உலகத்தில்..."
"போதும்! இந்த நம்பிக்கை எல்லாம் இருந்து பயன் என்ன?"
"இன்னும் என்ன நம்பிக்கை வேண்டும்? லாட்டரி சீட்டில், கோழிப் பந்தயத்தில், குதிரைப் பந்தயத்தில் என்று இப்படி நம்பிக்கைகள் வேண்டும்?"
"ஆமாம் அவைகளும் நம்பிக்கைகள் தான்."
மாலன் அவ்வாறு கூறியதும் எனக்குத் திடுக்கிட்டது. "இப்படிப்பட்ட குடிகெடுக்கும் பாழும் நம்பிக்கைகளைவிட மந்திரக்காரர் சோதிடக்காரர் முதலியவர்கள் ஊட்டும் மூடநம்பிக்கைகளே மேல்" என்றேன்.
"ஒன்று சொல்கிறேன்" என்று பொறுமையோடு உபதேசம் செய்பவன் போல் தொடங்கினான்.
"இவற்றில் எல்லாம் ஏதோ உண்மை இருப்பதால் தான் இவைகள் நடக்கின்றன. உண்மை இல்லாவிட்டால் படித்தவர்கள் கூட்டமாகப் போவார்களா?"
"நம்பிக்கையால் போகவில்லை. பொழுது போக்குக்காகப் போகிறார்கள். வாழத் தெரியாமல் போகிறார்கள்."
"சிலர்க்கு ஆயிரம் பத்தாயிரம் என்று எதிர்பாராமல் கிடைக்கிறதே. நல்ல தசை, யோகம் இருக்கிறது என்று சோதிடக்காரர் சொல்கிறபடியே கிடைக்கிறதே. அதற்கு என்ன சொல்கிறாய்?"
"வருங்காலத்தில் தானே வரும், கொடுக்கிற தெய்வம் தானே கொடுக்கும் என்ற நம்பிக்கை இருந்தால், ஒன்றும் செய்யாமல், பந்தயங்களுக்குப் போகாமல், சீட்டுக் கட்டாமல் சும்மா இருக்கவேண்டும். பணம்தானே வந்து சேரவேண்டும்."
"தெய்வம் காட்டும். ஊட்டுமா?"
"இப்படிப்பட்ட பழமொழிகள் பல உண்டு. யாரும் எதற்கும் பழமொழியைப் பயன்படுத்தலாம்."
"உன்னோடு பேசிப் பயன் இல்லை" என்று மாலன் வெறுப்போடு சொல்லி அமைதியானான்.
"அதையே நானும் சொல்ல முடியும்" என்றேன். அவ்வாறு நான் சொல்லிய பிறகு ஏன் சொன்னேன் என்று வருந்தினேன். நண்பன் மனம் சோர்வடையும் போது, புண்படுத்தும் முறையில் திருப்புவது நல்லது அல்ல என்று உணர்ந்தேன். பிறகு அதை மாற்றுவதற்காகத் தொடர்ந்து பேசினேன். "மூடநம்பிக்கையோ அல்லவோ, அது எப்படியோ போகட்டும். நாம் உழைக்க வேண்டும்; உழைப்புக்கு ஏற்ற கூலி வரவேண்டும். இப்படி எதிர்பார்ப்பதுதான் கடமை. அதைவிட்டு, எதிர்பாராமல் பணம் வந்து குவியவேண்டும் என்று ஏங்குவதே பாவம்! பலருடைய பணம் தகாத வழியில் நமக்கு வந்து சேர்வது நல்லதா? அது தன்னலம் அல்லவா?" என்றேன்.
"தன்னலம் இல்லாமல் இந்த உலகத்தில் யாரும் வாழ முடியாது" என்றான்.
"உண்மைதான். மற்றவர்களைக் கெடுத்துத் தான் வாழவேண்டும் என்பதுதான் கெட்ட தன்னலம். மற்றவர்களும் வாழத் தானும் வாழவேண்டும் என்பது நல்ல தன்னலம். தனக்கு மட்டும் நல்ல காலம் வரவேண்டும் என்பது கெட்டது. நாட்டுக்கே நல்ல காலம் வந்தால், தனக்கும் நல்ல காலம் வரும் என்பது நல்லது. அதனால் மூடநம்பிக்கைகளை நான் வெறுக்கிறேன். அவைகள் அறிவுக்கும் பொருந்தவில்லை; தன்னலத்தையும் வளர்க்கின்றன."
மாலன் பேசாமல் இருந்தான். மறுபடியும் குறிப்புப் புத்தகங்களைப் புரட்டிப் பார்த்தபடி இருந்து எழுந்து சென்றான்.
சந்திரன் ஒரு வகையில் கெட்டான்; மாலன் மற்றொரு வகையில் குறுக்கு வழிகள் நாடித் தவறான பாதையில் போவதால் கெடுவானோ என்று அவனைப் பற்றியும் அன்று கவலைப்பட்டேன். சூரியனை உலகம் சுற்றுவது முதல் அணுக்களின் சுழற்சிவரையில் பல துறையிலும் விஞ்ஞான அறிவு பெற்று வளரும் கல்லூரி மாணவர்களின் மனப்பான்மையே இப்படி இருந்தால், உலகம் எப்படி முன்னேற முடியும் என்று எண்ணிச் சோர்ந்தேன்.
இமாவதியிடமிருந்து ஏதாவது கடிதம் வருமா என்று நாள்தோறும் எதிர்பார்த்து வந்தேன். ஒரு நாள் எதிர்பார்த்தபடியே கடிதம் வந்தது. தான் ஊருக்கு வந்திருப்பதாகவும் பேச விரும்புவதாகவும் குறிப்பிட்டு வீட்டுக்கு வருமாறு அழைத்திருந்தாள். மறுநாள் சனிக்கிழமையாக இருந்தது. மாலனிடம் உண்மையைச் சொல்லிவிட்டு இராயப்பேட்டைக்குச் சென்றேன்.
அவள் என்னை எதிர்பார்த்திருந்தாள். கதவைத் தட்டியவுடன் திறந்து பார்த்து, "வாங்க வருவீர்கள் என்று எதிர்பார்த்திருந்தேன்" என்று வரவேற்றாள்.
முந்திய ஆண்டில் தேர்வுக்கு முன் அவளைக் கண்ட பிறகு இப்போது ஐந்து மாதம் கழித்துக் கண்டேன். முன்னைவிட அவளுடைய முகத்தின் பொலிவும் மினுமினுப்பும் மிகுதியாக இருந்தன. ஆனால் முன் இருந்த துடிதுடிப்புச் சிறிது குறைந்தாற்போல் தோன்றியது. தோற்றம் முன்னைவிட எளிமையாக இருந்ததை உணர்ந்தேன். சிறு நீலநிற வாயில் சேலையும் அதே துணியில் தைத்த சோளியும் அணிந்து எளிமையாகத் தோன்றினாள். அந்த எளிமை காண்பதற்கு அழகாகவும் தூய்மையாகவும் இருந்தது. காதில் பழைய தோடும், கழுத்தில் ஒரு மெல்லிய சங்கிலியும் அணிந்திருந்தாள். கையில் இரண்டு இரண்டு பொன் வளையல்கள் இருந்தன. கைக்கடியாரம் இல்லை. திருமணமாகி இல்வாழ்க்கை தொடங்கிய பிறகு சில பெண்களுக்கு ஆடம்பர வேட்கை குறைகிறது என்றும், சிலருக்குக் குழந்தைகள் பிறந்த பிறகே ஆடம்பர வேட்கை குறைகிறது என்றும், இன்னும் சிலருக்குத் தம் வயிற்றில் பிறந்த பெண்ணுக்குத் திருமணம் ஆனபிறகே ஆடம்பரம் குறைகிறது என்றும், வேறு சிலருக்குச் சாகும்வரையில் அந்த வேட்கை தீர்வதில்லை என்றும் ஒரு நூலில் படித்தது நினைவுக்கு வந்தது. இமாவதி முதல் வகுப்புப் பெண் என்று உணர்ந்து மகிழ்ந்தேன். ஆடம்பரம் குறைந்தும் அவளுடைய அழகு குறையவில்லை. நெற்றியில் சிறு திலகத்துடன் வாயில் புன்முறுவலுடன் அவள் என் எதிரே உட்கார்ந்தபோது அழகிய ஓவியம் போலவே விளங்கினாள்.
பேச உட்கார்ந்தவுடன், "அவரைப் பற்றி இன்னும் ஒன்றும் தெரியவில்லையா!" என்று கேட்டாள். அவள் முகத்தில் கவலை இருந்தது. "இன்னும் ஒன்றும் தெரியவில்லை. உங்களுக்காவது ஏதாவது கடிதம் வந்திருக்கும் என்று எண்ணினேன். உங்களுக்கும் ஒன்றும் எழுதவில்லையே" என்றேன்.
"அவரைப் பற்றிய நினைவு அடிக்கடி வருகிறது. பழகாமலே இருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவருடைய பிரிவுக்கும் துன்பத்துக்கும் நான் காரணமாக இருந்தேன் என்பதை நினைத்துக்கொள்ளும் போதெல்லாம் என் மனம் வேதனைப்படுகிறது. என்ன செய்வது?" என்று முகம் கவிழ்ந்தாள்.
அவளுடைய உள்ளத்திலும் இன்னும் அந்தப் பழைய கலக்கம் இருந்து வருதலை உணர்ந்தேன். "இனிமேல் நாம் கவலைப்பட்டுப் பயன் என்ன? மெல்ல மெல்ல மறக்க வேண்டியதுதான்" என்றேன்.
"ஒருநாள் கனவில் வந்தார். இதே வீட்டில்தான். அந்த நாற்காலியில் வந்து உட்கார்ந்திருந்தார். தலைகுனிந்தபடி இருந்தார். நான் வந்து பார்த்துக் கேட்டேன். வாய் திறக்காமல் தலைகுனிந்தபடி இருந்தார். இப்படிச் சொல்லாமல் எங்கே போனீர்கள் என்று கேட்டேன். ஓ என்று அலறினார். உடனே விழித்துக் கொண்டேன். அதன் பிறகு அன்று இரவெல்லாம் எனக்கு உறக்கம் வரவில்லை. சிறிது நேரம் அழுதேன். என் கணவர் விழித்துப் பார்த்து, ஏன் இன்னும் உறங்காமல் இருக்கிறாய் என்று கேட்டார். ஏதோ துன்பமான கனவு கண்டதாகச் சொல்லிவிட்டேன்."
"என்ன கனவு என்று அவர் கேட்கவில்லையா?"
"பகலெல்லாம் ஓயாமல் வேலை செய்கிறவர். படுத்தால் நன்றாக உறங்குவார். இப்படி எல்லாம் கேட்டுப் பழக நேரம் ஏது? ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் தான் ஓய்வு. அன்றைக்கும் எத்தனையோ நண்பர்கள், உறவினர்கள். அதன் பிறகும் அவர் என்னைக் கேட்கவில்லை. மறந்து விட்டார். கேட்டிருந்தாலும் உண்மையைச் சொல்லிப் பயன் இல்லை; சொல்லியிருக்க மாட்டேன்."
"ஏன் அப்படி?"
"அது உங்களுக்கு ஏன் தெரியவேண்டும்? எங்கள் கல்லூரியின் உள நூல் ஆசிரியர் சொல்லிக் கொடுத்தது அது. ஆண்கள் எவ்வளவுதான் முற்போக்காக இருந்தாலும் சந்தேகப்படுவார்கள். ஆகையால் அவர்களின் எதிரில் அண்ணன் தம்பியுடனும் எந்த ஆணுடனும் நெருங்கிப் பழகக் கூடாது. பழைய பழக்கங்களையும் சொல்லக்கூடாது என்று அறிவுரை கூறியிருக்கிறார்."
எனக்குச் சிரிப்பு வந்தது.
"ஏன் சிரிக்கிறீர்கள்?" என்று கேட்டாள்.
"பெண்கள் மட்டும் சந்தேகம் இல்லாதவர்களா? தன் கணவர் இன்னொரு பெண்ணுடன் வேறு எந்தக் காரணத்திற்காகப் பழகினாலும் மனைவிக்குச் சந்தேகம் ஏற்படாதா?" என்றேன்.
"அதுவும் உண்மைதான்" என்று அவளும் சிரித்தாள்.
"உங்கள் உளநூல் ஆசிரியை திருமணம் ஆனவரா?"
"ஆமாம். திருமணம் ஆகிக் கணவரோடு வாழாதவர்; கணவனால் கைவிடப்பட்டவர்."
"சரிதான். தம் சொந்த அனுபவம் போலும்."
"அய்யோ! தூய்மையான நல்ல வாழ்க்கை. ஒன்றும் குறை சொல்ல முடியாது."
"இருக்கலாம்."
சிறிது நேரம் இருவரும் பேசாமல் இருந்தோம்.
"உயிரோடு இருக்கவேண்டும் என்றுதான் விரும்புகிறேன். அப்படி இருந்தால் யாருக்காவது ஒரு கடிதம் எழுதியிருக்க மாட்டாரா?" என்று மறுபடியும் அவளே அந்தப் பேச்சைத் தொடங்கினாள்.
"ஏன் அப்படிச் சந்தேகப்படுகிறீர்கள்?"
"செத்தவர்கள் கனவில் வருவதாகச் சொல்வார்கள். அன்று இரவு அவர் கனவில் வந்தபோது, அவர் இறந்து போயிருப்பார் என்று எண்ணினேன். அதனால்தான் துயரம் தாங்காமல் அப்படி அழுதேன்."
"உயிரோடு இருப்பவர்கள் கனவில் வருவதில்லையா?"
"வருகிறார்கள். உண்மைதான். ஆனால் துயரப்படும் போது இந்த ஆராய்ச்சி எல்லாம் நினைவுக்கு வருவதில்லை; மனம் மெலிவாக இருக்கும்போது, அறிவு துணைக்கு வருவதே இல்லை அல்லவா? அதுபோகட்டும். அவரைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?"
"நல்லவன் என்றுதான் நினைக்கின்றேன். கொஞ்சம் மன உறுதி இருந்திருந்தால் இப்படிப் போயிருக்க மாட்டான்."
"உயிரோடு இருப்பார் என்றே எண்ணுறீர்களா?"
"ஆமாம்."
"அப்படியானால் ஏன் யாருக்கும் கடிதம் எழுதவில்லை"
"அவனுடைய இயற்கை அது. வாலாசாவில் இருந்தபோது என்னோடு எவ்வளவு நெருங்கிப் பழகினான் தெரியுமா? இரவும் பகலும் பிரியாமல் பழகினோம். அப்படிப்பட்டவன், சென்னைக்கு வந்த பிறகு சரியாகப் பழகவே இல்லையே. மனத்தில் ஏதாவது மாறுதல் ஏற்பட்டால், உடனே பழக்கத்தையே மாற்றிக்கொண்டு வேறு ஆள் போல் மாறிவிடுகிறான். இப்போதும் அப்படித்தான் செய்தான். பொறுத்துப் பார்ப்போம். இனிமேலாவது ஒரு கடிதம் எழுதுவான் என்று நம்புகிறேன்."
"அப்படியானால் அவர் உயிரோடு இருப்பார் என்றே சொல்கிறீர்கள்" என்று மறுபடியும் கவலையோடு கேட்டாள்.
"அப்படிச் சந்தேகமாக எண்ணவே வேண்டா. "ஏன் சந்தேகப்பட வேண்டும்?" என்றேன். அதன் பிறகு அமைதியாக இருந்தாள். பேச்சை மாற்றுவதற்காக அவளுடைய கணவரின் தொழில், வாழ்க்கை, வருவாய் முதலியன பற்றிக் கேட்டேன். அக்கறை இல்லாதவள் போல் அவற்றிற்கு மறுமொழி அளித்தாள்.
பிறகு மறுபடியும் சந்திரனைப் பற்றிய பேச்சைத் தொடர்ந்து, "நான் அவரோடு பழகியது தவறு என்றோ அவரை ஏமாற்றிவிட்டேன் என்றோ நீங்கள் கருதுகிறீர்களா?" என்று கேட்டாள்.
"ஏன் அதைப் பற்றித் திரும்பத் திரும்ப எண்ணிக் கலங்குகிறீர்கள். நான் அன்றைக்கே சொன்னேனே. நீங்கள் ஒரு குற்றமும் செய்யவில்லை. அவன் அவனுடைய அறியாமையால் அப்படி எண்ணி விட்டான் என்று சொன்னேனே. இனிமேல் அதைப்பற்றி எண்ணவே வேண்டா. விட்டு விடுங்கள்" என்றேன்.
பிறகு இமாவதியின் தாய் வந்து சிறிது நேரம் பேசிவிட்டு எழுந்து சென்றார். அவர் தம்முடைய பேச்சுக்கு இடையே, "இந்தக் காலத்துப் பிள்ளைகளே இப்படித்தான். ஒன்றும் இல்லாமலே காதல் காதல் என்று எண்ணிக் கொண்டு வீணாக மயங்கிப் போகிறார்கள்" என்றார். எனக்கு அந்தச் சொல் ஒரு புதுக் குண்டு போல் இருந்தது. அவர் போனபிறகு, சந்திரனுடைய பண்பைப் பற்றி இமாவதி என்ன எண்ணுகிறாள் என்று தெரிந்து கொள்ள விரும்பினேன்.
"சந்திரனுடைய மனத்தைப் பற்றி நீங்கள் என்ன எண்ணுகிறீர்கள்? அவன் காதலைப் பற்றி ஏதாவது சொன்னது உண்டா?" என்றேன்.
"என்னிடத்தில் அப்படி அவர் ஒரு நாளும் சொன்னதே இல்லை. சொல்லியிருந்தால் ஒன்று நானாவது விலகியிருப்பேன். அல்லது, இந்தத் திருமணமாவது நடந்திருக்காது. அப்படி ஒன்றும் சொன்னதே இல்லை" என்றாள்.
"மற்றப் பெண்களைப் பற்றியாவது அவன் உங்களிடத்தில் ஏதாவது சொன்னது உண்டா?"
"அவர் இந்தப் பேச்சையே பேசுவதில்லை. பாடங்களைப் பற்றிப் பேசுவார். பொது அறிவு பேசுவார். அரசியல் பேசுவார். சமயம் பற்றிப் பேசுவார். குடும்பத்தாரைப் பற்றிப் பேசுவார். ஆனால் பெண்களைப் பற்றியோ, காதலர்களின் போக்கைப் பற்றியோ பேசுவதில்லை. ஆனால்..." என்று சிறிது நிறுத்தினாள்.
"ஏன் தயங்குகிறீர்கள்? சொல்லக் கூடாதா?"
"அப்படி ஒன்றும் இல்லை. உங்களுக்கு அதனால் ஏதாவது வருத்தம் ஏற்படுமோ என்றுதான் தயங்குகிறேன்."
"என்னைப்பற்றி ஏதாவது சொன்னானா?"
"இல்லை. உங்களுக்கு வேண்டியவரான ஓர் அம்மாவைப் பற்றி."
"இருந்தால் என்ன? சொல்லுங்கள். அப்படி யாரும் இல்லையே"
"உங்கள் ஊரில், உங்கள் வீட்டுக்குப் பக்கத்தில்."
சிறிது நேரம் எண்ணிப் பார்த்தேன். யாரும் நினைவுக்கு வரவில்லை. "பெயர்?" என்றேன்.
"பெயர் நினைவுக்கு வரவில்லை. சந்திரன் சொன்னது நன்றாக நினைவுக்கு வருகிறது. உங்களைச் சின்ன வயதிலிருந்து அன்பாக எடுத்து வளர்த்தவளாம். விதவையாம்."
"ஆமாம். பாக்கிய அம்மையார். மூன்றாம் வீடு"
"அந்த அம்மாவைப் பற்றித்தான் ஒருநாள் என்னிடம் பேசினார். கடற்கரையில் நானும் அவரும் மட்டும் உட்கார்ந்திருந்தபோது பேசினார். அந்தப் பேச்சு ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது."
"நல்ல உத்தமியாயிற்றே. என்ன சொன்னான்?"
"பெண்களின் மனத்தையே அளந்து காண முடியாது என்றார். நம்ப முடியாது என்றார். அப்படிச் சொல்லக் காரணம் என்ன என்று கேட்டேன். அப்போதுதான் அந்த அம்மாவைப் பற்றிச் சொன்னார். நல்ல அழகும் அறிவும் உள்ளவளாம். இளமையிலேயே கணவனை இழந்தவளாம். சந்திரனோடு அன்பாகப் பழகினாராம். அவரும் அவளோடு தாயோடு பழகுவது போல் பழகினாளாம். கடைசியில் மனத்தில் வேறு ஆசை தோன்றியதாக அறிந்து கொண்டாராம். உடனே அங்கே போகாமல் விலகிவிட்டாராம். பழக்கத்தையே குறைத்துக் கொண்டாராம்."
அதைக் கேட்டதும் எனக்குத் திடுக்கிட்டது என் உள்ளத்திற்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. பெருமூச்சு விட்டேன். ஒன்றும் பேச வாய் வரவில்லை.
"நான் இதை உங்களிடம் சொல்லியிருக்கக் கூடாது. தவறு செய்துவிட்டேன் உங்கள் மனம் வருந்துவது தெரிகிறது" என்றாள் இமாவதி.
"எனக்கு ஒன்றும் வருத்தம் இல்லை. அந்த அம்மா எனக்கு உறவு அல்ல. ஆனால் மிகமிக வேண்டியவர். குழந்தையாக இருந்தபோது முதல் என்னிடம் அன்பு காட்டியவர். ஆனால், அவன் சொன்னது நம்ப முடியாதது. பொய். வேறு ஏதாவது சொன்னானா?"
"வேறு ஒன்றும் சொல்லவில்லை."
"அதைப் பற்றி நீங்கள் என்ன எண்ணுகிறீர்கள்?"
"எனக்கு எப்படி உண்மை தெரியும்? அதைக் கேட்ட பிறகு, சந்திரன் செய்தது சரி. அப்படி விலகுவதுதான் நல்லது என்று தோன்றியது. அவர் செய்தது சரி என்று அவரிடமே சொன்னேன். என் மனத்துக்குள் அவருடைய பண்பைப் பாராட்டினேன். ஆண்கள் இப்படித்தான் ஒழுக்கத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று எண்ணினேன்."
அதை மறுத்திட வேண்டும் என்று என் மனம் தூண்டியது. "சந்திரன் சொன்னதை நம்ப வேண்டா. உங்களிடம் பழகியபோதுதான் தவறாக எண்ணினான் என்றும், இதுதான் முதல் தவறு என்றும் இதுவரையில் கருதி வந்தேன். இது இரண்டாவது தவறு. இதற்கு முன்னமே பாக்கியம் அம்மையாரின் அன்பையும் அவன் இப்படியே தவறாக எண்ணிவிட்டான். அப்போதே முதல் தவறு செய்தான் என்று இப்போது தெரிந்து கொண்டேன். அவனுடைய மனத்திலேயே ஒருவகைக் கோளாறு இருக்கிறது. அதனால் தான் தாய் போல் பழகினாலும் தவறாக எண்ணுகிறான். தங்கை போல் பழகினாலும் தவறாக எண்ணுகிறான்" என்று சிறிது கடுமை கலந்த குரலில் சொன்னேன்.
"என்ன இப்படிக் கடுமையாகப் பேசுகிறீர்களே!" என்று திகைப்போடு பார்த்தாள் இமாவதி.
"ஆமாம். பெண்களின் மனத்தை அளந்து காண முடியாது என்றான். பொதுவாக, நல்ல மனத்தையே காண முடியாதவன் அவன். அதனால்தான் அப்படித் தடுமாறினான்" என்றேன்.
"சந்திரனை அவ்வளவு அறிவில்லாதவராகவோ கெட்டவராகவோ என்னால் கருதமுடியாது. நீங்கள் ஏனோ இப்படி எண்ணுகிறீர்கள்" என்றாள்.
என் கடுமையும் வேகமும் மெல்லத் தணிந்தன. பாக்கிய அம்மையாரின் வாழ்க்கையைப் பற்றி எனக்குத் தெரிந்தவற்றை எல்லாம் சொன்னேன். பிறகு வேறு பேச்சும் பேசிவிட்டு விடைபெற்றேன். விடைபெறு முன்பு "பொதுவாகப் பார்த்தால், சந்திரன் எதையும் அவசரப்பட்டு முடிவு செய்து விட்டு பிறகு அந்த முடிவுகளால் அல்லல் படுகிறான் என்று தெரிகிறது" என்று என் கருத்தைச் சொல்லிவிட்டு வந்தேன்.
திரும்பி வந்தபோது, மாலன் விரிவாகக் கேட்பான் என்று எதிர்பார்த்தேன். "பழைய கதையைப் பழையபடியே பேசியிருப்பீர்கள். சந்திரனைப் பற்றிப் புதிதாக ஒன்றும் தெரியவில்லையே. வீணான முயற்சி. உனக்கு ஏதோ பொழுதுபோக்கு போகட்டும்" என்று சொல்லி, என் பேச்சுக்கு இடம் தராமலே முடித்தான்.
--------
அத்தியாயம் 17
அடுத்த மார்கழி விடுமுறையில் ஊருக்குச் சென்றபோது, பாக்கிய அம்மையார், வீட்டுக்கு வந்து என்னைப் பற்றியும் சந்திரனைப் பற்றியும் கேட்டார். அவருடைய முகத்தில் முன்போல் மகிழ்ச்சியும் ஊக்கமும் காணப்படவில்லை. கவலையும் சோர்வும் காணப்பட்டன. அவரைப் பார்த்தவுடன், இமாவதி சொன்னது நினைவுக்கு வந்து என் உள்ளத்தை வருத்தியது. எந்தப் பெண்ணையும் - வயதில் பெரியவள் சின்னவள் என்று இல்லாமல் - தன்மேல் ஆசை கொண்டதாக எண்ணி யாரையும் இப்படிப் பழி தூற்றுவது சந்திரனுடைய தீயகுணம் என்று அவன் மேல் வெறுப்புத் தோன்றியது. பாக்கியம் வீட்டை விட்டுச் சென்றபின், அந்தக் குடும்பத்தில் அவருடைய தம்பி மனைவிக்கும் அவருக்கும் கசப்பு ஏற்பட்டிருப்பதாகவும், தம்பி அக்காவிடம் அன்பு இல்லாதவனாய் மனைவியின் சொல்லைக் கேட்டு நடப்பதாகவும் அம்மா சொன்னார். அதனால் பாக்கியம் முன் போல் ஊக்கமாக இல்லை என்றும், மனத்தில் எந்நேரமும் வருந்திக் கொண்டிருக்கிறார் என்றும் சொன்னார். கேட்டதும் எனக்கு இரக்கம் மிகுந்தது. "ஊமை போல் வாய் திறக்காமல் இருப்பவர்களை எப்போதும் நம்பக்கூடாது. அம்மா! எப்படி இருந்த அந்தத் தம்பி எப்படி ஆய்விட்டார், பார்த்தீர்களா? கடைசியில் தம்பிக்குப் பெண்பார்த்துத் திருமணம் செய்து குடும்பமாக்கி வைத்த அக்காவுக்கே துன்பமாக முடிந்ததே" என்று அம்மாவிடம் சொல்லி வருந்தினேன்.
"என்ன செய்வது? காலமே இப்படித்தான் மாறி வருகிறது. பாக்கியம் நல்ல பெண்! இருக்கும் இடம் தெரியாமல் அடங்கி ஒடுங்கி வேலை செய்கிறாள். அவளுக்கு வேறு ஒரு திக்கும் இல்லை. அவளுடைய ஒரு வயிற்றுச் சோறுக்காக நேற்று வந்த ஒரு பெண்ணிடம் சிறுமைப்படுகிறாள்" என்று அம்மா சொன்னபோது என் உள்ளம் உருகியது.
நிலைமை அவ்வளவு வேகமாக மாறிவிடும் என்று நான் எண்ணவில்லை. முடிவுத் தேர்வுக்கு நன்றாகப் படித்து எழுதிவிட்டுச் சித்திரை மாதத்தில் ஊருக்குத் திரும்பியபோது, பாக்கியத்தின் தம்பி தன் மனைவியுடன் தனியே சென்று தனிக்குடும்பம் நடத்தும் செய்தியைக் கேள்விப்பட்டேன். ஒரு வகையில் அதுவும் நல்லதே என்று ஆறுதல் அடைந்தேன். நன்றிகெட்ட தம்பியையும் தம்பியின் மனைவியையும் வீட்டில் வைத்துக்கொண்டு துன்பப்படுவதைவிட, தந்தைக்குச் சமைத்துப் போட்டுக்கொண்டு தனியே வாழ்வதே நல்லது என்று எண்ணினேன். பாக்கியத்தின் வீட்டுக்கு நான் சென்றவுடன், அவர் இதைப் பற்றி என்னிடம் குறிப்பிட்டு, "அப்பாவுக்கு மட்டும் மனத்தில் கவலை என்ன செய்வது? ஒரே மகன் இப்படிக் கைவிட்டானே என்று நொந்து கொள்கிறார்." என்று சொன்னார். தனித்தனியே பிரிந்து வாழ்வதே இந்தக் காலத்தில் ஒரு வகையில் நல்லது என்று ஆறுதல் மொழியாகக் கூறினேன்.
மற்றொரு நாள் அவர்கள் வீட்டில் அந்த அம்மையாருடன் நான் பேசிக்கொண்டிருந்தபோது எதிர்பாரா வகையில் என் திருமணத்தைப் பற்றியே பேசத் தொடங்கினார்.
"இந்தப் பங்குனி விழாவிற்கு வேலூரிலிருந்து அத்தையும் அத்தையின் பெண்ணும் வந்திருந்தார்கள் தெரியுமா" என்றார் பாக்கிய அம்மையார்.
"தெரியாதே அக்கா. அம்மாவும் சொல்லவில்லையே" என்றேன்.
"அந்தப் பெண் உன்னைத்தான் திருமணம் செய்து கொள்ளப் போவதாகச் சொல்கிறாள்."
"என் திருமணத்திற்கு இப்போது என்ன அவசரம். இன்னும் குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது படிக்கவேண்டும். படித்து முடித்தபிறகு ஒரு வேலைக்குப் போய் அமர வேண்டும்."
"எல்லாம் தானாக நடக்கும், அத்தையும் உனக்கே பெண்ணைக் கொடுப்பதாக இருக்கிறார். அப்பாவும் அப்படிச் சொல்வதாகத் தெரிகிறது. அம்மா மட்டும் வாயைத் திறக்கவில்லை. உன் விருப்பம் போல் நடக்கட்டும்" என்றார்.
"எல்லாம் பிறகு பார்க்கலாம்; இப்போது ஒன்றும் அவசரம் இல்லை அக்கா."
"நானாகக் கேட்கிறேன், தம்பி. உன் நன்மைக்காகத் தான் சொல்கிறேன். கயற்கண்ணி கொஞ்சம் துடுக்காகப் பேசுவாள். அவ்வளவுதான். மற்றப்படி பொறுப்பான பெண். குடும்பத்தை நன்றாக கவனித்துக்கொள்வாள். பாசம் உள்ளவள். பண்பு உள்ளவள். அவளை மணந்து கொண்டால் என்ன?" என்றார்.
"பொறுத்துப் பார்க்கலாம் அக்கா. இப்போது ஏன் அந்தப் பேச்சு?"
"என் தம்பிக்கு இப்போது புது இடத்தில் பெண் பார்த்து என்ன கண்டோம்? குடும்பம் இரண்டு ஆச்சு. அதற்காகத்தான் பயப்படுகிறேன், வேறொன்றும் இல்லை. கயற்கண்ணியாக இருந்தால் சின்ன வயது முதல் பழகிய பெண், குணம் குற்றம் எல்லாம் தெரியும். கொண்டு திருத்திப் போகலாம். அதற்காகத்தான் சொன்னேன்."
பாக்கியம் இவ்வாறே சொன்னதைக் கேட்ட பிறகு என் மனம் பெருங்காஞ்சியில் இருந்த கற்பகத்தை - சந்திரனுடைய தங்கையைப் பற்றி - அடிக்கடி எண்ணியது. தேர்வு எழுதி முடித்துவிட்டுக் கவலை துறந்திருந்த என் மனத்தில் இந்த எண்ணத்தை அந்த அம்மையார் வளர்த்துவிட்டார். பெருங்காஞ்சிக்குப் போய்க் கற்பகத்தைப் பார்த்துவிட்டு வரவேண்டும் என்றும் ஆவல் கொண்டேன். இரண்டொரு முறை போய் வரவும் முனைந்தேன். ஆனால், என்னவோ ஒரு வகைச் சோர்வு தடுத்துவிட்டது.
அப்பாவும் அம்மாவும் ஒருநாள் என்னிடம் பேசிக் கொண்டிருந்தபோது, வேலூர்க்கு அத்தை வீட்டுக்கு ஒரு முறை போய்வருமாறு சொன்னார்கள். பேசாமல் கேட்டுக்கொண்டிருந்து விட்டேன். மற்றொருநாள் அப்பா மட்டும் சொன்னார். இன்னும் சில வாரம் கழித்துப் போவதாகச் சொல்லிவிட்டேன். எங்கும் போக மனம் இல்லாமல் தேர்வு முடிவை எதிர்பார்த்தபடி விடுமுறையைக் கழித்தேன்.
தேர்வின் முடிவு வந்தது. மாலனும் நானும் இரண்டாம் வகுப்பில் தேறியிருந்தோம். மகிழ்ச்சியோடு அவனுக்குக் கடிதம் எழுதினேன். பி.ஏ. வகுப்பில் சேர முடிவு செய்திருப்பதாக அவன் எழுதினான். நானும் தந்தையிடம் சொல்லி அவ்வாறே முடிவு செய்து அதற்கு உரிய விண்ணப்பங்களை அனுப்பிவிட்டேன்.
இந்நிலையில் தங்கை மணிமேகலை கடுங்காய்ச்சலால் படுக்கையுற்று வருந்தினாள். காய்ச்சல் இரண்டு வாரம் மிகக் கடுமையாக இருந்தது. இரவும் பகலும் அம்மா அவளுடன் பக்கத்திலேயே இருந்து காத்துவந்தார். பாக்கியம் தந்தையார்க்கு உணவு சமைத்து இட்ட நேரம் போக மீதி நேரமெல்லாம் தங்கையின் பக்கத்திலேயே இருந்து வேண்டிய உதவிகள் செய்தார். காய்ச்சல் தன்னை மறந்து வாய் பிதற்றும் நிலை வரையில் சென்றது. தங்கை அப்போது அம்மா அக்கா என்ற சொற்கள் அடிக்கடி சொல்லக்கேட்டேன். தாய்க்கு அடுத்தபடியாகக் கருதத்தக்க அளவில் பாக்கியம் என் தங்கையின் உள்ளத்தை அன்பால் பிணைத்திருந்தார்.
வாய் பிதற்றும் நிலை மாறித் தன் உணர்வு வந்த பிறகு ஒருநாள் மாலையில் பாக்கியத்தின் வீட்டில் அலறல் கேட்டது. பாக்கியத்தின் தந்தை மாரடைப்பால் இறந்துவிட்டதாகச் செய்தி வந்து அம்மா ஓடினார். நானும் ஓடினேன். "அம்மா! நடுத்தெருவில் விட்டுவிட்டாரே! தம்பி! அப்பா என்னை இப்படி விட்டுவிட்டுப் போய்விட்டாரே" என்று பாக்கியம் கதறினார். பக்கத்தில் நின்ற என் கால்களைக் கட்டிக் கொண்டு கதறி அழுதார். நான் அந்த அம்மையாரின் கைகளைப் பற்றிக்கொண்டு அழுதேன். பட்டகாலிலேயே படுவதுபோல், துன்பம் அடுத்தடுத்து வந்து கெட்ட குடியையே கெடுப்பதை எண்ணிக் கலங்கினேன். தந்தையின் பிரிவைவிடக் கொடுமையாக இருந்தது தம்பியின் புறக்கணிப்பு. தந்தையின் மரணத்தின் போதும் அந்த ஆளின் நெஞ்சம் நெகிழ்ந்ததாகத் தெரியவில்லை. அயலார் வருவதுபோல் வந்தார்; அன்பு இல்லாமல் சடங்குகளைச் செய்தார்; கடமைக்காக, ஊருக்கு அஞ்சி நெருப்புச் சட்டியைத் தூக்கிச் சென்றார்.
அடுத்த மூன்றாம் நாளே அந்த ஆள் வீட்டு வாயிலை நெருங்காமல் நின்றுவிட்டார். சடங்குக்காக வந்தவர் சடங்கு முடிந்ததும் நின்று விட்டார். பாக்கிய அம்மையாரின் கண்ணீரும் கம்பலையும் நிற்கவில்லை. என் தாயின் மனம் ஆறுதல் பெறவில்லை. சொந்த மகளிடம் பரிவு காட்டுவது போல் பாக்கியத்திடம் பரிவு காட்டினார். அடிக்கடி சென்று கண்ணீரைத் துடைத்தார்.
மறு நாள் நான் கல்லூரியில் சேர்வதற்காகச் சென்னைக்குப் புறப்படவேண்டியிருந்தது. அம்மா என்னைப் பார்த்து, "பாக்கியத்திடம் போய்ச் சொல்லிவிட்டுப் போப்’பா. நாங்கள் இருக்கிறோம், பார்த்துக்கொள்வோம் என்று தேறுதல் சொல்லிட்டுப் போ. திக்கற்று நிற்கிறாள். பாசமெல்லாம் உன்னிடத்தில்தான். உடன்பிறக்காத குறைதான்" என்றார். அம்மாவின் கனிந்த சொற்களைக் கேட்டதும் என் உள்ளம் கரைந்தது. பாக்கியத்தைத் தேற்றி வரச் சென்ற நான், அவருடைய கண்ணீரைக் கண்டதும் விம்மி விம்மி அழுது விட்டு வந்தேன். அன்பு நிறைந்த நெஞ்சிற்கு அணை கட்ட முடியவில்லை.
-------
அத்தியாயம் 18
மாலனும் நானும் மறுபடியும் ஒரே வகுப்பில் சேர்ந்து படிக்கத் தொடங்கினோம். மாலன் விடுதியில் முன் இருந்த இடத்தைவிட்டு, என் வரிசையிலேயே ஐந்தாவதாக உள்ள அறைக்கு வந்து சேர்ந்தான். பழையபடியே நாங்கள் இருவரும் மாறுபாடுகளுக்கு இடையே வேறுபாடுகளுக்கு இடையே அன்பை வளர்த்து நண்பர்களாக இருந்து வந்தோம். அதை நினைத்து ஒவ்வொரு வேளையில் வியப்படைந்தேன். தொடர்பும் பழக்கமும் இல்லாவிட்டாலும் ஒரே வகையான உள்ளத்து உணர்வு இருந்தால் நண்பர்களாக வாழலாம் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். மாலனுக்கும் எனக்கும் ஒரே வகையான உள்ளத்து உணர்வு இருந்ததாகக் கூறமுடியாது. தொடர்பும் பழக்கமும் இடைவிடாமல் இருந்ததனால்தான் நாங்கள் நண்பர்களாக இருந்தோம் என்று கூறவேண்டும்.
சந்திரனுக்கும் எனக்கும், ஒரே வகையான உள்ளத்து உணர்வு இருந்தது. வாலாசாவில் படித்தபோது, அந்த உள்ளத்துணர்வோடு, தொடர்பும் பழக்கமும் இடையறாமல் இருந்தபடியால்தான், இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம். அவன் சென்னைக்கு வந்து படிக்கத் தொடங்கியபோது நான் ஓராண்டு வாலாசாவிலேயே படிக்க நேர்ந்தது. தொடர்பும் பழக்கமும் இல்லாமற் போகவே எங்கள் நட்புக் குன்றிவிட்டது.
மாலனும் நானும் கல்லூரியை விட்ட பிறகு, எங்கள் நட்பும் அப்படித்தான் ஆகுமோ என்று எண்ணினேன்.
ஆனால், சந்திரன் வாலாசாவில் இருந்தபோது என்னிடம் அன்பு செலுத்தி வந்தான். கல்லூரிக்கு வந்ததும் அவனுடைய மனம் மாறிவிட்டது. அவனுக்கு ஒருவகையான உயர்வு மனப்பான்மை ஏற்பட்டுவிட்டது. நட்புக்கு ஒத்த மனப்பான்மைதான் வேண்டும். உயர்வு மனப்பான்மையோ தாழ்வு மனப்பான்மையோ உள்ள இடத்தில் உண்மையான நட்பு ஏது? நான் அவனிடம் கணக்குக் கற்றேன்; உதவி பெற்றேன்; ஒரு முறை அவன் தேறிவிட நான் தவறிவிட்டேன்; அதனால் வகுப்பில் உயர்வு தாழ்வு ஏற்பட்டது. அதன் காரணமாக மனநிலையிலும் வேறுபாடு ஏற்பட வேண்டுமா? அந்த வேறுபாடு ஏற்படாதிருந்தால் எங்கள் நட்புச் சிறிதும் மாறியிருக்காதே.
கல்லூரியில் பி.ஏ. வகுப்பில் சேர்ந்த பிறகு இவ்வாறு அவனைப்பற்றி அடிக்கடி எண்ணங்கள் வந்தன. ஆனால் முன்போல் கவலையோ ஏக்கமோ இல்லை. சில நாட்களில் மறந்தாற்போலவும் இருந்தேன்.
இரண்டு வாரங்கள் கழித்து ஒருநாள் என்னுடைய அறையின் சன்னல் பக்கமாகப் பழைய மாணவர் ஒருவர் வந்து நின்றார். அவரைப் பார்த்ததும் முந்திய ஆண்டுக்கு முந்திய ஆண்டில் விடுதியில் சின்ன அமர்க்களம் நடத்திய கதர் மாணவர் என்று தெரிந்துகொண்டேன்.
"நினைவு இருக்கிறதா? சாந்தலிங்கம்" என்றார்.
"ஆமாம்" என்று உள்ளே வருமாறு அழைத்தேன். உள்ளே வந்து உட்கார்ந்தார்.
"சிறுநீர் கழித்த பிறகு தண்ணீர் கொட்டவேண்டும் என்று உங்கள் சந்திரனுக்கும் எனக்கும் போராட்டம் நடந்ததே நினைவு இருக்கிறதா?"
"நன்றாக நினைவு இருக்கிறது. எங்கே இருக்கிறீர்கள்?"
"ஊரில்தான் இருக்கிறேன் நிலபுலங்களைப் பார்த்துக் கொண்டு."
"தொழில்?"
"நிலபுலம் பார்ப்பது தொழில் அல்லவா? உங்களுக்கு அது ஒரு தொழிலாகத் தெரியவில்லையா?"
"மெய்தான். வேறு வேலை-?"
"வேண்டா என்று இருக்கிறேன். இதுவே போதும்."
"காந்தீயம்."
"ஆமாம். விருப்பமில்லையானால் மனிதம் என்று சொல்லுங்கள்."
அவர் பழையபடியே இருந்தார். முகம் மட்டும் சிறிது கறுத்திருந்தது. சென்னையில் இருந்தபோது வெயில் படாமல் இருந்தவர், இப்போது காட்டிலும் மேட்டிலும் வெயிலில் திரிவதால் இப்படி நிறம் மாறியிருக்க வேண்டும் என்று எண்ணினேன். "எங்கே வந்தீர்கள்? யாரையாவது கல்லூரியில் சேர்த்திருக்கிறீர்களா?" என்றேன்.
"உங்களிடம்தான் வந்தேன்."
"என்ன? சொல்லுங்கள்."
"சந்திரனைப்பற்றி-"
"ஒன்றும் தெரியவில்லையே."
"முயற்சி எல்லாம் கைவிட்டு விட்டார்களா?"
"அவ்வளவுதான். நானும் அவனுடைய ஊர்க்குப் போய் பல நாள் ஆயின."
"பெற்றோர் எப்படி இருக்கிறார்கள்?"
"கவலைபட்டுக் கொண்டுதான் இருப்பார்கள் நான் பார்க்கவில்லை."
"மறந்துவிட்டீர்கள்; கல்லூரி உறவு அவ்வளவுதான்."
"மறக்கவில்லை."
"அந்தக் குடும்பத்தில் எத்தனை பிள்ளைகள்"
"அவன் ஒருவன். பெண் ஒருத்தி"
"சரி" என்று மேல்துண்டை எடுத்து முகத்தைத் துடைத்துக் கொண்டு என்னைப் பார்த்தார்.
அவருக்கு ஏதோ தெரியும் போல் இருக்கிறது என்று உணர்ந்தேன். "நீங்கள் எங்காவது சந்திரனைப் பார்த்தீர்களா?" என்றேன்.
"ஆமாம். அதைப்பற்றிச் சொல்லத்தான் வந்தேன். சந்திரனுடைய அப்பாவை அழைத்துக் கொண்டு போய் நான் சொல்லும் இடத்தில் தேடிப்பாருங்கள்."
"சரி"
என் உள்ளத்தில் சந்திரனைப் பற்றி இருந்த வெறுப்பு மறைந்துவிட்டது. அவன் இருக்கும் இடத்தைத் தேடிக் கண்டுபிடித்து வரவேண்டும் என்ற ஆவலும் மகிழ்ச்சியும் ஏற்பட்டன. அக்கறையுடன் அவருடைய முகத்தைப் பார்த்தேன்.
"நீலகிரி மலைக்கு ஒரு வேலையாகப் போகவேண்டியிருந்தது. உருளைக்கிழங்கு எப்படிப் பயிரிடுகிறார்கள் என்று பார்த்து வரப் போனேன். நண்பர் ஒருவரும் உடன் வந்திருந்தார். உபதளையில் அவர் ஒருவரைப் பார்ப்பதற்காக அழைத்துப் போனார். அங்கே ஒரு சின்ன தேநீர்க் கடை இருந்தது. பசியால் தேநீர் குடிப்பதற்காக அதனுள் நுழைந்தபோது சந்திரனைப் பார்த்தேன். தேநீர் குடித்துக் கொண்டிருந்த அவன் என்னைப் பார்த்ததும் தலை குனிந்து கொண்டான். எனக்கு ஐயம் ஏற்பட்டது. சந்திரனோ வேறு யாரோ, எப்படிக் கேட்பது என்று தயங்கினேன், அவனுடைய உடையும் மாறியிருந்தது. காக்கிச் சட்டையும் காக்கிக் காலுறையும் உடுத்திருந்தான். தலைமயிர் கலைந்திருந்தது. மீசை தடிப்பாக இருந்தது. இங்கே இருந்த போது அவன் ஒருநாளும் அப்படி இல்லை. அவன் எதிரிலேயே போய் உற்றுப் பார்த்தேன். அவன் கடைக் கண்ணால் பார்த்துவிட்டு, விரைவாகத் தேநீர் குடித்து எழுந்தான். துணிந்து, "சந்திரா!" என்றேன். தன்னை மறந்து அவன் 'ஆ' என்றான். பிறகு ஏதோ தவறு செய்துவிட்டவன் போல், 'ஓ! நீங்களா? எங்கே வந்தீர்கள்? இதோ இருங்கள். வெளியே ஒருவர் காத்திருக்கிறார். அவருக்குச் சொல்லி விட்டு வருவேன்' என்று நடந்தான். போனவன் வருவான் என்று எதிர்பார்த்தேன். வரவில்லை. உடனே அங்கே தேநீர் தருவோனைப் பார்த்து, 'அந்த ஆள் சந்திரன் உனக்குத் தெரியுமா?' என்றேன். 'எனக்குத் தெரியாது. அதோ அவனுக்குத் தெரியும்' என்று சொல்லி அவன் இன்னொருவனைச் சுட்டிக் காட்டினான். அவனை மெல்ல அழைத்துக் கேட்டேன். சந்திரன் என்ன தொழில் செய்கிறான், எங்கே தங்கியிருக்கிறான் என்று கேட்டேன். அவன் எல்லாவற்றையும் சொன்னான். அதற்குப் பிறகு அவனுடைய பெற்றோர்களுக்குக் கடிதம் எழுதலாம் என்று எண்ணினேன். அவர்களுடைய முகவரி தெரியாது. உங்களுக்கு எழுதலாம் என்று எண்ணினேன். உங்களுடைய பெயர் தெரியாது. கல்லூரியில் இருக்கிறார்களோ இல்லையோ என்று ஐயம் எழுந்தது. பணம் செலவானாலும் சரி, நேரில் போய்விட்டு வருவோம் என்று வந்தேன்" என்றார்.
அவருடைய இரு கைகளையும் பற்றிக் கொண்டு, "மிக்க நன்றி, இது அந்தக் குடும்பத்துக்கு மிகப் பெரிய உதவி. அவனுடைய அப்பா அம்மா கேள்விப்பட்டால் உடனே புறப்பட்டு வந்துவிடுவார்கள். இப்போதே தந்தி கொடுப்பேன்" என்றேன்.
"அவசரமே கூடாது. அவனோ ஒளிந்து வாழ்கிறான் என்று தெரிகிறது. இதனால் ஆர அமர முயற்சி செய்து தேடிப் பிடிக்க வேண்டும். இனிமேல் எங்கும் போக மாட்டான். அந்தக் கவலையே வேண்டா. ஒரு குடும்பமாகவே இருக்கிறான். ஒரு பிணைப்பு இருக்கிறது. உடனே விட்டுப் போக அவனால் முடியாது. கடிதம் எழுதுங்கள் போதும்" என்றார்.
குடும்பம், பிணைப்பு என்பவற்றைக் கேள்விப்பட்டவுடனே எனக்கு ஒருவகை அருவருப்புத் தோன்றியது. பழுத்த மாம்பழம் கிடக்கிறதே என்று மகிழ்ந்து கை நீட்டியபோது கொஞ்சம் அழுகல் என்று சொல்லக் கேட்டது போல் இருந்தது என் மனம். இருந்தாலும், பெற்றோருக்குப் பிள்ளை கிடைப்பான் அல்லவா, அதுவே பெரிய மகிழ்ச்சியாகும் என்று எண்ணினேன். "அங்கே யாரோடு வாழ்கிறான்? விட்டு வருவானா?" என்றேன்.
"எனக்கு நேரே தெரியாது. சொல்லக் கேட்டதுதான். அந்தத் தேநீர்க் கடையில் இருந்தவன் சொன்னான். தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்பவள் ஒருத்தியாம், முப்பது வயது இருக்குமாம். குழந்தை ஒன்றும் இல்லையாம். அவளோடு அன்பாக வாழ்க்கை நடத்துகிறானாம்" இவ்வாறு அவர் சொல்லிச் சிறிது நிறுத்தினார். பிறகு, "அன்பான வாழ்க்கையாக இருந்தால், அவளிடமிருந்து பிரிப்பது பாவம் அல்லவா என்று எண்ணினேன். அதனால் உங்களுக்குச் சொல்லாமலே இருக்கலாம் என்றும் கருதினேன். மறுபடியும் வேறு ஒருவகையில் இரக்கம் ஏற்பட்டது. அவளுடைய கணவன் ஒரு கொலைக்குற்றத்தில் அகப்பட்டுப் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுச் சிறையில் இருக்கிறானாம். அவன் சிறையிலிருந்து எப்படியோ வெளியே வந்து பார்ப்பானானால் முன்பின் எண்ணிப் பார்க்காமல் சந்திரனைக் கொன்றுவிட்டு மறுவேலை பார்ப்பான். அதை எண்ணியவுடனே எனக்கு எப்படியாவது சந்திரனைக் காப்பாற்ற வேண்டும் என்ற இரக்க உணர்ச்சி ஏற்பட்டது" என்றார்.
"அய்யோ! அப்படிப்பட்ட குடும்பத்திலா போய் அகப்பட்டுக் கொள்ள வேண்டும்?" என்று வருந்தினேன். என்னுள் சிறு நடுக்கம் உணர்ந்தேன்.
"என்ன செய்வது? போனான், போன இடத்தில் ஒரு பெண்ணின் அன்பு கிடைத்தது. பிறகு என்ன விளையும் என்று எண்ணிப் பார்க்காமல் அந்த அன்பை ஏற்றுக் கொண்டான். நேர் வழியில் போகாமல் கொஞ்சம் திரும்பினால் இப்படித்தான். கல்லும் முள்ளும் காலைப் பொத்தும்" என்றார்.
"என்ன தொழில் செய்கிறான்?"
"அதையும் கேட்டேன். தேயிலைத் தோட்டத்தில் முதலில் கூலி வேலைக்குத்தான் போனானாம். பிறகு அவனுக்கு ஆங்கிலப் படிப்பு இருப்பதாகத் தெரிந்து கொண்டு கணக்குப் பிள்ளை வேலை கொடுத்திருக்கிறார்களாம். அங்கேயே இருந்தாலும் முன்னுக்கு வரலாம். ஆனால்-"
"அய்யோ! அந்த ஆபத்தான வாழ்வில் இருக்கக்கூடாது. சிறையிலிருந்து கணவன் வெளியே வந்தால், தன் மனைவி மாறிவிட்டாள் என்பது தெரியாமல், சந்திரன் மேல் ஆத்திரம் கொண்டு ஏதாவது செய்துவிடுவான்."
"ஆமாம்." சிறிது அமைதியாக இருந்து பெருமூச்சு விட்டார். உடனே, "உயர்ந்த பண்பாடு உள்ள படித்த குடும்பமாக இருந்தால், மனைவி மனம் மாறிவிட்டாள் என்று அறிந்ததும் பேசாமல் அமைதியோடு திரும்பிவிடுவான். தாழ்ந்த குடும்பங்களில் இப்படிப்பட்ட நிகழ்ச்சி என்றால் உயிரைப் போக்குவது தவிர வேறு எதையும் எண்ண மாட்டார்கள். காரணம் அறியாமை, போலிமானம்" என்றார்.
"போய்த்தேடி அழைத்து, வருவதே பெரிய தொல்லைதான்" என்றேன்.
"அப்படி அல்ல. நீங்கள் வந்திருப்பது தெரியாதபடி போய்ப் பிடிக்கவேண்டும். நேரில் போன பிறகு அதற்கு வேண்டிய வழிகள் தோன்றலாம்" என்றார்.
அவர்க்கு மனமார நன்றிகூறி, உணவுக் கூடத்துக்கு அழைத்துச் சென்று உண்ணுமாறு வேண்டினேன். உணவு முடிந்ததும், அவர் தம்முடைய முகவரியைத் தந்து, "நடந்தவற்றைத் தெரியப்படுத்துங்கள்" என்று கேட்டுக்கொண்டு விடை பெற்றார்.
உடனே என் அறைக்கு வந்து கடிதம் எழுதினேன். மூன்றாம் நாள் காலையே பெருங்காஞ்சியிலிருந்து சாமண்ணாவும் அந்த ஆசிரியரும் புறப்பட்டு விடுதிக்கு வந்தார்கள். சந்திரனுடைய புதிய குடும்ப வாழ்வு தவிர, மற்ற எல்லாவற்றையும் எடுத்துச் சொன்னேன். இருவரும் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தார்கள். அன்று இரவே புறப்படவேண்டும் என்றார்கள். நானும் உடன் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். இசைந்தேன். பிறகுதான் ஊரில் அத்தையைப் பற்றியும் சந்திரனுடைய தாயைப் பற்றியும் கேட்டேன். தாய் மகனைப் பற்றிய கவலையோடு உணவும் உறக்கமும் இல்லாமல் வருந்தி இறந்துவிட்டதாக ஆசிரியர் சொன்னார். சாமண்ணாவின் கண்கள் கலங்கின. சந்திரன் கேள்விப்பட்டால் உண்மையாகவே வருந்துவானே என்றும், ஒருவன் தவறு காரணமாகப் பெரிய குடும்பமே துன்புற நேர்ந்ததே என்றும் கலங்கினேன்.
அவன் ஒரு குடும்பத்தில் பிணைப்புண்டிருப்பதை ஆசிரியர்க்கு மட்டும் தனியே சொல்லவேண்டும் என்று எண்ணினேன். தக்க வாய்ப்பை எதிர்பார்த்திருந்தேன். ரயிலில் சென்றபோது சாமண்ணா அயர்ந்து உறங்கினார். அவர் குறட்டைவிட்டு உறங்கிய நேரம் பார்த்து, ஆசிரியரிடம் சொன்னேன். அவர் திடுக்கிட்டவர்போல் என்னைப் பார்த்து, "அய்யோ! கொலைக்காரக் குடும்பத்திலா போய் அகப்பட்டுக் கொண்டான்? தக்க சமயத்தில் வந்து சொல்லிய அந்த நல்லவர் உயிர்ப்பிச்சை அளித்த உதவி அல்லவா செய்திருக்கிறார்" என்றார். சிறிது நேரம் கழித்து, "சந்திரன் இவ்வளவு பொல்லாதவனாக - துணிச்சல் உடையவனாக - மாறுவான் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. வாலாசாவுக்கு அழைத்துப் போய்ப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தபோது எப்படி இருந்தான்! உனக்குத் தெரியுமே! மருண்டு மருண்டு பார்த்தான். இவனுக்குத் தைரியம் வரவேண்டுமே என்று கவலைப்பட்ட காலம் அது. அடுத்த ஆண்டில், ஒரு முறை ஊருக்கு வந்தபோது, என்னிடம் தனியே வந்து என் உடம்பில் வலு இல்லாமற் போகிறது. ஒரு மருத்துவரிடம் சொல்லி நல்ல மருந்து வாங்கிக் கொடுங்கள்" என்று கேட்டான். 'பார்ப்பதற்கு நல்லபடி இருக்கிறாயே'ப்பா உனக்கு என்ன குறை, சொல். ஆங்கில மருத்துவரிடம் போனாலும், அவர்கள் உடனே தெரிந்துகொள்ளமாட்டார்கள். நம் உடம்பில் உள்ள குறை இன்னது என்று நாமே தெளிவாகச் சொன்ன பிறகுதான் ஆராய்ந்து மருந்து கொடுப்பார்கள். இல்லையானால் ஒன்று கிடக்க ஒன்று செய்வார்கள், 'முதலில் உன் உடம்புக்கு என்ன என்று சொல்' என்று கேட்டேன். உடம்பில் சத்து எல்லாம் வீணாகிறது என்றான். ஏன் அப்படி என்றேன். தூங்கும்போது என்றான். உடனே அவனுடைய குறையைத் தெரிந்துகொண்டேன். 'தூங்கும்போது இந்திரியம் வெளிப்பட்டு விடுவதைச் சொல்கிறாயா? மாதத்துக்கு எத்தனை முறை?' என்று விளக்கமாகக் கேட்டேன். 'ஐந்தாறு முறை' என்றான். 'அது இயற்கை. அதைப்பற்றிக் கவலைப்படாதே!' என்று அவனுடைய தோளைப் பிடித்துக் குலுக்கித் தைரியம் ஊட்டி அனுப்பினேன். அதுவும் போதாது என்று ஒரு மருத்துவரிடமும் அழைத்துச்சென்று, அவரையே சொல்லுமாறு செய்தேன். வாரம் ஒருமுறை ஆனால் கெடுதியே இல்லை என்றும் அவரே அவனுக்குச் சொல்லியனுப்பினார். அப்படி மனம் சோர்ந்து கலங்கிய அந்தச் சந்திரனா இப்போது இப்படிப்பட்ட வாழ்க்கை நடத்துகிறான்? எண்ணிப் பார்த்தால் நம்ப முடியவில்லையே" என்றார்.
குறட்டைவிட்டு உறங்கிக்கொண்டிருந்த சாமண்ணா அப்போது விழித்துப்பார்த்து, "எது? என்ன நம்பமுடியவில்லை?" என்றார்.
"ஒன்றும் இல்லை. நீங்கள் தூங்குங்கள்" என்றார் ஆசிரியர்.
"தூக்கமாவது, பாழாவது! அவள் போன நாள் முதல் நல்ல தூக்கமே இல்லை. குடும்பப் பாரத்தை என்மேல் போட்டுவிட்டுச் சுகமாகப் போய்ச் சேர்ந்துவிட்டாள். கடவுளே கடவுளே" என்றார்.
மறுபடியும் என் மனம் சந்திரனுடைய தாயைப்பற்றி நினைத்து வருந்தியது. அன்பான மனம் தான் செய்யாத ஒரு குற்றத்துக்காக, தன் மகனுக்காக நொந்து நொந்து அழிந்ததே என்று வருந்தினேன்.
ரயில் மேட்டுப் பாளையத்தில் நின்றதும் இறங்கிப் பல்சக்கர வண்டியில் ஏறி உட்கார்ந்தோம். சிற்றுண்டி உண்டோம். ஆசிரியர் குடிக்கத் தண்ணீர் கேட்டார். தண்ணீர்க் குவளையைக் கையில் ஏந்தியதும் அதன் நிறத்தைப் பார்த்துத் தயங்கினார். "என்ன இது! இப்படிக் கலங்கலாக மண்ணாக இருக்கிறதே! இதை எப்படிக் குடிப்பது?" என்றார். பக்கத்திலே இருந்த ஒருவர், "குடியுங்கள், குடிக்கலாம். ஒன்றும் செய்யாது; இங்கே இப்படித்தான்" என்றார். குடிக்க மனம் இல்லாமல் ஒரு விழுங்குநீர் குடித்துவிட்டு நிறுத்தினார் "காப்பியிலும் இந்தத் தண்ணீர்தான் கலந்திருக்குமா? நீங்கள் எப்படிக் குடித்தீர்கள்?" என்று சாமண்ணாவைப் பார்த்துக் கேட்டார். "என் வாழ்க்கையே ஒரே கலங்கலாக இருக்கிறது. தண்ணீர் கலங்கலாக இருந்தால் என்ன?" என்று சிறிது சிரித்தார், அந்தச் சிரிப்பில் பெருந்துன்பம் கலந்திருந்தது.
பல்சக்கர வண்டி புறப்பட்டு மலையை நோக்கி ஏறியவுடன் புதிய புதிய காட்சிகள் கண்ணுக்கு விருந்தாகத் தோன்றின. நாங்கள் அந்த வழியில் அதற்கு முன் சென்றதில்லை. மலைமேல் ரயில் செல்வதே எங்களுக்கு ஒரு புதுமையாக இருந்தது. நீலகிரி மலையில் வளமான காட்சிகளும் புதுமையாக இருந்தன. அவற்றை நானும் ஆசிரியரும் ஆர்வத்தோடு கண்டு மகிழ்ந்தோம். ஆனால் சாமண்ணா எங்கள் மகிழ்ச்சியில் கலந்துகொள்ளவில்லை, அவர் முகத்தைப் பார்த்தபோதெல்லாம் எங்கள் மகிழ்ச்சி குன்றியது. அந்த மலையின் வளத்தைக் கண்டு வியப்படைந்தபோதெல்லாம், என்னை மீறி ஏதேனும் சொல்ல வாய் திறந்தேன். சாமண்ணாவின் துயரம், என் ஆர்வத்திற்கு தடையாக நிற்க, சொல்வதைச் சுருங்கச் சொல்லி முடித்தேன். எத்தனையோ மலைகளை எங்கள் ஊர்ப்பக்கம் கண்டிருக்கிறோம். ஆனால் மரம் செடி கொடிகள் தழைத்து வளர்ந்த மலைகள் காடுகள் செழித்தோங்கிய மலைகள்-விண்ணை முட்டி நின்ற மலைகள் - ஒன்றோடொன்று இணைந்து உயர்ந்து செல்லும் அழகை அதுவரையில் கண்டதில்லை. கண்ட இடமெல்லாம் வளப்பம் எங்களுக்குப் புதுமையாக இருந்தது. பயிரிடாமல் அங்கங்கே சரிவுகளில் இயற்கையாகவே வளர்ந்துள்ள வாழை மரங்களை ஆசிரியர் காட்டினார். அப்போது மட்டுமே சாமண்ணா தலை நீட்டி எட்டிப் பார்த்தார்.
மலையின் இயற்கை வளம் ஒருபுறம் இருக்க, பல்சக்கர ரயில் வண்டி ஆடி அசைந்து மலை ஏறிச் செல்வது தனி இன்பமாக இருந்தது. அங்கங்கே மலைக் குடைவுகளின் வழியாக வண்டி சென்றபோது, சுற்றிலும் இருள் சூழ்ந்து கிடக்க, சிறுவர்கள் ஓ என்று கூச்சலிட்டது வேடிக்கையாக இருந்தது. ஒரு முறை நீண்ட மலைக்குடைவின் வழியாக வண்டி சென்றபோது நானும் என்னை அறியாமல் சிறுவர்களோடு சேர்ந்து கூச்சலிட்டேன். குடைவைக் கடந்ததும் ஒளியில் ஆசிரியர் முகத்தைக் கண்டேன். அவருடைய முகமும் சிறுவர்களின் முகம் போலவே புதுமை இன்பம் நிறைந்ததாக இருந்தது. ஆனால் சாமண்ணாவின் முகத்தில் ஒரு மாறுதலும் இல்லை. பேரொலி கேட்டு வெளியே தலைநீட்டிக் கீழே பார்த்தேன். கானாறு ஒன்று நீர் நிரம்பி அலை புரண்டு கற்பாறைகளில் மோதி ஓடியது கண்டேன். மறு பக்கமாகப் பார்த்தேன். மலைமேல் உயரத்திலிருந்து பெரிய அருவி தூய வெண்ணிறமாக விழுந்து ஓடி வருவதைக் கண்டேன். அது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. வண்டி அங்கேயே நின்றால் நெடுநேரம் கண்டு மகிழலாம் என்ற வேட்கை உண்டானது. ஆனால் இயற்கையின் மாறாத நிகழ்ச்சிகள் போல் வண்டி சிறிதும் நிற்காமல் ஒவ்வொரு பல்லாக ஏறி ஆடி அசைந்து சென்றுகொண்டே இருந்தது. அந்தப் பெரிய அருவியே மற்றொரு பக்கத்தில் ஆறாக ஓடிச் செல்கிறது என்பதை மறுபடியும் இப்பக்கமாகக் கண்டபோது உணர்ந்தேன்.
எங்கள் மகிழ்ச்சியில் நாங்கள் இங்கும் அங்கும் பார்த்தபடி இருந்த போது சாமண்ணா மேலாடையை விரித்து முக்காடு இட்டுப் போர்த்துக்கொண்டார். அப்போதுதான் காற்று மிகக் குளிர்ந்து வீசுவதை நான் உணர்ந்தேன். இரண்டு மணிநேரத்திற்குள் வெப்பமான சூழ்நிலையை விட்டு, மிகக் குளிர்ச்சியான பகுதிக்கு வந்து விட்டதை உணர்ந்தேன். தமிழ்நாட்டில் வெப்பமும் தட்பமும் வறட்சியும் வளமும் அடுத்தடுத்து விளங்குவதையும், மனிதன் விரும்பக்கூடிய இயற்கையழகுகள் எல்லாம் அமைந்து விளங்குவதையும் எண்ணி எண்ணி மகிழ்ந்தேன். வெயிலே காணாத தட்ப நாடும் வெறுக்கத்தக்கது. தட்பமே இல்லாத கொதிப்பான பகுதியும் வெறுக்கத்தக்கது. எங்கும் மலையாகவும் காடாகவும் இருந்தாலும் பயன் இல்லை. கடல்வளம் முதல் மலைவளம் வரையில், சித்திரையின் வேனில் முதல் மார்கழியின் பனிவரையில், தொண்டை நாட்டின் சிறுவறட்சி முதல் நீலகிரியின் பெருவளம் வரையில் எல்லாம் கலந்து மனித வாழ்வை இனிக்கச்செய்யும் பெருமை தமிழ் நாட்டுக்கு இருப்பதை எண்ணிப் பெருமிதம் உற்றேன். இயற்கை அன்னை இங்கே வெறுக்கத்தக்கவளாகவும் இல்லை; சலிப்புறத் தக்கவளாகவும் இல்லை; மாதந்தோறும் மாறிவரும் சிறுவர்களின் பலவகை விளையாட்டுக்கள் போல், இடந்தோறும் பருவந்தோறும் மாறி மாறிப் பலவகையாய் நின்று மக்களை மகிழ்விக்கின்றாள். இங்கே தாங்க முடியாத கடுமையான குளிரும் இல்லை; தடுக்கமுடியாத கொடுமையான வெயிலும் இல்லை; பெருமழை பொழிந்து வெள்ளத்தால் நாட்டை அழிப்பதும் இல்லை; மழைத்துளியே இல்லாமல் வறட்சியால் பாலையாக்குவதும் இல்லை. வன்மையும் மென்மையும் குறிலும் நெடிலும் ஒத்து அமைந்து ஒலியுறுப்புகளுக்கு அளவான உழைப்புத்தந்து விளங்கும் அருமைத் தமிழ் மொழி போலவே, எங்கள் தமிழ் நாடும் தட்பமும் வெப்பமும் வறட்சியும் வளமும் எல்லாம் அளவு கடவாமல் அமைந்து மக்களின் வாழ்வுக்கு உரிய நானிலமாகத் திகழ்கிறதே என எண்ணி பெருமகிழ்வு எய்தினேன். இயற்கை இங்குதான் தாயாக இருக்கிறாள்; மக்கள் இங்குதான் இயற்கையின் குழந்தைகளாக இருக்கின்றனர். குறைந்த அளவு ஆடை உடுத்துத் திரியும் உரிமையும் இங்கே உள்ள மக்களுக்கு உண்டு; திறந்த வெளியில் வானத்தைப் பார்த்தவாறு படுத்து உறங்கும் இன்பமும் இங்குள்ள மக்களுக்குத்தான் உண்டு. கைக்கும் உறை வேண்டா; காலுக்கும் உறை வேண்டா. வீசும் காற்றுக்கு அஞ்சி ஒளியவேண்டா. வேண்டியபோதெல்லாம் காற்றில் திளைக்கலாம். விரும்பியபோதெல்லாம் நீரில் மூழ்கலாம். இவ்வாறு இயற்கையன்னை தன் மக்களுக்கு வேண்டியவை எல்லாம் அளித்துக் காத்துவரும் இந்த நாட்டில் மிக்க குளிர்ச்சி வேண்டும் என்று அழுகின்ற குழந்தைகளுக்காகத் தாய் தனி அன்போடு அழைத்து அளிக்கும் தட்ப இன்பம்போல் விளங்கியது அந்த நீலமலையின் குளிர்ச்சி மிக்க காற்று.
அருவங்காட்டில் இறங்கியபோது மணி இரண்டு ஆகியிருந்தது. அங்கே உபதளைக்கு வழிகேட்டுக்கொண்டு சென்றோம். என் மனம் இயற்கையழகை மறந்து கடமையில் மூழ்கியது. எப்படிச் சந்திரனைக் கண்டுபிடிப்பது, என்ன சொல்வது, எப்படி அவன் மனத்தை மாற்றுவது, சாமண்ணாவையும் ஆசிரியரையும் விட்டுச் செல்வதா, அழைத்துச் செல்வதா என்று பலவாறு எண்ணிச் சென்றேன். ஒரு மைல் தூரம் சென்ற பிறகு, வழியில் ஒருவரைப் பார்த்து உபதளை எது என்று கேட்டேன். அவர் ஒரு மலைச்சரிவையும் தோப்பையும் காட்டி அங்கே தெரிந்த ஓட்டுக் கூரைகளையும் காட்டி அந்த ஊர்தான் என்றார். இன்னும் ஒரு மைல் நடக்கவேண்டியிருக்கும் என்று எண்ணிக்கொண்டே மேலும் நடந்தோம்.
ஊர்க்கு வெளியே ஒரு தேநீர்க் கடை இருந்தது. சாந்தலிங்கம் சொன்னது இந்தக் கடையாகவே இருக்கும் என்று எண்ணி, ஆசிரியரையும் சாமண்ணாவையும் வெளியே இருக்கச் செய்து நான் மட்டும் உள்ளே நுழைந்தேன். அங்கே இருந்த இளைஞன் ஒருவனைப் பார்த்து, "இங்கே தேயிலைத் தோட்டத்தில் கணக்குப் பிள்ளையாகச் சந்திரன் என்று ஒருவன் - ஆங்கிலம் படித்தவன் - இருக்கிறானே, தெரியுமா?" என்று கேட்டேன். தெரியாது என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் பாராமலே அவன் போனான். இன்னொருவனிடம் நெருங்கி மெல்லக் கேட்டேன். "இப்படிச் சொன்னால் கண்டுபிடிக்க முடியுமா? இன்ன எஸ்டேட் என்று சொன்னால் வழி காட்டலாம். அங்கே போய்க் கேளுங்கள்" என்றான். மற்றொருவனையும் கேட்டுப் பார்த்தோம். பயன் இல்லை. "இன்னும் ஏதாவது ஒரு தேநீர்க் கடை இருக்கிறதா?" என்று வெளியே வந்து ஒருவரைக் கேட்டேன். "இருக்கிறது. தேநீர்க் கடைக்கு ஒரு குறைச்சலும் இல்லை. அதோ அரைக்கல் தொலைவில் தெரிகிறதே, அதுவும் ஒரு தேநீர்க் கடைதான்" என்று அதற்குச் செல்லும் பாதையும் காட்டினார். அவ்வழியாகச் சென்றோம்.
அந்த வழியே நடந்து சென்று அவர் காட்டிய தேநீர்க் கடையை கண்டுபிடித்தோம். அங்கே தேநீர் தந்து கொண்டிருந்த ஆட்களை உற்றுப்பார்த்தேன். இளைஞனாக இருந்த ஒருவனை அழைத்துச் சந்திரனைப் பற்றிக் கேட்டேன். "நான் இங்கே வந்து ஒருவாரம்தான் ஆச்சு, அதோ அவனைக் கேட்டுப்பாருங்கள்" என்று அவன் வேறொருவனைக் காட்டினான். அவனிடம் நானே சென்று மெல்லக் கேட்டேன். அவன் ஒன்றும் விடை கூறாமல், "நீங்கள் யார்? எந்த ஊர்?", என்று என்னையே திரும்பக் கேட்டான். இவனிடம் செய்தி இருப்பதாகத் தெரிகிறது என்று எண்ணி, உண்மையைச் சொன்னேன். "சரி, உட்காருங்கள். கூட்டம் குறையட்டும். பிறகு சொல்வேன்" என்றான். மறுபடியும் அவனே என்னிடம் வந்து, "ஒருவேளை அவனே இப்போது இங்கே வந்தாலும் வரலாம். உங்களை இங்கே பார்த்தால், தப்பித்துக் கொண்டு போய்விடுவான். நீங்கள் இங்கே இருக்காமல், அதோ அங்கே அந்தப் பங்களாவின் சுற்றுச் சுவர்க்குப் பின்னே உட்கார்ந்திருங்கள். நானே அங்கே வந்து சொல்வேன்" என்றான். ஆசிரியரும் சாமண்ணாவும் இதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவனுடைய பேச்சைக் கேட்டதும், சந்திரனைக் கண்டுபிடித்தது போன்ற மகிழ்ச்சி எங்களுக்கு ஏற்பட்டது. அவன் சொன்னவாறே அங்கேபோய் உட்கார்ந்திருந்தோம்.
ஒரு மணி நேரம் கழித்து அவன் எங்களிடத்திற்கு வந்தான். "சந்திரன் இன்றைக்கு வர நேரமாகுமாம். அந்தத் தோட்டத்திலிருந்து வந்த ஆளைக் கேட்டோம். அவன் இன்றைக்குக் குன்னூருக்குப் போயிருக்கிறானாம். போய்த் திரும்பி வரும் போது கடைக்கு வருவான். நான் அவனிடம் ஒன்றும் சொல்ல மாட்டேன். நீங்களும் நான் சொன்னதாக ஒன்றும் சொல்லக் கூடாது. இப்போது நேராக அந்தக் குடிசைக்குப் போய்ப் பின்பக்கத்தில் ஒரு ஆலமரம் இருக்கிறதே அங்கே இருங்கள். அவனைப்பற்றி அங்கே யாரிடமும் ஒன்றும் கேட்க வேண்டா. அவன் வந்தபிறகு அந்த வீட்டில் குரல் கேட்கும். அப்போது யாராவது ஒருவர் முன்னே போய்ப் பேசுங்கள். அதற்குமேல் உங்கள் திறமைப்படி நடக்கும். வாருங்கள்; வழிகாட்டுகிறேன்" என்று வெளியே அழைத்துவந்தான்.
வெளியே வந்ததும் ஆசிரியர் அவனைப் பார்த்து, "ஊருக்கு வருவானா?" என்றார்.
"நான் எப்படிச் சொல்வது? இப்போது என்னோடு நெருங்கிப் பழகுவதில்லை. முன்போல் இருந்தால் நானே சொல்ல முடியும். இப்போது சொன்னால் ஏற்றுக்கொள்ள மாட்டான்" என்றான் அவன்.
என்னுடைய அனுபவம்போல் இருக்கிறதே என்றும், சந்திரனுடைய பழைய குணம் இன்னும் மாறவில்லை போல் இருக்கிறதே என்றும் எனக்குள் எண்ணிக்கொண்டேன்.
என்னை மட்டும் தனியே அழைத்துச் சென்று, அவனுடைய அப்பாவிடம் சொல்லாதீர்கள். அந்த வீட்டுக்காரி நல்லவள் அல்ல. சந்திரனை நெடுங்காலம் வைத்துக் கொண்டிருக்கமாட்டாள். வேண்டா என்ற எண்ணம் வந்தபோது, யாராவது ஒரு முரடனுக்குச் சொல்லிக் கலகம் உண்டாக்கி அடிக்கச் சொல்வாள். அப்படித்தான் தன் கணவனுக்குப் பகையாகச் சொல்லிக் கலகம் உண்டாக்கி, ஒரு கொலையும் நடக்கச் செய்து, அவனைச் சிறைக்கு அனுப்பிவிட்டாள். எனக்கு அவளிடம் அனுபவம் உண்டு. எருமைபோல் இருப்பாள். பொல்லாதவள். எப்படியாவது பொய் சொல்லியாவது சந்திரனை அழைத்துக் கொண்டு போய்விட்டால் நல்லது. இங்கே இருந்தால் இன்னும் கொஞ்ச காலத்தில் குடிக்கக் கற்றுக்கொண்டு அடியோடு கெட்டுப்போய் விடுவான்" என்றான்.
என் மனத்தில் ஒரு குமுறல் ஏற்பட்டது. "வரமாட்டேன் என்று பிடிவாதம் செய்தால் என்ன செய்வது?" என்றேன்.
"அப்பாவைக் கண்ணீர்விடச் சொல்லுங்கள். அம்மா காய்ச்சலாக இருப்பதாகச் சொல்லுங்கள்."
"அம்மா இந்தக் கவலையால் இறந்துவிட்டார்."
"அய்யோ? அப்படியா? அதைச் சொன்னால் எப்படிப்பட்டவனுக்கும் மனம் மாறிவிடுமே. எதையாவது சொல்லுங்கள். ஊருக்குப்போய் மறுபடியும் திரும்பிவிடலாம் என்று சொல்லி அழைத்துச் செல்லுங்கள். பிறகு அங்கே போனால் மனம் மாறிவிடும். ஒரு கலியாணம் செய்து கட்டு ஏற்படுத்தி விடுங்கள்."
அவனுக்கு என் வயது, அல்லது இரண்டு வயது கூடுதலாக இருக்கும். இருந்தாலும் நல்ல அனுபவம் உடையவன் போல் பேசினான். துண்டு மீசையும், லுங்கி வேட்டியும் உடையவனாய்த் தேநீர்க் கடைக்குத் தகுந்த தோற்றத்தோடு இருந்தான். அப்படி இருந்தும் நல்ல மனத்தோடு பேசினானே என்று மகிழ்ந்தேன்.
சிறிது தொலைவு எங்களோடு வந்ததும், "அதோ தெரியுதே அந்த வரிசையில் கிழக்கே இருந்து மூன்றாவது வீடு. பயம் இல்லாமல் போகலாம். அவன் வந்து கொஞ்ச நேரம் ஆனபிறகு போய்ப் பாருங்கள். இதோடு நான் நிற்கிறேன்" என்று சொல்லி என்னைப் பார்த்துக் கைநீட்டினான். உடனே குறிப்புத் தெரிந்துகொண்டேன். என்ன செய்வது, வறுமையின் செய்கை என்று எண்ணிக்கொண்டே ஒரு ரூபாய் எடுத்துக் கொடுத்தேன்.
"வேறு ஏதாவது உதவி வேண்டுமானால் வந்து சொல்லுங்கள். ஆனால் நான் சொன்னதாக மட்டும் தெரியக்கூடாது. தெரிந்தால் என்மேல் வருத்தப்படுவான்" என்றான்.
அவன் சொன்னபடியே அந்த வீடுகளின் பக்கமாகச் சென்று, பின்புறத்து வழியில் நடந்து, அந்த ஆலமரத்தடியில் உட்கார்ந்தோம். போகும்போதே அந்த வீட்டை உற்றுப் பார்த்தோம். வீடு பூட்டியிருந்தது. அங்கே யாரும் இல்லை. ஆலமரத்தின் அடியில் நாங்கள் உட்கார்ந்திருந்தபோது, எங்களை உற்றுப் பார்த்தபடியே ஆண்களும் பெண்களுமாகச் சிலர் போனார்கள். "எந்த ஊர் அய்யா" என்று ஒருவர் கேட்டார். வெளியூர் என்றேன். குன்னூர்ச் சந்தைக்காக இன்றைக்கு வந்திருப்பார்கள்" என்று அவர்களுள் ஒருத்தி சொல்லிக் கொண்டு போனாள்.
கால்மணி நேரம் கழித்துப் பன்னிரண்டு பதின்மூன்று வயது உள்ள சிறுவன் ஒருவன் அந்தப் பக்கமாக வந்தான். அவன் எங்களை நெருங்கி வந்து, "யாரைப் பார்க்க வந்திருக்கிறீர்கள்?" என்றான்.
"சும்மா வந்திருக்கிறோம்" என்றார் ஆசிரியர்.
"கணக்குப்பிள்ளையப் பார்க்கவா?" என்றான் அவன்.
"கணக்குப்பிள்ளை யார்?" என்றேன்.
"அதோ அந்த மூன்றாவது வீட்டில் இருக்கிறார்" என்றான்.
அவனுக்கு வேறு ஏதாவது பேச்சுக் கொடுக்காமல் விட்டால், எங்களைப் புலன் விசாரிப்பான் என்று எண்ணி, "இன்றைக்குக் குன்னூரில் சந்தை அல்லவா? நீ போகவில்லையா?" என்றேன்.
"அம்மா அப்பா போகிறார்கள், எனக்கு என்ன வேலை?" என்றான்.
பிறகு என்ன படிக்கிறாய், வயது என்ன, எந்த ஊர், உடன் பிறந்தவர்கள் எத்தனைபேர் முதலான கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அவன் எழுந்து போவதாகத் தெரியவில்லை. திடீரென்று, அந்தப் பக்கமாக வந்து கொண்டிருந்த ஒருத்தியைக் காட்டி, "அதோ அந்த அம்மா கணக்குப்பிள்ளை வீட்டில்தான் இருக்கிறாள். கேட்டால் சொல்வாள்" என்று எழுந்தான்.
இது என்ன வம்பாய்ப் போயிற்றே என்று, அவனைத் தடுத்து, "நாங்கள் அதற்காக வரவில்லை. பக்கத்து ஊருக்கு ஒருவர் போனார். அவர் வரும் வரைக்கும் இங்கே காத்திருப்போம்" என்றேன். அப்போதும் அவன் போகவில்லை.
"அப்படியா?" என்று மறுபடியும் எங்களோடு உட்கார்ந்தான்.
"அந்த அம்மா யார்?" என்றேன்.
"அவளுடைய வீட்டுக்காரன் இப்போது இங்கே இல்லை. ஒரு கொலை செய்துவிட்டுப் பத்து வருசம் சிறையில் கிடக்கின்றான்."
இதற்குமேல் அவனைப் பேசவிட்டால் தொல்லையாய்ப் போய்விடும் என்று அஞ்சினேன். ஆயினும், "யாரைக் கொலை செய்துவிட்டான்?" என்று கேட்டேன். அந்த அம்மா நெருங்கி வந்தபோது கவனித்தேன். கட்டான முரட்டு உடலோடு தேநீர்க் கடையில் இருந்தவன் சொன்ன பொருத்தங்களோடு இருந்ததைக் கவனித்தேன். இப்படிப் பட்டவளை நாடும் அளவிற்குச் சந்திரனுடைய மனம் கெட்டுவிட்டதே என்று வருந்தினேன்.
"அவனோடு கூடவே இருந்தான் ஒருத்தன். தோட்டத்தில் வேலை செய்து வந்தவன்தான். ஒருநாள் இரவில் குடித்துவிட்டு, இதே ஆலமரத்தடியில்தான் இருவரும் சண்டை போட்டுக் கொண்டார்கள். குடிவெறியில் அறிவு இல்லாமல் வெட்டிப் போட்டுவிட்டான்" என்றான் அந்தப் பையன்.
அவனைப் பற்றி ஏதாவது கேட்கலாம் என்று விரும்பினேன். சாமண்ணா இருப்பதால், அவருக்குக் கூடிய வரையில் உண்மை தெரியாமல் இருக்கட்டும் என்று எண்ணித் தடுத்துக் கொண்டேன்.
நல்ல காலமாக, அப்போது வேறொரு பையன் வரவே அவன் சொல்லாமலே எழுந்துபோய் அவனோடு சேர்ந்து அவனுடைய தோள்மேல் கை போட்டுக்கொண்டு நகர்ந்தான்.
எனக்குப் பசி எடுத்தது. ஆசிரியரிடம் சொன்னேன். தேநீர்க் கடைக்காவது போய் ஏதாவது சாப்பிட்டு வரலாமா என்று கேட்டேன். "இப்போது ஒன்றும் வேண்டா. வந்த வேலையை முடித்துக்கொண்டு போனால் போதும்" என்றார் சாமண்ணா. ஆசிரியர் தம் பையிலிருந்த பிஸ்கட் சுருள் ஒன்றைப் பிரித்தார். அதனால் சிறிது பசி ஆறினேன்.
விளக்கு வைக்கும் நேரம் ஆயிற்று. சந்தைக்குப் போன மக்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினார்கள். எங்கள் பார்வை அவர்களிடையே ஊடுருவிச் சென்று தேடியது. அதற்குள் கொலைகாரனுடைய மனைவி எங்கள் பக்கமாக ஒற்றையடிப் பாதையில் நடந்து எங்களைக் கடந்து நேராகச் சென்றாள். அவளுடைய முகத்தை நெருங்கிப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அவளுடைய பண்புகள் எப்படி இருந்த போதிலும், அடர்ந்த புருவங்களிலும் அகன்ற கூரிய விழிகளிலும் ஒரு தனி அழகு இருக்கக் கண்டேன். கொடியவர்கள், பொல்லாதவர்கள் என்று பழிக்கப்படுவோரும் இருபத்து நான்கு மணி நேரமும் கொடுமையோடு இருப்பதில்லை; இருக்க முடியாது என்பது மனித இயற்கை. அவர்களின் உள்ளத்திலும் ஈரம் உண்டு; குழைவு உண்டு. அப்படிக் குழைந்த நெஞ்சோடு அவள் பழகிய நேரத்தில் சந்திரன் தன் உள்ளத்தைப் பறிகொடுத்திருப்பான் என்று எண்ணினேன்.
அவ்வாறு எண்ணிக் கொண்டிருந்தபோது அவள் மறுபடியும் அந்தப் பக்கம் வந்தாள். அப்போது அவளுடன் ஒரு சிறு பெண்ணும் வந்தாள். "என் கண் அல்லவா? போய் வா அம்மா, மாமா சந்தையிலிருந்து வந்ததும் உனக்கு முறுக்கும் பொரிகடலையும் தருவேன், போய் நான் சொன்னேன் என்று வாங்கி வா, பொழுது போய்விட்டது சீக்கிரம் வா" என்று அந்தப் பெண்ணை வேண்டிக் கொண்டே சென்றாள். நான் எதிர்பார்த்த குழைவும் இனிமையும் நயமும் அவளுடைய அந்தப் பேச்சில் இருந்ததைக் கண்டேன். சந்திரன் பிடிவாதம் செய்தால் அவன் அவளைத் தன்னோடு அழைத்துக்கொண்டே ஊருக்கு வந்து விட்டாலும் நல்லது தான் என்று என் மனம் எண்ணியது.
அவள் சென்றவுடன், நான் மெல்ல எழுந்து தொலைவில் ஒரு பக்கமாக நின்று, நடப்பது என்ன என்று பார்த்தேன். அந்த மூன்றாம் வீட்டைத் திறந்து ஒரு பையும் காசும் கொடுத்து அந்தப் பெண்ணைக் கடைக்கு அனுப்பியதைக் கண்டேன். அப்போது பக்கத்து வீட்டுக்காரப் பெண்கள் சந்தையிலிருந்து வந்துவிடவே, அவர்களோடு பேசிக்கொண்டு கலகலப்பாக இருந்தாள்.
"அதோ கணக்குப்பிள்ளை வருவதுபோல் தெரியுதே", "இன்றைக்குப் பொழுதோடு வந்துவிட்டாற் போல் தெரியுதே", "தாயம்மாவுக்கு இன்றைக்குப் பலம்தான். பொட்டலம் நிறைய வரும்" என்று இப்படிச் சில குரல்கள் அந்தப் பெண்களிடையே கேட்டதும், நான் உணர்ந்து பின்வாங்கி ஆலமரத்தடிக்குப் போய் விட்டேன்.
"அதோ சந்திரன் போல் இருக்கிறதே" என்றார் ஆசிரியர்.
உடனே சாமண்ணா எழுந்து நின்றார். அவருடைய கைகளும் உதடுகளும் துடித்தன. "பேசாமல் இருங்கள். மூச்சு விடாதீர்கள். கூப்பிடக்கூடாது. காரியம் கெட்டுப் போகும்" என்று அமைதிப் படுத்தினேன். "கடவுளே கடவுளே" என்று வாயோடு சொல்லிக்கொண்டார். நாங்கள் சந்திரனுடைய கண்ணில் படாதபடி மரத்தின் அந்தப் பக்கமாக ஒதுங்கி நின்றோம்.
சந்திரனுடைய நடை நன்றாகத் தெரிந்தது. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் என்னென்ன மாறுதல்கள் நேர்ந்தாலும் ஒருவருடைய நடைமட்டும் அப்படியே இருக்கிறது. அவனுக்குப் பின் இரண்டு பேர் மூட்டைகளுடன் நடந்து வந்தார்கள். அவனுடைய இரண்டு கைகளிலும் இரண்டு பை நிறையப் பொருள்கள் இருந்தன. சாமண்ணா எப்படியோ அவற்றைக் கவனித்துவிட்டார். "தெய்வமே இவனுக்கு ஏன் இந்தத் தலைவிதி! இவன் இட்ட வேலையைச் செய்ய ஆட்கள் காத்திருக்கிறார்களே! வேலைக்காரன் போல் இரண்டு கைகளிலும் எடுத்துச் சுமந்து வருகிறானே!" என்று வருந்தினார்.
சந்திரனும் பின்வந்த ஆட்களும் வீடுகளை நெருங்கிய பிறகு நான் மெல்ல நகர்ந்து தெருப்பக்கமாகத் தொலைவில் நின்று பார்த்தேன். அந்தப் பைகளை அவள் கை நீட்டி வாங்கியது தெரிந்தது. அவன் வீட்டினுள் நுழைந்தான். உள்ளே விளக்கு எரிந்தது. அணுகிச் சென்றேன். அவனுடைய குரல் நன்றாகக் கேட்டது. குரலில் ஒன்றும் மாறுதல் இல்லை. பதினைந்து மாதங்களில் மாறுதல் ஏற்பட்டிருக்க முடியாது என்று உணர்ந்தேன். அவனும் அவளும் பேசிக்கொண்டிருந்தபோது ஒரு பெண் நுழைந்தாள். முன்பார்த்த அந்தப் பெண்தான் என்று உணர்ந்தேன். அந்தப் பெண்ணின் கையில் இருந்த பையைத் தாயம்மா பெற்றுக்கொண்டு அவளுடைய கன்னத்தைத் தடவிக் கூந்தலை நீவுவதைக் கண்டேன். பெண்ணின் கையில் ஏதோ கொடுத்ததும் தெரிந்தது. பிறகு அவள் எதையோ எடுத்துக் கடித்துத் தின்றதைக் கண்டேன். இருள் விரைவாகப் பரவியது. எனக்கு பின் யாரோ வரும் குரல் கேட்டது. நான் அங்கே வேவு பார்ப்பது தெரியாதபடி ஒரு பக்கமாகத் திரும்பி நடந்து அவர்கள் போன பிறகு மறுபடியும் அங்கு வந்தேன். "யார் அது" என்ற குரல் கேட்டு நின்றேன். சந்திரனுடைய குரல் போலவே இருக்கவே, திகைத்துப் பார்த்தேன். மறுபடியும் "யார் அது" என்று கேட்டுக் கொண்டே நெருங்கி வரக் கண்டேன். அவனே வருவதை அறிந்தேன். திடுக்கிட்டு "நான் தான்" என்றேன். "நான்தான் என்றால் யார்?" என்றான். "வேலு" என்றேன். வந்தவன் திடுக்கிட்டுத் தூண்போல் நின்றான். "வேலுவா? நீயா? இங்கே ஏன் வந்தாய்?" என்று அசையாமல் நின்றான். நான் தயங்காமல் நெருங்கிச் சென்று அவனுடைய கைகளைப் பற்றிக் கொண்டு, "சந்திரா! மறந்துவிட்டாயே" என்றேன். என் கைகளில் நீர்த்துளி இரண்டு விழுந்தன. அவன் அழுவது தெரிந்தது. "உன் அம்மா இறந்துவிட்டார்" என்றேன். ஓ என்று கதறத் தொடங்கி, உடனே அடக்கிக் கொண்டு, வீட்டை விட்டு விலகி வந்தான். விம்மினான். குமுறினான்.
"சந்திரா!" என்றேன்.
"அம்மா இல்லையா? போய்விட்டார்களா? அய்யோ! அம்மா நினைவு அடிக்கடி வந்ததே! நான் பார்க்கவே முடியாதா?" என்று விம்மி அழுதான்.
அப்பா வந்திருக்கிறார் என்று சொல்ல வாயெடுத்து, உடனே அடக்கிக் கொண்டேன்.
"எப்போது இறந்து போனார்கள்?" என்றான்.
"ஒரு மாதம் ஆச்சு."
"அய்யோ! என் மனம் என்னவோ போல் இருக்கிறதே" என்று கலங்கினான். சிறிது நேரத்தில் முற்றிலும் மாறியவனாய், "நீ ஏன் இங்கே வந்தாய்! உனக்கு எப்படித் தெரியும்" உன்னோடு யாராவது வந்திருக்கிறார்களா?" என்று படபடப்பாகக் கேட்டான்.
"பொறு. சொல்கிறேன். அவசரப்படாதே. அவசரப்பட்டது போதும். உன்னுடைய நன்மைக்காகவே உன்னைத் தேடிக்கொண்டு வந்தேன். நீ இப்படிக் கல்மனத்தோடு பிரிந்து வந்துவிட்டாயே" என்றேன்.
"அதெல்லாம் இருக்கட்டும். யார் வந்திருக்கிறார்கள் சொல். எங்கே இருக்கிறார்கள் சொல்" என்றான்.
என்னால் எதையும் மறைக்க முடியவில்லை. உண்மையைச் சொன்னேன். "அய்யோ" என்று தலைமேல் கை வைத்துக் கொண்டு அந்த இடத்திலேயே மண்ணில் உட்கார்ந்தான்.
நானும் உட்கார்ந்தேன். "ஒன்றும் கவலைப்படாதே. ஆசிரியர் உனக்கு ஆகாதவரா? அப்பா பகையா? ஏன் இப்படிக் கலங்குகிறாய்? கவலை வேண்டா. சொன்னால் கேள்" என்றேன்.
அதற்குள், "என்னாங்க, என்னாங்க! எங்கே போய்விட்டாரோ, தெரியவில்லையே! இப்படித்தான் சொல்லாமலே எங்கேயாவது போய்விடுவார்" என்று தாயம்மாவின் குரல் கேட்டது. இருள் பரவியதால் நாங்கள் நின்றது தெரியவில்லை. பக்கத்து வீட்டு, அம்மா, "யார்? அவரா?" என்றாள். "ஆமாம். கணக்குப்பிள்ளைதான் வந்தார். மாயமாய் மறைந்துவிட்டார். என்ன அவசரமோ, தெரியவில்லை" என்று தாயம்மா எங்கள் பக்கமாகப் பார்த்தாள்.
சந்திரன் என் கையைப் பற்றிக்கொண்டு ஒரு மரத்தின் பக்கமாகச் சென்றான். அவனுடைய கருத்தை நான் உணர்ந்து கொண்டேன். எனக்கு ஒன்றும் செய்தி தெரியாது என்று அவன் எண்ணிக்கொண்டான். நானும் அவள் யார் என்று தெரியாதது போல் இருந்தேன்.
"நான் இந்த வீட்டில்தான் தங்கிச் சாப்பிடுகிறேன். தெரிந்தவன் ஒருவன் வீடு. அவன் இந்தத் தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்கிறான். இங்கே உங்களுக்கு இடம் இல்லை. அப்பாவையும் ஆசிரியரையும் நீயே போய் அழைத்துக் கொண்டு வா. ஒரு தேநீர்க்கடை தெரிந்த கடை இருக்கிறது. அங்கே போய்ப் பேசுவோம். அதற்குள் நானும் அந்த வீட்டாரிடம் சொல்லிவிட்டு வருவேன்" என்றான்.
எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அவனை விட்டுச் சென்றால், எங்காவது ஓடிவிடுவானோ என்று அஞ்சினேன். எப்படி நம்புவது? கேட்கவும் முடியவில்லை. தயங்கித் தயங்கி நின்றேன்.
"இங்கே உள்ளவர்களுக்கு ஒன்றும் தெரியக்கூடாது. தெரிந்தால் வீணாக ஆரவாரமாய்ப் போய்விடும் அதற்காகச் சொல்கிறேன்."
இரண்டு அடி எடுத்து வைத்து மறுபடியும் நின்றேன்.
"எங்காவது ஓடிவிடுவேன் என்று எண்ணுகிறாயா? இங்கேயே இருப்பேன். போய் அழைத்து வந்துவிடு. என் மானத்தைக் காப்பாற்று, வேலு" என்றான்.
அவனுடைய குரல் நம்பலாம் போல் இருந்தது. நான் ஆலமரத்தை நோக்கி நடந்தேன். அங்கே வேறு யாரோ அவர்களோடு பேசிக்கொண்டிருந்தது கேட்டது. நான் நெருங்கியதும், பார்த்தாயா! இதோ வந்துவிட்டார். இவருக்காகத்தான் இங்கே காத்திருந்தோம்; போகிறோம்" என்று சொல்லி, ஆசிரியர் அந்தப் புதியவரை அனுப்பினார். அந்த ஆள் என்னை உற்றுப் பார்த்து நகர்ந்தார்.
அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு அந்த மரத்துப் பக்கம் சென்றேன். அங்கே சந்திரன் இல்லை. என் மனம் திடுக்கிட்டது. வீட்டிற்குச் சென்றானோ என்று அங்கே பார்த்தேன். அவன் வீட்டிலிருந்து வெளியே வந்தது கண்டேன். அவள் பின்தொடர்ந்து வந்து நின்றதும், கண்டேன். மனம் தேறியது. ஏதோ அவசர வேலை என்று பொய் சொல்லிவிட்டு வருகிறான் என்று தெரிந்து கொண்டேன். எங்களை நெருங்கி வந்ததும், மேல்துண்டால் வாயைப்பொத்திக் கொண்டு விம்மினான். "சந்திரா! சந்திரா!" என்று சாமண்ணாவும் விம்மினார். ஆசிரியர் அவனுடைய இடக்கையைப் பற்றிக் கொண்டு தேற்றினார். சந்திரன் ஒன்றும் பேசாமல் முன்னே நடந்தான். நானும் சாமண்ணாவும் பின்னே வர ஆசிரியர் அவனுடன் நடந்தார். வழியில் அவன் விம்மி அழுதானே தவிர, வாய் திறந்து பேசவில்லை. எதிரில் யாரேனும் வந்தபோதெல்லாம், அந்த விம்மலையும் அடக்கிக்கொண்டு நடந்தான்.
பழைய தேநீர்க் கடைக்குத்தான் எங்களை அழைத்துச் சென்றான். விளக்கொளியில் பார்த்தபோது அவனுடைய கண்கள் சிவந்திருந்தன. "இங்கே இருங்கள். இதோ வருகிறேன்" என்று சொல்லி உள்ளே நுழைந்தான். எங்களுக்கு வழிகாட்டிய அந்த இளைஞனிடம் சிறிது நேரம் ஏதோ பேசிக் கொண்டிருந்தான். பிறகு இருவரும் எங்களை நோக்கி வந்தார்கள். "இவர்களுக்கு எங்காவது இடம் கொடு. இரவு உன்னோடு இருக்கட்டும். ஓட்டலுக்கு அழைத்துக் கொண்டு போய்ச் சாப்பிட்டு வருவோம். நீ எங்கேயாவது போய் விடாதே. இங்கேயே இரு. வந்துவிடுவேன்" என்று அவனிடம் சொல்லிவிட்டு, வேறோர் இடத்துக்கு எங்களை அழைத்துச் சென்றான். அங்கே மட்டமான உணவு கிடைத்தது. வேறுவழி இல்லை என்று மூவரும் உண்டோம். அங்கிருந்து தேநீர்க் கடையை நோக்கி வந்தபோது, ஆசிரியர் சந்திரனைப் பார்த்து, "நாளைக்கு ஊருக்குப் போகலாம் வா" என்றார்.
"இனிமேல் நான் ஏன் வரணும்? அம்மாவும் இல்லையே" என்றான் அவன்.
சாமண்ணா கனிவான குரலில், "சந்திரா! என்னையும் சாகடிக்காதே. பேசாமல் புறப்பட்டு வாப்பா. அத்தை உன் ஏக்கமாகவே இருக்கிறாள். உன் தங்கை இருக்கிறாள். இப்படிச் சொல்லாமல் விட்டுவிட்டு வந்தாயே. நாங்கள் என்ன பாவம் செய்தோம்? உன்னை ஏதாவது கண்டித்தோமா? வெறுத்து ஒரு சொல் சொன்னோமா? ஊரில் கேட்கிறவர்களுக்குப் பதில் சொல்ல முடியவில்லை அப்பா. இங்கே ஏன் இப்படித் திக்கற்றவன் போல் திரியணும்?" என்றார்.
சந்திரன் மறுமொழி கூறவில்லை.
சாமண்ணாவையும் ஆசிரியரையும் முன்னே போகச் செய்துவிட்டு, நான் சந்திரனோடு தனியே பேச முயன்றேன். எவ்வளவு முயன்றாலும் சந்திரனுக்கு அறிவுரை கூறுவதற்கு எனக்குத் தயக்கமாக இருந்தது. உண்மையாகவே எனக்குத் தாழ்வு மனப்பான்மை இருந்தது என்பதை அப்போது உணர்ந்தேன். அன்று சந்திரன் என்னைப் புறக்கணிக்கவில்லை. இகழ்ந்து நடக்கவில்லை. ஆனாலும், அவனோடு ஒத்த மனப்பான்மையோடு நட்புரிமையோடு அறிவுரை கூற என்னால் முடியவில்லை. என்ன என்னவோ எண்ணிக் கொண்டு வந்தேன். எண்ணியதை எல்லாம் விட்டு, "நாளைக்கே புறப்பட்டுப்போகலாம். அப்பா மிகவும் நொந்து போயிருக்கிறார்?" என்றேன்.
"இனிமேல் அங்கே வந்து வாழ்க்கை நடத்த எனக்கு மனமே இல்லை" என்றான்.
"உனக்கு யாராவது தீங்கு செய்தார்களா? யாராவது பகையா? உன்னை அன்போடு வரவேற்க எல்லாரும் காத்திருக்கும் இடத்துக்கு வந்தால் என்ன?"
"நான் செய்த குற்றம் தான்."
"குற்றம் செய்வது இயற்கை. திருந்துவதில் தவறு என்ன? என்னைவிட நீ எவ்வளவு வல்லவன்! உன் வாழ்க்கை நல்லபடி இருக்கும் புறப்பட்டு வா."
"நாளைக்குச் சொல்வேன்."
"அப்படி ஒத்தி வைக்காதே. உன் கணக்கு முதலியவைகளை எல்லாம் காலையில் ஒப்படைத்துவிட்டுப் புறப்படு"
"அய்யோ! நான் வேலையைவிட்டு ஊர்க்கு வருவது தெரிந்தால் இங்கே ஒரே ஆரவாரம் ஆகிவிடும்."
இவ்வளவும் அவன் வழியைப் பார்த்தோ, வானத்தைப் பார்த்தோ சொன்னானே தவிர, என்னுடைய முகத்தைப் பார்த்துச் சொல்லவில்லை. தப்பித் தவறி அவன் என் முகத்தைப் பார்த்தால் அப்போது என்னால் நேராகப் பார்க்க முடியவில்லை. நான் பார்வையை மாற்றிக்கொண்டேன். ஏதோ ஒன்று எங்கள் இருவருடைய உள்ளங்களுக்கும் இடையே குறுக்கே இருந்ததை உணர்ந்தேன்.
"அப்படியானால் ஒன்று செய். அவசரமாக ஊருக்குப் போய் வரவேண்டும் என்று மூன்று நான்கு நாள் விடுமுறை கேட்டுப் புறப்படு. அங்கே வந்த பிறகு கடிதம் எழுதிப் போட்டு நின்று விடலாம்."
"பார்க்கலாம்."
அதை அவன் சொன்னபோது, பழைய புறக்கணிப்பின் தன்மை இருந்தது. அதற்குமேல் என்னால் பேச முடியவில்லை.
தேநீர்க்கடையும் வந்துவிட்டது. அந்த இளைஞன் எதிரே இருந்தான். "நீங்கள் இங்கே இருங்கள். நான் அந்த வீட்டு வரைக்கும் போய் வந்துவிடுவேன்" என்று என்னைப் பார்க்காமல் நகர்ந்தான். நானும் வாய் திறக்கவில்லை. ஆசிரியரும் பேசாமல் இருந்தார். சாமண்ணா மட்டும் "சந்திரா!" என்றார். "காலையில் வருவேன் அப்பா" என்று திரும்பிப் பார்க்காமல் நடந்தான்.
அதே நேரத்தில் அவனுடைய நெஞ்சில் ஒருவகை முரட்டுத் தன்மை இருந்தது என்பதை அவனுடைய சொல்லாலும் பார்வையாலும் உணர்ந்தேன். மேலும் வற்புறுத்தி ஏதாவது சொன்னால் பயன்படாமல் போகும் என்று பேசாமல் இருந்தேன். அந்தக் கடைக்கார இளைஞனும், "அதுதான் சரி, மெல்லத்தான் திருப்பணும்" என்றான்.
அன்று இரவெல்லாம் சாமண்ணாவின் மனக்கலக்கத்திற்கு மருந்து கொடுப்பதே பெருந்துன்பமாக இருந்தது. "பையனைத் தனியாக விட்டுவிட்டோம். உயிருக்கு ஏதாவது தேடிக்கொண்டால் என் கதி என்ன?" என்று எழுந்து எழுந்து அலறினார். ஒரு பக்கம் நீலகிரியின் குளிர் எங்களை வாட்டியது. மற்றொரு பக்கம் அவருடைய துயரம் வாட்டியது. கடைக்கார இளைஞன் சிறிது நேரம் எங்களோடு விழித்திருந்து பிறகு தன்னை மறந்து குறட்டை விட்டுத் தூங்கினான்.
விடியற் காலையில் அவன் விழித்துக் கொண்டதும் என்னிடம் நம்பிக்கையோடு சொன்னான். "அவர் ஒரு மாதிரியானவர். பொழுது விடியட்டும் பாருங்கள். அவரே வந்து புறப்படுங்கள் என்று சொன்னாலும் சொல்வார்" என்றான்.
"நீ கொஞ்சம் சொல்லக்கூடாதா?" என்றேன்.
"அய்யோ! சொல்லக்கூடாது. முன் கோபக்காரர். பேசாமல் இருந்து விடுவது நல்லது. நான்தான் முதலிலேயே சொன்னேனே. நான் உங்களுக்குச் சொல்லி அனுப்பியதே தெரியக்கூடாது" என்றான்.
திக்கு இல்லாமல் வந்து சேர்ந்த வெளியூரிலும் சந்திரன் இப்படி மற்றவர்களை அடக்கி வைத்திருக்கிறானே? ஒத்த உரிமை கொடுத்துப் பழகாமல் இப்படி உயர்வு மனப்பான்மையோடு முன் கோபத்தோடு பழகுவதாலேயே இவன் இடறி இடறிக் கெடுகிறான் என்று எனக்குத் தோன்றியது. ஒத்த உரிமையோடு பழகினால்தான் மற்றவர்கள் நெருங்கி வந்து அறிவுரை கூறமுடியும். திருத்த முடியும். மற்றவர்களுக்கு என்ன தெரியும் என்று அறிவுச் செருக்கோடு நடந்தால் வழுக்கி விழும்போதும் துணை இல்லாமல் விழுந்து துன்புற வேண்டியிருக்கிறது. சந்திரன் கூர்மையான அறிவு படைத்திருந்தும் இதைத் தெரிந்து கொள்ளவில்லையே. தன் ஊரில் - கிராமத்தில் பெரிய வீட்டுப் பிள்ளையாய் எல்லோரும் ஏவல் செய்து பணியும் பெருமையோடு வளர்ந்தது காரணமாக இருக்குமா? அல்லது புத்தகப் படிப்பாக இருந்தாலும் நாடக நடிப்பாக இருந்தாலும் எதிலும் மற்றவர்கள் போட்டியிட்டு நெருங்க முடியாத அளவுக்குத் தனிச் சிறப்போடு உயர்ந்து நிற்கக்கூடிய அறிவின் திறமையால் ஏற்பட்ட தன்னம்பிக்கை காரணமாக இருக்குமா என்று எண்ணிக்கொண்டே பொழுது விடியும் நேரத்தில் உறங்கி விட்டேன்.
விழித்தபோது, அந்த இளைஞன் அங்கே இல்லை. தேநீரும் சிறு சிற்றுண்டியும் செய்து கொண்டிருந்தான். ஆசிரியரும் சாமண்ணாவும் பல் துலக்கிக் கொண்டிருந்தார்கள். காலைக் கடன்களை முடித்துவிட்டு, சந்திரன் வருவான் வருவான் என்று ஆவலுடன் அந்த வழியையே நோக்கிக் கொண்டிருந்தோம். மணி எட்டும் ஆயிற்று. ஒன்பதும் ஆயிற்று. அவன் வரவில்லை. சாமண்ணாவின் மனத்தில் இருந்த ஏமாற்றமும் திகைப்பும் எங்கள் மனத்திலும் புகுந்தன. கடைக்கார இளைஞனும் வருந்தினான். ஆனாலும் நம்பிக்கை ஊட்டிக்கொண்டே இருந்தான்.
சரியாக ஒன்பதரை மணிக்குச் சந்திரன் வெறுங்கையோடு வந்து சேர்ந்தான். கையில் ஏன் ஒன்றும் எடுத்து வரவில்லை என்று எண்ணினோமே தவிர, ஒருவரும் கேட்கவில்லை. அவன் வந்ததே போதும் என்று மகிழ்ச்சியோடு நோக்கினோம். கடைக்கார இளைஞனை அழைத்தான். அவன் கையில் இரண்டு ரூபாய் கொடுத்து, "தபால் எழுதுவேன்" என்று சொல்லிவிட்டு, ஆசிரியரைப் பார்த்து "வாங்க போகலாம்" என்றான். சாமண்ணாவின் முகத்தில் அப்போதுதான் மலர்ச்சி காணப்பட்டது. கடைக்கார இளைஞன் என்பின் வந்து, என் காதில் மட்டும் விழும்படியாக, "அப்படியே எனக்கும் ஒரு வேலை பார்த்து எழுதினால் நானும் அங்கே வந்துவிடுவேன்" என்றான். அவனுக்கு நம்பிக்கையாகச் சொல்லித் தலையசைத்துவிட்டு நகர்ந்தேன். ரயில் நிலையத்துக்கு வந்த சிறிது நேரத்திற்கெல்லாம் ஒரு வண்டி வந்தது. அதில் ஏறினோம்.
பயணத்தின்போது உணவு, சிற்றுண்டி, காப்பி இவற்றிற்காகப் பேசியது தவிர, வேறு எந்தப் பேச்சும் பேசவில்லை. நான்குபேரும் பேசா நோன்பு பூண்டவர்கள் போலவே வந்தோம். சந்திரனுடைய முகத்தை அடிக்கடி கவனித்தேன். அதில் தயக்கமோ தடுமாற்றமோ கலக்கமோ ஒன்றும் காணோம். கல்லூரி விடுதியைவிட்டு ஒருநாள் எப்படித் துணிந்து மற்றவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் வந்து விட்டானோ, அப்படியே நீலகிரியை விட்டுத் துணிந்து தேயிலைத் தோட்டத்து உறவைப் பற்றிக் கவலைப்படாமல் வந்துவிட்டான். அவன் நிலையில் நான் இருந்திருந்தால் எவ்வளவோ வருந்தியிருப்பேன். அந்தத் தாயம்மாவுக்காகவும் கண்ணீர் விட்டிருப்பேன். அவனிடம் வருத்தமோ ஏக்கமோ சிறிதும் காணப்படவில்லை.
----------
அத்தியாயம் 19
நான் எண்ணியது உண்மை ஆயிற்று. இரண்டு வாரங்கள் கழித்து ஆசிரியர் எனக்கு விடுதி முகவரிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். சந்திரன் தேயிலைத் தோட்டத்தை அடியோடு மறந்துவிட்டான் என்றும், அங்கு உள்ளவர்களுக்கு ஒரு கடிதமும் எழுதவில்லை என்றும், முன்போல் பரபரப்பாக அலையாமல் வீட்டோடு ஒதுங்கியிருந்தாலும் கவலை இல்லாமல் இருக்கிறான் என்றும், தந்தையார் திருமணத்துக்காகப் பெண் பார்த்து வருகிறார் என்றும், ஆவணியில் தவறாமல் திருமணம் நடக்கும்போல் இருக்கிறது என்றும் எழுதியிருந்தார். 'ஏதாவது ஒரு கட்டு ஏற்படுத்தி விட்டால் சரியாய்ப் போகும்' என்று அந்தத் தேநீர்க் கடையின் இளைஞன் சொன்னது என் நினைவுக்கு வந்தது.
ஆவணி மூன்றாம் நாளிலேயே என் கையில் திருமண அழைப்பிதழ் வந்து சேர்ந்தது, "சந்திரன் - வள்ளி" என்று மணமக்களின் பெயரைப் படித்தவுடனே என் உள்ளத்தில் மகிழ்ச்சி குடிகொண்டது. சந்திரனைக் கல்லூரிக்கு அனுப்பியதற்கு மாறாக, அப்போதே ஒரு திருமணம் செய்து மாமனார் வீட்டுக்கு அனுப்பியிருந்தால் இவ்வளவு தொல்லையும் இருந்திருக்காது என்று கிண்டலாகப் பேசினான் மாலன். "நான் சொல்வதற்காக வருத்தபடாதே, யாருக்கு என்ன பசி என்று அறிந்து உணவு இடவேண்டும். தன் மகனுக்குக் கல்விப் பசியை விடக் காமப் பசி மிகுதி என்று அவனுடைய தந்தை அப்போது தெரிந்து கொள்ளவில்லை. இப்போதாவது தெரிந்து கொண்டாரே, அது போதும்" என்றான்.
"சந்திரனுக்கு கல்வியில் ஆர்வம் இல்லை என்கிறாயா?" என்றேன்.
"நான் அப்படிச் சொல்லவில்லை, அதுவும் உண்டு ஆனால், அதைவிடப் பெண்ணுறவு தேடுவதில் ஆர்வம் மிகுதி என்று சொன்னேன்" என்றான் மாலன்.
பேச முடியாமல் அடங்கினேன்.
"சென்ற ஆண்டில் வேலூரிலிருந்து வந்த பேராசிரியர் அருளப்பர் ஒரு கூட்டத்தில் சொன்னது நினைவு இருக்கிறதா? அருமையான கருத்து" என்றான்.
"எது என்று எனக்கு நினைவு வரவில்லை. மறந்து விட்டேன், சொல்" என்று கேட்டேன்.
"காக்கையின் குஞ்சாக இருந்தாலும், கழுகின் குஞ்சாக இருந்தாலும் கூட்டில் வளர வேண்டிய காலம் வரையில் கூட்டிலேயே வளர வேண்டும். அந்தக் காலத்தில் வளர்ந்த பறவைகளைப் பார்த்துப் பின்பற்றக் கூடாது. மரக்கிளைகளையோ வானத்தையோ எண்ணி ஏங்கினால் வளர்ச்சிக்கு இடையூறு ஆகும் என்று அழகாகச் சொன்னாரே?"
"ஆமாம் மாணவர்களாக இருப்பவர்கள் கல்விக்கு உரிய பருவத்தில் மற்றவற்றில் ஈடுபடாமல் படிப்பது நல்லது என்று பேசினார்."
"அது உயர்ந்த கருத்து அல்லவா,"
"உயர்ந்த கருத்துத்தான். ஆனால் அப்படிக் கல்வி ஒன்றையே நாடி அடங்கியிருந்தால் பொது அறிவு வளராமல் போகுமே."
"கற்று முடிந்த பிறகு பொது அறிவு தானாக வருமே. இப்போது அரசியல் தலைவர்களாக உள்ளவர்கள் பலருடைய வாழ்க்கையை எடுத்துப் பார். அவர்கள் படித்து முடித்த பிறகுதான் இந்தத் துறைக்கு வந்தவர்கள். அதற்கு முன் படிப்போடு அடங்கியிருந்தவர்கள் தான்."
"ஆமாம், செய்வன திருந்தச் செய்ய வேண்டும். படிக்கும் போது படிப்பில் செம்மையாக இருந்தால்தான், பிறகு கொள்ளைக்காரன் ஆனாலும் அதையும் செம்மையாகச் செய்ய முடியும். இதிலேயே அரைகுறை என்றால், எதிலும் அரை குறையாகத்தான் முடியும்."
"குருவி அருமையாகக் கூடுகட்டிக் குஞ்சுகளைக் காப்பது போல் நம்முடைய பெற்றோரும் நமக்கு அருமையாக ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள். குஞ்சு நன்றாக இறக்கை முளைப்பதற்கு முன் கூட்டைவிட்டு வெளியே வரத்தொடங்கினால் என்ன ஆகிறது பார்த்தாயா? விழுந்து விழுந்து இடர்ப்படுகிறது. தாய்க் குருவியாலும் காப்பாற்ற முடியவில்லை. கடைசியில் காக்கைக்கோ பூனைக்கோ இரையாகிறது."
இதைக் கேட்டதும், சந்திரனுடைய வாழ்க்கையை அப்படியே படம் பிடித்து காட்டியது போல் இருந்தது. என் மனம் சந்திரனுக்காக உருகியது.
சந்திரனுடைய திருமண நாளன்று எனக்குக் கல்லூரியில் கால் ஆண்டுத் தேர்வு தொடங்குவதாக இருந்தது. ஆகையால் எப்படித் திருமணத்துக்குப் போவது என்று திகைத்தேன். மாலனை அறிவுரை கேட்பது போல் கேட்டேன்.
"கூட்டைவிட்டு வெளியே வருவது என்றால், பெண்ணுறவு தேடி அலைவதற்கு மட்டும் சொன்னது அல்ல. பொதுவாக எந்த வேறு வேலைக்கும் பொருந்தும். திருமணம் குடும்பக் கடமை. அதை உன் பெற்றோர்கள் பார்த்துக் கொள்ளட்டும், நீ போக வேண்டியதில்லை" என்றான்.
"நண்பன் அல்லவா? அவனுடைய வாழ்வில் ஒரு சிறந்த நாள்."
"இருக்கட்டும். நீ அன்றைக்கு இங்கிருந்தே அவனுக்காக நன்மை எண்ணு. நீ இங்கிருந்தால், உன் தேர்வும் எழுதலாம், அவனுக்குத் தீமை இல்லை. நீ போனால், உனக்குத் தீமை, அவனுக்கு ஒரு பயனும் இல்லை. இரண்டில் எது சிறந்தது? பற்றில்லாமல் நடுநிலையாக எண்ணிப்பார்" என்றான்.
தராசில் இரண்டு தட்டுகளில் வைத்து எடைபோட்டுக் காட்டுவது போல் இருந்தது. போவதில்லை என்று ஒருவாறு முடிவு செய்தேன்.
ஆனால், மாலன் என் அறையை விட்டுப் போன பிறகு, மனம் ஊசாலாடத் தொடங்கியது. போகாவிட்டால் சந்திரன் என்ன நினைப்பான், சாமண்ணா என்ன நினைப்பார் என்று வருந்தியது. போவதால், என்னுடைய காலமும் முயற்சியும் அவை போலவே ஓரளவு அவனுடைய காலமும் முயற்சியும் வீணாவது தவிர வேறு பயன் இல்லேயே; போகாமல் இருந்தால், காலமும் முயற்சியும் தேர்வுக்குப் பயன்படுமே என்றும் எண்ணினேன். திருமண அழைப்பு மட்டும் அனுப்பினானே தவிர, சந்திரன் தனிப்பட்ட ஒரு கடிதம் எழுதவில்லையே, நீலகிரியிலிருந்து வந்தபிறகு ஒரு வரியும் எழுதவில்லையே என்று சிறிது வருந்தினேன். ஒரு வேலையும் இல்லாத அவன் சிறிது நேரம் செலவிட்டு ஒரு கடிதம் எழுதவில்லையானால், அவனுக்காக நான் ஏன் காலத்தையும் முயற்சியையும் வீணாக்க வேண்டும்? ஊருக்குக் கடிதம் எழுதினால் வீட்டிலிருந்து யாராவது ஒருவர் போய்ப் பார்த்து வரட்டும் என்று அமைதியானேன்.
அடுத்த வாரம் ஊரிலிருந்து கடிதம் வந்தது. அதில் அவர்களுக்குத் திருமண அழைப்பே வரவில்லை என்றும், யாரும் திருமணத்துக்குப் போகவில்லை என்றும் குறித்திருந்தார்கள். எனக்கு அது வியப்பாக இருந்தது. சந்திரன் மறந்திருக்கலாம்; புறக்கணித்திருக்கலாம்; அது அவனுக்கு இயற்கை. சாமண்ணா எப்படி மறந்தார் என்று வருந்தினேன். மனைவியை இழந்த அவர் பலவகையிலும் மனம் நொந்தவராக இருப்பதால், எத்தனை கடமைகளை நேரில் கவனிக்க முடியும் என்று எண்ணி ஆறுதல் பெற்றேன்.
அடுத்த ஆவணி தொடக்கத்தில் மாலன் என்னுடைய அறைக்கு வந்து ஏதோ பேசிக்கொண்டிருந்து, திடீரென்று "எனக்குத் திருமண ஏற்பாடு நடக்கிறது; ஊரிலிருந்து கடிதம் வந்திருக்கிறது" என்றான்.
எனக்கு வியப்பாக இருந்தது. "என்ன அவசரம்? இன்னும் ஆறு மாதம் பொறுத்தால், பி.ஏ. தேர்வு எழுதி முடித்து விடலாமே. அதற்குள் ஏன்? கூட்டில் வளரவேண்டிய காலத்திற்கு முன்பே வெளியே தலை நீட்டலாமா?" என்றேன்.
என்னுடைய குத்தலை உணர்ந்துகொண்ட மாலன் "இது குஞ்சு தானாகவே வெளியே போய்க் கெடுவது அல்ல. தாய்க் குருவி பொறுப்போடு பார்த்துக் கொண்டு தன் குஞ்சை வெளியே அழைத்துப் போவது இது" என்றான்.
"எப்படியும் கெடுதல்தானே? இறக்கை நன்றாக முளைத்து வரவேண்டிய பருவம் அல்லவா,"
"முதல் கடிதத்திற்கு வேண்டா என்றுதான் எழுதினேன். ஆனால் எங்கள் குடும்பத்துக்குப் பழக்கமான சோதிடர் இந்த ஆவணியில் முகூர்த்தப் பொருத்தம் இருப்பதாகவும், குருதசை பலமாக இருப்பதாகவும், இன்னும் நான்கு வாரத்தில் திருமணம் கூடிவிடும் என்றும் தெற்குத் திசையில் அல்லது தென்மேற்குத் திசையில் பெண் வீடு அமையும் என்றும், ராசிநாதனை எடுத்துப் பார்த்தால் அப்படித் தெரிகிறது என்றும் சொல்லியிருக்கிறாராம்" என்றான்.
எனக்குத் தோன்றிய சிரிப்பை அடக்கிக்கொண்டே "இன்னும் என்ன எழுதியிருக்கிறார்கள்?" என்றேன்.
"ஒரு நல்ல குடும்பத்தில் பெண் பார்த்திருக்கிறார்களாம். கொஞ்சம் தென்மேற்கே உள்ள ஊராம். லக்கினாதிபதி அந்த இடத்தில்தான் பலமாகப் பார்க்கிறானாம். பெண்ணுக்கு மாங்கல்ய பாக்கியம் இருக்கிறதாம். ஆனால் கேதுவின் பார்வை எட்டில் இருப்பதால், இல்வாழ்க்கையில் கொஞ்சம் கசப்பும் இருக்குமாம். நாகபூசை செய்தால் சரியாகிவிடுமாம்" என்றான்.
என்னால் முன் போல் சிரிப்பை அடக்க முடியவில்லை. சிரித்து விட்டேன்.
"நீ இப்போது இப்படித்தான் சிரிப்பாய். உனக்கு ஒரு காலம் வரும். அப்போது நம்புவாய். அதற்கு ஒரு கிரகம் வந்து அமையும்" என்றான்.
"நீயே முக்கால் சோதிடனாக இருக்கிறாயே" என்று சொல்லிச் சிரித்தேன்.
"என் தகப்பனார்க்கு நன்றாகத் தெரியும். அவர்க்குச் சில நாட்களில் சளி பிடிக்கும். உடனே கிரக பலன் பார்ப்பார். அவர் சொல்வது சரியாக இருக்கும். புதனுடைய பார்வை இருந்தாலோ என்னவோ சொல்வார். சூடான உணவுப் பொருள்களையே சாப்பிட்டாலும் உடம்பில் சீதளம் ஏற்படுமாம். சில கிரகத்துக்கு, எவ்வளவு சீதளமான பொருள் சாப்பிட்டாலும் உடம்பு சூடாகிவிடுமாம். அதில் கற்கவேண்டியது எவ்வளவோ இருக்கிறது."
"எவ்வளவு இருந்தும் என்ன பயன்? இறக்கை நன்றாக வளர்வதற்கு முன்னமே குஞ்சு கூட்டைவிட்டு வெளியே வரப்போகிறதே."
"அது நம் கையிலா இருக்கிறது? கிரக பலனை யார் என்ன செய்ய முடியும்,"
"இதே காரணத்தை சந்திரனுக்குச் சொல்ல வேண்டும் அல்லவா? அவன் கெட்டது கிரக பலனால் என்று சொல்லாமல், அவனையே பழிக்கிறாயே! உனக்கு ஒரு காரணம், அவனுக்கு ஒரு காரணமா?"
மாலன் சிறிது தடுமாறினான்.
"போகட்டும். எண்ணிப்பார். இன்னும் ஆறுமாதம் கடத்தினால் உனக்கும் நல்லது; குடும்பத்துக்கும் நல்லது. வீட்டுக்கு எழுது. உன் நிலையில் நான் இருந்தால், முடி வேண்டா என்று துணிந்த இளங்கோவடிகள் போல், எனக்கு இப்போது திருமணம் வேண்டா என்று பிடிவாதம் செய்வேன். சந்திரன் வழி தெரியாமல் இருளில் இடறி விழுகிறான்; நீயோ பட்டப்பகலில் நேர்வழி தெரிந்தும் ஆசை மிகுதியால் குறுக்கு வழியில் நடக்கிறாய்" என்றேன்.
அறைக்குள் நுழைந்தபோது அவன் முகத்தில் இருந்த மகிழ்ச்சி, போகும் போது இல்லை. அவன் வருந்தினாலும் உண்மையைச் சொன்னதே நல்லது என எண்ணினேன்.
மறுநாள் பெருங்காஞ்சியிலிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. சந்திரன்தான் எழுதினானோ என்று பார்த்தால், அவனுடைய கையெழுத்தே இல்லை. அவனுடைய தந்தையார் சாமண்ணா எழுதியிருந்தார். பிள்ளை வீட்டார் வந்து கற்பகத்தைக் கேட்பதாகவும், பிள்ளை எங்கள் கல்லூரியில் படிப்பதால் குணம் முதலியவை அறிந்து தெரிவிக்கும் படியாகவும் எழுதியிருந்தார். என் மனம் திகைப்பு அடைந்தது, அடுத்த வரியில் பிள்ளை பி.ஏ. படிப்பதாகவும் பெயர் மாலன் என்பதாகவும் குறித்திருந்ததைப் படித்தவுடன் என் அறிவும் மனமும் நிலைகொள்ளாமல் புரண்டன. நான் கனவிலும் கருதாத தீமை நெருங்கிவிட்டது போலவும் யாரோ மறைந்திருந்து என்னை வதைப்பது போலவும் உணர்ந்தேன். மாலன்மேல் எனக்கு வெறுப்புத் தோன்றியது. அடுத்த விநாடியில் கற்பகத்தின் மேல் சினம் எழுந்தது. சந்திரனை நன்றி கெட்டவன் என்று நொந்தேன். வெறுப்பும் சினமும் மாறித் துயரமும் கண்ணீரும் ஆயின. அறைக்குள் இருக்கவும் மனம் கொள்ளவில்லை. அறையை விட்டு வெளியே செல்லவும் முடியவில்லை மனம் படாதபாடுபட்டது. கடிதத்தைக் கிழித்து எறியலாம் என்று எடுத்தேன். கொஞ்சம் பொறுமையுடன் முற்றிலும் படித்து முடிக்க முயன்றேன். "திருமணத்தைப் பற்றி இப்போது எண்ணியிருக்கமாட்டேன். ஆனால், என்ன செய்வது? என் அக்கா - சந்திரனுடைய அத்தையும் எங்களை விட்டுப் பிரிந்து விட்டார். உலகத்தில் நான் தனியாக நிற்கிறேன். என் ஆவியும் எந்த நிமிசத்தில் பிரியுமோ அறியேன். சந்திரனுடைய போக்கும் செயலும் எனக்கு வாழ்க்கையில் வெறுப்பையே உண்டாக்கிவிட்டன. ஆகவே, நானும் கண்ணை மூடிக் கொள்வதற்கு முன்னே அந்த ஒரு பெண்ணுக்குச் செய்ய வேண்டியதைச் செய்து விட்டால், சிவனே என்று மூச்சை விட்டு விடுவேன்" என்று கடைசிப் பகுதியைப் படித்ததும் மனம் கலங்கினேன். நல்ல பண்பும் உண்மை அன்பும் உடைய அந்த அத்தையின் வாழ்வும் முடிந்து விட்டதா என்று வருந்தினேன்.
சிறிது நேரத்தில் என்னைப் பிடித்துக் குலுக்கிய அந்த பேய் விட்டு நீங்கியது. என் நிலைமை எனக்கே விளங்கியது. மாலன்மேல் ஒரு குற்றமும் சொல்ல முடியாது. என் மனம் கற்பகத்தை விரும்புவது அவனுக்கு எப்படித் தெரியும்? தான் மணக்கப்போகும் பெண் அந்த கற்பகம்தான் என்பதும் அவனுக்குத் தெரியாது. அவன் முழுப் பொறுப்பையும் கிரக பலனிடத்தில் ஒப்படைத்து விட்டிருக்கும்போது அவனைக் குறை கூறிப் பயன் என்ன? கற்பகத்தின் மேலும் சினம் கொள்வதில் பயன் இல்லை. அவளைக் கேட்டு இந்த ஏற்பாடு செய்வதாகச் சொல்ல முடியாது. பெண்ணைக் கேட்ட பிறகு திருமணப் பேச்சைப் பேசுவது என்ற நாகரிக நிலை இன்னும் பெரும்பாலான குடும்பங்களில் வரவில்லையே. சந்திரன் தான் என்ன செய்வான்? அவன் குடிகாரனுடைய மனநிலையில் இருக்கிறான். குடிகாரனுக்குத் தன் வழியே தெரியாதபோது, பிறருக்கு எப்படி வழிகாட்ட முடியும்? நான் இதுவரையில் என் விருப்பத்தை ஒருவரிடமும் புலப்படுத்தவில்லையே. இனி மேலாவது புலப்படுத்த முடியுமா? அது மாலனுக்குக் குறுக்கே நிற்கும் முயற்சியாக இருக்கிறதே.
அன்று வகுப்புக்கு போகவில்லை. கல்லூரிக்குப் போகும் நேரத்தில் மாலன் வந்து அழைத்தான். "நீ முன்னே போ. நான் சிறிது நேரம் கழித்து வருவேன்" என்று சொல்லி அவனை அனுப்பிவிட்டேன். எங்கேனும் ஒரு பூங்காவுக்குச் சென்று ஒரு மரத்தடியில் உட்கார்ந்து அழலாம் என்று எழுந்தேன். செனாய் நகரில் திரு.வி.க. பூங்காவுக்குச் சென்று ஒரு மூலையில் உட்கார்ந்தேன் திரும்பத் திரும்ப முன்போலவே வெறுப்பும் சினமும் குழப்பமும் ஆறுதலும் மாறி மாறி வந்தன. என்னுடைய கலக்கம் எனக்கே பைத்தியக்காரத் தன்மையாகப் புலப்பட்டது. மாலையில் கடற்கரைக்குச் சென்றேன். நெடுந்தொலைவில் யாரும் நெருங்காத இடத்தில் ஒரு மூலையில் தனியே உட்கார்ந்தேன்; சோர்ந்து படுத்தேன். கிழவனும் கிழவியுமாய் இருவர் அந்தப் பக்கமாக வந்தார்கள். இவர்கள் ஏன் இங்கே வந்து தொலையவேண்டும் என்று வெறுப்போடு எண்ணினேன். வந்தவர்கள் இருவரும் ஒருபுறம் உட்கார்ந்து பழைய குடும்பக் கதையைப் பேசத் தொடங்கினார்கள். இன்னும் யாராவது வந்து சேர்ந்தால் அப்புறம் எழுந்து போகலாம். அது வரையில் இங்கேயே இருக்கலாம் என்று படுத்திருந்தேன். பேசிக் கொண்டிருந்த கிழவன் ஒரு கனைப்புக் கனைத்து, "சேச்சே! சுத்தப் பைத்தியங்கள்! எவ்வளவு பெரிய உலகம்! எத்தனை பிள்ளைகள் எத்தனை பெண்கள் பிறந்தது பிறந்தபடியே இருக்கிறார்கள்! இவனுக்கு என்று ஒரு பெண் கிடைக்க மாட்டாளா?" என்றான். கிழவி உடனே, "இந்த உலகத்தில் பெண் பஞ்சமும் இல்லை, ஆண் பஞ்சமும் இல்லை" என்றாள்.
எழுந்து உட்கார்ந்தேன். கன்னத்தில் அறைந்து என்னை நோக்கியே சொன்ன சொற்கள் போல் இருந்தன.
இமாவதியின் திருமண அழைப்பு வந்த அன்று சந்திரன் பட்ட துயரம் நினைவுக்கு வந்தது. அன்று அவனுக்கு எவ்வளவு அறிவுரை சொன்ன நான், இன்று அவனைப் போலவே கலங்குகிறேனே என்று எண்ணிப் பார்த்தேன். எந்தத் துன்பமும் அவரவர்களுக்கு வந்து பட்டால்தான் தெரிகிறது. ஆனால், சந்திரன் முயற்சி செய்தான். கிட்டாததற்கு ஏங்கி அழிந்தான். நான் முயற்சியே செய்யவில்லை. கிட்டக்கூடியதற்கும் முயற்சி செய்யத் திறன் இல்லாமல் வாடுகின்றேன். சந்திரன் அளவு கடந்து எதிர்பார்த்து எதிர்பார்த்து அல்லலுற்றான். நான் அளவோடு எதிர்பார்ப்பதற்கும் தயங்கித் தோல்வியுறுகிறேன். நல்ல உலகம் இது! வாதம் குறைந்தால் பித்தம், பித்தம் இறைந்தால் சிலேத்துமம் என்று நோயாளிகள் துன்பப்படுவது போலவே உள்ளது! மன நோயிலும் மிகுந்தாலும் குறைந்தாலும் ஒவ்வொரு வகைத் துன்பம் ஏற்படுகிறதே! காதல் முயற்சியில் இறங்கினால் ஒரு வகை ஏமாற்றம்! இறங்காமலே இருந்தால் இன்னொரு வகை ஏமாற்றம்! ஆனால், சந்திரன் துடுப்புகளை எறிந்துவிட்டு மரக்கலத்தையும் உடைத்துவிட்டுக் கடலில் குதித்தான். நான் துடுப்புகளை ஏந்தியபடியே, மரக்கலத்தில் நின்றபடியே வீசும் புயலின் கொடுமையைப் பார்த்துக் கலங்கி நிற்கிறேன். இவ்வாறு பற்பல எண்ணிக்கொண்டிருந்து விடுதிக்குத் திரும்பினேன்.
அன்று இரவு நல்ல உறக்கமும் இல்லை. சாமண்ணாவுக்குக் கடிதம் எழுதுவதா, இல்லையா, என்ன எழுதுவது, மாலனுக்காக விட்டுக்கொடுத்துக் கற்பகத்தை மறந்து விடுவதா, மாலனைப் பற்றிக் கவலைப்படாமல் கற்பகத்தைப் பெற முயற்சி செய்வதா, அப்படியானால் குருவிக்குஞ்சு இறக்கை வளர்வதற்கு முன்னமே கூட்டைவிட்டு வெளியே வந்த கதை ஆகுமோ என்று வேறு வகை எண்ணங்களில் சிக்குண்டு தடுமாறினேன்.
விடியற்காலையில் அயர்ந்து உறங்கிவிட்டேன். பொழுது விடிந்ததும் யாரோ எழுப்பும் குரல் கேட்டுச் சன்னல் வழியாகப் பார்த்தேன். மாலன் நின்றுகொண்டிருந்தான். "நேற்றெல்லாம் காணோம். இரவு நேரம் கழித்து வந்தாய்; முன்னேரத்திலேயே படிக்காமல் விளக்கணைத்துத் தூங்கி விட்டாய். என்ன காரணம்? உனக்கும் ஏதாவது காதல் நோய் முற்றிவிட்டதா, சந்திரனைப் போல-?" என்றான்.
"சந்திரன்தான் உன் மைத்துனன் ஆகப்போகிறானே" என்று வாய் தவறிச் சொல்லிவிட்டேன். பிறகு வருந்தினேன்.
"என்ன உளறுகிறாய்? எனக்குத் தங்கையும் இல்லை; அவனுக்குப் பெண் கொடுக்கப்போவதும் இல்லை."
"நீ அவனுக்குக் கொடுக்காவிட்டால் அவன் உனக்குக் கொடுக்கப் போகிறான்."
மாலன் திகைத்து நின்றான். மூக்கின் அருகே சுட்டு விரலை மடித்து வைத்து என்னவோ எண்ணினான். "உனக்கு ஏதாவது கடிதம் வந்ததா?"
"ஆமாம், பிறகு சொல்வேன்" என்றேன்.
"சொல், சொல்" என்று என்னைத் துளைக்கத் தொடங்கினான். மேசை மேல் இங்கும் அங்கும் தேடினான். "எங்கே கடிதம்? உண்மையைச் சொல்" என்றான்.
சாமண்ணாவின் கடிதம் பற்றிச் சொன்னேன். அமைதியாய்க் கேட்டான்.
"பெண் நல்ல பெண்தானா? நீ பார்த்திருப்பாயே? குணம் எப்படி?" என்றான்.
"அதைப் பற்றி என்னை ஏன் கேட்கிறாய்? உங்கள் வீட்டுச் சோதிடரைக் கேள்" என்றேன். பிறகு அவன் வற்புறுத்தவே, நல்ல அழகு என்றும், நல்ல பண்பு என்றும் அவன் மகிழுமாறு சொன்னேன். அவனுடைய முகத்தில் மலர்ச்சி கண்டபோது, என் உள்ளம் நொந்தது; தாங்க முடியாத ஒரு வகை வேதனை, என் உள்ளத்தில் இருந்தது; அதனை வெளிக்காட்டாமல் நொந்து வாடினேன்.
காலைக் கடன்களை முடித்தேன். உணவுக் கூடத்துக்குப் போய்ச் சிற்றுண்டி உண்டு திரும்பிவந்து என் நாற்காலியில் உட்கார்ந்தபோது, என் மனப்புயல் இருந்த இடம் தெரியாமல் அமைதி நிலவக் கண்டேன். என் துடுப்புகள் உதவியாக இருந்தன; மரக்கலமும் பயன்பட்டது. கடமைகளில் மனம் சென்றது, துடுப்புகளை எறியாமல் உதறாமல் பொறுமையோடு இருந்தது நன்மை ஆயிற்று.
மாலையில் வகுப்பிலிருந்து திரும்பி வந்ததும் சாமண்ணாவுக்குச் சுருக்கமாகக் கடிதம் எழுதினேன். மாலன் மூன்று ஆண்டுகளாகப் பழக்கமானவன் என்றும், ஒரு கெட்ட பழக்கமும் இல்லாதவன் என்றும், எப்படியாவது முன்னேறவேண்டும் என்ற ஆசை உடையவன் என்றும், ஆனால், பலவகை மூட நம்பிக்கைகள் உடையவன் என்றும் சோதிடத்தில் பற்று மிகுந்தவன் என்றும் எழுதினேன்.
கடிதம் எழுதி முடித்த பிறகு ஊசலாடிக் கொண்டிருந்த மனம் துணிந்து ஒரு நிலையில் நின்றது.
------
அத்தியாயம் 20
மாலனுடைய திருமணம் ஆவணி இறுதியில் அமைந்தது. கால் ஆண்டுத் தேர்வு முடிந்துவிட்ட பிறகே திருமணம் நடைபெறுவதால், ஒருவகை இடையூறும் இல்லாமல் திருமணத்திற்கு வந்து போகுமாறு மாலன் கூறிச் சென்றான். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு பெருங்காஞ்சிக்கு ஒருமுறை போய்வரலாம் என்று முடிவு செய்தேன். மாலன் தந்த அழைப்பு அல்லாமல், சந்திரன் அனுப்பிய அழைப்பும் வந்தது. சந்திரன் தனியே கடிதமும் எழுதியிருந்தான். நல்ல காலம், அவனுடைய மனம் மாறியிருக்கிறது என மகிழ்ந்தேன்.
தேர்வு முடிந்ததும் நேரே ஊர்க்குச் சென்றேன். அங்கே நான் கண்ட முதல் காட்சி, எங்கள் வீட்டுத் தோட்டம் ஒரு சிறு பள்ளிக்கூடமாய் மாறியிருந்ததுதான். தென்னை ஓலைகளால் ஒரு சிறு தாழ்வாரம் இறக்கியிருந்தது, தரை நன்றாக மெழகியிருந்தது. இருபது பனந்தடுக்குகள் பரப்பப்பட்டுச் சிறுவரும் உட்கார்ந்திருந்தனர். அவர்களுக்கு இடையே வெள்ளையாடை உடுத்து அன்புருவாகப் பாக்கியம் உட்கார்ந்து சில சிறுமியர்க்குக் கணக்குக் கற்பித்துக் கொண்டிருந்ததைக் கண்டேன்.
"எத்தனை நாளாக இப்படி ஆசிரியர் ஆக மாறிவிட்டீர்கள் அக்கா?" என்று வியப்போடு கேட்டேன்.
"போன ஆண்டு எல்லாம் பாத்திரம் தேய்த்து வேலை செய்து வயிறு வளர்த்தேன். முருக்கிலை ஆலிலை தைத்து வயிறு வளர்த்தேன். அவற்றால் ஒன்றும் குறைவு இல்லை. அப்போது ஓய்வு நேரங்களில் சிறுவர்க்குக் கதையும் கணக்கும் சொல்லிப் பார்த்தேன். அதில் தனி மகிழ்ச்சி இருந்தது. ஏன் அதையே தொழிலாக வைத்துக் கொள்ளக் கூடாது என்று எண்ணினேன். முதலில் இரண்டு பிள்ளைகள் வந்தார்கள். நம் வீட்டு நடையில் உட்கார வைத்துச் சொல்லிக் கொடுத்தேன். இப்போது இருப்பத்திரண்டு பிள்ளைகள் ஆகிவிட்டார்கள். அம்மாவை இடம் கேட்டேன். கையில் இருந்த பணத்தைப் போட்டுத் தென்னங்கீற்று வாங்கி இப்படிச் செய்தேன்" என்றார்.
"நல்லதுதான்" என்றேன்.
"என்ன செய்வது தம்பி! கழுத்தில் இருந்த ஒரு சங்கிலியும் வேண்டும் என்று தம்பி ஆசைப்பட்டான். அப்பா செய்து போட்டது. தனக்கு வேண்டும் என்று கேட்டான். கொடுத்துவிட்டேன். கொடுத்திருக்கக் கூடாது என்று நம் அம்மா கண்டித்தார்கள். போகட்டும் என்று கொடுத்து விட்டேன். இனிமேல் என் சொத்து அன்பும் அறிவும் தான்."
உள்ளம் உருகி நின்றேன்.
"என்னைப் பற்றிக் கவலைப்படாதே, தம்பி, உடம்பில் பலம் இருக்கிறவரையில் உழைத்துச் சாப்பாடு தேடிக் கொள்வேன். அதற்குப் பிறகு நீங்கள் இருக்கிறீர்கள்" என்றார்.
அந்தக் குரலில் துயரம் இருந்தது என்று சொல்வதற்கில்லை. நம்பிக்கை இருந்ததாகத் தெரிந்தது.
என் தங்கை மணிமேகலை அந்த ஆண்டில் பத்தாவது வகுப்பிலும், தம்பி பொய்யாமொழி ஏழாவது வகுப்பிலும் படித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய படிப்பு எப்படி இருக்கிறது என்று அறிவதற்காக, அவர்களின் அலமாரிகளை ஆராய்ந்தேன். என்ன என்ன புத்தகங்கள் படிக்கிறார்கள் என்று பார்த்தேன். மணிமேகலையின் அலமாரியில் திரு.வி.க. நூல்களும் காந்தியடிகளின் நூல்களும் விவேகானந்தரின் நூல்களும் பல இருந்தது கண்டேன்.
தங்கையை அழைத்து, "நீ பத்தாவது படிக்கிற பெண், இந்தப் பொதுப் புத்தகங்களைப் படித்துக் காலம் போக்கிக் கொண்டிருக்கலாமா? இவ்வளவு புத்தகங்கள் வாங்கக் காசு ஏது?" என்று சிறிது கடுமையாகக் கேட்டேன்.
"எல்லாம் பாக்கியம் அக்காவின் புத்தகங்கள். மாதம் மூன்று ரூபாய் சேர்த்து ஏதாவது புத்தகம் வாங்கிக் கொண்டிருக்கிறார். நூல் நிலையத்திலிருந்து சிலவற்றை எடுத்த வரச் சொன்னார். அவற்றையும் படிக்கிறார். அக்காவுக்கு இடம் இல்லாததால் இங்கே அலமாரியில் ஒரு பக்கத்தில் வைத்திருக்கிறார்" என்றாள்.
"சரி. போ. அக்கறையாகப் படி" என்று சொல்லி அனுப்பி விட்டேன்.
எங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த அம்மா நெருங்கி வந்து, "பாக்கியம் முன்போல் இல்லை அப்பா! நீங்கள் படிப்பதைவிட மிகுதியாகப் படிக்கிறாள். அவளுடைய ஒரு வயிற்றுக்காகத் தனியே சமைக்க வேண்டா என்று தடுத்து நம் வீட்டிலேயே சாப்பிடுமாறு சொன்னேன். சும்மா அல்ல, சாப்பாட்டுக்கு இரண்டு பங்காக வேலை செய்கிறாள். ஒரு நொடி சும்மா இருப்பதில்லை. குடும்ப வேலையில் முக்கால் பங்கு அவளே செய்கிறாள். எனக்கு எவ்வளவோ உதவியாக இருக்கிறாள். மற்ற நேரத்தில் மாலையில் இப்படிப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்கிறாள். பகல் எல்லாம் படிக்கிறாள். இலை தைக்கிறாள். கிடைக்கிற காசைப் புத்தகம் வாங்குவதற்கும் பத்திரிகை வாங்குவதற்கும் செலவழிக்கிறாள்" என்றார்.
"இன்னும் கொஞ்ச நாளில் ஒரு நூல் நிலையமே ஏற்பட்டு விடும்போல் இருக்கிறதே" என்றேன்.
"வீண் வேலை, வீண் பேச்சு ஒன்றும் இல்லை. அவளுடைய காலம் நல்ல வழியில் கழிகிறது" என்றார் அம்மா.
என் உள்ளம் மகிழ்ந்தது.
மறுபடியும் அம்மா, "இந்த புத்தகங்கள் எல்லாம் மணிமேகலையும் பொய்யாமொழியும் விடுமுறையில் படிப்பதற்காக இங்கே அலமாரியில் இருக்கட்டும் என்கிறாள் புத்தகம் எல்லாம் அவர்களுடைய சொத்தாம்."
உழைக்கும் பழக்கமும் தொண்டு மனமும் இருந்தால் எப்படியும் வாழ முடியும் என்பதை அந்த அம்மையாரின் வாழ்க்கை தெளிவாக்கியது.
திருமணத்துக்கு வருமாறு அம்மாவை அழைத்தேன். இசைந்தார். மறுநாள் மாலை பெருங்காஞ்சிக்குப் புறப்பட்டோம். வீட்டுக்குள் நுழைந்ததும் கற்பகத்தைக் கண்டு அம்மா சிறிது வருந்தினார். "உன் திருமணத்தைப் பார்க்க அம்மாவும் இல்லையே, அத்தையும் இல்லையே" என்று கற்பகத்திடம் கூறினார். மகிழ்ச்சியான நிகழ்ச்சிக்கு வந்தபோது, துயரத்தை ஏன் நினைவூட்ட வேண்டும் என்று எண்ணி அம்மாவின் பேச்சை மாற்றினேன். கற்பகம் என்னைத் தலைநிமிர்ந்து பார்ப்பாள் என்று எதிர்பார்த்தேன். அவள் என் பக்கமே திரும்பவில்லை. தன் கண் கலக்கத்தை மறைப்பதற்காக அவ்வாறு இருந்தாள் என்று எண்ணி அப்பால் வந்தேன்.
சாமண்ணாவும் சந்திரனும் அன்போடு வரவேற்றார்கள். சாமண்ணாவின் குரலிலும் பார்வையிலும் தளர்ச்சி இருந்தது. கவலை முதுமையை விரைந்து கொண்டு வருதலை உணர்ந்தேன். சந்திரனுடைய முகத்தை நன்கு கவனித்தேன். அவன் முன்னைவிட மிகுதியாகப் பேசினான். ஆனாலும் உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது இருந்த உள்ளக் கலப்பு இல்லை. ரயில் பயணத்தின்போது அன்பு இல்லாமலே ஓயாமலே பேசுகின்றவர்கள் இல்லையா? அந்தப் போக்கில் இருந்தது, சந்திரனுடைய பேச்சு. வேலைக்காரர்களைப் பற்றியும் விலைவாசியைப் பற்றியும் பிள்ளை வீட்டுக்காரரின் மந்தமான போக்கைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தான். சாமண்ணா ஒருமுறை என்னைத் தனியே அழைத்துச் சென்று, "பிள்ளை எப்படி? நன்றாகத் தெரியுமா?" என்று கேட்டார். கடிதத்தில் எழுதிய கருத்துக்களையே திரும்பச் சொன்னேன். மகிழ்ந்தார். பிறகு சந்திரனைப் பற்றிச் சில குறிப்புகள் சொன்னார். "திருந்துவான் என்று பார்த்தேன். திருந்துவதாகத் தெரியவில்லை. குடும்பத்திற்குப் பிள்ளை என்று இருக்கிறான். அவ்வளவே தவிர நல்ல பெயர் எடுப்பதாகத் தெரியவில்லை. பொருளிலும் கருத்து இல்லை. வரவு செலவு பார்த்து வாழக் கற்றுக் கொள்ளவில்லை. கேட்டால் உதறிவிட்டுப் போய் விடுவானோ என்று பயமாக இருக்கிறது. அவனுக்கு வந்த மனைவியோ தங்கம். உரிமை கொடுக்கத் தெரியாதவர்கள், அதிகாரிகளாய் உயர்வோடு நடப்பார்கள்; அது முடியாதபோது அடிமைகளாய்ப் பணிந்து நடப்பார்கள் என்று அறிஞர் ஒருவர் சொன்னது பொருத்தம்தான்."
என்னிடமே உரிமையோடு அன்பாகப் பழக முடியாதவனாக இருக்கிறானே. அன்பும் உரிமையும் இருந்தால், எனக்கு அடிக்கடி கடிதம் எழுதுவானே, நீலகிரியிலிருந்து இவனை அழைத்து வந்தபிறகு இன்றுதானே பார்க்கிறேன்! அன்பாகப் பழக வேண்டும் என்ற ஆர்வமும் நன்றியுணர்ச்சியும் இருந்தால், விடுமுறையிலாவது வாலாசாவுக்கு வந்திருக்கக் கூடாதா? திருமணம் ஆனபிறகு மனைவியோடு வெளியூர்க்குப் போகவேண்டிய காரணத்தை முன்னிட்டாவது அழைத்து வந்திருக்கக் கூடாதா என்று திண்ணை மேல் உட்கார்ந்தபடி பலவாறு எண்ணமிட்டுக் கொண்டிருந்தேன்.
"யார்? வேலுவா?" என்று அப்போது ஆசிரியர் வந்தார். "எங்கே வராமல் நின்றுவிடப் போகிறாயோ என்று எண்ணினேன். வந்தது நல்லது. வரப்போக இருந்தால் தான் அன்பும் உறவும் வளரும்" என்றார்.
"தொடர்பும் பழக்கமும் இல்லாதிருந்தாலும் உண்மையான நட்பு நீடிக்கும் என்று திருவள்ளுவர் கூறுகிறாரே" என்றேன்.
"உயர்ந்த மக்கள் சிலருக்கு அது உண்மையாக இருக்கலாம். ஆனால் சாதாரணமானவர்களுக்குத் தொடர்பும் பழக்கமும் இல்லாவிட்டால் நட்புக் குறைந்து போகிறது. இளமையில் என்னோடு பழகிய நண்பர்கள் எங்கோ இருக்கிறார்கள். மறந்தே போய்விட்டேனே?" என்றார்.
அப்போது அந்தப் பக்கமாக நீலநிறப் பட்டுச் சேலை உடுத்திச் சென்ற ஒரு பெண்ணைப் பார்த்தேன்.
"அது யார் தெரியுமா?" என்றார் ஆசிரியர்.
"தெரியாதே"
"சந்திரன் உனக்கு அறிமுகப்படுத்தி வைக்கவில்லையா? இவள்தான் அவனுடைய மனைவி"
"அறிமுகம் செய்யவில்லை, ஒன்றும் இல்லை. அந்த அன்பான வழக்கங்களை அவன் இன்னும் கற்றுக் கொள்ளவே இல்லை."
"என்ன செய்வது? அவன் போக்கே ஒரு மாதிரி."
"நல்ல பெண்தானே?"
"ஒரு குற்றமும் சொல்ல முடியவில்லை. சந்திரனுடைய அம்மா இருந்திருந்தால் மருமகளைக் கண்ணில் ஒத்திக் கொள்வாள். ஊரெல்லாம் புகழ்ந்து பெருமைப்படுத்துகிறார்கள். அப்படிப்பட்ட பெண். ஆனால், அவன் ஒருவன் மட்டும் பழிக்கிறான், சிறுமைப் படுத்துகிறான். அது ஒரு புராணம். உஸ் - அதோ அவன் வருகிறான்."
பிறகு வேறு பேச்சில் ஈடுபட்டவர்போல், "இந்த ஊர் போல் நீர்வளம் உடைய ஊர் வேறு ஒன்றும் இல்லை. ஆனால், ஏரி வறண்டால் ஒரு பயனும் இல்லை" என்று பேசத் தொடங்கினார்.
வந்த சந்திரன் ஆசிரியரோடு பேசாமலே நின்றான். "மேளக்காரர் இன்னும் வரவில்லையா? எத்தனை முறை சொல்லி வைத்தாலும் நாய்களுக்கு உறைப்பதே இல்லை" என்று யாரிடமோ சொல்லிக் கொண்டிருந்தான்.
அப்போது அவனுடைய மனைவி அஞ்சி ஒடுங்கி அந்தப் பக்கமாக வந்து வீட்டுக்குள் நுழைந்தாள். அப்போதாவது அவன் அறிமுகப்படுத்துவான் என்று எதிர்பார்த்தேன். அவன் அதைப் பற்றியே சிந்தித்தவனாகத் தெரியவில்லை.
ஒரு முறை வீட்டினுள் எட்டிப் பார்த்தபோது அம்மாவும் சந்திரனுடைய மனைவியும் நின்று பேசிக் கொண்டிருந்ததைக் கண்டேன். கற்பகம் தன் அண்ணியை அம்மாவுக்கு அறிமுகப்படுத்தியிருக்கக் கூடும் என்று எண்ணினேன்.
பிள்ளை வீட்டுக்காரர் வருதல், நலுங்கு வைத்தல் முதலியவை முறைப்படி நடந்தன. சந்திரன் மனைவி எல்லா வேலைகளிலும் முன்நின்று பொறுப்புடன் செய்ததும் உணவு பரிமாறியபோது அக்கறையோடு கவனித்ததும் போற்றத்தக்கவாறு இருந்தன. குடும்பத்திற்கு ஏற்ற மருமகள் என்று ஆசிரியர் சொன்னது பொருத்தமாக இருந்தது.
மாசன் என்ற பழைய வேலைக்காரன் எங்கோ வெளியே போயிருந்து வந்தான். என்னைக் கண்டதும் பரிவுடன் பேசினான். அம்மாவும் வந்திருப்பதாகச் சொன்னவுடன் உள்ளே தேடிச் சென்று பேசிவிட்டு வந்தான். பழைய ஆட்களில் தோட்டக்காரன் சொக்கான் ஒருவன்தான் வரவில்லை.
மணமகன் மாலன் நலுங்கு முடிந்ததும் என் பக்கத்திலேயே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தான். அவன் என்னைத் தன் பெற்றோர்களுக்கு அறிமுகப்படுத்தினான்.
மறுநாள் காலையில் எழுந்து தென்னந்தோப்பின் பக்கமாகச் சென்றபோது சொக்கானைக் கண்டேன். "என்ன சொக்கான்! எப்படி இருக்கிறாய்" என்று கேட்டேன்.
"நல்லபடி இருக்கிறேன் அய்யா! நீங்கள் எங்கள் ஊர்க்கு வருவதே இல்லையே? மறந்துவிட்டீர்களா?" என்றான். "நீந்தக் கற்றுக் கொண்டீர்களே, நன்றாக நீந்துகிறீர்களா?" என்று கேட்டான்.
அவனுடைய வயது, கண் பார்வை, பசி முதலியவை பற்றி நானும் கேட்டேன். "ஒன்றும் குறைவு இல்லை" என்று பொதுவாகச் சொல்லிவிட்டு, "ஆனால்" என்று நீட்டி அமைதியானான்.
"பிறகு என்ன குறை?" என்று கேட்டேன்.
"பெரிய பண்ணைக்காரருக்கு பிறகு பண்ணை எப்படியோ என்றுதான் கவலையாக இருக்குது" என்றான்.
"சின்னவர் சந்திரன் இருக்கிறாரே" என்றேன்.
வாயைச் சப்பி ஒலித்து, "ஒன்றும் பயன் இல்லைங்க. படித்தும் பயன் இல்லாதவராய்ப் போய்விட்டார். குழந்தை போல் ஒரு பெண்டாட்டி வந்திருக்குது. அதையும் கவனிக்காமல் ஊர் மேய்கிறார். கண்டபடி எல்லாம் திரிகிறார். சொல்ல நாக்குக் கூசுது. நானும் எத்தனையோ பேரைப் பார்த்திருக்கிறேன். பொலி எருது போல் திரிந்தவர்கள் பலபேரைப் பார்த்திருக்கிறேன். அது ஒரு வாழ்வா? சே!" என்றான்.
"அப்படியா?" என்றேன்.
"இன்றைக்குக் காசு இருக்குது. உடம்பில் வலு இருக்குது என்று ஆடலாம். நாளைக்குக் காலணாவுக்கு மதிக்க மாட்டார்கள்" என்றான்.
அவனுடைய பேச்சில் சந்திரனுக்காக வருந்துவது இல்லாமல், ஆத்திரம் கலந்து பேசுவதை உணர்ந்தேன். பிறகு மாசனிடம் பேசிய போது தான் காரணம் தெரிந்தது. தோட்டக்காரனுடைய பெண்ணோடு உறவுகொண்டு அவள் கணவனோடு வாழாதபடி சந்திரன் கெடுத்துவிட்டான் என்பதை அவன் சொன்னான். அதைக் கேட்டபோது என் உள்ளமும் கொதித்தது.
"பெரியவர்க்காகப் பார்க்கிறேன். இல்லையானால் ஒரு நாளும் இந்த வீட்டில் வேலை செய்யமாட்டேன். சின்னவர் அவ்வளவு கெட்டுவிட்டார்" என்றான் மாசன்.
திருமணம் சடங்குகளோடு நடந்தது. பந்தலுக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்து நான் கற்பகத்தின் முகத்தை அடிக்கடி பார்த்துக்கொண்டிருந்தேன். என் உள்ளத்தில் ஒரு மூலையில் பழைய கலக்கம் தலையெடுத்தது. உடனே அதை அகற்றி, நண்பன் மகிழட்டும், அதுவே என் கடமை என்று உறுதி பூண்டேன். மாலனுக்கு என் உள்ளத்தில் நிகழ்ந்தது இன்னது என்று தெரியாது. அவன் அடிக்கடி என்னைக் கண்டு புன்முறுவல் பூத்தான். ஆனால், அதற்கு முன் கண்டபோதெல்லாம் மகிழ்ந்த கற்பகத்தின் முகத்தில் சிறிதளவும் மகிழ்ச்சி இல்லை. அவளுடைய உள்ளத்தில் என்னைப் பற்றிய ஏக்கம் இருக்குமோ என்று ஐயுற்றேன். அப்படித் தெரிந்திருந்தால் திருமணத்துக்கு வராமலே இருந்திருக்கலாமே என்றும் எண்ணினேன். எனக்குப் பழங்கதையாய்ப் போன அந்த விருப்பம் அவளுக்கும் பழங்கதையாய்ப் போயிருக்க வேண்டுமே என்று எண்ணினேன்.
திருமணம் முடிந்து, விருந்தும் முடிந்து அன்று மாலை விடைபெற்றுப் பிரிந்தபோதாவது கற்பகம் பேசுவாளா என்று பார்த்தேன். அவள் இருந்த இடத்திற்கே சென்று அவளெதிரே நின்றேன். அவளுடைய முகத்தில் கண்ட வெறுப்புணர்ச்சி என் தவறுதலை எனக்கு எடுத்துக்காட்டுவதுபோல் இருந்தது. ஒரு வினாடி என் முகத்தைப் பார்த்தாளே தவிர, என்னோடு பேசவும் இல்லை புன்முறுவல் கொள்ளவும் இல்லை. "போய் வரட்டுமா?" என்று நான் சொன்னபோது தலையை மட்டும் அசைத்தாள்.
மாலன் அன்பாக விடை கொடுத்தான். என் உள்ளத்தில் கற்பகம் ஏற்படுத்திய புண் அவனுடைய அன்பாலும் ஆறவில்லை. அதனால் ஆறாப் புண்ணுடன் திருமண வீட்டைவிட்டு வெளியே வந்தேன். சாமண்ணா சிறிது தொலைவு நடந்து வந்து வழி விட்டார்.
சந்திரன் இன்னும் சிறிது தொலைவு நடந்து வந்தான். அம்மா அவனைப் பார்த்து, "தங்கையின் திருமணமும் முடிந்தது, அப்பா மிகவும் சோர்ந்து போயிருக்கிறார். அவருக்குக் கவலை வைக்காதே, இனிமேல் குடும்பம் உன் பொறுப்பு. நீ நல்லபடி பார்த்துக்கொள்ளணும். உனக்கு நல்ல மனைவியும் வாய்த்திருக்கிறாள். அக்கறையான பெண், அடக்கமான பெண். பார்த்தால் பசிதீரும் என்பார்களே அப்படி இருக்கிறாள். நல்லபடி வைத்துக்கொண்டு சுகமாக வாழணும். அவ்வளவுதான்" என்று அறிவுரையும் வாழ்த்துரையும் கலந்து கூறினார்.
சந்திரனுடைய முகத்தில் ஒரு மாறுதலும் ஏற்படவில்லை. சொன்னால் சொல்லிப் போகட்டும் என்பதுபோல் கேட்டுக் கொண்டு வந்தான். அவனுடைய முகத்தை நேற்றும் இன்றும் கவனித்த நான், என் உள்ளத்தில் உணர்ந்ததைச் சொல்ல வேண்டும் என்று விரும்பினேன். "உன் மூக்கில் முன்பு இல்லாத மினுமினுப்பு இருக்கிறது. காதின் ஓரமும் மாசு படிந்தாற்போல் கொஞ்சம் கறுப்பாக இருக்கிறது. தடிப்பாகவும் தெரிகிறது. தோலில் நோய் வந்தால் உடனே கவனிக்க வேண்டும். எதற்கும் ஒரு மருத்துவரிடத்தில் காட்டிக் கேள். அசட்டையாக இருந்து விடாதே" என்றேன்.
அவன் தன் இடக்கையால் காதைத் துடைத்தபடியே "அதெல்லாம் ஒன்றும் இல்லை" என்றான்.
"எதற்கும் ஒருமுறை போய்ப் பார்த்து வருவது நல்லது" என்று சொல்லி விடைபெற்றேன்.
அம்மாவும் நானும் நடக்க, மாசன் எங்களுக்குத் துணையாக ஏரிக்கரை வரைக்கும் வந்தான். வழியில் முன்பு கண்ட குடிசை வந்ததும், அந்தக் கிழக் காதலர் இருவரையும் நினைத்துக் கொண்டேன். "மாசா! அந்தக் கிழவனும் கிழவியும் இன்னும் இங்கே இருக்கிறார்களா?" என்றேன்.
"இருக்கிறார்கள். அப்படியே இருக்கிறார்கள்?" என்றான் மாசன். அம்மா முன்னே போகட்டும் என்று இருந்து, நான் மட்டும் அந்தக் குடிசைக்குள் எட்டிப் பார்த்தேன்.
"யார் அது?" என்றாள் கிழவி.
"கலியாணத்துக்கு வந்தவன். சந்திரனோடு கூடப் படித்தவன்" என்றேன்.
"முன்னெல்லாம் வருமே, அந்தப் பிள்ளையா?" என்றான் கிழவன்.
"ஆமாம்" என்றேன்.
"மொட்டையம்மா இறந்து போச்சே அப்பா! நல்ல பிறப்பு அது. அது பிறந்த வீட்டில் ஒரு கழுதை வந்து பிறந்திருக்கிறதே."
கிழவி குறுக்கிட்டு, "பேசாமல் இரு நமக்கு என்ன? யாராவது எந்தக் கதியாவது போகட்டும்" என்று கணவனைத் தடுத்தாள்.
"மெய்தான். பகலில் பக்கம் பார்த்துப் பேசு என்று சொல்லியிருக்கிறார்கள். சின்ன பெண்கள் வெளியே போனால் நாய்போல் திரிகிறானாமே! பெரிய வீட்டுப் பிள்ளை மரியாதையாக நடக்க வேண்டாவா? சேச்சே" என்றான் கிழவன்.
இது போதும் என்று அங்கிருந்து புறப்பட்டேன். ஏரிக்கரையை அணுகி பஸ் நிற்கும் இடத்தில் காத்திருந்தோம். வேலத்து மலைச்சரிவைக் கண்டதும் தாழை ஓடை நினைவுக்கு வந்தது. ஊர்ப்பக்கம் திரும்பியபோது, பழைய அரளிச் செடி இருக்கிறதா என்று பார்த்தேன். மலரும் அரும்பும் இல்லாமல், ஒன்றும் உதவாத இலைகளோடு அந்தச் செடி நின்று கொண்டிருந்தது. அதன் கீழே துளசிச் செடி இருக்கிறதா என்று பார்த்தேன், இருந்தது. ஆனால், ஓர் இலையும் இல்லை. குச்சிகள் இருந்தன. அவைகளும் உலர்ந்திருந்தன.
--------
அத்தியாயம் 21
பி.ஏ. தேர்வு நன்றாகவே எழுதி முடித்தேன். நல்ல வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. மாலன் அவ்வளவு நம்பிக்கையோடு பேசவில்லை. மூன்றாம் பகுதியைப் பற்றிக் கவலைப்பட்டான். "நீ எப்போதும் இப்படித்தான். உனக்கு எத்தனையோ நம்பிக்கைகள் உண்டு. உள்ளதைச் சொல்ல மாட்டாய்" என்றேன்.
"உனக்கு ஒரு நம்பிக்கையும் இல்லையா?" என்றான்.
"உழைப்பில் நம்பிக்கை உண்டு. அறத்தில் நம்பிக்கை உண்டு."
"கூடிய வரையில் உழைக்கிறோம். எதிர்பார்த்த பயன் கிடைக்கவில்லை. அதற்கு என்ன காரணம் சொல்வது?"
"ஒன்று. நம் உழைப்பிலேயே ஏதாவது குறை இருப்பதாகக் கருதவேண்டும். அல்லது, உலகம் ஏமாற்றிவிட்டதாகக் கருதவேண்டும்."
இப்படிப் பேசிக்கொண்டே புத்தகம், படுக்கை முதலியவைகளைக் கட்டி ஒழுங்கு செய்தேன். விடுதியை விட்டுப் புறப்பட்டபோது வருத்தமாக இருந்தது. அடுத்த ஆண்டில் எம்.ஏ. வகுப்பில் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஒரு புறம் இருந்தபோதிலும், வேண்டா என்று தந்தையார் தடுத்து நிறுத்திவிட்டால், இனி விடுதி வாழ்க்கை ஏது என்று வருந்தினேன். உள்ளத்தில் விடுதிக்கு நன்றி கூறிவிட்டுப் புறப்பட்டேன். வழக்கம்போல் மாலனும் நானும் ஒன்றாகவே பயணம் செய்தோம். அரக்கோணத்தில் அவன் பிரிந்தான். பிரிந்தபோது, "நம்முடைய மாணவ வாழ்க்கை இன்றோடு முடிந்தது" என்றான். "ஆனாலும் நாம் என்றும் நண்பர்களாக இருக்கவேண்டும்" என்று சொல்லி விடைபெற்றேன்.
படிப்பு முடிந்ததும் விடுதலையுணர்ச்சி ஏற்படும் என்று அதற்குமுன் எண்ணிக்கொண்டிருந்தேன். ஆனால், அதற்கு மாறாக, அதுவரையில் இருந்த உரிமை வாழ்வு குறைவது போல் உணர்ந்தேன். வீட்டில் தங்கையின் திருமணம் பற்றிய பேச்சு மிகுந்திருந்தது. அதைப்பற்றிப் பேசியபோது தாயின் முகத்தில் கவலை இருந்தது. தந்தையின் முகத்தில் என்றும் இருந்த கவலை அப்போது மிகுதியாகத் தோன்றியது. சென்னையிலிருந்து ஒரு குடும்பத்தார் வந்து பெண் கேட்டார்களாம். பிள்ளை எம்.ஏ. படித்த பிள்ளையாம். ஒரு வீடு சென்னையில் வாங்கி எழுதி வைத்து கையில் ஐயாயிரம் கொடுத்து, திருமணச் செலவும் செய்ய வேண்டுமாம். குடும்பத்தையே விற்றாலும் அவ்வளவு செலவு செய்யமுடியாது என்று தந்தையார் வருந்தி அனுப்பிவிட்டாராம். வேலூரிலிருந்து இன்னொரு குடும்பத்தார் வந்தார்கள். பிள்ளை பி.ஏ. படித்தவனாம். பத்தாயிரம் ரூபாய் கொடுத்துத் திருமணம் நடத்தி வைக்கவேண்டும் என்றார்களாம், அதுவும் முடியாது என்று தந்தையார் மறுத்துவிட்டாராம். சேலத்திலிருந்து ஒரு குடும்பத்தார் வந்து, பணம் கேட்காமல் பெண் கேட்டார்களாம். பிள்ளை இண்டர் படித்தவராம். ஆனாலும், முதல் மனைவி இறந்து இது இரண்டாம் திருமணமாக இருப்பதால் தாய் விருப்பம் இல்லாமல் மறுத்துவிட்டாராம்.
கடைசியில் பத்தாவது படித்துப் பயிற்சி பெற்ற ஆசிரியர் ஒருவரின் குடும்பத்தார் வந்து பெண் கேட்டார்கள். பணம் ஒன்றும் தேவையில்லை என்றும், எளிய முறையில் திருமணம் செய்து வைத்தால் போதும் என்றும் கூறினார்கள். பெண்ணும் பத்தாவது படித்தவள் அல்லவா என்று அம்மா கொஞ்சம் தயங்கினார். "பையனை நான்கு ஆண்டுகள் விடுதியில் சேர்த்துக் கல்லூரியில் படிக்க வைத்ததற்கே எவ்வளவோ செலவு ஆயிற்று. சின்ன மளிகைக் கடையில் எவ்வளவுதான் நான் ஒருவன் சம்பாதிக்க முடியும்? பி.ஏ., எம்.ஏ., பார்த்துப் பத்தாயிரம் பதினைந்தாயிரம் கொடுக்க என்னால் முடியாது. நீங்கள் எப்படியாவது போங்கள்" என்று அப்பா தம் உள்ளத்தின் குமுறலை எடுத்துரைத்த போது அம்மா பேசாமல் இசைந்துவிட்டார்.
படித்த மாப்பிள்ளை வீட்டாரின் இரக்கமற்ற பண வேட்டையையும் பெண்ணைப் பெற்ற பெற்றோரின் மனவேதனையையும் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், என் குடும்பத்திலேயே இந்த அனுபவத்துக்கு ஆளானபோது, உலகப் போக்கை மிக மிக வெறுத்தேன். படிப்பு எங்கே? பண்பு எங்கே? அழகுக்கு அழகு; அறிவுக்கு அழகு; அன்புக்கு அழகு என்று விலை போகும் கொடுமையை நன்றாக உணர்ந்தேன். சான்றோர்கள் நூற்றுக்கணக்காகப் பிறந்த நாடு, உயர்ந்த நூல்கள் பற்பல தோன்றிய நாடு, கோயில்களும் அறநிலையங்களும் மலிந்த நாடு என்று பெருமை பேசிக்கொள்கிறோம். தொன்றுதொட்டே இந்த நாடு ஒன்றுதான் பாரமார்த்த நாடு என்றும், மற்ற நாடுகள் இன்று வரையில் உலகாயதப் போக்கிலேயே உழன்று வருகின்றன என்றும் மற்ற நாடுகளைக் குறை கூறிப் பெருமை கொள்கிறோம். ஆனால், படித்த இளைஞர்களும் பண்புள்ள அழகிகளும் பணத்துக்காக விலைபோகும் கொடுமை வேறு எந்த நாட்டிலும் இவ்வளவு மலிந்துள்ளதாகக் கூறமுடியாது. திருமணக் காலங்களில் குடும்பங்களில் நடக்கும் பேச்சைச் செவிக்கொடுத்துக் கேட்டால் இந்த நாட்டிற்கு ஆத்மீகத் தொடர்பு மிகுதி என்று சொல்வதற்கு வாய் கூசும். இவ்வாறு எண்ணிக் கொதித்த என் மனத்தில் கோயில்களும் பணத்துக்குத் தக்கவாறு மூர்த்தியின் பெருமையும், பணம் கொடுப்பவர்களின் பெருமைக்கு ஏற்றவாறு அவர்களுக்கு அங்கே தரப்படும் சலுகைகளும் சிறப்புகளும், மடங்களிலும் மற்ற அறநிலையங்களிலும் பணத்துக்கு வரவேற்பு அமைந்துள்ள சிறப்பும் பெருமையும் ஆகிய எல்லாம் நினைவுக்கு வந்தன.
எப்படியோ என் தங்கை மணிமேகலையை ஏழை ஆசிரியர் ஒருவர்க்குத் திருமணம் செய்து கொடுப்பதற்கு முடிவு ஆயிற்று. அடுத்து, என் பேச்சு வந்தது. இனிமேல் படிக்க வைக்க முடியாது என்பதை அப்பா தெளிவாக்கி விட்டார். முன்பின் தெரியாத குடும்பத்துப் பெண்ணைக் கொண்டுவந்து மருமகளாகக் கொண்டால், இந்த ஏழைக் குடும்பம் என்ன ஆகுமோ, தெரிந்த வீட்டில் வேலூரில் உள்ள பெண்ணே நமக்குப் போதும் என்ற கருத்தையும் தெரிவித்தார். அம்மா ஒன்றும் கூறாமல் அமைதி ஆனார். நானே அம்மாவிடம் என் தயக்கத்தைச் சொன்னேன். "அத்தை மகள் என்பது ஒன்றுதான் குறை; பெண்ணைப் பொறுத்த வரையில் வேறு குறை இல்லை. மற்ற எல்லாப் பொருத்தமும் இருந்து ஒரு குறை இருந்தால் இருந்து போகட்டும்" என்றார். "வாய் துடுக்கு அல்லவா அம்மா?" என்றேன். "சின்ன வயதில் அப்படி இருந்தாள். இப்போது இல்லை. தவிர, நாம் புது உறவு தேடிப்போனால், அங்கே அந்தப் பெண்ணைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? இயற்கையாகவே வாய் துடுக்காக இருந்தாலும் முதலில் அடக்கமாகப் பழகுவாளே, அப்போது ஏமாறுவோம் அல்லவா," என்றார். வேறு வழி இல்லைபோல் தோன்றியது. "தேர்வு முடிவு தெரியட்டுமே" என்றேன். "அதற்கும் இதற்கும் தொடர்பு இல்லை. இரண்டு திருமணமும் ஒன்றாக நடந்தால் செலவு குறையும்" என்றார்.
கல்லூரியில் படித்த காலத்தில், அது ஓர் அறை என்றும், படித்து முடித்த பிறகு புகும் உலகம் திறந்தவெளி என்றும் கற்பனை செய்து கொண்டிருந்தேன். தங்கையின் திருமணப் பேச்சும் என் திருமணப் பேச்சும் அவற்றை ஒட்டிய சிக்கல்களும் எனக்கு உண்மையை உணர்த்தின. நான் இதுவரையில் இருந்ததுதான் திறந்தவெளி என்றும், இப்போது புகும் வாழ்க்கைதான் புழுக்கம் மிகுந்த அறை என்றும் உணர்ந்தேன்.
என் கவலையையும் சோர்வையும் பாக்கிய அம்மையார் உணர்ந்து கொண்டார். "கயற்கண்ணியைவிட நல்ல பெண்ணாக, தெரிந்த பெண்ணாக, இருந்தால் சொல், நானே அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சொல்லி ஏற்பாடு செய்வேன்" என்றார்.
சொல்லத் தெரியாமல் விழித்தேன்.
"தங்கையைப் பற்றி நீ கவலைப்பட்டுப் பயன் இல்லை. பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்று திருவள்ளுவர் அந்தக் காலத்திலேயே சொன்னாரே" என்றார்.
திருக்குறளை மேற்கோளாகச் சொன்னவுடன் எனக்கு வியப்பாக இருந்தது. அந்த அம்மையாரின் படிப்பு திரு.வி.க நூல்களிலிருந்து திருவள்ளுவர் வரையில் போய் விட்டதே என்று வியந்தேன். ஏதாவது மறுமொழி சொல்லியாக வேண்டுமே என்று, "இன்னும் கொஞ்ச காலம் பொறுக்கலாமே" என்றேன்.
"பொறுப்பதால் பயன் இல்லையே; தங்கைக்கு வயது பதினெட்டு ஆகிவிட்டது. இனிமேல் பொறுத்தால் மட்டும் நல்ல மாப்பிள்ளையாகக் கிடைப்பானா? வயது ஆக ஆக மாப்பிள்ளை வருவது குறையும். படிப்பும் பணமும் இருந்தால், அல்லது பணம் மட்டும் இருந்தாலும் சரி, முப்பது வயது வரையில் பொறுத்திருக்கலாம். வாழ்க்கையில் செல்வாக்கு இருந்தால், அதற்கு மேலும் பொறுத்திருக்கலாம். நம்மைப் போன்றவர்கள் பொறுத்திருப்பதால் பயன் இல்லையே."
"தங்கைக்கு அல்ல, எனக்குச் சொல்கிறேன்."
"உனக்கும் அப்படித்தான். இனிமேல் படிப்பதாக இருந்தால் நீ சொல்வது சரி. படிப்பு இனிமேல் இல்லை என்று முடிவாகிவிட்ட பிறகு, திருமணம் செய்துகொள்வது நல்லது. பணக்காரக் குடும்பத்தினர் உன்னைத் தேடி வருவார்கள். விருப்பமாக இருந்தால் சொல். அம்மாவுக்கும் அப்பாவுக்கும் விருப்பம் இல்லை. அவர்களுக்குச் சமமாகப் பணம் இல்லாவிட்டால், நம்மை மதிக்கமாட்டார்களே என்று அம்மாவும் அப்பாவும் அஞ்சுகிறார்கள். ஆகவே பொருளாதாரக் கவலை தான் இதற்கும் காரணம். அத்தை மகள், அக்கா மகள் என்று பழங்காலத்தில் சில குடும்பங்களுக்குள்ளேயே திரும்ப திரும்பப் பெண் கொண்டதற்கும் இந்தப் பொருளாதாரக் கவலைதான் காரணம் என்று எண்ணுகிறேன். இந்த கவலை தீரும் வரையில் உலக சமுதாய வாழ்க்கையில் நல்ல மாறுதல் ஒன்றும் எதிர்பார்க்க முடியாது."
அந்த அம்மையாரின் இந்தப் பேச்சு எனக்கு மேலும் வியப்பை உண்டாக்கியது. வார இதழ்களையும் மாத இதழ்களையும் வாங்கித் தவறாமல் படித்து வருகிறார் என்று முன்னமே அம்மா சொல்லக் கேள்விப்பட்டேன். அப்படிப் படிப்பதால் இவ்வளவு தெளிவாக அறிவு வளர்ந்திருந்ததை உணர்ந்தேன்.
மறுபடியும் பழைய கேள்வியையே கேட்டார். "கயற்கண்ணியைவிடப் பழக்கமான பெண்ணாக நல்ல பெண்ணாக இருந்தால் சொல்" என்றார்.
பேசியும் பயன் இல்லை, பேசாமலிருந்தும் பயன் இல்லை என்று உணர்ந்தேன்.
திருமண ஏற்பாடுகள் பரபரப்பாக நடந்தன. அரிசி முதல் சர்க்கரை வரையில் எல்லாப் பொருள்களும் வந்து சேர்ந்தன. உறுதிப்படுத்தும் சடங்குகள் இரண்டும் நடந்தன. அழைப்புகள் இங்கும் அங்கும் பறந்தன. அந்த வேலைகளில் நானும் கலந்து கொண்டேன். ஆற்றின் சுழற்சியில் நானும் சிக்கிக் கொண்டேன். சுழல் கடந்தும், ஆற்றின் போக்கிலேயே ஓடினேன். சந்திரனுக்கும் மாலனுக்கும் அழைப்புகள் அனுப்பிக் குடும்பத்தோடு வருமாறு தனிக் கடிதங்களும் எழுதியிருந்தேன்.
மாலன் மட்டும் திருமணத்திற்கு முந்திய நாளே வந்திருந்தான். கற்பகம் நிறைந்த கர்ப்பமாக இருந்ததால் வரமுடியவில்லை என்று சொன்னான்.
"உன் மைத்துனன் சந்திரன் வருவானா?" என்று கேட்டேன்.
"எனக்கு நம்பிக்கை இல்லை"
"ஏன் அப்படி?"
"அவன் எங்கும் போவதில்லை. உள்ளூரிலேயே எல்லாரையும் மிரட்டிக் கொண்டிருக்கிறான். என்னோடும் நெருங்கிப் பேசுவதில்லை. பழகுவதையே வெறுஞ் சடங்காக வைத்துக்கொண்டிருக்கிறான்."
"காரணம் என்ன?"
"நான் சொன்னால் நீ ஒப்புக்கொள்ளமாட்டாய். குற்றமுள்ள நெஞ்சு வெளியே வந்து பழகப் பயப்படுகிறது."
"ஆடும் மாடும் மனிதனை நெருங்கிப் பழகுவது போல், பாம்பும் புலியும் பழகுமா? தங்கள் இனத்தோடு பழகுவதும் இல்லையே. நானும் நீயும் குற்றம் இல்லாதவர்கள். ஆடுமாடுகள் போல் கூடி வாழ்ந்து பழகுகிறோம்."
"கட்டாயம் வருவான் என்று நம்புகிறேன். உனக்கு எழுதியது போல் கடிதமும் எழுதியிருக்கிறேன். பார்க்கலாம்" என்று சொல்லி மாலனிடம் எங்கள் இளமை நினைவுகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன்.
சந்திரன் அத்தையோடும் வேலைக்காரப் பையனோடும் முதல் முதலில் ஒரு வண்டியில் வந்து இறங்கியது. நான்காம் வீட்டில் குடியிருந்தது, அப்போது சந்திரன் அழகாகவும் அறிவாகவும் இருந்த நிலை, என் காற்றாடியை வேப்பமரத்தில் மாட்டி அறுத்தது, அதனால், நட்பு ஏற்பட்டது, பள்ளிக்கூடத்துக்குச் சேர்ந்து போய்ச் சேர்ந்து வந்தது, நாங்கள் உட்கார்ந்து பேசிய திண்ணைகள், விளையாடிய இடங்கள், பார்த்த வேடிக்கைகள், படித்த அறைகள் எல்லாவற்றையும் மாலனுக்குச் சொல்லிக் கொண்டிருந்தேன்.
மறுநாள் காலையில் திருமண நேரத்திலும் சந்திரனை எதிர்பார்த்தேன். அப்போதும் வரவில்லை. சாமண்ணா ஒரு மூலையில் வந்து உட்கார்ந்திருந்ததை நானும் கவனிக்கவில்லை, மாலனும் சொல்லவில்லை. திருமணம் முடிந்த பிறகு அவர் என்னை நோக்கி எழுந்து வந்தார்.
"எப்போது வந்தீர்கள்?" என்றேன்.
திருமணம் தொடங்கியபோது வந்ததாகக் கூறினார், ஆசிரியரும் வந்திருந்ததைக் காட்டினார்.
"சந்திரன் வரவில்லையா? மனைவியோடு வருமாறு எழுதியிருந்தேன்."
"தெரியும். மருமகளுக்கு இங்கே வர வேண்டும் என்று ஆசைதான். நான் அழைத்துக் கொண்டு வந்தாலும் அவள் மேல் கோபம் கொள்வான். அவனாகவும் புறப்படவில்லை. கடைசியில், யாரும் போகாவிட்டால் நன்றாக இருக்காதே என்று நான் வந்தேன்."
"அம்மாவும் எதிர்பார்த்தார். சந்திரனுடைய மனைவி வருவாள் என்று சொல்லிக் கொண்டிருந்தார்."
"அந்தப் பெண்ணை அழைத்துக்கொண்டு போவதற்கு வெட்கப்படுகிறான். அவள் ஒரு பட்டிக்காட்டு மிருகமாம். அப்படிச் சொன்னதாகக் கேள்விப்பட்டேன்."
"இவன்தான் பட்டிக்காட்டு மிருகம்" என்றேன். என் உள்ளத்தில் தோன்றியதை அப்போது சொல்லாமலே இருந்திருக்கலாம். வெறுப்பு மேலீட்டால் சொல்லி விட்டேன். பக்கத்தில் இருந்தவர்கள் என்னை உற்றுப் பார்த்தார்கள்.
"எப்படியோ போகட்டும். நீயும் உன் மனைவியும் இன்று போலவே என்றும் பளிச்சென்றிருங்கள். நல்ல வழியில் நடந்து நல்ல பெயர் எடுக்கணும்" என்று எங்களை வாழ்த்தினார் சாமண்ணா.
நான் தனியே இருந்தபோது மாலன் வந்து, "கேட்டு வந்தவள் தான்" என்று குறும்பாகச் சிரித்தான்.
"ஏன் அப்படிச் சொல்கிறாய்" என்று அவனுடைய தோளைப் பிடித்துக் குலுக்கினேன்.
"கிராமத்துப் பெண்ணாக இருந்தாலும் நல்ல அழகும் அறிவின் களையும் இருக்கின்றன. எல்லா வகையிலும் உனக்கு ஏற்ற மனைவிதான்" என்றான்.
"உன்னுடைய மனைவியை விடவா?" என்றேன்.
"அவள் ஒருவகை, உன் மனைவி ஒரு வகை. அவளை ஏன் ஒப்பிடுகிறாய்" என்றான்.
ஒப்பிட்ட காரணம் என் உள்ளத்துக்கு தெரியும் அவனுக்குத் தெரியாது என்று எண்ணினேன். ஆனால், அவனுடைய சிரிப்பில் குறும்பு மிகுதியாக இருக்கவே, ஐயுற்றேன். "ஏன் அப்படிச் சிரிக்கிறாய்?" என்றேன்.
"நீ கற்பகத்தை மணந்துகொள்ள எண்ணியிருந்தாயா?" என்று கேட்டு முன்னிலும் மிகுதியாகச் சிரித்தான்.
"இளமையில் திருமணத்திற்கு, முன்பு பார்க்கிற பெண்ணை எல்லாம் மணந்து கொள்ளலாமா? என்று மனம் தேர்ந்தெடுப்பது இயற்கைதானே?"
"அப்படியானால் கற்பகத்தை நீ விரும்பவில்லையா?"
"விரும்பினேன். ஆனால், உனக்காக விட்டுக் கொடுத்தேன்" என்று அவனை இரண்டு கைகளாலும் பற்றிக் குலுக்கினேன். "உனக்கு யார் சொன்னது?" என்றேன்.
"வேறு யார் சொல்ல முடியும்? அவள்தான். உன்னுடைய கடிதம் பார்த்த பிறகுதான் என்னைத் திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டாளாம். அதுவரையில் திருமணமே வேண்டாம் என்று சொல்லி கொண்டிருந்தாளாம்."
"எந்தக் கடிதம்?"
"என்னைப் பற்றி நற்சான்று ஒன்று எழுதி அனுப்பினாயாமே. அந்த நற்சான்றின் பேரில்தான் எனக்குப் பெண் கொடுத்தார்களாம்."
"இவ்வளவுமா நினைவில் வைத்துக் கொண்டிருந்து சொன்னாள்."
"இந்தச் செய்திகளை வாழ்நாளில் எப்போதுமே மறக்க முடியாதே. நீதான் வேண்டுமென்றே என்னிடம் சொல்லாமல் மறைத்து வைத்தாய். நான் விடுவேனா? உன் திருமண நாளன்றே இதைச் சொல்லி உன்னைத் திகைக்க வைத்தேன்" என்று என் கைகளை இறுகப் பற்றி அழுத்தினான்.
கற்பகத்தின் பெருந்தன்மையும் பேரன்பையும் நினைந்து என் உள்ளம் உருகியது.
மறுபடியும் அவனே, "நீ பெற்ற பரிசு - உன் மனைவி - எந்த வகையிலும் குறைவான பரிசு அல்ல. வாழ்க பல்லாண்டு" என்று சொல்லி மகிழ்ந்தான்.
திருமணத்திற்கு மூன்றாம் நாள் தேர்வு முடிவுகள் வெளியாக இருந்தன. அதுவரையில் மாலனை வீட்டிலே தங்கியிருந்து மகிழுமாறு வேண்டிக்கொண்டேன்.
"தேர்வு முடிவுகள் வெளிவரும்போது நான் இங்கே இருக்கக்கூடாது. அதனால்தான் போகவேண்டும் என்கிறேன்" என்றான்.
"ஏன்?"
"நீ நன்றாக எழுதியிருக்கிறாய். நல்ல வெற்றிச் செய்தி வரும். எனக்கு அப்படி இருக்காது. நான் இங்கே இருந்தால் எனக்காக நீ வருந்துவாய் அல்லவா? உன் மகிழ்ச்சி, வருத்தம் கலக்காத மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று எண்ணித் தான் போகிறேன்" என்று விடைபெற்றான்.
அவன் எதிர்பார்த்ததுபோலவே முடிவுகள் வந்தன. அவன் முதல் இரு பகுதியிலும் தேறி மூன்றாம் பகுதியில் தவறிவிட்டான். நான் முதல் பகுதியில் மூன்றாம் வகுப்பாகவும் இரண்டாம் பகுதியில் இரண்டாம் வகுப்பாகவும் மூன்றாம் பகுதியாகிய கணக்கில் முதல் வகுப்பாகவும் தேறி இருந்தேன். அப்பா உள்ளத்துள் ஏற்பட்ட மகிழ்ச்சியை எல்லாம் அடக்கிக் கொண்டு, வேண்டுமென்றே, "முதல் பகுதியிலும் ஏன் முதல் வகுப்பில் தேறவில்லை?" என்று கேட்டார், ஆங்கிலம் தாய்மொழி அல்ல என்றும் தாய் மொழியில் தருவதில்லை என்றும் சொல்லித் தப்பித்துக் கொண்டேன்.
----------
அத்தியாயம் 22
அங்கங்கே வேலைகளக்கு முயன்றேன். சில இடங்களுக்கு எழுதினேன். சில இடங்களில் நேரில் சென்றும் முயன்றேன். சர்வீஸ் கமிஷனுக்கு விண்ணப்பம் எழுதினேன். அதற்கு உரிய தேர்வும் எழுதினேன். தொழிலும் இன்றிக் கல்வியும் இன்றி வாலாசாவில் பொழுது போக்குவது ஒரு துன்பமாக இருந்தது. பெரிய குடும்பத்தில் ஒரு சின்னக் குடும்பமாக எங்கள் இல்வாழ்க்கை நடந்தது. ஆகையால் குடும்பச் சுமை உணரவில்லை. மனைவி கயற்கண்ணிக்கு எங்கள் வீடு புதிது அல்ல; எனக்கும் அவள் புதியவள் அல்ல. இடையிடையே வேளூர்க்கும் வேலூர்க்கும் போய் வந்தது தவிர மாறுதல் ஒன்றும் இல்லை. மாலன் வீட்டுக்கு ஒருமுறை குடும்பத்தோடு போய்வர எண்ணினேன். முதலில் அவன் அல்லவா குடும்பத்தோடு இங்கே வந்து போகவேண்டும். அவன் வந்தபிறகு வேண்டுமானால் நாம் போகலாம் என்று போலி மானம் தடுத்தது. ஆகையால் அங்கும் போகவில்லை. அவனுக்கு ஒரு மகன் பிறந்த செய்தி தெரிவித்திருந்தான். அதற்கு மறுமொழியாக என் வாழ்த்தை அறிவித்திருந்தேன். அதற்குப் பிறகு தேர்வுக்குப் படித்து வருவதாக எழுதியிருந்தான். பிறகு தன் மனைவி எங்கே இருப்பதைப் பற்றியும் அவன் குறிக்கவில்லை. தேர்வு எழுதி முடித்த செய்தியைத் தெரிவித்து இந்த முறை நம்பிக்கையோடு இருப்பதாகக் குறித்திருந்தான்.
அவன் தேர்வில் வெற்றி பெற்ற செய்தியை அறிந்ததும் அவனுக்குக் கடிதம் எழுதி என் மகிழ்ச்சியைத் தெரிவித்தேன். வேலை தேடும் முயற்சியைக் குறித்து என் அறிவுரையைக் கோரி மறுமொழி எழுதினான்.
என் நிலையே சோர்வாக இருக்கும்போது, நான் எப்படி அவனுக்கு வழி காட்டுவது என்று அவனுக்கு ஒன்றும் எழுதாமல் இருந்தேன். எதிர்பாராத வகையில், என்னை நேரில் வருமாறு சர்வீஸ் கமிஷன் அழைத்திருந்தது. அவர்கள் கேட்ட வினாக்களுக்குத் தக்க விடைகள் தந்தேன். சில நாட்களுள் வேலைக்கு உத்தரவும் வந்தது. கோயமுத்தூரில் கூட்டுறவுத் துணைப்பதிவராக வேலை வந்திருந்தது. மனைவியை வீட்டிலேயே விட்டுக் கோவைக்குப் புறப்பட்டுத் தொழிலில் சேர்ந்தேன்.
தொழில்துறை புதியது ஆகையால் இரவும் பகலும் என் சிந்தனை அதில் மூழ்கியிருந்தது. 'செய்வன திருந்தச் செய்' என்ற அறிவுரையைக் கடைப்பிடித்துத் தொடக்கத்திலிருந்தே சிறு கடமையையும் செம்மையாய்ச் செய்து வந்தேன். இரண்டு வாரங்களுள் வேலையில் பழகிவிட்டேன். எனக்கு மேலதிகாரியாக வாய்த்தவர் நல்லவராகவும் திறமையுடையவராகவும் இருந்தார். ஆகையால் வேலையைக் கற்றுக் கொள்வது எனக்கு மகிழ்ச்சியாகவும் ஊக்கமாகவும் இருந்தது. கோவையில் மூன்று மாதங்கள் பயிற்சி போல் இருந்து கற்றுக் கொண்ட பிறகு வேறு எந்த இடத்திற்காவது மாற்றுவார்கள் என அறிந்தேன். ஆகையால் மனைவியை அழைத்துக் கொண்டு போய்க் கோவையில் குடும்பம் நடத்தும் முயற்சியை மேற்கொள்ளவில்லை.
இடையே ஒருமுறை ஊர்க்குப் போயிருந்தேன். தங்கை மணிமேகலை அப்போது புக்ககத்திலிருந்து எங்கள் வீட்டுக்கு வந்திருந்தாள். ஒருநாள் நான் பகலுணவுக்குப் பிறகு கட்டிலில் படுத்துறங்கி விழித்தபோது தங்கையும் கயற்கண்ணியும் பாக்கிய அம்மையாருடன் பேசிக்கொண்டிருந்தது கேட்டது. தங்கை தன் கணவரைப் பற்றிக் குறை சொல்லிக் கொண்டிருந்தாள்.
"எதிலும் பிடிவாதக்காரராக இருக்கிறார். எதை எடுத்தாலும், ஒரு கோடு போட்டாற்போல் இப்படித்தான் நடக்க வேண்டும் என்கிறார். இல்லாவிட்டாலும் இது தப்பு அது தப்பு என்கிறார்" என்றாள் தங்கை.
"அய்யய்யோ! இதைக் கேட்டாலே பயமா இருக்குது அம்மா" என்றாள் என் மனைவி.
"என் அண்ணன் ஒரு நாளும் அப்படிக் கண்டிப்பாக நடக்கமாட்டார். நான் சொல்கிறேன் அண்ணி" என்றாள் தங்கை.
"மணிமேகலை! நீ சொல்வதைப் பார்த்தால் அவர் ஒன்றும் கெட்டவராகத் தெரியவில்லையே" என்றார் பாக்கியம்.
"கெட்டவர் அல்ல. பிடிவாதக்காரர். உலகத்தில் அங்கங்கே குடும்பங்களில் மனைவியின் விருப்பம்போல் விட்டு விட்டுக் கணவன்மார் எதிலும் தலையிடாமல் இருக்கிறார்கள். நம் வீட்டில் அப்பா இல்லையா? என் வீட்டுக்காரர் நான் கட்டுகிற புடைவை முதல் வாங்குகிற பொருள்கள் வரையில் எதற்கும் இப்படி அப்படி என்று கட்டளை போடுகிறார். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் கொடுத்த உரிமைகூட இவர் கொடுப்பதில்லை. சிவப்பு மையில் எழுத வேண்டியதைக் கறுப்பு மையில் எழுதினால் ஆசிரியர்கள் பெரிய குற்றமாகக் கருதுவதில்லை. இரண்டு பக்கம் எழுத வேண்டியதை இரண்டரைப் பக்கமாக எழுதினால் கோபித்துக் கொள்வதில்லை. ஒரு நாள் இரண்டு நாள் படிக்காமலே வந்தாலும், நேரம் கழித்து வந்தாலும் மன்னித்து விடுகிறார்கள். இவருடன் குடும்பம் நடத்துவது பெரிய பள்ளிக்கூடமாக இருக்கிறது. பள்ளிக்கூடமோ இராணுவப் பள்ளிக்கூடமாக இருக்கிறது. தாய் வீட்டுக்கு வந்தது சிறையிலிருந்து விடுதலையாகி வந்ததுபோல் இருக்கிறதே."
தங்கையின் இந்தப் பேச்சைக் கேட்டு என் மனைவி சிரித்தாள்.
பாக்கிய அம்மையாரின் சிரிப்புக் கேட்கவில்லை. "ஊ-ம்?" என்ற குரல் மட்டும் பெருமூச்சோடு கலந்து கேட்டது. "கோடு போட்டு வாழ்க்கை நடத்துவது நல்லதுதானே அம்மா! போட்ட கோட்டில் நடப்பது எளிது அல்லவா? ஒரு காட்டில் நடக்க வேண்டுமானால், வழி இல்லாமல் நடந்து போவதுதான் துன்பம். ஒற்றையடிப்பாதை ஒன்று இருந்தால், அதில் நடந்து போவதில் கவலையே இல்லை. ஒரு பாதையும் இல்லாத இடத்தில் இப்படி நடப்பதா அப்படி நடப்பதா, வலக்கைப் பக்கம் திரும்பலாமா இடைக்கைப் பக்கம் திரும்பலாமா, இந்தத் திசையா அந்தத் திசையா என்று நூறு முறை தயங்கித் தயங்கிப் போகவேண்டும். அப்போதும் மனக்குறை தீராது. அல்லலாக முடியும். ஒற்றையடிப்பாதை இருந்துவிட்டால் போதுமே. கவலை இல்லாமல் போகலாமே" என்றார்.
"மெய்தான் அக்கா! உலகத்தார் போகிய போக்கில் நாம் போகலாமே. துன்பம் இல்லாமல் இருக்குமே!"
"நீ சொல்வது நல்லதுதான். நம்முடைய முன்னோர் காலத்தில் அப்படித்தான் வாழ்க்கை நடத்தினார்கள். கவலையே இல்லாமல் இருந்தது. பெண்களுக்குக் குடும்பப் பண்பாடு என்று இருந்தது. ஆண்களுக்கு உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்று இருந்தது. இப்போது நம் நாட்டில் பலவகையான நாகரிகம் வந்து கலந்துவிட்டன. பணம் ஏற்பட்டு வாழ்க்கையைப் பலவகையாகப் பிரித்துவிட்டது. யாரை யார் பின்பற்றுவது என்று தெரியவில்லை. ஐம்பது ரூபாய் வருவாய் உள்ளவர் ஐந்நூறு ரூபாய் வருவாய் உள்ளவரைப் பின்பற்ற முடியுமா? அவர் ஐயாயிர ரூபாய் வருவாய் உள்ளவரைப் பின்பற்ற முடியுமா?" எல்லோரும் ஒரே ஊரில் அடுத்தடுத்து வாழவேண்டியுள்ளது. போக்கு வரவுக் கருவிகள் பலரைக் கொண்டுவந்து கலந்துவிட்டன. பத்திரிகை, சினிமா முதலானவை பல கருத்துகளைக் கொண்டு வந்து கலந்துவிட்டன. இப்போது குடும்பப் பண்பாடு என்று ஒன்று தனியே எப்படிக் கற்றுக் கொள்வது? உலகத்தோடு ஒட்ட ஒழுகல் என்று சொன்னாலும் உலகில் எந்த வகையான மக்களைப் பார்த்து நடப்பது? முன்காலத்தில் நம் நாட்டு நாகரிகமே ஒரு கிராம அமைப்புப் போல் தெளிவாக எளிமையாக இருந்தது. இப்போது நம் நாட்டு வாழ்க்கை ஒரு சந்தைபோல் பெருங் கலப்பாக ஆவாரமாக ஆகிவிட்டது. ஆகையால் இப்போது உலகத்தாரைப்போல் நடப்பது என்றால் யாரைப் பார்த்து நடப்பது? கணவன் மனைவி என்ற இரண்டே பேர் தனிக்குடும்பம் நடத்துகிறவர்கள் இதோ நம்முடைய பெரிய குடும்பத்தைப் பார்த்துப் பின்பற்ற முடியுமா? கிராமத்துக் குடும்பம் நகரத்துக் குடும்பத்தைப் பார்த்துப் பின்பற்ற முடியுமா? நகரத்தில் பஸ் பயணத்துக்குக் காசு இல்லாதவர்கள் கார் வைத்து வாழ்பவர்களைப் பின்பற்ற முடியுமா?"
"இதே போராட்டம்தான். எல்லாம் வரவு செலவு வகையில் வரும் துன்பங்கள்தான்."
"பார்த்தாயா, மணிமேகலை! இப்போது தெரிந்து கொண்டாயா? அடிப்படையில் இந்தக் குறை இருக்கும்போது உலகத்தைப் பார்த்து வாழவேண்டும் என்று ஏன் சொல்கிறாய்?"
"நான் வரவு செலவு வகையில் தலையிடப் போவதே இல்லை அம்மா! பேசாமல் சமைத்துப் போட்டுக்கொண்டு கவலை இல்லாமல் இருக்கப்போகிறேன்" என்றாள் என் மனைவி குறுக்கிட்டு.
"உனக்கு என்ன அண்ணி! அண்ணனுக்குச் சம்பளம், படி எல்லாம் முந்நூறு ரூபாய்க்குக் குறையாமல் வரும். தடபுடலாகக் குடும்பம் நடத்தலாம். நாங்கள் எழுபது ரூபாய்க்கு ஏங்குகிறோம். நீ கேட்டு வந்தவள்" என்றாள் தங்கை.
தங்கையின் சொல்லைக் கேட்டதும் என் உள்ளம் வருந்தியது. ஏழைக்குக் கொடுத்தோமே என்று கவலை எங்கள் உள்ளத்திலே முதலிலிருந்தே இருந்துவந்தது. இருந்தாலும், அன்று தங்கையே வாய்விட்டுக் குடும்பத் துன்பத்தைச் சொன்னபோது வேதனையாக இருந்தது. என்ன செய்வது. கொடுத்துவிட்டோம், இனி எப்படியாவது வாழவேண்டும் என்று மனம் ஆறுதல் அடைவதைத் தவிர வேறு வழி இல்லை. முதலில் தங்கை தன் கணவரைப் பற்றிக் குறை சொன்னபோது எனக்கு அவர்மேல் வெறுப்புத் தோன்றியது. அன்பும் இரக்கமும் இல்லாத கல் நெஞ்சராக இருக்கிறாரே. கதர் உடுத்தும் காந்தி நெறியராக இருந்தும் இப்படி நடக்கக் காரணம் என்ன என்று வருந்தினேன். அடிப்படைக் காரணத்தை நான் உணரவில்லை. ஆனால் பாக்கிய அம்மையார் எவ்வாறோ உணர்ந்து கொண்டார். அதனால்தான் அந்தப் போக்கில் பேசி அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தார். அந்த அம்மையாரின் நுட்பமான அறிவை எண்ணி வியந்தேன். படிப்புப் பல படித்துப் பரந்த உலகத்தில் பழகிய நான் உணராத, சிக்கல்களை எல்லாம், மூலைவீட்டில் தொண்டு செய்து வாழும் ஒருவர் உணர்ந்தது வியப்பாக இருந்தது. அவர் மேலும் பேசத் தொடங்கவே, ஆர்வத்தோடு கேட்டேன்.
"இப்போது உண்மை வெளிப்படையாகத் தெரிந்து விட்டது அல்லவா? உன் கணவர் ஏன் கோடு போடுகிறார் என்று காரணம் தெரிந்ததா? அவர் தம் குடும்பத்துக்கு என்று தனி வழி வகுத்துக் கொண்டு கவலை இல்லாமல் வாழ முயற்சி செய்கிறார். நல்லதுதானே?"
"சரி, அக்கா! சிக்கனமாக வாழ வேண்டியதுதான். ஒப்புக் கொள்கிறேன். பட்டு உடுத்த வேண்டா என்கிறார். திருமணங்களுக்குப் போனாலும் வேறு அலுவல்களுக்குப் போனாலும் பருத்தியாடையே போதும் என்கிறார். தாம் கதர் உடுத்திக்கொண்டே எதற்கும் போகவில்லையா என்று தம்முடைய பழக்கத்தைக் காட்டுகிறார். அவர் ஆண்மகன், எப்படிப் போனாலும் மதிப்பு உண்டு. நான் அப்படிப் போனாலும் மற்றப் பெண்கள் மதிக்கமாட்டார்களே என்று சொன்னால், அப்படிப் பட்டுக்காக மதிக்கின்றவர்களாக இருந்தால் அவர்கள் நல்லவர்கள் அல்ல என்கிறார். அப்படிப்பட்டவர்களின் உறவும் பழக்கமும் இல்லாமலிருப்பதே நமக்கு நல்லது என்கிறார். ஆடம்பரக்காரரோடு பழகினால் ஒரு வேளையாவது மனத்தில் ஏக்கம் வரும்; கவலை வரும்; பழகாமலே இருந்தால் தலைநிமிர்ந்து வாழலாம் என்கிறார். நாட்டு எலி நகரத்து எலியோடு பழகாமல் இருப்பதே நல்லதாம், பட்டுச் சேலைக்காக நீங்கள் பணம் செலவிட வேண்டா; எங்கள் தாய்வீட்டார் கொடுக்கும் பட்டுச் சேலை போதும் என்று சொன்னேன். அதற்கும் என்னை விடவில்லை. மனத்திலேயே ஆடம்பரம் இல்லாமல் வாழ்ந்தால்தான் சிக்கன வாழ்க்கையும் கவலையற்ற வாழ்க்கையும் முடியுமாம். தாய்வீட்டுப் பட்டாக இருந்தாலும், அதை விரும்புகிற மனமே நல்ல மனம் அல்லவாம். இன்றைக்கு அந்த ஆசைக்கு இடம் கொடுத்தால் நாளைக்கு வேறு பல ஆடம்பர ஆசைகள் மனத்தில் வருமாம். நாம் தனிச்சாதி போல் ஆடம்பரக்காரரிடமிருந்து பிரிந்து வாழலாம் என்கிறார். இது நடைமுறையில் முடியுமா?"
எனக்கு இந்தப் பேச்சு ஒரு முறையீடுபோல் இருந்தது. தங்கையின் நிலைமை இரங்கத்தக்கதாக இருந்தது. அதே நேரத்தில் அவளுடைய கணவரைக் குறை கூறவும் முடியவில்லை.
"நல்ல கதைதான்" என்றாள் என் மனைவி.
பாக்கிய அம்மையாரின் குரலில் இரக்கம் புலப்பட்டது. "என்ன செய்வது அம்மா! அவர் சொல்வதில் உண்மை இருக்கிறது. அப்படி நடந்தால் நல்லது என்றுதான் சொல்வேன். ஆனால் நீ இங்கே குழந்தை போல் செல்வமாக வளர்ந்துவிட்டாய். உன் மனத்துக்கு எல்லாம் புதுமையாக இருக்கும். பயப்படாதே, கவலை வேண்டா. முதலில் அவர் சொன்னபடியே நட, எதிர்த்துப் பேசாதே, உன்மேல் அன்பு வளரட்டும்; நாளடைவில் உன்மேல் அவருக்கே இரக்கம் ஏற்பட்டு விடும். ஆனால் அதுவரையில் பொறுக்க வேண்டும். பொறுப்பது துன்பமாகத்தான் இருக்கும். ஆனாலும் பொறு" என்றார்.
"அவர் நெஞ்சம் கல் நெஞ்சம்; அவருக்கு இரக்கம் வரும் என்று எனக்குத் தோன்றவில்லை."
"அப்படிச் சொல்லாதே மணிமேகலை; அம்மாவிடம் முதல் முதலில் அப்பா எப்படி இருந்திருக்கிறார் தெரியுமா? இன்றைக்கு எப்படி இருக்கிறார்? அம்மாவுக்கு காய்ச்சல் என்றால் மளிகைக் கடையை விட்டு நான்கு முறை வந்து பார்க்கிறார். யாருக்குமே நாளடைவில்தான் அன்பும் இரக்கமும் வளரும். நீ மட்டும் கொஞ்சம் பொறுமையைக் கற்றுக் கொள்ள வேண்டும். பொறுமையும் விட்டுக் கொடுத்தலும் இல்லாவிட்டால் ஒரு பயனும் இல்லை. காதல் காதல் என்று ஒரே நிலையில் நின்று திருமணம் செய்து கொள்கிறார்களே, அவர்களுக்கும் இந்தப் பொறுமையும் வேண்டும் விட்டுக் கொடுத்தலும் வேண்டும். நம் ஊரிலேயே பார், அந்த நெல்மண்டிக்காரர் பிள்ளை எதிர்வீட்டுப் பெண்ணோடு பழகிக் காதல் ஏற்பட்டு மணம் செய்து கொண்டான். ஊரெல்லாம் தெரியும். இப்போது அவர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கிறதாம் தெரியுமா? அந்த வீட்டு வேலைக்காரி ஒரு நாள் இங்கு வந்திருந்தபோது சொன்னாள். எலியும் பூனையுமாக இருக்கிறார்களாம். வேறு வழி இல்லை என்று இப்போது வாழ்கிறார்கள். காதல் ஒரு வகை ஆசை. அது வெறிபோல் வளரும்போது குற்றங்களே தெரிவதில்லை. அது தணியும்போது மற்றக் குடும்பங்களின் நிலை வந்து விடுகிறது. அப்போது பண்புகள் இருந்தால்தான் வாழமுடியும். இல்லையானால் வாழ்வு இல்லை. ஆகவே முதலிலே அன்பு இல்லை, இரக்கம் இல்லை என்று நீ கவலைப்படாதே. நம்பிக்கையோடு நான் சொல்வதைக்கேள். எந்த ஆண்களை நம்பக்கூடாது தெரியுமா? தன்னலம் மிகுந்தவர்களைத் தான் நம்பக்கூடாது. அவர்கள் இன்றைக்கு அன்போடு நடப்பதுபோல் இருக்கும். நாளைக்கு கைவிட்டு விடுவார்கள். உன் கணவர் கொள்கை உடையவர்; ஒரு நெறியை நம்புகிறவர்; சொல்கிறபடி நடக்கிறவர். ஆகையால் நீ அவரை நம்பலாம். உனக்கு ஒரு வழி அவருக்கு ஒரு வழி என்று நடந்தால், அப்படிப்பட்ட ஆளை நம்பக்கூடாது. சில ஆண்கள் வீட்டிலேயே சிக்கனம் பிடிக்கச் சொல்லி வெளியே சீட்டு ஆடிக் காசைத் தொலைப்பார்கள். மனைவி மக்கள் வெறுஞ்சோறு உண்ணச் செய்து தாம் மட்டும் ஓட்டலில் சுவையாகத் தின்பார்கள். மனைவி மக்களை வீட்டில் ஏமாற்றிவிட்டுத் தாம் மட்டும் நாடகமும் சினிமாவும் விடாமல் பார்ப்பார்கள். மனைவி மக்களுக்குக் கந்தை போதும் என்று விட்டு விட்டுத் தாம் மட்டும் அலமாரியிலிருந்து மடிப்பு மடிப்பாக எடுத்து உடுத்திக்கொண்டு ஊர் சுற்றுவார்கள். அப்படிப்பட்டவர்களைத்தான் நம்பக்கூடாது. அவர்களுக்கு ஒரு நாளும் உண்மையான அன்பு ஏற்படாது. உயிரையே விடுவது போல் உருகி உருகிப் பேசினாலும் அவர்களை நம்ப முடியாது; நம்பக்கூடாது. உன் கணவர் அப்படிப்பட்டவரா, மணிமேகலை! உனக்குப் பட்டு வேண்டா என்று சொல்லிவிட்டு அவர் மட்டும் ஆடம்பரமாகத் திரிகிறாரா? திருமணத்தின்போதே அவர் வெள்ளைக் கதர் தவிர வேறு உடுத்தவில்லையே. அப்பா போட்ட மோதிரத்தையும் மறுநாளே கழற்றி உன் கையில் கொடுத்துவிட்டார் என்று சொன்னாயே. பட்டாசை பொன்னாசை இல்லாமல் அவர் தம் மனத்தைப் பயன்படுத்திக் கொண்டார். நீயும் அப்படி ஆகிவிட்டால், வாழ்க்கை கவலை இல்லாததாக இருக்கும் என்று நம்புகிறார். அது உண்மைதான். காந்தியடிகள் பெரிய பெரிய போராட்டம் எல்லாம் நடத்தியும் கவலை இல்லாமல் இருப்பதற்கு அதுதானே காரணம்? கஸ்தூரிபாவின் வாழ்க்கை எவ்வளவு உயர்ந்த வாழ்க்கை! அவ்வளவு தொலைவு உன்னால் நடக்கமுடியாதிருக்கலாம். இருந்தாலும், அந்த வழி நல்ல வழி, நேர் வழி, கவலையற்ற வழி, துணிவான வழி, வீரர் நடக்கும் வழி. அதனால்தான் சத்தியசோதனை படி படி என்று உனக்குப் பலமுறை சொன்னேன். நீ அக்கறையோடு படிக்கவில்லை. அன்று காலையில் தாயுமானவர் பாடலில் ஒரு பாட்டுப் படித்து அப்படியே மனம் உருகிவிட்டது. 'ஓடும் செம்பொன்னும் ஒன்றாகக் கண்டவர்கள், நாடும் பொருளான நட்பே பராபரமே.' அந்த நிலை எவ்வளவு பெரிய நிலை! நாம் அவ்வளவு தொலைவுக்குப் போகவேண்டா. ஆடம்பரத்தில் ஆசை குறைந்தால் போதுமே. உடனே எனக்குத் திருக்குறள் நினைவுக்கு வந்தது. "வேண்டாமை அன்ன விழுச் செல்வம் வேண்டின் உண்டாகத் துறக்க." மனப்பாடம் செய்தாயே, நினைவு இருக்கிறதா? இனிமேல் கொஞ்சம் ஆழ்ந்து படி. மற்றப் பெண்கள் மதிப்பதைப் பற்றிக் கவலைப்படாதே. நீ அவர்களை விட மகிழ்ச்சியாக வாழமுடியும் என்று வாழ்ந்து காட்டு. அதுவே பெரிய செல்வம்!"
பாக்கியம் பேச்சைக் கேட்டதும், என்னால் படுக்கையில் அமைதியாக இருக்க முடியவில்லை. எழுந்து உட்கார்ந்தால் அதனால் அவர்களின் பேச்சு நின்று விடுமே என்று எண்ணி மறுபடியும் அப்படியே கிடந்தேன். சில புத்தகங்களையும் சில இதழ்களையும் படித்துவிட்டு அந்த அம்மையார் எப்படி இவ்வளவு விரைவில் அறிவை வளர்த்துக்கொள்ள முடிந்ததோ என்று வியந்தேன். கல்லூரியிலும் பல நூல்களைப் படித்தேன். அறிவை வளர்த்துக்கொண்டேன். ஆனாலும் இவ்வளவு தெளிவு ஏற்படவில்லையே என்று உணர்ந்தேன். சிலர் நூல்களைப் படிப்பதால் மூளையில் இன்னும் கொஞ்சம் சரக்குச் சேர்த்துக் கொள்கிறார்கள். என் நிலைமை அப்படித்தான் இருந்தது. என் நிலை மட்டும் அல்ல. பெரும்பாலும் நிலை அதுதான். அதனால்தான் படிப்பு என்பது ஒரு சுமையாகத் தோன்றுகிறது. பாக்கிய அம்மையார் படித்த புத்தகங்களின் கருத்துக்களை உணர்ந்தார்; தெளிவு பெற்றார். எங்கள் கல்விச் சுமை, உடம்பில் தோன்றும் தொந்தியும் வீண் தசைகளும் கட்டிகளும் போன்றது. பாக்கியத்தின் அறிவு வளர்ச்சி, உடம்பின் இயற்கையான வளர்ச்சி போன்றது. இயற்கையான வளர்ச்சியில் எவ்வளவு எடை மிகுந்தாலும் சுமையாகத் தோன்றுவதில்லை; உடம்புக்கு ஊக்கமாகவும் வலுவாகவுமே தோன்றும். ஆனால் செயற்கையான சிறு கட்டியும் உடம்புக்கு வேண்டாத துன்பமாகத்தான் தோன்றுகிறது. பாக்கியத்தின் அத்தகைய அறிவு வளர்ச்சி இவ்வளவு குறைந்த காலத்தில் ஏற்பட்டதை எண்ணி எண்ணி வியப்படைந்தேன். கணவரைப் பற்றிக் குறை கூறிய தங்கையின் உள்ளம் இரும்பாக இருந்தது. வேறு எந்தப் பெண்ணிடமாவது தங்கை அவ்வாறு கணவரின் குறையைச் சொல்லியிருந்தால், அந்த இரும்பு நெஞ்சம் துருபிடித்துக் கெடுமாறு செய்திருப்பார். என்னிடம் சொல்லியிருந்தாலும், கணவர்மேல் மேலும் வெறுப்பு வளருமாறுதான் செய்திருப்பேன். பாக்கியம் அந்த இரும்பைப் பொன்னாகுமாறு செய்துவிட்டாரே என வியந்தேன். அடுத்துத் தங்கை பேசிய பேச்சிலிருந்து அந்த இரசவாத வித்தை நடைபெற்றுவிட்டதை அறிந்தேன்.
"நீ சொல்வது சரி அக்கா. அவர் கெட்டவர் அல்ல. ஆனால் நாம் மற்றப் பெண்களோடு பழகாமல் இருக்க முடியுமா? திருமணங்களுக்குப் போகாமல் இருக்க முடியுமா?" என்றாள் தங்கை.
"பழகு, போ. ஆனால் நான் ஏழை என்ற தாழ்வு மனப்பான்மையோடு சிறுமை மனப்பான்மையோடு போகாதே. நான் எளிய வாழ்க்கை வாழவல்ல உயர்ந்த பெண் என்று பெருமிதமாக எண்ணிக் கொண்டு போ. கண்ணகி, மணிமேகலை, குயூரியம்மையார், கஸ்தூரிபா முதலான உத்தமப் பெண்களின் நெறியைப் உணர்ந்துவிட்டவள் என்ற உயர்வு மனப்பான்மையோடு போ. அப்படிப்போய்ப் பழகினால் ஒரு நாளும் நம் மனம் ஏக்கம் அடையாதே" என்றார் பாக்கியம்.
யாரோ ஒருவர் கொட்டாவி விட்டது கேட்டது. என் மனைவியாகத்தான் இருக்கும் என்று எண்ணினேன். அவளுடைய மூளை இந்த அறிவுரையின் சுமை தாங்காமல் சோர்ந்து போயிருக்கும் என எண்ணி எனக்குள் சிரித்துக் கொண்டேன்.
"என்ன, தூக்கம் வருகிறதா கண்ணி!" என்றார் பாக்கியம்.
"போய்த் தூங்கு அண்ணி" என்றாள் தங்கை.
"துக்கம் இல்லை. நீங்கள் பேசுவதைக் கேட்டால் எனக்குப் பயமாக இருக்கிறது! வாழ்க்கை இவ்வளவு தொல்லையாக இருக்கிறதே!" என்றாள் மனைவி.
பாக்கியம் சிரித்தபடியே பேச்சுத் தொடங்கினார்: "பயமாகவா இருக்கிறது? நீ இப்போது படிக்கிற நூல்களை விடாமல் படித்துக் கொண்டு வா! இன்னும் ஆறு மாதத்தில் பயம் இருக்கிறதா, என்று பார். மணிமேகலைக்கு இப்படிச் சொல்லி சொல்லிப் படிக்க வைத்ததனால்தான், இப்போது ஏதாவது சொன்னால் கேட்டுக் கொள்கிறாள்; சொல்வது விளங்குகிறது. நீயும் படி, உனக்கும் தெளிவு வரும்; பயமே இருக்காது" என்றார். சிறிது நேரம் அமைதி நிலவியது. பேச்சு முடிந்ததோ என்று எழ எண்ணினேன். மறுபடியும் அவரே பேசினார்: "பயமே இல்லாமல் இருக்கலாம். சுருக்கமான வழி சொல்லட்டுமா? இங்கிருந்து வேலூர்க்குப் போகணும். நீ தனியே போனால் எவ்வளவு பயம், கவலை! உன் அப்பாவுடன் போகிறாய் என்று வைத்துக் கொள். அப்போது பயம் உண்டா? கவலை உண்டா? அப்பா போகிற வழியில், அவர் பின்னே அடிவைத்து நடந்துகொண்டே இருக்கிறாய். வழியைப் பற்றியும் சிந்திப்பதில்லை. வழியில் கல்லும் முள்ளும் உண்டா என்றும் பார்ப்பதில்லை. திருடர்கள் வந்து அப்பாவை அடித்தால் என்ன செய்வது என்றும் எண்ணிப் பார்ப்பதில்லை. எல்லாம் அப்பாவின் பொறுப்பு. அவர் நடக்கிறார். அவர் பின்னே நீ நடக்கிறாய் அவ்வளவுதான். இல்வாழ்க்கையில் அப்படி நடக்கிற பெண்களுக்கு ஒரு கவலையும் இல்லை; போராட்டமும் இல்லை. கணவர் நல்லவராக, வாழ வல்லவராக வாய்த்துவிட்டால் போதும்! மனைவி மூளைக்கே வேலை கொடுக்காமல் கண்ணை மூடிக்கொண்டு அவரைப் பின்பற்றி நடக்கலாம். அப்போது பட்டு வேண்டுமா வேண்டாவா, வைரம் வேண்டுமா வேண்டாவா, திருவிழாவுக்குப் போவதா இல்லையா, சினிமாவுக்குப் போவதா இல்லையா என்று எந்தச் சிந்தனையும் இல்லாமல் வாழ்க்கை நடத்தலாம். அவர் அழைத்தால் போவது, இல்லையானால் அமைதியாய் வீட்டில் இருப்பது. ஆனால் இது எல்லோராலும் முடியாது. இப்படி வாழ்வதற்கு எவ்வளவோ பண்பாடு வேண்டும்! எவ்வளவோ தியாக மனப்பான்மை வேண்டும். தனக்கு என்று ஒரு சிறு ஆசையும் இல்லாமல் அற்றுப்போன மனநிலை யாருக்கு வரும்? கண்ணகியிடத்தில் பார்த்தோம்! கஸ்தூரிபாவிடத்தில் பார்த்தேன். வேறு யாரிடத்தில் பார்க்கிறோம்" என்றார்.
"படிக்காத பெண்கள், பயங்காளிப் பெண்கள் அப்படி அடங்கி நடக்கலாம். அண்ணியைப் போல் பத்தாவது படித்த பெண் அப்படி ஏன் அடங்கி நடக்கவேண்டும்?" என்றாள் மனைவி.
"பயந்து அடங்கி நடப்பது வேறே. அது தியாகம் அல்ல. அப்படிப் படிக்காத பெண்கள் பயந்து நடப்பதும் காணோமே! கணவன் இல்லாதபோது விருப்பம் போல் நடக்கிறார்கள்! அந்த வாழ்க்கையில் உண்மை இல்லையே! அது ஏமாற்றுகிற வாழ்க்கை, உள்ளத் தூய்மை இல்லாத வாழ்க்கை! போலி வாழ்க்கை! கணவனுக்குத் தெரியாமல் குழந்தைக்கு மந்திர தந்திரங்கள் செய்வது, காட்டேறி பூசை போடுவது, கணவனுக்கு தெரியாமல் சிறுவாணம் பிடித்து வட்டிக்குக் கொடுப்பது, இவைகள் போன்ற உண்மை இல்லாத வாழ்க்கை அது. அதனால் ஒரு பயனும் இருக்காது" என்றார் பாக்கியம். மறுபடியும் அவரே "மணிமேகலை! பெண்களில் மட்டும் அல்ல, அரசியல் தலைவர்களில் பலர் அப்படி இருக்கிறார்கள்; தாங்களாக ஒரு வழி தேடிக்கொள்ளாமல், தங்கள் தலைவர் ஒருவர் காட்டிய வழியில் கண்ணை மூடி நடப்பார்கள். அதனால் அவர்களுக்குக் கவலை குறைகிறது; ஒரு குறையும் இல்லாமல் தொண்டு செய்யவும் முடிகிறது" என்றார்.
"ஆமாம்" என்றாள் தங்கை, தொடர்ந்து "சினிமாவுக்கு அடிக்கடி போய்க் காசு செலவழிக்க நமக்கு வசதி இல்லை என்கிறார். சரி என்று நானும் அதைக் குறைத்துக் கொண்டேன். குடும்பக் கடமைகள் பல இருக்கும்போது, சடங்குகளிலும் பூசையிலும் மணிக்கணக்காச் செலவழிக்காதே என்கிறார். ஓய்விருக்கும்போது பக்திப் பாட்டுக்களைப் படித்தால் போதும் என்கிறார். வெள்ளிக்கிழமைப் பூசையையும் குறைத்துக் கொண்டேன்" என்றாள்.
"வீடு வாயில் முதலியவற்றைத் தூய்மையாக்குவதற்கு வெள்ளிக்கிழமை ஒரு நல்ல நாள்" என்றார் பாக்கியம்.
"அதை எல்லாம் அவர் தடுக்கவில்லை. தூய்மையை அவர் மிக விரும்புவார்" என்றாள் தங்கை. அப்போது தங்கையின் பேச்சுப் போக்கைக் கேட்டால் கணவர் மேல் ஒரு குற்றமும் காணாதவள் பேசுவதுபோல் இருந்தது.
பாக்கியம் தவிர வேறு பெண்களிடம் என் தங்கை அகப்பட்டிருந்தால், மேலும் மேலும் தூபம் இட்டு வெறுப்பையே வளர்த்து அவளுடைய மனத்தைக் கெடுத்து வாழ்க்கையைப் பாழ்படுத்தியிருப்பார்களே என்று எண்ணினேன். தங்கைக்கும் மனைவிக்கும் பாக்கியத்தின் பழக்கம் வாய்த்தது எவ்வளவு நன்மை என்று எண்ணி மகிழ்ந்தேன்.
தங்கையும் கயற்கண்ணியும் சந்திரனுடைய தங்கை கற்பகமும் ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் சிறுமியராக இருந்தபோது, ஒன்றாகக் கூடி ஆடிக் குலாவியது நினைவுக்கு வந்தது. பாக்கியத்தின் அறிவின் பயனை இவர்கள் இருவரும் பெறும்போது, கற்பகமும் பெறுவதற்கில்லையே என்று வருந்தினேன்.
மறுநாள் காலையில் பல் துலக்கியதும், தோட்டத்தின் பக்கம் சென்றேன். அங்கே பாக்கியம் அமைதியாக படித்துக் கொண்டிருந்ததையும் ஒரு குறிப்பில் எழுதிக் கொண்டிருந்ததையும் கண்டு பேசாமல் திரும்பினேன். பாத்திரம் துலக்குதல் முதலிய எல்லாக் கடமைகளையும் முடித்து அவ்வளவு காலையில் படிக்க ஓய்வு கிடைத்து விட்டதே என்று எண்ணினேன். கூடத்தில் புத்தக அலமாரியைத் திறந்து பார்த்தேன். முதலில் கிடைத்தது தாயுமானவர் பாடல். அதில் அங்கங்கே ஓரத்தில் கோடிட்டிருந்ததைக் கண்டேன். திருக்குறளிலும் அவ்வாறே கண்டேன். அப்போது தங்கை வந்து, "என்ன அண்ணா பார்க்கிறீர்கள்?" என்றாள்.
"இந்தப் புத்தகங்களில் ஏன் இப்படிக் கோடு போட்டிருக்கிறீர்கள்?" என்று கேட்டேன்.
"நான் போட்ட கோடுகள் அல்ல, அக்கா போட்டார்கள். கோடு போட்ட பகுதிகளைத் திரும்பத் திரும்பப் படித்து மனப்பாடம் செய்ய வேண்டும் என்று சொல்லி அப்படிச் செய்திருக்கிறார்கள்" என்றாள்.
தங்கை போய்விட்ட பிறகு அங்கே இருந்த வேறு நூல்களையும் புரட்டிப் பார்த்தேன். அருட்பாவும் கைவல்லியமும் பார்த்தேன். இராமதீர்த்தரின் அறவுரைகள் என்று ஒரு நூல் பார்த்தேன். இப்படி ஒரு நூல் பார்த்ததே இல்லையே. கேள்விப்பட்டதும் இல்லையே என்று சில வரிகள் படித்தேன். உயர்ந்த கருத்துகள் இருந்தன. சிலப்பதிகாரக்கதை, மணிமேகலை வசனம் என்ற இரு நூல்கள் பார்த்தேன். அவற்றிலும் சில பகுதிகள் கோடிட்டிருந்தன. செய்யுள் வடிவமான மூலத்தைப் படிப்பதற்கு வேண்டிய இலக்கியப் பயிற்சி இல்லாத காரணத்தால், பாக்கியம் இந்த உரைநடைக் கதைகளை மட்டும் படிக்க முடிகிறது.
இலக்கியப் பயிற்சி இருந்திருந்தால், இன்னும் சிறப்பாக இருக்குமே என்று எண்ணினேன். இன்னும் பல உரைநடை நூல்களும் இருக்கக் கண்டேன்.
அன்று இரவு உணவுக்குப் பிறகு நான் திண்ணைமேல் சாய்ந்து படுத்துக் கொண்டிருந்தேன். மறுபடியும் எப்படியோ பட்டுப்புடவை பற்றிய பேச்சு நடப்பது கேட்டது. மெல்ல எழுந்து சன்னல் பக்கம் உட்கார்ந்து கேட்டேன். எனக்கு முதலில் கேட்டது மனைவியின் குரல்தான்.
"எல்லாரும் பட்டு உடுத்திக் கொள்ளாமல் விட்டுவிட்டால், பட்டு நெசவாளர்கள் என்ன ஆவார்கள்? பட்டு வியாபாரிகள் என்ன ஆவார்கள்?" என்றாள் மனைவி.
அம்மா சிரிக்க, மற்றவர்களும் சேர்ந்து சிரித்தார்கள்.
"நாம் வீடுகளுக்கு வலுவான கதவும் சன்னலும் வைத்து, உறுதியான தாழ்ப்பாளும் போட்டு இரவில் படுத்துக் கொள்கிறோம். வாசலுள் யாரும் இறங்கி வராதபடி வாசலிலும் கம்பிகள் போட்டுவிடுகிறோம். எல்லோரும் இப்படிச் செய்தால் திருடர்கள் எப்படிப் பிழைப்பார்கள்? அவர்களுடைய மனைவி மக்கள் என்ன ஆவார்கள்?" என்றார் பாக்கியம்.
இப்போது என் மனைவியும் சேர்ந்து ஒரே ஆரவாரமாகச் சிரித்தது கேட்டது.
"பட்டுத் தொழிலும் வீட்டில் திருடுவதும் ஒன்றுதானா?" என்று சிரித்தபடியே மனைவி கேட்டாள். "வேறுபாடு உண்டு. திருடுகிறவன் பசிக்காகத் திருடுகிறான். ஆடம்பரத்துக்காகத் திருடவில்லை. ஆனாலும் அது குற்றமே. உணவுக்காக ஆடு மாடுகளை வெட்டுகிறார்கள். அதுவும் குற்றமே. ஆனாலும் ஆடம்பரத்துக்காக கொலை செய்யவில்லை. பட்டுத் தொழில் இந்த இரண்டையும் விடக் கொடுமையானது. பட்டுப் பூச்சிகளைத் தீனியிட்டு வளர்க்கிறார்கள். நூலுக்குள் சுற்றிக்கொண்டு கிடக்கும் நிலை வந்ததும் கொதிக்கும் நீரில் அந்தப் பட்டுப் பூச்சிகளை அப்படியே உயிரோடு போட்டுச் சாகடிக்கிறார்கள். பிறகு வெளியே எடுத்து, நுலைச் சேர்த்துக் கொண்டு செத்த உடம்புகளை எரிக்கிறார்கள். ஆடம்பரத்துக்காகச் செய்யும் கொலை இது. ஒருவன் பசிக்கு ஒரு சின்ன கோழி அல்லது அரைக்கால் ஆடு போதும். ஆனால் ஒரு பட்டுச் சேலைக்கு ஆயிரக்கணக்கான பட்டுப் பூச்சிகளைக் கொதிக்கும் வெந்நீரில் இட்டு வதைத்துக் கொல்ல வேண்டும். நான் கண்ணாரப் பார்த்தேன். அந்தக் கொடுமையை!" என்றார் பாக்கியம்.
உடனே அம்மா, "மெய்தான். ஆனால் பட்டுச் சேலைக்குப் போடும் காசு பழுது அல்ல. நன்றாக உழைக்கிறது. அழகாகவும் இருக்கிறது" என்றார்.
"என்ன இருந்தாலும், ஆடம்பரத்துக்காக, அழகுக்காகச் செய்யும் கொலை அது! மூட்டைப் பூச்சிகளை, கொசுக்களை, எலிகளைக் கொல்கிறோம். அவைகள் நம் வாழ்வுக்கு இடையூறு செய்கின்றன. அதனால் கொல்கிறோம். புலி சிங்கங்களையும் அப்படியே வேட்டையாடிக் கொல்கிறோம். ஆனால், ஆடம்பரத்துக்காக அழகுக்காகக் கொலை செய்யலாமா? அது அறமா?" என்றார் பாக்கியம்.
அவ்வளவு தெளிவாக அவர் சொன்னதைக் கேட்டதும் இனிப் பட்டாடையே உடுப்பதில்லை என்ற உறுதி என் நெஞ்சில் ஏற்பட்டது. அந்த உறுதி இன்று வரையில் தளராமல் இருக்கிறது. அப்படி இருப்பதால், அன்று இரவு, பாக்கியம் பேசிய பேச்சும் இன்னும் என் செவியில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
"என் வீட்டுக்காரர் இதற்குமேலே ஒரு படிபோய் விட்டார்" என்றாள் தங்கை.
"எப்படி" என்றாள் மனைவி.
"தோட்டத்தில் ரோசாச் செடி பூத்திருக்கும். நான் போய்ப் பறிக்கும்போது அவர் பார்த்துவிட்டால், 'அய்யோ பாவம்' என்பார். ஒருநாள் வெள்ளிக்கிழமை பூசைக்காக அரளிப் பூக்களைப் பறித்து ஒரு தட்டில் கொண்டுவந்தேன். அவைகளைத் தட்டோடு வாங்கிக் கண்ணில் ஒற்றிக்கொண்டு இரக்கத்தோடு பார்த்து, 'மனிதர் கையில் அகப்பட்டுக் கொண்டீர்களா?' என்றார்."
இதைக் கேட்டதும் பாக்கியம், "நல்ல மனம்தான். தாயுமானவரும் ஒரு பாட்டில் இப்படி உணர்ந்து பாடி இருக்கிறார். நவசக்தி இதழில் பார்த்தேன். காந்தியடிகளின் ஆசிரமத்தில், யாரும் அங்குள்ள பூக்களைப் பறிக்கக்கூடாது என்று ஒரு விதி உண்டாம். ஜெர்மனி நாட்டு ஸ்வெயிட்சர் என்ற மருத்துவர் - பெரிய விஞ்ஞானி ஒருவர் - புல்மேல் கால்வைத்து நடக்கமாட்டாராம்" என்றார்.
"இவைகள் எல்லாம் நடக்க முடியாத விதிகள்" என்றாள் தங்கை.
"நடக்க முடிந்தவை என்று சிலவற்றை ஏற்படுத்திக் கொண்டு, அவைகளையாவது கடைப்பிடிப்போம். அதுவும் செய்யாமல், பழையபடியே இருந்தால் பயன் என்ன?" என்றார் பாக்கியம்.
"அப்படியானால் உனக்குப் பூவும் வாங்கிக் கொடுக்க மாட்டார் உன் வீட்டுக்காரர்" என்றாள் மனைவி.
"அவர் கையால் வாங்கிக் கொடுப்பதில்லை. ஆனால் நானாகப் பூ வாங்கிக் கொண்டால் தடுப்பதில்லை."
பாக்கியம் குறுக்கிட்டு, "பார்த்தாயா? அவருடைய கொள்கையாக இருந்தும், இந்தப் பூ வகையில் உன் விருப்பம் போல் நடப்பதற்கு விட்டுக்கொடுத்திருக்கிறார். இந்த அன்பை நீ உணரவில்லையே" என்றார்.
"உணராமலா நல்லபடி வாழ்ந்துவிட்டு வந்திருக்கிறேன்? என்ன அக்கா, அப்படிச் சொல்லிவிட்டாயே!" என்றாள் தங்கை.
"தாய் தந்தைக்கு அடுத்தபடி கணவர்தான் அன்பு மிகுந்தவர். தன்னலம் இல்லாத ஆளாக இருந்தால் அந்த அன்பு நாளடைவில் வளர்ந்து பெருகும். முதலில் பொறுமையோடு அவர் வழியில் நடந்தால், காலம் செல்லச் செல்ல முழுதும் உன் வழியில் வந்துவிடுவார். உலகத்தில் பார்! பெண்கள் இட்ட கோட்டைக் கடக்காமல் எத்தனை ஆண்கள் வாழ்கிறார்கள்? பயந்து வாழ்கிறவர்களைக் கணக்கில் சேர்க்க வேண்டா, அன்பால் முழுதும் விட்டுக்கொடுத்து வாழ்கிற கணவன்மார் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள்" என்றார் பாக்கியம்.
"இரண்டு பேரும் விட்டுக்கொடுத்துப் போக வேண்டியதுதான். ஒரு மாடு மட்டும் இழுத்து இன்னொரு மாடு சும்மா இருந்தால் வண்டி போகுமா?" என்றார் அம்மா.
"சரிதான் அக்கா! கண்ணகிபோல் பயந்து அடங்கிப் பதில் பேசாமல் வாழ்க்கை நடத்தவேண்டும் என்று சொல்கிறாய்" என்றாள் தங்கை.
"அதுதான் நல்லது" என்றார் அம்மா.
பாக்கியம் மறுத்தார். "இதுதானா நீ படித்தது? அந்தச் சிலப்பதிகாரக் கதையைப் படித்ததும் உண்மையைத் தெரிந்து கொள்ளவில்லையே. கண்ணகியா பயந்த பெண்? அவளைப் போல் அஞ்சாமையும் வீரமும் யாருக்கு உண்டு? காந்தி பட்டினி கிடப்பதைப் பார்த்து அவரைக் கோழை என்று ஒரு வெள்ளைக்காரன் சொன்னால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கிறது உன் பேச்சு! துன்பம் பொறுப்பவர்கள் கோழைகள் அல்ல. கொள்கையோடு அமைதியாய் இருப்பவர்கள் கோழைகள் அல்ல. கண்ணகி பயந்த பெண் அல்ல என்பதற்கு அந்தக் கதையிலேயே பல இடங்கள் வருகின்றனவே. தோழி ஒருத்தி சந்திர சூரிய வழிபாட்டுக்கு அழைக்கிறாள். கணவனுடைய மனத்தை மாற்றுவதற்கு அது உதவும் என்கிறாள். கண்ணகி அது தகாத வழி என்று உடனே மறுத்துவிடுகிறாள். செப்பனிட்ட பாதைபோல் இருந்தது கண்ணகியின் வாழ்க்கை. அதில் தடுமாற்றமே இல்லை. மதுரையில் அயலார் வீட்டில் இருக்கும்போது கணவன் செய்த தவறு இப்படிப்பட்டது என்று எடுத்துக் காட்டுகிறாள். கணவன் கொலையுண்ட பிறகு, அரசனை எதிர்த்து எவ்வளவு பேசுகிறாள்!" என்றார்.
"கோவலன்" என்று எதையோ கேட்கத் தொடங்கிப் பேசாமல் நிறுத்தினாள் மனைவி.
"கோவலன் செய்தது தவறுதான். என் மனத்துக்கே அது வருத்தமாக இருக்கிறது. பல ஆண்கள் மனைவியைப் பிரிந்து வாழ்ந்தது பெருங்குற்றம்" என்றார்.
"ஆண்கள் மட்டும் அப்படித் தவறு செய்யலாமா?" என்றாள் மனைவி.
"செய்யகூடாதுதான். ஆனால்" என்று நிறுத்தினார்.
"ஏதோ சமாதானம் செய்து மழுப்பப் பார்க்கிறீர்கள்! நீங்கள் எப்போதும் ஆண்களின் கட்சியே" என்றாள் தங்கை.
"உண்மையான கட்சி நான் சொல்கிறேன். ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒழுக்கம் தவறாதவர்களுக்குத்தான் முதல் மதிப்பு உண்டு. ஆனால் ஒன்று எண்ணிப்பார்க்க வேண்டும். சிலர் மணலில் நடக்கிறார்கள். சிலர் சேற்றில் நடக்கிறார்கள் என்று வைத்து கொள்வோம். யார் வழுக்கி விழுந்தால் பெருந்தவறு?" என்றார்.
"சேறு வழுக்கும். விழுந்தால் தப்பு இல்லை, மணலில் நடப்பவன் விழுந்தால் அது தான் பெரிய குற்றம்" என்றார் அம்மா.
"அதுபோல்தான் ஆண்பெண் வாழ்க்கை. ஆணின் வாழ்க்கை வெளியே பலரோடு பழகித் திரியும் வாழ்க்கை. பலரோடு பழகுவதால் மனம் கெடுவதற்கு வாய்ப்பு உண்டு. ஒழுக்கம் கெடுவதற்கும் வழி உண்டு. சேற்றில் நடந்து வழுக்குவது போன்றது அது. பெண்ணின் வாழ்க்கை குடும்பத்தளவில் பெரும்பாலும் இருந்து, கணவனோடும் மக்களோடும் பழகி அமையும் வாழ்க்கை. மனம் கெடுவதற்கும் வாய்ப்பு இல்லை; ஒழுக்கம் தவறுவதற்கும் வழி இல்லை. மணலில் நடப்பது போன்றது இது. ஆகையால் தவறி விழவே கூடாது. விழுந்தால் நொண்டியாக இருக்க வேண்டும் அல்லது நோயாளியாக இருக்க வேண்டும்."
இவ்வாறு பேசிய பேச்சு முடிவதற்குள் தங்கை குறுக்கிட்டு, "இந்தக் காலத்தில் பெண்களும் வீட்டைவிட்டு வெளியே போய்ப் பலரோடு பழகவேண்டியிருக்கிறதே" என்றாள்.
"படித்துவிட்டு வேலைக்குப்போகும் பெண்களைச் சொல்கிறாய். அவர்கள் மணலில் நடப்பவர்கள் அல்ல, சேற்றில் நடப்பவர்கள். ஆகவே வழுக்கி விழுந்தால் மன்னிக்க வேண்டும். ஒரு முறை அனுபவப்பட்டு அறிவு பெற்ற பிறகாவது திருந்த வேண்டும். வெளியே பழகும் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும், ஊன்றுகோல் இல்லாமல் நடக்கக்கூடாது. புலனடக்கம் கட்டாயம் வேண்டும். திருமணம் ஆகாத பெண்களுக்கும், என்னைப் போல் கைம்பெண்களுக்கும் ஊன்றுகோல் இருந்தாலும் போதாது. எங்கள் வாழ்க்கை மலைச்சரிவில் பெருங்காற்றில் நடப்பது போன்றது. நாங்கள் நிமிர்ந்து கைவீசி நடக்க ஆசைப்படவே கூடாது. மண்ணோடு மண்ணாய் ஒட்டிப் பற்றிக் கொண்டு நடக்க வேண்டும். இல்லையானால் பெருங்காற்றில் கால் தவறினால் புரண்டு விழுந்து அழிய வேண்டியதுதான்" என்றார் பாக்கியம்.
சிலப்பதிகாரத்தில் கொலைக்களக் காதையும் வழக்குரை காதையும் எனக்குப் பாடமாக இருந்த பகுதிகள். அவற்றிற்காகச் சிலப்பதிகாரக் கதையை நன்றாகப் படித்தேன். ஆசிரியரும் நன்றாகச் சொல்லிக் கொடுத்தார். ஆயினும் பாக்கியம் தந்த விளக்கமும் அமைதியும் எனக்குப் புதுமையாக இருந்தன. மூல நூல் படிக்கக்கூடிய பயிற்சியும் அவருக்கு இல்லை; ஆசிரியரின் துணையும் இல்லை. வெறுங்கதையைப் படித்தே இவ்வளவு தெளிவு பெற முடிந்ததே என்று எண்ணி எண்ணி வியந்தேன்.
சன்னலருகே இருந்தபடியே பேசினேன். "சிலப்பதிகாரத்தை நீயே படித்ததுதானே? இவ்வளவு தெளிவாகத் தெரிந்து கொண்டிருக்கிறாயே அக்கா?" என்றேன்.
"இல்லை, தம்பி! போன வேனில் விழாவில் இங்கே இரண்டு நாள் சொற்பொழிவுகள் நடந்தன. அப்போது ஒருவர் கண்ணகியைப் பற்றி நன்றாகப் பேசினார். தலைவரும் பேசினார். அப்போது கேட்டதால் தெளிவு ஏற்பட்டது" என்றார் பாக்கியம்.
அது மட்டும் காரணமாக இருக்க முடியாது. இயற்கையான அறிவு வளர்ச்சிக்கு உரிய ஆர்வமும் உழைப்பும் முக்கியமான காரணங்கள் என்று உணர்ந்தேன்.
மறுநாள் கோவைக்குப் புறப்பட்டுச் சென்றபோது, ரயில் வண்டியில் அவருடைய அறிவின் சிறப்பை அடிக்கடி எண்ணி வியந்தேன். அந்த வளர்ச்சி, ஓவியன் கைப்பட்டதும் வெறுந்துணி வண்ண ஓவியமாக மாறுவதுபோல் இருந்தது. வெறுங்கல் சிற்பியின் கைத்திறனால் அழகிய சிலையாக மாறுவதுபோல் இருந்தது. இன்னும் உணர்ந்து வியந்து கொண்டிருந்தபோது, மேற்குவானத்தில் கருமுகில்களும் செவ்வொளியும் கூடிப் பலவகைக் காட்சிகள் அமைத்தலைக் கண்டேன். சிறிது நேரத்திற்கு முன் பார்க்கக் கண்கூசும் அளவிற்குக் கதிரவன் காய்ந்து கொண்டிருந்த அந்த வானத்தில் - சிறு சிறு வெண்முகில்கள் தவிர வேறொன்றும் இல்லாதிருந்த அந்த வானத்தில் - இயற்கை இழைத்த அந்தக் காட்சிகள் வியக்கத் தக்கவாறு அமைந்திருந்தன. பாக்கியத்தின் வாழ்க்கையில் விளைந்த இடர்களும் உள்ளத்தின் உயர்ந்த பண்பாடும் கூடி, அவருடைய அறிவை வளர்த்து உயர்த்திவிட்ட விந்தையும் இத்தகையதே என்று உணர்ந்தேன்.
--------
அத்தியாயம் 23
கோவைக்குச் சென்றதும் மாலனுடைய கடிதம் பார்த்தேன். வேலை எங்கும் கிடைக்கவில்லை என்பதைக் குறித்து வருந்தி எழுதியிருந்தான். நான் இருக்கும் கூட்டுறவுத் துறையிலேயே தனக்கும் வேலை தேடித் தருமாறு கோரி இருந்தான். ஒரு வேளை சோதிடர் சொன்னதைக்கேட்டே இந்த முடிவுக்கு வந்தானோ என எண்ணினேன். இயன்ற முயற்சி செய்து கேட்டும் பார்த்தேன். பி.ஏ. ஆனர்ஸ், எம்.ஏ. படித்தவர்கள் போட்டியிட்டுக்கொண்டு வருவதால் பி.ஏ.வில் ஒருமுறை தவறியவர்களுக்கோ, மூன்றாம் வகுப்பில் தேறியவர்களுக்கோ இடமே இருக்காது என்று சொல்லிவிட்டார்கள். அதை அவனுக்கு வருத்தத்தோடு தெரிவித்தேன். பிறகு அவன் எழுதிய கடிதத்தில் வேறு ஏதாவது ஒரு வேலை தேடித்தருமாறு கேட்டிருந்தான். வேறு சில துறைகளில் முயன்றேன். விண்ணப்பமும் அனுப்புமாறு செய்தேன். வேலை ஒன்றும் கிடைக்கவில்லை.
கோவையிலிருந்து என்னை ஈரோட்டுக்கு மாற்றினார்கள். உடனே ஈரோட்டுக்குச் சென்று வேலை ஏற்றேன். அந்த வட்டத்திற்குத் தனி அதிகாரியாக முழுப் பொறுப்பும் என்னிடம் இருந்தபடியால் வேலையைத் திறம்படச் செய்வதில் கண்ணும் கருத்துமாக இருந்தேன். கூட்டுறவு இயக்கத்தில் மிக்க ஆர்வத்தோடு ஈடுபட்ட அவ்வூர் நகர மன்றத் தலைவர் பொதுநல ஆர்வம் மிக்கவர்; உள்ளொன்று புறமொன்று இல்லாத பளிங்குமனம் படைத்தவர்; மேலுக்குப் படபடப்பு உடையவராக இருந்தபோதிலும் உள்ளத்தில் அன்பு நிறைந்தவராக இருந்தபடியால், அவரிடத்தில் எனக்கு நம்பிக்கை மிகுதியாயிற்று. தன்னலம் இல்லாமல் பொதுத்தொண்டு செய்வதையே அவர் பொழுதுபோக்காகக் கொண்டிருந்தபடியால், மக்களிடத்தில் அவருக்குச் செல்வாக்கும் மிகுதியாக இருந்தது. அப்படிப்பட்டவருடைய ஆதரவு எனக்கு விரைவில் கிடைத்தபடியால், என்னுடைய கடமைகளைச் செய்வதில் எனக்குத் தனி மகிழ்ச்சியும் இருந்தது. சில வாரங்களில் அவர் எனக்கு நண்பராகவே ஆகிவிட்டார். நான் குடும்பத்தோடு வந்திருப்பதற்கு நல்ல வீடும் பார்த்து ஏற்பாடு செய்தார். ஊருக்குச் சென்று மனைவியை அழைத்து வந்து குடும்பம் நடத்தத் தொடங்கினேன்.
கயற்கண்ணியோடு தனியே வாழ்ந்த வாழ்க்கை இன்பமாகவே இருந்தது. பல கடமைகளைச் செய்து முடித்து அலுத்தபின் வீட்டுக்கு வருவது ஆறுதலாக இருந்தது. அவளுடைய இளைமையழகும் இனிமைக் கவர்ச்சியும் எனக்குக் கள்வெறி ஊட்டி என்னுடைய களைப்பை மறக்கச் செய்தன. தனியே நான் மட்டும் வீட்டில் இருந்தபோது அவள் கரவற்ற உள்ளத்தோடு சிறு பெண்போல் என்னென்னவோ பேசுவாள். என் வயதையும் பொறுப்பான தொழிலையும் மறந்து நானும் சிறு பையன் போல் அவற்றைக் கேட்டுக் கொண்டிருப்பேன். உண்மையாகவே, அவள் பேசச் சலிக்கவில்லை; நான் கேட்கச் சலிக்கவில்லை. அவள் பேசிய பழைய பேச்சையே பேசினாலும் அதைக் கேட்பது எனக்கு இன்பமாகவே இருந்தது. தன் தாய் வீட்டின் அக்கம் பக்கத்தில் உள்ள குடும்பங்களைப் பற்றிப் பேசுவாள். அந்த ஊரில் சில பெண்கள் கணவன்மாரோடு சண்டை போடும் வகைகளைப் பற்றிப் பேசுவாள். என்னுடைய தங்கையும் அவளுடைய கணவரும் பேசும் முறைகளையும் பழகும் முறைகளையும் பற்றிச் சொல்வாள். வாலாசாவில் கண்ட பலவகைப் பெண்களைப் பற்றியும் மதிப்புரை வழங்குவாள். பாக்கியத்தைப் பற்றி அடிக்கடி சொல்வாள். அவரைப் பற்றிப் பேசும் போதெல்லாம் தனி மதிப்புத் தந்து அன்போடு பேசுவாள். சில சமயங்களில் அவருடைய திக்கற்ற வாழ்வை நினைத்து இரக்கத்தோடு பேசுவாள். அவர் தனக்குச் சொல்லிக் கொடுத்த சமையல் பாகங்களைப் பற்றி எனக்குச் சொல்வாள்; நான் ஒன்றும் விளங்காமலே கேட்டுக் கொண்டிருப்பேன். மிளகுவடை, கோதுமை அல்வா, தேன் குழல் இவற்றைப் பாக்கியம் கைப்படச் செய்தால் தனிச் சுவையாக இருக்கும் என்பாள். "உனக்கு என்ன தெரியும்? நீ நேற்று வந்தவள். நான் குழந்தையாக இருந்தது முதல் அவர் கைப்படச் செய்து கொடுத்த தின்பண்டங்களைச் சாப்பிட்டுப் பழகியிருக்கிறேன்" என்று நானும் என்னுடைய இளமை அனுபவங்களை மெல்லச் சொல்வேன். வேலையைச் சுறுசுறுப்பாகச் செய்து முடிப்பதில் பாக்கியத்துக்கு யாரும் இணை இல்லை என்று என் மனைவி சொன்னபோது கேட்ட என் உள்ளம் குழைந்தது. அறிவுத்திறன் உடையவர்கள் எந்தச் சிறு வேலையில் ஈடுபட்டாலும் தனிப்பெயர் பெற முடிகிறது என உணர்ந்தேன். பாக்கியம் தோட்டத்தில் நடத்தும் பள்ளிக் கூடத்தைப் பற்றி மனைவி பல குறிப்புகள் சொன்னாள். எந்தப் பையனையும் பெண்ணையும் அடிக்காமலே அன்பாகச் சொல்லித்திருத்தியது பற்றிப் பல நிகழ்ச்சிகளைச் சொன்னாள். பக்கத்துத் தெருவில் ஒரு பையன் பெற்றோர் என்ன சொன்னாலும் கேட்காமல் பள்ளிக்கூடத்துக்கும் போகாமல் அடம் பிடித்தானாம். அவனை முதலில் பாக்கியம் சேர்த்துக் கொள்ளவில்லையாம். "பிள்ளைகள் மிகுதியாக இருக்கிறார்கள். இடம் இல்லை. என்னாலும் கவனிக்க முடியவில்லை" என்று பாக்கியம் சொல்லி மறுத்து விட்டாராம்.
கடைசியில் பெற்றோர் என்னுடைய தாயிடம் வந்து முறையிட்டார்களாம். தாய் சிபாரிசு சொல்லவே சரி என்று பாக்கியம் சேர்த்துக் கொண்டாராம். அந்தப் பையனைத் தோட்டப் பள்ளிக்கூடத்தில் உட்கார வைத்து, படி என்று சொல்லவே இல்லையாம். அவன் பக்கத்தில் உட்கார்ந்து, கதைகளே சொல்லிக் கொண்டிருந்தாராம். இப்படி இரண்டு வாரம் கதை சொல்லிச் சொல்லி அவனுடைய மூளைக்கு உணவு கொடுத்த பிறகு ஒரு நாள் அவனே பெற்றோரைக் கேட்டு ஒரு புத்தகம் வாங்கிக் கொண்டு வந்தானாம். அதையும் பார்த்துவிட்டுப் பாக்கியம் பேசாமலே இருந்தாராம். அவனே அவரிடம் புத்தகத்தைக் காட்டிக் கற்றுக் கொடுக்கும்படி சொல்லும் நிலை வந்ததாம். இப்போது அந்தப் பையன் மற்றவர்களைவிடப் படிப்பில் ஆர்வம் மிகுந்தவனாக இருக்கிறானாம்.
சின்ன பெண் ஒருத்தி திருடுவதில் பொல்லாதவளாக இருந்தாளாம். பக்கத்துப் பெண்களிடமிருந்து நாள்தோறும் ஏதாவது ஒன்று திருடிக் கொண்டு போவாளாம். வீட்டிலும் சுற்றுப்புறங்களிலும் இப்படியே எதையாவது திருடிக் கொண்டு போவதும் அடிபடுவதுமாக இருந்தாளாம். என்ன சொல்லியும் திருத்தமுடியவில்லையாம். நம் வீட்டுத் தோட்டத்திலும் பூவோ வேறு எதுவோ திருடாமல் போவதில்லையாம். பாக்கியம் அவளிடமிருந்து ஒவ்வொரு பொருளாக எடுத்து மறைத்து வைத்துக் கொள்ளத் தொடங்கினாராம். அவள் தேடித் தேடி அழும்போது, "நீ யாரிடமிருந்தாவது எதையாவது திருடியிருப்பாய், அதனால் உன்னிடமிருந்து பொருள் போகும்படியாகச் சாமி செய்கிறார்" என்று அடிக்கடி சொன்னாராம். கடைசியில் அந்தப் பெண் எப்படியோ உணர்ந்து தானாகவே திருடுவதை விட்டுவிட்டாளாம்.
இதை கேட்டவுடன் நான், "பாக்கியமே சாமி ஆகிவிட்டாரா? சரிதான்" என்றேன்.
"சின்ன பெண்ணைத் திருத்துவதற்கு வேறு என்ன செய்வது?" என்றாள் மனைவி.
"நீ அந்தப் பிள்ளைகளுக்கு ஏதாவது சொல்லிக் கொடுத்திருக்கிறாயா?" என்று மனைவியைக் கேட்டேன்.
"பாக்கியம் ஏதாவது வேலையாகப் போனால், நான் போய்ப் பார்த்துக் கொள்வேன். அய்யோ! அந்தச் சிறுவர்கள் பொல்லாத அமர்க்களம் செய்வார்கள். இது அது என்று என்னென்னவோ கதை கேட்பார்கள். கதையில் ஏதாவது மறந்து விட்டுவிட்டால், தவறாகச் சொல்லிவிட்டால், பூனைக்குப் பதிலாகக் குரங்கு என்று வாய் தவறிச் சொல்லி விட்டாலும், எல்லாச் சிறுவர்களும் சேர்ந்து கொல்லென்று சிரிப்பார்கள். அய்யோ! அவர்களை மேய்ப்பது துன்பமான வேலை! அந்த அம்மாவுக்குச் சலிப்பே இல்லை" என்றாள்.
"என்ன வரும்படி கிடைக்கும்" என்று கேட்டேன்.
"சில பெற்றோர்கள் பணம் கொடுக்கிறார்கள். சிலர் கொடுப்பதாகத் தெரியவில்லை. ஏழை வீட்டுப் பிள்ளைகளுக்காக அந்த அம்மாவும் பணம் கேட்டு வாங்குவதில்லை. எப்போதாவது கிடைத்ததை, அரிசி காய் முதலியவற்றைக் கொடுத்தனுப்புவார்கள். அவற்றை எல்லாம் நம் வீட்டுக்குத்தான் கொடுத்துவிடுவார். கையில் ஒன்றும் சேர்த்து வைப்பதில்லை. அவ்வப்போது கிடைப்பதை அம்மாவிடத்தில் கொடுத்துவிடுகிறார். அப்படி நூற்றைம்பது ரூபாய் சேர்ந்தது. அதில் இரண்டு மோதிரம் செய்து, உங்கள் தங்கைக்கு ஒன்றும் எனக்கு ஒன்றுமாகக் கொடுத்தார். இதைப் பார்த்து உங்கள் தம்பி தனக்கு ஒன்று வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்" என்று தன் கைவிரலில் அணிந்திருந்த பச்சைக்கல் மோதிரத்தைக் காட்டினாள்.
அதைக் கண்டேன். என் நெஞ்சம் உருகியது. திக்கற்றவர் உழைத்து வயிறு வளர்த்து அதில் மீதியானதைக் கொண்டு இப்படி நகையும் சேர்த்துத் தருகிறாரே என்று அவருடைய உள்ளன்பை நினைத்தேன். கலங்கிய என் கண்களைக் கயற்கண்ணி பார்த்தாள்.
"நீங்கள் வருத்தப்படுவீர்கள் என்று தெரியும். வேண்டா என்று எவ்வளவோ மறுத்துப் பார்த்தேன். அந்த அம்மா கேட்கவில்லை. 'மறுக்கவேண்டா. மறுத்தால் பாக்கியத்துக்கு வருத்தமாக இருக்கும்; வாங்கிக்கொள்' என்று மாமி சொன்னபிறகுதான் போட்டுக் கொண்டேன்" என்று அவள் தயங்கித் தயங்கிப் பேசினாள்.
"வாங்கிக் கொண்டது தவறு அல்ல. அந்த அம்மா யார்? நாம் யார்? அவருடைய உள்ளத்தின் அன்பை நினைத்துத்தான் உருகுகிறேன்" என்று கண்களைத் துடைத்தேன்.
"அது மட்டும் அல்ல. ஆளுக்கு ஒரு சோளி தைத்துக் கொடுத்தார்கள். ஆளுக்கு ஒரு திருக்குறளும் பெண்ணின் பெருமையும் புதுப் புத்தகங்களாக வாங்கிக் கொடுத்தார்கள்."
"நீ படித்து வருகிறாயா? நான் ஒரு நாளும் பார்த்ததில்லையே".
"நீங்கள் வெளியூர்க்குப் போகும்போது படிக்கிறேன். நீங்கள் வீட்டில் இருக்கும்போது நான் ஏன் படிக்கவேண்டும்?"
சிரித்தேன். "படித்தால் விளங்குகிறதா?" என்று கேட்டேன்.
"திருக்குறள் பாதி விளங்குகிறது. பெண்ணின் பெருமை விளங்கவில்லை. உங்கள் தங்கையைப் பத்தாவது வரையில் படிக்க வைத்தார்கள். என்னை யார் அப்படிப் படிக்க வைத்தார்கள்? கிராமப் பள்ளிக்கூடத்தில் எட்டாவதோடு சரி" என்றாள்.
"அதைப் பற்றிக் கவலை இல்லை. பாக்கியம் எத்தனையாவது படித்தார்? படிக்கப் படிக்கத்தானே அறிவு வளரும்" என்றேன்.
உடனே, "தொட்டனைத்து ஊறும் மணற்கேணி" என்ற குறளைச் சொன்னாள்.
எனக்கு வியப்பாக இருந்தது. "கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி சொல்லும் என்பதுபோல் இருக்கிறதே பாக்கியத்தோடு பழகியதால்-"
நான் சொல்லி முடிப்பதற்குள், "அந்த அம்மா அடிக்கடி சொன்ன குறள் இது. அதனால் மனப்பாடம் ஆகிவிட்டது" என்றாள்.
இருந்தாலும், புத்தகப் படிப்பில் அவளுக்கு, ஆர்வம் இல்லை. போகப் போக அதை நன்றாக உணர்ந்தேன். புத்தகப் படிப்பில் அக்கறை இல்லாவிட்டாலும், அறிவுப் பசி மட்டும் இருந்தது. செய்தித்தாள் படித்து ஏதாவது சொன்னால், ஆர்வத்தோடு கேட்பாள். வார இதழிலிருந்து ஏதாவது கதை படித்துச் சொன்னால் கேட்பாள். நாளடைவில் அவளே அந்த இதழ்களில் இருந்த கதைகளைப் படித்துப் பழகினாள். பழக்கம் விடவில்லை. வார இதழ்கள் எப்போது வரும் என்று காத்திருந்தாள். சிறு கதைகளைவிடத் தொடர் கதைகளில் ஆர்வம் காட்டினாள். போன வாரத்தில் கதைத் தலைவன் இந்த ஊருக்குப் போனான். தலைவி இப்படி இருந்தாள். இந்த வாரத்தில் என்ன நடக்குமோ தெரியவில்லை என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாள். அவளுக்கு அதைவிட ஆர்வம் மிகுதியாக இருந்த ஒரு துறை சினிமா என்று தெரிந்து கொண்டேன். சினிமாவுக்குப் போகவேண்டும் என்ற ஆசையை அவள் வெளியே காட்டிக் கொள்ளாமல் இருந்தாள். நெருங்கிப் பழகிய பிறகு, "அங்கே புதுப்படம் ஓடுகிறதாமே இங்கே புதுப்படம் ஓடுகிறதாமே. வாங்க போகலாம்" என்று என்னை வருமாறு வற்புறுத்தலானாள். எனக்கு வேலை நெருக்கடி மிகுதியாக இருந்த நாட்களில் "உங்களுக்கு வேலை தீர்ப்பாடு இல்லை. நீங்கள் வரமாட்டீர்கள். அந்த வீட்டுப் பெரியம்மா போகிறார்களாம். நான் அவர்களோடு போகட்டுமா?" என்று அனுமதி கேட்டாள். அவள் விருப்பம்போல் இசைந்து போகச் செய்தேன். ஆனாலும் அவளுடைய சினிமா வேட்கை தீரவில்லை. போன ஆண்டில் பார்த்த பழைய படமே திரும்பி வந்தால், மறுபடியும் போய்ப் பார்க்க வேண்டும் என்று விரும்பினாள். வேண்டா என்று தடுத்தால் உடனே அவளுடைய முகம் மாறுவதைக் கண்டேன். அது எனக்கும் வருத்தமாக இருந்தது. இந்த வகையில் அவளைத் திருத்த முடியாதுபோல் இருக்கிறதே என்று அவள் விருப்பம் போல் விட்டேன்.
ஓய்வு கிடைத்தபோது நானே அவளைச் சினிமாவுக்கு அழைத்துச் சென்றேன். ஒருமுறை அடுத்தடுத்து மூன்று நாள் படம் பார்க்கப் போயிருந்தோம். அப்போது நான் விளையாட்டாக ஒரு தந்திரத்தைக் கையாண்டேன். வீட்டுக்கு வந்த பிறகு, சினிமா நடிகைகளைப் பற்றியே புகழ்ந்து பேசினேன். இன்னாருடைய முகவெட்டு இப்படி, கண் இப்படி, புருவத்தின் அழகே தனி, கன்னமும் உதடுகளும் அமைந்த அமைப்பே சிறப்பு. மார்பு இப்படி, வயிறு இப்படி கைவிரல்கள் இப்படி, கழுத்தின் அழகு இப்படி, மூக்கின் எழில் இப்படி, இன்ன நடிகையின் கூந்தல் அழகே அழகு, பேசும்போது அவளுடைய உதடுகளின் அசைவு என்ன அழகு, நடக்கும்போது என்ன ஒயில், கைகளை வீசும்போது அதுவே ஒரு தனிக்கலை, அப்படி எட்டிப் பார்க்கும்போதே உயிர் போகும்போல் இருக்கிறது. ஒரு சிறு கண்சிமிட்டுக்கு இந்த உலகத்தையே கொடுத்தாலும் ஈடு ஆகாது என்று இப்படியே நாள்தோறும் ஒரு நடிகையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். அவள் ஒரு நாள் பொறுத்தாள், மறுநாளே என் பேச்சில் வெறுப்புக் காட்டத் தொடங்கினாள். பிறகு நான் இந்தப் பேச்சில் ஈடுபட்டபோதெல்லாம் எழுந்து போய்விட்டாள். சினிமாப் படங்களைப் பற்றி எந்நேரமும் பேசிக் கொண்டிருந்தவள், என் போக்கு இவ்வாறு ஆன பிறகு அந்தப் பேச்சையே விட்டுவிட்டாள். நானோ விடவில்லை. இந்த விளையாட்டின் எல்லைக்குப் போய்ப் பார்த்துவிட வேண்டும் என்று முனைந்தேன். ஒரு நாள் அவள் உணவு பரிமாற வந்தபோது, அவளுடைய கால்களைப் பார்த்தபடியே இருந்தேன். "என்ன, சினிமா நட்சத்திரங்களின் நினைப்பா?" என்றாள். "ஆ ஆ! அந்த படத்தில் பார்த்த நடிகை உன்னைப் போல் நடந்து வரும்போது ஆ ஆ! என்ன அழகு, என்ன ஒய்யாரம்! அந்தக் கால்களையே பார்த்துக் கொண்டிருக்கலாம் போல் இருந்தது. ஒரு ரோசாப்பூவை ஒய்யாரமாகப் பறித்து அவள் தன் தலையில் சூட்டிக் கொண்டபோது அந்தக் கையை எடுத்ததே ஒரு கலை! அந்த விரல்களின் வளைவு நெளிவு அடடா! பூவைத் தலையில் சூடிக்கொண்டே அவள் திரும்பிப் பார்த்த பார்வை! அடடா! உயிரே கொள்ளை போகிறாற் போல் இருந்ததே!" என்றேன்.
"அய்யய்யோ! வர வர ஆபத்தாக வந்து முடியும்போல் இருக்கிறதே! உங்களுக்கு நடிகைப் பைத்தியமே பிடித்துவிடும் போல் இருக்கிறதே! என்ன இப்படிக் கெட்டுவிட்டீர்களே! இனிமேல் தயவு செய்து சினிமாவுக்கே போகவேண்டா. நானும் போகப் போவதில்லை. அடிக்கடி சினிமா பார்த்தால் குடும்ப ஆண்கள் கெட்டுப் போவார்கள் போல் இருக்கிறதே" என்றாள்.
அவள் இதைச் சொல்வாளா என்றுதான் காத்திருந்தேன்.
"ஆண்கள் கெட்டுப் போவது போல் பெண்களும் கெட்டுப் போவார்கள் அல்லவா?" என்றேன்.
"ஒரு காலும் பெண்கள் இப்படிக் கெட்டுப்போக மாட்டார்கள். உங்களுக்குத்தான் அந்த நட்சத்திரங்கள் கண்ணிலேயே வந்து குடிபுகுந்து விடுகிறார்களே, நாங்கள் படம் பார்க்கிறோம். கதை தெரிந்து கொள்கிறோம். வந்து விடுகிறோம்."
"எல்லோருமா அப்படி?"
"யாரோ சில பெண்கள் உங்களைப் போல் பைத்தியம் பிடித்துப் பிதற்றுவார்கள். நாங்கள் அப்படி ஒருநாளும் நினைக்கவே மாட்டோம். இது என்ன அவமானம்! யாராவது கேட்டால் என்ன எண்ணுவார்கள்?" என்று கடுகடுப்பாகப் பேசினாள்.
மறுநாள் காலையில் மற்றொரு தந்திரம் செய்தேன். உணவு முடித்து அலுவலகத்திற்குச் செல்வதற்குமுன் கூடத்தில் இருந்த ஒரு காலண்டரை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் ஒரு சினிமா நடிகையின் படம் இருந்தது. அவளுடைய தோற்றமும் பார்வையும் அழகாக அமைந்திருந்தன. நான் அதைப் பார்த்தபடியே நெடுநேரம் இருந்தேன். கூடத்துப் பக்கமாக மனைவி வந்தபோது, நடிகையின் அழகை அனுபவிப்பது போல் பாசாங்கு செய்தேன். அழகில் மயங்கிப் பார்ப்பதுபோல் பார்த்து அடிக்கடி தலையை அசைத்துக் கொண்டிருந்தேன். வந்தவள் விர்ரென்று போய்விட்டாள். அன்று மாலையில் அலுவலகத்திலிருந்து வந்து பார்த்தபோது அந்தக் காலண்டர் அங்கே காணோம். அதோடு இன்னும் இரண்டு சினிமாப் படங்களும் காணப்படவில்லை; எங்கே அந்தப் படம் என்று மனைவியைக் கேட்டேன். அடுப்பில் இட்டு எரித்துவிட்டதாகக் கூறினாள்.
"அழகு இன்னது என்று தெரியாத களி மண் நீ! யாரைக் கேட்டு அதை அடுப்பில் போட்டாய்? அதற்காகவா நான் கேட்டு வாங்கிவந்து, கூடத்தில் மாட்டினேன்? உனக்கு அப்படிப்பட்ட அழகு இல்லையே என்ற பொறாமையால் செய்திருப்பாய்? இருக்க இருக்க உன் மூளையே மாறுகிறது" என்று பொய்க் கோபத்துடன் பேசினேன்.
"நான் அப்படித்தான் செய்வேன். உங்கள் நடத்தையே எனக்கு ஒன்றும் பிடிக்கவில்லை. ஊருக்கு வாங்க. பாக்கிய அம்மாவிடத்திலே மாமியிடத்திலே சொல்லிப்பார்க்கிறேன். யாருக்கு மூளை மாறிவிட்டது என்று அவர்களே சொல்லட்டும்" என்று அழத் தொடங்கினாள்.
"அழகான படம், கூடத்துக்கு அலங்காரமாக இருக்கும் என்று வாங்கிக் கொண்டு வந்தேனே" என்று கொஞ்சம் தணிந்த குரலில் சொல்லி வருந்தினேன்.
"பார்க்கிறவர்களின் மனம் கெடுமானால், எவ்வளவு அழகான படமாக இருந்தாலும் வாழ்கிற வீட்டுக்குள் வரக்கூடாது. உங்களுக்குத் தேவையானால், என்னை ஊருக்கு அனுப்பிவிட்டு, அப்புறம் என்னாவாவது செய்யுங்கள்".
இதற்கு மேல் போகக்கூடாது என்று நடிப்பை நிறுத்திக் கொண்டேன். உடனே உண்மையைச் சொன்னாலும் பயன்படாது என்று அமைதியாக இருந்தேன்.
மூன்று நாள் கழித்து, "இன்று சினிமாவுக்குப் போகலாமா?" என்றேன்.
"வேண்டா. நான் வரவில்லை" என்றாள்.
"என்ன அவ்வளவு வெறுப்பு"
"ஆமாம். வெறுப்புத்தான். அதை பார்த்துக் கெட்டுப் போவதைவிட வீட்டோடு நல்லபடி இருக்கலாம்."
"நான் வாயால் அழகைப் பாராட்டியது குற்றமா? மனத்திற்குள்ளே நினைத்துக் கொண்டு மனத்திலேயே அவர்களின் அழகைப் போற்றிக் கொண்டு இருந்திருக்க வேண்டும். எல்லாரும் அப்படித்தான் இருக்கிறார்கள். நான் வெளிப்படையாக உன்னிடம் பாராட்டிச் சொன்னது குற்றம். பெண்கள் மனத்திற்குள்ளேயே வைத்துக்கொண்டு நல்லவர்கள் போல் நடிக்கிறார்கள். ஆண்கள் அழகை அழகு என்று வாயால் சொல்கிறார்கள். அது குற்றமா?"
அதற்கு மறுமொழியாக என்ன பேசுவது என்று தெரியாமல் அமைதியாக இருந்தாள்.
இரண்டு நாள் கழித்து மறுபடியும் படம் பார்க்க அழைத்துப் பார்த்தேன். முடியவில்லை. மறுநாள் முயன்றேன். அன்றும் மறுத்துவிட்டாள்.
எல்லாம் பழங்கதையாய்ப் போகட்டும் என்று இரண்டு வாரம் சும்மா இருந்தேன். பிறகு, இனி அப்படி நடிகைகளின் அழகில் மயங்குவதில்லை என்று உறுதிமொழி கொடுத்து, சினிமாவுக்கு வருமாறு அழைத்தேன். அன்று மனம் இறங்கி வந்தாள். நானும் பழைய நடிப்பு ஒன்றும் இல்லாமல் நடந்து கொண்டேன். இருந்தாலும், வீட்டுக்கு வந்த பிறகு, "ஆண்களையே நம்ப முடியாது. நீங்கள் அந்த நடிகைகளின் அழகை அடிக்கடி மனத்திற்குள் நினைக்கிறீர்கள் அல்லவா?" என்று கேட்டாள்.
"எனக்கு இப்போது வேலை மிகுதி. ஓய்வு ஏது? அவர்களின் அழகைப் பற்றிய நினைப்பே வருவதில்லை" என்றேன்.
"கடவுள் உங்களுக்கு எந்த நாளும் ஓயாத வேலை கொடுத்தபடியே இருக்கவேண்டும்" என்று கையெடுத்துக் கும்பிட்டாள்.
எனக்குச் சிரிப்பாக இருந்தது. "இதற்காக நான் மாடுபோல் ஓயாமல் உழைக்கவேண்டும் என்று சாபம் கொடுக்கிறாயா? நீ மட்டும் ஓய்வாக வீட்டில் சுகப்படு" என்றேன்.
அவளும் சிரித்தாள்.
அப்போதுதான் என் உள்ளம் திறந்து சொன்னேன். "நான் அப்படிப் படத்தின் அழகில் மயங்கிக் கெட்டுப் போகிற ஆள் அல்ல. அதெல்லாம் உண்மை அழகு அல்ல. மேற்பூச்சும் அலங்காரமுமே அதிகம். அவற்றை நம்புகிற பேர்வழி நான் அல்ல. நடிப்பு மட்டும் உண்மையாகவே சிறந்த கலை. அதைத்தான் பாராட்ட வேண்டும்" என்றேன்.
"அப்படியானால் நீங்கள் அவர்களின் அழகில் மயங்கவில்லையா?"
"நீ ஆண் நடிகரின் அழகில் மயங்கவில்லையா?"
"சேச்சே! அந்த எண்ணம் வந்தால் நான் சினிமாவுக்கே போகமாட்டேன். தெரியுமா?"
"அவர்கள் என்னைவிட அழகாக இல்லையா? அதனால் உனக்கு ஆசையாக இல்லையா!"
"சே! என்ன பேச்சு இது! தெருவில் போகிற ஒருவன் அழகாக இருந்தால், அதனால் அவன்மேல் ஆசை தோன்றி விடுமா? நம் அம்மாவைவிட இன்னொருத்தி அழகாக இருந்தால் அவள்மேல் ஆசை வளருமா? அழகு குறைவாக இருந்தாலும் என்னைப் பெற்று வளர்த்தவள்தான். எனக்கு வேண்டும், அவள்தான் எனக்குத் தாய். அப்படித்தான் நீங்களும் எனக்கு."
"கண்ணி! என் நிலையும் அதுதான். ஊரில் எந்தப் பெண் எவ்வளவு அழகாக இருந்தால் எனக்கு என்ன? அயலாருடைய கண் அழகாக இருந்தால் அதற்காக என் கண்ணைக் குத்திக்கொள்வேனா? என் கண்தான் என் கண்! என் கண்ணிதான் என் கண்ணி!" என்று அன்போடு அவள் முகத்தை நோக்கினேன்.
உடனே அவள் என் தோள்மேல் சாய்ந்து என் கன்னங்களைத் தடவினாள்.
இவ்வாறாக எங்கள் சினிமா நாடகம் முடிந்தது.
-----------
அத்தியாயம் 24
ஏதாவது ஒரு வேலை வேண்டும் வேண்டும் என்று மாலன் அடிக்கடி கடிதம் எழுதிக் கொண்டிருந்தான். நண்பராகிய நகர்மன்றத் தலைவரிடம் அவனுடைய நிலையை எடுத்துரைத்தேன். உள்ளூரிலே ஒன்றும் இல்லையே என்று அவர் வருந்தினார். அவருடைய பொதுத் தொண்டு காரணமாகச் சென்னையில் அவருக்கு நல்ல செல்வாக்கு இருந்த காரணத்தால் அங்காவது ஒரு வேலை தேடித் தருமாறு வேண்டிக் கொண்டேன். அவ்வாறே அவர் அடுத்த முறை சென்னைக்கு சென்றபோது இதே கூட்டுறவுத் துறையில் நூறு ரூபாய் வருவாயில் இன்ஸ்பெக்டர் தொழில் பெற்றுத் தந்தார். மாலனுக்கு அதுவும் பெரிய மனக்குறையாக இருந்தது. நான் முந்நூறு ரூபாய்க்கு மேல் சம்பளம் பெற, என்னுடன் என்னைப்போல் படித்த ஒருவன் நூறு ரூபாயளவில் நின்றது யாருக்குத்தான் வருத்தமாக இருக்காது? ஆனாலும் என்ன செய்வது? வேறு வழி இல்லையே என்று அத்தொழிலில் கொஞ்ச காலம் மனம் பொருந்தி இருக்குமாறு மாலனுக்குக் கடிதம் எழுதியிருந்தேன்.
சென்னைக்குப் போகவேண்டிய வாய்ப்பு எனக்கு ஒரு முறை நேர்ந்தது. தொழில் துறையின் தொடர்பாகவே போயிருந்தேன். முன்னதாகவே மாலனுக்கு எழுதியிருந்தேன். அவனுடைய வீட்டுக்கே போயிருந்தேன். திருமணத்துக்குப் பிறகு கற்பகத்தைப் பார்த்தது அப்போதுதான். "வாங்க" என்று அவள் வரவேற்றாள். அவளுடைய முகத்தில் மலர்ச்சி இருந்தபோதிலும் சிறுமியாக இருந்தபோது கண்ட துடிதுடிப்பு இல்லை. மாலன் தன் குழந்தையைக் கொண்டு வந்து என் கையில் தந்தான்.
அன்போடு பெற்றுத் தோள்மேல் ஏந்திக்கொண்டு "என்ன பெயர்?" என்றேன்.
"எழுதியிருந்தேனே! மறந்துவிட்டாயா! நீ பெரிய உத்தியோகத்தில் இருக்கிறாய். என்னைப் போன்ற ஆட்களை எல்லாம் நினைவில் வைத்திருப்பாயா?" என்றான்.
"அப்படி என்னிடம் சொல்லக்கூடாது. நான் என்றைக்கும் உன் நண்பன். ஏதோ வாய்ப்பு என்று சொல்கிறார்களே! அதன்படி எனக்குப் பெரிய வேலை கிடைத்தது. உனக்குக் கிடைக்கவில்லை. அதற்காக வருத்தப்படாதே."
"சும்மா சொன்னேன்."
அவன் அவ்வாறு சொன்னபோதிலும், அந்தச் சொல் அவனுடைய உதட்டிலிருந்து வந்த விளையாட்டுப் பேச்சு அல்ல என்றும், உள்ளத்தில் ஆழ்ந்திருந்த வேக்காட்டிலிருந்தே வந்தது என்றும் எண்ணினேன். "சரி, இவன் பெயரைச் சொல்" என்றேன்.
"திருவாய்மொழி" என்றான்.
"என் தம்பி பொய்யாமொழி. இவன் திருவாய்மொழியா? நல்ல பெயர்தான்" என்று சொல்லிக்கொண்டே கற்பகத்தின் முகத்தைப் பார்த்தேன். அவள் புன்சிரிப்போடு நின்று கொண்டிருந்தாள்.
"சொந்த மாமா இப்படி எடுத்துப் பழகாவிட்டாலும் இந்த மாமாவையாவது பாரப்பா" என்றாள் கற்பகம்.
"நான் இந்தப் பையனுக்கு மாமாவா?" என்றேன்.
"ஆமாம்" என்று சிரித்தாள் கற்பகம்.
"என்ன மாலா! நான் உனக்குச் சம்பந்தி ஆகிவிட்டேன். இனிமேல் அண்ணன் தம்பி முறையை மாற்றிக்கொள்ள வேண்டும்" என்றேன்.
"நண்பர்களாக இருந்தால் அதில் ஒரு நன்மை இருக்கிறது. எப்போது வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் முறையை மாற்றிக் கொள்ளலாம். பெண் இருந்தால் மாமன் மைத்துனன். இல்லாவிட்டால் அண்ணன் தம்பி. உறவாக இருந்தால் இப்படி மாற்றிக் கொள்ளும் உரிமை இல்லையே" என்றான் மாலன்.
"மாமாவுக்கு எப்போது பெண் பிறக்கப்போகிறது என்று பார்க்கிறான்" என்றாள் கற்பகம்.
"இன்னும் நான்கு ஐந்து மாதத்தில்" என்றேன். மாலன் சிரிக்க, நானும் சிரித்தேன்.
"இப்போதே பணம் சேர்த்து வைத்துக்கொள். இல்லையானால் நல்ல மாப்பிள்ளையாகக் கிடைக்க மாட்டான்" என்றான்.
என் தங்கையின் வாழ்க்கை என் நினைவுக்கு வந்தது. உடனே அதைப் பொருட்படுத்தாமல், "இந்தப் பையனுமா அப்படிப் பணம் கேட்பான்?" என்றேன். குழந்தை திருவாய்மொழி அப்போது தன் பொக்கை வாய் திறந்து முழுச் சிரிப்பு சிரித்தான். அந்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. எல்லோருமே குழந்தைகளாய் மாறிச் சிரித்தோம்.
மறுநாள் சென்னைக் கடமையை முடித்துக்கொண்டு ஊர்க்குப் புறப்பட்டேன். மாலன் ரயிலடிக்கு வந்திருந்தான். அவனுக்குத் தேறுதல் சொன்னேன். "இங்கே இருந்தபடியே வேறு நல்ல தொழில் கிடைத்தால் மாறிவிடலாம்" என்றேன்.
"எங்கே கிடைக்கிறது? வர வர வேலையில்லாத் திண்டாட்டம் வளர்கிறது. படிக்காதவர்கள் நன்றாகப் பிழைக்கிறார்கள். பணம் தேட அவர்களுக்கு வழி தெரிகிறது. படித்தவர்களுக்குத் தெரியவில்லை. எங்கள் ஊரில் நெல் ஆலை வைத்த ஒருவர் இன்றைக்குப் பெரிய செல்வராகி விட்டார். என்னோடு உயர்நிலைப் பள்ளியில் எட்டாவது வரையில் படித்தவன் லாரி வைத்துப் பணக்காரனாகி விட்டான். என்னை இந்த நூறு ரூபாய்ச் சம்பளத்துக்கு அழைக்கிறான். பேசாமல் இந்த வேலையை உதறிவிட்டு ஒரு நெல் ஆலையாவது லாரியாவது வைத்து நடத்தலாமா என்று எண்ணுகிறேன். அதைப்பற்றித்தான் இனி முயற்சி செய்ய வேண்டும்" என்றான்.
"அவசரப்படாதே நன்றாக எண்ணிப்பார். நமக்குப் பழக்கம் இல்லாத துறைகள்."
"படிக்காதவர்கள் செய்யும்போது படித்தவர்கள் செய்யக்கூடாதா?"
"வேண்டா என்றோ கூடாது என்றோ நான் சொல்லவில்லை. எண்ணிப் பார்த்து, ஒரு முறைக்குப் பல முறை எண்ணிப் பார்த்து இறங்கவேண்டும். படித்ததனாலேயே நமக்குத் திறமை இருப்பதாகச் சொல்ல முடியாது. சின்ன பிள்ளைகள் ஒரு நாளில் சைக்கிள் விடக் கற்றுக்கொள்கிறார்கள். வளர்ந்த பெரியவர்கள் கற்றுக்கொள்ள ஒரு வாரத்துக்கு மேலும் ஆகிறது."
என் பேச்சை அவன் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை.
வீட்டுக்கு வந்த பிறகு கற்பகத்தையும் குழந்தையையும் பார்த்த செய்தியை மனைவியிடம் சொன்னேன். "கற்பகத்தை நான் பார்த்துப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. ஒரு முறை பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது" என்றாள்.
ஏழாம் மாதம் வேலூரிலிருந்து அத்தையும் திருமந்திரமும் வந்து சிலநாள் இருந்து மனைவியை அழைத்துச் சென்றார்கள். அப்போதுதான் முதல் முறை பிரிவுத் துன்பத்தை உணர்ந்தேன். மனைவி கண்ணீர் விட்டுக் கலங்கினாள். பக்கத்தில் வேலையாட்கள் இருந்ததையும் மறந்து, நானும் கண்ணீர்விட்டேன். ரயில் நகரும் வரையில் அவள் கலங்கிக்கொண்டே இருந்தாள். அவளுடைய கண்கள் சிவந்திருந்தன. நான் மூச்சுப் பிடித்துக் கொண்டு இருந்தேன். என் உள்ளத்தை அடக்கிக்கொண்டிருந்தது பெரு முயற்சியாக இருந்தது. வீட்டிற்கு வந்து என் அறையில் நுழைந்த பிறகு என் உள்ளத்தை அடக்கு முறையிலிருந்து விட்டேன். நன்றாகக் கண்ணீர் விட்டு அழுதேன். அதன் பிறகு என் செயல் எனக்கே சிறுபிள்ளைத் தன்மையாக இருந்தது.
அடுத்த மாதமே வேலூர்க்குச் சென்று சில நாள் இருந்துவந்தேன். ஒரு பெண் குழந்தைக்குத் தந்தையான செய்தி அறிந்தவுடன் மற்றொரு முறை போனேன். அப்போது அம்மாவும் அப்பாவும் அங்கே வந்திருந்தார்கள். குழந்தைக்கு "மாதவி" என்று பெயர் வைத்தார் அப்பா. வந்தவர்களில் சிலர் குழந்தை அப்பனைப்போல் இருப்பதாகச் சொன்னார்கள். சிலர் மூக்கும் விழியும் மட்டும் தாயைப் போல் இருப்பதாகச் சொன்னார்கள். வளர்ந்த பிறகுதான் உண்மை தெரியும் என்று அம்மா தீர்ப்புச் சொல்லிவிட்டார்.
தங்கை தம்பி பாக்கியம் எல்லாரும் எப்படி இருக்கிறார்கள் என்று அம்மாவைக் கேட்டேன். அப்போது அவர் சொன்ன ஒரு செய்தி துன்பமாக இருந்தது.
"கற்பகமும் அவளுடைய அப்பாவும் நம் தெருவில்தான் இருக்கிறார்கள். முன் இருந்த அதே வீட்டில் குடியிருக்கிறார்கள். ஊரில் சந்திரனுக்கும் அப்பாவுக்கும் சொத்து வகையில் சச்சரவாம்."
"அதனால் அவனுடைய அப்பா வந்தது சரி, கற்பகம் ஏன் கணவனை விட்டு வரவேண்டும்."
"அவன்தான் அனுப்பிவிட்டானாம். சோழசிங்கபுரத்தில் நெல் ஆலை வைக்க வேண்டும் என்று முயற்சியாம். அதற்காக மாமனாரிடம் பணம் கேட்கிறான். நீ போய் உட்கார்ந்து பிடிவாதம் செய்து வாங்கிக் கொண்டுவா என்று அனுப்பிவிட்டான். சந்திரன் மிகக் கெட்டுப் போய்விட்டானாம். கண்டபடி கண்ட பெண்களுக்கும் நோய்க்கும் பணத்தைச் செலவு செய்து சொத்தை அழித்து வருகிறானாம். அவன் இப்படிச் செய்வதைத் தெரிந்துகொண்டு மருமகன் கேட்கிறான். அழியும் சொத்தில் ஒரு பங்கு கொடுத்தால் என்ன என்று மகளும் கேட்கிறாள். ஆனால், மகன் ஒத்து வரவில்லை. வீண் குழப்பம் செய்கிறானாம். அப்பாவால் அந்த ஊரிலேயே இருக்க முடியவில்லையாம். மன அமைதியாவது கிடைக்கும் என்று மகளை அழைத்துக்கொண்டு இங்கே வந்திருக்கிறார். அவர் வேறு என்ன செய்வார்?" என்றார்.
"இருந்தாலும் கற்பகம் வந்திருக்கக் கூடாது" என்றேன்.
"நீ ஒரு பைத்தியம்’டா. அவள் என்ன செய்வாள்? கையோடு அழைத்துக்கொண்டு வந்து விட்டு விட்டான். சொத்தோடு வந்தால் வா, இல்லாவிட்டால் வரவேண்டா என்று சொல்லி விட்டுவிட்டுப் போனால் அந்தப் பெண் என்ன செய்யமுடியும்?"
"மறுபடியும் புறப்பட்டுக் கணவன் வீட்டுக்கே போகவேண்டும்?"
"அவன் கழுத்தைப் பிடித்துத் தள்ளினால்? - அவன் அப்படிப்பட்ட முரடனாகத் தெரிகிறதே"
என்னால் நம்பவே முடியவில்லை. "அப்படிச் சொல்லாதே அம்மா! தப்பு, தப்பு" என்றேன்.
"உன் கண்ணுக்கு எல்லாரும் நல்லவர்களாகத் தெரியும். கற்பகத்தின் திருமணத்துக்கு முன் அவனைப் பற்றி உனக்குத் தான் எழுதி கேட்டார்களாம். நீ நல்ல பிள்ளை என்று எழுதியிருந்தாயாம். அந்தப் பெண் அதை என்னிடம் சொல்லிக் கண்ணீர் விடுகிறாள்" என்றார்.
என் உள்ளம் நைந்தது. சென்னைக்குச் சென்று அவர்களின் குடும்பத்தைக் கண்டபோது, அவர்கள் அன்பாக வாழ்ந்திருந்தார்களே என்று எண்ணினேன். அதை அம்மாவிடம் குறிப்பிட்டேன்.
"ஒருநாள் விருந்தாளிபோல் போய்ப் பார்ப்பவர்களுக்கு அந்தக் குடும்பத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாது. அதிலும் கற்பகம் நல்ல பெண். உள்ள துன்பத்தை வெளியே காட்டிக் கொள்வாளா?" என்றார்.
"மாலனா அப்படிச் செய்தான் என்று என்னால் நம்பவே முடியவில்லை அம்மா"
"நீ வெளுத்ததெல்லாம் பால் என்று நம்புகிறவன்."
இவ்வளவும் செய்துவிட்டு மாலன் எனக்கு ஒரு கடிதமும் எழுதாமலிருக்கிறானே என்று எண்ணியபோது அவன் மேல் வெறுப்பும் தோன்றியது.
ஈரோட்டுக்குத் திரும்பிச் சென்றபோது வீட்டில் அவனுடைய கடிதம் வந்திருந்தது கண்டேன். பிரித்துப் படித்தேன்.
"நான் உன்னிடத்தில் நேரில் சொன்னபடி ஊரில் நெல் ஆலை வைப்பதற்கு ஏற்பாடு செய்துவருகிறேன். அதனால் வேலையை விட்டு விட்டேன். நீ என்மேல் வருந்தமாட்டாய் என்று நம்புகிறேன். என் தந்தை கொஞ்சம் பணம் கொடுத்திருக்கிறார். அது போதவில்லை. மாமனாரிடம் கொஞ்சம் கேட்டு வாங்கிவருமாறு கற்பகத்தை அவளுடைய ஊர்க்கு அனுப்பியிருக்கிறேன்" என்று எழுதி இருந்தான்.
அம்மா சொன்னதற்கும் அவன் எழுதியதற்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்தேன். இன்னும் கற்பகத்தைக் கேட்டால், அவள் சொல்வது எப்படி இருக்குமோ? ஒரே இடத்தில் நடந்த நிகழ்ச்சியை வெவ்வேறு கட்சிச் செய்தித் தாள்கள் வெவ்வேறு வகையாய்த் திரித்து எழுதுவது போல் இருக்கிறதே என்று எண்ணினேன். மாலன் சோதிடம் கேட்டிருப்பான். வியாபாரத்துக்கு வேண்டிய பொருத்தம் இருப்பதாகச் சோதிடர் ஏதாவது சொல்லி இருப்பார். அவனுடைய லக்கினாதிபதி இப்படிச் செய்து விட்டிருப்பான் என்று வெறுப்படைந்தேன்.
சந்திரன் மிகக் கெட்டுவிட்டான் என்றும், சொத்தை அழித்து வருகிறான் என்றும் அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது. இனிச் சந்திரனை யாரும் திருத்த முடியாது; அவன் சொத்தை அழிக்கத் தொடங்கிய பிறகு அந்தச் சொத்தில் ஒரு பகுதியைக் கற்பகத்துக்கு எழுதி வைத்தால் நல்லதுதானே! ஏன் அவனுடைய தந்தை அப்படிச் செய்யத் தயங்குகிறார்? அப்படிச் செய்துவிட்டால் மாலன் எப்படியாவது வியாபாரமோ தொழிலோ செய்து முன்னேறுவானே என்று எண்ணிக் கொண்டிருந்தேன்.
உண்மை எதுவும் தெளிவாகத் தெரியாததால், மாலனுக்கு மறுமொழி எழுதாமலிருந்தேன். அடுத்த கடிதம் வரும் என்று எதிர்பார்த்தேன். ஒன்றும் வரவில்லை. எனக்கு வேலை மிகுதியாக இருந்தது. புதிய பொறுப்புகள் சில வந்து சேரவே, அவற்றில் சிந்தனை செலுத்தி இருந்தேன்.
மனைவியைக் குழந்தை மாதவியுடன் மூன்றாம் மாதத்தில் போய் அழைத்து வரலாமா என்று ஊருக்கு எழுதிக் கேட்டிருந்தேன். மூன்றாம் மாதத்தில் அம்மா போய் வாலாசாவுக்கு அழைத்து வருவதாகவும், ஐந்தாம் மாதத்தில் ஈரோட்டுக்கு அனுப்புவதாகவும் எழுதியிருந்தார்கள்.
இடையில் நான்கு நாள் சேர்ந்தாற்போல் விடுமுறை வர, ஈரோட்டில் இருக்க மனம் கொள்ளாமல், ஊருக்குப் புறப்பட்டேன். ஊருக்குச் சென்று வீட்டில் நுழைந்ததும் நான் முதலில் கண்ட காட்சி, கற்பகம் ஒரு சிறுமிக்குத் திண்ணையில் கணக்குக் கற்றுக்கொடுத்துக் கொண்டிருந்த காட்சிதான். கற்பகம் என்னைக் கண்டதும், "வாங்க அண்ணா; இப்போதுதான் வருகிறீர்களா?" என்றாள்.
"இது என்ன?" என்று அந்தச் சிறுமியை காட்டிக் கேட்டேன்.
"பாக்கியம் அக்காவிடத்தில் படிக்கும் பெண். கடைசி வீட்டுப் பெண். நானும் இப்போது அக்காவின் தொழிலைச் செய்யக் கற்றுக்கொள்கிறேன். என்ன செய்வது?" என்று வேதனையோடு கலந்த புன்சிரிப்பை மேற்கொண்டாள்.
"இருக்கட்டும். அப்பாவும் இருக்கிறாரா?" என்று வருந்தியவாரே கேட்டேன்.
"அதே வீட்டில்தான் இருக்கிறோம். அங்கே இருக்கிறார்" என்றாள்.
உள்ளே நுழைந்ததும் காக்கி உடை உடுத்தி ஒரு சிறு பையன் குறுக்கே நிற்பதைக் கண்டு வியந்தேன். "அடே யாரடா சிப்பாய்?" என்றேன்.
கற்பகம் என்பின் வந்தவள் "திருவாய்மொழி" என்றாள்.
உடனே, "என் மருமகனா? அடடே" என்று அவனைத் தூக்கித் தோள்மேல் வைத்துக் கொண்டேன்.
என் குரலைக் கேட்டதும் கயற்கண்ணி பால் குடிக்கும் குழந்தையுடன் எட்டிப் பார்த்தாள்.
"மாதவி என்ன செய்கிறாள்?" என்றேன்.
"அப்பா எங்கே என்று கேட்கிறாள்" என்றாள் கற்பகம்.
"இல்லை இல்லை. அப்பா வந்தால்தான் பேசுவேன் என்று அடம்பிடிக்கிறாள்" என்றாள் என் மனைவி.
"நீ ஒன்றும் அடம்பிடிக்காமல் இருந்தால் போதும்" என்றேன்.
அம்மா ஆர்வத்தோடு வந்து பார்த்து, "கடிதமும் எழுதாமல் வந்து விட்டாயே. உன் மகள் மேல் ஏக்கம் வந்து விட்டதா?" என்கிறார்.
"பாட்டி ஆச்சு, பேர்த்தி ஆச்சு. உன் பேர்த்தியைப் பற்றி எனக்கு என்ன அம்மா ஏக்கம்?" என்று சிரித்தேன்.
சிறிது நேரம் வீடு முழுவதும் ஆரவாரமாக இருந்தது. எல்லாருடைய முகங்களும் மலர்ந்திருந்தன. கற்பகத்தின் மகன் திருவாய்மொழியும் சிரித்து ஆடிக்கொண்டிருந்தான். மாதவியும் தன் விரலைச் சுவைத்துக் கொண்டே ஆ ஊ என்று ஒலித்துக் கொண்டிருந்தாள். கற்பகத்தின் முகத்தில் மட்டும் துன்பத்தின் சாயல் வந்து வந்து கவிந்துகொண்டிருந்தது. தானும் மற்றவர்களோடு கலந்து மகிழ வேண்டும் என்று அவள் எவ்வளவு முயன்றபோதிலும் முழு வெற்றி பெறமுடியவில்லை.
மாலனைப் பற்றிக் கேட்பதற்கு வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். சிற்றுண்டி முடிந்ததும், கற்பகத்தைப் பார்த்தேன். அவள் அங்கே இல்லை. சிறிது நேரத்தில் வந்தாள். "உன் கணவர் கடிதம் எழுதினாரா?" என்று கேட்டேன்.
"இல்லை. உங்களுக்கு எழுதினாரா?" என்றாள்.
"எழுதினார். நான் எழுதவில்லை."
"நடந்ததெல்லாம் தெரியும் அல்லவா?"
"தெரியும். அம்மா சொல்லித் தெரிந்து கொண்டேன்?"
"உங்களுக்கு எல்லாவற்றையும் எழுதினாரா?"
"எழுதினார். சுருக்கமாக, அந்த நெல் ஆலை ஏற்படுத்தி ஆயிற்றா?"
"நடக்கிறது என்று கேள்விப்பட்டேன். அங்கிருந்து வந்தவர்கள் சொன்னார்கள்."
அவளுடைய கழுத்தையும் கைகளையும் பார்த்தேன். நகைகள் காணப்படவில்லை. கேட்கலாமா என்று வாயெடுத்தேன். இப்போது கேட்டு அவளுடைய துயரத்தைக் கிளற வேண்டா என்று அமைதியானேன்.
"உன்னிடத்தில் உண்மை தெரிந்து கொண்டு கடிதம் எழுத எண்ணியிருக்கிறேன்" என்றேன்.
"எழுதியும் பயன்படாது. அவர் மனத்தை மாற்ற முடியாது. அவரே உணரும் காலம் வந்தால்தான் திருந்துவார்."
"வேறே ஒன்றும் கெட்ட பழக்கம் இல்லையே."
"நீங்கள்தான் திருமணத்துக்கு முன்னமே கெட்ட பழக்கம் ஒன்றும் இல்லை என்று எழுதியிருந்தீர்களே. அப்படியேதான் இருக்கிறார்."
"பிறகு எப்படி இந்த முரட்டுக் குணம் வந்தது."
"யார் சொன்னது முரட்டுக் குணம் என்று. அப்படி ஒன்றும் இல்லையே."
வேண்டும் என்றே மறுக்கிறாளோ என்று அவளுடைய முகத்தைப் பார்த்தேன். அவள் பார்வை கூரையைப் பார்த்தப்படி இருந்தது. முகக் குறிப்பு ஒன்றும் தெரியவில்லை.
பக்கத்து அறையிலிருந்து எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த என் மனைவி, "கற்பகம் வாய் திறந்து சொல்லமாட்டாள். இதோ நான் வந்து சொல்வேன். கொஞ்சம் இருங்கள்" என்றாள்.
கற்பகம் கண்ணைத் துடைத்துக்கொண்டே தோட்டத்தின் பக்கம் நடந்தாள்.
நான் என் மனைவி இருந்த அறைக்குள் நுழைந்து "நகைகள் காணோமே எங்கே?" என்றேன்.
"நகைகள் எல்லாவற்றையும் கழற்றிக் கொடுத்து விட்டுத்தான் இங்கே வந்தாள்" என்றாள் மனைவி.
"இவளே கழற்றிக் கொடுத்துவிட்டாளா? அவனே வற்புறுத்தினானா?"
"இவளே கொடுக்க, இவளுக்குப் பைத்தியமா? அவர் வற்புறுத்தினார் கொடுத்தாள். கடன் கடன் என்று கேட்டாராம் கொடுத்து விட்டாள். அப்படியாவது அவருடைய கவலை தீருமா, அன்பாக நடத்துவாரா என்று எதிர் பார்த்தாள். அவர் ஒன்றும் மனம் மாறவில்லை."
பெருமூச்சு விட்டேன். "சிக்கனமானவன். கடன்படக் காரணம் இல்லையே" என்றேன்.
"அது பெரிய கதை. பாக்கிய அம்மாவைக் கேட்டுப் பாருங்கள். அவருக்குத்தான் முழு உண்மையும் தெரியும்."
திகைத்தேன். "அவனே பெருங்காஞ்சிக்கு வந்து விட்டு விட்டானா" என்று கேட்டேன்.
"வீட்டு வாயில் வரைக்கும் வந்து விட்டுவிட்டு, ஒரு வேளையும் சாப்பிடாமல், சொல்லாமல் போய்விட்டாராம். கற்பகத்தின் அண்ணி எவ்வளவோ சொல்லி வேண்டிப்பார்த்தாளாம். பின் தொடர்ந்து சென்று அழைத்தும் முயன்றாளாம். அவர் திரும்பி வராமலே போய்விட்டாராம். அப்போது கற்பகத்தின் அப்பா இல்லையாம். எங்கோ போயிருந்தாராம்."
"அண்ணன் சந்திரன்?"
"அவர் வீட்டிலேயே சரியாகத் தங்குவதில்லையாம் மனம்போன படி வாழ்கிறாராம்."
"அய்யோ குடும்பமே! இந்த நிலைமைக்கா வரவேண்டும்?
"இவள் என்ன செய்வாள்? நல்லவள்; சூது வாது அறியாதவள்."
அப்போது அம்மா வந்து, "போனது போகட்டும் அப்பா. இப்படி நடப்பது உண்டுதான். நீ போய் அவளுடைய வீட்டுக்காரரைப் பார்த்துத் தக்கபடி சொல்லி அழைத்து வா. எப்படியாவது கணவனும் மனைவியுமாக வாழும்படியாகச் செய். கர்ப்பமாக இருக்கிற பெண் அடிக்கடி கண்ணீர் விட்டுக் கலங்குவது நல்லது அல்ல. கற்பகத்தின் அப்பாவுக்கும் தீராத கவலையாகிவிட்டது. மகனால் ஒரு பங்கும், மருமகனால் ஒரு பங்கும். அப்பனும் மகளுமாய் வீடு வாசல் நிலபுலம் எல்லாவற்றையும் மறந்து இங்கே வந்து கலங்கி நிற்கிறார்கள்" என்றார்.
சோழசிங்கபுரம் போய் மாலனைக் கண்டு பேசி முடிந்ததைச் செய்ய வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டேன். "அப்படியே செய்கிறேன் அம்மா" என்றேன். அதற்குள் முழுச் செய்திகளும் தெரிந்து கொள்ள விரும்பினேன்.
தோட்டத்தை நோக்கிச் சென்றேன். அங்கே பாக்கியம் பருப்பில் கல் பொறுக்கிக் கொண்டிருந்தார். கற்பகம் பக்கத்தில் உட்கார்ந்து தொலைவில் உள்ள எதையோ பார்ப்பதுபோல் ஒரே பார்வையாக இருந்தாள்.
பாக்கியம், என்னைப் பார்த்து "நீ ஏதாவது கேட்டாயா, தம்பி?" என்றார்.
"ஆமாம் அக்கா. எனக்கு உண்மை தெரிந்தால்தானே நான் அவரைக் கேட்க முடியும்?" என்றேன்.
"இதைவிட உங்களுக்கு என்ன உண்மை வேண்டும்? நிறையச் செல்வத்தோடு வந்தால்தான் வாழலாம் என்கிறார். இல்லையானால் வரவேண்டா என்று சொல்கிறார்" என்று கற்பகம் சட்டென்று சொன்னாள்.
இதுதான் நல்ல வாய்ப்பு. இப்போதே அவளுடைய வாயிலிருந்து செய்திகளை வருவிக்க வேண்டும் என்று எண்ணினேன். "எவ்வளவு செல்வம் வேண்டுமாம்? எதற்காகவாம்?" என்றேன்.
"எவ்வளவு கொடுத்தாலும் போதாது என்று கேட்டார். அப்பா அதற்கு இசையவில்லை. ஐந்து காணி நன்செய் நிலம் எழுதி வைத்திருக்கிறார். அதையும் அவரோ நானோ விற்க உரிமை இல்லாமல் எழுதி வைத்திருக்கிறார். அதற்கு மேல் பணமாகக் கேட்டால் இல்லை என்கிறார்."
"நிலம் எழுதி வைத்தது அவருக்குத் தெரியுமா?"
"தெரியும். கடிதம் எழுதியாயிற்று. ஆள் வாயிலாகச் சொல்லியும் ஆயிற்று. அங்கிருந்து அவரும் சொல்லி அனுப்பினார் பணம்தான் வேண்டும் என்று."
"இந்தப் பணப் பைத்தியம் அவருக்கு எப்படி வந்தது?"
"அது உங்களுக்கு முன்னமே தெரிந்திருக்க வேண்டும்."
பழைய அம்பே முன்போல் என்னைப் புண்படுத்தியது.
"நீ நான்கு ஆண்டுகள் பழகியிருக்கிறாயாமே அப்போது இப்படிக் கெட்டவராகத் தெரியவில்லையா" என்று பாக்கியம் கேட்டார்.
"இல்லையே அக்கா. பிறகுதான் அவர் எப்படியோ மாறிவிட்டார்."
"அப்புறமும் மாறியிருக்க மாட்டார். இவர் முந்நூறு, நானூறு, சம்பளம் வாங்குகிறார். இவரைப்போல் அவரும் ஆகியிருந்தால் ஒருவேளை நல்லவராகவே இருந்திருப்பார். அல்லது இவராவது பெரிய வேலைக்குப் போகாமல் அவரைப் போலவே நூறு ரூபாய்ச் சம்பளத்திலேயே இருந்தால் அவருடைய மனம் கெட்டிருக்காது."
இப்படிக் கற்பகம் பச்சையாகச் சொன்னபோது, என்னால் நம்ப முடியவில்லை. என்மேல் மாலன் பொறாமை கொண்டிருந்தது.
"உங்களுக்குள் குடும்பத்தில் வேறு எந்தக் காரணத்தாலும் மனக் கசப்பு இல்லையே" என்று கேட்டேன்.
"உண்டு. எல்லாம் பணத்தின் காரணமாக வந்தது தான்."
"எப்படி?"
"நகைகளை ஒவ்வொன்றாய்க் கேட்டார். மறுத்து வந்தேன். அதனால், முதலில் என்மேல் வெறுப்பு ஏற்பட்டது. பிறகு ஒவ்வொன்றாய்க் கொடுக்கத் தொடங்கினேன். பிறகும் அவருடைய மனம் அமைதியடையவில்லை என்மேல் வெறுப்பு வளர்ந்தது."
"பணத்தைக் கொண்டு என்ன செய்தார்?"
"அதை ஒருநாள் பிடிவாதமாய்க் கேட்டேன். அன்று என்னை - வேண்டா. அதை எல்லாம் கேட்காதீர்கள்" இவ்வாறு சொல்லிக் கற்பகம் கண்ணீர் விட்டாள்.
"எடுத்ததற்கெல்லாம் அழுது கண்ணீர் விடுவதால் பயன் இல்லை. அஞ்சாமல் போரிடவேண்டும். அல்லது அடியோடு பணிந்து அடங்கிப்போகவேண்டும். இரண்டும் இல்லாமல் இப்படி அழக்கூடாது" என்றேன்.
"நீ கேள் தம்பி. நான் சொல்கிறேன்" என்றார் பாக்கியம்.
"பணம் நகை எல்லாம் என்ன செய்தார்?"
"குறுக்கெழுத்துப்போட்டி முதல் குதிரைப் பந்தயம் வரையில் வழிகள் இல்லையா?"
"குதிரைப் பந்தயமா?" என்று திடுக்கிட்டுக் கேட்டேன்.
"அது அவ்வளவாக இருக்காது. இவளுக்கு எப்படித் தெரியபோகிறது? அதுபோன்ற தீமைகள் உண்டு என்று சொல்லலாம். இவள் கண்ணாரப் பார்த்தது ஒன்று. யாரோ சாமியார் ஒருவரை அழைத்துவந்து அவருக்கு வேண்டிய உதவி எல்லாம் செய்திருக்கிறார். பித்தளையைப் பொன் ஆக்குவதற்கு, இரும்பைப் பொன் ஆக்குவதற்கு என்று சொல்லி அந்தச் சாமியார் காசைக் கரி ஆக்கியிருக்கிறார். அதை இவளே பார்த்திருக்கிறாள். இவள் பார்த்து இரண்டு நாள் நடந்தது. பார்க்காமல் இருபது நாள் நடந்திருக்கும். அது ஒரு காரணம். இவளை அடித்துத் துரத்தியதற்கு, இவள் இல்லாவிட்டால் எங்காவது இருந்துகொண்டு எந்த வித்தையாவது செய்துகொண்டிருக்கலாம் அல்லவா?
"அடித்தா துரத்தினார்? உண்மையாகவா?" என்று துன்புற்றுக் கேட்டேன்.
"இல்லை" என்றாள் கற்பகம்.
என் மனம் ஒரு சிறிது ஆறுதல் அடைந்தது.
"அடித்திருந்தாலும் இவள் சொல்லமாட்டாள். குடும்பத்துக்குச் செய்த தீங்கைச் சொல்வாளே தவிர, தனக்குச் செய்த தீங்கைச் சொல்லமாட்டாள். கண்ணகியும் அப்படித்தானே பொறுத்து நடந்தாள்?" என்றார் பாக்கியம். மறுபடியும் அவரே, "அதோடு உனக்குப் பிறகு அவருக்கு வேறொரு நண்பர் கிடைத்திருக்கிறார். அவர் ஆவியுலகத்தில் எல்லாரோடும் பேச வல்லவராம். இறந்துபோன திலகர், கோகலே, பாரதியார், திருவள்ளுவர், அவ்வையார், ஐந்தாம் ஜார்ஜ், விக்டோரியா எல்லாரும் அந்த நண்பரோடு வந்து பேசுகிறார்களாம். உலகம் இப்படி இப்படி ஆகப்போகிறது என்று அவரிடம் மறைக்காமல் வந்து சொல்கிறார்களாம்" என்றார்.
"இவர்கள் எல்லாம் இன்னுமா தனித்தனியாக அப்படியே இருக்கிறார்களாம்?" என்றேன்.
"என்னவோ? அப்படி ஒரு நண்பர் கிடைத்து அவருக்கு ஆசையூட்டுகிறாராம்" என்றார் பாக்கியம்.
"இருக்கும். இதை நம்புகிறேன்" என்றேன்.
"எதை? ஆவியுலகத்தையா நீ நம்புகிறாய்?" என்று பாக்கியம் கேட்டார்.
"இல்லை அக்கா, கற்பகத்தின் வீட்டுக்காரர் இதை எல்லாம் நம்பக்கூடியவர். இப்படி ஏமாறக்கூடியவர் என்று நம்புகின்றேன். ஏன் என்றால், படிக்கும்போதே அவருக்கு ஆயிரத்தெட்டு மூடநம்பிக்கைகள் இருந்தன" என்றேன்.
"எல்லாவற்றிற்கும் சேர்த்து இப்போது பயன் விளைகிறது" என்று மின்வெட்டு போல் பேசினாள் கற்பகம்.
"அந்தத் தொழிலிலேயே இருந்து கிடைப்பது போதும் என்று எளிய வாழ்க்கை வாழலாமே! அதையும் விட்டு விட்டாரே!" என்றேன்.
"நீங்களும் பக்கத்திலேயே இருந்து அதே தொழிலில் நீங்களும் இருந்திருந்தால் ஒருவேளை விடாமல் ஒட்டி இருந்திருப்பார். முதலிலேயே அரை மனத்தோடு சேர்ந்தார். எந்த ஆவி வந்து என்ன சொல்லியதோ அந்த வேலையை விட்டு விட்டார். அதைப்பற்றி என்னிடம் சொல்லவே இல்லை. தாய் வீட்டுக்கு வந்த பிறகுதான் எனக்கு அந்தச் செய்தி தெரிந்தது" என்றாள்.
"ஊரில் நெல் ஆலை வைக்கிறாராம். அதற்காகக் கொஞ்சம் பணமாவது கொடுத்து உதவியிருக்கலாம்" என்றேன்.
பாக்கிய அம்மையார் மறுமொழி சொன்னார். "அப்படிச் செய்திருக்கலாம் என்று நானும் எண்ணினேன். கற்பகத்தின் அப்பா அதற்கு ஒப்புக்கொள்ளவே இல்லை. இப்படிப்பட்டவர் நாளைக்கு எல்லாவற்றையும் அடகு வைத்து விற்றுக் குடும்பத்தை நடுத்தெருவில் விட்டுவிட்டுப் போய் விடுவார். நம்ப முடியாது. மகன் தன்னால் கெட்டான். மகள் நல்லவள். அவளும் நடுதெருவில் நின்று கலங்க வேண்டுமா? ஒருக்காலும் நிலத்தை விற்றுப் பணமாகக் கொடுக்கமாட்டேன் என்கிறார். மகளை வைத்துக் கொண்டு வாழாவிட்டாலும் சரி நிலம் விற்பதற்கு இடம் கொடுக்கமாட்டேன் என்கிறார். அவர் சொல்வதும் ஒரு வகையில் நல்லதாகத் தெரிகிறது. நாளைக்கு என்ன துன்பம் வந்தாலும், பேரப் பிள்ளைகளுக்கு விற்க உரிமை வைத்து எழுதியிருப்பதால், அந்த ஐந்து காணி நன்செய் நிலமாவது கற்பகத்தைக் காப்பாற்றும், அவளுடைய குழந்தைகளைக் காப்பாற்றும், மனம் திருந்தி வந்தால் அவளுடைய கணவரையும் காப்பாற்றும்" என்றார்.
நான் அங்கிருந்து திரும்ப இருந்த நேரத்தில், "அந்தக் காலத்தில் பெண் கேட்க வந்தபோது, அப்பா இவருக்குக் கடிதம் எழுதினார். பொய்யாகவாவது கெட்ட பிள்ளை என்று ஒரு வரி எழுதமாட்டாரா என்று கடவுளை வேண்டிக் கொண்டேன். அப்போது என் எதிர்காலத்தைப் பற்றி அண்ணனும் கவலைப்படவில்லை. இவரும் கவலைப்படவில்லை" என்றாள் கற்பகம் கண்களைத் துடைத்தபடியே.
பழைய நிகழ்ச்சியை இவள் மறக்கமாட்டாள் போல் இருக்கிறதே என்று தலைகுனிந்துபடியே திரும்பினேன். தெருத் திண்ணை மேல் வந்து உட்கார்ந்தேன். சந்திரனோடு விளையாடியும் படித்தும் காலம் போக்கியது நினைவுக்கு வந்தது. கற்பகம் அவனைப் பற்றிக் கவலைப்படவில்லையே, அவனுடைய குற்றம் குறைகளைப் பற்றிப் பேசவில்லையே. ஒருகால், அவனுடைய கதை பழங்கதையாய்ப் போயிருக்கலாம். திருத்த முடியாதவன் என்று நம்பிக்கை இழந்து விட்டிருக்கலாம் என எண்ணிக் கொண்டிருந்தேன்.
உடனே கற்பகத்தின் தந்தையைப் பார்க்கவேண்டுமே என எண்ணி, நேரே அந்த வீட்டை நாடிச் சென்றேன்.
அங்கே அவருடைய பேரன் திருவாய்மொழி சில குச்சிகளையும் நெருப்புப் பெட்டிகளையும் வைத்து விளையாடிக் கொண்டிருந்தான். அவர் ஒரு மூலையில் எதையோ ஆழ்ந்து சிந்தனை செய்தபடி உட்கார்ந்தவாறே சாய்ந்திருந்தார். என்னைப் பார்த்ததும், "வாப்’பா, கற்பகம் சொன்னாள். நான் வந்து பார்க்கலாம் என்று இருந்தேன். அதற்குள் இவனை என்னிடம் விட்டுவிட்டு அவளே அங்கே போனாள்" என்றார்.
"இங்கே வந்திருக்கிறீர்கள்" என்றேன்.
"என்ன செய்வது? பிள்ளையையும் பெண்ணையும் பெற்று வளர்த்து விட்டுவிட்டு, அவள் சுகமாகப் போய்விட்டாள். கவலை எல்லாம் எனக்கு வந்து சேர்ந்தது. பிள்ளையால் துன்பப்பட்டால் பெண்ணால் சுகப்படலாம் என்று சொல்வார்கள். எனக்கு இரண்டு வகையிலும் துன்பமே. ஊரில் இருக்க முடியவில்லை. பையனுடைய நடத்தை குடும்பத்திற்கே பழியாகிவிட்டது. உனக்குத் தெரிந்திருக்கும். அவனுடைய உடம்பும் கெட்டுவிட்டது; அது தெரியுமா?" என்றார்.
"தெரியாதே" என்றேன்.
"தொழுநோய் போல வந்துவிட்டது. உடம்பெல்லாம் பரவிவிட்டது. நாட்டு மருந்து சாப்பிட்டுப் பயன் இல்லை. இப்போது அடிக்கடி ராணிப்பேட்டைக்குப் போய் ஊசி போட்டுக்கொள்கிறானாம். அது எப்படியாவது போகட்டும் என்றால், அவனுடைய மனைவி - நல்ல பெண் - அவனிடத்தில் அகப்பட்டுக்கொண்டு சிறுமைப்படுகிறாள். அவளை மிருகம் போல் நடத்துகிறான், அடிக்கிறான், உதைக்கிறான். அதை எல்லாம் கண்ணால் பார்த்துக்கொண்டு அங்கே இருக்க முடியவில்லை. சாப்பிடவும் மனம் வரவில்லை. நாங்கள் வந்துவிட்டால், கணவனும் மனைவியும் தனியே வாழும்போதாவது அன்பாக இருக்கட்டும் என்றுதான் வந்துவிட்டேன். அந்தப் பெண்ணோ, நாங்கள் புறப்பட்ட போது கதறிக் கதறி அழுதாள். தானும் எங்களோடு வருவதாகச் சொல்லி அழுதாள். எங்கள் குடும்பம் இப்படி இந்த நிலைக்கு வரும் என்று நான் கனவிலும் நினைக்க வில்லையே" என்று அவர் கண்ணீரோடு கூறினார். பிறகு "மருமகன் செய்தி எல்லாம் சொல்லியிருப்பார்கள். நான் வேறு சொல்ல வேண்டியதில்லை. நல்ல பிள்ளை என்று எல்லாரும் சொன்னார்கள். நீயும் எழுதியிருந்தாய். அவன் இப்படி மாறிவிட்டான். எல்லாம் நான் வந்தவழி" என்று தலையில் அடித்துக் கொண்டு வருந்தினார்.
சிறிது நேரம் பேசியிருந்து ஆறுதல் சொல்லிவிட்டுத் திரும்பினேன். அவருடைய மனத்தில் மகளைப் பற்றிய கவலையைவிட மகனைப் பற்றிய கவலையே மிகுதியாக இருந்ததை அறிந்தேன். கற்பகம் முதலானவர்களுக்குச் சந்திரனுடைய வாழ்க்கை இயற்கையாகிப் பழங்கதை ஆகிவிட்டது. ஆனால் சாமண்ணாவின் மனத்தில் அது இன்னும் ஆறாப் புண்ணாகவே இருந்து வருத்தி வந்தது.
மறுநாள் சோழசிங்கபுரத்துக்குப் போய் வருவதாகச் சொல்லிப் புறப்பட்டேன். புறப்பட்டபோது அம்மா என்னைப் பார்த்து, அப்படியே தங்கை வீட்டுக்குப் போய் வா. அங்கிருந்து ஏழெட்டு மைல்தான் இருக்கும்" என்றார். சில அடி நடந்தபிறகு "அப்பா! அவள் வருவதாக இருந்தால் நீயே அழைத்துக் கொண்டு வா" என்றார்.
சோழசிங்கபுரத்தில் இறங்கி மாலனுடைய பெயரைச் சொல்லிக் கேட்டேன். நெல் ஆலை பற்றிச் சொன்னவுடனே வழி காட்டினார்கள். அங்கே சென்று கேட்டபோது அவன் ஊரில் இல்லை என்று அறிந்தேன். யாரோ ஒரு சாமியாருடன் காலையில்தான் திருத்தணிக்குப் புறப்பட்டுச் சென்றதாகவும், இன்னும் இரண்டு மூன்று நாள் கழித்துத் திரும்பக்கூடும் என்பதாகவும் சொன்னார்கள். காணமுடியாமல் போய்விட்டதே என்று வருத்தம் தோன்றியது. "அவருடைய நண்பர் ஒருவர் இங்கே லாரி வைத்திருக்கிறாராமே. அவர் யார்? எங்கே இருக்கிறார்?" என்று கேட்டேன். சொன்னார்கள். அவரைத் தேடிச் சென்றேன்.
அவரிடம் சென்று மாலனுடைய நண்பன் என்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். "ஆமாம், ஆமாம் நினைவு வருகிறது. சொல்லியிருக்கிறார். எங்கேயோ பெரிய வேலையில் சேர்ந்து பெரிய அதிகாரியாக இருக்கிறீர்களாமே, உட்காருங்கள்" என்றார்.
"அவரைப் பார்த்துவிட்டு போகலாம் என்றுதான் வந்தேன். ஊரில் இல்லையாம்" என்றேன்.
"அப்படியா? மறுபடியும் வெளியூர்க்குப் போய்விட்டாரா? எனக்குச் சொல்லவில்லையே. அவர் ஊரில் இருப்பதும் தெரிவதில்லை, போவதும் தெரிவதில்லை. பார்த்தீர்களா? நெல் ஆலை நடத்துகிற முதலாளி இப்படி அடிக்கடி வெளியூர்க்குப் போனால் தொழில் எப்படி நடக்கும்?"
"உண்மைதான்."
"உங்கள் வேலை போல் ஒரு பெரிய வேலையாக அவருக்கும் வாங்கி கொடுத்திருக்கக் கூடாதா? பேசாமல் வேலையைச் செய்து சம்பளத்தை வாங்கிக் கொண்டு கவலை இல்லாமல் இருக்கலாமே. ஏன் இந்த வம்பு?"
"பெரிய வேலை கிடைப்பது அவ்வளவு எளிதாக இல்லையே."
"உங்களுக்கு எப்படிக் கிடைத்தது?"
"முதல் வகுப்பில் தேறியிருந்தேன். முதல் முறையிலேயே தேறியிருந்தேன். அப்போது சில வேலைகளும் காலியாகியிருந்தன. எனக்குக் கிடைத்தது ஒரு குருட்டு வாய்ப்பு என்றுதான் சொல்ல வேண்டும். நானே இப்போது முயற்சி செய்வதாக இருந்தால் கிடைக்காது."
"போகட்டும் என் லாரி கம்பெனியில் நூறு நூற்றைம்பது சம்பளம் தருகிறேன் என்று அழைத்தேன். அதையும் மறுத்துவிட்டார்."
"இப்போது என்ன? இந்த நெல் ஆலையை நன்றாக நடத்தலாமே."
"நடத்தலாம், நடத்தினால்தானே? அந்த நூறு நூற்றைம்பது ரூபாய் இதில் ஒழுங்காய் கிடைக்காதுபோல் இருக்கிறதே."
"அய்யோ! ஏன் அப்படி? நல்ல வரும்படி கிடைக்கும் என்று சொன்னாரே!"
"இவர் அந்தப் புது ஆலை தொடங்கியவுடன், பழைய நெல் ஆலைக்காரர் இருவரும் போட்டிக்காகக் கூலியைக் குறைத்து விட்டார்கள். அவர்கள் முன்னமே லாபம் தேடிக் கொண்டவர்கள். கையில் பணம் இருக்கிறது. ஆகவே புது ஆலை வளராதபடி கெடுப்பதற்காக இப்போது லாபம் இல்லாமல் வேலை செய்யத் துணிந்துவிட்டார்கள். வேண்டும் என்றே கூலியைக் குறைத்து நெல் ஆடித் தருகிறார்கள். இன்னும் போனால், கூலி இல்லாமலே இலவசமாகவே நெல் ஆடித் தந்தாலும் தருவார்கள். முன்னமே பணம் சேர்த்திருக்கிறார்கள். அதில் கொஞ்சம் போனால் போகட்டும் என்று, துணிந்து செய்வார்கள். நம் நண்பர் என்ன செய்ய முடியும்? ஆலையை மூடவேண்டியதுதான்."
"மூடினால், கடன்காரருக்கு வட்டி கொடுக்கவேண்டுமே அதற்கு எங்கே போவது" என்றார் பக்கத்தில் இருந்து எங்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த ஒருவர்.
"மாமனாரிடத்தில் கொஞ்சம் பணம் எதிர்பார்த்திருக்கிறார். மாமனாரோ பணத்தில் அழுத்தமானவர் போல் தெரிகிறது. ஒரு பைசாவும் கொடுக்கவில்லை" என்றார் லாரிக்காரர்.
"சே! அப்படிச் சொல்லக்கூடாது. நல்ல நன்செய் நிலமாக ஐந்து காணி மகள் பேரில் எழுதி வைத்திருக்கிறாராம்" என்றார் பக்கத்தில் இருந்தவர்.
"அதுசரி. நாளைக்கு வரும் பலாக்கனி இருக்கட்டும். இன்றைக்கு வேண்டிய களாக்கனி எங்கே?" என்றார் லாரிக்காரர். மறுபடியும் அவரே, "வந்த பெண்டாட்டியாவது இவருடைய மனம் தெரிந்து நடப்பவராகத் தெரியவில்லை. நான் ஒன்று சொல்கிறேன். மனைவி சரியாக இருந்தால் யாருக்குமே சாமியார் பைத்தியம் பிடிக்காது. இந்த ஆள் சாமியார் சாமியார் என்று யார் யார் பின்னாலோ சுற்றுகிறார். இந்த அளவுக்கு அந்த அம்மா இவரை விட்டிருக்கக் கூடாது. அந்த அம்மாவே வீட்டிலே பூசை பண்டிகை சடங்கு மந்திரம் தந்திரம் என்று பலவகையான அமர்க்களங்கள் செய்து கொண்டிருந்தால், இவருக்கு அதிலே சலிப்பு ஏற்பட்டுப் போயிருக்கும். இப்போது இவரே அல்லவா அவற்றை எடுத்துக்கொண்டு அலைகிறார்."
"அந்த அம்மா விட்டுக்கொடுத்து நயமாகப் பழகத் தெரியாத பேர்வழிபோல் இருக்கிறது" என்றார் பக்கத்தில் இருந்தவர்.
"ஆமாம் ஆமாம். எதற்கு எடுத்தாலும் சட்டம் பேசுகிற மனைவியாம். அதனால் ஒத்துப்போக முடியவில்லையாம். வாழ்க்கை ஏறுமாறாகப் போயிற்று. இவருக்குத் தெரியாதிருக்குமா? நாம் சொல்ல வேண்டுமா?" என்று சிகரெட் பெட்டியை எடுத்து என்னிடத்தில் நீட்டினார். நான் அன்போடு மறுக்கவே பக்கத்திலிருந்தவரிடம் நீட்டினார், இருவரும் புகைத்தார்கள்.
நான் பேசாமலே இருப்பது நன்றாக இருக்காது என்று எண்ணி, "ஆனாலும் கடன்பட்டு இந்த ஆலை தொடங்கியிருக்கக் கூடாது" என்றேன்.
"தொடங்கின பிறகு அக்கறையாகக் கவனிக்கவேண்டும். இது என்ன ஆபீஸ் வேலையா? ஐந்து மணி நேரம் வேலை செய்துவிட்டு பிறகு துண்டை உதறித் தோள் மேல் போட்டுக் கொண்டு போகக்கூடிய வேலையா இது? அங்கே வேலைக்கு ஒரு நேரம், பொழுதுபோக்குக்கு ஓர் இடம், சாப்பாட்டுக்கு ஓர் இடம் ஒரு நேரம் என்று எல்லாம் ஒழுங்காக இருக்கும். இங்கே வியாபாரத்தில் இந்தத் தொழிலில் நடக்குமா? காலையில் எழுந்து பல்லைத் துலக்கிக் கொண்டு வந்து விட்டால், தொழில் பொழுது போக்கு சாப்பாடு வேடிக்கை வம்பு தூக்கம் எல்லாம் இங்கேயே வைத்துக் கொண்டு பன்னிரண்டு மணி நேரமோ இருபது மணி நேரமோ இருந்தே ஆகவேண்டும். அப்படி இருந்தால் வேலையாட்களை வேலை வாங்க முடியும். சில நாட்களில் நெருக்கடியாக இருக்கும்போது மனைவி மக்கள் நினைவும் எங்களுக்கு வருவதில்லை. உங்கள் நண்பர் ஒரு நாளாவது அப்படி ஆலையில் உட்கார்ந்து வேலை செய்திருப்பாரா? கேட்டுப் பாருங்கள். ஒரு தொழிலில் இறங்கினோமா, ஒரே உறுதியாக இறங்கிவிடவேண்டும். அப்புறம் வேறு எதைப் பற்றியும் கவலைப்படக்கூடாது. வேறு எதிலும் ஈடுபடக்கூடாது" என்றார்.
"நீங்கள் சொல்லக்கூடாதா?"
"இந்தக் கல்வி எல்லாம் சொல்லி வரக்கூடாது. சொல்லாமலே பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும். எங்களுக்கு யார் சொல்லிக் கொடுத்தார்கள்?" என்றார்.
"அப்படியும் சொன்னோம். பயன் இல்லை" என்றார் பக்கத்தில் இருந்தவர்.
அப்படியே சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்து அவர்களோடு தேநீர் அருந்திவிட்டு விடைபெற்றேன்.
வள்ளிமலைப் பக்கமாகப் போகும் பஸ் பற்றிக் கேட்டு நடந்தேன். பஸ் ஏறி உட்கார்ந்தவுடனே மாலனுடைய நண்பர்கள் சொன்னவற்றை எல்லாம் எண்ணி எண்ணி அவனுக்காக வருந்தினேன். கற்பகத்தைப் பற்றி அவர்கள் சொன்னதை என்னால் நம்ப முடியவில்லை. சாமண்ணாவைப் பணத்தில் அழுத்தக்காரர் என்று சொன்னதுபோல், அதுவும் பொய்யோ; எல்லாம் மாலன் வேண்டுமென்றே அவர்களிடம் சொல்லி வைத்த பொய்கள் என்று உணர்ந்தேன்.
வள்ளிமலையில் இறங்கித் தங்கையின் கணவருடைய பேரைச் சொல்லி, ஆசிரியர் வீடு எங்கே என்று கேட்டுச் சென்றேன். வீட்டின் வாயிலில் நின்றதும் தங்கை ஏதோ புத்தகம் படிப்பது கேட்டது. மைத்துனர் பாயில் படுத்தவாறே கேட்டுக்கொண்டிருந்ததைக் கண்டேன். என்ன புத்தகம் என்று அறிவதற்காக அமைதியாக நின்றேன். சாரதாமணி அம்மையார் என்று பெயர் கேட்டதால் அவருடைய வரலாறாக இருக்கலாம் என்றும் எண்ணினேன். அதற்குள் யாரோ ஒரு பையன் என் பக்கத்தில் வந்து நின்று, "அய்யா! யாரோ ஒருத்தர் உங்களைப் பார்க்க வந்திருக்கிறார்" என்று சொன்னான். அவனுடன் வேறுயாராவது வந்திருக்கிறாரா என்று திரும்பிப் பார்த்தேன். ஒருவரும் இல்லை, என்னைத்தான் சொல்கிறான் என்று உணர்ந்தேன்.
மைத்துனரும் தங்கையும் எழுந்து வந்து அன்போடு வரவேற்றார்கள். ஊரில் அம்மா அப்பா பொய்யாமொழி எல்லோரைப் பற்றியும் கேட்டார்கள், பாக்கியத்தைப் பற்றியும் கேட்டார்கள், என் மனைவியைப் பற்றியும் குழந்தை மாதவியைப் பற்றியும் கேட்டார்கள்.
அந்தப் பையன் வந்து, அய்யா என்று விளித்தது என் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது. "யார் அந்தப் பையன்?"
"எங்கள் பள்ளிக்கூடத்தில் ஆறாம் வகுப்பில் படிக்கிற மாணவன்" என்றார் மைத்துனர்.
"சார் என்று அழைக்காமல் அய்யா! என்று விளிக்கிறானே" என்றேன்.
"சார் சார் என்று தான் சொல்லிக்கொண்டிருந்தார்கள். இந்த ஊருக்கு வட நாட்டார் ஒருவர் வந்தார். சார் சார் என்று மாணவர்கள் சொன்னது அவருக்கு வெறுப்பாக இருந்தது. 'உங்கள் நாட்டில் சிதம்பரம் பிள்ளை, பாரதியார், போன்ற பெரிய பெரிய தேசபக்தர்கள் பிறந்திருக்கிறார்கள். ஆனாலும், அந்நியமோகம் இப்படி இருக்கிறதே. உங்களுக்குள் ஒருவரை ஒருவர் சார் என்று ஆங்கிலத்தில் அழைக்கிறீர்களே. நம்முடைய தாயாரை டியர் மதர் என்று அழைத்தால் நன்றாக இருக்குமா? நாங்கள் எங்களை மறந்திருக்கும்போதும் சார் என்று சொல்லமாட்டோம். எங்கள் தாய்மொழியில் 'ஜீ' என்றுதான் சொல்வோம். வேண்டுமானால் எங்கள் நாட்டுக்கு வந்து பாருங்கள் பள்ளிக்கூடம், கடைத்தெரு, ஆபீஸ், விளையாடும் இடம், உணவுக்கடை எங்கே வேண்டுமானாலும் வந்து பாருங்கள். எங்கள் நாட்டார் ஜீ ஜீ என்று தான் ஒருவரை ஒருவர் அழைப்பார்கள். இங்கே கிராமங்களில் பள்ளிக்கூடத்துப் பிள்ளைகளையே இப்படி கெடுக்கிறீர்களே' என்று மிக மிக வருத்தப்பட்டார். அவருடைய உருக்கமான பேச்சைக் கேட்ட பிறகுதான், நாம் செய்யும் தவறு எனக்குப் புலப்பட்டது. அன்று முதல் மாணவர்களுக்குச் சொல்லி மாற்றிவிட்டோம்" என்றார் மைத்துனர்.
பிறகு தங்கையின் எளிய குடும்ப வாழ்க்கையைக் கண்டேன். ஒரு கட்டிலும் இல்லை. மெத்தையும் இல்லை. தங்கையின் உடம்பு முன்னைவிட மெலிந்திருந்ததையும் கண்டேன். உண்ண உட்கார்ந்த போது உணவின் எளிமையும் கண்டேன். தாய்வீட்டில் இது நன்றாக இல்லை, அது நன்றாக இல்லை என்று உணவில் குறைசொல்லிக் கொண்டிருந்தவள் இங்கே மிளகு நீரும் சோறும் இருந்தால் போதும் என்று வாழ்கின்றாளே என வருந்தினேன். குடும்பம் நடத்தும் முறை பற்றிச் சில கேட்டேன். வாரத்திற்கு இரண்டு நாள் மட்டுமே இட்டளியும் தோசையும் செய்வதாகவும் மற்ற நாட்களில் சிற்றுண்டியோ காப்பியோ இல்லை என்றும் அறிந்தேன். வரும் சம்பளத்திலேயே பத்து ரூபாய் மைத்துனருடைய பெற்றோர்க்கு அனுப்பப் படுவதாகவும் அறிந்தேன். விருந்தினர் வருகையாலோ நோய் காரணமாகவோ செலவு மிகுதியாகிவிட்டால், அதற்கு ஈடு செய்யும் வகையில் நெய் முதலிய சில பொருள்களை வாங்குவதில்லை என்றும், எதற்கும் வேலையாட்களே இல்லாமல் எல்லாக் கடமைகளையும் தானே செய்து வருகிறாள் என்றும், அடுத்த ஆண்டில் ஒரு தையல் பொறி வாங்கிக் கணவருடைய சொக்காய்களையும் தானே தைக்கக் கற்றுக்கொள்ள எண்ணம் உண்டு என்றும் அறிந்தேன். உடனே நான் அந்தத் தையல் பொறியின் விலையைத் தருவதாகச் சொல்லி மகிழ்வித்தேன். "வேண்டாம் அண்ணா! நகரத்தில் வாழ்க்கை நடத்தும் உங்களுக்கு எவ்வளவோ செலவுகள் ஏற்படும். இந்தத் துன்பம் வேண்டா" என்றாள். அதனால் ஒரு துன்பமும் இல்லை என்று சொல்லிவிட்டு வந்தேன். "இப்போது ஊருக்கு வரவில்லை. அடுத்த விடுமுறையின் போது இருவரும் வருவோம்" என்று கூறி எனக்கு விடை கொடுத்தாள்.
ஊருக்கு வந்ததும், தங்கையை ஏன் அழைத்து வரவில்லை என்ற கேள்வியைத்தான் முதலில் அம்மா கேட்டார். பிறகு தங்கையின் குடும்ப வாழ்க்கையைப் பற்றிக் கேட்டார். தையல் பொறி வாங்கும் முயற்சிக்கு நான் பண உதவி செய்யப்போவதைக் கூறியவுடன் அம்மாவின் முகத்தில் ஒரு தனி மகிழ்ச்சி ஏற்பட்டது.
பிறகு சோழசிங்கபுரம் பற்றிப் பேச்சு வந்தது. மாலன் ஊரில் இல்லாததைச் சொன்னபோது, எல்லோர்க்கும் பெரிய ஏமாற்றம் ஆயிற்று.
-----------
அத்தியாயம் 25
ஈரோட்டுக்குச் சென்றதும் கடமைகளில் ஈடுபட்டேன். இருந்தாலும் என் மனம் அடிக்கடி சந்திரனையும் மாலனையும் நினைந்து வருந்தியது. இளமையில் எனக்குக் கிடைத்த அரிய நண்பர்கள் அவர்கள் இருவருமே, அவர்கள் நல்லபடி இருந்திருப்பார்களானால், ஒருவர்க்கொருவர் அன்பாய்ப் பழகி வாழ்க்கையில் மகிழ்ச்சியாய் இருந்திருக்கலாம். இப்போது இருவரும் இருவேறு வகையாய்த் தவறுகள் செய்து தடுமாறித் துன்புறுகிறார்களே என்று எண்ணி வருந்தினேன்.
பத்து நாள் கழித்து மாலனிடமிருந்து கடிதம் வந்தது. ஏதாவது ஒரு நல்ல செய்தி இருக்கும் என்று எதிர்பார்த்துப் பிரித்தேன். எதிர்பார்த்ததற்கு மாறாக, அந்தக் கடிதம் என் கலக்கத்தை மிகுதிப்படுத்தியது. நான் சோழசிங்கபுரத்துக்குச் சென்றபோது, அவன் இல்லாமற் போனதற்காக வருத்தம் தெரிவித்ததோடு, பண முடையால் கடனுக்கு வட்டியும் கட்ட முடியாமல் தான்படும் துன்பத்தைப் பற்றி விரிவாக எழுதியிருந்தான். இந்த வேளை பார்த்துத் தன் மனைவி தன்னைக் கைவிட்டுத் தாய் வீட்டுக்குப் போய்ச் சுகமாக உட்கார்ந்திருப்பதாகக் குறித்திருந்தான். கடைசியாக, எப்படியாவது இந்தச் சமயத்தில் தனக்கு இரண்டாயிரம் ரூபாய் கடன் தரவேண்டும் என்றும், எந்தக் காரணத்தாலும் தட்டிக் கழிக்கக்கூடாது என்றும், இந்தச் சமயத்தில் இந்த உதவி இல்லாவிட்டால் தன்னுடைய வாழ்க்கையே அடியோடு போய்விடும் என்றும் எழுதியிருந்தான்.
தங்கைக்குத் தையல்பொறி வாங்கித் தருவதாக மகிழ்ச்சியோடு சொல்லிவிட்டு வந்ததை நினைத்துக் கொண்டேன். அதற்காக அந்த மாதச் சம்பளத்திலிருந்து நூறு ரூபாய் தனியே எடுத்து வைத்திருந்தேன். இன்னும் இரண்டு மாதம் அப்படி நூறு நூறு ரூபாய் எடுத்து வைத்தால் அவளுக்கு அதை வாங்கிக் கொடுத்துவிடலாம், அவ்வாறு செய்தால் பொருள் வகையிலும் அந்தக் குடும்பத்துக்குப் பெரிய உதவி செய்ததாகும். அதைக் கொண்டு அக்கம் பக்கத்தாருக்குச் சோளி சொக்காய் முதலானவை தைத்துக் கொடுத்துத் தன் குடும்பத்துக்குச் சிறு வருவாயும் தேடிக் கொள்வாள் என மகிழ்ந்திருந்தேன். என் திட்டமெல்லாம் வீண் மனக்கோட்டை ஆனதாக வருந்தினேன்.
இரண்டாயிர ரூபாயை யாரிடமிருந்து நான் எப்படி வாங்கித் தருவது? தந்தையாரின் மளிகைக்கடை வீட்டுச் செலவுக்கு வேண்டிய வருவாயைக் கொடுத்தால் போதும் என்று இருக்கிறது. இந்த நிலையில் நான் அவரைப் பண உதவி கேட்க முடியாது. அவருக்கு இந்தச் செய்தி தெரிந்தாலும் என்மேல் வருத்தப்படுவார். மாலனுக்கு நான் உதவி செய்யப் போவதாகத் தெரிந்தால் அந்தப் பணம் வீணாகி விடும், திரும்பி வராது என்று அம்மாவும் தடுப்பார். நான் உதவி செய்யாமல் இருப்பதும் முடியாது. மாலனும் பொறுப்போடு பணத்தைக் கையாள்பவனாகவும் தெரியவில்லை. வீண் செலவு செய்பவன் அல்ல. ஆனால், வழியல்லா வழியில் போய் ஏமாந்து கெடுகின்றான். என்ன செய்வது என்று மூன்று நான்கு நாள் கலங்கிக் கொண்டிருந்தேன். கடைசியில் ஆயிர ரூபாயாவது அனுப்புவது என்றும் கையில் இருந்த இருநூறோடு இன்னும் எண்ணூறு கடன் வாங்கிச் சேர்த்து அனுப்புவது என்றும் முடிவு செய்தேன். யாரிடம் சென்று கடன் கேட்பது? நண்பராகிய நகர்மன்றத் தலைவரிடமே சென்றேன். அவரும் பணவகையில் பலருக்குக் கொடுத்துக் கொடுத்து ஏமாந்தவர். ஏமாந்த கதைகளை எல்லாம் என்னிடம் விரிவாகச் சொல்லிக் கடைசியில் பணம் கொடுக்க இசைந்தார். மாதம் நூறு நூறாக எட்டு மாதத்தில் திருப்பித் தந்துவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டு கொடுத்தார்.
ஆயிரமும் சேர்த்து மாலனுக்கு அனுப்பியபோது விரிவாக ஒரு கடிதம் எழுதினேன். கடன் வாங்கி ஆலை வைக்கும் முயற்சி தொடங்கியிருக்கக் கூடாது என்றும் அங்கேயே இருந்து இரவும் பகலும் தொழிலைக் கவனிக்கவேண்டும் என்றும், இனிமேல் சாமியார்கள் பின்னே சுற்றக்கூடாது என்றும், மூடநம்பிக்கைகளைக் குறைத்து உழைப்பையும் உண்மையையும் நம்ப வேண்டும் என்றும் கடுமையாகவே எழுதியிருந்தேன். அவனுடைய மனைவி கற்பகத்தை என் தாய் கண்டு பேசினார் என்றும், அவளாகக் கணவனை விட்டு வரவில்லையாம் என்றும், கணவனோடு எப்போதும் வாழ விரும்புகிறாளாம் என்றும் மாமனார் கொடுத்தால் பணம் வாங்கிக் கொள்ள வேண்டுமே தவிர வற்புறுத்திக் கேட்பது தகாது என்றும், எனக்கு நேரே தெரியாத செய்திகள் போல், அவனுடைய மன உணர்ச்சியைப் புண்படுத்தாத வகையில் குடும்பத்தைப் பற்றியும் அறிவுரை எழுதியிருந்தேன்.
சந்திரன் போல் அவன் கடிதம் எழுதாமல் இருக்கவில்லை. அந்த வகையில் அவன் ஒருபடி மேலானவன் என்றே சொல்ல வேண்டும். உடனே கடிதம் எழுதியிருந்தான். பணம் வந்து சேர்ந்ததற்காக நன்றி தெரிவித்தான். இன்னும் ஓராயிரம் அனுப்ப முடிந்தால் பேருதவியாகும் என்றும் எழுதியிருந்தான். இனிமேல் தொழிலை அக்கறையுடன் கவனிக்க முடியும் என்று உறுதியும் கூறியிருந்தான். ஆனால், தன் மனைவியைப் பற்றி ஒரு சொல்லும் எழுதவில்லை. ஒருகால் இந்தத் துறையில் எனக்கு ஒன்றும் தெரியாது என்றும், பணம் வாங்கத் திறமையில்லாத என்னுடைய அறிவுரையை எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் எண்ணியிருப்பான். கல்லூரியில் படித்தபோதே சோதிடத்தை நான் நம்பவில்லை. அப்போது, 'உனக்கு ஒன்றும் தெரியாது' என்று இகழ்ந்தவன் அவன். அதே மனநிலையோடு இப்போதும் என் அறிவுரையை இகழ்ந்து ஒதுக்கியிருக்கக் கூடும். இப்படி மனைவியைத் தாய் வீட்டுக்கு அனுப்பிப் பணம் கேட்பதில் தவறு ஒன்றும் இல்லை என்று எண்ணிவிட்டிருப்பான். எப்படியோ போகட்டும். தொழில் நன்றாக நடந்த பிறகாவது திருந்தினால் போதும் என்று ஆறுதல் அடைந்தேன்.
ஐந்தாம் மாதம் மனைவியையும் மாதவியையும் அழைத்து வருவதற்காக ரயில் ஏறி ஊருக்குப் புறப்பட்டபோது மாலனுக்கு உதவி செய்ததைப் பற்றி வீட்டில் யாருக்கும் சொல்லக்கூடாது என்று தீர்மானம் செய்துகொண்டேன். தையல்பொறி வாங்குவது பற்றி அம்மா ஏதாவது கேட்டாலும் திருடனைத் தேள் கொட்டியது போல் இருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.
நான் வீட்டுக்குள் நுழைந்தவுடனே தங்கை மணிமேகலையைத் தான் கண்டேன். அவளுக்கு செய்வதாகச் சொன்ன உதவியை நினைத்து மனம் திக்கென்றது. ஒருவாறு மனத்தை மாற்றிக்கொண்டு பேசினேன். மனைவியும் குழந்தையும் இருந்தார்கள். அம்மா இல்லை. எங்கே என்று கேட்டேன். கற்பகத்தின் அண்ணி இறந்துவிட்டதாக சொல்லவே அம்மாவும் அவர்களோடு நேற்றுப் புறப்பட்டுப் போனார்கள் என்றாள் தங்கை. "நேற்று கற்பகம் அழ, மாமி அழ, வீடு ஒரே துயரமாக இருந்தது. மாமிதான் மிகுதியாக அழுதார்கள்" என்றாள் மனைவி.
"என்ன காரணம்? திடீரென்று இறந்துபோன காரணம்" என்றேன்.
"யாருக்குமே தெரியாது. அம்மா வந்தால்தான் தெரியும்" என்று சொல்லிக்கொண்டே பாக்கியம் வந்தார்.
என்னென்னவோ எண்ணினேன். சந்திரன் ஏதாவது கொடுமை செய்திருப்பானோ என்றும் ஓர் எண்ணம் வந்தது. சே, என்ன கெட்டவனாக இருந்தாலும் அந்த எல்லைக்குப் போயிருக்க மாட்டான் என்று தெளிந்தேன்.
அன்று பகல் உணவுக்கு உட்கார்ந்தபோது, பாக்கியம் தங்கையையும் மனைவியையும் உடன் உட்கார்ந்து உண்ணுமாறு வற்புறுத்தினார். "மாதவி தூங்குகிறாள். அவள் எழுவதற்கு முன்னே சாப்பாட்டு வேலையை முடித்து விடலாம்" என்று வற்புறுத்தி உண்ணச் செய்தார்.
உணவின் போது, கற்பகத்தின் பேச்சைத் தங்கை தொடங்கினாள். "வீட்டில் பிறந்த பெண்ணும் நன்றாக இல்லை. புகுந்த பெண்ணும் இப்படி ஆகிவிட்டாள்" என்று வருந்தினாள். மறுபடியும் அவளே, "பெண்ணாய்ப் பிறந்தவர்கள் எல்லோரும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று பெற்றோர்கள் வற்புறுத்தக் கூடாது. தக்க கணவர் கிடைக்காத பெண்கள் திருமணம் ஆகாமலே இருக்கட்டும் என்று விட்டுவிட வேண்டும். நம் நாட்டில் மணிமேகலை இல்லையா? ஆண்டாள் இல்லையா?" என்றாள்.
உணவு பரிமாறிக்கொண்டிருந்த பாக்கியம், "மணிமேகலைக்குத் தக்க கணவன் இல்லையா? அவளே துறவியாகிவிட்டாள். ஆண்டாளுக்குக் கணவன் கிடைக்கவில்லையா? மனிதரை மணக்க மாட்டேன் என்று உறுதி பூண்டார்" என்றார்.
"நல்ல கணவராக இல்லை என்று தெரிந்தால் நாமும் அப்படி இருந்துவிடவேண்டும்" என்றாள் தங்கை.
என் இலையில் மோர் விட்டபடியே பாக்கியம் அதற்கும் மறுமொழி சொன்னார். "ஆண்டாளைப் போல் மனிதர் யாரையும் மணந்து கொள்ளமாட்டேன் என்று சொன்னாலும் சொல்லலாம். ஆனால், மீராவைப் போல் திருமணம் ஆனபிறகு கணவனைக் கைவிட்டுப் போகக்கூடாது" என்றார்.
என் மனம் திடுக்கிட்டாற் போல் நின்றது. உணவை மறந்து அவருடைய புதிய கருத்தில் சென்றது. அவர், விட்ட மோர் இலையைவிட்டு ஓடி மனைவியின் இலைப்பக்கம் சென்றது. "அப்புறம் யோசிக்கலாம். சோற்றைப் பிசையுங்கள். மோர் தரையில் ஓடுகிறது" என்று மனைவி சொன்ன போதுதான் என் கைகள் கடமையை உணர்ந்தன. எண்ணிக் கொண்டே உண்டேன். உண்டு முடித்துக் கை அலம்பிய பிறகு, "மீரா செய்ததில் தவறு என்ன? கணவன் உயரவில்லை. தாம் உயர்ந்த நிலையை எட்டி விட்டார். ஆகவே குடும்பத்தைத் துறந்து விட்டார்" என்றேன்.
"சரி இருக்கலாம். காளிகோயிலில் இராமகிருஷ்ணர் தவம் செய்தாரே. அவர் உயர்ந்த நிலையை அடையவில்லையா? அதனால் மனைவி சாரதாமணியை விட்டுத் துறந்துவிடவில்லையே. மனைவியிடத்திலும் கடவுளைக் கண்டாரே. அதுபோல் மீரா கணவனிடத்திலும் தெய்வத்தைக் கண்டு வாழ்ந்திருக்கலாமே" என்றாள் தங்கை.
என் மூளையில் மின்னல் பாய்ந்தது போல் இருந்தது.
"உண்மை, அது சரி" என்றார் பாக்கியம்.
தங்கையின் அறிவு நுட்பத்தையும் தெளிவையும் உணர்ந்து போற்றினேன். "சாரதாமணி கணவருடைய நெறிக்கே திரும்பிவிட்டார். அதனால் இராமகிருஷ்ணர் தம்முடைய உயர்ந்த தவத்திற்கும் துணையாக்கிக் கொண்டார். ஆனால் மீராவின் கணவன் அவ்வாறு திருந்தாதிருக்கலாம்; உயராதிருக்கலாம் தன் வழிக்கு வராத கணவனை வைத்துக்கொண்டு என்ன செய்வது?" என்றேன். என்ன விடை வரப்போகிறது என்ற ஆவலாலேயே விளையாட்டுப் போல் கேட்டேன்.
பாக்கியம் மறுமொழி கூறினார்; "நெடுமாறனுடைய மனைவி மங்கையர்க்கரசி என்ன செய்தார்? கணவன் வேறே வழியாகச் சென்றபோதிலும், அவனோடு அன்பாக வாழவில்லையா? கடைசியில் கணவனைத் திருத்தும் முயற்சியில் வெற்றியும் பெறவில்லையா?" என்றார்.
பேசாமல் இருந்தேன்.
"கற்பகத்துக்கு முந்தாநேற்று இரவும் இதுதான் சொல்லிக் கொண்டிருந்தேன். கணவனைத் திருத்த முடியவில்லையா? அதற்காக அவனிடம் செலுத்த வேண்டிய அன்பைக் குறைத்துக் கொள்ளாதே; அவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைக் கைவிடாதே; ஒருவனை மணந்து கொண்ட பிறகு அவனுடைய இன்ப துன்பமே உன் இன்ப துன்பம்; இன்ப துன்பம் மட்டும் அல்ல, ஆக்கமும் அழிவும் கூட அப்படியே இருவர்க்கும் பொதுவாகக் கருதவேண்டும்; கணவனுடைய அழிவில் நீயும் கலந்து அழிவதில் ஒரு மகிழ்ச்சி வேண்டும் என்று எவ்வளவோ சொன்னேன். கோவலனுடைய தவறு நன்றாகத் தெரிந்திருந்தும், எதிர்த்துப் பிரிந்து வாழ்வதைவிட, அந்தத் தவறான வாழ்வுக்கும் துணையாக இருந்து, சாவதே நல்லது என்ற துணிவு கண்ணகியிடம் இருந்தது. அதனால்தான் பொருள் இழந்து வருந்திய கணவனுக்குத் தன் கால் சிலம்பைக் கொடுக்க முன் வந்தாள். கணவனை திருத்த முடியும் என்ற நம்பிக்கை இல்லாத போதும், அந்த வாழ்வுக்குத் துணையாக இருந்துவிட்டுச் சாகத் துணிந்த மனம் அது. அந்த மனம் எளிதில் வராது. தியாகத்தில் ஊறிப் பண்பட்ட மனம் அது. குடிகார மகனாக இருந்தாலும் அவனுக்குக் கொடுத்துக் கொடுத்துச் செல்வத்தை, அழிக்கத் துணியும் தாயின் மனம் அது. அதற்கு எவ்வளவு அன்பு வேண்டும்? எவ்வளவு தியாகம் வேண்டும்? சரியோ தவறோ, ஒருவனோடு பிணைந்து விட்ட வாழ்வு அவனோடேயே போகட்டும் என்ற துணிவு பழங்காலத்தில் பெண்களுக்கு இருந்தது. இந்தக் காலத்தில் எந்தப் பெண்ணும் இப்படித் துணிய மாட்டாள். கற்பகம் மட்டும் துணிய முடியுமா? அவளைக் குறை கூற முடியாது" என்றார்.
"கற்பகத்திடமும் குறை உண்டா" என்றேன்.
"உண்டு உண்டு. அவளும் பிடிவாதக்காரி. நயமாகப் பேசவும் பழகவும் தெரியாதவள். ஆனால் உண்மையும் நேர்மையும் உள்ளவள். உண்மையும் நேர்மையும், மட்டும் இருந்தால் குடும்பத்துக்குப் போதுமா? அவற்றால் மனங்களைப் பிணைக்க முடியாது; அன்பும் நயமும்தான் மனங்களைச் சேர்க்கும் ஆற்றல் உள்ளவை. கற்பகத்திடம் அந்தக் குறை உண்டு. எதற்கும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசுவாள். நயமே இல்லை" என்றார்.
"அவளுடைய அண்ணன் சந்திரனிடம் அந்தக் குறை உண்டு" என்றேன்.
அதற்குள் குழந்தை மாதவி விழித்து அழவே, எங்கள் பேச்சு அந்த அளவில் நின்றது.
மறுநாள் பகல் இரண்டு மணிக்குத்தான் பெருங்காஞ்சியிலிருந்து அம்மா வந்து சேர்ந்தார். வந்ததும் அலுத்துக் களைத்துக் கூடத்தில் உட்கார்ந்தார். செய்தி அறிவதற்காக நாங்கள் எல்லோரும் சுற்றி உட்கார்ந்தோம். அப்போது அப்பாவும் வீட்டில் இருந்தார். அவரும் செய்தி தெரிந்து கொள்வதற்காக நின்றார்.
"கற்பகத்தின் கலியாணத்துக்குப் போனபோது ஒன்றரை நாள் பழகினேன். அவளுடைய அன்பையும் குணத்தையும் நினைத்தால் மனம் கேட்கவில்லை. அய்யோ! பெண்ணே! போய்ப் பிணமாய்ப் பார்த்தேன். நம் வீட்டுக்கு வரணும் வரணும் என்று அவ்வளவு ஆசையாய் இருந்தாளாம். அந்தக் குடும்பம் கொடுத்து வைக்கவில்லை. முகத்தில் பால் வடிகிறது. என்ன களை! என்ன குணம்! ஊரே அழுது விட்டது" என்றார்.
"என்ன’மா உடம்புக்கு" என்றேன்.
"கிணற்றிலே விழுந்து உயிரை விட்டு விட்டாள். கணவனுடைய கொடுமை பொறுக்க முடியாமல்தான்."
இதைக் கேட்டதும் என் நெஞ்சம் குமுறியது.
"அய்யோ, பாவி" என்றாள் என் மனைவி.
அம்மா விரிவாகச் சொல்ல தொடங்கினார். "அடிதடி நடக்கிற குடும்பமாய்ப் போச்சு. எல்லோரும் சொல்கிறார்கள். ஒவ்வொரு நகையாய்க் கேட்டு வாங்கி ஊரில் கண்ட பெண்களுக்கெல்லாம் கொடுத்துவிட்டான். அடித்து உதைத்து நகையைக் கழற்றிக் கொண்டு போகும் பழக்கம் இருந்திருக்கிறது. கடன் கேட்டால் ஊரில் கொடுப்பார் இல்லை. பணம் இல்லாதபோது இப்படி நகைகளைக் கழற்றிக் கொண்டு போயிருக்கிறான். ஊரில் அவனைப் பழிக்கிற பழி எல்லாம் கேட்டு உருகிக் குன்றிப் போய்விட்டாள் அந்தப் பெண். முன்நாள் இரவு வந்தபோது, மனத்தில் இருந்ததை எல்லாம் சொல்லிக் கேட்காததை எல்லாம் கேட்டுவிட்டாள். அவன் கோபத்தால் தடியும் தாம்பும் எடுத்து அடித்திருக்கிறான். மூக்குத்தி கேட்டிருக்கிறான். அதையும் கழற்றிக் கொடுத்துவிட்டுப் பேசாமல் தோட்டத்துப்பக்கம் போனாள். காவல்காரன், 'இந்த நேரத்தில் எங்கே'மா. தனியாகப் போகிறீர்களே' என்று தடுத்துக் கேட்டானாம். 'தனியாகப் போகாமல், இதற்குக்கூட யார் துணை வருவார்கள்' என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாள். வெளிக்குப் போகிறாள் என்று காவல்காரன் இருந்து விட்டானாம். நேரே தோப்புக் கிணற்றுக்குப் போய் இறங்கி விட்டாள். அந்தப் பாவி பெரும்பாவி சிறிது நேரம் பொறுத்து வெளியே வந்தானாம். காவல்காரனைப் பார்த்து, அவள் வந்தாளா என்று கேட்டானாம். தோப்புக்குப் போனாள் என்று சொல்லவே அவன் பயந்துவிட்டான். 'போய்த் தேடு, போடா' என்று காவல்காரனை அனுப்பினானாம். எங்கும் கிடைக்கவில்லை என்று வந்து சொன்னானாம். விடியற்காலையில் போய்ப் பார்த்திருக்கிறான். பிணம் மிதப்பதைப் பார்த்து ஓடி வந்து சொன்னானாம். அந்தப் பாவி அப்போது போனவன் இன்னும் வரவில்லையாம். எங்கெங்கோ கேட்டுப் பார்த்திருக்கிறார்கள். எங்கும் கிடைக்கவில்லையாம். இங்கே ஆள் அனுப்பினார்கள். போனோம். அழுதோம். எடுத்துப் போட்டுவிட்டோம். போய்ச் சேர்ந்துவிட்டாள்" என்று சொல்லிக்கொண்டே கண்ணீர் உதிர்த்தார்.
"எங்கே போய்விட்டாராம்?" என்றாள் தங்கை.
"தொழு நோய் ஆஸ்பத்திரிக்குப் போகப் போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தானாம், அங்கேதான் போயிருப்பான் பாவி" என்றார் அம்மா.
"போய்த் தொலையட்டும். அங்கேயே ஒழிந்தால் குடும்பத்தைப் பிடித்த தொல்லையே விட்டுப் போகும்" என்று சொல்லிக் கொண்டே அப்பா நகர்ந்தார்.
பாக்கியத்தின் முகத்தைப் பார்த்தேன். கண்ணீர் தாரை தாரையாக வழிந்து கொண்டிருந்தது. கண்களைத் துடைத்துக் கொண்டே கம்மிய குரலில், "அய்யோ! இப்படியா ஆகணும்?" என்றார். "வெறி பிடித்துத் தப்புச் செய்தாலும் திருந்தக்கூடாதா? படித்த பிள்ளைக்கு நல்ல புத்தகம் கிடைக்கவில்லையா? நல்லவர்களின் பழக்கம் கிடைக்கவில்லையா? காலமெல்லாம் இப்படியா நடத்தை கெட்டு அழிய வேண்டும்? கடவுள் ஏன் இப்படிப் படைக்க வேண்டும்" என்று வருந்தினார்.
என்னால் ஒன்றும் பேச முடியவில்லை. என் வாழ்க்கையில் நேர்ந்த பெரிய அதிர்ச்சி போல் இருந்தது.
அம்மா இரண்டு நாள் இதே நினைப்பாக இருந்து அடிக்கடி பெருமூச்சு விட்டு வருந்தினார். எனக்கும் இந்தப் பயணத்தின் போது மனம் நன்றாக இல்லை. மனைவியையும் குழந்தையையும் அழைத்துக் கொண்டு வீட்டை விட்டுப் புறப்பட்டபோதும் எல்லோரிடத்திலும் துன்பத்தின் சாயல் இருந்தது. அம்மா பேத்தியைக் கையில் வாங்கிக் கண்ணில் ஒத்தி மருமகளிடம் கொடுத்தார். அப்போது மாதவி பாட்டியைப் பார்த்து வாய் திறந்து சிரித்தாள். அதைக் கண்ட போதுதான் அம்மாவின் முகத்தில் சிறு மலர்ச்சி தோன்றியது.
---------
அத்தியாயம் 26
ஒரு மாதத்திற்குள் என்னை ஈரோட்டிலிருந்து சென்னைக்கு மாற்றி உத்தரவு வந்தது. அருமையான நண்பரையும் காவிரியாற்றுத் தண்ணீரையும் விட்டுப் பிரிந்து போவது வருத்தமாக இருந்தது. "நான் அடிக்கடி சென்னைக்கு வருபவன். ஆகையால் நம் பழக்கம் எப்போதும் இருக்கும். அந்தக் கவலையே வேண்டாம். காவிரியாற்றுத் தண்ணீர்தான் அங்கே உங்களுக்குக் கிடைக்காது. வேண்டுமானால் நான் சென்னைக்கு வரும்போதெல்லாம், பெரிய காளத்தி கூசா நிறையத் தண்ணீர் பிடித்துக் கொண்டு வருவேன்" என்று நகர்மன்றத் தலைவர் நகைத்தார். என் குடும்பத்திற்குப் பெரிய விருந்து வைத்தார். குழந்தை மாதவிக்கு ஒரு தங்கச் சங்கிலி செய்து அன்போடு அணிவித்தார்.
குடும்பத்தை அங்கேயே விட்டு விட்டுச் சென்னைக்குச் சென்று வேலையில் சேர்ந்தேன். அந்தத் தொழிலில் எனக்கு முன்னே இருந்தவர் தாம் குடியிருந்த வீட்டையே எனக்கு ஏற்பாடு செய்தார். நுங்கம்பாக்கத்தில் இருந்தது அந்த வீடு. எனக்கு அந்த வீடு பிடித்தமாகவே இருந்தது. அதை ஏற்றுக் கொண்டேன். அடுத்த சனிக்கிழமையே ஈரோட்டுக்குச் சென்று குடும்பத்தைச் சென்னைக்கு அழைத்து வந்துவிட்டேன்.
ஈரோட்டாரிடம் வாங்கிய எண்ணூறு ரூபாய்க்கடனில் ஐம்பது மட்டுமே திருப்பிக் கொடுத்தேன். அவருக்கு உறுதி கூறியபடி மாதம் நூறு ரூபாய் தர முடியாததை நினைந்து வருந்தினேன். அதற்கு ஒரு கடிதமும் எழுதி மன்னிப்புக் கேட்டிருந்தேன். சென்னைக்கு வந்த பிறகு, அந்த மாறுதலின் காரணமாகவும், புது இடத்தில் வாழத் தொடங்கியதன் காரணமாகவும், எதிர்பாராத செலவுகள் நேர்ந்தன. எல்லாவற்றையும் அவர்க்கு எழுதியிருந்தேன். அவர் அதுபற்றிக் கவலை வேண்டாம் என்று ஆறுதல் அளித்திருந்தார்.
சென்னை வாழ்க்கை எனக்குப் புதியது அல்ல. மனைவிக்கு முற்றிலும் புதியது. ஈரோடு மிகப்பிடித்திருந்தது என்றும் சென்னை அவ்வளவாக பிடிக்கவில்லை என்றும் அவள் சொன்னாள். நாள் ஆக ஆக இந்தப் பரபரப்பு மிகுந்த நகரம் அவளுக்குப் பழகிவிட்டது. பல குடும்பத்துப் பெண்கள் அவளுக்கு பழக்கமாகிவிட்டார்கள். கடற்கரையும் உயிர்காட்சிச் சாலையும் அவளுக்கு விருப்பமான இடங்கள் ஆகிவிட்டன. ஒரு சின்ன கார் இருந்தால் அடிக்கடி மாதவியை வெளியே அழைத்துக் கொண்டு போய் வேடிக்கை காட்டுவதற்கு உதவியாக இருக்குமே என்ற அந்த ஒரு குறைதான் அவளுக்கு இருந்தது.
எனக்கும் அந்தக் குறை இல்லாமற் போகவில்லை. ஈரோட்டாரிடம் வாங்கிய கடனை தீர்த்துவிட்டு, தங்கைக்கு ஒரு தையல் பொறியும் வாங்கிக் கொடுத்த பிறகு பாதி பணமாவது சேர்த்துக் கையில் வைத்துக் கொண்டுதான் ஒரு பழைய கார் வாங்க முயற்சி செய்யவேண்டும் என்று உறுதி கொண்டேன். நான் ஈரோட்டிலேயே இருந்திருந்தால் மாதம் நூறு ரூபாய் மீதியாக்கி விரைவில் கடனை அடைத்திருக்க முடியும். சென்னைக்கு வந்த பிறகு மாதம் ஐம்பது மீதியாக்குவதே பெரு முயற்சி ஆயிற்று. எப்படியோ எதிர்பாராத வகையில் வேண்டாத செலவுகள் பெருகிக் கொண்டிருந்தன. ஊர்ப்பக்கத்திலிருந்து சென்னைக்கு வந்தவர்கள் நேரே வீட்டைத் தேடி வந்து தங்கியிருக்கத் தொடங்கினார்கள். உயர்நிலைப் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்த காலத்தில் உடனிருந்து படித்தோம் என்பது தவிர நெருங்கிப் பழகாதவர்கள் பலர் இருந்தார்கள் அல்லவா? அவர்கள் எல்லோரும் இப்போது நான் பெரிய வேலையில் இருப்பதை அறிந்த பிறகு, நெருங்கிப் பழகியவர்கள்போல் நட்புரிமை கொண்டாடி அடிக்கடி வரத் தொடங்கினார்கள். உண்மையாகவே நெருங்கிப் பழகிய பழைய நண்பர்கள் இரண்டே பேர்தான். அவர்களுள், சந்திரன் இருந்த இடமே தெரியாமல் போய்விட்டான். மாலன் இருந்தும் பயன் இல்லாதவனாக மாறிவிட்டான். ஆனால், என் உள்ளத்தில் இடம்பெறாத நண்பர்களும் உறவினர்களும் இப்போது என் வீட்டில் இடம் பெறத் தொடங்கி விட்டார்கள். அவர்களே, நெருங்கி வந்தபோது, "நீங்கள் எனக்கு நெருங்கிய தொடர்பு இல்லாதவர்கள்" என்று நான் சொல்ல முடியுமா? விலக்க முடியுமா? ஆகவே, ஆகும் செலவு ஆகட்டும் என்று எல்லோரையும் ஓரளவு வரவேற்றேன்.
சென்னை சின்ன நகரம் அல்ல; பெரிய நகரம்; அதிலும் பல தாலுக்காக்களையும் கொண்ட ஒரு மாவட்டம் போன்றது. இதைப் பலர் மறந்து விடுகின்றார்கள். ஒரு மாவட்டத்தின் வடகோடியில் ஓர் ஊரில் இருப்பவர்கள், அதே மாவட்டத்தின் தென் கோடியில் மற்றோர் ஊரில் இருப்பவர்களைக் கட்டாயப்படுத்தித் திருமணத்துக்கோ விருந்துக்கோ அழைப்பதில்லை. சென்னை ஒரு பெரிய மாவட்டத்துக்கு நிகரானதாக இருந்தாலும், ஒவ்வொரு திருமணத்துக்கும் அலுவலுக்கும் வருமாறு வற்புறுத்துகிறார்கள், விருந்துக்கு வருமாறு கட்டாயப்படுத்துகிறார்கள். ஒரே நாளில் இந்த நகரத்தில் எத்தனை வீடுகளில் திருமணங்கள், அலுவல்கள், விருந்துகள்! இத்தனைக்கும் போய்வருவது என்றால் யாரால் முடியும்? தொலைவான உறவினர்கள் எல்லாரும் நெருங்கிய உறவினர்கள் போல் தொடர்பு கொண்டாடும்போது என்ன செய்வது? அங்கங்கே போய் வருவதை எவ்வளவோ குறைத்துக் கொண்டேன். ஆனாலும், ஓரளவு செலவு ஏற்பட்டு வந்தது. எனக்கு அவைகளில் வெறுப்பு ஏற்பட்ட போதிலும், என் மனைவிக்கு அவற்றில் சலிப்பு ஏற்படவில்லை. அவள் குழந்தை மாதவியை அழைத்துக் கொண்டு அங்கும் இங்கும் ஓயாமல் போய் வந்தாள். எனக்கு வெளியே போய்வருதல் தொழிலிலேயே அமைந்தது. அவளுக்கு தொழிலோ வீட்டளவில் உள்ளது. வெளிப் போக்குவரத்தில் அவளுக்கு சலிப்பும் வெறுப்பும் ஏற்படாத காரணம் அதுதான் என்று உணர்ந்தேன்.
அவளுக்குப் புதிய நண்பர்கள் ஏற்பட்டது போலவே எனக்கும் புதிய நண்பர்கள் ஏற்பட்டார்கள். ஆனாலும், அவர்கள் பலர் பொழுதுபோக்குக்காக அல்லது ஏதேனும் உதவியின் காரணமாக என்னோடு பழகியவர்களாகவே இருந்தார்கள். அந்தக் காரணம் தீர்ந்ததும் அவர்களின் நட்பும் தீர்ந்தது போலவே இருந்தது. எங்கேனும் பார்க்கும்போது புன்முறுவல் காட்டுவதும், "எப்படி? நலம்தானே?" என்று பொருளின்றிக் கேட்பதும் அந்த நட்பின் நிழல்போல் நிற்கும். அவர்களின் புன்முறுவலைக் காணும்போதெல்லாம் எனக்குக் காகித மலர்களே நினைவுக்கு வரும். ஆயினும் அவர்களுள்ளும் ஒருசிலர் உள்ளன்பு உடைய நண்பர்களாக - நறுமண மலர்களாக - இருந்தார்கள்.
சந்திரனும் மாலனும் என் வாழ்வை விட்டு நெடுந்தொலைவு நீங்கிவிட்ட போதிலும் என் உள்ளத்தை விட்டு அவ்வாறு நீங்கவில்லை. அவர்களை வெறுத்த போதும், உளமார வெறுத்தேன். அந்த வெறுப்பு என் உள்ளத்தில் ஆழத்திலிருந்து எழுந்தது. நெருங்கிய பழக்கம் - உண்மையான நட்புதான் - அதற்குக் காரணம். ஆனால், உள்ளத்திற்கு ஓய்வு இல்லாத வாழ்க்கையில் அந்த ஆழ்ந்த நட்பும் எப்படி விளங்க முடியும்? பலவகையான கடமைகளும் பலரோடு பழகவேண்டிய காரணங்களும், பரபரப்பான போக்குவரவும் மிகுந்த சென்னை வாழ்க்கை இருந்தபடியால், உள்ளத்திற்கு ஓய்வே இல்லை. சந்திரனையும் மாலனையும் நினைத்து வெறுப்பதற்கும் நேரம் இல்லை. சில நாட்கள் அவர்களின் நினைப்பே இல்லாமலும் இருந்திருக்கிறேன். இப்படிச் சில நாட்கள் அவர்களை நினைக்காமலே இருந்து விட்டுத் திடீரென அவர்களின் நினைப்பு வரும்போது நெஞ்சம் உருகும். சந்திரனுடைய மனைவி இறந்தபின் சில நாட்கள் வரையில் அவன்மேல் அளவு கடந்த வெறுப்பு இருந்தது. அவன் முகத்திலேயே விழிக்கக் கூடாது என்ற அளவிற்கும் வெறுப்புக் கொண்டேன். நாள் ஆக ஆகத் துயரம் குறைவது போலவே வெறுப்பும் குறைந்தது. இளமை நண்பனை மறுபடியும் காண முடியாதா என்று ஏங்கினேன். என்னை அறியாமல் என் உள்ளத்தில் அந்த ஏக்கம் இருந்து வந்தது.
மாலனை அடிக்கடி நினைப்பதற்குக் காரணமாக இருந்தவள் என் மனைவியே. கற்பகத்தின் மேல் அவளுக்கு இரக்கம் ஏற்பட்டுவிட்டது. மாதவியை பெற்றெடுத்து வாலாசாவுக்கு வந்தபோது கற்பகம் அங்கே இருந்தாள் அல்லவா? அப்போது அவள் கற்பகத்தோடு நெருங்கிப் பழகிவிட்டாள். அவளுடைய பெருங்காஞ்சி முகவரியை எழுதிக் கொடுக்கச் சொன்னாள். எழுதிக்கொடுத்தேன். அந்த முகவரிக்குக் கடிதம் எழுதும் பழக்கம் வைத்துக் கொண்டாள். அங்கிருந்து ஒவ்வொரு கடிதம் வந்தபோதும் என்னிடம் செய்திகள் சொல்வாள். "கற்பகம் நல்ல பெண். அவளுடைய கணவர் உங்கள் நண்பர் அல்லவா? நீங்கள் அவளுடைய வாழ்க்கைக்கு ஏதாவது உதவி செய்யக் கூடாதா? அவருக்கு ஒருமுறை எழுதினால் போதுமா? மறுபடியும் எழுதக் கூடாதா" என்பாள். "நண்பர் நண்பர் என்று சொல்கிறீர்கள். ஆண்கள் ஒருவரைப் பற்றி ஒருவர் கவலைப்படுவதாகவே காணோம். நாங்கள் பெண்கள் அப்படி இருக்கவே மாட்டோம். ஆண்களுக்கே கல்மனம்தான்" என்பாள். கற்பகத்திடமிருந்து கடிதம் வந்தபோதெல்லாம் இப்படி ஏதாவது இரக்கத்தோடு சொல்லிக் கொண்டே இருந்தாள். ஒரு மாதக் கடைசியில் வரவு செலவு பார்த்தபோது, ஈரோட்டு அப்பாவுக்காக ஐம்பது ரூபாய் என்று சொல்லாமல் மாலனுக்காக ஐம்பது ரூபாய் என்று சொல்லிவிட்டேன். அகப்பட்டுக் கொண்டேன். விடாமல் கேட்டாள். உண்மையைச் சொன்னேன். "அவ்வளவுதான், அந்த ஆயிரமும் போனதுதான். பணவகையில் அவர் மோசமான பேர்வழி என்று தெரிந்துதான் கற்பகத்தின் அப்பா பணம் கொடுக்க மாட்டேன் என்கிறார். நிலமாக எழுதி வைக்கிறார். எனக்கு இதுவரையில் சொல்லவில்லையே" என்று கடிந்தாள். "நண்பருக்கு ஒரு முறையாவது அந்த அளவுக்காவது உதவி செய்யாமல் கல்மனத்தோடு இருக்க முடியுமா? பெண்களுக்கு அந்தக் கல்மனம் உண்டு. ஆண்களுக்கு முடியாது?" என்றேன். "போதும், இந்த அளவோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இனிமேல் பணம் கொடுத்து உதவும் வேலை வேண்டா" என்றாள். அதற்குப் பிறகு அவள் கற்பகத்தின் கடிதம் பற்றிச் சொன்னாலும், மாலனுக்குச் சொல்லிச் சீர்ப்படுத்தக் கூடாதா என்பதை பற்றி சொல்வதை விட்டுவிட்டாள்.
ஒருமுறை மட்டும் மிக்க இரக்கத்தோடு கடிதத்தைப் படித்து கொண்டிருந்தபோது நான் அணுகிச் சென்றேன். "நான் பார்க்கக்கூடாதா? படி கேட்கலாமே" என்றேன்.
படித்தாள், "இனிமேல் என் கணவர் மனம் திருந்தி வருவார் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அவர் போக்கே உலகத்தில் இல்லாத புதிய போக்காக இருக்கிறது. அப்பா யார் யாரிடமோ சொல்லியனுப்பி முயற்சி எல்லாம் செய்து ஆயிற்று. உன்னுடைய கணவரும் தம்மால் ஆனவரையில் முயன்றார் என்று நம்புகிறேன். என் மனமும் மரத்துவிட்டது. ஆனாலும், அப்பாவின் கவலையைப் பார்க்கும் போதுதான், என்னால் அவர் துன்பப்படுகிறாரே என்ற வருத்தம் ஏற்படுகிறது. அப்பா மட்டும் சிறிது மனத் துணிவோடு இருப்பாரானால், நான் இனி அவரோடு வாழும் வாழ்வையே மறந்துவிடுவேன். கொஞ்ச காலம் வாழ்ந்தேன் அல்லவா? அது போதும். எத்தனையோ பெண்கள் அவ்வளவு சிறு காலமும் கணவருடன் வாழாதவர்கள் இல்லையா? அவர்களை விட என் நிலைமை மேலானது என்று எண்ணிக் கொள்கிறேன். இன்னொரு வகையில் நான் புண்ணியம் உடையவள். திருவாய்மொழியும் திருப்பாவையும் எனக்கு இருக்கும்போது என்ன குறை? எப்படியோ அந்த இரண்டு மக்களையும் பார்த்துப் பாராட்டிக்கொண்டு காலம் கழிப்பேன்" என்று கற்பகத்தின் கடிதத்தைப் படித்தாள்.
அப்போது நான் நிறுத்தி, "திருவாய்மொழி பையன், நினைவு இருக்கிறது. திருப்பாவை" என்றேன்.
"மகள். குழந்தை, மறந்துவிட்டீர்களா?" என்றாள்.
"பெயர் தெரியாது அல்லவா? நல்லது. படி" என்றேன் தொடர்ந்து படித்தாள்.
"இந்தக் கடிதம் எழுதிக் கொண்டிருக்கும்போது, அப்பா திண்ணை மேல் உட்கார்ந்து ஒருவருடன் பேசிக்கொண்டிருப்பது கேட்கிறது. பையன் (அதாவது என் அண்ணன்) போன இடம் தெரியவில்லை, அவன் எங்கே வரப்போகிறான், எத்தனை குறை இருந்தாலும் மானம் உடையவன், எங்கேயாவது உயிரை விட்டு விட்டிருப்பான். இந்தச் சொத்தை எல்லாம் நான் யாருக்கு வைத்து விட்டுப் போகப்போறேன், மருமகன் வந்து எல்லா நிலத்தையும் வைத்துக் கொண்டு பார்த்துக் கொள்ளக்கூடாதா. இருக்கும் கடனைத் தீர்த்து விட்டுச் சுகமாக வாழலாமே எனச் சொல்லிக் கொண்டிருக்கிறார். சொல்லும்போது அவருடைய மனத்தில் மகனைப் பற்றிய வேதனையும் இருக்கிறது. என்ன சொன்னாலும் அவர் கேட்கவில்லை. அவருடைய மனத்துக்கு தான் ஆறுதல் அளிக்க முடியவில்லை. அதுதான் இப்போது என் கவலை, - இப்படிக்கு அன்புள்ள கற்பகம்."
இவ்வாறு மனைவி படித்து முடித்த போது, சாமண்ணாவின் வேதனை என் மனத்திலும் பற்றிக்கொண்டது. சந்திரன் உண்மையாகவே மானம் உடையவன். அதனால்தான் இமாவதியால் ஏமாற்றம் அடைந்ததாக உணர்ந்ததும் கல்லூரி விடுதியை விட்டே ஓடிப்போய் விட்டான். இப்போதும் மனைவி தற்கொலை செய்து கொண்டாள் என்று அறிந்ததும் ஊரை விட்டே ஓடிப்போனான். ஆனால் இந்த மான உணர்ச்சி இருந்த அளவிற்கு அறத்தில் நம்பிக்கையும் நெறியில் தெளிவும் இருந்திருந்தால் எவ்வளவோ நன்றாக இருந்திருக்கும். நம்பிக்கையும் தெளிவும் இல்லாத போது இந்தப் பொல்லாத மானம் இருந்தும் என்ன பயன்? தன்னைக் கெடுத்துக் கொள்வதற்கும் அழித்துக் கொள்வதற்கும் தான் இந்த மான உணர்ச்சி பயன்படுகிறது என எண்ணிச் சோர்ந்தேன்.
"ஏன் வருந்துகிறீர்கள்?" என்றாள் மனைவி.
"சந்திரன் என்ன ஆனானோ என்று நினைத்தால் மனம் வேதனைபடுகிறது."
"அந்த ஆள் இனி எப்படிப் போனால் என்ன? மனைவி போய்விட்டாள். குடும்பம் போய்விட்டது. போனவர்களை நினைத்து வருந்திப் பயன் என்ன? இருக்கிறவர்களுக்கு ஏதாவது செய்ய முடியுமா? செய்யுங்கள். இப்படிச் சொத்து முழுதும் கிடைக்கும் என்பதைக் கற்பகத்தின் கணவருக்கு எழுதுங்கள்."
அந்தச் சொல் நொந்த என் மனத்தைக் கோலால் குத்துவது போல் இருந்தது. "ஒருகாலும் நான் அப்படி எழுதமாட்டேன். என் நண்பன் சந்திரன் செத்துப்போனான் என்று நினைக்கவும் என் மனம் இடம் தரவில்லை. அய்யோ வேண்டா" என்றேன்.
மாலனுக்கு வேறு வகையில் கடிதம் எழுதினேன். மறுமொழி வரும் வரும் என்று ஆவலுடன் எதிர்பார்த்துச் சலித்தேன். பணம் கடன் கொடுத்த காரணத்தால் இருந்த நட்புக்கும் இடையூறு நேர்ந்துவிட்டது என்று எண்ணிக் கொண்டேன்.
முன்னெல்லாம் இப்படி நண்பரிடமிருந்தும் வீட்டாரிடமிருந்தும் கடிதம் வராமல் இருந்தால் அதுவே எனக்குப் பெருங்கவலை ஆகிவிடும். அதையே எண்ணி எண்ணி வருந்திக் கொண்டிருப்பேன். சிறு துன்பமும் பெரிதாகத் தோன்றிய காலம் அது. இப்போது பெரிய துன்பமும் சின்னதாகத் தோன்றும் அளவிற்கு மனமாறுதல் ஏற்பட்டுவிட்டது. நன்றியுணர்ச்சி முதலான அடிப்படை உணர்ச்சிகள் அப்படியே இருக்கின்றன. ஆனால் இன்ப துன்ப உணர்ச்சிகள் வரவரக் குறைந்துகொண்டிருக்கின்றன. சிறு தோட்டம் பயிரிடுகிறவன் ஒரு செடி வாடினாலும் கவலைப்படுகிறான்; பெரிய தோட்டம் உடையவன் ஒரு பாத்தியே பட்டுப்போனால் தான் வருந்துகிறான்; பெரிய தோப்பு உடையவன் ஒரு செடிக்காவும் கவலைப்படுவதில்லை; ஒரு பாத்திக்காகவும் வருந்துவதில்லை. இரண்டு மூன்று பெரிய மரங்கள் பட்டுப்போனால் தான் அவனுடைய மனம் கொஞ்சம் அசையும். அப்போதும் அவன், சின்ன தோட்டம் பயிரிடுகின்றவனைப் போல் அவ்வளவு கவலைப்பட மாட்டான் அல்லவா? என் மனநிலையும் அப்படித்தான் மாறியது. முன் சின்ன ஒரு கூட்டத்து அளவில் என் பழக்கமும் தொடர்பும் இருந்தன. இப்போது பெரிய நகரத்தில் நூற்றுக்கணக்கானவர்களோடும் ஆயிரக்கணக்கானவர்களோடும் பழக நேர்ந்துவிட்டதால், உணர்ச்சிகளின் ஆழம் குறைந்துவிட்டது. அதனால் சந்திரனுக்காகவும் மாலனுக்காகவும் வருந்தும் வருத்தம் முன்போல் இல்லை எனலாம்.
நான் தொழில் காரணமாகவும் வேறு காரணமாகவும் நூற்றுக்கணக்கானவர்களோடு பழகிய போதிலும், ஒரு சிலர் தான் உண்மையாக என்னுடன் நெருங்கிய பழக்கம் உடையவர்கள். அவர்களிடம் என் மனம் கொஞ்சம் ஆழ்ந்த நட்பும் கொண்டது என்று சொல்லலாம்.
அவர்களுள், என் அலுவலகத்தில் என்னோடு தொழில் செய்த நண்பர் ஒருவர். அவருடைய பெயர் பச்சைமலை. நல்ல பண்புகள் உடையவர். பலரோடு பழகமாட்டார். பழகும் சிலரிடத்தில் அன்பாகப் பழகுவார். அலுவலகத்தில் வேலையாட்களையும் மனம் நோகப் பேசாதவர். ஆனால் வேலையில் திறமையானவர். அப்படிப்பட்டவர் ஞாயிற்றுக் கிழமைகளில் எங்கள் வீட்டுக்கு வரப் போகப் பழகினார். நாங்களும் சில ஞாயிற்றுக்கிழமைகளில் அவருடைய வீட்டுக்குச் சென்றோம். நாளடைவில் பெண்களுக்குள் பழக்கம் மிகுந்தது. நான் வேலை மிகுதியாக இருந்தபோது மனைவி மட்டும் அங்கே போய் வருவதும் பழக்கமாயிற்று.
ஒரு நாள் இரவு நான் வீட்டுக்குத் திரும்பியதும் "பச்சைமலையின் மனைவி உங்களுக்குச் சின்ன வயதிலிருந்தே தெரியுமாமே" என்றாள்.
"உனக்குப் பைத்தியம்! நாம் எங்கிருந்தோ பிழைக்க வந்தோம். நாம் யார்? அவர்கள் யார்? இப்போதுதானே பழக்கம்! என்ன உளறுகிறாய்?" என்றேன்.
"அவர் உங்களுக்குச் சொல்லவே இல்லையா?"
"நீ என்னதான் சொல்கிறாய்?"
"அந்த அம்மாவுக்கும் இத்தனை நாள் தெரியாது. இன்றைக்குத் தான் கண்டுபிடித்தார்கள்."
"அமெரிக்காவா, ஆஸ்திரேலியாவா. என்னை அவர்கள் கண்டுபிடிக்க."
"பொய்யா சொல்கிறேன்?"
"என்ன செய்தி? விளக்கமாகச் சொல்."
அந்த அம்மாவின் அக்கா ஊரிலிருந்து வந்திருக்கிறார். முன்னமே ஒருமுறை வந்தபோதும் பார்த்திருக்கிறேன். பேசியிருக்கிறேன். இன்றைக்கு என்னென்னவோ பேசியிருந்து விட்டு, குடும்பத்தைப் பற்றிக் கேட்கத் தொடங்கினார். அப்போது தெரிந்துவிட்டது."
"என்ன தெரிந்துவிட்டது?" என்று அவளைக் கேட்டேன். அதற்குள் மாதவி மெல்லச் சுவரைப் பிடித்தபடியே நடந்து வந்து என் மடியின்மேல் ஏறித் தன் வாயைத் திறந்து நாக்கை நீட்டிக் காட்டினாள். "சரிதான். வாய்க்குள் நாக்கு இருப்பது தெரிந்து விட்டது என்கிறாள். அதுதானே நீ சொல்வது?" என்றேன்.
மனைவி சிரித்தாள். "சொல்வதைக் கேட்டுத் தெரிந்து கொண்டால் அதன் பிறகு சிரிக்கமாட்டீர்கள். உடனே போய்ப் பார்க்கலாம் என்று புறப்படுவீர்கள்" என்றாள். "உங்கள் வீட்டுக்காரர் பேர் என்ன என்று கேட்டார். பேரைச் சொன்னவுடன், சற்று விழித்துப் பார்த்தபடி இருந்துவிட்டு, ஊர் எது என்று கேட்டார். வாலாசா என்று சொன்னவுடன், திகைத்தாற்போல் இருந்தார். உடனே உங்கள் வீட்டுக்காரருக்குச் சந்திரன் என்று ஒரு நண்பர் இருக்கிறாரா என்று கேட்டார். அப்போது அவருடைய திகைப்பு முழுவதும் எனக்கு வந்துவிட்டது. 'ஆமாம் இருக்கிறார். உங்களுக்கு அவரை எப்படித் தெரியும்?' என்றேன். 'சொல்கிறேன். நீ வேலய்யாவுக்கு மனைவியாக வருவதற்கு முன்னிருந்தே அவரை எனக்குத் தெரியும்' என்று என்னிடம் சொல்லிவிட்டு, பிறகு தம் தங்கையைப் பார்த்து, 'தெரியுதா'டி உனக்கு நினைவு வருகிறதா’டி' என்று கேட்டார். 'யார்? நம் சந்திர அண்ணாவா!' என்று பச்சைமலையின் மனைவி உடனே அக்காவைக் கேட்டார். ஆமாம் என்றார் அந்த அக்கா. 'அவர்தான் அப்போதே எங்கோ போய் விட்டாரே அவரைப் பற்றி அப்புறம் ஒன்றுமே தெரியாதே' என்றார் தங்கை. எனக்குத் திகைப்பு மிகுதியாயிற்று. 'அவர் எங்கோ போய்விட்ட செய்தி உங்களுக்கு எப்படித் தெரியும் அம்மா?' என்று கேட்டேன். 'நேற்றுத் திருமணமாகி வந்த உங்களுக்கு அவர் போய்விட்டது எப்படித் தெரியும்?' என்று அக்கா என்னையே திருப்பிக் கேட்டார்."
இந்த அளவிற்கு மனைவி சொல்லியவுடன், என் கலக்கம் தீர்ந்து உடனே இமாவதியின் நினைவு வந்துவிட்டது. "அடடா!" என்றேன்.
"ஓ ஓ! உங்களுக்கு இப்போதுதான் யார் என்று தெரிந்ததா?" என்றாள் மனைவி.
"ஆமாம். இப்போதுதான் நினைவுக்கு வருகிறது. இமாவதி என்று ஒரு பெண். அவளாகத்தான் இருக்க வேண்டும்" என்றேன்.
"பெண்ணா? எனக்கு மேல் வயதில் பெரியவர். நான்கு பிள்ளைகளுக்குத் தாய்."
"இருக்கலாம் அப்போது பெண்தானே? நானும் சந்திரனும் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது திருமணம் ஆகாத பெண். சரி சொல்லிமுடி. அப்புறம் தான் விரிவாகச் சொல்வேன்."
"அப்புறம் என்ன? உனக்கு எப்படித் தெரியும் என்று அவர் கேட்க, நான் கேட்க, வேடிக்கையாக இருந்தது. அவர் முன்னமே ஒருமுறை ஓடிப்போய் வந்தவர் என்பது அப்போதுதான் எனக்குத் தெரிந்தது. பிறகு நான் எல்லாம் சொன்னேன். அவருக்குத் திருமணம் ஆனது. மனைவியோடு அன்பாக வாழாதது. அந்த அம்மா கிணற்றில் விழுந்து செத்தது. பிறகு அவர் ஓடிப்போனது எல்லாவற்றையும் நான் சொன்னேன். வியப்போடு கேட்டுக் கொண்டிருந்து விட்டு அவருக்காக மிகவும் வருத்தப்பட்டார். அழாத குறையாக அந்த அம்மாவின் முகம் வாடிப்போய்விட்டது" என்றாள்.
இவ்வளவு செய்திகளையும் இமாவதிக்குச் சொல்லி இருக்கத் தேவையில்லையே என எண்ணினேன். "இதை எல்லாம் ஏன் சொன்னாய்? அந்த அம்மா சந்திரனைப் பற்றித் தவறாக நினைப்பாரே" என்றேன்.
"அதுதானே இல்லை! இவ்வளவு சொன்ன பிறகும் அந்த அம்மா சந்திரனுக்காக வருத்தப்படுகிறார். இரக்கத்தோடு பேசுகிறார். தமக்குத் தெரிந்தவரையில் சந்திரன் மிக நல்ல குணமுள்ளவர் என்கிறார். அவரைப்போல் நல்ல மனம் உள்ளவர்களைப் பார்ப்பது அருமை என்கிறார். சந்திரனைப் பற்றி நீங்களும் அவ்வளவு நன்றாகச் சொன்னதே இல்லை" என்றாள்.
என் உள்ளம் குழைந்தது. "ஆமாம். அவ்வளவு நல்லவனாக இருந்தவன்தான். அந்தக் காலத்தில் அவன் மேல் ஒரு குறையும் சொல்ல முடியாது. அப்படிப்பட்ட நல்லவன்தான் பிறகு இப்படி மாறிக் கெட்டு விட்டான். அதுதான் எனக்கு வருத்தம்" என்றேன்.
"உங்களைக் கட்டாயம் பார்க்கவேண்டும் என்று அந்த அம்மா விரும்புகிறார். என்னோடு உடனே புறப்பட்டு வருவதாகச் சொன்னார். வீட்டில் இருக்கமாட்டார் என்று சொன்னதால் நின்றுவிட்டார். நாளை மறுநாள் அவர்களுடைய ஊருக்கே திரும்பிப் போகிறபடியால் நீங்கள் நாளைக்கே போய்ப் பார்த்துவிடுங்கள். நீங்கள் போகாவிட்டால் அந்த அம்மா தவறாமல் இங்கே வந்துவிடுவார்" என்றாள்.
"அப்படியானால், பச்சைமலையின் மனைவியின் பெயர் என்ன? திருமகளா?" என்றேன்.
"ஆமாம். உங்களுக்கு இவ்வளவு நன்றாகத் தெரிந்திருந்தும் நீங்கள் என்னிடம் சொன்னதில்லையே. பெயரும் நினைவில் வைத்திருக்கிறீர்களே, கணவர் தம் மனைவியைக் கூப்பிடும் போது "திரு" என்று அழைப்பார்" என்றாள்.
"நான் சின்ன வயதில் பார்த்தது உண்டு. அப்போதிருந்தே பெயரும் தெரியும். ஆனால் இந்தக் குடும்பம் என்று எப்படித் தெரியும்?" என்றேன்.
பிறகு, சந்திரன் படித்துக் கொண்டிருந்தபோது இமாவதியின் குடும்பத்தோடு பழகியதும், இமாவதியின் திருமண அழைப்பைப் பார்த்தவுடன் கலங்கி அழுததும், உடனே சொல்லாமல் ஓடிப் போனதும், பிறகு தேடிப் போய் அவனை அழைத்து வந்ததும் எல்லாம் விரிவாக மனைவிக்கும் சொன்னேன்.
"அப்படியானால், அடிப்படையிலேயே அவருடைய மனத்தில் ஏதோ ஒரு குறை இருக்கிறது" என்றாள் மனைவி.
"மெய்தான். அவனுடைய மனமே இன்னொருவரை நம்பாத மனம். யாராவது ஒரு பெரியவரிடத்திலாவது ஒரு சிறந்த புத்தகத்திலாவது நம்பிக்கை வைத்து மனத்தைக் கொடுத்திருக்க வேண்டும். அல்லது, ஒத்த உரிமையோடு யாரிடமாவது திறந்த மனத்தோடு பழகியிருக்க வேண்டும். நண்பனாகிய என்னிடமும் அப்படிப் பழகவில்லை. வந்த மனைவியிடமும் அவ்வாறு பழகவில்லை. அதனால் உலகமே அவனுக்கு இருண்ட குகையாக இருந்தது. வழி தெரியாமல் தடுமாறித் தடுமாறிக் கெட்டான். மருண்ட போதெல்லாம் வெருண்டு வெருண்டு ஓடினான்" என்றேன்.
காலையில் எழுந்தவுடன் இமாவதியைப் பற்றி மனைவி நினைவூட்டினாள். நானும் அதே நினைவாக இருந்தேன். கடமைகளை விரைந்து முடித்து, பச்சைமலையின் வீட்டுக்குச் சென்றேன். போய் நின்று கதவைத் தட்டியவுடன் "வாங்க! நானும் எதிர்பார்த்துக் கொண்டே இருந்தேன்" என்று சொல்லிக் கொண்டே இமாவதி வந்தார்.
"என்ன அய்யா! முன்னமே பழகிய பழக்கம் இருந்தும் ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ளாமலே இருந்தீர்கள். இப்போது நான் தான் அந்நியனாக, புதியவனாக நிற்கிறேன்" என்றார் பச்சைமலை.
அவருடைய மனைவி, "வேடிக்கையாக இருக்கிறது" என்றார்.
இமாவதியும் நானும் எங்கள் பழைய பேச்சை எடுத்தவுடன் ஒவ்வொருவராக நீங்கினார்கள். இமாவதியின் தங்கை திருமகள் மட்டும் ஒருமுறை வந்து குறுக்கிட்டு, "சந்திர அண்ணா வந்து வாழ்ந்து மறுபடியும் அப்படிப் போய்விட்டதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது" என்றார்.
நடந்தவற்றை எல்லாம் ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொண்டு வந்தேன்.
"அவர் திரும்பி வந்த பிறகு எனக்குத் தெரிவித்திருக்கக் கூடாதா? நான் வந்து பார்த்து உண்மையைச் சொல்லியிருப்பேனே! எனக்கும் ஆறுதலாக இருந்திருக்கும். அவருக்கும் ஆறுதலாக இருந்திருக்குமே" என்றார் இமாவதி ஓரிடத்தில்.
மற்றொரு முறை பேச்சின் இடையே, "வந்த அவராவது பழைய அன்பை நினைத்து எட்டிப் பார்த்திருக்கக் கூடாதா?" என்றார்.
இன்னொரு முறை குறுக்கிட்டு, "நீங்களும் அவரைப் போலவே நடந்து கொண்டீர்கள். எங்கள் முகவரி நன்றாகத் தெரிந்திருந்தும், சென்னையிலேயே தொழில் இருந்தும் எங்களை அடியோடு மறந்து விட்டீர்கள். கல்லூரி நட்பு இவ்வளவுதான் போல் இருக்கிறது" என்றார்.
"சந்திரனுக்கு விருப்பமான பெண்ணாகப் பார்த்துத் திருமணம் செய்து வைக்கவில்லை போல் இருக்கிறது" என்றார் வேறொரு பேச்சின் இடையே.
"எங்கள் அம்மாவிடத்தில் சந்திரன் எவ்வளவு பணிவோடு மரியாதையோடு இருந்தார். சொந்தத் தாய் தந்தையாருக்கு வருத்தம் உண்டாகும்படியாக நடந்தார் என்றால் நம்ப முடியவில்லையே" என்றார் மற்றோர் இடத்தில்.
நடந்தவற்றை நான் விரிவாகச் சொல்லிக் கொண்டிருந்த போது இமாவதி இப்படி இடையிடையே வியப்புடனும் திகைப்புடனும் பெருமூச்சுவிட்டுச் சில கருத்துகளைத் தெரிவித்தபடி இருந்தார். எல்லாவற்றையும் சொல்லி முடித்த பிறகு, "அய்யோ! கடவுள் ஏன் இப்படி அன்பானவர்களை - நல்லவர்களைக் - கெடுக்கிறார்?" என்று மிக மிக வருந்தினார். "எங்கேதான் போயிருப்பார்? தெரிந்தால் நானும் தேடுவேனே! நீங்கள் யாரும் தேடவே இல்லையா? அவ்வளவு தொலைவு நம்பிக்கை இழந்து விட்டதா குடும்பம்?" என்று துன்பப்பட்டார்.
சிறிது நேரம் தரையையே உற்றுப் பார்த்தபடி இருந்து ஒரு பெருமூச்சு விட்டார். அந்தப் பெருமூச்சு, சொல்லாத வேதனையை எல்லாம் சொல்வதுபோல் இருந்தது. வலமும் இடமும் முன்னும் பின்னும் மெல்லத் திரும்பிப் பார்த்தார். "என்னால் ஏற்பட்ட ஏமாற்றம்தான் அவருடைய மனமே கெட்டுப்போவதற்குக் காரணமாக இருந்ததோ என்று இன்னமும் என் நெஞ்சம் என்னைச் சுடுகிறது. என்ன உலகம் இது? பெண்கள் இருவர் பழகினால், உடம்பைக் கடந்து உள்ளத்தின் உறவுகொண்டு பழகவில்லையா? நீங்கள் ஆண்கள் இருவர் பழகும்போதும் அப்படி உள்ளத்தால் பழகவில்லையா? ஓர் ஆணும் ஒரு பெண்ணும் பழகும்போது மட்டும் உள்ளம் இல்லையா? ஏன் இந்தத் தடுமாற்றம் ஏமாற்றம் எல்லாம்?" என்றாள்.
அந்த வினாவுக்கு விடையாக நான் ஒன்றும் கூறவில்லை. அவர் என்னிடம் விடை எதிர்பார்க்கவும் இல்லை. படைத்தவனையே கேட்ட வினாவாக இருந்தது அது.
ஆனாலும் அந்த வினா இன்னும் என் செவிகளில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது.
--------
அத்தியாயம் 27
எப்படியோ இரண்டு ஆண்டுகள் வேகமாக உருண்டு ஓடின. ஒருநாள் தபால்காரர் ஒரு மணியார்டர் கொண்டு வந்து கையில் நீட்டினார். "நூறு ரூபாய்" என்றார்.
"எங்கிருந்து?" என்று சொல்லிக்கொண்டே அதைப் புரட்டிப் பார்த்தேன்.
மாலன், சோழசிங்கபுரம், வட ஆர்க்காடு மாவட்டம் என்று முகவரி கண்டதும் எனக்குப் பெரிய வியப்பாக இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகக் கடிதமும் எழுதாமல் மறைந்திருந்த ஒருவன் திடீரென்று நூறு ரூபாய் அனுப்பியிருந்தான் என்றால், என்ன என்று சொல்வது? நெல் ஆலை வேகமாக முன்னேறிப் பணம் நிறையக் கிடைத்தது என்று எண்ணுவதா? அல்லது சாமியாரின் ரசவாத வித்தை பலித்து வீட்டில் உள்ள செம்பு இரும்பு எல்லாம் பொன்னாகி விட்டன என்று எண்ணுவதா? என்ன என்று தெரியாமல் வியப்போடு அவன் அதில் எழுதியிருந்த குறிப்பைப் பார்த்தேன்.
"அன்புள்ள நண்பா! மன்னிக்க மன்னிக்க மன்னிக்க என்று பல முறை கேட்டுக் கொள்கிறேன். பணத்தில் ஒரு பகுதியாவது திருப்பிக் கொடுக்காமல் உன்னைப் பார்ப்பதும் இல்லை என்று நோன்பு கொண்டிருந்தேன். அதனால்தான் இதுவரையில் மறைவும் மவுனமும். பணம் சேர்த்துக் கவலை தீர்ந்துவிடவில்லை; மனம் திருந்திக் கவலை தீர்ந்து விட்டது. கடிதத்தில் விரிவு, அன்புள்ள, மாலன்" என்று எழுதியிருந்தான். அதில் கையெழுத்து இட்டுத் தபால்காரரிடம் கொடுத்தேன். அவர் கொடுத்த நூறு ரூபாயும் எண்ணி வாங்கும்போது என் மகள் மாதவி ஓடி வந்து, "அப்பா! அம்மா கூப்பிடுகிறாங்கோ" என்றாள். அவளுடைய பாவாடையும் சொக்காயும் பளபள என்று மின்னுவதையும், அவளுடைய சின்ன நெற்றியில் செந்நிறத் திலகம் பட்டொளி பரப்புவதையும், வாயின் புன்சிரிப்பு என் உள்ளத்தை கொள்ளைக் கொள்வதையும் உணர்ந்தபடியே, "இந்தா! கண்ணு! இதைக் கொண்டு போய் அம்மாவிடம் கொடு" என்றேன். அவள் அதை எண்ணுவது போல் விரல்களால் புரட்டிக்கொண்டே நடந்தாள். அவளுடைய தலையின் சின்ன கூந்தல் அழகாகப் பின்னப்பட்டிருந்ததையும் தாழம்பூவும் மல்லிகையும் அதற்குத் தூய அழகு தந்து விளங்கியதையும் கண்டேன். "அம்மா! அம்மா! அப்பா ரொம்ப ரூபா கொடுத்தாங்கோ" என்று அவள் சொன்னது கேட்டது.
உடனே அங்கிருந்து என் மனைவி அந்த நோட்டுக்களுடன் விரைந்து வந்து பல்லெல்லாம் தெரிய என் எதிரே நின்று, "பணமே இல்லை, சம்பளம் வந்தால்தான் உண்டு என்று ஏமாற்றினீர்களே? இப்போது மட்டும் எந்தச் செடியிலிருந்து முளைத்தது?" என்றாள்.
மாலன் பணம் அனுப்பியதாகச் சொன்னேன். அயர்ந்து நின்றாள். "அப்படியானால் கற்பகத்துக்கு ஏதோ நல்ல காலம் வரப் போகிறது. வரட்டும். நல்ல பெண் நல்ல படியே வாழ’ணும்" என்று உளமார வாழ்த்தி நின்றாள்.
அன்று அவளை ஊருக்கு அனுப்புவதற்காக ஏற்பாடு செய்து கொண்டிருந்தேன். அதனால் மாதவிக்கு அணிவன எல்லாம் அணிவித்து, தானும் புதிய சேலை உடுத்துக் கொண்டிருந்தாள். அவள் இரண்டாம் குழந்தைக்குத் தாய் ஆகும் நிலையில் இருந்தபடியால், வாலாசாவுக்கு அனுப்பும்படியாகப் பெற்றோர் வற்புறுத்தி எழுதியிருந்தார்கள். அவர்களுடைய விருப்பப்படியே அன்று பகல் ரயிலில் அனுப்புவதற்கு ஏற்பாடு செய்து, கையில் கொடுத்தனுப்பப் பணம் இல்லாமல் திகைத்துக் கொண்டிருந்த நேரம் அது. அந்நேரத்தில் தபால்காரர் மணியார்டரோடு வந்து நின்றது எனக்குப் பெரிய மகிழ்ச்சியாக மகிழ்ந்தேன். மனைவியோ அதில் கற்பகத்தின் நல்வாழ்வையும் கண்டு மகிழ்ந்தாள்.
அவள் மகிழ்ந்ததற்கு ஏற்பவே மாலன் மனம் திருந்திக் கடிதம் எழுதியிருந்தான். அவள் ஊருக்குப் போவதற்கு முன் அந்தக் கடிதம் வந்திருந்தால், அவளுடைய மகிழ்ச்சி பலமடங்கு மிகுதியாகியிருக்கும்.
"நெல் ஆலையை என்னால் தனியே நடத்தமுடியாது என்று தெரிந்து கொண்டேன். அந்த லாரிக்கார நண்பன் முன்வந்து பொறுப்பு ஏற்றுக் கொண்டார். இப்போது கூட்டு முயற்சியாக நடைபெறுகிறது. இருந்தாலும் பொறுப்பு அவருடையதே. நான் சம்பளக்காரன் போல் இருந்து அவர் சொன்னபடியே உழைக்கிறேன். மாதம் நூற்றைம்பது ரூபாய் குடும்பச் செலவுக்கும் ஐம்பது ரூபாய் பழைய கடன் அடைப்புக்கும் என்று கொடுக்கிறார். அவர் கிழித்த கோட்டை விட்டு விலகாமல் நடக்கிறேன். அதனால் கவலை இல்லாமல் இருக்கிறது. எனக்கு நன்மையாகச் சில மாறுதல்களும் ஏற்பட்டுவிட்டன. மற்றொரு நெல் ஆலைக்காரரின் போட்டி வேகம் தணிந்துவிட்டது. லாரிக்கார நண்பரோடு பகைத்துக் கொள்ள அவரால் முடியாது. ஆகவே வீம்புக்குச் செய்யும் போட்டியை விட்டுவிட்டார். நானும் வேறு வேலைகளில் ஈடுபடாமல் கவனம் செலுத்துகிறேன். மாமனாரும் கடைசியில் இரண்டாயிர ரூபாய் தருவதற்கு உடன்பட்டுச் சொல்லியனுப்பினார். நீ முதலில் எழுதிய கடிதத்தை நினைவில் வைத்துக்கொண்டு நான் வேண்டா என்று சொல்லிவிட்டேன். ஆனால் கற்பகத்தை இங்கே அழைத்து வருவதற்காகப் பெருங்காஞ்சிக்கு வரப்போவதாகத் தெரிவித்திருக்கிறேன். ஊருக்கு வந்து நிலபுலங்களைப் பார்த்துக்கொண்டு அங்கேயே வாழுமாறு மாமனார் எனக்குச் சொல்லியனுப்பிக் கொண்டிருக்கிறார். இருந்தாலும் எனக்கு அது அவ்வளவு பொருத்தமாகத் தெரியவில்லை. உன்னுடைய அறிவுரையும் எனக்கு வேண்டும். நான் இன்னும் பெருங்காஞ்சிக்கு போகவில்லை கற்பகத்தின் பிடிவாதமான வெறுப்புக்காக அஞ்சி நிற்கிறேன். உன்னைத் துணைக்கு அழைத்துக்கொண்டு போக எண்ணியிருக்கிறேன். நீதான் என் திருமணத்திற்கும் தொடக்கத்தில் உதவியாகக் கடிதம் எழுதியவன். எங்கள் இல்வாழ்க்கை இனிமேல்தான் செம்மையாகத் தொடங்க இருக்கிறது. இதற்கும் நீ முன்வந்து உதவி செய்யவேண்டுகிறேன். நீ வந்து சொன்னால் தான், அவள் பழைய வருத்தத்தை எல்லாம் மறந்து என்னை வரவேற்பாள். நீ மறுக்காமல் வரவேண்டும். அடுத்த வாரத்தில் வெள்ளிக்கிழமையோ சனிக்கிழமையோ அங்கே வந்து உன்னை அழைத்து கொண்டு பெருங்காஞ்சிக்குப் போக எண்ணியிருக்கிறேன். வருவேன். மற்றவை நேரில். உன் அன்பன் மாலன்."
இந்தக் கடிதம் எனக்குப் பெருமகிழ்ச்சி உண்டாக்கியது. அதனால் அன்று பிற்பகல் நான் அலுவலகத்தில் வேலையும் அவ்வளவாகச் செய்யவில்லை. பெரிய விருந்து உண்டு மயங்கியவன்போல் பொழுதைப் போக்கிவிட்டு மணி நாலரை ஆனதும் அலுவலகத்தை விட்டு புறப்பட்டேன். முன் வாயிலருகே வந்தபோது, "அய்யா சாமி" என்பதுபோல் ஒரு குரல் கேட்டது. திரும்பிப் பார்க்காமலே வந்தேன். "வேலு" என்பது போலவே இரண்டு முறை கேட்டது. யாரோ இந்தப் பெயருடையவன் ஒருவனை அழைக்கும் குரல், இதற்காக நம்மைப்போன்ற ஓர் அதிகாரி திரும்பிப் பார்க்கக்கூடாது என்று நகர்ந்தேன். மறுபடியும் அதே குரல் இரண்டு முறைகேட்கவே சிறிது திரும்பிப் பார்த்தபடி நடந்துகொண்டே இருந்தேன். "வேலய்யா! வேலு!" என்றதும் நின்றேன். மறுபடியும் நடந்தேன். "அய்யோ மறந்து விட்டாயா? கடவுளே மறந்து விட்டாயா? வேலு!" என்றதும் திகைத்து நின்றேன். சிறிது தொலைவில் ஒருவன் தொப்பென்று தரையில் விழுந்தது கண்டேன். எனக்கும் அவனுக்கும் இடையில் இருந்த ஒருவர், "உங்களைப் பார்த்துத்தான் கூப்பிட்டுக் கொண்டே வந்து கால் தடுக்கி விழுந்துவிட்டார். யாரோ, பாவம்" என்றார். உற்றுப் பார்த்துக்கொண்டே விழுந்தவனை நோக்கி நடந்தேன். குப்புறவிழுந்திருக்கவே யார் என்று தெரியவில்லை. அப்போது அலுவலகத்து வேலையாள் ஒருவன் அந்தப் பக்கம் வந்தான். அவனை நோக்கி, "யார் பார்" என்றேன். அவன் குனிந்து பார்த்து, "யாரோ நோயாளி" என்றான். அதற்குள் பத்துப் பதினைந்து பேர் அங்கே கூடிவிட்டார்கள். விழுந்தவனுடைய சட்டைப் பையிலிருந்து ஒரு சிறு புத்தகம் சிறிது வெளியே வந்திருந்தது. அதை எடுத்துப் பார்க்குமாறு வேலையாளிடம் சொன்னேன். அவன் தயங்கித் தயங்கி எடுத்தான். "திருவருட்பா. சந்திரன் என்று பெயர் எழுதியிருக்கிறான்" என்று அவன் சொன்னவுடனே, "ஆ" என்று திகைத்து அலறினேன். "சந்திரா" என்று குனிந்து அழைத்தேன். குரல் இல்லை. மூர்ச்சையாய் விழுந்து கிடப்பதை உணர்ந்தேன். முகமெல்லாம் வீக்கமும் தடிப்புமாக இருந்தன. "அய்யோ! சந்திரா!" என்று அழைத்து வருந்தினேன். வேலையாள் என் முகத்தைப் பார்த்துத் திகைத்து நின்றான். காப்பி வாங்கி வருமாறு சொல்லியனுப்பினேன். வழியில் சென்ற ஒரு டாக்சியைக் கூப்பிட்டு நிறுத்தினேன். மக்கள் மேலும் சிலர் கூடுவதைக் கண்டு, விரைந்து வீட்டுக்குப் போவதே நல்லது என்று உணர்ந்தேன். காப்பி வந்ததும், சந்திரனைத் திருப்பி அவன் வாயில் சிறிது விடச் செய்தேன். மூர்ச்சை தெளிந்ததும் கண் விழித்துப் பார்த்தான். கண்கள் சிவந்திருந்தன. என்னைப் பார்த்து, "வேலு! வேலு!" என்றான். "என்ன சந்திரா?" என்றேன். "வேலு! வேலு! வேலு!" என்று தலைகுனிந்து விம்மினான். "வீட்டுக்குப் போகலாம், வா. அப்புறம் பேசலாம்" என்று பிடித்து டாக்சியில் உட்கார வைத்தேன்" என் பை எங்கே?" என்றான். வேலையாள் தரையிலிருந்த பையை எடுத்துக் கொடுத்தான்.
டாக்சியில் வந்தபோது, அவனுடைய அழகிய முகம் பார்க்க அருவருப்பாக மாறியிருந்ததைக் கண்டு வருந்தினேன். தொழுநோய் அவனுடைய, காதுகளையும் மூக்கையும் அழகிய உதடுகளையும் கெடுத்துப் பாழ்படுத்தி அச்சமான தோற்றத்தை உண்டாக்கியிருந்தது. அவனுடைய இனிய குரல் - பெண் வேடம் போட்டு நடித்துப் பாடிப் புகழ்பெற்ற அந்தக் குரல் - கம்மலாய்க் கரகரப்பாய்க் கெட்டும் போனதை எண்ணி வருந்தினேன்.
"அய்யோ! வேலு! உன்னைப் பார்க்கப் போகிறேனா என்று ஏங்கினேன். பார்த்துவிட்டேன் அப்பா, இனி நான் செத்துப் போனாலும் கவலைப் படமாட்டேன். சாகத்தயார்" சாவு வரட்டும், வரட்டும்" என்றான்.
"அப்படி எல்லாம் பேசாதே. கவலைப்படாதே. எங்கே இருந்து வருகிறாய்?" என்று கேட்டேன்.
"திருமணியில் இருந்தேன், அங்கிருந்துதான் வருகிறேன்."
"ஆஸ்பத்திரியிலா?"
"ஆமாம். மருந்து மருந்து ஊசி ஊசி என்று எல்லாம் பார்த்து விட்டேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாக இருக்கிறது. மனம் தாங்கவில்லை. உடம்பும் தேறவில்லை. மனத்தையாவது தேற்றிக்கொள்ளலாம் என்று வந்து விட்டேன் அப்பா" என்றான்.
டாக்சியிலிருந்து இறங்கியதும், நான் சாவி எடுத்து வீட்டைத் திறந்ததைப் பார்த்து, "வீட்டில் யாரும் இல்லையா?" என்றான்.
"ஊருக்கு அனுப்பியிருக்கிறேன்" என்று சொல்லிக் கொண்டே உள்ளே அழைத்துச் சென்றேன்.
"நல்லதாச்சு. நான் செய்த புண்ணியம், வீட்டில் யாரும் இல்லை. இந்த நோய் அப்படிப்பட்டது அப்பா. எங்கே போனாலும் இருக்கிறவர்களுக்குத் துன்பம் கொடுக்கிற நோய் இது. இரண்டே நாள் இருந்துவிட்டுப் போய்விடுவேன்" என்றான்.
"இரண்டு நாள் அல்ல. இரண்டு மாதம் இரு. எனக்கு ஒரு துன்பமும் இல்லை" என்றேன்.
அவன் கட்டியிருந்த ஆடையில் இரத்தக் கறையைக் கண்டேன். என் மனம் அருவருப்பும் கொண்டது; வருத்தமும் கொண்டது. இருந்தாலும், நட்பாய்ப் பழகிய பழைய மனம் வந்து இரக்கம் கொண்டது. நாற்காலியைக் காட்டி "உட்காரு" என்றேன்.
தலையை அசைத்து மறுத்தான். "எனக்கு இங்கே இடம் தகாது; யாராவது வருவார்கள்; பார்ப்பார்கள். உனக்கு என்னால் ஒரு குறைவும் வரக்கூடாது வேலு, தோட்டத்துக்குப் போய் அங்கே ஒரு மூலையில் இருப்பேன். அங்கே வா. இடம் காட்டு" என்று முன்னே நடந்தான். அவனுடைய கால்களைப் பார்த்தேன். நான் பார்த்த வீக்கமும் வெடிப்பும் புண்ணும் என் நெஞ்சைப் புண்ணாக்கின. பார்த்த என் நெஞ்சு வெடிப்புகள் உடையதாய் இரத்தம் கசிவது போல் உணர்ந்தேன். கைவிரல்கள் என் கண்ணுக்கும் படாதவாறு மடக்கி வைத்திருந்தான். தோட்டத்தில் தாழ்வாரத்தில் இடம் காட்டினேன்.
"அய்யோ! இந்த இடம் சுத்தமாக இருக்கிறதே. இங்கே நான் இருக்க வேண்டுமா? வேறு ஏதாவது இடம் மாட்டுத் தொழுவம் போல் ஒன்றும் இல்லையா? ஒரு மூலையாக யார் கண்ணுக்கும் படாத இடமாக இருந்தால் போதும்" என்றான்.
"இங்கே யாரும் வரமாட்டார்கள். கட்டில் பிடித்துப் போட்டுவிட்டால் இங்கேயே இருக்கலாம்" என்றேன்.
"கட்டிலா? எனக்கா?" என்று என்னை நிமிர்ந்து பார்த்த போது என் கண்கள் அவனைப் பார்க்கக் கூசின. "ஒரு பழைய பாய் கொடு. அது போதும். நான் போன பிறகு அதைக் குப்பைத் தொட்டியில் எடுத்துப் போட்டுவிடவேண்டும்" என்றான்.
உள்ளே சென்று, ஒரு நல்ல பாயும் மெல்லிய மெத்தையும் ஒரு தலையணையும் கொண்டு வந்தேன்.
"வேலு சொன்னால் கேள். விருந்தாளிக்குக் கொண்டு வருவதுபோல் நல்ல பாயும் மெத்தையும் கொண்டு வருகிறாயே. வேண்டாம்’பா. ஏதாவது கந்தல் கொடுபோதும்" என்றான்.
"என் மனம் கேட்காது. பேசாமல் இரு. மறுக்காதே. என் கடமை இது" என்று வற்புறுத்திப் பாய்மேல் மெத்தை பரப்பி உட்காரச் சொன்னேன். அவன் மெத்தையை நீக்கி விட்டுப் பாய்மேல் உட்கார்ந்தான். "குடிக்கத் தண்ணீர் வேண்டும்" என்றான்.
தண்ணீர் எடுக்கச் சென்றபோது அவன் இரண்டு கைகளாலும் உடம்பெல்லாம் சொரிந்து கொண்டிருப்பதைப் பார்த்தேன். அப்போது அவனுடைய கைவிரல்களைப் பார்த்து விட்டேன். என்னைக் கண்டதும் அவன் சொரிவதை நிறுத்தி விட்டுக் கைகளை மடக்கிக் கொண்டான். தண்ணீரை நீட்டினேன். "வை கீழே. நான் எடுத்துக் குடிப்பேன். உனக்கு ஏதாவது வேலை இருந்தால் முன்னே போய்ப்பார். அப்புறம் பேசலாம்" என்றான்.
"எனக்கு இப்போது ஒரு வேலையும் இல்லை. உனக்கு வேண்டியதைச் சொல்."
"சாப்பாடு யார் சமைப்பது?"
"வேலைக்காரன் வருவான். ஓட்டலிலிருந்து எடுத்து வந்து கொடுப்பான்."
"சரி போதும்."
நான் உட்கார முயன்றேன்.
"நீ ஏன் இங்கே உட்காரணும். என் அழகைப் பார்க்கணுமா? வேண்டா, வேண்டா, போ" என்று தடுத்தான்.
"அப்படி எல்லாம் சொல்லாதே. உன் அழகையும் பார்த்தேன். உன் துன்பத்தையும் பார்க்கிறேன். என்ன செய்வது?" என்று உட்கார்ந்தேன்.
"வேலு!" என்று தரையைப் பார்த்துப் பெருமூச்சு விட்டான்.
"தண்ணீர் குடிக்கவில்லையே" என்றேன்.
"உன் எதிரில் இந்தக் கைகளை நீட்டித் தண்ணீர் எடுப்பதற்கு மனம் வரவில்லை, அப்பா. நான் செய்த வினை அப்பா, வினை!"
"புதிய இடத்தில் அச்சப்பட்டுத் தயங்குவதைப்போல் இங்கே இருக்காதே. நோய் வந்துவிட்டது. உன் அழகைப் பாழாக்கிவிட்டது. என்ன செய்வது? நான் பார்க்கிறேன் என்று இப்படித் தயங்கினால் இங்கே நீ வந்து பயன் என்ன? உன் உடம்புக்குத் தகுந்தபடி நடந்துகொள். கைகாலை நீட்டி வசதியாக இரு" என்றேன்.
"வசதியா? எனக்கு இன்னும் வசதி வேண்டுமா?" என்று இருமினான்.
அவன் இருமுவதைக் கேட்கத் துன்பமாக இருந்தது.
"மருந்து வாங்கி வருகிறேன். என்ன மருந்து, எதற்கு என்று சொன்னால்."
"மருந்தா? இனிமேல் ஒரே மருந்துதான் தேவை; சாவுக்கு மருந்து."
என் மனம் வாடியது. "நீ இங்கே இருக்கும் வரையில் சாவு இது அது என்று ஒரு பேச்சும் பேசக்கூடாது. இப்படிப் பேசினால் எனக்கு எவ்வளவு வருத்தமாக இருக்கிறது தெரியுமா?" என்றேன்.
"சந்திரன் இப்படி ஆவான். உடம்பெல்லாம் புண்ணாய் சீழும் இரத்தமுமாய் உன் வீட்டுக்கு வருவான் என்று எதிர்பார்த்தாயா?" என்று சொல்லிக்கொண்டே தண்ணீரை எடுத்துக் குடித்தான். பிறகு, "எனக்கு யார் இருக்கிறார்கள்? நான் வேறே யார் வீட்டுக்குப் போவேன்?" என்று கலங்கினான்.
அவனுடைய வீட்டாரைப் பற்றிப் பேசலாம் என்று எண்ணினேன். அந்தப் பேச்சால் அவனுடைய மனம் மேலும் என்ன துன்பப்படுமோ என்று தடுத்துக் கொண்டேன். அவனாகவே அவர்களைப் பற்றிப் பேசும் வரையில் காத்திருப்போம் என்று இருந்தேன்.
தரையைப் பார்த்தபடியே எதையோ சிந்தித்து ஒரு முறை தலை அசைத்தான். வந்தவன் சிறிது களைப்பாறட்டும். புதிய இடத்தில் மனமும் அமைதியுறட்டும் என்று அவனைத் தனியே விடும் நோக்கத்தோடு எழுந்தேன்.
"ஆமாம். ஏதாவது வேலை இருக்கும், போய்ப்பார். நானும் கொஞ்சம் படுத்துக்கொள்வேன். களைப்பாக இருக்கிறது" என்றான்.
"இரண்டு பழம் கொண்டு வருவேன். தின்றுவிட்டுப் படுத்துக்கொள்" என்று மலைவாழைப்பழமும் உலர்ந்த திராட்டையும் கொண்டு போனேன்.
மலைவாழைப்பழம் தின்று, மறுபடியும் தண்ணீர் கேட்டுக் குடித்து விட்டுப் படுத்தான்.
சிறிது நேரத்தில் வேளையாள் வந்தான். இரண்டு பேருக்குக் காப்பி வாங்கி வருமாறு சொன்னேன். காப்பி வந்ததும் நானே ஒரு குவளையில் கொண்டு போனேன். சந்திரன் குறட்டை விட்டுத் தூங்குவதைக் கண்டு எழுப்பாமல் திரும்பினேன்.
வேலையாளைப் பார்த்து, நீ போ. இதோடு எட்டு மணிக்குச் சாப்பாடு எடுத்து வந்தால் போதும். இரண்டு பேர்க்குச் சாப்பாடு கொண்டு வா. இனிமேல் நான் மறுபடியும் சொல்லும் வரையில், எது கொண்டு வந்தாலும் இரண்டு பேர்க்கு என்று நினைவு வைத்துக்கொள்" என்றேன். உடனே, அன்று மாலையில் பச்சைமலையாரின் வீட்டுக்கு வருவதாகச் சொல்லி விட்டு வந்தது நினைவுக்கு வந்தது. "அப்படியே பச்சை மலையாரின் வீட்டுக்குப் போய் அய்யா இன்று வரமாட்டாராம் என்று சொல்லி விடு" என்றேன்.
வேலையாள் சென்ற பிறகு தோட்டத்திற்குத் திரும்பி வந்து பார்த்தேன். உறங்கிக் கொண்டிருந்த சந்திரனுடைய முகம், நாற்பது ஐம்பது வயதுள்ள ஒருவனுடைய முகம்போல் இருந்தது. இளமையின் சாயலே இல்லாமல் அந்த முகத்தை நோய் மூடியிருந்தது. கால் விரல்களையும் கை விரல்களையும் நன்றாகப் பார்த்தேன். என் உள்ளத்தில் முன் இருந்த அருவருப்புச் சிறிதும் இல்லாமல் மறைந்து, இரக்கம் மட்டுமே நின்றது. பார்த்துப் பார்த்து வருந்தினேன்.
தொடக்கப் பள்ளியில் நான் படித்திருந்தபோது எனக்கு ஆசிரியராக இருந்தவர் ஒருவர் எப்படியோ தொழு நோய்க்கு ஆளானார். தொழு நோய் அவருடைய முகத்திலும் கை கால்களிலும் உருவெடுத்தபோது நான் உயர்நிலைப் பள்ளிக்கு வந்துவிட்டேன். அப்போது அவர் எதிரே வரப்பார்த்ததும் நான் பேசாமல் ஒதுங்கிவிடுவேன். அவருடைய கண்ணுக்குப் படாத படி சிறு சந்துகளின் வழியாகத் திரும்பிச் சென்று விடுவேன். வழக்கமாகத் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களிடம் அன்பும் பணிவும் உடையவனாய் நடந்த நான் அந்த ஓர் ஆசிரியரிடம் மட்டும் அவ்வாறு நடக்க முடியாமற் போயிற்று. அவரே ஒருநாள் வீட்டுக்கு வந்து, "வேலு" என்று கூப்பிட்டார். வந்து பார்த்தபோது அவர் திண்ணையில் உட்கார்ந்திருப்பதைக் கண்டு தொலைவில் இருந்தபடியே பேசிவிட்டுப் போய்விட்டேன். அவர் உட்கார்ந்திருந்த திண்ணைமேல் மூன்று வாளித் தண்ணீர் கொட்டிக் கழுவச் செய்தேன். அதன் பிறகும் அந்தத் திண்ணை மேல் உட்காராமலே இருந்தேன். அவ்வாறு அளவுக்குமேல் பயந்திருந்த நான் இப்போது சந்திரனோடு நெருங்கிப் பழகுவதோடு அவனை வீட்டிலேயே வைத்துப் போற்றும் படியாகவும் நேர்ந்ததை எண்ணினேன்.
திரும்பி வந்து என் அறையில் உட்கார்ந்தபடி என்னென்னவோ எண்ணிக் கொண்டிருந்தபோது அவன் இருமும் ஒலி கேட்டது. எட்டிப் பார்த்தேன். அவன் அசைவதைக் கண்டு, காப்பி எடுத்துச் சென்றேன். முதுகைச் சொரிந்து கொண்டிருந்த அவன் என்னை நிமிர்ந்து பார்த்து, "என்னால் உனக்குப் பெரிய துன்பம்" என்றான்.
காப்பி குடித்த பிறகு, "உன் தங்கையின் திருமணத்திற்கு நான் ஊருக்கு வந்தபோது, உன் காதுகளைப் பார்த்துச் சந்தேகப்பட்டுச் சொன்னேன்."
"ஆமாம். என் மூக்கிலும் மினுமினுப்பு மிகுதியாக இருந்ததாகச் சொன்னாய்; சொன்னாய்; மெய்தான். நான் கொஞ்சமும் சந்தேகப்படவில்லையே. மேலும் மேலும் ஆட்டங்கள் ஆடினேன். மேலும் மேலும் உடம்பைக் கெடுத்துக் கொண்டேன். வைத்தியர் பார்த்து, மேகம் என்று சொன்னாரே தவிர, இந்த மேகம் இப்படித் தொழுநோயாக முற்றும் என்று சொல்லவில்லை. யாரோ ஒரு பைத்தியக்காரன் என்னைக் கெடுத்தான். உடம்பில் இந்திரியம் தேங்கிப் புளிப்பதால்தான் இப்படி மேகம் ஏற்படுகிறது என்று பொய் சொல்லிக் கெடுத்தான். வெறி பிடித்த நாய்க்குச் சாராயம் ஊற்றியது போல ஆயிற்று. இந்திரியம் உடம்பில் தேங்காமல் வெளிப்பட வேண்டும் என்று கண்ட பெண்களை எல்லாம் தேடினேன். நல்லவள் கிடைப்பாளா? கெட்டு அழுகிப் போனவள்தான் நினைத்தவுடன் கிடைக்கிறாள். தப்பித்தவறி நல்லவள் ஏமாந்து கிடைத்தால், அவளையும் அழுகல் நோய் உடையவளாகச் செய்து ஒழித்தேன். நான் செய்தது கொஞ்சமான கொடுமையா? அப்போது தெரியலையே" என்று தலையை இரண்டு கைகளாலும் அடித்துக் கொண்டான்.
என்னால் கேட்டுக் கொண்டிருக்க முடியவில்லை. சந்திரனோ, உள்ளம் திறந்து தன் குற்றங்களைச் சொல்லி ஆறுதல் பெற முயன்றான்.
"அதன் பிறகு, என் நோய் எனக்கே தெரியத் தொடங்கியது. விரல்களில் மினிமினுப்பு ஏற்பட்ட பிறகும் தெரிந்துகொள்ளவில்லை. நகங்களைச் சுற்றி, கணுக்களைச் சுற்றித் தடிப்பு ஏற்பட்டபோது உடம்பெல்லாம் தடிப்பும் தழும்பும் ஏற்பட்டபோது உணர்ந்து கொண்டேன். அந்த ஏமாந்த பெண் - என் மனைவி - உடம்பெல்லாம் இப்படி இருக்கிறதே. மருத்துவரிடம் கவனிக்கக் கூடாதா, கவனிக்கக் கூடாதா, என்று நாலைந்து நாள் முறையிடத் தொடங்கினாள். "சே! கழுதை! வாயைமூடு" என்று அவளை அடக்கிவிட்டேன். மருத்துவரிடம் போனேன். சொல்லிவிட்டார்."
இப்படிச் சொல்லி நிறுத்தித் தனக்குத்தானே தலையை அசைத்துக் கொண்டான். நான் ஊம் கூட்டவும் இல்லை. அமைதியாக நின்றேன்.
"என் கதையை இன்னும் கேட்கணுமா?" என்றான். அதற்கும் பேசாமல் இருந்தேன். "ஏன் வேலு, நிற்கிறாய்? கேட்கணுமா என் கதையை? சரி சொல்கிறேன் கேள். அதற்குத் தானே நான் இங்கே வந்தேன்? ஆமாம், சொன்னால்தான், என் மனம் சுத்தமாகும், சுத்தமாவது ஏது? பளு குறையும் பாவ மூட்டையைக் கொஞ்சம் இறக்கி வைத்தாற்போல் இருக்கும். வேறு யாரிடம் சொல்வேன். யாரிடம் சொன்னால் எனக்கு ஆறுதல் ஏற்படும்? அதற்குத்தான் உன்னைத் தேடி வந்தேன்" என்று சொல்லிக்கொண்டே இருமினான். இருமலுக்குப் பிறகு மார்பைப் பிடித்து அழுத்திக் கொண்டான். பெருமூச்சு விட்டான். முகத்தில் வியர்வையைத் துடைத்தான். தலையைச் சொரிந்து கொண்டான். "அப்புறம் என்ன? இன்னொரு படுபாவி வந்து சேர்ந்தான்; பக்கத்து ஊரான். அவன் என்னைப் போல் நோயாளி. உனக்குமா இது வந்துவிட்டது" என்றான். "விதி" என்றேன். "இதற்கு ஒரு வழி சொல்கிறார்கள். செய்வாயா?" என்றான். நீ செய்து பலன் கண்டாயா? என்றேன். "என்னால் முடியாது. கையில் காசு இல்லை. உனக்குப் பணம் இருக்கிறது நீ செய்யலாம் என்றான். "கன்னிப் பெண்ணின் உறவு ஏற்பட்டால் இந்த வெப்பு அடங்கி விடும்" என்றான். நான் நம்பவில்லை. பட்டணத்தில் ஒரு படித்த பணக்காரர் இருக்கிறார் என்று அவருடைய கதையைச் சொன்னான். அவருக்கு இந்த நோய் வந்துவிட்டதாம். பெரிய பணக்காரராம், பெரிய பங்களாவாம். ஒரு கூட்டாளியைப் பிடித்தாராம். அந்தக் கூட்டாளி அழகாக இருப்பானாம். அவனைக் காட்டி அவனுக்காக என்று சொல்லி இளம் பெண்கள் பலபேரை காசு கொடுத்து மயக்கிக் கொண்டுவரச் செய்தாராம். என்ன என்னவோ சொன்னான். நான் நம்பிவிட்டேன். எண்ணிப் பார்க்காமல் நம்பி விட்டேன். அந்தப் பணக்காரப் பாவிக்கு நோய் போய் விட்டதா இல்லையா என்று ஆராய்ச்சி செய்யாமலே நம்பி விட்டேன். ஆசுபத்திரிக்குப் போன பிறகு அந்தப் பணக்காரனைப் பற்றிச் சிலரிடத்தில் என்னைப்போல் நோயாளிகளிடத்தில் சொன்னேன். அவர்கள் உண்மையைச் சொன்னார்கள். சுத்தப் பிதற்றல் என்று சொன்னார்கள். அந்தப் பணக்காரன் அதே நோயால் அழுகி அழுகி முகமெல்லாம் கெட்டு அழிந்து செத்தான் என்று சொன்னார்கள். நான் அப்படி ஆராய்ந்து பார்க்கவில்லை. பக்கத்து ஊரான் சொன்னதைக் கேட்டு நம்பிவிட்டேன், நிலத்தின்மேல் கடன் வாங்கத் தலைப்பட்டேன். காசை வாரி இறைத்தேன். சில ஏழைக் குடும்பங்களைக் கெடுத்தேன், கெடுத்தேன். அய்யய்யோ! வேலு! இந்தப் பாவத்துக்கு நான் என்ன செய்வேன்? என்ன செய்வேன் வேலு! நினைத்தால் மனம் பகீர் என்கிறதே" என்று கவரில் தலையை மோதிக்கொண்டு அழுதான். "அய்யய்யோ" என்று தலையைச் சுவரிலிருந்து எடுத்தபோது, தலையில் ஒரு புண்நைந்து இரத்தம் கசிந்தது.
"என்ன சந்திரா! நீ சும்மா இருக்கமாட்டாயா? இப்படியா தலையை மோதிக்கொள்ள வேண்டும்" என்று புண்மருந்து எடுத்துவரச் சென்றேன்.
திரும்பியபோது, அவன் ஒரு கந்தலால் தலையைத் துடைத்துக் கொண்டிருந்தான். என் கையில் மருந்து இருந்ததைப் பார்த்து, "மருந்து எடுத்துவந்தாயா?" அதைவிடப் பழுக்கக் காய்ச்சிய ஈட்டியை எடுத்து வந்து ஒவ்வொரு புண்ணிலும் குத்தினாலாவது என் பாவம் தீருமே" என்றான்.
"நீ ஒன்றும் சொல்லாமலாவது இரு; சொல்லிவிட்டு இப்படித் துன்பப்படாதே" என்றேன்.
"எப்படி இருப்பேன் வேலு! எப்படி இருப்பேன்? நான் பேசாமல் இருந்தாலும் என் மனம் சும்மா இல்லையே. அது உள்ளே இருந்து வாட்டி வதைக்குதே. உன்னிடம் சொன்ன பிறகுதான் அது அடங்குது. நான் எப்படிச் சொல்லாமல் இருப்பேன்? அதோ நினைவு வருகிறதே ஓர் ஏழைப் பெண், என்னால் சீரழிந்த பெண், என்னைப் போல் நோயாளி ஆய்விட்டாளே! அவளுக்கும் தொழுநோய் வந்துவிட்டதே. என்னால் எத்தனை குடும்பங்களில் இது பரவப் போகிறதோ! நான் மட்டுமா அழிந்தேன்? ஊரையும் கொஞ்சம் அழித்து விட்டுத்தானே வந்தேன்" இவ்வாறு சொல்லிச் சிறிது அமைதியானான். சரி, போகலாம் என்று அசைந்தேன். மறுபடியும் பேசத் தொடங்கினான்: "ஒன்று நல்லதாச்சு. என் பொண்டாட்டி போய்விட்டாள். நல்லதே செய்தாள். இருந்து நோயால் அழியாமல், தானே செத்து மறைந்தாள்" என்று அமைதியான குரலில் சொன்னான். அப்போது மட்டும் அமைதி இருந்த காரணம் என்ன, ஒருவேளை அந்தத் தற்கொலையைப் பற்றிய பயம் காரணமோ என்று எண்ணினேன். "அடடா! என்ன பாடு படுத்தினேன் அவளை! நல்ல கேள்வி கேட்டாள் என்னை! நீ படித்தவனா என்று சரியான கேள்வி கேட்டாள். எனக்குத் தகும் தகும். நான் படித்தவனா? படிப்பு எங்கோ போச்சு. எப்போதோ போச்சு! படித்தவனா நான்? நான் படித்தவனே அல்ல. நான் ஒரு முட்டாள். இப்போது உணர்கிறேன். அவள் சொன்னபோது உணரவில்லை. இப்படிக் கேட்டாளே என்று அடித்தேன். தடி எடுத்து அடித்தேன். ஆத்திரம் தீர அடித்தேன். அவளும் தன் ஆத்திரத்தை அந்தக் கிணற்றின் அடியில் போய்த் தீர்த்துக்கொண்டாள். வேலு! உனக்குத் தெரியுமா இது?" என்றான்.
நான் பேசாமல் நின்றேன். "தெரியுமா வேலு!" என்று என் முகத்தை பார்த்தான்.
"தெரியும்" என்றேன்.
"உனக்கு மட்டுமா? அம்மாவுக்கும் தெரியுமா?"
நான் பேசவில்லை.
"சொல்லு வேலு! இப்போது சொன்னால் என்ன, சொல்லு வேலு! அம்மா அப்பா எல்லார்க்கும் தெரியுமா?" என்று விடாமல் கேட்டான்.
"தெரியும்" என்றேன்.
"தெரியுமா!" என்று முதலில் மெல்லத் தலையை ஆட்டினான். பிறகு எங்கிருந்தோ உணர்ச்சி மேலிட்டு வந்து அவனை ஆட்டி வைத்தது. "அய்யோ! அம்மாவுக்கும் தெரிந்து போச்சா! நான் பொண்டாட்டியைக் கொன்றுவிட்டேன் என்று அம்மாவுக்கும் தெரிந்து போச்சா! என்னைப் பற்றி என்ன எண்ணினார்களோ, என்ன எண்ணினார்களோ? அய்யோ! அய்யோ!" என்று உடம்பெல்லாம் நடுங்கிக் கதறினான்.
சந்திரன் இப்படி உணர்ச்சி வசப்பட்டுக் கலங்கியதையும் கதறியதையும் என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. "பழைய கதையை எல்லாம் நினைத்து ஏன் மனத்தைப் புண்ணாக்கிக் கொள்கிறாய்? வேண்டா. சும்மா இரு" என்று அப்பால் நகர்ந்தேன்.
"பழைய கதையா? நான் நினைக்கிறேனா? அது போக’லையே! மனத்தை விட்டுப் போக’லையே! நான் என்ன செய்வது?" என்று இருமத் தொடங்கினான்.
இரவு எட்டு மணிக்கு வேலைக்காரன் உணவு கொண்டு வந்ததும்; ஒரு பகுதி உணவைத் தனியே எடுத்து வைத்து விட்டு, மற்றொரு பகுதியை அந்த உணவுத் தூக்கிலேயே வைத்திருக்கச் சொன்னேன். வேலைக்காரனை விட்டுச் சந்திரனுக்கு உணவு இடச் சொல்லலாம் என்றால் அவனுடைய நொந்த மனம் என்ன நினைத்து வருந்துமோ என்று எண்ணினேன். நான் முன்னே சாப்பிட்டுவிட்டுப் பிறகு அவனுக்குப் போடலாம் என்றால், அதற்கும் மனம் வரவில்லை. வேலைக்காரனை அனுப்பிவிட்டேன். நானே உணவை எடுத்துக்கொண்டு தோட்டத்துக்குச் சென்றேன். சந்திரன் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தான், "ஏன் அழுகிறாய்?" என்று கேட்டேன்.
"வேலு! அம்மாவை நினைத்துக் கொண்டேன்'பா. எவ்வளவு அன்பான மனம் அப்பா! மறுபடியும் எப்போடா பார்க்கப் போகிறேன்? நீலகிரியிலிருந்து நான் வந்த பிறகாவது அம்மா செத்திருக்கக் கூடாதா? அம்மா இருந்திருந்தால் இவ்வளவு கெட்டுப் போயிருக்க மாட்டேன் அப்பா! ஒவ்வொன்றும் நினைக்க நினைக்க மனம் ஆறவில்லை அப்பா வேலு!" என்று மறுபடியும் கண்ணீர் விட்டு அழுதான். நான் ஆறுதல் சொன்னேன். "உன்னால் ஆறுதல் பெறலாம் என்றுதான் வந்தேன்’பா. ஆனால் இங்கே வந்த பிறகுதான் என் மனத்தில் மறைந்து போயிருந்த பழைய நினைவுகள் எல்லாம் புறப்பட்டு வருகின்றன. நான் என்ன செய்வேன் வேலு? என்னால் தாங்க முடியலையே! உடம்பின் எரிச்சல் தினவு பாதை எல்லாம் அடங்கிப் போயிருக்கிறாற் போல் தெரிகிறது. என் மனத்தில்தான் இப்போது எல்லாத் துன்பமும் சேர்ந்துவிட்டது. தாங்க முடியவில்லையே" என்று பொருமினான்.
சாப்பிடச் சொன்னேன். ஒரு சொல்லும் சொல்லாமல் சாப்பிட்டு முடித்தான். நான் இலை எடுத்துப்போட முயன்றபோது, "வேலு! உனக்கு இந்த வேலையும் வைக்கணுமா! இந்த ஒன்று மட்டும் நான் செய்கிறேன்’பா" என்று தானே இலையைச் சுருட்டி ஒரு மூலையில் எறிந்தான். கைகழுவ நீர் விட்டேன். கையைத் துடைத்துக் கொண்டு உட்கார்ந்ததும், "அப்பா, வேலு! அம்மாவுக்குப் பிறகு என் மனைவி அன்பாகத்தான் சோறு போட்டாள். நான் சாப்பிட்டு முடிகிற வரைக்கும் என் எதிரில் நின்றது நின்றபடி இருப்பாள். ஒரு நாளாவது உட்காரு என்று நான் சொன்னதே இல்லை. அன்பாகத்தான் சோறு போட்டாள். ஆனால் நான் அன்பு காட்டவில்லை. அடக்குமுறைதான். பயந்து நடுங்கினாள். நான் கொஞ்சம் அன்பு காட்டியிருந்தேனோ, அம்மாவுக்கு மேல் இருந்திருப்பாள், கொடுமை செய்துவிட்டேன். கொஞ்சம் அன்பு காட்டியிருந்தால், இப்போது எவ்வளவோ உதவியாக இருந்திருப்பாள், எனக்காக உயிரையும் கொடுத்திருப்பாள். ஆமாம் எனக்காகத்தான் உயிரையும் கொடுத்தாள்" என்று மெல்லச் சொல்லி அடங்கினான்.
இன்னும் இருந்தால் ஏதாவது பேசிக்கொண்டு வருந்துவான் என்று, "சாப்பிடப் போகிறேன்" என்று சொல்லி நகர்ந்தேன். அவன் நான் சொன்னதைக் கவனிக்கவில்லை. ஏதோ சிந்தையில் இருந்துவிட்டான்.
நான் உண்டு முடித்தபிறகு, தண்ணீர் வேண்டுமா என்று கேட்டுவரச் சந்திரனிடம் சென்றேன். "தண்ணீர் வேண்டுமா?" என்றேன். அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான். சிறிதுநேரம் கழித்து, அவனுடைய குரல் கேட்டது. சென்று பார்த்தேன். உறங்கிக் கொண்டே இருந்தான். தாழ்வாரத்தில் மெல்ல நடந்தபடி இருந்தேன். என்னென்னவோ சொல்லி உறக்கத்தில் வாய் பிதற்றிக் கொண்டிருந்தான். திருப்பி வந்துவிட்டேன்.
நான் படுக்கச் செல்லுமுன், அம்மா அப்பா என்று சந்திரன் பெருமூச்சு விடும் குரல் கேட்டது. சென்று, "என்ன வேண்டும்?" என்று கேட்டேன். "தண்ணீர் கொடு! உடம்பு கனகன என்று இருக்கிறது. இங்கும் அங்கும் அலைந்தது உடம்புக்கு ஆகவில்லை. காய்ச்சல் வந்துவிட்டது" என்றான். "கொஞ்சம் இரு. வெந்நீர் வைத்துக் கொண்டுவருவேன்" என்று அங்கிருந்து வந்து மின்சார அடுப்பில் தண்ணீரைக் காய்ச்சிக் கொண்டுபோனேன். குடித்து "அப்பா!" என்று சோர்ந்து படுத்தான். அவனுடைய மனம் அப்பாவை நினைக்கிறதோ இல்லையோ, வாய் அடிக்கடி சொல்கிறது; அவர் மகனைப் பற்றி மனத்தில் அடிக்கடி நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டு கிராமத்தில் இருக்கிறார். தெரிந்தால் வந்துவிடுவார் என்று எண்ணிக் கொண்டே படுக்கச் சென்றேன். சந்திரனுடைய காய்ச்சலை எண்ணி வருந்தினேன். உடம்பின் அலைச்சல் காரணம் என்று சொன்னான். உள்ளத்து உணர்ச்சி வேகமே காரணம் என்று எனக்குத் தோன்றியது. நாளை முதல் இப்படிப்பட்ட வேகமான பேச்சுக்கு இடம் தரக்கூடாது; நான் அங்கே நின்று கேட்டுக் கொண்டிருக்கக் கூடாது என்று எண்ணியபடியே உறங்கிவிட்டேன். நள்ளிரவில் ஒருமுறை விழித்து எழுந்துபோய்ப் பார்த்தேன். உடம்பில் இன்னும் காய்ச்சல் இருக்கிறதா என்று தொட்டுப் பார்க்க அணுகினேன். தொடாமலே பின் வாங்கி வந்துவிட்டேன். காலையில் அவனுடைய குரல் கேட்டு விழித்தேன். "விளக்கறியா இருட்டறையில் கவிழ்ந்து கிடந்தழுது" என்ற அருட்பாவை அவன் உருக்கமாகப் பாடிக் கொண்டிருந்தான். பாட்டைக் கேட்டு என் மனமும் உருகியது. அவன் விருப்பம்போல் பாடிக்கெண்டு ஆறுதல் பெறட்டும் என்று ஒருவகை ஒலியும் செய்யாமல் அங்கே போகவும் போகாமல் இருந்தேன். அரைமணி நேரம் கழித்து பாடுவது நின்றது. அப்போது அணுகி காய்ச்சல் இல்லையே?" என்றேன் "நின்றுவிட்டது" என்றான். என் மனம் மகிழ்ந்தது.
"ஊரில் எல்லாரும் எப்படி இருக்கிறார்கள்? நீ ஒன்றுமே சொல்லலையே?" என்றான்.
"நீ ஒன்றும் கேட்கவில்லையே. எதைப் பேசினாலும் உடனே விம்மி விம்மி அழுகிறாய். அதனால் உடம்பும் கெட்டுப்போகிறது" என்றேன்.
"அழுவது ஒன்றுதான் இப்போது என் மனத்துக்கு மருந்தாக இருக்கிறது. உண்மையாய்ச் சொல்கிறேன் வேலு அழுத பிறகுதான் மனம் அமைதியாக இருக்கிறது. அழுவது நல்லது, மிக மிக நல்லது வேலு" என்றான்.
"ஊரில் எல்லாரும் நல்லபடி இருக்கிறார்கள். அப்பா இருக்கிறார். தங்கை கற்பகம் இருக்கிறாள்" என்றேன்.
"ஏன்? இன்னும் மைத்துனன் வந்து அழைத்துப் போகாமலே இருக்கிறானா?"
"இல்லை, இப்போது அன்பாக இருக்கிறார்கள். மாலன் முன் போல் இல்லை. மனம் திருந்திவிட்டான்."
"அப்பா! நல்ல செய்தி சொன்னாய் அப்பா. என் வயிற்றிலே பால் வார்த்தாற் போல் இருக்கிறது. நல்லபடி இருக்கட்டும்; போ. கற்பகத்தின் வாழ்க்கையும் கெட்டுப் போகுமே என்று பயந்தேன். ஆசுபத்திரியில் இருந்தபோது அவளைப் பற்றி நினைத்துக் கவலைப்பட்டேன். நல்லபடி வாழணும்" என்றான்.
காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு மிக அமைதியாகப் பேசினான். பழைய சந்திரனுடைய அறிவின் தெளிவை அந்தப் பேச்சில் கண்டேன்.
"வேலு! எனக்கு ஒன்று தோன்றுகிறது. எனக்கு இளமையிலேயே காம உணர்ச்சி மிகுதியாக இருந்தது. என்னைப்போல் எத்தனையோ பிள்ளைகள் இருப்பார்கள் அல்லவா?" என்றான்.
"ஆமாம். உடல்நூல் அறிஞர் ஒருவர் சொன்னது நினைவுக்கு வருகிறது. அறிவின் ஆற்றல் மிகுதியாக உள்ளவர்களுக்கு இந்த உணர்ச்சியும் மிகுதியாம். உணர்ச்சியைக் கட்டுப்படுத்திக் கொண்டு போனால் அவர்கள் சிறந்த அறிஞராக விளங்குவார்களாம்" என்றேன்.
"அது சரி. அப்படிப்பட்ட பிள்ளைகளைப் பெண்ணின் அன்பு இல்லாமல் பட்டினி போட்டால் கெட்டுப் போவார்களே, நான் அப்படித்தான் கெட்டொழிந்தேன். பழங்காலத்தில் போல பதினெட்டு இருபது வயதில் திருமணம் முடித்துவிட்டால்-"
"படிப்புக்கு இடையூறாகப் போய்விடும். வளர வேண்டிய திறமை வளராமலே போய்விடுமே. அது பெரிய இழப்பு அல்லவா?"
"அதுவும் உண்மைதான்" என்று தெளிவாகச் சொல்ல முடியாமல் அவனுடைய தொண்டை கரகரத்தது. கனைத்தான். உடனே இருமல் வந்தது. மார்பைத் தடவிக் கொண்டான். பிறகு தொண்டையை ஒருவாறு சரிப்படுத்திக் கொண்டு, "பெண்களின் அன்பைப் பெற முடியாமல் தடுக்கும்போது, அவர்களின் அழகும் கண்ணில் படாதவாறு தடுக்கவேண்டும். அதை செய்யாமல்-" என்று சொல்லி நிறுத்தினான். பிறகு "சிலர் முகமூடி போட்டு மறைப்பதும் இதற்குத்தானோ, என்னவோ? துறவியாகும் பெண்களையும் விதவைகளையும் மொட்டை யடிக்கும் வழக்கமும் உலகத்தில் இருக்கிறது. ஆமாம், பெண்ணின் அழகு பொல்லாதது. கெடுத்துவிடும் என்று பயந்து தான் செய்திருப்பார்கள்."
"இருந்தாலும் நாகரிகம் அல்ல."
"அது சரி. ஒப்புக் கொள்கிறேன். கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்றால் முடியுமா? என் பழைய வாழ்க்கை நினைவுக்கு வருகிறது. கல்லூரியில் படிக்கும்போது அந்தப் பெண்ணின் அன்பு கிடைத்தவரையில் கெடாமல் இருந்தேன். நீலகிரியில் அந்தத் தேயிலைத் தோட்டத்திலும் ஒருத்தியின் அன்பு கிடைத்தது. ஒழுங்காகத்தான் இருந்தேன். அவள் முரட்டுப் பெண். முரட்டுப் பெண்ணாக இருந்தாலும், அன்பில் முரட்டுத் தன்மை ஏது? எங்கள் ஊர்தான் என்னைக் கெடுத்துவிட்டது."
இவ்வாறு அவன் சொன்னபோது, ஊர் அல்ல. ஊரில் இருந்த செல்வம், அதிகாரச் செருக்கு, காசுதான் காரணம் என்று அப்போது எனக்குள் எண்ணிக் கொண்டேன்.
"அவர்கள் நானாகத் தேடிப்போன பெண்கள். என் மனைவி அப்படி நான் தேடியவள் அல்ல. அவள் வரும் போதே பயந்து வந்தாள். நான் அவளிடம் அன்பைப் பெறவில்லை. பயத்தைத்தான் பெற்றேன்."
அவன் முதலில் அன்பைத் தராமல் அதிகாரத்தைக் காட்டியிருப்பான். அதுதான் காரணம் என்று எண்ணிக் கொண்டேன்.
"ஊரில் கண்ட பெண்களோடு பழகினேன். அவர்கள் பயந்து பயந்து வந்தார்கள். அது ஒரு வாழ்வா! சே! ஊர்ச்சோற்றைத் திருடி உண்பது ஒரு வாழ்வா? நம் உரிமையான உணவு ஆகுமா? இப்படி என்னைப்போல் எத்தனை பிள்ளைகள் கெடுகிறார்களோ என்று எண்ணும்போது வருத்தமாக இருக்கிறது. அதனால்தான் பெண்ணன்பு பெறும் வரையில் பெண்ணழகு கண்ணுக்குத் தோன்றாமலே இருந்தால் நல்லது என்று கருதுகிறேன்" என்றான்.
மறுபடியும் அவனே பேசத் தொடங்கினான் "அல்லது, ஐரோப்பியர்களைப் போல் அமெரிக்கர்களைப்போல் நம்மவர்களும் வாழ்க்கையை மாற்றி அமைக்க வேண்டும். ஆண்களையும் பெண்களையும் இளமையில் பழகவொட்டாமல் பூச்சி பூச்சி என்று பயபடுத்திப் பிரிப்பதை விட்டுவிட வேண்டும். அழகுப் பசி இயற்கையாக இருக்கிறது. அப்படி இளமையில் கலந்து பழக நிறைய வாய்ப்புகள் இருப்பதால் ஐரோப்பிய இளைஞர்கள் அழகைக் கண்டு கண்டு மகிழ்ச்சி அடைகிறார்கள். இங்கே இயற்கையான பசியை அடக்க வேண்டியிருக்கிறது. ஆனால் சினிமா நாடகங்களில் அழகும் அலங்காரமும் இருப்பதால், அந்தப் பசி மறைமுகமாகத் தூண்டிவிடப்படுகிறது. சமுதாயத்திலோ பார்த்துப் பேசியும் பழகுவதற்கும் வாய்ப்பு இல்லை. இயற்கையான உணர்ச்சிகளை அடக்குவதில் சிலர் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள். பலர் கெட்டுப்போகிறார்கள்" என்றான்.
"ஆண்கள் அழகாக இல்லையா? அழகான ஆண்களோடு பழகி அந்த அழகுப்பசியைத் தீர்த்துக் கொள்ளக் கூடாதா?" என்றேன். வேண்டும் என்றே கேட்டேன்.
"நீ பெரிய பைத்தியக்காரன்! இயற்கை அப்படிப் படைத்திருக்கிறது. ஆணின் கண்ணுக்குப் பெண்கள் தான் அழகாக இருப்பார்கள். தெருவில் ஏழெட்டுப்பேர் ஆண்களும் பெண்களும் போவதைப் பார்க்கிறாய். யாரை நன்றாகப் பார்ப்பாய்? பெண்களே போகாவிட்டால் ஆண்களைப் பார்த்துக் கொண்டிருக்கலாம். அப்போது ஆண்களின் அழகு உன் கண்ணுக்குப் புலப்படாது. அப்படியே தான் பெண்களுக்கும், இயற்கை ஏற்படுத்திய கவர்ச்சி அது. நாய்க்கு இறைச்சியைப் பார்த்தால்தான் வாயில் நீர் ஊறும். பசுவுக்குப் புல்லைப் பார்த்தால்தான் வாய் ஊறும். அதுபோல்தான்" என்றான்.
இவ்வளவு அமைதியாக அறிவாகப் பேசுகிறானே என்று வியந்தேன். நேற்றோடு அவனுடைய கதறலும் அழுகையும் உணர்ச்சியும் முடிந்தன என்று மகிழ்ந்தேன்.
ஆனால் மலையில் அலுவலகத்திலிருந்து திரும்பி வந்தபோது, முன் நாள் போலவே உடம்பைச் சொரிந்து கொண்டும் தலையை அசைத்துக் கொண்டும் அமைதி இல்லாமல் இருந்தான். காப்பி குடித்துக் கால்மணி நேரம் ஆனதும், பெருமூச்சும் அய்யோ என்ற குரலும் கேட்டன. "வேலு! நான் ஏன் இன்னும் உயிரோடு இருக்கணும்? என்னால் இனிமேல் யாருக்கு நன்மை ஏற்படப்போகிறது? பெற்ற தாய் இல்லை. தந்தை முகத்தில் நான் விழிக்கப்போவதில்லை. கட்டின மனைவியும் இல்லை. ஏன்'பா இந்த வாழ்வு?" என்று கண்ணீர் விட்டு அழத் தொடங்கினான். சிறிது நேரம் அமைதியானேன். ஏதோ பழைய நிகழ்ச்சியை நினைத்துக்கொண்டு குமுறுகிறான் என்பது முகக்குறிப்பால் தெரிந்தது. "நம் தோட்டத்தில் சொக்கான் என்று ஒருத்தன் இருந்தானே, நினைவு இருக்கிறதா? ஏழைக் குடும்பம். அவனுடைய பெண் அழகாக இருந்தாள். பக்கத்து ஊரில் கொடுத்திருந்தான். நான் அந்தக் குடும்பத்தையும் கெடுத்தேன். அப்போது பாவம் என்ற எண்ணமே இல்லாமல் பணம் கொடுத்து ஏமாற்றிவிட்டேன். அப்பா கேள்விப் பட்டிருந்தால், என்னைப் பற்றி என்ன நினைப்பார்? இப்படிப்பட்ட கெட்ட வழி அப்பாவுக்குத் தெரியவே தெரியாது. அந்த உத்தமர் வயிற்றில் பிறந்த நான், எவ்வளவு அநியாயம் செய்தேன். நான் ஏன் அந்தக் குடும்பத்தில் பிறந்தேனோ, அய்யய்யோ!" என்று ஒரு பேதைப் பெண் போல் புலம்பினான். உடனே, "அப்போதே அதற்குத் தண்டனையும் அனுபவித்தேன். ஒருத்தி என்னை ஏமாற்றினாள். இரண்டு பவுனில் சங்கிலி ஒன்று செய்து போட்டால் சரி என்று ஒருத்தி ஒப்புக் கொண்டாள். மனைவி கழுத்தில் நாலு பவுன் சங்கிலி ஒன்று இருந்தது. அதைக் கழற்றிக் கொண்டு போனேன். அவளுடைய குடிசையில் அவள் சொன்ன நேரத்தில் நுழைந்து சங்கிலியைக் கொடுத்து விட்டுப் பேசிக் கொண்டிருந்தேன். வெளியேயிருந்து அவளுடைய கணவனும் இன்னொருத்தனும் திடீரென்று நுழைந்தார்கள். அந்த மோசக்காரி ஓ என்று கூச்சலிட்டாள். வந்தவர்கள் என் முதுகைப் பழுக்கப் பார்த்தார்கள். தாம்புக் கயிறு கொண்டு அடித்தார்கள். வீட்டுக்குத் திரும்பியபோது முதுகில் கறை இருந்ததை எப்படியோ மனைவி பார்த்து விட்டாள். என்னிடம் வாய் திறந்து கேட்கத் தைரியம் இல்லை. அழுதுகொண்டு போய் என் அத்தையிடம் சொல்லியிருக்கிறாள். அத்தை அப்போது இருந்தார். நான் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தபோது அத்தை என் முதுகுப்பக்கம் வந்து உட்கார்ந்து பார்த்து வருத்தப்பட்டிருக்கிறார். நான் விழித்தபோது வாசற்படிக்கு அப்பால் மனைவி கண்களைத் துடைத்தபடி நின்றிருந்தாள். அத்தையின் கை என் முதுகைத் தடவியது. நான் உடனே எழுந்து உட்கார்ந்து, "என்ன அத்தை! இரண்டு பேரும் சேர்ந்து நாடகம் நடத்த வந்து விட்டீர்களா? என்ன சொன்னாள் இந்த நாய்?" என்று கேட்டு எழுந்தேன். அத்தை பரிவுமிக்க குரலில், "ஒன்றும் இல்லையப்பா. ஏன்டா கண்ணு இப்படி, ராசா போல இருப்பதை விட்டுவிட்டு" என்றார். "போ அத்தை போ. போய் உன் வேலையைப் பார்" என்று அங்கிருந்து எழுந்து அவர்களின் கண்ணுக்குப் படாமல் சட்டையை மாற்றிக் கொண்டு வெளியே வந்தேன். இவ்வளவு தண்டனை பட்ட பிறகும் என்னுடைய ஆணவம் அடங்கியதா? அடங்கவில்லை. வேலு! சொன்னால் நம்புவாயா வேலு! நம்முடைய நண்பன் சந்திரனா இப்படிச் செய்தான் என்று நீ எண்ணுவாய். அவ்வளவு கொடுமை செய்தேன் வேலு! என்னை அடித்துத் துரத்திய அந்த குடிசைக்கு ஒரு நாள் தீ வைத்துவிட்டேன். சந்திரனா செய்தான் என்று எண்ணுகிறாயா நான் அல்ல வேலு. என்னுடைய ஆணவம், என்னுடைய ஆணவம்" என்று பலமுறை கதறினான். மறுபடியும் நேற்றுப் போல் உணர்ச்சி வேகம் அளவுகடந்து போய் உடம்பைக் கெடுக்கக்கூடாதே என்று பயந்து, சொல்லாமல் நகர்ந்து வந்து விட்டேன். சிறிது நேரம் கழித்து, அம்மா அப்பா என்று அவன் மூச்சுவிடும் குரல் கேட்டுச் சென்று, "என்ன, ஏதாவது வேண்டுமா?" என்றேன். "ஒன்றும் தேவை இல்லை. நேற்றுப் போல் காய்ச்சல் வந்துவிட்டது. தலை கனமாக இருக்கிறது" என்று தலையைப் பிடித்துக்கொண்டு வருந்தினான். தலை வலித் தைலம் கொண்டுபோய்க் கொடுத்தேன். பூசிக் கொண்டான். அதன் பிறகும் அப்பா அம்மா என்று துன்பக் குரல் தணியவில்லை. "குடிப்பதற்கு ஏதாவது சூடாகக் கொடு" என்றான். சூடாக ஆர்லிக்ஸ் போட்டுக் கொண்டுபோய்க் கொடுத்தேன். குடித்துவிட்டு, "காய்ச்சல் வரவர ஏறுகிறது. என்ன செய்வேன்? நீ போ. நான் படுத்துப் பார்க்கிறேன்" என்றான். "இன்றைக்காவது மருந்து வாங்கி வந்திருக்கலாமே" என்றேன். வேண்டா என்று தடுத்தான்.
அன்று இரவு இரண்டுமுறை எழுந்து போய்ப் பார்த்தேன். முதன் முதலில் வாய் பிதற்றிக் கொண்டிருந்ததைப் பார்த்து விட்டுத் திரும்பினேன். இரண்டாவது முறை சென்றபோது அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். மெல்லத் தொட்டுப் பார்த்தேன். காய்ச்சல் கன கன என்று மிகுதியாக இருந்தது. தொட்ட பிறகு ஏதோ மனக்குறை ஏற்பட்டது. உடனே சோப் இட்டுக் கையை நன்றாகக் கழுவி விட்டுப் போய்ப் படுத்தேன்.
மறுநாள் காலையில் முன்போலவே அருட்பா பாடிக்கொண்டிருந்தான். "காய்ச்சல் இருக்கிறதா, மருந்து வாங்கி வரட்டுமா?" என்று கேட்டேன். "எனக்கா? எதற்கு மருந்து? காய்ச்சல் இப்போது இல்லையே" என்றான். காப்பி குடித்த பிறகு இன்னும் தெளிவாகப் பேசினாள். உடம்பின் காய்ச்சல் போலவே, உள்ளத்தின் உணர்ச்சி வேகமும் காலையில் அடங்கியிருந்தது. பகலெல்லாம் மெல்ல மெல்ல வளர்ந்து, மாலையில் மலர்ந்து விடுகிறதே என்று எண்ணினேன். அன்று காலையில் தான் அவன் என் குடும்ப வாழ்க்கையைப் பற்றி மிக்க அக்கறையோடு கேட்டான். அப்போது அவன் காட்டிய அன்பால் என் மனம் உருகியது.
"இல்வாழ்க்கை எப்படி நடக்கிறது? மனைவியும் நீயும் மனம் ஒத்துப் போகிறீர்களா? அன்பாக இருக்கிறீர்களா?" என்று கேட்டான்.
"ஒன்றும் குறைவு இல்லை. ஆனால் விட்டுக் கொடுத்துப் போகத் தெரியாதவள். உண்மையானவள்; அன்பானவள்" என்றேன்.
"உண்மையும் அன்பும் இருந்தால் போதுமே. நீதான் விட்டுக் கொடுத்துப்போ. அதனால் ஒரு கெடுதியும் இல்லை. என்னைப்போல் தலைக்கொழுப்போடு நடக்காதே."
"நான் விட்டுக்கொடுத்துக் கொண்டுதான் போகிறேன். ஆனால்?"
"என்ன குறை? சொல் வேலு! இங்கு இல்லாதபோது பேசினால் என்ன?"
"ஒன்றும் இல்லை. கொஞ்சம் செருக்கு உண்டு."
"என்ன செருக்கு? பணச் செருக்கா? படிப்புச் செருக்கா அழகுச் செருக்கா?"
"அந்தச் செருக்கு ஒன்றும் இல்லை. அவற்றிற்கு இடமும் இல்லை."
"வேறு என்ன? சிலருக்கு ஒழுக்கச் செருக்கு இருக்கலாம்."
"ஆமாம் அதுதான். மிகப் படித்த பெண்களையும் மதிக்க மாட்டாள். அவர்கள் ஒழுங்கானவர்களா என்று கேட்பாள்."
"அந்தச் செருக்கு இருந்து போகட்டுமே. அதனால் ஒரு கெடுதியும் இல்லை, நல்லதாச்சு. என் தங்கை கற்பகத்துக்கும் அப்படிப்பட்ட செருக்கு உண்டு. தான் ஒழுங்கானவள் என்றும், கெட்டிக்காரி என்றும் எண்ணிக் கொண்டு, தன் கணவனை ஏமாந்த பேர்வழி என்று சொல்கிறாள். அப்படிப்பட்ட செருக்கு இருந்தால் இருந்து போகட்டும். அந்தச் செருக்கு இல்லாத மனைவியாக வேண்டுமானால் முப்பது வயது உள்ள விதவையாகத் தேடிக் கல்யாணம் செய்து கொண்டிருக்க வேண்டும்."
நான் சிரித்தேன்.
"நான் சொல்வது தப்பா? உள்ளதைத்தான் சொல்கிறேன். என்னிடத்தில் உண்மையாகப் பணிவோடு நடந்தவர்கள் இரண்டு பேர். ஒருத்தி நீலகிரித் தேயிலைத் தோட்டக்காரி, காரணம் அவளுடைய பழைய குறையான வாழ்க்கை. மற்றொருத்தி - இறந்துபோன மனைவி; காரணம் அவளுடைய பயம். பயந்த மனைவியைவிட, செருக்கு உள்ள மனைவியே மேல்" என்றான். திடீரென எதையோ நினைத்தவன் போல், "உன் மனைவியை நான் பார்க்கவே இல்லையே" என்றான்.
"பார்த்திருக்கிறாயே. வேலூரில் என் அத்தை மகள்."
"ஓ! அந்தப் பெண்ணா? சின்ன வயதில் உன் தங்கையோடும் என் தங்கையோடும் சேர்ந்து விளையாடிக் கொண்டு..."
"ஆமாம் அவளே தான்."
"நீ உன் அத்தை மகளை மணந்து கொள்ளமாட்டேன் என்று என்னிடம் சொல்லியிருக்கிறாயே, நினைவு இருக்கிறதா? அது சரி. இப்போது ஏன் அதைப் பற்றிப் பேசவேண்டும்? நான் ஒன்று சொல்கிறேன். உள்ளதைக் கொண்டு மகிழ வேண்டும். வியாபாரம், செல்வம் இவற்றில் மட்டும் அல்ல; மனைவியோடு வாழும் வாழ்க்கையிலும் இது வேண்டும். சில இளைஞர்கள் காலை மாலை இரண்டு வேளையும் பூசை, கோயில் வழிபாடு எல்லாம் ஓயாமல் செய்து, கடவுளிடம் நிறையப் பயன் எதிர்பார்த்து எதிர்பார்த்து, கடைசியில் பயன் கிடைக்காமல் ஏமாந்து திடீரென்று ஒருநாள் நாத்திகர் ஆகிவிடுகிறார்கள். தெரியுமா? அப்புறம் சாமியாவது பூதமாவது என்பார்கள். அதுபோல் மனைவியிடம் அளவுக்கு மேல் அன்பு பணிவு அடக்கம் ஒடுக்கம் அழகு ஆர்வம் எல்லாவற்றையும் எதிர்பார்த்தாலும் இப்படித்தான் கடைசியில் ஏமாந்து வருந்த வேண்டி ஏற்படும். குடும்ப வாழ்க்கைக்கு வேண்டிய ஊதியம் வந்தால் போதும் என்று வியாபாரம் செய்கிறவர்கள் அவ்வளவாகக் கெடுவதில்லை. அளவுக்கு மேல் ஒன்றுக்குப் பத்தாக எதிர்பார்த்து வியாபாரம் செய்கிறவர்கள் சிலர் கடைசியில் அடியோடு அழிந்து மண்ணோடு மண்ணாய் போகிறார்கள். சரி, சரி, பட்டுக் கெட்டு நான் கற்றுக் கொண்ட பாடங்களை உனக்கு ஏன் சொல்ல வேண்டும். நீதான் ஒழுங்காக வாழ்க்கை நடத்துகிறாயே. உன்னுடைய வாழ்க்கையைப் பார்த்து மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். நான் தான் கற்றுக் கொள்ளத் தவறிவிட்டேன்" என்றான்.
சிறிது பொறுத்து மறுபடியும் அதே போக்கில் பேசலானான். "நீ மண் அகலாக இருந்த காலத்தில் நான் பித்தளை அகலாக இருந்தேன். சிறிது காலம் பள பள என்று மின்னினேன். என் அழகையும் அறிவையும் அப்போது எல்லோரும் விரும்பினார்கள்; பாராட்டினார்கள். என்ன பயன்? வர வர, எண்ணெயும் கெட்டது, திரியும் கெட்டது. சிட்டமும் பிடித்தது. ஒளி மங்கியது. மங்கிவிட்டேன். நீதான் நேராகச் சுடர்விட்டு அமைதியாக எரியும் ஒளி விளக்கு" என்றான்.
அன்று மாலை மறுபடியும் உணர்ச்சி வேகத்தால் கதறுவான், அலறுவான், அதனால் காய்ச்சல் மிகும் என்று எண்ணி அவனெதிரே போய் உட்கார்ந்து பேசாமலே தப்பித்துக் கொண்டிருந்தேன். மாலை சிற்றுண்டியும், காப்பியும் கொடுத்துவிட்டு, அங்கே நிற்காமல் உடனே வந்து விட்டேன். சந்திரன் தானாகவே அழைத்தான். "இன்றைக்குக் காய்ச்சல் முன்னமே வந்துவிட்டது. கண்ணெல்லாம் எரிகிறது. உடம்பெல்லாம் எரிகிறது. கணுவெல்லாம் வலி பொறுக்க முடியவில்லை. மருந்து ஏதாவது வாங்கி வந்தால் தான், தாங்க முடியும்போல் இருக்கிறது" என்றான்.
"உடனே எனக்குத் தெரிந்த மருத்துவரிடம் போய், தொழுநோய் என்பது தவிர மற்றச் செய்தி எல்லாம் சொல்லி மருந்து வாங்கிவந்தேன். மருந்தை உட்கொண்டதும், ஏதோ பேசத் தொடங்குவான் போல் தெரிந்தது. அதற்கு இடம் கொடுக்காமல் வந்து விடவேண்டும் என்று எண்ணி உடனே நகர்ந்து வந்துவிட்டேன். ஊருக்குக் கடிதம் எழுதலாம் என்று எண்ணி மேசையருகே உட்கார்ந்து ஏழெட்டு வரிகள் எழுதினேன். சந்திரன் கூப்பிட்ட குரல் கேட்டது. போய் நின்றேன்.
"இன்றைக்கு என் பக்கத்தில் நிற்க மாட்டேன் என்று போய் விடுகிறாயே. என்மேல் வருத்தமா? நான் ஏதாவது தப்பாகச் சொல்லிவிட்டேனா?" என்றான்.
"அப்படி ஒன்றும் இல்லையே, கடிதம் எழுதிக்கொண்டிருந்தேன்" என்றேன்.
"யாருக்கு"
"வீட்டுக்கு"
"உங்கள் வீட்டுக்கா? எங்கள் வீட்டுக்கா?"
"எங்கள் வீட்டுக்குத்தான், உங்கள் வீட்டுக்கு உன்னைக் கேட்காமல் எழுதுவேனா?"
"ஆமாம், வேலு! நான் முன்னமே கேட்டுக் கொண்டிருக்கிறேன். எங்கள் வீட்டுக்கு என்னைப் பற்றி எதுவும் எழுதி விடாதே. ஒருவேளை அவர்கள் யாராவது வந்தாலும் சொல்லி விடாதே. யாராவது வருவதாகக் கடிதம் வந்தால் எனக்கு முன்னதாகவே சொல்லிவிடு. நான் இங்கிருந்து எங்காவது போய்விடுவேன். என்னிடம் ஒன்றும் மறைக்காதே."
"இப்படி நான் உன்னை மறைத்து வைத்திருப்பது தெரிந்தால் என்மேல் அவர்கள் வருத்தப்படுவார்களே!"
"வருத்தப்பட்டாலும் சரி. எனக்காகத் தாங்கிக்கொள். என் மனது கேட்காது. நீ மீறிச் செய்யமாட்டாய் என்று நம்பித்தான் இங்கே வந்தேன். இல்லையானால் வந்திருக்க மாட்டேன். என்னுடைய கெட்ட அழுகிய வாழ்வைப் பற்றி அவர்கள் யாரும் தெரிந்து கொள்ளாமலே இருக்கட்டும். இந்தச் சீர்கெட்ட முகத்தில் அவர்கள் யாரும் விழிக்கக் கூடாது. தங்கை கற்பகத்தை மட்டுமாவது பார்க்க வேண்டும் என்று நேற்று ஆசை வந்தது. அதுவும் வேண்டா என்று மனத்தைக் கல்லாக்கி கொண்டேன். இன்று உறுதியாய்ச் சொல்லியிருக்கிறேன். நான் செத்தாலும் அவர்களுக்கு தெரிவிக்காதே. நீயே எடுத்துப் போட்டுவிடு. ஒழியட்டும். என் வாழ்வு என்னோடு ஒழியட்டும். நீயே எடுத்துப் போட்டு விடு. யாரும் கொள்ளியும் வைக்க வேண்டாம். மண்ணில் சும்மா போட்டு மண்ணைத் தள்ளி விடு. போதும். இது என் வேண்டுகோள். உன் நண்பனுடைய கடைசி வேண்டுகோள். மறக்காதே" என்றான்.
அந்தச் சொற்கள் என்னைக் கலக்கின. என் நெஞ்சம் உடைந்து, கண்ணீர் வழிந்து நின்றேன். சந்திரன் தலை நிமிர்ந்து நான் கண்ணீர் விடுவதைப் பார்த்துவிட்டான். "அழுகிறாயா? வேலு! எனக்காக அழுகிறாயா? அழு, அழு. ஆசுபத்திரியில் இருந்த போது, நான் செத்தால் அழுகிறவர் இந்த உலகத்தில் யாரும் இல்லை என்று எண்ணினேன். நீ ஒருத்தன் இருக்கிறாய். அழு, வேலு. எனக்காக அழுகிறாய். என் அழுகிய உடலை எடுத்து மண்ணில் போட்டுவிட்டு அழுவதற்கு நீ ஒருவன் இருக்கிறாயே, அது போதும்" என்றான். உடனே என்ன நினைத்துக் கொண்டானோ, தெரியவில்லை. ஒரு பெருமூச்சு விட்டுத் தன் வலக்கையால் மார்பைப் பற்றிக் கொண்டு விம்மினான். குப்புறப் படுத்துத் தலையணை மேல் தலை வைத்துக்கொண்டு, மடை திறந்தாற்போல் உணர்ச்சி பொங்கி வர அழுதான். சிறிது நேரம் அப்படியே அழுது கொண்டிருந்த பிறகு மெல்ல உணர்ச்சி தணிந்து வரத் தொடங்கியது. கவிழ்ந்தபடியே இருந்தான். இன்னும் அங்கே இருந்தால், ஏதாவது ஒரு பேச்சைத் தொடங்கி மறுபடியும் உணர்ச்சி வசப்படுவான் என்று எண்ணி, அவன் திரும்பிப் பார்ப்பதற்கு முன் வந்துவிட்டேன்.
அன்று இரவு உணவுக்காகச் சென்றபோது, அவன் அமைதியாகப் படுத்து உறங்கி கொண்டிருந்தான், "சந்திரா சந்திரா" என்று இரண்டு குரல் கொடுத்தும் எழவில்லை. மூன்றாவது குரலுக்கு "ஆ" என்று விழித்து "ஏன் வேலு!" என்றான். "உணவுக்கு நேரம் ஆயிற்று" என்றேன். "பசி இல்லை. மிளகு நீரில் கொஞ்சம் சோறு இட்டுக் கரைத்துக் கொடு. குடித்து விட்டுப் படுத்துக் கொள்வேன். வேறு ஒன்றும் வேண்டா" என்றான். அப்படியே மிளகுநீரும் சோறும் கரைத்துக் கொடுத்தேன். குடித்து விட்டுப் படுத்தான். "உடம்பு எப்படி இருக்கிறது?" என்றேன். "உடம்பு காய்ச்சலால் கொதிக்கிறது. உடம்பு எப்படியாவது போகட்டும். சாவுக்காக இப்போது பயமே இல்லை. அழுகின உடம்பு அழியப்போகிறது. அவ்வளவுதானே? நான் தேடி வந்தது கிடைத்து விட்டது. மன அமைதியே இல்லாமல் எவ்வளவோ துன்பப்பட்டேன். அது கிடைத்துவிட்டது. போதும். ஊரை விட்டு வந்த பிறகு, என் மனம் என்றைக்கும் இவ்வளவு அமைதியாக இருந்ததில்லை. இனிமேல் செத்தால் கவலை இல்லை. இதுபோதும்" என்றான்.
இவ்வாறு அவன் தான் பெற்ற மன அமைதியைக் குறித்துப் பேசியது எனக்கு மகிழ்ச்சி தந்தது. என் வீட்டுக்கு வந்த பிறகு நான் அருமை நண்பனுக்குச் செய்த உதவியால் அந்தப் பயனாவது ஏற்பட்டதே என்று மகிழ்ந்தேன்.
நண்பனுடைய மனம் அமைதியுற்ற அன்று இரவு பத்துமணிக்கு வானத்தில் பெரும்புயல் கிளம்பியது. இடியும் மின்னலும் நான் நீ என்று முந்திக்கொண்டு பெருங்கூத்து நடத்தத் தொடங்கின. காற்று சுழற்றிச் சுழற்றி அடித்தது. மழையும் பெய்யத் தொடங்கியது. உடனே எழுந்து சென்று சந்திரனைப் பார்த்தேன். அவன் முன்போலவே அமைதியாய்ப் படுத்திருக்கக் கண்டேன். சன்னல் கதவுகளை எல்லாம் சாத்திக் கொக்கி இட்டுத் திரும்பி வந்தேன். காற்றும் மழையும் நடத்தும் போரைப்பற்றி எண்ணியவாறே படுக்கையில் படுத்தேன். காற்றின் பேரொலி சிறிது அடங்குவதுபோல் இருந்தபோது மழைத்துளிகளின் ஓசை மிகுவதும், மழை ஓசை அடங்கும்போது காற்றின் ஒலி மிகுவதும், போரின் வெற்றி தோல்விகளைக் காட்டுவன போல் இருந்தன. பேரிடியாக இருந்த ஒலி மாறி அமைதியான முழக்கம் மீண்டும் வானத்தில் இடையிடையே கேட்டது. சன்னல் கண்ணாடி வழியாக வானத்தின் மின்னல் ஒளி விட்டுவிட்டு என் அறைக்குள் புகுதல் கண்டேன். இவற்றிற்கு இடையே நண்பன் சந்திரன் பெற்ற மன அமைதியைப் பற்றி எண்ணியவாறே உறங்கிவிட்டேன்.
இரவு மூன்று மணிக்கு விழித்தபோது புயல் அடங்கி இருந்தது. மின்னலும் இடியும் களத்தைவிட்டு அகன்று ஓய்ந்திருக்கச் சென்றிருந்தன. காற்றுத் தோல்வியுற்று அடங்கி எங்கே ஒளிந்திருந்தது. மழையும் களைத்துச் சோர்ந்து விட்டாற்போல் சிறு சிறு தூறலாய் பெய்து கொண்டிருந்தது. எழுந்து போய்ச் சந்திரனைப் பார்த்தேன். பிதற்றாமல் புரளாமல் ஆடாமல் அசையாமல் இருந்தான். நல்ல அமைதியோடு உறங்குகிறான் என்று திரும்பி விட்டேன். மன அமைதி உள்ளபோது உடம்பும் நல்ல அமைதி பெறுவது இயற்கை என்று எண்ணியபடியே மறுபடியும் படுத்து உறங்கிவிட்டேன்.
காலையில் விழித்தபோது, வழக்கம்போல் சந்திரன் அருட்பா பாடுவது கேட்கும் என்று செவிகள் உற்று கேட்டன. ஒருகால் பாடி முடிந்திருக்கும் என்று எண்ணினேன். சிறிது நேரம் கண் மூடியவாறே படுத்திருந்து எழுந்தேன். சந்திரனிடம் சென்றேன். அவன் வழக்கத்திற்கு மாறாக, கதிரவன் வந்த பிறகும் படுத்திருந்ததைக் கண்டேன். சரி, உறங்கட்டும் என்று திரும்பிவிட்டேன். பல்துலக்கிக் குளித்தபிறகு சென்று கண்டேன். அப்போதும் அதே நிலையில் படுத்திருக்கக் கண்டதும், என் மனம் திக்கென்றது. நான்கு முறை பெயரிட்டு அழைத்தேன். ஒரு குரலும் இல்லை. அப்போதுதான் அவனுடைய உடம்பில் மூச்சின் அசைவும் இல்லாததை உணர்ந்து திடுக்கிட்டேன்! கைவிரலை மூக்கின் அருகே கொண்டு சென்றேன். காற்று இல்லாததை உணர்ந்ததும், என்னை மீறிச் "சந்திரா, சந்திரா!" என்று கூக்குரல் இட்டேன். என் உடம்பில் ஒருவகை அச்சம் ஊடுருவியது. கண்ணின் இமைகளை என் விரலால் நீக்கித் திறந்தேன். ஒளியற்றுப் பஞ்சடைந்திருந்தது. தலைமேல் கை வைத்துக் கொண்டு, "அப்பா சந்திரா இதற்காகவா என் வீட்டை தேடி வந்தாய்? சாவதற்காகக் கடைசியில் என்னைத் தேடி வந்தாயா?" என்று அழுதேன்.
கதவு தட்டும் ஒலி கேட்டு எழுந்து சென்று, "யார் அது? என்றேன். "பச்சைமலை" என்ற குரல் கேட்டுத் திறந்தேன், பச்சைமலையும் பக்கத்தில் வேலையாளும் நின்றிருந்தனர். என் கண்களில் கலக்கத்தையும் முகத்தின் வாட்டத்தையும் கண்ட பச்சைமலை, "என்ன அய்யா! ஏன் அழுகிறீர்கள்? என்ன காரணம்?" என்றார். நடந்ததைச் சொன்னேன். "நேற்று முந்தாநேற்று ஆபீசில் பேசிக் கொண்டிருந்தபோது ஒன்றுமே சொல்லவில்லையே" என்றார்.
"என்னுடைய வாழ்க்கையிலேயே பெறுவதற்கு அரிய நண்பர், இளமை நண்பர்" என்றேன்.
"முன்னே என் மனைவியும் அவளுடைய அக்காவும் சொன்னார்களே, அந்த நண்பரா?" என்றார்.
"ஆமாம்" என்று சொல்லி உடல் இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றேன். பச்சை மலை சந்திரனுடைய உடம்பைக் கண்டதும், சிறிது தொலைவிலேயே நின்று திகைப்போடு என்னைப் பார்த்து, "தொழு நோயாளிபோல் தெரிகிறதே" என்றார்.
"ஆமாம்" என்றேன். "இவருடைய வாழ்க்கை குடும்பத்துக்கும் ஊருக்கும் ஒரு பொல்லாத கறைபோல் இருந்தது. ஆனாலும், நெருங்கிப் பழகிய என்னுடைய வாழ்க்கைக்கு இவர்தான் ஒரு நல்ல கரைபோல் இருந்தார். இவர் இல்லையானால் நான் படித்து முன்னேறியிருக்க மாட்டேன். இவர் பட்ட துன்பங்களிலிருந்து எனக்கு அறிவு வரவில்லையானால், நான் இப்படிச் சீராக வாழ்ந்திருக்கமாட்டேன். அப்படிப்பட்ட நல்ல நண்பர் கடைசியில் என்னைத் தேடி வந்து என் வீட்டில் இறந்துவிட்டார்" என்றேன்.
"மனைவி திருமகள் சொல்லியிருக்கிறாள். சந்திர அண்ணா கூர்மையான அறிவுடையவர் சிறந்த குணங்கள் உடையவர் என்று அவள் சொல்லியிருக்கிறாள்" என்றார்.
"அறிவு மட்டுமா? குணம் மட்டுமா? இளமையில் இவரைப் போல் சுறுசுறுப்பும் அழகும் உடையவர்கள் நான் கண்டதில்லை" என்றேன்.
"அய்யோ! அவ்வளவு அழகான உடம்பு இப்படிநோயால் கெட்டு மாறிவிட்டிருக்கிறதே" என்று அவர் பின் வாங்கினார். பிறகு என்னைப் பார்த்து, "சரி, இனிமேல் ஊருக்குத் தந்தி கொடுக்கவேண்டும். முகவரி கொடுங்கள். நான் எழுதிக்கொடுப்பேன். வேலையாளை அனுப்பலாம். ஊரிலிருந்து வீட்டார் வந்த பிறகுதான் மற்ற வேலைகள்" என்றார்.
என் உள்ளத்தே துயரம் மேலெழுந்தது. அழுதேன். அழுதுகொண்டே, "நண்பருடைய வேண்டுகோளின்படி வீட்டார் யாருக்கும் தெரிவிக்கக்கூடாது" என்றேன்.
"நோயாளிகள் அப்படிச் சொல்வார்கள். ஆனால் நாம் அப்படிச் செய்யலாமா? அவர்கள் கேள்விப்பட்டால் உங்கள் மேல் வருத்தப்படுவார்கள்" என்றார்.
"அதையும் சந்திரனே சொன்னார். என்ன வருத்தப்பட்டாலும் வேண்டா வேண்டா என்றார். தம்முடைய கடைசி வேண்டுகோள் என்றும் தவறாமல் நிறைவேற்ற வேண்டும் என்று தெளிவாகச் சொல்லிக் கேட்டு கொண்டார்" என்றேன்.
"அப்படியானால் சரி" என்று சொல்லிவிட்டு, நண்பர் வேலையாளிடம் அடக்கத்திற்கு உரிய ஏற்பாடுகள் செய்யுமாறு ஏவினார். என்னிடம் நெருங்கிவந்து, அப்படியானால் வழக்கமான ஊர்வலத்துக்கு இடம் இல்லை. அக்கம் பக்கத்தில் யாருக்கும் தெரியாமல் ஒரு வண்டி வைத்து இடுகாட்டுக்கு கொண்டுபோய் விடுவோம்" என்றார். அதற்கு இசைந்தேன். ஆனால், வண்டியில் உடம்பை ஏற்றியபோது எதிர் வீட்டாரும் பக்கத்து வீட்டாரும் அணுகி வந்து பார்த்தார்கள். யார் என்ன என்று என்னைக் கேட்டார்கள். சொன்னேன்.
இடுகாட்டில் வேலையாளும் பச்சைமலையும் வண்டிக்காரனும் தவிர வேறு யாரும் இல்லை. தன் கிராமத்தில் பெரிய வீட்டில் செல்வ மகனாக வளர்ந்த ஒருவனுடைய வாழ்வு இப்படித் திக்கற்ற முடிவு அடைந்து விட்டதே என வருந்தினேன். சந்திரனுடைய முகத்தைப் பார்த்து நெஞ்சு உடைந்து கலங்கினேன். உடம்பைக் குழியில் இறக்குவதற்காக நாங்கள் நான்கு பேரும் பிடிக்கத் தொடங்கியபோது, "இருங்கள் இருங்கள்" என்று ஒலி கேட்டது. "அண்ணா!" என்று கதறிய பெண்ணின் குரல் கேட்டது வண்டி ஒன்று நிற்க, அதிலிருந்து மாலனும் கற்பகமும் இரண்டு குழந்தைகளும் இறங்குவதைக் கண்டேன். அழுதுகொண்டே எதிரில் சென்றேன்.
"அண்ணா போய்விட்டாயா? அண்ணாவா?" என்று கதறிக்கொண்டே வந்தாள் கற்பகம்.
"ஆமாம் அம்மா" என்று விம்மினேன்.
உடனே அவள் ஓடிச்சென்று தன் அண்ணனுடைய உடலின் அருகே உட்கார்ந்து அவனுடைய முகத்தைத் தொட்டு அழுதாள். "எங்களை எல்லாம் வெறுத்து வந்து விட்டாயா, அண்ணா! அப்பாவுக்கு என்ன சொல்லுவேன் அண்ணா" என்று கதறினாள்.
"உங்களுக்குத் தெரிவிக்கக் கூடாது என்று வற்புறுத்திச் சொல்லி விட்டுச் செத்தார். அதனால்தான் தெரிவிக்கவில்லை" என்று மாலனுக்குச் சொன்னேன். அவன் கண்களைத் துடைத்துக்கொண்டே, "பழைய கசப்பு எல்லாம் தீர்ந்து புது வாழ்க்கை தொடங்கும் போது முதன் முதலில் உன் வீட்டுக்கு வர வேண்டும் என்று நாங்கள் புறப்பட்டு வந்தோம். வீடு பூட்டியிருந்தது. பக்கத்து வீட்டுக்காரர் வந்து இப்படி ஒரு தொழுநோயாளி செத்து விட்டார் என்ற செய்தியும், நீங்கள் இடுகாட்டுக்குப் போயிருப்பதும் சொன்னார். உடனே தன் அண்ணன்தான் என்று கற்பகம் உணர்ந்துகொண்டு இடுகாட்டுக்குப் போகவேண்டும் என்று வற்புறுத்தினாள். அந்த வண்டியிலேயே நேரே இங்கே வந்தோம்" என்றான்.
கற்பகத்தின் கதறல் எளிதில் ஓயவில்லை. நாங்கள் எல்லோரும் சொல்லி ஓயப்படுத்தினோம். அவள் மகன் திருவாய் மொழியைப் பார்த்து, "மாமா’டா, தெரியுதா’டா" என்றாள். மகள் திருப்பாவையைப் பார்த்து, அழுது கொண்டே "மாமா’டி கும்பிடு" என்றாள். அந்தச் சிறுமியோ, எதையோ கண்டு அஞ்சியவள் போல் தன் தாயைப் பார்த்தபடியே இரு சிறு கைகளையும் எடுத்துக் கூப்பினாள்.
இடுக்காட்டிலிருந்து திரும்பியபோதும் கற்பகத்தின் அழுகை ஓயவில்லை. வழியில் சைக்கிளில் சென்ற இருவரில் ஒருவன், "டே! எப்போதும் இதில் வேகம் வேண்டாம்டா. வேகம் உன்னையும் கெடுக்கும். உன்னைச் சார்ந்தவர்களையும் கெடுக்கும்" என்றான். வலப்பக்கத்தே விளையாட்டு வெளியில் ஒரு பந்தாட்டம் நடந்து கொண்டிருந்தது. ஆரவாரத்திற்கு இடையே, "விளையாட்டாக இருந்தாலும் விதிகளுக்குக் கட்டுப்படவேண்டும் தெரியுமா? நீயே அரசன் என்று எண்ணிக் கொண்டு, உன் விருப்பம்போல் ஆட முடியாது. தெரிந்துகொள்" என்ற குரல் கேட்டது. சிறிது தொலைவு வந்துவிட்ட பிறகும் பந்தாட்டகாரரின் ஆரவாரம் கேட்டுக்கொண்டிருந்தது.
----------
அகல் விளக்கு முற்றிற்று