சுழலில் மிதக்கும் தீபங்கள் (முழு நாவல்)
ராஜம் கிருஷ்ணன்
cuzalil mitakkum tIpangkaL (novel)
of rAjam kirushNan
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Tamil Virtual Academy for providing a scanned image copy of this
work. This work has been generated using Google Online OCR tool and subsequent proof-reading
of the electronic text.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2016.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
சுழலில் மிதக்கும் தீபங்கள் (முழு நாவல்)
ராஜம் கிருஷ்ணன்
(தமிழ்நாடு அரசின் பரிசுபெற்ற சமூக நாவல்)
Source:
சுழலில் மிதக்கும் தீபங்கள்
(தமிழ்நாடு அரசின் பரிசுபெற்ற சமூக நாவல்)
ராஜம் கிருஷ்ணன்
தாகம்
11, சிவப்பிரகாசம் தெரு
பாண்டி பஜார் : : தி. நகர், சென்னை-600 017
---------
இந்த நாவல்
சமூகப் பிரச்னைகளையே மையமாகக் கொண்டு எழுதி வரும் திருமதி ராஜம் கிருஷ்ணன் அவர்கள் இந் நாவலிலும் இன்று தமிழகத்தில் படித்த பெண்கள் படும் அவலத்தை விரிவாகச் சித்தரித்துள்ளார். மனித நேயம் தேய்ந்து வரும் இந்நாளில் இவர் காட்டும் சில கதாபாத்திரங்கள் தம்முள் நம்பிக்கையை மலரச் செய்கின்றன.
கண்ணிருந்தும் குருடராய், வாயிருந்தும் ஊமையராய், சுமைதாங்கியாய், மேலும் நகை தாங்கிகளாய் நம்முள் உலா வரும் பெண்கள் பலப் பலர். எது சுதந்திரம் என்றே தெரியாது தவித்தும் மேலைநாட்டு நாகரீகத்தையும் முழுமையாகப் பின்பற்ற இயலாது நம்நாட்டுப் பண்பாட்டையும் கைவிட இயலாது தத்தனித்து, கருத்திழக்கும் மகளிரும் பலப் பலர். இப்படியாகக் குழம்பும் பண்பாட்டுத் தெளிவின்மைக்கு ஒர் நல்ல தெளிவைத் தருகிறது இந்நாவல்.
இயற்கையில் நடக்க இயலாத விஷயங்களைத் திரைப் படங்களிலும் பத்திரிகைகளிலும் பார்த்தும் படித்தும் எரிச்சலுறும் வேளையில் இந் நாவல் புரையோடிய புண்னைக் கீறி மருந்து கட்டுகிறது.
சமூக அவலங்களைச் சுட்டிக் காட்டுவதுடன் நாம் எங்கே போகவேண்டும். என்ற பாதையையும் தெளிவாக்கிக் காட்டுகிறது. இந்நாவல்.
இந்த நல்ல நாவலை வெளியிடும் வாய்ப்பினை எமக்கு அளித்த திருமதி ராஜம் கிருஷ்ணன் அவர்கட்கு நன்றி.
-தாகம்
---------------
சுழலில் மிதக்கும் தீபங்கள்
அத்தியாயம் 1
கிரிஜா காபித்தூளை அடைத்து, ஃபில்டரில் கொதி நீரை ஊற்றி விட்டு, ரொட்டித் துண்டுகளுக்கிடையில் ‘சீஸ்கறி’யைப் பொதிந்து, வாட்டும் கூட்டுக்குள் நெய் தடவி மூடித் தீயில் வாட்டுகையில் மணம் எட்டுருக்குப் பரவுகிறது.
“அம்மா, ஜமேதாரி வந்திருக்கா!” என்று அறிவித்துக் கொண்டு சாரு சமையலறைக்குள் வருகிறாள். “ஹை, எனக்குக் கொஞ்சம் சீஸ் கறிம்மா!” என்று கையில் அவள் அனுமதி இன்றியே எடுத்துக் கொண்டு மொட்டை மாடிக்கு ஒடுகிறாள்.
“காலங்காத்தால, பல்லுக்கூடத் தேய்க்காம...சை!”
பன்னிரண்டு வயசுக்கு எந்தப் பொறுப்பும் தெரியாத தீனிப்பட்டறை! உடம்பு பக்கவாட்டில் வளாச்சி பெற்று ‘விகாரம்’ என்று சொல்லும் எல்லைக்குப் போயாகி விட்டது
“ஏ, கழுதை! குருவியை வேடிக்கை பார்க்கிறியே? வந்தனாவுக்கு வாசக்கதவைத் திறந்து விடு? உள்வழியே வந்து ‘கச்சடா டப்பாவை’ எடுத்துக்கட்டும்!”
“பாட்டி ரூம்ல எழுந்து உக்காந்திண்டிருக்கா!”
இது எச்சரிக்கைக் குரல். பாட்டியின் அறையில் இருந்து மொட்டை மாடிக்கும், அவளுடைய குளியலறைக்கும் வரலாம். மொட்டை மாடியில்தான் ‘கச்சடா டப்பா’ எனப் பெறும் குப்பைத் தொட்டி வைக்கப்பட்டிருக்கிறது. சாப் பாட்டுத் தட்டுக்களில் இருந்து கழிக்கப் பெறும் கறிவேப்பிலை, முருங்கை சக்கை, பழத்தோல் போன்ற எச்சிற் குப்பைகள் இடம்பெறக் கூடிய குப்பைத் தொட்டி, உள்புறம் இடம் பெறக் கூடாது என்பது பாட்டியின் சட்ட திட்டம். கீழ்ப்புறம் விசையுள்ள மூடித்திறக்கக் கூடிய சுகாதாரமான குப்பைத் தொட்டிதான் என்றாலும் அதற்குரிய இடம் வெளிப்புற மூலை. அதை அன்றாடம் துப்புரவு செய்ய வரும் துப்புரவுக்காரியும் வீட்டுக்குள் வரக்கூடாது என்பது பாட்டியின் இன்னொரு சட்டம்.
வந்தனாவை “ஜமேதாரி” (ஜிம்மேதாரி) என்று சொன்னாலே கோபித்துக் கொள்வாள். ‘என் பேரைச் சொல்!” என்று ஆணையிடுவாள். அதுவும் நியாயம். அவள் குப்பை எடுத்துச் செல்பவளாகவா தோற்றமளிக்கிறாள்?
பளிச்சென்ற குங்குமப் பொட்டும், வாரிய கூந்தலும், சிறிதும் அழுக்கு ஒட்டாமல் பூத்துக் குலுங்கும் ஸல்வார் கமீஸுமாக, புத்தம் புதிய மலர் போல் இருக்கிறாள். கால்களிலுள்ள செருப்பைக்கூட வாயிலிலேயே கழற்றி விட்டுத் தான் நீண்ட நடை கடந்து வருகிறாள்.
தன் கைவாளியில் குப்பையைக் கவிழ்த்துவிட்டு, தொட்டியைச் சுத்தம் செய்ய, கிரிஜா தண்ணி கொண்டு வந்து ஊற்றுகிறாள். துப்புரவாக வடித்து, அடியில் ஒரு காகிதமும் போட்டுவிட்டு, துடைப்பமும் வாளியுமா வந்தனா போகிறாள்.
மணி ஆறரை அடித்தாயிற்று. பெரிய பெண் கவிதா இன்னமும் எழுந்திருக்கவில்லை. பத்தாம் வகுப்பு!
ஏழரைக்குள் வீட்டை விட்டுக் கிளம்பியாக வேண்டும்.
“சாரு, கவிய எழுப்பு! ‘அஞ்சுமணிக்கு எழுப்பு, அஞ்சரைக்கு எழுப்பு’ம்பா, எழுப்பினா எழுந்திருந்தாதானே?’
வேலைக்காரி வருவதற்கு ஒன்பது மணியாகும். அதற்குள் வந்தனா வந்துபோன இடத்தைத் தண்ணிர் தெளித்துத் துடைக்கிறாளா மருமகள் என்று கிழவி பார்த்துக் கொண்டிருப்பாள்.
கிரிஜாவுக்கு நெஞ்சுக்குள் ஏதோ ஒன்று முள்ளாய் நெருட பெருக்கித் துடைக்கிறாள்.
வந்தனா ‘வாஷ்பேஷின்’ குளியலறை நெடுகிலும் நன்றாகச் சுத்தம் செய்வாள். ஆனால் இந்த மாமியாரின் ஆணை அவை எல்லாவற்றையும் மருமகளுக்கு ஒதுக்கி யிருக்கிறாள். குளித்து, மடியில்லாத சமையல் ஒன்று முடித்து குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். குழந்தைகளின் தந்தை வெளிநாட்டுப் பயணம் போயிருக்கிறார். அடுத்த வாரம் திரும்பி விடுவார். அதுவரையிலும் அந்த நெருக்கடிக்கு விடுதலை. குளிரலமாரியில் முதல் நாளைய குழம்பும் கூட்டும் இருக்கிறது. அவற்றைக் கொதிக்க வைத்து, சோறு மட்டும் குக்கரில் பொங்கி வைத்து, இவர்கள் சாப் பாட்டை முடிக்கலாம். பகலுக்குத் தான் சீஸ்கறி ஸாண்ட் விட்ச் பண்ணி டப்பிகளில் போட்டாயிற்று.
கடைக்குட்டி பரத்துக்கு எழுந்து வந்ததும் அம்மாவைக் கட்டிக் கொண்டாக வேண்டும், இவனுக்கு ஒன்பது வயது தான். பள்ளிக்கூடம் தொலைவிலில்லை.
“அம்மா, எனக்கு கிரெயான் கலர் வேணும். மிஸ் கொண்டு வரச்சொல்லி இருக்கா...”
“அதுக்கு இப்பத்தான் சொல்றதா? போனவாரம் ஒரு கலர் பாக்ஸ் வாங்கிக் குடுத்தேனே, அது எங்கே?”
சாரு எடுத்துண்டு போய் ஒடிச்சிட்டா...”
“பொய்...பொய்மா...இவன் என் ஜாமட்ரி பாக்ஸ்ை எடுத்து ஒடச்சி வச்சிட்டு பொய் சொல்றான்...”
இந்த மாதிரித் தகராறுகளைப் பள்ளிக்குப் புறப்படும் நேரத்தில் தான் கொண்டு வருவார்கள். இவர்கள் வெளியேறி சந்தடி அடங்கிய பின்னரே, மாமியார் காலைக் கடன்களை முடிக்க வருவாள்.
மூன்று படுக்கையறைகளும், இரண்டு குளியலறைகளும் கொண்ட இந்த முதல் மாடிக் குடியிருப்புக்குச் சுளையாக மூவாயிரத்தைந்நூறு வாடகை. இந்தியத் தலைநகரில், அரசுக் குடியிருப்புக்கள் முக்கியத்துவம் பெற்றவை. இந்த வாடகையை, அவர்களுக்காக அவன் சார்ந்திருக்கும் வியாபார நிறுவனம் கொடுக்கிறது. மூவாயிரத்தைந்நூறு ரூபாயை வீட்டு வாடகையாகக் கொடுக்கவும் இன்னும் பல வசதிகளை அளிக்கவும் முன்வரும் அளவுக்கு அவள் கணவனின் வாணிப மதிப்பு உயர்ந்தது...ஆனால்...?
பெண்கள் பள்ளி சென்ற பிறகு வந்து பார்க்கையில், மூத்த பெண் கவிதா பாட்டியின் குளியலறையில் துணிகளை விசிறி இருப்பதைப் பார்க்கிறாள். குளித்திருக்க மாட்டாள். சோம்பேறி. மாலையிலோ, இரவிலோ குளிப்பாள்... ‘க்ளோஸெட்’டை ஃப்ளஷ்’ செய்யக் கூடாது?
கிரிஜா ஆத்திரமும் அருவருப்புமாகச் சுத்தம் செய்கிறாள்.
மாமியாருக்குக், கெய்ஸ்ரைப் போட்டுவிட்டு, கடைக் குட்டிப் பையனைப் பள்ளிக்கு அனுப்பச் சித்தம் செய்கிறாள்.
மாமியார் காலைக் கடன்களை முடித்து, நீராடி வெளிவரக் குறைந்த பட்சம் முக்கால் மணியாகும்.
பரத்துக்குக் காலை நேரத்தில்சாப்பாடு இலகுவில் உள்ளே செல்லாது. பாட்டி, அப்பா சலுகையில் இன்னமும் குழந்தையாக, அம்மாவைச் சாதம் ஊட்டச் சொல்கிறான். அவனைக் கீழே தெருவிலிறங்கும் வரையிலும் புத்தகப் பை சுமந்து கொடுத்து, தெருக் கோடியில் செல்லும் வரை நின்று ‘டாடா’ காட்ட வேண்டும். தெருத் திரும்பினால் பள்ளியின் பஸ் வரும்.
பிறகு மேலே வந்து, மாமியாரின் தெய்வங்களுக்கு, முன் இடம் துடைத்து, கோலம் போட வேண்டும். கீழே, வீட்டுச் சொந்தக்காரன் மல்ஹோத்ரா, வாசலில் மலர்ந்த பிச்சி, மந்தாரை, ஒன்றிரண்டு செம்பரத்தை மலர்களைக் கொய்து வைத்திருப்பான். முதியவளின் ஆசாரங்களில் மிகுந்த மரியாதை உள்ளவன். அவனுக்கு எழுபது வயசிருக்கலாம். மனைவி இல்லை. மூன்று மகன்கள்-மருமக்கள் சேர்ந்து கூட்டுக் குடும்பமாகக் கீழ்ப் பகுதியில் வாழ்கிறார்கள்.
அவனுடைய மருமகள் ஒருத்தியும் மாமனாருக்கு வேலை வைக்க மாட்டார்கள். வாயிலில், மனிதர் நடமாட இடமின்றி ஒரு அம்பாஸ்டரும், மாருதியும் போர்த்துக் கொண்டு வீட்டுச் சொந்தக்காரரின் அந்தஸ்தைப் பறையடிக்கின்றன!
உதவுபடிக்கு, மூன்று பிள்ளைகளுக்கும் இரு சக்கர வாகனங்களும் அணிவகுத்து நிற்கின்றன. ஒரு நேபாளத்து வேலைக்காரன். அடுப்பு வேலை. மேல் வேலை எல்லாம் செய்வான். வேலைக்காரி நிருபா எட்டுமணிக்குத்தான் வருவாள்.
கிரிஜா குழந்தைகள் துணிகளைச் சேகரித்துக் குழாயடிக்குக் கொண்டு வருகையில, கீழே முற்றத்தின் பக்கம் இரண்டாம் மருமகள் நீண்ட வீட்டங்கியுடன் கை நகத்துக்குச் சிங்காரம் செய்து கொண்டிருக்கிறாள், ஒரே மகன் ‘டுன்’ பள்ளியில் படிக்கிறான்.
“குட்மார்னிங் ஆன்டிஜி...”
“குட்மார்னிங்” என்று சொல்லும் கிரிஜாவுக்குச் சிரிப்பு வரவில்லை.
அவளுக்கு இவளை ‘ஆன்டி’ என்று சொல்லும் அளவுக்கு வயது குறைவா? இல்லை, சொல்லப் போனால், அந்தப் பெண்கள் அனைவரும் மேற்கத்தியப் பூச்சு நாகரிகத்தில் மீதப்பவர்கள். குட்டை முடி, உதடு. நகங்களில் பளிர்ச் சிவப்பு, வெளியே செல்லும்போது உடுத்தும் சேலையிலும் அடக்க மில்லாத எடுத்துக்காட்டு மோகங்கள் என்று ஆடம்பரமாக வாழ்பவர்கள். ஆனால் ஒருத்தி கூட முழுசாகக் கல்லூரிப் பட்டம் எடுத்தவளில்லை. ஆனால் அவளுடைய தோற்றத்தில் கிரிஜாவின் எம். ஏ. பி. எட். பட்டம் இருந்த இடம் தெரியாமல் அழுந்தியே போய் விட்டது.
கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொள்ள நேரமில்லை என்பது முற்றிலும் உண்மையன்று. ஆனால் பார்த்துக் கொள்ளும் ஆர்வமும் மனமும் எங்கோ தொலைந்து விட்டன. இவளுடைய மடிச் சேலைத் துணிகள், மாமியாரின் ஒன்பது கஜ நார்மடிப் பட்டு எல்லாம் உயர நடையின் நீண்ட கொடி யில் காய்கின்றன. அதனால் தான் வந்தனா அங்கு வருவதற்குத் தடை.
கொம்பில் தன் சேலை-பாவாடை முதலிய துணிகளைக் கொண்டு போய் வெளியில் வைத்துக்கொள்கிறாள்.
நீராடி ஈரம் சொட்டும் சேலையுடன் மடித் துணிகளை எடுத்துக் கொண்டு தலை துவட்டிக் கொள்ள வேண்டும். ஈரக் கூந்தலைச் சுற்றிய துண்டும் மடிச் சேலையுமாக மாமியாருக்கு. உலர் புடவை கொண்டு போகிறாள் இன்னொரு குளியல றையில். --
அப்போது தான் பொட்டு வைத்துக் கொள்ள மறந்தது. நினைவுக்கு வருகிறது.
கண்ணாடியைப் பார்த்து அவசரமாக ஒரு பொட்டை, குங்குமச் சிமிழ் திறந்து தொட்டு வைத்துக் கொள்கிறாள். வயிற்றில் கபகபவென்று பசி, எரிச்சல் கிளர்ந்தெழுகிறது.
நறுக்கென்று சீஸ் பொதிந்த மொறு மொறு ஸாண்ட் விச்சை எடுத்துக் கடித்துக் கொண்டு, நாற்காலியில் சாய்ந்து சூடான காபியைச் சிறிது சிறிதாக ரசித்துப் பருகினால்.... வெட்டு!
“கிரி.. புடவை கொண்டு வரியாம்மா...?”
“இதோ வந்துட்டேம்மா!”
கைப் புடவை, துண்டு இரண்டையும் குளியலறைக் கதவடியில் கொண்டு வந்து நீட்டுகிறாள்.
பரங்கிப் பழமாகப் பழுத்துத் தொங்கும் மார்பும் வயிறும், ஈரத் துணிக்குள் ஒட்டித் தெரிய, லேசாகப் பூசியப் பூச்சுப் போல் வெண்முடி படர்ந்த தலையும், கிரிஜாவுக்குப் பார்த்துப் பழகிய இரக்கத்தைத் தோற்றுவிக்கும் வடிவம்.
கடந்த பதினேழு வருஷங்களாக இவளைப் பூச்சியாக்கி வைத்திருக்கிறாள் என்ற உணர்வும் கூடவே இணைந்து எரிச்சலின் இழையைத் தோற்றுவிக்கிறது.
சேலையைச் சுற்றிக் கொண்டதும் மெள்ளக் குளியலறையை விட்டு வருகிறாள். விபூதிச் சம்புடம், மடி நீர்ச் செம்பு எல்லாம் சுவாமி அலமாரிக்கு அருகில் வைக்கப்பட்டிருக் கின்றன.
“குழந்தை ஸ்கூலுக்குப் போயிட்டானா?”
“ம்...”
“ராத்திரியெல்லாம் லொக்கு லொக்குனு இருமித்தே, மருந்து குடுத்தியா?”
“ம்”
“விளக்கேத்தி வச்சுட்டுப் போ. இன்னிக்குக் கிருத்திகை யாயிருக்கு, துளிப் பாயாசம் வேணா வை...”
-------
அத்தியாயம் 2
வேலைக்காரி மணி அடிக்கிறாள். எல்லா வீடுகளிலும் பாத்திரம் துலக்கும் தொட்டி, சமையலறையில் தான் இருக்கும். இந்த வீட்டிலும் சமையலறையில் இருந்தாலும், கேட்டுக் கொண்டதன் பேரில் வெளியே ஒரு தொட்டியும் குழாயும் பின் பக்க வராந்தா போன்ற சிறு பகுதியில் வைத்துக் கொடுத்து விட்டு மூவாயிரத்தை மூவாயிரத்தைந் நூறாக மாற்றினான் வீட்டுக்காரன்.
வேலைக்காரி துலக்கிய பாத்திரங்களை மீண்டும் நீரூற்றிக் கழுவிக் கவிழ்த்து வடிந்த பிறகே உள்ளே எடுத்துச் செல்லலாம். சிறுவர் உடைகளை அவள் துவைத்துப் பிழிந்து மொட்டை மாடியில் உலர்த்தினால், அவளே மாலை நான்கு மணிக்கு வந்து எடுத்து மடித்து வைப்பாள். பள்ளிச் சீருடைகளை அவளே எடுத்துச் சென்று மாலை வரும் போது பெட்டி போட்டுக் கொண்டு வருவாள்.
தலை போனாலும் கிரிஜா, குழந்தைகளின் துணிகளையோ, வேறு மடியில்லாத திரைச் சீலை போன்ற துணிகளையோ தொடலாகாது. மாமியார் இரவு ‘ஆகாரம்’ பண்ணி முடியும் வரையிலும், இவள் பெண்களின் மேல் பட்டுக் கொள்ளவும் கூடாது. பரத்துக்கு மட்டும் விலக்கு. துணி படாமல் தொடலாம். ‘பொன் முடிந்த’ துணிக்கும், புத்திரனுக்கும் தீட்டு இல்லை!
“தீதிஜி இன்று சாயங்காலம் நான் வர மாட்டேன்!”
பாத்திரங்களைச் சுத்தமாக கழுவி துடைத்துக் கவிழ்த்த வண்ணம் வேலைக்காரி மாயா சொல்கிறாள்.
“ஏன்?’’
“குழந்தைக்கு உடம்பு சரியில்லை தீதிஜி, டாக்டர்கிட்டக் கூட்டிட்டுப் போகணும்!”
“என்ன உடம்பு? நேத்துத் தெரு நாயைத் தொட்டு விளையாடிட்டிருந்தான். உனக்கு எத்தனைநாள் அந்த நாயைத் தொட விடாதேன்னு சொல்றேன், மாயா? அது சொறி நாய்!”
“ஹா, சொன்னா கேக்கறதில்ல தீதிஜி. ராத்திரியெல்லாம் காச்சல்...சீட்டு வாங்க ஒரு ரூபா தரணும் தீதிஜி!”
ஒரு ருபாய் பாரமில்லை. மதியம் துணி மடிக்க அவள் வரவில்லையென்றால், இவளே இப்போது அவற்றைப் பிழிந்து உலர்த்த வேண்டும்!
மாயாவுக்குக் கதவைச் சாத்திவிட்டு, மடியாகச் சாதம் பருப்பு குக்களில் வைத்துச் சமையலைத் தொடங்குகிறாள். பாயாசம் வைக்கச் சொல்லி உத்தரவாகி இருக்கிறது. இவள் துணிகளைப் பிழிந்து உலர்த்தி விட்டு, நிவேதனத்துக்குச் சித்தமாகப் பாயாசத்தையும் முடிக்கிறாள்.
ஜபம், பாராயணங்கள் எல்லாம் முடிந்து தெய்வங்களுக்கு நிவேதனமும் ஆகும் நேரத்தில் வாசலில் மணி அடிக்கிறது.
இந்நேரத்தில் யார்... வருகிறார்கள்?
கிரிஜா வாசற் கதவைத் திறக்கிறாள். பம்மென்று கூந்தல் எழும்ப அலங்காரக் கோலத்தில், கிள்ளி எடுக்கச் சதையில்லாமல் மல் வெடவெட என்று உயர்ந்து...
“என்ன கிரி? என்னைத் தெரியலையா?...கல்பனாவின் தங்கை ரத்னா. உங்க மாமியாரின் பேத்தி!”
கிரிஜா ஒரு சிரிப்பை நெளிய விடுகிறாள். 'ஓ...அடையாளமே தெரியாமே இளச்சிப் போயிட்டே... தலையை வேற எப்படியோ பண்ணிட்டிருக்கே... வா வா...”
“நீ வரோதேன்னாலும் வரத்தான் போகிறேன். வந்துட்டேன்...”
தோளில் கையைப் போட்டுக் கொள்கிறாள். கிரிஜா கூசி உதறும் வகையில் குறுக்கிக் கொள்கிறாள். “ஏய், என்ன மாமியார் மடியா? எப்படி இருக்கா பாட்டி?”
கைப்பெட்டியை முன் அறையில் வைக்கிறாள். முன் அறையின் கம்பளங்களையும் மூலை அலங்காரங்களையும் சுவரில் தொங்கிய ‘பதிக்’ ஒவியங்களையும் நடுவில் தொங்கிய படிக விளக்குகளையும் பார்த்து பிரமிக்கிறாள்! “வாவ்...! ஃபன்டாஸ்டிக்! கல்பனா தான் அட்ரஸ் குடுத்தா. அவ ரெண்டு மாசம் முன்ன ஆபீஸ் வேலையா வந்திருந்தாளாமே...?”
“ஆமாம் ஒரு நாள் ஃபோன் பண்ணினா...பிள்ளை, அவன் அப்பா, ரெண்டு பேரையும் உன் மாமா சொன்னார்னு ராத்திரிச் சாப்பிடக் கூட்டிட்டு வந்தா. அவன் சவூதிலேந்து வந்து இங்கே ஏதோ இன்டஸ்ட்ரீஸ் ஆரம்பிக்கணும்னு வந்தாப்ல...”
“இப்ப குடும்பமே சரியில்லே. அவன் திடீர்னு நீ பொட்டு வச்சிக்கற, கோயிலுக்குப் போற, நாளைக்கு என் பையனுக்கு கல்யாணம் பண்ணணும்னா நீ இப்படி இருந்தா எப்படின்’னு வம்பு பண்றான் போல. இவளோ நல்ல வேலை, பதவி. ‘போடா போ, உன் பணமும் வேண்டாம். குடும்பமும் வேண்டாம்’னு வர வேண்டியது தானே?வெளிலசொல்லிக்கல...வேதனை... எல்லாரும் ரோக்ஸ், ராஸ்கல்ஸ்...பதினைஞ்சு வருஷத்துக்குப் பிறகு, இப்ப ப்ளேட்ட, மாத்திப் போடறான், பணத்திமிர் இவளவ்வளவு படிப்புக்கூட அவனுக்குக்கிடை யாது, வெறும் மெக்கானிக்காத்தான் இருந்தான். ஏதோ போனான் நல்ல பணம் வந்திருக்கு. இப்ப, நீ தலையில துணியப் போட்டுக்க, பேரை மாத்திக்கன்னு நிர்ப்பந்தம் பண்றான்...”
கிரி பேசவில்லை. கல்பனா கல்லூரியில் அவளுக்கு ஒரு வருடம் இளையவள். அவள் கல்லூரி நாட்களில் வீட்டுக்கு வருவாள். இவளுக்கும் தந்தையில்லை; அவளுக்கும் தாய் மட்டுமே இருந்தாள். அந்த சிநேகத்தில், நாலைந்தாண்டு இடைவெளிக்குப் பிறகு இருதாய்மாரும் எங்கோ கோவிலில் சந்திக்கையில்தான் கிரிஜாவுக்கு இந்த வரனைக் கொண்டு வந்தார்கள்.
கல்பனாவின் தந்தை, பாட்டியின் முதல்தாரத்தின் மகன். தகப்பனார் உயிருள்ள போதே சொத்தைப்பிரித்துக் கொண்டு சென்று, குடித்துக் குடித்துத் தீர்த்துவிட்டான். பிறகு நோய் வாய்ப்பட்டுச் செத்தான். தந்தை இருந்த நாட்களிலேயே இவர்கள் குடும்பம் தொடர்பில்லாமல் பங்களுரோடு போய் இருந்தது. பின்னரே கல்பனாவின் தாய், தன் சகோதரன் குடும்பத்துடன் அண்டி வந்து, தையல் தைத்துக் கொடுத்து, குழந்தைகளைப் படிக்க வைத்தாள். இரண்டு பேரும் பெண்கள்!
“நீ... என்ன பண்ணிடிருக்கேம்மா, இப்ப?”
“நான் எம். ஏ. ஸோவியாலஜி பண்ணினேன். இப்ப பி. எச்.டி. பண்ணிட்டிருக்கிறேன். இங்க யுனிவர்சிட்டில என் கைட் இருக்காரு. கொஞ்சநாள் தங்கி ஃபீல்ட் வொர்க் பண்ணனும், வந்திருக்கிறேன்...சாமு, ஆபீசுக்குப் போயாச் சாக்கும்?”
“ஜப்பான் போயிருக்கிறார். வர புதன்கிழமை வரார்.”
“நான் நேத்தே வந்துட்டேன். எங்கம்மாவோட கஸின் ஒருத்தர் இங்கே கரோல்பாக்ல இருக்கார். அந்த அட்ரஸ் குடுத்து அங்கதான் அம்மா போகச் சொன்னா, பாவம், அவங்களே ‘பர்சாதில்’ இருக்காங்க. ரொம்ப சின்ன போர்ஷன். சரின்னு-காலம இந்த அட்ரஸத் தேடிட்டு வந்துட்டேன்...”
“உள்ள வா, குழந்தைகள் ரூமில தங்கிக்கோ...”
கிரிஜா அந்த அறைப்பக்கம் இந்த ‘மடி’ நிலையில் போக மாட்டாள். குளிப்பதற்கு முன் துணிகளை வாரிவந்து, ஒழுங்கு செய்வாள். விசாலமான அறையில் மூன்று கட்டில்கள் இருக்கின்றன. திறந்த புத்தக அலமாரிகள், பெரிய படிப்பு மேசை, காலெட்கள் மேசைமீதும், கட்டில்மீதும் இரைந்து கிடக்கின்றன. ரேடியோ கிராம் துளசி படிந்து மேலே கண்ட கண்ட பொருட்களையும் தாங்கிக் கொண்டிருக்கிறது.
சாந்துக் குப்பி, புத்தகம், குரோஷே ஊசி எல்லாம்...
“பாட்டிக்குச் சாதம் போடணும் ரத்னா. நீ குளிக்கணு மானால் பாத்ரூம் இங்கேயே இருக்கு. குளிச்சிக்க.”
“ஹாய்...நீ இப்பவும் நடுங்கிட்டிருக்கியா? பாட்டி மடி மடின்னு இன்னும் உயிரை வாங்குறாளா?”
“அதெல்லாம் கேட்காதே. நான் இங்க வந்து இப்ப நிக்கிறது தெரிஞ்சா, சாப்பிட மாட்டாள்!”
“பட்டினி கிடக்கட்டும்! நீ ஏன் பயந்து சாகனும்?”
கிரியின் அடி நெஞ்சில் எங்கோ போய் அந்த வினா நெம்புகோல் போடுகிறது.
“மாமா ஒண்ணும் சொல்ல மாட்டாரா?”
“ஹம்...அதானே முக்கியமான ‘பாயிண்டா’ இருக்கு!”
“ம்...மேல் சாவுனிஸம்! கிரி. நீங்க இப்படிக் கோழையா இருப்பதாலதான் அவங்க மேலேயே இருக்காங்க...” கிரி பேசாமல் திரும்புகிறாள்,
பூசை வழிபாடு முடித்து, விழிகளை உறுத்துப் பார்த்த வண்ணம் உட்கார்ந்திருக்கிறாள் மாமியார். இலை போட்டு சாப்பாடெடுத்து வைக்க வேண்டும்.
“யார் வந்திருக்கா?”
“ரத்னா!”
வெறுப்பை உமிழும் பார்வையுடன் தலைத்துணியை இழுத்து இறுக்கிக் கொள்கிறாள். இது ஒரு கோபத்தை வெளியிடும் செயல்.
“வந்தா, அவளோட பேசிண்டு நின்னயாக்கும்! இங்க எதுக்கு வந்திருக்கு? சாதியில்லை சனமில்லைன்னு எவனையோ கூட்டிண்டு அக்கா வந்தது; இப்ப , தங்கை எவனைக் கூட்டிண்டு வந்திருக்கு? அசத்துக்கள். நம்ம வீட்டுல ரெண்டு பொங்களை வச்சிட்டிருக்கிறோம். இதுக சகவாசம் என்னத்துக்கு? தாலியில்லை, மூக்குத்தியில்லை...?”
அவள் இங்கே தங்க வந்திருக்கிறாள் என்று தெரிந்தால் என்ன சொல்வாளோ? எல்லாம் போக இவள் எதற்கு அஞ்சு கிறாள்? இந்த வீட்டில் கிரிக்கு உரிமை இல்லையா?
பதில் பேசாமல் இலையைக் கொண்டு வந்து போடுகிறாள்.
கிருத்திகை...பாயாசம், சாதம், பருப்பு, நெய், தயிர், கத்தரிக்காய் துவையல், ரசம், வாழைக்காய் கறி எல்லாம் கொண்டு வந்து பரிமாறுகிறாள். குடிக்க இளஞ்சூடாக வெந்நீர்...
ரத்னா குளியலறையில் நன்றாகக் குளித்து, துணி துவைத்து, ரயிலழுக்கு, மேலழுக்கெல்லாம் போக்கிக் கொண்டு அலசிப் பிழிந்த உடைகளுடன் வெளியே வருகிறாள். பூப் போட்ட வீட்டங்கி அணிந்திருக்கிறாள்.
மொட்டை மாடிக் கம்பியில், தனது சால்வார் கமீஸ், பாவாடை மற்றும் உள்ளாடைகள், ஒரு சேலை எல்லாவற்றையும் உலர்த்துகிறாள். முடியைக் கட்டிய துணியால் துவட்டி, குட்டை முடியை ஷாம்பு மணம் காற்றில் கலக்க, ஒன்றோடொன்று இழை ஒட்டாமல் தட்டி ஈரம் உலரச் செய்கிறாள்.
“இந்த வீடு சொந்தமா கிரி?
“ஹ்ம். வாடகை. மூவாயிரத்தைந்நூறு!”
“ஹாவ்! கம்பெனி குடுக்கும்! பாட்டி சாப்பிட்டாச்சா?”
“ஆமாம். வா, உனக்கும் சாப்பாடு வைக்கிறேன்...”
சாப்பாட்டறை மேசையின் மீது, விருந்தினர் பீங்கான் தட்டுக்களில் ஒன்றை எடுத்து வைத்து கிரி பரிமாற முன் வருகிறாள்.
“வாட் அபெளட் யூ?”
“நீ சாப்பிடு, உனக்கு போட்ட பின் சாப்பிடுவேன்...”
“ஏன் சாதம் பத்தாமல் குக்கர் வச்சிருக்கியா? அப்ப ஆகட்டும், சேர்ந்து சாப்பிடுவோம்?”
"ஒ...இல்லடீ!”
கிரி சொல்லு முன் ரத்னா சமையலறைக்குச் சென்று பார்க்கிறாள். மடிச் சமையல், பாத்திரங்கள், குழம்பு, ரசம். எல்லாவற்றையும் திறந்து பார்க்கிறாள். பிறகு அவளே ஏதோ ஒரு தட்டைக் கொண்டு வந்து வைக்கிறாள். அந்தக் கையுடன் குளிரலமாரியைத் திறந்து, குளிர்ந்த நீர்ப் பாட்டிலை எடுத்து மேசைமீது வைக்கிறாள். ஊறுகாய்கள்.... தயிர்...
“ஹாய், இது என்ன ஊறுகாய் கிரி?”
“ஸ்விட் நெல்லிக்காய். நீ உட்காரு, நான் பரிமாறுவேன்.”
“நத்திங் டுயிங். ஏன் என்னுடன் சாப்பிடக்கூடாதா? இவக்கா எவனையோ கட்டிண்டா, நீ சாப்பிடக் கூடாதுன்னு மாமியார் சொன்னாளா?”
உண்மையில் இவள் வருகையில் தனது பல நாளைய வெறுப்பும் பொருந்தாமையும் ஓர் எல்லைக்கு வந்து விடுமோ என்று கிரி இப்போது அஞ்சுகிறாள்.
“உனக்கென்ன பிடிவாதம்?...அந்த அழுக்குச் சமையல் அறையில் கீழ உட்கார்ந்து, எல்லோருக்கும் எல்லாம் வைத்து விட்டு மிச்சம் மீதியைக் கொட்டிக் கொண்டு சாப்பிட, நீ நாலு கால் இனமா? நீ எதற்காக எம். ஏ. பி, எட். பண்ணி, எட்டு வருஷம் வேலையும் பண்ணினே? அந்த கிரிஜா எங்கே போனாள்? இந்த மொட்டைக் கிழத்துக்கு ஏன் இப்படிப் பயப்படனும? உனக்குச் சிந்திக்கும் அறிவு இல்லே? ஓ...கமான் கிரி...?”
இப்படி அவளிடம் யாராவது ஒரு நாள் பரிவு காட்டி இருக்கிறார்கள்? பெற்ற பெண் குழந்தைகள், கணவன், மாமியார்-?
எல்லோருக்கும் அவள் கடமைப்பட்டவள். பிரசவ காலத்தில் கூடத் தாயார் வந்து இருபத்திரண்டு நாட்கள் மட்டுமே இருந்திருக்கிறாள். பிறகு மெள்ள மெள்ள அவள் தன் வேலை, குழந்தை வேலை என்று கவனித்துக் கொள்வாள். இரண்டு மாசங்களில் முழு ‘சார்ஜை’யும் ஏற்றுக் கொள்ள வேண்டும்!
அந்தக் காலத்தில் அவள் கணவனுக்குச் சென்னையில்தான் அலுவலகம் இருந்தது. இரண்டு பெண் குழந்தைகளும் சேரிக் குழந்தைகள் போல் உடம்பில் துணியில்லாமல் இருக் கும். கிரிஜாவுக்குத் தன் சிநேகிதிகளோ. மாணவிகளோ எவரேனும் வந்துவிட்டால் வெட்கம் பிடுங்கித் தின்னும்!
பிறகு குழந்தைகளைக் கண்டித்துத் தன்னைத் தொடக் கடாது என்று பழக்கப்படுத்தினாள். பெண் குழந்தைகள். அவர்களுக்கு இளமையில் தாயின் அன்பான அரவணைப்பும் தொட்டுணரும் மகிழ்ச்சிகளும் அந்த இளம் பருவத்தில் மறுக்கப்பட்டன! இப்போது ஆண்குழந்தை என்று ‘பரத்’துக்கு அந்தக் கண்டிப்பு இல்லை! துணி படாமல் தெர்டலாம். தொட்டாலும் பிள்ளைக் குழந்தை!
“ஸ்வீட் நெல்லிக்காய் வொண்டர்ஃபுல்...கிரி! என்ன சும்மா ஷ்... என்ன இது? எதுக்குக் கண்ணிர் விடறீங்க? இதுதான் எனக்குப் பிடிக்கல...”
கிரி வெட்கத்துடன் கண்களைத் துடைத்துக் கொள்கிறாள். தட்டை இழுத்துக் கொண்டு பரிமாறிக் கொள்கிறாள்.
“...நீங்க எக்ஸ்லண்ட் குக் கிரி. சாம்பாரும், இந்த சீஸ் கறியும் பிரமாதமாயிருக்கு. இதுல என்ன போட்டிருக்கிறீங்க?
“வேறும் வெங்காயமும் பட்டாணியுந்தான்.”
மேசையில் இவளுடன் அமர்ந்து, எச்சிலுமில்லை, பத்து மில்லை என்று எல்லாவற்றையும் ஒரே கையினால் தொட்டுக் கொண்டு சாப்பிடுவதை மாமியார் எழுந்து வந்து பார்த்து விடுவாளோ என்ற குற்ற உணர்வு முள்ளாகப் பிடுங்குகிறது.
ரத்னா ஒரு கையால் தட்டைப் பிடித்துக்கொண்டு சோற்றைத் துவையலுடன் கலந்துகொண்டு, அதே கையினால் சாம்பாரையும் எடுத்து ஊற்றிக் கொள்கிறாள். ரசித்துச் சாப்பிடுகிறாள்.
“இப்படிச் சாப்பிட்டு... வருஷங்கள் இருக்கும்...ரொம்ப நல்ல காம்பினேஷன் இந்த சாம்பாரும் துவையலும்!”
பாராட்டுக்களை அள்ளிச் சொரிகிறாள். கிரி தனது சாப்பாட்டை ஐந்தே நிமிடங்களில் முடித்துக் கொள்கிறாள். ஆனால் அவள் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டு, கபட மற்ற அவள் தன்மையினால் கவரப்பட்டவளாக அமர்ந்திருக் கிறாள், வாழ்க்கையை நேராக நின்று அறை கூவல்களைச் சமாளிக்கும் துணிவு அவளிடம் இருக்கிறது. தான் மட்டும் ஏணிப்படி அஞ்சிக் குறுகிக் கூனிப் போக வேண்டும்...?
தட்டைச் சுந்தமாகத் துடைத்துவிட்டுக் கை விரல்களை யும் நாக்கால் நக்கிக் கொண்டு ரசிக்கிறாள் ரத்னா.
“கொஞ்சம் தயிரும் சாதமும் போடட்டுமா?”
“ஒ...நோ...வயிறு ஃபுல் கிரி. இனிமேல் இடமில்லை...”
“பாயசம் சாப்பிடு...?”
“ஓ!, அது வேற இருக்கா? சரி கிண்ணத்தில் கொஞ்சமாக விடுங்க!”
கிரியும் சிறிது கிண்ணத்தில் ஊற்றிக் கொள்கிறாள்.
நெள... டெல் மீ கிரி, உங்க அறிவு, உங்க திறமை எல்லாம் இந்தச் சமையலறைச் சேவகத்தில் முடங்கி இருக்கே. கிரி, ஆர் யூ ஹேப்பி வித் திஸ் லைஃப்?”
கிரிக்கு மீண்டும் கண்ணிர் கொப்புளிக்கிறது. வேதனை யுள்ள இடத்தை நேரடியாகக் குத்திக் கொண்டு வருகிறாள் ரத்னா. --
“...இந்த கிழத்தை, மொட்டைத், தலையைக் கண்டால் எப்படி ஆத்திரம் வருதுங்கிறீங்க? இதுவே போயி தலைய மொட்டையடிச்சிட்டு வந்திருக்கு. சாமிகளைப் பார்க்கணும்னு. கிரி எனக்கு இதுக ஸைகாலஜியே புரியல. அப்பெல்லாம். அந்தக் காலத்தில தாத்தா செத்துப் போனப்ப இவளுக்கு அதெல்லாம் பண்ணக் கூடாதுன்னு காவலா நின்னாராம். நான் சின்னவ, எனக்கு அவ்வளவா விவரம் தெரியல, உண்மையில எங்கப்பா அம்மாவை தாத்தாவை விட்டுப் பிரிச்சு, அடிச்சி விரட்டியதே இவதான். அப்பா பேரிலே தப்பு இருந்திருக்கும். இல்லேங்கல; ஆனாலும் இவளுக்கு என்னிக்குமே குடிலமான எண்ணந்தான். சிரிச்சே பார்த்ததில்ல...பாட்டின்னா, கிட்ட வராதே தொடாதேன்னு பயந்தான்...”
“இப்ப இதெல்லாம் எதுக்கு ரத்னா? நீ எழுந்து கையலம்பு...!”
“கை கழுவுறது கிடக்கட்டும். உங்களைப் போல எம் ஏ. பி. எட். படிச்சி சுயமா எட்டு வருஷம் வேலை செய்யிறவ, இவளுடைய முட்டாள்தனமான ஆசாரத்துக்கு உட்படுவாளா? இது என்ன மடி. ஆட்களை வதைச்சிட்டு? இவ பிள்ளை, அங்கே இங்க போறானே, மாட்டுக் கறியும், பன்னிக் கறியும் சாப்பிடாமலா இருப்பான்? உங்களை இப்படி வதைக்கிறது மட்டும் என்ன நியாயம்?”
“அடீ, ரத்னா...கத்தாதே. அவ காதுல விழுந்துடப் போகுது...இப்ப எதுக்கு ரகளை வீணா?”
இனிப்பும் கரிப்புமாகக் கண்ணிர் பொங்கச் சுண்டி எறிகிறாள். ரத்னாவைத் தழுவிக் கொள்ள வேண்டும்போல் இருக்கிறது. இந்த ஈரமற்ற மடிக் கூட்டில் மனித சிநேக மில்லாமல் தவிக்கும் அவளுக்கு, சிநேகத்தின் இழைகள் இன்னும் தாபத்தைக் கிளர்த்துகின்றன. -
“கேட்கட்டுமே...? அப்படியானும் இந்த மாமியார், பெரிய அறிவாளி இண்டலக்சுவல், ஏகப்பட்ட சமூக-பதவிப் பொறுப்புக்களை ஏற்றவர். அவருக்கு ஊழியம் செய்வது ஒரு கடமை என்றிருந்தாலாவது, நாம் ஒப்பலாம். அதுவும் கூட நாம் தன்மானத்தைக் கொல்ல வேண்டியதில்லை. ஆனா... இங்க என்ன? நீங்க எவர் வீட்டுப் பெண்ணோ? இவ பையன் தாலிக் கட்டியதால அடிமை...அம்மா முன்ன ஒருக்க மட்ராசில வந்தப்ப பார்த்தாளாம். கவிதாவும் சாருவும் பாவம், உடம்பிலே துணியில்லாமே மழைத் தண்ணியிலே அலைஞ்சு நெஞ்சு கட்டியிருக்கு. ஒரு கம்பளிச்சட்டையை பாந்தமில்லாம போட்டி வச்சிருக்கா’ன்னு வேதனைப்பட்டாள்...இந்த யுகத்தில் எந்தப் பொண்ணானும் உங்களைப் போல் இருப்பாளா?”
“டெல்லிக்கு வந்தப்புறம் கொஞ்சம் மட்டு. பரத்துக்கு ஒண்ணுமே கட்டுப்பாடு இல்லை.”
“புள்ள சாதிக்கப்பெ போறான். இவ புள்ள ஒரு பெண்ணைக் கட்டி அவளை வதைக்க முழு அதிகாரமும் குடுத்திருக்கான்ல? கிரி, சாமு ஒண்ணுமே சொல்ல மாட்டானா?”
“... ஐயோ! எங்கம்மா வயசானவ. அவ இருக்கிற கொஞ்ச வருஷம் நாம் அவ இஷ்டப்படி தான் நடக்கணும்னு கல்யாணம் ஆன அன்னிக்கே சொல்லிட்டார்...”
கொஞ்ச காலம்னு நூறு வயசு அவ ஜம்முனு கொடுங்கோல் ராணியா இருப்ப. நீங்க இருக்க மாட்டீங்க! அற்பாயுசில தேஞ்சு போயிடுவீங்க! அவ புள்ள தெரிஞ்சுப்பானா! நான் இப்ப வந்து, கேக்காமயா இருப்பேன்?”
“ரத்னா, ப்ளிஸ், நீ பாட்டில எதையானும் சொல்லிட்டுப் போயிடாதேடீ! குடும்ப ‘ஹார்மனி’ முக்கியம்...”
“அந்த ‘ஹார்மனி’ நீங்க வெறும் பூச்சியா, மீெஷினா உழைக்கிறதிலதான் இருக்குன்னா, அது கேவலம். எல்லா சுரங்களும் ஒத்து இணைஞ்சாத்தான் ‘ஹார்மனி’ங்கற அம்சம் வரும். ஒரே பார்வையில் ‘ஹார்மனி’ கிடையாது!”
ஒரே போடாகப் போட்டு விட்டு ரத்னா எழுந்து செல்கிறாள்.
-------------
அத்தியாயம் 3
பகல் மூன்றடிக்கப் போகிறது. மாவரைக்கும் கிரைண்டர் பழுதாகிக் கிடக்கிறது. ‘எலெக்ட்ரிஷிய’னுக்கு நேரில் போய்ச் சொல்லிக் கூப்பிட்டு வரவேண்டும். நேரமில்லை.
அடுப்பில் எண்ணெய்ச் சட்டியை வைத்து, தேன் குழல் பிழிந்து கொண்டிருக்கிறாள் கிரி. ரத்னா சற்றே படுத்து எழுந்து முற்றத்துத் துணிகளை எடுத்து மடிக்கிறாள். ரோஜா மாமி வருகிறாள் போலிருக்கிறது. இலேசான வெளிநாட்டு ‘சென்ட்’ மணம் காற்றில் தவழ்ந்து வருகிறது.
சமையலறையிலிருந்து வெளிப்பட்டு, கிரி சாப்பாட்டுக் கூடம் கடந்து மொட்டை மாடிக்குச் செல்லும் வாயிலில் நின்ற படியே பார்க்கிறாள். அங்கிருந்து பார்த்தால் மாமியார் அறை தெரியும். மருதோன்றிச் சிவப்பில் பட்டுச் சேலை தெரிகிறது. இவள் மட்டும் வந்தால் நேராக மாமியாரின் அறைக்குப்போய் விடுவாள். பிரதான வாசலில் வந்து மணியடிக்கும் சமாசாரம் கிடையாது. அந்த அறைக்கு மாடிப்படியில் இருந்து நேராகப் போய்விடலாம்.
“இப்ப மூணு நா சேர்ந்தாப் போல லீவா இருந்தது. போக முடியல, எங்கும். யாராரோ வெளிலேந்து வந்திருக் காப்பல. அசைய முடியாதுன்னுட்டார். அடுத்த வாரம் தான் பார்க்கணும்...”
“எனக்குக்கூட பார்க்கணும்னு இருக்கு எல்லாத்துக்கும் குடுப்பின வேணும் ரோஜா. நினைச்சாப்பல எங்க நடக்கறது.”
“உங்களுக்கென்ன பாட்டி, சாமு வந்ததும் கார்லயே ஒரு நடை போயிட்டு வந்துடலாமே? இல்லாட்டா இருக்கவே இருக்கு எங்க கூட வந்துடுங்கோ!”
“என்னமோ, பெத்த பெண்ணுக்கு மேல நீதான் கவனிச்சிக்கிற?”
“இது என்ன பிரமாதம்? உங்களப் பார்க்கறது எனக்கென்னவோ தாயாரப் பார்க்கிறாப்பில இருக்கு, பெரியவாளுக்குச் செய்யக் குடுத்து வச்சிருக்கணும். கோதுமைப் பாலெடுத்து இதை கிளறினேன், ஆறித் துண்டு போடக்கூட நிற்காம அவசரமா இத்தனை டப்பியில போட்டு எடுத்துண்டு வரேன். வாயில போட்டுண்டு பாருங்கோ...இவாள்ளாம் கோவாவும் பன்னிரும் கடையில வாங்கிப் போடுவா. உங்களுக்குத் திங்கறதுக்கில்ல. அதுக்காக நான் தனியாவே ரெண்டு பாக்கெட் பாலை வாங்கிக் கோவா கிளறினேன்...”
மாமியார் அவள் கொண்டு வந்து கொடுக்கும்: பண்டத்தை வாயில் போட்டுக் கொள்கிறாள்.
“நீ பண்றதுக்குக் கேக்கணுமா ரோஜா? பத்து விரலும் பத்துக் காரியம். அம்ருதமாக இருக்கு...” கிரிக்குப் பொறுக்க வில்லை. அந்த வாயிற்படியில் போய் நிற்கிறாள்.
“மாமி எப்ப வந்தாப்பல? உங்களுக்கு அம்மாவப் பார்த்துட்டுப் போனாப் போறும்...!”
“உனக்குத்தான் சிநேகிதி யாரோ வந்திருக்காப்பல... ‘பிஸி’யாக இருக்கே?”
துணி மடித்த கையுடன் ரத்னா அப்போது உள்ளே வருகிறாள்.
“பாட்டி! என்ன? எப்படியிருக்கிறீங்க? நான் உங்க பேத்தி ரத்னா...!”
பாட்டி அவளை ஏற இறங்கப் பார்த்துத் தலைத்துணியை ஒர் அசைப்புடன் இறங்கிக் கொள்கிறாள்.
“அதான் வந்து எட்டு மணி நேரம் கழிச்சுக் குசலம் விசாரிக்கிறியாக்கும்? எங்க வந்தே இப்ப?”
“இங்கே இருக்க வந்திருக்கிறேன். ஏன், வரககூடாதா பாட்டி?”
பேஷா இருக்கு. உன் சித்தி இருக்கா, ஈஷிண்டு எல்லாம் செய்வா. என்னை எதுக்குக் கேக்கற? என் வீடா இது? நான் ஒரு மூலைல யாரு வம்பும் வேண்டாம்னு தான் ஒதுங் கிட்டேனே?”
“ஐயய்யோ? நீங்க ஏன் பாட்டி ஒதுங்கணும்? ராணி மாதிரி அதிகாரம் பண்ணுறிங்க... ஒதுங்குவானேன்...”
“கேட்டியாடி ரோஜா அக்கிரமத்தை? நான் ராணி மாதிரி அதிகாரம் பண்ணுறேனாம்? ஏண்டியம்மா? உங்கம்மா சொல்லிக் கேக்கச் சொன்னாளா? எந்தனை நாள் என் அதிகாரத்தில் இருந்தா?”
“எங்கம்மாவ நான் சொல்லல...
அவள் அடுத்து பேசு முன், கிரி அஞ்சிக் கொண்டு அங்கிருந்து அகலுகிறாள்.
பாவம்! சித்திக்கு உங்களைக் கண்டு எத்தனை பயம் பாருங்க!”
“போடி அசத்து... அவளுக்கு என்ன பயம்? எட்டுருக்கு சாமர்த்தியக்காரி. எங்கிட்ட வாயை மூடிண்டு நடிக்கிறாள். அவன் என்னமோ நிக்க நேரமில்லாம எங்கியோ சாப்பிட்டு எங்கேயோ தங்கி அலையறான். அந்தக் காலத்துப் போல என்ன கஷ்டம் இப்ப வீட்டுக் காரியம்? எல்லாம் சுவிச், காஸ் அடுப்பு. நிமிஷமா ஆகற பிரஷர் குக்கர். வெய்லுக்குக் கூலர், குளிருக்கு ஹீட்டர். என்ன கஷ்டம் இவாளுக்கு?”
“அதான் மத்தியானத்திலேயே படுக்கையில போயிப் படுத்துக்கறா. எனக்கு என்னமோ புடிக்கிறதில்லை. என்ன ஏன் முன் ரூமுக்கு வரதில்லைங்கறாளே? இந்த சோபா, குஷன்...எவால்லாமோ உக்காரற எடத்தில எப்படி உக்கார? இங்க இந்த பிரம்பு சேர்தான் என் மனசுக்குப் பிடிக்கறது. எங்க வீட்டிலும் எனக்குன்னு பிரம்பு பின்னின சோபா-அம்மாவோடதுன்னு அதுல யாரும் உக்கார மாட்டா?” என்று ரோஜா மாமி ஒத்துப்பாடுகிறாள்.
“ரெண்டு பொண்ணு. அதிலயும் கவி மேஜராயாச்சு. ஒண்ணு தெரியல. எதானும் சொன்னா, போ பாட்டி, வா பாட்டிங்கும். ஆனால் மனசு கிடந்து அடிச்சிக்கிறது; தங்கம் என்ன விலை, வயிரம் என்ன விலை! இதுகளக் காது மூக்கு ஒக்கிட்டு காலாகாலத்தில கட்டி வக்கணுமேன்னு...இவாளப் பாரு!அக்காக்காரி...சொல்லப்படாது. எவனையோகட்டிண்டு குடும்பத்துக்கே அநாசாரமாயாச்சு. இவ...வயசு முப்பதா யாச்சு...ஒரு கட்டா காவலா கிடையாது...எனக்கு. ஏண்டாப்பா இதெல்லாம் பாக்கணும்னிருக்கு! ஒரு எச்சிலா, திட்டா, ஒரேழவுமில்ல. நூறு வியாதி ஏன் பிடுங்கித் தின்னாது? பரத்துக்கு ஒன்பது வயசாகல. பிள்ளைக் குழந்தை கண்ணாடி போறனும்ங்கறா...இப்பவே, இப்படி அநாசாரம் கலந்தா?” முட்டாக்கை இழுத்துக் கொண்டு முதியவள் வெறுப்புடன் திரும்புகிறாள்.
கிரிஜா, பாட்டிக்குப் பூரி இட்டுக் கொண்டிருக்கையில் குழந்தைகள் வந்து விடுகிறார்கள். ரத்னாவைக் கண்டதும் இரண்டு பெண்களுக்கும் ஒரே சந்தோஷம். அவர்கள் அறை யில் இவளால் ரசிக்க முடியாத மேற்கத்திய ரஞ்சக இசை முழங்குகிறது. ட்ரம் அதிரும் ஒசை குதித்துக் குதித்து இளைஞர் பாடும் குதுகலம்.
“என்னம்மா டிபன்?”
“பூரி பண்ணிருக்கேன். தேங்குழல் இருக்கு...”
“போம்மா, போர்? வெஜிடபிள் பஃப் பண்ணிலியா?...”
“இருந்த பட்டாணியக் காலம சீஸ் கறிக்குப் போட்டுட் டேண்டி...! பால்ல போட்டுத் தரேனே?”
“வேனாம் போ!”
காபியை மட்டும் பருகிவிட்டுப் போகிறார்கள். சற்றைக் கெல்லாம் மூவரையும் கூட்டிக் கொண்டு ரத்னா வெளியே செல்கிறாள்.
ஆறு ம்ணிக்குள் மாமியார் பலகாரம் முடிந்துவிடும். பாவில் நனைத்த பூரியுடன் கிரிஜா மாமியாரை உபசரிக்கப் போகிறாள். கிழவி கைகால் சுத்தம் செய்து கொண்டு நெற்றியில் புதிய விபூதியுடன் வாசல் பக்கம் உட்கார்ந்து வெளியே பார்க்சிறாள்.
“அம்மா... பூரி எடுத்துக்கறேளா?”
“எனக்கு வேண்டாம்...!”
தலை திருப்பலைக் கண்டதும் சுர்ரென்று கிரிஜாவுக்கு. பற்றிக் கொள்கிறது. விழுங்கிக் கொள்கிறாள். “ஏன் வேண்டாம்?”
“வேண்டாம்னா பின்னையும் பின்னையும் ஏன்னு என்ன கேள்வி? தினம் தினம் தின்ன்றாது. எங்கையில பண்ணிக்க முடியாதபோது என்ன வேண்டியிருக்கு? எனக்கு நீ உபசாரம் பண்ண வேண்டாம். போ!”
ஒரு பிரளயமாகும் ஆவேசம் அவளுள் கிளர்த்தெழுகிறது.
“நான் அவா மேல இவா மேல பட்டிருப்பேன். முழுகித் தொலைக்கலங்கறேளா” என்று சொற்கள் வெடித்து வரத் தயாராக இருக்கின்றன. உதட்டைக் கடித்துக் கொள்கிறாள். கிரிஜா பொறுப்பாள். ஆனால் அரணை உடைத்து விட்டால் பிறகு சமரசத்துக்கு இடமில்லை. அரண் அவளை உள்ளே இழுக்கிறது. தள்ளிக் கதவைச் சாத்துகிறது.
சமையலறையில் கொண்டு வந்து அவற்றைத் திரும்ப வைக்கிறாள். ரத்னாவும் குழந்தைகளும் வரும் கலகலப்பு செவிகளில் விழுகிறது.
“ஹாய் மம்மி! உனக்கு வெஜிடயிள் பஃப் கரம் கரமா வாங்கிட்டு வந்திருக்கிறோம் ..”
“சாதாரணமாக என்றேனும் அவர்கள் வெளியில் சென்று இதுபோல் எதையேனும் வாங்கி வந்தால் கிரிஜா ஒதுங்கிக் கொள்வாள். “போதும் மேலே வந்து விழனுமா? உள்ள கொண்டு வை!...” என்பாள்.
குழந்தைகளோடு தானும் இம்மாதிரி ஒரு குழந்தையாக உண்டு களிக்கும் நாட்கள் இவள் குடும்பத்துக்கு வரவே யில்லை.
“கிரி, குழந்தைகள் ஆசையா அம்மாவுக்கு வாங்கிட்டு வந்திருக்காங்க. வாங்கிச் சாப்பிடு. அடி மக்குகளா, பிளேட் வச்சு எல்லாருக்கும் எடுத்து வையிடி!”
சாரு தட்டுக்களைக் கொண்டு பரப்புகிறாள்.
கார சமோசா, மலாய் பர்ஃபி.
ரத்னா, சர்பத்தைக் கலக்கி ஐஸ் துண்டு போட்டு வைக் கிறாள். “எனக்கு ரோஸ்மில்க் ஆன்டி!” என்று பரத் அவளை ஒட்டிக் கொள்கிறான்.
கிரிஜா எல்லோருடனும் உட்கார்ந்து மகிழ்ச்சியில் கலந்து கொள்கிறாள். முன் அறையில் அமர்ந்து தொலைக் காட்சியில் வரும் தொடர் நிகழ்ச்சியைப் பெண்களின் கூச்சலான விமரிசனங்களுடன் ரசிக்கிறாள். நத்தைக் கூட்டை உடைத்துக் கொண்டு அவள் அவளாக இருக்க முயன்றாலும் ஏதோ ஒர் இடி-மழைக்கு வானம் கறுத்து எங்கோ முணுக் முணுக்கென்று மின்னல் ஒளி வயிர ஊசி பளிச்சிடுவது போல் உணர்வில் ஒர் அச்சம் தோன்றிக் கொண்டிருக்கிறது.
-------------
அத்தியாயம் 4
இன்றும் மாயா குழந்தைக்கு உடல் நலமில்லை என்று துணி துவைத்து உலர்த்தாமல் போய் விட்டாள். கிரிஜா முற்றத்துத் துணிகளை எடுத்து மடித்து வைக்கையில் ரோஜா மாமி வந்திருக்கும் குரல் கேட்கிறது.
“கேட்கவே சங்கடமாயிருக்கே! நீங்க என்ன, பஞ்சபட்சம் பரமான்னமா கேட்கறேள்? ஏதோ இத்தனை உப்புப் பண்டம், சுத்தபத்தமா இருக்கணும்னு பழகியிருக்கேள். அதுக்காக பட்டினி கிடக்கும்படி விடுவாளா? மாமி, உங்ககளுக்குச் செஞ்சு நான் குறைஞ்சு போயிடமாட்டேன். நீங்க தாயாரைப் போல. சாயங்காலம், நான் ஒரு நடை வந்து, ஏதோ பத்தில்லாத பலகாரமா, பூரியோ, கேசரியோ, அவல் கஞ்சியோ கொண்டு குடுத்திட்டுப் போவனே...?”
கிரிஜாவுக்குத் திக்கென்று நெஞ்சில் இடிக்கிறது. ரத்னா யுனிவர்சிடிக்குப் போய்விட்டாள். குழந்தைகளும் இல்லை. இப்படி ஒரு திருப்பமா முந்தையநாள் நிகழ்ச்சிக்கு?
“அவ என்ன செய்வா, ரோஜா? அந்தத் தறுதலை, ஏதோ கெடுதலுக்கு வந்து சேர்ந்திருக்கு. கிரி இல்லாட்டா இத்தனை வருஷத்தில, இப்படி, ஒண்ணும் ஆகாரமில்லாத படுத்துக்க விட்டதில்ல. சந்தேகமா இருந்தா, குளிச்சிட்டு வந்து பண்ணிக்குடுப்ப. இப்ப இது என்ன காலத்துக்கு வந்திருக்கோ தெரியலே...கவிதாவும் சாருவும் எட்டிப்பார்க்காதுகள். அதுங்க டிரஸ்ஸும் கண்ராவியும்! குதிராட்டம் வளர்ந்து, கவுனப் போட்டுண்டு கடத்தெருவெல்லாம் சுத்தறதுக. நேத்து, நான் பட்டினி. அவாள்ளாம் கடையில போயி என்னத்தையோ வாங்கி வச்சிண்டு, அதென்ன சிரிப்பு, கத்தல், கும்மாளம்? இப்படி கிரி கிரிசை கெட்டுப் போவான்னு நான் நினைக்கல. இன்னும் என்ன வெல்லாம் பார்த்துண்டு நான் உக்காந்திருக்க்ப் போறேனோ...?”
'த்ஸொ...த்ஸொ...பாவம், நீங்க கண்கலங்கினா எனக்கு மனசே எப்படியோ வேதனை பண்றது! என்னமோ சொல்வா, அந்தக்காலத்திலே, புருஷன் இல்லாத புக்ககக் கொடுமைன்னு’ இது பிள்ளை இல்லாத மாட்டுப் பெண் கொடுமையா? வ்யசாணவாளப் பட்டினி போட்டுட்டு, எப்படி மனசு வந்தது? நான் கூப்பிட்டுக் கேக்கறேனே...?”
"ஐயோ, வேண்டாம்மா, ரோஜா, அவன் ஊரிலேந்து வந்தா இப்படி இவ்வளவுக்கு இருக்க மாட்டா. அந்தச் சனியன முதல்ல அடிச்சி வெளில துரத்தச் சொல்றேன்...”
இதற்கு மேல் கிரிஜாவினால் பொறுக்க முடியவில்லை.
“என்ன மாமி, நானே வந்துட்டேன். கேளுங்க என்னன்னு?” ரோஜாமாமி, பளிச்சென்று ஒரு சிரிப்பை மலர விடுகிறாள். “ஏம்மா, மாயா வரலியா? நீயே துணி மடிக்கிற?” சுருதியே மாறிவிட்டது. பளிர் குங்குமம், போலிச் சிரிப்பு. சதை சுருங்கிப் பழுத்த முகத்தில் என்ன மேக்கப்? கூந்தல் சாயம், இயற்கைப் புருவங்களை அழித்து பென்சிலால் வளைத்துக் கொண்டு, கிழக்குரங்கு, வேடம் போட்டுக் கொண்டு, போலியாகச் சிரிக்கிறாள். கிரிக்கு எரிச்சல் கிளர்ந் தெழுகிறது. “ஏன், மாயா வரலியா?”
“...நேத்து, பூரியும் பாலும் பண்ணிக் கொண்டு வந்தா வேண்டாம்னு சொல்லிட்டு உங்ககிட்ட இப்ப பட்டினி போட் டான்னு சொல்றார்... நீங்க, நிசம்னு நினைப்பீங்க...”
ரோசமும், துயரமும் துருத்திக் கொண்டு வந்து குரலை நெகிழச் செய்கின்றன, கிரிஜாவுக்கு. அவளைப் போல் வாழைப்பழ ஊசியாகப் பேசத் தெரியவில்லை.
“இதபாரு, கிரி. மனசில எதையும் வச்சுக்காம சொல்லிடறது நல்லது. இவ யாரு இந்த வீட்டு விஷயத்தில் தலை யிடன்னு நீ நினைக்கலாம். நீ இந்த வீட்டுக்கு வரதுக்கு முன்ன நான் இங்க பெண்ணாய்ப் பழகினவள். உன் மாமனார் என்னை மூத்த பொண்ணுன்னுதான் சொல்வார். ஏன், இந்த டில்லியில், எங்கப்பா என்னைக் கல்யாணம் பண்ணிக் கொண்டு விடறப்ப, இவ வீட்டில்தான் கொண்டு விட்டா, அப்புறம்தான் நான் தனிக்குடித்தனமே போனேன். அப்ப ராமகிருஷ்ணபுரமே கட்டியாகல. இந்த இடமெல்லாம் காடு. தை மாசம் எங்கப்பா என்னைக் கூட்டிண்டு வரச்சே, குளிர் நடுக்கிறது.மாமி அன்னிக்கு ஒரு அவியல் வச்சு தேங்காய்பால் பாயசமும் வச்சிருந்தா, பாரு, இன்னிக்கும் நாக்கை விட்டு அந்த ருசி பிரியலே. நவராத்திரி ஒம்பது நாளும் இங்கத்தான் இருப்பேன். இவாளுக்குப் பெரிய குவார்ட்டர்ஸ், கர்ஸான் ரோடில. அவர் ஸ்கூர்ட்டர்ல கொண்டு விட்டுட்டு ராத்திரி வந்து கூட்டிண்டு போவார். அவர் முதமுதல்லே மூணுமாசம் ஜப்பானுக்குப் போனப்ப, நான் இவகூடத்தான் இருந்தேன். சாமு ஸ்கூலுக்குப் போகு முன்ன சாப்பிடமாட்டான், படுத்துவான். ரொட்டியத் தட்டி ஊறுகாயத் தடவி டப்பில வச்சுக்குடுப்பேன்.”
இந்த உறவுத் தொடர்பு சலுகைகளை வெளியே வீசி, ‘உனது உரிமைக்குமேல் எனக்குச் சலுகை’ என்று நிலை நாட்ட முயலுகிறாள் ரோஜாமாமி!
“அந்த நாளிலும் மாமி மடிதான். இந்தக் குளிரில் மாமா எழுந்து தனுர்மாச பூசை பண்ணுவார். மாமி பொங்கல் பண்ணுவாள். விடியரப்ப காம்பவுண்டில கோலம் பிரமாதமா இருக்கும்...”
“இதெல்லாம் இப்ப எதுக்கடீ, ரோஜா? அப்ப வாழ்ந்தது பொய்யும், இப்ப வாழுவது மெய்யுமாப் போச்சு...! ஆச்சு, அவர் போயி இருபது வருஷம் ஆகப்போறது.”
“சரயு கல்யாணத்துக்கு இருந்தா, சாமு எம். ஏ. சேர்த்திருந்தானா, படிச்சு முடிச்சிட்டானா?”
“அவன்தான் மெட்றாசில ஸி.ஏ. பண்ணிட்டிருந்தானே...? ஒரே நாழி அஸ்தமனம் ஆயிட்டது. கிடந்தாரா, கொண்டாரா?...”
கிழவி இதைப் பலமுறைகள் சொல்லிக் கேட்டாலும், அதன் சோகம் இப்போதும் கிரிஜாவுக்குப் புதிதாகக் கேட்பது போல் நெஞ்சைத் தொடுகிறது!
“மஞ்சளும் குங்குமுமா முன்னாடி போகக் குடுத்து வைக்கல. இப்படி ஒரு பாழும் ஜன்மம்...!” அளிந்த பழமான கண்களில் நீர் தளும்புகிறது.
புடவைத் துண்டத்தினால் கண்களைத் துடைத்து கொள்கிறாள்.
“அவள் சிறிசு. வருத்தணும்னு எனக்கு ஆசையா? இப்பல்லாம் தலை வச்சிண்டு, ரவிக்கையும் செருப்பும் போட்டுண்டு, எங்கவாண்ணாலும் எப்பவாண்ணாலும் சாப் பிட்டுண்டு எல்லாரும் இருக்கா. எனக்குக்கூடத்தான் சரயு கல்யாணம் ஆகறதுக்கு முன்னே இந்தக் கோலம் வாண்டாம்னு எல்லாரும் சொன்னா, இருந்தேன், சபையில வர முடியுமோ? அது அப்பவே போயாச்சு. முள்ளுமேல இருக்காப்பல இருந்தது, இந்த முடி ஈரம்-ஒரு துளி நீர் பூமில தெறிச்சால், அவர் பதினாலாயிரம் வருஷம் ரெளரவாதி நரகத்தில் தவிப்பாளாம். அந்தப் பாவத்தை நான் சுமக்கணு மோடி அம்மா? பொண்ணாப் பிறந்த ஜன்மாவில வேற என்ன இருக்குன்னு ராமேசுவரம் போய்த் தொலைச்சிண்டு வந்து, பெரியவாகிட்டத் தீர்த்தம் வாங்கிண்டேன்...? அவளக் கஷ்டப்படுத்த வேண்டியிருக்கு. இன்னும் பிள்ளைப்பேறு வயசு மாறல. ஸ்நானம் பண்ணாத்தான் மடி. ரோஜாக்குன்னா அதெல்லாம் தாண்டியாச்சி...”
இனி மேல் இல்லை, இல்லை-என்று சொல்லிக் கொள்ளும் அளவுக்கு, கிரிஜாவின் பகுத்துணர்வு மங்கி: அறிவு குழம்ப, நெகிழ்ந்து போகிறாள்.
-------------
அத்தியாயம் 5
“உள்ள வாங்க அபு! கமின்!” கிரிஜா ரத்னாவின் குரலில் கைவேலையை விட்டு, வெளியே வந்து பார்க்கிறாள். உயரமாக, மூக்குக் கண்ணாடி, பிடரியைத் தொட்டுப் புரளும் முடி, முன்பக்கம் லேசாக இருகோணங்கள் உள்ளடங்க முதிர்ச்சி காட்டும் நெற்றி, ஜிப்பா, ஜோல்னாப் பை என்று ஒர் இளைஞன் நிற்கிறான்.
“வாங்க ஆன்டி, இவர் அபு...இவரும் என்னைப் போல் ஒரு ப்ராஜக்ட் பண்ணுறார். இவர், கிரி ஆன்டி...”
அவன் கை குவிக்கிறான்; கிரி புன்னகையுடன் தலை யசைத்து வரவேற்று முன்னறையில் உட்காரச் சொல்கிறாள்.
"...உங்க காஃபி நேர்த்தியைச் சொல்லிக் கூட்டிட்டு வந்தேன் கிரி ஆன்டி.”
சிரிஜா மென்மையாகப் புன்னகை செய்கிறாள்.
“உங்களைப் பற்றி ரத்னா நிறையவே சமாசாரம் சொன்னாள்!” அவன் தமிழில்தான் பேசுகிறான்.
கிரிஜா உள்ளே வந்து, காபி கலக்கச் சித்தமாகிறாள்.
சாரு டான்ஸ் சிளாசுக்கும், கவிதா சிநேகிதி வீட்டுக்கும் போயிருக்கிறார்கள். பரத் மேல்மாடியில் மல்ஹோத்ரா பையனுடன் பட்டம் விடுகிறான். கிரிஜா, மாமியாருக்கு சொஜ்ஜி கிளறி வைத்திருக்கிறாள். ரத்னா எல்லாம் தெரிந்து கொண்டே உள்ளே வந்து, குளிரலமாரியைத் திறக்கிறாள்.
“கிரி, எதானும் கொறிக்க இருக்கா?”
“இங்க டப்பாவில் தேன்குழல் இருக்கு பார்!”
“ஹாய், சொஜ்ஜியா ஏலக்காய் மணம் வருதேன்னு அதானே பார்த்தேன்.”
சற்றும் தயங்காமல் தட்டில் இரண்டு கரண்டியளவு வைத்துக் கொண்டு தேங்குழலையும் நொறுக்கிப் போட்டுக் கொள்கிறாள். இரண்டு தட்டுக்களையும் ஏந்திக் கொண்டு செல்கிறாள்.
“என்னைக் கேட்கக்கூடாதா, ரத்னா?”
திரும்பிப் பார்க்கிறாள்.
“உன் பாட்டி நேற்று பட்டினி கிடந்தாள் இன்று ரகளை?” அவள் பேசாமல் சிரித்த வண்ணம் முன்னறைக்குப் போகிறாள். தட்டுக்களை அங்கு கொண்டு வைத்துவிட்டு மீண்டும் குளிர் நீரெடுக்க வருகிறாள்.
“ரத்னா, உன்னால் என் நிலைமையைப் புரிஞ்சிக்க முடியாது. என் குடும்ப அமைதியில் நீ தலையிடாதே!”
“தலையிட்டுத்தான் ஆகனும் கிரி ஆன்டி. நீங்க தனி மனுஷி இல்லை. ஒரு மொத்த சமுதாயத்தின் அங்கம். அறிவுப் படிப்புப் படிச்சு, கற்பிக்கத் தெரிஞ்சவங்க. உங்க அறிவு, திறமை, எல்லாம் இப்படி முட்டாள்தன மடிக்கூட்டில் பலியா சணுமா? மனுஷருக்கு மனுஷர் வேற்றுமை காட்டும் இது நிச்சயமா தருமமும் இல்லை, மண்ணும் இல்லை. தன்னையே எப்போதும் உயர்த்திப் பிடிச்சுகிட்டு மத்தவங்களைக் காலில் தேய்க்கும் கருவம் இது. ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண்ணே விரோதியாகும் முட்டாள்தனம்!”
“நீ இப்படி இரண்டு நாள் வந்து எதையானும் சொல்லி விட்டுப்போ, நாளைக்கு உன் சித்தப்பா வந்தால், அவருக்கு அவம்மாவை எதிரிடுவதே பிடிக்காது!”
“அவர் வரட்டும். அப்ப நான் சொல்றேன். நீங்க வாங்க. அபு உங்ககிட்ட பேசனும்னிருக்கிறார். அவர் பிராது. என்ன தெரியுமா? உங்களைப்போல் படிச்சிட்டு, அந்த அறிவு எதுக்கும் பயனாகாம சமூத்திலே முடங்கிப்போற சக்திகளைப் பத்தி ஸ்டடி. பண்றது. நமக்கு இப்ப தேவையான ஆராய்ச்சி...”
கிரிக்கு மலை உச்சியின் விளிம்புக்குப்போவது போல் தானிருக்கிறது.
சற்றைக்கெல்லாம் காபியை எடுத்துக்கொண்டு போகிறாள்.
அபு எழுந்து ஒரு பணிவுடன் காபிக் கிண்ணத்தை எடுத்துக் கொள்கிறான்.
“உக்காருங்க ஆண்டி!” ரத்னா கையைப் பற்றி கோபாவில் உட்காரச் செய்கிறாள். மேலே படிக விளக்கு வெளியே யிருந்து திரையினுள்டே வரும் மாலைநேர ஒளியில் மின்னுகிறது. அறையின் நேர்த்தியான இளம் நீலமும் பச்சையும் தெரியும் பூங்கோலம் ஒட்டிய சுவர்களும், பதித்த அலமாரியின் கண்ணாடியினுாடே தெரியும் கலைப்பொருள்களும், இவளுக்கே அந்நியமாகத் தெரிகின்றன.
சுவரில் தொங்கிய ஒரு ‘பதிக்’ ஒவியத்தை அவன் சுட்டுகிறான்.
“இது...எங்க வாங்கினிங்க?”
“நாங்க வாங்கல. ஒரு ஃபாரின் சிநேகிதர் ‘பிரசண்ட்’ பண்ணினதா நினைப்பு.”
“...இது பாலி ஆர்ட்னு நினைக்கிறேன்...”
“ஒ...! நான் இதெல்லாம் கவனிக்கிறதே இல்ல...”
“அட்லீஸ்ட், இது இராமாயணக் காட்சின்னாலும் தெரிகிறதில்ல?”
“அதுதான் அநுமார் முகம் பளிச்சினு இருக்கே?” என்று ரத்னா சிரிக்கிறாள்.
“அது அதுமார்தானா..?” கிரி உற்றுப் பார்க்கிறாள். என்ன மடத்தனம்? அப்படிக்கூட இவள் கவனித்துப் பார்த்திருக்கவில்லை. அநுமாரில்லை என்றால்...?
“உங்களுக்குப் புரியல? இது சுக்ரீவன், இராமர், லட்சுமனர்...பின்னே மரங்கள் சுக்ரீவனிடம் ராமர் தன் வில் திறமையை காட்டும் இடமாக இருக்கலாம்.”
கிரிஜா உற்றுப் பார்க்கிறாள், மீண்டும்.
இராமன் அம்பை எடுத்துப் பூட்டச் சித்தமாக இருக்கும் ‘பாவம்’ தெரிகிறது. மரங்கள் ஏழைத் துளைத்துக் காட்டும் இடமோ?
“நான் இத்தனை நாள்-அதாவது அது வந்து இரண்டு வருஷத்துக்கு மேல் இருக்கும். இப்போதுதான் நீங்கள் சொன்ன பிறகு உற்றுப் பார்க்கிறேன்...” அவளுக்கு நாணமாக இருக்கிறது.
“உங்களுக்குப் பார்க்க வேண்டும்னு தோன்றக்கூட இல்லையா?”
“ஹம்...ஒரு காலத்தில் ‘பதிக்’ கிளாசுக்குப் போய் கத்துக்கக் கூடக் கத்துக்கிட்டேன்...ஆனால்...அதெல்லாம் போன ஜன்மமாயிட்டது...”
மீண்டும் வெளிறிய புன்னகை
“நீங்க... ஏழெட்டு வருஷம் டீச் பண்ணிட்டிருந்ததா ரத்னா சொன்னாள். கல்யாணத்துக்குப் பிறகு வேலை வேண்டாம்னு விட்டுட்டீங்களா?”
“கல்யாணத்துக்கு முன்பே அப்படிக் கண்டிஷனா?”
“...அ...அதெல்லாம் அப்படி ஒண்னும் இல்லை.”
“பின்ன நீங்களா விட்டுட்டீங்களா?”
கிரிக்கு ஏதோ பேட்டிக்கு முன் சங்கடப்படுவதுபோல் இருக்கிறது!
அந்தக் காலத்தில், எட்டு வருஷம் அவள் வேலை செய்த காலத்துச் சாதனையை யார் எண்ணினார்கள்? அவள் செங்கற்பட்டுக்கு அருகே ஒரு கிராமத்தில் வேலை ஏற்றுச் சென்றதும், எந்த வசதியுமில்லாமல், பள்ளிக்கூடத்துக்கு நல்ல பெயர் வாங்கியதையும் அங்கே இருந்தே எம். ஏ. ஆங்கில இலக்கியம் எழுதித் தேர்ந்ததையும் யார் பாராட்டினார்கள்?
“என்னம்மா, எங்கோ கிராமப் பொந்தில் போய் இவள் வேலை செய்வது? இங்கே பட்டணமாக இருந்தாலானும் சட்டுனு வரன் இருந்தால் அவளைப் பார்க்க வசதியாக இருக்கும்...” என்று தான் அண்ணன் குதித்தான். அக்காவோ, “இவளை யார் எம்.ஏ. எடுக்கச் சொன்னது? போஸ்ட் கிராஜுவேட் பண்ணினவனைன்னா இனிமேல் பார்க்கணும்” என்றாளாம்! “வயசு முப்பதாகிறதே! தாலி கழுத்தில் விழலியே” என்று அம்மா மாய்ந்து போனாள்.
“துர்க்கைக்கு ராகுகால அர்ச்சனை பண்றேன். ஆடி மாசம் வெள்ளிக்கிழமையில். நீ வந்து ஒரு வெள்ளியிலானும் எலுமிச்சம் பழ விளக்கேற்றி வை. சுவாமிகளே சொல்லி யிருக்கார், வர தைக்குள் கல்யாணம் ஆகும்னு என்று கடிதத் துக்கு மேல் கடிதம் அனுப்பினாள்.
அந்தச் சூழலில், அந்தப் பராமரிப்பில், அந்த நம்பிகைப் போஷாக்கில், இவளுக்கு அறிவு பூர்வமான சிந்தனை எப்படி உதிக்கும்?
தலைமை ஆசிரியர், வயது முதிர்ந்தவர். விடுப்புக்கும் தடையில்லை. ஒரு வெள்ளிக்கிழமை, எலுமிச்சம்பழ முடியைத் திருப்பி நெய்யூற்றி, சந்நிதியில் விளக்கேற்றி வைத்தாள்.
தனக்கு வரப்போகும் கணவன், முரடனாக, குடிகாரனாக, குரூபியாக இருக்கலாகாது என்று மட்டும்தான் அவளால் எண்ண முடிந்தது. சம்பாதித்த பணத்தைத் தன் பெயருக்கு வங்கியில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூட நினைக்கத் துணிந்திராத அவள், அந்த அரண் களை மீறி எப்படிச் சிந்தித்திருக்க முடியும்?
“பையன் ஸி. ஏ. பண்ணிட்டு அமெரிக்காவில் போய் மானேஜ்மென்ட் டிகிரி வாங்கியிருக்கிறான். இரண்டு பிள்ளை, ஒரு பெண். பெரியவன் கனடாவில் இருக்கிறான். இவன் இரண்டாவது. பெண்ணுக்குக் கல்யாணமாகி, குழந்தைகள் இருக்கின்றன. ஒரே மாமியார், பிக்குப்பிடுங்கல் இல்லை. கையில் காவில் என்று கேட்கவில்லை, போடு வதைப் போட்டு ஸிம்பிள் மாரியேஜ் பண்ணுங்கள் போதும்’ என்று அந்தம்மா சொல்லிட்டா...” என்று வாயெல்லாம் பல்லாக அம்மா மகிழ்ந்து போனாள்.
கல்யாணத்துக்கு முதல் நாளே, மாமியார் இவரை அழைத்து வரச் சொல்லி, தன்னுடைய ஒன்றேகால் காரட் தோட்டையும் இரட்டை மூக்குக்குமான பேசரி, முத்து மூக்குத்திகளையும் போட்டுக் கொள்ளச் சொல்லிக் கொடுத் தாள். அப்போது இவள் ஒன்றை மூக்குதான் குத்தியிருந்தாள். எடுப்பான மூக்கு “இன்னொரு மூக்கைக் குத்திண்டு, முத்து மூக்குத்தியையும் போட்டுக் கொள்” என்று சட்டமிட்டாள். இந்த வயிரங்கள். பிறந்த வீட்டுச் சுற்றத்தை வியப்பால் வாய் பிளக்கச் செய்துவிட்டன.
“கிரிஜா மாமியாரைப் போல் கிடைக்கணுமே? மாட்டுப் பெண்ணை கண்ணை இமைகாப்பது போலக் காப்பாள்! வரதுக்கு முந்தி எந்த மாமியார் வைரத் தோட்டையும் மூக்குத்திகளையும் தூக்கிக்குடுப்பா? தோடு மட்டுமே இருப துக்குக் குறையாது...” என்று சொல்லிச் சொல்லி, எந்தக் குறையுமே கிடையாது என்று தீர்த்துவிட்டார்கள்.
“அவனுக்கு அஞ்சாயிரம் சம்பளமாம் வேலையை விடணுமான்னு கேப்பாளா?” என்று அதையும் இயல்பாகத் தீர்த்து விட்டார்கள். கல்யாணம் ஆன புதிதில் சில ஆண்டுகள் பம்பாயில் இருந்தார்கள். பிறகு சென்னைல் பரத் பிறக்கும் வரையில் வாசம். அடுத்து டெல்லிக்கு வந்து விட்டார்கள். மாமியார் காலம் காலமாகப் பழகிய ஊர்-நட்பு
“என்ன, நான் கேட்டதுக்கு நீங்க பதிலேசொல்லலியே? வேலைய நீங்களாத்தான் விட்டீங்களா?”
“அப்படி ஒரு கேள்விக்கே இடமில்ல. கல்யாணமாகல - வேலை. கல்யாணமான பிறகு பொருளாதாரத் தேவையு மில்லை. இவர் பம்பாயில் இருந்தார். அதைப்பத்தி எண்ணவே சந்தர்ப்பம் இல்ல...”
“ரொம்பச் சரி, பம்பாய் ஒரு காரணம். ஆனா, உங்களுக்கே இப்படி பி. ஜி. எல்லாம் பண்ண ஆர்வமா இருந்ததெல்லாம் ‘இன்வால்மெண்ட்டே’ இல்லாம செய்ததுன்னு இப்ப ஒத்துக்க முடியுமா?”
“ஒ...அதெப்படிங்க சொல்லுவது? அப்ப, ரொம்ப ‘என்தூஸியஸ்டிக்’கா, டீச்சிங் மெதட்ல, ஒவ்வொரு லெவல்லயும் சோதனையே பண்ணியிருக்கிறேன். அங்க ரொம்பக் குழந்தைகள் பின்தங்கிய வகுப்பு. நல்ல ‘ரிஸ்ல்ட்’ கொண்டு வந்திருக்கிறேன். ஒரு குழந்தை பாருங்க, தாய், ஒரு திருடி, தகப்பன் ஒரு குடிகாரன். அவளுக்குப் பெற்றோராலேயே ‘ப்ராப்ளம்.’ அம்மாவே பெண்ணைத் திருடச் சொல்லுவா. கெளரவமா இருக்க இந்தப் பள்ளிக்கூட யூனிஃபார்ம்! போலீசில புடிச்சிட்டுப்போய் இந்தப் பள்ளிக் கூடத்துப் பெண்ணுன்னு சொன்னதும், ஸ்கூலுக்கே கேவலம்னு அவளுக்கு டி. ஸி கொடுக்க ஹெட்மாஸ்டர் பிடிவாதமா இருந்தார். அவளை நான் தனியாக வச்சிக்கிட்டு, பிரச்னையை அவ அம்மாவையே கூப்பிட்டுப் பேசினேன். இரண்டு வருஷம் அவுளுக்குச் சொல்லிக்குடுத்தேன். டென்த் பாஸ் பண்ணிட்டுப் போனா.”
“வொன்டர்ஃபுல் ஆன்டி! நீங்க, இப்ப வெறும் அடுப்புப் பூச்சியாயிட்டீங்களே!” தூண்டிக் கொடுத்ததும் பொலபொல வென்று ஆற்றாமை சரிகிறது.
“இப்ப. நானா. நானான்னு ஆயிட்டது. என் குழந்தைகளுக்குக் கூடச் சொல்லிக் கொடுக்க முடியாத நிலை. கவிதா, இங்கிலீஷ்ல நாற்பது மார்க் வாங்கியிருக்கு. கோச்சிங் கிளாசுக்குப் போறா நினைச்சால் கஷ்டம்தான்...”
“இது அப்பட்டமான உரிமைப் பறிப்புன்னு தோணலியா உங்களுக்கு?”
“தோணினால் என்ன செய்யலாம்? இட் இஸ் டு லேட்...”
“பெட்டர் லேட் தேன் நெவர்...” என்று ரத்னா அவள்கையைப் பற்றுகிறாள்.
“இப்ப என்ன பண்ணலாம்? இந்த வீட்டுப் பொறுப்பை யார் ஏற்பார்கள்?”
“உங்களைப் போல் இருக்கிறவர்கள், சொந்தக் குழந்தை களுக்கும் அந்நியமாகும் நிலைமையில் இருப்பது பரிதாபம் தான். உங்க வீட்டில் மாட்டியிருக்கும் படம் பற்றித் தெரிய வில்லை. ஒரு சமூக விஷயம் பற்றித் தெரியாது. வாழ்க்கையின் ஒரு பொது ஓட்டத்திலிருந்து ஒதுங்கிய ஒரு அன்றாட நியமத்தில் நீங்கள் உங்களை ஐக்கியப் படுத்திக் கொள்கிறீர்கள். இது முழுதும் தேவைதானா, என்பதை நீங்கள் ஏன் நினைத்தும் பார்க்கவில்லை? பெரிய பெண்சக்தி இப்படி வீட்டுக்குள் முடங்கி வீணாகப் போவதைப் பற்றிச் சிந்தியுங்கள். இந்தச் சமுதாயத்தின் குறைபாடுகள், துன்பங்கள், இதெல்லாவற்றிலும் நமக்கும் ஒரு பங்கு இருக்கிறது என்று ஏன் எப்போதுமே நீங்கள் உணரவில்லை?”
அவன் சற்றே ஆறுதலாகக் காபியை எடுத்துப் பருகுகிறான்.
“ரத்னா சொன்னது போல் மிகவும் நன்றாக இருக்கிறது...” புன்னகை செய்கிறான்.
“...என்னை மன்னித்து விடுங்கள்...குழப்பி விட்டு விட்டேன?”
'ஒ...நோ. இல்லை. இந்த அதிருப்தி என்னுள் ஆழப் புதைந்துதான் இருக்கிறது. ஆனால்...ஆனால்...பொருளாதாரத் தேவை இருந்தால்தான் பெண் வேலைக்குப் போகலாம் என்ற நினைப்புதான் நூற்றுக்குத் தொண்ணுாறு பேர்களிடையே இருக்கிறது. அது ஒரு உரிமை என்றோ, இல்லையேல், அறிவு பூர்வமான மலர்ச்சியும், ஆளுமையும் அவசியம் என்றோ யாரும் நினைப்பதில்லை. சின்னச் சின்ன வட்டத்துக்குள்ளேயே செக்கு மாடாய் முடிந்து போக வேண்டி இருக்கிறது.”
“ஆல் ரைட்...நான் ஒரு...சின்ன ‘கொஸ்சினரை’க் கொடுக்கிறேன். அதைக் கொஞ்சம் படித்து. உங்களுக்கு ஆறுதலான நேரத்தில் பதில் எழுதிக் கொடுப்பீர்களா? இது வெறும் சடங்கல்ல. எதானும் உருப்படியாக ‘மோடிவேட்’ பண்ணனும்னுதான் ஆசை...”
தன் ஆபயிலிருந்து நீண்ட டைப் செய்யப்பட்ட காகிதம் ஒன்றை எடுத்து அவளிடம் கொடுக்கிறான். மேலெழுந்த வாரியாகப் பிரித்துப் பார்க்கிறாள்.
பெயர், வயசு, படிப்பு தகுதிகள்...பிறந்த இடம், வகுப்பு... குடும்பநிலை பற்றிய கணிப்பு, கூட்டுக் குடும்பமாதனிக் குடும்பமா-அது பற்றிய கருத்துக்கள், இவள் திருமணத்தில் வரதட்சணை உண்டா, சுயச் சார்பு விவரம்-ஆண்-பெண் குழந்தைகளின் வளர்ப்பு முறை பற்றிய விவரம், இவள் கருத்து, கற்புநிலை பற்றிய கருத்து, பெண்ணின் பொதுவாழ்வைப் பாதிக்கிறது என்பதில் அநுபவம், குடும்பத் தில் ஆணும் பெண்ணும் சமஉரிமை பெறுவது என்பது செயல் ரீதியாகச் சாத்தியமா-ஆணின் இயக்கம் குடும்பத்தில் எந்த விதமாக இருந்தால் சமஉரிமை பெறலாம் என்று கருதுகிறாள். இப்படி, பலபல வினாக்கள்.
அபு விடை பெற்றுக் கொண்டு போகிறான். ரத்னா அவனுடன் தெருமுனை வரையிலும் செல்கிறாள். கரி அந்தத் தாளைப் பத்திரமாகச் சுவாமி அலமாரியின் பக்கம் பெட்டிக்கடியில் வைத்துவிட்டு, குளியலறைக்குள் செல்கிறாள்.
ரத்னா உள்ளே நுழைகையில், கிரி, ஈரச்சேலையைப் பிழிந்து உலர்த்துகிறாள்.
“கேட்டது இராமாயணம். இடிப்பது பெருமாள் கோயிலா? என்ன அக்கிரமம் இது. கிரி ஆன்டி?”
அவளைப் பார்க்காமலே கிரி பதிலளிக்கிறாள்.
“ரத்னா கூட்டை உடைச்சிட்டா, பிறகு அதில் இருப் பதில் அர்த்தமில்லை. அதனால், உடனே செயலாக்க முடியாது...எதையும்.”
ஆம். கிரி ஒரு முடிவுக்கு வருவதென்பது எளிதல்ல. வந்தால், பின் வாங்கல், விட்டுக் கொடுத்தல் என்ற பேச்சுக்கே இடம் கிடையாது...
-----------
அத்தியாயம் 6
கணவன் ஊரிலிருந்து வந்திருக்கிறான் என்றால், கிரிக்கு அவன் அழுக்கு உடைகளைச் சுத்தம் செய்யும் வேலை கூடுதலாகும்!
அவனே ஒருதரம் சொன்னான். ஏதோ ஒரு செமினாருக்கு மிலஸ் மேனன் சென்றிருந்தாளாம். “ஒரு சேலை இஸ்திரி போட நம்ம ஊர் கணக்குக்கு நாற்பது ரூபாய் ஆகிறது. சாம், நீங்கள் எவ்வளவு செலவு செய்தீர்கள்” என்று கேட்டாளாம். அது பற்றி எனக்குக் கவலை இல்லை, இங்கே நான் ஒண்ணுமே பண்ண வேண்டாம். பத்து நாட்கள் தானே. ஊரில் கொண்டுபோய் போட்டால் என் மிஸஸ், எல்லாம் சரியாக்கி வார்ட்ரோபில் வைத்து விடுவாள்” என்றாராம். மூன்று, மாசம் போல் சென்றிருந்தபோது என்ன செய்தார் என்று அவனும் சொல்லவில்லை. இவளும் கேட்கவில்லை.
அவன் உடைகளைப் பெட்டி போடக் கொடுத்து வந்து, அவற்றை அலமாரியில் வைக்கையில், அலமாரியை ஒழுங்காக வைக்க, எல்லாவற்றையும் எடுக்கிறாள். மேல் தட்டில் ஒரு புதிய அலங்கார வேலைப்பாடமைந்த பெட்டி இவள் கண்களில் படுகிறது. பவள வண்ணத்தில் பச்சை எனாமல் பூ வேலை செய்யப் பெற்ற அலங்காரப் பெட்டி. ஒரு சிறிய ப்ரீஃப்கேஸ் போல் இருக்கிறது.
“ஏது...? இதுபோல் ஒரு பெட்டி முன்பு கிடையாதே?... வாங்கி வந்திருக்கிறாரா? சொல்ல மறந்து போனாரா?’
பெட்டியை எடுக்கிறாள். மரப் பெட்டி போல் கனமாக இருக்கிறது.
பூட்டு சாவித் துவாரம் கூட வேலைப்பாடமைந்த வில்லையால் மூடப் பெற்றிருக்கிறது. ஆனால் சாவியில்லை; திறக்கவும் முடியவில்லை.
இதுவரையிலும் அவளுக்குத் தெரியாத இரகசியம் எதுவும் அவனிடம் இல்லை என்று நம்பி இருக்கிறாள். இது... இது என்னவாக இருக்கும்?
பிறகு வேலை ஒடவில்லை. பெட்டி, புழுவாகக் குடைகிறது.
அதில் ‘ஃபான்ஸியாக’ அழகுப் பொருள் ஏதேனும் இருக்குமோ? ஊரிலிருந்து வந்தபோது அவள் தானே பெட்டியைக் காலி செய்து துணிகளை எடுத்து ஒழுங்கு செய்தாள்?
ரத்னா அன்று காலையிலேயே விடுதிக்குச் செல்வதாகக் கூறிப் போய் விட்டாள். ஆனால் பிறகு வருவாள். இவள் வினாத்தாளைப் பூர்த்தி செய்து வாங்கிப் போக, சாமுவிடம் பேச வருவாள். அபுவைக் கூட்டி வந்தாலும் வருவாள். அபு கிறிஸ்தவனா? ஏப்ரஹாமா? இல்லை...அபுபக்கர்.. ஆபத் சகாயம்...எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்-வித்தியாசமானவன்.
பெரியவள் கற்பகத்தின் தாறுமாறான வாழ்க்கைக் குழப்பம் நெஞ்சின் நினைவுகளை முட்டுகிறது. சீராக இருக்கும் குடும்ப அமைதி... இது அமைதியா? உண்மையில் கிரி, நீ மகிழ்ச்சியும் உற்சாகமுமாக இருக்கிறாயா?... ஆனால், சாமு தாயாருக்காக இவளை அடிமையாக வைத்திருந்தாலும், வேறு விதமான கெட்ட பழக்கங்களோ, நடத்தைப் பிசகானவனோ அல்ல அவர்களுள் எந்த விதமான ஒளிவு மறைவுக்கும் இடமில்லை-இல்லை. இருந்திருக்கவில்லை. ஆனால் எப்போதும் அவள் தானன்றோ விட்டுக் கொடுக்கிறாள். அவளுக்கு உடல் நிலை சுகமில்லை என்றாலும் கூட, அவள் வேலையை அவன் வந்து செய்ய வந்திருக்கிறானோ? அந்த நாளிலும் அவன் அரச அதிகார நிலை மாறியிருக்கிறதோ? 'டாக்டரிடம் போனாயா?’ என்று கேட்க மறந்து புேவான். இவளே டாக்டரிடம் ஒட வேண்டும். மருந்து வாங்கி வந்து சாப்பிட்டு உடலைக் காத்துக்கொண்டு உழைக்க வேண்டும். ஆனால்...அவனுக்கு ஒரு தலைவலி வந்தால்கூட, தாங்க மாட்டான். வீடு இரண்டு படும்!
தொலைபேசி மணி ஒலிக்கிறது.
“ஹலோ கிரி தானே...? நான் சாயங்கால ஃப்ளைட்ல பாம்பே போறேன். அங்கேருந்து திருவனந்தபுரம் போயிட்டு வருவேன். ரெடியா எல்லாம் எடுத்து வை. வந்ததும் கிளம்பி விடுவேன். ஒரு வாரத்துக்கான டிரஸ் வேண்டி யிருக்கும்.”
அவ்வளவுதான்.
இதுபோன்ற அவசியங்களுக்குத்தான் அவனைப் பொருத்தமட்டில் அந்தக் கருவி பயன்பட்டிருக்கிறது.
வந்ததும் வராததுமாக, அதை இதை அங்கங்கு விசி விட்டுப் பறப்பான்.
இவள் பார்த்துப் பார்த்துத் தேவையானதைச் செய்ய வேண்டும். ஜூஸோ? காபியோ எது கேட்பாரோ? சாப்பாடு வேண்டுமோ, வேண்டாமோ?
வீடு என்றாள் பறப்பு. அவசரம்...வெளியில் ஆசுவாசம், நிம்மதி.
குளிர்சாதன அலுவலக அறையில் கழுத்துச் சுருக்கைத் தளர்த்திக் கொண்டு அவன் உட்கார்ந்திருப்பதைக் கற்பனை செய்கிறாள்.
அழகான அந்தரங்கச் செயலாளர்...நகச்சிவப்பும், உதட்டுச் சாயமுமாக வெட்டு!
சாமு அந்த மாதிரியான சபலக்காரணில்லை... சரியே!
ஆனால் அந்தப் பெட்டி?
நல்ல வேளையாக, அவன் புறப்பட்டுச் சொல்லுமுன் சமயம் வாய்க்கிறது. அவள் அலமாரியின் பக்கம் நின்று அருகில் குளித்துவிட்டுத் தலை வாரிக் கொள்ளும் அவனிடம், “ஆமாம்! இது என்ன பெட்டி? ஏதானும் ஃபான்லி சாமானா? வாங்கிட்டு வந்து சொல்வவேயில்லை?” என்று கேட்கிறாள்.
அவனும் புரியாதவனாக, “எது...?” என்று கேட்கிறான்.
பெட்டியை வெளியிலெடுத்துக் காட்டுகிறாள்.
“ஒ இதுவா? ரோஜா மாமி குடுத்து வச்சிருக்கச் சொன்னாளாம். ஸ்டேட்ஸ் போறாளோ என்னமோ? விவேக்குக்குக் கல்யாணம் நிச்சயமாகும் போல...”
‘இதென்ன புதிசா இருக்கு? ரோஜா மாமிக்கு அவங்க வீட்டில இல்லாத பந்தோபஸ்தா இங்க? பாங்க் லாக்கர் எங்க போச்சு? தாகூர் அவின்யூல கோட்டையாக வீடு...ஸெக்யூரிட்டி ரொம்ப நாளா இருக்கும் சமையல் சாம்பசிவம்...இவர்களை மீறி என்றுமில்லாமல் இதென்ன புதிசு? அப்படி என்ன விலை மதிப்புள்ள சாமான்? நகையா..?’
-நாவில் இவ்வளவு சொற்களும் வரவில்லை.
“இது என்னவாம்? நகையா?”
அவன் உடனே எரிந்து விழுகிறான். இத பாரு, தொண தொணங்காதே. எனக்கு நேரமாச்சு. என்ன வச்சிருக்கே? சப்பாத்தியா, ரைஸா?”
“ஏணிப்படி எரிஞ்சு விழனும்? சப்பாத்தி, ரைஸ், சமயலறை மட்டும்தான் எனக்கு. அதிகப்படி ஒண்னும் கேட்கக் கூடாது! உங்கம்மா எது செஞ்சாலும் அது சரி. நான் ஏன் என்னன்னு கேட்டா, கோபம் வந்துடும்!”
“முனு முணுத்துக் கொண்டு அகலுகிறாள். தாழ்மைப் படுத்தும் இந்த நடப்பு அவளை ஆயிரம் நெருஞ்சி முட்களாக மாறிப் பிடுங்குகின்றன.
தட்டில் சோற்றைப் போட்டு மேசையில் வைக்கிறாள். குளிர் நீரை எடுத்து வைக்கிறாள். மேசையில் டக்கென்று உறைக்கிறது.
“ஏய், கிரி...என்ன?... என்ன முணுமுணுக்கிற?...”
அவள் பேசவில்லை.
அவன் அருகில் வந்து உறுத்துப் பார்க்கிறான். “என்னடீ முகம் வெங்கலப்பானையா இருக்கு?”
நான் ஒண்ணும் முணுமுணுக்கல. நான் பேசக்கூடாது. பேசினா... உங்களுக்கு ஆத்திரம் வரும் பேசாமலே ‘என்னடி!’ நான் மெஷின்!”
அழுகை கொப்புளிக்கக் கத்தி விட்டுத் திரும்புகிறாள்.
அவன் சோற்றுத் தட்டைத் தூக்கி எறிகிறான். தண்ணீர் குப்பியை வீச, அது உடைந்து சிதறுகிறது.
“எப்படியும் சுடுகாடாப் போங்க! எப்ப வீட்டுக்கு வந்தாலும் சிரிப்புக் கிடையாது. முணுமுணுக்கிறா. இல்லாட்டா அடுப்பில் வேத்து ஒழுகிட்டு நிப்பா! சை! கடனேன்னு தண்டமா எதையானும் செஞ்சு வைக்கிறது. இன்னிக்குப் பகல்ல லஞ்ச் வச்சிருந்தியே, ஏக உப்பு. ஸ்பூனைக் காணல...”
“என்னமோ ஒருநாள் மறந்துட்டேன். அதுக்கு வாய் வார்த்தை இல்லையா?”
“வாய் வார்த்தை இல்லாம இப்ப யாருடீ குத்தறாப்பல கொட்டினா? இத பாரு? நீ என்னமோ நாம்தான் இந்த வீட்டைத் தலைமேல் சுமந்து தாங்கறோம்னு நினைச்சிட்டு இஷ்டப்படி நடக்கிறாப்பல்த் தெரியுது. எனக்கு இந்த மறைமுகம் எல்லாம் பிடிக்காது. எங்கம்மாவையோ, என்னையோ பிடிக்கலன்னா புறப்பட்டுப் போ! வீட்டை நாங்க மானேஜ் பண்ணுவோம்! என் நிம்மதியைக் கெடுக்க வேண்டாம்!”
அவன் அவள் தயாராக்கி வைத்த கைப்பெட்டியுடன் வெளியேறுகிறான்.
...சீ! மனிதர்களா இவர்கள்?
பதினேழு வருஷம் அடிமைச் சேவகம் செய்து, குழந்தைகளைப் பெற்று வளர்த்த இவளுக்கு ஒரு பேச்சு, ஒரு குரல் எழுப்ப உரிமை இல்லையா? அப்படியும் உரத்த குரல்கூட இல்லை. அந்த ஒரு பிசிறைக்கூட பொறுக்க முடியாத ஒரு கூடு இது...? ரத்னா கூறினாற் போன்று, இது எவ்வளவு மோசமான கடுமையான, வெளிக்குத் தெரியாத அடக்கு முறை? வசதியான வீடு, நவீனமான வாழ்க்கை வசதிகள் என்ற ஆடம்பரங்கள். ஒரு பெண்ணுக்குத் தன் உரிமைக் குரலின் இலேசான ஒலியைக்கூட எழுப்ப விடாத அழுத்தங்கள் வேறென்ன?
கூலிக்கு வைத்த ஆளிடம் கூடத் தவறு நேர்ந்தால் கேட்க முடியவில்லை.
ஸ்பூன் வைக்க மறந்தது. உப்பு அதிகமாகி விட்டது இரண்டு மன்னிக்க முடியாத குற்றம். இந்த வீட்டை அவள் தாங்கவில்லை.
ஒரு நொடியில் உதறிவிட்டுப் போயிருக்கிறான். சோற்றை எடுத்து வீசி, நீர்க்குப்பியைப் போட்டு உடைத்து...!
அவள் உழைப்பை, அவள் உள்ளுணர்வை அவள் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்த சத்தியத்தை உதாசீனமாக உடைத்தெறிவது போல நொறுக்கி விட்டுப் போய் இருக்கிறான்!
அவள் காலையிலிருந்து இரவு கண் மூடும் வரை யாரை முன்னிட்டு ஆணி அடித்த நிலையில் சுழன்றாளோ, அந்த அவன், அவளைத் துரும்பை விடவும் கேவலமாகக் கருதியிருக்கிறான், அவனுக்குக் கோபம் வரும்; அவன் கோபம் அவள் அறிந்ததுதான். அவனிடம் பச்சாதாபம் கிடையாது என்ப தையும் அவள் உணர்ந்திருக்கிறாள். அவளுக்குப் பொறுமை பெரிது. ஆனால் இப்போது?
அந்த பொறுமையின் அரணில் தீப்பிடிக்கிறது!
திறந்த அலமாரி, விசிறிய சாப்பாட்டுத் தட்டு, உடைந்த கண்ணாடித் துண்டுகள்...
இதையெல்லாம் இப்போது அவள் சுத்தம் செய்ய வேண்டும்!
“அம்மா...என் ஷார்ப்பனரைக் காணல...” என்று பரத் வருகிறான்.
“அங்கியே இரு? உங்கப்பா, உடைச்சுப் பரத்திட்டுப் போயிருக்கார்?”
“அம்மா, டான்ஸ் மாஸ்டர் உங்கிட்ட என்னமோ அட்ரஸ் கேட்டாராமே? நீ அப்பாக்கிட்டக் கேட்டுச் சொல்றேன்னியாமே?”
“அங்கியே நில்லு...கண்ணாடி உடஞ்சிருக்கு. உங்கப்பாவுக்கு ஃபோன் பண்ணி அவரையே கேட்கச் சொல்லு!”
எல்லாவற்றையும் பெருக்கிக் கழுவிச் சுத்தம் செய்ய வேண்டும்; செய்கிறாள். குழந்தைகளுக்குச் சாப்பாடு போட்டு சமையலறையை கழுவித் துடைத்து, படுக்கை போட்டு...
எதுவுமே நடக்காதது போல் மாமியார் பேசாமலிருக்கிறாள்.
நல்ல வேளை, இந்தப் பிரளயத்துக்கு முன் அவள் உபசாரம் முடிந்து விட்டது! படுக்கையில் உட்கார்ந்து அந்த வினாத்தாளை எடுத்துப் பார்க்கிறாள். தனது கூண்டு வாழ்வின் புதிய பரிமானங்கள் காடைப்பTதி அழுத்துகின்றன. வெகுநேரம் உறக்கம் பிடிக்கவில்லை.
இந்தக் கூண்டில் தொடர்ந்து சுழல வேண்டுமா என்ற கேள்வி மெல்லியதாக எழுப்பி உறக்கம் கலைய, அது வலுவுள்ளதாக உயிர்க்கிறது!.
காலையில் பழக்கமான இயந்திரமாக இயங்குகிறாளே ஒழிய, உள்ளத்தில் வேறு சிந்தனைகள் உயிர்த்து இயங்குகின்றன! குழந்தைகளுடனோ, மாமியாருடனோ அவள் எதுவுமே பேசவில்லை. இந்த வீட்டில் தனக்கு எந்தப் பற்றுதலும் இல்லை என்ற மாதிரியில் இயங்குகிறாள்.
அந்த வினாத்தாளைப் பூர்த்திச் செய்து, ரத்னாவின் ஹாஸ்டலைத் தேடிக் கொண்டு சென்று கொடுத்து விட்டு, ஒரு மாறுதலுக்கு இரண்டு நாட்கள் வீட்டை விட்டுப் போக வேண்டும் என்ற ஒர் ஆவா, மூர்க்கமாக அவளுள் இடம் பெறுகிறது!
மாயா குளியலறையில் துணி கசக்குகையில், கிரிஜா தொலைபேசியைச் சுழற்றி, ரத்னாவிடம் தொடர்பு கொள்ள முயலுகிறாள்.
மணியடித்துக் கொண்டே இருக்கிறது. யாரும் எடுக்க வில்லை.
அவள் மொட்டை மாடிப்பக்கம் வருகையில் மாமியார் வாயிற்படியில் நின்றவாறு “காஸுக்கு ஃபோன் பண்ணினியா? ஸிலிண்டர் எடுத்து இருபது நாள்கூட ஆகலியே?” என்று கேட்கிறாள்.
அப்பப்பா எப்படி வேவு பார்க்கிறாள்? பிள்ளை கத்தியது உடைத்தது, பரத்தியது எல்லாம் தெரியும். ஆனால் ஒரு வார்த்தை கேட்க வேண்டுமே?
காதிலும் மூக்கிலும் இவள் சுமக்கும் வயிரங்கள் அவமானச் சின்னங்களாக அழுத்துகின்றன.
‘கூட்டுக்குள் இருப்பதை உணர அவகாசமில்லாமல், உணராமல் இயங்குவது சுமையில்லை. நீ கூட்டுக்குள் இருக்கிறாய் என்ற உணர்வு அறிவுறுத்தப் பெற்ற பிறகு, ஒரிரண்டு நாட்களேனும் அந்த விடுதலையை அநுபவித்தாக வேண்டும் என்ற உந்துதலில் ஒவ்வொரு விநாடியும் சித்திரவதையாக இருக்கிறது.
வயிரங்களைக் கழற்றி வைத்து விட்டாள். காதில் ஒரு சிறு திருகாணியும் கழுத்தில் தாலிச் சங்கிலியும் கையில் ஒற்றை வளையலும் கடிகாரமும் போட்டுக் கொண்டிருக்கிறாள்.
இரண்டு புடவைகளும் உள்ளாடைகளும் ஜிப் பையில் வைத்துக் கொள்கிறாள். மாயா வந்து போயாயிற்று; மாமியார் சாப்பிட்டாயிற்று.
தனது தேவைகளை வெளி வராந்தாவில் வைத்து, பிரதானமாக கதவைச் சாத்தி உள் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு, கடைக்குப் போகும் பாவனையில் மாமியார் அறைக்கு வருகிறாள்.
“ஏன், தோடு மூக்குத்தியக் கழட்டிட்டே?”
“அழுக்காயிருக்கு...கழட்டி வச்சேன்...நான் கடைக்குப் போயிட்டு வரேன்...”
பதிலை எதிர்பார்க்காமல் அவள் வெளியேறுகிறாள். பையுடன் படியிறங்கி விடுவிடுவென்று தெருவில் நடக்கிறாள்.
சாலை பஸ் நிறுத்தத்தில் திருமதி மூலே, குழந்தைகளுடன் நிற்கிறாள்.
புன்னகைப் பரிமாறல். பளிச்சென்று மஞ்சள் சல்வார் கமீஸில் எதிர்வீட்டு சுஷ்மா வருகிறாள். “ஆன்டி, எங்கே ஏர் பேகுடன் கிளம்பினர்கள்?”
“ஒரு ஃபிரண்டைப் பார்க்க...”
“ஸ்பிக் மே கே’ ப்ரோகிராம்...ஸவுத் இன்டியன் மியூஸிக்...! ஆன்டி. வரீங்களா? கவிதாகிட்ட இன்விடேஷன் குடுக்கிறேன் ?”
“யார் கச்சேரி.. ?”
“யாரோ வயலின் பர்ஃபாமென்ஸ்...”
“குடு...”
இதற்குள் மினி பஸ் ஒன்று வந்து நிற்கிறது.
இடித்துப் பற்றி ஏறி உட்காரும் பழக்கமும் கூட இவளுக்குப் போதாது.
இந்த நிறுத்தத்தில் நிற்க மனமின்றி ஏறி விடுகிறாள்.
அது பழைய டில்லி ரயில் நிலையம் வரை செல்லும் ஊர்தி.
சீட்டு வாங்கிக் கொண்டு, ஒரு குண்டன் சர்தார்ஜியின் அருகில் இருக்கும் இடத்தில் அமர்ந்து கொள்கிறாள்!
-------------
அத்தியாயம் 7
சாலை ஓரங்களை, கரிய அழுக்குத் தகர ட்ப்பாக்களை மனசில் உருவகப்படுத்திக் கொண்டு வெளியூர் பஸ்கள் அடைத்துக் கொண்டிருக்கின்றன.
பகல் நேரத்துச் சூரியன், உக்கிரமாக வருத்துகிறது. துணி வியாபாரிகளும், பழ வியாபாரிகளும் இன்னும் வயிற்றுப் பிழைப்புக்காக இஞ்சி முரபாவிலிருந்து ஈறு வாங்கி வரை யிலும் விற்கும் சிறு பொருள் விற்பனையாளரும் கூவும் ஒலிக், கசகசப்புக்கள் செவிகளை நெருக்குகின்றன.
ஆப்பிள் கொட்டிக் கிடக்கும் காலம். வண்டிக்காரன் ஒருவன் அவளை வாங்கச் சொல்லிக் கூவி அழைக்கிறான்.
கிலோ ஐந்து ரூபாய் என்று பேசி வாங்கிப் பைக்குள் போட்டுக் கொள்கிறாள்.
இங்கே நடமாடும் வர்க்கத்தில் இவளைச் சட்டென்று இனம் புரிந்து கொண்டு எங்கே போகிறீர்கள் என்று கேட்க வர மாட்டார்கள்.
கிரிஜாவுக்குப் பய உணர்வும் இல்லை; ஏமாற்றி விட்ட தான எண்ணமும் இல்லை.
முற்றிய நெற்றியில் துளி நீர் பட்டு வெடித்தாற்போல் அவள் அப்போதைக்கு ஒர் ஆசுவாசம் தேடி, அந்தக் கூட்டை விட்டு வந்திருக்கிறாள். இயல்பாகவே இருக்கிறது. ஒவ்வொரு பஸ்ஸாகப் பார்த்துக் கொண்டு வருகிறாள்.
டேராடுன்- ருஷி கேசம்- ஹரித்துவாரம்- ரூர்க்கி மீரட்...
இரண்டாண்டுகளுக்கு முன் குடும்பத்துடன் காரில் ஹரித்துவாரம், ருஷிகேசம் முதலிய இடங்களுக்கும் பின்னர் காசி, கயை என்றும் சென்றிருந்தார்கள்.
எங்கே போனால் என்ன? மாமியாருக்காக இவள் அடுப்புத் தூக்க வேண்டும். புண்ணியப் பயணம். விடுதலை உணர்வுடன் எதையும் அநுபவிக்க இயலாத மாறுதல்.
அவள் பள்ளியில் வேலை செய்யச் சேர்ந்த முதல் வருஷத்தில், பள்ளித் தலைமை ஆசிரியரான முதியவர், ஒரு வட இந்திய யாத்திரைக்கு அந்த வருஷக் கோடை விடுமுறையில் ஏற்பாடு செய்திருந்தார். ஆறு ஆண்களும், பதினெட்டுப் பெண்களும் சேர்ந்த அந்தக் குழுவில், கிரிஜாவைப்போல் ஐந்து பேர் மணமாகாதவர்கள்.
மற்றவர்கள் கணவன் மனைவியர். நடுத்தர வயதினரும், நடுத்தர வயசைக் கடந்தவர்களும் இருந்தார்கள்.
கிரிஜா, தானும் போகிறேன். ஆயிரத்தைந்நூறு செலவாகிறது என்று கூறியபோது அண்ணன் வேண்டாம் என்று முட்டுக்கட்டை போட்டான்.
“ஆயிரத்தைந்நூறுக்கு ரெண்டு மூணு சவரனாலும் வாங்கலாமே. நாளைக்குக் கல்யாணமானால், போகாமலா இருக்கப் போறே இப்ப எதுக்குடி, அண்ணா சொல்றதும் சரிதானே” என்று அம்மாவும் அவனுக்கு ஒத்துப் பாடினாள்!
“எல்லோரும் போகறப்ப, நான் மட்டும் போகக் கூடாதா? எனக்கொண்ணும் சவரன், நகை வேண்டாம்!' என்றெல்லாம் முரண்டி, பிடிவாதம் பிடித்து, கெஞ்சி அம்மாவைக் கரைத்து அவள் அந்தப் பயணத்துக்கு அவர்களைச் சம்மதிக்க வைத் தாள்.
கிண்டலும் கேலியுமாக, உமா, கங்கா, பார்வதி சாவித்திரி, அவள் எல்லோரும் எப்படி அநுபவித்தார்கள்! வயசான தலைமை ஆசிரியர் தம்பதியையும் மற்றவர்களையும் குழந்தைகள் போல் சீண்டிக் கொண்டும் பாடிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் ஏறக்குறைய ஒரு மாசம் விடுதலையைப் பூரணமாக அநுபவித்த பயணம் அது.
ஹரித்துவாரத்தில் அவர்கள் ‘மதராசி தர்மசாலா’ என்றழைக்கப்பட்ட விடுதியில் தங்கினார்கள். கங்கை பின் வாயிலை அலம்பிக் கொண்டு ஒடும்.
இரண்டாம், மூன்றாம் மாடி முகப்புக்களில் அமர்ந்து கங்கையின் ஒட்டத்தைப் பார்த்தபடி காலம் காலமாக உட்கார்ந்திருக்கத் தோன்றியது!
நினைவில் சில நிமிடங்கள் தோய்ந்து நிற்கிறாள்.
கங்கையின் ஒட்டத்தைப் பார்த்துக் கொண்டே கடந்த காலம் நிகழ்காலம் கட்டுப் படுத்தாத விடுதலையில் அவள் அமைதியாக இருந்த பின், தெளிந்து தன் பிரச்னைக்கு முடிவு காணலாம். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க இயலாது. குடும்பம்...மெல்லிய இழைகளால் மக்களையும் சுற்றத்தையும் இணைக்கும் நிறுவனம். இது காலம் காலமாக வந்த மரபில் பின்னப்பட்டது. இன்று இராட்சத முட்புதராக அது பெண்ணினத்தை வருத்துகிறதென்றால்...? முதலே தவறா...?
“ஏம்மா? இது ஹரித்துவாரம் போற பஸ்தானே?”
சட்டென்று திரும்பிப் பார்க்கிறாள்.
ஒரு முதிய தமிழ்ப் பெண்மணி, வயசான தன் கணவா அவர்களைப் போலவே தோற்றமளிக்கும் பெட்டியுடனும் பையுடனும் நிற்கிறார்கள்.
“ஏம்மா, தமிழ் போல இருக்கியே? தமிழர்தானே? இது ஹரித்துவாரம் போறதா?”
“ஆமாம், போகும், வாங்கோ...”
முதியவரின் கைப்பெட்டியை வாங்கிக் கொண்டு பஸ்ளில் அறர் சொல்கிறாள், பெரியவருக்குக் கண் பார்வை துல்லிய மில்லை போலிருக்கிறது. அவரையும் ஏற்றி விடுகிறார்கள். வசதியாக ஒரு மூன்று பேர் இருக்கையில் அமர்ந்து கொள்கின்றனர்.
“நீயும் அங்கதான் போறியாம்மா? ஆமாம் நீங்க எங்கேருந்து வராப்பல...?”
“நாங்க மதுரைப்பக்கம், கிராமம்...டில்லிக்கு வந்து அஞ்சு நாளாயிட்டது. தூரத்து உறவுகாரப் பையன் கரோல் பாலெ இருக்கான். கொண்டு ஏத்திவிட்ணும்னா, ஆபீசில லீவு கிடைக்கல. ஆட்டோ வச்சிட்டுப் போங்கோ. அவனே பஸ் நிறுத்தத்துல கொண்டு விட்டுடுவான். ஹரித்துவாரத்துக்கு அரை மணிக்கொரு பஸ் போறது, சிரமமில்லைன்னு சொன்னான். நாம்ப கேட்டா யார் லட்சியம் பண்ணிச் சொல்றா? இந்த பஸ் போகும்ன்னா, ஆனா இங்கிலீஷில வேற என்னவோன்னா போட்டிருக்கு? எச் எழுத்தில்லையே, இந்தி படிக்கத் தெரியாது...நல்ல வேளை, நீ தமிழ் பேசற வளாக் கிடைச்சே...ஏதோ ஸ்வாமி இருக்கார்!” அம்மாள் பொரிந்து தள்ளுகிறார்.
பருமனும் வெள்ளை மஸ்லின் சேலைக்கட்டுமாக, குஜராத்திப் பெண்கள், ஆண்கள், முக்காடும், முன்வகிற்றுக் குங்குமக் கீற்றுமாக உத்தர்ப்பிரதேசத்துப் பெண்கள், உச்சியில் குடுமி இழைகள் தனித்து இலங்க, கிராமத்து ஆடவர், குழந்தைகள் என்று பஸ் நிறைந்து விடுகிறது.
கிரிஜா இத்தகைய உலகத்துக்கு ஒரு காலத்தில் பழக்கப் பட்டிருந்தாள். இப்போது மீண்டு வந்திருக்கிறாள். என்றுமே இத்தகைய சூழலுக்கு இவள் அந்நியப்பட மாட்டாள்.
“எத்தனை மணிக்குக் கிளப்புவானோ?”
“கித்னே பஜேகோ பஸ் நிகல் தி ஹை”?
“ஏக் கண்டேகோ...” என்று அடுத்த வரிசைக்காரன் மறு மொழி கொடுக்கிறான்.
ஸாடே பாங்ச்...சே...பஜேகோ...பஹீஞ்ச்தீ!
“ஆறு மணிக்குள்ள போயிடும்மா...?”
“இருட்டறதுக்குள்ள போயிட்டாத் தேவல. எங்கிட்ட ஒரு லெட்டர் வாங்கிக் குடுத்திருக்கிறான் அந்தப் பிள்ளை, பூரீ மடத்துக்குச் சொந்தமான சத்திரத்தில தங்கிக்கலாம்னு. மூணு நாள் சாப்பாடும் போடுவாளாம். நீ எங்கே போறேம்மா வேலையாயிருக்காப்பல..?”
“...ஆ...டீச்சரா வேலை பாக்கிறவதான். இப்ப டெல்லில இருக்கேன். சும்மா ஒரு ஆறுதலா ரெண்டு நாள் ஹரித்து வாரத்தில் தங்கி கங்கையைப் பார்க்கணும்னு தோணித்து, வரேன்...” எங்க தங்குவியோ?...
“...சிநேகிதா இருக்கா. எங்கானும் இல்லாட்ட தரும சாலாவில தங்கணும். அதொண்ணும் கஷ்டமில்ல மாமி!”
வண்டியோட்டியும் நடத்துனரும் வந்து விட்டார்கள்.
இறுக்கங்களைக் கரைத்துக் கொண்டு பஸ் நகரைக் கடந்து செல்கிறது. யமுனைப்பாலம். யமுனையில் தண்ணிர் பெருகி ஒடுகிறது.
'யமுனைத்தாயே! கிருஷ்ண கிருஷ்ணா! ஜலத்தைப் பார்க்கவே பரவசமா இருக்கு. கிருஷ்ணா, கோதாவரி, எல்லாம் ராத்திரில முழிச்சிண்டு பார்த்தேன். நர்மதை வந்ததுன்னா, எனக்கு எதுன்னு தெரியல. கோடிச்சுக் கோடிச்சு, ஆயுசின் கடைசிக் கட்டமா ஊன்.ரவிட்டுக் கிளம்பி வந்துட்டோம். இதுவரையும் எப்படி எப்படியோ சிரம மில்லாம எல்லாம் பார்த்துட்டோம். பத்ரிக்குப் போகணும்னு ஆசைப்படல. அரித்துவாரம் ருஷிகேசம் பார்த்து கங்கையில ஸ்நானம் பண்ணனும்! ரொம்ப இழுக்கும். ஜாக்கிரதையா சங்கிலியப் புடிச்சிண்டு குளிக்கனும்னா. ஸ்வாமிகள் வேற இப்ப அங்க இருக்காளாம்...!”
அந்தம்மாள் வாயோயாமல் பேசுவது இவளுக்கு ஆறுதலாக இருக்கிறது.
மீரட்டில் வண்டி நிற்கையில், பையைத் திறந்து ஒரு பிளாஸ்கை எடுக்கிறாள். காப்பியை மேல் மூடியில் ஊற்றி, கனவனிடம் “காப்பி குடிச்சுக்குங்கோ!” என்று கொடுக்கிறாள். அவருக்கு மூடி பிடிக்கக்கூட கை நடுங்குகிறது. இவளே பிடித்துக் கொண்டு குடிக்கச் செய்கிறாள்.
பிறகு உள்ளேயிருக்கும் சிறிய மூடி போன்ற பிளாஸ்டிக் ‘கப்’பில் சிறிது காப்பியை ஊற்றி கிரிஜாவிடம் நீட்டுகிறாள்; “இந்தாம்மா நீயும் ஒருவாய் குடிச்சுக்கோ.”
“நீங்க குடிங்க மாமி! என்கிட்டே பழம் வாங்கி வைச்சிருக்கேன்.”
“இருக்கட்டும். நிறைய இருக்கு-காபி. அத்தனையுமா குடிக்கப் போறேன்? ஆளுக்குக் கொஞ்சம்...டில்லியிலே பால் ரொம்ப நன்னாயிருக்கு...”
கிரிஜா தட்ட முமுடியாமல் காபியை வாங்கிப் பருகுகிறாள்.
இப்படிப் பரிவுடன் யார் அவளுக்கு காபி ஊற்றிக் கொடுத்திருக்கிறார்சுள்? அந்த இதமே அதன் சுவையாக நாவில் பரிமளிக்கிறது!
-------------
இரண்டாவது பாகம்
ஹரித்துவாரம் சென்றடையும்முன் முதியவள் கிரிஜாவுக்கு மிக நெருக்கமானாற் போன்று ஒட்டி விடுகிறாள்.
பழைய கிராம முன்சீபு பரம்பரையாம். முதியவள் ஆறு குழந்தைகள் பெற்றாளாம். ஒன்றுகூடத் தங்கவில்லை. ஆறு மாசம், இரண்டு வயசு, நான்கு வயசு, என்று வளர்த்து மூன்று பிள்ளைகளும், பிறந்த உடன் இரண்டு பெண்களையும் இருபது நாளில் வயிற்றுப்போக்கு வந்து, ஒரு பெண்னையும் பறிகொடுத்தாளாம்.
கிழவருக்கு முன்சீபு என்கிற அதிகாரச் செருக்கும். ஆணவமும் சாதித் திமிரும் அதிகம் உள்ளவர் என்பதை அவள் பேச்சில் இருந்து உணர முடிகிறது. மாமியார் தொண்ணுறு வயசு வாழ்ந்து இவளை வறுத்தெடுத்தாள். இவருடைய அதிகாரம்... சாதி காரணமாக, கிராமத்தில் பட்ட துன்பங்களும் இடிபாடுகளும் விவரிப்பதற்கில்லை. ஒரு பழைய வீடும், கறம்பை தட்டிய பூமியும் கொஞ்சம் உடமைகள். அவற்றை மைத்துனர் பிள்ளைகளுக்கு எழுதிக் கொடுத்து விட்டார்கள். அவனிடம் பெற்ற பணத்தைக் கொண்டுதான் வாழ்க்கையின் பயனாகக் கருதும் இந்த கங்கை யாத்திரைக்கு இவள் வந்திருக்கிறாள்.
‘இப்ப பொட்டிப்பாம்பாக, சாதுவாட்டம் உட்கார்ந்திருக்காரேன்னு நினைக்காதேம்மா! வச்சிண்டே சொல்றேன். அம்மா பேச்சைக் கேட்டுண்டு விறகு கட்டையால அடிச்சிருக்கார்...சாதிகெட்டபய, அந்தத் தாசில்தாரன்னார். அவன் சஸ்பென்ட் பண்ணி வச்சிட்டான், ஆயிரம் காரணம் சொல்லி ...ஒரு கஷ்டமா, ரெண்டு கஷ்டமா?...
கிழவர், முழு வழுக்கையாய்ச் சுருங்கி, கண் பார்வையும் மங்கிவிட்ட நிலையில் நடுக்கமும் குறுக்கமுமாக ஒரு பழுப்புச் சட்டை, பழைய கம்பளித் துண்டுக்குள் ஒடுங்கி, மனைவியே ஊன்று கோலாக, துணையாக, ஆதரவாக உட்கார்ந்திருந்கிறார்.
சாமு....அவனை இப்படிக் கற்பனை செய்ய முடியுமாக் கிழவரின் யுகம் அது வேறு: இது வேறு.
அந்தக் காலத்தில் சாதிச் செருக்கு, பரம்பரை அதிகாரத் திமிர் இருக்கலாம். இப்போது. இது பணத்திமிர்-பணச் செருக்கு. ஆடம்பரம்...
விறகுக் கட்டையால் அடித்தவனை இன்னமும், அதை காப்பதுபோல் o பாதுகாக்கிறாள். அது கொடுத்திருக்கும் வினாத்தாளைப்பற்றி இவளிடம் சொன்னால், என்ன எதி ரொலி இவளிடம் இருந்து வரும் என்று கிரி நினைத்துப் பார்க்கிறாள்.
புருஷனாகப் பட்டவன், துாலமாகவும் சூக்குமமாகவும் அலைகடல் துரும்பாய் ஆக்கப்படும் பெண்ணுக்கு அடைக்கல்ம் என்று அவளுள் பதிக்கப்பட்டிருக்கிறது. அடிப்பதும் அழுத்து வதும் அதிகாரம் செய்வதும் அவன் உரிமை; சேவிப்பதும், பூசிப்பதும், பாதுகாப்பதும் இவள் கடமை. இந்தம்மாளுக்கு இந்தக் கணவன் இல்லையென்றால் சொத்துமில்லை; பத்து மில்லை. புருஷனை விலக்கினால் மைத்துனருமில்லை. அவர் மக்களுமில்லை. பிள்ளையில்லை. பெண் இருந்தால்கூட இவர்களுக்குச் சொந்தமில்லை: அவள் தன்னைக் கட்டியவனுககு அடிமையாவாள்.
ஹரித்துவாரத்துக்கு வந்து நிற்கையில் அந்திமயங்கும் நேரம். கிரிஜாவுக்கு இந்தி தெரிந்திருப்பது இவர்களுக்குச் சாதகமாக இருக்கிறது. ஒரு ரிக்ஷாவைப் பேசுகிறாள்.
‘நீயும் ரெண்டு நாள் இருந்துட்டுப் போகத்தானேம்மா வந்திருக்கே? எங்ககூட இருந்துக்கோயேன்? எனக்கு அவாளை இவாளைப் பார்த்துக் கேட்க வேண்டாமே?...’
இந்தச் சொல்லுக்குக் காத்திருந்தாற்போல இன்னொரு ரிக்ஷாவையும் பேசுகிறாள்.
முன்பு தங்கிய அதே விடுதிதான். இந்நாள் கைமாறி இருக்கிறது. பின்புறத்துப் படிகளில் கங்கை பெருகி ஓடுகிறது. சில்லென்ற நீர் பட்டதுமே உடல் சிலிர்க்கிறது: உள்ளத்தில் அது உணர்வின் வெள்ளமாகப் பாய்கிறது.
தீப ஆரத்தி விடும் நேரம்.
கெளரி அம்மாள், கணவரைப் படியில் உட்கார்த்தி வைத்து, புனித கங்கையைச் செம்பால் எடுத்தி ஊற்றி நீராட்டுகிறாள்.
கிரிஜா, அவர்கள் மூட்டைகளுடன் பையை வைத்து விட்டு வெளியே வந்து, அகன்ற படித்துறையில் அமர்ந்து கங்கையின் ஓட்டத்தில் ஒன்றிப் போகிறாள்.'கடந்த காலம், நிகழ்காலம் என்ற உணர்வுகள் கரைகின்றன.
---------
அத்தியாயம் 8
காலையில் அவர்கள் இருவரும் எழுந்திருக்கும் முன் கிரிஜாவுக்கு விழிப்பு வந்து விடுகிறது. பல்லைத் துலக்கி விட்டு மாற்றுச் சேலையை எடுத்துக்கொண்டு ‘ஹரி கிபைரி’யை நாடி நடக்கிறாள். கங்கையை ஒட்டிய சந்தில் உள்ள கடைகள் விழித்துக் கொண்டிருக்கின்றன. இந்தியக் கலாசாரத்தின் இழைகள் சமயத் தறியில்தான் பின்னப் படுகின்றன. பெண்கள் விரும்பும் அணிமணிகள், சேலை துணிகள், பாத்திரங்கள், யாத்திரீகர்களுக்குத் தேவையான பெட்டிகள், மற்றும் கங்கைநீர் முகர்ந்து செல்ல உதவும் அலுமினியத் தூக்குகள், பித்தளைச் செம்புகள், பிளாஸ்டிக் கேன்கள் பூசனைக்குரிய பல்வேறு வெங்கலப்படிமங்கள்... என்று முடிவேயில்லை; மிட்டாய்க் கடைகளில் புதிய நெருப்பு புகைகிறது. புதியபால் வந்து இறங்குகிறது. ஏற்கெனவே ஒரடுப்பில் பெரிய இரும்பு வாணலியில் பால் காய்கிறது...சந்து நெடுகிலும் மக்கள். இனம் புரிந்து கொள்ளும் படியான மொழி பல்வேறு பிரதேச மக்களின் கலவையாக நீண்டு செல்கிறது, சந்து. குடும்பத்தவர், துறவியர், இளைஞர், முதியோர், அப்போது தான் இரயிலில் வந்து இறங்கியவர் களாக மூட்டை முடிச்சுக்களைச் சுமந்தவர்கள், இந்தக் கரைதான் வாழ்வே என்று ஊறிப் போனவர்கள்...
‘ஹரியின் பாதங்க’ளென அழைக்கப் பெறும் படித் துறையின் மேல் சலவைக்கற்றரையின் சிறு சிறு கோயில்களும் ஈரம்பிழியும் மக்களும், பிச்சைக்காரரும் தருமதாதாக்களும் பணியாளரும் குழுமும் கட்டம்.
கிரிஜாவுக்கு இந்த முகமறியாக் கூட்டம் தன்னை மறந்த மகிழ்ச்சியைக் கொண்டு வருகிறது.
மாற்றுச் சேலையை ஒரு படியில் வைக்கிறாள். நீராடி முடித்த ஒரு வங்க மூதாட்டி அமர்ந்திருக்கிறாள். ‘இது இங்கே இருக்கட்டும்...!’
அவள் தலையை ஆட்டி ஆமோதிக்கிறாள். படிகளின் மேல் நிற்கையிலேயே கங்கையின் இழுத்துச் செல்லும் வேக ஒட்டம் மனசுள் அச்சத்தை ஊட்டுகிறது. குளம் போல் தடுக்கப்பட்ட நிலையிலும் இந்த ஒட்டம் காலை வைத்தால் இழுக்கிறதே? அப்பால் சங்கிலிக் கட்டைகள் தாங்கிகள் எதுவும் மிச்சமில்லை. எல்லாவற்றையும் பெருகி வரும் கங்கை அடித்துச் சென்று விட்டதோ? சேலையை வரிந்து கொண்டு இவள் தயங்கியவாறு இறங்குகிறாள். இழுப்பு...
அருகிலே, பெரிய ஒட்டுக் குங்குமத்துடன் ஒரு குஜராத்தி நங்கை கோலாகலமாக ஒரு மூதாட்டியின் கையைப் பற்றிக் கொண்டு நீராட உதவுகிறாள்! ‘ஆவோஜி ஆவோ..!’
இரண்டு மூன்று நான்கு பேர்களாகக் கைகளைப் பற்றிக் கொண்டு ஒட்டத்தைச் சமாளித்து மூழ்கி எழுந்திருக்கின்றனர். இந்த வளையத்தை விடாமல் வைத்து இயக்கும் நங்கையின் உற்சாகத்துக்கு அளவேயில்லை. அவள் கணவனோ, சகோதரனோ தெரியவில்லை. ஓர் இளைஞன், நீராடலுக்கு இடையே படியில் அமர்ந்து காட்சிகளை ரசிக்கிறான்.
கிரிஜா தயங்கி நிற்பதைக் கண்டு, ‘ஆவோஜி ஹாத் பகட்லியே!’ என்று ஊக்குகிறான். ‘ஆவோஜி! ஆவோஜி!’ என்று நங்கை கைநீட்டிக் கோர்த்துக் கொள்கிறாள்.
மூழ்கு...! மூழ்கு....! கங்கை.. கங்கையே இது என்ன புத்துணர்வு? இதுதான் பேரின்பமோ? எல்லாத் துன்பங்களையும், எல்லாக் குழப்பங்களையும் அடித்துச் சென்று தெளிவும் துலக்கமும் தரும் இந்த ஒட்டம். இதில் போகாமல் பத்திரமாக இருக்கிறோம் என்ற கைப்பிணைப்புக்கள்.
மூழ்கி...! மூழ்கி...!
இவர்களைப் பிணைத்துக் கொண்டு நீரில் ஆடும் நங்கைக்குத் தலை முழுகத் தெரியவில்லைதான். ஆனால், ஆவோஜி ஆவோஜி! என்றழைத்துப் புதிய புதிய மக்களை வட்டத்தில் கோர்க்கிறாள். இளைஞர், சிறுமி, முதியவர். எல்லோருடைய அச்சத்தையும் விரட்டும், கை ஆதரவாய்ப் பிணைக்கிறாள். இங்கே மொழியும் இனமும், பிராந்தியமும் அடிபட்டு, ஒரே ஒட்டத்தில் சங்கமமாகின்றன.
இந்த நிமிடங்களாகிய நேரம். இந்த கைப்பிணைப்புக்கள் தரும் பத்திர உணர்வு. இந்த ஓட்டம். இந்தப் புத்துணர்வு தரும் நீராடல்.எல்லாம் சத்தியம். இங்கு தாழ்ந்த சாதி: உயர்ந்த சாதி, படித்தவர், படிக்காதவர், கிழக்கு மேற்கு வடக்கு, தெற்கு எதுவும் இல்லை. கரையில் ஏறியபின் மீண்டும் வந்து இந்தக் கைப்பிணைப்பில் இணைகின்றனர்.
‘...இதோ இருக்காளே? ஏம்மா? ஒருவார்த்தை சொல்விட்டு வரக்கூடாதா?...’
கிரிஜா திரும்பிப் பார்க்கிறாள்.
கெளரியம்மாள், கணவனைக் கையைப்பற்றி அழைத்துக் கொண்டு வந்திருக்கிறாள்.
‘நீங்க, மாமா எழுந்து, அவரைக் கூப்பிட்டு வர நேர மாகும்னு நான் வந்துட்டேன். உங்களுக்கு வழி தெரிஞ்சதில்லையா?...’
‘...இங்கியும் இழுப்புத்தானே இருக்கு....?’
இதற்குள் குஜராத்திப் பெண்ணின் உற்சாகம் பஞ்சாபிக் காரிக்குத் தொற்றிவிட, ஆயியே... ஜி...’ என்று கையை நீட்டுகிறாள்.
‘மாமி, இப்படி வாங்கோ, கையைப் புடிச்சிட்டு நாலைஞ்சு பேராக ஸ்நானம் பண்ணுறது ரொம்ப சுகமாயிருக்கு. கங்கைக் கரைக்கு வந்து செப்பில் முகர்ந்து விடுவதா? மாமா? வாங்க! மாமி கையெப் பிடிச்சுக்குங்கோ...’
உற்சாகம் பிய்த்துக் கொண்டு போகிறது. இந்த வளையத் தில் இப்போது கிழவரின் மறு கையைப் பற்றிக் கொள்ள ஒர் இளைஞன் வருகிறான், அவன் மனைவி மறுகை. இடையில் இரு தம்பதியரையும் இணைக்கும் கிரிஜா-மூழ்கி மூழ்கி அந்தப் பரவசத்தில் திளைக்கின்றனர்.
கெளரி அம்மாள் ‘கங்கே, யமுனே, சரஸ்வதி, காவேரி, பவானி என்று எல்லா நதிகளையும். சங்கமிக்க வைக்கும்படி சொல்லிச் சொல்லி மூழ்குகிறாள். நீரோட்டம் புதுமையாக வருகிறது; புதிதுபுதிதாக மனிதர்கள் இணைவதும், கரையேறு வதும் புத்துணர்வின் அலைகளாய்ப் பிரவகிக்கின்றன.
கிரிஜா பழைய கிலேசங்கள் சுத்தமாகத் துடைக்கப்பட, தன்னைப் புதிய கன்னியாக உணருகிறாள்.
மூன்று நாட்கள் கங்கை நீராடலும் கரையில் திரிதலுமாக ஒடிப் போகின்றன. விடுதலையின் இன்ப அமைதியைக் சூழந்தைபோல அநுபவிக்கிறாள்.
--------
அத்தியாயம் 9
நான்காம் நாள் மாலையில் கிரிஜா, பாலத்தருகில் படித்துறையில், கால்களை நீரில் வைத்துக் கொண்டு அமர்ந்திருக்கிறாள். சின்னஞ்சிறு இலைப்பகுதிகளில், பூக்களின் இடையே, தீப ஒளிகள் மிதந்துவரத் தொடங்குகின்றன. ஒ... மாலை ஆரத்தி...
காவித் துறவியானாலும், கட்டழகியானாலும், பஞ்சுப் பிசிறுகளாய் நரைத்துத் தேய்ந்த கிழவியானாலும்,
இந்தத் தீப வழிபாட்டை நீர்ப்பெருக்குக் காணிக்கை யாக்குகின்றனர்.
அந்தத் தீபங்கள் இலை, மலர், சுற்றிலும் முழுக்கும் நீர், என்றாலும் இலைநடுவே சில ஒளித்திரிகள் சங்கிலியை அறுக்கும் வேக ஒட்டத்திலும் சுழிப்பிலும் அணையாமல் செல் கின்றன. பாலம் கடந்து சுழற்சியிலும் வீழ்ச்சியிலும் கூட அணையாது செல்லும் தீபங்கள் பாலம் கடந்து வந்தாலே அவற்றைக் குழந்தைபோல் வாழ்த்துகிறது உள்ளம்.
நாள்முழுதும் அவசரத்திலும் பரபரப்பிலும் திரியும் இளம் தலைமுறையினரை நினைக்கிறாள்.
கவியும் சாருவும் அறையில் எப்போதும் பரபரப்பான ‘ட்ரம்’ ஆட்டபட்ட இசையைப் போட்டுக்கொண்டு பழகுகிறார்கள். அமைதியாக இருத்தல், போர் என்று அலுப்பூட்டுவதாகக் குடைகிறது. தந்தை ‘வாக்மன்’ செட் வாங்கிக் கொடுத்திருக்கிறார். இந்த அமைதி கூட்டாத வெளி இசையைக் காதுக்குள் வாங்கி வேறு அநுபவிக்க வேண்டுமா? அதைப் போட்டுக் கொண்டு, பாடம் படிக்கிறாள்...அந்தக் குழந்தைகள் வாழ்க்கையாகிய இந்த நீரோட்டத்தில்,எதிர்காலமாகிய ஒளித்திரியை எப்படி ஏந்திச் செல்லப் போகிறார்கள்?
‘டிச்சர்...? நீங்க கிரிஜா டீச்சரில்லே?...’
திடுக்கிட்டாற் போல கிரிஜா திரும்புகிறாள். கூப்பிட்ட இளைஞன், வற்றி மெலிந்த உடலில் முப்புரி நூல் ஒட்டாம லிருக்க ஒற்றைச் சுற்று வேட்டியுடன் காட்சியளிக்கிறான். கருவலான உடல்வாகு. மொட்டையான தலையின் உச்சியில் வட இந்தியச் சமயாசாரச் சின்னமான இரண்டொரு முடி நீட்டிக் கொண்டிருக்கிறது.
‘யாரப்பா..? எனக்குப் புரியலியே?...’
‘நீங்க கிரிஜா டீச்சர் தானே?’
‘ஆமாம்.?’
‘நான்தான் டீச்சர், தருமராஜன், நீங்க தருமம்னு கூப்பிடுவேள்... சாவித்திரி மாமி பிள்ளை... நினைப்பில்லையா...?’
‘ஒ...!’
அவனுடைய தாய் நினைவில் வருகிறாள். வரிசையாக எட்டுக் குழந்தைகளுக்குத் தாய். புரோகிதப் பரம்பரையில் வந்து, ‘சரஸ்வதி’யின் பார்வையை எந்த வகையிலும் பெறாமல், வெறும் தீனிப் பட்டறையாக வயிறு வளர்த்து, அதன் காரணமாக நோயிலே வீழ்ந்த தந்தை. அவனுடன் எட்டுக் குழந்தைகளையும் காப்பாற்ற, கல்லுரலைக் கட்டி இழுத்து, அப்பளக் குழவியை ஒட்டி, இரும்புலக்கை பிடித்து, தன்னைக் கரைத்துக் கொண்டிருந்த அந்த அன்னை-கிரிஜாவுக்கு அவ்வப்போது வந்து உதவுவாள். இந்தத் தருமனுக்கும் இவன் சகோதரி விமலுவுக்கும் கல்வி பயிற்றும் பொறுப்பை அவள் ஏற்றிருந்தாள்.
விமலு தட்டிமுட்டி ஒன்பது வரை தேறி வந்தாள். இவன் ஏழையே தாண்டவில்லை.
‘அம்மா செத்துப் போயிட்டா டீச்சர். அப்பாவும் அப்பவே போயிட்டார். நாணா கல்யாணம் பண்ணிண்டு பங்களூர் போயிட்டான். விமலுதான் கான்வெண்ட் ஸ்கூல்ல டீச்சரா இருக்கா. சிவகாமி, சச்சு, ராஜூ எல்லாரும் ஊரில் இருக்கா, நான் இப்படி ஸ்வாமிகளோட வந்துட்டேன்...’
‘...இங்க நீ என்ன பண்ணுவே? வெறும சாப்பாடு போடுவாளா?’
‘இல்ல உச்சர், எடுபிடியா ஏவிய காரியமெல்லாம் செய்யனும்...நீங்க டில்லிலேந்து வந்திருக்கேளா டீச்சர்...?’
‘ஆமாம்...’
‘நீங்க ஸ்வாமிகளக் கிட்டப் பார்த்துப் பேசினேளா டிச்சர்...?’
அவள் தண்ணிரைப் பார்க்கிறாள். இந்த சத்தியங்களுக் கப்பால் எந்த நினைப்பும் எனக்கு இல்லை என்பதை எப்படிச் சொல்வது?
‘நீங்க வாங்க டீச்சர். நான் கிட்டக் கூட்டிட்டுப் போய்த் தரிசனம் பண்ணி வைக்கிறேன்...’
தன்னாலும் அவளுக்கு ஏதேனும் செய்ய முடியும் என்ற ஆர்வம், அவன் முகத்தில் ஒளிவிடுகிறது.
‘இருக்கட்டும்பா, சந்தோஷம். நான் வரப்ப சொல்றேன்...’
‘...நான்...அதோ, அந்தக் கட்டிடத்தின் முன்புற ரூமில் தான் அநேகமா இருப்பேன்...பூஜையின்போது வாங்கோ டீச்சர்...!’
வாழ்க்கை எந்தெந்த வகைகளில் மனிதர்களைத் திசை திருப்புகின்றன! இந்தப் பையனின் மனித நம்பிக்கையை மதிப்பதற்காகவேனும் அவள் அவன் சொல்லும் பூஜைக்குப் போகவேண்டும்!
அன்று கெளரியம்மாளும் கணவரும் இரவு உறங்க வர நேரமாகிறது.
‘ஏம்மா? உன்னைத் தேடினேன். காணலை, ருஷிகேசம் போயிட்டு வந்தோம். கங்கையை எங்கே பார்த்தாலும் அவ்வளவு அழகாயிருக்கு. அக்கரைக்கும் இவரை நடத்திக் கூட்டிண்டு போனேன். கோவிலெல்லாம் பார்த்தாச்சு...நாலு நாள் முழுசாயிட்டுது. ஒரே ஒரு குறைதான் ஆனால்...’
‘என்ன மாமி?...கங்கைக் கரைக்கு வந்துட்டுக் குறை யோடு போறது?’
சுவாமிகளக் கிட்டத்தில் பாக்கணும். இவருக்கு ரெண்டு வார்த்தை பேசணும்னு ஆசை. எங்க மாமனார் இருக்கறச்ச எங்க ஊருக்கு வநது பூஜையே நடந்திருக்கு. முன்சீப்போ இல்லையோ? எல்லாம் இவா கைதான். அவர் பேர் சொன்னாலே சுவாமிகளுக்குத் தெரியும். சொல்வி ஆசிர்வாதம் வாங்கிக்கணும்னு ...’
‘ஒ, இதுதானா மாமி?...நாளக்கிக் காலம நான் ஏற்பாடு செய்யறேன். இங்க ஒரு பையன் இருக்கிறான். அவன் என் பழைய ஸ்டுடன்ட். கஷ்டமேயில்லை...!’
மறுநாள் காலையில் ஏழரை மணிக்குள் நீராடல், காபி எல்லாம் முடித்துக் கொண்டுவிட்டார்கள். தட்டில் சீப்புப் பழம், கற்கண்டு என்று காணிக்கைப் பொருட்களை ஏந்திக் கொண்டு தருமராஜன் குறிப்பிட்ட விடுதிப் பக்கம் வருகிறார்கள். கிரிஜா உள்ளே செல்கிறாள்.
‘தருமராஜன் இருக்கிறாரா...’
அது அலுவலக அறை போலிருக்கிறது. மூக்குக் கண்ணாடிக்காரர் ஒருவர், தரைச்சாய்வு மேசையின் பக்கமிருந்து அவளை ஏறிட்டுப் பார்க்கிறார்.
‘தருமராஜனா? ... அப்படி இங்கு யாரும் இல்லை... நீங்க யாரு?... எங்கேருந்து வராப்பல?’
‘நா...ன் எனக்கு...டெல்லிலேந்து இப்ப வரேன்...’ அவள் தயங்கிச் சொல்லி முடிக்குமுன் உள்ளிருந்து தருமனே வந்து விடுகிறான்.
‘அடடா, வாங்க உச்சர், வாங்க!... சுவாமிகளப் பார்க்கணுமா?’
‘இவனைத்தான் கேட்டேளா.. அவருடைய ஆர்வம் விழுந்து விடுகிறது. ஏண்டா, உன்பேர் தருமராஜனா?. இவன அசட்டுப் பிச்சன்னு கூப்பிட்டாத்தான் தெரியும்; இவனுக்கு இப்படி நேர்மாறாக ஒருபேரை ஏத்திவச்சா...?
‘நீங்க வாங்க உச்சர்...! அவா...எங்க டீச்சர், மாமா, பெரிய... டீச்சர். இங்க டில்லில இருக்கா...’
‘சரி சரி கூட்டிண்டுபோ.’
கிரிஜா, கெளரியம்மாள், நியம ஆசாரங்கள் துலங்கும் கோலத்துடன் அவள் கணவர் ஆகியோருடன் அவன்முன் செல்கிறாள்.
சுவாமிகள் வீற்றிருக்கும் இடத்தில் கைகட்டி வாய் பொத்தி இருவர் உடன் இருக்கின்றனர். அவருக்கு முன் அடுக் கான கோப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. வேறொருவர் அவர் வீற்றிருக்கும் பலகையின் கீழ், பணிவாக, அவர் பணிக்கும் உத்தரவுகளை ஏற்று கோப்புக் கடிதங் களுக்குப் பதில் எழுதச் சித்தமாக அமர்ந்திருக்கிறார். ஜன்ன லாகத் தெரியும் வாயிலின் முன் இவர்கள் நிற்கின்றனர். கெளரியம்மாளின் கணவர், ஏதோ வடமொழி சுலோகத்தை முணமுணப்பைவிட உரத்த குரலில் சொல்லிக் கொண்டிருக் கிறார். சுவாமிகளுக்கு முன், பணிவும் குறுகலுமாகக் கூனிக் கைகுவித்து தருமன் நிற்கிறான். ஐந்து நிமிடங்கள் பத்து நிமிடங்கள் என்று ஒடுகின்றன. இவர்கள் நிற்பதை அறிந்தாற் போலவே அவர் காட்டிக் கொள்ளவில்லை. கிரிஜா தருமனின் செவியில் சுெகிசுக்கிறாள்.
‘தருமா, இப்ப நேரமில்லைன்னா, பின்னாடி பார்க்கலாமே?’ அவன் சாடையாக, ‘இப்ப முடிஞ்சிடும் டீச்சர்... என்று சொல்வதற்குள் ஒராள் ஒரு மூட்டை அரிசியைச் சுமந்து கொண்டு வந்து காணிக்கைபோல் வைக்கிறான். அந்தச் சிறு சார்ப்பில் தட்டுத்தட்டாக, ஆப்பிள், கொய்யா. மாதுளை, வாழை என்று கனிகள் வருகின்றன. கற்கண்டு, பாதாம், திராட்சை, பறங்கி, பூசணி, வெண்டை, பருப்பு, போன்ற சாமான்கள் வந்து நிறைகின்றன. கூடவே சானல் சென்ட் மணம்...ஒ...ரோஜாமாமியும் அவள் கணவரும்தான்!
கிரிஜா திடுக்கிட்டாற்போல் ஒரமாக ஒண்டிக் கொள்கிறாள். எப்படி நிகழ்ந்ததென்றே தெரியாமல் சுவாமிகள் முகம் மலரத் திரும்பிப் பார்க்க, அவர்கள் இருவரும் விழுந்து வணங்குகின்றனர். ரோஜாமாமி, வயிரங்கள் டாலடிக்க, சாயம் பூசிய கூந்தல், நீராடிய ஈரத்துடன் பூ முடிச்சாய்ப் புரள, சாதியை அறிவுறுத்தும் ஆசாரச்சேலைக்கட்டுடன், பணிவாக நிற்கிறாள்.
‘மலைபோல வந்தது, ஸ்வாமி அநுக்ரகத்தால் பணிபோல போயிட்டுது...’
மாமி கண்ணிர் தழுதழுக்கக் கரைகிறாள்.
‘எல்லாரும் க்ஷேமந்தானே?’
‘ஆமாம், குழந்தைக்குக் கல்யாணம் நிச்சயமாயிருக்கு; பெண்ணும் ஸ்டேட்ஸ்லதான் இருக்கா’
‘ராமகிருஷ்ணன்னு... யு. எஸ். ஏ. ல. இருக்கார். அவர் பொண்...பெரியவா ஆசீர்வாதம், தோணித்து, பார்க்கணும் பிட்சை பண்ணி வைக்கணும்னு...’
மாமாவும் மாமியும் விழுந்து பணிய, சுவாமிகள் குங்கும அட்சதை பிரசாதம் கொடுத்து ஆசி வழங்குகிறார்.
நெருக்கி அடித்துக் கொண்டு நிற்காமல் கிரிஜா வேறொரு பக்கம் நகர்ந்து கொள்கிறாள். இந்த அட்சதைப் பிரசா தத்தை கெளரி அம்மாளும் வாங்கிக் கொள்கிறாள்... மடமட வென்று சாமான்கள் அகற்றப்படுகின்றன.
‘எல்லாரும் நகருங்கோ சுவாமிகள் பூஜைக்குப் போகிறார்...!’ விரட்டி அடிப்பதுபோல் ஒரு காவலாளி அந்தச் சிறு சார்ப்பில் யாரும் நிற்காதபடி விலக்குகிறான்.
கிரிஜா வெளியே வந்து விட்டாள். முக்குக் கண்ணாடி எழுத்தர் யாரிடமோ சொல்வது காதில் விழுகிறது.
‘ஸ்டீல் ஸெகரிடரியா இருந்து இப்பதா ரிடயர் ஆகி எதுக்கோ சேர்மனா இருக்கார். அவா, அந்தம்மா, ரெண்டு பேருக்கும் ரொம்ப ஈடுபாடு. அந்தம்மாவும் சும்மா சொல்லக் கூடாது, எப்ப போனாலும் டில்லில சாப்பிடாம விடமாட்டா, ரொம்ப தாராளம். பணம் பதவி இருக்கிறவாகிட்ட இப்படி ஒரு குணம் பார்க்க முடியாது... என்றவர் குரலைத் தாழ்த்திக் கொண்டு, இப்ப ஸி. பி. ஐ. ரெய்டுன்னு ஒண்ணச் சொல்லி வேண்டாதவாளுக்கு ஒரு பேர்க்குழப்பம் கொண்டுவரது வழக்கமாப் போச்சு... இவா தெக்குத்திக் காரான்னு பொறாமை புடிச்சவன் எவனோ கிளப்பி விட்டுட்டான். ஒரு சுக்குமில்ல... கைங்கர்ய சிரோமனின்னு படடமே குடுத் திருக்கே? அவாளுக்குச் சோதனைன்னு வரதுதான் சகஜமாப் போயிட்டுது... அதான் தோணித்து, ஒடனே காரைப் போட்டுண்டு பிட்சை பண்ணி வைக்கணும்னு ஓடி வந்துட்டா...’
கிரிஜாவுக்குக் கால்கள் அங்கேயே நிலைக்கின்றன.
ஸி. பி. ஜ. ரெய்ட்...மூளையில் மின்னல்கள் பளிச்சிடுகின்றன. அந்தச் சிவப்பு வேலைப்பாட்டுப் பெட்டி-அதில் என்ன இருந்திருக்கும்? அதனால்தான் அது இவர்கள் விட்டுப் பீரோவில் இடம் பெற்றதோ? சாமுவுக்குத் தெரிந்து தான் இந்த மறைப்பு நடந்திருக்கும். பெட்டியில் இருப்பவை. பல இலட்சங்கள் அல்லது கோடி பெறத் தகுந்தவையாக இருக்க வேண்டும்-என்னவாக இருக்கும்?
திடீரென்று குளிர் சிலிர்ப்பாக ஒருணர்வு அவளை உந்தித் தள்ளுகிறது. ரோஜாமாமி அவளைப் பார்த்திருப்பாளோ? இங்கே சந்தித்துக் குற் றவாளியாக அவளை இட்டுப்போகும் ஒரு சந்தர்ப்பத்துக்கு இடம் எப்படிக் கொடுக்க விடுவிடு வென்று அவள் வெளியேறுகிறாள். கெளரியம்மாளையும் கணவரையும் நினைத்தால்கூடப் பிரச்னை கிளம்பிவிடுமோ என்று தோன்றுகிறது. நிச்சயமாகப் பழமை வாதியான அந்த அம்மாள், இவள் வீட்டைவிட்டு வந்திருப்பதை ஆமோதித்திருக்கமாட்டாள். இவள்மேல் வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையும் சரிந்துவிழக்கூடிய சந்தர்ப்பம் நேரிடும். இவள் காது மூக்கில் இல்லாமல், வெறும் சங்கிலிக் கொடியுடன் பொட்டு வைத்துக் கொண்டு வந்திருக்கிறாள். கல்யாணமாயிருக்கோ என்று கேட்கவில்லை. கெளரி அம்மாள் இங்கிதம் அறிந்தவள்தான். தங்கள் காரியத்தை மட்டும் பார்த்துக் கொண்டு போகிறார்கள். அநேகமாக மறு நாளே அவர்கள் ஊர் திரும்பக்கூடும்.
இப்போது கிரிஜா என்ன செய்யப் போகிறாள்?
----------
அத்தியாயம் 10
வீட்டை விட்டு வெளியேறும்போது, ஒரு அடங்காத முட்டல், உந்தல் அவளைத் தள்ளி வந்தது. கங்கை ஒட்டம், மனதுக்குப்பிடித்த சூழல் என்று தன்னைச் சுத்திகரித்துக் கொண்டு வந்தாள். இப்போது அந்த விடுதலையின் பரபரப்பு ஒயாமலே, எதிர்காலம் என்ன என்ற பிரச்னையாக அவளுள் விசுவருபமாக ஆக்கிரமித்துக் கொள்கிறது. இவள் வீட்டை விட்டு ஒடி வந்துவிட்டாள் என்று, ரோஜாமாமி அவள் தற் பெயராகிய பளிங்குப் பாண்டத்தைப் போட்டு உடைத்து விடுவாளோ என்ற அச்சம் இழையாக அலைக்கிறது. போயும் போயும், எந்த ஆடம்பரச் சூழலை வெறுத்தாளோ அங்கேயே வந்து சேருவாளோ?
ஹரிகி பைரியில் இப்போதும் கூட்டம், நீராடும் கலகலப்பு, குழுமிக் கொண்டிருக்கிறது. தூய மஸ்லின் உடையணிந்த ஒரு வங்க மூதாட்டி, வரிசையாக வறியவர்களுக்கு அன்னதானம் செய்கிறாள். அடுக்கான ரொட்டி; அகலமான பித்தளைப் பாத்திரத்தில் மஞ்சளாக ‘தால்’ (பருப்பு) ஒவ்வொருவருக்கும் நான்கு ரொட்டிகளும் இரண்டு கரண்டி பருப்புமாக ஊற்றி ஊற்றிக் கொடுக்கிறாள். வேலையற்று, இந்த கங்கைக் கரையிலும் அழுக்கைச் சுமந்து கொண்டு வேடம் போட்டுப் பிச்சை பெறும் கும்பல்...பிச்சை பெறுவதற்குச் சுத்தமாக இருக்கலாகாது..?
அருவருப்பாக இருக்கிறது. நான் பெரியவள், நான் கொடுப்பவள் என்ற அகங்காரத்தை நிலைநாட்டிக் கொள்ளும் வருக்கம் கங்கையின் தூய்மையையும் மாசுபடுத்து கிறதென்று நினைத்துக் கொள்கிறாள். இந்த மக்களே இல்லாத கங்கைக்கரை, ஆதிநாட்களில் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை செய்ய முயலுகிறாள்.
‘ருஷிகேச்... ருஷிகேச்...என்று பஸ்காரன் ஒருவன் கூவியழைக்கிறான்.
இங்கு நிற்பதற்குப் பதில் பொழுதைக் கழிக்கச் செல்லலாமே என்று தோன்றுகிறது. நிறுத்தி ஏறிக்கொள்கிறாள்.
சாலையில் செல்கையில் எந்தப்பக்கம் நோக்கினாலும் பசுமை கொள்ளை கொள்கிறது. கங்கை கண்பார்வையை விட்டு மறைந்து போகிறது. ஆனால் அவள் வண்மையில் வஞ்சகமில்லாத பசுமை, சரத்காலமல்லவா? அருவிகள் ஆங்காங்கே சுரந்து வருகின்றன. புல்வெட்டுபவர்கள், கூவி வேலை செய்யும் எளிய பெண்கள், வறுமையை இந்த வண்மையிலும் அகற்ற முடியவில்லையே என ஏக்கத்துடன் ஆங்காங்கு தென்படும் குழந்தைகள். குழந்தைகளால்தான் வறுமை, குழந்தைகள் வேண்டாம் என்று சொல்லும் சிவப்பு முக்கோண அழுக்குச் சுவர், என்று காட்சிகள் ஒடுகின்றன.
அவளுள் ஒர் ஆசை உயிர்க்கிறது. இந்த எளிய குழந் தைகள்.வறுமைக்கு நீங்களே காரணம் என்று குற்றம் சாட் டப்படும் குழந்தைகளைத் தீண்டி, நலம் செய்து, படிப்பித்து... இப்படி ஒரு கிராமத்தில் பள்ளி ஆசிரியையாக...ஒ.அவள் யாருக்கும் கட்டுப்படாமல் இங்கு வாழ வரமாட்டாளா?.
இந்தச் சூழலில் ஒரு சிறிய பள்ளிக் கூடம். இந்த மக்கள் ஆத்மார்த்தமாக வழங்கக் கூடிய அன்பு.
மனசை இனிய கனவுகளில் இலயிக்க விடுகிறாள். ஊர்தி கங்கைக் கரையைக் காட்டுகிறது. மீண்டும் மறைந்து போகிறது. வெளியில் மிக உக்கிரமாக விழும் பொட்டலில் தகர அடுக்குகளாய் நெருங்கியுள்ள வாகனங்களிடையே குலுக்கிக் கொண்டு நிற்கிறது.
கிரிஜா குலுங்கினாற்போல் பார்க்கிறாள்.
ஒ...இந்த ஊர் இவ்வளவு நாகரீகமடைந்து விட்டதா? இருமருங்கும் கங்கை தெரியாதபடி அடைத்துக்கட்டிய கட்டி டங்கள், சாக்கடைகள், இரைச்சல்கள், மனித மந்தைகளாகச் சந்தைக் கூட்டங்கள்.
இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன், இவள் ஆசிரியர் களுடன் பயணம் வந்தாளே, அப்போது எவ்வளவு அழகாக இங்கே அமைதி ஆசிரமங்கள் திகழ்ந்தன? ஒ, அந்த ஆசிரமங் கள் இந்நாள் எங்கே மறைந்தன? பெரிய சாலை. நீள நெடுகச் செல்கிறது. உயர உயர விடுதிகள், குளிர்சாதன அறைகள், வசதி மிகுந்த படுக்கைகள், உணவு. வாருங்கள் என்றழைக்கும் ஆடம்பர விடுதிகள்...
கங்கைத்தாயே! நீ எங்கு மறைந்தாய்? பிரச்னைக்கு முடி வென்று அவள் எங்கே வந்து நிற்கிறாள்? வெயிலின் உக்கிரம் தாளவில்லை. காலையிலிருந்து நல்ல உணவு உண்டிராததால் பசி வயிற்றைக் கிண்டுகிறது. இந்தச் சாலையில் இவள் ஏறி உணவு கொள்ளும்படியான விடுதிகள் தெரியவில்லை. துணிக்கடை, பாத்திரக்கடை, எலக்ட்ரானிக் சாமான்கள் விற்கும் கடைகள்...பழக்கடை ஒன்றில் நான்கு பழம் வாங்கிக் கொள்கிறாள்.
‘கங்காஜி காகினாரா...கஹா... ங் ஹை’
ஸீதா ஜாயியே! ஸீதா... நேராக... நேராகப் போ...
அவள் நடக்கிறாள், நடை வேகத்தில் எண்ணங்கள் விரட்டியடிக்கப் பெறுகின்றன. -
கங்கைக்கரை எங்கே? இவள் பிரச்னை எப்படி முடியும்? திரும்பிப் போக வேண்டுமா வேண்டாமா? அவளுடைய வாழ்வின் இன்றையப் பிரச்னையின் முடிவு... கங்கைக்கரை கள்...கரும்புகை கக்கும் டெம்போக்கள், லாரிகள், நடக்க இட மில்லாதபடி நெருக்கிக் கொண்டிருக்கின்றன. மக்கள் இங்கே அம்ைதியைக் குலைத்துக் கொண்டு வந்து வந்து போகிறார் கள். இங்கு இருக்க அமைதி நாடி வரவில்லை. ஓ, ஒரே நாளில் கங்கோத்ரி, யமுனோத்ரி, உத்தரகாசி, எல்லாம் பார்க்கலாம் என்று பறந்து கொண்டு வந்து, தங்கள் வசதிப் பெருமைகளைக் காட்டி விட்டுப் போகிறார்கள்...
இருபத்தைந்து வருஷங்களுக்கு முன்... கங்கா... ஆமாம்... இவளைவிட இரண்டு வயது பெரியவள். அவள் பாட்டு டீச்சராக வந்திருந்தாள். தெற்குச் சீமைக்காரி. தாமிரபரணி யில் விழுந்து நீந்திய பழக்கம். ஹரித்துவாரத்தில் அவளைப் பெரியவர்கள் யாரும் நீந்தவிடவில்லை.
‘அடி, இங்கே நீஞ்சிக் காட்டுறேன்’ என்று குதித்தாள்.
‘உன் சுண்டைக்காய் தாமிரபருனி இல்லைடி கங்கை வாயை மூடு! பத்திரமாய் எல்லாரும் ஊர்போய்ச் சேரனும்!’ என்று தலைமை ஆசிரியரின் மனைவியான பர்வதம்மா அதட் டினாள். எல்லோரும் இக்கரையில் வண்டியை விட்டிறங்கி, பார்த்துக்கொண்டே லட்சுமணன் ஜுலா தொங்குபாலத்தில் நடந்து அக்கரை சென்றார்கள்... அந்தக் கரை, எவ்வளவு அமைதியாக இருந்தது!
ஆசிரமம்போல் ஒரு விடுதி. ஒரு பண்டிட் நடத்தினான். அவனிடம் இருபது பேருக்கும் உணவு தயாரிக்கச் சொல்லி விட்டு, இவர்கள் கங்கையில் நீராடினார்கள். அப்போது, இந்த கங்கா, சேலையை வரிந்து கட்டிக் கொண்டு, ஆழ்ந்து நீலமாகத் தெரியும் கங்கைமடுவில் குதித்துவிட்டாள்.
அடிபாவி...! கங்கா!...வாடி...!...
எல்லாரும் அடிவயிற்றில் திகிலுடன் எப்படிக் கத்தினார்கள்! அவள் உண்மையிலேயே எவ்வளவு துணிச்சல்காரி! அவர்கள் குழுவில் அந்தத் துணிச்சல் எவருக்கும் இருந்திருக்க வில்லை.
ஏன்? இப்போது நினைத்தால் கூட அற்புதமாக இருக்கிறது. அவள் அந்த மடுவில் நீந்திவிட்டு, அலர்ந்த தாமரை போல் முகத்தைக் காட்டிக்கொண்டு வந்தாள். பெரிய இலைப் படகில் ஒளித்திரியாய் காட்சியளித்தாள்.
‘நீ கெட்டிக்காரி. துணிச்சல்காரி ஒப்புக்கறோம். இனி இந்தப் பரீட்சை வேண்டாமடி பாவி!’ என்றாள் முதிய பாகீரதி டீச்சர். பிறகு...பிறகு...
நெஞ்சு முட்டுகிறது. கல்யாணமென்று போனாள். வேலையை விட்டுவிட்டாள். நாலைந்தாண்டுகளுக்குப் பிறகு, சென்னைக் கைத்தறிச் சந்தையில் அவள் புருஷனையும் மூன்று பெண்களையும் அறிமுகம் செய்வித்தாள்.
‘மூணும் பொண்ணுடி...’ என்று ஒர் அழுகைச் சிரிப்பாகச் சிரித்தாள்.
‘நீதான் அற்புதமான நீச்சல்காரியாச்சே, கங்கா? பொண்ணானால் என்ன?’
‘தண்ணில நீஞ்சலாண்டி...’ என்று அரைகுறையாக நிறுத்திவிட்டு அந்த இயலாமைச் சிரிப்பையே நெளிய விட்டாள்.
‘நீ இன்னும் தனியாத்தான் இருக்கியாடி?...’ இவள் அப்போது தனியாகத்தான் இருந்தாள்.
‘ஜாலி...டி’ என்று சொன்னாள் பிறகு ஆறுமாசங்களில் இவள் கேள்விப்பட்ட செய்தி...
‘கிரி, நம்ம கங்கா இல்ல? செத்துட்டாளாம்டி, பாவி, நாலாவது உண்டாயிட்டாளாம். போயி ஏதோ மருந்துச் சாப்பிட்டு ஏடாகூடமாயி. ஹேமரேஜ்ல...’
அம்மம்மா...
கங்கையே அழுவது போல் நெஞ்சு முட்டிப் போகிறது. ‘நான்காவது பிள்ளையாக இருக்கவேண்டும் என்று கணவன் சொல்லிச் சொல்லி ஆணை போட்டிருப்பானோ? ஏன் சிதைத்துக் கொள்ளப் போனாள்? பெண்ணாயிருந்துவிடுமோ என்று சிதைத்துக் கொண்டிருப்பாளோ?
கங்கைமடுவில் அவள் முகம் காட்டிக் கொண்டு செல்வது போலிருக்கிறது. அப்படியே அன்று போயிருந்தால்கூட, இலைப்படகின் ஒளித்திரிபோல் நினைவில் நின்று கொண்டி ருப்பாள். இப்போதோ, வாழ்க்கையாகிய ஓட்டத்தில், சுழிலில் நலிந்து மோதி, பேதையாக, கோழையாக...
கங்கைப் பெருக்கில் சுடரணைந்தது மட்டுமில்லை. படகே கவிழ்ந்து போன இடம் தெரியாமல் மூழ்கிவிட்டது போல்... அழிந்துபோனாள்.
நெஞ்சு முட்டுகிறது. அபு கொடுத்த வினாத்தாளில் இப்படி ஒரு கேள்வி இருக்கிறது.
‘திருமணமானபின், வாழ்வின் மொத்தமான பிரதான ஒட்டத்தில் இருந்து விலகி, ஒரு தனிக் கூட்டில் உங்கள் ஆளுமையைக் குறுக்கிக் கொள்வதை நீங்கள் விரும்புகிறீர்களா?’..
ஆம். திருமணமும் பிள்ளைப் பேறும் பெண்ணின் வாழ்வை மலரச் செய்யும் மங்கலங்கள்தாம். ஆனால் அந்த மங்கலங்களே இவள் சக்தியை, சாரத்தை உரிமையுடன் சூறையாடுகின்றன. பெண் பிறப்பதும் பிள்ளை பிறப்பதும் இவள் ஒருத்தியைச் சார்ந்த நிகழ்வுகளா?...இவளே, மூன்றாவதாக ‘பரத்’தைப் பெற்றிராமல், பெண்ணைப் பெற்றிருந்தால்...!
அவனைச் சுமந்த நாட்களில் அந்த அச்சம் இவளுக்கும் இருந்ததே? கணவன், அவனைச் சார்ந்த வெகுஜன மதிப்பீடுகள், எல்லாம் பெண்ணுக்கு விரோதமாகவே செயல் படுகின்றன. o
கீழெல்லாம் சதக் சதக்கென்று ஈரம். கரையோர்ப்பாதை ஒற்றயடிப்பாதையாக, ஏற்றமும் இறக்கமுமாகக் குறுகிப் போகிறது... கும்பல் கும்பலாக மக்கள். டிரக் ஒன்று மேலே மலைச் சாலையோரம் எழுப்பப் பெறும் கட்டிடத்துக்கான சாதனங்களைக் கொண்டு ஏறுகிறது...
கிரிஜா, நடு ஒட்டமான மக்கள் பாதையிலிருந்து விலகி உயரமான மேடொன்றில் ஏறுகிறாள். ஏதோ ஒரு பழைய ஆசிரமத்தின் சிதைந்த கட்டிடங்கள் தெரிகின்றன.
ஒம்..ஔஷதாலயா, கோசாலா, என்ற மங்கலான சுவர் எழுத்துக்களும் வளைவு வாயில்களும், ஆசிரமம் ஒரு காலத்தில் புகழ் பெற்றிருந்திருக்க வேண்டும் என்று அறிவிக்கின்றன. அங்கிருந்து பார்க்கையில் கங்கையின் எதிர்க்கரை நன்றாகத் தெரிகிறது.
பழைய சிமிட்டி ஆசனமொன்றில் கிரிஜா அமருகிறாள், பையிலிருந்த பழங்களை எடுத்து உண்ணத் தொடங்குகிறாள்.
-----------
அத்தியாயம் 11
ஏம்மா, தமிழா?
அசரீரி கேட்டாற் போலிருக்கிறது. பின்புறமாகத் திரும்பிப் பார்க்கிறாள். பஞ்சுப் பிசிறுகளாக நரைத்த முடி; காலம் உழுதுவிட்ட எண்ணற்ற கீற்றுக்களைத் தாங்கும். முகம், காவிச் சேலை; ரவிக்கை... உயர்ந்த வடிவம் கூனிக் குறுகவில்லை.
‘தமிழாம்மா?’
‘ஆமாம், பாட்டி...!’
‘எங்கேந்து வந்திருக்கே...?’
‘... ஊரெல்லாம் மதுரைப் பக்கம். இப்ப டெல்லில இருந்து வந்திருக்கிறேன்...”
‘நீ மட்டுமா வந்திருக்கே?’
‘தெரிஞ்சவாகூட வந்தேன்...அவங்கள்ளாம் இங்க முன்னமே வந்துட்டுப் போயிட்டா. இன்னிக்கு ஏதோ பூஜைன்னு ஹரித்துவாரத்தில் தங்கியிருக்கா. நான் பார்த்துட்டுப் போகலாம்னு வந்தேன்...நீங்க...இங்க வந்திருக்கிறீங்களா பாட்டீ?...’
மூதாட்டி பல்லில்லா வாயைக் காட்டிச் சிரிக்கிறாள்.
‘நான் இங்க வந்து அம்பது வருஷம்கூட இருக்கும். ! வருஷமெல்லாம் யார் கண்டது? கங்கை ஒடறா. வாழ்க்கை ஒடுறது...”
‘ஓ...?’ வியப்புத் தாளவில்லை.
‘நீங்க...அத்தனை வருஷத்துக்கு முன்னன்னா... எப்படி...’
‘எப்படின்னா...நேந்துடுத்து. அப்ப இங்கே சாமிஜி, இருந்தார். இப்பவும் ஆசிரமம் மேலே பெரிசா கட்டி, ரூமெல்லாம் தங்கக் கட்டியிருக்கா. மிஷன் நடக்கிறது. ஆனா...ஆதியில சாமிஜி வந்த நாள்ல இதோ இந்தக் குடில்ல தான் இருந்தார்...?’
‘நீங்க உங்களுக்கு எந்த ஊரோ...?’
‘எப்போதோ ஊர்... மதுரைப் பக்கம்னுதான் பேரு. இப்ப இதுதான் சொந்தம்.’
கிரிஜா மலைத்துப் போய் பார்க்கிறாள். அவளையொத்த வயசுகூட இருக்காது, அத்தனை ஆண்டுகளுக்கு முன்னால், அப்படியானால்...வாழ்க்கை நீரோட்டத்தை விட்டு விலகி, துறவறம் என்று இங்கே வந்து ஒதுங்க இவளுக்கு உந்து சக்தியாக இருந்தது எது? திருமணமாகாமல் அக்காலத்தில் இருந்திருக்கலாகாது. திருமணம் முடிந்து கைம்பெண்ணாக இருந்தால்...
‘ஏம்மா? உன்னைப் பார்த்தால் களைப்பாகத் தெரியறது. எதானும் சாப்பிட்டயோ?...’
கிரிஜா புன்னகை செய்கிறாள். ‘இப்பத்தானே பழம் சாப்பிட்டேன்?’
‘...பழம்தனே? சாதம் எதானும் சாப்பிட்டியோன்னு கேட்டேன்...’
‘இங்க எதானும் ஒட்டல் இருக்கா?’
‘ஒட்டல் கிடக்கட்டும். நீ உள்ளே வா, ஒருபிடி மோரும் சாதமாச் சாப்பிடு!’
கிரிஜாவுக்கு ஒன்றும் புரியவில்லை.
கெளரியம்மாள் பயணத்தில் இசைந்து ஃபிளாஸ்கைத் திறந்து காபி கொடுத்தாள். அதுவே அதிகமாக இருந்தது. இப்போது முன்பின்னறியாத இடத்தில், முன்பின்னறியாத மூதாட்டி, ‘உள்ளே வா, ஒருபிடி சாப்பிடு’ என்று கூப்பிடுகிறாள்.
‘முன்பின் அறியாதவர்கள் உணவுப் பொருளோ தின்பண்டமோ கொடுத்தால் சாப்பிடாதீர்கள். கீழே ஏதேனும் பார்சல், அல்லது சிறு பெட்டி போன்ற பொருள் இருந்தால் எடுக்காதீர்கள்...!’ இதெல்லாம் அண்மைக்கால எச்சரிக்கைகள். ஆனால், முன்பின் நினைத்திராத விதமாக, அவள் ஒரு சீரான ஒடுக்கத்திலிருந்து விடுபட்டு இந்த முடிவு தெரிவிக்க கரையில் நிற்கையில் இப்படி ஒர் அநுபவ மலர் எடுத்துக் கொள்’ என்று வருகிறது.
‘ஏம்மா? இவயாரோ, எதுக்குப் போகணும்னு பார்க் கறியா? தயங்க வேண்டாம், வா... நானொன்னும் ‘பஞ்சபட்ச பரமான்னம்’ வச்சிருக்கல. ஒரு மோரும் சோறும் ஊறுகாயும் தான்...’
‘...நீங்க சாப்பிட்டாச்சா...?’
‘நான். ஆயிட்டுது. உள்ள வா...’
கிரிஜா வாயிற்படியில் கிழவி தரும் செம்பு நீரால் கால்கை கழுவிக் கொள்கிறாள். நீள் சதுர ஒற்றைக்குடில். மூலையில் அவள் பார்த்தறியா மண் அடுப்பு சிறு அலு மினியம் வட்டையில் உள்ள சோற்றை ஒரு தட்டில் போட்டு குடுவை ஒன்றிலிருந்து கெட்டியான மோரை ஊற்றுகிறாள். உப்பும் எலுமிச்சை ஊறுகாயும், அந்த உணவை அவளுக்கு இது காறும் அநுபவித்தறியா சுவையுள்ளதாகச் செய்கின்றன.
திருமணமானபின் இத்தனை ஆண்டுகளில் பிரசவித் திருந்த நாட்களில் தாயும், மாமியாரும் சாப்பாடு போட்டிருக் கிறார்கள், ஆனால் அதுகூட இத்தகைய பரிவாய் சுவைத்ததில்லை.
‘பாட்டி, நான் இவ்வளவு ருசியுள்ள சாப்பாடு சாப்பிட்ட தேயில்லை. இது என் நாற்பத்தாறு வயசின் சொல்ல முடியாத நிறைவு தரும் அநுபவம்...’
‘...சில நாளில் இப்படித்தான் யாருக்கேனும் சாப்பாடு போடணும்னு தோணும். தோணினால் கூப்பிடுவேன். இன்னிக்கு என்னமோ, இந்தப் படியில் உட்கார்ந்திருந்தேன், நீ மேலே ஏறி வந்தது தெரிஞ்சது. சந்தோஷமாயிருந்தது...’
‘பாட்டி, நான் கேட்கிறேன்னு தப்பா நினைக்காதீங்க, நான் படிச்சுப் பட்டம் வாங்கி, எட்டு, பத்து வருஷம் போல டீச்சர் உத்தியோகம் பண்ணினேன். கல்யாணம் பண்ணிட்டு பதினேழு வருஷமாச்சு டில்லியில்தான் இருக்கிறேன்... மேலெழுந்தவாரியா பார்த்தால் ஒரு குறைவும் இல்லை. ஆனா...நான் அப்ப ஒரு சின்ன ஊரில நானாக ஒரு வேலை செய்து கொண்டு இருந்தபோது இருக்கும் ஒரு நிறைவு இதில் இல்லை. உங்களைப் பார்க்கிறப்ப, நீங்களே, என்னை வந்து பசியோட இருக்கே, சாப்பிடுன்னு சொல்வது எப்படி இயற்கையாகத் தோணித்தோ, அப்படி இதையும் சொல்லலாம்னு எனக்குத் தோணுது...பாட்டி, நீங்க எப்படி இந்தக் கரையில் வந்து ஒதுங்கினர்கள்? நம்மில் ஒராண் இப்படி குடும்பம் வேண்டாம்னு வந்துட முடியும். குடும்பம்ங்கறது அவனை எப்பவுமே பாதிக்கறதில்ல. அவன் செளகரியத் துக்காகத்தான் மனைவி, பிள்ளை, குட்டி, எல்லாம். அவர் அவன் செளகரியத்துக்கு இல்லேன்னா, உதறிடலாம். ஆனா. பெண்ணால அப்படி உதற முடியுமா? சொல்லுங்கோ, பாட்டி!’
“நீ சொல்றது சரிதான். ஆனா....சில சந்தர்ப்பங்கள் அப் படி ஒதுக்கிடும்மா. இங்கெல்லாம் கங்கையில் தீப ஆரத்தி எடுப்பாளே, அப்ப நான் குழந்தையாய் வேடிக்கை பார்ப்பேன். நடு ஒட்டத்திலேருந்து எப்படியோ கரையில வந்து மோதும் ஒவ்வொரு தீபம் சில சமயம், நம்மைப் போலன்னு அந்தக் காலத்தில் நினைச்சிப்பேன். எங்க பிறந்த வீடு நாகப்பட்டினத்துங்கிட்ட ரொம்ப ஏழை. நாங்க ஏழெட்டுப் பேர். நான் அஞ்சாவது பொண். என்ன செய்வா? மதுரைப் பக்கத்திலேருந்து வந்து மூணாந்தாரம்னு கேட்டா, கல்யாணமா யிட்டது. அப்ப ஒண்ணும் உலகமே தெரியாது. இங்கே வந்தால் மூத்தாள் பிள்ளைகள் ரெண்டு பேருக்குக் கல்யாணமாயிருக்கு. பெரிய குடும்பம். எங்க வீட்டில வயிற்றுக்கில்லைன்னாலும் ஒரு சுதந்தரம் உண்டு. எம்பாட்டுக்கு ஆற்றில் குளத்தில் குளிப்பேன், கோயிலுக்குப் போவேன். யாரானும் ஏதானும் வேலை சொன்னால் செய்வேன். இங்கே வாடி, போடின்னு அந்த மூத்தாள் பிள்ளை அதட்டுவான்...ஒண்ணும் சொல்லிக்கிறாப்பல இல்ல. அதோட, அவன் நடத்தை வேற எனக்குப் பயமாகிவிட்டது. புருஷரோ, கல்யாணம்னு பண்ணிண்டாரே ஒழிய, பகல்ல சாப்பாடு போடறப்ப பார்த்தாதான் உண்டு. சித்தப்பிரமை புடிச்சாப்பல இருப்பார். இப்படி ஒரு ரெண்டு மாசம் தானிருக்கும். அப்ப இந்த சுவாமி எங்க ஊரில் வந்து தங்கி, காலை வேளையில, பஜணை பண்ணிண்டு போவார். மூணு நாளைக்குமேல தங்கமாட்டாராம் இவர். அந்த சுவாமி கிட்ட ரொம்ப ஈடுபாடா, பிட்சைக்குக் கூட்டிண்டு வந்தார். அப்பதான் இங்க இந்த ஆசிரமம் கட்டறா. சாமிஜி இவரிடம் அங்க வந்து சிலநாள் தங்குங்கோன்னு சொன்னார்னு நினைக்கிறேன். என்னைக் கூட்டிண்டுதான் வந்தார். அப்ப, இங்கே பாதையே கிடையாது. இப்படி ஹரித்துவாரத்தில் வண்டியை விட்டிறங்கி, சத்திரத்தில் மூட்டையை வச்சிட்டு ஸ்நானம் பண்ணப் போனோம். கையைப் புடிச்சுட்டு ஸ்நானம் பண்ணுங்கோன்னா. அப்பிசி மாசம் தீபாவளிக்கு முன்னே இருகரையும் பெருகும்.கங்கை கை இழுத்தது.
ஆனா, நான் நல்ல பலசாலி. இழுத்துட்டேன். எல்லாருமாகக் கரையில் என்னையும் சேர்த்து இழுத்தா. இந்தப் பக்கத்தில் கங்கையில் யாரானும் நழுவிட்டாக் கூடக் காப்பாற்ற மாட்டாளாம். ‘கங்கா மாதா வே ஜாதா?’ன்னு அதையே பாக்கியமாச் சொல்லிடுவா...அப்ப என்னமோ இழுத்துட்டா. அவருக்கு மூச்சே இல்லை... போயிட்டார்...
உலக இயக்கங்களே நின்று, சந்தடியற்ற ஒரு சூழலுக்குள் முன்பின் தொடர்பற்று, அவளும் அந்தக் கிழவியும் மட்டும் இருப்பதாகத் தோன்றுகிறது.
பாட்டி சட்டென்று மெளனமாகிறாள். அந்த மெளனத் தைக் கலைக்க கிரிஜாவுக்கு மனமில்லை.
‘இதோ இங்க...ஓம்...ஔஷதாலயான்னு போட்டிருக்கே, பார்த்தியா?’
‘ஆமாம்?’
‘அங்கே...அவருக்குப் பிறகுதான் பவானந்தான்னு வச்சிட்டு பெரிய சாமிஜி இந்த ஆசிரமத்தில சேர்த்தார். அப்ப இருபது இருபத்திரண்டு வயசுப்பிள்ளை. தேசத்துக்காக புரட்சிப் பண்ணக் கிளம்பி, இப்படி ஒதுங்கினதாச் சொல்வார். அப்ப எனக்கு இருபத்தஞ்சு வயசு, எங்களை இழுத்துப் போட்டவர் அவர்தான்.இவருக்கு மூச்சுப் பேச்சில்லைன்ன உடனே, அவர்தான் சிகிச்சை எல்லாம் செய்தார். அடுப்பில் சூடுகாட்டி ஒத்தடம் குடுத்து, மூலிகைப் புகைகாட்டி... ம், ஒண்ணும் பிரயோசனம் இல்லை. கங்கைக் கரையில் உடம்பைப் போட்டிருப்பாளா?...எல்லாம் ஆயிட்டது, ஊருக்கு அப்புறம்தான் காகிதம் போட்டார்கள். அந்த நிலையில் மூத்தாள் பிள்ளை புறப்பட்டு வந்தான். அந்த...பிரும்மசாரி ஆசிரமத்துப் பிள்ளையைப் பார்த்து அவன் பேசின. பேச்சு...சிவ, சிவா, சொல்லக்கூடாது. அத்தோட என்னை அழைச்சிண்டு போக அவன் வந்திருந்தான். நான், அவன் கண்ணில் படாமல் இந்தக் கரையில் ஒளிஞ்சு ஒளிஞ்சு நடந்து, காடாயிருந்த 'இந்த இடத்துக்கு, வந்தேன். பெரிய சாமிஜியிடம் சொல்லி
‘நீ போக வேண்டாம். இங்கே இரு...!’ன்னார்.
அவ்வளவுதான் இங்கேயே இருக்கேன்...’ சொல்வது போல் இவ்வளவு எளிதா என்று கிரிஜாவுக்குத்தோன்றுகிறது.
‘இப்ப இந்த ஆசிரமத்தில் யாரும் இல்லையா? உங்கள்...தப்பாக நினைக்காதீர்கள் பாட்டி, நீங்கள் ரொம்பவும் தைரியசாலின்னு தோணறது. ஒர் இளம் வயசுப் பெண், இங்கே துறவிகளுடன், பிரும்மசாரிகளுடன் தங்குவது எளிதாக இருக்காதே? பிரச்சனை இருந்திருக்குமே? - ஸ்வாமிக்கே கெட்டபேர் வருமே?...’
பாட்டி சிரிக்கிறாள்.
‘வெள்ளம் பெருகும்போது, பெரிய பெரிய மரங்களைக் கூட வேரோடு சாய்ச்சிட்டுப் போறது தான். அந்தப் பாவி மூத்தாள் பிள்ளை என்னை அழைச்சிட்டுப் போய் தலையைக் கோலம்பண்ணி,மூலையில் வச்சுக் குலைக்கணும்னு . நினைச்சான். ஏன்னா, அவன் இஷ்டத்துக்கு நான் வளையல இல்லையா?...ஊரில் போய் என்னென்ன கதை கட்டினானோ? அதெல்லாம் என் காதிலவிழல...பெரிய ஸ்வாமி... நீ உக்காந்து இருந்தியே அங்கதான் நான் முதல்ல பார்க்கிறப்ப உட்கார்ந்திருந்தார். பெண்களை இப்படிப் பண்றது மகாபாவம். அதுக்கு எந்த சாஸ்திரத்திலும் உண்மையாக ஒப்புதல் கிடை யாது. சாஸ்திரம்ன்னு இவங்க சொல்றதெல்லாம் மனுஷன் பண்ணினது தானேம் பார். இவா ஆசிரமத்தில் நிறைய, பெண்கள் வந்து இந்த மாதிரி சேவைபண்ணத் துறவறம் வாங்கிட்டிருக்கா. ஆனால் நாந்தான் முதல். இந்த பிரும்மசாரி சொன்னேனே? அவர் ஆயுர்வேதம் படிச்சவர். மூலிகைகள் கொண்டு வந்து மருந்தெல்லாம் தயாரிப்பார். நானும் அவரும் இங்க சுத்தி இருக்கும் கிராமமெல்லாம் கால் நடையாவே போவோம். அநுபவத்தில் பலதும் கத்துண்டேன்.காச்சல், சொறி, சிரங்கு, பிரசவம், கண்வலி, காதுவலின்னு பார்க்கவும் மருந்து போடவும், பழகினப்ப ஜன்மாவில இதுக்கு மேல என்ன வேணும்னு தோணும். ராத்திரில பனிக்குளிரில், கணப்பைப் போட்டுண்டு இப்படீ உட்கார்ந்திருப்பேன். அவரை பிஷக்பாபான்னும் என்னை மாதாஜின்னும் சொல்லுவா, ஆசிரமத்துக்குப் பணக்காரர் ஏழை எல்லாரும் வருவா. இப்பப் போல, காரிலும் பஸ்ஸிலும் வந்து பாத்துட்டுப் போறதுக்கில்லாம, தங்கி அந்த அமைதியை அனுபவிக்க வருவா...’
‘இப்ப அந்த பிஷக் பாபா இல்லையா?...’
‘காலமாயிட்டார். எட்டு வருஷமாயிட்டது. இப்ப எங்கிட்ட மருந்து கேட்க வரா ஒண்னுரெண்டு கிராமத்துக்காரா. அவர்போனப்புரம் ஒண்ணு ரெண்டு வருஷம் அதை இதை நினைவு படுத்திண்டு எப்பவானும் யாரானும் கேட்டாச் சொல்லுவேன். இப்பதா மூலைக்கு மூலை டாக்டர் போர்டு இருக்கே?...’
‘நீங்க அப்புறம் தெற்கே போகவேயில்லையா?’
"ஏன் போகாம? கன்யாகுமரி வரையிலும் நடந்தே யாத்திரை போயிருக்கிறோம், ஆனா ஒண்னு சொல்றேன்: எனக்கு இங்கே கிடைக்கும் நிம்மதி எங்கும் இல்லை. இங்கயும் எங்க காலம், அந்த யுகம் போயிட்டுது. இப்ப சாமிஜி பேரில மிஷன்னு பெரிய அமைப்பா வச்சு நடத்தறா மேல பாரு பெரிய கட்டிடம், பிரார்த்தனை மண்டபம் எல்லாம் இருக்கு, இவா மிஷன் ஆஸ்பத்திரி கூட உள்ள டவுன்ல கட்டியிருக்கா. பெரிய பெரிய பணக்காரா, அக்கரையில் குடீர் கட்டி வச்சிருக்கா, அவாளுக்கு அப்பப்ப வந்து தங்க...எல்லாம் மாறிப்போயிட்டது. ஆனா...இப்பத்து நடைமுறைக்கும். அப்போதைய லட்சியத்துக்கும் சம்பந்தமே இல்லைம்மா...!’
கிரிஜா கேட்டுக் கொண்டே உட்கார்ந்திருக்கிறாள். ‘தனது பிரச்னையைப் பற்றி இந்த மூதாட்டியிடம் சொன்னால்...’
‘பாட்டி, படிச்சுப் பட்டம் வாங்கின எங்களை எல்லாம் விட நீங்கள் அறிவாளியாகப் பேசுகிறீர்கள்... நீங்க உங்களுக்கு இந்த அமைதிக்கரையில் கூட மனிதர் வந்து குலைச்சிட்டுப் போறதை நேராகப் பார்க்கிறீர்கள். இப்பத்து வீடுகள்: குடும்பங்கள் எப்படியிருக்குமோன்னு நினைச்சுப் பார்க்கறேளா?’
‘நினைச்சுப் பார்க்கிறதென்ன? லோகமே பணத்துல இருக்கு. அதனால, பெண்ணாகப் பிறந்தவள் அதிகம் கஷ்டப் படுகிறாள். இவளுக்குப் பணமும் சம்பாதிக்கணும்னு கடமை வந்து சுமக்கிறாள். இல்லாட்டா, அத்தனையும் சதையாக மாப்பொம்மை மாதிரி அலங்காரம் பண்ணிண்டு காரில போறா. இங்க ‘குடீரு’க்கு வர பணக்காராளைப் பார்ப்பேன். அப்பதோணும். ஏண்டி, பிறந்த வீட்டிலேந்து அது கொண்டு வரல. இது கொண்டு வரலேன்னு அடிச்சுத் துரத்தும் கொடுமை இன்னும் இருக்கு. கங்கையில் விழுந்து சாகிறதும் கூடத்தான் இத்தனை வருஷத்தில பார்க்காமலில்லை...’
‘பாட்டி, நான்...உங்ககிட்ட மனம் திறந்து சொல்றேன். இங்க நான் ஆறுதலுக்காக வந்தேன். குடும்பத்தில் இரண்டு பெண்ணும் ஒரு ஆணும் குழந்தைகள். பணம் வசதி இருக்கு. ஆனா, காலமேந்து ராவரை, உடம்பு உழைப்பு. மெஷின் போல. ஒரு பக்கம் கட்டுக்களே இல்லாமல் ஒடப்பார்க்கும். தலைமுறை. இன்னொரு பக்கம், ஸ்டவ் திரியை நனைத்து உலர்த்து என்று சொல்லும் மாமியார். இந்த இரண்டுக்கும் கட்டுப்பட்டுப் பூச்சியாகப் போயாச்சு. ஆனால், இப்ப, இந்தக் கூட்டில் மனுஷத் தன்மையே இல்லைன்னு புரியறது. என்னால் இருக்கமுடியல. நான் பதினைந்து வருஷம் படிச்சு, பத்து வருஷம் கற்பிச்சு, அறிவாளியாக என்னை மலர்த்திக் கொண்டவள். கல்யாணம் என்ற அமைப்புக்குள், கீழ்ப்படியும் ஒன்றைத்தவிர வேறு எதற்கும் உனக்கு இடமில்லை என்பது சரியா?...நான் எப்படி அங்கு இருக்க? நீங்கள் சொன்னிர்கள், ஒன்றும் தெரியாத நான், என் அநுபவத்தில் எத்தனையோ கற்றுக் கொண்டேன்னு. அன்றாட சமையல், சுத்திகரிப்பில் கூடக் காலத்துக்கும் வசதிக்கும் ஏற்ற புதிய வழக்கங்கள் வரக் கூடாது. பழைய மரபை சுமந்து கொண்டே இருக்க வேணும்னா, என்ன செய்ய? இந்த மாதிரி ஒரு பிரச்னையை நீங்கள் நினைத்திருப்பீர்களா?” வெயிலின் கடுமை மாற மேகம் மூடிக்கொள்கிறது.
பாட்டி அரைக்கண் மூடி அநுபவிப்பவளைப்போல அவள் பேச்சுக்களைச் செவியுறுகிறாள்.
“உன் பேரென்னவோம்மா, ஒண்னு சொல்றேன். பிரச்னை, பிரச்னைன்னு நினைச்சிண்டே இருந்தா குழம் பிண்டே இருக்கணும். சுவாமிஜி சொல்வார். பொறுக்கலன்னா எழும்பிப் போராடு; தெளிந்துகொள், இரண்டிலொன்னு முடிவு செய்துடனும், அந்த முடிவைப்பத்திப் பிறகு அலட்டிக்கப்படாது. அப்படி, பிரச்னை பிரச்னைன்னு, சிக்கலிலிருந்து விடுபட நமக்குச் சக்தி இருக்குன்னு தைரியமில்லாமலேயே உசிரை மாய்த்துக்கறதே, ரொம்பக் கோழைத் தனம் பார். அன்னிக்கு படிப்பும் அநுபவமும் இல்லாத எனக்கு திடீர்னு அவர் செத்ததும் பிரச்னைதான் வந்தது. அப்புறமா கேள்விப்பட்டு என் அத்திம்பேர் கூட வந்திருந்தார். பிறிசு, நீ வாழ்நாள் முழுக்க ஊரார் அவதூறுக்கு இப்படி இருப்பியா? வந்துடுன்னார். எல்லாத்துக்கும், அந்தப் பிரும்மசாரிதான் காரணம்ன்னார். அவரை எனக்கு அப்ப உள்ளும் புறமுமாத் தெரியாதுதான், ஆன்ாலும் ஒரு முடிவு. என்ன வந்தாலும் ஊருக்குப் போறதில்லை. பிறந்தகத்து இல்லாமை, புக்கத்துக் கொடுமை, எல்லாத்துக்கும் மேல புருஷனை இவளே கங்கையில் அமுக்கிக் கொன்னுட்டான்னு சொல்லப்போகும் நாக்குகள்...இதெல்லாம் தீர்மானமாகக் கிடுத்து...திரும்பிப் போறதாக முடிவு செஞ்சிருந்தாலும், ஏன் வந்தோம்னு பின்னால் நொந்துகொள்வதாக இருக்கக் கூடாதுங்கறதுதான் என் நிச்சயம்...’
வானம் கறுத்துக்கொண்டு வந்து தொங்குகிறது, கங்கையின் பரப்பும் மக்கள் கலகலப்பும் மங்கிப்போகின்றன. தான் உயிரை மாய்த்துக் கொள்ள வந்ததாக இவர் எண்ணி விட்டாரோ என்று நினைத்து அவள் உள்ளுர நானமடைகிறாள்.
‘மழை கொட்டும்போல இருக்கு. இங்க தங்கப்போறி யாம்மா...’
‘ஒ. இல்லை பாட்டி. நான் திரும்பிப் போகணும். ஒர் ஆறுதலுக்காக, தெளிவு தேட, பரபரப்பில் இருந்து விடுபட்டு வந்தேன். உங்களை மறக்கவே மாட்டேன். எனக்கு வெறும் வயிற்றுக்கு மட்டும் அன்னமிடல. கவி பாரதி சொன்னார். ஞான உணவும் தோள் வலியும்னு அது ரெண்டும் தான் நமக்கு தைரியம். நம்பிக்கை...அந்த ரெண்டும் எனக்கு உங்க்கிட்ட வந்ததில கிடைச்சிடும்னு கிளம்பிப் போறேன்...”
‘போயிட்டு வாம்மா...நம்மாலானது ஒண்ணுமில்லேன்னு நினைக்காம. நம்மாலும் ஆகும்னு நினைச்சிண்டு போ! அவளுக்குத் தெளிவு துலங்குகிறது.
பிரச்னை பிரச்னை என்று சிக்கிக் கொண்டதாக, யாரோ வந்து கரையேற்றவேண்டும், விடுவிக்க வேண்டும் என்று ஏன் நினைக்கிறாய்? மாமியார், அவளும் ஒரு பெண். இந்த மடிக்கூடு வெறும் அர்த்தமற்ற போலிச் சடங்குகள். உள்ளும் புறமுமான மனிதத்துவத்தை விரட்டிவிடும் கொடுமைகள் என்று எடுத்துச் சொல்லேன். அந்த வீட்டில் உனக்கும் ஒரு உரிமை உண்டு. அவன் சொல்லியதால் மாற்றம் காண வேண்டும் என்று ஏன் நினைக்கிறாய்? உன் குழந்தைகளின் நல்ல மன வளர்ச்சியில் உனக்கு உரிமையும் பொறுப்பும் உண்டு... பின்னர்...
விடுவிடென்று இறங்குகிறாள், அவள் ஒரு முச்சக்கர ஊர்தியில் அமரும்போது மழை ‘சோ’ என்று கொட்டுகிறது. திரும்பி வருவதற்குக் கரையோர டெம்போக்களில் ஒன்றிலேயே அமர்ந்துவிடுகிறாள். மெழுகுச்சீலைத் திரையைத் தொங்கவிட்டிருக்கிறான். அப்படியும் மழைச்சாறல் உள்ளே வந்து சேலையை நனைக்கிறது. எட்டுப்பேர் நெருக்கி உட்காரக்கூடிய இருக்கைகளில், பதின்மூன்று பேர்களுக்கு இடம் கெர்டுக்க மழையின் நடுவே ஊர்தியை நிறுத்துகிறான்...மருந்துத் தொழிற்சாலை நிறுத்தத்தில், ஒர் இளம் பெண்ணும் அவள் கணவனும் ஏறுகிறார்கள். புதுமணத் தம்பதியாகத் தோன்றுகிறது. நெற்றிச் சிந்துாரமும், விரல் நுனிகளின் சாயமும், அரக்குச் சிவப்பில் சரிகை நூலால் பூவேலை செய்த சேலையுமாக, கதகதப்பாக இவளுடன் நெருங்கிக் கொள்ள, கணவன் அவளோடு ஒன்றிக்கொள்ள அமருகிறார்கள்.
பெண்ணின் கைப்பையோடு, அவன் வைத்துக்கொண்டிருக்கும் தினசரியும் இணைந்து அவள்மீது படுகின்றன. இந்தி தினத்தாள்தான். ஆனால், கொட்டை எழுத்துத் தலைப்பு அவள் கண்களைக் கவருகிறது.
விமானத்தில் தீப்பிடித்தது...! வியாழக்கிழமை பம்பாயில் இருந்து திருவனந்தபுரம் கிளம்பிய விமானம்...இதற்குமேல் மடிப்பில் தெரியவில்லை. கிரிஜாவினால் இதற்குமேல் எதுவும் சிந்திக்க முடியவில்லை. ‘அந்தப் பத்திரிகையை இப்படிக் கொடு...முழுசும் பார்த்துவிட்டுத் தருவேன்’ என்று சொல்ல நா ஒட்டங்கள் யாவும் அந்த எழுத்துக்களின் பின்னணியில் அழிந்துபோகின்றன. விமானத்தில் தீப்பிடித்து...
பம்பாய் சென்று அங்கிருந்துதானே திருவனந்தபுரம் செல்வதாகச் சொன்னான்!
ஓ! அவள் கிளம்பி வந்ததற்கு இப்படி ஒரு தண்டனையா? அங்கு குழந்தைகள்... ஆம். குழந்தைகளுக்கு அவளை விட்டால் யார் துணை?... ஏறத்தாழப் பதினெட்டு வருஷங்கள் அவனின் நிழலில் அண்டி அவனுக்குப் பணி விடைகள் செய்து, மூன்று மக்களைப் பெற்றிருக்கிறாள் இந்தப் பந்தம், அகன்று விடுமோ? ஏதேனும் ஆய்விடுமோ? ஆய்விட்டால்...? ஹரிகிபைரி வரும் வரையில் கிரிஜா விக்கித்துப்போய் உட்கார்ந்து இருக்கிறாள்.
மழைவிட்டு வானம் வெளிவாங்கி இருக்கிறது. முதலில் கிரிஜா இங்கே இறங்குவதாகத்தானிருந்தாள். ஆனால் இப்போது. அந்தத் தம்பதி இறங்குமிடத்தில் இறங்குவதாகத் தீர்மானிக்கிறாள்.
ரயில் நிலையத்துக்கருகில் அவர்கள் இறங்குகின்றனர். இறங்கும்போது, அந்தப் பத்திரிகையை அவள் அவர்களிடம் கேட்குமுன், அவன் கைப்பெட்டியை எடுக்கையில் அது விழுகிறது. கீழே விழுந்த அதைக் கிரிஜா சட்டென்று எடுக் கிறாள்.
‘...கொஞ்சம் பார்த்துவிட்டுத் தரட்டுமா?...’ அவர்கள் பதிலுக்குக் காத்திராமல் அவசரமாகப் பிரிக்கிறாள். விமானப் படம் போட்டிருக்கிறது. ஐந்து பேருக்கு லேசான காயம். விமானம் பழுதுற்றதை உடனே கண்ணுற்றுவிட்டதால் பம்பாய் விமான நிலையத்திலேயே திருப்பிவிடப் பெற்றது...
திருப்பிக் கொடுத்து விடுகிறாள். ‘தாங்க்யூ ...!’
‘நீங்கள் வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்கள் பஹன்ஜி!’
‘வேண்டாம்...ஒரு சிறு செய்தி பார்க்கவேண்டி இருந்தது. பார்த்துவிட்டேன்...’ தண்ணிர்பட்டுக் கரையும் ஒவியங் களாய் மனப்பரப்பில் இறுக்கங்கள் கலைகின்றன…
சிறிது நேரத்தில் அவள் ஆடிப் போனாள். இவளா தைரியசாலி? அன்பு, காதல், தெய்வீகம் என்றெல்லாம் கதைகளில், சினிமாக்களில் எப்படி மிகைப்படுத்துகிறார்கள்? அப்படி அவள் சாமுவை விட்டுப்பிரிய முடியாதபடி ஒன்றி விட்டாளா?... நிச்சயமாக இல்லை. திருமணம் செய்த நாளிலிருந்து, அவளுடைய சுதந்திரத்தன்மையைப் பிரித்த தனால், கூட்டுக்குள் அடைபட்டு, ஆளுமையை ஆணி வைத்து இறுக்கினாற்போல் குறுகிப் போயிருக்கிறாள். இதில் குழந்தைகளின் நிராதரவான தன்மைதான் இரக்கத்தினால் அவளை ஒட்ட வைக்கிறது... குழந்தைகளே இல்லை என்றால், அவள் விடுபட்ட பறவை...சாமுவின் மீது உள்ள கரிசனம் அல்லது அக்கறை, குழந்தைகளை முன்னிட்டதுதான்...
ஒருவாறு தேறியவளாக ஒரு தேநீர் கடையின் பக்கம் நின்று, தேநீர் கேட்கிறாள்.
இதெல்லாம், அவள் செய்யக்கூடாத செயல்கள். எளிய யாத்ரீகரும், கூலிக்காரர்களும் குழுமும் தேநீர்க்கடை. பெரிய வட்டையில் பூரி பொரித்து வைத்திருக்கிறான். மண் அடுப்பில் கணகணக்கும் ‘கொய்லா’ கரியின் சுவாலையில் இரும்புச் சட்டியில் பால்கோவாவுக்கான பால் காய்கிறது எண்ணெயும் மிளகாயும் மிதக்கும் கிழங்கு சப்ஜியை ஒரு வட்டையில் இருந்து எடுத்து பூரியில் ஊற்றி யாருக்கோ அழுக்குப்படிந்த துணி உடுத்திய ஆள்கொண்டு போகிறான். மாமியாருக்குத் தெரிந்தால்...?
‘சாய், மாதாஜி...!’
மாதாஜி என்ற சொல்லுக்குரியவள் தான்தான் என்று புரிந்ததும் சட்டென்று பார்க்கிறாள். புதிய மண் கிண்ணத் தில் ஆவி பறக்கும் தேநீரை நீட்டுகிறான்.
‘கித்னா..?’
‘ஸாட்... பைசே’...அறுபது பைசாவைக் கொடுத்துவிட்டு: தேநீரை அங்கேயே ருசித்துப் பருகுகிறாள். நிறையச் சர்க்கரை போட்டிருக்கிறான்.
பாலங்கடந்து அப்பால் கங்கைக் கரையின் பக்கம் அமர்ந்து மாலை முழுவதையும் கழிக்கிறாள். மாலை மங்கி தீபங்கள் சுடர்பொரிய கங்கைக்கரை விழாக்கோலம் கொள்கிறது. எழுந்து வருகிறாள்.
‘...அடிம்மா? இன்னிக்கு முழுக்க எங்க போயிட்டே?... காலம வந்தாளே, அவா வாதபூஜை பண்ணா. பிட்சை பண்ணா. வகை வகையா எல்லாம் பண்ணிச் செலவழிச் சிருக்கா, எங்கிட்ட வந்து காலம உங்ககிட்ட நின்னுண்டிருந் தாளே ஒரு பொண்ணு, அவ எங்கேன்னு கேட்டா... தெரியுமே இங்கதா எங்ககூட தாஇருக்கான்னேன். ‘தெரியுமா உங்களுக்கு அவளை...!ன்னு கேட்டதுக்கு, ரொம்பப் பழக்கம் அசப்பில அவளாட்டம் இருந்தது. மறுபடி பார்த்துப் பேசறதுக்குள்ள போயிட்டா. பூஜையிலேயும் காணலை... ன்னா... இன்னொன்று கேட்டியாம்மா? இவருக்கு, அவா ஏதோ துரத்து உறவாம். பேசிண்டே இருக்கச்சே பூதப் பாடின்னு சொன்னா. யாரு, எவா, எங்க அம்மான் வழிப் பாட்டனார் ஊராச்சேன்னு விசாரிச்சால், அவர், இவருடைய மாமாவுக்கு மச்சினனின் அத்தானாம். உறவு கிடக்கட்டும், ஒட்டி ஒட்டிண்டு துளி கருவமில்லாமல் அவளே பந்தி விசாரிச்சு, அவ்வளவு நேர்த்தியா எல்லாம் பண்ணினா இப்பத்தான் காரில் போறா. ராத்திரி யாரோ வெளிநாட்டுக் கார்ன் வரானாம். டில்லில இருக்கணுமாம்...
கெளரி அம்மாள் வாயோயாமல் ரோஜாமாமியைப் புகழுகிறாள். வயிரங்களும் பட்டும். காரும், மினுக்கான பேச்சும், சிரிப்பும் எப்படி எல்லோாையும் மயங்க வைக்கின்றன?
‘நாளைக்குக் காலம கொண்டு பேரும் புறப்பட்டு அமெரிக்கா போறோம். பிள்ளைக்குக் கல்யாணம் நிச்சயம் பண்றோம், இல்லாட்டா, நம்ம வீட்டில வந்து தங்கிட்டுப் போகணும்னு கூப்பிடுவேன். யார்யாரெல்லாமோ வந்து தங்கறான்னு ரொம்பச் சொன்னா. இன்னொருதரம் வரச்சே கண்டிப்பா இங்க வந்து தங்கணுமின்னு அட்ரஸ் எழுதிக் குடுத்திருக்கா...’
கிரிஜா அப்படியே நின்று கேட்கிறாள். ஒரு வகையில் நிம்மதியாக இருக்கிறது. காலை ஃபிளைட்டில் ஊருக்குப் போய் விடுவார்கள். இவள் ஊர் திரும்பும்போது, அவளும் வந்து ஏதும் கலவரம் நிகழாது...
பொழுது விடிந்ததும் காலை நீராடலும் உணவும் முடித்துக் கொள்கிறார்கள் கெளரியம்மாள் ஈரச்சேலையைக் கூட உலர்த்திக் கொள்கிறாள் க்டையில் சென்று பேரம் பேசி, கங்கைச் செம்புகள். ஸிந்துாரம், அப்பளக் குழவி என்று அவள் வாங்கிக் கொள்ள கிரிஜா உதவி செய்கிறாள்.
‘பெற்ற பெண்ணைப்போல் பழகிட்டே. ஏதோ போன ஜன்மாவிலே விட்டகுறை தொட்ட குறை போல இருக்கு. நீயும் எங்க கூட வரத்தானே போறே?’
‘ஆமாம், மாமி, அஞ்சு நாள் லீவெடுத்தாச்சு ...’ என்று கிரிஜா சிரிக்கிறாள். ஒரு தெம்பும் தெளிவும் வந்ததற்கு இப்போது கூடியிருக்கிறது. இரவு ரயில் வண்டியிலேறி, விடியும் போது டில்லி சென்றால், வெளிச்சத்தில் வீடு செல்வது வசதி யாக இருக்கும் என்று கிரிஜா சொல்கிறாள்.
திரும்பும் பயணத்தில் கெளரி அம்மாளும் கிழவரும் உறங்கிவிடுவதால், பேச்சுக்கே இடமில்லை.
------------
அத்தியாயம் 12
‘மாமி உங்களை உங்கள் விலாசத்தில் கொண்டு விடணுமா?...’
வேண்டாண்டியம்மா, நீ இவ்வளவு ஒத்தாசை பண்ணினதே பெரிசு ஆச்சு. நாளைக்குச் சாயங்காலம் வண்டி ஏறணும். நீ ஒரு ஆட்டோ மட்டும் புடிச்சு உக்காத்தி வச்சுடு. கரோல் பாகில, அந்தப் பெரிய ரோட் இருக்கே, அங்கேந்து போற்ப்ப எனக்கே அடையாளம் தெரியும். பக்கத்தில பால் பூத் இருக்கு...’
ஒர் ஆட்டோவைப்பேசி அவர்களை ஏற்றிவிடுகிறாள்.
‘பத்திரமாப் போயிட்டு வாம்மா...உங்கிட்ட அட்ரெஸ் வாங்கிக்கணும்னு நினைச்சேன். பாத்தியா?”
கிரிஜா புன்னகை செய்கிறாள். ‘நாங்க வீடுமாறிடுவோம். மாமி எங்கிட்ட உங்க அட்ரஸ் இருக்கே. காகிதம் போடறேன் நானே. உங்க ஊரில வந்து உங்களைப் பார்த்தாலும் பார்ப்பேன்...”
‘திவ்யமா வா, போயிட்டு வரோம்...! .
ஆட்டோ வட்டமடித்தாற் போல் சென்று சாலையில் மறையும் வரை அங்கே நின்று பார்க்கிறாள். காலைப் பொழுதின் சுறு சுறுப்பு. பள்ளிச் சிறாரின் சீருடைகளும், மலர் முகங்களுமாய்த் தெருவோர நடைபாதைகளில் மலர்ந் திருக்கிறது. இந்நேரம் அவள் குழந்தைகளும் பள்ளிக்குக் கிளம்பியாக வேண்டும்.
மதன நகர் செல்லும் பஸ்ஸைத் தேடி, ஏறி அமருகிறாள். அமைதியாகவே இருக்கிறாள்.
பஸ் இவளுக்குப் பரிச்சயமான வட்டத்துள் நுழைய நாற்பது நிமிடங்கள் பயணம் செய்ய வேண்டி இருக்கிறது. நடைபாதைப் பழக்கடைகள் உள்புறம் கட்ையோரங்களில் நிற்கும் சொகுசுக்காரர்கள், வண்மை கொழிக்கும் மக்களின் தேவைக்கான பல பல பொருள்களும் விற்கும் அங்காடிகள்...
பஸ்ஸிலிருந்து அவள் இறங்குகையில் ஸ்கூட்டரில் வரும் சிவலால் பையன் பார்க்கிறான். ‘நமஸ்தே ஆண்டி’ ஊருக்குப் போயிருந்தீர்களா?
‘ஆமாம், எங்கே ஃபாக்டரிக்கா?’
சகஜமாகப் பேசுகிறாள்.
முனிசிபாலிடி பள்ளிக்குச் செல்லும் ஏழைக் குழந்தை களின் அணி ஒன்று சாலையை கடந்து போகிறது. ‘ஆன்டி’ என்று ஒரு குரல்.
ஒ, மாயாவின் பையன் தனு...!சாதாரணமாகக் குரல் கொடுத்துக் கூப்பிட மாட்டான். இவளைக் காணவில்லை என்று வீட்டில் கலவரம் நிகழ்ந்திருக்க வேண்டும். இளநீல குடிதார்பைஜாமாவில் சுஷ்மா கல்லூரிக்குக் கிளம்பிச் செல்கிறாள். தெரிந்த முகம். பளிச்சென்று ஒரு சிரிப்பு; நின்று பார்வை. ‘மார்னிங்...!’ இவளுடைய தெரு...வழக்கம் போல், எந்த நேரத்திலும் உண்ட களைப்பின் சோம்பலைக் காட்டும் படி காட்சி அளிக்கும். ஒவ்வொரு சுற்றுச் சுவருக்குள்ளும் பூதங்களைப் போல் மூடிக்கொண்டு இரண்டு மூன்று கார்கள் ‘கண்ணாடி பதித்த பெயர்ப்புரைகள்...‘சந்தனா’வின் சொந்தக்காரி, பிதுங்கி விழும் வெண் சதையுடன் வாசலுக்கு நேராகக் காலையுணவு அருந்துகிறாள். இந்தத் தெருவை இவ்வளவு நின்று நிதானமாக இவள் பார்த்ததில்லை. பழைய பிரிகேடியர் விக்ரம்கிங், வாயிலிலுள்ள அழகுக் செடிகளுக்கு நீர் பாய்ச்சுகிறான். இவளுக்குப் பேசிப் பழக்கமில்லை. என்றாலும் நின்று ஒரு மலர்ச்சியுடன் பார்க்கிறான்.
‘ஓ கவி கி மா? ஊருக்குப் போயிருந்தீர்களா?...’ என்று ஸூனு ஓடி வந்து கேட்கிறாள். எதிர்வீட்டு மருமகள், ஏதோ அலுவலகத்தில் ரிஸப்ஷனிஸ்ட். ‘ஒ...ஆமாம்...’ ஆயிற்று. வீட்டு வாசலில் பத்திரிக்கை படிப்பவன் கதவு ‘கிளிக்’கென்று செய்யும் ஓசை கேட்டு எட்டிப்பார்க்கிறான்.
‘ஆயியே! ஆயியே!...எங்கே போயிருந்தீர்கள்? வீடு ஒரே அமர்க்களமாயிட்டது?...’
அவள் நிற்கவில்லை. விடுவிடென்று படி ஏறுகிறாள். கதவு திறந்தே இருக்கிறது. ஒருவரும் பள்ளிக்குச் செல்ல வில்லை. பரத் தான் முதலில் இவளைப் பார்க்கிறான்.
அம்மா என்று ஓடிவருகிறான். ‘அம்மா வந்துட்டா! அம்மா வந்துட்டா...’
‘அம்மா? நீ கெட்டுப்போயிட்டே, இனிமே வர மாட்டேன்னு சொன்னா. எப்படிம்மா கெட்டுப் போனே?...’
நெஞ்சில் கத்தரிபட்டுத் துண்டானாற்போல் துணுக்கென்று நோகிறது. குரல்கேட்டு, கோடுபோட்ட பைஜாமா அங்கியுடன். முகச்சவரம் செய்யும் கோலத்துடன் சாமு நடையில் வருகிறான். அவள் உறுத்துப் பார்த்தாள். ‘குழந்தை கிட்ட யார் இப்படிச் சொன்னது?’
‘அம்மா...வந்துட்டா, கிடைச்சுட்டா, அம்மா கெட்டுப் போகல...’ அவள் பரத்தின் தலையைத் தடவிக் கொண்டு, நிற்கிறாள். ஏனோ அவன் பார்வையின் கடுமை அவள் சரளத்தைத் தடுத்து நிறுத்துகிறது.
‘எங்கே போயிட்டு வரே?...’
‘ஹரித்துவாரம் போயிருந்தேன். குழந்தைகிட்ட இப்படியா இரண்டர்த்தச் சொவ்லெல்லாம் சொல்லுவது!’
‘பின்ன எப்படியடி சொல்ல? தொலைஞ்சு போனா கெட்டுப் போனான்னுதானே சொல்லனும்?’
இவனுடைய இந்தக் குரலை அவள் இதற்குமுன் கேட்டதில்லை. ஆணைகளான கட்டுக்களைத் தகர்த்தால் என்ன பலன் தெரியுமா என்று கிளர்ந்து வரும் குரல். அந்தக் குரலில் கவிதாவும், சாருவும்கூடச் சமையலறையில் இருந்து ஒடி வருகிறார்கள். குழந்தைகள் இருவரும் வண்ணமிழந்து பொலிவிழந்து காட்சியளிக்கின்றனர். கவிதாவின் மாக்ஸியில் எண்ணெய்ப் பிசுக்கு, மஞ்சள் கறை எல்லாம், அவள்தான் சமையல் வேலை செய்கிறாள் என்று அறிவிக்கின்றன. சாருவின் விரலில் ஒரு துணிசுற்றிய காயம் ஊகிக்க முடிகிறது.
‘ஹாய் அம்மா, எங்கம்மா போயிட்ட? கிச்ச்ன்ல வேலை செய்யுங்கடி கழுதைகளான்னு அடிக்கிறார்மா. அப்பா? கீழ பன்டியோட அம்மா டிக்குவ அனுப்பிச்சு, ரொட்டியும் சப்ஜி யும் பண்ணிக்குடுக்கச் சொன்னா, ஒரு நாளக்கி. அவன் கிச்சன்ல வரக்கூடாதுன்னு பாட்டி கத்தறா. ரத்னாக்கா வந்தா. அவளைப் புடிச்சி பாட்டியும் அப்பாவும் திட்டினா. ரத்னாக்கா சொல்லித்தான் நீ ஒடிப்போனியாம்!.ரத்னாக்கா அப்பாகிட்ட ரொம்பச் சண்டை போட்டாள்...’ என்று சாரு குழந்தை போல் ஒப்புவிக்கிறாள்.
‘உள்ள போங்கடி கழுதைகளா! ரெண்டு பேரையும் எங்கானும் போர்டிங்ல கொண்டுத் தொலைக்கணும். ஒடிப் போயிட்டு இந்த வீட்டில நுழைய, என்ன துணிச்சல் இருக்கணும்? அரித்துவாரம் போனாளாம், அரித்துவாரம். எங்கிட்ட காது குத்தறா. எதுக்கடி போன இப்ப அரித்துவாரம்?’
‘இத பாருங்க, குழந்தைகளை வச்சிட்டு இப்படிப் பேச உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.’
அவன் ஒரெட்டு அவளை அறைவது போல் முன்னே வருகிறான்.
‘பல்லை உடைப்பேன், நாயே. என்னடி உரிமைப் பேச்சுப் பேசறே? ஒடிப்போயி எங்கோ சீரழுஞ்சு வந்துட்டு? எனக்கு வெளியில் தலை நீட்ட முடியல...’
பாட்டி இப்போது மெள்ள எட்டிப் பார்க்கிறாள். ‘வாண்டாண்டா, சாமு. நமக்குப் பாவம் வேண்டாம். அநாவசியமா ஏன் கோபப்பட்டு வார்த்தையக் கொட்டரே? பால் சிந்தியாச்சு. அவ சாமான், துணிமணி எடுத்துண்டு போறதானா போகட்டும்...’
அடிபாவி... !
அடிவயிற்றிலிருந்து சுவாலை பீறிட்டு வருகிறது. பரத் மருண்டு போய் அழுகிறான்.
‘அம்மா..! நீ திரும்பிப் போயிடுவியா?...சாமு, பிள்ளையைப் பற்றி இழுக்கிறான். ‘உள்ளே போ... ராஸ்கல், அம்மா வாம் அம்மா. யாரது அம்மா இங்க? வெட்கம், மானம், சூடு, சுரணை இல்லாத ஒரு ஜன்மம் அம்மாவாம்!...’
‘சாமு நீ பேசாம இரு சித்த, வாயிலிருந்து கீழ விழுந்துடுத்து, எத்தனை நல்ல பண்டமானாலும் திருப்பி எடுத்து முழுங்க முடியறதா? குழந்தைகள் எப்படி அல்லாடிப் போயிடுத்து மல்ஹோத்ரா, பிள்ளைய விட்டு பாவம் நேத்து ஆஸ்பத்திரில எல்லாம் தேடிட்டு வரச் சொன்னான். எங்கிட்ட, ஏண்டீம்மா கடைக்குப் போறேன்னுதானே சொல்விட்டுப் போன? இத, கடைக்குப் போயிருக்கா, வந்துருவ, வந்துருவன்னு பார்த்தா வயத்தில புளிகரைக்கிறது. வரவேயில்ல. குழந்தைகள் வரா, மாயா வரா, கடைவீதி, மார்க்கெட்டெல்லாம் சல்லடை போட்டுத் தேடியாச்சு. என்னன்னு நினைக்க? நான் என்ன செய்வேன்? இவனோ ஊரில் இல்ல. ரோஜாக்கு போன் போட்டு, அவ ஒடி வந்து, இவனுக்கு போன் போட்டு, அடுத்த பிளேனில அடிச்சுப் புடிச்சிண்டு வந்தா என்னத்தைன்னு செய்ய? அன்னிக்குக் காலம யாருக்கோ ஃபோன் பண்ணினாப்பா, காஸுக்கான்னு கூடக் கேட்டேன். பதில் சொல்லலன்னேன். இத்தனை பெரிய டில்லிப் பட்டணத்தில் எங்க போய்த் தேட?’
‘அம்மா, உன்னை வாயிலே துணியடச்சு, குண்டுக் கட்டாக் கட்டிக் காரில வச்சுக் கடத்திட்டுப் போயிட்டாங்க களா? அப்பிடித்தானேம்மா, அந்த சினிமால கூட வந்தது..? பதின்மூன்று வயசுப் பெண்ணின் யதார்த்தமான சிந்தனை, அவளுள் நெகிழ்ச்சியைத் தோற்றுவிக்கிறது.
‘அவளக்கடத்திட்டுப் போயி என்ன பண்ணுவாங்க! இவளே தானே ஒடியிருக்கா. கொஞ்ச நாளாவே போக்கு சரியில்லாமதானிருந்தது. ஆனா இவ்வளவுக்குத் துணிஞ் சுடுவன்னு நான் நினைக்கல...ஏண்டி நிக்கற எம்முன்னால? எந்த எண்ணத்தோட நீ போனியோ, அதே கையோட திரும்பிப் போய்க்கோ. நீ இந்த ஒரு வாரமா எங்கே இருந்தே, எங்கே போனேன்னு நான் ப்ரோப் பண்ண போறதில்ல. நீ ஒரு வேளை வராமலே இருந்தா தேடிட்டிருப்பேன். இனிமே விசாரிக்கிறதே அசிங்கம். எனக்கு மானக்கேடாயிட்டுது. போலீஸ் கமிஷனர்கிட்ட நான் எந்த முகத்தை வச்சிட்டு என் பெண்சாதி வந்துட்டான்னு சொல்லுவேன்? என் மானம் கப்பலேறியாச்சு!’
ஒரு பேய்க் கையால் முகத்தில் அறைப்பட்டாற் போல் இருக்கிறது.
எத்தனை இயந்திர மயமான இராட்சதத் தாக்குதல்? எரிவாயு அடைப்பானை மூட மறந்து போய், காலையில் தீக்குச்சி, கிழிக்குமுன், அது ஆளை அடிக்கப் பற்றிக் கொள் வது போன்ற கதைதானா இது? அப்படி இப்படி மறந்து போய் மின் இணைப்பைத் தொட்டு விடுவது போன்றது தானோ, இவள் குடும்ப அரண்களும்? இவன் ஏன் இவ்விதம் நடந்து கொள்ள நேர்ந்தது என்று நினைக்கும் அளவுக்குக் கூட அவள் ‘மனித’ மதிப்பைப் பெற்றிருக்கவில்லையா? குடும்ப மானம் என்பது அவள் தாங்கிக் கொண்டிருக்கும் நீர்க்குமிழியா?
“என்னடீ மனிதத்தன்மையைக் கண்டுவிட்டாய், பெரிய...மனிதத்தன்மை? நானும் ஊரில இல்லாதபோது, அம்மாவிடம் பொய் சொல்லி ஏமாற்றி விட்டுப்போகற அளவுக்குக் கிரிசை கெட்ட உனக்கு நான் என்னடி மனிதத் தன்மையைக் காட்டனுங்கறே?’
‘உன்னை மறுபடி இங்கே வீட்டில் கூட்டி வச்சுக்கற அளவுக்கு நான் மழுங்கிப் போயிடல. உன்னைக் கட்டின தோஷத்துக்கு உனக்கு என்ன அழனுமோ, அதை வக்கீல் மூலமா ஏற்பாடு பண்ணிடறேன். நீ உன் இஷ்டப்படி போய்ச் சேர். இங்க இருந்து என் குழந்தைகளுக்கு எதிர்காலம் இல்லாமல் பண்ணிடாதே. இந்த ஏரியாவிலேயே இப்ப, எனக்கு வெளில தலைநீட்ட முடியாது...’
கார் வந்து நின்ற ஓசை கேட்கவில்லை. ரோஜா மாமி வருகிறாள்.
‘வந்துட்டாளா?... எனக்கு மனசே கேட்கல சாமு, மல்ஹோத்ராவுக்கு போன் பண்ணினேன். வந்துட்டா ஒரு கால்மணியாறதுன்னான். சரி விசாரிச்சுப்போம்னு உடனே வந்தேன்...’
ஒ...இவர்கள் நேற்று ஃப்ளைட்டில் அமெரிக்கா போகவில்லையா?...பேச்செழாமல் நிற்கிறாள்.
‘ஏம்மா, கிரி, உனக்கே இது சரியாயிருக்கா? குழந்தைகள் தவிச்சுப் போக; வயசானவ, அள்ளு அள்ளாக் குலுங்கி அழறா. என்னடீ செய்வேன் ரோஜா, இப்படிப் பேர் வாங்கி வச்சுட்டுப் போயிட்டாளேன்னு. சாருதான் பாவம், யார் யாரோ ஸ்நேகிதா வீட்டுக்கெல்லாம் ஃபோன் பண்ணி, மம்மி அங்க வந்தாளா ஆன்டி, கடைக்குப் போறேன்னு போனாங்க, காணலை.ன்னு’ கேட்டுண்டிருந்தது. ஒரு தாயாராகப் பட்டவள் செய்யற செயலா இது?...அந்தப் பொண், ரத்னா, அது வேற தடியனாட்டம் ரெண்டு சிநேகிதனைக் கூட்டிண்டு வந்து பாட்டியை நாக்கில் நரம்பில்லாமல் பேசித்து. இந்த வயசுக்கு அவருக்கு இதுவேனுமா? முதல்நாள் அவளை இங்க பார்க்கறப்பவே அவல்லாம் இந்த வீட்டுக்கு வரக்கூடிய உறவில்லன்னு தோணித்து. எப்படிச்சொல்ல? ஸிகரெட்டப் புடிச்சிண்டு போறதுக. எல்லாம் வெளிப்படை. ஏதுடா நமக் கும் பதினாறு வயசுப் பெண்ணிருக்கு, இந்த மாதிரி ரகங் களைச் சேர்க்கலாமச்ன்னு நீதானே தாயாராக லட்சணமா ‘கட்’ பண்ணனும்? ஒருநாள் கிழமை, பாவாடை உடுத்திக்கோ, தாவணி போட்டுக்கோன்னு நாமதான் சொல்லணும். நான் ஏன் சொல்றேன்னு நினைச்சுக்காதே சாமு, பளிச்’னு ஒரு குங்குமம் நெத்தில வெச்சுக்கறதில்ல. நாகரிகமா இருக்க வேண்டியதுதான். எனக்குந்தான் வீட்டில வராத விருந் தாளியா? ஆனால் என் நியமம், பூஜை, விட்டுடமுடியுமா? ஒரு வெள்ளி, செவ்வாய். மலைக்கோயிலுக்குப் போய் வந்தா என்ன? நீ பண்ணிக் காட்டினால்தானே குழந்தைகளுக்கு வரும்? அதுகளை வச்சிட்டே, பாட்டி மடி, ஆசாரக் குடுக் கைன்னா அதுகளுக்கு மதிப்பு வருமா? நீ ஊரில் இல்ல. உன் அம்மா, பாதிநா ராப்பட்டினிதான்...’
இவளால் இதற்குமேல பொறுக்க இயலவில்லை. அவளுடைய வயிரங்கள் பெரிய குங்குமம், சாயம் பூசிய கறுப்பு முடி, மின்னும் பட்டு எல்லாம் வெறுப்பைக் கிளர்த்திக் கொண்டு வருகின்றன.
“...மாமி உங்களுக்கே இது நல்லாயிருக்கா? ஒரு குடும்பத்தின் நடுவே புகுந்து, இப்படிப் பிரிக்கிறது உங்களுக்கு அழகா? எத்தனை நாள் பட்டினி போட்டேன், பார்த்தீர்கள்?”
‘உனக்கேனம்மா கோபம் வரது? குழந்தைகளை, நாம் தான் நல்லவழியாகக் கொண்டு போகணும். ஒரு ஆடி வெள்ளி, தைவெள்ளின்னு சொல்லி மடி, ஆசாரமா இருக்கச் சொல்லிக் குடுக்கணும்னுதானே சொல்றேன்!...’ கிரிஜா என்ன சொல்கிறோம் என்பதறியாமல் அடிவயிற்றிலிருந்து கத்துகிறாள்.
‘உங்க விழுப்பு, மடி எல்லாம் போலி! தங்கமும் வயிரமும் கடத்திட்டு வந்து, வரி கொடுக்காமல் ஏமாற்றி, பிறத்தியார் வீட்டில் குடுத்துப் பதுக்கி வைக்க, ஒண்ணும் தெரியாத கிழவியை உபயோகிக்க வேஷம் போடுறீங்க! என் குழந்தை களுக்கு வேஷம் போடற மடி தேவையில்ல!’
சாமு பாய்ந்து வந்து அவள் முகத்தில் அறைகிறான்.
‘என்னடி சொல்ற? திமிரெடுத்து எவன் வீட்டிலோ தங்கிட்டு வந்து நிக்கற நாய். என்னடீ பேசற... ?’ கிரியின் கண்களில் தீப்பறக்கிறது.
“இத, பாருங்க! அநாவசியமாக வாயைக் கொட்டாதீங்க! நான் எங்கும் ஒடிப் போகல. நீதான் இந்த வீட்டைத் தாங்கறதா நினைச்சிக்க வேண்டாம்ன்னு என்னை ஒரு விநாடியில் தூக்கி எறிஞ்சு, சோத்தை வீசி எறிஞ்சிட்டுப் போனிங்க! அப்ப உங்கம்மா, இந்த மாமி, யாரும் எனக்கு நியாயம் சொல்ல வரல. நான் வெறும் மழுக்குண்ணிப் பொம்மையில்ல. என் படிப்பு, அறிவு, மனுஷத்தன்மை எல்லாத்தையும் வெட்டிச் சாய்ச்சிட்டு கண்ணை மூடிட்டு உடம்பால் உழைக்கும்படி, சவுக்கடியைவிட மோசமான உள்ளடியினால் கட்டாயப்படுத்தினர்கள். இல்லாட்ட, பதினெட்டு வருஷம் இந்த வீட்டில் அச்சாணியாக உழன்றவளுக்கு நீங்கள் என்ன மதிப்பு கொடுத்தீர்கள்? அது அன்னிக்கு எனக்கு பொறுக்கல. நீங்கள் என்ன செய்தாலும் நான் முழுங்கிட்டு மெஷினாக இருக்கணும்னு பொறுக்காம அன்னிக்கு மனசு விட்டுப் போச்சு. கங்கையைப் பார்க்கப் போனேன். இந்த மாமியும்தான் என்னைப் பார்த்தாள். ஏன் சும்மா இருக்கறீங்க? பிச்சை பண்ணி வைக்க வந்தேள் என்னைப் பார்க்கலியா? இப்படி அபாண்டமா, நாவில் வராத அவதூறுகளைச் சொல்லலாமா?”
‘என்னது? உன்னைப் பார்த்தேனே? நான் எங்க உன்னைப் பார்த்தேன்? என்னைப் பொய்ச்சாட்சி சொல்ல இழுக்காதேம்மா? உன் மூஞ்சிய அன்னிக்கு இங்க வந்தப்ப பார்த்ததுதான், இப்ப பார்க்கிறேன்...’
பெண்ணுக்குப்பெண் காலை வாரிவிட்டு யமனாக நிற்கும் கொடுமையில் கிரிஜா விக்கித்துப் போகிறாள்.
‘மாமி...! நீங்க என்னைப் பார்க்கல! அந்தக் கெளரி அம்மா, பூதப்பாடி உறவுன்னுகூடச் சொன்னதாகச் சொன் னார். அவாகூடப்போய், அவாகூடத்தங்கி அவாகூடத்தான் காலம வந்து இறங்கினேன். நீங்ககூட நம்மாத்துல தங்க லாம். ஆனா நாளை ஃப்ளைட்ல அமெரிக்கா போறோம். குழந்தை கல்யாணம் நிச்சயமாகப் போறதுன்னு சொன்னேளாம்...’
‘ஐயோ என்னென்ன கதை கட்டுகிறாள், பாருங்கோம்மா! சாமு, இத்தனைக்கு வந்தப்புறம்...நம்ம சிநேகமெல்லாம் நீடிக்கறதுக்கில்ல. என்னமோ ஒரு பாசம், பழகின தோஷம் வந்து வந்து பெரியவ பெத்தவ மாதிரின்னு ஏதோ உப்பிலிட்டது. சர்க்கரைன்னு கொண்டு கொடுப்பேன். இனிமே எனக்கென்ன? உங்க வீடு.’
ரோஜா மாமி திரும்பினால் விடுவார்களா!
‘ரோஜா நீ எதுக்குடி வருத்தப்படற! அந்த நாள்ளயே நான் படிச்சு வேலை பண்ற பொண் வேண்டாம்னு இதுக்குத் தான் பயந்தேன். எங்கபெண் படிச்சாப்பலவே காட்டிக்க மாட்டா, பாருங்கோன்னு இவம்மா சொன்னா, இருக்கவும் இருந்தா. இப்ப என்ன போறாத காலமோ, எதெதுகளோ வந்து குழப்பி, திரிய விட்டாச்சு...எல்லாம் என்னால் வந்தது தான். நான் ஒருத்தி மடி ஆசாரம்னு இல்லாம இருந்தா, இஷ்டம்போல போயிண்டிருக்கலாம்...’
‘அம்மா, இத்தனைக்குப் பிறகும் இங்க வந்து இவ இருக்கறதுங்கறது சரிப்படுமா? நீ ஏன் வருத்தப்படறே? இவளுடைய உள்விஷம் எனக்குத்தான் தெரியாமல் போச்சு அவ எங்க வேணாப் போயிக்கட்டும்...ஆமாம்...’ அவன் வெடுக்கென்று உள்ளே செல்கிறான்.
கிரிஜாவினால் இனியும் இந்த வீட்டில் எப்படி இருக்க முடியும்? நாற்பத்தாறு வயசு, மூன்று குழந்தைகளுக்குத்தாய். இவள் குடும்பத்தைவிட்டுப் போனால், உடல் பரமான மாசு களை வீடுவதுதான் நியாயமா? அந்த மாசு ஆணுக்குக் கிடையாது. இல்லை? ஒரு மனிதப்பிறவியான பெண்ணை, இயந் திரத்தையும் விட மேர்சமாக நடத்த ஒர் ஆணுக்கும்.அவனைச் சார்ந்தவர்களுக்கும் உரிமை வழங்கும் ஒர் அமைப்புத்தான் குடும்பம், இந்த மையமான அதிகார உரிமை குவியலை மாற்றமாட்டோம் என்றால், அவள் வெளியேறித்தான் அதைச் சீராக்க முனையவேண்டும்.
அவள் படிகடக்கையில், அம்மா.நீ போறியாம்மா...? என்று பரத் ஓடிவருகிறான். கவிதா நகத்தைக் கடித்துக் கடித்துத் துப்புகிறாள். சாரு தந்தைக்கு அஞ்சி ஒதுங்கி நின்றாலும் உதடுகள் துடிக்கின்றன.
‘ஏய், எல்லாம் உள்ள போங்க! பரத். இங்க வா! நீ அம்மா அம்மான்னு போனா ஒண்ணும் கிடையாது. ரிமோட் கன்ட்ரோல் ப்ளேன் வாங்கிட்டு வருவேன். ரோபோ வாங்கித் தருவேன். அம்மாவோட போனால் ஒண்ணும் கிடையாது!’ ஒரு கையில் பிள்ளையைப் பிடித்துக்கொண்டு அவன் ஆசை காட்டி நிபந்தனை விதிக்கும் நேரத்தில் அவள் விடுவிடென்று தெருவில் இறங்கிப் போகிறாள்.
யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை.
------------
அத்தியாயம் 13
பொதுத் தொலைபேசி எப்போதும் ஒழுங்காக இயங்கிய தில்லை. இவளுக்கும் பழக்கம் இல்லை. எனினும் தபால் அலுவலகத்தை ஒட்டிய தொலைபேசி அது. சில்லறைமாற்றி வைத்துக்கொண்டு ரத்னாவின் பல்கலைக்கழக விடுதி எண் ணுக்கு அவள் சுழற்றுகிறாள். உடனே கிடைக்கவில்லை. நாலைந்து தடவைகள் முயன்றபிறகு மணி அடிக்கிறது. ‘ஹலோ...’ என்ற ஆண்குரல் கேட்கிறது. இவள் நம்பரைச் சொல்கிறாள் ‘...எஸ்.திஸ் இஸ் அபு ஸ்பிக்கிங்! ‘ஓ..நா... நான் ரத்னாவின் ஆண்டி’, கிரிஜா பேசுகிறேன். ரத்னா இல்லையா?’
‘...அவ...எம். பி. ரோட் ஹாஸ்டலுக்கு ஷிஃப்ட் பண்ணிட்டாளே? உங்க வீட்டுப்பக்கம்தான்.’
‘..எனக்கு அவசரமா. அவ ஹெல்ப் வேண்டியிருக்கு சந்திச்சுப் பேசணும். கொஞ்சம் வழி சொல்கிறீர்களா? பஸ் எந்த பஸ்னு சொன்னாத் தேவலை...’
‘ஷூர்...உங்கபக்கத்திலேந்து ட்ரிபிள் ஃபோர்...நாலு நாலு நாலு பஸ் போகும்-விமன் ஹாஸ்டல் ஸ்டாப்பிங்கே இருக்கு...நீங்க வீட்டிலேந்துதானே பேசுகிறீக?...
‘இல்ல’ பப்ளிக் பூத். உங்க கொஸ்ச்சினருக்கு நாலஞ்சு நாளுக்குள்ள விரிவா பதில் எழுதித் த்ரேன்...நீங்க...முடிஞ்சா. ரத்னாவுக்கு ஃபோன் பண்ணி நான் வரேன்னு சொல்லுறீங்களா?...இங்க... கனெக்ஷன் கிடைக்கிறதே கஷ்டமா இருக்கும் போல...’
சொல்றேன். நீங்க வேற ஏதானும் ஹெல்ப் வேணும்னா சொல்லுங்கம்மா!’
‘சொல்றேன்...பின்னால. தாங்க்ஸ்...’
வாங்கியை வைத்து விட்டுச் சிறிது தொலைவு நடந்து சென்று, பஸ் நிறுத்தத்தில் நிற்கிறாள். கையில் அதிகப் பணம் இல்லை. அன்று ஐநூறு ரூபாய் மட்டுமே கைப்பையில் எடுத்துக் கொண்டிருந்தாள். இனி, ஒவ்வொரு காசையும் எண்ணிச் செலவழிக்க வேண்டும். ஆட்டோவுக்குச் செலவு செய்யக் கூட கணக்குப் பார்ப்பவளாக, பழைய கிரிஜாவாக எண்ணிக் கொள்கிறாள்.
பஸ்ஸிலேறி பெண்கள் விடுதி நிறுத்தத்தில் வந்து இறங்குகிறாள்.
உயர்ந்த சிவப்புக் கட்டிடம். மூன்றடுக்குகள் இருக் கின்றன. நான்காவது மாடிக் கட்டிட வேலை நடக்கிறது. ரத்னாவின் அறை இரண்டாம் மாடி...இருநூற்று மூன்று எண்.
அவள் வந்து கதவை இடிக்கையில், ‘ஸ்கர்ட் ப்ளெவுஸ்’ அணிந்து, வெளியே செல்லத் தயாராக இருந்த பெண்ணொருத்தி கதவைத் திறக்கிறாள்.
இவளைக் கண்டதும் முகம் மலர்ந்து, ப்ளிஸ் கம் இன்- இப்பதான் அபு ஃபோன் பண்ணிச் சொன்னார். ஜஸ்ட் நெள, ரத்னா கொஞ்சம் வெளியே போயிருக்கிறாள். இத இப்ப ஒரு மணிக்கு வந்து விடுவாள்...ப்ளீஸ்...கம்..’ வரவேற்கிறாள். ஆறுதலாக இருக்கிறது. நடுத்தெரு வெயிலிலிருந்து ஒரு நிழலுக்கு வந்திருக்கிறாள். அலமாரியில் இருந்து, ஆரஞ்சுச் சாற்றை எடுத்துக் கலக்கிக் கண்ணாடித் தம்ளருடன் நீட்டுகிறாள் அந்தப் பெண்.
ருஷிகேசத்துக் கிழவியை நினைத்துக் கொள்கிறாள். மூன்றாம் மாடியிலிருந்து ஜன்னல் வழியே துாரத்துப் பசுமை தெரிகிறது. ஒவ்வொரு துளியாக அவள் ரசித்துப் பருகுவதைக் கண்ணுற்ற அந்தப்பெண், ‘ஹாவ் ஸம் மோர்...!’ என்று இன்னொரு தம்ளர் கலந்து வைக்கிறாள். கிரிஜா புன்னகையுடன் ஏற்கிறாள். மேலே விசிறி சுழல்கிறது. இரண்டு பேர் தங்கும் அறை அது.
‘நீங்கள் அவளுடன் இந்த அறையில் இருக்கிறீர்களா..?’
‘...ஆம்...ஐ'ம் ஆனி...’ என்று அறிமுகம் செய்து கொள்கிறாள். புன்னகையுடன்.
‘நீங்கள் வெளியில் கிளம்பிட்டிருந்தீங்க போலிருக்கு...’
‘ஆமாம். நீங்கள்... செளகரியமாக இருங்கள்...இதோ பாத்ரூம்...நான் பையனிடம் சொல்லிட்டுப் போறேன். பிரேக் ஃபாஸ்ட் கொண்டு வருவான் ரத்னா லஞ்ச் அவருக்கு முன்ன வத்துருவா...ரூம் சாவி இதோ...ஒகே. வரட்டுமா?...’
கிரிஜா ஆறுதலுடன் தலையசைக்கிறாள்.
ஆனி சென்ற பிறகு சில நிமிடங்கள் கண்களை மூடிக் கொண்டு நடந்த நிகழ்ச்சிக்களை மறக்க முயலுகிறாள்.
ஒருபெண், எத்தனை வயதானாலும், என்ன நிலையானாலும், வீட்டரணை விட்டால், தறிகெட்டுப் பாலுணர்வின் உந்ததுலினால் தன்னை மாசுபடுத்திக்கொண்டு விடுவாள் என்ற தீர்மானமான, அருவருக்கத்தக்க கருத்தைக் கல்லாய் நிலைப்படுத்தியிருக்கிறார்கள். எந்த வயசானாலும், கணவன் தவிர்த்து ஒரு பெண் எந்த ஆண்மகனுடனும் பேசவோ, பழகவோ, ஒன்றாக நடக்கவோ நேர்ந்தால், அந்த ஒரே கோணப்பார்வைதான் பதிக்கப்படுகிறது. இந்தப் பார்வை ஆணைக் கட்டுப்படுத்தாது.
இத்தனை ஆண்டுகள் படித்து, பெண் பொருளாதார சுதந்திரம் பெற்றபின் உள்ள நிலையா இது? எந்த உண்மை யும் ஒரு சோதனைக் கட்டத்தில்தான் குதித்து வெளி வருகிறது. சாமு அவள்மீது வைத்திருக்கும் மதிப்பை வெளி யாக்கி விட்டான். இனி அந்தக் குடும்பத்துடன் அவளால் எவ்வாறு ஒட்டிக்கொண்டு இருக்கமுடியும்?
ஆனால்...கவிதா, சாரு...
நெடுநேரம் கூரையை வெறித்துக் கொண்டு அவள் கிடக்கிறாள். பையன் அவளுடைய பிரேக்ஃபாஸ்ட் உணவைக் கொண்டுவந்து கதவைத் தட்டும் போதுதான் புதிய கரையில் ஒதுங்கியிருக்கிறோம் என்று நினைவு வருகிறது. எழுந்து கதவைத் திறக்கிறாள், டோஸ்ட், ஜாம் வெந்தமுட்டை, சூட்டுக் குப்பியில் காபி முதலியவை வைத்துக் கொண்டு வந்திருக்கிறான். முட்டை வேண்டாம் எடுத்துச் செல் என்று கூறுகிறாள். ஆனால் அவனுக்கு அது புரிய வில்லையோ என்னவோ?...தட்டை எடுத்துச்செல் என்று சொல்வதுபோல், ‘இருக்கட்டும் பின்னால் வருகிறேன்’ என்று போகிறான்.
குளியலறையில் சென்று புத்துணர்வு பெற்று வந்து சேலைமாற்றிக் கொள்கிறாள். இந்த அறையில் ஈரச்சேலை உலர்த்த வசதி கிடையாது. கூடுமான வரையிலும் அறை துப்புரவாக இருக்கிறது. இருவரும் பகிர்ந்து கொள்ள ஒரு பெரிய இரும்பு அலமாரி...பதிக்கப்பெற்றிருக்கிறது. மேசைக்கு இருபுறங்களிலும் இழுப்பறைகள் இருக்கின்றன. அலங்காரக் கண்ணாடி, நடுவில் பவுடர், நகப்பாலிஷ். போன்ற ஒப்பனை சாமான்கள் இருக்கின்றன. இன்னொரு சிறு மேசை எழுது வதற்குப் பயன்படும்; சாப்பிடுவதற்கும் பயன்படும்போலும்!
மூலையில் ஒரு மண் கூசாவும், மொட்டையான உலோகத் தம்ளரும் துப்புரவாக இருக்கின்றன. இரு கட்டில்களுக்கும் நடுவே இருக்கும் மெத்தென்ற விரிப்பு - பூ வேலை செய்த, பருத்தி ரகம்தான். உள்ளே பேர்ட்டுக் கொள்ளும் ஸிலிப்பர்கள் இரண்டு ஜோடிகளும் அந்த கட்டிலுக்குக் கீழே இருக் கின்றன. வராந்தாவைப் பார்த்த ஜன்னலின் சிறு திண்ணை யில் சில புத்தகங்கள்...ஒரு பெரிய சிப்பி ஒட்டில் சாம்பல் குவியல்...அவளுள் ஒரு குலுக்கல்.
ஸிகரெட்டையும் புடிச்சிட்டுப் போறது...!
ரோஜாமாமி கூறியது நிசம்தானா? கட்டவிழ்ந்து உண்மையில் அவள் எந்தக் கும்பலிடையே வந்திருக்கிறாள்?
இவர்களுடைய சுதந்தரம், ஆண் பெண் எந்தக் கட்டுப் பாடின்றியும் உறவு கொள்வதும், மதுவருந்துவதும், புகைப்பதும் என்ற அரண்களைத் தகர்ப்பதும்தானா. உண்மையில்’ இந்தக்குற்றச் சாட்டுக்கள், உண்மைதானா?
ஒராயிரம் கேள்விகள் மொய்க்கின்றன.
சாம்பற் குவியலிலே, வெண்மையாக சிகரெட்டின் ஒரு துண்டு போல் கிடக்கிறது...இருக்கலாம்.
வெட்ட வெளிக்காற்றில் குளிர்ச்சியும் உண்டு; தூசியும் தவிர்க்க முடியாததுதான். ரொட்டித் துண்டுகளையும் குப்பியி லிருந்த தேநீரையும் காலி செய்கிறாள். அடுக்கில் இருந்த புத்தகம் ஒன்றை எடுத்துப் பிரிக்கிறாள். ‘ஸூஸான் க்ரிஃத்ஸ் எழுத்துக்களில் இருந்து பொறுக்கு மணிகளாகத் தேர்ந்தெடுக் கப்பட்ட கட்டுரை, கவிதைகளின் தொகுப்பு. ‘விமன்ஸ் பிரஸ்’ வெளியிட்டது.
எடுத்துப் பிரித்துத் தலைப்புகளைப் பார்க்கிறாள்-
பெண்-தாய்மை-பெண்-சமயம்-
கருச்சிதைவு-பாலுணர்வுச் சிக்கல்கள்-போர்னோகிராஃபி ...இன்றைய தலைமுறையினரை ஆட்டிப் படைக்கும் பிரச்னைகளே முதன்மைப்படுத்தப்பட்டிருக்கின்றன நூலில்.
பெண்ணுரிமைக் கோணத்தில் இப்பிரச்னைகள் சமூகத் தில் எவ்வாறு ஆழ்ந்து போய் அவளைப் பாதிக்கிறதென்று ஆசிரியை பல நிரூபணங்களுடன் விவாதிக்கிறாள் என்பவை மாதிரிக்கு அங்கும் இங்குமாகப் பார்த்துப் புரிந்து கொள்கிறாள்.
அமெரிக்காவில், கருச்சிதைவுக்கு அங்கீகாரமில்லை என்ற நிலையில், கட்டுப்பாடற்ற வாழ்வில் பாதிக்கப்பெற்று சுமக்கும் பெண்ணொருத்தி தன் சுமையைக் கழிக்க அனு பவிக்கும் கொடுமைகளை விளக்கிக் கொண்டு போகிறாள்.
தொடர்ந்து படிக்க முடியவில்லை.
நெஞ்சு இறுகிப் போகிறது.
நாகரிக நாட்டிலே, நாகரிக உலகிலே, பெண் இந்த நிலையிலும் வெறும் தோலும் சதையுமாகவே. சீரழிக்கப் படுகிறாள் என்ற விவரங்களை சீரணிக்க முடியவில்லை.
ஊடே, இந்த நாட்டிலும் இந்தப் பெருநகரிலும், நமக்குத் தெரியாத எத்தனை கோரங்கள் நாகரிக அலங் காரப் பூச்சுக்கும் சுதந்தரத்துக்கும் அப்பால் ஒவ்வொரு பெண்ணையும் ஆட்டி அலைக்கழிக்குமோ என்ற அச்சம் குளிர்திரியாக ஓடுகிறது. அறையில் கடியாரமில்லை. இவள் கைக்கடியாரம் நின்று போயிருக்கிறது. இது மிகப் பழைய கடிகாரம், இவள் திருமணத்துக்கு ருக்மணி டீச்சரும் பாகீரதி டிச்சரும் பகிர்ந்து கொண்டு வாங்கிப் பரிசளித்த ‘ஸூஜா தா கடியாரம்.
மணி இன்னும் ஒன்றடித்திருக்காது?...
கதவு ஒசைப்படுகிறது.
ரத்னாவின் பேச்சுக் குரல்...
கதவைத் திறக்கிறாள். ஆர்கண்டிச் சேலை விறைத்த நிலையில் ஜோல்னாப் பையுடன் ரத்னா;
ஹலோ...
ரத்னா சிரிக்கிறாள். முதுகைத் தட்டுகிறாள். “அபு வந்திருக்கிறார். கீழே போகலாமா?”
பேசிக் கொண்டே இறங்குகிறார்கள்.
அபுவை லைப்ர்ரி சென்டரின் அருகே தற்செயலாகப் பார்த்தாளாம்.
கீழே வட்டமான பார்வையாளர் கூடத்தில் நிற்கிறான்.
“நீங்க பேசிட்டிருங்க. நான் லஞ்ச் கிடைக்குமான்னு பார்த்துட்டு வரேன்...” அவர்களை உட்கார வைத்து விட்டு அவள் உள்ளே செல்கிறாள்.
“அறிவாளியாக இருக்கக் கூடிய ஒவ்வொரு மணமான பெண்ணுக்கும், சராசரி பழைய மரபுக் குடும்ப ஆணுடன் வாழும் வாழ்க்கையில் நியாயம் கிடைப்பதில்லை என்ற கூற்று... நிரூபணமாகி விட்டது இல்ல!...”
“இப்படி ஒரு திருப்பம் நான் நிச்சயமா எதிர்பார்க்கல. எனக்கு மூச்சு முட்டும் இந்த உழைப்பு நெருக்கடியில் அலுத்து வரும் சோர்வில், ஒர் இடைவெளி வேண்டும், தெளிவு வேண்டும் என்றுதான் போனேன். அதை நான் அவர்களிடம் கேட்டுப் பெறமுடியாதுன்னு தெரிஞ்சு போனேன்...ஆனால், ஏன் என்னன்னு தெரிஞ்சிக்கக்கூட இடமில்லாமல் சேற்றை வாரி இறைத்து, வெளியே துரத்தினார்கள் என்றே சொல்லலாம்...” அவன் ஒன்றுமே பேசவில்லை...சிறிது நேரத்துக்குப் பின் ஆழ்ந்த குரலில்,
“நீங்க...நிச்சயமா முடிவா வந்துட்டீங்களா?” என்று கேட்கிறான்.
“எதுவும் புரியல..”
“எனக்கு ஒரு ஸிஸ்டர் இருந்தா. இந்த ஊரில் சுதந்திரமாகப் படித்துப்பழக வளர்க்கப்பட்ட அவளை, எங்கோ நாகப்பட்டினத்துக்குப் பக்கம், பண்ணை, வீடு, மாடு மந்தை பிஸினஸ்னு கல்யாணம் பண்ணிக் கொடுத்தார்கள். என்னை விட நாலைந்து வயசு பெரியவள். அவள் செய்த குற்றம் புருஷனைவிட அதிகம் படித்தது மட்டுமில்லாமல் அறிவாளியாகவும் இருந்ததுதான். பெண் பண்ணைச் சீமாட்டியாக இருப்பாள் என்று என் பெற்றோர் நினைத்தார்கள். அம்மை வார்த்துக் குளிர்ந்து போனான்னு, நாங்கள் சேதி வந்து போவதற்குமுன் மண்ணோடு ஆக்கிவிட்டார்கள். என்...என் ஆத்திரத்துக்குக் காரணம் நீங்கள் தெரிஞ்சுக்கணும்னு சொல்றேன்...!”
“நீங்க ஒண்ணுமே செய்யமுடியல?”
“என்ன செய்ய? பெண்களுக்குக் கல்யாணம் என்றால் வெறும் வளமையுள்ள இடம் மட்டுமே பார்க்கப்படுகிறது. ஆண்கள், அவள் அழகு, பணம், அடங்கிப் போகும் இயல்பு மட்டும் குறியாக்குகிறார்கள், அது இல்லை என்றால், நீதி செத்துப் போகிறது. சகோதரி, ரத்னா இப்ப ஒரு சர்வேயில் ஈடுபட்டிருக்கிறாள். இங்க, இந்த நாட்டில், இப்ப அதிகமாக வியாபாரம் ஆகும் பொருள், ஏற்றுமதியாகும் பொருள் என்ன தெரியுமா?...பெண்தான். உடல்னு உச்சரிக்கவே எனக்கு மரியாதைக் குறைவாக இருக்கிறது. நீங்கள் திடுக்கிடக் கூடிய தகவல்களை ரத்னாவிடம் கேட்பீர்கள்!”
“உங்க ரெண்டு பேருக்கும் சப்பாத்தி. சப்ஜி, தயிர் கொண்டு வரச் சொல்றேன். வாங்க, டைனிங் ஹாலிக்கு!”
ரத்னா அழைக்கிறாள்.
“வாட் அபெளட் யூ?” “நான் ஒரு மணிக்கே முடிச்சிட்டேன்...அது சரி, இப்ப என்ன செய்யப்போறீங்க கிரி?”
“அவள் தலைகுனிந்து கீழே விரலால் நெருடிய வண்ணம், மெளனமாக இருக்கிறாள்.
“என்ன நடந்தது, இன்னைக்குக் காலையில?”
கிரிஜா, சுருக்கமாக, அவன் கிளம்பிச் சென்ற நேரத்திலிருந்து, ரோஜா மாமியின் பெட்டி விவரம் உட்பட எடுத்துரைக்கிறாள்.
“பூ...ரெய்ட் தான் பேப்பரில் எல்லாம் வந்து சந்தி சிரிச்சாச்சே? ஸோ, சாமுவும் இதில் இன்வால்வ்ட்?...”
“அதென்னமோ தெரியாது. எனக்கு இப்ப, கவிதாவையும் சாருவையும் பத்தித்தான் கவலை. அந்தக் குழந்தைகளை தாயும் பிள்ளையுமா, எப்படி நடத்துவான்னு நினைக்கவே முடியல...இப்ப. இப்ப, நான் அங்கே இருந்து வெளியே வந்ததுக்குக் காரணமே, அவங்களுக்கு நல்ல எதிர்காலம் அமைக்கணும், ஸெல்ஃப் ரிலயன்டா, அறிவினால் மேம் பட்டவர்களாக வளர்க்கணும்னு. இந்த பாஷ், ஸ்கூல்: காலேஜ் இதுவெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. பயமா யிருக்கு...”
‘பையனைப் பற்றிக் கவலை இல்லையா, பஹன்ஜி?...’
“...அவனை விடமாட்டாங்க. ரோபோ வாங்கித் தரேன்: ரிமோட்கன்ட்ரோல் பிளேன் வாங்கித் தரேன், அம்மாவை மறந்துடுன்னு காலமே சொல்லிட்டிருந்தார். நான் ஏன் போனேன், என்மனம் எப்படி நொந்து போயிற்று என்பதை அறியத் துளியும் மனமில்லாமல், உடனே சேற்றை வாரி இறைத்து, இந்த வீட்டை விட்டுப்போ என்று துரத்துபவர்கள்...மனிதர்களா?...பிள்ளையையும் அதே போல் வளர்ப்பான் ...”
‘நீங்க இவ்வளவுக்கு ஆண் எதிர்ப்பாளராக இருக்கக் கூடாது பஹன்ஜி?’ அபுவினால் இப்போது சிரிப்பை வர வழைக்க முடியவில்லை.
‘ரத்னா...எனக்கு உடனடியா ஒருவேலை, தங்குமிடம் வேண்டும். வக்கீல் மூலமாக என் சிடுக்கைத் தீர்ப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். எனது சர்ட்டிஃபிகேட், போன்ற பேப்பர்கள், துணிமணியெல்லாம் முதலில் எடுத்திட்டு வரணும். அதுக்கெல்லாம் நீங்க ஹெல்ப் பண்ணனும்...”
“டோன்ட் வர்ரி. அதெல்லாம் பாத்துக்கறோம். நீங்க * ஒருவாரம் அமைதியாக ரெஸ்ட் எடுங்க...!’
“ரெஸ்ட் எடுக்கத்தானே போறேன்! படகு கரைக்கு வந்தாச்சு...”
“சாப்பிடுங்க முதலில்...”
முற்றிலும் புதிய சூழ்நிலைக்குக் கிரிஜா தன்னைப் பழக்கப்படுத்திக் கொள்கிறாள்.
-----------
அத்தியாயம் 14
மாலைநேர நெருக்கடியில் பஸ்ஸில் இருந்து இறங்குவதே கடினமாக இருக்கிறது. சாலையோரங்களில் புழுதி பறக்குமளவுக்கு வெயில் தொடர்ந்து காய்கிறது. பெண்கள் விடுதி நிறுத்தத்தில், கலகலவென்று இறங்கிப் படிகளில் ஏறும் o சில பெண்களுக்குக் கிரிஜா பார்த்தால் சிரிக்குமளவுக்குப் பழகி யிருக்கிறாள். யாரிடமும் யாரும் திருமண அந்தஸ்தை அறிவதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், உள்ளே ஆண்கள் யாரும் வருவதில்லை. அபுகூட அன்று மேலே வர வில்லையே? வருபவர்கள் கீழே உள்ள பார்வையாளர்கள் வட்டத்தில் மட்டுமே இருக்கலாம். சாப்பாட்டுக் கூடத்தில், விருந்தினராக அழைத்து வரலாம்...அங்கு, சுருள் சுருளாகப் புகைவிடும் வனிதையர் புதிதில்லை. உடையணிவதிலும் எந்தக் கட்டுப்பாடும் இல்லை. ஆனி, பத்து நாட்களாக இவளுக்கு இடத்தைக் கொடுத்துவிட்டு வெளியே எங்கோ உறவினர் வீட்டில் தங்கி இருக்கிறாளாம்.
இரண்டாம் மாடி ஏறிப்போகுமுன் முட்டி வலிக்கிறது. இலேசாக மூச்சு இறைக்கிறது. எதிரே புரளும் நீண்ட விட்டங்கியில், அழிந்த சாயமும் கிறங்கிய கண்களுமாக ருனோ இறங்கிப் போகிறாள். ஆல்கஹால் வாசனை நாசியில் படுகிறது. i.
இங்கு எல்லாம் சர்வ சகஜம்...
கதவுச்சாவி இருக்கிறது. திறந்து கொண்டு உள்ளே செல்கிறாள்...
கண்ணாடியில் பார்த்துக் கொள்கிறாள்.
எப்போதும் அணியும் பொன்வடமில்லை. சிறுசிறு சிவப்பு மணிகளாலான மெல்லிய சரம், அழகாகத்தானிருக்கிறது.
இரண்டு மூக்குத்துவாரங்கள். ‘விடுதலை’ என்றறிவிக் கிறது. செவிகளில் சிறுதிருகாணி மட்டும் போட்டிருக்கிறாள்.
கைப்பையைத் திறந்து, கற்றை நோட்டுக்களை எண்ணிப் பார்க்கிறாள். ஆயிரத்தைந்நூறு...வங்கி...ரசீது...
தனக்குத் திருநீர்மலைக்கோயிலில், சாமு அந்தச் சங்கிலியைப் போட்ட நேரம் நினைவில் வருகிறது. அது ஒன்றுதான் அவளே சம்பாதித்துச் சேர்த்துச் செய்து கொண்ட பொன்னகை. கல்யாணத்துக்கென்று அவள் பணத்தில்தான் தாலிக்கொடி பண்ணக் கொடுத்தார்கள். அதன்மீது எத்தனை புனிதம் ஏற்றி வைக்கப்பட்டிருந்தது! பொற்சங்கிலி, தனியாக மஞ்சட்சரட்டுத்தாலி என்று இரண்டு போட்டுக் கொண்டிருந்தாள் வெகுநாட்களுக்கு. பரத் பிறந்த பிறகு வெறும் தங்கக் கயிற்றுத்தாலி மட்டும் போட்டுக்கொள்வதென்றுவிடுத்தாள். ரோஜாமாமி அதைத்தான் குறிப்பாகச் சொல்லிக் காட்டினாள். இப்போது, இந்த அவசரத்துக்கு அது உதவு கிறது. வங்கியில் வைத்துப் பணம் வாங்கியிருக்கிறாள்.
ஆனி வருகிறாள்.
“ஹலோ-?...சித்தரஞ்சன் பார்க் போனிங்களா கிரிஜா?”
“பார்த்தேன் மதர். ஃபர்ஸ்ட்லேந்து வேலைக்கு வாங் கன்னா...இப்ப ஃபோர் ஹன்ட்ரட்தான் அவங்களால குடுக்க முடியுமாம். எல்லாம் ஜுக்கி ஜோப்டி சில்ட்ரன், ரிஃப்யூஜி சில்ட்ரன்னாங்க.’’ -
“ஹா...ஃபர் த ப்ரஸண்ட் ஒத்துக்குங்க. உங்க வீட்ல எல்லாரும் பார்த்து ஏற்பாடு பண்ணியிருக்கோம். உங்க ஸ்ர்ட்டிபிகேட், மற்ற சாமான்களெல்லாம் கொண்டு வந்து குடுத்திடறதாச் சொல்லி இருக்காங்க. மதர் இன்லா...என்ன அப்படி அழுவுது?”
கிரிஜாவுக்கு இது எதிர்பாராத செய்தி.
“அவங்க யாரும் இல்லை. உங்க மதர் இன்லா, மிஸ்டர் சாமிநாதன் தான் இருந்தாங்க. நம்ம லாயர் பிரகாஷ்தான் பேசினார். சட்டுனு இப்ப டைவர்ஸ்னு ஒண்ணும் முடியாது... அவங்க திங்ஸ்’ல்லாம் கொண்டு வந்து குடுத்திடணும்னு கேட்டோம். சரின்னிருக்காங்க...”
“வேற ஒண்னும் சொல்லல...!”
“ஏன்? காம்பரமைஸ் பண்ணிக்கவா?”
ஆனி சிரிக்கிறாள். கிரிஜாவினால் சிரிக்க முடியவில்லை.
மதர் இன்லா எதுக்கு அழுதாங்க?
ரத்னா வருகிறாள். இவள் தோற்றத்தைப் பார்த்ததும் “வெரிகுட்...?” என்று ஆமோதித்து முதுகில் தட்டுகிறாள்.
“கிரிஜா, நீங்க ரொம்ப ஃபார்வர்டாயிட்டீங்க. நம்ம அழுக்கு மரபுகளைத் தூக்கி எறிஞ்சிட்டீங்க! நான் ஒரு தமிழ் சினிமா பார்த்தேன். பேரு நினைப்பில இல்ல. அவ டைவர்ஸ் பண்ணிட்டு வேற ஊருக்கு வரா. வந்த இடத்தில் பழைய காதலன் அடுத்த வீட்டில், இவளையே நினைச்சு உருகிட்டிருக்கிறான். சந்திக்கிறார்கள். கல்யாணம் செய்துகொள்ள முடிவு செய்கிறார்கள். காதலன் சொல்கிறான்-உன் கழுத் தில் இருக்கிறதே அந்த...அவன் போட்டது. அதை நீக்கிவிடு. என்று.இவள் இவளால் அதைக் கழற்ற முடியவில்லை. அது புனிதமானது. மிகப்புனிதமானது. மனப்போராட்டம். அதை நீக்க முடியவில்லை. காதலனை மறுத்துவிடுகிறாள். விவாகரத்துக்குப் பிறகும் அவன் கட்டிய அது புனிதமாகக் கருதப்படுகிறது கிரிஜா, சபாஷ் ....”
கையைக் குலுக்குகிறாள் ரத்னா.
அந்தக் கதாநாயகிக்கு இரண்டு வயசு வந்த பெண்கள் இருந்தார்களா என்று கேட்கத் துடிக்கிறாள் கிரிஜா.
‘...சரி, இப்ப இதைக் கொண்டாடணும். ஐஸ்கிரீம் வாங்கிட்டு வருவோம்...வா. ஆனி...?’
ரத்னா அவளையும் இழுத்துக் கொண்டு போகிறாள்.
அவள் சென்ற ஐந்து நிமிடத்துக்குள் உள்ளே...நார் மடிப்பட்டு முட்டாக்கு தெரிகிறது...மாயா...மாயா ஒரு பெட்டியைச் சுமந்துகொண்டு வந்து வைக்கிறாள். “தீதிஜி..?” என்று பெரிதாக அழுகைக்குரல் கொடுக்கிறாள். கிரிஜா திடுக்கிட்டாற்போல் நாற்காலியை இழுத்து நகர்த்தி விட்டு மரியாதையாக (பழக்க தோஷம்) நிற்கிறாள்.
“உட்காருங்கம்மா!”
“உட்காறதுக்கு என்ன இருக்கு? சர்ட்டிபிகேட், உன் சாமான் எல்லாம் இருக்கு...பாத்துக்கோ...ஆயிரங்காலத்துப் பயிர்னு நினைச்சேன். ஒரு நாழில அவச் சொல்லைத் தெறிச்சிட்டுப் போயிட்டே. புருஷனாகப்பட்டவன் கோபத் தில், நீ என்ன கிழிச்சேன்’னு சொல்றதுதான். அதை எல்லாம் மனசில, வச்சுக்கலாமா? உனக்கென்ன குறை வச்சிருந்தது? காசு பணம் குறைவா, நீ அதை செலவழிச்சே, இதை செல வழிச்சேன்னு சொன்னமா? ஒரு தீபாவளின்னா ஆயிரம் ஆயிரத்தைந்நூறு என்று புடவை வாங்கிக் குடுக்கலியா? உனக்கு என்ன செளகரியக் குறைவு இருந்தது?...இப்படி ஒரு வாழ்க்கையைக் கொடுக்கிறவன், கோபம் வந்தா பேசறது தான். பெண்ணாகப்பட்டவள் வணங்கித்தான் போகணும். குடும்பங்கறது. அதுதான். அந்தப் பொறுமைதான் பெண்ணை உசத்தறது. பதினெட்டு வருஷம் வாழ்ந்து அனுபவிச்சவ, ஒரு நிமிஷமா அதை முறிச்சிட்டு, வெளில தலைகாட்ட முடியாத மானக்குறைவை ஏற்படுத்திட்டு ஒடிப்போவாளா?... என்னமோ, ரெண்டு பெண்ணை வேறு வச்சிட்டிருக்கோம். அதுகளுக்கு ஒரு கல்யாணம் காட்சி எப்படி ஆகுமோன்னு உருகிப்போயிட்டான். அதை உத்தேசிச்சானும் நீ இப்படி தரக்குறைவா நடந்திருக்க வேண்டாம்...”
கிரிஜாவுக்கு முகம் சிவக்க ஆத்திரம் பொங்கி வருகிறது,
“நான் என்ன தரக்குறைவா நடந்துட்டேன்? நீங்க ஒயாம எம்மேலே சகதிய வாரி எறியும்படி என்ன பண்ணிட் டேன்...?”
“இன்னும் என்னடியம்மா பண்ணனும்? ஆனானப்பட்ட சீதையையே லோகம் பேசித்து. அக்கினிப் பிரவேசம் பண்ணினப்புறமும், உனக்கு ஒண்ணுமில்ல. துடைச்சுப் போட்டுட்டுக் குடும்பத்தைவிட்டு ஒடிப்போயிட்ட, இருக்கிற வாளுக்கு மானம் மரியாதை இல்லை...?”
“இதைச் சொல்லத்தான் இங்க வந்தீங்களா?...'
“உன் சாமானெல்லாம் இருக்கு பாத்துக்கோ, கண்டதுகளும் வந்து மானம் மரியாதை இல்லாம கத்தறது. மானமா இருந்தோம், அது போயிட்டது. எல்லாம் இருக்குன்னு இந்தக் கடிதத்தில் கையெழுத்துப் போட்டுத்தரச் சொன்னான்...”
பெட்டியைத் திறக்கிறாள். அட்டை ஃபைலில் அவளுடைய கல்வித் தகுதி மற்றும் சான்றுகள்...அதன்மேல்
பத்தாயிரத்துக்கு ஒரு செக். அதை எடுத்து வெறித்துப் பார்க்கிறாள்.
“இதென்ன, நாய்க்குப் போடும் எலும்புத்துண்டா?... எடுத்திட்டுப்போங்க!” விசிறி எறிகிறாள்.
அவள் குரலின் கடுமையில் மாமியார் பின்னடைத்திருக்க வேண்டும். வீசிய காகிதம் அவள்மேல் விழுகிறது. குத்தப் பட்ட செருக்கை விழுங்கிக்கொண்டு வெளியேறுகிறாள். மாயா “தீதீஜி...!” என்று கண்ணிரைக் கொட்டியவளாகப் போகிறாள்.
கிரிஜா வெறித்துப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்கிறாள்.
ஐந்து நிமிடங்கள், பத்து நிமிடங்கள்.
எந்த அரவமும் செவிகளில் விழவில்லை. ரத்னாவும் ஆனியும் இன்னுமா ஐஸ்கிரீம் வாங்கி வருகிறார்கள்? எங்கே போனார்கள்?...
---------
அத்தியாயம் 15
ஏதோ நினைத்துக்கொண்டவளாக அவள் வராந்தாவுக்கு வந்து கீழே பார்க்கிறாள். அந்த முன் வாயில் நடை பாதையை ஒட்டி, ஒரு கூட்டம் கூடியிருக்கிறது. சைக்கிள்கள் ஸ்கூட்டர்கள் போகவில்லை.
ஏதேனும் விபத்தா?...ஆனால் விடுதிச் சுற்றுச்சுவருக் குள்ளும் கூட்டம் நிறைந்திருக்கிறது?
கப்பென்று நெஞ்சைப் பிடித்துக்கொள்கிறது ஓர் அச்சம்
ரத்னாவும் ஆனியும் ஏதேனும் விபத்தில்... கதவைப் பூட்டிக்கொண்டு பரபரவென்று விரையும் போது, படிகளில் உதிரிகளாகப் பெண்கள்; இந்தியிலும் ஆகிங்லத்திலும் பரிதாபச் சொற்களின் பிசிறுகள்.
“க்யாஹவா? கெளன்...”
“ஒ, ருனோ......ஸி ஜம்ப்ட் ஃப்ரம் த ஸ்கன்ட் ஃப்ளோர்.”
“ருனோ?...அவளை இப்போதுதானே வெளியிலிருந்து வரும் போது மூன்றாம் மாடிப் படிகளில் சந்தித்தாள்?... ருனோ...இன்றைக்கெல்லாம் இருந்தால் இருபது வயதிருக் குமா?...இளமை மாறாத முகம். எங்கோ ரிசப்ஷனிஸ்டாக வேலை பார்த்ததாகச் சொல்வார்கள்...
எதற்காக இந்த நேரத்தில் மாடியிலிருந்து குதித்தாள்? போதையா? தெரியாமல் செய்து விட்டாளா?
ஆண்டவனே, ஆண்டவனே என்று மனம் கூவுகிறது. ஆணியும் ரத்னாவும் ஒருகால் அங்குதானிருப்பார்கள்...கீழே போய்ப் பார்க்கிறாள்.
ஆனியைக் காணவில்லை. ரத்னா உயரமாக இருக்கிறாள். கூட்டத்தைப் பின்னால் போகும்படி விலக்கிக் கொண்டிருக்கிறாள்.
குப்புற விழுந்தவளுக்கு முதல் சிகிச்சை செய்து கொண்டி ருக்கிறார்கள் இரு பெண்கள்.
சற்றைக்கெல்லாம் ஆம்புலன்ஸ், போலீஸ் வண்டிகள் தென்படுகின்றன. ரத்னா இவளைப் பார்த்து விட்டு ஓடி வருகிறாள்.
‘கிரி...அன்ஃபார்ச்சுனேட்...நாங்க வர கொஞ்சம் நேரமாகும். நோ ஹோப்...பிழைப்பான்னு தோணலே...’
வெரி ஸாரி கிரி...பெரிய இடத்துப்பெண். அம்மா இல்ல. அப்பா ஒரு குடிகாரன். மட்டமான ஆள். இதைக் கவனிக்கிறவர் யாருமில்ல. வீட்டிலே வேற ஒரு பெண் பிள்ளையைக் கொண்டு வச்சிட்டான். இது பாய்ஃப்ரண்ட் அது இதுன்னு கெட்ட பழக்கங்களுக்கெல்லாம் அடிமையா யிட்டது. இப்ப பாரு, பாய்ஃப்ரண்ட் வந்தானாம். அவங்க கூடப் பேசிட்டு வெளியே நின்னாளாம். எல்லாரும் பார்த்தேங் கறாங்க...”
“நான்கூடப் பார்த்தேன் ரத்னா...வேகமாகப் படியிறங்கிப் போனாள்...”
“ரொம்பக் கஷ்டமா இருக்கு...பை த பை வாசலில் கார் நின்னுது. உன் ஹப்பி இருந்தான். மாமியார் மேல வந்தாளா?
“ஆமாம். எல்லாம் குடுத்துட்டா...”
“ஒ. கே. நான் வரேன்...நீங்க போயி ரெஸ்ட் எடுத்துக்குங்க!” ரத்னா விரைகிறாள்.
உடலை எடுத்துக் கொண்டு சென்ற பின்னரும் பெண்கள் ஆங்காங்கு நின்று அவளைப் பற்றியே பேசுகிறார்கள்...
---------
அத்தியாயம் 16
கிரிஜாவுக்கு ஆணி அடித்தாற்போல் ஒரே வரிதான் ஆழ்ந்து பதிகிறது.
அம்மா இல்லை. அப்பா குடிகாரன். வீட்டில் யாரோ ஒரு பெண் பிள்ளையைக் கொண்டுவந்து விட்டான்...
கவிதா...கவிதா... வயசு வந்த பெண்...கட்டுப்பட்டே பழக்கப் படுத்தியிராத பெண்...
இப்போது கட்டுப்படுத்துவார்கள். அவளைக் காப்பி போடச் சொல்வார்கள். ‘மடிப்’ பழக்கம் கட்டுப்பாடாக்கப் படும். பள்ளிக்குச் சென்று வருதல் கண்காணிக்கப் பெறும். அடோலஸண்ட் ஏஜ்-குமரப்பருவம். படிக்கும் பள்ளியோ ஆடம்பர வாழ்க்கை வாழும் செல்வர் வீட்டுச் சிறுவர் சிறுமியர் உள்ள பள்ளி...
இந்த எண்ணங்களிலிருந்து விடுபடவே முடியவில்லை.
எப்போது உறங்கினாள் என்று தெரியவில்லை. கதவை இடிக்கிறார்கள், ஆனால் இவளால் கதவைத் திறக்க எழுந்து செல்ல முடியவில்லை. கட்டிப் போடப்பட்ட நிலையில் இருக்கிறாள்.
கிரி...கிரிஜா, எழுந்திருந்து கதவைத் திறவுங்கள்...கவி... கவிதாபாத்ரூம்ல கெய்ஸர் ஆக்ளிடன்டாகி செத்துட்டாளாம். எழுந்து. ஐயோ...ஐயோ, ஐயோ, கவிதா...!
அடிவயிறு சுருண்டி கொள்ள அலறுகிறாள், ஆனால் கண்களையே திறக்க முடியவில்லை. எழுந்து கதவை எப்படித் திறப்பாள்?
கிரி...? திரி..!
கதவை உடைக்கிறார்கள் ரத்னா, ரத்னாதான்.
“ஐயோ, இவர்கள் பேச்சைக் கேட்டுத்தானே சலனமடைந்தாள்?
கவிதா, கவியம்மா, ஒருநாள் கூட உன்னை அடுப்படியில் விட்டதில்லையே. கெய்ஸர் பிளக் சரியில்லாமல் இருந்திருக்க வேண்டும். தகப்பனும் பாட்டியும் கவனித்திருக்க மாட் டார்கள்...வாழும் வசதியாம் இது யாருக்கு வேண்டும்?... கவி...கவி...
கதவை உடைக்கிறாள், கிரி. கிரிஜா! வாட் ஹேப்பன்ட் டு ஹர்?..
முகத்தில் தண்ணிர் வந்து விழுகிறது.
சட்டென்று விழிப்பு வரக் குலுங்கி எழுந்திருக்கிறாள்.
கதவைத் திறக்கிறாள்.
‘என்ன கிரி...? என்ன?’
‘கவி.. கவிதாவுக்கு என்ன ஆச்சு? என் குழந்தை எப்படி இருக்கா?’
‘கவிதாவுக்கு ஒண்ணுமில்லியே...? ஸ்கூலுக்குப் போயிட்டியிருப்பா...ஏதானும் கனவு கண்டீங்களா?’
ரத்னா சோர்ந்து போயிருக்கிறாள். இரவு முழுவதும் உறங்கியிருக்கவில்லை என்று புரிகிறது.
‘பாடி போஸ்ட்மார்ட்டம் பண்ணிரிப்போர்ட் வர்ல. ஆனி இருக்கா- ருனோவோட பிரதர். பாவம், வந்து அழுவுறான். உங்களுக்கு இது ஸிரிஸா பாதிச்சிருக்கும். அன்ஃபார்ச்சுனேட் காதல் காதல்னு ஒரு பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிட்டு கோழையாப் போறதுங்க. கண்ட போதைக்கும் அடிமையாகி, அந்த பாய்ஃப்ரன்ட் ஏமாத்திட்டான்னு உயிரை விட்டிருக்கு, ஒரு பக்கம் உங்க மாமியார் மடி கேஸ்...இன்னொரு பக்கம் இப்படி....
தலையில் கை வைத்துக்கொள்கிறாள்.
‘சே...!’
கிரிஜா சிறிதுநேரம் உற்றுப்பார்த்துவிட்டு, குளியலறை யில் சென்று பல்துலக்கி முகம் கழுவிக்கொள்கிறாள்...
வெளியே சென்று பையனை அழைத்து சூடாக இரண்டு தேநீர் கொண்டு வரப் பணிக்கிறாள்.
‘கிரி, உங்களை இது ரொம்பப் பாதிச்சிருக்கும்...’
“...அ. ஆமாம். ஆனால்.. நான் அதனால் மூட்டையைக் கட்டிட்டு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு வாலை இடுக்கிக் கொண்டு குழையும் நாயின் நிலையில் போய் நிற்கமாட்டேன். நான் உங்களைப்போல் வெளியில் இருந்தால்தான், ‘ருனோக்கள்’ உருவாவதைத் தடுக்க முடியும்...’
ஒ. கிரி, அப்ப.. மாமியார் உங்ககிட்ட, ‘நடந்தது நடந்து போச்சு, வந்துடு’ன்னு கூப்பிடலியா?’
‘அந்தப் பேச்சே இல்லை ரத்னா. அப்படி அவள் சொல்லி யிருக்கும் பட்சத்தில், கீழே காரில் அமர்ந்தவன் என்னைச் சந்திக்க விரும்பியிருந்தால், நான் ஒரு வேளை மனம் இறங்கிப் போயிருந்திருப்பேன் என் குழந்தைகளை உத்தேசித்து. ஆனால்... அவன் செருக்கு, அம்மாவிடம் பெண்ணாப் பிறந்தவள் என்ற என் நிலையை உறுதியாக்க நான் பண்ணினது மன்னிக்க முடியாத தப்புன்னு சொல்லி, பெரிய மனிதத்தன்மையாக ஒரு பத்தாயிரம் ரூபாய் ‘செக்’கையும் கொடுத்து அனுப்பியிருந்தான். நான் செக்கை வீசி எறிஞ்சேன்...’
ரத்னா மெளனமாக இருக்கிறாள்.
‘ஸ்ர்ட்டிஃபிகேட் எல்லாம் வந்துடுத்து. என் சேலைகளைக் குடுத்து அனுப்பி இருக்கிறார்கள்...நகைகளைத் தான் கழட்டி முன்பே வைத்து விட்டேன்...’
‘போ, ரத்னா, முகம் கழுவிட்டு வா, டீ வந்துடுத்து...’
ரத்னா எழுந்து செல்கிறாள்.
கிரிஜா தான்படுத்த படுக்கையை ஒழுங்காக்கி, அறையைப் பெருக்குகிறாள்.
மணி ஏழரைக்கு மேலாகியிருக்க வேண்டும். தெருவில் பள்ளிக்குச் செல்லும் சிறுவர் அணி அணயாகத் தென்படுகின்றனர்.
கவிதாவைப் போலவே பருமனாக ஒரு பெண் நீலம் வெள்ளைச் சீருடையில் போகிறாள்...
பார்த்துக்கொண்டே நிற்கிறாள். கனவு கூர்முள்ளாக வருத்துகிறது. கவிதா ருனோவைப்போல் போகக்கூடும். வாய்ப்புக்கள் உள்ளன. குமரப்பருவம்... வீட்டுக் கண்டிப்பு. அம்மா கெட்டவள் என்ற உருவேற்றல்கள்...
‘கிரி, என்ன பார்க்கறிங்க? டீ ஆறிப்போயிட்டுது...’, அவள் உள்ளே வருகிறாள். தேநீரைப் பருகுகிறாள். ரத்னா கைப்பையிலிருந்து ஒரு பாக்கெட்டை எடுக்கிறாள். சந்தனத் தூள்... சுகந்த சந்தனத்துள்...கோபுர வடிவிலான வில்லை ஒன்றைக் கிளிஞ்சல் போன்ற அந்தக் கிண்ணத்தில் வைக் கிறாள். ஒரு சிறு துண்டுக் காகிதத்தை நன்றாகச் சுருட்டி தீக்குச்சியில் காட்டிப் பற்ற வைத்து, அந்த ‘கோன்’ வில்லையைக் கொளுத்துகிறாள். சன்னமாக நெளிந்து வளைந்து பாம்பின் அசைவைப் போல் புகை எழும்புகிறது.
‘சந்தன வாசனை வருதா, கிரி?...’ என்று கேட்டுக் கொண்டு சன்னல் கதவை மூடுகிறாள்.
சந்தன மணம் குப்பென்று பரவவில்லை. மெல்லிய திரி இழையாக முகர வேண்டி இருக்கிறது.
கலப்படம் பண்ணி ஏமாத்தறாங்க. ஐஸ்கிரீம் வாங்கணும், கொண்டாடனும்னு போனமா?...இதை வாங்கிப் பையில் போட்டுட்டோம், அதுக்குள்ள, ‘விமன்ஸ் ஹாஸ்டல்ல மாடிலேந்து குதிச்சிட்டாங்கன்னு யாரோ சொல்லிட்டுப் போனாங்க, அடிச்சுப் புரண்டுட்டு வந்தோம்... ராத்திரி முழுசும்...ஆஸ்பத்திரி, போலீசுன்னு...எப்படியோ ஆபிட்டுது. இந்த வாசனை சந்தனமேயில்லை...’ ரத்னா அதிருப்தியுடன் எழுந்திருக்கிறாள்.
‘ரத்னா...நான் வந்தன்னிக்கு இந்த ஆஷ்ட்ரே, சாம்பல், எல்லாம் பார்த்தப்ப, நீங்க சிகரெட்டுக் குடிக்கிற வங்கன்னு நினைச்சேன். பொசுங்கின காகிதச்சுருள் இப்ப போட்டிருக்கிற அதில, அத சிகரெட் துண்டுன்னும் நினைச்சேன். ரோஜா மாமி நீங்கள்ளாம் தெருவோட சிகரெட் குடிச்சிட்டுப் போகும் சாதின்னு கேவலமாகச் சொன்னாளா, எனக்கு உறுத்திட்டே இருந்தது.’
ரோஜ மாமி எல்லாம் சொல்லுவா. இனிமே நீங்களும் எல்லாம் பழக்கமாயிட்டீங்க, பிரஷ்டம் பண்ணினதுக்கு நியாயம் இருக்கும்பா. ஒரு பக்கம் பொய்யில்ல. இந்த ஹாஸ்டல்லயே எல்லாம் பார்ப்பீங்க. ஆனா, ருனோவைப்போல் மன முதிர்ச்சியில்லாத நிலையில் அப்படி விழறவங்கதான் - சகஜம். இது ஒரு எஸ்கேபிஸ்ம். இந்த ரோஜா மாமி வீட்டில போனா அந்த மாமியே மட்டரகமான ஸெக்ஸ் புத்தகங்களைத் தான் படிச்சிட்டிருப்பா, பார்டிலயும் கலந்திட்டு குடிக்கவும் பழிக்கப்பட்டிருப்பா. தமிருல யெளியாற இத்தனை மட்டப் புத்தகங்களும் மட்ட சினிமாக்களும் இந்த ஆசாரக் கும்பலால் தான் போஷிக்கப்படுகின்றன. ஏன்னு நினைச்சுப் பாத்திருக். கிறீங்களா, கிரி?
ஏன்னா அவங்களும் ஏதோ ஒரு வகையில் சுயமா இருக்க முடியாதபடி அழுத்தப்பட்டவங்க முடி, ஆசாரம், மதம், இல்லாட்ட நேர்மாறாக உடல்பரமான விவகாரங்கன்னு போலித்தனமான எல்லைக்குள் தங்களை ஏமாற்றி கொள்ளுவாங்க.’ கிரி வாய் திறந்து பேசவில்லை.
‘ரொம்பப் பேர் விடுதலை, நாகரிகம்னா, அறிவுன்னே புரிஞ்சுக்கல. கிரி, நாம யாருக்கும் விரோதிகளல்ல. ஆனால், நாம் நாமாக இருக்க சமுதாயத்தில் அநுமதிக்காத சக்திகளோடு போராட வேண்டியிருக்கு...நாம் இப்படிச் சிந்திக்க ஆரம்பிச்சதனால, எதிர்ப்புச் சக்தி ரொம்ப மூர்க்கமா அழுத்த வருது. ஆண்வர்க்கம் இவ்வளவு கொடுமையா முன்னல்லாம் நடந்திருக்கலன்னு தோணுது...கிரிஜாவின் மனவெழுச்சி குபிரென்று வெளிக்கிளம்புகிறது.
‘ரத்னா, எனக்குக் கவியையும் சாருவையும் நினைச்சா சங்கடமாயிருக்கு. என் தொடர்பு அவங்களுக்கு வேணும். அவங்க சுதந்தரமா, நல்ல அறிவோடு வளரனும். நான் குடும்பத்திலிருந்து விலக்கப்பட்டாலும், அவங்க...அவங்களை விட முடியாது...’-
கண்ணிர் மல்குகிறது.
ரத்னா அவள் கையைப்பற்றி மெல்ல அழுத்தினாள்.
...நிச்சயமாக...நம் போராட்டம் இனிமேல்தான் ஆரம்பம்...’
சந்தன வில்லை, அற்பமான சாம்பற் குவியலாகி விட்டது. ரத்னா சன்னல் கதவுகளை நன்றாகத் திறந்துவிடுகிறாள்.
(முற்றும்)
---------------
This file was last updated on 20 November 2016.
Feel free to send corrections to the webmaster,