பாற்கடல்
(இளமை நினைவுகள்)
லா.ச. ராமாமிருதம்
pARkaTal
(Early remembrances) of laa.ca. irAmAmirutam
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
We thank the Tamil Virtual Academy for providing a PDF scanned image version of this wrok.
This work has been prepared using the Google Online OCR tool to generate the machine-readable
text and subsequent corrections and proof-reading.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2017.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
-----------
பாற்கடல்
(இளமை நினைவுகள்)
லா.ச. ராமாமிருதம்
Source:
பாற்கடல்
(இளமை நினைவுகள்)
லா.ச. ராமாமிருதம்
வானதி பதிப்பகம்,
முதற் பதிப்பு : ஆகஸ்ட் 1994
இரண்டாம் பதிப்பு நவம்பர் 2005, விலை: ரூ. 100-00
திருநாவுக்கரசு தயாரிப்பு
Title : PAARKADAL
Author : La. Sa RAMAMIRUTHAM
Language: Tamil
Edition : Second Edition, November, 2005
Pages,ν + 364 - 368
Published by : VANATHI PATTHIPPAKAM
23, Deenadayalu Street, Thyagaraya Nagar, Chennai-6000 17.
E-Mail: vanathi pathippakam
Website: www.vanathipathippakam.com
Price: Rs... 100-00
ஒளிஅச்சுக்கோவை: நேரு அச்சகம், ராயப்பேட்டை, சென்னை-14.
Printed at: Sri Sarawanan Offset Printers, Chennai-8,
---------
பதிப்புரை
தன் இளமைக்கால வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை இலக்கிய அனுபவங்களாக வடித்துக் கொடுத்திருக்கிறார் ஆசிரியர் கலைமாமணி லா.ச. ராமாமிருதம் அவர்கள். இது எப்படி சாத்தியமாகிறது என்று கேட்டால், “கையில் உள்ளதை விட்டுவிட்டு, காற்றில் பறப்பதை வைத்துக்கொண்டு இலக்கியம் பண்ணச் சக்தி எனக்குக் கிடையாது. நிகழ்ச்சி சரித்திரமாகி, சரித்திரம் நினைவாகி, நினைவு கதையாகி, கதையைச் சொல்லிச் சொல்லி, அல்ல நினைவின் ஊறலில், சொல்லின் பிசிர் விட்டு, பாஷை மெருகேறி, விஷயம் துல்லியமாகி, பிறகு நம் ரத்தத்தில் தோய்ந்து, நம் மனத்தையும், மாண்பையும் ஊட்டி வளர்க்கும் காவியம் இலக்கியத்தின் ரசாயனம் இதுதான்” என்கிறார் ஆசிரியர்.
தனது முன்னோர்கள், அவர்கள் வாழ்வின் ஆதாரங்கள், நம்பிக்கைகள், லட்சியங்கள், ஆசா பாசங்கள், வாழ்க்கை முறை எப்படி இருந்தது? இப்போது எந்த அளவுக்கு இருக்கிறது? எந்தெந்தக் கோணங்களில் முன்னேறியிருக்கிறோம் - தனக்கு நேர்ந்த சம்பவங்கள் தன் நோக்கை’ எந்த அளவுக்கு பாதித்தன என்பதை எல்லாம் சொல்லி, அதனால் நேரும், நேரக்கூடிய இலக்கிய அனுபவத்தை 'அமுதசுரபி' பத்திரிகை மூலம் வாசகர்களிடம் பகிர்ந்துகொண்டதை வானதி பதிப்பகம் மூலம் நூல் வடிவாக உங்கள் முன் படைக்கிறேன். இந்தப் பாற்கடலில் நிறைந்திருக்கும் அமுதத் துளிகளைப் பருக வாருங்கள் என்று வாசகர்களை அன்போடு அழைக்கிறேன்.
ஏ. திருநாவுக்கரசு
வானதி பதிப்பகம்
----------
பாற்கடல்
இந்தத் தலைப்பில் 'அமுதசுரபி'யில் என் கதை, ஒரு தீபாவளி மலரில் வந்தது. எனக்குப் பெயரைத் தேடித் தந்த கதைகளில் ஒன்று.
பாற்கடலிலிருந்துதான் லக்ஷமி வந்தாள்.
ஐராவதம் வந்தது. உச்சைஸ்ரவஸ் வந்தது.
ஆலகால விஷம் வந்தது. கடைசியில் அமிர்தமும் வந்தது.
யானையையும் குதிரையையும் இந்திரன் எடுத்துக் கொண்டான்.
லசுஷ்மியை விஷ்ணு மார்பில் வைத்துக்கொண்டார்.
சிவனுக்கு விஷம் பங்காயிற்று.
தேவர்களுக்கு அமுதம்.
கூடக் கடைந்த அசுரர்கள் ஏமாந்து போனார்கள்.
ஏனெனில் தேவர்கள் நல்லவர்கள்.
அசுரர்கள் கெட்டவர்கள். அளவுகோல்' தேவாதி தேவனுடையது.
நீ அவல் கொண்டு வா - நான் உமி கொண்டு வருகிறேன்.
கலப்போம். நீ ஊது. நான் தின்கிறேன்.
இந்த நியாயம் அன்றிலிருந்தே வழங்கி வருகிறது. அசுவத்தாமா ஹத. (குஞ்சர; குடும்பம் ஒரு பாற்கடல். அதிலிருந்துதான் – பல்லவி
தட்டாமான்லத் தாமரைப் பூ சுத்திச்
சுத்திச் சுண்ணாம்பு.
கிட்டவந்தால் குட்டுவேன்
எட்டப் போனால் துப்புவேன்.
ஏகலைவன் குருதக்ஷணையாகத் தன் கட்டை விரலைக் கொடுத்துத் தான் கற்ற வித்தையையும் குருவுக்கே சமர்ப்பித்துவிட்டான். வேறெப்படி அர்ச்சுனன் முகத்தை குரு காப்பாற்றுவது?
அன்றிலிருந்து இன்றுவரை நியாயங்கள் பாற் கடலின் பங்குகளாய்த்தான் நடைபெற்று வருகின்றன. வாழ்க்கையின் நியதியே அதுதான். ஆகையால் சோர்வுக்கு இடங்கொடேல். அது கடலோ, பூமியோ, வானோ - இயற்கைக்கு ஒரு செயல்தான் உண்டு. அது தான் விருத்தி எடுக்க எடுக்கப் பெருக்கம். இறைக்க இறைக்க ஊற்று.
அதற்கென்று ஒரு தனிப் ப்ரக்ஞை இருந்தால்:
"இயங்கிக்கொண்டிருப்பதுதான் என் வழி, என் மெய், என் உயிர், என் உண்மை.
எவ்வளவு எடுத்தாலும் மிச்சம் நான் உண்டு.
எவ்வளவு குறைந்தாலும் உன்னை எனக்கு அடை யாளம் தெரியாது.
என்னையே எனக்குத் தெரியாது. எனக்கும் நான் வேண்டாம்.
ஆனால் ஆரம்பம்
நடு
முடிவே அற்று
நான் இருப்பதை
என்னால் தவிர்க்க முடியாது.
"யாருக்கு? எதற்கு? ஏன்? கேள்விகள்தான் பங்கின் பாஷை."
தி.ஜ. ர. சொல்வார்: "எழுதுவது நீந்துகிற மாதிரி தண்ணிர் வெதவெதக்கிறதா, சில்லிட்டிருக்கிறதா என்று விரலை ஆழம் விட்டுப் பார்த்துக்கொண்டு வேளை பார்த்துக் கொண்டிருந்தால் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான் குதி, குதித்துவிடு.”
தி.ஜ.ர. பெரிய ஆள். அவருடைய தரத்தை யாரும் சரியாகத் தெரிந்து கொள்ளவில்லை. தெரிந்து கொண்டவர், தெரிந்துகொண்டவரைப் பறைசாற்ற வில்லை. அவரும் சாற்றிக்கொள்ளவில்லை. செட்டியார் மிடுக்கா, சரக்கு மிடுக்கா என்ற முறையில்தானே பண்டம் விலை போகிறது! தம்பட்டம் வாழ்க்கையின் உயிர்நாடி.
எனக்குப் பதினான்கு வயதிலிருந்து அவர் பழக்கம். இடையிடையே எங்கள் தனித்தனி லெளகீகங்களில் எங்கள் பாதை பிரிந்ததெனினும் எங்கள் உறவுக்குப் பங்கம் இல்லை. கடைசியாக உத்யோக ரீதியில் தென் காசியில் இருந்தேன். அது குற்றாலம் கிட்ட என்பதோடு சரி. தகவல் சட்டென்று எட்டாத இடம். ஒய்வு பெற்று நான் சென்னை திரும்பிய பின்னர்தான் அவர் மறைவு பற்றி அறிந்தேன்.
தி.ஜர. எனக்கு குரு. அப்படியென்றால் அவர் என் கட்டைவிரலைக் கேட்கவில்லை. நான் பிடித்துக் கொள்ளத் தன் விரலையும் எனக்குத் தரவில்லை. ஆனால் இந்த குரு சிஷ்ய பாவம் எனக்கு எப்பவுமே பிடிக்கும். எழுத்து, ஸங்கீதம் மாதிரி. ஸங்கீதத்தில் நான் இந்தச் சிஷ்ய பரம்பரையில் வந்தவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையே ஒழிய, நான் தான்தோன்றி, வரப்ரசாதி என்று மார்தட்டிக் கொள்ளுதல் நேர் எதிர். அந்த பாவனையில் ஒரு "க்ளாமர் காண்கிறேன். அதற்காகவே அவரை நான் குருவாக வரித்தேன். விஷயம் தெரிந்தவர். தன் துறையில் சாதனை புரிந்தவர். என்னிலும் நன்கு மூத்தவர். அந்த நாளிலிருந்து 'வாடா'ன்னு அன்புடன், உரிமையுடன் விளிப்பவர். எனக்கு நாளுக்கு நாள் குறைந்துதானே போகிறார்கள்!
ஆகையால் திஜ.ர. என் குரு. அந்த பாவனையே துணைக்குத் தோளைத் தொட்டுக்கொள்ளுவது போல.
என் உத்யோகத்தில் என்னோடு வேலை செய்தவர்கள் இப்போ என்னைத் தாண்டிப்போன பின்னர், பாதி கேலி பாதி வினையாக என்னை 'குருஜி என அழைக்கையில் சந்தோஷமாகத்தானிருக்கிறது.
"வாத்யாரே, உங்கள் சிஷ்யன் ராகவன், தன் பிள்ளை பூனூலுக்கு உங்களுக்குப் பத்திரிகை அனுப்பினானா?”
பத்திரிகை என்ன? வீடு தேடி வந்து அழைத்துச் சென்று வேட்டி அங்கவஸ்திரமே போர்த்தினான்.
"உங்கள் சிஷ்யன் சங்கரநாராயணன்?
டீக்காக உடுத்தும் ஆசாமி. மடிப்புக் கலைவதைக் கூடப் பொருட்படுத்தாது என்னைக் கண்டதும் நடுக்காரியாலயத்தில் அத்தனைபேர் நடுவில் காலில் விழுந்து நமஸ்கரித்தான். அது அவனுக்கும் விளம்பரம் தான் என்றாலும் எனக்குப் பெருமையாகத்தானிருக்கிறது.
இதில் ஏதோ கவிதை நயம் இல்லை?
பெரியோரைப் புகழ்வோம்.
பூவோடு சேர்ந்த நாராக மணப்போம் என்று மனப் பூர்வமாக எண்ணினும் அதிலும் சூட்சுமமான சுய புராணம் வெளிப்படுகிறது. பக்கத்து இலைக்குப் பரிமாறச் சொன்னவனுக்கும் பாயசம் கிடைக்கிறது.
Let us praise great men.
நன்றியுடன், அவர்களைப் பற்றிய நினைவுக்காகவே நன்றியுடன், அதுவே நம் சந்தோஷமாகப் பெரியோரைப் புகழ்வோம்.
நான் புகழும் பெரியோர்கள், அச்சிலோ, மேடை யிலோ, வேறெந்த சம்பிரதாய முறையிலோ பொது மக்கள் கவனத்திற்கு வந்திருக்கமாட்டார்கள்.
தான் உண்டு தன் காரியமுண்டு. தன் தறியில் அறுந்த நூலை முடி போட்டு, அதுவே கவனமாய், அதுவே தங்கள் பரவசமாக, முழம் முழமாய் திரெளபதியின் துகிலை நெய்பவர்கள்.
ஒரு முறுவலில், ஒரு சொல்லில், ஒரு சிறு சைகையில் ஒரு சிடுசிடுப்பில் ஒரு திருப்புமுனையையே ஏற்படுத்தும் சக்தர்கள், சக்திகள் இன்னும் இருக்கத்தான் இருக்கிறார்கள். என்னுடைய பெரியவர்கள் அவர்கள் தான். தங்கள் பிரஸ்ன்ன வாஸ்த்தை இங்கேயே விட்டுச் சென்றவர்கள்.
செயல் என்னவோ ஒன்றுதான். ஆனால் அதன் மொழிபெயர்ப்புகள் தனித்தனி அந்தந்த சமயத்தில் அவரவர் கண்ட படி அவரவர்க்குக் கிடைத்த வரப்ரஸாதம், முகூர்த்த வேளைகள் நம்மைத் தாண்டிய வண்ணமிருக்கின்றன. அந்த வேளைச்சிறகு தோல்மேல் உராயும் படபடப்பை அடையாளம் கண்டுகொள் வதோ, அந்த வேகத்தை இருத்திக்கொள்ள முயல்வதோ, அதில்தான் எழுத்தின் இறுமாப்பு.
ஆனால் நாளடைவில் வெறும் சாதகவாயிலாகவே எழுத்துக்கு ஒரு செருக்குச் சேர்ந்துவிடுகிறது. ரோசனப் பிசுக்கு இருக்கட்டும். இருக்க வேணும். எழுத்தும் இதயமீட்டல்தானே! புவனமென்னும் இந்தப் பெரிய வாத்ய ஸம்மேளனத்தில் - இங்கே தொட்டதெல்லாம் வாத்யம். பட்டதெல்லாம் நாதம். எழுத்தாளனுக்கு இல்லாத பங்கா?
நான் இருக்கிறேன்’ இதுவே புவனகீதம். இதைப் பாடுவது ஜீவனுக்கு ஏற்பட்ட வாய்ப்பு, பாக்கியம்.
சில மாதங்களுக்கு முன்னர் ஒரு பத்திரிகை ஆசிரியர் தன் பத்திரிகையில் ஒன்றரைப் பக்கங்களுக்கு மேற்படாமல் எழுத எனக்கு ஒரு தலைப்புக் கொடுத் தார், “எங்கள் லால்குடி வீடு”
எங்கள் வீடு பற்றி அவருக்கென்ன தெரியும்? அவர் விதித்த மீட்டருக்குள், - ஏன், எந்த மீட்டருக்குள்ளும் எங்கள் வீடு அடங்காது. ஆதலால் அவர் அழைப்பை நான் ஏற்கவில்லை.
ஆனால் அந்தத் தலைப்பு கடுக்க ஆரம்பித்து விட்டது. தன் உயிர் வளர்ந்து, இன்னொரு வாரப் பத்திரிகையில் ‘எங்கள் வீடு' என்கிற தலைப்பில், இன்னும் கொஞ்சம் தாராளமான இடத்தில் - ஆனால் அதுவும் ஒரு ஆரம்பம்தான் - என் கட்டுரை வெளி வந்தது. அதற்குரிய பாதிப்பையும் விளைவித்தது.
அந்த அடிப்படையில் கலைஞன் பதிப்பகம் திரு. மாசிலாமணி சொன்னார்: "உங்கள் எழுத்துலகத்தைப் பற்றி நீங்களே ஏன் எழுதக்கூடாது? நம்முடைய இருபத்துஐந்து வருடத் தொடர்பில் அதுபற்றி நாம் எவ்வளவு பேசியிருப்போம்! வேணுமானால் நானே அவ்வப்போது அடியெடுத்துக் கொடுக்கிறேன். கணிசமான ஒரு புத்தகத்துக்கு விஷயமிருக்கிறது. நானே அதை வெளியிடுகிறேன்.”
நல்ல யோசனைதான். ஆனால் கதை அல்லாத நீண்ட பாடு (Non-Fiction) எனக்கு ஒரு புது அனுபவம். எப்பவுமே நேரிடையாகப் புத்தகத்தில் இறங்குவது எனக்குச் சுலபமாக இல்லை. பாதிக்கிணறு தாண்டலில் சில முயற்சிகள் இன்னும் முடிவுறாமல் நிற்கின்றன. முதலில் அத்தியாயமாகப் பார்க்கக் கிடைக்கட்டும். புத்தகம் தன்னை கவனித்துக் கொள்ளும்.
இந்த அத்தியாய வாய்ப்பு அமுதசுரபியில் நேர் வதற்கு ஒரு நியாயமிருக்கிறது. சுரபியின் பிறப்பிதழில் என் கதை வெளியாயிற்று. குழந்தையின் தொட்டிலை ஆட்டியவர்களில் நான் ஒருவன். சுரபிக்கும் எனக்கும் நீண்ட சொந்தம். ஒருகாலத்தில் அமுதசுரபியின் ஆஸ் தான எழுத்தாளன் என்றே எனக்குப் பேர் உண்டு. அதன் சக்கரத்துடன் என் எழுத்தின் விதியும் இணைந் திருந்ததுண்டு.
"ஐயோ பிஸ்கே! இவ்வளவு பிரமாதம் பண்ணிக்க என்ன இருக்கு? இப்போ யார் எழுதவில்லை? அந்தந்த எழுத்துக்கு எந்தெந்தப் பத்திரிகைகள் இல்லை ? இதென்ன மூக்கு உறிஞ்சல், உணர்ச்சி நாடகம் ?”
இந்தக் கூற்றுக்கு என்னிடம் ஒரு பதில்தான் உண்டு.
எல்லாமே அவரவர் பூத்ததுக்குத் தக்கபடி.
இந்த விஞ்ஞான யுகத்திலும், பகுத்தறிவு சகாப்தத் திலும்கூட மணங்களை விரும்புபவர்கள், தேடுபவர்கள் இருக்கிறார்கள்.
தொண்டை மட்டும்தானே ருசி? மூக்குவரைதானே மணம் ?
இந்தக் கேள்விகள் இன்றா பிறந்தன? இன்னும் கேட்டுக்கொண்டுதாணிருக்கிறோம். உயிர் வாழ்ந்து கொண்டுதாணிருக்கிறோம். மணக்க, மணக்க.
பாசம், பாசத்தின் விளைவாக மதிப்பு சமுதாயத்தில் கமழும் மணம்தானே! உறவின் தாது இந்த மணம்.
இது ஒரு சிந்தனை ஒட்டம். அதில் அவ்வப்போது தோன்றுவன, தோன்றியவர், தோன்றுபவர் எழுத்தின் மூலம், என்னால் முடிந்தவரை, தோன்றியபடி, பாற்கடல் உத்தி, கடைந்துகொண்டேயிருப்போம். கிடைப்பது கிடைக்கட்டும் - கிடைக்கிற வேளையில். இது தவிர வேறேதும் அறியேன்.
நாற்பத்துஐந்து வருடங்களாகக் கடைந்துகொண் டிருக்கிறேன். யார் கண்டது? என் கயிற்றிலேயே கால் தடுக்கிக் கடலில் மூழ்கினாலும் போச்சு.
ஆனால் தம்பி கேட்டது என்னவோ உண்மைதான்.
எழுத்தின் முகம் இப்போ எவ்வளவோ மாறி விட்டது. தொழிற்சாலை ரீதியில் நடக்கிறது.
“என்னமாதிரி கதை வேண்டும்? எத்தனை பக்கங்களில்? ரெடி.”
செருப்புக்கேற்றபடி காலை வெட்டு.
வாரப் பத்திரிகைகள் மலிந்துவிட்டன. (விலை அல்ல) ஒவ்வொன்றில் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட தொடர்கதை, தவிர மாதப் புத்தகங்கள். வாராவாரம் விமர்சனக் கடிதங்களுக்கு வாசகர்களுக்கு இடம். கேள்வி பதில் என்கிற முறையில் வேறு வாசகர்கள். தங்கள் அபிப்ராயங்களை விசிறிக்கொள்ள வழி.
இது சாக்கில் எனக்கொரு கதை ஞாபகம் வருகிறது. கதையல்ல குடும்ப சம்பவம்தான்.
என் சிறிய பாட்டனார் மகன், எனக்கு ஒன்று விட்ட சித்தப்பா முறை ஆகிறது அல்லவா? செல்வ மகன். செல்ல மகன். புத்திசாலி; ஆனால் படிப்பு ஏறவில்லை. படிக்கவில்லை, ஏறவில்லை அவ்வளவு தான். அந்த நாளிலேயே அடங்காத பிள்ளை என்று பேர் வாங்கிவிட்டார். ஆனால் இன்றைய நடப்புக்குச் சித்தப்பாவைக் கோயிலில் வைத்துக் கும்பிடவேணும். நிற்க,
அந்த நாளில் இம்பொஸிஷன் என்று ஒரு தண்டனை உண்டு.
"வகுப்பு நேரத்தில் பக்கத்துப் பையன்களுடன் இனிப் பேசமாட்டேன்." நாற்பது தடவை. மறுநாள் வாத்தியாரிடம் காண்பித்தாக வேண்டும்.
ஒரு சமயம் (எத்தனையோ சமயங்களில் ஒன்று) வாத்தியார் வீட்டுக் கணக்கை இனி தவறாமல் செய்து வருவேன். ஐம்பது தடவை என்று சித்தப்பாவைப் பணித்தார்.
உடனே மாணவன் இந்தாங்கோ சடாரென்று ஒரு நோட் புத்தகத்திலிருந்து இரண்டு ஏடுகளைக் கிழித்துத் தந்தான்.
வாத்தியார் உள்பட வகுப்பில் எல்லோரும் திணறிப் போயிருப்பார்கள் என்று சொல்லத் தேவையில்லை. வாத்தியார் சமாளித்துக்கொண்டு, சரி பாடங்களை ஒழுங்காக வகுப்பில் கவனிப்பேன் நூறுதரம்.
'இதோ, இதோ - நோட்டுப் புத்தகத்திலிருந்து இன்னொரு நான்கு ஏடுகளை - ஏதோ காசோலை கிழிக்கிறமாதிரி.
நிஜமா, பொய்யா, இதற்கென்ன ருசு?” சாக்ஷக் கூண்டில் நிறுத்தாதீர்கள். சித்தப்பாவின் பிரதாபங் களைச் சூழ்ந்த கதைகளில் இது ஒன்று. மன்னன் செக்கச்செவேலென்று சுந்தரபுருஷன். அந்திம நாட் களில் விபூதி சந்தனம் குங்குமம் பூஜை புனஸ்காரம் - இவரா அப்படியெல்லாம். ? என்று நம்பமுடியாத வகையில் மாறிவிட்டார். ஐம்பதே தாண்டினாரோ இல்லையோ? நிற்க. இது ஒரு பழைய ப்ரயோகம். பண்ணிப் பார்க்கிறேன். ஹூம், கூர்மையிருக்கிறதே!)
பத்திரிகை எழுத்து நிலவரம் இப்படித்தானாகி விட்டது.
மாறுதல் அவசியம்தான். மாறுதல்தான் உயிரின் நியதி. உயிரின் வலுவுக்குச் சான்று. தேக்கமற்ற ஒட்டத் திற்கு உறுதி. ஒட்டமிருந்தால் மட்டும் போதாது. கடையல் காணணும். கங்கையைக் காட்டிலும் யமுனைக்கே சீறல் கூடவாம். சீறல்சுழல்கள், சுழிப்புகள் நானே பார்த்தேன். டில்லியில் பாலத்தின் மேல் ரயில் போய்க்-கொண்டிருக்கையில் சுழிப்பில் தண்ணிரே ஒட்டை விட்டுக்கொண்டது. கடையல் ஓய்ந்தபின் தெளிவு. அந்தத் தெளிவில் திரண்டு வந்திருப்பது என்ன? அவ்வப்போது நாட்டில் கலாச்சாரம் சரித்திர ரீதியாகத் தனித்தனியாகவும் ஒரு மக்களாகவும் நாம் அடைந்திருக்கும் பண்பின் எடை
ஒன்று சொல்ல வேணும். இந்த நாள் எழுத்தின் உற்பத்திக் கொழிப்புக்கு எங்கள் தலைமுறை ஒருநாளும் ஈடு கொடுக்க முடியாது. அப்பப்பா, அசுர சாதகம். இந்தச் சாதக விளைவுதானோ என்னவோ கதை சொல்லும் உத்தி, பாஷையின் பாணி எல்லாம் ஒர் அதம தரத்தில் ஒடுகின்றன, முறைகள் வலுத்துவிட்டன.
விஷயம். விஷயம் ?
வெகுநாட்களுக்கு முன் ஒர் எழுத்தாளர் வீட்டுக்கு வந்திருந்தார். இப்படி வருவார்கள் போவார்கள். என்னத்தையோ எதிர்பார்த்து வந்தவர்கள் ஏமாந்து போவார்கள். எதிர்பாராமலே வந்தவர்கள் எனக்குப் புது நண்பர்கள் ஆவார்கள். எழுத்து உறவில் எனக்குக் கிடைத்த மதிப்பில்லா லாபம் இதுதான். இன்னமும் அந்த அதிர்ஷ்டம் இருந்துகொண்டுதாணிருக்கிறது. நிற்க. (சபாஷ்! ஆனால் அதிகமாகத் தலை நீட்டுகிறாப்போல் தோன்றுகிறது. இத்தோடு தலையை வெட்டிவிட வேண்டியதுதான்!)
"சார் இதைப்பற்றித்தான் எழுதணும்னு கண்டிஷன் உண்டா என்ன? நான் எதைப்பற்றி வேண்டுமானாலும் எழுதுவேன்.”
"தாராளமா” எந்த வகையில் இவரைக் கோவப் படுத்திவிட்டேன்? நான் ஒரு பயங்கொள்ளி.
திடீரென்று நினைத்துக்கொண்டாற்போல் "ஆபீஸில் டைப் அடிக்கிறேன். என் டைப்ரைட்டரைப் பற்றி எழுதுவேன்."
"நல்லது நல்லது”நான் ஒரு பஹுத் பயங்கொள்ளி.
“ஸார், நான் என் டைப்ரைட்டர்மேல் காதல் கொண்டிருக்கிறேன். செல்லப் பெயரால் ரஹஸ்யமாக அழைப்பேன். அதன் தட்டுகளைத் தொடும்போதெல் லாம் எனக்கு உடலும் உள்ளமும் கூச்செறிகின்றன. தட்டும் எழுத்துக்கு எழுத்து ஸிலிண்டர் நகரும்போது என்னோடு தட்டம்மா பேசுகிறாள். ஆபீஸுக்கு வந்ததும் உறையைக் கழற்றுகிறேன். நாணமுறுகிறாள். முதிர முதிர நாணம் கலைகிறாள். வீட்டுக்குப் போகும்போது உறையைப் போடுகிறேன். மெளனமாக விடை பெறுகிறோம். "நாளை சந்திப்போம்."
நள்ளிரவில் விழிப்பு வந்ததும்,
ஆபீஸ் அறையில் தனியாக அவள், மறுநாள் என் வரவுக்காகக் காத்திருப்பதை எண்ணுகிறேன். ஆறுதல் கொள்கிறேன். இப்படி ஏன் எழுதக்கூடாது?”
நன்றாய்த்தானிருக்கிறது. ஏன் எழுதக்கூடாது? மகளே உன் சமர்த்து. கொண்டையுள்ள சீமாட்டி சீவி முடிந்துகொண்டாலும் அழகுதான். ஜடை பின்னிக் கொண்டாலும் அழகுதான். மதுரை மணியின் ஸ்வரப் ரஸ்தாரம் (மனிதா, 'மதனி தோடி ராகத்தில் ஒரு முறை அசந்துபோனேன்)
ஆனால் அந்த நாளில், என்னுடைய அனுபவக் குறைவில், விஷய அஞ்ஞானத்தில் நான் நினைத்த துண்டு; சதை, தசை, உடல், அதன் மேடுபள்ளங்கள், கவர்ச்சி, பேச்சு, சாஹஸம் இத்தனை சவால்களுடன் உயிர் வளைய வருகையில் இந்த மனுஷன் ஒரு ஜட வஸ்துவுக்கு ஆஹ"தி ஆகவேண்டிய அவசியம் என்ன? அதுபற்றி எழுதிக் காணப்போவதும் பிறர்க்குக் காண் பிக்கப்போவதும் என்ன?
அப்பவும் அவர் உயிர்மேல் தன் ஆர்வத்தை எனக்குப் பழக்கமில்லாத ஒரு கோணத்தின்மூலம் வெளியிடுகிறார் என்று இப்போது அறிகிறேன்.
ஆம். பூ, புஷ்பம், நந்தவனம், பால்கனி, டூயட், ஒடிப்பிடி விளையாட்டு இதிலேயே வாழ்க்கை நிற்குமா?
“வியட்நாம், வேலையில்லாத் திண்டாட்டம், குவாயிட்டில் வேலை, இடி அமீன், யூனியன், பேச்சுரிமை, செயலுரிமை, ஸ்டிரைக், போனஸ், தலை முறை இடைவெளி, ஜேம்ஸ்பாண்டு, வாட்டர்கேட், சேஸ், ரஜினி ஸ்டைல், டி.வி. எல்லார் வீட்டிலும் நம் வீட்டைத் தவிர” - பிரச்சினைகள், தடங்கள், எடைகள் மாறிக்கொண்டேயிருக்கின்றன. ஆனால் இருந்து கொண்டேயிருக்கின்றன.
தற்சமயம் மார்க்கெட்டில் உச்ச ப்ராக்கெட் எழுத்தாள நண்பன் - நெடுநாளைய நட்பு - அவரைக் கேட்டேன்! “என்னப்பா ஆபீஸ்"க்கும் போய்க்கொண்டு எப்படித் தாக்குப் பிடிக்கிறாய்?"
"உந்தல் இருந்தால் தானே சக்தி வந்துவிடுகிறது. பையன் ‘மாட்டருக்கு காலையில் வாசலில் காத்துக் கிடக்கிறான். எழுந்திருக்க ஏழரை மணி ஆகிவிட்டது. முந்தைய இரவு ஒன்றரை மணி வரை ஒரு தொடர்கதை அத்தியாயம் எழுதி முடித்தேன். பையன் காத்திருப்பது சிறுகதைக்குத்தான். ஒரு மணி நேரத்தில் தட்டிவிடலாம். அவனுக்குக் காப்பியைக் கொடுத்துச் சமாதானப்படுத்தி உட்காரச் சொல்லிவிட்டு ஆரம்பிக்கிறேன். ஆச்சு, இன்றிரவு இன்னொரு தம் பிடிச்சாகணும். இன்னொரு பத்திரிகையில் இன்னொரு தொடர்கதை இன்ஸ்டால் மென்ட் - காலையில் ஆள் கிங்கரன் மாதிரி வந்து விடுவான். பெரிய இடம்.”
"நீ சொல்வது எனக்கு பயமாயிருக்கிறது.
"ஆரம்பத்தில் எனக்கும் பயமாய்த்தானிருந்தது. ஆனால் வண்டியைக் கிளப்பிவிட்டால் அப்புறம் அது தானே ஓடவேண்டியதுதானே! கேட்கப்போனால் இந்த மாதிரி நெருக்கடியில்தான் எனக்குக் காரியமே நடக்கிறது. அதிலேயே ஒரு குஷியிருக்கிறது.”
"அப்போ உன்னுடைய தூக்கம், ஒய்வு.”
"அதெல்லாம் பார்த்தால் முடியுமா? தூக்கத்துக்கு மாத்திரையிருந்தால் மாற்றுக்கும் மாத்திரைகள், உற்சாக மாத்திரை, இன்னும் தென்பு ஊட்டிக்க வழிதானா யில்லை?”
“எழுதினதைத் திருப்பிப் பார்ப்பது, திருத்துவது?"
வாய்விட்டுச் சிரித்தார். "என்ன ஜோக் அடிக்கிறீர்! கையை விட்டுப் பிடுங்கிண்டுன்னா போறான்! ஆளை விட்டா போறும். இதுக்கேதான் அல்வா மாதிரி விழுங்கக் காத்திருக்கான்களே! ரவா ஆனியன் ரோஸ்ட் ரெடி!” - கேலியாக உரக்கக் கத்தினார். "திருப்பிப் போடக்கூடத் தேவையில்லை. தகரத்தின் சூட்டிலேயே மறுபக்கமும் வெந்துவிடுகிறது, ஹஹ்ஹா..!"
சட்டென்று என் பக்கம் திரும்பினார்.
"இது ஜெட்யுகம், ஞாபகம் வைத்துக்கொள்ளும். இருக்கின்றது என்று போடலாமா, இருக்கிறது என்று போடலாமா? சரியான வார்த்தை கிடைக்க நாள் கணக்காகக் காத்திருப்பேன். வார்த்தைகளின் ஒசையைச் செவியில் தட்டிப் பார்ப்பேன்” என்று ஒருகாலத்தில் நீங்கள் சொல்ல நாங்களும் வாயைப் பிளந்து கேட்டுக் கொண்டிருந்த நாள் எல்லாம் மலையேறிப்போச்சும் வோய்!”
"அப்படியா?”
ஒரு சமயம் - ஒரு கதையில் ஒரு கட்டம். கதைப் பெயர் கணுக்கள் (அமுதசுரபி). வயிற்றில் பல், நாக்கு நுனியில் நாசூக்காய்ப் புரளும் சொல். இதற்கு ஒரு உவமையே கவனமாக அன்றிரவு கண்ணயர்ந்து விட்டபின் ஒரு கனா. அல்ல, தோற்றம். ஒரு பாழும் சுவரில் ஒரு கரிக்கட்டி எழுதுகிறது:
'மாம்பூவைக் காம்பு ஆய்ந்தாற்போல்’
நான் தேடிய உவமை.
அது ஒரு காலம்.
இது "ஜெட் ஏஜ். அப்படியானால் டைப்ரைட்ட ருடைய காதலையும் நிபந்தனையின்றி ஏற்றுக்கொள்ள வேண்டியதுதான்.
---------
அத்தியாயம் 2
ஒரு சமயம்.
அயோத்யா மண்டபம்.
ஸ்ரீராமநவமி உத்ஸவம்.
மதுரை சோமு.
களை கட்டியாச்சு. உருப்படிகளின் போக்கில் சபையோரையும் பக்க வாத்யங்களையும் தன்னுடைய ப்ரத்யேக பாணியில் ஏதோ ஒரு பாட்டுக்கு ஆவலைத் தூண்டிவிட்டு (என்னுடைய சொந்த ஆசை, மதுரையை அரசாளும் மீனாகூழி மாநகர் காஞ்சியில் காமாகூS" வராதா? கானடாவில் கம்பீரமாய்த் தேர் அசையும்) சடக்கென்று, “லொகஸ"சகா ம்ருதங்க தாளமு’ என்று எடுத்தாரே பார்க்கலாம்! தொடையைத் தட்டிக் கொண்டே எல்லாரும் கேட்க, கரகரத்த குரலில்,
“நல்ல பாட்டு, தானாகவே வாயிலிருந்து குதிச் சிடிச்சி” அன்று அந்தப் பாட்டு சக்கைப் போடு.
அதுபோல, இத்தோடு இதுவும் சேர்ந்ததே. ஆனாலும் இப்போ ஒரு இடைமறிப்பு. 'அமுதசுரபி'யின் முப்பத்து நான்காவது ஆண்டு பிறந்த விழாவில் கலந்துகொள்வோம். என் பல்லவி: “பெரியோரைப் புகழ்வோம்.”
அப்போதுதான் நாலுபேர் கண்ணோட்டத்தில் என் எழுத்து பட்டுக்கொண்டிருந்த சமயம். கண்ணைத் தடுத்து, கவனத்தையும் நிறுத்திய சமயங்களும் நேர்ந்து கொண்டிருந்த சமயம், அப்போ குடும்பம் திருவல்லிக்கேணியில் ஜாகை, ஒருநாள் ஒர் அழகிய வாலிபர் வீட்டுக்கு வந்து, “என் பெயர் லகஷ்மணன். நேஷனல் கேர்ல்ஸ் ஸ்கூலில் தமிழ்ப் பண்டிதராக வேலை பார்க்கிறேன். ராஜன் எலக்ட்ரிக் பிரஸ் முதலாளியின் ஆதரவிலும் உற்சாகத்திலும் ஒரு மாதப் பத்திரிகை தொடங்கவிருக்கிறோம். முதலிதழுக்கு உங்கள் கதை தேவை. சந்திரோதயத்தில் உங்கள் 'அபூர்வ ராகம்’ படித்தேன். ஆஹா!" -
பிறகு கண்டேன். வித்வான் வே. லகஷ்மணனுக்குத் தோற்றம் மட்டும் கவர்ச்சி அல்ல, அதனினும் வசீகரம் அவர் பேச்சு, குரல் வெல்வெட். ‘அடாடா’க்களும் 'ஆஹா'காரங்களும் அவர் சம்பாஷணையில் அள்ளித் தெளித்திருக்கும். அவரைவிடப் பல வருடங்கள் நான் மூத்தவன் என்றாலும் கைதட்டலுக்குக் காத்திருக்கும் நாட்கள்.
அப்போ என் எழுத்துக்கு ஒரு இக்கட்டான கட்டம், என்னைத் திட்டிக்கொண்டே என்னைப் படிக்கும் ஒரு வட்டம் உருவாகிக்கொண்டிருந்தது.
“என்னய்யா இந்த மனுசன், என்னத்தை எழுதறான்? என்னத்தைச் சொல்ல வரான் ? புரிய மாட்டேன்குது. புரியல்லியா விட்டுத் தொலைன்னு தூக்கி எறியவும் முடியல்லே. படிச்சு முடிச்சபின் வயித்தை என்னவோ சங்கடம் பண்ணுது. படிச்ச நினைப்பில் நாலுதரம் புரண்டாச்சு, ஆனால் தூக்கம் வரல்லே.”
இதுபோன்ற வசைமாரிக்கு ஆளாகிக் கொண் டிருந்தேன்.
"பிறருடைய போற்றுதலுக்கும் தூற்றுதலுக்கும் என் எழுத்து அப்பாற்பட்டது” என்று எழுத்தாளன் சொல்லிக் கொள்ளலாம். அது ஒரு கட்டத்துக்குப்பின் உண்மையாகவுமிருக்கலாம். ஆனால் எழுத்தாளனும் மனுஷன்தான். "என் எழுத்து அத்தனையும் மாணிக்கம்; வாசகர்கள் அதற்கு லாயக்கற்றவர்கள்” என்று சாதிக் காமல், தர்க்கம் முற்றினால் கோதாவில் இறங்காமல், தன் எழுத்தில் தன்னம்பிக்கையை மெளனத்தில் நிலைநாட்டினால் பெரிசு. ஆனால் பாராட்டை வேண்டாம் என்கிற மறுப்பை யாரும் நம்ப வேண்டாம். எங்களுக்கும் முதுகு தட்டல் பிடிக்கும், வேணும்.
வேகமாக எழுத வராதவன் நான். அப்பொவேனும் உத்தியோகத்தின் மேல் பழி. இப்போ எனக்குப் பொழுது கூட இருக்கிறது. அப்போவிடக் கூட எழுதுகிறேன் என்று நினைக்கிறேன். ஆனால் சப்ளை சக்திக்கு எனக்கு எப்பவும் போதாது. சிலருக்குப் பாடச் சொன்னால் பாட வ்ர்ாது. வெந்நீர் அறை வித்வத்தை வைத்துக்கொண்டு என்னால் பத்திரிகையின் அவசரத் துக்கு ஈடு கொடுக்க முடியுமா?
ஆனால் லக்ஷமணன் சார் அப்போது என்னைச் சந்தித்து, கதையின் கட்டத்தை நாஸ்"க்காக விசாரித்துக் கொண்டு, என்னை உற்சாகப்படுத்தி ('ஆஹா ! அடாடா!) நான் கேலி பண்ணவில்லை. அத்தனையும் எனக்கு வேண்டித்தானிருந்தது) "அமுதசுரபி'யின் முதலிதழுக்குக் கதையையும் வாங்கிக்கொண்டு போய் விட்டார் என்றால், அது அவருடைய சாமர்த்தியத் துக்குச் சான்று.
கதையும் தன்னை எழுதிக்கொண்டது.
'பூர்வா’ வெளிவந்தது எனக்கு ஒரு முகூர்த்த வேளை. என் வாசக வட்டம் விரிவடைந்தது. "பூர்வா ஒரு புதுவிதமான கவிதா சிருஷ்டி" - "ஃப்ரீஇண்டியா ஒரு சக பத்திரிகை, அதுவும் ஆங்கிலப் பத்திரிகையில் என் எழுத்து பற்றிய முதல் விமர்சனம், பாராட்டாகவும் அமைந்ததென்றால், அதைப் படித்துவிட்டு நாலுபேர் என்னைப் படித்து விசாரிக்கவும் வருவதென்றால் (ஏதேது, நம்ம ராமாமிருதமா?) என்னைக் கட்டிப்பிடிக்க முடியுமா ?
பூர்வாவின் கதை - இல்லை, நான் சொல்லப் போவதில்லை. பூர்வாவுக்குப் பின் இரண்டு தலைமுறை களாயினும் தோன்றிவிட்டன. இன்றைய வாசகர் களுக்குத் தெரியப்படுத்துவது பத்திரிகையின் கடமை என்று ஆசிரியருக்குத் தோன்றினால், அவருக்கு அக்கறையிருந்தால் அவர் மறுபடியும் பதிப்பிக்கட்டுமே! மறுபதிப்புக்கு இப்போதைய எழுத்து நிலவரத்துக்கும் விஷயத்துக்கும் பாணிக்கும் புதுத் தகவலாகவே தோன்றக்கூடிய என் கதைகள் பல, 'அமுதசுரபி'யில் வெளிவந்திருக்கின்றன. இதுவும் அவருக்குத் தெரிந்த விஷயம்தான்.
இன்னமும் பூர்வா’ இலக்கிய வட்டாரங்களில் பேசப்படுவதே, கதையின் உரத்துக்குச் சானறு. ஜனவி, யோகம், புற்று, பூர்வா' என்று வாசகர்களின் அன்பான அடுக்கு வரிசையில் சேர்ந்துவிட்டது என்று மட்டும் சொல்லிக்கொண்டு பூர்வா விஷயத்தை முடித்துக் கொள்கிறேன்.
என் கய புராணத்தைப் பற்றிக் கூடிய வரை உஷாராய்த்தானிருக்கிறேன். ஆனால் இந்தக் கட்டங்கள் இந்த வரலாற்றில் தவிர்க்க முடியாதவை. எழுத்தில் ஈடுபாடே ஒரு சுயபுராணம். சுயஹிம்சை புராணம்.
'அமுதசுரபி'யை மிதக்கவிட்டு, வித்வான் வே. லசஷ்மணன் போய்விட்டார். ஆனால் அதன் ஆதவன், அடுத்துவந்து அப்போதிலிருந்து ஆசிரியராகத் திகழும் ஸ்ரீ வேம்பு என்று அடித்துச் சொல்கிறேன். 'குருவும் தாரமும் தலைவிதி என்று பழமொழி. பத்திரிகைக்கும் அவருக்கும் தொந்தத்திற்கும், இந்தப் பழமொழிக்கும் என்னைப் பொறுத்தவரை துளிக்கூட வித்தியாச மில்லை. இந்த முப்பத்துமூன்று வருடங்களில், பத்திரி கைக்காக, அவர் கடந்திருக்கும் மேடு பள்ளங்கள், மைல் கற்கள், தாங்கியிருக்கும் சிலுவைக்கு நான் சாகூழி. நானும் அவரைப் படுத்தியிருக்கிறேன். 'அமுதசுரபி' உடன், ஆசிரியராக வேம்பு பிணைந்திருக்கும் கதை அதுவே ஒரு குட்டி அரிச்சந்திர புராணம், ஒரு பாற்கடல்தான். வேம்புவும் ஒரு விடமுண்ட கண்டன்தான்.
கஷ்டங்கள் தீர்ந்தன.
கதாநாயகன் கதாநாயகியை மணந்துகொண்டு பிறகு எல்லோரும் செளக்யமாக வாழ்ந்தனர், கதை முடிந்தது. கத்திரிக்காய் காய்த்தது, கற்கண்டு இனித்தது,
என்பதெல்லாம் குழந்தையைத் தூங்கப்பண்ணச் சரியாயிருக்கலாம். ஆனால் முடிந்த கதையே கிடை யாது. நடுவில் நின்றுபோன கதை உண்டு. ஆனால் முடிந்த கதை கிடையாது. அப்படியென்று ஒன்று இருந்தால் உலகம் எப்பவோ முடிந்துபோயிருக்க வேண்டும். உலகம் அழிந்து போயிற்று என்று சொல்ல ஒருவன் மட்டும் மிஞ்சியிருந்தால் கூட, உலகம் தொடர்கதைதான்.
பேனா என் வயிற்றுப்பிழைப்பு அன்று. நான் அர்ப்பணித்துக்கொண்ட எழுத்தாளன் அல்லன். ஆனால் வேம்பு அர்ப்பணித்துக்கொண்ட பத்திரிகை ஆசிரியர். அதுவும் ஒரே பத்திரிகைக்கு அதிலும் 'அமுத சுரபி'க்கு என்பதை யாரும் நிரூபிக்கத் தேவையில்லை, வேம்பு உள்பட, அர்ப்பணித்துக்கொள்வதென்றால் என்ன என்று அவரைக் கண்டு அறிந்துகொள்ளலாம். இனிமேலும் என்னை நான் அர்ப்பணித்துக் கொள்ள மாட்டேன்.
வேம்புக்கு 'அமுதசுரபி' இன்னும் குழந்தைதான், தனக்குப் பிறந்த குழந்தையைக் காட்டிலும் வளர்ப்புக் குழந்தைதான் அதிக பாசத்தை, கஷ்டத்தை வாங்கிக் கொள்கிறது. ஆனால் 'அமுதசுரபி நமக்கு, தன் முப்பத்து நாலாவது வயதில் தன் முழுமையை அடைந்து குடியும் குடித்தனமுமாய், கணவன் உள்பட எல்லாரையும் அட்டம் செலுத்தும் முழுமாதாகத்தான் காசுழி அளிக்க முடியும்.
என் குரல் இனி உர்த்தண்டமாய்த்தானிருக்கும். இன்னும் நான் புக்ககத்துக்கு வந்த புதுநாட்டுப்பெண் அல்ல. அந்த அடக்கமும் அமரிக்கையும் யாரும் என்னிடமும் இனி எதிர்பார்க்க முடியாது. பிறந்தகத் துக்கும் போகமாட்டேன்.
விசேஷங்களில் குத்துவிளக்கு ஏற்ற, வெற்றிலை பாக்கு முதல் நமஸ்காரம் வாங்கிக்கொள்ள, சுமங்கலிப் பிரார்த்தனை, சுபாஷிணி பூஜை இத்யாதிகளுக்கு எனக்குத் தகுதி வந்தாச்சு.
வேம்புவுக்கு நான் ஐஸ் வைப்பதாக நினைக்க வேண்டாம். நான் ஆயிரம் எதிர்பார்த்தாலும் அவர் நடத்துவதைத்தான் நடத்துவார் என்பது எனக்கு அனுபவ பூர்வம். பத்திரிகை உலகத்தின் தருமமே அப்படித்தான் போலும்!
எப்பவும் இன்முகத்துக்கும், எப்பவும் இனிய சொல்லுக்கும், குரலின் மெத்துக்கும் லசுஷ்மணன், வேம்பு - இருவரில் யார் யாரை மிஞ்சியவர் என்பது எனக்கு இன்னும் திகைப்புத்தான். ‘இன்றுபோய் நாளைவா' - அதை அவர் கையாண்ட விதம் - வாய்ச் சொல் என் சிறந்த அம்சமல்ல. வேம்புவுக்கு நான் தலைவணங்குகிறேன்.
பத்திரிகைக்காக அவர் ஆற்ற வேண்டியிருக்கும் சதாவதானத்தில் அவர் முகம் சுளித்தோ, குரல் தடித்தோ இன்னும் காணப்போகிறேன். சீண்டலை வென்றவர். அவருடைய சுமுகமே அவரை ஆளும் பாணி ஆகிவிட்டது என்பது என் துணிவு.
இன்றைய எழுத்துலக ஜாம்பவான்களில் பெரும் பாலோர் 'அமுதசுரபி'யின் கலசத்தில் உண்டவர்கள் தான். நான் சுரபி வளர்த்த குட்டிதான்.
பூர்வாவைத் தொடர்ந்து எனக்குப் பேர் தந்த பல கதைகள், எழுத்தில் நான் நடத்திய சோதனைகள், பயின்ற சாதகத்தின் இடையே கிட்டிய சாதனைகள், நான் எட்ட முடிந்த ஆசைகள், முயன்ற பேராசைகள் எல்லாம் சுரபி ஆசிரியர் இடம் கொடுத்த பெருந் தன்மையால், அவருக்கு என்னிடமிருந்த நம்பிக்கை மூலம்தான், என் எழுத்துலகிற்கு 'அமுதசுரபி' வாசற்படி.
'அமுதசுரபி'யின் உசிர்கெட்டியை, உசிர்கெட்டிக்குப் பாடுகிறேன். என் நலங்குப் பாட்டு 'அமுதசுரபி'யோடு வேம்புவுக்கும் சேர்த்துதான்.
உங்களுக்கு அவர் டாக்டர் விக்கிரமன், உரிமையாக எனக்கு வேம்பு. பெரிய சந்தர்ப்பங்களைப் புகழ்வோம்.
வெகுநாட்களுக்கு முன்னர், ஆனந்தவிகடனில் ‘எங்கள் ஊர்' என்கிற வரிசையில் லால்குடியைப் பற்றிய என் கட்டுரை வெளிவந்தது. என்னைத் தெரியாதவர்கள் கூட என்னை அதுபற்றி விசாரித்ததுகூடப் பெரிதல்ல. சிவராஜ் குருக்களையே வீடு வந்து விசாரிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
கட்டுரைக் கடைசியில், எங்கள் ஊர் மண்ணைக் கிள்ளி ஒரு சிட்டிகை எடுத்து வாயில் போட்டுக் கொள்கிறேன் என்று எழுதியிருந்தேன். அந்த வரிகள் தாம் வாசகர்களை மிகக் கவர்ந்த இடம் போலும்! என்னைச் சந்திக்கும்போதெல்லாம் அதை மட்டும் சொல்லிக்கொண்டிருப்பவர் இன்னும் இருக்கிறார்கள்.
எங்கள் ஊர், எங்கள் வீடு, எங்கள் குடும்பம், என் திருஷ்டியில் எனக்கு உழம்பலாய்த்தான் இருக்கிறது.
எங்கள் லால்குடி வீடு இப்போ எங்களுடையதல்ல. அது கைமாறிய கதை வேறு; அது இங்கு வேண்டாம். இப்போ அது சிவராஜ குருக்களுக்குச் சொந்தம். அவரும் காலமாகிவிட்டார். அவருடைய பிள்ளைகள் அங்கு வாழ்ந்து வருகிறார்கள். கூட்டுக் குடித்தனம், நல்ல பையன்கள். எப்பவும் இதேபோல் சேர்ந்து இருக்கணும். அவர்கள் என்னை மறக்கவில்லை. சமீபத்தில் சப்தரிஷியின் பிள்ளைகளின் பூணுரலுக்கு அழைப்பு வந்தது. சிவராஜ குருக்கள் அன்றிலிருந்து இது பெருந்திருப்ரசாதம்; எப்பவும் உங்கள் வீடுதான்’ என்று சொல்லும் விதத்திலேயே உள்ளம் நெகிழ்ந்துவிடும்."
சிவராஜ குருக்கள் பெருந்திருவின் அர்ச்சகர். அவர் வழியில் பூஜ்யர்.
என் தந்தையார் காலத்திலிருந்தே குடும்பம் லால்குடியை விட்டுக் கலைந்துவிட்டது. அடுத்த சந்ததி நாங்களே லால்குடிக்கு எட்ட ஆகிவிட்டோம். என் குழந்தைகளைப் பற்றிக் கேட்பானேன்! அவர்களுக்கு லால்குடி எண்ணத்திலேயே எட்ட எட்ட. இருந்தும் இன்னும் முற்றும் இற்றுப்போகவில்லை. குலதெய்வத் துக்கு வேண்டுதலை, அபிஷேகம், நம்ம ஊர் என எப்போதேனும் நெஞ்சிலிருந்து எட்டிப் பார்க்கும் ஏக்கம் இருக்கிறதே! பரம்பரை வாசனை என்பது அதுதான்.
கீழ்த்தெருக்கோடியில் கடைசி இரண்டு வீடுகளுக்கு முன், வடக்கே பார்த்த வீடு, தமிழ்ப் பண்டிதர் ராமசாமி அய்யர் வீடு. இப்போ வீட்டின் முகப்பு மட்டும் மாறியிருக்கிறது. மாடி எழும்பியிருக்கிறது. மற்றபடி உள்ளே எல்லாம் அப்போ இருந்தபடிதான். அந்த இடத்துக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன். இதோ வாசலில் ஜட்கா நின்றுவிட்டது. வாசலில் நின்று கொண்டு அம்முவாத்துக் குடும்பத்தை வேடிக்கை பார்க்க வேண்டாம்.
வாருங்கள். என்னோடு வாருங்கள். சரித்திரத்துள் நுழைவோம்.
நீண்ட திண்ணைக்கும் குட்டித்திண்ணைக்கும் மேலே ஒலைக்கூரை, வாசல் தாண்டியதும் ஒழுங்கை யில் ஓர் அறை. அது சொல்லும் கதை தனி பின்னால் அதற்கு வருவோம். ரேழி தாண்டியதும் கூடம்.
சுவரில் பதித்த இரண்டு சந்தனக்கட்டைகள் மீது, சிறிய மணைப்பலகை அளவுக்கு ஒரு பழம் பலகை. ஊரிலிருந்து வந்த அனைவரும் அந்தப் பலகைக்கு விழுந்து நமஸ்கரிக்கிறோம். எப்போ ஊருக்கு வந்தாலும் எங்கள் முதல் வேலை அதுதான். இதுதான் அம்மன் பலகை.
சேவித்து எழுந்து கூடத்தை ஒருமுறை சுற்றிப் பார்க்கிறேன். இந்தப் பட்டக சாலையில் எத்தனை பெரிய ஆத்மாக்கள் நடமாடியிருக்கின்றன! நெஞ்சை அடைக்கிறது. வெளியில் நாலுபேர் சொல்லக் கேட்ட கதை, குடும்பத்தில் கேட்ட கதை, நேரே கண்ட கதை, எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து அமுக்குகையில் திரைச் சீலையின் படபடப்பு மார்பின் படபடப்பாக மாறுகிறது.
அம்முவாத்து அரங்கமேடை இதுதான்.
அமிர்தமய்யர் குடும்ப வழி, மருவலில் அம்முவாக மாறிவிட்டது. அதனால்தான் என் பெயரிலும் அந்த நாமமும் வழங்குகிறது.
கொள்ளுப் பாட்டாவும் பாட்டியும் - (குடும் பத்தில் அதற்கு முன் பெயர்கள் ஏதோ அமாவாசைத் தர்ப்பணத்தில் சொல்லத் திகழ்கின்றனவே அன்றி, அவர்களைப் பற்றிய நிச்சயமான தகவல் எல்லாம் புகைமண்டலம்) அர்த்தஜாமம் பின்னர்தான் ராச் சாப்பாடு - (அது சமையலோ, பழையதோ, மாவு சாதமோ, பலகாரமோ, பட்டினியோ - பெருந்திரு என்ன கொடுத்தாளோ அதுதான்) அதுபோல் தவறாமல் ஐம்பது அறுபது வருடங்கள் நடந்திருக்கின்றன. பால்ய விவாகம்.
அப்போதைய அர்த்தஜாமம் இப்போ நடக்கிற ஆபீஸ் நேரமல்ல. ஒன்பது மணிக்குக் கதவை இழுத்துப் பூட்டிக்கொண்டு, சாவியைத் தோளில் மாட்டிக் கொண்டு போய்விடுகிறார்களே! - அம்மனையும் சுவாமியையும் பள்ளியறைக்குக் கொண்டுபோய் விடும் போது குறைந்தது மணி பதினொன்றுக்கு மேலிருக்குமே ஒழிய, தாழ இல்லை.
கிழவரும் கிழவியும் கோயிலிலிருந்து திரும்பி வருகையில் திண்ணையிலும், தெருவிலும் கயிற்றுக் கட்டிலைப் போட்டுக்கொண்டு, அரட்டையடித்துக் கொண்டிருப்பவர்கள், அவர்கள் கடந்து செல்லும்வரை எழுந்து நிற்பார்களாம். அர்த்தஜாமம் பார்த்தவர்களைப் பார்த்த புண்ணியம். அந்த மோனக்ஷி மனக் கண்ணில் எழுகையில் - Tableaux என்று சொல்வார்கள் - உடல் பூரா உள்ளே ஏதோ நீல லைட் அடிக்கிறது. விழியோரங்கள் குளுகுளுக்கின்றன.
ஐயாவைப் பற்றி அதிகம் பேசி நாங்கள் கேட்ட தில்லை. ஆனால் பாட்டி –
பாட்டி ஒரு காட்டாள், வாட்ட சாட்டமாய் ஸோல்ஜர் கோயிலிலும் ஆண் பிள்ளை போல் சாஷ் டாங்க நமஸ்காரம்தான் பண்ணு வாளாம். பூமியிலிருந்து பிடுங்கியெடுத்த கிழங்கு போன்று உக்கிர முகம். அந்த நாளில் அழகு பார்த்து, அழகு கேட்டுக் கலியாணம் பண்ணிக்கொள்ள முடியுமா? எல்லாம் உறவு விட்டுப்போகாமல் இருக்கப் பெரியவர்கள் பார்த்து முடித்து வைத்ததுதான்.
இரண்டு கைகளிலும் இரண்டு [*]விரைக்கோட்டை நெல்லை ஏந்திக்கொண்டு பரணில் கொட்ட, ஏணிமேல் ஏறுவாளாம். எழுத்து, படிப்பு வாசனை மருந்துக்குக் கூடக் கிடையாது. இத்தனையும் கேள்வித் தகவல். அவள் போட்டோ வீட்டில் இல்லை. அந்த நாளில் போட்டோ ஏது? இருந்தாலும் எடுக்க வக்கு இல்லை. இஷ்டமுமில்லை - எடுத்தால் ஆயுசு குறைவு.
---------
[*] ஐந்து மரக்கால் அளவு.
குடும்பம் பெரிசு. ஐந்து பிள்ளைகள், இரண்டு பெண்கள். ஜீவனம் ? ஏதோ ஒர் அரைக்காணி நிலத்தில் நடந்தது. இத்தனை பேருக்கும் சாப்பாட்டுக்குப் போதுமா? அதெல்லாம் டிபன் நாளல்ல. நாஸ"க்காக உள்ளங்கையில் ஈரம் படாமல் கொறிக்கிற ஆசாமிகள் அல்ல. ஆளுக்கு வேளைக்குக் கால்படி வேணும்.
ஆனால் பாட்டிக்கு மனம் ஒரு மஹால். அவள் மஹாலைப் பார்த்திருக்கமாட்டாள். சரி, துரண்களைத் தட்டிவிட்ட, ஆயிரங்கால் மண்டபம், தூண்கள் விசாலத்துக்குத் தடுப்பு இல்லையா?
ஒருநாள் இல்லாக்குறை, பகல் பட்டினி கிடந்து விட்டு இரவு உண்ண உட்கார்ந்தவள், வாசலில் ராப்பிச்சைக் குரல் கேட்டு, அப்படியே இலையோடு கொண்டுபோய் அவன் ஏந்திய முன்றானையில் போட்டுவிட்டாளாம்.
அது அவள் மனசா? அந்தக் காலத்து மனசா ? . என் அழுக்கு மனசு என்ன அறிய முடியும்?
ஆனால் கொள்ளுப் பாட்டியைப் பற்றிப் பேர் போன கதை, அவள் கறிவேப்பிலைக் கூடைக்காரிக்குப் பிரசவம் பார்த்ததுதான்.
ஒருநாள் ஒரு கறிவேப்பிலைக்காரி - அந்த நாள் கையரிசிக்குத்தான் அனேகமாக எல்லா வியாபாரமும். காசைப் பார்க்கவே கண் கூசும். தம்பிடிக்கே தழையத் தழைய வாங்கலாம், ஆனால் தம்பிடி?
கறிவேப்பிலைக்காரி நிறை மாத கர்ப்பிணி. எங்கள் வீட்டுத் திண்ணையில் கூடையை இறக்கியதும் இடுப்புவலி எடுத்துவிட்டதாம். இடுப்பைப் பிடித்துக் கொண்டு திருகாடுகிறாளாம். "அப்பா! அம்மா ! அம்மாடி!" நெற்றியில் வேர்த்துக் கொட்டுகிறது. கண் செருகுகிறது. பாட்டிக்கு விஷயம் புரிந்துவிட்டது.
"அடிப்பாவி!”
அவளை அப்படியே தோளில் சார்த்திக்கொண்டு, பாதி நடத்தி, பாதி தூக்கியபடி வாசல் கடந்து ஒழுங்கையறையுள் கொண்டுபோன பத்து நிமிடங்களுக் கெல்லாம் "வீல்.” என்று ஒரு பெரிய அலறல் ஒட்டி ஒரு புதுக்குரல்.
தெரு 'கொல்'.
"அடியே! அம்முவாத்தில் கறிவேப்பிலைக் கூடைக் காரி பிரசவண்டீ!”
மூன்றுநாள் தாயையும் குழந்தையையும் இருத்தி வைத்துக்கொண்டு பத்தியம் போட்டு; அவளுக்கு ஒரு பழம் புடவையும் கொடுத்து (தனக்கே தகராறு தம்பிக்குப் பழையது!), அனுப்பி வைத்தாளாம்.
ஊரே திமிலோகப்பட்டது. அக்ரஹாரத்தில் மூக்கில் விரலை வைக்கும், புருவத்தை உயர்த்தும் அந்நாளில் பாட்டி ஒரு டோன்ட்கேர் மாஸ்டர்.
ஆனால் அம்முவாத்துக்குப் பொறித்த முத்திரை - (வீட்டுக்கு வீடு இதுபோல் ஒரு சின்னம், அடையாளம் சீல்" இருக்குமே!) கொள்ளுப்பாட்டி, கறிவேப்பிலைக் கூடைக்காரிக்குப் பிரசவம் பார்த்த சம்பவம்தான்.
ஆனால் பாட்டி மஹா முன்கோபக்காரியாம். கோபம் வந்துவிட்டால் கண், மண், யார், எது என்று தெரியாதாம். குங்கிலியம் குபிர். ‘புஸ்' தணிந்ததும் சாதுக்கடல். பயப்பட வேண்டிய ஆசாமி.
என் பாட்டனார் தமிழ்ப்பண்டிதர். மூத்தவர் ஐயாத்துரை- ஐயா, ஊருக்கெல்லாம் ஐயா - அவருக்குச் சுட்டுப்போட்டாலும் படிப்பு - எந்தப் படிப்பும் வரவில்லை.
மற்ற பிள்ளைகள் இடறி விழுந்து, எடுப்பார் எடுத்து மெட்ரிகுலேஷனைப் பிடிப்பதே - அதிலும் யார் யார் தேறினார்கள், கோட்டை விட்டார்கள் என்பது மூடு சூளை ஜகதீசன் ஒரளவு தேவலை, அந்த நாளிலேயே உத்யோகம் குதிரைக்கொம்பு - தகுதியும் இல்லா விட்டால் எப்படிக் கிடைக்கும்?
இந்தக் கூட்டத்துக்கு ஒரு மட்டாய் வேலை கிடைத்தவிதமே ஒரு குட்டி வரலாறு. இந்தக் கட்டத்தை மனம் இல்லாமல்தான், சொல்ல வேண்டியிருக்கிறதே என்று சொல்கிறேன். எதோ தப்புத்தண்டா, சுவாரஸ்யம் என்று தீட்டிய செவிகள் ஏமாந்துபோகும், காரணம் என் மனம்தான்.
ப்ரசித்தி பெற்ற பெயர்களின் நிழல் எங்கள் மேல் படுவதோ, சரி என்மேல் படுவதை நான் விரும்புவ தில்லை. இதென்ன அசூயை, வறட்டு ராங்கி, தவிடு தின்பதில் ஒய்யாரம் என்ன வேண்டிக்கிடக்கு? இருந்து விட்டுப் போகட்டும்.
ஸ்ரீமான் ஜி. சுப்ரமணிய ஐயர், 'ஹிந்து ஸ்தாபகர், காங்கிரஸ்காரர், சமூக சீர்திருத்தவாதி, என் சிறிய பாட்டனார் ஜகதீசனுக்கு மாமனார், இந்த வேலை வாய்ப்புக்குக் காரணமானார். அவர் உறவு வந்த விதத்தில்தான் கதை அடங்கியிருக்கிறது.
ஜி. சுப்ரமணிய ஐயருடைய பெண்களில் ஒருத்தி பாவம் - கன்னி விதவையாகி விட்டாள். அவருடைய சமூக சீர்திருத்த ஆர்வம், அத்துடன் நாட்டில் அப்போதுதான் அடிக்க ஆரம்பித்திருக்கும் காந்தி காற்று இரண்டும் சேர்ந்து, ஐயர் எங்கெங்கோ அலைந்து திரிந்து எப்படியோ ஒரு வரனைத் தேடிப்பிடித்து, ஏகமாய்ப் பணத்தைக் கொடுத்து மறு விவாகமும் பண்ணி முடித்தாலும் முடித்தார். பிடித்தது அவருக்குப் பாக்கு.
அக்கரைச் சீமைக்குப் போனாலே பிராயச்சித்தம் கேட்கும் இந்தச் சமுதாயம், அந்த நாளில் விதவா விவாகத்தைப் பொறுக்குமா? ஐயர் ஜாதிப்பிரஷ்டம் செய்யப்பட்டார். ஐயருக்கு வாக்குக்குக் குறைவா?
செல்வத்துக்குக் குறைவா? அடுத்த பெண்ணுக்கு வரனுக்கு ஊர் ஊராய்த் திரிகிறார். சல்லடை போட்டுச் சலிக்கிறார். சீந்துவார் யாருமில்லை. தனக்கு இவ்வளவு எதிர்ப்பு இருக்கும் என்று ஐயர் எதிர்பார்த்திருக்க மாட்டாரோ என்னவோ? நாளாக ஆக, அவர் லால் குடிக்கு வந்தபோது சலித்துப் போனதல்லாமல், மிரண்டும் போயிருப்பார் என நினைக்க வேண்டி யிருக்கிறது.
இந்த இக்கட்டுக்களைத் தீர்க்க மத்யஸ்தர் இதற் கென்றே திரிந்துகொண்டிருப்பாரே! அமிர்தமய்யர் குடும்பமும் ஐயரும் இடை ஆள்மூலம் அறிமுகமாகி, ஜகதீசனுக்கு இன்னும் கலியாணமாகாததும், இரு குடும்பங்களின் விவகாரங்களும் பரிமாறிக் கொள்ளப் பட்டன.
ஐயருடன் சம்பந்தம் செய்வதால் இந்தக் குடும்பமும் சாதிவிலக்காவது பற்றி, இந்தக் குடும்பம் கவலைப் படவில்லை. வருடத்தில் மூச்சைப் பிடித்துக்கொண்டு நடத்த வேண்டியிருக்கும் வைதீகச் சடங்குகளின் செலவு மிச்சம் ஆச்சு!
ஜி. சுப்ரமணிய ஐயர் குமாரத்தி செள. கமலத்துக்கும் அமிர்தமய்யர் குமாரர் எல்.ஏ. ஜகதீசனுக்கும் திருமணத் துக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள்:
ஜகதீசனை வக்கீலுக்குப் படிக்க வைக்க வேண்டும். சோதரமாருக்கு வேலை பண்ணி வைக்க வேண்டும்.
இந்த விக்கிரமாதித்த சோதனைகளுக்கு ஐயர் ஒப்புக்கொண்டு, எப்படி நிறைவேற்றினார் என்றால், ஐயர் ஒரு விக்கிரமாதித்தன். அவருடைய சோதனை யைக் காட்டிலும் பெரிய வேதாளம் அவரைப் பிடித்துக்கொண்டிருந்ததே! பெண்ணுக்கு எப்படி யானாலும் கல்யாணம் நடந்தால் சரி.
ஐயர் உதவியில் தாத்தாவுக்குப் பள்ளிக்கூடத்தில் தமிழ்ப்பண்டிதர் வேலை. ஒரு தம்பிக்கு உப்பு இலாகாவில், இரண்டு பேருக்குப் போலீஸ் டிபார்ட் மெண்டில்.
ஐயாவுக்குத்தான் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒரு ஏவலாளிக்குக்கூட அவர் லாயக்கில்லை; படிப்பு சூன்யம் மட்டும் அல்ல; அதிகாரத்தின் ஒழுங்குக்குப் படியும் சுபாவமும் கிடையாது.
--------------------------------------------
அத்தியாயம் 3
என் பாட்டனார் தமிழ்ப்பண்டிதர்.
அவருக்குப் பதினாறு வயதினிலே, கனவில் பிள்ளை யார் வந்து அவர் வாயில் கற்கண்டு போட்டாராம். மறுதினத்திலிருந்தே வரகவியாகி விட்டார். குலதெய் வத்தின் பேரில் தோத்திரங்கள் கொட்ட ஆரம்பித்தன. அச்சு வெட்கும் அழகான கையெழுத்தில் ஒரு பெரிய நோட்டுப்புத்தகத்தில் கறுப்பு மசியில் எழுதி வைத் திருந்தார். இந்த நோட்டுப் புத்தகத்தை நான் பார்த் திருக்கிறேன். எந்தப் பக்கத்தைப் பிரித்தாலும், ஒரே அளவில் அடுக்கடுக்காய் எழுத்தின் மணிமாலை கண்ணைப் பறிக்கும், மனத்தை மயக்கிவிடும் வரிகளைப் படிப்பது அந்த இன்பத் திகைப்பினின்று தெளிந்த பின்னர்தான். அந்த அழகிய எழுத்துச் சரங்களே அம்பாளின் பாதகமலங்களில் சேரும் முதல் காணிக்கை.
இந்தத் தோத்திரங்கள் அவரவருக்கு மனப்பாடம் ஆன வரை, குடும்பத்தின் சோதனைக்காலத்தில் எங்களுக்கு ஆறுதல், தைரியம், நம்பிக்கை, ரட்சை, எல்லாமே அதுதான். மிக எளிமையான நடை, பாணவேடிக்கை ஏதுமிலாது அம்பாளிடம், சப்தரிஷி நாதரிடம் முறையீடுகள், தேவியுடன் தர்க்கங்கள், நேரிடை சண்டைகள், சமாதானங்கள், சாந்தங்கள், சஞ்சலங்கள், சலசலப்புகள், ஏக்கங்கள், உடனே தேறுதல்கள், திட்டுகள், அதட்டல்கள், அதிகாரங்கள், கெஞ்சல்கள் - எங்கள் குடும்ப தினசரி நடப்பில், பெருந்திருவும் பங்கான ஒரு ஆள்.
எனக்குத் தெரிந்தவரையில் ஒரு குளுமை இந்தப் பக்கங்களில் ஒடுகிறது. கடுஞ்சுரத்தில் நீெற்றியில் முலைப்பால் நனைத்த துணியைப் போட்டுக்கொண்ட மாதிரி.
தாத்தா - தப்பு - தாத்தாவென்றால் அவருக்குக் கனகோபம் வந்துவிடும். அப்பாவென்று அழைப்போம். அப்பாவை அண்ணாவென்று அழைப்போம் - நின்றெரியும் சுடர்போல் நிமிர்ந்த ஒற்றைநாடியில், செக்கச் சிகப்பு. அம்முவாத்துக் கூட்டமே ஆண் பெண் அடங்கலாக எல்லாருமே சிவந்த மேனி - ஸோல்ஜர் கூட்டம். யாருக்கும் தோய்ந்த தோற்றம் கிடையாது.
தாத்தாவின் தம்பிமார்களும் தங்கைமார்களும் கம்பராமாயணத்தில் புகுந்து விளையாடுவார்கள். இத்தனைக்கும் பாடம் கேட்டவர்கள் அல்ல.
இந்தக் குடும்பத்தின் ரத்தத்திலேயே தமிழ் மணம் ஒடிற்று. எப்படி? தெரியாது.
என் சின்ன அத்தைப் பாட்டி, அதேசமயத்தில் என் தாயாரைப் பெற்றவள் - நன்னூல் நைடதம் படித்த வளாம். “ஸ்ரீமதி இந்தப் பாட்டில் இந்த வரி இப்படி வந்திருக்கே. இதன் இலக்கணம் சரியா?" என்று தாத்தா அவளை யோசனை கேட்டுக்கொள்வாராம். அவளும் கவிதைகள் புனைந்திருக்கிறாள்.
தாத்தாவின் தமையனார் ஐயாதான் எழுத்து வாசனைகூட இல்லாமல், வீட்டுக்குப் பூசணிக்காய் கட்டினமாதிரி. ஐயா, கீரிப்பிள்ளை - அது இஷ்டப் பட்டால் அடங்கின மாதிரியிருக்கும். ஆனால் முற்றிலும் அதை மனிதன் தன் இஷ்டத்துக்குப் பழக்கி விட முடியாது. தன் எதேச்சையை அதனால் விட்டுக் கொடுக்க முடியாது.
ஒரு திவசம், திங்கள், நாள், கிழமையன்று சகோதர சகோதரிகள் அவரவர் குடும்பத்துடன் ராமசாமி அண்ணா வீட்டில் கூடும்போது வீடு அமர்க்களம்தான். எல்லோரும் வாட்டசாட்டம், கிங்கரவாகு. பட்ட சாலையில் ஏதோ ராவணசபை கூடின மாதிரிதான் இருக்கும். அவர்கள் பேச்சும் சர்ச்சையும்கூட அப்படித் தான். உற்சாகத்தில் (சில சமயங்களில் சொந்த சண்டையாகக்கூட மாறிவிடும்) உயர்ந்துவிட்ட உரத்த குரலில், கூடத்தில் நடக்கும் இலக்கிய சர்ச்சையைக் கேட்க ரேழியில், திண்ணையில், வாசலில், கூட்டம் கூடி நிற்கும். அந்த நாளில் மக்களுக்கு சுவாரஸ்யம் இது போன்ற விஷயத்தில்தான். இப்பத்தான் மாறிமாறி அலுக்காமல், விவித்பாரதி. அது கெட்டால் ரேடியோ சிலோன் - "மச்சானைப் பார்த்தீங்களா?” வருடக் கணக்கா மச்சானைத் தேடியாகிறது. மச்சான் கிடைத்து விட்டாலும் தேடல் மட்டும் ஓயாது. வேண்டாம் என் ஒட்டத்தை என்னால் முடிந்தவரை நினைவின் சந்தோஷ ஜலங்களிலேயே நடத்திச் செல்லவேணும். "ஏ சுந்தரம்” இம்போசிஷன் சித்தப்பாவின் தந்தை) - "இந்த ராமன், காவிய நாயகன், தனியா என்னத்தைக் கிழிச்சுட்டான்? ஒரு லகஷ்மணன், ஹனுமான், ஒரு சுக்ரீவன், கேவலம் ஒரு வாணர சைன்யம் இல்லா விட்டால் அவன் கதி என்ன? நாறிப்போயிருப்பான்." "விபீஷணன், ப்ராத்ரு த்ரோகியை மறந்துட்டியே! அண்ணனைக் காட்டிக் கொடுத்த பாவி!” “சுக்ரீவன் இன்னொரு ப்ராத்ரு த்ரோஹி (இந்தப் பிரயோகத்தில் என்ன மோகமோ? அண்ணன் பெண்டாட்டியைப் பெண்டாளுகிறானாம். சொந்த நியாயம் பேசும்போது வானரம், மற்ற சமயத்துக்கு அவதார புருஷன்!”
"உஷ் - தாரையைப் பதிவிரதை லிஸ்டில் சேர்த் திருக்குடா !”
"ராமன் கேஸ் மட்டும் என்ன, ஓயாமல் சீதைக்கு அழுதுண்டு! அவனை அவனுக்கு அப்பப்போ ஞாபகப் படுத்த வேண்டியிருக்கு!” “சீதை என்ன லேசுப்பட்ட வளா? கிழிச்ச கோட்டைத் தாண்டியவள்தானே! லசுஷ்மணனை என்ன மட்டமாய்ப் பேசியிருக்கிறாள்! வலைச்சி தோற்றாள்!”
“உஷ் - சிதம்பரம்!”
"என் இஷ்டம், பேசுவேன். நீ யார் கேட்க?"
"ஆமாண்டாப்பா, நீ போலீஸ் டிபார்ட்மெண்ட் ஆச்சே! உன்னை யார் கேட்பது?”
"லசுஷ்மணன் ஒரு ஏமாளிடா! என்ன சுகத்தைக் கண்டான்?”
"தலைவிதி யாரை விட்டது?”
“ராவணனும்தான்! வரம் கேட்கும்போது நரனை விட்டதுதானே அவன் நாசத்துக்குக் காரணமாச்சு”
"நாசத்துக்குக் காரணம் சீதை. சீதை பிறக்க லங்கை அழிய !"
"அவள் லங்கிணிடா, அவளால் ராமன் மட்டும் சுகப்பட்டானா?”
"ராவணன் சுகப்பட்டானா ?”
'கஷ்டத்தைக் கொண்டுவருவதே அவள் ராசி"
"தெரிஞ்சு தான் ஜனகன் கலியாணத்தோடு அவளைக் கை கழுவிவிட்டான்."
"அவள் என்ன நியாயமா ராஜவம்சமா? மண்ணில் கண்டெடுத்த குந்துமணிதானே? அவளே யார் ராக்ஷசி யாகவே இருக்கலாம். இல்லாட்டா சிவதனுசைத் தூக்க முடியுமா? ராக்ஷசி அல்ல பேய். வேதவதி, அது இதுன்னு சொல்லிக்கிறது இருக்கட்டும். இந்த ராமாயணத்தைத் தற்காலிகத்துக்குக் கொண்டுவந்து இந்தச் சூழ்நிலையில் பாத்திரங்களை வெச்சுப் பார்க்கணும்! அப்போ லசுஷ்மணன் இவ்வளவு சாதுவா யிருப்பானா?”
"இல்லை உன்மாதிரி பெண்டாட்டி தாஸனாகி யிருப்பான்!” கூடம் முழுக்கக் கொல்லென்று உருட்டுச் சிரிப்பு.
"ஷட்அப்" கொஞ்சநேரம் மெளனம்.
"ஐயா எங்கே?" ஏதோ ஒரு குரல் கேட்கிறது.
“எங்கானும் யார் எருமை மாட்டுக்கேனும் பிரசவம் பார்த்துண்டிருப்பான்."
“சரி சரி கொஞ்சம் எழுந்திருங்கோ எல்லோரும்.” என் பாட்டி சமையலறையிலிருந்து ஆஜராகிறாள். "பெருக்கிட்டு இலை போடணும்.”
“என்ன சமையல் மன்னி!"
"கத்தரிக்காய் வெத்தல் குழம்பு, கத்தரிக்காய் வதக்கல் கறி.”
"பேஷ், மன்னி கை கேட்கணுமா ?”
"கத்தரிக்காய் ஏது - ஐயா கொண்டுவந்தானா, பக்கத்துக் கொல்லையிலிருந்து திருடி வந்தது? கொல் லைக்குச் சொந்தக்காரன் நாளைக்குப் போய்ப் பார்க்கிற போதுன்னா தெரியப்போகிறது!”
“என்ன தெரியப் போகிறது? பிச்சை, கேஸ் பிடிக்க அலையறான்!”
“சப்-இன்ஸ்பெக்டரில்லையா?”
அவன் வயிற்றுக்குள்ளேதான் பண்ணின கத்தரிக் காயில் பாதிக்குமேல் போகப் போகிறது. ஏண்டா பிச்சு, நாளுக்கு ஒரு சுத்து பெருத்துண்டே போறயே. எங்கு போய் இது நிற்கும்? ஒருநாள் 'டப்'……."
"கத்தரிக்காய் வெளியே கொட்டும்.”
"அப்போ பிச்சுவுக்குக் கேஸ" ருசு கிடைச்சாச்சு."
"அவன் வயிற்றிலேயே."
"அப்போ கேஸ் ஐயா மேலா, பிச்சு மேலா?”
"இல்லை, கத்தரிக்காய் கொல்லைக்காரன் மேலே, கத்தரிக்காயைப் பியிர் செய்ததற்காக, போலீசுக்குக் குற்றவாளியைப் பிடிக்க வேண்டாம். யாராவது ஒரு ஏமாளி கிடைச்சாப் போதும். அவ்வளவுதான்!”
“லசுஷ்மணன் மாதிரி.”
"ராமனே கொஞ்சம் மக்குத்தான். எங்கே சுறுசுறுப் பாயிருந்திருக்கான் ?”
"புனர்வசு நக்ஷத்திரம் கொஞ்சம் அப்படி இப்படித் தான்."
“இருந்தாலும் அதிர்ஷ்டம் இருக்கு. ஆள்கட்டு இருக்கு. பிறத்தியார் தொடையில் கயிறு திரிக்க ஆளும் அப்பப்போ கிடைக்கிறான்."
"உழைக்கிறவன் ஒருத்தன். பேரைத் தட்டிண்டு போறவன் இன்னொருத்தன். அகஸ்தியன், உத்திர காண்டத்தில் ராமனுக்கு நாஸ"க்காக ஞாபகப்படுத்தறார் பார். இந்திரஜித் ஸம்காரம்தான் ராவண ஸம்காரத்தைவிடப் பெரிசுன்னு!”
"நியாயங்களின் பங்குகள் அன்றிலிருந்து இன்று வரை மூடு சூளைதான். என்னவோ ஒரு ஒரு நாளா கழியறது. எப்படியோ கழியறது. அது ஒண்ணுதான் உண்மை. மற்றவையெல்லாம் புளுகு”
"ராமண்ணா நோட்புக்கே கதின்னு இருக்காப் போல.”
"பூர்வஜன்மத்தில் குசேலனாயிருந்திருப்பானோ? அவர் கிருஷ்ணா கிருஷ்ணான்னுண்டு இருந்தாரே!” புர்வஜன்மமென்ன, குசேலோபாக்யானம் இப்பவும் தான் தொடர்கிறது. ரூபாய்க்கு எட்டுப் படி அரிசி - கொல்லையில் தானாய் முளைத்த கீரை. ஆனால் பலவந்த உபவாசங்கள் அப்பப்போ குடும்பத்தில் நேர்ந்துகொண்டிருக்கும்.
தாத்தாவுக்குச் சம்பளம் பதினைந்து ரூபாய். குடும்பம் ஏற்கெனவே பெரிசு. ஐயா, தனக்குக் கட்டினவள் இறந்ததும், குழந்தைகளுடன் அண்ணா வீட்டுக்கு வந்து தங்கிவிட்டார். மறுமணம் செய்து கொள்ளவில்லை. இத்தனைக்கும் காளை வயது.
இந்தக் குடும்பமும் சிறியதல்ல. மூன்று பிள்ளைகள். இரண்டு பெண்கள். தவிர ஸ்ரீமதி தன் மூன்று குழந்தை களுடன் சீக்கிரமே அண்ணாவாத்துக்கு வந்துவிட்டாள்.
தம்பிமார் குழந்தைகள் இங்குதான் பிரசவம். ஒழுங்கையறைக்கு கர்ப்பக்ரஹம் என்ற பெயர். தன் இருட்டுக்கும் அது வருடத்தில் சராசரி பாதி வேளைக் கேனும் படும் பயனுக்கு முற்றும் தகும். மிச்சக் காலத்துக்கு அங்குதான் பழையது மூலை, சிவப்பு எறும்பு, பிள்ளையார் எறுப்பு, கட்டெறும்பு, சாதத்தில் கண்டு குழந்தைகள் முனகினால் மன்னி ரெடியாக பதில் வைத்திருப்பாள்: "இரட்டைக் கடுகு, இரட்டை மிளகு" தப்பி விழுந்திருக்கும். அப்படியே எறும்பைத் தின்னாலும் கண்ணுக்குக் குளுமை. எண்ணாயிரம் வயசு, படிக்கிற பையன்களுக்கு நாக்கைப் பாரு. சோற்றைப் பழித்தால் நாளைக்கு இதுவும் கிடைக்காது. முன்பிடிக்குப் பின் பிடி கப்பிட்டு எழுந்து பள்ளிக் கூடத்துக்கு ஒடற வழியைப் பாருங்கடா!"
ஒருநாள் கிழமை, திவசம், திங்கள் என்று குடும்பத் துடன் தம்பிமார்கள் நான்கு நாள் முன்னதாகவே வந்து உட்கார்ந்துவிட்டால் கேட்க வேண்டாம். அந்தக் காலத்தில் மலைகளுக்குச் சிறகு இருந்ததாம். பறந்து வந்து பட்டணங்கள் மேல் இறங்கி உட்கார்ந்துவிடுமாம். "அண்ணா! அண்ணா !” என்று உயிரை விடுவது வார்த்தையோடு சரி. அண்ணா என்ன பண்ணுவார் என்று நினைத்துக்கூடப் பார்க்கமாட்டார்கள்.
தாத்தா - தப்பு அப்பா எப்படி - சமாளித்தார்? நோட்புக்கில் மணிமணியான எழுத்தில் நிரப்பிக் கொண்டிருப்பார். அவர் காதில் எதுவும் விழாது. போடவும் பாட்டிக்கு தைரியம் கிடையாது. பெருந்திருவே துணை.
தாத்தாவுக்கு கம்பீர சாரீரம், கேட்ட பாக்கியம் எனக்கு உண்டு.
"தாராமல் இருப்பாளோ? அவள் என்ன சத்தியம் மறந்தவளோ ?”
அவர் பாட்டை அவர் பாடுகையில் அந்த வெண்கலநாதம் இப்பவும் செவியில் ஒலிக்கிறது.
------------------------------------
அத்தியாயம் 4
நான் சிறுவனாயிருக்கையில் ஒருசமயம் சென்னை யில் இருந்து லால்குடிக்கு வந்து இறங்கியதும் அன்றே, கேட்கப்போனால் அப்பவே என்று நினைப்பு - என் தகப்பனாரும் நானும் கோயிலுக்குச் சென்றோம். அம்மன் சன்னதியுள் நுழைந்ததுமே அண்ணாவுக்குக் கண் மல்கிவிட்டது. நாத் தழுதழுக்க:
"ராம், லால்குடியில் நம்முடைய ஒரே சொத்து இந்தக் கோயில்தாண்டா, பெருந்திருதாண்டா" அவர் சொன்னது இன்னும் மறக்கவில்லை. இன்னும் எனக்குத் தென்புதான்.
ஆனால் அந்த வயதில் முழுக்கப் புரிகிறதா? ஏதோ தலையாட்டுகிறோம். மறந்துவிடுகிறோம். பிறகு ஏதோ ஒரு நமுநழுப்பு, சந்தேகிக்கிறோம். அத்துடன் சண்டை போடுகிறோம். மறுக்கிறோம். சலிக்கிறோம். பிறகு அடி மேல் அடி விழ, நேரத்துக்கு நேரம் பதமாகி, மெதுவாகி, மிருதுவாகி, உணர்ந்து உருகி, அன்று சொன்னதுதான் இன்றுவரை, என்றுமே நம்மைக் காக்கும் மந்திரம், தாங்கும் தென்பு, நம் தஞ்சம் என்று தெரிகிறோம்.
நாஸ்திகம், ஆஸ்திகம், ஸம்வாதம், இஸங்கள் எல்லாம் கிளம்பி, தலைவிரித்தாடி, எல்லாவிதமான எதிர்மறைகளின் கடையலில் எல்லாம் ஒரு மறை யெனும் அமுதம் தோன்றுகையில் என் பாற்கடலின் மறுபெயர் 'பட்டுத்தெறி என்று புரிந்துகொண்டேன். புரிந்துகொண்டேயிருக்கிறேன்.
கனாக் கண்டாற்போல் ஏதோ நிழலாடுகிறது. நினைப்பில், பெங்களூரில் அண்ணா வேலை பார்த்த போது யானைக்குட்டி மாதிரி இருப்பார். அந்தநாள் பள்ளிக்கூட வாத்தியாரின் அங்கி, தலையில் டர்பன்; கழுத்துவரை மூடிய கோட்டு; பஞ்சகச்சம்; கம்பீரத் தோற்றம். எனக்கு அவரிடம் ஒரு திகைப்பு. வேட்டியில் ஒரு துளி அழுக்குக்கூடச் சேராது. கரையோரத்தில் கூடக் கிடையாது. கட்டிக்கொண்டதற்கு அடையாளம் லேசான கசங்கல். அதெப்படி? அந்தநாள் வெளுப்பா, மனிதனின் தன்மையா?
விதிப் பயன், பெங்களூர் வாசம் முடிந்து, சென்னைக்கு வந்ததும் ஆஸ்துமாவில் மாட்டிக் கொண்டு எலும்பும் தோலுமாகிவிட்டார். முகம் சுண்டி, உதடுகள் கசந்து, வயிறு முதுகோடு ஒட்டி, இந்தத் தோற்றம் நினைப்பில் பதிவாகத் தெரிகிறது. சென்னை யில் இனி இருந்தால் ஆளைக் காண முடியாது என்று டாக்டர் பயமுறுத்தி அண்ணாவையும், அம்மாவையும், எங்களையும் கிராமத்துக்கு விரட்டிவிட்டார். காஞ்சி புரத்துக்கு மூன்று மைல் தூரத்தில் ஐயன்பேட்டை கிராமம். இன்று அது கிராமமில்லை, நான் பையனாகி வளர்ந்து அறிந்த கிராமம் நாட்டிலேயே இனி கிடையாது எனத் தோன்றுகிறது.
உடலும் நொந்து, வேலை சரிந்து, மனம் நொந்து…..
"என்னுடைய ஆஸ்தி என் குழந்தைகள்தான்."
பரமசாது. சாது என்றால் அசடு என்கிற இந்நாள் அர்த்தத்தில் நான் சொல்லவில்லை. உள்ளும் புறமும் ஒன்று.
திலோமம் செய்து, ராமேஸ்வரம் போய்த் தவங் கிடந்து பெற்ற பிள்ளை நான். ஆகவே, பெரியோர் களின், பெற்றோர்களின் தனி ஆவல்கள், ஆசிகள், ஆசைகள், பாசங்களின் ஆவாஹனத்துக்கிடமாவதில் தனிப்பேறு இல்லையா?
அண்ணாவுக்குப் பிரியமான இன்னொரு சொல்: "கடந்த ஞானியரும் மறப்பரோ மக்கள்மேல் காதல்?
“ராம்!”
தசரதர் ராமனை ராமா' என்று அழைத்தாரா, ‘ராம்” என்று அழைத்தாரா?
இப்பவும் அழுகை வருகிறது. பயன்! நானும் கிழமாயாச்சு.
பின்னோக்கில் நினைவோட்டம் கற்கண்டு நேரம்.
நல்ல சமயங்களின் நினைப்பில் என்னை அவ்வப் போது இழக்க நேர்ந்தாலும் அவைதான் அமுத நேரங்கள். உண்மையாகக் காத்திருந்த வேளைகள், இவை என் சொந்த நேரங்கள் அல்ல நம்ம நேரங்கள்.
தருணங்கள் திரும்பி வாரா.
ஆனால் பெருந்திரு காத்திருப்பாள். தருணங்களின் மகிமையை அவள் அறிவாள். அவளே, அவளும் அதுதானே!
ஸன்னதியுள் நுழைகையிலேயே ஒரு அமைதி மேலே படர்வதை யாரும் உணர முடியும். ஏலக்காய் வாசனை போல் லேசாகச் சோகம் கலந்த அமைதி.
“பாட்டி! இதோ வந்திருக்கேன்"
தன் மக்களுக்கும், பேரன் பேத்திமார்களின் வம்ச வம்ச முறையீடுகளுக்கும், உலகத்தின் துயரங்கள் அனைத்துக்கும் சுமைதாங்கி ப்ரவிருத்த ஸ்ரீமதி ஆள் உயரத்துக்கு அம்பாள் நிற்கிறாள். சாந்த ஸ்வரூபி.
என் பாட்டிக்குச் செல்லமாக நான் பெரிய தீவட்டி என் தம்பி 'சின்ன தீவட்டி. அவளுடைய கடைசிப் பிரயாணத்தில் தீவட்டி பிடித்துச் சென்றது நினைவு வருகிறது.
பெற்றோர்கள்கூட குடும்பச் சூழ்நிலை காரணமாக மிரட்டுவார்கள்.
"மத்தவாளுக்கு வேணும். உன் வீதம் ஆச் சோன்னோ? உனக்கு மட்டும்தான் வயிறா? பிறத்தியார் பங்குக்கு இப்படி அலையாதே!”
ஆனால் பாட்டி, தன் பங்கையும் பேரக் குழந்தை களுக்குக் கொடுத்துவிடுவாள். பாட்டி என்கிற சத்திய மும் அதுதான். பெருந்திருப் பாட்டியும் அப்படித்தான்.
தாராமல் இருப்பாளோ அவள் என்ன சத்தியம் மறந்தவளோ?
சந்தர்ப்பக் குறைவில் தன் குழந்தைகளுக்கு அந்த நாள் மறுத்ததைப் பின்னால் மனமுவந்து ஈந்து, பிராயச்சித்தம் அடைவதற்குத்தான் பாட்டி நிலை.
என் குலதெய்வமும் கன்னியாகுமரியும் என் இலக்கிய வாழ்வை, என் எழுத்தை பாதித்தவர்கள்.
மிகவும், "கொஞ்சம்' அடைமொழிகளை, வேணு மென்றே விலக்குகிறேன். பாதிப்பு என்கிறபோதே அதில் ஏற்றத்தாழ்வுக்கு இடமில்லை. பாதித்தது பாதித்ததுதான். நெருப்பின் ‘சுறிலு’க்குகூட குறைச்சல் உண்டா? அல்ல 'சுறீலுக்குப் பழகிப்போவது என்பதும் உண்டா?)
பெருந்திரு நெஞ்சை உருக்குகிறாள் என்றால் கன்னியாகுமரி நெஞ்சை உலுக்குகிறாள்.
கன்னியாகுமரி மேல் காணாமலே காதல் கொண்டு விட்டேன். என் பன்னிரண்டு வயதிலிருந்தே கன்னியா குமரிக்குப் போய்வந்த உற்றார் உறவினர், இரவு வேளைக்கு வாசல் திண்ணையில் ஒதுங்கிய பைராகிகள், யாத்ரிகர் கதை சொல்லி விசிறிவிட்ட வியப்பு, சென்னைக் கடற்கரையின் மாலைக்காற்றில் அந்தி வானத்து வர்ணஜாலங்களில், காலை வேளையில் கடல் விளிம்பில், சூரியனின் உதயவாசலில் கரையோரம் ஒடத்து நிழலில் மணலில் சாய்ந்தவண்ணம் சிந்தனை யில் கொழுந்துவிட்டு, கண்டவர் கையோடு கொண்டு வந்த குங்குமம், கிளிஞ்சல் சரம், சாயமண், என் கனவிற்குக் கலவை கூட்டி, ஏக்கமாய்க் கட்டி அதுவே அதுவாய்ப் பந்தல் படர்ந்தது.
கன்னியாகுமரி, பேரிலேயே, பேருக்குள்ளேயே ஏதேதோ நீரோட்டங்கள் விளையாடுகின்றன. அவள் குமரி, நான் குமரன்,
கடலோரம் கோயில் (எல்லாம் அப்போ சொல்லக் கேட்டவைதான்). பாறை, பாறைகள், நெஞ்சிலும் பாறைகள், பாறைகளின்மீது அலைகளின் மோதல், சொல்லுள் அடைபடாது, என் கற்பனைக்கே சொந்த மான கதைகள், கவிதைகள், கதையின் நிழல்கள், நீழல் களின் காதைகள், கமகமப்புகள், கமகங்கள், இம்சைகள் சொல்ல முடிந்தவை. முடியாதவை, பேச்சில் முடியா தவை, முடிந்தாலும் பங்கிட்டுக் கொள்ள மனம் வராதவை - சொல்லச் சொல்ல இல்லை, தலை சுத்தறது.
இதை இந்த இடத்தில் சொல்லக் காரணம், மனோவாக்காய் சக்திகள் நம்மைப் பிடித்தாட்டும் வேதனையைச் சொல்லி ஆற்றிக்கொள்ள முயலுகிறேன். இந்த அவஸ்தையேதான் உயிரின் இயக்கமே. ஆனால், இதிலும் எதோ ஒரு செம்மை, கோலத்தின் ஒழுங்கு, ஏற்பாடு தெரிகிறது. கோலம், அதன் புள்ளிகள், புள்ளிகளைக் கட்டிய கோடுகள், கோடுகளின் இழைவு, இத்தனைக்கும் அடிக்கோடு, ஒரு கோடு எங்கே ஆரம்பித்தது. அதுவே ப்ரக்ஞையாக நுனியென்று இழுக்கப் பார்த்து வகிடுகள் ஏதேதோ பிரிகின்றன. கலை, சுயப்ரக்ஞை, தருணம், அவசம், பரவசம்அவரவர் கண்டது அவரவர் பூத்ததுக்குத் தக்கபடி.
இந்தக் கூச்சங்கள், யாருடைய தனி உரிமையல்ல, எல்லோருக்கும் சிருஷ்டி ஈன்ற செல்வம். அவரவர்க்கு அவரவர் பங்கு சேர்ந்துகொண்டுதாணிருக்கிறது. என் பங்கு என் வழியில் என் எழுத்து. என் சொல்லில் ஜீவனின் பரம்பரையின் பெருமையைப் பறைசாற்றல். நம் பெருமை. நீயும் நானுமிலாது நாம் இல்லை. அதனாலேதான், பெருந்திருப் பாட்டி மடியில் தவழ்ந்து விளையாட உன்னையும் அழைக்கிறேன்.
பாட்டி, அப்பா, அம்மா, உடன்பிறந்தவர், மனைவி, குழந்தை, பெண்டிர், பேரன், பேத்தி - குடும்பத்தைப் பற்றியே நான் எழுதுகிறேன் என்று எனக்கு ஒரு பேர். அதுவே ஒரு குற்றச்சாட்டைப் போலவும் சில சமயங்களில் த்வனிக்கிறது. எதற்குமே லேபிள் ஒட்டி விடுவதில், அந்த லேபிலினுள் யாவற்றையும் அடக்கி அல்லது அடக்கப் பார்ப்பதில் நமக்குத்தான் என்ன ஆர்வம் !
அவள், டப்பாமேல், கொட்டை எழுத்தில் துவரம் பருப்பு என்று எழுதி ஒட்டியிருப்பாள்.
மாதத்தில் ஒருவேளை, அரைவேளை அவன் ஆபீஸ் அவசரத்தில் சமைக்கவும் நேரும்போது துவரம்பருப்பு டப்பாவைத் திறந்தால், அதில் வேறு எதோ சிறுபருப்பு இருக்கும். பாசிப்பருப்பா? உளுத்தம்பருப்பா! குழப்பம், தவிப்பு, கோபம். வந்ததய்யா புதுக்குடித்தனத்தின் முதல் குஸ்தி! சீட்டு ஒட்டலின் தமாஷ் இதுதான்.
குடும்பத்தின் படிப்படியான விரிவாகத்தான், எனக்கு வயது ஏற ஏற உலகத்தைக் கண்டுகொண்டே யிருக்கிறேன் என்று ஒப்புக்கொண்டு, எனக்குக் குத்தி யிருக்கும் முத்திரையில் பெருமை கொள்கிறேன்.
அன்றொரு நாள், ஒரு வீட்டுக்குப் போயிருந்தேன். அந்த வீட்டுக் குழந்தை ஒடிவந்து, “சேப்புத் தாத்தா!" என்று குழறிக்கொண்டு என் கழுத்தைக் கட்டிக் கொண்டான். என்னை யாரென்று நினைத்தானோ, எதுவும் முன்பின் நினைக்காமலே அப்படிச் செய்யத் தோன்றிற்றோ? அறியேன்.
அவன் தாய் - “எங்கள் முரளிக்கு முக வேற்றுமை கிடையாது. யாரோடும் ஒட்டிக்கொண்டு விடுவான்.”
இதுபோன்ற அடையாளங்களுக்கு ஆதாரம் இல்லை என்று நான் நினைக்கமாட்டேன். உயிரின் உள்சரடு எங்கெங்கோ எப்படி எப்படி ஒடுகிறது என்று நாம் என்னத்தைக் கண்டோம்? உலகத்தை ஒரு குடும்பமாக என் எழுத்தில் நான் உழப்ப முயல்வதில் புதுமைகூட இல்லை.
எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறேதும் அறியேன் பராபரமே.
ஸர்வே ஜுனாஸுகினோ பவந்து: Love thy neighbour as thyself.
இந்த நோட்டத்திலேயே, எனக்குக் கட்டித் தொங்க விட்டிருக்கும் இன்னொரு லேபிளையும் குறிப்பிடத் தோன்றுகிறது.
சமீபத்தில் என் புத்தகத்தைப் பற்றிய ஒரு விமர் சனம், என்னைப் பற்றிய ஒரு பாராட்டு - படித்தேன். இரண்டிலும் என்னைத் தமிழ்ச் சிறுகதை உலகுக்குப் பிதாமகர் என்று குறிப்பிட்டிருக்கிறது. ஏன், சில வருடங்களுக்கு முன் என்னை இப்படி விளித்து ஒரு கவிதையே, ஒரு சின்னப் பத்திரிகையில் வெளி வந்திருந்தது. என் நரைத்த கரடிப் புருவங்கள் காட்டும் கரடிவித்தை!
தேசப்பிதா, குடும்பத்துக்குப் பிதாமகன் - ஆனால் சிறுகதைக்குப் பிதாமகன்? எழுத்துக்கும் வயது வகுப்பது உண்டா என்ன?
அப்படிப் பார்த்தால், என்னிலும் அப்பவே வயதில் மூத்தோர் - ந. பிச்சமூர்த்தி, புதுமைப்பித்தன், கு.ப.ரா- இன்று நம்முடன் இருக்கும் பி.எஸ். ராமய்யா - நினைப் புக்கு உடனே வரும் பெயர்கள் இவை. இன்னும் நான் அறியாத பெயர்கள் எத்தனையோ - இவர்களை நாங்கள் பிதாமகர்கள் என்றா அழைத்துக்கொண்டிருந் தோம்? புதுமைப்பித்தன் எழுத்தில் இன்னும் சீற்றம் சிந்துகிறது. ந. பிச்சமூர்த்தி, கு.ப.ரா. எழுத்தில் பட்டுக் கயிற்றின் முறுக்கேறிய உரம் மின்னுகிறது.
இவர்களுக்கும் முன்னால் வ.வே.சு. ஐயரின் 'குளத்தங்கரை அரசமரத்தைப் படிக்கையில் காதலின் இளமை ஏக்கம் அப்படியே மூட்டம் கவிகின்றது.
காக்கைச் சிறகினிலே நந்தலாலா
நின்றன் கரிய நிறம் தோன்றுதடா.
தீயில் இப்பவும் சுறீல்'
கங்கைக் கரைத் தோட்டம்
கன்னிப்பெண்கள் கூட்டம்
கண்ணன் நடுவினிலே.
காலத்தை அழித்துக்கொண்டு காட்சி கண்முன் எழுகிறது.
எழுதி எத்தனை வருடங்கள் ஆயினவோ? இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
சொல்ல வருவது யாதெனில், எனக்குத்தான் வயதாகிக் கொண்டிருக்கிறது.
(வயதுடன் இனி நான் சண்டை போடுவதில் அர்த்தம் இருக்கிறதா? மலைப்பாம்பின் படிப்படியான தழுவல்.)
ஆனால் எழுத்துக்கு வயோதிகம் கிடையாது. எழுத்துக்கு வயதை எழுதுவதற்கு பதிலாக, அதை, ஒலிம்பிக் விளையாட்டு வீரன் ஏந்தி ஓடிவரும் தீவட்டி யுடன் ஒப்பிட எனக்கு ஆசையாயிருக்கிறது. ஒரு திரியி லிருந்து மறு திரி அடுத்தடுத்து ஏற்றிக் காணும் அனந்த பத்மநாப ஸ்வாமி கோயில் லக்ஷ தீபமாகப் பார்ப் போமே! எல்லாமே, காலத்துக்குக் காலம் வழிவழியாக ஏற்றிய உருவுக்கேற்பத் தோய்ந்திருக்கும் வண்ணம் தானே!
ஒன்று, எனக்கு இந்த மகத்தான பதவியைக் கொடுத்தவர்களுக்கு என் எழுத்தின்மேல் அவர் களுடைய பெரும் அபிமானம்தான் காரணம் என்பதில் எனக்குத் துளிகூட ஐயமில்லை. இதுபோல நான் முகமறியாத வாசக அன்பர்களின் ஆசிபலம், எண்ண பலம் இன்றுவரை என்னில் ஊறி என்னை வளர்க்கும் பலம் என்பது என் பெருமிதம். ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ளாமலே பரஸ்பர உறவு வளர்க்கும் ஆன்ம சக்தி, எழுத்தைக் காட்டிலும் எது? இசை, ஒவியம் போன்ற கலையின்பங்கள் மற்றவர்க்குச் சேர அதனதற்குரிய புலன் நுகர்ச்சி தேவைப்படுகிறது. எண்ணத்துக்கு அடுத்தது எழுத்துதான்.
எழுத்தறிவித்தவன் இறைவனாகும். பரம்பரையின் அழியாச்சுடர். அதற்கு நான் பிதாமகனா ? அடியம்மாவ்!
நாம் யாவருமே அமுதகலசத்தின் வம்சவழி. அழியாத்தன்மைக்குக் குறிக்கப்பட்டவர்கள். தெரிந்தோ, தெரியாமலோ, அழியாத தன்மைக்கு அர்ப்பண மானவர்கள். தெய்வமே ஒரு குறிக்கப்பட்ட பொருள் தான். தட்டிவிட்ட சாரம்தான் நம்மை வழி வழியாகத் தாங்கிவரும் தவபலம்.
இந்தத் தர்க்கப்படி, கோபுரத்தை பொம்மைதான் தாங்குகிறது.
"தட்டிவிட்ட சாரமா? அது என்ன?” - உறுமல் கேட்கிறது.
நம்பிக்கைதான். ஏதோ ஒன்றன்மேல் நம்பிக்கை, அது தெய்வமோ, குழந்தையோ, நம் மூதாதையர் நமக்காக வகுத்துவிட்டுச் சென்றிருக்கும் வழியோ, அசட்டு கெளரவமோ, வறட்டு ராங்கியோ…..
அந்த நாளில் கண்ணன் கோவர்த்தனகிரியைச் சுண்டுவிரலில் ஏந்தினான் - இது கண்ணன் மேல் நம்பிக்கை.
நடராஜன் ஒற்றைக்காலில் கட்டைவிரல் நுனியில் தான் ஆடுகிறான். அந்த வேகமே சமயங்களில் தாங்க முடியாமல் குவலயமே குலைகிறது. பூகம்பம், வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்கள்) - இது நடராஜன் மேல் நம்பிக்கை.
ஒன்றையொன்றன் ஈர்ப்புசக்தியின் கடையலில் கிரஹங்கள் கவிழாமல் அந்தரத்தில் இயங்கும் விஞ்ஞான உண்மையில் மேற்கூறிய இரு நம்பிக்கை களும் சித்தாந்தங்களும் நிரூபணையாகின்றன.
நம்பிக்கைமேல் நம்பிக்கை, நம்பிக்கையின்மைமேல் நம்பிக்கை - ஊம், ஆமாம், ஜாபாலி நியாயத்துக்கும் நம் சித்தாந்தம் இடம் கொடுக்கிறதே!
நான் தொட்டதெல்லாம், இப்பவே, அத்தனையும் எனக்கே - என்கிற கொள்கையில்தான் மோசம் போகிறோம். சுயநலம்தான் நம்பிக்கை துரோகத்துக்கு வித்து. மாஞ்செடி முளைக்கச் செய்தல், கழைக்கூத்தாடி நமக்குக் கொஞ்சநேரம் பொழுது போக, நம்மிடமிருந்து காசு பறிக்க, காட்டும் கண்கட்டு வித்தையோடு சரி.
நம்பிக்கை எங்கள் பாட்டன் சொத்து. நானே எனக்குச் சொந்தமல்ல - நான் எங்கள் பாட்டன் சொத்து. நான் என்றால் நீயும்தான்.
தொன்றுதொட்ட இந்த வாழையடி வாழை நம்பிக்கையின் அடிவழியில் என் தகப்பனார், இந்தக் கோயில், பெருந்திருதான் நம் சொத்து என்று உருகியதில் என்ன ஆச்சரியம் ?
இந்தத் தட்டிவிட்ட சாரம்தான் நம் சமுதாய பலம். இதிஹாஸ காலத்திலிருந்து ஓங்கி வளர்ந்திருக்கும் அதன் பண்பு. கட்டடம் எல்லாமே.
பானைச்சோற்றுக்கு ஒரு சோறு பதம். பக்குவம் பார்க்க எனக்கு ஒரு சோறு எங்கள் குடும்பம் – என்றால் என்ன? நான்தான். ஒரு சோற்றைப் பதம் பார்க்கும் திறன்தான் எனக்கு எழுத்து. நான் காணும் அகண்ட தரிசனத்துக்கு, எழுத்துதான் எனக்குப் பலகளி.
பலகணிப் பார்வைதான் - முழுப் பார்வையல்ல. ஆனால் இதுவே எவ்வளவு பெரும் பேறு!
வாசகன் எழுத்தாளனை, அவன் எழுத்தைப் படித்து அதன்மூலம் அவனை இனம் கண்டுகொள்ளவும் முடிந்ததென்றால் - அது என்ன சாதாரண வாய்ப்பா?
'கடினமான உழைப்பு சொல்லில் வாய்மை (The true word) கொஞ்சம் அதிர்ஷ்டம் - இவைகளின் கூட்டுதான் வாசகனுக்கு எழுத்தாளனைத் தெரியப் படுத்தும் எழுத்து என்கிறான் ஹெமிங்வே.
என் எழுத்தின் மூலம் எனக்குக் கிடைத்திருக்கும் என் சோதர சோதரிகளே, என் குழந்தைகளே, நான் அறியாமலே என்னை நினைப்பவர்களே, என்மேல் நல்ல எண்ணம் கொண்டு, நான் அறியாமலே என்னை வளர்ப்பவர்களே, உங்கள் அனைவரையும் தழுவிக் கொள்ளக் கைகள் எனக்கில்லையே? என் தாய்மார் களே, தாதையர்களே, உங்கள் பாதங்களில் பொருத்தவே - சிரங்கள் எனக்கில்லையே! நான் அர்ச்சுனனாகவே யிருக்கலாம். ஆனால் இந்தச் சமயத்துக்குச் செயலற்ற பிருகந்நளையாக நிற்கிறேனே! எனக்கு நமஸ்கரிக்கப் பிடிக்கும். தன் முழுமையின்மையில் தவிக்கும் உயிர் ஏக்கத்தின் விசுவரூபத்தை யாரேனும் ஒருத்தர், ஒரு சமயத்துக்கு யாரென்றாலும் நீதான், அவள் என்றாலும் நீதான், அவன் என்றாலும் நீதான், உணர முடிந்தால், நீதான் என் பெருந்திரு.
------------------------------
அத்தியாயம் 5
போன பக்கங்களில் நான் பயணத் தண்டவாளத் திலிருந்து பக்கவாட்டில் பிரிந்துவிட்டேனோ என்று பாடுபடுகிறதோ? இல்லவே இல்லை. இந்த வரலாற்றின் வழியே இப்படித்தான். நீயும் நானும் பாற்கடலைக் கடைந்து கொண்டிருக்கிறோம்.
அண்டை வீட்டு மாடிக்குப் பேரக் குழந்தைகள் விளையாட அப்பப்போ ஓடினாலும் ராத் தாச்சுக்கல்" தன் மடியில்தான் என்று பெந்துப் பாட்டி அறிவாள். எங்களுக்கும் தெரியும்.
பூரா, நாம் ருசியிலேயே வாழவில்லை, பூராப்பூரா ருசியின் நினைப்பிலும் வாழவில்லை. வாஸனைகளில் வாழ்கிறோம் என்று என் துணிபு. மூச்சில் ஏதேதோ மோப்பங்கள் தாமே வந்து கலக்கின்றன. பிராணன் புதுப்பித்துக் கொள்கிறது. சரி; பிறருக்கு எப்படியோ, என் உடல், மனப்பாங்கு, நான் வளர்ந்த சூழ்நிலைப்படி, இந்த வாஸனைத் தத்துவம்தான் எனக்கு வாழும் தத்துவமாக நிலைத்துவிட்டது. ஆனால் எல்லாருக்கும் இதுதான் பாதை என்று நான் படிக்க வரவில்லை.
அவரவர் பூத்ததற்குத் தக்கபடி, வாஸனை ? அதென்ன வாஸனை? இதோ அதற்காக ஒரு கதை. கதையல்ல; சொந்த அனுபவம். சுமார் இருபத்துஐந்து வருடங் களுக்கு முன் - ஏன், மேலேயே இருக்கும் - இரவு சுமார் 10-30 ரேடியோ அலறிக்கொண்டிருக்கிறது. (வழக்கப் பிரகாரம்தான், முடுக்கிவிட்டு அவரவர் தூங்கிக்கொண்டிருக்கின்றனர். வம்பு அளந்துகொண்டிருக்கின்றனர். நான் நடு முற்றத்தில் படுத்தவண்ணம் நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டிருக்கிறேன். கவனம், படிப்படியாக படிந்த வாய்க்காலில், ரேடியோ சத்தங்கள் எழுந்து, உருத்தெளிந்து, நடைபெறுவது நாடகம் எனத் தெரிந்தது.
எனக்குச் சாதாரணமாக ரேடியோ நாடகம் எடுபடுவதில்லை. ஆனால் அன்று நாடக ஆசிரியர் கொண்டுபோயிருக்கும் பாணியில் (யாரோ வங்காள ஆசிரியரின் தமிழாக்கம். நாடக முடிவில் தெரிவிப் பார்களே!) ஒரு சக்தி விறுவிறுத்து, கவனத்தை வசம் கொண்டது.
காசிராஜன் தீர்ப்பளித்தாகிவிட்டது. சந்திரமதி திருடியெனத் தீர்மானிக்கப்பட்டு, அவள் தலையை இதோ அரிச்சந்திரன் சீவப்போகிறான்.
பூமியிலும் வானிலும் கூட்டம் நெரிகிறது. தேவர்கள் வேடிக்கை பார்க்கக் கூடிவிட்டனர். "ஜே! ஜே! அதோ உருத்தெரியா ஜன இரைச்சலைத் தத்ரூபமாகக் கொண்டு வந்திருக்கிறான். அதிலிருந்து கணிரென்று அரிச்சந்திரன் குரல் பிரிந்து வருகிறது. அவன் கைக் கத்தியின் தீட்டிய பளபளப்பை என்னால் பார்க்க முடிகிறது.
"சந்திரமதி ! உன் இஷ்ட தெய்வத்தை நினைத்துக் கொள்!"
நினைத்துக்கொள்கிறாள். அவளுடைய இஷ்ட தெய்வம் யார்? (!)
விசுவாமித்ரர் ஓடி வருகிறார். கடைசி நிமிஷத்தில் அவனை, இத்தனை சோதனைகளிலிருந்து மீட்டுவிடும் ஒரு பொய்க்குக் கெஞ்சுகிறார்.
அந்த ஒரு பொய்.
கட்டம் பரபரப்பாய்த்தானிருக்கிறது. மசிந்து விடுவாரோ? ஜெயிப்பு அவருடையதுதானா?
'அரிச்சந்திரா அரிச்சந்திரா! எங்களைக் கைவிட்டுடாதே!
இந்தப் புதுக்குரல்கள் எங்கிருந்து? அரிச்சந்திரன் திகைக்கிறான்.
"நீங்கள் யார்?"
"அரிச்சந்திரா! நாங்கள் உன் பிதுர்க்களடா! எங்களைக் கைவிட்டுடாதே! இப்போ சறுக்கினையோ, உன் ஒரு பிழையால், இந்தக் குலபதியைத் தொட்டு வழிவழியாகக் கரையேறியிருக்கும் அத்தனைபேரும் மீளா நரகத்துக்குத் தள்ளப்படுவோம். அடே, குழந்தே! எங்களைக் கைவிட்டுடாதே!”
கிடக்கையில் என் உடல் கட்டையாக விறைத்து விட்டது. தொண்டையை அடைத்தது. நான் - நான் - என்னிலிருந்து ஒரு 'நான் புறப்பட்டு விம்மிக் கொண்டே.
பால்ரோசம். உள்ளூர அமைதியான ஒரு சீறல் சப்தம் ஓர் ஆக்ரோஷத்தின் படமெடுப்பு. இன்னும் விம்மிக்கொண்டே.
இந்த விம்மல் நான்' என்னுடைய நான்தான். என்னின்று வந்த நான். நானும் இதைச் சேர்ந்தவன் தான். ஆனால் நான் இதனுள் அடங்கியவன். இது நானின் விசுவரூபம் தணலிலிருந்து சுழித்துக்கொண்டே
மேலெழும்பிய அகிற்புகையின் வியாபகத்தில் உருப் பிதுங்கின ராக்ஷஸம். நெருப்பில்லாமல் புகையில்லை. இந்தக் கங்கு, பரம்பரை அஸ்தியில் எங்கோ செருகிக்கொண்டு, கனன்று கொண்டேயிருக்கும் பரம்பரை ஆஸ்தி. prometheus சொர்க்கத்தினின்று நமக்காக மூங்கில் குழாயில் அடைத்துக்கொண்டு வந்த தீ. எல்.ஐ.சி. சின்னத்தில் ஒரு உள்ளங்கைகளுள் ஏந்தல் காக்கும் குடும்பச்சுடர். ஒலிம்பிக் தீப்பந்தம். அன்றே என் பாட்டி, என்னையும் என் தம்பியையும் செல்லமாக அழைத்த பெரிய தீவட்டி, சின்ன தீவட்டி. மூன்றாவது கண்ணின் திறப்பு. சாவுக்கும் பிறப்புக்கும் இடைக்கோடின் முகடு. இந்த நான்’-இல் நான் நான் நான் நான் நான் நான் நான் நான் நான் பல கோடி பிம்பங்களில் நானும் ஒரு பிம்பம். என் ஆரம்பம், அர்த்தம், முடிவு, நோக்கம், பெருமை, இதுவேதான் நான்’ எனும் என் வெளியீடல்இதுவே அம்முவாத்து அகந்தை அவள் எங்களவள். ஆகையால் மற்றதெல்லாம் எங்களுக்கு திரணமாத்திரம் எனும் ஒரு ஸர்வ தோரணை மஹா பிகு.
ஸத்யோஜ்யோதிஷி
ஜிஹோமி ஸ்வாஹா;
தாராமல் இருப்பாளோ
அவள் எனன
சத்தியம் மறந்தவளோ ?
பூம் பூம் பூம் ஸ்வயாகாரத்தின்
சங்கநாதம்.
இருங்கள், இருங்கள், பொறுங்கள், மூச்சிறைக்கிறது. இருபத்துஐந்து வருடங்களுக்கு முன்னின் நினைவுக் கூட்டல் அல்லவா? கூட்டவே வேண்டாம். அன்றின் அழுத்தல் இன்னும் குறையவில்லையே!
இதைத்தான் நான் வாஸனை என்கிறேன்.
எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே. பாரதி சொல்வது மட்டும் என்ன?
அவர்கள் விந்தையில் ஆயிரம் எண்ணங்கள், ஆசைகள் எவர், யாவர் என்று விளக்கியும் கூற வேண்டுமா?
நான், நான் மட்டுமல்ல, என் குடும்பச் செருக்கு. அதுவும் எனக்குச் சொந்தமல்ல.
என்னிடம் ஒப்படைக்கப்பட்ட ஒப்பிலா நகை, அதை நான் அணிந்ததால், அது என்னை ஆண்டு, நான் வாழ்ந்தபின், என் பின்னோருக்கு விட்டுச் செல்லும் சாஸனம். இது நான் கண்ட அமுதம்.
பாற்கடலை நீயும் நானும் கடைந்தோம்.
எனக்காக நீ, உனக்காக நான், எனக்காக நான்.
நமக்காக நாம்.
கடைந்தோம்.
அமுதம் வந்தது.
நான் கலசமானேன்.
என் கரண்டி என் பேனா,
நான் பரிமாறுகிறேன்.
உண். இனி நாம் தேவர்.
-இதை நான் வாஸனை என்கிறேன்.
நான் என் தாத்தாவின் பேரன்
என் அப்பன் மகன்
என் தாய் வயிற்றில் தோன்ற
பாக்கியம் செய்தவன்.
- இதை நான் வாஸனை என்கிறேன்.
இன்றைய குடும்ப வாழ்க்கையில் இந்த மணம் மறந்து போய்க் கொண்டிருப்பதுதான் என் கொடிய வேதனை.
'சுஜி இந்த வருஷம் காலேஜ் போறாள்னு அவளுக்கு அவாத்துலே நைலக்ஸ் தாவணி நாலு வாங்கியிருக்கா பாரு! கண்ணைப் பறிக்கிறது. தவிர ஷெர்வாணி கம்மீஸ், நாமும் இருக்கோம்!”
“தெரியுமோன்னோ? இல்லே இல்லேன்னு சொல் லிண்டு கடைசியில் அவாத்திலும் - டிவி வாங்கியாச்சு. அடுத்த மாஸம் - ஃப்ரிஜ்"
“நாலு பையன்களும் சம்பாதிக்கிறான்கள். சேத்து வெச்சுக்கறான்கள். அல்பம் மாதிரி அவர் அப்பா, அவர்கள் சம்பளத்துக்குப் பங்குக்கு வரதில்லை. கணக்கும் கேட்பதில்லை. பிறத்தியாரிடமிருந்து நாம் கற்றுக்க வேண்டியது எவ்வளவோயிருக்கு”
மேலே இரைந்து கிடக்கும் நட்சத்திரங்களில், என் மூதாதையர் அப்பா அம்மாவுடன் என்று போய் நானும் சேர்வேன்?
"அவாளைக் கவனிச்சையோ ? முகத்தில் ஒரு பணக்காரக் களையிருக்கு!”
அப்போ பணக்காரா வேறே, பணக்காரக் களை வேறேயாக்கும்!
இரண்டும் வெவ்வேறாய் சொல்பவர்களுக்கே தெரிகிறது போலும்!
"நம்மைவிடப் பச்சையாக எதிர்வீட்டில் வாழ்கிறார் கள் என்பதைச் சொல்லியே தீருவேன்; பொறாமைப் படுகிறேன் என்று அர்த்தமல்ல. உண்மையைச் சொல் கிறேன். நான் உண்மை விளம்பி"
ஏற்றத்தாழ்வுகளை ஒப்பிட்டுப் பேசுவது பொறாமை யல்லேல் வேறு எது பொறாமை ? நான் இன்னும் ஒருபடி மேலேயே போகிறேன். பிறர் வசதிகளைப் பேசத் தோன்றுவதே காழ்ப்புதான் என்று சொல்வேன். பிறரிடம் கண்ட நற்குணங்களைப் பேசுவோம். பெரியாரைப் புகழ்வோம்.
பங்கமிலாது வாழ அந்த வாழ்வு பெற, நாணயமான முறையில், நம் உழைப்பு, முயற்சி பற்றிப் பேசுவோம்.
தங்க அணிலைக் கண்டால், ‘எங்கே புரண்டாய்? என்று விசாரிக்கமாட்டோம். அதன் தோலை உரிக்க என்ன வழி! அதனால்தான் தங்க அணில் கண்ணில் படுவதில்லை.
என்று நாம்,
நம் வீட்டுப் பழையது,
நான் தொடுத்த முழம்,
ஆத்தாளுக்கும் அகமுடையாளுக்கும் அங்கச்சிக்கும் நான் எடுத்த புடவை நூறு புடவைதான். ஆனால் என் உழைப்பு, என் அன்பு, என் சக்தி, எங்கள் கெளரவம், என்று பெருமை கொள்கிறோமோ, வீட்டில் இருப்பவர் எல்லோரும் அப்படி நினைக்க வேண்டும். திருப்திப்பட வேண்டும். பெருமைப்பட வேண்டும். இதுவரை தெரியாவிட்டால் இனிமேலாயினும் பழகிக்கொள்ள வேண்டும். ஒன்று தெரிய வேண்டும்; நன்றி பெருகப் பெருக அங்கு சுபிக்ஷமும் பெருகும். அங்கு ராமராஜ்யம் நடக்கிறது. அந்த வீட்டைப் பிதுர்க்களின் ஆசீர்வாதம் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. அஞ்சலி செய்வோம்.
கடமை என்பது ஒருவழிக் கடன் அல்ல.
"அப்பா! Vicco-turmeric இல்லாமல் இனி ஒரு நிமிஷம்கூடத் தள்ள முடியாது.”
"ஒரு பத்துநாளைக்கு சோப்பைத் தள்ளு. பயத்த மாவைத் தேய்த்துக்கொள்” - என்றால் கேட்பாளா?
"அப்பாவுக்குக் காசு ஒண்ணுதான் குறி!”
வாஸ்தவந்தான். இல்லாத குறைதான். வேடிக்கை Vicco turmeric போட்டுக்கொண்டாலும்தான் களைக் கிறது. காலேஜ் குமாரி ஆகிவிட்டால் மரியாதையும் காற்றில் பறந்துவிடுகிறது.
மானத்தோடு வாழ்வதைப் பெரிதாக அந்த நாளில் கருதினார்கள்.
வசதிகளின் பெருக்கம்தான் இப்போ வாழ்க்கையின் குறிக்கோள். கடன் வாங்கியோ, ஏமாற்றியோ, எப் படியோ, ஜப்தி ஆகிறவரையில் அனுபவித்தது லாபம்.
மதிப்பீடுகள் மாறுகின்றன எனும் பொதுத் தீர்ப்பில் எல்லாமே அடங்கிவிடுமா?
இத்தனையும், குழந்தே, எங்களைக் கைவிட்டுடாதே என்று அன்று ரேடியோ நாடகத்தில் கேட்ட அலறலின் எழுச்சிதான். குட்டிக்கதை என்றுதான் ஆரம்பித்தேன்; ஒப்புக்கொள்கிறேன்.
மன்னிப்பு - கேட்கமாட்டேன்.
சிறுகையூர் பஸ் ஸ்டாண்டில் இறங்கினாலே லால்குடிதான். ரோடுக்கு வந்து கொஞ்சதூரம் நடந்து, ஐயன் வாய்க்கால் பாலம் தாண்டியதும் ஐயனார் கோயில் உள்ளேயே கறுப்பண்ணன் ஸ்ன்னதி.
ஐயனார் சிவனுக்குப் பிறந்ததால் பெருந்திருவுக்கும் மகன்.
கறுப்பண்ணன் பெருந்திருவின் பணியாள்.
பெருந்திருவைச் சார்ந்தவர்கள் என்கிற முறையில் அம்முவாம் இந்தத் தெய்வங்களையும் தன் வழிபாட்டில் சேர்த்துக்கொண்டது; அதற்கே உரித்தான வழிபாடு மோஸ்தரில்;
பாட்டனார், ஐயனாரைத் தோத்தரிக்கிறார்:
நஞ்சிருக்கும் நெஞ்சிருக்கும்
நாரியோடு பாகருக்கும்
மஞ்சிருக்கும் வண்ணநெடு மாயருக்கும்
மஞ்சன் என உற்ற ஐயனார்
அப்பன் உண்டு துணை எனக்கு
மற்றெவர்க்கும்
அஞ்சேன் மனம்.
ஒரு சமயம்.
வாளாடியில் தங்கை வீட்டுக்குப் போய்விட்டு, தாத்தா லால்குடிக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தார். இரவு வெகு நேரமாகிவிட்டது. இப்போ இரண்டு நிமிஷங்களுக்கு ஒரு முறை திருச்சி ரோடில் பஸ்கள் பறக்கின்றன. அந்த நாளில் பஸ்ஸா, மாட்டு வண்டியா, தெருவிளக்கா, ரோடா?
அமாவாசை வேறு.
எனக்கு இப்பவும் ஒரு ஏக்கம். இந்த நாளில் மையிருட்டு என்பதையே பார்க்க முடிவதில்லையே. முகத்துக்கெதிரே கையைப் பிடித்தால் கை தெரியாதாமே! மரங்களை வெட்டிச் சாய்த்துவிட்டால் நட்சத்திர வெளிச்சம் காட்டிக் கொடுத்துவிடுகிறது.
சுருக்கப் போய்விடலாம் என்று எண்ணி, படிந்த பாதையை விட்டுக் குறுக்கே எங்கோ புகுந்திருக்கிறார். அப்படி, இப்படி, இரண்டு திருப்பத்தில், வழியும் தப்பிப்போச்சு, சிறிதுநேரம் நடந்தபின் ஒரு பெரிய சப்பாத்திக்கள்ளி, வழி விடாமல் குறுக்கே நிற்கிறது. இனி செய்ய என்ன?
“பெருந்திருவே கறுப்பண்ணா!”
இந்தக் குடும்பத்தில் நாபிக்கொடி வீறல் அது ஒன்றுதான்.
ஆதிமூலமே!” யானையின் அலறல்.
"ஹே, ஹ்ருதய கமலவாஸா"அதுவரை இடுப்பில் நுனியைப் பிடித்துக்கொண்டிருந்த கைகள் தலைக்கு மேல் தூக்கிவிட்ட நேரம். அவனும் அதற்காகத்தானே காத்துக்கொண்டிருக்கிறான்! அது என்ன ருசியோ?
The Lord is my Shepherd I shall not want.
‘RUSTOM! ரஸ்டமின் வீரமுத்திரை கர்ஜனை
“பெருந்திருவே கறுப்பண்ணா!"
இந்தக் குடும்பத்தின் டங்கார த்வனியும் அதுதான்.
தூரத்தில் ஒரு வெளிச்சப் புள்ளி தோன்றிற்று. நெருங்கி வந்ததும் அந்த ஆள் கை லாந்தரை அப்பா முகத்தெதிரே பிடித்தான்.
“யாரது? இந்த நிசியில் நடுக் காட்டில்?”
தலையில் முண்டாசு, பரந்த நெற்றியில் பட்டையாக உதிரி விபூதிமேல் குறுக்கே தீட்டிய குங்குமம், குத்துமீசை குழிமேலாய். இடுப்பில் நிஜார். கையில் சாட்டை. மார்பில் சந்தன வாசனை. மேட்டுவிழிகள் பொறி பறந்தன.
“வழி தப்பிப் போச்சு அப்பா !”
"நேர் வழிவிட்டு உம்மை யார் குறுக்கே திரும்பச் சொன்னது? கள்ளர் பயம் பேச்சு நடமாடறது தெரியுமல்ல?”
“தெரியுமப்பா !”
"சரி என் பின்னாலேயே வாங்க”
நிமிஷமாக பழக்கமான பாதை வந்துவிட்டது. ஒரு பத்து கஜ தூரத்துக்கு முன்னால் 'லொடக் லொடக் இரட்டை மாட்டு வண்டி
"இனி, போவீரா? வழி தெரியுமா ?”
“தெரிஞ்சதப்பா. நீ நன்னாயிருப்பே !”
"இனி இப்படியெல்லாம் குறுக்கில் இறங்காதீங்க. உமக்கு அது தேவையில்லை!"
திருப்பத்தில் ஆள் மறைந்துவிட்டான். அவன் சென்ற திக்கிலிருந்து ஜல் ஜல் கால் சிலம்போசை, அடுத்துக் குதிரையின் குளம்புச் சத்தம்.
எட்ட எட்ட எ.ட்.ட.
தாத்தா வார்த்தைகளில், வந்த ஆளைப் பார்ப்போம்.
"தலைப்பாகும், சீறாவும் தாரும் தடம் தோள்
சிலைப் பாரமும் கைச் சமுதாடும்
நினைத்த கழற் காலன்.
நினைத்த விடம் காணக்
கறுப்பண்ணன்
எக்காலும் துணைக்கு வருங்காண்”
பிரதி இரவும் மன்னிப்பாட்டி மேற்கூறிய இரு பாக்களையும் சொல்லி எங்கள் படுக்கைக்கு இரு தெய்வங்களையும் காவல் வைத்துவிடுவாள்.
ஆனால், தாத்தா, வாளாடி வழியில் வகையாக மாட்டிக்கொண்டார் என்பது தவிர, சுபாவத்தில் பயந்தாங்கொள்ளி - இன்னொரு தினுசில்.
கொல்லைப்பக்கம் போய் வருவார்.
"ஏய்!” இது அந்தக் காலத்துத் தோரணை) காலில் என்னவோ சுருக்குன்னுது. ரெண்டு மிளகு கொண்டுவா!"
“செருப்புப் போட்டிருக்கேள். எப்படி சுருக் கென்னும்?”
“கொண்டுவான்னா கொண்டுவா! தர்க்கம் பண்ற சமயத்தைப் பாரு!” (கொண்டுவந்து கொண்டேதான் மன்னிப்பாட்டி கேட்கிறாள் பாவம். என்றுமே இடிசொல் படுவதற்கென்றே வாழ்க்கைப்பட்டவள்)
"என்னடி தித்திக்கிற மாதிரியிருக்கு, விசுவநாதஞ் செட்டியை அழைச்சுண்டு வா. காலில் விறுவிறுன்னு ஏர்ற மாதிரியிருக்கு; முழங்காலுக்கு வந்துடுத்து." கண்டசதையைக் கிள்ளிப் பார்த்துக்கொள்வார்.
செட்டி வந்து நாடியைப் பார்ப்பான். "நீங்கள் சொல்றபடியிருந்தால், இதுக்குள் என்னென்னவோ நடந்திருக்கனுமே! நாடி கல்லாட்டம் ஒடறது. பித்த நாடி தூக்கல்லே, எனக்கொண்ணும் தெரியலியே!”
"உனக்கென்னடா தெரியும்! இப்போ லசுஷ்மி இங்கிருந்தால் உன்மாதிரி மசமசப்பாளா?
"வாஸ்தவந்தான், லக்ஷமி அம்மா நாடி பிடிக் கிறதிலே வரப்ரசாதி. ஆனால் அவா இப்போ இங்கே இல்லே. நீங்க வாளாடிக்கே நடந்தே போய் அவளைப் பிடிக்கச் சொல்லிக் கேட்டுக்கலாம்."
“ஒஹோ! அதிகப்ரஸங்கம் வேறயா? விஷய சூன்ய மானாலும்!”
விசுவநாதன் செட்டியென்ன எல்லாருமே கேட்டுப் பார்கள் அந்தநாள் அப்படி.
இதற்குள் மன்னி, செருப்பில் தைத்துக்கொண் டிருந்த சப்பாத்தி முள்ளைப் பிடுங்கி, பணிவுடன் நீட்டுவாள்.
"சரி, சரி உள்ளே போ! இதென்ன சதிர்க் கூடமா ?”
மன்னி உன்னுடைய நட்சத்திரப் பதவி, தாத்தாவை விட உயர்ந்ததாய் இருக்கணும்; ஆனால் நீ அங்கு இருக்கமாட்டாய். தாத்தா காலடியில் இடம் தேடி யிருப்பாய். அங்கு போயும் உன் தலையெழுத்து அப்படி,
தாத்தாவை நினைக்கும் அதே மூச்சில் ஐயாவை நினைக்காமல் இருக்க முடியவில்லை. தாத்தாவுக்கு மூத்தவர். குணாதிசயங்களில் தாத்தாவுக்கு நேர் எதிர். பயம் என்றால் வீசை விலையென்ன?
அவரும் நள்ளிரவில் போயிருக்கிறார். சினிமாக் கொட்டகையிலிருந்து நண்பர்களுடன் திரும்பி வருகையில், பாதை குறுக்கே விழுந்து கிடந்த பழுதையை மிதித்து, அது நொடியில் காலில் நாலு சுற்று போட்டுவிட்டது. கண்ணிமைக்கும் நேரத்திலும் மின்னலில் காலைச் சுற்றியதன் பல் பதியுமுன் பிடுங்கித் தூர எறிந்துவிட்டு, விட்டுப்போன பேச்சைத் தொடர்ந்து சர்வ சகஜமாகப் பேசிச் சிரித்துக்கொண்டு வந்தாராம். கூட வந்தவர்கள் சாக்ஷி.
"ஐயாவா? ஐயோ!” - வாயைப் பொத்திக் கொள்ளத் தவிர வேறு அவர்களுக்குத் தோன்றவில்லை.
மறுநாள் அதே இடத்தில் பிடாரன் கருநாகம் பிடித்தானாம்.
எட்டடி இது வெறும் நாகம் என்று கட்சி கட்டலாம். கட்டுபவர்கள் கட்டட்டும்.
ஐயாவுக்குப் படிப்பு வாஸனையோ, எழுத்து வாஸனையோ கிடையாது. இடுப்பில் ஒரு வாழைப் பட்டைக்கத்தி எப்பவும் செருகியபடி இருக்கும். படுக்கையில்கூட பக்கத்தில் அதுதான் அவருடைய மந்திரக்கோல். தாழ்க்கோல், காவல், வேலைக்காரன். குரு எல்லாம். அவருக்குச் சொன்னபடி கேட்கும்.
அவருக்கு உற்ற வயதில் மனைவி இறந்துபோனபின் இரண்டு குழந்தைகளுடன் தாத்தாவிடம் வந்து தங்கினவர்தான். மறுவிவாகம் செய்துகொள்ளவில்லை என்பதுகூடப் பெரிதல்ல. அவர் இருந்தவரை (நீண்ட வயதும் இருந்தார்) சதா மெல்ல அலைந்து கொண் டிருக்கும் ஊர் வாய் அவர் மேல் துளி மாசு கற்பிக்க வில்லை.
கோபம் வந்துவிட்டால் வாயில் வந்தபடி பேசுவார். மெய் கூசும். தன்னிடம் நியாயம் ஒடுங்குவது தெரிந்ததும் அதட்டி எதிராளியை அடக்கிவிடுவார். கைகூட மிஞ்சிவிடுவார்.
பரோபகாரி கூழுக்குப் பாடி, கோலம் போட்டால் வழியில் போகும் பெண்டிர் ஜோலி மறந்து அதிசயித்துப் பார்த்துக்கொண்டு நிற்பர். கூடை முடைவார். ஒலைக் கூரை பின்னுவார். துடைப்பக் குச்சியிலிருந்து இழை ஈர்க்கெடுப்பார். முதல் செடி நட, தென்னங்கன்று வாழைக்கன்று வைக்க அவரை அழைப்பார்கள். கிணற்றில் சொம்பு விழுந்துவிட்டதா ? ஐயாவை அழைச்சுண்டு வா; கொல்லையில் பாம்பா? குடத்தில் பிடித்துவிடுவார். பையன்கள் அவருக்குச் சஹா. கீழத்தெரு கோடியாத்தில், சிப்பாய்க்கலகம் பார்த்த சீதாப்பாட்டியிலிருந்து, எதிர் வீட்டுப் பண்டாரி சிவராமன் தனக்குப் பிறக்கத் தவங்கிடக்கும், இன்னும் வயிற்றில் பூச்சி வைக்காத சிசுவரை எல்லாருக்கும் ஐயா.
வேண்டாத விஷயஞானம் அதிகப்படி,
ஐயா ஐம்பது தாண்டியபின் லால்குடி கோயிலில் மெய்க்காவல் வேலை கிடைத்தது. (வாட்ச்மேன்) இந்தத் திடீர் அதிர்ஷ்டத்துக்குக் காரணம் தனித்துத் தெரிய வில்லை. பலவாயிருக்கலாம். தமிழ்ப்பண்டிதர் குடும் பத்தின்மேல் இருந்த மதிப்பாயிருக்கலாம். ஒருநாள் விடாமல் ஐம்பது வருடங்களுக்கு மேல் அர்த்தஜாமம் பார்த்த குடும்பமாச்சே, தமிழ்ப்பண்டிதரிடம் படித்த பையன் தர்மகர்த்தாவாக ஆகியிருக்கலாம். ஐயா மேலேயே இரக்கமாயிருக்கலாம். அவரைக் கண்டு பயமாயுமிருக்கலாம். "டேய் நீ இன்னிக்குக் கோயில் தர்மகர்த்தா. நாலுபேர் உன்னைப் பார்க்க வரா, போறா. ஆனால் உன் அப்பன் எப்படியிருந்தான், என்ன பண்ணினான். அவன் மூடு சூளை என்னன்னு எனக்குன்னா தெரியும்!”
ஐயாவுக்கு blackmail பண்ணவேண்டும் என்கிற எண்ணம் அறவே கிடையாது. அப்படியென்றால் என்ன என்றே அறியார். ஆனால் தன் ரிஷிகோபத்தில், நாலுபேர் நடுவில் என்னத்தையாவது அவிழ்த்து விட்டால் அது நிஜமா, பொய்யா? ருசு பின்னால், மான நஷ்ட கேஸ் போட்டாலும் ஐயாவிடம் என்ன வசூலாகும் ? நடுத்திண்ணையில் என் கதி. என் கெளரவம் என்ன ஆறது? அவரோ நாக்கில் நரம் பில்லாத மனுஷன்.
மத்தியானம் பட்டைச்சாதம் நாலு - அளவு, தயிர், தாளிதம் எல்லாமே கணிசம். தவிர மாதச்சம்பளம், அது நேரே மன்னி கைக்கு வந்துவிடும் ஐயா சொன்னபடி
விசேஷ தினங்களில் உபயக்காரர்கள், வேண்டிக் கொண்டவர்கள் மண்டகப்படியில் பாயஸம், வடை, சுண்டல், சர்க்கரைப் பொங்கலில் அவர்களாகக் கொடுக்கும் பங்கு. தேங்காய்மூடி, சில்லரை, மடப்பள்ளி யிலிருந்து ஸன்னதிக்கு நைவேத்தியத்தைக் கொண்டு வந்து வைத்தால், படி உண்டு. ஐயாவின் பொடிமட்டை செலவுக்கு இடுப்பில் நிமிண்டிக்க இன்னும் என்ன வேண்டும்?
இந்தச் சம்பிரதாய செலவுகளுக்கு அபிஷேகக்காரன் பிசுகமாட்டான். பிசுகுவதால் சப்தரிஷி நாதரிடம் கஷ்டப்பட்டு சம்பாதித்த புண்ணியத்தில் குறைந்து போனால் பிறகு தான் இழைக்கும் அக்கிரமங்களுக்குப் பிராயச்சித்தம் எப்படி,
வெள்ளிக்கிழமை மாலை மட்டும் குறைந்தது நாலு சஹஸ்ரநாமம். அதற்கேற்றபடி அபிஷேகம். நைவேத் தியங்கள் நடக்கும். ஐயா கொடுத்ததை வாங்கிக்கொள்வார். சண்டை பிடிக்க மாட்டார். Don't Care.
"சமயத்துக்குக் கொடுக்கிறாளா பாருடா! நீங்கள் சேர்த்துவைத்து வீடு கட்டி வாழுங்கடா, தரித்திரப்பசங்களா !”
ஐயா வேலை பார்த்தவரை வீட்டின் ஓநாய்ப் பசி குறைந்து, பட்டினிச் சோர்வு கலைந்து, குடும்பத்துக்கே சற்று முகத்தெளிவுதான்.
தலைச் சிக்கெடுத்து, கோதி வாரி, முகம் மழித்து, பட்டை விபூதிக் குழைத்துத் தரித்து, டவாலியில் கையில் கிழங்குமாதிரி வெள்ளிப் பூண் போட்ட தடி (அர்த்தஜாமம் ஆனவுடன் தர்மகர்த்தா இரண்டையும் பிடுங்கிக்கொண்டு விடுவான்) யுடன் நிற்கையில் ஐயா களைதான்.
எல்லோரும் போனபிறகு வெளவாலுக்கும் துரிஞ் சலுக்கும், அவைகளிடும் புழுக்கைக்கும்தான் ஐயா காவல். நடராஜர் ஸன்னதிக்கெதிரே தூணடியில் துண்டை விரித்து, ஐயா காலை நீட்டிவிடுவார்.
பெருச்சாளி குடைந்து மடப்பள்ளியில் பாத்திரம் ஏதேனும் உருளும். கோயில் குளத்தினின்று குபிரென்று பாசி நாற்றம் கிளம்பும். பேரென்னவோ சிவகங்கை! நந்தவனத்தில் திடீரென்று பட்சி ஏதோ ‘க்றீச். பாம்பு பிடிச்சுடுத்தா?
ஆனால் இந்த மெய்க்காவல், முதல் ஜாமத்திலேயே மூணாம் ஜாமத்தின் அயர்ந்த குறட்டையில் நடக்கிறது.
ஆமாம்; மெய்யாகவே காவல் காக்க என்ன இருக்கிறது? நடராஜாவின் பஞ்சகச்சத்தை எவனாவது உருவிக்கொண்டு போக வரப்போறானா? விக்ரகத் திருட்டு இன்னும் Fashionஇல் வரவில்லை. திருடனே அதுபற்றி இன்னும் நினைக்கக்கூட ஆரம்பிக்கவில்லை. களவு, தனிக்கலையாக, அதன் அந்தஸ்துக்கு வரவில்லை.
ஒருநாள், ஐயா காவல் முடித்து, காலை வீடு திரும்ப வில்லை. ஆனால் அதுபற்றிக் கவலைப்படுவதற்கில்லை.
பல் குச்சியை வாயில் மாட்டிக்கொண்டு எங்கானும் போயிருப்பார்.
எவனேனும் கடலைக்காய் கொல்லைக்காரன், வேர்க்கடலை தருவதாகச் சொல்லியிருக்கலாம்.
அல்லது வாழைத்தோட்டக்காரன் தார் தருவதாகச் சொல்லியிருப்பான்.
கரும்பு ஆலையில் சக்கரம் சுற்றினால் வெல்லக் கட்டி கிடைக்கும். ஐயாவுக்கு வெல்லம் என்றால் உயிர்.
ஆனால் இந்த வீட்டில் எவ்வளவு வந்தால் என்ன? ஆடு அப்போ, மாடு மத்தியானம்.
எச்சுமிப் பாட்டிக்கு மட்டும் இருப்புக் கொள்ள வில்லை. 'ஐயா ஏன் வரவில்லை ? எனக்கென்னவோ பண்றதே! என்று அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு கூடத்துக்கும் தெருவுக்குமாக அலைந்தாள்.
வாசல் திண்ணையில் தாத்தா, வழக்கம்போல் பாட்டு நோட்டில் மூழ்கியிருந்தார்.
"ஐயா வராண்டா!"
ஐயா தனியாக வரவில்லை. குடிகாரன்மாதிரி அவர் தள்ளாடி இரண்டுபேர் பிடித்துக்கொண்டு வந்து கூடத்தில் விட்டதும், தடாரென்று தரையில் சாய்ந்தார். தொட்டுப் பார்த்தால் ஜ"ரம் மழுவாய்க் காய்ந்தது.
“பெருந்திரு ஸன்னதிக்குப் போற வழியிலே நெனப்பில்லாமல் கிடந்தார்"
"ராமசாமி! ஐயாவுக்கு நாடி விழுந்துடுத்தடா !”
அத்தைப்பாட்டியின் அபயக்குரல் கேட்டு அப்பா அதான் தாத்தா திண்ணையிலிருந்து ஒடிவந்தார். அதுவரை ஐயா வந்ததுகூட அவருக்குத் தெரியாது. பாட்டு நோட்டில் அவ்வளவு ஆழ்ந்திருந்தார்.
அத்தை, ஐயாவைத் தோளில் சார்த்திக் கொண்டாள். ஐயாவுக்குக் கண்கள் செருகின.
"ஐயா என்ன ஆச்சு?”
ஐயாவுக்குத் தொண்டை ஒரே அடியாய்க் கம்மிப் போச்சு, அவர் வாய்க்குச் செவி வைத்துக் கேட்டால் ஏதோ பதினைந்தாயிரம் வருடங்களுக்கு முன்னால், பதினெட்டாயிரம் மைல்களுக்கப்பாலிருந்து ஒரு குரல் தீனமாக வந்தது.
“பெருந்திரு சன்னிதானம் வாசற்படியில் படுத்திருந் தேனா, வெடுக்குனு முழிப்பு வந்தது. உள்ளூர ஏதோ உஷார் சிலிர்ப்பில் வர முழிப்பு எதிரே யாரோ நிக்கறா. உடம்பில் அத்தனை உறுப்புகளும் விழிச்சுண்டு பதறி எழுந்து உட்கார்ந்தேன். யார் இது? எப்படி வந்தாள்? அகல் சுடரில் உருவம் தெரிஞ்சது.
சிவப்புப் பட்டுப் பாவாடை. மேலே பச்சைப் பட்டுத் தாவணி. தோளில் பச்சைக்கிளி.”
தாத்தா கை, வாய் பொத்திக்கொண்டது. "நேத்தைய கடைசி அலங்காரம், ஜவுளிக்கடை ஜம்புநாதன் செட்டியின் அபிஷேகம்!"
"மூக்குத்தி என்கிற பேரிலே சின்னதும் பெரியதுமா ரெண்டு நட்சத்திரங்கள் ஜ்வலிக்கிறதுகள். அந்தக் கண்களின் ஒளி."ஐயா கண்களைப் பொத்திக்கொண்டு விலங்குபோல் தலையை உதறிக்கொண்டார்.
கடல் இருட்டின்மேல் மணிக்கூண்டு கதிர்ப் பாய்ச்சல் –
லால்குடி சுற்று வட்டாரத்தைத் தாண்டாத ஐயா, மணிக்கூண்டையும் கடலையும் எங்கு பார்த்தார்? எப்போ பார்த்தார்? முதலில் இந்த பாஷையே ஐயா வுடையது இல்லை.
"கண்களின் ஒளி வீச்சின் கூசல் அதன் பின்னால் அந்த முகத்தைச் சரியாகப் பார்க்கவிடலே. முகம் கோட் டுக்குள் அடைச்ச நிழலாப் போச்சு. ஆனால் அந்தக் குறுஞ்சிரிப்புக்கூடவா ஒளி வீசும்? இடுப்பில் ஒரு கை, மறு கையில் சாட்டைபோல் பின்னலைச் சுழட்டிண்டு."
"நான் திகிலாயிட்டேன். இருக்கிற தைரியத்தை, மனசை ஒண்ணு கூட்டிண்டு கண்ணை இறுக மூடிண்டு “யாருடி நீ? இங்கே எப்படி வந்தே? பெருந்திரு மேல் ஆணையா சொல்றேன் இங்கேயிருந்து ஒடிப்போ !”
"கடகடன்னு சிரிக்கிற சத்தம் கேட்டது. ஒடிப்போற கொலுசின் ஓசை கர்ப்பக்ருஹத்துள் ஒடி மறைஞ் சுடுத்து. அப்புறம் என்ன ஆச்சு தெரியாது."
தலை தொங்கிப்போச்சு. தாத்தா ஐயாவைக் கட்டிண்டு, விக்கி விக்கி அழுதார்.
"ஐயா, குடி கெடுத்தையேடா! ஆயுசுக்கும் நான் என் பாட்டு நோட்டைக் கட்டிண்டு என்னத்தைக் கண்டேன்? யாருக்குமே கிட்டாத பாக்கியம் உனக்குக் கிட்டியும், எட்டி உதைச்சுட்டே. இனிமேல் இந்தக் குடும்பத்துக்கு விமோசனம் உண்டோ?”
ஐயா படுக்கையை விட்டு எழுந்திருக்க மாதம் சென்றது. பிறகு அவர் வேலைக்குத் திரும்பவில்லை. திரும்பவும் பழையபடி பழைய ஐயாதான். வீட்டில் வெல்லப்பானையைத் தூக்கிண்டு ஓடிண்டு, மாற்றான் கொல்லையைக் கொள்ளை அடிச்சுண்டு, அடிச்சதைப் பசங்களுடன் பங்கிட்டுண்டு, திரும்பவும் வெறுங்கையை வீசிண்டு, சிரிச்சுண்டு, சீறிண்டு, வெகுளியா, எல்லோ ருக்கும் வேண்டியவராய், தனக்கு உதவாக்கரையாய் - தன் வேளை வந்து சாகிறவரை அப்படியே.
'எனக்கு - என்னுடையது' எனும் தனிச் சொந்தங் களிலிருந்து விடுபட்டு, அதனாலேயே எல்லாமே தனக்குச் சொந்தமாகி, பொறுப்பற்ற, கவலையற்ற அதுபோன்ற வாழ்க்கை கிட்டல் அரிது. பொறாமைக்கு உரியது.
ஞானசித்தி இலாது, கெளட்பீனத்தோடு மட்டும், தரிசன சித்தி.
--------------------------------------
அத்தியாயம் 6
என் பிள்ளைப் பருவத்தினிலே கிராமத்தில், பந்தி போஜனத்தின்போது ஒரு பழக்கம் உண்டு. பாயசம் தாண்டி மோருக்குமுன், வீட்டு எஜமான், “ஏ நாணு, ஒரு சுலோகம் பாடேன்! ஏய், எல்லோரும் கொஞ்சம் சத்தம் போடாமே இருங்கோ, நாணு சுலோகம் பாடப் போறான் - ஊம் - ஆரம்பிக்கட்டும் - யாரங்கே? பாயசம் இன்னொருதரம் பந்தி பூரா விசாரியுங்கோ."
அவ்வளவுதான். தொண்டையைக் கனைத்துக் கொண்டு,
“மாதா ராமோ மத்பிதா ராமச்சந்த்ரா ப்ராதா ராமோ.
நாணு பிடித்தாரானால், அன்று சாரீரமும் ‘வபையாக வாய்த்துக்கொண்டு, ராகமாலிகையில் இறங்கிவிட்டாரானால், மோருஞ்சாதத்துக்குக் கை காய்ந்து கொண்டேயிருக்க வேண்டியதுதான். தாம் பாளத்தில் சாதத்தின் மேல் ஈ அப்பும். யாரும் ஒண்ணும் செய்ய முடியாது. அந்த ஸ்லோகம் முடிந்தவுடன், "மாணிக்க வீணா முபலாலயந் தீம். நாணு இன்னொரு சுலோகத்துக்குத் தாவிவிடுவார். மோருஞ்சாதம் வேண்டாம் என்று யாரும் பந்தியை விட்டு எழுந்து செல்ல முடியாது. அந்த மாதிரி அநாகரிகத்தை யாரும் நினைக்கவே முடியாது. உடனே தேவாரம், தோடுடைய செவியன். அடுத்து, துள்ளுமத வேள்கைக் கணை யாலே' - விளாசு விளாசு என்று விளாசித் தள்ளி விடுவார். ஆடச்சொல்லி அஞ்சு பணம், ஒயச் சொல்லி ஒன்பது பணம் - ஆனால் ஒயச்சொல்ல யாருக்கேனும் தைரியமுண்டா? நாணு அவருடைய கொத்தவரைக் காய்ப் பின்னல் பிராயத்தில், காஞ்சீபுரம் நயினாப் பிள்ளையிடம் மூணுமாதம் குருகுல வாசம். அதற்குள் பாடம் வராது என்று அனுப்பிவிட்டாரா, அல்லது ஆகாத விஷமம் செய்தான் என்று அடித்துத் துரத்தி விட்டாரா? நாணுவுக்கே மறந்துவிடும் நாளாகிவிட்டது. ஆனால் தான் நயினாப்பிள்ளை சிஷ்யன் என்று முத்திரை குத்திக்கொள்வதற்கு மூணு மாதம் போதாதா! நாணு யாருக்கேனும் தம்பூரா மீட்டக்கூட மேடை யேறினதாக எனக்கு நினைவில்லை. அவருடைய வித்தை, வித்வத், அனுபவம் எல்லாம் பந்தியில் ஸ்லோகம் பாடுவதோடு சரி.
பந்தியில் ஸ்லோகம் பாடுவது, விடிவேளையில் வாசலில் சாணம் கரைத்துத் தெளிப்பது, சாப்பிட்ட இடத்தைச் சாணமிட்டு எச்சில் மெழுகுவது - வீட்டில் டேபிள் மீல்ஸ் வந்தபிறகு - இரவு படுத்துத் தூங்கிய இடத்தை மறுநாள் ஈரத்துணியால் துடைப்பது இதெல்லாம் என் பிள்ளைக்கு அடுத்த தலைமுறைக்கு நம் கலாச்சாரம் என்பது அறவே மறந்து, தகவல்ரீதியில் ஒரு சங்கதி. சிரிப்புக்குரிய சங்கதி (The Savages) யானால் ஆச்சரியமில்லை.
சரி, இது, இங்கே, இப்போ எதற்கு? விஷயத்துக்கு வருகிறேன்.
சென்ற பக்கங்களில் என் குடும்பத்தைப் பற்றியே இருப்பதால், சுய தம்பட்டத்தின் இரைச்சல் படிப் பவர்க்குச் சற்று அடங்க வேண்டாமா ? வீட்டுக் குள்ளேயே எத்தனை நாழிகை அடைந்திருப்பது! ஏற்கெனவே நான் என் எழுத்தில் குடும்பத்தை விட்டு வெளிவருவதில்லை எனும் புகாருக்கு ஆளாகியிருக் கிறேன். தெருவுக்கு வந்து சற்றுக் காற்று வாங்குவோமே! பாயசத்துக்கும் மோருஞ்சாதத்துக்குமிடையே ஸ்லோகம் லேசான intervat தெருவில் நின்று உங்கள் கைகளை மோருஞ் சாதத்துக்குக் காயவைக்கப் போகிறேன். திஜர. சொன்னது நினைவுக்கு வருகிறது.
"கதையாம், கட்டுரையாம், சரித்திரமாம்! கதை என்னடா கதை ஒருமுறை திறந்த கண்ணோடு உன் வீட்டுத் தெருவில் நடந்துவிட்டு வா. கதைக்கோ, கட்டுரைக்கோ விஷயம் கிடைச்சாச்சு! ஊர்வலம், கறுப்புக்கொடி, சட்டத்தின் தடை, எதிர்ப்பு, லத்தி சார்ஜ், துப்பாக்கிச் சூடு இவையெல்லாம் தெருவில் நடக்கும் சரித்திரமன்றி வேறு என்ன?” திஐர. பெரிய ஆள். எவ்வளவு உண்மையான வார்த்தை! கதைக்குரிய இலக்கணம் அத்தனையும் அவருக்கு அற்றுப்படி. வகுப்பு நடத்தமாட்டார். அவர் சொல்ல வந்தது யாதெனில், கதைக்குக் கரு, பார்க்கும் கண்ணுக்கு எப்பவும் காலிலேயே இடறக் காத்திருக்கிறது.
கட்டுரையின் உருவம் வேறு தவிர விஷயமும் அதே விதம்தான். கத்தரிக்காய்ப் பாவாடை (முதலில் அது பாவாடையா, அந்தக்காலத்து BA குடுமி மாதிரி அப்பளக்குடுமி நடுவில் ஆணிக் குடுமியா ? BA குடுமி என்றால் தெரியுமா? கல்லூரி மாணவன் ஆசாரம் கெடாமல் வைத்துக்கொண்டிருக்கும் அப்பளக் குடுமி நடுவில், குருவி வால்போல் இன்னொரு சின்னக் குடுமி நீள மயிருடன் வளர்ப்பான். நள்ளிரவில் எழுந்து படிக்கும்போது தூக்கம் வரும் அல்லவா? சுவரில் ஆணியில் கயிறு நுனியைக் கட்டி, மறு நுனியை, நடுக்குடுமியின் குஞ்சத்தோடு கட்டிக்கொண்டால், தூக்கத்தில் சாமி ஆடும்போது அவ்வப்போது கயிறு இழுத்து, விழிப்பைக் கொடுத்து பரீட்சைக்குப் படிப்பைக் காப்பாற்றும்) - கத்தரிக்காய்க் காம்பில் ஆரம்பித்து இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லைத் தகராறில் கொண்டுபோய் முடிக்கலாம். இது சாக்கில் கேட்கிறேன் அல்லது கேட்டுக்கொள்கிறேன். எட்டு மாமாங்கம் காத்திருந்தாலும், இந்தப் பிரச்சினை உண்மையில் தீரப்போகிறதோ? இந்தப் பூனையும் இந்தப் பாலைக் குடிக்குமா? (அல்லது குடித்ததா என்று சொல்ல வேணுமா?) என்று டிராகன் தன் மேல் உதட்டைப் பிளந்த நாக்கால், நக்கிக்கொண்டிருக்க, குழந்தை, கனவில் அம்மாப்பால் நினைப்பில் நாக்குச் சப்புக்கொட்டுவது போல, பாரதம், குரங்கு நியாயத்தின் தர்பாரைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டியது தானா? கட்டுரையின் போக்குக்கு இதையே ஒருமாதிரி யாக எடுத்துக்கொள்ளலாம் என்று நான் நினைத்துக் கொள்ளட்டுமா? தவிர என் கொள்ளுப்பேரனுக்குச் சிரிக்க, இது சாக்கில் BA குடுமித் தகவல் கிடைச்சுப் போச்சு. “Savages! அவன் இன்னும் பிறக்கவில்லை. ஆனால் அவன் குரல் கேட்கிறது.
குடிகாரனின் தள்ளாட்டம் போல் கால்போன வழிதான் தன்வழி என்பதுதான் கட்டுரை வழி என்று முடிவு அல்ல.
மனச்சாட்சி, ஆணித்தரம், தராசின் நிர்த்தா கூடிண்யம், விஷய வெளியீட்டில் பொன் எடை போன்ற சொல் செட்டு, அதேசமயத்தில் சரளம், நையாண்டி - இப்படியும் கட்டுரைகள் உண்டு. தி.ஜரவின் பேனா விலிருந்து புறப்பட்டவையே இந்த இலக்கணங்களுக்கு சாகூஜி. வரலாறு - இது ஒரு வம்பு சமாச்சாரம். சர்வ ஜாக்கிரதையாக, சிரத்தையாகச் சேகரித்துக் கொடுத் திருப்போம். வம்சங்கள் கழிந்து ஒரு காலநேமி தோன்று வான். "இந்த ராமாமிருதம் என்னவென்று நினைத்துச் சரடு விட்டிருக்கிறான்? தமிழ்ப்பண்டிதர் ராமசாமி அய்யரை எங்கள் குடும்பத்துக்குத் தெரியாதா? என் தாத்தாவுக்குத் தாத்தா மாப்பிள்ளை வாத்தியாரிடம் படித்தவர்தானே ?” என்று Capsule ஐத் திறக்கும் முயற்சியில் இறங்கிவிடுவார். உடனே சாகூS, ஸம்மன்ஸ், சவப்பெட்டி திறத்தல், எலும்புக்கூடு ஆராய்ச்சி (ஆமாம்- இல்லை - ஆமாம் வில்வலன் வாதாபி Trick, ‘வாதாபி ஜீர்ணாபி என்று வயிற்றைத் தடவி செரித்துக்கொள்ளுமளவுக்கு நான் அகத்தியனா?) உருவேற்றத்தால் பொய்யே மெய் போலும்மே மெய் போலும்மே. மெய்யே பொய் போலும்மே பொய் போலும் மே. கடைசியில் பொய்யும் மெய்யும் சமுதாயத்தின் Fashionஐச் சேர்ந்தது. வரலாற்றில் இந்தக் கிலிகள் எல்லாம் உண்டு. வரலாறு ஒரு "பேஜாரு, சிலம்பில் சிறு பிழை என்று ராஜபாளையத்திலிருந்து விமர்சனப் புத்தகம் வெளிவந்திருக்கிறது. இளங்கோவடிகளுக்கு இடப்பொட்டில் லேசாகத் தலைவலி.
அடுத்தது உரத்த சிந்தனை. எழுத்தில் இதுபோல் ஒரு வெளியீடு, அதற்கேற்ற நடை-இப்போது ஸ்திரமும் ஆகிவிட்டது. அடிப்படையில் இது என் பேத்தி அபிதாவின் தனி உலகம். கூடத்தில் நாற்காலியெதிரில் படுத்து உருண்டவண்ணம் அவள் தனக்கே பேசிக் கொள்ள ஆரம்பித்துவிட்டால் அந்த நாற்காலியே ---
ஒருசமயம் T.V.
ஒருசமயம் அப்பாவின் ஆபீஸ்,
ஒருசமயம் Gas அடுப்பு.
ஒருசமயம் ராஜராஜேச்வரி அம்மன் கோயில் கோபுரம்.
ஒருசமயம் அவள் பள்ளியின் பின், விளையாட்டு மைதானம்.
அந்த உலகத்துள் வெளி ஆளுக்கு உரிமை கிடை யாது. ஆனால் அவள் உரக்கப் பேசிக்கொள்வதால், அனுமதியில்லாமல் நானாக நுழைகிறேன். அலிபாபா குகைக்குள் அந்தந்த ஆவாஹனத்துக்கேற்றபடி அவள் உரக்கப் பேசிக்கொள்வதால், கேட்டவர்களுக்குக் கற்பனை. ஆனால் அவளைப் பொறுத்தவரை அவள் காணும் உலகம் அவளுக்கு, அவள் எண்ணத்தின் தீவிரத்தில், அவளைச் சூழும் உலகத்தினும் உண்மை பழம்வெள்ளத்தை அடித்துச்செல்லும் புதுவெள்ளம். ஆழத்தில் காலைச் சுற்றிக்கொள்ளும் பவழக் கொடி. இதன் அணைப்பு பெரிது. நனவோடை (Stream of consciousness) aiv6avsT6) ஸ்லாவதர் டாலியின் Surrealism. நான் எனக்காகவே எழுதிக்கொள்கிறேன்’ எனும் வீறாப்பு. இடைக்கோடுகளின் அழிப்பு போகாத ஊருக்கு ஆகாத வழி - இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். அது தான் சொல்லிக்கொண்டே போகிறேனே, அத்தனையும் உரத்த சிந்தனை உத்தியுள் அடங்கும்.
எந்த உத்தியை எழுத்தாளன் கையாண்டாலும் சரி, அத்தோடு இணைந்து அதேசமயம் அதைத் தன்னோடு பிணைக்கும் கட்டுப்பாடு, பொறுப்பு, உழைப்பு (discipline) அவன் பாஷைக்கு அத்தியாவசியம். A method in madness. மரத்தை மறைத்தது மாமத யானை; மரத்தில் மறைந்தது மாமத யானை, அபிதா, நாற் காலியில் மாற்றி மாற்றிப் பார்க்கும் உருவங்கள் அவள் எண்ணத்தின் ஆக்க சக்தியில் அவளுக்கு முற்றும் பொருந்தும். அந்த உலகம் அதன் ஆக்க முறையில் ஸ்ருதி சுத்தமானது. அந்த ஸ்ருதி சுத்தம்தான் எல்லாமே. அபிதாவுக்கு அது சுலபம். பிடிவாதங்களும் அவ நம்பிக்கைகளும் கேலியும் நாளடைவில் ஏறி ஏறி முற்றிப் போன நமக்குக் கடினம். சாத்தியமே இல்லையென்று கூடச் சொல்வேன்.
கற்பனை காட்டாறாக ஒடுகிறது என்று சொல்லி விடலாம். ஆனால் காட்டாறும் கரைக்குள்தான் ஒடுகிறது. ஒருசமயம் கரை விரியலாம். உடையலாம். ஆனால் எதுவும் விளிம்பு மீற முடியாது. புதுக் கரைகள். மேடு பள்ளமாகும். பள்ளம் மேடாகும். அவ்வளவுதான். சமுதாயம் தன் இஷ்டத்துக்கு அமைத்துக்கொண் டிருக்கும் ஒழுங்குபாடு வேறு. இயற்கையின் நிரவல்வழி வேறு. பரஸ்பர ஈர்ப்புசக்தியில் காலம் காலம் கற்பாந்த காலமாக அந்தரத்தில் தாம் தனித்தனியாக இயங்கிக் கொண்டு சில கிரகங்கள் மற்ற கிரகங்களைச் சுற்றி வருவதுமே இந்த ஸ்ருதி சுத்தத்துக்குச் சான்று. ஒரு துளி அபஸ்வரம் அடித்தாலும் கவிழ்ந்து மோதி இந்த ஸ்ருதியில் இதுபற்றி உரக்கச் சிந்தனை புரிந்துகொண் டிருப்பதற்கு நாம் இருக்கமாட்டோம். The music of the spheres...
…..என்றவுடனே, நெடுநாட்களுக்கு முன் - எனக்குப் பதினைந்து வயது இருக்குமோ என்னவோ - ஒரு ஸங்கீத மையம் ஞாபகத்துக்கு வருகிறது.
மஹாராஜபுரம் விசுவனாத அய்யர் ஸபாவில் ஏதோ ஒரு ராகத்தை விஸ் தாரமாக ஆலாபனை பண்ணிக்கொண்டிருக்கிறார். முன்னணியில் வித்வான் களிலேயே பெரிய புள்ளிகள் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு விழிக்கிறார்கள். ராகம் அவர்களுக்கே பிடிபடவில்லை என்றால் நாங்கள் பாமர மக்கள், அதிலும் நான் அரை டிக்கெட் எந்த மூலை? ஆனால் நாதப்பிழம்பு சபையோரைத் தன் பாகில் கட்டி, இன்னும் புறப்பட்டுக் கொண்டே யிருக்கிறது. பிடில்காரர் ஜாக்கிரதையாக, பாடகர் காட்டும் வழியே நூல் பிடித்துக்கொண்டு வருகிறார்.
திடீரென்று டைகர் வரதாச்சார்யார் எழுந்தார். சபையென்று கூடப் பாராமல் மேடைக்கு வந்து பாடகரைக் கட்டிக்கொண்டு, "அடே விசுவநாதா! தேவமனோகரியை இவ்வளவு விஸ்தாரமாக ஆலா பனை பண்ணி இன்னிக்குத்தான் கேக்கறேண்டா !”
பாராட்டுபவர் தியாகய்யர்வாளின் நேர் சிஷ்ய பரம்பரை பாடுபவர் வர ப்ரஸாதி. மனோதர்மத்துக்கு மறுபெயர் மஹாராஜபுரம். தவிர அழகன். ஸ்பா ரஞ்சிதன். வெளித்தோற்றம், உண்மையான சரக்கு இரண்டும் சேர்ந்துதான் ஒரு குறிப்பிட்ட effect முக்கிய மாக சங்கீதத்தில் விளைகின்றது. சம்பவத்துக்கு என் சாயம் அளவுமீறி ஏறுமுன் நிறுத்திக்கொள்கிறேன்.
இங்கு நான் உறுத்திச் சொல்ல முயல்வது யாதெனில், தேவமனோகரி ஆலாபனை பழக்கத்தில் வராததால் அதற்குரிய ஆரோஹண அவரோஹண ஸவரங்கள், இயக்கவரம்புகள் இல்லாமல் போய்விடுமா? அஃதில்லாமல், அதன் விதிப்பயனாய், அதை அடை யாளம் கண்டு கொள்ளல் இயலுமா? பிரண்டால் பூகம்பம் அல்லது வேறு ராகம் தேவமனோகரி இல்லை.
அதேபோல், எழுத்துக்கும் ஸ்வரம் உண்டு. அனு ஸ்வரங்கள் உண்டு. கால ப்ரமாணம் உண்டு. லயமுண்டு. மோன ஸ்வரங்கள் வேறுண்டு. எழுத்தை நான் பயிலும் விதத்தில் இது என் அனுபவம். அனுபவம் காரணமாக அனுமானம்.
ஸங்கீதம், சிற்பம், ஒவியம், பரதம், எழுத்து, சிந்தனை (ஆம்; சிந்தனைகூடத்தான்) இத்யாதிகள் ஒட்டுக் கலைகள்தாம். சூரிய ஒளி விசிறி விரிந்த VIBGYOR.
இன்று, தேவமனோகரி என்ன, புதுப்புது ராகங்கள், வாயில் நுழையாத பெயர்களுடன் பழக்கத்திலேயே இருக்கின்றன. நன்றாயுமிருக்கின்றன. இல்லையென்று யார் சொல்லுவார்?
ஆனால், அந்த நாளில் இந்த தேவமனோகரி சம்பவம் எங்களுக்குப் பெரிசு.
விழிகளில் பாஷ்பம் பெருக, "அடே விசுவநாதா !”
அப்புறம் அவரிடமே பலமுறை தேவமனோகரி கேட்டிருக்கிறோம். ஆனால் அந்தத் தருணம் கிடைக்குமா? அதுவே எனக்கு இன்னும் நெஞ்சில் மணிக்கூண்டு. என் எழுத்தை ஏற்றுக்கொள்பவர் ஏற்றுக் கொள்ளட்டும். அன்று தேவமனோகரி கேட்டேன். தேவமனோகரி உண்டு. அதனால் நானும் ஒரு ராகம். நான் எனும் ராகத்தின் வெளியீடுதான் என் எழுத்து.
"அடே விசுவநாதா !”
தருணம்.
இந்த வார்த்தை தலைகாட்டிவிட்டது. தருணத்தைப் பற்றித் தனி அத்தியாயத்துக்கே விஷயம் இருக்கிறது. வாழ்க்கையில் தருணங்கள் சேர்ந்துகொண்டேயிருக் கின்றன. அவற்றை வார்த்தைகளில் பிடிப்பது அதன் தனி ஸாகஸம், த்ரில் - அதை இப்போது எடுத்துக் கொண்டால் பாதை மாறிவிடும். மறுபடியும் வேளையும் இடமும் கொடுக்கையில் சொல்கிறேன்.
கதை, கட்டுரை, வரலாறு, கவிதை, உரத்தசிந்தனை, இவை தாண்டி, எழுத்தில் - ஏன், பரிசோதனையில் இன்னொரு கட்டம் இருக்கிறது. அதை நான் அடைந்து விட்டதாகச் சொல்லிக்கொள்ளவில்லை. ஆனால் இருக் கிறது. அதன் சாயலை உள் பிரக்ஞையில் தூரதிருஷ்டி யாக உணர்கையில்…….
பாஷை எவ்வளவோ முன்னேறியிருக்கிறது. ஆனால் பற்றாத இடங்கள் வேணது உண்டு. இது சமயங்களுக்குத் தனி பாஷையே வேணும் என்பது என் கருத்து. போதாததற்கு எனக்கு ஏற்கெனவே தமிழ் போதாது. நான் தமிழ்ப்பண்டிதர் பேரன். ஆனால் நான் தமிழ் படித்தவன் அல்லன். என்னைச் சுற்றியிருக்கும் நவயுக இளம் எழுத்தாளர் சிலருக்கு இருக்கும் தமிழ்ப் பாண்டித்யம் எனக்கு பிரமிப்பாயிருக்கிறது.
நான் குறிக்கும் நிலையை ஒரளவு உணர்த்த ஆங்கில வார்த்தைகள்தான் சிரத்தையாக இப்போது தோன்றுகின்றன. Legend, fable, parable, விஷயமும், சொல்லும் விதமும் ஒன்றாகி, அதன் தாய்மையில் தோய்ந்துபோய்,
அதன் பூனூாலை அறுத்துக்கொண்டு,
மானுடம் எனும் பண்பில் மூழ்கி
ஜீராவில் ஊறி ஊறி நைந்து
போன ஜாங்கிரி போல்
உத்திகள் இற்றுப்போய்
நிபந்தனைகளிலிருந்து விடுதலை அடைந்து
எழுதினவன் எழுதினதில் மறைந்துபோய்
இது இன்னும் முற்றுப்பெறாத வாக்கியம்தான்.
ஏனெனில் இது என்றும் முற்றுப்பெறாத எண்ணம்.
இந்த ஆசை ஒரு பேராசை, பேராசை என்பதனா லேயே ஒருவேளை, துராசைகூட.
இதில் ஒரு அமானுஷ்யம், நேரில் பார்த்தாலும், அல்ல - நிரூபணங்கள் இருந்தாலும், நம்பமுடியாத தன்மை இருக்கிறது.
இந்த சாதனா வீரர்களில் --
சங்கரர், பாரதி, பரமஹம்ஸர், விவேகானந்தர், காந்தி. பாரதி வாழ்ந்துகொண்டிருந்த சமயத்திலேயே இவன்போல் ஒரு பிறப்பு உண்டா எனும் அதிசயிப்பில் இதிஹாச உலகில் புகுந்துவிடுகிறார்கள். நாட்டின் முதுகெலும்பாய் மாறிவிடுகிறார்கள்.
சுந்தரகாண்டம் கேட்கிறோம், அல்லது படிக் கிறோம். வால்மீகியையா நிமிஷத்துக்கு நிமிஷம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்? நாம் வேண்டுவது அனுமத் பலம். பெருந்திருவை தரிசிக்கிறேன். ஸ்தபதியை நினைக்கிறேனா? எழுத்து பாராயணத் தோடு கலந்துவிடல் வேண்டும்.
இதில் விசுவப் பிரேமையிருக்கிறது. "என் அஸ்தியை வயல்களில் தூவிவிடுங்கள்"-நேரு)
இதில் ஒரு ஸ்வாயாகாரம் இருக்கிறது. பிரளய காலத்தில் சிவனின் புன்னகை இதில் அரும்பு கட்டுகிறது.
பூமியின் மண்ணோடு, ஜீவனுக்கு எருவாகிவிடும் எழுத்து.
தியானத்தின் மூலம் சமாதி நிலை சாத்தியமானால்,
எழுத்து மூலம் - சொல்ல அஞ்சுகிறது - அநாம தேயத்தின் ஸர்வாகாரம்.
Legend, fable, parable.
பதவி கிடைக்குமா? கிடைத்துவிட்டாலும் ஏதோ விபத்தில் அது நியாயமில்லை என்றுகூடத் தோன்று கிறது. ஆனாலும் கிடைக்குமா?
எப்பவோ ஒரு நண்பர் சொன்னது:
குண்டலினி சக்தியின் விழிப்பு எல்லாருக்கும் உண்டு. யோகம் பயிலாவிடினும், நினைவு பூர்வமாக உணர்ந்தாலும் உணர முடியாவிட்டாலும், ஒருமுறை நிச்சயம் உண்டு. விழிப்பின் நேரமும், சமயமும் முன் அறியற்பாலதன்று. மெதுவாகச் சுருள் கழன்று, மூலாதாரத்தினின்று ஸர்ப்பம் முதுகின் நரம்புத்தண்டின் மேல் ஏறத் துவங்குகிறது. ஒரு தூரம் ஏறியபிறகு - எம்மட்டு என்று யாரே அறிவார் ? அல்லது ஏறுவதற்கு முன்னரேயோ. அதையும் யாரே அறிவார்? ஒருமுறை தன்னைச் சுற்றிப் பார்க்குமாம். அந்த நோக்கமும் என்ன ? அதற்குத்தான் தெரியும். இந்த ஸர்ப்பமே உள்ளதா? அல்லது உருவகமா? இதுவே தனி ஆராய்ச்சி. இருள், உறை கழன்று உள் ஒளியின் புறப்பாடை இம்முறையில் ஏற்றுத்_கொண்டோமானால் அது விழிப்பின் முதல் சுற்றுப். பார்வையின் விளைவாகத் தான். மனிதன் தன் பிறவியின் அவதார நேர்த்தியை (genius) அடையாளம். கண்டுகொள்கிறான். இதன் நேர்பலன், அந்தந்த மனப்பான்மைக்கேற்ப ஒவியமோ, காவியமோ, ஸங்கீதமோ, சிந்தனையோ இத்யாதி கலை ஈடுபாடு உண்டாகிறதாம்.
ஆனால் இதுவே தன்னைத் தேடலின் மிகமிக அரிச்சுவடி நிலை. ஸத்தியத்தின் சொர்க்க வாசற்கதவு மணிகளின் கிண்கிணி. கதவுகள் இன்னும் திறக்கக்கூட இல்லை. கடக்க வேண்டிய பிராகாரங்கள் உள்ளே எத்தனையோ இருக்கின்றன. அவைகளுக்கு அப்பால் ஸன்னதி, அந்த ஒளிதான் சொர்க்கவாசல் வரை எட்டியிருக்கிறது. அதற்கு இங்கேயே தங்கப் படிக்கட்டில் நெற்றி பொருத்தி இந்தப் பிறவியின் முதல் அஞ்சலி.
ஜீவனின் முத்துக் குளிப்புக்கு உறுதென்பாக, அருளப்பட்ட வரப்பிரசாதமாக, அடைந்திருக்கும் ஆற்றலே எடை காண்பவனின் விழுக்காடு. பாலை வனத்து மணலில் உச்சி வெயிலில் விழுந்துவிட்ட வைரக்கல்லைத் தேடுவது போல்தான். நடப்பது யாதெனில், லோகாயதமான வசதிகளைப் பெறுவதற் காக விழிப்பு தந்த வித்தையைக் களங்கம் பண்ணிக் கொண்டு பயன்படுத்துகையில் அல்லது விழிப்பு வந்தும் கவனம் வேறு மாறாட்டங்களில் வழி தப்பிவிடுகையில், ஸர்ப்பம் தடாலென்று விழுந்து பழைய மயக்க நிலையில் ஆழ்ந்துவிடுகிறோம். அப்புறம் என்ன? அரைத்த மாவையே அரைத்துக்கொண்டு, அகப்பட் டதைச் சுருட்டுடா ஆண்டியப்பாவென்று - பின்னரும் அதே மாவை அரைத்துக்கொண்டு, நாளடைவில் அடைந்த வரமும் (gift) தேய்ந்து கட்டில் காலைப் போலப் பஞ்சபாண்டவர் என்று எழுதிக் காண்பித்த கதைதான். அநேகமாய் எல்லாரும் பின் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?
மனச்சாட்சி பணயமானதற்குச் சந்தர்ப்ப சூழ்ச்சி மேல் பழி சுமத்தியாகிறது. அல்லது ஊருக்கு இளைத் தவன் பிள்ளையார் கோயிலாண்டி, பிழைக்கத் தெரியாதவன் என்று கேலி. எல்லோரும் கல்லை எறிகிறார்கள். நானும் என் பங்குக்கு எறிகிறேன். வேறு என்ன காரணம் வேண்டும்? பின்,
“பாலைவனத்தில் அநேக புஷ்பங்கள் பார்ப்பவர் அற்றுக் கன்னம் சிவக்கின்றன” என்று சொன்னவன் பைத்தியக்காரனா?
ஒன்று எப்பவும் நெஞ்சில் இருத்திக்கொள்வோம். தகுதியும் அதற்கு உரிய வெகுமதியும் - இவைகளின் வழிகளே வெவ்வேறு. துருவ தூரம் என்பதை விதியாக ஏற்றுக்கொண்டால்தான் பிழைத்தோம். லட்சியம், தகுதி, லசுஷ்மி கடாகூழ்ம் மூன்றும் ஒரிடத்தில் ஒருங்கே சேருவது என்பது வெகு அபூர்வம். அதற்கும் காரணம் இல்லாமல் போகாது. ஆனால் அதை ஆராய்ந்து அறிந்து தெளிய அதற்கு ஒரு தனித்தகுதி எய்தல் வேண்டும்.
இதனால்தான் ஞானத்தின் விடிவை அடையாளம் கண்டுகொண்ட மஹாபுருஷன் (ரமணர் போன்றவர்) தப்பித்தோம் என்று வீட்டை விட்டு ஓடிவிடுகிறான். நம்மிடம் அந்தத் திராணியிருக்கிறதா? - ஹ"ம். இந்தப் பொருமலுடன் இந்த ஏக்கம் சரி.
சரி. இருள் இறங்குகிறது. உள்ளே போகலாம்.
இருட்டில் கூடத்தில் தனியாக உட்கார்ந்திருக்கிறேன்.
மின்சாரம் அம்பேல். மனைவி பிறந்தகம் போயிருக்கிறாள்.
# # #
இன்று ஹிந்து செய்தி. சட்டத்தில் ஒரு நுணுக்கம் தெளிவாகும் வரை, பில்லா, ரங்காவைத் தூக்கு ஜனவரி நடுவரை ஒத்திப் போடப்படுகிறது. இல்லையேல் இன்று விடிகாலை தண்டனை நிறைவேறியிருக்க வேண்டும்.
# # #
காயத்ரியும் கண்ணனும் மயிலாப்பூர், சினிமாக் கலைஞர்களுக்கு ஏதோ பட்டமளிப்பு விழா.
# # #
தூக்கு தண்டனைத் தீர்ப்புக்குக் காரணமான குற்றம் நிகழ்ந்து மூன்று வருடங்கள் ஆகின்றன. பிறகு ஆசாமி களைத் தேடிக் கைதுசெய்து பின்பு, விசாரணை, தீர்ப்பு, அப்பீல், பிறகு சட்ட நுணுக்க விவகாரம், மனு மறுப்பு. உயிரின் ஊசலாடல் இன்னும் ஒயவில்லை. அவர்கள் இருவரின் மனோநிலை எப்படியிருக்கும்?
இன்று TV யில், "பொல்லாதவன். சேகர், ஸ்ரீகாந்த் திரும்ப மணி பத்தாகும்.
பில்லாவுக்கு ஜனாதிபதியைப் பார்க்க வேண்டு மாம், அவன் கொலை செய்யவில்லையாம். அவரிடம் தான் உண்மையைத் தெரிவிக்கப் போகிறானாம், பார்க்க முடியாவிட்டால்? 'சும்மா இறந்துபோகிறேன். இது என்ன பிடிவாதம்? இதில் என்ன அர்த்தமிருக் கிறது? இதுவும் ஒரு பாணியா? உண்மை என்பது 6T657607 ? What is Truth? Pontius Pilate SLL-55, Lஇரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னால் கேட்டு விட்டுப் போன கேள்வி இன்னும் பதிலுக்கு அலைந்து கொண் டிருக்கிறது.
வீட்டைச் சுற்றித் தண்ணிரும் சகதியும். இன்று மழை நின்றாலும், தண்ணிர் வற்றினாலும், சேறு காய ஒரு மாதம் ஆகும். மழையாவது அவ்வளவு சுருக்க, மழைக்காலத்தில் என் இஷ்டத்துக்காக நின்றுவிடுமா? ஐப்பசி கடைசியில் சம்பிரதாயப்படி குடமுழுக்குக்கு ஒரு பாட்டம் கொட்டக் காத்துக்கொண்டிருக்கிறது. வானொலி பயமுறுத்திக்கொண்டேயிருக்கிறது. இன்னும் 48 மணி நேரத்தில் - இன்னும் 36 மணி நேரத்தில். நெஞ்சில் அப்படியே வண்டல் இறங்குகிறது. பில்லா, ரங்காவுக்கும் ஒரு ஒரு நாளாக நெருங்க நெருங்க இப்படித்தானேயிருக்கும்?
பில்லா, ரங்காவுக்காக இரங்குகிறேனா, இது என் சொந்த பயமா ?
அட, நல்ல கதையாயிருக்கிறதே! என் சொந்த மனநிலைக்காக பில்லா, ரங்காவுக்காக, உலகம் நின்று விடுமா ? வெள்ளமென்றும், தீயென்றும், ரயிலென்றும் விபத்தென்றும் எவ்வளவு உயிர்ச்சேதம் நடந்துகொண்டிருக்கிறது? தவிர, ஏரோப்ளேன் hijack, தற்கொலை, இராக் - இரான் போர் அதுபாட்டுக்கு நடந்து கொண்டேயிருக்கிறது. பூகம்பம் மொத்தச் சகட்டில் வாங்கும் பலி பற்றவில்லையென்று இரானில், பிரதி தினமும் ஆளும் கட்சி பனங்காய் சீவுவதுபோல, எதிர்க்கட்சித் தலைகளைக் குலைகுலையாகச் சுட்டுத் தள்ளிக் கொண்டிருக்கிறது. உயிர் மிகவும் மலிவாகி விட்டது. காய்கறிகளின் விலைதான் தலைவிரித்தாடு கிறது. வியாபாரமும் இப்போதுதான் மும்முரம்.
Life Marches On. அது யாருக்காகவும், எதற்காகவும் பார்க்கவில்லை, காத்திருப்பதில்லை.
என் தங்கையின் சடலத்துக்கு நெருப்பு வைத்து விட்டுச் சுடுகாட்டிலிருந்து திரும்பியதும் அம்மா கதறுகிறாள்; "ராமாமிருதம், எனக்குப் பசிக்கிறதேடா !” பத்து மாதம் சூளை வைத்த குழியாச்சே! அதிலிருந்து ஜ்வாலையின் ‘குபீர்’ But Life Marches On.
எது தன்னிரக்கம் ? எது உண்மையாக, மன்னுயி ருக்குப் பரிதவிப்பு?
எது கண்துடைப்பு? எது கண்ணிரைத் துடைப்பது?
Legend. Fable. Parable. என் பெரிய பாட்டனார் ஐயாவைச் சந்தேகமில்லாமல் இந்த ரகத்தில் சேர்த்து விடலாம். இதுமாதிரி ஒரு மனிதன் இருக்க முடியுமா என்று அவரிடம் ஒரு நம்பமுடியாத தன்மையிருந்தது. அத்தனை வயதிலும், ஆச்சரியத்துக்குரிய ஒரு குழந் தைத்தனம், தனக்கென்று ஏதுமில்லை. தனக்கென்று ஏதும் தேடவில்லை. வைத்துக்கொள்ளவில்லை. நாளைய கவலையுமில்லை. நேற்றையின் பச்சாதாபமும் இல்லை. இருந்தவரை அன்று அன்றைக்கே என, அவர் உடல் மனவறைகளுக்கு எட்டியவரை, ஒவ்வொரு நாளையும் பூராக வாழ்ந்தவர். அது அவருக்கு இயல்பாக அமைந்து விட்டது. ஆனால் அதையே வாழ்க்கையை வாழ ஒரு மாபெரும் உத்தி என்று நினைக்கையில் அதில் ஏதோ கவர்ச்சி legend இன் லக்ஷணங்கள் தோன்று கின்றன. எழுத்தில் மட்டும், கலைகளில் மட்டும்தானா உத்தி? வாழ்க்கையை வாழ்வது, வாழ்ந்து காட்டுவது - இதைவிடப் பெரிய உத்தி இருக்கிறதா என்ன?
இந்த அத்தியாயத்துக்கு, நனவோடை உத்தியில்,
‘எழுத்தாளனின் இலக்கிய வாழ்வில் ஒருநாள்' என்று தலைப்பு இடலாமா?
------------------------------
அத்தியாயம் 7
மீண்டும் ஞாபகத்துக்கு (எனக்கு அல்ல!) :
என் பாட்டனாரும் அவர் உடன்பிறந்தோரும்.
1. ஐயா, The Legend. எல்லோருக்கும் மூத்தவர்.
2. எல்.ஏ. ராமஸ்வாமி ஐயர்: என் பாட்டனார்; லால்குடி போர்டு ஸ்கூல் தமிழ்ப்பண்டிதர்.
3. எல்.ஏ. சிதம்பரம் ஐயர்: போலீஸ் இலாகா - குமாஸ்தாதான்; ஆனால் அவருக்கு எட்டுக் கண்ணும் விட்டெறிந்தது. கான்ஸ்டபிள், ஸ்ப்-இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர் வரை அவரவர் காரியங்களுக்கு ஒழுங்கு நடவடிக்கையிலிருந்து தப்புவதிலிருந்து பதவி உயர்வுக்குக் குறுக்கு வழி, கோணல் வழி வரை) இவர் வாசலில் காத்துக் கிடப்பார்கள். ஆபீஸ் நெளிவு சுளிவுகள் அற்றுப்படி, ஆங்கிலத்தில் சூரன். மேலதிகாரி ஆங்கிலேயன். அவர் கை காட்டிய இடத்தில், கண்ணை மூடிக்கொண்டு கையெழுத்துப் போடுவான். காம்ப் க்ளார்க் மேல் அவ்வளவு அபார நம்பிக்கை. எத்தனையோ பேருக்கு வழி திறந்துவிட்டிருக்கிறார்; அடைத்தும் இருக்கார் (இலாகா அப்படி). இத்த னைக்கும் படிப்பு மெட்ரிகுலேஷன் வரைதான்.
4. எல்.ஏ. சுந்தரம்: உப்பு இலாகா.
5. லசுஷ்மி: புக்ககம் லால்குடி பக்கத்தில் வாளாடி யில். கைநாடி பிடித்துப் பார்த்து உடல்நிலை சொல் வதில் அவ்வளவு நிபுணியாம். அவளுக்குச் சொல்லிக் கொடுத்த வைத்தியனே அவளிடம் யோசனை கேட்கும் அளவுக்குத் தேறிவிட்டாள். வெகு சீக்கிரத்தில், விளை யாட்டாக ஆரம்பித்ததுதான்.
"அதெல்லம் அம்சம். என் வீட்டில், பரணில் நாடிசாஸ்திரம் பற்றி மட்டுமே, அடுக்கடுக்கா புஸ்தகங் களும், ஒலைச்சுவடிகளும் கிடக்கு, பாட்டனார் படிச்சது. நானும் படிக்காமல் இல்லை. ஆனால் லக்ஷமி அம்மாளின் தரிசனம் எனக்குக் கிட்டுமா?”
6. எல்.ஏ. ஜகதீச ஐயர், பி.ஏ.பி.எல். இவர் வக்கீ லுக்குப் படித்ததாகத் தெரியுமே ஒழிய, தொழில் நடத் தினதாகத் தெரியவில்லை. வயிற்றுக் கோளாறில் நொந்த முகம். தினம் பொரித்த குழம்பு, பத்தியச் சாப்பாடு.
7. ப்ரவ்ருத்த ஸ்ரீமதி புக்ககம் லால்குடிக்கு அடுத்த ஆங்கரையில்.
8. எல்.ஏ. பிச்சு: கடைக்குட்டி, போலீஸ், தாத்தா இறந்த சமயம், இவர் லால்குடிக்கு ஈமச்சடங்குகளுக்கு வந்திருந்தபோது நான் முதன்முதலாகப் பார்த்தது. எனக்கு அப்போது வயது 10, 12 இருக்குமா? இல்லை; இன்னும் குறைவுதான். (ஏழு, எட்டு?) அவர் அதிகமாக யாருடனும் பேசிக் கலகலப்பாக இருந்ததாகத் தெரிய வில்லை. ஆஜானுபாகு, தலையில் அடர்த்தியான கன்னங்கரேல் மயிர். பரந்த முகத்தில் குத்துமீசை, (அல்லது கொத்துமீசையா? என்னவோ எலுமிச்சம் பழத்தை நுனியில் வைத்துப் பார்க்கிறதாமே! அந்தக் காலத்து பாஷை, போலீஸ் ஆனதால் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியிருக்கிறது)
அடுத்து இருபது இருபத்துஐந்து வருடங்களுக்குப் பின்னர்தான் மறுபடியும் பார்க்க வாய்த்தது. வேலையி லிருந்து ஒய்வுபெற்று லால்குடி வாசத்துக்குத் திரும்பி விட்டார். மாயாபஜார் ராக்ஷஸன் மாதிரி இருந்தார். முன்னுக்கும் பின்னுக்கும் ஏகத்தாறாகத் தள்ளி, உடல் சரிந்துவிட்டது. தலையிலும், மீசையிலும் பழைய கரேலும் பொலிவும் இன்னும் இருக்குமா? ஆனால் முகத்தின் இயற்கை கம்பீரமும், பின்னால் உத்தியோக ரீதியின் பலனாக அந்த கம்பீரத்தின் மேல் அதிகா ரத்தின் வார்ப்பும் போய்விடுமா?
"ஒஹோ, சப்தரிஷி பிள்ளையா?” தொண்டையில் மணல் நறநறத்தது. "அம்மாப்பெண் மாதிரியே இருக்கையே! பேஷ், எங்களுக்கு உன் தாயார் ரொம்ப உசத்தி. செல்லம். அம்மா எப்படியிருக்காள் ?”
இவர் ப்ரதாபங்களுக்கு இந்த வரலாற்றில் இட மில்லை. ஆனாலும் தனிக்கதை பெறும். அசாத்திய தைரியம். ஒரு கொள்ளைக் கூட்டத்தையே தனியாக வளைத்துவிட்டாராம்!
சிதம்பரம் ஐயர், சுந்தரம் ஐயர், பிச்சு ஐயர் நன்றாகச் சம்பாதித்தனர். அவர்கள் தொழில் பார்த்த இலா காக்கள் அப்படி.
ஐயாதான் தனக்கு உதவாத, ஊருக்குச் செல்லப் பிள்ளை.
தாத்தா (உஷ்! காது கேட்டால், கனவில் வந்து அதட்டுவார். ‘என்னடா தாத்தா? நீதான் வயசுக்கு முன்னால் தலை நரைச்சு கிழவனாயிட்டே!) அவர் உண்டு; அவர் பாட்டு நோட்டு உண்டு.
வக்கீலய்யா, எப்படியோ முண்டி அடித்து, பி.எல். தேறினாரே ஒழிய, தொழிலில் அதிர்ஷ்டமில்லை.
ஜி. சுப்ரமணிய ஐயருக்கு மாப்பிள்ளை ராசி கிடையாது.
இந்தக் குடும்பத்தில் ஆண் - பெண் அனைவருமே, ஏதோ உக்கிரம் படைத்தவர்கள். வெளித் தெரியா விட்டால், உள் புழுங்கும் உக்கிரம். காவிய நாயகம் உண்டோ இல்லையோ, காவியத்தன்மை படைத்த வர்கள். எல்லோருடைய தன்மையிலும் ஏதோ விபரீதமும் - (விரல் வைத்துச் சொல்ல முடியாது) - கட்டு மாத்திரை உரை சொட்டு மருந்துபோல் கலந் திருந்தது. அடிப்படை குரூரம்கூட என்று சொல்வேன். தவிர, தனி வர்க்க எண்ணம். (Clannishness).
காரம், பூரம் எல்லாம் சேர்ந்துதான் உயிர் காக்கும் லேகியம் அல்லது சூரணம் ஆகிறது.
பாற்கடலின் கடையலில் வாசுகி கக்கிய விஷத்தை ஆண்டவன் எடுத்துக்கொண்டான் எனினும் ஒரு சிறிதேனும் கடலில் கலவாது இருந்திருக்குமா? அதுவும் பின்னர் திரண்ட அமிர்தத்துடன் கலந்துதானே இருக்கும்? இல்லையென்று நான் நம்பத் தயாராக இல்லை. என் எண்ணம் என் உரிமை - (சரி, சரி, வண்டி ஸைடிங் மாறுகிறது, கவனி!)
ஆனால் வீட்டுக்கு வீடு, குடும்பத்துக்குக் குடும்பம் அவரவர்களுக்குத் தங்களைப் பற்றி எண்ணம் இப்படித் தான் இருக்குமோ என்னவோ? எண்ணச் செருக்கு ஏறத்தாழ, அவ்வளவுதானே! இதுகூட இல்லாவிடின், பின் எப்படி? இத்தனை செருக்குகளின் திரட்சிதானே மானுடத்தின் பெருமிதம்!
பெரியோரைப் புகழ்வோம்.
ஆண்களுக்குப் பொதுவான, அடித் தலைமுறை களுக்கும் இறங்கிவிட்ட ஒரு அங்கசேஷ்டை உண்டு. பத்மாஸன ஆரம்பத்தில், ஒரு காலை மடித்து, அந்தத் தொடைமீது மறுகாலைப் போட்டு, பாதத்தை ஆட்டிக் கொண்டு, நிமிர்ந்த முதுகுடன் மணிக்கணக்கில் உட்கார்ந்தவண்ணம் (சினிமாவில் வில்லன் 'ரிஷி” மடாதிபதி போஸ்) அது அரைப்பட்டினியோ, கால் பட்டினியோ, பேச்சிலோ, உட்கார்ந்திருக்கும் நிலை யிலோ மிடுக்குக் குறையாது. வாசற்படி இறங்கி, யாரையும் கைதாழ்ந்து கேட்க மாட்டார்கள். உதவு பவர்கள் தங்கள் கெளரவமாக பாவித்தல் வேண்டும். பேச்சிலும் அதிகாரம். இது என் தகப்பனார் பார்த்த கோணம். நான் சிறியன். ஆனால் பொதுவாக அந்தக் கூட்டத்தின் வணங்காமுடித் தன்மையை என்னால் மனக்கண்ணில் பார்க்க முடிகிறது.
இந்த அட்டஹாசக் குழாம் நடுவே ஒரே வரி சொருகிய 'ப்ரவர்த்த ஸ்ரீமதி எனும் பெயர், கண் தப்பியிருப்பின், அமிர்தமய்யர் பேறுகளின் எண்ணிக்கை முழுப்பெறாது. அவள் என் அம்மாவைப் பெற்ற பாட்டி அவள் கீர்த்தி பெரிதாகையால் தனியாகச் சொல்லும் நிலை கொண்டது.
வெள்ளைப் பீங்கான் நிறம். கன்னங்கள் அசல் பீங்கான்கள் போலவே பளபளக்குமாம். (வேறேதும் நினைத்துக்கொள்ள வேண்டாம்), ஜலம் விழுங்கினால் நெஞ்சில் கண்ணாடிபோல் தெரியுமாம். அவள் நிறத்துக்குப் பார்த்தவர்களின் அலங்கார பாஷை. இவளுக்கு நைடதம், நன்னூல் பாடம் என்று ஏற்கெனவே சொல்லி இருக்கிறேன்.
பயன்?
ஆங்கரையில் சம்பந்தம். பெரிய குடும்பம். வேளைக்கு ஆளுக்குக் கால்படி அரிசி வேணும். அதற்கு வக்கும் இருந்தது. ‘மூடி வைத்துக் கல்யாணம் பண்ணி விட்டார்கள். பேசு மொழிக்குப் பெண்டிர் சொல். கவனி - ஆரம்ப எழுத்தாளர்களுக்கு என் சூத்திரம் அதில் சிந்தும் கனம், கேலி, செறிவு ஆண்களுக்கு சாத்தியமில்லை)
எள்ளும் பச்சரிசியும் கலந்தாற் போன்ற ஜோடிப் பொருத்தம். அழகு பார்த்தா அந்த நாள் திருமணங்கள்! புகுந்த வீட்டில் பெண் வயிறு பசியாமல் சாப்பிடு வாளா? அதைவிட முக்கியம், ஊர் வாயில் புகுந்து புறப்படு முன் வீட்டை விட்டுப் பெண்ணை எப்படி யேனும் கழற்றிவிடு.
நடராஜ ஐயருக்குக் காலில் சக்கரம். வீட்டைவிட்டு அப்பப்போ காணாமல் போய்விடுவார். பல மாதங்கள் கழித்துத் திரும்பி வருவார். மறுபடியும் 'அம்பேல். போகும்போது பண்டங்களைக் கழற்றிப் போனார். அல்ல, எடுத்துக்கொண்டு போனார். ஏன் போனார்? நான் உங்களைக் கேட்கிறேன். சில வீடுகளில் இதுபோல், செல்லாக்காசு ஒன்று இருக்கும். மளிகைக் கடைக்கார னிடம் கொடுத்து மாற்றிவிட்டதாகச் சந்தோஷப்பட்டுக் கொண்டிருப்போம். காய்கறிக் கடைக்காரனிடமிருந்து அதே காசு திரும்பி வந்துவிடும். வீட்டுக்கு வந்து சில்லரையை எண்ணிப் பார்க்கும் போதுதான் தெரியும். அதிர்ஷ்டக் காசு என்று தேற்றிக் கொள்வதா? ஐயோ. ஸ்ரீமதியின் அதிர்ஷ்டமே!
இதுதான் ‘ஸஸ்பென்ஸ். நடராஜ ஐயர் கஞ்சா அடிப்பார். இடது உள்ளங்கையில் இலைச்சூர்ணத்தை வைத்து வலது கட்டைவிரலால் தேய், தேய். நிமண்டு, மறுபடியும் தேய். பதம் காணும்வரை இப்படியே செய்து கொண்டிரு. அனுபவிக்கப்போகும் 'பங்'கின் எதிர்பார்ப்பில் இப்பவே கண்ணில் ஒரு செருகல். புகைத்துப் புகைத்துப் பொலிவிழந்து போன முகத்தில் நாளடைவில் வெந்நீர் அண்டாக் கரிபோல் கன்னங் களில் சேர்ந்துவிட்ட ஒர் அசடு. கூடவே, மாட்டிக் கொண்டோம், கழற்றிக்கொள்ள முடியவில்லை, பார்த்தையா எனும் உண்மையான சோகம்….
ஆச்சு ஆச்சு. இனிப் பொறுக்காது. எடு குழாயை, அத்தோடு ஒட்டிய துணியுடன் பற்றவை பற்றவை. வத்திப்பெட்டி இந்தச் சமயத்துக்கு மறந்துபோனால், அல்லது அதன் கடைசிக் குச்சியில் இருந்தால், அதுவும் கிழித்த சுருக்கில் 'சுர்ர்ரோடு - புஸ்க்" ஆனால் - இந்தச் சமயத்துக்கு நரகம் இதைவிட இல்லை.
புக் புக், புகு புகு, புக்டக். அப்பாடி, அம்மாடி! என்ன சுகம்! என்ன சுகம், பெகு ஸுக், பெகு ஸுக், மஞ்சி ஸுகம் மஞ்சி ஸுகம். உலகத்தின் அத்தனை பாஷைகளிலும் அந்த சுகம். அதையும் தாண்டி ஆனந்தம். சொர்க்கம்? யாருக்கு வேணும்? பின் வேறு எங்கு இருக்கிறேன்?
இதெல்லாம் அப்பா - அண்ணா சொன்னது. லாசராவுக்குத் தானாகவே இந்த "கெத்து வந்துவிடுமா? அண்ணா, பார்ப்பதற்கு - ஏன், சுபாவத்திலேயும் சாதுதான். ஆனால் அவரிடம் ஒரு 'வெள்ளை’க் கபடு உண்டு. தான் சிக்கமாட்டார். ஆனால் ? எதிராளிக்கு விலா தைக்கும்படி ஆகிவிடும்.
மேற்கூறிய சடங்கை, படிப்படியாக அதன் கடைசி சித்திவரை வீட்டுள் பண்ண முடியாது. வாய்க்கால் கரையோரம், துவைக்கும் கல், பாழ்மண்டபம், சில இடங்களில் தென்னங்கொல்லையிலோ, சப்பாத்திப் புதரிலோ, அடர்த்தி நடுவில் பறவைக் கூடுபோல் கிடைக்கும் ஒதுக்கிடம் - இதுபோல் மறைவு தேடியாக வேண்டும். முதலில் கஞ்சா சம்பாதிக்கணும். அவர் ஊர் ஊராய்த் திரிந்ததே கஞ்சா வேட்டையில்தானோ என்னவோ?
பொறுத்துப் பார்த்து, இது தேறாத கேஸ் என்று தெளிந்ததும், சகோதரர்கள் கழற்றிவிட்டனர். அரசப் பழக்கத்துடன் ஆண்டிப் பிழைப்பு தீவிரமாயிற்று. வீட் டுக்கு வந்தால், சாப்பாட்டோடு சாப்பாடு; தனியாகப் பண்ணிப் போடுவது என்ன தட்டுக் கெட்டுப்போகிறது? அந்த நாளிலேயே இல்லாதவருக்கும் இருக்கப்பட்ட வருக்கும் வித்தியாசம் அளவில்தான். வகையில் அல்ல. அனேகமாக எல்லார் வீட்டிலும் பானை நிறையச் சோறு. சட்டி நிறையக் குழம்பு, (ஆம், மண்பாண்டச் சமையல்தான். இப்போது அதற்கு ஒட்டல்களில் தனி விளம்பரம். தனிக்கட்டணம் கூடவோ என்னவோ) சட்டி நிறையக் கீரை, ஒருவேளை சுட்ட அப்பளாம், மூலையில் பழையது. வகைவகையாகப் பண்ணிப் போடவும் தெரியாது. வகைகளும் வழக்கில் இல்லை.
ஐயா யாத்திரையில் சொல்லாமல் கிளம்பும்போது வயிற்றில் பூச்சியை வாங்கிக் கொண்டு, திரும்பி வரும் போது 'குழந்தையைப் பார்த்தேளா? என்று ரவிவர்மா படத்தில் மேனகை போல் ஏந்திக்கொண்டு அவரும் ரிஷி போல் ஒரு கையால் கண்ணை மூடிக்கொண்டு, மறுகையால் தள்ளிக்கொண்டு. (அந்தப் போஸ்" கொடுக்கவில்லை. ஆனால் காட்டிய அக்கறை அவ்வளவுதான்) ஸ்ரீமதிக்குத்தான் அந்த வாழ்க்கை அலுத்துவிட்டதோ, இல்லை, அங்குதான் இனி அவளுக்கு மதிப்பு இல்லையோ - ஒருநாள், ராமசாமி அண்ணாவிடம், ஐந்து குழந்தைகளுடன் - இரண்டு பெண்கள், மூன்று ஆண்கள் - வந்துவிட்டாள்.
பின்னர் ஒருநாள் - நடராஜ ஐயர் இம்மையின் தேடலில் படும் அவஸ்தை காலதேவனுக்கே காணப் பொறுக்காமல், அவருடைய சீட்டைத் தேடிக் கண்டு எடுத்துவிட்டான். ஸ்ரீமதி தன் பேறுகளுடன் இங்கேயே வேரோடிப் போனாள்.
மூத்த பிள்ளைக்கு அடுத்துப் பெண்; அடுத்து என் அம்மா, அப்புறம் சுப்ரமணியன், சுந்தரம்.
பொதுவாகவே, இதுபோன்ற துர்ப்பாக்கியவதிக்குக் குடும்பத்தில், அவள் வயது கடந்த செல்லம் கிடைத்து விடும். இதை என் சொந்த அனுபவத்திலிருந்தும் சொல்கிறேன். ஸ்ரீமதியை இமைபோல்தான் காத்தனர். செல்லம் என்றால் என்ன? சொல் ஆதரவும், இருக்கிற கஞ்சியை வஞ்சமில்லாமல் வந்தவளுடன் பங்கிட்டுக் கொள்வதும்தான். தமிழ்ப்பண்டிதர் வீட்டில் வேறென்ன தனியாகக் கிடைத்துவிடும் ? ஒருவருக்கொருவர் பாட்டுக்கள் பரிமாறிக்கொள்ளலாம். அதுதான் நடந்தது.
ஆணுக்குச் சரியாக இலக்கிய விசாரம் பேசும் அறிவாற்றல், குண இயல்பு படைத்த பெண்மணி ஒரு பாக்கியம். அந்த வீட்டில் அடிக்கடி சின்னத்தனங்கள் பேச்சிலோ செயலிலோ நிகழா. ஒரு தோரணையிலேயே வண்டி ஒடும். ஆங்கரையில் இதே விலாசம் ஏது?
ஏதோ கையிலும் கழுத்திலும் இருந்த ஒன்று, அரை - பொன்னோ, காக்காப் பொன்னோ - பூட்டி, முதல் பெண்ணை, உடன் பிறந்தவர்மார் உபயத்தில் கட்டிக் கொடுத்தாச்சு. ஆங்கரைப் பையன், வேலை தபால் இலாகாவில்.
என் தகப்பனாருக்கு அத்தையைக் கண்டால் பயம். ஒருசமயம் கடையில் உப்பு வாங்கிவரச் சொன்னாளாம். இவர் ஏனம் கொண்டுபோகாமல், கடைக்காரனிடம் காகிதம் இல்லாமலோ இஷ்டமில்லாமலோ, எரிச்ச லோடு மடியில் ஏந்தப் பண்ணிவிட்டான். அண்ணா அப்போ என்ன, சின்னப்பையன் - இடுப்பு முண்டுத் தலைப்பை அப்படியே பிடித்துக்கொண்டே கவனத்தைச் சொந்த ஆகாயத்தில் பறக்க விட்டுவிட்டு வீட்டுக்கு வந்து மடியை உதறியதும் எண்ணி எட்டு உப்புக்கற்கள் உதிர்ந்தனவாம். அத்தை அன்று கொடுத்த விளாசலில் - அடேயப்பா? அத்தை பொல்லாதவள்.
என் அம்மாவும் தன் அம்மாவைப் பற்றி ஒரு கதை வழங்கியிருக்கிறாள்.
ஒரு நாளிரவு, வாசல் திண்ணையில் அவள் அம்மா வும் எதிர் வீட்டுப் பாட்டியும் பேசிக்கொண்டிருந் தாளாம். பக்கத்தில் ஒரு பிள்ளை குப்புறப் படுத்துக் கொண்டிருக்கிறான். மடியில் மறு பையனை உறங்கப் பண்ணிக்கொண்டிருக்கிறாள். அம்மா திண்ணைத் தூணைக் கட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தாளரம்.
"இன்னிக்கு அடைக்கு அரைச்சேன். நாட்டுப்பெண் தட்டினாள். இரண்டு விண்டு வாயில் போட்டுண்டேன். ராமா, கிருஷ்ணா, இன்னிப்பொழுது கழிஞ்சது. விடிஞ்சால் நாளைக்கு வேறே பொழுது. வேறே படியளப்பு!”
இரண்டு என்றால் நாலு என்று கொள்ள வேண்டும். இது பாஷையில் திரிசமம்.
"ஸ்ரீமதி ! உனக்கு இன்னிக்கு என்ன பலகாரம்?"
"தோசை.”
"தோசையா?" - என் அம்மா ஆச்சரியமுற்றாள். அவளுக்கு வயது அப்போது ஐந்தோ, ஆறோ.
"சாதமே இல்லை, தோசையாம்!”
அன்று அரிசிக்காரி யோகாம்பாள் வரவில்லை. அவள் வரவில்லையானால் அன்றைய பாடு அவ்வளவு தான். ஏதோ பிராமணக் குடும்பம் என்று ஈவு இரக்கம் பார்ப்பாள். பணம் சற்று முன்னே பின்னே வாங்கிக் கொள்வாள். அந்த அன்னபூரணித் தாயும் வராவிடின் அன்றைய படியளப்பு ஆகாசம்தான்.
"திண்ணை இருட்டில் என் அடித்தொடையில் அம்மா ஒரு திருகு திருகியிருக்காள் பாரு. இப்போ நினைச்சாக்கூட அழுகை வரது."
ஸ்ரீமதியின் விஸ்வரூபம் அம்மு வாத்து முழு முத்திரை யுடன் அவள் மரணத் தறுவாயில்தான் வெளிப் படுகிறது.
என் தாய்க்கு அப்போது வயது பதின்மூன்று/ பதினாலு வயதுகளை உத்தேசக் கணக்கிலே ஒப்பிட்டுப் பார்க்கையில் ஸ்ரீமதிப் பாட்டி நாற்பது தாண்டினாளோ, சந்தேகம். ஒன்றிரண்டு கூடக் குறைய இருக்கலாமோ என்னவோ?
வீட்டில் யாருக்கோ திவசம். அதுசமயம் வழக்கப் படி குழுமும் அம்முவாத்துக் கூட்டம் இன்னும் பூராகக் கலையவில்லை.
திவசம் கழிந்த மூணு நாட்களுக்கு வீட்டில் பட்டினி தெரியாது. மூலைப் பழையதிலும், சுண்டான் குழம் பிலும் இரண்டு மூன்று நாட்கள் வண்டி தூம்தடாகா' வில் ஒடும்.
சுண்டக் குழம்பு ஆரம்பத்தில் நன்றாய்த்தா னிருக்கும். நானும் சாப்பிட்டிருக்கிறேன்.
பெரிய கற்சட்டி, அம்முவாத்து மியூஸியம் பீஸ் நானும் பார்த்திருக்கிறேன். அது உடைந்தபோது மன்னிப் பாட்டி அழுதாள்.
திவசத்தின் மிச்சம் மீதிக் குழம்பு, ரஸம், கூட்டு, பதார்த்த வகைகளுடன் இன்றியமையாத கீரையையும் புழக்கடையிலிருந்து பிடுங்கிச் சேர்த்து, இன்னும் கொஞ்சம் எண்ணெயையும் கூட்டிக் காய்ச்சி, சுண்டக் காய்ச்சி அன்றன்று குறையக் குறைய மீதியை இன்னும் காய்ச்சிக் காய்ச்சி மீண்டும் carry over ஐக் காய்ச்சி சுண்டச் சுண்ட அதற்கு ஒரு கறுப்பு கண்டு, ஆறின நிலையில் ஏடு புடைத்துக்கொண்டு, அப்புறம் ஒரு பழம் வாடை வீச ஆரம்பித்ததும், ஜாடை தெரிந்து கொள்ளாமல் அல்லது தெரிந்துகொள்ள மறுத்து - எல்லாம் இல்லாக் குறைதான் - உனக்காச்சு எனக் காச்சு என்று வகை பார்த்தால், அந்தக் கறுப்பு, அன்று பாற்கடலைக் கடைந்ததும் படர்ந்த நீலத்தை விழுங்கிய காலகண்டனையும் கவிழ்க்கவல்ல கரி என வேளை தவறி அடையாளம் கண்டுகொண்டு என்ன பயன்?
மூன்று நாட்கள் வயிற்றுப்போக்கில், குடல் சதையையே பிய்த்துக்கொண்டு வருவதுபோல் (நடந்ததும் அதுதானோ என்னவோ?) திருகித் திருகி அப்படி ஒரு வலி, அதிஸாரம் என்று அதன் பெயராம்.
ஆஸ்பத்திரியென்றால் அக்கரைச் சீமையென்று பயப்படும் நாட்கள். அங்கு நம் வருகைக்காகக் காத்திருக்கும் யமனுக்குத் தெரிந்த பாடாக, வீடு தேடி வரும் யமனே மேல். வேளை வந்துவிட்டது வந்து விட்டான். நல்ல யமன் ஊசிக்காதில் நுழையுமளவுக்கு உயிரோட்டம் குறுகிவிட்டது ஸ்ரீமதிக்குத் தெரிந்து விட்டது.
பணக்காரன் சுவர்க்கத்துள் நுழைவது ஊசிக்காதில் ஒட்டகம் நுழைவதைக் காட்டிலும் கடினம். அம்மு அகத்தில் அதுபோன்ற பணக்காரப் பிரச்சினைக்கு வழி கிடையாது.
ஆனால், இந்த ஊசிக் காதுதான் உயிர் இரண்டறக் கலக்கும் அகண்ட ஏரியின் முகத்துவாரம். அங்குதான் காதற்ற ஊ சியும் வாராதுகாண் கடைவழிக்கே. திருவெண்காடர் சொல்லித்தான் ஸ்ரீமதிக்குத் தெரிந்து ஆக வேண்டியதில்லை.
"அண்ணா ராமண்ணா" குரலில் தனி கணிர். கண்ணாடி உடையப்போவது போல், பயம்? பயம் தந்த தைரியம்? இந்த நாள் பாஷையில் ஹிஸ்டீரியா?
"இங்கேதான் இருக்கேன், ஸ்ரீமதி" தாத்தாவுக்கு இந்தத் தங்கைமேல் எப்படியும் தனி உசிர்,
"அண்ணா! நான் நாளைக்காலை தாண்ட மாட்டேன்! அம்மாப்பெண் எங்கே? அம்மாப் பெண்ணே!” அம்மாப் பெண் கையைப் பிடித்து, அண்ணன் கையில் கொடுத்து, "என் பெண்ணை சப்த ரிஷிக்குத்தான் நீ பண்ணிக்கணும்!”
"இப்போ என்ன அதைப்பத்தி? நாளைக்கு நடக்கப் போறதை யார் கண்டது?” மன்னி நீட்டி முனகினாள். அவளுக்குத் தன் பிள்ளைக்குப் பரிசப் பணம் வாங்க வேண்டும் என்று ஆசை இருக்காதா? மூத்த பிள்ளை. எப்.ஏ.க்குப் படித்துக்கொண்டிருக்கிறான். [*]
------
[*] அப்போதையக் காலம் மெட்ரிகுலேஷனுக்கு அடுத்து FA இரண்டு வருடக் கல்லூரிப் படிப்பு. PUCக்கு ஈடாக இருக்கலாம். அதுவும் 10+2வாக மாறிவிட்டது. ஆனால் அந்த FAக்கு இந்த 10+2 என்ன, இன்றைய BA. உறை போடக் காணுமா? அதன், அஸ்திவாரமே வேறு.
----
ஸ்ரீமதி காதில் வாங்கிக்கொண்டதாகத் தெரிய வில்லை. “நாலுபேர் நாலு சொல்வா. நீ கேட்கப்படாது. ஏற்கெனவே தகப்பனில்லாத குழந்தைகள். இதோ நானும் விட்டுட்டுப் போயிடப் போறேன். என் பெண் தெரியாத இடத்தில் புகுந்து கண் கலங்கினாள் என்று இருக்கக்கூடாது. நல்லதோ பொல்லாதோ அவள் இந்த விட்டுக்கே வாழ்க்கைப்-படட்டும். நான் இப்போ உன்னைக் கேட்கிறபடி நீ நடப்பதை நான் தெய்வமாக இந்த வீட்டைச் சுற்றிப் பார்த்துண்டு இருப்பேன். என்ன சொல்றே ?”
"அப்படியே பண்ணிக்கிறேன் ஸ்ரீமதி!”
“என் மற்றக் குழந்தைகள் எங்கே?"
சுப்ரமணியம், சுந்தரத்தை ஒருமுறை அனைத்துக் கொண்டு, முத்தமிட்டு, தன்னிடமிருந்து மெதுவாகத் தள்ளினாள். "இனிமேல் என்னிடம் வராதேயுங்கள். என்னைப் படைச் சவனைச் சந்திக்க நான் தயாராகணும்!” அவ்வளவுதான். சுந்தரகாண்டத்தை எடுத்து வைத்துக்கொண்டு இரவின் மிச்சப் போதுக்கு வியாக்யானம், வின்யாசம், கவிநயம், பொருள்நயம், சொல்நயம், மனோதத்துவ ஆராய்ச்சி.
"ஏன் அண்ணா, இந்த அனுமனைப்போல் தன்னடக்கம் உண்டா, இதை நம்பும்படியாக இருக்கா? அவன் சீதையைக் கண்டுபிடித்துக் கொடுக்காவிட்டால், கதை என்கிற ரீதியில் அதற்கடுத்த யுத்தகாண்டம் கிடையாது. பட்டாபிஷேகம் கிடையாது. உத்தர காண்டத்தை விட்டுத்தள்ளு; அது வண்ணான் வண்ணாத்தி அக்கப்போர்; நடந்துபோன காரியங் களுக்குச் சாக்குகள்; சமாதானங்கள் - ஆனால் இந்த ஹனுமான் ஒரு ஆச்சரியமான சிருஷ்டி. ராம ஜெபத்தின் சொரூபமே அவன்தானே ! ராம - இரண்டெழுத்து வார்த்தைதான். ஆனால் மந்திரம்னு எடுத்துண்டால், வெறும் உச்சரணை - திரும்பத் திரும்பச் சொல்வதற்கே என்ன சக்தி ! அப்புறம், எத்தனையோ சக்திகளுக்கு உறைவிடமாக இருந்தும் தன்னை மறந்திருந்தானாம்! அப்போ ஞாபகப்படுத்தற வன் ஞாபகப்படுத்த வேண்டிய முறையில் ஞாபகப் படுத்தினால் மனித சக்திக்கு எல்லையே இருக்காது போல இருக்கே! அதற்கு எடுத்துக்காட்டுதானே ஆஞ்ச னேயன், குரு என்கிறவன் புதுசா என்ன உபதேசம் பண்ணுகிறான் ? புதுசாக உபதேசிக்கவே என்ன இருக்கு? ஞாபகப்படுத்துகிறவன் குரு. அப்படித்தானே? தன் உணர்வு என்பதுதானே அனுமத் ப்ரபாவம்"
விழிகள் தளும்ப தாத்தா வாயடைத்து உட்கார்ந் திருக்கிறார். அணையப்போகிற சுடர் கடைசிக் கொழுந்து விடுகிறது. இனி இதுபோல் பேச்சு ஏது?
சொன்னபடியே பொலபொலவென விடிநேரத்தில் அடங்கிக்கொண்டே வரும் மூச்சில் கடைசியாகக் கெட்ட வார்த்தை:
"ஹா - லா - ஸ் - யம்!” மூத்த பிள்ளை பக்கத்தில் இல்லை. சென்னையில் draughtsman course-க்குப் படித்துக் கொண்டிருந்தான்.
மாரே வெடித்துவிடும் போல் தாத்தா விக்கி அழுதாராம். ஆண்பிள்ளை அழுதால் இன்னமும்கூட அது பயப்படக்கூடிய விஷயம். யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே. ஆனால் இது ஒல மணி, நல்லதற்கல்ல.
நான் இந்தக் குடும்பத்தில் பிறந்தவன்தான். ஆனால் சற்று ஒதுங்கி நின்று இவர்களைப் பார்க்க முயல்கிறேன். யார் இவர்கள் - ஆண், பெண் அடங்கலாக? லேசாகப் பேய் கலந்த தெய்வீகங்களா ? அல்லது அதன் ‘உல்ட்டாவா? எனக்கும் ஆரேஞ்ஜ் ஸிக்னல் விழுந்தாகி விட்டது. ஆனால் இன்னமும் இவர்களைச்'சிந்திக்கச் சிந்திக்கப் புது வியப்பே காட்டுகிறார்கள்.
இவர்கள் ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு மிகைப் பட்ட தன்மை (abnormality) இருந்தது. அது இவர்கள் பரிணாமத்தை 3-Dஇல் பிதுக்கிற்று. அந்தப் பரிணா மத்தின் விவரம்தான் என்ன ?
இவர்களிடம் ஒரு மேடை ஆக்கிரமிப்பு இருந்தது. யமனிடமிருந்துகூட மேடையைப் பிடுங்கிக்கொள்ள வேண்டும். இது என் கடைசி நிமிஷம். இது என்னு டையது. கடைசிவரை இது என்னுடையதாகவே இருத்தல் வேண்டும்.
என்னுடைய வேளை (moment of truth) வரும்போது இவர்களுக்குரிய வாரிசாய் நான் உயர்வேனா? என் எழுத்து அதற்கு எனக்குக் கை கொடுக்குமோ?
இவர்கள் யதார்த்தத்துக்குச் சற்று புறம்பானவர்கள். இவர்களிடம் ஒரு unreality கமழ்ந்தது. அதனால் இவர்கள் பொய்மையர்கள் என்று அர்த்தமல்ல. ஆனால் உலகத்துக்கும் இவர்களுக்கும் பிணைப்பில் ஏதோ ஒரு நரம்பு அறுந்திருந்தது. தாம்புக்கயிறு திரி பிரிந்தாற்போல் எந்த நிமிடமேனும் கயிறு அறுந்து வாளி மூழ்கிவிடக் கூடும்.
வாழும் வாழ்க்கையையே நடைமுறையில் இலக்கிய மாக மாற்ற முயன்றார்களோ?
இவர்களிடம் ஒரு தன்னழிப்புணர்வு மறைந்து கிடந்ததோ ? உலகில் சாவின் விளைவுக்கே காரணம் death-wish என்று ஒரு வாதம் ஏற்கெனவே வழக்கில்
இருந்து வருகிறது. அது இவர்களிடம் அழுத்தமான விளம்பல் கண்டிருந்ததோ ?
தன்னழிவு மூலம் அமரத்வம், மரணம்-? பூ!
பெருந்திரு, குலதெய்வம் - இன்னொரு பூ! நம்மையே அவளிடம் ஒப்படைத்தாகி விட்டது. நம் நிலைமை அவளுக்குத் தெரியாதா? அவளை நாம் என்ன வரம் கேட்பது? அப்புறம் குலதெய்வம் என்கிற பட்டம் என்ன வேண்டிக்கிடக்கு? அதைவிட அரிசிக் காரி யோகாம்பாளுக்கு தூபம் போட்டால் கைமேல் பலன் உண்டு.
"நாமார்க்கும் குடியல்லோம். நமனை அஞ்சோம்.”
விரோதம், குரோதம் பாராட்டினாலும், கடைசி வரை அதுவேதான். அப்படித்தான். வளைந்தே கொடுக்கமாட்டோம். ஆனால் இத்தனைத் தர்க்கம் குதர்க்கம் என் அறிவின் - அல்ல - அறிவு என்று நினைத்துக்கொண்டிருக்கும் அசடின் அதிகப்பிரசங்க மாக இருக்கலாம்.
'பிழைக்கத் தெரியாத கூட்டம்! அண்ணா புழுங்கு வார். அப்பாவின் தகுதிக்கு அவர் காலத்துப் பெரிய மனுஷாளைக் கொஞ்சம் நைச்சியம் கட்டிக்கொண்டு போயிருந்தாரானால் வித்வத் பிரகாசித்திருக்கும்; குடும்பம் உருப்பட்டு இருக்கும். எங்கள் ஜாதகமே திசை மாறியிருக்கும். கால்மேல் கால் போட்டுக்கொண்டு, “ஏ எச்சுமி, இந்தப் பாட்டில் இந்த வரி எப்படி? ஏ சீமதி, நீ என்ன சொல்றே?" என்று திண்ணை தர்பார் நடத்திக் கொண்டிருந்தால் ஆகிவிட்டதா?
அரேரே எச்சுமி வந்துட்டாளா? இவள் தாத்தாவின் தங்கை லகஷ்மி அல்ல. இது வேறு எச்சுமி. இவர் வாங்குகிற பதினஞ்சு ரூபாய் சம்பளத்தில் ஒரு அந்தஸ்து லசுஷ்மி. அப்படியேனும் லக்ஷ மிகரம் உண்டா ? யோகாம்பாள் அளக்கிற படியில் சில சமயங்களில் பங்குக்கு வந்துவிடுவாள்.
லக்ஷ்மியை முதன் முதல் அவள் அடையாளத்தடன் பார்த்தபோது அவள் கிழவியாகிவிட்டாள். "இப்போ இப்படி ஆயிட்டேனே என்று பார்க்காதே. அந்தக் காலத்தில்." என்று தனக்குத் தானாவது பீற்றிக்கொள்ளு மளவுக்குச் சிதைந்த களைகூட அவளிடம் ஏதுமில்லை.
பிரம்மோத்ஸவத்தின் போது ஊர்வலத்துக்குப் பின் கோயிலுள் நடராஜா சன்னதிக்கெதிரே உத்ஸவரை இறக்கி, அங்கே நாயனக் கச்சேரி, கும்மி கோலாட்டம் பரத்நாட்டியம், தேவாரம், கேளிக்கை, உபசாரங்கள் நடக்கும். அங்கிருந்து பள்ளியறைக்கு எழுந்தருளப் பண்ண மணி ஒன்று, இரண்டு ஆகிவிடும்.
அந்தச் சமயத்தில், பழைய பாரம்பரிய உரிமையில் கும்மியடிக்கும் தேவதாசிக் கூட்டத்தில் லக்ஷமியும் கலந்துகொள்வதைப் பார்த்திருக்கிறேன்.
"குழந்தைகள் சோற்றுக்கு ஆலாப் பறக்கிறதுகள். இதில் இது ஒண்ணுதான் குறைச்சல். குடிக்கிறதுக்குக் கூழ் கூட இல்லை. ஆனால் கொப்பளிக்கிறது 'பன்னீர்’.
அண்ணாவுக்கு மிக மிக வெறுப்பு.
கொடிது கொடிது வறுமை கொடிது.
அதனினும் கொடிது இளமையில் வறுமை.
வறுமையால் வீட்டுச் சூழ்நிலை, பட்டினிகள், பள்ளியில் பாடம் சொல்லிக் கொடுக்காமலே, சொல்லிக் கொடுக்கத் தெரியாமலே, உபாத்தியாயர் களின் கொடுமை, பின் வந்தவர்களைக் காட்டிலும் அவரை அதிகம் பாதித்துவிட்டன என்று சொல்ல வேணும். ரோசம், நுட்பமான மனம் உடையவர்கள் பாடு என்றுமே கஷ்டம்தான்.
இளம் வயதில் அவருக்கும் பாட்டிக்கும் இடையே ஒரு வாக்குவாதத்தை அடிக்கடி சொல்வார்.
“மன்னி, பண்டாரி மாமி முறுக்கு சுத்தறாளே, வாசனை மூக்கைத் துளைக்கிறதே. நம்மாத்தில் ஏன் சுத்தக்கூடாது? நீ எப்போ சுத்தப்போறே ?”
"நீ பெரியவனாகி, உத்தியோகம் பண்ணி, சம்பா திச்சுக் கொண்டுவந்து என்னிடம் கொடு. பண்டாரி மாமியைவிட பேஷா பண்ணறேன்!"
"நான் சம்பாதித்தபின் இவளிடம் வந்து கொடுத்து இவள் முறுக்கு பண்ணறவரை காத்திருக்கணுமா? நேரே ஹோட்டலுக்குப் போறேன்!”
அண்ணா பேச்சு சில சமயங்களில் சாப்ளின் தமாஷ் போல் இருக்கும். கேட்டவருக்கு உதட்டில் சிரிப்பு வெடிக்கையிலேயே, நெஞ்சில் பக்கென்று ஒட்டை விழும். இது பேச்சு சாமர்த்தியமல்ல. வயிற்றுக் கொடுமையில், ஒழுங்கை உள் தந்த இருளின் தஞ்சத்தில் மானம் வடித்த கண்ணிரில் ஊறிப்போய், நேரிடையாக நெஞ்சம் திறந்த வாக்கு.
இப்போதோ -
காலேஜிலிருந்து, ஆபிஸிலிருந்து, இல்லை வெட்டிக்கு வெளியே சுற்றிவிட்டு வந்து உள் நுழைந்ததும்,
“என்ன இன்றைக்கு, இட்டிலிதானா டிபன்?”
"அடே, என்கையாலேயே அரைச்சேண்டா, அரவை மெஷினில் கொடுத்தால் புளிச்சுப்போகுமேன்னு சட்னி அரைச்சிருக்கேன். உடைத்த கடலை சட்னி சுட்ட கத்தரிக்காய் கொத்ஸ" வேறே!” தாயார் கெஞ்சுகிறாள்.
சமையலறையில் இது நடக்கிறது.
வாசற்பக்கம் என் அறையில் (சிறையில்) நான் உட்கார்ந்திருக்கிறேன்.
காக்ஷிவியின் கொடுமை மட்டும் எனக்கு வடி கட்டுகிறது.
உடல் ஒருதரம் குலுங்குகிறது. உள்ளம் சுருங்கு கிறேன். தப்புப் பண்ணிவிட்டாற்போல் தலை குனி கிறேன். இன்று மெளனவிரதம் வேறு வாய் அடைத்துப் போயிற்று. வாய் இருந்தால் மட்டும் நான் என்ன செய்ய முடியும்? இது, இந்தத் தலைமுறை. இதற்குப் பசியின் அவா அடைத்துவிட்டது. புதுமையின் அவா மட்டும் திறந்துகொண்டது. அடங்காத அவா.
அண்ணா சொன்ன கதை ஞாபகம் வருகிறது.
புருஷன், மனைவி; பெரிய குடும்பம். கணவன் வீட்டை விட்டு ஓடிவிட்டான். பல வருஷங்கள் கழித்துத்தான் திரும்பி வந்தான். குழந்தைகள் பெரியவர் களாக வளர்ந்துவிட்டார்கள்.
"இதுகளை நானும் இல்லாமல் எப்படி வளர்த் தாய்?" என்று வியப்புடன் கேட்டானாம்.
"நீங்களும் இல்லை. என்னவோ புல்லையும், மண்ணையும் போட்டு வளர்த்தேன்!” என்றாளாம்.
*புல்லைக் கொடுத்து வளர்த்தாயா ? என்ன அக்கிரமம்? இதுகளுக்கு இப்படி நாக்கை வளர்க் கணுமா? அதுவும் நான் இல்லாத சமயத்தில்! இது கட்டுப்படியாகுமா?” என்று கணவன் கோபம் பொங்கி வழிந்தானாம்.
என் தந்தையின் கதைகளே கொஞ்சம் அலர்ஜி தான்.
-------------------------
அத்தியாயம் 8
இந்த வரலாற்றின் எழுத்து வாகில் ஒரு பாத்திரம் நுழைந்தது. அதைப்பற்றிச் சொல்கையில் வெளிப் படும் விசேஷ நற்குணங்களில் எனக்குத் தனிச் சந்தோஷமே உண்டு. ஆனால் தோற்றத்தை விவரிக் கையில், 'இடுப்பு குழம்புக் கற்சட்டிபோல்’ என்கிற உவமை தோன்றியதும் -
உவமையின் பொருத்தம் பற்றி எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஆனால், மனம் ஏனோ இச்சமயம் தயக்கமுற்றது. அந்த ஆசாமி இதைப் படிக்க நேர்ந்து, தன்னை அடையாளம் கண்டுகொள்ளும்போதும் - கண்டு கொள்ளாமல் இருக்க முடியாது - அந்த மனம் என்ன புண்படும்! அதுதான் என் நோக்கமா? கலையின் லட்சியங்கள்தாம் என்ன ? இந்தப் பாத்திரம் இந்த இடத்தில் அவசியந்தானா? எப்படியேனும் சாதக விசேஷத்தால், பாத்திரத்தை இங்கு இணைத்துவிடலாம். ஆனால் எம்மட்டில் அது கலையாகும்? ஓர் உண்மை யான கலா சிருஷ்டியில், அதை உற்பவிப்பவனுக்கே எந்தமட்டில் சொந்தம் உண்டு? கலையென்பதுதான் என்ன?
இக்கேள்விகளை (கேள்விகள் இதோடு முடிந்துவிட வில்லை. ஒரு கோடிதான் காட்டியிருக்கிறேன்) ஒட்டித் தொடர்ந்த சிந்தனைகளை இங்கு பரிமாற விரும்புகிறேன்.
"ஆச்சு, கதையை விட்டுவிட்டு வகுப்பு நடத்த ஆரம்பிச்சாச்சா?” என்கிற அலுப்பு முறை அல்ல.
எந்தக் கலைக்கும் கச்சா சரக்கு, வாழ்க்கையும் மக்களுந்தான் - காசுக்குத் தலையும் பூவும் போல, எழுத்தின் (கதை, கட்டுரை, வரலாறு, கவிதை, கடிதம், வெள்ளைக் காகிதத்தைக் கறுப்புக் காகிதமாக்கும் இத்யாதிகள் அனைத்தையும் அணைத்ததைத்தான் எழுத்து எனக் குறிப்பிடுகிறேன். நான் பயிலும் கலை சம்பந்தமாக, இந்த விளக்கம் இனிமேலும் பொருந்தும் என வேண்டிக்கொள்கிறேன். எழுத்தின் இன்றியமை யாத, இரு பக்கங்கள் எழுத்தாளனும், வாசகனும்.
"நீ இல்லாமல் நானில்லை.
நானில்லாமல் நீயில்லை.
டடடா டடடா
டட்டா டட்டா -
கூடத்தில் திடீரென ரேடியோவின் ஒலி பயங்கரத் துக்குப் பெருகுகிறது.
“எனக்காகவே எழுதிக்கொள்கிறேன்!" வாஸ்தவம், எழுதுகிறவரை இது சரி எழுதியதைப் பிறருக்குக் காட் டாமல், நானே படித்துக் கொண்டாலும், அந்த சமயத்துக்கு நான் வாசகன்தானே! இந்தத் தர்க்க நுணுக்கங்கள் எதற்கு? வாசகன் என்கையில், படிப்பவன் - படிக்கத் தெரிந்தவன் மட்டும் குறிப்பாக இல்லை. படிக்கக் கேட்டுத் தெரிந்து கொண்டாலும் யாரோ எழுதியதை, யாரோ படித்து, அதை அவரிடமிருந்து, யாரோ சொல்லிக் கேட்டுத் தெரிந்துகொண்டாலும் நேரும் பலன்கள் வேறுபடினும் எழுத்தின்மூலம் பரவிய விஷயஞானம் கொள்கையில் ஒன்றுதான். வெளிப்படுத்துவோனிடமிருந்து வாங்கிக் கொள்பவன் எனும் இந்த உடந்தை நிலை மாறவே முடியாது. சமைப்பது, சாப்பிடுவதற்குத்தான். எழுத்தும் முக்கியமான ஊட்ட வகைகளைச் சேர்ந்ததுதான்.
ஆகவே புரிந்தாலும் புரியாவிட்டாலும், பிடித் தாலும் பிடிக்காவிட்டாலும் படித்ததனாலாய பாதிப்பு கண்டபின், வாசகனின் பொறுப்பு, எழுதினவனுக்குக் குறைந்ததல்ல என்பது என் கருத்து.
இந்த அடிப்படையில் நான் சொல்ல வருவது இதோ:
தினப்படியே உவமைகளும் குறியீடான உணர்த்தல் களும் என்னமாக வாழ்க்கையை ஆள்கின்றன ! வசையுடனேயே ஆரம்பிக்கிறேன்.
“டேய் பொறுக்கி!” “என்னத்தை” என்று கேட் கிறோமா?
"டேய் குரங்கே " (நாம் குரங்கிலிருந்து வழி வந்திருக்கலாம். ஆனால் இப்போது குரங்காக இல்லை. குரங்கைப் போல என்றுதான் அர்த்தம்)
"நான் பொறுக்கி, இவர் மேருவாக்கும்!” (ஸ்வாகதம். ஆனால் உவமையை கவனிக்க)
"என் கண்ணே! கற்பகமே! ராஜாத்தி!” இது ஒரு குடிசையில், தன் பிள்ளைக் குழந்தையைக் கொஞ்சும் ஒரு தாய். அத்தனையும் பொய்' என்று எதிர்க்குரல் எழுப்ப யாருக்கேனும் தைரியம் இருக்கிறதா ? அத்தனையும் அன்பு சுரந்த கவிதை.
"அவரை போட்டால் துவரை முளைக்குமா ?”
"டிபன் நேரத்துக்குத் தவறாமல் எப்படியோ வந்து விடுகிறான். எப்படித்தான் மூக்கில் வேர்க்கிறதோ?” "தாய் பத்தடி பாஞ்சால், குட்டி பதினாறடி துப்பாக்கி வயிற்றில் பீரங்கி!”
"எமனும் எங்கானும் பிறந்துதானே ஆகணும்?" கேள்வி என்னவோ சிறிசு ஆகத் தோன்றுகிறது. ஆனால் அதன் இடையே என்னென்னவோ வேறு கேள்விகள் கண்ணாமூச்சி விளையாடுகின்றன.
"நல்ல மரத்தில் புல்லுருவி பாய்ந்தாற்போல."
"அந்த அம்மாள் அவங்க கையாலே மண்ணைக் கிள்ளிக் கொடுத்தாலும் போதும், மருந்தாக மாறிடும். மருந்தில்லாட்டி பொன். குங்குமத்தை இழந்துட்டாலும் அழிஞ்ச களையே இல்லை, குளிச்சிட்டு வந்த களைதான்."
"குரலில் எப்படி கிளி கொஞ்சுது பாத்தியா?”
இன்னும் சொல்லிக்கொண்டே போவேன். ஆனால் ஒரே சமயத்தில், அந்த அந்தச் சந்தர்ப்பங்களிலிருந்து பிரித்துத் தனிப்படச் சுவைக்கையில் திகட்டினால்?.
ஆனால் அறிந்தும், அறியாமலும், மானாவாரியாக பவழமல்லி, வேப்பம்பூ, பூவரசு உதிர்ந்து தரைக்கு ஜமக்காளமிடுவது போன்று, சொற்கள், பதங்கள், ஒசைகள் (வே) தெள்ளுமணிகள் தம் வாயிலாகவும் வாக்காகவும், தம் மாண்பில் நிகழ்ந்துகொண்டே- யிருக்கின்றன. மலர்களின் நளினங்கூட அறியாமல், அவற்றை மிதித்து, அவற்றின் விரிப்பின் மேலேயே நடந்து செல்கிறோம்.
இவற்றில், வட்டாரத் தனிக் கமழ்ச்சி வேறே.
இவை, உடனேயோ, பின்னரோ மறதியில் புதைந்தோ அல்லது வெவ்வேறு சந்தர்ப்பங்களில், நாக்குக்கு நாக்கு வழிவழியாகச் சுழன்று, வெவ்வேறு மணங்களும் நிழல்களும் கூடி, மிச்ச நேரத்துக்கு, Ether-இல் நீந்திக்கொண்டேயிருக்கின்றன. வெளிப்பட்ட வைக்கு அழிவேயில்லை. காத்துக்கொண்டிருக்கின்றன.
எதற்கு?
பின்னர் ஒருநாள்
கடலோரம் கிளிஞ்சல்
நதியோரம் கூழாங்கல்
வயலோரம் நத்தை முத்து
பாதை வழியில் குந்துமணி
குழந்தைகள், புதுக்கண் விழிப்பில் கண்டெடுப்பது போல்.
கவியென்றும், கதகன் என்றும், காயகன் என்றும், நாடோடியென்றும்,
கண்ணப்பன் முன் சுவைத்து என்னப்பனுக்கு முன் ஊட்டிய நிவேதனமென,
இப்பதங்களை, சொற்களை, ஒசைகளைத் தன்தன் ஈடுபாட்டுக்கேற்பத் தேர்ந்தெடுத்து ஆரம் தொடுத்து நம் முன் வைக்கையில்,
அதை நாம் அடையாளம் கண்டுகொள்கையில், "ஆ! ஈதென்ன? இப்படித்தான் என் நெஞ்சில் இருந்ததை நான் சொல்லவல்லாமல், இவன் எப்படி என் நெஞ்சில் இருந்ததை என் நெஞ்சிலிருந்து பிடுங்கச் சொல்லி விட்டான்?" என்று வியக்கையில், கூச்சமுணர்கையில், அச்சுறுகையில், தேறுதல் கொள்கையில், உள்ளுணர்வு ஆசி கூறுகையில் அந்த எழுத்து, (எழுத்து என்பது வெளி யீட்டின் ஒரு வகைதானே?) எழுதியோன், வாசகன் மூவரும் அந்தச் சமயத்தின் ஆசியைப் பெறுகின்றனர்.
ஆசியேதான் தரிசனம், ஆசியில்லாமல் தரிசன மில்லை. தரிசனம் என்பது என்ன?
என் நரம்பின் விதிர்விதிப்பில் ஏற்கெனவே அதனுள் புதைந்து கிடந்து, அவ்வப்போது தன்னை வெளிப் படுத்திக் கொள்ளும் வாழ்வின் இசை, இதன் விளை வாய் என் மகிழ்ச்சியின் மறு பெயர் அஞ்சலி. அவள் பாதகமலங்களில் போய்ச் சேரும் நேரம், நேமம் முன் அறிய எனக்குச் சக்தி ஏது? இந்த அவள் யார்? நட்ட கல்லெல்லாம் சிவமாய நம்நாட்டுப் பண்பில் அவரவர் தன் உபாஸனையில் சிறுதுளி பெருவெள்ளமாய், சக்தி என்றும், விஞ்ஞான பாஷையில் ether என்றும், எனக்குக் குலதெய்வம் பெருந்திரு என்றும், அவரவரின் நடமாடும் தெய்வம் தாய் என்றும், பொதுவாக உயிரின் கவிதா தேவி என்கட்டுமா?
ஆனால் இந்த உள்பூரிப்புகள் ஒன்று குழைந்து தொடர்ந்த ஒரே நிலையாகிவிடில், இந்த உடல், அதன் பல குறைகளில், தாங்க முடியாது; ககனத்தில் பறந்துகொண்டேயிருக்க முடியாது. அவ்வப்போது இறங்கி பாதத்தடியில் அதன் தைரியத்தை உணரத்தான் இந்த பூமி. மாற்றியே சொல்கிறேன். இந்த பூமி இருப்பதால்தான் கவிதையென்றும், தரிசனமென்றும், பாஷை யென்றும் அவ்வப்போது சிறகு விரிக்க முடிகின்றது.
ராஜாளியின் தனிமையில்
புறாவின் கூட்டத்தில்
ஹனுமானின் தாண்டலில்
இந்தச் சிறகுப் பரவசம், அவரவர் அடைந்திருக்கும் பக்குவத்துக்கேற்ப நேர்கின்றது.
உடலுக்கும், ஆத்மாவிற்கும் இடைப்பாலம், சமாதானம், உறவின் நேர்த்திதான், பாஷையும் அதன் பல நயங்களும். இந்த உவமைகள், சொல் 'சுறீல்கள், துள்ளு மீன்போல் மனம் தாவித் தாவிக் கண்டுவிட்ட வேறு தடத்து ருசி.
அவ்வப்போது புத்துயிர் கொண்டும் வேறு பிரதேச பாஷைகளின் கலப்பினாலும், சொந்த பாஷை செறிவும் உரமும் பெறுகின்றது. சொந்த பாஷையின் சுயத்தனமும் சேர்ந்து பெருங்கிளையில், புதுத்தண்டு முளைத்தாற் போல் செடியில் புது மொட்டுக் கட்டினாற்போல், சுய பாஷை ஒன்று உருவாகின்றது.
அத்தனையும் ஒரே செடியில் பூத்த மலர்கள். ஆனால் மலருக்கு மலர் அதனதன் விதி தனித்தனி.
கொண்டையில் ஏறுபவை சில, பூமியில் உதிர்பவை பல.
அவள் பாதகமலங்களுக்கு அர்ச்சனையில் தூவப் பெறுபவை எத்தனை?
இலை மறைவில் இதழ்கள் சிவந்து, காண்பார் அனுபவிப்பாரற்று,
தனக்கும் பயனற்று, தான் கழலும் மலர்ச்சிகள் எத்தனை எத்தனை?
பாஷையின் உச்சகட்டங்களில் உருவாகி, நாட்டின் பண்பை வெளிப்படுத்துபவை அதன் பழமொழிகள். ஏடு, எழுத்தின் வரம்பைக்கூடத் தாண்டி, வாய்மொழி யாகவே வழிவழியாக இறங்கும் தலைமுறையின் ஊட்டம்.
கடலினும் பெரிய உண்மைகளும், மதிப்பீடுகளும், போதனைகளும் பழமொழிகளில் தெளிந்த தைரியங் களிலும் உவமைகளில் இழுத்துப் பிடித்த சொற்கட்டு களிலும்தான் அடைத்து வைத்திருக்கின்றன.
'அகழ்வாரைத் தாங்கும் நிலம்போல்' - இந்த உவமையை வரப்ரஸாதம் உள்ளவன்தான் வழங்க முடியும்.
"தீயினாற் சுட்டபுண் உள் ஆறும் ஆறாதே
நாவினாற் சுட்டவடு”
இதன் அனாயாஸத்தையும்
'ஆறாதே"இன் கடை எழுத்தின் ஏகாரத்தில் ஏற்றி யிருக்கும் பயங்கரத்தையும்
வடுவின் உள்சிறலையும், மன்னிப்பற்ற கோபத் தையும் ஓயாத புழுக்கத்தையும், நினைத்துப் பார்க்க உள்ளவர்க்கு இப்பவும் காலடியில் பூமி கிடுகிடுக்கும்.
சொன்னவன் சொல்லிவிட்டு, அவன் மேல் மண்ணும் எண்ணற்ற முறை புரண்டு போயாச்சு. ஆனால் அவனுடைய சொற்கோபம், சொல் சாந்தம். அவன் காட்டிய உவமைகளில், அல்லது உவமைகளால், இன்னும் எள்ளளவும் குன்றாமல், புழக்கத்திலும் மிச்ச நேரத்துக்கு அண்டகோசத்திலும் நீந்திக்கொண்டிருக்கின்றன.
உவமைகளில்தான் பாஷையின் ராஸ் லீலை.
பண்பு என்கிற சொல் அடிக்கடி இங்கு நேர்ந்து கொண்டிருக்கிறது. பண்பு என்றால் என்ன?
எண்ணம், வாக்கு, செயல் மூன்றிலும் பரம்பரை யாக சாதகபூர்வமாக ஏறும் மெருகுதான் திரும்பத் திரும்ப எண்ணினதையே விதம்விதமாக எண்ணி, சொன்னதையே விதம்விதமாகச் சொல்லி, செய்த தையே விதம்விதமாகச் செய்து, மூன்றிலும் விதம் விதமாகக் கூட்டிக் கடைந்து - "அம்மா, என்னடி பண்ணறாள்? மணம் கூடத்தைத் தூக்கறதே!”
"கூடமா ? எனக்குத் தெருத்திருப்பத்திலேயே வந்தாச்சு. அதான் ஓடிவருகிறேன்! என்னடி செய்யறா?”
கவிதாதேவி அவளுடைய மர்மப்புன்னகை புரிகின் றாள். அந்த மணம்தான் பண்பு. அதன் அடிப்படை உச்சரணை திரும்பத் திரும்ப.
இந்தச் சமயத்தில் ஒன்றைத் தெளிவாக்க விரும்பு கிறேன். எதுவும் புதிதாக நாமும் சிருஷ்டித்துவிட வில்லை. எல்லாம் ஏற்கெனவே இருந்ததுதான்.
Let there be light; and there was light.
இருளின் கர்ப்பத்திலிருந்து புறப்பட்டதுதான் ஒளி. ஏற்கெனவே இருந்ததுதான். வேளையின் ரஸாயனத்தில் நம் உள்ளொளி, தன்னை வெளிப்படுத்திக் கொள் கையில் அதையேதான் தரிசனம் என்கிறோம்.
நினைவின் மறுகூட்டலில்தான் நெஞ்சின் மீட்டல் விளைகின்றது. மறுகூட்டலைச் சுண்டிவிடத்தான் கலைஞனிடம் கலையின் ஒப்படைப்பு எதுவுமே யாருக்கும் சொந்தமல்ல. எல்லாம் வாழ்க்கையின் நதியோட்டத்தில் கடலில் கலக்க வேண்டியவைதாம்.
ஆகையால், ராமன், கிருஷ்ணன், இயேசுவிடமிருந்து ஜே. கிருஷ்ணமூர்த்தியையும் இப்போதைக்கு) தாண்டி, நானும் நீயும் வரை, தற்செயல்கள் அல்ல. அத்தனையும், அனைவரும், பாற்கடலின் கடையலில் கிடைத்துக் கொண்டே இருப்பவை. பின்னால் திரண்டுவரும் அமுதத்தின் தாரைகள், திவலைகள் நாம். ஏற்கெனவே நாம் அமரபானம் செய்தவர்கள்தாம். இந்த பாக்கி யத்தை, இந்த ஆனந்த கீதத்தைத்தான் எழுத்தாளன் பாடுகிறான். ஜீவ பரம்பரையின் மாண்பைப் பாடு கிறான். பாற்கடல் பாடுகிறது. கடைபவர் பாடுகிறார்கள்; கயிறாய்த் திகழும் பாம்பும் விஷத்தைக் கக்கிப் பாடுகிறது.
"ஏலே வாலி! ஐலஸா !”
லின் யூ டாங், Wisdom of India and China என்கிற புத்தகத்தில் நம் வேதங்களைப் பற்றி எழுதும்போது சொல்கிறார்: And God Created himself –
இந்த வாக்கு எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆரம்பம் முடிவு எல்லாமே இதில் அடங்கிவிட்டதாகத் தோன்றுகிறது. பிறவிக்கு ஒரு நோக்கம், நிமித்தம் உண்டு என்பதை இதைவிட எப்படிச் சொல்ல முடியும்?
இந்த ஏற்பாட்டில், எழுத்து என்பது என் பிறவியின் நிமித்தமாக இருக்குமெனில் எனக்கு மேற்கூறியபடி தோன்றிய பாற்கடலின் கடையலில் நினைவுக்கும் முந்திய காலத்திலிருந்து இயங்கிக் கொண்டிருக்கும் அமரகீதத்தில், நான் எழுத ஆரம்பித்ததிலிருந்து என் கடைசி மூச்சுவரை என் நிமித்தமாக என்னின்று வெளிப்பட்ட அத்தனை எழுத்துக்களில் ஒரு அகூடிரம் சேர்ந்துவிடின் மற்றவை அத்தனையும் நீர்த்துப் போகட்டும். என் வாழ்க்கை பயனடைந்துவிட்டது என்கிற உவகையில் என் மரிப்பு எனக்குக் கிட்டுமா? பிராணனின் மூச்சோடு சேர்ந்துவிடும் அநாமதேயப் பதவிதான் மகத்தான பதவி. லா.ச.ரா. எனும் மூன்றெழுத்துமல்ல; என் முழுப் பெயருமல்ல. அடையாளத்துக்குப் பெயரில் ஆரம்பித்துப் பெயரோடு நானும் பாற்கடலில் கரைந்துவிடல் வேண்டும்.
இதை எழுதிக்கொண்டே இருக்கையில், கடலோடு நதிக்குக் கோபமேன்? என்று ரேடியோவிலிருந்து பாடல் புறப்படுகிறது. ஆம்; அத்தனையும் கடலில் கலக்க வேண்டுமென்றிருக்கையில், கோபத்தால் பயன் என்ன? ஆகவே நம் வீர சைவம் உணவு மட்டில் இருக்கட்டும்; பிறமொழிகள் மேல் காட்ட வேண்டாம். பாஷையும் பண்பும் அவ்வப்போது தம்மைத் தாமே புதுப்பித்துக் கொள்வதற்கு மற்ற இலக்கியங்களின் உரம் காரண மாகும், தேவை. எல்லா பாஷைகளையும் படிக்க நமக்கு வழியில்லை. அத்தனையையும் மொழிபெயர்ப்பில் ஆங்கிலம் நம் வாசற்படியில் கொணர்ந்து தருகிறது.
ஆங்கிலம் ஜீவ பாஷையாக இருப்பதற்குக் காரணம் - அது இந்தியாவின் அந்நிய நாட்டுக் கடன்களைக் காட்டிலும், ராக்ஷஸ அளவுக்குத் தொன்றுதொட்டு அந்நிய மொழிகளிலிருந்து கடன் வாங்கியிருக்கிறது. இந்த இடத்தில் அதன் சிறப்பு, அது திருப்பிக் கொடுப்ப தில்லை. அத்தனையையும் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டுவிட்டது. சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறது. ஆங்கிலத்தை நிறையப் படியுங்கள். இருநூறு வருட ஆங்கில அரசாட்சியில், வயிற்றுப் பிழைப்பு காரண மாகவே வலுக்கட்டாயப் படிப்பாக, எங்கள் தலைமுறை வரை எங்கள் ரத்தத்திலேயே ஊறிவிட்டது. அதுபற்றி எனக்கு வருத்தமில்லை. மகிழ்ச்சியே. உலகத்தின் பலகணிகள் திறந்துகொண்டால் நோகுமா?
Let there be light!
தென்றல் வீசுகிறது. கதவுகளை மூடாதீர்கள்.
ஸம்ஸ்கிருதத்தில் ஸிம்ஹம், ஆப்பிரிக்காவில் விம்பா.
ஸிம்ஹத்திலிருந்து லிம்பாவா?
விம்பாவிலிருந்து லிம்ஹமா?
ஆராய்ச்சி, யாருக்கு முதல் தாம்பூலம் என்று பிரச்சினையை வளர்ப்பதற்கல்ல.
பூமத்திய ரேகைபோல், பாஷை மக்களை எப்படி வளைத்துக் கட்டிக் கொண்டிருக்கிறது என்பதில் வியப்புறத்தான்.
சரி, கதையென்றும், கவிதையென்றும், ஞான மென்றும், விஞ்ஞான மென்றும், பண் பென்றும் மொழியின் பெருமையை அறைகூவிக் கொண்டிருக்கி றோம். இன்னும் அலுக்கவில்லை. அலுக்கப் போவதில்லை.
ஆனால் வாய்மொழி தாண்டி, பேசாத மொழி யென்று ஒரு கட்டம் இருக்கிறது. மொழி நோக்கம் வெளியீடு எனில், அந்த வெளியீடு குறிப்பாலேயே நடப்பது.
வெளியீட்டுக்கு ஆங்கில வார்த்தை Communication (com+uni) சேர்ந்து+ஒன்று) அதாவது பல, ஒன்றாதல். ஆகவே புரிவதுதான் பாஷையின் குறிக்கோளே தவிர பேச்சு அல்ல.
குறிப்பால் உணர்த்தலை கிராமத்தில் பட்டி னத்தைக் காட்டிலும் அதிகம் பார்க்கலாம். இயற்கையின் விசாலத்தில், பரந்த மைதானங்களிலும் ஆகாய வெளியிலும் அகன்ற வயற்புறங்களிலும் மனிதன் இழைந்துவிடுவதால் பேச்சு தானே அடங்கிவிடுகிறது.
பிள்ளைப் பருவத்திலே, கிராமத்தில் என் தகப்ப னார் வாத்தியார் வேலை பார்த்துக்கொண்டிருந்த போது, எங்கள் வீட்டுக்கெதிர் வீட்டில் ஒரு முதலியார் வசித்து வந்தார். நாங்கள் குடியிருந்த வீட்டுக்குச் சொந்தக்காரர் கைக்கோள முதலியார். நெசவுத் தொழில்.
ஐயாவும் அம்மாவும் பிரம்மோற்சவத்தின் போது ஸ்வாமிக்கு முன் செல்லும் பூதப் பொம்மைகள் போன்று இருப்பார்கள்.
முதலியார் விடிகாலையில், கழனிக் காட்டைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பிப் போய்விட்டு - பத்து பத்தரைக்குத்தான் திரும்பி வருவார். நுழையும்போதே உறுமலுக்கும் மூக்கு உறிஞ்சலுக்குமிடையாக ஒரு தனிச் சத்தம் அவரிடமிருந்து வெளிப்படும். அவர் மனைவி அது கேட்டுப் பதறிக் கிணற்றடிக்கு ஓடி, தவலையில் தண்ணிர் கை கால் கழுவக் கொண்டுவந்து வைப்பாள்.
உடலைச் சுத்தம் செய்துகொண்டு, இது ஸ்னானம் அல்ல, திருநீறு தரித்து, முதலியார் தறியில் இறங்குவார். சற்று நேரம் பொறுத்து அதே உறுமல். எங்கிருந்தாலும் அந்த அம்மாவுக்கு எப்படித்தான் காது கேட்குமோ? ஆவி பறக்க ஒரு கையில் கஞ்சியும், ஒரு கையில் தம்ளருமாய் ஒடி வருவாள்.
அல்லது, பாவில் அறுந்துபோன இழையை நிமிண்டுவாள். பேச்சுக்கோ, தர்க்கத்துக்கோ நேரம் கிடையாது, நெசவுத் தொழிலில், அதுவும் தறியில் இழை அறுந்தால் கரணம் தப்பினால் மரணம் மாதிரி, குறுக்கே பாயும் நாடாவில் இழையறுதல் நேரலாம். நெடும் பாவில் நேரலாம். லுங்கியின் கட்டான்களின் சமன் களுக்குக் கண்ணின் கணிப்புத்தான் அளவு கவனம் சற்றுப் பிசகினால் ஏமாற்றக் காத்திருக்கும் செப்பன் வேலைகள் எத்தனையோ இடையிடையே இருக் கின்றன. இதனால், உம்மணாமூஞ்சியாகவோ, ஊமை யாகவோ இருப்பார்கள் என்று நான் சொல்ல வர வில்லை. ஆனால் உஷாராய் மோனத்தின் சுருதி, தறியின் இயக்கத்தில் சார்ந்தவரைக் கவ்விக்கொண் டிருத்தல் வெளியாருக்கே தெரியும்.
மாலை வேளையில் தறியை விட்டு இறங்கி வாசலில் நிற்பார்.
உறுமல்,
அந்த அம்மா, ஒரு குட்டி மண் குடுவையில் எண்ணெயுடன் ஒடி வருவாள். வாய்க்காலைத் தாண்டி உள்ள பச்சையம்மன் கோயிலில் விளக்கிட,
நிலா வெளிச்சத்தில் நடுமுற்றத்தில் முதலியார் சாப்பிட்டுக் கொண்டேயிருப்பார். மறுபடியும் உறுமல்.
அவர் மனைவி நடுநடுங்குவாள். மெய்யாகவே உடல் வெடவெடக்கும்.
"என்ன ஆச்சு?" அவளிடம் கிசுகிசுப்பேன்.
"எள்ளுத் துவையலில் புளி கூடிப்போச்சாம்.”
முதலியார் எங்களிடம் கலகலப்பாய் இருப்பார். அவர் பேசினால் இன்று பூராக் கேட்டுக் கொண்டிருக் கலாம். வாய்விட்டுச் சிரிக்கமாட்டார். உடல் மடிமடியாகக் குலுங்கும். அது பாட்டுக்கு, தாயுமானவர் பாடல், அறப்பளிசுவர சதகம், குமரேச சதகம், பட்டினத்தார் பாடல், குறள், ‘கச்சி யேகம்பனே, அருட்பா, திருப்புகழ், எப்படித்தான் தங்கு தடையின்றி வருமோ, வந்து கொண்டேயிருக்குமோ, அத்தனையும் நுண்ணிய அர்த்தச் சுவைகளுடன். என் எழுத்தை பாதித்த முக்கியப் பாத்திரங்களில் முதலியாரும் ஒருவர்.
ஆனால் என்னுடைய வியப்பு யாதெனில், இந்த ஒரேவிதமான உறுமலில் இத்தனை அர்த்தங்கள் விசிறுகின்றன?
“சிவபாக்கியம், நீ எப்படிப் புரிஞ்சுக்கறே?” என்று கேட்டால், அவள் சிரிப்பாள். "என்னைக் கேட்டா எனக்கென்ன தெரியும்? நீதான் இங்கிலீஸ் படிச்சவன். நீதான் சொல்லணும். எனக்குத் தமிழ் எளுத்துக்கூடத் தெரியாது.”
மெளனம் என்பது வெறுமனே பேசாமல் இருத்தல் அல்ல. மெளனம் பேச்சின் ஒரு ஸ்தாயி. அதில் ஏதோ யோகம், தாந்த்ரீகம் கலக்கிறது. அல்லது ஆரம்பிக்கிறது என்று நினைக்கவே கவர்ச்சியாக இருக்கிறது. அங்கு இன்னொரு தடத்தின் கதவு திறக்கிறது. அல்ல, திறக்கக் காத்திருக்கிறது. இதைவிட உன்னத இலக்கு, இலக்கியத்தில் உண்டா?
தட்டுங்கள் திறக்கப்படும்.
சொல்லிவிடலாம், சுலபமாக,
குறிப்பாக உணர்தல்கூடப் பெரிதல்ல, உணர்வது அதைவிடப் பெரிதல்லவா? புத்திசாலித்தனத்துக்கும் முன்னால் புரிந்துகொள்ள இஷ்டம், ஒரளவு பயம்,
ஈடுபாடு, பக்தி, விசுவாசம் வேண்டும். பழகப் பழகப் பக்குவநிலை எய்தும். பேச்சின் வியர்த்தம் அறிந்தபின், பேச்சு கீச் கீச்சுதான்.
கொட்டாங்கச்சியில் தண்ணிரும், பக்கத்தில் ஊசியும் கதையில் மூன்று விஷயங்கள் புலனாகின்றன.
ஒரு பருக்கைகூடச் சிந்தாமல் ஒருவன் வாழ்நாளின் கடைசிவரை சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
ஒரு பருக்கைகூடச் சிந்தாமல் ஒருத்தி, அவள் வாழ்நாளின் கடைசிவரை பரிமாறினாள்.
ஒரு பருக்கைகூடச் சிந்தாமல் சாப்பிடுவது செளந்தர்ய உபாசனை.
இதுபற்றி ஒருவருக்கொருவர் எப்படித்தான் இருக்க வேண்டும் என்று, முன்கூட்டிச் சொல்லிக் கொள்ளவு மில்லை. அதனால் கொட்டாங்கச்சியில் தண்ணிரும், பக்கத்தில் ஊசியும், நிகழ்ந்து கொண்டேயிருந்த செளந்தரியத்துக்குச் சாகூழியாக நின்றுவிட்டன.
எழுத்தாளன், வாசகன், இடையில் எழுத்து - இந்த உறவும் இப்படித்தான்.
--------------
அத்தியாயம் 9
நான் பிறப்பதற்கு முன்னரே இறந்துவிட்ட என் அம்மாவைப் பெற்றவளுக்கு அத்தியாயமே ஒதுக்கி விட்டபின், நான் நன்கு அறிந்தவள், என் தந்தையைப் பெற்றவளைப் பற்றி எழுதாவிடின், நான் நன்றி கொன்றவனாவேன் என்பது மட்டும் அல்ல. நான் மேற்கொண்டிருக்கும் காரியத்தின் நோக்கமும் கலையும் தவறினவனாவேன்.
பெரியோரைப் புகழ்வோம்.
மன்னிப்பாட்டியின் செலலத் தீவட்டி' நான். ஆனால் அவள் போனபின், பேரன் நான் அவளுக்கு நெய்ப்பந்தம் பிடிக்கக் கொடுத்து வைக்கவில்லை. அவள் மரணத்தின்போது அவள் பக்கத்தில் நான் இல்லை.
காஞ்சிபுரத்துக்கு (பழைய கணக்கு) ஐந்து மைல் - சென்னைக்கு நாற்பது மைல் தூரத்தில் ஐயன்பேட்டை (அப்போது) கிராமத்தில் வாத்தியார் வேலை பார்த்துக் கொண்டிருந்த அப்பா (அண்ணா)விடம், மன்னி (பாட்டி) இறந்தாள். அந்தச் சமயத்தில் சென்னையில் வாஹினி பிக்சர் (லிமிடெட்)ளில் எனக்கு டைப்பிஸ்ட் வேலை. மன்னி சாகும் தறுவாய் சேதி இருமுறை வந்து, போய்ப் பார்த்துவிட்டு வந்தபின் –
பாட்டிக்குப் புலன்கள் ஒவ்வொன்றாய் ஒடுங்கி விட்டன. "மன்னி, இதோ ராமாமிருதம் வந்திருக்கேன்! மன்னி, இதோ என் முதல் சம்பளம் (அது முதல் சம்பளமல்ல). கையில் வாங்கிக்கொள்ளுங்கள். மன்னி, இதோ நமஸ்காரம் பண்றேன்.” கண்களில் பார்வை போய்விட்டது. கைகள் என்னை ஆசியில் தொடத் துழாவி, ஸ்பரிச உணர்வும் அற்றுவிட்டதோ என்னவோ, கூப்பிக்கொள்கின்றன. உள்நினைவு மட்டும் ஒடிக் கொண்டிருக்கிறது.
போய்ப் பார்த்துவிட்டு வந்தபின், மன்னி செத்துப் போய்விட்டாள் என்று ஆள் வந்ததும் லீவு கேட்டதும் மானேஜருக்குக் கோபம் வந்துவிட்டது. "உனக்கென்ன, பாட்டிங்க செத்துப்போய்க்கிட்டே இருப்பாங்க. அவங்களுக்கும் வேலையில்லை, உனக்கும் வேலை யில்லை” என்கிறான்! வயிற்றுப்பிழைப்பு என்னென்ன வெல்லாம் கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது! முறைத்துக்கொண்டால் நான் நடுத்தெருவில், சுளை சுளையா ரூபாய்கள் இருபத்தைந்து. மாதம் சம்பளம், குடும்பம் அப்போது தத்தளித்துக்கொண்டிருந்தது.
"இந்தக் குடும்பம் என்றைக்குத் தத்தளிக்கவில்லை?” கேலிக் கொக்கரிப்புச் சிரிப்பு கேட்கிறது.
(சிரிப்பு எங்கள் உரிமை)
ஞாயிற்றுக்கிழமைகூட வந்தாகணும். பேருக்கு அரைநாள். அந்த வேலையுள் முழுநாளின் சாறு வேறு சக்கை வேறாகப் பிழிந்தாகிவிடும். என் நாள் காலை 9-30 மணியிலிருந்து இரவு எட்டு - எட்டுக்கு மேல் அதன் ஒட்டுக்கள் அன்றன்று எம்மட்டில் நின்றனவோ, அதுவரை. O.T.? அப்படி என்றால் என்ன ? அப்பவே சீட்டைக் கிழித்துக்கொள்ள வழி "மன்னிச்சுக்கோங்கோ ஸார் தெரியாமல் கேட்டுவிட்டேன் ஸார்.”
'ஸாரி தம்பி, இது உன் தப்போடு போகல்லே. இந்த எண்ணம் மத்தவங்ககிட்ட புரையோடாமல் இருக்க உன்னை முன்னால் கழட்டியே ஆகணும், ஆபரேஷன் செய்யறமாதிரி.
வேலைக்கு அமர்ந்த புதிதில், என் அறியாமையில் முதல் ஞாயிற்றுக்கிழமை நான் வேலைக்குப் போக வில்லை. அடுத்தநாள் போனதும், "ஒஹோ, நீங்கள் எல்லாம் Gazetted ஆபீஸர்களா? ஞாயிற்றுக்கிழமை வரமாட்டீங்களாக்கும்!”
சரி, நான் வேலையை உதறிவிட்டு மன்னிப்பாட்டி சாவுக்குப் போயிருந்தாலும் அவள் ஆவி சம்மதித்திருக் காது. அவளுடைய கடைசி மூச்சு என்னைக் கண்டிக்கத் திரும்பினாலும் திரும்பியிருக்கும்.
"அட அசடே! இப்படிப் பொறுப்பில்லாமல் இருப்பையா? குடும்பம் என்னாவறது?”
“எனக்காக வந்தையா? நன்னாயிருக்கு! என்னைப் பார்க்காட்டால்தான் என்ன ? நான் போக வேண்டி யவள்தானே!"
மானேஜர் படபடவெனப் பேசிவிட்டானே ஒழிய, ஒரு கால், அரைமணி நேரம் பொறுத்துத் தானே என்னைப் போகச் சொல்லிவிட்டான். ஆனால் வண்டி கிடைத்து நான் ஊர் போய்ச் சேர்வதற்குள், மன்னிக்கு நெருப்பு வைத்தாகிவிட்டது. அவள் கதை முடிந்து நாற்பத்தைந்து வருடங்களுக்கு மேலாகின்றன.
சில சமயங்களில் சூழ்நிலையின் அலுப்பில் நொந்து போகையில் அவள் நினைப்பு எழும்.
(அலைபாயும் மனந்தானே!)
இந்த வீட்டில், அந்த தடயுடல் கெடுபிடிக்காரர் கள், அசாதாரணிகள், தாங்கள் தனி என்ற இறுமாப்புக் கொண்டவர்கள், அடாவடிகள் - இந்தப் பட்டினிக் கிராக்கி வீட்டில், ஸ்ர்வ ஸாது மன்னி எப்படி மாட்டிக் கொண்டாள்? இந்த நிலை அவளுக்குத் தேவையில்லை. 'ஆஹா ஒஹோ' என்று இல்லாவிடினும் அவள் பிறந்த வீட்டில் பசி கிடையாது. தகப்பனார் கனம் பண்ணினவர். ப்ரவசனம் வேறு சொன்னார். இதில் வருமானம் தவிர, கொஞ்சம் பூஸ்திதியும் இருந்தது. கூடப் பிறந்தவன் ஒரு அண்ணாவுடன் சரி.
ஏன்? ஏன்? ஏன்?
இது எத்தனையாவது முறை சொல்கிறேனோ? ஏன்? ஏது? எப்படி? இந்தக் கேள்விகளுக்கு அவள் காலத்தில் சிறு தலைகளுக்கு உரிமை கிடையாது. ‘எல்லாம் எங்களுக்குத் தெரியும்! எல்லாம் அதில் முடிந்துபோய் விட்டது. அவர்கள் தீர்மானித்து முடித்ததுதான். ஊர்கள் கிட்டக் கிட்ட அவற்றில் முடங்கிய உறவுகள் ஆயிரம், இங்கே தொட்டு அங்கே தொட்டு தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டு ஏற்கெனவே ஒரு முடிச்சு எங்கேனும் இருக்கும். உறவுகள் விட்டுப் போக முடியாது. அம்முவாத்துச் சம்பந்தம் லேசில் கிடைக்கக் கூடியதா? ராஜ சம்பந்தம் அல்லவா?
மன்னி இந்த வீட்டில் புகுகையில் அவளுக்கு வயது எட்டோ, ஒன்பதோ? தாத்தாவுக்குப் பதினாறு. அவர் பொடி போட ஆரம்பித்தாகிவிட்டது. பாடவும் ஆரம்பித்துவிட்டார்.
கஷ்டம் தெரியாமல் வாழ்ந்துவிட்டுச் சோறு துணிக்கு லாட்டரி அடிக்கும் இடத்துக்கு திடீரென மாறியதும் குழந்தைக்கு எப்படி இருக்கும்? அவரவர் நினைத்துப் பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.
அண்ணா அடிக்கடி சொல்வார்: "இந்த மன்னி யிருக்கிறாளே, அவள் தலையில் பிரம்மா எல்லோருக்கும்போல் எழுதவில்லை. என்ன ஆயுதம் கொண்டு எழுதினானோ? இப்படியும் ஒரு பரம சூன்ய ஜாதகம் உண்டா?” என்று வேதனையில் அங்கலாய்ப்பார். "அம்முவாத்துச் 'சாப்பா வேறு விழுந்தபின் விமோசன மேது?”
ஆனால் மன்னி என்ன நினைத்தாள்? அவள் குழந்தைப் பருவத்தில் நினைத்ததைக் குறிக்கவில்லை.
போகப் போக.
கண்ணதாசன் பாடல் அற்புதமாக ஆரம்பிக்கின்றது.
இரண்டு மனம் வேண்டும்
நினைத்து வாட ஒன்று
மறந்து வாழ ஒன்று
ஆனால், நினைப்பதற்கே மன்னியிடம் மனம் என்று ஒன்று இருந்ததோ?
பெண்களுக்கு மானத்தைப் பற்றி மாறி மாறி உபதேசம் செய்வதே ஒழிய, அவர்களுடைய மனத்தைப் பற்றி ஆண்களே ஆகட்டும், வெளிப்படையாகக் காட்டிக்கொண்டதாகத் தெரியவில்லை.
அடுக்குள்தான் உன் ஆலயம்.
அடுப்புதான் உன் வழிபாடு.
கல்லானாலும் கணவன்.
புல்லானாலும் புருஷன்.
உனக்கு வாய்த்ததுதான் உன் வாழ்க்கைக்கு உபதேசம்.
மணமாகும் வரை பெற்றோர், மணம் ஆனபின் புக்ககம், கணவனுக்குப் பின் பிள்ளைகள் - ஆகவே அண்டிப் பிழைப்புதான். உன் வாழ்வின் வழி, நோக்கம், விடிவு முடிவு எல்லாமே - இந்த அடிப்படையில்தான் சொல்லிலும் செயலிலும் பெண்டிருக்கு அந்தக் காலத்து புத்திமதிகள்,
உளைமேல் நடக்கிறேன். எனக்கே தெரிகிறது. எந்த நிமிடம் அடி பிசகிச் சேற்றில் விழுந்து மூழ்கி விடுவேனோ? பயமாயிருக்கிறது.
பெண்டிர் ஆண்டு கொண்டாடி ஆகிவிட்டது.
பாரதி நூற்றாண்டு விழா நடந்துகொண்டிருக்கிறது.
மேற்கண்டதைப் படித்து, புதுமைப்பெண் படை என்மேல் வெகுண்டு எழும் பயத்தில் ஒடுங்குகிறேன். நான் என் செய்ய? யார் கட்சியும் நான் பேசவில்லை. அந்நாள் சமுதாயம் பெண்டிருக்கு மனமே இல்லாமல் போக அடித்தது நியாயம் என்று கூறவில்லை. அந்நாளின் நடப்பு இப்படி என்று சொல்கிறேன். கூடவே அந்தச் சாக்கில் இதையும் சொல்ல வேண்டி யிருக்கிறது. மன்னியின் சூழ்நிலையில், அவளுக்கு மனம் என்று ஒன்று இருந்தால் நினைத்து வாடிக்கொண்டே யிருக்க வேண்டியதுதான். மனம் அவளுக்குக் கட்டுப்படி யாகாத சொகுசு. அவளுக்குள் இருந்ததற்குள். நல்ல வேளை, அதையும் அவள் அறியாததுதான்.
வீட்டுக்குப் புதுப்பெண் வந்தவுடனே, அவளை அடுக்குள்ளில் அடைத்தார்கள் என்று எனக்குத் தோன்றவில்லை. அம்முவினம் பெண்களைச் சிறை வைக்கும் குடும்பமல்ல. அது அவர்கள் இயற்கை அல்ல. ஆனால் வந்தவளுக்குத் தனிச் சலுகை கிடைத்திருக்கும் என்கிற அர்த்தம் அல்ல. தனிக் கனிவும் கிடைத்திருக் காது. பத்தோடு பதினொன்று - தப்பு, குடும்பத்தில் அவள் வந்தபோது எத்தனை எத்தனை பேர் என்று எனக்குத் தெரியாது. எல்லோருக்கும் வழங்கப்படும் பொதுப்படை அலட்சியத்தில், தன் நாமதேயமற்று, (ஏ குட்டீ !' அல்லது) “ஏ , கிருஷ்ண சாஸ்திரிகள் பெண்ணே!” - கண்டிப்பாக அவளுக்கு இட்ட பெயர் ஸ்ரீதாலக்ஷமி என்று அழைக்கவில்லை. அது நிச்சயம். அந்தக் காலத்துப் பாணி அப்படி) வளைய வந்திருப்பாள்.
வந்த புதிதில் மன்னிக்கு இந்தக் கூட்டத்தில் ஸல்லோ புல்லோ என்று சந்தோஷமாகத்தான் இருந் திருக்கும். பிறந்த வீட்டில் அவள் தாயில்லாக் குழந்தை. இந்தக் கலகலப்பு ஏன் பிடிக்காது? ஆனால் போகப் போக, ஒருநாள் குழம்பு தீர்ந்துபோச்சு, ஒருவேளை சாதம் தீர்ந்துபோச்சு, ஒருநாள் மூலைப் பழையதும் காலி’ என்கிற நிலைமை அடிக்கடி நேர, பசி தாங்காமல் அழுகை வருகையில் யாரிடம் போய்ச் சொல்லிக் கொள்ள முடியும்?
நாலு மாதம், ஆறு மாதங்களுக்கொரு முறை பார்க்க வரும் தந்தையோடு தனியாகப் பேச, இடமும் சமயமும் தேட முடியுமா? அப்படியே அவசரமாக இரண்டு வார்த்தைகளுக்கு இடம் கிடைத்தாலும் தந்தையிடம் ஆதரவு கிடைக்குமா?
“எது எப்படியிருந்தாலும் அம்மா, இனி இதுதான் உன் இடம். பிறந்த வீட்டு மண்டை தரையில் உருளாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது உன் பொறுப்பு. எல்லாம் போகப் போகச் சரியாப் போயிடும்.”
அப்படித்தான் ஆறுதல் சொல்வார்கள்.
தற்செயலாகச் சம்பந்தி அம்மாள் அந்தப் பக்கம் வந்துவிட்டால், மிகவும் பணிவுடன், "குழந்தை மனம் கோணாமல் நடந்துகொள்கிறாளா? அவள் உங்கள் வீட்டுச் சொத்து. அப்படி வாய்த்தது எங்கள் பாக்கியம்.”
சம்பந்தி அம்மாள் அதற்கு பதில் சொல்வாளா? உதட்டைப் பிதுக்கிக்கொண்டு ஒரு புன்னகை, அதற்கு என்ன அர்த்தம்?
இந்த நாளுக்கு இது சினிமா டயலாக்.
அந்த நாளின் யதார்த்தத்தில் பாஷையே இதுதான்; புடித்துச் சொல்கிறேன்.
"போகப் போகச் சரியாப் போயிடும்."
என்ன பொன்னான வார்த்தைகள், மருந்து வார்த்தைகள்! சிந்திக்கச் சிந்திக்க ஒளஷதத்தின் ஸ்புடத் தினின்று ஏதோ அகிற்புகை சூழ்ந்து அதில் மணம் மிதக்கிறது.
வெறும் ஆறுதல் வார்த்தைகளா அவை? gigsLDIT வின் தேடலின் முடிவே அதில் அடங்கியிருப்பதாக ஒரு சமயம் தோன்றுகிறது. சத்தியத்தின் நீரோட்டம் அதில் தெரிகின்றது. சீடனுக்கு குருவின் உபதேசங்கள் ஏதேதோ ஜிகினா காட்டுகின்றன.
பொறு.
காத்திரு.
அடக்கு.
வளைந்து கொடு.
அது அது அதன் வேளையில்தான் வரும்.
உன்னிடமே இருப்பதை
எங்கே தேடிக்கொண்டிருக்கிறாய்?
இன்னும் ஏதோ தொடுவானத்துக்கு விரிவு கொடுத்துக் கொண்டே போகும் mystic வார்த்தைகள்.
போகப் போகச் சரியாப் போயிடும்.
ஆம், எது சரியாகப் போகவில்லை?
மன்னிக்கு - அப்போது அவள் இன்னும் மன்னி அல்ல. சீதாலக்ஷமிக்கு - அவள் சீதாலகஷ்மியும் அல்ல. சரி, குட்டிக்கு, இந்த வீட்டுப் பட்டினிகள் பழகிவிட வில்லையா? அரைத்தவளுக்கு ஆட்டுக்கல், சமைத்த வளுக்குச் சட்டி - இதுதான் குடும்பம். குடும்பம் ஒரு பாற்கடல்.
மனத்துடன் பசிவயிறு சமாதானமாகி விடவில்லை. சமாதானம் என்றால், விலக்க முடியாததை அநுபவித்தே யாக வேண்டும் என்கிற நிலை.
வாழ்க்கையில் வயிறு ஒர் அத்தியாயம், வயிறு மட்டும் வாழ்க்கை அல்ல.
அக்கிரமங்களுக்கு அத்தியாயம் ஒண்ணா ரெண்டா? கண்ணைத் திறந்துகொண்டே அவற்றில் வாழ்ந்துகொண்டு மிஞ்சவில்லையா? மன்னி அப்படி வாழ்ந்து மிஞ்சா விட்டால் நான் ஏது? அவள் வழிப் பேரன் அவனும் இதோ தன் ஒடத்துக்குக் காத்திருக்கிறான்.
Life marches on.
குழந்தை குமரியாகி, தன் மலர்ச்சியின் புது விழிப்பில், தன் மன்னவனைக் காண்கையில் உள்ளூர உவகை பொங்கியிருக்க மாட்டாளா?
ஆனால் இந்த ராமசுவாமிக்கு இந்தச் சீதாலட்சுமி யிடம் அதே பரஸ்பரம் நேர்ந்ததோ ?
தோற்றத்தைக் கண்டு ஏமாறாதே.
நிறம் பார்க்காதே, குணம் பார்.
பார்யா ரூபவதி சத்ரு.
இந்தக் கோட்பாடுகளின் கண்களுடன், ராம சுவாமிக்குச் சீதாலகழ்மியைப் பார்க்க முடிந்ததா? அவர் ஏற்பாடு பண்ணிக்கொண்ட லக்ஷமியைத்தான் கேட்க வேண்டும். அவரையே கேட்டால் –
"நிகரில்லா நேசமடி இது
மோசம் மோகம் எனக் கேதுக்கடி?”
என்று கவி பாடியிருப்பாரா?
மன்னியைக் கேட்டிருந்தால் எதுவும் சொல்லி யிருக்கமாட்டாள். மெளனமாய் அநுபவிப்பதில் அவள் வல்லவள் இல்லை. மெளனம் அவள் பாஷை அல்ல. அவள் சதை.
ராமசுவாமி.
சீதாலக்ஷமி.
பெயரோடு ஒற்றுமை சரி.
ஆனால் ஜோடி சேர்க்கும் பெரியவர்களுக்கு இந்தப் பொருத்தம் ஒன்றே போதும். இதுவே மாபெரும் சகுனம். உடனே அடுத்துச் சகுனம் காட்டும் பதவி.
மன்னிப் பாட்டியை நான் நினைப்போடு பார்க்கும் போது எனக்கு வயது ஐந்து. அவள் அறுபதுக்குள் நுழைந்துகொண்டிருந்தாள். நெற்றியில் தகடு அளவில் பிரகாசித்த குங்குமத்தையும் வெண்பட்டுப் போல் மின்னிய கூந்தலையும் தவிரத் தனியாக எனக்கு வேறு தெரியும் வயது அல்ல அப்போ நாளடைவில் உப்பும் தண்ணியும் காரமும் உடம்பில் எனக்கு ஊற ஊற அவளைத் தனியாகவும் தாத்தாவோடும் சேர்ந்து பார்க்கையிலும் பிறர் சொல்வதைக் கேட்பதையும் வைத்துக்கொண்டு அவள் தன் சிறிய வயதினில் ஆகிலும் சரி - உற்ற வயதிலும் சரி எப்படி இருந்திருப் பாள் என்று அனுமானிக்க முடிந்தது. என் பாட்டியைப் பற்றி வேறு ஏதும் சொல்ல நான் தயாராயில்லை. இது பாற்கடலா? அக்கப்போரா? அவள் கூன், குருடு, செவிடு, ஊனம் இல்லை.
ஒன்று மட்டும் சொல்லி நிறுத்திக்கொள்கிறேன். தோற்றத்தைப் பொறுத்தவரை அம்முவாத்து இனத்துக்கு நேர் எதிரிடை. படிப்பா, எழுத்தா, வாஸனை கிடை யாது. சரியான உழவு மாடு. இந்தச் சம்சாரத்துக்கு அவளைப் போல உழவுமாடுதானே சரிப்படும்.
கல்யாணங்கள் சுவர்க்கத்தில் ஏற்பாடாகின்றன.
காவல்கள் இங்கு எப்படியோ ஆகிவிடுகின்றன. வியப்பும் அதில்தானே இருக்கிறது. "போகப் போக எல்லாம் சரியாப் போயிடும்."
சண்டையோ, பூசலோ, உதையோ, குத்தோ, ஆசைக் கிழத்தி லக்ஷமியோ இத்தனை நடுவிலும் சப்தரிஷி, அமிர்தகடேசன், அகிலாண்டம், ஸ்ரீமதி, கார்த்திகேயன் தவிர இவர்களுக்கிடையிலோ முன்னாலோ கணக்குத் தீர்ந்துவிட்டவை இரண்டு.
கொழுந்தன் மைத்துனன்மார்களுக்குக் கல்யாண மாகி, ஒரகத்திகள் ஒவ்வொருவராய்ச் சேரச் சேர, "மன்னி" என்று அழைத்து, ஊருக்கே மன்னியாகி விட்டாள். பாட்டி எங்களுக்கும் மன்னியான கதை இதுதான்.
குடும்பம் எப்போது உடைந்தது? உடைந்ததா? அத்தியாவசியத்தால் பிரிந்ததா? நாஸுக்கில் பிரிந்ததா? மன்னி மூடின கதவு. எதற்கும் காரணம் மன்னியில்லை. அதனால் அவளுக்குத் தெரியாது. எல்லாமும் இருந் திருக்கும். சகோதரர்கள் ஆறுபேரும் ஆறு திக்குகள் ஆச்சே!
இத்தனை பேர் சேர்ந்து இருந்த சமயத்திலும், பிரிந்து போன பின்னர், நாள் கிழமையென்று, ஒன்று சேரும் சமயத்திலும் உழைப்பு என்னவோ மன்னியுடையது தான். விடிகாலை சாணி தெளிக்க எழுந்தாளெனில் இரவு, இருக்கிற அழுக்கு, கல்லிட்டுவிட்ட தலையணை யில் தலை சாய்க்க மணி பத்து, பதினொன்றாகிவிடும். வாரத்துக்கு இரு முறையாகினும் மாப்பிள்ளை வாத்தியார் விகாரி போய் வந்து இரவு பன்னிரண்டு மணிக்குக் கதவைத் தட்டினால், எழுந்து கதவைத் திறந்து அவருக்குச் சாதம் போட்டு, பிறகு தான் சாப்பிட்டுவிட்டு இடையில் தேக அலுப்பில் முனகி னால் 'கும்பா கும்மா - ராக்கூத்து இன்னும் நீடிக்கும்.
அபூர்வ இடைவேளைகளில் மன்னி பிறந்தகமும் போய் வருவாள். இதோ வாளாடி - தானே! காலையில் போனால் மாலையில் அநாயாசமாகத் திரும்பி விடலாம். நான் ரயிலை மனத்தில் வைத்துக்கொண்டு சொல்லவில்லை.
அந்தநாள் எல்லாமே கால்நடைதான். திரும்பி வரும்போது இடுப்பில் மூட்டைகளோடுதான் வருவாள்.
அரிசி, பருப்பு, உளுந்து, மிளகுப்பொடி, மூட்டைமேல் நடுவழியில் தெரிந்தவர் கொடுத்த வாழைக்காய், கீரைத்தண்டு, குடும்பம் இரண்டுவேளை பசியாமல் சாப்பிடும் வலுவில்தான் மூட்டை இருக்கும்.
மன்னிக்கு அப்பா இருந்தவரை இந்தச் சீர் நடந்து கொண்டிருந்தது. அண்ணனுக்கும் தங்கைக்கும் என்றைக்குமே ஒற்றுமை இருந்ததில்லை.
“என்னடா நீ குடுமியோடு பிறந்தால், நான் கொண்டையோடு பிறந்தேன். உனக்கு இருக்கும் உரிமை எனக்கும் உண்டு!” என்று மன்னி சண்டை போடு வாளாம். இது என் தகப்பனாரின் அலாதிக் கிண்டல் கதையா? உண்மையிலேயே அப்படித்தானா? மன்னிக் குத்தான் வெளிச்சம். தகப்பனார் காலமாகிவிட்ட பின் சுப்பராமன் உள்ளே நுழையக்கூட விடவில்லை. அப்புறம் மன்னிக்குப் பிறந்த வீட்டுப் பிரமேயமே அற்றுப்போயிற்று.
அண்ணனும் பிறகு விளங்கவில்லை. ஏனோ போண்டியாகிவிட்டான். அதோடு அந்த அத்தியாயம் சரி.
நான் அறிந்த மன்னிப் பாட்டிக்குப் பற்கள் ஒன்றிரண்டு தவிர, மற்றவை விழுந்து விட்டன. சிரித்தால் முகம் ரப்பர் பொம்மை மாதிரி சுருங்கும். அழுகிறாளா? சிரிக்கிறாளா? உண்மையிலேயே சந்தேகம் தோன்றும். ஏன் அழப்போகிறாள்? ஆனால், “மன்னி மன்னி, அழாதேயுங்கோ " என்று பேரக்குழந்தைகள் கேலி பண்ணப் பண்ண, முகம் இன்னும் சவுங்கும். அதுவே எங்களுக்கு ஒரு பெரிய தமாஷ். அந்த முகம் எங்களுக்கு அலுக்காது.
மன்னி சமையல் நளபாகம் தோற்றது. நாளுக்கு நாள் தேவாமிர்தம்; ஒரு உப்பு கூட மினுக்கும். ஆனால் அதுவே தனி ருசி.
“சப்தரிஷி சரிஞ்சு போயிட்டான். அவனோடு நான் இருந்தால் அவனுக்குச் சிரமந்தானே?” என்று சொல்ல மாட்டாள். ஆனால் அதுதான் அவள் எண்ணம். ஆகையால் அவள் நாட்கள் பெரும்பாலும் இரண்டாம் பிள்ளையிடமே கழிந்தன. தவிர, சித்தி நோஞ்சான். சப்தரிஷி பிள்ளைகள் இங்கேதான் படிக்கின்றன. அமிர்தகடேசனுக்கு மூன்று பெண்கள். சம்சாரமும் வேலையும் இங்கேதான். கூட நம்மால் முடிந்தவரை பார்வதிக்கு ஒத்தாசையாக இங்கே இருப்போம்!”
மனம் அங்கே, இடம் இங்கே.
நோஞ்சான் சித்தி நாளடைவில் நோயாளி ஆகிவிட்டாள். வலது முழங்காலில் முட்டியில் வீக்கம் கண்டு எந்தச் சிகிச்சைக்கும் மசியவில்லை. அப்புறம் ஒருநாள் வாய் வைத்துக்கொண்டு, முளை கண்டு, புரையோடிப் படுத்த படுக்கையாகிவிட்டாள். அதற்குக் கான்சர் எனும் பெயர் அப்போது கண்டுபிடிக்கப் படவில்லை. அல்லது டாக்டர்களிடம் பெயர் 'குட்டாக இருந்ததோ என்னவோ? நோய்க்குப் பேரே தெரியாத போது, மருந்து ஏது? டாக்டர் இருட்டில் குருட்டாண்டி.
அப்போது நாங்கள் திருவட்டீஸ்வரன் பேட்டை கோயில் குளத்துக்கெதிர் நாகப் பையர் சந்தில் குடியிருந்தோம். கீழே மூன்று குடித்தனங்கள். மாடியில் ஒன்று. இன்னும் மின்சாரமும் டிரெயினேஜ"ம் வராத நாட்கள். இந்த வீடு என் வாழ்க்கையில் பல சம்பவங் களுக்கு அரங்க மேடை. இதில் மன்னி நிலை என்ன?
தேறாத நோயில் படுக்கையாகி, நாட்டுப்பெண், மாமியார் ஆகிவிட்டாள். அவளுக்குப் பணிவிடையில் மாமியார் மருமகளாகிவிட்டாள். வாழ்க்கையின் கேலி எப்படி? விதியின் மோனச் சிரிப்பு எப்பவும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது நம் செவிக்கு. ஒட்டுக் கேட்டால் கேட்கும்.
விதவைக் கோலத்தில், வயது எழுபதை நெருங்கிக் கொண்டு, என் முழு பிரக்ஞையில் அழுத்தக் கோடாக விழுந்த மன்னி இவள்தான்.
சித்தப்பா குழந்தைகளுக்கு இரண்டுங்கெட்டான் வயதுகள், பத்து, ஏழு, நாலு இதுபோல். நானும் என் தம்பியும் வேறு. சித்தப்பா கடும் ஆஸ்துமாக்காரர். இழுக்க ஆரம்பித்துவிட்டால் எண்ணெய் காணா கில், கீச் கீச் பயமாய்க்கூட இருக்கும். விலாவில் இழுத்து இழுத்து, மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு, கை மார்மேல் முஷ்டியாகி நடப்பார். அவருக்கு அதிலேயே உடல் கூனிவிட்டது. அதற்குரிய மருந்துப் பொடியைப் புகை பிடித்துக் கபம் கழன்று மூச்சு கொஞ்சம் சுவா தீனப்படுவதற்குள் அவர் படும் வேதனை பெரிதா ? பார்ப்பவர் வேதனை பெரிதா? தாய் படும் வேதனை பெரிதா ? நள்ளிரவில் தாக்குதல் வந்துவிட்டால், பயங்கரம் கேட்க வேண்டாம். பனிக்காலத்தில் நாள் கணக்கில் சித்தப்பா குளியலுக்கு முழுக்குத்தான்.
ஆகவே மன்னி பாடு என்ன என்று அறிவதற்கு இவ்வளவு விபரம்.
மருமகளின் காலைக்கடன்கள் - எடுப்பு, குளிப்பாட்டு, படுக்கை மாற்றல், உணவு, மருந்து கவனித்தல் - மருமகளுக்குச் செவிலித்தாய்.
சித்தப்பா குழந்தைகள் - குளிப்பாட்டல், அவர்கள் உடை மாற்றல் இத்யாதி குழந்தைகளுக்குச் செவிலித் தாய்.
நாங்கள், நானும் என் தம்பியும் வேறு, படித்துக் கொண்டு இருக்கிறோம்.
மகனுக்கு வேளை பொழுது பாராமல், தாக்குதல் வரும் - மகனுக்குச் செவிலித்தாய்.
தவிர சமையல் - இதர, வீட்டுக் காரியங்கள்.
வயது எழுபது.
"மன்னி, வாஸ்தவந்தான். பலகாரத்துக்கு இட்டிலி மல்லிப்பூவா வார்த்திருக்கு. மிளகாய்ப் பொடியிருக்கு. மத்தியானச் சாம்பார் இருக்கு. சட்னி வேறே அரைச் சிருப்பே. இருந்தாலும், தேங்காய் வாங்க வக்கில்லாமல் லால் குடியில் உன் கையால் வெறுமனே பச்சை மிளகாயும் உப்புக்கல்லையும் சேர்த்து இழைச்சு அந்த அம்மிக்கல் சூட்டோடு கொண்டுவந்து இட்லிமேல் தடவுவையே, அதென்னவோ இப்போ ஞாபகம் வந்துடுத்து. இதெல்லாம் அதுக்கு இணையாகுமோ? கறிகாய்க் கூடையில் எலுமிச்சம் பழம் ஒண்ணு பார்த்தேன். இழைச்ச பச்சை மிளகாய் மேல் ஒரு சொட்டுப் பிழிஞ்சு, கடுகையும் தாளிச்சுட்டா. ஹூம்!"
உடனே, மன்னி, மண்ணெண்ணெய் கைவிளக்கு வெளிச்சத்தில் பச்சை மிளகாயும் உப்பும் சேர்த்து இழை இழையென்று இழைத்து, எலுமிச்சம்பழம் பிழிந்து, கடுகு தாளித்துக்கொண்டு வந்து இட்டிலி மேல் இடுவாள்.
“மன்னி, உன்னை நான் பண்ணச் சொன்னேனா? என்னவோ பழைய நாள் கதையைச் சொன்னேன். ஏற்கெனவே, மிளகாய்ப்பொடி, மத்தியான சாம்பார், இப்போ தேங்காய்ச் சட்டினி. இது போறாதா ?”
மன்னி, நீங்கள் மனுஷியா? மாடா ? மெஷினா?
மன்னி பழங்காலக் கட்டை இல்லாவிடில், அந்த வயதில், அந்தச் சுமைக்கு ஈடு கொடுக்க முடியுமா? இந்தக் காலத்து நாரிமணிகள் அந்த உழைப்பை நினைத்துக்கூடப் பார்க்க முடியுமா?
மன்னி பாதங்களில் நொத நொத வென்று சேற்றுப்புண். காலில்தான் வந்து கண்டிருக்கிறோம். கையில் சேற்றுப்புண் யாரேனும் பார்த்திருக்கிறீர்களோ? விரல்களின் இடுக்குச் சதையை அரித்துவிட்ட இடத்தில் ஒரு குழிப்புண்ணே விழுந்திருந்தது.
மன்னி கையால் சாப்பிடவே வெறுப்பாயிருக்கும். ஆனால் வேறு வழி? சமையல்காரி தனியாகப் போட முடியுமா?
சித்திக்குக் கட்டுக் கட்ட வரும் வைத்தியன் அல்லது கம்பவுண்டர், "என்ன பாட்டி, உங்கள் கையையும் காலையும் இப்பிடி வெச்சுக்கிட்டு இருந்தால், மத்தவங் களுக்கு நீங்கள் செய்யறது எப்பிடி?” என்று அவனாகப் பார்த்து மருந்து கொடுத்தாலாச்சு, தா னாகக் கேட்பாளா? மாட்டாள். ரோசம் காரணமல்ல. ஏற்கெனவே அம்பி கஷ்டப்பட்டுண்டிருக்கான். நான் வேறு செலவு வைக்கணுமா? இதுதான் அவள் போக்கு.
அல்லது கேட்கவே தோன்றாது.
சித்திக்கு இனி விமோசனமே இல்லை. அவளுக்கே அது தெரிந்துவிட்டது. குடித்தனக்காரர்கள் ஒருவருக் கொருவர் கிசுகிசுத்தனர். யார் வத்தி வைத்தனரோ, வீட்டுக்காரன் ஒருநாள் வந்து, எங்கள் கட்டுக்குள் வந்ததும் அவனுக்கு மூக்குத் தண்டு சுருங்கிற்று - சித்தப்பாவைத் தனியாக அழைத்துக்கொண்டு போய், அவரோடு கிசுகிசுத்தான்.
சித்தப்பா சித்தி, குழந்தைகளை மன்னியோடு ஐயன்பேட்டைக்குக் கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டார். அது கிராமாந்தரம். அங்கே கேட்பார் கிடையாது. உதவியாகக்கூட இருப்பார்கள். அம்மா இருந்தாள். வேலைக்காரி இருந்தாள்.
மன்னிக்குக் கையிலும் காலிலும் சேற்றுப்புண் அத்தரதையாக மறைந்துபோயிற்று - வந்ததா என்று சந்தேகப்படும்படி உடம்பில் சதை பிடித்தது. பழங் காலத்துக் கட்டை, இப்போதுகூட அதற்குத் துளிர்க்கச் சக்தி இருந்தது.
இறக்கையிலும்கூட, சாக்குக்கேனும் ஏதேனும் நோய் என்று மன்னிக்குக் காணவில்லை. வயது, அங்கங்கள் ஒய்வு, படிப்படியாக ஒவ்வொன்றாய்ப் புலன்களின் ஒடுங்கல். கடைசிவரை உள் நினைவு. அதுவும் அதன் வேளையில், எண்ணெய் காய்ந்த திரிபோல் அணைந்து போயிற்று. வியாதிக்கும் உடலுக்கும் போராட்டம் என்கிற நிலையே இல்லை. பெட்ரோல் தீர்ந்துவிட்டது. வண்டி நின்றுவிட்டது. மன்னி விடுதலை அடைந்தாள்.
இந்தக் கட்டத்தில் எங்கள் மன்னியை இப்படி விட எனக்கு மனமில்லை. அவள் மஞ்சளும் குங்குமுமாக இருந்த வருடங்களுக்குச் சற்று முன் இழுத்துச் செல்கிறேன். சென்னையில், ராயப்பேட்டை பெருமாள் கோயில் தெருவில் ஒரு வீட்டில், பின்கட்டுப் பூரா வாடகைக்கு எடுத்துக்கொண்டு, அண்ணா சித்தப்பா கூட்டுக் குடும்பம். ரூ 15-க்குக் கடல்போல் இடம். ஆஸ்துமாக் கொடுமையில் கிராமத்துக்குத் தள்ளப்படும் முன் அண்ணாவின் சம்பாதனையின் பொற்காலம் அது. எங்கள் குட்டி சித்தப்பா பையன், நாங்கள் குழந்தைகள், குடும்பம் பச்சையாக வாழ்ந்த காலம்; மன்னியின் சந்தோஷ காலமும் அதுதான்.
மன்னியின் சந்தோஷந்தான் என்ன? ராமஜபம். ராம ராம ராம. அப்புறம் 'ஆபதாமப ஹத்தாரம். அப்புறம் ஒன்றிரண்டு ஸம்ஸ்கிருத வாக்கியத் தொடர். அவைகளும் ராம தோத்திரந்தான். தன் தந்தையிடம் கற்றுக்கொண்டதோ என்னவோ. ஒருவாறு அவைகளின் நிரடல்களினின்று, தட்டுத்தடுமாறி மீள்வாள். அப்புறம் தாத்தா இயற்றிய பெருந்திரு ஸ்தோத்திரம்.
ஸ்நானம் பண்ணிவிட்டு, உட்கார்ந்தாளெனில் குறைந்தது மூணு மணிநேரம் ஆகும். அப்புறம் சாப்பாடு. அந்தக் காலத்து மனிதர்களின் சாப்பாட்டுக்கும் இப்போதைய கொரிப்புக்கும் சம்பந்தமே இல்லை. ஒரு காலை நீட்டிக்கொண்டு, மெதுவாக - பல் வேறு இல்லை - வெண்கலப் பானை காலியாகும். அப்படிச் சாப்பிட்டதுதான் அவளுக்குப் பின்னால் அவவளவு தாங்க உரம் தந்தது.
இரண்டு வேளை திடமான சாப்பாடு. போதும். விரதம், பட்டினி, பலகாரப் பாட்டி அல்லள். கோயில், குளம், ஸ்தலம் என்று தேடி அலைபவள் அல்லள்.
பிற்பகலில் இருந்தால் நொறுக்குத் தீனி. அதுவும் அவளுக்கு அவசியமில்லை. பொக்கை வாயில் மென்று அரைத்து உள்ளே செலுத்துவதற்குள் பேரக்குழந்தைகள்,
நாங்கள்தான், எங்கள் பங்கை எப்பவோ காலி பண்ணி விட்டு அவள் வாயைப் பார்த்துக்கொண்டு சுற்றி உட்கார்ந்திருக்கோமே! பிடுங்கித் தின்றுவிடுவோம்.
இரவு எங்களுக்குக் கதை சொல்வாள். தாத்தா மாதிரி காட்சிகளைத் தத்ரூபமாகக் கண்ணெதிரில் நிறுத்தத் தெரியாவிட்டாலும் நன்றாகச் சொல்வாள். அவள் கூறும் கதை கேட்டுக் கதை அலுத்த குழந்தை ஏது? "நான் பிறந்த கதை சொல்லவா? வளர்ந்த கதை சொல்லவா? பூந்தமல்லி செட்டி வீடு புகுந்த கதை சொல்லவா?" இந்த வசனத்துக்கு அர்த்தம் எங்களுக்குத் தெரியாது. அவளுக்கும் தெரியாது. ஆனால் இந்த நெற்றிக் குட்டலுடன்தான் அவள் கதை ஆரம்பிக்கும். அவளுடைய ராமஜபம், வழிபாடு, சொந்த ஆர்வத்தி னின்று எழுந்ததா? சொல்ல முடியாது. நல்லது என்று பெரியவர்கள் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள். அவர்கள் சொன்னதை, செய்ததை நாமும் செய்வோம்.
எங்கள் பரீட்சைகளுக்கோ, பின்னால் வேலை தேடிச் சென்றபோதோ, அவள் அம்பாளை வேண்டிக் கொள்ளும் விதத்தை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.
"பெருந்திருவே, குழந்தைகளின் பேனா முள்ளில் நின்று, அவாளைப் பாஸ் பண்ணவை."
"பெருந்திருவே, மானேஜர் மனசில் புகுந்து, குழந்தை களுக்கு வேலை கிடைக்கும்படிப் பண்ணு."
பேனா முள்ளில் நின்று - ஏதேது, மன்னியா? இல்லை, கம்பன் வீட்டுக் கட்டுத்தறியா?
நிஜமாகவே மன்னிப்பாட்டி ஒன்றும் அறியா தவளா? எல்லாம் தெரிந்தவளா? புதிரே இல்லாத இடத்தில் புதிரைத் தேடுகிறேனா?
உழைப்பும், கஷ்டமும், சோதனைகளும் ஆயுள் தண்டனையாக அவள் விதியின் தீர்ப்பாகி விட்டபின், அந்த நிலைமையுடன் சமாதானமாகிவிட்ட பலனாக, பொறை அவள்மேல் பூஷணமாக இறங்கிவிட்டதா? பிறகு அதுவே கழுத்தில் விழுந்த மாலை கழற்ற முடிய வில்லையா? இதுபோன்ற சகிப்புத் தன்மையைத்தான் ஆண்டவன், ஜன்மாவிடம் எதிர்பார்க்கிறானா? மன்னி மஹிமைதான் என்ன !
இப்போது தெரிகிறது. அவளுடைய ஸர்வ ஸாதா ரணந்தான் - அதுதான் இந்தக் குடும்பத்தின் அத்தனை புத்திசாலிகள், கெட்டிக்காரர்களின் 'குட்டுகளுக்கும் முட்டல்களுக்கும் முட்டுக் கொடுத்துக் குடும்பத்தை வழிப்படுத்தியிருக்கிறது.
மன்னியை மனத்தில் வைத்துக்கொண்டு நான் பேசும் இந்தச் சர்வ சாதாரண நிலையில், மக்குக்கும், மஹானுக்கும் வித்தியாசம் சாத்தியம் இல்லை.
'பெரியோரைப் புகழ்வோம். இந்தச் சங்கல்ப ரீதியில், இந்த வரலாற்றில் இதுவரை வந்துபோனவர்கள், இனிமேல் வரப்போகிறவர்கள், எல்லாரைக் காட்டிலும் மன்னிதான் மிகப் பெரியவள்.
சிந்திக்கச் சிந்திக்க இந்த எண்ணம்தான் உறுதி யாகிறது.
------------------
அத்தியாயம் 10
இதற்கு முந்திய பக்கங்களில் மன்னிப் பாட்டியின் துயரக் கேணியில் இறங்கிய ஆதங்கம் எனக்கு இன்னமும் தணிந்தபாடில்லை. இந்த அனுபவம் என்னை பாதித்திருக்கும் அளவுக்கு வாசகனை பாதித்திருக்க முடியாது; பாதிக்கக் கூடாதென்று கூடச் சொல்லலாம் - என்றாலும் இதன் விளைவாய் மேலும் சொல்ல விழைகிறேன்.
கானல் நீர் எழுத்தைப் பருகிப் பருகித் தாபம் தீராத கவனங்கள், மன்னிப் பாட்டியைப் பற்றிய பக்கங்களை மாற்று மருந்தாகவேனும், பிடிக்காவிட்டாலும் விழுங்க வேண்டும் என்கிறேன். அதென்ன கானல் நீர் எழுத்து? இதோ :
ஃபிரிஜ்ஜில் மின்சார ஒட்டம் தாழ்ந்த ஸ்ருதி போல் அடங்கி இழைந்து கொண்டிருந்தது. பிரம்மாண்டமான டபிள் bedஇல் சுற்றிச் சிதறிக் கிடந்த வெல்வெட் தலை யணைகளின் நடுவே அவள் படுத்திருந்த கோலம், ஸெலுலாயிடு பொம்மையை நினைவூட்டியது. விழித் தெழுந்து உடலை முறித்துக்கொண்டு உட்கார்ந்ததும் அவள் தன் பாதங்களை நுழைக்க, கணக்காகக் காலடி யில் மொஸெய்க் தரைமேல் விரித்த ஜமக்காளத்தின் மீது ஸேட்டின் ஸ்லிப்பர்ஸ் காத்துக் கொண்டிருந்தன. கண் திறந்ததும் முதல் முழிக்கு நேர் எதிரே சுவரில் மாட்டிய படத்திலிருந்து ஆள் sizeக்குக் கமலஹாஸன் இடுப்பு வரை வெறும் உடம்பில் boxing poseஇல் பதுங்கியபடி சிரித்துக் கொண்டிருந்தான். அந்த இடது hook உயிர் பெற்று படத்திலிருந்து தாவி அவள் அவயவங்களில் எங்கு விழுமோ? எங்கு விழுந்தால் என்ன ? விழுந்த இடம் ஐயோடி! புளகாங்கிதம்தான்.
“What would you have? Stravonsky or Saturday Night fever? காஸெட்டுகளை வேகமாகப் புரட்டினான். மறு கையில் கண்ணாடித் தம்ளரில் இரண்டு ஐஸ் கட்டிகள், வாயில் சிகரெட், பேச்சில் உதடுகளின் அசைவுக்கேற்ப, மேலும் கீழும் குதித்தது சிகரெட் புகை, அவன் கண்களில் தெரிந்த புவனச் சலிப்புக்கு வளைபடி கட்டிற்று.
“Oh anything you say, But first come here Ganontust விலிருந்து லைலா முனகினாள். அந்தச் சொக்காயும் பைஜாமாக்களும் கண்ணாடியிலேயே நெயதனவா? இல்லாவிடில் வேறு என்ன material? அவளுக்குச் சற்று புத்தி தெளிந்திருந்தால், அவள் இப்போது சோபாவின் ஒரு கை மேல் ஒரு காலை உதைத்துக்கொண்டு சாய்ந் திருந்த நிலையிலிருந்து அவள் கூடக் கொஞ்சம் அடக்கம் காட்டியிருப்பாள்.
பளபளப்பான டைனிங் மேசை மேல், தலைகீழ்ப் பிம்பம் பளபளப்பு அடித்த சீனா மண் காப்பிக் கலர் கிண்ணத்தில், ஐந்து ஆப்பிள்கள் மனோகரமான லஜ்ஜையில் வெட்கித்துக் கொண்டிருந்தன. அந்தக் கன்னச்சிவப்பு 'கடி கடி' என்று அழைத்தது. ஆனால் அவை வெறும் ஆசை காட்டத்தானா ? அல்லது அவற்றை அடுக்கியிருக்கும் அழகைப் பார்ப்பவன் வியக்கவா? வீட்டு எசமானியைத்தான் கேட்க வேணும். ஆனால் அவளை மட்டும் எப்படிக் கேட்பது? கேட்பவன் தன் பட்டிக்காட்டுத் தனத்தையோ பரதைத் தனத்தையோ அம்பலமாக்காமல்.
- மிஸ் மெனாவதி, வெள்ளி Mugஇன் வளை பிடியைப் பிடித்துக்கொண்டு மறு கையால் Mugஇன் மூடியைப் பொத்திக்கொண்டு Mugஐச் சாய்த்ததும் தேனீர், கெண்டியிலிருந்து தங்க நரம்புகள் போல், பீங்கான் கோப்பையுள் பாய்ந்தது.
மாதம் ஒரு புத்தகங்களில், பல சஞ்சிகைகளில் சர்வ சாதாரணமாக பவனி வரும் வைபவங்கள் இவை. இவற்றைப் படிக்கத்தான், பவனி வருகின்றன. ஆசை விழிகளால் அல்வாத் துண்டுகளாக விழுங்கப்படு கின்றன. நடக்கட்டும் விருந்து.
ஐயா, எழுதியவர்களையும் படிப்பவர்களையும் தான் கேட்கிறேன். நம் வீடுகளில், எத்தனை இல்லங்களில் இது போன்ற - நம் இயல்பான வாழ்க்கை முறைக்கும், நமக்குக் கிட்டியிருக்கும் வாழ்க்கைத் தடத்துக்கும் பொருந்தாத வசதிகள் இருக்கின்றன? சர்க்கரைக்கும் மண்ணெண்ணெய்க்கும் Palmotinக்கும் காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிவரை நிற்கும் க்யூ வரிசைகளுக்கு இதுபோன்ற எழுத்துக்களைப் படிப்பது க்யூ நேரத்துக்கு மறதிக்கு உதவலாம் என்பது தவிர, வேறு உருப்படியான பயன்கள் இதனால் என்ன? முதிய தலைமுறைக்கு இவ்வசதிகள் தெரியவும் தெரியா; புரியவும் புரியா. இளைய தலைமுறையை அதுபோல் நினைக்க முடியுமோ? முதலில் ஆச்சரியம், பிறகு வியப்பு, பிறகு ஏக்கம், பிறகு புழுக்கம், நாளடைவில் நெஞ்சில் ஊறும் நச்சுத்தான் கண்ட பலன்.
விவரித்திருக்கும் கானல்நீர்க் காட்சிகள் அநேக மாகச் சாந்தம், சஃபையரில் 70 mm திரையில் கண்ட வையே அன்றிக் கண்கூடு கூட அல்ல.
சென்னையில் இந்திராநகர், இன்னும் கொஞ்சம் தள்ளித் திருவான்மியூரில் ஒரு பகுதி, அடையாறில் (Boat house Road) பங்களாக்கள். இவற்றை மட்டும் வெளி நாட்டுப் பிரயாணிகளுக்குக் காட்டிவிட்டு, 'இதுதான் இந்தியா!’ என்று ஒரு பதிவை மனத்தில் உண்டாக்கி விட்டு வந்த விருந்தாளிகளைத் தளுக்காக மறு காட்சிக்கு Tourismஇலாகா அழைத்துச் செல்வதுபோல, 'இதுதான் சென்னை கூட இவை இல்லை. இந்த Magic lantern slides வெளிநாட்டுக் கடன் வாங்கப் பயன் படலாம். இவை வாழ்க்கையின் எடுத்துக்காட்டுக்கள் அல்ல.
பிராம்மணார்த்தம் சாப்பிட்டுவிட்டு உண்ட மயக்கத்தில் வாசல் திண்ணையில் படுத்து மண்டை யினின்று உதிர்ந்த எள்ளைக் கையில் வைத்துக்கொண்டு கட்டிய கனவுக் கோட்டைக்குள் இந்தக் கானல்நீர் எழுத்துக்கள் எழுப்பும் காட்சிகள் ரகம் கண்டுவிடும். இந்தத் தாபங்கள் எவருக்கும் உண்டு என்பதை அப்பவே எதிர்பார்த்து, ஆனால் அவற்றின் உண்மை நிலவரத்தை வெளிப்படுத்துவதற்காக, இந்தப் பிராம்மணார்த்தக்காரன் கதை, காவடியில் கண்ணாடிச் சாமான்கள் கூடையை வைத்துக்கொண்டு, அல்நாஸர் கனவு கண்ட கதை - திரிசங்கு சுவர்க்கமேறிய கதை. இவை காரணம் இல்லாமல் முளைத்துவிடவில்லை.
"பின் மறதிக்கு வழி என்ன? உன் மன்னிப் பாட்டி யின் அழுகை வாழ்க்கைதான் வாழ்க்கை என்று நீ ஒதும் வேதத்தை நாங்களும் ஒத வேண்டுமா? முதலில் கேட்டுக்கொள்ள வேண்டுமா ?”
சோகங்களுக்கு, கிட்டாததைத் தெரிந்த பின்னர் அவற்றை வெட்டி விடுவதற்குத்தான் மறதி எனும் மருந்து பிரச்னைகளுக்கு மறதி மருந்தல்ல. என்னைக் கேட்கப் போனால் உண்மையில் மறதி என்பதே கிடையாது. நினைவின் அகண்ட அலமாரியில், ஆலயத்தில், விஷயங்கள், நாளடைவில் தம் தம் இடம் கண்டு தாமே அடங்க சிருஷ்டி தந்திருக்கும் ஒரு வழி. தன்னை ஏமாற்றலுக்கு மறதியை போதையாகப் பயன் படுத்துவது ஒழுங்கல்ல. அதில் பலனுமல்ல.
மன்னி வாழ்க்கைதான் வேத வாழ்க்கை என்று எப்படிச் சொல்வேன்? ஆனால், 'உலகம் பிறந்தது எனக்காக, ஒடும் நதிகளும் எனக்காக என்று அவள் வாழ்க்கை அமையவில்லையே! யாருக்குத்தான் அப்படி அமைகிறது என்பதை நாம் எப்போது உணரப் போகிறோம் என்கிற அளவில் மட்டும் அவள் வாழ்க்கை எடுத்துக்காட்டுக்குப் பயன்படட்டுமே!
ராமன், நளன், பஞ்சபாண்டவர்கள், ஹரிச்சந்திரன், பீஷ்மன் இவர்கள் வாழ்க்கையெல்லாம் அவர்களுக்கேற் பட்ட சோதனையால், வீணாகிப் போய்விட்ட வாழ்க்கையா ? ஆனால் இதிலும் சொல்கிறேன், அவரவர் பூத்ததற்குத் தக்கபடி, அவரவர் நினைப் பதற்குத் தக்கபடி, அவர்கள் வாழ்க்கையை ஒரு சவாலாக ஏற்றுக் கொள்வதோ, தன்னைச் சுற்றி வேளைக்கு ஒரு கல்லாகக் கட்டிச் சுவரெழுப்பி, தன்னைக் காற்றும் இல்லாமல் நெருக்கப் போகும் கல்லறையாக நினைப்பதோ.
மன்னிப் பாட்டி என்னத்தை நம்பி வாழ்ந்தாளோ? நான் அவளுக்காகப் பதைபதைக்கும் அளவுக்கு அவள் தன்னைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தாளோ? படைத்தவனுக்குத்தான் வெளிச்சம். விலக்க முடியாததை அனுபவித்தே தீர வேண்டும் என்பது சித்தாந்தம் இல்லையா? என் தாயின் சொல் இப்போது நினைவுக்கு வருகிறது:
"பிடித்தால் சாப்பிடு.
பிடிக்காவிட்டால் கடித்து முழுங்கு."
துப்பு என்று அவள் போதிக்கவில்லை. பாற்கடலில் வந்த ஆலகால விஷத்தைக் கூட ஆண்டவன் வெறு மனே விட்டு வைக்கவில்லையே! பாற்கடலில் தோன்றிய வற்றில் அவன் பங்கு அது.
இப்போது சோதனைகள் நமக்குக் குறைவாகவா இருக்கின்றன?
இந்தப் பக்கங்களை நான் மதுரையில் உட்கார்ந்து கொண்டு எழுதுகிறேன்.
இங்கு வந்து இருபது நாட்களுக்கு மேல் ஆகின்றன. இன்னும் நான் கோயிலுக்குள் அடியெடுத்து வைக்க வில்லை. இன்னும் அதற்கு வேளை கூடவில்லை.
முதல் முதலாக நான் மதுரையில் அடியெடுத்து வைத்தது 1969இல் என்று நினைக்கிறேன். இரவு வேளை. டவுன் ஹால் ரோடு கட்டடங்களின் ஒரமாக நடை பாதைக்காக ஒடும் சிமிட்டி மேடைமேல் (platform) சோளத் தட்டுகளில் வழிய வழிய மலைப் பழச் சீப்புகள், வேளையில்லை, போதில்லை, (plastic) கண்ணாடிச் சாமான்கள், ரிப்பன்கள், பிஸ்கட், சோடா, காப்பிக் கடைகள், இரவைப் பகலாக்கிய மெர்க்குரி வெளிச்சம், இட்டிலிக் கடைகள், இரவு ஒரு மணிக்கு ஆவி பறக்க, சுடச்சுட இட்டிலிப் பானையடியில் நர்த்தனமாடும் தீ நாக்குகள். கம்மென்று மல்லி மணம் மதுரை மல்லி, தெருவில் ஜேஜே என்று கூட்டம். ஏதோ கலியாண வீட்டுள் சரியாக முகூர்த்த வேளைக்கு நுழைந்துவிட்ட மாதிரி ஒர் உணர்ச்சி. அந்த முதல் சமயம் நெஞ்சில் பதிவானது மதுரை எனும் ஊர் அல்ல. ஆலந்தூர் சகோதரர்கள் ஸ்ரீராகத்தில் ஒரு பாட்டுப் பாடுவார்கள்.
"நாம குஸும-”
அந்தப் பாட்டை அவர்களிடம் கேட்கும்போதெல் லாம் என் மனக் கண்ணில் ஓர் உருவம் எழும். ஒர் அழகிய பெண், பின்கச்சை தெரிய மாத்வக் கட்டு கட்டிக்கொண்டு இடுப்பில் குடத்துடன் குலுக்கி நடந்து.
அதுபோலவே, மதுரையெனும் பட்டணத்தின் ஜீவன் திரண்டு, ஒரு மாது ஆகி, கொண்டையில் மல்லி, கழுத்தில் மல்லிகை மாலை, முழங்கையில், கைகளில் கால்களில் மல்லிகைச் சரங்கள் - .
அதோ அவள், கூடம் கூடமாக அமைந்த வீதிகளின் நடுவே பெருமிதத்துடன் எழும் நாற்கோபுரக் கோயிலுள் ஆள்கிறாள். கூண்டுகளுள், கோபுரங்களின் ஸ்தூபிகளின் மேல் பச்சைக்கிளி தத்தித் தத்தி.
”மீனாக்ஷி!”
தடாதகைப் பிராட்டி, பாண்டிய ராஜகுமாரி.
உள்ள நெகிழ்ச்சி, மதுரையை அப்போது, அப்படிப் பார்க்க வைத்தது.
எந்த வீட்டு மொட்டைமாடிமேல் நின்று பார்த் தாலும், பெரிய கோபுரம் ஒரு பக்கம்.
அதற்கெதிரே திருப்பரங்குன்றக் கோபுரம். இரவு வேளையில் வான நட்சத்திரங்களை பூமியில் தூவி விட்டாற்போல், பொட்டுப் பொட்டாய், சிறிதும் பெரிதுமாய் வெளிச்சங்கள். மதுரையா? கலியாணக் கோலமா ?
ஒரு சமயம் மதுரையின் தெருக்களில் வழி தப்பி விட்டது. எங்கோ அவசரமாகப் போய்க் கொண்டிருக் கும் ஒர் ஆளைத் தடுத்து, ‘வடக்குச் சித்திரை வீதிக்குப் போவது எப்படி?’ என்று கேட்டதற்கு, ‘என்னோடு வாங்க என்று அவர் தன் காரியத்தையும் விட்டுவிட்டு என்னை, என் அடையாளங்களைத் தெருவில் கண்டு பிடிக்கும் இடத்தில் விட்டுவிட்டுத் திரும்புகையில், நான் அவர் எனக்காக எடுத்துக்கொண்ட சிரமத்துக்கு நன்றி தெரிவித்தபோது, "இது என்ன பிரமாதம்? இந்த மட்டும் கூட இல்லாவிட்டால், மதுரையின் தமிழ்ப் பண்பு என்ன ஆச்சு? எப்பவும் ஒன்று வெச்சுக்கங்க. கோயில் நகரத்தின் மையத்திலிருப்பதால் அதை ஆதாரமாக வைத்துக்கொண்டு எந்த இடத்துக்கும் போய்ச் சேர்வது சுலபம். மதுரை வாழ்க்கையே கோயிலைச் சுற்றித்தான் இயங்குது - வாரேன் ஐயா!” என்று என் பதிலுக்குக் காத்திராமலே வேகமாகத் தம் வழியில் போய்விட்டார்.
நான் கொஞ்ச நாழி இன்ப ரகஸ்யத்தில் ஸ்தம்பித்து நின்றேன். 'மதுரையின் வாழ்க்கையே கோயிலைச் சுற்றித் தான் இயங்குது!’ பக்தியில் சொன்னாரா? இருப்பதைச் சொன்னாரா? வேடிக்கையாகச் சொன்னாரா? எதுவா யிருந்தாலும் அத்தனையும் பொருந்தும் பூடகம். இவ்வார்த்தைகளையே மீனாகூழிக்கு அணிகலனாயும் கொள்ளலாம். காதில் தாடங்கமாக! கை விரல் மோதிரமாக !
இன்றும் அவள்தான் ஆட்சி புரிகிறாள். இப்பவும் தெருக்களில் இட்டிலிக் கடைகள் வியாபாரம் சுறுசுறுப்பாக நடக்கிறது. மல்லிகைச் சரங்களும் அமர்க்கள மாகச் செலவாகின்றன. தெருக்களில் முன்னிலும் 'ஜேஜே'.
ஆனால் 'நாமகுஸும’. மதுரையே ஒரு மாதுவாக மனக் கண்ணில் தோன்றினாளே - அவள் இப்போது எங்கே? தேடு தேடு என்று தேடுகிறேன். அவள் கேலிச் சிரிப்புக்கூடக் கேட்கவில்லை.
இத்தனை சாக்கடைகளும் குப்பைகளும் வீதி யென்றும் சந்தென்றும் வித்தியாசம் இல்லாமல் எங்கிருந்து வந்தன? தெருக்களின் அன்றைய கம்பீரத் தையும் விசாலத்தையும் இப்போது சந்துகளின் சகதி களும் நாற்றங்களும் ஆதிக்கம் கொண்டுவிட்டன.
"ஜடாமுனி சந்து எதுவுங்க ?” சந்தில் நின்று கொண்டே, ஒரு ஆளை மறித்துப் பரீகூைடிக்காகவே கேட்கிறேன். பதில் பேசாமல் போய்க்கொண்டிருக் கிறான். அன்று தம் அவசர ஜோலியையும் விட்டு விட்டு, எனக்கு வழி காண்பிக்கவே வந்தவர் எங்கே போய்விட்டார்? இந்த ஆளும் சொந்த ஊரிலேயே என்னைப் போல் ஜடாமுனி சந்தைத் தேடிக் கொண்டிருக்கின்றானா?
காலையில் ஒரு மணி நேரந்தான் குழாயில் தண்ணிர் வழங்கல், மதுரை மாநகரத்து மக்கள் அத்தனை பேரும் அன்றைய தின முழுத் தண்ணிர்த் தேவைக்குச் சேகரித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
கணேஷ் மெஸ்ஸுக்கு எதிரே உள்ள குப்பைத் தொட்டி கொள்ளாமல், பிளாட்பாரத்தில் வழிந்த எச்சில் இலைகளில் மனிதனும், நாயும் என்ன கிடைக்கும் என்று புரட்டிப் பார்க்கின்றன. மீனாகூழியின் மதுரையா இது?
நானே என்னை அறியாமலே Realism எழுத்தில் இறங்கிவிட்டேன். இந்த அவலத்தை விவரிப்பதற்கு - உள்ளதை உள்ளபடி, பார்த்ததைப் பார்த்தபடி - பாடு வதற்குத்தான் எழுத்தெனும் வாத்தியமா? எனக்குத் தலை சுற்றுகிறது. எங்கேனும் உட்கார இடம் - சுற்றிப் பார்க்கிறேன். எங்கே இடம் தெருவெல்லாம் கடை பிளாட்பாரம் எல்லாம் கடை, வெயில் பிளக்கிறது.
"சரிதான், நீ என்ன சுவர்க்கத்திலிருந்து நேரே இறங்கி வந்துவிட்டாயோ? வா, வா, இன்னும் ஐந்தாறு வருடங்களில் உன் அம்பத்தூரை என்ன பண்ணுகிறேன் பார்!” மனத்துக்குள் ஏதோ கேலிக் கொக்கரிப்பு கேட்கிறது. இது யார்? பாற்கடலை தேவர்களுடன் சேர்ந்து கடைந்த அமுதத்தைக் கோட்டை விட்ட அரக்கருள் ஏமாறாத இருவரில், இது ராகுவா ? கேதுவா? அமுதத்தை உண்டதால் அவர்களுக்கும் அழி வில்லையே? ஏமாந்த அரக்கர் குலத்தைப் பழிவாங்க வாரிசுகளாக - சாகா வரம் பெற்றுவிட்ட வாரிசுகள் அவர்கள்தானே? ஆகையால் இந்தப் பழிவாங்கும் போராட்டமும் சாகாவரம் பெற்றுவிட்டது. ஆகவே –
தினசரி வாழ்க்கைப் போராட்டத்தை மறக்க Escapist எழுத்து.
அல்லது
உள்ளது உள்ளபடி, இதுவேதான் உண்மை என்று அவலத்துக்கும், அருவருப்புக்கும் முரசு கொட்டும் Realism எழுத்து.
இரண்டில் எதைத் தேர்ந்து எடுக்கப் போகிறாய்?
இந்தக் கட்சி கட்டல் எல்லாமே அநாவசியம். எல்லாமே விருதா. எதுவுமே நிரந்தரமல்ல. எழுத்தும் நிரந்தரமல்ல. எழுத்தால் சாதிக்கக் கூடியது எதுவு மில்லை. அமர இலக்கியமாவது? ஆட்டுக் குட்டியாவது? ஒரு Hydrogen ஓ, ஒரு Neutron ஓ. அஜாக்கிரதையில் தானாகவோ, யாரேனும் வெடிக்கச் செய்தாலோ, உங்கள் சர்ச்சைகள், சாதனைகள், சரித்திரம், நிமிடத்தில் காலி. உலகத்துக்கு எப்பவுமே அவசர நிலைதான். அதன் எத்தனையோ பொழுது போக்குகளில் எழுத்தும் ஒரு பொழுது போக்கு. தாட்சணியமில்லாமல் யோசித்துப் பாருங்கள். இலக்கியம் என்றும், எழுத்து என்றும், அந்த ism இந்த ism என்றும் ஜாதி பிரித்துக்கொண்டு ஏன் அவஸ்தைப்-படுகிறீர்கள்? எழுதுவதே escapism தான், al your philosophies, your mythologies everything form the spring board of escapism.
இதுபோல, சமீபத்தில் தீவிரமாக ஒரு வாதம், எதிர்வாதம் இரண்டுக்கும் ஆள் சேர்க்கை உருவாகிக் கொண்டு வருகிறது. காரசாரமாக வசைகள் பரிமாறிக் கொள்ளப்-படுகின்றன. இந்த கோதாவில் இறங்குவதற்கு எனக்குத் தென்பு கிடையாது. தைரியம் கிடையாது. சண்டையென்றால் காத தூரம் ஒடுபவன் நான்.
‘அப்படியானால், வாயை மூடிக்கொண்டு, இருக்கும் இடத்தில் இரும் கிழவனாரே!
இல்லை, அப்படியும் இருக்க முடியவில்லை. இருக்க மாட்டேன். என் வளையிலிருந்து லேசாகத் தலையை நீட்டுகிறேன்.
Charles Dickes-ன் நாவல்கள், London சேரிகளில் மக்களின் அவல நிலையைப் போக்கக் காரணமாக இருந்தன.
H. Beecher எழுதிய Stowe எழுதிய Uncle Tom's cabin அமெரிக்காவில் அடிமைகளின் தளையறுப்பதில் பெரும் பங்கு கொண்டது.
நம் நாட்டில் பாரதியை வைத்துக்கொண்டு எழுத்தைப் பூ பூ என்றால் என்ன அர்த்தம்? இதுதான் பாரதிக்குக் காணிக்கையா?
தலையை உள்ளே தைரியமாக இழுத்துக் கொள்கிறேன்.
ஒம் சக்தி!
எனக்குப் படுகிறது. எதன் மேலும் தீர்ப்புச் சொல்வது எழுத்தின் வேலையல்ல. எடுத்துக் காட்டி, மெளன சாட்சியாகத் தங்கி நின்று, எழுத்தாளனோ, வாசகனோ தயாரானதும் அவனை வாழ்க்கைப் பிரயாணத்தின் அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும் வழித் துணை. இராஜகுமாரனை, அவன் இன்னும் கண்டிராத, ஆனால் தேடி வந்திருக்கும் ராஜகுமாரியிடம் கூட்டிச் செல்லும் மோனத் தாதி இளவரசி அப்படி ஆள் அனுப்பியிருக்கிறாள். தாதியே இளவரசி அல்ல. தாதியின் அழகில் இளவரசியை மறந்த ராஜகுமாரன் வந்த காரியம் குலைந்தவன்.
ஏதோ ஒர் ஆத்ம வேதனை முதல் முதலாகத் தன்னைத் தீண்டாமல், தீய்க்காமல் எழுத்து (எனும் உள் எழுச்சியின் உருவம்) வெளிப்பட முடியாது. சில இடங் களில் இந்த உள் எழுச்சி - எழுத்தின் ஸ்வரூபத்தைப் பொறுத்தமட்டில் தான் என்னுடைய இந்த விவரிப்புவேருடன் பிடுங்கிக்கொண்டு பூகம்பமாக நிகழ்கிறது. சில இடங்களில் விசன தேவதையாகக் கொஞ்சம் கொஞ்சமாகப் படர்ந்து வளர்கிறது. சில இடங்களில் பட்டுப் பூச்சி தன்னைச் சுற்றி நூற்றுக்கொண்ட நூலிலேயே தன் சமாதியைக் கண்டு விடுவதுபோல் பிரத்யேக சாந்தி (எனக்காக எழுதிக் கொள்கிறேன்) யாகக் கூடு கட்டுகிறது. எதைத் தள்ளுவது? எதைத் தழுவுவது?
Albert Schweitzer இதை Reverence for Life என்கிறார்.
யேசு, ‘உன்னுயிர் போல் மன்னுயிர்” (Love thy neighbour as thyself) என்கிறார்.
சங்கரர், தத்வமஸி’ என்கிறார்.
Sister Theresaவிடம் காணும் எல்லையற்ற கருணை (Compassion)யும் இதுதான்.
நேரு, 'என் அஸ்தியை வயல்களில் இறைத்து விடுங்கள்! என்று எழுதி வைத்ததும் இதுதான்.
ஆத்மாவின் தேடல் மார்க்கங்களில் எழுத்தும் ஒன்று.
உயிரின் உயிலை எழுதி வைப்பதற்கே எழுத்து.
இஸங்களை (isms) விட்டுவிட்டு நாம் வந்த வழியைக் கொண்டாடிக் கொள்வோம்.
-----------
அத்தியாயம் 11
"அம்மாப் பெண்ணை நீ உன் பிள்ளைக்குத்தான் பண்ணிக்கொள்ள வேண்டும் !" என்று ஸ்ரீமதி தன் அண்ணனிடம் கை பிடித்துக் கொடுத்துவிட்டுத் தான் போகுமிடம் போய்ச் சேர்ந்துவிட்டாலும், மன்னிப் பாட்டிக்குச் சபலம் விடவில்லை. அம்மாப் பெண்ணைப் பெண் பார்க்க ஓரிருவர் வந்தார்களாம். அவர்களில் ஒரிடம் மெய்யாகவே வசதி உள்ளது தானாம். இரண்டாந் தாரம். அப்படித்தானே வாய்க்கும் ! கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை என்றால் முடியுமா? ஆனால் அப்படி ஒன்றும் வயதாகி விடவில்லையாம். ஆள் திடகாத்திரம்தானாம்.
அண்ணாகூட - அதான் என் தந்தை - சொன்னா ராம்: "அம்மாப் பெண்ணே, எனக்காக நீ பார்க்காதே! உன் வாழ்க்கை உருப்பட வரும் சமயத்தை நழுவ விடாதே! இந்த வீட்டில் வாழ்க்கைப்பட்டால் - நான் சொல்லத் தேவையில்லை; இந்த வீட்டு நிலைமைதான் உனக்குத் தெரியும்."
தாத்தா: "அம்மாப் பெண்ணே, உன்னிஷ்டம் எப்படி யிருந்தாலும் நான் குறுக்கே நிற்கமாட்டேன்."
ஆனால், அம்மாப் பெண், "நான் சப்தரிஷியைத் தான் பண்ணிக்கொள்வேன்!” என ஒரே பிடியாகப் பிடித்து, மன்னியின் கட்டாயத்துக்குக் கண்ணிரானதும், அப்பாவுக்கு - அதான் தாத்தா - பொறுக்கவில்லை. "குழந்தையை அழவிடாதேடி பாவி, இனி அவளை யாரும் பெண் பார்க்க வரக்கூடாது" என்று கட்டளையிட்டு, மன்னி மேலும் வரன் தேடும் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.
ஆனால் மன்னிப் பாட்டி அவ்வளவு சுலபமாக விஷயத்தை விடுபவள் இல்லை. "சின்னவாளோடு பெரியவாளும் சேர்ந்துண்டு எப்போ என் பிள்ளை அம்மாப் பெண்ணுக்குன்னு தீர்மானமாயிடுத்தோ அகிலாண்டத்தை ஹாலாஸ்யம் பண்ணிக்கணும்' என்று கண்டிஷனைக் கொண்டு வந்தாளே பார்க்கணும்!
மாமா திக்குமுக்காடிப் போனார்? மல்யுத்த பாஷையில், இது கத்திரிப் பிடியா? நண்டுப் பிடியா? கராட்டேவில் இது என்ன வெட்டு?
மாமா அப்போதுதான் உத்தியோகத்தில் கோயமுத்தூர்) காலெடுத்து வைத்திருக்கிறார். இனிமேல் இரு தம்பிகள் தலையெடுத்தாகணும். அம்மாவைப் பிரிந்த கண்ணிர் இன்னும் குழந்தைகள் கன்னத்தில் காயவில்லை. வாளிப்பாகத் தங்கை கல்யாணத்துக்குக் காத்திருக்கிறாள். தாயுமில்லை. தகப்பனுமில்லை. வளர்ந்த இடத்தை விரோதித்துக்கொண்டு, தன் இஷ்டப் படி விடிவு கண்டு கொள்வதென்பது இப்போதைக்கு நடக்கிற காரியமா?
"மன்னி கேட்பதில் என்ன தவறு? நன்றி என்று ஒன்று கிடையாதா?” மன்னி கேட்டாலும் கேட்கா விட்டாலும் கிராமத்தில் வக்காலத்து வாங்குபவர் களுக்குக் குறைச்சலா? வாசல் திண்ணை கட்டி யிருப்பது வழிப்போக்கர்கள் தங்குவதற்கு என்று பேச்சு. ஆனாலும், பயன்படுவது பஞ்சாயத்துக்குத்தானே! அதுவும் கேட்காத பஞ்சாயத்துக்கு.
நீதிகளை (நம் நாட்டைப் பொறுத்தவரை) மனு வகுத்திருக்கலாம்; ஆனால் நியாயம் வந்த வழி அல்லது காரணம்: முதலில் பேச்சுக்கு ஒரு சந்தர்ப்பம், பிறகு சந்தர்ப்பத்துக்கு ஒரு சந்தர்ப்பம்! எல்லா நியாயங் களுமே சந்தர்ப்ப நியாயந்தான் என்பது என் துணிவு. இந்தச் சந்தர்ப்பத்துக்கு என்ன பொருந்தும்?’ என்பது தான் அடிப்படைச் சட்டம்.
இஷ்ட நியாயத்துக்கும் சந்தர்ப்பத்தை மொழி பெயர்க்கச் சட்டப் புத்தகங்கள் இருக்கின்றன. சட்டத்தை முறுக்கிப் பேசவேதான் அதற்கென்றே படிப்பு. அப்படியும் முடியாவிட்டால் சட்டத்தையே மாற்றி அமைத்தால் போகிறது. அந்த அளவுக்கு நீதி இடம் கொடுக்கிறதோ இல்லையோ, சட்டத்திலேயே இடம் வைத்துக்கொண்டுதான் சட்டம் எழுதியாகிறது. சொல்லி ஆகிறது. ஆகவே சட்டத்தின் அடிப்படை, வழக்கமாக மனத்தில் எழும் நடு நியாயமுமல்ல. நீதியுமல்ல. எல்லாமே கட்சி நியாயந்தான்.
உலகில் எத்தனை மனிதப் பிறவிகளோ, அத்தனை தனித்தனி மரங்கள், தத்துவங்கள், நியாயங்கள், கட்சிகள், நாஸ்திகம், ஆஸ்திகம், அத்வைதம், விசிஷ்டாத்வைதம், இன்னும் பெயர் காணாத தத்துவங்கள், ஜாபாலி, சந்தர்ப்பம், பொது (அப்படி என்று ஒரு பெயர்!) அப்புறம் ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்கிற நியாயத்தில் (அல்லது தத்துவமா?) மன்னி பெற்ற இரு பெண்களில் மூத்தவளின் கல்யாணப் பிரச்சினையைத் தீர்த்துக்கொண்டு விட்டாள். மன்னி ஒன்றும் தெரியா தவள் என்று யார் சொன்னது?
மாமா, சிவப்பாக எடுப்பான மூக்கு முழியாக இருப்பார்.
அத்தை வெள்ளை நிறம், மற்றப்படி மன்னி ஜாடை
கல்யாணங்கள் சொர்க்கத்தில் முடிக்கப்படுகின்றன. இரண்டு திருமணங்களும், அவற்றுக்குச் சமயம் வாய்த்தபோது, ஒரே பந்தலில்தான் நடந்தன.
மாமாவையும் அத்தையையும் புதுக்குடித்தனம் வைக்கப் பெரியவர்கள் யாரும் கோயமுத்தூர் போன தாகத் தெரியவில்லை. ரயில் சார்ஜ"க்கு எங்கே போவது? அம்முவாத்து காலக்கடுப்பு எவ்வளவு மோசம் என்று எவ்வளவு ருசுப்படுத்த முயன்றாலும் போதாது. 'பெருந்திருவே கருப்பண்ணா” என்று அம்மன் பலகைக்கு விழுந்து நமஸ்கரித்து, பெரியவர்களை நமஸ்கரித்து எழுகையில் அவர்கள் இட்ட விபூதியோடு தோய்ந்த ஆசிதான் கடைசிவரை துணை. ஆனால் அதற்குத்தான் என்ன குறைச்சல்!
ஆனால் வழியனுப்புகையில், பெண்ணுக்குத் தாயாரின் புத்திமதியைப் பற்றி மாத்திரம் அண்ணாவின் கேலி இன்னும் நினைவில் நிற்கிறது.
"சோனா!-(அத்தை 'ஞே'வென்று தேய்ந்து மாய்ந்து சோனியாக இருப்பாள். ஆகையால் அவளை அழைக்கும் பெயர் சோனியிலிருந்து வயதாக ஆகச் சோனாவாக மருவி இட்ட பெயரினும் கெட்டியாக நிலைத்து விட்டது) "சோனா, மறக்காமல் வாரத்துக்கு இருமுறை எண்ணெய் தேச்சுக்கோ! நெய் வாங்கி வெச்சுக்கோ."
இங்கே அம்மாப் பெண்ணுக்கு இவள் சிபாரிசு செய்யும் வாரக் குளியல்களும் செளக்யங்களும் கிட்டுமா? நெய் வாங்கி வெச்சுக்கோவாம். அம்மாப் பெண்ணை விடு. ஏன், உன் ஆம்படையான் உடம்பை கவனித்துக் கொள்' என்றுகூட ஒரு வார்த்தை சொல்றது தானே! அதைச் சொல்லக்கூடத் தோன்றவில்லையே!”
அண்ணாவுக்குப் புழுங்கும் சுபாவம், இளமையில் வறுமை, வயது முறுக்கில் திடீரென ஆஸ்துமா நேர்ந்து அதனாலேயே உத்தியோகத்தில் சறுக்கல், வியாதியின் கொடுமை - இதிலேயே உடலும் மனமும் உளுத்துப் போய்விட்டார். அவருடைய பல உத்தமங்கள் எனக்குப் படியாவிட்டாலும் புழுக்கத்தை மட்டும் ஸ்வீகரித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கே தெரிகிறது. எழுத்தாளனுக்கு இன்றியாமையாத குற்றங்கள், குணக்கேடுகளில் புழுங்கலும் சுயநலமும் சேர்ந்தவை போலும்!
நினைவில் ஊறப் போட்ட பின்னர்தானே விஷயம் எழுத்துக்குப் பக்குவத்தை அடைகிறது!
அண்ணாவிடமிருந்த பொருமல் ஏன் அம்மாவிடம் இல்லை? எனக்கு இன்னும் வியப்புதான். அவருடைய சூழ்நிலையில்தானே அவளும் இருந்தாள்! கேட்கப் போனால், அவள் நிலைமை இன்னும் மோசம். சின்ன வயதிலேயே, பெற்றோர்கள் இருவரையும் இழந்தது மட்டுமல்ல, தம்பிமார் இருவர் வேறு-பிறர் தருமத்தில் வளர்ந்து - இதுபோன்ற அகதிகளுக்கு ஆண்டவன் கூடவே ஒரு விரக்தியையும் கொடுத்துவிடுவானோ? அல்லது அம்மாவுக்கு அந்த வயதில் இயற்கையாகவே அமைந்திருந்த ஆரோக்கியம் இந்தக் கவலைகளை யெல்லாம் அடித்துக்கொண்டு போய்விட்டதோ ? அல்லது இந்தக் கவலைகளையெல்லாம் படுவதற்கே அவளுக்குத் தோன்றவில்லையோ? இழைக்க வேண்டு மென்ற எண்ணம் இல்லாமல், ஆனால் தாய் தகப்ப னில்லாத அந்த ஒரே காரணத்தாலேயே நேரும் சிறுசிறு அலகூழியங்கள், கொடுமைகள், எறும்புக் கடிகள், அங்குமிங்கும் ஏவல்கள், ஏலமிட்ட வாழ்க்கை, அவர்கள் நியதியில் சேர்ந்தனவையாக, அவற்றிடையில் அநாத பந்து அவர்களைப் பதப்படுத்துகிறான். ஒன்று தெரிகிறது. யாருக்கும் அவன், அவரவர்க்குரிய வாழ்க்கைப் பங்கை ஏமாற்றுவதில்லை. அவன் இருக்கிறான் என்பதற்கு இதைவிட அத்தாட்சி வேண்டாம். ஆனால் அவன் அதை வழங்கும் வழிகள்தாம் புரிவதில்லை. அப்படியும்தான் அவன் ருசுவாகிறான்.
இன்னும் புதிர்! அது அவனோ? அவளோ ? அதுவோ ?
எதுவோ? (ஹ"ம்)
“எது எப்படி இருந்தால் என்ன? இழைச்சவாளும் செஞ்சவாளும் இந்த உலகத்தை விட்டே போயாச்சு. உங்கப்பாதான் பலனில்லாமல் பசலியான நினைப்பு களுக்கு, இன்னமும் இடம் கொடுத்துண்டு தன் மனசையும் கெடுத்துண்டு அவதிப்படறார். முதல் கோணல் எங்களுக்கு அப்பன் வயணமில்லை."
இப்படியெல்லாம் சிந்திக்கறதாலே திரும்பி வருவாரா? திருந்தியிருப்பாரா? நாங்களோ தஞ்சம் அடைஞ்சுவிட்டோம். ராமசாமி மாமா எவ்வளவுக்குத் தான் ஈடு கொடுப்பார்? மன்னியுந்தான் என்ன செய்வார்? பெண்ணுக்கு விடிவு கண்ட இடத்தில் உடம்பைப் பார்த்துக்கொள்ளச் சொல்வதில் என்ன தவறு? பெத்தவா சுபாவம் அது. மன்னி சொல்லாதத னாலே அண்ணா செளக்யம் சேர்த்துக்காமல் இருக்கப் போறானா? தான் எண்ணெய் தேச்சுக்காமல் இருக்கப் போறானா? மூல வியாதிக்காரன், முக்கியமா அவனுக்கு நெய் சேரணும். இல்லை, சோனாதான் சமைச்சுப் போடாமல் இருக்கப்போறாளா? குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை. தாய் தகப்பன் இல்லாதவர்கள். அவசியமா எங்களுக்குச் சுற்றம் வேண்டும். சுற்ற மில்லாமல் எங்களுக்குச் சரிப்படாது. எது எப்படி இருந்தால் என்ன?” அம்மா புன்னகை புரிந்தாள். “தருமத்துக்குப் போட்டாளோ? பிரியத்தில் போட் டாளோ? நாலுபேர் வீட்டு நாலுவிதச் சாப்பாடு சாப்பிட்டு, அந்த ஊட்டம் என்னை இன்னும் தாங்கிண்டுதாணிருக்கு. சோனா ஆயிரம் செளக்யம் சேர்த்துண்டு என்ன, இன்னும் சோனாதான். அவளும் இரண்டு பெத்தப்புறம்கூட, மன்னி இன்னமும்தான் கேட்டுக்கொண்டிருக்கிறாள்; 'மறக்காமல் வாரத்தில் ரெண்டுமுறை எண்ணெய் தேய்க்கறாயா? இங்கு வந்தாலும், 'அம்மாப் பெண்ணே! வாரம் ரெண்டு முறை எண்ணெய் தேச்சுக்கோன்னு சொல்றா. சொல் லிட்டால் நாங்கள் தேச்சுக்க முடிகிறதா ? கை ஒழியணும்; தூக்குச்சொம்பில் வெள்ளிக்கிழமையன் னிக்கு எண்ணெய் இருக்கணும்.
முதல் நாள் வதக்கல் கறி பண்ணினால், அதோடு அந்த வெள்ளிக்கிழமை எண்ணெய்க்குளியல் போச்சு. இல்லாத அன்னிலிருந்து இன்னிவரை இதுதான் குடும்பம்! தட்டுமுட்டு முன்னே பின்னே! ஆனால் என்னிக்குமே உண்டு. எனக்குத் தெரிந்தது அவ்வளவு தான். இல்லைப் பாட்டுப் பாடினால் பாடிண்டேயிரு. இருக்கு இருக்குன்னு சொல்லிண்டிருந்தால், இன்னிக் கில்லாவிட்டால் நாளைக்கேனும் - சுண்ணாம்பாலே சூட்சுமம், ரஹஸ்யம் வெளிச்சம் எல்லாமே இதுதான்!”
தன் இளமைப் பருவத்தின் சோதனைகள் பற்றி அண்ணா மாதிரி, அம்மா அதிகம் பாட்டமாகப் பாடினமாதிரி எனக்கு ஞாபகமில்லை. நான் தனியாகச் சொல்ல என்ன இருக்கு? உங்கள் அண்ணாதான் தினமும் ஜபமாலை உருட்டறாரே என்று கேலி பண்ணுவாள். நாங்கள் எல்லாரும் ஒரே இடத்தில் தானே வளர்ந்தோம். ஆனால் ஒன்றிரண்டு நினைவுகள். நீண்ட இடைவேளைகளில் ஏதேனும் சந்தர்ப்ப விளைவாக அவளிடமிருந்து வெளிப்படும்போது நெஞ்சைத் தீய்க்கும்.
ஜகதீச மாமா - (வக்கீலுக்குப் படித்துவிட்டுத் தொழில் நடத்தாத வக்கீல்!)
ஜகதீச ஐயர் மனைவி வியாதிக்காரி, அடிக்கடி பிறந்தகம் போய்விடுவாள். வளத்தில் பிறந்து வளர்ந் தவள். இங்கு வந்து மாட்டிக்கொண்டது அவள் தலையெழுத்து. இடையில் பிள்ளைப்பேறு நேர்ந்து கொண்டால், கேட்கவே வேணாம். தான் போகும் போது குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு போய் விடுவாள்.
மாமா, சதா வயிற்று வலிக்காரர். ஏதேனும் ஒரு நித்தியக் கோளாறு. பொரித்த ரஸம், பொரித்த குழம்பு, காரம் புளி தள்ளி, தினம் பத்தியச் சமையல், அவருடைய சுபாவத்துக்கும் முகக் கடுப்புக்கும் யாரும் அவரிடம் ஒட்டித் தங்கமாட்டார்கள். அப்புறம் யார்? ஸ்ரீமதி இந்தமாதிரி சமயத்துக்குத்தானே அவள் தாயார் பெற்றுவிட்டுப் போயிருக்கிறாள்! “அம்மாப் பெண்ணை வரவழை, சும்மாவா செய்யப்போகிறாள்? அவளோடு போச்சா? கூடவே அந்தக் கொசுறுகளும்தான் வரப் போகிறது."
சில மாதங்கள் அவர் வீட்டில் பிழைப்பு நடக்கும். ராமசாமி மாமாவுக்கும் எங்கள் சுமையைக் கொஞ்ச நாள் தாங்கத் தேவையில்லாமல் இருப்பதே, நாங்கள் அவருக்குச் செய்யும் எங்களால் முடிந்த உபகாரம். வேறென்ன உதவி எங்களால் சாத்தியம்? அண்ணா கோயமுத்தூரில் சிதம்பர மாமா வீட்டில் படிக்கிறான்."
மேல் காண்பவை, வாய்விட்டுச் சொன்ன வார்த் தைகள் அல்ல. ஆனால் அவரவர் பார்வைகள்.
அந்த மஹானுபாவன், சாப்பாடு முடிந்து பற்றுப் பாத்திரங்களைத் தேய்த்துக் கவிழ்க்கும்வரை காத்திருந்து கூடத்தை மட்டும் விட்டு மற்ற அறைகளை (சமையல் அறை உள்பட)ப் பூட்டிக்கொண்டு போய்விடுவாராம். கட்சிக்காரனும் இல்லாமல் எந்தக் கச்சேரிக்கு அப்படிப் பிரதி தினமும் போவாரோ?
மஹா சந்தேகப் பேர்வழி. டப்பாவைத் திறந்து குழந்தைகள் முந்திரிப் பருப்பு வீசைக்கணக்கில் வாங்கி வைத்திருப்பதைத் தின்றுவிடுமோ என்கிற பயமோ? அல்லது சர்க்கரையை அள்ளிப் போட்டுக்கொண்டு விடுவார்களோ ? இல்லை, பிற்பகலில் அவசர அவசர மாக அம்மாப்பெண் ரவா உப்புமா கிளறிக் குழந்தை களுக்கும் போட்டுத் தானும் தின்றுவிட்டால்..?
குழந்தைகள் கூடத்தில் சற்று நேரம் விளையாடிக் கொண்டிருக்கும். பிறகு பக்கத்துக் குடித்தனத்துக்கு விளையாடப் போவார்கள். அந்த வீட்டுக் குழந்தைகள் மதிய உணவு வேளையாக இருந்தால், அந்த வீட்டு மாமிக்கு அந்தச் சமயம் மனம் இரங்கியிருந்தால் - இவர்களுக்கும் கிடைக்கும். குழந்தைகள் வயிற்றுள் ஒநாய் பிடுங்கும். ஆனால் வாய் திறந்து கேட்கமாட் டார்கள். அம்முவாத்துப் பாடம் அதுதான்.
இந்த அதிர்ஷ்டம் தினப்படி வாய்த்துக் கொண்டி ருக்குமா ? இல்லாத நாளில் விளக்கு வைக்கும் நேரத்துக்கு மாமா திரும்பும் வேளைவரை கண்ணில் உசிர்தான்.
சமைக்கும் அரிசியை அளந்து கொடுப்பாராம். எப்படி?
இரண்டு சிறுவர்களையும் இரு கைகளிலும் பிடித்த வண்ணம், இந்தச் சிறுமி அவர்களுக்கு, "இதோ மாமா வந்த உடனே நிமிஷமாகச் சமைச்சுப் போடறேன்!” என்று தாய்க்கு மறு தாயாக ஆறுதல் சொல்லிக் கொண்டு, நல்லதங்காள் மாதிரி நிற்கும் காட்சியை மனத்தில் உருவாக்கிப் பார்த்துக்கொள்கிறேன். வயிறு கொதிக்கிறது.
மனுஷனா இவன்?
நம் குழந்தைகள் இந்தக் கஷ்டப்படுமா? இந்தக் கொடுமை தாங்குமா? கஷ்டமே பட வேண்டாம். இப்படியும் இருந்ததா என்று நினைக்கும் கருணை யேனும் அதுகளுக்கு இருக்கிறதோ?
-"உங்கள் பெரியவாள் பட்டாள்னா நாங்களும் படனும்னு எங்கள் தலையெழுத்தா? இல்லை, அது தான் உங்கள் இஷ்டமா ? ஏன், எங்களை விடச் சுகப்பட்டுண்டு இருக்காளே, நினைச்சால் Wrist Watch, நினைச்சால் Organdy, தோளில் அழகாகத் தொங்கற Camera, அவாளைப் பத்தி நினைச்சுப் பாருங்களேன். இந்தப் பெரியவாள் எல்லாம் எங்களைத் தங்களோடு இறுக்கிப் பிடிச்சு வெச்சுக்கப் பண்ணற பயமுறுத்தல் தானே! அவாள் சொல்றதாலே நாங்கள் ஏற்றுக் கொள்கிற மாதிரி ஏதேனும் சாஷி இருக்கா? சரி, அப்படியே இருக்கு, எங்களை அதற்காக என்ன பண்ணச் சொல்கிறீர்கள்
?”
காதைப் பொத்திக் கொள்கிறேன்.
"மனுஷாள்னா பலவிதந்தான்!”
பிரம்புச் சாய்வு நாற்காலியில் வீற்றிருந்தபடி உள்ளங் கையில் தானே பறந்துவந்து உட்கார்ந்துகொண்ட அம்மா சிட்டுக்குருவியை மறுபடியும் அதன் சிறகு விரிப்புக்கு வீசி எறிவதுபோல், அம்மா கையை ஒருமாதிரியாக உதறுவாள். அதுவே ஒரு அழகு - No; graceக்கு நேர்த்தமிழ் யாரேனும் சொல்லுங்களேன்! ஸாஹசம்? சொகுஸ" ? ஹ" ம், இல்லை, இதை யெல்லாம் தாண்டி, எதோ ஒரு நேர்த்தி. எப்பவுமே அம்மாவின் சைகைகளில் இரைச்சல் இருக்காது. அவளுக்குச் சைகைகளே குறைச்சல்.
"ஆனால் சிதம்பர மாமாவாத்துக்குப் போனால் எங்கள் பாடு ஒரே குஷிதான்." அந்த நினைப்பில், இப்பவும் அவள் விழிகள் குழந்தைபோல் விரியும். தனி ஒளி வீசும். அவரும் அழைத்துக்கொண்டு போய் வைத்துக்கொள்வார். "ஸ்ரீமதி குழந்தைகைைள யாருடி கூப்பிடறா, காரியவாதிகளைத் தவிர ? - அங்கே வேலையே கிடையாது; வேளா வேளைக்குச் சாப்பாடு, மேல் தீனி. அங்கே போய்விட்டுத் திரும்பினாலே நாங்கள் மொழு மொழுன்னுதான் வருவோம். கோய முத்தூர் வெயில் மிதத்துக்குக் கேக்கணுமா? செவந்து போய், சேவல் கொண்டை போல. சிதம்பர மாமா கர்வி. எல்லாரையும் தூக்கியெறிஞ்சு பேசுபவராக இருக்கலாம். ஆனால் அம்மாப் பெண் மேல் அவருக்குப் பிரியம்தான். "குட்டி, குட்டி!” என்று அழைப்பார்.
"நாங்கள் நாய்க்குட்டி போல, சிறு சிறு நன்றி களையும் எங்களால் மறக்க முடியாது.”
எனக்கு விழி துளும்பும்.
"ஆனால், நாங்கள் எங்கே போனால் என்ன? எங்கே வாடினாலும், எங்கு செழிச்சாலும், எங்கள் தேர், லால் குடி, கீழ்த்தெருவு வடக்கே பார்த்த கோடி வீட்டில்தான் வந்து நிற்கும். பாந்தம் எங்களுக்கு இங்கேதான்; இங்கே தாரதம்மியம் கிடையாது. எல்லாரும் அடிச்சுப் பிடிச்சு, சண்டை போட்டுக்கொண்டு, அடுத்த நிமிஷமே கூடிக் கொண்டு, அந்த இரட்டைக் கடுகு விழுந்த பழையதை மன்னி பிசைஞ்சு கையில் போட, கடைசியில், "ஆச்சு, அடிக்குழம்பு யானை போல" - யானையும் இருக்காது, பூனையுமிருக்காது, அடிக் குழம்புமிருக்காது. காலிக் கல்சட்டியைத் திருஷ்டி கழிப்பது போல் குழந்தைகள் தலைமேல் சுற்றுவாள். நாங்கள் சிரித்துக்கொண்டு ஒடுவோம். "ராமாமிருதம், அந்த நாட்கள் தனி நாட்கள் தாண்டா. கஷ்டங்கள்தான். பட்டினிகள்தான். ஆனால் அந்த ‘ஸல்லோ புல்லோ’வில் எங்களுக்குத் தனியாத் தெரியாது. சுகம், துக்கம் சேர்ந்து அநுபவிப்பதிலேயே ஒரு ஆனந்தம் இருக்குன்னுகூட நான் சொல்வேன்."
விஷயத்தை முடிக்க மறுபடியும் பல்லவியில் கொண்டுவந்து நிறுத்துவது போலும், "அம்மாப்பெண் என்றால் பொதுவாக எல்லாருக்கும் பிரியந்தான்."
அதை நானே கண்கூடாகத் தெரிந்துகொண்டேன், என் மூத்த பிள்ளைக்கு உபநயனம் நடந்தபோது.
அந்த உபநயனம் சம்பிரமமாகவே நடந்தது. இருபது வருடங்களுக்கு முன்னர் விலைவாசிகள் இவ்வளவு கொடுமையாக இல்லையே!
லால்குடியிலிருந்து ஒரு கூட்டமே திரண்டு வந்தது பாருங்களேன்! நான் என்னவோ மெப்புக்குத்தான் அந்தப் பக்கம் பத்திரிகைகள் விட்டிருந்தேன். அங்கு எனக்கு உறவினரோ, தெரிந்தவர்களோ இவ்வளவு நாட்களுக்குப் பிறகு மிகவும் குறைவு. நெருக்கமான பழக்கங்கூட இல்லை. ஆண்களும் பெண்களுமாக, தெரிந்தவர்கள் அழைப்பில் அழைக்காதவர்களும் ஒட்டிக்கொண்டு, மூட்டையும் முடிச்சுமாய் மூன்று ஜட்காக்களிலிருந்து இறங்கினவர்களை நானே எதிர் பார்க்கவில்லை. இறங்கினதும் இறங்காததுமாக அத்தனைபேரும் அம்மாப்பெண்ணை மொய்த்துக் கொண்டனர். அவர்கள் நடுவில் அம்மா முகத்திலிருந்து ஐம்பது வருடங்களேனும் உதிர்ந்து எல்லோருக்கும் காலத்தின் முன்பின் திரும்பி அவர்கள் பிள்ளைப் பிராயத்தில் நுழைந்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்தது எங்களை மறந்து - அதுவே ஒரு தனிக்காட்சி! அட, அந்த வயதில் அம்மா இவ்வளவு அழகா? பிரமித்துப் போனேன். என் தம்பிமார்களே, எழுத ஆசையிருந்தால் மட்டும் போதாது. எழுத்து ஒரு சின்னம்மை, அரிப்பு மாதிரி. அது வராதவர்களே கிடையாது. ஆனால் எத்தனை பேர் குடலிலேயே போட்டுக்கறது, ஜ்வாலை யாக வளர்ந்து அவர்களிலும் எத்தனைபேரை எரிக் கிறது, அதிலும் எத்தனைபேரை எரித்துக் கொண்டே யிருக்கிறது என்பதுதான் கேள்வி.
என் தாயார் என்பதற்காகச் சொல்லவில்லை. அந்த நரைக்கூந்தலையும் கண்ணில சதை வளர்ந்துகொண் டிருக்கும் நிலைக்கு அப்பால் பார்க்க உள்கண் பழக வேண்டும். அந்தப் பார்வைக்குக் கண் தனியாகத் திறக்கும் பாக்யம் கிட்ட வேண்டும். இதில் அதிர்ஷ்டம் கால் - அப்பியாசம் முக்கால். இந்த எழுத்தின் வியா பகத்தில் ஸ்தூலப் பொருள்கூட முக்கியம் அல்ல. அதன்பின்னால் அடுக்கடுக்காக இயங்கும் அதன் சூட்சும சாரங்கள்தான் முக்கியம்.
கடையலில் தற்செயலாக அமுதத் திவலை நாக்கில் தெறித்து ருசி கண்டவன் அமுதத்துக்குக் குறைந்து, எதையும் தேடமாட்டான். தேடலினின்று அவனுக்கு மீட்சியும் கிடையாது. தேடிக்கொண்டேயிருப்பான், கலைஞனுக்கு மீறிய சுயநலம் படைத்தவன் கிடையாது. வாழ்க்கையில் சுகத்திலும் சோகத்திலும் கூட அமுத கலசத்தின் தரிசனம் காண அவன் உட்கண்ணுக்குச் சக்தி உண்டு. தரிசனம் தவிர வேறு குறியும் அவனுக்கில்லை.
கடலில், கொட்டு மழையில், தன் மழைத்துளிக்கு வாய்திறந்து அதல ஆழத்தினின்று மேல் வந்து காத்திருக்கும் சிப்பி-
விடிவேளையில் மலர்களின்மேல் தங்கிய பனித்துளி மட்டுமே தன் ஆகாரமெனக் கொண்ட ஸாதகப் பகூழி - (என்று ஒன்று இருக்கிறதாமே!) – அதுபோல
'உத்தமம் தவிர வேறு அறியேன்” என்ற தத்துவம் வாழ்க்கையின் தினப்படி நடைமுறையிலும் உண்டு.
உத்தமம் என்பது என்ன?
சரி சரி, கேள்விகள் நீள்கின்றன. எனக்குக் கிடைத்த காட்சியில் எனக்குக் கண்ட வெறியில் என்னை மீறி வந்த ஏதோ ஏதோவைக் கொட்டிவிட்டேன்.
மேலே –
பூனூல் கல்யாணம் விமரிசையாக நடந்தது பெரி தல்ல. கையிலிருப்பதையும் கடன் வாங்கியும் காசை இறைக்கத் துணிந்துவிட்டால், பண்டங்களை வாங்கி விடுகிறோம். ஆனால் இதில் தனியாக ஒரு களை கட்டிற்று. அல்லது களை கட்டிக்கொண்டது. களை என்பது, விரல் வைத்து விவரிக்க முடியாத அம்சம்.
அழைப்பிதழ் விடுகையிலேயே , உள்ளூரிலேயே, இவர்கள் எங்கே வரப்போகிறார்கள்? என்று நான் நினைத்தவர்கள், இவர்கள் வரவேண்டாம் என்று நான் நினைத்தவர்கள், எல்லாரும் வந்து இருந்து சிறப்பித்தார்கள்.
கூட்டம் நெரிய நெரிய எனக்கு மண்டையில் ஏதோ கிறு கிறு ஏறியது. இதைத் தனிப்பட்ட முறையில் எப்படி விவரிப்பேன்? இருபது வருடங்களுக்கு முன் இப்ப விட வளர்ச்சி குறைந்தவன்தானே ! இப்ப மாத்தி, ம் என்ன?) ஏதோ ஒரு அசட்டு மதமதப்பு. வழக்கமா சாத்துக்குடிக்குப் பதிலாக எல்லாருக்கும் முகூர்த்தத் தாம்பூலத்தில் தேங்காய் வழங்கும் திமிர். ஆபீஸ் மற்றத் துறைகளிலிருந்து வந்திருக்கும் பெரிய புள்ளிகளின் தலைகள் இது என்னுடைய ராஜசூய யாகம் என்பது போல உணர்வு; இல்லை, இந்தக் காலத்துக்கேற்ப அதேபோல ஏதோ ஒன்று.
அன்றிரவு, கூடத்தில் லால்குடிக் கூட்டம் அம்மா வைப் புடைசூழ, எல்லாரும் என்னென்னவோ ஒருவரையொருவர் இடைமறித்தபடி சந்தோஷமாகப் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது என்னிடமிருந்து அந்தக் கேள்வி புறப்பட்டது. நான்தான் என் வசத்தில் இல்லையே. மீனாட்சி கல்யாணத்தில் மீனாட்சி யம்மனின் போதை!
"ஏன் அம்மா, இத்தனைபேரும் எனக்காகத்தானே வந்திருக்கிறார்கள்?" - ஏன் கேட்டேன், தெரியாது. கேள்வி ஏன் அப்படி அமைந்தது, தெரியாது. அடிப்படை லா.ச.ரா.வின் கீர்த்தி பற்றி அவ்வளவு தீர்மானமான எண்ணமோ?
ஆனால் இத்தனை வயது எழுதியும், லா.ச.ரா. எத்துணை சின்னஞ்சிறிய சுண்டெலி என்று சமீபத்தில் கூட நிரூபணமாயிற்று.
மதுரையில் (இப்பத்தான் திரும்பி வந்தேன்) என் நண்பர் ஒரு புது ஆளுக்கு என்னை அறிமுகப் படுத்தினார்.
“இவர் யார் தெரியுமோன்னோ ? லா.ச.ரா. எழுத்துலகில் ஜாம்பவான்."
"ஆமாங்க, இந்த மாதங்கூடக் 'கலைமகளில் இவர் கதை படிச்சேன், இவருடைய புதுக்கவிதை ஒண்ணு போனவாரம் 'கல்கி'யில் வந்திருந்ததல்ல ?”
எனக்குப் 'பக்கென்று சிரிப்பு வந்துவிட்டது. நண்பர் முகம் சுண்டிற்று. புது ஆள் குறிப்பிட்ட இரண்டு பத்திரிகைகளிலுமே என் எழுத்து வெளியாகி இருபது வருடங்களுக்கு ஏறக்குறைய இருக்கும்.
இதுபோன்ற வெடிகளை எழுத்தாளனைப் பற்றிய விகடத் துணுக்குகளில் சேர்த்துக்கொள்ளலாம். விகடத் துணுக்குகளுக்கென்றே எழுத்தாளர்கள் இப்போது தனிக்கிளை பிரிந்து அவர்கள் தொழிலும் மும்முரமாக நடக்கிறதே?
வந்திருந்தவர்களில் ஒரு மாமி - ஒரு பாட்டி என்று சொல்லட்டுமா - அம்மாவுக்கு அருகே உட்கார்ந் திருந்தவள் அம்மாவின் மடியில் செல்லமாகக் கையை வைத்துக் கொண்டாள். அவளைத் தொட்டுக் கொள்ளணுமாம்.
“எங்களுக்கு உன்னைப் பத்தி என்ன டாப்பா தெரியும் ? அம்மாப்பெண் பேரனுக்குப் பூணுரல் போடறாள்னு சேதி வந்ததும் கைக்காரியங்களைப் போட்டது போட்டபடி போட்டுவிட்டு அப்படியே ரயிலேறிவிட்டோம். மறுபடியும் ஒருவரையொருவர் பார்க்கக் கொடுப்பினை இருக்கோ இல்லையோ? யார் கண்டது? பெண் வயத்துப் பேரனுக்கா, பிள்ளை வயத்துப் பேரனுக்கான்னுகூடத் தெரியாது. எங்களுக்கு அம்மாப் பெண்ணைத்தான் தெரியும்."
அம்மாவுக்கு ஒரு mannerism. அவள் தனியாக இருக்கையிலோ, சிந்தனையில் ஆழ்ந்திருந்தாலோ பிறர் பேச்சுக்கு கவனம் கொடுக்கையிலோ, அவள் உதடு களை இரு விரல்கள், சுட்டு விரலும் நடு விரலும் பொத்தியிருக்கும். அம்மாவின் கண்கள் என்மேல் ஆழ்ந்தன. விரலடியினின்று உதடுகள் அசைந்தன. ஆனால் எனக்கு மட்டும் கேட்டது. சேதி எனக்கு மட்டும்தான்.
"அட அசடே!”
அவ்வளவுதான். ஆனால் எவ்வளவோ அர்த்தங்கள். அவற்றில் ஒன்று, “மெனக்கெட்டு கேட்டு வாங்கிக் கட்டிக் கொள்ளணுமா?”
இதற்குள் இன்னொரு பாட்டி பழுத்த சுமங்கலி - "இந்த நாள் எல்லாம் என்ன கல்யாணச் சமையல் பண்ணறான்கள்? என்னவோ மந்தை மாதிரி பத்து, பன்னிரண்டு பேர் வரான்கள். இரண்டு பேர் அரைக் கிறான். இரண்டு பேர் நறுக்கறான். எதையோ வெந்ததும் வேகாததுமா, கால் உப்பு, அரை உப்பில், ஏற்றி இறக்கிவிட்டு அவசர அவசரமாப் பரிமாறி அவசர அவசரமாச் சாப்பிட்ட எச்சில்மேல் தெளித்த ஜலம் காயறத்துக்கு முன்னாலேயே, மறு பந்திக்கு இலைக்கட்டைத் தூக்கிண்டு நிக்கறான். இதிலே இனிப்பாம், காரமாம். எதுவுமே வாயில் நுழையாத பேர். ஆனால் பிட்டுப் பார்த்தால் இன்னும் வேகாத மைதா மாவு! நாங்கள் அந்த நாளில் கையால் தொடக்கூட மாட்டோம். யாராவது விசேஷம் என்னுது உன்னு துன்னு இழுத்துப் போட்டுண்டு செய்யறாளா ? அம்மாப்பெண்ணே, நீ அந்தச் சீமந்தக் கல்யாணத் துக்குச் சமைச்சயே, அதைவிட ஒசத்தியாடீ ?”
அத்தனை தொண்டைகளிலிருந்தும் ஏகோபித்து ஒரு ‘ஹாஹாகாரம்.
பிறகு தனித்தனியாகவும் சேர்ந்தும் விசாரித்துத் தெரிந்துகொண்டேன்.
சிதம்பர மாமா மூத்த பெண்ணுக்குச் சீமந்தம். ஏற்பாடு செய்திருந்த சமையல்கார செட், செட்டா டோக்கர் கொடுத்துவிட்டான்கள். வேறு எங்கே இரண்டு காசு கூடக் கிடைத்ததோ, இல்லை "ஹெட் சொல்லி வைத்திருந்த ‘ஸெட் சேரவில்லையோ? இல்லை, யாருக்கு உடம்பு சரியில்லையோ? மணி ஏழாயிடுத்து ஜாடா'க் காணோம்.
இட்டிலிக்கு முதல்நாள் அரைச்சு வைத்திருக்கும் மாவு பொங்கி வழிகின்றது. தேடின இடத்தில் ஆள் இல்லை. சிதம்பரமையர் போலீஸ் இலாகாதான். அதிலும் அவர் ஆட்டம் தனிப் பெரிசுதான். ஆனால் இசைகேடாக மாட்டிக்கொண்டு விட்டார். பின்னால் சிகூைர் சமையல்காரனுக்கு, நடக்கிறபடி நடந்ததோ, என்னவோ? ஆனால், இன்று, இப்போ, ஆகவேண்டியது என்ன? கல்யாண சீசன், மாற்றாள் கிடைக்கவில்லை. அந்த அவசரத்துக்கு எவன் அகப்படுவான்? கூட வைத்துக்கொண்டு சமாளிக்க முதல்நாள் இட்டிலிக்கு அரைத்த பாட்டிமார்கள் கூடக் கிடைக்கவில்லை. அவர்களும் எங்கோ தேங்காய் துருவப் போய்விட்டார்களோ?
வந்திருக்கும் பெண்டிரில் யாருக்கும் காரியத்தில் இறங்கத் துணிச்சல் இல்லை. சமையல் முந்நூறுபேருக்கு. ஏதேனும் கொஞ்சம் பிசகினாலும் சிதம்பரமையர் வாயில் யார் புகுந்து புறப்படுவது?
அந்தச் சமயத்துக்கு மன்னிப் பாட்டியும் இருந்த தாகத் தெரியவில்லை. ஒருவேளை கார்த்திகேயனை (கடைக்குட்டி)ப் பிரசவித்திருந்தாளோ என்னவோ? இதெல்லாம் ஹேஷ்ய விஷயம். சீமந்தத்துக்குச் சாமான்கள், காய்கறிகள், பால் தயிர் வாங்கிப் போட் டதும், காணிக்கையாக வந்தவையும், உக்ராண உள்ளிலும், கூடத்திலும் வதியழிகின்றன. கோட்டை அடுப்பு தூங்கறது. சிதம்பரமையரோ கையைப் பிசையும் நிலைமைக்கு வந்துவிட்டார். ஹே லக்ஷமணா!
அப்போ அம்மாப்பெண் - இன்னும் மணமாக வில்லை - வயது பதிமூணோ பதினாலோ - விளையாட்டாகச் சொன்னாளோ, வினையாகச் சொன்னாளோ?
"ஏன் மாமா, நான் சமைக்கட்டுமா ?”
ஐயர்வாள் மருமாளை ஒருமுறை அடையாளம் தெரியாத கண்களுடன் பார்த்தார். அடுத்த அடை யாளத்தில், அவர் விழிகள் அகல விரிந்தன. "குட்டி என்னடி சொல்றாள்?”
சிதம்பரமையர் சம்சாரம் சோனியா? கெட்டிக் காரியா? அல்லது இரண்டுமா? தெரியாது.
ஆனால் idea உடனேயே பற்றிக்கொண்டு கிறுகிறு வெனப் பரவியும் விட்டது.
"சோற்றுத் தவலையை என்னால் இறக்கி வைக்க முடியாது. அதுமட்டும் புருஷாள் கவனிச்சுக்கட்டும். சாதம் பதம்வரை நான் பார்த்துக்கிறேன். சுற்றுக் காரியம் வந்திருக்கறவா செஞ்சு கொடுத்தால் நான் ஏத்தி இறக்கிடறேன்."
அவ்வளவுதான் சமையல்கட்டு ஒரே குதூகலக் கூடமாக மாறிவிட்டது. பட்டுப்புடவை கட்டிக் கொண்டு வந்திருக்கும் மாமிகள் போட்டி போட்டுக் கொண்டு தேங்காய் துருவுகிறார்கள். காய்கறி நறுக்குகிறார்கள். வடைக்கு அரைத்தாகிறது. அதற்கு உப்பு, மிளகாய்த்திட்டம் அம்மாப் பெண்ணுடையது தான். கூடத்தில் அதுபாட்டுக்கு இட்டிலிக் கடை நடக்கிறது. சாதம் பதமாகி, சோற்றுத் தவலைக்குக் கோணி கட்டி இரண்டு ஆண் பிள்ளைகள் பிடித்து நகர்த்திக் கஞ்சி வடியத் தொட்டி முற்றத்துக்கு உருட்டி விட்டாச்சு. ஹெஸர் இன்னொரு தவலையில் காய்கிறது. பாவாடை தாவணியில் ஒரு சிறுமி, அவள் மாரளவுக்கு வீடு அண்டாக்களில் கோட்டையடுப்பில் கொதித்துக் கொண்டிருக்கும் குழம்பு, ரசத்தைக் கிளறிக்கொண்டிருக் கிறாள். இதற்குள் இட்டிலிப் பானையின் மேல்மூடியை ஒரு ஆண்பிள்ளை தூக்க, இட்டிலியைப் பதம் பார்க்கி றாள். ஆச்சு, ஆச்சு, இன்னும் பாயசமும், வடையும் தான் பாக்கி. சொன்னபடி பதினோரு மணிக்கு இல்லாட்டாலும் பன்னிரண்டு மணிக்கு இலை போட்டுவிடலாம்.
அந்தச் சந்துஷ்டியான முகத்தைச் சுற்றி மற்ற அத்தனை இளசுகளும் வட்டம்.
"இப்போ நினைச்சால்கூட எங்களுக்கு ஆச்சரியமா யிருக்குடி. நான் சமைக்கிறேன், காரியத்தை ஒப்பேத்திக் கொடுக்கறேன். கழுதை வயசானவளுக்கெல்லாம் ஏத்துக்கத் தெம்பு வல்லே. நீ பச்சைக் குழந்தை, உனக்கெப்படி அந்தத் தைரியம் வந்தது?"
"அம்மு வாத்து ரத்தம் அவள் உடம்பிலும் ஒடல்லியா? தைரியத்துக்கென்ன குறைச்சல்?”
"அந்தச் சமையலும் என்ன, சின்னப்பொண்ணு பண்ற மாதிரியா இருந்தது? அதெப்படி ஆவேசம் வந்தமாதிரி அப்படி அப்பழுக்கில்லாமல் அமைஞ்சுது? அம்மாப்பெண்ணே, மறுபடியும் அதுமாதிரி நேர்ந்தால் அதேமாதிரி உன்னால் முடியுமா ?”
அம்மா புன்னகை புரிந்தாள். "நான் மறுபடியும் குமரியாவதற்கு வழி சொல், மிச்சத்துக்கு பதில் அப்புறம் சொல்றேன்!”
“பேச்சில் எப்படி மடக்கறாள் பார்த்தியா?”
"அவள் சொல்றது வாஸ்தவம்தானே
"அந்த நாள் எல்லாம் திரும்பி வராது."
“வந்தாலும் அதுமாதிரி, நமக்குத் தெரியாது. இப்பவும் அதைப்பத்திப் பேச, அந்தச் சமயம் ஒரே தரமா நேர்ந்து, அப்புறமும் சமயம் சமயமா நிக்கறது."
“பெருந்திரு, எத்தனை காலமாக, மூலஸ்தானத்தில் நின்றவிடத்திலேயே நின்னுண்டிருக்கா, அது மாதிரி"
அம்மாடி! ராமாமிருதம் சுண்டெலிகூட இல்லை. சுண்டைக்காய், சுண்டைக்காய் கூட இல்லை. சுண்டைக்காய் ஒளஷதம். அதன் தகுதி எனக்கில்லை. நான் சுண்டெலியாகவே இருந்துவிடுகிறேன்.
அம்மாவைப் பார்க்கிறேன். இதுவரை அம்மா இதுபற்றி என்னிடம் ஏன் சொன்னதில்லை? சொல்ல வேண்டாம் என்கிற எண்ணமா? சொல்லி என்ன ஆக வேண்டும் என்கிற அலகூழியப் பாங்காயிருக்கலாம். இல்லை, அந்த விஷயத்தின் பேரிலேயே அலகூழியமா யிருக்கலாம். அதில் என்ன இருக்கிறது? நடந்தது நடந்தாச்சு என்கிற போக்கு. விஷயத்தின் எடை தெரிந்தே அதைத் தூக்கி எறிதல், துறவிச்செருக்கு.
அன்று எல்லோரும் படுத்து ஒசை அடங்கின பின்னர் - ஒசைப்படாமல் எழுந்து அம்மா எங்கு இருக்கிறாள்? பார்க்கிறேன். ரேடியோ எதிரில் Night buib இன் நீல ஒளியில் பிரம்புச் சாய்வு நாற்காலியில், சிந்தனையில் ஆழ்ந்து வீற்றிருக்கும் உருவம் தெரிந்தும் தெரியாததுமாகத் தெரிகிறது. உதட்டின்மேல் இரு விரல்கள். அவளுடைய வழக்கமான போஸ். அவளுக்கும் என்போல் தூக்கமில்லை. ஒரு பாறை போல் தோன்றுகிறாள்.
Legend.
நீல நக்ஷத்ரங்களில் தனித் தனியாகப் பொறிந்து கொண்டு என் மனக்கண்ணில் சொல் எழுகிறது. ஒப்புக்கொள்கிறேன். எனக்கு மிகவும் பிடித்தமான சொல். இதன்மேல் எனக்கு எப்பவுமே பாரபகஷம் உண்டு.
இப்போ மதுரையிலிருந்து திரும்புகையில் தரிசனத் துக்கு லால்குடி போயிருந்தேன்.
தேனோ, பன்னிரோ, இளநீரோ ஏதோ ஒரு அபிஷே கத்துக்குப் பின்னர் குருக்கள் உபசார தீபாராதனை காட்டுகிறார். சிவராஜ குருக்களுக்குப் பின் இப்போ அவர் பிள்ளை கணேசன்.
"அம்பாளை நன்னா பார்த்துக்கோங்கோ.”
அவள் எங்கே அப்படி நன்றாகத் தெரிந்துவிடு வாளா? ஏற்கெனவே எனக்குக் கண்ணில் கோளாறு. குன்றிக்கொண்டே வரும் கற்பூர ஒளியில், கர்ப்பக்ரு ஹத்தின் மையிருளிலிருந்து, உருவம் மங்கலாக அங்கு மிங்குமாக (முழுமை காட்டாமல்) பிதுங்குகிறது. கற்பூரம் குளிர்ந்ததும், உருவம் மறுபடியும் இருளோடு கரைந்து விடுகிறது.
தேடின கண்ணுக்குத் தோற்றம்.
மிச்ச நேரத்துக்கு இருளோடு இருள்.
அம்பா, நீ இருக்கிறாயா, இல்லையா?
நீ எது சொல்கிறாயோ, அது. இருக்கிறேன் இல்லை இல்லை, இருக்கிறேன்.
என் நெஞ்சில் அதுசமயம் ஏதேனும் புன்னகை மலர்ந்தமாதிரி எண்ணப் படலம் படர்ந்திடில் அது என் பாக்கியம் அதுவே என் பதிலும்கூட.
Legendஇன் சாயைகளில், கேள்விக்கு பதிலெனப் பிடிபடாத இந்தத் தன்மை ஒன்று, உயிரோடு இருக் கையிலேயே சிலரிடம் இந்த அம்சம் வந்து அடைகின்றது. அம்மா.
------------
அத்தியாயம் 12
கலியாணமான கையோடு சோனா அத்தை தனிக் குடித்தனம் போய்விட்டாள்.
ஆனால், அதே பந்தலில் திருமணம் ஆன அம்மா வுக்கு, ஏழு எட்டு வருடங்களுக்குப் பிறகுதான் அந்தப் பதவி கிட்டிற்று என்பது அவள் விதியின் விளை பாட்டு.
அண்ணாவுக்கு பெங்களுரில் வேலை, லீவுக்கு லீவு லால்குடி வந்துவிடுவார். வாத்தியார் வேலையில் லீவுக்குக் கேட்பானேன்! நவராத்திரி (அல்லது மைக்கேல்மஸ்), கிறிஸ்துமஸ், பொங்கல், கோடை விடுமுறை; வெள்ளையன் ராஜ்யம். அவன் பண்டிகை தவிர, இந்துப் பண்டிகைக்கு வேறு.
ஆம்படையான்தான் அப்பப்போ வந்துவிடுகிறானே என்பதன்றி தனிக்குடித்தனம் உடனே வைக்காததற்கு இன்னொரு காரணம் உண்டு. ஊருக்கு அண்ணா அனுப்பும் மாதாமாதக் கப்பம் பாதிக்கப்படுமே! குடும்பம் என்றால் அவசரக் கடன்கள், எதிர்பாராத செலவுகள் அப்பப்போ எத்தனை எத்தனை! ஒருவாறு சமாளிச்சுத் தலைநிமிர்ந்து கொண்டுதானே சிறிசுகள் அவசரத்தை கவனிக்க முடியும் சிறிசுகளுக்கு என்ன அவசரம்? வயசு வேணது கிடக்கு.
'பாற்கடல்" கதையில் ஒரு வாக்கியம் வருகிறது. 'குடும்பம் என்பது பாற்கடல் இந்த வாக்கியந்தான் கதையின் முதுகெலும்பு. உருவகத்தில்தான் பாற்கடல். உள்ளபடி உப்புக் கடல்தான்!
விடுமுறைக்கு விடுமறை அண்ணா குண்டாக வருவார். ஹோட்டல் சாப்பாடு அவருக்கு நன்றாக ஒத்துக்கொண்டிருந்தது. அது கன்னடச் சீமை, மாதவச் சமையல், நெய் கை வழிய, பிஸிபேளா ஹ"ளி அன்னா, மைசூர் ரஸா, எதிலும் பருப்பு சொதச் சொதா. காய்ந்த மாடு கம்பில் விழுந்த கதைதான்.
அண்ணாவின் ஹோட்டல் வாழ்க்கை பற்றி ஒரு துணுக்கோடு நிறுத்திக்கொள்கிறேன். பானை சோற்றுக்கு - இல்லை, பருப்புக்கு ஒரு பதம்.
போன புதிதில் ரஸத்தைத் தெளிவாக விட்டுக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தாராம். ரஸம் என்றால் தெளிவாய்த்தான் இருக்கும் என்கிற நினைப்புப் போலும். ஆனால் பரிமாறும்போது, தவறாமல் அலுக்காமல் Server, “தெளிவா? அடியா?” என்று கேட்பானாம். என்னடா தினமும் இப்படிக் கேட்கிறானே என்று ஒருநாள், "சரி கலக்கித்தான் விடேன்!” என்றாராம். தான் எதிர்பாராது கண்ட புது ருசியைத் தெரிவிக்கும் ரீதியில் அண்ணா எங்களுக்கு அவ்வப்போது விழித்துக் காட்டும் ஆச்சரியத்தையும், குரலில் சுருதி பேதத்தையும், எழுத்தில் கொணர இயலவில்லை.
"அன்றிலிருந்து முதலில் தெளிவு ரஸத்தில் ஒரு Course; அடுத்து கக்கலும் கரைசலுமாக வண்டல் ரஸத்தில் ஒரு Course அடிப்பேன்."
“ஸாக்கா? பேக்கா ?” கேள்விக்குக் கன்னடம் தெரியாத வெளியூர்க்காரன். 'ஸாக்குலே கொஞ்சம் பேக்குலே கொஞ்சம் விடுங்கோ’ என்றானாம். அது மாதிரி என்று அந்தக் கதையும் சொல்வார். நாங்கள் முழங்காலை இறுகக் கட்டிக்கொண்டு, குதூகலத்தில் குமுங்குவோம்; கொக்கரிப்போம்! எங்களுக்கு நா சுரக்கும்.
"சரி, அம்மாப்பெண்ணே ! பையன்கள் ரொம்ப ரஸிக்கிறான்கள். நாளைக்கு மைசூர் ரஸம் வைத்துவிட வேண்டியதுதான்."
மைசூர் ரஸம், கத்தரிக்காய் எண்ணெய் வதக்கல். கத்தரிக்காயை நாலாகப் பிளந்து உள்ளே மஸாலாப் பொடி அடைத்து, வாணலி எண்ணெயில் அப்படியே போட்டு, மேலே தட்டுப் போட்டு மூடி, உள்ளே அப்படியே அது குமுங்க வேண்டியதுதான்.
நமுட்டு விஷமத்தில்தான் விவரிக்கிறேன். இதைப் படித்துவிட்டுப் பிள்ளையாண்டான்மார்கள் படப் போகும் எரிச்சலில் நான் இப்பவே காணும் உவகை தான்.
"கதையில் கூடவா அப்பா சாப்பாட்டு விவகாரத்தைக் கொண்டு வரணும்? மானம் போகிறது. அது என்ன கத்தரிக்காய் எண்ணெய்க் கறியோ? அது மாறினால் உருளைக்கிழங்கு வதக்கல். பாங்க் மானேஜ ராக உத்தியோகம் பண்ணுண மனுஷனா இருக்கா பார்? என்னவோ சமையல்காரன்.” உஷார் ! உஷார் பசங்களா! நா காக்க ஜாதியைப் பற்றிப் பேசுவதோ தொழிலைப் பழிப்பதோ சட்ட விரோதம்.
இவர்கள் ஏன் இப்படிக் குமுறுகிறார்கள்? வகை யாகப் பணணிப் போட்டால் ஒரு வளை வளைப்பதில் குறைச்சல் இல்லை. தின்றால் குற்றம் இல்லை. தின்பதை எழுதினால்தான் குற்றமா?
என் ரஸனையைப் பற்றிக் கவிஞர் 'அபி சொல்வதைக் கேளுங்கள்.
"லா.ச.ரா.வின் இயற்கை வர்ணனைகளிலும், உணவு பற்றி அவர் எழுத்தில் வெளிப்படும் இலக்கியத்தரமான விவரங்களிலும், தனித்தனியாக பி.எச்.டி. பண்ணு வதற்கே விஷயங்கள் இருக்கின்றன."
உணவு பற்றி மேலை எழுத்தாகட்டும்; இதிகாச காலத்திலிருந்து நம் வரலாறு ஆகட்டும் - வேணது வழங்கியிருக்கிறது. அதற்கெதிரில் நான் எந்த மூலை? படித்தாலேதானே! படிக்காமலே தீர்ப்பு.
எந்த மேனாட்டுக் கதையையோ நாவலையோ எடுத்துக்கொள்ளுங்கள். ஒன்று குடி, அல்லது தீனி அல்லது இரண்டும். பக்கத்துக்குப் பக்கம் இடறி விழுந்தேயாகணும்.
Thomas Mannஇன் புகழ் பெற்ற Budden broks. முதல்அத்தியாயம், முப்பது பக்கங்களுக்கு மேல் ஜெர்மனியில் ஒர் உயர்தரக் குடும்பத்தின் சாப்பாட்டை வெகு சாவகாசமாக விவரிக்கின்றது. அதனாலேயே அந்த அத்தியாயம் தனிப் பிரசித்தி பெற்றது.
Hemingwayக்கு ஒரு பக்கத்தில் ஒரு பாராவுக்குள்ளே, ஒரு விஸ்கி & சோடா அல்லது தீனி காணாவிட்டால் மண்டை வெடித்துவிடும்.
Irving wallaceஇன் The Plot எனும் நாவல் திண்டு கனம். அதில் ஒரு பத்திரிகை நிருபன், சாப்பாட்டு ராமன். முக்கியமான பாத்திரம்; நாவலின் கடைசி அத்தியாயம் வரை வருகிறான். அடேயப்பா! அவன் தின்கிற தீனியும், பருகுகிற குடி வகைகளும், நமக்குப் புரியாவிட்டாலும் ஆச்சரியத்தைத் தருகின்றன. கணக்கெடுத்தால், புத்தகத்தில் கால்பங்கு இந்த விவரத்துக்கே தேறும். புத்தகமும் சுவாரசியமானது.
மேல்நாட்டுக் கற்பனை இலக்கியத்தில் மாற்றி மாற்றி டான்ஸ், நாடகம், Opera, இடையிடையே விருந்து, சிறு தீனி, ஐஸ்கிரீம், சாக்லெட், முந்திரி, காப்பிஇதுபோல இந்தத் திண்டியும் தீனியுமே கதையின் சம்பவக்கோவைக்கு இன்றியமையாத காரைப் பூச்சாக அமைகின்றன.
வெகு சமீபத்தில் –
அகதா கிறிஸ்தியின் மர்மச் சிறுகதைகள் இரண்டு படித்தேன். தலைப்புகள் என்ன தெரியுமா? "A drink of Chocolate A Box of Chocolate தனித்தனி, வேறுபட்ட கதைகள். ஆனால் தலைப்பின் அடிப்படையில்தான் விஷயம்.
Charles Dickens-ன் அமர நாவல் Tale of Two Cities கதாநாயகன் Sydney Carton தன் வாழ்க்கை வியர்த்தமாகப் போனதைக் கண்ணாடிக் கோப்பையிலிருந்து பூமியில் மதுவைச் சிந்திச் சின்னமாக உணர்த்துகிறான்.
Victor Hugoவின் இதிகாச காவியம் Les Miserable கதாநாயகன் Jean Val jean இழைத்த குற்றமே, பட்டினி கிடக்கும் தன் சகோதரியின் குழந்தைகளுக்காகத் திருடிய ரொட்டியில் நேர்ந்து, அதற்காக அவன் சிறை சென்று அனுபவித்த துன்பங்களுக்கும் அந்தக் காவியத்துக்கே அஸ்திவாரமாகவும் அமைகிறது.
ஒரு கோடிதான் காட்டியிருக்கிறேன். என்னால் இன்னும் சொல்லிக்கொண்டே போக முடியும். Oliver Twist, Little woman, Hunger (By Kunt Hamsun) இல்லை. நிறுத்திக்கொள்கிறேன். வெறும் பெயர்களை உதிர்த்து, நான் படித்திருக்கிறேன் என்று காட்டுவது ரஸமட்டம்.
நம் நாகரிகத்துக்கும், நம்பிக்கைகளுக்கும் வரு வோமா? கர்நாடகம், ஆந்திரா, தமிழ்நாடு, பஞ்சாபி, மராத்தி, குஜராத்தி, வங்காளம், மலையாளம்- எத்தனை விதச் சமையல்கள், தின்பண்டங்கள் - இத்தனை பிரதேசப் பக்குவங்களையும் ருசி தெரிந்தவன் ஒருவனே னும் நம்மில் உளனா? எனக்குச் சந்தேகந்தான். இத்த னைக்கும் நான் சைவ உணவு வரைக்கும்தான் சொல் கிறேன். மற்றது பற்றித்தான் எனக்குத் தெரியாதே! பழக்கப்பட்ட தமிழ்நாடு வரைக்குமே எடுத்துக்கொள் வோம். பதார்த்தங்களைத் தயாரிக்கும் வகைகளில், மாயவரத்துக்கும் தஞ்சாவூருக்குமே வேறுபாடு. தஞ்சாவூர் சமையலுக்கும் திருச்சினாப்பள்ளிக்கும் வித்தி யாஸம்; திருச்சிக்கும் திருநெல்வேலிக்கும் வித்தியாஸம்; சரி சரி இந்த அத்தியாயம் வெறும் சமையல் குறிப் பாகவே ஆகிவிடப் போகிறது என்று எனக்கே அச்சம் வந்துவிட்டது.
நம் மரபை இதிகாச காலத்திலிருந்து எடுத்துக் கொண்டோமானால், விருந்தோம்பல்தான் சமுதாய வாழ்க்கையின் அடிப்படைத் தத்துவமே. சமாராதனை கள், வன போஜனங்கள், வைக்கத்தவுடமி, ஊட்டுப் பிறை - சுருங்கச் சொல்லின் மீனாட்சி அம்மன் கல்யா ணத்தில் மீனாட்சி அம்மனின் 64 கேள்வி. அதற்குப் பதிலென ஆண்டவன் திறந்துவிட்ட குண்டோதரப் பசியைத் தொட்டு, சிறுத்தொண்டனின் பிள்ளைக் கறி வழி அன்னம் அஹஞ்ச ப்ரம்மா’ என்கிற ஸுஜூத்திரத் தில் கொண்டுபோய் விடுவதற்குள் இந்தப் பக்கங்கள் என்ன, பிரபஞ்சத்தையே ஏடாகப் புரட்டினும் போதா.
ஒரு கிழவி, கூழுக்குப் பாடியே தமிழை வளர்த்தாள்.
நம் பண்டைய வைத்தியப் புத்தகங்களில் தினப் படிக்கே ஆரோக்கிய வளர்ச்சியை முன்னிட்டு விதித் திருக்கும் உணவு விமரிசை, இந்நாளில் கட்டுப்படி யாகாது. நம்மால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. உதாரணம்; பாலைக் கறந்த அரை மணி நேரத்துக்குள் காய்ச்சிச் சாப்பிட்டாக வேணும். காய்கறிகளைச் செடி யினின்று பறித்த ஒரு மணி நேரத்துக்குள் சமைத்தாக வேண்டும். இல்லாவிடில் பலன் இல்லை. பைப்பாலை யும் புட்டிப்பாலையும் குடித்துக்கொண்டு, கொத்தவால் சாவடியில் மூட்டையில் குமுங்கிக் கீழே கொட்டிய கோஸையும் வெங்காயத்தையும் தின்றுகொண்டிருப் பவர்களுக்குச் சாத்தியமா? விட்டுத்தள்ளு.
இதுமாதிரி ஒரு பாரா. ஏழையின் வாழ்க்கையைச் சித்திரிப்பதாக எண்ணம்:
"ரிக்ஷாக்கார முனிசாமி - (கதையில் ஏன் ரிக்ஷாக் காரன் எபபவுமே முனிசாமியாக இருக்கிறானோ தெரியவில்லை) ஸ்ரீட்டின்மேல் சாய்ந்தபடி, ரிக்ஷாத் தட்டில் அமர்ந்து இடதுகையில் தோசை, அதன்மேல் வைத்த கறியோடு விண்டு விண்டு வாயில் போட்டுக் கொண்டிருக்க, அவன் ஆசைக்கிழத்தி - (பகவானே, எனக்காக அவளே முனிசாமியின் மனைவியாகவும் இருக்கட்டும்) அருகில் நின்றபடி தகரக் குவளையை வீசி வீசி ஆட்டியபடி உள்ளிருக்கும் கஞ்சியை ஆற்றிக்கொண்டிருந்தாள். குவளையிலிருந்து ஆவி பறந்தது."
இதைப் படிக்கையில்: "ஆகா, என்ன தத்ரூபமான சித்திரம் என்ன realism என்ன பிரதிபலிப்பு!”
கையால் இழுக்கும் ரிக்ஷா இந்நாளில் கண்ணில் படுவது அரிது. இந்நாளில் குப்பம்மா அப்படி ஆற்றிக் கொடுத்த கஞ்சியை முனிசாமி குடிக்கிறானா என்பதே சந்தேகம் - இது என் முணுமுணுப்பு.
எழுதினவரைக் குற்றம் கண்டுபிடிப்பதற்காகச் சொல்லவில்லை. ஆனால் ஒரு சின்னக் கேள்வி: குப்பம்மாள் அவ்வளவு ஸ்டைலாக ஆற்றிய கஞ்சியில் ஒரு முழுங்கேனும் பரீக்ஷார்த்தமாகவேனும் நம்மால் குடிக்க முடியுமா ?
"எழுதினால் குடித்தாகணுமா ? இதென்ன நியாயம் ?”
அப்போது எண்ணெய்க் கத்திரிக்காய் சாப்பிட்ட தைத்தானே எழுதுகிறேன்! குடிக்காத கஞ்சியைப் பற்றி எழுதினால் விசேஷம். அனுபவித்த பதார்த்தத்தைப் பற்றி எழுதுவது குற்றம். தரக்குறைவு. வாதம் அப்படிப் போகிறது அல்லவா?
கூடவே சமர்ப்பித்துக் கொள்கிறேன். சாப்பாட்டு விஷயத்தில் மேற்கோள் காட்டிக் கட்சி ஜயிப்பதற்கு ஒன்றுமில்லை. உண்மையில் இதில் வியாஜ்யமே ஏது? சிருஷ்டியின் இயக்கமே அதுதான். அவ்வளவுதான்; பிறந்து, உண்டு, அழிவது. இடையில் நடப்பது, நிகழ்வது அத்தனையும், அடிப்படையில், வித விதமான பெயர்களில் பொழுதின் விதவிதமான வியாபகம்.
விதவிதமான விஸ்தரிப்பு - ருசிகள் தனித்தனி, அவ்வளவுதான்.
நன்றாக உழை
நன்றாக உண்
நன்றாக உறங்கு
காய்ந்த வயிற்றில் எந்தக் கலையும் வளராது. அதுவும் இலையும் காயும் போல்தான்.
ஆனால் முட்டிய வயிறும் அதற்கு உதவாது. நீர்ப்பாய்ச்சல் அதிகமானால் செடி அழுகிவிடுவது போல். ஆகவே –
கூடவே பசித்திரு.
உடல் ஆரோக்கியத்துக்கு மட்டும் இல்லை - எந்தக் கலைக்கும் இந்தச் சூத்திரம் பொருந்தும். பசி மிகவும் ஆரோக்கியமான உணர்ச்சி, உடல் பசியை மட்டும் நான் குறிக்கவில்லை.
எதையும் பழிக்காமல்
எதிலும் நேர்த்தி
ஆனந்தத்தின் தூய்மை இதுதான்.
என்னைப் பொறுத்தவரை என் ருசிகள் உணக்கைதான். 'சீலம்' என்று சமயத்துக்கு, வீட்டுப் பெண்களின் அவ்வப்போதைய மனநிலைக்கேற்றவாறு, செல்ல மாகவும், எரிச்சலிலும் சொல்வார்கள். வீட்டில் மட்டும் இல்லை. என் நாக்கை வளர்த்ததில் என் ரஸிகர் குழாத் துக்கும் (அவ்வட்டம் எவ்வளவு சிறியதாயிருப்பினும்) பெரும் பங்கு உண்டு. டில்லியிலிருந்து கன்யாகுமரி வரை அவர்களுடைய கரை கடந்த உபசரிப்புக்கும் திணிப்புக்கும் ஆளாகிப் புனிதனாகி இருக்கிறேன்.
குருக்கள் வீட்டில், அன்பிலேயே குழைத்து, மோர் கூட இலாது, வெறும் நீரும் சோறும் பிசைந்து, கையிலோ, தாமரை இலையிலோ, இட்ட பழைய திலிருந்து, உத்தியோக ரீதியில் - தனியாக எனக்கு எப்படிக் கட்டுப்படியாகும்? - Hotal Asoka வில் A.C. அறையில், ரொட்டித் துண்டுகள் மிதக்கும் ஸூப்பில் தொடங்கி எண்ணி இருபத்துநான்கு தினுசுகள் வழி, கடைசியாக, சைனா மண் கிண்ணத்தில் பதமான வெந்நீரில் விரல் நுனிகளை நனைத்துக்கொண்டு எழுந்ததும், ஒரு முழுங்கு மட்டுமே கொள்ளும் சின்னஞ் சிறு கோப்பையில் காபியில் முடிந்து - (அப்புறமும் ஏதோ ஒரு தினுசில் திருப்தியில்லாத) Dinner வரை சாப்பிட்டிருக்கிறேன்.
ஆனால் இந்தத் தகவலில் பெருமையும் இல்லை. இது தகவலும் இல்லை. நான் வெறும் உண்டி வளர்ப்பான் என்கிற எண்ணத்துக்கே, இந்த விவரங்கள் இடம் தர ஏதுவாக இருக்கின்றன. அதனாலேயே இதில் Vulgarity தட்டுகிறதோ என்றுகூட பயமாயிருக்கிறது. ஆனால் என் நினைப்பு அது அல்ல. இந்தத் தப்புக்கு உடனே பிராயச்சித்தம் தேடுவதும் அவசியமாகி விட்டது.
1967-இல் அதிகாரிகள் ஏதோ ஒரு பயிற்சி பெற (Training) டில்லிக்கு அனுப்பினார்கள். மொத்தம் ஆறு வாரப் பயிற்சி. அதுவரை எனக்கு அவ்வளவு நீண்ட பயணம் நேர்ந்ததில்லை. கேட்கப்புகின், குறுகிய பயணங் களுக்குக் கூட அகக் கண்ணில் மங்க ஆரம்பித்து விட்டதோ என்னவோ? அவளே பொழுதில் பாதிக்கு மேல். நினைவில் அதற்கும் மேல். இருளில்தானே இழைந்து கிடக்கிறாள்! இந்த நிலைக்கு அணை கோலியே, என் பாட்டனார், அவருடைய கவித்து வத்தில் ஒரிடத்தில் அவளைத் தோத்தரிக்கிறார்.
“பேணேம் ஆனாலும், முதிர் அன்பால்
வம்சமுறையே எதிரும் கருணாநிதியே”
(உன்னை நாங்கள் வழிபடாவிட்டாலும், உன் னுடைய முதிர்ந்த அன்பில் வம்சவழியில் எங்களுக்குத் துணை நிற்கும் (அல்லது தோன்றிக் கொண்டிருக்கும்) கருணாநிதியே!)
(பெருந்திருப் பாட்டி! நாங்கள் பேரன்மார்கள், சிறிசுகள். இப்படித்தான் இருப்போம். நாங்கள் மறந் தாலும், நீ எங்களை மறக்காதே என்பதுதான் தாத் பரியம். இதில் வேடிக்கை, அவளும் அப்பத்தான்!)
டெல்லிக்குப் புறப்படுகையில் எனக்கு வயது ஐம்பது தாண்டிவிட்டது. டெல்லி சேர்ந்ததும் கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட மாதிரியிருந்தது. கலம் அழுக்கு ஏறியிருந்தாலும் Pant-இலோ, பைஜாமாவிலோ படுத் துறங்கும் வடநாட்டாருக்கு வேட்டியைக் கண்டால் எளப்பம். இல்லை - நான் போன சமயம் அப்படி 'ஸாதி வாலா’ என்று கேலி பண்ணுவார்கள். பாஷை தெரியாது. ஆங்கிலம் தெரிந்தவன்கூட வீம்புக்குத் தன் பாஷைதான் பேசவான். அவர்களுடைய தேசப்பற்று சில விஷயங்களில் அப்படி, வகுப்பின் சூழ்நிலையி லேயே ஆதரவு இல்லை. உள்பகையும் அவநம்பிக்கையும் தான் உணர முடிந்தது. முதல் தினத்திலிருந்தே, சென்னை திரும்ப இன்னும் எத்தனை நாள் என்று குழந்தை மாதிரி எண்ண ஆரம்பித்தவிட்டேன்.
ஆனால் நல்ல வேளை; இந்நிலையினின்று மீட்சிக்கு விடிவும் கண்டது. கடைசிவரை துணையும் இருந்தது. இச்சமயம் பத்திரிகைகளில் அடிபட்டுக் கொண்டிருந்த என் பெயர் டில்லி தமிழ் மக்களின் கண்ணிலும் ஏற்கெனவே பட்டுக்கொண்டிருந்ததன் விளைவாக, நான் வந்திருக்கும் மோப்பம், என் அதிர்ஷ்டவசமாகக் கண்டு என்னை அனைத்துக்கொண்டார்கள். நான் எழுத்தாளன் என்கிற முறையைக் காட்டிலும், அவர் களுக்கும் ஏதோ ஒர் ஏக்கம் இருந்திருக்க வேண்டும்.
தமிழ்நாட்டிலிருந்து ஒரு புதுமுகத்தைப் பார்த்ததும் சொந்த மனுசாளைக் கண்டமாதிரி இருந்ததோ என்னவோ? எப்படியிருந்தால் என்ன? எனக்கு மீட்சி.
என்னோடு சென்னையிலிருந்தும், மதுரையிலிருந் தும், கோயமுத்தூரிலிருந்தும் வந்திருந்த சகாக்கள் பிரதி தினமும் அதே சுக்கா சப்பாத்தி, அதே ஆலு, அதே சாயாவில் ஆறு வார தண்டனையை அனுபவித்து நாக்கு செத்துப்போய்க் கொண்டிருக்கையில், நான் கரோல் பாக், லோடி நகர், சாணக்கியபுரி, ராம கிருஷ்ணாபுரம் என்று ஆங்காங்கே விருந்தினனாக எழுந்தருளி, வத்தல் குழம்பு, சுட்ட அப்பளம், மோர்க் குழம்பு, தேங்காய்த் துவையல், சாம்பார், இட்டிலி, தோசை, மிளகாய்ப்பொடி, அடையென்று திளைத்துக் கொண்டிருந்தேன். மிளகு ரஸம், பருப்புப்பொடி, கருவடாம், மணத்தக்காளி வத்தல். என்ன இருந்தாலும் உள்ளூரச் சென்னை அரித்துக் கொண்டிருந்தது.
ஸரோஜினி நகரில் ரிசர்வ் பாங்க் ஆபிஸர் ஒருவர் சாப்பிட அழைத்திருந்தார்.
இலையில் எல்லாம் பரிமாறியாகிவிட்டது. சாதம் ஒன்றுதான் பாக்கி. மாமி திடீரென மாயமாகிவிட்டாள். அவர் பொங்கி வழிகிறார். "எனக்கு அவசரமே இல்லை!" என்று அவரை நான் சமாதானப்படுத்திக் கொண்டிருக்கையில் இலை மேல் ஈ ஒட்டக் கையை ஆட்டும் நிலை நெருங்கிக் கொண்டிருக்கையில்.
"எங்கே போய்த் தொலைந்தாய்?" அவர் எரிந்து விழுந்தார்.
மாமி கையோடு தான் கொணர்ந்திருந்த சின்னக் கிண்ணியிலிருந்து என் இலையில் மட்டும் ஒரமாய் எதையோ பரிமாறினாள். ஊறுகாய்.
"பண்டங்கள் எல்லாம் ஆறிப்போகிறது, ஊறு காய்க்கு என்ன அவசரம்? எங்கே தொலைஞ்சே?”
"அப்படியில்லே, நாலு ப்ளாக் தாண்டி, ஒரு மாஸ்மா திருச்சினாப்பள்ளிக்காரர் குடித்தனம் வந்திருக்கா. இன்னிக்குச் சாயந்திரம் இவரைப் பார்க்க வராராம். இவருக்காகச் சீமை ஊறுகாய் மெனக்கெட்டு அவாளிடம் கேட்டு வாங்கி வந்தேன். இவர் ஒரு கதையில் எழுதியிருக்கார்; கசப்பு நார்த்தங்காய் கல்லையே ஜீரணம் பண்ணிவிடுமாம்; ஆனால் தன்னை ஜீரணம் பண்ணிக்கத் தெரியாதாம்! அது நெணைப்பு வந்தது."
இலைமேல் என் முகம் குனிந்துவிட்டது. இரண்டு சொட்டுக்கள் சர்க்கரைப் பொங்கல்மேல் விழுந்ததை மாமா, மாமி, குழந்தைகள் எல்லோருமே பார்த்து விட்டார்கள். நான் என்ன செய்ய முடியும்? என்ன செய்யனும்? கண்ணிரில் புனித நீராடினேன்.
பெண்ணினத்துக்கே உரித்தான தாய்மையின் பரிவில் 2000 மைல்களை ஒரு கணத்தில் கடக்க வைத்துச் சென்னையில் அசோக் நகர், பெருமாள் கோயில் தெரு 21-Cயில் என் குடும்பத்துடன் என்னைச் சேர்ப்பித்த இந்த அம்மாளின் மந்திரக்கோலை என்ன என்பேன் ? இதுபோல் என் எழுத்துமூலம், நான் கண்டும் காணாமலும் தாய்மார்கள் எத்தனைபேர் ஆங்காங்கே சிதறியிருக்கிறார்களோ ? தனித்தனியாக என் நன்றியை அவர்களிடம் எவ்வாறு தெரிவித்துக் கொள்வேன்? அனைவருக்கும் என் நமஸ்காரத்தைத் தான் சொல்லிக்கொள்ள முடியும்.
தருணம் நேர்ந்துவிடுகிறது. அந்தச் சமயத்தின் பரவசத்துடன் அதன் பாதிப்பு நிற்கவில்லை. சிந்தனை யில் ஊறி, மோனத்தில் உருவேறி, வேளை வரும்போது மோனத்தின் வாக்காக எழுத்தில் வெளிப்படுகையில் கூடவே அதன் பரிவாரமென…
நெஞ்சில் அமைதி தவழ்விக்கும் கண்ணுக்குக் காணா வெண்புறாக்களும்,
நெஞ்சில் ரஹஸ்யப் பாளம் எதையோ கீறிக் கவிதை சொரிய வைக்கும் கண்ணுக்குத் தெரியா க்ரவுஞ்சங் களும் விடுபடுகின்றன. உள்ளே சுற்றிச் சுற்றி வட்ட மிடுகின்றன.
பாற்கடலைக் கடைகையில் தோன்றிய குமிழிகள் தாம் இவையென்றாலும் உள்ளே அமுதத் துளிகள் தங்கி யிருப்பதால் இந்தக் குமிழிகளும் அமரத்துவம் அடைந்து விட்டன. உன் வாழ்க்கையின் இருள் நேரங்களுக்கு இந்தக் குமிழிகள்தாம் வெளிச்சங்கள் என்று ஏதோ தைரியம் சொல்கிறது. ஆறுதல் அடைகிறோம்.
இந்த இடைமறிப்பு இப்போதைக்கு இத்துடன் நிற்கட்டும். அம்ருத மந்தனத்தில் இதுபோன்ற தோற்று வாய்கள் இன்னும் எத்தனை எத்தனையோ!
"இதோ பார் அம்மாப்பெண்ணே, தனிக்குடித்தனம் போறே! நீங்கள் இரண்டுபேரும் சிறிசுகள். உங்களுக்கு அவசரமேயில்லை. சட்டுச் சட்டுன்னு குழந்தைகளைப் பெத்துண்டு உடம்புதான் கெட்டுப்போகும். இங்கேயே இதுக்குள்ளேயே உனக்கு ரெண்டு குறைப்பிரசவ மாயிடுத்து. இங்கெல்லாம் சொல்றா. ஹோட்டல்லே சாதம் மல்லிப்பூவா, பார்வையாயிருக்கணும்னு, வடிக்கிறபோது சுண்ணாம்பைக் கலக்கறானாம்….”
அப்பா ! ஹோட்டல் காரனை வாழ்த்தணும். அம்மாப்பெண்ணுக்கு அவனாலேதான் விடியப் போறது!
"சோனா சுருக்கப்போய்ச் சேர்ந்தாளோ, ஹாலாஸ் யம் உடம்பு பிழைச்சுது. ஏற்கெனவே மூல உபத்ரவக் காரன்."
ஒஹோ ப்ளேட்டு இப்போ அப்பிடி வாசிக்கிறதா?
-"புருஷாளுக்கு அவா உடம்பைப் பற்றி நினைப்பே இருக்காது. உழைக்கிற கட்டை நீயாத்தான் பார்த்து வாரத்துக்கு ஒரு முறையேனும் எண்ணெய் தேச்சுக்கிறா னான்னு பார்த்துக்கணும்."
சபாஷ் மன்னி! பெண்ணை அனுப்பும்போது, ஹாலாஸ்யத்தைப் பேச்சுக்குக்கூட எண்ணெய்க் குளியலில் சேர்க்காமல் அம்போவில் விட்டுவிட்டு, "சோனா! வாரம் தவறாமல் ரெண்டு முறை எண்ணெய் தேச்சுக்கோ! செளக்கியம் சேர்த்துக்கோ !”
இப்போ இப்படியாக்கும்!
திண்ணையில் இதே சமயத்தில் வேறுமாதிரி உபதேசம் நடக்கிறது.
"சுந்தரம் சுப்ரமணியனோடே கார்த்திகேயனையும் அனுப்பறேன். அங்கே ஒருத்தருக்கொருத்தர் துணையாக ஒழுங்காகப் படிக்கட்டும்."
"என்னப்பா நீங்கள் சொல்லணுமா? கண்டிப்பாகக் கார்த்திகேயனை கவனிச்சுக்கிறேன்."
"சம்பளம் வந்ததும் முதல் நினைப்பு உனக்கு லால் குடியாத்தான் இருக்கணும். மணியார்டர் பண்ணிட்டு அப்புறம் மற்றதை கவனி. இந்த மாசக் கடைசியில், உன் தாத்தாவுக்குத் திவசம் வரது அரிசிக்காரி யோகாம் பாளுக்குப் போன மாஸமே பாக்கி நின்னுபோச்சு."
‘லக்ஷ்மி ஆசைநாயகிக்கு மாதம் தவறாமல் செலுத்தற கப்பத்தில் increment கேட்கிறாளா? சப்தரிஷி சம்பாதிக்க ஆரம்பிச்சா அவளுக்குத்தானே முதல் பங்கு!’ என்று நினைத்துக்கொள்வேன். வாய்விட்டுச் சொல்ல முடியுமா என்று அண்ணா எங்களிடம் சொல்வார்.
ஆகவே, இந்த வரலாற்றில் தன் முதல் வெற்றிப் பிரவேசத்தில், தன் இல்லத்தரசியாக, அம்மாப்பெண் பெங்களூருக்கு வருகிறாள். கூடவே தம்பிமாரும் குட்டி மைத்துனனும், அனுமார் அண்டையிலே காவல், பரதன் பக்கத்திலே காவல், சத்ருக்னன் வாசலில் காவல்.
-சே, நான்தான் சமயம் கிடைத்ததென்று வேடிக்கை பண்ணுகிறேன். அம்மா, அண்ணா இருவருமே இது விஷயத்தில் ஒருமித்துத்தான் சொல்கிறார்கள்.
"தனியாயிருக்க வேணும், தேனிலவு அநுபவிக்க வேணும் என்கிற எண்ணம் எங்களுக்குக் கனவில்கூடக் கிடையாது. எல்லோருடனும் சேர்ந்து இருந்துவிட்டுத் தனியாக இருந்தால் எங்களுக்கே பாந்தமாயிருக்காது. அத்தங்கா - அம்மாஞ்சி கலியாணம் பண்ணிண்டு அதுவும் சிறுவயதிலிருந்தே சேர்ந்து வளர்ந்துவிட்டு அதிலே என்ன தேனிலவு கிடைக்கும்? ஐரோப்பியர்கள் கொண்டாடுவான்னு, நான் கேட்டதை, படிச்சதை, உங்களிடம் சொல்கிறேன். அதனுடைய நிலவரம் என்ன வென்று ஸ்திரமா எங்களுக்கு ஒண்ணும் தெரியாது.”
"பெங்களூரில் பத்து வருஷம் வாழ்ந்தோமே, எங்கள் பூரண சந்தோஷ நாட்களும் அங்கேதான். எங்கள் வாழ்க்கையின் பேரிடிகள் விழத் தொடங்கின இடமும் அதுதான்!” என்று அம்மா சொல்லியிருக்கிறாள்.
சந்தோஷம் என்றால் சினிமா, டிராமா, கூத்து அல்ல. 'டாக்கி வர இன்னும் எத்தனையோ வருடங்கள் இருந்தன. திரையில் உருவங்கள் வெறும் வாயை மென்றுகொண்டிருக்கையில் வசனங்கள் திரையில் பூத்து மறையும். அதுவும் எப்பவோ ஆடிக்கொரு தடவை. அமாவாசையைச் சேர்த்துக்கொள்ளக்கூடாது. அமாவாசை மாதம் ஒரு முறை வருகிறது. தவிர அண்ணாவுக்கு அப்பா இருக்கிறாரே!
காலையில் ஸ்நானம், சமையல், ஸ்தோத்திரம் எல்லாம் முடிச்சுண்டு, பள்ளிக்கூடத்துக்கு, வேலைக் கனுப்பறவாளை அனுப்பிவிட்டு, நானும் சாப்பிட்டு - மத்தியானம் பக்கத்துக் கட்டில் ஒரு மாமி மணி கோக்கச் சொல்லிக் கொடுப்பாள். மணிகள் (beads) - கண்ணாடிக் குழல்கள் வகுப்பே நடத்தினாள்; பத்துப் பன்னிரண்டு மாமிகள் ஒண்ணு சேருவோம். மணிக்கார மாமி கட்டுலே நுழையறபோதே அவள் அங்கங்கே, கூடத்தில் அறையில் மணியும் குழலும் தைத்தும் கோத்தும் தொங்கவிட்டிருக்கும் திரைகளைத் தள்ளிக் கொண்டு தான் நுழையணும். "கிளு கிளு குலு குலு, வேடிக்கையா இருக்கும்.
சிலர் மத்தியான வேளைக்கு டிபன் டப்பாவில் சாதமோ, முறுக்கு, சீடை, தேங்குழல் இதுமாதிரி கொண்டு வந்திருப்பா. எல்லாரும் பங்கிட்டுக் கொள் வோம். வாத்தியார் மாமி ஒண்ணுகூடத் தன்னுதுன்னு தெறிக்கமாட்டாள். கெட்டிக்காரி. தவிர எப்படிக் கட்டுப்படியாகும்? நானும் அத்தி பூத்த மாதிரி என்னிக் கானும் பண்ணுவேன். பஜ்ஜி, பக்கோடா. பயந்தான். எண்ணெய்ச் சட்டி இந்த ரேட்டுக்கு வெச்சுதுன்னா ஊருக்கு அனுப்பறதிலே துண்டு விழுமே, அவாளுக்குக் கணக்குச் சொல்லணுமே!
அலுப்புத் தட்டாமல் இருக்க, முறை போட்டுண்டு ஒரு மாமி, ராமாயணம், பக்தவிஜயம்னு ஏதேனும் புண்ணிய கதை உரக்கப் படிப்பா, அவளுக்கு நான் ஒரு தம்ளர் காபி கொண்டு வந்து கொடுப்பேன். எங்களுக்கே பெங்களூர் வந்துதான் கிலுப்தமா காபிப் பழக்கமாச்சு. சந்தோஷமா பேசிண்டும் சிரிச்சுண்டும் வகுப்பு நடக்கும். நான் கத்துண்டேனே ஒழிய, நம் வீட்டில் திரை வைத்துத் தொங்கவிடத் துணியேது? புதுசா வாங்க வேண்டாமா?
அண்ணா சாயந்திரம் பள்ளிக்கூடத்திலேருந்து வந்து காபி சாப்பிட்டுவிட்டு உடனே ட்யூஷனுக்குக் கிளம்பிவிடுவார். இரவு எட்டு, ஒன்பதுக்குத்தான் திரும்புவார்.
காலையிலேயே கூடத்தில் மூணு நாலு ட்யூஷன் நடக்கும்.
ஞாயிற்றுக்கிழமை, விடுமுறை நாட்களில், மாலை வேளைகளில் லால்பாக் மைதானத்தில் மிலிட்டரி பாரேட் - இல்லாட்டா மிலிட்டரி band - ரொம்ப நன்னாயிருக்கும் ஆத்துக்குத் திரும்பி வந்ததும் மோருஞ் சாதத்தைச் சாப்பிட்டுவிட்டுப் படுத்தால், அவ்வளவு தான்.
எங்கேயாவது கதா காலகேஷபம் இருந்தால் போவோம். சங்கீத உபன்யாசத்துக்கு அப்போ ஒரு தனி மவுசு. ஸரஸ்வதிபாயை அப்போ கேட்டிருக்கேன். அப்பத்தான் தைரியமா மேடை ஏறின புதுசு. அவா ஜாதிக் கட்டுக் கட்டிண்டு, மூக்கில் புல்லாக்கு - மங்கள கரமாக இருப்பாள். அந்த திரெளபதி சபையில், தனக்கு நியாயம் கேட்கிற இடத்தைப் பாட்டும் வசனமுமா அள்ளி வீசி. ரொம்ப நன்னாயிருக்கும். அடேயப்பா! கண்ணில் திரெளபதியே வந்துவிடுவாள்.
அம்மா இந்த அளவுக்கு ஒரு விஷயத்தை வாய் விட்டுப் புகழறாள்னா, வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி.
அம்மாவுக்குக் கொட்டி அளக்கற சுபாவம் கிடையாது. எடை போடுவதோடு சரி.
காய்கறிகள் இங்கே கொஞ்சம் தைரியமா நடமாடும். கோஸ், உருளை.
அம்மா குடும்பத்தின் சந்தோஷங்கள் இவை.
நாளைக்குச் சோறு வடியல் எப்படி?’ என்கிற கவலை விட்ட நாட்கள். "சந்தோஷம் என்று தனியா என்னடா இருக்கு? மனம் நிறைஞ்சுவிட்டால் அதை விட என்ன வேணும்? யாருக்கேனும் அப்படியிருக்கோ நெஞ்சைத் தொட்டு, அவாள் வாதங்களையே கேட்டுக்க வேண்டியதுதான். அல்ப விஷயம் சொல்ப விஷயத்தில்
மனம் நிரம்பி வழியறதே, இன்றைக்கு இது கிடைச்சதே இதுவே திருப்தி; இதுதான் சந்தோஷம். சந்தோஷத்தில் மனச்சாகூSக்குப் பங்கு உண்டு."
லால்குடிக்கு அப்புறம் இங்கேயும் எனக்கு முன்னால் இரண்டு சிசுக்கள் நிறையும் குறையுமாகக் காலாவதி ஆகிவிட்டன. பெரியவர்கள் சொற்படி அம்மாவும் அண்ணாவும் ராமேஸ்வரம் போய்வந் தார்கள். வீட்டில் திலோமம் நடந்தது. அம்மா கடும் விரதங்கள் இருந்தாள்.
பிறகு –
நள வருடம் ஐப்பசி மீ 14 வக்குச் சரியான 30-10-1916 அன்று காலை 9-15 மணிக்கு பெங்களூரில் அடியேன் ஜனனமானேன்.
ஆகவே வரலாற்றுக்குள் ஒருவழியாக - உருப்படி யாக சரித்திர ரீதியாக நுழைந்துவிட்டேன். ஆனால் பிறக்கும்போது நான் உருப்படியாகப் பிறக்கவில்லை. அங்கஹரீனம் இல்லை. வாஸ்தவந்தான். ஆனால் உடம்பு பூரா நீலம் பாரித்துக் கட்டையாக விழுந்தேனாம். பிறகு டாக்டரோ, மருத்துவச்சியோ - எனக்குத் தெரியாது - குழந்தையைத் தலைகீழாகப் பிடித்துச் சப்பையில் இரண்டு அறை அறைந்த பிறகுதான் அழுகை புறப் பட்டதாம். அதுவும் திருப்தியாக இல்லை. பூனைக்குட்டி போல் ஏதோ முனகல், தவம் கிடந்து பெற்ற குழந் தைக்குச் சீட்டு உறுதியாகவில்லை. யார் சொல்லியோ, கழுதைப்பாலை ஒரு பாலாடை புகட்டிய பிறகுதான்கழுதைப்பால் - நெருப்பு. - உடல் நீலம் மறையத் தொடங்கி நானும் ஜன்னியிலிருந்து மீட்கப்பட்டேன்.
நான் நினைவு வயதை அடைந்தபிறகு எனக்கு அழுகை வருமளவுக்குக் குழந்தைகளும் பெரியவர்களும் அம்மா கூடச் சில சமயங்களில் சேர்ந்துகொண்டு –
அழுதழுஞ்சி சிரிச்சுதாம்
கழுதைப் பாலைக் குடிச்சுதாம்
என்று பாடிக்கொண்டு, என்னைச் சுற்றிக் கும்மி அடிப்பார்கள்.
என் பெயரில் நான் ராமேசுவர ப்ரஸாதம் என்பதற்கு அடையாளமாக
- ராம நாமம்
- என் தாத்தாவின் பெயர் (ராமசுவாமி) முன் பகுதி
- இந்தக் குடும்ப ஸ்தாபகர் பெயர் (அமிர்தமய்யர்) மூன்றும் சேர்ந்து கொடி கட்டிப் பறக்கின்றன.
என் ஆண்டு நிறைவுக்கு இருநூறு பேருக்குச் சாப்பா டாம், கூடம் கொள்ள-வில்லையாம், நாலு பந்தியாம். குடும்பச் சந்தோஷங்கள் இப்படி
கொழ கொழ கன்னே -
அத்தனையும் பால் சதை. கொழ கொழவா? தோசை மாவு பொங்கி வழிந்த மாதிரி தகதகக்கும் சிவப்பு. (சொல்லாமல் இருக்க முடியாது) கன்னச் சதையில் புதைந்துபோன பொத்தான் விழிகள், மஞ்சள் நிற விழிகள் - சொப்பு வாய்க்கடியில் மூன்று மோவாய்கள், நெற்றியில் அடையாக வழியும் மயிர்.
"Ah what a darling child!"
மைதானத்தில் நின்றபடி paradeயோ பார்க்கில் bandடயோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கையில் அங்கு வந்திருக்கும் ஐரோப்பியக் குடும்பங்களில் யாரேனும் ஒரு ஸ்திரீ, அம்மா இடுப்பிலிருந்து அம்மாவைக் கேட்காமலே குழந்தையை வாரிக்கொண் டதும், அம்மாவுக்கு ஒரே வெட்கமாகப் போய்விடுமாம்! அங்கிருந்து குழந்தை அவர்கள் கோஷ்டியில், ஆண் பெண் அடங்கலாகக் கைமாறிக்கொண்டே போய், அவர்களுடைய கொஞ்சலிலிருந்து ஒருவாறு மீண்டு அம்மா கைக்குத் திரும்பி வரும்போது, கூடவே பிஸ்கட் பாக்கெட், சாக்லெட் பெட்டி (பெட்டியில் - ஞாபக மிருக்கட்டும், விளையாட்டுச் சாமான்கள்)
தெரியவில்லையா இன்னும்? இத்தனையும் என் பிரதாபந்தான்.
ராமாமிருதத்தின் குழந்தைப் பருவத்தில் அவன் உடல் செழிப்பு, நிறம், கவர்ச்சி பற்றி லால்குடியிலும் சென்னையிலுங் கூடப் பலர் நினைவு கூட்டல் கேட்டிருக்கிறேன்.
"குழந்தைக்குச் சுத்திப் போடுடி!"
ஒரு முறை இரு முறை இப்படி நேர்ந்தால் திருஷ்டி கழிக்கலாம். இது காரணமாகப் பிறர் இடுப்புச் சவாரி குழந்தைக்குத் தினப்படி மாமூல் ஆகிவிட்டால், தினப் படிக்கு திருஷ்டி கழித்துக் குழந்தை மிளகாய்க் கமறலில் செத்துப்போக வேண்டியதுதான், லால் குடிக்குப் போகும்போது நிச்சயமாக இந்தச் சடங்கு நடை பெறும். பெங்ளுரில்..? எனக்கு எப்படித் தெரியும்? தெரிந்துதான் என்ன ஆக வேண்டும்? ஆனால் அம்மா வுக்குப் பொதுவாக இப்படியெல்லாம் பாராட்டும் சுபாவம் கிடையாது. அனுபவத்தில் அதுதான் எனக்குத் தெரியும்.
கிராப்பு வேறு வெட்டிவிட்டதும் கப்பலிலிருந்து இறங்கிய பரங்கி (Feranghi)க் குழந்தை போலாகி விட்டேன். முகவார்ப்பும் அப்படித்தான்.
இவையெல்லாம் தற்பெருமையாகப்படின், வாச கர்கள் பொறுத்துக்கொள்வதைத் தவிர வேறு வழி யில்லை. என் கூச்சத்தைப் பற்றி இங்கு தெரிவித்துக் கொள்வதில் என்ன பயன்? சொல்லித்தானே ஆக வேண்டியிருக்கிறது! பிறகு ஏழு எட்டிலிருந்து பதிமூன்று, பதினாலு வயதுவரை தேவாங்காய் (ஒரு சிறு கூனலையும் போட்டுக்கொண்டு) மாறிவிட்டேனே, அதுபற்றி இவ்வளவு விவரமாகச் சொல்லப் போறேனா? சொன்னால்தான் உங்களுக்குப் பிடிக்குமா?
பத்து மாதத்திலேயே பேச ஆரம்பித்துவிட்டேனாம். கலசத்தில் உற்பவித்த உடனேயே கையோடு பிறந்த கமண்டலத்துடன் தன் வழியைத் தேடிக்கொண்டு புறப்பட்டுவிட்ட சுகப்ரம்மம் ஆகிவிட்டேன் என்று சொல்ல வரவில்லை. சொல்லக் கேட்டதைச் சொல்லுகிறேன்.
எனக்கு இரண்டு வருடங்கள் கழித்துச் சிவப்பிர காசம் பிறந்தான். ஆனால் அவன் என் பருமன் இல்லை.
இப்போது காலம், விளம்பரத்துக்கு, அப்போது இப்போது போலிருந்தால் Mothers Food Baby. Glaxo Baby, Farex Baby என்று பத்திரிகைகளிலும், சினிமாவில் விளம்பரத் துண்டுகளிலும் பார்க்கிறோம். அதுபோல, Mother's Milk Baby என்று விளம்பரத்துக்கு இணங்கி யிருந்தால், என் பெற்றோர்கள் உருப்படியாகக் கொஞ்சமேனும் சம்பாதித்திருக்கலாம். அவர்களுக்குத் தோன்றவும் இல்லை, (பிழைக்கத் தெரியாதவர்கள்!) அவர்கள் இணங்கினாலும் பெரியவர்கள் சம்மதித் திருக்கமாட்டார்கள். தவிர, இப்போது போல், விளம்பரம் ஒரு சாஸ்திரமாக அந்நாளில் முன்னேற வில்லை. எப்படியேனும் இருந்துவிட்டுப் போகிறது.
கொழ கொழ கன்னே –
குழந்தை பிறந்த பத்தாம்நாள் தொட்டிலிலிட்டு ஆட்டி நாமம் சூட்டிப் பெண்டிர் பாடுகிறார்கள். அப்போதே அந்தப் பிறவிக்கு, இந்த ஜன்மா பூரா சேர வேண்டிய ஆசீர்வாதங்களையும், பாதுகாப்பு வரங் களையும் ஜாதகப் படி கிரஹ தேவதைகளும் வேளையின், குடும்பத்தின் நற்தேவதைகளும், ராசி தேவதைகளும் வழங்கி விடுகின்றன. இது என் நினைப்பு. பிதுர்க்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
ததாஸ்து, Life's fairy-taie.
கூடவே துர்த்தேவதைகளும் தங்கள் சாபங்களை.
ஒருநாள் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வந்து சுப்ரமணியன் ஜுரமென்று படுத்தவன் ஒரு வாரத்தில் செத்துப் போனான்.
-----------
அத்தியாயம் 13
இந்த பயங்கர நோயை நாட்டை விட்டே அடி யோடு விரட்டிவிட்டதாக இடையே பத்திரிகைகளில் அரசாங்கத்தின் கொக்கரிப்பு: மார்தட்டல், அடிபட்ட தாக எனக்கு நினைப்பு. இதன் உண்மை, தற்போதைய நிலவரம் அறியேன். சுமார் அறுபது வருடங்களுக்கு முன்னர், அதனால் அடிபட்டுவிட்ட என் பெற்றோர் வாயிலாக விட்டுவிட்டுத் தெரிந்துகொண்டதைச் சொல்கிறேன்.
பெங்களூர், கோயமுத்தூர்தான் Plagueக்குப் பேர் போனதாம். சுவரோரம் எலி செத்துக்கிடந்தது அங்கே, இங்கே என்று தகவலாகவோ, வதந்தியாகவோ கேட்டாலே போதும். ஜனங்கள் வீடுகளைக் காலி பண்ணிக்கொண்டு தெருவே வெறிச்சோடி விடுமாம். ஆனால் நோயின் விபரீதத்தை முற்றும் உணராமையால் என் பெற்றோர்கள் அஜாக்கிரதையாக இருந்து விட்டனரோ, இல்லை - அண்டை வீட்டார் என்ன செய்கிறார்கள் பார்த்துக்கொண்டு நாமும் நடக்கலாம் என்று தயங்கினார்களோ, என்னவோ, சுப்ரமணி. யணுக்கு ஜுரம் கண்டுவிட்டது.
கடுமையான காய்ச்சலில் ஆரம்பிக்கும் இந்நோயின் போக்கு எப்படி என்று அண்ணாவின் கண்ணிரில் கலந்த வார்த்தையில் என் சிறு வயதில் கேட்டிருக்கிறேன். அந்தச் சோகத்தில் அந்த விவரங்கள் முழுக்க நினைவில் நிற்கவில்லை. நின்றவரை இங்கு விஸ்தரிக் கவும் எனக்கு மனம் இல்லை. விரசமான கோரத்தை விவரிப்பதில் புண்ணியம் என்ன? ஏதோ ஒரு சமயத்தில் அம்மாவே என்னைத் தனியே அழைத்துத் தன்னையோ அண்ணாவையோ அதுபற்றிக் கிளறிக் கிளறிக் கேட்க வேண்டாம் என்று கட்டளையிட்டு விட்டாள்.
ஊரிலிருந்து யாராவது வந்தார்களா ? வர அனுமதிக்கப்பட்டனரா ? தெரியாது.
பக்கத்திலிருந்தவர் இரக்கம் பார்த்த துணையா? உதவியா? தெரியாது.
இதற்கு இடுகாடா? சுடுகாடா ? தெரியாது.
எதுவோ அதனின்று திரும்பிய அம்மாவின் துக்கத் தைக் காட்டிலும் அண்ணாவுக்குக் கண்டுவிட்ட அதிர்ச்சிதான் சொல்லப் போதாதென்று அம்மா சொல் கிறாள். இதுபற்றி விலக்க முடியாதபடி எப்போதேனும் பேச்சு நேரிடும் போதெல்லாம் அண்ணாவுக்குக் கண் தளும்பும். "ராமாமிருதம், ஏமாந்து விட்டேண்டா " - அப்பாவுடன் பேச்சைத் தொடர வேண்டாமென எனக்கு ஜாடை காட்டுவாள்.
அண்ணாவுக்கு ஏதோ குற்ற உணர்வில் trauma. அண்ணா வீடு வீடாகப் படியேறி, "ஏ சுப்ரமணியா! சுப்ரமணியா !” என்று கூப்பிட ஆரம்பித்துவிட்டாராம்.
அம்மாவின் நிலை எப்படியிருக்கும் ! நானும் சிவப்ரகாசமும் குழந்தைகள்.
பகவானுக்கு அநாதி என்று ஒரு பெயர் உண்டு.
அநாதிக்குப் பெண்பால் அநாதையா? அல்ல, இது வேறா?
அனாத பந்தோ!
அடியே பெருந்திருவே, இப்படியெல்லாம் பண்ணா விட்டால், உன்னை நாங்கள் மறந்துவிடுவோமா?
அண்ணாவை ஒருவாறு சமாதானப்படுத்தித் தெருவிலிருந்து வீட்டுக்குள் கொண்டுவந்து விட்டுவிட்டு எந்த டாக்டர் அகப்படுவான் என்று தேடிக் கண்டு பிடித்து அழைத்து வந்து அவர் அண்ணாவைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு, "அதிர்ச்சிதான். வேறு கவலைக்கிடமாக எனக்கு ஏதும் படவில்லை. ஆனால் இந்தச் சூழ்நிலை-யிலிருந்து அவர் உடனே மாற வேண்டும். உடனே ஊருக்குப் போய்விடுங்கள்.”
ஆகையால் அன்றே இரவோடு இரவாய்.
ரயிலில், சுந்தரத்துக்கு ஜுரம் கண்டுவிட்டது.
அம்மாவின் விழிகள் திகிலில் சுழல்கின்றன. மாறி மாறித் தம்பியைப் பார்க்கிறாள்.
மழுக் காய்ச்சலில் பையன் நினைவிழந்து கிடக்கிறான்.
அண்ணா அவனைப் பார்க்கிறார். அடுத்து அம்மாவைப் பார்க்கிறார்.
நானும் சிவப்ரகாசமும் குழந்தைகள்.
“No no. no. no"
அம்மா, அழுத்தமாக, அண்ணாவின் கையைப் பிடிக்கிறாள்.
உஷ், மூச் - விஷயம் தெரிந்தால் அப்படியே இறக்கி விட்டு விடுவான்கள்.
அவள் சோதனையில் இது ஒரு விதம், சோதனை யிலேயே சோதனை முயற்சி.
புயல் கடலில் உருவாகிறது. அலைகள் மதில்கள் உயரம் எழுகின்றன. மதில்கள் உடைந்து சரிகின்றன. ஒவ்வோர் அலையும் தனித் தனிக் கடலாகிறது. அலை நடுவே ஒடம் சாய்கிற சாய்வில் கவிழ்ந்துவிடும் போல் ஒருக்களிக்கிறது. கவிழ்ந்தாலே தேவலை, ஆனால் கவிழவில்லை. தத்தளிக்கிறது.
நான் கடலில் மட்டும் இல்லை. உன் வயிற்றின் உள்ளும் இருந்தேன். உன் வயிறு சாதாரணமா? கடலினும் பெரிது. அங்கேதான் எனக்கு ஒளிவிடம், கடலிலும்கூட.
இதுகாறும், பெளர்ணமியின் நடுநிலவில், அலை ஜரிகைகள் மிதக்கும் கடலின் கருநீலப் புடவையுள் ஒளிந்த காற்றின் வீக்கத்தில் களியாட்டம் கண்டிருந்தாய். இப்போது என் சீற்றம் பார். என் சீற்றம் மட்டும்தான் உயிர். ஆனால் அதற்குள் அதன் விளைவைப் பார்.
அழகிய அந்தி மந்தாரம் காட்டிய மேகங்கள்தாம் இப்போது உடைப்புக் கண்டு கொட்டுகின்றன. பெரும் பெரும் மழைத் தூறல்கள் சாட்டைகள், நெடும் நெடும் தூலங்கள், உருவிய ராக்ஷஸ வாள்கள், பாம்பு வால்கள், சில்லிப்பே, நெருப்பினும் பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பிகள் விளாசுகின்றன, விழுகின்றன. 'சொடேர்! சொடேர் உருவி உருவி அடிக்கின்றன. துளைக்கின்றன. கூடவே விதியின் விளையாட்டில் சேர்ந்துகொண்ட இந்த முக்கூடலில், அலைகடல் படும் பாடில், அதன் நடுவே படகு எம்மாத்திரம்? பம்பரமாய்ச் சுழல்கிறது, பந்தாடுகிறது. புயலென்றால் இப்படித்தான் இருக்க வேணுமா? அடி மகளே, அடி அசடே, பின் எப்படி? என் சினமேதான் நான். பாற்கடலை நீங்கள் மட்டும் கடைவதாக உங்கள் நினைப்பா? நோகாமல் அடி, ஒயாமல் அழுகிறேன் என்கிற உங்கள் கடையலில் அமுதம் காண்பதெப்போ? பார், என் கடையலைப் பார்! ஆனால் நான் கடைந்து, நீங்கள் காணப்போகும் அமுதத்தில் எனக்குப் பங்கு கிடையாது. ஏன், அதுதான் பாற்கடல் நியாயம். நான் அசுரன், பாம்பின் தலைப் பக்கம் பிடித்துக் கடைகிறேன். வாலைப் பிடித்துக் கொண்டிருப்பவர்களுக்குத் தலை ஒரு சில முறைக ளேனும் தெரிய வேண்டாமா?
நான் மடிவதற்குள் இழைக்கும் சின்னாபின்னமே என் பழிவாங்கல், நான் மடிவேன், உயிர் பெறுவேன். மறுபடியும் வருவேன், போவேன். எதிர்பாராத சமயத்தவன் நான். இதுதான் புயல்; அதுதான் நான்.
வீசும் புயலில், ஒயாத மழையும், நொறுங்கும் இடியும், வானத்தின் வயிற்றைக் கிழிக்கும் மின்னலும், இருளின் வீக்கமும் அன்றி, இரவு எது? விடிவு எது? இருள் எது?
புயல் எப்போது கடந்தது? எந்தக் கரையைக் கடந்தது? அங்கு எத்தனை கிராமங்களை விழுங்கிற்று?
கடலின் சினப்பு தணிந்தபாடில்லை. வீங்கி, குமுறி, உள்ளுக்கே "விண் விண்…."
நாசம் தன் கூத்தை இங்கு ஆடிவிட்டு அடுத்த இடம் தேடிப் போய்விட்டது.
பத்தே நாட்களில் சுந்தரம், சுப்ரமணியனை இழந்த பின்னர், வாழ்க்கையைப் போஷிக்கும் சில சந்தோஷ ஊற்றுகள் என் பெற்றோர்களின் நரம்புகளில் வற்றி விட்டன என்றே நினைக்க வேண்டியிருக்கிறது.
ஆங்கிலத்தில் ஒரு கவிதை The wreck of the Hesperus (பையன் பருவத்தில் படித்தது. தலைப்பு தப்பாயிருப்பின் திருத்தம் கோருகிறேன்)
கப்பல் தேசத்தில், இங்கிலாந்தின் அரசன் முதலாம் எட்வர்டின் மகன் மூழ்கிவிடுகிறான். தகப்பனைப் பற்றிக் கவிதையின் கடைசி வரி இப்படி முடிகிறது;
He never smiled again.
அண்ணாவும் அம்மாவும் சிரிக்காமல் இல்லை. அண்ணா தமாஷ் பண்ணாமல் இல்லை. குடும்பத்தின் சந்தோஷங்களில் இருவரும் பங்கு கொள்ளாமலில்லை. கல்யாணம் கார்த்தி என்று வெளி விசேஷங்களுக்குப் போகாமல் இல்லை. சபை நடுவே கலகலப்பாக இல்லாமல் இல்லை. துக்கத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கவில்லை. வாழாமல் இல்லை. ஆனால்?
ஆனால் –
இருவர் ரத்த ஓட்டத்திலும் துயரக் குமிழி ஒன்று உருவாகி, ரத்தக் குழாயை அடைக்காமல், ஆனால் உடையாமல், கரையாமல் எஞ்சிய வாழ்நாள் பூராவும் தங்கிவிட்டது. ஒ, எனக்குச் சொல்லத் தெரியவில்லை.
இந்தச் சோகத்தோடு பங்கு தீர்ந்துவிட வில்லை. அண்ணாவைச் சாவு முன்னால் ஆட்கொண்டதோ மற்ற இடிகளினின்று பிழைத்தார். இல்லாவிடின் அவர் தாளக்கூடியவர் அல்ல. அம்மா நிறைய அனுபவித்து விட்டாள். ஆனால் முதல் துயரம் (அல்லது முதல் காதல்) பிறவியின் முதல் கவிதையாக அமைந்து விடுகிறது.
எழுதினால்தான் கவிதை அல்ல. வார்த்தைகள்தான் கவிதை அல்ல. கவிதையென்று தானே உணர்ந்தால் தான் கவிதை அல்ல. சிறுவயதிலேயே அம்மா தாயை இழந்தாள். அதற்கும் முன்னர் தந்தையை இழந்தாள். ஆனால் அந்தத் துயரங்கள் அவளுடைய கவிதை அல்ல. அண்ணாவுக்கும் அம்மாவுக்குமிடையே காதல் கண்டதால் அவர்கள் திருமணம் நடந்தது என்றில்லை. ஆகையால் அவர்கள் திருமணமும் கவிதையில்லை. உண்மையின் - இல்லை, அது சொல்வதும் போதாது - சத்தியத்தின் கோடரி எப்பொழுது உள் பாய்கிறதோ, அப்போது நான் சொல்லும் கவிதை நேர்கின்றது. கோடரி மேல் மரம் வளர்ந்துவிடுகிறது. ஆனால் உள்ளே கோடரி பாய்ந்த இடத்தில், பாய்ந்தபடி, பத்திரமாய்.
இந்த முதல் கவிதைக்கும் தேவியின் பாதகமலங் களுக்கும் ஏதோ பற்று இருக்கிறது. அவள் சரணம் பட்ட மாத்திரத்தில் மலரின் இதழ்கள் மேல் இதயத்தின் ரத்தச் சொட்டுகள் குங்குமச் சிதறுகளாக மாறிவிடுகின்றன.
அதை ஏற்று, அவளே நெஞ்சில் நட்டுவிடுகிறாள். அங்கு அது தெறித்துக்கொண்டு கமழ்ந்துகொண்டு, இதர சமயத்தில் இதயப் புதரில் மறைந்துகொண்டு, தனிப் பூவாய்ப் பூத்துக்கொண்டே விளங்குகிறது. ஓ, எனக்குச் சொல்லத் தெரியவில்லை. இத்தனைக் காலம் எழுதி என்ன? என் பற்றாக்குறை நெஞ்சை அடைக்கிறது.
"அந்தக் குழந்தைகள் பிறந்தது முதல் ஒரு சுகத்தை அறியவில்லை! அண்ணா வெளியூரில் படிப்பு, பிறகு உத்தியோகம் சாக்கில், எப்படியோ ஒதுங்கியே இருந்து விட்டான். தாய் தகப்பனை இழந்தபின் சிறுசிலிருந்தே இவர்கள் என்னோடு ஒட்டிக்கொண்டு இருந்துவிட் டார்கள். விடிவு காணும் வேளையில், குழந்தைக் கைப்பண்டத்தைத் தெருவில் போகிறவன் பிடுங்கிண்ட மாதிரி, திடுதிப்புனு இருவரையும் தோத்துட்டு நிக்கறேன். இப்படிப் போகணும்னு இருந்தால், இதுகள் பிறப்பானேன்? பிறவியின் வீணோடு எனக்குச் சமாதானம் பண்ணிக்கொள்ள முடியவில்லை. இந்த ஆற்றாமையைக் கேட்பதற்கு ஆள் இல்லையே! தெய்வத்தைக்கூட என்னால் இனி அளவோடுதான் நம்ப முடியும். அது சர்வ வல்லமை உள்ளதல்ல. பல விஷயங்கள் அதன் வசத்தில் இல்லை. என்னவோ திருடனுக்கும் கன்னக்கோல் சார்த்த ஒரு மூலை, அதோடு சரி. தெய்வத்தின்மேல் பழி போடுவதில் அர்த்தமில்லை. நான் அறியாதவளாகவே இருந்து விட்டுப் போகிறேன்.”
தன்னை அறியாமலே அப்பவே, அம்மா வாழ்க்கைக் கோடுகளைப் பற்றி, ஒரு தத்துவ முடிவுக்கு வந்துவிட்டேன். எனக்கு வயது ஏற ஏற, அவளை ஒரு தோரணை சூழ்ந்துகொண்டிருப்பதாக உணர்கிறேன். ஆனால் அது தோரணையில்லை. விஷயங்களை எடை போட்டு ஒதுக்கிவிட்ட ஒரு விரக்தி. "ஆ, இது இவ்வளவு" "ஒ, இது இவ்வளவுதானா?”
எதிர்த் தராசில் எடை கட்டியிருப்பது தம்பிகளின் சாவு - நல்லது பொல்லாது, எல்லாவற்றுக்கும் அதுவே தான் எடை. இது சுயபிரக்ஞையில் எல்லாருக்கும் வெளிப்படையாக நடக்கவில்லை. உள்ளுணர்வில் தோய்ந்து, விஷயங்களை நோக்கும் பாவனையில், நடைமுறையில் காண முடிந்தது என்றே சொல்லிக்கொள்ள வேண்டும்.
ஆங்கிலத்தில் Double event என்று ஒரு பிரயோகம் உண்டு - இரட்டைப் பிறவியைத் தெரிவிப்பதற்கு. ஆனால் இந்தக் குடும்பத்தில் அது இரட்டைச் சாவு எனத்தான் பொருள் கண்டது. ஏதோ குடும்பச் சாபம் போல், அவை அடுத்தடுத்தோ அல்லது நெருக்கத் திலோ நேரும். ஏதோ முறையில் விதியால் தீர்ப்பு அளிக்கப்பட்டவர்களாகி விட்டோம். உடனே இங்கே, இவ்வரலாற்றில் இடம் கண்டுகொள்ளட்டும்.
"லா.ச.ரா.வின் எழுத்தில் எப்பவும் சாவின் நிழல் ஆடிக்கொண்டிருப்பதைக் காண்கிறோம்." இப்படி ஒரு விமரிசனம்.
ஏன் இராது? எனக்கு அறியாத வயதிலிருந்தே சுந்தரம் - சுப்ரமணியன் சாவில் ஆரம்பித்த தொடர்பு.
“ரெயில் விபத்து, கொள்ளைக் கூட்டத்தாரால் சுட்டுக் கொலை, புயல், தீ, அங்கே உள்நாட்டுக் கலகம், இங்கே assassination, அதோ கொரியா என்று whole sale கனக்கில் வாரிக்கொண்டு போகையில், உயிரே மலிவாகிவிட்ட இந்நாளில், தனிச் சாவுக்கு என்ன பூச்சூட்டல்? இதெல்லாம் இலக்கியம் பண்ணுகிறோம் என்று ஒரு பம்மாத்து. எங்களைத் தங்களோடு எப்பவும் இருத்தி வைத்துக்கொள்ள ஒரு பயமுறுத்தல். இதற்கெல் லாம் நாங்கள் மசிந்துவிடுவோமா? போகிறவாளைத் தடுக்க முடியுமா? இதோ நான் வெளியே போகிறேன். உயிருடனோ, உருப்படியாகவோ திரும்பி வருகிறேன் என்பது என்ன நிச்சயம்? உங்களுக்கு நாளை என்பது இருந்தது. அதனால் நம்பிக்கையைக் கொண்டாடு கிறீர்கள். அதனாலேயே சாவையும் கொண்டாடு கிறீர்கள். எங்களுக்கு நாளை என்பது இல்லை. ஆகை யால் கொண்டாடுவதற்கு உயிரும் இல்லை, சாவும் இல்லை. கொண்டாடுவதற்கு எதுவுமில்லை. பிய்த்துக் கொண்டு போவது ஒன்றைத் தவிர. ஏன் பிறந்தாய்? இறப்பதற்குத்தான் பிறந்தோம். இதற்குள்ளேதான் கராட்டே, Kungfu எல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும். Elvis Presley பாட்டு பாட வேண்டும். Guitar வாசித்திக் கொண்டே ஆட வேண்டும். ஹஹ் ஹா! சச்சாச்சா சச்சாச்சா - சொடுக்கு விரலை ! ஒடி இடுப்பை ! jug jug, jig jig Whoope ஒரு Valentino என்ன, James Dean என்ன, Bruce Lee என்ன, இவர்களைப் போல் பொட் டென்று போய்விட வேண்டும், அப்போதுதான் என்னைச் சுற்றி ஒரு cult வளரும்."
எதிர்ப்பதற்கென்றே எதிர்ப்பு என்பதோடல்லாமல், இதுவே ஒரு தத்துவம், இயக்கம், ஏக்கம்!
சரி, முகிலாம்பரி, சோகாபரணம் என்கிற மாதிரி வழக்கில் இல்லாத ராக ப்ரஸ்தாரத்தில் இறங்கிவிட்டு, நேயர்கள் இன்னும் அதிகப்படியான குழப்பத்துக்கும் வேதனைக்கும் ஆளாகுமுன், ரஞ்சகமான ஒரு துரித உருப்படிக்கு நேரம் வந்துவிட்டது என்று எனக்கே தோன்றுகிறது. ஆ!
ஒவியர் ஸுபாவைப் பற்றிக் கொஞ்ச நேரம். எனக்கு மகிழ்ச்சி தரும் விஷயம்.
அந்த நாள், 'அமுதசுரபி'யின் ஆஸ்தான எழுத்தாள னாக நான் விளங்கியபோது, ஸுபாதான் எனக்கு இன்றியமையாத பக்கவாத்தியக்காரர். சித்திரங்கள் இல்லாமல் பத்திரிகையில்லை என்கிற நிலை வெகு நாட்களாக இருந்து வருகிறது. அதுவும் இப்போது சித்திரங்களின் ஆதிக்கம் முன்னிலும் ஓங்கி, அதில் விதவிதமான பாணிகள், விஷயத்துக்கேற்ற சித்திரக் காரர், சித்திரக்காரருக்கேற்ற விஷயம் என்கிற மாதிரி யெல்லாம் வளர்ந்து, நெய்க்குத் தொன்னை ஆதாரமா, தொன்னைக்கு நெய் ஆதாரமா என்கிற நிலையில் இருக்கிறது. வியாபார ரீதியில், விஷயத்தைக் காட்டிலும் சித்திரங்களின் இடம் இப்போது கெட்டி. இந்த நிலைமையில் என் தனி அபிப்பிராயம் அதிகப் பிரசங்கம். அவசியமற்றது, எந்தச் சமயத்திலும் அது முக்கியமும் இல்லை.
எழுத்தைப் படிக்கையில், வரிகளுக்கிடையே, ாழுதாத சொற்கள், வாசகனின் யூகத்துக்கு எப்படி ஒளிந்திருக்கின்றனவோ, அதேபோல் சித்திரத்தில் வரை யாத கோடுகளுக்குள் காட்டாத மேனி காத்துக்கொண் டிருக்கிறது என்பது என் துணிபு. ஆகவே இரண்டும் இணைந்த கலவையில், சித்திரக்காரரின் ஒத்துழைப் புடன் புதுமையாக ஏதேனும் செய்வதோடல்லாமல் என் எழுத்தின் (அழுத்தம் உச்சரிப்பு - 'என்') வீச்சை எப்படி அதிகப்படுத்திக்கொள்வது என்பதுதான் என் குறி எழுதாத வார்த்தைகளையும் காட்டாத மேனி யையும் தேடுவோனின் ஆர்வத்தையும் தூண்டும்படி இருத்தல் வேண்டும். சித்திரமும் செந்தமிழும் இணைந்து இழைக்கும் ரஸவாதம் ஒவியனுக்கும் எழுத்தாளனுககு மிடையே ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும் ஒருமைப்பாடு, குறிப்பறிந்துகொள்ளும் தன்மை, கொஞ்சம் கூடுவிட்டுக் கூடு பாயும் சித்து, எல்லாமே தேவை. இந்த எதிர்பார்ப்பு அதிகப்படிதான். எல்லாமே முடிந்தவரைதான். முடிந்தவரை முயற்சி செய்து பார்ப்போமே!
51, 52 வாக்கில், 'அமுதசுரபியில் பஞ்சபூதக் கதைகள் எனும் சோதனை முயற்சியில் ஜலத்தைப் பிரதான பாத்திரமாக உருவகப்படுத்தி, தரங்கிணி என்கிற தலைப்பில் முதல் கதை வெளிவந்தது. என் சாதகத்தில், இந்த வரிசை ஒரு முக்கியமான முனையெனக் கருது கிறேன் என்று இப்போதைக்குச் சொல்லி நிறுத்திக் கொள்கிறேன்.
தரங்கிணிக்கு முகப்புப் படமாக என் மனக்கண் கண்ட காட்சி பாறைகளில், படிப்படியாக இறங்கிப் பொங்கிச் சுழித்துக் கொட்டும் நீர்வீழ்ச்சியில், அந்த ஜலத்திலிருந்தே தரங்கிணி என்ற வார்த்தையின் எழுத்துக்கள் தனித்தனியாகத் திரண்டு, உருண்டு, உக்ரகமாகப் பிதுங்குகின்றன. இந்த ideaவை ஸுபா விடம் தெரிவித்துச் சித்திரமாக்கும்படிக் கேட்டேன்.
சரியென்று தலையை ஆட்டினார். ஆனால் ஒரு வாரம் கழித்து, என் idea சாத்தியமில்லையென்று அவர் தெரிவித்ததும் எனக்குப் பெருத்த ஏமாற்றந்தான். வழக்கப்படி ஒரு பெண் முகம் முகப்பாக அமைந்ததும் எனக்குப் பெருத்த கோபமுந்தான். இஷ்டப்படி எதை யேனும் வரைந்துவிட்டாலும் கலர், Block, அச்சு என்கிற கட்டங்களில் பிரச்சினைகள் இருக்கின்றன என்பதை நான் அறியமாட்டேன். கற்பனைக்கு உள்ள துராசையும், சுயநலமும் சொல்லுபடி போகாது. ஆயிரம் எண்ணலாம், எத்தனையோ பிரயாசையில் ஒன்று தேறினால் புண் ணியம். மிச்சம் அத்தனையும் பிந்துசேதம். ஆகையால் எங்களையும் இளகிய கண்ணுடன் பார்க்க நியாயம் இருக்கிறது என்று பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஸுபாவின் பெரும் வெற்றிகளில் ஒன்று, "கங்கா எனும் கதைக்கு அவருடைய முகப்புச் சித்திரம். வெள்ளி மணிகள் கிண்கிணிக்க கோயில் சிற்பக் கதவுகள் மெதுவாகத் தாமாகத் திறக்கின்றன. உள் இருளில் இரண்டு ஜாலர்கள் ஒன்றோடொன்று அறைகின்றன. அந்த நாள் SSLC. முடித்த ஒரு பையனின் இதயத்தில் முதல் முதலாகக் காதலின் பிறப்பை இந்த உருவகத்தில் தான் எழுதியிருந்தேன். ஸுபாவின் சித்திரம் தனித் தன்மையில், கதைக்கு வலுவூட்டமாக அமைந்ததோடல் லாமல், அதன் ஸ்தலத்தில், இலக்கியத் தடத்தையும் பெற்றுவிட்டது என்பது என் கருத்து மட்டும் அல்ல பலருக்கு ஏற்பட்ட பாதிப்பு.
அடுத்து எனக்கு முழுத் திருப்தியை அளித்தது அவர் என் ஜனனி முதல் கதைத் தொகுதியின் முதல் பதிப்பின்மேல் மூடிக்கு Wrapper வரைந்த கலர்ச் சித்திரம். அதற்கு idea கூட நான் கொடுக்க்வில்லை. ஆனால் அற்புதமாக அமைந்தது. வளைவரிசையில் அகல் ஜோதிகளின் சுடரையும் செந்தழலையும் கலர் block வெற்றியோடு எடுத்தது. தொகுதியின் தலைப்புக் கதையின் தகுதிக்கேற்பப் படம், லேசான அரூபத்துடன் (abstractness) ஜவலித்தது. வியாபர ரீதியில் அந்தப் பதிப்பு படுதோல்வி. ஆனால் இப்போது அது ஒரு collector's item ஆகிவிட்டது.
பிறகு எனக்கு உத்தியோகத் தொந்தரவு, வெளியூர் மாற்றல். அதனால் சுமக்க வந்த பொறுப்புகள் எல்லாம் சேர்ந்து அமுதசுரபியையும் என்னையும் சில வருடங்கள் பிரித்து வைத்தமையால், என் கதைகளுக்கும் ஸ"பாவின் படங்களுக்கும் தொடர்பு அற்றுப் போய் விட்டது.
பிறகு இப்போது 'பாற்கடல்" தொடர் கட்டுரை வெளிவரத் தொடங்கி, முதலிதழில் அவர் சித்திரத்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு நான் சந்தித்ததும் எனக்கு என் பழைய நண்பனைப் பார்க்கும் சந்தோஷம். அவருடைய அலங்கார வேலை (Decorative work) எப்பவுமே சிறப்பாக இருக்கும். தேவர்களும் அசுரர் களும் மலையைக் கட்டி இழுக்கிறார்கள். பழைய ஒவியம் பார்ப்பது போல எனக்கு ஒரு பிரமை தட்டிற்று. நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் தவிர, ஸ"பாவின் துணுக்குச் சித்திரங்கள் துணுக்குச் சித்திரங்கள் அல்ல) ஒரு 'ஸ்பெஷாலிட்டியாக நான் கருதுகிறேன்.
ஈதெல்லாம் இருக்கட்டும். அல்லது போகட்டும் - இவையெல்லாம் ஸுபா பாணியில், அவரிடம் எதிர் பார்க்கக்கூடியதுதான்.
முன் அத்தியாயங்கள் ஒன்றில் குண்டிலினி சக்தியின் விழிப்பைப் பற்றி எழுதியிருந்தேன். தபாலில் வந்ததும், அந்த இதழைப் பிரித்ததும், தற்செயலாக அது திறந்தது பாற்கடல் தொடங்கும் பக்கத்தில். எனக்குச் “சுரீல்" என்றது. ஸர்ப்பம் பக்கத்திலிருந்து பிதுங்கிச் சீறிற்று குண்டிலினியின் விழிப்பையே படமாக்கி யிருந்தார்.
எலுமிச்சம் பழத்தைப் பிழிந்தவுடன் பால், சத்தும் சக்கையுமாகப் பிரிவது போல, ஸ"பாவின் மேல் அபிமான எண்ணம் தனிப்பிரிந்து, அவர் இழைத்திருக்கும் சித்திரம், ‘என்னை எனக்காகவே பார்!’ என்று என் காதைத் திருகி என் முகத்தைத் தன் பக்கம் திருப்புவது போல் ஒர் உணர்ச்சி துவக்கத்திலிருந்து பென்சிலைத் தூக்காமல் ஒரே கோட்டில், பிசிரில்லாமல், அதிமந்திரத்திலிருந்து ஒரே தம்மில் மேல் பஞ்சமத்துக்குப் போனதுபோல், கனமாக ஜியோமதியின் சுத்தத்துடன், திடீரென்று ஸர்ப்பம் கடித்துவிட்டது. “சுரீல்" - உண்மை சுடும் என்பார்கள். இந்தக் கோட்டில், இதுவரை நான் ஸுபாவிடம் பழக்கப் பட்ாத ஒரு புதுத் துணிச்சல், அரூபம் ஒரு புது விழிப்பு இது என் கண்களுக்குச் சதை உரிப்பா அல்லது ஸுபாவின் சட்டை உரிப்பா?
அடுத்து மே இதழில் வெளிவந்த பகுதியில், மதுரை மாநகரின் எழிலை, நான் ஒரு மாதமாக உருவகப்படுத்தி யிருந்ததை அவர் காட்டியிருந்ததைக் கண்டவுடன் குலுங்கிப் போனேன். கோபுரம் பின்னணியில் ஒங்க, ஸ்திரீயை இடுப்பில் குடத்துடன், நான் விவரித்திருந்தபடியே தீட்டியிருந்தார். அம்பாளே, மாறுவேடத்தில் நகர் சோதனைக்குக் கோவிலினின்று புறப்பட்டு விட்டாற்போல் இருந்தது.
சமீபத்தில் மறுபடியும் என்னை நெஞ்சை உருக்கியது, அவர் சித்திரத்தில் வடித்திருந்த என் தாயாரின் சிந்தனைப் போஸ் - உதட்டின்மேல் சுட்டுவிரலையும் நடுவிரலையும் பொத்திக்கொண்டு.
நானும் இப்போதெல்லாம் சுருக்க உணர்ச்சி வசப்பட்டுவிடுகிறேன் என்கிறது ஒரு பக்கமிருக்க, ஸுபா, நீங்களும் ஒரு "அஸாமி ஆகிவிட்டீர்கள்; பரஸ்பரப் பாராட்டுச் சங்கம் என்று ஏளனம் செய்பவர் செய்யட்டும். ஸுபா என்னைவிட 10, 15 வயதேனும் சிறியவர். ஆனால் சிறியோரெல்லாம் சிறியோரல்லர்.
பெரியோரைப் புகழ்வோம்.
நான் பிறந்து அங்கு வளர்ந்தவரை ஞாபக சக்தி எம்மட்டு, பெங்களூர் நினைவுகளை எட்டுகிறது? ஒரு ஸ்வாரஸ்யமான பயிற்சி, பகீரதப் பிரயத்தனம் பண்ணிப் பார்க்கிறேன். சுந்தரம், சுப்ரமண்யம் முகங் களை நினைவுபடுத்திக் கொள்ளவே முடியவில்லை. ஆனால் அவர்களுடன் கூடவே வளர்ந்த கார்த்திகேயச் சித்தப்பா, அப்பளாக்குடுமி, கழுத்துவரை பொத் தானிட்ட சொக்காய், இடுப்பில் ஒற்றை வேட்டியுடன் பளிச்சென்று நினைவில் தெளிகிறார். மூளையின் அபார சக்தி, அதேசமயம் அதன் கிறுக்குகளையும் என்றுமே அளவிட முடியாது போலும். Magic lantern side போலும் frameகள் எழுகின்றன. அவை சம்பந்தப் பட்ட நிகழ்ச்சிகளை வரிசைப்படுத்த முடியவில்லை, விவஸ்தை தெரியவில்லை.
மாலை வேளை, கூடத்தில் எதிர்எதிராக இரண்டு வரிசைகள் மாமிகள், தனித்து நாலைந்து ஆண்கள் உட்கார்ந்திருக்கிறார்கள். வரிசைகளின் ஒரு முனையில் சுவரோரம் கிருஷ்ணன் படம் மாலையிட்டுக் கோல மிட்ட மனைமீது சுவர்மேல் சார்த்தியிருக்கிறது. எதிரே குத்துவிளக்கு எரிகிறது.
எனக்குப் பஞ்சகச்சம் உடுத்தி, அதன்மேல் பட்டுச் சவுக்கம் கட்டி, கிருஷ்ணன் கொண்டை கட்டி, நாமமிட்டு (கொழு கொழு கன்னே!) மார்பில் சந்தனம், கழுத்தில் அம்மா சங்கிலி, காலில் சதங்கை, ஜாலரா தட்டிக்கொண்டு (சலங்கையும் ஜாலராவும் எனக் கென்றே வாங்கியவை) - கண்டவலே, மூச்சவலே’ என்று வாய்க்கு வந்ததை உளறிக்கொண்டு, சதங்கை ஒலிக்கக் குதிக்கிறேன். ஸங்கீத உபன்யாசம் கேட்டு வீட்டுக்குத் திரும்பியதன் விளைவு! அம்மா, பக்தி சிரத்தையுடன், எல்லோருக்கும் சுண்டல் கேஸரி விநியோகம் பண்ணிக்கொண்டிருக்கிறாள்.
லால்பாக் - நடுவில் ஏதோ கண்ணாடியாலேயே மண்டபம் போல் ஏதோ தெரிகிறது.
பிசிர் தட்டிக்கொண்டு ஏதேதோ மைதானங்கள் கட்டடங்கள் கோபுரங்கள், தோட்டங்கள்.
Zoo, பணியாள் யாரோ, அண்ணாவிடம் காசு வாங்கிக்கொண்டு புலி வாயில் கோலைக் கொடுக் கிறான். பாதத்தால் கோலைத் தட்ட முயன்று புலி கர்ஜிக்கிறது. தலையை ஆட்டி ஆட்டி. பயமாயிருக்கிறது. அழகாயிருக்கிறது. சந்தோஷமாயிருக்கிறது.
ஏதோ ஒரு ஹால், சுவர்களை அடைத்த அலமாரி களை அடைத்துப் புத்தகங்களாக, வெறும் புத்தகங் களாகவே முளைத்திருக்கின்றன. ஹாலில் மேசைகள், நாற்காலிகள், தெளித்தாற்போல் அங்குமிங்குமாக நாலைந்து பேர் புத்தகங்கள் படித்துக் கொண்டிருக் கின்றனர். மேசைகளிலும் புத்தகங்கள் குவிந்து கிடக்கின்றன. அண்ணா புத்தகம் படித்துக்கொண்டிருக் கிறார். அவர் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு, நகங் களைக் கடித்துக்கொண்டு, நான் பொறுமை இழந்து கொண்டிருக்கிறேன். குழந்தை இன்னும் "bore." என்று சொல்லிக்கொண்டே பிறக்கக் கற்றுக்கொள்ளவில்லை.
என் எதிரே ஒரு ஐரோப்பியப் பாதிரி படித்துக் கொண்டிருக்கிறார். மெத்தை உறைபோல் எவ்வளவு நீண்ட அங்கி! அவ்வப்போது முகம் நிமிர்ந்து என்னைப் பார்த்துப் புன்முறுவல் பூக்கிறார். அவர் விழி நீலம் எனக்குப் புதுமையாக இருக்கிறது. சற்று நேரம் பொறுத்து என் பக்கமாகச் சாய்ந்து என் தலைமயிருள் கைவிட்டுச் செல்லமாகத் துழாவுகிறார். அண்ணாவைப் பார்த்து என்னவோ இங்கிலீஷில் சொல்கிறார். அண்ணா பதில் சொல்கிறார். இருவரும் என்னவோ பேசுகிறார்கள், சிரிக்கிறார்கள்.
அண்ணாவும் அம்மாவும் கூடத்தில் நிற்கிறார்கள். ஏதோ உணர்ச்சிவசத்தில், நான் அங்கு இருப்பதைக்கூட மறந்து அம்மா அண்ணாவின் கையைப் பற்றுகிறாள். "ஒண்ணும் கவலைப்படாதீர்கள். பெருந்திரு கைவிட மாட்டாள். தாராமல் இருப்பாளோ, அவள் என்ன சத்தியம் மறந்தவளோ? - பாடுகிறாள்.
வேலுசாமி வாத்தியார் அண்ணாவின் சஹ டீச்சர், நண்பர்; அடிக்கடி வீட்டுக்கு வருவார். அவர் வந்தாலே அம்மாவுக்கு முகம் சுண்டும். அண்ணாவுடன் சேர்ந்தே பள்ளிக்குக் கிளம்புவார். சில சமயங்கள் அண்ணா வுடன் சாப்பிட உட்கார்ந்துவிடுவார். முனகிக் கொண்டே அம்மா, அவர் இலையை எடுத்து எறிந்து விட்டுப் பல முறை சோப்புப் போட்டுக் கைகளைக் கழுவிக் கொள்வாள். அவர் உட்கார்ந்த இடத்தில் தண்ணிர் தெளித்துச் சுத்தம் செய்வாள். அம்மாவுக்கும் அண்ணாவுக்கும் சண்டை. அம்மாவின் ஆத்திரத்தைக் கண்டு அண்ணா போக்கடாத்தனமாகச் சிரிப்பார், நாக்கைக் கன்னத்துள் துழாவிக்கொண்டு.
"என்னை என்ன பண்ணச் சொல்கிறாய்? நான் 'வா’ என்று அழைக்கவில்லை. வந்த ஆளைக் கழுத்தைப் பிடித்துத் தள்ள முடியுமா? பயந்தால் என்ன செய்கிறது? இதற்கெல்லாம் தப்பிப் பிழைச்சு வந்தால்தான் பிள்ளை ?”
"இதோ பாருங்கள், அவன் பண்றதை?”
நான் வேலுசாமி ஸார் போலவே விரல்களை மடக்கிக் கொண்டு, மூக்கைச் சொரிந்துகொள்கிறேன். அம்மா முதுகில் ரெண்டு வைக்கிறாள். பலமான அறைகள்தான்.
மணிகள், கண்ணாடிக் குழல்கள் துணியில் தைக்கக் கற்றுக் கொடுக்கும் டீச்சரம்மா, கூந்தல் பொடி வங்கி யில் எப்பவும் பரட்டையாகவே இருக்கிறது. மாமி வற்றல் காய்ச்சியாக, காய்ந்த ரொட்டிபோல் ஒட்டி உலர்ந்து.
அப்புறம், பாகீரதி மாமி என்று ஒரு பேரும் ஆளும் நினைவில் தட்டுப்படுகின்றன. எப்பவும் சிரித்த முகம். அடிக்கடி என்னைத் தூக்கி வைத்துக்கொள்வாள். பின்னால் தெரிய வந்தது. அவளுக்குக் குழந்தையில்லை. ஆத்துக்காரரும் வயணமில்லையாம். ரொம்ப சிரமம். அம்மா தன்னால் இயன்ற உதவி குழம்பு, ரசம், மிஞ்சிப் போன பழையதுகூட மாமி வாங்கிக் கொள்வாள் போலிருக்கிறது.
நாங்கள் குடியிருந்த இடம், விவரங்களுடன் எழுகின்றது. எங்கள் வாசற்கதவைத் திறந்தவுடனேயே கூடம். அடுத்து இரண்டு படிகள் கீழ் இறங்கிப் பள்ள மட்டத்தில் சமையலறை, உடனே இரண்டு படிகள் ஏறிக் கூடத்துக்கு நேர் எதிரில், அதேசமத்தில் அறை. அதில்தான் பெட்டி, படுக்கை வேறு கனவாரியான சாமான்கள் இருக்கின்றன.
கூடத்தில், இரு சிறார்கள் ஒரு பாப்பாவுக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றனர். அம்மா அடுப்பங்கரையில் வேலையாக இருக்கிறாள். குழந்தை எங்கள் பராக்குக்கு மசிவதாக இல்லை. அழுகிறாள். அப்பா, என்ன உரத்த குரல் ! காதைப் பொளிகிறது. அப்பா, என்ன நிறம்! காய்ந்த சந்தனம் போன்ற வெள்ளை, எங்களுக்குத் தங்கை வந்திருக்கிறாள், பானு.
ராமாமிருதம், சிவப்பிரகாசம், பானுமதி.
எலி வேட்டை இப்படித் தனித் தலைப்புக் கேட்கும் இந்த விஷயத்தின் நினைப்பில், அருவருப்பில் இப்பவும் உடல் கூசுகிறது. ஆனால் இதைத் தப்ப வழியில்லையே. என்ன செய்வேன்?
சமையலறை தாண்டிய படுக்கையறையில் எல் லோரும் படுத்துக் கொண்டிருக்கிறோம். வெடுக்கென்று விழித்துக்கொள்கிறேன். ஏதோ சத்தம்தான் என்னை எழுப்பி விட்டிருக்கிறது.
"விழுந்துடுத்து!" கார்த்திகேயன் அறை கூவுகிறான். (சித்தப்பா என்று ஒருநாளும் என் சித்தப்பாவை நான் அழைத்ததில்லை. அதுவும் அந்த வயதில் இருவருக்குமே மரியாதையைக் கடைப்பிடிக்க வயதில்லை)
சமையலறைக்குப் போய் எ லிக் கூண்டுடன் திரும்புகிறான்.
கூண்டுக் கதவின் அடியிலிருந்து வால் நீண்டு தொங்குகிறது. அவன் காலைச் சுற்றிக்கொண்டு பூனையும் வருகிறது. கூண்டைக் கீழே வைக்கிறான். பூனை கூண்டைச் சுற்றிச் சுற்றி வருகிறது. அதனின்று ஏதோ தினுசான முனகல் சப்தங்கள் கிளம்புகின்றன.
'ஆ' அண்ணா சுவர் மூலையில் சார்த்தியிருக்கும் தடியான கழியை எடுத்துக் கொள்கிறார். ஊர்கோலமாக, முதலில் கார்த்திகேயன், எலிக்கூண்டுடன், உடனே பூனை, அடுத்து அண்ணா அறையை விட்டு வெளியே போகின்றனர். அறை வாசல் தாண்டியதும் அண்ணா ஜாக்கிரதையாகக் கதவை மூடுகிறார். எனக்கு பயமாயிருக்கிறது. துக்கமாயிருக்கிறது. அம்மாவைக் கட்டிக் கொள்கிறேன். அம்மா முகமும் ஏதோ தினுசில் மாறியிருக்கிறது. என்னை அணைத்துக்கொள்கிறாள். அவள் நாட்டம் மற்ற இரு குழந்தைகளையும் அணைத்துக் கொள்கிறது. சிவாவும் பானுவும் அயர்ந்து தூங்குகின்றனர்.
பின்னர் –
தாக்கல் மோக்கல் இல்லாமல், நினைவில் ஒரு படம் எழுகிறது. எல்லோருமாக ரெயிலில் பிரயாணம் செய்து கொண்டிருக்கிறோம். எங்களைச் சுற்றி - சரியாக உட் காரக்கூட இடமில்லை - நிறைய மூட்டை முடிச்சுகள். மூடிமேல் ஆணி அறைந்த ஜாதிக்காய்ப் பெட்டிகள்.
டிக்கெட் பரிசோதகர் check பண்ணிக்கொண்டிருக் கிறார். நான் உட்கார்ந்து கொண்டிருக்கும், கயிறு கட்டி யிருக்கும் படுக்கையைக் காலில் உதைத்து, "இதனுள் என்ன?” என்று கேட்கிறார்.
"அம்மி " - என்கிறேன். அண்ணா என்னை முறைத்துவிட்டு, இரண்டு படி அரிசி தலைகாணி உறையில் தைத்துப் போட்டிருக்கிறோம்.”
"இல்லை அம்மிதான்!” நான் ஆத்திரத்துடன் சாதிக்கிறேன். “நான்தான் பார்த்தேனே! என் அடியில் கெட்டியா இருக்கே!”
டிக்கெட் பரிசோதகர் சிரித்துக்கொண்டே, கேட்காதது மாதிரி எங்களைத் தாண்டிச் செல்கிறார். அவர் தலை மறைந்ததும் அண்ணா என் தலையில் அடிக்கிறார்.
"உன் பிள்ளை லக்ஷணத்தைப் பார்!” அம்மாவைக் கடிக்கிறார். அம்மா சிரிக்கிறாள். “குழந்தையைத் தலையில் அடிக்காதேங்கோ, ஆகாது.”
ஒரு பெரிய ஸ்டேஷனில் இறங்குகிறோம். வேறு ரெயில்களும் வருகின்றன, போகின்றன. பிரயாணிகள் இறங்குகிறார்கள். ஏறிக்கொள்கிறார்கள். ஒரே ஆச்சரிய மாகவும் வியப்பாகவும் இருக்கிறது. பார்க்கப் பார்க்க அலுக்கவே இல்லை.
“என்ன அமிர்தகடேசா, செளக்கியமா?” அம்மா தான் விசாரிக்கிறாள். கட்டை குட்டையாக, கறுப்பாக ஒருவர் எங்களை நோக்கி வந்து, ஆசையுடன் என் கையைப் பிடிக்க முயல்கிறார். நான் கையை இழுத்துக் கொள்கிறேன்.
"சித்தப்பாடா"
"ஜட்கா காத்திண்டிருக்கு. நீங்கள் முன்னாலே போங்கோ - இந்தப் பெரிய சாமானை எல்லாம் ஏத்திண்டு பின்னாலே நான் வரேன்.”
அண்ணாவும் தம்பியும் ஏதேதோ பேசிக்கொள்கிறார்கள். பேச்சில் இடையில் அண்ணாவின் கேள்வியில் ஏதோ படுகிறது. "இங்கு நிலைமை எப்படி?
"கவலையே படாதே - ஒரு பள்ளிக் கூடம் இல்லாட்டா இன்னொண்ணு. Muslim High Schoolஇல் இப்பவே ஒரு Vacancy இருக்காம் - நமக்குத்தான். அந்தச் சகவாசம் நமக்குப் பிடிக்கணும்."
"எதோ ஒண்ணு, முன்னால் தொத்திக்கணும். அப்புறம் தாவிக்கலாம். வேலையில்லாமல் ஒரு க்ஷணம் இருக்க முடியாது" அப்பா புன்னகை புரிகிறார். ஆனால் அந்தப் புன்னகையில் தெம்பு இல்லை.
"அநாவசியமாகக் கவலைப்படாதேடா! நாங்கள் எல்லாம் ஏதுக்கிருக்கோம்! பெருந்திருவே எங்கேயும் போயில்லேடா !”
சம்பாஷணை இந்த முறையில் நடந்ததாகவோ, இவ்வளவு தெளிவாகவோ ஞாபகத்தில் இல்லை. நினைவில் நிற்காததைக் கொஞ்சம் இட்டு நிரப்பி யிருக்கிறேன். ஆனால் ஒன்று சந்தேகமற வெளிச்ச மாயிற்று.
பெங்களுரை விட்டாச்சு. எங்கள் பெங்களூர் வாழ்க்கை முடிந்தது. பெங்களூரை விட்டுக் காலை உதறியாச்சு.
குடும்பம் சென்னைக்கு வந்துவிட்டது.
------------------
அத்தியாயம் 14
பெங்களூரை விட்டுச் சென்னை வந்து சேர்ந்தோம் என்று சென்ற பகுதியில் நான் தெரிவித்துக் கொண்ட சமயத்திலேயே என் வாழ்க்கைப் பிரயா ணத்தில் முதல் கட்டம் முடிந்தது. இது சமயத்தில் ஆயக் கால் போட்டு, நான் வந்த தூரத்துக்கு மூச்சு விட்டுக் கொண்டு கொஞ்ச நேரம் என்னை ஆற்றிக்கொள்ளத் தோன்றுவது சரியென்று நினைக்கிறேன்.
இந்தப் பதின்மூன்று மாதங்களாக, வரலாற்றில் இன்னும் என் பிள்ளைப் பருவம் தாண்டவில்லை. என் பகைப்புலனை மட்டுமே விவரிப்பதற்கு என்னிடம் இவ்வளவு விஷயம் இருந்ததா? இத்தனையும் என்னிடம் இதுகாறும் எங்கே புதைந்திருந்தன என்பதை நினைக்கையில் திகைப்பாக இருக்கிறது. ஆணவமாக இருக்கிறது. யானெனும் அகந்தை சித்தமிசை குடி கொண்டது; கொள்ளட்டும்; நான் இல்லாமல் நீ இல்லை.
யார் நம்பினாலும் நம்பாவிடினும் சரி, தமிழ் எனக்கு இன்னும் தடுமாற்றந்தான். உதாரணமாக, பகைப்புலன் என்கிற வார்த்தையை வழக்கில் காண்கிறேன். நானும் பயன்படுத்துகிறேன். ஆனால் அதன் முழுத் தாத்பரியம் வியாபகம் என்ன?
வெள்ளைக்காரன் ராஜ்யத்தில் வயிற்றுப் பிழைப்புக் காரணமாகப் பழகிப் பழகி, மூதாதையர் நாளிலிருந்தே ஆங்கிலம் ரத்த ஒட்டத்தில் கலந்துவிட்டது. "இது புரளி, உன் தாத்தா தமிழ்ப்பண்டிதர்தானே, மூதாதையரை ஏன் இழுக்கிறாய்?" என்கிற கேள்வி, கேள்விக்கெனக் கேள்வியே அன்றிப் பொருத்தமற்றது. நான் குறிப்பது அந்தக்காலம். அந்தக் காலத்தின் கட்டாயம்.
பகைப்புலனுக்கு Background என்கிற அர்த்தம் கொள்ளுமா? அவ்வளவு மட்டுந்தானா? எனக்குத் தோன்றவில்லை. திருப்தி ஏற்படவில்லை. Backdrob, Canvas, திரைச்சீலை. நாடகமே உலகம். தெருக்கூத்து நாளில்கூடத் திரையில்லாமல் கூத்து நடக்காது. அந்தப் பக்கம், இந்தப்பக்கம் இரண்டுபேர் ஒரு துப்பட்டியைத் திரையாகப் பிடித்துக்கொண்டு நிற்க, பின்னாலிருந்து பாட்டுக் கிளம்பும். துரியோதன மஹாராஜன் வந்தானே!"
திரையைச் சடக்கென்று தாழ்த்தியவுடன், அல்லது இருவரில் ஒருவன் இழுத்துக்கொண்டவுடன், துரியோதன மஹாராஜன் வந்தானே! என்று துரியோதன மஹாராஜனே பாடிக்கொண்டு வேஷத்தின் அத்தனை சுமையுடன் பெஞ்சில் உட்கார்ந்தபடியே, வலிப்புக் கண்டமாதிரி, மேடையே கிடுகிடுக்க ஆடுவான்.
தருமராஜன் வந்தாலும் அதே கிடுகிடுப்புத்தான்.
அந்த நாளில் ஆனந்தவிகடனில் கர்நாடகத்தின் வர்ணனைக்கெதிரே நான் காரைப்பூச்சுகூடக் காண மாட்டேன்.
ஆனால் அன்றைய தெருக்கூத்து முதல் இன்றைய National Theatres நாடகத்துக்குக் கொணர்ந்திருக்கும் நகாசுவரை ஆதாரம் திரைத் துணிதான்.
திரையில்லையேல் 16 mm இலிருந்து 70 mm வரை, சினிமாவே கிடையாது. அந்தத் தொழிலே அதன் அத்தனை யந்திரங்கள், தந்திரங்கள், டெக்னிக்குகள், ராக்ஷஸ் ஸ்டுடியோக்கள் பரம்பரையுடன், அந்த வெள்ளைத் திரையை நம்பித்தான் இயங்குகிறது. அதனின்றுதான் பிதுங்கி வருகிறது.
தெலுங்கு, மாத்வ, மராத்தித் திருமணங்களில் திரையின் பங்கு இன்றியமையாதது. மகத்தானது. மன மகனுக்கும், மணமகளுக்கும் இடையே திரையை இருவர் பிடித்துக்கொண்டு நிற்க, இரு தரப்பு புரோகிதர் களும் பாடுகிறார்கள்- பெண்டிருக்குப் பாடத் தெரியாத தால் என்று நினைக்கிறேன். சட்டென்று திரை விலகு கிறது. வதுக்கள் ஒருவரையொருவர் முதல் முழி எனும் ஐதீகம்; அந்த 'த்ரில் தனிதான். நான் - நீ உனக்கு நான், எனக்கு நீ உன்னைப் பார்க்கிறேனா? உன்னில் என்னைப் பார்க்கிறேனா? உனக்கும் அப்படித்தானே? எங்கிருந்தோ வந்தோம். சந்திக்கவே திரைக்கு வந்து சேர்ந்தோம். திரை விழுந்தது, நமக்கு உலகம் பிறந்தது. நீயும் நானும்தான் இவ்வுலகம். இதில் நம் பிம்பம் கண்டு மகிழ்வோம். புகழ்வோம், மறைவோம், மறப்போம். மறுபடியும் தோன்றி அடையாளம் கண்டுகொள்வோம்.
த்ரில், த்ரில், த்ரில்! வெறும் திரையைப் பார்ப் பவரைப் பற்றிக் கேள்வி இல்லை.
இப்படியெல்லாம் நான் ஸ்தாபிக்க வருவது யாவதுக்கும் பூமி, திரைச்சீலை, Backdrop, Background, Canvas. The world is a stage என்றான் Shakespeare. The world is my canvas என்பேன் நான். நான் எனும் என் ஸ்வயாகாரப் பெருமிதத்தில் உலகமே என் ஓவியச்சீலை, பூமி, சூரியனைச் சுற்றி வருகையில் ஏற்படும் ஒளியின் நிழலில், வேளைக்கு வேளை மாறும் ஒளியின் நிழலில் என்னைப் பல கோணங்களில் கண்டு தீட்டிக் கொண்டிருக்கிறேன். இது ஒரு பாஷை, தூரிகையெடுத்தவன் தான் ஒவியன்; பேனா பயில்பவன்தான் கவிஞன் - கலைஞன் ! உளியெடுப்பவன்தான் சிற்பி என்றல்ல. உயிரின் செயலே, உலகமே என் ஓவியச் சிலையில் ஆடுவதுதான். ஓரளவு கற்பனையில்லாமல் உலகில் வாழ முடியாது. கற்பனை என்பது பலர் நினைப்பது போல் வெறும் கனவு - கட்டுக்கதை புனைவதல்ல. தரிசனத்துக்குத் தன் உள் சக்தியைச் சமயம் வரும்போ தெல்லாம் வளர்த்துக்கொண்டே இருப்பதுதான் கற்பனை. தன் வண்ணத்தை என் கைவண்ணத்தில் விளம்பல். அலுக்காத விளம்பல்.
திரும்பத் திரும்ப, திரும்பத் திரும்ப, சூக்ஷமம், வெளிப்படை சத்தியம், உயிர் தேடும் விடுதலை, நித்தியம், எல்லாமே இதில்தான் இருக்கிறது. பிறவியே அதற்குத்தான். திரும்பத் திரும்ப.
'தெலிஸி ராமச்சந்தர மதுரை மணியிடம் எத்தனை முறைதான் கேளுங்களேன், அலுக்காது. நேரில் கேட்டவருக்கு அந்த பாக்கியம் தெரியும். ஏன்? மனுஷன் தனக்காகவே பாடிக்கொண்டிருந்தான். தான் கண்ட இன்பம் வையகமும் உய்ந்தது. உச்சாடனம் கூடக்கூட மந்திரத்துக்கு வலு ஏறுகிறது.
கோடி கோடி ராமகோடி
கோடி ராம
நாம கோடி. 'ஓம்' இன் 'ஹம்'
கேட்க ஆரம்பிக்கவில்லை?
ஒமின் ஹம்மில் எது
நாமம் எது ராமம்?
எது எதுவாய் இருந்துவிட்டுப் போகட்டும்; அதுவே ஆனந்தத்தின் மீட்டல் ஆரம்பித்துவிட்டது.
எவனும் அவனவன் நாமம். அதாவது மேல் சொன்ன நாமம். அதுவே பாரம்பர்யம். பகைப்புலனி லிருந்து விடுபட முடியாது என்பது என் துணிவு.
'பழையன கழிதலும் புதியன புகுதலும்!’ எனும் வழக்கு தான்தோன்றித்தனத்துக்குத் தப்பட்டமல்ல. ஓர் இலை உதிர்கிறது. அதற்கு பதில் மறு இலை துளிர்க் கிறது என்றுதான் அர்த்தம். எதையும் அதன் சந்தர்ப் பத்தினின்றும் பிடுங்கி அதில் புது அர்த்தம் படிக்க முயல்வது தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்வது மட்டு மல்ல; பாபம். அந்தப் பாபச் செயலால் பல கொடுமை களே விளைகின்றன.
இங்குள்ள மாஞ்செடியை வேருடன் பிடுங்கிக் கொண்டு போய் ஆப்பிரிக்காவில் நட்டால், அது அங்கே மல்லிகையாக மாறிவிடாது. மாறினால் உஷார்; ஏதோ ஆபத்து.
வேர் களைந்தது செத்த பொருள் மட்டுமல்ல, விபரீதப் பொருள்.
'பசு இரவெல்லாம் வேதனைப்பட்டு விடிகாலையில் மூன்று தலை நாலுடலுடன் மனித ஜாடையில் ஒரு செத்த பிறவியை ஈன்று, மூன்று மணி நேரத்துக்குப் பின் தாயும் உயிர் நீத்தது என்று தினசரிப் பத்திரிகை களில் படிக்கிறோமே, அந்தக் கதைதான்.
அதுபோன்ற புதுமை விளைவிக்க நான் ஆசைப்பட வில்லை. வாழத்தான் ஆசைப்படுகிறேன். என் தேக, மன வளர்ப்பின் தர்மப்படி, நான் ஐதீகவாதிதான், ஐயா, நான் தான்தோன்றி அல்ல, ஐதீகம்' எனும் சொல் பிரயோகத்தில் அதனுடன் சேர்ந்த அதன் குற்றம் குணங்களுடன், ஆட்சேபணை ஆமோதனைகளுடன் ஐதீகவாதி. பெருங்காயச் செப்பு, கஸ்தூரிப்பெட்டி, சந்தனக்கட்டை (தேயத் தேய மணம்) உன் மானம் என் மானம், என் கானம் எல்லாமே எனக்கு இதுதான் ஐதீகம்; பாரம்பரியம், சம்பிரதாயம்.
உலகமே செய்துகொண்டிருக்கும் தவத்தின் சேமிப்புதான் சம்பிரதாயம்.
ஐதீகம், சம்பிரதாயவாதி என்பதால் நான் கட்சிக் காரன் ஆகிவிடமாட்டேன். ஏனெனில் இந்த ஐதீகம், சம்பிரதாயம் என்பதே - யாவரும் ஒரு குலமே, எவ்வுயிரும் என்னுயிரே எனும் சமரஸத் தெளிவுக்கு மார்க்கந்தான். எதையும் அதனதன் காரண காரியத் துடன் அதற்குரிய அனுதாபத்துடன் புரிந்துகொண் டால், அது வந்து முடியும் கோட்பாடு - எம்மதமும் சம்மதமே.
இசைத்தட்டில் கிட்டப்பாவின் கிளிக் கண்ணி கேட்கிறோம். மாண்ட் - வெள்ளிக் கிண்கிணிகளின் அலறல், மூல மூர்க்கத்தின் வேதனை, நகூர்த்திரப் பொறிகள், இளமையின் பிரிவாற்றாமை, பீரங்கிகள் கோட்டையைத் தகர்ப்பது போல் நெஞ்சை உலுக்கல்.
அடுத்து காவடிச்சிந்தில் அல்ல; அதுபோன்ற ஒரு ராகத்தில் பட்டம்மாளின் கிளிக் கண் ணியைக் கேட்கிறேன். தடபுடலற்ற அடக்கம். ஆனால் ஏமாற்றல் அடக்கம். ஊறுகாய் ஊறி ஊறித் தேன் கசிவது போன்ற ஒர் இனித்த ஏக்கம். 'உள்ளேயே அரித்து அரித்து எலும்பை உருக்குகிறது; இனிப் பிழைக்கமாட்டேன். என் மார்பில் பாய்ந்துவிட்ட வேலோடு என்னை எரித்து விடுங்கள்’ என்று கேட்கிற மாதிரி இருக்கிறது.
எதனின்று எது மிகை?
"நானும் பார்க்கிறேன். இந்த வரலாறு பூராவே, ஏதோ சொல்ல ஆரம்பித்து, எங்கெங்கேயோ போய், எதிலேயோ முடிக்கிறாய். அதுவும் முடிவற்ற முடிவு! சொல்ல வந்ததுதான் என்ன?”
சபாஷ்! இந்த ஆக்கத்தின் இலக்கணமே நீ சொன்ன படிதான். புரிந்து கொண்டுவிட்டாய் என்பதிலேயே என்ன மகிழ்ச்சி! எந்தப் பிரசவத்திலும் அனுபவ ஸ்திரியான மருத்துவச்சியின் பங்கு பக்க உதவிதான். தான் வெளிவரும் வழி விதம், தன்னை கவனித்துக் கொள்ள ஜீவனுக்கு எப்பவுமே தன் சக்தி உண்டு. அதன் வழிதான் உற்ற வழி எழுத்திலும், எழுத்தாளனின் பங்கு அப்படித்தான். தன் மேதாவித்தனத்தைக் காட்டாமல், சமய உதவியோடு தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளல் வேண்டும்.
"நீ எதை வேணுமானாலும் எழுதுடா, போடு கிறேன்." தி.ஜ.ர. சக்தி ஆசிரியராக இருந்தபோது எனக்குக் கொடுத்த தைரியம்.
அலங்காரம் செய்த பினத்தைக காட்டிலும் உயிருள்ள அவலக்ஷணமான குழந்தையே சிறந்தது. ஏண்டா, குழந்தைக்கு உயிரோ கொடுத்துவிட்டாய். ஆனால் அது எவ்வளவு முரட்டுத்தனமாக, சில சமயங் களில், உன் எழுத்தில், வக்ரமாக இருக்க வேண்டியது அவசியமா? நீயே யோசித்துப் பார்." இதுதான். இவ்வளவுதான், எப்பவுமே அவர் விமர்சனம், வகுப்பு நடத்தமாட்டார். பிரசங்கம் பண்ணமாட்டார். லேசாக, ஜாடையாக, சமயத்தில் ஒரு வார்த்தை; திருத்தல்கூட இல்லே. அத்துடன் சரி. குருவே நமஸ்காரம்.
எழுத்து ஒர் அற்புதமான குழல் வாத்தியம். பிரான ஆஹ"தியை அதனுள் செலுத்தியதும் அந்த ஆஹ"தி வெளிப்படும் உருவத்தில் என்ன என்ன நாதங்கள்!
எழுத்து ஒரு அராபியக் குதிரை. வாஹனமும் சவாரியும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு விட்டால், அப்பப்பா ! என்னென்ன வேகங்கள், அழகுகள் தொடுவானமும் தாண்டிய தூரங்கள் ! கொடுத்து வைத்தால், I am the Horseman in the sky! I am riding Pegasus (கிரேக்க இதிகாசத்தில் வரும் சிறகு முளைத்த தெய்வீகக் குதிரை!) எழுத்தும் விஷயமும் ஒன்றுக்கொன்று போஷாக்கு ஒருநாள், என்றேனும் ஒருநாள் என் மட்டிலேனும் எழுத்துக்கும் செயலுக்கும் இடைக்கோடு அழிந்து, எழுத்தே செயல், செயலே எழுத்து - ஜெய் பவானி! உனக்கும் இடைக்கோடு அழிந்து உன் வெள்ளத்தில் என்னை அடித்துக்கொண்டு போய்விடு - "சொல்லே மந்திரமடா !” சும்மாவா சொன்னான் மீசைக்காரன் !
என்ன சொல்ல வந்தேன்! என்ன சொல்ல வந்தால் என்ன? விடு. இதோ ஒரு மூர்ச்சம் ககன சவாரி போய் வந்தேன். வந்தோம் என்று சொல்வது உன்னைப் பொறுத்தது.
இந்த வரலாறு போகும் பாணி முழுக்கவும் என் வசத்தில் இல்லை. பல இடங்களில் அது என்னைத் தன் வழியில் இழுத்துக்கொண்டு போகிறது. அந்த இடங்களைப் படிக்கும்போதே அவற்றின் தனி இனத்தைக் கண்டுகொள்ளலாம். அது போகும் வழி அதற்குத் தெரியும்.
இது கதையாயிருப்பின் பாயின்டாகச் சொல்லலாம். இது முழு சுயசரிதையுமல்ல. ஆங்காங்கே நேரும் மன நெகிழ்ச்சிகளை, நான் தேர்ந்த தெளிவுகளை, கண்ட தரிசனங்களை வரலாற்றின் ஊடே இழைத்துச் சொல்லிக்கொண்டு போகிறேன். அநுபவங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அவற்றுடன் சேர்ந்த அவற்றின் காவியத் தன்மையும் கூடவே இழையோடி வருகிறது. கண்கள் கேட்கின்றன. செவிகள் பார்க் கின்றன. ஜன்மேதி ஜன்ம பூர்வாதி மணங்கள் ஏதேதோ 'கம் கம்' வீசுகின்றன. காயத்தை, காலத்தைத் தூக்குகின்றது. உடல் பறக்கிறது - பரபரக்கிறது - இந்த அற்புதம் நேரும்போது எழுத்தில் மாட்டிக்கொண்ட வரை அதன் சலனத்தோடு சொல்லிவிடல் வேண்டும். இல்லையேல் அந்த அனுபவச் சூடு ஆறிப்போய் ஃப்ரிட்ஜில் வைத்த பச்சைக் காய்கறி போல் ஒரு மாதிரி யாகச் சிலிர்த்துக்கொண்டு, வெறும் உபதேசங்களாக, வறட்டுப் பாடமாக, அனுபந்தமாக அம்சம் குறைந்து போய்விடும். மருந்தையே சர்க்கரையாக டில்லி பாதுஷாக்களுக்குக் கொடுக்கத்தானே யுனானி வைத்திய முறை கண்டுபிடிக்கப்பட்டது.
"இதென்ன இந்த மனுஷன் புலன்களின் செயல் களையே மாறாட்டமாகச் சொல்கிறான். ஒஹோஹோ !” நெற்றிப்பொட்டைத் தட்டிக் கொள்கிறீர்களா ? அதுதானே இல்லை! அதுதானே அற்புதம்! பைத்தியம் தான் பைத்தியம் என்று ஒப்புக்கொள்ளுமா என்கிறீர் களா? அப்படியுந்தான் இருந்துவிட்டுப் போகட்டுமே, ஆண்டிக்கூத்து!
நந்தவனத்தில் ஒர் ஆண்டி
அவன் நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டுவந்தான் ஒரு தோண்டி
அதைக் கூத்தாடிக் கூத்தாடிப் போட்டு உடைத்தாண்டி
இல்லை, போதும், ஒரே அடியாக மிரண்டுவிடப் போகிறீர்கள். கீழே இறங்கிவிடுகிறேன். பூமியே சரணம் ஆயிரம் உயரப் பறந்தாலும், அவ்வப்போது பாதம் பதிய உன் தைரியம் இல்லாவிட்டால், எங்கள் கதி என்ன? அம்மா, நீதான் ஜகன்மாதா! சர்வ ஜனனி! சர்வரக்ஷஇ! கடைசியில் உன் குழந்தைகளை மாறாத தூக்கத்தில் உன் மடியில் ஏந்திக்கொள்பவளும் நீயே!
என் சுயசரிதையை அதன் சம்பவ ரீதியில் மட்டும் எழுதுமளவுக்கு அதை நான் முக்கியமாக ஒருநாளும் கருதியதில்லை. என் வரலாறு என்கிற பெயரில் வாழ்க்கையில் கமழும் மணங்களை நுகர, பிறருடன் பங்கிட்டுக்கொள்ள, விசுவதரிசனம் காணச் சுயசரிதை ஒரு சாக்கு அவ்வளவுதான். மற்றபடி என் வாழ்க் கையில் கரடி வித்தைகள், ஆச்சரியகரமான தப்பித்தல்கள் (Escapes), ஜன்னல் கம்பிகளை வளைத்து வெளியேறல்கள், நூலேணியின் மூலம் இராஜகுமாரி யின் உப்பரிகையில் புகல், ஏழுபேரை ஒரே அடியில் வீழ்த்தும் தீரச் செயல்கள், ஸாம்ஸன் ஸாஹஸங்கள், Bruce Leeஇன் ஒரு கத்தல், ஒரு குத்தல், ஒரு வீழ்த்தல் இவை போன்ற பராக்கிரமங்களுக்கு எங்கே போவேன்? கேவலம், சப்பணம் போட்டுச் சேர்ந்தாப்போல அரை மணி நேரம் உட்கார முடியவில்லை. கொஞ்ச நாட்களாக வலதுகால் சொன்னதைக் கேட்க மறுக்கிறது. இத்தனைக்கும் முடக்குவாதம் மூட்டுவாதம் என்று வெளிப்படையாகத் தெரியவில்லை. Some trouble; சரி, போகட்டும்.
சுகதுக்கங்களில் என்னிலும் அதிகம் பங்குபட்டவர்கள் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயம் இல்லை, இதில்:
எது வரினும் தட்டிக் கழித்துக்கொண்டு மேல் காரியத்தை கவனிப்பவர் இல்லையா?
குறுக்கு வழியென்று நினைத்துப் பள்ளத்தில் வீழ்ந்து மீள முடியாதவர் -
தற்கொலையில் விடுதலையைத் தேடுபவர் -
வெறும் கட்சி வெறியில் சுய தஹனம் செய்துகொள்பவர் –
உயிரைக் கொடுத்தேனும் சுய விளம்பரம் - இப்படி எத்தனைபேர்?
குடி, கஞ்சா, ஹெராயின், ஹவீஷ்; இத்தனையும் பற்றாமல், எதற்காகவென்று தனக்கே புரியாமல் கைலையிலிருந்து குமரி வரை அலைச்சல், முதுகில் ஒரு மூட்டை, சிக்குப்பிடித்த தாடி, சிக்குப்பிடித்த ஆடை, இஷ்டப்படி இன்ப நுகர்ச்சியால் தொங்கிப்போன அங்கங்கள், அதை மறைப்பதில் கூட அசிரத்தை, அலட்சியம். நாடு பூரா எத்தனை ஜீவநதிகள், ஆறுகள், அருவிகள் ஒடியென்ன? ஏரி, கிணறு, குழாய்கள் இருந்து என்ன? இவர்களின் அழுக்குக் கரைய ஸ்நானம் செய்ய இவர்களுக்கு மட்டும் தண்ணிர் இல்லை - இவர்களின் அர்த்தமற்ற திரியல் ஒருவாறு அலுத்தபின் கப்பலி லிருந்து இறங்கியபோது இருந்த நிலையிலேயே இல்லை, இவர்கள் தங்களுடன் ஏற்றிச் செல்லும் அழுக்கை மறந்தேனே!) மீண்டும் சொந்த நாட்டுக்குக் கப்பலேறும் யுவர், யுவதிகள் –
சாம்பலில் புரண்டெழுந்து உடம்பில் தரையில் புரளும் ஜடாபரத்தைப் பந்தாய்ச் சுருட்டி அக்குளில் வைத்துக்கொண்டு நடமாடும் சாதுக்கள்,
அயல்நாட்டிலிருந்து வந்துபோனவர், இங்கேயே தங்கிப் போனவர், வேறு கிருத்திரியங்களால் திரும்ப முடியாமல் தவிக்கும் வெளவால் வாழ்க்கையினர்.
அங்கே விட்டு வந்த குடும்பத்தை மறந்தோ அல்லது மீண்டும் அத்துடன் சேர இயலாமலோ இங்கே ஒரு புதுச் சந்ததியை ஏற்படுத்துபவர்.
இப்படியிருந்து அப்படி ஆனவர், எப்படி எப்படியோ இருந்து எப்படியோ ஆனவர் எல்லாமே தத்துவந்தான். வணங்காமுடித் தத்துவம், ஏளனத் தத்துவம், ஆசாபங்கத் தத்துவம், மெழுகுவர்த்தியை இரு பக்கமும் கொளுத்தி எரியவிடும் தத்துவம், ஒட்டுண்ணித் தத்துவம், நாளை நமதே என்ற தத்துவம். நாளை நடப்பதை யாரறிவான்? ஏக் ப்ளேட் மட்டன் பிரியாணி, கோழி வறுவல் ஜல்தி லாவ் - தத்துவம்.
சொல்லிக்கொண்டே போகலாம். டிக்கெட் இல்லாத இந்தப் பிரயாணிகளின் வாழ்க்கையில் சம்பவங்களுக்குக் குறைச்சலா? என் வாழ்க்கையில் அதிசயங்கள் இவர்கள் கண்டதுபோல் இல்லை. நிச்சயமாக இல்லை.
ஆனால் –
இந்தப் பேனா முள் என்று ஒன்று இருக்கிறதே, பொல்லாத முள், விஷ முட்கள் கடிகள் அத்தனையைக் காட்டிலும் மாபெரும் சக்தி வாய்ந்தது. தைத்தது எப்போ எங்கே என்று தெரியாது. பேனா மன்னர்கள் எல்லாம் பேனா முள் தைத்தவர்கள் அல்ல. அது விதி யென்றே சொல்லலாம்.
தியானம் என்கிறோம். இறைவனே தியானத்தில் இருக்கிறான் என்கிறார்கள். தியானத்தில் என்ன தெரிகிறது? அல்ல, தெரியும்? ஏதோ ஒரு மகிழ்ச்சி யில்லாமலா, ஊன் துறந்து, ஊன் மறந்து, காலம் கடந்து, தன்னையே மறந்து…
பேனாமுள் தீட்டும் சொல் தரும் மர்மத் தத்து வத்தின் (mysticism) மகிழ்ச்சிதான் என்ன?
வியாபாரம், லாபம், புகழ் நோக்கில் எழுதினாலும் சரி, என் விதி எழுத்து எனப் பயின்றாலும் சரி.
எழுதும் வரையிலேனும் எழுத்தில் ஏதோ வசியம் இருக்கிறது.
முதலில், இந்தச் சேதன வாழ்க்கையில், எழுத்து மூலம் தூண்டப்படும் அசேதன லக்ஷயங்கள் இருக் கின்றனவே, அதுவே பெறும் பேறு இல்லையா?
லக்ஷியம் என்பது என்ன ? நாளை என்பதே லகூழியந்தான். எல்லா லக்ஷயங்களும் நாளை எனும் நம்பிக்கையுள் அடங்கிவிட்டன. அதனினும் பெரிய லக்ஷியம் ஏது?
"எனக்காக அல்ல; என் பேரன்மார் பழம் கடிக்க” என்று இன்று மாஞ்செடி நட்ட கிழவன் கதை சின்ன வயதில் கேட்ட கதை; இப்போதுதான் அதன் உண்மை புரிகிறது; புரிந்துகொண்டே இருக்கிறது.
"என்னால் இந்தப் பிறவியில் முடியாததை, என் பிள்ளைகள் மூலம், பேரன்மார்கள் மூலம், சந்ததி மூலம், வர்க்கத்தின் மூலம் சாதித்து, என் அரைகுறையை முழுமையாக்கிக் கொள்வேன்; இதற்காகவே என் வர்க்கத்தின் ஸ்திரத் தன்மையில், (evolution தத்துவப்படி திரும்பத் திரும்பப் பிறவிமூலம் கடையல்) அது அடைந்திருக்கும் தரம் மேலும் மேலும் உயர்தல் வேண்டும்.
Perpetuation by Continuity and Quality of the race.
(வர்க்கத்தின் தொடர்ச்சி மூலம், தரத்தின் மூலம் அதன் சாசுவதம்)
அர்த்தமுள்ளவையெல்லாம் பயனுள்ளவை அல்ல. பயனுள்ளவை எல்லாம் அர்த்தமுள்ளவையுமல்ல.
அர்த்தமுள்ளவையும் கடைசியில் அர்த்தமற்றுப் போகின்றன. (காரணம்: எல்லாவற்றையும் இங்கேயே விட்டுவிட்டுத்தானே போக வேண்டியிருக்கிறது).
நம்ப வேண்டியவை வேர்கள்; விழுதுகள் அல்ல.
வேர்கள் உன்னைக் கைவிடா. அவற்றில் பரம்பரை யின் தவபலம் அடங்கியிருக்கிறது. விழுதுகளைப் பிடித்துக்கொண்டு தொங்கினால் அவை அறுந்து நாம் வீழ்வோம். அல்லது விழுதுகளுடன் பாம்புகளும் தொங்குகின்றன.
ஆகவே, வேர்களின் வேரோடலுக்குப் பாடுவோம்; வேர்களைப் புகழ்வோம். வேர்களின் பலத்தில்தான் விழுதுகளுக்கு பலம், வேர்கள் ல கூழியங்கள்; நம்பிக்கைகள், புதுப்பிக்கும் சக்திகள். இன்று, நேற்று, நாளை இவை வேரின் விளைவில் எழும் டங்காரத்வனி இன்றின் பின்னோக்கில் பிறந்த நேற்றுக்கு நினைவு மீட்டும் யாழிசை முன்னோக்கில் சிரிப்பது நாளையின் வானவில்,
சாரங்களைத் தட்டி விட்ட முற்றும் துறந்த ஞானியர்தாம் அறிவர், இந்த இன்று, நேற்று, நாளையின் முழு சூட்சமத்தையும். நாம், எப்படியும் நான் அவர் களின் நிலையை அடையாதவரை, எழுத்து, இசை, கலை எனும் வெள்ளைப் பொய்களோ, அல்லது நிஜங்களோ இவைதாம் நம் தஞ்சம். பரவாயில்லை; வைமூலம் நமக்குக் காணக் கிடைத்ததை, கண்டவரை விண்டிடுவோம்.
அப்படியும் காணக் கிடைக்காமல் இல்லை. இருளில் செதில்கள் வெள்ளியும் தங்கமுமாகச் சுடர் விடுகின்றன. "ட்ச்சிக் ட்ச்சிக்” விட்டத்தில் பல்லி எச்சரிக்கிறது.
நடுக்கடலில் யகூஷிணியின் கானம் கேட்கிறது. எனக்குப் பித்துப் பிடித்துவிட்டது. பாய்மரத்தோடு என்னைப் பிணைத்திருக்கும் தளைகளை அறுக்க, அவிழ்க்க முயல்கிறேன். Song of the Sirens Ulysses பாவனை நண்பர்களின் முன்யோசனையால் பத்திரமாக கானம் கடந்து செல்கிறேன்.
இந்தப் பக்கங்கள் சற்று அத்துமீறிவிட்டன. எனக்கே தெரிகிறது. என் சொந்தப் பக்கங்களாகத் தற்சமயத்துக்கு இருந்துவிட்டுப் போகட்டும். இன்று எனக்குச் சொந்தம். நாளைக்கு உங்களுக்குச் சொந்தம்.
இப்போதைக்கு இவை, கிழவன் காற்றாடி விடுகிற மாதிரி.
(உவமை சரியல்ல; ஜப்பானில் முதியோர் காற்றாடி விடுவது முறையே) i
கிழவன் பம்பரம் விடுகிற மாதிரி (ஊ - ஹும் - இதுவும் போதாது)
கிழவன் பாண்டி விளையாடுகிற மாதிரி (ஆ! பரவாயில்லை)
ஒவ்வொருவர் உள்ளேயும் ஒரு துஷ்டப் பையன் இருக்கிறான். அவனை ஒரளவு அடக்கி வைக்கலாமே தவிர, முற்றும் திருத்த முடியாது. சமயமில்லாத சமயத்தில் தலையை நீட்டுவான், அடாதன செய்வான் ஆனால் அவனை நாம் மன்னித்து விடுவோம். ஆனால் நம் மன்னிப்பு அவனுக்கு அக்கறை இல்லை.
ஒரு பிரபல எழுத்தாளர் என் பிள்ளையைக் கேட்டாராம்.
"பாற்கடலைப் படித்துக்கொண்டு வருகிறேன். அப்பாவுக்குத் தான் எழுத்தாளனாகப் போவது, தன் சுயசரிதை எழுதப்போவது எல்லாம் முன்னாலேயே தெரியுமா ? அப்பவே திட்டமிட்டுவிட்ட மாதிரி இளமை நினைவுகள் அவ்வளவு சுத்தமாக, தெளிவாக, அடுக்காக வருகின்றனவே எப்படி?” கேள்வி புத்திசாலித் தனமானது என்று தெரிந்ததே தவிர, அதன் ஸாரம் (Substance), நோக்கம் முழுமையாக உடனே புரிய வில்லை. யோசித்து, என் ஞாபகசக்தி சாகூதிக்கூண்டில் ஏற்றப்படுகிறது என நானே முடிவு செய்துகொண்டு உரிய பதிலை என்னால் இயன்றவரையில் அளிக்கிறேன்.
மேலே போகுமுன் ஒரு வார்த்தை, இப்போ தெல்லாம் இந்தக் கேள்வி பதில் ஸிஸ்டத்துக்கு மவுஸ் அதிகமாகி இருக்கிறது. பத்திரிகைகளிலிருந்து மேடை வரை பரவி இருக்கிறது. இது எனக்குப் பிடிக்கவில்லை என்று கூட தைரியமாகச் சொல்லிவிடுகிறேன். ஏனெனில் இந்தக் கேள்வி பதில் முறையினால் சந்தேகத்தைப் பூரா தெளிவிக்க முடியும் என்கிற நம்பிக்கை எனக்கு இல்லை. கேள்விக்குப் பதில், இன்னொரு கேள்வியைப் பயக்கின்றது.
உடனே அதற்கு ஒரு பதில் - இப்படிச் சங்கிலி போட்டுக்கொண்டே போய், விஷயம் தண்டவாளம் மாறி, சர்ச்சையில் முற்றி - சண்டை வந்தாச்சு, பிராம்மணா, சோற்று மூட்டையைக் கீழே வையும் என்பதில் முடிகிறது. தவிர எல்லா பதில்களுமே சமா தானங்கள்தாம் என்பது என் துணிபு. கந்தேகங்கள் உண்டு மறுக்க முடியாது. முக்கியமாகச் சிந்தனை விஷயங்களில், அவரவர் சிந்தனையில் ஊறி ஊறித் தெளிவு ஏற்பட வேண்டும். பதிலே அதுதான்.
இது என்னுடைய பார்வை என்கிற மட்டில் நிறுத்திக்கொள்கிறேன். ஆனால் பதிலே சொல்லாமல் இருக்க முடியுமா? பதில் சொல்ல வழியில்லாமல் இப்படி ஒரு தர்க்கம் பண்ணி டிமிக்கி பண்ணுகிறேன் என்று சொல்லமாட்டீர்களா? இந்தப் பீடிகையைப் போட்டுக்கொண்டு என்னால் இயன்றவரை சொல்லுகிறேன்.
கேள்வியைக் கேட்ட எழுத்தாளர் என்னிடம் பதிலை எதிர்பார்க்கவில்லை. அவருக்குத் தோன்றி யதைப் பேச்சுவாக்கில் என் பிள்ளையிடம் சொல்லி யிருக்கிறார் என்பது என் நினைவில் இருக்கிறது. ஆனால் என்றேனும் ஒரு நாள், வேறு யாரிடமிருந்தும் இந்தக் கேள்வி எதிர்பார்க்கக்கூடியதுதானே! தவிர இது இலக்கியத் தரமான கேள்வி. இலக்கிய ரீதியில் சமா தானம் சொல்வது முறையே. நிற்க.
எழுத்துத் துறையில் நான் இறங்கப்போவது, என் சுயசரிதம், அது பாற்கடல் என்கிற தலைப்பில், (அப்போது கர்ப்பவாஸம் கூடக் காணாத) "அமுதசுரபி' என்கிற பத்திரிகையில் இடம்பெறப் போகிறது. இவற்றைத் திட்டங்களாக என் குழவிப் பருவத்தில் எப்படி நான் கண்டிருக்க முடியும்? அந்த எண்ணத்தில் இதற்குப் பின் இது என்கிற வரிசையில், தோன்றும் போதே, என்னுடைய அப்போதைய நினைவுகளை நினைத்துக் கொண்டேனா?
நினைத்துக்கொள்ள முடியுமா? முடியாது என்பதைக் சொல்லவும் வேண்டுமா?
சம்பவம் நேர்ந்தபோது, நேர்ந்தவை. நினைவு ஏற்பாடு, (arrangement) இப்போதைய நிகழ்ச்சி, பின்னோக்கு, அதில் கிடைத்த (அல்லது கிடைத்ததாக நினைத்துக்கொள்ளும்) தெளிவு திருஷ்டி (Perspective) வெளியீடு பாஷை, பிறகு சொந்தத் திருப்பல் (evision) சொந்த editing மூலம் விஷயத்துக்கு முறுக்கேற்றம், ஒசை, கையெழுத்தில் அதற்கு ஒரு தோற்றம், அச்சில் காண் கையில் வேறு அந்தஸ்து (சில சமயங்களில் இதுவே ‘உல்ட்டா ஆகிவிடுவதும் உண்டு) இடையில் இத்தனை கட்டங்கள், கவனங்கள், கட்டுகள், சூதுவாதுகள் இருக்கின்றன. இத்தனைப் பக்குவங்களுக்கிடையில், விஷய பின்னம், உத்தேச (Intention) பின்னம், என் மமதையின் அதிகப் பாசங்கள் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும். ஸாம்பார் ரஸமாகிவிடக்கூடாது. ஆனால் Processingஇல் எந்தக் கட்டத்தையும் தவிர்க்க முடியாது. இதில் அசிரத்தை காட்டினால் இத்தனை காலம் பயின்ற எழுத்தின் கலையம்சம் என்னாவது?
பொய் வரக்கூடாது. பொய்மை புகின் அது மைக்கும் குற்றமன்றிப் பண்டத்தில் பழுதில்லை.
'சம்பவங்களை - நேர்ந்தபடி, நேர்ந்த சமயத்தின் பாஷையிலேயே சொல்லாவிட்டால் அவை முழு உண்மை எப்படியாகும்?” என்கிற எதிர்க்கேள்விக்கு பதில் சொல்லச் சக்தி அற்றவனாகிறேன்.
முதலில் சாத்தியமாகவும் எனக்குப் படவில்லை. நான் பூமியில் குழந்தையாக விழுந்ததும் 'குவா குவா என்று அழுதேன். 'குவா’ என்கிற சப்தத்தை அழுத நேரத்துக்குப் பக்கம் பக்கமாக நிரப்புவதா? அப்படி அழுகையில் குழந்தை பாலுக்கு அழுததா? அல்லது பிறவி எடுத்ததற்கா? "எங்கே வந்திருக்கிறோம்?’ (குவா~ எங்கே) என்கிற பெரிய தத்துவார்த்தத்தில் ஜீவனின் அலறலா? யார் கண்டது?
அந்தந்த வயதுக்குக் கிடைத்த சுய நினைவு, அதிலும் கூடியவரை கிடைத்த நினைவு கூட்டும் சக்தி, அதையும் கூடியவரை அந்தந்தச் சமயத்தின் பார்வையோடு நோக்க முயற்சி, பிறர் சொல்லக் கேள்வி, இரண்டுக்கும் கிடைக்காததை இட்டு நிரப்பும் சொந்த அனுமானம், இத்துடன் பாஷையும் சேர்ந்த கலவையாகத்தான் என் இளமை - இளமை என்ன, எல்லா நினைவுகளையும் இந்தப் பக்கங்களில் பார்க்கிறீர்கள். இதில் மாட்டிக் கொண்ட உண்மைதான் கிடைத்தவரை, பிற எல்லாம் அந்த உண்மை சாய்க்கும் நிழல்கள் என்று சொல் லட்டுமா? நிழல்களும் பொய்யல்லவே!
முன் அத்தியாயங்களில் ஓரிடத்தில் சொல்லு கிறேன். தங்கள் கடும் சாவினால் குடும்பத்தையே கலக்கி விட்ட என் மாமாக்கள் சுந்தரம், சுப்ரமண்யன் முகங் களை நினைவு கூட்டப் பார்க்கிறேன். எவ்வளவோ முயன்றும் கிடைக்கவில்லை. கூடவே அதே வயதுக் கூறில் இருந்த என் சித்தப்பா கார்த்திகேயன், அப்பளாக் குடுமி, கழுத்துவரை Close Coat அந்த வயதின் அங்க, ஆடை அடையாளங்களுடன் நினைவில் ஸ்பஷ்ட மாகப் பிதுங்குகிறார். மூளையின் கிறுக்கு இப்படி யெல்லாம் விளையாடுகையில் நினைவுகளை எப்படித் திட்டம் போட்டு நினைப்பது?
இன்னொன்று, யாரைச் சுற்றியுமே வெட்ட வெளிச்சத்தை எதிர்பார்க்க முடியாது. ஸ்டுடியோவில் நூற்றுக்கணக்கான candle poverஇல் headlights arc lamp நடுவில் கேமிரா எவ்வளவு பெரிய பொய்களைச் சொல்கிறது தெரியுமா? கேமரா மேதை கே. ராம்நாத் சொல்வார்: "The Camera never liesஇல் வளர்ந்துவிட்ட பேச்சு வழக்கு பெரும் புளுகு. பொய்யைத் தவிர வேறெதுவும் அது சொல்லவில்லை. பொய்க்கென்றே பிறந்தது.”
ஒளியும் நிழலும் சேர்ந்ததுதான், மனிதனின் வெளித் தோற்றம், உள் தோற்றம், பேச்சு, தன்மை, குணாதி சயங்கள் எல்லாமே. யாரையும் அகில்புகை சூழ்ந்து கொண்டிருக்கிறது. முகஸ்துதி, தூற்றல், வதந்தி, அவனே தன்னைச் சுற்றி அறிந்தும் அறியாமலும் ஏற்படுத்திக் கொள்ளும் அரண் (பட்டவர்த்தனம், வெகுளித்தனம் கூட அரண்கள்தாம்) இத்யாதி இந்தப் புகையைப் பயக்கும் திரவியங்கள். இந்த மூட்டத்தில் அவ்வப்போது வெளிப்படும்வரை அந்த ஆளின் காக்ஷி சென்றபின் புகை மேலும் கவிந்துகொள்கிறது.
What is Truth? என்ன அற்புதமான கேள்வி? எதனுடைய உண்மையையும் அதன் முழுமையில் அறிய முடியாது.
இதழ்கள் ஸஹஸ்ராகாரமாக விரிந்துகொண்டே இருக்கின்றன். விரிய விரிய உள்ளே இன்னுமொரு மொட்டு; இதழ்களாக இருத்தல் நம் பாக்கியம்.
ஒரிரு சமயங்களில் கதைப்போக்கின் யூகத்தில் வெளிப்பட்ட விஷயங்கள், உண்மையிலேயே அவை அப்படித்தான் என்று பின்னால் நிரூபணமாகையில் என்னில் நேர்ந்த பெருமிதம், புல்லரிப்பு, அதேசமயம் கலவரம், அச்சத்தை வாசகனுடைய யூகத்துக்கே விட்டுவிடுகிறேன். அப்போ எழுதியதில் ஏதோ ஒரு சத்தியம் பேசுகிறதோ? என்று நான் வியப்புற்றதுண்டு. சிந்தனை எவ்வளவு பெரிய Lab? பேனாதான் கங்கோத்ரி.
இதையொட்டி, காளிதாஸனைச் சூழ்ந்த ஒரு கதை நினைப்பு வருகிறது. ஏற்கெனவே பலருக்குத் தெரிந் திருக்க வேண்டிய கதை. ஆயினும் தெரியாதவர்கள், தேர்ந்தவர்களிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்று தப்பித்துக்கொள்ளாமல் கூடியவரை சுருக்கமாக, நான் தெரிந்துகொண்டபடி சொல்லிவிடுகிறேன்.
போஜராஜன் நாட்டிலேயே சிறந்த ஒவியனைத் தேடி வரவழைத்து, ராணியை வரைய நியமிக்கிறான். ராணியும், அவன் கட்டளைப்படி உட்கார்ந்து "போஸ்’ கொடுத்தாள் - நாளடைவில் ஒவியம் முற்றுப்பெறும் சமயத்தில் ஒரு சொட்டு வர்ணம் தூரிகையினின்று தற்செயலாகச் சித்திரத்தின் உள்தொடையில் தெறித்தது. ஒவியன் மிகவும் சிரமப்பட்டு அந்தச் சொட்டை நீக்கிவிட்டு ஒவியத் திரவியங்களைக் கடை கட்டுகையில் மீண்டும் அதே அளவில் அதே தெறிப்பு. அந்தச் சொட்டையும் நீக்கியபின் மூன்றாம் முறையும் அதே போல நிகழ ஒவியன் மிரண்டுபோய்க் காளிதாசனிடம் போய்ச் சொன்னான். அவன்தான் காளி வரம் பெற்றவ னாயிற்றே! ஞான திருஷ்டியில் விஷயத்தைப் புரிந்து கொண்டு, ‘பரவாயில்லை, கவலைப்படாதே. ஒவியத்தை அப்படியே ராஜாவிடம் சமர்ப்பித்துவிடு’ என்று சொல்லிவிட்டான்.
ராஜா ஒவியத்தைப் பாராட்டிக் கொண்டிருக் கையில் வர்ணச்சொட்டையும் அது விழுந்திருக்கும் இடத்தையும் கண்ணுற்றதும் திடுக்கிட்டான். ராணியின் தொடை மச்சம் சைத்ரீகனுக்கு எப்படித் தெரியவந்தது? அவள் மஹா பதிவிரதை ஆயிற்றே! யாரைச் சந்தே கிப்பது? மூன்று நாட்களுக்கு அவனுக்கு உணவே செல்லவில்லை. ராஜாங்கக் காரியங்களே ஒடவில்லை. காளிதாஸன் அப்போது அவனிடம் வந்து, “ஹே ராஜன்! இதில் தெய்வச் செயலைக் காண்கிறோம். ஒவியன் தன் கலையைத் தவமாகப் பேணுபவன். ராணியோ பத்தினி. இந்த இடத்தில் சத்தியம் தானாகவே தோன்றி, தானே பேசி, ராணியின் மச்சத்தைத் தானே தீட்டி இருக்கிறது. ஆகையால் நீ யாரையும் சந்தேகப்பட வேண்டாம். தெய்வ ப்ரசன்னத்துக்குச் சந்தோஷப்பட வேண்டிய விஷயம் ! என்று விளக்கி, தேற்றி, சஞ்சலத்தைப் போக்கினான் - என்று கதை.
இந்தக் கதையில் ஒட்டை இருக்கிறது! ராணி உடுத்த படிதானே "போஸ்' கொடுத்திருப்பாள் ? அப்போது மச்சம் வெளியில் தெரிய வாய்ப்பே இல்லையே! மச்சம் வெளியில் தெரியும் அளவுக்கு ராணியின் ஆடை ஸல்லாவா? அப்படி இருக்கலாமா? ஒவியத்தில், ராணி ஆடைமீது வர்ணம் சொட்டி இருந்தால் ஒவியத்தின் அழகு கெட்டுப்போகவில்லையா? இந்தக் கதையை நான் எழுதவில்லை. கேட்ட கதைதான். இதை ஒரு நீதிக்கதை என்று கொண்டு அந்த நீதியை மட்டும் ஏற்றுக்கொள்ள வேண்டும் போலும்!
எழுத்து, ஒவியம், இசை, சிற்பம், நடனம், ஆய கலைகள் அறுபத்து நான்கும் மடிப்பு விசிறிபோல், விரித்தால் தனித்தனியாக, பல ஜால மடிப்புகள். மடக்கினால் ஒரே விசிறி. நதிகள் கடலில் கலக்கின்றன. கடலும், இந்தச் சங்கமத்தில் நதிகளுடன் கலக்கிறது. பழம் பசலி உவமைதான். ஆனால் வேறு பொருந்து வதாகத் தெரியவில்லை.
ஒரு நண்பர் எழுதுகிறார்:
“இம்மாத(ஜூன்)ப் பாற்கடல் படித்தேன். எத்தனையோ வருடங்களாகியும் அந்த நிகழ்ச்சிகள் பசுமை மாறாமல் ஜீவன் ததும்புகிறது. உங்கள் முன்னோர் களுக்கு நீங்கள் எழுப்பும் ஞாபகச் சின்னங்கள் மகத் தானவை. படிக்கிறவர்கள் தங்கள் முன்னோர்களுக்கும் அவ்வித நினைவுச் சின்னங்களை மனசில் எழுப்பிக் கொள்ளவும் அவை செய்கின்றன. எழுத்தின் உண்மை இதை ரகசியமாக நம்மை அறியாமல் செய்துவிடுகிறது”
இதைவிடப் பேறு எது? விசுவ தரிசனத்தின் மின்னல் அடிக்கிறதா?
குழந்தைகளா, கலத்தில் கொஞ்சம் கூடுதலாகத்தான் விழுந்துவிட்டது. எறியாமல் சாப்பிட்டுவிடுங்கள். சமத்துக் குட்டிகளோன்னோ!
-----------
அத்தியாயம் 15
இந்த ஞாபகசக்தி விவகாரத்தையொட்டி, இன்னும் கொஞ்சம்.
மதுரை சர்வகலாசாலையில் - 1978-இல் என்று நினைக்கிறேன் - இதுமாதிரி விஷயங்களில் தேதிகளில் நான் ப்ளாங்கி - என் எழுத்து பற்றி ஒரு முழுநாள் கருத்தரங்கு (Seminar) நடைபெற்றது. என் புத்தகங்கள் அந்த யுனிவர்ஸிடியில் எம்.ஏ. வகுப்புக்கு விதிக்கப் பட்டிருந்தன. என்னையும் அழைத்திருந்தார்கள், கேள்வி களுக்கு பதில் சொல்ல.
அங்கு என் ஆரம்ப உரையில், என் பல்லவியைப் படித்தேன். "நான் என்னுடைய பதினெட்டு பத்தொன்ப தாவது வயதில் எழுதத் தொடங்கியபோது, நான் பிரசுரிக்கப்படுவேன்; தொடர்ந்து பிரசுரிக்கப்படுவேன்; என்னை முழு புத்தகங்களாகப் பார்ப்பேன்; என் புத்த கங்கள் கல்லூரிகளுக்கு விதிக்கப்படும். என்னுடைய அறுபத்திரண்டு அறுபத்து மூன்றாவது வயதில் கருத்தரங்கில் இன்று உங்கள் எதிரில் நிற்கப் போகிறேன் எனக் கனவிலும்கூட நான் எதிர்பார்த் திருக்க முடியாது.”
லா.ச.ரா.வின் எழுத்து, அதன் பல கோணங்களில் சிறுகதை, நாவல், பாத்திரப் படைப்பு, நடை, வெளி யீட்டு உத்திகள், தத்துவம் (!) இத்யாதி - அலசப்பட்டன. இதற்கு என்றே வேறு கல்லூரிகளிலிருந்து அழைக்கப் பட்டிருந்த விரிவுரையாளர்கள் - தயாரித்துக்கொண்டு வந்திருந்த ஆய்வுக்கட்டுரைகளைப் படித்தார்கள். சில சிலாகித்தன; பல கண்டித்தன. கடிக்க முயன்றன. ஒன்றிரண்டில் என் மண்டை உருண்டது.
ஆனால், எழுத்து அச்சில் பொதுச் சொத்தாகிவிட்ட பின், பூச்செண்டுகளுக்கும் அழுகல் முட்டை வீச்சு களுக்கும் எழுத்தாளன் தயாராக இருக்கத்தான் வேணும். பதில்சொல்வது அவன்இஷ்டம். சொல்லாமல் இருந்தாலும் அவன் இஷ்டம். ஆனால் தடுக்க முடியாது.
இதழ்கள் என்கிற தலைப்பு வரிசையில், ஒரு கதை. கதாநாயகனின் முழு வாழ்க்கையும், அவனுடைய குழவி நிலை நினைவிலிருந்து சாவுவரை கதாநாயகனின் கண்ணோட்டத்திலேயே தன்னிலை ஒருமைப் பெயரில் (First Person Singular) பார்க்கப்படுகிறது.
ஆய்வாளர் கதையின் குரல் வளையைப் பிடித்த இடம்.
"ஆசிரியர், கதாநாயகனின் முதல் முதல் நினைவாக அவன் தாய்ப்பால் குடிப்பதை அவகாசமாகவே விஸ்தரிக்கிறார். அந்த அளவுக்கு முதல் நினைவு. அதுவும் சுய வெளியீட்டில் எப்படிச் சாத்தியமாகும்? இதைப் படிப்பவன் நம்பி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசிரியர், First person Singular முறையில் எதிர்பார்ப்பது நியாயமல்ல."
இது அவர் பிராதின் அப்பட்ட பாஷை அல்ல; சாராம்சம். சற்று அநாவசியமான சூடாகத்தான் படிக்கும் குரல் இருந்தது என்று என் அபிப்பிராயம்; ஆனால் அது அவரவர் உரிமை; மேடைப் பாணி.
கதையில் குறிப்பிட்ட பகுதியைக் கீழே தருகிறேன்:
இருந்தாற் போலிருந்து எங்கள் வீட்டுச் சமைய லறையைக் காண்கிறேன்.
அடுப்பெதிரில் அம்மா உட்கார்ந்திருக்கிறாள். குழந்தையாய் அவள் மடியில் நான் படுத்திருக்கிறேன். என் முகத்தை மூடிய மேலாக்கைத் தள்ளிவிட்டுத் திரும்பி, அடுப்பிலாடும் தீயை வியப்புடன் நோக்கு கிறேன். என் உதட்டோரத்தில் பால் வழிகிறது.
அடுப்பிலிருந்து அக்கினி, தன் எண்ணிறந்த கைகளை நீட்டி என்னை அழைக்கிறது, நீலமும், சிவப்பும், அரக்குமாய்ச் சாயங்கள், தீயின் விளிம்பிலும் நடுவிலுமாய்ப் பிறந்து வழிந்து, ஒன்றோடு ஒன்று இழந்து, விதவிதமான உருவங்களையும் முகங்களையும் தீட்டி, அழித்துச் சலிக்காமல் மறுபடியும் அழைக்கின்றன.
பார்த்த முகங்கள், பாராத முகங்கள்.
இவ்வேழு மாதங்களுக்குள் நான் எவ்வளவு முகங்கள் பார்த்திருக்க முடியும்? ஆனால் இவ்வேழு மாதங்களுக்குள் நேர்ந்த முகங்கள் அல்ல இவை. ஏழாயிர வருடங்களின் முகங்கள்.
நான் அளித்த பதில்:
"ஏழு மாதத்தில் என் தாய்ப்பால் அனுபவத்தை நினைவுபூர்வமாக எழுதினேன் என்று நான் - கதாநாய கனின் வாய் மூலமாகச் சாதிக்க முடியுமா? அது சாத்தியமா இல்லையா என்கிற அளவுக்கேனும் எனக்கு புத்தியில்லையா ? ஆனால் பிற தாய்மார்களிடம், பிற குழந்தைகள் பால் அருந்துவதையும், அவ்வளவு தூரம் போவானேன்? எனக்குப் பின் என் உடன் பிறப்புகள் அம்மாவிடம் பால் குடித்துக்கொண்டு அடுப்பு நெருப்பைப் பார்ப்பதை நான் பார்த்திருக் கிறதை வைத்துக்கொண்டு, நானும் வேறு எப்படி இருந் திருக்க முடியும்? என்கிற சந்தேகமற்ற நம்பிக்கையில் எழுதினேன். குழந்தையின் சிந்தனை நான் விவரித்தபடி ஒடியிருக்குமா? (ஏழு மாத முகங்கள் அல்ல இவை, ஏழாயிர வருடங்களின் முகங்கள்) அவரவர் யூகத்துக்கு ஏற்றபடி (anybody's guess). குழந்தைக்கு என்ன தோன்றியிருக்கும் ? சாயங்களைக் கண்டதா? முகங்களைக் கண்டதா ? எதைக் கண்டாலும் தத்துவமாகச் சிந்தித்ததா? யாருக்குத் தெரியும்? சிந்திக்கவே அதனால் முடியுமா? நினைவுப் பாதையில் அந்த இடம் இன்னும் நம் பாதம்,படாத பூமி. ஆகையால் கதாசிரியன் புகுந்து விளையாடும் விளையாடக்கூடிய இடம் அதுதான். அதுவே குற்றமாயின், அதைப்பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை. கதை தொடர்ந்து எனக்கு வளரும் இடமாக நான் அதை எடுத்துக்கொண்டு விட்டேன்.
அதே கதையில் கடைசிக் கட்டத்தில் கதாநாயகன் இறந்தபின்னரும் அவனுடைய தொடர்ந்த சிந்தனையை மட்டும் சித்தரித்திருக்கிறேன். ஸார் அந்த இடத்தையும் உண்மைக்குப் புறம்பானது என்று ஏன் கண்டனம் செய்யவில்லை? மறந்துவிட்டாரா? இல்லை, அந்தப் பகுதி அவர் கவனத்துக்குத் தப்பிவிட்டதா? அல்லது அதை ஏற்றுக்கொண்டு விட்டாரா? இதை சர்ச்சை யாக வளரவிடாமல், இது சம்பந்தமாக ஒரு விஷயம் சொல்ல விரும்புகிறேன்.
காளிதாசனுக்கும் முந்திய, அல்லது இதிகாச காலத்திலிருந்தே, விமர்சகர்களின் சம்மதத்துடன் (Poetic licence) காவியச் சலுகை என்று ஒன்று வழங்கி வருகிறது. இந்தச் சலுகை தரும் இடத்தின் காரணமாகத்தான், இலக்கியங்களைப் பரிமளிக்கச் செய்யும், உவமான உவமேயங்கள், கற்பனைகள், அலங்காரங்கள் ஆட்சி புரிந்து கொண்டிருக்கின்றன.
கணித சாஸ்திரத்தில் பரிச்சயமுள்ளவர்கள் ஜியோமதியில் Construction என்கிற பிரயோகத்தைப் புரிந்துகொள்வார்கள். அதாவது ஒரு நிரூபணையின் நிமித்தமாக, கணிதத்தில் ஏற்கெனவே இல்லாத குறிப்பாகக்கூட உணர்த்தாத ஒரு புதுக்கோட்டையோ புதுக்கோணம் அல்லது வளைகோட்டையோ (arch) வரையவோ, அல்லது ஏற்கெனவே இருக்கும் கோட்டை நீட்டவோ வேண்டி வரும். இந்தப் புது நிர்மாணம் இல்லாமல் நிரூபணையே முடியாது. இலக்கியத்தில் poetic licence இதேபோல்தான்.”
கருத்தரங்கில் நான் அளித்த பதில் இம்மட்டுடன் தான். ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை ஏறக்குறைய ஐந்து வருட அவகாசத்தில் சாதக விளைவாய்க் கூடி யிருக்கும் சொல்முறை அனுபவத்தில் இன்னும் கொஞ்சம் சொல்ல விரும்புகிறேன்.
கதையில் அடுத்து நான் குறிப்பிட்ட பகுதி இதோ.
வருகிற வருடமும் வழக்கம்போல் இதே தினத்தன்று காலை மிஸ் ஹெர்மாயின் யானைத் தலையளவு பூச்செண்டுடன் உள்ளே நுழைகிறாள்.
"ஹல்லோ மிஸ்டர் ராம், குட்மார்னிங்! நீங்கள் சிரஞ்சீவியாக இருக்க வேண்டும். இந் நன்னாள் திரும்பத் திரும்ப வர வேண்டும்!”
அவள் வார்த்தைகள் தடைபடுகின்றன. நான் எழுந் திருக்கவில்லை. என்னுடைய கண்கள் மூடியிருக்கின்றன.
என்னிடம் வந்து தாதுவைப் பிடித்து இதயத்தில் செவி சாய்த்துக் கேட்கிறாள்; கை துவண்டு விழுகிறது.
என் கைகளை எடுத்து மார்மேல் சேர்த்து வைத்துச் சிலுவையின் குறியில் தன் தோள்களையும் நெற்றியையும் தொட்டுக்கொள்கிறாள்.
அவள் உதடுகள் அசைகின்றன. போர்வையை என் தலைமேல் இழுத்துவிட்டுப் பூச்செண்டை என் பக்கத்தில் வைத்துவிட்டு, அடிமேல் அடி வைத்து வெளியே செல்கிறாள்.
நான் உள் ப்ரக்ஞையின் ஒரே இதழில், உயிர் வெள்ளத்தில் மிதந்து செல்கிறேன்.
எழக்கூடிய கேள்விகள்.
1. வருகிற வருடம் நடக்கப்போவதை இப்பவே எப்படி -
2. கண்ணை மூடிக்கொண்டே, மிஸ் ஹெர்மா யினின் செயல்களை நான் எப்படிப் பார்த்திருக்க முடியும்?
3. போர்வையை அவள் என் தலைமேல் இழுத்து விட்டபின். மேற்படி மேற்படி.
இந்த இடத்தில்தான் Poetic Licence பேசுகிறது. கதாசிரியன் தன் கைவரிசையைக் காட்டக் கை கொடுக்கிறது. கதாநாயகனின் உயிர் பிரிந்த பின்னும் அவன் உயிரோடிருப்பது போன்ற பாவனை முறையா? உயிர் பிரிந்தால் பிரியட்டுமே! பிரிந்த பின்னரும் அவனுடைய ப்ரக்ஞை மட்டும் தொடர்வதற்கு இடம் கொடுத்து என்னதான் நடக்கிறது பார்ப்போமே!
ஏதோ போதனா புத்தகத்திலிருந்து நான் படிக்க வில்லை. எழுத்தனுபவத்தில் சொல்கிறேன். கற்பனை என்பது வெறும் கப்பு. 'Gas’ காற்றாடி விடுவதல்ல; இஷ்டத்துக்குக் கயிறு திரிப்பதல்ல. அதற்கும் பிரமாணங் கள், பிரமாணிக்கங்கள் உண்டு. நித்தியத்துவத்துக்கு நாம் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் காலவரைகளைத் தாண்டி, எண்ணத்தின் வன்மையில், சாதுர்யத்தில் நிகழ்ச்சியை அதன் வரம்புக் கோட்டினின்று விடுதலை செய்து, விரிவுகண்ட அந்தத் தடத்தில் என்ன நடக்கிறது, நடக்கக்கூடும் என்பதை அனுமானத்தில் காண்பதுதான் கற்பனை. It is not anybody's guess. It is Calculated. Watch out for test tube reaction in experimental idea-chemistry (ஆங்கிலத்தில் திடீரென நழுவிவிட்டதற்குப் பொறுத்துக் கொள்ளுங்கள். என்னுடைய தற்சமய உள் எழுச்சிக்கு என்னால் தமிழைச் சுற்றிச் சுற்றி வர முடியவில்லை. ஆங்கிலத்திலும் என் முயற்சி பற்றவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது) கரணம் தப்பினால் மரணத்தில், கழைக்கூத்தாடி ஒரே மூர்ச்சத்தில் முயலும், ஒண்ணு - ரெண்டு மூணு - நாலாவது உச்சி அந்தர் பல்டி. மேகங்களுள் உரு மறைந்து கீதக்குரல் மட்டும் எட்டும் வானம்பாடியின் அந்தர்த்தியானம்.
குறிப்பிட்ட இந்த இதழ்கள் கதைப் பாணி, நான்' என்கிற முறையில் அமைந்த விஸ்தரிப்பில் நானும் எதிர்பாராத ஏதோ ஒரு கவிதைத் தன்மையை வெளிப்படுத்திக் கொண்டே போகையில், கதாநாயகன் இறந்துவிட்டதால் கதைப் போக்குக்காகப் படர்க்கைக்கு (Third Person) மாறினால் கவிதைக் கமழ்ச்சிச் சிதை வால், எனக்குக் கதையே போச்சு.
Poetic licence பற்றி இந்த அளவுக்குச் சொல்ல முனைந்தது இளம் எழுத்தாளர்களுக்குப் பயன்படாதா என்கிற சபலந்தான்.
கடை விரித்தேன்….
மீண்டும் சொல்கிறேன். கதை சொல்லும் வகை களில் யதார்த்த முறையும் உண்டு; ஆனால் அதன் பெயரில் இழைக்கப்படும் தீம்புகளில், இலக்கியத்தில் சுகாதாரம், மென்மைகள், லக்ஷயங்கள், மானுடத்தின் மாண்பான உறவுகள், செளந்தர்யங்கள் கலைந்து, கசங்கி, ஏதோ ஒரு முறையில் அவைமேல் ஒரு தினுசான, அருவருப்பான மிருக ரோமம் படர்ந்து - என்ன, மீண்டும் ஜங்கிளா?
"Reality, Truth (யதார்த்தம், உண்மை) இரண்டும் ஒன்றல்ல.
கர்ப்பத்தில் பரீக்ஷத்துக்கு விஷ்ணுவின் தரிசனம் கிட்டியதாக பாரதம் சொல்கிறது.
பிரஹலாதன் தாய்க்கு நாரதர் விஷ்ணுவின் பெருமைகளைச் சொல்லிக் கொண்டிருந்த போது கர்ப்பத்தில் பிரஹலாதன் ஊங் கொட்டிக் கேட்டுக் கொண்டிருந்தானாம்.
நாம் பூர்வஜன்மத்தில் இந்துமதக் கோட்பாடுகளின் படி நம்பிக்கை உள்ளவர்கள். ஏழு மாத முகமல்ல, நெருப்பின் சாயங்களில் ஏழாயிர வருட முகங்களைக் கண்டேன் என்று கதையில் வருகையில், இந்தப் பின்னணியில் எதை யதார்த்தம், எதைச் சத்தியம், எதைக் கற்பனை என்பது? அனுமான தரிசனத்துக்கு, இந்த ஞானபூமியில், பகவான் ராமகிருஷ்ணர் அடைந்த நிர்விகல்ப சமாதியிலிருந்து, இலக்கியம் வரை இடம் உண்டு.
பட்டணத்து வாழ்க்கையில் எனது மிகமிக இளமை நினைவுகள் எவை?
பெங்களூர்ப் புழுதியைக் காலிலிருந்து உதறிவிட்டு மறுநாள் காலை சென்னையில் அந்தக் காலை வைத்த தால் நான் உடனே விருகூrமாக மாறிவிட முடியுமா? நினைவு நூல் நுனியைச் சிக்கிலிருந்து என்னால் இயன்றவரை இழுக்கிறேன்.
எழும்பூர் ஸ்டேஷனிலிருந்து ஜட்காவில் - தக்கடா, புக்கடா, கடகடா, கடகடா, சக்கரத்தின் விட்டங் களிடையே ஜாட்டிக்கோலைக் கொடுத்து வண்டிக் காரன் எழுப்பும் சப்தம் - குழந்தைகளுக்குத் தனிக் குஷி - வீடு வந்தாச்சு.
குடுகுடுவென்று ஒரு ஸ்திரீ ஓடிவந்து எங்களை ஒவ்வொருவராக முதலில் அணைத்துக்கொண்டு, உருப்படி உருப்படியாகக் கீழே இறக்குகிறாள்.
“வாங்கோடா என் கண்களா?” அந்த வரவேற்பு இன்னும் மறக்கவில்லையே!
"வாங்கோ மன்னி! அண்ணாவை வாங்கோன்னு சொன்னேன்னு சொல்லுங்கோ மன்னி!”
"ஒரே வழியாக வந்துட்டோம் பார்வதி! நீ செளக்கியமா?”
டார்வதி சித்தி, சிறுகூடாக, மடிசார் கட்டிக் கொண்டு, மரப்பாச்சி மாதிரி –
"குழந்தைகளா, சமையலாயிடுத்து, சாப்பிட்டு டுங்கோ. மத்தியானம் குளிப்பாட்டி விடறேன், குழாயில் தண்ணி வந்தால்."
திருவல்லிக்கேணி அருணாசல ஆச்சாரித் தெருவில் அன்றிலிருந்தே தண்ணிருக்குத் தகராறுதான். குழாய்க்கு அடிக்கடி சுவாஸம் கட்டி இழுக்கும். ஆனால் குடித் தனங்களுக்குக் குறைவில்லை. பட்டணத்தின் மர்மமே இதுதான்; ஆயிரம் அசெளகரியங்களிடையே அத்தியா வசியங்களைக்கூடத் தியாகம் பண்ணிக்கொண்டு நெரிசலே ஆனந்தம். வேறு வழியில்லை என்று இப்போது சொல்லிக்கொள்ளலாம். ஆனால் வழியிருந்த போதும் தேடிக்கொள்ளவில்லை. அவர்களுக்கு இஷ்ட மில்லை.
பார்வதி சித்தியை அன்று நான் முதன்முதலாகக் காண்கையில், அவளுக்கு வயது பதினெட்டுக்கும் குறைவாகத்தான் இருக்கும். ஏற்கெனவே நான் முன் பகுதிகளில் தெரிவித்திருந்தபடி, அவளுக்கு முழங்காலில் புற்றுநோய் கண்டு, கிடந்து இறக்கையில் நாற்பதைக்கூட எட்டிப் பிடிக்கவில்லை என்றே என் நினைப்பு. நோயினின்று தனக்கு மீட்சி இல்லை என்று திரிபுஅறத் தெளிவானபிறகு நோய்க்கொடுமையால் அந்திம காலத்தில் மனங்கசந்து போனாள். எனினும் எங்கள் பார்வதி சித்திபோல் தங்கமான சித்தி கிடையாது.
சித்தி பற்றி ஒரு சுவாரஸ்யமான கதாம்சம்: அவளுடைய கலியான தினத்தன்று அவளைக் கன்னிகாதானம் செய்துவிட்டுப் போன தாய் தந்தையர் அன்றிலிருந்து பிறகு அவள் செத்தாளா இருக்கிறாளா என்று எட்டிக்கூடப் பார்க்கவில்லை. அதே நிலையில் அவள் செத்தும் போனாள் எனில் இக்காலத்தில் யாரேனும் நம்புவார்களா? நம்புவார்களோ மாட்டார் களோ, உள்ளது என்னவோ அப்படித்தான். எட்டுப் பெண்களுக்கு நடுவில் அவள் ஒருத்தி ஸ்வாமி ! கைவிட்டுக் கழிந்தால் போதும், விட்டது ஒண்ணு என்கிற தத்துவம் ஸ்வாமி! என் தாயைக் காட்டிலும் அவள் நித்தியமானவள் என்றே எனக்குத் தோன்றுகிறது. அவளும் பிறந்த வீட்டைப் பற்றி ஒரு நாளேனும் நினைத்ததாகத் தெரியவில்லை. என் மனைவி ஐம்பதை எப்பவோ கடந்தாச்சு. ஆனால் மாதம் ஒரு முறை யேனும் மயிலாப்பூர் போகத் தவறுவதில்லை. (அது என் பாக்கியம்!) இவள் போன்றவர்களுக்குப் பார்வதி நிலை புரியுமோ? சந்தேகந்தான்.
அம்முவாத்துக் கிறுக்குகளில் இதுவும் ஒன்று: வந்த மருமகளுக்குப் பிறந்த வீட்டுச் சலுகை ப்ராப்தமே இல்லை என்பதால், அவளை இழிவாகப் பேசவில்லை. நடத்தவில்லை. கஞ்சியோ, கூழோ, பட்டினியோ இருப்பதற்குப் பங்குக்கு வா. இல்லாததைக் கேட்டால் அது இங்கு இல்லை என்பதுதான் அவர்கள் கொள்கை ஆனால் பார்வதி இந்த வீட்டுள் நுழைந்தபோது பட்டினிக்கட்டம் எல்லாம் தாண்டியாகிவிட்டது. சித்தப்பாவுக்கு Postal Audit (இப்போது DAG Audit) Posts and Telegraphs இலாகாவில் வேலை. அப்போது சம்பளம் ரூபாய் நாற்பதோ என்னவோ?
அண்ணாவுக்கு உடனேயே முஸ்லிம் உயர்தரப் பள்ளியில் வேலை கிடைத்துவிட்டது. அந்தப் பள்ளி இப்போது சொந்தக் கட்டடத்தில் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் இயங்குகிறது. அதனுடைய அன்றைய இடம் அண்ணைாசாலையில் (பழைய மவுண்ட் ரோடு) இன்றைய காயிதேமில்லத்தின் இடம் என்று நினைக் கிறேன். அல்லது ராயப்பேட்டையிலா? நாங்கள் குழந் தைகள் எங்களுக்கென்ன தெரியும்? இந்தச் சமயத் துக்குக் குழந்தையாயிருப்புது செளகரியமாக இல்லை? நினைவுப்பாதையில் ஒரு கோணம் அல்லது ஒரு கோணல்.
நாங்கள் வந்துவிட்டபின் அருணாசல ஆச்சாரித் தெருவில் இடம் பற்றவில்லை. ராயப்பேட்டையில் ஆண்டித் தெருவுக்குக் குடித்தனம் மாறிற்று.
பின்கட்டு எங்களுக்கு. முன்கட்டில் ஒரு பாலக் காட்டு பிராமணக் குடும்பம்; தலைவர் அதே தெருவின் மறுகோடியில், அதே சாரியில், ராயப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனைப் பார்த்துக்கொண்டு ஒரு காப்பி ஹோட்டல் நடத்திக்கொண்டிருந்தார்.
ராமையர் பிள்ளையும் ராமனே. அவருக்கு ஒரு பிள்ளை, ஒரு பெண் என்று தோன்றுகிறது. மாமி கஷ்கு முஷ்கு. இவர்கள் இந்த வரலாறுக்கு முக்கியமில்லை என்றாலும், பெண் பெயர் தங்கம் என்று சொல்லி என் ஞாபகசக்தியைச் சவாரி பழகிப் பார்க்கிறேன். மாமா, மாமி, இரண்டு குழந்தைகள், மாமா தம்பி வீரராகவன் அந்தக் குடும்பத்து நபர்கள்.
பெண்ணும் குண்டுதான். ஏன் குண்டாக இருக்க மாட்டார்கள்? பிரதி தினமும் காலையில் ஒரு பெரிய தூக்கு டப்பாவில் இட்டிலி, சட்டினி, இன்னொரு டப்பாவில் சாம்பார். யானை மண்டையாட்டம் (பித்தளையா? வெண்கலமா?) கூஜாவில் காப்பி - ஹோட்டலிலிருந்து வந்துவிடும். இந்நாள் விலைதான் பெரிசு, காற்றில் பறக்கவிடுகிற மாதிரி இருக்கிறதே. அந்த இட்டிலி அந்நாள் நாணயம் அரையணாவுக்கு ஒண்ணு; உள்ளங்கை கொள்ளாது. இரண்டு இட்டிலி சட்டினி சாம்பார் (எண்ணெய் இலவசம், சில இடங்களில் நெய்கூட ஒரு முட்டை ஸாங்ஷன்) அடிச்சு அரையனா அரை கப் காப்பி அடிச்சால் மதியம் உணவு வேளை வரை அநாயாசமாகத் தாங்கும்.
அதிலும் ஹோட்டலிலிருந்து வீட்டுக்கு வரும் இட்டிலி காப்பி, ஸ்பெஷல், முதலாளி குடும்பத்துக் கல்லவா? கேட்கணுமா?
மாமி ரொம்ப நல்ல வள். இட்டிலியை ஒரு பாத்திரத்தில் போட்டு வெஞ்சனங்களுடன் பின் கட்டுக்குப் பெண்ணிடம் சில சமயங்கள் அனுப்புவாள். நாங்கள் காக்கைகளுக்கு மேல் அடித்துக்கொள்வோம். ‘மானம் போறது!’ என்று அம்மா எங்கள் முதுகில் (முதுகுகளிலா?) அறைவாள்.
நாங்கள் வசம் கண்ட பூனைகளாகி விட்டோம். ஹோட்டலிலிருந்து வரும் டிபனை மோப்பத்திலேயே அறியும் சக்தி எங்களுக்கு வந்துவிட்டது. இடையில் சித்தப்பா காவலையும் "டேக்கா கொடுத்துவிட்டு முன்கட்டில் ஆஜராகிவிடுவோம். அவர்கள் பங்கு போட்டுச் சாப்பிடுவதைக் காக்கை மாதிரி பார்த்துக் கொண்டிருப்போம்.
மாமியும் கொடுப்பாள்.
மாமியும் குழந்தைகளும் தின்ன முடியாமல் தின்று திணறிப்போன மிச்சத்தைத் துண்டம் துண்டமாகக் காக்கைக்கு எறிகையில், எங்களுக்கு வயிறு எரியும். முன் கட்டுக்கு வரும் காக்கைகள் வாடிக்கைக் காக்கைகளோ? தனிப் பருமனாக எங்களுக்குத் தோன்றும்.
பின் கட்டுக்குத் திரும்பினதும், சித்தப்பா எங்களைத் திட்டிக்கொண்டு எள்ளுருண்டையாகக் (குள்ளபட்டா) குதிப்பார். அதெல்லாம் நிமிஷமாகத் துடைத்தெறிந்து விடுவோம். மானம் பார்த்தால் இட்டிலி கிடைக்குமா? ஆனால் சித்தப்பா குதிப்பதையும், சத்தம் போடு வதையும் பார்த்தால் பயமாய் இருக்கும்.
அதேபோல் பிற்பகல், பொட்டலங்கள் (பஜ்ஜி, பகோடா, தோசை) காபி ஸ்கிதம் வந்து சேரும். ஆனால் அதற்கு மட்டும் சில சமயங்களில், சமையலறைக் கதவு மூடிக்கொள்ளும். ஏமாந்து திரும்புவோம். அந்தத் தோசை விள்ளல்மேல் உருளைக்கிழங்கை வைத்து. கிடைக்காதா என்கிற ஆசைதான்.
மனம் இல்லாமல் எழுந்து மாமி பதினோரு மணிக்கு சமையலைத் தொடங்குவாள்.
வீரராகவன் விழிகள் கண்முன் எழுகின்றன. சிமிழ் போன்று, பெரிய அழகிய, ரப்பை சுருண்ட இமை களுடன் ஏதோ சோகம் ததும்பும் சாம்பல் விழிகள் Close upஇல், திரையை அடைத்து, அதனால் நெஞ்சை அடைக்கும் sidepose Charles Boyer, கமலஹாஸன் கண்கள். அண்ணன் தம்பிகள் இருவருமே யாருடனும் தமக்குள்ளும் அதிகம் பேசிக்கொள்ள மாட்டார்கள். ஏதோ வருவார்கள், போவார்கள். ஊஞ்சலில் உட் கார்ந்து நடுவில் செல்லத்திலிருந்து வெற்றிலை போட்டுக்கொள்வார்கள். முறுக்கானும்தான். சிவபுரி வாசனைத் துண்டுப் புகையிலை அல்ல. பாலக்காட்டுச் சுருள் புகையிலை, நெடி ஊரைத் தூக்கும்.
நாங்கள், இன்னும் ஒன்றிரண்டு வீடுகள் தவிர ஆண்டித்தெரு பூரா ஆங்கிலோ இந்தியக் குடும்பங்கள் தாம்.
எங்கள் வீட்டுக்கு நேரே வசித்த குடும்பத்தில் புருஷன் மனைவி இரண்டே பேர்கள்தாம். அவளை எல்லோரும் அம்மி என்று அழைப்போம். அவள் இயற் பெயர் Amy என்று இப்போது தோன்றுகிறது. அம்மியாவது? ஆட்டுக்கல் மாதிரிதான் உடம்பு இடை, அடித்தாங்கல் எல்லாம் பெரிது! அவளுடைய குடும்பப் பெயர் இன்றுவரை தெரியாது. இருவரும் வாட்ட சாட்டம். ஐம்பது, ஐம்பத்தைந்து வயது இருக்கும். குழந்தை குட்டி கிடையாது. குழந்தைகள் என்றால் மிகவும் ஆசை.
அவள் வீட்டில் அரை டஜன் பூனைக்குட்டிகள் வளர்ந்தன. எதிர்பாராத இடங்களில் எதிர்பாராத சமயங்களில் அவை திடுக் திடுக்கென ஒசைப்படாமல் முளைப்பது தமாஷாயிருக்கும். சில சமயங்களில் திக் திக்கென்றுகூடக் கட்டிலில் மெத்தையில் இரு தலை யணைகளுக்கிடையில், Table lamp இன் பெரிய Lampshadeஇன் இருட்டில் கண்கள் மட்டும் நிகுநிகு, மேசை இழுப்பில் அமுக்கி வைத்திருக்கும் ஆடை களுக்கு அடியில், அடுப்பங்கரைச் சாம்பல் கதகதப்பில் திடீரென Ventilator இலிருந்து தொப்பு - "மியாவ் - அதில்தான் எத்தனை boredom அம்மியின் தோள்மேல் ஒன்று வாலை விரைத்துக்கொண்டு நிற்கும். அவள் பாட்டுக்குக் கைக்காரியத்தைக் கவனித்துக் கொண் டிருப்பாள்.
ஆனால் பொதுவாக அவள் அதிகம் வீட்டு வேலை செய்வதாக எங்களுக்குத் தோன்றவில்லை. சதா எங்களோடு பேசிக்கொண்டோ, எங்கள் விளையாட்டுகளை கவனித்துக்கொண்டோ, வெறுமனே உட்கார்ந்து கொண்டிருப்பதாகத்தான் தோன்றிற்று. இப்போது நினைவுகூட்டி எடை கட்டிப் பார்க்கையில், அம்மி துரைசானி கொஞ்சம் சோம்பேறிதான். ஆயில் ட்ரம் மாதிரி அந்த உடம்பை வைத்துக்கொண்டு, அது எப்படி வணங்கும்? ஆனால் சமைக்காமல் அடுப்புச் சாம்பல் கதகதக்குமா? சாப்பிடாமல் உடம்பு அப்படிப் பருக்குமா?
Drainage, gas அடுப்பு, பேசும் படங்கள் இன்னும் வராத நாட்கள்.
ராயப்பேட்டை நெடுஞ்சாலையில், மவுண்ட் ரோடில், புரசைவாக்கம் நெடுஞ்சாலை, மயிலாப்பூர், திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னையின் இதர பிரதம பாகங்களில் டிராம் ஒடிற்று.
“கண கணாங் - கணகணாங்.." டிரைவரின் காலடியில் மணியோசை, இதோ நினைவில் எழுகிறது. இரவு வேளைகளில் மேலே மின்சாரக் கம்பியைத் தொட்டுக்கொண்டு போகையில் நீல மின்பொறிகள் பந்து பந்தாக, முடிச்சு முடிச்சாக 'விச்விச்" எனச் சத்தமிடும். ஒன்று திண்ணமாகக் கூற முடியும். என் குழந்தைகளும் உங்கள் குழந்தைகளும் ட்ராம் பார்த்ததில்லை. முக்கி முக்கி விரட்டினாலும் வேகம் பத்து, பன்னிரண்டு மைல்களுக்கு ம்ேல் எட்டாது. நடுத்தெருவை அடைத்துக் கொண்டிருந்தாலும் டிராம் விபத்துக்களால், உயிர்ச்சேதங்கள், காயங்கள்கூட நேர்ந்த தாகத் தெரியவில்லை.
ஒரு கண்டக்டர் முகம், இன்னும் மறக்கவில்லை. அடர்ந்த புருவங்கள் அடியில் தணல் விழிகள். எடுப் பான நாசி. முக்கியமாக அந்த மீசை செழிப்பாக வளர்ந்து காதடியில் அதற்கென்றே இறங்கிய கிருதா வுடன் கலந்து ஒட்டிக்கொண்டது. கன grand. ராணா ரஞ்சித்சிங், ராணா ப்ரதாப்சிங் - சரித்திரப் புத்தகப் படங்களில் சந்திக்கும் முகம்போல் தோற்றத்தை ஜாக்கிரதையாகப் பயிர்செய்து கொண்டிருந்த போதில், அந்த ஆள் தமிழன்தான் என்று பின்னால் தெரியவந்தது.
டிராமை எடுத்தபின் பல டிரைவர்கள், கண்டக்டர் குடும்பங்கள் நசித்துப் போனதாகத்தான் ஞாபகம். அவர்களுக்கு வேறெந்தத் தொழிலும் தெரியாது. பஸ்ஸுக்கும் அவர்களால் மாற முடியாது! அந்த நெரிசலுக்கும், ஆபீஸ் நேரக் கெடுபிடிக்கும், அடாவடி நியாயங்களுக்கும், நிமிட நேரத்தில் மரியாதைகள் கசங்கிப் போவதற்கும், அவர்களால் ஒருநாளும் பழக்க மாக முடியாது. நிச்சயமாக அவர்கள் கெளரவமானவர்கள்.
எதிர்எதிராக இரண்டு டிராம்கள் கடக்கையில் ஒரு டிரைவரின் உதடு அசையும். எதிர்வண்டி டிரைவரின் புருவங்கள் உயரும்; ஏதோ சேதி பரிமாறப்பட்டுவிட்டது. எனக்கு அப்பவே தோன்றிற்று - டிரைவர்கள் மூலம் டிராம்களே பேசிக்கொண்டன.
"கனகனாங் கனகனாங் கணகணி கணாங்" வழி விடப்பா, டிராமுக்குக்கூட அல்ல. மரியாதை மிகுந்த அந்த நாட்களுக்கு.
இரவு வேளையில், சில சமயங்களில் அங்கிருந்து மிஞ்சின குழம்பு, ரஸம் அம்மிக்குச் சீர் போகும். சொல்லி அனுப்பித்தால், நொட்டாங்கு அடிக்காமல் அவளே வந்து வாங்கிக்கொள்வாள் "ஆ! ப்ராமின்ஸ் குக்கிங்? நல்லா ஆச்சே! John likes especially your pepper water very much!” அம்மியைக் காட்டிலும் எங்களுக்குத்தான் மகிழ்ச்சி கூட. ஏனங்கள் திரும்பி வருகையில் ஒரு தரம்கூடக் காலியாக வரா. Plum cake, திராக்ஷைகள் ஏராளமாகப் பதித்த bun. Basra பேரீச்சம் பழம் (பார்த்திருக்கிறீர்களா? கர்ச்சூரிக்காய், வாதாம் கொட்டை, (பார்த்திருக்கிறீர்களா?) பச்சை வாழைப் பழம் -
ப்ராக்கெட்டுக்குள் இருப்பதற்குக் கோபித்துக் கொள்ளக்கூடாது. அது குழந்தை ராமாமிருதத்தின் கொக்கரிப்பு.
அம்மி எங்கள் வீட்டுள் நுழையும்போதே அவள் முன்னால் நர்த்தனமாடிக்கொண்டு வருவோம்.
“நேக்கு, நேக்கு, நேக்கு."
“பக்கிப் பொணங்கள்! பனாதைகள்! காணாததைக் கண்டமாதிரி அலையறதுகள்! மானம் இல்லை, வெட்கம் இல்லை, ரோசமில்லை!"
அந்த நாள் தமிழில் அர்ச்சனை இப்படித்தான் போலும்.
வீட்டில் குழந்தைகளே அம்மிப் பெண் குழந்தைகள்தான். அம்மாதான் திட்டுவாள். திட்டிவிட்டு அம்மாவே ரோசப்படுவாள். வேடிக்கையாக இல்லை?
சித்தி வயிற்றில் இன்னும் அன்னம் வைக்கவில்லை. ஆம் அதென்ன பாஷை ?
அம்மியின் கணவனுக்கு ஸ்பென்சரில் வாச்மேன் வேலை. காலை ஏழு, ஏழரை மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பினால், மாலை ஐந்தரை, ஆறுக்குத்தான் திரும்புவான். கையில் அம்மி கொடுத்த பார்சல் (அவள் அடுப்புக் கதகதப்புக்குக் காரணம்) தெருமுனையில் அவன் தலை மறையும் வரை வாசலில் நின்றுகொண்டு கையை ஆட்டிக்கொண்டே இருப்பாள். ஒருநாள் கூட மாறாத, எங்களுக்கும் பார்க்க அலுக்காத சடங்கு.
அபூர்வமாக என்றேனும் மாலையில் சடுதியாக வீடு திரும்பிடில், இருவரும் வாசல் தாழ்வாரத்தில் நாற்காலிகளைப் போட்டுக்கொண்டு அவள் socks அல்லது sweater ஊசிகளால் பின்னிக்கொண்டிருக்க, ஐயா வாயில் சுங்கானுடன் (pipe) இருவரும் மணிக்கணக்கில் அப்படியே உட்கார்ந்திருப்பர். இது என்ன சம்பாஷணை ? ஆனால் இருவரிடையிலும் ஏதோ போக்கு வரத்து (Communication) நடந்துகொண்டுதான் இருந்தது. இப்போது நினைத்துப் பார்க்கையில் என்ன அற்புதமான நிலை! அந்த ஆள் குரலைக் கேட்ட தாகவே எனக்கு ஞாபகமில்லை.
அண்ணா - என் தந்தை - பின்னால் எப்பவோ எனக்கு விவரம் தெரிந்த வயதில், பேச்சுவாக்கில் சொன்னார். அம்மியின் கணவன் பக்கா ஆங்கிலேயன். அம்மி ஆங்கிலோ இந்தியன். ஆகையால் அவர்கள் சந்ததிக்கு அவன் தாய்நாட்டில் இடம் கிடையாது. சரி, அம்மியுடன் அவன் திரும்பியிருந்தால் அவளுக்கும் அங்கு மதிப்பு கிடையாது (Oh, Mister! you don't know. Our class Consciousness is worse than your caste feeling) அம்மி அங்கே போய் அவமானப்படுவதை விட, இங்கிலாந்தைத் துறக்கத் தீர்மானித்து விட்டான்.
My land is no longer mine.
ஆணழகன். அம்மி போல் பீப்பாய் அல்லன். லேசாக வெள்ளி படர்ந்த மீசை, தலையில் Sailor தொப்பி. கழுத்தைச் சுற்றி muffler, முதல் உலக மஹா யுத்தத்தில் போர் முனையில் duty பார்த்தவன். சும்மா சுட்டுத் தள்ளியிருப்பான். எங்களுக்கு எங்களுடைய ஆண்டித்தெரு வயதில் அதுதான் முக்கியம்.
“My land is no longer mine.”
அவன் சொல்லக் கேட்டு அண்ணா, பிறகு எப்பவோ, எனக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் வாக்கில் சொன்னது. ஓரிரண்டு இடையினங்கள்; அவற் றுடன் மெல்லினங்கள் மலிந்து, இழைக்கும் ஓசை நயங்களுடன் பின்னணியில் ஒற்றை ஸாரங்கியின் சோகத் தேம்பல், மூச்சின் கேவல் கேட்கவில்லை?
கேட்கும் செவியைப் பழக்கிக்கொள்ள - அல்லது, நான் பழக்கிக் கொண்டதற்கு ஒர் உதாரணம்.
பெரியோரைப் புகழ்வோம்.
அம்மியின் கணவனைக் குறிப்பிடுகிறேன்.
எனக்கு இரண்டாவது தம்பி ஆண்டித் தெருவில் பிறந்தான். ஹோட்டல்கார மாமி வாசல் பக்கத்து அறையை ஒழித்துக் கொடுத்தாள். (பின்னர் நாங்களே அதை எடுத்துக்கொண்டு விட்டோம்).
பிரசவம் (வழக்கம் போல்) வீட்டில்தான் நடந்தது. மன்னிப் பாட்டி, midwife உதவியுடன். ஆனால் என்ன கோளாறென்று தெரியவில்லை. முறைப்படி அம்மாவை ஸ்நானம் செய்வித்து வீட்டுக்குள் அழைத்துக் கொள்ள வில்லை. புண்ணியாவாசனம் நடக்கவில்லை. ஒரு ஜவ்வரிசிப் பாயசம்கூட வைக்கவில்லை.
திடீரென்று ஒருநாள் வாசலில் ஜட்கா வந்து நின்றது. அம்மாவை மன்னி தாங்கிக் கொண்டு வந்து ஏற்றித் தானும் ஏறிக்கொண்டாள். வண்டி பறந்தது. பின்னால் அண்ணா சைக்கிளில் கூடவே போனார். குழந்தையையும் கூடவே.
"சித்தி! அம்மாவை எங்கே அழைச்சுண்டு போறா ?”
"உஷ். குழந்தைகளா, விளையாடப் போங்கோ."
அம்மா அப்போ போனவள்தான்.
மன்னி இரவு வீட்டில் படுக்கவில்லை. காலை ஒன்பது மணி வாக்கில் அவசரமாக வந்து, பல் விளக்கு கிறாள்; காபி, ஸ்நானம். அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு, இரவுக்குத் தனக்கு எதையோ கட்டி எடுத்துக்கொண்டு போகிறாள். மறுபடியும் அவளைப் பார்க்க முடிவது மறுநாள் காலைதான்.
அண்ணா பள்ளிக்கூடம் போகிறார். சித்தப்பா ஆபீஸ் போகிறார்.
சித்தி சமைக்கிறாள். விட்டுக் காரியம் பார்க்கிறாள். முடிந்தபோது முன்கட்டு மாமியுடன் கிசுகிசு. நான் அந்தப் பக்கம் வந்தால் பேச்சே அடங்கிவிடுகிறது.
சிவாவும் பானுவும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
நான்தான் இருப்புக் கொள்ளாமல் வீட்டுள் சுற்றிச் சுற்றி வருகிறேன். வெறிச்சோன்னு இருக்கு. காடுன்னா இப்படித்தான் இருக்குமா ? ஏதோ பயம்மா. அம்மா இங்கேயே எங்கேனும் ஒர் அறையில் ஒளிஞ்சுண்டு கண்ணாமூச்சி காட்றாளா? அம்பிப் பாப்பா? அக்கறை இல்லை. அம்மாதான் வேணும்.
"அண்ணா, அம்மா எப்போ வருவா ?”
"எல்லாம் வருவாள். போடா என்னைத் தொந்தரவு பண்ணாதே."
இதென்ன தாத்தா - அதான் அப்பா - இல்லை, அதான் தாத்தா, முன்னே பின்னே தெரியாமே, திடீரென்று ஊரிலேருந்து வரா? அந்த ஆறடியும், கற்பூரக் கொழுந்து போன்ற அந்தச் சிவப்பும், நிமிர்ந்த முதுகையும் (உபமானங்கள் இப்போதவை) அன்றுதான் முதலாகப் பார்க்கிறேன் போலும். ஏதோ தைரியம் என் உள் புகுவதை உணர முடிகிறது.
அன்று மாலை ஆஸ்பத்திரியிலிருந்து அவர் வீடு திரும்பியதும் அவருடைய நோட்டுப் புத்தகத்தில் மணிமணியாக எழுதிக் கொண்டிருக்கிறார். மனசில் ஆயிரம் சந்தேகங்களுடன் அவரை அணுகுகிறேன்.
“தாத் - அப்பா, அம்மா எப்போ வருவா?”
"அதே கேள்வியைத்தான் இப்போ நான் அவளைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.”
“எவளை ?”
முகம் நிமிர்ந்து என்னைப் பார்க்கிறார். லேசாகப் புன்முறுவல் பூக்கிறார். என் தலைமேல் கையை வைக்கிறார். கை சுடுகிறது.
எனக்குத் திடீரென்று அழுகை வருகிறது. கூடவே சிரிப்பும் வருகிறது.
அதுதான் அவளோ?
----------
அத்தியாயம் 16
மன்னி புறப்பட்டுக் கொண்டிருக்கிறாள்.
“மன்னி, அம்மா எப்ப வருவா? நீங்கள் எங்கே போறேள் ?”
பாட்டி முகம் சுளிக்கிறாள். “இது என்னடி அபசகுனம் மாதிரி! போடா உள்ளே!”
“சித்தப்பா, அம்மா எப்போ வருவா ?”
"அம்மா எப்ப வரணும்னு பெரிய வாளுக்குத் தெரியும். நீ அம்மியாத்துக்கு விளையாடப் போ”
சித்தப்பாவே அம்மியாத்துக்குப் போகப் பர்மிஷன் குடுக்கறான்னா பயமாயிருக்கு.
"அம்மி, அம்மா எப்போ வருவா?”
அம்மி என் தோள்மேல் கையை வைத்து நாற்காலி யிலிருந்து எழுந்திருக்கிறாள். மலை எழுந்திருக்கிற மாதிரி. அவளால் முடியவில்லை. என்னை உள்ளே அழைத்துச் செல்கிறாள்; படுக்கை அறையில் சுவரில் ஆள் உயரத்துக்கு ஒரு பெரிய படம். அழகான முகம்: தாடி, தலையைச் சுற்றி ஒரு முள் மகுடம். ஆள் சிலுவையிலிருந்து தொங்குகிறான். இடுப்பைச் சுற்றி அந்த இடத்தை மட்டும் மூடிக்கொண்டு கொஞ்சம் துணி. இரண்டு புது மெழுகுவர்த்திகளைக் கொண்டு வந்து, அம்மி படத்துக்கு எதிரே வைத்து ஏற்றி மண்டியிடுகிறாள். என்னையும் மண்டியிட ஜாடை காட்டு கிறாள். ஆனால் நான் மாட்டேன். அவளைப் பார்த்துக் கொண்டு நிற்கிறேன். அவள் கண்ணை மூடிக்கொண்டு தலை குனிகிறாள். அம்மி என்ன செய்கிறாள்? சற்று நேரம் கழித்து அம்மி கண்ணைத் திறக்கிறாள். என்னை மெதுவாக அறையை விட்டு அழைத்துக்-கொண்டு போய் ஒரு சின்ன பீங்கான் தட்டில் பிஸ்கட், வாழைப் பழம் இன்னும் ஏதேதோ எடுத்து அடுக்குகிறாள்.
எனக்கு.
ஆனால், எனக்கு இப்போ வேண்டியில்லை. நான் தொடக்கூட இல்லை. வெளியேறுகிறேன்.
ஒருநாள் திடீர்னு வீடு பளிச்சிடுகிறது. வாசலில் கோலம் போட்டு, செம்மண்ணிட்டு உள்ளே வாசல் அறையில் கட்டிலைத் தயார் பண்ணி, புது தலகாணி உறை –
அம்மா வரப்போறா.
அம்மா வந்துட்டா.
வாசலில் ஜட்கா நிக்கிறது. வாசலில் சின்னவா பெரியவா எல்லாருமே கூடி இருக்கிறோம்.
ஆனால் மன்னி மேல் ஒருமட்டா தாங்கிக்கொண்டு ஜட் காவிலிருந்து இறங்குவது அம்மாவா? இது அம்மாதானா? அம்மா மாதிரி யாரோவா? குழி விழுந்து கன்னம் ஒட்டிப்போய், தேஞ்சு மாஞ்சு -
"அம்மாப்பொண்ணே, வந்தையா? வாடியம்மா? - தாத்தா, “நான்தான் அன்னிக்கே சொன்னேனே. அவள் என்ன சத்தியம் மறந்தவளா?” பாடுகிறார். வெண்கலப் பானை மேல் கரண்டியை அடித்தாற் போல் ‘கும்’ கொடுத்து அந்தக் “கணிர்’ அலை பாய்ந்தது.
அம்மா போய்க் கட்டிலில் சாய்கிறாள். அவள் அருகில் கட்டிலில் சுண்டு விரலுக்குக் கையும் காலும் முளைத்தாற்போல் ஏதோ ஒண்ணு நெளியறது.
"அம்பிப் பாப்பாடா!”
வியப்புடன் பார்க்கிறேன். இது என் தம்பியாமே! விரலான்.
பாதி இரவில் திடுக்கென முழிச்சுக்கறேன். இல்லை, எனக்குத் தூக்கமே வரல்லியோ என்னவோ?
ஒசைப்படாமல் எழுந்து அடிமேல் அடி வெச்சு - கும்மிருட்டு, பயமாத்தானிருக்கு - ஆனாலும் முன் கட்டுக்குப் போறேன். கதவை மெதுவா திறக்கிறேன்.
விடிவிளக்கில் கட்டில்மேல் அம்மா தெரியறா. உட்கார்ந்துண்டு பாப்பாவுக்குப் பால் கொடுத்துண்டு இருக்கா என்னை அடையாளம் கண்டுண்டதும் அவள் விழிகள் நாவல் பழம் மாதிரிப் பளப்பள - ஒரே பேப்பர் மாதிரி வெளுத்திருக்கா. நான் உள்ளே வரக் காலை எடுத்து வைக்க முன்னிடுவதைக் கண்டதும் மறுக்கும் பாவனையில் தலையை பலமாக ஆட்டுகிறாள்.
"அம்மா, உன்னை நான் தொடணுமே!” புன்னகை புரிகிறாள்.
"உன்னைத் தொடத்தான் தொடுவேன்!” என் முனகல் உயர்கிறது. தரைமேல் காலைப் பிடிவாதத்தில் உதைக்கிறேன்.
"உஷ்!" உதட்டின்மேல் கையை வைத்துத் தரையில் சுருண்டு படுத்திருக்கும் உருவத்தைக் காட்டுகிறாள்.
மன்னிப் பாட்டி குறட்டை விடுகிறாள். பாவம் சரியான அசதி,
"ஒரே ஒருவாட்டி!"
அம்மாவின் கண்களில் தயக்கம் தலைகாட்டுகிறது. அடுத்த நிமிஷமே திடம் திரும்பிக் கூடாது என்று தலையை பலமாக ஆட்டுகிறாள்.
தாங்க முடியாத அசதி என்மேல் படருகிறது. திரும்பி என் இடத்துக்கு வந்து கவிழ்கிறேன்.
அழுகை பீரிடுகிறது.
அம்மா, நீ செத்துப் போ.
இரவு வேளை.
தாத்தா - அதான் - அப்பா - அதான் தாத்தா - சரி அப்பா, சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். கொத்த மல்லித் துவையல் அடுத்து புடலங்காய் பொரித்த குழம்பு. தாத்தாவுக்கு ரொம்பப் புடிக்கும்.
எங்களுக்கும் புடிக்கும். எங்களுக்குச் சாப்பாடு ஆயிடுத்து.
லாந்தர் வெளிச்சத்தில் தாத்தாவின் வாழை இலையில் துவையல் சாதம் மேல் நெய் பளபளப்பதைப் பார்க்கையில் எனக்கு மறுபடியும் பசிக்கவே ஆரம்பிச்சாச்சு.
ஏன் என் தட்டில் என் சாதம் இவ்வளவு நன்னா இல்லை? என் தட்டில் மாத்திரம் ஏதோ சிதறி, குதறி ஆறிப்போய், சளசளா, சொள சொளா - தாத்தா ஒரு பக்கம் மேடு கட்டிக் கொஞ்சம் கொஞ்சமாத் தள்ளித் தள்ளி மொத்தையடிக்கிறார். பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு அவர் வாய்க்கும் கைக்கும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
தாத்தா சப்பளம் மாற்றி ஒரு காலை மண்டியிட்டுக் கொள்கிறார். ஒரு கையைத் தரையில் ஊன்றிக் கொள்கிறார். துவையலுக்குப் பின் பொரித்த குழம்பு சாதம். அப்பறம் ரசஞ்சாதம். உள்ளே வேகிறேன். எங்களுக்குத் தொட்டுக்க மட்டும் பொரிச்ச குழம்பு. அப்பறம் நேரே மோருஞ் சாதம். தாத்தாவுக்கு மட்டும் இத்தனை சாதமோ? ரசஞ்சாதம் முடித்தபின் தாத்தா இலையை ஸ்பெஷலாக வழிக்கிறார்.
சித்தி ஒரு ஒரத்தில் சர்க்கரை வைக்கிறாள்.
"ஏய், பாலுஞ்சாதம் !"
தாத்தா தளரப் பிசைந்த அன்னத்தைத் தூக்கித் தூக்கி வாய்க்குள் எறிந்துகொள்கிறார். பூனைபோல் ஏதோ முனகல்கள் அவரிடமிருந்து வெளிப்படுகின்றன. அனுபவித்துச் சாப்பிடுகிறார். எனக்குத் தாங்க முடிய வில்லை. என் வாயிலிருந்து 'சொள்ளு தரையில் சொட்டுகிறது. தாத்தா பார்த்துவிடுகிறார். அவருக்கு முகம் சுளிக்கிறது.
"ஹும்! இதுகளைத் துரங்கப் பண்ணப்படாதா எனக்குப் படைக்கு முன்?”
"எல்லாரும் தூங்கியாச்சு. இவன்தான் இப்படி!"
"கிட்ட வந்து தொலை!” இரண்டு கவளங்கள் அள்ளி, குருவிபோல் திறந்த என் வாயுள் எறிகிறார். அப்பா, என்ன ருசி! என்ன ருசி!
அந்தப் பிரசாதம்தான் என்னிடம் ஏதோ ஒர் அளவுக்கு இப்பவும் பேசுகிறதோ?
அம்மாவுக்குச் சாதம் போடும்போதெல்லாம் மன்னி கதவை மூடிக்கொள்கிறாள். அப்படியும் அவாளுக்குத் தெரியாமல் நான் தலையை உள்ளே நீட்டுகிறேன்.
அம்மாவின் கை வழிய முழு நெய், அம்மாவுக்கு மட்டும் தனிச் சமையல்; கெட்டித் தயிர். பாட்டி என்னைப் பார்த்துவிட்டாள். எழுந்து ஓடி வருகிறாள்.
“ஒடு! ஒடு! மத்ததெல்லாம் இவன் மாதிரி இருக்கா பாரு. இவனுக்குத்தான் இந்த நுழைநரித்தனமெல்லாம்!”
சாப்பாடு முடிஞ்சதும் பாட்டி குட்டி குட்டியா அம்பது வெற்றிலையேனும் இருக்கும்; தனித்தனியா மடிச்சு ஒரு துடைப்பக் குசசியில் அத்தனையும் செருகி அம்மாவிடம் எறிகிறாள்.
"சாறை மட்டும் முழுங்கு. சக்கை ஜீரணமாகாது.”
அம்மா முகத்தின் சுண்ணாம்பு வெளுப்பில் உதடுகள் மட்டும் வெகு சீக்கிரம் ரத்தச் சிவப்புக் கொள்கின்றன.
நாளடைவில் அந்தச் சிவப்பு அம்மாவின் கன்னங் களுக்கு, நெற்றிக்கு ரோஸா பரவறது. ராத்திரி ஒரு டம்ளர் நிறையப் பால்,
அப்புறம் காலை ஒரு ஆறு, ஏழு மணிவாக்கில் கிட்டத்தட்ட ஒரு எலுமிச்சம்பழ அளவில் மருந்து தின்கிறாள். பிள்ளை பெற்றாள் லேகியம் பண்ணின சூட்டில் எங்களுக்கும் ஆளுக்கு ஒரு சுண்டைக்காய் கிடைத்தது. ஒரே காரம், கொஞ்சம் கசப்பு. ஆனால் தாண்டி ஒரு தித்திப்பு. நெய் எல்லாம் சேர்ந்து என்னவோ ரொம்ப ஜோர்.
அம்மா அறையை விட்டு வெளியே வந்து படிப் படியாக வீட்டுக் காரியங்களில் படிய ஆரம்பித்த பின்னரும் ரொம்ப நாளைக்கு அந்த மருந்து மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். வலிக்கிறதா?
"அது என்ன ராத்திரி கண் மூடறவரையில் வாய் மூடாப் பட்டினியோ, சதா எதையேனும் அரைச் சிண்டு ! கொட்டடா குடையடான்னு அந்த உடம்பு என்னத்துக்குத்தான் இப்படி அலையறதோ?” மத்யானம் இட்டிலிக்குச் சட்டினிக்கு உடைச்ச கடலை வாங்கி வெச்சிருந்தால் பொட்டலம் காலி, வெல்ல டப்பாவில் திடீர் திடீர் என பெரிய கட்டி சின்னக் கடடிகளாகத் தானே பிட்டுக்கொள்ளும்.
“யாரு? அவன்தான். எங்கேடிம்மா வெச்சுக் காப் பாத்தறது? வயத்துலதான் வெச்சுக் காப்பாத்தனும்!”
“அவன் வயத்துலதானே வெச்சுக்கறான்!”
அம்மாவுக்கு ரோசமாயிருக்கு. பல்லைக் கடிக் கிறாள். அடிக்கிறாள். நேக்குச் சிரிப்பாயிருக்கு.
ஒருநாள் பின்கட்டில், எல்லோரும் பேசிக்கொண் டிருக்கையில், முன் அறையில், என்னுடைய அனுமார் தேடலில் ஜன்னல் பிடிச்சுவரில் மருந்து பாட்டிலைப் பார்த்துவிடுகிறேன். நேற்றுத்தான் மறுபடியும் மன்னி புதுசா பண்ணி, பாட்டில் நெறைய அடைச்சு வெச்சிருக்கு. சுற்றுமுற்றும் பார்த்துவிட்டுத் திறந்து வழித்துப் போட்டுக் கொள்கிறேன். காரம் காதில் சுரீல் என்கிறது. ஆனால் நாக்கடியில் கூடவே தேனும் வெல்லமும் தித்திக்கிறதே! பத்திரமா மூடிவிட்டு வெளியே சற்று நேரம் - வெளியே என்ன, வீட்டு உள்ளேதான் – மறுபடியும் –
மறுபடியும் - போக வரப் புளியம் பொந்தில் கை விட்டுக் கொண்டிருக்கிறேன்.
இரண்டாம் வேளை குழந்தைகளுக்குச் சாப்பாட்டு நேரம் வந்துவிட்டது. வட்டமா எங்களை உட்கார வைத்து மன்னி, கல்சட்டியில் பழையதைப் பிசைந்து கையில் போடுகிறாள்.
"என்னடா தூங்கித் தூங்கி வழியறே?"
ஆமாம், அதென்ன அப்படியொரு தூக்கம் வரது!
கை அலம்பினதாகக்கூட ஞாபகம் இல்லை. முன் அறையில் அடுக்கி வெச்சிருக்கும் பாய் தலைகாணிமேல் விழுகிறேன். அதற்கு முன்னால் சாப்பிட்ட வாய்க்கு ஒரு பெரிய பாச்சாக் கோலிக் குண்டளவு.
ஆனால் எனக்குத் தூக்கமாக வரவில்லை. என்னவோ என் அடியில் தரை வளைஞ்சு நகர்றமாதிரி இருக்கு. சுவர் சுத்திச் சுத்தி மிதக்கிறது. கண்ணுக்கெதிரே என்னென்னவோ பெரிசு பெரிசா நான் இதுவரை பார்க்காத பூச்சிகள், புழுக்கள், பல்லிகள், முள்ளு, கொம்பு பெரிசு பெரிசா நெளியறதுகள். வெளிச்சங்கள், கலர் கலரா மாறி மாறி அதிலிருந்து இன்னும் ஏதேதோ ஐந்துக்கள், குடைகள் சிலந்தி –
பயம்.ம்.மாயிருக்கு.
"அம்மா!” அலறுகிறேன். அம்மா பதைபதைத்துப் பின்கட்டிலிருந்து ஒடி வருகிறாள். பசு மாதிரியிருக்காள். அவளைக் கட்டிக்கிறேன். சிரிக்கிறேன். அழறேன். சிரிக்கிறேன். எங்கோ சுட்டிக் காண்பிக்கிறேன். "அங்கே பாத்தியா, சாமி வரார் எருமை மாட்டு மேலே "
“மன்னி இங்கே வாங்களேன்! குழந்தையைப் பாருங்களேன்!”
மன்னி என்னைத் தன் மடியில் கிடத்திக்கொள் கிறாள். "என்னடி இவன் வாயோரம் கறுப்பாயிருக்கு?
அம்மாவுக்குப் பளிச்சின்னு விஷயம் உதயமாகிறது. எழுந்து ஒடிப்போய் மருந்து பாட்டிலைக் கொண்டு வருகிறாள். அம்மாவின் விழிகள் வட்டம் சுழல்கின்றன. மன்னி முகத்துக்கெதிர், பாட்டிலைத் துரக்கிப் பிடிக்கிறாள்.
"என்னடி அம்மாப்பெண்ணே ?” பாட்டில் பாதிக்கு மேல் காலி.
"ஐயய்யோ! மருந்தில் கஞ்சா சேர்ந்திருக்குடி விஸ்வனாதன் செட்டி எழுதின ப்ரகாரம்!”
“பெருந்திருவே கருப்பண்ணா!"
வீடு அல்லோலப்படுகிறது. எனக்கு எல்லாம் அக்கரையில் தெரியறாப்போல இருக்கு.
அண்ணாவுக்குச் சொல்லி அனுப்பி, வருகிறார். தலையில் டர்பன்; கழுத்துவரை க்ளோஸ் கோட் ஒரு கையில் பஞ்சகச்சத்தின் கொடுக்கைப் பிடித்துக் கொண்டு நிற்கிறார்.
என்ன கம்பீரம் ! அண்ணாவுக்குக் கொஞ்சம் ஜவஹர்லால் நேரு ஜாடை உண்டு.
கன்னத்துள் நாக்கைத் துழாவிக்கொண்டு. அண்ணாவுக்கு எப்பவுமே ஒரு நமுட்டு விஷமச் சிரிப்பு உண்டு. இப்பவும் இருக்கு.
மன்னி என்னைத் தூக்கிக்கொள்கிறாள். நெற்றியில் விபூதி இடுகிறாள். அடுத்த தெருவில் ராயப்பேட்டை ஆஸ்பத்திரி மதில் ஒடுகிறது. பெருந்திரு கருப்பண்ணன் துணை.
என்னை நாற்காலியில் உட்கார வைத்துத் தொண்டை வழியாகப் புனல் வைத்த ரப்பர் குழாயை வயிற்றுள் இறக்கி மருந்தோ, தண்ணியோ - இல்லை, இரண்டுமோ அதனுள் ஊற்றி, என்னவோ பண்ணி - மறுக்கி மறுக்கி வாந்தியெடுக்கிறேன். நான் தின்ற மருந்து கோழையுடன் சடைசடையாக வெளியே பேஸனில் வந்து விழறது.
ரெண்டு மூணு தடவை அப்படிப் பண்ணி எனக்கு வயிறு புண்ணா வலிக்கிறது. ஆனா அவா விடறதா இல்லை. கடைசியா வாந்தியில் இனிக் கலப்படம் இல்லை என்று தெளிந்த பின்னர்தான் குழாயை ஒருவாறு வெளியே எடுக்கிறார்கள். நான் வாயில், மோவாயில், மார்பில் கொழுகொழுன்னு எச்சில் தண்ணியா ஒட ஒட அழுது கொண்டிருக்கிறேன். அதில் கொஞ்சம் அழுகைக்காக அழுகையும் கலந்திருக்கும் என்று இப்போது தோன்றுகிறது.
அன்று என்னை வீட்டுக்கு அனுப்பவில்லை. மன்னி தான் கட்டிலின் கீழ்த்தரையில் படுத்துக் கொள்கிறாள்.
“Wake up, Sonny, your mother has come to take you home! "
ஜன்னல் வழியாகப் பொற்கிரணங்கள் துTலம் பாய்கின்றன.
“ராமாமிருதம்..."
என் முகத்தின் மேல் குனிவது இது என்ன முகம்? சூரியனைவிட வெளிச்சமான முகம்! அந்தக் கண்களில் விளையாடி, கன்னங்களில் வழியும் அந்தக் கருணையை, அந்த ஆசையை, அந்த அன்பை, அந்தப் பாசத்தை, அப்படியே அள்ளித் திங்கணும்போல் இருக்கு. ஆனால் தின்ன முடியாதா?
என்னிக்கும் அம்மா அம்மாதான்.
அதிலும் நீ நீதான்.
-------------
அத்தியாயம் 17
நாளடைவில், ஆண்டித்தெரு வீட்டு இடம் எங்களைக் கொள்ள முடியவில்லை. வளரும் குழந் தைகள். சித்தி வயிற்றில் வேறு, 'அன்னம்' வைத்து விட்டது. (அப்படி என்றால் என்ன ?) மன்னியும் தாத்தாவும் ஒன்றாகவோ, மாறி மாறியோ, லால்குடியில் பாதி, பட்டணத்தில் பாதி நாளாக வந்து போய்க் கொண்டிருந்தனர். சமாளிக்க முடியாத நிலைமை வந்த பிறகுதான் அம்முவாத்தில் மாறுதலுக்குத் தயாரா வார்கள். அந்தச் சுபாவம் என்னிடமும் போகவில்லை என்பது என் மக்களுடைய கருத்து.
ராயப்பேட்டையிலேயே முத்து முதலித் தெருவுக்குக் குடித்தனம் மாறிற்று. ஏய்டி, பழைய வீட்டைவிட இங்கே நிஜம்மாகவே இடம் தாராளம். இங்கே சித்தப்பாவுக்கும் தனி அறை. எங்களை ராத்திரி வேளையிலேனும் போட்டு அடைக்க எப்பவுமே, அண்ணா, அம்மாவுடன் தனி இடம் உண்டே!
இங்கேயும் பின் கட்டுதான். இந்த இரண்டு படுக்கையறைக்கும் சமையலறைக்கும் இடையே மானம் பார்த்த பெரிய தாராளமான தாழ்வாரம். தாத்தாவும் பாட்டியும் அநேகமாக அங்கேதான் வாசம். முற்றத்தில் தான் குழந்தைகளுக்கு அநேகமாக ராச்சாப்பாடு, நிலாச்சாப்பாடு. வழக்கமான மோருஞ்சாதத்தையே பிசைந்து மன்னி எங்களுக்கு நிலாவில் போட்டால், நிலாச் சாப்பாடு.
இந்த வீட்டிலும் இரண்டு குடித்தனங்கள்தாம். ஆனால் முன் கட்டுக்காரர்களுடன் நாங்கள் - (நாங்கள் என்றால் குழந்தைகளைச் சொல்கிறேன்) ஒட்டிக் கொள்ள முடியவில்லை. அதற்குக் காரணம் வீடு கட்டி யிருக்கும் வாகோ, மனுஷாள் வாகோ, அறியேன். முதலில் அவர்கள் ஒட்டல் வைத்து நடத்தவில்லை. அம்மி மாதிரி அவர்களிடமிருந்து எங்களுக்கு ஸ்வா ரஸ்யமான வரவு இல்லை, வரவே இல்லை.
வீட்டுக்கு இரண்டு பெரிய திண்ணைகள். அங்கு உட்கார்ந்தபடி தெருவில் பறக்கும் வண்டிகளையும் ஜன நடமாட்டத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண் டிருக்கவே எங்களுக்குப் பொழுது போதவில்லை.
ஒரிரு முறை, அம்மி அவளுக்குரிய புன்னகை யுடனும் வந்தாள். எங்களையும் ஒரிரு முறை தன்னுடன் அழைத்துக்கொண்டு போய் வைத்துக்கொண்டு, மாலையில் திரும்பக் கொணர்ந்து விட்டாள்.
ஆனால் அதுவே படிந்த பழக்கமாக எப்படிச் சாத்தியமாகும்? எங்களுக்கும் அக்கறை மங்கிவிட்டது. நான் சொல்கிறேன் கேளுங்கள். குழந்தைகளைப் போன்ற இரக்கமற்ற ஐந்துக்கள் கிடையாது. அவர் களுடைய மறதி சட்டானது, கொடுரமானது. Out of Sight, out of mind - பெரியவர்களுக்கே வசனம் துணை யிருக்கிறதே, சிறியவர்களைப் பற்றிக் கேட்பானேன்!
சமீப காலமாகவே, ஒரு கேள்வி என்னை உறுத்திக் கொண்டிருக்கிறது. வட்டத்தின் சுற்றுக் கோடு முடிவதற்குத் தன் ஆரம்ப இடத்தை நெருங்கிக் கொண்டிருப்பதாலா?
ஒரு வாழ்நாளில், எத்தனைபேரைச் சந்தித்தாகிறது? எத்தனை நட்புகள், பழகிய கட்டங்கள் நேர்கின்றன. அந்தப் போதுக்கு - நமக்கு ஆகாதவர்களாக, ஆனவர் போக - அந்த நட்புகள், அந்த முகங்கள் இனியவை யாகத்தான் இருந்தன. ஆனால் அந்தத் தொடர்பு களை ஏன் நம்மால் கடைசிவரை பேணிக் காப்பாற்ற முடியவில்லை.
நான் S.S.I.C. பரீட்சை எழுதும்போது எனக்கு வயது பதினைந்துக்கும் பதினாறுக்கும் இடையில். பின்னால் குட்டெழுத்து, தட்டெழுத்துப் பரீட்சைகளில் தேறினேன். என் மொத்தப் படிப்பே அதோடு சரி. என்னையும், எங்கள் வீட்டில் அண்ணாவிடம் படித்துக் கொண்டிருந்த மாமா பிள்ளையையும், அப்போது கள்ளிக்கோட்டையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த என் மாமா வீட்டுக்குக் கோடை விடுமுறைக்காக அண்ணா அனுப்பினார். என் முதல் தனியான ரெயில் பயணம். அண்ணா எங்களை ஏற்றிய பெட்டியில் தற்செயலாக அந்த மார்க்கமாகப் போய்க்கொண் டிருந்த ஒரு குடும்பத்தை, என்னைக் கண்காணித்துக் கொள்ளும்படி அண்ணா கேட்டுக்கொண்டு, பெரியவர் களின் வழக்கப்படி எங்கள் விடுதலைச் சிறகுச் சந்தோ ஷத்தைக் கெடுத்துவிட்டார்.
அந்த மாமாவுக்குச் சுமார் 55 வயது இருக்கலாம். வேட்டி, கோட், தலையில் ஒரு சவுக்கத்தை முண்டாசு கட்டியிருந்தார் - பனிக்கென்று நினைக்கிறேன். கடைசி வரை தானாகவும் தளரவில்லை. அவரும் அவிழ்க்க வில்லை. மாமி வாட்டசாட்டமாகக் கொஞ்சம் குண்டு. இரண்டு பெரிய பெண்கள். இரண்டு பெரிய ஆண் பசங்கள்.
எங்களை கவனித்துக்கொள்ளும் காரணமாக அவர்கள் எங்கள் வழிக்கு வரவில்லை. எங்களுடன் பேச்சுத் தொடங்கவில்லை. மாமா பேரை மட்டும் கேட்டார். அதோடு சரி. புகை வராத ஒரு சுங்கானைப் பற்களுக்கிடையில் கடித்துக்கொண்டு, அவர் பாட்டுக்கு ஏதோ புத்தகம் படித்துக்கொண்டிருந்தார். குடும்பத்தில் மற்றவர்கள் தங்களுக்கிடையில் ஏதோ பேசிக் கொட்ட மடித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் பாஷையே வேறு. துளு என்று பின்னர் அறிய வந்தேன்.
நாங்கள் கொஞ்ச நேரம் வெளியே வேடிக்கை பார்த் தோம். அம்மா பண்ணிக்-கொண்டிருந்த நொறுக்குத் தீனியை மொக்கினோம். அவர்களுக்கும் கொடுக்கலாம் என்று எங்களுக்குத் தோன்றவில்லை. எங்களை ஒத்த வயதினர் அவர்கள் இல்லை. இருந்திருந்தால் கொடுக்க மனம் இருக்காது. ஆக மொத்தம் பலன் என்னவோ ஒன்றுதான்.
இன்னும் கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்தோம். பசிகட முழுக் காரணம் இல்லை. பொழுது போக வில்லை. ராச் சாப்பாட்டுக்குக் கட்டிக் கொடுத்திருந்த தயிர்ச்சாதம், எலுமிச்சம்பழச் சாதப் பொட்டலங் களைக் காலி பண்ணினோம், கையலம்பினோம். இடுப்பு நோகத் தலைப்பட்டது. எத்தனை நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது? படுத்தோம். காலை நீட்டினோம். வண்டியின் தாலாட்டில் கண் சொக்கித் தூங்கியே போனோம்.
காலை வெயில் சூடு கண்ணில் பட்டு, எங்களை எழுப்பிற்று. அவசரமாகப் பல்லை விளக்கிவிட்டு, அம்மா வார்த்துக் கொடுத்திருந்த இட்டிலிப் பொட்ட லத்தை அவிழ்த்தோம். எண்ணெயும், நெய்யும், மிளகாய்ப் பொடிக் கலவையில் அப்படியே இரண்டு பக்கங்களிலும் படும்படி தனித்தனியாக முக்கி எடுத்து, லேசாகத் தண்ணிர் தெளித்து ஊறிய இட்லியைத் தின்று பாருங்கள்.
ருசி முதற்கொண்டு சொல்லிக் கொடுக்கும் நாளாகி விட்டதே இந்தக் காலம்! ஊசிப்போன சட்டினிக்கு அவன் இன்னொரு பேர் வைத்துக் குட்டித் தட்டில் மேசைமேல் கொண்டுவந்து வைத்தால், தனியாகக் காசு கொடுத்துக் கண்டேன் கண்டேன் என்று விழுங்கு வீர்கள்! இப்படி எழுத்தில் விழுந்துவிட்டதற்காக, உங்களுக்குக் கோபம் வராமல் இருப்பதற்காக, நான் துணைக்கு உங்களுடன் சேர்ந்து விழுங்குகிறேன்!)
அவர்கள் எங்களை அங்கு இருப்பதாக பாவித்துக் கண்ணெடுத்துக்கூடப் பார்க்கவில்லை. இதுதான் எங்களைக் கவனித்துக் கொள்வதா? அண்ணா இவர் களிடம் ஏன் எங்களை ஒப்படைக்கணும்? எனக்குச் சாவகாசமாக அவர்கள் மேல் கோபம் வந்தது. கள்ளிக் கோட்டை (கோழிக்கோடு) போய்ச்சேர முற்பகல் பதினோரு மணி பிடிக்கும். அதுவரை என் செய்வது? புரியவில்லை. காபி இல்லாமல் பிரம்மஹத்தி பிடித்த மாதிரி ஆகிவிட்டது.
ரெயில், எட்டு மணிவாக்கில் ஒரு பெரிய ஸ்டேஷனில் வந்து நின்றது. அந்தக் குடும்பம் சுறுசுறுப்புக் காண ஆரம்பித்தது. மேல் ராக்கிலிருந்து (Rack) மாமா ஒரு 'டின்னை இறக்கினார். ஆண் பிள்ளைகள் இருவரும் யானை மண்டை போன்ற ஒரு பெரிய வெண்கலக் கூஜா சொம்பு, இரண்டு மூன்று பாட்டில்களுடன் வண்டியை விட்டுக் கீழே இறங் கினர். வண்டியின் 'டிகானா இங்கே பெரிசாகத்தான் இருக்கும்போல இருக்கு. எஞ்சின் அவ்வளவு நீண்ட மூச்சு விட்டது. சற்று நேரம் கழித்து வண்டித் தொடரே ஆடிற்று. எஞ்சினை மாற்றுகிறார்கள் போல இருக்கு.
அந்த அம்மா, டின்னை நாலு காலில் கட்டி இருக்கும் கயிற்றை அவிழ்த்து டின்னின் மேல் மூடியைத் திறக்கும் காரியத்தில் முனைந்திருப்பதை நான் சுவாரஸ்யமாக கவனிக்கிறேன். இதில்தான் எனக்குச் சின்னஞ்சிறு வயதிலிருந்தே 'ஸர்விஸ் ஆச்சே ! என்னென்னவோ பொட்டலங்கள், டப்பாக்கள்; எடுத்து வைக்கிறாள். எத்தனை நாழி பண்றாள்?
யானை அடி அகலத்துக்கு மும்மூன்று பூரி எடுத்து அதன்மேல் ஒரு டப்பாவிலிருந்து திரட்டுப்பால் போன்று கெட்டியான ஒரு பாகை ஏற்றி எங்களிடம் நீட்டுகிறாள். போணி எங்களுக்குத்தான். சட்டென்று ஊறிவிட்ட எச்சிலை (சனியனே) விழுங்கிக்கொண்டு, "நாங்கள் உங்களுக்குக் கொடுக்கல்லியே! எப்படி வாங்கிக்கிறது? எங்கள் அப்பா கோவிச்சுப்பா !” என்று தலையை பலமாக ஆட்டினேன். (எப்படி என் பட்டிக்காட்டான் பட்டணப் பிரவேசம்!)
மாமி பெரிசா வாய்திறந்து - உள்ளே ஒரு குருவி போய் உட்கார்ந்து கொள்ளலாம் - சிரித்துவிட்டாள். "பரவாயில்லை, நீ சொன்னதே கொடுத்தமாதிரிதான். எடுத்துக்கொள்." - (தமிழ் கொச்சை) - என்று திணித் தாள். மாமா பற்களிடையே பைப்புடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
அப்புறம் மாமி, மாமாவிடம் சொல்லி, மாமா எங்களுக்கு ஜாடை காட்டி (ஜாடைதான், ஆனால் அதில் எதிர்க்க முடியாத ஒரு அதிகாரம் இருப்பதை உணர்ந்தேன்), என் பிகு தளர்ந்து, அவர்கள் வெற்றி கண்டார்கள். உங்களிடம் சொல்லுகிறேன். உள்ளபடி வெற்றி கண்டது பூரிதான். நெய் வாசனைதான் மூக்கைத் துளைக்கிறதே!
இதற்குள் வெளியில் போயிருந்த பையன்கள், பாட்டில்களில் குடி ஜலத்துடன், கனக்கும் கூஜா சொம்புடன் திரும்பிவிட்டார்கள். தவிர, அவர்கள் கையில் பெரிய பெரிய தையல் இலைப் பார்சல்கள். அவற்றை அவிழ்த்து சுடச்சுட எங்களுக்கு ஆளுக்கு இரண்டு மெதுவடைகள் இப்போ மாதிரி வெறும் துளையை மட்டும் தாங்கும் வடையா?), மேலே கெட்டிச் சட்டினி. மறுபடியும் இரண்டு இட்டிலி சாம்பார் (அவர்கள் கூடக் கொண்டு போய்க் கொண்டு வந்த பெரிய எவர்ஸில்வர் தூக்கு டப்பாவைச் சொல்ல மறந்துவிட்டேனோ :) இப்போ சூடாக உருளைக்கிழங்கு மசாலாவைச் சுமந்துகொண்டு மறுபடியும் இரண்டு பூரி.
ஒருவழியாக டிபன் கடை முடிந்ததும் கூஜா சொம்பு திறக்கப்பட்டது. சேறாட்டம் காபி எங்களுக்கு ஒரு தம்ளர் வழங்கப்பட்டது. அப்பா, மண்டையிடியும் ஒய்ந்தது. வண்டியும் ஒருவழியாக முக்கி முனகிக் கொண்டு கிளம்பிற்று.
நான் என்னோடு கலந்து ஆலோசித்துக்கொண்டு, மாமா பிள்ளையோடு மண்டையோடு மண்டையை இடித்துக்கொண்டு (அந்த மந்திரிக்கு அப்போது வயது ஒன்பது) எனக்குள் ஒருவாறு ஒரு முடிவுக்கு வந்து, என் பர்ஸ்"க்குள் கைவிட்டுத் துழாவி ஒரு நாலணா வெள்ளி நாணயத்தை எடுத்து மாமாவிடம் நீட்டினேன். அவர் புருவங்கள் வினாவில் உயர்ந்தன.
“காபி, ரெண்டு கப் விலை.”
எங்களைச் சுற்றிக் கொல்’ என்று ஒரு சிரிப்பு விஷ்ணுசக்கரம் மாதிரிக் கிளம்பித்து பாருங்கள், லேசில் ஒயவில்லை. மாமிக்குப் புரைக்கேறி விட்டது. பெண்கள் அம்மா முதுகைத் தட்டி அவள் முதுகில் முகத்தைப் புதைத்துக்கொண்டு சிரிக்கிறார்கள். அவர்கூடச் சிரித்து விட்டார். இதைப் படித்துவிட்டு யாராவது சிரிக்கிறீர் களா? ஞாபகம் இருக்கட்டும். பின்னால்தான் காளி தாஸன் முன்னால் அவன் 'ராபணாத்தான்.
மாமி அந்த அலிபாபா ‘டின்"னிலிருந்து எடுத்துக் கொடுத்துக் கொண்டே இருந்தாள். தட்டை, முறுக்கு, போளி, தேன்குழல் - வெட்கத்தை விட்டபிறகு நாங்களும் கொடுப்பதையெல்லாம் வாங்கி வயிற்றுக்குப் போட்டுக்கொண்டிருந்தோம்.
தெரிந்த தாய்மார்களைக் கேட்கிறேன். வெட்கம் கெட்டுப் போனால், இரைப்பை நீளுமா? அல்லது பக்கத்திலேயே ஒன்று புதிதாக முளைத்துக் கொள்ளுமா ?
வண்டி நின்ற அடுத்த ஸ்டேஷனில் மாமா, அவரிடம் நான் கொடுத்த நாலணாவுடன் சேர்த்துப் போட்டு ஒரு பெரிய பிஸ்கட் ரோல் வாங்கிக் கொடுத் தார். அதையும் நாங்கள் யாருக்கும் கொடுக்காமலேயே தீர்த்துக்கட்டினோம். அவர் அப்படி வாங்கிக் கொடுத்தது எங்களுக்கு தண்டனையா? பரிசா ? பாடமா? இன்றுவரை புதிர்.
எங்களை அழைத்துப் போக, மாமா ஸ்டேஷனுக்கு வந்திருந்தார். இந்த மாமாவோடுதான் நாங்கள்வந்தோம் மாமா. ரொம்பப் பிரியமா எல்லாம் கொடுத்தா!" என்று இன்னொரு ராபனா பண்ணினேன்.
-அண்ணா சொல்லுவார். கழுதைக் குட்டிகூட பிறந்த புதுசில் குதிரைக்குட்டி மாதிரி இருக்கும். அப்புறந்தான், முட்டிக்கால் தட்டி, காதுகள் நீண்டு, வாயைத் திறந்து விட்டால் கேட்கவே வேண்டாம். சொந்த மாமா இந்த மாமாவைப் பார்த்ததும் திடுக்கிட்டுப் போனார். ஸ்லாம் போடுவதா, கூப்புவதா? கைகள் தவித்துத் திணறின.
“Hallo, Mr. Halasyam, so you are now in Calicut.”
“Y-Ye-Yes Sir.’
“Nice boys!”
வண்டி புறப்படும் வரை இரண்டு மாமாக்களும் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தனர். வண்டி புறப் பட்டதும் மாமி ஜன்னல் வழியே, முடிந்தவரை குனிந்து, என் கன்னங்களைத் தொட்டாள்.
வண்டி வளைவில் மறைந்தபின்னர் கேட்டேன்: "யார் மாமா அது ? உங்களுக்கு முன்னாலேயே தெரியுமா ?”
"அவர் E.E.டா !” Executive Engineer. மாமா draughtsman என்று முன்னாலேயே சொல்லியிருக்கிறேன்.
"என்னுடைய பழைய மேலதிகாரி"
BOSS என்கிற வார்த்தை இன்னும் புழக்கத்தில் வரவில்லை.
இந்தச் சம்பவத்தில் இவ்வளவு சாவகாசமாகத் துளைந்திருக்கக் காரணம் அதில் இப்போது காணும் சிரிப்பை உங்களுடன் பங்கிட்டுக் கொள்வதற்கே, ஆனால், அடிப்படைக் காரணம், அதற்குப் பின் அந்தக் குடும்பத்தை நான் சந்திக்க நேரவே இல்லை. அப்படி ஏன் நேர வேணும்? அந்த மாமி என் கன்னங்களைத் தொட்டபோதும், எங்களுக்குத் திண்டி வழங்கின போதும், அவள் விரல் நுனிகளில் சொட்டிய அமுத தாரைகள் மறக்க முடியவில்லையே! இந்தச் சந்திப்பு, ரெயில் சந்திப்பு இப்படியே வீணாகிவிடணுமா? டில்லி யில் ஒரு பெண்மணி எனக்காகக் கசப்பு நாரத்தங்காய் ஊறுகாய் தேடிக் கொண்டுவந்து பரிமாறின கதை இந்தப் பக்கங்களில் ஏற்கெனவே வெளியாகி இருக்கிறது. அந்தத் தாய் இப்போ எங்கு இருக்கிறாளோ? முதலில் இருக்கிறாளோ? இல்லையோ? இதுபோன்ற சந்திப்புகள் திடீரென முளைத்தபடியே திடீரென்று அற்றுப் போவானேன்?
தெருவில் நடந்துபோகிறோம். எத்தனை முகங்கள், ஜனநெருக்கடியால், எத்தனை உரசல்கள்.
“I am sorry.”
“Oh that is alright!”
"ஏன்யா, கண் தெரியல்லே?"
அல்லது வெறும் முறைப்பு.
அல்லது மனதை மயக்கம் கொள்ளும் புன்னகை.
எத்தனை உறவுகள் இப்படித் தனித்தனியாக உதிர்ந்த பூக்களாகி வீணாகிவிடுகின்றன.
சில மணங்கள் நெஞ்சில் ஆயுசுக்கும் இப்படி இனங் காணாது நிற்பதும் உண்டு.
"அடடடடா! என்ன மனிதாபிமானம்!”
“எழுத்தாளனோன்னோ ! தனியா இப்படித் தோணும்போல இருக்கு."
"ஆசை அப்படிப் பொங்கினால் தெருவில் போறவா அத்தனைபேரையும் வீட்டுக்கு அழைச்சுண்டு வந்து சமாராதனை நடத்துவதுதானே! தினமும் வைக்கத்து அஷ்டமி! மூணு வருஷமாக் கேட்டுண்டிருக்கேன், தீபாவளிக்கு ஒரு நல்ல புடவைக்கு வழியைக் காணோம்!”
ஏளனத்துக்கும் ஆத்திரத்துக்கும் எங்குதான் குறைவு?
மூன்று நாட்களுக்கு முன் டாக்டரிடம் போகும் நிலைமை வந்துவிட்டது. ஜ"ரம், அது சாக்கில் ஏற்கெனவே மூன்றுநாள் பட்டினி. என் நட்டாமுட்டு வைத்தியத்துக்குக் கேட்கவில்லை. வைத்தியனுக்குக் கொடுக்க வேண்டிய தகூழ்ணையைக் கொடுத்தாக வேண்டும் போலும்! பெண்கூடத் துணைக்கு வந்தாள் என்றாலும் உடம்பு பலஹினம்; நடுவில் மூன்று இடங்களில், ஒரு மரத்தடியில், ஒரு வீட்டு வாசற் படியில், ஒரு தெருவிளக்கு மேடையில் தங்கித் தங்கிக் களைப்புத் தேற்றிக்கொள்ளும்படி ஆகிவிட்டது.
இரண்டாவது கட்டத்தில் தெருவில் போகும் ஒரு ஸ்திரீ - முன்பின் அறியாதவள். தெரிந்தவள் போல் என்னைப் பார்த்துவிட்டு நின்றுவிட்டாள். "என்னம்மா தாத்தாவுக்கு உடம்பு? பால் கொண்டுவந்து கொடுக் கட்டுமா? இங்கேதான் எனக்கு வீடு. சோடா வாங்கி யாரட்டா ? கையைப் புடிச்சு அழைச்சுப் போ. பெரியவரே, என் மேலே தாங்கிக்கோங்க. பால் மாறாதீங்க. என் தகப்பனாருக்குச் செய்யமாட்டேனா?”
தெருவில் நேர்ந்த இந்தக் கவிதை பொய் இல்லை என்பதற்கு என் மகள் சாக்ஷி.
தான் தேவைப்படவில்லை என்று தனக்கு நிச்சய மான பிறகு அந்தப் பெண்மணி தன் காரியமாகப் போய்விட்டாள். ஆனால் அவள் வார்த்தைகள், என் உடல், மன நிலையில் எனக்கு எவ்வளவு தைரியம் தந்தன என்று எந்த அளவில் என் வார்த்தைகள் பதியவைக்க முடியும்?
ஆனால் அந்தத் தாயாருடன் சந்திப்பு அத்துடன் சரி. ஆயிரம் குற்றங்கள் குறைகள் ஒருவரையொருவர் கண்டுகொண்டும் சொல்லிக்கொண்டும் திரிந்தாலும், உயிருக்குயிர் உறவின் உள்சரடு சத்தியம். ஒருநொடிப் பொழுதுக்குத்தான் அவ்வப்போது வெளிப்படுத்திக் கொண்டாலும், "நான் இருக்கிறேன்!” என்கிறது. அப்பா, என்ன பலம்! என்ன சுமை தாங்கல்! இதைத்தான் நான் சொல்ல முயல்வது.
எல்லாம் ஊமை கனாக் காணும் வேதனை! இதற்கு ஒர் ஊமை பதிலும் வேதனை எழுந்த இடத்திலேயே கிடைக்காமலும் இல்லை.
"நீ உனக்கு இருக்கும் இரு கைகளாலேயே உலகத்தை அணைக்க ஆசைப்படுகிறாய். ஜீவசக்தியின் அடிப்படை ஒருமைதான் உன்னுள் நீ உணரும் எழுச்சி. உன் ஆசை பேராசை, சாணளவுகூட இல்லாத உன் வாழ்க்கையில் உன் பங்குக்கு வழங்கி இருக்கும் உறவுகளைப் பேணிக் காத்து இன்புற உன் தகுதியை வளர்த்துக்கொள்ள வழி பார்.
சித்திக்குச் சீமந்தம். நடுமுற்றத்தை அடைத்துப் பந்தல். இந்த நாளில் தாலி கட்டும் கலியாணத்திலேயே வதுக்களில் லஜ்ஜை கைவிரிப்பு. சீமந்தத்தில் மணப் பலகைக்காக மெனக்கெட்டு வரவழைத்துக் கொள்ளும் வெட்கத்தில் ஏதோ ஒரு பரிதாபம் இல்லை? அதுவும் சித்திக்குப் பிறந்த வீட்டுத் துணையும் இல்லை.
ராச்சாப்பாடு முடிந்தவுடன் குஷி ! குஷி! கதை ! கதை ! எதிர்வீட்டுப் பையன், அண்டை வீட்டுப் பையன்களில் ஒரிருவர், முன்கட்டுப் பையன், நாங்கள் எல்லோரும் சேர்ந்து அப்பாமேல் - அதான் தாத்தா மேல், பூச்சி, வண்டுகள் போல் அசலாகவே மொய்த்துக் கொள்வோம்.
“டேய் ஒரு எட்டுக் கத்தரிக்காய், ஒரு டஜன் வெண்டை, ஒரு நாலு கிழங்கு போடுடா !”
தாத்தா மார்க்கெட் வாங்கவில்லை. அவருடைய உடம்பைப் பிடித்துவிடுகையில், பிடிகள், உருட்டுகள், நிமிண்டல்கள், குத்துகள், புரட்டிவிடுதல்கள் (பேஷ்!) களுக்கு ஸங்கேதப் பெயர்கள். “இன்னிக்கு உனக்கு வலதுகால், இவனுக்கு இடது, அதோ அவனுக்கு, உன் பேர் மறந்துபோச்சு, இந்தக் கை, டேய், யாருக்குடா முதுகு வேணும்?” என்று பங்கு போட்டாகிவிடும்.
இத்தனை ஆர்ப்பாட்டங்களிடையே, கதை புறப்படும் ஜரூராக. ஆரம்ப நடைபோட்டு, மெதுவாகி, அப்புறம் கொஞ்சம் சூடு ஆகி, சரியான உயிர் நிலையில் குறட்டையில் நின்றுவிடும். தூங்குபவரைத்தான் எழுப்ப முடியும். இனிமேல் நாளை ராத்திரிக்குத்தான்.
இப்படியேதான் தாத்தாவிடம் நாங்கள் ராமா யணம், திருவிளையாடல் புராணம், பெரிய புரா ணத்தில் சில முக்கிய நாயன்மார்களின் வரலாறு, மஹா பாரதம் (மேலெழுந்தவாரியாக), பஞ்சதந்திரக் கதைகள் அரிச்சந்திரன் கதை எல்லாம் கேட்டது.
தாத்தா - பாணியில் இது இப்போதைய சிந்தனை யில் தோன்றியது - புலியின் வால் சுழட்டல், அடவியில் நிழலோடு நிழலாக வரிக்கோடுகள் இழையும் தன்மை இருந்தது. ஒருதடவை கேட்டால் போதும். அதன் உறுத்தல் விடவே விடாது.
சித்தப்பா (அவரும் ஒன்றும் லேசுப்பட்டவர் அல்ல) சொல்கையில் பாத்திரங்கள் கண்முன் நின்றுவிடும். (Kinetic effect) தோற்றக் காட்சியின் நியாயம் அவர் சொல்லும் முறையில் தூக்கி நிற்கும். ராவணனுடைய பராக்கிரமத்தை அவரிடம் கேட்கையில், இந்த மஹாத்மாவைக் கொல்லவா ஒரு அவதாரம்' என்ற சந்தேகம் அந்தச் சிறுவயதிலேயே வித்து வைத்து விட்டது. அதிலிருந்து பல்வேறு விளைவுகள், வாழ்க்கை நோக்கைப் பலவிதங்களில் பாதிக்கின்றன என்பதை யாவரும் சிந்திக்க வேண்டும்.
"நக்கீரனுக்கும் சிவனுக்கும் நடந்த சம்வாதத்தில் சிவன் எங்கே ஜெயித்தான். வன்முறையைக் கையாண்டு வழுக்கலடித்தான்." அந்தக் கட்டத்தை விவரிக்கையில், திருவிளையாடற் புராணத்தில் பரஞ்சோதி முனிவரின் செய்யுட்களின் வழவழா கொழகொழாவுடன், அதே கட்டத்தில் காளத்தி புராணத்தில் சிவப் பிரகாச சுவாமிகளின் வாக்கையும் ஒப்பிட்டுக் காண்பிப்பார். "சங்கை அறுப்பது எங்கள் குலம், சங்கரனாருக்கு ஏது குலம்” என்று கீரனா கேட்டான்? எங்களுக்குள் புகுந்து கொண்டு அவன் கேட்கையில் நாங்கள் உள் விம்மு வோம். அப்பா! அப்பா! அதுவன்றோ உண்மையாக வாழ்ந்த நாட்கள்!
துரியோதனன் செய்தது நியாயமோ அநியாயமோ! கடைசிவரை வணங்காமுடி மன்னன். வைராக்கியமே ஒரு சத்தியந்தான். “சூதாட்டத்தில் தோற்றவன் வைத்த பணயத்துக்கேற்ப ஜெயித்தவனுக்குக் கட்டுப்பட வேண்டியவன்தானே! அவன் ஆட்டத்துக்கு அழைச் சான்னா தருமபுத்திரனுக்கு புத்தி எங்கேடா போச்சு ?” என்று எங்களைக் கோபிப்பார். அந்தக் கோபம் எங்களிடம் மாற்றப்படுவதை நாங்களே உணர்வோம்.
மனசுக்குத் தனியாகச் சிந்திக்கும் சக்தி உண்டு என்பதைச் சித்தப்பாவிடம்தான் உரிய அஸ்திவாரத் துடன் நான் உணர்ந்துகொண்டேன். நினைக்க ஒரு சக்தி கொடுத்தானே, அதுதான் ஆண்டவன் இழைத்த பெரிய தவறு. தனக்கு எதிர்ப்பு ஏற்படுத்திக் கொண்டது அதனால்தானே! தனித்த நினைப்புத்தான் Forbidden fruit ஆனால் அதைக் காட்டிலும் ருசியும் வேறு இல்லை. Satan ஒரு தத்தாரிப் பிள்ளை, அவ்வளவுதான் -அவன் என் சோதரன்; என் பிள்ளை, என் ரத்தம், என் குலந்தான். என்னால் என் ரத்தத்தை மறுக்க முடியாது.
கதை சொல்லப் பாட்டனார்.
பழையது போடப் பாட்டி.
இளம் வயதில் அவசியம் வேண்டும்.
லக்ஷியங்கள், வாழ்க்கையில் பிடிப்புகள், சோதனை களைத் தாங்கப் பலங்கள், நம்பிக்கைகள், அன்பின் ருசிகள் இப்படித்தான் ரத்தத்திலேயே பெரியவர்களால் ஊட்டப்பட்டன.
ஆம்; அம்மா கைப் பழையதுகூடப் பாட்டி பிசைந்து போட்ட பழையதுக்குப் பின்தான்.
“M”, பரமஹம்சரைக் குறித்து சொல்கிறார் (Gospel of Ramakrishna):
அது சமுத்திரம், அவ்வப்போது நாங்கள் மொண்டு கொண்டது, எங்களால் தூக்க முடிந்த சின்னஞ்சிறு பாத்திரங்களில், எங்களிடம் இருந்த பாத்திரம் கொண்டது அவ்வளவுதான்."
இதேபோல்தான் என் இலக்கிய வன்மையும். முன்னோர்கள் தோண்டி வைத்துவிட்டுப் போன ஊற்றில் இருந்து எடுக்க எடுக்க என் எல்லைகள் எவ்வளவு குறுகியவை என்பதை நாளுக்கு நாள் உணர்ந்துகொண்டே இருப்பதிலேயே ஓர் ஆனந்தம் தெரிகிறது.
கைக்கெட்டமல் அதோ, அவ்வளவு கிட்ட பூமிக்கு அடியில் அதோ தெரியும் புதையல்.
அண்ணாவுக்கு - அதான் அப்பாவுக்கு - அதான் அண்ணாவுக்குக் கதை சொல்ல நேரம் ஏது? (பின்னால் தன் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் நேரம் போக, மிச்சத்துக்குக் கதை சொல்லவுமே அவர் முழு நேரமும் செலவழிந்தது. ஆனால் அண்ணா கதை சொல்லும் விதத்தைப் பற்றிச் சொல்ல இப்போது இடம் இல்லை. அவரும் அந்தக் கலையில் 'கில்லாடிதான். அதற்குச் சமயம் வரும்போது சொல்கிறேன்) இப்போதைக்குப் பள்ளிக்கூடத்துக்கும், டியூஷன் சொல்லிக் கொடுக்கப் போய் வரவுமே நேரம் போத வில்லை. அண்ணாவுக்கு நல்ல சம்பாதனை வேளை. ஆனால் இந்தக் குடும்பம் எத்தனை வந்தாலும் கொள்ளும், அத்தனையும் கொண்டது. தமக்காகச் சேர்த்து வைத்துக்கொள்ளும் எண்ணம் அவருக்குத் தோன்றியதும் இல்லை; அவருக்கு அப்படிச் சொல்லிக் கொடுக்கும் மந்திரியாகவும் அம்மா அமையவில்லை. எப்படிப் பார்த்தாலும் எங்கள் குடும்பம்தானே பெரிசு. அண்ணாவுக்கு முப்பத்துஇரண்டு, முப்பத்து மூன்று வயதுக்குள் நாலு குழந்தைகள்.
சம்பளத்தையும் வருமானத்தையும் அண்ணா அப்படியே சித்தப்பாவிடம் கொடுத்துவிடுவார். சித்தப்பாதான் நிர்வாகம். இப்போது சிந்தித்துப் பார்க்கி றேன், எங்கள் குடும்பத்தின் ஒற்றுமையை இந்நாளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் நமபத்தகுந்ததாகக்கூட இல்லை. ஒருவர் நாணயத்தை ஒருவர் சந்தேகிக்கத் தோன்றியது கூட இல்லை. நிர்வாக ஸ்தனைச் செலவுக்குக் கணக்குக் கேட்டதும் இல்லை. அதனால் அநியாயங்கள் நடக்கவும் இல்லை. அடிப்படைக் காரணம் பாசம் என்றுகூடச் சொல்லமாட்டேன். பெரிய கைகள் (தாத்தா-பாட்டி) இருக்கிறவரை - ஊரில் இருந்தாலும் சரி, இங்கே இருந்தாலும் சரி, அவர்களிடம் இருந்த ஒரு அத்து, மரியாதைதான். வால்கள் இருந்திருக் கலாம். ஆனால் அவர்களுக்கு எதிர்ப்பில் சுழலக்கூடத் தைரியம் கிடையாது. தவிர யாரும் தனி பாவனையாக நினைக்கவில்லை. எல்லோரும் ஒரு குடும்பம். அதுவும் இது பெருந்திருக் குடும்பம். இங்கே வஞ்சனைகளுக்கே இடம் கிடையாது.
ஆனால் இந்த வாழ்க்கை திருப்பம் காணும் வேளை வந்துவிட்டது. மத்தியானம் வரை பொன்னுருகக் காய்ந்து கொண்டிருந்த வெயில் திடீரென்று மறைந்து மேகங்கள் எங்கிருந்தோ திரண்டு வந்து கவிழ்ந்து கொண்டன.
அண்ணாவுக்கு ஆஸ்துமா கண்டுவிட்டது.
காரணம், பையன்களுடன் மாரடிப்பதா? ஆனால் அவருடைய தம்பிகள் வாத்தியார் வேலை பார்க்க வில்லையே! அவர்களும் ஆஸ்துமாக்காரர்கள்தாம். என் தம்பி சிவப்பிரகாசத்துக்கும் ஆஸ்துமா உண்டு. இது பரம்பரை வியாதி என்று சொல்வதற்கு இல்லை. தாத்தாவுக்கும் அவருடன் பிறந்தவர்களுக்கும் லேசாகக் கூட இதன் அடையாளம் கிடையாது. பட்டணம் போன்ற பெரிய இடங்களில் எழும் தெருப்புழுதி சுவாசப்பைக்குள் போய்விடுவதால் என்கிறார்கள். என்னவோ மூடுமந்திரம் மூடுபனியாக அண்ணாமேல் கவிந்துவிட்டது.
இன்னும் ஆஸ்துமாவுக்குப் பூரண குணம் (அதாவது உடம்பை விட்டே விரட்டல்) மருத்துவத்தில் கிட்ட வில்லை என்றே தெரிகிறது. இப்போதாயினும் ஊசிகள், மாத்திரைகள் சமயத்துக்கேனும் உதவ இருக்கின்றன. அறுபது வருடங்களுக்கு முன்னால் அது போன்ற பரிகாரங்கள் ஏது?
அண்ணாவுக்கு வந்த மும்முரம் மாபாரதம். அந்த உடல்வளம் எப்படி? அப்படி நேற்றைக்கும் இன்றுமாகக் குலைந்தது? விலாவில் கோணி ஊசியால் கோத்து வாங்கல் போன்ற இழுப்பு. (மேல், கீழ்) உள்ளங்கை களிடையில் எலுமிச்சம் பழம்போல் ஆளைக் கசக்கிப் பிழிந்தது. சளியின் கல் கல் சப்தத்தில் வீடே அதிர்வது போல் எங்களுக்குத் தோன்றும்.
விடியற்காலை, சரியான பனிக்காலத்தில் குளிர்ந்த ஜலத்தில் ஒருநாள் கூடக் குளிக்கத் தவறாத மனுஷன், இப்போது சேர்ந்தாப்போலக் குளியலுக்கு முழுக்குப் போட வேண்டி இருந்தால் அவருக்கு எப்படி இருக்கும்? முழுக்கு குளியலுக்கு மட்டுமா? வழக்கப்படி உணவு போச்சு. டிபன், இது ஆகாது - அது ஆகாது. அளவுகள் கொடுரம் அடைந்தன. ராச்சாப்பாட்டுக்குக் கதவடைப்பு. இட்டிலியோ இரண்டுக்கு மேல் ஆகாது -“தோசையா?” வேண்டாண்டா, சப்தரிஷி ராத்திரி நீதாண்டா கஷ்டப்படுவே !” - நின்றால் குற்றம், உட்கார்ந்தால் அபராதம், திரும்பினால் தண்டனை. வானத்துப் பறவைக்குச் சிறகைச் சேதித்தாகிவிட்டது. ஆயுள் தண்டனை.
நோய்வாய்ப்படும் அவஸ்தையைத் தவிர, அண்ணா வின் கண்ணில் கண்டு விட்ட தி கைப்பையும் மருட்சியையும் இப்போது நினைவுகூட்டிப் பார்க்கி றேன். ஏதோ ஒரு குற்ற உணர்வில் தலை குனிகிறது. அவர் அப்படிக் கஷ்டப்படுகையில், பிறர் வேளா வேளைக்கு இஷ்டப்படி தின்றுகொண்டு, வளைய வந்துகொண்டு வாழ்வதே நியாயமா? பெருந்திருவே! இதுதான் நியாயமா?
இடையில் சித்தி பிரசவம்; பெண் குழந்தை,
அப்பா லால்குடியிலிருந்து வந்து பிள்ளைப் பக்கத்தில் உட்கார்ந்து விட்டார். பெருந்திருவைக் கெஞ்சுகிறார். கொஞ்சுகிறார் சீறுகிறார். லால்குடிக் கோயிலுக்குப் போகாமல் அந்தப் பாவையைப் பாராமல் பிரிந்திருக்கவும் முடியவில்லை. அம்முவாத்து பலமும் அதுதான் - பல ஹினமும் அதுதான். தூண்டிலில் மாட்டிக்கொண்டுவிட்ட குஞ்சுக்கு ஏதும் உதவ இயலாது. அதைச் சுற்றிச் சுற்றி வரும் தாய்மீன் போல் தவிக்கிறார். அந்தத் தலைமுறை வரை அம்முவாத்துப் பாசங்கள் பிரகடனங்களாக வெளி வரா. இந்தமாதிரிச் சமயங்களின் தவிப்பில்தான் தெரியும்.
அவளுந்தான் தவிக்கிறாள்.
எங்களுக்கு என்றும் அவள் கல்லாகவே இருக்க முடியாது. நள்ளிரவில் தைரியமுள்ளவர் கர்ப்பக் கிருகத்துள் போய் விக்கிரகத்தின் கன்னத்தைத் தொட்டுப் பாருங்கள். நனைந்திருப்பது தெரியல்லே?
நான் என்னப்பா செய்வேன்? கர்மா அப்பா. கர்மா யாரை விட்டது? வினையிலிருந்து யாரால் தப்ப முடியும்? என்னால் ஒரு விரலைக்கூட அசைக்க முடிய வில்லையே, என் செய்வேன்?"
அவளுந்தான் எங்களுடன் அழுகிறாள் - ஒரேயடி யாக திடீரென்று அவள் கையை விரித்துவிடாது இருந்தால் எங்கள் பெரும் புண்ணியம்.
அண்ணாவுக்குக் கன்னங்கள் ஒட்டிப்போய்க் கண்கள் குழி விழுந்துவிட்டன. உயிரைக் கோழையாகத் துப்பிக்கொண்டிருந்தார். யானை போன்ற உடல் தேய்ந்து பூனையின் நிழலாகி, அதுவும், அதுவும். திகில் எங்கள் எல்லோரையும் கவ்விக்கொண்டது.
அம்மாவைத் தவிர.
அம்மா முகத்தில் தனி ஒளி வந்துவிட்டது. களை வந்துவிட்டது. அதுமாதிரிக் களை காணக்கூடாது என்றுகூட ஒரு கட்சி உண்டு.
அவள் என்ன சத்தியம் மறந்தவளோ?
அம்மா பாடி நீங்கள் யாராவது கேட்டிருக்கிறீர் களோ? என்னவோ உளறுகிறேன், அந்த வேளையில் சுழலில் மாட்டிக்கொண்டு. அவள் குரலைப் பற்றி வேறு சந்தோஷமான இடத்தில் விவரிக்கிறேன். அவளுடைய பாடும் குரலில் பெண்மை இருந்தது என்று மட்டும் சொல்லி நிறுத்திக்கொள்கிறேன். பெண்ணுக்குப் பெண் கேட்கிறாள்.
"என்னடி உன் கழுத்தில் தொங்கல்லே!” பெருந்திரு பயப்படுகிறாள்.
பிள்ளைக்குக் கிடந்த தவத்தைக் காட்டிலும் இப்போ தாலிக்கு இருந்த தவத்தின் நெருப்பைப் பற்றி என்னால் பேசக்கூட முடியுமா?
எங்களை அழைத்துக்கொண்டு - ராமாமிருதம், சிவப்பிரகாசம், பானு - இடுப்பில் கைக்குழந்தையுடன் கையில் எண்ணெய்க் குடுவையுடன் விளக்கிட, எங்கள் வீட்டையடுத்துப் பத்துப் பதினைந்து வீடுகள் தள்ளி யிருந்த பெருமாள் கோயிலுக்குப் போவாள். துவஜ ஸ்தம்பத்தடியில் எல்லோரும் சாஷ் டாங்கமாக விழுவோம். அண்ணாவுக்கு உடம்பு சரியாக வேண்டும். கைக்குழந்தையையும் குப்புறப் போடுவாள். அது வீல் என்று அழும்.
பட்டர் வெளியே வருவார். முறுவலிப்பார். "குழந்தையை அழவிடாதேம்மா. அது சேவிக்கத் தேவை இல்லை. அதுவே தெய்வம்."
"அப்படியானால் அதன் குரல் அவனுக்குக் கேட்கட்டும்.”
அந்த உக்கிரம், அந்த வெறி, அந்தக் காளித்தனம் அம்மாவிடம் எப்பவுமே உள் உறங்கிக் கொண்டிருந்தது என்று என் அபிப்பிராயம். சமயத்தில் வெளிப்படும்.
குப்புசாமி முதலியார் - வாழ்க்கையில் என் நோக்கை பாதித்த சிலரில் அவரும் ஒருவர். அவர் சொல்வார்: “பெண்களிடம் எப்பவுமே கொஞ்சம் பேய்க்குணம் உண்டு.”
அம்மாவிடம் பாசம், பக்தி, அன்பு, பிரியம் - இந்த அம்மாவுக்கும் இந்தப் பிள்ளைக்கும் உள்ள பந்தம் எங்கள் குடும்பத்துள் பிரசித்தமாகிவிட்டது. அதை மறைக்கவோ, மறுக்கவோ அவசியம் இல்லை.
அம்மாவிடம் அன்பு பிரியம், பாசம், பக்தி - இவை எல்லாவற்றையும் முன்னிட்டுக் கொண்டு எனக்கு அவளிடம் எப்பவுமே ஒரு லேசான அச்சம் உண்டு.
முதலியார் சொன்னது காரணமோ?
--------
அத்தியாயம் 18
மாங்கல்யப் பிச்சை எடுக்கும்படி அம்மாவுக்கு யாரோ சொன்னார்கள், ஆனால் அம்மா எடுத்ததாக விவரம் இல்லை.
ஆனால், மாங்கல்யப் பிச்சை யாரோ எடுத்ததாகத் தான் பார்த்தது பற்றி அம்மா என்னிடம் சொல்லியிருக் கிறாள். சொல்லும்போதே அம்மாவுக்கு அழுகை வந்து விட்டது. எனக்கு பூமி நடுங்கிற்று.
வயதான தம்பதிகளாம். கிழவர் நினைவிழந்து ரேழித் திண்ணையில் கிடக்கிறார். அவருடைய அகமுடையாள் - மாமியென்று சொல்வேனா, பாட்டி என்று சொல்வேனா? நரை மஞ்சள் பூத்துவிட்ட அந்தக் கூந்தல் முடிச்சில் மல்லிச்சரம் ஆட, பட்டுப்புடவை உடுத்து, இரு கைகளிலும் முந்தானைத் தலைப்பைப் பிடித்தபடி வீட்டு வாசல்படிகளினின்று சரசரவென்று இறங்கித் தெருவில் வேகமாக நடந்து செல்கிறாள்.
இரண்டொரு வாக்கியத்தின் அவசர வீச்சில், நிமிஷத்தில் காகூழியை உட்கண் முன் கொணர்ந்து நிறுத்தும் ஆற்றல் அம்முவாத்துக்கே வழிவந்த பாடு.
நெற்றியில் பதக்கம் போன்ற குங்குமப் பொட்டு. பாட்டியின் தந்தச் சிவப்பு - ஈதெல்லாம் அம்மா சொல்லவில்லை.
“எனக்கு மாங்கல்யப் பிச்சை போடுங்களேன்!” "என் கணவனுக்கு உயிர்ப் பிச்சை போடுங்களேன்!” அம்மா அலறியது இவ்வளவுதான்; மிச்சமெல்லாம் அந்த அலறலின் நாடிக் குபிரில் நெஞ்சில் நடுங்கும் எதிரொளிகள், எதிரொலிகள்.
அது மாடவீதி, ஒரு சாரியில் வீடுகள்; எதிர் சாரி கோயில் மதில். அதன் நடுவே ஓங்கி எழுந்த கோபுர சாட்சி. இதுவும் தானே எழும் தோற்றந்தான். சத்திய சாயைகள்.
அந்தக் கூக்குரல் கேட்டு உள்ளிருந்து பதறி ஓடிவந்த பெண்டிரின் குவிந்து நடுங்கும் கரங்களினின்று பாட்டி யின் முன்றானையில், அக்ஷதையும், மஞ்சளும், குங்குமமும், காசும் பெய்கின்றன. அடையாளமாக ஒரு பத்து வீடு தாண்டி, தன் வீடு திரும்பி, முன்றானையில் சேர்ந்த பிச்சையைப் பாத்திரத்தில் கொட்டியதும், ஒரு தாலிக் குண்டும் சேர்ந்து விழுந்ததாம். எந்தப் புண்ணிய வதியோ?
பாட்டி கதை முடிவு எப்படி? அம்மா சொல்ல வில்லை; நானும் கேட்கவில்லை. தெரியவும்வேண்டாம். ஆனால் அந்தச் செயலில் அடங்கியிருக்கும் அல்லது அடக்கியிருக்கும் ஆணவ ஒடுக்கம், எம்மட்டுக்கு? உனக்கு அகமுடையான் - அவன்கூட இல்லை- தாலி அவசியம் தெரிகிறது? அந்த அளவுக்கு ஆத்ம பரீட்சை.
“எனக்கு மாங்கல்யப் பிச்சை போடுங்களேன்!” மும் மூர்த்திகளின் தேவிமார்களும் தங்களையறியாமலே தன் தன் கழுத்துச் சரடை நெருடிப் பார்த்துக் கொள் கிறார்கள். இத்தனைக்கும் அவர்கள் கணவன்மார் அமரர்கள். ஆயினும் ஏதோ புரியாத திகில் – ஆலய மணி அலறுகிறது; சாட்சி சொல்ல நீதி மன்றத்துக்கு அழைக்கிறது.
"அநியாயம் நேரவிருக்கிறது. உங்கள் பாத்திரத்துக் காகவே அது நேராமல் பார்த்துக் கொள்ளுங்கள்." இதுதான் அதன் சேதி.
கடையலில், பாற்கடல் கொந்தளிக்கிறது. கடைவது அமுதத்துக்காக, அமுதம் அமரத்துவத்துக்காக.
உயிரின் இயல்பு, உள்ளுணர்வு, நோக்கம், லகூழியம் எல்லாமே அதுதான். நான் அழியக்கூடாது.
மத்துச் சூடேறி இமயத்தினின்று நெருப்புப் பொறிகள் பறக்கின்றன.
“எனக்கு மாங்கல்யப் பிச்சை போடுங்களேன்” இமயம் கூக்குரலிடுகிறது.
"இதென்ன திரும்பத் திரும்பத் திருப்பயாமி? பக்கம் ரொப்பியாமி ?”
அப்படித் தோன்றின் அப்படியே இருக்கட்டும். எங்கெங்கோ திரிந்து அயர்ந்து, பாலைவனச் சோலைக்கு வந்திருக்கிறேன். இரு உள்ளங்கைகளையும் கிண்ணம் சேர்த்து, உயிரின் சுனையினின்று இரண்டு மொள்ளு அள்ளிக் குடிக்கிறேனே! அப்படியே அந்தப் பால் மணலில் சாய்ந்து அண்ணாந்து, ஆகாயத்தில் கண் விட்டிருக்கும் அத்தனை நக்ஷத்திரங்களில் என் மூதா தையரைத் தேடி அடையாளம் கண்டு அவர்கள் ஆசியைப் புதுப்பித்துக் கொள்கிறேனே! அத்தனையும் உயிரின் ஊர்ஜிதந்தானே!
“பதிம்தேஹி! பதிம்தேஹி! பதிம்தேஹி! பதிம்தேஹி! பதிம்தேஹி! பதிம்." இவள்தான் நளாயினி, அவள்தான் பாஞ்சாலி. இதுவே பாரதம்.
ஆகவே அம்மாவின் தவ பலமோ, முதலியார் பொதுவாகப் பெண்களுக்கென உணர்த்திய வேறு பலமோ, வியாதி பலம் ஒடுங்கி, ஆனால் முடிந்த மட்டும் அதன் பற்களிடையில் அண்ணாவைக் கடித்துக் கசக்கி மென்று விழுங்கப் பார்த்து முடியாமல், கோபத்துடன் உமிழ்ந்துவிட்டது. ஆனால் எப்படிப்பட்ட மீட்சி! அண்ணா, தன் அஸ்தியிலிருந்து எழுந்து வந்தார்.
He cried in a loud voice. Lazarus come forth.
And he that was dead, came forth bound hand and foot with grave clothes and his face was bound about with a napkin. Jesus saith unto them Loose him and let him go. (St. Jhon, XII. 43,44)
எங்கள் அண்ணா எங்கே? ஏன், உங்கள் அண் ணாவை உங்களுக்கு அடையாளம் தெரியாதா? ஆம். அடையாளம்தான் தெரியறது. உங்கள் அம்மாவுக்காகப் போட்ட பிச்சைதானே! படி அடியில் அக்ஷதை, பிழைச்சுப் போங்கோ.
அண்ணா கடைசிவரை குடுமி வைத்திருந்தார். கசப்பின் வார்ப்பிடத்தில் உதடுகள் நிரந்தரமாக முறுக்கிக் கொண்டுவிட்டன. நெஞ்சின் முள் எலும்பு முண்டிக்கொண்ட உடனே அதன் கீழ் நெஞ்சுக் குழியில் எண்ணெயிட்டுத் திரியேற்றலாம். செழிப்பான அந்த buff கன்னங்கள் ஒளி மங்கி, அவற்றில் சதா ஒரு மருட்சி, கூடவே சிறை வைத்த சீற்றம்.
இருந்தாலும் அண்ணா, எங்கள் அண்ணா. எங்களுக்கு அண்ணா மிஞ்சியிருக்கார்.
அண்ணா தன் பத்தியச் சாப்பாட்டைச் சாப்பிட்டு விட்டு - எல்லாமே தனிச் சமையல், தனி அளவு ஏனத்தில் அளவாகச் சாதம் வடியல் உள்பட - பள்ளிக் கூடத்துக்குத் தயாராகிறார். அந்தப் பஞ்சகச்சமும் close Coatlம், டர்பனும் கழுத்தைச் சுற்றிய அங்கவஸ்திரமும்அவற்றிற்கும் அவர் உடலுக்கும் சம்பந்தமில்லாதவை போல் அவர் மேல் மாட்டி வைத்திருக்கின்றன. இன்னும் கொஞ்ச நாள் ஒய்வில் இருந்தால் தேவலை, ஆனால் திணறிக்கொண்டேனும் வேலைக்குப் போய்த் தான் ஆகணும். இரண்டு மாதங்களாகக் குடும்பம் திணறுகிறது. சரியான சோதனைக் காலம்.
இப்போ தோன்றுகிறது. கடவுளர்கூட பள்ளிக்கூட வாத்தியார் மாதிரிதான். அவர் சுழிக்கத் தீர்மானித்து விட்ட பையன், வேறு காரணங்களால் - மார்க்குக் கூட்டலில் வாத்தியார் தப்பைச் சுட்டிக் காட்டியோ, நோட்புக் மார்க்கில் கூட வாங்கி ஈடுகட்டியோ, அல்லது சிபாரிசிலோ, அவர் சிவப்புப் பென்சிலுக்குத் தப்பித்து விட்டால் அவரால் அவனை லேசில் மன்னிக்க முடிவ தில்லை. "ஓ! அப்படியா சமாச்சாரம்? நீ இனிமேல் என் முன்னால் உட்கார வேண்டியதில்லை - பின்னாலே போ! அண்ணா back benchக்குத் தள்ளப் பட்டு விட்டார். அங்கே போனவர்கள் *Devils island போன மாதிரி. அதிலிருந்து தப்பவே வழி கிடையாதாம்.
-----
* French penal settlement.
பெந்துப் பாட்டியின் பாசம் வேறு. விதியின் தேவதைகளின் கோபம் வேறு. பூசாரி வரம் பெறும் தயவு பூசாரி கோபம் பொல்லாக் கோபம். பெந்துப் பாட்டியின் அணைப்புத்தான் கழுகு வட்டத்தினின்று குஞ்சைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.
அம்மா முகம் இப்போதெல்லாம் கொஞ்சம் இறுகி யிருக்கிறதா? அண்ணா தன்னைப் பார்க்காத சமயத்தில் அவள் அண்ணாவைப் பார்க்கும்போது, அண்ணா வைப் பார்க்கவில்லை. அண்ணாவுக்குப் பின்னால் அவளுக்கு மட்டும் தெரியும் ஏதோ நிழலுருவத்தைப் பார்க்கிறாள். “வா உனக்காச்சு எனக்காச்சு”
"என்னம்மா பேசிக்கிறே?"
அம்மா என்னை மெளனமாகப் பார்க்கிறாள் யாரோ அந்நியனைப் பார்க்கிற மாதிரி.
புரியல்லே.
வீட்டு நடப்பிலேயே கார் மாதிரி ஏதோ gear மாறியிருக்கிறது. இதுபோல் புது வார்த்தைகள், நாங்களும் வாசல் திண்ணையில் உட்கார்ந்தபடியே, அர்த்தம் தெரிந்தோ தெரியாமலோ கற்றுக்கொள்ள ஆரம்பிச்சாச்சு.
என் குட்டித் தம்பி இப்போது விரலானாயில்லை. உரலானாகிவிட்டான்! இன்னும் ஆகிக்கொண்டிருக் கிறான். சிவந்து தளதளத்து, சுருட்டை மயிர், அழகிய பெரும் விழிகள், மூக்கு என் மாதிரியில்லாமல், கூரிட்டுக் கொண்டு வருகிறது. அவன் அண்ணா ஜாடை, இட்ட பெயர் வைத்யலிங்கம், இப்பத்தான் சிரமப்பட்ட நினைவுடன் புழக்கத்தில் கொண்டு வந்திருக்கிறது.
அம்மா பெருமாள் கோயிலுக்குக் கையில் எண்ணெய்க் குடுவையுடன் போய்க்கொண்டிருக்கிறாள். தன்னோடு வர எங்களைக் கட்டாயப்படுத்துவதில்லை. எங்களுக்கும் சிரத்தையில்லை. எந்தப் புது நிலை மைக்கும் உடனே சரியாகிவிடும் தன்மையில் குழந்தை களுக்கு நிகரே கிடையாது. பெரியவர்களுக்குச் சுட்டுப் போட்டாலும் வரப் போவதில்லை.
அண்ணாவுக்குப் பகலும் இரவும் இழுத்து மூச்சில் தந்திக் கம்பம் வாசித்தால் என்ன, எங்கள் தூக்கம் கலைவதில்லை. ராச்சாப்பாடு முடிந்ததும் நாங்கள் எங்கள் ஜமாவைச் சேர்த்துக்கொண்டு வாசல் திண்ணையில் கூடித் தாத்தா சொன்ன கதைகளைச் சொல்லிக் கொண்டிருப்போம். எங்கள் சொந்தச் சரக்கையும் சேர்த்து எங்கள் புது அலையில் (அஹ்ஹா அர்ச்சுனன் கதையைத் தூக்கிக்கொள்வான். பீமன் வில்லாளி ஆகிவிடுவான். லசுஷ்மணனோடு கர்ணனைச் சண்டைக்கு விட்டுப் பார்ப்போம். ராவணனுக்கு இரண்டு மூன்று தடவையேனும் யுத்தத்தில் வெற்றி கிடைக்கும். ராமனுக்காக, அசோகவனத்து மரங்களை வளைய வந்து சீதை மடிப்பிச்சை எடுப்பாள். எங்களைக் கேட்பதற்கு ஆள் இருந்தால்தானே!
பிள்ளைக்கு உயிர்ப்பயம் இல்லை என்று தெளிந் ததும் தாத்தா ஊருக்குப் புறப்பட்டுவிட்டார். அவரால் பெருந்திருவைப் பிரிந்திருக்க முடியவில்லை.
“பெருந்திருவையா? யெச்சுமியையா?" அண்ணா மன்னியைக் கேட்பார். “பிள்ளை உடம்பு தேற இட்டுக் கட்டின பாட்டுக்களை அவளிடம் அரங்கேற்ற வேண்டாமா ?”
"ஆமாம். சின்ன நாத்தனார் காலமானபின், அப்பாக்குப் பெரியத்தைதான் யோசனைக்கு. அவளும் சாமானியமா? ராமநாதபுரம் ஸ்மஸ்தான சங்கீத வித்வானுக்கு வாழ்க்கைப்பட்டிருக்கிறாள். உங்கள் அப்பா கால்நடைக்கு வாளாடி கொல்லைப்புறம்.”
‘சரிதான் மன்னி, நான் சொல்றது வாளாடி அத்தையை இல்லை. இந்தச் சாமர்த்தியமெல்லாம் உனக்கெப்போ வந்தது?"
அண்ணாவுக்கு, அப்பாவின் காதல் கிழத்தி மேலிருந்த கசபபை மன்னியிடம் நான் காண முடிய வில்லை. மன்னி, உங்கள் தோல் வலிமை தடிமனா, அல்லது இப்போது எங்கள் பாஷையில், adjustment திறமை அவ்வளவு அபாரமா?
என் தம்பி இன்னமும் என்னிடம் பாடுகிறான். கொக்கரிக்கிறான், வாய்ப்பாடு ஒப்பிக்கிறான். அஜஸ்ட்! அஜஸ்ட்! அஜஸ்ட்!" (நடுவில் ‘d’ காலி தெரிகிறதா?) அது இல்லாததனால்தான் நீ திண்டாடித் தெருக் குலைந்து உள்ளேயே வெந்துகொண்டு வயசுக்கு மீறின கிழம் காட்டறே! என்னைப்பார், எதையுமே காதில் போட்டுக் கொள்ளாததால் எவ்வளவு இளமையா யிருக்கேன்! நான் ஆதம்பாக்கத்து M.G.R.
சைதாப்பேட்டையில் குடியிருந்தபோது சைதாப் பேட்டை M.G.R.
ஒருநாள் எதிர்வீட்டுப் பையன், பெருமையாக எங்களிடம் ஒரு சாமானைக் காண்பித்தான். அவனுக்குத் தெருவில் கிடைத்ததாம் Compass. நிமிஷம் கூட ஓயாத அதன் முள் ஆட்டம் எங்களுக்கு ஆச்சரி யத்தை விளைவித்தது. நாம் தூங்கிப் போயிட்டாக் கூட அப்படித்தான் துடிச் சுண்டிருக்கும். எங்கப்பா சொன்னா.
அண்ணா உடம்பு அப்படித்தான் இருந்தது. ஒரு நிலையில் இல்லை. பள்ளிக்கூடத்திலிருந்து வருவார். குஷியாகவே இருப்பார் ட்யூஷன்களைக் குறைத்துக் கொண்டு விட்டதால், அண்ணா இப்போதெல்லாம் எங்களுக்குக் கூடவே கிடைச்சார் எங்களுக்குச் சரியா பேசிண்டு, கும்மாளம் அடிச்சுண்டு, இந்த அண்ணா இத்தனை நாள் எங்கேயிருந்தா? அண்ணா எப்போ தினம் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வருவா? ராத்திரி எங்களை அணைச் சுண்டு படுத்துப்பா. ஏதோ நாங்கள்லாம் பெரிய மனுஷா மாதிரி பள்ளிக்கூடத்தில் அன்னிக்கு நடந்ததைச் சொல்லுவார்.
"அம்மாப் பொண்ணே, இன்னிக்குக் குழந்தை களோடு சேர்ந்து எனக்கு முற்றத்தில் நிலாச்சாப்பாடு.”
"ஐயே, ஜாலி! ஜாலி!” நாங்கள் கையைக் கொட்டிக் கொண்டு கொக்கரிப்பு. அண்ணா கழுத்தைக் கட்டிக் கலாமான்னு ஆசையாயிருக்கே! ஆனால் அது கூல் டிரிங்கை உறிஞ்சிக் குடிக்கிறான்களே அந்தப் புல்குழாய் மாதிரி முறிஞ்சுட்டா? கழுத்து அவ்வளவு சன்னம் –
"அம்மாப் பொண்ணே ! இன்னிக்கு என்ன சமையல் ?"
அண்ணாவுக்கு ராத்திரி மாதத்தில் 35 நாளைக்குப் புழுங்கலரிசிக் கஞ்சி (கேஸ் பிடிக்கக் காத்திருப்பவர் ஏமாற்றமடையக் கடவர். இதற்கு முன் பக்கங்களில் Poetic licence பற்றி ஒரு பிரசங்கமே நிகழ்த்தியிருக் கிறேன். அதுதான் இது)
பச்சை மணத்தக்காளி வெந்தயக் குழம்பு, கீரை மசியல், வேணும்னா அரிசி அப்பளாம் சுட்டுப் போடறேன்.
"பேஷ். ராஜ சாப்பாடு! இதுக்கு மேல் என்ன வேணும்?"
"கண்டிப்பா வடுமாங்காய் உங்களுக்குக் கிடையாது. உங்கள் கண்ணெல்லாம் எங்:ே , இந்தச் சூழ்ச்சி யெல்லாம் எதுக்குன்னு எனக்குத் தெரியும்."
"சரி, வேண்டாம், மோரும் சாதத்துக்குக் கீரையும் குழம்பும் கலந்துக்கக் கைபிடிக்க முடியாதே?”
"மோரும் சாதமா? சப்தரிஷி”
"ஆனாலும் அக்கிரமம் பண்ணாதேயுங்கோடி. மோரைச் சுடவெச்சுப் போடுங்கோ.”
ஊரில் உள்ள அத்தனை பேச்சையும் பேசிண்டு, சிரிச்சுண்டு, சத்தம் போட்டுண்டு சாப்பிடுவோம்.
"ஏ பசங்களா! சின்ன வயசுலேருந்தே எனக்கு இப்படித்தான் சாப்பிடணும்னு ஆசை. ஆனால் அது இப்போத்தான் கிடைக்கணும்னு இருக்காப்போல் இருக்கு."
மனம் நிரம்பறதுன்னா நிஜம்மா அதுவும் Cup போல வழியும்னு லேசா அப்பவே ஒரு உணர்ச்சி தோணித்து.
இன்னும் மோருஞ்சாதத்துக்கு வந்திருக்க மாட் டோம். அண்ணா பேச்சு அடங்கிப்போய், எங்களை ஒரு தினுசாப் பாக்கறா. அந்த மிரண்ட முழியை அடையாளம் கண்டுகொள்ள எங்களுக்கே தெரிஞ்சு போச்சு. அடுத்த சில வினாடிகளில் “கொர் கொர், லொக்கு லொக்கு, கல் கல்." அந்த ஆஸ்துமா அரக்கன் கொலுசு கட்டிண்டிருப்பானா?.
நெஞ்சை அடைக்கிறது. டேய், உனக்கு தைரியம் இருந்தால் வெளியே வாடா, அண்ணா உள்ளே ஒளிஞ் சுண்டு அவரை என்ன மிதி மிதிக்கறே? நீ மாத்திரம் கண்ணில் படு, உன்னை என்ன பண்ணறேன் பார்!
“சப்தரிஷி, சொன்னா கேக்கறையா? நீ எல்லாம் வெட்ட வெளியில் உட்காரப்படாது - இங்கே காற்று நடமாட்டம் ஜாஸ்தி."
இருமல், இழுப்பின் அவஸ்தையோடு அண்ணா திணறுவார். “மன்னி, காற்று இல்லாட்டா, நாம் எல்லோரும் செத்துப்போயிடுவோம். காற்று இருக்கோ, இழுத்துண்டாவது இருக்கேன். இல் லாட்டா, ஒரேயடியா க்ளோஸ்."
"அட போடா அசடே, நீ சொல்ற காற்று வேறே! நான் சொல்ற காற்று வேறே!”
அம்மா ஒண்ணும் பேசமாட்டாள். அண்ணாவின் அவஸ்தையை உற்று கவனித்துக்கொண்டிருப்பாள். அவளுடைய கறிவேப்பிலைக் கன்று மறுபடியம் புயலில் சிக்கிவிட்டது.
மறுபடியும் - மறுபடியும் - இதுவரை எத்தனை மறுபடியோ? கணக்கில்லை இன்னும் எத்தனை இருக்கோ ?
சரியானபடி எங்கள் நிலாச்சாப்பாட்டைக் கெடுக்க வந்த பாவி வியாதி.
நிலாவா? யார் சொன்னது? அது அண்ணா பேச்சுக்குச் சொன்னது. எங்களோடு சேர்ந்து சாப்பிடும் சந்தோஷத்துக்கு எல்லாம் நடுமுற்றத்தில், லாந்தர் வெளிச்சம்தான். இந்த வீட்டிலும் மின்சாரம் கிடையாது. வேணும்னா நக்ஷத்ர வெளிச்சத்தைச் சேர்த்துக்கோ - அதுவும் கிடைச்சவரை. இன்னிக்குக் கொஞ்சம் கறுக்கல், நிலாவெல்லாம் அவரவர் மனசு நிலாத்தான்.
காலம் சரியானபடிதான் எங்களுக்கு வக்கரித்துக் கொண்டு இருந்தது.
ஒருநாள் சாயங்காலம் மன்னி அடுத்த தெருவில் ஏதோ சாமான் வாங்க, என்னைத் துணைக்கு அழைத்துக்கொண்டு போனாள்.
எதிர் வீட்டுள் நுழைஞ்சு போனால் பின்கட்டு வாசலில் அடுத்த தெரு. அப்படித்தான் போனோம். அந்தியிருட்டு. கடைகளில், இப்பொத்தான் அங்கு மிங்குமாய்ச் சோம்பல் மினுக் மினுக் விடுகின்றன.
தெருவில் சக்கரங்கள் பறந்தவண்ணம், எங்கள் கடை எதிர்ப்பக்கம் சடக்னு நான் மன்னி கையை விட்டுட்டுத் தெருவின் குறுக்கே பாய்ந்தேன்.
"பூம்! பூம்!"
என்மேல் ஒரு பெரிய கட்டடம், ராயப்பேட்டை ஆஸ்பத்திரி மாதிரி - தன்னிடத்திலிருந்து பேர்ந்து வந்து என்மேல் மோதிற்று. கார் அடியில் போய்விட்டேன்.
முன் சக்கரம், அடுத்து, பின் சக்கரம். இரண்டுக்கும் இடைவெளி மின்னல் நேரத்திலும் மட்டு. ஆனால் தனித் தனி நேரம் - மண்டைமேல் ஏறி இறங்கினது எனக்கு நன்றாகத் தெரிந்தது. வாயிலிருந்து ஒரு சத்தத்துக்கு நேரமில்லை. சத்தம் மறந்துபோச்சு.
அப்பா, என்ன அடி! கழுத்தில் ஏறி இருந்தால், லா.ச.ரா. (“புரியாத எழுத்தாளர், புரியாமல் எழுதுவதே அவர் அம்சம்!”) ஏது? மண்டையே ஏன் இந்த இரண்டு அடிகளுக்கும் சட்னி ஆகவில்லை? (மண்டையா அது? சரியான மரக்கட்டை" தேங்காயைச் சுண்டுவதுபோல் ‘ணக் ணக்' பண்ணிக்கொண்டு” - அண்ணா)
எங்களைச் சுற்றி உடனே கூடிவிட்ட கூட்டத்துக்குக் கேக்கணுமா? யாரோ ஒருவன் என்னை எழுப்பி நிறுத்தி என்னைத் தும்பு தட்டினான். ஒரு சிராய்ப்புகூட இல்லை - அடுத்தநாள் பையன்களிடம் பீற்றிக் கொள்ள (போடா டூப் விடறே!) எனக்கு ஏமாற்றம் தான். Death takes a Holiday.
பாட்டி இரு கன்னங்களிலும் அறைந்த கையோடு கல்லாய்ச் சமைந்துவிட்டாள்.
காரைத் தெருவோரத்தில் (அப்போல்லாம் Platform கட்டவில்லை) நிறுத்திவிட்டு யாரோ இறங்கி எங்களைப் பார்த்து நடந்து வரார் - பையிலிருந்து Purseஐ எடுத்துக்கொண்டு. என்னைத் தொடக்கூட இல்லை. (அவர் கையில் நான் பிசுக்கு ஒட்டிக்கொண்டால்? அவ்வளவு பெரிய மனுஷர்) ஒரு முறை கூர்ந்து கவனிக்கிறார் தலையிலிருந்து, கால் வரை. Purse பைக்குள் திரும்பிவிட்டது.
"யாரம்மா பாட்டி? உன் பையனா? நீங்கள் எல்லாம் இப்படிப் பொறுப்பில்லாமல் குழந்தைகளை நடுத் தெருவில் ஒட விடுங்கோ. அப்புறம் எங்களைக் குத்தம் சொல்லுங்கோ? இந்த நாட்டுக்கு எப்படிச் சுதந்தரம் வரும் Road sense ஏ கிடையாது! Fools!”
கூட்டத்தில் மறைந்துவிட்டார். கார் ஸ்டார்ட் ஆகும் சத்தம் கேட்கிறது. Ford ஆ? Chevrolet ஆ? அப்பவும் என் கவலை ஏன் இப்படி ஒடுகிறது?
அன்று நான் வீட்டில், பெரிய ஹிரோ, எனக்குப் போட்டியில்லை. அப்போ M.G.R எங்கே சின்னப் பையனோ? ரஜினி இன்னும் பிறக்கவேயில்லை. அப்பாடி!
மன்னி, எனக்கு உதிரி விபூதி இட்டு, நடு முற்றத்தில் என்னை உட்காரவைத்துச் சுற்றிப் போட்டு - மன்னி நடு முற்றத்தில் எங்கோ ஒரு மூலையை முறைச்சுப் பார்த்துண்டு.
"கருப்பண்ணன் மேல் ஆணை - ஒடிப்போ - இங்கே விட்டு ஓடிப்போ!” யாரை அதட்டுகிறாள்?
"உனக்கு என்ன வேணும்" அன்று இரவு எனக்குச் சாப்பாட்டில் தனி மரியாதை எனக்கு என்ன வேணும்? பாலுஞ் சாதம்தான்.
"ஏலே, நீ செத்துப் போயிருந்தால், உன்னை எரிக்கிற வயசா? புதைக்கிற வயசா?” விரலான் அவர் கைகளி லிருந்து என்னைப் பார்த்துச் சிரிக்கிறான்.
"போறுண்டா சப்தரிஷி உன் வேடிக்கை!" மன்னி என்னை மூர்க்கமாக அணைத்துக் கொண்டாள். "தவம் கிடந்து பெத்த குழந்தை. பெருந்திரு போட்ட பிச்சை அவளை உதாசீனமாய்ப் பேச எப்படிடா உனக்குத் தோணறது?"
மன்னி சீறி அன்றுதான் பார்த்தேன். முதல் தடவை, கடைசித் தடவை ரெண்டும் அதுதான்.
இவாள்லாம் இப்படி அமர்க்களப்படுத்துவதால், எனக்கு லேசா பின்மண்டையில் வலிக்கிற மாதிரி இருக்கோ?
உண்மையிலேயே வலிக்கத்தான் செய்தது. பின் மண்டையில் 'சுருக் சுருக்' - அந்த அடிக்கு அதாவது இருக்க வேண்டாமா? தூக்கம் வரவில்லை. படுக்கையில் புரண்டு உருண்டேன். ஊஹ"ம் - முனகலாமா? இல்லை. மன்னியும் அம்மாவும் பேச்சுக்குரல் கேட்கிறது. அவாளுக்கும் தூக்கம் வரல்லே போலும். விடி விளக்கில் உட்கார்ந்து கொண்டு அவர்கள் நிழல் உருவம் (Silhouette) தெரிந்த்து.
"அம்மாப் பொண்னே! குழந்தைக்கு நேரக்கூடாதது நேர்ந்திருந்தால் என்னடி பண்ணுவோம்?"
"நாம் என்னத்தைப் பண்ணுவோம்? வரத்தைப் பட வேண்டியதுதான்."
“என்னடி அவன் என்னமோ விகடம் பண்ணறான்! நீ விட்டேத்தியாப் பேசறே! எவ்வளவு பெரிய பழி பாவத்துக்கு ஆளாகியிருப்பேன்? அப்புறம் என் கதி என்ன ? மெனக்கெட்டுக் குழந்தையை அடுத்த தெருவுக்கு அழைச்சுப் போய் நான் யமனாக முளைக்க இருந்தேனடி?”
“ஒரு சுந்தரம் சுப்ரமணியம் போனதுக்கு மேலேயா மன்னி? பத்தே நாளில் இரண்டுபேரையும் பறி கொடுத்துட்டு உசிரோடு பாவி நான் இன்னும் இல்லையா?" அம்மா சட்டென மன்னி மடியில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அழுகிறாள்.
மன்னி பரிவுடன் அம்மாவின் தலையைக் கோதுகிறாள்.
அம்மா சட்டென எழுந்து உட்காருகிறாள். இதோ மறுபடியும் அதுக்குமேல் பிரளயம் இப்போ வந்திருக்கு. நானும் என்னவோ எனக்கு மிஞ்சி யாருமில்லேன்னு வளைய வரேன். ஆனால் எனக்கு ஒரு சமயம் இல்லாட்டா ஒரு சமயம் பயமாயிருக்கே!
மன்னி அம்மாவின் தலையைத் தன் தோள்மேல் சாய்த்துக் கொள்கிறாள். "அந்த அளவுக்குப் பெருந்திரு விட்டுடமாட்டாள். அம்மாப் பொண்ணே, நாங்களே உன் தைரியத்திலேதானே இருக்கோம்!”
அம்மாவின் மனம், நினைப்பதெல்லாம் ஒரு செறிந்து எங்கே நிற்கிறது என்று தெரிகிறது. அம்மாவின் எண்ணத்தில் நான் First இல்லை. ஆனால் ஏனோ எனக்குப் பொறாமையில்லை.
முதல் காதல், முதல் துயரம், முதல் முறிவு யாருக்கும் நேரும் கவிதை. முன்னாலேயே சொல்லி யிருக்கிறேன். பின்னரெல்லாம் காயங்கள்; நேர்ந்து கொண்டு தானிருக்கின்றன. நேர்ந்துகொண்டுதான் இருக்கும். படத்தான் காயங்களே.
புலி, சிங்கம், சிறுத்தை, கரடி வனவிலங்குகள் வேட்டையாடுகையில் அவைகளையும்-தான் பற்கள் கடிக்கின்றன. நகங்கள் கிழிக்கின்றன. கொம்புகள் குத்தி வாங்குகின்றன. அம்புகள் பாய்கின்றன. குண்டுகள் விலாவில் புதைகின்றன. முட்கள் தைக்கின்றன. ஒரொரு சமயமும் மிருக வைத்தியன். இதோ வந்தேன் ராசாவே! என்று கட்டியம் கூறிக்கொண்டு பாண்டேஜ"டன் தோன்றுகிறானா? அல்லது Androcles ஆஜராகிறானா?
காயங்கள் பட்டுக்கொண்டுதான் இருக்கும். புதைந்த குண்டின் மேல் சதை மூடும்- அம்புப் புண் தீராத வினை கண்டிருக்கும்.
வேட்டை நடந்துகொண்டு தானிருக்கும். ஒருநாள் இப்படியே குண்டுக்கோ அம்புக்கோ, பொட்டென்று இரையானாலும் போச்சு.
அல்லது –
இப்படியே ஆறிக்கொண்டும் அழுகிக்கொண்டும் முழு வயது வாழ்ந்து கடைசியாக ஒரு நாள் அதன் வேளை வந்ததும் மறைவிடம் தேடி உயிரை நீத்தாலும்
போச்சு.
ஆனால்….
எப்படியும் அவைகளின் கம்பீரம் கடைசிவரை அவைகளைக் கைவிடுவதில்லை. மாந்தரைப் போல அவைகளுக்குத் தன்னிரக்கம் கிடையாது.
--------
அத்தியாயம் 19
Magic lantern Slide இப்போது மாறுகிறது. சற்று வெடுக்கெனத்தான். ஆனால் சம்பந்தத்துடன்தான்.
Reserve Bank அண்ணாவைப் பற்றிச் சொல்லப் போகிறேன்; சொல்லியே ஆகணும்.
அண்ணா பெயர் வெங்கட்ராம ஐயர். ஆனால் அவர் எல்லோருக்கும் அணணா. Reserve Bank-இல் வேலையாயிருந்தார். பரோபகாரம் செய்வதில், அதாவது சரீர உபகாரத்துக்கு - அவரை மிஞ்சி எனக்கு யாரும் இதுவரை நினைவுக்கு வரவில்லை.
கலியாணத்தில் சந்தனப்பேலா, சர்க்கரைத்தட்டு தூக்கணுமா? கூறைப்புடவை, தாலித்தட்டை எல்லோ ருக்கும் காண்பிக்கணுமா?
பந்தியில் கோகர்ணம் தூக்கணுமா?
சமையல்காரன் சமையலுக்குத் துண்டு விழறதென் றால் மார்க்கெட்டுக்குப் போய் வரணுமா?
இதைவிட மேல்.
பிணம் தூக்கக் கால்மாடு ஒரு கை குறைகிறதா? அண்ணாவை –
கூப்பிடவே வேண்டாம். இதோ. “ஏம்பா அனா வசியக் கவலைப்படறே? இதுக்கெல்லாம் புண்ணியம் பண்ணியிருக்கணும்." பஞ்சக்கச்சத்துக்கு உடனே மாறி இடுப்பில் துண்டைக் கட்டிக்கொண்டு, தலையில் கட்டுக்குடுமி, பெரிய புஜங்கள், தொப்பை, கடோத் கஜன், கம்பீரன்.
அண்ணா கைபட்டுக் கரையேறினவர் எத்தனை பேரோ? யார் கணக்கு வைத்துக் கொண்டிருக்கிறார்கள். நம் சாஸ்திரங்கள் சொல்வதை நம்பினால் அந்த மஹானுக்கு மறு பிறப்பே கிடையாது. நாராயணனும் அதேமாதிரிதான். தந்தை வழி மகன்.
ஒருநாள் மாலை அமமாவும் நானும் ஒரு சீப்பு ரஸ்தாளி வாங்கிக்கொண்டு (அண்ணாவின் தாயார் வயசான வளாச்சே! அண்ணா வீட்டுக்குப் புறப் பட்டோம். சும்மாதான், நலன் விசாரிக்க. அண்ணாவின் ஜாகை George town-இல் தம்புசெட்டித் தெருவில் பட்டனவாசம். நாலு குடித்தனத்துக்கு நடுவில்தான்.
போய்ச் சேர்ந்ததும் வீடு பூரா ஏதோ படபடப்பு பரபரப்பு கண்டோம். கூடிக் கூடிப் பேசிக்கொள் கிறார்கள். எங்களைப் பார்த்ததும் விழிக்கிறார்கள். உள்ளே நுழைந்தவுடன் என்னென்று கேட்பது? ஆனால் சூழ்நிலையில் ஏதோ மின்சாரம். மாடியேறிச் சென் றோம். கீழே விட மாடியில் அண்ணா விடுதிப் பக்கம் கூட்டம் தெரிந்தது. இடித்துப் புகுந்துகொண்டு உள்ளே போனால் –
மொட்டை மாடியில் அண்ணா மலைபோலும் சாய்ந்து கிடக்கிறார். மூடிய கண்கள். அவரை டாக்டர் Stethoscope வைத்துப் பரிசீலனை பண்ணிக்கொண் டிருக்கிறார்.
அண்ணா பக்கத்தில் மொட்டை மாடிச் சுவரில் சாய்ந்தபடி அவர் தாயாரும் மனைவியும் நிற்கிறார்கள்.
டாக்டர் பரிசீலனை ஒப்புக்குத்தான். எத்தனை அனுபவம். அவருக்குத் தெரியாதா என்ன? எழுந்து நின்று பெருமூச்செறிந்து உதட்டைப் பிதுக்குகிறார். வேகமாகக் கீழிறங்கிச் செல்கிறார்.
"ஐயையோ !"
"அழாதேடி கண்ணே! இல்லை, பொறுத்துக்கோநாம் என்ன செய்ய முடியும்?” கிழவி மருமகளை அணைத்துக்கொண்டு அவள் மோவாயைப் பிடித்துக் கொண்டு தேற்றப் பார்க்கிறாள். ஆறுதல் சொல்கையி லேயே அவள் குரல் உடைகிறது. இருந்தும் சமாளிக்கப் பார்க்கிறாள்.
நாங்கள் கையில் ரஸ்தாளிச் சீப்புடன் பேயறைந் தாற் போல் நிற்கிறோம்.
இடம், ஏவல், ஆண்டவனின் வேடிக்கைச் சித்திரம் எப்படி?
ஒரொரு சமயம் தோன்றுகிறது-சே, இந்த வாழ்க்கை ஏன் தன் உயிருக்கு வந்தது? சின்னப் பையன் தும்பியுள் துடைப் பக்குச்சியை ஏற்றினால் 'பாவி’ என்று திட்டுகிறோம். சுண்டெலி வாலில் கயிறு கட்டித் தலை கீழாகப் பிடித்தால், தாங்க முடியவில்லை. அட்டையில் பட்டுப்பூச்சியை ஊசியால் குத்தித் தைக்கிறான். கண்ணை மூடிக்கொள்கிறோம் கவணால் பறவையை அடித்துக் கீழே வீழ்த்துகிறான். அத்தனையும் அவனுக்கு விளையாட்டு. 'உருப்படுவியா நீ? என்று சபிக்கிறோம். ஆனால் இப்புவனமே ஆண்டவனின் பரீக்ஷைக்கூடமாக விளங்குகிறதே, அவனை யார் என்ன செய்வது? 'ஆண்டவனே! உனக்கு அடுக்குமா? என்று அப்பவும் அவனையேதான் சரணடைகிறோம். நமக்கும் வேறு கதியில்லையா? அவனும்தான் இப்படியெல்லாம் நம்மைச் சோதனை செய்து என்ன தேடுகிறான்?
அண்ணா மூன்று பெண்களையும், ஒரு பிள்ளையை யும், மனைவியையும், தாயாரையும் நடுவழியில் விட்டு விட்டு மீளாத தன் தனிப் பயணத்தில் போய்விட்டார்.
எல்லோரும் இன்புற்றிருக்க எண்ணும் அண்ணா.
யார்க்கும் உபகார அண்ணா.
ஆபீஸ் ட்ரஸ்ஸில் - டர்பன், கோட், பஞ்சகச்சம், இரட்டை நாடி சரீரம் - காம்பீர்ய அண்ணா.
இது கடந்து ஐம்பது வருடங்களுக்கு மேல் ஆகிறது. நாராயணனும் ரிஸர்வ் பாங்கிலிருந்து ஒய்வு பெற்றாயிற்று.
ஆனால் -
அன்று மன்னி தோளில் அம்மா தலையை இங்கு பார்க்கையில், உடனே அடுத்து, மகனைப் பறிகொடுத்த தாய், கணவனைப் பறிகொடுத்த மருமகளைத் தேற்றும் காக்ஷி நினைவில் எழுகிறது.
Ballet, Silhouette, பொம்மலாட்டம், Tableaux நாடக நடனங்களில் இதுபோலும் விதங்கள் உள. தவிர, சினிமா, டிராமா. ஆனால் எத்தனை வருடங்களாயினும் அழியாது, நெஞ்சில் உறைந்துபோன இச்சித்திரங்களுக்கு ஈடாகுமோ?
இங்கு ஒன்று சொல்வது முறையாகும். இந்த வரலாற்றில் இதுவரை கண்டிருக்கும் சம்பவங்கள் அப்பட்டமாகவும், சாயல்களாகவும், அடையாளமாகவும் என் கதைகளில் இழைந்திருப்பது, என் எழுத்துடன் பழக்கமான வாசகர்களுக்குப் புரிந்திருக்கும் என்றே நம்புகிறேன். எங்கெங்கு, என்னென்ன, எவ்வெவ்வாறு எனத் தனிப்பட்ட முறையில் நான் விளக்கப் போவ தில்லை, அனுபந்தமும் தரப்போவதில்லை. பொதுவாக அது கலைக்குக் குறைவு ஏற்படுத்துவதாகும். பாலாடைப் புகட்டல். எழுத்தாளன், வாசகன் இருவரையுமே அவமானப்படுத்துவதாகும். இலக்கிய அனுபவம் ஆளுக்கு ஆள் வேறு. அது வாசகனுடைய பிரயத்தனமாகவும் இருத்தல் வேண்டும்.
இலக்கிய அனுபவம் என்பதுதான் என்ன? இதைத் திட்டவட்டமான ஒரு சட்டத்துள் அடைக்க முடிந்த தாக எனக்குத் தோன்றவில்லை. எத்தனை வியாக்யா னங்கள் செய்ய முடியுமோ அத்தனையையும் அது வாங்கிக்கொண்டு மேலும் இடம் காட்டும். இதில் பிரளயத்திற்குப் பின் ஆண்டவன் அதரங்கள் இளகும் புதிர்ப் புன்னகையின் ஒளியாட்டம் ஒளிந்துகொண் டிருக்கிறது என எனக்குத் தோன்றுகிறது.
சம்பவங்கள் நேர்கையில் அவைகளில் பூமியிலிருந்து பிடுங்கிய ஒரு கிழங்கு முரட்டுத்தனம், ஒரு கோரம் - ஏன், தரக்குறைவுகூடத் தெரியும். ஆனால் நினைவில் ஸ்புடமாகி அதன் வேளையில் எழுத்தாக வெளிப்படும் போது, நிகழ்ந்த நேரத்தின் மிரண்ட மூர்க்கம் கழன்று ஆனால் வலுக் குன்றாமல், ஒரு தெளிந்த குளுமை ஒளி தரும் சுடராக மாறுகின்றது. எழுத்துக்கே ரஸவாதம் உண்டு.
ஆனால் இதற்கு அடிப்படை உண்மைச் சம்பவம் தான். தி.ஜ.ர. சொல்வார்: "எந்தக் கதையேனும், அதில் கொஞ்சமேனும் நிஜத்தின் ஆதாரம் இருந்தால்தான், நம்பக்கூடியதாகவும் படிப்பவன் அத்துடன் ஒன்றக் கூடியதாகவும் இருக்க முடியும்" ஆகாயத்திலிருந்து நார் கிழித்ததாக, 150% கற்பனை என்று தம்பட்டம் தட்டும் எழுத்தும் இதற்கு விலக்கல்ல.
"உண்மைச் சம்பவங்களை இலக்கிய அனுபவங் களாக மாற்றுகிறேன் என்று இவர் சொல்லிக்கொள்ளும் சாக்கில் இவருடைய சொந்த விவகாரங்களைப் பற்றி நாங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது?” ஆக்ஷேபணைக்காகவே ஆக்ஷேபணை செய்பவர்க்கு என் பதில் இதுதான்: கையில் உள்ளதை விட்டுவிட்டு, காற்றில் பறப்பதை வைத்துக்கொண்டு இலக்கியம் பண்ணச் சக்தி எனக்குக் கிடையாது.
"இது எனக்கு நேர்ந்தது, அல்லது நேரக்கூடியது. இதில் இவ்வளவு அழகு இருக்கிறது என்பதை, நேர்ந்த போது எப்படி அறியாமல் போனேன்?” என்கிற ஒரு புல்லரிப்பு, அதன் விளைவாக ஒரு இன்பம், உயிருக் குயிர் அனுதாபம், உள்ளூர ஊறும் ஆத்ம பலம், நம்பிக்கை - இதுதான் இலக்கிய அனுபவம். என் காலத்தில் எனக்கும் முன் காலத்தில், அதற்கும் முன் காலத்தில் இதுபோன்ற மனிதர்கள் நடமாடினார்கள்; வாழ்ந்தார்கள். அவர்கள் வாழ்வதற்கு ஆதாரமாக இருந்த அவர்களுடைய நம்பிக்கைகள், லக்ஷயங்கள், ஆசாபாசங்கள்; வாழ்க்கை முறை இன்னவிதமாக இருந்தன. இப்போது எந்த அளவுக்கு நீர்த்துப் போய்விட்டோம். அல்லது எந்தெந்தக் கோணங்களில் முனனேற்றம் கண்டிருக்கிறோம் - எனக்கு நேர்ந்த சம்பவங்கள் என் நோக்கை, எந்த அளவுக்கு பாதித்தன என்பதைச் சொல்லி, அதனால் நேரும், நேரக்கூடிய இலக்கிய அனுபவத்தை வாசகனுக்குச் சொந்த மாக்குவதே 'பாற்கடல்' எழுதும் நோக்கம். இதில் பிறர் காணும் வெற்றி, தோல்வி, குறைகள், அவரவர் பூத்ததற்குத் தக்கபடி. என் விளக்குத் தூண்டுகோல் பற்றித்தான் நான் சொல்லிக்கொள்ள முடியும்.
நடுநிசியின் முழுநிலவில் வாழ்க்கையின் கீதத்தைப் பாடிக்கொண்டே தெருவழியே செல்கிறேன். ஏன்? அது என் ஆனந்தம். நான் பிச்சைக்குப் பாடவில்லை. என் இச்சைக்கே பாடிக்கொண்டே போகிறேன்.
சில கதவுகள் திறக்கின்றன.
திறந்திருந்த கதவுகள் மூடிக்கொள்கின்றன.
சிலர் வெளியே வந்து கவனிக்கவும் கவனிக்கின்றனர்.
இதுதான் இலக்கிய அனுபவம்.
ராயப்பேட்டை வாழ்க்கையில் என் முக்கிய நினைவுகளில் ஒன்று மொகரம் பண்டிகை.
மொகரம் பண்டிகையாம்! எனக்கு அப்பவே தமிழ் கூடத் தெரிஞ்சிருந்தால் துயரப் பண்டிகை எனப் பெயர் சூட்டி இருப்பேன். துயரமும் பண்டிகையும் எப்படி
எதிர் மறைகள் சேரும்? நமக்குத்தான் புத்தி இப்படி ஒடும்! எல்லாமே கொண்டாட்டம்.
கொளுத்திவிட்டுச் சுடலையிலிருந்து திரும்பியதும், முப்பருப்பு - பாயஸ்த்துடன் பந்தி.
பத்தாம் நாளன்று முக்கனி, பாயஸம் இத்யாதி களுடன் விமரிசையாக விருந்து.
பதின்மூன்றாம் நாள் தீண்டல் கழிகிறதாம். புதுத் துணி, விருந்து, சந்தனம் குங்குமத்துடன் மங்கலத்தின் ஸ்வீகரிப்பு. காரியங்கள் யதாப்பிரகாரம் நடக்கின்றன. யாருக்காகவும் எதுவும் காத்திருக்க முடியாது. ஒப்புக் கொள்கிறேன்.
இந்தப் பத்து நாட்களுக்கும் இரவு தித்திப்புடன் பலகாரம் தவிர, அக்ரஹாரத்தில் வசித்தால் ஒருநாள், வீட்டுக்கு வீடு படியேறி முச்சந்திப் பணியாரம் என்று போட வேண்டும்.
சம்பிரதாயப்படி இறந்த ஒரு வருடத்துக்குப் பண்டிகைகள் கொண்டாடலாகாது. ஆனால் சம்பிர தாயங்களுக்கும் பவுடர் பூசி முகத்தை மாற்றியாகிறது. புத்திமதிகளையும் யோசனைகளையும் உதிர்க்கப் பக்கத்து வீடு, எதிர் வீடுகள் இருக்கின்றன. அவர்கள் செளகரியமாகச் சொல்லும் யோசனைகளை ஏற்க வீட்டுப் பெண்டிர்க்கு வலிக்குமா?
‘மாமியார், நன்னா வயசாகிக் காலமாகி இருக்கிறார். கலியாணச் சாவு! தீபாவளிக்குக் குழந்தைகளை வஞ்சனை செய்யாதே; நீங்கள் பெரியவாள் வேணு மானால் எண்ணெய் தேய்ச்சுக்க வேண்டாம். குழந்தை களுக்கு யதாப்ரகாரம் நடக்கட்டும், பட்டாசு உள்பட, பக்கத்து வீட்டில் மத்தாப்புக் கொளுத்தினால் இதுகள் ஏக்கமாகப் பார்த்துண்டு இருக்க முடியுமா? நீங்கள் கூட மத்தியானம் புதுசைக் கட்டிண்டுடலாம். ஒரு தடவை தட்டினால் மூணு தடவை போகும். மாமா கிட்டே நான் சொன்னேன்னு சொல்.”
துயரப் பண்டிகை ! கவியாணச் சாவு! பதச் சேர்க்கைகள் எப்படி!
"மற! மற! மற!" உபதேசங்களின் அடிப்படை.
எதை? மறைந்தவர்களையா? அல்ல, அவர்களின் மறைவையா? நடைமுறையில் அதுதான் புரியவில்லை. இரண்டும் ஒன்றுதானே? வித்தியாசம் இருக்கிறதா என்ன?
பைக்ராப்ட்ஸ் ரோடு வீடுகளில், மாடி ஒன்றில் இடம் பிடிச்சாச்சு. காலை பதினோரு மணியிலிருந்தே, ரோடு திமிலோகப்படுகிறது. வெயில்கூடச் சமயத்தை அனுசரித்து மங்கிச் சூரியனும் முகம் தொங்கலில் இருக்கிறானே?
11, 12, 1.
ஜன நெருக்கம் அதிகமாகிறது.
அந்த நெருக்கடியில் இரட்டை மாட்டுக் கட்டை வண்டிகளில் பெரிய பெரிய அலுமினிய அண்டாக் களுடன் வந்தன. அவற்றில் என்ன?
போலீஸ் தலைப்பாகைகள் கூட்டத்தில் செறிந்து கலந்திருந்தன. தவிர, குதிரைகளில் சவாரி செய்யும் போலீஸ் வீரர்கள், அவ்வப்போது கூட்டத்தை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்தார்கள்.
ஆம்புலன்ஸ்கள் கூட்டத்தில் திணறின.
மேற்படி இரண்டு வாகனங்களையும் போலீஸ் ஊர்திகளையும் தவிர மற்ற வண்டிப் போக்குவரத்து படிப்படியாக ஓய்ந்து நிறுத்தவும் பட்டுவிட்டன.
ஆ! அதென்ன? 'திடும்! திடும்! தூர இடிச் சப்தம்? இல்லை, இடிச் சப்தம் மாதிரி? பெல்ஸ் ரோடின் வாலாஜா முனையிலிருந்து, மெதுவாக, விதியின் விலக்க முடியாத தன்மையுடன் நெருங்கிக்கொண்டு வருகிறது; நெருங்கிக்கொண்டே வருகிறது.
ஒரே சீராக விழும், இல்லை, இறங்கும் இடிகள் பலமாக இருக்கு. அந்த இடத்தை விட்டு ஓடிப்போக வேணும்னு தோண்றது. அதேசமயத்தில் ஏதோ ஒரு வசியம் என்மேல் கூடு கட்டுகிறது. என்னால் அங்கு விட்டு ஓட முடியாது.
பெல்ஸ் ரோடும் பைக்ராப்ட்ஸ் ரோடும் சந்திக்கும் கூடலில் ஜனம் கடல் கடைகிறது. அந்தக் கடைசலில் கக்கும் நுரை போலும் மிச்சக் கூட்டம் வழிகிறது, சுழல்கிறது, நுரைக்கிறது.
“சொடேர் ! சொடேர் ! சொடேர்!”
பல நூற்றுக்கணக்கான சாட்டைகள் சொடுக்குவது போலும் - ஆனால் இதில் ஆச்சரியம் யாதெனில் ஒரே அளவில் லயம் பிசகாத அந்தத் தாளம். தாள பயங்கரம்.
திடும்! திடும்! திடும்!
எந்தச் சந்தேகமும் வேண்டாம். சப்தம் நெருங்கி விட்டது. இதோ, நேர்முகம் திரும்பினதுபோல், மெதுவாக - கம்பீரமாக, கூடவே ஒரு பயத்தையும் உண்டுபண்ணிக்கொண்டு, முதல் batch எங்கள் பார்வைக்குத் தோன்றுகிறது.
முஸ்லிம் குருக்கள் குரானிலிருந்து ஒரு சுலோ கத்தைப் பாட்டுக் குரல் கொடுத்து வாசிக்கிறார். அந்தச் சுலோகம் முடிந்ததும்:
"ஆலி! ஜூலா! ஹஸ்ஸேன்! ஹுஸ்ஸேன்!”
அப்பா! அடிகள் மார்மேல் இறங்குகின்றன. அத் தனை கரங்களும் ஒரே நிதானத்தில், ஒரே இடைவெளி யில், ஒரே எண்ணத்தில், ஒருமித்த மனோலயத்தில் –
திடும்! திடும்! திடும்! அடியா அது! இடி! இடியா அது? இப்போது தோன்றுகிறது. அன்று பண்டையில் நடந்த பாவச்செயலுக்குப் பச்சாதாப துக்கம். அந்த ரத்தில் மாரடித்துக் கொள்பவர்களுக்குத் தனித்தனி யாகச் சரகு பிரிந்து ஒரு பெரிய, பிரமாண்டமான orchestral movementஇல் தன்னை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது. மூடுபனியில் திடீரென விளிம்பு காட்டும் Iceberg எட்டவும் இருக்கிறது, கிட்டவும் தோன்றுகிறது. நான் துக்க மலை.
இப்போ எனக்கு பயம்கூடத் தெரியவில்லை ஏதோ பரவசம்.
திடீரென வெயில் தன் சுய வெம்மையைக் காட்டு கிறது. சூரியனை மறைத்த மப்பு கலைந்துவிட்டது.
இந்தக் கூட்டத்தை அடுத்து பெல்ஸ் ரோடில் இன்னொரு மாரடிச் சத்தம் தனித்துக் கேட்கிறது. முதல் கூட்டம் நகர்கிறது. அடுத்த batch வந்துவிட்டது. அந்த முக்கில் (pycrafts Road - Bells Road) ஒரு மசூதி இருக்கிறது. அதனால் இங்கே துக்கக் காணிக்கை தனியாகச் செலுத்தியாகிறதோ?
இரண்டு மூன்று நிமிடங்கள்தான். ஆனால் எத்தனை யுகங்கள்! நேரத்தை அதன் கணக்கழித்து நிறுத்தியாகிவிட்டது.
"ஆலி! ஜூலா! ஹஸ்ஸேன்! ஹுஸ்ஸேன்”
அடுத்த batch -
அடுத்த batch –
கரங்கள் ஆகாயம் நோக்கித் தூக்கிச் சூரியனை அஞ்சலிக்கும் பூ மலர்ச்சிகள். விரல்கள் தனித்தனியாக இதழ் விரியலில் தவிக்கின்றன; துடிக்கின்றன. அடுத்து, விரைந்து, மார்கள் மேல் இறங்குகின்றன. மார்புகள் குருதித் தடாகங்கள்.
"ஹஸ் - ஸேன்! ஹுஸ் - ஸேன்” இரண்டு நிமிடங் களில் அடிகள் உச்ச சுருதியை அடைந்து, தங்கிப் படிப்படியாகத் தணிகின்றன. கரங்கள் மார்புகளைத் தடவிக் கொள்கையில், தடாகத்தில் மிதக்கும், கசங்கிய இதழ்கள்.
குருக்கள் அடுத்த சுலோகத்தைத் தொடங்குகிறார். இந்த batch நகர்கிறது. அடுத்த batch நெருங்கிக் கொண்டிருக்கிறது.
இந்த அடி தாங்காமல் களைத்து விழுந்தவர்களை, இதைப் பார்க்கச் சகிக்காமல் கூட்டத்தில் மூர்ச்சை யானவர்களைத் துக்கிக்கொண்டு ஆம்புலன்ஸ்கள் அவசரச் சிகிச்சைக்கூடங்களுக்குப் பறக்கின்றன. இரட்டை மாட்டுக் கட்டை வண்டியிலுள்ள, பெரிய தவலைகளிலிருந்து, மாரடித்துக் கொள்ளுபவர்களுக்குச் சிரமபாணம் ஏதோ வழங்கப்படுகிறது.
கடைசியாக முன் சென்றவைகளுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் ஒரு கோஷ்டி தோன்றுகிறது. இந்தக் கோஷ்டியினர் இந்தத்துக்கக் கடலினின்று எடுத்த ஏடு போலும். அவர்களுடைய அழகில், திவ்யமான நிறச் செழிப்பில், உடல் கட்டுமஸ்தானத்தில் அவர்களைச் சுற்றித் திகழும் ஏதோ ஒரு தேஜஸ்ஸின் தூய்மையில், அவர்களைப் பற்றிக்கொண்டிருக்கும் ஆவேசத்தில் தனித்துத் தூக்கி நிற்கின்றனர்.
இவர்களின் மாரடி, துக்கம் முதலாக நேர்ந்தபோது அடித்துக்கொண்ட அந்தப் பரம்பரையிலிருந்து இறங்கிய அடி. இதில், சங்கிலியாலும், சாட்டையாலும் அடித்துக் கொள்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களின் நடுவே, அவர்களுக்குச் சரியாகத் தங்களை தண்டித்துக் கொள்ளும் என் வயதுச் சிறார்கள் சிலரைப் பார்க் கிறேன். வீராவேசம் கட்டிய மொக்குகள், இதற்குள் ளேயே இவவளவு வெறியா? விவரம் தெரிந்த பக்தியா? அல்லது பெரியவர்களுக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்று ஒரு சந்துஷ்டியா?
"ஆலி! ஜூலா!, ஹஸ்ஸேன்! ஹுஸ்ஸேன்!”
இதுவரை உணராத ஒரு துக்கம் என் தொண் டையை அடைக்கிறது. நானும் - நானும் அந்தக் குழந்தைகளுடன் சேர்ந்து, அவர்களோடு நின்று, அவர்கள் துக்கத்தில் கலந்துகொள்ளமாட்டேனா என்று ஏதோ ஏக்கம் காண்கிறது. கால் கட்டை விரலிலிருந்து மண்டை உச்சி வரை ஒரு "கிர்ர்ர். அப்புறம் ஒண்ணும் தெரியல்லே.
அடுத்தாற்போல் ஏதோ குரல், மன்னியென்று நினைக்கிறேன் –
"குழந்தைகளை எல்லாம் இதுக்கெல்லாம் அழைச் சுண்டு வரப்படாது!"
அண்ணா குரல்: "அப்படிப் பொத்திப் பொத்தி வெச்சால் எப்போதான் அதுகள் எல்லாத்துக்கும் பழகறது? இதையும் பார்க்க வேண்டியதுதான்!”
ஒருநாள் மாலை, எதிர்வீட்டில் அங்கே பையன் களுடன் விளையாடிவிட்டு, வீடு திரும்பியபோது, எல்லாரிடமும் ஒரு பரபரப்பான நடமாட்டம் கண்டேன். மன்னி ஒரு கம்பளியில் தலையணையை வைத்துப் படுக்கையாகச் சுருட்டிக்கொண்டிருந்தாள். அம்மா ஒரு சின்னப் பெட்டிக்குள் அண்ணாவின் துணிகள், மருந்துகள் என்னவோ அடுக்கிக் கொண் டிருந்தாள். அண்ணாவும் பரபரப்பாக அலைந்துகொண் டிருந்தார். என்னைக் கண்டதும் நேரே என்னிடம் வந்து என் தோள்களை இரு கைகளாலும் பற்றிக்கொண்டு, “மன்னியும் நானும் ஊருக்குப் போகிறோம். அப்பாவுக்கு உடம்பு சரிப்படலேன்னு சேதி வந்திருக்கு. போகும் போது எங்கே போறேன்னு கேட்காதே. கேட்கப்படாது. முன்கூட்டியே சொல்லிவிட்டேன்."
ஆனால் இந்த வாய் சும்மா இருக்காது. எங்கே போறேன்னுதான் கேட்கக்கூடாது. எப்போ திரும்பி வருவேன்னு கேட்கக்கூடாது என்று சொல்ல வில்லையே! அண்ணாவும் மன்னியும் வாசற்படியில் இறங்கியாச்சு, கேட்டும்விட்டேன். கேட்காவிட்டால் எனக்கு மண்டை வெடிச்சுடும். அது ஏன் அப்படி?
"நான் மெனக்கெட்டுச் சொல்லி இருக்கேன்" பல்லைக் கடித்துக்கொண்டு அண்ணா கையை ஓங்கிவிட்டார்.
“சரி. விடுடா சப்தரிஷி! எல்லாம் நடக்கறதுதான் நடக்கும். பெருந்திரு விட்ட வழி! குழந்தையைச் சிக்ஷை பண்ணிண்டிருந்தா நமக்கு ரெயிலுக்கு நேரமாயிடும்."
அவசரமாக அவர்கள் போனபிறகு, அம்மாவிடம் சக்கையாக வாங்கினேன். ஆனால் அடியெல்லாம் துடைச்சுப் போட்டு வளைய வர வயசுதானே! அடியை மட்டுமல்ல அண்ணாவும் மன்னியும் ஊருக்குப் போனதையே மறந்துபோனேன். ஏன் விளையாட்டின் முனைப்பில் அண்ணாவும் மன்னியும் வீட்டில் இல்லா ததுகட நினைப்பில் நிற்கவில்லை.
சின்ன அத்தை வீட்டுக்கு வந்திருந்தாள். அவள் புக்ககம் பட்டணத்தில்தான். திருவல்லிக்கேணி நெடுஞ் சாலையில் வீடு. கணாங்! கணாங்! கணாங்! வாசலி லேயே ட்ராம்கள் சென்றன. அத்தை அடிக்கடி பிறந்தகம் வருவதில்லை. வந்தாலும் தங்குவதில்லை.
"ஏன் அத்தை வந்திருக்கே?”
“என்னடி அம்மாப் பெண்ணே, உன் பிள்ளை இப்படிக் கேட்கிறான்?”
"ஏன் கேட்டதில் என்ன தப்பு? வர வர, நான் வாயைத் திறந்தாலே தப்பாயிருக்கு!”
“என்னை என்ன பண்ணச் சொல்றே? கொஞ்ச நாளாவே அவன் நாக்கில் சனி ஒடிண்டிருக்கு. நானும் பார்த்துட்டேன். கண்டிச்சாலோ, தண்டிச்சாலோ இனனும் அதிகமாறது."
அம்மாப்பெண், பிள்ளைக்குப் பரிந்து பேசவில்லை. அம்மாப்பெண் எத்தனை நிர்த்தாகூyண்யமானவள் என்று எல்லாருக்குமே தெரியும். ராமாமிருதம் ராமேசுவரப் பிரசாதம் என்று ஏற்கெனவே தெரிந்த விஷயம். ஆகையால் அவனுடைய அசட்டுத்தனங்கள் எல்லாம் தனி ரீதியைச் சேர்ந்தவை.
திடீரென ரேழியில் கார்த்திகேயனின் அழுகை பெருங்குரலாய்க் கேட்டது. கையில் ஒரு சிவப்புக் காகிதத் துண்டுடன் உள்ளே வந்தான்.
உடனே எல்லாரும் அழத் தொடங்கிவிட்டனர். இது மாதிரி இதுவரை நாங்கள் குழந்தைகளுக்குப் பார்த்துப் பழக்கம் இல்லை. கை கால்கள் உதறல் எடுத்துக் கொண்டன. நாங்களும் ஒன்றும் புரியாமலே அழுதோம்.
கொஞ்ச நேரத்துக்கெல்லாம் பெரிய சித்தப்பா ஆபீஸிலிருந்து வந்தார். இத்தனை அழுகை நடுவில் அவர் ஒருவர்தாம் அழவில்லை. சிணுங்கக்கூடவில்லை. என் நினைப்பில், அவர் கண்ணிர் சிந்தியதாகவே எனக்கு ஞாபகம் இல்லை. உள்ளம் கெட்டி.
அன்றிரவே எல்லாரும் ரெயிலேறிவிட்டோம். ஆனால் ஜாலியா இல்லை. அம்மாவும் சித்தியும் முன்றானையால் வாயைப் பொத்தியபடி உட்கார்ந் திருந்தனர். குழந்தைகள், எங்கள் சத்தம் அதிகரித்தால் அவ்வப்போது 'ஷ' பண்ணிக் கொண்டிருந்தனர். வழியில் எங்களுக்கு எதுவும் வாங்கிக் கொடுக்கவில்லை. கையோடு எடுத்தும் வரவில்லை. கார்த்திகேயன் ஜன்ன லோரம் உட்கார்ந்துகொண்டு, ஒரு கையில் தலையைத் தாங்கியபடி மெளனமாகக் கண்ணிர் உகுத்துக் கொண்டிருந்தான். சித்தப்பா உறவின் மரியாதையைக் கடைப்பிடிக்க பரஸ்பரம் அவனுக்கு வயது வரவில்லை. எங்களிடமும் மரியாதை இல்லை. ஊரைவிட்டு ஊருக்கு ரெயிலில் போகிறோம் - அந்த ஜாலியோட சரி. ஆனால் அதுவே எங்களுக்கு அந்த வயதில் போதும். இரக்கம், அனுதாபம், சமயம் சந்தர்ப்பம் அறியா வயது. பெரியவர்கள் எப்போது புரிந்து கொள்ளப் போகிறார்கள்? பசி வயிற்றைக் கிள்ளுகிறது. எங்கள் முனகல், அழுகை எதுவும் பலிக்கவில்லை.
லால்குடி ஸ்டேஷனில் இறங்கியதும் ஜட்கா பிடித்து, வண்டி கீழத் தெருமுனை திரும்புமுன்னரே கார்த்திகேயன் கட்டுக்கடங்காமல் அழ ஆரம்பிச்சாச்சு. வீட்டுக்கு எதிரில் வண்டி நின்று நாங்கள் இறங்கியதுமே, வீட்டின் உள்ளிருந்து எங்களை எதிர்கொண்டது பேரழுகை, உள்ளே போனால் ஒரு பெரிய கூட்டம் மன்னியைச் சூழ்ந்துகொண்டு, அவளைக் கட்டிக் கொண்டு, மூலைக்கொருவராகத் தன் பக்கம் இழுத்துக் கொண்டு, "அடி பாவி, நீ முன்னால் போய்ச் சேர்ந் திருக்கக்கூடாதா ?" திட்டறாளா ? அழறாளா ? மன்னியைக் கொன்றுவிடப் போகிறார்களா? அது மாதிரி. ப.ய.ம்..ம்..ம்.
அன்றிரவு.
“ராமண்ணாவுக்குப் பரமபத சோபன படம் மாதிரி இனிமேல் ஏணி ஏர்றதும் பாம்பில் இறங்கறதுமா, ஜன்மாவஸ்தை கிடையாது. நேரே பெருந்திருவின் பாத கமலங்களில்கூட அல்ல - அவளுடைய அபய ஹஸ் தத்திலேயே சேர்ந்துட்டான். அதுமாதிரி ஐக்யம் சாமான்யமா கிடைக்கக்கூடியதா?”
வாளாடி அத்தைப் பாட்டியை முதல் முதலாகப் பார்க்கிறேன். செம்மரப் பாச்சிபோல் சிறுகூடாக, காய்ந்துபோன வெற்றிலைபோல் கூடத்தில் நாற் காலியில் உட்கார்ந்திருக்கிறாள். ஒடிந்த நாற்காலியைக் கூடச் சிம்மாசனமாக்கிவிடும் ப்ரஸன்னம் சிலபேருக்குத் தான் உண்டு.
அவளைச் சுற்றிச் சிறியவர், பெரியவர் எல்லாரும் உட்கார்ந்திருக்கிறோம்.
இந்தச் சமயத்தில் ஒரு உரத்த சிந்தனைக்கு இடம் வேண்டுகிறேன். இந்தக் குடும்ப வரலாறில், இந்தக் கால கட்டங்களை வெளியிடுவதில் எனக்கு நிச்சயமாக இருக்கும் ஒரு பிரதிகூலத்தை உணர்கிறேன். அம்முவாத்து இந்தத் தலைமுறையில் - அதாவது நான் விவரித்துக் கொண்டிருக்கும் என் தந்தைக்கு முன் தலைமுறை முன்னோர்கள் ஒவ்வொருவருமே, ஏதோ விதத்தில் வார்ப்படம் மீறியவர்கள். பேச்சிலும், தோற்றத்திலும் அவர்களுக்கு தோரணை இயற்கையாகவே வந்தது. அதை அவர்கள் மறப்பது இல்லை. வார்த்தைகளின் உசச்சரிப்பில்கூட ஒரு தனித்தனம்; அந்த வரியை, அதிகாரத் தை எழுத்தில் என்னால் கொண்டுவர இயலவில்லை.
‘எல்லாருமேவா இப்படி? - லேசாக நம்பத்தகாத ஒர் அதிசயத்துடன்? - இனம் காண முடியாத அதிசயத் துடன்!” என்று நேயர்கள் வியப்புற, அவர்கள் மனத்துள் ஒரு புன்னகை புரிந்துகொள்ளக்கூட வாய்ப்பு இருக் கிறது. ஆனால் அதற்கு நியாயம் இல்லை. அது நியாயம் இல்லை என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.
எனக்கு அப்போது ஆறு வயது. கதை கேட்கும் வயது. அப்போது கேட்ட கதையை வைத்துக்கொண்டு இப்போது கதை பண்ணுகிறாயாக்கும்? என் முயற்சி எவ்வளவு நாணயமாக இருப்பினும், இந்தக் கேள்விக்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்? உண்மையில் அதுவுந்தான், என்னை அறியாமல் நடந்துகொண்டிருக் கிறதோ என்னவோ.
உணமை என்பது என்ன? What is truth? Pilate-இன் என்ன மகத்தான கேள்வி! கோபுரக் கேள்வி. எத்தனை முறை கேட்டுக்கொண்டாலும் தோன்றும் வியப்புக்கு அலுப்பே இல்லை.
ஆம், உண்மை என்று சொல்லிக்கொள்ளும் போதெல்லாம் அவரவருக்குக் கிடைப்பது பார்வைகள் (கோணங்கள்)தாம். உண்மை அதன் முழுமையில் எங்கே? கண்டவர் விண்டிலர். உண்மையைப் பேசாமல் நழுவுவதற்கு, இப்படி ஒரு தீர்ப்பா?
ஆகையால் உண்மையோ ஒரு பொய்யோ - அந்த எண்ணமே கூசுகிறது. பயமாய் இருக்கிறது. இதுமாதிரி யான புரட்சி பண்ணுவதில் நாட்டமும் இல்லை. அதற்கு உரிய தில்லும் எனக்கு இல்லை.
இந்த உதயத்தையோ (இருளையோ) அதன் முழுமையில் உணர்ந்துவிட்டதால்தானோ, Sartre தன் சுயசரிதைக்கு Words என்று தலைப்புக் கொடுத்தானோ?
வெறும் சொற்கள்.
வெறும் பார்வைகள்.
கோணங்கள்.
இவைகளிலாய, இவைகளே ஆய.
மனித உறவுகள்.
உண்மை என்பது என்ன?
அது எங்கே?
இவை சேர்ந்ததுதான் உண்மையா?
ஆயினும் இவைகளில் கமழும் மணங்களை மறுக்க முடியுமா? இவைகளும் நாம் அதன் முழுமையில் உணர, காண இயலாத, சதா தேடிக்கொண்டிருக்கும் உண்மை யைச் சார்ந்தனதாமே !
பிறவி, சாவு, இடையில் உறவுகள் இல்லாமல் இருக்க முடியாது.
துணை தேடும் உறவு.
காதலுடன் உறவு.
குரு - சீட உறவு.
கடவுளுடன் உறவு.
துணை துறந்து தனிமையுடன் உறவு.
உன்னை நீ அறி எனும் வேட்டையுடன் உறவு.
உறவைத் தேடலிலேயே தேடலோடு உறவு.
பிறவிக்கும் சாவுக்கும் இடையே உனக்குக் கிடைத்த உறவுடன் சமாதானம் அடை.
சமாதானம் அடைவாயாக.
சிந்தனைக்கு இடங்கொடேல்.
சிந்தனையில் இறங்குவதாக இருந்தால், கடைசி வரை - உன் கடைசிவரை அதை ஒரு கை பார்த்து விடத் துணிச்சலுடன் இறங்கு.
கலைஞன் முழு ப்ரக்ஞையுடன் உணரும் தன் விதி இது. சமுத்திரத்தை அதன் எதிர்க்கரைக்கு (?) (!) நீஞ்சத் துணிச்சல்,
எங்கு அவனுக்கு எது, இந்த நீச்சலில் அவன் கண்டானோ, அத்துடன் அவன் ஜலசமாதி. அதுவே அவன் கண்ட கரை. அதையும் அவன் அறிந்திருத்தல் வேண்டும்.
நிற்க. இதோ வாளாடி அத்தை பேச ஆரம்பித்து விட்டாள்.
--------------
அத்தியாயம் 20
"இந்தத் தடவை அவனுக்கு உடம்பு சரி யில்லேன்னு லால்குடியிலிருந்து ஆள் வந்ததும் - என்னவோ தெரியல்லே, நானும் பிறந்தாம் போய் நாளாச்சு, ரெண்டுநாள் தங்கலாம்னு உத்தேசத்திலேயே வந்துட்டேன். உள்ளே நுழைஞ்சால் கூடத்தில் படுத்துக் கிடக்கான். காலையிலிருந்து சாப்பிட்டானா, யாரை யேனும் கஞ்சி வெச்சுக் கொடுக்கச் சொன்னானா? தெரியல்லே. கேட்டிருக்கமாட்டான். அந்த சவுடாலுக் குத்தான் அம்முவாத்தில் கேக்க வேண்டாமே! கண் ஒரே அடியா உள்ளே போயிருந்தது.
“என்னடா ராமண்ணா, உடம்பு என்ன பண்ற துன்னு மணிக்கட்டைச் சாதாரணமாப் பிடிச்சால், பகீர்’ன்னுது. நாடி விழுந்துபோச்சு. அதோடேயே ரெண்டு நாளா நடமாடிண்டிருக்கான். அவனையுமறி யாமல் ஜுரம் கீழே தள்ளியிருக்கு. இதுக்கு முன்னாலே ஒருதடவை இப்படி ஆயிருக்கு.
ராமாமிருதம் பிறக்கல்லே, உண்டாயிருந்தாள்ன்னு நினைக்கிறேன். நாடி விழுந்து மூணுநாள் நடமாடிண் டிருந்து தேறிட்டான். அப்பக்கிப்போ ஆறு ஏழு வருஷம் வித்தியாசம் இல் லியா ? அப்படியே இப்பவும் நடக்கும்னு சொல்ல முடியுமா ? மனுஷன்னு பிறந்துட்டா சிரஞ்சீவியா? அப்புறம் தலைச்சுழிக்கு மதிப்பென்ன? பெருந்திருவுக்கும் பெருமையேது?
ஒசைப்படாமல் கீழண்டை ஆத்துக்குப் போய் சேதுராமையரிடம் சொல்லி, பட்டணத்துக்குத் தந்தி கொடுக்கச் சொல்லிட்டேன். அடுத்த கண்டத்துக்கு வேண்டிய வாளைப் பக்கத்தில் கொண்டு வந்து, சேர்த்துட்டாளே? பெருந்திருவால் முடிந்தது அவ்வளவு தான். இங்கே வேண்டியவா யார் இருக்கா?
எல்லோரும் வெளியூரில். முதலித் தெருவில் இருக்கான் போலீஸ்காரன். என் கடமை ஆள்விட்டு அனுப்பிச்சப்போ ஊரில் இல்லேன்னு சேதி வந்தது. இப்போ இருக்கான். இன்னும் வரல்லே. வராட்டாப் போறான். வந்திருந்தால் அவன் போலீஸ் அமுல் போப்போற உசிரைப் பிடிச்சு நிறுத்த முடியுமா?
முதலித் தெருவில், சிதம்பரம் ஐயர், போலீஸ் இலாகாவில், மேலதிகாரிக்குக் காம்ப் கிளார்க், எட்டுக் கண் விட்டெறியும்னு முன் பக்கங்களில் சொல்லியிருக் கிறேன். அத்தை பேச்சிலிருந்து அவர் இந்த வீட்டுடன் "டு விட்டுண்டு இருந்தார் என்று தெரிகிறது. என் ஆயுசில் கடைசிவரை, சிதம்பரம் தாத்தாவைப் பார்த்ததாகவே எனக்கு ஞாபகமில்லை.
அம்முவாத்துச் சம்பிரதாயங்களில் ஒன்று குடும் பத்தில் ஏதேனும் ஒரு விரோதமாவது கொண் டாடியபடி இருக்கும். அண்ணனுக்கும் தம்பிக்கும், அண்ணனுக்கும் தங்கைக்கும்,அக்காவுக்கும் தம்பிக்கும்பெரிய தலை சாக்கில் அந்தந்தக் குடும்பங்களும் கொண்டாடும் என்றால் அசல் - விரோதம் குரோத மாகி, வெள்ளி விழா, ப்ளாட்டினம் இந்த ரீதியில் பகை நீடிக்கும். ஒருத்தன் சளைத்தால் மற்றவன் வீட்டில் பாயசம் என்று பேச்சு நடமாடும். நிஜமோ பொய்யோ அறியேன். தமிழ்ப்பண்டிதர் ராமசாமி ஐயருக்கு அந்த அளவு வீட்டில் வக்கு இல்லை. நெஞ்சம் அந்த வேகம் இல்லை. அவர் சண்டை, சமாதானம், ஸாஹஸம் எல்லாம் பெருந்திருவுடன் அவருடைய பாட்டு நோட்டில் பாசிமணி கோத்தாற் போன்ற எழுத்து மூலத்துடன் சரி. ஆசைநாயகி லச்சுமிகூட, அவர் கவி அரங்கேற்றத்துக்குத்தான்.
அதேபோல் கூடிக்கொண்டாலும் ஒரே வெறிதான். அண்ணன் தம்பி ஆற்று வெள்ளம் இதென்ன சாதாரண ரத்தமா? ராஜ வம்ச ரத்தம். அது தப்பாப் பேசுமா என்ன? ஏதோ கொஞ்ச காலம் போறாத வேளை! என்ன சொல்றே அண்ணா ?”
அண்ணாவுக்கும் சிதம்பரத் தாத்தாவுக்கும் ஆகாது. ஆனால் அம்மாப் பெண்மேல் சிதம்பரத் தாத்தா வுக்கும் பரஸ்பரம் கொள்ளைப் பாசம்.
சுந்தரத் தாத்தாவுக்கு வீடு தமிழ்ப் பண்டிதர் இல்லத் துக்கு மேலண்டை. கொல்லைப் புறத்தில் கிணறு. இருவருக்கும் பொது எப்பவோ ஏதோ மனஸ்தாபத்தில் சுந்தரம் ஐயர் கிணறுக்குக் குறுக்கே சுவர் போட்டு விட்டார். கிணற்றில் பெரும் பாதி அவர் பக்கம். இங்கே ஒரு சொம்புக்கு மேல் மொள்ள வழியில்லை. சுவர் தடுத்தது. சண்டை போய்ச் சமாதானம் வந்தது. ஆனால் சுவர் நின்றுவிட்டது.
சிதம்பரம் ஐயருக்கு எல்லாரோடும் சண்டை.
தலை, கண் தெரியாத கோபம் சுபாவத்திலேயே. கேள்விப்பட்டவரை சுவாரஸ்யம் அவருடைய Personality மற்ற உடன்பிறந்தாரை ஓங்கி நின்றதாகத் தெரிகிறது. வாட்ட சாட்டம், செம்மேனி, அவரை எப்பவும் இன்றைய பாஷையில்) சூழ்ந்திருந்த ஜாலராக் கூட்டம், உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் நெருங்கிய பழக்கம். "மிஸ்டர் சிதம்பரம், Alright if I Sign here?) அதிகாரப் பிரயோகத்தில் (நேரிடையாக வழியில்லா விடினும்) ருசி, அவரை ஏதோ முறையில் தனியாக ஒதுக்கிவிட்டது. எல்லா Camp clerkகளுக்கும் அந்த மவுசு உண்டாகிறதா? அதில்தான் அவருடைய தனித்துவம்.
அவருடைய நற்குண சமயங்களில் அவருடைய தாராளங்கள், பரோபகாரங்கள் ஆச்சரியத்துக்குரிய அபரிமிதமானவை என்று தெரிந்தவர் சொல்கின்றனர். லஞ்ச ஊழல் வழக்குகள், தண்டனைகளிலிருந்து எத்தனை சிப்பந்திகளை (பங்கா பதவிக்காரர்கள் உட்பட), இலாகா ரூல் சட்டங்களில் அவருடைய நிபுணத்துவத்தாலும் வாக்குச் சாதுரியத்தினாலும், எல்லாவற்றிற்கும் மேல், ஆங்கிலத்தில் தன் எழுத்து வன்மையினாலும் தப்புவித்திருக்கிறார்! என்ன செய்து என்ன? கடைசியில் கழநீர்ப் பானையில் கைவிட்டு விடுவார். இந்த மனுஷனிடம் ஏண்டாப்பா உபகாரம் பெற்றோம் என்று சலித்துக்கொள்ளும் படிப் பண்ணிவிடுவார். நாக்கில் பாம்பு விஷத்தை அப்படித் தெறிப்பாராம். 'உங்களைப் போல் உண்டா? என்கிற கற்பூர தீபாராதனைப் புகைதான் அவர் மூச்சு, இல்லையேல் –
சிதம்பரத் தாத்தாவும் அவர் தாயாரும்-
அவளை ஏதோ தகாத வார்த்தை பேசிவிட்டார். அப்போதுதான், இலையில் சாதத்துடன் உட்கார்ந்திருக்கிறாள். சாதம் பிசைந்தாயிற்று. கவளம் இன்னும் வாயுள் போகவில்லை.
"அடே !
கொள்ளிக் கட்டையிலிருந்து ஜவாலை குயீரிட்டது. நுனியில் பொறிகள் பறந்து சரிந்தன.
"அடே !"
அதே வேளையில், இன்னொரு வீட்டில், கிண்டி மூக்கிலிருந்து குழல் ஜலம், பூமியில் தத்தம் சிந்திற்று. அப்போதே, தொலைக்கப்பால், ஜலம் விழுந்த அதே கோட்டில், பூமி வெடித்தது.
எங்கோ, மைதானத்தில் நட்ட நடுவில் நின்ற அரசில் இலைகள் சலசல.
அடே! உன்னைப் பெற்ற வயிறு பற்றி எரிஞ்சு சொல்றேன், உன்னை ஏன் பெற்றேன்னு இருக்குடா !”
எங்கோ, எவனோ, துர்க்கனாவில் குழறல் பயத்தின் சிரிப்பாக வெடித்துச் சில்கள் "சில்லென உதிர்ந்தன.
அந்தரம் அதிர்ந்தது.
"அடே! உனக்கு ஆண் குழந்தை பிறக்காது!”
"ஒஹ்ஹோ! பத்தினி சாபமாக்கும்! பிறந்தாலோ ?”
"பிறந்தாலும் தக்காது. பாம்பு தன் முட்டையை நக்கிவிடற மாதிரி நக்கிவிடுவாய்!”
மேற்காண்பது, வாசிக்காதவர்களுக்குப் 'புத்ர' நாவல் முதல் பக்கத்திலிருந்து.
இலக்கியம் பண்ணுகிறேன் என்கிற சாக்கில், குடும்ப அழுக்குகளை அம்பலத்தில் கழுவியாகிறது என்கிற ஏளனத்துக்கு இடம் ஏற்படின், அது பார்க்கும் பார்வை யைப் பொறுத்தது எனும் சகஜமான வாதத்தில் நான் அடைக்கலம் தேடுகிறேன்.
குற்றமாய்ப் பார்ப்பவர்களின் குற்றச்சாட்டில் ஒரளவு நியாயம் உண்டு. ஆனால் இந்நிலை இன்றியமை யாதது.
நிகழ்ச்சி சரித்திரமாகி, சரித்திரம் நினைவாகி, நினைவு கதையாகி, கதையைச் சொல்லிச் சொல்லி, அல்ல, நினைவின் ஊறலில், சொல்லின் பிசிர் விட்டு, பாஷை மெருகேறி, விஷயம் துல்லியமாகி, பிறகு நம் ரத்தத்தில் தோய்ந்து, நம் மனத்தையும் மாண்பையும் ஊட்டி வளர்க்கும் காவியம் இலக்கியத்தின் ரசாயனம் இதுதான்.
இதற்கடுத்த கட்டத்துக்குத் துணிச்சலுடன், என் பேராசையில் போகிறேன். இலக்கியத்துக்கு அர்த்தம் என்று ஒன்று இருந்தால் அது இதுதான். நிகழ்ச்சியின் கிளர்ச்சி அடங்கி ஓய்ந்தபிறகு பின்னோக்கியேனும் வாழ்க்கையைக் காவியமாகப் பார்க்க நமக்குக் கண் ணில்லாமல் போனால், நாம் வாழவே லாயக்கற்ற வர்கள். மன்னிப்பவனே மன்னிக்கப்படுவான். சிருஷ்டி, உயிரென்று பிடித்துப் போட்டபின் இருக்கும் வரை வாழ்வதைத் தவிர வேறு வழி என்ன?
இன்னொன்று, நேரே தொப்புளிலிருந்து வர்ணக் கடிதாசை வரவழைத்தேன் என்று கழைக்கூத்தாடி காட்டும் கண்கட்டு வித்தை அல்ல. கற்பனையைப் பற்றி என் எண்ணத்தை முன் பக்கங்களில் சொல்லி இருக் கிறேன். மீண்டும் சொல்கிறேன். சூரிய சாகூழியில் கற்பனையென்று தனியாக வால் முளைத்தது எதுவுமே கிடையாது. திரைகள் விழுகின்றன. பின்னாலிருந்து உருவம் வெளிப்படுகிறது. இருளில் மறைந்திருந்தவை வெளிச்சமாகின்றன. தேடல் தத்துவம் இதுதான். அதனால் சும்மாவே இருக்க முடியாது. இருப்பின் அதுவே சாவு.
எங்கேயோ போய்விட்டேன்; நிற்க இதோ, அத்தை பேசுகிறாள்:
"ஆகவே சப்தரிஷியும் மன்னியும் உள்ளே நுழைஞ் சதுமே ராமண்ணாவுக்கு அதிர்ச்சி ஆகியிருக்கும். எனக்கும் உங்களை முன்கூட்டி உஷார்ப்படுத்த முடிய வில்லை. நான் என்ன செய்வேன்? மன்னிதான், பாவம் வாங்கிக் கட்டிக் கொண்டாள். என்ன ஆனால் என்ன? சமயத்துக்கு வந்துட்டேன். அவனும் அப்புறம் சரி ஆயிட்டான். சப்தரிஷியின் முதுகைத் தடவிக் கொடுத்தான். இவ்வளவு கனிவாக அப்பாவையும் பிள்ளையையும் இதுவரை நான் பார்த்ததில்லை. எனக்கு ஒன்று தோன்றியது. உண்மை அதன் உண்மை யில் வெளிப்பட அதற்கு ஒரு சமயந்தான் உண்டு. அதோடு அதன் முத்து நீர்த்துப் போச்சு. மிச்ச மெல்லாம் நீர்த்துப் ப்ோன ஜலத்தில் நம் முகத்தைப் பார்த்துக்கற சமாச்சாரந்தான்."
புரியாத பாஷை பரம்பரை ரத்தம். வாளாடி அத்தையும் லேசுப்பட்டவள் அல்ல; அவளும் பாட்டுப் புனைவாள். சில மாதங்களுக்கு முன் லால்குடி சென்றபோது அவளுடைய பேரன் பாடிக் கேட்டேன்.
எல்லாம் சகஜமாத்தான் இருந்தது. சப்தரிஷி என்னைக் கண்ணில் கேள்விக்குறியுடன் பார்த்தது எனக்குத் தெரியாதா? அணையற சுடரப்பா!
இருந்தாப் போலிருந்து நடுப்பேச்சில் - "இதோ பார் லசுஷ்மி! என் உயிர் போறது.” உடனே தலை தொங்கிப் போச்சு.
"இந்தா எடுத்துக்கோ.” தாம்பாளத்தில் தாம்பூலம் போல் அவளிடம் கொடுத்து விட்டான்.
"காலில் சுருக்குன்னுது. ரெண்டு மிளகு கொண்டு வாடி என்ன, தித்திக்கிற மாதிரி இருக்கே!” என்று அலட்டிக்கொண்ட மனிதரா இவர்?
உடல் உரத்திலும் தாத்தா ஒண்ணும் சோப்ளாங்கி இல்லை. ஒரு சமயம், அவரைத் துரத்திக்கொண்டு ஓடி வநத காளை மாட்டை அப்படியே அதன் கொம்பு களைப் பிடித்து நிறுத்திவிட்டார். மனிதனுக்கும் மிருகத் துக்கும் அந்தச் சிலகண நேரம் பலப் பரீட்சுைஷயில் கொம்புகளைக் கையோடு பிடுங்கிவிட்டாராம். இவர் கைகளில் கொம்புகளுடன் நிற்க, அது முகத்தில் குருத்தின் குருதி வழிந்து இன்னும் மிரண்டுபோய் ஓடி விட்டதாம். இவரைக் கோழையென்று கூற முடியுமா?
வீட்டில் கூட்டம் கூடியது. குமைந்தது. கலைந்தது. நாங்களும் சென்னை திரும்பினோம். அந்த வயதில் எனக்கு நினைவுபூர்வமாகப் பதிந்தது: செத்தவர் திரும்பி வரமாட்டார்கள். தாத்தா இனிமேல் கிடையாது. தெருவில் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த உண்மை, வீட்டுக்குள்ளேயே வந்துவிட்டது.
1981 ஜூலை 5, ஞாயிற்றுக்கிழமை விடியற்காலை சுமார் நாலரை மணி.
வருடக் கணக்கில் ஒழுங்கான ராத்தூக்கம் இழந்து, கோழி கூவும் வேளையில் யாரையும் அயர்த்தும் அந்தக் கண் சொக்கலில், "பால்!”
ஆனால் இன்று இப்போது இன்னும் பால்காரன் வரவில்லை.
'ஈ ஜகமுலோ திக்கெவரம்மா! என்கிற அடியைப் பாடிக்கொண்டே அழுதபடி எனக்கு விழிப்பு வந்தது - வந்துகொண்டே இருந்தது தெரிந்தது. என் கன்னங்கள் நனைந்திருந்தன.
ஒரு நிமிஷம், இதற்கு முந்தியோ பிந்தியோ என் கனவில் வருவதற்குக் காரணமாகச் சொல்லிக்கொள்ள அந்தப் பாட்டை நான் நினைத்ததில்லை. அதுபற்றி வீட்டில் பேச்சும் இல்லை. முதலில் இதுபோன்ற கீர்த்தனைகள் பற்றிப் பேசக்கூடியவர்கள், பேசியவர்கள் மூலம் போய்ச் சேர்ந்தாச்சு. ரேடியோவிலும் அந்தப் பாட்டு சமீபத்தில் கேட்கவில்லை.
ஆனால் எனக்கு ரீதிகெளளை ரொம்பவும் பிடித்த ராகம். அதிலும் "ஜனனி நினுவினா கேட்டுக்கொண்டே இருக்கையில் பட்டென்று உயிர் போய்விடாதா என்று நான் வெகுவாக விரும்புவது உண்டு. எந்தவிதமான உன்னத அனுபவத்திற்கும் சாவைப் பற்றிய எண்ணம் சொர்க்கவாசலாக எனக்குத் தோன்றுகிறது.
"ஜனனி நினுவினா"-
வேண பேர் பாடுகிறார்கள். ஆனால் ஆலத்தூர் சகோதரர்களிடம் கேட்கையில் அதில் சக்கைப்பிரத மனின் வழவழா கொழகொழா இல்லாது, விளம்ப காலம் என்கிற சாக்கில் ஆமை மெதுவும் இலாது அதற்குரிய நடையில் சாஹித்யத் துல்லியமும் ராகத்தின் முழு ஸ்வரூபமும் பரிணமிப்பதாக பரிமளிப்பதாக எனனுடைய எணணம்.
ஆனால் ‘ஈ ஜகமுலோ திக்கெவரம்மா' அதன் கண்ணிருடன் இன்று விடிகாலை என்னின்று வெளிப் படுவதற்கு ஆலத்தூர் சகோதரர்களின் விற்பன்னம் அடிப்படையில்லை. இந்த சாஹித்யத்தின் சுந்தர் வடிவுக்கு ஏற்கெனவே அடிமையாகிவிட்டவன் என் பதைத் தவிர அவர்களுடைய சங்கீதத்தில் விவகாரம் அதிகம் என்று அவர்கள் ஏற்கெனவே அடைந்திருக்கும் பிரசித்தி தவிர, அவர்களுடைய மற்ற கலை நுட்பங் களை ஆராய நான் அருகன் அல்லன். நான் சொல்லிக்கொள்வது எல்லாம் என் சொந்தப் பரவசம். இந்த உள்மேனித் தந்திமீட்டல், நெஞ்சின் நெக்குருகல், சர்க்கரை பொம்மை உள்விண்டு, நானே எனக்கு இலாது போவதுபோல் என்னுடைய உள்கரையல், இந்த இன்ப வேதனை, இந்த பயங்கரத்தை ஆயிரம் வர்ணித்தாலும் எப்படிப் பிறருடன் பங்கிட்டுக் கொள்ள முடியும்? 'திக்கெவரம்மா! தொண்டையில் பால் பொங்குகிறது. இதோ வழிந்து வழிந்து மேலே வந்துவிடும்போல் தவிக்கிறேன். துக்கம் அடைக்கிறது. உண்மையில் துக்கமா அது?
"இல்லை! இல்லை! இல்லை!"
"ஆமாம்! ஆமாம்! ஆமாம்!"
பாக்குவெட்டி என்னைக் கத்தரிக்கிறது. இரண்டு எதிர்மறுப்புக்கள் ஒன்று இழைந்து ஒரு உண்மை.
மோனக் கடலின் முழு அமைதி மேல் வானம் கவிந்த கவியில் பீறிட்ட முதல் வீறலினின்று சொரிந்து கொண்டே இருக்கும் பல கோடி, கோடானு கோடி உயிர்ச்சுக்கல்கள் நாம்.
In the beginning there was God, the holy Ghost and the word.
ஆதிபகவனின் ஆனந்தக் கூத்தில் டமருகத்தினின்று 'டம டம டமரு' வெளிப்பட்டது முதல் ஒலி.
கால் கட்டைவிரல் நுனியை அழுத்தி அவன் ஆடும் பேய்க்கூத்து கடையும் புயலில் கடல் பொங்கிக் காற்று அலைந்து புயல் பொங்கி, சராசரங்கள் குலைந்து நகர்ந்த அசைவுகளின் ஒசையின் அணுத்திரள் ஒலி. மோகனக் கடல் பொங்குகிறது. ரீம். ரீம் - க்ரீம் க்ரீம் - க்ரோம் க்ராம் - ஒம், ஒம், ம் ம் ம் ம அம்மா. பிரணவம் முதலா? பிராணன் முதலா?
ஓம் முதலா? அம்மா முதலா? பிரணவத்தின் அக்ஷரங்கள் 'அம்மா’ எனும் ஆதி வீறலுள் அடங்கி இருக்கின்றன. கிரஹங்களை அதன் அதன் இடம் தடுமாறாமல் இழுத்துப் பிடிக்கும் விசையின் இசை the music of the spheres - 35lbliu b/TL 60L, Ly6) 60T காணமே 'அம்மா!'
ஞானம், அஞ்ஞானம், பிரஞ்ஞானம், விஞ்ஞானம், அலசல், உளைசல், கடைசல், நான் யார்! யார் நீ? நான் போ. நீ வா. யாம் அறிந்த மொழிகளில் 'அம்மா' தான் முன்மொழி, என் மொழி, எவர் மொழியும். மற்றவையெல்லாம் 'அம்மா'வின் எதிரொலி. அவள் அகண்ட வயிறுள் அடங்கிப்போன அஞ்ஞானங்கள் தான். ஆம், பிறந்த நாள் முதலாய் என்னென்னவோ கண்டுபிடித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் என்னத்தைக் கண்டுவிட்டோம்? 'அட அசடே! அவள் உதட்டோரப் புன்னகைக் குமிழ் அடையக்கூட நாம் கண்டவையெல்லாம் காணாது.
ஆம், இதற்கெல்லாம் இங்கே என்ன இடம்? பின்னால் என்னையே கேட்டுக் கொள்கிறேன். ஆனால் என்னை இப்படியெல்லாம் சொல்லச் சொல்கிறதே. சம்பந்தம், தொடர்பு, எங்களுடையது எங்களுக்குத் தெரியும் என்று ஒரு குரல் அதட்டுகிறதே.
"எங்களைச் சொல், எங்களுக்குச் சொல்.”
ஒலியின் உருவே எழுத்தாகும்.
“எங்களை எழுது. எங்களுக்கு உருவம் கொடு. உயிரின் ஸ்வயாகாரம் தன் பிரக்ஞையில் முதலாக உணர்ந்த தனிமைக்கு, 'குவாவுக்கு உருவம் தா!"
எல்லா உருவத்துக்கும் பின்னால் பொதுவான ஒரு அரூபம் அது. நாதமோ உயிரோ எப்படியும் சதைக்குத் தவித்துக் கொண்டேயிருக்கிறது. அந்தத் தவிப்பே அதன் இயக்கம். அதன் அர்த்தமே அதன் தேடல்.
"இதையெல்லாம் எழுது எழுது”
கட்டளைகள் இவ்வளவு ஸ்பஷ்டம் இல்லை. ஆனால் ஏதோ ஒரு கட்டாயம் என் நெஞ்சில் சரசர வென வேர்விட்டு இலைவிட்டுத் துளிர் விட்டு வளர் வதை உணர்ந்தேன். இன்னும் சற்று நேரமோ காலமோ சென்றால் விருகூடிம் என்னைப் பிளந்துவிடும்.
சரசரவென எழுந்து காலைக்கடன்களை முடித்துக் கொண்டு என் காப்பியை நானே போட்டுக் குடித்து விட்டு - வருடக்கணக்கில் பழக்கம் - வழக்கமான என் இடத்தில் Pad, பேனா ஸ்கிதம் அமர்ந்துவிட்டேன். ஆம், என்னத்தை எழுத? அன்று சேக்கிழார்க்கு ஆண்டவனே அடியெடுத்துக் கொடுத்தான். எனக்கு யார் கொடுப் பார்? அந்த நினைப்பே துக்கம் அடைத்தது. ஆனால் உடனே ஞாபகம் வந்துவிட்டது. ஏன் அடியெடுத்துக் கொடுக்கவில்லை?” 'திக்கெவரம்மா! அதுவே எடுத்துக் கொடுத்த அடிதானே.
அந்த அடியிலேயே, கச்சேரி Setting-இல் கதை ஆரம்பமாயிற்று. வேகமாய்த் தன்னை எழுதிக்கொண்டு போயிற்று, எழுத எழுத, என்னை உந்திக்கொண்டு போகும் சக்தியின் உறிஞ்சலில் என் உடல் பலம் வடிவதை உணர்ந்தேன். ஆம், நிஸ்திராணியாகத் தலையணை மேல் சாய்ந்துவிட்டேன். என்றுமே இடுப்பொடிந்த மாடு. சாய்வு நாற்காலியோ சுருட்டி வைத்த படுக்கையோ இல்லாமல் பத்து நிமிடங்களுக்கு மேல் என்னால் உட்கார்ந்திருக்க முடியாது.
என் உடல் பிழிந்தெடுத்த மாதிரி ஆகிவிட்டது. கைவிரல்கள் தம் பிடி வன்மையை இழந்து துவண்டன. Stroke? பயம் வந்துவிட்டது. என் சோர்வை யார் அறிவார்? அதே சமயத்தில் உள்ளூர ஏதோ உவகை.
"சமையல் ஆயிடுத்து, குளிச்சிட்டு சாப்பிட வரவாள் வரலாம். எனக்கு ஆயிரம் ஜோலி கிடக்கு" சமைய லறையிலிருந்து அறைகூவல் வந்துவிட்டது. இன்று குளியலுக்கு முழுக்குப் போட்டுவிடுவோமா? ஆனால் மனம் வரவில்லை. அதுவும் இன்றைக்கா? ஒருவாறு சுதாரித்துக்கொண்டு எழுந்து கிணற்றடிக்குச் சென்றேன். சேகர் குளித்துக் கொண்டிருந்தான். மொண்டு விட்டுக் கொள்ள வேண்டும். நினைத்துப் பார்த்தாலே களை போடுகிறது.
"சேகர்!"-
சேகர் என்னை நிமிர்ந்து பார்த்தான்.
"என்னப்பா என்னவோ மாதிரியிருக்கேள்?”
"என்ன மாதிரி?”
"முகம் சிவந்து - இல்லை, சொல்லத் தெரிய வில்லை. முகம் மாறி – Expression-”
"சேகர் ! என்னைக் குளிப்பாட்டி விடறியா?” அவமானம் விழியோரம் உறுத்திற்று. ஆனால் என் செய்வது?
சேகர் பதிலே பேசவில்லை. இழுத்து இழுத்துத் தலையில் கொட்டினான்.
ஒருவாறு சாப்பாடு முடிந்து கூடத்தில் சாய்ந்தேன். மிகுந்த ஆயாசம் நாடியைப் பிடித்துப் பார்த்துக் கொண்டேன். பந்தய மைதானத்தில் குதிரை மிரண்டு Gallop-இல் போய்க்கொண்டிருந்தது. ஜாக்கியைக் கீழே தள்ளிவிடப் போகிறதா ? எனக்கு வேளை வந்து விட்டதா? பயம்? இல்லை சந்தோஷம்? தெரியவில்லை. மூச்சுத் திணறல் மார் வலி? இல்லை. ஆனால் மொத்தத்தில் உள்ளே தாங்க முடியாத பரபரப்பு. சேகர் புறப்பட்டுக் கொண்டிருக்கிறான். TVஇல் ஏதோ தெலுங்குப் படம்.
“சேகர்! ஒருநிமிஷம் தங்கிவிட்டுப் போ. எனக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால் உன்னை ஆயிரம் கேள்வி கேட்பார்கள்.”
சேகர் புன்னகையில் ஏளனம் சிந்திற்று. "அப்பா எங்களைச் சொல்கிறார். இப்போது அவர் நடத்துவது சினிமாவா? ட்ராமாவா?” என்கிற மாதிரி.
“சேகர் உள்ளே இரண்டு பக்கம் எழுதி வைத்திருக் கிறேன். எதிரில் உட்கார்ந்தபடி, எனக்கே தெரியணும்.”
ஆனால் சேகர் வாய்விட்டுப் படிக்கவில்லை. தனக்கே படித்துக்கொண்டிருந்தான். அந்த இரண்டு பக்கங்களைப் படிக்க அவனுக்கு ஏறக்குறைய ஒரு மணி நேரம் பிடித்தது. அவன் தலை நிமிர்ந்தபொழுது அவன் முகமும் மாறி இருந்தது.
“உங்கள் பாஷைதான். உங்கள் பாணிதான். ஆனால் கூடவே ஏதோ ஒண்ணு. இடங்கள் புரியவில்லை. ஆனால் புரியாமலும் இல்லை. அதையும் மீறி ஏதோ ஒண்ணு. ரொம்ப Deep ஒரு பவர் - yes, Deep Power, This is Power.”
அப்படி அன்று ஆரம்பித்த கதை முன் ஏற எற, எனக்கும் பலமும் உற்சாகமும் ஊற ஊற, பாராசாரிக் குதிரையும் படியப் படிய, அனுபவம் ஒரு தனிக் குஷியாகத்தான் இருந்தது. விஷயமும் நானும் ஒரு சமயம் ஒருவருக்கொருவர் தோகை விரித்து ஆடினோம்.
The hunter and the hunted. Who is the hunter? Who is the the huneted is not the point.
The hunt is all that matters. Oh! this stalking so thrilling so beautiful!
Fair Copy செய்து - எப்பவும் என் எழுத்துச் சம்பந்தப்பட்ட வரை எல்லாமே இதுவரை என் கையினால்தான் - இனி உடல் ஒடுக்கம் என்ன ஆகுமோ? Dictation தட்டெழுத்து என்று எழுத்தா ளர்கள் இப்பொழுது கையாளுகிறார்கள். தென்காசியில் ஒரிரு கதைகளை நான் சொல்லக் கண்ணன் எழுதினான். ஆனால் சரிப்பட்டு வரவில்லை. எனக்கு வெட்கமாயிருந்தது - நான் நிர்வாணமாக்கப் பட்டாற் போல்.
Fair Copy செய்து 5-8-1981 அன்று, Register தபாலில் பிரபலமான பெரிய சர்க்குலேஷன் பத்திரிகை ஒன்றுக்கு அனுப்பினேன். இங்கு கதையின் லெளகீகப் பகுதி ஆரம்பமாகிறது. காற்றாடி காற்றிழந்து தரை தட்டினாற்போல எனக்குப் பொதுவாகவே பிடிக்காத பகுதி. ஆனால் சொல்லாமல் முடியவில்லை.
அந்தப் பத்திரிகையின் ஆதரவும் பிரசுரமும் ஏற்கெனவே பன்முறை பெற்றிருக்கிறேன். அது வழங்கும் கூடுதலான சன்மானம் ஒரு பக்கம் இருக்கட்டும். இம்முறை இக்கதை அந்தப் பத்திரிகையின் மூலம் அதிகப்படியான வாசகர்களிடம் சேராதா என்கிற சபலம்தான். ஸ்தாபனம் பெரிசு. ஓரிரு சமயம் நான் அங்கு போக நேர்ந்தபோது, ரொம்பவும் அனுசரணை யாகப் பேசுவார்கள். அந்த மரியாதை, வியாபார ரீதியானாலும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
ஆச்சு, ஒரு மாதம், இரண்டு மாதம், டெலிபோனில் நினைவுபடுத்தினேன். தலைவரிடம் போயிருக்கிறது’ என்ற பதில். அதுவும் சரிதான். அப்படியானால் கதை ஒரு கட்டம் தாண்டி இன்னொரு கட்டத்துள் புகுந்திருக்கிறது என்று அர்த்தம்.
மறுபடியும் இரண்டு மாதங்கள் கடந்தன. எனக்கு அலுப்பும் ரோசமும் வந்துவிட்டன. 22-12-81 அன்று ஸ்தாபனத்தின் தலைவருக்கு முழு விவரங்களைத் தெரிவித்துக் கதையைத் திருப்பி அனுப்பிவிடும்படி எழுதினேன். அடுத்து அவசர காரியமாக மதுரைக்குப் போய்விட்டேன்.
1982 மார்ச் மாத முதல் வார வாக்கில் கதை திருப்பி வந்ததாக வீட்டிலிருந்து தகவலும், கதையும் தபாலில் எனக்கு வந்து சேர்ந்தன. நானும் மூச்சு விட்டேன். சில எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். பத்திரிகைகளாகட்டும், பதிப்பாளர்களாகட்டும் அவர்களை அதட்டியோ மிரட்டியோ அவர்களுடைய காரியங்களைச் சாதித்துக் கொள்ள முடிகிறது. அதுவே ஒரு உத்தி, மிரட்ட மிரட்ட அவர்கள் Box Office உயர்கிறது. நான் அப்படி யெல்லாம் எதிர்பார்க்க முடியுமா? எழுத்தாளர்கள் என்றும் பத்திரிகைகளை, அதுவும் ஸ்தாபனங்களைப் பகைத்துக்கொள்ள முடியாது கூடாது. இந்தக் கதையின் விதியை "அமுதசுரபி'யுடன் முடித்திருக்கிறது என்று நான் எப்படி அப்போது கண்டேன்?
கதையைக் கையெழுத்துப் பிரதியில் கண்ணன் இப்போதுதான் படிக்க நேர்ந்தது.
கண்ணன் என்னுடைய அம்பிகாபதி. மதுரை Seminar-இல் மேடைக்கு அவனை வரவழைத்துச் சபையோருக்கு அப்படித்தான் பரிச்சயம் செய்வித்தேன். முடியைப் பின்னுக்கு வாரி விபூதிப்பட்டைகள் மூன்றும் தனித்தனியாக, சக்தியிடம் வேல் வாங்கின குமரன் போல் இருந்தான்.
இந்தக் கதையைப் பற்றிக் கண்ணன் சொன்னதைக் கேளுங்கள்:
"ஏற்கெனவே உங்களிடம் காணும் குணம் குறை களுக்கு இந்தக் கதை விலக்கு அல்ல. ஆனால் - இந்த ஆனாலில்தான் விஷயமே அடங்கியிருக்கிறது. படித்துக்கொண்டு வருகையிலேயே உடனுக்குடன் வார்த்தைகள் அவைகள் காட்டும் செயலாக மாறி விடுகின்றன. மழையை வர்ணிக்கிறீர்கள். தலை மேலேயே கொட்டுவதைப் போலப் பிரமை தட்டுகிறது. “கெளரி விளக்கேற்றுகிறாள்' என்றால் குத்துவிளக்கின் மேல் அவள் குனிகையில் புடவையின் சலசலப்பு உட் செவிக்குக் கேட்கிறது. கச்சேரியில் இருவர் குரலும் இதோ ஓங்கி ஜோடி சேர்ந்து, பகூF வட்டமிடுகிறது. மின்சாரம் தோற்ற இருளில் குத்துவிளக்குகளின் வெளிச் சத்துக்கு நடுவே படத்தினின்று அதோ ராஜராஜேஸ்வரி புன்னகை ஜவலிக்கிறது.
நீங்கள் பல வருடங்களுக்கு முன் சொல்லைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள். "நெருப்பு என்றால் வாய் வெந்து விட வேண்டும்!” இந்தக் கதையில் அதுபோலச் சொல் லுக்கும் செயலுக்கும் இடைக்கோடு அவிழ்ந்திருக்கிறது.
ஆச்சு, கதையம்சத்தைக் காட்டிக் கொடுக்காமல் இந்தக் கதையின் கதையைச் சொல்லிவிட்டேன். கொஞ்சம் அதிகமாகவே சொல்லிவிட்டேன். இனி வாசகன் பாடு.
கடைசியாக ஒரு வேண்டுகோள். என்னுடைய வேளை வரும்பொழுது இந்தப் பாட்டு என் செவியில் ஒலித்துக்கொண்டே அனாயஸ் மரணத்தில் என் உயிர் பிரிய வேண்டும் என்று என் சார்பில் அவளை வேண்டிக்கொள்ளுங்கள். உண்மையாகத்தான். நான் கேட்கும் வரமும் சாமானியமா? ஆனானப்பட்ட மகான்களே கிடந்துதான் சடலம் கழற்றும்படி இருந் திருக்கையில் என் ஆசையை அவள் அகந்தையாகவே கருதக்கூடும். ஆனால் அதைக் கொடுத்தவளும் அவளே. ஈ ஜகமுலோ நினுவினா திக்கெவரம்மா!
அண்ணாவுக்கு உடல் சரியாகவே தேறவில்லை. என்னதான் வைத்தியம் செய்துகொண்டாலும், பட்டணத்துப் புழுதியினின்று அவர் தப்பினாலே ஒழிய அவருக்கு விமோசனம் இல்லை. டாக்டர் தீர்ப்பு அளித்துவிட்டார். ஆகவே குடும்பம் ஒரு முக்கியமான தீர்மானம் எடுக்க வேண்டியதாயிற்று.
என்ன என்று எங்களுக்கு (அதாவது குழந்தை களுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. காஞ்சிபுரத்துக் கருகே ஐந்து மைல் தூரத்தில் ஐயன்பேட்டை என்ற கிராமத்தில் (தஞ்சாவூர் அய்யன்பேட்டையுடன் குழம்பிக் கொள்ள வேண்டாம்) அண்ணாவுக்கு ஒரு சிறிய பள்ளிக்கூடத்தில் வாத்தியார் வேலை கிடைத்தது.
எங்கள் குடும்பம் - அண்ணா, அம்மா, சிவப்பிர காசம், பானு, விரலான் - எங்கள் குடும்பம் மட்டில் கிராமத்துக்குப் பெயர்ந்தது.
இத்துடன் என் வாழ்க்கையின் முதல் ஸர்க்கம் முடிந்தது.
------------------------ ----------------- -------------
This file was last updated on 10 Jan. 2017.
Feel free to send corrections to the webmaster.