காக்கை விடு தூது
ஆசிரியர் : பாந்தளூர் வெண்கோழியார்
ச.வெள்ளைவாரணார் (தொகுப்பு)
kAkkai viTu tUtu
of pAntalUr veNkOziyAr, c. veLLaivAraNar (edited)
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
We thank Tamil Virtual Academy for providing a scanned image copy of this work.
The e-version of this release has been generated using Google OCR online tool and
subsequent correction of the OCR output text. We thank R. Navaneethakrishnan for
his help in proof-reading this work.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2017.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website:
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
காக்கை விடு தூது
ஆசிரியர் : பாந்தளூர் வெண்கோழியார்
ச.வெள்ளைவாரணார் (தொகுப்பாசிரியர்)
Source:
சென்னை மாநில முதலமைச்சர்
ச. இராசகோபாலாச்சாரியார் அவர்களிடத்து
வெண்கோழியுய்த்த
"காக்கை விடு தூது"
ஆசிரியர்
பாந்தளூர் வெண்கோழியார்
(ச. வெள்ளைவாரணன் வெளியீடு)
1987
இரண்டாம் பதிப்பு: 1988
பிரதிகள் கிடைக்குமிடம்:
சிவகாமி பதிப்பகம்,
அண்ணாமலை நகர் - 603992
---------------
பதிப்புரை
பாரதநாடு வெள்ளையர் ஆட்சியிலிருந்து விடுதலை பெறாத நிலையில் அளிக்கப் பெற்ற தேர்தல் உரிமையினை யேற்றுத் தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரசு கட்சி, சென்னை மாநில ஆட்சியுரிமையைக் கைப்பற்றியது. மூதறிஞர் இராசகோபாலாச்சாரியார் முதலமைச்சராயினார். அக்காலத்தில் உயர்நிலைப் பள்ளிகளில் தாய்மொழி கட்டாயமாக்கப் பெறவில்லை; ஆங்கிலமே பயிற்று மொழியாக இருந்தது. அந்நிலையில் முதலமைச்சர் இராசகோபாலாச்சாரியார் இந்தி மொழியினைக் கட்டாய பாடமாக்கினார். அப்பொழுது தமிழ் விருப்பப் பாடமாகவே இருந்தது. தமிழைக் கட்டாய பாடமாக ஆக்காமல் அயன் மொழியாகிய இந்தியைக் கட்டாய பாடமாக்குதல் கூடாது என மறைமலையடிகளார் பேராசிரியர் ச. சோம சுந்தரபாரதியார், தமிழவேள் உமாமகேசுவரம் பிள்ளை முதலிய தமிழறிஞர்களும், சர். ஏ. டி.பன்னீர்ச்செல்வம், தந்தை பெரியார், இராவ் சாகிபு ஐ. குமாரசாமி பிள்ளை, கி.ஆ.பெ. விசுவநாதம், அறிஞர் அண்ணா முதலிய தமிழன்பர்களும் எதிர்த்தார்கள். மூதறிஞர் இராசாசி அவர்கள் தமது கட்சிப் பெரும்பான்மையைக் கொண்டு தமது திட்டத்தைக் கைவிடவில்லை. இந்நிலையில் இத்திட்டத்தை எதிர்த்த தந்தை பெரியார் முதலியவர்களும் துறவிகளும் புலவர்களும் பெண்களும் சிறையிலடைக்கப் பெற்றனர். அந்நிலையில் 1939-ஆம் ஆண்டிற் பாடப்பெற்றதே காக்கைவிடுதூது என்னும் பனுவலாகும். இது தமிழ்ப்பொழில், விடுதலை, திராவிடநாடு ஆகிய இதழ்களில் வெளிவந்தது. இப்பொழுது இந்நூலின்படி கிடைக்காமையால் இரண்டாம் பதிப்பாக வெளியிடப் பெறுகிறது. இதனை வனப்புற அச்சிட்டுதவிய அண்ணாமலைநகர் சிவகாமி அச்சகத்தார்க்கு என் நன்றியும் பாராட்டும் என்றும் உரியவாகும். இந்நூலை என் ஆசிரியப் பெருந்தகை டாக்டர், நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் அவர்கட்கு உரிமையாக்குகின்றேன்.
செந்தமிழைக் காக்கும் திறலார் புகழ்சோம
சுந்தர பாரதியாம் தோன்றலார் - இந்திமொழி
மீதூரா வண்ணக் தடுத்தார்வெண் கோழிவிடு
தூதுரிமை யாமவர்க்குச் சொல்.
14-1-87
142,கனகசபைநகர் இங்ஙனம்
சிதம்பரம் ச. வெள்ளைவாரணன்
--------------------
அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் நாவலர் டாக்டர் ச. சோமசுந்தர பாரதியார் எம்.ஏ. பி.எல், அவர்கள்
உளமுவந்து வாழ்த்திய பாட்டியற்றமிழுரை வாழ்த்து
காக்கைக்குத் தூது சொல வாக்குதவும் வெண்கோழி
நீர்க்குட் சிறுமீனை நினைந்துணவின் நிலவிநிதம்
பார்க்குஞ் செங்கட்கள்ளப் பருந்தைத் திருந்துமென
நம்பும் வெளிறன்று, நள்ளார் நமைநலிய
வெம்பும் கொடுவிரகே. வேட்பார் பகைசொலினும்
எள்ளற் கருமறப்போர் இசைந்து தொடங்குமுனே
உள்ளங் கரவா துரனோ டறிவுறுத்தி
விள்ளவொரு வாயில் விடுக்குஞ்செந்தமிழ்மரபு
உள்ளி உரை உதவும் வெள்ளை மனப் பண்பால்
துதிக்கைக் கருமாத் தொடராவாரண நீயென் – றுணர்ந்தெவரும்
துதிக்க வெண்மையடை துலங்கப்பெயர் வாய்ந்ததுகொல்
இருபாற்கேட் டொருநோக்க மிறவாக் கரவற்ற
காரண்டக் காக்கைப்புள்--கண்ணற்ற கருவுளத்தர்
மாரண்டு பகையஞ்சா வாயிலெனவிடுக்கச்
சூழ்ந்து துணிந்ததிறம் சொல்லுந் தரத்ததிலை
வாழ்ந்ததமிழ்த் தாய்தளரா வாறுரிய வாய்மொழிநின்
வெண்பா -- நமர்படையின் வேசறவைத் தீர்த்து
வண்புகழ் மூவாத் தண்தமிழ் தழையப்
பகைமற மழியப் பலநலம் பொலிய
விரைந்து வீறொடும் வெற்றிவிளைத்திடுக.
அன்பனே, தூதுரை படித்து மீதூரி மகிழ்ந்தேன். காக்கை பாற் பல பழியொழித்து வாழ்த்திய பகுதிகளும், தமிழர் வீறு கூறுங் கூற்றுக்களும் பெண்டிரும் தருக்கிய சிறைபுகுஞ் சிறப்புரையும் உளமினிக்கும் வளமுடையவாம். வசைகரந்து வருமங்கத நகைச்சுவை வாய்மைகுன்றா வனப்புடைத்து.
தமிழறமோம்ப 'வண்போர்க்குக் கைவழங்க'த் தூது விட்டு வெட்சி சூடிய நின்செய்யுள், முறையே வஞ்சியுந் தும்பையும் மிலைந்து வாகையும் பெறுக: பாடாண் எம்மனோர் பகர்வோமாக. நாடொறும் நலனும் புகழும் பீடுடன் பெருகப் பல்லாண்டு கூறுகின்றேன்.
14-8-89
பசுமலை ச. சோ. பாரதி
௨
தமிழ்த் தாய் வாழ்க
சென்னை மாநில முதலமைச்சர்
ச. இராச கோபாலாச் சாரியாரவர்களிடத்து
வெண்கோழி யுய்த்த காக்கை விடு துது
[இத்தூது புறப்பொருள் பற்றிய தூதாகும். அண்டங் காக்கையென்பது காக்கையையன்றி இரட்டுறமொழிதலால் அரசனையுங் குறித்தபெயராகக் கருதப்படுதலால் அப்பெயருடைமை பற்றி இவண் தூது சென்றார் பறவையரசராய காக்கையார் எனக்கொள்க. அரசரிடத்துப் பார்ப்பார் தூது சேறல் பழைய வழக்காகவும் அதற்குமாறாக இற்றைஞான்று பார்ப்பாரிடத்து அரசர் தூதுசெல்லும் இன்றியமையாமை நேர்ந்ததென்பதனை இத்தூது கொண்டு தெளிக.]
வானுயரும் புள்ளாகி மாநிலத்தோர் அன்பு செயத்
தானமரும் நல்ல தனுப்படைத்து -- மேன்மையாற்
பெற்றகரு மேனிகொடு பேருலகம் எங்கணும்
உற்றுயிர்கா வென்ற வுரையளித்து -- வெற்றிகொண்
டெல்லார்க்குங் கோவாய் இருந்தமிழே பேசியுல
கெல்லாந் தமிழ்கூறும் ஏற்றத்தாற் -- பல்லோருங்
தாமுண்ணு முன்னர்த் தனைநினைந்தவ் வின்னடிசில்
ஏம முடனேற்க என்றுரைக்கும் -- சேமமுற்றுத்
தாமரையான் மாயன் தலைவரிவர் போற்றவுடன்
வாம மயில்வைத்த வள்ளலுமொத் -- தேமமாய்த்
தன்னினத்தை யெல்லாமூண் தானுண்ணும் வேளையில்
இன்னுரையா லேயழைத் தின்பூட்டித் -- தன்னுடனே
ஒக்கவழைத் துத்தமிழர் ஒப்புர வீதென்னத்
தக்க செயலாற் றலை நின்று -- மிக்கவைசெய்
தெந்நாட்டினுக்கும் இயற்கையின் முற்றோன்றும்
முன்னாடு தென்னாடாம் உண்மையும் – அந்நாடொட்
டிந்நாட்டா ரென்றும் இயல்பும் மொழிதமிழென்
றிந் நானிலத்தோர் இசையவே – எந்நாளும்
அம்மா வெனவழைக்கும் ஆன்கன்றும் மற்றதனைத்
தம்மாசை யாற்றொடரும் தாயும்பார்த் – தெம்மவர்கள்
ஆவி யுருகா ரணுவளவு மென்றவரை
மேவி வெகுளியான் மெய்கருகிப் – பாவியீர்
தேனேயுஞ் செந்தமிழைத் தீயவர்கள் தம்மொழியால்
வீணே சிதைக்க விரையுமுன் -- ஆனாதிங்
காவாவென் றார்த்தெழுமின் என்றவரைக் கூவியே
காகாவென் றோலமிடுங் காக்கையே -- மாகாதல்
தாய்த்தமிழிற் கொண்டார் தலைமைசேர் நின்போல
ஏத்து புகழோரை யான்காணேன் -- ஆர்த்த
கடலுண் குறுமுனிவன் கையகத்துக் கொண்ட
குடநீர் தனைக்கவிழ்த்துக் கொட்டித் -- தடமண்டு
காவிரியா றாக்கிக் கருணையாற் செந்தமிழர்
ஆவியளிக்கும் அருமருந்தே -- தேவர்கோன்
வானுலகந் தன்னை வளர்த்திடுவா னாயினும் நீ
தானருள்நீ ராலே தகைபெற்றான் -- தேன்போன்ற
வண்டமிழைக் காக்கும் மரபானும் மாநிலத்தோர்
அண்டங்காக் கையென்ன ஆயினாய் -- மண்டு
நிறத்தைக் கருதாது நின்பெருமை நின்னை
யுறவே கருங்காக்கை யென்பர் -- திறல்சேர்
கருமைநிறந் தானுங் கடவுளமைத் திட்ட
பெருமை யடையாளப் பேரே - உருவார்ந்த
பார்வதியும் மாலும் பகர்கருமை பெற்றதனால்
பேரழகும் ஆண்மையும் பெற்றுயர்ந்தார் -- தேரின்
கருமுகிலும் மற்றுன் கருணைநிறங் காட்டி
அரிதின் உலகம் அளிக்கும் – இருகண்கள்
உற்ற வுனக்கொருக ணேயென் றுலகத்திற்
குற்ற முடையார் குறிப்பரால் -- மற்றதுவும்
ஒப்பற்ற கண்ணுடையா யென்றிடுமிவ் வுண்மையைச்
செப்பிடுவ தென்றறிஞர் செப்புவரால் -- இப்புவியில்
மக்கள் தமைவருத்த வன்சனியோ டுற்றுறையும்
ஒக்க லெனவே யுனைப்பழிப்பர் -- மிக்கவன்றான்
மாந்தர் தமைவருத்த வல்விரைந்து செல்லாமுன்
எந்தவன்றன் ஊர்தியாய் எய்தியே -- தேர்ந்துனது
தந்திரத்தி னாலவனைத் தாறுமா றாயிழுக்கும்
இந்த விரகறிவார் யாவரோ -- விந்தையுறக்
காலை யெழுந்து கரைந்து துயிலுமுயிர்
மாலை யகற்ற வருமணியே -- சீலத்தால்
வீந்த வுடலை விரும்பும் விரதியுயிர்
சார்ந்த வுடலூண் தவிர்தல்போல் -- சேர்ந்தவுயிர்
மாண்ட வுடலை யயின்று வளர்ந்துலகில்
வேண்டு முயிரளிக்கும் மேதகையாய் -- ஈண்டுன்
பெருமையெலாம் சாற்றப் பிறங்குயிரா லாமோ
உரிய துனக்கொன் றுரைப்பன் – இருநிலத்துக்
‘கற்றோன்றி மண்தோன்றாக் காலத்தே யெவ்வுயிர்க்கும்
முற்றோன்றி மூத்த குடி’ நிலைத்துப் -- பிற்றோன்றும்
பேரறிவுக் கெல்லாம் பிறப்பிடமாய் முன்னரே
சாரும் பெரிய தகவுடைத்தாய்ப் -- பாரின்கண்
மக்களெலாந் தோற்றி மறைகுமரி கண்டந்தன்
தெற்கண் அமைந்த சிறப்பினைப்பெற் -- றொற்கா
வடவெல்லை வேங்கடமா மன்னிய கீழெல்லை
தொடுகடலாத் தொன்றுமுதிர் பௌவம் -- அடலரணாம்
மேலெல்லை யாக விரிந்தொளிருந் தென்னாட்டில்
சால்புங் குணனுந் தகப்பெற்ற -- மேன்மக்கள்
இன்னாசெய் யாமை இயல்வ பரிந்தளித்தே
ஒன்னாரை யும்போற்றும் ஒட்பம்பெற் – றிந்நிலத்தில்
ஆதரவற் றிங்கண் அடையுமவர் தங்களைக்
காதலாற் போற்றுங் கருத்தினால் -- ஓதுலகில்
எவ்வூரும் எம்மூரே யாவரும் எம்மவரே
செவ்விதிற் றெய்வமும் ஒன்றேகாண் - அவ்வப்
‘பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்குஞ் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யானெ’ன்னும் -- மெய்யுரையைப்
பொன்னேபோற் போற்றவுடன் புத்துணர்வைத் தந்தொளிரும்
தன்னே ரிலாத் தமிழே தம்முயிரா -- மன்னிய
வாழ்வி னுயர்வெல்லாம் வண்டமிழாற் றம்மிடம்
சூழ வருவ தெனச் சூழ்ந்தே -- ஆழ்கடலிற்
போந்த பெருநாட்டைப் பொருட்படுத்தா திந்நிலத்திற்
றீந்தமிழே தத்தஞ் செவிமாந்தப் – போந்திருந்து
மூவேந்தர் போற்றவுயர் முச்சங்கப் பாலுட்டித்
தேவ ரறியாத் திறமளித்து -- மேவரும்
தாயெனவே போற்றுக் தனித்தமிழை முன்னாளிற்
றூய்மைபெறா ஆரியர்தாம் துன்னியே – வாயினால்
‘ஆரியம் நன்று தமிழ்தீ தெ’னவுரைத்த
காரியத்தாற் காலக்கோட் பட்டிருந்தும் -- சீரிய
நக்கீரர் தாமிலரால் நாமெதையுஞ் செய்வோமென்
றொக்க வுரைத்துரங்கொண் டாரியத்தின் -- மிக்க
சிதைவுமொழி யாம்அம்பைச் சிந்தித் தமிழிற்
புதையம்பிற் புண்படுத்தி னார்கள் -- அது நிற்க
செந்தமிழ்சேர் சேலத் தினையடுத்த வூரின்கண்
முந்தையங் கார்தம் முதன்மரபில் -- வந்தே
இராசகோ பால னெனும்பெயர்பெற் றியாரும்
பரவுமோர் ஆச்சாரியார்தாம் -- இரவும்
பகலும் உழைத்தே படித்தாங் கிலத்தில்
தகவார் வழக்கறிஞ ராகி -- மிகவும்
உலகமதில் இந்தியநா டிவ்வெள் ளையரால்
பலவும் இடுக்கட் படுமோர் -- நிலையுணர்ந்தே
நெஞ்சமுளைந் தந்நிலைமை நீக்க நினைந்துளத்தே
அஞ்சாமை பூண்டோர் அறிவுரையை -- எஞ்சாமல்
இந்தியருக் கெல்லாம் எடுத்துரைத்து வெள்ளையர்கள்
வந்த வழிபோம் வகையதுவே – சிந்திக்குந்
தன்னாட்சி மன்றத்தார் தம்முடனே கூடியதால்
தென்னாட்டுக் காந்தியெனச் செப்பப்பெற் – றிந்நாட்டில்
சாதி யுரங்கொள் தனிக்குடியில் தான்பிறந்தும்
ஒது புகழ்பெற் றொளிரவே -- வேத
நெறிகடந்து, தான்பெற்ற நேரிழையைக் காந்தி
பெறுமகனார்க் கீந்து பிறங்கி -- அறுதொழிலை
அறவே மறந்துபோந் தாங்கிலர்கள் தம்மை
இறையி லொழிப்பதற் கேற்ற -- முறையுன்னிச்
சட்டங் கடக்கத் தமிழர்களைத் தூண்டியே
கட்டப் படுத்துங் கடுஞ்சிறையில் -- விட்டுடனாய்த்
தானுஞ் சிறைபுகுந்து தம்மவரைக் காத்தளிக்கும்
மேன்மைக் குணமே மிகப்படைத்திங் -- கானாத
வெள்ளையர்கள் தம்மை விரட்டி யடிப்பதுடன்
எள்ளி யவரீந்த இழிவரசைக் -- கொள்ளத்
தகாத வகையாம் தகர்த்தெறிந்து மற்றோர்
புகாத வழியாற் புரக்க -- மகாத்துமா
காந்தியெமை ஏவினார் காங்கிரசார் யாமென்னச்
சூழ்ந்த வுரைகள் பலசொல்லி – மாந்தர்களை
மஞ்சளெனும் பேரால் மயக்குறுதீப் பெட்டியினில்
வஞ்சனையால் வாக்களிக்க வைத்ததனால் -- விஞ்சியே
தந்திரத்தி னாலே தமிழர்களை ஏய்க்க முதல்
மந்திரியாய்ச் சென்னைமாகாணத்தே -- வந்தமர்ந்து
சக்ரவர்த்தி யென்று தனையுலகோர் கூறுதலால்
தக்க அரசாய்த் தனைநினைந்து -- மிக்க
உழைப்பும் உரனும் உடையதமிழ் மக்கள்
தழைக்க வமருமிடத்தே -- பிழைப்பினால்
எல்லைகடத் தப்பெற்ற ராசனெனுந் தம்மவரைக்
கொல்லைப் புறவழியே கொண்டுவந்தார் -- வல்லவெழிற்
சீருஞ் சிறப்புமுடைச் செந்தமிழை இந்நாட்டோர்
ஆர்வ முறப்பியிலா தாங்கிலமாம் -- பேர்சொல்
பிறர் மொழியைத் தத்தம் பிழைப்புன்னிக் கற்றே
அறவே தமிழறியாராகி -- உறுதமிழிற்
கட்டாய மின்மையாற் கண்ணூற்றுவர்களுள்
எட்டுப்பேர் கூட எழுத்தறியா மட்டிகளாய்த்
தங்க ளுணர்வின்றித் தமிழர் நிலைகுன்றி
எங்கும் அடிமைகளாய் வாழ்நாளில் -- இங்குத்
தமிழெனவொன் றில்லையேல் தம்மடியின் கீழே
தமிழரெலாஞ் சார்வரென் றுன்னி -- இமிழ்திரைநீர்
சூழ்ந்த வுலகின்கண் தூய்மையிலாச் சொற்களைப்பெற்
றேய்ந்தா ரியத்தின் இழிசொல்லாய் -- வாய்ந்த
உருதுமுதற் பன்மொழியி னுற்றிடுசொற் பெற்றுக்
கருதும் இலக்கியக் கண்ணற் -- றொருபொழுதும்
இந்நாட்டார்க் கேலா திழிவுதரும் இந்தியைத்
தென்னாட் டவர்தம் சிறுமகார் -- முன்னான
அங்கிலத்தி னோடே யவசியமாய்க் கற்றற்குத்
தங்கியதோர் திட்டந் தனைவிதித்தார் -- இங்குற்
றருந்தமிழ ரெல்லாரும் அஞ்சியொன்று கூடிப்
பொருந்து பலகிளர்ச்சி செய்தே – வருந்துமிந்தி
எம்மைந்தர்க் கென்றும் இளவயதி லேறாதால்
அம்மைத் தமிழும் அழியுமால் செம்மையிலா
இத்திட்டஞ் சேந்தமிழர்க் கேற்புடைத்தன் றென்றரற்ற
அத்தகையோர் தம்மை அறிவிலியென் -- றெத்திறத்தும்
தன்னேரிலாப் பெரியோர் தம்மை யிழித்துரைத்தே
எந்நாளும் மாறா வசையுரைத்தும் -- உன்னாது
தான்கொணர்ந்த கட்டாய இந்தி தனையெதிர்க்கும்
மேன்மைத் தமிழர்களை வெஞ்சிறையிற் -- றான்வைத்தார்
சாதிப் பிரிவைத் தகர்த்தும் எனவுரைத்தோர்
மேதினியில் அப்பிரிவை மேலாக்க -- மேதக்க
தச்சரெலாம் ஆச்சாரி சார்விசுவ பார்ப்பனரென்
றுச்ச நிலைப்பெயரை ஓதாமல் -- நிச்சலும்
ஆசாரி கர்மாவென் றாரு முரைக்கவே
பேசப்படுவதுவே* பெற்றியெனக் --கூசாது
திட்டப் படுத்திஅவர் சீற்றங் கொளஅஞ்சிக்
கட்ட மடைந்ததனைக் கைவிட்டும் -- ஒட்டாத்
தமிழ வழக்கறிஞர் தம்மவரோ டொத்து
மகிழு முயர்நிலையின் மன்னா – தமிழவே
தேர்வு நிலை மாற்றுச் சீறி யவர்வரவே
ஆர்வங் குறைந்தே அடங்கியும் – பார்மேல்
மதிப்பிழந்த விந்தமுதன் மந்திரியார் நெஞ்சங்
கொதிக்கும் வகைகொடுமை செய்ய – விதிர்ப்புற்றுக்
கண்ட துறவியருங் கன்றி யிளகியுளம்
விண்டு கடுஞ்சிறையில் மேவினார் – தொண்டர்கள்
____________________________________________________________________
• "பேசப்படல் வேண்டுமென்றதனை’ எனமுன்னர் அச்சிடப்பட்ட தொடர்,
என் ஆசிரியப்பெருந்தகை நாவலர் ச. சோ. பாரதியாரவர்கள் பணித்த வண்ணம்
மேற்கண்டவாறு திருத்தப் பெற்றது.
___________________________________________________________________________
பன்னூற் றுவரும் புகர்புலவ ருஞ்சிறையிற்
றுன்னி யழிந்து துளங்குகின்றார் – இந்நிலையில்
தாய்மார்க ளெல்லோரும் தத்தம் உளம்பொறார்
சேயோ டடைந்து சிறைபுக்கார் -- தாய்மொழியிற்
காதல்மிகப் பெற்றதனாற் கன்னி யிளந்தமிழ்நன்
மாதர் மழலைக் குழவிகளோ-- டோதுலகிற்
சிறைபெற்ற இந்நிலைமை செந்தமிழர் என்போர்
அறியப் பெறார்இன் றறிந்தார் -- மறைகற்றுப்
பஞ்சாங்கஞ் சொல்லிப் பொருள்பறிக்கும் பார்ப்பார்தம்
நெஞ்சங் கருங்கல்லோ நீள்மரமோ--வஞ்சகத்தில்
ஆக்கி யுருக்கும் அரமோ அருளதனைத்
தாக்குங் கொடிய தனிவாளோ -- யார்க்கும்
உரைசெய்ய வொண்ணுதென் றொண்டமிழ ருள்ளங்
கருகி முனிந்து கனல்வர்-- மருவிய நற்
காக்கைப்பிள் ளாய்யாம் கடியமுதன் மந்திரியைப்
பார்க்கப் பலரை அனுப்பினோம்--போக்குமவர்
தம்முரைகொள் ளாது தருக்கினிவர்ந் திட்டதனால்
செம்மைத் தமிழர் சிராப்பள்ளி--வெம்மைப்
படைகள் திரட்டிவந்து பைந்தமிழர் நற்போர்க்
கொடிக ளுயர்த்திக் குழாமாய் -- நொடியதனில்
வாகை கொளவே வழிக்கொண்டார் ஆயினும்
ஓகை யுறவேதம் ஒன்னார்பாங் -- கேக
விடுதூதொன் றேவி வினையியற்ற நின்றார்
ஒடியா வுளத்திங் குறுநீ – நெடிதுநினைந்
தெண்டிசைதேர்ந் தந்த இராசகோ பாலரை
அண்டி அவரை யணுகியே – “தொண்டீர்
பிறரடிமை போக்கப் பிறந்துழைத்தேன் “ -- என்னுந்
திறல்பெற்ற தந்திரியே தேர்ந்த -- மறையவரே
யானும் ஒருதமிழன் என்றுரைத் தெங்கட்டுத்
தேனேய் மொழிபகர்ந்து தித்திக்கத்--தான்வந்து
பேசு பெரியீர் பெரும்புதவி பெற்றதனால்
ஆசை மறைக்க அறிவழிந்தீர்--நாசமுறு
சாதி யுரங்கொள் தகையுடையீர் இந்நாள்நும்
பேதம் அறியாத் தமிழன்பை -- ஓதுலகில்
குட்டிக் கதையாய்க் குறைத்துப் பழந்தமிழைக்
குட்டிச் சுவராக்கிக் கூறிட்டு--வெட்ட
வெளியாய் விளக்கிடுநல் வீரரே நுந்தம்
ஒளியா வுளத்தை யுணர்ந்தோம்--தெளிவிலீர்
உம்மவர்கள் வாழவுளத் துன்னினீ ராயினுடன்
எம்மவர்கள் வாழ இடமுரைமின் -- உம்மையே
நூலால் உலகம் நொடியின் அழியுமென
மேலோர் உரைத்த விதியறிவோம் -- மால்கொண்டே
இந்தியெனுக் தீயாள் இன்பத் தினைவிழைந்து
செந்தமிழ்த் தாயின் திருவுடற்குத் -- தந்திரத்தால்,
தீங்கிழைத்துச் செந்தமிழர் தம்பகையைத் தேடாது
தேங்கா தவரைச் சிறையகற்றி -- ஓங்குபெரும்
அச்சமீக் கூர்ந்தெம் அருந்தமிழர்ப் போற்றியே
மெச்சு மவர்முன் விரைந்தடைந்து--கைச்ச
மொழி யுரைத்த தீப்பிழைக்கு மும்மடங்கு வேண்டி
அழியா வுளத்தன்பு பெற்றுப்--பழிபோக்கி
உங்குலத்தார்ப் போற்றி ஒளிர்சென்னை மாநகரில்
தங்கு முதலமைச்ச ராயமர்ந் -- தெங்கும்
வசைநீங்கி யாரும் வழுத்து மரபால்
இசைபரப்பி வாழுமின் இன்றேல் -- நசையினால்
உள்ளத் துயர்தமிழர் உண்மைவழிப் போரியற்ற
ஒல்லையிற் கைதாரும் என்றுரைத்துச் -- செல்லவே
வெண்கோழி யென்னை விடுத்ததுகாண் என்றுரைத்து
வண்போர்க்குக் கைவழங்கி வா,
(க.வெ)
இந்திமொழியின் கட்டாயம் ஒழிக.
----------------
ஆட்சியாளர்க்கு ஒரு வேண்டுகோள்
பதினான்கு மொழிகளைத் தேசிய மொழிகளாக் கொண்ட நம் பாரத நாட்டில் சில மாநிலத்தவர்கட்கு மட்டும் தாய் மொழியாகிய இந்திமொழி ஆட்சிமொழியாகப் பாராளுமன்றத்திற் சட்டமாக்கப் பெற்றுவிட்டது. தமிழ் மாநிலத்தார் முதலியோர் அதனை வன்மையாக எதிர்த்தனர். இந்திய நாட்டின் பிரதமராக விளங்கிய ஜவகர்லால் நேரு அவர்கள் இந்தி மொழியுடன் ஆங்கிலமும் மக்கள் விரும்பும் வரை ஆட்சி மொழியாகத் தொடர்ந்திருக்கும் என உறுதி மொழியளித்தார்கள். ஆயினும் அவ்வுறுதிமொழிக்கு மாறாக இந்திமொழியைப் பிறமாநிலங்களில் வலிதிற் புகுத்தும் சூழ்ச்சி செயற்பட்டு வருகின்றது. வானொலியிலும் தொலைக்காட்சியிலும் மாநில மொழிகளைக் கீழ்ப்படுத்தி இந்திமொழியே மீதூர்ந்து வருகின்றது, நடுவண் அரசிலிருந்து அவ்வப்பொழுது இந்திமொழியின் கட்டாயம் குறித்து வெளியிடப்படும் அறிக்கைகள் தமிழக மாணவர்களின் கல்விப் பயிற்சியில் அச்சுறுத்தலாக அமைந்துள்ளன. அதனால் ஆண்டுதோறும் தமிழகத்திலே இந்தி யெதிர்ப்புக்கிளர்ச்சி தோன்றிக் கல்வி நிலையங்கள் பல நாட்கள் மூடப்பட வேண்டிய தொல்லை நேர்கின்றது.
மக்களாற்பேசப்படும் தாய்மொழி அவர்கட்கு விழியெனத் தகும் சிறப்புடையதாகும். மொழிவழியாக அமைந்த மாநிலங்களில் தொடக்கக்கல்வி முதல் பல்கலைக்கழகக் கல்வி முடியத் தாய்மொழியே பயிற்று மொழியாதல் வேண்டும் என்பது இயல்பான நியதியாகும். மக்களுக்கு இன்றியமையாத மொழியுரிமை யின்றி நாட்டுரிமை பெற்றோம் என எண்ணுதல் ஆடை யின்றி அணிகலன்களை யணிவோர் செயல் போன்று வெறுக்கத் தக்கதாகும். எனவே இந்திய நாட்டின் தேசிய மொழிகளாகிய எல்லா மொழிகளும் அவ்வம்மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டுள்ள மாநிலங்களைப் பொறுத்தவரையில் அரசியல் ஆட்சிமொழிகளாகவும் கல்வி பயிற்று மொழிகளாகவும் அமைதல்வேண்டும் என்பதிற் சிறிதும் ஐயுறவுக்கு இடனில்லாதவாறு விழிப்பாக இருத்தல் மாநில அரசின் கடமையாகும்
தேசிய மொழிகளாகிய மாநில மொழிகள் யாவும் இத்திய நாட்டின் மொழிகளாகக் கொள்ளத்தக்கனவே. இந்திய மொழிகளுள் ஒன்றாகிய இந்திக்குமட்டும் முதலிடம் தந்து ஏனைய மொழிகளை இரண்டாந்தர மொழிகளாகக் கீழ்ப்படுத்தாமல் இந்திமொழியின் வளர்ச்சிக்கு உதவிவருவது போன்று ஏனைய மாநில மொழிகளின் வளர்ச்சிக்கும் வாய்ப்பினையமைத்தல் நடுவணரசின் கடமையாகும். இந்தியநாட்டின் தேசிய மொழிகளில் ஒன்றாகிய இந்திமொழியின் வளர்ச்சி பிற மாநில மொழிகளின் வளர்ச்சிக்குத் தடையாயிராதவாறு இந்திய நாட்டின் அரசியல் ஆட்சி மொழிபற்றிய சட்டத்தினை ஐயுறவுக்கு இடந்தராதபடி திருத்தியமைத்தல் இந்திய நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஆக்கந்தரும் நற்பணியாகும்.
இந்தியநாடு உரிமைபெறவுழைத்த பெருந்தகையும் நாடு விடுதலைபெறும் நிலையில் இந்திய அரசின் தலைமை ஆளுநராகத் திகழ்ந்தவரும் ஆகிய மூதறிஞர் இராசாசியவர்கள் இந்திமொழி யாளரது ஆதிக்கவெறியினைக் கண்டு அஞ்சி இந்திமொழி யொன்றே இந்தியாவின் ஆட்சிமொழியாகத் தொடர்ந்து நீடிக்குமானால் இந்தியநாடு பல கண்டங்களாகச் சிதைவுறும் என்பதனையுணர்ந்து இந்திமொழி யாதிக்கத்தைத் தமது வாழ் நாளின் இறுதிவரை விடாது கண்டித்துவந்தார். இந்திய நாட்டின் எல்லா மாநிலங்களிலும் பொதுவாகப் பயிலும் பயிற்சி வாய்ந்ததும் இந்நாளில் வளர்ந்துவரும் அறிவியற் கலை நூல்கள் பலவற்றுக்கும் நிலைக்களமாகத் திகழ்வதும் ஆகிய ஆங்கில மொழியினையும் நடுவண் அரசின் ஆட்சிமொழியாக்குதல் தேசிய ஒருமைப்பாட்டுக்குத் துணை புரிவதாகும் என்பது மூதறிஞர் இராசாசி அவர்களின் தெளிவான நம்பிக்கையாகும்.
இந்தியநாடு விடுதலை பெருதநாளில் சென்னை மாகாண முதலமைச்சராயிருந்து உயர்நிலைப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயமாக்கிய இராசாசி அவர்களைக் குறித்துப் பாடப் பெற்றதே காக்கைவிடுதூது என்னும் இப்பனுவலாகும். இந்தி மொழியைக் கட்டாயமாகப் பிற மாநிலங்களில் திணித்தல் இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஊறுவிளைப்பதாகும் என்பதனையே இந்திய நாடு விடுதலை பெற்றபின் மூதறிஞர் இராசாசி அவர்கள் உணர்ந்து வெளியிட்டமை இங்குச் சிறப்பாகக் குறிப்பிடத்-தகுவதாகும்.
ஆட்சி மொழி இந்தியொன்றே யாயின்இந் நாட்டொருமை
வீழ்ச்சியுறும், ஆங்கிலமும் வேண்டுமென--மாட்சியுறும்
மூதறிஞர் ராசாசி முன்மொழிந்தார் அம்முறையே
ஏதமிலாச் சட்டமியற் றீர்.
என இந்திய அரசினை வேண்டி நாட்டின் ஒருமைப்பாட்டுணர்வுக்கும் மாநில மொழிகளின் பாதுகாப்புக்கும் அவற்றின் கலை வளர்சிக்கும் அரண் செய்யும் முறையில் தமிழக அரசும் நடுவண் அரசினை அணுகி ஆவனசெய்தல் வேண்டும் எனத்தூண்டும் நோக்குடன் காக்கைவிடுதூது என்னும் இச் சிறுநூல் இரண்டாம் பதிப்பாக இப்பொழுது வெளியிடப் பெறுகின்றது.
------------------
This file was last updated on 15 Feb. 2017
Feel free to send corrections to the webmaster.