கவிச் சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர்
சி. பாலசுப்பிரமணியன் சொற்பொழிவுகள்
kavic cakkiravarti oTTakkUtar
Lectures of cirpi pAlacupramaNiyan
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
We thank Tamil Virtual Academy for providing a scanned image copy of this work.
The e-version of this release has been generated using Google OCR online tool and
subsequent correction of the OCR output text. We thank S. Karthikeyan for
his help in proof-reading this work.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2017.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website:
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
கவிச் சக்கரவர்த்தி "ஒட்டக்கூத்தர்"
சி. பாலசுப்பிரமணியன் சொற்பொழிவுகள்
Source:
கவிச் சக்கரவர்த்தி "ஒட்டக்கூத்தர்"
டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்,
எம்.ஏ., எம்.லிட்., பிஎச்.டி.,
தமிழ்ப்பேராசிரியர் - தமிழ்மொழித்துறைத் தலைவர்
சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை - 600 005
விற்பனை உரிமை :பாரி நிலையம்
184, பிரகாசம் சாலை,சென்னை 600 108
முதற்பதிப்பு : அக்டோபர் 1985
விலை ரூ. 6.00
நறுமலர்ப் பதிப்பக வெளியீடு
அச்சிட்டோர் : கற்பகம் அச்சகம், சென்னை - 600 002.
----------
முன்னுரை
தமிழ் நாட்டு வரலாற்றிலும் இலக்கிய வரலாற்றிலும் பொற்காலங்கள் என்று குறிக்கப்படுவன இரண்டு காலங்களாகும். ஒன்று சங்க காலம்; பிறிதொன்று பிற்காலச் சோழர் காலம். சங்க காலத்தில் கபிலர், பரணர், ஒளவையார், நக்கீரர் முதலானோர் புகழ் பூத்து விளங்கியது போன்று, பிற்காலச் சோழர் காலத்தில் தெய்வப் புலமைச் சேக்கிழாரும், கவிச்சக்கரவர்த்தி கம்பரும், கலிங்கத்துப் பரணி பாடிய சயங்கொண்டாரும், நளவெண்பா இயற்றிய புகழேந்தியும், தெய்வப் பரணியாம் தக்கயாகப் பரணி தந்த கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தரும் சிறப்பாகக் குறிப்பிடப் பெறத் தக்கவர்களாவர்.
"கோவையுலா அந்தாதிக்கோர் ஒட்டக்கூத்தன்" எனும் பாராட்டு, சிற்றிலக்கியங்களாம் கோவையினையும் உலாவினையும் அந்தாதியினையும் பாடிப் பெருஞ் சிறப்புப் பெற்றவர் ஒட்டக்கூத்தர் என்பதனை நன்கு வெளிப் படுத்துகின்றது. இவர் கவிராட்சதர், கவிச் சக்கரவர்த்தி, கெளடப் புலவர், சர்வஞ்ஞ கவி என்று பலவாறு பாராட்டப் பெறுகின்றார்.
இவர் காலம் தமிழ் இலக்கிய வரலாற்றில் உறுதி செய்யப்பெற்ற ஒன்றாகும். விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் இராசராச சோழன் ஆகிய சோழப் பெருமன்னர் மூவர் காலத்திலும் ஒட்டக்கூத்தர் அவர்கட்குக் கல்வி கற்பித்த ஆசிரியராய்ப் பின் அரண்மனைப் புலவராய் இறுதியில் ஞானாசிரியராய் விளங்கித் தம் தொண்ணுற்றேழாவது வயதில் சிவகதி அடைந்துள்ளார்.
செய்யுந் தொழிலில் நிகரற்ற நெய்யுந் தொழிலை வாழையடி வாழையெனப் பரம்பரைப் பரம்பரையாக, கால்வழி கால்வழியாக மேற்கொண்டொழுகுபவர்களும், தமிழறிவிலும் தமிழ்ப் பற்றிலும், சிவசிந்தனையிலும், போர்புரியும் ஆற்றலிலும், நீதிநெறியிலும் புகழ் பூத்து விளங்குபவர்களுமாகிய செங்குந்தர் குலப்பெருமக்களிடையில் வானத்து நிலவாய் வந்துதித்தவர் ஒட்டக்கூத்தராவர்.
விலைதந்தார் தமிழினுக்குச் செங்குந்தர்
என் கவிக்கு விலையா கத்தான்
தலைதந்தார் எனக் கொட்டக் கூத்தனெனும்
பெயரினையும் தந்தார் தாமே,
என்னும் பாட்டு, செங்குந்தர் பெருமக்களின் தழையாத தமிழார்வத்தைக் குறிப்பிடும். 'செங்குந்தர்' என்ற சொல் குந்தத்திற்கு உரியவர் எனப் பொருள்படும். குந்தம் என்றால் ஈட்டி, 'ஈட்டி எழுபது' என்னும் ஒட்டக்கூத்தர் நூல் செங்குந்தர் என அம் மரபினர் அழைக்கப் பெறுவதற்குரிய காரணத்தைப் புலப்படுத்துகின்றது: 'கைக் கோளர்' என்ற பெயரும் இம்மரபினர்க்கு உண்டு என்பது 'எய்தவர்க்குச் சிறைச் சோறு மீகுவர் கைக்கோளராகிய செங்குந்தரே' என்னும் அடியால் விளக்கமுறுகின்றது. ஒட்டக்கூத்தர் வினைதீர்க்கும் விநாயகப் பெருமான் மாட்டும், தம் மரபினராகிய செங்குந்தரிடத்தும் கொண்ட ஆராத பக்தித் திறமும் அணையாத அன்பும் அவர்தம் ஈட்டி எழுபது காப்புச் செய்யுளால் விளக்கமுறும்:
நாட்டிலுயர் செங்குந்த நாயகர்மீ திற் சிறந்த
ஈட்டி யெழுப தினைப்பாடக் - கோட்டில்
பருமா வரையதனிற் பாரதிநூல் தீட்டும்
கருமா முகன் கழலே காப்பு.
மேலும் ஒட்டக் கூத்தர் செங்குந்தர்கள் 'நிதம் சந்தி சந்திசிவ சிந்தனை மறவாத ராவரிச் செங்குந்தரே' என்றும், ‘குருபூசை சிவ பூசை மறவாத தயவாளர்' என்றும், தேவே விலகினும் நாவிலங்காதவர்' என்றும், 'தேவி யுமை பாதச் சிலம்பில் வரு வீதியர்கள் சிறு தேருருட்டி யருளே' என்றும், 'சண்மு கன்றன் சேனாபதிகளும் சேனையும் ஆனவர் செங்குந்தரே' என்றும், 'சிங்கள மாதிய பல்தேயம் வென்றவர்' என்றும், 'தெரிஞ்ச கைக் கோளப் படையினர்' என்றும் கூறப்படுவதனால் செங்குந்தர் குலத்தின் சீர்மை விளங்கும்.
முதற்கண் சென்னைப் பல்கலைக் கழகத் 'தெய்வத் தமிழ்' பற்றிய கருத்தரங்கிலும், பின்னர்ப் பல அமயங்களில் பல இலக்கிய மேடைகளில் கவிச் சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தரைப் பற்றிச் சொற்பெருக்காற்றும் வாய்ப்புக் கிடைத்தது. அதன் விளைவே இந்நூல். இந் நூல் வடிவும் வனப்பும் பெற இசைவளித்த சென்னைப் பல்கலைக் கழகத்தினர்க்கு நன்றியுடையேன். தமிழ்கூறு நல்லுலகத்தின் முன் இந்நூலைப் படைக்கின்றேன்.
சி.பா.
----------
ஒட்டக்கூத்தர்
தமிழ் இலக்கிய வரலாற்றில் பொற்காலம் என்று போற்றப்படும் காலங்கள் இரண்டாகும். ஒன்று சங்க காலம்; பிறிதொன்று பிற்காலச் சோழர் காலமாகும். சங்க காலத்தில் வாழ்ந்த மக்கள் நல்ல இலக்கியச் செல்வத்தினைப் பெற்று வாழ்ந்தனர் என்பது பத்துப்பாட்டு எட்டுத்தொகை முதலிய பழந்தமிழ் இலக்கியங்களால் தெரியவருகின்றது.
நேரிழை மகளிர் உணங்குணாக் கவரும்
கோழி யெறிந்த கொடுங்காற் கனங்குழை
பொற்காற் புதல்வர் புரவியின் றுருட்டும்
முக்காற் சிறுதேர் முன்வழி விலக்கும். [1]
"குழைகொண்டு கோழி யெறியும் வாழ்க்கையரென்றவழி,
கோழி யெறிவாரென்றுணராற்பாலதன்று;
ஒன்றானும் முட்டில் செல்வத்தாரென்றவாறு." [2]
சுள்ளியம் பேரியாற்று வெண்நுரை கலங்க
யவனர் தந்த வினைமாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும். [3]
முதலான சங்க இலக்கியத் தொடர்களும், உரையாசிரியர்தம் விளக்கமும் மக்களின் வளமான செல்வ வாழ்வினைப் புலப்படுத்துவனவாகும்.
------
[1]. பட்டினப்பாலை, 22 - 25.
[2]. நன்னூல் நூற்பா, 407, மயிலைநாதருரை.
[3]. அகநானூறு, 149, 7 -10.
அடுத்து,
"நிலநாவிற் றிரிதரூஉம் நீண்மாடக் கூடலார்
புலனாவிற் பிறந்தசொற் புதிதுண்ணும் பொழுதன்றோ
பலனாடு நெஞ்சினோம் பரிந்து நாம் விடுத்தக்கால்
சுடரிழாய் நமக்கவர் வருதுமென் றுரைத்ததை " [4]
என்ற கலித்தொகைத் தொடர்கள் கொண்டு பண்டைத் தமிழ்ப் பெருமக்கள் தமிழ்க் கவிதைக் காதல் கொண்டு நின்ற வேட்கைத் திறத்தினை வெளிப்படையாக அறியலாம்.
---------
[4]. கலித்தொகை, பாலைக்கலி, 34, 17-20.
இச் சங்க காலத்தினை யடுத்துவந்த களப்பிரர் காலத்தில் தமிழிலக்கிய வளர்ச்சி தடைப்பட்டது. பல்லவர் காலத்தில் பக்தி இலக்கியங்களும் கலைகளும் பரவிச் செழித்தன. ஒன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் தஞ்சையைச் சுற்றியிருந்த பகுதிகளை ஆண்ட முத்தரையர்களிடமிருந்து விசயாலய சோழன் ஆட்சியைக் கைப்பற்றிப் பிற்காலச் சோழர் பேரரசுக்குத் தோற்றுவாய் செய்தான். பின்னர் வந்த பராந்தக சோழன், ஆதித்த கரிகாலன் முதலான அரசர்களால் மேலும் விரிவாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட பேரரசு, முதலாம் இராசராசன் காலத்தில் உயர்நிலை பெற்றது. அவன் மகன் முதலாம் இராசேந்திர சோழன் காலத்தில் கங்கை வரையிலும் சோழர் வெற்றிக் கொடி பறந்தது. முதலாம் இராசராசன் தஞ்சைப் பெருவுடையார் கோயிலைக் கட்ட, தனயனோ தன் வடநாட்டு வெற்றியினைப் பாராட்டும் வகையில் கங்கை கொண்ட சோழபுரத்தை நிர்மாணித்தான். இவர்களுக்கும் பின்னால் வந்த விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன் முதலிய மன்னர்கள் காலத்தில் ஆட்சிச் சிறப்பும், இலக்கிய மேம்பாடும் சீரிய இடம் பெற்று விளங்கின.
சோழ மன்னர்கள் வீரமும் வெற்றித் திறனும் வாய்ந்திருந்ததோடு, சமயம், இலக்கியம், கலைகள் முதலியனவற்றின் வளர்ச்சியில் பெரிதும் அக்கறை காட்டினார்கள். இவர்கள் ஆட்சியின் எல்லை வடக்கிலும், தெற்கிலும், தூரக் கிழக்கு நாடுகளிலும் பரவின. சாவகத் தீவோடு இவர்கள் கொண்ட நட்புறவும், வாணிபத் தொடர்பும், கலைத்தொடர்பும் இன்றும் ஓரளவு விளங்கக் காணலாம். சீன நாட்டிற்கொரு தூதுக்குழு சோழ மன்னர்கள் காலத்தில் சென்றது. சோழ மன்னர்கள் தமிழ்ப் புலவர்களைப் பெரிதும் போற்றினர். 'புலவர் பாடும் புகழுடையோ' ராக விளங்கினர். மன்னர் சிலர் இலக்கியப் படைப்பாளர்களாகவும் சிறந்திருந்தனர். கலைகள் களிநடம் புரிந்த காலம் இக்காலம் எனலாம். சோழ மன்னர்களின் கட்டடக் கலைச் சிறப்பினைத் தஞ்சையில் கி. பி. 1012 ஆம் ஆண்டில் முதலாம் இராசராச சோழனால் கட்டப்பெற்ற பிரகதீசுவரர் கோயிலில் காணலாம். வானளாவிய கோபுரங்களுடன் பெரிய திருக்கோயில்கள் சோழர் திருப்பணியின் விளைவே எனலாம். தமிழ் இசை இவர்கள் காலத்தில் உயர்நிலை பெற்றிருந்தது. சோழ மன்னரான கண்டராதித்தரே திருவிசைப்பாவில் சில பாடல்களைப் பாடியிருக்கக் காணலாம். தேவாரப் பாடல்களை நாடோறும் திருக்கோயில்களில் முறையாக ஒதி வருவதற்குச் சோழ மன்னர்கள் செய்திருந்த விரிவான ஏற்பாட்டினைக் கோயில் கல்வெட்டுகளில் காணலாம். தேவார ஓதுவார்கள் தம் இசைத் தொண்டிற்குப் பெற்ற மானியங்களைத் தஞ்சைப் பெரிய கோயில் கல்வெட்டொன்று குறிப்பிடுகின்றது. முதலாம் இராசேந்திர சோழன் நலிந்து கொண்டு வந்த நாடகக் கலைக்குப் புத்துயிர் கொடுத்தான். 'இராசராச நாடகம்' என்னும் நாடகம் அவன் காலத்தில் முதன்முதலாகத் தஞ்சைப் பெரிய கோயிலில் அரங்கேற்றுவிக்கப் பெற்றது. திருநாறையூர் நம்பியாண்டார் நம்பி சைவப் பெருமக்கள் பாடிய பாடல்களைத் தொகுத்துத் திருமுறைகளாக வகுத்தார். வைணவப் பிரபந்த உரையாசிரியர்கள் தோன்றித் தம் புலமை நலந்தோன்ற வியாக்கியான உரைகள் வகுத்தனர். பெளத்த, சைன சமயப் பெரியோர்கள் தமிழ் இலக்கிய இலக்கணத் தொண்டில் தலைப்பட்டனர். இவ்வாறாகப் பிற்காலச் சோழர்காலம் ஆட்சிச் சிறப்பாலும், இலக்கியப் படைப்பாலும், கலை மேம்பாட்டினாலும் சிறந்து விளங்கியது. கலிங்கத்துப் பரணி இவ் இலக்கிய காலத்தினைப் பின் வருமாறு சுட்டுகின்றது.
"கலையினொடுங் கவிவாணர் கவியினொடும்
இசையினொடுங் காதல் மாதர்
முலையினொடும் மனுநீதி முறையினொடும்
மறையினொடும் பொழுதுபோக்கி." [5]
இக் காலச் சிறப்பினை வரலாற்றுப் பேரறிஞர் திரு க. அ. நீலகண்ட சாஸ்திரி அவர்கள் 'சோழர் காலம் தமிழர் பண்பாட்டின் பொற்காலம்' என்று போற்றுகின்றார் [6]. தமிழ் இலக்கியத் திறனாய்வாளராம் திரு ஏ. வி. சுப்பிரமணிய ஐயர் அவர்கள் இக்காலப் பகுதியினைப் பின் வருமாறு குறிப்பிடுகின்றார் :
"சமய எழுச்சியின் பயனாய்த் தமிழரிடம் சமுதாய உணர்ச்சி ஓங்கியது. ஆட்சி முறைகளும் திட்டங்களும் அபிவிருத்தி அடைந்தன. சமுதாய வாழ்வு சுதந்திரத்துடன் இயங்கியது. சத்திரங்கள் சாவடிகள் எழுந்தன. கோயில்கள் தோன்றின. நமது கோயில்களைக் கல்லிலே செதுக்கிய காவியம் என்பர். பழங்கால நாகரிகத்தைச் சங்க நூல்களிலே காண்பது போல், இடைக்காலக் கலை வளத்தைக் கோயில்களிலே காணலாம். இவைகளைப் போன்ற மகத்தான கல் கட்டடங்கள் உலகிலே வேறு எந்த நாட்டிலும் இல்லை. சிற்ப நூலின் அற்புதமாய் அவை திகழ்கின்றன. இவைகளை எளிதிலே ஆக்கக்கூடிய ஆற்றலைப் பெற்றிருந்த மூதாதையரது சமயப் பற்றைப் போற்றாமல் இருக்க முடியாது." [7]
--------
[5]. கலிங்கத்துப்பரணி, தாழிசை, 278,
[6]. The age of imperial Cholas (850-1200) was the golden age of Tamil culture, and it was naturally marked by the widespread practice and patronage of literature - A History of South India. p. 357.
[7]. கல்வியிற் பெரியர் கம்பர், பக்கங்கள் 116 - 117.
சோழர் காலத்தில் தமிழகப் பண்பாட்டு வளர்ச்சியினை ஆய்வாளர் ஒருவர் தாம் வரைந்த ஆய்வேட்டில் பின் வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
"மனித சமுதாயம் அனைத்தையும் தழுவிய முறையில் சோழர்கள் பண்பாடு பரவி நின்றது. அறிவு, கலை, சமயம், நீதி, சமூகம், பொருளாதாரம், அரசியல் முதலான அனைத்துத் துறைகளிலும் பண்பாடு விளங்கிற்று. மனிதனின் மனமே பண்பாட்டின் உறைவிடம் என்பதனைக் கண்டனர். எனவே எதிர்காலத் தலைமுறைகளுக்கு வியக்கத்தகு பண்பாட்டு நிலையினைத் தந்து விட்டுச் சென்றனர்." [8]
------
[8]. Thiru S. R. Krishnamurti - A study of the cultural developments in the Chola period. "Culture had a wide and comprehensive significance for the Cholas, covering as it should, the entire field of human activity intellectual, aesthetic, spiritual, moral, social, economic and political. They would appear to have realised and appreciated the dictum that the seat of culture is the mind of man. It was this understanding that enabled them to leave such a wonderful heritage to posterity." p. 15.
கம்ப நாட்டாழ்வாரின் கம்பராமாயணம் எனும் பெருங்காப்பியமும், தெய்வச் சேக்கிழாரின் பெரிய புராணமும், கச்சியப்பரின் கந்தபுராணமும் இக் காலத்தே தோன்றின.
சிற்றிலக்கியங்கள் எனப்படும் தொண்ணுாற்றாறு வகைச் சிறு பிரபந்தங்கள் இக் காலப் பகுதியில் முகிழ்த்தன எனலாம்.
சோழர்கள் ஆட்சி மேம்பாடும், வெளிநாட்டு வாணிக நலனும், ஊராட்சிச் சிறப்பும், வளமனை வாழ்வும் புதிய இலக்கியங்களுக்குக் கால்கோள் செய்தன.
இக்காலப் பகுதியில் தோன்றியவரே ஒட்டக்கூத்தர்.
ஒட்டக்கூத்தர் பற்றிய என்னுடைய இக்கட்டுரையினை மூன்று பகுதிகளாகப் பிரித்துக் காண நினைக்கின்றேன்.
முதலாவது பகுதி 'ஊரும் பேரும்' என்பதாகும். இதில் ஒட்டக்கூத்தரின் ஊரும், அவர்தம் பேரும், அவர் பெற்ற பட்டங்களும் சிறப்பும் ஆராயப்படுகின்றன.
இரண்டாவது பகுதி, 'நூற்களும் அவை நுவலும் பொருள்களும்' என்பதாகும். இப்பகுதியில் ஒட்டக் கூத்தர் தம் நூல்களும், அந்நூற்கண் பொதிந்துள்ள செய்திகளும் சிறப்புகளும் ஆராயப்பெறும்.
மூன்றாம் பகுதி 'ஆய்வும் முடிவும்' என்பதாகும். இப்பகுதியில் ஒட்டக்கூத்தர் வாழ்வு பற்றியும் புலமை பற்றியும் எழுந்துள்ள பல்வேறு கருத்துகள் ஆராயப்பெற்று யான் முடிவாக எண்ணுகின்ற ஆராய்ச்சி முடிவுகளை வைத்துள்ளேன்.
'செப்பலுற்ற பொருளின் சிறப்பினால் அப்பொருட்கு உரை யாவரும் கொள்வரால்' என்றபடி, என் ஆர்வத்தால் எழுந்த இச்சிற்றுரையை ஏற்க வேண்டுவல்.
------------
ஊரும் பேரும்
பிறந்த ஊர்
ஒட்டக்கூத்தர் ஊரைப் பற்றிப் பல மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.
"சென்று செவியளக்குஞ் செம்மையவாய்ச் சிந்தையுள்ளே
நின்றளவில் இன்பம் நிறைப்பவற்றுள் - ஒன்று
மலரிவருங் கூந்தலார் மாதர்நோக்கு, ஒன்று
மலரிவருங் கூத்தன்தன் வாக்கு."
என்ற தண்டியலங்கார மேற்கோட் செய்யுளின் அடிகளில் 'மலரிவரும்' என வரும் சொற்கள் கொண்டு கூத்தரின் பிறப்பிடம் மலரி என்று கூறுவர்.
கீழ்க்காணும் சோழமண்டலச் சதகச் செய்யுளொன்று கூத்தரின் பிறப்பிடம் சீகாழியே எனச் செப்புகின்றது.
"ஒத்த துணர்ந்த நாடனைத்தும் ஒருங்கே கூடி உயர்கூத்தன்
கத்தி யலையத் துரத்துதலும் கசிந்துகாழிக் கவுணியர்கோன்
பத்தி யுடனே தக்கன்மகப் பரணி பாடப் பணிந்து முத்தின்
வைத்த சிவிகை மகிழ்ந்தேற வைத்தார் சோழமண்டலமே."
மேலும் இதற்கு ஆதாரமாகக் கூத்தர் தம் நூலில் 'வைரவர் வணக்கம்' கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டி, வைரவக் கடவுள் சீகாழித் தலத்தில் மட்டும் எழுந்தருளிவித்துள்ள சிறப்பினைக் குறிப்பிடுவர். மேலும் சீகாழியில் கூத்தரைப் போற்றித் திருவிழாக்கள் இன்றும் எடுக்கப்படுவதனைக் காட்டுவர். கூத்தர் இயற்றியுள்ள நூல்களின் ஏட்டுச்சுவடிகள் சீகாழி மடத்திலிருந்தே முதன் முதலாகக் கண்டெடுக்கப்பட்ட செய்தியினைத் தம் கருத்திற்கு வலுவான சான்றாகச் சுட்டுவர்.
அடுத்து, கூத்தர் சோழநாட்டிலுள்ள திருவாய்மூருக்கு அடுத்தமைந்துள்ள மணக்குடியில் பிறந்தவர் என்பர்.
"தேனுந்து மலர்ச்சோலைத் திருமணவூர்ச் சிவசங்கத்
தோனந்தச் சிற்சபைஎம் கூத்தனருட் கூத்தனெனும்
ஆனந்தச் செல்வநின தாசனத்தில் அலகுபெறின்
நானந்தச் செனனமுனை நயந்திரத்தல் என்கடனே."
மேலும் சிலர் கூத்தர் வாழ்ந்த ஊர் இன்று பூந்தோட்டம் ரயிலடிக்கு அருகில் உள்ள கூத்தனுாரே என்பர். இவ்வூர் சோழ மன்னரால் இவருக்கு முற்றூட்டாக வழங்கப்பட்டது என்பதற்கு ஆதாரங்கள் காணலாம். மேலும் கூத்தரே முன்நின்று இவ்வூரில் சரசுவதி தேவிக்குக் கட்டிய கோயில் ஒன்றும் நன்னிலையில் உளது.
பெயர்
இவர் பிறந்த குடியின் காரணமாக இவருக்குக் கூத்த முதலியார் எனும் பெயர் வந்தது என்பர். இருவேறு பாக்கள் தம்முள் ஒட்டிவரப் பாடிய சிறப்பினால் ஒட்டக்கூத்தர் என்று பெயர் பெற்றார் என்று சிலரும், பந்தயம் (ஓட்டம்-பந்தயம்) வைத்துப் பாடுவதில் பெயர் பெற்றவராதலால் ஒட்டக்கூத்தர் எனப் பெயர் பெற்றார் என்று வேறு சிலரும் கூறுவர். விக்கிரம சோழன் தன் மீது இயற்றப்பட்ட உலாவில் வரும்
கையும் மலரடியும் கண்ணும் கனிவாயும்
செய்ய கரிய திருமாலே [9]
என்ற கண்ணியை ஒட்டிப் பாடும்படி புலவரைக் கேட்டுக் கொள்ள,
-- வையம்
அளந்தாய் அகளங்கா ஆலிலைமேற்பள்ளி
வளர்ந்தாய் தளர்ந்தாளென் மான்
என்று அவ்வாறே விரைந்து ஒட்டிப் பாடி முடித்துக் கொடுத்ததனால் ஒட்டக்கூத்தர் என வழங்கப் பெற்றார் என்று வேறு சிலரும் கூறுவர். ஒட்டக்கூத்தர் எனப் பெயர் அமைந்ததற்கு வேறு ஒரு காரணமும் கூறுவர். அதாவது இவர் பிறந்த மரபினைச் சேர்ந்த செங்குந்தர்கள் பலர் திரண்டு வந்து இவரிடம் தம் மரபின் பெருமை விளங்க ஒரு பிரபந்தம் பாட வேண்டுமென்று கேட்க, முதலில் மறுத்த கூத்தர், பின்னர் ஒரு நிபந்தனையுடன் பாட ஒப்புக்கொண்டாராம். தாம் பாடும் ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு தலை விழுக்காடு, எழுபது செங்குந்தர் குலத்தலைச்சன் பிள்ளைகளின் தலைகளைக் காணிக்கையாகக் கொடுக்கும்படி கட்டளையிட, இச் செங்குந்த மரபினரும் கூத்தர் இட்ட கட்டளையை நிறை வேற்றினராம்.
-------
[9]. விக்கிரம சோழனுலா, கண்ணி, 158.
கூத்தர் அத்தலைகளை ஒன்றன் மேலொன்று அடுக்கி அத்தலையாசனத்தின் மீதிருந்து,
கலைவாணி நீயுலகி லிருப்பதுவுங் கல்வியுணர் கவிவல்லோரை
நிலையாகப் புரப்பதுவு மவர்நாவில் வாழ்வதுவு நிசமே யன்றோ!
சிலைவாண னாவிருந்தா யிரம்புயங்கள் துணிந்து முயல் சீவனுற்றாள்
தலையாவி கொடுத்திடுஞ் செங் குந்தருயிர் பெற்றிடநீ தயை செய்வாயே
என்று கலைமகளை வேண்டிப் பாட, அத் தலைகள் அனைத்தும் தத்தம் உடல்களில் வந்து பொருந்திக் கொண்டனவாம். இவ்வாறு பொருந்தி ஒட்டிக்கொண்டு இறந்தவர் உயிர் பெற்ற காரணத்தினால் அவ்வாறான நிலை - 'அற்ற தலையும் உடலும் ஒட்டப்' பாடிய காரணத்தினால் ஒட்டக்கூத்தர் என்று பெயர் வந்ததென்று விநோத ரச மஞ்சரி [10] கூறும். விநோத ரச மஞ்சரி கூறும் செய்திகள் வரலாற்றாய்வு உணர்வுக்குப் பொருந்துவனவல்ல எனக் கருதி ஒதுக்கி விடலாம்.
--------------
[10]. விநோதரச மஞ்சரி, பக்கங்கள் 238 - 239.
பட்டப் பெயர்கள்
இவருக்குக் கவிராட்சசன், கவிச்சக்கரவர்த்தி, சக்கரவர்த்தி, காளக்கவி, கெளடப் புலவர், சருவஞ்ஞ கவி என்னும் பெயர்கள் வழங்கின.
கவிராட்சசன்
சோழ மண்டல சதக மேற்கோள்பாடல், இவரைக் கவிராட்சசன் என்று குறிப்பிடுகின்றது.
புதுவைச் சடையன் பொருந்து சங்கரனுக்கு
உதவித் தொழில்புரி ஒட்டக் கூத்தனைக்
கவிக்களி றுகைக்கும் கவிராட்சதன் எனப்
புவிக்குயர் கவுடப் புலவனும் ஆக்கி [11]
எனக் கூறுதலால் உணரலாம். கவிராட்சதன் என்பதால் இவருடைய கவிப் புலமையின் ஆழம் பெறப்படும்.
கவிச்சக்கரவர்த்தி
இப் பட்டம் பெற்ற கவிஞர் மூவர். 1. கம்பர், 2. ஒட்டக்கூத்தர், 3. செயங்கொண்டார் என்போர். தக்கயாகப் பரணியில் வாழ்த்துப் பகுதியில்,
ஆக்கம் பெருக்கு மடந்தை வாழியே
ஆற்றங் கரைச்சொற் கிழத்தி வாழியே
கோக்குங் தமிழ்க்கொத் தனைத்தும் வாழியே
கூத்தன் கவிச்சக்கர வர்த்தி வாழியே [12]
வாழி கவிச்சக்கர வர்த்தி கூத்தனே? [13]
எனவரும் அடிகளால் இப்பெயருண்மை விளங்கும். கவியரசர்களில் பேரரசராக இவர் புகழ்பூத்துச் சிறந்தமையால் இவ்வாறு பாராட்டப் பெற்றார்.
-------------
[11]. சோழமண்டல சதகம், 93 மேற்கோள்.
[12]. தக்கயாகப் பரணி. தாழிசை 813.
[13]. தக்கயாகப் பரணி. தாழிசை 914.
சக்கரவர்த்தி
தக்கயாகப் பரணி உரையாசிரியர் ஓரிடத்தில், "உலகக் களிப்பென்னும் பெயர் சக்கரவர்த்திகள் தாம் படைத்த திரி சொல்லென உணர்க" என்று குறிக்கின்றார். [14] இவர் கூற்றால் கூத்தர் 'சக்கரவர்த்தி' எனவும் அழைக்கப் பெற்றார் என அறிகிறோம்.
--------------
[14]. தக்கயாகப் பரணி, தாழிசை 457 உரை.
காளக்கவி
கொத்தற்குஞ் சடிலக்குந் தளருக்கு மல்லாற்
கூழைத்தண் டமிழ்க்கேன் கொடியுங்கா ளமுமே
என்ற அடிகள் கொண்டு 'காளவிருது' பற்றி அறியலாம்.
சோழ மன்னனிடம் 'காளம்' என்ற விருது பெற்றமையால் 'காளக்கவி' என்றும் சிறப்பிக்கப் பெற்றார். "இப் பொருள் காளக்கவிக்குப் பொருந்தாது" எனத் தக்கயாகப் பரணி உரையாசிரியர் இப் பெயரை ஆட்சி செய்வர்.
கெளடப் புலவர்
வடமொழிச் செய்யுள் நெறி வைதருப்ப நெறி கெளட நெறி என இருவகைப்படும். இரு நெறிகளைத் தமிழ்த் தண்டியாசிரியரும் விளக்குவர். கெளட நெறி என்பது உலக இயல்பைக் கடந்த வருணனைகளைக் கொண்டது. சொற் பெருகத் தொடுப்பது. இவ்வமைப்பு, இவர் பாடிய தக்கயாகப் பரணியில் காணப்படுகின்றது. எனவே இப் பரணி பாடிய பின்னரே இவர் இப் பெயர் பெற்றிருக்கலாம்.
புதுவைச் சடையன் பொருந்து சங்கரனுக்கு
உதவித் தொழில்புரி யொட்டக் கூத்தனைக்
கவிக்களி றுகைக்கும் கவிரா க்ஷதனெனப்
புவிக்குயர் கவுடப் புலவனு மாக்கி
என்ற சோழ மண்டல சதக மேற்கோள் பாடல், [15] இவரை இப்பெயரால் பாராட்டுகின்றது.
சருவஞ்ஞ கவி
தக்கியாகப் பரணியில் 'டாகினிகள்' என்னும் சொல் வருகின்றது. [16] தமிழில் 'டா' மொழிக்கு முதலில் வராது. அவ்வாறிருக்க இவர் அமைத்திருத்தல் இவர் சருவஞ்ஞ கவியாய் இருத்தல் காரணமே என்று உரையாளர் விளக்குவர். இவ்விளக்கத்தால், இவர் வடமொழிக் கடலைக் கடந்தவர் என்பது பெறப்படும். பல மொழிகளும் நன்கறிந்து எல்லாப் பொருள்களையும் எளிதில் பாடும் ஆற்றல் பெற்றிருந்தமையால் இப்பெயரால் சிறப்பிக்கப் பெற்றார். தக்கயாகப் பரணியில் இவருக்குள்ள 'யாமள நூற்' பயிற்சியை அறிகிறோம். இப்பயிற்சி மிக்க தமிழறிஞர் இவர் ஒருவரே.
-------------
[15]. சோழமண்டல சதகம், 93.
[16]. தக்கயாகப் பரணி, தாழிசை, 433.
ஊழுக்குக் கூத்தன்
'காசுக்குக் கம்பன்' என்ற பழம்பாடல் "தேசு பெறும் ஊழுக்குக் கூத்தன்" என்று சிறப்பிக்கின்றது. "கூத்தர் சொல் வாழ்த்தாயினும் சாபமாயினும் ஊழ்வலி போலத் தப்பாது பயன் தந்தமையால் இச்சொல் எழுந்தது போலும்" என்பர் இலக்கிய வரலாற்றுப் பேராசிரியர் மு. அருணாசலம் அவர்கள்.
பிறந்த மரபு
செங்குந்த மரபினர் வீரவாகுதேவர் முதலிய முருகக் கடவுளின் வழித்துணைவர்கள் ஒன்பதின்மர் வழித் தோன்றினவர் என்று கூறுவர். குந்தம் என்னும் வீரப் படைக்கு உரியார் செங்குந்தராவர்.
செங்குந்தப் படையர் சேனைத் தலைவர்
தந்து வாயர் காருகர் கைக்கோளர்
என்ற சேந்தன் திவாகர நூற்பா கொண்டு செங்குந்தப் படையர், சேனைத் தலைவர், தந்துவாயர், காருகர், கைக்கோளர் என்கின்ற ஐந்து பெயர்களும் கைக்கோளரையே - செங்குந்தரையே குறிக்கின்றன என அறியலாம். இச் செங்குந்தர் மரபினரை உப சுப்பிரமணிய வம்சத்தினர் என்று கூறும் வழக்கம் உளது. இக் குடியினர் செல்வவளமும் செல்வாக்கு நலமும் சான்றவர் என்றும், [17] தென்னிந்தியாவில் புகழ் வாய்ந்த நெசவுக் குடியினர் என்றும், [18] அறிஞர் கூறுவர்.
----------
[17]. Thiru T.V. Seshagiri Aiyar - Opinions செங்குந்தர் பிரபந்தத் திரட்டு - ப 56. 'Sengunthars, a community of great wealth and influence in the Tamil country'.
[18]. Thiru C. T. Parthasarathy Mudaliar - Opinions - Dc - p. 58 - Sengunthar or Kaikolars, the familiar weaving class of South India.
இம் மரபினர் பற்றி எழுந்துள்ள பழைய குறிப்புகள் சில வருமாறு:
வீரவாகு வழியினர்:
'தேவியுமை பாதச் சிலம்பில்வரு வீரியர்கள் சிறுதே ருருட்டி யருளே'
'சிவ கயிலாய பரம்பரையா ரென்னும் செங்குந்தரே'
'குமரச் செட்டிக் கிளையநற் செட்டிகளாகும் இச்செங்குந்தர்'
வீரர்கள்
'சண்முகன்றன் சேனா பதிகளும் சேனையும் ஆனவர் செங்குந்தரே'
'சிங்கள மாகிய பல்தேயம் வென்றவர் செங்குந்தரே'
'சிறந்த சீலமுடையவர்; சிவ சிந்தனையுடையவர்'
'எய்தவர்க்குச் சிறைச்சோறு மீகுவர் கைக்கோள ராகிய செங்குந்தரே'
'தேவார முற்றும் படிப்பவரும் அங்கையிற் செங்குந்தரே'
'திருவாசகஞ் சொல் ஒருவா சகத்தரும் செங்குந்தரே'
'நிதம் அந்திசந்தி சிவசிந்தனை மறவாதவ ராவரிச் செங்குந்தரே'
தமிழ் மருத்துவன் திரு சுப்பிரமணிய தேசிகனார் அவர்கள் 'செங்குந்தர் பிரபந்தத் திரட்டு' எனும் நூலில் 'கல்வெட்டுரை' என்ற பகுதியில், இம் மரபினர் பற்றிப் பின் வருமாறு சில செய்திகளை மொழிந்துள்ளார: [20]
-------------
[19]. செங்குந்தர் பிரபந்தத் திரட்டு, பேராசிரியர் கா. நமசிவாய முதலியார் முன்னுரை, பக்கங்கள் 1 - 10
[20]. செங்குந்தர் பிரபந்தத் திரட்டு, கல்வெட்டுரை, பக்கங்கள்: 41-42.
"பழைய ஒழுக்கத்தை இன்றும் கைவிடாதொழுகி வரும் தமிழ்நாட்டுச் சாதியர் என்னும் பகுப்பினுள் இவர்களும் ஒரு பான்மையரென்றும் குறிக்கப் படும். இவர்களின் பெருமைகளையும் பண்டைய நாட்களின் பல சிறப்புகளையும் குறித்துப் பல்லிடங்களில் எழுதியிருந்தாலும், பல்குன்றக் கோட்டத்துச் சிங்கபுர நாட்டு அண்ணமங்கலயப் பற்று தேவனூர்க் கோயில் கல்வெட்டுகளிலும், வெண்ணிக் கோட்டத்துக் கோலிய நல்லூரிலும், பையூர்க் கோட்டத்துக் கீழ்ப்பட்டைய நாட்டின் திருவான்பூரென்னும் தமிழ் முருக வேளாரது கோயிலுள்ளும் எழுதப்பட்டுள்ள அரிய கல்வெட்டுகளுள் இவர்களது பெருமைப்பாடுகளைக் குறித்து மிகச் சிறப்பிக்கப்படுகின்றன.
இச் சாதியார் எத்தனையோ கோயில்களை எடுப்பித்தனர். கச்சியுள் ஆண்ட பல தொண்டைமான்கட்குத் துணையாகப் போந்து பல போர்களில் வெற்றி கொண்டனர். இவர்களின் வீரச் செயல்களின் வீரர்கள் பலரிருந்து மேம்பட்டனர்களென்பதும் அவர்களது பெயர்களைக் கொண்டே உணரலாம். அவர்களுள் ஊன் புசிக்காது தூய்மையாக இருந்தவர் பல்லோர்கள். அவர்க ள் இடையில் மேற்கொண்ட தொழில்களுள் நூல் நூற்றல், ஆடையாக்கல் முதலிய செய்திகளினாலேயே அவர்களது பாவச்செயல் இன்மையாகிய விருத்தியைப் புலப்படுத்தும். அவர்கள் பழந்தமிழ்ப் பரம்பரையைச் சேர்ந்தவர்களென்றெண்ணுதற்குச் சான்றாக இன்றும் தங்கள் தமிழாசிரியர்களிடத்திலேயே பல சடங்குகளையும் நடத்திக் கொள்ளுகின்றனர். பிற்காலத்தும்கூட இவர்களது ஆட்சியில் அரும்பெருங் கோயில்கள் அகப்பட்டுக் கிடக்கின்றன. அவற்றுள் கச்சி வேளுக்கைத் தண்காக் கோயிலும், கச்சிக் கச்சாலையுடைய நாயனார் கோயிலும், கச்சி மேற்றளியும், கச்சிப் பஃறளியும் இன்னும் பலவாம்."
காலம்
தமிழ்ப் புலவர்கள் பலரின் கால ஆய்வு, அடிமுடி தேடிய ஆய்வுபோல மலைப்பாய்வாக உள்ளது. இவ்வாய்வில் ஐயம் தெளிவுறக் காலம் தெரிந்த ஒரே புலவர் ஒட்டக்கூத்தர். இவர் விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்க சோழன், இரண்டாம் இராசராச சோழன், ஆகிய மூவேந்தர் காலத்தும் வாழ்ந்தவர். இம்மன்னர்கள் காலம் கி.பி. 1118-1163. எனவே கிபி 12-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த முதுதமிழ்ப் புலவர் ஒட்டக்கூத்தர் ஆவர்.
கூத்தர் காலப் புலவர்கள்
சோழர் காலம் புலவர் பலர் வாழ்ந்த பொற்காலம். ஒட்டக்கூத்தர் காலத்தில் நம்பி காளியார், நெற்குன்ற வாண முதலியார், தமிழ்த்தண்டி ஆசிரியர் ஆகிய பலர் வாழ்ந்தனர்.
'ஒட்டக்கூத்தர் கடைசியாக இராசராசன் விருப்பப்படி உறந்தையிற்றானே தங்கியிருந்து தமது 97 ஆம் வயதில் பரிபூரணம் அடைந்தார். அவரடைந்த திருநக்ஷத்திரம் ஆவணி மாத உத்திராடம் என்ப.' [21]
'உத்திராட நக்ஷத்திரம்' ஒட்டக்கூத்தர் பரிபூரண தினமாகக் கொண்டு ஆவணி மாதத்தில் மதுரை, காஞ்சி, உறந்தை, கமலை முதலிய பல இடங்களில் கொண்டாடப் படுகிறது. [22]
------------
[21]. காஞ்சி நாகலிங்க முனிவர், செங்குந்தர் பிரபந்தத் திரட்டு பதிப்பாளருரை, பக். 74.
[22]. காஞ்சி நாகலிங்க முனிவர், செங்குந்தர் பிரபந்தத் திரட்டு பதிப்பாளருரை, பக். 75.
(ஆ) நூல்களும் அவை நுவலும் பொருள்களும்
பொதுச் செய்திகள்
இப்பகுதியில் கூத்தரின் இலக்கியப் பணிகள் ஆராயப் படுகின்றன.
"வெண்பாவிற் புகழேந்தி பரணிக்கோர்
செயங் கொண்டான் விருத்தம் என்னும்
ஒண்பாவிற்கு உயர் கம்பன் கோவையுலா
அந்தாதிக் கொட்டக் கூத்தன்
கண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்கள்
வசைபாடக் காள மேகம்
பண்பாக உயர்சந்தம் படிக்காச
லாதொருவர் பகரொ ணாதே" [23]
என்னும் தனிப்பாடல், குறிப்பிட்ட இலக்கியம் பாடுதலில் சிறப்புடையார் இவர்இவர் எனத் தொகுத்துணர்த்துகின்றது. இப் பாடலைநோக்கின் இவர் கோவை, உலா, அந்தாதி என்னும் சிற்றிலக்கியம் மூன்றும் பாடுதலில் வல்லார் என அறியலாம். ஆனால் இப்போது இவர் பாடிய 'மூவருலா' மட்டுமே கிடைத்து இவரை உலா வல்லார் என்பதனை மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறது. கோவையும் அந்தாதியும் கிடைக்கவில்லை. இவ்விலக்கியங்களும் இவர் பாடியிருத்தல் வேண்டும். இல்லையேல் கோவையுலா அந்தாதி என எண்ணுப் படுத்திப் பாடியிருக்க ஏதில்லை.
-----------
[23]. பெருந்தொகை, 1804.
இவர் பெயரால் வழங்கப்படும் நூல்கள் முப்பால் போல மூன்றாகப் பகுப்பர்.
1. கிடைக்கின்ற நூல்கள்
2. மறைந்த நூல்கள்
3. ஐயத்திற்குரிய நூல்கள்.
1. கிடைக்கின்ற நூல்கள்
விக்கிரம சோழன் உலா, குலோத்துங்க சோழன் உலா, இராசராச சோழன் உலா, குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ், தக்கயாகப் பரணி, இராமாயண உத்திர காண்டம் என்பன.
(அ) மூவருலா
விக்கிரம சோழனுலா, குலோத்துங்க சோழனுலா, இராசராச சோழனுலா என்ற மூன்றும் மூவருலா என்ற பொதுப் பெயரால் வழங்கப் பெறுகின்றன. இம் மூன்றும் தம்மைப் பேணிய ஒரு குலத்து வந்த மூவேந்தரைப் பற்றியன. சோழர் வரலாற்றிற்குரிய அகச்சான்றுகள் நிறைந்த கி. பி. 12 ஆம் நூற்றாண்டின் வரலாற்றுப் பெட்டகம் இது. சோழர் வரலாற்றில் இருள்நிறைந்த பகுதிகளை இவ்விலக்கிய விளக்குகளே தெளிவாகக் காட்டின. இதனைத் தமிழுலகுக்கு வழங்கிய பெருமை தமிழ்த்தாத்தா உ. வே. சா. அவர்களைச் சாரும்.
(ஆ) தக்கயாகப் பரணி
பதினொரு உறுப்புக்களையும் 814 தாழிசைகளையும் கொண்ட தாய்ப்பரணி. வீரப் பரணிகளின் போக்கை மாற்றிய புதுப்பரணி. இதற்கு அரிய உரை உள்ளது. இதனையும் நமக்கு அளித்தவர் டாக்டர் உ. வே. சா. அவர்களே.
(இ) இராமாயண உத்தரகாண்டம்
இராமாயணம் உத்தரகாண்டம் கம்பர் பாடினார் என்று கூறுதல் ஏற்புடைத்தன்று. "கரைசெறி காண்டம் ஏழு" என்னும் தனிப்பாடல், இராம காதை ஏழு காண்டங்கள் உடையது என்றும், இவற்றைப் பாடியவர் கம்பரே என்றும் குறிக்கின்றது. ஆனால் நடையால் உத்தர காண்டத்திற்கும் ஏனைக் காண்டங்களுக்கும் வேறுபாடு காணப்படுகின்றது. மேலும் யுத்த காண்டத்தின் இறுதிப் பகுதி, இராமன் அயோத்திக்குத் திரும்பி வந்து முடி புனைந்த செய்தியையும், இராமன் அனைவருக்கும் விடை கொடுத்து அனுப்பிய செய்தியையும் கூறுகின்றது. இவ்வமைப்பில் யுத்த காண்டத்துடன் இராமகாதை முற்றுப் பெற்றது என்பது போதரும். எனவே அதன்பின் கம்பர் உத்தர காண்டம் பாடினார் என்றல் ஏற்புடைத்தாகாது.
ஒட்டக்கூத்தர் கலைமகளின் அருள் பெற்றவர். ஆதலால் இவருக்கு 'வாணிதாசன்' என்ற பெயரும் உண்டு. இப்பெயரே இவர் உத்தரகாண்டம் பாடினார் என்ற செய்திக்கு இடமளித்து விட்டது என்று சிலர் கருதுவர். அவர்கள் கருத்துப்படி உத்தரகாண்டம் பாடியவர் 'வாணியன்தாசன்' என்ற புலவர். இப்பெயர் மருவி, 'வாணிதாசன்' என ஆயிற்று. பின் ஒட்டக்கூத்தருக்கும் இப்பெயர் இருத்தலால் ஒட்டக்கூத்தரே உத்தரகாண்டம் பாடினார் என்ற நிலையை ஏற்படுத்தியது என்பதாம். விநோதரச மஞ்சரி எழுதிய அட்டாவதானம் வீராசாமி செட்டியார், ஒட்டக்கூத்தர் உத்தரகாண்டம் பாடினார் என்பதற்குச் சுவையான கதையும் எழுதியுள்ளார். இக் கதை, கம்பரையும் கூத்தரையும் இணைக்கின்றது. எனவே இது சான்றற்ற பொய்க்கதை என முடிவு செய்வர்.
"ஒட்டக்கூத்தருடைய பிற நூல்களின் நடைக்கும் உத்தரகாண்டத்துக்கும் நிரம்ப வேறுபாடு உண்டென்று சொல்கிறார்கள். உண்மை. பிற்காலத்தில் சக்கரவர்த்திகளுடைய அவைப் புலவராகப் பெருஞ் சிறப்போடு வாழ்ந்த காலத்தில் இவர் பாடிய பாடலின் பெருமித நடைவேறு; உலாக்களிலும் பிள்ளைத் தமிழிலும் தக்கயாகப் பரணியிலும் இதை நன்றாய்க் காணலாம். ஆனால் இளமை ஓர் ஆதரவுமின்றி வாழ்க்கையில் முன்னேற வழி தேடிக் கொண்டிருந்த இளம்புலவருடைய நடைவேறு. இந்த இளம் புலவர் சிறப்பான இந்நூல் செய்தார் என்பதை அறிந்தே விக்கிரம சோழன் இவரைத் தனது அவைப்புலவராக ஆக்கிக் கொண்டான்" இவ்வாறு விளக்கம் செய்து உத்தர காண்டம் எழுதியவர் ஒட்டக்கூத்தரே என நிலைநாட்டுபவர் திரு. மு. அருணாசலம் அவர்கள். [24]
----------
[24]. தமிழ் இலக்கிய வரலாறு. 12-ஆம் நூற்றாண்டு பக். 442.
(ஈ) குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ்
இரண்டாம் குலோத்துங்க சோழன் மீது பாடப் பெற்றது. இச்சோழன் மீது உலாவும் பாடியுள்ளார். இந்நூல் முழுமையாகக்கிடைக்கவில்லை. 1933இல் பண்டிதர் உலகநாத பிள்ளை அச்சிட்டார். இந்நூலில் 103 பாடல்கள் உள்ளன. பிள்ளைத்தமிழ் பற்றிய குறிப்புகள் தொல் காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் காணப்படுகின்றன. ஆயினும் பிள்ளைத் தமிழ்ப் பகுதிகள் பலவற்றைத் தொடர்புபடப் பாடியவர் பெரியாழ்வார். ஆயினும் இதனை முழுமையாகப் பிள்ளைத் தமிழ் என்று கூற முடியாது. இத் தமிழை முதன் முதல் அளித்தவர் ஒட்டக் கூத்தரே. இப்போது கிடைத்த இந்நூலின் அமைப்பு.
1. காப்புப் பருவம்-11 பாடல்
2. செங்கீரைப் பருவம்-11 பாடல்
3. தாலப் பருவம்-11 பாடல்
4. சப்பாணிப் பருவம்- 11 பாடல்
5. முத்தப் பருவம்- 11 பாடல்
6. வாரானைப் பருவம்-11 பாடல்
7. அம்புலிப் பருவம்-12 பாடல்
8. சிறுபறைப் பருவம்-7 பாடல்
9. சிற்றிற் பருவம்-11 பாடல்
10. சிறுதேர்ப் பருவம்-7 பாடல்
சிறுபறைப் பருவம் நாற்சீர் கொண்ட சந்தக் கலி விருத்தமாக உள்ளது. பெரும்பாலும் பிள்ளைத்தமிழ் ஆசிரிய விருத்தத்தால் பாடப்பெற, இவர் சந்தக் கலிவிருத்தத்தைக் கையாண்ட முறை குறிப்பிடத்தக்கது.
குலோத்துங்க சோழனுலாப் பாடிய பின்னரே இப் பிள்ளைத் தமிழ் பாடியுள்ளார். இதன் பின் தோன்றிய சங்கரசோழனுலா,
" கூடிய சீர்தந்த என்றெடுத்த கூத்தனுலாச்
சூடிய விக்கிரம சோழனும் - பாடிய
வெள்ளைக் கலியுலா மாலையொடு மீண்டுமவன்
பிள்ளைத் தமிழ்மாலை பெற்றோனும் "
எனக் குறிப்பிடுதலால் அறியலாம்.
இப் பிள்ளைத்தமிழில்,
" பாடற் பெரும்பரணி தேடற் கருங்கவி
கவிச்சக்கர வர்த்தி பரவ " [25]
எனவரும் அடிகளால் இவர் 'பரணி' நூலொன்றும் பாடினார் என அறியலாம்.
-----
[25]. குலோத்துங்க சோழன் பிள்ளைத் தமிழ், 14 - 2.
2. மறைந்த நூல்கள்
கலிங்கப் பரணி, அரும்பைத் தொள்ளாயிரம், காங்கேயன் நாலாயிரக் கோவை, எதிர்நூல் என்பன.
ஆ. கலிங்கப்பரணி
ஒட்டக்கூத்தரை முதன்முதல் போற்றிய மன்னன் விக்கிரம சோழன். இவன் தந்தை முதற் குலோத்துங்கச் சோழன் கலிங்கத்தில் பெருவெற்றி பெற்றான். இதனைப் பாராட்டிச் செயங்கொண்டார் கலிங்கத்துப் பரணி பாடிப் பெருவெற்றி கொண்டார். தந்தை போலவே விக்கிரம சோழனும் தென் கலிங்கத்தை வென்றான். இவ் வெற்றியைப் பாராட்டிச் செயங்கொண்டார் பரணி ஒன்று பாடினார். இப் பரணி இப்போது கிடைக்கவில்லை. ஆனால் இவர் பாடினார் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.
விரும்பரணில் வெங்களத்தீ வேட்டுக் கலிங்கப்
பெரும்பரணி கொண்ட பெருமாள் - தரும்புதல்வன்
கொற்றக் குலோத் துங்கச் சோழன் (28 - 29)
என்று குலோத்துங்க சோழன் உலாவிலும்,
பகவான் வளைத் தெழுகலிங்கமும் விழுங்கப்
பகட்டணிதுணித்தொரு பெரும்பரணி கொள்ளுஞ்
சேவகன் அபங்கன் அகளங்கன் மதலாய்! நின்
சேவடிக ளால் எமது சிற்றில் சிதையேலே.
என்று இராசராச சோழன் உலாவிலும் ஒட்டக்கூத்தரே கூறியுள்ளார்.
இனி, தக்கயாகப் பரணியில்,
செருத்தந் தரித்துக் கலிங்கரோடத்
தென்தமிழ்த் தெய்வப்பரணி கொண்டு
வருத்தந் தவிர்த்துல காண்டபிரான்
மைந்தர்க்கு மைந்தன் வாழ்த்தினவே (776)
என்னும் தாழிசைக்கு உரைகாரர், "இப் பரணி பாடினார் ஒட்டக்கூத்தரான கவிச்சக்கரவர்த்திகள். இப் பரணிப் பாட்டுண்டார் விக்கிரமசோழதேவர்" என்று குறிப்பிட்டுள்ளார். இத்தாழிசையில் வரும் தென்தமிழ்த் தெய்வப் பரணி என்பது கூத்தர் பாடிய கலிங்கப் பரணியையே குறிக்கும் என்று சிலரும், செயங்கொண்டார் பாடிய கலிங்கத்துப் பரணியைக் குறிக்கும் என்று சிலரும் கருதுவர். பெரும்பாலும் தக்கயாகப் பரணி குறிப்பிடும் தென் தமிழ்த் தெய்வப்பரணி கலிங்கத்துப் பரணியே என்பது பொருத்த மாகும்.
சிலப்பதிகாரம் இந்திரவிழவூரெடுத்த காதையின் உரையில் அடியார்க்கு நல்லார் மூன்று பரணித் தாழிசைகளைக் காட்டுகின்றார். இப் பாடல்களில் ஒருபாடல் கலிங்கத்துப் பரணியில் உள்ளது. ஏனைய இரண்டும் எப் பரணியைச் சார்ந்தன என்பது தெரியவில்லை. ஆனால் முதற் தாழிசையின் இறுதியில் கவிச்சக்கரவர்த்தி என்ற குறிப்புக் காணப்படுகின்றது. இதனால் அப் பட்டம் பெற்ற ஒட்டக்கூத்தர் பாடிய கலிங்கப் பரணியில் இத் தாழிசைகள் இருந்திருக்கலாம் என்று முடிவு செய்யலாம்.
இந்நூல் விக்கிரம சோழனின் படைத் தலைவனான அரும்பாக்கிழான் மணவிற்கூத்தன் காலிங்கராயன் மீது இயற்றப் பெற்றது. இந் நூலின் பெயர், அரும்பைத் தொள்ளாயிரம் என்று இருத்தல் தவறு என்றும் அரும் பகைத் தொள்ளாயிரம் என்பதே பொருந்துவது என்றும் கூறுவர். இந்நூல் கிடைக்கவில்லை. இந் நூல் வச்சத் தொள்ளாயிரம் முத்தொள்ளாயிரம் போன்றது போலும் .
(இ) காங்கேய நாலாயிரக் கோவை,
இந்நூல் தம்மை இளமைக் காலத்தில் ஆதரித்த புதுவைக்காங்கேயன் மீது கூத்தரால் பாடப் பெற்றது. இந் நூல் கிடைக்கவில்லை. நானுாறு பாடல்களால் பாடப் படுவதே கோவையாக, இவர் நாலாயிரம் பாடல்களால் கோவை பாடினார் என்றால் இவரின் புலமையை என்னென்பது! சிலர் நாலாயிரக் கோவை என்பதற்கு காங்கேயன் ஊர் நாலாயிரம் என்றும், அதனைச் சிறப்பித்து நானூறு பாடல்களால் பாடிய கோவை என்றும் கூறுவர்.
(ஈ) எதிர் நூல்
நூலின் வகைகளில், எதிர்நூல் என்பதும் ஒன்று. இதன் இலக்கணம்
"தன்கோள் நிறீஇப் பிறர்கோள் மறுப்பது
எதிர்நூல் என்ப ஒருசா ரோரே. "
என்று பேராசிரியரால் தொல்காப்பிய உரையில் காட்டப் படுகின்றது. இத்தகைய நூல் ஒன்று கூத்தர் இயற்றியிருக்கலாம். ஆனால் அந்நூல் இப்போது கிடைக்கவில்லை.
3. ஐயத்திற்குரிய நூல்கள்
கண்டன் கோவை, கண்டன் அலங்காரம், தில்லை உலா, ஈட்டி எழுபது, எழுப்பெழுபது என்னும் நூல்களும் ஒட்டக்கூத்தர் பாடினார் என்று கூறுகின்றனர். ஆனால் இந் நூல்கள் இவரால் இயற்றப்பட்டன என்று கூறுதற்குப் போதிய சான்றுகள் இல்லை.
இனி, இப் பகுதியில் ஒட்டக்கூத்தர் இயற்றிய மூவருலாவும், தக்கயாகப் பரணியும் அவர் பாடியனவாகக் கருதப்படும் தனிப் பாடல்களிற் சிலவும் ஆராயப்படுகின்றன. இவ் ஆராய்ச்சியின் நோக்கம், ஒட்டக்கூத்தர் இந் நூல்களிற் காட்டியுள்ள கற்பனை வளத்தினையும் புலமைச் சிறப்பினைனயும், வரலாற்று உணர்வினையும் புலப்படுத்துவதேயாம்.
முதற்கண் சிறுபிரபந்த வகைகள் குறித்து ஒரு சிறிது காண்போம் :
சிறுபிரபந்த வகைகள்
சிற்றிலக்கியங்கள் பிற்காலத் தெழுந்தனவாம். அவை தொண்ணுற்றாறு வகைப்படும். தொல்காப்பியம் குறிப்பிட்டுள்ள 'விருந்து' என்னும் வகையைச் சேர்ந்த இலக்கிய வகைகளில் இச் சிற்றிலக்கியங்கள் அடங்கக் காணலாம். பதினேழாம் நூற்றாண்டின் இறுதியிலும் பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் வாழ்ந்தவராகக் கருதப் படும் படிக்காசுப் புலவர், சிவந்தெழுந்த பல்லவன் என்னும் வள்ளல் மீது பாடிய சிவந்தெழுந்த பல்லவராயன் உலா நூலில்,
"தொண்ணுாற்றாறு கோலப்ர பந்தங்கள்"
என்று குறிப்பிட்டுள்ளார். பொதுவாக இச் சிற்றிலக்கியங்களில் புலவர் பெருமக்களின் நூலறிவும், உலகியலறிவும், கற்பனைத் திறனும், காவிய நயமும், அணிநலனும், கற்பார்தம் உள்ளத்தைக் கவரும் வருணனைத் திறனும் கண்டு தெளிவதோடு, அவ்வப் புலவர் பெருமக்கள் காலத்தில் வாழ்ந்த அரசர், அமைச்சர், படைத்தலைவர், வள்ளல்கள் முதலானோரின் வீரமும் ஈர நெஞ்சமும் அறப்பணி போற்றிய அருங்கொடை மணமும் கண்டு தெளியலாம் என்பர்.
இனி, இவர் நூல்களில் மூவருலா - தக்கயாகப் பரணி ஆகிய இருநூல்களில் மட்டும் அமைந்துள்ள சிறப்புச் செய்திகளைக் காணலாம்.
1. மூவருலா
உலாப் பிரபந்தம் பாடுதலில் ஒட்டக்கூத்தர் வல்லவர் என்பது வெளிப்படை.
"பேதை முதலா எழுவகை மகளிர்கண்
தொடங்கிய வகைநிலைக் குரியான் ஒருவனைக்
காதல்செய் தலின்வருங் கலிவெண் பாட்டே " [26]
என்ற நூற்பா உலாவின் இலக்கணத்தை உணர்த்தும். கலிவெண்பாவான் இயன்று ஒரடி எதுகை பெற்று அமைந்த கண்ணிகள் விக்கிரமசோழன் உலாவில் 342, இரண்டாம் குலோத்துங்க சோழன் உலாவில் 387, இரண்டாம் இராசராச சோழன் உலாவில் 391, ஆக 1120 கண்ணிகள் மூவருலாவில் அமைந்துள்ளன. குலோத்துங்க சோழன் உலாவுக்கு மட்டும் பழைய உரை உள்ளது. ஆசிரியர் பெயர் அறியக்கூடவில்லை. ஆயினும் இவர்தம் உரையில் தொல்காப்பியம், பரிபாடல், பெருங்கதை முதலிய நூல்களிலிருந்து மேற்கோள்களை எடுத்துக் காட்டியிருப்பதனால் இவர் தென்மொழி, வடமொழி ஆகிய இரு மொழிகளிலும் புலமை மிகுந்தவர் என்பதனை அறியலாம்.
------------
[26]. பன்னிருபாட்டியல்
தம் வழிபடு தெய்வத்தின் மீதும், ஆசிரியர் மீதும், தம்மை ஆதரித்த உபகாரி மீதும் புலவர் உலா பாடுவர். மூவருலா, ஒட்டக்கூத்தரால் தம்மை ஆதரித்த அரசர்கள் மூவர் மீது பாடப்பட்டுள்ளது. இம் மன்னர்கள் பட்டத்து யானை மீது பவனி வந்ததாக மூவருலா குறிப்பிடுகின்றது. பாட்டுடைத் தலைவர்களுடைய முன்னோர் பெருமையினை முதலில் கூறிப் பின்னர் அவர் பெருமையினைக் கிளத்தி, அவர் நீராடுதல், பட்டத்து யானையில் பவனி வருதல், உடன் வருவோர், மகளிர் குழாம் மன்னர்களைக் காத்திருந்து காணல் முதலான செய்திகளை முற்பகுதியில் கூறுகின்றது. பிற்பகுதி, பேதை முதல் பேரிளம் பெண் ஈறாகவுள்ள ஏழு பருவ மகளிரின் இயல்புகளையும் விளையாட்டுக்களையும் கூறித் தலைவரைத் தரிசித்த வழி அவர்கள் பெற்ற உணர்வுகளைக் கிளத்தி நிற்கின்றது. மூவருலாவில், தலைவன் உருவத்தைக் கிழியில் வரைதல், பந்து, அம்மானை ஆடல், மது அருந்துதல், தலைவன் நிறத்திற்கு ஏற்ப உடுத்தல், அணி பூணல், பூக்கொய்தல், புனலாட்டு, கழங்காடல், சிற்றில் இழைத்தல் முதலான விளையாட்டுக்கள் மகளிர் மேற்கொண்ட விளையாட்டுக்களாக இடம் பெற்றிருக்கக் காணலாம்.
மூன்று உலாக்களின் தொடக்கக் கண்ணிகளே ஒட்டக்கூத்தரின் மிடுக்கு நடைக்குக் கட்டியங்கூறி நிற்கின்றன.
சீர்தந்த தாமரையாள் கேள்வன் திருவுருவக்
கார்தந்த உந்திக் கமலத்து
-- விக்கிரமசோழன் உலா
தேர்மேவு பாய்புரவிப் பாசடைச் செங்கமலம்
போர்மேவு பாற்கடல் பூத்தனையோன்
-- குலோத்துங்கசோழன் உலா
புயல் வண்ணன் பொற்பதுமப் போதிற் புவனச்
செயல் வண்ணங் காட்டிய சேயோன்
-- இராசராச சோழன் உலா
தாம் சிறந்த சைவராயிருப்பினும், தாம் எடுத்துக் கொண்ட பொருளுக்கேற்ப, சோழர்குலப் பெருமையைக் கூறவந்த ஒட்டக்கூத்தர், அக் குலம் சூரிய குலம் ஆன காரணத்தினால் அக்குல முதல்வனார் திருமாலைத் தக்காங்கு புகழக் காணலாம்.
இது போன்றே அறச் செங்கோல் நாட்டிய சோழர் குல முன்னோன் மாந்தாதாவைக் கூத்தர் ஒவ்வோர் உலாவிலும் கூற வந்த ஒரு செய்தியினையே வேறுவேறு சொற்களைக் கையாண்டு திறம்பட உரைப்பதனைக் காணலாம்:
ஆடுதுறையில் அடுபுலியும் புல்வாயும்
கூடநீ ரூட்டிய கொற்றவன். [27]
-- விக்கிரம : 5
போந்த புலியுடனே புல்வாய் ஒருதுறைநீர்
மாந்த உலகாண்ட மன்னர்பிரான். [28]
-- குலோத்துங்க : 7
புக்க துறையிற் பகைப்புலியும் புல்வாயும்
ஒக்க வொருகாலத் தூட்டினோன்." [29]
-- இராசராச : 5
இதுபோன்றே களவழி பாடிக் கோச்செங்கட் சோழன் சிறைக் கோட்டத்திலிருந்து சேரமான் கணைக்காலிரும் பொறை பொய்கையாரால் சிறை மீட்கப்பட்ட செய்தி ஒரு வரலாற்று நிகழ்ச்சியாகும். இதனைக் கூத்தர் மூன்றுலாக்களிலும் பின்வருமாறு கூறுவர்.
மேதக்க பொய்கை கவிகொண்டு வில்லவனைப்
பாதத் தளைவிட்ட பார்த்திபனும். [30]
-- விக்கிரம : 14
படுத்துப் பொறையனைப் பொய்கைக்குப் பண்டு
கொடுத்துக் களவழிப்பாக் கொண்டோன். [31]
-- குலோத்துங்க : 20
நல்லவன் பொய்கை களவழி நாற்பதுக்கு
வில்லவன் காற்றளையை விட்டகோன். [32]
-- இராசராச : 18
இதுபோன்றே விசயாலய சோழனின் வீரத்திறனை விளங்க எடுத்துரைக்கின்றார்:
எண்கொண்ட தொண்ணூ ற்றின் மேலும் இருமூன்று
புண்கொண்ட வென்றிப் பரவலனும் .” [33]
-- விக்கிரம : 15
--------------
[27]. விக்கிரமசோழன் உலா, 5.
[28]. குலோத்துங்க சோழன் உலா, 7.
[29]. இராசராச சோழன் உலா, 5.
[30]. விக்கிரம சோழன் உலா, 14.
[31]. குலோத்துங்க சோழன் உலா, 20.
[32]. இராசராச சோழன் உலா, 18.
[33]. விக்கிரம சோழன் உலா, 15.
சீறுஞ் செருவிற் றிருமார்பிற் றொண்ணூ றும்
ஆறும் படுதழும்பி னாகத்தோன். [34]
-- குலோத்துங்க : 21
தொழும்புடைய ஆகத்துத் தொண்ணூ றும் ஆறும்
தழும்புடைய சண்டப்ர சண்டன். [35]
-- இராசராச : 19
சங்கம் தவிர்த்துச் சோழ நாட்டு வாணிக வளத்தை மேம் படுத்திய முதலாம் குலோத்துங்க சோழனை,
-- உடலை
இறக்கி வடவரையே யெல்லையாத் தொல்லை
மறக்கலியுஞ் சுங்கமும் மாற்றி. [36]
-- விக்கிரம 25, 26
என்றும்,
புவிராச ராசன் மனுமுதலோர் நாளில்
தவிராத சுங்கந் தவிர்த்தோன். [37]
-- குலோத்துங்க : 26
என்றும் புகழ்ந்துரைத்த கூத்தன், அவன் காலத்தில் ஏற்பட்ட குடிமக்கள் கலகத்தினையும், ஒருங்கே கூறி யுள்ளார்:
கலகமுஞ் சுங்கமுங் காய்கலியும் மாற்றி
உலகைமுன் காத்த உரவோன். [38]
-- இராசராச : 26
இதனால் கூத்தரின் நடுநிலைமை சான்ற நன்னெஞ்சம் விளங்கும்.
-----------------------------------------------------------------------------------------------------
[34]. குலோத்துங்க சோழன் உலா, 21.
[35]. இராசராச சோழன் உலா, 19.
[36]. விக்கிரம சோழன் உலா, 25, 26.
[37]. குலோத்துங்க சோழன் உலா, 26.
[38]. இராசராச சோழன் உலா, 26.
வருணனைத் திறம்
பேதையை வருணிக்கும் அழகினைப் பின்வரும் பகுதியிற் காணலாம்.
-- அங்கொருத்தி
வந்து பிறந்து வளரு மிளந்திங்கள்
கொந்து முகிழாக் கொழுங்கொழுந்து - பைந்தழைத்
தோகை தொடாமஞ்ஞை சூடுண்டு தோற்றவன்மேல்
வாகை புனைய வளர்கரும்பு - கோகுலத்தின்
பிள்ளை யிளவன்னப் பேடை பிறந்தணிய
கிள்ளை பவளங் கிளைத்தகிளை - கள்ளம்
தெரியாப் பெருங்கட் சிறுதேற றாயர்ப்
பிரியாப் பருவத்துப் பேதை. [39]
-- விக்கிரம : 112 - 116
இதனோடு குலோத்துங்க சோழன் உலாவின் பேதைப் பருவ வருணனையும் ஒப்புநோக்கினால் புலவர் எத்துணையளவு திறம்பட வருணிப்பதில் வல்லவர் என்பதனையும், ஒரே கருத்தினையே வேறு வேறு வகைகளில் நயம்படக் கிளத்தும் சதுரப்பாடு உடையவர் என்பதனையும் காணலாம்.
இனையர் பலர்நிகழ வீங்கொருத்தி முத்திற்
புனையுஞ் சிறுதொடிக்கைப் பூவை - கனைமுகினேர்
ஆடாத தோகை யலராத புண்டரிகம்
பாடாத பிள்ளைப் பசுங்கிள்ளை - சூடத்
தளிராத சூதந் தழையாத வஞ்சி
குளிராத திங்கட் குழவி - அளிகள்
இயங்காத தண்கா விறக்காத தேறல்
வயங்காத கற்பக வல்லி - தயங்கிணர்க்
கூழைச் சுருண்முடிக்கக் கூடுவதுங் கூடாதாம்
ஏழைப் பருவத் திளம்பேதை. [40]
-- குலோத்துங்க : 123 - 127
---------------
[39]. விக்கிரம சோழன் உலா, 112 - 116.
[40]. குலோத்துங்க சோழன் உலா. 123 - 127.
பட்டத்து யானையில் பவனிவரக் கண்ட தலைவனைக் கண்டு தன் தாய் நடந்து கொண்டது போன்றே பேதையும் நடந்து கொண்டாள் என்று பின்வருமாறு கூறும் கூத்தரின் கூற்றில் அவர்தம், உளவியல் நுட்பம் உணரும் திறம் கண்டு தெளியலாம்.
தாயர் வரவந்து தாயர் தொழத்தொழுது
தாயர் மொழிந்தனவே தான் மொழிந்தாள் [41]
-- விக்கிரம : 122
அடுத்து, பேதைப் பருவங்கடந்து பெதும்பைப் பருவம் வந்தடைந்த நிலையுடைய பெண்ணைப் புலவர் வருணிக்கும் வகையில் அப் பெண்ணின் உடல், உள்ள வளர்ச்சியினை ஒருங்கே காணலாம்:
-- ஒருத்தி
மழலை தனது கிளிக்களித்து வாய்த்த
குழலி னிசைகவர்ந்து கொண்டாள் - நிழல்விரவு
முன்னர் நகைதனது முல்லை கொளமுத்தின்
பின்னர் நகைகொண்ட பெற்றியாள் - கன்னி
மடநோக்கந் தான் வளர்த்த மானுக் களித்து
விடநோக்கம் வேலிரண்டிற் கொண்டாள் - சுடர்நோக்கும்
தானுடைய மெய்நுடக்கந் தன்மா தவிக்களித்து
வானுடைய மின்னுடக்கம் வாங்கினாள் - பூநறும்
பாவைகள் பைங்குர வேந்தப் பசுங்கிளியும்
பூவையு மேந்தும் பொலிவினாள் - மேவும்
மடநடை யன்னப் பெடைபெறக் கன்னிப்
பிடிநடை பெற்றுப் பெயர்வாள் - சுடர்கனகக்
கொத்துக் குயின்ற கொடிப்பவள பந்தத்தின்
முத்துப் பொதியுச்சி முச்சியாள் - எத்திறத்தும்
வீரவேள் போல்வாரை வீட்டி விழுத்தவர்மேல்
மாரவேள் கண்சிவப்ப வாய்சிவப்பாள் - நேரொத்த
கோங்க முகையனைய கொங்கையா டன்கழுத்தாற்
பூங்கமுகை யிப்போது பொற்பழிப்பாள். [42]
-- விக்கிரம : 134 - 143
-------------
[41]. விக்கிரம சோழன் உலா, 122.
[42]. விக்கிரம சோழன் உலா, 134 - 143.
அடுத்து, தெரிவை பட்டத்து யானைமேற் பவனி வந்த தலைவனைக் கண்டு காமுற்று மயங்கி விழுந்த நிலையில் அவள் உற்ற நிலையினைப் பின்வருமாறு திறம்பட வருணிக்கின்றார்:
"வீணை யிசையாலோ வேனிலா னம்பாலோ
வாணுதல் வீழா மதிமயங்காச் - சேணுலாம்
வாடை யனைய மலயா நிலந்தனையும்
கோடை யிதுவென்றே கூறினாள் - நீடிய
வாரை முனிந்த வனமுலைமேல் விட்டபனி
நீரை யிதுவோ நெருப்பென்றாள் – ஊரெலாம்
காக்குந் துடியை யழிக்குங் கணைமாரன்
தாக்கும் பறையென்றே சாற்றினாள் - சேக்கைதொறும்
வாழு முலகத் தெவரு மனங்களிப்ப
வீழு நிலவை வெயிலென்றாள் - கோழிக்கோன்
எங்கோ னகளங்க னேழுலகுங் காக்கின்ற
செங்கோல் கொடுங்கோல் சிலர்க்கென்றாள் - கங்குல்
புலருந்தனையும் புலம்பினாள். [43]
மேலும், இரண்டாம் குலோத்துங்கன் கரிய நிறமுடையவன்
கொற்றக் குலோத்துங்க சோழன் குவலயங்கள்
முற்றப் புரக்கு முகில்வாண்ணன் [44]
என்று குறிப்பிடும் கூத்தர், அவனைக் காணவந்த பெண்களும் நீலச் சேலையே அணிந்து, நீலமணிகளே பூண்டு, நீல மலர்களையே அணிந்து, நீல நிறத்தையே நினைந்திருந்தனர் என்று திறம்படக் கூறுகின்றார்:
நீலமே வேய்ந்தடுக்க நீலமே பூண்டுடுக்க
நீலமே யன்றி நினையாதாள் [45]
---------
[43]. விக்கிரம சோழன் உலா : 279 - 285.
[44]. குலோத்துங்க சோழன் உலா: 29
[45] குலோத்துங்க சோழன் உலா: 194.
நாகரிகம் என்று இன்றும் நாகரிக மங்கையர் மேற் கொள்ளும் நெறியன்றோ இது. முருகப் பெருமானைப் பரவும் பாரதம் பாடிய பெருந்தேவனாரும் முருகனின் செந் நிறத்தைப் பின்வருமாறு கூறியிருக்கக் காணலாம்.
தாமரை புரையும் காமர் சேவடி
பவளத் தன்ன மேனித் திகழொளிக்
குன்றி யேய்க்கும் உடுக்கை, குன்றின்
நெஞ்சுபக எறிந்த அஞ்சுடர் நெடுவேல். [46]
முருகனின் திருவடிகளும் செந்நிறம்; திருவுருவமும் செந்நிறம்; ஆடையும் செந்நிறம், கைவேலும் செந்நிறம் என்று இப்பாடலில் புலவர் கூறியுள்ளார்.
மேலும் கூத்தர் அக் கால மகளிர் அணிந்த ஆபரண வகைகளைப் பின் வருமாறு கூறியுள்ளார்:
-- கொணர்ந்தணிந்த
சூடாமணியும் பணிவ ளையுஞ் சூடகமும்
கோடா மணிமகர குண்டலமும் - ஆடிய
கலைசையும் மாலையும் ஆரமும் தாமழும்
கச்சையும் மேகலையும் காஞ்சியும் - பச்சென்ற
பட்டும் குறங்கணியும் பட்டிகையும் நூபுரமும்
கட்டும் கனவயிரக் காறையும். [47]
கதிரவனை வருணிக்கும் கவிஞர் கூற்றில் பாட்டோட்டத்தினைக் கண்டு மகிழலாம்:
"அடுத்தடுத் தேந்திய திவ்யா பரணம்
எடுத்தெடுத் தொப்பித் தெழுந்து - சுடர்க்கதிரோன்
மாலைப் பகைவியைப் போக்கி வருவித்த
காலைத் துணைவியைக் கண்டெழுந்தாள்." [48]
ஒட்டக்கூத்தரின் கற்பனை வளத்திற்கு கீழ்க்காணும். பகுதிகள் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
---------------
[46]. குறுந்தொகை : கடவுள் வாழ்த்து.
[47]. இராசராச சோழன் உலா, 321 - 324.
[48]. குலோத்துங்க சோழன் உலா, 267 - 268.
-- சுடர்நோக்கும்
தானுடைய மெய்ந்நுடக்கம் தன்மா தவிக்களித்து
வானுடைய மின்னுடக்கம் வாங்கினாள். [49]
திருவிருந்து தாமரையாய்ச் சென்றடைந்த வண்டின்
பெருவிருந்து பேணுங் குழலாள். [50]
-- செம்மை
நிறையும் அழகால் நிகரழித்துச் செய்யாள்
உறையும் மலர்பறிப்பாள் ஒப்பாள். [51]
இரவிக்கு நிற்பன வேழு மொழியப்
புரவிக் குலமுழுதும் போற். [52]
தில்லைத் திருப்பணிகள்
இரண்டாம் குலோத்துங்க சோழன் உலாவில், குலோத்துங்கன் செய்த தில்லைத் திருப்பணிகள் கூறப்படுகின்றன.
"தில்லைத் திருமன்ற முன்றிற் சிறுதெய்வத்
தொல்லைக் குறும்பு தொலைத் தெடுத்து.............
வருநாளில்" [53]
-- குலோத்துங்க: 39 - 58
இவன் தில்லைக் கோவிந்தராசப் பெருமானைக் கொவிலிலிருந்து பெயர்த்தெடுத்துக் கடலில் போட்டவன் ஏன்பதும் இப் பகுதியால் விளங்கும். இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த செயலாகும். திருப்புறம்பியக் கல்வெட்டு இவன் செய்த இத் திருப்பணிகளைக் குறிப்பிடுகின்றது.
---------------
[49]. விக்கிரம சோழன் உலா, 138.
[50]. விக்கிரம சோழன் உலா, 240.
[51]. விக்கிரம சோழன் உலா, 309.
[52]. குலோத்துங்க சோழன் உலா, 94.
[53]. குலோத்துங்க சோழன் உலா, 39 - 58.
இவ்வாறு ஒட்டக்கூத்தர் புலமை நலத்துக்கும், வரலாற்றுணர்வுக்கும் (Historical sense) மூவருலா ஒரு சான்றாய் விளங்குகின்றது.
(2) தக்கயாகப் பரணி
உலா, பிள்ளைத்தமிழ், தூது, அந்தாதி முதலிய சிற்றிலக்கியங்களைப்போல அளவால் மிகுதியான பரணிகள் தமிழில் இல்லை. ஆயினும் பரணி நூல்களில் முதலாவது கலிங்கத்துப் பரணியும், அதனையடுத்துத் தக்கயாகப் பரணியும் சிறப்புற்று விளங்கக் காணலாம். கூடல் சங்கமத்துப்பரணி, கொப்பத்துப்பரணி, கலிங்கப் பரணி முதலான நூல்கள் இருந்து மறைந்திருக்கலாம் என்பது பின்வரும் சான்றுகள் கொண்டு அறியலாம்.
கூடல் சங்கமத்துப்பரணி
-- கூடல்
சங்கமத்துக் கொள்ளுங் தனிப்பரணிக் கெண்ணிறந்த
துங்கமத யானை துணித்தோனும். [54]
பாடவரிய பரணி பகட்டொன்றின்
கூடல் சங்கமத்துக் கொண்டோன். [55]
கொப்பத்துப் பரணி
. . . . . . கொலையானை
பப்பத் தொருபசிப் பேய் பற்றவொரு பரணி
கொப்பத் தொருகளிற்றாற் கொண்டகோன். [56]
------------------
[54]. விக்கிரம சோழன் உலா, 22.
[55]. இராசராச சோழன் உலா, 25.
[56]. இராசராச சோழன் உலா, 24.
செருத்தந் தரித்துக் கலிங்க ரோடத்
தென்றமிழ்த் தெய்வப் பரணிகொண்டு
வருத்தங் தவிர்த்துல காண்ட பிரான்
மைந்தற்கு மைந்தனை வாழ்த்தினவே. [57]
விக்கிரம சோழன் மீது ஒட்டக்கூத்தர் கலிங்கத்துப் பரணி (கலிங்கப்பரணி) பாடியது:
விரும்பரணில் வெங்களத்தீ வேட்டுக் கலிங்கப்
பெரும்பரணி கொண்ட பெருமான் - தரும்புதல்வன்
கொற்றக் குலோத்துங்க சோழன் [58]
தரணியொரு கவிகை தங்கக் கலிங்கப்
பரணி புனைந்த பருதி - முரணில்
புரந்தர னேமி பொருவு மகில
துரந்தரன் விக்கிரம சோழன். [59]
பின்வரும் பாட்டியல் இலக்கண நூல்கள் 'பரணி' நூல் எழுதற்குப் பல்வேறு காரணங்களைக் குறிப்பிட்டாலும், ஆயிரம் யானைகளை அமர்க்களத்திலே அட்டு வெற்றி வாகை சூடிய வேந்தனை நயம்பட நாவாரப் புகழ்ந்து பrடுதலே பரணியின் இலக்கணம் என்பது புலப்படுகின்றது.
பரணியின் இலக்கணம்
பின்வரும் நூற்பாக்கள் பரணியின் இலக்கணம் கூறும்:
வஞ்சி மலைந்த உழிஞை முற்றித்
தும்பையிற் சென்ற தொடுகழல் மன்னனை
வெம்புசின மாற்றான் தானைவெங் களத்தில்
குருதிப் பேராறு பெருகுஞ் செங்களத்து
ஒருதனி ஏத்தும் பரணியது பண்பே. [60]
-- பன்னிரு பாட்டியல் : 57
-----------
[57]. தக்கயாகப் பரணி: கூழடுதலும் இடுதலும்: 49.
[58]. குலோத்துங்க சோழன் உலா: 28, 29.
[59]. இராசராச சோழன்: 27, 28.
[60]. பன்னிரு பாட்டியல்: 57.
மூண்டஅமர்களத்து மூரிக் களிறட்ட
ஆண்டகை யைப்பரணி யாய்ந்துரைக்க - ஈண்டிய
நேரடியே யாதியா நீண்டகலித் தாழிசை
ஈரடிகொண் டாதியுட னீறு [61]
-- வெண்பாப் பாட்டியல் : 38
ஆனை யாயிர மமரிடை வென்ற
மான வனுக்கு வகுப்பது பரணி [62]
-- இலக்கண விளக்கப் பாட்டியல் : 838
------------------
[61]. வெண்பாப் பாட்டியல், 38.
[62]. இலக்கண விளக்கப் பாட்டியல் : 838.
அடுத்து, பரணியின் உறுப்புகள் வருமாறு:
பரணியின் உறுப்புக்கள்
1. கடை திறப்பு, 2. பாலை கூறல், 3. கோயிற் சிறப்பு,
4. காளியைப் போற்றல், 5. இந்திரசாலம், 6. மன்னன் மரபுரைத்தல்,
7. போர்ச்சிறப்பு உரைத்தல், 8. போர்க் களம் காணல்,
9. கூழ் சமைத்து வார்த்தல், 10. மன்னனை வாழ்த்தல்.
இனி, பரணியின் பெயர்க்காரணத்தை ஆராய்வோம்.
பரணி - பெயர்க்காரணம்
தினைப் புனத்தில் காவல் செய்வோர் ஒரு பரண்மீது அமர்ந்து, தினையை அழிக்க வரும் பறவையினங்களைத் துரத்துவது போன்று, போர்க்களத்தில் வீரன் யானை மீதிருந்து எதிரிகளைத் துரத்துவதால் இச்செய்தி பற்றிக் கூறும் இந்நூல் பரணி எனப்பெயர் பெற்றது என்பர் சிலர்.
தினைப்புனங் காப்போர் பரண் மீது இருந்து பறவைகளைத் துரத்தப் பாடுதல் போல, அரசனின் வில்வேல், வாள் ஆகிய படைக்கலங்களால் அமைக்கப்பட்ட பரண் மீதிருந்து புலவர் இந் நூலைப்பாடுதலால் இந்நூல் பரணி என அழைக்கப்படுகின்றது என்பர் சிலர்.
அணி மணி முதலியவற்றை வைக்கும் செப்பு பரணி என அழைக்கப்படுதல் போல, பல்வேறு கற்பனை நலமும் சுவைகளும் தன்னகத்துக் கொண்டது இவ்விலக்கியமாதலால் இது பரணி என அழைக்கப்படுகின்றது என்பர் வேறு சிலர்.
இப் பெயர் பரணி நட்சத்திரம் பற்றி அமைந்த பெயராகும் என்றும் அறிஞர் சிலர் கூறுவது ஏற்புடைய கருத்தாக விளங்குகின்றது.
நூற்பொருள்
தக்கயாகப் பரணி என்று ஒட்டக்கூத்தரால் இயற்றப் பட்ட இப் பரணி, தாட்சாயணி (உமாதேவி) யின் தந்தையாகிய தக்கன், சிவபெருமானை மதிக்காமல், அவரை அவமதிக்கும் நோக்கில் செய்யப் புகுந்த யாகத்தைச் சிவபெருமான் வீரபத்திரக் கடவுளைத் தோற்றுவித்து, அவரைக் கொண்டு அந்த யாகத்தையழித்து, தக்கனுக்கு உதவ வந்த தகாத தேவர்களை அவமானப்படுத்தி, இறுதியிற் தக்கனுடைய தலையையும் தடிந்த புராணச் செய்தியினைக் காப்பிய நயம்பட விளக்குகின்றது.
இப் பரணியின் பாட்டுடைத் தலைவன் சிவபெருமான், இப் பரணியைப் பாடும்படி வேண்டியவன் இரண்டாம் இராசராசன் ஆவன்.
தக்கயாகப் பரணியில் எண்ணூற்றுப் பதினான்கு தாழிசைகள் அமைந்துள்ளன. முதற்கண் வைரவக் கடவுள் காப்பு அமைந்துள்ளது. இக்காப்புப் பகுதியே இப்பரணி முழுவதிலும் அமைந்துள்ள சந்தச் சுவைக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றது.
உரககங் கணந் தருவனபணமணி
யுல கடங்கலுந் துயிலெழவெயிலெழ
உடைதவிர்ந்ததன் றிருவரையுடைமணி
யுலவியொன்றொடொன் றல மரவிலகிய
கரதலந்தருங் தமருக சதிபொதி
கழல்புனைந்தசெம் பரிபுரவொலியொடு
கலகலன்கலன் கலனெனவருமொரு
கரியகஞ்சுகன் கழலிணை கருதுவாம். [63]
அடுத்து அமைந்துள்ளது உமாபாகர் வாழ்த்து. அதன் பின்னர் விநாயகக் கடவுள், முருகக்கடவுள் காப்புச் செய்யுட்கள் பின்வருமாறு அமைந்துள்ளன:
விநாயகக்கடவுள் வாழ்த்து
சதகோடி விததாள சதிபாய முகபாகை குதிபாய்கடா
மதகோடி யுலகேழு மணநாற வரும்யானை வலிபாடுவாம்.
நககோடி பலகோடி புலியேறு தனியேற நளினாலயன்
உககோடி பலகோடி குலதீப னெழுதீவு முடனாளவே. [64]
முருகக் கடவுள் காப்பு
ஒருதோகை மிசையேறி யுழல்சூரு மலைமார்பு முடனூடுறப்
பொருதோகை சுரராச புரமேற விடுகாளை புகழ்பாடுவாம்.
கடலாழி வரையாழி தரையாழி கதிராழி களிகூர்வதோ
ரடலாழி தனியேவு குலதீப ந்ருபதீப னருள்கூரவே. [65]
--------------
[63]. தக்கயாகப் பரணி: வைரவக் கடவுள் காப்பு.
[64]. தக்கயாகப் பரணி: 3, 4.
[65]. தக்கயாகப் பரணி: 5, 6.
திருஞான சம்பந்தப் பெருமானை முருகனாகவே எண்ணி, அவர் வள்ளியை மணம் புணர வந்தவர் என்பதனைக் 'கோயில் பாடியது' எனும் பகுதியில், மதுரையில் சமணரை வாதில் வென்ற கதையினை விளக்கும் பகுதியில் குறிப்பிட்டுள்ளார் :
வருகதை தெய்வமகளென் மருமகள் வள்ளிவதுவை
மனமகிழ் பிள்ளைமுருகன் மதுரையில் வெல்லுமினிய
தொருகதை சொல்லுதவள வொளிவிரி செவ்விமுளரி
யொளிதிக ழல்லிகமழு மொருமனை வல்லியெனவே. [66]
'சம்பந்தர் முருகப் பெருமானின் அவதாரம்' என்று முதற்கண் இக் கொள்கையைத் தோற்றுவித்தவரே ஒட்டக்கூத்தர் ஆகலாம் என்றும், சேக்கிழார் தம் திருத்தொண்டர் புராணத்தில் இவ்வாறு சொல்லவில்லை என்றும், ஆயினும் அருணகிரிநாதர் ஒட்டக்கூத்தர் கொள்கையை ஏற்றுப் பாடியுள்ளார் என்றும் ஆராய்ச்சி வல்ல திரு. மு. அருணாசலம் அவர்கள் கூறுவர். [67]
-----------------------
[66]. தக்கயாகப் பரணி, கோயிலைப் பாடியது : 34.
[67]. தமிழ் இலக்கிய வரலாறு; 12ஆம் நூற்றாண்டு; ப. 408
இனி, இப் பரணியின் கண் அமைந்துள்ள போர்க்கள வருணனையினைக் காண்போம் :
சிரமுஞ் சிரமுஞ் செறிந்தன
சரமுஞ் சரமுந் தறிப்பவே.
கனமுங் கனமுங் கனைத்தன
சினமுஞ் சினமுஞ் சிறக்கவே.
கடையுங் கடையுங் கலித்தன
தொடையுந் தொடையுந் துரப்பவே.
தாருந் தாருந் தழைத்தன
தேருந் தேருந் திளைப்பவே.
தோலுந் தோலுந் துவைத்தன
கோலுங் கோலுங் குளிப்பவே.
தோளுந் தோளுங் தொடங்கின
தாளுந் தாளுந் தரிப்பவே.
கிரியுங் கிரியுங் கிடைத்தன
கரியுங் கரியுங் கடுப்பவே.
தலையுந் தலையுந் தகர்த்தன
சிலையுஞ் சிலையுஞ் சிலைப்பவே.
குடையுங் குடையுங் கொழித்தன
படையும் படையும் பகைப்பவே. [68]
இப்பகுதியில் எளிய சொற்கள் அடுக்காக அமைந்து, ஒரு போர்க்களத்தையே நம் கண்முன் காட்டக் காணலாம்.
தேவியின் வருணனையும் நம் உள்ளத்தை அள்ளுகின்றது. தேவிக்குத் திருமஞ்சன நீர் கங்கை நீர்; அவளுடைய குழைகள் சந்திர சூரியர்; படுக்கை அரவரசு, ஆடை பொன்னாடை,
வானமலரோ பூமாரி வானக்கற் பகமலரே
கனசலமோ வபிடேகங் கடவுட்கங் காசலமே.
வயங்குகுழை மதியமோ வாளிரவி மண்டலமே
தயங்குகவுத் துவமோபூண் டனிச்சோதிச் சக்கரமே. [69]
---------------
[68]. தக்கயாகப் பரணி, காளிக்குக் கூளி கூறியது: 268 - 276
[69]. தக்கயாகப் பரணி, தேவியைப் பாடியது: 13, 14.
இவருடைய பாலை வருணனை பின்வருமாறு அமைந்துள்ளது.
பால்வறந்துகீழ் நின்றகள்ளியும்
பசைவறந்துபோய் மீமிசைச்
சூல்வறந்துபோய் மாகமேகமுஞ்
சுண்டவீமவெரி மண்டவே.
பிணங்கடுங்கனலு மின்றிவெந்துநில
வாய்நிமிர்ந்துபில வாயபேய்
நிணங்கரைந்துருக நெய்யைநீரென
நினைந்துநாவினை நனைக்குமே. [70]
தேவி வருணனை யாமள நூலிற் கண்டபடி கூறப் பட்டுள்ளதாகக் குறிப்பிடுவர்.
இக்கணங்கள் வந்துசூழும் யோகயாமளத்தினாள்
மெய்க்கணங்க ளேவிரும்பு கோயில்யாம் விளம்புவாம். [71]
யாமள நூல் அறிந்து, அச்செய்திகளைத் தமிழ் நூல்களிற் பயன்படுத்திய புலவர் ஒட்டக்கூத்தர் ஒருவரேயாவர்.
இந்நூலின் முடிவில் கவிச்சக்கரவர்த்தி ஒட்டக் கூத்தரை வாழ்த்தும் முகமாகப் பாடல்கள் இரண்டு அமைந்துள்ளன.
ஆக்கம் பெருக்கு மடந்தை வாழியே
ஆற்றங் கரைச்சொற் கிழத்தி வாழியே
கோக்குந் தமிழ்க்கொத் தனைத்தும் வாழியே
கூத்தன் கவிச்சக்ர வர்த்தி வாழியே.
வாழி தமிழ்ச்சொற் றெரிந்த நூற்றுறை
வாழி தமிழ்க்கொத் தனைத்து மார்க்கமும்
வாழி திசைக்கப் புறத்து நாற்கவி
வாழி கவிச்சக் ரவர்த்தி கூத்தனே. [72]
"மிகச் சிறப்புடைய கலிங்கத்துப்பரணிக்குப் பழைய உரை எதுவும் இல்லை; அடுத்துவந்த தக்கயாகப்பரணிக்கே உரை உண்டென்பது இந் நூலின் சிறப்புக்களில் ஒன்று" என்பர் அறிஞர் திரு. மு. அருணாசலம் அவர்கள். [73]இதற்குக் காரணம் தக்கயாகப் பரணியில் அமைந் துள்ள சைவ சமயச் சிறப்பின் திறமே எனலாம்.
------------------
[70]. தக்கயாகப் பரணி, காடு பாடியது; 2, 3.
[71]. தக்கயாகப் பரணி, கோயிலைப் பாடியது: 1.
[72]. தக்கயாகப் பரணி, வாழ்த்து 14, 15.
[73]. தமிழ் இலக்கிய வரலாறு; 12 ஆம் நூற்றாண்டு, பக் 413.
3. தனிப் பாடல்கள்
ஒட்டக்கூத்தர் இயற்றியனவாகப் பல செய்யுட்கள் தனிப்பாடல் திரட்டிலும், தமிழ் நாவலர் – சரிதையிலும் காணப்படுகின்றன. இனி, இவை குறித்து ஒரு சிறிது காண்போம்.
விக்கிரம சோழனுடைய வீரத்தினைப் புகழ்ந்து இரண்டு பாடல்களை ஒட்டக்கூத்தர் பாடியுள்ளார். அவை வருமாறு:
இன்னம் கலிங்கத்து இகல்வேந்தர் உண்டென்றோ
தென்னன் தமிழ்நாட்டைச் சீறியோ - சென்னி
அகளங்கா! உன்றன் அயிரா வதத்தின்
நிகளங்கால் விட்ட நினைவு. [74]
இப்பாடலில் விக்கிரமசோழனின் போர்ப்பெருமை குறிப்பிடப்படுகின்றது.
அன்றையிலும் இன்றைக் ககன்றதோ, அல்லாது
குன்றெடுத்து நீதிருத்திக் கொண்டாயோ - என்றும்
அடைந்தாரைத் தாங்கும் அகளங்கா! நீயும்
நடந்தாயோ நாலைந் தடி. [75]
இப்பாடலும் விக்கிரம சோழனின் சீற்றச் சிறப்பினை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கக் காணலாம்.
----------------
[74]. தமிழ் நாவலர் சரிதை (கழகப் பதிப்பு): 126.
[75]. தமிழ் நாவலர் சரிதை (கழகப் பதிப்பு): 124.
'உலாப் பாடியபோது, பேராசிரியர் நேமிநாதர் பட்டோலை பிடிக்கப் பாடியது' என்ற தலைப்பின் கீழ், தமிழ் நாவலர் சரிதையில் பின்வரும் பாடல் காணப் படுகின்றது:
செங்கால்மட அன்னம்படர் தீயாமென வெருகிச்
சிறையிற்பெடை மறையக்கொடு திரியத்திரள் கமுகின்
பைங்காய்மர கதமீது படர்ந்தேறி நறுந்தண்
பாளைக் கிடை பவளக்கொடி படர்காவிரி நாடா!
தங்காதலி யருமைந்தரும் உடனாக வணங்கித்
'தலைகா, எம துடல்கா, எம துயிர்கா, அக ளங்கா
கொங்கா, மன துங்கா!' என மதுரேசர் வணங்கும்
கொல்யானை அபங்கா! இவள் குழலோசை பொறாளே. [76]
இப்பாடலில் அரிய இலக்கியச் சுவை அமைந்திருக்கக் காணலாம். மேலும் ஒட்டக்கூத்தருக்கும் இரண்டாம் குலோத்துங்கனுக்கும் இடையே சிறக்க நிலவிய ஆசிரியர் - மாணாக்கன் தொடர்பினைத் தமிழ்நாவலர் சரிதை பின்வருமாறு விளக்குகின்றது. ஒட்டக்கூத்தர் ஒருசமயம் குலோத்துங்கனின் புகழைப் பாடத் தொடங்கினார்.
ஆடுங் கடைமணிநா அசையாமல் அகிலமெல்லாம்
நீடுங் குடையில் தரித்தபிரான் என்றும்
என்று பாடிக் கொண்டிருந்த அளவில் இதனைக் கேட்டுக் கொண்டே வந்த சோழன், தான் ஒட்டக்கூத்தர் மாட்டுக் கொண்ட ஆசிரிய அன்பினையும் பணிவுடைமையினையும் பாங்குறப் புலப்படுத்தும் வகையில், கூத்தர் தாம் தொடங்கிய பாடலை முடிப்பதற்குள், தானே அப்பாடலின் பிற்பகுதியினைப் பின்வருமாறு பாடி முடித்தான் என்பர்.
--நித்தநவம்
பாடுங் கவிப்பெருமாள் ஒட்டக்கூத்தன் பதாம்புயத்தைச்
சூடுங் குலோத்துங்கச் சோழனென்றே என்னைச் சொல்லுவரே. [77]
இரண்டாம் இராசராசனைக் குறித்தும் இவர் தனிப் பாடல்கள் சிலவற்றை இயற்றியதாகத் தெரியவருகின்றது.
--------
[76]. தமிழ் நாவலர் சரிதை (கழகப் பதிப்பு): 132,
[77]. தமிழ் நாவலர் சரிதை (கழகப் பதிப்பு): 131.
இராசராசன் குதிரையேற்றம் கற்றுக்கொண்டு வெளியே குதிரை விட்ட சமயத்தில்
கண்டன் பவனிக் கவனப் பரிநெடுங்கால்
மண்துளங் காதேயிருந்தவா! -- கொண்டிருந்த
பாம்புரவி தாயல்ல பாருரளி தாயல்ல
வாம்புரவி தாய வகை. [78]
என்றும், அவன் துலா புருடதானம் செய்த சிறப்பினைப் பாராட்டி,
தொழுகின்ற மன்னர் சொரிந்திட்ட
செம்பொற் றுலாத்திடைவண்டு
உழுகின்ற தார்க்கண்டன் ஏறிய
ஞான்றின் உவாமதிபோய்
விழுகின்ற தொக்கும் ஒருதட்டுக்
காலையில் வேலையில்வந்து
எழுகின்ற ஞாயிறொத் தான்குல
தீபன் எதிர்த்தட்டிலே. [79]
என்றும், இராசராசனுடைய தேவி ஊடல் காரணமாகக் கதவடைத்துக் கொண்டிருந்த காலையில்,
கரத்தும் சிரத்தும் களிக்குங் களிறுடைக் கண்டன் வந்தான்
இரத்தும், கபாடம் இனித்திறப் பாய், பண்டிவன் அணங்கே
உரத்தும் சிரத்தும் கபாடம் திறந்திட்ட துண்டு, இலங்கா
புரத்தும் கபாட புரத்தும்கல் யாண புரத் தினுமே. [80]
என்றும் பாடியதாகப் பாடல்கள் தமிழ்நாவலர் சரிதையில் காணப்படுகின்றன. அரசி ஊடலாய்க் கதவடைத்துக் கொண்டிருந்த பொழுது இவர் மேற்கண்ட பாடலைப் பாட, அரசி சினந்தணியாளாய், கதவடைத்து ஒரு தாழ்ப்பாள் போட்டுக் கொண்டிருந்தவள் இரட்டைத் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டாள் என்றும், அன்றிலிருந்து 'ஒட்டக்கூத்தர் பாடலுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்' என்ற மொழி நாட்டில் எழுந்தது என்றும் கூறுவர்.
------------
[78]. தமிழ் நாவலர் சரிதை (கழகப் பதிப்பு): 125.
[79]. தமிழ் நாவலர் சரிதை (கழகப் பதிப்பு): 127.
[80]. தமிழ் நாவலர் சரிதை (கழகப் பதிப்பு) 128.
ஒரு சமயம், அரண்மனைச் சமையற்காரன் அரசனுக்காகச் சமைத்த உணவில் கல்லும் மண்ணும் கலந்திருந்ததைக் கண்டு, அரசன் அடங்காச் சீற்றங்கொண்டு சமையற்காரனுக்குத் தண்டனை கொடுக்க முன்வந்த போது, ஒட்டக்கூத்தர் தலையிட்டுச் சமையற்காரன் பிழையினை அரசன் பொறுத்தருள வேண்டும் என்று கூறும் போக்கிற் பின்வரும் பாடலைப் பாடிச் சமையற்காரனை உய்யச் செய்தார் என்பர்.
மீனகம் பற்றிய வேலையும் மண்ணையும் வெற்படங்கப்
போனகம் பற்றிய மாலலை யோ? பொருந் தாஅரசர்
கானகம் பற்றக் கனவரை பற்றக் கலங்கல் பற்ற
வானகம் பற்ற வடிவேல் விடுத்த மனதுங் கனே. [81]
-------------------
[81]. தமிழ் நாவலர் சரிதை (கழகப் பதிப்பு): 138
மேலும், குலோத்துங்கன் போலவே இராசராசனும் ஒட்டக்கூத்தர் மாட்டுப் பேரன்பு செலுத்தினான் என்பது பின்வரும் நிகழ்ச்சியால் விளங்கும். ஒருமுறை அவைக் களத்தில் வீற்றிருந்த ஒட்டக்கூத்தர், அவை கலைந்தபோது தம் வயது முதிர்ச்சியின் காரணமாகத் தாம் அமர்ந்திருந்த இருக்கையினின்றும் எழுந்திருக்கச் சிறிது தொல்லைப்பட்ட நிலையில், அதுபோது அரியணையிலிருந்து இறங்கி வந்து கொண்டிருந்த இராசராசன் இதனைக் கண்டுவிட்டு இரங்கி, ஒட்டக்கூத்தர் பெருமானுக்குக் கைகொடுத்து அவரை இருக்கையினின்றும் இறக்கி விட்டான் என்பர். அவன் தன்மாட்டுக் காட்டிய பேரன்பாலும் பெருமதிப்பாலும் மனம் உருகிய ஒட்டக்கூத்தர் பின்வரும் பாடலைப் பாடினார்.
கொலையைத் தடவிய வைவேல் அரக்கர் குலம்மடியச்
சிலையைத் தடவிய கையே யிது, செக தண்டத்துள்ள
மலையைத் தடவிய விந்தத் தடவி மலைந்தஒன்னார்
தலையைத் தடவி நடக்குங் கொல் யானைச் சயதுங்கனே. [82]
குலோத்துங்க சோழன் தில்லைக் கோவிந்தராசப் பெருமானைக் கடலில் தூக்கி எறிந்ததாக வரலாறு கூறும் . ஆனால் இராசராசன் அவ்வாறின்றிச் சமயப் பொறை மிகுந்தவன் என்பது 'விழுந்த அரிசமயத்தை மீள எடுத்தான்' என்று அவன் மெய்க்கீர்த்தி குறிப்பிடுவதனின்றும் அறியலாம். மன்னன் 'அரியைப் பாட வேண்டும்' என்று ஒட்டக்கூத்த ரை ஒரு ஞான்று கேட்ட தாகவும், அதுபோது பின்வரும் பாடலை அவர் பாடியதாகவும் தமிழ்நாவலர் சரிதை குறிப்பிடும்.
ஆரே யெனுமொன்று சொல்லத் தொடங்கினும் அவ்விடத்துன்
பேரே வரும் என்ன பேறுபெற் றேன் பெரு நான்மறையின்
வேரே, மிதிலையின் மின்னுட னேவெய்ய கான்நடந்த
காரே, கடல்கொளுந் தச்சிலை வாங்கிய காகுத்தனே. [83]
சிவபெருமானிடம் ஒட்டக்கூத்தர் பெரும்பக்தி செலுத் தியவர் என்பது அவர் திருநெய்த்தானத்துச் சிவபெருமானைச் சேவித்த பொழுது பாடிய பாடலால் அறியப்படும்.
சோணாட்டில் திரிபுவனம் என்ற புவனை மாநகரில் வாழ்ந்த செல்வன் சோமன் என்பான் ஒட்டக்கூத்தரைப் புரந்த வள்ளல் ஆவன்.
-------------------
[82]. தமிழ் நாவலர் சரிதை (கழகப் பதிப்பு): 137
[83]. தமிழ் நாவலர் சரிதை (கழகப் பதிப்பு): 139
நிழலருமை வெய்யிலிலே நின்றறிமின் ஈசன்
கழலருமை வெவ்வினையிற் காண்மின் - பழகுதமிழ்ச்
சொல்லருமை நாலிரண்டிற் சோமன் கொடையருமை
புல்லரிடத் தேயறிமின் போய். [84]
என்ற பாடலால் சோமன் கொடைப் பெருமை நன்கு வெளிப்படும். பழிகாரர் சிலர் ஒட்டக்கூத்தரைத் துரத்தி வந்தபொழுது சோமன் வாயிலிற்கு ஒடிச் சென்று ஒட்டக்கூத்தர் பாடியதாகத் தமிழ் நாவலர் சரிதையிற் பின்வரும் செய்யுள் காணப்படுகின்றது.
அடையென்பார் தள்ளென்பார் அன்பொன் றிலாமற்
புடையென்பார் தங்கடைக்கே போகேம் - கொடையென்றால்
முந்துஞ்சோ மாபுவனை முன்னவனே நின்குடைக்கீழ்
வந்துய்ஞ்சோ மாதலான் மற்று. [85]
மேலும், சோமன் ஒருகால் சோழ மன்னனைக் காண வேண்டி அரண்மனை வந்து, அரசனைக் காண அமயம் பார்த்து நின்றபோது, அரசனைக் கண்டு திரும்பும் கூத்தரை அரசனைக் காணத் தகுந்த சமயம் யாது?" என வினவ அதற்குக் கூத்தர் மறுமொழி கூறிய பாடல் வருமாறு:
தன்னுடைய தேவியர்க்குத் தார்வளவன் தானுரைப்பது
உன்னுடைய கீர்த்தி யுயர்நலமே - துன்னுபுகழ்ச்
சோமா திரிபுவனத் தோன்றலே நின்புகழை
யாமோ ருரைக்க வினி. [86]
-------------
[84]. ஒளவையார் தனிப்பாடல்
[85]. தமிழ் நாவலர் சரிதை: 134.
[86]. தமிழ் நாவலர் சரிதை: 133.
நெய்த்தானப் பெருமானை ஒட்டக்கூத்தர் பாடியதாகப் பின்வரும் செய்யுள் தனிப்பாடல் திரட்டில் காணப் படுகின்றது. இப் பாடலில் அமைந்துள்ள அரிய பொருள், வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்துவதாக இருக்கின்றது.
விக்கா வுக்கா வித்தா விப்போய்
விட்டா னட்டார் சுட்டூர் புக்கார்
இக்காயத்தா சைப்பா டுற்றே
இற்றே டிப்போய் வைப்பீர் நிற்பீர்
அக்காடப் பேய் தொக்கா டச்சூ
ழப்பா டத்தீ வெப்பா டப்பூண்
கெக்கா டக்கா னத்தா டப்போம்
நெய்த்தா னத்தா னைச்சே வித்தே. [87]
---------------------
[87]. தனிப்பாடல் திரட்டு; முதற்பாகம் : பாட்டு 61.
இப் பாட்டின் பொருள் வருமாறு:
"விக்கித் தளர்ந்து உயிர் உடலை விட்டுப்போய் விட்டால், உறவினர் பிணத்தைத் தகனஞ் செய்துவிட்டு ஊர்க்குள் போய்விடுவர். இத்தகைய இயல்புடைய உடம்பில் பற்றுவைத்து, செல்வத்தைத் தேடிச் சம்பாதித்து வீட்டிற்கொண்டு வைக்கின்றவர்களே! தாம் அணிந் திருக்கும் எலும்பு மாலை அசையும் பேய்கள் ஒருங்குகூடிக் கூத்தாடவும், சடையிற் சூழ்ந்திருக்கும் கங்கையானது அசையவும், திருக்கைகளில் வைத்திருக்கும் வெப்பமான நெருப்பு அசையவும், அச் சுடுகாட்டினிடத்தில் நடனஞ் செய்கின்ற அந்தப் பெருமை பொருந்திய நெய்த்தான மென்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானை வழிபட்டு நிலையான கதியைப் பெறுவீராக."
இவ்வாறாகத் தனிப்பாடல்கள் பலவுள. இவை அனைத்தும் ஒட்டக்கூத்தரே பாடியவைதானா என்பதில் சிலர்க்கு ஐயப்பாடு உண்டு. ஆயினும் இலக்கியச் சுவை நோக்கி இவை இங்கே ஒரளவு சுருக்கமாகக் கூறப்பட்டன.
கதைகள்
ஒட்டக்கூத்தர் பல்வேறு சமயங்களில் பலரைப் பாராட்டித் தனிப் பாடல்கள் பாடியிருக்கலாம். அப்பாடல்கள் தனிப்பாடற்றிரட்டு, தனிச் செய்யுட் சிந்தாமணி, தமிழ் நாவலர் சரிதை, விநோதரச மஞ்சரி, பெருந்தொகை ஆகிய நூல்களில் ஆசிரிய விருத்தம், கலிவிருத்தம், வெண்பா ஆகிய யாப்புகளில் காணப்படுகின்றன. இப் பாடல்களைக் கொண்டு கதைகள் பல கட்டியுள்ளனர். அவற்றில் பல கால முரண்பட்டன. ஒட்டக்கூத்தர் - கம்பர் கதை, ஒட்டக்கூத்தர் - புகழேந்தி கதை என்பன பின்வந்தோரின் கற்பனைப் படைப்புகள். இக்கதைகளில் ஒட்டக்கூத்தர், புகழேந்தி கதை விறுவிறுப்பும், சுவையும் மிக்கது. இப் பாடல்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு கூத்தரின் புலமைநலங் காண முற்படுதல் பொருந்தாச் செயலாகும்.
--------------------
3. ஆய்வும் முடிவும்
1. ஒட்டக்கூத்தரின் பெயர்க்காரணம்
ஒட்டக்கூத்தரின் இயற்பெயர் கூத்தர் என்றும், அம்பலக்கூத்தர் என்றும், ஆனந்தக் கூத்தர் என்றும் குறிப்பர் ஒரு சாரார். ஒட்டக்கூத்தர் என்பதில் ஒட்ட என்பதனை வினையெச்சமாகக் கொண்டு 'ஒட்டுதல்' என்ற பொருளும், 'ஒட்டம்' எனப் பெயராகக் கொண்டு 'பந்தயம்' என்ற பொருளும் அமைத்துக் கதைகள் பல புனையப்பட்டுள்ளதும் காணலாம். விக்கிரம சோழன் உலாவில் தாம் பாடிய ஒரு கண்ணியை ஒட்டிப் பாடியமையால் இப் பெயர் பெற்றார் என்றும், அரும்பைத் தொள்ளாயிரம் என்னும் நூலினை அரங்கேற்றிய பொழுது, அந்நூலில் உள்ள ஒரு செய்யுளைத் தனக்கு ஒட்டப் பாடும்படி விக்கிரம சோழன் சொல்ல, அவ்வாறே கூத்தர் பாடினமையால் இப்பெயர் பெற்றார் என்றும் கூறுவர். மேலும் புலவர் பலருடன் பந்தயம் வைத்துப் பாடிப் புகழ் பெற்ற காரணத்தால் ஒட்டக்கூத்தர் எனும் பெயர் பெற்றார் என்றும் கூறுவோர் உண்டு.
டாக்டர் மு. வரதராசனார் அவர்களால் எழுதப் பெற்று அண்மையில் சாகித்திய அக்காதெமியினர் வெளியிட்டுள்ள 'தமிழ் இலக்கிய வரலாறு' என்னும் நூலில் ஒட்டக்கூத்தர் பெயர்க்காரணம் பின்வருமாறு சுட்டப் படுகின்றது.
"அவர் (ஒட்டக்கூத்தர் ஒரிசா நாட்டோடு பெற்றிருந்த தொடர்பு காரணமாக ஒட்ட (ஒரிசா நாட்டு) என்ற அடையுடன் ஒட்டக்கூத்தர் என வழங்கப் பெற்றார்." [88]
முதற் குலோத்துங்கனின் கலிங்க வெற்றிக்குப் பிறகு, தமிழர் கலிங்க நாட்டோடு - ஒரிசாவோடு நெருங்கிய தொடர்புகளை வளர்த்துக் கொண்டிருக்கக்கூடும். எனவே அம்முறையில் சோழ மன்னர்களின் அவைக்களப் புலவராகவும், ஆசிரியராகவும், இலக்கியச் செம்மலாகவும் விளங்கிய ஒட்டக்கூத்தர் ஒரிசா நாட்டிற்குப் பன்முறை சென்று வந்திருக்கலாம். அதுவும் அரசியற் பணியின் பொருட்டுச் சென்று வந்திருக்கலாம். இக்காரணம் பற்றி இவர் 'ஒட்டக்கூத்தர்' என்று அழைக்கப்பட்டார் என்னும் டாக்டர் மு. வ. அவர்கள் கூற்று ஆய்வுக்குப் பொருந்துவதேயாகும்.
---------------
[88]. தமிழ் இலக்கிய வரலாறு பக். 157.
2. ஒட்டக்கூத்தர் பிறந்த ஊர்
"சேலேய் விழிமடவாரில் செங்கா லன்னம்சேர் பழனப்
பாலேய் மணவயிற் கூத்த."
என்னும் தனிப்பாடல் ஒன்று கொண்டு, இவர் 'மணவை' எனும் ஊரினர் என்பர். இம் 'மணவை' என்னும் ஊர் 'மணக்குடி'யாக இருக்கலாம் என்று கொண்டு அவ்வூரினைத் திருத்துறைப் பூண்டிக்கு எட்டு மைல் தொலைவில் உள்ள ஊராகக் கருதுவர். இவ்வூரில் இன்றும் செங்குந்தர்கள் மிகுமியாக வாழ்கின்றனர். மேலும், இவ்வூரின் மேலைத் தெருவின் வடபுறம் ஒட்டுக் கட்டடம் ஒன்று உள்ளது. இதுவே கூத்தர் பிறந்த இல்லம் என்று கருதுவர்.
இனி 'காழிவொட்டக் கூத்தன்' என்று இவர் பாராட்டப்படுவது கொண்டு, இவர் சீகாழியில் பிறந்தவர் என்பர். 'காழியொட்டக் கூத்தன்' என்பது பாடமில்லை, 'காளியொட்டக் கூத்தன்' எனபதே பாடம் எனக் கொண்டு அக் 'காளி' எனும் சொல், ஒட்டக்கூத்தரின் சம காலத்துப் புலவராகிய 'நம்பிகாளி' எனும் புலவரைக் குறிப்பிட்டு நிற்கிறது என்பர். ஒட்டக்கூத்தர் காளிதேவியின் அருள் பெற்றவர். எனவே 'காளியொட்டக் கூத்தர்' என அழைக்கப்பெற்றார் என்பர்.
அடுத்து, தஞ்சை மாவட்டத்தில் பூந்தோட்டம் ரயில் நிலையத்திற்கு மூன்று கல் தொலைவில் அமைந்துள்ள கூத்தனூரே ஒட்டக்கூத்தர் பிறந்த ஊர் என்பர். விக்கிரம சோழன் முற்றுாட்டாக புலவர்க்குப் பரிசாக இவ்வூரினைத் தந்துள்ளானேயன்றிக் கூத்தர் பிறப்பிடம் இவ்வூர் ஆகா தென்பர்.
தண்டியலங்கார மேற்கோள் செய்யுளொன்றில் 'மலரி வரும் கூந்தன் தன் வாக்கு' எனும் தொடரால் ஒட்டக்கூத்தர் ஊர் மலரி என்பர்.
கல்வெட்டு ஆராய்ச்சிப் பேரறிஞரான திரு. டி. வி. சதாசிவப் பண்டாரத்தார் கலைக்களஞ்சியம், தொகுதி இரண்டில் ஒட்டக்கூத்தர் பிறந்த ஊர் பற்றிப் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
"இப்புலவர் பிறந்தது மலரி என்னும் ஊர். இவ்வூர், திருச்சிராப்பள்ளிக்கு அண்மையில் இக் காலத்தில் திருவரம்பூர் என்று வழங்கிவரும் திருஎறும்பியூரே என்பது அங்குள்ள கோயிற் கல்வெட்டால் உறுதி எய்துகின்றது." [89]
எனவே கூத்தர் மலரியிற் பிறந்து, சீகாழியில் சிலகாலம் வாழ்ந்து, கூத்தனூரில் இறுதிக் காலத்தைக் கழித்து, இயற்கை எய்தியவர் என்று முடிவுக்கு வரலாம்.
---------------
[89]. கலைக்களஞ்சியம் : தொகுதி 2 : பக், 654.
3. ஒட்டக்கூத்தர் பொறுக்காத மனமும் புலமைக் காய்ச்சலும் கொண்டவரா?
ஒட்டக்கூத்தர் பல்வேறு சமயங்களில் பலரைப் பாராட்டித் தனிப்பாடல்கள் பாடியிருக்கலாம். அப் பாடல்கள் தனிப்பாடல் திரட்டு, தனிச் செய்யுட் சிந்தாமணி, தமிழ் நாவலர் சரிதை, விநோதரச மஞ்சரி, பெருந்தொகை ஆகிய நூல்களில் ஆசிரிய விருத்தம், கலி விருத்தம், வெண்பா ஆகிய யாப்புக்களில் காணப்படுகின்றன. இப்பாடல்களைக் கொண்டு கதைகள் பல கட்டியுள்ளனர். அவற்றில் பல கால முரண்பட்டன. ஒட்டக் கூத்தர் - கம்பர் கதை, ஒட்டக்கூத்தர் - புகழேந்தி கதை என்பன பின்வந்தோரின் கற்பனைப் படைப்புகள் என்று உறுதியாக நிறுவலாம். இக் கதைகளில் ஒட்டக்கூத்தர். புகழேந்தி கதை விறுவிறுப்பும் சுவையும் மிக்கது. இப்பாடல்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு கூத்தரின் புலமை நலங் காண முற்படுதல் பொருந்தாச் செயலாகும்.
புலவர் போட்டியும் பொறாமையும் இக்கால (ஒட்டக் கூத்தர் கால) இலக்கிய வளர்ச்சிக்கு ஒரு தூண்டுதலாக இருந்துள்ளது என்றும், இவர் காலத்துப் புலவர்களாகிய கம்பர், புகழேந்தி, ஒளவை முதலானோருடன் காழ்ப்புக் கொண்டு பூசலிழைத்துக் கொண்டேயிருந்திருக்கலாம் என்றும், சோழ மன்னர்க்குச் சமயப் பொறையில்லாதது போலவே இவர்க்கு (ஒட்டக்கூத்தருக்கு) புலமைப் பொறையும் இல்லாமை உணரப்படுகின்றது என்றும் அறிஞர் கருதுவர். [90]
--------------
[90]. டாக்டர் மு. கோவிந்தசாமி, இலக்கியத் தோற்றம்: பக். 133.
கல்வெட்டுப் புலமையும், நடுவுநிலை நெஞ்சும், ஆராய்ச்சி வித்தகமும் நிறைந்த அறிஞர் சதாசிவ பண்டாரத்தார் பின்வருமாறு எழுதியுள்ளார்:
"இவர் காலத்திருந்த புலவர்கள் நம்பிகாளியார், நெற்குன்றவாண முதலியார், தமிழ்த் தண்டியாசிரியர், தக்கயாகப்பரணி உரையாசிரியர், தொல்காப்பியத்திற்கு உரைகண்ட பேராசிரியர் முதலானோர் ஆவர். கம்பர், புகழேந்தி, சேக்கிழார் ஆகியோர் இவர் காலத்தில் இருந்தவர்கள் என்பது சிலருடைய கொள்கையாகும்; அதற்குத் தக்க ஆதாரங்கள் இல்லை என்பது அறியத்தக்கது. அவர்களுள் புகழேந்திப் புலவர் இவருக்குச் சற்றேறக் குறைய நூறாண்டுகளுக்குப் பிற்பட்டவர். எனவே, இவருக்கும் அப் புலவருக்கும் வாதப் போர் நிகழ்ந்தது என்றும், இவர் தூண்டுதலால் அவர் சோழ மன்னனால் சிறையிடப் பட்டார் என்றும் கூறப்படும் செய்திகள் எல்லாம் வெறுங் கற்பனைக் கதைகளேயன்றி உண்மையான சரித்திர நிகழ்ச்சிகள் ஆகமாட்டா என்பது திண்ணம்: இவர் புலவர் பெருமக்களிடத்தில் பேரன்பும் பெருமதிப்பும் வைத்திருந்தார் என்பதை இவருடைய நூல்களால் நன்குணரலாம்.
இவரை ஆதரித்தவர்கள் மேலே குறிப்பிடப்பெற்ற சோழ மன்னர் மூவரும் அவர்களுடைய அமைச்சர்களும் படைத் தலைவர்களுமான அரும்பாக்கிழான் மணவிற் கூத்தன் காலிங்கராயன், திருச்சிற்றம்பலமுடையான் பெருமானம்பி என்பவர்களும், காவிரிப் பூம்பட்டினத்து வீரர்கள் புதுவைக் காங்கேயன், திரிபுவனைச் சோமன் ஆகியோரும் ஆவர். [91]
----------
[91]. அ. கலைக்களஞ்சியம்; இரண்டாந் தொகுதி: ப. 655.
டாக்டர் மு. வ. அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுவர் :
"அவர் (ஒட்டக்கூத்தர்) இலக்கண இலக்கியங்களில் வல்லவர். வடமொழிக் கல்வியும் நிரம்பியவர். பழைய மரபுகளை விடாமல் போற்றி, பிறர் செய்யும் தவறுகளைக் கடுமையாக எடுத்துரைத்துக் கடிபவர்... புகழேந்திப் புலவர் ஒட்டக்கூத்தருக்குப் பிறகு சில நூற்றாண்டுகள் கழித்து வந்தவர்." [92]
இனி, இதுகுறித்து நாம் ஒரு முடிவுக்கு வருவோம். ஒட்டக்கூத்தனெனப் பெயர் தரித்த புலவனொருவன் ஏதோ கவிகள் பாடி வந்ததைக் கேட்ட தத்துவப் பிரகாசர் என்ற புலமைப் பெரியார்,
பறியாரோ நின்வாயிற் பல்லதனைப் பாரோர்
முறியாரோ நின்முதுகின் முள்ளைச் - சிறியவொரு
மட்டப்பேர் போதாதோ வாக்கிதுவே யானக்கால்
ஒட்டக்கூத் தன்றா னுனக்கு. [93]
என்று கூறியுள்ளதாகப் பாடல் ஒன்று தமிழ் நாவலர் சரிதையிற் காணப்படுகின்றது.
இப் பாடலால் ஒட்டக்கூத்தர் தம் புலமைச் சிறப்பும், போலிப் புலவர்களைக் கண்டிக்கும் திறமுமே விளங்குகின்றன.
அடுத்து,
பாட்டுத் தொடுக்கும் புலவோர்க்குக் கூத்தன் பயப்படல்பே
தாட்டுக் கடற்புலி யஞ்சலன் றோவறுத் துக்கிடந்த
சூட்டுக் கதிர்க ணிலத்தடங்கா மற் றொகுத்துமள்ளர்
மேட்டுக் குவாலிடும் பொன்னிநன் னாடுடை வேற்கண்டனே.
என்னும் பாடல் தமிழ் நாவலர் சரிதையிற் [94] காணப்படுகின்றது. இப் பாடலின் கொளு, 'அது கவிகளை அறுத்த போது புலவரெல்லாம் வெகுள, ஒட்டக்கூத்தர் பாடியது' என்று அமைந்துள்ளது.
--------
[92]. தமிழ் இலக்கிய வரலாறு: பக். 157, 158.
[93]. தமிழ் நாவலர் சரிதை; பாட்டு: 235:
[94]. தமிழ் நாவலர் சரிதை; பாட்டு: 129.
இப்பாடலுக்கு உரை வேந்தர் ஒளவை துரைசாமிப் பிள்ளை அவர்கள் எழுதியுள்ள 'குறிப்பு' வருமாறு :
"புன்மையும் வழுவும் நிறைந்த கவிகளால் தமிழிலக்கியத்தின் பொலிவழிக்கும் புன்கவிகளை ஒட்டக்கூத்தர் கண்ணோடாது ஒறுத்தது ஏனைப் புலவரெல்லார்க்கும் அவர் மேல் வெகுளியை விளைத்தது. அதனால் அவர்களும் அவர் வழி வந்தவர்களும் அவர்மேல் பொய்க் கதைகள் பல புனைந்து பரப்பினர். ஒட்டக்கூத்தர் அவர் செய்கைக்கு அஞ்சாமல் இப்பாட்டைப் பாடினார்". [95]
"இப்பாட்டு, கூத்தர் செய்ததுதானா என்பது ஐயத்திற்கிட மானது" என்பர் அறிஞர் திரு. மு. அருணாசலம் [96].
அடுத்து, "இது கவிஞரை வெட்டவேண்டாமென்று ஒட்டக்கூத்தரை நெற்குன்றவாண முதலியார் பாடியது" என்ற கொளுவமைத்து தமிழ் நாவலர் சரிதையில் பின் வரும் பாடல் காணப்படுகின்றது:
கோக்கண்ட மன்னர் குரைகடற் புக் கிலர் கோகனகப்
பூக்கண்ட கொட்டியும் பூவா தொழிந்தில பூவில் விண்ணோர்
காக்கண்ட செங்கைக் கவிச்சக்ர வர்த்தியின் கட்டுரையாம்
பாக்கண் டொளிப்பர் களோகவி பாடிய பாவலரே. [97]
------------------
[95]. தமிழ் நாவலர் சரிதை; பாட்டு : 129 உரை.
[96]. தமிழ் இலக்கிய வரலாறு; 12ஆம் நூற்றாண்டு; பக். 351.
[97]. தமிழ் நாவலர் சரிதை; பாட்டு 130.
புலவர்கள் பிழை பொறுக்கலாற்றாது அவர்கட்குத் தண்டனை தந்த ஒட்டக்கூத்தர், சோழவேந்தனது சமையற்காரர், ஒருமுறை சமைத்த உணவில் கல்லும் மண்ணும் கலந்திருக்கக் கண்டு, அதனைப் பொறாது சோழ மன்னன் அவனைத் தண்டஞ் செய்ய முற்பட்டபோது, அதனை விலக்கக் கீழ்க்காணும் பாடலைப் பாடியதாக அறிய வருகிறோம்.
மீனகம் பற்றிய வேலையு மண்ணையும் வெற்படங்கப்
போனகம் பற்றிய மாலலை யோபொருந் தாவரசர்
கானகம் பற்றக் கணவரை பற்றக் கலங்கல் பற்ற
வானகம் பற்ற வடிவேல் விடுத்த மனதுங் கனே. [97]
இதனால் ஒட்டக்கூத்தரின் இரக்கவுள்ளம் இனிது புலப்படும். போலிப் புலமையைப் பாராட்டித் தமிழிற்குத் தலையிறக்கம் தாராமல் போலிப் புலவர்களைக் கடுமையாகச் சாடி, உண்மைப் புலமையே உலவ வழிவகை செய்தார் ஒட்டக்கூத்தர் என்றே கொள்ளலாம். மேலும் தனிப்பாடல் திரட்டில் 'பொற்களந்தைப் படிக்காசுத் தம்பிரான் பாடியது' என்ற தலைப்பில் கீழ்க்காணும் பாடல் காணப்படுகின்றது.
குட்டுதற்கோ பிள்ளைப்பாண்டிய னிங்கில்லைக்
குறும்பியளவாக் காதைக் குடைந்துதோண்டி
எட்டினமட் டறுப்பதற்கோ வில்லியில்லை
இரண்டொன்றா முடிந்துதலை யிறங்கப்போட்டு
வெட்டுதற்கோ கவியொட்டக் கூத்தனில்லை
விளையாட்டாக் கவிதைகளை விரைந்துபாடித்
தெட்டுதற்கோ வறிவில்லாத் துரைகளுண்டு
தேசமெங்கும் புலவரெனத் திரியலாமே. [98]
'போலிப் புலவர்களைப் பற்றிப் பாடியது' என்ற தலைப்பில் இப்பாடல் அமைந்துள்ளது.
-------------------
[97]. தமிழ் நாவலர் சரிதை; பாட்டு: 138.
[98]. தனிப்பாடற்றிரட்டு; முதற் பாகம்: பக். 233.
இப்பாடலில் போலிப் புலவர்களைக் கண்டித்துத் தண்டஞ் செய்பவர்களாகப் பிள்ளைப் பாண்டியனும், வில்லிபுத்தூரரும், ஒட்டக்கூத்தரும் ஆகிய மூவர் குறிப்பிடப் பெறுகின்றனர். இதனால் ஒட்டக்கூத்தர் பொறாத மனங்கொண்டு புலவர்களை யொறுத்து வந்தார் என்பது பிழை; போலிப் புலவர் மாட்டே கடுமையாக இருந்தார் என்பது வெளிப்படை. சமையற்காரனைத் தண்டத்திலிருந்து தப்புவித்த நன்மனம் ஒட்டக்கூத்தருடையது.
மேலும் சோழ மன்னர்கள் பலர் சமயப் பொறை வாய்ந்தவர்கள். முதலாம் இராசராசன் நாகப்பட்டினத்தில் பெளத்த விகாரம் - சூடாமணி விகாரம் ஒன்று எழுப்பினான். இரண்டாம் குலோத்துங்கன் மட்டுமே சமயப் பொறை அற்றவனாகக் காணப்படுகின்றான். அந்நிலைக்கும் காரணம் அவன் காலச் சமயச் சூழ்நிலையே என்பர். இரண்டாம் இராசராசன் 'விழுந்த அரி சமயத்தை மீள எடுத்தான்' என்று அவனுடைய மெய்க்கீர்த்தி கூறுவதோடு, ஒட்டக்கூத்தரை அரியைப் பாடுமாறு கேட்க, அவரும் அவ்வாறே திருமாலைச் சிறப்பித்து ஒரு பாடல் [99] பாடினார் என்பதும் விளங்குகின்றன.
எனவே, அறிஞர் திரு. தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் அவர்களின் கீழ்க்காணும் கருத்தே ஒட்டக்கூத்தர் நன்னெஞ்சம் சான்ற நல்லவர் என்பதனைப் புலப்படுத்தும் சான்றாக அமையும்:
"இவர் இரு வேறுலகத்தியற்கைக்கு முரணாகத் திருமகள், கலைமகள் ஆகிய இருவரது திருவருட் பேற்றிற்கும் உரியவராகப் பெருஞ் செல்வமும் அருங் கல்வியும் எய்திச் சிறந்து வாழ்ந்தவர். செய்ந் நன்றியறிதல், பிற புலவர் பெருமக்களை உளம் உவந்து 'பாராட்டுதல்' மாணாக்கர்கட்குப் பாடஞ் சொல்லி அன்னாரை நல்வழிப்படுத்துதல் ஆகிய உயர்ந்த குணங்கள் இவர்பால் நன்கு அமைந்திருந்தன என்பதற்குப் பல எடுத்துக்காட்டுக்கள் உள்ளன." [100]
-----------------
[99]. தமிழ் நாவலர் சரிதை: 139.
[100]. கலைக்களஞ்சியம்; இரண்டாந் தொகுதி: பக், 654.
4. ஒட்டக்கூத்தர் "ஈட்டி எழுபது" என்னும் நூலைப் பாடினாரா?
அறிஞர் கா. சுப்பிரமணிய பிள்ளை அவர்கள், "அவர் (ஒட்டக்கூத்தர்) அம்மரபின் (செங்குந்தர் மரபு) பெருமை விளங்க ஈட்டியெழுபது என்னும் நூலினைப் பாடியுள்ளார்" என்று குறிப்பிட்டுள்ளார். [101]
அறிஞர். மு. இராகவையங்கார் அவர்கள், "இப்புலவர் (ஒட்டக்கூத்தர்) பாடிய நூல்களிலே ஈட்டியெழுபது என்பதும் ஒன்று. இஃது இவரது குலப் பெருமைகளையெல்லாம் கம்பீரமாக விளக்குவது." என்று குறிப்பிடுவர். [102]
அறிஞர் திரு. மு. அருணாசலம் அவர்கள் "இது (ஈட்டி எழுபது) ஒட்டக்கூத்தர் செய்ததன்று" [103] என்பர்.
-----------------
[101]. இலக்கிய வரலாறு: பக்கங்கள் 372.
[102]. செங்குந்தர் பிரபந்தத் திரட்டு: பிரபந்த ஆராய்ச்சியுரை.
[103]. தமிழ் இலக்கிய வரலாறு 12 ஆம் நூற்றாண்டு: பக். 435
ஒட்டக்கூத்தர் தக்கயாகப் பரணி பாடிய பின்பே ஈட்டியெழுபது பாடியவர் என்பது,
எந்தையா யம்மைபாகத் திறைவனை வணங்கியாமே
பைந்தமிழ்ப் பரணிசெய்த பாடலோடு
என்னும் ஈட்டிஎழுபதுத் (பாடல் 63) தொடரால் அறியப்படும்.
எனவே, தாம் பிறந்த செங்குந்தர் குலச் சிறப்பு விளங்க ஒட்டக்கூத்தர் ஈட்டியெழுபது பாடினார் எனலாம்.
5. ஒட்டக்கூத்தர் உத்தர ராமாயணம் பாடினாரா?
"இராமாயண உத்தரகாண்டம் இவர் (ஒட்டக்கூத்தர்) எழுதியதாகக் கூறப்படுவதனை ஏற்கத் தடையுள்ளது" என்பர் டாக்டர் மு. கோவிந்தசாமி அவர்கள். [104]
அறிஞர் மு. அருணாசலம் அவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்:
"இங்கு நாம் பார்க்கவேண்டுவது, கூத்தர் உத்தரகாண்டம் பாடினார் என்பதற்குரிய சான்று: நெடுங்காலமாக வழங்கி வரும் வழக்கு இவர் பாடினாரென்பது. தாம் இளைஞராயிருந்த பொழுது ஒரு பேரிலக்கியம் பாட இவர் எண்ணினார். இராமாயணம் ஞாபகம் வந்தது. அதன்மேல், முன்னமே கம்பர் இராமாயணத்தைப் பாடி முடித்திருந்தமையால் அவர் பாடாது விட்ட உத்தரகாண்டப் பகுதியை மட்டும் தாம் பாடி முடித்தார் என்று கருதுவது பொருந்தும்." [105]
ஆயினும் ஒட்டக்கூத்தர் உத்தரகாண்டம் பாடினார் என்றோ பாடவில்லை என்றோ கொள்வதற்குத் தகுந்த ஆதாரங்கள் கிடைக்கவில்லை. நெடுங்காலமாக வழங்கி வரும் வழக்கால் ஒட்டக்கூத்தர் உத்தரகாண்டம் பாடினார் என்று கொள்ளலாம். அவ்வளவே! தகுந்த சான்றுகள் மேற்கொண்டு கிடைக்கும்வரை இக் கருத்தினையே வைத்துக் கொள்ளலாம்.
-------------
[104] . இலக்கியத் தோற்றம்: பக். 182,
[105]. தமிழ் இலக்கிய வரலாறு: 12 ஆம் நூற்றாண்டு: பக். 415, 416.
6. 'கோவை யுலா அந்தாதிக்கு ஒட்டக்கூத்தன்' என்னும் கூற்று எந்த அளவிற்குப் பொருத்தமுடைத்து?
ஒட்டக்கூத்தர் 'நாலாயிரக் கோவை' என்றொரு நூல் செய்ததாகச் சோழமண்டல சதகம் கூறும்:
புதுவைச் சடையன் பொருந்துசங் கரனுக் ,
குதவித் தொழில்புரி யொட்டக் கூத்தனைக்
கவிக்களி றுகைக்குங் கவிராட் சதனெனப்
புவிக்குயர் கவுடப் புலவனு மாக்கி
வேறுமங் கலநாள் வியந்துகாங் கயன்மேற்
கூறு நாலாயிரக் கோவைகொண் டுயர்ந்தோன்.
தம்மை ஆதரித்த புதுவைக் காங்கேயன் மீது நாலாயிரக் கோவை என்னும் நூலினை ஒட்டக்கூத்தர் பாடியதாகத் தெரிகிறது. அந்நூல் இன்று கிடைக்காமையினால் இது குறித்து மேலும் ஒன்றும் கூறுவதில்லை.
'உலா' என்னும் பிரபந்தம் பாடுதலில் ஒட்டக்கூத்தச் வல்லவர் என்பதற்குச் சில சான்றுகளை 'மூவருலா' க் கொண்டு நிறுவலாம்.
கூத்தரின் காவியப் புலமை
இராமாயணமும், பாரதமும் இந்திய நாட்டின் இரு கண்கள்; இதிகாசம் எனப் போற்றப்படும் இலக்கியங்கள். இவ் விலக்கிய நிகழ்ச்சிகள் சங்ககாலந்தொட்டே தமிழகத்தில் புலவரால் கவிதைகளில் மேற்கோளாகக் காட்டப்பட்டன. காலம் செல்லச்செல்ல இக்கதைகள் இலக்கிய உலகில் பெரும்பங்கு பெற்றன. கூத்தர் இக் காப்பியங்களில் நல்ல பயிற்சி உடையவரே என்பது மூவர் உலாவால் வெளிப்படுகின்றது.
இராமன் மிதிலையில் வில்லை உடைத்த நிகழ்ச்சியை, 'மாதை, ஒறுக்கும் மிதிலை யொருவில்லைத் தொல்லை, இறுக்கு மவனிவனென்பார்' (குலோத்துங்க: 116) என்ற கண்ணியிற் காணலாம். இராமன் கடலின் மீது அம்பெய்த நிகழ்ச்சியைப் பின்வரும் அடிகளால் குறிப்பிடுகின்றார்.
-- முற்கோலி
வட்ட மகோததி வேவ வொருவாளி
விட்ட திருக்கொற்ற விற்காணீர்"
-- இராசராச: 84
-- மாதண்ட
ழற்றக் கடல்கிடந்து வேவ முனிந்தின்னம்
கொற்றத் தனிவிற் குனியாதோ?"
-- இராசராச: 310
-- பொருது
சிலையால் வழிபடு தெண்டிரையைப் பண்டு
மலையால் வழிபட வைத்தோன்"
-- இராசராச: 12
-- தென் திசையில்
நீரதிரா வண்ணம் நெடுஞ்சிலையை நாணெறிந்த
வீரதரா வீரோ தயா"
-- இராசராச: இறுதிவெண்பா
என்ற கண்ணியில் இராவண சங்காரத்திற்குரிய காரியங்களைப் பற்றித் தன்னை சூழ்ந்து நிற்போரிடம் ஆலோசிக்கையில் கடல் முழக்கம் ஒருவர் பேசுவது மற்றவருக்குக் கேளாதபடி செய்ததால் சினங்கொண்டு வாளியை விட்ட இராமனைப் போன்ற வீரத்தையுடைய சோழன் என்று கூறுகிறார்.
இராமபிரான் இராவணனின் பத்துச் சிரங்களையும் வெட்டிய சிரத்தோன் என்று பின் வரும் அடிகள் கூறும்.
மலைபத்தும் வெட்டும் உருமின் மறவோன்
தலைபத்தும் வெட்டும் சரத்தோன்."
-- குலோத்துங்க: 10
ஒட்டக்கூத்தர் பாரதத்திலிருந்து எடுத்துக்கூறிய அரிய செய்திகளால் புலவரது நுண்ணிய ஆராய்ச்சி புலனாகிறது. கண்ணபிரான் விடைப்பேரினம் தழுவிப் பின்னை என்ற மாதை மணந்ததைப் புலவர் கூறுகிறார்.
-- விடைப்பேர்
இனந்தழுவிப் பின்னையைக் கொள்வாய்"
-- குலோத்துங்க: 253
காளியன் என்ற பாம்பினுடைய படத்தில் கண்ணன் ஆடிய கூத்தையும் ஆயர் சேரியில் ஆடிய குடக்கூத்தையும் கூறுகிறார்.
"பாடிக் குழலூதிப் பாம்பின் படக்கூத்தும்
ஆடிக் குடக்கூத்தும் ஆடினார்"
-- இராசராச: 338
கண்ணன் ஆய்ச்சியரது துகில்களைக் கொண்ட செய்தியை
-- தோகையர்
நற்றுகில் கொண்ட நறுந்துழாய் மார்பாநின்
பொற்றுகில் தந்தருளிப் போதென்பார்"
-- குலோத்துங்க: 218
என்றும், கண்ணபிரான் நாரதருக்குப் பதினாயிரம் திருவிளையாடல்களைக் காட்டிய நிகழ்ச்சியை,
-- மாதவத்தோன்
சார்ந்த பொழுதனகன் தன்னை அறிவித்த
பூந்துரை யந்தப் புரம்போன்றும்"
-- விக்கிரம: 92
என்றும், கண்ணன் இரு மருதமரங்களை வீழ்த்திய செயலை,
"ஒருதன் அடியின் மடிய வுபய
மருது பொருத வயவன்."
-- குலோத்துங்க: 155
என்றும் கூறுகிறார்.
கூத்தரும் வருணனையும்
கவிஞர்கள் உள்ளதை உள்ளவாறே படம்பிடித்துக் காட்டும் ஓவியக்காரர்கள் அல்லர். அவர்கள் தம் மன உந்துதலால் அழகிய வருணனைகளைப் படிப்பவர் மனம் இன்புற அமைக்கின்றனர். கூத்தரின் வருணனைகளும், கற்பனைகளும் நம்மை இன்பக் கடலில் ஆழ்த்துகின்றன.
சுடர்க் கதிரோன் எழுந்ததும் ஆய வெள்ளமும் தலைவியும் சோலையில் வருதலைக் கண்டு மானினம் மருண்டு ஓடின. அன்னமும் சேவலும் விழித்தெழுந்து ஆரவாரித்தன. மஞ்ஞைகள் ஆசையோடு ஆடின. அவற்றின் ஆட்டத்திற்குத் தகுந்தாற்போல் கிளிக்குலம் கான மழை பொழிந்தனவாம். நாகணவாய்ப் புள்ளும் சேவலும் நகைத்து மொழி கூறவும் உழவர் அவற்றின் முகம் பாராமல் புறத்திலே முகத்தைச் சாய்த்துத் தங்கள் வேலையில் கவனம் செலுத்தினார்கள். தேனுண்டு மயங்கிக் கிடந்த வண்டு, கோவை செய்யும் களியாட்டம் கண்டு விரும்பி, அதற்கேற்பக் கபோதப் பேடும் சேவலும் தம்மிலே விளிக்கும் தன்மை கண்டு வியந்தனவாம். இவ்வாறு இயற்கைக் காட்சி ஒன்றை மிகவும் நயமாக வருணித்துள்ளார் புலவர். (குலோத்துங்க: 272 - 276)
குயில்களைப் பற்றிக் கூறுகையில் 'முற்றாத சொற் குதலைக் கோகுலங்கள்' (இராசராச: 165) என்று அழகாகக் கூறுகிறார்.
மகளிர் நீராடுதலை வருணித்துள்ளார். அவர்கள் நெடுநேரம் நீரிலே விளையாடினதால் ஏற்பட்ட நிலையைப் பின் வரும் அடிகளில் காணலாம்.
-- வெள்ளம்
படிய வருஞ்சிவப்பு வள்ளப் பசுந்தேன்
வடிய வருஞ்சிவப்பின் வாய்ப்ப"
-- இராச: 293
நீராடிய மகளிரது கண்கள் நீர் படிந்ததனால் சிவந்து விட்டனவாம். அவற்றிலிருந்து நீர் வழிந்த காட்சி கிண்ணத்திலிருந்து வடியும் செவ்வித் தேனை ஒத்திருந்ததாம்.
ஒட்டக்கூத்தரின் கற்பனையாற்றல் மிக்க வியப்பை அளிக்கின்றது. ஒவ்வோர் அடியும் மேன்மையான நயத்தை உடையதாயிருக்கின்றது. இவர் கற்பனையாற்றலை அறிவதற்குச் சில அடிகளை நோக்குவோம்.
-- சுடர்நோக்கும்
தானுடைய மெய்ந்நுடக்கம் தன்மா தவிக்களித்து
வானுடை மின்னுடக்கம் வாங்கினாள்."
-- விக்கிரம: 138
பெதும்பை மிக்க நாணமுடையவள் என்று கூறாது வானத்தில் தோன்றும் மின்னலினது துவளுதலை -- 'வானுடைய மின்னுடக்கம்' வாங்கினாள் என்று கூறுகின்றார்.
"திருவிருந்து தாமரையாய்ச் சென்றடைந்த வண்டின்
பெருவிருந்து பேணுங் குழலாள்."
-- விக்கிரம: 240
இவ்வடிகளில் அரிவையை அறிமுகப்படுத்தும்போது, 'பெருவிருந்து பேணுங்குழலாள்' என்று நயமாகக் கூறுகிறார். அவள் கேசத்தில் மலர்கள் விளங்கியதால் வண்டுகளுக்கு விருந்தளிக்கும் கூந்தலையுடையவள் என்று கூறுகிறார்.
ஒரு பேரிளம்பெண்ணின் செய்கையை அழகாகக் கூறுகிறார். பின்வரும் அடிகளின் மூலம் புலவரின் கற்பனையாற்றல் எல்லையைக் கடந்துவிட்டதென்றே கூறலாம்.
-- செம்மை
நிறையும் அழகால் நிகரழித்துச் செய்யாள்
உறையும் மலர்பறிப்பாள் ஒப்பாள்.
-- விக்கிரம: 309
அந்தப் பேரிளம்பெண் தன் சிவந்த கரத்தினால் தனக்கு நிகரான கமலத்தைக் கொய்தாளாம். அக்காட்சி எவ்வாறிருந்தது என்பதை நயத்துடன் இவ்வடிகள் கூறுகின்றன. தாமரையை அவள் கொய்தது தன்னிடம் எழிலிலும் தன்மையிலும் தோல்வியடைந்ந திருமகள் வீற்றிருக்கும் இடத்தைக் கைக்கொள்வது போல் இருந்ததாம். என்ன ஒப்பற்ற கற்பனை!
கூத்தரின் உவமைகள்
உவமை என்பது கவிஞரின் அனுபவ ஆற்றலையும், அறிவு முதிர்ச்சியையும் காட்டுவது. ஒட்டக்கூத்தரின் உவமைகள் அவருடைய நுண்மாண் நுழைபுலத்தைக் காட்டுகின்றன.
"அரியன நித்திலத்தின் அம்பொற் றொடித்தோள்
பரியன காம்பிற் பணைத்தும் "
-- விக்கிரம : 175
முத்தினாலாகிய வளையை அணிந்த தோளை மூங்கிலுக்கு ஒப்பிடுகிறார். மூங்கிலும் முத்து பிறக்கும் இடங்களில் ஒன்றாதலின் அதை ஓர் ஏற்றப் பொருளாக எண்ணி முத்துக்கள் விளங்கும் தோளுக்கு உவமையாக்கிக் கூறியுள்ளார்.
-- திருமார்பிற்
கார்க்கடன் மீதே கதிர்முத்தத் தாமங்கள்
பாற்கடல் போர்த்த தெனப்பரப்பி."
-- குலோத்துங்க : 68
கரிய நிறத்தை உடைய குலோத்துங்கனின் மார்பிற்குக் கார்க் கடலும், தோளின் மீது அணியப்பட்ட முத்து மாலைகளுக்குப் பாற்கடலும் உவமையாகக் கூறப்பட்டுள்ளன. இரு கடல்களையும் ஒருங்கே சேர்த்து விடுகிறார் கவிஞர்.
மேற்காட்டிய இலக்கிய எடுத்துக்காட்டுகளால் ஒட்டக் கூத்தர் உலாப்பாடுதலில் இலக்கிய உலகில் தலைசிறந்த இடத்தினை வகிக்கின்றார் என்பது தாமே போதரும்.
ஒட்டக்கூத்தர் பாடியதாக அந்தாதி ஏதும் நமக்கு இன்று கிடைத்திலது. இவர் பாடிய அந்தாதி, இவர் பாடிய வேறு சில நூல்கள் இன்று கிடைக்காமற் போனமை போன்றே இருந்து பிற்காலத்தே வழக்கு வீழ்ந்திருக்கலாம்.
இவர் பாடிய 'மூவருலா' கொண்டே இவர் புலமை நயத்தினை வியந்து பாராட்டலாம். எனவே 'கோவை உலா அந்தாதிக்கொரு ஒட்டக்கூத்தன்' என்ற புகழுரை பொருளுடையதேயாகும்.
7. தக்கயாகப் பரணி ஏன் பாடினார் ?
ஒட்டக்கூத்தர் தம்மைக் குலகுருவாகவும், ஞானாசிரியராகவும், அவைக்களப் புலவராகவும் பெரிதும் மதித்துப் போற்றிய
இராசராசனைத் தக்கயாகப் பரணியில் சிறப்பித்துள்ளார். இப்பரணியில் பல பெயர்கள் கூறி, இராச ராசனைப் பாராட்டுகின்றார்.
இராசராசன் சிறப்புப் பெயர்களாக இவர் குறிப்பிடும் எட்டுப் பெயர்களைப் பின்னிணைப்பில் காண்க.
இரண்டாவதாக, நல்ல பழுத்த சைவர் ஒட்டக்கூத்தர் என்பதால், சிவபெருமானுடைய சிறப்பினைக் கூறும் தக்கயாகப் பரணியினை
இயற்றினார் எனலாம். சிவபெருமானை 61 பெயர்களால் அழைக்கக் காணலாம். (பார்க்க: பின்னிணைப்பு)
மூன்றாவதாக தேவி உபாசகர் ஒட்டக்கூத்தர் என்பது நாம் அறிந்த செய்தியாகும். கலைமகளையும், கோயில் கட்டி வழிபட்டவர் இவர். எனவே தேவியின் - துர்க்கையின் - காடுகெழு செல்வியின் வீரமும் ஈரமும் ஒருங்கே பேசும் பரணியினை இயற்றினார் எனலாம். உமாதேவியின் திருப்பெயர்களாக இவர் 55 பெயர்களைக் குறிப்பிடுவர். (பார்க்க:
பின்னிணைப்பு). தம் புலமை நலந் தோன்றப் பரணி நூலினை யாத்தார் என்றுங் கொள்ளலாம்.
இறுதியாகத் திருஞான சம்பந்தர் பெருமானிடத்துத் தாம் கொண்ட ஈடுபாட்டினைக் காட்டுவதற்குப் பதினைந்து பெயர்களால்
திருஞான சம்பந்தர் பெருமானைச் சுட்டுகின்றார். (பார்க்க: பின்னிணைப்பு) சம்பந்தரிடத்தும் தாம் கொண்ட ஈடுபாட்டினைப் புலப்படுத்த ஒர் அரிய இடமாகக் கொள்ள - தக்கயாகப் பரணியினைத் தேர்ந்தெடுத்தாரோ என்று கருதும் வகையில், இப்பரணியின் இடையில் திருஞானசம்பந்தர் மதுரை சென்று சமணரை வாதில் வென்ற வரலாற்றுச் செய்தியினை வைத்துள்ளார்.
இதனைச் சிறிது விளங்கக் காண்போம்.
திருஞானசம்பந்தரிடம் ஈடுபாடு
ஒட்டக்கூத்தர் கைக்கோளார் என்று கூறப்படும் செங்குந்தர் மரபில் தோன்றியவர். சைவ சமயத்தவர்; சக்தி வழிபாட்டில் நாட்டம் மிக்கவர்; தம் நூல்களில் திருமாலைப் பற்றிய பெருமைகளைக் கூறி வணங்குதலால், சமயப் பொதுமை உடையவர் என்று இவரைக் கருதலாம். ஆயினும் கூத்தர் சிறந்த முருகபக்தர். தக்கயாகப் பரணியில் கோயில் பாடியது என்ற பகுதியில் திருஞானசம்பந்தர் வரலாறு காணப்படுகின்றது. இங்கே திருஞானசம்பந்தரை முருகப் பெருமானாகவே கூத்தர் காட்டுகின்றார். காளிதேவி, கோயிலில் வீற்றிருக்கின்றாள்; அப்போது கலைமகளை அழைத்துச் சம்பந்தர் சமணரை வென்ற வரலாற்றைக் கூறுமாறு கட்டளை யிடுகின்றாள். அவ்வாறே கலைமகளும் சம்பந்தர் வரலாற்றினைக் கூறுவதாகக் கூத்தர் பாடுகின்றார்.
தக்கயாகப் பரணி பாடுவதற்கு இவ்வாறு பலவாறான காரணங்கள் ஒட்டக்கூத்தருக்கு இருந்திருக்கக் கூடும் எனக் கருதலாம்.
8. ஒட்டக்கூத்தர் நூல்களிற் சில வழக்கு வீழ்ந்தமைக்குரிய காரணங்கள்
ஒட்டக்கூத்தர் செய்யுட்கள் மிடுக்குநடை வாய்ந்தன; எளிதிற் பொருள் அறியமுடியாதன; வடமொழிச் சொற்கள் விரவி நிற்பன என்பர் பேராசிரியர் ஏசுதாசன் அவர்கள். [106]
----------
106. Prof. C. Jesudasan and Hephzibah Jesudasan, History of Tamil Literature : "Ottakkuttar's style certainly arrests by its Miltonic tread . . . . . . The poet maintains a stately and dignified style, inclining to hardness rather than softness ...--- For Ottakkuttan's Tamil is a highly sanskritised Tamil, and just short of becoming Mani Pravala... Ottakkuttan’s achievement, then is a courtly style" - Pages 190 & 191.
வரம்பிகந்த வருணனைகளும், வடமொழிக் கலவை பெற்ற சொற்கள் அமைப்பும், கடினமான பல்வேறு வகைப் பட்ட யாப்பு வடிவங்களும் அமைந்த நடையினை ஒட்டக் கூத்தர் கையாண்டுள்ளார் என்றும், மன்னர்கள் நிகழ்த்திய போர்களைப் புகழ்ந்து பாடுதலைத் தவிர்த்து, நன்மைக்கும் தீமைக்கும் இடையே நடக்கும் போராட்டத்தைப் பாடத் தம் புலமையைப் பயன்படுத்தினார் ஒட்டக்கூத்தர் என்றும் பல்கலைச் செல்வர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் கூறுவர். [107]
------------
[107]. A History of Tamil Literature : p. 258
"He has developed a style full of exaggerations, sanskrit compounds and difficult varieties of metres. He must have felt that then ultra grand style becomes nothing but an unnatural exaggeration when applied to the description of ordinary battles which are becoming less and less glorious and less frequent. Therefore he conceived the idea of making use of this style to sing the glories of the universal fight between the good and the evil.’’
டாக்டர் மு. வ. அவர்கள் தாம் எழுதிய 'தமிழ் இலக் கிய வரலாறு' என்னும் நூலில், ஒட்டக்கூத்தர் நூல்கள் புலவர்களிடையே பெருவழக்கினைக் கம்பரது நூல் இராமாயணத்தின் அளவிற்குப் பெறாமற் போனமை குறித்துப் பின்வருமாறு காரணம் காட்டுவர்.
"கவிச்சக்கரவர்த்தி எனச் சோழ வேந்தரால் பட்டம் பெற்ற ஒட்டக்கூத்தர் மரபுகளைப் போற்றி நூல்கள் இயற்றினார். வாழ்வின் உணர்ச்சிகள் உந்த நூல்கள் இயற்றும் வாய்ப்பு அவர்க்கு இல்லை. ஆதலின், மக்களால் கவிச் சக்கரவர்த்தி எனப் போற்றப்பட்ட கம்பரின் நூல் எய்திய சிறப்பை ஒட்டக்கூத்தரின் நூல்கள் பெற முடியவில்லை. செய்யுள்கள், வருணனைகள் மிகுந்தனவாய்ச் செறிவு உடையனவாய் இருந்த போதிலும், அவற்றின் நடையில் இயல்பான ஒட்டம் அமையவில்லை. அவருடைய வாழ்வில் இருந்த பெருமிதமும் கடுமையும் அவர் இயற்றிய செய்யுள்களிலும் அமைந்தன; உள்ளத்து உணர்வின் செம்மையும் இனிமையும் படியவில்லை". [108]
--------------
[108]. தமிழ் இலக்கிய வரலாறு: ப. 258
9. தமிழ் இலக்கிய வரலாற்றில் ஒட்டக்கூத்தர் பெறும் இடம்
முதலாவதாக, ஒட்டக்கூத்தர் 'பிள்ளைத் தமிழ்' என்னும் பிரபந்த வகையினை விளங்கச் செய்யும் போக்கில் 'குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்' என்னும் நூலினைப் பாடினார். பெரியாழ்வார் கண்ணனைக் குழந்தையாக எண்ணிப் பாடிய பாடல்களை நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் காணலாம். ஆனாலும் 'பிள்ளைத் தமிழ்' என்றோர் இலக்கிய வகைக்கு இலக்கிய வடிவத்தினை முதற்கண் தந்தவர் ஒட்டக்கூத்தரே ஆவர்.
இரண்டாவதாக, ஒடடக்கூத்தர் பற்றி நாம் சிறப்பாகக் குறிக்கத்தக்க செய்தி, அவர் தாம் பாடியுள்ள நூல்களில் அரிய வரலாற்றுச் செய்திகள் பலவற்றினை ஆங்காங்கே பொதிந்து தந்துள்ள பெருஞ் சிறப்பாகும். சங்ககாலப் புலவரான பரணர் போன்றே ஒட்டக்கூத்தர் வரலாற்றுணர்வு வாய்ந்த புலவராகத் தமிழ் இலக்கிய வரலாற்றில் சிறந்து மிளிர்கின்றார். இவ்வுண்மையினை அறிஞர் தி. வை. சதாசிவப் பண்டாரத்தார் அவர்களின் 'பிற்காலச் சோழர் சரித்திரம்' எனும் நூலால் (பகுதி 2; பக்கங்கள், 44 - 118) நன்கு அறியலாம்.
முடிவுரை
ஒட்டக்கூத்தர் அப்பர் அடிகளைப் போல் நீண்டநாள் வாழ்ந்தவர். சொற்சுவையும், பொருட்சுவையும் திரம்பிய பனுவல்களை ஈந்தவர். செயங்கொண்டார் கலிங்கத்துப் பரணி என்னும் வரலாற்றுப் பரணியைப் பாட, ஒட்டக் கூத்தரோ தக்கயாகப் பரணி என்னும் சமயப் பரணியைப் பாடினார். பரணியில் புரட்சியை உண்டாக்கியவர் கூத்தர். இவர் தொடங்கிவைத்த இப் பரணிப் போக்கே அஞ்ஞவதைப் பரணி, பாசவதைப் பரணி, மோகவதைப் பரணி முதலிய பரணிகளுக்கு வழிகாட்டியாயிற்று. ஒட்டக் கூத்தருக்கு முன் திருக்கைலாய ஞான உலா போன்ற இறை உலாக்கள் தோன்றின. கூத்தரோ வரலாற்று உலாக்களை வடித்தார். பிள்ளைத் தமிழ் என்னும் பெரிய தமிழுக்கு வடிவும் வனப்பும் கொடுத்தார். இவர் புலவரில் புலவர்; கவிஞரில் கவிஞர். இவர் இயற்றிய நூல்கள் இவர் பெருமைக்குச் சான்றாக என்றும் விளங்கும்.
"இறைவாழி தரைவாழி நிறைவாழி
இயல்வாழி இசைவாழியே".
-------------
பின்னிணைப்பு
டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் தக்கயாகப் பரணி பற்றி ஆய்ந்துரைக்கும் சில ஆராய்ச்சியுண்மைகள் - செய்திகள் இவண் தரப்பட்டுள்ளன. இச் செய்திகள் ஆராய்ச்சி உலகிற்குக் கிடைத்துள்ள நல் விருந்தாயினமையின் அவற்றுள் சில பகுதிகள் இங்கே தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
1. பிற பரணி நூல்களுக்கும் தக்கயாகப் பரணிக்கும் இடையேயுள்ள வேறுபாடுகள்
1. மற்றப் பரணிகளைப் போலப் பாட்டுடைத் தலைவனுக்கு நன்மை உண்டாக வேண்டுமென்று வாழ்த்தாமல், ஆக்குவித்தோனுக்கு நன்மை உண்டாகும்படி தெய்வங்களை வாழ்த்தியிருத்தல்.
2. உமாபாகர், விநாயகர், முருகக் கடவுள், திருஞான சம்பந்தரென்னும் இவர்களை மட்டும் வாழ்த்தியிருத்தல்.
3. நூலுறுப்புகளின் பிறழ்ச்சி.
4. காடு பாடியது முதலியவற்றில் யாமள நூலின் முறைப்படி வருணித்திருத்தல்.
5. சைவத்தின் ஏற்றம் புலப்படும்படி திருஞான சம்பந்தர் சைனரை வென்ற கதையைத் தேவிக்கு நாமகள் கூறியது முகமாகப் புதிதாக விளங்கக் கூறியிருத்தல்.
6. கூழடுதலென்னும் உறுப்பிற் பேய்கள் கூழையாக்கிக் குடித்துப் பாட்டுடைத் தலைவனை வாழ்த்தாமல் இந்நூலை ஆக்குவித்த இராசராச சோழனைபும் அவன் முன்னோர்களையும் அவர்களுடைய நற்செய்கைகளையும் வாழ்த்துதலைக் கூறியிருத்தல்.
7. களங்காட்டுதலிற் காளி பேய்களுக்குக் களங்காட்டியதாகக் கூறியது போலன்றிக் கதைத் தொடர்பு புலப் படத் தேவிக்குச் சிவபெருமான் காட்டியதாகக் கூறியிருத்தல்.
8. ஆக்குவித்தோனிடத்துள்ள பேரன்பால் அவனைத் தனியே இறுதியில் வாழ்த்தியிருத்தல்.
2. வரலாறு தொடர்பான செய்திகள்
• இராச கம்பீரன் (இராசராசன் 2) பிட்டனை வென்று இரட்டனுக்குப் பட்டம் கட்டியது.
• இராசராசபுரி பல அரசர்களாற் காக்கப்படுதல்.
• இராசராசன் II தில்லைத் தலத்தில் தேர் அமைத்தது.
• அவன் பாண்டியரை வெல்லப் படைவிடுத்தது.
• அவன் மலையை வெட்டிப் பொன்னிக்கு வழி கண்டது.
• அவன் வஞ்சியில் வாகை புனைந்தது.
• ஒரு பாண்டியன் கை பொன்னானது.
• காவிரிப்பூம்பட்டினத்தார் வல்லவனை நடை கொண்டது.
• குலோத்துங்கன் II (தில்லையில்) ஏழ்நிலைக் கோபுரம் வகுத்த்து
• அவன் கோயிலுக்கு ஆனிரையையும் யானைகளையும் வழங்கியது.
• அவன் தில்லை மன்றிற்கு இடங் கண்டது.
• அவன் தில்லையில் மண்டபங்கள் அமைத்தது.
• அவன் தில்லையிற் கற்பகம் வைத்தது.
• அவன் மகோதைமேற் சென்றது.
• அவன் மதுரைமேற் சென்றது.
• அவன் (தில்லையில்) மறுகு வகுத்தது.
• சோழர் கருநடர் ஒளித்த விந்தவனத்தில் எரியிட்டது.
• சோழர் மலைகளிற் புலிவடிவம் பொறித்தது.
• தண்டகாபதியாகிய பல்லவராயன் (நம்பிப் பிள்ளை) சேரனைத் திறை கொண்டது.
• தெய்வப் பெருமாள் (முதல் இராசராசன்) இராசராசேசுவரம் அமைத்தது.
• பெரிய பெருமாள் (குலோத்துங்கன் II) தில்லை வனத்திற் பீடிகையமைத்தது.
• முதற் குலோத்துங்கன் வேதத்தழிவு மாற்றிச் சுங்கந் தவிர்த்த்து.
• விக்கிரமசோழன் கலிங்கரை வென்று தெய்வப் பரணி கொண்டது முதலியன.
3. சிவபெருமானுக்குக் கூத்தர் வழங்கும் பெயர்கள்
• அடிப்பெருங் கடவுள்
• அந்திப் போதனையான்
• அரன்
• அற்புதத்துயிர்க் கிழத்தி புக்குழி
• அனலன்
• ஆதிவானவன்
• ஆலமமுது செய்யுமையன்
• ஆலால மயிலுநாதன்
• இருவர்கட் கரியராமெங்கணாயகர்
• இருவரே தெரியவரியர்
• இறை
• இறைமலை வில்லி
• இறைவர்
• ஈசன்
• உமைவாழ்வதொருபாகர்
• ஐயன்
• கண்ணுதற் கடவுள்
• கண்ணுதன் முதற்கடவுள்
• கபால நிரைப்பேரார மார்புடைய வீரர்
• குன்ற வில்லி
• கொன்றையார்
• சடாடவி முடித்தேவர்
• சிங்கமுங் கற்கியும் பன்றியுஞ் செற்றவர்
• சிவன்
• சூலபாணி
• சேயோன்
• தலைவர்
• தனிமூல முதல்வர்
• தாராக வண்டந் தொடுத் தணிந்தோர்
• திரிபுரம் பொடிபடப் பொரும் பொருநர்
• தேவர் தேவர்
• தொல்லைநாயகர்
• நக்கர்
• நாதர்
• நாயனார்
• நிசிந்தர்
• பணி மதாணியோர்
• பரசுபாணி
• பரம்பரன்
• பரமன்
• பரன்
• பசிமேவுநாயகன்
• பிரான்
• புராரி
• பெருமான்
• பெருமானடி
• பொலஞ்செக்கர்ச் சடையான்
• மதியமூர் சடாமோலி மகிணர்
• மழுவார்
• மழுவாளியார்
• முக்கணெம்மாதி
• முத்தர்
• முப்பத்து முத்தேவராயவர் (தேவர் ஆயும் அவர்)
• முப்புரஞ் சுட்டவீரர்
• மூவராயவரின் முதல்வர்
• மேருதரர் •
• மேருவரையிற் கடவுள்
• ரசதக் குன்றவர்
• ராசராச புரேசர்
• வல்லவன்
• வெள்ளிமலைப் பெருமான்
--------------
4. தேவியின் பெயர்கள்
• அகிலலோகநாயகி
• அகிலலோக மாதா
• அகிலாண்ட நாயகி
• அந்திப்போதனை யானுடனாடுந்திரு
• அமலை
• அன்னை
• ஆரணாகாரி
• இகன்மகள்
• இமவான் மகள்
• இரணியருரம் பிளவு பட நடுமுகிரி
• இறைமகள்
• இறையாள்
• இறைவி
• உடையாள்
• உமை
• உயிர்க்கிழத்தி
• உலகினன்னை
• உலகுடைய செல்வி
• உவணவூர்தியூர்வாள்
• ஐயை
• ஒப்பரிய நாயகி
• கடவுணீலி
• கலையுகைப்பாள்
• கனகனாகமிரு கூறுபடு கூரேக நகநாயகி
• கான நாடி
• கெளரி
• திரிபுர பயிரவி
• தலைவி
• தொல்லைநாயகி
• நாயகி
• நிலாவீசு சடிலமோலி
• நூபுராதாரசரணி
• பங்கனகலத்திறைவி
• பச்சைவிளக்கு
• பணிமதாணி மார்பள்
• பத்ரகாளி
• பரம்பரன்றேவி
• பாகனகங் குழைவித்த பவித்ரபயோதரி
• பிரமற்குமம்மனை
• பிரமனைப் பண்டு பெற்ற பெருந்திரு
• புணரியிற்றுயில் வல்லி
• புவன நாயகி
• மங்கலமகள்
• மலைமகள்
• மாகாளி
• மாதேவி
• மாயோள்
• மூலநாயகி
• மோகினி
• மோடி
• யோக முதலிறைவி
• யோக யாமளத்தினாள்
• வன்மானுகைத்த கொடி
• வேதங்கவர் கிளவித் திருமின்
• வேதநாயகி
-------------------
• திருஞான சம்பந்தருக்கு வழங்கும் பெயர்கள்
• அமண்மூகர் கருமாள வருமீளி
• இமவான் மகளார் மகன்
• ஐயைகளிறு
• கொச்சைப் பெருமான்
• நான்மறையோரேறு
• பரசமய கோளரி
• பிள்ளை
• பிள்ளையார்
• புகலிக்கிறை
• புகலிப்பெருந்தகை
• மலையாண் முலையாரமுதுண்டவர்
• மலைவில்லி புதல்வர்
• வெள்ளிமலைப் பெருமான் மகனார்
• வைதிகராச சிங்கம்
• வைதிக வாரணம்
------------------------
6. இராசராசனுக்கு வழங்கும் பெயர்கள்
• இராச கெம்பீரன்
• இராசபுரந்தரன்
• கண்டன்
• குலதீபன்
• சனநாதன்
• சொக்கப்பெருமாள்
• தெய்வப் பெருமாள்
• வரராசராசன்
----------------------
சி. பாலசுப்பிரமணியன்
தேசிங்கு ஆண்ட செஞ்சியில் பிறந்தவர் (3-5-1935) இந்தச் செந்தமிழ்ச் செல்வர். கண்டாச்சிபுரமும் திருவண்ணாமலையும் இந்த இலக்கியப் பொழில் கற்ற இடங்கள். பைந்தமிழ் வளர்க்கும் பச்சையப்பன் கல்லூரி பாசறை மறவருள் ஒருவர். அன்னைத் தமிழில் பி.ஏ. ஆனர்சு. அங்கு! முதல்வகுப்பில்தேறிய முதல்வர். "கு றுந் தொகை" பற்றிய ஆய்வுரைக்கு 1963ல் எம்.லிட்., பட்டமும், சேர நாட்டுத் தமிழ் இலக்கியங்கள் பற்றிய ஆய்வுரைக்கு 1970ல் டாக்டர் (பிஎச்.டி) பட்டமும் சென்னைப் பல்கலைக் கழகத்தில் இவர் பெற்ற சிறப்புகள். நல்ல நடைகொண்ட இந்த நாகரிகர் பேர் சொல்ல நாளும் மாணவர் படை உண்டு நாட்டில்! சென்னைப் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்தவர் பேராசிரியராகத் துறைத் தலைவராகச் சிறந்திருக்கிருர். முன்னாள் தமிழக ஆளுநருக்குத் தமிழை முறையாகப் பயிற்றுவித்த ஆசிரியர், இந்த முற்றிய புலமையாளர்!
இருபது நூல்கள் படைத்துள்ள இவர் ஒப்பருந் திறனுக்கும் உயர் தமிழ் அறிவுக்கும், "தமிழ் இலக்கிய வரலாறு" ஒன்றே சான்று! அண்மையில் வந்துள்ள அணிகலன் "பெருத் தகை மு.வ. ஆங்கிலத்தில் ஒரு நூல்" ("சங்ககால மகளிர் நிலை" பற்றிய ஆராய்ச்சி. "இலக்கிய அணிகள்" என்ற நூல் தமிழக அரசின் இரண்டாயிரம் உரூபா முதல் பரிசைப் பெற்றது. படித்துப் பல பட்டம் பெற்ற இந்தப் பைந்தமிழ் வேந்தர்க்குப் பலரும் கொடுத்துள்ள புகழ் மகுடங்கள்: புலவரேறு (குன்றக்குடி ஆதீனம்) செஞ்சொற் புலவர் (தமிழ் நாட்டு நல்வழி நிலையம்), சங்கநூற் செல்வர் (தொண்டை மண்டல ஆதீனம்) சங்கத் தமிழ்ச் செல்வர் (தருமபுர ஆதீனம்).
பெருந்தகை மு.வ.வின் செல்லப்பிள்ளை சி.பா. அவர் புகழ் பாடும் அந்தமிழ்த் தும்பி! அயராது உழைக்கும் அருஞ் செயல் நம்பி! இலக்கியப் பேச்சில் இன்ப அருவி! எழுத்தில் நல்ல இலக்கியப் பிறவி!
சி.பா. இந்த ஈரெழுத்து ஒரு மொழி. இளைஞர்க்குச் சொல்வது சிறக்கப் பாடு படு!
-- மா.செ.
------------------------------------------------------------------------------------------------------
ஆசிரியரின் பிற நூல்கள்
தமிழ் இலக்கிய வரலாறு
உருவும் திருவும்
கட்டுரை வளம்
காரும் தேரும்
வாழையடி வாழை
முருகன் காட்சி
மனோன்மணியம் (பதிப்பு)
இலக்கிய அணிகள்
பெருந்தகை மு. வ.
மலர் கட்டும் வாழ்க்கை
இலக்கியக் காட்சிகள்
சான்றோர் தமிழ்
நெஞ்சின் நினைவுகள்
நல்லோர் நல்லுரை
சங்க கால மகளிர்
ஆண்டாள்
The Status of Women in Tamilnadu during the Sangam Age.
A Study of the Literature of the Chera Country.
Papers on Tamil Literature.
This file was last updated on 6 April 2017
Feel free to send the corrections to the webmaster.