சங்ககாலச் சான்றோர்கள்
ஆசிரியர்: ந. சஞ்சீவி
cangkakAlac cAnROrkaL
of na. canjcIvi
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Tamil Virtual Academy for providing a scanned image
version of this work for the etext preparation. This work has been prepared using the
Google Online OCR tool to generate the machine-readable text and subsequent proof-reading.
We thank R. Navaneethakrishnan for his assistance in the proof-reading of this work.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2017.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
சங்ககாலச் சான்றோர்கள்
ஆசிரியர்: ந. சஞ்சீவி
Source:
சங்ககாலச் சான்றோர்கள்
ந. சஞ்சீவி, எம். ஏ.
தமிழ்த்துறைத் தலைவர், பச்சையப்பர் கல்லூரி,
காஞ்சிபுரம்.
பாரி நிலையம்,
59, பிராட்வே, சென்னை -1.
முதற்பதிப்பு: ஜூலை, 1954
இரண்டாம் பதிப்பு: பிப்பிரவரி, 1957
மூன்றாம் பதிப்பு: மே, 1958
உரிமை ஆசிரியர்க்கே.
----------
காஞ்சிபுரம் பச்சையப்பர் கல்லூரி முன்னாள் தலைவர் பேராசிரியர்
திரு. ம. சண்முக சுந்தரனார், எம். ஏ. எல். டி. அவர்கள்
அணிந்துரை
‘சங்ககாலச் சான்றோர்கள்' என்னும் தலைப்புக்கொண்ட இந்நூலில்
திரு. ந. சஞ்சீவி அவர்கள், விருந்தினர்க்கு அறுசுவை அடிசில் சமைத்து அளிப்பது போல, பழந்தமிழ் நூல்களின் சுவைகளையெல்லாம் பிழிந்து தமிழருக்கு ஒர் இலக்கிய விருந்து அளித்துள்ளார். வீரமும் பரிவும், நேர்மையும் நெறியும், வள்ளன்மையும் தெளிவும் இக்கட்டுரைகளில் ஊறி வழிகின்றன. பழந்தமிழ்ப் புலவர்களும் அவர்கள் அறிவுரைகளைக் கேட்டு ஒழுகி அவர்களைப் பெருமைப்படுத்திய புரவலர்களும் இதில் கண் நிறைந்த காட்சியளிப்பதோடு, தங்கள் சுவை மிக்க செந்தமிழ்ப் பாடல்களால் செவிக்கின்பமும் ஊட்டி நம் உள்ளங்களை ஊக்குவிக்கின்றார்கள். அவர்களது வாழ்க்கை வரலாறுகளின் பல சீரிய பகுதிகள் இதில் இவ்வாசிரியருக்கே சிறப்பான உணர்ச்சியும் கவர்ச்சியும் மிக்க தோரணையில் ஒரு பேசும் படம் போல நம்முன் தோன்றுகின்றன. தமிழ் நாட்டுச் செந்தமிழ் மேடை வீரர்களிடையே தலையாயவர்களுள் ஒருவராக மதிக்கப் பெறும் ஆற்றலும் புகழும் தம் இளமையிலேயே பெற்றுள்ள திரு. சஞ்சீவியோடு சென்ற மூன்று ஆண்டுகள் இடைவிடாது பழகும் நல்வாய்ப்புப் பெற்ற எனக்கு, அவரது இனிய குரலும், ஆர்வமும் கற்பனையும் ததும்பும் பேச்சும் இந்நூலின் வரிகளூடே ஒலித்துக்கொண்டிருக்கின்றன. சங்கத் தமிழும் அவ்வரிகளுக்கு உரம் பாய்ச்சி நிற்கின்றது. அவ்வகையில் இந்நூலினைப் பாட்டிடை யிட்ட ஒர் உரை நடைக் காவியத் தொகுப்பு எனலாம். இப்பண்புகளோடு இதில் திரு. சஞ்சீவி மிக்க மதிப்புடன் அடுத்து நெருங்கிப் பழகிய டாக்டர். மு. வ., திரு. வி. க. அவர்களின் நடை நயங்களும் இடையிடையே தோய்ந்து சொட்டிக் கொண்டிருக்கின்றன.
இத்தகைய சிறப்புக்களோடு அமைந்துள்ள இந்நூல் தமிழ் நாட்டுக் கல்லூரிகளில் கலை பயிலும் மாணவர் கட்கும் தமிழில் ஆர்வமிக்கவர்கட்கும் எல்லையற்ற இன்பமும் அறிவும் ஊட்டும் என்பதில் ஐயமில்லை. திரு. சஞ்சீவி இலக்கியத் துறையில் இத்தகைய முயற்சிகளில் மேலும் மேலும் ஈடுபட்டுத் தமிழன்னையின் சேவையில் தலை சிறந்து விளங்கவேண்டுமென்பது எனது அவா.
பச்சையப்பர் கல்லூரி,
காஞ்சிபுரம், 1-7-54. ம. சண்முகசுந்தரம்
-------
முன்னுரை
நம் வாழ்விற்கு எஞ்ஞான்றும் வழி காட்ட வல்லனவாய்த் திகழும் ஒளி விளக்கங்களை இருவகையாகப் பாகுபடுத்தலாம்: ஒரு வகை, ‘மாசறு காட்சி’ படைத்த திறவோர் யாத்த அற நூல்கள். மற்றொரு வகை, அவ்வறவோரின் நூல்கள் வழி வாழ்ந்து புகழ் கொண்ட பெருமை சான்ற சான்றோர்களின் நல்வாழ்க்கை முறைகள். திருக்குறள் போன்ற அறநூல்களை அறிவுகொண்டு ஆராய்ந்து கற்பதாலும், இதயம் கொண்டு உணர்ந்து பண்படுவதாலும் மனித வாழ்க்கை அடைய வல்ல பயன்கள் பலவாகும். அவ்வாறே அவ்வறநூல்கள் நுவலும் வாழ்வின் இலக்கணங்கட்கு ஓர் இலக்கியமாய் இவ்வுலகில் வாழ்ந்து காட்டிய சான்றோர்களின் பல்வகையான பயன் நிறைந்த நிகழ்ச்சிகளைக் கொண்ட வரலாறுகளை அறிந்து தெளிவதாலும், பல திறப்பட்ட ஒளி படைத்த உணர்ச்சி அலைகள் ஆடிப் பாடும் அவர்களின் வாழ்வுக் கடலில் படிந்து உள்ளம் குளிர்தலாலும் நம் உயிர் வாழ்க்கை காண வல்ல நன்மைகள் பலவாகும். ஆயினும், எளியதாம் பின்னைய வழியாலேயே அரியதாம் முன்னைய நெறியால் பெற வல்ல பயன்கள் பலவற்றையும் பெறல் கூடும் என்பது எண்ணிப் பார்ப்பவர் எவர்க்கும் இனிதின் விளங்கல் திண்ணம்.
இக்கருத்தோடு யான் சங்க இலக்கிய உலகில் புகுந்தேன். அவ்விலக்கிய நல்லுலகில் யான்
கண்டு பழகிப் பெரும்பயனடையக் காரணராயிருந்த சான்றோர் பலர் ஆவர். அவருள்
தலைமை சான்ற அறுவரின் அருமை பெருமைகளையும், இலக்கிய உலகில் அவர்களோடு
யான் பழகிய போது பெற்ற இன்பத்தையும் பயனையும் ஒருவாறு அனைவருக்கும்-சிறப்பாகத் தமிழ்
இளைஞர்கட்கும்-எடுத்துரைக்க வேண்டும் என்ற பேரார்வத்தால் எழுந்த முயற்சியே
'சங்ககாலச் சான்றோர்கள்’ என்னும் இந்நூல்.
*அன்பும் அறிவும் ஆற்றலும் பொருந்திய
தமிழ் நாட்டு
வீர இளைஞர்கட்கு*
-----------
பொருளடக்கம்
1. கபிலர்
2. ஒளவையார்
3. பெருந்தலைச்சாத்தனார்
4. பிசிராந்தையார்
5. பாண்டியன் நெடுஞ்செழியன்
6. கணியன் பூங்குன்றனார்
----------------
1. கபிலர்
ஈராயிரம் ஆண்டுகட்குமுன் நம் தாயகமாம் தமிழகம் இயற்கை வளனும் செயற்கைத் திறனும் நிறைந்து, அறிவும் ஆண்மையும் அருளும் பொருளும் நிறைந்த இன்பத் திருநாடாய்க் காட்சியளித்தது. கலை வளமிக்க புலவர் கவித்திறத்தாலும், கொடை வளமிக்க புரவலர் கருணைத் திறத்தாலும், வேலெதிர் வரினும் அஞ்சி இமையாத விழிகள் படைத்த வீரர் நெஞ்சுரத்தாலும், ‘மக்களின் உயிர் நான்,' என உணரும் உணர்வு சிறிதும் குறையாது குடி தழீஇக் கோலோச்சிய கோவேந்தரின் நெறி பிறழா ஆட்சியின் மாட்சியாலும் புகழ் மண்டிக் கிடந்த நம் பழந் தமிழ் நாடு, அலைகடல் சூழ்ந்த உலக மக்கள் அனைவரது கவனத்தையும் ஒருங்கே கவர்ந்ததோடன்றி, அவர்களது உளமார்ந்த மதிப்பிற்கும் போற்றுதலுக்கும் உரிய தகுதியும் பெற்றுத் திகழ்ந்தது.
அத்தகைய பெருமை மிக்க திருநாட்டில் மாநில மாந்தர் அறிவைக் கூரியதாக்கி-உணர்வை
நுண்ணியதாக்கி ஒழுக்கத்தை விழுப்பமுடையதாக்கி- கலைமகள் கொழுநன் படைக்கும்
வெற்றுடம்புகளை போல அழியாது என்றும் நின்று நிலவி மன்பதைக்கு ஒளி காட்டி வழிகாட்டும்
மணி விளக்குகளாய்த் திகழச்செய்யவல்ல தீஞ்சுவைக் கவிதை களைச் செய்தளித்த பாகுதமிழ்ப்
புலவர் கணக்கிலடங்காப் பெருந்தொகையினர் ஆவர். அத்தகைய புலவர் திருக்கூட்டத்திற்குத்
தலைமை தாங்கும் சிறப்புப் பெற்றோருள் தனிச்சிறப்புப் படைத்தவர் கபிலர் ஆவர்.
புலவர் போற்றும் புலவரேறாய்த் திகழ்ந்த அவர்தம் தீஞ்சுவைப் பாட்டின் இன்பமும், ‘தெய்வக்
கவிதை’யின் திறனும், தமிழ் இலக்கியத் தொகையுள்ளேயே மிகப் பழையதும் விழுமியதுமாகிய
‘மூத்தோர் பாடியருள் பத்துப்பாட்டுள்’ ஒன்றாகிய குறிஞ்சிப் பாட்டினுள்ளேயே காட்சியளிக்கின்றன.
ஆம்! தீந்தமிழின் சுவையை முற்றுமுணர வாய்ப்பின்றித் திகைத்திருந்த ஆரிய அரசன்
பிரகத்தனுக்குத் தமிழறிவுறுத்தும்பொருட்டு அருந்தமிழ்க் கவிஞர் உள்ளத்தினின்றும்
மலையருவி போலக் கிளர்ந்தெழுந்த பாட்டமுதன்றோ அத்தீஞ்சுவைக் கவிதை? பத்துப்பாட்டுள்
மட்டுமேயன்றிப் பழந்தமிழ்ச் செல்வங்களான புறநானூறு, குறுந்தொகை, நற்றிணை,
கலித்தொகை, ஐங்குறு நூறு போன்ற நூல்களையும் தம் அமிழ்தினுமினிய தமிழ்க் கவிதைகளால்
அணி செய்யும் பேற்றினைப் பெற்ற பெரும் புலவர் அல்லரோ கபிலர் பெருமானார்?
இத்தகைய பெருமை பெற்ற புலவர் பெருந்தகையார் வையை என்னும் பொய்யாக் குலக்கொடி பாய்ந்து வளங்கொழிக்கும் பாண்டி வளநாட்டில்-திருவாதவூரில்- தோன்றினார். மாசு மறுவற்ற வீரத்திற்கும் மதுரத் தமிழ் மொழியின் வாழ்விற்கும் என்றென்றும் இடமாய் விளங்கும் ஏற்றம் பெற்ற பாண்டி வளநாட்டில் தோன்றிய கபிலர் பெருமான், சங்கத் தமிழைத் துங்கமுற வளர்த்த தம் வாழ்வாலும் வாக்காலும் மன்பதைக்கு என்றென்றும் வழி காட்டும் வான்பொருளாய்-தமிழ்ச் சான்றோராய் -விளங்குவதில் வியப்பொன்றுமில்லை அன்றோ?
கொடி படர்வதற்கேற்ற கொழுகொம்பே போலப் பண்டைத் தமிழகத்தில் புலவரைப் போற்றும் புரவலர் கூட்டம் பல்கி இருந்தது. வீரத்தால் நிகரற்றுத் திகழ்ந்த அம்மேலோர் ஈரத்தாலும் இணையின் றிச் சிறந்து விளங்கினர். அவ்வாறு விளங்கிய பெருமக்களுள் ‘முடிகெழு வேந்தர் மூவரினும் சிறந்து விளங்கிய வள்ளலர் எழுவர் ஆவர். அவ்வெழுவரும் கடைச்சங்க காலத்து வாழ்ந்த காரணத்தால் ‘கடையெழு வள்ளல்கள்’ எனப் பெயர் பெறலாயினர். அவருள் முடிமணியாய்த் திகழும் பெருமை பெற்றவன் பாரி வள்ளல் ஆவன். இப்பாரி வள்ளலே நம் சான்றோராகிய கபிலரின் உள்ளங்கவர் நட்புடை உத்தமனாய்த் திகழ்ந்தான். கலையுணர்வாலும் வீரத்தாலும் கருணையுள்ளத்தாலும் ஒப்பாரும் மிக்காருமின்றி விளங்கிய பாரியின் பால் கபிலர் பெருமனார் நெஞ்சைப் பறி கொடுத்தார். அப்பாவலர்தம் நுண்ணுணர்விலும் ஒழுக்க மேம்பாட்டிலும் நட்பின் இன்பத்திலும் திளைத்த கைவண்பாரியும் தன் நெஞ்சைக் கபிலர் பெருமானுருக்கே காணிக்கை ஆக்கினான். இவ்வாறு நீல வானமும் கோல மதியமும் போல விளங்கிய இருவர்தம் நட்பு, இருநிலத்தார் இதயத்தை எல்லாம் இன்ப ஆழியில் ஆழ்த்துவதற்கோர் ஏதுவாயிற்று.
பாரியின் பெயரையும் புகழையும் அறியாத தமிழருண்டோ? பாரிற் பிறந்த அருளாளர்
எவருக்கும் இளைக்காத கருணைத்திறம் படைத்தவன் வள்ளல் பாரி.
“வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்!” எனக் கசிந்துருகிக் கண்ணீர் மல்கிப் பாடினர்
அருட்பெரு வள்ளலாராகிய இராமலிங்க அடிகளார்.
அப்பெருமானாரது அமுத வாக்கிற்கோர் இலக்கியமாய்த் திகழ்ந்த வாழ்க்கை பாரியின் தியாக
வாழ்க்கை. அவ்வாழ்க்கையின் பல்வேறு பண்புகளையும்
‘புலனழுக்கற்ற அந்தணாளராகிய’ கபிலர் பெருமானார், காலம் உள்ள வரையில் நாம் படித்துப்
படித்துப் பாறைநெஞ்சமெல்லாம் பனிநீர் போல உருகிப் பண்படப் பைந்தமிழ்க்கவிதைகளாய்ப்
பாடியுள்ளார். பறம்பு மலையின் வற்றா அருவி வெள்ளம் போலத் தம் நெஞ்சிற் பொங்கியெழுந்த
அன்புப் பெருக்கை-உணர்வு வெள்ளத்தையெல்லாம்-நாமும் அள்ளி அள்ளிப் பருகி அமர நிலை
காணத் தெள்ளமுதக் கவிதைகளில் தேக்கி வைத் துள்ளார் தீஞ்சுவைக் கவிஞராகிய கபிலர்
பெருமானார்.
கபிலர் வாழ்ந்த காலம் தமிழ் மக்கள் இயற்கையோடு இயைந்த இன்ப வாழ்க்கை நடத்திய காலம். அதனாலன்றோ பழந்தமிழ் இலக்கியங்களெல்லாம் இயற்கை இன்பத்தின் சுவைப் பிழிவாய்க் காட்சியளிக்கின்றன? சங்கச் சான்றோருள்ளும் கபிலர் பெருமானார் இயற்கையின் தலை சிறந்த அடியாராய் விளங்கிய பெருமை படைத்தவர். அவர் பாடியுள்ள அகப்பாடல்களிலும் புறப்பாடல்களி லும் இயற்கை அன்னை இன்ப நடம் புரிகின்றாள். மாவும் பலாவும், வாழையும் வள்ளியும், ஆரமும் கமுகும், வேங்கையும் விரிமலர் வெட்சியும், தேனும் தினையும் பெருகிக் கிடக்கும் குறிஞ்சி நிலத்தில் இயற்கை அன்னையின் இன்பத் திருவிளையாடல் ஏற்றமுற்று விளங்குவது இயல்பேயன்றோ? அத்தகைய பல்வளமும் மல்கிக் கிடக்கும் பேறு பெற்று விளங்கியது மாவண்பாரியின் புகழ் பரப்பும் கலங்கரை விளக்கமாய்த் திகழ்ந்த பறம்பு மலை. பறம்பின் வளத்தைக் கபிலர் பாடியுள்ள திறத்தினை என்னென்று போற்றுவது! சங்கச் சான்றோர்க்கே உரிய செந்தமிழ் நடையில் இயற்கையின் இன்பவளம் கொழிக்கும் அம்மலையின் அழகையெல்லாம், கற்றவர் உளம் தழைக்க உடல் சிலிர்க்க-உயிர் இனிக்கப் பாடுகிறார் கபிலர்.
அப்பாடல்களைப் படிக்குந்தொறும் ‘வான் பொய்ப்பினும் தான் பொய்யா'து வளம் சுரக்கும் அருவிகளின் அழகும், அவ்வருவி நீரினும் இனிய சாயல் படைத்த பாரியின் அழகுத் தோற்றமும், ஆங்காங்கே வானுற வளர்ந்திருக்கும் ஆரமும் பலாவும், எங்கெங்கும் குறுந்தொடிக் குறத்தியர் வெறி கமழ் சந்தனக் கட்டைகளை வெந்தழலிலிட்டு எரித்தலால் எழும் நறும்புகையும், அப்புகை பஞ்சென முகிலெனப் பரந்து சென்று பொன் போலப் பூத்த சாரல் வேங்கையின் கிளை தொறும் தவழும் காட்சியும், நாடோறும் வண்டு பண் பாடி நறவருந்த மலர்ந்திருக்கும் மாயிதழ்க் குவளையும், ‘உழவர் உழாதன நான்கு பயனுடைத்து’, என உலகம் போற்ற முத் தனைய நெல்லுதிர்க்கும் கழைகளின் காடும், மலை பிளக்க வேர் வீழ்க்கும் வள்ளிக்கிழங்கும், கிளை தாங்காவண்ணம் பழம் ஊழ்க்கும் தீஞ்சுளைப் பலாவும், வரையெலாம் தேன் சொரிய வானுயர் கோடுதோறும் ஒரி பாய்ந்து விளங்கும்
தேனடையும், அகல் விசும்பில் அள்ளித் தெளித்த அழகு நித்திலங்கள் போல ஒளிரும் வெள்ளி மீன்களனைய தண்ணறுஞ்சுனைகளும், அவற்றில் ‘கண் போல் மலர்ந்த காமர் சுனை மலரும்’ மனக்கண் முன் தோன்றி என்றும் கண்டிராத இன்ப உலகிற்கு நம்மை ஈர்த்துச் செல்லும் வல்லமை படைத்து விளங்குகின்றன.
, குறிஞ்சியின் அழகெலாம் பருகிப் பண்பட்ட கபிலர் பெருமானார், கருவி வானம் கண் திறந்து பாரியின் கருணை போல மாரி பொழியும் காலத்து, அம்மலையின் இயற்கை அழகையெல்லாம் படமாக்கிக் காட்டும் பான்மையினை
மேலும்மறத்தலும் எளிதோ! தேர்வண் பாரியின் தேன் சொரியும் மலையில் பரந்து கிடக்கும் பனிமலைச் சுனைகளில் பூத்துக் குலுங்கும் கிணை மகளின் இணை விழிகள் போன்ற மலர்களில் விண்ணின்று விழும் தண்ணமுதத் துளிகள் நிறைந்து நிற்கும் கண்ணுக்கினிய கார்காலம் காண்போர் நெஞ்சை இன்பக் கடலாக்கும். அந்நாளில் அண்ணல் பாரியின் ‘பேரிசை உருமொடு மாரி முற்றிய
’திணிநெடுங்குன்றம் ‘ஒள்ளிழைக் குறு மகள் பெருங்கவினெய்திய’ காட்சி போல இலங்கும். அது போழ்து நெடியோன் பாரியின் நீளிருங்குன்றம் சூழ்ந்திருக்கும் சோலையிலெல்லாம் தொடியணி மகளே போலத் தோகை விரித்து மயில் ஓகை கொண்டு ஆடும்; மலையினுச்சியெல்லாம் மந்தி பாய்ந்து ஒடும். அம்மந்தியும் கடுவனும் தின்று தின்று வெறுத்து எறியப் பல் வகை மரங்களும் பருவமின்றியும் பயனளிக்கும்.
இத்தகு பயன்கெழு பறம்பு மலையேயன்றி, அம்மலை வீழ் அருவிகள் பாய்ந்து வளமுறுத்தும் முரம்பு நிலமும், ‘பெயல் பிழைப்பு அறியா’ப் பெருமை படைத்துத் திகழும். அக்‘கொள்ளரு வியன் புலம்’ எங்கும் வரகும் தினையும் விளைந்து முதிர்ந்து வளைந்திருக்கும். இவற்றுடன் எள்ளின் இளங்காய்களும் முற்றிக் கறுத்திருக்கும். கொழுவிய அவரைக் கொடியில் கொத்துக்கொத்தாய்க் கோட்பதம் பெற்று விளர்க்காய்கள் விளங்கும். மேலும் காணுமிடமெல்லாம் களிற்றின் முகத்தில் கிடக்கும் புகர் போலத் தெறுழ்வீப்பூத்துக் குலுங்கும். அதனுடன் களிகொண்டு சிரிக்கும் காட்டுப் பூனையின் முள்ளனைய இளவெயிறு போன்ற ‘பாசிலை முல்லை’ முறுக்குடைந்து மணங்கமழும்.
பறம்பின் கோமான் மலையேயன்றி, அவனது பறம்பு நன்னாடும் ‘மைம்மீன் புகையினும் தூமம் தோன்றினும் தென்றிசை மருங்கின் வெள்ளியோடினும்’ வளம்
சிறிதும் குன்றாது, வயலகமெல்லாம் புதர்ப்பூப் பூத்துக் குலுங்கும். வீட்டின் கண் கன்றை ஈன்ற அமர்க்கண் ஆமாவின் பெருங் கூட்டம் வயிறாரப் பசும்புல் மேய, பச்சைப் படாம் பரப்பியது போலப் பசும்புல் தரையும் விரிந்து கிடக்கும். இங்ஙன ம் கூர்வேல் பாரியின் குறிஞ்சி நிலமெல்லாம் இயற்கை அன்னை ஓயாது வரையும் எழிலோவியக் களஞ்சியத்தைத் தம் சொல்லோவியங்களால் உயிரோவியங்க ளாக்கிக் காட்டுகின்றார் கபிலர். அத்தகு பெருமைக்கு அண்ணல் பாரியின் அருமைநாடு இலக்காகியதற்கு உரிய காரணத்தையும் அவர் எடுத்துரைக்கும் திறத்தினை என்னென்று போற்றுவது!
‘கோஒல் செம்மையிற் சான்றார் பல்கிப்
பெயல்பிழைப்(பு) அறியாப் புன்புலத் ததுவே
…. ….. ….
ஆய்தொடி அரிவையர் தந்தை நாடே.’ (புறம். 117)
என்று மகிழ்வண் பாரியின் நாடு மாறாப் பசுமையுடன் விளங்கும் காரணத்தைக் கூறுகின்றார்,
‘முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.’ (குறள், 559)
என்பதன்றோ வள்ளுவர் வாய் மொழி? அல்லவை செய்யா வேந்தன் அரசாளும் நாட்டில், ஆன்றவிந் தடங்கிய சான்றோர் பல்கி வாழ்வர். அன்னவர் வாழும் நாட்டிலேயே அறம் திறம்பாது இருக்கும். அறம் திறம்பா நாட்டிற்கே இயற்கை அன்னையும் ‘ஈன்ற குழவி முகங் கண்டு இரங்கித் தீம்பால் சுரப்பாள்’ போன்று கருணை காட்டுவள் என்பது கபிலர் பெருமானார் கருத்தாகும். சான்றோரின் பெருமையைச் சான்றோரே அறிவர்.
இவ்வாறு சான்றோர் பல்கிக் கிடந்த தண்பறம்பு நன்னாட்டின் தலைவனாய் விளங்கினான் வேள் பாரி. அவனது அருமந்த மலையின் அழகையெல்லாம் உணர்ந்து பாடிப் பண்பட்ட கபிலர்-அம்மலையாள் தலைவனது மனமாளும் பெருந்தகையார்-அவன் அருமை பெருமைகளையெல்லாம் உணர்ந்து உணர்ந்து, உணர்வுக் கடலுள் ஆழ்ந்து ஆழ்ந்து, கண்ட கருத்துக்களை எல்லாம் ஆழ்கடலின் கீழ்ச்சென்று வாரிக் கொணர்ந்த முத்துக் குவியல் போல அள்ளி வழங்கியுள்ள அருந் தமிழ்க் கவிதைகள் யாவும் தமிழ்த்தாய் பெற்ற தலை சிறந்த காணிக்கையாய் விளங்குவதில் வியப்புமுண்டோ? வீர நெஞ்சத்தாலும் ஈர உணர்வாலும் நிகரற்று விளங்கியவன் வேள்பாரி. அவன் ஆண்ட பறம்பு மலை, பகை வேந்தர் பல்லாண்டு முற்றுகையிடினும் ‘கொளற்கரி தாய்க் கொண்ட கூழ்த்தாகி அகத்தார் நிலைக்கெளிதாய்' (குறள், 745) அரண் ஆற்றல் மிக்கதாய் விளங்கியது. கலப்பை ஏந்தும் உழவர் எல்லாரும் கூர்வாள் ஏந்திப் போர் முனை புகினும் சிறியிலை மூங்கிலின் நெல்லும், தீஞ்சுவைப் பலாவின் சுளையும், வள்ளிக்கிழங்கும், நறுஞ்சுவைத் தேனும் வேண்டளவும் கிடைக்கும் வற்றா வளமுடையது அவன் மலை. அரணின் ஆற்றலும் மலையின் வளனும் ஒருபுறமிருக்க, பாரியின் படை வலியும் நெஞ்சுரனும் மாற்றார் நெஞ்சை நடுங்கச்செய்யும் தகைமையன. ஆம்! கலைஞர்கள் நடுவண் கருணையே வடிவெடுத்துக் காட்சி தரும் பாரி, பகைவர் நடுவண் இருள் கொல்லும் கதிரவன்போல விளங்கும் இயல்பினன். அதனாலன்றோ அவன், ‘அண்ணல் யானை வேந்தருக்கு இன்னானாகி அப் ‘பண்பிற் பகைவர் ஓடுகழற் கம்பலை கண்ட செரு வெஞ்சேஎய்’ ஆகவும்,
‘ஆளிடூஉக் கடந்து வாளமர் உழக்கி
ஏந்துகோட் டியானை வேந்தர் ஓட்டிய
கடும்பரிப் புரவிக் கைவண் பாரி ' (அகம். 78)
ஆகவும் காட்சியளித்தான்? இத்தகைய ‘கூர்வேற்குவை இய மொய்ம்பு’டைய வேள் பாரியின் பெரும்பெயர்ப் பறம்பை அவன் அருமை அறியாது மூவேந்தரின் வலம் படுதானை பண்பின்றிப் பல்லாண்டுகள் முற்றுகையிட்டது. முற்றுகையிட்ட மூவேந்தரின் படை அளவிலும் ஆற்றலினும் மிக்கதாயிருப்பினும், அது குறித்துப் பாரியோ, அவன் நாட்டு மக்களோ, நெஞ்சு கலங்கினாரில்லை. ‘கைவண் பாரியின் வெள்ளருவி கறங்கும் நெடு வரை, உழவர் உழாமலே நான்கு பயனுடைத்து,' என்பது வையக மெல்லாம் அறிந்த வாய்மை அன்றோ? அம் மலை வாழ் பறவைகளும் அச்சமின்றிக் காலையில் பறந்து சென்று மாலையில் செந்நெற்கதிர்களைச் சேர்த்துக் கொணரும். இக்காட்சியினை,
… …. ‘பாரி பறம்பின்
நிரைபறைக் குரீஇயினங் காலப் போகி
முடங்குபுறச் செந்நெல் தரீஇய ரோராங்(கு)
இரைதேர் கொட்பின ஆகிப் பொழுதுபடப்
படர்கொள் மாலைப் படர்தந் தாங்கு’ (அகம், 303)
என்று ஒளவையாரும் அழகுறப் பாடியுள்ளார். இவ்வாறு ஒரறிவு உயிர்களும் ஆறறிவு உயிர்களும் அச்சமின்றி இருந்த அந்நிலையில் நெடுமாப்பாரியின் உயிரனைய நட்புடைய கபிலர் பெருமானார் பாரி வேளின் பறம்பு மலையை முற்றுகையிட்டிருந்த பகை மன்னரை நோக்கிக் கூறியவற்றை அறிவிக்கும் பாடல்களைப் படிக்குக்தோறும் நம் மனம் எத்துணை இறும்பூது எய்துகின்றது!
‘மரந்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும்,
புலந்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும்,
தாளிற் கொள்ளலிர், வாளிற் றாரலன்;
யானறி குவனது கொள்ளு மாறே :
சுகிர்புரி நரம்பின் சீறியாழ் பண்ணி
விரையொலி கூந்தல்நும் விறலியர் பின்வர
ஆடினிர் பாடினிர் செலினே
நாடுங் குன்றும் ஒருங்கீ யும்மே.’ (புறம், 109)
‘கடந்தடு தானை மூவிருங் கூடி
உடன்றணி ராயினும் பறம்புகொளற் கரிதே!
முந்நூ றூர்த்தே தண்பறம்பு நன்னாடு;
முந்நூ றூரும் பரிசிலர் பெற்றனர்;
யாமும் பாரியும் உளமே;
குன்று முண்டுநீர் பாடினிர் செலினே.’ (புறம்.101)
‘அளிதோ தானே பேரிருங் குன்றே!
வேலின் வேறல் வேந்தர்க்கோ அரிதே!
நீலத் திணைமலர் புரையும் உண்கண்
கிணைமகட்கு எளிதால் பாடினள் வரினே.’ (புறம்.111)
என்று கபிலர் பாடும் பாடல்களில், ‘முந்நூறு ஊர்களை உடையது தண்பறம்பு நன்னாடு. அம்முந்நூறு ஊர்களையும் பரிசிலர் பெற்றனர்,’ என்றும், எஞ்சியிருப்பவர் தாமும் பாரியும் குன்றுமே என்றும், ‘அக்குன்றினைக் கைப்பற்றப் பரந்து கிடக்கும் பார் முழுதும் தேரைப்பரப்பியும் மரந்தோறும் களிற்றைப் பிணித்தும் எத்துணை அரும் பாடு பட்டாலும் தேர்வண்பாரி கூர்வேலுக்கஞ்சி அதை ஒரு நாளும் கொடுக்கமாட்டான்,' என்றும், ‘ஆனால், வாளையும் வேலையும் வீசி எறிந்துவிட்டு, வாள் பிடித்த கையால் வையத்தின் நெஞ்சுருக்கும் யாழ் பிடித்து, நீல மலர் போலும் கோல விழி படைத்த விரையொலி கூந்தல் விறலியர் பின் வர ஆடியும் பாடியும், பொன்னும் மணியும் முத்தும் பவளமும் தேனும் பலாவும் சிந்திக் கிடக்கும் அவன் முற்றத்திற்குச் சென்றால், நாட்டையும் குன்றையும் எம்மையும் எம் தலைவனையும் ஒருங்கே பெறலாம்,' என்றும் எத்துணை இறுமாப்புடன் இகல் வேந்தர் சிறுமையும், இசை வள்ளல் பாரியின் பெருமையும் தோன்ற அவர் குறிப்பிடுகிறார் பாருங்கள்!
ஆயினும், என்ன பயன்? பாரியோ, ஒருவன். 'அழுக்காறு என ஒரு பாவி’ படைத்த பேரோ, மூவர். முற்றுகையோ, பல காலம் நடைபெற்றது. என் செய்வர்
மாந்தர்! 'பாறையும் குவடும் பாதுகாப்பாய் விளங்க, பிறை மதியின் வளைவு போலும் கரையுடைய தெளிந்த நீர் படைத்த சிறுகுளம் உடைந்து நாசமாவது போல நம் நாடும் வாழ்வும் ஆகுமோ!’ என்று அஞ்சிக் கலங்கினர். இந்நிலை கண்டான் வேள் பாரி; ஆற்றொணாக்கோபம் கொண்டான். ஓவத்தன்ன தன் வினை புனை நல் இல்லினைத் துறந்து, புலியெனப் பாய்ந்து, போர்க்களம் சென்றான்; ஒருவனை எதிர்க்க மூவராய் ஒருங்கு வந்துள்ள பொறாமைப் பேயர்களை எதிர்த்துப் போர் முரசு கொட்டினான்; வீரப் போர் புரிந்தான்; மாண்டான்! ஆம்! அறத்தை நம்பினான் பாரி; அந்த அறத்தினாலேயே வீழ்ந்தான் அழியாப் புகழ் பெற்றான். அம்பை நம்பினர் அம்மூவேந்தர்; அதனாலேயே வென்றனர்; அழியாப் பழியும் எய்தினர்.
மீகானற்ற மரக்கலமும்-பால் நிலவற்ற காரிருள் வானமும்-உயிரற்ற உடலும் ஆயிற்று வேள் பாரியின் விழுமிய நாடு. விண்ணும் மண்ணும் அழுதன. ஆரமும் வேங்கையும், அணிநெடுங்குன்றும், கறங்கு வெள்ளருவியும் அழுதன. மானும் மயிலும், ஆவும் கன்றும் கதறிக் கலங்கின. புள்ளும் மாவும், முல்லையும் முழுநிலவும் புலம்பித் தேம்பின. இந்நிலையில் வள்ளல் பாரியின் மக்களும் அவன் ஆருயிர்த் தோழர் கபிலரும் அழாமல் இருப்பரோ! பேச்சின்றி மூச்செறிந்து பொருமி அழுதன பிற உயிர்களெல்லாம். வாய் திறந்து, நெஞ்செரிந்து கதறியரற்றினர் புலவர் கோவும் பொற்றொடி மங்கையரும். அஞ்சா நெஞ்சம் படைத்த புலவர் பெருமானும் அரிவை நல்லாரும் பச்சிளங்குழந்தைகள் போலப் பதைபதைத்து அழுதனர். ஒப்பற்ற தங்தையாரின் அருகா அன்பில் வாழ்நாள் முழுதும் ஆடித் திளைத்து மகிழ்ந்திருந்த அந்த இளநங்கையர் இப்போது இதயம் துடித்து விம்மி விம்மி அழுதனர்.
மூவேந்தரும் முற்றுகையிட்டிருந்த அற்றைத் திங்களில் அவ்வெள்ளிய நிலாவின் கண் எம்முடைத் தந்தையும் உடையேம்; எம் குன்றையும் பிறர் கொள்ளவில்லை. ஆனால், ஐயோ! இற்றைத் திங்களில் இவ்வெள்ளிய நிலவின்கண் வென்றறைந்த முரசினையுடைய வேந்தர் எம்மலையும் கொண்டார்; எம் தந்தையையும் இழந்தோம்!’ எனும் வேதனை மிக்க கருத்தமைந்த
‘அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்
எந்தையும் உடையேமெங் குன்றும் பிறர்கொளார்;
இற்றைத் திங்க ளிவ்வெண் ணிலவின்
வென்றெறி முரசின் வேந்தரெம்
குன்றும் கொண்டார்;யாம் எந்தையும் இலமே!’ (புறம், 112)
என்ற பாடலைக் கூறி மண்ணாண்ட வேள் பாரி முழுமதியாகி வஞ்சகர் வாழாத விண்ணாளச் சென்றான் போலக் கார் வானத்து வெளிக்கிளம்பிய வெண்ணிலாவைக் கண்டதும் கண்பொத்திக் கதறியழுதனர் அக்கோமான் செல்வியர்.
கபிலர் பெருமானாரது நிலையைச் சொல்லவும் வேண்டுமோ! ஆடி விழும் அருவியிலும் அண்ணல் பாரியின் அழகுச் சாயலைப் பார்த்தவர் அவர்; மாவண் பாரிக்குத் தம் மனத்தையே அரண்மனையாக்கிக் கொடுத்தவர்; தாமுறையும் கோயிலாகப் பாரியின் நெஞ்சு இருப்பது கண்டு பெருமையும் பூரிப்பும் கொண்டவர். அண்ணல் பாரியின் புகழ் நினையாத நாளை அவர் வாழ்நாள் கண்டதில்லை. விண்ணும் மண்ணும், காடும் மலையும், அருவியும் சுனையும் எல்லாம் தம் ஆருயிர்த் தலைவன் பாரியின் புகழாகவே அவர் கண்கட்கு விளங்கின. அத்தகு காட்சியில் தோய்ந்திருந்த கபிலர் பெருமானார், உணர்வு வெள்ளம் நுரையிட்டுப் பாய, எத்தனை அருமையான கவிதைகளை அவன் புகழ் தெரித்துப் பாடினர்! ஆம்! கால வெள்ளத்தில் கரைந்தோடியது போக, எஞ்சியுள்ள பாடல்களிலேயே ‘இருநிலம் பிளக்க வீழ்க்கும்’ வேரனைய அவர்களுடைய நட்பு எத்துணை அழகுடையதாய் இருந்தது என்பது புலனாகின்றதன்றோ! வையகம் உள்ள வரை பாரியின் புகழ் அழியா வண்ணம் கபிலர் பாடியுள்ள பாடல்கள் எத்துணைச் சிறப்பின! கலையிலும் கருணையிலும் கொடையிலும் குணத்திலும் சிறந்தவனல்லனோ பாரி! அவன்பால் சென்ற பாணரும் விறலியரும் பெறாத பொன்னும் பொருளும் உண்டோ? வழியிற்கண்ட விறலியை,
'சேயிழை பெறுகுவை வாணுதல் விறலி!
…. ….. ….. …. ….
பாரி வேள்பாற் பாடினை செலினே.’ (புறம், 105)
என்று செந்தமிழ்ப் புலவர் ஆற்றுப்படுத்தும் அளவிற்கு அவன் கொடை வளம் சிறந்திருந்தது. அத்தேர் வீசு இருக்கை நெடியோன், பரிசிலர் இரப்பின், ‘தாரேன்' என்னாது, அவர்க்குத் தன்னையும் அளிக்கும் தகைமையனாய் விளங்கினான். அம்மட்டோ! அழுக்காறு படைத்த இகல் வேந்தர்க்கு அவன் இன்னான் ஆயினும், இரவலர்க்கு எஞ்ஞான்றும் இனியனாய் விளங்கினான் எனவும், வீரத்தில் எவருக்கும் இளைக்காத அவ்வேளிர் குலத் தலைவன் உயிர் குடிக்கத் தேடிவரும் வேலுக்கு அரியன் ஆயினும், உயிர் உருகப் பாடி வரும் கிணைமகளின் கலை விழிகட்கு என்றும் எளியன் எனவும் அன்றோ கபிலர் பெருமானார் போற்றிப் புகழ்கின்றார்? இரவலர்க்கு ‘இல்லை' என்னாது ஈயும் அத்தகைய வள்ளியோன் இறந்துபடக் கபிலர் இதயம் பொறுக்குமோ? ‘கைவண் பாரி, மாவண்பாரி, தேர்வண்பாரி, நெடுமாப்பாரி' என்றெல்லாம் ‘பொய்யா நாவின’ராகிய அவர் போற்றிப் புகழ்ந்த பறம்பின் கோமான் பொன்னுடலம் மூச்சின்றிப் பேச்சற்று வீழ்ந்து கிடக்க ஒருப்படுவரோ? ‘பாரியின் புகழ்க்கு உலகின் கண்ணேறு வருமோ!’ என அஞ்சியவர் போல, “பாரி பாரி எனப்பல எத்தி, ஒருவர்ப் புகழ்வர் செந்நாப்புலவர்; உலகீர், பாரி ஒருவனும் அல்லன்; மாரியும் உண்டு, ஈண்டு உலகு புரப்பது," எனக் கூறிக் கண்ணேறு கழித்த பெருமானார், இன்று அக்கருணை மாரி வறங்கூர்ந்து போக இசைவரோ?
‘பாரியில்லாத வாழ்க்கை பாழாகித் தொலையாதா?!’ என்று மனம் பதைத்தார் புலவர். புல்லிலை எருக்காயினும் ஏற்கும் தெய்வம் போல, அறிவற்ற மடவரும் மெல்லியரும் சென்றாலும் அருள் சுரக்கும் கருணைத் தெய்வத்தை இழந்த தம் வாழ்வு காரிருளில் மூழ்கிக் கெட்டொழியாதோ என்று உள்ளம் குமுறினார். இவ்வாறு வாயில்லா முல்லைக்கும் வாட்டம் தீரப் பொற்றேர் வழங்கிய வள்ளல் வாய் மூடிக் கிடக்கும் நிலை காணப் பொறாராய், அவன் சென்ற இடம் நோக்கிச் செல்ல-உடற்சுமை நீக்கி உயிர் விடத்-துடித்தார்; ஆனால், உத்தமன் பாரி உயிர் துறக்குமுன்பே அவனுக்கு ‘உன் அன்பின் செல்வியரைக் காத்துப் பின்னரே உயிர் நீங்குவேன்,' என்று அளித்த உறுதியை எண்ணினார்; மாவண்பாரிக்குப் பிறந்த மாணிக்கங்களை அழைத்துக் கொண்டு கண்ணிரும் கம்பலையுமாய்க் கதறி அழுது கொண்டே பறம்பு நாட்டினின்றும் பெயர்ந்தார். அந்நிலையில் அப்புலவர் பெருமானார் அழுத குரல், இன்றும் அவர் பாடிய அருந்தமிழ்ப் பாடல்களில் எதிரொலி செய்வதன்றி, அப்பாடல்களைக் கற்போர்-கேட்போர்கண்ணீரை எல்லாம் காணிக்கையாகப் பெறுகின்றதே!
‘அந்தோ! இவ்விடத்து நின்றோர்க்கும் தோன்றும்-சிறிது எல்லைபோய் நின்றோர்க்கும் நிச்சயமாய்த் தோன்றும்-யானை மென்று போட்ட கவளத்தின் கோது போல மதுவைப் பிழிந்து போடப்பட்ட கோதுடையதாய்ச் சிதறியவற்றி னின்றும் வார்ந்த மதுச்சேறொழுகும் முற்றம் படைத்த தேர் வழங்கும் இருப்பையுடைய உயர்ந்தோன் மலை!. அது மட்டுமோ மட்டு இருந்த சாடியைத் திறப்பவும்,ஆட்டுக்கடாயை வெட்டி வீழ்த்தவும், ஓய்தலில்லாத கொழுவிய துவையலையும், ஊனுடைய புலவுச்சோற்றையும் விரும்பியவாறெல்லாம் வழங்கும் மிக்க செல்வம் பெற்று முதிர்ந்து எம்முடன் முன்பு நட்புச் செய்த பறம்பு மலையே, இப்போது எங்கள் பாரி இறந்தானாகக் கலங்கிச் செயலற்றுக் கண்ணீர் வெள்ளம் பெருக்கெடுத்தோடும் கண்களோடு நின்னைக் கையாரத் தொழுது வாயார வாழ்த்திச் செல்கின்றோம். பெரும் புகழ்ப் பறம்பே….. குறிய வளையணிந்த பாரி மகளிரின் மணம் கமழும் நறிய கூந்தலைத் தீண்டுதற்குரிய மணவாளரை நினைந்து நாங்கள் செல்வோம் ஆயினோம்,' என்னும் கருத்தமைய,
‘ஈண்டுநின் றோர்க்கும் தோன்றுஞ் சிறுவரை
சென்றுநின் றோர்க்கும் தோன்றும் மன்ற
களிறுமென் றிட்ட கவளம் போல
நறவுப்பிழிந் திட்ட கோதுடைச் சிதறல்
வாரசும் பொழுகு முன்றில்
தேர்வீ சிருக்கை நெடியோன் குன்றே.’ (புறம். 114)
‘மட்டுவாய் திறப்பவும் மைவிடை வீழ்ப்பவும்
அட்டான்(று) ஆனுக் கொழுந்துவை யூன்சோறும்
பெட்டாங்(கு) ஈயும் பெருவளம் பழுணி
நட்டனை மன்னோ முன்னே; இனியே,
பாரி மாய்ந்தெனக் கலங்கிக் கையற்று
நீர்வார் கண்ணேம் தொழுதுநிற் பழிச்சிச்
சேறும் வாழியோ பெரும்பெயர்ப் பறம்பே!
கோல்திரள் முன்கைக் குறுந்தொடி மகளிர்
நாறிருங் கூந்தற் கிழவரைப் படர்ந்தே. ' (புறம். 113)
இவ்வாறு தாயற்ற சேய்போல அழுது அடித்துப் பாரி மகளிரோடு காலும் மனனும் கலங்கித் தடுமாற, உயிரற்ற கூடாய்க் கபிலர் பெருமானார் பறம்பின் எல்லை இகந்து செல்லல் ஆயினர்; தம் ஆருயிர்த் தலைவன்றன் அருமைச் செல்வியரின் அன்பு வாழ்க்கையைத் தொடங்கி வைக்கவும், இருள் சூழ்ந்த தம் துயர வாழ்க்கையை முடித்துக்கொள்ளவும் கருதி, அடிமேல் அடி பெயர்த்து வைக்கலாயினர். இவ்வாறு ஏந்திழை நல்லாரைக் காத்து அருள்செய்ய வல்லாரைத் தேடிச் சென்ற கபிலர் பெருமானார், முதற்கண் ‘விளங்குமணிக் கொடும்பூண் விச்சிக்கோ'வுழைச் சென்றார், சென்ற செந்நாப்புலவர்-பாரியன்றி வேறெவரையும் பாட நினையாத பைந்தமிழ்ச் சான்றோர்-அவன் புகழெல்லாம் எடுத்து ஒதினார். விச்சிக்கோவின்-கல்லகவெற்பனின்-மழைமிசை அறியா மால் வரை அடுக்கத்தில் பலவின் கனி கவர்ந்துண்ட கருவிரற் கடுவன் செம்முக மந்தியொடு சிறந்து சேண் விளங்கிக் கழைமிசைத் துஞ்சும் காட்சியை எடுத்துரைத்து, மலை வளம் கூறுவார் போல அவன் மனத்தில் பெருமையும் பெருமிதமும் கடமை உணர்வும் ஊற்றெடுக்க அவன் நாட்டின் பெருவளத்தைப் பாடினார்.
‘விளங்குமணிக் கொடும்பூண் விச்சிக் கோவே!
இவரே, பூத்தலை அறாஅப் புனைகொடி முல்லை
நாத்தழும் பிருப்பப் பாடா தாயினும்
கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த
பரந்தோங்கு சிறப்பிற் பாரி மகளிர்;
யானை, பரிசீலன் மன்னும் அந்தணன்; நீயே,
வரிசையில் வணக்கும் வாள்மேம் படுநன்.
நினக்(கு) யான் கொடுப்பக் கொண்மதி.’ (புறம், 200)
என இவ்வாறு பாரியின் புகழையும், தம் நிலையையும், விச்சிக்கோவின் கடமையையும் கல்லும் கரைந்துருக எடுத்தோதினார். ஆனால், அந்தோ! கல்லினும் வலிய அக்கல்லக வெற்பன் மனம் மட்டும் கசியவில்லை. நொந்த உள்ளத்தினராய், தளர்ந்த நடையினராய்க் கபிலர் பெருமானார் அடுத்து வேளிர் குலத்தவனாகிய இருங்கோவேள் பாற்சென்றார்; அவன் புகழும் போற்றினர்; தம் சென்ற காலச் சிறப்பையும் நிகழ்காலச் சிறுமையையும் நினைந்துருகிக் கண்ணிர் மல்கிப் பேசலானார்; இருங்கோவேளின் -புலிகடிமாலின்-தொன்மைக் குடியின் சிறப்பையெல்லாம் செப்பினர்; ‘வடபால் முனிவன் வேள்விக் குண்டத்தில் தோன்றி, உவராவீகைத் துவராபதியை ஆண்ட நாற்பத்தொன்பது வழிமுறை வந்த’ வேளிருள் வேளாய் விளங்கிய அவன் பாண் கடன் ஆற்றும் பண்பினைப் போற்றினார்; வானம் கவிக்க, வார்கடல் சூழ, வையத்தில் பொன்படு மால்வரைக்குப் பொருந்திய தலைவனாய் விளங்கும் அவன், வென்வேல் வேந்தர் வெருவி ஓடச்செய்யும் படையுடை வளமார் நாட்டின் வண்புகழ்த் தலைவனாய் விளங்கும் பெற்றியினைப் பின் வருமாறு புகழ்ந்தார்:
‘இவர்யா ரென்குவை யாயின், இவரே,
ஊருடன் இரவலர்க்(கு) அருளித் தேருடன்
முல்லைக்(கு) ஈத்த செல்லா நல்லிசைப்
படுமணி யானைப் பறம்பிற் கோமான்
நெடுமாப் பாரி மகளிர், யானே
தந்தை தோழன்; இவரென் மகளிர்;
அந்தணன் புலவன் கொண்டுவந் தனனே.’
* * *
‘வேளிருள் வேளே! விறல்போர் அண்ணல்!
தாரணி யானைச் சேட்டிருங் கோவே!
ஆண்கடன் உடைமையிற் பாண்கட னாற்றிய
ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்!
;
யான்தர இவரைக் கொண்மதி.’ (புறம் 201)
கடமையுணர்ச்சியின் மேலீட்டால் ‘வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலர்’ இவ்வாறு குறுநில
மன்னன் இருங்கோவேளின் இசை பரவிப் பெரிதும் வேண்டினார். ஆனால், விச்சிக்கோவைப்
போலவே இருங்கோவேளின் இதயமும் இரும்பாயிருந்தது. அவன் சொல்லோ, அதனினும்
கொடிய கூர்வேலாயிருந்தது. அவன் பாரியின் அருமையும் அறியாது, அவன் ஆருயிர்த்தோழர்
கபிலர் பெருமையையும் உணராது, அச்சான்றோரின் நெஞ்சைத் தகாதன கூறிப் புண்ணாக்கினான்.
இருங்கோவேளின் பொருந்தாச் சொற்கேட்ட புலவர் பெருமானார், ஆற்றொணாக்
கோபங்கொண்டார். “இயல்தேர் அண்ணலே, ஒலியல் கண்ணிப் புலிகடி மாலே, வெட்சிக்காட்டில்
வேட்டுவர் அலைப்பப் புகலிடம் காணுத கடமாவின் நல்லேறு சாரல் மணி கிளம்பவும்,
சிதறுபொன் மிளிரவும் விரைந்தோடும் நெடுவரைப் படப்பையில்-வென்றி நிலை
இய விழுப்புகழ் இருபாற்பெயரிய உருகெழு மூதூரில்-கோடி பல அடுக்கிய பொருள் நிற்குதவிய
நீடுநிலை அரையம் அழிந்த வரலாறு கேள்: நின் முயற்சியானன்றி நுந்தை தாயம் நிறைவுறப்
பெற்றுள்ள புலிகடி மாலே, உன்னைப் போல அறிவுடையனாய் உன் குடியில் உனக்கு முன் பிறந்த
ஒருவன் என்போல் புலவராகிய கழாத்தலையாரை இகழ்ந்ததால் கிடைத்த பயன் அது!
இயல்தேர் அண்ணலே, இவ்வருமைச் செல்வியர் கைவண் பாரியின் மகளிர். ‘இவர் எவ்வியின்
பழங்குடியிற் படுவாராக,’ என்று நான் கூறிய தெளியாத
புன்சொல்லைப் பொறுப்பாயாக! பெருமானே, புலிகடி மாலே, கருங்கால் வேங்கை மலர்
வீழ்ந்து கிடக்கும் துறுகல் கடும்புலி போலக் காட்சியளிக்கும் காட்டின் தலைவனே, நின் பால் விடை
கொண்டேன் , போகின்றேன்; நின்வேல் வெல்வதாக!” [1] என இருங்கோவேளின் சிறுமைப்பண்பை இகழ்ந்து கூறி அவன் நாட்டை விட்டு வெளியேறினார் புலவர் பெருமானார். இனி என் செய்வார்!
______
[1]. புறம். 202
_________
ஆர்வத்துடன் அணுகி வேண்டிய இரண்டிடங்களும் பயனற்றுப் போயின! பதடிகளால் மனமும் புண்ணாகியது. இந்நிலை எண்ணித் துடித்தழுத புலவர் உள்ளம் சிந்தனையில் தோயலாயிற்று. “அந்தோ! அருந்தமிழ் வள்ளல் பாரியின் அருமைச் செல்வியரினும் செல்வம் பெரிதுண்டோ! இதனை ஏற்கவும் காக்கவும் சிறுமதியாளர் சிந்தனை இசையவில்லையே! என்னே கொடுமை! என்ன காரணம் இதற்கு?” என்று எண்ணினார். ”ஆம்! காய்த்த மரத்திலன்றோ கல்லெறியும் இவ்வுலகம்? கோவேந்தன் குடியானாலும், பொன்னும் பொருளும் இன்றேல், மன்னரானார் மதிப்பரோ?" என்று எண்ணினார்;
“செய்க பொருளைச் செறுநர் செருக்கருக்கும்
எஃகதனின் கூரியது இல்" (குறள். 597)
என்ற எண்ணம் கொண்டு திண்ணியரானார்; ஆனால், அவ்வெண்ணத்தில் வெற்றி காணும் வரை பாரியின் அருமை மகளிர்க்குப் பாதுகாவல் ஆவார் யாரெனக் கலங்கினார். இந்நிலையில் பாரி மகளிர் வாழ்க்கையில் ஒரு நாள் நடந்த நிகழ்ச்சியும் அது வழங்கிய காட்சியும் கபிலர் பெருமானார் நெஞ்சில் நெருப்பைக் கொட்டின.
அண்ணல் பாரியின் அருமைச் செல்வியர் தங்கி யிருந்த ஏழை மனை முள் மிடைந்த வேலியால் சூழ்ந்திருந்தது; சுரைக்கொடி படர்ந்திருந்தது; பீர்க்கு முளைத்திருந்தது; முன்னிடமெல்லாம் புல், முளைத்துக் கிடந்தது. இத்தகு மனையினருகே ஈத்திலைக் குப்பை மேடும் இருந்தது; பாரியின் செல்வ மகளிர் அக்குப்பை மேட்டின்மீது ஏறித் தங்கள் பிஞ்சிள விரல்களால் உமணர் செலுத்தும் உப்பு வண்டிகளை எண்ணியவாறு இதயத் துயரை ஒருவாறு மறந்திருந்தனர். இக்கடுந்துயரக் காட்சியைக் கண்டார் கபிலர் மனங் குமுறினார்; “அந்தோ! இதுவோ வாழ்க்கை! ஓங்குபுகழ்ப் பறம்பின் உச்சிமீது நின்று அன்புப் பாரியின் அருமை அறியாது அழுக்காறு கொண்ட மன்னர் மலையைச் சுற்றி அணி அணியாய் நிறுத்தி வைத்திருந்த கலிமாவை எண்ணி எண்ணி எள்ளி நகையாடிய அவ்வேந்திழை நல்லார், இன்று குப்பைக் குவியல்மீது நின்று அதே விரல்களால், உருளும் வண்டிகளை-உப்பு வண்டிகளை-எண்ணுவதோ! அதுவும்,அந்தோ நம்பால் அடைக்கலமாக இருக்கும் நாளில் என் கண் முன்பேயோ! அந்தோ! அருமை வள்ளலே அருட்கோமானே! அண்ணல் பாரியே! வீர திலகமே! புகழ்த் தெய்வமே! இதுவோ நான் பெற்ற பரிசில்! ஊழே, மிகக் கொடியை நீ!” என்று எண்ணி மனந்துடித்தார் கபிலர். துடித்துத் துயருற்ற புலவர் பெருமானார், எவ்வாறேனும் பொருள் காண்பேன்! இன்னகை மகளிரைப் பொன்னொளிர்
வாழ்விற்கு உரியராக்குவேன்!’ என்று உறுதிகொண்டு, செந்தண்மை பூண்டொழுகும் அந்தணாளர்பால்
பாரி மகளிரை அடைக்கலமாக்கிச் செல்வம் திரட்டி வரச் செல்வக்கடுங்கோ வாழி யாதனை
அடைந்தார்.
பாரியைப் பாடிய வாயால் வேறு எவரையும் பாட எள்ளளவும் விரும்பாத நெஞ்சு
படைத்தவர் கபிலர். அதுவும் தமக்குப் பொருளுக்காகப் பாடக் கனவிலும் விழையாத கலை
நெஞ்சம் கபிலருடையது. இவ்வுண்மையை அவர் வாழ்வையும் வரலாற்றையும் ஊடுருவிக்
காண்பார் உணர்வது திண்ணம். மாவண் பாரியன்றி வேறு யாரையேனும் அவர்
போற்றினார்-பாடினார்-என்றால், அது தினையளவும் தந்நலங் கருதாது பிறர் நலம்-
பொது நலம்-கருதியமையாலேயே ஆகும். சான்றாகக் கடையெழு வள்ளல்களுள்
ஒருவனாய் விளங்கி ஒருவாத் புகழ் பெற்றிருந்த பேகன் என்பானை நல்லிசைக் கபிலர்
பாடிய செய்தியை இங்கு நாம் மறவாது நினைவு கூர்தல் பொருத்தமும் பயனும் உடையது ஆகும்.
தாயுமானவர் உள்ளமுருகிக்கூறியதுபோல, ‘கூர்த்த அறிவெல்லாம் கொள்ளை
கொடுத்து’ ஆருயிர்கள்பால் அன்பு காட்டி அழியாப் புகழ் பெற்றோருள் ஒருவன் அல்லனோ
செந்நாப் புலவர் பாடும் புகழ்படைத்த ‘கடாஅ யானைக் கலிமான் பேகன்’? மயில் ஆடி
அகவியதைக் கேட்டுக் குளிரால் நடுங்கிக் கூவியதாக உணர்ந்து தன் போர்வையை
அதற்கு ஈந்த அருள் வள்ளல் அல்லனோ பேகன்? இவ்வாறு கான மஞ்ஞைக்கும் கலிங்கம்
நல்கிய அவ்வாவியர் பெருமகனது-பெருங்கல் நாடனது-கருணை வாழ்விற்கே களங்கமாக,
அவன் வாழ்வில் எவ்வாறோ புகுந்துவிட்டது ஒரு குறை. தோகை விரித்து ஆடும் மயிலுக்கு
அருள் செய்த அவன், தன் கற்பின் கொழுந்தாய் விளங்கிய வாழ்க்கைத் துணைவியை மனைக்கு
விளக்காகிய வாணுதலை- கண்ணகியைக் கை விடத் துணிந்தான். கைவண்மை மிக்க பேகன் தன் மனைவியிடம் கொண்ட மாறுபாடு, நாளடைவில் புலவர் நெஞ்சையெல்லாம் புண்படுத்தி, கலைஞர் உள்ளத்தை யெல்லாம் கலக்கி, இரங்க வைக்கும் அளவிற்குப் பெரியதாய் விட்டது. இந்நிலையில் தமிழ்ச்சான்றோர் பலரும் அவன்பால் சென்று அறிவுரை கூற முற்பட்டனர். அச்சான்றோருள் ஒருவராய்க் கபிலரும் விளங்கினார். துன்பத்தின் சிறு நிழலும் மன்னுயிர்கள்மீது படிதல் ஆகாது என்ற அருள் நெஞ்சம் படைத்த சான்றோர் அல்லரோ கபிலர் பெருமானார்? தாம் கண்ட காட்சியை
கல் நெஞ்சையும் உருக்கும் கடுந்துயரக் காட்சியை-தாம் கேட்ட குரலை-குழலின் துன்ப இசை போன்ற அழுகுரலை யெல்லாம் வள்ளல் பேகனது அகவிழிகட்குக் கவிதையாலேயே காட்சிப்படுத்திக் காட்டினார். "கைவண்மை சான்ற பேக, நேற்று அருவழி கடந்து வருந்தி வந்த சுற்றத்தின் பசியைப் போக்க, உன் சீறூர் எய்தி உன் வாயிலில் வாழ்த்தி நின்றேன்; உன்னையும் உன் மலையையும் பாடினேன். அதனைக் கேட்ட அளவில் துயரம் மிகுந்து கண்ணீர் சொரிந்து அதனை நிறுத்தவும் ஆற்றாளாய் விம்மி விம்மி மிக அழுதாள் ஒருத்தி. அவள் அழுத குரலும் குழலின் துன்ப இசைபோல இருந்தது! அவள் யாரோ! இரங்கத்தக்கவளாய் இருந்தாள்!” என்றார் கபிலர்.
‘கைவண் ஈகைக் கடுமான் பேக!
யார்கொல் அளியள் தானே!
சுரன் உழந்து வருந்திய ஒக்கல் பசித்தெனக்
குணில்பாய் முரசின் இரங்கும் அருவி
நளியிருஞ் சிலம்பிற் சீறுர் ஆங்கண்
வாயில் தோன்றி வாழ்த்தி நின்று
நின்னுநின் மலையும் பாட இன்னா(து)
இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள்
முலையகம் நனைய விம்மிக்
குழலினை வதுபோல் அழுதனள் பெரிதே!’ (புறம். 148)
கண்ணகியின் இளமை-பேகனைப் பாடிய அளவில் அவன் நினைவு அவளை வாட்டிய துயர்-அத்துயர் தாங்காது அவள் விம்மி விம்மி அழுத அழுகை-கருணை சிறிதுமின்றி அவளைத் துறந்த பேகனது கொடுமை-ஆறறிவற்ற உயிர்க்கும் இன்ப அருள் புரியும் வள்ளல் தன் வாழ்க்கைத் துணைவிக்கு ஊறு செய்யும் அறமற்ற பண்பு-எத்தகையராயினும், யாரோ ஒருத்தியாயினும், அவளுக்கு இரங்கித் தீதில் நல்லருள் செய்ய வேண்டிய பெருங்கடமை-இவையெல்லாம் வயங்குபுகழ்ப் பேகன் நெஞ்சில் விளங்கி, அவன் உள்ளந்திருந்துமாறு செறுத்த செய்யுட்செய் செந்நாவினராகிய கபிலர் பெருமானார் பாடிய இப்பாடலைப் படிக்குந்தொறும் புலனழுக்கற்ற அப்புலவர் பெருந்தகையின் கருணை உள்ளமும் பொதுநல உணர்வும் நமக்குப் புலனாகின்றன அல்லவோ? இவ்வாறு எவ்வுயிரும் இன்புற்றிருக்கவே துடித்தது அச்சான்றோரின் தமிழ் நெஞ்சம். இஃதன்றித் தன்னலம் சிறிதும் காணா அத்தகைசால் உள்ளத்தின் பெற்றியினை எவரே அளந்து போற்ற வல்லார்!
பேகனுக்கு வாழ்க்கைப்பட்டுப் பின் பிரிந்த கண்ணகியின் நிலை குறித்தே இவ்வாறெல்லாம் கவன்ற அச்சான்றோரின் கருணை இதயம், தம் ஆருயிர்த் தோழனுடைய இரு கண்மணிகள் அனைய செல்வியரின் ஆதரவற்ற நிலை குறித்து எவ்வாறெல்லாம் கலங்கியதோ! தாம் நம்பிச் சென்று தம் செந்நாவால் பாடிய இருங்கோவேளும் விச்சிக்கோவும் தம் நெஞ்சு புண்ணாகச் செய்த நிலைமை மீண்டும் மீண்டும் அவர் நினைவிற்கு வந்து அவரை வாட்டியது. அப்போதெல்லாம் அவர், தோல்வி ‘துலையல்லார்கண்ணும் கொளலே சால்பிற்குக் கட்டளை போலும்!’ என நினைந்து, தம் மனத்தைத் தாமே ஆற்றிக்கொண்டார். எனினும், பாரி மகளிர் நினைவே அவரைப் பெரிதும் அலைத்தது. வள்ளல் பாரியே, எவ்வாறு என் பணி ஆற்றுவேன்? எவ்வாறு உன் ஆவி குளிரச்செய்வேன்?” என்று எண்ணி எண்ணி மனம் நைந்தார். ‘பாரியைக் காணவே இக்கண்கள்; அவன் புகழ் பாடவே இந்நா; அவன் குடிகொள்ளவே இவ்விதயம்; அவனுடன் பழகி இன்புறவே இவ்வாழ்வு,' என்றெல்லாம் தம்மைப் பற்றியே எண்ணிலடங்கா இன்பக் கனவுகள் கண்டு இறுமாந்திருந்தவர் கபிலர்.
ஆனால் என் செய்வார்! தம் ஆருயிர்த் தோழனுக்கு ஆற்ற வேண்டிய நட்புக் கடனுக்காக மனந்தேறிச் சேரலர் கோவைச் செந்தமிழ்க் கவிகளால் அணி செய்ய மனங் கொண்டார். அவனுழைச் சென்ற அருந்தமிழ்ப் புலவர் கபிலர் பெருமானார், அங்கும் அண்ணல் பாரியின் அழியாப் புகழை ஆர்வத்துடன் பாராட்ட மறந்தாரில்லை. ‘சேரலர் பெருமானே, பசும்புண் பட்ட வாய்போல வெடித்திருக்கும் பலாவினின்றும் வார்ந்து ஒழுகும் மதுவினை அள்ளிச் செல்லும் வாடைக் காற்று ஓடி வழங்கும் பறம்பு காட்டின் பெருவிறல் தலைவன்-சித்திரச்செய்கை போன்ற வித்தகத் தொழில் புனைந்த நல்ல மனையின்கண் வாழும் பாவை நல்லாள் கணவன்-பொன் போலப் பூத்த சிறியிலைப் புன்கால் உன்னத்தின் பகைவன் - புலர்ந்த சாந்தும் புலராத ஈகையுமுடையோன்-மலர்ந்த மார்புடை மாவண் பாரி-எங்கள் தலைவன். அவன் பரிசிலர் முழவு மண் காய்ந்தொழிய, இரவலர் கண்ணிர் இழிந்தோட, மீளா உலகிற்குச் சென்றுவிட்டான். அதனால், நான் நின்னிடம் கையேந்தி இரக்க வந்தேனில்லை; நின் புகழைக் குறைத்தோ மிகுத்தோ கூறேன். கொடுத்தற்கு வருந்தா நெஞ்சும், ஒரு சிறிதும் முனைப்பற்ற உள்ளம் காரணமாக வாரி வழங்கும் போதும் களிவெறி கொள்ளாப் பண்பும், நீ கொடுக்குந்தோறும் மாவள்ளியன் என மன்பதை போற்றும் புகழ் ஒலியும் நின் பால் அமைந்திருத்தலின், உன்னிடம் வந்தேன்,’ எனப் புலாஅம் பாசறைத்
தலைவனாகிய செல்வக் கடுங்கோவின் சிறப்பினை விதந்தோதி வாழ்த்தினார். [1] ‘வயங்கு செந்நாவின’ராகிய கபிலர் பெருமான் திருவாயால் புகழ் பெற்ற செல்வக் கடுங்கோ வாழியாதன், சிந்தை குளிர்ந்து, செந்தமிழ்ச் சான்றோரைத் தலையுற வணங்கி, சிறப்பெலாம் செய்து 'சிறுபுறம்" என்று கூறி, நூறாயிரம் காணம் கொடுத்து, நன்றாவென்னும் குன்றேறி நின்று, நற்றமிழ்ப் பெரியார்க்குத் தன் கண்ணிற்கண்ட நாடெல்லாம் கொடுத்தான். என்னை கபிலரின் மாட்சி! என்னே அக்கோவேந்தன் குணச் சிறப்பு!
--------
[1] . பதிற்றுப்பத்து, 61.
-------------
இவ்வாறு இரவலராய்ச் சென்ற கபிலர் பெருமானர் புரவலராய் மீண்டார். எனினும், அவர் இதயத்தில் அமைதியில்லை. அரிவையரின் கடிமணம் முடியும் நாளன்றோ அச்சான்றோர் உள்ளம் இன்பக் கடலில் திளைக்கும் திருநாள்? இரு குறுநில மன்னர்பால் முன்னம் சென்று மனமிடிந்து போன கபிலர், மீண்டும் எவர்பால் செல்வது என்று ஏக்கமுற்றிருந்தார். அந்நிலையில் அச் சான்றோர் நெஞ்சில் புலவர் பாடும் புகழ் படைத்து அந்நாளில் பெண்ணையாற்றங்கரையில் பீடுற்று விளங்கிய மலையமான் திருமுடிக்காரியின் நினைவு எழுந்தது. அவர் மகிழ்வு துள்ள, நம்பிக்கை ஒளி மின்ன, அவன் வைகும் திசை நோக்கி நடந்தார்; அவன் திருவோலக்கம் புகுந்து, கோவலூர்க்கோவின் புகழ் போற்றி வாழ்த்தினார். அந்நிலையில் மலையமான் மகிழ்வு மிகக் கொண்டு வழக்கம் போலப் பொன்னும், மணியும், புனைநல் தேரும் வழங்கினான். அது கண்ட புலவர் நெஞ்சம் துணுக்குற்றது. “என்னே! என் செந்தமிழ்க் கவிதையெல்லாம் இப்பொன்னிற்கும் புனை எழில் தேருக்குமோ எழுந்தன? வரையாது வழங்கிய கோமான் பாரியின் ஆருயிர் நண்பன் யான்; வெறும்பொருளுக்கு வருந்தும் இரவலனல்லேன். இவனும் ஆழ்ந்திருக்கும் என் கவிதையுளம் அறியானோ!” என்று இனைந்து, கழல் புனை காரியைப் பார்த்து, “மாவண் தோன்றலே, ஈதல் எளிது; வரிசை அறிதலோ அரிது. ஆகலான், புலவர்மாட்டுப் பொது நோக்கு ஒழிக!” எனும் கருத்து அமைய,
‘ஒருதிசை ஒருவனை உள்ளி நாற்றிசைப்
பலரும் வருவர் பரிசின் மாக்கள்;
வரிசை அறிதலோ அரிதே; பெரிதும்
ஈதல் எளிதே மாவண் தோன்றல்!
அதுநற் கறிந்தனை யாயிற்
பொதுநோக்கு ஒழிமதி புலவர் மாட்டே’ (புறம். 121)
என்ற அருந்தமிழ்க் கவிதையை அவன் மனத்தில் தைக்கும் வண்ணம் அஞ்சாது கூறினார்.
புலவர் கருத்தறிய மலையமான் பெரிதும் விழைந்தான். அஃதறிந்து ஆராமகிழ்வு கொண்டு, அருந்தமிழ்ப் புலவரும் பெருமை சான்ற வேள் பாரியின் மகளிரை வதுவை புரிய உதவ வேண்டும் என்ற தம் விருப்பத்தைக் கூறி, அதுவே தாம் விழையும் பரிசில் எனவும் இயம்பினார். புலவரின் கருணையுள்ளத்தையும், கருவி வானம் போல வரையாது இரவலர்க்குச் சுரந்த வள்ளியோன் மக்கட்குத் தான் ஆற்ற வேண்டிய கடமையையும் எண்ணிப்பார்த்தான் காரி. அவன் உள்ளத்தில் ஒர் அழகோவியம் எழுந்தது. மாவண் பாரியின் மகளிரும் தன் மக்களும் வதுவைக் கோலத்தில் வீற்றிருக்கும் திருக்காட்சி அவன் உள்ளக் கிழியில் உயிரோவியமாய் உருப்பெற்றிருத்தல் கண்டான். தீந்தமிழின் இன்பம் போன்றதொரு பேரின்பம் அவன் உடலெல்லாம் பாய்வதை உணர்ந்தான்;
‘உள்ளத்து எழுந்த இவ்வெண்ணமே வாழ்வாக-நனவாக-மலராதோ!’என்று ஏங்கினான்; தன் அருமை மக்களின் மனம் அறிய முயன்றான்; தான் பெற்ற செல்வர்கள்-அறிவும் ஆண்மையும் அருளும் ஒருங்கே பெற்ற காளையர்-கருத்தும் எவ்வாறோ தம் மனம் போலவே இருக்கக்கண்டான். பருவ மழை கண்ட பயிர் போல அவன் உள்ளம் பூரித்தது. ‘நெடுமாப் பாரியின் மகளிர் என் மருகியர்!’ என்ற நினைவு அவன் சிந்தையெல்லாம் தேனாகச் செய்தது. அளவிலா மகிழ்வு கொண்டான் அத்தேர்வண் தோன்றல். ’பறம்பின் கோமான் செல்வியரை அடைய மலையமான் குடி செய்த மாதவம் என்னையோ!’ என இறும்பூது கொண்டு, இருந்தமிழ்ப் புலவர் கோனிடம் தன் கருத்தையும் இசைவையும் கூறி, உவகைக் கடலாடியிருந்தான். கபிலர் பெருமானர் கொண்ட மகிழ்விற்கும் ஒர் எல்லையுண்டோ! அவர் தமிழ் நெஞ்சம் இன்பவாரியாயிற்று. ‘பாரியே, பறம்பின் கோமானே, சேட்புலஞ்சென்ற செம்மலே, என் கடன் இனிது முடியலாயிற்று!’ என்று அவர் உள்ளம் இன்ப வெள்ளத்தில் துள்ளிக் குதித்தது; ஆடிப் பாடி ஆனந்தக் கண்ணீர் மல்கித் திளைத்தது. இந்நிலையில் மலையமான் மைந்தர் இருவரும் மாவண் பாரியின் மகளிர் இருவரையும் திருக்கரம் பற்றி, இருநில மக்கள் இதயம் இன்ப வெள்ளத்தில் திளைக்கச் செய்தனர்.
அருமைத் தலைவனது ஆவி குளிர நட்புக் கடனாற்றிய புலவர் கோமானார் நெஞ்சம் மகிழ்வுக் கடலில் நீந்தி விளையாடியது. அவர், எல்லையில்லா மகிழ்வால் எம்மான் காரியின் புகழெல்லாம் இன்பத் தமிழ்க் கவிதைகளால் பாடி, அவனி உள்ள வரை அவன் பெருமை அழியா வண்ணம் செய்தார். அவர் பாடிய அருந்தமிழ்க் கவிதைகள் அந்நாள் புலவர் நெஞ்சிலெல்லாம் இன்பத் தேன் பாய்ச்சிற்று.
'பறையிசை அருவி முள்ளூர்ப் பொருந!
தெறலரு மரபினின் கிளையொடும் பொலிய
நிலமிசைப் பரந்த மக்கட் கெல்லாம்
புலனழுக் கற்ற அந்த ணாளன்
இரந்துசென் மாக்கட்(கு) இனியிட னின்றிப்
பரந்திசை நிற்கப் பாடினன்.' (புறம். 126)
என நல்லிசைப் புலமை மெல்லியலாராகிய மாறோக்கத்து நப்பசலையார் போற்றிப் புகழ்ந்துள்ளார்
என்றால், செஞ்சொற்கபிலரின் அருந்தமிழ்க் கவிதையின் ஆற்றலை எவரே அளந்துரைக்க இயலும்!
நெடுமாப் பாரிக்குத் தாம் செய்ய வேண்டிய ஒரே கடமையையும் செய்து முடித்த பின் இவ்வுலகத்தில் கபிலருக்குச் சுமை ஏது? ‘உள்ளம் கலந்து உயிர் கலந்து பழகிய பாரியில்லையே!’ என்ற ஏக்கமே புலவரின் இதயத்தைப் பிளந்தது.
‘கடமை முடிந்தது; பாரியில்லா நம் வாழ்வும் முடிக!' என்று கருதினார் கபிலர் பெருமானார். அந்தோ! நானிலமெல்லாம் கண்ணீர் சிந்தி நடுங்கு துயர் அடைய, நற்றமிழ்க் கவிஞர் தாம் எண்ணியதை நிறைவேற்ற உறுதி கொண்டார்; பெண்ணையாற்றின் நடுவில் திண்ணிய சிந்தையராய் வடதிசை நோக்கி அமர்ந்தார்; உண்ணா நோன்பிருந்து உயிர் துறக்க உளங்கொண்டார். “அந்தோ! அருந்தமிழ்ப் புலவரேறே, பறம்பின் கோமான் ஆருயிர்த் தோழரே, செய்ந்நன்றி மறவாச் செம்மலே, மதியாரை மதியாத மாற்றுயர்ந்த பசும் பொன்னே, மறைந்த வள்ளலின் மாணிக்கங்களைக் காத்த கருணை முகிலே, மாமணி யே, மங்காப் புகழ் ஒளியே, வண்டமிழ்ச் செல்வரே, சங்கத் தமிழ் வளர்த்த எங்கள் குலச் செல்வமே,” என்று நாத் தழுதழுக்கக் கூறிஉடல் நடுங்க-உள்ளங்குமுற-உயிர் சோர நற்றமிழ் மக்களெல்லாம் குவித்த கையராய்க் கூடி நின்று கண்ணீர் பெருக்கினார்கள்.
அந்நிலையில் இருந்தமிழ்ப்புலவர் கபிலர் பெருமானார் இதயம் பீரிட்டு எழுந்த கவிதையை என்னென்பது! “அண்ணலே, பாரியே, உளங்கலந்த உயிர் நட்பிற்கு ஒவ்வா வகையில் உன்னுடன் நானும் வருதலைத் தடை செய்து விட்டா யே! நினக்கு நான் ஏற்ற நட்பினன் அல்லேனெனினும், இம்மைபோல மறுமையிலும் இடையிலாக் காட்சியுடை நின்னோடு இயைந்து வாழ ஏங்கி கிற்கின்றன என் உள்ளமும் உயிரும்! ஊழ்-உயர்ந்த ஊழ்-இவ்வுள்ளத்தின்-உயிரின்-ஆரா வேட்கை தீர அருள் புரிவதாக!" என்னும் கருத்தமைய,
‘மலைகெழு நாட! மாவண் பாரி!
கலந்த கேண்மைக்(கு) ஒவ்வாய் நீஎற்
புலந்தனே யாகுவைபுரந்த யாண்டே
பெருந்தகு சிறப்பின் நட்பிற்கு ஒல்லா(து)
ஒருங்குவரல் விடாஅ(து) ஒழிகெனக் கூறி
இனையை ஆதலின் நினக்கு, மற்றியான்
மேயினேன் அன்மை யானே யாயினும்
இம்மை போலக் காட்டி உம்மை
இடையில் காட்சி நின்னொ(டு)
உடனுறை வாக்குக உயர்ந்த பாலே.’ (புறம். 236)
என்ற அருந்தமிழ்ப் பாடலைக் கல்லும் புல்லும் கரைந்துருகப்பாடி, மாநில மக்களை எல்லாம் கண்ணீர் வெள்ளத்தில் வீழ்த்தி, ஊணின்றி வடக்கிருந்த கபிலர் பெருமானார் உயிர் துறந்தார்.
வீரப்போர் புரிந்து மாண்டான் வேள் பாரி; வடக்கிருந்து உயிர் துறந்தார் கபிலர். கலைக்காகவே வாழ்ந்த கொடைப்பெருஞ்சான்றோனும் மறைந்தான்; அவன் நட்பிற்காகவே வாழ்ந்த அருந்தமிழ்ச் சான்றோரும் மறைந்தார். வெங்கதிரையும் தண்ணிலவையும் இழந்த வானம் போலத் தமிழகம் ஆராத் துயர்க்கடலில் ஆழ்ந்தது........ ஈராயிரம் ஆண்டுகள் சென்றுவிட்டன. கபிலர்-பாரி காலம், இலக்கியக் காலமாய்-பழந்தமிழ் நூற்றாண்டாய் மாறிவிட்டது. எனினும், இன்றும்-என்றும்-இவ்விரு பெருஞ் சங்ககாலச் சான்றோரையும் இன்பத் தமிழகம் தன் இதயக் கோயிலில் வைத்துப் போற்றி வழிபடுவது திண்ணம்.
---------------
2. ஒளவையார்
‘-ஒண்டமிழே!
பெண்களெல்லாம் வாழப் பிறந்தமையால் என்மனத்தில்
புண்களெல்லாம் ஆறப் புரிகண்டாய்.’ [1]
எனப் புனல் மதுரைச் சொக்கர் அழகில் சொக்கி மயங்கிய தலைவி, தான் அவர்பால் மாலை வாங்கி வரத் தூதாக அனுப்பும் தீந்தமிழிடம் கூறுகிறாள். என்னே அத்தலைவியின் பேருள்ளம்! பேருள்ளம் படைத்த அத் தலைவியின் வாயினின்றும் பிறந்த அச்சொற்களில் எவ்வளவு ஆழ்ந்த உண்மை அடங்கியுள்ளது!
-----------
[1]. தமிழ்விடுதூது
----------
உலக மொழிகளுள்ளேயே-இலக்கியங்களுள்ளேயே-தமிழ் மொழிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் தனிச் சிறப்புண்டு. அத்தகைய சிறப்பினை நம் அருந்தமிழ் மொழி பெறுதற்குரிய காரணங்கள் பலப்பல. அவற்றுளெல்லாம் தலை சிறந்தது ஆடவரோடு மகளிரும் சரிநிகர் சமானமாய் விளங்கி இலக்கியத்தையும் மொழியையும் பேணி வளர்த்தமையேயாகும். இது வேறு எம்மொழியினும் நம் செந்தமிழ் மொழிக்கு உரிய தனிச் சிறப்பாகும். தமிழினத்தின் பொற்காலமாய்த் திகழ்ந்த சங்க காலத்தில் மட்டும் முப்பது பெண்பாற்புலவர் தமிழகத்தில் விளங்கி, அருந்தமிழ் மொழியைத் தம் ஆருயிர் எனக் கருதிப் போற்றி வளர்த்தனர் என்றால், தமிழினத்தின் பெருமையினையும், தமிழிலக்கியத்தின் வளத்தினையும் நிறுவிக்காட்ட வேறு சான்றும் வேண்டுங்கொல்? சங்க காலத்திற்குப் பின்னும் செந்தமிழ் மொழியையும் இலக்கியத்தையும் போற்றிப் புரந்த நல்லிசைப் புலமை மெல்லியலார் பலராவர். அவருள் தலை சிறந்தவராகக் குறிப்பிடத்தகுந்தவர்
‘அற்புதத்திருவந்தாதி’ பாடி அருளிய காரைக்கால் அம்மையாரும்,
‘ஆத்தி சூடி’ முதலான அற நூல்களைப் பாடி அருளிய ஒளவைப்பிராட்டியாரும்,
அருள் சுரக்கும் ‘திருப்பாவை’ செய்தருளிய ஆண்டாளும் ஆவர். இவ்வாறு ஒரு நாட்டின் உண்மையான
மேம்பாட்டை அளந்தறிய இன்றியமையாத அளவுகோலாய் விளங்கும் தாய்க்குலத்தின் மேதையில்
தலை சிறந்து ஒளிரும் பேரும் பெருமையும் பெற்றிருந்தது தமிழகம். அத்தகைய தமிழகத்தில்
அனைத்துலகும் கண்டு வியந்து போற்றும் பெருமிதம் மிக்க பொற்காலமாய்த் திகழ்ந்த
சங்ககாலத்தில்-தமிழினம் ஈன்றெடுத்த நல்லிசைப் புலமை மெல்லியலார்க்கெல்லாம் தலை
மணியாய் விளங்கிய பெருமை ஒளவையார் என்னும் தமிழ் அன்னையாரையே சாரும்.
தமிழிலக்கிய வரலாற்றை ஆராய்ச்சிக்கண் கொண்டு நுணுகிப் பார்க்கும்போது ஒளவையார் பலராய் விளங்கல் ஒருதலை. கடைச்சங்க நாளில்-அதிகமான் காலத்தில்-வாழ்ந்த ஒளவையார் ஒருவர்; சமய காலத்தில்-சுந்தரரின் சமகாலத்தவராய் விளங்கிய ஒளவையார் ஒருவர்; காவிய காலத்தில்-கம்பர் நாளில்-வாழ்ந்த ஔவையார் ஒருவர். இம் மூவரும் ஒருவராயிருத்தல் ஒல்லாது அன்றோ? கி.பி. முதல் நூற்றாண்டிலும் கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டிலும் வாழ்ந்தவர் ஒருவர் ஆதல் எங்ஙனம் இயலும்? எனவே, ஒளவையார் ஒருவர் அல்லர் என்பது வெள்ளிடை மலை. இவ்வாறு ஒளவையார் பலராய் விளங்கக் காரணம், சங்கச் சான்றோருள் ஒருவராய் விளங்கும் பேறு பெற்ற அவ்வன்னையாரின் திருப் பெயரைத் தாமும் சூடிக்கொள்வதால் ஆகும் சிறப்பினைப் பிற்காலத்தவர். பெரிதும் போற்றினமையேயாகும், இவ்வாறு ஊழி உள்ள வரை தம் தாய் நாட்டில் வாழும் மக்கள் உள்ளத்து உறையும் பெரும்புலமையும் மிகு புகழும் படைத்த மூதாட்டியாராய் விளங்கினார் முதல்வராய ஒளவையார்.
ஒளவையாரின் பிறப்பு வளர்ப்புப்பற்றி நாம் ஏதும் அறிந்திலோம். எனினும், சங்க இலக்கியப் பாடல்களின் துணைக்கொண்டு அவர் பாணர் குடியில் பிறந்தவர் என்பதும், இளமை முதற்கொண்டே இன்கலை பல பயின்று நூலோடு மதி நுட்பமும் நிரம்பப் பெற்றவராய் விளங்கினார் என்பதும் தெளியலாம். முத்தமிழும் கற்றுத் துறை போய வித்தகச் செல்வியராய் விளங்கிய ஒளவைப்பிராட்டியார் அரசியற் பெரும்பணிகளை ஆற்றுவதிலும் நிகரற்றவராய் விளங்கிய தன்மை தமிழகத்திற்கு உலக அரங்கில் மன்பதை உள்ள வரை மங்காப் புகழைத் தேடித்தருவதாகும். ஈராயிரம் ஆண்டுகட்குமுன் இலக்கியப் புலமையும், அரசியல் திறமையும் ஒருங்கே கைவரப்பெற்ற ஒளவையாரனைய அரிவை நல்லார் எவரும் உலகின் எத்திக்கிலும் வாழ்ந்து விளங்கியதில்லை என்பதைத் துணிந்து கூறலாம். அத்தகு தனிப் பெரும்புகழினைத் தமிழகத்திற்குத் தம் வாழ்வால் வழங்கிய ஒளவைப்பிராட்டியார் அதிகன் ஆண்ட தகடூரிலேயே தம் வாழ்வின் பெரும் பகுதியைக் கழித்திருத்தல் வேண்டும் என்பது புலனாகிறது.
‘வெறுத்த கேள்வி விளங்குபுகழ்க் கபிலர்’ பெருமானுக்கு ஆருயிர்த் தலைவனாய்ப் பாரிவேள்
விளங்கியது போன்றே ஒளவையார்க்கு அதிகமான் விளங்கினான்.
அதிகமான், அருளும் ஆண்மையும் ஒருங்கே வடிவெடுத்தாற்போன்று விளங்கிய கடையெழுவள்ளல்களுள் ஒருவனாய்த் திகழும் பெருமை பெற்றவன். தக டூரைத் தலைநகராகக்கொண்டு ஆட்சி புரிந்த அதிகமான் நாடு, புனல் வளமும் பூவார் கரவின் அழகு வளமும் ஒரு சேரப்பெற்றுப் புலவர் பாடும் புகழ் படைத்திருந்தது. அதிகமான் நாடு பெற்றிருந்த இயற்கைத் திறத்தினும் அவன் நாட்டு மக்கள் பெற்றிருந்த ஆண்மைத் திறனும் அவர்கள் தலைவனான அதிகமான் கொடைத் திறனுமே பல்லாயிர மடங்கு பெரியனவாய் விளங்கின. அதிகமான் வீர வாழ்க்கையின் சிகரமாய் விளங்கினான். அவன் கீழிருந்த மழவர் படை போரையே உணவாகக் கருதி வாழ்ந்தது. கலைஞர்க்கும் புலவர்க்கும் கண்ணினும் இனிய தலைவனாய் விளங்கிய அதிகமான், மாற்றார் வாழ்விற்குக் காலனாகவே இருந்தான். இவ்வாறு ஆடும் விறலியர்க்கும் பாடும் பாணருக்கும் அமிழ்தினும் இனியோனாய் விளங்கிய அவனது நல்லிசைச் சிறப்பினை யெல்லாம் அவன் அரசவைப் புலவராய்த் திகழ்ந்த ஒளவையார் எண்ணற்ற பாடல்களால் இயற்றமிழின் சுவை கனி சொட்டச் சொட்டப் பாடியுள்ளார். அதிகமானது குடி தொன்மைச் சிறப்பு வாய்ந்தது. அதிகமான் உலகம் தோன்றிய நாள் தொட்டு உளதாகக் கருதப்படும் முடியுடை மூவேந்தர் குடியுள் ஒன்றாகிய சேரர் குடியைச் சேர்ந்தவன் எனவும், ‘இரும்பனம்புடையலை’ விரும்பிச் சூடுபவன் எனவும் இலக்கியம் போற்றும் பெருமை படைத்தவன். அவன் மரபின் முன்னோர்
‘அரும்பெறல் அமிழ்தம் அன்ன’ கரும்பைத் தேவர் உலகினின்றும் தென்தமிழ் நாட்டிற்குக் கொண்டு வந்தனர் எனப் போற்றப்படுகின்றனர்.
‘அமரர்ப் பேணியும் ஆவுதி அருத்தியும்
அரும்பெறல் மரபிற் கரும்பிவண் தந்தும்
நீரக இருக்கை ஆழி சூட்டிய
தொன்னிலை மரபின்நின் முன்னோர் போல’
(புறம்.99)
என அதிகமானையும்
‘அந்தரத்(து)
அரும்பெறல் அமிழ்தம் அன்ன
கரும்(பு)இவண் தந்தோன் பெரும்பிறங் கடையே.’
(புறம். 392)
என அவன் மகன் பொகுட்டெழினியையும் ஒளவையார் பாராட்டுகின்றார், அதிகமான் முன்னோர், விறல் மிக்க வீரத்திருவினர்; கடல் கடந்து அயல் நாடுகளுக்குப் படை யெடுத்துச் சென்றனர்; பல நாடுகளை வென்றனர். அவ்வாறு வெற்றி கொண்ட நாடுகளுள் ஒன்றிலிருந்து தாங்கள் அடைந்த வெற்றிக்கு அறிகுறியாகத் தீஞ்சுவைக் கரும்பினைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்தனர். அதற்கு முன் தமிழகத்தில் கரும்பு இல்லை. அதன் பிறகே கரும்பு இங்கும் பரவியது. இவ்வாறு வெற்றி கொண்ட மன்னன் தான் வென்ற நாட்டினின்றும் அரும் பெறல் பொருள் ஒன்றைக் கொண்டு வரலும், தோற்ற வேந்தனும் தன் தோல்விக்கு அடையாளமாகத் தன் நாட்டின் சிறந்த பொருள் ஒன்றைக் காணிக்கையாகத் தரலும் பழம்பெரும் புகழல்லவோ? அதை ஒட்டி நடந்த நிகழ்ச்சியையே ஒளவையார் ‘அந்தரத்துக்’ கரும்பு இவண் தந்ததாகப் பாடுகின்றார் எனக் கோடலே ஏற்புடைத்தாகும்.
இத்தகு தொன்மை சால் புகழ் படைத்த அதிகமானது பெருஞ்சிறப்பைப் பல்காலும் செவிமடுத்து விருப்புற்றிருந்த ஒளவையார், அவன் திருவோலக்கத்தைச் சேர்ந்தார்; தமிழிசையால் அவன் புகழ் பரவினார். ஒளவையார் தம் அரும்பெருஞ் சிறப்புக்களை-யெல்லாம் முன்னமே கேட்டிருந்த அதிகனும், “பழுமரம் தேடிச் செல்லும் பறவை போல்பவர்கள் இப்புலவர் பெருமக்கள்; பரிசில் ஏதும் தந்திடின் ஒளவையார் விரைவில் விடை பெற்று வேறிடம் ஏகிடுவாரே! அவர் பிரிவை நாம் பொறுத்தல் ஒல்லுமோ!” எனப் பலப்பல எண்ணியவனாய்ப் பரிசில் ஏதும் தாராது நீட்டித்தான். மிக நுண்ணிய கலையுள்ளம் படைத்தவரல்லரோ ஒளவையார்? அதிகமானது இச்செயல் கண்டு அவர் வெகுண்டெழுந்தார்; தம் மூட்டை முடிச்சுக்களைச் சுருட்டிக்கொண்டு வெளிக்கிளம்புவார், வாயில் காப்பானைக் கண்டு பின் வருமாறு அஞ்சாது கூறினார்:
“வாயில் காப்போய், வாயில் காப்போய், வண்மை மிக்கோர் செவியாகிய புலத்தில் விளங்கிய சொற்களாகிய நல்விதைகளை வித்தித் தாம் கருதிய பரிசிலை விளைவாகப் பெறும் மன வலி மிகப் படைத்தோர் பரிசிலர். இங்ஙனம் மேம்பாட்டிற்கு வருந்தும் பரிசில் வாழ்க்கையினையுடைய இப்பரிசிலர்க்கு அடையாத வாயிலைக் காப்போய், விரைந்து செல்லும் குதிரைப் படையுடைய தோன்றலாகிய நெடுமான் அஞ்சி தன் தரம் அறியானே? அன்றி, என் தரம் அறியானே? அறிவும் புகழும் உடையோர் அனைவரும் மாண்டு ஒழிந்து இவ்வுலகம் இன்னும் வறியதாகிவிடவில்லையே! ஆகலான், யாழ் முதலிய இசைக் கருவிகளையும் அவை வைக்கும் பை முதலியனவற்றையும் மூட்டையாகக் கட்டினேம். மரத்தைத் துணிக்கும் கை வன்மைமிக்க தச்சனுடைய மக்கள் மழுவேந்திக் கானகத்தின் உட்புகுந்தால், அக்காட்டகம் அவர்கட்குப் பயன் படுமாறு போன்றே யாம் எத்திசைச் செல்லினும் அத் திசையெல்லாம் சோறு கிடைக்கும்.”
‘வாயி லோயே! வாயி லோயே!
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித்தாம்
உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து
வரிசைக்கு வருந்துமிப் பரிசில் வாழ்க்கைப்
பரிசிலர்க்கு அடையா வாயி லோயே!
கடுமான் தோன்றில் நெடுமான்-அஞ்சி
தன்னறி யலன்கொல்? என்னறியலன்கொல்?
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென
வறுந்தலை உலகமும் அன்றே! அதனால்
காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை;
மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத்(து) அற்றே
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே’. (புறம். 206)
இவ்வாறு புலமைக்கே உரிய பெருமிதம் புலப்பட வாயிற்காவலனிடம் கூறிவிட்டு விரைந்து வெளிப்போந்தார் ஒளவையார். இதை அறிந்தான் அதிகமான். வாளாவிருப்பானோ? விரைந்து சென்று ஒளவைப்பிராட்டியாரைத் தடுத்து நிறுத்தித் தலையார வணங்கித் தன் உள்ளத்தின் உண்மையைக் கரவின்றிக் கூறினான். நெஞ்சம் திறந்தோர் நிற்காண்குவரே!’ எனக் கூறி நின்ற மன்னனது மனமறிந்த ஒளவையாரும், “ஆ! ஆழ்கடல் முத்துப் போலன்றோ இவன் உள்ளத்தில் நம்பால் கொண்ட அன்பு மிளிர்கிறது!” எனக் கருதி வியந்து போற்றினார்; உவகையோடு அவன் நாளோலக்கத்துக்கு மீண்டும் வந்து, அவன் மனம் மகிழத் தங்கினார்; தம் புலமை நலம் கனிந்து ஒழுகும் பாடல்களால் அவன் கொடை வளத்தைச் சிறப்பித்தார். “யாம் ஒரு நாள் செல்லலம்; இரண்டுநாள் செல்லலம். பல நாளும் பயின்று பலர் எம்முடன் வரச் செல்லினும், முதல் நாள் போன்ற விருப்புடையவன் அவன். அணிகலம் அணிந்த யானையையும், இயன்ற தேரையும் உடைய அதிகமான் பரிசில் பெறும் காலம் நீட்டிப்பினும் நீட்டியாது ஒழியினும், யானை தன் கொம்பிடை வைத்த கவளம்போல அப்பரிசில் நம் கையகத்தது. அது தப்பாது. எனவே, உண்ணற்கு நசையுற்ற நெஞ்சே, நீ பரிசிற்கு வருந்தற்க! அதிகமான் தாள் வாழ்க!” என்னும் கருத்தமைய,
‘ஒருநாள் செல்லலம் இருநாள் செல்லலம்
பலநாள் பயின்று பலரொடு செல்லினும்
தலைநாள் போன்ற விருப்பினன் மாதோ:
அணிபூண் அணிந்த யானை இயல்தேர்
அதியமான் பரிசில் பெறூஉங் காலம்
நீட்டினும் நீட்டா(து) ஆயினும் யானைதன்
கோட்டிடை வைத்த கவளம் போலக்
கையகத் தது.அது பொய்யா காதே;
அருந்(த) ஏமாந்த நெஞ்சம்!
வருந்த வேண்டா; வாழ்கஅவன் தாளே!’ (புறம். 191)
என இவ்வாறு மழவர் பெருமான் வள்ளன்மையை வாயாரப் புகழ்ந்தார் ஒளவையார்.
வள்ளன்மையில் தலை சிறந்து விளங்கிய அதியமான் வீரத்திலும் நிகரற்ற பெருவிறல் வேந்தனாகக் காட்சியளித்தான். ஒரு நாளில் எட்டுத் தேரை இயற்றும் கைவல் தச்சன் ஒருவன் ஒரு திங்கள் முழுதும் அரும்பாடு பட்டுத் தேர்க்கால் ஒன்றை மட்டும் செய்வானாயின், அத்தேர்க் கால் எத்துணை வலிவுடையதாகும்? அத்துணை உடல் வலி பெற்ற வல்லாண்மைக் குரிசிலாய் விளங்கினான் அதிகமான். அவன் படை வலி கண்டு அஞ்சாத திக்கில்லை; தன்மை தெரியாது,
‘இளையன் இவன், என இகழ்ந்த மாற்றாரையெல்லாம் ‘இருங்களிறு அட்டு வீழ்க் கும்
ஈர்ப்புடைக்கராம்' போலக் கொன்று வீழ்க்கும் கடுந்திறல் படைத்து விளங்கினான். அத்தகை
நெடுவேலோன் நாட்டில் எறிகோலுக்கு அஞ்சாது சீறிப்பாயும் அரவினை ஒத்த மள்ளர்
கூட்டம்-மழவர் கூட்டம்-மண்டிக் கிடந்தது. அவன் கனன்றெழுந்தால், மாற்றார் மதில்கள்
நொறுங்கும்; ஒன்னார் படையெல்லாம் ஓடிச் சிதறும். கேளாருக்குக் காலனை ஒத்த அதிகன்
கோபங் கொள்ளின், அவன் குருதிக் கொதிப்பேறிய கண் தன் அருமைக் குழந்தையைக்
காணினும் குளிராது. அத்தகு ‘போரடு திரு'வினாய் விளங்கினான் அதிகமான். அதிகமான்
தகடூரை ஆட்சி புரிந்து வந்த அந்நாளில் மலையமான் திருமுடிக்காரி என்பான் கோவலூரை
ஆட்சி புரிந்து வந்தான். இம்மலையமான் திருமுடிக்காரியும் மாற்றார் அஞ்சும் போர் வலி மிக்கவனாய் விளங்கியதோடன்றி,
‘வாலுளைப் புரவியொடு வையக மருள
ஈர நன்மொழி இரவலர்க்(கு) ஈந்த
... ... ... ... ... ... ... ... ...
கழல்தொடித் தடக்கைக் காரி'
(சிறுபாணாற்றுப்படை : அடி, 92-95)
எனக் காசினி போற்றக் கடையெழு வள்ளல்களுள் ஒருவனாய்த் திகழ்ந்தான். ஈரத்தாலும், வீரத்தாலும் இணையற்று விளங்கிய அவனது படையாற்றலின் பெருமையுணர்ந்து முடியுடை வேந்தரும் தம் பகைவரை வெல்ல அவன் அரும்பெறல் துணையையே ஆர்வத்துடன் எதிர் நோக்கி நின்றனர். இத்தகு வலி மிக்க மன்னன் திருமுடிக்காரிக்கும், பல்வேல் தானை அதிகனுக்கும் இடையே மலையமான் கொண்ட படை வலிச் செருக்காலோ-அதிகமானது செருவேட்ட நெஞ்சத்தாலோ-யாது காரணம் பற்றியோ எழுந்த கடும்பூசல் முற்றி, நாளடைவில் கொடும்போராய் மூண்டது.
இந்நிலையைக் கண்டார் தமிழ்ச் சான்றோராகிய ஒளவையார்; இதயம் புண்ணாணார். “அந்தோ! தமிழகமே! யாது குறை செய்தனையோ நீ? உன் புகழ்க் கோயிலினையும் கோட்டையையும் பொசுக்கும் தீயாக அன்றோ இப் போர்த்தீ உள்ளது? அயலவரால் அழிக்க நினைக்கவும் ஒண்ணா உன் அரணம் உன்னவரா லேயே அழிந்து விடுமோ! போரின் பெயரால் எண்ணற்ற தமிழ் வீரரின் தலை தமிழகத்தில் தமிழர்களாலேயே உருளுவதோ! கொடுமை! பெருங்கொடுமை! அறத்தை நம்பாது அம்பையே நம்பும் சிறுமையினை என்னென்று உரைப்பேன்!” என இவ்வாறு பலவும் எண்ணி அவரது தாய்மையுள்ளம் ஆருயிர்கள் மேல் வைத்த கருணையாலும் அருமைத் தமிழகத்தின் மேல் வைத்த பற்றாலும் துடித்திருக்க வேண்டும். அந்நிலையில் போர்க்களம் புகுந்து அறிவுரை கூறி அமைதி கூட்ட அவர் விரைந்தார்; அதிகனை எதிர்த்துநின்ற மன்னனை நோக்கிப் பின் வருமாறு கூறினார்:
“அதிகமான் போரைச் செய்தற்கு உறை கழித்த வாள்கள் பகைவர் அரணை அழித்தலால், அவர் தசையின் கண்ணே உறக் குளித்துக் கதுவாய் போய் வடி விழந்தன. அவன் வேல்கள் குறும்பர் அரண்களை வென்று அவர் நாட்டை அழித்தலால், சுரை பொருந்திய கரிய காம்புடனே ஆணி கலங்கி நிலையழிந்தன. அவன் களிறுகள், கணைய மரத்தால் தடுக்கப்பட்ட கதவைப் பொருது அப்பகைவரது களிறுடை அரணழித்தலால், மருப்பின் கிம்புரிகள் கழலப்பெற்றன. அவன் குதிரைகள் பகை நாட்டு வீரர் பொலந்தார் மார்பம் உருவழிய மிதித்து ஓடலால், குருதிக்கறை படிந்த குளம்புடையவாயின. அவனும், மண்ணுலகையே தன்னுள் அடக்கும் கடலனைய படையையும், அம்புகள் துளைத்த பரிசையையும் உடையவன். அத்தகையவனால் வெகுளப்பட்டார் பிழைத்தல் ஆகுமோ! இகல் வேந்தரே, உங்கள் அகல் நாடு உங்கட்கே வேண்டுமாயின், அதிகனுக்குத் திறை தந்து உய்யுங்கள். இல்லையேல், அவன் ஆறாச் சினம் மாறாது. இவ்வாறு யான் சொல்லவும் தெளியீராயின், நீங்கள் உங்கள் குறுந்தொடி மகளிர் தோளைப் பிரிதல் வியப்பன்று!”
இவ்வாறு வெல்போர் அதிகனது வீரத் திறன்களையெல்லாம் எடுத்துரைத்து, “பகை மன்னரே, எம் ஒளிறிலங்கு நெடுவேல் தலைவனை நேரில் கண்டிலீர் நீர்; கண்டால், மனமொடிந்து போவீர். ஆகலின், அவனைக் காணா நிலையில் கரவா நாவினராய்க் கண்டதும் கூறிச் சோகாக்கும் நிலையடையாதீர்!” என எச்சரித்தார்.
‘யாவின் ஆயினும், கூழை தார்கொண்(டு)
யாம்பொருதும்,’ என்றல் ஒம்புமின்; ஓங்குதிறல்
ஒளிறிலங்கு நெடுவேல் மழவர் பெருமகன்
கதிர்விடு நுண்பூண் அம்பகட்டு மார்பின்
விழவுமேம் பட்ட நற்போர்
முழவுத்தோள் என்னையைக் காணா வூங்கே.’ (புறம், 88)
ஆன்ற புலமை நல்லிசைச் சான்றோரின் பொன் மொழிகளெல்லாம் பயனற்றுப் போயின. போர் புரியவே விரும்பினான் மலையமான். அதிகமானோ, அது கண்டு அஞ்சிப் பின் வாங்குபவன்! தமிழ்க்குடி வீரம் அவனுக்கு மட்டும் விதி விலக்கோ? ஆயினும், அவன் ஒளவையாரின் அருள் மொழிகட்கு அடங்கிப் பொறுத்திருந்தான்; ஒளவையாரின் சொல்லையும் மதியானாயினன் மலையமான் என்பதை அறிந்ததும், ஆற்றொணாக் கோபத்துடன் காற்றோடு கலந்த கடுந்தீப்போலப் போர்க்களத்தில் பாய்ந்தான். கரியொடு கரியும், பரியொடு பரியும், தேரொடு தேரும் மோதின. கணக்கற்ற வீரர்களின் தலைகள் உருண்டன. குருதி வெள்ளம் பெருக்கெடுத்தோடியது. போரின் முடிவு யாதாமோ எனக் கற்றோரும் மற்றோரும் கலங்கி நின்றனர். ஆருயிர்க்கு இரங்கும் ஒளவையாரின் தமிழ் நெஞ்சம் பாகாய் உருகியது.
அதிகமான் நெஞ்சில் எழுநாவிட்டு எரியும் செந்தழ லன்ன சிற்றத் தீயினைக் கண்ட ஒளவையார், "அந்தோ! போர் முனையில் பகைவர் மாறுபாடு ஒழியப் பொருதலால் தேய்ந்து குறைந்த கோடுகளையுடைய நின் யானைக் கூட்டம் போகக் காணில், பகைவர் தம் மதில் வாயில் உள்ள பழைய கதவங்களையும், கணைய மரங்களையும் மாற்றிப் புதியன இடுவர்; மாற்றார் சேனை வீரர் பிணம் சிதறியழியப் போர்க் களத்தை உழக்கிச் செல்லுதலால் குருதிக்கறை படிந்த நின் குதிரைக் கூட்டம் போகக்கண்டால், நின் பகைவர் காட்டு வாயில்களையும் வேலமுள்ளால் அடைத்துக் காப்பர் : பகைவர் மார்பைத் தைத்து ஊடுருவிப்போன உறையின்கண் செறித்தலில்லாத நின் வேலைக் கண்ட பகைவர், தம் கிடுகைக் காப்புடனே கைநீட்டுச் செறிப்பர்; வாள் வாய்க்கத் தைத்த வடுப்படிந்த நின் மைந்துடை வீரரைக் கண்டால், குருதி படிந்த அம்பைத் தூணியுள் அடக்குவர். ஆனால், நீயோ, காவலாக வெண்சிறு கடுகைப் புகைக்கவும் மனம் தரியாது, மாற்றாரின் உயிரைக் கொடுபோகும் கூற்றம் ஒப்பாய். ஆகலின், அதிகமானே, நெற்கதிர் சுழலும் கழனியொடு பெரும்புனல் வளமிக்க நின் பகைவரின் அகல் நாடு இரங்கிக் கெட்டு ஒழிவதோ!" என எண்ணி மனம் உருகினார்.
ஒளவையாரின் எண்ணம் நிறைவேறிவிட்டது. அதிகனது அஞ்சா மழவர் படை, ஆர்த்தெழுந்து காரியின் கடியரண்களையும் கடும்படையையும் கலக்கழியச் செய்தது. அரிமா அன்ன அதிகன் தலைமையில் வரிப் புலிகளெனப் பாய்ந்த மழவர் சேனைக்கு ஆற்றாது மான் கூட்டமாயின மலையமான் படைகள். அதிகமான் வீர முரசு கொட்டி, வாகை சூடி, வெற்றிக்கொடியை விண்ணுயரப் பிடித்தான்; அதனோடும் அமைந்தானில்லை அவன்; மலையமான் காரியின் கோவலூருக்குள் நுழைந்து அந்நகரையும் பாழாக்கினான். பொலிவு மிக்க அவ்வள்ளியோன், தலைநகரைப் பொலிவிழந்ததாக்கினான். இவ்வாறு அவன் மூவேந்தருக்கும் மொய்ம்பாய் நின்ற கோவலூரானை வென்ற திறம் புலவர் பாடுதற்கும் அரியதாய் விளங்கியது. முன்னர் ஒரு முறை மூண்டெழுந்த போரில் அதிகமான் அவன் முன்னோர் போல இரும்பனம் புடையலும், ஈகைவான் கழலும், பூவார் காவும், புனிற்றுப்புலால் நெடுவேலும், எழுபொறி நாட்டத்து எழாஅத் தாயமும் வழுவின்றிப் பெற்றிருந்தும், அமையாது செருவேட்டு, இமிழ் குரல் முரசார்த்து வந்த எழுவரோடும் முரணி, அவரை முறியடித்து வெற்றி கொண்ட பெருந்திறலும், அஞ்சொல் நுண் தேர்ச்சிப் புலவர் அழகுறப் பாடுவதற்கு அரிதாகவே விளங்கியது. அதிகமான் அன்று எழுவரை வென்று பெற்ற வெற்றியினைப் போலவே படை வலி சான்ற கோவலூரை எறிந்த அவன் அரிய திறத்தை நா வன்மை மிக்க பரணரே
பாடியுள்ளார். ஆதலின்,
‘செருவேட்(டு)
இமிழ்குரல் முரசின் எழுவரொடு முரணிச்
சென்(று) அமர் கடந்துநின் ஆற்றல் தோற்றிய
அன்றும் பாடுநர்க்(கு) அரியை, இன்றும்
பரணன் பாடினன் மன்கொல் மற்றுநீ
முரண்மிகு கோவலூர் நூறிநின்
அரண்அடு திகிரி யேந்திய தோளே.’ (புறம், 99)
என இவ்வாறு கோவலூர் எறிந்தானை ஒளவையார் போற்றினார்.
இங்ஙனம் தன் வாழ்வில் இரு பெரு வெற்றிகளைப் பெற்றுப் புகழொடு விளங்கிய அதியர்
கோமானது அரசியல் வானில் மீண்டும் போர் மேகங்கள் சூழலாயின. ஆனால், ஒளவையாரின்
அருந்திறத்தால், அப்போர் மேகங்களின் நெருப்பு மழையினின்றும் தமிழகம் தப்பியது.
அதிகமான் நாளில் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டைச் சோழர்
மரபினனாகிய தொண்டைமான் ஆண்டு வந்தான். கொடை வளமும் படை நலமும் மிக்கவனாய் விளங்கிய தொண்டைமானுக்கும் அதிகமானுக்குமிடையே பூசல் ஏற்பட்டது. அஞ்சியின் மீது படையெடுக்கத் தொண்டைமான் ஆவன புரிந்தான். ஒற்றர் வாயிலாகத் தொண்டைமான் செயல்களை அறிந்த அதிகமானும் மழவர் படையைச் சேரத் திரட்டிப் போர் முரசு கொட்டத் துடித்தான். ஆனால், போரின் கொடுமையையும் அதனால் தமிழகம் காலப்போக்கில் ஒற்றுமை சிதைந்து காணக் கூடிய ஒருபெருங்கேட்டையும் நண்குணர்ந்த ஒளவையார், எவ்வாற்றானும் அப் போன்ரத் தடுத்து நிறுத்தத் துணிந்தார். ‘அன்பு, அறிவு, ஆராய்ந்த சொல்வன்மை ஆகிய இன்றியமையா மூன்றிலும் ஒப்பாரும் மிக்காரும் இன்றி உயர்ந்திருந்த ஒளவையார், தாமே தொண்டைமானிடம் தூது செல்லவும் உறுதி கொண்டார். ஒளவையாரின் திருவுள்ளம் அறிந்த அதிகமானும் தன் அமர் வேட்கும் நெஞ்சை முயன்று அடக்கிக்கொண்டு அவர் கருத்துக்கு இசைந்தான். தொண்டை நாடு சென்றார் ஒளவையார். அருந்தமிழ்ப் புலவரை ஆர்வத்துடன் வரவேற்று அன் பொழுகப் போற்றினான் தொண்டையர் கோன். ஒளவையாரும் அவன் மனம் கொளும் வகையில் தம் உள்ளத்திருக்கும் கருத்துக்களை எடுத்துரைத்து, இன்பத் தமிழகத்தில் அமைதி எனும் அருள் ஆறு வற்றாது பாய்ந்து வளங்கொழிக்குமாறு செய்யத் தக்க தருணத்தை எதிர் நோக்கியிருந்தார். தொண்டையர் கோனும் தன் படைக்கலப் பெருமையையெல்லாம் ஒளவையாருக்குக் காட்டி அதிகனை அஞ்சச் செய்யக் கருதி ஒரு நாள் அவரைத் தன் படைக்கல இல்லத்திற்கு அழைத்துச் சென்று பளபளவென மின்னும் போர்க்கருவிகளின் பரப்பையெல்லாம் காட்டினான். கண்ணெதிரே மின்னும் படைக்கலங்களைக் கண்ட ஒளவையாரின் சிந்தனை விண்ணில் கருத்துக்கள் மின்னின. அவர் அறியாமை இருளில் ஆழ்ந்திருக்கும் தொண்டைமானுக்கு அவன் மனம் நோவா வண்ணம் அதிகனைப் பற்றிய உண்மைகளைக் கூறி அறிவொளி காட்ட விழைந்தார். “காஞ்சிக் காவல, காவல் மிக்க இக்கோயிலின் கண் உள்ள உன் படைகள் யாவும் அழகுற மயிற்பீலி அணியப்பெற்று, மாலையும் சூட்டப் பெற்றுப் பொலிவுடன் காட்சியளிக்கின்றன; திரண்ட வலிய காம்பும் அழகாகச் செய்யப்பட்டு, நெய் பூசப்பெற்று, ஒளியுடன் திகழ்கின்றன. ஆனால், எங்கள் அதியனின் படைக்கருவிகளோ, பகைவர்களைக் குத்திக் குத்தி, கங்கும் நுனியும் முறிந்து, பழுது பார்க்கும்பொருட்டு எந்நாளும் கொல்லன் உலைக்களத்திலேயே குவிந்து கிடக்கின்றன,” என்னும் கருத்தமைந்த பின் வரும் பாடலைக் கூறினார்:
‘இவ்வே, பீலி அணிந்து மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்திநெய் யணிந்து
கடியுடை வியனக ரவ்வே; அவ்வே,
பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து
கொல்துறைக் குற்றில் மாதோ; என்றும்
உண்டாயின் பதங்கொடுத்(து)
இல்லாயின் உடனுண்ணும்
இல்லோர் ஒக்கல் தலைவன்
அண்ணல்எம் கோமான் வைந்நுதி வேலே.’ (புறம். 95)
ஒளவையாரின் நுண்ணிய கருத்துக்கள் அடங்கிய அரிய மொழிகளைக் கேட்ட தொண்டைமான் துணுக்குற்றான்; ‘நும் அகன்றலை நாட்டில் அமர் அஞ்சா வீரரும் உளரோ?’ என வினவினான். தொண்டைமானுக்கு மேலும் அறிவுரை பகர்ந்து அவனைத் தெருட்டக் கருதிய ஒளவையாரும்,
‘.. விறலி!
பொருநரும் உளரோதும் அகன்தலை நாட்டு?'என
வினவல் ஆனாப் பொருபடை வேந்தே!
எறிகோல் அஞ்சா அரவின் அன்ன
சிறுவன் மள்ளரு முளரே; அதாஅன்று,
பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை
வளிபொரு தெண்கண் கேட்பின்
‘அதுபோர்' என்னும் என்னையும் உளனே!’ (புறம், 89)
என்ற அருந்தமிழ்ப் பாடலைக் கூறி, அது வாயிலாக அதிகமான் நாட்டில் அடிக்கும் கோலுக்கும் அஞ்சாது எதிர்த்துப் பாயும் பாம்பின் இயல்பு படைத்த வலி மிக்க இளையவீரர் எண்ணற்றோர் உள்ளமையையும், அவ்வீரர் படைத்தலைவனாய் விளங்கும் தம் தலைவன் மன்றின்கண் தூங்கும் முழவினிடத்துக் காற்றெறிந்த ஓசையைக் கேட்பின், ‘ஆ! அது போர்ப்பறையின் முழக்கம்!’ என மகிழும் மனம் படைத்தவனாய் விளங்குவதையும் எடுத்துரைத்து, அவன் இதயத்தில் குடிகொண்டிருந்த இகலும் இறுமாப்பும் கரைந்து ஒழியச் செய்தார். இவ்வாறு ஒளவைப் பிராட்டியாரின் அரும்பெருந்தொண்டால், மூள இருந்த பெரும்போர் ஒன்றினின்றும் ஆயிரம் ஆயிரம் ஆருயிர்கள் உய்ந்தன.
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கியே தொண்டையர் கோனுக்கு அறிவு புகட்ட வேண்டும்,' என்று எண்ணி யிருந்த அதியமான், வாளேந்தி உயிர்களை வதைக் காமலே, சொல்லேந்தி அமைதி நிறுவிய அருந்தமிழ்ப் பெருமாட்டியாரின் ஆற்றலைக் கண்டு வியந்து போற்றித் தலை வணங்கினான்; தன்பால் அப்பெருமாட்டியார் கொண்டிருக்கும் பேரன்பினையும், தன்னிலும் பெரிதாகிய தமிழகத்தின்பால் அவர் கொண்டிருக்கும் பெருங் கருணையையும் எண்ணி எண்ணி மனம் உருகினான்; ‘இத்தகைய உத்தமச் சான்றோர்க்கு நாம் எந்நன்றி செய்ய வல்லேம்! பொன்னும், துகிலும், முத்தும், மணியும் இவர் மேதைக்கும் கருணை நெஞ்சிற்கும் இணையாமோ?’ எனக் கருதினான்; ‘போர், போர்’ என உழலும் தன் போன்ற புவியாள் மன்னர் வாழ்வதினும், ‘அமைதி, அமைதி’ எனவே அல்லும் பகலும் வாழும் கவியாள் சான்றோர் வாழ்வதே சாலச் சிறப்புடைத்து எனக் கருதினான். அந்நிலையில் அவன் மனத் திரையில் அரியதொரு நினைவு மின்னல் மின்னியது. 'ஆ உய்ந்தேன்!” என மகிழ்ச்சியால் துள்ளிய அம்மாவள்ளியோன், குதிரை ஏறித் தன் நாட்டின்கண் உள்ள அருமலை ஒன்றின் உச்சியை நோக்கி அம்பு போலப் பாய்ந்து சென்றான். அங்கு விடரகம் ஒன்றில் கவர்தற்கு அரியதாய்-பல்லாண்டுகட்கு ஒரு முறையே கனிவதாய்-உண்டாரை நீடுழி வாழச் செய்யும் வல்லமை படைத்ததாய் விளங்கிய அமிழ்தினுமினிய நெல்லிக் கனியைக் கண்டான்; அரும்பாடு பட்டு அதனைப் பறித்தான்; பழத்தின் பண்பையும் பயனையும் தன்னுள் மறைத்து, மலையினின்றும் அருவி போல இழிந்தோடி வந்தான். வந்தவன், ஒளவையாரைக் கண்டு, அன்பு கெழுமிய ஆர்வமொழி பல புகன்று, அளவளாவி இருந்தான்; பின்னர்க் கனியை அவர் கையில் கொடுத்து,
‘உண்ணுக தாயீர்!’ என்று உளமுருகி வேண்டினான்.
ஒளவையார் யாதும் அறியாதவராய் அக்கனியை உண்டு ஆராமகிழ்வு கொண்டு, “மன்னா, அமிழ்தினு மினிய சுவை மிக்க இக்கனியை எங்குப் பெற்றாய்?” என்று உள்ளமும் உடலும் அன்பாலுருகிக் கேட்டார். மன்னன் தலை வணங்கித் தமிழ்ப் பெருமாட்டியாரிடம் உண்மையை உரைத்து நின்றான். மன்னன் மொழிகள் கேட்டதும் ஒளவையாரின் உடல் புளகமெய்திற்று; "மன்னா, யாது செய்தனை! உலகு புரக்கும் வேந்தன் நீ, அருஞ்சுவைக் கனியை உண்டிருக்க வேண்டியவனும் நீயே. அதனை உண்டு நெடுங்காலம் அவனியைக் காக்க வேண்டியவன் நீ அல்லையோ? அந்நீண்ட வாழ்வில் நீ அருந்தமிழைப் புரக்கலாமன்றோ? அவ்வாறன்றி, 'ஆதல் நின் அகத்து அடக்கி’, அதை எனக்குச் சாதல் நீங்க அளித்தனையே! என்னே உன் கருணை!” என்று பலவும் கூறிக் கண் களில் இன்பக் கண்ணீர் மல்க, உணர்ச்சி வெள்ளம் ஓங்குதிரைக் கடலாய்ப் பொங்கி எழ, பின் வரும் அருந் தமிழ்க்கவிதையைக் கூறினார்:
‘போரடு திருவின் பொலந்தார் அஞ்சி!
பால்புரை பிறைநுதற் பொலிந்த சென்னி
நீல மணிமிடற்(று) ஒருவன் போல
மன்னுக பெரும! நீயே; தொல்நிலைப்
பெருமலை விடரகத் தருமிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் தீங்கனி குறியா(து)
ஆதல் நின்னகத்(து) அடக்கிச்
சாதல் நீங்க எமக்(கு)ஈத் தனயே!’ (புறம், 91)
இவ்வாறு ‘கறைமிடறு அணிந்த கருணைக் கடவுளே போல்வான் அதிகன்’ எனத் தன்னைப் போற்றிப் புகழ்ந்த புலவர் பெருமாட்டியாரின் புகழுரை கேட்ட அதிகமானது முகம் நாணத்தால் சிவந்தது. “அன்னையீர், மண்ணின் காவலன் நான். ஆனால், தண்டமிழ்ச் சான்றேராகிய நீவிர் மக்கள் மனத்தின் காவலர் அல்லிரோ! அம்பின் வாழ்விற்கும் வெற்றிக்கும் எல்லை உண்டு. ஆனால், உமது அமுதத் தமிழின் வாழ்விற்கும் வெற்றிக்கும் எல்லையுமுண்டோ? எல்லையில்லா வாழ்வுடை இன்பத் தமிழிற்கு ஏற்றமளிக்கும் அன்னையீர், என் வாழ்வினும் நும் வாழ்வு உலகின் நலனுக்கும் இமிழ் கடல் சூழ்ந்த தமிழகத்தின் பொன்றாப் புகழிற்கும் பெரிதும் வேண்டுவதன்றோ?” எனப் பலவும் கூறி ஒளவைப் பெருமாட்டியாருக்குத் தான் மாறாக் கடப்பாடு பெரிதும் உடையவன் என்பதை ஆரா அன்புடன் புலப்படுத்தினான். அதிகன் கூறிய அன்புடை மொழிகளைக் கேட்ட ஒளவையாரின் உள்ளம் நன்றி உணர்வால் முழுமதி கண்ட முந்நீர் போலப் பொங்கியது. ‘மன்னா, அமுதொழுகும் மக்களின் கனிவாயினின்றும் வரும் முற்றா மழலைச் சொற்கள் யாழோசை போன்று கேட்பவருக்கும் இன்பம் செய்யா; காலத்தோடும் கூடியிரா; பொருளோடும் பொருந்தியிரா. எனினும், அப்பிள்ளைக் கனி அமுதைப் பெற்றோர்க்கோ, அவை குழலினும் யாழினும் இனியவையாய் இருப்பனவல்லவோ? அரண் பல கடந்த அஞ்சியே, உன் அருளால் என் சொற்களும் அது போன்றே உனக்கு உயர்வுடையனவாய் விளங்குகின்றன,’ என்னும் கருத்தமைய,
‘யாழொடுங் கொள்ள பொழுதொடும் புணரா
பொருளறி வாரா ஆயினும் தந்தையர்க்(கு)
அருள்வந் தனவால் புதல்வர்தம் மழலை;
கடிமதில் அரண்பல கடந்த
நெடுமான் அஞ்சி! அருளன் மாறே.’ (புறம், 98)
என்ற அமிழ்தனைய தமிழ்ப்பாடலைக் கூறி, அவன் மெய்யும் மனமும் மகிழ்வு வெள்ளத்தில் மிதக்கச்செய்தார்; அதிகமானது விந்தைச் செயலில் சிந்தையைப் பறி கொடுத்து அவன் திருவோலக்கத்தைப் பிரிய மனமில்லாதவராய் அங்கேயே தங்கியிருந்தார்; அவ்வாறு அதிகமான் அரசவையில் தங்கியிருந்த நாளிலெல்லாம் அவன் வாழ்வையும் செயலையும் நுணுகி ஆராய்ந்த வண்ணம் இருந்தார். அவ்வாறு ஆராய்ந்திருந்த அவர் தம் எண்ணக் கடலில் ஆழ்ந்தெடுத்த முத்துக்களை எல்லாம் அருந்தமிழ்க் கவிதைகளாக்கி உலகு உள்ளவரை தம் ஐயன் அதிகமான் புகழ் சுடர் விட்டு ஒளிருமாறு செய்தார்.
அதிகமான் தன் வாழ்வில் அருளையும் ஆண்மையையும் இரு கண்களெனவே போற்றுவதைக் கண்ட அருந்தமிழ்ப் பிராட்டியார் அளவிலா மகிழ்வு கொண்டார். எல்லாவற்றினும் மேலாக, இகல் வேந்தர் கண்டு நடுங்கும் மாறுபாடு மிக உடையவனாகக் கலைஞர்களுக்கு எளிவந்த அவனது நிலையை எண்ணி, ‘ஊரின்கண் உள்ள சிறுவர் தன் வெள்ளிய மருப்புக்களைக் கழுவி மகிழுங்கால் நீர்த் துறையின்கண் படியும் பெருங்களிறு அவர்க்கு எத்துணை எளியதாய்-இன்பம் தருவதாய் - உள்ளது! அது போன்று அதிகமான் எமக்கு உள்ளான். ஆனால், அப் பெருங்களிற்றின் நெருங்குதற்கரிய மதம்பட்ட நிலைபோல அவன் தன் ஒன்னார்க்கு உள்ளான்,' என்று மனமாரப் போற்றினார். மேலும், அவன் சான்றோர் நடுவண் குழந்தை போல விளங்குவதையும், பகைவர் நடுவண் பைந்நாகம் போலச் சீறிச் செல்வதையும் எண்ணி, ‘எம் அதிகமான், விட்டின் இறைப்பில் செருகிய தீக்கடை கோல்போலத் தன் வலி தோற்றாது அடங்கியும் இருப்பன்; அடையார் முன்போ, அத்தீக்கடைகோல் கக்கும் காட்டுத் தீப்போலத் தோன்றவும் செய்வன்!’ எனக்கூறி இறும்பூது கொண்டார்.
இவ்வாறு ஆர்கலி நறவின் அதியர் கோமானது, அரும்பெறற்பண்புகளை எல்லாம் உளமாரப்
பாராட்டிய ஒளவையார், இல்லோர் ஒக்கல் தலைவனாய்-புலரா ஈகைப் பெரியோனாய்-
அவன் திகழும் பெருமிதக் காட்சியையும் போற்றல் ஆயினார்.
“ஆர்வலர் அணுகின் அல்லது கூர் வேல் காவலர் கனவிலும் அணுக முடியாத காப் புடைப்
பெருநகர் அவனுடையது. அந்நகரில் மஞ்சு தோய் மலைகளென நிறைந்து விளங்கும் வான்
தோய் மாடங்கள் சிலம்பப்பாடி நின்ற பாணர்க்கும் புலவர்க்கும் எஞ்ஞான்றும் அடையா
நெடுங்கதவினன் அதிகமான்; தன் தலை வாயில் வந்த புலவரை எல்லாம் தன் தமரெனக்கருதி
அருகழைத்து அவர்மேல் கிடந்த ஊருண் கேணிப்பாசி போன்ற மாசு மலிந்த ஆடைகளையெல்லாம்
களைந்து, திருமலரன்ன புத்தாடைகளைத் தருவான்; மகிழ்வு தரும் தேட்கடுப்பன்ன நாட்படு
தேறலேயன்றி, அமிழ்தனைய கொழுந்துவையொடு குய்யுடை ஊன் சோறும் வெள்ளி
வெண்கலத்தில் நிரப்பி, அருகிருந்து உண்ணச் செய்வான். இவ்வாறு பன்னாள் அவர்களைப்
போற்றிய பின் அவர்கள் வேற்றிடம் செல்லக்கருதின், பிரியா விடை தருவான். அவ்வாறு
அவர்கட்கு விடையளிக்கும் போது களிறும் தேரும் விரிமலர் வேங்கை ஒத்த பகடுதரு
செந்நெற்போரொடு கொடுத்து அனுப்புவான்."[1]- இத்தகைய வள்ளியோனாய் அவன்
விளங்கியமையால், ‘அதிகமான் இரவலர் புரவலன்.’ ' கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார்?’
எனக் கலங்கி நிற்கும் விறலியே, விரைந்து செல்வாயாக அதியனிடம்; அவன்
சேய்மைக்கண்ணனும் அல்லன்; பரிசிலும் நீட்டியான்; எஞ்ஞான்றும் மாற்றார் முனை சுட
எழுந்த புகை மலை சூழ்ந் தாற்போல மழகளிறு சூழ ஒன்னார் தேயத்தே ஓயாது இருப்பான்;
ஆகலின், அவன் திறை கொண்ட பொருள் கடலினும் பெரிது; நீயும் வேண்டிய
வேண்டியாங்கெய் துவை. ஓயாது உண்ணுதலாலும் தின்னுதலாலும் எப்போதும் ஈரம் புலராத
மண்டை மெழுகான் இயன்ற மெல்லடை போலும் கொழுத்த நிணம் மிக உலகமெல்லாம்
வறுமையுறினும் உன்னைப் பாதுகாத்தல் வல்லன; அவன் தாள் வாழ்க!” [2] என்று அவன்பால்
பெருவளம் பெற்றார், அது பெறாது வாடியிரங்கும்
------------------
[1]. புறம். 390; [2]. புறம், 108.
-------------
வளைக்கை விறலியரையும் பாணரையும் அவன்பால் ஆற்றுப்படுத்தும் அளவிற்குப் பசிப்பிணி மருத்துவனாய் விளங்கினான்.
இத்தகைய தலை சிறந்த வள்ளியோன் வீரத்தின் பெருமையையும் நாம் நன்கு அறிவோமல்லமோ? எழுவரொடு முரணி அவன் போர் புரிந்து கண்ட வெற்றியும் கோவலூரை நூறி அவன் கொண்ட கொற்றமும் என்றென்றும் அவன் புகழ் பேசுவன அல்லவோ? அத்த கைய போர் அடு திருவினாகிய பொலந்தார் அஞ்சியின் இணையற்ற வீரத்தை எத்தனையோ அருந்தமிழ்க் கவிதையால் பெருமிதம் தோன்றப் புகழ்ந்துள்ளார் ஒளவையார். அவற்றுள் எல்லாம் தலை சிறந்தது ஒன்று. அதிகன் வாழ்வில் நடந்த உண்மை நிகழ்ச்சி ஒன்றை அதன்கண் அவர் சொல்லோவியமாக்கிக் காட்டும் திறன் என்றென்றும் நம் கருத்தை விட்டு அகலா வண்ணம் நிலை பெற்று விளங்குகிறது.
போர்க்களத்தில் கடும் போர் புரிந்துகொண்டிருந்தான் அதிகமான். அவ்வமயம் அவனுக்குத் தவமகன் பிறந்தான். வெற்றியுடன் போர் புரியும் வேளையில் இச் செய்தி அவனுக்கு எட்டியது. தன் குல விளக்காய்த் தோன்றிய தவமகன் திருமுகத்தைப் போய்க் காண அவன் கால்கள் விரைந்தன. அவன் தன் போர்க் கோலத்தையும் களைந்தானில்லை. கையிலே வேல்; காலிலே வீரக்கழல்; உடம்பிலே வியர்வை; கழுத்தில் அம்புகள் பாய்ந்த ஈரம் புலராப் பசும்புண்கள்-இத்தோற்றத்தோடு தன் தவமகனை-செல்வக் களஞ்சியத்தைப் போய்க்கண்டான். ஆனால், அந்நிலையிலும்-மாலை மதிய மனைய பால் ஒழுகும் மைந்தன் முகங்கண்ட நேரத்திலும் பனந்தோட்டையும் வெட்சி மலரையும் வேங்கைப் பூவுடனே கலந்து தொடுத்து உச்சியில் சூடி ஒன்னாரை வெகுண்டு பார்த்த கண்கள் தம் சிவப்பு மாறவில்லை. இந்நிலை கண்ட ஒளவையார், தன் அன்புச் செல்வத்தைக் கண்ட நேரத்திலும் மனம் ஆறிக் கண் குளிராத சினமுடைய அதிகமானது மனநிலையை எண்ணி எண்ணிப் பாடுகிறார் :
‘கையது வேலே , காலன புனைகழல்;
மெய்யது வியரே; மிடற்றது பசும்புண்;
வட்கர் போகிய வளரிளம் போந்தை
உச்சிக் கொண்ட ஊசிவெண் தோடு
வெட்சி மாமலர் வேங்கையொடு விரைஇச்
சுரியிரும் பித்தை பொலியச் சூடி
வரிவயம் பொருத வயக்களிறு போல
இன்னு மாறாது சினனே! அன்னோ!
உய்ந்தன ரல்லரிவன் உடற்றி யோரே!
செறுவர் நோக்கிய கண்தன்
சிறுவனை நோக்கியுஞ் சிவப்பா னாவே!’ (புறம். 100)
இவ்வாறு இரவலர்க்குக் கருணை நிலவாய் இகல் வேந்தர்க்கு வெங்கதிராய் விளங்கிய அதிகமானின் சிறப்புக்களையெல்லாம் செந்தமிழ்க் கவிதைகளால் பாடிப்பாடி மகிழ்ந்தார் ஒளவையார். அவற்றையெல்லாம் நாளும் செவிமடுத்திருந்த அதிகமானும் “காடும் மலையும் கலந் துறையும் நாட்டைப் பெற்றதினும் வயப்புலியனேய வாள் வீரம் மிக்க ஆயிரம் ஆயிரம் மழவர்களடங்கிய படையைப் பெற்றதினும், களம் பல புகுந்து வலம் பல கொண்டதினும், இணையிலா வீரன் என்று எங்கும் பரவிய இசையினும் பெரும்பேறன்றோ ஒளவைப் பிராட்டியாரின் திருவாயால் புகழ் பெறும் பெரும்பேறு?” என எண்ணி மகிழ்ந்து இன்பக் கடலில் ஆடியிருந்தான்.
இந்நிலையில் அதிகமானின் வாழ்வில் துன்ப இருள் படியலாயிற்று; போர் மேகங்கள் குமுறிக்கொண்டு சூழலாயின. தன் தலை நகரைப் பாழாக்கிய அதிகமானது நாட்டையும் வாழ்வையும் பாழாக்க, கரவுடை அரவு போல அற்றம் நோக்கியிருந்தான் மலையமான். தன் நாடும் நகரமும் அழிந்து சுடுகாடான காட்சி அவன் நெஞ்சில் நெருப்பாய்க் கனன்றுகொண்டிருந்தது. இயற்கையும் கால மெனும் கடுங்காற்றுக்கொண்டு அந்நெருப்பை ஊதித் தன் காரியத்தைச் சாதித்துக்கொண்டது.
மலையமான் எவ்வாறேனும் அதிகமானை வென்று தன் நாட்டையும் நகரையும் பெறக்கருதிச் சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறையைத் தனக்குத் துணை நிற்க வேண்டினான். அவனும் அதற்கு ஒருப்பட்டுக் கடை யெழு வள்ளல்களுள் ஒருவனாய் விளங்கிய வல்வில் ஒரியின் ‘பயங்கெழு கொல்லியினை’முதற்கண் பொருது கொள்ள எண்ணங்கொண்டான். மலையமானும் அதற்கு இசைந்து கொல்லி மலையை முற்றுகையிட்டான். அச்செய்தி யறிந்த 'குறும்பொறை நன்னாடு கோடியர்க்’கீந்து குன்றாப் புகழ்படைத்திருந்த ‘ஓங்கிருங்கொல்லிப் பொருநன்’ தன் ஓரிக்குதிரைமீதேறிப் போர்க்களம் நோக்கிப் பாய்ந்தான். சேரன் துணைக்கொண்டு வந்த ‘ஒள்வாள் மலையன்’ படையும், வல்வில் ஒரிதன் தானையும் ஒன்றோடொன்று மோதின. குருதி வெள்ளம் ஆறாய்ப் பெருகிற்று. காரிக் குதிரைக் காரியொடு ஓரிக்குதிரை ஓரி இடியொடு இடி தாக்கினாலென மோதி மலைந்து காலனும் அஞ்சக் கடும் போர் உடற்றினான். கொல்லிக் கூற்றத்தின் தலைவன் உயிரைத் துரும்பென மதித்துத் தன் கண்ணான நாட்டைக் காக்க மாற்றார் படை கலக்கி-மனம் கலக்கிப் போர் புரிந்தான். ஆனால், அந்தோ! அவன் ஈர நெஞ்சில் கூர்வேலொன்று ஆழப் பாய்ந்து அவன் இன்னுயிர் குடித்தது. சாய்ந்தான் ஓரி. அவன் நாடும் மலையும் அவலமுற்றன; கூத்தரும் பாணரும் குமுறி அழுதனர். கொல்லிக் கூற்றம் பெருஞ்சேரல் இரும்பொறையின் சீற்றத்துக்கு இரையாயிற்று.
‘முள்ளூர் மன்னன் கழல்தொடிக் காரி
செல்லா நல்லிசை நிறுத்த வல்வில்
ஒரிக் கொன்று சேரலர்க் கீத்த
செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி’ (அகம். 209)
என வரும் நெடுந்தொகை அடிகளும் பிற சங்கப்பாடல்களும்[1] இவ்வரலாற்றுச் செய்தியை வலியுறுத்தும்.
மலையமான் ஓரியைக் கொன்று அவன் ஊரைப் பாழாக்கினான். ஆயினும், அவன் உள்ளம் அமைதி அடையவில்லை. தன்னை வென்று தன் தலை நகரையும் அழித்தவனை அழிக்கவே அவன் உள்ளம் விரும்பியது. ‘ஓங்கிருங் கொல்லி'யை அதன் தலைவனைக் கொன்று பெருஞ்சேரல் இரும்பொறைக்குக் காணிக்கையாக்கி அவன் உள்ளம் உவக்கச் செய்தான் காரி. தான் பெற்ற காணிக்கையால் புகழ் வெறியும் போர் வெறியும் கொண்டான் சேரன்; தன்னை மகிழ்வித்த மலையமான் மனம் குளிரத் தகடூரை அழிக்கத் துணிந்தான். சேரனுடன் காரி வஞ்சம் தீர்க்கச் சீறி வரும் செய்தி அறிந்தான் அதிகமான்; தன் நட்பிற்குரிய இருபெருவேந்தரையும் துணைக்கு அழைத்தான்; 'அரவக்கடல் தானை அதிகன்’ வேண்டுகோட்கிசைந்த அவர்கள் பெரும்படை திரட்டி வரும் வரையில் தன் தலை நகராம் தகடூரிலேயே அரணடைத்து உள்ளிருந்தான். அவன் மழவர் படை கடியரண்களைக் காத்து நின்றது. சேரன் படையும், மலையமான் படையும், ‘வெல்போர் ஆடவர் மறம் புரிந்து காக்கும் வில் பயில்’ தகடூரை முற்றுகையிட்டன.
---------
[1]. அகம். 208, நற்றிணை. 320.
-----------
அதிகமானோ, அவர்மேல் சென்று தன் அருமந்த நாட்டைக் காக்கும் வழி கருதி ஆழ்ந்த
சிந்தனையில் மூழ்கியவனாய் வாளாவிருந்தான். அதிகர் கோமான் வாளாவிருத்தல் கண்டு,
ஒளவையார் அவன் நெஞ்சில் கனன்றெரியும் ஆண்மைத் தீப்பொங்கி எரியும் வண்ணம் வீர
மொழிகள் பல புகன்றார் : “வெண்காந்தள் பூவும் காட்டு மல்லிகையும் மணம் பரப்பும்
மலைச்சாரலில் வாழும் மறப்புலி சீறினால் அதை எதிர்க்கும் மான் கூட்டமும் உளதோ?
காய்கதிர்ச் செல்வன் கதிரொளி பரப்பக் கண்டால், கனையிருளும் எதிர் நிற்குமோ?
பாரமிகுதியால் வண்டியின் பார் அச்சொடு பொருந்தி நிலத்தின்கண் சகடம் பதியினும்,
மணல் பரக்கவும் கற்பிளக்கவும் இழுத்துச் செல்லும் பெருமிதப் பகட்டிற்குத் துறையுமுண்டோ?
கணைய மரமொத்த முழந்தாளளவு தோயும் கைகளை யுடையவனே, மழவர் பெரும, நீ
போர்க்களம் புகுந்தால் உன் மண்ணகத்தைக் கைக் கொண்டு ஆர்க்கும் வீரர்களும் உண்டோ?’ [1]
என்று வீரமுழக்கம் செய்தார்.
--------
[1]. புறம். 90.
----------
ஒளவையாரின் வீரமுழக்கம் கேட்ட அதிகமான் கோபத்தீ இரு கண்களிலும் பொறி பறக்க அரிமா எனப் பாய்ந்தான். அவனுடன் இருபெரு வேந்தரும் தம் நால் வகைப் படையுடன் கலந்துகொண்டனர். இருபுற வீரரும் ஒருவரை ஒருவர் சாடினர். நானிலமே நடுங்கப் பெரும்போர் மூண்டது. மலையன் அவனை எதிர்த்து நின்ற அதிகன் ஆகிய இருபெரு வேந்தர் படையும் கடலை எதிர்க்கும் கடலென நின்று ஆரவாரித்தன. இரு புற மன்னரும் வீரப்போர் நிகழ்த்தினர். யானைகளும், குதிரைகளும் மலை மலையாய் வெட்டுண்டு வீழ்ந்தன. வாள் வீரரும் வேல் வீரரும் விழுப்புண் தாங்கிச் சாய்ந்தனர். களிறுகளின் பிளிறலும், பரிகளின் சாவொலியும், வீரர்களின் அரற்றலும் கடலொலியையும் மீக்கூர்வவாயின. வையகம் காணாக் கடும்போர் நடந்தது.
தன்னை ஒத்த ஓரியைக் கொன்ற மலையமான் பால் கொண்ட வஞ்சம் தீர்க்கத் துணையாகப் படை திரட்டி வந்த சேரன் கொடுமதியை-இறுமாப்பை-நினைந்தான் அதியன்; எரிமலை போலக் கொதித்தான். கண்களில் சினத்தீக்கனன்றது. நெடுநாள் பசித்திருந்த வாள் வரி வேங்கையென நேரார் படை கிழித்து அவர் நெஞ்சைப் பிளக்கப் பாய்ந்தான்; எதிர்த்து வந்த மள்ளரையும் களிறுகளையும் இரு கூறாக்கினான். அதியனது ஆற்றொணாச் சினத்தீக் கண்ட மழவர் கூட்டம், விண்ணதிர முழங்கி, அடுபோர் உடற்றியது; காற்றென வந்த அம்புகளை எல்லாம் தடுத்து நிறுத்தி மழையெனக் கணைகளைப் பொழிந்தது. இரு திறத்திலும் பேயும் அஞ்சப் பெரும் போர் நிகழ்ந்தது. மாவும் களிறும் குருதி வெள்ளத்தில் மிதந்தன. வைத்த கண் வாங்காது வாள் வீரரும் வேல் வீரரும் அருஞ்சமர் புரிந்தனர். அதியமானும் அம்பொடு வேல் நுழை வழியெல்லாம் நின்று பெரும்போர் புரிந்தான். அவன் உடல் முழுதும் மாற்றாரின் கணைகளால் துளைபட்டது. அத்துளைகளினின்றும் செந்நீர் அருவி போலப் பெருக்கெடுத்தது. அது கண்ட ஒளவையாரின் அன்புள்ளம் கொதித்தது. அவர், “பெருந்தகாய், பெருஞ்சமர் புரிந்து நீ விழுப்புண் தாங்கியமையால், உன்னோடு மாறு கொண்ட மன்னர், களத்தில் சாவாமையால் உளதாகும் குற்றம் ஒழியும்படியும் பிற்காலத்தில் நோயால் இறந்த தம் உடம்பைத் தருப்பையில் கிடத்தி வாளால் பிளந்து அடக்கம் செய்தலினின்று தப்பியும் உய்ந்தனர். இப்போது உன் வாட்போரில் பலர் மாண்ட னர். இனி நீ வருந்திப் போர் செய்து வெல்ல வேண்டுவது யாதுளது?” என மேலும் அவனை ஊக்கினார். அதிகமானும் ‘உடலெனக்கு ஒரு சுமை,’ எனக் கருதிய வனாய்த் தன் ஆற்றலெல்லாம் காட்டிச் சமர் புரிந்தான். அந்நிலையில் கூர்வேலொன்று கடுகி வந்து அவன் பேரிதயத்தைப் பிளந்தது. அதிகமான் வாழ்வு வீரச் சாவைப் புன்முறுவலோடு ஏற்றது. ஆனால், அவன் சாவை வையகம் பொறுக்குமோ? பருவகால மழையெனக் கண்கள் நீர் பொழிய, அவன் மக்கள் உள்ளம் குமுறி அழு தார்கள். ஒளவையார் அடைந்த துயரைச் சொல்லவும் இயலுமோ! அவர், தன்னினும் தண்ணார் தமிழையே பெரிதாகப் போற்றி ய அப்பெருந்தகையின் மீளாப் பிரிவை எண்ணி எண்ணி இதயம் துடித்தார்; உள்ளம் குமுறிக் குமுறி ஓவென அழுதார்.
”குளிர்ந்த நீருடைய துறையின் கண் தேன் நிறைந்த பகன்றை மாமலர் பிறரால் சூடலின்றி வாடி ஒழிவதைப் போன்று, தம்மிடமுள்ள பொருளைப் பிறர்க்கு ஈயாமல் இறந்தொழியும் மாந்தர் பலரையுடையது இம்மண்ணுலகம். இத்தகைய உலகில் அதியன் வாழ்வு எத்துணைப் பயன் நிறைந்து விளங்கியது! சிறிது மதுவைப் பெற்றாலும் அதை எமக்குத் தருவான். பெரிய அளவில் கிடைத்தாலோ, அம்மதுவை யாமுண்டு பாட எஞ்சியதை அவன் நுகர்வான். அந்தோ! அந்த வாழ்வு கழிந்ததே! சோறு அனைவர்க்கும் பொதுவாகலான், அப்பெருந்தகை அது சிறிய அளவில் கிடைப்பினும் பெரிய அளவில் கிடைப்பினும் பலரோடு சேர்ந்து உண்பான். அந்த வாழ்வு கழிந்துவிட்டதே! என்பொடு ஊன் உளதாகிய இடமெல்லாம் எமக்கீந்து, அம்புடன் வேல் நுழை வழியெல்லாம் தான் நிற்பான். நரந்தம் நாறும் தன் கரத்தால் புலவு நாறும் என் தலையை அருளுடன் தைவந்திடுவான். அந்த வாழ்வும் தொலைந்ததே! அவன் மார்பில் பாய்ந்த வேல் அவனை மட்டுமா கொன்றது? இல்லை! அது பெரும்பாணரின் அகல் மண்டையைத் துளைத்து, ஊடுருவிச் சென்று, இரப்போரின் ஏந்திய கையையும் பிளந்து, சுற்றத்தார் புன்கண் பாவையின் ஒளியையும் மழுங்கச் செய்து, அழகிய நுண் சொல் தேர்ச்சிப் புலவர் நாவிலே சென்று அன்றோ விழுந்தது! எமக்குப் பற்றாகிய எம் இறைவன் யாண்டுளனோ! இனி, பாடுவாரும் இல்லை; பாடுவார்க்கு ஒன்று ஈவாருமில்லை’, என்னுங் கருத்தமைய
‘சிறியகள் பெறினே எமக்கீயும் மன்னே!
பெரியகள் பெறினே
யாம்பாடத் தான்மகிழ்ந்து உண்ணும் மன்னே!
சிறுசோற் றானும் நனிபல கலத்தன் மன்னே!
பெருஞ்சோற் றானும் நனிபல கலத்தன் மன்னே!
என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயும் மன்னே!
அம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தான்நிற்கும் மன்னே!
நரந்தம் நாறுந் தன்கையாற்
புலவு நாறும் என்தலை தைவரும் மன்னே!
அருந்தலை யிரும்பாணர் அகல்மண்டைத் துளை உரீஇ
இரப்போர் கையுளும் போகிப்
புரப்போர் புன்கண் பாவை சோர
அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவிற்
சென்றுவீழ்ந் தன்(று) அவன்
அருநிறத்(து) இயங்கிய வேலே!
ஆசா(கு) எந்தை யாண்டுளன் கொல்லோ!
இனிப்பாடுநரும் இல்லை; பாடுநர்க்(கு)ஒன்று ஈகுநருமில்லை;
பணித்துறைப் பகன்றை நறைக்கொள் மாமலர்
சூடாது வைகி யாங்குப் பிறர்க்(கு)ஒன்று
ஈயாது வீயும் உயிர்தவப் பலவே!’ (புறம், 235)
என விண்ணும் மண்ணும் கண்ணீர் வடிக்கத் தம் உள்ளத்தில் பீரிட்டு எழுந்த துயரவெள்ளத்தைச் செய்யுள் வடிவாக்கினார்.
ஆனால், அந்தோ! ஒளவையாரின் கவிதையும் கண்ணீருங்கூட இனி அதிகமானை உயிர்ப்பியாவே! அதியமான் வாழ்வு அவ்வளவு கசப்பான பாடத்தைக் கடுந்துயரொடு கலந்து இவ்வுலகுக்கு உணர்த்திவிட்டது. அணுவினும் நுண்ணியதாய்-அணுவைப் பிளந்தால் தோன்றும் ஆற்றலினும் பன்னூறு மடங்கு அதிகமான பேராற்றல் படைத்ததாய் விளங்கும் இயற்கையின் ஆற்றலை-பரந்த பேரூழின் வல்லமையை-என்னென்று கூறுவது! ‘வாளெடுத்தவன் வாளால் மடிவான்,' என்ற சான்றோரின் வாக்கு அதிகமான் வாழ்வில் எவ்வளவு துயரக் காட்சிகளோடு கலந்து மெய்யாகிவிட்டது! ‘மனிதனது ஒவ்வொரு செயலும் தன் எதிர்ச் செயலைக் கண்டே தீரும்,' எனும் இயற்கையின் சட்டத்தை எவரே உடைக்க வல்லார்? தீயின் சுடர் வானோக்கி எரிவதும், வெள்ளம் கீழ் நோக்கி விரைவதும் போலன்றோ தவிர்க்க முடியாத தன்மையதாய் அவ்வியற்கையின் ஆற்றல் விளங்குகிறது? அதிகமான் மாண்டான். தகடூர் வீழ்ந்தது. வரலாறாகிவிட்ட இச்செய்திகளைப் பின் வரும் பதிற்றுப்பத்து அடிகள் விளங்குகின்றன:
‘பொய்யில் செல்வக் கடுங்கோ வுக்கு
வேளாவிக் கோமான் பதுமன் தேவி ஈன்றமகன்
கொல்லிக் கூற்றத்து நீர்கூர் மீமிசைப்
பல்வேற் றானை யதிக மானொ(டு)
இருபெரு வேந்தரையும் உடனிலை வென்று
முரசுங் குடையுங் கலனுங் கொண்(டு)
உரைசால் சிறப்பின் அடுகளம் வேட்டு' [1]
....................
‘வெல்போர் ஆடவர் மறம்புரிந்து காக்கும்
வில்பயில் இறும்பின் தகடூர் நூறி
பேஎ மன்ற பிறழ நோக்கியவர்
ஒடுறு கடுமுரண் துமியச் சென்று
வெம்முனை தபுத்த காலை ‘ [2]
---------
[1]. பதிற்றுப்பத்து, 8-ஆம்,பத்து, பதிகம்
[2]. பதிற்றுப்பத்து, 8-ஆம் பத்து, 8-ஆம் பாடல்
----------
வீரமரணமடைந்த அதிகமான் பொன்னுடலம் ஈமச் சிதை எறியது. அதிகமானது அருமை
மகன் பொகுட்டெழினி நீர் வடியும் கண்களோடும் குருதி கொதிக்கும் நெஞ்சோடும் தந்தையின்
சிதைக்குத் தீயிட்டான். உற்றாரும் மற்றாரும், இரவலரும் இல்லோரும், பாணரும் பாடினியரும்,
கூத்தரும் விறலியரும் கோவெனக் கதறி அழுதனர். ஈமத்தீச் சுழன்று சுழன்று எழுந்தது;
சுடர் விட்டு எரியலாயிற்று. ஒளவையாரின் அருள் உள்ளம் கொதித்துக் குமுறியது. அவர்
பிள்ளையைப் பறிகொடுத்த பெற்றவளைப்போல, துடிதுடித்து அழுது அரற்றினர்.
“அந்தோ! ஈம வெந்தீயே! நீ எந்தை உடலை எரிக்காது போயினும், அன்றி விண்ணுற எழுந்து எரித்து நீறாக்கினும், அவனுடைய ஞாயிறு அன்ன புகழை உன் ஞல் ஒரு நாளும் எரிக்க முடியாது. அதிகர் கோமானே, அருங்கொடை வள்ளலே, ஆர்வலர் புன்கண் தீர்த்த அருமருந்தே, ஈரநெஞ்சத்தோடு மாரி போல வழங்கிய கருணை முகிலே, நீயின்றிக் கழிகின்ற காலையும் மாலையும் இனி என் வாழ்நாள் காணாது இருள் சூழ்ந்து ஒழியட்டும்; உனக்கு உற்றவர், நடுகல் நட்டு நாரால் அரிக்கப்பட்ட மதுவை நீ அருந்து வாயெனக் கருதிச் சிறு கலத்தினின்றும் உகுக்கின்றனர். கோடுயர் மலையுடன் நாடு முழுதும் கொடுப்பினும் கொள்ளாத பண்பினை உடைய நீயோ, இப்புல்லிய மதுத்துளிகளை நுகர்வாய்! ” என்னும் கருத்தமைந்த
‘எறிபுனக் குறவன் குறையல் அன்ன
கரிபுற விறகின் ஈம ஒள்ளழல்
குறுகினுங் குறுகுக; குறுகாது சென்று
விசும்புற நீளினும் நீள்க; பசுங்கதிர்த்
திங்கள் அன்ன வெண்குடை
ஒண்ஞாயி றன்னோன் புகழ்மா யலவே.’ (புறம், 231)
இல்லா கியரோ காலை மாலை
அல்லா கியர்யான் வாழும் நாளே;
நடுகற் பீலி சூட்டி நாரரி
சிறுகலத் துகுப்பவுங் கொள்வன் கொல்லோ
கோடுயர் பிறங்குமலை கெழீஇய
நாடுடன் கொடுப்பவுங் கொள்ளா தோனே!’ (புறம். 232)
என்னும் பாக்கள் ஒளவையாரின் அரற்றலை விளக்குவன.
இவ்வாறு எழுத்தறிவார் இதயத்தையெல்லாம் பாகாய் உருக்கிக் கண்ணீர் பெருக்கெடுத்தோடச் செய்யும் கையறுநிலைப் பாடல்களைப் பாடிய ஒளவையார், அதிகமான் மறைவிற்குப் பின்னும் சிலகாலம் "இன்னும் இறப்பு வரவில்லையே! சேண் உயர் உலகிலேனும் சென்று அதிகமானைக் காணோமோ!” என்ற கலகத்துடனையே வாழ்வை நடத்தியிருக்க வேண்டுமெனத் தோன்றுகிறது.
அதிகமான் மகன் பொகுட்டெழினி மிக இளையனாயிருந்தான். அதனால், அவனுடன் ஒளவையார் சூழ்ச்சித் துணைவராய்த் தங்கி, 'விலங்கு பகை கடிந்த கலங்காச் செங்கோலனாய்’ அவன் விளங்க, அவனுக்கு உற்ற துணைவராய் விளங்கினார். பொய்யா ஈகைப் பொகுட்டெழினியும் தன் நிழல் வாழ்வோர் துன்ப இருள் சிறிதும் காணாதவாறு ஆட்சி புரிந்தான். மேலும், ‘இசை விளங்கு கவிதை நெடியோனா'ய் விளங்கிய அவன், தன் அருமைத் தந்தையைப் போன்றே விருந்திறை நல்கும் வள்ளியோனாயும் திகழ்ந்தான். அத்தகையோன் வீரம், கருணை, காதல் முதலிய புண்புகளையெல்லாம் போற்றியவாறு ஒளவையார் ஓரளவு தம் வாழ்வில் வீழ்ந்த பேரிடியால் விளைந்த பெருந்துயரை மறந்திருந்தார், பின்னர் அவர் ‘தமிழ் கூறும் நல்லுலக’த்தின் பல்வேறு பகுதிகளையும் காண விழைந்தார். அது காரணமாகத் தகடூரினின்றும் வெளிப்போந்தவர், வள்ளுவர் குடியில் தோன்றியவனும், நாஞ்சில் மலைக்கு உரியவனுமாகிய நாஞ்சில் வள்ளுவனைக் கண்டு, அவன் செம்மைசால் பண்பினன் என்பதை அறிந்து, அவன்பால் சென்று, பொன்னே துகிலோ ஏதும்பெற எண்ணாதவராய், உணவுக்குச் சிறிது அரிசியே வேண்டினார். அவனோ, அருந்தமிழ்ப் புலவர் வரிசை அறிந்து வழங்குபவன் ஆகலின், ஒளவையாரின் பெருமை யெல்லாம் உணர்ந்தவனாய் யானைப் பரிசில் அளித்தான். அது கண்டு ஒளவையார் அவன் கொடையை வியந்து, “செந்நாப் புலவீர், நாஞ்சில் மலை வேந்தன் மெல்லிய அறிவினனே, இஃது உறுதி. யாம் இலைக்கறிமேல் தூவச் சிறிது அரிசி வேண்டினேமாக, அவன் பரிசிலர்க்குதவும் வரிசை அறிதலால், எம் வறுமையைப் பார்த்தலே அன்றித் தன் மேம்பாட்டையும் சீர்தூக்கிப் பார்த்துப் பெரிய மலை போல்வதொரு யானையை அளித்தான். ஆதலால், ஒருவர்க்கு ஒன்றனைக் கொடுக்குமிடத்து அப்பெற்றிப் பட்டதொரு தெளியாக்கொடையும் உளதோதான்! பெரியோர் தாங்கள் செய்யக்கடவ முறைமையைத் தெரிந்து பாதுகாத்துச் செய்யார்கொல்!” எனக் குறிப்பாகவும், வெளிப்படையாகவும் அவனைப் புகழ்ந்தார்.
பின்னர் ஒளவையார் உறையூரின் கண் சோழ அரசன் இராயசூய வேள்வி இயற்றுகின்றான்
என்பது அறிந்து ஆங்குச் சென்றார். அவன் சேரமான் மாரி வெண்கோவும்
பாண்டியன் உக்கிரப் பெருவழுதியும் சோழ வேந்தனோடு ஒருங் கிருக்கக் கண்டார். வாழ்நாளெல்லாம்
தமிழ் வேந்தரும் தமிழ் வள்ளல்களும் தங்களுள் மாறுபாடு கொண்டு போரிட்டு மடிவதையே கண்டு மனம்வெந்திருந்த ஒளவையாருக்குத் தமிழகத்து முடியுடை மூவேந்தரும் ஒருங்கிருந்த காட்சி எல்லையில்லா இன்பத்தை அளித்தது. அவர் அவ்வின்ப உணர்வின் எல்லையில்நின்று அம் மூவேந்தரையும் அருந்தமிழ்க் கவிதையால் போற்றினார்.
மூண்டெழும் போருக்கெல்லாம் அடிப்படைக் காரணம் மண் வெறியும் புகழ் நசையுமே என்பதை நன்குணர்ந்த அச்சான்றோர், அம்மண்ணாள் வேந்தர் மனம் கொளும் வகையில் தம் இதயக் கருத்தை எடுத்துரைக்கலானார் : “தேவர் உலகை ஒத்த பகுதிப்பட்ட நாடு தம்முடையது ஆயினும், அஃது எப்போதும் தம்மோடு உரி மைப்பட்டே நடவாது; ஒருவர் அந்நாட்டிற்கு உரியவர் அல்லர். ஆயினும், நற்றவம் செய்தோராயின், அஃது அவர்க்கே உரித்தாகும். ஆகையால், நீவிர் யாசிக்கும் அறவோர் ஈர்ங்கை நிறையப் பூவும் பொன்னும் புனல் படச் சொரிந்து, ஒண்டொடி மகளிர் பொலங்கலத் தேந்திய தண்கமழ் தேறல் மாந்தி மகிழ் சிறந்து, இரவலர்க்கு அருகாது ஈந்து, உங்கட்கு அறுதியிட்ட வாழ் நாள் முழுதும் வாழ்தல்வேண்டும். ஒருவர் பிறவிப் பெருங் கடலைக் கடக்கத் தாம் செய்த நற்கருமமன்றி நற்புணை பிறிதொன்றுமில்லை. அந்தணர் வேள்வியில் வளர்க்கும் முத்தீப்போலக் கண்ணுக்கினிய கவின் மிக்க காட்சியுடன் ஒருங்கிருந்த கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்தர்களே, இவ்வாறு நீங்கள் கூடி உறைதலால் உண்டான பீடும் பயனும் நன்மையும் புகழும் யானறிந்து உரைக்கும் அளவினவோ? உங்கள் வாழ்நாள் விண் மீனினும், மழைத்துளியினும் சிறந்து பெருகுவதாக!” எனத் தமிழக வேந்தர் உணர்ந்து உய்யும் வகையில் அறிவுரை கூறி வாழ்த்தினார்.
‘முத்தீப் புரையக் காண்டக இருந்த
கொற்ற வெண்குடைக் கொடித்தேர் வேந்திர்!
யானறி அளவையோ இதுவே?’ (புறம் 387)
என்னும் இவ்வருமை சான்ற அடிகளைத் தன் அகத்தே கொண்டு சங்க இலக்கியத்துள்ளேயே ஒளி மிக்க மணியாய் விளங்கும் இப்புறப்பாடலைப் படிக்குங் தோறும் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே பல்லாற்றானும் சிறந்திருந்த இன்பத் தமிழகத்தைச் சீரழிக்கக்கூடிய கொடு நோய் எதுவென உணர்ந்து அங்நோய் தீர மருந்தும் காட்டிய அவ்வருந்தமிழ்த் தாயரை எண்ணி எண்ணி,
‘அன்னையீர், எங்கள் தலைமுறையிலேனும் ஒற்றுமையால் உய்ந்து உலகு போற்றும் ஒப்பற்ற சாதியாய் விளங்குவோம். அதுவேயன்றி, உமக்கு வேறென்ன கைம்மாறு செய்ய வல்லேம்?’ என்று நம் தமிழ் உள்ளம் உருக்கத்துடனும்
உறுதியுடனும் முழங்குகின்றது அன்றோ?
இவ்வாறு தமிழகம் அன்றும் இன்றும் உய்வதற்கு உரிய ஒரு பெருநெறியினைக் காட்டி ஒற்றுமைச் சங்கொலித்த சான்றோராகிய ஒளவையாரின் பிறப்பைப் போன்றே அவர் முடிவைப் பற்றியும் நாம் ஏதும் அறிந்திலோம்.
ஒளவைப்பிராட்டியாரின் பொன்னுடலம்-அண்ணல் அதிகமான் அளித்த அருங்கனியால் நீண்ட நாள் தமிழகத்தில் வாழ்ந்து தொண்டு புரிந்த திருவுடலம்-எங்கு-எப்பொழுது-எவ்வாறு மறைந்ததோ! அந்தோ! அருந்தமிழ்ப் பெருமாட்டியாரின் பொன்னுடலம் மாய்ந்து ‘அவருடற் பூந்துகள் ஆர்ந்தது’ம் நாம் பிறந்து வாழும் இத்தமிழ் மண்ணிலேதான் என்பதை எண்ணும் போது நம் உடலெல்லாம் சிலிர்க்கிறது! அன்னையாரின் திருவுடலம் மறைந்தாலும், அவருடைய அருந்தமிழ்க் கவிதைகள் என்றும் நமக்கு வழி காட்டும் சுடர் விளக்குகளாய்த் திகழ்வது திண்ணம்.
தமிழகம் கால வெள்ளத்தில் நீர்க்குமிழிபோல அழிந்தொழியாமல்-உலக இருள் போக்கும் ஒப்பற்ற கலங்கரை விளக்காய்த் திகழ வேண்டுமாயின், ஒற்றுமை யொன்றே அதற்குரிய வழி என்பதை இன்றும் நாம் உணருமாறு இருபது நூற்றாண்டுகட்கு முன்பே உணர்த்திய ஒளவைப் பெருமாட்டியாரின் அரியதொரு பாடல் தமிழகத்திற்கு மட்டுமன்றிக் கடல் குழ்ந்த காசினிக்கெல்லாம் அறிவுச்சுடர் கொளுத்தும் அணையா விளக்காய் ஒளிர்கிறது.
தம் வாழ்வில் எத்தனையோ மன்னர்களையும் வள்ளல்களையும் பார்த்தவர் ஒளவையார்; அவர்கள் ஆண்ட மண்ணையும் கடலையும், மலைகளையும் காடுகளையும் கண்டவர். அருமைத் தமிழகத்தின் ஐவகை நிலங்களின் அழகும் அவர் கண்ணாரக் கண்டு களித்ததே ஆகும். சோறு படைக்கும் சோழ நாடும், முத்தளிக்கும் பாண்டி நாடும், வேழம் மிகவுடைய சேரநாடும், சான்றோர் பலருடைத் தொண்டை நாடும் அவர் கண்டு பழகிய பகுதிகளே ஆகும். அத்தகையோர் தம் பரந்த அனுபவத்தில் கனிந்த உண்மை ஒன்றை உலகிற்குத் தம் வாழ்வின் காணிக்கையாக அளித்துள்ளார். "நிலனே, நீ ஒன்றில் நாடேயாக, ஒன்றில் காடேயாக! ஒன்றில் பள்ளமேயாக, ஒன்றில் மேடேயாக! எவ்வாறாயினும், எவ்விடத்து ஆடவர் நல்லரோ, அவ்விடத்து நீயும் நல்லையல்லது, நினக்கென ஒரு நலமுடையையல்லை. வாழிய நிலனே!” என்னுங் கருத்தமைய
‘நாடா கொன்றோ, காடா கொன்றோ
அவலா கொன்றோ, மீசையா கொன்றோ!
எவ்வழி நல்லவர் ஆடவர்,
அவ்வழி நல்லை வாழிய நிலனே!’ (புறம், 187)
என அமைந்ததே அச்செய்யுள்.
இவ்வாறு தம்மையும், நம்மையும் ஈன்றெடுத்த மண் மகளை வாழ்த்தும் அருமையான பாடல், நாமும் வையகமும் உணர்ந்து உய்ய ஒளவையார் அளித்த சாவா மருந்தாகும்.
இருபது நூற்றாண்டுகட்கு முன்பு தாய்க்குலத்தின் பெருமையாய் வெற்றியாய்த் தமிழகத்தில் தோன்றிய ஒளவையார்- நல்லிசைப் புலமை சான்ற பெண்மணிகளுக்கெல்லாம் தலை மணியாய் விளங்கிய தமிழ்ச்சான்றோர்-உலகப் பெருமாதருள் ஒருவரென்பது தமிழகம் உலக அரங்கில் மேலும் மேலும் உயர்ந்து ஒப்பற்ற சமுதாயமாய் விளங்கும் பொன்னாளில் வையகம் முழுதும் ஏற்றுப் போற்ற இருக்கும் பேருண்மையாகும். அத்தகு பெருந் தாயரின் சான்றாண்மை மிக்க நெஞ்சின் உள்ளொளியாய் விளங்கும் அருந்தமிழ்ப் பாடல்கள் என்றென்றும் நம் வாழ்விற்கு இருள் நீக்கி ஒளி காட்டி-சிறுமை நீக்கிச் செம்மை கூட்டி-இறப்பு நீக்கி வாழ்வு ஊட்டி-வளம் புரிவதாக!
--------
3. பெருந்தலைச் சாத்தனார்
‘மருங்குவண்டு சிறந்தார்ப்ப மணிப்பூ ஆடை அது போர்த்துக் கருங்கயற்கண்
விழித்தொல்கி’ நடக்கும் காவிரித்தாயின் கருணை வளம் கொழிக்கும் சோழ
நன்னாட்டிலுள்ள பழமை பொருந்திய ஊர்களுள் ஒன்று ஆவூர். அவ்வூரின் கண்
மூலங்கிழார் என்ற பெயர் படைத்த சங்கச் சான்றோர் ஒருவர் இசைபட வாழ்ந்திருந்தார். தமிழகம் எங்கணும் புகழ் பரப்பி வாழ்ந்திருந்த ஆவூர் மூலங்கிழாருக்கு அருந்தவப் பயனாய்த் தோன்றினார் ஓர் அருந்தமிழ்ச் சான்றோர். தவமிருந்து பெற்ற குழந்தைக்குத் தண்டமிழ்ப் புலவராகிய மூலங்கிழார் தம் குல தெய்வத்தின் பெயராகிய ‘சாத்தனார்’ என்பதையே சூட்டினார். சாத்தனார் மழலை மிழற்றும் குழந்தைப் பருவத்தராய் இருந்த நாளிலேயே அவர் தலை சற்றே பெரிதாய் விளங்கியது. அது கண்ட பெற்றோரும் மற்றோரும் ‘பெருந்தலைச் சாத்தன்' என்றே அன்பூற அவரை வழங்கலாயினர். நூலறிவோடு நுண்ணறிவும் படை த்த நல்லறிஞர் பலரும் முழுநிலவனைய சாத்தனாரின் திருமுகத்தை உற்று நோக்கி உளமிகப் பூரித்துச் ‘சாத்தன் உண்மையிலேயே பெருந்தலைச் சாத்தனாய்த்-தமிழகம் போற்றும் சான்றோனாய்த் திகழ்வான்,' எனக் கூறி இன்புற்றனர். தாம் பெற்ற மகவை நாட்டவரெல்லாரும் போற்றி மகிழ்வது கண்டு ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனர் பெற்றோர்.
இவ்வாறு பிறந்த நாள் தொட்டுப் பெற்றோர்க்கும் உற்றோர்க்கும் பெருமகிழ்வூட்டி வந்த சாத்தனார், இமிழ் கடல் சூழ்ந்த தமிழகம் முழுவதற்குமே இன்பம் வழங்க விழைவார்போலக் குடதிசைத் தோன்றிய குளிர்மதி என நாளும் புதுப்புதுப் பொலிவுடன் வளர்ந்து வரலாயினர். ஆண்டுகள் பல கழிந்தன. "தந்தையறிவு மகனறிவு” என்ற மணி மொழிக்கு ஒப்பப் பெரும்புலவரானார் சாத்தனார்; பழுத்த தமிழ்ப் புலமைக்கும் ஒழுக்கம் நிறைந்த வாழ்விற்கும் உறைவிடமாய் விளங்கினார்.
காளைப்பருவம் எய்திய சாத்தனாரின் கலை உணர்விற்கும், புலமை சான்ற வாழ்க்கைக்கும் ஏற்ற பொற்புடை நல்லார் ஒருவர் அவர்க்கு வாழ்க்கைத் துணைவியராய் அமைந்தார். அவ்வன்னையாரோ, புலவர் பெருமானாரது கருத்தறிந்து நடக்கும் காதல் நெஞ்சினராய், ‘தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகை சான்ற சொற்காக்கும் சோர்விலா’ நலத்தினராய்த் திகழ்ந்தார். மனைத்தக்க மாண்புடையராய்த் திகழ்ந்த அவருடன் மங்கலம் நிறைந்த இல் வாழ்க்கை நடத்திய சாத்தனார், நன்கலமான நன் மக்கட்பேற்றினைப் பெற்றார். குழலினும் யாழினு மினிய மழலை பேசியும், சிறு கை நீட்டிக் கலத்திடை உள்ள அடிசிலை அளாவி அமிழ்தம் ஆக்கியும் சின்னஞ் சிறு குழந்தைகள் செய்த சிறுகுறும்பெல்லாம் புலவர் வாழ்க்கையைப் புத்தேளிர் உலக வாழ்வினும் இன்பம் நிறைந்ததாய் விளங்கச் செய்தது. இவ்வாறு இன்புற்றிருந்த புலவர் பெருமானார் வாழ்க்கையை நிரயமனைய வறுமைத்தீத் தீண்டிற்று. வெந்தழலிற்பட்ட பூங்கொடி போலப் புலவரின் குடும்பம் சோர்ந்து தளர்ந்து துன்புறல் ஆயிற்று. கலைக்கடல் கடந்தும் கலிக்கடலைக் கடக்க ஒண்ணாப் புலவரின் நெஞ்சம் கலங்கியது. ‘இன்மை என ஒரு பாவி’ புலவரின்-அவர் குடும்பத்தின்-துன்பக் கண்ணீரைத் திறையாகக் கொண்டான். புலவரின் குடும்பம் துயரத்தீயில் வெந்து துடித்தது. நன்மனைக்குத் திருவிளக்காகிய மனைவியார் சிந்திய கண்ணீர் சாத்தனாரின் நெஞ்சைச் சுட்டது.பசியால் குழந்தை அலறிய அலறலோ, அவர் உயிரையே வாட்டியது. இந்நிலையில் அவர் என் செய்வார்! துன்பக் கண்ணீர் வடித்தார்; 'தமிழே, கலையே, புலமை வாழ்க்கையே, நின் பிரியாத் துணை கொல்லும் வறுமைதானோ?’ என எண்ணி மனம் குமுறினார். இவ்வாறு வாட்டும் பசி கொல்லினும் புலவர் தம் வறுமை தீர்க்கப் புகழல்லா வழிகளை நாடினரில்லை : சாவே வரினும் தம் கலையும் தமிழும் மாசுறாமல் இருக்கவே மனம் துணிந்தார். வறுமைத்தீ, பொன்னனைய புலவரின் உடலை-உள்ளத்தைப்-புடமிட்டது ஆனால், சாத்தனாரின் ஒழுக்கம் நிறைந்த பெருமித வாழ்வு குறையேதும் கண்டிலது. சுடச்சுட ஒளிரும் பொன்னே போல அவர் பண்பும் வறுமைத் துன்பம் சுடச்சுட ஒளி வீசலாயிற்று. 'கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே’ அல்லரோ? சங்கு சுட்டாலும் வெண்மை தருமன்றோ?
சாத்தனாரின் தமிழகம் துன்பக் களமாயிற்று. அழுகையும் அலறலும் அவர் வீட்டில் கொடுங்கூத்தாடின. இல்லின் கண் உள்ள அடுப்பு, சமையலை மறந்து எத்தனையோ நாளாயின. அதனால், அதில் ஆம்பி (காளான்) பூக்கும் நிலையும் நேர்ந்தது. கடும்பசியின் கொடுங்கோல் எல்லை மீறியது. அக்கொடுங்கோலாட்சிக்கு இரையான பச்சிளங்குழந்தையும் பசியால் துடித்தது.
உண்ண உணவின்றி ஆவி சோர்ந்திருக்கும் அன்புத்தாயின் மார்பில் பாலும் வற்றவே, வறிதே சுவைத்துச் சுவைத்துப் பால் பெறாது அன்னை முகம் நோக்கி அச்செல்வக் குழந்தை வீரிட்டுக் கதறி அழுத குரல் கேட்டுக் கல்லும் மலையும் கண்ணீர் பெருக்குமெனில், பெற்றவர் நிலை பற்றிப் பேசவும் ஒல்லுமோ! அலறியலறி அழுத குழந்தை முகம் நோக்கி நீர் நிறைந்த மழையெனக் கண்ணீர் பொழியும் கண்களோடு மனங்குமுறினார் பெற்ற தாயார். காணப்பொருத இக்கடுந் துயரக் காட்சியைக் கண்ட புலவர் நெஞ்சம் எரியிடைப்பட்ட இழுது என உருகியது. அவர் கலங்கினர்; கசிந்தார்; உள்ளம் துடித்தார்; ‘என் துயர் களைய வல்ல சான்றோர் எவரும் இல்லையோ?’ என்று ஏங்கினார்.
”இருவே(று) உலகத்(து) இயற்கை; திருவேறு
தெள்ளியர் ஆதலும் வேறு." (குறள், 374)
என்ற வள்ளுவர் வாய்மொழிக்குச் சாத்தனார் வாழ்க்கையும் விதி விலக்காகவில்லை.
இந்நிலையில் வாடிய அவர் செவிகட்குப் பயிர் கண்ட வான்மழையே போல ஒரு செய்தி
கிடைத்தது. ‘முதிர மலைக் கிழவன் புலவர் போற்றும் புரவலர் தலைவன்; முதிர்ந்த அன்பும்
அறிவும் மிக உடையவன்; பசிப்பிணிப் பகைவன்; அடையா நெடுங்கதவினன்; அருள்
நிறைந்த முகத்தினன்; புலவர்க்குப் பொன்னும் பொருளும் வரையாது ஈயும் வள்ளியோன்;
அவனிடம் சென்றாரை வாழ்நாள் முற்றும் வறுமைத்தீ அண்டாது, ' என்ற செய்தி
சாத்தனார் செவிகட்கு அமிழ்தம் ஆயிற்று. அத்துடன் பெருஞ்சித்திரனார் என்ற
பெருஞ் சான்றோர் பாடும் புகழ் படைத்தவனும் அவனே; அவர் வாழ்வைக் கவ்விய
வறுமையெல்லாம் களைந்து வளமை பொங்கச் செய்தவனும் அவனே, என்பதைக்
கேள்வியுற்றார்; வரம்பிலா மகிழ்வு கொண்டார். பழுமரந்தேடும் பறவை போல-முந்நீர்ப் பவ்வம்
நோக்கிப் பாய்ந்தோடும் வான் மலை அருவியும் பேராறும் போலச்-சாத்தனார்
திருந்து வேற் குமணன் இருந்து அருள் புரியும் திக்கு நோக்கிச் செல்ல
உளங்கொண்டார்.
பண்டைத் தமிழகத்தில் பசித்தார் துன்பம் போக்கித் தண்ணளி புரியும் தகைசால்
சுடர் விளக்குகளாய்த் திகழ்ந்தனர் எழுவர். கறங்கு வெள்ளருவி கல்லலைத்து ஒழுகும்
பறம்பிற்கோமான் பாரியும், கொல்லியாண்ட வல்வில் ஒரியும்,
மாரி ஈகை மறப்போர்
மலையனும், கூர் வேல் கூவிளங்கண்ணிக் கொடும்பூண் எழினியும்,
பெருங் கல் நாடன் பேகனும், திருந்துமொழி மோசி பாடிய ஆயும்,
உள்ளி வருநர் உலைவு
தீரத் தள்ளாது ஈந்த தகைசால் வண்மை நள்ளியும் ஆகிய அக்கடையெழு வள்ளல்கள் ஈத்துவக்கும் இன்பமறிந்து வாழ்ந்த வாழ்வின் புகழ் அந்நாளில் காசினியெல்லாம் பரந்து விளங்கியது. அவர் புகழ் பாடிய சங்கப் புலவர்களின் பாடல்களைப் படிக்குந் தொறும் இன்றும் நம் உள்ளம் இன்பக் கடலாகிறது. ஈடுமெடுப்புமில்லா அறச்செல்வர்களாய்த் திகழ்கின்ற அப்பெருமக்கள், அழகை-கலையை-இசையை-கூத்தை-தமிழை-புலமையைத் தெய்வமெனக் கருதி வழிபட்டனர். அந்நாளில் பாணரும் பாடினியரும், கூத்தரும் விறலியரும் தம் கலைத்திறனால் தமிழகத்தை இசையும் கூத்தும், பண்ணும் பாட்டும் நிறைந்த கலைக்கோயிலாய்த் திகழும் வண்ணம் செய்தனர். அவர்கள் வாழ்வு துன்பம் கண்டிலது. அவர்கள் கையிலும் கருத்திலும், நாவிலும் நெஞ்சிலும் கலையரசியின் களி கடமே சிறந்து விளங்கியது. கலை வளர்த்த அச்செல்வர்கள் வீட்டிலும் வாழ்விலும் இன்ப நடனம் இடையறாது நிகழும் வண்ணம் நாடாண்டும் தலையளி செய்தும் வாழ்ந்த வள்ளல் பெரு மக்களைக் கூற்றுவன் கொண்டேகினான். வளமார்ந்த தமிழகம் வறியதாயிற்று. பாடுவோரும் ஆடுவோரும் தம் பசி போக்கித் துயர் களைந்து இன்பம் நல்கும் வேந்தர்களைக் காணாது மனம் இடிந்து போயினர்; கைந்நெறித்துக் கவலை மிகுந்து கண்ணீர் சொரியலாயினர். நஞ்சு போலும் கொடிய வறுமை நாளும் கலைஞர் வாழ்க் கையை நையுமாறு செய்தது. சொல்லொணாத் துயர்க் கடலில் வீழ்ந்து, வளம் படைத்த வாழ்வு என்னும் கரை சேர வழியின்றி அவதியுற்றிருந்த அருந்தமிழ்க் கலைஞரகளைக் கரையேற்றிக் காக்க வல்ல நாவாயாய்-அறவோனாய்த்-தோன்றிய அண்ணலே குமணன் என்ற பெயர் படைத்த பெருந்தகையாளன் ஆவன். அவனது முதிரமலை, இயற்கை வளனெல்லாம் ஒருங்கே பெற்றுத் திகழ்ந்தது. தேனொழுகும் தெருக்கள் கிறைந்த அவன் முதிரமலை, அயராது பெருகும் புதுப்புது வருவாயை நாளும் உடையது. அங்கே மூங்கில்கள் வானுற வளர்ந்து ஓங்கி நிற்கும், அவற்றுடன் சுரபுன்னை மரங்கள் பூமணம் கமழப் பொலிவுற்று உயர்ந்து விளங்கும். ஆசினியும், அழகு மிக்க பலாவும், முள்ளைப் புறத்தேயுடையனவாய் முழவு போலப் பருத்து முதிர்ந்து கனிகளைத் தாங்கி நிற்கும். அவற்றை வேட்கை தீர உண்ண விரும்பிய கடுவன், ஆர்வத்துடன் கவர்ந்து செல்லும். தான் பெற்ற தீஞ்சுவைப் பலவினை அன்புடை மந்தியோடு கூடி உண்ண ஆசை கொண்ட கடுவன், பஞ்சு போன்ற மயிரைத் தலையிலுடைய பெண் குரங்கைக் கை காட்டி அழைக்கும்.
இவ்வாறு விலங்குகளும் வயிறார உண்டு பேரின்பம் காணத் துணை புரியும் அம்மலை எனின், பாடி வரும் பாணர்க்கும், ஆடி வரும் விறலியர்க்கும் எத்துணை இன்பம் நல்கியிருக்கும் என்பதைக் கூறவும் வேண்டுமோ! கைவண்குமணனது புகழ் கேட்ட இரவலர் கூட்டம் அம் முதிர மலையை முற்றுகையிட்டது. புலவர் கூட்டம் நாளும் பல்கிப் பெருகுதலை அறிந்த குமண வள்ளலும் எல்லையில்லாப் பெருமகிழ்வு எய்தினன். காய்கதிர்ச் செல்வன் கடுமை பொறாது புற்களும் கரிந்து போன கானகத்தில் ‘கல்’லெனும் ஒசையெழுப்பிக் கருவி வானம் அதிரும் குரலோடு இடித்தும் மின்னியும் பெருமழை பெய்து வாடிய நிலமும் பயிரும் செழித்து விளங்கச் செய்வது போன்று, கொல்லும் வறுமையால் அவிழ்ப்பதம் காணாது பசி தின்ன வாடிய யாக்கையினராய் வருந்தி வரும் இரவலர்களின் வயிறு குளிரும் வண்ணம் தாளிப்போடு கூடிய கொழுவிய துவை கலந்த நெய்யுடை அடிசிலை, திங்களைச் சூழ்ந்த திருமீன்களென விளங்கும் செம்பொன்னாலாகிய ‘பொங்குகதிர் மின்னப் புகழ்க்கலங்கள் பல பரப்பி’ வைத்து ஊட்டித் தானும் உடனிருந்து உண்டு மகிழ்வான்; ' கேடில்லை ஆகுக பாடு வாரது சுற்றம்' என்று வாழ்த்திப் பெறுதற்கரிய பொன் அணிகளையெல்லாம் அவர்கட்கு எளிதாக வழங்கி உள்ளம் இன்புறுவான்; தன்னை நட்டோரினும் தன்னை நாடி வந்த இரவலர்பால் பேரன்பு செலுத்துவான். இத்தகை வள்ளியோனாய்த் திகழ்ந்த அவன் புகழ் எங்கும் பரவி இரவலர்களைக் கூவி அழைத்தது. அவர்களும் கொடிய வறுமை பின்னின்று துரத்த, குமண வள்ளலின் புகழ் முன்னின்று இழுக்க, அணியணியாய் வரலாயினர். அவ்வாறு வந்தோர்க்கு எல்லாம் வானம் பொய்த்து வளமழை மாறிப் பெருவறம் கூர்ந்த நாளிலும் மன்பதை யெல்லாம் சென்று நீர் உண்ணுதற்குக் கங்கையாற்றின் வெள்ளம் பெருக்கெடுத்துத் தோன்றியது போலக் கருணை காட்டினான் குமணன்; ஆறலை கள்வர் வழிப் போவாரை அடித்துக்கொன்று பொருளைக் கவர்தலால் கடத்தற்கு அரியதாயிருக்கும் பேரிருஞ்சுரம் வழியாகத் தம் மனைவியரைப் பிரிந்து வந்த இரவலர் அன்பின்றிப் பிரிந்து சென்ற தம் கணவன்மாரை எண்ணிக் கலங்கி இருக்கும் கற்புடை மகளிர் காணுந்தொறும் களிகொள்ளுமாறு பொன்னும் பொருளும் வாரி வாரி வழங்கினான்; பெருவேந்தரும் கண்டு நாணப் பனையொத்த கைகளையும், முத்துவிளையும் தந்தங்களையும் உடைய களிறுகளின் மீது பக்கமணிகள் மாறிமாறி ஒலிக்கப் பாடி வந்த புலவர்கள் ஏறிச் செல்லுமாறு செய்தான். இத்தகைய அருளும் பொருளும் நிறைந்த அறவோனாய் விளங்கிய குமணன் புகழ் பகலவன் ஒளி போல எங்கும் பரவித் திகழ்ந்தது. அவன் வாய்மையினையும் வண்மையினையும் அறிந்த புலவர் பெருந்தலைச்சாத்தனாரும் அத்தகைய மேலோன் இருக்குமிடம் மேவித் தம் வறுமைத்துயர் களையத் துணிந்தார்.
குமணனது திருநாட்டை அடைந்தார் புலவர். அங்கு அவர் கேட்ட செய்தியும் கண்ட காட்சிகளும் அவர் உள்ளத்து உணர்வுகளை வீறு கொண்டு எழச் செய்தன.
உரிய நாளில் அரியணை ஏறி அருளாட்சி புரிந்து வந்த குமணனுக்குத் தம்பி ஒருவன் இருந்தான். எவ்வாறோ அவன் மனத்தில் தீய எண்ணங்கள் தோன்றுமாறு செய்தனர் பண்பற்ற சிலர்; அண்ணனது புகழையும் பெருமையையும் பற்றிப் பெருமை கொள்ள வேண்டிய அவன் மனத்தில் பொறாமைத்தீக் கொழுந்து விட்டு எரிய வழி வகுத்தனர். சிறியார் விரித்த சூழ்ச்சி வலையில் இளங்குமணன் சிக்கினான் , அறிவிழந்தான்; அறமற்ற செயல்களைச் செய்யத் தலைப்பட்டான்.
‘நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்(கு)
இனத்தியல்ப தாகும் அறிவு” (குறள், 452)
என்ற வள்ளுவர் குறளுக்கு ஒர் எடுத்துக்காட்டாயிற்று இளங்குமணன் வாழ்க்கை. அழுக்காறு என்னும் பாவிக்கு இரையாகிய அவன், எவ்வாறேனும் அண்ணனை அரியணையினின்றும் அகற்றிவிட்டு அதில் தான் அமர வேண்டுமென்று ஆசை கொண்டான்; தன் ஆசையை அண்ணன்பால் சென்று குறிப்பாகவேனும் கூறியிருப் பின், 'அன்றலர்ந்த செந்தாமரை'யினும் ஒளி நிறைந்த முகத்தோடு, இக்கணமே இவ்வரசுரிமையை நினக்கே ஈந்தேன்!” என்று மகிழ்வோடு கூறி மணிமுடி துறந்திருப்பான் அருளுருவான குமண வள்ளல். ஆனால், மதி கெட்டுப் பொறாமைத்தீயால் மனம் பொசுங்கிக் கிடந்த இளங்குமணனுக்கு அந்த எண்ணம் வருமா? அவன் தன் அற்ப ஆசையை நிறைவேற்ற அறிவற்ற புல்லர் துணையைப் புல்லினான்; சதி பல செய்தான்; அரியணையைக் கைப்பற்றினான். அதோடு அணையவில்லை அவன் ஆசைத்தீ; அருமந்த அண்ணனை நாட்டிலும் வாழ முடியாத வகையில், தீச்செயல்கள் செய்யத் துணிந்தான்; காடே குமணனுக்கு வீடாகுமாறு கொடுமைகள் புரிந்தான். சான்றோனாகிய குமணவள்ளலின் அருள் கனிந்த உள்ளம் அத்தனையும் பொறுத்துக்கொண்டது. ‘ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம்; பொறுத்தார்க்குப் பொன்றுந்துணையும் புகழ்,’ அன்றோ? குமண வள்ளலின் சால்புள்ளம் பிறர் தீமையைச் சொல்லவும்-நினைக்கவுங் கூட-முன் வந்திலது.
‘கொல்லா நலத்தது நோன்மை; பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு.’ (குறள், 984)
என்பதன்றோ வள்ளுவர் வாய் மொழி? மகிழ்வு நிறைந்த உள்ளத்தோடு
‘இருளுடை உலகந் தாங்கும்
இன்னலுக்கு இயைந்து நின்றான்
உருளுடைச் சகடம் பூண்ட
உடையவன் உய்த்த காரேறு
அருளுடை ஒருவன் நீக்க
அப்பிணி அவிழ்ந்த தொத்தான்,’
என்று ‘செப்பருங்குணத்து ராமனை’ப்பற்றிக் கவியரசர் கம்பர் கூறியாங்கு, ‘என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றதன்றோ?’ என்ற இதயக் களிப்புடன் கான் நோக்கிக் கடுகி நடந்தான். புள்ளும் மாவும் கள்ளமின்றி உறையும் காட்டு வாழ்க்கை குமணன் உள்ளத்திற்கு நாட்டு வாழ்க்கையினும் நனிமிக இனித்தது.
குமணனது நாடுற்ற சாத்தனார் கண்களும் கருத்தும் ஏமாற்றமடைந்தன. அவர் காவிரி நீரைக் காண வந்த இடத்துக் கானல் நீரைக் கண்டார்; அரிமா வீற் றிருக்குமென ஆவலுடன் காண விழைந்த அரியணையில் நரிமா அனைய நெறி யில்லான் இருப்பது கண்டார். ‘அறத்திற்கும் அருளுக்குமோ வீழ்ச்சி! மறத்திற்கும் கயமைக்குமோ வெற்றி! இக்கொடுமைக்குத் தமிழகத்திலோ இடம்!’ எனக் கொதித்தார்; தம்மை-தம் குடும்பத்தை -வாட்டி வதைக்கும் வறுமையின் கொடுமையையும் அக்கணமே மறந்தார்; தம் வாழ்வினும் நாட்டின் புகழும் அறத்தின் வெற்றியுமே பெரியன எனக் கருதும் பெற்றியார் அல்லரோ பெருந்தலைச் சாத்தனார்?
‘இன்மை ஒருவர்க்(கு) இளிவன்று; சால்பென்னும்
திண்மைஉண்டாகப் பெறின்.’ (குறள், 988)
என்ற அருமறைக்கு ஒர் இலக்கியமன்றோ அப்புலவர் பெருமானது வாழ்க்கை? கூழுக்கு ஆட்படாத அவர் உள்ளம் செயற்கரிய செய்யத் துணிந்தது. வயிற்றுக்கு இரை தேடி வேறு திசை நோக்கிச் செல்லலினும் வள்ளியோன் குமணனையே காணத் துடித்தது அவர் நெஞ்சம். புலவர் குடி புரக்கும் அவன் புகழைக் குன்றின் மீதிட்ட விளக்காக்க உறுதி கொண்டார் புலவர். வள்ளல் புகுந்த காடு நோக்கி வண்டமிழ்ப் புலவரும் விரைந்தார்; அங்கு அறத்தின் நாயகன் அருந்தமிழ்ச் சுவையில் தோய்ந்த நெஞ்சினனாய் இருக்கக் கண்டார். செந்தமிழ்ப் புலவரைக் கண்டான் குமண வள்ளல்; தன் நிலை மறந்தான்; அவரைத் தன் மார்புறத் தழுவி மகிழ்ந்தான்; இன்மொழி கூறி வரவேற்றான்,
மாரிகாலத்துக் கதிரவன் போலக் கானகத்திடை மறைந்திருந்த குமண வள்ளலைத் தேடிச்சென்று புலவர் கண்ட வேளையில் இளங்குமணன் ஆணையிட்டு அறையச் சொல்லிய பறையொலி ஒன்று எங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தது. காட்டிலே வாழினும் குமண வள்ளலால் நாட்டிலே ஆட்சி புரியும் தனக்குக் கேடு நேரும் என மதியிழந்த இளங்குமணன் கருதலானான். குமண வள்ளல்மீது மக்கள் கொண்டுள்ள அன்பே அவனை எதிர்க்கும் படையாகத் திரளக்கூடும் என அவனைச் சூழ்ந்திருந்த சிறுமதியாளர் அவனுக்கு அச்சம் ஊட்டினர். அச்சத்தால்-அழுக்காற்றால்-அறிவு கெட்டிருந்த இளங்குமணன், தன் அண்ணன் தலைக்கே உலை வைக்க நினைத்தான். அடவியில் வாழும் அண்ணன் தலையைக் கொய்து கொண்டு வருவார்க்குக் கோடி பொன் பரிசிலென்னும் பறையொலி எங்கும் கேட்கச் செய்தான். அச்செய்தி கேட்டான் குமண வள்ளல்; வருந்தினானில்லை; ‘இந்த என் தலைக்கோ கோடி பொன்! உடன் பிறந்த உள்ளன்பு போலும் எம்பி என் தலைக்கு இவ்வளவு விலை ஏற்றி வைத்தது!’ என எண்ணி மகிழ்ந்தான். அகழ்வாரைத் தாங்கும் நிலத்திலும் பொறையும் பண்பும் பயனும் மிகப் படைத்த பெரியோன் அல்லனோ குமணன்! ‘மாண்டு மடிந்த வள்ளல்களுள் எவர்க்கும் கிடைக்காத வாய்ப்பு எனக்கு-என் தலைக்குக் -கிடைத்ததே!’என்று எண்ணி உவகை கொண்டான்.
இந்நிலையில் அவன் தன்னைக் கண்ட புலவரின் உள்ளக் கருத்தை உணரத் துடித்தான் . ‘புலவீர், நீவிர் என்பால் வேண்டுவது யாதோ?’ என அருள் கனிந்த மொழிகளால் கேட்டான். புலவரும் தம் துயர வாழ்க்கையை நினைந்தவராய் அக்கொடுமையைக் கல்லும் கேட்டுக் கரைந்துருகும் வண்ணம் சொல்லோவிய மாக்கிக் காட்டினார்; தம் இல்லத்தில் அடுதலை மறந்து நெடுநாளாக அடுப்பில் ஆம்பி பூத்திருக்கும் அவலத்தை-வாட்டும் பசியால் வதையுறும் தம் மனைவியாரின் பாலற்ற மார்பினை வறிதே சுவைத்துச் சுவைத்து வாய் விட்டுக் கதறும் பச்சிளங் குழந்தை படும் வேதனையை-அது கண்டு ஆவி சோர்ந்து அழுது நிற்கும் தம் மனைவியாரின் துன்பத்தை-துயரத்தை யெல்லாம் கேட்டார் கண்கள் நீர் சிந்தும் வண்ணம் நவின்றார் புலவர். இன்மை தீர்க்கும் குடிப்பிறந்த அவ் வேந்தன், புலவரின் துயர் நிறைந்த மொழிகள் கேட்டு இதயம் உருகினான்; சான்றோரின் தமிழகத்துக்கு நேர்ந்த நிலை நினைந்து கண் கலங்கினான். தன் காடுறை வாழ்வினும் கோடி மடங்கு இன்னாததாய் விளங்கியது புலவரின் வாழ்வு அவனுக்கு. பொன்னும் மணியும் வாரி இரைத்த தன் வண்மை நிறைந்த கைகள் பயனற்றுக் கிடக்கும் நிலை கண்டு அவன் மனம் நொந்தான்; நாடி வந்தவர்க் கெல்லாம் நறுஞ்சோலையாய்ப் பயன் பட்ட தன் வாழ்க்கை, யாருக்கும் உதவாத கொடும்பாலையாகி விட்டதே என மனம் குமுறினான். இந்நிலையில் அண்மையிலே அவன் கேட்டிருந்த செய்தி அவன் அகச் செவிகளில் முழங்கியது. அவன் முறுவல் பூத்தான்; பெருமகிழ்வு கொண்டான்; ‘சாவினும் துன்பம் நிறைக் தது வேறில்லை; ஆனால், நாடி வந்த நல்லோர்க்கு ஈய முடியாத நிலையில் அச்சாவினும் இனியது வேறெதுவுமில்லை,’ என்று சான்றோர் சாற்றிய மணி மொழியை நினைந்தான்; வாழ்வில் என்றும் கண்டிராத இன்ப உணர்ச்சி அவன் உடலை-உள்ளத்தை-உயிரை ஆட் கொண்டது.
‘சாதலின் இன்னாதது இல்லை; இனி(து)அதூஉம்
ஈதல் இயையாக் கடை.’ (குறள், 280)
என்ற திருவாக்கு அவன் தலையை அவனுக்கு நினைப்பூட்டியது. அவன் உடன் பிறந்த தம்பியால் அது பெற்றிருக்கும் விலையை எண்ணினான் பூரித்தான். வள்ளலின் கை சரேலென உடைவாளை உருவியது. அவன் எடுத்த வாளை இருந்தமிழ்ப் புலவர்பால் நீட்டினான். அருந்தமிழ்ப் பெரியீர், அந்த நாள் வந்திலிர்! யான் கானுறை யும் இந்த நாள் வந்தீர்! யாது செய்வேன்! பொன்னும் களிறும், முத்தும் மணியும், துகிலும் மதுவும் வரையாது கொடுக்கும் வழியறியேன். ஆனால், இதோ வாள்! இதோ என் தலை! இத்தலையைக் கொண்டுபோய் என் தம்பிகைக் கொடுப்பின், அவன் கோடி பொன் தருவான். தயங்காது ஏற்க!' என்றான்.
அவன் உணர்வும், உரையும், ஒரு பெருஞ்செயலும் அவனுக்கு முன் வாழ்ந்து அழியாப் புகழ் படைத்த வள்ளல்கள் புகழை எடுத்து விழுங்கி விழுப்புகழ் காணும் பெற்றிய வாய் விளங்கின. ‘வசையில் விழுத்திணைப் பிறந்த வள்ளியோன்’ வாய் மொழி கேட்டார் புலவர்; துணுக்குற்றார்; அவர்மேனி அதிர்ந்தது; கண்கள் சுழன்றன. அவர், 'காலம் தாழ்க்கின் என்னாகுமோ?’ என்று கவன்றவராய்க் கண்ணிமைப் பொழுதில் அவன் கையகத்திருந்த வாளைப் பற்றினார் கையில் இறுகப்பற்றிய வாளுடன் குமண வள்ளல் திருமுகம் நோக்கினார்; சற்று நேரம் கற்சிலை போல நின்றார்; பின்பு மெல்ல மெல்ல உணர்வு பெற்றவராய்ப் புலவரின் வறுமையைப் போக்க-பைந்தமிழ் வளர்ப்போனது வாழ்வைக் காக்க தலையையே கொடுக்கும் தலைக்கொடையாளியின் பண்பை உள்ளினார்; உருகினார். ‘இணையில்லா வள்ளலே, தலைக் கொடையாளியே, உன் தலை கொண்டோ என் வாழ்வு ஒளி பெற வேண்டும்?' என்ற எண்ணம் புலவர் நெஞ்சை உணர்ச்சிக் கடலாக்கியது.
‘பழிமலைந் தெய்திய ஆக்கத்திற் சான்றோர்
கழிநல் குரவே தலை.’ (குறள், 657)
எனும் மறைமொழி அறியாதவரா நம் புலவர் பெருமானார்? கடல் போலக் குமுறிய புலவர் நெஞ்சில் கருத்து மின்னல் ஒன்று மின்னியது. அம்மின்னல் ஒளி அவர்க்கு ஒரு நல்வழி காட்டியது. எழுச்சி கொண்டார் புலவர். உணர்ச்சிக் கடலாயிருந்த அவர் உள்ளம் உறுதி மலை யாயிற்று. அவர் தம் துயரெல்லாம் மறந்தார்; வறுமைத் தீயில் வேகும் தம் மனைவியார் சிந்தும் கண்ணீரையும், பசிக்கொடுமைக்கு இரையாகிய தம் அன்புச் செல்வத்தின் அலறலையும் மறந்தார்; தம் வாழ்வினும் நாட்டின் நல் வாழ்வும், அருளின் வெற்றியுமே பெரியவெனக் கருதினார். அக்கணமே குமண வள்ளலிடம் விடை பெற்றுக் கொண்டு காடும் மலையும் பின் ஒழிய, ஒலியினும் ஒளியினும் வேகமாய்ப் பறந்தோடிச் சென்றார் இளங்குமண னிடம், நெட்டைக் கனவில் நீந்திக்கொண்டு தன்னை மறந்து அரியணையில் கிடந்தான் இளங்குமண ன். அறத்தின் திருவுருவைக் கானகத்திற்கு அனுப்பிவிட்டு இறுமாந்திருந்த அவன்பால் வாயிற்காவலர் விரைந்தோடி, வாளும் கையுமாய்ப் புலவர் ஒருவர் வந்திருக்கும் செய்தியை அறிவித்தனர். அவன், ‘தடையின்றி வர விடுக!' என்றான். சிந்தனையில் ஆழ்ந்தது அவன் உள்ளம். ‘வாளும் கையுமாய்ப் புலவரா!...... அண்ணன் தலைக்கு விலை வைத்தோமே!.... என்னாயிற்றோ!’ என நினைந்தான். அவன் தலை சுழன்றது; மனம் கலங்கியது. ‘அண்ணன் தலைக்கு விலை வைத்த-வாள் வைத்த கயவன் நீ!’ என்று எங்கிருந்தோ ஒரு குரல் அவன் உள்ளத்தினுள்ளே ஒலித்தது. இளங்குமணன் இதயம் துடித்தது. புலவரும் உருவிய வாளுடன் உள்ளே புகுந்தார். இளங்குமணன் வாளுடன் வரும் வண்டமிழ்ப் புலவரைக் கண்டான். ‘அண்ணன் தலை என் கையிலா!' என்று அலமந்து நடுங்கியது அவன் மனம். தானாடாவிடினும் தன் சதை ஆடுமன்றோ? அவன் தன் பால் வந்த தண்டமிழ்ப் புலவர்க்கு இருக்கை அளித்து, அவர் வாயினின்று வரும் சொல் நோக்கி நின்றான். அவன் தோற்றத்தையும் துடிப்பையும் கூர்ந்து நோக்கியவராய்ச் செவ்வியறிந்து அவன் செவிகளில் செந்தமிழ் அமுதை வார்க்கலானார் சாத்தனார்:
‘எப்பொருளும் நிலையாத இந்நிலவுலகின் கண்ணே நிலை பெறுதலைக் கருதியவர், தம் புகழை இந்நிலமிசை நிறுத்தித் தாம் மறைந்தனர். அணுகுதற்கரிய தலைமை யுடைய பெருஞ்செல்வர், வறுமையால் இரப்போர்க்கு ஒன்றும் ஈயாமையால் பழமை சான்ற கொடையாளரைப் போலப் பின்னும் தம் பெயரை நிறுத்தி உலகத்தோடு இடையறாது தொடர்ந்து புகழுடன் இன்றும் விளங்குதலை அறியாது போயினர். யான் பாவலர்க்குப் பரிசிலாகச் சிறந்த யானைகளை மிகுதியாகக் கொடுக்கும் அழிவில்லா நற்புகழ் சான்ற வலிய குதிரையையுடைய தலைவனைப் பாடி நின்றேன். 'பாடி வந்த பரிசிலன் பயனின்றி வாடினனாகப் பெயர்தல் என் நாடு இழந்ததனினும் நனி இன்னாது!’ என நினைந்து, தன்னிற்சிறந்த பொருள் வேறின்மையால், தன் தலையை எனக்குத் தருவதற்காக வாளைத் தந்தான் நின் தமையன்! அவனைக் கண்டு வென்றி மிக்க உவகையால் ஓடி வந்தேன்!’ என்ற பொருள் பொதிந்த பாடலைக் கூறினார் சாத்தனார்:
‘மன்னு உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே,
துன்னருஞ் சிறப்பின் உயர்ந்த செல்வர்
இன்மையின் இரப்போர்க்(கு) ஈஇ யாமையின்
தொன்மை மாக்களிற் றொடர்பறி யலரே;
தாள்தாழ் படுமணி இரட்டும் பூநுதல்
ஆடியல் யானை பாடுநர்க்(கு) அருகாக்
கேடில் நல்லிசை வயமான் தோன்றலைப்
பாடி நின்றனெ னாகக் ‘கொன்னே
பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயர்தல்என்
நாடிழந் ததனிறு நணியின் னா'தென
வாள் தந் தனனே தலையெனக் கீயத்
தன்னிற் சிறந்தது பிறிதொன் றின்மையின்;
ஆடுமலி உவகையொடு வருவல்
ஓடாப் பூட்கைநின் கிழமையோற் கண்டே.’ (புறம். 165)
நல்லிசைப் புலவரின் நற்றமிழ்ச் சொற்களைக் கேட்டான் இளங்குமணன்; நாணினான், வாள் தந்தனனே தலை எனக்கீய,’ என்ற புலவரது மொழி அவன் நெஞ்சைப் பிளந்தது. ஆறாத்துயர் உற்றான் : கண்ணீர் வடித்துக் கற்சிலைபோல நின்றான். சாத்தனார் இளங்குமணன் கண்ணீர் வெள்ளத்தைக் கண்டார். கடைத்தம்பியாய் இருந்த அவன் கல் நெஞ்சும் கரைந்து உருகும் நீர்மையை அறிந் தார்; வசையில்லாக்குடியில் தோன்றிய அவன்பால் விலங்கு மனம் அழிந்து தெய்வமனம் முகிழ்த்தலை உணர்ந்தார்; உவகை கொண்டார்.
இளங்குமணன் தன் பாழ் நெஞ்சின் பான்மை உணர்ந்த அக்கணமே அரியணை-யினின்றும் இழிந்து, புலவர் திருவடிகளில் வீழ்ந்து, " அருந்தமிழ்ப் பெரியீர், எவ்வாறேனும் கானகம் பற்றியுள்ள என் அண்ணனை நாடாளும் காவலன் ஆக்க வேண்டும். தீ நெறிப்பட்ட என் வாழ்வு இனியேனும் நன்னெறி காணத் துணை புரிய வேண்டும்,” என்று இரந்தான். பாய்மா பூட்டிய தேரின் மீது புலவரை அமரச்செய்து கானகம் நோக்கி விரைந்தான் இளங்குமணன். வான் வழங்கியற்கை வளியென, அதனினும் கடுஞ்செலவுடை மனமெனப் பறந்தது தேர். கல்லும் முள்ளும் நிறைந்த அருவழியெல்லாம் கடந்து சென்று அருட்கோமானைக் கண்டனர் இருவரும். தன் எதிரில் நாணி நின்ற இளங்குமணனைக் குழந்தைபோல வியந்து நோக்கினான் குமணன். ஒளி வீசும் கண்களுடன் நின்ற புலவர் பெருமானார், உவகை பொங்கும் நெஞ்சுடன் ஈரநன்மொழி பல புகன்று இருவரையும் இன்புறச் செய்தார்; அதன் பின் குமண வள்ளலை நோக்கி,
‘நல்லிசைத் தோன்றலே, இனி நாடாளும் பொறுப்பை நீயே ஏற்க வேண்டும்,' என்றார்.
அரசாளும் பெருந்துன்பத்தினின்றும் நீங்கி இயற்கைச் சூழலின் இனிமையில் மூழ்கியிருந்த
குமண வள்ளலோ, சற்றே தயங்கினான். ஆனால், என் செய்வான்! அவன் தலையும் அவன்
உடைமை அன்றே. அது புலவர் பெருமானது உரிமையன்றோ? அதற்கு மணி முடி புனைய
அவர் விரும்பின், அதை மறுக்க அவனால் இயலுமோ? எனவே, அவன் சான்றோரின்
கருத்துக்கு இசைந்தான். நாடு திரும்பினான்; மணி முடி புனைந்தான்; செங்கோல்
ஏந்தினான்; அருளாட்சி புரியத் தலைப்பட்டான். அறிந்தனர் புலவரும் பாணரும்; அளவிலா
மகிழ்வு கொண்டனர். ‘கொடை வள்ளல் குமணன் வாழ்க! வள்ளலின் தலை காத்த
பெருந்தலைச் சாத்தனார் பெருந்தலைச் சாத்தனாரே! அவர் வாழ்க! நீடு வாழ்க!’ என்ற வாழ்த்தொலி எண்டிசையிலும் எதிரொலித்தது. ‘அறம் வென்றது!’ ‘தமிழ் வென்றது!’ என மாந்தர் யாவரும் இன்பக் குரவையாடினர்; பாடினர்; பண்டுபோலக் குமணவள்ளலின் திருநாட்டில் கலை முழங்கியது; கருணை பெருகியது; எழில் நிறைந்தது; இன்பம் சுரந்தது.
மீண்டும் மணி முடி தாங்கிக் குடி புறங்காக்க ஒருப்பட்ட குமண வள்ளலின் திருவோலக்கத்தில் சின்னாளே தங்கினார் சாத்தனார். வறுமையால் துயருறும் தம் தலைவியாரது துயரமும் மழலைச் செல்வத்தின் அவலமும் களைய அவர் உள்ளம் துடித்தது. புலவர் பெருமானரது இதயத் துடிப்பை உணர்ந்தான் குமணவள்ளல். தம் ஒழுக்கத்தோடியைந்த உணர்வால்-சொல்லால்-செயலால் செயற்கருஞ்செயல் புரிந்த செந்தமிழ்ப் பெரியாரைப் பிரிய அவன் மனம் ஒருப்படவில்லை. அவன் பெரிதும் வருந்தினான். எனினும், தன் பிரிவினும் மிக்க பெருங் துயரம் நிறைந்த வறுமை வாழ்வு வாழ்ந்து நலியும் நற்றமிழ்ச் செல்வரின் குடும்பத்தை நினைந்தான்; தன் துயர் மறந்தான்; பொன்னும், மணியும், பாய்மாவும், மதகளிறும் ‘போதும், போதும்’ எனப் புலவர் கூறி மறுக்கும் அளவிற்கு வாரி வழங்கினான். அருள் ஒழுகும் குமண வள்ளலின் கரம் ஈந்த செல்வமனைத்தையும் பெற்ற சாத்தனார் பெருமகிழ்வு கொண்டார்; அளக்கலாகாச் செல்வச் சிறப்புடன் தம் ஊர் மீண்டார் : குடும்பத்தின் வறுமைப் பிணியைக் களைந்தார்: ஆம்பி பூத்த அடுப்பில் அறுசுவை உண்டி நாளும் அடும்படி செய்தார்; துயரக் கண்ணீர் வடித்து வாழ்ந்த தம் மனைவியார் பெருமிதமும் பூரிப்பும் கொண்டு வாழும்படி செய்தார். பாலின்றி அழுது துடித்த தம் குழவி குறையேதுமின்றி அரசிளங்குழவி போல விளங்கச்செய்தார். சான்றோரின் தமிழகம் விருந்தோம்பும் அரண்மனையாய் விளங்கியது.
இவ்வாறு சுற்றமும் நட்பும் சூழ மகிழ்ந்து இனிதிருந்த சாத்தனார் சில காலம் கழித்துச் சங்கம்
நிறுவிச் செந்தமிழ் புரக்கும் மாடமலி கூடல்மாநகர் காண விழைந்தார்; அவ்வாறே
தொல்லாணை நல்லாசிரியர் கூடியிருந்து தமிழாய்ந்து வந்த அப்பழவிறல் மூதூரை
அடைந்தார்; அவண் இருந்த சான்றோர்களுடன் உவப்பத் தலைக்கூடி, பன்னாள்
இன்புற்றிருந்தார்; பின்னர்த் தம் ஊர் திரும்பும் வழியில் பாண்டியர் படைத்தலைவனும்,
கோடை மலைக் கிழவனும், வேளிர் குலத் தலைவனும் சிறந்த கொடையாளன் என்ற
புகழ் படைத்திருந்தோனுமாகிய கடிய நெடுவேட்டுவன் என்பானைக் கண்டு பரிசில்
வேண்டினர். அவன் எக்காரணத்தாலோ, புலவர்க்கு விரைந்து பரிசில் வழங்காது நீட்டித்தான். பெருமிதம் மிக்க நம் புலவர் அது கண்டு பொறாது வெகுண்டார்! வேட்டுவனை நோக்கி, ‘அஞ்சி வந்தடைந்த பகைவர்க்குப் புகலிடமே, போர் உடற்ற நினைந்தார் வலியழிக்கும் வாட்போரின் மிக்க படையுடையோனே, முல்லை வேலியுடைய கோடை மலைத் தலைவனே, தப்பாது மான் கூட்டங்களைத் தொலைக்கும் சினமிக்க நாய்களையும் வில்லையும் உடைய வேட்டுவனே, செல்வத்தால் சிறந்த சேர சோழ பாண்டியரே ஆயினும், அவர் எம்மை விரும்பிப் போற்றாது ஈதலை யாம் சிறிதும் விரும்பேம். உலகத்தில் பெருமழை பெய்ய வேண்டி நீர் முகக்கக் கடலுள் திரண்டு இறங்கிய முகில் நீர் முகவாது மீளாதது போலப் பரிசிலர் சுற்றம் அரசர்களிடம் களிறும் தேரும் பெறாது வறிதே மீள்வதில்லை. உன்னைப் பாடி வந்த யாமோ, அவை பெறாது போகின்றோம். வேட்டுவனே, நோயின்றி வாழ்வாயாக!' எனக் கூறிவிட்டு அவ்விடம் விட்டு அகன்றார்,
கடியநெடு வேட்டுவன் புலவர் பெருமானார் தன்னை ‘நோயின்றி வாழ்வாயாக!' என நொந்த உள்ளத்தோடு குறிப்பு மொழியால் சினந்துரைத்துச் செல்வதையறிந்து நடுங்கினான்; விரைந்து சென்று புலவர் பெருமானாரை வணங்கி, தன் பிழை பொறுக்க இறைஞ்சினான். வேட்டுவன் பண்பறிந்த புலவரும் இரங்கினார்; அவன் அவைக் களத்திற்கு மீண்டார்; அவன் அன்புடன் போற்றி அளித்த செல்வமெல்லாம் பெற்றுப் பேருவகை கொண்டார்; தம் உள்ளத்து உவகையை வெளிப்படுத்த அவன் அளியும், பண்பும், வலியும், வண்மையும் போற்றி அரியதோர் அகப்பொருட்பாடலையும் பாடி மகிழ்வித்தார்; பின்பு அவன்பால் விடை கொண்டு தம் ஊர் ஏகி இனிது வாழ்ந்திருந்தார்.
சின்னாள் சென்ற பின் சாத்தனார் கடையெழு வள்ளல்களுள் ஒருவனும், தோட்டி மலைக்கு
உரியவனும், ‘இரப்போர்க்கு இழையணி நெடுந்தேர் களிறோடு என்றும் மழை சுரந்தென்ன’
ஈயும் வள்ளியோனும் ஆகிய ‘கழல்தொடித் தடக்கைக் கலிமான்’ நள்ளி என்பான் இளவல்
இருங்கண்டீரக்கோ என்பவனைக் காணுதற்கு அவனிடத்துச் சென்றார். அவ்வமயம்
அவ்விடத்துப் பெண் கொலை புரிந்த நன்னன் என்னும் வேளிர் குலத் தலைவன் வழி
வந்தோனாகிய இளவிச்சிக்கோ என்பவனும் வந்து ஒருங்கே அமர்ந்திருந்தான். அவண் சென்ற புலவர் கண்டீரக்கோப்பெரு நள்ளியின் தம்பி இளங்கண்டீரக் கோவை மட்டும் தழுவி மகிழ்ந்து அளவளாவிவிட்டு, இளவிச்சிக் கோவைத் தழுவாதிருந்தார். அது கண்டு இளவிச்சிக்கோ நாணமுற்றுப் புலவர் பெருமானாரை நோக்கி, ‘புலவீர், என்னை மட்டும் புல்லாமைக்குக் காரணம் யாதோ?’ என வினவினான். அதற்குப் புலவர், ‘காரணம் கூறுவேன்: தொன்று தொட்டே விண் முட்டும் உச்சியையுடைய சிறந்த மலைப்பக்கத்துள்ள நெடுந்தூரமான இடங்கட்குத் தம் கணவர் சென்றிருந்தாலும் பாடி வரும் புலவர்க்குப் பெண்டிரும் தம் கணவன்மார் நிலை நின்று மெல்லிய பிடி யானைகளைப் பரிசிலாகக் கொடுக்கும் வண்புகழ்க் குடியிற்றோன்றிய கண்டீரக்கோவின் தம்பி இவன். ஆகலின், பெரிதும் விரும்பிப் புல்லினேன்; நீயோ, பொய்யா நாவின் புலவர் பெருமக்கள் வசைக்குரியவனாய்ப் பெண் கொலைசெய்த நன்னன் மருகன். அன்றியும், உன் குடியில் தோன்றிய உன் முன்னோன் ஒருவன் பாடிவரும் வயங்குமொழிப் புலவர்க்கு அடைத்த கதவினனாயிருந்து அழியாப்பழி எய்தினான். அது முதல் நின் மணங்கமழ் மலையை எம்மவர் பாடுதல் நீங்கினர். அதனால் யானும் நின்னை முயங்கினேன் இல்லை,’ என விளக்கம் கூறினார். இவ்வாறு புலவர் பெருமானார் அஞ்சாது பெருமித உணர்வுடன் கூறிய பதில் இளவிச்சிக்கோவைச் சிந்தனைக் கடலில் ஆழ்த்தியது.
இந்நிகழ்ச்சிக்குச் சின்னாள் கழித்து மூவன் என்னும் சிற்றரசனிடம் சாத்தனார் பரிசில் கடாவிச் சென்றார். அவன் தன்பால் வந்த புலவரைப் போற்றிப் பரிசில் கொடாது காலந்தாழ்த்தான். அது கண்டு ஆற்றொணாச் சினங் கொண்டார் சாத்தனார். அவனுக்கு நல்லறிவு புகட்ட நினைந்து, ‘ பொய்கைக்கண் மேய்ந்த நாரை நெற் போரின் கண்ணே உறங்கும் நெய்தற்பூக்களை உடைய வயலின் கண் முற்றிய நெல்லை அறுக்கும் உழவர்கள் ஆம்பல் இலையில் கள்ளை வார்த்து உண்டுவிட்டு அருகிலுள்ள கடலின் அலை ஒலியையே தாளமாகக்கொண்டு ஆடும் நீர்வளம் நிறைந்த ஊர்களையுடைய நன்னாட்டு வேந்தே, பல கனிகளையும் உண்ண விரும்பி ஆகாயத்தின்கண்ணே உயரப் பறந்து மலை முழைகள் எதிரொலி முழங்கச்சென்று அவ்விடத்துப் பழமுடைய பெரிய மரம் பழுத்து ஓய்ந்ததாக வருந்திப் பழம் பெறாதே மீளும் பறவைகள் போல நின் விரும்புதற்குரிய பண்புகள் என்னை ஈர்த்து வர வந்து உன் புகழ் பாடிய பரிசிலன் யான். வறியேனாய் மீளக் கடவேனோ? வாட்போர் வல்லோனே, நீ ஒன்றை ஈந்திலையாயினும், யான் அதற்கு வருந்துவேன் அல்லேன்; நீ நோயின்றி இருப்பாயாக! பெரும, நீ என் மாட்டுச் செய்த இவ்வன்பின்மையை நின் நாளோலக்கமன்றிப் பிறர் அறியாது ஒழிவாராக!' என்று கூறி அகன்றார்.
நிறைமொழி மாந்தராகிய சாத்தனார் நெஞ்சு புண்பட்டுக் கூறிய சொற்கள் கூர்வேலினும்
ஆற்றல் பொருந்தியவை யல்லவோ? ‘நீ நோயின்றி இருப்பாயாக!' எனப் புலவர் பெருமானார்
எவ்வளவு மனம் நொந்து கூறினாரோ! சொல்லேருழவரின் நெஞ்சைப் புண்படுத்திய
மூவன் வாழ்வு சின்னாளிலேயே பாழ்பட்டது. தெறலருந்தானக் கணைக்கால் இரும்பொறை
என்ற சேரமன்னன் மூவனைப் போரில் வென்று அவன் பல்லைப் பிடுங்கித் தன் தலை நகராய தொண்டி நகரத்துக் கோட்டை வாயில் கதவில் அழுத்தினானாம். இச்செய்தியை நற்றிணைப் பாடலொன்று நமக்கு அறிவிக்கின்றது.
‘பெரியாரைப் பேணா(து) ஒழுகின் பெரியாராற்
பேரா இடும்பை தரும்.’ (குறள், 892)
என்பது பொய்யாமொழியன்றோ?
செந்தமிழ்ச் சான்றோராகிய சாத்தனாரின் இத்தகைய பெருமிதமிக்க வரலாறு தமிழி லக்கியம் கற்பார்க்குக் கருதுந்தொறும் கழிபேருவகை அளிக்க வல்லது.
வறுமைத்தீத் தம்மையும் தம் குடும்பத்தையும் சுட்டு வதக்கினாலும், அட்டாலும் சுவை குன்றாத் தீஞ்சுவைப் பால் போல ஒழுக்கம் தளராது-உணர்வு குன்றாது-கடமை மறவாது-வாழ்ந்து மன்னா உலகத்து மன்னுதல் குறித்துத் தம்புகழ் நிறீஇத் தாமாய்ந்த பெரும்புலவர் சாத்தனாரின் வறுமையிலும் பெருமிதம் நிறைந்த வாழ்வு நமக்கும் வையகத்திற்கும் என்றென்றும் நின்று நிலவி ஒளி காட்ட வல்ல தலை சிறந்த கலங்கரை விளக்கம் ஆகும்.
-----------
4. பிசிராந்தையார்
உலகின் வளர்ச்சிக்கும் வாழ்விற்கும் அடிப்படையாய் விளங்கும் உயிர் ஊற்று, அன்பு என்னும் நல்லுணர்வேயாகும். ஞாயிற்றின் ஒளியின்றேல் எவ்வாறு ஞாலம் அழிந்து ஒழிந்து நாசமாகிவிடுமோ, அவ்வாறே அன்பு என்ற உணர்வும் உயிர்கள் மாட்டு இல்லையாயின் உலகமும் உலக வாழ்வும் சீர் கெட்டுப் பாழடைந்து போதல் ஒருதலை. அதனலன்றோ வான்மறை தந்தருளிய பெரியார் வள்ளுவரும்,
‘அன்பின் வழிய(து) உயிர்நிலை; அஃதிலார்க்(கு)
என்புதோல் போர்த்த உடம்பு.’ (குறள், 80)
என்று இயம்பல் ஆயினர்? இவ்வாறு உலக உயிர்களை நடமாடும் பிணமாக அல்லாமல், உண்மையிலேயே உயிர் படைத்த ‘நடமாடும் கோயில்'களாக விளங்கச் செய்யும் அன்பின் பெருமையைக் கூறாத நூல்கள்- கலைகள்-காவியங்கள் நானிலத்தில் உண்டோ? அவ்வன்பின் மாண்பினைப் போற்றாத கலைஞர்களும் சான்றோர்களும் வையகத்தில் உண்டோ? உலகம் தொடங்கிய நாள் தொட்டு இன்று வரை இவ்வுலகின் பல்வேறு பிணிகட்கும் உற்ற நன்மருந்தாய் விளங்குவது அன்பெனும் அமிழ்தமே அன்றோ? இத்தகு சிறப்பு வாய்ந்த அன்பெனும் உணர்வு முதிருங்கால், அந்தந்த நிலைகட்கு ஏற்ப ஆர்வம், நட்பு, காதல், பத்தி, அருள் என்றெல்லாம் பெயர் பெறல் கண்கூடு.
‘அன்(பு)ஈனும் ஆர்வம் உடைமை; அது ஈனும்
நண்பென்னும் நாடாச் சிறப்பு.’ (குறள், 74)
‘அருளென்றும் அன்(பு) ஈன் குழவி' (குறள், 757)
என்னும் இக்குறள் மொழிகள், பெரும்பேருணர்வுகட்கெல்லாம் அடிப்படையாய்-தாயுணர்வாய்-விளங்குவது அன்பே என்ற உண்மையை அழகுற விளக்குகின்றன அல்லவோ? இத்தகைய ஆற்றல் நிறைந்த அன்புணர்வு வளர்ச்சி பெற்ற நிலையில் அடையும் பெயர்களில் ‘நட்பு’ என்பதும் ஒன்றாகும். இந்நட்புக்குத்தான் எவ்வளவு ஆற்றல்! மனித குலத்தின் வாழ்வை ஒளியும் பயனும் நிறைந்ததாக்குவதில் இந்நட்பே தலை சிறந்து விளங்குகின்றது அன்றோ?
நட்பிற்கும் காதலுக்குமிடையே மிகச் சிறிய வேறு பாடே உள்ளது எனலாம். ஒரோவழி அவ்வேறுபாடு இல்லையாகிவிடலும் இயற்கை. ஒத்த தலைவன் தலை வியரிடை ஊறி எழும் அன்பின் முதிர்வே ‘காதல்’ ஆகும். ஆனால், நட்போ, ஆடவர் இருவர்க்கு இடையேயோ, அரிவையர் இருவர்க்கு இடையேயோ, ஓர் ஆண் ஒரு பெண் ஆகியோரிடத்தோ, அன்றிப் பலரிடமோ, தோன்றி வளரும். இத்தகு அன்பின் முதிர்வே நட்பு எனப்படும். இஃதன்றி அடிப்படையை ஆராயுமிடத்து அன்பின் முதிர்வே நட்பும் காதலும் எனலாம்.
இத்தகைய நட்பும் காதலும் நெருங்கிய பழக்கத்தாலேயே வளரும். அவ்வாறு உளங்கலந்து-உயிர் கலந்து-பழகிய நட்பே உரனுடையதாக விளங்கலும் உலக இயற்கை. ஆனால், இப்பொது விதிக்கு விலக்காய் உள்ள இன்னொரு வாய்மையினையும் வள்ளுவர் கூறியுள்ளார். ‘இரு உள்ளங்களிடையே தோன்றும் உணர்வு ஒன்றுபடுதல் போதும். புணர்ச்சியும் பழக்கமும் வேண்டுதிவல்லை. அவ்வுணர்வு ஒன்றே நட்பினை வளர்க்கும்,' என்பது அச்சான்றோரின் கருத்து.
‘புணர்ச்சி பழகுதல் வேண்டா, உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும்.' (குறள், 784)
என்பது தமிழ் மறை.
இத்தமிழ் மறைக்குத் தக்க சான்றாய் விளங்கிய ஒரு பெரியார் சங்க காலத்தில் வாழ்ந்தார். அவரையே பிசிராந்தையார் எனப் போற்றுவர்.
சங்கம் நிறுவித் தமிழ் வளர்த்த பெருமை தண் பாண்டி நன்னாட்டிற்கு உண்டு. அத்திரு
நாட்டில் ‘பிசிர்’ என்ற ஊரில் ‘ஆந்தையார்’ என்ற புலவர்
தோன்றினார். ‘ஆதன் தந்தையார்' என்னும் பெயரே ‘ஆந்தையார்’ என மருவி வழங்கலாயிற்று.
பண்டைய தமிழர் தம் கால வழக்கப்படி அவரைப் பிசிராந்தையார் என அவர் ஊர்ப்பெயரும் தோன்றி விளங்கும்படி வழங்க லாயினர். பிசிராந்தையார் வாழ்க்கை பிஞ்சிளம்பருவம் தொட்டே எல்லா நலங்களையும் எய்தியிருந்தது. அவர் கற்பன கற்றார்; கேட்பன கேட்டார்; அவற்றோடு அமையாது, தாம் கற்றனவும் கேட்டனவும் உணர்த்திய நன்னெறியில் நின்று வாழ்க்கையை நடத்தலாயினார், அஃகி அகன்ற அறிவும், ஆழ்ந்த நுண்ணுணர்வும் பெற்றவராய்த் திகழ்ந்தார். சான்றாண்மைக்குரிய எல்லாப் பண்புகளும் அவர்பால் இளமை தொட்டே அமைந்து விளங்கலாயின. இத்தகைய செம்மை சான்ற பண்பு நலனும், சீரிய புலமை வளனும் ஒருங்கே பெற்றுத் திகழ்ந்த அப்பெரியார்க்கு வாய்த்த வாழ்க்கைத் துணைவியாரும், குலமகளிர்க்கெல்லாம் மணி விளக்காய்த் திகழ்ந்தார். ‘வாழ்க்கைத் துணை நலம்’ என்ற அதிகாரத்தில் இல்லத்தின் அரசிக்கு இன்றியமையாது வேண்டுவன வென்று திருவள்ளுவர் எடுத்தோதியுள்ள அரும்பெறற் பண்புகட்கெல்லாம் உறைவிடமாய் அவ்வன்னை யார் திகழ்ந்தார். அதனால், ‘ஏறுபோல் பீடு நடை’யராய் விளங்கிய பிசிராந்தையார் வாழ்வில் எஞ்ஞான்றும் இன்பத் தென்றல் வீசிய வண்ணம் இருந்தது. மாசில் வீணையாய்-மாலை மதியமாய்-வீசு தென்றலாய்-வீங்கிள வேனிலாய்த் திகழ்ந்த அவர் வாழ்வு மேலும் மேலும் ஒளியும், சுவையும், பயனும் காணும் வகையில் அவர்க்கு அருமருந்தன்ன மக்கள் தோன்றினர்கள்.
‘மங்கலம் என்ப மனைமாட்சி; மற்(று) அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு.’ (குறள், 60)
என்ற வள்ளுவர் வாய்மொழிக்கு ஏற்ற எடுத்துக்காட்டாய்ப் பிசிராந்தையார் வாழ்க்கை பொலிவுற்றுத் திகழ்ந்தது. குழலினும் யாழினும் இனிய மழலைச் செல்வங்களைப் பெற்ற புலவர் பெருமானார் வாழ்க்கை யாதொரு குறையும் கண்டிலது. மனைவி, மக்கள், மன்னன், ஏவலர் அனைவரும் அவர் மனக்கு இனியராய் விளங்கினர். துன்பம் சிறிதும் காணாத் தண்டமிழ்ப் புலவரின் சீரிய வாழ்க்கையில் கவலைக்கு இடமேது? வாழ்வைக் கொல்லும் நஞ்சாய் விளங்கும் கவலை சிறிதும் இல்லாத களி துளும்பும் வாழ்க்கை புலவர் பெருந்தகையின் நல்லுடைமை ஆயிற்று. இதனினும் செல்வம் பிறிதுண்டோ?
இத்தகைய தமிழ்ச் செல்வர் வாழ்ந்த காலத்தில் பாண்டி நாட்டை நீதி வழுவாது ஆட்சி புரிந்து வந்த தமிழ் மன்னன், பாண்டியன் அறிவுடை நம்பி யாவான். தமிழரசோச்சித் தமிழரசு தலை நிமிர்ந்திருந்த அந்நாளில் பூவேந்தரெல்லாரும் புலமை நலமிக்க பாவேந்தராய் விளங்கியதில் வியப்பொன்றும் இல்லையன்றோ? பாண்டியன் அறிவுடை நம்பி நாடாளும் மன்னன் மட்டுமன்றி, ஏடாளும்-எண்ணமாளும்-ஆற்றல் படைத்தவனாயும் கவிச்செல்வம் நிரம்பப் பெற்றவனயும் திகழ்ந்தான். அவன் பாடிய அழகிய பாடலொன்று புறநானூற்று மணிகளுள் தலை சிறந்த ஒன்றாய் விளங்கித் தமிழ் இலக்கியத்தை அணி செய்கின்றது. ‘ஒருவர் உலகில் படைக்கப்படும் செல்வம் பலவற்றையும் படைத்துப் பலரோடு உண்ணும் வளம் செறிந்த பெருவாழ்வைப் பெற்றவராய் விளங்கலாம். ஆயினும், குறுகுறு என நடந்தும், சின்னஞ்சிறு கரம் நீட்டி உண் கலத்திலுள்ள சோற்றைத் தரையிலே இட்டும், தோண்டியும், வாயிற்கெளவியும், கையால் துழாவியும், மேலெல்லாம் நெய்ச்சோறு படுமாறு அள்ளி எறிந்தும் ஆடி மகிழும் அமிழ்தங்களை-அறிவினை இன்பத்தால் மயக்கும் செல்வக் களஞ்சியங்களை-அடையாதார்-மக்கட்பேற்றினைப் பெறாதார்-வாழ்வின் பயனையே பெறாதார் ஆவர்' என்பதே பாண்டியன் அறிவுடை நம்பியின் அரிய பாடலின் கருத்தாகும்.
‘படைப்புப் பல்படைத்துப் பலரோ(டு) உண்ணும்
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும், இடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம்வாழு நாளே.’ (புறம். 188)
என்பது அவர் பாட்டு.
ஒரு நாட்டிற்கு வாழ்வளிக்கும் தலை சிறந்த செல்வம் அந்நாட்டின் மண்ணும் மலையும் அல்ல; ஆறும் அடவியும் அல்ல. அந்நாட்டின் அழியாப் பெருஞ் செல்வம் அமிழ்தொழுகும் கனிவாய்க் குழந்தைகளே ஆம். வருங்கால உலகைப் படைக்கும் தெய்வங்களல்லரோ அச் செல்வச் சிறார்கள்? இவ்வுண்மையை நாடாளும் தலைவ னாகிய பாண்டிய மன்ன ன் உணர்ந்திருந்தான்; தான் உணர்ந்ததோடன்றித் தான் உணர்ந்த அவ்வுணர்வைத் தமிழிலக்கியம் உள்ள வரை அதைக் கற்பார் உணர்ந்து பயன் பெறுமாறு சொல்லோவியமாகவும் ஆக்கித் தந்துள்ளான் என்றால், அவன் மாட்சியினை என்னென்று போற்றுவது!
கரவற்ற குழந்தைகள் வழங்கும் பேரின்பத்தில் மூழ்கித் திளைக்கும் பண்பு பெற்று விளங்கிய பாண்டியன் கோல் கோடா ஆட்சி புரிவதிலும் கருத்துடையவனாய் விளங்கினான், அவனுக்கு அரசியல் நெறியினை நன்கு அறிவுறுத்தக் கருதிய புலவர் பெருமானார் அவனிடம் சென்றார்; தம் உள்ளக் கருத்தை எடுத்துரைக்க முனைந்தார்; சிறந்ததோர் எடுத்துக்காட்டு வாயிலாகத் தம் எண்ணத்தை விளக்கலாயினார்: ‘களிறு ஒன்று தனியே நெல் வயலில் புகுந்து உண்ணத் தொடங்கின், நூறு காணியாயினும், அழியும்; களிற்றின் வாயில் புகும் உணவினும் காலில் மிதியுண்டு பல மடங்கு உணவுப்பொருள் அழியும். ஆயின், செய்களில் உள்ள செந்நெற்கதிர்களை முற்றவிட்டுக் காய்த்த நெல்லை அறுத்து அரிசியாக்கிக் கவளம் செய்து தருவதானால், ஒரு சிறு பகுதியே அதற்குப் பல நாளுக்குப் போதுமானதாகும். அதே போல, அறிவற்ற மன்னன் தன் வலி கருதிக் குடிகளை வருத்திப் பொருள் பெறத் தொடங்கின், அவனும் வாழான்; அவனால் உலகமும் கெடும். அவ்வாறன்றி, அறிவுடை வேந்தன் வளம் நிறைந்து வாழும் குடிமக்களிடமிருந்து ஆறில் ஒன்று கடமையாகப் பெறுவானாயின், அரசும் சிறக்கும்; நாடும் செழிக்கும்,' என்னும் கருத்தமைந்த
‘காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே
மாநிறை(வு) இல்லதும் பன்னாட்(கு) ஆகும்;
நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்(கு) உணினே
வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
கோடி யாத்து நாடுபெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம்போலத்
தானும் உண்ணான்; உலகமும் கெடுமே.' (புறம். 184)
என்னும் பாடலைப் பாடினார்.
புலவர் பாடலில் அறத்தின் குரல் முழங்குகின்றதன்றோ? புலவரின் முழக்கம் கேட்ட புவியாள் மன்னன் கலை நெஞ்சும் கருணை உணர்வும் கொண்ட காவலன் அல்லனோ? கவிதை உள்ளத்தில் ஆழ்ந்திருக்கும் உண்மையின் ஆற்றலை அனுபவத்தால் அறிந்த தமிழரசன் அல்லனோ? அவன் சான்றோராகிய பிசிராந்தையாரின் சொற்களைப் பொன்னே போல் போற்றி நல்லாட்சி நடத்தினான். ‘அறிவுடை நம்பி’ என்ற இயற்பெயர் பெற்ற அவன், அதனையே அழியாப் புகழ்ச் சிறப்பினைக் குறிப்பதாகவும் பெற்றான், அவன் அல்லனோ மன்னன்! அவன் அரசன்றோ தமிழரசு!
அறிவுரம் பெற்ற பிசிராந்தையாரின் உடல் பாண்டி நாட்டில் உலாவிக்கொண்டிருந்தது.
ஆனால், அவர் உள்ளமோ, உறந்தையிலேயே வாழ்ந்தது. அந்நாளில் உறையூரைத் தலைநகராகக்
கொண்டு ஆட்சி புரிந்த சோழ வேந்தன் கோப்பெருஞ்சோழன். அவன் ஆட்சியில் பொன்னி
வளநாடு குறையேதுமின்றிப் பொலிவுற்று விளங்கியது. பாணரும் பரிசிலரும் மகிழ்ச்சி
வெள்ளத்தில் ஆழ்ந்திருந்தனர். சோழன் தலை வாயிலை நாடி வந்த கலைஞர் அனைவரும்
கைநிறையப் பொன்னும் பொருளும் மணியும் துகிலும் பரிசிலாகப் பெற்று மீண்டனர்.
பசியால் வாடி வந்த இரவலர்க்கெல்லாம் ஆமையின் இறைச்சியையும் ஆரல்மீனின்
கொழுவிய சூட்டையும் விளைந்த வெங்கள்ளையும் அவர் வேட்கை தீருமட்டும் தருவதில்
என்றும் மன்னன் சலிப்புக் கண்டதில்லை. அவன் திருவோலக்கம் எஞ்ஞான்றும் இசை
முழங்கும் பெருவிழாக் காட்சியையே அளித்தது. அவன் நன்னாடோ, நாளும் வற்றாத புது
வருவாய் மிக உடையது. இத்தகைய சிறப்புக்களை யெல்லாம் பெற்று விளங்கிய
அக்கோப்பெருஞ்சோழன், கோழியூராம் உறையூரினைத் தலைநகராக உடைய ஒப்பற்ற
வேந்தனாய் விளங்கினான்; தன் வாழ்நாள் முழுதும் பாணர் குடியை வாட்டி வதைத்து
வந்த பசிப்பிணிக்குப் பெரும் பகைவனாய் விளங்கி விழுப்புகழ் பெற்றுத் திகழ்ந்தான்;
அதோடு புரையில்லா நட்பினை உடைய பொத்தியார் என்னும் புலவரோடு மாறாத் தோழமை பூண்டு நாடோறும் மகிழ்ச்சிக் கடலில் திளைத்து இன் புற்றிருந்தான். இவ்வுண்மைகளையெல்லாம் சான்றோராகிய பிசிராந்தையார் பாடல் ஒன்றே நமக்கு உளங்கொளும் வகையில் சாற்றுகின்றது :
‘நும்கோ யாரென வினவின் எம்கோக்
களமர்க்(கு) அரிந்த விளையல் வெங்கள்
யாமைப் புழுக்கிற் காமம்வீட ஆரா
ஆரற் கொழுஞ்சூ(டு) அங்கவு ளடாஅ
வைகுதொழின் மடியு மடியா விழவின்
யாணர் நன்னாட் டுள்ளும் பாணர்
பைதற் சுற்றத்துப் பசிப்பகை யாகிக்
கோழி யோனே கோப்பெருஞ் சோழன்
பொத்தில் நண்பிற் பொத்தியொடு கெழீஇ
வாயார் பெருநகை வைகலும் நக்கே." (புறம். 212)
நட்பிலும் பெட்பிலும் சிறந்து விளங்கிய கோப்பெருஞ்சோழன் நற்பண்புகள், சான்றோராகிய பிசிராந்தையாரின் நெஞ்சைக் கவர்ந்தன. தாம் இருப்பது பாண்டி நாடே ஆயினும், அவன் வாழ்வது சோழ நாடே ஆயினும், ‘கேட்டு வேட்ட’ அவர் கலை நெஞ்சம் கோப்பெருஞ்சோழன் பால் மாறா அன்பு கொள்ளலாயிற்று. புலவரைப் போன்றே கோப்பெருஞ்சோழனும் நெடுந் தொலைவில் இருந்த புலவர் பெருமானாராகிய பிசிராந்தையாரின் இளமை தவழும் வளமை நிறைந்த வாழ்வினையும் புலமை நலங்கனிந்த கலைநெஞ்சின் ஆழத்தையும், உறுதி படைத்த ஒழுக்கத்தின் விழுப்பத்தினையும் ‘செவி வாயாக நெஞ்சு களனாக’ப் பல காலும் சான்றோர் வாயிலாகக் கேட்டு அறிந்து, அவர்பால் தீராக் காதல் கொண்டான். இருவருக்கும் இடையே எழுந்த அன்புணர்வு-ஆர்வமாய் -நட்பாய்-காதலாய்-அதனினும் சிறந்த பெரும்பேருணர்வுமாய் உருக்கொள்ளல் ஆயிற்று. இருவருக்கும் இடையே இருந்த நட்பின்-காதலின்-திறத்தையெல்லாம் அவர்கள் பாடிய அருந்தமிழ்ப் பாடல்களே இன்றும் நமக்கு எடுத்துரைக்கும் வல்லமை பெற்று விளங்குகின்றன. சான்றாக ஈண்டுப் புலவர் பிசிராங்தையார் பாடல் ஒன் றைக் காணல் சாலும்.
‘விரிகதிர் பரப்பி உலகமுழுதாண்ட ஒருதனித் திகிரி உரவோன்’ மலை வாயில் வீழ்ந்துவிட்டான். கதிரவனை விழுங்கிய காரிருளைத் துரத்திக்கொண்டே நீல வானில் பால் நிலவு தன் முழு அழகையும் காட்டிய வண்ணம் எழுகிறது. தமிழ் போல ஓங்கி உயர்ந்து விரிந்து பரந்து கிடக்கும் விண்ணில் தோன்றிய முழு நிலவை-அத்தண்ணிலவைப்-பருகிய வண்ணம் பிசிராந்தையார் தம் இல்லத்து இளமரக்காவில் வீற்றிருந்தார். கங்குல் நங்கை சூடிய மல்லிகை மலர் போல விளங்கும் அவ்வழகிய நிலா அவர் உள்ளத்தில் இன்ப வெள்ளத்தைப் பாய்ச்சியது. அஃது இன்ப உணர்வை அள்ளி வழங்கிய அந்நேரத்திலேயே துன்ப உணர்வையும் தோற்றுவித்துப் புலவர் பெருமானரின் கலை நெஞ்சை வெதுப்பத் தொடங்கியது. புலவர் பிசிராந்தையார்-கோப்பெருஞ்சோழனது ' உயிர் ஒம்பும்’ உழுவல் நண்பர்-உள்ளம் காதற்கடலாயிற்று. வெண்ணிலவைக் கண்டு பொங்கும் விரிதிரைக் கடல் போல அவர் காதல் நெஞ்சில் உணர்வு அலைகள் ஓவென எழுந்து முழங்கலாயின. அம்முழக்கத்தின் எதிரொலியை இன்றும் நாம் அவர் பாடிய அழகிய பாடலில் கேட்கலாம்.
வான்மதியின் முழுநகையைக் கண்ட புலவர் நெஞ்சம் காதல் கொண்ட கற்புடைத் தலைவி போலக் கலங்கி வருந்தலாயிற்று. தலை சிறந்த அரசியல் அறிவு பெற்ற அத்தண்டமிழ்ப் புலவரின் நெஞ்சம் உணர்வு மயமாயிற்று, 'உறந்தையோனே, உயிரினும் சிறந்த அண்ணலே, உன்னைக் காணும் நாள் எந்நாளோ! இடையீடின்றி உன்னோடேயே உறையும் நாள் எந்நாளோ!' என்று தம் உள்ளம் கவர்ந்த கள்வனைக்-காதலனைஎண்ணி அவர் காதல் நெஞ்சம் கலங்கலாயிற்று. தம்மை மறந்தார் புலவர்; தம் நிலை மறந்தார்; செயிர்தீர் கற்புடைச் சேயிழை ஆனார்; தூண்டிற் புழுவினைப் போலக்-கூண்டுக்கிளியைப் போலப்-பொறுக்க ஒண்ணாப் பிரிவுத்துயரால் துடித்தார். அச்சமயம் தென்திசை சென்று இரை தேடிய அன்னச்சேவல் ஒன்று தன் பெடையுடன் வடதிசை நோக்கி விரைந்து செல்வதைக் கண்டார். அகல் வானில் அன்னத்தையும் அது செல்லும் திசையையும் விரைவையும் கண்ட புலவர் மனத்தில் உறங்கிக்கிடந்த கற்பனை உணர்வு ஓங்கி எழல் ஆயிற்று. அவர் தம்மைத் தலைவியாகவும், அன்னத்தைத் தூது போய் அணி மாலை வாங்கி வரவல்ல ஆருயிர்த் தோழி யாகவும் கருதிக்கொண்டார். புலவருடைய கற்பனை ஊற்றெடுக்கலாயிற்று.
அன்னம், கிள்ளை, மான் முதலியன ஆறறிவற்ற உயிர்கள்; ஒருவர் சொல்வதைக் கேட்டுப் பிறர்பால் சென்று சொல்லும் ஆற்றல் அற்றவை. ஆனால், குழந்தை உள்ளத்திற்கும், காதல் இதயத்திற்கும், கற்பனை நெஞ்சிற்கும் உள்ள ஆற்றல் தனிச் சிறப்பு வாய்ந்தது ஆகும்; ஓடி விளையாடும் அன்புச் செல்வத்திற்கு-ஆடி வரும் தேனுக்கு-உயிரற்ற மரப்பாவை உற்ற தோழன். ஆருயிர்க் காதலன் பிரிவால் ஆறாத்துயர் உழக்கும் அணங்கிற்கு அன்னமும் கிள்ளையும் மானும் உயிர்க்கினிய தோழியர். அவ்வாறே கலைஞன் கலை உணர்விற்கு-கற்பனை நெஞ்சிற்கு-ஆடும் கொடியும், ஒடும் ஆறும், வீசும் தென்றலும், விரியும் மலரும் ஆறறிவு படைத்த அறிவும் உணர்வும் நிறைந்த உயிர்கள். குழந்தையின் கண்-காதலியின் பார்வை-புலவன் கருத்து இவை பட்டால் கல்லும் புல்லும் பாடும்; மரமும் மலையும் பேசும்; அருவியும் கடலும் ஆடும்; ஆம்! அதுதான் கரவற்ற நெஞ்சில் எழும் கற்பனையின் ஆற்றல்; உயிரற்ற பொருள்கட்கும் உயிர்கொடுக்கும் உள்ளப்பண்பு. இப் பண்பின் திறனைப் பண்டுதொட்டு இன்று வரை இலக் கியங்களிலும் வாழ்க்கையிலும் காணலாம்.
அன்னம் முதலியவற்றைக் ‘கேட்குந போலவும் கிளக்குந போலவும், இயங்கந போலவும் இயற்றுந
போலவும்’ [1] கருதிக் கவி பாடல் தமிழ் இலக்கியத் துறையில் நெடுங்காலமாய் நிலைத்து நிற்கும் மரபு.
பிற்காலத்தில் தூது எனப் பெயர் தாங்கிப் பிரபந்தமாகவே பெருகி வளர்ந்த இந்நெறி சங்க
இலக்கியப் பாடல்களுள்ளேயும் காணப்படுகின்றது. இவ்வுண்மையைப் பிசிராங்தையார்
பாடலும் நமக்குப் புலப்படுத்துகிறது.
¨----------
[1. நன்னூல், சூ. 409,
---------
‘அன்னச் சேவலே, அன்னச் சேவலே, வீரப்போர் புரிந்து மாற்றாரை வென்று வீழ்த்தி வெற்றி மிகப் பெற்று விளங்கும் தலைவனது தண்ணளி புரியும் திரு முகம் போலப் பொலிவுதரும்-இருமுனையும் ஒன்றுகூடி விளங்கும்-எழில் நிறைந்த முழுநிலவு ஒளி வீசி நிற்கின்றது. தமியரானாரை வாட்டி அறிவை மயக்கும் இந்த அந்தி வேளையில் யான் செயலற்று வருந்திக் கிடக்கிறேன்! நீயோ, தென்திசைக்கண் உள்ள குமரிப் பெருந் துறையில் அயிரை மீனினை மேய்ந்து வடதிசைக்கண் உள்ள பேரிமயம் நோக்கிப் பெயர்கின்றாய். அவ்வாறாயின், இடையில் உள்ள சோழ நாட்டினைக் கடந்துதான் செல்லல் வேண்டும். அதுபோழ்து என்பொருட்டு அச் சோழ நாட்டில் கோழியூராகிய உறையூரின் கண் உள்ள உயர்நிலை மாடத்திலே உன் பெடையுடனே சற்றே தங்கு. வாயில் காவலர் எவரிடமும் நீ ஏதும் உரைக்க வேண்டுவதில்லை. தடையேதும் இன்றிக் காவலன் கோயிலுள் நீ புகலாம். அங்கு எம் பெருங்கோக்கிள்ளி இனிது வீற்றிருப்பான். அவன் திருச்செவிகள் கேட்கும் வண்ணம், ‘நான் பிசிராந்தையின் அடிமை,’ என்று ஒரு சொல் சொல்லுதல் போதும், சிறந்த உன் அன்புறு பேடை அணிந்து அகமிக மகிழ்ந்து இன்புற நினக்குத் தன் விருப்பத்திற்குரியவான அழகிய அணிகலன்களெல்லாம் உவந்து அளிப்பான்,' என்னும் கருத்தமைந்த
‘அன்னச் சேவல் அன்னச் சேவல்!
ஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணல்
நாடுதலை யளிக்கும் ஒண்முகம் போலக்
கோடுகூடு மதியம் முகிழ்நிலா விளங்கும்
மையல் மாலையாம் கையறு(பு) இனையக்
குமரியம் பெருந்துறை அயிரை மாந்தி
வடமலைப் பெயர்குவை ஆயின், இடையது
சோழநல் நாட்டுப் படினே, கோழி
உயர்நிலை மாடத்துக் குறும்பறை யசைஇ
வாயில் விடாது கோயில் புக்(கு)எம்
பெருங்கோக் கிள்ளி கேட்ப, ‘இரும்பிசிர்
ஆந்தை அடியுறை,’ எனினே, மாண்டநின்
இன்புறு பேடை அணியத்தன்
நன்புறு நன்கலம் நல்குவன் நினக்கே.’ (புறம். 67)
என்னும் பாடல் அவர் பாடியது.
இவ்வாறு பெருங்கோக்கிள்ளியின் அன்பினை நினைந்து உருகிப் பாடிய பிசிராந்தையாரின் பாடலில் அவர் காதல் உள்ளத்து ஊறி எழும் உணர்வின் கடல் அனைய ஆழம் நம் அகக் கண்கட்குப் புலனாகிறதன்றோ? இவ்வாறு ‘தென்னம் பொருப்பன் நன்னூட்டுள்' வாழ்ந்த தெள்ளுதமிழ்ப் புலவரின் நெஞ்சை அள்ளித் திறை கொண்ட பண்பொன்றே கோப்பெருஞ் சோழனது பெருமையை விளக்க வல்ல தக்க சான்றன்றோ?
இங்ஙனம் பீடும் பெருமையும் பெற்றுச் சிறந்து விளங்கிய சோழநாட்டு மன்னனுக்கு மைந்தர் இருவர் இருந்தனர். அவ்விருவரும் இளமை கொழிக்கும் வளத்தினராய் விளங்கினும், இதயப்பண்பாடு எள்ளளவும் அற்றவராய் இருந்தனர் : நெடுநாளாகத் தம் தந்தை அரசோச்சி வருவது கண்ட அவர் மனம் பொறுக்க வில்லை. தம் உள்ளக்கருத்தைக் குறிப்பாகவேனும் புலப் படுத்தியிருப்பரேல் துன்பமல்லது தொழுதகவு இல்லாத வான் பேரச்சம் நிறைந்த மன்பதை காக்கும் பொறுப்பை-ஆட்சியை-அக்கணமே அவர் கையில் ஒப்படைத்து விட்டு விலகி இருப்பான், ‘வேண்டாமையன்ன விழுச் செல்வம்' வேறில்லை என்பதை நன்குணர்ந்த வேந்தன். ஆனால், அதற்கு மாறாக, ‘மைந்தர்' எனவும் எண்ணாது தம்மை மாற்றார் போலக் கருதித் தம் தந்தையுடனேயே போர் உடற்ற மனங் கொண்டனர் அப்பண்பில் புதல்வர். இழிவு நிறைந்த இச்செய்தி கேட்டுப் பொருக்கென எழுந்தான் பெருங்கோக்கிள்ளி; ‘என்னுடைய மக்களா இவர்கள்! பண்பற்ற பதடிகள் போல அல்லவோ நடக்கின்றார்கள்! இவ்வறமற்ற சிந்தையர்க்கு என் கூர்வாளே பாடம் கற்பிக்கும்! உள்ளப்பண்பு ஒரு சிறிதும் அற்ற இவர்கள் என் உதிரத்து உதித்த மக்களானால் என்ன, வேறு யாராயினுந்தான் என்ன!' என்று இடி போல முழங்கினான். அவன் இடி முழக்கத்தை எதிரொலி செய்வது போலப் போர் முரசங்கள் முழங்கின. மன்னன் களம் புகுந்தான்.
அந்நாளில் சோழ மன்னன் பேரவையை அணி செய்த அரசவைப் புலவர் பெருமக்களுள்
‘புல்லாற்றூர் எயிற்றியனார்’ என்பவர் தலை சிறந்தவராய் விளங்கினார். அவருக்குச்
செய்தி எட்டியது. அவர் கோழியூரானது கோபக்கனல் தெறிக்கும் வஞ்சின மொழிகளைக்
கேள்வியுற்றார். அந்தோ! போரா! தந்தையைப் பகைத்து மக்களும், மக்களை எதிர்த்துத் தந்தையும் செய்யும் போரா! கொடிது கொடிது! அதுவும் கருணையே வடிவெடுத்த காவேரித்தாய் பாய்ந்து வளஞ்சுரக்கும் கழனி நாட்டிலா! வழுவறியாச் சோழர் குடியிலா! இது நாணத்தகுவது!’ என எண்ணி, அவர் அருள் நெஞ்சம் துடித்தது. ‘எவ்வாறேனும் இப்போரை நிறுத்துவதே நம் கடன். சோழ வேந்தன் மிக உயர்ந்தவன். அறிவிலா மக்களால் அவன் மனம் தீயாகிவிட்டது. தண்ணார் தமிழ் கொண்டு அவன் நெஞ்சைத் தணிப்போம்; போர் நிற்கும்; அமைதி நிலவும்; பழியேதுமின் றிச் சோழர் குடியும் உய்யும்,’ என உள்ளத்தில் உறுதி கொண்டவராய்ப் போர்க்களம் புகுந்தார்; மன்னனைக் கண்டார்; ஒளிவு மறைவு இன்றித் தம் உள்ளக் கருத்தைக் கூறினார்; அஞ்சாது கூறினார்; அமர் வேட்ட மன்னன் நெஞ்சம் தணிந்து கனியுமாறு பேசினார்; தம் சொல்லை ‘வெல்லுஞ்சொல்’ வேறில்லாதவாறு பேசினார். அவர் பேசிய அப்பேச்சு-அருளும் அஞ்சாமையும் நிறைந்த பேச்சு-போர் நீக்கித் தடுத்து அமைதி நிலை நாட்டும் பேச்சு-பழி போக்கிப் புகழ் காக்கும் பேச்சு-இன்றும் புறநானூற்றைப் படிக்கும் போது நம் செவிகளில் கேட்கிறது.
‘மடுத்தெழுந்த போரில் மாற்றாரைக் கொன்ற வலிய முயற்சியுடைய வெண்குடையால் உலகினை நிழல் செய்து காக்கும் புகழ் மிகுந்த வெற்றி பொருந்திய வீரனே, ஆழி சூழ் இவ்வுலகின்கண் போர் வேட்டு நின்னொடு மாறுபட்டு வந்த இருவரும் யாரென்பதை நன்றாக நினைத்துப்பார்! அவர்கள் தொன்றுதொட்டு வரும் நின் பகை வேந்த ராகிய சேரபாண்டியரும் அல்லர்; நீயும் அவர்கட்கு அத்தகைய பழம்பகைவன் அல்லை. ஒன்னாரைக் கொல்லும் யானைப் படையுடைய தலைவ, பரந்த நின் நற்புகழை இப் பாருலகில் நிலை நாட்டி நீ மேலுலகம் எய்திய பின்னர், நீ விட்டு நீங்கிய ஆட்சியுரிமை அம்மக்கட்கே உரியது அன்றோ? அதுவே முறையாதலும் நீ அறிந்த உண்மை தானே?' என்னும் கருத்தமைய
‘மண்(டு)அமர் அட்ட மதனுடை நோன்தாள்
வெண்குடை விளக்கும் விறல்கெழு வேந்தே!
பொங்குநீர் உடுத்தஇம் மலர்தலை உலகத்து
நின்தலை வந்த இருவரை நினைப்பின்
தொன்(று)உறை துப்பின்நின் பகைஞரும் அல்லர்;
அமர்வெங் காட்சியொடு மா(று)எதிர்(பு) எழுந்தவர்;
நினையுங் காலை நீயு மற்றவர்க்(கு)
அனயை யல்ல; அடுமான் தோன்றல்!
பரந்துபடு நல்லிசை எய்தி மற்றுநீ
உயர்ந்தோ ருலக மெய்திப் பின்னும்
ஒழித்த தாயம் அவர்க்(கு)உரித் தன்றே?
அதனால், அன்ன(து) ஆதலும் அறிவோய்!’ (புறம் 213)
என்னும் பாடலைத் தொடங்கி, மேலும் பேசலானார்: ‘புகழ்மிக விரும்புவோனே, இன்னும் கேள்: நின்னொடு போர் செய்தற்குப் பெரு வலியுடன் படை திரட்டி எழுந்த அறிவற்ற நின் மக்கள் தோற்பதே ஆகட்டும். அப்போது நின் பெருஞ்செல்வத்தை நீ யார்க்கு அளிப்பாய்? போர் விரும்பும் செல்வனே, அவர்க்கு நீ தோற்றாலோ, நின் பகைவர் மகிழ அழியாப் பழியே நினக்குக் கிடைக்கும். ஆகலின், ஒழிவதாக நின் மறன்! அஞ்சினோர்க்கு அரணாகும் நின் தாள் நிழல் நல்வினை செய்வதாக! பெறற் கரிய விண்ணுலகத்துள்ளார் நின்னை விருந்தாக ஏற்றுக் கொள்ள எழுக! வாழ்க நின் நல் நெஞ்சம்!’ என்னும் கருத்தமைய
‘நன்றும்
இன்னும் கேண்மதி இசைவெய் யோயே!
நின்ற துப்பொடு நிற்குறித்(து) எழுந்த
எண்ணில் காட்சி இளையோர் தோற்பின்
நின்பெருஞ் செல்வம் யார்க்(கு)எஞ் சுவையே!
அமர்வெஞ் செல்வ! நீஅவர்க்(கு) உலையின்
இகழுநர் உவப்பப் பழிஎஞ் சுவையே;
அதனால், ஒழிகதில் அத்தைநின் மறனே! வல்விரைந்(து)
எழுமதி வாழ்கநின் உள்ளம்! அழிந்தோர்க்(கு)
ஏமம் ஆகும்நின் தாள்நிழல் மயங்காது
செய்தல் வேண்டுமால் நன்றே; வானோர்
அரும்பெறல் உலகத்(து) ஆன்றவர்
விதுப்புறு விருப்பொடு விருந்(து)எதிர் கொளற்கே!’ (புறம். 218)
எனப்பாடி முடித்தார்.
எயிற்றியனார் கூறிய மொழிகளைக் கேட்ட மன்னன் சிந்தனைக் கடலில் ஆழ்ந்தான்; அருந்தமிழ்ப் புலவர் கூறிய மொழிகள் அத்தனையும் உண்மை எனக்கண்டான்; ‘அறமில்லா மக்களைப் பெற்றோமே!’ என்று மனம் உளைந்தான்; உள்ளினான்; ஆழ்ந்து உள்ளினான்; உள்ளொளி பெற்றான். போரை-புகழை- வெறுத்தான்; ஆட்சியுரிமையை அக்கணமே நீத்தான்; ‘நாடு காவல் புரியும் நமக்கு இத்தகைய பண் பாடற்ற பிள்ளைகள் பிறந்தார்களே! இப்பழி துடைக்க வழியும் உள்ளதோ?’ எனக் கருதி மனம் கலங்கினான். அந்நிலையில் அவன் காலத்துச் ‘சான்றோர் சென்ற நெறி' அவன் நினைவிற்கு வந்தது. ‘விட்டு விடுதலையாகும் வழி கண்டோம்!’ எனப் பேருவகை கொண்டான்; ஊரின் வட திசை நோக்கிச் சென்றான். உண்ணாது-பருகாது- பட்டினி கிடந்து உயிர் துறக்கத் துணிந்தான்.
கோப்பெருஞ்சோழன்-குணக்குன்று - பசிப்பிணிப் பகைவன் - இரவலரின் மிடி போக்கிய கொடைவள்ளல்-கலை வளர்த்த காவலன்-பொன்னியின் செல்வன் - வடக்கிருந்து உயிர் துறக்கத் துணிந்தான் என்ற செய்தி காவிரி நாடெங்கணும் காட்டுத் தீப்போலப் பரவியது. ஆம்! தீயெனவே பரவிய அச்செய்தியைக் கேட்டவர் நெஞ்சில் எல்லாம் தீயே மூண்டது. மக்கள் எல்லாம் மனம் கலங்கினார்கள்; ‘புறவின் அல்லலையும் காணப் பொறாத அருள் நிறைந்த மன்னர்களைப் பெற்ற சோழர் குடியே, நீயும் காலக்கடவுளின் கடுஞ்சோதனைகட்கு விதி விலக்காகாய் போலும்!" என நினைந்து கவன்றார்கள். வடக்கிருக்கச் சென்ற மன்னனைத் தொடர்ந்து அவன் கண்ணனைய தமிழ்ப் புலவர் அனைவரும் சென்றனர்; மாற்ற ஒண்ணா அவன் மனத் துணிவு கண்டு கலங்கினர்; கண்ணீர் சிந்தினர்; ‘அன்புடை வேந்தனை எவ்வாறு பிரிந்து அவனியில் வாழ்வோம்!’ என்று இதயம் புழுங்கினர்; உடன் உயிர் துறக்கவும் உறுதி கொண்டனர். சின்னாட்கள் கழிந்தன. ஒரு நாள் அரசன் தன்னைச் சூழ இருந்த சான்றோர்களை நோக்கிப் ‘பெரியீர், என் ஆருயிர் நண்பராகிய பிசிராந்தையார் இப்போது வருவார்,' என்று கூறினான். அது கேட்ட சான்றோர் பெருவியப்பு அடைந்தனர்; ‘அரசே, உன் பெயரையும் புகழையும் கேட்டறிந்ததே அன்றிப் பிசிராந்தையார் உன்னைக் கண்ணாற்கண்டதும் இல்லையே! அவர் எங்ஙனம் வருவார்?' என ஐயுற்று வினவினர். சான்றோரின் கேள்வி, ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கியிருக்கும் கோப்பெருஞ்சோழனது உள்ளத்தில் மறைந்திருந்த கவிதை ஊற்றையே தோண்டிவிட்டது.
உணர்வு மிக்க மொழிகளால் சோழவேந்தன் தனக்கும் தன் நண்பர்க்கும் இடையே நிலைத்து நிற்கும் ‘உணர்ச்சி ஒத்த’ நட்பின் திறத்தைச் சொல்லோவிய மாக்கிக் காட்டினான். ‘பெரியீர், ஐயுறல் வேண்டா, என் ஆருயிர் நண்பர் தவறாது வந்தே தீருவார். அவர் தம் பெயர் கூறும்போதும் 'என் பெயர் சோழன்’ எனக் கூறும் பண்புடை நண்பர். யான் வாழ்ந்த காலத்து அவர் வாராது போயினும், தாழ்ந்த காலத்து வரத் தவறார், அவருக்கும் என்னருகில் ஓரிடம் ஒழித்து வையுங்கள், என்னும் கருத்தமைந்த பின் வரும் பாடல்களைக் கூறினான் :
‘தென்னம் பொருப்பன் நன்னாட் டுள்ளும்
பிசிரோன் என்பஎன் உயிரோம் புநனே;
செல்வக் காலை நிற்பினும்
அல்லற் காலை நில்லலன் மன்னே,’
‘கேட்டல் மாத்திரை அல்ல(து) யாவதும்
காண்டல் இல்லா(து) யாண்டுபல கழிய
வழுவின்று பழகிய கிழமையர் ஆகினும்,
அரிதே தோன்றல்! அதற்பட வொழுகல்’ என்(று)
ஐயங் கொள்ளன்மின் ஆரறி வாவீர்!
இகழ்விலன்; இனியன்; யாத்த நண்பினன்;
புகழ்கெட வரூஉம் பொய்வேண் டலனே;
தன்பெயர் கிளக்குங் காலை ‘என்பெயர்
பேதைச் சோழன்’ என்னுஞ் சிறந்த
காதற் கிழமையு முடையன்; அதன்றலை
இன்னதோர் காலை நில்லலன்
இன்னே வருகுவன்; ஒழிக்க அவற்(கு) இடமே. (புறம் 216)
இவற்றைக் கேட்டவர் நெஞ்சம் அனலிடைப்பட்ட மெழுகாய் உருகியது. மன்னனது மாற்றம் கேட்ட சான்றோர் மெய் சிலிர்த்தனர்; என்னே இவ்வரசன் உணர்வும் உறுதியும்!’ என்று வியந்தனர். சான்றோனாகிய கோப்பெருஞ்சோழன் சொல் பொய்க்குமோ?
‘அழிவின் அவைநீக்கி ஆறுய்த்(து) அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு.’ (குறள், 787)
எனவும்,
‘ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்(கு)
ஆழி எனப்படு வார்.’ (குறள், 989)
எனவும் கூறிய பொய்யில் புலவரின் பொருளுரை பிழைக்குமோ?
என்ன விந்தை! ஐயுற்ற அச்சான்றோரின் வியப்பு வரம்பற்றதாகும் வண்ணம் கோப்பெருஞ்சோழனது உள்ளமே கோயிலாகக்கொண்ட பிசிராந்தையாரும் அலை கடல் நோக்கிச் செல்லும் அணியாறென ஓடி வந்து அவண் உற்றார், அக்காட்சியைக் கண்டோர், ‘ஈதென்ன மாயமோ! கற்பனையோ!' என்று எண்ணி மருண்டனர்; தம் கண்களை அகலவிழித்து விழித்துப் புலவர் பெருமானாரது திருமுகத்தை உற்று நோக்கினார். ஆம் அவரே பிசிராந்தையார். அவர் கண்களிலேதான் எத்தகைய ஒளி! அவர் முகத்திலேதான் எவ்வளவு இளமை! அவர் தோற்றத்திலேதான் எத்துணைப் பெருமிதம்! புலவர் பெருமானாரது பொன்போன்ற மேனியிலுள்ள ஒவ்வோர் அணுவும் ‘ஆம்!, நானே பிசிராந்தை – உங்கள் சோழ வேந்தனுக்கு உயிர் நண்பன்’ என்று பேசுவது போலத் தோன்றியது. பருகுவனன்ன ஆர்வத்தனாகிப் புலவர் பெருமானேயே வைத்த கண் வாங்காது பார்த்திருந்த மன்னனைப் பிசிராந்தையார் மார்புறத் தழுவிக்கொண்டார். அவ்விரு பெருஞ்சான்றோர்களின் திருவிழிகளினின்றும் சிந்திய இன்பக்கண்ணிர் இருநில மடந்தையின் திருவடிகளைத் தண்ணெனக் குளிர்வித்தது.
உலக வரலாற்றில் ஒப்புக் காண ஒண்ணா அவ்வின்பப் பெருங்காட்சியைக் கண்ட பல்லோரும் இறும்பூது எய்தி மெய்ம்மறந்து நின்றனர். அவ்வாறு அவ்வற்புதக் காட்சியைக் கண்டு களித்து நின்ற பெரியோர்களுள் புலவர் பொத்தியாரும் ஒருவர். கோப்பெருஞ் சோழனுடைய அவைக்களப் புலவருள் ஒருவராய் விளங்கி, அம்மன்னன் இதயம் கலந்த நட்பிற்கு உரியவராகும் பேறும் பெருமையும் பெற்றவரல்லரோ அவர்? வெங்கதிரோனும் தண்ணிலவும் ஒருங்கிருந்த காட்சி போல விளங்கிய அவ்வின்பக் காட்சியினைக் கண்ட அவர் கலையுள்ளம், வியப்பையும் வருத்தத்தையும் மாறி மாறிக் கண்டது. அவர் நெஞ்சக் கடலில் உணர்வு அலைகள் பொங்கின. “இம்மன்னன் தன் மிகப்பெரிய அரச செல்வத்தையும் சிறப்பையும் அடியோடு துறந்து இவ்வாறு வடக்கிருக்கத் துணிந்ததை நினைத்தாலே வியப்புண்டாகிறது! வேற்று நாட்டுத் தோற்றம் சான்ற சான்றோர் ஒருவர் நட்பைப் பாதுகாத்து அதனையே பற்றுக் கோடாகக்கொண்டு துன்பம் நிறைந்த இவ்வேளையில் இங்குத்தவறாது வந்ததை நினைத்தால், முன்னையதினும் இது பெருவியப்பாயுள்ளது! ‘ஆருயிர் நண்பர் வருவார்,’ என்று துணிந்து கூறிய மன்னனது பெருமையும், அது பழுதின்றி வந்தவர் அறிவும் வியக்குந்தொறும் வியக்குந்தொறும் வியப்பே மிகுகின்றது! ஆனால், அந்தோ! தன் செங்கோல் செல்லாத பிற நாட்டுச் சான்றோரின் நெஞ்சையும் தனக்கு உரிமையாகக் கொண்ட பழமை சான்ற புகழ் படைத்த பெரியோனது இந்நாடு இனி என்னாகுமோ! இதுவே மிகவும் இரங்கத்தக்கது!” என்னும் கருத்தமைந்த
‘நினைக்குங் காலை மருட்கை உடைத்தே
எனைப்பெருஞ் சிறப்பினொ(டு) ஈங்கிது துணிதல்;
அதனினு மருட்கை யுடைத்தே பிறன்நாட்டுத்
தோற்றம் சான்ற சான்றோன் போற்றி
இசைமர(பு) ஆக நட்புக்கந் தாக
இணையதோர் காலை ஈங்கு வருதல்;
‘வருவன்' என்ற கோனது பெருமையும்
அது பழு(து) இன்றி வந்தவன் அறிவும்
வியத்தொறும் வியத்தொறும், வியப்பிறந் தன்றே!
அதனால், தன்கோல் இயங்காத் தேயத்(து) உறையும்
சான்றோன் நெஞ்சுறப் பெற்ற தொன்றிசை
அன்னோனை இழந்தஇவ் வுலகம்
என்னா வதுகொல்! அளியது தானே!’ (புறம், 217)
என்னும் பாட்டே அவ்வுணர்வலைகளின் விளைவு.
இவ்வாறு கற்றவர் நெஞ்சையும் கரை காணா வியப்பில் ஆழ்த்தும் வகையில் வந்த பிசிராந்தையாரைக் கண்ட சான்றோர்கள், அவருடைய இளமை சான்ற தோற்றத்தைக் கண்டு மேலும் வியப்புற்றார்கள். கரவற்ற நெஞ்சுடை அக்கற்றோர்கள் பிசிராந்தையாரிடமே தங்கள் ஐயத்தைக் கூறலானார்கள். கற்றறிந்த சான்றோர்களின் கருத்தில் எழுந்த ஐயத்தைப் பிசிராந்தையார் தம்
வாழ்வின் அனுபவத்தையே சுட்டிக்காட்டி அகற்றலாயினர். ஆன்றவிந்தடங்கிய சான்றோராகிய பிசிராந்தையார் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பு புன்னகை தவழும் முகத்தோடு ஒரு சிலர்க்கே கூறிய அமுத மொழிகள் காலத்தையும் வென்று காசினிக்குப் பயன்படும் அழியாத் தன்மை பெற்று விளங்குகின்றன :
‘பெரியீர், யான் ஆண்டில் முதியவனே; ஆயினும், நரையின்றி விளங்கல் எவ்வாறோ எனக் கேட்கின்றீர். அதற்குரிய காரணங்களைக் கூறுவேன் : மாட்சி மிக்க பண்புகள் நிறைந்தவள் என் மனைவி. அவளோடு என் மக்களும் அறிவிற் சிறந்தோராய் விளங்குகின்றனர். என்னுடைய ஏவலாளரும் யான் கருதிய அதனையே கருதும் பண்பு உடையவர்கள். என் வேந்தனாகிய பாண்டியனும் முறையற்றன செய்யாது, அறம் காக்கும் மாண்பு மிக்க செங்கோலன். அதற்கு மேலே யான் வாழும் ஊரின் கண்ணே நற்பண்புகள் நிரம்பிப் பணிய வேண்டிய பெரியோரிடத்தே பணிந்து ஐம்புலனும் அடங்கிய கோட்பாட்டினை உடைய சான்றோர் பலர் உள்ளனர்,’ என்னுங் கருத்தமைந்த
“ ‘யாண்டுபல ஆக நரைஇல ஆகுதல்
யாங்(கு)ஆகியர்!’ என வினவுதிர் ஆயின்,
மாண்டஎன் மனைவியொடு மக்களும் நிரம்பினர்;
யான்கண் டனையர்என் இளையரும்; வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும்; அதன்றலை
ஆன்றவிந்(து) அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர்யான் வாழும் ஊரே.” (புறம். 191)
என்னும் பாடலைக் கூறினார்.
வாழ்க்கையின் தீராப்பிணிகட்கு எல்லாம் அடிப்படைக் காரணம் கவலை, கவலை கவலையே ஆகும்! அறிவியல் துறையில் எவ்வளவோ முன்னேறியும், அன்பும் அருளும் ஆண்மையும் இன்றி இந்த உலகின் அகவாழ்வு அழிந்து கொண்டே இருப்பதற்கான காரணம், கவலையே ஆகும். அக்கவலை நோய் வீட்டில்-ஊரில்- நாட்டில் உலகில் - எந்த மூலையிலும் எந்த வடிவிலும் தலை காட்டாது ஒழிய வேண்டும். இந்நிலை தோன்ற உலக மக்களின் உள்ளம் பண்பட வேண்டும். அப்பண்பாட்டினைக் காக்கும் வேலியாய்-அரணாய்-நாடுகளின் அரசியலும் உலகின் அரசியலும் அமைய வேண்டும், அந்த அரசியல், அறத்தை உயிராக ஒம்பும் அரசியல் ஆக வேண்டும். உலகின் அரசியலும் மக்களின் வாழ்வும் மாசுறா வண்ணம் ஆன்றவிந்தடங்கிய சான்றோர்களின் காவல் ஓங்க வேண்டும்.
இத்தகு எண்ணங்கள் எல்லாம் நம் உள்ளத்தில் எழுச்சி கொள்ளத் துணை புரிகிறதன்றோ பிசிராந்தையாரின் அரிய பாடல்? அப்பாடல் தரும் நற்செய்தி உல கெங்கும் பரவ வேண்டும்; வெற்றியுற வேண்டும்.
பிசிராந்தையாரின் ஒரு பாடல் பாண்டிய மன்னனது அரசியல் வாழ்வையே உயர்த்தி அறமணம் கமழச் செய்தது. இன்னம் இரு பாடல்களோ, அவர் கோப்பெருஞ் சோழன் பால் கொண்டிருந்த இணை காண இயலா நட்பின் ஆழத்தை உலகம் உணர்ந்து வியந்து போற்றச் செய்தன. இறுதியாக அவர் பாடிய பாடலோ, என்றென்றும் இரு நிலத்தின் பிணிகளையெல்லாம் தீர்க்க வல்ல நன்மருந்தாய் விளங்குகிறது.
இத்தகைய பண்பு நிறைந்த வாழ்க்கை வாழ்ந்து பயன் செறிந்த பாக்களைப் பாடிய புலவர் பெருமானாரின் வாழ்வும், குறிக்கோள் நிறைந்த பாடல்களை யாத்துதவிய தமிழ் நெஞ்சம் படைத்த சோழ மன்னனது வாழ்வும் ஆறோடு ஆறு கலந்தாற்போல ஆயின. உள்ள நாள் எல்லாம் பிரிந்திருந்த அவர்கள், உயிர் போம் காலத்தில் கூடிவிட்டார்கள். எல்லையில்லா இன்பம் கண்ட அவர்கள் வாழ்வின் இறுதி, வையகத்தை வரம்பில்லாத் துன்பத்தில் ஆழ்த்தியது. பிசிராந்தையாரும் கோப்பெருஞ்சோழனும் ஒன்றாக உயிர் நீத்தனர். அவர்கட்கு அது விடுதலையாகலாம். ஆனால், இன்பத் தமிழகம் சங்ககாலச் சான்றோர் உலகம்-அவர்கள் பிரிவைப் பொறுக்க இசையுமோ? கலைஞரும் புலவரும் கண் கலங்கினர். சான்றோர் மனம் நைந்தனர். அனைவருக்கும் மேலாகப் புலவர் பொத்தியார் கதறி அழுதார். சோழ வேந்தனது அவைக்களப் புலவராகவே இருந்து காலமெல்லாம் அவனுடன் உறையும் இன்பத்திலேயே வாழ்வைப் போக்கிய அவர், மன்னனது - மாசறக் கற்ற சான்றோனது - பிரிவை எங்ஙனம் பொறுப்பார்? அரசனோடேயே ஆவி துறக்கத் துடித்தார். ஆனால், மன்னன் மனம் வேறாய் இருந்தது. தான் பெற்ற பிள்ளைகளை வெறுத்தான் சோழவேந்தன். ஆனால், அதற்காகக் குழந்தை உலகத்தையே அவன் கலை நெஞ்சம் வெறுக்குமோ? பிள்ளைக் கனியமுதின்-பேசும் பொற்சிலைகளின்-அருமை அறியாதவனோ
அவன்? அல்லன். அதனால் அருந்தமிழ்ப் புலவரை நோக்கி, ‘நண்பீர், புகழ்சால் புதல்வன் பெற்ற பின் வருக!' என்று பணித்தான். அன்புடை மன்னன் மொழியை யாங்ஙனம் மறுத்தல் கூடும்? ஆனால், பொத்தியார் உள்ளம் துயரத்தால் வாடியது. அவர் கண்களில் நீர் மல்கிற்று. அவர் ஆறாத்துயர் அடைந்தார். இந்நிலையில் கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் ஆவி பிரிந்தது. தமிழ் மக்கள் துன்பக் கண்ணீர் வடித்தனர். பாணரும் புலவரும் விம்மி விம்மி அழுது கலங்கினர்.
பொத்தியாரும், சோர்ந்த நெஞ்சினராய், நீர் பெருகும் கண்ணினராய், உறையூர் திரும்பினார்; உயிரற்ற உறையூரைக் கண்டார்! ‘அந்தோ! தேர்வண் கிள்ளியே! நீ இல்லா மூதூராயிற்றோ உறந்தை! என்று குழந்தை போலப் புலம் பினார்; சின்னாள் உயிர் சுமந்து இருந்தார். அவருக்குத் தவமகனும் பிறந்தான். அதன் பின் அவர் கோப்பெருஞ்சோழனும் பிசிராந்தையாரும் உயிர் துறந்த இடத்திற்கு வந்தார். அங்கே கண்ட காட்சி அவர் உள்ளத்தை உருக்கியது. இளகிய இதயம் படைத்த அவரால் அத்துயரத்தைப் பொறுக்க முடியவில்லை. ஓவென அழுதார். மாண்டு போன மாந்தருக்கு அந்நாள் வழக்கப்படி தமிழ் மக்கள் நடுகல் நிறுவியிருந்தார்கள்; தங்கள் கண்ணீரால் அதை நீராட்டி நித்தமும் வழிபட்டார்கள். மலரிட்டு, மதுப்படைத்து, இறந்துபோன சான்றோரை ஏத்தித் தொழுதார்கள். இக்காட்சியைக் கண்ட புலவர் பொத்தியார், கண்களை இரு கையால் பொத்திக்கொண்டு அழுது அரற்றினார்; நெஞ்சைப் பிளந்துகொண்டு வெளி வந்த பெருந்துயரால் தாயை இழந்த சேய் போல விம்மி விம்மி அழுத வண்ணம், ‘அந்தோ! மன்னா, நீ நடுகல்லாய் நிற்க நான் காணவோ!’ என்று கூறித் தவித்தார்;
“ ‘பாடுனர்க்கு ஈத்த பல்புகழோனை-ஆடுநர்க்கு அளித்த பேரன்புடையோனை. அறவோர் புகழ்ந்த செங்கோலனை-சான்றோர் போற்றிய திண்ணிய நட்பினனை - அருமை பாராது கொன்றதே கொடுங்கூற்றம்! அக்கூற்றம் ஒழிவதாக!’ என்று வையமாட்டீரோ வாய்மை சான்ற புலவர்களே?” என்று கண்ணீர் உதிர்த்துப் புலம்பினார், சோழன் உயிர் விட்ட இடத்திலேயே தாமும் உயிர் துறக்க நினைத்த புலவர், நடுகல்லாய் நின்ற மன்னனை நோக்கி, “என்னைப் பிரிந்தேகிய அன்பிலாள, நம் நட்பை நீ மறந்திருப்பாயல்லை. ஆதலின், எனக்கு நீ குறித்த இடம் யாது?” என வெள்ளம்போலப் பெருகும் விழி நீர் சோர மண்ணும் மலையும் கரைந்துருகக் கேட்டுக் கதறினார். கண்ணீர் சிந்தி அவர் கதறி அழுத குரல் கேட்டுக் கல்லும் கனிந்தது போலும்! சோழன் அருகேயே புலவர் இடம் பெற்றார்.
இவ்வற்புதக் காட்சிகளை எல்லாம் கண்டார்கள் சங்க காலத் தமிழ் மக்களும் புலவர்களும்; உள்ளத்தின் பேராற்றலை எண்ணி எண்ணி வியந்தார்கள். அவ்வாறு வியந்தோருள் ஒருவராய்-உணர்வு மிக்கவராய் - இருந்த புலவர் ஒருவர், வாழ்நாள் முழுதும் காணுது இருந்தும் இறுதி நேரத்தில் எவ்வாறோ சேர்ந்துகொண்ட கோப் பெருஞ்சோழனையும் பிசிராந்தையாரையும் அவர் நட்பின் ஆற்றலையும் நினைந்து நினைந்து பார்த்தார். வியப்பால் - உணர்வால் - விம்மிய அவர் உள்ளம், அருந்தமிழ்ப் பாட்டாயிற்று. மண்ணின் அடி வயிற்றில் கிடக்கும் பொன், மலையின் சாரலில் இருக்கும் மணி, ஆழ்கடல் தரும் முத்து, பவளம் - இவையெல்லாம் ஒன்றுக்கொன்று இடத்தால் மிகச் சேய்மைப்பட்டவையே; ஆயினும், அணிபெறு நன்கலம் அமைக்குங்கால் இவையெல்லாம் எவ்வாறோ ஓரிடத்தில் வந்து அமைந்துவிடுகின்றன. அவ்வாறே ஒன்று கூட வேண்டிய சமயத்துத் தவறாது சான்றோர் சான்றோரையே சார்வர்’! என்னுங் கருத்தமைந்த
‘பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய
மாமலை பயந்த காமரு மணியும்
இடைபடச் சேய வாயினுந் தொடைபுணர்ந்(து)
அருவிலை நன்கலம் அமைக்கும் காலை
ஒருவழித் தோன்றியாங்(கு) என்றுஞ்
சான்றோர் சான்றோர் பால ராப;
சாலார் சாலார் பாலரா குபவே.’ (புறம், 218)
என்பதே அப்பாட்டு,
இது கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையாரின் ‘உணர்ச்சி ஒத்த’ நட்பின்-வாழ்வின்-அற்புதத்தைக்
கண்ணாரக் கண்ட கண்ணாகனார் வரைந்த கருத்தோவியம். கண்ணாகனரின் கவிதை நயத்தில்
தோயும் போதும், பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழனது பெருமை சான்ற வாழ்வினை உள்ளும்
போதும் நம் நெஞ்சம் உலகப்பெருஞானியாரான பிளேட்டோவின்பால் செல்கின்றது. ‘ஓர்
ஆடவனுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதல் சாதாரணமானது; இயற்கையானதுங்கூட.
ஆனால், ஓர் ஆடவனுக்கும் இன்னுமோர் ஆடவனுக்கும் இடையே ஏற்படும் உண்மையான
உயிர் நட்போ, எல்லையற்றது; என்றும் அழியாதது,' [1] என்பது அவர் அமுத வாக்கு, ஆம். உயர்ந்த நட்பின் இலக்கணத்தைத்தான் கண்டார் கிரேக்க ஞானியார். ஆனால், நம் அருமைத் தமிழகமோ, அவ்விலக்கணத்தை வாழ்விக்கும் இலக்கியத்தையே-சான்றோர்களின் நல்வாழ்க்கையையே-கண்டு களித்தது!
----------
[1]. “The love of man to woman is a thing common and of course . . . . but true friendship between man and man is infinite and immortal.'-Plato.
----------
இவ்வாறு சங்ககாலத் தமிழகத்தின் உள்ளத்தைத் தொட்டு உணர்வினைப் பெருக்கும் ஒரு பெருவாழ்க்கை வாழ்ந்த இரு பெருஞ்சான்றோர்களாகிய பிசிராந்தையார், கோப்பெருஞ்சோழன் ஆகியோரின் பெருமை மிக்க பீடு நிறைந்த வாழ்க்கை ஓர் இலக்கியம்; பேரிலக்கியம்; பயில் தொறும் பண்புடையாளர் தொடர்பே போல நவில் தொறும் நயம் நிறைந்து விளங்கும் நல்லிலக்கியம். அவர் கள் வாழ்வும் இலக்கியம்; வாக்கும் இலக்கியம். தமிழ் இலக்கிய வானில் ஒளி பரப்பி இருளகற்றும் இருபெருஞ் சுடர்களாய்த் திகழும் அவர்கள் நல்வாழ்வை நினைப்பார் நெஞ்சம் நூலாகும்; கருதுவார் வாழ்க்கை காவியமாகும்; வாழ்வார் வரலாறு வான்மறையாகும்.
--------------
5. பாண்டியன் நெடுஞ்செழியன்
‘மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்
இயற்கை அல்லன செயற்கையின் தோன்றினும்
காவலர்ப் பழிக்கும்.இக் கண்அகல் ஞாலம். (புறம், 85)
‘கோல்நிலை திரிந்திடின் கோள்நிலை திரியும்;
கோள்நிலை திரிந்திடின் மாரிவறங் கூரும்;
மாரிவறங் கூரின் மன்னுயி ரில்லை;
மன்னுயி ரெல்லாம் மண்ணுள் வேந்தன்
தன்னுயிரென்னுந் தகுதியின் றாகும்.'
(மணிமேகலை, காதை-7; 8-12)
‘அரைசியல் பிழைத்தோர்க்(கு) அறங்கூற்று.’ (சிலம்பு : பதிகம், 55)
இவ்வாறு ஆன்றோர் கூறிப்போந்த அறிவுசால் நன் மொழிகளை-உண்மைகளை-மனமார
உணர்ந்து நல்லறம் நாடிச் செங்கோல் செலுத்திய சங்ககால மன்னர் பலர் ஆவர். அவருள்
‘அரசியல் பிழையாது’ ஆண்ட தலை சிறந்த தமிழ் மன்னன் தலையாலங்கானத்துச் செருவென்ற
பாண்டியன் நெடுஞ்செழியன். அதனாலன்றோ, அவன் நாளோலக்கம் ‘குடமுதற்றோன்றிய
தொன்று தொழு பிறையின் வழிவழிச் சிறக்கநின் வலம் படு கொற்றம்! [1] என்று புலவர் பாடும்
புகழுடையதாய் விளங்கியது?
---------
[1]. பத்துப்பாட்டு-மதுரைக்காஞ்சி, அடி: 191-94
----------
தமிழகத்தில் தமிழரசு தழைத்தோங்கியிருந்த சங்க காலத்தில் நாடாண்ட மன்னர் பலர் நற்றமிழ்க் கவிஞராயும் விளங்கிய வன்மையினைத் தமிழ் இலக்கிய வரலாறு நமக்கு அறிவிக்கின்றது. ஈராயிரம் ஆண்டுகட்கு முன்-இன்பத் தமிழகத்தின் பொற்காலத்தில்-அரியணை ஏறி அரசோச்சிய முப்பத்தொரு தமிழ் மன்னர் அருந்தமிழ் வளர்த்த புலவர்களாயும் விளங்கினர். இப் பெருமையினை எண்ணும்போதெல்லாம் இன்ப வெறி கொள்ளும் நம் இதயம், ‘இங்கிதன் மாண்பிற் கெதிரெது வேறே?’ எனக் கேட்கத் துடிக்கின்றது அன்றோ? ஆம்! கன்னித் தமிழகத்திற்கு வாய்த்த இப்பெருமை, ஆழி குழ் உலகில் வேறு எந்த நாட்டிற்கும் இல்லாத் தனிச் சிறப்பன்றோ?
பாராளும் திறனால் மட்டு மன்றி, வையகத்தைப் பாலிக்கும் பாட்டுத் திறனாலும் தமிழகத்தின் புகழிற்கு வாழ்வளித்த மன்னருள் ஒருவனாகிய பாண்டியன் நெடுஞ் செழியன் இளமைப்பருவத்தினனாயிருந்த பொழுதே ‘தமிழ்கெழு கூடலைத்’ தலை நகராகக் கொண்ட பாண்டி நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்க நேர்ந்தது. ஆண்டில் இளையனாயிருப்பினும், அறிவில் முதியோனாய் ஆண்மையில் பெரியோனாய் அனுபவத்தில் சிறந்தோனாய் விளங்கினான் நெடுஞ்செழியன். அவ்வாறு அவன் மாட்சியுடன் விளங்கியமையாலேயே குடபுலவியனார், கல்லாடனார், மாங்குடி கிழார், இடைக்குன்றூர் கிழார் ஆகிய சான்றோர் அவன் புகழ் பாடிப் போற்றினர். பாண்டியன் நெடுஞ்செழியனது திருவோலக்கம் எஞ்ஞான்றும் திருவிழாக் காட்சியையே வழங்கி வந்தது. அறிவு சான்ற அமைச்சர்களும், அன்பு கெழுமிய புலவர்களும், வீர ஒளி வீசும் கடுங்கண் மறவர்களும், ஈரநெஞ்சம் படைத்த இசையும் கூத்தும் வல்ல கலைஞர்களும் அவனுறையும் கோயில் வாயிலில் குழுமிய வண்ணம் இருந்தார்கள். பலர் புகழ் ஞாயிறு கடற்கண்டாற்போலவும், விண்மீன் நடுவண் விளங்கு மதியம்போலவும் திகழ்ந்து, தமிழக ஆட்சியைக் கண்ணும் கருத்து மாய்க் காத்து வந்தான் பாண்டியன் நெடுஞ்செழியன், அவன் மண்டலத் தலைவர், வீர மறவர், நல்லறிஞர், அருங்கலைஞர் முதலிய பல்லோரையும் விரும்பி
அழைத்துப் போற்றிப் புரந்த செயல், கண் கொள்ளாக் காட்சியாய் விளங்கியது. அதை ஓங்குபுகழ் மாங்குடி மருதனார், பத்துப்பாட்டுள் ஒன்றாகிய மதுரைக் காஞ்சியில் அழகோவியமாகச்-சொற்சித்திரமாகத்-தீட்டிக் காட்டியுள்ளார்:
‘புலர்ந்த சாந்தின் விரவுப்பூந் தெரியல்
பெருஞ்செய் ஆடவர்த் தம்மின்! பிறரும்
யாவரும் வருக! ஏனோருந் தம்என
வரையா வாயில் செறாஅ(து) இருந்து
‘பாணர் வருக! பாட்டியர் வருக!
யாணர்ப் புலவரொடு வயிரியர் வருக!’ என
இருங்கிளை புரக்கும் இரவலர்க்(கு) எல்லாம்
கொடுஞ்சி நெடுந்தேர் களிற்றெடும் வீசி
* * *
முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும்
பன்மீன் நடுவண் திங்கள் போலவும்
பூத்த சுற்றமொடு பொலிந்தினிது விளங்கி
(மதுரைக்காஞ்சி, அடி 745-52; 768-70)
என்னும் அடிகளைக் காண்க,
இவ்வாறு நாடி வந்த நல்லோர்க்கெல்லாம் தேரும் களிறும் களிப்புடன் வீசிப் புகழுடன் விளங்கிய நெடுஞ் செழியனுக்கு அரசுரிமை ஏற்ற சின்னாளிலேயே பெருஞ் சோதனைகள் நேரலாயின. நெடுஞ்செழியன் ஆட்சிப் பொறுப்பை மேற்கொண்ட நாளில் சேர சோழரும், குறு நில மன்னர் பிறரும் அவன் ஆளுகைக்கு அடங்கியே வாழும் நிலை இருந்தது. நாளடைவில் இவ்வாறு பாண்டி யன் ஆட்சிக்குப் பணிந்திருக்கும் நிலையை அவர்கள் வேம்பென வெறுத்தார்கள். அதன் விளைவாகச் சேரனும் சோழனும், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன் ஆகிய குறுநில வேந்தர் ஐவரும் ஒருங்கு கூடிப் போர் புரிந்து நெடுஞ்செழியனை வீழ்த்தி வெற்றி கொள்ளத் திட்டமிட்டனர். ‘நெடுஞ்செழியன் இளைஞன்; சிறியன், என்ற தவறான எண்ணமே அவர்கள் இவ்வாறு துணியக் காரணமாயிருந்தது. அவ்வெழுவர்க்கும் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்ற சேரமன்னனை தலைமை தாங்கும் பொறுப்பினை ஏற்றுக்கொண்டான்; பாண்டி வேந்தன் நெடுஞ்செழியனுக்குப் போர் ஒலையும் அனுப்பினான்; அதில் செழியன் பாண்டி நாட்டு உரிமையைக் கை விட வேண்டும். இல்லையேல், போர் புரியவேண்டும்,' என அறிவித்திருந்தான்.
சேரன் விடுத்த ஒலை, புலவர் அமைச்சர் போர் மறவர் ஆகியோர் புடைசூழக் காட்சிக்கெளியனாய், கடுஞ் சொல்லன் அல்லனாய், இனியனாய் வீற்றிருந்த நெடுஞ் செழியனுக்கும் எட்டியது. அவன் சீறி எழுந்தான்; சேரனுக்கும் செம்பியனுக்கும் வாழ்நாள் முடியும் காலம் வந்துற்றதுபோலும் எனக் கருதினான். ஆற்றொணாச் சினங் கொண்ட செழியன் அவையை நோக்கி முழங்கலானான் : ‘என் நாட்டை ஏத்திப் புகழ்ந்து உரைப்பார் தம்மால் எள்ளி நகையாடற்குரியர் என்றும், யான் இளையன் என்றும் என் மனம் வெறுக்கக் கூறத் துணிந்தனர்;’ ‘வலி மிக்க நாற்படையும் உடையம் யாம்!' என்று சினத்தால் செருக்கிச் ‘சிறுசொல் செப்பினர்; என் உறுவலி கண்டு உள்ளம் நடுங்கினாரில்லை. இவ்வாறு புன் சொல் புகன்ற இகல் வேந்தர் எழுவரையும் போரில் சந்திப்பேன்! என் படை வலிக்கு அவர் ஆற்றாது தோற்றுச் சிதறி ஓடுமாறு தாக்குவேன்! முரசத்தோடு அவரை ஒருங்கே சிறைப் படுத்துவேன்! அவ்வாறு நான் ஆற்றேனாயின், என் நிழல் பொருந்தி வாழும் குடிகள், தங்க வேறு நிழல் காணாது, ‘கொடியன் எம் தலைவன்!’ என்று கண்ணீர் உகுத்துக்கூறக் குடி மக்கள் பழி தூற்றும் கொடுங்கோலை உடையேனாகுக! உயர்ந்த தலைமையுடனே சிறந்த கேள்வியுடைய மாங்குடி மருதனார் முதலான புலவர் பாடாது என் நிலவெல்லையை நீங்குவாராக! என்னால் புரக்கப்படும் கேளிர் துயர் மிக, இரப்போர்க்கு ஈயலாகாத வறுமையை யான் அடைவேனாக!' எனத் துன்னருஞ்சிறப்பின் வஞ்சினம் கூறினான் பாண்டி வேந்தன். கேட்டவர் உடல் புல்லரித்தது. என்னே இம்மன்னனது ஆண்மை-ஆற் றொணாச் சினம்! என்னை இவ்வேந்தனது மன்னுயிர் புரக்கும் நன்னர் நெஞ்சம்-புலவர் மாட்டுக் கொண்ட பெரு மதிப்பு!’ எனக் கற்றோரும் மற்றோரும் எண்ணி எண்ணி இறும்பூது கொள்ளல் ஆயினர்.
வழுதி உரைத்த வஞ்சினம் நாடெங்கும் பரவியது. காளையர் செவிகளிலெல்லாம் காவலன் கூறிய வீரமொழிகள் சென்று ஒலித்தன. அவர்தம் குருதி கொதித்தது. காளையர், ‘எம்மையாள் வேந்தன் உற்ற இழிவு எமக்கும் எந்தாய் நாட்டிற்கும் உற்றதன்றோ!’ என உருத்து எழுந்தனர்; தோள் கொட்டிக் குருதி பாயும் களங்காணத் துடித்தனர். பாண்டி நாட்டின் திக்கெங்கும் அதிர்ந்த போர் முரசம் கேட்டு வில்லும் வாளும் ஏந்தி வேங்கைக் கூட்டமென எழுந்தவீரர் கூட்டம், கடலெனத்திரண்டது. இருங்கடல் போல விரிந்து கிடந்த மறவர் தானைக்கு இள ஞாயிறு அனைய நெடுஞ்செழியன் தலைமை தாங்கினான். பாய்மாவும், கொல்களிறும், நெடுந்தேரும், வாள் மறவரும் பார்க்குமிடமெல்லாம்
நீக்கமற நிறைந்திருந்தனர். பாண்டியனைப் போர்க்களத்தில் காண்போம்; கண்டு சாய்ப்போம்,’ எனக் கருதி எழுவர் படையும் மாறன் தலை நகர் நோக்கி மண்டலாயிற்று. எழுவரின் பெரும்படைக்கும் சேரன் தலைமை தாங்கி வந்தான். நகர்ப்புறத்தே கிடந்த பறந்தலையில் இரு புறத்து நாற்படைகளும் எதிரெதிர் சந்தித்தன. கடும்போர் மூண்டது. வினாடிக்கு வினாடி போரின் வேகம் விடமென ஏறியது; ‘வையகமே அழிந்தொழியுமோ!’ என்னும்படி இரு தரப்பிலும் பெரும் போர் நிகழ்ந்தது. யானை வீரரும் இவுளி மறவரும் வாள் வல்லாரும் வேல் வீரரும் விற்படையரும் உயிரைத் துரும்பெனக் கருதிச் சமர் புரிந்தனர். வெட்டுண்ட களிறுகளின் பிளிறலும், கணை பாய்ந்த கலிமாவின் சாவொலியும் முறியுண்ட தேர்களின் முழக்கமும், தாக்குண்ட வீரர்களின் அலறலும் அலைகடல் ஒலியையும் அடக்கி மிகுவனவாய் விளங்கின.
எழுவர் படையையும் ஒருதரனாகி நின்று ஈடு கொடுத்துச் சாடினான் நெடுஞ்செழியன். புயல்
போலத் தாக்கிய மாற்றார் படையை மலை போலத் தாக்கிப்போர் உடற்றியது பாண்டியன் படை. வெள்ளம் போல ஒன்னார் படை- மேலும் மேலும் மோதல் கண்டு, கடுங்கோபங் கொண்டான் செழியன்; மாற்றார் அணி வகுப்பைக் கிழித்து உட்புகுந்தான்; இடியென முழங்கினான். திசைகள் அதிர்ந்தன. தானை வேந்தனது வீரமுழக்கம் கேட்டுப் படை வீரர் தோள்கள் துடித்தன. அவ்வீரர் எதிர்த்து வந்தோர் அனைவரையும் இரக்கமின்றி வெட்டிச் சாய்த்தனர்; களிறுகளின் மீது ஏறிக்கொன்று மிதித்தனர். வேம்பனது படை வேகம் தாங்கொணாததாயிற்று. சேரர் படை சரியலாயிற்று. சோர்வின்றி மேலும் மேலும் முன்னேறித் தாக்கினான் பாண்டியன். எழுவர் படையும் பின் வாங்கின. அது கண்டும் ஆற்றினானில்லை பாண்டியன்; மாற்றார் படை நொறுங்கித் துகளாகத் தன் நாற்படைகளையும் செலுத்தினான். எழுவர் படையும் பின் வாங்கிய வண்ணமே நெடுந்தொலைவு பின்னேறிச் சென்றன; பாண்டி நாட்டு எல்லையும் கடந்து சோழநாட்டிற்புகுந்தன.
இறுதியாகத் தலையாலங்கானம் என்ற இடத்தில் பெரும்போர் மூண்டது. அங்கு நடந்த போர் ‘வரலாற்றில் இதற்கு இணையேதுமில்லை,’ என்னும்படி மிகக் கொடியதாய் அமைந்தது. தமிழ்ப் படைகள் தலை மயங்கின. அவ்வாறு ‘தமிழ் தலை மயங்கிய தலையாலங்கானத்’தில் களமெல்லாம் குருதிக் கடலாயிற்று. கணக்கற்ற பகழிகள் பாய்ந்த களிறுகளின் தோற்றம் குருவியினம் சென்று தங்கும் குன்றுகளின் தோற்றம் போன்றிருந்தது. கண்ட இடமெல்லாம் யானைகள் வெட்டப்பட்டு, அவற்றின் வாயோடு சேர்ந்த தும்பிக்கைகள் கலப்பைகள் போல நிலத்தின்மேல் புரண்டுகொண்டிருந்தன. அஞ்சி இரங்கத்தக்க காட்சிகள் நிறைந்திருந்த ஆலங்கானப் போரில் எண்ணற்ற உயிர்கள் எமனுக்கு இரையாயின. தனியனான தன்னை எழுவரும் வளைத்துக்கொண்டு தாக்குதல் கண்டான் பாண்டிய ன்; போர் வெறி கொண்டான். அவன் விழிகளில் சினத்தீச் சீறி எழுந்தது. அவன் குரல் கேட்டு எண்டிசையும் நடுங்கின. அவன் ‘எழுவர் நல்வலம் அடங்க’த் தான் தமியனாய் நின்று பொருதான். ‘செழியன் இளையன்; சிறியன்,’ என எண்ணிய இகல் வேந்தர், மனம் இடிந்து போயினர். சிங்கக் குருளை போலச் சினங்கொண்டு தாக்கினான் செழியன். எதிர்த்து வந்த எழுவரும் வெஞ்ஞாயிற்றின் திறலனைய பாண்டியன் ஆற் றல் கண்டு அஞ்சினர்; தளர்ந்தனர். அது கண்ட செழியனும் அவன் படைஞரும் விண் அதிர ஆர்த்து, மேலும் மேலும் சென்று
சாடினர். பாண்டியனை எதிர்த்து வந்த படைகள் சூறாவளியில் பட்ட சிறு துரும்பெனச் சுழன்று சிதறி
ஓடின. இருபெரு வேந்தரும் வேளிர் ஐவரும் அரிமாவிடம் சிக்கிய களிறுகளாயினர்: அவன்
ஆற்றலுக்கு எதிர் நிற்க வலியின்றித் தோற்றனர்; தலை சாய்ந்தனர். இருபெரு வேந்தரும் களத்திடை
வீழ்ந்த காட்சி, விண்ணில் இயங்கும் இருபெருஞ்சுடர்களும் மண்ணின் மேல் வீழ்ந்தாற்போல
விளங்கியது. வேந்தர் எழுவரின் வெற்றி முரசங்களும், குடையும், கொடியும் பாண்டியனால்
கைக்கொள்ளப்பட்டன. வெற்பனைய வேம்பன் தோள்களில் வெற்றித்திரு விருப்புடன் மேவி
விற்றிருக்கலாயினாள். |வைகைத் தலைவன் நடத்திய கன்னிப்போர் அவனுக்கு நிகரில்லா
வெற்றியையும் பெரும்புகழையும் அளித்தது. பாண்டியன் ‘தலையாலங்கானத்துச் செருவென்ற
நெடுஞ்செழியன்' ஆனான். அவன் பெரும்புகழ் குமரி முனையிலும் வடபெருங்கல்லிலும் எதிரொலி
செய் தது. இன்றும் அவன் பெற்ற வெற்றியின் சிறப்பினைச் சங்கப் பாடல்களும், மூன்றாம் இராசசிங்க
பாண்டியன் வரைந்தளித்த செப்பேடுகளும் [1] வாய் விட்டு முழங்குகின்றன. இவ்வாறு புகழ் கொண்ட
வேந்தனை - வெற்றிவேற் செழியனைப்-புலவர் பாடிப் புகழ்ந்தனர். தலையலங்கானத்தில் நெடுஞ்செழியன் நிகழ்த்திய போரை நேரில் கண்டவருள்
இடைக்குன்றூர் கிழார் ஒருவர். அவர் பாடிய நான்கு புறப்பாடல்கள் ஆலங்கானப் போரை நம்
அகக் கண்கட்கு அப்படியே படம் பிடித்துக் காட்டுகின்றன. இடைக்குன்றூர் கிழார்க்கு
நெடுஞ்செழியனை நினைக்கும் போதெல்லாம் அவன் இளமைத் தோற்றமும், தனி ஒருவனாய்
நின்று எழுவரையும் வென்ற புதுமைச் செயலுமே மீண்டும் மீண்டும் தோன்றி, எல்லையில்லா
வியப்பினை அளித்தன. அவ்வாறு தாம் பெற்ற வியப்பும் மகிழ்வும் எல்லாரும் அடையும் வண்ணம்
அவர் பாடியுள்ள பின் வரும் பாடல்கள் அழகும் அருமையும் உடையன.
-------
[1]. தலையாலங் கானத்திற் றன்னொக்கு மிருவேந்தரைக்
கொலைவாளிற் றலைதுமித்துக் குறைத்தலையின் கூத்தொழித் தும்"
-South Indian Inscriptions, Vol. III, No. 206
----------
‘ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
புதுவ(து) அள்று;இவ் வுலகத்(து) இயற்கை;
இன்றின் ஊங்கோ கேளலம்!
* * *
நாடுகெழு திருவிற் பசும்பூண் செழியன்
பீடும் செம்மலும் அறியார் கூடிப்
‘பொருதும்' என்று தன்தலை வந்த
புனைகழல் எழுவர் நல்வலம் அடங்க
ஒருதான் ஆகிப் பொருதுகளத்(து) அடலே.’ (புறம். 76)
இவ்வாறு செயற்கருஞ்செயல் புரிந்த செழியனது இளமைத் தோற்றமும் பெருமிதப் பண்பும் இடைக்குன்றூர் கிழாரின் இதயத்தை மேலும் கொள்ளை கொண்ட தன்மையினை மற்றொரு புறப்பாடலில் சுவை ததும்பக் கூறினார். ‘கிண்கிணியைக் கழற்றிய காலிலே ஒளி மிக்க வீரக்கழலை அணிந்து, குடுமி ஒழிந்த தலையிலே வேம்பின் தளிரை உழிஞைக் கொடியொடு சூடி, சிறிய வளையல்கள் கழற்றிய கைகளில் வில்லும் அம்பும் தாங்கி, நெடுந்தேரில் அமர்ந்து அதன் கொடுஞ்சியைப் பற்றி, அழகு பெற நின்றவன் யாரோ! அவன் யாரெனினும், அவன் கண்ணி வாழ்வதாக! தார் அணிந்திருப்பினும், ஐம்படைத்தாலியை இன்னும் அவிழ்த்திலன்; பாலையொழித்து உணவும் இன்றுதான் உண்டான்; முறை முறையாக வெகுண்டு எதிர்த்து மேவி வந்த புதிய வீரரை மதித்ததும் இலன்; அவமதித்ததும் இலன்! அவரை இறுகப் பற்றிப் பரந்த ஆகாயத்தின் கண்ணே ஒலியெழக் கவிழ்ந்து உடலம்நிலத்தின் கண்ணே பொருந்தக் கொன்றதற்கு மகிழ்தலும், தன்னைப் பாராட்டிக்கொள்ளலும் செய்தான் இலன்,’ என்னுங் கருத்தமைந்த பின் வரும் பாடலே அது :
‘கிண்கிணி களைந்தகால் ஒண்கழல் தொட்டுக்
குடுமி களைந்தநுதல் வேம்பின் ஒண்தளிர்
நெடுங்கொடி உழிஞைப் பவரொடு மிலைந்து
குறுந்தொடி கழித்தகைச் சாபம் பற்றி
நெடுந்தேர்க் கொடுஞ்சி பொலிய நின்றோன்
யார்கொல்! வாழ்கஅவன் கண்ணி! தார்பூண்டு
தாலி களைந்தன்றும் இலனே; பால்விட்டு)
அயினியும் இன்(று)அயின் றனனே;lவயின்வயின்
உடன்றுமேல் வந்த வம்ப மள்ளரை
வியந்தன்றும் இழிந்தன்றும் இலனே; அவரை
அழுந்தப் பற்றி அகல்விசும்(பு) ஆர்ப்பெழக்
கவிழ்ந்துநிலஞ் சேர அட்டதை
மகிழ்ந்தன்றும் மலிந்தன்றும் அதனினு மிலனே.’ (புறம். 77)
இவ்வாறு களிறு போல் பெருமிதத்தோடு களம் நோக்கிச்சென்ற நெடுஞ்செழியன், முழையிற்கிடந்த புலி தான் விரும்பிய இரை நோக்கி எழுந்து வந்தாற்போன்ற, தன் மாறுபடுதற்கரிய மார்பத்தை மதியாராய், ‘யாம் பெரியம்; செழியன் இளையன்; அடையக்கூடிய கொள்ளை பெரிது,' என எண்ணி வந்த மன்னரைத் தன் பாண்டி நாட்டுள் கொல்ல விரும்பாது, அவர் தந்தையார் ஊரிலேயே அவர் பெண்டிர் நாணி இறந்துபடுமாறு போர்ப் பறை முழங்கச்சென்று கொன்ற காட்சியினை-வரலாற்றுச் செய்தியினைப்-புலவர் கூறும் பாடல்கள் கற்பார் நெஞ்சில் செழியன் கொண்ட சினத்தின் வெம்மையைப் புலப்படுத்துவதோடு போரால் வரும் அழிவு கண்டு இதயம் இரங்குமாறும் செய்கின்றன. இடைக்குன்றூர் கிழாரே அன்றிக் கல்லாடனர், மாங்குடி மருதனார் போன்ற புலவரும் நெடுஞ்செழியன் வெற்றியைப் புகழ்ந்தனர்; எனினும், அவர்தம் பாடல்களில் வெம்போரால் விளையும் பேரழிவினைப் புலப்படுத்துதல் வாயிலாக நெடுஞ்செழியன் மனத்தை நெகிழ்வித்து அவன் போர் வெறி தணிக்கவே பெரிதும் விரும்பினர். அவ்வுண்மை அச்சான்றோர்களின் பாடல்களை ஊன்றிக் கற்பார் உள்ளத்திற்கு எளிதில் புலனாகும். ஒன்னார் நாட்டில் துயரமே வடிவு கொண்டாற் போலக் கலங்கிக் கிடந்த நீர்த்துறைகள்-அழிந்துகிடக்கும் நிலங்கள்-வெட்டுண்டு கிடக்கும் காவல் மரங்கள்-மனை வாழ்வு சிதையத் தீயால் பாழ்பட்ட வீடுகள்-இவற்றை யெல்லாம் தம் பாட்டில் சித்திரித்துக் காட்டிய கல்லாடனார், இறுதியில்,
‘ யான் வந்த வழியில் இன்னொரு துயரக்காட்சியும் கண்டேன்; கொம்பொடிந்த பெரிய கலைமான் ஒன்று புலியாற் பற்றப்பட்டது கண்ட அதன் பெண்மான், தன் சிறிய குட்டிகளை அனைத்துக்கொண்டு பூளைச்செடி நிறைந்த ஆளற்ற அஞ்சத்தக்க பாழிடங்களில் வேளைப் பூவைக் கடித்துக்கொண்டிருந்த துன்பக் காட்சியே அதுவாகும்,' என்று உரைத்து அது வாயிலாக அவன் வெஞ்சினத்திற்கு இரையாகிப் பகைவர் இறந்தமையால் அவர் பெண்டிர் தம் இளம் புதல்வரைக்
காத்தற்பொருட்டு அடகு தின்று உயிர் வாழும் நிலையை நினைந்து மனம் கனிந்து இளகும் வண்ணம் கருத்தமைந்த பாடலைப் பாடினர். மாங்குடி மருதனாரோ, இன்னும் ஒரு படி மேற்சென்று, வெற்றி புகழ் இவற்றின் நிலையாமையை யெல்லாம் உண்ர்ந்து, அவன் இனிது ஒழுகி உய்யுமாறு காஞ்சித்திணை அமைந்த அழகிய பாடலைப் பாடலானார்:
‘இரவன் மாக்கள் ஈகை நுவல
ஒண்டொடி மகளிர் பொலங்கலத்(து) ஏந்திய
தண்கமழ் தேறல் மடுப்ப மகிழ்சிறந்(து)
ஆங்கினி(து) ஒழுகுமதி பெரும! ஆங்(கு)அது
வல்லுநர் வாழ்ந்தோர் என்ப; தொல்லிசை
மலர்தலை உலகத்துத் தோன்றிப்
பலர்செலச் செல்லாது நின்றுவிளிந் தோரே.’ (புறம். 24)
மாங்குடி மருதனாரின் அறவுரைகளை நெடுஞ்செழியன் செவி மடுத்தான்; மகிழ்ந்தான். எனினும், ஊழித்தீப் போல அவன் உள்ளத்தில் எரிந்துகொண்டிருந்த சினத் தீ முற்றிலும் அவிந்தது எனக்கூறமுடியவில்லை. கனன்று கொண்டே இருந்த அந்நெருப்பு எழுநா விட்டு எரியும் வாய்ப்புக்கள் அவனைத் தேடி அடுத்தடுத்து வந்த வண்ணம் இருந்தன. மாங்குடி மருதனார் போன்ற சான்றோர்கள் அவன் செவிப்புலத்தில் வித்திய சொற்கள் விதைகளாகவே கிடந்தன. அவன் உள்ளமும் தணியவில்லை. அவன் ஒன்னார் பகையும் ஒழியவில்லை. அவன் மீண்டும் பல போர்கள் புரிந்தான். எல்லாவற்றினும் கடுமையான போர் ஒன்றும் அவன் ஆற்ற நேர்ந்தது.
நெடுஞ்செழியனை எதிர்த்து அவன் பழம்பகைவர் களின் கால்வழியில் தோன்றியவர் கிளம்பினர். ஆலங்கானப் போரில் தம் முன்னோர் பாண்டியன் வாளுக்கு இரையான செய்தி அவர்கள் மான உணர்ச்சிக்கு ஒர் அறைகூவலாய் இருந்தது. அதன் விளைவாகச் சேரநாட்டிலும் சோழநாட்டிலும் படை திரண்டது. வேளிர் குடியைச் சார்ந்த குறுநில மன்னர்களும் பண்டு போலப் போருக்கு ஆவன புரிந்தார்கள். அவர்களுள் முதன்மையானவர் இருவர். சோழ நாட்டில் அவர்கள் ஆட்சிபுரிந்த பகுதிகள் மிழலைக் கூற்றமும் முத்தூற்றுக் கூற்றமும் ஆகும். இவ்விரு சிறு நாடுகளுள் ஒன்றாகிய மிழலைக் கூற்றத்தை ஆண்டவன் சிறந்த கொடை வள்ளலாகிய வேள் எவ்வி என்பான். முத்தூற்றுக் கூற்றத்தை நிலங்கடந்த நெடுமுடியண்ணல் வழித் தோன்றிய நாற்பத்தொன்பது வேளிருள் ஒரு குடி வழி வந்த வேளிர் தலைவன் ஆண்டு வந்தான். இவ்விருவரும் தம் முன்னவர் ஐவரை அழித்த பாண்டியனை எதிர்த்து வென்று குடிப்பழி துடைக்கத் துடித்தனர். இவர்கள் துணையையும் பயன்படுத்திக்கொண்டு கோச்சேரமான் யானைக்கட் சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை என்ற சேரமன்னன் பாண்டியனை எதிர்த்துப் படை திரட்டிப் புறப்பட்டான். இரும்பொறை சிறந்த வீரன்; குடி மக்களின் பேரன்பைப் பெற்றவன். அவன் தோற்றமே வீரம் செறிந்ததாய் விளங்கியது. படை வலி மிகப் படைத்த அவன் பார்வை, யானையின் பார்வையை ஒத்திருந்தது. அதனாலேயே ‘யானைக்கட்சேய்' என்ற பெயர் பெற்றான்; புலவர்களும் அவனை ‘வேழ நோக்கின் விறல் வெஞ்சேய்' எனப் புகழ்வார் ஆயினர்.
இத்தகையோன் தலைமையில் பாண்டியனை எதிர்த்து வந்த படைக்கும் நெடுஞ்செழியன் சேனைக்கும் இடையே கடும்போர் மூண்டது. இரவொழியப் பகல் எல்லாம் போர்-கடும்போர்-நடந்தது. இறுதியில் சேர அரசன் சிறைப்பட்டான். வேளிர் தோற்றனர். அவர்தம் நாடுகள் பாண்டியன் வசமாயின.
நெடுஞ்செழியன் புரிந்த போர்கள் அனைத்திலும் வெற்றியும் விழுப்புகழும் அன்றி வேறெதுவும் கண்டான் இல்லை. பகைவர் ஆட்சியில் இருந்த நாடுகள்-ஊர்கள்பல அவன் உடைமைகளாயின. இவ்வாறு வாழ்வின் பெரும்பகுதியைப் போர்க்களத்திலேயே கழித்தான் பாண்டிய மன்னன். அவன் ஒன்னார் தேயத்தை உழக்கிப் பெற்ற அரும்பெரும்பொருள்களையெல்லாம் இரவலர்க்கும் புலவர்க்கும் இன்னிசைக் கலைஞர்க்கும் எடுத்தெடுத்து வழங்கினான்; எண்ணற்ற மறக்கள வேள்விகள் இயற்றினான். வெங்கதிர்ச் செல்வன் போல அவன் பாசறையில் விற்றிருக்கும் காட்சியைக் காண மதுரைக் கணக்காயனர் மகனார் நக்கீரனார் போன்ற நல்லிசைச் சான்றோர் ஆர்வத்துடன் சென்றனர்; அங்கு அவனது பெரும்புகழை அகப்பொருள், புறப்பொருள் அமைதிகள் நிறைந்த அழகிய பாடல்களால் பாடிச் சிறப்பித்தனர். அவ்வாறு பாசறைக்கண் வீர வாழ்வு வாழ்ந்த நெடுஞ்செழியன் பெற்ற பெறலரும்புகழ் மாலையுள் ஒன்றே நக்கீரர் பாடிய நெடுநல்வாடை.
இங்ஙனம் அடுபோர் பல ஆற்றிப் புகழ் ஈட்டுவதிலேயே காலமெல்லாம் கடத்திய நெடுஞ்செழியன், கூடல் மாநகரையும் பாண்டி நன்னாட்டையும் நெடுங்காலம் பிரிந்திருக்க நேர்ந்தது. அதன் விளைவாகப் பாண்டி நாட்டின் சில பகுதிகள் நீர் வளம் பெரிதும் குறைந்து வற்றலாயின. இந்நிலையினைப் போர் பல ஆற்றிய பின்னும் மனம் அமைதியுறானாய்ப் பாண்டி நாடு திரும்பிய வேந்தனிடம் சென்று அறிவிக்க அறிஞர் பலர் துணிந்தனர். அவருள் தலையாயவர் குடபுலவியனார் என்பவர். அப்பெரியார் ஆன்றோர் குழ மல்லல் மூதூராம் மாமதுரையில் தன் அவைக்களத்தே வீற்றிருந்த பாண்டிய வேந்தனிடம் பரிவுடன் சென்றார்; அவன் புகழ் பரவினார்;
‘ஒன்றுபத் தடுக்கிய கோடிகடை இரீஇய,
பெருமைத் தாகநின் னாயுள் தானே!’ (புறம், 18)
என்று வாயார வாழ்த்தினார்; பின் தாம் வந்த நோக்கத்தைப் புலமை நலம் செறிந்த பாண்டியனுக்குக் கவி நலம் கனிந்த பாடலால் புலப்படுத்தினார்; “வளமிக்க வேந்தனே, நீ செல்ல இருக்கும் உலகத்தின்கண் நுகர விரும்பும் செல்வத்தைப் பெற வேண்டினும், வையகம் முழுதும் ஒரு குடைக்கீழ் ஆள அவாவினும், என்று மழியாப் பெரும்புகழை இவ்வுலகில் நிலைநாட்ட விரும்பினும், அவையனைத்தையும் பெறற்குரிய நெறி கூறுவேன். செவி சாய்த்தருள்வாயாக. பெரியோய், நீரின்றி உலகில் எவ்வுயிரும் நிலைத்து வாழாது; அவ்வாறு நீரின்றி அமையாத உடம்புகட்கு உணவு கொடுத்தவர்களை உயிரைக் கொடுத்தவர்கள். உணவை முதலாக உடைத்து அவ்வுணவால் உளதாகிய உடம்பு. உணவென்று சொல்லப்படுவதோ, நிலத்தோடு கூடிய நீரே யாகும். அந்நீரையும் நிலத்தையும் ஒரு வழிக் கூட்டினவர், இவ்வுலகத்தின் உடம்பையும் உயிரையும் படைத்தவராவர். நெல் முதலியவற்றை வித்தி மழையைப் பார்த்திருக்கும் புன்புலம் இடமகன்ற பெருமையுடையதாயினும், அது அரசன் முயற்சிக்குப் பயன்படாது. ஆதலால், நிலம் குழிந்த இடங்களிலே நீர் நிலை மிகுமாறு தளைத்தோரே மல்லன்மா ஞாலத்துச் ‘செல்லும் தேஎத்துக்கு உறுதுணை’யான செல்வத்தையும், வெற்றியையும், புகழையும் தம் பேரோடு தளைத்தோராவர். அவ்வாறு உயிர் வாழ்விற்கு இன்றியமையா நீரைத் தளையாதோர் இவ்வுலகத்துத் தம் பெயரைத் தளே யாதோரே ஆவர்.' என்னுங் கருத்தமைந்த பின் வரும் பாடலே அது :
‘மல்லல் மூதூர் வயவேந்தே!
செல்லும் உலகத்துச் செல்வம் வேண்டினும்.
ஞாலம் காவலர் தோள்வலி முருக்கி
ஒருநீ ஆகல் வேண்டினும், சிறந்த
நல்லிசை நிறுத்தல் வேண்டினும், மற்(று)அதன்
தகுதி கேளினி: மிகுதி யாள!
நீரின்(று) அமையா யாக்கைக்(கு) எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே
உண்டி முதற்றே உணவின் பிண்டம்;
உணவெனப் படுவது நிலத்தொடு நீரே;
நீரும் நிலனும் புணரி யோர் ஈண்டு)
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே;
வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகல்
வைப்பிற்(று) ஆயினும் நண்ணி ஆளும்
இறைவன் தாட்(கு)உதவாதே; அதனால்,
அடுபோர்ச் செழிய! இகழாது வல்லே
நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம இவன்தட் டோரே;
தள்ளா தோரிவண் தள்ளா தோரே.’ (புறம், 18)
இவ்வாறு அடுபோர்ச் செழியனது மனம் போர் நினைவு நீங்கி ஆக்க வேலைகளில் - அறப்பணிகளில் - ஈடுபடுமாறு தூண்டினார் குடபுலவியனார். புலவர் பெருமானாரின் பொன் மொழிகளைச் செவி மடுத்தான் வேந்தன்; நல்லிசைப் புலவரின் ஆணையை நிறைவேற்றுவதில் அயராது முனையலானான்.
பாண்டி நாட்டில் வற்றிக்கிடந்த பகுதிகளெல்லாம் வளம் சுரக்கலாயின. ஏரியும் குளனும் எங்கும் பெருகல் ஆயின. மக்கள் உள்ளம் மகிழ்ச்சிக் கடலாய்ப் பொங்கியது. மாந்தர் குடபுலவியனாரையும் கூடல் வேந்தனையும் மாறி மாறி வாழ்த்தினர்; புலவர் சொற்கேட்டுப் பாண்டிய மன்னன் மின்னல் வேகத்தில் புரிந்த ஆக்க வேலைகளை எண்ணினர்; இறுமாப்பும் பூரிப்பும் கொண்டனர். நெடுஞ்செழியன் அழித்தலிலேதான் வல்லவன் என நினைந்தோம். ஆனால், நாடு கெட எரி பரப்பிச் செற்றவர் அரசு பெயர்க்கும் அச்செரு வெஞ்சேய் - நட்டவர் குடி உயர்த்தும் அந்நல்லோன் - தன் நாட்டவர் வாழ்வு காக்கும் மேலோனாய் - ஆக்கலிலும் வல்லவனாய் விளங்கல் நாம் செய்த நற்பேறன்றோ?’ என எண்ணி மகிழ்ந்தனர். மகிழ்ச்சி நிறைந்த மக்களின் செவிகளில் நெடுஞ்செழியனைப் பற்றிய புகழ்ப்பாடல்கள் ஒலித்த வண்ணம் இருந்தன. ‘தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்’ என்ற பெரும்பெயர் கேட்ட போதெல்லாம் அவர்கள் தோள்கள் விம்மின, கண்கள் விரிந்தன; தலைகள் நிமிர்ந்தன. அவர்கள் நாடி நரம்பு களிலெல்லாம் ஒரு புத்துணர்வு பாய்ந்தது. நெடுஞ்செழியனைப் புகழ்ந்து நல்லிசைப் புலவர்கள் பாடிய பாடல்கள் யாவும் அவர்கள் நாவிலும் நெஞ்சிலும் களிநடம் புரிந்தன. எல்லாவற்றிற்கும் மேலாக, அரசவைக்கண் இருந்த செழியன், சேரன் விடுத்த ஓலை கண்டதும் சிவந்த கண்ணனாய்ச் சிறி எழுந்த காட்சியையும், கேட்டவர் மெய் சிலிர்க்க அவன் கூறிய வஞ்சினத்தையும் அடிக்கடி நினைத்துக்கொண்டார்கள். அவர்கள் உள்ளம் பாகாய் உருகியது. ‘இவனல்லனோ மன்னன்! இவன் கீழ் வாழும் பேறு பெற்ற நாமல்லமோ குடிகள்!’ என்று உள்ளி உள்ளி உவந்தார்கள்,
‘நகுதக் கனரே நாடுமீக் கூறுநர்
‘இளையன் இவன்’என உளையக் கூறிப்
‘படுமணி யிரட்டும் பாவூடி பணைத்தாள்
நெடுநல் யானையும் தேரும் மாவும்
படையமை மறவரும் உடையம் யாம்'என்(று)
உறுதுப்(பு) அஞ்சா(து) உடல்சினம் செருக்கிச்
சிறுசொல் சொல்லிய சினங்கெழு வேந்தரை
அருஞ்சமம் சிதையத் தாக்கி முரசமொ(டு)
ஒருங்(கு) அகப் படேஎன் ஆயின், பொருந்திய
என்நிழல் வாழ்நர் செல்நிழல் காணாது
‘கொடியனெம் இறை'யெனக் கண்ணீர் பரப்பிக்
குடிபழி தூற்றும் கோலேன் ஆகுக!
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவ னாக
உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைகஎன் நிலவரை!
புரப்போர் புன்கண் கூர
இரப்போர்க்(கு) ஈயா இன்மையான் உறவே!’ (புறம். 72)
என்று செழியன் கூறிய வஞ்சின மொழிகளை - இலக்கியமாய் உருப்பெற்று விளங்கும் உணர்ச்சி ததும்பும் பாடலை வாயாரக் கூறி மகிழ்ந்தார்கள் குடிகள். பகைவர்க்கு அஞ்சாப் பாண்டியன்-‘இருபெரு வேந்தரொடு வேளிர் சாயப்பொருது அவரைச் செருவென்ற’ வேந்தன் நெடுஞ்செழியன்-குடி மக்கள் சிந்தும் கண்ணீருக்கும் கூறும் பழிக்கும் அஞ்சும் நெஞ்சினாய் விளங்கலை நினைந்தார்கள்; விம்மிதமுற்றார்கள்; ஓங்கிய சிறப்பு, உயர்ந்த கேள்வி, உலகமொடு நிலைஇய புகழ்-இவற்றின் உறைவிடமாய் விளங்கிய புலவர்- அவருள் தலையாய மாங்குடி மருதனைச் போன்ற சான்றோர்-வாயால் வாழ்த்துப் பெறும் புகழே புகழென்று அவன் கருதிய பண்பைச் சிந்தித்தார்கள்; உள்ளம் கசிந்தார்கள். 'என்னால் புரக்கப்படுவோர் துன்புறுமாறும் இரப்போர்க்கு இல்லை என்னுமாறும் ஈய வொட்டா வறுமையை அடைவேனாக!' என்று அவன் கூறிய வஞ்சின மொழிகளை எண்ணினார்கள்; நயனுடைய அவன் உள்ளத்து உணர்வை ஊன்றி உள்ளினார்கள்; ‘என்னே இவன் கருணை நெஞ்சம்!’ என மனம் நெகிழ்ந்தார்கள். இவ்வாறு தங்கள் நாட்டுத் தண்கோல் வேந்தன் உள்ளத்தையும் உணர்வையும் நினைந்து நினைந்து களிப்புற்றிருந்த மக்கள் மனத்தில் ஒரு கருத்து ஒளி வீசியது :
“ஆலங்கானத்து அமர் வென்ற செழியன் பாடிய பாட்டு-ஒரு பாட்டு-நம் தாயகத்தின் தமிழ் மொழியின் பெருஞ்செல்வமாய் என்றென்றும் விளங்குமன்றோ? ஊழியையும் வென்று வாழுமன்றோ? அவன் உள்ளத்தினின்றும் எழுந்த அவ்வீரப் பாடல் ஏடும் எழுத்தும் உள்ள வரை இவ்வுலக மக்கள் எந்நாளிலும் நம் வேந்தன் நெடுஞ்செழியன் வெஞ்சினமுற்ற நேரத்தும் கூறிய குற்றமில் மொழிகளைக் கற்றும் கேட்டும் தமிழ் நெஞ்சின் தன்மையுணர்ந்து போற்றுவதற்கு உரியதாமன்றோ?’ என இவ்வாறு கருதிய பாண்டிய மக்கள் மேனி சிலிர்த்தது; என்றும் கண்டறியா இன்ப உணர்வு அவர்கள் உடல், உள்ளம், உயிர் எல்லாம் ஊடுருவிப் பாய்ந்தது.
இங்ஙனம் குடி மக்கள் தன் புகழ்க் கடலில் மூழ்கித் திளைத்திருக்குமாறு கோல் கோடா ஆட்சி புரிந்து வங் தான் நெடுஞ்செழியன்; விண்ணவரும் கண்டு ஏங்கவல்ல எழிலும் இன்பமும் எங்கும் தவழும் திருநாடாய்ப் புனல் மதுரைப் பெருநாட்டை உருவாக்கும் பணியில் ஒய்தலின்றி நாளும் ஈடுபடலாயினான். அவன் ஆட்சியில் வீடெல்லாம் இசையும் கூத்தும் விளங்கின; நாடெல்லாம் அன்பும் அறனும் நிறைந்தன; மக்கள் நெஞ்செல்லாம் கலையும் தமிழும் கவினுறக் கவர்ந்தன.
இந்நிலையில் கூடல் வேந்தன் உள்ளம் அமைதியிழந்து ஆத்திரம் கொள்ளும் நிகழ்ச்சி ஒன்று நடந்தது : சிறைப் பட்டுக் கிடந்த கோச்சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ் சேரல் இரும் பொறையை அவன் நாட்டு வீரர்கள் சிறையை உடைத்து விடுவித்துவிட்டார்கள். தன்னை எதிர்த்த சிறைக் காவலாளரைக் கொன்று குவித்துச் சேரனும் வெளியேறிவிட்டான். இச்செய்தி கேட்டான், புலவர் புடை குழ அவையகத்திருந்த நெடுஞ்செழியன். அவன் உள்ளமும் உதடும் துடித்தன. அவனை அறியாமல் அவன் கை உடை வாளைப் பற்றியது. ‘சிறையிலிருந்து தப்பிவிட்டான் சேரன்! ஆனால், என் கூர்வாளி னின்றும் தப்புவானோ? போர்! போர்! சேரனேடு போர்! அதுவே என் ஆவலை-ஆத்திரத்தை-அடக்கும்!’ என்று நாற்றிசையும் எதிரொலிக்க முழங்கினான், போர் நசை குன்றாப் பாண்டியன். வேந்தன் நெஞ்சில் சிறிது சிறிதாக அவிந்து வந்த போர்த்தீ மீண்டும் பற்றி எரியத் தொடங்கியது கண்டனர் உடனிரு ந்த புலவர்; அவ னுக்கு அறிவுரை புகன்றனர்: ‘வெந்திறல் வேந்தே, நின் ஆற்றலுக்கு ஈடு கொடுப்பார் எவருமில்லை. இஃது உண்மை. எனினும், சேரனும் மூவேந்தருள் ஒருவனல்லனோ? முடி சூடி ஆளும் பெருமை அவனுக்கும் உரியதன்றோ? மேலும், அவன் கொடுங்கோலனும் அல்லன்; தன் நாட்டைப் ‘புத்தேளுலகத் தற்று' எனத் தண்டமிழ்ப் புலவர் போற்றி வாழ்த்துமாறு குடி புரக்கும் செங்கோலன்; தண்ணளியன்; செம்மனத்தன்; தன்பால் சென்ற இரவலர்-புலவர்-வேறெவரிடமும் சென்று பாட வேண்டாதவாறு வாரி வாரி வழங்கும் வண்மை படைத்த ஓம்பா ஈகையன்; எண்ணற்ற நற்றமிழ்ப்புலவர்களின் இனிய நண்பன்; புலத்துறை முற்றிய கூடலூர் கிழாரின் துணை கொண்டு ஐங்குறுநூறு என்ற நூலை அழகுறத் தொகுப்பித்த அருந்தமிழ்ச் செல்வன். அரசே, அவனும் உன்போல் ஒரு தமிழ் வேந்தனே அல்லனோ? அவனுக்கும் உரிமை வாழ்வு உயிரினும் நனி
உயர்ந்ததன்றோ? அதனால், குடி மக்கள் போற்றும் அக் கோவேந்தனுக்குப்-புலவர் பாடும் புகழ்படைத்த அப்பெருந்தகைக்கு-‘உயிரினும் பெரிது மானம்' எனக் கருதும் அவன் நாட்டு மறக்குடி வீரர் சிறையைத் தகர்த்து விடுதலை வழங்கியமையால், நீ கொண்ட சினம் தணிவாயாக! அவ்வாறு அவன் விடுதலை பெற்றதால் நினக்கு யாதோர் இகழ்ச்சியும் வாராது. எம்போல் புலவர் பாடும் சிறப்பினை என்றும் நீ பெறுவாய்,’ என்று மாங்குடி மருதனார் முதலிய சான்றோர் அறிவுரை கூறினார். மன்னன் ஒருவாறு சினமடங்கினான். அவனை நோக்கி மாங்குடி மருதனார், ‘வைகைக் கோனே, நின் அமர் வேட்கும் நெஞ்சம் அருட் கடலாவதாக! பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழன்றோ நின் நலங்கருதி மதுரைக்காஞ்சி எனப் பெயர் படைத்த பாட்டொன்று பாடியுள்ளேன். அதனைக் கேட்டருள வேண்டும்,' என்றார், புது நறவுண்ண வேட்கும் தாதுண் பறவை போலப் புலவரின் பாடலைக் கேட்க ஆவல் கொண்டான் வேந்தன். தன்னோடு செந்தமிழ் நாட்டுப் புலவர் பெரியோரெல்லாம் சேர இருந்து தீந்தமிழ் இன்பத்தைப் பகிர்ந்துண்ண வேண்டுமெனக் கருதினான். தாம் இன்புறுவது உலகு இன்புறக் கண்டு காமுறுவதன்றோ கற்றறிந்தவர் செயல்? காவலனாயும் பாவலனாயும் விளங்கிய பாண்டியன் நெடுஞ்செழியன், அத்தகைய உயர்பண்புக்கோர் உறைவிடமாயிருந்ததில் வியப்புமுண்டோ?
அவன் தன் பேரவையைக் கூட்டினான். நாட்டின் நல்லறிஞர் அனைவரும் ‘புலன் நா உழவர் புதுமொழி கேட்டுண்ணும் பேராவலால் ஒருங்கே ஈண்டினர். ஓங்கு புகழ் உயர்ந்த கேள்விச் சான்றேராகிய மாங்குடி மருதனார், தம் தெய்வத் தமிழ் உள்ளத்தினின்றும் ஊற்றெடுத்து உருவாகிய மதுரைக் காஞ்சியை அவையோர் ஏத்தி மகிழ அரங்கேற்றினார். ‘பெருகு வளமதுரைக் காஞ்சி’யின் திறம் கேட்டான் நெடுஞ்செழியன்; உள்ளம் உருகினான்.
‘இவ்வுலகத்துப் பொருள்கட்கு நின்னோடு என்ன உறவு? அதை நீ ஆய்ந்து உணர்க. நின்னடுத்துள்ள மாயை அழிவதாக, அம்மாயையைக் கொல்லும் போர் வல்ல தலைவனே, பெரிதாயிருக்கும் ஒரு பொருளை யான் கூறுவன். என்னால் காட்டற்கு அரியது அது. அப் பெரும்பொருளைத் தொல்லாணை நல்லாசிரியர்பால் கேட்டுத் தெளிந்து நீ வாழ்வாயாக:
‘அன்னாய் நின்னொடு முன்னிலை எவனோ?
கொன்னொன்று கிளக்குவல் அடுபோர் அண்ணல்!
கேட்டிசின் வாழி! கெடுகநின் அவலம்!’
(மதுரைக்காஞ்சி, அடி, 206-208)
‘வேந்தே, உன்போல் வீரப்புகழ் எங்கும் பரக்க இவ்வுலகில் இதற்கு முன் வாழ்ந்த மன்னர் எத்துணையோ பேர். மக்கட்குரிய நன்மன உணர்வு அற்ற அவர் யாவரும் வறிதே மாண்டு ஒழிந்தனர். அவ்வாறு சென்ற காலத்தில் இறந்தவர் கடலலையால் தரையில் சேர்க்கப் படும் மணலினும் மிகப் பலர் ஆவர்.'
‘பணைகெழு பெருந்திறல் பல்வேல் மன்னர்
கரைபொரு(து) இரங்கும் கனையிரு முந்நீர்த்
திரையிடு மணலினும் பலரே உரைசெல
மலர்தலை உலகம் ஆண்டுகழித் தோரே'
(மதுரைக்காஞ்சி, அடி, 234-237)
இவ்வாறு செந்தமிழ்ச் சான்றோர் கூறிய நிறைமொழி கேட்டான் நெடுஞ்செழியன்; நிலையாமை
உணர்ந்தான்; போர் வெறி நீங்கினான்; புத்துணர்வு பெற்றான்; விருப்பும் வெறுப்பும் அற்ற-உயர்வும்
தாழ்வும் ஒழிந்த-இகழும் புகழும் கடந்த புது வாழ்வு-இன்ப வாழ்வு-கண்டான்; எவ்வுயிரும் தன்
உயிரெனப் போற்றும் இதயம் பெற்றான்; இறவாத பெரும்புகழ் எய்தினான். இருள் நீங்கி
இன்பம் பயக்கும் அருளாளனாய்-பொய்யில் காட்சிப் புலவனாய்அந்தமில் இன்பத்து அரசாள்
வேந்தனாய் விளங்கினான் பாண்டியன் நெடுஞ்செழியன். உலகை வெல்லும் போரில் அவன்
அரசியல் வாழ்வு தொடங்கியது. ஆனால், உள்ளத்தை வெல்லும் போரில் அவன் அருள் வாழ்வு
முடிந்தது. உலகை வென்ற அவன் வரலாறும், அதனினும் பெரிதாய உள்ளத்தை வென்று
விழுப்புகழ் கொண்ட அவன் பெருமையும், காலமும் கன்னித் தமிழும் உள்ள வரை நின்று நிலவும்.
-------------
6. கணியன் பூங்குன்றனார்
‘வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ் கூறு நல்லுலகம் முழுதையும் அரியணை ஏறித் திருமுடி சூடிச் செங்கோல் ஏந்தித் தமிழன்னை ஆட்சி புரிந்த சங்ககாலம் தமிழ் மக்களின் பொற்காலம். மக்கள் வாழ்வில் அழகும் அறிவும் அன்பும் அறனும் இன்பமும் ஒளியும் கை கோத்து எங்கணும் களிநடம் புரிந்து விளங்கிய அந்நாளில் நம் அன்னையின்-தமிழரசியின் திருவோலகத்தை ஐந்நூற்றுவர்க்கும் மேற்பட்ட அருந்தமிழ்ப் புலவர் அணி செய்தனர். அப்புலவர் தொகையுள் ஆடவரும் மகளிரும் உழவரும் தொழிலாளரும் வணிகரும் வீரரும் அரசரும் அந்தணரும் என எண்ணற்ற பல் பிரிவினரும் கலந்து விளங்கினர்; செந்தமிழ் மொழியையும் இலக்கியத்தையும் சங்கம் நிறுவிச் சீர்மையுற ஆய்ந்து போற்றி, அருமையுடன் வளர்த்தனர். அவ்வாறு தமிழன்னையின் திருவடி பரவி வந்த சான்றோர் பலரும் உறுப்பு-தொழில்பாட்டு-மரபு-வழக்க ஒழுக்கம் முதலான பல்வேறு காரணங்களால் பெயர் பெற்று விளங்கினர். சங்க இலக்கியப் பதிப்பொன்று நாற்பத்து நான்கு வகையாக அக்காலப் புலவர் பெயரை வகைப்படுத்திக் காட்டுகின்றது. அவருள் தொழிலால் பெயர் பெற்றவராகச் சற்றேறக் குறைய நாற்பத்தாறு புலவர் காணப்படுகின்றனர். அவர்கள் பெயரை ஆராய்ந்து பார்க்குங்கால் ‘அரும்பும் வேர்வை உதிர்த்துப் புவிமேல்’ பல்விதமாய தொழில் புரிந்தோரும் அந்தநாளில் தமிழிலக்கிய வளர்ச்சியில் ஈடு பட்டிருந்த சிறப்பு நமக்கு இனிது புலனாகும். சான்றாகச் சிலர் பெயரைச் சுட்டிக் காட்டலாம். அவர் ஆசிரியன் பெருங்கண்ணன், உறையூர் இளம்பொன் வாணிகனார், உறையூர் மருத்துவன் தாமோதரனார், தங்கால் பொற் கொல்லன் வெண்ணாகனார், மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார், மதுரைக் கொல்லன் வெண்ணாகனார், மதுரைக் கூத்தனார், வினைத்தொழில் சோகீரனார் என்பவர் ஆவர். இவருள்ளும் சிலர் தொழிலால்மட்டும் அன்றி இடம் தொழில் இரண்டாலும் பெயர் பெற்றிருத் தலையும் காணலாம்.
அவ்வாறு பெயர் பெற்றாருள் ஒருவரே கணியன் பூங்குன்றனாராவார். கணியன் என்று அவர் பெற்றுள்ள அடைமொழியை ‘விளைவெல்லாம் கண்ணி உரைப்பான் கணி’1 என்ற புறப்பொருள் வெண்பாமாலை அடியைத் துணையாகக் கொண்டு எண்ணிப் பார்க்குமிடத்து, அவர் காலத்தின் இயலை எல்லாம் கணித்துரைக்க வல்ல கூர்மதியாளராய் இருந்திருத்தல் வேண்டும் என்பது தெள்ளிதின் புலனாகும். அவர் பிறந்த ஊர் பூங்குன்றமாகும். பூங்குன்றம் என்பது நாடொன்றின் தலை நகர். இராமநாதபுர மாவட்டத்தில் மகிபாலன் பட்டி என்ற ஓர் ஊர் உளது. சாசனங்கள் அவ்வூரைப் ‘பூங்குன்ற நாட்டுப் பூங்குன்றம்’ எனக் குறிக்கின்றன. அதனால், மகிபாலன் பட்டியே பழைய பூங்குன்றம்2 எனத் துணிய லாம். ஏரார்ந்த பேரும் இயற்கை வளனும் படைத்த அவ்வூரின்கண் தோன்றிய அத்தமிழ்ச் சான்றோரரின் வாழ்வு, முகில் கூட்டம் ஏதும் படியாத முழுதும் வெள் ளிய தூய வானம் போன்ற காட்சியை வழங்குகின்றது.
--------------
[1]. பு. வெ. 178. [2]. நாலடியார், 128, 212.
------------
உணர்ச்சியின் அலைப்புக்கும், நிகழ்ச்சிகளின் மோதல்களுக்கும் இரையாகாது வாழ்ந்த அச்சான்றோரின் உள்ளம், கள்ளமற்ற குழந்தையின் உள்ளம் போன்ற தூய்மையும், துவரத் துறந்த ஞானியின் தெளிவும் ஒருங்கே பெற்றுத் திகழ்ந்தது. ‘கற்றோர் அறியா அறிவின சாயும், கற்றோர்க்குத் தாம் வரம்பாகிய தலைமையராயும்’ விளங்கிய பூங்குன்றனாரது அருள் ததும்பும் உள்ளத்து உணர்வினின்றும் பொள்ளெனப் பொங்கிப் பிறந்த இரு பாடல்கள் சங்கத்தமிழ் வானில் மாலை மதியமும் காலைக் கதிரவனும் போல ஒளி பரப்பி அணி செய்கின்றன. அவற்றுள் ஒன்று, அகப்பொருள் அமைதி நிறைந்து உள்ளத்தையும் உணர்வையும் உருக்கும் ஒண்மை பெற்று ஒளிரும் நற்றிணைப் பாடல்; மற்றொன்று, புறப் பொருட்பயன் பொதிந்து உள்ளத்தை உணர்வைத் தெளிவிக்கும் பண்பு பெற்றுப் பொலியும் புறநானூற்றுப் பாடல். இவ்விரு பாடல்களுள்ளும் அறிவும் உணர்வும் கலந்த அறவாழ்வு வாழ்ந்த பூங்குன்றனார் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ எனத் தொடங்கிப் பாடியுள்ள அரிய பாடல், உலகிற்கு ஓங்கிய ஒரு மாமணியாய்த் தமிழிலக்கியம் பெற்ற திருமாமணியாய் மிளிர்கின்றது.
சான்றோர்களின் வாழ்வைக் கற்றல் இனிது; கேட்டல் அதனினும் இனிது. அவர் வாழ்வை மனமாரப் போற்றல் எளிது; வாயால் புகழல் அதனினும் எளிது. ஆனால், அவர் வாழ்வை அடியொற்றி வைத்து வாழ்வாங்கு வாழ்வதோ அரிது; மிக அரிது! அரிதாயினும், அத்துறையில்-வாழ்வுத் துறையில்-வெற்றி காணல் அன்றோ சிறப்பு? அச்சிறப்பினை எய்தற்குரிய செந்நெறி யாது? அதை விளக்குவதே பூங்குன்றனாரின் அரிய பாட்டு.
‘சான்றாண்மை’ என்றே தனி ஒர் அதிகாரம் வகுத்து உலகுய்ய வழி காட்டிய செந்நாப்போதாரும்,
‘குணநலம் சான்றோர் நலனே; பிறநலம்
எந்நலத்(து) உள்ளது உம் அன்று' (குறள், 982)
என்று தெள்ளத்தெளியக் கூறிப் போந்தார். அவ்வாறு அவர் போற்றிய குணநலனுக்கெல்லாம் உயிராய் விளங்கும் ஒப்பற்ற பண்பே ‘நடுவுநிலைமை’யாகும். இவ்வுண்மையையும் வள்ளுவப் பெருந்தகையாரே விளக்குகின்றார்,
‘கேடும் பெருக்கமும் இல்லல்ல; நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி.’ (குறள், 115)
‘சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்(து)ஒருபால்
கோடாமை சான்றோர்க் கணி.’ (குறள், 118)
என்னும் இம்மணி மொழிகள் வள்ளுவர் உள்ளத்தைநடுவு நிலைமையின் சிறப்பை-நன்கு புலப்படுத்துகின்றன அல்லவோ? இக்கருத்தமிழ்தில் ஊறிய கவியரசர் பாரதியாரும்,
‘ஞாயிற்றை யெண்ணி யென்றும்
நடுமை நிலைபயின்று
ஆயிர மாண்டுலகில் கிளியே!
அழிவின்றி வாழ்வோமடீ!’ [1]
என்று கவிதை நலம் சொட்டச் சொட்டப் பாடுகின்றார், வள்ளுவர் முதல் பாரதியார் வரை
சான்றோரனைவரும் போற்றும் இந்நடுவு நிலைமை, வாழ்க்கையின் எல்லாத் துறைகட்கும் வேண்டும்.
-----------
[1]. கிளிப்பாட்டு: கண்ணி, 4.
--------------
எத்துறையிலும், எந்நிலையிலும் எள்ளளவும் இந்நடுவு நிலைமை பிறழுமானால், அத்துறை பாழ்பட்டுக் கெட்டொழிதல் உறுதி. எனவே, தமிழ்ப் பெருஞ் சான்றோராகிய பூங்குன்றனார், தனி ஒருவனது வாழ்க்கைக்கும் பொது வாழ்க்கைக்கும் இன்றியமையாத நடுவுநிலைமையின் அருமையையும் பெருமையையும் அழகுற விளக்குகிறார் :
‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நேர்தலும் தணிதலும் அவற்றோ ரன்ன;
சாதலும் புதுவ(து) அன்றே; வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே! முனிவின்
இன்னா(து) என்றலும் இலமே; மின்னொடு
வானம் தண்துளி தலைஇ ஆனாது
கல்பொரு(து) இரங்கும் மல்லல் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம்; ஆகலின், மாட்சியிற்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. (புறம். 192)
முதல் நூற்றாண்டில் இருந்த உலகத்தை நோக்க இருபதாம் நூற்றாண்டிலுள்ள இன்றைய மனிதனது புற நாகரிகம் எவ்வளவோ வளர்ச்சி பெற்றுவிட்டது. ஆனால், அதற்கு இணையாக அவன் அக நாகரிகம் - உள்ளத்தின் பண்பாடு-வளரவில்லை-சிறப்புறவில்லை என்றே கூற வேண்டும். இல்லேயேல், ஆயிரக்கணக்கான மைல்களைச் சில மணி நேரத்தில் விண்வழியே பறந்து கடக்கக் கற்றவன்-ஆழ்கடலினிடையே நீர் மூழ்கிக் கப்பல்களின் துணைக்கொண்டு நெடுநேரமிருக்கக் கற்றவன்- விண் முட்டும் வெண்மாளிகைகளை அடுக்கடுக்காய்க் கட்டக் கற்றவன்-விண்ணின் இயல்பை, மண்ணின் பண்பை யெல்லாம் துருவியறியக் கற்றவன்-தீராத உடல் நோய்களையெல்லாம் தீர்த்துவைக்கும் அருமருந்துகளைப் பாடுபட்டுக் கண்டவன்-பல்லாயிர மைல்களுக்கு
அப்பாலிருந்து பாடும் குரலையும் ஆடும் காட்சியையும் காணக் கருவிகள் அமைத்தவன்-சுருங்கச் சொன்னால், இடத்தையும், காலத்தையும், இயற்கையையும் எத்தனையோ வகைகளால் வெல்லக் கற்றவன்- ‘கள்ளமற்ற குழந்தைகள் கலை பயிலும் கூடம்' என்றும், ‘கூழுக்கலையும் திக்கற்ற ஏழையர் வாழும் பகுதி’ என்றும், ‘நோயுற்று நலிந்தவர் வதியும் நிலையம்’ என்றும் சிறிதும் கண்ணோடாது, தீக்குண்டுகளை எறிந்தும் நச்சுப் புகையைப் பரப்பியும் உலகை நாசமாக்க முனைவானோ? இத்தகைய இழிநிலை - மனிதனை மனிதன் மாய்க்கும் மடமை-கொடுமை - இன்னமும் உலகில் இருக்கக் காரணம் என்ன? மனிதன் மண்ணை - விண்ணே - காற்றை - நீரை - நெருப்பை வெல்லக் கற்ற அளவில் ஒரு சிறு பகுதியேனும் தன் மனத்தை-தன்னல வெறியை-அடக்கி ஒடுக்கி ஆளுவதில் முயலாமையும், முயன்று வெற்றி பெறாமையுமே ஆகும். இனியேனும் மனித குலம் அவ்வகையில் வெற்றி பெறப் பல்லாற்றானும் முயலும் பணியில் ஈடுபடல் ஒன்றே அஃது உய்வதற்குரிய ஒரே நெறி. அந்நெறியில் - சான்றோர் சென்ற செந்நெறியில் - வெற்றி பெற இன்றியமையாது வேண்டுவது அறிவினுக்கும் அறிவாய் விளங்கும் மெய்யறிவே யாகும். அத்தகைய மெய்யறிவே-வாழ்க்கையின் உண்மையைப் பற்றிய தெள்ளத் தெளிந்த திருக்காட்சியே-நடுவு நிலைமை என்னும் நல்லமிழ்தை நமது நெஞ்சில் பாய்ச்சும். அவ்வமிழ்தே நம்மை மனிதருள் அமரர் ஆக்கும்.
உலகில் காணும் பல வகையான கேடுகட்கும் அடிப்படையாய் இருப்பது தன்னலமேயாகும். அத் தீய பண்பு - மனிதன் மூளையையும் நெஞ்சையும் பாழாக்கும் நஞ்சு - பொதுநலமென்ற நல்லுணர்வால் முறிந்து ஒழிதல் கூடும். அப்பொது நலவுணர்வு நம் உள்ளத்தில் மெல்ல மெல்ல அரும்ப வேண்டுமானால்,
‘யாதும் ஊரே; யாவரும் கேளிர்’
என்ற சிறந்த கோட்பாடு நம் நெஞ்சில் பதிய வேண்டும்.
உலகமெல்லாம் அமைதியாக-இன்பமாக- வாழ்ந்தாலன்றித் தனி ஒரு நாடும் ஊரும் குடும்பமும் மனிதனும் அமைதியாக – இன்பமாக - வாழ முடியாது. விஞ்ஞான வளர்ச்சியால் மிகச் சுருங்கியதாகிவிட்டிருக்கும் இன்றைய உலகில் இவ்வுண்மை முன்னிலும் நன்றாக விளங்கல் இயல்பே. எங்கோ ஒரு நாட்டில் தொடங்கும் சிறு போர் உலகப் போருக்கே வித்தாகிறது; எங்கோ ஒரு நாட்டில் ஏற்படும் சிறு பூசல் உலகப் பெருநாடுகளின் உள்ளத்தை யெல்லாம் அலைக்கிறது; எங்கோ ஒரு நாடு சோதனைக்காக வீசி எறியும் புதிய நச்சுப் பெருங்குண்டு, பல மைல்கள், பல நூறு மைல்களுக்கு அப்பாலுள்ள நாடுகளில் வாழும் ஏழை எளிய மக்களின் உடலை, நரம்புகளையெல்லாம் ஊடுருவித் தாக்குகிறது. இந்நிலையில், ‘உலகமெல்லாம் கெடட்டும்; ஆனால், என் நாடு மட்டும் வாழட்டும்,’ என எண்ணும் தன் நாட்டுப்பற்றோ, 'நாடெல்லாம் நலிவுறட்டும்; என் ஊர் மட்டும் பொலிவுறட்டும்,' என்று கருதும் குறுகிய ஊர்ப்பற்றோ, 'ஊரெல்லாம் பாழாகட்டும்; என் வீடு மட்டும் வாழட்டும்,' என விரும்பும் தன் நல எண்ணமோ-பொருளற்றன மட்டுமல்ல; தீமை பயப்பனவும் ஆகும். பெருங்காட்டில் பற்றும் தீயினின்றும் எத்துணைக் காலம் அக்காட்டிலுள்ள சில மரங்களும் கொடிகளும் தப்பி வாழ முடியும்? உடம்பின் ஒரு மூலையில் உட்புகும் நஞ்சு, எவ்வளவு நேரம் அந்த இடத்திலேயே ஒடுங்கி இருக்கும்? நொடிப்பொழுதில் உடம்பெங்கும் பரவி உயிரைக் கொள்ளை கொள்ளல் தவிர்க்க முடியாத தன்றோ? அவ்வாறே உலகின் ஒரு பகுதிக்கு வரும் அழிவும், உலக மக்களில் ஒரு சாரார்க்கு வரும் தீங்கும், மற்ற எப்பகுதியையும்-வேறு எவரையும்-ஒரு நாளல்லா விட்டாலும்- ஒரு நாள் தாக்குவது திண்ணம். தன்னலமும் குறுகிய நாட்டுப்பற்றும் தொடங்குங்கால் இன்பமாகத் தோன்றினும், காலப்போக்கில் துன்பமாகவே முடியும். வாழ்க்கையில் வரும் சிறுசிறு நிகழ்ச்சிகளாலும் உலக வரலாறு உணர்த்தும் கசப்பான பெரும் பாடங்களாலும், இவ்வுண்மையைத் தெளிவாக அறிய வல்ல நெஞ்சத்திற்கு
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’
என்ற பேருணர்வில் தோய்ந்து நிற்பதைத் தவிர வேறு வழியில்லை. எவ்வூரையும் தன் ஊர் போல, எவரையும் தன் கேளிர் போலக் கருதி அன்பு செய்யாத நெஞ்சம் நின்று கொல்லும் அறத்தின் கொடிய ஒறுப்பிற்கு ஆளாவது தவிர்க்க முடியாதது. ஆனால், இந்த உண்மையை ஒரோவழி உண்மையென உணரினும், வாழ்வில் எஞ்ஞான்றும் இதைப் போற்றி ஒழுகல் எளிதோ? இதை எண்ணிப் பார்த்த சான்றோராகிய பூங்குன்றனார், இத்தகைய உயரிய எண்ணம் மனித உள்ளத்தில் வேரூன்றாது போகும் அடிப்படைக் காரணத்தையே ஆராய்கிறார்; மனிதனது புல்லறிவாண்மையே அதற்குக் காரணமெனத் தெளிகிறார்; தெளிந்தவர், தம் உள்ளம் கண்ட உண்மையை அவ்வறியாமை இருள் இரிய நமக்கும் அளித்துதவுகிறார். நன்மையும் தீமையும் பிறரால் வருவன அல்ல என்ற தெளிவு வேண்டும். இந்தத் தெளிவு வந்தால், பின் நன்மை செய்தார் நல்லவர்-நண்பர் என் அறும், தீமை புரிந்தவர் தீயவர்-பகைவர் என்றும் கருதும் மனப்பாங்கு தொலைந்து, ‘யாவரும் கேளிர்’ எனப் போற்றும் பெருநெஞ்சம்-அருள் நெஞ்சம்-முகிழ்க்குமன்றோ?அதனால்,
‘தீதும் நன்றும் பிறர்தர வாரா?’
என்று வற்புறுத்தி உரைக்கின்றார், ‘தீதும் நன்றும் பிறர் செய்யக் கண்கூடாகக் காண்கின்றோமே!’ எனின், பிறர் புரியும் அச்செயல்களை மறந்து அச்செயல்களின் பயனையே கருதுமாறு நம்மையும் நம் அறிவையும் தூண்டுகிறார், தீது என்றும், நன்று என்றும் நாம் கருதுவது பிறர் செய்யும் செயல்களிலில்லை. அவ்வாறு நாம் உணரும் நம் உள்ளத்தின்பாற்பட்டதே அதுவென விளக்குகிறார், ‘தீதால் வரும் துன்பமும் நன்றால் வரும் இன்ப ஆறுதலும் பிறர் கொடுத்துப் பெறுவன அல்ல; நம் மனத்தின் விளைவே,’ என்று தெளிவுபடுத்துகிறார்,
‘தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன.’
என்று ஆழ்ந்து சிந்தனைக் கடலில் மூழ்கிக் கண்டெடுத்த கருத்து நித்திலத்தை நமக்குப் பரிசாக அளித்து நம்மை மகிழ்விக்கின்றார் பூங்குன்றனார்.
பூங்குன்றனார் கூறும் இவ்வரிய உண்மையை அறிவால் ஏற்றுக்கொள்ளினும், வாழ்க்கையில் கடைப்பிடித்தல் ஒல்லுமோ? அரிதினும் அரிதாய் விளங்கும் அதையும் அடையத் திருவள்ளுவர் கூறுவது போன்று, 'இடுக்கண் வருங்கால் நகும்’ வன்மை பெற்ற நெஞ்சம் வேண்டும். அத்தகைய நெஞ்சு பெற்றார்க்குச் சாவும் அஞ்சத்தகுந்ததாக அமையாது. துன்பத்துள் எல்லாம் பெருந்துன்பமாகக் கருதப்படும் சாவு, ‘உறங்குவது போலும்’ எளியதாய், இனியதாய் அமையும். அதில் ஒரு மருட்சியோ புதுமையோ இராது. அவ்வாறு சாவிற்கே அஞ்சாதவன்- ‘நமனை அஞ்சோம்' என்ற நாவின் வேந்தரின் நல்லுறுதி பெற்றோன்- வேறெதற்கு அஞ்சுவான்? அத்தகைய அச்சமற்றவன் உச்சிமீது வானிடிந்து வீழ்ந்த போதிலும்-பச்சைஊனியைந்த வேற்படைகள் எதிர்த்து வந்த போதும்-நச்சைக் கொணர்ந்து நண்பர்கள் வாயில் ஊட்டுகின்ற போதும்-கலங்கான். அத்தகையவனை தணிதலோடு நோதலையும் ஒன்றாகக் காணும் தறுகண்மை பெற்றவனவான். அத்தகைய வீரம்- சாவிற்கும் அஞ்சா வீரம்-துன்பத்துளெல்லாம் பெருந்துன்பத்தைக் கண்டும் கலங்காப் பெருவீரம்- வாய்க்கப்பெற வேண்டுமெனக் கருதும் பூங்குன்றனார், ‘சாதலும் புதுவதன்றே’ என்று ‘ஆன்றவிந்தடங்கிய’ உள்ளத்தின் அருமை தோன்றக் கூறுகிறார், பூங்குன்றனார் காட்டிய வழியில் சாவைக் கண்டும் அஞ்சாத உள்ளத்திற்கு-
‘தீதும் நன்றும் பிறர்தர வாரா; நோதலும் தணிதலும் அவற்றேரன்ன’, என்ற உண்மையினை வாழ்க்கையில் காட்டும் வன்மை பெற்ற நெஞ்சிற்கு- ‘நடுவுநிலை’ தானாக வந்தமையும். அதுபோழ்து ‘வாழ்வு இனிது’ என மயங்கும் மயக்கமும், ‘’இன்னாது’ என வெறுக்கும் வெறுப்பும் இல்லாது போகும். இதையே சான்றோராகிய பூங்குன்றனார்,
‘வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்னா(து) என்றலும் இலமே.’
என்று தாம் உணர்ந்த உணர்வின் ஆழமெல்லாம் புலனாகக் கூறுகின்றார். இத்தகைய ஆழ்ந்த உணர்வினை அடிப்படையாகக்கொண்ட நல்லுள்ளம் உணர்ந்து தெளியவல்ல ஒர் அரிய உண்மையை அடுத்து விளக்குகின்றார் பூங்குன்றனார்.
விண்ணையும், மண்ணையும், உலக வாழ்க்கையையும் தன் அற ஆட்சியினின்றும் ஒரு சிறிதும் பிறழாதவாறு இயக்குகின்றது உயிர் வாழ்வின் ‘முறை’ என்ற ஒன்று. அம்முறை சிலர்க்கு இயற்கையாகவும் மற்றும் பலர்க்குக் 'கடவுளாகவும்’ காட்சி வழங்குகிறது. ‘ஓருருவம் ஒரு நாமம்’ இல்லாத
அம் ‘முறை’க்கு உலகம் ஆயிரம் உருவங்கள் கற்பித்து, ஆயிரம் நாமங்கள் சூட்டி வழிபடுகின்றது. உலகின் போக்கு எவ்வாறாயினும், உயிர் வாழ்விற்கு அடிப்படையாய் விளங்கும் அம்’முறை’ என்ற ஒன்று-ஓங்கி ஆழ்ந்து அகன்று நுண்ணியதாய் விளங்கும் அப்பேராற்றல்-மறுக்கவோ மறைக்கவோ புறக் கணிக்கவோ முடியாத தன்மையதாய்த் திகழ்கின்றது. இத்தகைய ஆற்றலை உணர்த்தக் கலையுரைத்த கற்பனைகள் எண்ணில. அறவோர்கள் கண்ட சமயங்களும் மிகப் பல. பலவாய் விளங்கும் இவற்றின் அடிப்படை ஒருமையை-உண்மையைக் காண உலகால் இயலவில்லை. அதற்கு மாறாகக் கல்லில் விளங்கும் கலையை-கருத்தைமறந்து, கல்லையே போற்றத் தலைப்பட்டது; கலைஞனது உள்ளத்தைப் போற்ற மறந்து, அவன் உருவையும் சிலை செய்த உளியையும் தொழத் தொடங்கியது. இத்தகைய உலகின் போக்கு இன்றும் மாறியபாடில்லை. அறவோரின் கொள்கையைக்-குறிக்கோளை-மறந்து, ‘சமயம்’ என்ற பெயரால் அவர் சித்திரத்தைச்-சிலையைப்-போற்றத் தலைப்பட்டனர் மக்கள். வாழ்விற்குப் பயன்பட வேண்டிய ’சமயம்’ வெறுஞ் சடங்காயிற்று. அம்மட்டோடும் நின்றதோ? ‘இக்கல்லினும் அக்கல்லே சிறந்தது,’ என்றும், ‘இக் கலைஞரிலும் அக்கலைஞரே உயர்ந்தவர்,’ என்றும், ‘இச் சமயத்தினும் அச்சமயமே உயர்ந்தது,' என்றும், ‘அவ்வறவோரினும் இவரே பெரியவர்,' என்றும் பிதற்றவும் தொடங்கியது; அவ்வாறு புகழ்தலோடும் அமையாது, ’இவர் பெரியவர்; அதனால், அவர் மிக இழிந்தவர்,ட எனக் கூசாது கூறவும் முனைந்தது. உண்மை எங்கோ ஒடி மறைந்தது. இவ்வாறு ஒருவர் புகழ்ச்சியும் மற்றவர் இகழ்ச்சியும் பகைக்கும் பூசலுக்கும் வித்திட்டன. பகையும் பூசலும் இகலாய்ப்-போராய்-மூண்டன. இவ்வுல கியலைக் கூர்ந்து கண்டார் பூங்குன்றனார். எனவே,
‘நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்.’ (குறள், 948)
மேற்கொள்ளும் நன்மருத்துவர் போல உலகின் பெரு நோய்க்கு மருந்தளிக்கின்றார்.
பொருள் துறையில் பெரிய ஏற்றத் தாழ்வுகள் இருப்பது எவ்வளவு தீமையானது
என்பதை-எரிமலையின்மீது குடியிருப்பது போன்றது என்பதை-இன்றைய உலகம் உணரத்
தலைப்பட்டுவிட்டது. இந்த உணர்ச்சியின் பயனாக ‘ஏழை என்றும் அடிமை என்றும் எவனும்
இல்லை சாதியில்' [1]; ‘எல்லாரும் எல்லாப் பெருஞ் செல்வமும் எய்தலாலே, இல்லாரும் இல்லை;
உடையார்களும் இல்லை மாதோ,’ [2] என முழங்க வல்ல ஒப்பற்ற உலக சமுதாயத்தைப் படைக்க விழைகின்றது. இங்ஙனம் பொருள் நிலையால் ஒத்த வாழ்வு அமையாததால் வரும் கேட்டை இன்று உலகம் உணர்வது போலவே, ‘புகழ்ச்செல்வமும் பொல்லாதது; கேடு பயக்க வல்லது,’ என்ற உண்மையையும் உணரவேண்டும்.
----------
[1]. பாரதியார் : விடுதலை
[2]. கம்பராமாயணம் - நகரப்படலம், 74.
-----------
இப்புகழ் வெறியன்றோ உலகில் நேரும் பல்வேறு கேடுகட்கும் முக்கிய ஏதுவாய் விளங்குகின்றது? உலக வரலாற்றிலேயே புகழ் வேட்ட பெருவிருப்பால் அன்றோ கணக்கற்ற போர்கள் நடைபெற்றன? ‘அவனுக்கு அவ்வளவு புகழா? பொறுக்க முடியாது! அவனை அழித்தாயினும், அவன் புகழ் தொலைப்பேன்!’ என்ற அழுக்காற்றால் அன்றோ பாரியைப் போன்ற மனிதகுலத்தின் தலை சிறந்த மாணிக்கங்கள் வாளுக்கும் வேலுக்கும் இரையாயின? இத்தகைய அவலச் சுவையை உலகிலுள்ள ஒவ்வொரு நாட்டின் வரலாறும் அள்ளிக் கொட்டுகின்றதே! புகழ் வெறியாலன்றோ உலகின் அரசியலும் சமயமும் பாழ்படுகின்றன? ’என் புகழே ஓங்கவேண்டும்; அதற்குத் துணையாகப் பிறர் புகழெல்லாம் மண்ணாக வேண்டும்,’ என்ற எண்ணத்தாலேயே அன்றோ அரசியல் கட்சித் தலைவர்களும் அவர் புகழ் பெருக்குவதிலேயே தம் வாழ்வைக் காணும் தொண்டர்களும்-தாங்கள் போற்றும் கட்சிகளையும்-கட்சிகள் கண்ட தலைவர்களின் சிறந்த கொள்கைகளையும் குறிக்கோளையும் கைநழுவவிடத் துணிகின்றார்கள்? அவ்வாறே சமயத் துறையிலும் தனி ஒருவர் தம் புகழே எங்கும் மணக்க வேண்டும் என்ற எண்ணத்தாலன்றோ அச்சமயத்தின் உயர்நெறிகளெல்லாம் அதன் பாதுகாவலர்களாலேயே புறக்கணிக்கப்படுகின்றன? இவ்வளவு தீமை கட்கும் வித்தாயிருப்பது புகழ் நசை. இப்புகழ்ப் பற்று நீங்கவேண்டுமாயின், வாழ்வின் உண்மையில் தெளிவு வேண்டும். அத்தெளிவு பெறும் ஆற்றலினை எளிய வகையில் அறிவிக்கின்றார் பூங்குன்றனார்; வெள்ளப் பெருக்கெடுக்கும் பேரியாற்றின் நீரில் பட்ட புணையினை நமக்குக் காட்டுகின்றார். அப்புணை எவ்வாறு அந்நீர் வழியே செல்கின்றதோ, அவ்வாறே ஆருயிரும் அனைத்தினும் வல்லதாய் விளங்கும் ‘முறை’ வழியாகவே செல்லும் நீர்மை படைத்தது. இவ்வுண்மையினை உணர உணர மனித உள்ளம் அம்’முறையின்’ ஆற்றலை எண்ணி வியப்பதில் ஈடுபடுமேயன்றி, ‘இவர் பெரியர்’ எனப் புகழ்வதும், அதனினும் பெருந்தவறு உடைத்தாக ‘அவர் சிறியர்' என்று இகழ்வதுமான புன்னெறியில் ஒருநாளும் படியாது. புன்னெறிப் புகாது நன்றின் பால் படிந்து மனிதகுலம் உய்ய இது ஒன்றே வழி. இதனைப் பின் வரும் அடிகளால் புலப்படுத்துகிறார் புலவர்:
‘நீர்வழிப் படுஉம் புணைபோல் ஆருயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம்; ஆகலின், மாட்சியிற்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே.’ (புறம், 199)
தனி மனிதனது ஆற்றலையும் புகழையும்விட எல்லோரையும் எல்லாவற்றையும் இயக்கும் இணையில்லாப் பேராற்றலின் உயர்வே – மாட்சியே - நாம் அறிந்தும் - உணர்ந்தும் - போற்றியும் - வாழ்வதற்குரியது என்ற உயர்ந்த உண்மையை ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே கண்டு தெளிவித்த சங்ககாலச் சான்றோரின் கருத்து வழியே பண்பட்டு உண்மையினைத் தேர்ந்து தெளிந்து உயரும் நன்னாளே, உலகம் ஒரு குடும்பமாகி, மனித இனம் நயத்தகு நாகரிகத்தின் மணி முடியினைக் காணும் பொன்னாளாகும்.
This file was last updated on 5 July 2017
Feel free to send corrections to the webmaster.