மனத்தின் தோற்றம்
(ஆய்வுக் கட்டுரைகள்)
பேரா. சுந்தர சண்முகனார்
manatin tORRam
(literary essays) by cuntara caNmukanAr
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Tamil Virtual Academy for providing a scanned image
version of this work for the etext preparation. This work has been prepared using the
Google Online OCR tool to generate the machine-readable text and subsequent proof-reading.
We thank R.Navaneethakrishnan for his help in proof-reading of this work.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2017.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
பேரா. சுந்தர சண்முகனார்
மனத்தின் தோற்றம் : ஆய்வுக் கட்டுரைகள்
Source:
பேரா. சுந்தர சண்முகனார்
மனத்தின் தோற்றம் : ஆய்வுக் கட்டுரைகள்
Source:
மனத்தின் தோற்றம் :
ஆய்வுக் கட்டுரைகள்
ஆசிரியர்:
ஆராய்ச்சி அறிஞர் முனைவர் சுந்தர சண்முகனார்
தமிழ்-அகராதித்துறைப் பேராசிரியர் (ஓய்வு),
தமிழ்ப் பேரவைச் செம்மல்
(மதுரை காமராசர் பல்கலைக் கழகம்),
புதுச்சேரி-11
வெளியிடுபவர்: சுந்தர சண்முகனார்
புதுவைப் பைந்தமிழ்ப் பதிப்பகம்,
38. இரண்டாம் தெரு, வேங்கடங்கர்
புதுச்சேரி-605011.
முதல் பதிப்பு: அக்டோபர் 1992, விலை : ரூ. 30.00
உரிமை : ஆசிரியருக்கே.
அச்சகம்: சபா நாயகம் பிரிண்டர்ஸ்,
73-A, கீழவீதி, சிதம்பரம்.
முன்னுரை
‘மனத்தின் தோற்றம்’ என்னும் இந்த நூல் பதினாறு ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பாகும். இவற்றுள், முதல் கட்டுரையாகிய ‘மனத்தின் தோற்றம்’ என்பதே நூலுக்குப் பெயராகச் சூட்டப் பெற்றுள்ளது.
சிறு கதைகளையும் பெருங் கதைகளையுமே பெரிதும் விரும்பிப் படிக்கும் நம்மவர்கள், கதையல்லாத உரைநடைக் கட்டுரைகளை அதிலும் ஆய்வுக் கட்டுரைகளை விரும்பிப் படிப்பது அரிது.
இதற்காக நாம் சோர்ந்து விடக் கூடாது. கதை படிக்கும் எளிய பயிற்சி நிலையிலேயே வைத்து நிலையாக மக்களைப் பழக்கி விடலாகாது. கதையல்லாத மற்ற ஆய்வுச் செய்திகளையும் படிக்கும் பொறுமையினையும் படித்துச் சுவைக்கும் திறனையும் வளர்த்துவிட வேண்டியது நம் போன்றோர் கடமையாகும்.
கதையல்லாத ஆய்வுச் செய்திகளைப் படிப்பதால், பல்வேறு செய்திகளைப் பற்றி அறிந்து பயன்பெறும் வளமான வாய்ப்பு பெறப்படும்.
இந்த அடிப்படையில், இந்த நூலில், உளவியல் - உடலியல் ஆகிய அறிவியல், மரஇன (தாவர) இயல், இலக்கியம், நாடகம், ஆடல் - பாடல், இலக்கணம், மொழியியல், வரலாறு, தரையியல், மன்பதை (சமூக) இயல், அறநெறி என்னும் பல துறைகளைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன.
கட்டுரைகள் உருப்பெறப் பல மேற்கோள் நூல்கள் துணைபுரிந்துள்ளன. இந்நூல்களால், பழந்தமிழ் அறிஞர்கள் பல துறைகளில் பெற்றுள்ள அறிவுவளம் அறியவரும்.
எனது நூலையும் வரவேற்று வாழ்த்து நல்க வேண்டுகிறேன். நூலை நன்முறையில் அச்சிட்டுத் தந்த சிதம்பரம் சபாநாயகம் அச்சகத்தாருக்கு நன்றி செலுத்துகிறேன்.
வணக்கம்.
அன்பன்
சுந்தர சண்முகன்
பொருளடக்கம்
1. மனத்தின் தோற்றம்
2. உயிரினும் உயர்ந்தது
3. மலர்களும் மனையறமும்
4. கம்பரின் தமிழ்ப் படலம்
5. மாணிக்கவாசகர் காலம்
6. திருவயிந்திர புரம்
7. குற்றாலத்திற்கு ஒரு குறவஞ்சி
8. தமிழ் வளர்ச்சிக்கு இலக்கணப் புலவர்களின் நன்கொடை
9. தமிழ் வளர்ச்சிக்கு மொழியியலாரின் பங்கு
10. பிரபுலிங்கலீலை - ஒர் அறிமுகம்
11. முதுமொழி நூறு
12. மணிமேகலையில் பழக்க வழக்க மரபுகள்
13. மொழி ஒப்பியல்
14. திராவிட மொழிகளில் சில சொல்லாட்சிகளும் சொற்சுவைகளும்
15. சிலம்பில் இரு குரவைகள்
16. கம்பரின் காலம்
1. மனத்தின் தோற்றம்
உயிரின் தோற்றம் போலவே மனத்தின் தோற்றமும் ஆராயத்தக்கது. மனம், புத்தி அகங்காரம், சித்தம், என நான்கு உட்கருவிகள் (அந்தக் கரணங்கள் - Inner Seat of thought, feeling and volition consisting of four aspects) இருப்பதாக இந்தியத் தத்துவவாதிகள் சிலர் கூறுகின்றனர். மனம் என்பது நெஞ்சில் (கழுத்தில்) இருப்பதாக அப்பாவிகள் சிலரும், மனம் என்பது இதயத்தில் இருப்பதாக வேறு சிலரும் எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஆன்மாவே மனம் என்பது சிலரது கருத்து. மனம் ஒரு தனிப் பொருள்; அது மூளையில் தங்கியிருக்கிறது என்பர் சிலர். உடலிலேயே ஏற்படும் ஒரு வகை உணர்ச்சியே மனம் என்பது ஒரு சாரார் கருத்து. மனம் ஒர் அணு என்பர் சிலர். அடிக்கடி மாறுதல், இன்ப துன்பங்களை உணர்தல் முதலிய செயல்களை நோக்குங்கால், உடலினின்றும் வேறாக மனம் என ஒன்று இருப்பது தெளிவு என்பது இன்னொரு சாரார் கூறுவது. உடல் இயக்க செயல்பாடுகளைக் கொண்டு, மனம் என்னும் ஒர் ஆற்றல் இருப்பது புலனாகிறது எனப் பரிணாமக் கொள்கையினர் கூறுகின்றனர். இனி, இக்கால உளவியல் அறிஞர்களின் (psychologists) கருத்தைக் காணலாம்:-
உளம் (மனம்) ஒரு தனிப்பொருள் அன்று; உயிரி (organism) வளர்ச்சி பெறுங்கால் பல படிகளில் காணப்படும் தொழிலே உளம் - வெளியிலிருந்து வரும் தூண்டல்களுக்கு இயையத் துலங்கும் தொகுதியே உளம் என்பது உளவியல் கருத்து. தூண்டல் துலங்கல் என்றால் என்ன? இந்தக் கருத்தைத் தொழில்களின் வாயிலாகத் தெளிவு படுத்துவதற்குப் பின்வரும் விளக்கம் தேவைப்படுகிறது:-
தூண்டல் - துலங்கல்
மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐம்பொறிகளும் சுரப்பிகளும் தசையும் தண்டு வடத்தின் (spinal cord) வாயிலாக மூளையோடு தொடர்பு கொள்கின்றன. அவ்வாறே மூளையும் நேராகத் தொடர்பு கொள்ளாமல், தண்டுவடத்தின் வாயிலாகவே பொறிகள், சுரப்பிகள் முதலியவற்றோடு தொடர்பு கொள்கிறது. மூளைக்குக் கீழே தண்டுவடம் உள்ளது. அஞ்சல் நிலையமும் தொலை பேசி நிலையமும் போல, தண்டு வடமானது இடையே இருந்து, பொறிகளிலிருந்து மூளைக்கும் மூளையிலிருந்து பொறிகளுக்கும் செய்திகளை வாங்கிக் கொடுக்கிறது. எனவே, தண்டு வடத்தை, பல மறிவினைகளின் (Reflexes) இருப்பிடம் எனக் கூறலாம். இதற்குச் சில எடுத்துக் காட்டுகள் வருமாறு:-
கையில் ஒரிடத்தில் நெருப்புப் பட்டால், அந்த இடத்திலுள்ள உள் செல்லும் (Afferent) நரம்பு வழியாகச் செய்தி தண்டு வடத்துக்குச் செல்கிறது: அங்கிருந்து அச் செய்தி மூளைக்கு அனுப்பப்படுகிறது; நெருப்பினின்றும் கையை இழுத்துக் கொள்ளும்படி மூளை கட்டளை யிடுகிறது; அக்கட்டளையைத் தண்டு வடத்தின் வழியாக வெளிச் செல்லும் (Efferent) நரம்பு கைக்கு எடுத்துச் செல்கிறது; உடனே கை நெருப்பினின்றும் விலகுகிறது. இது, தண்டு வடம் செய்யும் ஒரு வகை மறிவினை (Reflex) ஆகும். இங்கே நெருப்பு ‘தூண்டல்’ (stimulus) ஆகும்; கையை இழுத்துக்கொள்வது ‘துலங்கல்’ (Response) எனப்படும்.
உள் செல்லும் நரம்புகள் (Afferent Nerves) மூளைக்கு ஐம்புல நுகர்ச்சி கிடைக்கச் செய்வதால் ‘புலன் நரம்புகள்’ (Sensory Nerves) என்றுங்கூடப் பெயர் வழங்கப்பெறும்: வெளிச்செல்லும் நரம்புகள் (Efferent Nerves) மூளையிலிருந்து உறுப்புகளுக்குக் கட்டளையை எடுத்துச் செல்வதால் கட்டளை நரம்புகள்’ (Connecting Nerves) என்றுங்கூடப் பெயர் வழங்கப்பெறும்.
இங்கே, ஐம் பொறிகளுள் ’மெய்’ என்னும் ஒரு பொறியின் ‘ஊறு’ என்னும் புலன் தொடர்பான தூண்டல் - துலங்கலை அறிந்தோம். இதே போன்று, வாய், கண், மூக்கு, செவி என்னும் மற்ற நான்கு பொறிகள் (சுவை, ஒளி நாற்றம், ஓசை என்னும் புலன்கள்) தொடர்பாகவும் தூண்டலுக்குத் துலங்கல் (Response to Stimulus) உண்டு. எடுத்துக்காட்டுகளாவன:- உணவுப் பொருள் தூண்டல் - அதனை வாங்குதலும் வாய்க்குக் கொண்டு செல்லுதலும் நாக்கு சுவைத்து உண்ணுதலும் போன்றவை துலங்கல்; எதிரே உள்ள ஒரு பொருள் தூண்டல் - கண் உற்றுப் பார்த்து அதற்கேற்பச் செயல் புரிதல் துலங்கல்; மலர் தூண்டல் - மூக்கால் மணம் அறிந்து பறித்தலும் வாங்குதலும் சூடுதலும் மோந்து பார்த்தலும் போன்றவை துலங்கல்; மணியோசை தூண்டல் - அதனைக் காதால் கேட்டு அதற்கேற்ப வேலை தொடங்குதலும் செய்தலும் போன்றவை துலங்கல். இவ்வாறு வெவ்வேறு எடுத்துக்காட்டுகள் பல தரலாம்; மழை பெய்தால் குடை பிடிக்கிறோம்; இங்கே மழை தூண்டல் - குடை பிடித்தல், விரைந்து நடத்தல் போன்றவை துலங்கல். இவ்வாறு எல்லாச் செயல்களிலும் தூண்டல் - துலங்கல் இருப்பதைக் காணலாம்.
உள்செல் நரம்புகள் (Afferent Nerves) உறுப்புகளிலிருந்து மூளைக்குச் செய்தி எடுத்துச் செல்வதாகவும், வெளிச்செல் நரம்புகள் (Efferent Nerves) மூளையிலிருந்து கட்டளைகளை உறுப்புகளுக்குக் கொண்டு செல்வதாகவும் அறிந்தோம். எனவே, நரம்பு கயிறுபோல் இருந்து மூளையையும் மற்ற பகுதிகளையும் இணைக்கிறது என்பது தெளிவு. இதனை ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகட்கு முன்பே, மாணிக்க வாசகர் என்னும் தமிழ்த் துறவி திருவாசகம் என்னும் நூலில்,
1“மொய்ப்பால் நரம்பு கயிறாக
மூளை என்பு தோல் போர்த்த
குப்பாயம் புக்கு இருக்க கில்லேன்”
என்று அறிவித்திருப்பது ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது. குப்பாயம் என்றால் சட்டை (Shirt) என்று பொருளாகும். சட்டையின் பாகங்கள் நூல் கயிற்றால் இணைத்துத் தைக்கப்படுவது போல, உடம்பு என்னும் சட்டையில் உள்ள மூளை - எலும்பு - உறுப்புகள், நரம்பு என்னும் கயிற்றால் தைக்கப்பட்டிருப்பதாக - தொடர்பு செய்யப்பட்டிருப்பதாகக் கூறியிருப்பது மிகவும் பொருத்தமாயிருக்கிற தன்றோ!
எலும்புகள் நரம்புகள் என்னும் கயிற்றால் பின்னப் பட்டிருப்பதாகத் திருத்தக்க தேவர் தமது சீவக சிந்தாமணி என்னும் நூலில் கூறியுள்ள பாடல் பகுதியும் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது:
2“என்பினை நரம்பிற் பின்னி
உதிரம் தோய்த்து இறைச்சி மெத்திப்
புன்புறத் தோலைப் போர்த்து
மயிர்புறம் பொலிய வேய்ந்திட்டு
ஒன்பது வாயில் ஆக்கி
ஊன்பயில் குரம்பை செய்தான்
மன்பெருந் தச்சன் நல்லன்
மயங்கினார் மருள என்றான்.”
என்பது பாடல்.
1. திருவாசகம், ஆசைப் பத்து -2
2. சீவக சிந்தாமணி – கனக மாலையார் இலம்பகம் -21
மற்றும், செவ்வைச் சூடுவார் இயற்றிய பாகவதம் என்னும் நூலில் உள்ள,
“இடையுறும் என்பினை நரம்பின் ஆர்த்திடாப்
புடையுறும் இறைச்சியால் பொதிந்து போக்கற
மிடைதரு தோலினான் வேயப் பட்டதோர்
உடலினை யானென உரைக்கல் ஒண்ணுமோ.”
என்னும் பாடலும் (5, 2: 31) உடலிடை நரம்புக்கு உள்ள தொடர்பை அறிவிப்பது காணலாம். இக்கால அறிவியல் தோன்றுவதற்குப் பலநூற்றாண்டுகட்கு முன்பே தமிழர்கள் நரம்பின் இயக்கத்தை அறிந்திருந்தனர் என்பதற்காக இவை ஈண்டு எடுத்துக்காட்டப் பட்டன. இனி அடுத்து முடிவுக்கு வருவோம்:
குறிப்பிட்ட ஒரு தூண்டல் - துலங்கல் தொடர்பான செயல் முழுவதும் ஒரு ‘மறிவினை அலகு’ (Reflex Unit) ஆகும். இவ்வாறு பல அலகுகள் உள்ளன. இத்தகைய தூண்டல் - துலங்கல் செயல்களின் தொகுப்பே உளம் (மனம்) ஆகும் என்பது இக்கால உளவியல் கொள்கை. எனவே, ஒருவகை உடல் இயக்கச் செயல்பாடே - குறிப்பாக மூளை இயக்கமே - மனம் என உணரப்படுகிறது. இக் கொள்கை மிகவும் பொருத்தமானதாகத் தோன்றுகிறது.
இங்கே ஒரு சாராரின் மாறுபட்ட கருத்து ஒன்றுக்குப் பதில் தரவேண்டியுள்ளது. அஃதாவது:-
மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறிகளின் வாயிலாகச் சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐம்புல நுகர்ச்சி மூளையால் நடைபெறுகிறது என்பது உண்மை; ஆனால் மனத்தின் ஈடுபாடின்றி இந்நுகர்ச்சி நடைபெற முடியாது. நாம் தேடிக் கொண்டு போகும் ஒருவர் எதிரே வருவதை நம் கண் பார்த்தாலும், மனம் வேறொன்றில் நாட்டம் கொண்டிருந்தால் வருபவரை நாம் இனம் கண்டு கொள்ள முடியாது. இது போலவே, நாம் இருக்கும் இடத்தில் திடீரெனக் கெட்ட நாற்றம் வீசினும், மனம் வேறொன்றில் ஈடு பட்டிருப்பின் கெட்ட நாற்றம் நமக்குப் புலப்படாது.நாம் அங்கேயே இருப்போம். நம்மிடம் ஒருவர் ஏதாவது சொல்லுங்கால், மனம் ஈடுபடாவிடின் அவர் சொன்னது கேட்காது-புரியாது. உண்ணுங்கால் மனம் வேறொன்றில் ஈடுபட்டிருப்பின் சுவை தெரியாது. மனம் வன்மையாக வேறொன்றில் நாட்டம் கொண்டிருப்பின், உடம்பில் எறும்பு கடித்தாலும் தெரியாது. இச்செய்திகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கின், மனம் என்னும் ஓர் உட் கருவி தனியாக இருப்பது புலனாகும் - என்பதாக ஒரு சாரார் கூறுகின்றனர். இதற்குரிய பதில் வருமாறு:
ஒரு பொறி ஏதேனும் ஒன்றில் முனைப்பாக ஈடுபட் டிருக்கும் போது, மற்ற நான்கு பொறிகளுமே அடங்கியிருக்கக் கூடும். சுந்தரர் என்னும் சிவனடியார், கடவுள் திருமேனிச் சிலையை மிக்க ஆர்வத்துடன் கண்ணால் கண்டு வணங்கிக் கொண்டிருந்தபோது, மற்ற நான்கு பொறிகளும் அடங்கிக் கண் என்னும் பொறியோடு ஒன்றியிருந்ததாகச் சேக்கிழார் என்பவர், பெரிய புராணம் என்னும் நூலின் பாடல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்:
“ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள”
(பெரிய புராணம்-தடுத்தாட் கொண்ட புராணம்-106)
என்பது அவரது பாடல் பகுதி. மூளை முனைப்பாக, ஏதேனும் ஒரு தூண்டலுக்குத் துலங்கிக் கொண்டிருக்கும் போது, மற்ற பொறிகளின் தூண்டலில் கவனம் இல்லாமல் இருப்பது இயற்கையே. இங்கே மனம் என்னும் ஒன்று தேவையில்லை. நாம் தேடிக்கொண்டு போகும் ஒருவர் எதிரே வந்து கொண்டிருப்பதை நம் கண் பார்த்தாலும், இந்தத் தூண்டலுக்கு ஏற்பத் துலங்காமல், நாம் வீட்டிலிருந்து புறப்படும்போது மனைவியோ - மக்களோ கடையில் வாங்கி வரச்சொன்னதிலேயே முனைப்பாகப் பின் நோக்கி ஈடுபட்டிருந்தால், அந்தத் தூண்டலுக்கு ஏற்பவே நாம் துலங்கிக் கொண்டிருப்போம்; அதனால் எதிரே வருபவரை இனம் கண்டுகொள்ள முடியாமற் போகிறது. இவ்வாறு எல்லாப் பொறிகளின் துண்டலுக்கும் கொள்ள வேண்டும். இது கவனக்குறைவு அன்று; இது கவன மாற்றம் ஆகும். அஃதாவது, ஒரு தூண்டலுக்குத் துலங்க வேண்டிய நேரத்தில் வேறு துண்டலுக்குத் துலங்கிக் கொண்டிருக்கிறோம் என்பது இதற்குப் பொருளாகும். இவ்வாறு ஒன்று நிகழ வேண்டிய நேரத்தில் வேறொன்று வந்து குறுக்கிட்டுத் தடுப்பதற்கு உளவியல் அறிஞர்கள் ‘பின் செயல் தடை' (Retroactive Inhibition) எனப் பெயர் வழங்குவர்.
நினைவும் மறதியும்:
ஈண்டு ‘மறதி’ (Forgetfulness) என்பது ஒப்புநோக்கத் தக்கது. ஒன்றை நினைத்திருக்க வேண்டிய நேரத்தில், அதனை விட்டு, வேறொன்றில் நினைப்பு இருப்பது தானே மறதி! எனவே, நினைவு மாற்றமே மறதி எனப்படும். நினைவும் மறதியும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் (Reciprocal) போன்றவை எனலாம். ஒன்றின்றி மற்றொன்றில்லை. ஒன்றை மறந்தால்தான் இன்னொன்றை நினைக்கலாம் - ஒன்றை நினைத்தால்தான் மற்றொன்றை மறக்கலாம். மரத்தால் செய்யப்பட்ட யானையை எடுத்துக் கொள்வோம். அதை மரம் என்று நினைக்கும்போது யானையை மறந்து விடுகிறோம் - அதை யானை என்று நினைக்கும்போது மரத்தை மறந்து விடுகிறோம். இதைத் தான், திருமூலர் தமது திருமந்திர நூலில்,
“மரத்தை மறைத்தது மா மத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை”.
(எட்டாம் தந்திரம் - பராவத்தை - 2290)
என்னும் பாடலில் மிகவும் நயமாகக் கூறியுள்ளார். 'கல்லைக் கண்டால் நாயைக் காணோம் - நாயைக் கண்டால் கல்லைக் காணோம்' - என்று கூறும் முதுமொழி, கல்லால் ஆன நாயின் தொடர்பாக எழுந்ததே.
இந்தக் கருத்தைத் திருவள்ளுவர் என்னும் தமிழ் அறிஞர் திருக்குறள் என்னும் நூலின் பாடல் ஒன்றில் மிகவும் நுட்பமாகப் பொதித்து வைத்துள்ளார். மனைவியைப் பிரிந்து வெளியூர் சென்றிருந்து திரும்பிய கணவன், மனைவியை நோக்கி, ‘உன்னை நான் அடிக்கடி நினைத்தேன்’ என்று கூறினானாம், உடனே அவள், ‘நீங்கள் என்னை அடிக்கடி மறந்திருந்ததனால் தானே அடிக்கடி நினைக்க வேண்டி நேர்ந்தது; ஏன் அவ்வாறு மறந்தீர்கள்?' என்று கூறி, அவனைத் தழுவாமல் ஊடல் கொண்டாளாம்.
“உள்ளினேன் என்றேன் மற்று
என் மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக்க னள்". (1316)
(திருக்குறள் - காமத்துப்பால் புலவி நுணுக்கம்)
என்பது அப்பாடல். மனைவி என்னும் தூண்டலுக்குத் துலங்காமல், வேறொன்றிற்குத் துலங்கியதை இது குறிக்கின்றது. எனவே, மனம் ஒன்று தனியே இருப்பதாகவும், அது வேறு எங்கேயோ வேறு எதிலோ ஈடுபட்டிருப்பதாகவும், சிலர் கூறுவது பொருந்தாது. அன்னார் வேறொன்றும் கூறுவர்:
திறமை மிக்க ஒருவர் ஒரே நேரத்தில் பல செய்திகளுக்கு ஈடு கொடுக்கிறார். ஒரே நேரத்தில் எட்டுச் செய்திகளைக் கவனிப்பதற்கு அட்டாவதானம் என்றும், பத்துச் செய்திகளைக் கவனிப்பதற்கு 'தசாவதானம்' என்றும், பதினாறு செய்திகளைக் கவனிப்பதற்குச் ‘சோடசாவதானம்’ என்றும் பெயராகும். மனம் என்னும் ஒன்று தனியே இருப்பதால்தான், அது, எல்லாச் செய்திகளிலும் - செயல்களிலும் விரைந்து மாறி மாறி ஈடுபாடு கொண்டு பதில் தர முடிகிறது - என்று அவர்கள் கூறுகின்றனர். இதற்குரிய பதிலாவது: மனம் என ஒன்று தனியே இருந்து கொண்டு விரைந்து மாறி மாறிச் செயல் படுவதாக இதற்குப் பொருள் இல்லை; அட்டாவதான மாகிய எட்டுத் தூண்டல் துலங்கல்களும், தசாவதானமாகிய பத்துத் தூண்டல் துலங்கல்களும், சோடசாவதானமாகிய பதினாறு துண்டல் துலங்கல்களும் உடலுக்குடன் மிகவும் விரைந்து விரைந்து நடைபெறுகின்றன என்பதே இதற்குப் பொருளாகும். அனைவராலும் இது செய்ய வியலாது. ஆற்றல் மிக்க ஓரிருவரே இதனைச் செய்ய வியலும். அவர்களும் சில நேரத்தில் தவறிப் போவதுண்டு. எனவே, மனம் எனத் தனியாக ஒன்றும் இல்லை; உடற் கூற்றின் ஒருவகை இயக்கமே மன உணர்வாகும்.
மாற்றுக் கொள்கையினர், இன்னும் நிறைவு கொள்ளாமல், மற்றொரு மறுப்பு கூறலாம்; அஃதாவது: மனிதன், படுக்காமல் - தூங்காமல், விழித்துக் கொண்டு செயலாற்றும் போது, பல தூண்டல்கள் இடையிடையே ஏற்பட, அவற்றிற்குத் துலங்கிக் கொண்டிருக்கலாம் - என்பதையாவது ஒத்துக் கொள்ளலாம். ஆனால், அவன் இரவில் - இருளில், தனியறையில், தனியாகப் படுத்துக் கொண்டிருக்கும்பொழுது, நெடு நேரம் தூக்கம் வராமல், எதை எதையோ மணிக் கணக்கில் மாறி - மாறி எண்ணிக் கொண்டிருக்கின்றானே - இது எவ்வாறு நிகழ்கிறது? எந்தத் தூண்டலும் அங்கே இல்லாமலேயே, பல எண்ணங்களின் மேல் எவ்வாறு துலங்கிக் கொண்டிருக்கிறான்? எனவே, மனம் என ஒன்று இருந்து கொண்டே அவ்வாறு செய்து கொண்டிருக்கிறது என்பது புலனாக வில்லையா? - என்பதாக, மாற்றுக் கொள்கையினர் வினவலாம். இதற்குப் பதில் வருமாறு:
மூளையில் பல மடிப்புகள் உள்ளன. மனிதன் ஐம்பொறி புலன்களால் அறிந்த செய்திகள் அனைத்தும் அவ்வப்போது மூளையில் பதிவாகி விடுகின்றன. மேலோடு கவனம் செலுத்திய செய்தி, மேலோடு மூளையில் பதிவாகிறது; இது விரைவில் மறந்து போகக் கூடும் - விரைவில் நினைவுக்கு வராமலும் இருக்கக் கூடும். ஆனால், ஆழ்ந்து கவனிக்கும் செய்தி மூளையில் நன்றாகப் பதிவாகிறது; விரைவில் மறக்காது - விரைவில் நினைவுக்கு வரும், தாளின் மீதோ - வேறு எதன் மீதோ பல முறை மேலும் மேலும் எழுதினால் ஒன்றும் படிப்பதற்குப் புரியாது. ஒருமுறை எழுதியதை அழித்தால்தான், மறுமுறை எழுதுவது புரியும். அதேபோல, நாடாவில் (டேப் ரிகார்டர் -Tape Recorder) ஒலியை ஒரு முறை மட்டும் பதிவு செய்தால்தான், மீண்டும் அவ் வொலியைக் கேட்க முடியும். இன்னொரு முறை அதிலேயே ஒலியைப் பதிவு செய்ய வேண்டுமெனில், முதலில் செய்த பதிவை அழித்த பிறகே மறு பதிவு செய்ய முடியும் - கேட்கவும் முடியும். நம் மூளை மேற்கூறிய பொருள்கள் போன்றதன்று; ஆண்டுக் கணக்கில் புதிய புதிய செய்திகள், மேலும் மேலும், மூளையில் எத்தனை முறை பதிவாகிக் கொண்டிருந்தாலும், அத்தனை செய்திகளும், குழப்பம் இன்றி, எப்போது வேண்டுமானாலும் நினைவுக்கு வரும்; எல்லாம் தெளிவாகவே இருக்கும். இத்தகைய வியத்தகு ஆற்றலும் அமைப்பும் மூளைக்கு உண்டு.
எனவே, ஒருவன் இரவில் இருளில் - தனி அறையில் - தனியாகப் படுத்துக்கொண்டு, மூளையில் முன்பு பதிவாகியுள்ள எத்தனை செய்திகளை மாறி - மாறி நினைத்தாலும், அத்தனை செய்திகளும் மாறி - மாறி நினைவுக்கு வந்து கொண்டேயிருக்கும். இங்கே தூண்டல் எதுவும் இல்லையே என்று வினவலாம். ஏன் தூண்டல் இல்லை! அவன் அன்றைக்கு அனுபவித்தவை தொடர்பான சூழ்நிலையும், அதன் விளைவாக மறுநாளோ - எதிர் காலத்திலோ செய்யவேண்டியவை தொடர்பான சூழ்நிலையும், அவனுக்கு அப்போதிருக்கும் நிலைமை தொடர்பான சூழ்நிலையும், துக்கம் வராமல் ஏற்படும் தொல்லை காரணமான சூழ்நிலையும், இன்ன பிறவும், துலங்கல்களாக இருந்து கொண்டு, அவனைப் பலப்பல எண்ணங்களின் மீது துலங்கச் செய்கின்றன. எனவே, இதற்கு மனம் என ஒன்று தனியாக இருக்க வேண்டியதில்லை. ஆகவே, எவ்வாறு நோக்கினும், உடற் கூற்றின் ஒருவகை இயக்கமே - சிறப்பாக முளையின் இயக்கமே மன உணர்வாகும் என்பது வெளிப்படை.
மக்களாகிய உயர்திணை உயிரிகட்கேயன்றி, அஃறிணை, உயிரிகட்கும் துண்டல்-துலங்கல் செயல்பாடுகள் இருப்பதைப் பரக்கக் காணலாம். எனவே, அவையும் மன உணர்வு உடையன என்பது விளங்கும். அங்ஙனமாயின், அஃறினை உயிரிகளும் மக்களைப் போல் ஏன் சிறப்புச் செயல்கள் புரியவில்லை எனில், அவற்றிற்கு மக்களைப் போல், கைகள் உள்ள உடல் அமைப்பு இல்லை - என்பதே அதற்குரிய காரணமாகும். எனவே, ‘கையே மனிதன்' என்னும் கொள்கை உறுதியாகிறது.
முடிவான கருத்து
மனம் என ஒன்று தனியாக இல்லை - மூளையின் இயக்கமே மனம் என்ப்படுகிறது - என்பது என் கருத்து. 1970ஆம் ஆண்டு என எண்ணுகிறேன் - புதுவைச் சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தில் ஒருநாள் சொற்பொழிவு செய்தபோது மனம் எனப்படுவது மூளையின் இயக்கமே என்றேன். எனக்குப் பின்னால், நன்றி கூற வந்த ஒருவர் என் கருத்தை மறுத்துப் பேசினார். பின்பு நான் அவரை மறுத்தேன். இவ்வாறு சிறிது நேரம் இருவரும் மாறி மாறி மறுப்பு தெரிவித்துக் கொண்டிருந்தோம். அப்போது, சங்கத்தின் நிறுவனர், எனக்கு மறுப்பு தெரிவித்தவரை அமரும்படிச் சொல்லி விட்டார். அதோடு இது முடிந்தது. நான் பல இடங்களில், இது தொடர்பான வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் எனது கருத்தைக் கூறிவந்திருக்கிறேன்.
1982ஆம் ஆண்டு, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் தொகுப்பியல் துறைக்குத் (Department of compilation) தலைவராகவும் பேராசிரியராகவும் அமர்த்தப் பெற்றேன் யான். அங்கு அடிக்கடிப் பலதுறைகள் பற்றிக் கருத்தரங்குகள் நடைபெறும் ஒரு நாள் மருத்துவத் துறைக் கருத்தரங்கு நடைபெற்றது. இதில், பல்வேறு மருத்துவத்துறைப் பிரிவிலும் வல்லுநர்கள் பலர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
எனக்குப் பெயர் நினைவில்லை. ஒர் உயர்தர மருத்துவ அறிஞர், பல்வேறு கருத்துகளைக் கூறிக்கொண்டிருந்த சொற்பொழிவின் நடுவிலே, ஏதோ ஒரு தொடர்பு பற்றி, 'மூளையின் இயக்கமே மனம்’ என்னும் கருத்தை உதிர்த்தார். யான் எனது கருத்தை ஒத்து நோக்கி மகிழ்ச்சி யுற்றேன்.
எனவே, மனம் என்பது, உடலின் உள்ளே உள்ள ஓர் உள்ளுறுப்பு அன்று; மூளையிலிருந்து தோன்றும் ஒரு வகை இயக்கமே மனம் - மூளையே மனத்தின் தோற்றம் - அதாவது, மனம் தோன்றும் இடம் மூளையே என்பது உறுதியாகிறது.
2. உயிரினும் உயர்ந்தது
ஒழுக்கமே மிகவும் உயர்வைத் தரவல்லது; ஆதலின் ஒழுக்கத்தை உயிரினும் சிறந்ததாக ஒம்பிக் காக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். ஈண்டு மற்றையவற்றினும் ஓம்ப வேண்டும் என்னாது, உயிரினும் ஓம்பவேண்டும் என்று உயிரைக் குறிப்பிட்டுள்ளதில் உள்ள நயத்தை ஊன்றி நோக்க வேண்டும். மக்கள் எல்லோருமே தத்தம் உடைமைகளைப் பாதுகாப்பதில் கண்ணுங்கருத்துமாய் இருப்பதைக் காண்கின்றோம். அவற்றுள்ளும், இழந்து விட்டாலும் மீண்டும் எளிதில் கிடைக்கக் கூடிய உடைமையைக் காப்பதற்குச் செலுத்தும் விழிப்பை (கவனத்தை) விட, இழந்தால் எளிதில் கிடைக்காமல் - அரிதிற் கிடைக்கக்கூடிய உடைமையைக் காப்பதற்குச் செலுத்தும் விழிப்பு மிகப் பெரிதாகும். தெளிவாகச் சொல்வோமானால், பொருளின் விலையும் அதைப் பெறும் முயற்சியும் குறையக் குறைய மக்களின் விழிப்பும் குறைந்துகொண்டே போகும்; விலையும் பெறும் முயற்சியும் பெருகப் பெருக மக்களின் விழிப்பும் பெருகிக்கொண்டே செல்லும். எடுத்துக்காட்டாக: மண்பாண்டம், பித்தளைப்பாண்டம், செப்புப்பாண்டம், வெள்ளிப்பாண்டம், பொன்பாண்டம், வைர அணிகள் - இவை முறையே ஒன்றிற்கொன்று பெருமதிப்புடையன வாதலின் இவற்றைப் போற்றிக் காப்பதில் விழிப்பும் பெருகிக் கொண்டே செல்கின்றதல்லவா? இது முதலாவது.
இரண்டாவதாக, நம் உடலைவிட்டுப் பிரிக்கக் கூடிய - மேற்கூறிய - இன்னும் ஏனைய உடைமைகளை விட, நம் உடலைவிட்டுப் பிரிக்கமுடியாத கை, கால், கண் முதலிய உறுப்புகளைக் காப்பதில், மேலும் மிகமிகப் பெரிய விழிப்பு செலுத்துகிறோம். (இவ்வுறுப்புகள் பிரிக்க முடியாதவை யென்றால் வெட்டியெடுக்க முடியாதவை என்பது பொருளன்று; ஆடையணிகலன்களைப் போல் உடம்போடு கூட்டவும், பின்பு பிரிக்கவும் - பின்பு கூட்டவும் முடியாதவை என்பதே பொருள்.) ஏனைய உடைமைகளை இழந்து விட்டால், அரிய விலை தந்து - அரும்பாடுபட்டாவது திரும்பப் பெற்றாலும் பெறலாம். ஆனால் உடலுறுப்புகளை யிழந்து அவற்றைத் திரும்பப் பெற முடியாதன்றோ? அதனாலேயே உறுப்புகளை ஏனைய உடைமைகளினும் மிகுதியாகப் போற்றுகிறோம்.
மூன்றாவதாக, - ஒர் ஊரில் எதிரி திடீரென்று படையெடுத்துப் போர்புரியும்போது, மறவர்கள் (வீரர்கள்) தவிர மற்றையோர் ஊரைவிட்டு ஒடுகின்றனர், ஒடும்போது தம் உடைமைகளையெல்லாம் அறவேவிட்டு ஒடுகின்றனர். ஒடும் வழியில் ஒரு படைபட்டுக் கை வெட்டுண்டு விழுந்தாலும் அதைப்போட்டு விட்டு ஒடுகின்றனர். கால் வெட்டுண்டாலும், முடிந்தவரை தரையில் ஊர்ந்து ஊர்ந்து நகர முயல்கின்றனர். இங்ஙனம் தம் உடைமைகள், உடலுறுப்புகள் இவற்றையெல்லாம் மனமார விட்டுவிட்டு வெளியில் ஒடுகின்றார்களே! - எதைக் காப்பதற்காக இவற்றையெல்லாம் விட்டுவிட்டு ஒடுகின்றார்கள்? தம் உயிரைக் காப்பதற்காக வன்றோ?
உடைமைகள் போனால் வேறு உடைமைகள் தேடிக் கொள்ளலாம். கை கால்கள் போனால் பொய்க் கை - பொய்க் கால் வைத்துக்கொண்டு வழக்கம்போல் எதையும் செய்யலாம். கண் போனாலும் வேறு கண் வைக்கப் பெற்றுத் திரும்பப் பார்வையைப் பெறலாம். இவற்றை யெல்லாம் இக்கால விஞ்ஞானிகள் செய்து முடிக்கின்றார்கள் அல்லவா? உயிர் போனால் திரும்பி வருமா? வேறொருவருடைய உயிரைத்தான் பொருத்த முடியுமா? அதனால் உடைமைகள் - உறுப்புகள் ஆகியவற்றினும் உயிர் சிறந்ததென்பது புலப்படு மன்றோ? மேலும் உடைமைகளே யில்லாத கோடிக்கணக்கான ஏழையெளியவர்கள் உலகில் வாழ்வதைக் காண்கின்றோமே? உடலுறுப்புகளை இயற்கையாகவோ - செயற்கையாகவோ இழந்துவிட்ட கூன், குருடர், நொண்டி, முடவர் எண்ணற்றவர்கள் உலகில் வாழக் காண்கின்றோமே! ஆனால் உயிர் போனபின் வாழ்ந்தவர்களை என்றேனும் எங்கேனும் யாரேனும் பார்த்ததுண்டா? உயிர் போனபின் பிணம் என்றல்லவோ பெயர்? அதன் நிலைதான் எல்லோர்க்கும் தெரியுமே! இத்தகைய காரணங்களினாலேயே, மற்றையவற்றைக் குறிப்பிடாமல், உயிரினும் ஓம்பப்படும் என்று உயிரையே குறித்தார் நம் வள்ளுவர்.
மற்றும், ஆசிரியர் உயிரைப்போல் ஒழுக்கம் ஓம்பப்படும் என்று கூறி உயிரும் ஒழுக்கமும் ஒரு நிலையுடையன என்று கூடக் கூறவில்லை; உயிரைக் காட்டிலும் ஒழுக்கம் ஓம்பப்படும் என்று கூறி உயிரினும் உயர்ந்த பொருளாக ஒழுக்கத்தைச் சிறப்பித்துள்ள மாட்சி மிகப் பாராட்டுதற் குரியதாகும். எனவே, உடைமைகளினும் சிறந்தன உடலுறுப்புகள், உடலுறுப்புகளினும் சிறந்தது உயிர், உயிரினும் சிறந்தது ஒழுக்கம் என்றாயிற்று. ஆகா! இதனினும் ஒழுக்கத்தின் உயர்வைச் சிறப்பித்தவர் எவர்? சிறப்பிக்கத்தான் முடியுமா?
நிற்க, ஒழுக்கம் உயிரினும் சிறந்தது என்பது எவ்வாறு பொருந்தும்? ஒழுக்கம் மட்டும் இருந்து உயிர் போய்விட்டால் மட்டும் உலகில் வாழ முடியுமா? என்பவற்றையும் ஆராய வேண்டும். ஏசுநாதர் போன்றோர் எதற்காக உயிரை விட்டனர்? உலகில் ஒழுங்கு முறையை (ஒழுக்கமுறையை) நிலை நாட்டவல்லவா? தாம் மேற்கொண்ட செயல்களால் தம் உயிருக்கு ஊறு நேரிடலாம் என்பதை அவர்கள் முன் கூட்டியே உணராதவர்களா? உணர்ந்து வைத்தும், உயிரினும் ஒழுக்கத்தைப் பெரிதாக மதித்தே - ஒழுங்கை நிலை நாட்டவே உயிரை விட்டார்கள் அன்றோ? கயவன் ஒருவனிடம் சிக்கிக் கொண்ட கற்புடைய மங்கை அக்கயவனால் தான் கற்பழிக்கப்படக்கூடிய நிலை நெருங்கியபோது தற்கொலை செய்து கொள்கின்றாளே! அது ஏன்? உயிரினும் ஒழுக்கத்தைப் பெரிதாக மதித்தமையினாலன்றோ?
இவர்களெல்லோரும் உயிரினும் ஒழுக்கத்தை மதித்து உயிர் விட்டதனால், புகழுடம்புடன், எல்லோராலும் பாராட்டப் பெற்று இன்றைக்கும் வாழ்கிறார்கள்-இனியும் என்றும் வாழ்வார்கள் அல்லவா? எனவே, ஒழுக்கமின்றி உயிர் வாழ்பவர்கள் பலராலும் தூற்றப்படுதலின் அவர்களே உயிர் வாழாதவர்கள்; ஒழுக்கத்திற்காக உயிர் விட்டவர்கள் பலராலும் போற்றப்படுதலின் அவர்களே உயிர் வாழ்பவர்கள் என்பது வெளிப்படை. எனவே,
“ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.”
பலர் பல தான தருமங்களைப் பற்றியும், சில பயன் உள்ள செயல்களைப் பற்றியும், அவற்றால் உண்டாகக் கூடிய பயன்களைப் பற்றியும் நன்கு தெரிந்து கொண்டு, அவற்றைக் கடைப்பிடித்தும் வரலாம். ஆனால் அவர்களிடம் நல்லொழுக்கம் இல்லாமலும் இருக்கலாமல்லவா? இந்நிலை கூடாது. புகழை விரும்பியும், முத்தியை நம்பியும் பிறர்க்கு வாரி வழங்குபவர்கள் பலர், தம் சொந்த ஒழுக்கத்தில் மிகத் தவறியிருப்பதைக் காண்கின்றோ மல்லவா?
இவர்களை மனத்தில் வைத்துதான் திருவள்ளுவர் "மக்களே! நீங்கள் கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பீர்களேயானால், மாட்டை யடித்துச் செருப்புத் தானம் செய்வீர்களாயின், தாய் தண்ணீரின்றித் தவிக்கக் கும்பகோணத்தில் கோதானம் கொடுப்பீர்களானால், இன்னும் இவற்றைப் போல் உள்ளுக்குள் தகாதன செய்துகொண்டு - வெளியில் சில நல்ல காரியங்களைச் செய்வீர்களானால் அவற்றால் ஒரு சிறிதும் பயனில்லை. அவையெல்லாம் துணையாகா. எல்லாவற்றிற்கும் அடிப்படையான நல்லொழுக்கமே நற்றுணையாவது” என்று சுட்டாமல் சுட்டியுள்ளார் -
“பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அ.தே துணை.”
என்ற குறளால்!
அடுத்து, சாதிமுறை பற்றி ஆசிரியர் கூறும் கருத்து ஈண்டுக் கருதற்பாற்று.
“ஒழுக்க முடைமை குடிமை யிழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்.
என்னுங் குறளில் சாதி என்பது என்ன என்பதை வள்ளுவர் தெள்ளத்தெளியத் தெரிவிக்கிறார். ஒழுக்கமுடைமையால் ‘பார்ப்பார்’ முதலிய வகுப்பினர் உயர் குலத்தாராகப் பகுக்கப்பட்டார்கள் என்றும், ஒழுக்கமின்மையால் பறையர் முதலிய வகுப்பினர் தாழ்குலத்தாராகப் பகுக்கப்பட்டார்கள் என்றும் சில ஆராய்ச்சியறிவிலிகள் உளறுகின்றனர். மேலும் சிலர், உயர் குலப் பார்ப்பான் ஒழுக்கம் தவறி விட்டால் தாழ் குலத்தானாவான் என்றும், தாழ்.குலப் பறையன் ஒழுக்கம் உயர்ந்து விட்டால் உயர்குலத்தானாவான் என்றும் குளறுகின்றனர். இக் கருத்துகள் எல்லாம் தவறுடையவை.
பார்ப்பான்-பறையன் என்னும் சாதிப் பிரிவினை, அன்று ஒழுக்கமுடைமையையும் இன்மையையும் கருதிப் பிரிக்கப்பட்டதன்று, அவரவர்கள் செய்யும் தொழிலைக் கருதியே தொழிலுக்கேற்ற பெயர்கள் தரப்பட்டன. எடுத்துக் காட்டாக, - கணக்கு வேலை செய்பவரைக் கணக்குப் பிள்ளை யென்றும், பாடம் கற்பிப்பவரை ஆசிரியர் என்றும், ஊர் நாட்டாண்மை செய்பவரை நாட்டாண்மைக் காரர் என்றும், சமையல் செய்பவரைச் சமையல்காரர் என்றும் இப்பொழுதும் நாம் அழைக்கின்றோம் அல்லவா? இதே போலத்தான் பண்டைக் காலத்தில் யார் யார் எவ்வெத் தொழில் செய்தனரோ, அவ்வத்தொழிலால் அவ்வவரைப் பெயரிட்டு அழைத்தனர். செந்தண்மையாகிய அந்தண்மை பூண்டு ஒழுகுபவன் (பார்ப்பான்) அந்தணன், பறையடிப்பவன் பறையன் என இங்ஙனம் அழைத்து வந்தார்கள். எனவே, ஒழுக்கம் குறித்து சாதிப் பிரிவினை ஏற்படவில்லை; தொழில் குறித்தே ஏற்பட்டது என்னும் கருத்தினை, நம் திருவள்ளுவர்,
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்”
என வெட்ட வெளிச்சமாக அறிவித்துவிட்டார்.
உண்மை இங்ஙனமிருக்க, “ஒழுக்கமுடைமை குடிமை” என்னும் இக்குறளுக்கு 'ஒழுக்கமுடைமை உயர் சாதித் தன்மை ஒழுக்கமின்மை இழி சாதித் தன்மை’ என்னும் கருத்தில் உரையாசிரியர்கள் பலரும் உரை பகர்ந்திருப்பதும், பரிமேலழகர் இக்குறளில் வருணத்தை இழுத்து மாட்டியிருப்பதும் அறியாமையும் வருந்தத்தக்கதுமாகும். “ஏன்? இவ்வுரையாசிரியர்கள் மேல் என்ன தவறு? “ஒழுக்கமுடைமை குடிமை-இழுக்கம் இழிந்த பிறப்பு’ என்று வள்ளுவர்தான் வெளிப்படையாகச் சொல்லியிருக்கின்றாரே - அதைத்தான் இவர்களும் எழுதினார்கள். இது சரியில்லையென்றால் எது சரி?” என்று நம்மைச் சிலர் வினவலாம். ஆதலின் இக்குறளின் உண்மைக் கருத்தைத் தெளிவுறுத்துவோம்:—
முதலியார் என்னும் ஒரு சாதியை எடுத்துக் கொள்வோம். அம்முதலியாருள்ளும் பல முதலியார் பிரிவுகள் இருக்கலாம். அவற்றுள் ஏதேனும் ஒரு பிரிவு முதலியார் சாதியினரை ஈண்டு எடுத்துக் கொள்வோம். அவர்களே தம் பிரிவுச் சாதிக்குள் - தம் உறவினருக்குள் உயர் சாதி - தாழ் சாதி கூறுவதை நாம் கண்கூடாகக் காணலாம். எங்கேயும் அப்பால் செல்ல வேண்டியதில்லை; ஒரு சாதிக் கணவன் - மனைவியையே எடுத்துக்கொள்வோம். கணவன் குடும்பத்தாரும், மனைவியின் தாய்வீட்டுக் குடும்பத்தாரும் ஐந்தாறு தலைமுறைகளாகப் பெண் கொடுக்கல் - வாங்கல் (சம்பந்தம்) செய்துவந்திருப்பார்கள். இங்ஙனம் வழிவழி உறவின் மேல் மணந்து கொண்ட இக்கணவன் மனைவியருக்குள் குடும்பத்தில் ஒரு சமயம் சிறு சச்சரவு ஏற்படுவதுண்டு. அப்போது கணவன், தன் மனைவி தவறு செய்ததாக எண்ணியபோது அத் தவறைச் சுட்டிக்காட்டி, ‘நீ என்னடி செய்வாய்? உன்னைக் குறை சொல்லிப் பயன் இல்லையடி, இது உன் சாதிப் புத்தியடி’ என்று வைகிறான். அதுபோலவே, மனைவியும் தன் கணவனை நேரில் சொல்வதுண்டு. சில பெண்கள் தம் பிள்ளையை நோக்கி, இது உங்கள் குலாசாரம் - சாதி வழக்கம் என்று கூறித் தம் கணவர் குலத்தைச் சுட்டிப் பேசுவதுண்டு. இவற்றையெல்லாம் நாம் நேரில் கண்டிருக்கின்றோ மல்லவா?
அப்பப்பா! ஒரு சாதி ஆணும் - ஒரு சாதிப் பெண்ணும் மணந்து வாழ்கின்ற ஒரு குடும்பத்திலேயே கணவன் உயர்ந்த சாதி - மனைவி தாழ்ந்த சாதி, அல்லது கணவன் தாழ்ந்த சாதி - மனைவி உயர்ந்த சாதி, இன்னும், தாய் ஒரு சாதி - சேய் (பிள்ளை) ஒரு சாதி யென்றால், பார்ப்பான் - பறையன் முதலிய சாதிகட்குள் எது உயர்ந்தது? எது தாழ்ந்தது?
எனவே இக்குறள், பலவகைப்பட்ட வெவ்வேறு சாதியினரின் சாதி ஒழுக்கமுடைமை.இன்மைகளைப் பற்றிப் பொதுவில் கூறவில்லை. வெவ்வேறு சாதியினராயினும், ஒரே சாதியினராயினும், தலைமுறை தலைமுறையாக உறவினராயிருந்தாலும் சரியே! எவர்குடி (குடும்பம்) ஒழுக்கமுடைய குடியோ அவர்குடி உயர்குடியாகும், எவர்குடி ஒழுக்கமற்ற குடியோ அவர்குடி தாழ்குடியாகும் - இது பரம்பரையாகத் தொடர்வதும் உண்டு. இந்த அடிப்படை யிலேயே ஒழுக்கமுடைமை குடிமை - இழுக்கம் இழிந்த பிறப்பு என்று திருவள்ளுவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏனெனில், பார்ப்பனர்க்குள்ளும் பறையர்க்குள்ளும் நல்லொழுக்க முடையவரும் உள்ளனர், தீயொழுக்க முடையவரும் உள்ளனர். நல்லொழுக்க முடையோரெல்லாம் நற்குடியினர், தீயொழுக்க முடையோரெல்லாம் இழி குடியினர். இவர்களிடையே குணத்தைக் கொண்டுதான் உயர்குடி, தாழ்குடி பகுக்க வேண்டுமே தவிர, தொழிலுக் கேற்பவுள்ள தூய்வை - சுகாதாரச் சூழ்நிலை என்பவற்றைக் கொண்டு பொதுவில் உயர்குடி, தாழ்குடிகளைப் பிரிக்கக் கூடாது. அண்ணன் தம்பிகளுக்குள்ளேயே அரசர்ங்க அலுவல் பார்க்கும் அண்ணனுக்கும், வயல்வெளிச் சேற்றில் வேலை பார்க்கும் தம்பிக்கும் உருவத்தில் - தூய்மையில் - நாகரிகத்தில் வேற்றுமை இருக்கத்தானே செய்யும்? இவ்வேற்றுமையைக் கொண்டு இவர்கட்குள் உயர்வு தாழ்வு கற்பிக்க முடியாதன்றோ? இவருள்ளேயே தம்பி நற்குண நற்செய்கை யுடையவனாயிருப்பின் அவன் உயர்ந்தவன்; அண்ணன் தீக்குண - தீச் செய்கை யுடையவனாயிருப்பின் அவன் தாழ்ந்தவன். இதுபோலவே பார்ப்பனர்க்கும் பறையர்க்கும் இடையேயும் கொள்க. மற்றும், அடுத்த குறளும் ஈண்டு ஒப்பு நோக்கி ஆராயத்தக்கது.
“மறப்பினு மோத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும்.”
பார்ப்பான், தனக்குரிய தொழிலாகிய ஒதுதல் - ஒதுவித்தலை மறந்தாலும் மறக்கலாம்; நல்லொழுக்கத்தை மட்டும் மறந்து கைவிடலாகாது. ஏனெனில், ஒதுதலை விட்டால் மீண்டும் ஒதிக்கொள்ளலாம். அது குறித்து அவனை அவ்வளவாக இகழ மாட்டார்கள். ஆனால் முதலில் தீயொழுக்கத்தில் நடந்துவிட்டால், மீண்டும் நல்லொழுக்கத்தைக் கடைப்பிடிக்க முயன்றாலும் கெட்டபெயர் கெட்ட பெயர்தானே? அதனால்தான் ஒதுதலைவிட ஒழுக்கத்தில் விழிப்பு மிகவேண்டும் என்றார் ஆசிரியர். இன்னும் இதனை மற்றொன்றாலும் அறியலாம். அது வருமாறு: திருவள்ளுவர் ‘கல்வி' என்னும் பகுதியில்,
“எண் என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண் என்ப வாழும் உயிர்க்கு”
“கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்”
எனக் கல்வியைக் கண்ணினும் சிறந்ததாகக் கூறியுள்ளார். இவ்வதிகாரத்து முதற்குறளில், ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்று கூறியுள்ளார். எனவே, கண்னைவிடத் கல்வியையும் உயிரையும் விட ஒழுக்கத்தையும் போற்றிக் கடைப்பிடிக்க வேண்டும் என்றாயிற்று. ஆயின், கண் இன்றி வாழமுடியும்-உயிரின்றி வாழமுடியுமா? அது போலவே, கல்வியின்றி வாழ்ந்தாலும் ஒழுக்கமின்றி வாழக்கூடாது-எனவே ஒத்தினும் (ஓதுதலினும்) ஒழுக்கமே மேலானது என்பது தெளிவு. இக்கருத்தைத்தான் ஆசிரியர் இக்குறளில் குறிப்பாகக் (தொகுத்து) கூறியுள்ளார். நிற்க—
ஒழுக்கம் குறித்தே சாதிப் பிரிவினை ஏற்பட்டது என்னும் கருத்துடையோர், தம் கொள்கைக்கு ஆதாரமாக இக்குறளை எடுத்துக் காட்டலாம். அஃதாவது பார்ப்பான் ஒழுக்கம் குன்றினால் பிறப்புக்கெடும் என்று வள்ளுவர் கூறியிருப்பதால், ஒழுக்கத்தைக் கொண்டுதான் பார்ப்பான். பறையன் என்ற சாதிகள் வகுக்கப்பட்டன என்பது விளங்க வில்லையா?- என்று அவர்கள் சொல்லலாம். இக்குறளின் கருத்து இஃதன்று. ஒழுக்கத்தைக் குறித்தல்லாமல், தொழிலைக் குறித்தே சாதி வகுக்கப்பட்டது என்னும் நற் கருத்துக்கு, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்னும் குறளோடு இந்தக் குறளும் ஆதாரமாகும்.
எங்ஙன மெனின் —
வள்ளுவர் இக்குறளில், ‘பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்’ என்று மட்டும் சொல்லவில்லை; ‘மறப்பினும் ஒத்துக் கொளலாகும்’ என்றும் கூறியிருப்பதை ஆழ்ந்தாராய வேண்டும். வேதம் ஒதலை மறந்தாலும் மறக்கலாம், ஒழுக்கத்தை - மறக்கலாகாது என்பதிலிருந்தே, வேதம் ஒதுதலும் மிக மிக இன்றியமையாதது என்பது புலப்படும். திருடரிடம் அகப்பட்டுக்கொண்ட வீரனொருவன், ‘என் உயிரைவிட்டாலும் விடுவேன் இந்தப் பொருளை மட்டும் விடமாட்டேன்' என்கிறான். அப்படியென்றால், உயிர் விடக்கூடாத பொருள்-எல்லாவற்றினும் உயர்ந்த பொருள் என்பது தெரிகிறதன்றோ அதுபோலவே வேதமோதுதலும் மறக்கக் கூடாத ஒன்று-எல்லாவற்றைக் காட்டிலும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று என்பதும் புலப்படும். ஏனெனில், அவ்வேதம் ஒதிப் பிழைக்கும் தொழிலைக் கொண்டுதானே, அது செய்பவன் மறையவன் (பார்ப்பான்) என்று அழைக்கப் பட்டான்? ஆதலின் என்க!
எனவே பார்ப்பான், தான் பார்ப்பன சாதியான் என்று அழைக்கப் படுவதற்கே காரணமான-பிழைப்புத் தொழிலான வேத மோதலை மறக்கக்கூடாது; தப்பித்தவறி மறந்தாலும் மீண்டும் ஒதிக்கொள்ளலாம் - அல்லது வேறு தொழில் செய்தாவது பிழைத்துக் கொள்ளலாம். ஆனால் மனித இனத்திற்கே பொதுவாக இருக்க வேண்டியதான ஒழுக்கம் மட்டும் குறையலாகாது. அங்ஙனம் குறைந்தால், உயர்ந்தவனாகத் தன்னை எண்ணிக்கொண்டிருக்கின்ற அவனது பிறவியும் பயனற்றதுதான் - இழிந்தது தான்.
அதுமட்டுமா? பொறாமைக் குணம் உடையவன் பிறருடைய உடைமை, புகழ் முதலியவற்றைக் கண்டு கண்டு, நெஞ்சம் புழுங்கிப் புழுங்கிச் சாவா னாதலாலும், அவன் ஒன்றும் செய்ய முடியா தாதலாலும், பிறரது உடைமையையோ - புகழையோ பொறாமையால் கெடுக்க முயன்ற போது பிறரால் தாக்கப்படுவா னாதலாலும் அவனிடத்தில் எத்தகைய நல்வளர்ச்சியும் இருக்க முடியாது; அதுபோலவே, ஒழுக்கமில்லாதவனும் மக்களிடையே எத்தகைய உயர்வையும் அடைய முடியாது. அவனுக்குக் கிடைக்கக்கூடிய பரிசு பழியே யாகும்.
ஒழுக்கக் கேட்டால் உலகில் பல தீங்குகள் நேருவதை அறிந்திருப்பதால், அறிஞர்கள் நல்லொழுக்கத்தினின்றும் தவறவே மாட்டார்கள். இழுக்கத்தால் பல துன்பங்கள் நேரும் என்பதையும், அதனால் ஒழுக்கமுடையவராய் வாழ வேண்டும் என்பதையும் அறிந்து ஒழுகுபவரே அறிஞர்.
ஒழுக்கமுடையோரே உயர்வடைவர்; ஒழுக்க மில்லாதவர், பிற குற்றவாளிகள் அடைய முடியாத பழியையும் அடைவார்கள். அப்படியென்றால் ஒழுக்கமின்மை எவ்வளவு கொடிய குற்றம் என்பது பெறப்படு மன்றோ? மேலும், தாங்களே அடைய வேண்டாத பழியையும் அடைவார்கள். அஃதாவது, ஒரு குற்றத்தைப் பிறர் செய்தாலும், அதனை ஒழுக்கமில்லாத இவரே செய்திருக்கக் கூடுமென்று உலகத்தார் கருதி, ஒழுக்கமில்லாத இவரையே பழிப்பர்.
பயன் தரும் நல்ல பயிரை விளைத்துப் பயனுற்று வாழ விரும்புபவர்கள் முதலில் நல்ல விதையை விதைக்கின்றார்களல்லவா? அதுபோலவே, நன்மையை அடைய விரும்புபவர்கள் முதலில் நல்லொழுக்கம் உடையவர்களாகத் திகழ வேண்டும். தீயொழுக்கம் என்பதோ, துன்பம் என்னும் நச்சு மாமரத்தை-முள்ளிச் செடியை வளர்க்க இட்ட விதையே யாகும்-என்பதும் கருதத்தக்கது. எனவே, நன்றிக்கு நல்லொழுக்கம் வித்தானாற்போல, இடும்பைக்குத் தீயொழுக்கம் வித்தென்றும், தீயொழுக்கம் இடும்பை தருவதைப் போல, நல்லொழுக்கம் நன்றி தரும் என்றும் கொள்ளல் வேண்டும்.
சிலர் நல்லொழுக்கமுடையவராய் உள்ளனர்; ஆனால் அவர்கள் வாழ்க்கையில் நன்மையின்றித் துன்புறுகின்றனர். சிலர் தீயொழுக்கமுடையவராயுள்ளனர்; ஆனால் அவர்கள் வாழ்க்கையில் தீமையின்றி இன்புறுகின்றனர் - இம் மாறுபட்ட காட்சிகளை நாம் காண்கின்றோமல்லவா? விதை விதைத்தவன் உடனேயே நன்மையடை-வதில்லை; நன்மை யடையாததோடு மேலும் மேலும் பணச் செலவும், உடல் முயற்சியும் செய்து உழல்கிறான். இப்போது அலுப்பாக இருந்தாலும் பயிர் முற்றி விளைந்தபின் இன்புறுவானல்லவா? அதுபோலவே, நல்லொழுக்கமுடையவரும் முதலில் துன்புறுவதாகத் தெரியினும் பின்னொரு சமயம் நன்மை எய்துவார்கள். பின்னொரு சமயம் என்றால் அடுத்த பிறவியிலன்று. இப்பிறவியிலேயே, ஒரு சமயம், இவரது செயலால் உலகிற்குப் பயனுள்ளதாக மக்கள் அறிந்து கொண்டு இவர்க்குப் பல நன்மைகள் செய்வரன்றோ?
ஆதலின், பின்னால் உண்டாகும் நன்மைப் பயிருக்கு இப்போது கொள்ளும் ஒழுக்கம் வித்தாகும். இஃது இப்படி யெனவே, இப்போது நன்மைபோல் தெரிந்தாலும் பின்னால் வரப்போகும் துன்பப் பயிரின் விளைவுக்குத் தீயொழுக்கம் முன்கூட்டி இடும் வித்தாகும் என்பதும் புலப்படும். மற்றும், தீயொழுக்கமுடையவர்கள் இப்போது இன்புற்றுக் கொண் டிருக்கும்போதே, தம் இழுக்கம் வெளியில் தெரிந்து விட்டால் - அரசாங்கம் அறிந்துவிட்டால் என்ன நேருமோ என்று அஞ்சிக் கொண்டே யிருப்பார்கள். ஆதலின், இப்போதும் அவர்கட்கு மன அமைதி இராது. ஆதலானும், பின்னர் வெளிப்பட்டபோது தண்டனையும் பழியும் ஏற்பார்கள் ஆதலானும், தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்.
நல்லொழுக்கமுடையவர்கள், கெட்டவர்கள் பேசுகின்ற கெட்ட பேச்சுக்களை மறந்தும் - தவறியும் தம் வாயால் பேசவே மாட்டார்கள். எனவே, கெட்டதைப் பேசா திருப்பதும் நல்லொழுக்கத்திற்கு ஓர் அடையாளமாகும் என்று ஆசிரியர் குறளில் கூறியுள்ளார்.
இனிக் குறள்களைக் காண்போம்.
“அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை.
ஒழுக்கம் இலான்கண் உயர்வு”.
“ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து”.
“ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி”
“நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்”.
“ஒழுக்க முடையார்க் கொல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல்”.
மேலும் ஒழுக்கம் என்னும் தலைப்பில் வள்ளுவர் கூறி யுள்ள ஒரு புதிய கருத்து சிந்தனைக்குரியது:
உலகில் பலர் பழைய முறையை விடக்கூடாது என்று கூறிப் பழமையோடே முட்டிக்கொண்டு கிடப்பதைப் பார்க்கலாம். இவர்கள், கோயில்களில் பழைய வழக்கப்படியுள்ள எண்ணெய் விளக்கைத் தவிர மின்னொளி (எலெக்ட்ரிக்) விளக்குப் போடவே கூடாது என்றும், சிலரைத் தீண்டக் கூடாது என்றும், உள்ளே விடக்கூடாது என்றும் ஒற்றைக் காலில் நின்றார்கள் - நிற்கிறார்கள். இன்னும் சிலர் கடல் தாண்டிக் கப்பல் போக்குவரவு செய்யக் கூடாது என்றார்கள் - என்கிறார்கள். அதிலும் பெண்களை அழைத்துச் செல்லவே கூடாது என்பது அவர்களின் விடாப் பிடி. இவையெல்லாம் இன்று எவ்வளவு அறியாமைக்கு உரியன? இவர்கள், வளர்ச்சி பெற்றுச் செல்லும் விஞ்ஞான உலகம் என்னும் குழந்தையை, மேலும் வளரவிடாமல், பழைய காலப் பழக்கவழக்கம் என்னும் தாயின் கருவிற்குள் (வயிற்றுக்குள்) கொண்டு வைத்துவிட முயல்கின்றனர். இவர்கள் எவ்வளவு கற்றிருந்தாலும் அறிவிலிகளே யாவார்கள். அறிஞர் உலகம் இவர்களை மதிக்குமா? இவர்களின் கொள்கைகள் பொருத்தமற்றவை என்பதை ஈண்டு விளக்கி வீண்காலம் போக்க வேண்டியதில்லை. இக் காலத்திலுள்ள பத்து வயதுடைய பள்ளி மாணவரும் இவர்களின் பழைய கொள்கைகளைப் பழிப்பது வெளிப்படை யன்றோ?
எனவேதான் நம் திருவள்ளுவர், மக்கள் தாம் எவ்வளவு கற்று அறிந்திருந்தாலும் உலகத்தோடு ஒத்துப் போக வேண்டும் என்னும் கருத்தில்,
“உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்”.
என்று அருளியுள்ளார்.
எதிர்காலம் மாறக்கூடும் என்பதை முன்கூட்டியே நுனித் துணர்ந்து வள்ளுவர் இக்குறளைக் கூறவில்லையென்றால் அவருக்கு என்ன மதிப்பு? இதனாலேயே திருக்குறள் என்றும்-எங்கும்.எவரும் போற்றும் பொதுநூல் என்னும் பெயர் பெற்றதல்லவா?
பவணந்தி முனிவரும் தம் நன்னூலில்,
‘பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே’
என்று கூறியுள்ளமையை நோக்குக.
ஒரு காலத்தில் நல்லொழுக்கமாகக் கருதப் பெற்றது மற்றொரு காலத்தில் இழுக்கமாகவும், ஒரு காலத்தில் இழுக்கமாகக் கருதப்பெற்றது மற்றொரு காலத்தில் ஒழுக்கமாகவும், ஒரிடத்தில் ஒழுக்கமாகக் கருதப் பெற்றது மற்றோரிடத்தில் இழுக்கமாகவும், ஓரிடத்தில் இழுக்கமாகக் கருதப் பெற்றது மற்றோரிடத்தில் ஒழுக்கமாகவும், ஒரு காலத்திலேயே ஓரிடத்திலேயே-ஒரு கூட்டத்தாரால் ஒழுக்கமாகக் கருதப்பெற்றது மற்றொரு கூட்டத்தாரால் இழுக்கமாகவும், ஒரு கூட்டத்தாரால் இழுக்கமாகக் கருதப்பெற்றது மற்றொரு கூட்டத்தாரால் ஒழுக்கமாகவும் கருதப்பெறக் கூடும். இவற்றிற்கெல்லாம் எடுத்துக்காட்டு (உதாரணம்) தர வேண்டுமாயின் விரியும். எனவே, காலத்திற்கேற்ப, இடத்திற் கேற்ப, சூழ்நிலைக்கேற்ப மக்கள் தத்தம் ஒழுக்கங்களை - நடைமுறைச் செயல்களை வகுத்துக்கொண்டு வாழ்வதே அறிவுடைமை.
கற்றவர் சிலர்-சிலரென்ன, பலர்-தங்களை ஏதோ தனிப் பிரிவினர் - உயர் வகுப்பினர் என்று எண்ணிக்கொண்டு, சமூக மக்களோடு நன்கு கலந்து பழகாமல் - அவர்கட்கு ஆவன புரியாமல் ஒதுங்கி வாழ்கின்றனர். வேறு பல கலைகளைக் கற்றிருப்பினும், உலக மக்களோடு ஒட்டி வாழ்தலைக் கல்லாத இவர்களை உண்மையில் கல்வி உடையவர்களாக எப்படிக் கொள்ள முடியும்? கற்றும் இவர்கள் அறிவிலிகளே யாவார்கள். எனவே, உலகத்தோ டொட்டி ஒழுகலும் ஒரு சிறந்த பேரொழுக்கமாகும்.
3. மலர்களும் மனையறமும்
மக்கள் மனையறம் - மனைவாழ்க்கை நடத்துவது போலவே மலர்களும் மனையறம் நடத்தி இன்ப வாழ்வு வாழ்கின்றன. மக்கள் ஆணும் பெண்ணுமா யிணைந்து இல்லறங் காத்து விருந்தோம்பி வேளாண்மை (உபகாரம்) செய்தல் போலவே, மலர்களும் செய்து வாழ்கின்றன. ஈண்டு மலர்கள் என்றால், சினையாகு பெயராகக்கொண்டு, மரஞ்செடி கொடிகளை யெல்லாம் குறித்துக்கொள்ள வேண்டும். இருப்பினும், குறிப்பிட்ட பயனாகிய மனையறப் பகுதி மலர்களின் வாயிலாகவே நடத்தவின் சிறப்பாக மலர்களைப் பற்றியே எடுத்துப் பேசி ஆராய்வோம்.
மனையறம் என்றால், கணவன், மனைவி, குழந்தைகள், விருந்தினர் முதலியோர் இருப்பர். 'இருந்தோம்பி இல்வாழ்வதெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு' என்ற வள்ளுவரின் வாய்மொழிப்படி, மனையறத் தால் பலர்க்கும் பலவகை நன்மைகளும் இருக்கும். அங்ஙனமெனின், மலர்களின் மனையற வாழ்க்கையில் கணவன் யார் - மனைவி யார் என முதலில் கண்டுபிடித்தாக வேண்டும். பிறகு பயன்களைப் பற்றிப் பார்க்கலாம்.
பொதுவில் புலவர்கள் சிலர் மலரை மனைவியாகவும், ஞாயிறு (சூரியன்) அல்லது திங்களை (சந்திரன்) கணவனாகவும் உருவகித்துப் பாடுவதுண்டு. காட்டாக, கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, சூரியகாந்தி மலரை நோக்கி,
“ஆகாய வீதி உலாவிவரும் இந்த
ஆதித்தனோ உனது அன்பனடி!
வேகாமல் வெந்து வெயிலில் உலர்ந்து நீ
விண்ணிலே கண்ணாக நிற்ப தேனோ?
காயும் கதிரவன் மேனியை நோக்க - உன்
கண்களும் கூசிக் கலங்காவோ?
நேயம் மிகுந்தவர் காய வருத்தம்
நினைப்பதும் இல்லையோ? சொல் அடியே!
செங்கதிர் செல்லும் திசையது நோக்கி - உன்
செல்வ முகமும் திரும்புவ தேன்?
மங்கையே உன் மணவாள னாகில் - அவன்
வார்த்தை யொன்றும் சொல்லிப் போகானோ?
ஆசை நிறந்த உன் அண்ணலை நோக்கிட
ஆயிரம் கண்களும் வேண்டு மோடி?
பேசவும் நாவெழ வில்லையோடி! - கொஞ்சம்
பீத்தல் பெருமையும் வந்த தோடி?
மஞ்சள் குளித்து முகமினுக்கி - இந்த
மாயப்பொடி வீசி நிற்கும் நிலை
கஞ்ச மகள் வந்து காணிற் சிரிக்குமோ?
கண்ணீர் உகுக்குமோ? யாரறிவார்!”
என்று கேட்பதுபோல் மிக இனிமையாகவும் நயமாகவும் பாடியுள்ளார். இப்பாடல்தொடரில், சூரியகாந்தி மலரின் கணவனாகச் சூரியனைக் குறிப்பிடுகிறார். அம்மலர் தன் மணவாளனாகிய கதிரவனையே என்றும் பார்த்துக் கொண்டிருக்கிறதாம். நேயம் மிகுந்தவனாதலால் அவன் தன்மேல் காய்வதற்கும் வருந்தவில்லையாம். அவனை மேன்மேலும் மயக்குவதற்காக, மஞ்சள் குளித்து முகம் மினுக்கி மாயப் பொடியும் (மகரந்தத் தூள்) வீசுகிறதாம். இந்தப் போட்டிக் காட்சியைக் கதிரவனது மற்றொரு மனைவியாகிய தாமரை மலர் கண்டால் எள்ளி நகையாடிச் சிரித்தாலும் சிரிக்குமாம் - அல்லது கவலையால் கண்ணீர் சொரிந்தாலும் சொரியுமாம். எவ்வளவு கற்பனையான பாடல் ! இறுதிப் பாடல் இரு பொருள் (சிலேடை) நிறைந்தது. கண்ணீர் = கள் நீர் = தேன்.
சூரியகாந்திப் பூவுக்கும், தாமரை மலருக்கும் கதிரவனைக் கணவனாகக் கூறும் மரபு உண்டென்பது மேற்கூறிய பாடல்களால் புலனாகும். மேலும், கச்சியப்ப முனிவர் கந்தபுராணத்தில்,
“சகட சக்கரத் தாமரை நாயகன்”
என்றும், சிவப்பிரகாச முனிவர் திருவெங்கை யுலாவில்,
“செந்தாமரை நாதன் தேரில் பதாகையோடு
நந்தா மதிற் கொடிகள் நட்பாட”
என்றும் கூறியிருப்பதிலிருந்து, கதிரவனுக்கு, ‘தாமரை நாயகன்’, ‘தாமரை நாதன்’ என்னும் பெயர்கள் உளவாதலும் அறியப்பெறும். நாயகன் - நாதன் என்றால் கணவன்தானே!
நம் புலவர்கள் திங்களை மட்டும் விட்டு வைத்தார்களா என்ன! குமுத (ஆம்பல்) மலரின் கணவனாக மதியத்தைக் கூறி வைத்தார்கள். இதனை,
"ஆம்பல் களிகூர வரும் வெண்ணிலாவே-உனக்கு
அம்புயம் செய் தீங் கெதுவோ வெண்ணிலாவே!”
என்னும் தேசிகவிநாயகம் பிள்ளையின் பாடலாலும்,
“காமக் கருத்தாக் குமுத நாதன்
கங்குல் வரக் கண்டும்”
என்னும் தனிப்பாடல் திரட்டுச் செய்யுளாலும் உணரலாம். திங்கள் குமுத நாதனாம் - ஆம்பலின் கணவனாம்!
ஆனால் உண்மையில் ஞாயிறும் திங்களும் மலர்களின் கணவன்மார்களாக முடியுமா? முடியாதே! கதிரொளியாலும் நிலவொளியாலுமா மலர்கள் கருவுற்றுக் காய் காய்க்கின்றன? இல்லையே! கதிரவனும் மதியமும் புறப்படும் நேரத்தில் வழக்கமாக மலர்கள் மலர்வதால் அவற்றை அம்மலர்களின் கணவன்மார்களாகக் கூறியிருப்பது ஒருவகை இலக்கிய மரபேயாகும். காய் காய்க்கும் மலர்களின் கணவன்மார்கள் வேறே உளர். எனவே, கதிரவனையும் திங்களையும், மலர்களின் மலர்ச்சிக்கு உதவும் உதவியாளராக - ஆதரவாளராக - நண்பராக வேண்டுமானால் ஒரு வகையில் கூறலாம். இதனை நன்கு உணர்ந்ததனால் தானோ, பிங்கல முனிவர் தம் பிங்கல நிகண்டில் ‘குமுத சகாயன்’ என்றும், மண்டல புருடர் தம் சூடாமணி நிகண்டில் ‘குமுத நண்பன்' என்றும் திங்கட்குப் பெயர் கூறியுள்ளனரோ என்னவோ? சகாயன், நண்பன் என்னும் சொற்கள் கணவனைக் குறிக்கா அல்லவா?
ஆனால் ஒரு சிலர், மலர்களின் கணவராக வண்டுகளைக் கூறுவது வழக்கம். இதனை,
“காமர் செவ்விக் கடிமலர் அவிழ்ந்தது
உதய குமரன் எனும் ஒருவண்டு உணீஇய”
என்னும் மணிமேகலை யடிகளாலு முணரலாம். அதாவது, மாதவியின் மகளாகிய மணிமேகலை என்னும் மலரை, இளவரசன் உதயகுமரன் என்னும் வண்டு உண்ண விரும்புவதைப்பற்றிக் கூறுகிறது இப்பகுதி. இதிலிருந்து, மலரைப் பெண்ணாகவும் வண்டை ஆணாகவும் கூறும் ஒருவகை மரபு உண்டு என்பது புலனாகும். இத்தகைய இலக்கிய வழக்காற்றைச் சங்க நூல்களிலும் காணலாம். அப்படியெனில், வண்டுகள் மலர்களின் கணவராக முடியுமா? முடியாது. உண்மையை ஆராயின், காய் காய்க்கும் மலர்களுக்கும் அவற்றின் கணவன்மார்களுக்கும் இடையே தூது செல்லும் தூதுவர்களே வண்டுகள் என்பது புரியும், இந்த வேலை செய்வதற்காக வண்டுகள் பெறும் கூலி - இல்லையில்லை பரிசு - இல்லையில்லை கையூட்டே (இலஞ்சமே) அவை குடிக்கும் தேனாகும். இப்படிச் சொன்னால் ஒன்றும் புரியாதுதான்! இதனை ஈண்டு விளக்கமாகச் சொல்லவேண்டும். அதற்காக நாம் இங்கே பொதுவாகப் பூ காய் (கனி) ஆகியவற்றின் வரலாற்றை ஆராய்ந்து காணவேண்டும். இனி அவ்வாராய்ச்சியில் ஈடுபடுவோம்:
பூவின் வரலாறு
இங்கே விளக்கத்திற்காகப் பூவரசம் பூவினை எடுத்துக் கொள்வோம். நகரங்களிலுள்ள சிலர் அறியாவிடினும், சிற்றுரர்களில் உள்ள பலரும் பூவரசம் பூவினைப் பற்றி நன்கு அறிந்திருப்பர். சிறுவர் சிறுமியர் பூவரசம் பூவைப் பறித்துப் பாவாடை கட்டிய பெண்குழந்தைபோல் பொம்மை செய்தும், இதழ்களைக் களைந்தெறிந்துவிட்டு அடியிலிருக்கும் காய்ப் பகுதியைக் கம்மலாகவும் பம்பரமாகவும் பயன்படுத்தியும் விளையாடுவது வழக்கம். எனவே, சிறார்களும் நன்கறிந்த பூவரசம் பூவினை எடுத்துக் கொள்வது பொருத்தந்தானே. மேலும் அது பூக்களுக்குள்ளே அரசன் அல்லவா? ஆகவே, அதைப்பற்றித் தெரிந்து கொள்வது, மற்ற பூக்களைப்பற்றித் தெரிந்து கொள்வதற்குப் பெரிதும் துணை புரியும்.
பூவரசங் கிளையின் கணுச்சந்துகளிலிருந்து நீண்ட காம்புகளுடன் பூக்கள் தோன்றுகின்றன. காம்புக்கு ‘விருந்தம்’ (Pedicel) என்று பெயர் கூறுகின்றனர்
மர (தாவர) நூலார். இதனை மலரின் தாள் என்றும் சொல்லலாம். விருந்தத்தின் நுனியில் ஒரு கிண்ணம் பூவின் மற்ற பகுதிகளை உள்ளடக்கி மூடிக்கொண்டிருக்கும். சிறிய அரும்பாயிருந்தபோது மூடிக்கொண்டிருக்கும் இக் கிண்ணம், பெரிய மொட்டானதும் மேற் புறத்து விரிகிறது. உடனே உள்ளிருக்கும் பாகங்கள் வெளிப்பட்டு வளருகின்றன. இப் பூக்கிண்ணத்தை புஷ்ப கோசம் (calyx) என்றழைக் கின்றனர்.
புஷ்ப கோசம் எனப்படும் பூக்கிண்ணம் பூவின் வெளிப்பாகமே. உட்புறத்தே அழகிய மஞ்சள் நிறங்கொண்ட ஐந்து தளங்கள் உண்டு. பூவின் நடுவில் நீளக் கம்பிபோன்ற ஒரு பாகம் உள்ளது. அதில், குழாய் போன்றும் ஊசி போன்றுமாக இரண்டு உட்பிரிவுகள் உண்டு. குழாய் போன்றது ஊசிபோன்றதைச் சுற்றிக்கொண்டிருக்கும். இந்தக் குழாயின் வெளிப்புறத்தைச் சுற்றியிருக்கிற நூல் போன்ற கம்பிகளின் நுனிகளில், மஞ்சள் நிறமுடைய சிறுசிறு உருண்டைகள் இருக்கும். இக்குழாய் 'கேசரக் குழாய்' (Staminal tube) என்றும், மஞ்சள் நிற உருண்டை 'மகரந்தப் பை' (Anther) என்றும் அழைக்கப்படும். கேசரக் குழாய்க்குள் உள்ள கம்பி 'கீலம்' (Style) எனப்படும். கீலத்தின் நுனிப்பகுதி 'கீலாக்ரம்' (Stigma) அல்லது கீல நுனி எனப்படும். கீலம் அடியில் பிஞ்சுடன் தொடர்புற்றிருக்கும். இந்தப் பிஞ்சு 'அண்டாசயம்' (Ovary) எனப்படும். இந்தக் கீலம், கீலாக்ரம், அண்டாசயம் ஆகிய மூன்றும் சேர்ந்து 'அண்டகோசம்’ (Gynaecium) என்றழைக்கப்படும். பூவில் காயாக மாறும் பகுதி இந்த அண்டகோசம்தான். எனவே, இதனைப் பூவின் பெண்பாகம் என்று கூறலா மன்றோ? கேசரப் பகுதியிலுள்ள மகரந்தப் பையில் இருக்கிற 'மகரந்தப்பொடி' (Pollen) என்னும் பூந்தூள், அண்ட கோசத்துள் விழுந்து தொடர்பு கொண்டால்தான் காய் உண்டாகுமாதலால், அம் மகரந்தப் பொடி உள்ள கேசரப் பகுதியைப் பூவின் ஆண்பாகம் என்று சொல்லலா மன்றோ?
இணையினப் பூஞ்செடிகள்
பூவரசில் ஒரே பூவில் ஆண்பாகம், பெண்பாகம் இரண்டும் உள்ளன. சப்பாத்தி, அகத்தி முதலியவற்றிலும் இப்படியே. இத்தகையனவற்றை 'மிதுனச் செடி என்பர். நாம் இவற்றை இணையினப் பூஞ்செடி என அழகு தமிழில் அழைப்போம்.
ஈரினப் பூஞ்செடிகள்
எல்லாச் செடிகளிலுமே ஒரே பூவில் கேசரமாகிய ஆண்பாகமும் அண்ட கோசமாகிய பெண் பாகமும் இருப்பதில்லை. சில செடிகளில் ஒரு கிளையிலுள்ள ஒரு பூவில் ஆண்பாகமாகிய கேசரம் மட்டும் இருக்கும்; அதற்கு ஆண் பூ என்று பெயராம். அதே அல்லது வேறு கிளையிலுள்ள மற்றொரு பூவில் பெண்பாகமாகிய அண்டகோசம் மட்டும் இருக்கும்; இதற்குப் பெண் பூ என்று பெயராம். பூசணி, பாகல், குப்பை மேனி, ஆமணக்கு முதலியவை இவ்வகையைச் சேர்ந்தவை. இத்தகையனவற்றை துவிலிங்கச் செடிகள் என்பர். தமிழில் ‘ஈரினப் பூஞ்செடிகள்’ என்று நாம் சொல்லலாம்.
ஓரினப் பூஞ்செடிகள்
வேறு சில வகைகளில், ஒரு செடியிலோ அல்லது கொடியிலோ ஏதாவது ஒரினப் பூ மட்டுந்தான் இருக்கும். அதாவது கோவைக் கொடியை எடுத்துக் கொள்வோம். ஒரு கோவைக் கொடியில் ஆண் பூக்கள் மட்டுமே இருக்கும். இன்னொரு கோவைக் கொடியில் பெண் பூக்கள் மட்டுமே இருக்கும். ஆண் பூ - பெண் பூ என்று சொல்வதற்குப் பதிலாக, ஆண் பனை பெண் பனை என்பதுபோல, ஆண்கோவை . பெண்கோவை என்றே சொல்லிவிடலாம். இத்தகையனவற்றை 'ஏகலிங்கச் செடிகள்' என்பர். தமிழில் 'ஓரினப் பூஞ்செடிகள் அல்லது கொடிகள்’ என்று சொல்லலாம்.
மகரந்தச் சேர்க்கை
ஒரே பூவில் ஆண் பாகமும் பெண் பாகமும் இருந்தால், ஆண் பாகத்திலுள்ள மகரந்தத் துணுக்குகள் பெண் பாகத்தோடு தொடர்புகொண்டு கருவுற்றுக் காய் காய்ப்பது தன்னில்தானே இயற்கையாக நிகழும். இதற்குத் தன் மகரந்தச் சேர்க்கை என்று பெயராம். ஆண் பூவும் பெண் பூவும் தனித்தனியாயிருக்குமானால், காற்று, வண்டு, தேனி, பறவை, விலங்கு முதலியவற்றின் வாயிலாக, ஆண் பூவிலுள்ள மகரந்தத் துணுக்குகள் பெண் பூவிற்கு வந்து தொடர்புறுவதால் கருவுற்றுக் காய் காய்க்கும். இதற்குப் ‘பிறமகரந்தச் சேர்க்கை’ என்று பெயராம்.
இனிமேல்தான் மலர்களின் காதல் வாழ்வை நாம் ஆழ்ந்து ஆராய வேண்டும். செகதீச சந்திரபோசு கூறி யுள்ளாங்கு, அவற்றிற்கும் எல்லாவகை உணர்வுகளு முண்டு.
பெரும்பாலும் மலர்கள் தன்மகரந்தச் சேர்க்கையை விரும்பாமல், பிறமகரந்தச் சேர்க்கையையே விரும்புகின்றன. உலகியலில்கூட மணமக்கள் சிலர், சொந்தக்காரப் பெண் அல்லது ஆணின்மேல் கவர்ச்சி கொள்ளாது புதியவரையே விரும்பி நாடுவதைக் காண்கிறோமே! விஞ்ஞான முறைப்படி நோக்கின், சொந்தக்கார மணமக்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் அறிவிலோ உருவிலோ போதிய வளர்ச்சி பெறுவது ஐயமே. புதியோர்க்குப் பிறக்கும் பிள்ளைகள் போதிய வளர்ச்சி பெறுவது திண்ணம். அதேபோல, தன்மகரந்தச் சேர்க்கை உடைய மலர்கள் போதிய மணமோ, நிறமோ, தோற்றமோ, கவர்ச்சியோ உடையனவாக இருக்கமாட்டா. தாழம் பூவும், சில புல் செடிப் பூக்களும் இத்தகையனவே. காற்றின் உதவியால் மகரந்தப் பொடிகள் பெண்பாகத்தை அடைவதால் இவை கருவுறுகின்றன. மகரந்தப் பொடி கொஞ்சமாக இருந்தால் பெண்பாகத்தில் பட்டாலும் படும், படாமல் போனாலும் போகுமாதலின், தாழை போன்றவற்றில் மகரந்தப் பொடிகள் மிகுதியாகவும், காற்றில் மிதப்பதற்கேற்றவாறு கனமற்று மெல்லியனவாகவுமுள்ளன. இவையும் பிற பூக்களிலிருந்து பிறமகரந்தச் சேர்க்கை ஏற்பட வழியில்லாது போவதனாலேயே, வேண்டா வெறுப்பாய்த் தம் பூவிலிருந்தே தன் மகரந்தச் சேர்க்கை பெற்றுக்கொள்கின்றன.
மலர்கள் தன் மகரந்தச் சேர்க்கையை விரும்பாமல் இருப்பதற்கு இயற்கையும் ஒத்துழைப்பதும் உண்டு. அதாவது, சில இணையினப் பூஞ்செடிகளில், ஒரே மலரிலுள்ள ஆண் பாகமும் பெண் பாகமும் ஒரே நேரத்தில் முற்றுதல் (பக்குவம்) பெறாமல், முன்பின்னாகவே பதப்படுகின்றன. இதனால் தன்மகரந்தச் சேர்க்கைக்கு வழியில்லாமல், பிற பூக்களை எதிர்பார்க்க வேண்டியுள்ளது. சிறு குழந்தையும் பெரியவரும் மணந்துகொள்ள முடியாததுதானே! பேரா முட்டி, கம்பு, சோளம் முதலியன இந்த வகையைச் சேர்ந்தவை.
எனவே, மலர்கள் பிறமகரந்தச் சேர்க்கையையே விரும்புகின்றன. ஒரு பூவின் பெண் பாகத்தில் வேறு மலரிலுள்ள ஆண் பாகமாகிய மகரந்தப் பொடியைக் கொண்டு வந்து சேர்க்கும் வேலையை வண்டு, தேனீ, வண்ணத்துப்பூச்சி முதலியவை செய்கின்றன. இவ்வாறு பிறமகரந்தச் சேர்க்கையால் கருவுறும் மலர்கள் மிக்க மணமும், நிறமும், தேனும், தோற்றக் கவர்ச்சியும் உடையனவாக இருக்கும். இவ்வகை மலர்கள் மணமும் நிறமும் கவர்ச்சியும் பெற்றிருப்பது வண்டு முதலியனவற்றைக் கவர்ந்து மயக்கித் தம்பால் இழுப்பதற்கேயாம். அதற்காகத் தேனும் கொடுக்கப்படுகிறது. வண்டு முதலியன ஒரு மலரில் தேன் குடிக்கும்போது அதிலுள்ள மகரந்தத் துணுக்குகளைத் தம்மேல் ஒட்டிக்கொண்டு, வேறொரு மலரில் சென்று அத்துணுக்குகளைத் தற்செயலாகச் சேர்க்கின்றன. மலர்களிடம் கவர்ச்சியில்லையென்றால் வண்டுகள் அவற்றை நோக்கிச் செல்லமாட்டா அல்லவா?
“மஞ்சள் குளித்து முகம்மினுக்கி - இந்த
மாயப்பொடி வீசி நிற்கும் நிலை”
என்று கவிமணியவர்கள் சூரியகாந்தியைப் பற்றிக் குறிப்பிட் டிருப்பது, உண்மையில் சூரியனை மயக்குவதற்கன்று; வண்டுகளை மயக்கி வரவேற் பதற்கேயாம். இதனை அவரே மற்றொரு பாடலில் மலர்களின் வாயில் வைத்து,
“வண்டின் வரவெதிர் பார்த்து நிற்போம் - நல்ல
வாசனை வீசி நிற்போம்”
என்று கூறியிருப்பதனாலும் உணரலாம். மற்றும் பொழுது சாயும் மாலை வேளையில் மலரும் முல்லை முதலிய மலர்கள் பளிச்சிட்ட வெண்ணிறமாயிருப்பதன் காரணமும் வண்டுகளை மயக்கி வரவேற்கும் நோக்கமேயாம். இருட்டு நேரத்தில் வெண்ணிறந்தானே பளிச்சிட்டுத் தெரிந்து பார்ப்பவரைக் கவரும்! இதனை, பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றிய மனோன்மணியம் என்னும் காவியத்திலுள்ள,
”... ... ... ... நிசியலர் மலர்க்கு
வெண்மையும் நன்மணம் உண்மையும் இலவேல்
எவ்வணம் அவற்றின் இட்ட நாயகராம்
ஈயினம் அறிந்துவந் தெய்திடும்? அங்ங்னம்
மேவிடில் அன்றோ காய்தரும் கருவாம்?”
என்னும் (மூன்றாம் அங்கம் - நான்காம் களம்) அடிகளால் அறியப் பெறலாம்.
இங்கே நுணுகி நோக்குவோர்க்கு ஓர் ஐயம் எழலாம். அதாவது, முல்லை மலர் ஒன்றில் தேன் அருந்தி மகரந்தப் பொடியும் ஒட்டிக்கொண்ட ஒரு வண்டு, அடுத்தாற் போல் மற்றொரு முல்லை மலருக்கே சென்று அம் மகரந்தப் பொடியைச் சேர்க்கும் என்று எப்படிச் சொல்ல முடியும்? ஏன், அந்த வண்டு அடுத்தாற்போல் ஒர் ஆம்பல் மலருக்கோ அல்லது வேறொரு மலருக்கோ செல்லக்கூடாதா? அங்ஙனம் செல்லின் ஒரு முல்லையின் மகரந்தம் மற்றொரு முல்லையில் சேர்ந்து கருவுறுவது எப்படி? இப்படி ஒர் ஐயம் எழலா மன்றோ? ஆனால் இந்த ஐயத்திற்கு இடமேயில்லை. இது உற்றாய்ந்து கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, ஒரு முல்லை மலரில் தேன் குடித்த வண்டு, குறைந்தது அரை மணி அல்லது ஒரு மணிநேரம் வரையும் முல்லை மலர்களை மட்டுமே சூழ்ந்து கொண்டிருக்குமாம். அதே போல மந்தாரையில் தேன் குடித்த வண்டு தொடர்ந்து மந்தாரையை தேடித்திரிந்து தேன் குடிக்குமாம்? ஆகா இயற்கையின் வியத்தகு செயலை என்னென்பது மலர்களின் காதல் வாழ்க்கைக்கு இயற்கை எப்படி யெப்படி யெல்லாமோ உதவுகின்ற தல்லவா?
மேலும், பெண் மலர்கள் ஆண் மலர்களின் கூட்டுறவைத் தவங்கிடந்து பெற்றுக் கருவுற்று இன வளர்ச்சி செய்வதோடல்லாது, காயாகிக் கனியாகிப் பிற உயிரினங்கட்கும் உதவி ஒப்புரவு செய்து வாழும் மனையறத்தை எண்ணுங்கால் மயிர்க்கூச் செறிகின்றது. இங்கே, நாம் உண்ணும் நெல், கேழ்வரகு முதலியவற்றின் வாழ்க்கையைச் சிறிது நினைத்துப் பார்ப்போம். இவற்றின் பூக்கதிர்கள் தலைக்குமேல் மிக உயர்ந்து நீண்டிருப்பதற்குக் காரணம் என்ன? தாங்கள் அடர்த்தியாக நெருங்கி வாழ்வதால், பூக்கதிர்கள் அடியிலோ நடுவிலோ ஏற்படின், பிறமகரந்தச் சேர்க்கைக்குப் போதிய வசதியிராது, அதனாலேயே, பூக்கதிர்களைத் தலைக்கு மேல் மிக நீட்டிக் கொண்டு பிறமகரந்தச் சேர்க்கையை எதிர்நோக்கிக் காத்து நிற்கின்றன. என்னே இந்தச் செயல்!
மற்றும், தண்ணீருக்குள் வாழும் ‘வேலம்பாசி’ என்னும் ஒருவகைச் செடியின் காதல் வாழ்வை ஆராய்ந்தோமாயின் வியப்பினும் வியப்பாயிருக்கும். இச்செடி தண்ணீருக் குள்ளேயே இருக்கும். மேல் மட்டத்தில் தெரியாது. மேலும் இஃது ஒரினப் பூஞ்செடி வகையைச் சேர்ந்ததாகும். அதாவது, சில செடிகளில் ஆண் பூக்கள் மட்டுமே இருக்கும்; சில செடிகளில் பெண் பூக்கள் மட்டுமே இருக்கும். இவற்றிற்குள் மகரந்தச் சேர்க்கை உண்டாக வேண்டுமே? அப்படி உண்டாக்குவதற்கு வண்டு முதலியனவும் தண்ணீருக்குள் முழுகி வரமுடியாதே. இந்நிலையில் மகரந்தச் சேர்க்கை ஏற்பட்டுக் கருவுறுவது எங்ஙணம்? இதற்காக இம் மலர்கள் கையாளும் வழி யாது?
தண்ணீருக்குள் இருக்கும் ஆண் வேலம்பாசிச் செடியிலிருந்து பருவம் முற்றிய ஆண் பூக்கள் பிரிந்து நீரின் மேல்மட்டத்திற்கு வந்து காதலியைத் தேடி மிதந்து திரிந்துகொண்டிருக்குமாம். அதேபோல நீருக்குள் இருக்கும் பெண் வேலம்பாசிச் செடியிலுள்ள பருவம் முதிர்ந்த பெண் பூக்கள் காதலர்களைத் தேடித் தாம்மட்டும் நீர் மட்டத்திற்கு மேலே வந்து தலையை நீட்டிக் கொண்டிருக்குமாம். இருக்கவே, ஏற்கெனவே மிதந்து கொண்டிருக்கிற ஆண் பூக்களிலிருந்து இப்பெண் பூக்களுக்கு மகரந்தச் சேர்க்கை கிடைக்கிறது. கிடைத்ததும் பெண் பூக்கள் தண்ணிருக்குள் இறங்கிக் கருவுற்று வளர்ச்சி பெறுமாம். என்னே இயற்கையின் விந்தை இக் காட்சியை அடுத்து வரும் ஒவியத்தில் கண்டு தெளியலாம்:
வேலம்பாசிச் செடிகள்
இந்த ஒவியத்தில் வலக்கைப் பக்கம் இருப்பது ஆண் செடி இடக்கைப் பக்கம் இருப்பது பெண் செடி : ஆண் செடியிலிருந்து பூக்கள் பிரிந்து மேல் நோக்கிச் சென்று மிதந்து கொண்டிருப்பதையும், பெண் செடி தனது பூவை மட்டும் தண்ணீரின் மேல்மட்டத்திற்கு நீட்டி ஆண்பூவோடு தொடர்பு கொள்வதையும் காணலாம்.
எனவே, மக்கள் மட்டுமே மனையறம் ஓம்பிப் பிறர்க்கும் பயன்படுகிறார்கள் என்று எண்ணுவதற்கில்லை; அஃறிணையாகிய மரஞ் செடி கொடிகளின் மலர்களுங்கூட மனையறம் நடத்திப் பல்வகை உயிர்கட்கும் பயன் தருகின்றன என்பது புலனாகும். இதனைப் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை தமது மனோன்மணியம் என்னும் நாடகக் காவியத்தில் மிக அழகாகச் சொல்லோவியப்படுத்தியுள்ளார். அவர் கூற்றுப்படி:- ஒரு சிறு புல் உட்பட எல்லா உயிர்களுமே குறிக்கோளுடன் வாழ்கின்றன. எனவே எதையும் தாழ்வாக எண்ணுவதற்கில்லை. ஒரு சிறு புல்லானது தன் சிறு பூக்குலையை மேலே உயர்த்தி, தேன் துளியினையும் தாங்கி, ஈக்களை அழைத்துத் தேன் அருத்தி மகரந்தச் சேர்க்கை உண்டாகச் செய்து கருவுற்றுக் காய் கனிகளை ஆக்கிப் பலர்க்கும் பயனளிக்கிறது. இக்கருத்தை அவர் பாடியுள்ள
“இதோஒ! இக்கரை முளைத்த இச் சிறுபுல்
சதாதன் குறிப்பொடு சாருதல் காண்டி
அதன்சிறு பூக்குலை அடியொன் றுயர்த்தி
இதமுறத் தேன்துளி தாங்கி ஈக்களை
நலமுற அழைத்து நல்லூண் அருத்திப்
பலமுறத் தனது பூம்பராகம் பரப்பித்து
ஆசிலாச் சிறுகாய் ஆக்கி இதோ......?”
என்னும் மனோன்மணிய (மூன்றாம் அங்கம் - இரண்டாம் களம்) அடிகளால் அறியலாம்.
ஆகவே, அஃறிணைப் பொருளாகிய மலர்களே இவ்வாறு மனையறங் காத்து மாநிலத்திற்குப் பயன் பட்டுக்கொண்டிருக்க, அதே நேரத்தில், உயர்திணையாகிய மக்களுள் சிலர், நன்முறையில் மனைவாழ்க்கை நடத்தாமலும் பிறர்க்குப் பயன்படாமலும் வறிது கழிவதை எண்ணுங்கால், அம்மக்களினத்தைச் சேர்ந்த அனைவரும் வெட்கப்பட வேண்டுமன்றோ?
4. கம்பரின் தமிழ்ப் படலம்
கம்பர் தமது இராமாயணக் காப்பியத்தில் தமிழ்ப் படலம் ஒன்று தந்துள்ளார். அதன் விவரமாவது:—
இராமன், சீதை, இலக்குவன் ஆகிய மூவரும் காட்டில் தம்மை வரவேற்ற சுதீக்கணன் என்பவரிடமிருந்து விடை பெற்றுக் கொண்டபின், அகத்தியனது இருப்பிடம் நோக்கிச் சென்று நெருங்கினர்.
இவர்களின் வருகையை அறிந்த அகத்தியனின் மகிழ்ச்சி அளவு கடந்ததாய் ஏழுலகும் பரவிற்றாம். என்றும் உள தென்தமிழ் இயம்பி இசை கொண்டவனும், நீண்ட தமிழால் உலகை அளந்தவனுமாகிய அகத்தியனின் திருவடிகளை இராமன் வணங்க அவன் வரவேற்றான்.
பாடல் : (அகத்தியப் படலம்)
“ஆண்தகையர் அவ்வயின் அடைந்தமை அறிந்தான்
ஈண்டு உவகை வேலைதுணை ஏழுலகும் எய்த
மாண்ட வரதன் சரண் வணங்க எதிர் வந்தான் ...
நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான்” (36)
ஆண் தகையர் = மற ஆண்மையுடைய இராம இலக்குமணர். அவர்கள் வந்தனர் எனில் சீதையும் உடன் வந்தமை சொல்லாமலே விளங்கும்.
இராமன் அகத்தியனிடம் படைக்கலம் பெற்று அரக்கரை வெல்லப் போகிறானாதலின் உவகை ஏழுலகும் பரவியது.
மாண்ட வரதன் = மாண்பு மிக்க இராமன். தன் திருவடிகளை இராமன் வணங்கும் அளவுக்கு அகத்தியன் உயர்ந்தவனாவான்.
அகத்தியன் நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான் என்பது ஆய்விற்கு உரியது. நேமி = ஆழிப்படை. இங்கே நேமி என்பது இடப்பொருள் (தானி) ஆகுபெயராய் நேமியை உடைய திருமாலைக் குறிக்கிறது. திருமால் மாவலியிடம் மூன்றடி மண் கேட்டு உலகம் முழுவதையும் அளந்தார், அல்லவா? அத் திருமாலைப் போல, அகத்தியன் தமிழால் உலகை அளந்தானாம்.
தமிழால் உலகை அளத்தலாவது, உலகம் முழுவதிலும் தமிழைப் பரவச் செய்தலும், உலகில் உள்ள கலைகளை யெல்லாம் தமிழில் உளவாகச் செய்தலுமாம். இதனால், பண்டு உலக அரங்கில் தமிழுக்கு இருந்த முதன்மையும் சிறப்பும் விளங்கும். -
நீண்ட தமிழ் என்பது, தமிழில் பல்வேறு கலைநூல்கள் நிரம்ப இருந்தமையையும், அது நீண்ட தொலைவில் உள்ள இடங்களில் எல்லாம் பரவியிருந்தது என்பதையும் அறிவிக்கும்.
இப்போது தமிழை உயர்த்தும் நோக்கத்துடன் தமிழின் சிறப்பைக் கூறினால், ‘தமிழ் வெறியர்’ என்னும் பட்டம் கிடைக்கின்றது. கம்பர் இங்கே அறிவித்ததை விட இன்னும் உயர்வாக எந்தத் தமிழ் வெறியரும் தமிழின் மேன்மையைச் சொல்ல முடியாது. தமிழ் அறிஞர்களைத் தாழ்த்திப் பேசுபவரின் மொழியில் சொல்லப் போனால் கம்பர் மாபெருந் தமிழ் வெறியராவார்.
சேக்கிழார் பெரிய புராணத்தில் இதையே சுருக்கி
“ஞாலம் அளந்த மேன்மைத் தெய்வத் தமிழ்” (975)
என்று சிறப்பித்துள்ளார்.
சுப்பிரமணிய பாரதியார்,
“வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழியவே!
வானம் அளந்தது அனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழியவே!
ஏழ்கடல் வைப்பினும் தன்மணம் வீசி
இசை கொண்டு வாழியவே!' (23)
“பல்விதமாயின சாத்திரத்தின் - மணம்
பாரெங்கும் வீசும் தமிழ்நாடு
வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தத்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு
சிங்களம் புட்பகம் சாவகம் - ஆதிய
தீவு பலவினும் சென்றேறி - அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு
விண்ணை இடிக்கும் தலைஇமயம் - எனும்
வெற்பை அடிக்கும் திறனுடையார் - சமர்
பண்ணிக் கலிங்கத்து இருள் கெடுத்தார் - தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு
சீனம் மிசிரம் யவன ரகம் - இன்னும்
தேசம் பலவும் புகழ் வீசிக் - கலை
ஞானம் படைத்தொழில் வாணிபமும் மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு
செந்தமிழ் நாடேனும் போதினிலே” (20)
என்று தமிழின் பரப்பை விரித்துக் காட்டியுள்ளார். சேக்கிழாரும் பாரதியாரும் தமிழ் வெறியர்களா?
ஞானப்பிரகாச அடிகளார் (Rev. S. Gnana Prakasar, 0. M. I) என்னும் இலங்கைப் பேரறிஞர், ‘சொற்பிறப்பு - ஒப்பியல் தமிழ் அகராதி’ (An Etymological and comparative Lexicon of the Tamil Language) என்னும் தமது அகராதியின் முன்னுரையில் பின்வரும் கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
“தமிழ்ச் சொற்கள் முதல் முதல் மக்களினத்தில் மொழி தோன்றத் தொடங்கிய காலத்தில் எழுந்த சொல்லொலிகளை அடிப்படையாகக் கொண்டவை. தமிழ்ச் சொற்களால் உணர்த்தப்படும் கருத்துகள் மக்களினத்தின் பொதுப் பண்பைக் குறிக்கும் அடிப்படையாகும். எனவே, கூர்ந்து ஆராயின், தமிழ்ச் சொற்களின் வேரிலிருந்தே உலகமொழிகளின் சொற்கள் தோன்றிப் பல்வேறு வடிவம் கொண்டன என்பது புலப்படும்”.
மேலே இது காறுங் கூறியவற்றால், “நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான்” என்று கம்பர் கூறியுள்ளமை முற்றிலும் பொருந்தும் என்பது பெறப்படும்.
அகத்தியன் கடலை உண்டவன் - வாதவியை வயிற்றில் அடக்கிச் செரிக்கச் செய்தவன் - விந்த மலையைக் கீழே ஆழ்த்தியவன் - என்றெல்லாம் அறிவித்த பெருமை போதாது என்று, மீண்டும் தமிழ் வாயிலாக அகத்தியனுக்கு ஒரு சிறப்புக் கூறுகிறார் கம்பர். அதாவது:-
உயர் தமிழ்
உலக வழக்கு, செய்யுள் வழக்கு ஆகிய இரு வழக்குகளையும் ஒட்டித் தமிழ் இலக்கணம் அளித்தானாம் அகத்தியன். அந்தத் தமிழ் முதல் முதல் சிவனால் தனக்குக் (அகத்தியனுக்கு) கற்றுக் கொடுக்கப்பட்டதாம். மேலும் அந்தத் தமிழ், வலிந்து கற்கும் நான்கு வடமொழி வேதங்களினும் உயர்ந்ததாம்.
“உழக்கு மறைநாலினும் உயர்ந்து உலகம் ஓதும்
வழக்கினும் மதிக் கவியினும் மரபின் நாடி
நிழல்பொலி கணிச்சிமணி நெற்றி உமிழ் செங்கண்
தழல்புரை சுடர்க்கடவுள் தந்த தமிழ் தந்தான்” (41)
வேதம் ஒலி வகையால் கற்பதற்குக் கடினமாதலால் ‘உழக்கு மறை’ என்றார். அதை நோக்க, தமிழ், இன்தமிழ்-மென்தமிழ் - செந்தமிழ் - பைந்தமிழ் - தேன் தமிழ் - அமிழ்தத் தமிழ், - வண் தமிழ் - ஒண் தமிழ் முதலிய அடைமொழிகளைப் பெற்றிருப்பது பொருத்தமே போலும்!
சிவன் ஒளி பொருந்திய மழுப்படையையும் நெற்றிக் கண்ணையும் ஒளி வீசும் செம்மேனியையும் உடைய கடவுளாம்.
‘ஆண் தகையர்’ என்று தொடங்கும் பாடலால் தமிழின் பரப்பைக் கூறிய கம்பர், இந்தப் பாடலால் தமிழின் உயர்வைச் சொல்கிறார் ‘உழக்கு மறை நாலினும் உயர்ந்தது தமிழ்’ என்று கூறியுள்ளார். இதைச் சுப்பிரமணிய பாரதியார்
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்
இனிதாவது எங்கும் காணோம்” (22-1)
என்ற வடிவத்தில் அறிவித்துள்ளார். சேக்கிழார் பெரிய புராணத்தில்,
“அசைவில் செழுந் தமிழ்வழக்கே
அயல் வழக்கின் துறைவெல்ல” (192)
என்று கூறித் தமிழ் அவாவைத் தீர்த்துக் கொண்டு உள்ளார்,
பரஞ்சோதி முனிவர் தமது திருவிளையாடல் புராணம் நாட்டுப் படலத்தில்,
“கண்ணுதல் பெருங்கடவுளும் கழகமோடு அமர்ந்து
பண்ணுறத் தெரிந்து ஆய்ந்த இப்பசுங் தமிழ் ஏனை
மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணிடைப் படக் கிடந்ததா எண்ணவும் படுமோ” (57)
“தொண்டர் காதனைத் தூதிடை
விடுத்ததும் முதலை
உண்ட பாலனை அழைத்ததும்
எலும்பு பெண்ணுருவாக்
கண்டதும் மறைக் கதவினைத்
திறந்ததும் கன்னித்
தண்தமிழ்ச் சொலோ மறுபுலச்
சொற்களோ சாற்றீர்” (58)
என்று பாடித் தமது தமிழ் உணர்வுத் தினவைத் தீர்த்துக் கொண்டார். இப்படியே போனால் இந்தப் பட்டியல் மிகவும் நீளும்
சிவன் அகத்தியர்க்குத் தமிழ் தந்த செய்தி, காஞ்சிப் புராணத்தில்,
“வடமொழியைப் பாணினுக்கு வகுத்தருளி
அதற்கு இணையாத்
தொடர் புடைய தென்மொழியை
உலகமெலாம் தொழுதேத்தும்
குடமுனிக்கு வலியுறுத்தார்
கொல்லேற்றுப் பாகர்”
எனக் கூறப்பட்டுள்ளது. குடமுனியை உலகம் எல்லாம் தொழுது ஏத்துவது எதற்காக? நீண்ட தமிழை உலகம் முழுவதற்கும் தந்ததனால் என்க.
என்றும் உளது - இசை தருவது
தமிழால் அகத்தியன் புகழ் பெற்றுள்ளமையைக் கம்பர் மற்றொரு பாடலாலும் அறிவித்துள்ளார். அகத்தியனின் அடிகளை இராமன் வணங்கினானாம். அகத்தியன் மகிழ்ச்சிக் கண்ணீர் - உணர்ச்சிக் கண்ணீர் பெருக இராமனைத் தழுவிக் கொண்டு, நும்வரவு நல்வரவாகுக என்று பல நயமொழி புகன்றானாம். பாடல்:
“நின்றவனை வந்த நெடியோன் அடி பணிந்தான்
அன்று அவனும் அன்பொடு தழீஇ அழுதகண்ணால்
'நன்று வரவு' என்று பல நல்உரை பகர்ந்தான்
என்றும் உள தென்தமிழ் இயம்பிஇசை கொண்டான்” (47)
என்பது பாடல். நெடியோன் = இராமன். அகத்தியன் குறளன் அல்லவா? அழுத கண்ணும் வரவேற்றது போன்ற குறிப்பு பாடலில் மறைந்து கிடக்கிறது. இப்பொழுது ‘நல் வரவாகுக’ - Welcome - என்றெல்லாம் போடுவதை அப்போதே கம்பர் தொடங்கி வைத்து விட்டார்.
இந்தப் பாடலின் இறுதி அடியில் தமிழின் இரண்டு சிறப்புகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. ஒன்று: என்றும் உள்ளது; மற்றொன்று இசை தருவது.
தமிழ், சமசுகிருதம், இலத்தீன் போன்ற பழம்பெரு மொழிகளுள் சமசுகிருதமும் இலத்தீனும் இப்போது வழக்கிழந்துள்ளன. தமிழ் என்றும் வழக்கு இழக்காமல் நிலையாய் உள்ளது. இது ஒரு சிறப்பு. இங்கே, மனோன்மணீயத்தில் சுந்தரம் பிள்ளை பாடியுள்ள -
“ஆரியம்போல் உலகவழக்கு அழிந்து
ஒழிந்து சிதையா உன்
சீரிளமைத் திறம் வியந்து
செயல் மறந்து வாழ்த்துதுமே”
என்னும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பகுதி எண்ணத் தக்கது.
அடுத்தது: தமிழை இயம்பியதால் அகத்தியர் இசை (புகழ்) பெற்றாராம். இருபதாம் நூற்றாண்டில் தமிழ் இயம்பிய தமிழாசிரியர்கட்கு இது கிடைத்ததா? மற்ற பாடத்து ஆசிரியர்களின் பெயர்கட்குக் கடைசியில் தமிழாசிரியர்களின் பெயர்கள் எழுதப்பட்டனவே - அதாவது - தமிழாசிரியர்கட்கு ‘இறுதி மரியாதை’ செய்யப் பட்டதே. புதுவை மாநிலத்தில் தமிழாசிரியர்கள் போராடி, உயர் நிலைப் பள்ளிகட்கு அன்று - நடுநிலைப் பள்ளிகட்குத் தலைமையாசிரியர் பதவி அளிக்கச் செய்தனர். உடனே, மற்ற பாடத்து ஆசிரியர்கள் போராடியதால், தமிழாசிரியர் கள் தலைமையாசிரியர் பதவியிலிருந்து கீழே இறக்கப் பட்டனர். இப்போது புதுச்சேரி மாநிலத்தில் அரசுக் கல்வித் துறையில் உள்ள அலுவலர்களுள் யாரும் இதற்குப் பொறுப்பாளர் ஆகார். இது முன்பு எப்போதோ நடந்தது. ஆனால், அந்தக் காலத்தில் அகத்தியர் தமிழை இயம்பியதால் புகழ் பெற்றாராம். காலத்தின் கோலம் என்னே!
தமிழ் நாட்டின் வடக்கே இருந்து கொண்டு காட்டில் இராமனை வரவேற்ற அகத்தியர் எந்த மொழியில் பேசி யிருப்பார்? இராமனோடு எந்த மொழியில் உரையாடி யிருப்பார்? - என்பதை அறிஞர்கள் ஆய்க. மற்றும், கம்பராமாயணம் சுந்தர காண்டத்தில்,
“தென்சொல் கடந்தான் வடசொல்
கடற்கு எல்லை தேர்ந்தான்”
என இராமன் கம்பரால் சுட்டப்பட்டிருப்பதும் ஈண்டு நினைவுகூரத் தக்கது.
இதுகாறும் மேலே கூறப்பட்டுள்ள தமிழ் பற்றிய செய்திகள், கம்பராமாயணம் - ஆரணியகாண்டம் - அகத்தியப் படலத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், அந்த அகத்தியப் படலம் 'கம்பரின் தமிழ்ப் படலம்' என்று கூறப்படும் உரிமைக்கு ஏற்றதே. கம்பரின் தமிழ்ப் படலம் என்பது இந்த அகத்தியப் படலமே.
5. மாணிக்கவாசகர் காலம்
இப்போது திருப்பாதிரிப்புலியூருக்கு வடக்கே ஒடும் கெடிலம் ஆறு, முன்பு திருப்பாதிரிப்புலியூருக்குத் தெற்கே கரையேற விட்ட குப்பம் என்னும் வண்டிப் பாளையத்தை யொட்டி ஓடிக் கொண்டிருந்தது. இதற்குச் செவி வழி வரலாற்றுச் சான்றுகளேயன்றி, எழுதி வைக்கப் பெற்றுள்ள இலக்கியச் சான்றுகளும் உள்ளன. தொல்காப்பியத் தேவர் இயற்றிய திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம் என்னும் நூலில் இதற்குத் தக்க அகச்சான்று கிடைத்துள்ளது; வருமாறு:
“நித்தில முறுவற் பவழவாய்ப் பிறழுங்
கயல்விழி நிரைவளை யிடமாக்
கைத்தலத் திருந்த புள்ளிமான் மறியர்
கடிலமா நதியதன் வடபால்
செய்தலைக் குவளை மகளிர்கண் காட்டுங்
திருக்கடை ஞாழலி லிருந்த
பைத்தலைத் துத்திப் பணியணி யாரெம்
பரமர்தாள் பணிவது வரமே.” (45)
“முத்தினை முகந்துபவ ளக்கொடியை வாரி
மோதியிரு டண்டலை முறித்துமத குந்தித்
தத்திவரு சந்தன மெறிந்தகி லுருட்டித்
தாமரையு நீலமு மணிந்ததட மெல்லாம்
மெத்திவரு கின்றகெடி லத்துவட பாலே
மெல்லிய றவஞ்செய்கடை ஞாழலை விரும்பிப்
புத்தியுட னன்புசெய்து போதுசொரி வாரைப்
புணர்ந்துயிரி யாள்விரைசெய் போதிலுறை பூவே.” (100)
என்பன அந்நூற் பாடல்கள். இப்பாடல்களிலுள்ள 'கெடில மாநதியதன் வடபால்' 'கெடிலத்து வடபால்' என்னும் பகுதிகள், கெடிலத்தின் வடபுறத்தே திருக்கடை ஞாழல் என்னும் மாற்றுப் பெயருடைய திருப்பாதிரிப் புலியூர் இருப்பதாகத் தெரிவிக்கின்றன. ஆனால் இப்போது கெடிலத்தின் தென்புறத்தேதான் திருப்பாதிரிப் புலியூர் இருக்கிறது. எனவே, கெடிலம் திருப்பாதிரிப் புலியூருக்குத் தெற்கே வண்டிப்பாளையத்தினருகில் ஓடிக் கொண்டிருந்தபோது ‘திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம்’ என்னும் நூல் தொல்காப்பியத் தேவரால் இயற்றப்பட்டது என்பது தெளிவு.
இலக்கணம் சிதம்பரநாத முனிவர் இயற்றிய ‘திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம்’ என்னும் நூலிலும் இதற்குச் சான்று கிடைக்கிறது. திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம் நகருக்குத் தெற்கே கெடிலம் ஒடியபோது எழுதப்பட்டதென முன்பு கூறினோம். ஆனால், திருப்பாதிரிப்புலியூர்ப் புராணமோ, கெடிலம் திசை மாற்றம் பெற்று நகருக்கு வடக்கே ஒடத் தொடங்கியபின் எழுதப்பட்டதாகும். முன்பு நகருக்குத் தெற்கே ஒடிய கெடிலம், பின்பு நகருக்கு வடக்கே ஒடத் தொடங்கியதற்குக் காரணமும் அப்புராணம் கூறுகிறது. அது வருமாறு:-
“மாணிக்கவாசகர் தென் திசையிலிருந்து வடதிசை நோக்கி, வழியிலுள்ள திருப்பதிகள் தோறும் சென்று இறைவழிபாடு செய்துகொண்டு வந்தார். தில்லையில் (சிதம்பரத்தில்) கூத்தப் பெருமானை வணங்கியதும், திருப்பாதிரிப்புலியூர் இறைவனை வணங்குதற்காக வடக்கு நோக்கி வந்து கொண்டிருந்தார். திருப்பாதிரிப்புலியூர் இன்னும் சிறிது தொலைவில் இருந்த நிலையில், இடையிலேயிருந்த கெடிலத்தில் வெள்ளம் சீறிப் பெருக்கெடுத்தோடிய தாம். என்செய்வார் மாணிக்கவாசகர் ! ஆற்றில் வெள்ளம் தணிவது எப்போது? வெள்ளத்தின் அளவும் விரைவும் மிகக் கடுமையாயிருந்ததால் தெப்பமும் விடப்பட வில்லை. ஆற்றைக் கடந்து அக்கரையை அடைந்தால் அல்லவா திருப்பாதிரிப்புலியூர்த் திருக்கோயிலுக்குச் சென்று வழிபடமுடியும்? மூன்று நாள்கள் இரவு பகல் பட்டினியுடன் அங்கேயே கிடந்தாராம். அப்போது இறைவன் மாணிக்கவாசகர் மேல் இரக்கங்கொண்டு ஒரு சித்தராய்த் திருவுருவந் தாங்கி அவ்விடத்தில் தோன்றி உமக்கு என்ன வேண்டும்? என்று அவரைக் கேட்டாராம். நான் ஆற்றைக் கடந்து அப்பால் சென்று திருப்பாதிரிப்புலியூர்த் தேவனை வழிபடவேண்டும்; அதற்கு ஏற்பாடு செய்தருளுக’ என்று வேண்டிக் கொண்டாராம். உடனே சித்தர் ஆற்றை நோக்கி, 'ஏ கெடிலமே! நீ வளைந்து திசைமாறித் திருப்பாதிரிப் புலியூருக்கு அப்புறமாகச் சென்று மாணிக்கவாசகருக்கு வழி விடுக’ என்று கைப் பிரம்பைக் காட்டி ஏவினாராம். நகருக்குத் தெற்கே ஒடிய கெடிலம் சித்தர் கட்டளைப்படி திசைமாறி நகருக்கு வடக்கே ஒடி வழி விட்டதாம். பின்னர் மாணிக்கவாசகர் இடையூறின்றித் திருப்பாதிரிப்புலியூர் போந்து சிவனை வழிபட்டாராம்” இச்செய்தியினை, திருப்பாதிரிப்புலியூர்ப் புராணம்-பாடலேசர் சித்தராய் விளையாடிய சருக்கத்திலுள்ள-பின்வரும் பாடல்களால் அறியலாம்.
“அருவமா யுருவமா யருவுரு வகன்ற
உருவமாகிய பரவெளி 1பெரும்பற்றப் புலியூர்த்
திருவ ருட்டிற மருவியாங் கிருந்துதீம் புனலூர்
மருவு 2முத்தர புலிசைமா நகர்தொழ வந்தார்” (32)
“தென்னகன் கரை யிருந்தனர் யாவருஞ் சிறந்த
மன்னு 3முத்தர தீரத்தின் வகைகுறித் தார்க்குத்
தன்னை யொப்பருங் கலங்களுந் தெப்பமுஞ் சாரா
வன்ன பேருடற் கும்பத்தி னனைத்தவு மணையா (35)
“உத்த ரத்திருப் புலிசைமா நகர்தொழ வுற்றேன்
தத்து வெண்புனல் 4சாகரத் தோடெதிர் தயங்கி
முத்தம் வாரியெற் றலைகளு மலையென முயங்கச்
சித்த சாமியில் ஆறுஇடை தடுத்ததென் செய்கேன்” (39)
“உயிரும் யாக்கையு மகிழ்விக்கும் வல்லப முடையீர்
தயிரின் வெண்ணெய்போல் மறைந்தருள் இறைவர்நீர் தாமே
செயிரறுத்தெனை அக்கரை ஏற்றுதிர் சேர்ந்தோர்
அயர்வ றுக்கும் அக் கரையேற விட்டவ ராவீர் (41)
கெடில மாதி 5பாடலேச் சுரனிகே தனத்தின்
வடதி சைக்கணே மன்னுவித் துமைக்கொடு போதும்
புடவி தன்னிடைத் தாள்துணை ஊன்றியே போந்து
கடவுள் ஆலயம் கண்ணுறீஇ வழிபடும் என்றார். (45)
அட்ட சித்தியும் புரிகுவோ மாதலி னுமக்காம்
இட்டம் யாவையும் செய்குது மெனவுரைத் திரைத்த
மட்டு வார்புனல் வடதிசை 6மருவவேத் திரத்தால்
தொட்டு நீக்கினர் அவ்வழி யேகின துனைநீர் (47)
அன்ன ராமிரு முனிவரர்க் கபயமீந் தப்பான்
மன்னு தீம்புனல் வடதிசை மருவிடப் புரிந்து
முன்ன மேகிப்பின் வரவருள் செய்தனர் முனியைப்
பன்னு சித்தர்பின் மாணிக்க வாசகர் படர்ந்தார். (49)
___________________________________________________________________________
1. பெரும்பற்றப்புலியூர்-சிதம்பரம் (32). 2.உத்தரபுலிசை- திருப்பாதிரிப்புலியூர் (32)
3.உத்தரதீரம்-வடகரை (35). 4.சாகரம்- கடல்(39). 5. பாடலேச்சுரன் நிகேதனம்- பாடலேச்சுரர் கோயில். (45). 6.வேத்திரம்-பிரம்பு (47)
திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம், திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம், ஆகிய நூல்களின் துணைகொண்டு கெடிலத்தின் திசை மாற்றத்தை நன்கு புரிந்து கொள்ள முடிகிறது. புரிந்து கொள்ளவில்லை யெனில், திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம் பொய்ச் செய்தி தெரிவிப்பதாக எண்ண வேண்டிவரும். இதைத் தெளியவைக்கு முகத்தான், திருப்பாதிரிப்புலியூர்ப் புராணமானது, கெடிலத்தின் இருவேறு திசைப்போக்குகளையும் சுட்டிக்காட்டி, போக்கு திசை மாறினதற்குக் காரணமாக மாணிக்க வாசகர் வரலாற்றைக் கொண்டு வந்து நிறுத்தியுள்ளது.
மாணிக்க வாசகருக்காகக் கெடிலம் திசை மாறிய வரலாறு, திருப்பாதிரிப்புலியூர்ப் புராணத்திற்கு ஒரு நூற்றாண்டிற்குப்பின் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் - இயற்றப் பெற்ற கரையேற விட்ட நகர்ப் புராணம் என்னும் நூலிலும் சித்தர் திருவிளையாடற் படலம் என்னும் தலைப்பில் மிக விரிவாகவும் தெளிவாகவும் கூறப்பட்டுள்ளது.
புராண நம்பிக்கையுள்ளவர்கள், ‘மணிவாசகருக்காகத் தான் கெடிலம் திசை மாறியது; இது முற்றிலும் உண்மையான வரலாறேயாகும்’ என அடித்துப் பேசுவர். புராண நம்பிக்கையில்லாத சீர்திருத்தக் கொள்கையினர், ‘கெடிலம் பெருவெள்ளத்தினால் இயற்கையாகத் திசை மாறியது; ஆனால், திருப்பாதிரிப்புலியூர்ப் -- புராண ஆசிரியர், மாணிக்கவாசகருக்காக மாறியதாகச் செயற்கையாக ஒரு காரணம் கற்பித்து நிலைமையைச் சரிக்கட்ட முயன்றுள்ளார்; இதுபோலப் புனைந்துரைப்பது புராணங்களின் வாடிக்கை’ என்று கூறி இக்காரணத்தைத் தட்டிக் கழிப்பர்.
இவ்விரு திறத்தாரின் கொள்கை முரண்பாடு எவ்வாறிருப்பினும், இவண் நமக்கு விளங்கும் உண்மை யாவது: திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம் எழுதிய தொல் காப்பியத்தேவரின் காலத்தில் நகருக்குத் தெற்கே ஓடிய கெடிலம், திருப்பாதிரிப்புலியூர்ப் புராணம் எழுதிய இலக்கணம் சிதம்பரநாத முனிவரின் காலத்தில் நகருக்கு வடக்கே ஒடியிருக்கிறது என்பதாம். அங்ஙனமெனில், கெடிலத்தின் வரலாறு கண்ட இத்திசை மாற்றம் நடந்த காலம் எது? - என ஆராய வேண்டும்.
திருநாவுக்கரசர் கரையேறியபோது கெடிலம் திருப் பாதிரிப் புலியூருக்குத் தெற்கே ஓடியது என்பது அனைவரும் நன்கு அறிந்த செய்தி. அதற்குப் பல சான்றுகளும் பலரால் காட்டப்பட்டுள்ளன. நாவுக்கரசரின் காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு என்பது ஆராய்ச்சியாளர் பலர்க்கும் ஒப்ப முடிந்த கருத்து. எனவே, அதன் பிறகுதான் கெடிலத்தின் திசைமாற்றம் நிகழ்ந்திருக்க வேண்டும். அடுத்துத் தொல்காப்பியத் தேவரின் காலத்தை ஆராயவேண்டும்.
தொல்காப்பியத் தேவர் இரட்டையர்களால் புகழ்ந்து பாடப்பெற்றுள்ளார். இரட்டையர்கள், திருப்பாதிரிப் புலியூர் சென்றிருந்தபோது, அவ்வூர்ச் சிவன்மேல் ஒரு கலம்பகம் பாடித் தருமாறு அவ்வூரார் வேண்டினர். அதற்கு இரட்டையர்கள். - சிவன் மேல் கலம்பகம் வேண்டுமென்றால் தொல்காப்பியத் தேவர் பாட வேண்டும் நாம் பாடுவது இறைவனுக்கு ஏறுமோ? என்று கூறியுள்ளார்கள். இதனை,
தொல்காப் பியத்தேவர் சொன்னதமிழ்ப் பாடலன்றி
நல்காத் திருச்செவிக்கு நாமுரைப்ப தேறுமோ
மல்காப் புனறதும்ப மாநிலத்திற் கண்பிசைந்து
பல்காற் பொருமினர்க்குப் பாற்கடலொன் ற்ந்தார்க்கே”
என்னும் இரட்டையர் பாடலால் அறியலாம். இதிலிருந்து இரட்டையர் காலத்திற்கு முற்பட்டவர் தொல்காப்பியத் தேவர் என்பது தெளிவு. அங்ஙனமெனில், இரட்டையர் காலம் எது?
இரட்டையர்கள் வரபதியாட்கொண்டான் என்னும் வள்ளலைப் பாடியுள்ளனர். வரபதியாட்கொண்டானின் வேண்டுதலால் வில்லிபுத்தூரார் பாரதம் பாடினார். வில்லிபுத்தூரார் காலத்தில் அருணகிரிநாதரும் காளமேகப் புலவரும் வாழ்ந்ததாக வரலாறு. இவர்களின் காலம் பதினைந்தாம் நூற்றாண்டு. எனவே, இரட்டையர் காலம் 15 ஆம் நூற்றாண்டு என அறியலாம். ஆகவே, இரட்டையரால் புகழ்ந்து பாடப்பெற்ற தொல்காப்பியத் தேவர் 15 ஆம் நூற்றாண்டிற்கும் முற்பட்டவர் என்பது புலனாகும்.
இரட்டையர் காலத்திலேயே தொல்காப்பியத் தேவரும் ஏன் இருந்திருக்கக் கூடாது? என்பதாக இங்கே ஒர் ஐயம் தோன்றலாம்.
இந்தக் காலத்தில் ஒருவர் ஒரு நூல் எழுதினால் அது உடனே அச்சிடப்படுகிறது. அச்சிடப்பட்ட ஒரு திங்களில் உலக முழுவதும் பரவவுஞ் செய்கிறது. அந்தக் காலத்தில் ஒருவர் நூல் எழுதுவது ஒலைச் சுவடியில்தான். அது பலராலும் பலபடிகள் எடுக்கப்பட்டுப் பல ஊர்களிலும் பரவுவதற்குப் பன்னெடுநாள் ஆகும். அதன் பிறகே அந்நூலின் சிறப்பு பலராலும் அறிந்து பாராட்டப்படும். இந்நிலையில், தொல்காப்பியத் தேவர் இயற்றிய திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம், புகழ்பெற்ற பெரும் புலவர்களாகிய இரட்டையர்களாலேயே பாராட்டப் பெற்றிருக்கிறதென்றால், அக் கலம்பகம் அவர்கள் காலத்துக்கு முன்பே தோன்றித் தமிழ் நாட்டில் பரவிப் பாராட்டப் பெற்றிருக்க வேண்டும். எனவே, இரட்டையர் வாழ்ந்த 15 ஆம் நூற்றாண்டுக்கும் முற்பட்டவர் தொல்காப்பியத் தேவர் என்று கொள்ளவேண்டும். தேவர் காலத்தைப் பதினைந்தாம் நூற்றாண்டுக்கும் பல நூற்றாண்டுகள் முன்னால் தள்ளிக்கொண்டு போகவேண்டும்.
திருப்பாதிரிப்புலியூர்ப் புராணம் இயற்றியவரும் சிவஞான முனிவரின் மாணாக்கருமாகிய இலக்கணம் சிதம்பரநாத முனிவர் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்றாலும், அவர் அப் புராணத்தில் கூறியுள்ளபடி, கெடிலத்தின் திசை மாற்றத்திற்குக் காரணமாக இருந்த மாணிக்கவாசகர் பழங் காலத்தவர். பழங் காலத்தவர் என்றால் இற்றைக்கு ஆயிரம் ஆண்டாவது முற்பட்டவர். ஒன்பதாம் நூற்றாண்டினராகக் கூறப்படும் சுந்தரமூர்த்தி நாயனார் என்னும் சுந்தரர், சைவ நாயன்மார்களின் பெயர்களைத் தொகுத்து எழுதியுள்ள திருத்தொண்டத் தொகை
என்னும் நூலில் மாணிக்கவாசகரின் பெயரைச் சேர்க்க வில்லையாதலின், சுந்தரர்க்குப் பிற்பட்டவர் மாணிக்கவாசகர் என்பது புலனாகும். ஆனால் சிலர், மாணிக்கவாசகர் சுந்தரர்க்கு மிகவும் முற்பட்டவர்; இவர் அறிவால் சிவனே யாயினார்; ஆதலின் மற்ற நாயன்மார்களினும் சிறப்பில் மிக்கவர்; அதனாலேயே, சுந்தரர் இவரை மற்ற நாயன்மார்களோடு இணைத்துத் தம் நூலில் பாடாது விட்டார் என்று கூறுகின்றனர். இக் கூற்றுப் பொருந்தாது. மாணிக்க வாசகர் இயற்றிய திருவாசகம், திருக்கோவையார் ஆகிய நூல்களின் மொழி நடையைக் காணுங்கால், மானிக்கவாசகர் தேவார ஆசிரியர்களாகிய திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவருக்கும் முற்பட்டவராயிருக்க முடியாது - பிற்பட்டவரே என்பது புலப்படாமற் போகாது. சில ஆண்டுகளாயினும் மாணிக்க வாசகர் சுந்தரர்க்குப் பிற்பட்டவராயிருந்ததனால்தான், சைவ நாயன்மார்களைப் பற்றிச் சுந்தரரால் பாடப்பெற்ற நூலில் மாணிக்கவாசகர் இடம் பெறவில்லை.
முதல் நூற்றாண்டிலிருந்து பன்னிரண்டாம் நூற்றாண்டு வரைக்கும், ஆராய்ச்சியாளர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக மாணிக்கவாசகரின் காலத்தை அங்குமிங்குமாகத் தூக்கிப்போட்டுப் பந்தாடினாலும், சுந்தரர் நூலில் மாணிக்கவாசகர் இடம் பெறாததைக் கொண்டும், திருவாசகப் பத்துக்களின் தலைப்புகளைக் கொண்டும், மொழி நடையைக் கொண்டும், சுந்தரர்க்குப் பிற்பட்டவரே மாணிக்கவாசகர் எனத் துணிந்து முடிவு செய்யலாம். இதற்கு இயற்கையான இன்னொரு சான்றும் உள்ளது: 'சைவ சமய குரவர் நால்வர்’ அல்லது ‘நால்வர்' என்னும் தொகைப் பெயர் வரிசையில், (1) திருஞானசம்பந்தர். (2) திருநாவுக்கரசர், (3) சுந்தரர், (4) மாணிக்கவாசகர் என மாணிக்கவாசகர் நான்காம் இடத்தைப் பெற்றுள்ளமை காண்க. இவர் மற்ற மூவரினும் காலத்தால் பிற்பட்டவராயிருந்ததனால்தான் இறுதியில் வைத்து எண்ணப்பட் டுள்ளார். மற்றபடி, பெருமையினால் நால்வரும் ஒரு நிகரானவர்களே.
இந்நால்வருள் முதல் இருவராகிய திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் ஒரே காலத்தினர் - அதாவது ஏழாம் நூற்றாண்டினர். இவ்விருவரையும் தம் நூலில் பாடியுள்ள சுந்தரர் எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டினராகத் துணியப்பட்டுள்ளார். எனவே, மாணிக்கவாசகர் ஒன்பதாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவர் எனக் கொள்ள வேண்டும். ஒன்பதாம் நூற்றாண்டிற்குப் பிற்பட்டவர் என்றால், பல நூற்றாண்டுகள் பின் தள்ளியிருக்க முடியாது; ஒரிரு நூற்றாண்டுதான் பிற்பட்டிருக்க முடியும். பல நூற் றாண்டுகள் பிற்பட்டவராயிருந்திருந்தால், தமக்குள் அண்மை நூற்றாண்டினராகிய மூவருக்கும் பின்னால் நாலாமவராக மாணிக்கவாசகர் வைத்து எண்ணப்பட்டிருக்க மாட்டார்; பிற்காலத்துத் தோன்றிய சைவப் பெரியார்கள் சிலரைப் போல மாணிக்கவாசகர் தனித்துவிட, அந்த மூவரும் மூவராகவே நின்றுவிட்டிருப்பர். அங்ஙனமின்றி இந்நால்வரும் அடுத்தடுத்த நூற்றாண்டுகளில் மிகப் பெரிய சைவத் தலைவர்களாக விளங்கினமையால்தான் ‘நால்வர்’என இணைத்துச் சிறப்பிக்கப் பெற்றனர். இஃது இயற்கையின் தீர்ப்பு! ஆம், மக்களின் தீர்ப்பு எனவே, பத்தாவது நூற்றாண்டினர் மாணிக்கவாசகர் என்று கொள்ளலாம்.
இந்தக் கருத்துக்கு எதிராக அப்பர் தேவாரத்திலிருந்து ஒர் அகச்சான்று காட்டப்படுகிறது. அப்பர் தமது திருவாரூர்த் தேவாரப் பதிகத்தில்,
“நரியைக் குதிரைசெய் வானும்
நரகரைத் தேவுசெய் வானும்
விரதம்கொண் டாடவல் லானும்
விச்சின்றி நாறுசெய் வானும்...”
என்று இறைவனின் திருவிளையாடல்களைக் கூறியுள்ளார். இதிலுள்ள நரியைக் குதிரை செய்வானும் என்னும் பகுதியைக்கொண்டு, நரி பரியாக்கிய கதைக்கு உரிய மாணிக்க வாசகர் அப்பருக்கு முற்பட்டவராவார் என்று சிலரால் கூறப்படுகிறது. ஆனால், இறைவன் மாணிக்கவாசகருக்காக நரியைப் பரியாக்கிய கதை இங்கே அப்பரால் குறிப்பிடப்பட வில்லை. இறைவன் எதையும் செய்யவல்ல ‘சித்தர்’ என்ற கருத்திலேயே அப்பர் இதனைக் கூறியுள்ளார். அஃதாவது, இறைவன், நரியைக் குதிரையாக்க வல்லவன் - நரகரைத் தேவராக்க வல்லவன் - தாமாகவே விரதம் எடுத்துக் கொண்டு ஆடவல்லவன் - விதை போடாமலேயே செடி கொடிகளை முளைக்கச் செய்பவன் - என்பதாக இறைவனின் சிறப்புமிக்க சித்து விளையாடல்கள் கூறப்பட்டிருப்பதை இங்கே காணலாம். எனவே, இந்தத் தேவாரப் பகுதிக்கும் மாணிக்கவாசகர் பற்றிய கதைக்கும் இங்கே தொடர்பே யில்லை. தமிழறிஞர் எம். சீநிவாச ஐயங்கார் ‘தமிழாராய்ச்சி' என்னும் தமது நூலில், நரி பரியாக்கிய கதை தமிழகத்தில் பண்டு தொட்டு வழங்கி வருவது; அதற்கும் பாணிக்க வாசகருக்கும் தொடர்பில்லை - என்பதாகக் கூறியிருப்பது ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது. எனவே, மணிவாசகர், தேவார ஆசிரியர் மூவருக்கும் பிற்பட்டவர் - பத்தாம் நூற்றாண்டினர் என்பது போதரும்.
இதற்கு இன்னும் கூரான சான்று ஒன்று கொடுக்க முடியும். நம்பியாண்டார் நம்பி என்னும் சைவப்பெரியார், தமது ‘கோயில் திருப்பண்ணியர் விருத்தம்’ என்னும் நூலில், திருவாதவூரர் என்னும் இயற்பெயருடைய மாணிக்கவாசகரையும் அவர் அருளிய திருச்சிற்றம்பலக் கோவையையும் பற்றி,
“வருவா சகத்தினில் முற்றுணர்ந்
தோனைவண் தில்லைமன்னைத்
திருவாத ஆர்ச்சிவ பாத்தியன்
செய்திருச் சிற்றம்பலப்
பொருளார் தருதிருக் கோவைகண்
டேயுமற் றப்பொருளைத்
தெருளாத வுள்ளத் தவர்கவி
பாடிச் சிரிப்பிப்பரே” (58)
என்னும் பாடலில் சிறப்பித்துக் கூறியுள்ளார். நம்பியாண்டார் நம்பியின் காலம் பதினோராம் நூற்றாண்டு என்பது, அனைவரும் எளிதில் ஒப்புக்கொண்டுள்ள உண்மை. எனவே, அவருக்கும் முற்பட்டவர் மாணிக்கவாசகர் என்பது தெளிவு. ஆகவே, மாணிக்கவாசகரின் காலம் பத்தாம் நூற்றாண்டு என்பதும் தெளிவு.
மற்றொரு வகையிலும் மாணிக்கவாசகரின் காலத்தைக் குறுக்கி நெருக்கிக்கொண்டு வரலாம். பதினோராம் நூற்றாண்டினரான நம்பியாண்டார் நம்பி பட்டினத்தாரின் பாடல்களைத் தொகுத்துள்ளார். பட்டினத்தாரோ, மாணிக்கவாசகரைப் பாராட்டிப் பாடியுள்ளார். எனவே, நம்பியாண்டார் நம்பிக்கும் முற்பட்ட பட்டினத்தார்க்கும் முற்பட்டவர் மாணிக்கவாசகர் என்பது புலனாகும். ஆகவே, நம்பியாண்டார் நம்பி பதினோராம் நூற்றாண்டினரென்றால், பட்டினத்தாரின் காலம் பதினோராம் நூற்றாண்டின் முற்பகுதி அல்லது பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்றும், மாணிக்கவாசகரின் காலம் பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதி என்றும் கொள்ளலாம். பத்து பதினோராம் நூற்றாண்டுகளாகிய இருநூறு ஆண்டு காலத்தில் மூன்று தலைமுறையினர் (மாணிக்கவாசகர், பட்டினத்தார், நம்பியாண்டார் நம்பி) இருந்திருப்பதில் வியப்பேதுமில்லை; அது நடக்கக் கூடியதே.
இஃது இங்ஙனம் இருக்க - புராணம் போன்ற மத நூல்களில் நம்பிக்கையுள்ள பெரியோர் சிலர் கூட - ஏன், *தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர் அவர்களுங்கூட, கெடிலத்தின் திசைமாற்றத்திற்குக் காரணமாக மாணிக்க வாசகர் பற்றித் திருப்பாதிரிப்புலியூர்ப் புராணத்தில் கூறப்பட்டுள்ள செய்தியினைப் பொய்யான கற்பனையென மறுத்துள்ளனர். அதற்கு அவர்கள் கூறுங்காரணமாவது: 'நகரின் தெற்கே கெடிலம் ஒடுவதாகக் கலம்பக நூலில் எழுதியுள்ள தொல்காப்பியத் தேவருக்கும் முற்பட்டவர் மாணிக்கவாசகர்; எனவே, மாணிக்கவாசகர் காலத்தில் கெடிலம் திசைமாறி நகருக்கு வடக்கே ஒடியிருக்க முடியாது’ - என்பதாம்.
• திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம் - பதிப்புரை
இவ்வாறு சிலர் புராணச் செய்தியை மறுப்பதற்குக் காரணங்கள் இரண்டு: மாணிக்கவாசருக்காக இப்படி நடந்திருக்க முடியாது என்று எண்ணுவது ஒன்று; மாணிக்கவாசகர் காலத்தை மிக முற்பட்டதாகவும் தொல்காப்பியத்தேவர் காலத்தை மிகப் பிற்பட்டதாகவும் கணிப்பது மற்றொன்று. இவ்விரண்டிற்கும் உரிய மறுப்புப் பதில்களாவன:
(1) மாணிக்கவாசகருக்காக ஆறு திரும்பியது என்பதை நம்பாவிட்டால் போகிறது. இயற்கையாகவே ஆறு மாறியதாக ஏற்றுக்கொள்வோம். ஆனால், அவர் காலத்தில் இயற்கையாக ஆறு திசைமாறியிருக்கலாம் என்பதையாவது நம்பலாமே! புராணங்கள் புளுகு மூட்டை என்பதாகச் சொல்லினும், திருப்பாதிரிப்புலியூர்ப் புராணம் இயற்றிய சிதம்பரநாத முனிவர், எத்தனையோ பெரியார்கள் இருக்க அவர்கள் எல்லாரையும் விட்டுவிட்டுக் கெடிலத்தின் திசை மாற்றத்தோடு மாணிக்கவாசகர் பெயரை முடிச்சுப் போட்டிருப்பதில் ஏதேனும் பொருத்தம் இருக்கத்தான் வேண்டும் - மாணிக்கவாசகர் காலத்தில் ஆறு திசைமாறியதாகச் செவிவழிச் செய்தி (கர்ண பரம்பரைச் செய்தி) யொன்று சிதம்பரநாத முனிவர்க்குக் கிடைத்திருக்கலாம்; திருப்பாதிரிப்புலியூர்ப் பகுதி மக்கள் அவ்வாறு அவரிடம் தெரிவித்திருக்கலாம். அந்தச் செய்தியை அடிப்படையாக வைத்துக் கொண்டு, மாணிக்கவாசகர் சித்தரை வேண்டிக் கொள்ள, சித்தர் திசை மாற்றினார் என்பதாக ஆசிரியர் புராணத்தில் புனைந்துரைத்திருக்கலாம். பல்லாயிரம் ஆண்டுகட்கு முந்தியல்ல - ஐரோப்பியரால் ஆளப்பட்ட பதினெட்டாம் நூற்றாண்டில் - தேவலோகத்தையோ நரக லோகத்தையோ அதள சுதள பாதாள லோகத்தையோ பற்றியல்ல. ஐரோப்பியர் ஆளத் தொடங்கிய திருப்பாதிரிப் புலியூரைப் பற்றிப் புராணம் பாடிய சிதம்பரநாத முனிவர், ஒரு பற்றுக்கோடும் இல்லாமல் வீணே வெறும் பொய் புளுகியிருக்க முடியாதல்லவா? ஒன்றாவது இருந்தால் தானே ஒன்பதாகச் சொல்ல முடியும்?
மாணிக்கவாசகருக்காகச் சித்தர் கட்டளையிட அதனால் கெடிலம் திசைமாறாவிட்டாலும், உண்மையில் என்ன நடந்திருக்கலாம்? மாணிக்கவாசகர் தில்லையிலிருந்து வடக்கு நோக்கி வந்து திருப்பாதிரிப்புலியூரை நெருங்கினபோது, வழியிலே கெடிலத்தில் வெள்ளம் ஒடியிருக்கலாம். அதனால் அவர் வெள்ளத்தின் வடிவை எதிர்பார்த்து அக் கரையிலேயே கடவுளை வேண்டிக் காத்திருக்கலாம். இந்த நேரத்தில், அவ்விடத்திற்கு மேற்கே திருவயிந்திரபுரத்தில் ஆற்று வெள்ளம் பிய்த்துக் கொண்டு திசைமாறி ஓடி யிருக்கலாம். வந்துகொண்டிருந்த வெள்ளத்தின் பெரும் பகுதி மேற்கே திசைமாறி எதிர்ப்பக்கம் திரும்பியதால் மணிவாசகர் காத்துக் கொண்டிருந்த இடத்தில் தண்ணீர் குறைந்திருக்கலாம். இது மாதிரி இந்தக் காலத்திலும் நடப்பதுண்டு. சிலர், ஆற்று வெள்ளம் தங்கள் ஊரை அழிக்காமல் இருப்பதற்காக எதிர்க்கரையில் சென்று அக்கரையை வெட்டிவிட்டு வெள்ளத்தை அக்கரைப் பக்கம் திருட்டுத்தனமாகத் திருப்பி விடுவதும் இக் காலத்தில் நடப்பதாகச் சொல்லப்படுகிறது. தண்ணீர் குறைந்து வழக்கமாகக் கடக்கக் கூடிய அளவுக்கு வரவே, மாணிக்க வாசகர் எளிதாக ஆற்றைக் கடந்து அக்கரை யடைந்திருக்கலாம். வேறு பக்கம் திசை மாறிய கெடிலம் அந்தப் புதுப்பாதையிலேயே தொடர்ந்து சென்றிருக்கலாம். இந்த நிகழ்ச்சி தொடர்ந்து பல நூற்றாண்டுகளாகச் செவி வழியாக மக்களிடையே அறியப்பட்டு வந்திருக்கலாம். இதைக் கேள்விபட்ட சிதம்பரநாத முனிவர் புராணத்தில் பொருந்தப் புளுகிவிட்டிருக்கலாம். எனவே மாணிக்க வாசகருக்காகத்தான் கெடிலம் திசை மாறியது என்பதை நம்பாவிட்டாலும், அவர் காலத்தில் திசை மாறியிருக்கலாம் என்பதையாவது நம்பி வைக்கலாமே!
(2) அடுத்து, மாணிக்கவாசகரை முற்பட்டவராகவும், தொல்காப்பியத் தேவரைப் பிற்பட்டவராகவும் கொள்ளுதலும் பொருந்தாது. பத்தாம் நூற்றாண்டினராகிய மாணிக்க வாசகருக்குச் சில ஆண்டுகளாயினும் தொல்காப்பியத் தேவர் முற்பட்டவராகவே இருந்திருப்பார். ஏன், இருவரையும் ஒரு காலத்தில் வாழ்ந்தவராகக் கூடக் கூறலாமே! தொல்காப்பியத் தேவர் வயதில் மூத்தவராயிருந்து முன்னால் காலமாகி யிருக்கலாம்; மாணிக்கவாசகர் வயதில் இளையவராயிருந்து பின்னால் காலமாகி யிருக்கலாம். திருப்பாதிரிப்புலியூர்க்குத் தெற்கே கெடிலம் ஓடியதாக எழுதிய தொல்காப்பியத் தேவர் காலமான சில ஆண்டுகளில் கெடிலம் திசை மாறியிருக்கலாமே! எனவே, தொல் காப்பியத் தேவர் நூற்றாண்டுக் கணக்கில் மாணிக்க வாசகர்க்கு முட்பட்டவர் என்று கூறமுடியாவிடினும், சில ஆண்டுகளாயினும் முற்பட்டவர் என்று கூறலாமே!
சிலர், வேறொரு காரணங் காட்டியும் தொல்காப்பியத் தேவரின் காலத்தைப் பின்னுக்குத் தள்ள முயலலாம். அஃதாவது, கலம்பகம், தூது, உலா முதலிய 96 வகைச் சிற்றிலக்கியங்கள் பிற்காலத்தில் தோன்றியவை; எனவே, திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம் இயற்றிய தொல்காப்பியத் தேவர் மணிவாசகருக்குப் பிற்பட்டவரே என்று கூறக் கூடும்.
கலம்பகம் போன்ற சிற்றிலக்கியங்கள் சங்க இலக்கியங்கட்குப் பிற்பட்டனவேயெனினும், ஏழாம் நூற்றாண்டிலிருந்தே இத்தகு சிற்றிலக்கியங்கள் தோன்றத் தொடங்கி விட்டன. கலம்பக நூல்கள் ஒன்பதாம் நூற்றாண்டிலேயே தோன்றத் தொடங்கிவிட்டன என்பதும், திருப்பாதிரிப் புலியூர்க் கலம்பகம், நந்திக்கலம்பகம், ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் முதலிய கலம்பகங்கள் கலம்பக நூல்களுக்குள் மிகவும் பழமையானவை என்பதும் தமிழிலக்கிய ஆராய்ச்சி வல்லுநர்கள் நன்கறிந்த செய்திகளாம். ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம் நம்பி யாண்டார் நம்பி இயற்றியது. அவர் பதினோராம் நூற்றாண்டினர். எனவே, திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம் இயற்றிய தொல்காப்பியத் தேவரின் காலம் ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியாய் இருக்கலாம். இவ்வகையில் பார்க்குங்கால், மாணிக்கவாசகருக்குச் சிலவாண்டுகளாயினும் முற்பட்டவர் தொல்காப்பியத் தேவர் என்று கூறமுடியுமே.
மேலும், தேவர் என்னும் பட்டப் பெயரைப் பார்க்கும் போது, இவர் சமணராயிருந்து பிறகு சைவத்திற்கு மாறினதாகத் தெரிகிறது. தேவர் என்பது சமணமுனிவரைக் குறிக்கும் பெயராகும். சீவக சிந்தாமணி ஆசிரியராகிய திருத்தக்க தேவர், சூளாமணி யாசிரியராகிய தோலா மொழித் தேவர் ஆகிய சமணப் பெரியோர்களின் பெயர்களை ஈண்டு ஒப்பு நோக்குக. திருத்தக்க தேவரும் தோலா மொழித் தேவரும் எட்டு அல்லது ஒன்பதாம் நூற் றாண்டினராக இருக்கலாம் எனக் கூறப்படுகின்றனர். அவர்கள் காலத்தையொட்டியவராகத் தொல்காப்பியத் தேவரையும் கொள்ளலாம். ஏழாம் நூற்றாண்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டு வரை - அதாவது அப்பரடிகள் காலத்திலிருந்து மணிவாசகர் காலம் வரை, சைவ சமணப் புத்த மதப் போராட்டங்கள் கடுமையாக நடந்ததும், சமண. புத்த மதங்களைப் பின்பற்றியிருந்தவர்கள் சைவத்திற்கு மாறினதும் அறிந்த செய்திகளே. எனவே, தொல்காப்பியத் தேவர் என்னும் பெயர் அமைப்பையும், அவர் சமணத்தி லிருந்து சைவத்திற்கு மாறினதையும் எண்ணிப் பார்க்குங்கால், தொல்காப்பியத் தேவரின் காலம், ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியாய் இருக்கலாம் எனச் சூழ்நிலையையொட்டித் தெரிய வருகிலது.
ஈண்டு மீண்டும் ஒன்றை நினைவுகூர வேண்டும். பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த இரட்டையர்கள், ‘தொல்காப்பியத் தேவர் திருப்பாதிரிப்புலியூர் இறைவன் மேல் கலம்பகம் பாடியபின் நாங்கள் பாடுவது எடுபடாது’ என்று கூறியிருப்பதைக்கொண்டு, தேவர் இரட்டையர்க்குச் சிறிது காலந்தான் முற்பட்டவர் என்று கொள்ளக்கூடாது. * ‘கண்பாய கலம்பகத்திற்கு இரட்டையர்கள்’ என்ற புகழ் மொழிப்படி, கலம்பகம் பாடுவதில் இரட்டையர்கள் வல்லவர்கள். தில்லைக் கலம்பகம், திருவாமாத்தூர்க் கலம்பகம் முதலிய சிறந்த நூல்களை அவர்கள் இயற்றியுள்ளார்கள்.
• ¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬தனிப்பாடல்
எனவே, கலம்பக வல்லுநர்களாகிய அவர்கள் திருப்பாதிரிப் புலியூருக்கு வந்தபோது, தங்கள் ஊர்க்கும் ஒரு கலம்பகம் பாடும்படி அவ்வூரார் கேட்டனர். ஆனால்,
தொல்காப்பியத் தேவரின் திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகமோ முன்னமேயே மிகவும் பெயர் பெற்று விளங்கியது. இந்நிலையில், திருப்பாதிரிப்புலியூர் இறைவன் மேல் தாங்களும் ஒரு கலம்பகம் பாடத் தேவையில்லை என இரட்டையர்கள் உணர்ந்து, தேவரின் கலம்பகமே போதும் எனக் கூறிவிட்டனர். எனவே, கலம்பகச் ‘சேம்பியன்கள்’ (Champians) ஆன இரட்டையர்களாலேயே பாராட்டப் பெற்ற திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம் இரட்டையர்கட்கு முன்பே பல நூற்றாண்டுகளாக மக்களால் பாராட்டப் பெற்று வந்திருக்க வேண்டும் என உணரலாம். ஆகவே, தொல்காப்பியத்தேவர், முப்பத்திரண்டு ஆண்டுகளே வாழ்ந்த மாணிக்கவாசகரினும் முற்பட்டவராய், ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தார் எனத் துணியலாம்.
மேலே இதுவரையும் செய்த ஆராய்ச்சியில், தொல்காப்பியத் தேவரும் மாணிக்கவாசகரும் பத்தாம் நூற்றாண்டளவில் முறையே அடுத்தடுத்து வாழ்ந்தவராய் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்த ஆராய்ச்சியை அனைவரும் ஏற்றுக்கொள்வது அரிது. காலவாராய்ச்சி மிகவும் கடுமையானது அதற்குத் திட்டவட்டமாய் அறுதியிட்டு உறுதி கூறி முற்றுப்புள்ளி வைத்துவிட முடியாது. அந்தந்தக்காலச் சூழ்நிலையைக் கொண்டு இப்படியிருந்திருக்கலாம் எனக் குறிப்பாகவே கூறமுடியும்.
இந்த அடிப்படையில் நோக்குங்கால், தொல்காப்பியத் தேவரின் காலத்தையடுத்து மாணிக்கவாசகர் காலத்தில் கெடிலம் திசை மாறியிருக்கலாம் என்பதும், அந்தக் காலம் பத்தாம் நூற்றாண்டு என்பதும் புலப்படும். எனவே, மாணிக்கவாசகர் காலம் கி.பி. பத்தாம் நூற்றாண்டு எனலாம்.
6. திருவயிந்திரபுரம்
கெடிலக்கரையை ஒட்டியுள்ள ஒரே ஒரு வைணவத் திருப்பதியான திருவயிந்திரபுரம், கடலூர்த் தலைநகரப் பகுதிக்கு மேற்கே 7 கி.மீ. தொலைவில் - கடலூர்த் திருப்பாதிரிப்புலியூருக்கு மேற்கே 5 கி.மீ. தொலைவில், கடலூர் - திருக்கோவிலூர் மாவட்ட நெடும்பாதையில், கெடிலத்தின் கிழக்குக் கரையில் அமைந்திருக்கிறது. ஊரின் வடக்கு எல்லையில் - அணையின் கீழ்பால் நெடும்பாதை ஆற்றைக் கடந்து செல்கிறது. இங்கே ஆற்றில் பாலம் இல்லை. நெடும்பாதையில் பேருந்து வண்டி போக்குவரவு உண்டு. வெள்ளக் காலத்தில் மட்டும் பேருந்து வண்டிகள் இவ்வழியே செல்லாமல் மஞ்சக்குப்பம் வழியாகச் செல்லும், கடலூருக்கும் - திருவயிந்திரபுரத்திற்குமாக உள் நகர்ப் பேருந்து வண்டி (டவுன் பஸ்) போக்கு வரவு உண்டு. புகைவண்டியில் வருபவர்கள், திருப்பாதிரிப்புலியூர்ப் புகை வண்டி நிலையத்தில் இறங்கி மேற்கே 5 கி.மீ. செல்ல வேண்டும். இங்கிருந்து பேருந்து வண்டி வசதியிருப்பதன்றி, மிகுதியாகக் குதிரை வண்டி வசதியும் உண்டு. திருப்பாதிரிப் புலியூர்ப் புகைவண்டி நிலையத்தை விட, அதனையடுத்து மேற்கேயுள்ள வரகால்பட்டுப் புகைவண்டி நிலையம் திருவயிந்திரபுரத்திற்கு மிகவும் அணித்தாகும். இந்த நிலையத்திற்கும் திருவயிந்திரபுரத்திற்கும் இடையே கெடிலம் ஆறு வடக்கும் - கிழக்குமாக வளைந்து செல்கிறது. இந்த நிலையத்திலிருந்து ஒன்று அல்லது ஒன்றரை கி.மீ. தொலைவு தெற்கு நோக்கி நடந்து ஆற்றின் வளைவைக் கடந்து திருவயிந்திர புரத்தை அடையவேண்டும். நடக்க முடியாதவர்கள் திருப்பாதிரிப் புலியூர்ப் புகைவண்டி நிலையத்தில் இறங்கி வண்டி பிடித்துக்கொள்ள வேண்டும். இந்த நிலையம் விழுப்புரம் - கூடலூர்ப் பாதையில் இருக்கிறது.
திருமாணிகுழிப் பக்கத்திலிருந்து கேப்பர் மலைத் தொடர்ச்சியின் அடிவாரத்தையொட்டிக் கிழக்கு நோக்கி வந்து கொண்டிருக்கும் கெடிலம் ஆறு, திருவயிந்திரபுரம் வந்ததும் L செங்கோணத்தில் நேர் வடக்காக வளைந்து திரும்புகிறது. இந்த இடத்தில், மேற்கும் கிழக்குமாக நீண்டு கிடக்கும் கேப்பர் மலையிலிருந்து ஒரு குன்று வடக்கு நோக்கிப் பிதுங்கிக் கைகாட்டிபோல் நீட்டிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு கேப்பர் மலையில் வடக்கு நோக்கி ஒரு பிதுக்கம் வளைந்து நீட்டிக்கொண்டி டிருப்பதாலேயே அம்மலையின் அடிவாரத்தைத் தொடர்ந்து ஒடி வந்து கொண்டிருக்கும் கெடிலம் ஆறும் இவ்விடத்தில் வடக்கு நோக்கி வளைந்து செல்கிறது. இவ்வாறு வடக்கு நோக்கி ஒரு கி.மீ. தொலைவு ஓடி மீண்டும் கிழக்கு நோக்கி வளைந்து விடுகிறது.
கிழக்கு நோக்கி ஓடிவரும் கெடிலம் வடக்கு நோக்கித் திரும்புகிற முனையில் ஆற்றின் கிழக்குக் கரையில் திருவயிந்திரபுரம் உள்ளது. இங்கே ஆறு தெற்கு வடக்காக ஒடுகிறது. வடக்கு நோக்கியோடும் ஆற்றிற்கும் வடக்கு நோக்கியுள்ள மலைப் பிதுக்கத்திற்கும் நடுவே திருவயிந்திரபுரம் பெருமாள் கோயில் உள்ளது. கோயிலின் கிழக்குவாயிலிலிருந்து மலைக்குப் படிக்கட்டு மேல்நோக்கிச் செல்கிறது; கோயிலின் மேற்கு வாயிலிலிருந்து ஆற்றிற்குப் படிக்கட்டு கீழ் நோக்கிச் செல்கிறது. இதிலிருந்து, ஆற்றிற்கும் மலைக் குன்றுக்கும் நடுவே கோயில் நெருக்குண்டு கிடத்தல் புலனாகும். ஆறு கோயிலின் மேற்கு வாயிலை முட்டி மோதிக்கொண்டு செல்கிறது எனலாம். கோயிலின் கோபுரம், மதில் முதலியவற்றின் தோற்றம் தலைகீழாய்த் தண்ணீரில் தெரிவதைக் காணலாம். திருவயிந்திரபுரத்தில் வடக்கு நோக்கிப் பிதுங்கியுள்ள குன்றின் படத்தையும், வடக்கு நோக்கித் திரும்பி ஓடும் ஆற்றின் படத்தையும், தண்ணீரில் கோயிலின் தோற்றம் தெரியும் படத்தையும். கெடிலக் கரை நாகரிகம் என்னும் நூலில் காணலாம். மற்றும், கோயிலின் மிக அண்மையில் வடபுறம் இருக்கும் அணை பற்றியும், அந்த இடத்தின் இயற்கைக் காட்சிச் சிறப்புப் பற்றியுங்கூட அந்த நூலில் விரிவாகக் காணலாம்.
திருவயிந்திரபுரம் கோயில் தேவநாதசாமி கோயில் எனவும் தெய்வநாயகப் பெருமாள் கோயில் எனவும் அழைக்கப்படும். பெருமாள் பெயர்: தேவநாதர், தெய்வ நாயகப் பெருமாள்: தாயார் பெயர்: வைகுந்த நாயகி, செங்கமலத் தாயார். ஊரின் பெயர் நாலாயிரப் பிரபந்தத்தில் ‘திருவயிந்திரபுரம்’ எனக் கூறப்பட்டுள்ளது. இப் பெயர் இன்று ‘திருவந்திபுரம்’ எனச் சுருங்கி விட்டது. இதனையே மக்கள் தமது திருந்தாத கொச்சை வழக்கில் 'திருந்திபுரம்’ எனக் கூறுகின்றனர். இவ்வூர்ப் புராணங்களில் 'திருவுகீந்திரபுரம்’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அயிந்திரன்-அகீந்திரன் என்றால் ஆதிசேடன் என்று பொருளாம்; ஆதிசேடன் வழிபட்ட ஊராதலின் அயிந்திரபுரம் - அகீந்திரபுரம் என அழைக்கப்பட்டதாம். அயிந்திரபுரம் என்னும் பெயர் சுருங்கி மருவி ‘அயிந்தை' என இலக்கியங்களில் வழங்கப்பட்டுள்ளது. சில கல்வெட்டுகளில் திருவேந்திபுரம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேதாந்த தேசிகர் முதலிய வைணவப் பெருமக்கள், திருவயிந்திரபுரத்தருகில் ஒடும் கெடிலத்திற்கு ஒரு பெருமை கற்பித்துள்ளனர். தமிழ் நாட்டில் ஆறுகள் மேற்கு - கிழக்காக ஒடுகின்றன; இவ்வாறே மேற்கு - கிழக்காக ஓடி வரும் கெடிலம் திருவயிந்திரபுரத்தில் வடக்கு நோக்கித் திரும்பித் தெற்கு வடக்காக ஓடுகிறது. இவ்வாறு வடக்கு நோக்கி ஒடுவது ஒரு புதுமையாம். - அற்புதமாம். இங்கே வடக்கு நோக்கி ஓடுவதால் கெடிலத்திற்கு உத்தர வாகினி என்னும் சிறப்புப் பெயர் ஈந்து போற்றியுள்ளனர் பெரு மக்கள். உத்தரம் என்றால் வடக்கு. வடக்கு நோக்கி ஓடும் ஓர் ஆற்றோட்டத்தின் கரையில் ஒரு தெய்வத் திருப்பதி அமைந்திருப்பது மிகவும் சிறப்பாம். இந்தச் சிறப்பு திருவயிந்திரபுரத்திற்குக் கிடைத்திருக்கிறது. வடக்கு நோக்கி ஒடும் உத்தர வாகினியாகிய கெடிலத்தின் கிழக்குக் கரையில் திருவயிந்திரபுரம் அமைந்திருப்பதால், இவ்வூர் மிகவும் பெருமைக்கு உரியதெனப் பெருமக்களால் போற்றப் படுகிறது.
இந்த அடிப்படையில் திருவயிந்திரபுரம் என்னும் பெயர் வந்ததற்கு ஒரு புதுக் காரணம் கற்பித்துக் கூற விரும்புகிறேன் அடியேன். அயித்திரம் என்னும் சொல்லுக்குக் கிழக்கு என்னும் பொருளும் உண்டு. கெடிலத்தின் கிழக்குக் கரையில் இருக்கும் ஊர் ஆதவின் ‘அயிந்திரபுரம்' என்னும் பெயர் ஏற்பட்டிருக்கலாம் என்பது அடியேன் கற்பித்துக் கூறும் காரணம். தமிழகத்தில் மற்ற ஆறுகள் மேற்கு-கிழக்காக ஓடுவதால், ஆற்றங்கரைத் திருப்பதிகள் ஆற்றின் வடகரையிலோ அல்லது தென்கரையிலோதான் இருக்கும். ஆற்றின் கிழக்குக் கரையில் திருப்பதிகள் அமைவதற்குப் பெரும்பாலும் வாய்ப்பில்லை. இந்த நிலையில் திருவயிந்திரபுரம் கெடிலத்தின் கிழக்குக் கரையில் அமைந்திருப்பது ஒரு புதுமை-அற்புதம்! எனவே, அயித்திரக் (கிழக்குக்) கரையில் அமைந்திருக்கும் இவ்வூரை அயிந்திரபுரம் என அக்காலத்தில் பெரியவர்கள் அழைத்திருக்கலாம் என்பது அடியேனது புதிய கற்பனை. ஆறு வடக்கு நோக்கி ஒடுவது அற்புதம் என்றால், ஆற்றின் கிழக்குக் கரையில் தெய்வத் திருப்பதி அமைந்திருப்பதும் அற்புதம் என்பது சொல்லாமலே விளங்குமே! இந்தக் கருத்தை அனைவரும் ஏற்றுக் கொள்வர் . ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற முறையில் முடிந்த முடியாக இங்கே அடியேன் கூறவில்லை - கூறவும் முடியாது; சிந்தனையைக் கிளறித் தூண்டும் முறையிலேயே ஆராய்ச்சியாளர் முன் இந்தக் கருத்தை அடியேன் வைத்துள்ளேன். சிறப்பு கருதித் திசையின் பெயரால் கெடிலம் ‘உத்தர வாகினி' என அழைக்கப் படுவதைப் போல, ஊரும் சிறப்பு கருதித் திசையின் பெயரால் அயிந்திரபுரம் என அழைக்கப் படலா மல்லவா?
கோயிலின் கிழக்கு வாயிலின்மேல் கோபுரம் இல்லை. மேற்கு வாயிலின்மேல் கோபுரம் இருக்கிறது; ஆற்றுப் பக்கமாக இருக்கும் மேற்குக் கோபுரவாயில் தான் கோயிலின் சிறப்பு (முக்கிய) வாயிலாகக் கருதப்படுகிறது. இறையுருவங்கள் விழாக்காலங்களில் வெளியில் செல்வது . வருவது எல்லாம் இந்த மேற்குக்கோபுர வாயிலால் தான். மேற்குவாயிலே சிறப்பிடம் பெற்றிருப்பினும், கருவறையில் திருமால் நின்ற கோலத்தில் எழுந்தருளியிருப்பது கிழக்கு நோக்கியேயாம். கோயிலின் நடுவிலும் ஒரு சிறுகோபுரம் உள்ளது. கோயிலின் கிழக்கு வாயிலுக்கு எதிரே மலையிருக்கிறது; இம்மலையின் மேலும் கோயில் உண்டு;
இந்த மலைக் கோயிலும் கிழக்குநோக்கியே அமைந்துள்ளது. ‘அயக்கிரீவன் கோயில்’ என்பது இதன் பெயர். அயக்கிரீவன் என்பது திருமாலின் பெயர்களுள் ஒன்று. திருமாலின் தோற்றங்களுள் அயக்கிரீவத் தோற்றமும் ஒன்று. அயம் (ஹயம்) என்றால் குதிரை; கிரீவம் என்றால் கழுத்து; அயக்கிரீவன் என்றால் குதிரைக் கழுத்து உடையவன் என்பது பொருளாம்; திருமாலின் அயக்கிரீவத் தோற்றத்தில் ஒரு புராணக் கதை அடங்கியுள்ளது. அயக்கிரீவன் கோயில் முகப்பில் இருக்கும் மண்டபத்தின் மேல் உள்ள விமானம் காணத்தக்கது. மலை மேலும் ஒரு கிணறு உண்டு.
அயக்கிரீவன் கோயில் உள்ள மலைக்கு ஔஷதகிரி என்னும் பெயர் புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. ஒளஷதம் = மருந்து; கிரி = மலை; ஒளஷதகிரி = மருந்து மலை. இந்த மலையில் மருத்துவ மூலிகைகள் பல உள்ளன; இந்த மலைக் காற்றும் மலையடிவாரத் தண்ணிரும் நோய் தீர்க்கும் மருந்துகளாம்; அதனால் இம்மலை மருத்துவமலை என அழைக்கப்படுகிறது.
“முன்னொரு காலம் விண்வழியே உலாச் சென்ற திருமால் மருத்துவ மலையில் தங்கி இளைப்பாறினார். அப்போது அவர்க்குத் தாகவிடாய் தோன்ற, ஆதிசேடனும் கருடனும் நீர்கொண்டுவரச் சென்றனர். ஆதிசேடன் மலையின்கீழ்த் தரையை வாலால் அடித்துப் பிளந்து கிணறு உண்டாக்கி நீர் கொணர்ந்து தந்தார். அந்தக் கிணற்றுக்குச் ‘சேஷ தீர்த்தம்’ என்பது பெயர். கருடன் தன் அலகால் தரையைக் கிழித்து நீர் ஆறாகப் பெருகச் செய்து அதிலிருந்து நீர் கொணர்ந்தார்; அந்த ஆற்றிற்குக் ‘கருட தீர்த்தம்’ அல்லது 'கருட நதி' என்பது பெயர்: அதுதான் கெடிலம் ஆறு-இது புராணங்களை ஒட்டிய கதை.
ஆதிசேடன் வாலால் அடித்துத் தோன்றியதாகச் சொல்லப்படும் சேஷதீர்த்தம் என்னும் கிணறு திருவயிந்திரபுரம் கீழ்க்கோயிலில் உள்ளது. அந்த கிணற்றின் கைப்பிடிச் சுவரில் ஆதிசேடன் (பாம்பு) உரு அமைக்கப்பட்டுள்ளது. கிணற்றுத் தண்ணிரின் நிறமும் வாடையும் இயற்கைக்கு மாறாய் உள்ளன - அதாவது, நன்றாயில்லை. காரணம், வேண்டி நேர்ந்து கொண்ட (பிரார்த்தித்துக் கொண்ட) அன்பர்கள் பால், மிளகு, வெல்லம், சூடம் முதலியவற்றை அக்கிணற்றில் கொட்டுகின்றனர்; காணிக்கையாகக் காசும் போடுகின்றனர்; இதனால் தண்ணீரின் தன்மை மாறுதலாயுள்ளது. ஆனால் இந்தக் கிணற்றுத் தண்ணீரைக் கொண்டுதான் கோயிலில் உணவுப் பொருட்கள் ஆக்கப்படுகின்றன; இந்தத் தண்ணீரில் ஆக்கப்படுவதால், உணவுப் பொருட்கள் மிகவும் சுவை உடையனவாகவும் நெடுநேரம் கெடாதனவாகவும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
வைணவர்களால் 'நடுநாட்டுத் திருப்பதி' எனச் சிறப்பித்துத் கூறப்படும் திருவயிந்திரபுரம் திருக்கோயில், திருமங்கையாழ்வாரின் மங்களாசாசனப் பாடல் பெற்று உள்ளது இவ்வூரில் பல்லாண்டுகள் வாழ்ந்த மிகச் சிறந்த வைணவ ஆசாரியரான வேதாந்த தேசிகர் இவ்வூர் இறைவன் மேல் தமிழிலும் வடமொழியிலும் பல பாடல்கள் பாடியுள்ளார். இவ்வூரைப் பற்றி வடமொழியில் பிரம்மாண்ட புராணம், கந்தபுராணம் (சைவக் கந்தபுராணம் வேறு), பிருகந் நாரதிய புராணம் முதலிய நூல்கள் உள்ளன. கருட நதியாகிய கெடிலம் கங்கைக்கு ஒப்பானது எனத் திருமாலால் பாராட்டிப் புகழப்பட்டிருப்பதாகக் கந்த புராணம் (வைணவ புராணம்) முதல் பகுதியில் தெரிவிக்கப் பட்டுள்ளது. தமிழிலே, மும்மணிக் கோவை, நவரத்தின மாலை முதலிய சிற்றிலக்கியங்களும் இவ்வூரின் மேல் இயற்றப்பட்டுள்ளன. “வெற்புடன் ஒன்றி அயிந்தையில் வெவ்வினை தீர் மருந்தொன்று அற்புதமாக அமர்ந்தமை” என மும்மணிக் கோவையில் அயிந்தை (அயிந்திரபுரம்) பாராட்டப் பெற்றுள்ளது.
திருவயிந்திர புரத்தில் சித்திரைத் திங்களில் பத்துநாள் பெருவிழா நடைபெறும் ஒன்பதாம் திருவிழா நாளான சித்திரைப் பருவத்தன்று தேர்த்திருவிழா நடைபெறும். அன்று மிகப் பெருந்திரளான மக்கள் இங்கே கூடுவர். எட்டாம் திருவிழா அன்று இரவே ஆயிரக்கணக்கான மக்கள் வந்து கூடி ஆற்று மணலில் படுத்து உறங்கியும் உரையாடியும் இரவுப் பொழுதை மகிழ்ச்சியுடன் கழிப்பர். வைகறையில் எழுந்து ஆற்றில் நீராடித் தேர்த்திருவிழாவைக் கண்டு களிப்பர். இவ்வூரில் பல்லாண்டுகள் வாழ்ந்து நூற்றுக்கு மேற்பட்ட நூல்களை இயற்றிய வேதாந்த தேசிகரின் நினைவாக ஒரு மண்டபம் உள்ளது. அம்மண்டபத்திற்கு விழாநாளில் இறையுருவம் கொண்டு செல்லப்படும். இது தேசிகரின் சிறப்பிற்குச் சான்று. தேசிகருக்குக் கருடாழ்வார் அருளுரை வழங்கிய விழா புரட்டாசித் திருவோணத்தில் நடைபெறும். கார்த்திகைத் திங்களில் ‘தாலாட்டுவிழா’ என்னும் ஒருவகை விழா இனிது நடைபெறும். மாசிமகத்தன்று தேவநாத்ப்பெருமாள் கடலூர்க் கடற்கரைக்கு எழுந்தருளி நீராடுவார்; அன்றிரவு வண்டிப்பாளையத்திலுள்ள மண்டபத்தில் தங்கி விழா வயர்ந்து செல்வார்.
மக்கள் பலர் திருவயிந்திரபுரம் வந்து முடியெடுத்துக் கொள்வர். குடும்பப் பழக்கமாகக் குழந்தைகட்கு முடியெடுப்பதல்லாமல், நேர்ந்து வேண்டிக்கொண்ட பெரியவர்களும் வந்து முடியெடுத்துக் கொள்வதுண்டு. திருவயிந்திரபுரம் தெற்குத் திருப்பதி எனப் புராணங்களாலும் மக்களாலும் போற்றப்படும் பெருமையுடைய தாதலால், திருப்பதிக்குப் போகமுடியாதவர்கள் அங்கே செலுத்துவதாய் நேர்ந்துகொண்ட கடனை இங்கே வந்து செலுத்துவதும் உண்டு. திருப்பதி வேங்கடத்தான் கோயில் முன் காலத்தில் முருகன் கோயிலா யிருந்தது என்று சிலர் சொல்வதுபோல், திருவயிந்திரபுரம் கோயிலும் முன் காலத்தில் சைவக் கோயிலாயிருந்தது எனச்சிலர் சொல்வதுண்டு; அவர்கள் தம் கூற்றுக்குச் சான்றாக, இக்கோயிலுக்குள் விநாயகர் உருவமும் சிவனது தட்சணாமூர்த்தி உருவமும் இருப்பதைச் சுட்டிக் காட்டுகின்றனர். சில ஊர்ச் சிவன் கோயில்களுக்குள்ளே கூடத்தான் திருமால் கோயில் இருக்கிறது. சிதம்பரத்தில் இரண்டும் அருகருகே இல்லையா? எனவே, இது சார்பாக எதையும் திட்டவட்ட மாகக் கூறமுடியாது. பழமுதிர்சோலை என்னும் கள்ளழகர் கோயில் பற்றியும் இது போன்ற கருத்து வேறுபாடு காணப்படுவது ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது.
நீராடு செலவு (தீர்த்த யாத்திரை) மேற்கொண்ட அர்ச்சுனன் திருவயிந்திரபுரத்திற்கும் வந்து நீராடி வழிபாடு நடத்தினானாம். இதனை வில்லிபாரதம் - ஆதிபருவம் அர்ச்சுனன் தீர்த்த யாத்திரைச் சருக்கத்திலுள்ள,
“மெய்யாகம வதிகைத்திரு வீரட்டமு நேமிக்
கையாளான் அகீந்திரபுரமும் கண்டு கைதொழுதான்”
என்னும் பாடல் (17) பகுதியால் அறியலாம். வெளியூரார் சிலர் திருவயிந்திரபுரம் கோயிலில் வந்து திருமணம் செய்து கொண்டு போவதும் உண்டு.
திருவயிந்திரபுரத்தில் சோழர், பாண்டியர் முதலியோர் காலத்தைச் சேர்ந்தனவாய் ஐம்பதிற்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. இவற்றுள் மூன்றாம் இராசராசச் சோழனது கல்வெட்டொன்று மிகவும் குறிப்பிடத்தக்கது. பாண்டியர்க்குத் தோற்றோடிய அச்சோழனைக் கோப்பெருஞ்சிங்கன் சேந்தமங்கலத்தில் சிறை வைத்த செய்தியும், சோழனுக்கு நண்பனான போசள மைசூர் மன்னன் வீரநரசிம்ம தேவன் கோப்பெருஞ்சிங்கனை முறியடித்துச் சோழனைச் சிறைமீட்ட செய்தியும் வரலாற்றில் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. இந்நிகழ்ச்சியை விவரிக்கும் மூன்றாம் இராசராசனது கல்வெட்டு திருவயிந்திரபுரம் தேவநாயகப் பெருமாள் கோயிலில் உள்ளது; அது வருமாறு:-
"ஸ்வஸ்தி ஸ்ரீதிரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீராஜ ராஜ தேவர்க்கு யாண்டு பதினைந்தாவதில் எதிராமாண்டு, ப்ரதாபச் சக்கரவர்த்தி ஹொய்சன ஸ்ரீவீர நரசிம்ம தேவன் சோழ சக்கரவர்த்தியைக் கோப்பெருஞ்சிங்கன் சேந்த மங்கலத்தே பிடித்து கொடு வந்து தன் படையை இட்டு ராஜ்யத்தை அழித்து தேவாலையங்களும் விஷ்ணஸ்தானங்களும் அழிகையாலே இப்படி தேவன் கேட்டருளி, சோழ மண்டல ப்ரதிஷ்டாசாரியன் என்னும் கீர்த்தி நிலைநிறுத்தி அல்லது இக்காளம் ஊதுவதில்லை என்று தோர சமுத்திரத்தினின்றும் எடுத்து வந்து மகத ராஜ்ய நிர்ம்மூலமாடி, இவனையும் இவன்பெண்டு பண்டாரமும் கைக்கொடு பாச்சூரிலே விட்டு கோப்பெருஞ் சிங்கன் தேசமும் அழித்து சோழ சக்கரவர்த்தியையும் எழுந்தருளிவித்துக் கொடு என்று தேவன் திருவுள்ளமாய் ஏவ, விடை கொண்டு எழுந்த ஸ்வஸ்தி ஸ்ரீமனு மஹாப்ரதானி பரம விச்வாஸி தண்டிந கோபன் ஜகதொப்ப கண்டன் அப்பண தண்ணாக்கனும் சமுத்திர கோப்பய தண்ணாக்கனும் கோப்பெருஞ் சிங்கன் இருந்த எள்ளேரியும் கல்லியூர் மூலையும் சோழர்கோன் இருந்த தொழுதகையூரும் அழித்து, வேந்தன் முதலிகளில் வீரகங்க நாடாழ்வான் சீனத் தரையன், ஈழத்து ராஜா பராக்கிரம பாஹா உள்ளிட்ட முதலி நான்கு பேரையும்...... கொன்று இவர்கள் குதிரையும் கைகொண்டு, கொள்ளிச் சோழ கோன் குதிரைகளையும் கைக்கொண்டு, பொன்னம்பல தேவனையும் கும்பிட்டு எடுத்து வந்து தொண்டை மானல்லூர் உள்ளிட தமுக்குர்களும் அழித்து அழி...... க்காடும் வெட்டிவித்து, திருப்பாதிரிப்புலியூரிலே விட்டு இருந்து, திருவதிகைத் திருவெக்கரை உள்ளிட்ட ஊர்களும் அழித்து, வாரண வாசி ஆற்றுக்குத் தெற்கு சேந்த மங்கலத்துக்கும் கிழக்கு கடலிலே அழி ஊர்களும் குடிக்கால்களும் சுட்டும் அழித்தும் பெண்டுகளை பிடித்தும் கொள்ளை கொண்டும் சேந்த மங்கலத்திலே எடுத்துவிடப் போகிற அளவிலே, கோப்பெருஞ் சிங்கன் குலைந்து சோழச் சக்கரவர்த்தியை எழுத்தருளிவிக்கக் கடவதாக தேவனுக்கு விண்ணப்பம் செய, இவர் விட்டு நமக்கும் ஆள் வரக் காட்டு கையாலே சோழச் சக்கரவர்த்தியை எழுந்தருளிவித்துக் கொடு போந்து ராஜ்யத்தே புக விட்டது.”
இந்தக் கல்வெட்டு வாயிலாக, போசள மன்னன் வீர நரசிம்மன் சோழனுக்குப் பரிந்து கொண்டு, கோப்பெருஞ் சிங்கனது ஆட்சியின்கீழ் இருந்த பல பகுதிகளைக் கண்டபடி தாக்கித் தீயிட்டு அழித்திருக்கிறான் என அறியலாம். இந்தக் கல்வெட்டின் இடையே ‘மகத ராஜ்ய நிர்ம்மூலமாடி’ என்றிருக்கும் பகுதியைக் கொண்டு, திருமுனைப்பாடி நாட்டின் ஒரு பகுதிக்கு ‘மகத நாடு’ என்னும் பெயர் அன்றிருந்தமை புலனாகும்.
தொண்டையர் கோமான் அடையவளைந்தான் என்னும் குறுநில மன்னனுடைய படை மறவரின் பெருமையை அறிவிக்கும் கல்வெட்டுச் செய்யுள் ஒன்று, தேவநாயகப் பெருமாள் கோவில் மேலைக் கோபுர வாயிலின் இடப்புறச் சுவரில் உள்ளது. இந்தச் செய்திகளையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு பார்க்குங்கால் அந்தக் காலத்தில் திருவயிந்திரபுரம் அரசியல் அரங்கில் பெற்றிருந்த சிறப்பிடம் புலப்படும். கோப்பெருஞ்சிங்கன் மூன்றாம் இராசராசச் சோழனைச் சேந்தமங்கலத்தில் சிறை வைத்திருந்ததன்றித் திருவயிந்திரபுரத்திலும் சில நாள் சிறை வைத்திருந்ததாகச் சிலர் கூறுவதும் ஈண்டு கருதத் தக்கது. வேதாந்த தேசிகர் தம் பாடல்களில்,
“மகிழ்ந்து வாழும் போதிவை நாம் பொன்னயிந்தை
நகரில் முன்னாள்”
“அயிந்தை மாநகரில் அமர்ந்தனை எமக்காய்”
எனத் திருவயிந்திரபுரத்தை நகர் - மாநகர் எனச் சிறப்பித்துக் கூறியிருப்பதும் ஈண்டு குறிப்பிடத்தக்கது. இதைக் கொண்டு, அந்தக் காலத்தில் திருவயிந்திரபுரம் ஒரு சிறந்த நகராய் விளங்கியதென அறியலாம்.
திருவயிந்திரபுரச் சீமையை ஆங்கிலேயர்கள் 1749 ஆம் ஆண்டு ஆர்க்காடு நவாப்பிடமிருந்து 28,000 உரூபாய்க்கு வாங்கினர். வடமொழியும் தென்மொழியும் பயின்று வந்த திருவயிந்திரபுரம் வைணவ அந்தணர்கள் ஆங்கிலேயர் ஆட்சியில் ஆங்கிலமும் பயிலத் தொடங்கினர். அதன் பயனாய்ப் பல குடும்பத்தினர் ஊரை விட்டு வெளியேறி நாட்டின் பல்வேறிடங்களில் இன்று அரசு அலுவலகங்களில் வேலை பார்க்கின்றனர். ஊருக்கு அன்று இருந்த பொலிவு இன்று இல்லையென்றே சொல்லலாம்; இந்த ஊரில் வடகலை வைணவர்களும் தென்கலை வைணவர்களும் பிணங்கி நீதிமன்றம் வரையும் சென்று வழக்கிட்டுக் கொண்டதுண்டு. இவ்வூரில், கிழக்கே 5 கி. மீ. தொலைவி லுள்ள கடலூர்ப் பகுதியைக் கிழக்கு என்னும் திசைப் பெயரால் சுட்டும் வழக்கம் உள்ளது; அதாவது, ‘கிழக்கே போகிறேன்', 'கிழக்கே போயிருக்கிறார்’ என்னும் வழக்கை இவ்வூரில் காணலாம். இவ்வூர் கடலூர் ஊராட்சி மன்ற ஒன்றியத்தைச் சேர்ந்துள்ளது.
இவ்வூரில் கெடிலம் ஆற்றில் அணை கட்டப்பட்டிருப்பதால், இதன் சுற்று வட்டாரத்தில் வளத்திற்குக் குறைவில்லை. இவ்வூர் மலையிலும் மலையடிவாரத்திலும் வெள்ளைக் களிமண் படிவம் இரண்டறக் கலந்துள்ளது. வெள்ளைக் களிமண் வெட்டி எடுக்கப்பட்டு, உரம் உண்டாக்குவதற்காகக் கூடலூரிலுள்ள தொழிற்சாலைக்கு அனுப்பப்படுகிறது. இவ்வாறு பல்வேறு துறைகளிலும் திருவயிந்திரபுரம் புகழ் பெற்றுத் திகழ்கிறது.
7. குற்றாலத்திற்கு ஒரு குறவஞ்சி
“குற்றாலக் குறவஞ்சி” என்னும் பெயரைக் கேட்கும் போதே குளிருகின்றது மனம். ஏன்? தன்னிடம் உள்ள நீர் வீழ்ச்சியால், தன்னை உலகத்தாருக்கு விளம்பரம் செய்து கொண்டிருக்கும் குற்றால மலையின் குளிர்ச்சியினை விரும்பாதவர் எவர்? உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறவஞ்சி நாடகத்தைக் கொள்ளாதவர் எவர்?
தென்பாண்டி நாட்டாராகிய திரிகூடராசப்பக் கவிராயர் எழுதிய நாடகமே குற்றாலக் குறவஞ்சியாகும். குற்றாலத்திலமர்ந்து கூத்தாடும் சிவனைத் தலைவனாகக் கொண்ட தலைவிக்குக் குறத்தி குறி சொல்லுவதைப் பற்றியது ஆகையாலும், குறவன் - குறத்தியின் காதலை ஒவியப்படுத்துவது ஆகையாலும், இந்நாடக நூலுக்குக் “குற்றாலக் குறவஞ்சி” என்னும் பெயர் கொடுக்கப் பட்டது. படிக்கப் படிக்கச் சுவைதருகின்ற இந்நூலுள், பழந்தமிழக் குடிகளின் பண்புகள் பல பகரப்பட்டிருப்பது உள்ளத்திற்கு மகிழ்ச்சி தருகின்றது. இனி நயம் மிகுந்த இந் நாடகத்துள் புகுவோம் நாம்.
குற்றாலத்துச் சிவன் தெருவில் உலா வந்து கொண் டிருக்கின்றார். அவரைக் காணக் கன்னியர் பலர் கடிதின் ஒடுகின்றனர். ஒரு பெண் ஒரு கையில் வளையல் போட்டுக்கொண்டிருந்தாள். இச் செய்தி தெரிந்ததும் மற்றொரு கைக்கு வளையல் போடுவதையும் மறந்து ஒடுகின்றாள். இன்னொரு பெண் ஆடையணிகளை இடம் மாற்றி அணிந்துகொண்டு இரைக்க இரைக்க ஓடுகின்றாள். மற்றொரு பெண் ஒரு கண்ணுக்கு மையிட்டுக்கொண்டு, மற்றொரு கண்ணுக்கு அங்கே போய் மையிட்டுக் கொள்ளலாம் என்று கையில் எடுத்துக்கொண்டு கடிய ஓடுகின்றாள். கூத்தலும் வளையலும் சோர்ந்த வேறொருத்தி, சடைதாங்கிய சிவனை நோக்கி,
“மைவளையும் குழல்சோரக்
கைவளை கொண்டான் இது என்ன
மாயமோ சடைதரித்த ஞாயமோ”
என்கின்றாள்.
இப் பெண்களை எல்லாம் அங்குள்ளார் பார்த்து நகைக்கின்றார்கள். என்ன செய்வது? ஆவலுக்கு அடிமைப் பட்டு விட்டால் இந்நிலைதானே!
இந்நிலையில், பந்தாடிக்கொண்டிருந்த வசந்த வல்லி என்னும் தலைவியும் ஓடினாள். அங்கே தோழிமார்களின் நிலையே இப்படி என்றால் தலைவியைப் பற்றிச் சொல்லவா வேண்டும்? அவ்வளவுதான்! எதிர்பார்த்திருந்த அந்தக் குற்றால நாதருடன் கூட்டியனுப்பிவிட்டாள் தன் உள்ளத்தை உள்ளம் அவள்பால் இல்லாததால் உணவிழந்தாள், உடை சோர்ந்தாள், உறக்கம் விட்டாள். உரை தடுமாறுகின்றது. சுருங்கக் கூறின் அவள் உடம்பைச் சுட்டெரிக்கின்றது காமத் தீ.
அவ்வெப்பத்தைப் போக்க எண்ணிய தோழிகள், வசந்தவல்லியை மேல்மாடியில் நிலா முற்றத்திற்குக் கொண்டு போனார்கள். வாழைக் குருத்தில் கிடத்தினார்கள். மேலே குளிர்ந்த மலர்களைக் கொட்டினார்கள். சந்தனக் குழம்பைப் பூசினார்கள். வெட்டிவேர் விசிறி கொண்டு விசிறினார்கள், இன்பக் கதைகள் பல எடுத்துரைத்தார்கள். ஆனால், கிணறு வெட்டப் பூதம் புறப்பட்டதைப்போல் குளிர்ச்சிக்காகச் செய்த முயற்சிகளெல்லாம் தவிடுபொடியாயின. ஒரே வெப்பம்! ஒரே வெப்பம்! சந்தனக் குழம்பு கொதிக்கின்றது. மலர்கள் கருகின. முத்துமாலைகள் பொரிந்தன. வெட்டிவேர் விசிறி வீசுகின்றது அனலை. வாழைக் குருத்து இருக்குமிடமே தெரியவில்லை. என்ன செய்வாள், ஐயோ! போதாக்குறைக்கு அந்தப் பொல்லாத நிலவோனும் (சந்திரனும்) பொசுக்குகின்றான். எல்லார்க்கும். இன்பம் தரும் நிலாக்காரன் வசந்தவல்லிக்கு மட்டும் வெப்பம் வீசுபவனாக வெளிப்படுகிறான். அந்தோ! இது. தான் காமத்தியின் இயற்கைபோலும்!
வெப்பம் தாங்கமுடியாத வசந்தவல்லி அந்த வெண்ணிலாவை நோக்கி வெந்து விளம்பத்தொடங்குகின்றாள். "ஏ நிலவே கண்ணிலிருந்து நெருப்பைக் கக்கும் அந்தச் சிவன் முடியில் சேர்ந்து சேர்ந்து, நீயும் நெருப்பை வீசக் கற்றுக்கொண்டாயோ? தண்ணிய - குளிர்ந்த அமிழ்தமும் நிலவும் திருமகளும் திருப்பாற்கடலி லிருந்து தோன்றியதாகப் புராணங்கள் புகலுகின்றனவே! தண்ணிய அமிழ்தத்தொடு நீயும் பிறந்தாய் என்றால் நீ மட்டும் ஏன் அந்தத் தண்மையை மறந்தாய்? பெண்ணோடு பிறந்தவர்களுக்குப் பெண்டிர்மேல் இரக்கம் இருக்கும் என்று சொல்வார்களே! திருமகளோடு பிறந்த நீ மட்டும் ஒரு பெண்ணாகிய என் மேல் ஏன் இரக்கம் கொள்ளாமல் வெப்பத்தை வீசுகின்றாய்? அப்படி என்றால் அவையெல்லாம் புராணங்கள் புளுகிய பொய்தானோ?” என்று புலம்புகின்றாள் வல்லி. இதனைப் பாடல் வடிவில் பார்ப்போம்.
“தண்ணமு துடன்பிறந்தாய் வெண்ணிலாவே - அந்தத்
தண்ணளியை ஏன் மறந்தாய் வெண்ணிலாவே
பெண்ணுடன் பிறந்ததுண்டே வெண்ணிலாவே - என்றன்
பெண்மை கண்டும் காயலாமோ வெண்ணிலாவே.”
மேலும் அவள் மொழிகின்றாள்: “ஓகோ மதியமே! இப்போது புரிந்துகொண்டேன் நீ என்னை எரிப்பதற்கு என்ன காரணம் என்பதை! இதோ பார்! இது என்னுடைய கூந்தல். கறுத்துச் சுருண்டு வளைந்து நெளிந்து காணப்படுகின்றது. இதோ என்னுடைய பின்னல் சடை. நீ இந்தச் சடையைப் பார்த்ததும் கிரகண காலத்தில் உன்னைப் பிடிக்கின்ற நாகப் பாம்பின் நடு உடல் என்றும், தலையைப் பார்த்ததும் பாம்பு படமெடுத்து நிற்கின்றது என்றும் எண்ணிக்கொண்டாய் போலும். உன் எதிரியாகிய பாம்பை நான் வைத்துக் கொண்டிருக்கிறேன் என்ற காரணத்தால் என்னை எரிக்கின்றாயா? அல்லது, வசந்தவல்லியின் முகமதியை அந்தப் பாம்பு விழுங்கப் பார்க்கின்றது; ஆதலின் அந்தப் பாம்பை இப்போதே சுட்டெரித்து விடவேண்டும் என்றெண்ணி அந்தப் பாம்பைச் சுடுகின்றாயா? ஐயோ, ஒன்றும் புரியவில்லையே! இது பாம்பன்று பின்னல் சடை! இனிமேலாயினும் எரிப்பதை நிறுத்து இந்த மோகினி தன்னுடைய மோகன் வரவில்லையே என்று வருந்துகின்றாள். உனக்கு ஏன் இந்த வேகம் வெண்ணிலாவே!”
“மோகன் வரக் காணேன் என்றால்
வெண்ணிலாவே - இந்த
வேகம் உனக் கானதென்ன
வெண்ணிலாவே
நாகம் என்றே எண்ணவேண்டாம்
வெண்ணிலாவே - இது
வாகு குழல் பின்னல் கண்டாய்
வெண்ணிலாவே...”
‘அது இருக்கட்டும் - பேடியைப்போல ஒரு பெண்ணின் மேல் வந்து காய்கின்றாயே! இதுதானா சூரத்தனம்? வெட்கத்துடன் வீரமும் இருக்குமானால் அந்தச் சிவன் முன்பு சென்று காயக்கூடாதா?” என்று வருந்திப் பேசினாள் வசந்தவல்லி.
பின்னர் அவள் மன்மதனை விளித்து, “ஏ மன்மதா! அந்தப் பாவி நிலா காய்கிறது போதாதென்று இந்தத் தென்றல் காற்று என்னும் புலியும் பாய்கிறது. ஒன்றுக்கு இரண்டு உபத்திரவத்துக்கு மூன்று என்ற முறையில், பற்றாக்குறைக்கு நீயும் ஏன் என்னை இவ்வாறு கொல்லாது கொல்கிறாய்? உன் கைவரிசையை அந்தக் குற்றால நாதரிடம் போய்க் காண்பி பார்க்கலாம்! ஏன்? அவர் நெற்றிக் கண்ணால் சுட்டெரித்து விடுவார் என்று அஞ்சுகின்றாயா? ஒரு பெண்ணிடம் போர்தொடுக்கும் நீயும் ஒர் ஆண் மகனா? பேடியே போதாய்!” என்று ஏசிப் பேசினாள்.
தலைவியின் துன்பத்தைக் கண்ட தோழி ஆறுதல் பல சொன்னாள். சொல்லியும் தேறுதல் உண்டாகவில்லை. பின்பு தோழியை நோக்கிச் சிவன் திருமுன்பு தூது சென்று வா என்று சொன்னாள் வல்லி.
“ஐயோ! நான் எப்படி அவர் முன்பு தூது செல்வேன். அவர் என்னைப் பற்றி என்ன எண்ணிக் கொள்வாரோ” என்று வெட்கப்பட்டாள் தோழி.
அதற்கு வசந்தவல்லி, தூது சென்றால் சிவன் ஒன்றும் எண்ணிக்கொள்ள மாட்டார். அது அவருக்கு வழக்கமான வாடிக்கை, அவரிடம் தூது அனுப்புவோர் மிகப் பலர். அவ்வளவு ஏன்? அவரே சுந்தரருக்காகப் பரவை நாச்சியாரிடம் ஒருமுறைக்கு இருமுறையாகத் தூது சென்றுள்ளாரே! ஆகையால் அவரைப் பொறுத்தமட்டில் வெட்கமே வேண்டியதில்லை” என்று கூறினாள்.
‘அப்படி என்றால் நான் என்ன சொல்லவேண்டும்’ என்று கேட்டாள் தோழி.
என்ன சொல்லவேண்டுமா? என் நிலைமையை எல்லாம் அறிவித்து,
“வந்தால் இந்நேரம் வரச்சொல்லு வராதிருந்தால்
மாலையாகிலும் தரச்சொல்லு.”
என்று கூறி அனுப்பினாள் தலைவி. பின்பு குற்றாலநாதர் தன்னுடன் கூடுவாரோ? மாட்டாரோ? என்று குறியை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.
அந்த நேரத்தில் ‘குறி கேட்கலையோ குறி குறி’ - ‘குறி கேட்கலையோ குறி குறி’ என்று கூவிக்கொண்டு குறப்பெண் ஒருத்தி குறுகினாள் அங்கே, அவள் இடையில் ஒரு குலுக்கும், நடையில் ஒரு தளுக்கும் விழியில் ஒரு சிமிட்டும், மொழியில் ஒரு பகட்டுமாய்க் காணப்பட்டாள். கையில் குறிசொல்லும் கோல்; கழுத்தில் பச்சை மணி-பவளமணி; கருங்கூந்தலில் செச்சை மலர்; நெற்றியில் நீலநிறப் பொட்டு ; இடுப்பில் கூடை - இவைகளின் தொகுப்பே அக்குறப்பெண்.
குறி சொல்வதாகக் குறத்தி கூவியதைக்கேட்ட வசந்தவல்லி, குற்றாலநாதரே கிடைத்துவிட்டதாக எண்ணி ஒடோடியும் வந்து உள்ளே அழைத்துக் கொண்டு சென்றாள். சென்றதும் குறத்தியை நோக்கி, "ஏ குறவஞ்சியே! உன் சொந்த மலை எந்த மலை? அந்த மலையின் வளத்தை அறிவிக்கக் கூடாதா” என்று ஆவலுடன் கேட்டாள். உடனே தொடங்கிவிட்டாள். குறப்பெண். "ஒ அம்மே! எங்கள் மலையின் வளப்பத்தைச் சொல்லுகிறேன் கேள்! எங்கள் மலையில்,
“வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்”.
எங்கள் மலையிலே ஆண்குரங்குகள் பெண் குரங்குகளுக்குத் தாமாய்ப் பழங்கொடுத்துக் கொஞ்சும். பெண் குரங்குகள் சிந்துகின்ற பழங்களுக்கு ஆண் குரங்குகள் கையேந்திநிற்கும். ஊம் தெரிகிறதா?” என்றாள் குறவஞ்சி. இப்பாட்டில் ஆழம் மிகவும் உண்டு. என்ன அது?
இதைக்கேட்ட வசந்தவல்லி, ஆகா! விலங்காகிய பெண்குரங்கு செய்த நற்பேறுகூட நான் செய்யவில்லையே. பெண்துரங்கினிடம் ஆண்குரங்கு தானாகவே சென்று கொஞ்சுகிறதாமே கெஞ்சுகிறதாமே! நானாக விரும்பியும், குற்றாலநாதர் என்னை வந்து கூட மாட்டேன் என்கிறாரே! என்று ஏங்கும்படியாக, அவளைக் குத்திக்காட்டுவதுபோல இருக்கின்றதல்லவா இந்தப் பாட்டு?
மேலும் குறவஞ்சி கூறுகின்றாள்:
“கிழங்கு கிள்ளித் தேன் எடுத்து வளம்பாடி நடிப்போம்
கிம்புரியின் கொம்பொடித்து வெம்புதினை இடிப்போம்
செழுங்குரங்கு தேமாவின் பழங்களைப் பந்தடிக்கும்
தேனலர் சண்பகவாசம் வானுலகில் வெடிக்கும்”
தெரியுதா அம்மே!
வல்லி: ஊம் தெரிகிறது தெரிகிறது. சரி உன் மலையின் வளப்பத்தைப் பாடுகின்றாயே, அம்மலையின் பெயரைச் சொல்லமாட்டேன் என்கிறாயே!
குறத்தி: ஓகோ மலையின் பெயரா? இதோ சொல்லுகிறேன் அம்மே!
“கூனல்இளம் பிறைமுடித்த வேணி அலங்காரர்
குற்றாலத் திரிகூட மலையெங்கள் மலையே”
எங்கள் மலை குற்றாலநாதர் எழுந்தருளியுள்ள திரிகூட மலை அம்மே என்று கூறினாள்.
ஒகோ அப்படியா ! என்று பெருமூச்சு விடுகிறாள் வல்லி, அல்வாவின்மேல் ஆவல் கொண்டிருக்கும் சிறுவனிடம், அல்வாவைப் பற்றியும், அது இருக்கும் இடத்தைப் பற்றியும் சொன்னால் எப்படி இருக்கும்? துடிக்காதா மனம்? அதே நிலைதான் இப்போது வசந்தவல்லிக்கும். “சரி உன் இருப்பிடம் குற்றாலமலை என்று கூறினாய். உன் சொந்தக்காரர் இருக்கும் மலைகள் எவை எவை என்று எடுத்துச்சொல் பார்ப்போம்” என்றாள் வல்லி.
பின் குறவஞ்சி தன் சொந்தக்காரர்களின் மலைகளை யெல்லாம் சொல்லத் தொடங்கிவிட்டாள்.
குற: கேள் அம்மே சொல்கிறேன் - எனக்கு இளைய செல்லி மலை எது தெரியுமா?
“கொல்லிமலை எனக்கிளைய செல்லிமலை அம்மே”
வல்லி, அப்படியா! உன் கணவன் மலை?
குற: “கொழுநனுக்குக் காணிமலை பழநிமலைஅம்மே”
வல்வி: உன் தந்தை மலை? தமையன் மலை?
குற: எல்லுலவும் விந்தைமலை எந்தைமலை அம்மே!
இமயமலை என்னுடைய தமையன்மலைஅம்மே."
குற: எம் மாமி மலையும் தோழிமலையும் கேள்!
“சொல்லரிய சாமிமலை மாமிமலை அம்மே!
தோழிமலை நாஞ்சில்காட்டு வேள்விமலை அம்மே!”
வல்லி: ஓ அப்படியா உங்கள் கொள்வினை கொடுப்பினை எப்படி?
குற: கேளம்மே!
“ஒருகுலத்தில் பெண்கள் கொடோம் ஒரு குலத்தில் கொள்ளோம்
உறவுபிடித் தாலும்விடோம் குறவர்குலம் நாங்கள்”
வல்லி: அப்படியென்றால் உங்கள் மருவினருள் (சம்பந்திகளுள்) ஒருவரைக் கூறு ! கேட்போம்.
குற: “அருளிலஞ்சி வேலர் தமக்கு ஒரு பெண்ணைக் கொடுத்தோம்
ஆதீனத்து மலைகள் எல்லாம் சீதனமாக் கொடுத்தோம்”
முருகனுக்கு எங்கள் வள்ளியை மணஞ்செய்வித்து, எங்களைச் சேர்ந்த மலைகளெல்லாம் சீர் வரிசையாகக் கொடுத்துவிட்டோம். எப்படி எங்கள் குலப்பெருமை! என்று விளாசு விளாசு என்று விளாசுகின்றாள் குறவஞ்சி.
இங்குக் கூர்ந்து நோக்கவேண்டியது ஒன்றுண்டு. அஃதென்ன! தமிழ்நாட்டுக் குறப்பெண் ஒருத்தி இமய மலைமுதல் நாஞ்சில் நாட்டு வேள்விமலை வரையும் உள்ள பகுதிகளை எல்லாம், தங்களுடையதாகவும், தங்களைச் சேர்ந்தவர்களுடையதாகவும் காட்டியிருக்கும் தொடர்பு, எண்ணத்தைக் கிளறுகின்றதல்லவா? மற்றும் 'முருகனுக்கு உரியது மலை உலகம்’ என்னும் கருத்தில் உள்ள "சேயோன் மேய மைவரை உலகம்” என்னும் தொல்காப்பிய நூற்பாவிற்கு ஏற்ப, குறப் பெண்ணாகிய வள்ளியை மணந்த முருகனுக்குச் சீர்வரிசையாக மலைகளையெல்லாம் கொடுத்துவிட்டதாகக் கூறியுள்ள குறத்தியின் கூற்று, கொள்ளை கொள்ளுகின்றதல்லவா உள்ளத்தை!
பின்பு வல்லி குறவஞ்சியை நோக்கி, ‘மலைவளங் கூறினாய்-நாட்டு வளத்தையும் கூறுக’ என்றாள். தொடங்கிவிட்டாள் குறத்தி:
“மாதம் மூன்று மழையுள்ள நாடு
வருடம் மூன்று விளைவுள்ள நாடு”
இன்னும் கேள். அந்நாட்டில்,
“நீங்கக் காண்பது சேர்ந்தவர் பாவம்
நெருங்கக் காண்பது கன்னலில் செந்நெல்
தூங்கக் காண்பது மாம்பழக் கொத்து
சுழலக் காண்பது தீந்தயிர் மத்து
ஓடக்காண்பது பூம்புனல் வெள்ளம்
ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்
போடக்காண்பது பூமியில் வித்து
புலம்பக் காண்பது கிண்கிணிக் கொத்து”
தெரியுமா அம்மே என்றாள்.
ஒர் ஆண்டுக்கும் மூன்று மழை காணமுடியாத நமக்குத் திங்கள் மூன்றுமழை பெய்ததாக ஏட்டிலாயினும் கண்டு இன்புறும் வாய்ப்புக் கிடைத்ததே இந்நாடகத்தால்!
இந்த விதமாகக் குறவஞ்சி மலைவளம், நாட்டுவளம், ஊர்வளம் கூறிக் குற்றாலநாதரின் சிறப்பையும் சிறிது செப்பினாள். கேட்டுப் பதைபதைக்கும் வசந்தவல்லி, "ஏ நங்காய்! நீ நன்றாகக் குறி சொல்லுவாயா “ என்றாள். உடனே குறவஞ்சி ஒ அம்மே! பாரம்மே! மதுரையில் மீனாட்சியின் மணத்திற்குக் குறி சொல்லியவர்களும்.எங்கள் குலத்தார்களே! நானும் அப்படித்தான்!
“வஞ்சி மலைநாடு கொச்சி கொங்கு
மக்க மராடங் துலுக்காண மெச்சி
செஞ்சி வடகாசி நீளம் சீனம்
சிங்களம் ஈழம் கொழும்பு வங்காளம்
தஞ்சை சிராப்பள்ளிக் கோட்டை தமிழ்ச்
சங்க மதுரைதென் மங்கலப் பேட்டை
மிஞ்சு குறி சொல்லிப் பேராய்த் திசை
வென்றுநான் பெற்ற..விருதுகள், பாராய்”
என்று தன் சுற்றுப்பயணத்தையும், குறி சொல்லித் தான் பெற்ற வெற்றி விருதுகளையும் வெளிப்படுத்தினாள்.
சுற்றுப் பயணத்தால் அறிவு வளர்ச்சியும் ஆற்றலும் உண்டாகும் என்பதற்கு இக்குறப்பெண் சான்று என்பதை எவரும் மறந்துவிட முடியாது. ‘பல ஊர்த் தண்ணிர் குடித்தவர்’ என்பது முதுமொழியாயிற்றே.
பின்பு வல்லி தன் உள்ளக்கருத்தைக் குறியின் வாயிலாக விள்ளச் சொன்னாள். குறவஞ்சியோ வழக்கப்படி முதலில்,
“என்ன குறி யாகிலுநான் சொல்லுவே னம்மே சதுர்
ஏறுவே னெதிர்த்தபேரை வெல்லுவே னம்மே
மன்னவர்கள் மெச்சுகுற வஞ்சிநானம்மே யென்றன்
வயிற்றுக்கித் தனைபோதுங் கஞ்சிவாரம்மே
பின்னமின்றிக் கூழெனினுங் கொண்டுவா அம்மே வந்தால்
பெரிய குடுக்கை முட்ட மண்டுவேனம்மே
தின்னஇலை யும்பிளவு மள்ளித்தா அம்மே கப்பற்
சீனச்சரக்குத் துக்கிணி கிள்ளித்தா அம்மே”
என்று கேட்டு உணவும் வெற்றிலைபாக்கு புகையிலையும் வாங்கி உட்கொண்டாள். ஈண்டு கப்பல் சீனச்சரக்கு என்றால் புகையிலை. அன்றைய தமிழனுக்கும் சீனனுக்கும் நடந்த கப்பல் வாணிகப் பெருக்கை நோக்குங்கள். துக்கிணி புகையிலை என்பது உலக வழக்கை ஒட்டி உள்ளதன்றோ?
பின்பு குறத்தி குறி சொல்லத் தொடங்குகின்றாள். “ஏ அம்மே! எல்லா நிமித்தங்களும் (சகுனங்களும்) சரியாய் உள்ளன, ஆந்தையின் அலறலும் நன்று. தும்மலுடன் காகமும் இடம் செல்லுது. மூச்சும் நல்ல பக்கமே செல்லுது. பல்லியும் பல பலென்னப் பகருது. ஆகையாலே உனக்கு நல்ல மாப்பிள்ளை வருவான் அம்மே. அவன் கழுத்திலே கறுப்பு இருக்கும் அம்மே. சரி உன் கையைக் காட்டு.
(வசந்தவல்லி கையைக் காட்டுகிறாள்)
ஒகோ நல்ல கை யம்மே! என்னைப்போன்ற நாலு பேருக்கும் அள்ளிக்கொடுக்கும் கை அம்மே சரி, உதடும் நாக்கும் துடிக்கின்றன. குறி சொல்லுகிறேன் கேள்.
வல்லி: சொல்லு சொல்லு!
குற: ஒருநாள் தலைவன் தெருவில் வந்தான். பந்தாடிக் கொண்டிருந்த நீ அவனைப் பார்த்து அஞ்சியதாகத் தெரிகின்றது. சரிதானே அம்மா!
வல்லி என்னடி நீ குறி சொல்லுவது? எல்லாவற்றையும் என் வாயிலிருந்தே வரவழைக்கப் பார்க்கின்றாய். அச்சத்தினால் இந்தக் காய்ச்சலும் கிறுகிறுப்பும் வருமா?
குற:- இல்லம்மே உள்ளத்தைச் சொன்னால் சீற்றம் வருமென்று ஒளித்தேன். உங்கள் காய்ச்சல் காமக்காய்ச்சல் அம்மே கிறுகிறுப்பு மோகக் கிறுகிறுப்பு அம்மே! இப்போது சரிதானா?
வல்லி:- என்னடி நான் பிறந்த வடிவமாய் இருக்கிறேன். இந்தக் கன்னியின்மேல் என்னென்னவோ பழி போடுகிறாயே! சரி, நான் ஒருவனைக் காதலித்தது உண்மையானால் அவன் பெயரைச் சொல்லடி.
குற:- பேராம்மே! அவன் பேர் "பெண் சேர வல்லான்” என்பது. அவன் உனக்குக் கட்டாயம் கிடைப்பான். (சிரிக்கிறாள்.)
வல்லி:- என்னடி மதம் உனக்கு இவ்வளவு ஏளனமாகச் சொல்லுகிறாய். நாக்கை அடக்கிப் பேசு.
குற:- இல்லையம்மா! பெண் என்றால் ஸ்திரி; சேர என்றால் கூட’ வல்லான் என்றால் நாதன் ; “பெண் சேர வல்லான்' என்றால் “திரிகூடநாதன்” அதுதான் குற்றால நாதர் பெயர். அவர் உனக்குக் கட்டாயம் கிடைப்பார். உறுதி உறுதி உறுதி. சரிதானா (சிரிக்கிறாள்).
கேட்டாள் வசந்தவல்லி. உண்மை அதுதானே! அப்படியே நாணித் தலை கவிழ்ந்தாள். குறத்திக்குத் தகுந்த பரிசு கொடுத்தனுப்பி, தான் இறைவனுடைய
பேரின்பத்தில் ஈடுபடலானாள்.
வசந்தவல்லி ஒருபுறம் ஆறுதலடைய, மற்றொரு புறம் குறத்தியைத் தேடிக்கொண்டு அவள் கணவனாகிய குறவன் ஊர்ஊராய்த் திரிகின்றான். எங்கும்கிடைக்கவில்லை அவள். குறவன் தேடித் தேடிப் பஞ்சு பூத்த கண்ணனாகி, ”ஆகா ஆகா! அவளை இணைபிரியாதிருப்பதற்கு அவளுடைய ஆடை அணிகள் செய்த நல்வினைகூட நான் செய்ய வில்லையே!” என்று ஏங்குகிறான். அப்போது அவனுடைய தோழனாகிய நூவன் வந்தான். குறத்தியைத் தேடி அழைத்துக் கொண்டு வரும்படியாக நூவனைக் கேட்டுக் கொண்டான். ”அதற்கு என்ன கைம்மாறு செய்வாய்” என்றான் நூவன். "கைம்மாறா? எனக்குச் சில மந்திரங்கள் தெரியும். அதாவது, கூடியிருப்பவரைப் பிரிக்கும் மந்திரம், பிரிந்திருப்பவரைக் கூட்டும் மந்திரம், கண்கட்டி வித்தை முதலியனவும் கற்றுத் தருவேன் “ என்றான் குறவன். அதற்கு நூவன், “பலே கெட்டிக்காரனப்பா நீ ! உன்னை ஆற்றில் இருந்து அப்பால் கடத்திவிட்டு விட்டால், பின்பு விண்வெளியில் பறப்பேன் என்பாய் போலிருக்கிறது. உனக்குத்தான் பிரிந்தவரைக் கூட்டும் மந்திரம் தெரியுமே - பிறகு ஏன் குறத்தியைத் தேடும்படி என்னைக் கெஞ்சுகிறாய்? நீயும் கெட்டாய். உன் மந்திரமும் கெட்டது. மந்திரக்காரர்கள் எல்லோருமே இப்படித்தான்போல் இருக்கிறது” என்று எள்ளி நகையாடினான்.
பின்பு குறச்சிங்கன் ஒன்றும் பதில் பேச முடியாமல் பேந்தப் பேந்த விழித்துத் தான் தனித்துத் தேடலானான். தற்செயலாகக் குறச்சிங்கனும் குறச்சிங்கியும் குற்றாலத்தில் ஒன்று கூடினார்கள் பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோ? சிங்கன், சிங்கி என்று பெயரிட்டுக் கொண்டு ஒருவர்க்கொருவர் உரையாடலாயினர்.
குறச்சிங்கன் குறச்சிங்கியைக் கேட்கின்றான்:
“இத்தனை நாளாக என்னுடன் சொல்லாமல்
எங்கே நடந்தாய் நீ சிங்கி
எங்கே நடந்தாய் நீ சிங்கி”
சிங்கி சொல்லுகின்றாள்:
“கொத்தார் குழலார்க்கு வித்தாரமாகக்
குறிசொல்லப் போனேனடா சிங்கா
குறிசொல்லப் போனேனடா சிங்கா”
சிங்கன். அப்படியா! அது இருக்கட்டும். உன்
“காலுக்கு மேலே பெரிய விரியன்
கடித்துக் கிடப்பானேன் சிங்கி
கடித்துக் கிடப்பானேன் சிங்கி”
சிங்கி; இது விரியன் பாம்பல்ல
“சேலத்து காட்டிற் குறிசொல்லிப் பெற்ற
சிலம்பு கிடக்குதடா சிங்கா
சிலம்பு கிடக்குதடா சிங்கா”
பிறகு சிங்கன் சிங்கியின் இடுப்பைக் காட்டி
“மெல்லிய பூங்தொடை வாழைக்குருத்தை
விரித்து மடித்ததார் சிங்கி
விரித்து மடித்ததார் சிங்கி”
சிங்கி; இது வாழைக் குருத்தல்ல—
“நெல்வேலியார் தந்த சல்லாச் சேலை
நெறிபிடித் துடுத்தினேன் சிங்கா
நெறிபிடித் துடுத்தினேன் சிங்கா”
சிங்கன்:- ஒகோ சேலையா? இவ்வளவு பேசுவதற்கு நீ எங்கே கற்றுக் கொண்டாயடி?
சிங்கி; “பல ஊர்த் தண்ணீர் குடித்தால் பத்தெட்டும் தெரியும் “ என்னும் பழமொழி உனக்குத் தெரியாதா சிங்கா? சரி! நீ இங்கே என்னை எப்படிக் கண்டுபிடித்தாய் சிங்கா?
சிங்கன் : குற்றாலநாதரை வேண்டிக் கொண்டேன்; அவர் கூட்டி வைத்தாரடி சிங்கி.
சிங்கி அப்படியென்றால் அவரைக் குறித்து ஆடுவோமே -பள்ளு பாடுவோமே சிங்கா!
சிங்கன்:. ஆடுவது யார்? பாடுவது யார் சிங்கி?
சிங்கி:- நீ இறைவனைப் பற்றி இசையாகப் பாடு. நான் அதற்கேற்ப ஆடுகிறேன் சிங்கா.
சிங்கன் :- நீ ஆடுவதைப் பார்த்தால் எனக்கு நெஞ்சு பொறுக்காதடி சிங்கி.
சிங்கி:- ஏன் சிங்கா? எனக்கு உடம்பு நோகும் என்றா?
சிங்கன் :- இல்லை இல்லை: ஆட ஆட உன்மேல் ஆவல் பிறந்துவிடுமடி சிங்கி.
சிங்கி:- சே! சே! கடவுளைக் குறித்து நீ பாட அதற்கேற்ப நான் ஆடும் போது என்னைக் கடவுளாகவே எண்ண வேண்டும். பொருளறிந்து ஆட்ட பாட்டங்களைச் சுவைக்க வேண்டும். ஆடுபவரையும் பாடுபவரையும் பார்த்துச் சுவைக்கக் கூடாது. தெரிகிறதா? ஊம், பாடு. நான் ஆடுகிறேன்.
கணீர் கணீர் என்று சிங்கன் பாடினான். கலீர் கலீரென்று சிங்கி ஆடினாள். இருவரும் இறைவனின் இணையற்ற பேரின்பத்தில் மூழ்கித் தம்மை மறந்து திளைத்தார்கள்.
வசந்த வல்லியும் குறச்சிங்கனும் குறச்சிங்கியும் சிற்றின்பம் என்னும் கடலில், காதல் என்னும் அந்தக் கரையை அடைந்ததாக அமைந்துள்ள இக்குறவஞ்சி நாடகம் சிறந்த பொருள் பொதிந்ததாகக் காணப்படுகின்றதல்லவா? வெல்லக்கட்டியையே விரும்பும் குழந்தைக்கு, அதனுள் மருந்தை மறைத்து வைத்துக் கொடுப்பதைப் போல, நாடகத்தையும் உலகச் சிற்றின்பத்தையும் விரும்பும் மக்களுக்கு, அவற்றுடன் பேரின்பக் கருத்தையும் கலந்து தருவதே இந்நாடகம் என்றால் மிகையாகாது.
இந்நூலாசிரியர் உலக நிகழ்ச்சிகள் பலவற்றை அமைத்து மிக எளிமையாகவும் இனிமையாகவும் பாமரரும் விரும்பும் படிப் பாடியிருப்பது மிகவும் பாராட்டத் தக்கதாகும். மேலும், பழந்தமிழ்ச் சங்க இலக்கியங்களாகிய அகநானூறு, ஐங்குறுநூறு, நற்றிணை, குறுந்தொகை, கலித்தொகை முதலிய அகப்பொருள் நூல்களாகிய மலைகளின் உச்சியில் ஏறுவதற்குரிய படிகளுள் இக் குற்றாலக் குறவஞ்சியும் ஒன்று என்று கூறினால் அது குற்றமாகாது.
சுருங்கக் கூற வேண்டுமானால், ஒருவர் பாலைவனத்தின் நடுவில் நின்று கொண்டு இக்குறவஞ்சி நாடகத்தைப் படிப்பாரேயானால், அது அவருக்குப் பாலைவனமாகத் தோன்றாமல் குளிர்ந்த சோலைவனமாகவே தோன்றும்.
அம்மம்மா ! குற்றாலக் குலவஞ்சி நூலின் இன்பம் எத்துணை சுவை மிக்கது
8. தமிழ் வளர்ச்சிக்கு இலக்கணப் புலவர்களின் கொடை
மற்ற மொழிகளைப் போலவே தமிழிலும் முதலில் இலக்கியங்கள் தோன்றின. பின்னர், இலக்கியம் கண்டதற்கு இலக்கண நூல்கள் தோன்றின.
ஆறு, கண்ட இடங்களில் பிய்த்துக்கொண்டு சிதறாமல் நேரிதின் செல்வதற்குக் கரைகள் துணைபுரிகின்றன. அவ்வாறே, மொழிகள் சிதையாமல் நேரிதின் இயங்குவதற்கு உதவும் கரைகளே இலக்கண நூல்கள்.
மொழிகள் சிதையாமல்-அழியாமல் வளர்வதற்குத் துணைபுரியும் காத்தல் கடவுளே இலக்கண நூல்கள்.
மொழிகளைத் தாறுமாறாகப் பயன்படுத்தாமல் இப்படி இப்படித்தான் கையாண்டு பயன்பெற வேண்டும் என்னும் சட்ட விதிகளை வகுத்துத் தந்துள்ள மொழிச் சட்ட நூல்களே இலக்கண நூல்களாகும்.
‘தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் துணைநிற்கும் இத்தகைய இலக்கண நூல்கள் பலவற்றை இலக்கண ஆசிரியர்கள் பலர் தத்தம் கொடையாக அளித்துப் போந்துள்ளனர். விரிவஞ்சி, இலக்கண நூல்களின் பெயர்களையும் அவற்றின் ஆசிரியர் பெயர்களையும் மட்டும் ஒரளவு இங்கே காணலாம்.
“நீண்ட தமிழால் உலகை நேமியின் அளந்தான்”
எனவும், "என்றும் உள தென்தமிழ் இயம்பி இசை கொண்டான் எனவும் கம்பரால் போற்றிப் பாராட்டப் பெற்றுள்ள அகத்தியர் இயற்றிய அகத்தியம் என்னும் நூல், முதல் இலக்கண நூலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. முழுநூலும் கிடைக்கவில்லை. இந்நூலின் சில பாக்கள் மட்டும் உரையாசிரியர்களின் உரைகளில் எடுத்தாளப் பட்டுள்ளன. அகத்தியமே முதல் நூலாக இருக்கும் என்று திட்டவட்டமாகச் சொல்வதற்கும் போதிய சான்று இல்லை.
அடுத்து நமக்கு முழுமையாகக் கிடைக்கும் முதல் இலக்கண நூல் தொல்காப்பியமாகும். எழுத்திலக்கணம், சொல் இலக்கணம், பொருள் இலக்கணம், யாப்பிலக் கணம், அணியிலக்கணம் என ஐந்து இலக்கணங்களும் அமைத்து இந்நூலைத் தொல்காப்பியர் இயற்றியுள்ளார். இதற்கு இணையான தமிழ் இலக்கண நூல் இன்றளவும் வேறு கிடையாது. தொல்காப்பியத்தைப் பின்பற்றிப் பின்னர் நூல்கள் பல எழுந்தன.
தொல்காப்பியர் காலத்தவராகக் கருதப்படும் அவிநயனார், காக்கை பாடினியார், செயிற்றியனார், பனம் பாரனார், நத்தத்தனார் முதலியோரும் இலக்கண நூல்கள் எழுதியிருப்பதாகத் தெரிகிறது. அவிநயனம், காக்கை பாடினியம், செயிற்றியம் முதலிய நூல்கள் இவர்களுள் சிலரின் படைப்புகளாகும், இந்தக் குறிப்பும், உரையாசிரியர் களின் உரைகளால் அறியப்படுகிறது.
தொல்காப்பியத்திற்குப் பின் பல நூல்கள் தோன்றினும், அதற்கு அடுத்தபடியாக இப்போது பயன்படுத்தப் படுவது, பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூல் என்னும் நல்ல நூலேயாம்.
அடுத்து, ஐந்திலக்கணங்களையும் அமைத்தோ அல்லது அவற்றுள் ஒன்றிரண்டைமட்டும் அமைத்தோ இயற்றப்பெற்ற நூல்களின் பெயர்களையும் அவற்றின் ஆசிரியர் பெயர்களையும் பொதுவாகக் காண்பாம்:
இறையனார் இயற்றிய இறையனார் அகப்பொருள் அல்லது இறையனர் களவியல் என்னும் இரு பெயர்களையுடைய நூலும், நாற்கவிராச நம்பியின் நம்பி அகப் பொருளும், ஐயனாரிதனாரின் புறப்பொருள் வெண்பா மாலையும், பன்னிருவர் இயற்றிய பன்னிரு படலமும், அமித சாகரர் இயற்றிய யாப்பருங்கலம் - யாப்பருங்கலக் காரிகை என்னும் நூல்களும், தண்டி ஆசிரியரின் தண்டி அலங்காரமும், திருக்குருகைப் பெருமாள் கவிராயரின் மாறனலங்காரமும், விசாகப் பெருமாள் ஐயரின் ஐந்திலக்கண நூலும் அணியிலக்கண நூலும், புத்தமித்திரரின் வீரசோழியமும், வைத்தியநாத தேசிகரின் இலக்கண விளக்கமும், சிவஞான முனிவரின் இலக்கண விளக்கச் சூறாவளியும், முத்துவீரநாவலரின் முத்து வீரியமும், வீரமாமுனிவரின் தொன்னூல் விளக்கமும், வீரமாமுனிவர் இலத்தீன் மொழியில் எழுதிய கொடுந்தமிழ் இலக்கணம் - செந்தமிழ் இலக்கணச் சுருக்கம் - செந்தமிழ் இலக்கணத் திறவுகோல் என்னும் நூல்களும், குணவீர பண்டிதரின் சின்னூல் என்னும் நேமிநாதமும், ஈசான தேசிகரின் இலக்கணக் கொத்தும், சுப்பிரமணிய தீட்சதரின் பிரயோக விவேகமும், பாம்பன் சுவாமிகளின் பல் சந்தப் பரிமளம் - வண்ண இயல் என்னும் நூல்களும், குமரகுருபரரின் சிதம்பர செய்யுட்கோவையும், பொய்கையார் - பரணர் முதலிய பன்னிருவர் எழுதிய பன்னிரு பாட்டியலும், மாமூலரின் மாமூலர் பாட்டியலும், நேமிநாதரின் வச்சணந்தி மாலை என்னும் வெண்பாப் பாட்டியலும், நவநீத நடர் என்னும் அரிபத்தரின் நவநீதப் பாட்டியலும், பரஞ்சோதியாரின் சிதம்பரப் பாட்டியலும், சம்பந்தரின் சம்பந்தப் பாட்டியல் என்னும் வரையறுத்த பாட்டியலும், விருத்தப் பாவியல் முதலிய பிற்காலத்தார் இயற்றிய இன்னும் பல நூல்களும், தமிழ் வளர்ச்சிக்கு இலக்கணப் புலவர்கள் அளித்த அறிவுக் கொடைகளாகும்.
மேலும் பிற்காலத்தில் உரைநடையில் பல்வேறு தமிழ் அறிஞர்கள் எழுதியுள்ள இலக்கண நூல்களும் தமிழ் வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிகின்றன. அவற்றுள், ஆறுமுகநாவலர் எழுதிய இலக்கணச் சுருக்கம் என்னும் நூல் குறிப்பிடத்தக்கது.
இலக்கணத்தின் நன்மை
இலக்கணத்தின் நன்மையை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவோமாயின், இலக்கணப் புலவர்கள் கொடை கொடுத்த நூல்களின் சிறப்பு விளங்கும்.
பெரும்பாலோர் தமிழைப் பிழையாகவே எழுதுகின் றனர். கடிதம், விளம்பரத் தாள், பெயர்ப் பலகை, குறிப்பிட்ட சில வெளியீடுகள் முதலியவற்றில் பிழைகள் மலிந்திருக்கக் காணலாம். இதற்குக் காரணம் இலக்கண அறிவு இன்மையே. இலக்கண விதி தெரியாமல் போனால் குறைவு என்ன? சிறு பிழையுடன் எழுதினால்தான் என்ன? ஏறக்குறையக் கருத்தைத் தெரிவித்தால் போதாதா? - என்ற வினாக்கள் எழலாம் - எழுகின்றன.
உலகில் எந்த மொழியினையும் பிழைபடப் பேசுவதாலும் எழுதுவதாலும் உண்டாகும் கேடு சொல்லும் தரத்ததன்று. காட்டாக நம் தென்னிந்திய மொழிகளையே எடுத்துக் கொள்வோம்.
சில ஆயிரம் ஆண்டுகட்கு முன் தென்னிந்தியாவில் ஏதோ ஒரு மொழியே பேசப்பட்டிருக்கலாம். ஒரு மொழியைப் பேசிய மக்களே, ஒரு மூலைக்கு ஒரு மூலை அம்மொழியினைப் பலவிதமாக இழுத்தும், விழுங்கியும், நீட்டியும், குறுக்கியும், மாற்றியும், திருத்தியும் பேசி வந்தனர். இதனால் ஒரே மொழி பலவகை மாறுபாடு அடைய இடமுண்டல்லவா?
அது மட்டுமன்று; ஆங்காங்கு வந்து குடியேறிக் கூடி வாழ்ந்த பிற மொழியாளர்களின் வீதத்திற்கு ஏற்ப, கூடுதல் குறைச்சலாக, மூலைக்கு மூலை பிறமொழிக் கலப்பு ஏற்பட்டதாலும், ஒரே மொழி பல மாறுபாடு அடைய நேரிட்டது.
இங்ஙனம் நாளடைவில் ஒரு மொழியினர்க்குள்ளேயே, இம் மூலையில் வாழ்ந்தவர் பேசியது ஒரு விதமாகவும் அம் மூலையில் வாழ்ந்தவர் பேசியது வேறு விதமாகவும் இருந்ததால், இது ஒரு மொழியாகவும், அது வேறொரு மொழி போலவும் தோன்ற இடமுண்டாயிற்று.
இந்நிலையில், சூழ்நிலையின் காரணமாக, அவ்வொரு மொழி மக்களுக்குள்ளேயே மேலும் பல பிரிவினைகள் ஏற்பட்டுவிட, அவ்வவர் பேசிய பேச்சுகள் வெவ்வேறு பெயர்களுடன் வெவ்வேறு மொழிகளாகப் பிரிந்து விட்டன.
இவ்விதம் பிரிந்தவைகளே தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்னும் மொழிகள் எனலாம். இவற்றுள் ஒவ்வொன்றும் வடமொழிக் கலப்பின் விகிதத்தால் மாறுபடும். இவற்றுள் மிகவும் குறைந்த கலப்புடையது தமிழ்தான். கலக்காமலேயே எழுதவும் பேசவும் வேண்டிய சொற்கள் தமிழிலேயே உள்ளன. மற்ற மொழிகள் தம்மிடம் உள்ள வடமொழிச் சொற்களை நீக்கிக் கொள்ளுமாயின், மீண்டும் ஒன்றுபட்ட மொழிகளாகத் தோன்றலாம். இக்கருத்தை மெய்ப்பிப்பதற்காக, நான்கிலும் ஒத்துள்ள சில சொற்கள் கீழே தரப்படுகின்றன. ஊன்றி நோக்கின் உண்மை புலனாகும்:
தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம்
கால்(எண்) கால் கால் கால்
அரை(அரெ) அர அரெ அர
முக்கால் முக்க முக்கா முக்கால்
ஒன்று ஒக்கட்டி ஒந்து ஒந்து
இரண்டு ரெண்டு ரெடு ரண்டு
மூன்று மூடு முரு மூந்நு
நாலு-நான்கு நாலுகு நால்கு நாலு
அஞ்சு, ஐந்து ஐது ஐது அஞ்சு
ஆறு ஆரு ஆரு ஆறு
எட்டு எனிமிதி என்டு எட்டு
ஒன்பது தொம்மிதி ஒம்பத்து ஒன்பது
பத்து பதி ஹத்து பத்து
அண்ணன் அன்ன அண்ணா -
தம்பி தம்புடு தம்ம -
தாத்தா தாத தாத மூப்பன்
அது இது எது இதி இதி எதி அது இது எது அது இது எது
சிறிய-சின்ன சின்ன சிக்க சிறிய
நெருப்பு-தீ நிப்பு (பெங்கி) தீ
மழை-வான் வானெ மளெ மழ
கொடு-ஈ ஈய் கொடு கொடு
பகல் பகலு அகலு பகல்
யார்=எவர் எவரு யாரு யாரானு
ஊர் ஊரு ஊரு ஊரி
சோறு-ஊண் (அன்ன) ஊண்ட ஊணு
கண் கன்னு கண்ணு கண்ணு
மூக்கு முக்கு மூங்கி மூக்கி
காது-செவி செவ்வு கிமி செவி
வாய் (நோரு) பாயி வாயி
தலை தல தலெ தல
எருது-காளை எத்து எத்து காள
எந்த எந்த எழுத்துகள் இணைந்து வரும் என்ற மயக்க விதி அறிந்து எழுத வேண்டும். பயிற்ச்சி, சால்ப்பு என எழுதலாகாது. ற் என்பதன் பக்கத்திலும் 'ல்' என்பதன் பக்கத்திலும் மற்றொரு மெய்யெழுத்து மயங்கி வராது. இது போல் பல உள.
க், ச் முதலிய எழுத்துகள் தமிழில் ஒரு சொல்லுக்கு முதலிலும் வரமாட்டா-இறுதியிலும் வரமாட்டா. மொழிக்கு முதலிலும் இறுதியிலும் வராத எழுத்துக்களை அறிந்து அதற்கேற்ப எழுத வேண்டும். இந்த விவரங்களை இலக்கண நூல்கள் தெரிவித்துள்ளன.
தமிழ் இலக்கண நூல்களில் வடமொழியாக்கமும் சொல்லப்பட்டுள்ளது. கம்பர் இராமாயண நூல்முழுவதிலும் வடமொழிப் பெயர்களையெல்லாம் தமிழ் உருவம் கொடுத்தே எழுதி உள்ளார். விபீஷணன் வீடணன் ஆக்கப் பட்டான். இப்படிப் பல. நாமும் இந்த விதியைப் பின்பற்ற வேண்டும். .
யாப்பிலக்கண நூல்கள் செய்யுள் இயற்றும் விதிமுறைகளைக் கூறியுள்ளன. அம்முறையில் செய்யுள் இயற்றலாம். புதுக்கவிதை எழுதுவோர் எழுதுவாராக.
அணியிலக்கண நூல்கள், செய்யுளில் உவமை, உருவகம் முதலிய அணிகள் வந்து, கருத்தைப் புரிந்துகொள்ளச் செய்வதோடு நயம் தந்து சுவைக்கவும் செய்கின்றன. உரை நடையிலும் இந்த அணிகளைப் பயன்படுத்தலாம்.
இதுகாறும் இயல் தமிழ் வளர்ச்சி பற்றிப் பேசப் பட்டது. இயல் தமிழை அடுத்து இசைத் தமிழும் சுத்துத் தமிழும் உள்ளன. தமிழ் முத்தமிழ் எனப்படும் அல்லவா?
பண்டு இசைத் தமிழ் இலக்கண நூல்களும் கூத்துத் தமிழ் இலக்கண நூல்களும் தமிழில் இருந்தன. பெரும் பாலும் அவை இப்போது மறைந்து விட்டன. இசை மரபு என்ற நூலை மறப்பதற்கில்லை. தொல்காப்பியம் - நூல் மரபு என்னும் இயலில் உள்ள
“அளபிறந்து உயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்
உளவென மொழிய இசையொடு சிவணிய
நரம்பின் மறைய என்மனார் புலவர்” (33)
என்னும் நூற்பாவில் உள்ள ‘இசையொடு சிவணிய நரம்பின் மறை’ என்னும் பகுதி தமிழில் இசை இலக்கண நூல்கள் நிரம்ப இருந்தன என்பதற்குச் சான்றாகும். ‘என்று அறிஞர்கள் சொல்லுவார்கள்’ என்னும் பொருளில் ‘என்மனார் புலவர்’ என்று கூறியிருப்பதைக் கொண்டு, முன்பிருந்த பல இசை நூல்களை உள்ளத்தில் கொண்டு கூறியுள்ளார் என்பது புலனாகும். மற்றும் அவர், அகத் திணை இயலில் —
“நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்”
என்று கூறியிருப்பதிலிருந்து, அந்தக் காலத்திலேயே தமிழில் நாடக இலக்கண நூல்கள் - அதாவது - கூத்துத் தமிழ் இலக்கண நூல்கள் நிரம்ப இருந்தன என்பதை அறியலாம்.
இது காறும் கூறியவற்றால், முத்தமிழ் வளர்ச்சிக்கும் இலக்கணப் புலவர்கள் கொடுத்துள்ள கொடைமிகுதி என்பது தெள்ளிதின் புலனாகும்.
9. தமிழ் வளர்ச்சிக்கு மொழியியலாரின் பங்கு
தமிழ் வளர்ச்சிக்கு மொழியியலாரின் பங்கும் சிறிது உண்டு. அப்பங்கை ஆராய்வதற்கு முன் ‘எந்தத் தமிழ் வளர்ச்சிக்கு?’ என்னும் வினாவிற்கு விடை காணல் வேண்டும்.
ஒரு வேடிக்கைக் கதை உண்டு. நோயாளி ஒருவன் சாகுந்தறுவாயில் இருந்தபோது அவன் உயிரைப் பிடிக்க எமன் சென்றானாம். நீ யார்? என்று நோயாளி கேட்டானாம். நான் எமன் என்ற பதில் வந்தது. உடனே நோயாளி, நீ பழைய எமனா? புதிய எமனா? என்று வினவினானாம். திடுக்கிட்ட எமன், புதிய எமன் ஒருவன் இப்போது கடவுளால் உண்டாக்கப்பட்டுள்ளான் போலும் - இவனது உயிரைப் பிடிக்கும் பொறுப்பு புதிய எமனுடையது போலும் - நமக்கு ஏன் வம்பு? என்று வாளா திரும்பி விட்டானாம். ஒரே எமன்தான்.
இந்தக் கதை இங்கே ஏன் சொல்லப்படுகிறதெனின், தெனாவிராமன் கறுப்பு நாயை வெள்ளை நாயாக்க முயன்றதைப் போல, இன்றைய மொழியியலார் சிலர், பழைய தமிழைத் திருத்தியும் மாற்றியும் புதிய தமிழ் படைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
மொழியியலாரின் அடிப்படை நோக்கம் நல்லதே. தமிழை வளர்க்க வேண்டும் என்னும் நல்லெண்ணம் கொண்டவர்களே அவர்கள். அதாவது இப்போது மக்கள் பேசும் புதிய வழக்காறுகள் பழைய இலக்கண விதிக்கு மாறுபட்டிருப்பினும், அதைப் பொருட்படுத்தாது, பழமையை நீக்கிப் புதிய வழக்காறுகட்குப் பொருத்தம் கற்பித்து அவற்றை மொழியில் புகுத்துகின்றனர்.
“பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே”
எனப் பவணந்தி முனிவர் நன்னூலில் கூறியுள்ளார். மற்றும், ஆர்தர் மன்னன் தன் இறுதிக் காலத்தில் தன் அமைச்சர் சர்-பெடீவரிடத்தில் “Old order changeth yielding place to new” என்று கூறினானாம். ‘கழிதல்’ என்பதை விட, changeth என்பது மிக்க பொருத்தம் உடையதாகத் தோன்றுகிறது.
புதுமையைப் புகுத்துபவர்கள் தங்கள் கொள்கைக்கு அரணாக இந்தக் கருத்தைக் கூறுகின்றனர். ஆனால், இங்கே, “பழைய காலைத் தூர்க்காதே - புதிய காலை விடாதே” என்னும் பழமொழி இருப்பதையும் நினைவுசெய்துகொள்ளல் வேண்டும். கால் என்றால், நீரோடும் வாய்க்கால்.
“முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொரு
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப்பெற்றியனே.”
என்பது மாணிக்கவாசகரின் திருவாசகப் பகுதி.
பழமையைக் கழித்துப் புதியன புகுத்தும் பயனுள்ள நல்ல பணி இன்றைய மொழியியலாரால் இப்போது மட்டும் செய்யப்படவில்லை. இரண்டாயிரம் மூவாயிரம் ஆண்டுகளாகவே இந்தப் பணி முன்னோரால் செய்யப்பட்டு வந்துள்ளது.
தொல்காப்பியர் தொல்காப்பியத்தில் சொல்லியுள்ள இல செய்திகளைப் பவணந்தியார் நன்னூலில் விட்டுவிட்டார்; தொல்காப்பியர் சொல்லாத சில செய்திகளைப் பவணந்தியார் நன்னூலில் சொல்லியுள்ளார். எடுத்துக்காட்டுகள்:
ஆவிரை என்ற சொல்லைக் குறிப்பிட்டுத் தொல்காப்பியர் புணர்ச்சி விதி கூறியுள்ளார். நன்னூலார் இச் சொல்லைக் குறிப்பிடவில்லை. தொல்காப்பியர் சொல்லாத பதவியலை நன்னூலார் நன்னூலில் புகுத்தியுள்ளார். எகர ஒகரம் புள்ளியொடு நிற்கும் எனத் தொல்காப்பியர் சொன்னதை நன்னூலார் சொல்லவில்லை.
தொல்காப்பியரையே எடுத்துக் கொள்வோமே - இப்படியெல்லாம் முன்னோர்கள் கூறியுள்ளார்கள் எனப் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். உயிர் மயங்கியலில் புணர்ச்சிவிதி சொல்லும் இடத்திலும் இவ்வாறு கூறியுள்ளார்:
“செய்யா என்னும் வினையெஞ்சு கிளவியும்
அவ்வியல் திரியாது என்மனார் புலவர்” (20)
என்பது நூற்பா.
இப்போதைய மொழியியலார் இப்போது வழக்கில் இல்லாததை நீக்கிப் புதிய வழக்கைப் புகுத்துகின்றனர். தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள இயல்புப் புணர்ச்சி நீங்கலான விகாரப் புணர்ச்சிகள் - அதாவது - தோன்றல், திரிதல், கெடுதல் உள்ள விகாரப் புணர்ச்சிகள் அனைத்தும், பழமை நீங்கிய புதிய வழக்காறுகளே. எனவே, தொல் காப்பியரையும் அந்தக் காலத்துப் புதிய மொழியலார் என்று கூறலாம். ஒரோஒர் எடுத்துக் காட்டு வருமாறு:
மக்கள் பனைமரத்தின் பூவைப் ‘பனம்பூ’ என்கின்றனர். ஆனால் ‘பனம்’ என ஒரு சொல் கிடையாது. பனை என்பதன் ஈற்றில் உள்ள ஐ கெட்டு, ‘பன்’ என நிற்க, அதனுடன் ‘அம்’ என்பது சேர்ந்து ‘பனம்’ என்றாகிறது. இதோடு பூ சேரும் போது ‘பனம்பூ’ என்றாகிறது. ‘காய்’ என்பது சேரின் ‘பனங்காய்’ என ‘ம்’ என்பது ‘ங்’ எனத் திரிகிறது. ஆவிரை என்ற சொல்லுக்கும் இதே விதிதான்:
“பனையும் அரையும் ஆவிரைக் கிளவியும்
கினையுங் காலை அம்மொடு சிவனும்
ஐயென் இறுதி அரைவரைந்து கெடுமே
மெய் அவண் ஒழிய என்மனார் புலவர்” (81)
என்பது உயிர் மயங்கியல் நூற்பா. பனை பூ என்னும் பழைய இயற்கையான சொற்களை மக்கள் பனம்பூ எனத் திரித்துப் பேசினர். புதுமைக்கு இந்தக் காலத்து மொழியியலார் இடம் கொடுப்பது போலவே, அந்தக் கால மொழியியலாராகிய தொல்காப்பியரும் புதுமைக்கு இடம் கொடுத்துள்ளார். இவ்வாறு எண்ணற்ற எடுத்துக் காட்டுகள் தர முடியும்.
இந்தக் கால மொழியியலாரின் கூற்றுப்படி, ‘பனைபூ’ என்பதைப் பழைய தமிழ் என்றும், ‘பனம்பூ’ என்பதை அந்தக் காலப் புதிய தமிழ் என்றும் கொள்ளல் வேண்டும். இந்தக் காலத்திலும் பனம்பூ என்றே மக்கள் வழங்குகின்றனராதலின், இந்தக் காலத்து மொழியியலாருக்கு வேலை வைக்காமல் இவர்களின் வேலையை அந்தக் காலத்திலேயே தொல்காப்பியர் முடித்து வைத்துச் சென்றுள்ளார்.
மற்றும், தஞ்சாவூர் தஞ்சை எனவும், வாழ்நன் வாணன் எனவும், ஐந்து அஞ்சு எனவும், மையல் மயல் எனவும் மக்கள் வழங்குவதற்கு, முன்னமேயே இலக்கண ஆசிரியர்கள் அமைதி கூறியுள்ளனர். (மரூஉ, போலி)
இதுகாறும் கூறியவற்றால் அறிய வேண்டுவதாவது: ஆயிரம்-ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழ் புதுமை பெற்றுத் தான் வந்துகொண்டிருக்கிறது; ஆனால், இவ்வளவு கால மாக நடந்து வருவது போலவே, மொழியியலார் ‘புதிய தமிழ்’ என்னும் புதிய பெயரைத் தங்கள் உள்ளகத்திலிருந்தும் விலக்கிவிட்டுப் பொருத்தமான புதுமைகளைப் புகுத்திக் கொண்டிருக்கலாம் என்பது, இதுவரை கூறியவற்றால் அறிய வேண்டியதாகும்.
இதுகாறும் இவ்வளவு கூறவேண்டியதின் காரணமாவது:- ‘புதிய தமிழ்’ என்னும் பெயர் பலரைப் புண் படுத்துவதேயாகும். இப்போது இது பற்றித் தமிழ் அறிஞர்களிடையே கடுமையான- கார சாரமான கருத்து வேற்றுமை நிலவி வருகிறது. மொழியியல் என்னும் பாடம் படித்துப்பட்டம் பெற்றவர்கள், அப்பட்டம் பெறாதவர்களை மிகவும் மட்டமாக மதிக்கிறார்கள். இதற்கு எவ்வளவோ சான்றுகள் உண்டு.
அதே நேரத்தில் மொழியியல் என ஒன்றைத் தனியே படிக்காதவர்கள், மொழியியல் என்பது தமிழுக்கு வேண்டாத - வீணான ஒரு பெருஞ்சுமை என்கின்றனர். மொழியியல் என ஒன்றைத் தனியே படிக்காமலேயே, மொழியியல் எனத் தனியே படித்தவர்கள் செய்யும் பணியை முன்னோர் போல் செய்யலாம் என்பது இவர்களின் வாதம். முன்னோர்கள் செய்தது இப்படித்தானே.
‘தமிழ் வளர்ச்சிக்கு மொழியியலாரின் பங்கு’ என்னும் தலைப்பில் இந்தச் செய்திகளை யெல்லாம் ஆராய வேண்டியது மிகவும் இன்றியமையாதது. இங்கே இதை ஒதுக்கிவிடலாகாது.
கல்வித்துறையில், ஆங்கிலம், தமிழ், கணிதம், அறிவியல், வரலாறு, தரையியல், வானியல், உயிரியல், பொறியியல், மருத்துவம், வணிக இயல், பொருளியல், மெய்யுணர்வு என்னும் தத்துவ இயல், உளவியல், சமூக இயல், வேளாண்மை இயல் முதலிய தனித்தனித் துறைப் பாடங்கள் இருப்பது போலவே, மொழியியலுக்கும் தனிப்படிப்பும் தனித்தேர்வும் எம்.ஏ (M.A.) என்னும் முதுகலைப்பட்டமும் உண்டு.
இதற்கென நூற்றுக்கணக்கான புதிய கலைச் சொற்களை ஆங்கிலத்திலும் தமிழிலும் மொழியியலார் படித்து அறிந்து வைத்துள்ளனர். அவற்றையெல்லாம் தமிழில் புகுத்தவும், அவற்றின் அடிப்படையில் தமிழை அணுகவும், அந்தத் துறைக் கண்கொண்டு தமிழைக் காணவும் மொழியியலார் சிலர் முனைந்து முயல்கின்றனர்.
மற்றதுறைப் பாடங்களாலும் தமிழ் வளர்ச்சிக்கு ஒரு சிறிது கொடை கிடைக்காலம். அவற்றினும், மொழியியலால் சிறிது கூடுதலாகத் தமிழ் வளர்ச்சிக்குக் கொடை கிடைக்கலாம் . அவ்வளவுதான். எனவே, மொழியியல் என்னும் ஒரு பொதுப் பெயரை வைத்துக்கொண்டு, தமிழுக்கு முன்னால் ‘புதிய’ என்னும் அடைமொழியைச் சேர்த்துப் ‘புதிய தமிழ்’ படைக்கப்போகிறோம் என்று அடம் பிடிப்பது பொருந்தாது.
இன்றைய மொழியியலார் எழுத்து சொல் - சொற்றொடர் இவற்றிலேயே நிற்கின்றனர். பொருளுக்குப் போவது குறைவு. எனவே, தமிழ் எழுத்துகளின் மேல் தங்கள் சினத்தைச் செலுத்தி அவற்றுள் சிலவற்றை ஒழித்துக் கட்டுவதில் முனைப்பாயுள்ளனர். இது அவர்களின் பங்குகளுள் ஒன்றாகும்?
இந்திய மொழிகளுள் தமிழ் மொழியில் எழுத்து குறைவு. க, ச, ட, த, ப என்பன நந்நான்கு வரிவடிவமும் ஒலிவடிவமும் பெற்றுள்ள மற்ற இந்திய மொழிகட்கு உள்ள சுமை தமிழுக்கு இல்லை.
ஆங்கிலம் இருப்பத்தாறு எழுத்தில் நடை போடுகிறதாம். அதனால்தான், நெடுநல்வாடை என்பது Nedu Nal valai என ஆங்கில எழுத்தில் எழுதப் பட்டிருந்ததை ஒருவர் ‘நெடுநாள் வடை' என்று படித்தாராம். குறில் - நெடில் தனித்தனியே இல்லாத குறையினால் நேர்வது இது போன்றது.
ஆங்கிலத்தில் A, (A) a,(a); B, (B), b,(b)
எனப் பெரியஎழுத்தில் அச்செழுத்து ஒன்று-கையெழுத்து ஒன்று, சிறிய எழுத்தில் அச்சு எழுத்து ஒன்று - கையெழுத்து ஒன்று - என ஒவ்வோர் எழுத்திற்கும் பெரும் பாலும் நான்கு வரிவடிவங்கள் உள்ளன. இதை நோக்கத் தமிழில் எழுத்து மிகக் குறைவே என்பது தெளிவாகும். இங்கே, சீன மொழியின் எழுத்துப் பெருக்கத்தை ஒப்பிட்டு நோக்கின் வியப்பாயிருக்கும்.
தமிழில் நடைமுறை வசதிக்காக உயிர்மெய் எழுத்து படைக்கப்பட்டுள்ளது. முருகு என்னும் மூன்றெழுத்துத் தமிழ்ச் சொல்லை, ஆங்கிலத்தில் Muruku என ஆறு எழுத்துகளாலும், Mourourkou எனப் பிரெஞ்சு மொழியில் ஒன்பது எழுத்துகளாலும் எழுதவேண்டும் தமிழை உரோமன் எழுத்தால் எழுதலாம் என்பவர்கள் இதை ஊன்றி நோக்கவேண்டும்.
ஆனால், தட்டச்சு, கணிப்பொறி முதலிய துணைக் கருவிகளின் காரணமாக எழுத்தைக் குறைக்க வேண்டியது தேவையாகிறது, இது, தொப்பிக்கு ஏற்பத் தலையையும், மிதியடிக்கு ஏற்பக் காலையும் செதுக்கிக் கொள்வது போன்றது. தமிழுக்கு ஏற்பப் பொறி அமைக்க முயலின் முடியுமே. (எதையும் செதுக்க வேண்டா)
இப்போதுள்ள வரிவடிவங்கள் சிறார்கள் எளிதில் கற்றுக்கொள்ளும் முறையில் உள்ளன. க, கா, கி, கீ, கெள என்னும் வரிசை ன, னா, னி, னி, னெள என்பது வரையும் எளிதில் தன்னில் தானே ஒடும்.
எழுத்துச் சீர்திருத்தத்தில் மொழியியலார் மிகவும் வற்புறுத்துவது ஐ, ஒள என்னும் ஈரெழுத்துகளையும் நீக்கி விடவேண்டும் என்பதே. ஐ என்பதை ‘அய்’ என்னும் ஈரெழுத்துகளாலும், ஒள என்பதை ‘அவ்’ என்னும் ஈரெழுத்துகளாலும் எழுதி, ஐ, ஒள என்னும் இரண்டெழுத்துகளையும் கல்லறைக்கு அனுப்ப முயல்கின்றனர். இவை, வேறு மொழியிலிருந்து வந்ததாகச் சிலர் உளறுவர். தொல்காப்பியத்தின் சிற்சில பகுதிகளைப் பிய்த்துப் பிய்த்துக் கல்லறைக்குள் எறிகின்றனர் சிலர்.
தமிழிலிருந்து வேறு மொழிகட்குப் போன எழுத்துகளும் கலைகளும், அம்மொழிகளிலிருந்து தமிழுக்குத் திரும்ப வந்தன என்று கூறக் கூடாதா? அப்பா தந்த மிட்டாய்களுள் இரண்டை, சிறுவன் மீண்டும் அப்பாவுக்குக் கொடுத்தது போன்றதாகும் இது.
ஐ, ஒள இரண்டனுள் ஒள என்பது புதிய வரிவடிவம் கொண்டது அல்லவே! முன்பே ஒ உள்ளது. ள உள்ளது. இவற்றைப் பொறிகளில் பயன்படுத்தி ஒள எழுத்தைச் சரி கட்டலாமே. மற்றும், அய்யர் என்பதனினும் ஐயர் என்பதில் ஒரு வரிவடிவம் குறைவாயிற்றே.
ஐ, ஒள என்னும் எழுத்துகளை இந்த வரிவடிவத்தில் ஏன் படைத்துச் சேர்த்துக் கொண்டிருக்கவேண்டும்? - என்பதையும் ஆராய வேண்டும். ஏதோ பயன் கருதித் தானே அந்தக் காலத்தில் முன்னோர்கள் இந்த ‘ஐ’ எழுத்தை அமைத்துள்ளனர். அந்த எழுத்தை இப்போது நீக்கி விடுவதால் சில புணர்ச்சி விதிகளில் தெளிவின்மை உண்டாகும்; இதற்காகப் புணர்ச்சி விதியில் கை வைக்க வேண்டி நேரும்.
எழுத்தைக் குறைக்கும் முயற்சியில், பண்டைக் காலத்தார் இந்தக் காலத்தார்க்கு இளைத்தவர் அல்லர், நுணா, கனா, புறா என்று இக்காலத்தார் ணா, னா, றா என இரண்டு வரி வடிவம் கொடுப்பதைக் குறைத்து பழைய ணா, பழைய ன, பழைய றா என ஒரே வரிவடிவம் பண்டைக் காலத்தவர் கொடுத்துள்ளனர்.
இதுபோலவே, இணை, சுனை, அலை, களை, என இக் காலத்தார் ணை, னை, லை, ளை, என இரண்டு வடிவம் கொடுப்பதைக் குறைத்து பழைய ணை. பழைய னை. பழைய லை., பழைய ளை என ஒரே வடிவம் பண்டைக் காலத்தார் கொடுத்துள்ளனர். இது எழுத்தைக் குறைக்கவேண்டும் என்னும் எண்ணத்தால் ஏற்பட்ட முயற்சியே. பழைய னை. என்பதைச் சிலர் ‘னை’ என எழுதாது, ‘லை என இரண்டையும் ஒன்று போல் எழுதிவிடுகின் றனர். சிலர் ‘னன’ என ஒன்று போல் எழுதி விடுகின்றனர். இரண்டும் ஒத்த வரிவடிவம் உடைமையால் நேர்ந்த குறை பாடே இது. இந்தக் குறைபாடு அச்சுக்கோப்பவரிடத்திலும் எதிரொலிக்கிறது. சில நேரங்களில் அவர்கள் ‘பழைய னை.’ என்பதை ‘, எனவும், ‘பழைய ளை’ என்பதை ளள எனவும் அச்சுக் கோக்கின்றனர். இதனை அச்சுப் பிழைகள் திருத்துபவர்கள் நன்கறிவர். இந்தக் குழப்பத்தை நீக்குவதற்கே முன்னோர்கள் பழைய ணை, பழைய னை பழைய லை, பழைய ளை. என்னும் வரி வடிவங்களைப் படைத்தனர். நிற்க —
எழுத்துச் சீர் திருத்தம் பற்றிப் பார்த்தோம். இனிச் சில சொல்லாட்சிகளைப் பார்ப்போம்:
வேண்டாம்
தீய செயல்களைச் செய்ய வேண்டா - என எழுதுவது அந்தக் கால வழக்கு. திருவள்ளுவர்,
“அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டுர்ந்தா னிடை” (37)
“மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின்” (280)
என, வேண்டாம் என்னும் பொருளில் வேண்டா என்னும் சொல்லையே கையாண்டுள்ளனர். வேண்டா என்றிருந்தால் தான் வேண்டு + ஆ எனப் பிரித்து ஏதாவது பொருத்தமான புணர்ச்சி விதி கூறலாம். வேண்டாம் என்றால், வேண்டு+ஆ + ஆம் எனப் பிரிக்க வேண்டும். இங்கே ஆம்' என்பதை என்ன என்று சொல்வது - என்ற குழப்பம் நேரும். ஆம் என்பது தன்மைப் பன்மை வினைமுற்று விகுதியாகும். இங்கே அது பொருந்தாது.
ஆனால், உலகநீதி என்னும் நூலில், உலகநாதபண்டிதர்,
“ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்...”
என நூல் முழுவதிலும் வேண்டாம் என்பதையே போட்டு வெளுத்துக் கட்டிவிட்டார். ஆனால், யான், இதுவரையும் வேண்டா என்று எழுதி வருகிறேன். மொழியியலார் சிலர் வேண்டாம் என்பதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்கின்றனர். இதற்கு இலக்கண அமைதி என்ன?
“வேறு இல்லை உண்டு ஐம்பால் மூவிடத்தன” (339)
என்பது நன்னூல் பா. இவை ஐந்து பால்களுக்கும் மூன்று இடங்கட்கும் வரும் என்பது இதன் கருத்து. வேண்டும், தகும், படும் என்னும் சொற்களையும் இவ்வாறே கொள்ள லாம் என உரையாசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இவற் றுடன் வேண்டாம் என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம்.
அல்ல
அவன் அல்லன், அவள் அல்லள், அவர் அல்லர், அது அன்று, அவை அல்ல, தான் அல்லேன் - நாங்கள் அல்லேம், நீ அல்லை - நீங்கள் அல்லீர் என்று எழுத வேண்டும் என்பது விதி. ஆனால் மக்கள், அவன் அல்ல, அவள் அல்ல, அவர் அல்ல, அது அல்ல, அவை அல்ல, நான் அல்ல, நீ அல்ல - என்றே பெரும்பாலும் எழுதுகின்றனர். அதனால், அல்ல என்பதையும் வேறு, இல்லை, உண்டு முதலியன போல் பொதுவாக வைத்துக் கொள்ளலாம் என்கின்றனர். இதையும் வேண்டா வெறுப்பாகவாவது ஏற்றுக் கொள்ளலாம்.
எல்லாரும்
நாங்கள் எல்லேமும், நீங்கள் எல்லீரும், அவர்கள் எல்லாரும் என எழுதுவது விதி. ஆனால் மக்கள், நாங்கள் எல்லாரும், நீங்கள் எல்லாரும், அவர்கள் எல்லாரும் என எல்லாரும் என்பதைத் தன்மை - முன்னிலைக்கும் பயன் படுத்துகின்றனர். எனவே, எல்லாரும் என்பதையே மூன்றிடங்கட்கும் கொள்ளலாம் என்பதையும் வேண்டா வெறுப்பாயாவது ஏற்றுக் கொள்ளலாம்.
ஆறாம் வேற்றுமை உருபு
எனது மகன் முருகன், எனது நண்பன் என எழுதுகின்றனர் மக்கள். திருமண அழைப்பிதழ்களில் பெரும்பாலும் எனது மகன், எனது மருகர் என்று ‘எனது’ என்னும் சொல்லே பயன்படுத்தப்படுகிறது. (இது குறித்து வேறொரு நூலிலும் எழுதியுள்ளேன்.)
ஆனால், ‘அது’ என்னும் ஆறாம் வேற்றுமை உருபை, எனது வீடு, எனது மாடு எனப் பின்னால் வரும் உடைமைப் பொருள் அஃறிணையாயிருந்தால் மட்டுமே பயன்படுத்தலாம் என்பது விதி.
எனது மகன், முருகனது நண்பன் என்பனவற்றை, எனக்கு மகன், முருகனுக்கு நண்பன் என எழுத வேண்டும் என்பது பழைய விதி. எனக்கு என்பதை வேண்டுமானால் விட்டு விடலாம். ஆனால், எனது மகன், முருகனது நண்பன் என எழுதாமல், என் மகன் என உருபு இன்றியே எழுதலாம்; முருகன் நண்பன் அல்லது முருகனின் நண்பன் அல்லது முருகனுடைய நண்பன் என்று எழுதலாம். பெரியவர் ஒருவர் ஒரு திருமண அழைப்பிதழில், எனது மகன் என்று எழுதிக் கொடுத்திருக்கிறார். உரியவர்கள் அழைப்பிதழின் கைப்படியை என்னிடம் காட்டித் திருத்தித் தரச் சொன்னார்கள். நான் எனது மகன்’ என்பதை என் மகன்' என்று திருத்திக் கொடுத்தேன். இதை எப்படியோ பார்த்துவிட்ட பெரியவர், நான் எனது மகன் என்று எழுதியதை என் மகன் என எந்த மடையன் திருத்தினான் என்று சினம் கொண்டாராம்.
எனது மகன் என்று எழுதாதவர்கள் மடையர்கள் என்ற அளவுக்கு நிலைமை முற்றிவிட்டிருக்கிறது. மொழியியலார் சிலரும் மடையர்களாதற்கு அஞ்சிப் போலும் - எனது மகன் என்றே எழுதத் தொடங்கி விட்டனர்.
இப்போது தமிழ் இலக்கணத்திலிருந்து ஆங்கில இலக்கணத்திற்குத் தாவுவோம்:
மாணவன் கால் என்பதற்கு Student's leg என ஆறாம் வேற்றுமை உருபாகிய ‘s’ என்பதற்கு முன்னால் ‘ ’ ’ என்னும் எழுத்தெச்சக் குறியை (Apostrophe) இடவேண்டும். இது ஒரு மாணவனின் காலுக்கு உரியது. அதாவது, உடையவர் ஒருமையாயிருந்தால் இது தகும்.
மாணவர்களின் கால்கள் என உடையவர் பலராயிருந் தால் - அதாவது பன்மையாயிருப்பின், Students’ legs என, 's’ என்னும் பன்மை விகுதிக்குப் பின்னால் ‘ என்னும் குறியைப் போட வேண்டும். ‘s’ பெறாத பன்மையில் Children's legs என ‘s’ என்பதன்முன் (’) போட வேண்டும்.
ஆங்கிலத்தில் எழுதும்போது ஆங்கில இலக்கண விதிப்படியே எழுதுபவர்கள், தமிழில் எழுதும்போது மட்டும், எனது மகன் என விதியை மீறி எழுதலாமா?
இது போய்த் தொலைகிறது. எனது மகன் என்று எழுதாதவர்கள் மடையர்களாவதால் விட்டுக் கொடுத்து விடலாம். கோவணம் கட்டாத ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரனல்லவா?
இவ்வாறு புதியன புகுதலுக்கும் ஒர் அளவு உண்டு. கண்டபடி மாற்றிக்கொண்டு போனால் மொழியே வேறாகி விடும். மொழியின் விதிகளை இழுத்துப் பிடிக்காமல் அதன் போக்கில் விட்டுவிடின், கரையில்லா ஆற்று வெள்ளம் அதன் போக்கில் சென்று பல கால்களாகப் பிரிந்துவிடுவது போல மொழியும் சிதைந்து பலவாகும்.
உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசும் தமிழ்ப் பகைவர்கள் சிலர் - தமிழின் தனித்தன்மையைப் பற்றிக் கவலைப்படாதவர்கள் சிலர், மொழியியல் என்னும் போர்வையில் மறைந்துகொண்டு, தமிழ்மொழியின் பழைய உருவத்தை மறைத்துப் புதுமொழி படைக்க உரிமை யில்லை. இந்த முயற்சியில் இறங்காதீர் என அவர்களின் திருவடிகளை வணங்கி மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன்.
பழமைவாதிகள் எனச் சுட்டப்படும் எங்களிடம் தமிழ் வளர்ச்சி தொடர்பான முயற்சியை விட்டுவிடுங்கள் - வழக்கம்போல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். எங்கள் மனப் புண்ணை இப்போது நீங்கள் அறிவீர்கள் என நம்புகிறேன். வணக்கம்.
10. பிரபுலிங்கலீலை - ஓர் அறிமுகம்
1. அறிமுகம்
1.1. நூல் அறிமுகம்
பிரபுலிங்கலீலை என்பது ஒரு வீர சைவ நூல். இதை ஒரு காப்பியம் எனலாம், காப்பியத் தலைவர் அல்லமப்பிரபு என்பவர். இவர் சிவபெருமானின் தெய்வக் கூறாகக் (தெய்வ அம்சமாகக்) கருதப்படுகிறார்.
இந்த நூல் நயமான கற்பனை வளம் நிரம்பியது. இந்த இருபதாம் நூற்றாண்டின் முற்பாதி வரையிலுங்கூட இந்நூல் பலராலும் படிக்கப் பெற்றது. திருப்பாதிரிப்புலியூர். ஐந்தாம் பட்டத்து ஞானியார் அடிகளார் தாம் சென்ற இடங்களிலெல்லாம் இந்நூலைப் பலர்க்குக் கற்பித்துள்ளார். அந்தப் பேறுபெற்ற பலருள் அடியேனும் ஒருவன்.
சென்ற ஆண்டு (1991) ஒருநாள், உயர்திரு டாக்டர் ச. மெய்யப்பன் அவர்களின் வீட்டிற்கு நான் சென்றிருந்த போது, அவருடைய தந்தையாரும் குங்குலியம் சாமியார் என்று ஒரு சிறப்புப் பெயர் வழங்கப்பெறுபவருமாகிய பெருந்திரு சண்முகம் செட்டியாருடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் பெரியவர், பிரபுலிங்க லீலைப் பாடல்களைப் பார்க்காமலேயே அவர்பாட்டும் ஒப்பித்தார். நான் வியப்படைந்தேன்; செட்டிநாட்டில் பிரபுலிங்க லீலை பரவியிருந்தமையை உணர்ந்தேன்.
புதுச்சேரியில் வள்ளலார் சன்மார்க்க சங்கத்தில் நான் ஒரு நாள் பிரபுலிங்கப் பாடல் ஒன்றைப் பார்த்து விளக்கிக் கொண்டிருந்தபோது, வந்திருந்தவர்களுள் ஒருவரான ந. மகாலிங்கம் என்பவர் என்னை நோக்கி, நீங்கள் பிரபு லிங்கலீலைப் பாடலைப் பார்த்துப் படிக்கிறீர்களே - எங்கள் தாத்தா பிரபுலிங்கலீலைப் பாடல் முழுவதையும் பார்க்காமலேயே ஒப்பிப்பார் என்று கூறினார். பிறகு நான் அவரிடம் சில பாடல்களைப் பார்க்காமல் ஒப்பித்துக் காட்டினேன்.
1.1.1. நூல் நுதலிய பொருள்
நூல் நுதலிய பொருள் புராணக் கதை போன்றது தான். கதையில் நம்பிக்கை யிராவிடினும், பாடல்களில் உள்ள ஈடு இணையற்ற வளமான கற்பனை நயங்களைச் சுவைக்கலாம். கதை வருமாறு:
கைலாயத்தில் சிவனும் சிவையும் உரையாடுகின்றனர். மண்ணுலகில் உள்ள என் கூறாகிய அல்லமப் பிரபுவை யாராலும் தன்பால் அகப்படும்படிக் கட்டுப்படுத்தி வெல்ல முடியாது என்று சிவன் கூறினார். மந்த குணமாகிய மாயையைப் பெண்ணாக அனுப்பி அல்லமரைக் கட்டுப்படுத்தி வெல்லும்படி யான் செய்வேன் எனச் சிவை சூள் உரைத்தாள். பின் மந்தகுண மாயை, மையக்குண விமலை, உயர்குண மாதேவி ஆகியவர்களை அனுப்பியும் அல்லமரை வெல்ல முடியவில்லை. பின்னர்ச் சிவை தோல்வியை ஒப்புக்கொண்டாள்.
இவர்களை வென்ற அல்லமர் பின்னர் மாற்றுக் கருத்து கொண்டிருந்த அறிஞர்கள் பலரை வென்று அருளாளர்களாக்கி வீடுபேறு அடையச் செய்தார். இது கதை.
அல்லமப் புரபுவின் லீலைகளை அதாவது அருளை அடிப்படையாகக் கொண்ட திருவிளையாடல்களைக் கூறுவதால் இந்த நூல் பிரபுலிங்க லீலை என்னும் பெயர் வழங்கப் பெற்றது. லிங்கம் என்பது தெய்வத் தன்மையைக் குறிப்பது. வீர சைவர்கள் இலிங்கத்தைத் தம் உடலிலேயே அணிந்து கொண்டு வழிபடுபவர்கள். அதனால் நூல் பெயரில், பிரபுலிங்கம் என்னும் பெயர் இடம் பெற்றது. இந்நூலில் இருபத்தைந்து கதிகள் உள்ளன.
1.2. ஆசிரியர் அறிமுகம்
பிரபுலிங்கலீலை நூலாசிரியர் கற்பனைக் களஞ்சியம் என்னும் சிறப்புப் பெயர் பெற்ற சிவப்பிரகாச அடிகளாராவார். இவர் குமாரசாமி ஐயர் என்பவரின் திருமகனார். வீரசைவரும் ஐயர் என்ற பட்டம் வைத்துக் கொள்கின்றனர். அடிகளாரின் இளவல்களாகிய கருணைப் பிரகாசர், வேலையர் என்பவர்களும் புலவர்களாகத் திகழ்ந்தனர்.
அடிகளார் இடைக் காலத்தில் திருச்சி மாவட்டத்தில் உள்ள துறைமங்கலம் என்ற ஊரில் தங்கியிருந்தமையால் துறைமங்கலம் சிவப்பிரகாசர் எனப் பெயர் வழங்கப் பெற்றார். இறுதிக் காலத்தில், புதுச்சேரிக்கு மேற்கே 16 கி.மீ. தொலைவிலுள்ள நல்லாற்றுாரில் தங்கியிருந்தமையாலும் அவரது அடக்கமும் அந்த ஊரிலே இருப்பதாலும் நல்லாற்றுார்ச் சிவப்பிரகாசர் என்றும் பெயர் வழங்கப் பெறுகிறார். இவர் பல நூல்கள் இயற்றியுள்ளார். இவர் பாடல்களில் நயமான கற்பனைகள் செறிந்திருக்குமாதலின், இவர் கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாசர் என்றும் பெயர் வழங்கப் பெறுகிறார்.
2. கற்பனை வளம்
2.1. தாழ்ந்தோர் - உயர்ந்தோர்
உலகில் செல்வம் நிலையானதன்று. ‘மூன்று தலை முறை தொடர்ந்து வாழ்ந்த குடும்பமும் இல்லை - மூன்று தலைமுறை தொடர்ந்து தாழ்ந்து வீழ்ந்த குடும்பமும் இல்லை’ என்னும் பழமொழி ஒன்றுன்டு. இதில் ஒரளவு விதி விலக்கும் இருக்கலாம். செல்வமும் வறுமையும் நிலையானவை அல்ல - வண்டிக் கால்கள் போல் மாறி மாறி வரலாம். இந்தக் கருத்தை நறுந்தொகை என்னும் நூல் விரிவாக விளக்குகின்றது. வருமாறு:
“உடைமையும் வறுமையும் ஒருவழி நில்லா” (49)
“குடைநிழல் அமர்ந்து குஞ்சரம் ஊர்ந்தோர்
நடைமெலிந்து ஒரூர் நண்ணினும் நண்ணுவர் (50)
“சிறப்பும் செல்வமும் பெருமையும் உடையோர்
அறக் கூழ்ச் சாலை அடையினும் அடைவர்” (51)
“அறத்திடு பிச்சை கூவி இரப்போர்
அரசரோ டிருந்து அரசாளினும் ஆள்வர்” (52)
“குன்றத்தனை இரு நிதியைப் படைத்தோர்
அன்றைப் பகலே அழியினும் அழிவர்” (33)
“எழுநிலை மாடம் கால்சாய்ந்து உக்குக்
கழுதை மேய் பாழாயினும் ஆகும்” (54)
“பெற்றமும் கழுதையும் மேய்ந்த அப்பாழ்
பொற்றொடி மகளிரும் மைந்தரும் கூடி
நெற்பொலி நெடுநகர் ஆயினும் ஆகும்” (55)
பட்டறிந்து எழுதிய இக்கருத்துகளின் உண்மையை இந்தக் கால நாடாளும் தலைவர்களிடமும் காணலாம்; தனி மாந்தரின் வாழ்க்கையிலும் காணலாம்.
இந்தக் கருத்துகள் நாலடியாரில் செல்வம் நிலையாமை என்னும் பகுதியிலும் வலியுறுத்தப்பட்டுள்ளன. அவை:
“அறுசுவை உண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட
மறுசிகை நீக்கி உண்டாரும் - வறிஞராய்ச்
சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழெனில் செல்வ மொன்று
உண்டாக வைக்கற்பாற் றன்று” (61)
“அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம்
சகடக்கால் போல வரும்” (62)
“யானை எருத்தம் பொலியக் குடை நிழற்கீழ்ச்
சேனைத் தலைவராய்ச் சென்றோரும் - ஏனை
வினையுலப்ப வேறாகி வீழ்வர் தாம்கொண்ட
மனையாளை மாற்றார் கொள” (63)
செல்வத்தை - செல்வாக்கை இழப்பதன்றி, மனையாளையும் மாற்றார் கொள்ள இழப்பர் என்பது மிகவும் இரங்கத் தக்கது - வருந்தத் தக்கது.
இன்னும் தமிழ் நூல்களைத் துருவினால் இத்தகைய எண்ணற்ற அகச் சான்றுகளைக் காணலாம்.
இந்தக் கருத்துகளை யெல்லாம் உள்ளத்தில் கொண்டு சிவப்பிரகாசர் பிரபு லிங்க லீலை மாயையின் உற்பத்தி கதி என்னும் பகுதியில் பின்வருமாறு கூறியுள்ளார்.
தாழ்ந்த நிலையில் உள்ளவர்கள் பின்னொருகால் உயர்ந்த நிலை எய்தலாம் என்றும், உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் பின்னொரு நேரம் தாழ்ந்த நிலை எய்தக் கூடும் என்றும், அறத்தின் இயல்பை, அற நூல்கலைக் கொண்டும் உலகியல் நடைமுறையைக் கொண்டும் ஆராய்ந்தறிந்த அறிஞர்கள் கூறியது மிகவும் உண்மை என்பதை அறிந்து கொண்டோம் - என்று அடிகளார் கூறியுள்ளார். பாடல்:
“தாழ்ந்தோர் உயர்வர் என்றும் மிக உயர்ந்தோர் தாழ்வர் என்றும் அறம்
சூழ்ந்தோர் உரைக்கும் உரை கண்டாம்” (14)
என்பது பாடல் பகுதி. அறம் சூழ்ந்தோர் என்பவர் நாலடியார் ஆசிரியர், நறுந்தொகை ஆசிரியர் முதலானோர். அறம் சூழ்ந்தோர் உரைக்கும் உரை என்பது, மேற் கூறிய நூல்களின் பாடல்களில் கூறப்பட்டுள்ள திரண்ட கருத்தாகும்.
இந்தப் பிரபுலிங்க லீலைப் பாடல் பகுதிக்கு வேறொரு விதமாகவும் பொருள் கூறலாம். அதாவது:-
தாழ்மையாக - அமைதியாக அடக்கமாக - பணிவாக வாழ்பவர்கள் மிகவும் உயர்ந்தவர்களாக மதிக்கப் பெறுவார்கள்; இங்கனம் இன்றி, தங்களைத் தாங்களே பெருமைப்படுத்திக் கொண்டு ஆரவாரமாகச் செருக்குடன் வாழ்பவர்கள் மிகவும் தாழ்ந்தவர்களாகக் கணிக்கப்படுவர். என்பதுதான் மற்றொரு பொருள்:
இந்தக் கருத்தை, எந்த அறம் சூழ்ந்தோர் உரைத்த நூல்கள் கூறுகின்றன? திருவள்ளுவர் திருக்குறளாகிய அறநூலில் கூறியுள்ளார்:
பெருந்தன்மை உடையவர்கள் என்றைக்கும் பணிவாக ஒழுகுவார்கள் அதாவது, பணிவாக நடப்பவர்களே பெருந் தன்மை உடையவர்களாக மதிக்கப் பெறுவர். மாறாக, கீழ்மையாளர்கள் தங்களை மேலாகப் பாராட்டி ஆரவாரப் படுத்திக்கொள்வர் - அதாவது, தங்களைத் தாங்களே பாராட்டிக் கொண்டு ஆரவாரத்துடன் வாழ்பவர்கள் கீழோராகக் கணிக்கப்படுவர்-
மற்றும், தங்களைத் தாங்களே பெருமிதப் படுத்திக் கொள்ளாதவர்கள் பெருமை உடையவர்கள் எனவும், தங்களைத் தாங்களே பெருமிதப்படுத்திக் கொண்டு திரிபவர்கள் சிறுமை உடையவர்கள் என்றும் மக்களால் எண்ணப்படுவர். குறள்கள்.
“பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து” (978)
“பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்த்து விடல்” (979)
என்பன குறள்கள். திருத்தக்கதேவர் சீவக சிந்தாமணியில் நெல்பயிரைக் கொண்டு இந்தக் கருத்தைக் குறிப்பாக அறிவித்துள்ளார்:
நெல்பயிர் செல்வம் பெற்றுள்ள மேன்மையில்லாத கீழோர்போல் தொடக்கத்தில் தலை நிமிர்ந்து நின்று, பின்னர், தேர்ந்த நூல் கற்ற பெரியோர் போல் தலை தாழ்ந்து காய்த்து விளையுமாம். பாடல்:
“சொல் அரும் பசும்பாம்பின் தோற்றம்போல்
மெல்லவே கருவிருந்து ஈன்று மேலலார்
செல்வமே போல் தலைநிறுவித் தேர்ந்தநூல்
கல்விசேர் மாந்தரின் இறைஞ்சிக் காய்த்தவே” (53)
என்பது பாடல். இந்தக் கருத்தை, ஆங்கிலப் பெரும் புலவராகிய சேக்சுபியரும் தமது “As you like it” என்னும் நாடக நூலில் ஓரிடத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அறிவிலி தன்னை உயர்ந்த அறிவாளியாக எண்ணிக் கொண்டிருப்பானாம்; ஆனால், உண்மையான அறிஞன் தன்னை அறிவிலியாக எண்ணிக் கொண்டிருப்பானாம் - அதாவது, சிறுமை தன்னை வியந்து அணியுமாம்; பெருமையோ என்றும் பணியுமாம், பாடல்:
“I do now remember a saying,
The fool doth think he is wise,
but the wise man knows himself to be a fool” (5-1 : 29-31)
என்பது பாடல் பகுதி. ‘I do now remember a saying’ என்பது, பிரபுலிங்க லீலைப் பாடலில் உள்ள ‘அறம் சூழ்ந்தோர் உரைக்கும் உரை கண்டாம்’ என்னும் பகுதி போன்றது.
இனி, சிவப்பிரகாச அடிகளார் எதை அடிப்படையாகக் கொண்டு இக்கருத்தைக் கூறியுள்ளார் என நோக்குவாம்:
விளவல நாட்டின் தலைநகராகிய வனவசை என்னும் நகரைச் சுற்றியுள்ள கோட்டை மதிலையும் அதைச் சுற்றியுள்ள அகழியையும் மையமாகக் கொண்டு அடிகளார் இதை அறிவித்துள்ளார்.
அகழி மிகவும் ஆழமாகத் தாழ்ந்து - தாழ்ந்து கீழ் நோக்கிச் சென்றதால், ஆதி சேடனுடைய மணிமுடிமேல் நிற்கும் பெருமை பெற்றதாம்.
மதிலோ, மேல் நோக்கி உயர்ந்து-உயர்ந்து சென்றதால், ஞாயிற்றின் காலடியில் மிதிபடும் தாழ்வை அடைந்ததாம்.
அதாவது, அகழி மிகவும் ஆழமானது என்பதையும், மதில் மிகவும் உயரமானது என்பதையும் அடிகளார் இவ்வாறு கற்பனை செய்துள்ளார். இனிப்பாடல் வருமாறு.
“தாழ்ந்தோர் உயர்வர் என்றும் மிக உயர்ந்தோர் தாழ்வரென்றும் அறம்
சூழ்ந்தோர் உரைக்கும் உரைகண்டாம் மதில் சூழ்கிடந்த தொல் அகழி
தாழ்ந்து ஓர் அனந்தன் முடிமேல் நின்றன்று உயர்ந்து தடவரையைச்
சூழ்ந்துஓர் வரையின் உதிப்பவன் தாள்கீழ் நின்றது போய்ச் சூழெயிலே” (3:14)
என்பது பாடல். அனந்தன் = ஆதிசேடன். ஓர் வரையின் உதிப்பவன் = ஞாயிறு தோன்று மலை (உதயகிரி) என்னும் மலையிலிருந்து ஞாயிறு தோன்றுவதாகக் கூறுவது அக்கால மரபு. ஒரு மலையின் மேற்கே வாழ்ந்த பண்டைக் காலத்தார், கிழக்கேயுள்ள மலையிலிருந்து ஞாயிறு தோன்றுவதாகக் கூறினர். கடற்கரையைச் சார்ந்து வாழ்ந்தவர்கள் ஞாயிறு கடலிலிருந்து தோன்றுவதாகக் கூறினர். இந்தக் கால நிலைமை வேறு.
அடிகளார் இந்தப் பாடலில் ‘ஒரு கல்லால் இரண்டு மாங்காய்’ அடித்துள்ளார்.
மண்ணுலகைத் தாங்கும் சேடன்முடிவரையும் அகழி சென்றுள்ளது என்று கூறியதன் வாயிலாக அகழியின் ஆழத்தையும், ஞாயிறு மண்டலம் வரையும் மதில் உயர்ந்துள்ளது என்று கூறியதன் வாயிலாக மதிலின் உயரத்தையும் கற்பனை செய்தது ஒரு மாங்காயாகும்.
இந்தக் கற்பனையின் அடிப்படையில், தாழ்ந்தோர் உயர்வர் - உயர்த்தோர் தாழ்வர் என்னும் உலகியல் நடை முறை உண்மையைக் கூறியது இரண்டாவது மாங்காயாகும்.
இப்பாடலில் ஒரு கற்பனைச் செய்தியைக் கூறி அதன் அடிப்படையில் வேறோர் அறக் கருத்தைப் பெறவைத்திருப்பதால், இத்தகைய அமைப்பு வேற்றுப் பொருள் வைப்பு அணி எனப்படும்.
2.2. நாகமும் மயிலும்
ஒரு தனி நூலாக எழுத வேண்டிய அளவிற்குச் சிவப்பிரகாசரின் கற்பனை நயம் பரந்துபட்டுள்ளது. விரிவு அஞ்சி, இன்னும் ஒரே ஒரு கற்பனை நயத்தோடு இந்தத் தலைப்பை முடித்துக் கொள்ளலாம்.
இடப் பாகத்தில் பெண்ணையுடைய சிவன், பாம்பு, மண்டையோடு முதலியவற்றை அணிந்திருப்பவர். அவருடைய பிள்ளையாகிய முருகன் மயிலை ஊர்தியாக உடையவர்.
முருகன் தந்தையாகிய சிவனைக் காண மயில் ஊர்தியில் அமர்ந்து அடிக்கடி வருவது உண்டு. நாகப் பாம்புக்கு மயில் பகை என்பது அறிந்த செய்தி. முருகனது மயிலைச் சிவன் அணிந்துள்ள நாகப்பாம்பு பார்த்ததும், அஞ்சி, சிவன் அணிந்துள்ள மண்டை ஒட்டின் துளைக்குள் பதமாக உடல் சுருண்டு புகுந்து கொண்டதாம். பின், மயில் போய் விட்டதா என்பதை அறிந்துகொள்ள மெல்லத் தலையை வெளியே நீட்டிப் பார்க்குமாம், மயில் போகாததைக் கண்டதும் மீண்டும் தலையை உள்ளே இழுத்துக் கொள்ளுமாம் பாடல்:
“பாகம் ஒரு பெண் குடியிருக்கும்
பரமன் அணியில் பரித்த மணி
நாகம் நுழைவுற்று உடல் சுருண்டு கிடந்து
நகுவெண் தலைப் புழையில்
போக மெல்லத் தலைநீட்டிப்
பார்த்து வாங்கப் போகும் ஒரு
தோகை மயில் வாகனப் பெருமாள்
துணைத்தாள் கமலம் தொழுதிடுவாம்” (1.4)
என்பது பாடல். நகு வெண்தலை = வெண்ணிற மாயிருக்கும் தலை ஓடாகிய மண்டை ஓடு. வெள்ளொளி வீசுவதால் நகுவெண்தலை எனப்பட்டது. இது ஒரு நகைச் சுவைக் கற்பனை.
இங்கே ஒரு சிக்கலுக்கு இடம் உண்டு. நாகப்பாம்புக்கும் கருடனுக்கும் பகை என்பதும் அனைவரும் அறிந்த செய்தி. ஆனால், கருட ஊர்தியில் அமர்ந்து திருமால் சிவனைக் காணச் செல்லின், சிவன்மேல் உள்ள பாம்பு திருமாலின் கருடனுக்கு அஞ்சுவ தில்லையாம். அந்தப் பாம்பு கருடனை நோக்கி, ‘ஏன் கருடா நலமா?’ என நலம் விசாரிக்குமாம் சிவன்மேல் உள்ள துணிவால் நாகம் இவ்வாறு கேட்குமாம். திருமாலின் கருடன் சிவனுக்காக அஞ்சி, நலம் வினவிய பாம்பை நோக்கி, ‘எல்லாம் இருக்கிற இடத்தில் இருந்தால் நலம்தான்’ என்று பதில் இறுக்குமாம்.
திருமாலின் கருடனுக்கு அஞ்சாத பாம்பு, முருகனின் மயிலுக்கு அஞ்சும் போலும், ஒரு தலைவனிடம் இருப்பவர்கள் அத்தலைவனின் பிள்ளைக்கு மட்டுமன்று - அப்பிள்ளையின் நாய்க் குட்டிக்கும் அஞ்சுவது போன்றது இது.
இது வெங் கற்பனை நயச்சுவை. அவ்வளவுதான்.
3. சிறப்புச் செய்திகள்
3-1 வெண்மைப் புகழ்
கண்ணுக்குத் தெரியாத பண்பாகிய புகழ் என்பதை வெண்ணிறமாகக் கூறுதல் இலக்கிய மரபு. இகழ் கரு நிறமாம் - புகழ் வெண்ணிறமாம். கம்பர் பல இடங்களில் இதைக் கூறியுள்ளார். இலங்கையை இருள் கவ்விக் கொண்டதாம். இதற்குக் கம்பர் கூறும் உவமைகளுள் ஒன்று வருமாறு:-
இராவணன் சீதையைச் சிறையிட்டதால் அவனுக்கு உண்டான கரிய இகழ் சூழ்ந்து கொண்டதுபோல் இருள் சூழ்ந்து கொண்டதாம். இராவணனது இகழை, ‘வெண்மை நீங்கிய புகழ்' என்கிறார் கம்பர். புகழ் வெண்மையானது. அந்த வெண்மை நீங்கியது இகழாகத்தானே இருக்க வேண்டும். அதனால் இகழை வெண்மை நீங்கிய புகழ் என்கிறார். பாடல்:
“வண்மை நீங்கா நெடுமரபில் வந்தவன்
பெண்மை நீங்காத கற்புடைய பேதையைத்
திண்மை நீங்காத வன்சிறை வைத்தான் எனும்
வெண்மை நீங்கிய புகழ் விரிந்த தென்னவே” (5-2-44)
என்பது பாடல். இவ்வாறு, புகழ் வெண்மையானது என்பதைச் சிவப்பிரகாசர் தெளிவாக் கூறியுள்ளார். கைலை மலை வெண்மையானது. சிவனது புகழாகிய வெண்மை தான் வெள்ளைக் கைலை மலையாகத் திரண்டுள்ளது எனக் கற்பனை செய்துள்ளார், பாடல்:
“கள்ளழிந்து ஒழுகு செம்பொன் கடுக்கை
வேய்ந்து இலகு வேணி
வள்ளல் வெண் புகழ் திரண்ட
வளங்கெழு கைலைக் குன்று” (2-4)
என்பது பாடல் பகுதி. கைலாச கதியிலேயே மற்றொரு சுவையான பாடல் உள்ளது.
மூன்று அகவை உடைய ஞானசம்பந்தர் சிவனைப் பாடப் பால் சுரந்தளித்த உமையின் கொங்கையின் வெண்மைப் புகழ்போல, ஒளி வீசும் வெண்மையான முத்து மாலை அந்த உமையின் கொங்கைமேல் அணியப்பட்டுள்ளதாம். பாடல்:
“அரவுலாஞ் சடை அண்ணலைப் பிள்ளைதான்
பருவம் மூன்றினில் பாட இன்பால் தரும்
பொருவில் கொங்கைப் புகழெனப் பொங்கொளி
மருவும் ஆர மணிவடம் தாழ்ந்துற” (22)
என்பது பாடல். அண்ணல் = சிவன், பிள்ளை - ஞான சம்பந்தர்.
பிரபுலிங்க லீலைப் பாடலுக்கு மேலும் அரண் செய்ய இலக்கிய ஒப்புமை காண்டல் என்னும் முறையில் இன்னும் சில காண்போமே. சிலப்பதிகாரத்திலுள்ள -
“அந்தி வானத்து வெண்பிறை தோன்றி
மீனர சாண்ட வெள்ளி விளக்கத்து” (4-23, 26)
என்னும் பகுதியில் உள்ள வெள்ளி விளக்கம் என்பதற்குப் புகழ் என்னும் பொருள் கூறப்படுகிறது. மற்றும்,
“இகல் என்னும் எவ்வநோய் நீங்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும்” (853)
என்னும் குறளிலுள்ள விளக்கம் என்னும் சொல்லுக்குப் பரிமேலழகர் முதலியோர் புகழ் என்னும் பொருளே தந்துள்ளனர்.
அன்றியும், - வெள்ளைக் கொடிகள் புகழ்போலவும் வெண்மையான அலைபோலவும் பரந்து பறந்தனவாம் எனக் கம்பர் கூறியுள்ளார்:
“தானைமாக் கொடி-புகழ் எனக் கால்பொரப் புரண்ட
வானயாற்று வெண்திரையென வரம்பில பரந்த” (3-9-7)
மற்றும், நிலவின் வெண்மையான ஒளி, இராமனது புகழ் புகுந்து உலவியதுபோல் இருந்ததாம்:
“அன்னவன் புகழ் புகுந்து உலாயதோர்
பொலிவும் போன்றதே” (5-1-65)
என்பன கம்பரின் பாடல் பகுதிகள்.
3.2 கற்பு முல்லை
கற்புக்கும் முல்லைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. கற்புடைய மகளிர் தம் மனையில் முல்லைக் கொடி வளர்ப்பார்களாம்; முல்லை மலரைச் சூடிக் கொள்வார் களாம். இது பல இலக்கியங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. சில காண்பாம்:
சிலப்பதிகாரத்தில்:
“இல்வளர் முல்லையொடு மல்லிகை அவிழ்ந்த
பல்பூஞ் சேக்கைப் பள்ளி” (4:27, 28)
“மாதவி, மல்லிகை, மனைவளர் முல்லைப்
போது விரி தொடையல்” (13:120, 121)
குறுந்தொகையில்:
“மனை எல்லறு மெளவல் காறும்
பல்லிருங் கூந்தல்” (மெளவல்=முல்லை 19:4,5)
நற்றிணையில்:
“மனைநடு மெளவலொடு ஊழ்முகை யவிழ” (11:6)
அகநானூற்றில்:
“மனைய மெளவல் மாச்சினை காட்டி” (23:12)
பெருங் கதையில்:
“இல்லெழு முல்லையொடு மல்லிகை மயங்கிப்
பெருமணம் கமழவும்” (1:33:73,74)
இப் பகுதிகளால், மனையில் மல்லிகை வளர்ப்பதும் கூந்தலில் சூடிக் கொள்வதும் கற்புடைய மகளிர்க்கு இயல்பு என்பதை அறியலாம்.
இந்த நூல்களின் அடிப்படையில், ஒட்டக் கூத்தர் தக்கயாகப் பரணி என்னும் நூலில், உமாதேவிகூட முல்லை வளர்த்ததாகப் பாடியுள்ளார். உமாதேவி வளர்க்கும் முல்லைக்கொடி நூறாயிரமாகக் கிளைத்து விண்ணில் சென்று திங்களைத் தடவுகின்றதாம். திங்களிலுள்ள (கறையாகிய) மான், தேவி வளர்க்கும் முல்லை என அஞ்சி அதை மேய வில்லையாம். பாடல்:
“நுதிக்கோடு கூர்ங்கலை உகைப்பாள் விடாமுல்லை
நூறாயிரம் கிளைகொடு ஏறா விசும்பிவர்
மதிக்கோடு தைவர எழும்தண் கொழுந்துகளை
வாயாது எனக்கொண்டு மேயாது மான்மறியே” (75)
என்பது பாடல். கூர்ங்கலை உகைப்பாள் = உமாதேவி. மேலும் சில வருமாறு:-
‘முல்லை சான்ற கற்பு’ என்னும் தொடர் அகநானூறு (274), நற்றிணை (142), சிறுபாணாற்றுப்படை (30) என்னும் நூல்களில் இடம் பெற்றுள்ளது.
ஐங்குறு நூறு
“வாணுதல் அரிவை முல்லை மலைய” (408)
தக்கயாகப் பரணி
“முடிச்சூட்டு முல்லையோ முதல்கற்பு முல்லையோ” (119)
குலோத்துங்க சோழன் உலா
“வண்முல்லை சூடுவதே நலங்காண் குலமாதருக்கே” (168)
காளத்திப் புராணம்
“முல்லை சால்மனை உலோபா முத்திரை” (பொன்முகரி-21)
பெரிய புராணம்
“கற்புவளர் கொடியே யனைய மனைவியார்” (3369)
இன்ன பிற.
கற்புக்கும் முல்லைக்கும் உள்ள தொடர்பு குறித்து திவாகர நிகண்டும் ஆசிரிய நிகண்டும் முல்லைக்குக் கற்பு என்னும் பெயரும் உண்டெனக் கூறியுள்ளன. முறையே அவை. வருமாறு:
“மெளவலும் தளவமும் கற்பும் முல்லை” (தி.நி. 4.197)
“மெளவல் ஊதிகை தளவு கற்பு மாகதியென
வழங்கு பெயர் முல்லையாகும்” (ஆ.நி. 137)
அகப்பொருள் இலக்கணப்படி நோக்கின், முல்லையின் உரிப்பொருளாவது, தலைவன் பிரிந்திருந்த காலத்தில் தலைவி பெரும் பண்புடன் ஆற்றியிருத்தலாகும். குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் ஆகியவற்றிற்கு உரிய புணர்தல் ஊடல், பிரிதல், இரங்கி வருந்தல் என்னும் உரிப்பொருள் களினும் முல்லையின் உரிப்பொருளாகிய ஆற்றியிருத்தலே கற்புடைமைக்குச் சிறந்த தகுதியாகும். அதனாறும் கற்பு முல்லை எனப்பட்டது.
இதுகாறும் கூறியவற்றால் கிடைத்த - சிறந்த கற்புடைய மகளிர்க்கும் முல்லைக்கும் உள்ள தொடர்பை அடிப்படையாகக் கெண்ேடு பிரபுலிங்க லீலைக்கு வருவோம்.
கற்புடைமையில் சிறந்தவளாக - கற்புடைய பெண்கட்கு உவமையாக ஓதப்படுபவளாக உள்ளவள் அருந்ததி என்பதை, கற்றவர் - கல்லாதவர் அனைவரும் ஒப்புக் கொள்வர். இந்த அருந்ததியும் முல்லை வளர்த்தவளாம். முனிவர்களின் மனைவிமார்களைக் குறிப்பிடத் தொடங்கிய சிவப்பிரகாசர், வசிட்ட முனிவரின் மனைவி எனப்படும் அருந்ததியை முதலில் குறிப்பிட்டுள்ளார். பாடல்:
“முல்லையங் தொடை அருந்ததி முதல் எழு முனிவர்
இல்லறம்புரி துணைவியராம் எழுவர்” (2:27)
என்பது பாடல் பகுதி. சங்க இலக்கியங்களிலிருந்து தம் கால இலக்கியங்கள் வரை கற்றுத் தேர்ந்துள்ள சிவப்பிரகாச அடிகளார், அந்த மரபை ஒட்டி இவ்வாறு கூறியிருப்பது ஒரு சிறப்புறு கருத்தாகும்.
இந்தக் காலத்தில் எங்கெங்கோ சில வீடுகளில் முல்லை வளர்க்கின்றனர். முல்லைமலர் மாலை சூடிக் கொள்வதும் வழக்கத்தில் உள்ளது. முல்லையரும்பு - முல்லையரும்பு என்று கூவித் தெருக்களிலும் விற்கப்படுகிறது.
3.3. மரபு நிலையும் சூழ்நிலையும்
ஒருவருக்குப் பிறந்த குடிவழி - குடும்பவழி வரும் குணநலச் செயல் மரபுநிலை (Heredity) எனப்படும். ஒருவர் சேர்ந்து பழகுகின்ற சூழல் வழி வரும் குண நலச் செயல்கள் சூழ்நிலை (Environment) எனப்படும்.
நல்ல மரபு நிலையில் பிறந்தவர்கள் நல்லவராக இருப்பதும் உண்டு அல்லது தீய சூழ்நிலையால் கெட்டு விடுவது முண்டு. திய மரபு நிலையில் பிறந்தவர்கள் தீயவராக இருப்பது முண்டு அல்லது நல்ல சூழ்நிலையால் நல்லவராக மாறுவதும் உண்டு.
சூழ்நிலை என்ற ஒன்றைத் தவிர மரபுநிலை எனப் பண்டு இருந்ததில்லை. காட்டுமிறாண்டிகளாக வாழ்ந்த மக்கள் சிறிது சிறிதாக நாகரிகம் பெறப் பெற நல்ல சூழ்நிலை ஏற்பட்டது. அந்த நல்ல சூழ்நிலையின் மாற்ற முடியாத இறுக்கமே நல்ல மரபுநிலை என்பது. அதே போல், தீய சூழ்நிலையின் மாற்ற முடியாத இறுக்கமே கெட்ட மரபுநிலை என்பது. மரபுநிலையின் தாய் சூழ்நிலையே.
‘உயிர்கள் சார்ந்ததன் வண்ணம்’ எனச் சைவ சித்தாந்தம் கூறுகிறது.
மக்களின் பொதுமனப் போக்குகளுள் (Generał Tendencies) ‘பின்பற்றல்’ (Imitation) என்பது ஒன்று. குழந்தைப் பருவத்திலிருந்து முதுமை வரையும் மக்கள் வாழ்க்கையில் பெரும்பாலும் பிறரைப் பின் பற்றுவதைக் காண்கிறோம். இது சூழ்நிலையின் பாற்பட்டதே.
ஒருவர் தீய இனத்துடன் தொடர்ந்து பழகினால் அவரது அறிவு தீயதாகவே செயல்படும். ஒருவர் நல்ல இனத்தோடு தொடர்ந்து பழகினால் அவரது அறிவு நல்லதாகவே செயல்படும். ஈண்டு இனம் என்பது சாதி குலத்தை யன்று - மக்கள் குழுவே ஈண்டு இனம் எனப்படுவது.
நிலத்தின் இயல்புக்கு ஏற்ப நீர் திரிவது போல, மாந்தர்க்குப் பழகும் இனத்தின் இயல்பினதாகவே அறிவு செயல்படும் எனத் திருவள்ளுவர் கூறியுள்ளார்:-
“நிலத்தியல்பால் நீர்திரிங் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்து இயல்பதாகும் அறிவு” (425)
மேலும் கூறுகிறார்: ஒருவன் இத்தகையவன் என்பதை அவன் பழகும் இனத்தைக்கொண்டு கூறிவிடலாம். அறிவு இனத்துளதாகும்;
“மனத்தானாம் மாந்தர்க்கு உணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படும் சொல்” (453)
“மனத்துளது போலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு” (454)
என்பன குறள்கள். இந்த அடிப்படையுடன் பிரபுலிங்க லீலைக்கு வருவோம்.
திருநீறு (விபூதி) மிக்க பெருமைக்கு உரியது என்பதைச் சைவ நூல்களில் பரக்கக் காணலாம். இதற்கு ஞான சம்பந்தரின் தேவாரத் திருநீற்றுப்பதிகம் ஒன்றே போதுமே.
திருநீறு அணிந்து தூய்மையாயிருப்பின், உள்ளத்தில் உண்டாகும் உலக மாயையை உலக மயக்கத்தைத் திருநீறு போக்கும் என்பர். அந்தத் திருநீறே சாரக்கூடாத இனத்தைச் சார்ந்ததும் தீய உணர்வை உண்டாக்குகிறதாம்.
மாயை என்னும் மிக்க அழகிய பெண் சிவன் கோயிலை அடைவதற்காகத் தெருவிலே வந்துகொண்டிருக்கின்றாள். அவள்நெற்றியில் திருநீற்றை நிரம்பப் பூசிக்கொண்டுள்ளாள். அவளை நோக்கியதும் காம உணர்வு கொள்ளும் இளைஞர்க்கு, அவள் அணிந்துள்ள திருநீற்றின் பொலிவு மேலும் தீய உணர்வைத் தூண்டுகிறதாம். திருநீறு அணிந்த தோற்றம் அவ்வளவு கவர்ச்சியாயிருக்கிறதாம், இளைஞர்களின் உடலை அதிரச்செய்து காமத்தீயை உண்டாக்குகிறதாம். அறிவு இனத்தியல்பதாகும் எனப் பெரியோர் கூறியது உண்மையே போதும் - என்று கூறுகிறது. ஒரு பாடல்:
“இனத்தியல்ப தாகும் அறிவென்பது உண்மையே,
மனத்துயர் செயும் மயல்மாற்றும் நீறுதான்,
அனிச்ச மெல்லடியினார் துதல் அடுத்தலும்
பனித்து உடல் வெதும்பும் மால் படுத்தலால் என்பார்” (4-34)
மாயையின் தோற்றத்தைக் கண்ட இளைஞர்கள் இவ்வாறு கூறினராம். 'இனத்தியல்பதாகும் அறிவு’ என்னும் திருக்குறள் கருத்தை வைத்துக் கொண்டு சிவப்பிரகாசர் இவ்வாறு பாடலில் விளையாடியுள்ளார்.
4. கருத்து வெளியீட்டில் புதுமை
4.1 வினா எதிர் வினா விடை
ஒருவர் மற்றொருவரை நோக்கி, ‘முனியன் ஏன் குறை வயதிலேயே இறந்து போனான்?’ என்று ஒரு வினா எழுப்புகிறார் என வைத்துக் கொள்வோம். அதற்கு மற்றவர் நேரே பதில் சொல்லாமல், ‘கெட்ட பழக்கம் உடையவர்களுள் யார் நீடித்து வாழ்ந்தார்கள்?’ - என்று தாம் ஒரு வினா எழுப்புகிறார். இந்த வினா, ‘முனியன் கெட்ட பழக்கம் பல கொண்டவன் ஆதலின் விரைவில் இறந்து போனான்’ என்னும் விடையைத் தருவதாகும். இதற்குத் தான் ‘வினா எதிர் வினாவிடை விடுத்தல்’ என்பது பெயர். இனி நூலுக்கு வருவோம்.
மாயை கோயிலுக்குச் சென்ற போது அவளுடன் மிகவும் அழகிய மகளிர் பலர் சென்று கொண்டிருந்தனர். இவர்களைக் கண்ட இளைஞர் பலர் ஒருவர்க்கொருவர் இவர்கள் தொடர்பாக உரையாடிக் கொண்டனர். ஒருவன் மற்றவர்களைப் பார்த்து, ‘கூட்டமாக வரும் இப்பெண்களுள் அழகில் மிகவும் சிறந்தவள் யார்?’ என வினவினானாம். அவ்வினாவிற்கு விடையாக, ‘வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம் என்னும் முக்கனிகளுள் மிக்க சுவையுடைய கனி எது என்று கூறுவாய்?’ என்ற வினா வந்தது. அதாவது, முக்கனிகளுள் எல்லாமே ஒத்த சுவை உடையன. ஆதலின், இன்னதுதான் சுவை மிக்கது என்று சொல்ல முடியாதது போல், இந்தப் பெண்கட்குள்ளும் இன்னாரே மிக்க அழகுடையவர் என்று சுட்டிக் கூறமுடியாது என்பது உரிய பதிலாகும். பாடல்:
“இக்குழு மகளிருள் யார் வனப்பினால்
மிக்கவள் எனத்தமை வினவினா னெதிர்,
முக்கனிகளுள் சுவை முதிர்ச்சி பெற்றுளது
எக்கனி அதனைநீர் இயம்புவீர் என்பார்” (4-35)
இந்தக் காலத்தில், பெண்களைக் கேலி செய்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள் என்று செய்தித் தாள்களில் படிக்கிறோம். நடுத்தெருவில் செல்லும் பெண்களைப் பற்றித் திறனாய்வு செய்யும் ‘வல்லுநர்கள்’ எந்தக் காலத்திலும் இருப்பார்கள் போலும் ஆண் - பெண் என்ற இரு வேறு இனத்தைப் படைத்த இயற்கையின் விளையாட்டு போலும் இது. கருத்து வெளியீட்டில் இது ஒரு புதுமை யன்றோ?
4.2 ஒன்றை ஒன்றால் கட்டுதல்
விளவல நாட்டு மக்கள், பொறையும் புகழும், இன் சொல்லும் விருந்தோம்பலும், பெரியோரின் அறிவுரையும் மன அடக்கமும், அறச் செய்கையும் செல்வமும் உடையவர் களாம். இதைச் சிவப்பிரகாசர் ஒரு புதுமையான முறையில் விளக்கியுள்ளார்.
பொறை என்ற கயிற்றால் புகழையும், இன்சொல் என்னும் கயிற்றால் விருந்தையும். பெரியோரின் அறிவுரை என்னும் கயிற்றால் அலைந்து திரியும் மனத்தையும், அறத்தால் (பிறர்க்குக் கொடுத்தலால்) செல்வத்தையும் கட்டிப் போட்டு நிலைபெறச் செய்து விட்டார்களாம். என்பது பாடல்.
“பொறைக் கயிற்றின் புகழை, இன்சொல் எனும்
விறல் கயிற்றின் விருந்தைக், குரவர் சொல்
மறைக் கயிற்றின் மனத்தைத், திருவைகல்
அறக் கயிற்றின் அசைப்பவர் எங்குமே” (3-4)
பொறைக் கயிற்றின் புகழை. “பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ்” (156) என்பது திருக்குறள். இன்சொல் கயிற்றின் விருந்தை:- “மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து நோக்கக்குழையும் விருந்து” (90) - குறள்.
குரவர் சொல் கயிற்றின் மனத்தை. “மனம் தூய்மை செய் வினை தூய்மை இரண்டும் இனம் தூய்மை தூவாவரும்” -குறள் - 455
அறக்கயிற்றின் திருவை:
“அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
கல்விருந்து ஓம்புவான் இல்” (84)
“காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்ன நீரார்க்கே உள” (52)
பொறையால் புகழையும், இன்சொல்லால் விருந்தையும், குரவர் சொல்லால் மனத்தையும் கட்டுப்படுத்தி நிலை நிற்கச் செய்யலாம். ஆனால், அறத்தினால் திருவைக் கட்டுதல் என்பது அவ்வளவு எளிய செயலன்று.
காக்கைபோல் கரவாமல் எல்லாருக்கும் உதவிக் கொண்டு இருந்தால் செல்வம் நிலைக்குமா? ஒரு போதும் நிலைக்காது.
இந்தச் சிக்கலுக்குத் தீர்வு என்ன? காக்கை போல் மறைக்காமல் பலருக்கும் உதவுபவரிடமே செல்வம் இருக்க அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். மாறாக, பிறர் ஈட்டிய செல்வத்தையோ - தீய வழிகளில் ஈட்டிய செல்வத்தையோ வைத்துக் கொண்டு பிறருக்கு உதவாதவரிடத்தில் செல்வம் இருக்க அரசு உடன்படலாகாது; அச்செல்வத்தை அரசு பறிமுதல் செய்து பலருக்கும் உதவும்படியான பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என்பதே இதற்கு உரிய சிக்கல் தீர்வாகும். இதைத்தான் திருவள்ளுவர் மறைமுகமாகக் கூறியிருப்பார் என்று எண்ணத் தோன்றுகிறது.
ஆக்கமும் அன்ன நீரார்க்கே உள என்பதற்கு, ஆக்கம் அன்ன நீரார்க்கே உளவாதல் வேண்டும் என்பது கருத்து. திருவை அறக்கயிற்றால் கட்டுதலும் இன்னதே.
4.3 காராடும் வெள்ளாடும்
காம வேதனை கொண்ட மகளிர் திங்களை நோவதாகக் கூறுவது இலக்கிய மரபு. இங்கே, அல்லமப் பிரபுமேல் காதல் கொண்ட மாயை என்பவள் திங்களை நொந்து புலம்புதலில் சிவப்பிரகாசர் ஒரு புதுமையைக் கையாண்டுள்ளார். அதாவது, அவள் கூறுகிறாள்: திங்களே! உடலுக்குள் செல்லுமாறு நஞ்சை உண்டவனாகிய சிவன், நின்னை அவ்வாறு செய்யாமல், உடலின் உட்பகுதியோடு தொடர்பு இல்லாத முடிமேல் நின்னை வைத்திருப்பது, நீ நஞ்சினும் கொடிய பொருள் என்பதால்தான். உன்னை அமுத கலை என்று சொல்வது, மக்கள் காராட்டை வெள்ளாடு என்று சொல்வது போலாம்.
“அங்கமதில் நஞ்சிருத்தினோன் அங்கமல்லா
அவிர்சடை மேல்
தங்கநினை வைத்திட்டது நின்கொடுமை
கருதித் தானன்றோ
பொங்கும் அமுதகலை என்ன நின்னைப்
புகறல் வெண்திங்காள்
இங்கு மனிதர் காராட்டை வெள்ளா
டென்பது ஒக்குமால்” (5.59)
செம்மறியாட்டின் உடலை நோக்க, காராட்டின் உடல் தெளிவாக - தூய்மையாக இருப்பதால், காராட்டை வெள்ளாடு என்றனர் போலும். இந்தியர், ஐரோப்பிய வெள்ளையர் போல் இல்லாவிடினும், ஆப்பிரிக்க அட்டைக் கறுப்பர்களை நோக்க ஒரளவு வெள்ளையராவர். காராட்டை வெள்ளாடு என்பதும் இன்னதே!
4.4 கொள்வோர் இல்லாக் குறை:
வனவசை என்னும் நகரத்தில் எந்தக் குறையும் இல்லையாம். அங்ஙன மிருக்கவும், அங்கேயும் ஒரு குறையிருப்பதாகப் புதிய குறை ஒன்று கண்டு பிடித்துள்ளார் சிவப்பிரகாசர். உடை, உணவு, மலர், அணிகலன், மனை முதலியவற்றால் எந்தக் குறையும் இல்லாத அந்த நகரில், கொடுப்பவருக்கு வாங்குபவர் இல்லாதகுறை ஒன்று உள்ளதாம் பாடல்:
“உடுப்போர்க்கு உடுக்கும் துகில்களால்
உண்போர்க்கு உண்ணும் பொருள்களால்
தொடுப்போர்க்கு எடுக்கும் மலர்களால்
அணிவோர்க்கு அணியும் சுடரிழையால்
அடுப்போர்க்கு அடுக்கும் மனைகளால்
குறைபா டுடைய தன்று அதுதான்
கொடுப்போர்க்கு இரப்பார் இல்லாத
குறை ஒன்றுளது கூறுங்கால்” (3.16)
கொடுப்போர்க்குக் கொள்வோர் இல்லாத குறை இருப்பதாகக் கூறியதன் வாயிலாக, அந்நகரின் மாபெரு வளத்தைப் புதிய முறையில் அறிவித்துள்ளார் அடிகளார்.
இங்கே கம்பரின் பாடல் ஒன்று நினைவிற்கு வருகிறது. கோசல நாட்டில் வறுமையே இன்மையால் கொடுக்கும் வள்ளல் செயலுக்கும், பகைவர் இன்மையால் மறத்திற்கும், பொய் இல்லாமையால் உண்மைக்கும், மக்களிடையே கேள்விச் செல்வம் மிக்கிருத்தலால் அறியாமைக்கும் இடம் இல்லையாம். இவ்விதமாக அந்நாட்டின் பெருமையைக் கூறியுள்ளார் கம்பர். பாடல்:
“வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
திண்மை இல்லை நேர்செறுநர் இன்மையால்
உண்மை இல்லை பொய்உரை இலாமையால்
ஒண்மை இல்லை பல்கேள்வி ஓங்கலான் (1-2-53)
சிவப்பிரகாசரும் கம்பரும் இவ்வாறு கூறியிருப்பதில் உள்ள உட்கருத்து என்ன?
வரலாற்றாசிரியன் நடந்ததை மட்டும் கூறுபவன். இலக்கிய ஆசிரியனோ, இருந்ததைக் கொண்டு, மேலும் இருக்க வேண்டியதைக் கூறுபவன்.
இந்த அடிப்படையில், ஒரு நாட்டில் உடை, உணவு, உறையுள், செல்வம் முதலியன குறையின்றி நிறைந்திருக்க வேண்டும் என அடிகளார் மறைமுகமாக வலியுறுத்தியுள்ளார்.
இதே அடிப்படையில், ஒரு நாடு என்றால், அதில், வறுமை, பகை, பொய், அறியாமை முதலியவை கூடா எனக் கம்பர் மறைமுகமாக வலியுறுத்தி யுள்ளார். இத்தகைய கருத்து வெளிப்பாடுகள் புதுமையா யுள்ளன வன்றோ?
5. சுவையான சில செய்திகள்
5.1 வெறுத்து விரும்பல்
பொழிலின் குளிர்ச்சி மிகுதி புலவர்களால் பலவாறு புனையப்படும். வானளாவிய குளிர்ந்த பொழில் ஒன்றின் வழியாக ஞாயிறு செல்வதால், வெப்பமான ஞாயிற்றை இழுத்துச் செல்லும் குதிரைகள் ஒரளவு களைப்பு குறைந்து மீண்டும் செல்லும் ஆற்றலைப் பெற்றனவாம் எனக் கம்பர் மராமரப் படலத்தில் கூறியுள்ளார். பாடல்:
“திக்கும் வானமும் செறிந்த அத்தருநிழல் சீதம்
புக்கு நீங்கலின் தளர்கில இரவி தேர்ப்புரவி” (5)
என்பது பாடல்.
சிவப்பிரகாசர் வசவண்ணர் கதியில், ஒரு பொழிலின் குளிர்ச்சியின் மிகுதியைப் பின்வருமாறு புனைந்துள்ளார்: கடுமையான வெயிலில் வழி நடந்து வெப்பம் தாங்காமல் களைப்படைந்து அந்தப் பொழிலில் வந்து தங்கினவர்கள், அந்தப் பொழிலின் குளிர்ச்சி மிகுதியால் உடல் நடுங்கி மீண்டும் வெயிலை விரும்பினார்களாம். பாட்டு:
“தனைவிரும்பி வந்துஅடைந்தவர் தம்மைமுன் வெறுத்த
தினகரன்கதிர் விரும்புறச் செய்து. பொழில் திகழ்வது” 14-11)
5.2 பிடியின் ஊடல்
மக்களினத்தில், கணவன் மற்றொரு பெண்ணை விரும்புவதாகத் தெரிந்தால் மனைவி ஊடல் கொள்ளும் செயல், அஃறிணை உயிரிகளிடமும் நிகழும் போலும், இது பல நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.
ஒரு மாடத்தில் பல பழ வகைகளும் கிளி முதலிய பறவை வகைகளும் பொம்மையாகச் செய்து வைக்கப் பெற்றிருந்தன. உயிர் உள்ள ஓர் ஆண் கிளி, பொம்மை வடிவில் உள்ள பெண் கிளியின் பக்கத்தில் நின்று அங்கிருந்த பொம்மைக் கனியை உண்மைக் கனி என்று கொத்திற்றாம். எட்டிய தொலைவில் இதைப் பார்த்துக் கொண்டிருந்த பெண் கிளி, தன் கணவனாகிய ஆண் கிளி இன்னொரு பெண் கிளியை விரும்பி அதன் அருகில் நிற்பதாக எண்ணி ஊடல் கொண்டதாம். இவ்வாறு பல கற்பனைகள் இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன. சிவப்பிரகாசரின் படைப்பில் உள்ள இத்தகைய ஊடல் ஒன்றைக் காண்பாம்:
திருப்பருப்பதம் என்னும் மலைச் சாரலில், ஒரு களிறு (ஆண் யானை) தளிர் இலைகளைப் பறித்துத் தேனில் தோய்த்துப் பிடியின் (பெண் யானையின்) வாயில் கொடுத்துக் கொண்டிருந்ததாம். இந்தக் காட்சி, பக்கத்தில் இருந்த பளிங்கு அறைச் சுவரில் தெரிந்ததாம். தளிரை உண்டுகொண்டிருந்த பெண்யானை பளிங்குச் சுவரில் இதைக் கண்டு, தன் கணவனாகிய களிறுதான் வேறொரு பிடிக்கு உணவு தருவதாக எண்ணிக் களிற்றின்மேல் ஊடல் கொண்டதாம். பாடல்:
“தளிர்க் குளகினைத் தேன்தோய்த்துத்
தனதுவாய் கொடுக்கும் செய்கை
பளிக்கறை அதனுள் கண்டு
பரிந்து வேறொன்றினுக்கு இங்கு
அளித்த தென்று உளம்மயங்கி
அரும்பிடி ஒருகூர்ங் கோட்டுக்
களிற்றினை முனிந்து செல்லும்
கம்பலை உடைத்து அக்குன்றம்” (19-23)
என்பது பாடல். குளகு = இலை உணவு.
5.3 பறவைகளை மிரட்டும் பொய்த் தீ
ஒரு பொய்கையில் அரக்கு ஆம்பல் எனப்படும் சிவந்த ஆம்பல் மொக்குகள் வாய் அவிழ்ந்து நிரம்ப மலர்ந்தனவாம். அதைக் கண்ட தாய்ப் பறவைகள், தண்ணீர் தீப்பற்றி எரிகிறது என்று அஞ்சி, தம் குஞ்சுகளைச் சிறகாகிய கைகளில் ஒடுக்கிக் காத்தனவாம். இக்கற்பனை முத்தொள்ளாயிரம் பாடல் ஒன்றில் உள்ளது. பாடல்.
“அள்ளல் பழனத்து அரக்காம்பல் வாயவிழ
வெள்ளம் தீப்பட்ட தெனவெரீஇப் - புள்ளினம்தம்
கைச்சிறகால் பார்ப்புஒடுக்கும் கவ்வை உடைத்தரோ
நச்சிலைவேல் கோக்கோதை நாடு” (110)
என்பது பாடல். பார்ப்பு = குஞ்சு. கவ்வை = கூச்சல் ஒலி - இதிலிருந்து பிரபுலிங்க லீலைக்கு வருவோம்.
திருப்பருப்பத மலையில் உள்ள ஒளிமரத்தில் பகலில் பறவைகள் கூடுகளில் முட்டையிட்டு வெளியில் சென்று இரைதேடிப் பின் இருள் தொடங்கும் மாலையில் மரத்தை அடைந்தபோது, அம்மரம் ஒளிமயமாகத் திகழ்ந்ததால், மரம் தீப்பற்றிக் கொண்டது என அஞ்சி மேலேயே வட்ட மிட்டு வருந்தினவாம். பாடல்:
“செங்கதிரவன் எழுந்த திவாவிடைக் குடம்பை தெற்றிப்
பொங்குஒளி மரத்தில் சீர்சால் புள்ளினம் பொறையுயிர்த்துக்
கங்குலின் அடைகிடப்பக் கருதிவந்து அதனைக் கண்டு
வெங்கனல் கொளுந்திற்றுஎன்று மீமிசைச் சுழன்று இரங்கும்” (19-19)
என்பது பாடல். திவா = பகல்; குடம்பை = கூடு; பொறை உயிர்த்தல் = முட்டையிடுதல், ஒளிமரத்திற்குச் சோதி மரம் என்ற பெயரும் உண்டு. இம்மரம் இரவில் ஒளி வடிவாகத் தெரியுமாம்.
5.4 திங்களின் கொடுமை
திங்கள் (நிலா) தோன்றி, தன்னைப் பெற்ற தாய் அலை மோதித் தலைசாயும் படிச் செய்கிறதாம். தன்னுடன் பிறந்தவளின் வீட்டை மூடிப் பூட்டிவிடுகிறதாம். இவ்வாறு தாய்க்கும் தமக்கைக்குமே கேடு செய்யும் திங்கள், உறவு இல்லாத அயலாரை என்ன பாடு படுத்துமோ?
இவ்வாறு, அல்லமப் பிரபுவைக் காதலித்துக் காம வேதனை கொண்டுள்ள மாயை என்பவள் திங்களைத் திட்டுகிறாள்: பாடல்:
“தாய்வா யடைந்து மிருந்தலையை
மோதிமோதிச் சலித்தலறக்
காய்வாய் கிலவே உடன்பிறந்தாள்
இருந்து வாழும் கடிமனையை
நீ வான் எழுந்து வந்தழிப்பா
யென்றால் அந்தோ நிலையின்றித்
தேய்வாய் நின்னோடு இயைபில்லா
என்னை என்ன செய்யாயோ” (5.57)
திங்களும் திருமகளும் கடலில் தோன்றியதாகக் கூறுவது புராண இலக்கிய மரபு. இதே சிவப்பிரகாச அடிகளார் தம் நன்னெறி என்னும் நூலில், ‘தண்ணென் கதிர் வரவால் பொங்கும் கடல்,’ (18) என்றார். தண்ணென் கதிர்= திங்கள். முழு நிலாப் பருவ நாளில் கடல் மிகவும் அலைமோதி மோதி அலறும் - இரைச்சலிடும். அதை இப்பாடலின் முதலடியில் குறிப்பிட்டுள்ளார். மிகுந்தலையை மோதி என்னும் தொடரில், தாயாகிய கடல், நிலவால், தலையை மோதி மோதி வருந்துகிறது என்னும் பொருள் நிழலோடுகிறது. இதையே ‘மிகுந்து அலை மோதி’ எனப் பிரிக்கின், அலை மிகுதியாய் அடிக்கிறது என்னும் பொருள் தெரிகிறது. இவ்வாறு இருபொருள் (சிலேடை) அமையப் பாடப்பட்டுள்ளது ஒரு சுவையன்றோ?
அடுத்தது, உடன் பிறந்தவளின் மனையை மூடி அழிப்பது. உடன் பிறந்தாள் திருமகள். திருமகள் தங்கியிருக்கும் மனை (வீடு) செந்தாமரை, நிலா தோன்றியதும் தாமரை மலர் முடிக்கொள்ளும் அல்லவா? அதைத்தான், இவ்வாறு உடன் பிறந்தவளின் மனையைக் கெடுப்பதாகக் கூறியுள்ளார்.
பிரிந்த தலைவி திங்களை வெறுத்துப் பேசுவதாகக் கூறுவது இலக்கிய மரபல்லவா? எனவே, தாய்க்கும் தமக்கைக்கும் தொல்லை கொடுக்கும் திங்கள், ஓர் உறவும் இல்லாத எனக்குத் தரும் தொல்லையைச் சொல்லவா வேண்டும் என்று கூறும் முறையில் மாயையின் வாயிலாக அடிகள் பாடியுள்ளார்.
திங்கள் தேய்வதும் வளர்வதுமாய் இருப்பதைக் குறிப்பிட்டு, நிலையில்லாமல் தேய்கின்ற நிலவே எனக் கூறித் திட்டுகிறாள் மாயை.
5.5 கொங்கைக் குடம்
கெளசிகன் என்னும் மன்னன் அக்கமாதேவி என்னும் பெண்ணைத் தனிமையில் கண்டு, நெருப்பில் உருகிய அரக்கு போல உள்ளம் உருகி, பூங்கொடியே காமக் கடலை நான் கடப்பதற்கு உன் கொங்கையாகிய குடத்தைத் தருவாயாக என்று கெஞ்சினான் பாடல்:
“மடந்தையைத் தனிக்கண்டு அங்கி
மருவிய அரக்கே போல
உடைந்து நெக்குருகி ஆற்றா
உள்ளமோடு இளம்பூங் கொம்பே
கடந்திடற்கு அரிய காமக்
கடல் கடந்தேறக் கொங்கைக்
குடம்தரத் திருவுளத்தில் கோடி
என்று அரசு இறைஞ்ச” (10.44)
கொங்கைக்குக் குடத்தை ஒப்புமையாகக் கூறுவது இலக்கிய மரபு. இங்கே, கொங்கையாகிய குடம் எனக் கொங்கை குடமாக உருவகிக்கப்பட்டுள்ளது.
கொங்கைக்கு யானைக் கொம்பு, தாமரை மொக்கு, மலை முதலியவற்றை உவமையாகக் கூறுவதும் உண்டு. இங்கே, கொங்கைக் கொம்பைக் கொடு - கொங்கை மொக்கைக் கொடு - கொங்கை மலையைக் கொடு என்றெல்லாம் கூறாமல், கொங்கைக் குடம் கொடு என்றது ஏன்? ஆற்றைக் கடப்பதற்குக் குடத்தைக் கவிழ்த்துப் பிடித்துக்கொண்டு நீந்திச் செல்லும் வழக்கம் உண்டு. இங்கே காமக் கடலாகிய பெரிய நீர்நிலையைக் கடக்க வேண்டுமாதலின் கொங்கை குடமாக உருவகிக்கப்பட்டது. ‘கும்பத்தின் அணைத்தவும் அணையா’ என்பது திருப்பாதிரிப் புலியூர்ப் புராணம். கும்பம்-குடம்.
5.6 மருங்குல் வெளி
தெருவில் செல்லும் இராமனைக் காணப் பெண்கள் நெருக்கியடித்துக் கொண்டு நின்றனர். முன் வரிசையில் நின்றவர்கள் எளிதாக இராமனைக் காண முடிந்ததாம். பின் வரிசையில் நின்றவளுக்கு முன் வரிசையில் நின்றவர்கள் மறைத்துக்கொண்டிருந்ததால் காணமுடிய வில்லையாம். அதாவது, முன்வரிசையில் நின்றவர்களின் இடுப்புக்கு மேல் உள்ள பருத்த முலை, அடர்ந்த கூந்தல், இடுப்பின் கீழே உள்ள அல்குல் பரப்பு ஆகியவை மறைத்துக்கொண்டிருந்தனவாம். ஆனால் அவர்களின் இடை மெலிந்திருந்ததால், முன் வரிசையில் நின்ற இரண்டு பெண்களின் இடையின் நடுவே உள்ள இடைவெளி வழியாகப் பின் வரிசையில் உள்ளவள் இராமனைக் கண்டாளாம். பாடல்! இதனைக் கம்பர், பால காண்டம் உலாவியல் படலத்தில் கூறியுள்ளார். பாடல்:
“கருங்குழல் பாரம் வார்கொள்
கனமுலை கலைசூழ் அல்குல்
நெருங்கின மறைப்ப ஆண்டுஓர்
நீக்கிடம் பெறாது விம்மும்
பெருந்தடங் கண்ணி காணும்
பேரெழில் ஆசை தூண்ட
மருங்குலின் வெளிக ளூடே
வள்ளலை நோக்கு கின்றாள்” (17)
என்பது பாடல். பிரபுலிங்க லீலைக்கு வருவோம்:
இளவரசியாகிய மாயை என்பவள், ஆடவர்கள் வராதபடி வாயிலை அடைத்துக் கோயிலின் ஒரு புறம் நடனம் ஆடினாள். இதைக் காண விரும்பிய இளைஞர்களுள் சிலர் மதிலிலுள்ள துளைவழியாகக் கண்டார்களாம். சிலர் மதில் ஓரம் இடம் கிடைக்காமையால், நின்றிருந்தவர்களின் தோள்மேல் ஏறிக் கொண்டு மதிலின் மேல் துளை வழியாகப் பார்த்தார்களாம். (திரைப்பட அரங்கில் கட்டணச் சீட்டு (டிக்கெட்) வாங்க, கும்பலாக நின்றிருப்பவர்களின் தலைமேல் ஒருவர் கவிழ்ந்து படுத்துக் கொண்டு நீந்திச் செல்வதைக் காணலாம்).
இந்த இளைஞர்கள் என்ன கண்டார்கள். மாயையின் மருங்குல் (இடை) என்னும் வெற்றுவெளியைக் கண்டார்களாம்:
“பொன்னெயிலின் ஒன்றிய புழைக்குள் முகம்வைத்தும்
துன்னி முனம் நின்றவர் தோளிடை இவர்ந்தும்
மின்னென நடம்புரியும் மெல்லியல் மருங்குல்
என்னும் வெளிகானிய இடர்ப்படுவர் மைந்தர்” (4-55)
பெண்கட்கு இடை சிறுத்திருப்பதால், இடையே இல்லை எனக் கற்பனையாகக் கூறுவது இலக்கியமரபு. அவ்வாறே, கம்பர் ‘மருங்குலின் வெளி’ என்றும், சிவப்பிரகாசர் 'மருங்குல் என்னும் வெளி’ என்றும் கூறியுள்ளனர்.
இடுப்பு மடிப்பு விழுந்திருக்கும் பெண்களிடம் இதை எதிர்பார்க்க முடியாது. ‘உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு’ என்றபடி உண்டி சுருங்கி மெல்லிய இடுப்புடன் இருப்பவர்கட்கு மகப்பேறு எளிதாயிருக்கும்; குழந்தை விரைவில் வெளியில் வரும்படியான அழுத்தம் (Pressure) உண்டாகும் என்றெல்லாம் கருத்து கூறப்படுகிறது.
6.6 சொல்லாட்சி
6.1 அள்ளிக் கொள்ளும் அழகு
அல்லமப் பிரவுவை “அள்ளிக் கொள்ளும் பேரழகன்” (51-31)
என்று அடிகளார் குறிப்பிட்டுள்ளார். அழகை அள்ள முடியாது. மிகுந்த அழகு என்னும் பொருளில் இந்தச் சொல்லாட்சி கையாளப்பட்டுச் சுவை பயக்கிறது.
6.2 நீங்கிய உடையாள்
அக்கமாதேவி என்பவள் துறவு முதிர்ச்சியால் உடையின்றிச் சென்றாளாம். இதை, ‘நீங்கிய உடையாள்’ என எதிர் மறுக்கும் உடன்பாட்டால் கூறியுள்ளார். இது, அகநானூற்றில உள்ள ‘சென்று சேக்கல்லாப் புள்ள’ (42-8) என்பது போலவும், திரு முருகாற்றுப் படையில் உள்ள ‘கழிந்த உண்டியர்’ (4- 31) என்பது போலவும், கம்ப ராமாயணத்தில் உள்ள ‘பயில்வு இல் கல்வியார்’ (4-3-32) என்பது போலவும் உள்ள சொல்லாட்சியாகும். இஃது ஒர் இனிய இலக்கிய நடையாகும்.
6.3 பறந்திடா வண்டு
கொக்கு என்னும் சொல்லுக்கு, மாமரம், பறக்கும் ஒரு பறவை என்ற பொருள்கள் உண்டு. பறவாக் கொக்கு என்றால், இத்தொடர் பறக்காத மாமரத்தைக் குறிக்கும். அதுபோல், வண்டு என்னும் சொல்லுக்கு, வளையல், பறக்கும் வண்டு என்னும் பொருள்கள் உண்டு. பறந்திடா வண்டு என்றால், இத்தொடர், பறக்காத வளையலைக் குறிக்கும். சிவப்பிரகாசர் கைலாச கதியில் உள்ள.
“பறந்திடா மணிவண்டு படுமலர்” (23)
என்னும் பாடலில் ‘பறந்திடா மணி வண்டு’ என வளையலைக் குறிப்பிட்டுள்ளார். இது ஒரு சுவையான சொல்லாட்சியாகும். (மணி = அழகு. மலர் = மலர் போன்ற கை)
6.4 எட்டிப் பார்த்தல்
மாயை வளர்ந்து வருகிறாள். மார்பில் கொங்கைகள் தோன்றத் தொடங்கிவிட்டன. மாயையின் பேரழகால் துறவிகளாம் பறவைகளும் காம மயக்க வலையில் விழுவார்களாம். துறவிகள் எந்த நிலையில் உள்ளனர் என்பதை அறிய மார்பில் இருந்து கொண்டு முலைகள் எட்டிப் பார்த்தனவாம்.
மார்பில் முலைகள் சிறிய அளவில் முளைத்திருப்பதை, இவ்வாறு ‘எட்டிப் பார்த்தல்’ என்னும் சொல்லாட்சியால் கூறி இலக்கியச் சுவை தந்துள்ளார் அடிகளார். பாடல்:
“முட்டித் துறவாம் பறவை மயல்
வலையில் படுதல் மெல்ல மறைந்து
எட்டிப் பார்ப்பு என முகங்கொண்டு
எழுந்தன மார்பில் இள முலைகள்” (3-56)
என்பது பாடல் பகுதி. வலையில் பறவை விழுவதை மறைந்திருந்து தானே வேடர்கள் பார்ப்பார்கள். இங்கே முலைகள் மறைந்திருத்தல் என்பது மேலாடையால் மூடப்பட்டிருப்பதாகும். இந்தச் சொல்லாட்சியை அடிப்படையாகக் கொண்டு, ‘அம்பிகாபதி காதல் காப்பியம்' என்னும் நூலில் இந்த அமைப்பு பின்வருமாறு புனையப் பட்டுள்ளது.
“இடமது சிறிதே ஈந்ததும் பெரிய
மடமுழு தினையும் மடக்குவோர் மான
எட்டிப் பார்க்க இடம் சிறிதளவே
விட்ட மார்பின் வியலிடம் முழுமையும்
தட்டிக் கொண்ட தளதள நகில்கள்” (2:21-25)
என்பது பாடல் பகுதி. இத்தகைய நயமான சொல்லாட்சிகள் பல, நூலில் இடம் பெற்றுள்ளன.
7. திருக்குறள் ஆட்சி
திருக்குறள் ஆட்சி பன்னிரண்டுக்குமேல் பிரபுலிங்க லீலையில் இடம் பெற்றுள்ளன. ஈண்டு இரண்டு மட்டும் காண்பாம்:
7.1 தொழு தெழுதல்
மாதாம்பிகை என்னும் பெண்மணி கொழுநனைத் தொழுது எழுவாளாம்: “பைந்தொடி கொழுநன் தொழு தெழு தொழிலாள்". (9-21)
“தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை” (55)
என்னும் குறள் கருத்து இதில் உள்ளது.
7.2 உடுக்கை யிழந்தவன் கை
அல்லம தேவர், உடையிழந்தவன் கைபோல, அடியர்களின் துன்பம் துடைப்பாராம்:
“உடையிழந்த ஒருவன் கரமெனக்
கடிதடைந்து களைந்தருள் செய்யுநாள்” (13.2)
என்னும் பாடல் பகுதியில்,
“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு” (788)
என்னும் குறள் கருத்து அடங்கியுள்ளது. இவ்வாறு பல உள.
8. உவமையணி
இந்நூலில் உவமையணி மலிந்துள்ளது. தற்குறிப்பேற்ற அணி முதலியவும் உள்ளன. ஈண்டு உவமையணி சில காண்பாம்:-
8.1 தளர்ந்துழி உதவும் கல்வி
முனிவர்கள் தளர்ச்சியுற்றிருந்த போது அவர்களின் தளர்ச்சியைப் போக்கத் துருவாசமுனி வந்தாராம். இதற்கு உவமையாக,
“தளர்ந்துழி உதவும் கல்விதானென” (3-34)
என்பது கூறப்பட்டுள்ளது. சிறந்த உவமை இது.
“இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ லற்றே
ஒழுக்க முடையார் வாய்ச் சொல்” (415)
என்னும் குறள் ஈண்டு எண்ணத்தக்கது.
8.2 குழந்தை வளர்ப்பு
மோகினி மாயை என்னும் குழந்தையை அருமையாகப் போற்றி வளர்த்தமைக்கு மூன்று உவமைகள் கூறப் பட்டுள்ளன. அவை:-
“மிடியன் ஒருசெய்யாளன் அச்செய்
விளையக் காக்கும் செயல்போலப்
படியில் கல்வி விரும்பினோன்
பாடம் போற்றுமது போல
ஒடிவில் செங்கோல் மனுவேந்தன்
உலகம் புரக்கு முறைபோலக்
கொடிய நோன்பு செய்தீன்ற
கொடியை வளர்த்தாள் மோகினியே” (3.49)
என்பது பாடல். இதில் அரிய பெரிய ஆழ்ந்த கருத்துடைய மூன்று உவமைகளைக் காணலாம்.
9. தத்துவ ஆய்வு
அல்லமரும் கோரக்கர் என்பவரும் தத்துவ ஆய்வு செய்து உரையாடுகின்றனர். உயிர் என்பது பற்றியும் ஆன்மா என்பது பற்றியும் அல்லமர் கோரக்கருக்கு விளக்குகிறார்.
உயிர் என்பது ஆன்மாவின் பெயர் அன்று. மூக்கின் வழியாகப் போய் வந்து கொண்டிருக்கும் மூச்சுக் காற்றுக்குத்தான் உயிர் என்பது பெயராகும். உயிரை உடைய ஆன்மா என ஒன்றுள்ளது. உயிர் என்னும் பெயர் ஆகுபெயராய் அதனை உடைய ஆன்மாவைக் குறிக்கிறது. பாடல்;
“உயிர் எனும் பெயர் இயங்குகாற்கு இயற்பெயர் உரைப்பின்
அயலுறுந் தனக்கு அப்பெயர் ஆகுபெயராம்” (19-38)
என்பது பாடல் பகுதி. உயிர் என்னும் பெயர், மூச்சுக் காற்றுக்கு உரிய இயற்பெயராம் - ஆன்மாவிற்கு ஆகு பெயராம். இது பற்றி மெய்யறி வாய்வாளரிடம் கருத்து வேற்றுமை இருக்கலாம். தனக்கு - ஆன்மாவிற்கு உயிர்ப்பது (மூச்சு விடுவது) உயிர்.
இப்பாடவில் உள்ள ‘காற்கு’ என்னும் சொல், கால் என்பது ‘கு’ என்னும் நான்காம் வேற்றுமை உருபு பெற்ற சொல்லாகும். கால் + கு = காற்கு. ‘காற்கு’ என்றால் காற்றுக்கு என்று பொருளாம். ‘காற்கு’ என்பதற்கு முன்னால் இயங்கு என்னும் சொல் சேர்ந்து ‘இயங்கு காற்கு’ என்றுள்ளது.
காற்று எப்போதும் இயங்கிக் கொண்டே இருப்பது. கால் என்னும் தமிழ்ச் சொல்லுக்கும், வாயு என்னும் வட மொழிச் சொல்லுக்கும் பொருள் இஃதே. காற்று உலவிக் கொண்டே இருப்பதால், திவாகர நிகண்டில் காற்றுக்கு உலவை என்னும் பெயர் தரப்பட்டுள்ளது (1-37). காற்று எப்போதும் சரித்துக் கொண்டே (இயங்கிக்கொண்டே) இருப்பதால் ‘சாரிகை’ என்னும் பெயரும், சதா சென்று கொண்டே இருப்பதால் ‘சதார கதி’ என்னும் பெயரும் சூடாமணி நிகண்டில் காற்றுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன.
10. பிற துறைகள்
மருத்துவம், சோதிடம், தருக்கம் முதலிய துறைகளும் பிரபுலிங்க லீலையில் இடம் பெற்றுள்ளன.
10.1 மருத்துவம்
ஆவிற்கு (பகவுக்கு) நோய் வரின், அதன் பாலையே கறந்து அதற்கு ஊட்டினால் நோய் நீங்குமாம். பாடல்:
“ஆவுறு பிணிகெட ஆவின் பால்கறந்து
ஆவினை ஊட்டல் போல்” (16-15)
என்னும் பாடல் பகுதியால் மாட்டு மருத்துவமும் அறிவிக்கப் பட்டுள்ளது.
10.2 கணி (சோதிடம்)
மாயை என்னும் கன்னியின் அத்தத்தில் (கையில்) கடகம் என்னும் அணிகலனைப் புனைந்தாளாம் ஒரு தோழி. பாடல்:
“கன்னி அத்தம் வந்து இனமணிக் கற்கடகத்தின்
மன்னி உற்றது அற்புதம் என வளைபல காக்க
வின்னுதல் கருங்கண் மடமாது கை விளங்கப்
பொன்னின் நற்கடகம் புனைந்தனள் ஒரு பூவை” (4-13)
என்பது பாடல்: மேடம், இடபம், மிதுனம், கடகம் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம், என்னும் பன்னிரண்டு இராசிகளுள், இருபத்தேழு விண் மீன்களுள் (நட்சத்திரங்களுள்) ஒன்றான அத்தம் (அஸ்தம்) என்னும் விண்மீன் கன்னி இராசிக்கு உரியது. அது, (கற்) கடக இராசியில் வந்து உற்றது அற்புதம் என்று சொல்லும் படி, கன்னியின் அத்தத்தில் (கையில்) கடகம் அணிந்தது இருந்ததாம். கணிப்பாடல் இன்னும் உண்டு.
10.3 தருக்கம்
தருக்கம் என்பதைத் தமிழில் நெறிமுறை எனலாம். தீ மேல் நோக்கிச் செல்லும் - நீர் கீழ் நோக்கிச் செல்லும் என்பது தருக்க - நெறி முறை.
திருப்பருப்பத மலை உச்சியிலிருந்து அருவி கீழ் நோக்கி ஓடி வருகிறது. ஒரு யானை அருவி நீரை உறிஞ்சி மேல் நோக்கி விண்ணிலே செல்லும்படி உந்தி எறிகிறதாம். வெப்பமான ஞாயிறு இந்த அருவி நீர் படலால் குளிர்ந்த திங்கள் போல் குளிர்கிறதாம்: இது, தீ மேல் நோக்கியும் நீர் கீழ் நோக்கியும் செல்லும் என்னும் தருக்க - நெறிமுறைக்கு மாறாக உள்ளதாம். பாடல்:
“தூங்கிசை அருவிபாயத் தொளைக்கை
வெண்கோட்டு உரல்கால்
ஈர்ங்கவுள் நெடுநல்யானை ஏற்ப
வெந்தழல் அலாமல்
தேங்கு தண்புனல் மேல்நோக்காது
என்பது தீரச் சென்று
பூங்கதிர் பணிவெண் திங்கள்
போன்மெனத் திவலை செய்யும்” (19-16)
என்பது பாடல். ஏற்ப = மேல் நோக்கி எறிய; பூங்கதிர்= ஞாயிறு.
இவ்வாறாகப் பிரபுலிங்கலீலை என்னும் இலக்கிய உலகில் பல துறைக் காட்சிகளைக் கண்டு களிக்கலாம். சிவப்பிரகாச அடிகளாரைக் ‘கற்பனைக் களஞ்சியம்’ என்னும் சிறப்புப் பெயரால் குறிப்பிட இந்நூல் ஒன்றே போதுமே!
11. முதுமொழி நூறு
கழக (சங்ககால) இலக்கியங்களுள், பெரிய அளவுள்ள பாடல்களைக் கொண்ட பதினெட்டு நூல்கள் பதினெண் மேற்கணக்கு எனவும், சிறிய அளவுள்ள பாடல்களைக் கொண்ட பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க்கணக்கு எனவும் வழங்கப் பெறும். கணக்கு என்றால் நூல். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் முதுமொழிக் காஞ்சி என்னும் நூலும் ஒன்றாகும். இதனை இயற்றியவர், மதுரைக் கூடலூர்க் கிழார் என்னும் கழகப் புலவர் பெருமானாவார்.
முதுமொழிக் காஞ்சியாவது: எல்லோரும் கொண்டாடும் அறிவுடையோர் குற்றம் நீக்கி ஆராயும் உலகத்தியலுள் முடிந்த பொருளாகிய அறம் பொருள் இன்பத்தை அறியச் சொல்வது முதுமொழிக் காஞ்சியாகும்.
இந்நூலுள் நூறு முதுமொழிகள் பரிந்துரைக்கப் பட்டுள்ளன. அவற்றை வாழ்க்கையில் பின்பற்றி ஒழுகின் வீடும் திருந்தும் நாடும் திருந்தும் - மக்களினம் உயர்வடையும். அவை வருமாறு:
1. சிறந்த பத்துக் கருத்துகள்
1. கடல் சூழ்ந்த இவ்வுலகத்தில் உள்ள மக்களுக்கு எல்லாம், கல்வியைக் காட்டிலும் நல்லொழுக்கம் உடைமை சிறந்ததாகும்.
2. ஒருவரிடம், அன்பைக் காட்டிலும், தமது உயரிய பண்பைக் கண்டு மதிக்கும் முறையில் அவர் அஞ்சி ஒழுகும் படி நடந்து கொள்ளுதல் சிறந்தது.
3. கல்வியில் பெரிய மேதையாய் வல்லமை பெற்று இருப்பதைக் காட்டிலும், கற்றவரைக்கும் மறவாமல் அதன்படி ஒழுகுதல் சிறந்தது.
4. வளமான செல்வம் உடைமையைவிட, உண்மையான (முறை தவறாத) வாழ்வு உடைமை சிறந்தது.
5. நோயோடு கூடிய இளமையைவிட, நோயின்றி ஒரளவு முதுமை இருப்பினும் அது நல்லது.
6. எல்லாச் செல்வ நலன்களைக் காட்டிலும், நாணமும் மானமும் உடைய வாழ்க்கை சிறந்தது.
7. உயர் குலத்தோர் என்னும் பெருமையினும், கற்புகல்வி உடையவர் என்னும் பெருமை சிறந்தது.
8. ஒருவர் தாம் கற்பது போதாது; கற்றவர்களைப் போற்றி வழிபடுதல் சிறந்தது.
9. பகைவரை ஒறுத்தலைவிட (தண்டித்தலைவிட), அவரினும் தம்மை உயர்ந்தவராக்கிக் காட்டுதல் சிறந்தது.
10. முன்னால் ஆரவாரமாக வாழ்ந்து வளம் குன்றிப் போவதினும், பின்னால் நிலைமை குறையாமல் நிறையுடன் வாழ்தல் சிறந்தது.
2. அறியத் தக்க பத்துக் கருத்துகள்
1. கடல் சூழ்ந்த உலகில் உள்ள மக்களுக்குள் யாவரா யினும், அவருடைய குளிர்ந்த அருளுடைமையைக் கொண்டு தான் அவர் உயர் குலத்தார் என அறியப்படுவார்.
2. ஒருவர் பிறர்க்கு அளிக்கும் கொடையைக் கொண்டு அவர் குளிர்ந்த அருளுடையவர் என்பதை அறியலாம்.
3. ஒருவர் செய்யும் உதவியை அளவுகோலாகக் கொண்டு, அவர் தளராத நட்பு உடையவர் என்பதை அறியலாம்.
4. ஒருவரது உண்மை காணும் திறத்தைக் கொண்டு, அவரது கல்வி வல்லமையை அறியலாம்.
5. ஒருவர் உயர்ந்த ஆராய்ச்சி உடையவர் என்பதை, அவர் எதிர்காலத்தில் வரக் கூடியதை முன் கூட்டி நுனித் துணர்ந்து செயல்படுவதைக் கொண்டு அறியலாம்.
6. ஒருவர் தம்மைப் பெருமைப்படுத்திக் கொண்டு செருக்குற்று இருப்பதைக் கொண்டு, அவர் அற்பக் குடும்பத்தில் பிறந்தவர் என்பதை அறியலாம்.
7. ஒருவர் செய்யும் வஞ்சகச் சூழ்ச்சிச் செயலைக் கொண்டு, அவர் கள்ளத்தனம் உடையவர் என்பதை அறியலாம்.
8. ஒருவரின் சொல் சோர்வைக் கொண்டு - அதாவது சொன்ன சொல்லைக் காப்பாற்றாததைக் கொண்டு, அவர் எல்லாவற்றிலும் சோர்ந்து தவறுவார் என்பதை அறியலாம்.
9. ஒருவர் அறிவுடைமையில் குறைபாடு உடையவரா யிருப்பின், அவர் எல்லாவற்றிலும் குறைபாடு உடையவரா யிருப்பார் என்பதை அறியலாம்.
10. ஒருவரது சிறப்பான ஆளுமைத் தன்மையை, அவர் செய்யும் செயல் திறமையைக் கொண்டு அறியலாம்.
3. பழியாமை கூறும் பத்துக் கருத்துகள்
1. கடல் சூழ்ந்த உலகில் உள்ள மக்களுக்குள், எந்தக் கட்டுப்பாடும் இல்லாதவரது இயற்கையான தாழ்குணத்தைப் பழிப்பதில் பயனில்லை.
2. பெருந்தன்மையில்லாத அற்பர்கள் தம்மைத் தாமே பெருமைப் படுத்திக் கொள்வதைப் பழிப்பதில் பயனில்லை.
3. மிக்க பெருமைக்கு உரிய செயல், செய்வதற்கு அரியதாய் (கஷ்டமாய்) இருப்பின், அதற்காக நொந்து (பழித்து) விட்டுவிடலாகாது.
4. ஒரு செயல் முடிப்பதற்கு அரியதாய் (கஷ்டமாய்) இருப்பின், அதற்காக அதன் உயர்வினைப் புறக்கணிக்கக்கட்டாது.
5. ஒருவர் ஒரு செயலை நிறைவுபெற முடிக்காமல் குறையாய் விட்டிருப்பின், அதற்காக அவரைப் பழிக்கலாகாது; பின்னர்த் தொடர்ந்து முடிக்கலாம்.
6. செங்கோல் முறை தவறிய அரசனது நாட்டில் இருந்துகொண்டு அறிஞர்கள் அவனைப் பழித்துக்கொண்டிருப்பதில் பயனில்லை.
7. உதவி செய்யவேண்டிய உரிய சுற்றத்தார் உதவி செய்யாராயின், அதற்காக உயர்ந்தவர்கள் அவர்களைப் பழிக்காமல் பொறுத்துக் கொள்வர்.
8. முன்பின் அறியாத புதிய நாட்டிற்குச் சென்றால், அங்கே உள்ள பழக்க வழக்கங்களின் மாறுதலைக் கண்டு உயர்ந்தவர்கள் பழித்துரையார்.
9. வறியவன் வள்ளல்போல் வழங்கவில்லையே என அவனை எவரும் பழித்துரையார்.
10. கீழ்மக்களின் இழி செயல்களைக் கண்டு, சிறந்த பெரியவர்கள் பழிக்காமல் - கண்டும் காணாமல் விலகி விடுவர்.
4. துவ்வாமை கூறும் பத்து உரைகள்
1. கடல் சூழ்ந்த உலகில் உள்ள மக்களுள் பழியுடையவரிடம் உள்ள செல்வம், வறுமையைப் போலவே துய்க்கப் படாது (நுகரப்படாது).
2. அளவுக்கு மீறிய மறம் (வீரம்) காட்டுதல் பேடித் தன்மையைப் போலவே நல்ல பயன் தராது.
3. மானத்தோடு பசித்திருக்கலாம், நாணம்-மானம் இன்றி மற்றொருவரிடம் வாங்கி உண்பது உண்மையான உணவாகாது.
4. உண்மையான விருப்பமின்றிக் கடமைக்கு ஈவது, ஈயாத கஞ்சத்தனத்தைப் போலவே பெறத் தகுதியற்றது.
5. செய்யக் கூடாத செயல்களை மேற்கொண்டு செய்வது, மடத்தனமாய்க் கருதப்பட்டு நல்ல பயனை நல்காது.
6. பொய்யான உள்ளத்துடன் நடித்துச் செய்யும் உதவி, கீழ்மையினும் கீழ்மையானது.
7. ஒருவருடன் நட்பு கொண்டு, அவருக்குத் துன்பம் வந்தபோது நழுவி விடுதல் கொடுமையினும் கொடுமையாகும்.
8. அறிவில்லாத முடனுடைய துணை, தனிமையிலும் தாழ்ந்தது-பயனில்லாதது.
9. மிகவும் தளர்ந்து தாழ்ந்து இழிந்த நிலையில் உள்ள முதுமை, சினம் எந்த நற்பயனையும் அடையச் செய்யாதது போல் தக்க பயனை எய்தச் செய்யாது.
10. ஒருவர் தம் செல்வத்தைத் தாம் மட்டும் துய்த்து மகிழ்தல், ஒன்று மற்ற ஏழைமையைப்போல் துய்க்காததாகவே கருதப்படும்.
5. அல்லாதது - (ஆகாதது) கூறும் பத்து மொழிகள்
1. கடல் சூழ்ந்த உலகில் உள்ள மக்களுக்குள், நல்ல கணவனது இயல்பு அறிந்து ஒழுகாதவள் நல்ல மனைவியாகாள்.
2. மனைவியிடம் நல்ல மாட்சிமை - மாண்பு இல்லையெனில், அவளிருக்கும் குடும்பத்தின் வாழ்க்கை சிறப்புடையதாகாது.
3. ஒருவர்க்கு ஒருவர் குளிர்ந்த அன்பின்றிக் கொள்ளும் தொடர்பு, உறவும் ஆகாது - நட்பும் ஆகாது.
4. பிறர்க்கு ஒன்றும் உதவாத கையையுடைய கருமி புகழாகிய மலைக்கு - மலையத்தனைப் புகழுக்கு உரியவன் ஆகான்.
5. ஒன்று கலந்து பொருந்தாத உள்ளம் உடையவன் உயர்ந்த நண்பனாகக் கருதப்படான்.
6. ஆசிரியர்க்கு ஒருதவியும் செய்யாமல் வஞ்சித்துக் கற்கும் கல்வி உண்மையான கல்வியாகாது.
7. தான் வளத்துடன் வாழாவிடினும், பிறர் அவ்வாறு வாழமுடியாமையைக் கண்டு வருந்தும் வருத்தம் உண்மையான வருத்தமாகாது.
8. அறவழியில் ஈட்டிய பொருளை நன்முறையில் - நல்லதற்குக் கொடாத கொடை உண்மைக் கொடையாகாது.
9. உரிய முறையில் நோற்காத நோன்பு (தவம்) உண்மை நோன்பு ஆகாது.
10. மறுபிறப்பு என்பதை முன்கூட்டி அறிந்து அதற்கு ஏற்றபடி ஒழுகாமல், ஆண்டில் மட்டும் மூத்த மூப்பு, உண்மையான பயனுள்ள மூப்பாகாது.
6. இல்லை - இல்லை எனக் கூறும் பத்து மொழிகள்
1. கடல் சூழ்ந்த உலகில் உள்ள மக்களுக்கு எல்லாம், பிள்ளைப்பேற்றை விட வேறு பெரிய பேறு இல்லை.
2. உலக நடைமுறை அறிந்து ஒருவர்க்கு ஒருவர் உதவி வாழ்வதைக் காட்டிலும் தக்க செயல்-தக்க வரவு இல்லை.
3. நல்ல வாய்ப்பு - வசதி தரும் பழக்க வழக்கத்தைக் காட்டிலும் சிறந்த பழக்கவழக்கம் இருக்க முடியாது.
4. நல்ல வாய்ப்பு - வசதி தராத பழக்கவழக்கத்தைக் காட்டிலும் வீண் செயல் வேறு இன்று.
5. தன்னால் செய்ய முடிந்த நல்ல செயலையோ - கொடையையோ மறைத்தலினும் கொடுமை வேறொன்றும் இல்லை. -
6. நல்லறிவும் நல்லுணர்ச்சியும் இல்லாத மரக்கட்டை யாய் வாழ்தலைவிட வேறு சாவு இல்லை. இந்த வாழ்வே சாவுக்குச் சமம்.
7. பேராசையைக் காட்டிலும் பெரிய வறுமைத்தனம் வேறு இருக்க முடியாது.
8. நமக்குப் பின் விட்டுப் போகக்கூடிய எச்சப்பொருள் புகழினும் வேறேதும் இன்று.
9. ஒருவரிடம் சென்று கெஞ்சிக் கேட்டு இரத்தலைக் காட்டிலும் இழிவு வேறு யாதும் இலது.
10. தம்மிடம் வந்து ஒன்று கேட்டு இரப்பவர்க்குக் கொடுப்பதைவிட உயர்ந்த சிறப்பு வேறு இருத்தற்கு இல்லை.
7. பொய்யான பத்து உரைகள்
1. கடல் சூழ்ந்த இவ்வுலகில் வாழும் மக்களுக்குள், உயர்ந்த பெரிய அறிவாளர் இனிமையாய் வாழ்வதில்லை என்பது பொய்; அவர் உள்ளம் இனியதாகவே இருக்கும்.
2. மிகப் பெரிய செல்வமும் செல்வாக்கும் பெற்றவன் பிறரிடம் சினம் (கோபம்) காட்டமாட்டான் என்பது பொய். செருக்கினால் அவன் சுடுமுகம் காட்டலாம்.
3. கள் உண்பவன் எதிலும் சோர்வடையான் - தாழ்வடையான் என்பது பொய்.
4. செய்ய வேண்டிய செயலை உரிய காலம் அறிந்து செய்யாதவனுக்குச் செயல் கைகூடி வரும் என்பது பொய்.
5. எதிர் காலத்தில் நேரக் கூடியதை துணித்துணர்ந்து (உத்தேசமாகவாவது அறிந்து) அதற்கு ஏற்ப முன்கூட்டி நடந்து கொள்ளாதவன் தன்னைக் காத்துக் கொள்வான் என்பது பொய்.
6. உற்ற செயலைக் காய்ந்து வெறுத்துச் செய்யாதவன் உயர்வு பெறுதல் இயலாது.
7. எதையும் பொறுத்து அடக்கமாய் இல்லாதவன், பெருமையை வேண்டிப் பெறுதல் இயலாது.
8. தனக்குப் பெருமை வேண்டாதவன், - அதாவது - தற்பெருமையை விரும்பாதவன் சிறுமை அடைதல் இல்லை.
9. பொருளின் மேல் பேரவாக் கொள்பவன், முறையாகப் பொருள் ஈட்டுவான் என்பது பொய்.
10. தூய்மையான உள்ளத்தான் அல்லாதவன், உயர்ந்த தவம் செய்வான் என்பது பொய்.
8. உறுதல் எளிதான பத்து மொழிகள்
1. கடல் சூழ்ந்த உலகில் வாழும் மக்களுள், புகழான செயல்களை விரும்பிச் செய்பவர்க்குத் தேவர் வாழும் இன்ப உலகம் எளிதில் கிடைக்கும்.
2. போரை ஏற்று உண்மையாய்ப் போரிடுபவர்க்குப் பெரிய போரில் வெற்றி கிடைத்தல் எளிது.
3. குளிர்ந்த உள்ளன்பு உடையவர்கட்கு, பிறர் விரும்பும் பொருளைக் கொடுத்தல் எளிது.
4, பிறர்மேல் கோள் சொல்லுதலை விரும்புபவர், எந்த மறை பொருளையும் (இரகசியத்தையும்) எளிதில் வெளியிட்டுவிடுவர்.
5. உழைப்பினால் உண்டாகும் துன்பத்தைப் (சிரமத் தைப்) பொருட்படுத்தாது உழைப்பவர்க்கு இன்பம் கிடைப்பது எளிது.
6. உழைக்காமல் இன்பத்தை மட்டுமே விரும்புபவர்கள் எளிதில் துன்பம் எய்துவர்.
7. பெருந்தீனியை விரும்பி உட்கொள்பவர்க்கு, மிகுந்த பெரிய நோய்கள் எளிதில் உண்டாகும்.
8. தன் மனைவியல்லாத மற்ற பெண்களை விரும்பு பவர்க்குப் பெரும் பழி நேர்தல் எளிது.
9. பிறர் பாரத்தைத் (பிறர் சுமையைத்) தாங்கிக் காக்க வேண்டும் என்னும் அருள் உடையவர்கள், மற்ற வர்க்கும் பகுத்துக் கொடுத்து உண்ணுதல் எளிய செயலே; முடியாத தன்று.
10. எந்தப் பொறுப்பும் கவலையும் இல்லாதவர்க்கு, பிறரைப் படுகொலை செய்தல் எளிது.
9. நல்கூர்தலாகக் (வறியதாகக்) கூறும் பத்துக் கருத்துகள்
1. கடல் சூழந்த உலகில் மக்களை ஆளும் அரசன் செங்கோல் முறை தவறின், அவன் ஆளும் நாடு நல்கூர்ந்ததாகும் - வறுமை யுடையதாகும்.
2. மிகவும் அகவை (வயது) முதிர்ந்தவன் காமத்தை விரும்புதல் - அதாவது மேலும் புதிதாகத் திருமணம் செய்து கொள்ள விரும்புதல் பயனற்றதாகும்.
3. உடன் இருந்துகொண்டே உள்ளத்தில் பகை கொண்டு செயலாற்றுபவனுடன் சேர்ந்திருத்தல் வறிதானதே - வீணானதே.
4. பெரிய பிணியாளி பெறுகின்ற இன்பம் என்பது உண்மையான பயன் உடையதாகாது.
5. தன்னைப் பொருட்படுத்தாது புறக்கணிப்பவரிடத்தில் சினம் கொள்வது செல்லாது - பயனற்றது.
6. மிகவும் அகவை முதிர்த்த மூத்தோன் தன்னை ஆடையணிகலன்களால் ஒப்பனை (அலங்காரம்) செய்து கொள்வது அவ்வளவாக எடுபடாது.
7. தனது பேச்சு எடுபடாத இடத்தில் பேசுதல் என்பது பயனற்ற வீண்செயலாகும்.
8. உள்ளத்தில் குளிர்ச்சியின்றி வறட்சியுற்றிருப்புவனோடு - அதாவது - உள்ளன்பு இல்லாதவனோடு சேர்ந்திருத்தல் பயன் தராததாகும்.
9. தமது பெருமையைக் கண்டு அஞ்சி மதிப்பு கொடாத இடத்தில் சினம் காட்டுதலால் பயனில்லை.
10. உண்மையான நட்பு இல்லாதவரிடத்தில் இன் சொல்லையோ - ஓர் உதவியையோ பெற உள்ளத்தில் விரும்பிச் செல்லுதலால் ஒரு பயனும் இராது.
10. தவறாமை பற்றிய பத்து உரைகள்
1. கடல் சூழ்ந்த உலகில் வாழும் மக்களுக்குள், தான் ஓங்கி உயர்வு பெற விரும்புபவன், உயர்ந்த மொழிகளை - பிறரைப் பற்றி உயர்வான புகழுரைகளைக் கூறத் தவிர மாட்டான் (தண்டான்).
2. தான் பெருமையில் பெருக விரும்புபவன், பல புகழ்ச் செயல்களைச் செய்யத் தவிரான்,
3. கல்வி கற்க விரும்புபவன் ஆசிரியரை வணங்குவதில் பின் வாங்கமாட்டான். -
4. உலகில் புகழுடன் நிலைத்து நிற்க விரும்புபவன் உயர்ந்த தவம் இயற்றுதலைத் தவிர்க்கமாட்டான்.
5. தான் நன்முறையில் வாழ வேண்டுபவன், பெரியோருடன் சூழ்ந்து (ஆலோசித்து) வாழும் வழி அறிதலைத் தவிரான்.
6. தான் மேன்மேலும் வளர விரும்புபவன், முயற்சியுடன் உழைப்பதை விடமாட்டான்.
7. இன்பம் பெற விழைபவன், அதைப் பெறும் முயற்சியினிடையே ஏற்படும் இன்னல்களைக் கண்டு சோர மாட்டான்.
8. பின்னால் துன்பப்பட இருப்பவன், முன்னால் தேவையில்லாத சிற்றின்பங்களை விடாது நுகர்வான்.
9. குடிமக்களின் நன்மையை விரும்பும் அரசன், செங்கோல் முறை தவறாமல் ஆளுதலைக் கைவிட மாட்டான்.
10. இன்பம் விரும்புவன், பெரியோரின் குறிப்பறிந்து செயலாற்றுதலினின்றும் நீங்கான்.
12. மணிமேகலையில் பழக்க வழக்க மரபுகள்
ஐம்பெருங் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலை என்னும் காப்பியக் காலத்தில் பல்வேறு மக்களிடையே இருந்த பழக்க வழக்கங்களையும்-மரபுகளையும் காண்பாம்.
மலர் வனம் புக்க காதை
கடவுளர்க்குத் தூய மலர்
கடவுளர்க்குச் சூட்டும் மலர் தூயதாயிருக்க வேண்டும் என்பது ஒருவகை மரபு. மலர் கொய்து போடும் போதும் போட்ட பின்னரும் மலர்க் குடலையை இடுப்பின் கீழ் தொங்கவிடக் கூடாது என்பர். குளிக்காமல் மலர் கொய்யக் கூடாதென்பதும் ஒரு கொள்கை. மணிமேகலை மலர் தொடுத்த போது, தந்தை கோவலனை எண்ணி அழுத கண்ணீர் மலரில் பட்டுவிட்டதால் வேறு மலர்கள் கொய்து வரும்படி மாதவி மணிமேகலையை மலர் வனத்திற்கு அனுப்பினாளாம்.
“மாதர் செங்கண் வரிவனப்பு அழித்துப்
புலர்புநீர் உருட்டிப் பொதியவிழ் நறுமலர்
இலங்கிதழ் மாலையை இட்டுநீ ராட்ட
மாதவி மணிமேகலை முகம் நோக்கித்
தாமரை தண்மதி சேர்ந்தது போலக்
காமர் செங்கையின் கண்ணீர் மாற்றித்
தூநீர் மாலை தூத்தகை யிழந்தது
நிகர்மலர் நீயே கொணர்வாய் என்றலும்” (8-15)
என்பது பாடல் பகுதி. மூக்கால் மலரை மோந்து பார்த்தலும் கூடாதாம். கழற்சிங்கர் என்னும் அரசனின் மனைவி கடவுளுக்கு உரிய மலரை எடுத்து மூக்கால் மோந்ததால் செருத்துணை நாயனார் என்பவர் அரசியின் மூக்கை அரிந்து விட்டாராம். இதையறிந்த மன்னர் கழற் சிங்கன் மலரை எடுத்த கையையல்லவா முதலில் வெட்ட வேண்டும் என்று கூறித் தம் மனைவியின் கையை வெட்டி விட்டாராம். இவரும் ஒரு நாயனார். எவ்வளவு கடுமைச் செயல் இது! இது பெரியபுராணக் கதை.
சவகர்லால் நேரு ஒரு முறை காஷ்மீர் சென்றபோது அங்கு ஓரிடத்தில் இருந்த நறு மலர்களை அண்ணல்காந்தியடிகளிடம் கொண்டுவந்து அளித்துச் சிறப்பு செய்வதற்காக எடுத்தாராம். பின் அவற்றை மூக்கால் மோந்தாராம். அப்போது அவருடைய உதவியாளராக உடன் சென்றிருந்த எச். வி. ஐயங்கார் என்னும் தமிழர், நேருவை நோக்கி, மோந்த மலரை அளிப்பது எங்கள் பக்கத்தில் (தமிழகத்தில்) வழக்கமில்லை என்று கூறினாராம். உடனே நேரு மோந்த மலர்களைக் கீழே போட்டு விட்டு வேறு புது மலர்களை எடுத்துச் சென்றாராம். மோந்ததே கூடாதெனின், கண்ணீர் பட்டது சிறிதும் கூடாதன்றோ!
பெண்கள் தனித்து ஏகாமை
மாதவி மணிமேகலையை மலர் வனம் சென்று வேறு மலர் கொண்டு வருக என்றதும், சுதமதி என்ற தோழி, மணிமேகலையைத் தனியே அனுப்பலாகாது; அவளை ஆடவர் கண்டால் அகலார்; அவர்கள் உள்ளத்தில் காம உணர்வு தோன்றாராயின் பேடிகளாகத்தான் அவர்கள் இருக்கவேண்டும்.
“ஆடவர் கண்டால் அகறலும் உண்டோ
பேடிய ரன்றோ பெற்றியின் நின்றிடின் “ (24,25)
எனவே,
“மணிப்பூங் கொம்பர் மணிமே கலைதான்
தனித்து அலர் கொய்யும் தகைமையள் அல்லள்” (42,43)
என்று கூறினாள். அந்தக் காலத்திலும் (எந்தக் காலத்திலும்) பெண்கள் காவலுடன் இயங்க வேண்டியவர்களாக இருந்தனர் என்பது இதனால் பெறப்படும். இந்த இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் கால் பங்குக் காலத்தில், மகளிர் ஆடவர் துணையுடன் செல்லினும், ஆடவரை வீழ்த்தி மகளிரைக் கொள்ளை கொள்பவர் கூட்டம் மிக்கிருக்கிறது என்பதை எண்ணுங்கால் வேதனையாய் உள்ளம் வருந்துகிறது.
மண்ணாமை
சமணத் துறவிகள் குளித்துக் கழுவி உடலைத் தூய்மை செய்வதில்லையாம். இதனை,
“மண்ணா மேனியன் வருவோன் தன்னை” (3.91)
என்னும் பகுதியால் அறியலாம். மண்ணுதல் = குளித்தல் - தூய்மை செய்தல். துணியைத் தூய்மை செய்யும் வண்ணான் என்னும் பெயர்ப் பொருளில் மலையாளத்தில் ‘மண்ணான்’ என்னும் பெயர் வழங்கப்படுகிறது. இதனை நம்பியாண்டார் நம்பி அருளிச் செய்த ‘திருஞான சம்பந்தர் திருவந்தாதி’ என்னும் நூலில் உள்ள
“கண்டினம் சூழ்ந்தவளை பிரம்போர் கழுவா உடலம்
விண்டினஞ் சூழக் கழுவின வாக்கிய வித்தகனே” (6)
“குழுவாய் எதிர்ந்த உறிக்கைப் பறிதலைக் குண்டர்தங்கள்
கழுவா உடலம் கழுவின வாக்கிய கற்பகமே” (28)
என்னும் பாடல் பகுதிகளாலும் தெளியலாம். கழுவா உடலம் எனினும் மண்ணா மேனி எனினும் பொருள் ஒன்றே. ஒட்டக் கூத்தரின் தக்கயாகப் பரணியிலும்,
“மண்ணா உடம்பு - வருவோன் தன்னை நோக்கி” (219)
எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கையுதிர்த்தல்
தமக்கு பிடிக்காதவர்கள் பிடிக்காத மொழிகளைப் பேசின், அப்பால் போங்கள் என்று வாயால் சொல்லாமல், கையை அசைத்து அப்பால் போகும்படிக் குறிப்பு காட்டுதல் சமணத் துறவியர்களின் பழக்கமாம். குடிகாரன் ஒருவன் சமணத் துறவி ஒருவரை நோக்கிக் கூறாதன கூறிக் கிண்டல் செய்ய, அவனை அப்புறப்படுத்த அவர் கையசைத்தனாராம். இதனை,
“உண்டு தெளிந்து இவ்யோகத் துறுபயன்
கண்டால் எம்மையும் கையுதிர்க் கொண்மென
உண்ணா நோன்பி தன்னொடும் சூளுற்று
உண்மென இரக்குமோர் களிமகன்” (2:100-103)
“மையறு படிவத்து மாதவர் புறத்தெமைக்
கையுதிர்க் கோடலின்...” (5:54,55)
என்னும் பகுதிகள் அறிவிக்கின்றன.
ஐம்படைத்தாலி
இந்தக் காலத்தில் குழந்தைகளைக் காக்க அரையில் என்னென்னவோ கட்டுகின்றனர். அந்தக் காலத்தில் அரையில் ஐம்படைத் தாலி கட்டினர். காத்தல் கடவுளாகிய திருமாலின் வளை, ஆழி, கதை, வாள், வில் என்னும் ஐந்து படைக் கருவிகளைச் சிறிய வடிவில் பொன்னால் செய்து அரையில் கட்டுவர். இதற்குத்தான் ஐம்படைத் தாலி கட்டுதல் என்பது பெயர்.
“செவ்வாய்க் குதலை மெய்பெறா மழலை
சிந்து சின்னீர் ஐம்படை நனைப்ப” (3-137,138)
“அமளித் துஞ்சும் ஐம்படைத் தாலிக்
குதலைச் செவ்வாய்க் குறுநடைப் புதல்வர்” (7.56,57)
என்னும் பாடல் பகுதிகளால் இதனை அறியலாம். மற்றும், சங்க இலக்கியம் முதற்கொண்டு பல்வேறு நூல்களில் இச் செய்தி இடம் பெற்றுள்ளது.
கணவனை இழந்தோர்
அந்தக் காலத்தில், கணவரை இழந்தவர் துயரம் தாளாமல் பெருமூச்சு எறிந்து உயிர் துறப்பராம்; அல்லது தீக்குளிப்பராம்; அல்லது தவநோன்பு கொள்வராம். இதனை,
“காதலர் இறப்பின் கனை எரி பொத்தி
ஊதுலைக் குருகின் உயிர்த்து அகத்தடங்காது
இன்னுயிர் ஈவர் ஈயா ராயின்
நன்னீர்ப் பொய்கையின் நளிஏரி புகுவர்
நளிஏரி புகாஅ ராயின் அன்பரோடு
உடனுறை வாழ்க்கைக்கு நோற்றுடம் படுவர்
பத்தினிப் பெண்டிர்” (2:42-48)
என்னும் பகுதியால் அறியலாம். இரட்டைக் காப்பியங்களுள் மற்றொன்றான சிலப்பதிகாரத்திலும், கணவனை இழந்தவர் பெருமூச்செறிந்து உயிர்விடுதல் கூறப் பட்டுள்ளது. இதற்குப் பாண்டிமாதேவி எடுத்துக்காட்டு.
“காதலற் பிரிந்த நோயோடு உளங்கனன்று
ஊதுலைக் குருகின் உயிர்த்தனர் ஒடுங்கி” (4:58,59)
“காதலற் கெடுத்த நோயோடு உளங்கனன்று
ஊதுலைக் குருகின் உயிர்த்தனள் (22: 151,152)
என்பன சிலப்பதிகாரப் பகுதிகள். மறுமணம் செய்து கொள்ளாவிடினும் தவ நோன்பு கொள்ளலாம். ஆனால், தீக்குளிப்பு தேவையற்றது - கொடுமையானது - ஆண் பெண் சம நிலைக்கு முரணானது. அதாவது, இந்தக் காலத்திற்கு ஒவ்வாதது.
யானை முன் பறை
மதம் பிடித்த யானை வெளியில் செல்லின், மதயானை வருகிறது - அனைவரும் விழிப்பாயிருந்து தற்காத்துக் கொள்க என்று முன்னால் பறையறைந்து செல்வார்களாம்.
“ஒருபாற் படாஅது ஒரு வழித் தங்காது
பாகும் பறையும் பருந்தின் பந்தரும்
ஆதுல மாக்களும் அலவுற்று விளிப்ப
நீல மால்வரை நிலனொடு படர்ந்தெனக்
கால வேகம் களிமயக்கு உற்றென” (4:40-44)
என்னும் பகுதியில் ‘பாகும் (பாகரும்) பறையும்... அலவுற்று விளிப்ப’ என்றிருப்பது காண்க.
தொழுது பேசுதல்
அரசரிடம் ஒன்று பேசுவோர் முதலில் அரசனுக்கு வணக்கம் செய்தலும் வாழ்த்துச் சொல்லுதலும் வழக்கம். மணிமேகலை தெருவில் சென்றபோது, அவளைக் காலதர் (சன்னல்) வழியாகக் கண்ட எட்டி குமரன் என்பவன் வாசித்துக் கொண்டிருந்த யாழிசை பிழைபடச் செய்து அசையாதிருந்தான். அவனைக் கண்ட உதயகுமரன் என்னும் சோழ இளவரசன், நீ இவ்வாறு இருப்பதற்குக் காரணம் என்ன என வினவினான். எட்டி குமரன் அரசகுமரனை வணங்கிச் சொல்லலானான். இதனை,
“பாங்கிற் சென்று தான்தொழு தேத்தி
மட்டவிழ் அலங்கல் மன்ன குமரற்கு
எட்டி குமரன் எய்தியது உரைப்போன்” (4.62-64)
என்னும் பகுதி அறிவிக்கும். மற்றும், மணிமேகலையின் தோழியாகிய சுதமதி என்பாள், உதய குமரனை வாழ்த்திப் பேசினாள்:
“வார்கழல் வேந்தே வாழ்கநின் கண்ணி
தீநெறிப் படரா நெஞ்சினை ஆகுமதி” (5:28,29)
என்பது காண்க.
பேசத் தொடங்குமுன் மன்னரை வணங்கி வாழ்த்துவது போலவே பேச்சின் முடிவிலும் வாழ்த்துவது மரபு. சுதமதி இவ்வாறு உதயகுமரனை வாழ்த்தி முடித்தாள். இதனை,
“மிகைநா இல்லேன் வேங்தே வாழ்கஎன” (5:79)
என்பதால் அறியலாம். சிலப்பதிகாரத்திலும், இவ்வாறு மன்னனிடம் பேசத் தொடங்கும்போதும் முடித்த போதும் வாழ்த்தும் மரபு பல காதைகளில் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இரட்டைக் காப்பியங்கள் ஆயிற்றே.
குமரியும் காவிரியும் ஆடல்
வடபுலத்திலிருந்து தமிழகம் வருவோர், குமரியிலும் காவிரியிலும் குளித்தல் வழக்கமாம். சுதமதியின் தந்தை வட புலத்திலிருந்து குமரியும் காவிரியும் ஆடி (நீராடி) வந்தோருடன் சேர்ந்துகொண்டு புகார் வந்தானாம். இதனை,
“குரங்கு செய்கடல் குமரியம் பெருந்துறைப்
பரந்துசெல் மாக்களொடு தேடினன் பெயர்வோன்
கடல்மண்டு பெருந்துறைக் காவிரி ஆடிய
வடமொழி யாளரொடு வருவோன்” (5:37-40)
என்பதால் அறியலாம். ‘குரங்கு செய்கடல்’ என்பது, இராமனுக்காக வானரர்கள் கடலில் அணை கட்டிய செயலைக் குறிக்குமாயின், இராம - இராவணப்போர் இந்தியாவிற்குள்ளேயே நடைபெற்றது என்போரின் ஆராய்ச்சிக் கருத்து அடிபட்டுப் போகலாம்.
மற்றும், ஒழுக்கம் தவறிய பெண்களும் அத்தீவினையைத் (பாவத்தைத்) தீர்த்துக்கொள்ள வந்து குமரியாடுதல் உண்டாம். வாரணாசி என்னும் ஊரிலிருந்த அபஞ்சிகன் என்னும் அந்தணனின் மனைவி சாலி என்பாள், ஒழுக்கம் தவறியதால் அந்தத் தீமையைப் போக்கிக் கொள்ள வந்து குமரியாடினாளாம். இதனை,
“ஆரண உவாத்தி அபஞ்சிகன் என்போன்
பார்ப்பனி சாலி காப்புக்கடை கழிந்து
கொண்டோற் பிழைத்த தண்டம் அஞ்சித்
தென்திசைக் குமரி ஆடிய வருவோள்” (13:4-7)
என்னும் பகுதியால் அறியலாம்.
காமத்து இயற்கை
உவவனம் சென்ற மணிமேகலையை அடைவதற்காக வந்த உதய குமரன், மணிமேகலை ஆங்கிருந்த பளிங்கு அறைக்குள் புகுந்துகொண்டபின், அவளை எப்படியாவது யான் அடைவேன் எனச் சுதமதியிடம் கூறிச் சென்று விட்டான். பின்னர் வெளிவந்த மணிமேகலை சுதமதியிடம் பின்வருமாறு கூறுகிறாள்:
கற்போ-தவ உணர்வோ இல்லாதவள், இழிந்த குலத்தினள், காசுக்கு உடலை விற்கக் கூடிய வேசி என்றெல்லாம் என்னை இகழினும் என்னை விரும்பிய அந்தப் புதியவனாகிய - முன்பின் பழகாதவனாகிய உதய குமரன் பின்னே என் உள்ளம் சென்றது. சுதமதியே! இது தான் காமத்தின் இயற்கை போலும் - என்று கூறினாள்:
“கற்புத் தானிலள் கற்றவ உணர்விலள்
வருணக் காப்பிலள் பொருள் விலையாட்டி என்று
இகழ்ந்தன னாகி நயந்தோன் என்னாது
புதுவோன் பின்றைப் போனதென் நெஞ்சம்
இதுவோ அன்னாய் காமத் தியற்கை
இதுவே யாயின் கெடுக அதன்திறம்” (5:86-91)
என்பது பாடல் பகுதி. இதனால், தவ ஒழுக்கம் பூண்டோர்க்கும் உள்ளம் தடுமாறுதல் இயல்பு என்பது புலப் படும். பொறுத்தருள வேண்டும் என்ற வேண்டுகோளுடன், குமரகுருபர அடிகளாரின் நீதி நெறி விளக்கம் என்னும் நூலில் உள்ள ஒரு பாடலை இவண் தருகிறேன்.
“ஏந்தெழில் மிக்கான் இளையான் இசைவல்லான்
காந்தையர் கண்கவர் நோக்கத்தான்-வாய்ந்த
நயனுடை இன்சொல்லான் கேள்எனினும் மாதர்க்கு
அயலார்மேல் ஆகும் மனம்” ( )
என்பது பாடல். கணவன் எல்லா வகையிலும் சிறந்தவன் எனினும், ஒரு பெண்ணுக்கு மற்றோர் ஆடவன்பால் மனம் நாடக் கூடுமாம். அதாவது, மனம் மாற்றானைப் பற்றி நினைத்துப் பார்க்கக் கூடுமாம். இப்பாடல் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது.
உயிர்க் கடன்
கொற்றவைக்கு (துர்க்கைக்கு) உயிர்க்கடன் கொடுக்கும் வழக்கம் பண்டு இருந்தது. உயிர்க்கடன் தருவோர் தலைமுடியை மரத்தில் கட்டி விட்டுக் கழுத்தை அரிந்து கொள்வாராம். தலைமுடியை மரத்தில் கட்டி இவ்வாறு கழுத்தை அரிந்து கொண்டபின் தலைகள் மரத்தில் தொங்கிக்கொண்டிருக்குமாம். காடு அமர் செல்வியாகிய கொற்றவையின் கோட்டத்தில் இக்காட்சியைக் காணலாம்.
“உலையா உள்ளமோடு உயிர்க்கடன் இறுத்தோர்
தலைதுாங்கு நெடுமரம் தாழ்ந்து புறஞ்சுற்றிப்
பீடிகை ஓங்கிய பெரும்பலி முன்றில்
காடமர் செல்வி கழிபெருங் கோட்டம்” (6:50-53)
என்பது பாடல் பகுதி. சிலப்பதிகாரத்திலும் உயிர்க் கொடை கூறப்பட்டுள்ளது. ஒட்டக் கூத்தரின் தக்கயாக பரணியில்,
“சிரந்தெரிந்தன அரிந்தரிந்து குவைசெய்த
பைரவர்கள் செந்நிலம்
பரந்தெரிந்து பொடிசெய்ய மற்றவை
பரிக்க வந்தவர் சிரிப்பரே” (51)
எனவும், செயங் கொண்டாரின் கலிங்கத்துப் பரணியில்,
“வீங்குதலை நெடுங்கழையின் மிசைதோறும்
திசைதோறும் விழித்து நின்று
தூங்குதலை சிரிப்பன கண்டு உறங்குதலை
மறந்திருக்கும் சுடர்க்கண் சூர்ப்பேய்” (கோயில் பாடியது-21)
எனவும் உள்ள பாடல்கள் ஈண்டு ஒப்புநோக்கத்தக்கன.
இறந்தோர் கோயில்
சிறந்தவர்கள் இறந்துவிடின் அவர்கட்குக் கோயில் எடுத்தல் மரபு. இதனை,
“அருந்தவர்க் காயினும் அரசர்க் காயினும்
ஒருங்குடன் மாய்ந்த பெண்டிர்க் காயினும்
நால்வேறு வருணப் பால்வேறு காட்டி
இறந்தோர் மருங்கின் சிறந்தோர் செய்த
குறியவும் நெடியவும் குன்றுகண் டன்ன
சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டமும்” (6:54-59)
என்னும் பகுதி அறிவிக்கிறது. சுடுமண் = செங்கல்.
பிணம் படும் பாடு
பிணத்தைச் சுடுவதும் பள்ளம் வெட்டியும் தாழியில் இட்டும் புதைப்பது மன்றி. அப்படியே முழு உருவத்துடன் தரையின் மேலே போட்டுவிட்டுப் போவதும் உண்டு எனத் தெரிகின்றது. சக்கர வாளக் கோட்டம் உரைத்த காதையில் இது விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள
“சுடுவோர் இடுவோர் தொடுகுழிப் படுப்போர்” (66)
என்னும் அடியில் சுடுவோர் என்றது எரித்தலையும், தொடு குழிப் படுப்போர் என்பது புதைப்பதையும், இடுவோர் என்பது வெளியிலே போட்டுவிட்டுப் போவதையும் குறிக்கும். இந்தக் காலத்தில், சுடுகாடு எனச் சுடும் பகுதியையும், இடுகாடு எனப் புதைக்கும் பகுதியையும் குறிப்பர். அந்தக் காலத்தில் வெளியில் இட்டுச் (போட்டுச்) செல்லும் பகுதியையே இடுகாடு என்பது குறித்ததாகத் தோன்றுகிறது. இதற்கு உரிய சான்று:-
பெண்களின் செம்பஞ்சு ஊட்டிய அழகிய அடிகளை நரிகள் கவ்விச் செல்கின்றனவாம். ஆடை உடுத்தி மறைத்திருந்த அல்குலைக் (பிறப்புறுப்பைக்) கழுகுகள் குடைந்து உண்கின்றனவாம். கடகம் அணிந்த கையை நாய் கவ்விச் செல்கிறதாம். சாந்து பூசிய எடுப்பான அழகிய முலைகளைப் பருந்துகள் கொத்தி உண்கின்றனவாம். ஒருபேய், பெண்ணின் தலையை முழவுபோல் கையில் ஏந்திக் கண்களைத் தோண்டி உண்கிறதாம். இத்தக் காட்சி.
“வழுவொடு கிடந்த புழு ஊன் பிண்டத்து
அலத்தகம் ஊட்டிய அடிகரி வாய்க்கொண்டு
உலப்பில் இன்பமோடு உளைக்கும் ஓதையும்
கலைப்புற அல்குல் கழுகுகுடைந் துண்டு
நிலைத்தலை நெடுவிளி எடுக்கும் ஓதையும்
கடகம் செறிந்த கையைத் தீகாய்
உடையக் கவ்வி ஒடுங்கா ஓதையும்
சாந்தம் தோய்ந்த ஏங்திள வனமுலை
காய்ந்தபசி எருவை கவர்ந்துண் ஓதையும்
பண்புகொள் யாக்கையின் வெண்பலி அரங்கத்து
மண்கணை முழவ மாக ஆங்கோர்
கருந்தலை வாங்கிக் கையகத்து ஏந்தி
இரும்பேர் உவகையின் எழுந்தோர் பேய்மகள்
புயலோ குழலோ கயலோ கண்ணோ
குமிழோ மூக்கோ இழதோ கவிரோ
பல்லோ முத்தோ என்னாது இரங்காது
கண்தொட்டு உண்டு கவையடி பெயர்த்து
தண்டாக் களிப்பின் ஆடும் கூத்து” (6:109–126)
எனப் புனைந்துரைக்கப் பட்டுள்ளது. இதனால், பிணங்களைச் சுடாமலும் புதைக்காமலும் வெளியே போட்டுவிட்டுச் செல்லும் வழக்கமும் இருந்தது என்பது தெளிவு.
மணிமேகலை நூல் புத்த காப்பியம். புத்தமதம் மணிமேகலை காலத்தில் தமிழகத்தில் சமணம் போலவே பரவியிருந்தது. புத்தமதத்தினர் பிணங்கள் வீணாகாதவாறு பிற உயிர்கள் உண்ணட்டும் என வெளியில் அப்படியே போட்டு விட்டுச் செல்வது உண்டு என்பதற்கு வேறு சான்றுகளும் உண்டு.
புத்த மதத் தலைவரும் அரசியல் தலைவருமாகிய தலாய்லாமா திபேத்தில் இருந்த காலத்தில், செர்மானியர் ஒருவர் ஏழாண்டு காலம் அங்கிருந்தாராம். அவர் எழுதிய ‘திபேத்தில் ஏழாண்டுகள்’ என்னும் நூலின் தமிழ்மொழி பெயர்ப்பை யான் படித்தேன். திபேத்துப் புத்தமதத்தினர், பிணங்களைக் குறிப்பிட்ட மலைப் பகுதிகட்கு எடுத்துச் சென்று, கண்ட துண்டமாக வெட்டித் தூக்கித் தூக்கி எறிவராம். அவற்றைச் சில பறவைகளும் சில விலங்குகளும் பெற்று உண்ணுமாம். இவ்வாறு அவர் எழுதியுள்ளார். மற்றும் சிவனுடைய திருவடிகளை மலரிட்டு வணங்காதவர்களும் திருப்பெயரை ஒதாதவர்களும் காக்கைக்கு இரையாகுவர் என்னும் கருத்தில், நாவுக்கரசர்,
“பூகைக் கொண்டு அரன் பொன்னடி போற்றிலார்
நாக்கைக் கொண்டரன் காமம் நவில்கிலார்
ஆக்கைக்கே இரை தேடி அலமந்து
காக்கைக்கே இரை யாகிக் கழிவரே” (பொது)
எனப் பாடியுள்ளார். நாவுக்கரசர் காலத்தில் தமிழகத்தில் சமணமும் புத்தமும் மக்களால் பின்பற்றப்பட்டிருந்தன என்பது வரலாறு. காக்கைக்கு இரையாகுவர் என்பதும், அவர்தம் உடல்கள் வெளியில் போடப்படும் என்பதற்குத் தக்க சான்றாகும். இந்தக் காலத்தில் இப்பழக்கம் இல்லாதது நலம்.
பிணங்களைத் தாழியில் (சாலில்) அடைத்துவைக்கும் பழக்கமும் இருந்தது. இந்தச் சாலுக்கு ‘முது மக்கள் தாழி’ என்பது பெயர். இது பல நூல்களிலும் கூறப்பட்டுள்ளது.
சிறாரைத் தூங்கச் செய்தல்
சிறுவர் கூட்டத்துடன் தேர் இழுத்து விளையாடிக் களைப்புற்றுத் தாங்கும் சிறார்களைக் காற்று கறுப்பன் (பேய் பிசாசு) அண்டாதவாறு, சிறார்காக்கும் பெண்கள், பேய்ப்பகையாகிய வேப்பிலை - வெண்சிறு கடுகுகளைச் சுற்றிப் போட்டுத் தூபம் காட்டிக் கண்ணேறு கழித்து உறங்க வைப்பார்களாம். இதனை
“தளர்நடை ஆயமொடு தங்கா தோடி
விளையாடு சிறுதேர் ஈர்த்து மெய் வருந்தி
அமளித் துஞ்சும் ஐம்படைத் தாலிக்
குதலைச் செவ்வாய்க் குறுநடைப் புதல்வர்க்குக்
காவல் பெண்டிர் கடிப்பகை எறிந்து
தூபங் காட்டித் தூங்குதுயில் வதியவும்” (7:54-59)
என்பதால் அறியலாம்.
இரவுக் காவல்
இரவில், அரண்மனையில் உள்ள நாழிகை வட்டில் (கடிகையாரம் போன்றது) காட்டும் நேரத்தைக் கொண்டு, மணி (நேரம்) ஊர் மக்கட்கு உரத்த ஒலி வாயிலாக அறிவிக்கப்படுமாம். ஊர் காப்பாளர் ஊரைச் சுற்றிச் சுற்றித் துடி அடித்துக் கள்வர்களினின்றும் காத்து வருவராம். இவற்றை,
“பழவிறல் மூதூர் பாயல் கொள் நடுநாள்
கோமகன் கோயில் குறுநீர்க் கன்னலின்
யாமங் கொள்பவர் ஏத்தொலி அரவமும்” (7:63-65)
“ஊர் காப்பாளர் எறிதுடி ஓதையும்” (7:69)
என்பவற்றால் அறியலாம். குறுநீர்க் கன்னல் என்பது, துளித் துளியாக நீர் சொட்டும் ஏதோ ஒரு வகை அளவைக் கொண்டு அந்தக் காலத்தில் நேரத்தின் அளவை (மணியை) அறிந்து வந்தார்கள் என்பதைப் புலப்படுத்தும்.
தோப்பி
தோப்பி என்பது, நெல்லோடு சில பொருள்களைச் சேர்த்துக் காய்ச்சித் துழவி உண்டாக்கும் ஒருவகைக் கள்ளாகும். இது, வீட்டிலே கூடக் காய்ச்சி உண்டாக்கப் பட்டதாம்.
“முழங்குநீர் முன்றுறைக் கலம்புணர் கம்மியர்
துழந்து அடு கள்ளின் தோப்பி உண்டு அயர்ந்து
பழஞ்செருக்கு உற்ற அனந்தர்ப் பாணியும்” (7:70-72)
என்பது பாடல் பகுதி. கலம் புணர் கம்மியர்=கப்பவில் வேலை செய்யும் தொழிலாளர்கள், இவர்கள் தோப்பி உண்கின்றனர். செருக்கு, அனந்தர் என்னும் சொற்களின் பொருள், தேநீரோ (Tea), காபியோ (Coffee) பருகினால் உண்டாவது போன்ற ஒருவகை விரு விருப்பு - உற்சாகம் என்பதாகும். ஈண்டு ‘பழஞ் செருக்கு’ என்பது குறிப்பிடத் தக்கது. வேலை செய்வதால் அலுத்து விருவிருப்பு குறைந்து விடுகிறது. தோப்பி உண்பதால், மீண்டும் பழைய விரு விருப்பு உண்டாகிறதாம். துழந்து அடு கள்ளின் தோப்பி உண்டு என்பது கள்ளிலே பல வகை உண்டு; அவற்றுள் தோப்பி என்பது ஒருவகை என்னும் குறிப்பைத் தருகிறது. இது வீட்டிலேயும் காய்ச்சப்படும் என்பதைப் பெரும் பாணாற்றுப் படையிலுள்ள
“நாள் ஆ தந்து நறவு கொடை நொளைச்சி
இல் அடு கள்ளின் தோப்பி பருகி” (141, 142)
என்னும் பகுதியால் அறியலாம். இதற்கு நச்சினார்க்கினியர் எழுதியுள்ள பொருள் அப்படியே வருமாறு:-
“விடியற் காலையிலே அவர்கள் பசுக்களை அடித்துக் கொண்டு போந்து அவற்றைக் கள்ளுக்கு விலையாகப் போக்கி, அதற்குப் பின்பாகத் தமது இல்லிலே சமைத்த கள்ளுக்களில் இனிதாகிய நெல்லால் செய்த கள்ளை உண்டு” - என்பது அது.
கள்ளுக் கடையிலே கள்ளுக்கு விலையாகப் பசுக்களைத் தந்து கள் பெற்றுப் பருகுவதும், பின்பு வீட்டிலே சமைத்த தோப்பிக் கள்ளை உண்பதும் வழக்கமெனத் தெரிகிறது. இது, வீட்டில் செய்யும் தேநீர், காபி போன்றது போலும். தற்செயலான வாய்ப்பு நேர்ந்ததால் ஈண்டு மற்றொரு கருத்தைக் காணலாம்:-
கள்ளுக் கடையிலே கள்ளின் விலைக்கு ஈடாகப் பசுவைக் கொடுத்தார்கள் என்பதால் அறியக்கூடியது ஒன்றுண்டு. அதாவது: அந்தக் காலத்தில் மாடு செல்வமாகக் (காசாகக்) கருதப்பட்டது என்பது. இதனால் தமிழில் மாடு என்னும் விலங்கைக் குறிக்கும் சொல் செல்வத்தையும் குறிக்கலாயிற்று, கன்னட மொழியில் ‘தன’ என்னும் சொல் மாட்டையும் செல்வத்தையும் குறிக்கும்; இலத்தீனில் ‘Pecunia’ என்னும் சொல்லும் மாட்டையும் செல்வத்தையும் குறிக்கும் - என்பதே அந்தக் கருத்து. மீண்டும் கள்ளுக்கு வருவோம். ஒளவையார் அதியமான் நெடுமான் அஞ்சியைப் பாடிய
“சிறிய கள் பெறினே எமக்கு ஈயும் மன்னே
பெரிய கள் பெறினே
யாம் பாடத் தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே” (235:1-3)
என்னும் புற நானுற்றுப் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ள கள்ளும் அரண்மனையில் ஆக்கியதாகத்தான் இருக்க வேண்டும். இந்தக் காலத்தில் வெறுப்புக்கும் ஒறுப்புக்கும் உரிய கள்ளச் சாராயம் காய்ச்சுவது போன்றது அன்று வீட்டில் காய்ச்சும் தோப்பி, இந்தக் காலத்தில் தேநீர், காபி வந்து விட்டதால், வீட்டிலோ - நாட்டிலோ மக்கள் மது காய்ச்சாமல் இருப்பார்களாக.
புனிறு தீர் கயக்கம்
பிள்ளை பெற்ற பெண்கட்குத் ‘தீட்டுக் கழித்தல்’ என்னும் ஒரு பழக்கவினை (சடங்கு) நடத்தல் உண்டு. அதுவரையும் பிள்ளை ஈன்ற பெண் கையில் வேப்பிலையை வைத்துக் கொண்டு இருப்பதும் நடப்பதும் வழக்கம். வேப்பிலைக்கும் ஐயவிக்கும் (வெண்சிறு கடுகுக்கும்) கடிப் பகை என்னும் பெயர் உண்டு. கடி = பேய், கடிப்பகை = பேய்ப்பகை. புனிறு என்பது, அண்மையில் பிள்ளை ஈன்ற நிலை என்னும் பொருளது. தீட்டுக் கழித்ததும் புனிறு என்னும் நிலை கழிந்து விடுகிறது. கயக்கம் = கலக்கமான நிலை. புதுவை-கடலூர்ப் பகுதியில் சில பல குடும்பங்களில்குறிப்பாக எங்கள் (சு. ச) குடும்பங்களில் பிள்ளை பெற்ற ஒன்பதாம் நாள் தீட்டுக் கழிப்பதும், பெற்ற தாயைக் குளிக்க வைப்பதும் வழக்கம். இந்தக் காலத்தில் இந்த நாள் கணக்கில் குடும்பத்துக்குக் குடும்பம் மாறுதலும் உண்டு. இது மணிமேகலை நூலில் பின்வருமாறு சொல்லப் பட்டுள்ளது: பிள்ளை பெற்ற பெண்கள் தீட்டு கழிவதற்காக, வேப்பிலை - ஐயவி - தூமத்துடன் சென்று குளத்தில் குளிப்பார்களாம்:
“அரவாய்க் கடிப்பகை ஜயவிக் கடிப்பகை
விரவிய மகளிர் ஏந்திய தூமத்துப்
புதல்வரைப் பயந்த புனிறுதீர் கயக்கம்
தீர்வினை மகளிர் குளன் ஆடு அரவமும்” (7:73-76)
என்பது பாடல் பகுதி. அரவாய்=வேப்பிலை. வேப்பிலையின் விளிம்பு அரம்போல் இருப்பதால் அரவாய் என்னும் பெயர் ஈயப்பட்டது.
குளத்தில் பச்சைத் தண்ணீரில் குளித்தார்கள் என்பது இக்காலத்து மேட்டுக்குடி மக்கட்கு வியப்பாயிருக்கலாம். இக்காலத்திலும் ஏழை எளியவர்கள் நிலை இதுதான். வசதி படைத்தவர்கள் பச்சைத் தண்ணீரைத் தொடுவதில்லை. வசதியற்ற ஏழைப் பெண் ஒருத்தி, மருத்துவமனையில் பிள்ளை பெற்று விட்டு வந்து, மூன்றாம் நாளே எருமுட்டை தட்டினாள். ஒரு ‘ரிக்ஷா’ வண்டிக்காரன் மனைவி இவள், இந்தக் காட்சியை யான் கண்ணால் நேரில் கண்டேன். மற்றும், அந்தக் காலத்தில் வீடுதோறும் கிணறு இருக்கவில்லை. நான் சிறுவனாய் இருந்த போது எங்கள் வீட்டுத் தோட்டத்தில் கிணறு உண்டு. எங்கள் வீட்டின் இரு புறங்களிலும் உள்ள (2 + 2 = 4) நான்கு வீடுகளில் கிண்று இல்லை. அவ்வீட்டினர் எங்கள் கிணற்றில் நீர் எடுத்தனர். (இப்போது அவர்களும் கிண்று தோண்டிக் கொண்டுள்ளனர்).
இருபதாம் நூற்றாண்டிலேயே இந்த நிலை எனில், பல நூற்றாண்டுகட்கு முன் வீட்டில் கிணறு இன்மையால் குளத்தில் குளித்ததில் வியப்பில்லை. வீட்டில் கிணறு இருப்பினும், திருக்கோயில் குளத்தில் குளிப்பது ஒரு நல்வினை (புண்ணியம்) என்று கருதினர். ஈண்டு,
“மடையில் வாளை பாய மாதரார்
குடையும் பொய்கைக் கோலக்கா உளான்” (1:1,2)
என்னும் ஞானசம்பந்தரின் திருக்கோலக்காப் பதிகப் பாடல் பகுதி ஒப்பு நோக்கத் தக்கது. பொய்கை = குளம் (இந்தக் காட்சியைத் திருக்கோலக்காவில் 1941 ஆம் ஆண்டு ஒரு நாள் காலை யான் (சு. ச)நேரில் கண்டுள்ளேன். மற்றும், பத்தாம் நாள் இரவில் நீராட வேண்டும் என ஆரிய மொழி நூல்களில் கூறப்பட்டுள்ளதாம். அதற்கும் தமிழரின் பழக்க வழக்கத்திற்கும் தொடர்பில்லை. ஒற்றைப் படையாம் நாளில் நீராடல் தமிழர் வழக்கம்.
ஊடலில் காலில் விழல்
மனைவி ஊடல் கொள்ளின், ஊடலைத் தீர்க்க அவள் காலில் கணவன் விழுதல் அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்குமி என்பவள் ஊடல் கொள்ள, அவளுடைய காமவயப்பட்ட கணவனாகிய இராகுலன் என்பான் அவள் காலில் விழுந்து வணங்கினானாம். (இது முற்பிறப்புச் செய்தி).
“இலக்குமி கேளாய் இராகுலன் தன்னொடு
புலத்தகை எய்தினை பூம் பொழில் அகவயின்
இடங்கழி காமமொடு அடங்கானாய் அவன்
மடந்தை மெல்லியல் மலரடி வணங்குழி” (10:20-23)
என்பது பாடல் பகுதி. இது நடக்குமோ நடக்காதோ - இவ்வாறு எழுதுதல் ஓர் இலக்கிய மரபாய் விட்டது. சிவப்பிரகாச அடிகளாரின் பிரபுலிங்க லீலை நூலில் ஒரு பெரிய அடிவணக்கம் கற்பனையாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது:-
சிவன் உமையின் ஊடலைத் தணிக்க உமையின் காலில் விழுந்தாராம். அவரது முடியில் பிறை நிலவு, பாம்பு, கங்காதேவி உண்டு. உமையின் நெற்றிப் பகையாகிய பிறை நிலவும், அல்குல் பகையாகிய பாம்பும் தன் காலில் படும்படி விழுந்ததற்கு மகிழாமல், சககளத்தி (ஒத்த மனைவி) யாகிய கங்காதேவி தன் காலில் படும்படி விழுந்ததற்காக உமா தேவி மகிழ்ந்தாளாம். பாடல்:
“ஆதி பகவன் தனதுாடல் தணிப்பான்
பணிய அவ்விறைவன்
பாதம் இறைஞ்சு மதற்கும் நெற்றிப்
பகையும் அல்குல் பகையுமாம்
சீத மதியும் அரவும் விழும் செயற்கும்
உவகை செயாமல் அலை
மாது பணியுமதற்கு மனமகிழும்
உமையை வணங்குவாம்”
என்பது (துதிகதி-2) பாடல். அலைமாது = கங்கா தேவி.
கம்ப ராமாயணத்தில் கிளைக் கதையாக இரணியன் கதை வருகிறது. திருமாலை வணங்கும்படி இரணியனுக்குக் கூறியபோது, வணங்குதல் என்பது பெண்டிரோடு ஊடல் கொள்ளும் நாளிலும் எனக்கு இல்லை என்று கூறி அண்டங்கள் நடுங்கும்படி இடி சிரிப்புச் சிரித்தானாம்:
“வணங்குதல் மகளிர் ஊடல்
நாளினும் இலதே என்னா அண்டங்கள் நடுங்கநக்கான்”
என்பது கம்பராமாயணப் பாடல் பகுதி. இதனால், மகளிர் ஊடல் கொள்ளும்போது வணங்குதல் உண்டு என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
தமரகம் புகுதல்
போர்க்களத்தில் கணவனை இழந்த பெண்கள், கைம்பெண் ஆனதும், தம் தாய் வீட்டில் சென்று தங்கும் வழக்கம் உண்டு. மாலையைப் புனைந்துரைக்கும் (வருணிக்கும்) சாத்தனார், மாலையில் ஞாயிறைப் பறி கொடுத்த புகார் நகரில், கணவனை இழந்து தாய் வீடு செல்லும் கைம்பெண் போல், அந்தி என்னும் கலங்கிய பசலை மெய்யுடைய பொழுது வந்ததாம்.
“அமரக மருங்கில் கணவனை இழந்து
தமரகம் புகூஉம் ஒரு மகள் போலக்
கதிராற்றுப் படுத்த முதிராத் துன்பமோடு
அந்தி என்னும் பசலை மெய்யாட்டி
வந்திறுத் தனளால் மாநகர் மருங்கென்” (6,137-141)
என்பது பாடல் பகுதி.
குல தெய்வப் பெயர் இடல்
தங்கள் குல தெய்வத்தின் பெயரைத் தம் பிள்ளைகட்கு இடுவது ஒரு வகை மரபு. முருகன் பெயர்களையே வைக்கும் குடும்பங்கள் உண்டு. அதேபோல், திருமாலின் பெயர்களை எந்த அவதாரப் பெயர்களாயிருந்தாலும் சரி . வைப்பவர்கள் உளர். ஐயனார் பெயர்களும் அப்படியே. அங்காளம்மனைக் குல தெய்வமாகக் கொண்டவர்கள் அங்கம்மா, அங்கப்பன் போன்ற பெயர்களைக் கொள்வர். அரங்கன் தொடர்பான பெயர், பாண்டுரங்கன், அரங்கசாமி, (அ)ரங்கன், (அ)ரங்கநாயகி, (அ)ரங்கநாதன் முதலிய பெயர்களையே வைக்கும் குடும்பம் உண்டு. இவ்வாறு, கோவலன், தங்கள் குல தெய்வமாகிய மணிமேகலா தெய்வத்தின் பெயரையே தன் மகளுக்கு மணிமேகலை என வைத்தான்.
இவ்வாறு இன்னும் பல பழைய பழக்கவழக்க மரபுகள் மணிமேகலைக் காப்பியத்தில் சுவைபெறக் கூறப்பட்டுள்ளன.
13. மொழி ஒப்பியல்
(Comparative Philology)
ஒரு பொருளோடு மற்றொரு பொருளை ஒப்பிட்டுப் பார்க்கும் வழக்கம் உலகியலில் உண்டு. நாம் இதற்கு முன் பார்த்தறிந்தவர் போன்றுள்ள மற்றொருவரைக் காணின், உடனே முன்னவரின் நினைவு வருகிறது. அவர் போலவே இவரும் இருக்கிறாரே என்று எண்ணுகிறோம். இருவரிடையே காணப்படும் ஒற்றுமை தொடர்பாக ஒரு சிறிய ஆராய்ச்சியிலும் சிலர் ஈடுபடுவதுண்டு. இவர் என்ன - அவர் பிள்ளையா யிருப்பாரா என்று சிலரும், உடன் பிறந்தவரா யிருப்பாரா அல்லது பங்காளியா யிருப்பாரா என்று சிலரும் எண்ணக்கூடும். ஒற்றுமையுடையவர்களுள் பெரும்பாலோர் உறவினராயிருப்பர். சிறுபாலார் ஒருவகை உறவும் இன்றியே, இயற்கையாக - தற்செயலாக ஒற்றுமை அமையப்பெற்றிருப்பர். இவ்வாறு ஒருவரோடு இன்னொருவரை ஒப்பிட்டுப் பார்ப்பது போலவே, ஒரு மொழியோடு பிற மொழிகளை ஒப்பிட்டுப் பார்த்து ஆராயும் வழக்கம் பிற்காலத்தில் ஏற்பட்டது.
நாம் வாழும் இவ்வுலகம் பல்வேறு பகுதிகளாய்ப் பிரிந்து கிடக்கிறது. ஒவ்வொரு பகுதியிலும் பற்பல மொழிகள் பேசப்படுகின்றன. உலகில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் பேசப்படும் மொழிகள் ஒன்றோடொன்று ஒற்றுமையுடையனவாய் இருத்தல் இயல்பு. ஒற்றுமையுடைய மொழிகள் ‘ஒரு குடும்ப மொழிகள்’ என மொழியியல் அறிஞர்களால் கூறப்படுகின்றன. இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பம், சித்திய மொழிக் குடும்பம், திராவிட மொழிக் குடும்பம், சீனோ-திபேத்திய மொழிக் குடும்பம், ஆப்பிரிக்க மொழிக் குடும்பம், அமெரிக்க மொழிக் குடும்பம் முதலியனவாகப் பல்வேறு மொழிக் குடும்பங்கள் பேசப்படுகின்றன.
ஒரு மொழியும் அதிலிருந்து பிறந்த பல மொழிகளும், ஒரு மொழியும் அதிலிருந்து பிரிந்த பல மொழிகளும், ஒரு மொழி திரிந்து வேற்று மொழிகளின் கலப்பினால் உரு மாறிய பல மொழிகளும் ஒவ்வொரு குடும்பம் எனக் கூறப்படும். ஒரு குடும்ப மொழிகள் நாளடைவில் தமக்குள் பல்வேறு வகையான மாறுபாடுகள் பெற்றிருப்பினும், அவற்றின் அடிச்சொற்கள் பெரும்பாலும் ஒத்திருக்கும். ஒரு குடும்ப மொழிகட்குள்ளேயே, மிக மிக நெருங்கிய மொழிகளின் அடிச்சொற்கள் கட்டாயம் ஒத்திருக்கும்; நெருக்கம் குறைந்த ஒரு குடும்ப மொழிகளில் பெரும்பாலான அடிச்சொற்கள் ஒத்தில்லாவிடினும், அப்பா, அம்மா முதலிய முறைப் பெயர்களும், ஒன்று, இரண்டு முதலிய எண்ணுப் பெயர்களும் இன்ன பிறவுமாவது ஒத்திருக்கும். இப்படிப் போல உள்ள சில அல்லது பல ஒற்றுமைகளைக் கொண்டு ஒரு குடும்ப மொழிகளை அடையாளங் கண்டுகொள்ளலாம். இந்த அடிப்படையிலேயே உலக மொழிகள் மேற்கூறிய பல்வேறு குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. மொழிகள் பல குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டிருப்பதைத் தொடர்ந்து மொழி ஒப்பியல் ஆராய்ச்சிகளும் விரிவும் வளர்ச்சியும் அடைந்து வருகின்றன. இந்த ஒப்பியல் மொழியாராய்ச்சி சுவைமிக்க ஒரு கலையாகவும் காட்சியளிக்கிறது.
பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சர். வில்லியம் ஜோன்சு (Sir William Jones) என்பவர் வடமொழி என்கிற சமசுகிருதம் பயின்றார். சமசுகிருத மொழிக்கும் - கிரேக்கம், இலத்தின் முதலிய ஐரோப்பிய மொழிகட்கும் இடையேயுள்ள சில ஒற்றுமைகள் அவரது உள்ளத்தைக் கவர்ந்தன. மேலும் ஆராய்ந்து, சமசுகிருதத்திற்கும் ஐரோப்பிய மொழிகட்கும் உள்ள ஒப்புமைகளை விளக்கி, அவை ஒரு குடும்ப மொழிகள் என்னும் உண்மையை கி.பி. 1786ஆம் ஆண்டில் வெளியிட்டு ‘மொழி ஒப்பியல்’ அல்லது ‘ஒப்பு மொழியியல்’ (Comparative Philology) என்னும் புதுத்துறைக்கு வித்திட்டார். பின்னர் இவரைத் தொடர்ந்து அறிஞர் பலர் இத்துறையில் ஈடுபட்டு ஆராய்ந்து பல உண்மைகளை வெளியிடலாயினர்.
‘ராஸ்மஸ் ராஸ்க்’ (Rasmus Rask) என்னும் டேனிஷ் காரர் (1787-1832) ஆரிய மொழிகள், பின்னோ - ஊக்ரிக் மொழிகள், திராவிட மொழிகள் ஆகியவற்றை அரிதின் முயன்று வகைப்படுத்தினார்.
‘பல்லஸ்’ (P.S. Pallas) என்பவர் 1791ஆம் ஆண்டிலும், ‘அதெலுங்’ (J. C. Adelung) என்பவர் 1817ஆம் ஆண்டிலுமாக, பல மொழிகளினின்றும் சொற்களைத் தொகுத்துச் சொல் அட்டவணைகள் சில படைத்தார்கள். இவ்வாறு மற்றும் சிலர் மொழி ஒப்பியல் ஆராய்ச்சியில் கருத்து செலுத்தினர்.
இத்தகைய ஆராய்ச்சிகளின் பயனாக, சமசுகிருதமும் மேற்கு ஆசிய மொழிகளும் ஐரோப்பிய மொழிகளும் 'இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பம்’ என்னும் பிரிவைச் சேர்ந்தவை என்னும் உண்மை நாளடைவில் தெளிவுபடலாயிற்று. ஆனால், வட இந்திய மொழிகளேயன்றித் தென்னிந்திய மொழிகளுங்கூட, சமசுகிருதம் என்னும் ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்னும் தவறான எண்ணம் ஐரோப்பிய மொழி நூலறிஞர் பலரிடையே நெடுங்காலம் நிலவி வந்தது.
இந்நிலையில், நேப்பாளத்தில் நெடுநாள் இருந்த ஹாட்சன்[ 1(Hodgson) என்னும் பெரியார், வட இந்திய - தென்னிந்திய மொழிகளிலுள்ள சொற்களைத் தொகுத்துச் சில ஆய்வுரைகளை வெளியிட்டு, வட இந்திய மொழிகளும் தென்னிந்திய
¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬1. Linguistic Survry of India VOL.1
¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬¬மொழிகளும் வெவ்வேறு குடும்பத்தவை என்னும் உண்மைக்குப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே வித்திட்டார். பம்பாயில் பன்னாள் வாழ்ந்த ‘பெறி’ என்னும் பேரறிஞர், இந்திய மொழிகளை நன்காராய்ந்து, வட இந்திய மொழிகள் ஆரியக் குடும்பத்தை யும் தென்னிந்திய மொழிகள் தமிழ்க் குடும்பத்தையும் சேர்ந்தவை என்னும் கொள்கையை வெளியிட்டார். இந்த ஆராய்ச்சி முடிவுகள் ஐரோப்பிய அறிஞர் சிலரின் உள்ளத்தை ஈர்த்தன.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப் பகுதியில் கால்டுவெல் (Caldwell) என்னும் பெரியார் தமிழ் நாட்டில் வந்து தங்கினார்; தென்னிந்திய மொழிகளைக் கற்றார்; அம்மொழிகளினிடையே உள்ள இலக்கண ஒப்புமைகளை ஆராய்ந்து பதினைந்து ஆண்டுகாலம் ஓயாது உழைத்து 'திராவிட (தென்னிந்திய) மொழிகளின் ‘ஒப்பிலக்கணம்’ (Comparative grammar of Dravidian Languages) என்னும் அரிய நூலை ஆக்கி 1856ஆம் ஆண்டில் வெளியிட்டு ‘ஒப்பிலக்கணம்’ என்னும் புதுத்துறையைத் தொடங்கி வைத்தார். இப்புது முயற்சியை மொழி நூலறிஞர்கள் மிகவும் வியந்து பாராட்டினர். ஒப்பிலக்கணத் துறையின் தந்தையாக விளங்கிய கால்டுவெல் அவர்களின் புதுத்துறைப் படைப்பைப் பாராட்டி, இங்கிலாந்திலுள்ள கிளாஸ்கோ பல்கலைக் கழகம் ‘டாக்டர்’ என்னும் சிறப்புப் பட்டம் அளித்துச் சிறப்புப் பெற்றது.
கால்டுவெல் அவர்களின் படைப்பைக் கண்டு ஊக்கங் கொண்ட ஐரோப்பிய மொழி நூலறிஞர் சிலர், தாமும் அவர் பாதையைப் பின்பற்றி ஒப்பிலக்கண நூல்கள் படைக்கலாயினர், அறிஞர் ‘ழீல் பிளோக்’ (Jules Bloch) என்பவர் ‘திராவிட மொழிகளின் இலக்கண அமைப்பு’ என்னும் தலைப்பில், திராவிட மொழிகளின் இலக்கணத்தை ஆராய்ந்து பிரெஞ்சு மொழியில் நூலொன்று படைத்தார். ‘பாப் (Fronz Bopp) என்பார் (1791-1867) இந்திய-ஐரோப்பிய மொழிகளின் ஒப்பிலக்கணம் இயற்றினார். ‘புரூக்மன்’ (Brugmann) என்பவர் (1849-1919) இந்திய - ஐரோப்பிய மொழிகட்குப் பொது ஒப்பிலக்கணம் படைத்தார். மற்றும், கோல் புரூக், கிரீம், மாக்ஸ் முல்லர், விட்னி முதலிய அறிஞர் சிலரும் இத்துறையில் ஈடுபட்டுப் பணியாற்றினர். இவ்வாறு இவர்கள் இந்திய - ஐரோப்பிய மொழிகளை ஆராய, ‘பிளீக்’ (Bleek) என்பவரோ, தென்னாப்பிரிக்க மொழிகளை ஆராய்ந்து அவற்றிடையே உள்ள ஒப்பிலக்கணக் கூறுகளைத் துருவியெடுத்துத் தந்து ‘தென்னாப்பிரிக்க மொழிகளின் ஒப்பிலக்கணம்’ (Comparative Grammar of the South African Languages)என்னும் நூலை வெளியிட்டார். இப்படியாக ‘ஒப்பு மொழியியல்’ (Comparative Philology) என்னும் கலைக்குள்ளேயே ‘ஒப்பிலக்கணம்’ என்னும் துறையும் ஒரு பிரிவினதாய் வளர்ந்து வரலாயிற்று.
கால்டுவெல் அவர்களின் படைப்பை அடிப்படையாகக் கொண்டு, திராவிட மொழிகளின் ஒப்பிலக்கண நூல்கள் பல தோன்றலாயின. இந்தத் துறையில் தேவநேயப் பாவாணர், வேங்கடராசுலு ரெட்டியார் முதலிய அறிஞர்கள் பல நூல்களும் கட்டுரைகளும் எழுதியுள்ளனர். இன்னும் இந்தத் துறை ஓர் எல்லையில் நின்றுவிடாமல் வளர்ந்து கொண்டே வருகிறது.
இவ்வாறு ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மொழிகட்குள்ளே உள்ள ஒப்புமைகளை ஆராய்ந்து வெளியிடுவது ஒருபுறமிருக்க, வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த மொழி கட்குள்ளே உள்ள ஒப்புமைகளை ஆராயும் முயற்சியிலும் அறிஞர் சிலர் ஈடுபடலாயினர். கால்டுவெல் அவர்களே கூட, தென்னிந்தியாவில் பேசப்படும் திராவிடக் குடும்ப மொழிகட்கும், ஆசிய நாடுகளில் பேசப்படும் சித்தியக் குடும்ப மொழிகட்கும் இடையே ஒற்றுமையிருப்பதாக ஆய்ந்து தெரிவித்துள்ளார். இந்திய மொழிகளை ஆராய்ந்த கிரையர்சன் (Dr. Grierson) போன்றோர் சிலர் திராவிடக் குடும்ப மொழிகளை வேறு உலகக் குடும்ப மொழிகளோடு ஒத்திட்டுக் கூறத் துணியாவிடினும், இலங்கைப் பேரறிஞரான ஞானப்பிரகாச அடிகளார் (Rev. S. Gnana Prakasar, O. M, I.), ஆக்சுபோர்டு பல்கலைக்கழப் பேராசிரியர் டி. பர்ரோ (T. Burrow), கலிபோர்னியாப் பல்கலைக் கழகப் பேராசிரியர் எம். பி. ஏமெனோ (M. B. Emeneau) போன்றோர் சிலர் திராவிட மொழிகளை உலக மொழிகளோடு பிணைத்துப் பேசியுள்ளனர்.
ஞானப்பிரகாச அடிகளார் 1938-ஆம் ஆண்டளவில், ‘சொற்பிறப்பு-ஒப்பியல் தமிழ் அகராதி’ (An Etymological And Comparative Lexicon of the Tamil Language) என்னும் அகராதியொன்று படைத்தார். இதில், சொற்பிறப்பும் மொழி ஒப்பியலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. தமிழ்ச் சொல்லுக்கு ஆங்கிலச் சொல்லாலும் தமிழ்ச் சொல்லாலும் பொருள் கூறப்பட்டிருக்கும் இவ்வகராதியில், எடுத்துக் கொண்ட ஒரு சொல், எந்த வேரிலிருந்து எப்படிப் பிறந்து உருவாகிறது என்பது காட்டப் பட்டிருப்பதோடு, அத்தமிழ்ச் சொல் மற்ற இந்திய மொழிகளிலும் ஐரோப்பிய - ஒத்த நிலையில் வழங்கப்படுகிற அவ்வம் மொழியுருவங்களும் (Indexes of Words Quoted from Indo-European Languages) கொடுக்கப்பட்டிருப்பது, இவ்வகராதிக்கு மட்டுமன்றித் தமிழ் மொழிக்கும் மாபெருஞ் சிறப்பளிக்கிறது. ஞானப்பிரகாச அடிகளார், நூலின் முன்னுரையில் பின்வருங் கருத்துக்களைத் துணிந்து வெளியிட்டுள்ளார்:
“தமிழ்ச் சொற்கள் முதல்முதல் மக்களினத்தில் மொழி தோன்றத் தொடங்கிய காலத்தில் எழுந்த சொல்லொலிகளை அடிப்படையாகக் கொண்டவை; தமிழ்ச் சொற்களால் உணர்த்தப்படும் கருத்துகள், மக்களினத்தின் பொதுப் பண்பைக் குறிக்கும் அடிப்படையாகும். எனவே, கூர்ந்து ஆராயின், தமிழ்ச் சொற்களின் வேரிலிருந்தே உலக மொழிகளின் சொற்கள் தோன்றிப் பல்வேறு வடிவங்கொண்டன என்பது புலப்படும்”.
இவ்வாறு ஞானப்பிரகாச அடிகளார், திராவிடக் குடும்பத்தின் தலைமை மொழியாகிய தமிழோடு உலக மொழிகளை முடிச்சுப் போட்டுள்ளார். பேராசிரியர்கள் பர்ரோ, ஏமெனோ ஆகிய இருவரும் இணைந்து ‘A Dravidian Etymological Dictionary’ என்னும் அகராதி யொன்றை 1961ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ளனர். இந்த அகராதியில் தமிழ், தெலுங்கு, கன்னடம் முதலிய பத்தொன்பது திராவிடக் குடும்ப மொழிகளிலுள்ள ஒத்த உருவமுடைய சொற்கள் சிலவற்றை ரோமன் (ஆங்கில) எழுத்தால் எழுதி, அவற்றிற்கு ஆங்கிலத்தில் பொருள் கூறியுள்ளனர். இந்நூலில் திராவிட மொழிகளுக்குள் தமிழே முதன்மை பெற்றுள்ளது. முதலில் ஒரு தமிழ்ச் சொல் நிறுத்தப்பட்டுப் பொருள் கூறப்பட்டுள்ளது; அதனையடுத்து அதே பத்தியில் அந்தத் தமிழ்ச் சொல்லோடு ஏறக்குறைய ஒத்த தோற்றமுடைய வேறு சில திராவிட மொழிகளின் சொற்கள் நிறுத்தப்பட்டுப் பொருள் கூறப் பட்டுள்ளன. சில சொற்கட்குப் பொருள் கூறுமிடத்து, திராவிட மொழிகளிலுள்ள ஒத்த உருவமுடைய சொற் களேயன்றி, திராவிட மொழிகளிலிருந்து இந்தோ-ஆரியன் மொழிகளிலும் ஐரோப்பிய மொழிகளிலும் சென்று கலந்துள்ள சில சொற்களும் உடன் கொடுக்கப்பட்டுப் பொருள் கூறப்பட்டுள்ளன. இந்த அகராதியில், பத்தொன்பது திராவிடமொழிகளும், வடஇந்தியா, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளில் வழங்கும் பதினைந்து இந்தோ-ஆரியன் மொழிகளும், அரபு, பாரசீகம், பலுச்சி ஆகிய ஆசிய மொழிகளும், கிரீக், இலத்தீன், ஆங்கிலம் ஆகிய ஐரோப்பிய மொழிகளும் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதுகாறும் கூறியது, மொழி ஒப்பியல் வரலாற்றின் ஒரு சுருக்கமாகும்.
14. திராவிட மொழிகளில் சில சொல்லாட்சிகளும் சொற்சுவைகளும்
திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தனவற்றுள், பேச்சுத் தமிழும் எழுத்துத் தெலுங்கும் எழுத்துக் கன்னடமும் எழுத்து மலையாளமும் ஏறக்குறைய ஒன்றா யிருக்க, எழுத்துத் தமிழ் வேறுபட்டிருப்பதைக் காணலாம். இதற்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டு வருக:
‘தலை’ என்பது எழுத்துத் தமிழ். இது, பேச்சுத் தமிழில் ‘தல - தலெ’ என்றும், எழுத்துத் தெலுங்கில் ‘தல’ என்றும், எழுத்துக் கன்னடத்தில் ‘தலெ’ என்றும், எழுத்து மலையாளத்தில் ‘தல’ என்றும் வழங்கப்படுகின்றது. ‘தல - தலெ’ என்பன கொச்சைத் தமிழ்; ஆனால் இவை, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவற்றிற்கு இலக்கண - எழுத்து வடிவமாகும். இதிலிருந்து தெரிவதாவது:
எழுத்துத் தமிழின் ஈற்று ‘ஐ’ என்பது, மற்ற நான்கிலும் ‘அ’ அல்லது ‘எ’ ஆக மாறுகிறது என்பதாம். துளு மொழியிலும் இந்த மாற்றம் உண்டு. துளுவில் தலை என்பது ‘தரே’ எனப்படுகிறது. இதில் ‘ஐ’ என்பது ‘எ’ ஆனதோடு, லகரம் ரகரமாகத் திரிந்துள்ளது. இவ்வாறு திராவிட மொழிகட்கிடையே உள்ள சில திரிபு மாற்றங்களை விதந்து காண்பாம்:
தெலுங்கு
தமிழ் ழகரம் தெலுங்கில் டகரம் ஆகிறது. எடுத்துக் காட்டுகள் கூழு = கூடு, ஏழு = ஏடு. கோழி = கோடி. கூடு என்பதற்கு, தெலுங்குக் கவிஞர் வேமன்னரின் வேமன்ன பத்தியம் என்னும் நூலிலிருந்து ஒர் இலக்கிய மேற்கோள் வருக! “பப்பு லேனி கூடு பலமு லேது” (பருப்பு இல்லாத உணவு (கூழு= கூடு) வலிமையற்றது) என்பது அது. அடுத்து, தமிழ் ணகரம் தெலுங்கில் னகரம் ஆகிறது. காட்டுகள்: சுண்ணம்= சுன்னம். கண்ணு = கன்னு. அண்ணன் = அன்ன. வெண்ணெய் = வென்ன. அணைக்கட்டு = அனக்கட்ட தமிழில் சில சொற்களின் இறுதியில் 'உ' சாரியை வரும் அமைப்பு தெலுங்கில் மிகுதியாக உண்டு. தீர்=தீரு=திரு. வேர்-வேரு வேரு தெரு=தெருவு தெருவு.
கன்னடம்
தமிழ் ழகரம் கன்னடத்தில் ளகரம் ஆகிறது. காட்டுகள்: ஏழு=ஏளு, கூழு= சுளு கோழி=கோளி. தென் தமிழ் நாட்டினரும் ழகரத்தை ளகரமாக ஒலிப்பது இங்கே நினைவு கூரத் தக்கது. தமிழ் அகரமும் பகரமும் கன்னடத்தில் ஹகரம் ஆகும். காட்டுகள்: அப்பளம் ஹப்பளம், பாலு= ஹாலு, பண ஹண. பேன், பேணு-ஹேனு. பல்லி= ஹல்லி. பல்லு = ஹல்லு, புலி = ஹாலு, தமிழ் வகரம் கன்னடத்தில் பகரம் ஆகும். காட்டுகள்: வரை = வரெ = பரெ. வெள்ளி= பெள்ளி. வண்டி - பண்டி, தமிழ் றகரம் கன்னடத்தில் ரகரம் ஆகும். காட்டுகள்: முறம்-மொற(ம்)= மொர திற தெற தெர. மாறு=மாரு சாறுக சாரு. குறை= கொறெ-கொரெ. சிதறு=கெதரு, கூரை = கோர (துணி), நிறைவு தெரவு. சிறை=செறெ = செரெ. இவற்றுள் றகரம் ரகரமானதன்றி, உகரம் ஒகரமாகவும், ஊகாரம் ஒகாரமாகவும், இகரம் எகரம் ஆகவும், சகரம் ககர மாகவும் திரிந்திருப்பதையும் காணலாம்.
மெய் ஈறு இன்மை
மற்றும் கன்னடத்தில் மெய் ஈற்றுச் சொற்கள் இல்லை . அதாவது - எச்சொல்லின் இறுதியிலும் எந்த மெய் யெழுத்தும் இராது. இஃதும், தமிழோடு தொடர்புடைய ஒரு கூறாகும். தமிழ் மெய்யெழுத்துகளுள் ஞ், ண், ம், ய், ர், ல், ழ், ள், ன் என்பன சொல் இறுதியில் பெருவாரியாக வரும். இவற்றுள், பேச்சு வழக்கில் உரிஞ் = உரிது, உண்= உண்ணு. தூண்=துணு எனவும், நாய் - நாயி. தாய் =தாயி எனவும், வேர்-வேரு, பார்: பாரு எனவும், கால்=காலு, பல்=பல்லு எனவும், கூழ் = கூழு, அகழ்=அகழு எனவும், முள் = முள்ளு, தேள் =தேளு எனவும், தின் = தின்னு, பேன் = பேனு எனவும், ம் தவிர்த்த மற்ற மெய்கள் உகரச் சாரியையோ இகரச் சாரியையோ பெற்று வரும். மரம், ஏலம், அவன், போனான் என ம், ன் என்னும் மெய்யீற்றுச் சொற்கள் தமிழில் 'உ' சாரியை பெறுவதில்லை; சில இடங்களில் மட்டும் ன் ஈறும் உகரச் சாரியை பெறுவ தில்லை. பலம் - பலமு, குடம்= குடமு எனத் தெலுங்கில் ‘ம் உகரச் சாரியை பெறுகிறது. தமிழிலோ, மரம், ஏலம், அவன், போனான் போன்ற சொற்களின் இறுதி மெய் யெழுத்துகள் முழுமையாக ஒலிக்கப்படுவதில்லை; மர(ம்), ஏல(ம்), அவ(ன்), போனா(ன்) என இறுதி மெய் ஒலித்ததும் ஒலிக்காததுமாகப் பாதியளவு ஒலியே பெறுகின்றன. பிரெஞ்சு மொழியிலும் இது போன்ற அமைப்பு உண்டு. ஒன்று என்னும் பொருள் உடைய ’UN’ என்னும் பிரஞ்சுச் சொல் ஆன் என முழுதும் ஒலிக்கப் படாமல் ஆ(ன்). என மெலுக்காகவே ஒலிக்கப் பெறுகிறது. விரிவஞ்சி ஒர் எடுத்துக்காட்டோடு விட்டு விடலாம்.
இதுகாறும் கூறியதிலிருந்து தெரிவதாவது: தமிழிலும் பேச்சு வழக்கில் சொல் இறுதி மெய்யெழுத்துகள் சரியான - போதுமான ஒலி பெறுவதில்லை - என்பதாம். கன்னட மொழியில் மெய்யீற்றுச் சொற்களே இல்லை என்னும் கருத்தோடு இந்தக் கருத்து ஓரளவு ஒத்து வருகின்றதல்லவா? மற்றும், கன்னடத்திலும், இருள்=இருளு, தாள் = தூளு; கூலிகாரர்: கூலிகாரரு என மெய்யிறு 'உ' சாரியை பெறுவதுண்டு. பேச்சு வழக்கில் தமிழிலும் எழுத்து வழக்கில் கன்னடத்திலும் மெய்யீறு ஒலிக்கப் பெறாமையும் ஒரு சில இடங்களில் 'உ' சாரியை வருவதும் இவ்விரு மொழிகளும் ஒத்த மொழிகள் என்பதற்குப் போதிய சான்று பகரலாம். பழங் கன்னடத்தில் உள்ள சொல்லாட்சிகள் மேலும் இக் கருத்துக்குத் துணை புரியலாம். (இப்போது, கன்னடச் சொற்களின் இறுதியில் மெய்யெழுத்தைச் சேர்க்கும் முயற்சி நடைபெறுவதாகத் தெரிகிறது)
வெங் - வென்
இனி இங்கே ஒரு சுவையான சொல்லாட்சியைக் காண்போம். தமிழில் ‘வெந்' என்பதற்கும் சிறிதளவு ஒலி வேறுபாடுடைய ‘வென்’ என்பதற்கும் முதுகு என்பது பொருள். வென்னிடுதல் என்றால், முதுகு காட்டி ஒடுதல் ஆகும். தமிழில் உள்ள ‘வென்’ என்பதோடு ஒலித் தொடர்புடைய வென், வெனு, வென்னு, என்பன தெலுங்கிலும் ‘பென்னு' என்பது கன்னடத்திலும் முதுகைக் குறிக்கும். தமிழ் வகரம் கன்னடத்தில் பகரமாக ஒலிப்பதுண்டு; இதன் படி வென் என்பது கன்னடத்தில் பென் ஆயிற்று. கன்னடத்தில் மெய்யீறு உள்ள சொல் இல்லை; மெய்யீறு இருப்பின் 'உ' சாரியை சேர்ந்து விடும் அல்லவா? இதன்படி 'பென்' என்பது பென்னு ஆயிற்று. வென், வென்னு, வெனு, பென்னு என்பவற்றின் அடிப்படைச் சொல்லாகத் தமிழில் உள்ள வெந் (வென்) என்பதற்கு ஒரு சுவையான இலக்கிய மேற்கோள் காண்போம்:-
தலைவன் தலைவியின் மார்பைத் தழுவ விரும்புகிறான். தென்னங் குரும்பை போன்ற அவளுடைய முலைகளின் குளிர்ச்சியைத் துய்க்கத் துடிக்கிறான். அந்நேரம் அவள் நாணத்தால் தலைவன் பக்கம் முதுகைக் காட்டித் திரும்பி நின்றாள். அப்போது அவன் அவளை நோக்கி, குரும்பை போன்ற முலைகளின் தண்மையைத் துய்க்க விரும்பும் எனக்கு முதுகைக் காட்டலாமா? என்று கூறுகிறான். இது, நூல் பெயர் தெரியாத பின்வரும் பாடல் பகுதி ஒன்றினால் அறியப்படுகிறது:-
“இளங்குரும்பைத் தண்ணீர் அளவுக்கு
வெந்நீர் அளித்தல் தகுதியன்றோ”
என்று கூறுகிறான். குரும்பை என்பது குரும்பை போன்ற முலை. தண்ணீர் (தண்நீர்) என்பது குளிர்ந்த தன்மை, வெந்நீர் என்பதை வெந்+நீர் எனப் பிரிக்கவேண்டும். வெந்=முதுகை, நீர்=நீங்கள், அளித்தல்= காட்டுதல் முறையன்று என்று கூறுகிறான். இங்கே தண்ணீர் (குளிர்ந்த பச்சைத் தண்ணீர்) விரும்பியவர்க்கு, வெந்நீர் (சூடான் நீர்) அளித்தல் தகுதியன்று என்று இரு பொருள் (சிலேடை) தந்து இப்பகுதி சுவை பயக்கிறது. இவ்வாறு சுவைதரும் சொற்கள் பல உண்டு. மேலும் ஒன்று வருமாறு:
தனம்-மாடு
தனம் என்னும் சமசுகிருதச் சொல்லைக் கன்னட மொழி ஏற்றுக் கொண்டுள்ளது. கன்னடத்தில் இந்தச் சொல் மாடு (பசு) என்னும் இரு பொருளையும் தருகிறது. இதில் சுவையான செய்தி ஒன்று அடங்கியுள்ளது. தமிழிலும் இது போன்ற அமைப்பு உண்டு. தமிழில் மாடு என்பதற்குப் பசு, செல்வம் என்னும் இரு பொருளும் உண்டு. மாடு என்பதற்குச் செல்வம் என்னும் பொருள் உள்ளமையை,
“கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு -
மாடு அல்ல மற்றை யவை”
என்னும் திருக்குறள் பா அறிவிக்கிறது. கல்வியே செல்வம், மற்றையவை மாடு (செல்வம்) ஆகா - என்பது பொருள். தன் சொல்லுக்குத் தானே பொருள் கூறும் பாடல் இது.
ஐயர் குலத்தினர், தம் வீட்டிற்கு வரும் மருமகளை ‘மாட்டுப் பெண்’ என்று கூறும் வழக்காறும் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. மாடு என்பதற்குப் பக்கம் என்னும் பொருளும் உண்டு வீட்டில் பிறந்த பெண் வேறு வீட்டுக்குப் போய் விடுவதாலும் மருமகள் தம் பக்கத்திலேயே இருப்பதாலும் மாமியார் வீட்டார் மருமகளை ‘மாட்டுப் பெண்’ என்று அழைப்பதாகச் சிலர் பொருள் கூறுகின்றனர். இது சரியன்று. மருமகளை வீட்டிற்கு வந்த திருமகள் (இலட்சுமி) என்று சொல்வது மரபு. மருமகள் வீட்டிற்குச் செல்வம் ஆவாள். மேலும் சீர்வரிசைச் செல்வம் (சீதனம்) கொண்டு வருகிறாள். இதற்கேற்ப, மாடு என்பதற்குச் சீதனம் (பெண் சீர்) என்னும் பொருளும் உண்டு என அகராதி நிகண்டு கூறுகிறது. எனவே, மாட்டுப் பெண் என்றால், செல்வப் பெண் என்றே பொருள் கூறல் வேண்டும். ஐயர்கள் ஆத்திலே (அகத்திலே), அம்மாஞ்சி (அம்மான் சேய்) என்றெல்லாம் நல்ல தமிழ்ப் பெயர்களை வழங்குவதை அறியலாம். அவற்றுள் மாடு என்பதும் ஒன்றாகும்.
இலத்தீன் மொழியில், Pecunia, என்னும் சொல்லுக்கு மாடு, செல்வம் என்னும் இரு பொருள் உள்ளமையும் இங்கே ஒப்பு நோக்கத் தக்கது. இதுகாறும் இது பற்றிக் கூறியதிலிருந்து இன்னும் ஓர் உண்மையை அறிய முடிகிறது. அஃதாவது:-
இப்போது உள்ளதுபோல் பண்டைக்காலத்தில் உலோக நாணயமோ அல்லது தாள் நாணயமோ (Currency) இல்லை. ஒரு பொருள் தந்து மற்றொரு பொருள் வாங்கும் பண்டமாற்று முறையே அன்று இருந்தது. அப்போது, மிகுதியான மாடுகள் உடையவர்களே பெருஞ் செல்வராக மதிக்கப் பெற்றனர். மாட்டைக் கொடுத்து வேறு பெரிய பொருளை - அளவில் பெரிய பொருளை வாங்குவது மரபாகும். இவ்வளவு செய்திகளையும் ஈண்டு எண்ணிப் பார்க்க இந்தத் தனம் என்னும் சொல் வாய்ப்பு அளிக்கிறது. கன்னட மொழியில் சொல்லின் இறுதியில் ஒற்றெழுத்து வருவதில்லை யாதலின் தனம் ‘தன’ என்றே வழங்கப்படுகிறது. இந்த வழக்காறு ஒரு வகைச் சுவையாகும்.
மலையாளம்
மலையாளம் தமிழ்ச்சேர நாடாதலின் மலையாள மொழிக்கும் தமிழ் மொழிக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இரண்டு மொழிகளிலும் ஒலிப்பு வேற்றுமையில்லாமல் ஒரே மாதிரியான சொற்கள் நிரம்ப உண்டு. தூய்மையான உருவங்களும் மலையாளத்தில் உண்டு. சில சொற்களில் ஞகரமும் வகரமும் வந்து இனிமை ஊட்டுகின்றன. தமிழ் நகரத்திற்குப் பதிலாகவும் தமிழ் சகரத்திற்குப் பதிலாகவும் ஞகரம் வருவது இனிமை தருகிறது. எடுத்துக்காட்டுகள்: நான் = ஞான்; நாங்கள் = ஞாங்கள்; நரம்பு = ஞரம்பு; நண்டு = ஞண்டு; நாவல் - ஞாவல். கஞ்சி = கஞ்ஞி; மஞ்சள் - மஞ்சா - மஞ்ஞ, மஞ்சு = மஞ்ஞ, கழிந்த = கழிஞ்ஞ எனத் தகரத்திற்குப் பதிலாகவும் ஞகரம் வருவது உண்டு. ககரத்திற்குப் பதில் ஙகரம் வருவதுண்டு; தேங்காய் - தேங்கா = தேங்ங; மாங்காய் - மாங்கா = மாங்ங; நரைத்த = நரச்ச; குறித்து = குறிச்சி, ஒருமித்து = ஒருமிச்சு; சிரித்து = சிரிச்சி-எனத் தகரத்திற்குப் பதில் சகரம் வரும். இது பேச்சுத் தமிழிலும் உண்டு. ஐ. ஈற்றுக்குப் பதில் அ, எ வருவதும், சொல் ஈற்றில் உகரச் சாரியை வருவதும் மலையாளத்திலும் உண்டு.
எண்ணுப் பெயர்களில் ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து, பதினாறு, பதினேழு, பதினெட்டு, பத்தொன்பது, இருபது, இருபத்திரண்டு, முப்பது, அறுபது, எழுபது, எண்பது தொண்ணுறு, நூறு, ஆயிரம் முதலிய எண்ணுப் பெயர்கள் தமிழிலும் மலையாளத்திலும் ஒரே மாதிரியாயிருப்பது குறிப்பிடத் தக்கது. மற்ற திராவிட மொழிகளில் இவ்வாறு இல்லை; சிறு சிறு மாற்றம் உண்டு.
‘ங’ ப் போல் வளை
மற்றும், மலையாளம் பற்றிய சுவையான செய்திகள் சில சொல்லவேண்டும். ‘ங முதல் ஙெள’ வரை தமிழில் உள்ள எழுத்துகளுள், இங்ஙனம், எங்ஙனம் என மட்டுமே பயன்படுகிறது. பங்கு, மங்கு என 'ங்' மெய்யும் பயன்படுகிறது. தனி ‘ங’ என்பதை ஒரு சொல் போல் கொண்டு அது ‘குறுணியளவு’ என்னும் பொருளைக் குறிக்கும் எனச் சித்தர் தேரையர் தமது ‘தைல வருக்கச் சுருக்கம்’ என்னும் நூலில் கூறியுள்ளார். இவ்வாறு ங், ங என்பன மட்டும் பயன்படுகின்றன எனினும், தமிழ் நெடுங் கணக்கு (எழுத்து) வரிசையில் ங முதல் ஙௌ வரை உள்ள பன்னிரண்டு எழுத்துகளும் இடம் பெற்றுள்ளன. இதை எண்ணிய ஒளவையார், ங என்பது தன் வரிசை எழுத்துகளும் இடம் பெறச் செய்தது போல, செல்வர்கள் தம்மைச் சார்ந்தவர்களையும் வளைத்து (சேர்த்துக் கொண்டு) நன்கு காக்க வேண்டும் என்னும் பொருளில் ‘ங’ப் போல் வளை’ எனத் தம் ஆத்தி சூடி நூலில் கூறியுள்ளார்.
ஆனால், மலையாளத்திலோ, தேங்ங் - மாங்ங - தங்ஙல் (தங்கல்) - ஏங்கல் (ஏங்கல்) என ‘ங’ என்னும் எழுத்து பயன்படுவதல்லாமல், ‘இடுங்ஙிய’ (ஒடுங்கிய) - துடங்ஙியவர் (துடங்கியவர்) - வாங்ஙிக்கான் (வாங்க) என ‘ஙி’: எழுத்தும், தாங்ஙு (தாங்கு) - நடுங்ஙு (நடுங்கு) - எங்ஙு (எங்கு) - பொங்கக (பொங்குக) என ந எழுத்தும் பயன் படுத்தப்பட்டிருப்பது இனிமை பயக்கிறது. ‘ங்’ என்னும் ஒற்றுக்குப் பக்கத்தில் ககரம் வந்த சொற்கள் சிலவற்றில் ககரம் ஙகரமாகியுள்ளது. ஆனால், செங்கல், தரங்கம், தெங்கு முதலிய சொற்களில் இவ்வாறு ககரம் ஙகர மாக வில்லை.
வான் விகுதி
தமிழில், செய்வான் வந்தான், படிப்பான் சென்றான் - என்னும் தொடர்களில் உள்ள ‘செய்வான்’ என்பதற்குச் செய்ய என்பது பொருள், 'படிப்பான்’ என்பதற்குப் "படிக்க' என்பது பொருள். வான், பான் என்பன வினை யெச்ச விகுதிகள் எனத் தமிழ் இலக்கணம் கூறுகிறது. இவை போல, மலையாளத்தில் ஆன், வான் என்பன வினை யெச்ச விகுதிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன. மலையாளத்தில், தின்னான் - குடிக்கான், வாங்ஙிக்கான், காணுவான் - என்பனவற்றிற்கு முறையே, தின்ன - குடிக்க-வாங்க, காண - என்பன பொருளாம். இந்த அமைப்பும் இந்த இரு மொழிகட்கும் உள்ள நெருக்கத்தை அறிவிக்கிறது.
வேண்ட
”வேண்டிய தில்லை” என்னும் பொருளில் 'வேண்டாம்' என்னும் சொல் தமிழில் பேச்சு வழக்கில் உள்ளது. ஆனால், தமிழில் எழுத்து வழக்கில் 'வேண்டா' என்றே சொல்ல வேண்டும்; இறுதியில் 'ம்' கூடாது. மலையாளத்தில் 'வேண்டா' என்பது 'வேண்ட' என வழங்கப்படுகிறது; இங்கும் இறுதியில் 'ம்' இல்லை. ஆனால், இறுதியில் 'ஆ' என்பது 'அ' என ஆகியுள்ளது, இந்தச் சிறு மாறுதலைத் தவிர, 'வேண்ட' என்னும் மலையாளம் 'வேண்டா' என்னும் தமிழோடு ஒத்திருப்பதைக் காணலாம்.
சிரட்டை
மலையாளத்தில், கொட்டாங்கச்சியை - அதாவது - தேங்காய் ஒட்டைக் குறிக்கச் ‘சிரட்ட’ என்னும் சொல் வழங்கப்படுகிறது. இந்தச் சொல் தமிழிலும் திருநெல்வேலி மாவட்டத்தில் வழங்கப்படுகிறது. இது தொடர்பான என் பட்டறிவு ஒன்றை இங்கே தெரிவிக்க விரும்புகிறேன். நான் காவிரிக் கரையில் உள்ள திருவையாற்று அரசர் கல்லூரியில் ‘வித்துவான்’ பட்டத்திற்குப் படித்துக்கொண்டிருந்த போது 1938 ஆம் ஆண்டில் எனது பதினாறாம் அகவையில் - நிகழ்ந்த ஒரு செய்தி வருமாறு:- கோடை - காவிரியில் சிறிதும் நீரோட்டம் இல்லை. வெண்மணல் பரந்து கிடந்தது. ஒருநாள், நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சாமி என்பவரும் முத்தணைந்த பெருமாள் என்பவரும் யானும் ஆற்று மணலில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருந்தோம். பதினாறு அகவையே உடைய எனது கை வாளா இருக்க முடியுமா? கையால் மணலை முழங்கை ஆழத்திற்குத் தோண்டிக் கொண்டிருந்தேன். குறிப்பிட்ட ஓரளவு ஆழம் உண்டானதும் கையில் கெட்டிப் பொருள் ஒன்று தட்டுப்பட்டது. அதைத் தோண்டி வெளியே எடுத்தேன். அதைப் பார்த்ததும், முத்தணைந்த பெருமாள் என்பவர், ”சண்முகம் ‘சிரட்ட’ எடுத்திருக்கிறான்,“ என்று கூறினார். நான் எடுத்தது கொட்டாங்கச்சி, அவர் சொன்ன ‘சிரட்ட’ என்னும் பெயர் எனக்குத் தெரியாது. வடதமிழ் நாட்டில் இந்த வழக்கு இல்லை. பிறகுதான் ‘சிரட்டை’ என்னும் பெயர் நெல்லை மாவட்டத்தில் வழங்குவதை அறிந்தேன். ‘சிரட்டை' என்னும் பெயர், நெல்லை மாவட்டத்துப் பேச்சுத் தமிழிலும் மலையாளத்தில் எழுத்துத் தமிழிலும் ‘சிரட்ட’ என வழங்கப்படுகிறது.
தலச் சோறு
மலையாளத்தில் உள்ள ‘தலச் சோறு’ என்னும் பெயரும் என்னைக் கவர்ந்துள்ளது. மலையாளத்தில் தலச்சோறு என்பதற்கு ‘மூளை’ என்பது பொருள். எழுத்துத் தமிழில் இதனைத் ‘தலைச்சோறு’ என்று சொல்ல வேண்டும். தலை உச்சியில் உள்ள மூளைக்குச் சோறு என்னும் பெயர் உள்ளதை அறிந்தபோது, எனது இளமைக் கால நிகழ்ச்சி யொன்று நினைவுக்கு வந்தது. எனது இளம் பருவத்தில் எங்கள் தோட்டத்தில் ஒரு தென்னை மரத்தை வெட்டினார்கள். தென்னையின் உச்சித் தலைப் பகுதி வெட்டப் பட்டுக் கீழே விழுந்ததும், ‘சோற்றைத் தோண்டி எடுங்கள்’ என்று ஒருவர் கூறினார். உச்சியிலிருந்து வெண்மையான ஒரு பகுதி வெட்டி எடுக்கப்பட்டது. அது பலர்க்கும் பங்கிட்டுத் தரப்பட்டது. நான் என் பங்கைத் தின்றபோது அது மிகவும் சுவையாயிருக்கக் கண்டேன். அந்தப் பகுதிக்குச் சோறு என்னும் பெயர் உண்டு என்பதை நான் அப்போது தான் தெரிந்து கொண்டேன். ‘தலச்சோறு’ என்னும் மலையாளப் பெயரோடு பொருத்திப் பார்த்தபோது மிக்க மகிழ்ச்சி உண்டாயிற்று. ‘மண்டையிலே மசாலா இருக்கிறதா’ என்று சிலர் கேட்பது இங்கே ஒப்புநோக்கத் தக்கது.
மண்ணான்
மலையாளத்தில் உள்ள மற்றொரு சொல் சுவையாயுள்ளது. தமிழில் உள்ள ‘வண்ணான்’ என்பது மலையாளத்தில் ‘மண்ணான்’ என்று வழங்கப்படுகிறது. வண்ணான்- மண்ணான் என்றால் சலவைத் தொழிலாளி (Washerman) என்பது பொருள். இந்தக் காலத்தில் வண்ணான் என்று சொன்னால் அது குறைவாகத் தோன்றுகிறது; அந்த இனத்தார் சினம் கொள்வர் - வருத்தப்படுவர். குறைவோ வருத்தமோ தராத சொல்லாக ‘ஏகாலி’ என்பது சிற்றுார்ப் புறத்தும், ‘சலவைத் தொழிலாளி’ என்பது நகர்ப்புறத்தும் இப்போது வழங்கப்படுகின்றன. வண்ணான், மண்ணான் என்னும் சொற்கட்கும் ‘சலவைத் தொழிலாளி’ என்பதே பொருளாகும்.
வண்ணான் என்பதற்கு, உடைக்கு வண்மை-அழகு ஊட்டுபவன் என்பது பொருள். மலையாளத்திலுள்ள மண்ணான் என்பதற்கு, உடையைத் தூய்மை செய்பவன் - அணி (அலங்காரம்) செய்பவன் என்பன பொருளாம். மண்ணுபவன் மண்ணான். மண்ணுதல் என்பதற்குக் கழுவுதல், தூய்மை செய்தல், அழகு செய்தல் என்பன பொருளாகும். இதற்கு ஒளவையாரின் மூதுரை நூலிலிருந்து ஒர் அகச் சான்று காண்பாம்:
“மடல்பெரிது தாழை மகிழினிது கந்தம்
உடல் சிறியர் என்றிருக்க வேண்டா-கடல்பெரிது
மண்ணீரும் ஆகாது அதனருகே சிற்றூறல்
உண்ணீரும் ஆகி விடும்” (12)
என்பது மூதுரைப் பாடல். மண் நீர் (மண்ணீர்) என்றால், உடம்பைக் குளித்துக் கழுவித் தூய்மை செய்ய உதவும் நீர் என்று பொருளாம். கடல்நீர் அதற்கு உதவாதன்றோ? இன்னொரு அகச்சான்று கலித்தொகை என்னும் நூலிலிருந்து காண்பாம்: “மண்ணி மாசு அற்ற நின் கூழையுள்” (கலித் தொகை 107-31) என்னும் தொடரின் பொருள்: குளித்துக் கழுவி அழுக்கு போக்கித் தூய்மை செய்த நின் கூந்தல் - என்பதாம். மண்ணினால் மாசு (அழுக்கு) அறும் எனத் தெளிவான பொருளில் சொல்லாட்சி அமைந்துள்ளது. இன்னும் ஒரு சொல்லாட்சியை இங்கே காணலாம்.
கோதுமை - கோதும்பை
1982 மார்ச்சு முதல் நாள் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் தொகுப்பியல் துறைத் தலைவனாகவும் பேராசிரியனாகவும் யான் பணி தொடங்கினேன். எனக்குப் பணி தந்த என் வணக்கத்திற்கு உரிய துணைவேந்தர் உயர்திரு வி. ஐ. சுப்பிரமணியனார் அவர்கள், எதைத் தொகுப்பது என்று தேர்ந்தெடுக்கும் உரிமையை எனக்கே வழங்கிவிட்டார்கள். மர இனப் பெயர்களை முதலில் தொகுக்கலாம் என்றேன் நான். ஐயா அவர்கள் அதற்கு அன்போடு ஒப்புதல் அளித்தார்கள். எனது பணிக்கு வேண்டிய ஒரு நூலும் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் இல்லாத நிலையில், யான் புதுச்சேரியிலிருந்து நாற்பது அகர முதலிகள் கொண்டு போய் வைத்துப் பணி தொடங்கினேன். அப்போது யான் அறிந்த சுவையான செய்தி ஒன்றை இங்கே தருகிறேன்:
‘கோதுமை’ என்பதைத் தென்னாற்காடு மாவட்டப் பகுதியிலும் அதன் நடுவே உள்ள புதுச்சேரியிலும் ‘கோதும’ என்று கொச்சையாகப் பேச்சுத் தமிழில் சொல்வது வழக்கம். மூளைக்கட்டி நோயாளியாகிய யான் மருத்துவத்திற்காகச் சென்னைக்குச் செல்லும் போதெல்லாம் என் சிறிய மாமனார் வீட்டில் தங்குவது வழக்கம். அந்த வீட்டுச் சமையல்காரர் இராமநாதபுரம் மாவட்டத்தினர். அவர் கோதுமை என்பதைக் ‘கோதம்ப’ என்று கூறுவார். நான் ‘கோதம்ப’ என்பதைக் கேட்டதும் கிண்டல் பண்ணுவது வழக்கம். எங்கள் வீட்டிற்கு வந்த பிறகும், என் மனைவியை நோக்கி, இன்றைக்கு என்ன ‘கோதம்ப உப்புமாவா?’ - ‘கோதம்ப பூரியா?’ எனக் கிண்டலாகக் கேட்பது வழக்கம்.
இந்த நிலை இருக்க, யான் பல்கலைக் கழகத்தில் மர இனப் பெயர்களைத் தொகுத்துக் கொண்டிருந்த போது, கோதுமை என்பதன் வேறு பெயர்களை வேறு வேறு அகர முதலிகளில் கண்டு வியந்தேன். அவையாவன: ‘கோதும்பை’ என்னும் பெயரைச் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதியிலும், ‘கோதிமம்’ என்னும் பெயரைச் சாம்பசிவம் பிள்ளையின் தமிழ் - ஆங்கில அகராதியிலும், ‘கோதுமம்’ என்னும் பெயரை யாழ்ப்பாணத்து மானிப்பா யகராதி யிலும், கோதூமம் என்னும் பெயரைத் திருவானைக்காப் புராணத்திலும் கண்டு வியந்தேன். “நலத்தகு பொருள் கோதுமம்” என்பது, திருவானைக்காப் புராணம் - நான விதிப் படலம் - 25-ஆம் பாடலில் உள்ள பகுதியாகும். மற்றும், கோதுமைக்குக் ‘கோதி’ என்னும் பெயரும் உண்டு என்பதைத் திவாகர நிகண்டிலும் சூடாமணி நிகண்டிலும் உள்ளதைக் கண்டேன். “கோதி கோதுமை” என்பது, திவாகர நிகண்டு - மரப் பெயர்த் தொகுதியின் 173-ஆம் பாடலாகும். அடுத்து, “தழுவு கோதுமையே கோதி” என்பது, சூடாமணி நிகண்டு- மரப்பெயர்த் தொகுதி.39ஆம் பாடல் பகுதியாகும். இத்தனையும் யான் கொண்டு சென்ற நூல்களிலிருந்து பெறப்பட்டவையாகும். இனிச் செய்திக்கு வருவோம்:
யான் கிண்டல் செய்த தென் தமிழ் நாட்டுப் பேச்சு வழக்குப் பெயராகிய ‘கோதம்ப’ என்பது மலையாளத்தில் ‘கோதம்ப’ என்னும் எழுத்து வழக்காகும். எனவே, எனது கிண்டலில் பொருள் இல்லை. மற்றும், கோதுமைக்குக் ‘கோதி’ என்னும் பெயரும் உள்ளதாகத் தமிழ் நிகண்டுகள் கூறுகின்றனவே - அந்த வழக்கு, கன்னடத்திலும் ‘கோதி’ என உள்ளது. அடுத்து, பேச்சுத் தமிழில் உள்ள கோதும’ என்னும் கொச்சை வழக்கு, தெலுங்கில் ‘கோதும’ என எழுத்துத் தெலுங்காக உள்ளது. இத்தகைய அமைப்பு, நான்கு மொழிகட்கும் உள்ள ஒற்றுமையை உணர்த்தும் சுவையான செய்தியன்றோ? இன்னும் இவ்வாறு பல்வேறு சொற்சுவைகளைக் காணலாம்.
15. சிலம்பில் இரு குரவைகள்
சிலப்பதிகாரத்தில் ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை என இரு பெருங் குரவைக் கூத்துப் பகுதிகள் உள்ளன. குரவை என்பது, மகளிர் கைகோத்துப் பாடி ஆடும் ஒரு வகைக் கூத்து. ஆய்ச்சியர் குரவையைத் திருமாலைப் பற்றிய ஒரு சுருக்கமான காப்பியம் எனவும், குன்றக் குரவையை முருகனைப் பற்றிய ஒரு சுருக்கமான காப்பியம் எனவும் கூறும் அளவுக்கு, இரண்டும் சுருங்கக் கூறி விளங்க வைத்தல் என்னும் முறையில் சிறந்து திகழ்கின்றன. சுவையான இந்தப் பகுதிகளை எழுத ஆசிரியர் இளங்கோ அடிகள் எங்கே யாரிடம் கற்றாரோ என வியக்கத் தோன்று கிறது. இனி முறையே அவை வருமாறு:
1. ஆய்ச்சியர் குரவை
ஏழுகள்
தாம் வாழும் பகுதியில் தீய நிமித்தங்கள் பல தோன்றியதால், மாதரி, தன் மகள் ஐயையிடம், குரவைக் கூத்து ஆடினால் தீமைகள் வாரா எனக் கூறிக் குரவைக் கூத்தாட ஏற்பாடு செய்தாள். மேலும் சில கூறுவாள்:
கன்னியர் எழுவர் தலைக்கு ஒரு காளையாக ஏழு காளைகளைத் தொழுவத்தில் கட்டி வளர்த்து வந்தனர். இந்த இந்தக் காளையை அடக்குபவருக்கு இந்த இந்தக் கன்னி உரியவள் என மாதரி கூறலானாள்:
1. தேனார்ந்த மலர்மாலை அணிந்த இந்தக் கன்னி, இதோ இருக்கும் கரிய காளையின் சீற்றத்திற்கு அஞ்சாமல் பாய்ந்து அதை அடக்குபவனை விரும்புகிறாள்.
2. இதோ உள்ள பொன் வளையல் அணிந்த பெண்ணின் தோள்கள், இதோ உள்ள நெற்றிச் சுட்டி பொருந்திய காளையின் மேலேறி அடக்குபவனுக்கு உரியவை யாகும்.
3. இதோ உள்ள முல்லை மலர் சூடிய கூந்தலையுடைய கன்னி, வலிமை மிக்க இந்த இளங்காளையை அடக்குபவனுக்கு உரியவள்.
4. கொடியனைய இந்தப் பெண்ணின் தோள்கள், சிறுசிறு நுண்ணிய புள்ளிகளை உடைய இந்த வெள்ளைக் காளையை அடக்குபவனுக்கு உரியனவாம்.
5. இந்தப் பொன் புள்ளிகளை உடைய வெள்ளைக் காளையை அடக்குபவனுக்கே, இந்தக் கொடி போன்ற நங்கையின் முலைகள் உரியனவாம்.
6. இந்தக் கொன்றைக் கூந்தலாள், இந்த வெற்றி வாய்ந்த இளங்காளை மேல் ஏறி அடக்குபவனுக்கு உரியவளாவாள்.
7. இந்தப் பூவைப் புதுமலர் சூடியிருப்பவள், இதோ உள்ள இந்தத் தூய வெள்ளைநிறக் காளையைத் தழுவி அடக்குபவனுக்கு உரியவள் - என்றெல்லாம் மாதரி கூறினாள். இவற்றிக்கு உரிய பாடல் பகுதிகள் வருமாறு:-
"காரி கதனஞ்சான் பாய்ந்தானைக் காமுறும் இவ்
வேரி மலர்க் கோதையாள்; சுட்டு 1
நெற்றிச் செசிலை அடர்த்தாற்கு உரிய இப்
பொற்றொடி மாதராள் தோள் 2
மல்லல் மழவிடை ஊர்ந்தாற்கு உரியள் இம்
முல்லையம் பூங்குழ லாள் 3
நுண் பொறி வெள்ளை அடர்த்தாற்கே யாகும்.இப்
பெண் கொடி மாதர்தன் தோள் 4
பொற்பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகும்.இக்
நற்கொடி மென் முலைதான் 5
வென்றி மழவிடை ஊர்ந்தாற்கு உரியள்இக்
கொன்றையம் பூங்குழ லாள் 6
தூநிற வெள்ளை அடர்த்தாற்கு உரியள்.இப்
பூவைப் புதுமல ராள்” 7
என்பன பாடல் பகுதிகள். இவ்வாறு மாதரி தன் மகளிடம் கூறிப் பின் கன்னியர் எழுவர்க்கும், பழைய பெயர்கள் இருப்பதல்லாமல், தானாக ஒவ்வொரு புதுப் பெயர்கள் சூட்டினாள். அப்பெயர்கள்: குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன. பாடல் பகுதி:
தொழு விடை ஏறு குறித்து வளர்த்தார்
எழுவர் இளங்கோதையார்
என்றுதன் மகளை நோக்கித்
தொன்று படு முறையால் நிறுத்தி
இடை முது மகள் இவர்க்குப்
படைத்துக் கோட் பெயரிடுவாள்.
குடமுதல் இடை முறையாக் குரல், துத்தம்,
கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என
விரிதரு பூங்குழல் வேண்டிய பெயரே”
இது பாடல் பகுதி. படைத்துக் கோள் பெயரிடுதல் - தானாகப் புதிதாகப் படைத்துக் கொண்டு பெயர் வைத்தல்.
இக்காலத்தில் கூறும் ச, ரி, க, ம, ப, த, நி எனச் சுருக்கமாக வழங்கப்பெறும் சட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்திமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்னும் ஏழுக்குப் பதிலாக, அக்காலத்தில் தமிழில் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் ஏழு பெயர்களும் கூறப்பட்டன என்பது ஆராய்ச்சியாளர் சிலரின் கருத்து. ஆனால், அவற்றிற்கு நேராக இவற்றையோ - இவற்றிற்கு நேராக அவற்றையோ கூற முடியாது என விபுலாநந்த அடிகள் தம் யாழ்நூலில் கூறியுள்ளார். இது ஆராய்ச்சிக்கு உரியது.
கேளாமோ தோழி
அடுத்து, ஆய்ச்சியர் குரவையில் உள்ள மூன்று பாடல் பகுதிகளை விளக்கம் இன்றித் தந்து சுவைத்து மகிழச் செய்ய வேண்டுமென என் அவா உந்துகிறது. இதோ அவை:
‘கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்
இன்று நம் ஆனுள் வருமேல் அவன் வாயில்
கொன்றையங் தீங்குழல் கேளாமோ தோழீ ‘ 1
‘பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன்
ஈங்கு நம் ஆனுள் வருமேல் அவன் வாயில்
ஆம்பலக் தீங்குழல் கேளாமோ தோழீ’ 2
‘கொல்லையஞ் சாரல் குருந்தொசித்த மாயவன்
எல்லைகம் ஆனுள் வருமேல் அவன்வாயில்
முல்லையங் தீங்குழல் கேளாமோ தோழீ’ 3
என்பன அவை. திரும்பத் திரும்பப் பாடிச் சுவைக்க வேண்டிய பகுதிகள் இவை. இவ்வாறு பாடிக்கொண்டே ஆய்ச்சியர்கள் குரவைக் கூத்து ஆடினமை, சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி பொழிந்தது போன்றதாகும்.
அடுத்த ஒன்று படர்க்கைப் பரவல் என்னும் தலைப்பின் கீழ் உள்ள,
‘சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே
திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே’ 1
‘கரியவனைக் காணாத கண் என்ன கண்ணே
கண்ணிமைத்துக் காண்பார்தம் கண் என்ன கண்ணே’ 2
‘பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நா என்ன நாவே
நாராயணா என்னா நா என்ன நாவே’ 3
என்பன குறிப்பிடத்தக்கன. செவி, கண், நாக்கு ஆகியவை, அன்புப் பெருக்கால், திருமாலின் பெருமையைக் கேட்க வேண்டுமாம் - கோலத்தைக் காணவேண்டுமாம் - அவரை ஏத்த வேண்டுமாம்.
திருமாலின் கோலத்தைக் காணாத கண்ணைத் தாக்குவதோடு நிறுத்தவில்லை - அவரது கோலத்தை (கண்களை) இமைத்து இமைத்துக் காணும் கண்களும் தாக்கப்பட்டுள்ளன. அதாவது கண்களை மூடித்திறக்காமல் தொடர்ந்து பார்த்துக்கொண்டே இருக்க வேண்டுமாம். இது ஒரு நயமான பகுதி.
ஆயர்கள் திருமாலை வழிபடும் வைணவர்களாதலின், ஆய்ச்சியர் குரவையில் இச்செய்திகள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. அந்த அந்த இடங்களில் அந்த அந்த நடிகராக இளங்கோ அடிகள் நடித்துள்ள அருமை பெருமை மகிழத்தக்கது.
இலக்கிய ஒப்புமை காண்டல் என்ற முறையில் திருநாவுக்கரசர் தம் உறுப்புகட்கு விடுத்துள்ள கட்டளைகளைக் காண்பாம்:-
“தலையே நீ வணங்காய்” (1)
‘கண்காள் காண்மின்களோ-’ (2)
‘செவிகாள் கேண்மின்களோ-’ (3)
‘மூக்கே முரலாய்-’ (4)
‘வாயே வாழ்த்து கண்டாய்-’ (5)
‘நெஞ்சே நினையாய்–’ (6)
‘கைகாள் கூப்பித் தொழீர்-’ (7)
‘ஆக்கையால் பயனென்-’ (8)
‘கால்களால் பயனென். (9)
அறிவுப் பொறிகள் (ஞானேந்திரியங்கள்), செயல் பொறிகள் (கன்மேந்திரியம்), உள்ளுறுப்பு (அந்தக்கரணம்) ஆகியவற்றுள் ஒன்பது உறுப்புகளின் கடமையைத் திருநாவுக்கரசர் தேவாரப் பாடலில் கூறியுள்ளார்.
இளங்கோ அடிகள் செவி, கண், நாக்கு என்னும் மூன்றின் கடமைகளை மட்டும் கூறியுள்ளாரெனில், இது அவராகக் (ஆசிரியர் கூற்றாகக்) கூறவில்லை. கதை மாந்தராகிய ஆய்ச்சியரின் சூழ்நிலைக்கு ஏற்ப, ஆய்ச்சியர் கூறியிருப்பதாக அளந்து கூறியுள்ளார். நாவுக்கரசர் தம் சொந்த உறுப்புகட்குக் கூறுவதால், கஞ்சத்தனம் இன்றி . தாராளமாகப் பல உறுப்புகட்கும் கட்டளை பிறப்பித்து உள்ளார்.
ஆய்ச்சியர் குரவைப் பகுதியைப் பாடிப் பாடிச் சுவைத்து இன்புறல் வேண்டும்.
2. குன்றக்குரவை
சிறுகுடியீரே சிறுகுடியீரே?
தம் குன்றுப் பகுதியில் வேங்கை மரத்தின் கீழ் நின்று பின்பு வானுலகம் சென்ற கண்ணகியைக் கண்ட குன்றவர், இவள் போன்ற தெய்வம் நமக்கு வேறு இல்லையாதலின் இவளைப் பாடுவோம் என்று பாடிய பகுதி சுவையானதாதலின், விளக்கம் வேண்டாது அதனைக் காண்பாம்:
“சிறுகுடி யீரே சிறுகுடி யீரே
தெய்வம் கொள்ளுமின் சிறுகுடியீரே
நிறங்கிளர் அருவிப் பறம்பின் தாழ்வரை
நறுஞ்சினை வேங்கை நன்னிழல் கீழ்ஒர்
தெய்வம் கொள்ளுமின் சிறுகுடி யீரே
தொண்டகம் தொடுமின் சிறுபறை தொடுமின்
கோடுவாய் வைம்மின் கொடுமணி இயக்குமின்
குறிஞ்சி பாடுமின் நறும்புகை எடுமின்
பூப்பலி செய்ம்மின் காப்புக்கடை நிறுமின்
பரவலும் பரவுமின் விரவுமலர் துவுமின்
ஒருமுலை இழந்த நங்கைக்குப்
பெருமலை துஞ்சாது வளஞ்சுரக் கெனவே”
குன்றவரின் இயங்களும் பூசனை முறைகளும், இப் பகுதியில், அடிமேல் அடித்தாற்போல் தொடர்ந்து இடம் பெற்றுப் படிப்பவரை மகிழ்விக்கின்றன.
இது நகையாகின்றே
தலைமகன் ஒருவனோடு காதல் கொண்ட தலைமகள் ஒருத்தி விரைவில் மனம் கூடாமையால் மிகவும் வாடி வதங்கி மெலிந்து காணப்படுகிறாள். இந்தக் காதல் திருவிளையாடலை அறியாத தலைவியின் தாய், தன் பெண்ணை ஏதோ தெய்வம் தீண்டி அச்சுறுத்தி விட்டது என்று எண்ணி, வேலன் வெறியாடல் செய்யத் தொடங்கு கிறாள். அத்தெய்வம் முருகன் என எண்ணுகிறாள்.
தாய் முருகனுக்குப் பூசனை போடுவாள்; முருகன் ஏறிய வேலன் என்னும் சாமியாடியை அழைத்து, மகளின் நோய்க் காரணத்தை அறிந்து சொல்லச் செய்து அது தீர்க்கும் வழியையும் அறிவிக்கச் செய்வாள் தாய். வேலன் என்பவன் மேல் முருகன் ஏறி எல்லாம் கூறுவானாம். இதற்குத் தமிழ் அகப்பொருள் துறையில் வேலன் வெறியாட்டு என்பது பெயராகும்.
தலைவி தோழிக்குச் சொல்லுகிறாள்:- தோழியே! என் காதலனால் உண்டான நோயை முருகனால் உண்டான நோயாக அன்னை எண்ணி வெறியாடும் வேலனை வரச் சொல்லியுள்ளாள். இது நகைப்புக்கு உரியது தோழியே! (இது நகையாகின்றே தோழி).
ஆய் வளையல் அணிந்த தோழியே ! மலை நாடனாகிய என் காதலனால் உண்டான நோயைத் தீர்க்க வேலன் வருமாயின் உண்மை நோயை அறியாததால் அவனால் தீர்க்க முடியாதாதலின் அவ்வேலன் அறிவிலியாவான். மற்றும், அவ்வேலன்மேல் ஏறியாடச் செய்யும் குருகுபெயர்க் குன்றம் தொலைந்த முருகனும் மடவோனேயாவன். இது நகையாகின்றே.
செறிவளைக் கை நல்லாய்! வெறிகமழ் வெற்பனாகிய என் காதலனால் உண்டான நோயைத் தீர்க்க வரும் வேலன் மடையன். ஆலமர் செல்வனாகிய சிவனின் மகனாகிய முருகன் அவன்மேல் வரின் அவ்வேலனைவிடப் பெரிய மடையனாவான். இது நகையாகின்றே!
நேரிழை நல்லாய்! மலை நாடனாகிய என் தலைவனது மார்பு தந்த கொடிய நோயைத் தீர்க்க வரும் வேலன் மடவோனாவான். கடப்ப மாலை யணிந்த முருகன் வேலன் மேல் ஏறி வரின், அவனினும் இவன் கடைந்தெடுத்த பெரிய மடவோனாவான். இது நகையாகின்றே! என்று தலைவி தோழிக்குக் கூறினாள். இனிப் பாடல் பகுதிகள் வருமாறு:
‘இறைவளை நல்லாய்! இது நகை யாகின்றே
கறிவளர் தண்சிலம்பன் செய்த நோய் தீர்க்க
அறியாள் மற்று அன்னை அலர் கடம்பன் என்றே
வெறியாடல் தான் விரும்பி வேலன் வருகென்றாள்.’ 1
‘ஆய்வளை நல்லாய்! இது நகை யாகின்றே
மாமலை வெற்பன் நோய் தீர்க்க வரும் வேலன்;
வருமாயின் வேலன் மடவன்; அவனின்
குருகுபெயர்க்குன்றம் கொன்றான் மடவன்’ 2
‘செறிவளைக் கை நல்லாய்! இது நகையாகின்றே
வெறிகமழ் வெற்பன்நோய் தீர்க்க வரும் வேலன்;
வேலன் மடவன்; அவனினும் தான்மடவன்
ஆலமர் செல்வன் புதல்வன் வருமாயின்’. 3
‘நேரிழை நல்லாய்! நகையாம் மலைநாடன்
மார்பு தரு வெந்நோய் தீர்க்க வரும்வேலன்;
தீர்க்க வரும்வேலன் தன்னினும் தான்மடவன்
கார்க் கடப்பக் தார் எம் கடவுள் வருமாயின்’. 4
இவை பாடல் பகுதிகள். தமிழ் அகப்பொருள் இலக்கணத்தை முற்றும் (கரைத்துக் குடித்துக்) கற்றவராகக் காணப்படுகிறார் ஆசிரியர் இளங்கோ.
மேலும் தலைவி கூறுகிறாள்:
1. நீல மயில் மேல் வள்ளியோடும் முருகன்வரின், மலை நாடராகிய என் காதலரோடு என்னை மணம் முடிக்க அருள் புரிக என்று வேண்டுவோம்.
2. மலைமகள் மகனாகிய முருகன் வரின், அவனையும் அவன் துணைவி குறமகள் வள்ளியையும் தொழுது, அயலாருக்கு என்னை மணம் முடிக்கச் செய்யாமல், என் காதலருக்கே என்னை மணம் முடிக்க அருளும்படி வேண்டுவோம்.
3. மலைமகள் உமையின் மகனாகிய முருகன் வரின், அவனையும், அவன் மனைவியாகிய எம் குறக் குலத்து வள்ளியையும் தொழுது, பலரும் அறியும்படியாக என் காதலருடன் என்னை மணம் முடிக்க அருளும்படி வேண்டுவோம்.
4. குறமகளும் எம் குலத்து மகளும் ஆகிய வள்ளியையும் முருகனையும் தொழுது, பிழைபட வேறொருவர்க்கு என்னை மணம் முடிக்காமல், என் காதலருடனேயே என்னை மணம் முடிக்க அருளும்படி வேண்டுவோம் –
என்று தலைவி கூறினாளாம். பாடல் பகுதிகள் வருமாறு:
‘வேலனார் வந்து வெறியாடும் வெங் களத்து
நீலப் பறவைமேல் நேரிழை தன்னோடும்
ஆலமர் செல்வன் புதல்வன் வரும்; வந்தால்
மால்வரை வெற்பன் மனஅணி வேண்டுதுமே’. 1
‘கயிலைகன் மலையிறை மகனை நின் மதிநுதல்
மயிலியல் மடவரல் மலையர் தம் மகளார்
செயலைய மலர்புரை திருவடி தொழுதேம்
அயல் மணம்ஒழி; அருள் அவர் மணம் எனவே’. 2
‘மலைமகள் மகனை நின் மதி நுதல் மடவரல்
குலமலை உறைதரு குறவர்தம் மகளார்
நிலையுயர் கடவுள்நின் இணையடி தொழுதேம்
பலர் அறி மணம் அவர் படுகுவர் எனவே’. 3
‘குலமகள் அவள் எம குலமகள் அவளொடும்
அறுமுக ஒருவநின் அடியிணை தொழுதேம்
துறை மிசை நினதுஇரு திருவடி தொடுநர்
பெறுக நன் மணம், விடு பிழை மணம் எனவே’. 4
என்பன பாடல் பகுதிகள்.
முருகனை ஈர்த்துக் கவர, அவன் மனைவி வள்ளி தங்கள் குறக் குலத்தவள் என்று கூறியிருக்கும் நயமான பகுதி சுவைக்கத் தக்கது. இவ்வாறாகக் குன்றக் குரவையில் பல சுவைகளை நுகர்ந்து மகிழலாம்.
ஆய்ச்சியர் குரவை, குன்றக் குரவை ஆகிய இரண்டிலும், பல பாடல்களில், இரண்டாம் அடி திரும்பவும் மூன்றாம் அடியாக மடங்கி வரும் செய்யுள் அமைப்பைக் காணலாம். ஒவ்வொன்றிலுமிருந்து ஒவ்வோர் எடுத்துக்காட்டு வருமாறு:-
ஆய்ச்சியர் குரவை
‘முந்நீ ரினுள் புக்கு மூவாக் கடம் பெறிந்தான்
மன்னர்கோச் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன்
மன்னர்கோச் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன்
கன்னலில் தோளோச்சிக் கடல் கடைந்தான் என்பரால் ‘.
குன்றக் குரவை
‘எற்றொன்றும் காணேம் புலத்தல் அவர்மலைக்
கற்றீண்டி வந்த புதுப்புனல்
கற்றீண்டி வந்த புதுப்புனல் மற்றையர்
உற்றாடி னோம்தோழி நெஞ்சன்றே’.
வந்த சொல்லே சொற்றொடரே மீண்டும் அடுத்து அடுத்து வருதல் நாடகத்தில் சுவை கூட்டும் ஓர் அமைப்பாகும் என்று The Art of Play Writing என்னும் நூலில் படித்தது இங்கே இப்போது நினைவிற்கு வந்து உவகை ஊட்டுகின்றது.
இவ்வாறாக, சுவையான சிறப்புச் செய்திகள் பல சிலம்பில் உள.
16. கம்பரின் காலம்
கம்பரின் காலம் பற்றி இருவேறு கருத்துகள் உள்ளன. கம்பர் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டினர் என ஒரு சாராரும், கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டினர் என மற்றொரு சாராரும் கூறுகின்றனர். இவற்றுள், கம்பர் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டினர் என்னும் கருத்தே சரியானது. இதற்கு உரிய சான்றுகள் வருமாறு:
கம்பர் சோழ நாட்டினர்; சோழ மன்னரின் அவைக்களப் புலமைத் தொடர்பு உடையவர்; சோழ மன்னர் மூவரின் அவைக்களப் புலவராயும் ஆசானுமாயும் இருந்த பெரும் புலவர் ஒட்டக் கூத்தரோடு முரண்பாட்டுத் தொடர்பு கொண்டிருந்தவர்; தம் மகன் அம்பிகாபதியைச் சோழன் கொன்றதாலும் பிற காரணங்களாலும் சோழ மன்னனைப் பகைத்துக்கொண்டு சோழ நாட்டை விட்டு வெளியேறியவர்.
மேற்கூறிய செய்திகளை அடிப்படையாகக் கொண்டு காணுங்கால், கம்பர் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டினர் என்னும் கருத்து வலுப்பெறும். ஆனால், சிலர், கம்பரும் ஒட்டக் கூத்தரும் ஒரு காலத்தவரல்லர் - அம்பிகாபதி கம்பர் மகன் அல்லன்-என்றெல்லாம் கூறுவர். இது சரியன்று. கம்பரையும் கூத்தரையும் தொடர்புறுத்தியும் கம்பரொடு அம்பிகாபதியைத் தொடர்புறுத்தியும் பல நிகழ்ச்சிகள் கூறப்படுகின்றன. “அள்ளாமல் குறையாது இல்லாமல் பிறக்காது” என்னும் முதுமொழி நூற்றுக்கு நூறு உண்மை யில்லாவிடினும் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளத் தக்கதே. எனவே, கம்பரும் கூத்தரும் ஒரு காலத்தவரே. மறைமலை அடிகளார், ரா. பி. சேதுப்பிள்ளை, ரா. இராகவையங்கார் முதலிய தமிழ் ஆராய்ச்சி அறிஞர்களின் கருத்து, கம்பர் பன்னிரண்டாம் நூற்றாண்டினர் என்பதே.
ஒட்டக் கூத்தர், விக்கிரம சோழன் (கி.பி. 1120-1135), இரண்டாங் குலோத்துங்கன் (1136-1150), இரண்டாம் இராசராசன் (1151-1163) ஆகிய மூன்று சோழர்க்கும் அவைக்களப் புலவராயிருந்தவர்; இம் மூவர்மேலும் ‘உலா' பாடியவர். இந்த உலா நூல்கள் மூன்றும் 'மூவர் உலா' என்னும் பெயரால் வழங்கப் பெறும். இந்தச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு நோக்குங்கால், கூத்தரும் அவர் காலத்தவராகிய கம்பரும் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டினர் என்பது தெளிவுறும்.
'கம்பரும் கூத்தரும் ஒரு காலத்தவர் அல்லர்; எனவே, கம்பர் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டினரே' என்பவரின் கருத்துப்படி கம்பரையும் கூத்தரையும் காலத்தால் பிரித்து விடினும், கம்பர் ஒன்பதாம் நூற்றாண்டினராகார். இதற்கு உரிய சான்றாவது:
கம்பர் சோழ அரசோடு தொடர்பு கொண்டிருந்தார் என்பதையும் இறுதியில் முரண்பாடு கொண்டு சோழ நாட்டை விட்டு வெளியேறினார் என்பதையும் பெரும் பாலும்-பலரும் ஒத்துக் கொள்கின்றனர். கம்பர் தொடர்பு கொண்டிருந்த சோழன் பேரரசனாகத்தான் இருந்திருக்க வேண்டும். எனவே, கம்பர் ஒன்பதாம் நூற்றாண்டினர் எனக் கூற வியலாது. ஏனெனில், கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டில் சோழ அரசு இருக்கும் இடம் தெரியாமல் எங்கோ ஒரு மூலையில் ஒதுங்கிக் கிடந்தது. கி.பி. 879-897ஆம் ஆண்டுக் காலத்தவனாகிய அபராசித பல்லவன் காலம்வரை சோழ நாடு பல்லவ அரசின்கீழ் இருந்தது. ஒன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்தவனாகிய விசயாலயச் சோழன் (கி.பி. 850.870) பல்லவர்க்குக் கப்பம் கட்டி ஒரு சிற்றரசனாய் உறையூர்ப் பகுதியில் ஒடுங்கிக் கிடந்தான். அப்போது தஞ்சைப் பகுதியை முத்தரையர் மரபினர் ஆண்டு வந்தனர். நாளடைவில், விசயாலயச் சோழன் முத்தரையரை வென்று தஞ்சைப் பகுதியைக் கைப்பற்றினான்.
விசயாலயனுக்குப் பிறகு அவன் மகனாகிய முதலாம் ஆதித்தச் சோழன் (கி.பி. 871-907) படிப்படியாகப் பல்லவரை வென்று, சோழ நாட்டையும் தொண்டை நாட்டையும் தன்னுடையனவாக்கிக் கொண்டான். இவனுக்குப் பல ஆண்டுகட்குப் பின்னால், முதலாம் இராசராசன் (985-1014) காலத்தில்தான் சோழ அரசு மிகப் பெரிய வல்லரசாகத் திகழத் தொடங்கியது. இது, மூன்றாம் இராசேந்திரச் சோழன் (1247-1279) காலம் வரையும் நிலைத்திருந்து, பின்னர் வீழ்ச்சியுற்றுப் பாண்டியரால் பற்றப்பட்டது. இந்தச் செய்திகளின் அடிப்படையில் ஒரு முடிவு காண்பாம்:
இறுதிப் பல்லவனாகிய அபராசிதன் 897ஆம் ஆண்டு வரை பல்லவ நாட்டையும் சோழ நாட்டையும் ஆண்டிருக்கிறான். அபராசித பல்லவனைக் கொன்ற முதலாம் ஆதித்தச் சோழன் 907ஆம் ஆண்டுவரை ஆண்டிருக்கிறான். எனவே, சோழப் பேரரசு பிற்காலத்தில் மீண்டும் உருவாகத் தொடங்கிய காலம் கி.பி. 897ஆம் ஆண்டுக்கும் 907ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட பத்தாண்டுக் காலத்துக்குள்ளே யாகும். இந்தக் காலக் கணிப்பு சிறிது முன் பின்னாகவும் இருக்கலாம். இந்த அடிப்படையில் நோக்குங்கால், சோழ அரசோடு பெரிய தொடர்பு கொண்டிருந்த கம்பர் சோழ அரசு ஒடுங்கிக் கிடந்த ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்தவராகத் தோன்றவில்லை. ஆனால், சோழ அரசு சிற்றரசாயிருந்தாலும் அரசு அரசுதானே?-ஏன் அக்காலத்தில் வாழ்ந்திருக்கக் கூடாது?-என்று சிலர் வினவலாம். மற்ற வரலாற்றுச் சூழ்நிலைகளையும் பார்க்க வேண்டுமே! கம்பருக்கும் ஒட்டக் கூத்தருக்கும் இடையே தொடர்புக் கதைகள் பல சொல்லப்படுவதை அவ்வளவு எளிதாகப் புறக்கணித்து விட முடியாது. கம்பர் வரலாறு முழுவதையும் கூர்ந்து நோக்குங்கால், அவர், பேரரசுச் சோழர் காலத்தவராகவே தென்படுகிறார்.
ஆனால், கம்பர் ஒன்பதாம் நூற்றாண்டினர் என்னும் கொள்கையினர் சிலர், ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் பத்தாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் (கி.பி. 871-907) அரசாண்ட ஆதித்தச் சோழன் காலத்தில் கம்பர் வாழ்ந்தார்; அதனால் அவர் ஆதித்தச் சோழனுக்கு நன்றி தெரிவிக்கும் முறையில், தம் நூலில், இராமனுடைய முன்னோர் சூரிய, குலத்தில் வந்தவர்கள் என்பதை அறிவிக்கும் இடத்தில், (1 - வரலாற்றுப் படலம் - 3).
“ஆதித்தன் குல முதல்வன் மனுவினை யார் அறியாதார்”
என்று பாடி ஆதித்தன் பெயரைச் சுட்டியுள்ளார் என்று கூறுவர். ஆதித்தன் என்பதற்குச் ‘சூரியன்’ என்ற பொருள் உண்டு. கம்பர் ஆதித்தச் சோழனை நினைவு கூராமல், இயற்கையாக ‘ஆதித்தன்’ என்று கூறியிருக்கக் கூடாதா? அல்லது தம் தந்தையின் பெயராகிய ‘ஆதித்தன்’ என்பதைத் தந்தையின் நினைவாகத் தம் நூலில் பெய்திருக்கக் கூடாதா? எனவே, இது பொருத்தமான சான்று ஆகாது.
மற்றும், இக்கொள்கையினரால், கம்பர் ஒன்பதாம் நூற்றாண்டினர் என்பதற்கு அடிப்படைச் சான்றாக எடுத்துக்காட்டப் படுகின்ற,
“எண்ணிய சகாத்தம் எண்ணுற் றேழின்மேல் சடையன் வாழ்வு
நண்ணிய வெண்ணெய் நல்லூர் தன்னிலே கம்ப நாடன்
பண்ணிய இராம காதை பங்குனி அத்த நாளில்
கண்ணிய அரங்கர் முன்னே கவியரங் கேற்றி னானே”
என்னும் ஊர் பேர் தெரியாத (அநாமதேயப்) பாடலுக்கு, சில கம்பராமாயண ஓலைச் சுவடிகளின் ஈற்றில் காணப்படுகிற பின் வரும் பாடல் பதில் இறுக்கும். அப்பாடல்:
“ஆவின் கொடைச்சகரர் ஆயிரத்து நூறொழித்துத்
தேவன் திருவெழுந்துார் நன்னாட்டு-மூவலூர்ச்
சீரார் குணாதித்தன் சேய் அமையப் பாடினான்
காரார் கா குத்தன் கதை”
என்பதாகும். (சகரர் ஆயிரத்து நூறொழித்து = பன்னிரண்டாம் நூற்றாண்டு; குண ஆதித்தன் சேய் = கம்பர்; காகுத்தன் = இராமன்). இப்பாடல், கம்பர் பன்னிரண்டாம் நூற்றாண்டினர் என்னும் கருத்துடையது.
மற்றொரு சான்று: சோழநாட்டைவிட்டு வெளியேறிய கம்பர், இறுதியாகப் பாண்டிய நாடடைந்து இயற்கை எய்தியதற்குமுன், (தொண்டை நாடு எனப்படும் பல்லவ நாடு சோழர் கைக்கு மாறியதால் அங்கே தங்காமல்) ஆந்திர அரசனாகிய ஓரங்கல் நாட்டுப் பிரதாப ருத்திரனிடம் சென்று சிறிது காலம் தங்கியிருந்ததாக ஒரு வரலாறு கூறுகிறது. இந்தப் பிரதாப ருத்திரனும், ஒட்டக் கூத்தரால் உலா பாடப்பெற்ற சோழ மன்னர்களும் பன்னிரண்டாம் நூற்றாண்டினர் எனச் சில கல்வெட்டுகள் கூறுகின்றன. பிரதாப ருத்திரனோடு தொடர்பு கொண்ட கம்பரும் இக்காலத்தவரே.
எனவே, கம்பர் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டினர் என்பது விளங்கலாம்.
★ ★ ★