துளசி மாடம் (சமூக நாவல்)
தீபம் நா. பார்த்தசாரதி
tuLaci mATam (novel)
by tIpam nA. pArtacArati
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Tamil Virtual Academy for providing a scanned image
version of this work for the etext preparation. This work has been prepared using the
Google Online OCR tool to generate the machine-readable text and subsequent proof-reading.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2017.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
துளசி மாடம்
(ராஜா அண்ணாமலை இலக்கியப் பரிசு பெற்றது)
நா. பார்த்தசாரதி
Source:
துளசி மாடம் (சமூக நாவல்)
(ராஜா அண்ணாமலை இலக்கியப் பரிசு பெற்றது)
நா. பார்த்தசாரதி
தமிழ்ப் புத்தகாலயம்
15, மாசிலாமணி தெரு, தி. நகர், சென்னை -600 017
ஆறாம் பதிப்பு 1999 (முதல் பதிப்பு 1979)
விலை ரூ 75.00
Thulasi Maadam
(Tamil Social Novel)
(Raja Sir Annamalai Literary Award winnder)
by Naa. Parthasarathy
C Mrs. Parthasarathy
Sixth Edition, April 1999
Published by:
Tamil Puthakalayam, 15, Masilamani Street,
T. Nagar, Chennai 600 017, Price Rs. 75.00
----------
துளசி மாடம்
முன்னுரை
1978 ஜூன் மாதம் முதல் 1979 ஜனவரி மாதம் வரை 'கல்கி' வார இதழில் வெளியான இந்நாவல் இப்போது புத்தக வடிவில் வெளி வருகிறது.
தொடராக வெளிவரும் போதும், நிறைந்த போதும், ஏராளமான அன்பர்களின் நுணுக்கமான கவனிப்பையும், பாராட்டையும் பெற்ற இந்நாவலை இப்போது புத்தக வடிவில் தமிழ்ப் புத்தகாலயத்தார் கொண்டு வருகிறார்கள்.
"பண்பாடு என்பது பரவலாகும் போது வெறும் தேசிய அடையாளப் புள்ளி (National Identity) நீங்கி மானிடம் என்கிற சர்வதேச அடையாளப் புள்ளி (International Identity) வந்து விடுகிறது.
நன்கொடை அளித்து உதவுங்கள்!
சங்கரமங்கலம் என்ற ஒரு சிறிய தமிழ்நாட்டுக் கிராமத்தில் இந்தக் கதை நிகழ்ச்சிகள் நடந்தாலும் இதில் வரும் மனிதர்கள் அல்லது முக்கிய கதாபாத்திரங்கள் அந்தச் சிறிய கிராமத்துக்கு அப்பாலும் - அதைவிடப் பரந்த பெரிய உலகத்தைப் பாதிப்பவர்கள் - பாதித்தவர்கள், பாதிக்கப் போகிறவர்கள்" - என்ற கருத்தை இந்த நாவலின் முடிவுரையில் காண்பீர்கள். அதையே இங்கும் முதலில் நினைவூட்ட விரும்புகிறேன். உலகத்தைப் பொறுத்தவரை அழகிய தென்னிந்தியக் கிராமமான சங்கரமங்கலத்தில் விசுவேசுவர சர்மாவின் இல்லத்துத் துளசி மாடத்தில் தொடர்ந்து தீபம் ஏற்றப்படுகிறது என்பது தான் முக்கியம். ஆனால் அந்தக் கிராமத்தைப் பொறுத்தவரையிலோ அந்த தீபம் எந்தக் கைகளால் யாரால் - ஏற்றப்படுகிறது என்பது மட்டுமே மிகவும் முக்கியம்.
பூரண ஞானிகளும் விருப்பு வெறுப்பற்ற அறிவாளிகளும் உலகெங்குமுள்ள மனிதர்களை இனம், நிறம், மொழி, வேறுபாடுகளைக் கருதாமல் சமதிருஷ்டியோடு பார்க்கிறார்கள். சமதிருஷ்டியும், சஹ்ருதயமும், பக்குவத்தாலும் பண்பாட்டுக் கனிவு, முதிர்ச்சி ஆகியவற்றாலுமே வருவன. அவை எல்லாருக்கும் எல்லா இடத்திலும் வந்து விடுபவை அல்ல.
சர்மாவுக்கும், இறைமுடிமணிக்கும், அறிவாலும் சமதிருஷ்டியாலும் கிடைக்கும் கனிவு, சீமாவையருக்கும் பிறருக்கும் எதனாலும் எப்போதும் கிடைக்கவில்லை என்பதைத்தான் கதை நமக்குச் சொல்லுகிறது. மகாகவி பாரதி கூறுவதைப் போல்,
"நோக்கும் இடம் எங்கும்
நாமன்றி வேறில்லை
நோக்க நோக்கக் களியாட்டம்"
என்கிற 'சமதரிசனம்' தான் அறிவின் முடிவான பயன். அத்தகைய சமதரிசனம் விசுவேசுவர சர்மாவுக்கு இருக்கிறது. காமாட்சியம்மாளுக்குக் கூட முடிவில் அந்தச் சமதரிசனம் வரத்தான் செய்கிறது. ஆனால், அந்தச் சமதரிசனமே அவளது முக்தியாகவும் அமைந்து விடுகிறது கதையில்.
அத்தகைய சமதரிசனமும் மன விசாலமும் ஏற்பட இக்கதை ஒரு சிறிது உதவினாலும் அதற்காக இதை எழுதிய ஆசிரியன் பெருமகிழ்ச்சியடைய முடியும் என்பதை வாசகர்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
நா. பார்த்தசாரதி
'தீபம்'
சென்னை - 2
16-2-1979
-------
துளசி மாடம்
அத்தியாயம் 1
புதன் கிழமைக்கும் வெள்ளிக் கிழமைக்கும் நடுவில் சங்கரமங்கலம் விசுவேசுவர சர்மாவின் அந்தக் குடும்பத்தில் அப்படி என்னதான் நடந்து விட்டது? ரவி பாரிஸிலிருந்து எழுதி வியாழக்கிழமை காலையில், இங்கே கிடைத்திருக்கிற அந்த விமானத் தபால் - கடிதம்தான் இந்த மாறுதல்களை உண்டாக்கியிருக்க வேண்டும். கடிதத்தைப் பார்த்தபின் என்ன செய்வது என்ற மலைப்பு, இனி எப்படி நடக்கும் என்ற ஆவல், எப்படி அதற்கு ஒத்துக் கொள்வது என்ற தயக்கம், யார் யார் என்ன நினைப்பார்கள் என்ற பயம் - எல்லாம் விசுவேசுவர சர்மாவின் மனத்தைப் பற்றிக் கொண்டு உலுக்கின.
ரவியைப் பிரான்சுக்குப் போக அனுமதித்திருக்கவே வேண்டாமோ என்று தோன்றியது இப்போது. வேணு மாமாவின் யோசனைப்படி ஆங்கிலப் பத்திரிகைகளில் கொடுப்பதற்காக எழுதி வைத்திருந்த 'மணமகள் தேவை' - விளம்பரத்தைக் கொடுக்கும் எண்ணம் இப்போது அவருக்கு இல்லை. அப்படி ஒரு விளம்பரம் கொடுப்பதற்கு இனிமேல் அவசியம் இருப்பதாகவும் அவருக்குத் தோன்றவில்லை. அவர் முடிவு செய்வதற்கென்று இதற்குப்பின் அவருடைய திருக்குமாரனால் எதுவும் மீதம் விடப்பட்டிருக்கவில்லை. எல்லாம் முடிந்துவிட்டது. அல்லது கைமீறிப் போயிருந்தது.
வெள்ளிக்கிழமை காலை, உள்ளூர் நியூஸ் ஏஜெண்டு பத்திரிகைக்கு வாங்கி அனுப்புவதற்காக அந்த 'மணமகள் தேவை' விளம்பரத்தை அவரிடம் வந்து கேட்ட போது,
"இப்ப வேண்டாம்... மறுபடியும் நானே சொல்லி அனுப்பறேனே...?" என்று அவனுக்குப் பூசி மெழுகினாற் போலப் பதில் சொல்லி மறுத்துவிட்டார்.
புதன் கிழமை காலையில் பத்திரிகை போடும்போது, 'நாளன்னிக்கு வெள்ளிக் கிழமை காலம்பர ஒரு விளம்பரம் தரேன். அதைப் பேப்பருக்கு அனுப்பிடணும். என்ன பணம் ஆறதுன்னு கணக்குப் பார்த்துச் சொன்னா அதுக்கும் கூடவே செக் எழுதித் தந்துடறேன்..." என்று கூறியிருந்தவர் வெள்ளிக் கிழமை அந்த எண்ணத்தை உடனே கைவிடும்படி அப்படி என்ன ஆயிற்றென்று புரியவில்லை.
தனக்குக் கிடைக்க இருந்த விளம்பரக் கமிஷன் போய் விட்டதே என்று ஏஜெண்டுக்கு வருத்தம். அந்த ஊரிலும், அக்கம் பக்கத்து ஊர்களிலுமாக இப்படி ஏதாவது பத்துப் பன்னிரண்டு விளம்பரங்களை வாங்கி அனுப்புவதன் மூலம் பத்திர்கைகளின் விற்பனைக் கமிஷன் தவிர விளம்பரக் கமிஷனாகவும் அவனுக்கு ஏதாவது கிடைக்கும். ஏஜெண்டைப் பொறுத்தவரை அந்த மாத விளம்பரங்களில் ஒன்று இப்போது போய்விட்டது. நஷ்டம்தான்.
"ஐரோப்பிய நகரம் ஒன்றில் சில ஆண்டுகள் வசித்துவிட்டுத் தாயகம் திரும்பும் மேற்படிப்பும் உயர்கல்வித் தகுதியும் உள்ள முப்பத்திரண்டு வயது மணமகனுக்கு மணமகள் தேவை. கௌசிக கோத்திரம் அல்லாத கோத்திரத்தைச் சேர்ந்தவர் எழுதவும். மணமகள் அழகாகவும் இலட்சணமாகவும் குடும்பப் பாங்காகவும் அடக்கமாகவும் இருக்க வேண்டும். பி.ஏ. வரை படித்திருந்தால் நல்லது. குறைந்த பட்சம் எஸ்.எஸ்.எல்.சி.யாவது பாஸ் செய்திருக்க வேண்டும். புகைப்படம் முதலிய விவரத்தோடு ஜாதகமும் அனுப்ப வேண்டும்" - என்னும் பொருள்பட ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்டிருந்த அந்தச் சிறிய விளம்பரம் வேணு மாமாவின் ஆலோசனையோடு தயாரிக்கப்பட்டவுடனேயே பாரிஸூக்கும் ஒரு காப்பி அனுப்பப்பட்டது. விசுவேசுவர சர்மாவின் பிள்ளை ரவிக்கு அதை முதலில் அனுப்பச் சொன்னதே வேணு மாமாதான்.
வேணு மாமாவின் பிள்ளை சுரேஷுக்குப் பாரிஸில் உள்ள யுனெஸ்கோ அலுவலகத்தில் பெரிய உத்தியோகம். சுரேஷ் முதலில் ஐ.நா. தலைமை அலுவலகத்தில் நியூயார்க்கில் இருந்தான். அப்புறம் பாரிஸுக்கு மாற்றப்பட்டு இப்போது சில ஆண்டுகளாகப் பாரிஸில் இருக்கிறான். பாரிஸில் குடும்பத்தோடு வசித்து வந்த சுரேஷ் அங்கு வந்ததிலிருந்தே தன் தந்தையையும் ஒரே தங்கையையும், வரச்சொல்லிச் சங்கரமங்கலத்துக்கு எழுதிக் கொண்டே இருந்தான். வேணு மாமாவும் அவர் பெண்ணும் அசையவே இல்லை. கடைசியாக நாலைந்து மாதங்களுக்கு முன்பு சுரேஷ் இரண்டு பேருக்குமாக அங்கிருந்து விமான டிக்கட்டையே வாங்கி அனுப்பிவிட்டான். வேணு மாமாவும் அவர் பெண்ணும் பாரிஸ், லண்டன் எல்லாம் சுற்றிப் பார்த்து விட்டுத் திரும்பிய பின்புதான் பாரிஸிலிருக்கும் தன் பிள்ளை ரவியைப் பற்றிய சில விவரங்கள் விசுவேசுவர சர்மாவுக்குத் தெரிந்தன.
வேணு மாமா அந்த விபரங்களைத் தெரிவித்த போது, முதலில் விசுவேசுவர சர்மாவால் அவற்றை நம்பக் கூட முடியவில்லை. வேணு மாமா என்னவோ மிகவும் எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் தான் சர்மாவிடம் அதைச் சொல்லியிருந்தார். புறங்கூறுவது போலவோ குறை கூறுவது போலவோ அவர் சர்மாவிடம் அதைக் கூறவில்லை.
"உமக்குத் தகவல் தெரியணும்கிறதுக்காகத்தான் இதைச் சொன்னேன். உடனே கோபத்தோடு அசட்டுப் பிசட்டுன்னு ஆத்திரப்பட்டு அவனுக்கு லெட்டர் எழுதிப்பிடாதேயும். எழுதறதுன்னாக்கூட இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு இதெல்லாம் ரொம்ப நாசூக்காகவும் மனசு புண்படாமலும் எழுதணும். 'ஏண்டா போன இடத்தில் நீ பாட்டுக்கு யாரோ ஒரு பிரெஞ்சுப் பெண்ணைக் காதலிக்கிறியாமே?' -ன்னு எழுதாதீரும். 'நீ இந்த தடவை ஊருக்கு வரபோது உனக்குக் கல்யாணம் பண்ணிடலாம்னு நானும் உங்கம்மாவும் நினைக்கிறோம். பேப்பர்லே இந்த மாதிரி விளம்பரம் பண்ண உத்தேசித்திருக்கேன்'னு எழுதும். அதுக்கு அவன் என்ன பதில் எழுதறான்னு பார்க்கலாம்" என்பதாக வேணு மாமாதான் அந்த யோசனையைச் சொல்லியிருந்தார். அந்த யோசனைப்படி சர்மா ரவிக்கு இரண்டு வாரம் முன்பு எழுதியிருந்த கடிதத்துக்குத்தான் வியாழக்கிழமை காலையில் சுருக்கமாகவும், தீர்மானமாகவும், ஓரளவு கண்டிப்பாகவும் பாரிஸிலிருந்து பதில் வந்திருந்தது.
ரவியின் கடிதம் சற்றே பதற்றத்தோடும் அவசரத்தோடும் எழுதப்பட்டிருந்தது போல் தோன்றியது.
"மணமகள் தேவை விளம்பரம் அவசியமில்லை. அதை உடனே நிறுத்தவும். இங்கு சில மாதங்களுக்கு முன்பு வந்திருந்த வேணு மாமாவோ, அவர் பெண் வசந்தியோ என்னைப் பற்றிய விவரங்களை உங்களுக்குச் சொல்லியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். அவர்கள் அந்த விவரங்களை எல்லாம் சொல்லியதன் பின் உங்களுக்கு எழுந்த சந்தேகத்தின் பேரில் நீங்கள் எழுதியிருந்தாலும் சரி, எந்த விவரமும் உங்களுக்குத் தெரியாமல் நீங்களாகவே எனக்கு எழுதியிருந்தாலும் சரி, என் பதில் இதுதான். இதில் மாறுதல் எதுவும் எதிர்பார்க்க வேண்டாம்.
நான் என் மனத்தை மிகவும் கவர்ந்துவிட்ட பிரெஞ்சு யுவதி 'கெமெலை'க் (Camille-என்ற அவள் பெயரை என் உச்சரிப்பு வசதிக்காகக் 'கமலி' - என்று இந்தியத் தன்மையூட்டி அழைக்கிறேன் நான்) காதலிக்கிறேன்; அவளும் என்னைக் காதலிக்கிறாள். நான் இன்றி அவள் வாழ முடியாது. அவளின்றி நான் வாழ முடியாது. இது நிச்சயம். அவளுடைய பெயரில் நான் செய்துள்ள மாற்றம் உங்களுக்குப் பிடிக்கும் என்று நினைக்கிறேன். அவளும் இந்தியாவைச் சுற்றிப் பார்க்கவும் என் பெற்றோர்களாகிய உங்களையெல்லாம் காணவும் மிகவும் ஆவலாக இருக்கிறாள். இம்முறை நான் வரும்போது கமலியையும் அங்கு அழைத்து வருவதாக முடிவு செய்திருக்கிறேன்.
மகாலட்சுமி போன்ற அழகும், புன்னகை மாறாத துறுதுறுவென்ற முகக் களையும், மாற்றுக் குறையாத சொக்கத் தங்கம் போன்ற நிறமும் உள்ள மருமகளை அவளிடம் அழைத்து வருவதாகத் தயவு செய்து அம்மாவிடம் சொல்லுங்கள். கமலிக்கும் இந்தியத் தாய்மார்கள், இளம் பெண்கள் இவர்களோடெல்லாம் பழகிப் பல விஷயங்களை அறிய வேண்டும் என்பதில் கொள்ளை ஆசை. அம்மாவோ, நீங்களோ, கமலியிடம், எந்தவிதமான கோபதாபங்களையோ மனஸ்தாபங்களையோ காண்பிக்கக் கூடாது. இது என்னுடைய வேண்டுகோள்.
சின்ன வயதில் நீங்கள் எனக்குக் கற்பித்த சமஸ்கிருத காவியங்களில் 'காந்தர்வ விவாகம்' - என்பதற்கு விளக்கம் சொல்லும்போது, "கொடுப்பவர்களும் ஏற்பவர்களும் இன்றிச் சகல இலட்சணமும் பொருந்திய ஓர் இளைஞனும் இளம் பெண்ணும் தமக்குள் தாமே சந்தித்து மனமும் உடம்பும் இணைவது" என்று விளக்கம் சொல்லியிருக்கிறீர்கள். விவாகங்களில் உயர்ந்த தரத்து விவாகம் அதுதான் என்பதையும் விளக்கியிருக்கிறீர்கள். அதை இப்போது உங்களுக்கு ஞாபகப்படுத்த மட்டும் விரும்புகிறேன்.
'உங்கள் மன உணர்ச்சிகள் எப்படி இருக்கும்? அம்மா என்ன நினைப்பாள்?' - என்றெல்லாம் என்னால் இங்கிருந்தே அநுமானம் செய்து கொள்ள முடிகிறது.
குமார் நன்றாகப் படிக்கிறானா? பாருவுக்கு என் பிரியத்தைச் சொல்லவும். இருவரிடமும் அவர்களுடைய பிரெஞ்சு மன்னி அவர்களைச் சந்திக்க மிகவும் ஆவலாக இருக்கிறாள் என்று சொல்லவும்.
வேணு மாமாவையும் அவர் பெண் வசந்தியையும் கேட்டதாகச் சொல்லுங்கள். வசந்தி இங்கு வந்திருந்த போது கமலியோடு நன்றாகப் பழகினாள். கமலிக்கு அவளையும் அவளுக்குக் கமலியையும் ரொம்பப் பிடித்துப் போயிற்று.
மாமாவிடமும், வசதியிடமும், நாங்கள் வருகிற தகவலைச் சொல்லவும்.
உங்கள் பிரியமுள்ள
ரவி."
அருமைப் பிள்ளையாண்டான் ரவியின் இந்தக் கடிதத்தைத் திரும்பத் திரும்பப் பலமுறை படித்துவிட்டார் சர்மா. அவருடைய மனைவி காமாட்சி வேறு தொணதொணத்தாள்.
"ஏன்னா, நீங்க ஒரேயடியாகக் கவலையிலே மூழ்கறாப்பலே ரவி அப்படி என்னதான் எழுதியிருக்கான்? எனக்குந்தான் கொஞ்சம் படிச்சுச் சொல்லுங்கோளேன்; கேட்கிறேன்;"
"உனக்கு இப்போ ஒண்ணும் தெரிய வேண்டாம். நீ குய்யோ முறையோன்னு கூப்பாடு போட்டு ஊரைக் கூட்டிப்பிடுவே. விஷயம் இரசாபாசமாயிடும்."-
"நீங்க படிச்சுக் காட்டலேன்னா அதைப் படிச்சுத் தெரிஞ்சுக்க முடியாதுன்னு நினைச்சுக்க வேண்டாம். பாருவைப் படிக்கச் சொல்றேன். இல்லேன்னாச் சாயங்காலம் குமார் வந்தான்னா அவனைப் படிக்கச் சொல்லிக் கேட்டுப்பேன்."
-காமாட்சியம்மாள் இப்படிச் சொல்லவே சர்மா முன் ஜாக்கிரதையாக அந்தக் கடிதத்தை இரும்புப் பெட்டியில் வைத்துப் பூட்டிக் கொண்டார். இரும்புப் பெட்டிச் சாவி எப்போதும் அவர் இடுப்பை விட்டு இறங்காது. சாதாரணமாகவே தூண்டித் துருவி விசாரிக்கும் இயல்புள்ள காமாட்சியம்மாளிடம் 'உனக்கு இப்போ ஒண்ணும் தெரிய வேண்டாம். நீ குய்யோ முறையோன்னு கூப்பாடு போட்டு ஊரைக் கூட்டிப்பிடுவே... விஷயம் இரசாபாசமாயிடும்' என்று அவர் பதில் சொல்லிய விதமே அவள் ஆவலை அதிகப்படுத்திவிட்டிருக்கும். காமாட்சியம்மாளுக்குக் கொஞ்சம் காது மந்தம். வழக்கம் போல் 'உனக்கு இப்போ ஒண்ணும்...' என்று இரந்து உரத்த குரலில் தொடங்கிய சர்மா அந்த முதல் மூன்று சொற்களுக்குப் பின் ஒலியை மெதுவாக்கி மற்ற வார்த்தைகளை மென்று விழுங்கினாற் போல அமுக்கி விட்டார். ஆகவே உரையாடலின் பின் பகுதியில் அவர் என்ன சொன்னாரென்று நல்ல வேளையாகக் காமாட்சியம்மாளுக்குப் புரியவில்லை.
*****
சங்கரமங்கலம் அக்கிரகாரம் மற்ற எல்லா அக்கிரகாரங்களையும் போல வம்பு தும்புகளும், புறம் பேசுதலும், பொருளற்ற விரோதங்களும், பயனற்ற முரண்டுகளும் நிறைந்ததுதான். எல்லாவிதமான மனிதர்களும் அங்கு இருந்தார்கள். புதுமையை அங்கீகரிக்காத வறட்டுப் பிடிவாதம், சாதி சம்பிரதாய ஆசார அநுஷ்டானங்களுக்கு முக்கியத்துவமளிக்கும் பழைய வைதிகர்களின் பிடிப்பு, படித்த இளைஞர்கள் உத்தியோகங்களுக்காகக் கிராமத்தைவிட்டு வெளியேறுதல், கட்சி கட்டுதல், ஒற்றுமையின்மை, வயல் வரப்புச் சண்டை, வைக்கோல் போருக்குத் தீ வைத்தல் சகஜமாக அந்தக் கிராமத்திலும் இருந்தன.
இன்றைய இந்தியக் கிராமம் என்பது முழுவதும் பழமையான நன்மைகள் நிறைந்ததுமில்லை. முழுவதும் புதுமையான வளர்ச்சிகள் நிறைந்ததுமில்லை. பழைமையை விடமுடியாமல், புதுமையைப் புறக்கணிக்கவும் முடியாமல், சடங்கு சம்பிரதாயங்களை தவிர்க்கவும் முடியாமல், விஞ்ஞான விவேக வளர்ச்சிகளை விட்டுவிடவும் ஏற்கவும் இயலாமல் தவிக்கும் ஓர் இரண்டுங்கெட்டான் நிலையில் அது இருந்தது. தர்மம், அதர்மம், நியாயம், அநியாயம், பணத்தாசை, பொறாமை, திருட்டு, நட்பு, விரோதம், அசூயை, விபூதி, துளசி, சீட்டாட்டம், புகையிலை, பொடி, வேதம், அத்யாயனம், வறுமை, செல்வம் என்று இவையெல்லாம் எப்படி ஒன்றோடொன்று ஒட்டாதவையோ அப்படியே இந்தியக் கிராமங்களின் நிலையும் ஒன்றோடென்று ஒட்டாமல் இருந்தது.
அதிலும் ஜீவநதி ஒன்று பாய்கிற தீரவாசத்துப் பிரதேசமாக இருந்துவிட்டாலோ இந்தப் பிரச்னைகள் இன்னும் அதிகம். சங்கரமங்கலம் தீரவாசத்தில் இருந்த வளமான கிராமம். அங்கே பாயும் அகஸ்திய நதி வற்றி மணல் தெரிந்தது என்ற பேச்சுக்கே இடமில்லை. பொன் விளையும் பூமி என்பார்களே அப்படிப்பட்ட கிராமம். கிராமத்திலிருந்து வெளியேறி பெரிய உத்தியோக அந்தஸ்தில் இருக்கிறவர்களின் பட்டியலில் முதலிடம் யுனெஸ்கோவில் உள்ள வேணு மாமாவின் பிள்ளை சுரேஷுக்குத்தான். தொழில் துறையில், வியாபாரத்தில் சர்க்கார் உத்தியோகங்களில், கம்பெனி நிர்வாகப் பதவிகளில் அந்தக் கிராமத்திலிருந்து சென்றவர்கள் பலர் இருந்தாலும் சுரேஷுக்கு அடுத்த இடம் என்னவோ சர்மாவின் பிள்ளை ரவிக்குத்தான் தரப்பட்டிருந்தது.
நாலைந்து ஆண்டுகளுக்கு முன் இப்போது பாரிஸில் ரவி பார்க்கும் இந்த உத்தியோகத்திற்காக அவன் விண்ணப்பித்த போது தனக்கு இது கிடைக்கும் என்ற நம்பிக்கையே அவனுக்கு இல்லை.
பிரான்ஸில் உள்ள பெரிய பல்கலைக் கழகத்துக்காக 'புரொஃபஸர் ஆஃப் இண்டியன் ஸ்டடீஸ் - அண்ட் ஓரியண்டல் லாங்வேஜஸ் டிபார்ட்மெண்ட்' பதவிக்கு மனுக்களைக் கோரி இந்தியன் கவுன்ஸில் ஃபார் கல்ச்சுரல் ரிலேஷன்ஸ் விளம்பரம் செய்திருந்தது. பி.எச்.டி. தவிர தமிழ், சமஸ்கிருந்தம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமையோடு பிரஞ்சு மொழிப் பயிற்சியில் டிப்ளோமாவும் தகுதிகளாகக் கோரிக் குறிப்பிடப்பட்டிருந்தன.
ரவியிடம் இந்த எல்லாத் தகுதிகளும் இருந்தன. ஒரு வருஷத்துக்கும் குறைவாகச் சென்னையில் ஒரு கல்லூரியில் வேலை பார்த்தபோது மாலை நேரங்களில் சும்மா இருக்க வேண்டாமே என்று 'அல்லயான்ஸ் பிரான்ஸேயில்' சேர்ந்து வாங்கிய பிரெஞ்சு டிப்ளோமாவும் பயன்பட்டது இப்போது.
அந்த உத்தியோகத்திற்காக டில்லியில் நடந்த இண்டர்வ்யூவுக்கு மொத்தம் ஆறுபேர் வந்திருந்தார்கள். அதில் இருவர் அதிகம் வயது மூத்தவர்கள் என்பதால் தகுதி இழந்தனர். வேறு இருவருக்குப் பிரெஞ்சு மொழி ஞானம் சரியாயில்லை. இன்னொருவருக்குச் சமஸ்கிருதம் போதுமான அளவு தெரியவில்லை. இண்டர்வ்யூ நடத்தியவர்களுக்கு எல்லா வகையிலும் - கம்பீரமான அழகிய தோற்றம் உட்படத் - திருப்தியளித்தது ரவிதான். அதனால் ரவிக்கு அந்தப் பதவி கிடைத்தது.
முதலில் அவன் பெற்றோர் தயங்கினாலும், அந்தப் பதவிக்காக இந்தியாவில் கனவிலும் எதிர்பார்க்க முடியாத சம்பளத் தொகையைக் கேள்விப்பட்டதும் சம்மதித்தார்கள். இதுதான் வெளிநாட்டில் ரவிக்கு ஓர் உத்தியோகம் கிடைத்த வரலாறு.
இன்று புதிதாக எழுந்துள்ள பிரச்னையையும் இந்தப் பழைய வரலாற்றையும் சேர்ந்தே இப்போது மறுபடி நினைத்தார் சர்மா. ஒரு முடிவுக்கு வருவதற்கு முன் வேணு மாமாவையும் அவர் பெண் வசந்தியையும் கலந்தாலோசிக்கலாம் என்று சர்மாவுக்குத் தோன்றியது.
ரவியின் கடிதத்தை எடுத்துக் கொண்டு வடக்குத் தெருவில் இருந்த வேணு மாமாவின் வீட்டுக்குச் சென்றார் சர்மா.
அவர் போன சமயம் வேணு மாமா வீட்டில் இல்லை. வேணு மாமாவின் மகள் வசந்தி கூடத்தில் நாற்காலியில் சாய்ந்தபடி 'ஈவ்ஸ் வீக்லி' படித்துக் கொண்டிருந்தாள்.
சர்மாவைப் பார்த்ததும், "வாங்கோ மாமா! அப்பா வெளியிலே போயிருக்கார்... திரும்பற சமயம் தான்... உட்காருங்கோ" - என்று வரவேற்றாள் வசந்தி.
"அப்பா வர்றபோது வரட்டுமே... அதுவரை உங்கிட்டப் பேசறதுக்கே நெறைய விஷயம் இருக்கு அம்மா..."
"சித்தே இருங்கோ மாமா... உள்ளே அம்மாகிட்ட உங்களுக்குக் காபி கலக்கச் சொல்லிட்டு வந்துடறேன்..."
"காபியா? எனக்கெதுக்குமா; இப்பத்தானே சாப்பிட்டுட்டு வந்தேன்..."
"அதுனாலே என்ன! நான் சாப்பிடப் போறேன். எங்கூடச் சேர்ந்து இன்னொரு கப் சாப்பிடுங்கோன்னு நான் சொன்னாச் சாப்பிட மாட்டேளா என்ன?"
"பேஷா, நீ வற்புறுத்தினா எப்படி நான் மாட்டேங்கறது?"-
வசந்தி உள்ளே சமையலறைக்குப் போய்விட்டு வந்தாள். வேணு மாமாவின் மனைவி அதாவது வசந்தியின் அம்மா - சர்மாவுக்கு முன்னால் வந்து நின்று பேச மாட்டாள். சில பெண்டுகள் சில ஆண்களுக்கு முன்னால் நேருக்கு நேர் நின்று பேசுவதில்லை என்பது கிராமங்களில் நீடித்த மரியாதை வழக்கமாக இன்னும் இருந்து வருகிறது. படிப்பு, பழக்க வழக்கம் எல்லாவற்றிலும் வசந்திக்கும் அவள் அம்மாவுக்கும் நடுவிலேயே ஒரு தலைமுறையின் பெரிய வித்தியாசங்கள் இடைவெளிவிட்டுத் தெரிந்தன. வேணுமாமாவின் சம்சாரம் சர்மாவுக்கு முன்னால் வருவதையோ எதிர் நின்று பேசுவதையோ கூடத் தவிர்த்தாள். வேணுமாமாவின் பெண் வசந்தியோ, சர்மாவுக்கு முன் நாற்காலியில் அமர்ந்து எந்த விஷயத்தையும் பற்றி அவரோடு நேருக்கு நேர் விவாதிக்கவும், சிரித்துப் பேசவும் தயாராக இருந்தாள்.
"என்ன மாமா? ரவிகிட்டே இருந்து உங்க லெட்டருக்குப் பதில் வந்துதா?"
"வந்திருக்கும்மா! அது விஷயமாத்தான் உங்கிட்டவும் உங்கப்பாகிட்டவும் பேசிட்டுப் போகலாம்னு வந்தேன்..."
"என்ன எழுதியிருக்கான் மாமா?"
ரவியின் கடிதத்தை அப்படியே எடுத்து வசந்தியிடம் நீட்டினார் சர்மா.
வசந்தி கடிதத்தைப் படித்துவிட்டு அவரிடம் திருப்பிக் கொடுத்தாள். 'கமலி ரொம்பத் தங்கமான பெண்' - என்ற பாராட்டுரை வசந்தியின் வாய் நுனிவரை வந்துவிட்டது. சர்மா எப்படி, என்ன மனநிலையோடு வந்திருக்கிறாரோ என்றெண்ணி அந்த வார்த்தைகளை அப்போது அவசரப்பட்டுச் சொல்லிவிடாமல் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள் அவள்.
உள்ளேயிருந்து வசந்தியின் அம்மா அவளை அழைக்கும் குரல் கேட்டது. வசந்தி போய் இரண்டு டவரா டம்ளர்களில் காபியை எடுத்துக்கொண்டு வந்தாள்.
காபி குடித்து முடிக்கிறவரை இருவரும் மேற்கொண்டு எதுவும் பேசிக் கொள்ளவில்லை. காபி குடித்து முடித்ததும் சர்மாதான் முதலில் ஆரம்பித்தார்.
"இப்படி நடந்துடும்னு நான் சொப்பனத்துலேகூட நினைச்சுப் பார்த்ததில்லேம்மா!"
"நீங்க வருத்தப்படற அளவுக்குத் தப்பா ஒண்ணும் இப்போ நடந்துடலியே மாமா?"
"இன்னும் என்ன நடக்கணும்கிரே?"
"சந்தோஷமாப் பிள்ளையையும் மாட்டுப் பொண்ணையும் வரச்சொல்லிப் பதில் எழுதுங்கோ மாமா! என்னையும் அப்பாவையும் பொறுத்த மட்டிலே நாங்க நேர்லே அங்கே போயிருந்தப்பவே எல்லாம் உறுதியாத் தெரிஞ்சு போச்சு. நாங்க வந்து சொன்னதுலே உங்களுக்குச் சந்தேகம் இருக்கப்படாதுங்கிறதுக்காகத்தான் நாசூக்காகவும் நாகரிகமாகவும் 'மணமகள் தேவை' விளம்பரத்தை அவன் கவனத்துக்கு அனுப்பற மாதிரி அனுப்பச் சொன்னோம். இப்போ ரவியே அவன் கையெழுத்தாலே எல்லாத்தையும் தெளிவா உங்களுக்கு எழுதியாச்சு..."
"ஏம்மா?... நீ ஒண்ணும் தப்பா நெனச்சுக்க மாட்டேன்னா... உங்கிட்ட ஒரு யோசனை...?"
"என்ன மாமா?"
"சில ஈரோப்பியன் லேடீஸ் பணத்துக்கு ஆசைப்பட்டு இண்டியன்ஸை லவ் பண்ற மாதிரிப் பழகறதுண்டாம். அப்புறம் ஹெவியா - அவாளுக்குப் பணம் குடுத்துட்டா - டைவோர்ஸ் பண்ணிண்டு விட்டுட்டுப் போயிடுவாளாம்; நீதான் அந்தப் பெண்ணோட நன்னாப் பழகியிருக்கியாமே. அவ வேணா ரவியோட இங்கே வரட்டும் - அதை நான் வேணாம்னு சொல்லலே. வந்தப்புறம் நீ வேணா அந்தப் பெண்ணோடத் தனியாக் கொஞ்சம் பேசிப் பாரேன் - "
"என்னத்தைப் பேசச் சொல்றேள் மாமா?"
"பண விஷயம் தான்... வேற எதைப் பேசச் சொல்லப் போறேன்?"
"உங்களுக்கு யாரோ தப்பாச் சொல்லியிருக்கா மாமா! 'கமலி' அந்த 'டைப்' இல்லே. அவ ரவி மேலே உயிரையே வெச்சிருக்கா. பணம் ஒண்ணும் அவளுக்குப் பெரிய விஷயமில்லே. அவ ஒரு பெரிய கோடீசுவரனோட பொண்ணு. பாரிஸ்லேயும் பிரெஞ்சு ரிவேரா (Riviera)விலும் ஒரு செயின் ஆஃப் ஹோட்டல்ஸுக்கு அவ அப்பா சொந்தக்காரர். அது தவிர மில்லியன் கணக்கில் விலை மதிப்புள்ள முதல் தரமான வொயின் யார்ட் - அதாவது திராட்சை நிலப் பண்ணைகளும் அவருக்கு உண்டு. உங்க சங்கரமங்கலத்தைப் போலப் பத்துச் சங்கரமங்கலத்தையே அவர் விலைக்கு வாங்கலாம்."
சர்மா ஓரிரு விநாடிகள் அவளுக்கு என்ன பதில் சொல்வதென அறியாமல் மௌனமாயிருந்தார்.
-------------
அத்தியாயம் 2
இரண்டு மூன்று நிமிஷ மௌனத்துக்குப் பின் மறுபடியும் சர்மா வசந்தியைக் கேட்டார்.
"உங்கண்ணா சுரேஷ் பாரிஸிலேயே இருக்கானே; அவனுக்கு உங்கப்பாவை விட்டுத் தகவல் எழுதச் சொன்னா ஏதாவது பிரயோஜனப்படுமோ...?"
"எங்கப்பா எதை எழுதி, அண்ணா என்ன செய்யணும்னு நீங்க எதிர்பார்க்கறேள் மாமா?..."
"ரவியும் அந்தப் பெண்ணும் இங்கே புறப்படறத்துக்கு முந்தி சுரேஷ் அங்கேயே அவாளைப் பார்த்துப் பேசி ஏதாவது பண்ணலாம்மோன்னு தோணித்து... அது சாத்தியமா இல்லையான்னு நீதான் சொல்லணும்..."
"நீங்க கேக்கற விஷயத்தைப் பத்தி என்ன பதில் சொல்றதுன்னே எனக்குத் தெரியலையே மாமா! நம்ம தேசத்துக்கும் ஐரோப்பா, அமெரிக்கா போல இருக்கிற மேனாடுகளுக்கும் இந்த மாதிரிப் பிரச்சனைகளை அணுகறதிலேயே ரொம்ப வித்தியாசம் உண்டு. இங்கேயிருந்து போய் அங்கே வசிக்கறவாளுக்குக் கூட நாளாக நாளாக அந்த தேசங்களின் தாராள மனப்பான்மை, 'பெர்மிஸிவ்னெஸ்' எல்லாம் வந்துடறது. உங்க பிள்ளை ரவியும் கமலியும் காதலிக்கிறதைப் பத்திச் சுரேஷ் அண்ணாகிட்டச் சொன்னா, அவன் 'அப்படியா...? ரொம்ப நல்லது! அதிலே என்ன தப்பு...? ரவியோட அதிர்ஷ்டத்தைப் பாராட்டுகிறேன்' பான். இந்தப் பிரச்சனையை நீங்க அணுகற விதத்தை அவாளுக்கெல்லாம் புரிய வைக்கறது ரொம்ப சிரமமான காரியம் மாமா! அப்படியே புரிஞ்சாலும் உங்க தரப்பு வாதங்களை இன்னிக்கு நாகரிக உலகத்திலே அவாள்ளாம் ஒத்துக்க மாட்டா..."
"சங்கரமங்கலம் வியாகரண சிரோன்மணி குப்புசாமி சர்மாவோட பேரன் - இப்படி ஒரு வெள்ளைக்காரியைக் கட்டிண்டு வீட்டுக்கு அடங்காமப் போயிட்டானாம்னு நாலு பேர் பேசுவாளே அம்மா...? நம்ப சமஸ்காரம், சம்பிரதாயம் எல்லாத்தையும் விட்டுட்டு அவன் இப்படிச் செய்யலாமா...? நாளைக்கு நானோ அவனோட அம்மாவோ - போயிட்டா எங்களுக்குக் கர்மம் எல்லாம் பண்ண வேண்டிய பிள்ளையாச்சே அவன்?"
இவர்கள் இருவரும் இப்படிப் பேசிக்கொண்டிருக்கும் போதே "அடடே...யாரு? சர்மாவாளா? வாங்கோ..." என்று கூறிய படியே வேணுமாமா உள்ளே நுழைந்தார். பாரிஸிலிருந்து ரவியின் கடிதம் வந்த விவரத்தைச் சொல்லி வேணுமாமாவிடமும் அதைப் படிக்கக் கொடுத்தார் சர்மா.
படித்து முடித்து விட்டுச் சிரித்துக் கொண்டே "காந்தர்வ விவாகம்னு ஒண்ணு நம்ம சாஸ்திரங்கள்ளேயே ஒப்புக் கொள்ளப்பட்டிருக்குன்னு உங்களுக்கே அழகா ஞாபகப்படுத்தியிருக்கானே பிள்ளையாண்டான்?" என்றார் வேணு மாமா.
சர்மா தயங்கித் தயங்கி சுரேஷ் மூலமாகப் பாரிஸிலேயே ரவியைச் சந்தித்து அவன் மனத்தை மாற்ற முயற்சி செய்ய இயலுமா என்ற தம் யோசனையை வேணு மாமாவிடமும் கூறினார்.
"அது சாத்தியம் இல்லை சர்மா...! அங்கே எல்லாம் ஒருத்தரோட தனி வாழ்க்கையிலே இன்னொருத்தர் தலையிடறதை அநாகரிகமா நெனைப்பா. சுரேஷ் அவனுக்குக் கலியாணமாகி ஒரு குழந்தையும் பொறந்தப்பறம் டெல்லியிலே பார்த்துண்டிருந்த வேலைலேருந்து அப்பிடியே யுனேஸ்கோவுக்கு செலக்ஷன் ஆகி நியூயார்க் போனான். அப்புறம் இப்போ பாரிஸ் வந்திருக்கான். இப்படி எல்லாம் இல்லாமே கட்டைப் பிரம்மச்சாரியா அங்கே போயிருந்தான்னா இன்னிக்கு நீர் இருக்கிற நிலைமையிலே நானும் இருக்க நேர்ந்திருக்கலாம். ஒரு பிரெஞ்சு மருமகளையோ, அமெரிக்க மருமகளையோ என் வீட்டுக்குள் வரவேற்கிற நெலைமையை நானே எதிர்த்தாலும் தவிர்க்க முடியாமல் போயிருந்திருக்கும்."
சர்மாவின் இதயத்தில் அந்தப் பிரச்சனை ஏற்படுத்தியிருக்கிற கனத்தைக் குறைத்து இலகுவாக்க விரும்பியவர் போல வேணுமாமா இப்படிக் கூறியிருந்தார். சர்மாவின் பயங்கள், தயக்கங்கள், தர்ம சங்கடங்கள் எல்லாம் வேணு மாமாவுக்குப் புரிந்தன. சர்மாவின் குடும்பம் பரம்பரையான வைதீகக் குடும்பம். சர்மாவோ சுபாவத்தில் நல்லவர் என்றாலும் கட்டுப்பட்டி. வெளி உலகை அதிகம் சுற்றிப் பார்த்திராதவர். சிறு வயதிலேயே வேதங்களையும் சாஸ்திரங்களையும் கற்றவர். பரம்பரை பரம்பரையாக வேதாத்யயனம் செய்த குடும்பத்தைச் சேர்ந்தவர். கிராமத்தின் மூன்று பெரிய தெருக்களையும் சேர்ந்த மற்றவர்களுக்குச் சாஸ்திர விஷயங்களிலோ சம்பிரதாய விஷயங்களிலோ யோசனை சொல்லி வழிகாட்டும் உயர் அந்தஸ்தை உடையதாயிருந்தது சர்மாவின் குடும்பம். வடக்குத் தெரு, நடுத்தெரு, தெற்குத்தெரு என்ற அக்கிரகாரத்தின் மூன்று தெருக்களிலும் உள்ளவர்கள் பெரும்பாலும் அத்வைத மடத்தின் வழிகளைப் பின்பற்றுகிறவர்கள். அத்வைத மடத்தின் சுவாமிகளால் சங்கரமங்கலத்திற்கும், அகஸ்திய நதிக்கரையிலிருந்த சுற்றுப்புற கிராமங்களுக்கும் ஸ்ரீ மடத்தின் பிரதிநிதியாக, முந்திராதிகாரி பதவியில் இருந்து வருபவர் விசுவேசுவர சர்மா. ஸ்ரீ மடத்தின் ஏஜண்ட் என்ற இந்தக் கௌரவப் பதவியை ஏற்றிருந்ததனால் சங்கர மங்கலத்திலும் அக்கம் பக்கத்துக் கிராமங்களிலும் நல்லது கெட்டதுகளில் 'ஸ்ரீ மடம் சம்பாவனை' என்ற பெயரில் ஓதியிடப்படும் தொகையையும் மரியாதையையும் பெற்று வரும் அதிகாரம் சர்மாவுக்கு இருந்தது. பிரான்சில்-பாரிஸில் வேலை பார்க்கும் தன் மகன் செய்திருக்கும் காரியத்தால் இனி இந்த அந்தஸ்துக்களும், மரியாதைகளும் என்ன என்ன மாறுதல்களை அடையும் என்றெல்லாம் எண்ணியே சர்மா சலனம் அடைந்திருக்கிறார் என்பது வேணு மாமாவுக்கு இப்போது புரிந்தது.
"எப்படியாவது இதைத் தவிர்த்துடலாம்னு நினைச்சுத்தான் உங்ககிட்டவும், உங்க பொண்கிட்டவும், இப்போ பிரஸ்தாபிச்சதைத் தவிர வேற யாரிட்டவும் இந்த லெட்டரிலுள்ளதைப் பத்தியே நான் பிரஸ்தாபிக்கலே."
"தவிர்க்கறதுங்கிற எண்ணத்தையே நீங்க விட்டுடணும் மாமா! ரவியையும், கமலியையும் இனிமே நீங்க பிரிக்கிறது நடக்காத காரியம். நான் பாரிஸியே கமலிகிட்டேயிருந்து விடை பெற்றபோது, அவ ரொம்ப பிரியத்தோட எனக்கு ஒரு ஆல்பம் 'பிரஸண்ட்' பண்ணினா. நீங்க தப்பா நினைச்சுக்கலேன்னா உங்களுக்கு இப்போ அதைக் காண்பிக்கிறேன்."
மனத்தின் மேற்பரப்பில் மண்டிக்கிடந்த வித்தியாசங்களையும் வெறுப்புகளையும் மீறி மகனைக் கவர்ந்த அந்தப் பிரெஞ்சு யுவதியைப் படத்திலாவது பார்க்க வேண்டுமென்று சர்மாவுக்கும் ஆவலாகத்தான் இருந்தது. ஆனால், அந்த ஆவலை அவர் வெளிப்படுத்திக் கொள்ள முடியவில்லை. அவர் தமது சம்மதத்தையும் தெரிவிக்காமல், சம்மதமின்மையையும் தெரிவிக்காமல் மௌனமாக இருந்தார்.
"மாமாவுக்கு ஆல்பத்தைக் கொண்டு வந்து காண்பியேன். பார்க்கட்டும்" என்று தம் மகளிடம் சொல்லி விட்டு சர்மாவின் பக்கம் திரும்பி, "எவ்வளவு விகல்பமில்லாத மனசு இருந்தா இப்படித் தங்கள் படத்தை எல்லாம் ஒட்டின ஆல்பத்தை எங்க ஞாபகார்த்தமா வச்சிக்குங்கோ'ன்னு குடுக்கணும்கிறதை நினைச்சுப் பாருங்கோ சர்மா. பிரெஞ்சு ஜனங்களே நல்ல மாதிரி. அதுவும் ரவியோட...இவ இருக்காளே - அதான் - கமலி - அவ அற்புதமான பொண்ணு. இன்னிக்குப் பூராவும் அவளோட சிரிச்சுப் பேசிண்டிருக்கலாம்னு தோணும். இங்லீஷ்லே, 'பிரான்ஸ் இஸ் நாட் எ கண்ட்ரீ பட் ஆன் ஐடியா'ன்னு ஒரு வசனம் உண்டு. அது நூத்துக்கு நூறு உண்மை சர்மா..." என்றார் வேணு மாமா.
இப்படி வேணுமாமாவும் கமலியைப் புகழ்ந்து பேசவே சர்மா யோசிக்கத் தொடங்கினார். முதலில் வேணுமாமாவின் பெண் வசந்தி அவளைப் புகழ்ந்து பேசியிருந்தாள். இப்போது வேணுமாமாவும் அந்தப் பிரெஞ்சு யுவதியைச் சிலாகித்துச் சொல்கிறார். ரவியையும் அந்தப் பிரெஞ்சு யுவதியையும் பிரித்து வைக்க முயலும் தன் திட்டத்துக்கு அப்பாவோ, பெண்ணோ பாரிஸில் யுனஸ்கோவில் இருக்கும் வேணுமாமாவின் பிள்ளையோ ஒத்துழைப்புத் தரமாட்டார்கள் என்பது சர்மாவுக்கு இப்போது குறிப்பாகவும், தெளிவாகவுமே புரிந்தது.
வேணுமாமா பேசியபோதே 'உங்க ரவியோட... இவ' என்று அவர் சொல்லிய வார்த்தைகளைக் கூர்ந்து கவனித்ததில் 'ரவியோட மனைவி' என்று முதலில் சொல்ல நினைத்துப் பின்பு அந்த ஒரு வார்த்தையை விழுங்கி விட்டு 'இவ' என்பதாக மழுப்பிக் கூறினாரோ என எண்ணினார் சர்மா. ஒரு வேளை ரவியும் கமலியும் காதலர்கள் என்ற நிலையையும் கடந்து அங்கெல்லாம் 'மோதிரம் மாற்றிக் கல்யாணம்' - என்று சொல்கிறார்களே, அப்படிக் கல்யாணமே செய்து கொண்டு விட்டார்களோ என்றும் சந்தேகமாயிருந்தது அவருக்கு.
வசந்தி அந்த அழகிய ஆல்பத்தைச் சர்மாவிடம் கொடுத்தாள். அவர் பிரித்த முதல் பக்கத்திலேயே வெண் பனி மூடிய மலைச்சரிவு ஒன்றில் ரவியும், அந்தப் பிரெஞ்சு யுவதியும் பனிச்சறுக்கு விளையாட்டு விளையாடும் போது எடுக்கப்பட்ட அழகிய வண்ணப் படம் ஒன்று ஒட்டப்பட்டிருந்தது.
சர்மாவுக்கு அருகே நின்று அவர் ஆல்பத்தைப் பிரிப்பதைக் கவனித்துக் கொண்டிருந்த வசந்தி "இந்தப் படம் ரவியும் கமலியும் ஸ்விட்ஜர்லாந்துக்கு உல்லாசப் பிரயாணம் போயிருந்த போது எடுத்ததுன்னு சொன்னா-" என்று அவருக்கு விளக்கினாள்.
"சர்மா படத்தைப் பார்த்து வெறும் உல்லாசப் பிரியமும், விளையாட்டுப் புத்தியும் அசல் லௌகீக ஆசைகளும் மட்டுமே உள்ளவளா இருப்பா போலிருக்கேன்னு நினைச்சுடாதீரும். கமலியைப் போல புத்திசாலிப் பொண்ணை நீர் ஐரோப்பா முழுவதும் தேடினால்கூடக் கண்டுபிடிக்க முடியாது. பிரெஞ்சு தவிர ஜெர்மனும், இங்கிலீஷூம் அவளுக்குத் தெரியும். ரவிகிட்ட சமஸ்கிருதமும், தமிழும், இந்தியும் கத்துக்கறா..."
சர்மா ஆல்பத்தில் அடுத்த பக்கத்தைப் புரட்டினார்.
"இது வெனிஸ்-அவா ரெண்டு பேரும் போட்லே போறா. வெனிஸை மிதக்கும் நகரம்னு இத்தாலியிலேயே சொல்லுவா மாமா. பாரிஸிலேயிருந்து ஜெனிவா, ரோம் எல்லாத்துக்கும் ரயில்லேயே போயிடலாம் மாமா... நானும் அப்பாவும்கூட ரயில்லேயேதான் அங்கெல்லாம் போனோம். அவா ரோம்'னு சொல்றதில்லே 'ரோமா'ன்னு தான் சொல்றா..."
ஆல்பத்தில் மற்றொரு பக்கம் புரள்கிறது. சர்மாவின் கைவிரல்கள் சுபாவமாக இயங்காமல் மெல்ல நடுங்குவதையும், பதறுவதையும் வசந்தி கவனித்தாள். வேணு மாமா சர்மாவைக் குஷிப்படுத்த முயன்றார்.
"நான் பாரிஸிலே அவகிட்டப் பேசிண்டிருந்தப்போ, 'சௌந்தர்ய லஹரி'யைப் பற்றி-என்னை ஏதோ இவன் ரொம்பத் தெரிஞ்சவனாக்கும்னு அவளா நெனைச்சுண்டு என்னமோ சந்தேகம் கேட்டாள். "கமலீ! இதெல்லாம் நீ சங்கரமங்கலத்துக்கு வர்றப்போ உன் எதிர்கால மாமனாரிட்டக் கேளு. அவர் பெரிய சான்ஸ்கிரிட் ஸ்காலர்"னு அவகிட்டச் சொல்லியிருக்கிறேன்..."
"ஏன் ரவியையே கேட்டுத் தெரிஞ்சுக்கலாமே?" என்று அமுத்தலாகப் பதில் வந்தது சர்மாவிடம் இருந்து.
வேணுமாமா தளரவில்லை. சர்மாவின் மன நிலையை இளகச் செய்யும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டார்.
"கமலியோட விநயம், அடக்கம், பணிவு, இதையெல்லாம் பார்த்தால் அவ அத்தனை பெரிய பிரபுத்துவக் குடும்பத்துப் பெண்கிறதை எப்பேர்க் கொத்தவாளாலேயும் ஊகிக்கக் கூட முடியாது சுவாமி! அவ்வளவு நல்ல சுபாவம்...!"
சர்மா பட்டென்று ஆல்பத்தை மூடி வசந்தியிடம் நீட்டி விட்டு எழுந்து நின்றார். புறப்படத் தயாரான நிலையில் நின்று கொண்டு, "எனக்கு மனசு சரியில்லை, அப்புறமா இன்னொரு நாள் வரேன். மத்ததைப் பேசலாம்" என்று சொல்லி விட்டுக் கிளம்பத் தயாராகி விட்டார். அவரைச் சமாதானப்படுத்தி மறுபடியும் உட்கார வைப்பதற்குள் வசந்திக்கும் அவள் தந்தைக்கும் போதும் போதுமென்றாகி விட்டது.
விசுவேசுவர சர்மாவுக்கு மனத்தில் அழுத்தமான சந்தேகமே விழுந்து விட்டது. வேணு மாமாவும், அவர் பெண் வசந்தியுமே இந்தக் காதல் பிரச்சனையில் ரவியின் நிலையைத் தீவிரமாக ஆதரிக்கிறார்களோ என்று எண்ணினார் சர்மா.
உணர்ச்சி கொந்தளிப்பு அடங்கி அவர் நிதானப்படுகிற வரை ஒரு மாறுதலாக வேறு எதையாவது பற்றி அவரிடம் பேசலாம் என்று தோன்றியது வேணு மாமாவுக்கு!
"ஆத்தங்கரை நத்தத்துத் தென்னந் தோப்பை யாருக்குக் குத்தகை பேசியிருக்கேள் சர்மா? இந்த வருஷம் தென்னை, மா, பலா எல்லாமே நல்ல காய்ப்பாமே..."
"குத்தகை எதுவுமே சரியாத் தெகையலெ, நல்ல குத்தகை அமையலேன்னா ஒரு காவல் ஏற்பாடு பண்ணிட்டு நானே சொந்தமாக் கவனிக்கலாம்னு தீர்மானம்."
"மடத்து நிலமெல்லாம் என்ன செய்யப் போறேள்...?"
"அதெல்லாம் எப்படியும் நல்ல மனுஷாளாப் பார்த்துக் குத்தகைக்கு அடைச்சுத்தான் ஆகணும். நெல விஷயம் வேறே. தோப்புத் துரவு விஷயம் வேறே. நிலத்துக்கு எப்படியும் நல்ல குத்தகை அமையும்."
"தெக்குத் தெரு சங்கரசுப்பன் இரண்டு பெண்ணுக்கும் கல்யாணம் பண்றத்துக்காக நெலம், தோப்புத் துரவு எல்லாத்தையும் கிரயம் பேசிட்டானாமே; தெரியுமா?"
"அப்படித்தான் யாரோ பேசிண்டா... எங்காதிலேயும் விழுந்தது."
இந்த விதமாகச் சிறிது நேரம் ஊர் விவகாரம் பேசிய பின் மறுபடி பழைய பேச்சை மெதுவாக ஆரம்பித்தார் வேணு மாமா.
"ஆத்திரப்பட்டு ரவியை இங்கே வரவேண்டாம்னு எழுதிடாதீங்கோ...கொஞ்சம் பெருந்தன்மையா நடந்துக்குங்கோ...உங்களுக்கு நான் சொல்லித்தான் தெரியணும்ங்கிறதில்லே, நீங்க மகா வித்வான். பெரிய படிப்பாளி. ஞானஸ்தர்..."
"இதிலே எனக்கிருக்கிற தர்ம சங்கடங்கள் உங்களுக்கும் புரியணும். பல வகையிலே கிராமத்தாருக்கும் ஸ்ரீ மடத்துக்கும் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கேன் நான். எடுத்தேன் கவிழ்த்தேன்னு மத்தவாளை மாதிரி நான் எதையும் பண்ணிண்டு அப்புறம் ஊர்லே நிமிர்ந்து நடக்க முடியாது. ரவியைத் தவிர எனக்குக் கல்யாணத்துக்கு இன்னொரு பிள்ளையும், பொண்ணும் வேற இருக்காங்கறதை மறந்துடாதீங்கோ! இந்தக் கிராமமும் ஜனங்களும் எப்படிப்பட்டவான்னு உங்களுக்கு நான் சொல்லித்தான் தெரியணும்கிறதில்லே. ஊருக்குப் பயன்படற ஒரு பொது நன்மையைச் செய்யணும்கிறபோது அதுக்காக ஒண்ணாச் சேர மாட்டா. ஊருக்குப் பயன்படாத ஒரு தனி மனுஷ விவகாரத்தைப் பெரிசு பண்ணி விரோதத்தை வளர்த்துக்கணும்னா அத்தனை பேரும் உடனே ஒண்ணாச் சேருவா. நல்லது உடனே புரியாது. கெட்டதை உடனே புரிஞ்சுப்பா. முக்கால்வாசி சமயங்கள்ளே நல்லதையே அவசரப்பட்டுக் கெட்டதாப் புரிஞ்சுண்டுடுவா. ரெண்டுங் கெட்டான் ஊர், ரெண்டுங்கெட்டான் மனுஷா..."
"நீங்க சொல்றது அத்தனையும் நியாயம் தான் சர்மா... ஆனா...உங்க பிள்ளை ரவியோட மனதை நீங்க புண்படுத்திடப் படாது. புஷ்பம் மாதிரி மனசு அவனுக்கு..."
சர்மா இதற்குப் பதில் எதுவும் சொல்லவில்லை. அவர் சற்று முன் திருப்பிக் கொடுத்ததும் உள்ளே கொண்டு போய் விடாமல் வசந்தி அங்கேயே வைத்திருந்த ஆல்பத்தைக் கையிலெடுத்து மீண்டும் அவரே பார்க்கத் தொடங்கினார். சர்மா கவனித்து விடாமல் வசந்தியும் அவள் அப்பாவும் ஒருவரை ஒருவர் குறிப்பாகப் பார்த்துப் புன்னகை புரிந்து கொண்டார்கள். வசந்தி பழையபடி தன்னுடைய 'ரன்னிங் காமெண்ட்ரி'யைத் தொடர்ந்தாள்.
"இது ஜெனீவா லேக்-கரையிலே நின்னு மணிக்கணக்காப் பார்த்துண்டிருக்கலாம். எனக்கு இது ரொம்பப் பிடிச்ச இடம் மாமா!"
பெரியதாய்க் கிண்ணம் கிண்ணமாகப் பூத்திருந்த பூக்கள் நிறைந்த ஒரு பெரிய பூங்காவில் ரவியும் கமலியும் நிற்கிறாற்போல ஒரு படம் ஆல்பத்தில் வந்தது. சர்மா வினவினார்.
"இதென்ன பூம்மா? இத்தனை பெரிசா...இத்தனை அழகா...?"
"அது துலீப் பூன்னு ஹாலந்திலே ரொம்பப் பிரசித்தம் மாமா. 'துலீப் ஃபெஸ்டிவல்'னு அது நிறையப் பூக்கிற காலத்திலே அங்கே ஒரு விழாவே கொண்டாடுவா..."
ஆல்பத்தில் அடுத்தபடம் திரும்பியது.
"இதென்ன இடிஞ்ச மண்டபமா...? அரண்மனையா....?"
" 'அக்ரோ-போலிஸ்'னு கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸிலே இது பெரிய சரித்திரப் பிரசித்தி பெற்ற இடம் மாமா!"
"அப்போ அவனும், இவளுமா ஐரோப்பா பூராவும் சுத்தியாச்சுன்னு சொல்லு..."
"........"
"ரெண்டு பேரும் தனியாத்தானே இதெல்லாம் சுத்தியிருக்கா....? இல்லியா....?"
சர்மாவின் இந்தக் கேள்வி குழந்தைத் தனமானதா அல்லது உள்ளர்த்தம் வைத்துக் கேட்கப் படுகிறதா என்பதை வசந்தியாலும் வேணு மாமாவினாலும் கண்டு பிடிக்க முடியாமல் இருந்தது. கொந்தளிப்பிலும் அலை மோதலிலும் படகு கவிழ்ந்து விடாமல் மெல்ல நடத்திச் செல்லும் தேர்ந்த படகோட்டியைப் போல் அந்த உரையாடலை அவர்கள் மேலே கொண்டு செல்ல வேண்டியதாயிருந்தது. மீண்டும் விசுவேசுவர சர்மா கோபித்துக் கொண்டு எழுந்திருந்து போய் விடாமல் அந்தப் பேச்சைச் சுமூகமாகக் கொண்டு செல்ல முயன்றார்கள் அவர்கள்.
எதிர்பாராத விதமாக மறுபடியும் சர்மாவே தாமாக ரவியைப் பற்றிய பேச்சுக்குத் திரும்பியது கண்டு அவர்கள் இருவருக்கும் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் பேச்சு எப்படி எந்த சமயம் எதிர்பாராத கோணத்துக்குத் திரும்புமோ என்ற தயக்கமும் முன்னெச்சரிக்கையும், ஒரளவு பயமும் கூட இருந்தன. அதனால் சர்மாவின் சில கேள்விகளுக்குப் பதில் சொல்லாமலே தவிர்த்தார்கள் அவர்கள். ஆனால் பேச்சு மேலே வளர்ந்த விதத்தைப் பார்த்தால் அவர் அதைப் பற்றியே உரையாடலைத் தொடர விரும்புவதாகப்பட்டது. அவர்கள் இருவரையும் நோக்கி அவர் கேட்டார்.
"இவன் தான் காணாததைக் கண்ட மாதிரி அவமேலே பிரியம் வெச்சுட்டான். அவ குடும்பத்திலேயாவது இதை எல்லாம் கண்டிக்க மாட்டாளோ? அவ தகப்பன் யாரோ பெரிய கோடீசுவரப் பிரபூன்னு சொன்னேளே...?"
"அந்தத் தேசத்திலே அப்படிக் கண்டிக்கிற உரிமையெல்லாம் எடுத்துக்கமாட்டா மாமா. படிச்சு வயசு வந்த ஆண் பெண்களுக்கு அவா அவாளே தங்களோட வாழ்க்கைத் துணையைத் தேடிக்கிற உரிமை உண்டு. அப்பா அம்மா பார்த்து ஏற்பாடு பண்ற கல்யாணம்கிறது அங்கே எல்லாம் எப்பவாவது அபூர்வமாகத்தான் நடக்கும்..."
"பெரிய பணக்காரக் குடும்பத்துப் பொண்ணுன்னியே...? தன்னோட பொண்ணு அந்தஸ்துக்குக் குறையாத இடத்துக்குப் போய்ச் சேரணும்னாவது அப்பாவுக்கு அக்கறையோ கவலையோ இருக்காதா...?"
"நம்மூர்ப் பணக்காரா மாதிரி இருபத்து நாலுமணி நேரமும் தாங்க பணமுள்ளவா, தனி அந்தஸ்துள்ளவா, தனி ஜாதி, தனி ரகம்னே நினைச்சுண்டிருக்க அங்கே அவாளுக்கெல்லாம் தெரியாது. பணம்கிறதை ஒரு வசதியா நினைப்பாளே ஒழிய வரப்பிரசாதமா நினைச்சுக் கர்வம் பிடிச்சு அலைய மாட்டா. நீக்ரோவைக் காதலிச்சு வெற்றி கண்ட பணக்காரக் குடும்பத்து வெள்ளைப் பெண் உண்டு. அந்தக் காதல் பெற்றோர்களுக்கும் மக்களுக்கும் எந்த விரோதத்தையும் உண்டு பண்ணினதில்லை. இதிலே ஒளிவு மறைவுகள், இலை மறைவு, காய் மறைவு எதுவும் கிடையாது. 'இவனை நான் காதலிக்கிறேன்' என்று தன் தாய் தந்தையிடம் தன் காதலனை அழைத்துச் சென்று அறிமுகப் படுத்தும் துணிவும் நேர்மையும் ஒரு பெண்ணுக்கு அங்கே உண்டு. கமலியைப் பொறுத்த மட்டிலே இண்டியன் ஸ்ட்டீஸ் ஃபேகுல்டியில் ரவியிடம் 'இண்டாலஜி' படிக்க வந்த போது அவளாகவே விரும்பி ரவியால் வசீகரிக்கப்பட்டுத் தான் அவனைக் காதலிச்சிருக்கா... இதை அவளே எங்கிட்ட மனசு விட்டுச் சொன்னா மாமா..."
"இனிமே யாரைச் சொல்லி என்ன பிரயோஜனம் அம்மா...? நான் என் தலையிலேதான் செருப்பாலே அடிச்சுக்கணும். ரவியை நான் பிரான்சுக்கு உத்தியோகம் பார்க்கப் போகவே விட்டிருக்கப்படாது...."
"நீங்க சொல்றது வேடிக்கையாகத்தான் இருக்கு சர்மா...! இன்னும் கொஞ்ச நாழி போனா 'அவனை நான் பெத்தே இருக்கப்படாது'ன்னு கூட வருத்தப் படுவேள் போலிருக்கே?" - என்று சிரித்துக் கொண்டே மெல்லக் கேட்டார் வேணு மாமா.
சிறிது நேரம் மௌனத்திற்குப் பின் சர்மாவே தொடர்ந்து பேசலானார்.
"நீங்க ரெண்டு பேரும் இப்ப நான் என்னதான் செய்யணும்னு சொல்றேள்? சொல்லுங்கோ...? இந்த லெட்டருக்குப் பதில் எழுதணுமோ, வேண்டாமோ...? வரச் சொல்லி எழுதவும் எனக்குப் பிரியம் இல்லே. வர வேண்டாம்னு சொல்லி எழுதவும் என் மனசு துணியலே..."
"சொந்தப் பிள்ளையை வர வேண்டாம்னு எழுதறத்துக்கு உங்களுக்குப் பயித்தியம் பிடிச்சிருக்கா என்ன..."? அப்பிடி எழுதற அளவுக்கு அவன் தான் பெரிசா என்ன தப்புப் பண்ணிட்டான்?"
"இது வரை பயித்தியம் ஒண்ணும் பிடிக்கலே... நீங்களும் அவனும் படுத்தற பாட்டைப் பார்த்தா இனிமேல்தான் அதெல்லாம் பிடிக்கணும்..."
"ஏன் இப்படி எல்லாம் பேசறேள் சர்மா...? உங்களுக்குப் பகவான் கிருபையிலே ஒரு கொறையும் வராது. எல்லாம் தெய்வசங்கல்பப்படி நல்லவிதமா நடக்கும். தயவு பண்ணிக் கொஞ்சம் நான் சொல்றதை இப்போ பொறுமையா கேட்கணும் நீங்க" என்று இதமாக ஆரம்பித்தார் வேணு மாமா.
-------------
அத்தியாயம் 3
வேணு மாமா இதமான குரலில் விசுவேசுவர சர்மாவிடம் சொல்லலானார்:-
"ரவி ரொம்ப நாளைக்கு அப்புறம் தூர தேசத்திலிருந்து திரும்பி வரான். அவன் கிட்டவும் அவன் கூட வர்றவாகிட்டவும் முகம் கோணாமல் நீங்க நடந்துக்கணும். குடும்பம் என்னும் அழகிய பிணைப்புத்தான் இந்திய வாழ்வின் சிறப்பு என்பதாக அவாள்ளாம் நினைக்கறா... இந்து அவிபக்த குடும்பம்ன்னு நாம் சொல்றோமே - இந்தக் கூட்டுக் குடும்ப அமைப்பு - இதன் பந்த பாசங்கள் எல்லாம் அவாளுக்குப் புதுமை. அவா கண் காணவே நாம் அப்பாவும் பிள்ளையும் எலியும் பூனையுமா அடிச்சிண்டு நிக்கப்படாது."
இவர்கள் இருவரும் இப்படிப் பேசிக் கொண்டிருந்த போது, தெருப்பக்கம் பார்த்தவாறே நாற்காலியில் அமர்ந்திருந்த வசந்தி, "மாமா! உங்க பொண் பாரு, உங்களைத் தேடிண்டு வரா" என்று சர்மாவிடம் கூறினாள். சர்மா தெருப்பக்கம் திரும்பினார். வசந்தி எதிர்கொண்டு போய்ப் பாருவை அழைத்து வந்தாள்.
"அப்பா! அந்தப் பூமிநாதபுரம் மாமா தேடி வந்தா. இன்னிக்கு 'லக்கினப் பத்திரிகை' எழுதணுமாம். ரெடியா இருக்கச் சொன்னார். இன்னம் ஒரு மணி நேரத்துலே வந்து அழச்சிண்டு போறாராம்."
"யாரு ராமசாமியா... வந்திருந்தான்? ஓகே...? இன்னிக்குச் சாயரட்சை பூமிநாதபுரம் நிச்சயதார்த்தத்துக்குப் போகணும்கிறதையே மறந்துட்டேன்."
"இதுக்கு ஏன் இவ்வளவு பதட்டப்படறீர்... பூமிநாதபுரம் என்ன இங்கேயிருந்து அம்பது மைலா, அறுபது மைலா...? அகஸ்திய நதிப் பாலத்தைத் தாண்டினா அக்கரையிலே தானே இருக்கு...? கூப்பிடு தூரம். சூரியன் மலைவாயிலே விழறப்போ புறப்பட்டீர்னாப் போறுமே..." என்றார் வேணு மாமா.
சர்மாவின் பெண் பார்வதி பாவாடை தாவணி அணிந்திருந்தாள். பன்னிரண்டு பதின்மூன்று வயதுக்குள்ளேயே அதைவிட இரண்டு மூன்று வயது அதிகம் மதிக்கிற மாதிரி ஒரு வளர்த்தி. துறுதுறுவென்று களையான முகம். 'எச்சில் விழுங்கினால் கழுத்தில் தெரியும்' - என்பார்களே அப்படி நிறம். கருகருவென்று மின்னும் நெளியோடிய கூந்தலும் இலட்சணமான முகமும் சேர்ந்து ஒருமுறை பார்த்தவர்களை இன்னொரு முறையும் பார்க்க ஆசைப்பட வைக்கிற அழகு பார்வதிக்கு. வசந்தி பார்வதியை விசாரித்தாள்:
"ஏண்டி...? அதுக்குள்ளேயே ஸ்கூல் விட்டாச்சா...? இன்னும் மணியாகலியே?"
"நாலஞ்சு டீச்சர் லீவு மாமி! அதுனாலே லாஸ்ட் பீரியட் கிடையாதுன்னு விட்டுட்டது."
பார்வதியைத் தழுவினாற்போல உள்ளே அழைத்துச் சென்றாள் வசந்தி.
"இவ இந்த வருஷம் ஸ்கூல் ஃபைனல் முடிக்கிறா. குமார் பி.ஏ முதல் வருஷம் படிக்கிறான். காலேஜூக்காக அவன் தினசரி இருபது மைல் இரயில் பிரயாணம் பண்ண வேண்டியிருக்கு. நாள் தவறாமே இருட்டி ஏழு ஏழரை மணிக்குத்தான் வீடு திரும்பறான். பொண்ணை நான் காலேஜ் படிப்புக்கு அனுப்பப் போறதில்லே. பள்ளிக்கூடம் முடிஞ்சதும் கல்யாணத்துக்கு வரன் பார்க்கறதாத் தான் உத்தேசம்..."
"உள்ளூர்லியே காலேஜ் இருந்தாப் படிக்க வைக்கலாம். பெண் குழந்தைகள் - வெளியூர் போய் வர்றது சாத்தியமில்லே. பக்கத்து டவுன்லே இருக்கிற ஒரே காலேஜூம் கோ-எஜுகேஷன் காலேஜ்... ஆணும் - பொண்ணும் சேர்ந்து படிக்கிற காலேஜ். உமக்குப் பிடிக்காது."
"எனக்குப் பிடிக்கும் பிடிக்காதுங்கிறது ஒரு பக்கம் இருக்கட்டும். வித்தைங்கிறது ஞானத்தையும் விநயத்தையும் வளர்க்கணும். இன்னிக்கு அது பெரும்பாலும் அஞ்ஞானத்தையும், முரட்டுத்தனத்தையும் தான் வளர்க்கிறது. ஒவ்வொரு பையனும் தன்னைச் சினிமாவிலே வர்ற ஹீரோவா நினைச்சிண்டு முக்காவாசி நாழி ஏதோ ஒரு தினுசான சொப்பனத்துலே வாழறான். ஒவ்வொரு சின்ன வயதுப் பெண்ணும் தன்னைச் சினிமா ஹீரோயினா நினைச்சிண்டு சீரழியறா. நிஜமா? இல்லையா...? என்ன நான் சொல்றது...?"
"நீர் சொல்றதெல்லாம் இன்னிக்கு எடுபடாது சர்மா! ஒரே வார்த்தையிலே 'சுத்த மடிசஞ்'சீன்னு உம்மை ஒதுக்கிடுவா!"
"அது தான் இல்லை! நீங்க தான் அப்பிடிச் சொல்றேள்! நம்மூர்ப் பகுத்தறிவுப் படிப்பகம் இறை முடிமணி இருக்கானே அவனும் இந்த விஷயத்திலே என்னோட ஒத்த அபிப்பிராயம் உள்ளவனா இருக்கான். எதிர்காலத்தை மறந்த - உழைப்பாற்றலை இழந்த - வெறும் போலி உல்லாச நிகழ்காலத் திளைப்பு இன்றைய இளைஞர்களிடையே காணப்படுகிறது. அவர்கள் கடினமான உடலுழைப்புக்கும் இலாயக்கில்லாமல், நுணுக்கமான மூளை உழைப்புக்கும் இலாயக்கில்லாமல் ஏனோ தானோ என்று தயாராகிறார்கள். இது அபாயமானதுன்னு ஒவ்வொரு பிரசங்கத்திலேயும் அவன் திருப்பித் திருப்பிச் சொல்லுகிறான்."
"யாரு...? தெய்வசிகாமணி நாடார்தானே? அவருக்கும் உங்களுக்கும் ஒத்த அபிப்பிராயம் ஒண்ணு இருக்குங்கறதே ஆச்சர்யமான விஷயந்தான் சர்மா...!"
"அதென்னமோ ஆயிரம் அபிப்பிராய பேதம் இருந்தாலும் சில பொது அபிப்பிராயங்களாலே நாங்க இன்னும் சிநேகிதத்தோட தான் பழகறோம். இறைமுடிமணி யோக்கியன். நாணயஸ்தன். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதவன். பரோபகாரி..."
"உம்மை மாதிரி ஒரு பரம ஆஸ்திகர் அவரை மாதிரி ஒரு தீவிர சுயமரியாதைக்காரரை இத்தனை தூரம் சிலாக்கியமாச் சொல்றதே பெரிய ஆச்சரியம்தான்....!"
"நாஸ்தீகாள் யோக்கியமுள்ளவாளாயிருக்கக் கூடாதா என்ன...?"
"சரி சரி! நீரும் வந்த காரியத்தை மறந்துட்டீர். நானும் பேசவேண்டிய விஷயத்தை மறந்துட்டேன். ஆஸ்தீக - நாஸ்தீகத் தர்க்கங்களை இன்னொரு நாள் வச்சுப்போமே...? இப்போ நாம பேச வேண்டியதைப் பேசலாம்."
சர்மா வேணு மாமாவுக்கு அருகே நெருங்கி வந்து குரலை முன்னினும் தணித்துக் கொண்டு பேசினார். "இந்தப் பிள்ளையாண்டான் பண்ணியிருக்கிற சுந்தர கோளத்திலே இனிமே என் பொண்ணுக்கு நல்ல இடத்துலே சம்பந்தம் கிடைக்குமோ கிடைக்காதோன்னு கூடப் பயமாயிருக்கு. குமாரைப் பொறுத்த மட்டுலே கவலையில்லை. அவன் ஆண்பிள்ளை. கொஞ்ச நாள் கல்யாணம் ஆகாமே இருந்தாக்கூடப் பெரிய பழி ஒண்ணும் வந்துடாது. தவிர அவனோட காலேஜ் படிப்பு முடியறத்துக்கு இன்னும் ரெண்டு மூன்று வருஷம் ஆகும். பொண் விஷயம் அப்பிடி இல்லே. ஒரு குடும்பத்திலே ஆண்கள் பண்ற ஒவ்வொரு தப்பும் அந்தக் குடும்பத்திலே கல்யாணத்துக்கு நிக்கிற பொண்களைன்னா பாதிக்கிறது?"
"திரும்பத் திரும்பப் பழைய ராமாயணத்துக்கே போறீரே...? ரவி என்னமோ பெரிய மகாபாதகத்தைப் பண்ணிட்ட மாதிரியும் அதுனாலே உம்ம குடும்பமே முழுகிடறாப்பிலேயும் பேசறதை முதல்லே விட்டுடும். இது இருபதாம் நூற்றாண்டுங்கறதை ஞாபகப்படுத்திக்கணும் நீர். இந்த நூற்றாண்டிலே இரயில் பிரயாணம், விமானப் பிரயாணம், தேர்தல், ஜனநாயகம், சோஷலிஸம் இதெல்லாம் போலக் காதலிப்பதும் சகஜமான விஷயம்."
"இந்தச் சங்கரமங்கலம் மாதிரியும், பூமிநாதபுரம் மாதிரியும் ரெண்டுங்கெட்டான் கிராமங்கள்ளே அது இன்னும் சகஜமான விஷயமாகல. விசேஷமா என் குடும்ப பாரம்பரியத்துக்கு ஒட்டாதது அது. அதனாலே தான் படிப்பைப் பாதியிலே நிறுத்தினாலும் பரவாயில்லேன்னு இந்தப் பாருவுக்கு ஒரு நல்ல இடமாகப் பார்த்து உடனே கல்யாணத்தைப் பண்ணிட்டா என்னன்னு தோணறது... அவன் இங்கே அந்தப் பிரெஞ்சுக்காரியோட வந்து கூத்தடிக்கிறதுக்குள்ளே இந்தப் பொண்ணு கல்யாணத்தைப் பண்ணி இவளைப் புருஷனோட புக்காத்துக்கு அனுப்பிச்சுட்டா ரொம்பச் சிரேஷ்டமாயிருக்கும். இந்த நிமிஷத்திலே இது தான் என் மனசிலே படறது."
"இதென்ன பொம்மைக் கல்யாணமா...?அல்லது மரப்பாச்சிக் கல்யாணமா...? பச்சைக் குழந்தையைப் போய்ப் படிப்பையும் கெடுத்துட்டு மணையிலே உட்காத்தித் தாலி கட்டச் சொல்றேங்கறீரே...? உமக்கு ஈவு இரக்கமே கிடையாதா ஓய்; கேக்கறேன்?"
"பால்ய விவாகம் ஒண்ணும் விநோதமில்லியே...? எனக்கும் அப்படித்தான் கல்யாணம் ஆச்சு. உமக்கும் அப்படித்தான் ஆச்சு..."
"அதனாலே இவளுக்கும் அப்படித்தான் ஆகணும்னு நிர்ப்பந்தமா அல்லது தலையெழுத்தா...?"
"என்னோட பிள்ளையாண்டான் இப்போ பண்ணியிருக்கிற கூத்தைப் பார்த்து அப்படித் தோணித்துன்னு தானே சொன்னேன்."
"அதெல்லாம் ஒண்ணும் தோண வேண்டாம். மேலே ஆகவேண்டிய காரியத்தைக் கவனியும். முதல்லே சுமூகமா அவனுக்கு ஒரு பதில் எழுதும், அப்புறம் அவா ரெண்டு பேரும் இங்கே வந்தால் தங்கறத்துக்குத் தகுந்த மாதிரி நீர் சில ஏற்பாடுகளைப் பண்ணணும்..."
"என்ன பண்ணணும்கறேள்...?"
"பிரெஞ்சுக்காராளுக்குப் 'பிரைவஸி' ரொம்ப முக்கியம். மேல் நாட்டுக்காரர் எல்லோருமே பிரைவஸியைக் கவனிப்பான்னாலும் பிரெஞ்சுக்காரா ரொம்ப மென்மையான மனசுள்ளவா... இங்கிதம், நாசூக்கு இதெல்லாம் அதிகம். சங்கரமங்கலம் அக்ரகாரம் நடுத்தெருவிலே இருக்கிற உங்க பூர்வீக வீடோ ராணி மங்கம்மாள் காலத்துத் தர்ம சத்திரம் மாதிரி இருக்கு. கீழ் வீட்டில் ஒரே பெரிய கூடம். மச்சும் கூட ஒரு பெரிய ஹால் தான். பாத்ரூம்னு எதுவுமே இல்லே. கிணத்தடிதான் பாத்ரூம். நீரோ, மாமியோ கிணத்தடியிலே குளிக்கிற வழக்கமே இல்லே. சூரியோதயத்துக்கு முன்னாடியே அகஸ்திய நதிக்குப் போயிட்டு வந்துடறேள். இந்த ஊர்லே பிறந்து வளர்ந்த உம்ம பிள்ள ரவியே இப்போ வர்றப்பப் பாருமே, முன்னே மாதிரி இனிமேக் கிணத்தடியிலேயோ, ஆத்தங்கரையிலேயோ குளிக்க மாட்டான். பாத்ரூம்கிறது ஒரு தவிர்க்க முடியாத பழக்கமாகிப் போயிருக்கும் அவனுக்கு...!"
"அவாளுக்காக இனிமே நான் புதுசா ஒரு வீடே கட்டணும்கிறேளா...!"
"நான் அப்பிடிச் சொல்லலே. மாடியிலே ஒரு தனி ரூம் போடுங்கோ -அதை ஒட்டினாற்போல ஒரு அட்டாச்டு பாத்ரூமும் ஏற்பாடு பண்ணிடுங்கோ. இதை நீங்க கமலிக்காகப் பண்ணறதா நினைச்சுக்க வேண்டாம். உங்க பிள்ளையாண்டானே இப்போ இதை அவசியம்னு நினைப்பான். என் பிள்ளை சுரேஷ் ரெண்டு தரம் இங்கே வந்து ரெண்டு ரெண்டு நாள் தங்கினத்துக்காக, இந்த வீட்டையே நான் ரீமாடல் பண்ணினேன். சந்தேகமாயிருந்தா... என் பின்னாடி வாங்கோ காமிக்கிறேன்....!"
சர்மாவும் வேணு மாமாவும் உள்ளே சுற்றிப் பார்ப்பதற்குச் சென்ற போது பார்வதி எதிரே வந்தாள்.
"நான் ஆத்துக்குப் போறேன்ப்பா... நீங்க சீக்கிரம் வந்துடுங்கோ, பூமிநாதபுரம் மாமா வந்தா உட்காரச் சொல்கிறேன்" என்று சர்மாவிடம் சொல்லிவிட்டு, "நான் வரேன் மாமா" என்று வேணு மாமாவிடமும் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டாள் பார்வதி.
"இந்தா வசந்தி! மாடிச் சாவியை எடுத்துண்டு வா. மாமாவுக்கு மாடியைத் திறந்து காமிப்போம் பார்க்கட்டும்."
வசந்தி சாவிக் கொத்தைக் கொண்டு வந்து தன் தந்தையிடம் கொடுத்தாள். வெளி நாட்டில் உத்தியோகம் பார்க்கிற பிள்ளையிடமிருந்து கணிசமான தொகை மாதா மாதம் வருகிறது என்பதைத் தவிர வேணு மாமாவே நல்ல வசதியுள்ள குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருக்குச் சுரேஷ் ஒரே பிள்ளை. வசந்தி ஒரே பெண். வசந்தியின் கணவருக்கு அதாவது வேணு மாமாவின் மாப்பிள்ளைக்குப் பம்பாயில் ஒரு பெரிய கம்பெனியில் சேல்ஸ் மானேஜர் உத்தியோகம். அந்தக் கம்பெனியின் தயாரிப்புகள் ஏற்றுமதியாகி விற்கிற இடம் பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடுகள் என்பதால் கோடிக் கணக்கில் அந்நியச் செலாவணி ஈட்டும் அந்த வெளி நாட்டு வர்த்தகதை மேலும் பெருக்குவதற்கு அடிக்கடி அந்த நாடுகளுக்குப் பயணம் செய்பவர் அவர். அவர் மாதக்கணக்கில் வெளிநாடு போகும் சமயங்களில் வசந்தி அப்பாவோடு ஊரில் வந்து தங்குவது வழக்கம். கல்யாணம் ஆகிப் பல ஆண்டுகள் ஆகியும் அவர்களுக்குக் குழந்தை குட்டி இல்லை. பிள்ளை வந்தாலும் சரி மாப்பிள்ளை வந்தாலும் சரி கிராமத்து வீட்டில் அவர்கள் பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப நவீன வசதிகள் இருக்கட்டும் என்று மாடியில் குளியலறை இணைந்த அறைகளைக் கட்டியிருந்தார் வேணு மாமா. மாடியிலிருந்து வீட்டு முன்புறமும் பின்புறமும் இறங்குவதற்குத் தனித்தனிப் படிக்கட்டுகள் இருந்தன. மாடி முகப்பில் திறந்த வெளியில் குளிர்ச்சியாக இருக்கட்டும் என்று தொட்டியில் நிறையச் செடிகளும், கொடிகளும் வளர்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்து விட்டு சர்மா வேணுமாமாவிடம் சொன்னார்.
"உங்களுக்குச் சரி. இதெல்லாம் தேவைதான். பிள்ளை, மாப்பிள்ளை யாராவது மாத்தி மாத்தித் தங்க வந்திண்டிருப்பா. எனக்கு இதெல்லாம் எதுக்கு? ஒரு நாள் கூத்துக்குத் தலையைச் சிரைச்சிண்ட கதையா இப்போ ரவியும் அவனோட எவளோ ஒருத்தியும் வராங்கறதுக்காக நான் உடனே இதெல்லாம் பண்ணியாகணுமா...? எல்லாம் போறாதுன்னு நீங்க மேற்கே மலையிலே ஏலக்காய் எஸ்டேட் வேற வாங்கியிருக்கேள். அது சம்பந்தமாகவும் உங்ககிட்ட மனுஷாள் வரப்போக இருப்பா...லௌகிகம் அதிகம் உள்ளவாளுக்கு, உம்மைப் போல நாலு பேரோடப் பழகறவாளுக்கு - இது எல்லாம் பிரயோஜனப்படும்."
"ஓய் சர்மா...? இந்த மாதிரி சாமர்த்தியப் பேச்சு தானே வேண்டாம்கிறேன். எனக்கு இதெல்லாம் தேவைதானா இல்லையான்னு நீர் 'சர்டிபிகேட்' கொடுக்கறதுக்கு உம்மை நான் கூப்பிட்டுக் காமிக்கலே. நீர் என்ன செய்யணும்னு யோசனை சொன்னா அதை காதுலேயே வாங்கிக்காம வேற என்னென்னமோ பேசறீரே...?"
சர்மாவும் வேணு மாமாவும் இப்படிப் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்டபடி அருகில் நின்ற வசந்தி ஒரு யோசனை சொன்னாள்.
"மாமாவுக்கு ஒண்ணும் ஆட்சேபணையில்லேன்னாக் கமலியும், ரவியும் கொஞ்ச நாளைக்கி இங்கேயே தங்கிக்கலாம். நான் பம்பாய் திரும்பறத்துக்கும் ஒரு மாசம், ரெண்டு மாசம் ஆகும். அதுவரை கமலிக்கு நானே பேச்சுத் துணையா இருக்கலாம். உங்காத்திலே நீங்களும் வைதீகம், மாமியும் படு ஆசாரம். பார்க்கப் போனா மாமி உங்களை விடக் கடுமையான வைதீகம்னு சொல்லணும். அத்தனைக்கும் நடுவிலே வர்றவாளையும் சிரமப்படுத்திண்டு, நீங்களும் சிரமப்படறதைவிட சுலபமா அவாளை இங்கேயே தங்க வச்சுடலாம்."
இதற்கு சர்மா உடனே பதில் எதுவும் சொல்லவில்லை. ஆனால் வேணு மாமா இந்த அருமையான யோசனையைக் கூறியதற்காகத் தம் பொண்ணைப் பாராட்டினார்.
"நல்ல ஐடியா வசந்தி! இந்த யோசனை எனக்குத் தோணலியே...? பேஷான காரியம்! இங்கேயே அவாளை தங்க வச்சுண்டுடலாம். சர்மாவுக்கும் செலவு மிச்சம். இப்போ உடனே கட்டிட வேலை மர வேலைன்னு ஆளைத் தேடி அலையவும் வேண்டாம். என்ன சொல்றீர் சர்மா?..."
சர்மா பதில் எதுவும் சொல்லவில்லை. ஏதோ யோசனையில் மூழ்கினாற் போல் இருந்தார். அவர் உடனே அந்தப் பிரச்சினையை அப்படியே விட்டுவிட்டு வீட்டில் சுரேஷூக்குப் போடலாம் என்று எப்போதோ வாங்கி வைத்திருந்த ஓர் ஏரோகிராம் தாளை எடுத்து வந்து சர்மாவிடம் நீட்டினாள் வசந்தி.
"நீங்க இப்போ பூமிநாதபுரம் போகப் போறேள். நாளைக்குப் போஸ்ட் ஹாலிடே. ஏரோகிராம் வாங்கவோ எழுதிப் போஸ்ட் பண்ணவோ முடியாது. இப்பவே இரண்டு வரி எழுதிக் குடுத்துடுங்கோ மாமா! நானே அதைப் போஸ்ட் பண்ணிடறேன்."
அவள் குரல் அவரிடம் கெஞ்சாத குறையாக குழைந்தது. முதலில் அவர் தயங்குவதாகப் பட்டது. அப்புறம் வசந்தியின் முகதாட்சண்யத்துக்கு மனசு இளகினார் அவர்.
"பேனா இருந்தாக் குடும்மா! நான் கொண்டு வரலை-"
வேணுமாமா உடனே தம் சட்டைப் பையிலிருந்து பேனாவை எடுத்துச் சர்மாவிடம் கொடுத்தார்.
சர்மாவின் உள்ளடங்கிய ஆத்திரமும் கோபமும் அந்தக் கடிதத்தில் அவர் எழுதிய வாக்கியங்களிலேயே தெரிந்தன.
"சிரஞ்சீவி ரவிக்கு அநேக ஆசீர்வாதம். உபய க்ஷேமோபரி. உன் கடிதம் கிடைத்தது. விளம்பரத்தைக் கொடுக்கவில்லை. நிறுத்திவிட்டேன்.
"இங்கு உன் அம்மா, சௌ. பார்வதி, சிர. குமார் அனைவரும் சௌக்கியம். மற்ற விஷயங்களை நீ வரும் போது நேரில் பேசிக் கொள்கிறேன்" - என்று நாலைந்து வரிகளில் எழுதிக் கையெழுத்திட்டு வசந்தியிடம் கொடுத்தார் சர்மா.
வசந்தி அதை வாங்கிக் கொண்டு, "நீங்க இதிலே என்ன எழுதியிருக்கேள்? கோபமா ஒண்ணும் எழுதலியே...?" என்று அவரைக் கேட்டாள். அவரிடமிருந்து சிரித்தபடி பதில் வந்தது.
"முதல்லே நீ படிம்மா! அப்புறம் உங்கப்பாட்டக் கொடுத்து அவரையும் படிக்கச் சொல்லு! உங்களுக்கெல்லாம் தெரியக்கூடாத பெரிய ரகசியம் ஒண்ணும் அதிலே எழுதிடலே..."
"நான் படிக்கணும்கிறது இல்லே மாமா! நீங்க சொன்னாச் சரிதான்..."
"நீ படீம்மா... நானே சொல்றேனே... படீன்னு."
அவள் அதைப் படித்துவிட்டுத் தன் தந்தையிடம் கொடுத்தாள். அவரும் அதைப் படித்தார்.
"ஏன் ஓய்? இவ்வளவு செலவு பண்ணி ஒரு ஏர்மெயில் கடிதாசு போடறோம். அதிலே போயி இத்தனைக் கஞ்சத்தனமா நாலேநாலு வரிதானா எழுதணும். அத்தனை தூரத்திலே இருந்து புறப்பட்டு வரேன்'னு எழுதியிருக்கிற பிள்ளையாண்டானுக்கு, 'உன் வரவை ஆவலோடு எதிர்பார்க்கிறான்'னு... ஒரு வரி கொஞ்சம் தாராளமாக மனசுவிட்டு எழுதப்படாதா...?"
சர்மா பதில் சொல்லவில்லை.
"மாமாவைக் கஷ்டப்படுத்தாதீங்கோ அப்பா. எல்லாம் இவ்வளவு எழுதியிருக்கிறது போறும். சரியாத்தான் எழுதியிருக்கார்."
வேணு மாமாவிடமும் அவர் பெண் வசந்தியிடமும் சர்மா விடைபெற்றுக் கொண்டு புறப்பட்ட போது "அப்போ அவா இங்கே தங்கற விஷயமா என்ன முடிவு பண்றேள்னு யோசனை பண்ணி அப்புறமாச் சொல்லுங்கோ" என்றார் வேணுமாமா.
"சொந்தக் கிராமத்திலே சொந்த அப்பா, அம்மா, தங்கை, தம்பியெல்லாம் இருக்கிற கிருஹத்திலே தங்க முடியாதபடி ஒருத்தன் வரான்னா - அவன் அப்புறம் எங்கே தங்கினாத்தான் என்ன...? இந்த ஊர்லே நீங்க சொல்ற மாதிரி பாத்ரூம் வசதி - தங்கற வசதியோட ஆத்தங்கரையிலே ஹைவேஸ் - பி.டபுள்யூ.டி. பங்களா, மலையடிவாரத்திலே ஃபாரஸ்ட் ரெஸ்ட் ஹவுஸ் எல்லாம் கூட இருக்கே...?"
வேணுமாமா இதைக் கேட்டு அயர்ந்தே போனார். ஒருபுறம் வருத்தமாக இருந்தாலும் மறுபுறம் மகன் மேல் சர்மாவுக்கிருந்த பாசம் புரியும் படி இந்த வாக்கியங்கள் ஒலித்தன. சொந்த மகன் தன்னோடு தங்க முடியாமல் போவதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் சர்மாவின் மனம் அப்போது தவிப்பது புலப்பட்டது.
சர்மா புறப்பட்டுப் போய் விட்டார்.
"என்னம்மா வசந்தி? திடீர்னு இப்படிப் பேசிட்டுப் போறார்...?"
"அவர் தப்பா ஒண்ணும் சொல்லலே அப்பா. பிள்ளை மேலே இருக்கிற பிரியத்தையும் விட முடியலே. அதே சமயம் ஊர் மெச்சற ஆசார அனுஷ்டானங்களைப் பத்தின பயமும் இருக்கு. இறுதலைக் கொள்ளி எறும்பு மாதிரி மாட்டிண்டு தவிக்கிறார்."
"சரி! முதல்லே லெட்டரைத் தபாலுக்கு அனுப்பு. மனுஷன் ஏதோ பெரிய மனசு பண்ணி இந்த லெட்டரையாவது எழுதிக் கொடுத்திருக்காரே...?"
...வசந்தியே அந்த ஏரோகிராமை ஒட்டி ரவியின் பாரிஸ் முகவரியைத் தெளிவாக எழுதி எடுத்துக் கொண்டு தன் கையாலேயே தபாலில் சேர்ப்பதற்காகத் தபாலாபீஸூக்குப் புறப்பட்டாள். வசந்தி பாதி வழி கூடப் போயிருக்க மாட்டாள். எதிரே சர்மாவின் புதல்வி பார்வதி அவசர அவசரமாகத் தன்னை நோக்கி வருவதை அவள் கண்டாள்.
----------------
அத்தியாயம் 4
மூச்சு இரைக்க இரைக்க ஓடி வந்த வேகத்திலிருந்து நின்று நிதானித்துக் கொண்டு சர்மாவின் பெண் பார்வதி அப்போது வசந்தியிடம் பேசுவதற்குச் சில விநாடிகள் ஆயின.
"வசந்தி அக்கா...! அப்பா ரவி அண்ணாவுக்கு எழுதிக் குடுத்த 'ஏரோகிராமை' அவசரப்பட்டு இன்னிக்கே போஸ்ட் பண்ணிட வேண்டாம்னு உடனே உங்ககிட்ட சொல்லிட்டு வரச் சொன்னா..."
"ஏண்டி...? திடீர்னு இப்போ என்ன வந்திடுத்து உங்கப்பாவுக்கு....?"
"அதென்னமோ... தெரியலே, வேண்டாம்னு சொல்லிவிட்டு வரச் சொன்னார்..."
பார்வதியை வசப்படுத்துவதற்கு மிகச் சுலபமான வழி ஒன்று வசந்திக்குப் புலப்பட்டது.
"பாரு! ரவி அண்ணா இப்போ ஊருக்கு வரணும்னு உனக்கும் ஆசை தானே...?"
"ரவி அண்ணாவைப் பார்த்து மூணு வருஷத்துக்கு மேலே ஆச்சு வசந்தி அக்கா...! எனக்கும், குமாருக்கும் அம்மாவுக்கும் அண்ணாவை உடனே பார்க்கணும்னு கொள்ளை ஆசை."
"அப்படியானா நீ ஒரு உபகாரம் பண்ணனும் பாரு! நீ என்னைப் பார்க்கிறதுக்குள்ளேயே நான் இந்த ஏரோகிராமை தபால்லே சேர்த்தாச்சுன்னு உங்க அப்பாட்டச் சொல்லிடணும். ரவி அண்ணாவைப் புறப்பட்டு வரச் சொல்லி சித்த முன்னே தான் இதிலே எழுதிக் கையெழுத்துப் போட்டுக் குடுத்தார் உங்கப்பா. இப்போ இதைப் போஸ்ட் பண்ண வேண்டாம்னு அவரே சொல்லியனுப்பிச்சதா நீ சொல்றே... உங்கப்பா என்ன பண்ணுவாரோன்னு எனக்கும் பயமா இருக்குடி. வரச்சொல்லி எழுதியிருக்கிற இந்த லெட்டரைக் கிழிச்சுப் போட்டுட்டு வர வேண்டாம்னு இன்னொரு லெட்டர் எழுதப் போறாரோ என்னமோ?"
"ஐயையோ! அது வேண்டாம் அக்கா! நீங்க இதையே போஸ்ட் பண்ணிடுங்கோ... நான் உங்களைப் பார்க்கறத்துக்குள்ளேயே நீங்க 'ஏரோகிராமை'ப் போஸ்ட் பண்ணியாச்சுன்னு அப்பாட்டச் சொல்லிடறேன்."
தபாலாபீஸ் வரை பார்வதியையும் உடனழைத்துச் சென்றே அந்தக் கடிதத்தைப் பெட்டியில் போட்டாள் வசந்தி. தபாலாபீஸ் வாசலில் இருந்தே வசந்தியும், பார்வதியும் அவரவர் வழிகளில் பிரிந்து சென்றனர்.
பார்வதி வீட்டிற்கு திரும்பிச் சென்றபோது அவள் தந்தை விசுவேசுவரசர்மா பூமிநாதபுரத்துக்குப் புறப்பட்டுப் போயிருந்தார். அம்மா வாசல் திண்ணைப் பிறையில் அந்தி விளக்கு ஏற்றி வைத்து விட்டு உட்கார்ந்திருந்தாள். பிறைக்குக் கீழே திண்ணையில் தண்ணீர் தெளித்து அழகாகச் சிறிதாகத் தாமரைப்பூக் கோலம் போட்டிருந்தாள் அம்மா. வயதாகியும் கை சிறிதும் நடுங்காமல் அம்மாவால் எப்படி இத்தனை அழகாக அளவாகக் கோலம் போட முடிகிறதென்று பார்வதி ஒவ்வொரு முறையும் அம்மாவின் கோலத்தைப் பார்க்கும் போது ஆச்சரியப்படுவதுண்டு. தாமரைப்பூ, தேர் எதைப் போட முயன்றாலும் கோலம் போடும் போது தனக்குக் கைகோணி விடுவதும், அம்மாவுக்கு அச்சுப் போல் கச்சிதமாக வரைய வருவதும் சேர்ந்தே நினைவு வரும் அவளுக்கு. இதற்காக அம்மாவிடம் அவள் பொறாமைப் படுவது கூட உண்டு. பார்வதி பாத்திரக்கடையில் தகரத் தகட்டில் தாமரைப் பூ போலவும், தேர் போலவும் செய்த கோல அச்சுக்களையும் கோலக் குழலையும் வாங்கப் பணம் கேட்ட போது அம்மா மறுத்து விட்டாள்.
"எங்க நாளிலே இதெல்லாம் ஏதுடி...? கன்னியாப் பெண்களோட மனசுலேயும் கைகள்ளேயும் லட்சுமி கடாட்சமும், சரஸ்வதி கடாட்சமும் போட்டி போட்டுண்டு நிற்க வேண்டாமோ...? சிரத்தையும் அக்கறையும் இருந்தாக்க மனசு நெனைச்சப்படி கை கோடு இழுக்காதோ...? கோலத்துக்கு அச்சும், குழலும் வந்திருக்குன்னு சொன்னா அந்த நாளிலே சிரிப்பாடீ... சிரிப்பா... அதெல்லாம் ஒண்ணும் வாங்க வேண்டாம். கொஞ்சம் கொஞ்சமாகப் பழகு. எல்லாம் தானாக வந்துடும்..."
சங்கரமங்கலம் அக்கிரகாரத்தின் மூன்று தெருக்களிலும் தேடிச் சல்லடை போட்டுச் சலித்துப் பார்த்தால் தேறக்கூடிய முதல் தரமான குடும்பத் தலைவிகளில் முதல் இடம் விசுவேசுவர சர்மாவின் மனைவி காமாட்சி அம்மாளுக்குக் கிடைக்கும். 'கிருகலட்சுமி' என்ற பதத்துக்குத் தனியாக இலட்சணம் சொல்லி விளக்கிக் கொண்டிருப்பதைவிட அந்த அம்மாளை அப்படியே சுட்டிக் காட்டி விடலாம். ஆனாலும், அவளுக்குக் காது கொஞ்சம் மந்தம் என்ற ஒரே காரணத்துக்காக சர்மா அவளிடம் திட்டுவதும் கூப்பாடு போதுவதும் வழக்கமாக இருந்தது. அப்படி அவர் திட்டுவதற்கும் கூப்பாடு போடுவதற்கும் கூடப் பல சமயங்களில் ஆழ்ந்த அர்த்தம் இருக்காது. அவள் மேல் தனக்கு இருக்கும் உரிமையையும், ஆதிக்கத்தையும் காட்டும் ஓர் உணர்ச்சி வெளிப்பாடாகவே சர்மாவின் இந்த விதமான கோபதாபங்கள் அமையுமே தவிர வேறு ஆழ்ந்த பொருளோ பொருத்தமோ அவற்றுக்கு இருக்காது. அந்த அம்மாளும் அதை அப்படித்தான் புரிந்து கொண்டிருந்தாள். பிரியமுள்ளவரிடத்தில் பெய்யப்படும் வசைச் சொற்களுக்குப் பொருளே இருப்பதில்லை. பிரியமும் உறவும் பாசமும் ஆகிய அன்புப் பெருக்கில் சொற்கள் கரைந்து போய் விடும்போது, அப்புறம் அவற்றுக்குத் தனியே பொருள் எங்கிருந்து கிடைக்கும்...?"
சர்மாவின் கோபமும், கூப்பாடும் அவர் தன்னிடம் அப்போது ஏதோ பேசிக் கொண்டிருக்கிறார் என்பதற்கும் அதிகமாகவோ, மேலாகவோ, வேறெந்தப் பொருளையும் காமாட்சியம்மாளின் மனதில் உண்டாக்கியதே இல்லை. அந்த அளவு கடுஞ்சொற்களைக்கூட அநேகமாக அவளறிந்தவரை அவர் வேறு யாரிடமும் உரிமையோடு உபயோகப்படுத்துவதில்லை. தன்னைத் தான் அவர் அப்படித் திட்டுவதற்கு உரிமை கொண்டாடுகிறார் என்பதே காமாட்சியம்மாளுக்கு உள்ளூறப் பெருமைதான். கணவனின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருக்கிறோம் என்பதற்காகவே பெருமப்படும் பழைய தலைமுறை இந்தியப் பெண்களில் ஒருத்தியாகத்தான் அந்த அம்மாளும் இருந்தாள். கணவன் என்னும் ஆதிக்கத்திலிருந்தோ குடும்பம் என்னும் ஆதிக்கத்திலிருந்தோ விடுபட விரும்பும் நவீன காலத்து நகர்ப்புற இந்தியப் பெண்களின் முனைப்பு அவர்கள் தலைமுறையின் கடைக்கோடியில் கூட இன்னும் எட்டிப் பார்க்க வில்லை. தங்களது சுதந்திரமும், பெருமையும், பீடும், சுகமும், துக்கமும், வீடு என்னும் எல்லைக்குள், குடும்பம் என்னும் சாம்ராஜ்யத்துக்குள் மட்டுமே இருப்பதாக எண்ணிக் கருமமே கண்ணாக அந்த தலைமுறையினர் உழைத்துக் கொண்டிருந்தனர். கன்னியாகத் தாயாகப் பாட்டியாக அந்த எல்லைக்குள்ளேயே அவர்கள் வளைய வளைய வந்து கொண்டிருந்தார்கள். அதை விடச் சுதந்திரமும், சுகமும் உள்ள வாழ்வு ஒன்று அந்த வட்டத்துக்கு வெளியே இருப்பதாக அவர்கள் ஒரு போதும் எண்ணிப் பார்த்து ஏங்கியதில்லை.
"என்னடி காமூ! பிள்ளையாண்டான் தூர தேசத்துக்குப் போய் வருஷக் கணக்கிலே ஆச்சே...? வரச் சொல்லி ஒரு கால்கட்டைப் போட்டு அனுப்பப் படாதோ...?" என்ற விசாரணையுடன் பக்கத்து வீட்டு முத்து மீனாட்சிப் பாட்டி திண்ணையில் வந்து உட்கார்ந்தாள். பாட்டி காமாட்சியம்மாளின் காதில் விழுவதற்காக உரத்த குரலில் பேசியது தெருவில் எதிர்ச்சரகத்து வீடுகள் வரை கேட்டது.
நாள்தோறும் சந்தியா காலத்தில் விளக்கேற்றி வைத்து விட்டு வழக்கமாகச் சொல்லும் தோத்திரம் ஒன்றை வாய்க்குள் முணுமுணுத்துக் கொண்டிருந்த காமாட்சியம்மாள், அதை முடித்து விட்டுப் பதில் சொல்வதாகப் பாட்டியை நோக்கிச் சைகை செய்தாள். பாட்டி அந்தச் சைகை புரிந்து பாருவிடம் பேச்சுக் கொடுத்தாள். "குமார் இன்னும் காலேஜிலேருந்து வரலியாடி பாரு...? டவுன்லேருந்து ஒரு சாமான் விலை விசாரிச்சுண்டு வரச்சொல்லி அவனிட்டக் காலம்பரக் கேட்டுண்டேன்."
"இன்னும் வரலே பாட்டீ! அவன் வரத்துக்கு ஏழு ஏழரை மணியாகும்..."
இதற்குள் காமாட்சியம்மாள் தோத்திரத்தை முடித்து வணங்கிவிட்டுத் திண்ணையில் கால் நீட்டி உட்கார்ந்திருந்த பாட்டிக்கு அருகே வந்து அமர்ந்தாள். பாட்டி மறுபடியும் தன் கேள்வியைத் தொடங்கினாள்.
"இந்த வருஷமாவது சீமையிலேருந்து பிள்ளை வரப் போறானோ இல்லியோ..?"
"வரதா அவன் எழுதியிருக்கானாம். 'வான்னு' சொல்லி இவரும் பதில் எழுதிப் போட்டிருக்காராம். வேணுமாமா பெண் வசந்தி சொன்னதா இப்போ தான் பாரு எங்கிட்டச் சொன்னாள். இவரா இதெல்லாம் எனக்கெங்கே சொல்றார் பாட்டி...?"
"வேணுகோபாலன் பொண் உன் பொண்ணிட்டச் சொல்லித்தான் உனக்கே அவன் வரான்கிறது தெரியறதாக்கும்!"
"ஆமாம் வேற யார் இதெல்லாம் எனக்குச் சொல்றா? இவருக்கோ நான் எதைக் கேட்டாலும் மூக்குக்கு மேலே கோபம் வந்துடறது."
வாசல் திண்ணையில் பக்கத்து வீட்டு முத்து மீனாட்சிப் பாட்டியும் விசுவேசுவர சர்மாவின் மனைவி காமாட்சி அம்மாளும் உரையாடிக் கொண்டிருந்த போது பார்வதி திண்ணையில் இருந்து தெருவுக்குக் கீழே இறங்கும் படிகளில் ஒன்றில் அமர்ந்து கொண்டிருந்தாள்.
கிழக்கு மேற்காக நீண்டிருந்த தெருவின் மேற்குப் பக்கமிருந்து கட்டை குட்டையாக ஓர் இரட்டை நாடியுள்ள மனிதர் வந்து கொண்டிருந்தார். இடுப்பில் நாலு முழம் வேஷ்டி, கறுப்பு நிறத்தில் அரைக்கைச் சட்டை மேலே ஒரு சிறு துண்டு அணிந்த தோற்றத்தில், நீண்ட வெட்டரிவாள் மீசையுடன் அந்த நடுத்தர வயது மனிதர் வீட்டு வாசலில் வந்து நின்றதும் பார்வதி தயங்கித் தயங்கிப் படியிலிருந்து மெல்ல எழுந்திருந்தாள்.
"ஐயா இருக்காரா பாப்பா...?"
"இல்லையே...? பூமிநாதபுரம் போயிருக்கார். திரும்பி வர நாழியாகும்."
"சரி பரவாயில்லை. அவரு திரும்பி வந்ததும் ஞாபகமா 'இறைமுடிமணி' தேடி வந்தார்ன்னு சொல்லு, மறுபடி நாளைக்கிக் காலையிலே வந்து பார்க்கிறேன்..."
வந்தவர் போய்விட்டார். பார்வதியிடம் யாரோ பேசும் குரலைக் கேட்டுத் தலைப்பை இழுத்து நன்றாகப் போர்த்திக் கொண்டு எட்டிப் பார்த்த காமாட்சியம்மாளிடம்,
"அப்பாவைத் தேடி வந்துட்டுப் போறார்... மறுபடி காலம்பர வராறாம்...?" - என்றாள் பார்வதி.
"யாருடீது...? வெறகுக் கடைத் தேசிகாமணிநாடார் குரல் மாதிரின்னா கேட்டுது" என்று இருந்த இடத்திலிருந்தபடியே நீட்டி முழக்கி வினவினாள் முத்து மீனாட்சிப் பாட்டி.
காமாட்சியம்மாள் பார்வதியை விசாரித்துத் தெரிந்து கொண்டபின், "ஆமாம் பாட்டி! நீங்க சொன்னவர்தான். இவரைத் தேடி வந்துட்டுப் போறார்..." என்று பாட்டிக்குப் பதில் சொன்னாள்.
"தேசிகாமணி நாடார்தானா? அவனுக்கு விசுவேசுவரன் கிட்ட என்னடீ காரியம் இருக்கும்...?"
"என்ன காரியம்னு தெரியலே, எப்பவாவது இப்படி இவரைத் தேடிண்டு வரது உண்டு. இவரும் அவரைத் தேடிப் போறதுதான்!"
"என்ன ஆச்சரியம்டீ இது?"
"இதுலே ஆச்சரியம்னு என்ன இருக்கு...?"
காமாட்சியம்மாளின் இந்தக் கேள்விக்கு நேரடியாக மறுமொழி கூறாமல் முத்து மீனாட்சிப் பாட்டி தெய்வ சிகாமணி நாடாரைப் பற்றி விவரிக்கத் தொடங்கினாள்.
எல்லாவற்றையும் கேட்டு விட்டுக் காமாட்சியம்மாள் சொன்னாள்:-
"நீங்க தான் இப்படியெல்லாம் சொல்றேள் பாட்டி! இவரானா அந்த மனுஷரைக் கொண்டாடாத நாள் கிடையாது..."
தெரு விளக்கின் மங்கிய வெளிச்சத்தில் புத்தகமும் கையுமாக இருபது வயது மதிக்கத்தக்க ஒல்லியான பையன் ஒருவன் அந்த வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தான்.
அதைப் பார்த்துவிட்டுப் பார்வதி குரல் கொடுத்தாள்.
"பாட்டி! குமார் வந்தாச்சு..."
குமார் படியேறி உள்ளே நுழைந்ததும் பாட்டியைப் பார்த்தவுடனே அவள் சொல்லியிருந்த தகவல் நினைவு வந்தவனாக, "பாட்டி! நீங்க சொன்ன மாதிரி சைஸிலே வெண்கல உருளியே இப்போ வரதில்லையாம். பாத்திரக் கடைக்காரன் சொன்னான். 'இது எவர்சில்வர் காலம். வெங்கலத்தையும் பித்தளையையும் தாமிரத்தையும் யாரும் விசாரிக்கிறதே இல்லே'ங்கிறான் அவன்" என்றான்.
"அவன் எதை வேணாச் சொல்லட்டும்டா குமார்! உங்கம்மாகிட்டக் கேட்டுப் பாரேன். நல்ல பால் வெங்கலத்திலே வார்த்த குண்டு அருக்கே, அதுலே பருப்பு வேகவச்சால் வர்ற ருசி 'எவர்சில்வர்லே' வருமா கேளு...!"
"வருமோ வராதோ பாட்டீ... அவன் சொன்னதை உங்ககிட்டச் சொன்னேன்."
"அது சரிடா கொழந்தே! தினம் ஏன் இத்தனை நாழியாறது....? காலேஜ் நாலு மணிக்கே விட்டுடமாட்டாளோ...! புது நகரத்திலேயிருந்து சங்கரமங்கலத்துக்கு ரெயில் வந்து சேர மூணு மணி நேரமா ஆறது..."
"புது நகரம் டூ சங்கரமங்கலம் முழுசா இருபது மைல் கூட இல்லே பாட்டி! பத்தொம்பது மைல்தான். ஆனா இந்தப் பத்தொம்பது மைல்லே முப்பத்தொம்பது ஊர் சிறிசும் பெரிசுமா இருக்கு. நாலு ஊருக்குத்தான் ரயில்வே ஸ்டெஷன் போட்டிருக்கா. சட்டப்படி ரயில் அங்க மட்டும்தான் நிக்கணும். ஆனா, எல்லா ஊர்லேருந்தும் புதுநகரம் காலேஜூக்குப் பையன்கள் வந்து திரும்பறதுகள் அங்கங்கே செயினைப் பிடிச்சு இழுத்து ரெயிலை நிறுத்தி இறங்கதுங்கறது வழக்கமாப் போச்சு. காலம்பர இங்கேயிருந்து காலேஜூக்குப் போற ரெயில்லேயும் இதே தொல்லை. சாயங்காலம் திரும்பற ரயில்லேயும் இதே தொல்லை பாட்டீ!"
பாட்டிக்கு விவரம் சொல்லிவிட்டு உள்ளே சென்ற குமாரைப் பின் தொடர்ந்து பார்வதியும் வீட்டின் உள்ளே சென்றாள்.
"அப்பா இல்லையாடீ பாரு..."
"அப்பா பூமிநாதபுரம் போயிருக்கா... அது சரி... ரவி அண்ணா வரப்போறதா, அப்பா பாரிஸுக்கு லெட்டர் எழுதியிருக்கா... உனக்குத் தெரியுமோ...?"
"தெரியாது... எப்போ வரானாம்...?'
"எப்போன்னு சரியாத் தெரியாது... ஆனா ரவியண்ணா வரப் போறது நிச்சயமாக்கும்..."
சொல்லியபடியே கூடத்து மேடையிலிருந்த ஸ்டவ்வைப் பற்ற வைத்துக் காப்பி கலப்பதற்காகப் பாலைச் சுட வைத்தாள் பார்வதி. டிகாக்ஷன் ஏற்கெனவே போடப்பட்டு ஃபில்டரில் தயாராயிருந்தது.
அந்த வீட்டில் சமையலறைக்குள் காப்பி, டீ கலந்து சாப்பிட அநுமதி இல்லை. காப்பி, டீ சாப்பிடுகிறவர்கள் சர்மாவும் குமாரும் பார்வதியும் தான். வீட்டுக் கூடத்தில் அவர்கள் காப்பி, டீ போட்டுக் கொள்வதற்காகத் தனி ஸ்டவ் மேடை இருந்தது. அதையும் அவர்களே தான் போட்டுக் கொள்ள வேண்டும். ஸ்டவ் - போன்ற மண்ணெண்ணெய் அடுப்புக்கள் சமையலறைக்குள் நுழையக்கூடாது. அடுப்பாகவும், கொடியடுப்பாகவும் பிரிக்கப்பட்டிருந்த புராதனமான மண் அடுப்பு மட்டுமே சமையலறை மேடையில் இருந்தது. அந்த மண் அடுப்பு அதன் சுற்றுப்புறச் சூழல், எல்லாவற்றையுமே ஒரு கோயில் கர்ப்பக்கிருகம் போலச் சுத்தமாக வைத்துக் கொண்டிருந்தாள் காமாட்சி அம்மாள். கோயில் கர்ப்பக்கிருகத்துக்குள் கண்டிப்பான அனுமதி நிபந்தனைகளும், சேர்க்கக் கூடியவை - சேர்க்கக் கூடாதவை என்ற விதிகளும் இருப்பது போல அந்த வீட்டின் புராதனமான சமையலறைக்குள் விதிகள் ஆசார அநுஷ்டானங்கள் எல்லாம் இருந்தன. நேமநிஷ்டை தவறாத ஒரு முனிவரின் ஆசிரமத்தில் தங்க வந்தவர்கள் போல் மற்றவர்கள் அந்த வீட்டில் பழக வேண்டியிருந்தது.
நீண்ட காலம் வரை சர்மாவும் காப்பி, தேநீர் எதுவும் அருந்தாமல்தான் இருந்தார். அவர் காப்பி சாப்பிடத் தொடங்கிச் சில ஆண்டுகளே ஆகின்றன. ஆனால், அவருக்காகக்கூட அந்த வீட்டின் ஆசாரத்தையும், சமையலறை நிபந்தனைகளையும் காமாட்சி அம்மாள் தளர்த்தவில்லை. அவரையும், அவருடைய காப்பிப் பழக்கத்தையும் கூடத்து மேடையோடு தடுத்து நிறுத்திவிட்டாள்.
ரவியே பாரிஸ் போகுமுன் சென்னையில் வேலையாக இருந்தபோது ஒரு தடவை விடுமுறைக்குச் சங்கரமங்கலம் வந்திருந்த சமயத்தில், "அம்மா, விடிஞ்சு எந்திருந்தா கோபூஜை, துளசி பூஜை, விளக்கு பூஜைன்னு வீட்டையே கோயிலாக்கிட்டே நீ... இனிமே, நாங்கள்ளாம் வேற வீடு பார்த்துண்டு போயிட வேண்டியதுதான்..." என்று சிரித்துக் கொண்டே காமாட்சியம்மாளிடம் சொல்லியிருக்கிறான்.
'இங்கே நிற்காதே, அங்கே நிற்காதே, அதைத் தொடாதே... இதைத் தொடாதே', என்று அம்மா பண்ணுகிற கெடுபிடிகளில் சலிப்படைந்து அப்படிச் சொல்லியிருந்தானே ஒழிய உள்ளுற அவனுக்கும் அந்த வீட்டின் மற்ற உறுப்பினர்களுக்கும் காமாட்சியம்மாளின் ஆசார அனுஷ்யானங்களில் பெருமைதான். அந்த அம்மாளின் சத்திய விசுவாசத்தையும் இனிய கொள்கை முரண்பாடுகளையும் அவர்கள் மதித்திருக்கிறார்கள். சொல்லப் போனால் சர்மாவே பல விஷயங்களில் ஆசார அநுஷ்டானங்களைத் தீவிரமாகப் பற்றிக் கொண்டிருந்ததற்குக் காமாட்சியம்மாள் தான் மிகப்பெரிய தூண்டுதல்.
"காப்பியோட நிறுத்திக்குங்கோ... ஒண்ணொண்ணாக் கெடுத்துக்காதீங்கோ..." என்று அவள் அவரிடமே கேலி செய்யத் தவறுவதில்லை.
அதிகாலை இருள் பிரிந்தும் பிரியாமலும் இருக்கிற வைகறை வேளையில் நீராடிய ஈரக் கூந்தலும், திலகம் துலங்கும் பொன்நிற நெற்றியுமாக மல்லிகையும் சாம்பிராணியும் கற்பூரமும் துளசியும் மடிப்பாலும் தசாங்கமும் கமகமவென்று மணக்க அம்மா எதிரே தென்படும் போது சாட்சாத் ராஜ ராஜேஸ்வரியே வீட்டுக்குள் வந்து நிற்பது போல் ரவிக்குத் தோன்றும்.
அம்மாவின் ஆசார அநுஷ்டானங்கள் அசௌகரியமாக மற்றவர்களைச் சிரமப்படுத்தியபோது கூட அவை மங்கலமான-தவிர்க்க முடியாத அசௌகரியங்களாகத் தான் அவனுக்கும் மற்றவர்களுக்கும் தோன்றியிருக்கின்றன. அம்மா தோன்றி வளர்ந்து வந்த குடும்பம் அப்படிப்பட்டதென்று அவன் அறிவான்.
அதே அகஸ்திய நதி தீரத்தில் சங்கரமங்கலத்திலிருந்து சில மைல் தொலைவிலிருந்த பிரம்மபுரத்தில் ஒரு வைதிகமான குடும்பத்தில் கனபாடிகள் ஒருத்தரின் ஒரே மகளாகத் தோன்றிய பெண் வேறு எப்படி இருக்க முடியும்? அப்பா அளவிற்கு இல்லையென்றாலும் அம்மாவுக்கும் போதுமான அளவு சாஸ்திரஞானம், சமஸ்கிருத ஞானம், தமிழ்த் தோத்திரப் பாடல்களில் ஞானம் எல்லாம் உண்டு. தன் இளமையில் ஊரில் இருந்தபோது, அம்மாவின் ஆசாரங்களால் விளையும் அசௌகரியங்களுக்கு 'ஹோலி - இன்கன்வீனியன்ஸ் - ஆசார அசௌகரியங்கள்' என்று செல்லமாக ஒரு பெயரே சூட்டியிருந்தான் ரவி. வீடே அந்த அசௌகரியங்களில் சிறைப்பட்டிருந்தது. ஆனாலும் அதிலிருந்து விடுபட விரும்பாமல் அதை அப்படியே தொடர விரும்பியது.
ரவியின் கடிதத்தை வீட்டில் யாரும் அறிய விடாமல் சர்மா தடுத்தது காமாட்சியம்மாளுக்குப் பயந்துதான். ரவி ஒரு பிரெஞ்சு யுவதியைக் காதலிக்கிறான் என்ற உண்மை தனக்கும் முன்னதாக ஏற்கெனவே எந்த இரண்டு பேருக்குத் தெரியுமோ, அந்த இரண்டு பேருக்கு மட்டுமே அவராலும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கும் மேலாக அந்தப் பிரெஞ்சு யுவதியுடன் அவன் சங்கரமங்கலத்துக்குப் புறப்பட்டு வரப் போகிறான் என்பதை அவர் வேறு யாருக்கும் தெரிவிக்கத் தயங்கினார்.
இதில் அவருக்குப் பல தர்ம சங்கடங்கள் இருந்தன. வேணு மாமாவும், வசந்தியும், ரவியையும் அவனுடைய பிரெஞ்சுக் காதலியையும் தங்களோடு தங்க வைத்துக் கொள்வதாகச் சொல்லியிருந்தாலும் கூடச் சொந்த ஊரில் சொந்த வீடு இருக்கும்போது... ஏதோ ஓர் அந்நிய நாட்டு யுவதியுடன் வருகிறான் என்ற ஒரே காரணத்துக்காக ரவியை மற்றொருவர் வீட்டில் தங்க வைப்பது எப்படி நியாயமாயிருக்கும் என்றெண்ணி அவர் மனம் தயங்கியது.
சற்றே லௌகீகமாகவும் கூட இந்த விஷயத்தில் அவர் யோசித்தார். அவன் மேல் உயிரையே வைத்திருக்கிற அந்தப் பெண்தான் அவனைப்பற்றி என்ன நினைப்பாள்? இன்னொருவர் வீட்டில் தங்கிக்கொள்ளக் காரணமென்று அவன் தான் அந்தப் பெண்ணிடம் எதைச் சொல்ல முடியும்? 'உங்கள் நாட்டில் காதல் செய்வது இவ்வளவு பெரிய, தண்டனைக்குரிய காரியமா? ' என்று அவள் அவனைத் திருப்பிக் கேட்டால் அவன் என்ன பதில் சொல்லுவான்? என் வீட்டில் நான் தங்குவதற்குப் போதுமான வசதிகள் இல்லை. அதனால் இங்கே தங்க நேர்ந்தது என்று அவன் சொல்ல உன் வீட்டின் வசதியின்மையே எனக்குப் போதும். அங்கு போகலாம்' என்று அவள் பதில் கூறிவிட்டால் என்ன செய்வது? தூர தேசத்துக்குப் போய்விட்டுப் பல வருஷங்களுக்குப் பின் ஊர் திரும்புகிற பிள்ளையை இத்தனை தயக்கங்களோடும் வரவேற்க நேர்கிறதே என்று மனம் குழம்பினார் அவர். அவன் ஊருக்கு வருவதை ஒரு மாதம் தள்ளிப்போட்டால் கொஞ்சம் நிதானமாக யோசித்து முடிவுக்கு வரலாமே என்று அவருக்குத் தோன்றியது. அதனால் தான் வேணு மாமாவைப் பார்த்து விட்டு வீடு திரும்பியதுமே 'அந்த ஏரோகிராமைத் தபாலில் போட வேண்டாம்' என்று தன் பெண் பார்வதியிடம் வசந்திக்கு அவசர அவசரமாகச் சொல்லி அனுப்பிவிட்டுப் பூமிநாதபுரம் புறப்பட்டிருந்தார் சர்மா.
பூமிநாதபுரத்திற்குச் சென்ற போதும், அங்கு இருந்த போதும் இரவு நேரங்கழித்துத் திரும்பிய போதும் சர்மாவுக்குத் தாம் ரவிக்கு எழுதிய கடிதத்தின் தொடர்பான சிந்தனைதான். அவர் இரவு வீடு திரும்பிய போது பார்வதி தூங்கிப் போயிருந்தாள். காலையில் அவர் அகஸ்திய நதியில் நீராடி வீரு திரும்பிப் பூஜை புனஸ்காரங்களை முடித்துக் காப்பி மேடையை அணுகிய போது பார்வதி அந்த விவரங்களைத் தந்தையிடம் தெரிவித்தாள்.
"அப்பா! நான் ஓடிப்போய்ச் சொல்றதுக்குள்ளே வசந்தி அக்கா அந்த லெட்டரைப் போஸ்ட் பண்ணிட்டா. அப்புறம் நீங்க பூமிநாதபுரம் போயிருந்தப்போ இறைமணி முடி உங்களைத் தேடிண்டு வந்தார். இன்னிக்குக் காலம்பர மறுபடி வரேன்னார்..."
"இறைமணி முடியில்லே! இறை முடிமணீன்னு சொல்லு".
"இறை மணிமுடி."
"இறை மணி முடியில்லேடீ! இறைமுடி மணி....அதாவது தெய்வ-சிகா-மணியங்கறதைத் தெய்வ-இறை, சிகா - முடி, மணி-மணின்னு நீ வரிசைப் படுத்திக்கணும்."
"எனக்கு இப்படித்தான் சொல்ல வருது அப்பா!'
காப்பியைக் குடித்து விட்டு அவர் தெருத் திண்ணைக்கு வரவும் இறைமுடிமணி அவரைத் தேடி வரவும் சரியாயிருந்தது.
"வணக்கம் விசுவேசுவரன்..."
"யாரு... தேசிகாமணியா...வா..."
"நேற்றே வந்தேன்... நீ பூமிநாதபுரம் போயிட்டேன்னு பாப்பா சொல்லிச்சு..."
நீராடி நுனியில் முடிந்த ஈரத்தலை, நெற்றியிலும் மார்பிலும் பளீரென்று விபூதி, பஞ்சகச்சம், கழுத்தில் நவமணி மாலை சகிதம் ஒரு பரம வைதிகரும் உடம்பில் இருளாக மின்னும் கருநிறச் சட்டையும் வெட்டரிவாள் மீசையும் குண்டு முகமுமாக ஒரு சுயமரியாதைக்காரரும் அந்த அதிகாலையில் அக்ரகாரத்தில் வீட்டுத் திண்ணையில் எதிரெதிரே உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தது தெருவில் போவோர், வருவோர் கவனத்தை எல்லாம் கவர்ந்தது.
-----------------
அத்தியாயம் 5
விசுவேசுவர சர்மாவும், இறைமுடிமணியும், பல ஆண்டுகளுக்கு முன் சங்கரமங்கலம் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ஒரே வகுப்பில் படித்த தோழர்கள். வாழ்க்கைப் பாதையில் இருவரும் வேறு வேறு திசைகளில் நடந்தாலும் பழைய நட்பு என்னவோ நீடிக்கத்தான் செய்தது. அவர்கள் தனியேயும், தங்களுக்குள்ளேயும் பேசிக் கொள்ளும்போது இருவரும் ஒருவரை மற்றொருவர் நீ - நான் - வா - போ என்று உரிமை பாராட்டி ஏக வசனத்தில் பேசிக் கொள்ளுவார்கள். ஆனால் மற்றவர்களிடம் ஒருவரைப் பற்றி இன்னொருவர் குறிப்பிட்டுப் பேச நேரும் போதெல்லாம் அவர், இவர் என்று மிகவும் மரியாதையாகத்தான் குறிப்பிட்டுப் பேசுவார்கள். எதிரெதிரான வாழ்க்கை முறைகளையும், கொள்கைகளையும் விட்டுக் கொடுக்காமல் நட்பையும் இழந்து விடாமல் அவர்களால் பழக முடிந்தது. அந்த அதிகாலை வேளையில் அன்று இறைமுடிமணி தன்னைத்தேடி வந்த காரியம் என்னவாக இருக்கும் என்று அறிய ஆவலாக இருந்தது சர்மாவுக்கு. வந்தவர் தாமாகச் சொல்லுவதற்கு முன் தானே வலிய அவசரப்பட்டு விசாரிப்பது நன்றாக இராது என்று சர்மா இறைமுடிமணியின் குடும்ப ஷேம லாபங்களை விசாரிக்கலானார். இறைமுடிமணியும் சர்மாவின் குடும்ப ஷேம லாபங்களை விசாரித்தார்... பேச்சு ரவியைப் பற்றி விசாரிப்பதில் வந்து நின்றது.
"தம்பிகிட்ட இருந்து லெட்டர் ஏதாச்சும் உண்டா?"
"...போட்டுருக்கான்... புறப்பட்டு வரதாக்கூட எழுதியிருக்கான்..."
"எப்ப வருதாம்...."
"தேதி எழுதலே... சீக்கிரமா வருவான்... வரச் சொல்லிப் பதில் எழுதிப் போட்டிருக்கேன்."
மனந்திறந்து பேசுவதற்கும் நம்பிக்கைக்கும் உரிய சிநேகிதனிடம் உண்மை நிலையைச் சொல்லி யோசனை கேட்கலாம் என்று சர்மாவுக்குத் தோன்றியது. இருந்தாலும் இறைமுடிமணி தன்னைத் தேடி வந்த காரியத்தைச் சொல்லுவதற்கு முன் தான் எதையும் பிரஸ்தாபிக்க வேண்டாம் என்று இருந்தார் அவர்.
இறைமுடிமணி அதிகமாக நேரத்தைக் கடத்தாமலும் சுற்றி வளைக்காமலும் வந்த காரியத்தைச் சொல்லி விட்டார்.
"வடக்குத் தெரு கோடியிலே இருக்கே ஒரு காலி மனை; அதுலே என் மருமகன் - அதாம்பா... மூத்த மகளோட புருசன் - குருசாமி பலசரக்குக் கடை போடணும்கிறான். விசாரிச்சதிலே அந்த இடம் உன் மடத்துக்குச் சொந்தமானதுன்னு தகவல் தெரிஞ்சுது. முடியுமானா அந்த இடத்தை ஒரு நியாயமான வாடகைக்குப் பேசி விட்டால் நல்லது. இதை உங்கிட்டக் கேட்டுட்டுப் போகலாம்னுதான் வந்தேன்..."
"அந்த இடத்தை வாடகைக்கு விடலாம்னு நானாத் தீர்மானம் பண்ணிட முடியாது. ஸ்ரீ மடத்துக்கு ஒரு வார்த்தை எழுதிக் கேட்டுண்டு அப்பறமா உனக்குச் சொல்றேன்..."
"எழுதப் போறதைக் காலதாமதம் பண்ணாமே கொஞ்சம் சீக்கிரமா எழுதேன்."
"இதோ இன்னிக்கே எழுதிடறேம்ப்பா."
"அப்ப நான் வரட்டா?"
"கொஞ்சம் இரு தேசிகாமணீ? உங்கிட்ட ஒரு யோசனை கேட்கணும்."
இறைமுடிமணி புறப்படுவதற்காக எழுந்திருந்தவர் மறுபடி திண்ணையில் உட்கார்ந்தார். குரலைத் தணித்துக் கொண்டு ரவியின் கடிதம், தன் பதில் எல்லாவற்றையும் விவரித்துக் கூறினார் சர்மா. பின்பு இறைமுடிமணியிடமே அபிப்பிராயம் கேட்டார்.
"என் நெருங்கின சிநேகிதன்கிற முறையிலே இதில் உன் யோசனை என்ன தேசிகாமணி?"
"உன் மகன் தப்பா எதுவும் பண்ணிடலே. திருமணத்துக்குத் தக்க பருவம் வந்துவிட்ட இளைஞன் ஒருவனுக்கு அவன் பெற்றோர் திருமண ஏற்பாட்டை உரிய காலத்தில் செய்யத் தவறிவிட்டால் அந்த இளைஞன் தானே, தனக்குரிய மணமகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது நியாயமானதே என்று அஷ்டாதச தர்ம சாஸ்திரத்தில் ஒன்றாகிய யாக்ஞவல்கியத்தில் சொல்லப்பட்டிருக்கிறதே ஞாபகமில்லையா?"
"தர்மமா இல்லையான்னு உன்னை நான் கேட்கலே. நடைமுறையில் உள்ள சாத்திய அசாத்தியங்களைப் பற்றித்தான் இப்ப உன்னைக் கேட்கிறேன்."
"சாத்தியமா அசாத்தியமான்னு யோசிச்சுத் தயங்கிக்கிட்டிருக்கிறதை விடச் சாத்தியமாகிறாப்பலே செய்துக்க வேண்டியது தான். என்னைப் பொறுத்த வரை இத்தகைய கலப்பு உறவுகளை வரவேற்கிறேன்." - மேலும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு இறைமுடிமணி புறப்பட்டுப் போய் விட்டார்.
சர்மா யோசனை கேட்ட விஷயத்தில் சர்மாவுக்கு எது முடியும் எது முடியாது என்று எண்ணிப் பார்த்து யோசனை சொல்லாமல் ஒரு சுயமரியாதைக்காரர் என்ற முறையில் தன்னுடைய கொள்கைப் பிடிவாதத்தை விட்டுக் கொடுக்காமல் பதில் சொல்லிவிட்டுப் போயிருந்தார் இறைமுடிமணி. நாத்திகரான இறைமுடிமணி யாக்ஞவல்கியத்தை மேற்கோள் காட்டிப் பேசியது பற்றிச் சர்மா ஒரு சிறிதும் ஆச்சரியப்படாததற்குக் காரணமிருந்தது.
இறைமுடிமணி ஓர் ஆச்சரியகரமான மனிதராயிருந்தார். சிறு வயதில் ஒரு சுயமரியாதைப் பிரசங்கத்தில் தாக்கிப் பேசுகின்ற நோக்குடன் ஒரு புராணக் கதையைத் தவறாகவும் சிறிது மாற்றியும் சொல்லியதற்காக 'ஒன்றை அரைகுறையாகவும் தப்பாகவும் தெரிந்து கொள்வது தான் சுயமரியாதைக்காரருக்கு இலட்சணம் போலும்' என்று எதிர்த் தரப்புப் பத்திரிகையில் அவரைத் தாக்கி எழுதியிருந்தார்கள். உடனே ஒரு முரண்டுடன் சமஸ்கிருதத்திலும் தமிழிலும் இருந்த புராணங்களையும், காப்பியங்களையும், நீதி நூல்களையும், தரும சாஸ்திரங்களையும், தக்கவர்கள் துணையோடு ஒன்று விடாமல் படிக்கத் தொடங்கினார் அவர். இறைமுடிமணியின் அந்த நேர்மை பலரைக் கவர்ந்தது. ஒன்றைக் கண்டித்தும், தாக்கியும் பேசுவது என்றால் கூட அதைப் பற்றி முழுமையாகத் தெரிந்து கொண்டு பேச வேண்டும் என்று உணர்ந்த அவரது நாணயம் அவர் சார்ந்திருந்த இயக்கத்துக்கே ஒரு மதிப்பை உண்டாக்கியது என்றுதான் சொல்லவேண்டும். இதனால் சங்கரமங்கலத்திலும் சுற்றுப்புறத்து ஊர்களிலும் புராண இதிகாச தர்மசாஸ்திரங்களில் எதிலும் நுணுக்கமான எந்த மூலையில் உள்ள எந்தக் கருத்தை விசாரிப்பது என்றாலும் ஒன்று பரம ஆத்திகராகிய சர்மாவை விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் அல்லது பரம நாத்திகராகிய இறைமுடிமணியை விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டிருந்தது.
யாக்ஞவல்கியத்தை மேற்கோள் காட்டி இறைமுடிமணி பேசிவிட்டுப் போனபின்பும் சர்மாவின் மனதுக்குள் நெடுநேரம் வரை அந்த மேற்கோளைப் பற்றிய சிந்தனையே இருந்தது. பின்பு வீட்டுக்குள்ளே போய்க் காகிதமும் பேனாவும் எடுத்துக் கொண்டு வந்து இறைமுடிமணி கேட்ட காலி மனை விஷயமாக ஸ்ரீமடத்துக்குக் கடிதம் எழுதினார். சீக்கிரம் கிடைக்கச் சொல்லிக் கல்லூரிக்குச் செல்லும் தன் மகன் குமாரிடம் அந்தக் கடிதத்தை உடனே கொடுத்து அனுப்பினார்.
மனம் என்னவோ இடைவிடாமல் ரவியையும் அவனோடு வரப்போகும் அந்நிய நாட்டு யுவதியையும் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தது. "ராணி மங்கம்மாள் காலத்துத் தர்ம சத்திரம் மாதிரிப் பிரைவஸியே இல்லாத உம்ம வீட்டிலே அவாளை எப்பிடித் தங்க வைக்கப் போகிறீர்" - என்று வேணு மாமா கேட்டிருந்த கேள்வியும் கூடவே ஞாபகம் வந்தது. ரவியையும் அவனோடு வருகிற பெண்ணையும் வேணுமாமா வீட்டு மாடியில் தங்க வைப்பது சரியாகவும் பொருத்தமாகவும் இராதென்று அவர் நினைத்தார். சாதாரணமாகவே வம்பு பேசக் கூடிய ஊர் இன்னும் அதிகமாக வம்பு பேசுவதற்குத் தான் அது வழிசெய்யும் என்று அவருக்குத் தோன்றியது. 'குடும்பத்துக்கும் அவனுக்கும் பெரிய மனஸ்தாபமாம்; அதனாலே தான் அப்பா அம்மாவோடு சொந்த வீட்டில் தங்காமல் வேணு மாமா வீட்டில் போய் தங்கியிருக்கிறானாம்' - என்று ஊரிலே உள்ளவர்கள் பேசத் தொடங்கி விடுவார்கள்.
சர்மாவின் யோசனை சிறிது கலைந்தது. பார்வதி புத்தக அடுக்கும் கையுமாகப் பள்ளிக்கூடத்துக்குப் புறப்பட்டிருந்தவள் தெருவாசலில் படியிறங்குமுன் அவரிடம் சொல்லிக் கொண்டு போனாள். அவர் மனத்தினுள் ஏதோ ஒரு தீர்மானத்துக்கு வந்தவராக வீட்டின் உட்புறம் எழுந்து சென்றார். கூடத்திலும், மாடியிலும் சுற்றிச் சுற்றிப் பார்த்தார். மாடி ஹாலில் கால் அடியினாலேயே நீள அகலத்தை ஒரு முறை அளந்தார்.
அப்போது அவருடைய மனைவி காமாட்சி அம்மாள் சமையலறையில் காரியமாக இருந்தாள். அந்த வீட்டில் குளியலறை இணைப்புடன் தனியாக ஓர் அறை கட்டிக் கொள்ள ரவிக்கு எல்லா உரிமையும் இருந்தது. சில ஆண்டுகளாக மாதாமாதம் அவன் அனுப்பியிருந்த பணமேகூட வட்டியுடன் சேர்த்து ஒரு பெருந்தொகையாக பாங்க் கணக்கில் இருந்தது. ஆனால் அப்படியெல்லாம் இருந்தும்கூட அவன் கைப்படக் கடிதத்தில் 'எனக்கு அந்த வசதி செய்துதர வேண்டும், இந்த வசதி செய்து தர வேண்டும்' என்று எதுவும் அவருக்கு வற்புறுத்தி எழுதவில்லை. ஒரு வேளை அவனே வேணு மாமா வீட்டில் தங்கிக் கொள்கிற எண்ணத்தில் தான் அதெல்லாம் எழுதாமல் இருக்கிறானோ என்று கூட அவருக்கு ஒரு சந்தேகமும் ஏற்பட்டது. அவனுடைய வருகையைச் சில நாட்கள் தள்ளிப் போடச் சொல்லி எழுதவும் இனிமேல் முடியாது. அவர் ஏற்கெனவே வரச் சொல்லி எழுதிக் கொடுத்திருந்த கடிதத்தை வேணு மாமாவின் பெண் வசந்தி தபாலில் சேர்த்து விட்டாள்.
இதுவரை இந்தப் பிரச்னையை அவர் யார் யாரிடம் கலந்தாலோசித்திருந்தாரோ அவர்கள் அத்தனை பேரும் ரவியின் மேல் அநுதாபத்தோடு தான் பதில் சொல்லியிருந்தார்கள். 'தனியிடம், குளியலறை இணைப்பு இவற்றை எல்லாம் ரவி கடிதத்தில் எழுதி வேண்டிக் கொண்ட பின்பு தான் செய்ய வேண்டுமா என்ன? அவன் கேட்காவிட்டாலும் நாமாகவே ஏற்பாடு செய்ய வேண்டியது தானே?" - என்று கூட ஒரு சமயம் இவர் மனத்தில் தோன்றியது. 'நாமாவது கொஞ்சம் வளைந்து நெளிந்து கொடுத்து அநுசரித்து போய் விடலாம். ஆசார அனுஷ்டானங்களில் பிடிவாதமுள்ள அவள் பாடுதான் சிரமம். இவளுக்குப் பதில் சொல்லி விளக்கிக் கொண்டிருப்பது தான் முடியாத காரியம்' என்று தம் மனைவியைப் பற்றி எண்ணித் தயங்கினார் சர்மா. ரவியும் அவனோடு அந்தப் பிரெஞ்சுப் பெண்ணும் சங்கரமங்கலத்துக்கு வந்து சேருவதற்குள்ளாவது தம் மனைவிக்கு விவரத்தைச் சொல்லியாக வேண்டுமென்று நினைத்திருந்தார் அவர். இப்போதே காமாட்சியிடம் அதைச் சொன்னால் அவள் தற்செயலாகவோ அல்லது வாய்தவறியோ பக்கத்து வீட்டு முத்து மீனாட்சிப் பாட்டியிடம் பிரஸ்தாபிப்பாள். முத்து மீனாட்சிப் பாட்டி உடனே ஊரெல்லாம் தமுக்கடித்தாற்போல் அதைப் பரப்பிவிடுவாள் என்று பயந்தார் அவர்.
நீண்ட சிந்தனைக்குப்பின் மகன் ஊர் வந்து சேருவதற்குள் செய்யவேண்டிய ஏற்பாடுகளைப்பற்றி ஒரு வழியாக அவர் ஒரு தீர்மானத்துக்கு வந்து சேர்ந்தார். அவருடைய அந்த வீட்டுக்கு இரண்டு வாசல்கள் இருந்தன. பக்கவாட்டில் பசுமாடுகள் தொழுவத்துக்குப்போக ஒரு வாசல் பயன்பட்டு வந்தது. தொழுவத்துக்கு அப்பால் பத்து பன்னிரண்டு தென்னைமரங்கள், நாலைந்து மா, பலா மரங்கள், பூஞ்செடி கொடிகள் அடங்கிய தோட்டமும் ஓர் இறவைக் கிணறும் வீட்டை ஒட்டினாற்போல் இருந்தன. தோட்டத்துக்கும் மாட்டுத் தொழுவத்துக்கும் வேலையாட்கள் வரப்போக அந்தப் பக்கவாட்டிலிருந்த வாசல் பயன்பட்டு வந்தது. வீட்டுத் கொல்லையிலிருந்தே தோட்டத்திற்கும் மாட்டுத் தொழுவத்திற்கும் போகலாம் என்றாலும் வெளி ஆட்கள் வரப்போகப் பயன்படுகிற வரையில் தனி வாசல் இருந்தது. இந்த தனி வாசலில் வந்து சேருகிற விதத்தில் மாடியிலிருந்து தோதாகப் படிகள் இருந்தன. மாடியில் மரப்பலகையாலேயே அறை மாதிரித் தடுத்து மேலே ஒரு ஸீலிங் ஃபேனும் போட்டுக் கொடுத்துவிட்டு பக்கத்து ஹாலில் அதை ஒட்டினாற் போலேயே சில நாற்காலிகள், டைனிங் டேபிள்-தேடி வருகிறவர்களைப் பார்க்கிற வசதி எல்லாம் செய்து கொடுத்து விடலாம் என்ற முடிவுக்கு இப்போது வந்திருந்தார் சர்மா.
வேறு விதமான தயக்கங்கள், தர்மசங்கடங்கள் எல்லாம் இருந்த போதிலும் மகன் மேல் உயிர் நட்புக்கொண்டு அவனை நம்பி வருகிற ஒரு கோடீஸ்வரன் வீட்டுப் பெண்ணைச் சாதாரணத் தேவைகளுக்குத் தவித்துக் கஷ்டப்பட விடக்கூடாது என்று உறுதியாக நினைத்தார் அவர். 'சர்மாவுக்கு இப்போ செலவு மிச்சம். அவாளை இங்கேயே தங்க வச்சுடலாம்' - என்று முதல்நாள் வேணு மாமா சொல்லியிருந்த வார்த்தைகள் வேறு சர்மாவின் ரோஷத்தைக் கிளறி விட்டிருந்தன. 'நான் ஏதோ செலவு செய்யறத்துக்குத் தயங்கற மாதிரி அவர் சொல்லிக் காமிச்சுட்டாரே?" - என்று எண்ணி வருந்தினார் சர்மா. அன்று ஏதோ ஒரு வடக்கத்திப் பண்டிகைக்காகத் தபாலாபீஸ் - பாங்கு - எல்லாம் விடுமுறையாயிருந்தன. நினைத்த உடனே கொத்தனாருக்கும் மரவேலை செய்கிற மேஸ்திரிக்கும் சொல்லி அனுப்பினார் சர்மா. பாங்கை எதிர்பார்க்காமல் உடனடிச் செலவுக்குப் போதுமான ரொக்கம் கொஞ்சம் அவர் கையிலிருந்தது. எப்போதோ மலிவாக வருகிறதென்று வாங்கிப் போட்ட தேக்குமரம் வேண்டியமட்டும் வீட்டிலேயே இருந்தது அப்போது வசதியாகப் போயிற்று. அந்த ஊரைச் சுற்றி மலைப் பகுதியில் தேக்குமரம் அதிகம்.
பிற்பகலில் தச்சனும், கொத்தனாரும் வந்து அளவுகள் எடுப்பதைப் பார்த்த பின்புதான் காமாட்சியம்மாள் மெல்ல அவரை விசாரித்தாள்: "என்ன பண்ணப் போறேள்? கட்டிட வேலைக்காராளும் மர வேலைக்காராளும் வந்திருக்காளே?"
"பிள்ளையாண்டான் பாரிஸிலேருந்து வரப் போறானே; அவன் தங்கிக் கொள்ள வசதியா இருக்கட்டுமேன்னு மாடியிலே ஒரு தனி ரூம் போடச் சொல்லியிருக்கேன்" என்று சர்வ ஜாக்கிரதையாக ரவி வருவதாக மட்டும் அவளிடம் சொன்னார் சர்மா.
சாயங்காலம் தற்செயலாக அங்கே வந்த வேணுமாமாவும் அந்த ஏற்பாடுகளைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே சர்மாவைப் பாராட்டினார்.
"அடேடே! பரவாயில்லையே! தனியா ஒரு ரூம் போடணும்னு நான் சொன்னப்போ வேண்டா வெறுப்பாகக் கேட்டுண்டீர்! இங்கே வந்து பார்த்தால் ரொம்ப ஜரூரா எல்லா ஏற்பாடும் பண்ணியிருக்கீரே!"
"மனசுக்கு பிடிக்கிறதோ, பிடிக்கலையோ செஞ்சு ஆகணுமே?"
"அப்படியெல்லாம் சொல்லப்படாது சர்மா. மனசுக்குப் பிடிக்காமப் போறாப்பல இப்ப ஒண்ணும் நடந்துடலே" என்று சொல்லி வேணு மாமா அவரை உற்சாகப்படுத்திவிட்டுப் போனார்.
பத்து நாட்களுக்குள் எல்லா வேலைகளும் முடிந்து விட்டன. தனியறை - தங்குவதற்கு வசதிகள் எல்லாம் செய்யப்பட்டாயிற்று. வேணுமாமாவும் அவர் பெண் வசந்தியும் கூட வந்து பார்த்துவிட்டுச் சர்மாவுக்கு நற்சான்றிதழ் வழங்கி விட்டார்கள்.
அந்த வேலைகள் முடிந்து வெள்ளையடித்துச் சுத்தம் செய்த தினத்தன்றுதான் ரவியிடமிருந்து அவனும் கமலியும் புறப்பட்டு வருகிற தேதி முதலிய விவரங்கள் பற்றிக் குறிப்பிட்டுக் கடிதமும் வந்திருந்தது. அதிகம் செலவழித்து விமானத் தபால் உறையில் வைக்கப்பட்டிருந்த அந்தக் கடிதத்தோடு இன்னோர் ஆச்சரியமும் இணைந்திருந்தது. தமிழக முறையில் அழகிய புடவையணிந்து திலகமிட்டுக் கொண்டு ரவிக்கு அருகில் கமலி அமர்ந்திருக்கிற வண்ணப் புகைப்படம் ஒன்றும் அந்த உறையில் இருக்கக் கண்டார் சர்மா. வருகிற தேதி முதலிய விவரங்களை எழுதிவிட்டு, "இதனுடன் உள்ள படம் இங்கே இந்தியத் தூதரக நண்பர் ஒருவர் எங்களுக்கு அவர் வீட்டில் விருந்தளித்த போது எடுத்த படம். அவர் வீட்டுப் பெண்களே கமலிக்குப் புடவை அணிவித்துப் பொட்டுவைத்து அழகு பார்த்து மகிழ்ந்தார்கள். இந்தப் படம் எனக்கு மிகவும் பிடித்தது. உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன்" என்பதாக அந்தப் படத்தைப் பற்றியும் விவரம் குறிப்பிட்டிருந்தான் ரவி. உண்மையில் அந்தப் படத்தில் அந்தக் கோலத்தில் கமலி மிகமிக இலட்சணமாகத் தோன்றினாள். சர்மாவுக்கு அந்தப் படம் மிகவும் பிடித்துப் போயிற்று. காமாட்சியிடம் விஷயத்தைச் சொல்லி விடுவதற்கு அதுதான் சரியான சமயம் என்று அவருக்குப் பட்டது.
முன்னுரை, பீடிகை எதுவும் போடாமல், "அடியே உன் பிள்ளை எழுதியிருக்கான்...படிக்கிறேன் கேளு!" என்று இரைந்து படித்துவிட்டு மாடப் பிறையில் வைக்கச் சொல்லி உறைக்குள் இருந்த படத்துடன் சேர்த்தே கடிதத்தைக் காமாட்சி அம்மாளிடம் கொடுத்தார் சர்மா. படத்தை அவள் பார்க்க வேண்டுமென்று எண்ணினார் அவர். படத்தைப் பார்க்க நேர்ந்தால் காமாட்சியம்மாள் உணர்ச்சி வசப்படக்கூடும் என்று அவர் எதிர்பார்த்திருந்தார். ஆனால் அந்த அம்மாளிடம் அசாதாரணமான அமைதியே தெரிந்தது.
"ஏன்னா! அவன் மட்டும் தனியா வரலை போலிருக்கே?... இன்னும் யாரோ கூட வராங்கிற மாதிரி படிச்சேளே?...."
"ஆமாம்!... அது சரி உங்கிட்டக் கொடுத்த அந்தக் கவர்லே ஒரு படம் இருந்துதே;... அதை நீ பார்க்கலியா காமாட்சி?"
"இல்லையே? லெட்டரை மட்டும்தான் நீங்க படிச்சேள், கேட்டேன், படம் எங்கே இருக்கு?"
சர்மா அந்த உறையை மறுபடி வாங்கி அதிலிருந்த படத்தைத் தனியே எடுத்து அவளிடம் நீட்டினார். காமாட்சியம்மாள் படத்தை வாங்கிப் பார்த்தாள்.
"இந்தப் பொண் யாரு?"
"அதுதான் எழுதியிருக்கானே,... கமலீன்னு... படிச்சேனே நீ கேழ்க்கலியா?"
"யாரு இவ?"
"ரொம்ப லட்சணமா இல்லை?"
"வயசுக்கு வந்து நல்ல கலரும் இருந்து உயரமும் வளர்த்தியுமா வந்தா எந்தப் பொண்ணும் அழகுதான். அழகுக்கு என்ன கொறைச்சல்? இது யாருன்னு சொல்லுங்களேன்...? புடவை பொட்டு எல்லாம் இருந்தாலும் நிறம், பார்வை ஒண்ணும் நம்மூர்ச் சாயல்லே இல்லியே?"
"ரவியோட சிநேகிதி... பிரெஞ்சுக்காரி...?"
"அவனோட இங்கே கூட வரதா எழுதியிருக்கானே... அது இவ தானே?"
"ஆமாம்."
"நம்ம தேசம் ஊரு எல்லாம் சுத்திப் பார்க்கறத்துக்காக வராளாக்கும்."
"ஆமாம்! அப்படித்தான் இருக்கும்னு நினைக்கிறேன்."
இதற்கு மேல் காமாட்சியம்மாள் அவரிடம் எதுவும் கேட்டுக் கொண்டு நிற்கவில்லை. கடிதத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டுப் போய் விட்டாள். தனக்கும் கமலிக்கும் உள்ள தொடர்பைக் குறிப்பிட்டு முன்பு ரவி எழுதிய கடிதத்தை வேணு மாமாவுக்கும் அவர் மகள் வசந்திக்கும் மட்டும் காட்டி விட்டு இரும்புப் பெட்டியில் ரகசியமாக வைத்துப் பூட்டிய மாதிரி இந்தக் கடிதத்தைச் சர்மா பத்திரப்படுத்தவில்லை. கூடத்தில் உள்ள மாடப்பிறையில் மற்றெல்லாக் கடிதங்களையும் சாதாரணமாகப் போட்டு வைப்பது போல் போட்டு வைத்திருந்தார். சாயங்காலம் கல்லூரியிலிருந்து வந்த பின் குமார், பார்வதி எல்லாருமே அந்தக் கடிதத்தைப் படித்தார்கள். படத்தைப் பார்த்தார்கள். தீக்குச்சியை உரசிச் சுடர் தோன்றி அந்தச் சுடர் விரலைச் சுடுகிற எல்லைக்கு வந்ததும் குச்சியை சுடரோடு அவசர அவசரமாகக் கீழே போட்டு விடுகிற மாதிரிக் குழப்பத்தைத்தான் இனி உண்டாக்கும் என்ற எல்லையை அடைந்துவிட்ட அந்த ரகசியத்தை இப்போது மனத்திலிருந்து உலகுக்காக வெளியேற்றினார் சர்மா. தொடக்கத்தில் அவர் மனத்திலிருந்த விகல்பமும் வெறுப்பும் கூட இப்போது மெல்ல மெல்ல அமுங்கிப் போயிருந்தது. சில ஆயிரம் ரூபாய்களைச் செலவழித்துத் தனியறை - குளியல் வசதி இணைப்பு, வாஷ்பேஸின் - கண்ணாடி, சாப்பாட்டு மேஜை நாற்காலிகள்... எல்லா ஏற்பாடும் அந்தக் கர்நாடகமான பழைய வீட்டில் செய்யப்பட்டிருந்தன. பம்பாயில் இரண்டு தினங்களும் சென்னையில் நான்கு தினங்களும் தங்கிய பின் சென்னையிலிருந்து இரயிலில் புறப்பட்டுச் சங்கரமங்கலம் வருவதாக ரவி எழுதியிருந்தான். முதலில் மெதுவாக நகர்ந்த நாட்கள் அவனும் கமலியும் வருகின்ற தினம் நெருங்க நெருங்க விரைவாக ஓடின. யாரும் பம்பாய்க்கோ, சென்னைக்கோ எதிர்கொண்டு வர வேண்டாம் என்றும் தானே சங்கரமங்கலம் வந்து சேர்ந்து விடுவதாகவும் ரவியே கடிதத்தில் குறிப்பிட்டிருந்தான்.
"உம்ம வழக்கம்போல இரட்டைமாட்டு வண்டி கட்டிண்டு அவாளை வரவேற்க ரெயில்வே ஸ்டேஷனுக்குப் புறப்பட்டுடாதேயும். என்னோட கார் தவிரவும் பக்கத்து எஸ்டேட்காரரான சாரங்கபாணி நாயுடு கிட்ட இன்னொரு கார் இரவல் கேட்டிருக்கேன். வரவாளை அழைச்சிண்டு வர எல்லாருமே ரெண்டு கார்லே ஸ்டேஷனுக்குப் போகலாம். அன்னிக்கு முகூர்த்த நாள். அவாளை ஸ்டேஷன்லேருந்து அழைச்சிண்டு வந்து விட்டுட்டு எனக்குப் பூமிநாதபுரத்துலே ஒரு கல்யாணத்துக்குப் போகணும்" என்றார் வேணு மாமா.
சர்மா சொன்னார்: "நல்ல வேளையாக இந்த மாச முதல் தேதியிலிருந்து ரயில் காலம்பர் அஞ்சே முக்கால் மணிக்கு வரது. முன்னாடி எல்லாம் மூணே முக்கால் மணிக்கோ நாலு மணிக்கோ வந்துண்டிருந்தது. போக வர ரொம்ப அசௌகரியமாயிருந்தது."
"மாமி, குமார், பார்வதி எல்லாரும் ஸ்டேஷனுக்கு நம்மோட வராளோல்லியோ?"
"குமாரும் பார்வதியும் வரா. அவ தான் வராளோ இல்லியோ, தெரியலே. வெள்ளிக்கிழமை வேறே. அவளுக்கு ஏகப்பட்ட பூஜை புனஸ்காரம்லாம் இருக்கும்."
"ஒரு நாளைக்கு அந்தப் பூஜை புனஸ்காரத்தை எல்லாம் சீக்கிரமா முடிச்சிட்டு வரட்டுமே...? தூர தேசத்திலேருந்து இத்தனை வருஷத்துக்கப்புறம் பிள்ளை வரபோது அம்மா ஸ்டேஷனுக்கு வந்து வரவேற்க வேண்டாமோ?"
"நான் சொல்லிப் பார்க்கிறேன். ஆனா அவ வரது சந்தேகம்னு படறது எனக்கு."
"நீர் பேசாம இரும். நான் காலம்பர நாலு மணிக்கு வசந்தியைக் காரிலே அனுப்பி மாமியைச் சரிகட்டறேன்."
இவை ரவி சங்கரமங்கலம் வருவதற்கு முந்திய தினத்தன்று இரவு வேணு மாமாவும் சர்மாவும் பேசிக் கொண்டவை.
மறுநாள் அதிகாலையில் சர்மா நாலு நாலரை மணிக்கே தயாராகி விட்டார். கிராமத்தில் அங்கங்கே கலியாண முகூர்த்தங்கள் இருந்ததால் நாதஸ்வர இன்னிசையும் வைகறையின் குளிர்ந்த காற்றும் மேற்கே மலையில் சாரல் பிடித்திருந்ததால் பன்னீர் தெளிப்பது போல் பெய்து கொண்டிருந்த பூந்தூற்றலுமாக இருந்தது அந்தக் காலை வேளை. காமாட்சியம்மாளை ரெயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்துக் கொண்டு போக வசந்தி காருடன் வந்து முயற்சி செய்தும் பலிக்கவில்லை.
"எனக்கென்னடி வேலை அங்கெல்லாம்? நீங்கள்ளாம் போயிட்டு வாங்கோ போறும்! மனுஷா வரபோது வீட்டிலேயும் யாராவது இருந்து வான்னு சொல்லி வரவேற்கணுமோ இல்லியோ, நான் வீட்டிலே இருக்கேன்."
வசந்தி மன்றாடியது, வீணாயிற்று. சர்மா, குமார், பார்வதி, வேணு மாமா, வசந்தி ஆகியோர் இரயில் நிலையத்துக்குப் புறப்பட்டார்கள். போகிற வழியில் பண்டாரத்தின் பூக்கடை வாசலில் காரை நிறுத்தி முதல் நாள் தகவல் சொல்லி வைத்திருந்தபடி அவன் கட்டிவைத்திருந்த மல்லிகைப்பூ மாலை இரண்டையும் வாங்கிக் காரில் வைத்துக் கொண்டாள் வசந்தி. அந்த வைகறை வேளையின் குளிர்ச்சியும் மல்லிகைப்பூ வாசனையும், எங்கிருந்தோ ஒலித்துக் கொண்டிருந்த நாதஸ்வரம், மேள வாத்திய இன்னிசைகளும் சேர்ந்து ஊரே கல்யாண வீடானாற் போன்ற சூழ்நிலையை உருவாக்கியிருந்தன. காரில் போய்க் கொண்டிருந்த போதே வேணு மாமா வசந்தியைக் கேட்டார்.
"மாமி ஏன் வரமாட்டேன்னுட்டா வசந்தி? ஏதாவது கோபமா?"
"தெரியலே! பார்த்தால் சுமுகமாத்தான் பேசற மாதிரிப் படறது அப்பா!... ஆனா... மனசுலே என்னமோ இருக்கு..."
"அதெல்லாம் ஒண்ணும் இருக்காதும்மா! பிள்ளை வரான்; பாயசம், பட்சணம்னு விருந்துச் சமையல்லே தீவிரமா இருக்காளோ என்னமோ?" என்று பேச்சை மாற்றினார் வேணு மாமா.
இரயில் சரியான நேரத்துக்கு வந்து விட்டது. முதல் வகுப்பில் அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக, ரவியும் கமலியும் இரண்டாம் வகுப்புப் படுக்கை வசதியுடன் கூடிய பெட்டியிலிருந்து இறங்கினார்கள். எளிய வாயில் புடவை, ரவிக்கை, குங்குமத் திலகத்துடன் எல்லாருக்கும் கைகூப்பி வணங்கினாள் கமலி. கிழக்கே சூரியோதயமாகிற வேளையில் சங்கரமங்கலம் ரயில் நிலையத்தையொட்டி இருந்த தனவணிக வைசியர் கல்யாண மண்டபத்தில் எந்த முகூர்த்தத்துக்காகவோ கெட்டி மேளம் முழங்கிக் கொண்டிருந்தபோது, கமலியும் ரவியும் சங்கரமங்கலம் மண்ணில் கால் வைத்தார்கள். "இவர்தான் என் தந்தை" என்று ரவி சர்மாவை அறிமுகப்படுத்தியதும் அந்தப் பிரெஞ்சு யுவதி செய்த காரியம் சர்மாவை ஒரு கணம் மெய்சிலிர்க்க வைத்துவிட்டது.
----------------
அத்தியாயம் 6
யாரும் எதிர்பாராத விதத்தில் கமலி திடீரென்று குனிந்து விசுவேசுவர சர்மாவின் பாதங்களைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக் கொண்டு வணங்கினாள். பக்கத்து திருமண மண்டபத்தில் கெட்டி மேளம் முழங்கிக் கொண்டிருந்த அந்த மங்கலமான வைகறை வேளையில் ஒரு மணமகளை ஆசீர்வாதம் செய்வது போலத்தான் சர்மாவும் அவளை வாழ்த்தியிருந்தார். சர்மாவின் மனம் ஓர் இனிய திருப்தியில் நிறைந்திருந்தது. கமலி கீழிறங்கி நின்றதும் அவளது அழகிய உடலிலிருந்து பரவிய வசீகரிக்கும் தன்மை வாய்ந்ததொரு செண்ட்டின் நறுமணம் புழுதி படிந்த அந்த ரயில் நிலையத்து பிளாட்பாரம் முழுவதும் பரவியது. பந்துக்கள் உற்றார் உறவினர்களில் யாராவது ஓர் இளம் பெண் திருமணமான புதிதில் வந்து தம்மை வணங்கினால் தயக்கமில்லாமல் என்ன ஆசீர்வாதச் சொற்களை அவர் வாய் முணுமுணுக்குமோ அதே ஆசீர்வாதச் சொற்களைத்தான் இப்போதும் கூறியிருந்தார் அவர். முயன்றால் கூட அவர் வித்தியாசமாக நடந்து கொள்ள முடியாது போலிருந்தது. இது விஷயத்தில் அவர் மனமே அவருக்கு எதிராயிருந்தது. வசந்தியைப் பார்த்ததும் கமலி அப்படியே கட்டித் தழுவிக் கொண்டாள். ரவிக்கு வேணு மாமாவும் கமலிக்கு வசந்தியும் மாலையணிவித்தனர். 'வெல்கம் டூ சங்கரமங்கலம்'... என்று கை குலுக்குவதற்கு முன் வந்த வேணு மாமாவிடம் புன்னகை பூத்த முகத்துடன் "ஹேண்ட் ஷேக்கிங் இஸ் நாட் ஆன் இண்டியன் கஸ்டம்" - என்று கூறிக் கைகூப்பினாள் கமலி. தங்கை பார்வதியையும், தம்பி குமாரையும் ரவி கமலிக்கு அறிமுகப்படுத்தினான். பார்வதியின் முதுகில் பிரியமாகத் தட்டிக் கொடுத்து அவளிடம் தமிழிலேயே பேசினாள் கமலி. குமாரிடம் அன்பாக அவன் படிப்பைப் பற்றி விசாரித்தாள். ரவி எல்லா விவரங்களையும் அவளுக்குத் தெளிவாகச் சொல்லி வைத்திருந்தானென்று புரிந்தது. எந்த விநாடியிலும் எதற்கும் அவள் குழப்பமடைந்து தடுமாறவில்லை.
அங்கே புதிதாக வந்து புதிதாக முதல்முறை அறிமுகமாகிப் பேசுகிறவர்களிடம் பதில் பேசுவது போலக் கமலி பேசவில்லை. தெரிந்து பலமுறை பழகிய குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்களிடம் பேசிப் பழகுவதுபோலச் சுபாவமாகவே பேசிப் பழகினாள் அவள்.
ஸ்டேஷன் பிளாட்பாரத்திலேயே ஒரு சிறிய கூட்டம் கூடிவிட்டது. வித்தியாசமான நிறத்தில் வித்தியாசமான நடையுடை பாவனைகளோடு யாராவது தென்பட்டால் சிறிய ஊர்களில் ஒவ்வொருவரும் நின்று உற்றுப் பார்ப்பார்கள். இந்தியக் கிராமம் என்பது ஆவல்கள் நிறைந்தது. ஒவ்வொன்றையும் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு சமயத்திலும் கூர்ந்து கவனித்துவிட விரும்பும் அக்கறையும் அவகாசமும் உள்ளது. கிராமங்களின் இந்த ஆவலுக்குச் சலிப்பே கிடையாது.
சங்கரமங்கலம் இரயில் நிலையத்திலேயே அது தெரிந்தது. சுமார் இருபத்தைந்து ஆண்டுகளாக அந்த இரயில் நிலையத்தில் 'போளி, ஆமவடை', என்று ஒரு சீரான குரலில் கூவி விற்று வரும் சுப்பாராவ், நியூஸ் பேப்பர் கன்னையா, பழக்கடை வரதன் ஆகியவர்களும் பிறரும் அவர்களைச் சுற்றிக் கூடிய அந்தக் கும்பலில் இருந்தார்கள். அந்தப் பாதையின் வழக்கமான இரயில் பயணி ஒருவர் கண்ணை மூடியபடி இரயிலுக்குள் இருந்தே 'போளி ஆமவடை, போளி ஆமவடை' என்று குரலைக் கேட்டே அது எந்த ஸ்டேஷன் என்று கண்டுபிடித்துவிடுகிற அளவுக்கு ஒரு கால் நூற்றாண்டுக் காலமாக அங்கே ஒன்றிப் போயிருந்தார் சுப்பாராவ்.
அத்தனை பேர்களுக்கு நடுவே, "என்ன சுப்பாராவ் சௌக்கியந்தானே?" என்று மறக்காமல் ஞாபகமாக ரவி தன்னை நலம் விசாரித்ததில் சுப்பாராவுக்குத் திருப்தியும் மகிழ்ச்சியும் ஏற்பட்டன. சுப்பாராவின் வெற்றிலைக் காவி படிந்த சிரிப்பு அதை வெளிப்படுத்தியது.
ஸ்டேஷனிலிருந்து வீடு திரும்பும்போது வேண்டுமென்றே கமலியும், ரவியும், சர்மாவும் பின்னால் ஒரு காரில் தனியே வரும்படியாகச் செய்துவிட்டு வேணு மாமாவும், வசந்தியும், குமாரையும், பார்வதியையும் தங்களோடு அழைத்துக் கொண்டு முன்னால் புறப்பட்டு மற்றொரு காரில் வீடு திரும்பியிருந்தனர். வசந்தியையும், குமாரையும் பார்வதியையும் இறக்கிவிட்டு விட்டு வேணு மாமா அதே காரில் அப்படியே பூமிநாதபுரம் போய்விட்டார். வீட்டு வாசலில் சாதாரணமான மாக்கோலம் தான் போடப்பட்டிருந்தது. வசந்தி அதைக் கவனித்துவிட்டு, "உள்ளே போய்க் கொஞ்சம் செம்மண் கரைச்சுண்டு வாடி பாரூ! அவசரமா ஒரு செம்மண் கோலம் போடு, அப்புறம் தாம்பாளத்திலே கொஞ்சம் ஆரத்தி கரைச்சுத் திண்ணையிலே தயாரா வச்சுக்கோ... பின்னாடியே அவா கார் வந்துடும். அவாளைத் தெருவிலே காக்க வச்சுடாதே" - என்று பார்வதியைத் துரிதப்படுத்தினாள். ஏதோ வெளியூரில் கலியாணமாகி வீட்டுக்கு வருகிற பெண் மாப்பிள்ளையை வரவேற்கிறவள் போன்ற உற்சாகத்திலும் உல்லாசத்திலும் திளைத்திருந்தாள். காமாட்சி மாமி கோபித்துக் கொண்டுவிடப் போகிறாளோ என்ற பயமும் இருந்தது. வசந்தியின் செயல்களில் எல்லாம் கமலியின் மேலும் ரவியின் மேலும் அவளுக்கு இருந்த அளவு கடந்த பிரியம் தெரிந்தது. அவர்கள் காதலை அவள் மனப் பூர்வமாக விரும்பி ஆதரிப்பதும் தெரிந்தது.
பார்வதி அவசர அவசரமாகச் செம்மண் கரைத்துக் கொண்டு வந்தாள். கிழக்கு வெளுக்கிற நேரம். அப்போது கிணற்றடியில் கணீரென்ற இனிய குரலில் ஸ்தோத்திரம் சொல்லிக் கொண்டிருந்தாள் காமாட்சி மாமி.
"துளசி ஸ்ரீசகி சுபே பாபஹாரிணி புண்யதே
நமஸ்தே நாரத நுதே நாராயண மந; ப்ரியே"
மாமியின் உச்சரிப்பிலிருந்த தெளிவும் துல்லியமும் வசந்தியை மெய் சிலிர்க்க வைத்தன. வீட்டுக் காரியங்கள் நிறைய இருப்பதாகச் சொல்லிய ஒரு காரணம் பொருந்தினாலும் மாமி தான் வற்புறுத்தியும் தங்களோடு காரில் ரெயில்வே ஸ்டேஷனுக்கு வர மறுத்ததில் வேறு மனத்தாங்கல் ஏதோ இருப்பது போல பட்டது வசந்திக்கு.
கல்யாணக் கோலம் போல் பார்வதி செம்மண் பட்டைகளைப் போட்டு நிறுத்தியிருந்தாள். வசந்தி கோலப் பொடிக் கொட்டாங்கச்சியை எடுத்துக் கொண்டு போய் அந்தச் செம்மண் பட்டையைச் சுற்றி வெண்ணிறக் கோடுகளால் அழகுபடுத்தி அலங்கரித்து விட்டுப் படிக் கோலங்களையும் போட்டு முடித்தாள். அவள் கோலத்தை முடித்து விட்டு தலை நிமிரவும் பார்வதி ஆரத்திக்கு மஞ்சள் நீர் கரைத்துக் கொண்டு உள்ளேயிருந்து வரவும் சரியாயிருந்தது.
சங்கரமங்கலம் ரெயில் நிலையத்திலிருந்து ஊருக்குள் வருகிற வழியில் பிரம்மாண்டமான அரசமரம் ஒன்றின் கீழ் புராதனமாக பிள்ளையார் கோயில் ஒன்று இருந்தது. அந்தப் பிள்ளையாருக்கு 'வழித்துணை விநாயகர்' என்று பெயர். ஊரிலிருந்து வெளியூருக்குப் போகிறவர்களோ, வெளியூரிலிருந்து ஊர் திரும்புகிறவர்களோ இந்தப் பிள்ளையார் கோவிலில் கும்பிட்டு தேங்காய் விடலைப் போட்டு விட்டுப் போவது நீண்ட கால வழக்கமாகயிருந்தது. சர்மா கூட ஏதோ யோசனையில் மறந்து பேசாமல் இருந்து விட்டார். பிள்ளையார் கோவில் வாசலுக்கு வந்தவுடன் ரவி ஞாபகமாகக் காரை நிறுத்தச் சொன்னான்.
காலணிகளைக் காருக்குள்ளேயே கழற்றி விட்டு ரவியும், சர்மாவும் இறங்கிய போது, அதேபோல் செய்தபின் அவர்களைப் பின் தொடர்ந்து கமலியும் கீழே இறங்கினாள். தேங்காய் வாங்கி விடலைப் போட்டு விட்டுப் பிள்ளையாரை கும்பிட்டுப் பிரதட்சிணம் வந்த பின் காருக்குத் திரும்பினார்கள் அவர்கள். அந்தப் பிள்ளையாரின் பெயர், அவ்வூர் வழக்கம், முதலியவற்றை கமலிக்கு விளக்கிச் சொல்லிக் கொண்டு வந்தான் ரவி. ரெவ்லான் இன்டிமெட் வாசனை காரின் உட்பகுதி முழுவதும் கமகமத்துக் கொண்டிருந்தது. அந்தக் கிராமமும் அதன் இயற்கையழகு மிக்க சூழலும் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகச் சொல்லி வியந்து கொண்டு வந்தாள் கமலி. நடுநடுவே ரவி பிரெஞ்சிலோ, ஆங்கிலத்திலோ கேட்பவற்றுக்கு அவன் கேட்ட மொழியிலேயே பதில் கூறினாலும் கமலி கூடியவரை தமிழிலேயே பேச முயன்றாள்.
ஒரு மொழியைப் புதிதாகக் கற்றுக் கொண்டவர்கள் பேசும், புத்தகத்தில் அச்சடித்தாற் போன்ற சொற்களின் முனைமுறியாத் தன்மை அல்லது உச்சரிப்புக் குறைபாடுகள் சில இருந்தாலும் மொத்தத்தில் அவள் பேசிய தமிழ் நன்றாகவும் புரிந்து கொள்கிறாற் போலவும் இருந்தது.
தமிழில் தான் அறிய நேர்ந்த ஒவ்வொரு புதுச் சொல்லையும், சொற்றொடரையும் வியந்து வரவேற்று ஒரு புதுத் தொகையை வருமானமாக ஏற்று வரவு வைப்பது போல மகிழ்ந்தாள் அவள். எந்த ஒரு புது மொழியையும் விரும்பி ஆர்வத்தோடு கற்பவர்களின் மனநிலை அப்படிப்பட்டதுதான். அந்தப் புதிய மொழியில் அவர்களுக்குக் கிடைக்கும் ஒவ்வொரு புதுச் சொல்லும், புதுத் தகவலும் எதிர்பாராமல் வருகிற ஐசுவரியம் அல்லது புதையலாக இன்பம் அளிக்கும். 'வழித்துணை விநாயகர்' - என்ற பெயர் கமலிக்கு மிக மிகப் பிடித்துப் போயிற்று. அதைச் சொல்லிச் சொல்லி வியந்தாள் அவள். சர்மா கூறினார்:
"இந்த ஊர் ஸ்தல் வரலாற்றிலே 'மார்க்க சகாய விநாயகர்'னு தான் இருக்கு! ஜனங்கள் எல்லாம் வழித்துணை விநாயகர்னு சொல்றா" -
"பழைய வரலாற்றிலே என்ன பேர் இருந்தாலும் பெருவாரியான மக்கள் வழங்குகிற பெயர்தான் நிலைக்கும். மக்களின் நடை, பாவனை, பேச்சு, மொழியும் விதம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிப்பதால் தான் 'லிங்விஸ்டிக்ஸ்' அதாவது மொழியியல் உயிருள்ள சயின்சாக வளர்கிறது. அப்படி முக்கியத்துவம் அளிக்காமல் மொழியின் ஆரம்பகாலச் சட்ட திட்டங்களிலேயே நகராமல் நின்று கொண்டிருப்பதனால்தான் கிராமர் - அதாவது இலக்கணம் நாளடைவில் ஒரு பழைய காலத்து மியூஸியம் போல் ஆகிவிடுகிறது" என்றாள் கமலி.
இதைக் கேட்டு அந்த பிரெஞ்சு யுவதி இணையற்ற அழகு மட்டுமல்ல; நிறைய விஷய ஞானமுள்ளவளாகவும் இருக்கிறாள் என்று சர்மாவுக்குத் தோன்றியது. சின்ன வயதிலிருந்தே ரவிக்கும் லிங்விஸ்டிக்ஸிலும் - கம்பேரிட்டிவ் லிங்விஸ்டிக்ஸிலும் ஒரு பைத்தியம் உண்டு என்பது அவருக்கு ஞாபகம் வந்தது.
அவர்கள் சென்ற கார் வீட்டு வாசலில் போய் நின்ற போது நன்றாக விடிந்திருந்தது. கார் வந்து நின்ற ஓசை கேட்டு அக்கம் பக்கத்திலும் எதிர் வரிசை வீடுகளிலும் பலர் வாசலில் வந்து நின்று எட்டிப் பார்த்தார்கள். காமாட்சி மாமி திண்ணையோரமாக வந்து சற்றே ஒதுங்கினாற் போல் நின்று கொண்டிருந்ததை வசந்தி கவனித்தாள்.
காரிலிருந்து இறங்கிய ரவியையும், கமலியையும் பார்த்துக் குறும்புத்தனமாகக் கண்களைச் சிமிட்டிச் சிரித்த படி, "ரவீ! கமலியையும் அழைச்சிண்டு இப்படி இந்தச் செம்மண் கோலத்திலே வந்து கிழக்கைப் பார்த்து நின்னுக்கோ! ஆரத்தி சுத்திக் கொட்டிடறேன்" என்றாள் வசந்தி. சர்மா காரில் இருந்து இறங்கி நின்று கொண்டிருந்தார்.
வசந்தி வேண்டியபடி ரவியும், கமலியைக் கைப்பற்றி அழைத்து வந்து செம்மண் கோலத்தில் நின்று கொண்டான். வசந்தியும் பார்வதியும் ஆரத்தி எடுத்தார்கள்.
"மங்களம் மங்களம் ஜெயமங்களம்
ஸ்ரீராமச் சந்திரனுக்கு சுபமங்களம்
மாதர்கள் மகிழும் மங்கள ஹாரத்தி
கோதையர் மகிழும் கற்பூர ஹாரத்தி
தங்கத் தாம்பாளத்தில் பஞ்சவர்ணங்கள் போட்டு
நல்முத்துக் கமலத்தில் நவரத்தினங்கள் போட்டு
சீதை மணாளருக்கு மங்களம் மங்களம்
ஸ்ரீராமச் சந்திரனுக்கு மங்களம் சுபமங்களம்..."
வசந்திக்கு இவ்வளவு இனிமையான குரல் உண்டு என்பதைக் கமலி அன்றுதான் முதல் முதலாக அறிந்தாள். அதிகாலையின் இதமான மோனத்தைப் பறவைகளின் குரல்கள் மெதுவாகக் கலைத்துக் கொண்டிருந்த வேளையில் அந்த ஆரத்திப் பாட்டு மிகவும் சுகமாக இருந்தது. கோலத்தையும் பாட்டையும் 'லவ்லி' 'லவ்லி' என்று பாராட்டினாள் கமலி.
ஒதுங்கினாற் போல் நின்று கொண்டிருந்த தன் தாய்க்கு அருகே கமலியை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினான் ரவி. சர்மாவை வணங்கியது போலவே காமாட்சியம்மாளையும் கால்களில் குனிந்து வணங்கினாள் கமலி. ஆனால் காமாட்சியம்மாள் அவள் வணங்கும்போது சற்றே பயந்தாற்போலவும், ஒதுங்கினாற் போலவும் விலகி ஒதுங்கி நின்று விட்டாள். கூச்சமா அல்லது கோபமா என்பதைக் கண்டு பிடிக்க முடியவில்லை.
"அப்படியே மாடிக்கு அழைச்சுண்டு போ... நீங்க தங்கிக்கறதுக்கு அங்கே எல்லா ஏற்பாடும் பண்ணியிருக்கேன்" என்று ரவியிடம் சொன்னார் சர்மா.
"ஏற்பாடென்ன வேண்டிக் கிடக்கிறது? இருக்கிற இடத்திலே அட்ஜஸ்ட் பண்ணிக்கலாமே? கமலிக்குன்னு தனி சௌகரியம் எதுவும் வேண்டியதில்லே அப்பா!"
"யெஸ்! ஐ ஆம் டயர்ட் ஆஃ லக்சுரீஸ்... அண்ட் மணி ஹெட்டெட் லைஃப்" - என்று கமலியும் ரவியோடு சேர்ந்து சொன்னாள்.
ஆனாலும் சர்மா சொல்லி ஏற்பாடு செய்திருந்தபடி ரவி - கமலி சம்பந்தப்பட்ட பெட்டிகள், சாமான்கள் எல்லாம் மாடியிலேயே கொண்டுபோய் வைக்கப்பட்டன. முதல் நாளே வசந்தி சொல்லியிருந்ததால் குமார் தன் கல்லூரிக்கும் பார்வதி பள்ளிக்கூடத்துக்கும் அன்று லீவு போட்டிருந்தார்கள். வசந்தியும் கூட இருந்தாள்.
"சிரமப்பட்டு இதெல்லாம் எதுக்குப் பண்ணினேள் அப்பா? மோட்டார் - ஓவர் ஹெட் டேங்க் - அட்டாச்டு பாத்ரூம் - டைனிங் டேபிள்... இதெல்லாம் வேணும்னு நான் எழுதலியே? கமலி ரொம்ப ஃப்ளெக்ஸிபிள் டைப்... இருக்கிற வசதிக்கு ஏத்தாப்பில எங்கேயும் அட்ஜஸ்ட் பண்ணிக்க அவளால் முடியும்..."
"இருந்தாலும் முறை - மரியாதை - நாகரிகம்னு இருக்கே? என்னாலே முடிஞ்சதைப் பண்ணினேன். வேணு மாமாவும் வசந்தியும் கூடச் சில யோசனைகள் சொன்னா."
மாடி அறை முகப்பிலே சர்மா புதிதாகச் செய்து போட்டிருந்த நாற்காலிகளில் அப்போது எல்லோரும் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.
"அப்பா உங்கிட்டச் சொல்லச் சொன்னார் ரவி. பூமிநாதபுரத்திலே ஒரு கலியாண முகூர்த்தத்துக்குப் போயிருக்கார். மத்தியானம் வந்திடுவார். நீ புறப்படறத்துக்கு முன்னே சுரேஷைப் பார்த்தியா? ஏதாவது சொன்னானா?"
"பார்க்கலே! ஆனா யுனெஸ்கோ ஆபிஸூக்கு ஃபோன் பண்ணினேன். சுரேஷ் ஜெனீவா போயிருக்கிறதா சொன்னா. திரும்பி வர ஒரு வாரத்துக்கு மேலே ஆகும்னு தெரிஞ்சுது."
பார்வதி புதிதாக வாங்கியிருந்த ட்ரேயில் புதிதாக வாங்கியிருந்த பீங்கான் கிண்ணங்களில் காபியோடு வந்தாள். அப்பா சிரமப்பட்டு அந்த வீட்டில் ஒவ்வொன்றாகப் புதிய பண்டங்களைச் சேகரித்திருப்பது ரவிக்குப் புரிந்தது. கோப்பைகள், பீங்கான் கிண்ணங்கள் வழக்கமாக அந்த வீட்டில் இருந்ததில்லை. கண்ணாடி கிளாஸ் கூட அவனுக்குத் தெரிந்து அங்கே உபயோகித்ததில்லை. பித்தளை டவரா, டம்ளர்கள் தான் உபயோகத்தில் இருந்தன. இந்த மாறுதல்கள் தனக்காகவா, கமலிக்காகவா என்று சிந்தித்தான் அவன். கமலயின் வருகை என்னும் நாசூக்கான விஷயம் அப்பாவையும், அந்தப் புராதனமான கிராமத்து வீட்டையும் அதிகமாகப் பாதித்திருப்பது தெரிந்தது.
எல்லாரும் காபி அருந்திய பின் வீட்டையும், தோட்டத்தையும் சுற்றிப் பார்ப்பதற்காகக் கமலியை வசந்தி அழைத்துக் கொண்டு போனாள். பார்வதியும் காபி டிரேயையும் கிண்ணங்களையும் கொண்டுபோய் வைத்துவிட்டுக் கமலியோடும் - வசந்தியோடும் போய் சேர்ந்து கொண்டாள். குமார் ஏதோ சாமான் வாங்கி வருவதற்காகக் கடைக்குப் போயிருந்தான்.
மாடியில் அப்பாவும் பிள்ளையும் தனியே விடப்பட்டிருந்தனர். சர்மாதான் முதலில் ரவியிடம் பேசினார்:-
"இதென்ன பெரிய அரண்மனையா சுத்திப் பார்க்கிறதுக்கு? அந்தக் காலத்து வீடு.... அவளோ பெரிய கோடீசுவரன் வீட்டுப் பொண்ணுன்னு வசந்தி சொன்னா..."
"அரண்மனையோ குடிசையோ என் சம்பந்தப்பட்ட எதிலும் அவளுக்கு அக்கறை உண்டு. இந்தியா, இந்தியக் கலாச்சாரம், இந்தியக் கிராமங்கள், கிராமத்து வாழ்க்கை எல்லாத்திலேயும் கமலிக்குக் கொள்ளை ஆசை அப்பா!"
"உங்கம்மாட்ட நான் முழு விவரமும் சொல்லலே... உன்னோட ரெண்டாவது லெட்டரைப் படிச்சுக் காமிச்சேன். படத்தைப் பார்த்தா. யாரு? தெரிஞ்சவளா? கூடச் சுத்திப் பார்க்க வராளான்னு கேட்டா, ஆமாம்னேன். அதோட சரி... அப்புறம் மேற்கொண்டு அவளும் கேழ்க்கலை... நானும் சொல்லலை."
"நீங்க சொல்லாததுதான் தப்பு அப்பா! ஒரு விஷயத்தைப் பூசி மெழுகறதுங்கறதையே பல நூற்றாண்டுகளா நம்ம நாட்டிலே ஒரு கலையா வளர்த்துண்டிருக்கோம். அதனாலேதான் எல்லாத்திலியும் எல்லாக் கெடுதலும் வரது..."
"உங்கம்மாகிட்ட மட்டும் இல்லேடா ரவி! யாருகிட்டவுமே நான் எதையும் சொல்லலே. வேணு மாமா, வசந்தி, இவா ரெண்டு பேருக்குத்தான் ஏற்கனெவே எல்லாம் தெரியும். இப்போ புதுசா எனக்குத் தெரியும்."
"இது மாதிரி ஊர்லே, ஒரு விஷயத்தை நேராக அறிவிப்பதைவிட வேற எதுவும் செய்யறதிலே பிரயோஜனமில்லேப்பா. அறிவிக்கிறதைவிட அநுமானத்துக்கு விடறதுதான் அபாயகரமானது."
"என்னமோடா நீ சொல்றே! எனக்கானா அத்தனை துணிச்சல் வரலே; உங்கம்மாட்டவே சொல்றதுக்கு பயமாயிருக்கு. மத்தவாகிட்ட எப்பிடிச் சொல்றது? உனக்கே தெரியும். நான் சொல்லணும்கிறதில்லே. ஸ்ரீமடத்துப் பொறுப்பு என் கைக்கு வந்ததிலேருந்து ஊர்லே எத்தனை பேரோட விரோதம் ஏற்பட்டிருக்குத் தெரியுமா?"
"விரோதத்துக்குப் பயப்படறதாலேயும் தயங்கறதாலேயும் அது போயிடாதுப்பா! ஃபேஸ் பண்ணித்தான் ஆகணும். நம்மகிட்டத் தப்புத் தண்டா இல்லாத போது நாம் யாருக்குப் பயப்படணும்? எதுக்குப் பயப்படணும்?"
"அதெல்லாம் இருக்கட்டுண்டா! அப்புறம் பேசிக்கலாம். நீ முதல்லே உங்கம்மாவைப் பார்த்துவிட்டு வா. அவ உங்கிட்டச் சரியாகவே பேசலை போலிருக்கே... அந்தப் பெண்ணைக் கூட்டிக் கொண்டு போய் என்னமோ சொன்னியே....? அப்போ அவ 'ரியாக்ஷன்' எப்படி இருந்தது?"
"அம்மா, சரியா இல்லே அப்பா! கமலி நமஸ்காரம் பண்ணினப்பவே அவ மூஞ்சியைத் தூக்கி வச்சுண்டு இருந்தா. தெரு வாசல்லே வச்சு அவகிட்ட விவாதம் பண்ண வேண்டாம்னு நானும் அப்போ பேசாம விட்டுட்டேன்..."
"செம்மண் கோலம், ஆரத்தி எல்லாம் கூட வேணு மாமா பொண்ணும் நம்ம பாருவுமாத்தான் பண்ணியிருக்கா. காமுவுக்கு இதெல்லாம் பிடிச்சிருக்காது. உன் கல்யாணத்தைப் பத்தி அவ என்னென்னமோ சொப்பனம் கண்டுண்டிருக்கா. தெருவை அடைச்சுப் பந்தல் போட்டு நாலு நாள் கல்யாணம், நலுங்கு, மஞ்சள், தேங்காய், ஊஞ்சலோட பண்ணணும்னு அவளுக்கு ஆசை..."
"யார் வேண்டாம்னா? சடங்கு சம்பிரதாயத்தில் அத்தனை ஆசைன்னாக் கமலிக்கும் எனக்குமே அந்த மாதிரி நாலு நாள் கலியாணம் நடத்திச் சந்தோஷப்படட்டுமே? அவளுக்கும் இந்தியக் கல்யாணச் சடங்குகள்னா ரொம்பப் பிரியம்..."
"போடா போ! நான் என்னத்தையோ சொன்னா நீ என்னத்தையோ பதில் சொல்றே! வீட்டுக்கு அடங்கின மருமகளாத் தனக்கு அடங்கின கிராமாந்தரத்து மாட்டுப் பெண் ஒண்ணு வரணும்கறது காமுவோட பிரியம்."
'பேப்பர்'-என்ற கரகரத்த குரலுடன் தெருத் திண்ணையில் காலைத் தினசரி வந்து விழுகிற சத்தம் கேட்டது. ரவியே படியிறங்கிப் போய்ப் பேப்பரை எடுத்துக் கொண்டு வந்து கொடுத்து, "நீங்க பேப்பரைப் பார்த்திண்டிருங்கோ அப்பா! நான் போய் அம்மாட்டப் பேச்சுக் குடுத்துப் பார்க்கிறேன்" என்று வீட்டுக் கூடத்துக்குப் போனான்.
ரவிக்கும் அம்மாவைப் பார்க்கக் கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது.
அவன் போனபோது அம்மா சமையலறையிலே இல்லை. கொல்லைப்பக்கம் அவள் குரல் கேட்டது. அம்மாவின் குரலுக்கு வசந்தி ஏதோ பதில் சொல்லுவதும் அவன் காதில் விழுந்தது.
உடனே ரவி கொல்லைப் பக்கம் விரைந்தான். அம்மா எதிரே வந்தாள். ஆனால், அவனைப் பார்க்காதது போல விடுவிடுவென்று நடந்து முகத்தைத் திருப்பிக் கொண்டு சமையல் கட்டுக்குள் புகுந்து கொண்டாள். வசந்திக்கும் அம்மாவுக்கும் என்ன உரையாடல் நடந்திருக்கும் என்றறியும் ஆவலில் ரவி முதலில் கிணற்றடிக்கே சென்றான். துளசி மாடம் இருந்த இடத்தின் அருகே சிறிது தொலைவு விலகினாற் போல் நின்று கமலிக்கு அதைச் சுட்டிக் காட்டி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள் வசந்தி. கமலி ஆர்வமாகக் கேட்டுக் கொண்டு நின்றாள். பார்வதியும் பக்கத்தில் இருந்தாள்.
"அம்மா என்ன சொல்றா வசந்தி?" என்ற கேள்வியோடு அவர்களருமே சென்றான் ரவி.
"ஒண்ணுமில்லே! மாமி இப்பத்தான் விளக்கேற்றித் துளசி பூஜை பண்ணி முடிச்சிருக்க. நாங்க ரெண்டு பேரும் குளிக்காமக் கிட்டப் போயித் துளசி மாடத்தைத் தொட்டுடப் போறோமோன்னு பயந்துண்டு வந்து எங்கிட்டச் சொல்லிட்டுப் போறா ரவீ! ஆனா மாமி வந்து சொல்றதுக்கு முன்னாடி கமலியே, "கோலம், குங்குமம், மாடத்தில் எரியும் விளக்கு எல்லாம் பார்த்தால் இப்பத்தான் பூஜை முடிஞ்ச மாதிரி இருக்கு. நீயும் ஸ்நானம் பண்ணின மாதிரி தெரியலே. நானும் ஸ்நானம் பண்ணலே... எதுக்கும் தீட்டு இல்லாமே ஒதுங்கி நின்னு பார்ப்போம்"னு எங்கிட்டச் சொல்லிட்டா. அதையே மாமிகிட்டச் சொன்னேன் நான். 'இந்து மேனர்ஸ் கஸ்டம்ஸ் அண்ட் செரிமனீஸ்'னு ஏதோ புஸ்தகத்திலே கமலி இதெல்லாம் ஏற்கெனவே படிச்சிருக்காளாம்."
இதைக் கேட்டு ரவி புன்முறுவல் பூத்தான். கமலியும் அவனை நோக்கிப் புன்னகை செய்தாள்.
"கமலியைத் தோட்டத்துக்குக் கூட்டிண்டு போ வசந்தி! காலம்பர நீங்க ஸ்டேஷன்ல போட்ட மல்லிகை மாலையின் வாசனையைப் புகழ்ந்து குறைஞ்சது இதுக்குள்ளே நூறு தடவையாவது அவ எங்கிட்டச் சொல்லியிருப்பா. அவளுக்குத் தெரிஞ்ச ஒரே மல்லிகை பாரிஸ்லே 'ஜாஸ்மின்'னு ஒரு மெட்ரோ ஸ்டேஷன் இருக்கே அதான். நம்ம தோட்டத்திலே நிஜம் மல்லிகைச் செடியையே பூவோட அவளுக்குக் காமி."
ரவி இப்படிக் கூறியதும் அவர்கள் தோட்டத்துப் பக்கமாக நகர்ந்தார்கள். ரவி மீண்டும் வீட்டுக்குள் திரும்பிச் சமையல் கட்டின் வாசலில் அம்மாவின் ஆசார எல்லை, எந்த இடம் வரை தன்னை அநுமதிக்குமோ அந்த இடத்துல நின்று கொண்டு உள்ளே வேலையாக இருந்த அம்மாவின் கவனத்தைக் கவர, "நான் தான் ரவி வந்திருக்கேன்ம்மா-" என்று கொஞ்சம் இரைந்தே குரல் கொடுத்தான். ஆனால் அதற்குப் பதில் எதுவும் இல்லை.
----------------
அத்தியாயம் 7
மறுபடியும் இரண்டாவது தடவையாக ரவி குரல் கொடுத்தபோது, "எல்லாம் தெரியறதுடா? சித்தே இரு... குளிக்காமேக் கொள்ளாமே உள்ளே வந்துடாதே... தோ வரேன்" என்று சமையலறைக்குள் இருந்து பதில் வந்தது.
உள்ளே அம்மா தயிர்ப்பானையில் மத்தால் வெண்ணெய் கடைந்து கொண்டிருந்தாள். ஆயர்பாடியில் யசோதை தயிர் கடையும் போது சின்னக் கண்ணன் வெண்ணெய்க்காகத் தன் பிஞ்சுக் கையை நீட்டிக் கொண்டிருப்பது போன்ற வழக்கமான காலண்டர் ஓவியம் ஒன்றிலிருக்கும் யசோதையின் தோற்றத்தைப் போலத்தான் அம்மாவின் தோற்றமும் அப்போது அழகாக இருந்தது.
"நான் போயிட்டு அப்புறம் வரட்டுமா அம்மா? ஸ்நானம் பண்ணிட்டு வந்தாத்தான் நீ பேசுவியா?"
"இருடா... வரேன்..."
"எங்கிட்டே உனக்கென்ன கோபம்?"
"அதை என்னைக் கேழ்ப்பானேன்? நோக்கே தெரியாதோ?"
"நான் என்ன பண்ணிட்டேன் அப்படி?"
"என்னடா பண்ணனும் இன்னம்?"
அம்மாவுடைய மனஸ்தாபத்தின் கனம் முழுவதும் அந்த 'இன்னம்' என்ற கடைசி வார்த்தையில் இறுகித் திரண்டிருப்பது ரவிக்குப் புரிந்தது. அப்பா கூட ஓரளவு ஒத்து வந்திருப்பது போல் அவனுக்குத் தெரிந்தது. ஆனால் அம்மாதான் கரைக்க முடியாத கருங்கல்லாக இருப்பாளோ என்று பயந்தான் அவன். மனத்தாங்கலும், ஆதங்கமும் தெரியும்போது தான் இதயம் சுருங்கி விடுகிறாற் போல அவளுடைய பதில் வார்த்தைகள் மிகவும் சுருங்கியிருப்பதை ரவி கண்டான். பத்து நிமிஷத்துக்கு மேல் அவன் சமையல் கட்டின் வெளியே காத்து நிற்க வேண்டியிருந்தது.
அப்புறம் தான் ஒரு வழியாக அம்மா வெளியே வந்தாள். "தள்ளி நின்னுண்டு கையை நீட்டுடா ரவி..." - எங்கே வலது கையில் பிரம்பு அடி விழுமோ என்று கூட சந்தேகமாயிருந்தது ரவிக்கு. ஆனால் நடந்த்தென்னமோ முற்றிலும் வேறானதாயிருந்தது.
அப்போது தான் கடைந்த பசு வெண்ணெயில் வெல்லச் சர்க்கரையைக் கலந்து, உருட்டி, "சாப்பிடுடா. உனக்குத்தான் ரொம்பப் பிடிக்குமே" - என்று ரவியின் வலது கையை நீட்டச் சொல்லித் தூக்கி இடித்து விடாமல் கவனமாகத் தள்ளி நின்று கொண்டு போட்டாள் அவன் அம்மா.
எந்த வயதிலும் எந்தச் சூழலிலும் எவர் முன்னிலையிலும் தான் பெற்ற பிள்ளையைச் சுலபமாக மறுபடி பச்சைக் குழந்தையாக மாற்றி விட முடிகிற வித்தையை ஒரு தாயினால் தான் செய்ய முடியும். அறிவு, ஆணவம், புகழ், மேதாகர்வம், மூப்பு முதலிய எல்லாப் போர்வைகளும் கழன்று விழச் செய்து தன் மக்களைத் தன் முன் குழந்தையாக்கி விடும் ஆற்றல் தாய்க்கு இருந்தது.
எங்கோ கண் காணாத சீமையில் மிகவும் புகழ் பெற்ற புரொஃபஸராக இருக்கும் வயது வந்த தன் மகனை அரை நொடியில் ஆடையணியாத பருவத்து வெள்ளி அரை ஞாணும் தாயத்தும் கட்டிய சிறு பாலகனாக மாற்றி விட்டாள் காமாட்சியம்மாள்.
தன் அம்மா கொடுத்த சுவையான பசுவெண்ணெயை விழுங்கி விட்டு, "கையை நீட்டுடான்னதும் எங்கே பிரம்படி குடுத்துடப் போறியோன்னு பயந்துட்டேன்ம்மா!" என்றான் ரவி.
"பிரம்பாலே இல்லேடா, நீ பண்ணியிருக்கிற காரியத்துக்கு உன்னை உலக்கையாலேயே மொத்தணும் போல இருக்கு." -
சரிசமமான அளவில் பிரியமும் கோபமும் கலந்த குரலில் இந்தக் கடிந்துரை இருந்தது. இதற்கு ரவி ஏதோ பதில் சொல்லத் தொடங்கிச் சொல்லுவதற்குள் வாசலில் பக்கத்து வீட்டு முத்துமீனாட்சிப் பாட்டியின் குரல் கேட்டது. பாட்டி காமாட்சியம்மாளைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டுக் கொண்டே உள்ளே வந்து விட்டாள். அம்மா உள்ளே சமையல் காரியமாக இருந்ததாலும், பாட்டி தேடி வந்து விட்டதாலும், மாடிக்குப் போகலாம் என்று திரும்பினான் ரவி. ஆனால் பாட்டி பிடித்துக் கொண்டாள்.
"ரவி தானேடா?... கார்த்தாலே வந்தியா? சௌக்கியமா இருக்கியா"
"ஆமாம் பாட்டி! சௌக்கியந்தான்." - சொல்லி விட்டு ரவி நழுவ முயன்றான். பாட்டி விடவில்லை. "கண் பார்வை மங்கிப் போச்சு! கிட்ட வாயேண்டா நன்னாப் பார்த்துடறேன்." - என்று வலது கைவிரல்களால் நெற்றியிலிருந்து ஒரு 'சன்ஷேட்' இறங்கின மாதிரி வைத்துப் பார்வைக்கு வசதி செய்துகொண்டு நெருங்கி வந்து ரவியை உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உற்றுப் பார்த்தாள்.
"முன்னை விடச் சேப்பாயிருக்கே! குளிர் தேசமோல்லியோ? உடம்பு தானா வெளுப்புக் குடுத்துண்டிருக்கு. என்னடீ காமு! நான் சொல்றது சரிதானேடீ?"-
தான் முன்னைவிட நிறம் வெளுத்திருக்கிறதைப் பற்றிய விவாதம் அம்மாவுக்கும் பாட்டிக்கும் இடையே நிகழட்டுமென்று மாடிக்குத் திரும்பினான் ரவி. பதினாறு பக்கங்கள் கொண்ட ஆங்கிலத் தினசரியில் முதற் சில பக்கங்களைக் கடந்து தலையங்கப் பக்கத்தில் ஆசிரியருக்குக் கடிதங்கள் பகுதியில் அப்பா இலயித்திருந்தார். ரிடையராகிற வயதை நெருங்கும் தந்தைமார்களுக்கும் ஆங்கிலத் தினசரிகளின் ஆசிரியர் கடிதப் பகுதிக்கும் ஏதோ அபூர்வமான தொடர்பு இருக்க வேண்டும் என்று ரவி அடிக்கடி நினைப்பதுண்டு. இந்திய நாட்டு ஆங்கிலப் பத்திரிகைகளில் நாள் தவறாமல் சலிப்பின்றி இப்படிப் பகுதிகளுக்கு எழுதுகிறவர்களும், படிப்பவர்களும் பெரும்பாலும் ஒரே வயதினராக இருப்பதை ரவி கவனித்திருக்கிறான். அப்பா, ஆசிரியர் கடிதப் பகுதியில் இலயித்திருப்பதைப் பார்த்து மனதுக்குள் அவன் நகைத்துக் கொண்டான்.
தற்காலிகமாகப் படிப்பதிலிருந்து தலையை நிமிர்த்தி அப்பா அவனைக் கேட்டார்.
"என்னடா அவகிட்டப் பேசினியா? என்ன சொல்றா?"
"பேச ஆரம்பிச்சேன். அதுக்குள்ளே பக்கத்தாத்துப் பாட்டி வந்துட்டா. அம்மா எங்கிட்டப் பிரியமாத்தான் பேசறா! அதே சமயத்தில் உள்ளூற ஏதோ கோபமும் சந்தேகமும் இருக்கிற மாதிரிப்படறது அப்பா..."
"ஆண்கள் நின்று நிதானமா யோசிச்சுப் பார்த்துச் சந்தேகப்படறதா இல்லையான்னு தயங்கிற ஒரு விஷயத்தைக் கூட முன் கூட்டியே மோப்பம் பிடிச்சது போலத் தெரிஞ்சுண்டு நிச்சயமாகச் சந்தேகப்படற சுபாவம் பொம்மனாட்டிகளுக்கு உண்டு."
"இதிலே அம்மாவுக்குச் சந்தேகம் வராதபடி நீங்களே எல்லா விவரத்தையும் நேரடியாச் சொல்லியிருக்கலாம். சொல்லாமல் மூடி வைக்கிறதாலேதான் இதெல்லாம் சந்தேகத்துக்கும் மனஸ்தாபத்துக்கும் காரணமாயிடறது அப்பா!"
"ஒண்ணும் சொல்லாம இருக்கறப்பவே தானா அநுமானம் பண்ணிண்டு இத்தனை கோபப் படறவ... சொல்லியிருந்தா எத்தனை கோபப் படுவாள்னு தெரியலையா உனக்கு? எனக்கே உன் லெட்டரைப் பார்த்ததும் அப்படியே மலைச்சுப் போச்சு. என்ன செய்யறதுன்னே தோணலை! அப்புறம் வேணு மாமாவும் அவர் பொண் வசந்தியும் படிப்படியா என்னைச் சமாதானப்படுத்தினான்னு வச்சுக்கோயேன்."
"சண்டைன்னும் சமாதானம்னும் பேசறாப்பிலே எந்தத் தப்பும் இப்ப நடந்துடலே அப்பா! நானும் ஒளிவு மறைவா உங்களுக்கு எதையும் எழுதலே. தப்பபிப்ராயம் வரக்கூடாதுன்னுதான் முன் கூட்டியே எல்லாம் எழுதினேன். வேணு மாமாவும், வசந்தியும் பாரிஸூக்கு வந்திருந்தப்பக்கூட அவாகிட்டே நான் எதையும் மறைக்கலே! உங்ககிட்டேயும் அவாளை இதைப் பத்திப் பேசச் சொல்லித்தான் அனுப்பிச்சேன்."
"நீ சொல்றதெல்லாம் நியாயம்னே வச்சுக்கலாம்டா! இந்த ஊர் எப்படிப்பட்ட ஊர்? இங்கே நமக்கு எப்பிடி எப்படி விரோதிகள்ளாம் இருக்காங்கறது நான் சொல்லித்தான் தெரியணுமா உனக்கு? வைட்டமின் "ஏ" வைட்டமின் "பி"ங்கிற மாதிரி வைட்டமின் "வி" - அதாவது வைட்டமின் வம்புங்கிறது இந்த அகஸ்திய நதிக்கரைக் கிராமங்களுக்கு ஒரு முக்கியமான தேவை. எந்த வைட்டமின் டெஃபிஷியன்ஸியையும் தாங்கிக்க இவாளாலே முடியும். வைட்டமின் 'வி' டெஃபிஷியன்ஸியை ஒருநாள் கூட இவாளாலே தாங்கிக்க முடியாது. புராதன காலத்திலே அதிதிகளையும் வழிப் போக்கர்களையும், பந்து மித்திரர்களையும் வரவேற்கவும், உபசரிக்கவும்தான் கிராமத்து வீடுகளிலே திண்ணைகள் ஏற்பட்டது. ஆனா இப்போ வம்பு பேசறத்துக்கும், புறம் பேசறத்துக்கும், கோள் மூட்டறதுக்கும்தான் அது பிரயோசனப்படறது. இந்த ஊர்லே மூணு தெருவிலேயுமா முந்நூறு திண்ணைகளுக்கு மேலே இருக்குடா! மறந்துடாதே... அந்தத் திண்ணைகளும் ஆற்றங்கரைப் படித்துறைகளும் இன்னும் பலநாள் உன்னைப் பத்தியும் உன்னோட வந்திருக்கிறவளைப் பத்தியுந்தான் பேசிண்டிருக்கும்..."
"என் வாழ்க்கை எனக்குச் சொந்தமானது அப்பா! அதை இந்த ஊரின் முந்நூறு திண்ணைகளிலும் மூன்று தெருக்களிலும் யாரும் தீர்மானித்து விட முடியாது."
"சரி! நீ குளிச்சிட்டு வா... வயித்துலே வெறுங் காப்பியோட எவ்வளவு நாழி பசி தாங்கும்? இதெல்லாம் இப்போ பேசி முடிவு காணற விஷயம் இல்லே... அவளையும் குளிக்கச் சொல்லு. சாப்பாடு - பழக்கம் எப்படி? நம்ம சாப்பாடு ஒத்துக்குமோ இல்லையோ?"
"தாராளமா... இங்கே என்ன கிடைக்குமோ, அதை கமலி சாப்பிட்டுப்பா. நமக்கும் அவாளுக்கும் அதுதான் பெரிய வித்தியாசம் அப்பா. எங்கே எப்படி இருக்கணுமோ, அப்பிடி இருக்க அவாளாலே முடியும். 'எங்கேயும் இப்படித்தான் இருப்பேன் - இப்பிடித்தான் இருக்க முடியும் - இதுதான் பிடிக்கும்'னு முரண்டு பண்றதெல்லாம் நம்ம ஜனங்க கிட்டத்தான் அதிகம்...."
"ஒரேயடியா அப்படிச் சொல்லிட முடியாது. சிலதுலே முரண்டும் வேண்டியதாத்தான் இருக்கு..."
"தேவையானதுலே முரண்டு இருக்கிறதில்லே. தேவையில்லாததுலே எல்லாம் நம்மகிட்ட முரண்டு இருக்கு". அப்பாவுக்குப் பதில் சொல்லிக் கொண்டே பெட்டிகளை எடுத்துப் பிரித்தான் ரவி.
"நல்ல ரிஸ்ட் வாட்ச் வேணும்னு பாரு, குமார் ரெண்டு பேருமே தனித் தனியா எனக்கு லெட்டர் போட்டிருந்தா. அவா லெட்டர் போட்டு ஏழெட்டு மாசமாச்சு. எனக்கு மறந்தே போச்சு. கமலிதான் ஞாபகப்படுத்தினா.... அவ சொல்லலேன்னா மறந்தே போயிருக்கும்" - என்று சொல்லிக் கொண்டே இரண்டு அழகான சிறிய அட்டைப் பெட்டிகளை எடுத்து நீட்டினான் ரவி.
சர்மா அதை வாங்கிப் பார்த்துவிட்டு "நன்னாத்தான் இருக்கு! அவளை விட்டே குழந்தைகள் கிட்டக் குடுக்கச் சொல்றேன்" - என்றார். சிறிது நேரம் ஊர் விவகாரங்கள் பேசிக் கொண்டிருந்து விட்டுச் சர்மா மாடியிலிருந்து படியிறங்கிக் கீழே போனார்.
அவர் படியிறங்கும்போது ஒரு சிறிய பிரம்புக் கூடை நிறையக் குடைமல்லிகைப் பூவுடன் வசந்தி பின் தொடர எதிரே வந்து கொண்டிருந்தாள் கமலி. ஒரு சிறு குழந்தையின் உற்சாகத்தோடு அவள் அந்தப் பூக்களைக் கொய்து நிரப்பிக் கொண்டு வருவது தெரிந்தது. சர்மா சிரித்தபடி அவர்களைக் கடந்து மேலே நடந்து சென்றார்.
கமலியை மாடியில் கொண்டு போய் விட்டுவிட்டுத் தான் வீட்டிற்குப் போய்விட்டு அரை மணி நேரத்தில் மீண்டும் வருவதாகக் கூறிச் சென்றாள் வசந்தி. வீட்டுக்குப் புறப்படு முன் ஞாபகமாகச் சமையலறை வாசலில் நின்று காமாட்சி மாமியைக் கூப்பிட்டுச் சிரித்துக் கொண்டே, "மாமி! பாயாசம் வையுங்கோ - பிள்ளை ரொம்ப நாளைக்கப்புறம் ஊர் வந்திருக்கிறதைக் கொண்டாட வேண்டாமோ?" என்று சொல்லி விட்டு வெளிப்படையாகச் சொல்லத் தயங்கிய கொண்டாட்டக் காரணத்தை மனத்தின் உள்ளே நினைத்தவளாகச் சென்றாள் வசந்தி. திரும்பி வந்து மல்லிகைப் பூவைத் தொடுப்பது எப்படி என்று கமலிக்குக் கற்றுக் கொடுப்பதாக ஒப்புக் கொண்டிருந்தாள் அவள்.
*****
விடிந்ததிலிருந்து வெய்யிலே தெரியாமல் சாரல் தூறிக் கொண்டிருந்ததால் அன்று சங்கரமங்கலம் மிக மிக அழகாக இருந்தது. மேற்குப் பக்கம் மலைத் தொடர்கள் மயில் கழுத்து நிற நிலத்தில் பளபளத்தன. மழைக் காலத்தில் மணப்பெண்ணுக்கு வருகிற அழகு போல் மலைகளுக்கு எல்லாம் வரும் பருவ அழகு ஒன்று உண்டு. அப்படி அழகு அந்த மலைகளில் அன்று வந்து கவிந்திருந்தது. காலையில் இரயில்வே ஸ்டேஷனுக்கு வந்து திரும்பியதற்காக மறுபடி ஒரு தடவை ஸ்நானம் செய்துவிட்டு பூஜை அறைக்குள் நுழைந்தார் சர்மா.
காலைப் பூஜை என்பது அந்த வீட்டில் முக்கியமானது. சுமார் முக்கால் மணியிலிருந்து ஒரு மணி நேரம் வரை பிடிக்கும். காமாட்சி அம்மாள் சாம்பிராணி தூபக்காலில் உருகிய பொன்னாய் மின்னும் நெருப்பை எடுத்துக் கொண்டு வந்து வைத்தாள். பார்வதி குளித்து உடைமாற்றிக் கொண்டு தோட்டத்திலிருந்து பூஜைக்கு வேண்டிய பூக்களைக் கொய்து கொண்டு வந்து வைத்தாள்.
"பாரு! அண்ணா குளிச்சிருந்தான்னாக் கீழே வரச் சொல்லும்மா!" என்று பார்வதியிடம் பூஜையின் நடுவே சொல்லியனுப்பினார் அவர். பார்வதி மாடிக்குப் போனாள். காமாட்சி அம்மாள் சர்மாவைக் கடிந்து கொண்டாள்.
"அவனை ஏன் சிரமப்படுத்தறேள்? ரெயில்லே அலுத்துக் களைச்சுப் போய் வந்திருக்கான்... மெல்ல வரட்டுமே?"
"ரொம்ப நாளைக்கப்புறம் வந்திருக்கான். பூஜைக்கு வரட்டுமே!"
காமாட்சியம்மாள் நைவேத்தியத்தை மூடி எடுத்துக் கொண்டு வருவதற்காக உள்ளே போயிருந்தாள். ரவியும் கமலியும் அவர்களை அழைக்கப் போயிருந்த பார்வதியும் மாடியிலிருந்து வந்தார்கள்.
ரவி நாலு முழம் வேஷ்டியும் மேலே சட்டையோ பனியனோ போடாமல் ஓர் அங்கவஸ்திரமும் அணிந்திருந்தான். பழைய காலத்துச் சுங்குடிப் புடவை டிசைனில் ஆனால் புதிய நவநாகரிக மஞ்சள் நிற வாயிலில் நீலப் புள்ளிகள் இட்ட மெல்லிய புடவை ஒன்றை அணிந்திருந்தாள் கமலி. நெற்றியில் குங்குமத்திலகம், ஷாம்பு போட்டு நீராடியதால் புஸுபுஸு வென்று கூந்தல். மேலே பொன் நிறத்தில் தோள் பட்டையோடு துடிகிற கையில்லாத 'ரவிக்'கை அணிந்திருந்தாள். உடலை இறுக்கினாற் போலத் தைக்கப்பட்டிருந்த அந்த 'ரவிக்'கையும் அவளுடைய செழிப்பான மேனி நிறத்தையும் கூர்ந்து கவனித்துத் தான் பிரித்தறிய வேண்டியிருந்தது. அந்த உடையில் அந்த வேளையில் நறுமணங்களின் உருவகமாய் ஒரு நளினமான கவிதையாய் பூஜை அறைக்கு முன் வந்து நின்றாள் கமலி.
அவள் முதலிலேயே குளித்து விட்டு வந்ததால் அவளை டிரஸ் செய்து கொள்ள விட்டு விட்டு ரவி குளியலறைக்குள் போயிருந்தான். அவள் பின் தங்கவிட்டுச் சென்ற மனத்தை மயக்கும் நறுமணங்கள் குளியலறையை முழுமையாக நிறைத்துக் கொண்டிருந்தன. அவள் உபயோகித்த ஷாம்பு, சோப்பு துவட்டிக் கொண்டு போட்டிருந்த டர்க்கி டவல் எல்லாமாகச் சேர்ந்து - காலை வரையில் சுண்ணாம்பு சிமெண்ட் வாடை மட்டுமே நிரம்பியிருந்த புதிதாகக் கட்டப்பட்ட அந்தக் குளியலறையை இப்போது நறுமணங்கள் நிறைந்த கந்தர்வ லோகமாக்கியிருந்தன.
அவன் நீராடி விட்டு வெளியே வந்த போது கமலி ஏறக்குறைய டிரஸ் செய்து முடித்திருந்தாள். அவள் 'ரவிக்'கை அணிந்திருந்ததை அவன் அப்போது தான் கவனித்தான். சொல்லி வேறு ஏதாவது கையுள்ள ரவிக்கையை மாற்றிக் கொள்ள வைக்கலாமா என்று ஒரு கணம் யோசித்தான். அது கமலியின் சுதந்திரத்தில் தலையிட்டுத் தான் அநாவசியமாக அவள் மேல் ஆதிக்கம் செலுத்துவதாக இருக்குமோ என்று தோன்றியது. செல்வச் செழிப்பில் கவலையில்லாமல் வளர்ந்த அந்தப் பெண் தன்னைக் காதலித்துத் தன்னோடு புறப்பட்டு இந்தியாவுக்கு வந்திருக்கிறாள் என்பதற்காகவே அவளை ஒவ்வொன்றிலும் வலித்து நிர்ப்பந்தப்படுத்த அவன் தயாராயில்லை. அவனும் அவனைச் சேர்ந்தவர்களும் சொல்வதையெல்லாம் ஏனென்று விசாரிக்காமல் கூட உடனே கடைப்பிடிக்க அவள் தயாராயிருந்தும் அவன் அதைச் சொல்லத் தயங்கினான். ஐரோப்பிய வாழ்க்கையின் தனி நாகரிகம் அதை அவனுக்குக் கற்றுக் கொடுத்திருந்தது. அதே சமயத்தில் சங்கரமங்கலம் போன்ற ஓர் இரண்டுங்கெட்டான் ஊரில் சுவர்ண விக்கிரகம் போன்ற ஓர் இளம்பெண் செழித்த தோள்கள் தெரிய உடையணிந்து நடப்பது எப்படி எதிர்கொள்ளப்படும் என்று தயக்கத்தோடு நினைத்துப் பார்க்கவும் அவனால் முடிந்தது.
'ஊர் இருக்கட்டும்! இந்த வீட்டில் அம்மாவும் அப்பாவுமே என்ன நினைப்பார்க்ள்?' - என்று எண்ணியது அவன் மனம். அவனைப் பொறுத்தவரையில் இந்தக் கோலத்தில் அப்படியே வாரி அணைத்துக் கொள்ள வேண்டும் போல அத்தனை அழகாயிருந்தாள் கமலி. மனம் தயங்கினாலும் அவளிடம் அதைப்பற்றி அவன் எதுவும் சொல்லவில்லை.
அவளையும் அழைத்துக் கொண்டு கூப்பிடுவதற்கு வந்திருந்த தங்கை பார்வதியோடு பூஜைக்கு வந்திருந்தான் ரவி.
அம்மாவும் அவன் மேல் பிரியமாயிருக்கிறாள். கமலியோ அவன் மேல் உயிரையே வைத்திருக்கிறாள். ஆனால் அம்மாவுக்கும் கமலிக்கும் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஒரு சிறு மோதல் கூட வந்து விடாமல் தடுக்க வேண்டுமே என்று அவனுக்குக் கவலையாயிருந்தது. பூப்போன்ற மனமும், இங்கிதமான குணமும் உள்ள கமலியால் எந்தத் தகராறும் வராது என்பதை அவன் அறிவான். அம்மாவைப் பற்றித்தான் அவனுக்குக் கவலையாக இருந்தது. பால் குடிக்கிற வயதிலிருந்து ஓர் ஆணால் பிரியம் செலுத்தப்படுகிற ஒரே பெண் முதலில் தாய் தான். வயதும் பருவமும் வந்த பின் ஆணின் அந்தரங்க அபிமானமும் பிரியமும் இன்னொரு யுவதியிடம் போகிறது. இதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் மகனின் பிரியத்தைக் கவர்ந்து விட்ட அந்தப் புதிய யுவதியின் மேல் தாய்க்கு ஏற்படுகிற இரகசியமான பொறாமை தான் மாமியார் மருமகள் சண்டையின் ஆரம்பமோ என்று எண்ணினான் ரவி. இவ்வளவிற்கும் 'இவள்தான் உன் மருமகள்' என்பதாக அம்மாவிடம் யாரும் இன்னும் அதிகார பூர்வமாகச் சொல்லவில்லை. அம்மாவாகக் கமலியைப் பற்றிச் சந்தேகப்படுகிறாள்; அவ்வளவுதான்.
நீராடி மடியாடை உடுத்துச் சுத்தமாக இருந்தாலொழிய அந்த வீட்டில் யாரும் பூஜையறைக்குள் நுழையக் கூடாது.
"முதல்லே இந்த வீட்டுக்குள்ளேயே ஒரு ஆலயப் பிரவேசப் போராட்டம் நடத்தியாகணும் அம்மா" என்று முன்பு தன் கல்லூரிப் படிப்பு நாட்களில் அம்மாவிடம் கேலியாகப் பலமுறை சொல்லியிருக்கிறான் ரவி.
பூஜையறையைப் பொறுத்துக் கமலியை அம்மா எப்படி நடத்துவாளோ என்று பயந்தான் அவன். அதனால் கமலிக்காக அவனும் வெளியிலேயே நின்று கொண்டான். கமலியின் கையில்லாத நாகரிக 'ரவிக்'கை அம்மாவும் அப்பாவும் வெறித்து வெறித்துப் பார்த்தார்கள். அம்மா ஒரு தடவை அவன் மட்டுமே கவனிக்கிற சமயத்தில் முகத்தைக் கோணிக் கொண்டு தோள்பட்டையில் இடித்து அழகுகூடக் காட்டினாள். நல்ல வேளையாக அப்போது கமலி பார்வதியின் பக்கம் திரும்பி அவளிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தாள்.
ஒரு வழியாக பூஜை முடிந்து பிரசாதம் வாங்கிக் கொண்டு பூஜையறைக்கு முன்னாலிருந்து கலைந்தார்கள் அவர்கள். அப்போது வசந்தி திரும்பி வந்து விட்டாள். அப்பாதான் முதலில் அவனிடம் அதைக் கேட்டார்.
"சாப்பாடு மேலேயே அனுப்பச் சொல்லட்டுமா அல்லது இங்கேயே இலை போட்டுப் பரிமாறலாமா?"
கமலி எல்லோரோடும் சேர்ந்து இலையிலேயே சாப்பிடத் தயாராக இருந்தாள். பரிமாறுவதில் காமாட்சியம்மாளுக்கு உதவி விட்டு மற்றவர்கள் சாப்பிட்டபின் சாப்பிடவும் கூட அவளுக்கு ஆவலாயிருந்தது. அம்மா கமலியைச் சமையலறைக்குள்ளேயே நுழைய விடாவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தில் ரவியும் வசந்தியும் தான் துணிந்து கீழே இலை போட்டுச் சாப்பிடும் திட்டத்தை மாற்றினார்கள்.
"மாமாவும் மாமியும் இங்கே சாப்பிடட்டும். நீ, கமலி, பார்வதி, குமார் எல்லாருமே நிதானமாகச் சிரிச்சுப் பேசிண்டு மாடியிலேயே சாப்பிடலாம். நான் கூட இன்னிக்கு இங்கேயே 'விருந்து' சாப்பிடப் போகிறேன். பெரியவாளைச் சிரமப் படுத்த வேண்டாம். நாம் எல்லோரும் மாடியிலேயே சாப்பிடுவோம்" என்று நிலைமையை நாசூக்காகச் சமாளித்தாள் வசந்தி. சர்மாவுக்கும் நிலைமை புரிந்தது. அவர் இதற்கு ஆட்சேபணை எதுவும் சொல்லவில்லை.
"வசந்தி சொல்றதும் சரிதான். அப்படியே நடக்கட்டும்" என்று சொல்வதைத் தவிரச் சர்மாவாலும் அப்போது வேறெந்த முடிவுக்கும் வர இயலவில்லை. ரவி கமலியை அழைத்துக் கொண்டு மாடிக்குச் சென்றான்.
வசந்தியும், குமாரும், பார்வதியும் மாடிக்குச் சமையலறையிலிருந்து பண்டங்களை எடுத்துச் செல்லும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அவர்கள் மாடிக்கு வருகிற வரை கிடைத்த தனிமையில் கமலியிடம் ரவி இரண்டொரு விஷயங்களைச் சொல்ல முடிந்தது. கைக்கடிகாரங்களையும் வேறு அன்பளிப்புப் பண்டங்களையும் கமலியே அவள் கைப்படக் குமாரிடமும், பார்வதியிடமும் கொடுக்க வேண்டும் என்பதைச் சொன்னான். நேரடியாக அம்மாவின் முரண்பாடுகளைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லாமல், "எது நடந்தாலும் ஈஸியா எடுத்துக்கணும் கமலி! பழைமையான முரண்டுகள் உள்ள கிராமம். பழைய முரண்டு பிடித்த மனிதர்கள். நாகரிகம், மேனர்ஸ் எல்லாம் அதிகம் எதிர்பார்க்க முடியாது" என்றான்.
"நீங்க இப்படித் தனியா எடுத்துச் சொல்லி என்னிடம் வேண்டுகோள் விடுக்கிறது தான் அன் ஈஸியா இருக்கு" என்று சிரித்த படியே மறுமொழி கூறினாள் கமலி.
கமலி தானும் பரிமாறுவதில் உதவிக்கு வருவதாக முன் வந்து இரண்டு பெரிய அப்பளங்களைக் கீழே போட்டு உடைத்த பின், "நீ பேசாமல் உட்கார்ந்து சாப்பிடு கமலி. பழகினப்புறம் பரிமாறலாம்" என்று அவளை ரவியுடன் உட்காரச் சொன்னாள் வசந்தி. சாப்பிட்டு முடித்த பின் ரவி சிறிது நேரத்தில் அசதி காரணமாகத் தூங்கச் சென்றான்.
குமாரையும், பார்வதியையும் கூப்பிட்டுக் கடிகாரங்களைக் கொடுத்தாள் கமலி. வசந்திக்கு ஒரு செண்ட் பாட்டிலைக் கொடுத்த போது, "வசந்தீ! நீ மட்டும் தினம் காலையிலே ஒரு கூடை மல்லிகைப்பூத் தரதா எனக்கு உறுதி சொன்னால் நான் பாரீஸ்லேருந்து கொண்டு வந்திருக்கிற அத்தனை வாசனைப் பொருள்களையும் யாருக்காவது கொடுத்து விடலாம் அல்லது தெருவிலே தூக்கு எறிஞ்சுடலாம்" என்றாள் கமலி.
குடைமல்லிகைப் பூவை நெருக்கமாக ஊசி மூலம் நூலிலும் கோக்கலாம், நாரிலும் தொடுக்கலாம் என்று சொல்லி இரண்டையும் கமலிக்குச் செய்து காட்டினாள் வசந்தி. வசந்தி கையால் நாரில் பூத்தொடுத்த வேகத்தைப் பார்த்து அதிசயித்தாள் கமலி.
"நாங்கள் இயந்திரமாக்கிவிட்ட எத்தனையோ நுண் கலைகளை இன்னும் இந்தியப் பெண்கள் தங்கள் அழகிய மென்மையான விரல்களின் நுனிகளிலேயே கட்டிக் காத்து வருகிறார்கள். பழைய முறையில் உருவாகி, நவீன நாகரிகங்களால் பாதிக்கப்படாத ஒவ்வொரு இந்தியப் பெண்ணும் ஒரு நுண்கலைக் களஞ்சியமாக இருப்பாள் போலத் தோன்றுகிறதே!"
"காமாட்சி மாமி - அதாவது உன் மாமியார் இன்னும் வேகமாகப் பூத்தொடுப்பாள் கமலி! கோலம் போடறது, பூத்தொடுக்கிறது, பல்லாங்குழி ஆடறது, அம்மானை ஆடறது, சமைக்கிறது இதிலெல்லாம் மாமி எக்ஸ்பர்ட். பாட்டுக் கூட நன்னாப் பாடுவா" என்றாள் வசந்தி.
"அம்மானை ஆடுவது என்றால் என்ன?" என்று தெரிந்து கொள்ளும் ஆவலோடு கேட்டாள் கமலி. அதைக் கமலிக்கு விளக்குவதற்காகப் பார்வதியிடம் சொல்லி வீட்டிலுள்ள அம்மானைக் காய்களை எடுத்து வரச் சொன்னாள் வசந்தி. பித்தளையில் எலுமிச்சம்பழம் பருமனுக்கு உருண்டை உருண்டையாக இருந்த அம்மானைக் காய்களைக் காமாட்சியம்மாளிடம் கேட்டு வாங்கி வந்தாள் பார்வதி. வசந்திக்குக் கைப்பழக்கம் விட்டுப் போயிருந்ததால் அது என்ன விளையாட்டு என்று கமலியிடம் சொல்லி விளக்க மட்டும் முடிந்ததே ஒழியச் செய்தோ, 'டெமான்ஸ்ட்ரேட்' பண்ணியோ காட்ட முடியவில்லை. வசந்தியும் தன்னை அறியாமலே தான் ஒரு நகரவாசியாகி விட்டதை அப்போது அந்தக் கணத்தில் அந்த இயலாமையால் உணர்ந்தாள். அம்மானையில் மிகக் குறைந்த பட்சத் திறமையாகிய மூன்று காய்களை மேலே போட்டுக் காய் எதுவும் கீழே விழாமல் மாற்றி மாற்றி இரு கைகளாலேயும் பிடிப்பது கூட வசந்திக்கு வரவில்லை. 'நீ கொஞ்சம் இருடீ கமலி! மாமியை வந்து 'டெமான்ஸ்ட்ரேட்' பண்ணச் சொல்லிக் கேட்டுப் பார்க்கிறேன். மாமி இதில் கெட்டிக்காரி. ஒரே சமயத்தில் அஞ்சு காய்வரை கூடக் கீழே விழாமல் போட்டுப் பிடிச்சுடுவா" என்று சொல்லி விட்டுக் காமாட்சி மாமியை அழைத்து வரக் கீழே படி இறங்கிப் போனாள் வசந்தி.
---------------
அத்தியாயம் 8
வசந்தி மாடியிலிருந்து படியிறங்கிக் கீழே வந்த போது காமாட்சியம்மாள் மணைப் பலகையைத் தலைக்கு உயரமாக வைத்துக் கொண்டு புடவைத் தலைப்பையே விரித்துச் சமையல்கட்டு முகப்பில் ஒருக்களித்தாற்போலப் படுத்துக் கொண்டிருந்தாள். மாமி தூங்கிக் கொண்டிருக்கிறாளோ என்று முதலில் தயங்கிய வசந்தி, அருகே நெருங்கிச் சென்று பார்த்ததும் அவள் விழித்திருப்பதைக் கண்டாள்.
"நீ அம்மானைக் காய் கேட்டேன்னு பாரு வந்து வாங்கிண்டு போனாளே...? இன்னும் என்னமாவது வேணுமா...?" என்று மாமியே வசந்தி வருவதைக் கண்டு எழுந்திருந்து உட்கார்ந்து விட்டாள்.
பாதி அயர்ந்த அந்தத் தோற்றத்திலும் கூடக் காமாட்சியம்மாள் ஏதோ கோவில் கர்ப்பக்கிருகத்திலிருந்து ஓர் அம்மன் விக்ரகம் உயிருடனும் உருவுடனும் புறப்பட்டு வந்து அமர்ந்திருப்பது போல் இலட்சணமாயிருந்தாள். "இந்த வீட்டின் கிருகலட்சுமி நான் இதன் அன்னபூரணி நான்" என்ற கம்பீரமான செருக்குடன் அழகும், தவ ஒளியும் குன்றாத ஒரு ரிஷிபத்தினிபோல் அப்போது அங்கு அமர்ந்திருந்தாள் காமாட்சியம்மாள்!
மாமி நிர்த்தாட்சண்யமாக மறுத்து விடுவாளோ என்ற பயத்தோடும் தயக்கத்தோடும் வசந்தி வந்திருந்தாள்.
"நம்ம பூர்வீகக் கலைகள், பாட்டுக்கள், விளையாட்டுக்கள், பழக்க வழக்கங்கள், எல்லாத்திலியும் கமலிக்குக் கொள்ளை ஆசை... நீங்க கொஞ்சம் சிரமத்தைப் பாராமே வந்து அவளுக்கு அம்மானை ஆடிக் காமிக்கணும் மாமீ! நானே 'டிரை' பண்ணினேன்... எனக்கு நன்னா ஆட வரலை... பழக்கம் விட்டுப் போச்சு..."
"மொட்டைக் கழுத்தும் மூளித் தோளுமாக் கையில்லாமே ஒரு ரவிக்கையைப் போட்டுண்டிருக்காளேடீ?"
"நீங்க அதைத் தப்புன்னு நெனைக்கிறதாத் தெரிஞ்சா அடுத்த நிமிஷமே கழட்டிட்டு வேறே போட்டுண்டுடுவா... கமலிக்கு உங்ககிட்ட அத்தனை மரியாதை... அத்தனை பயபக்தி..."
"மரியாதையும், பயமும், பக்தியும் வெச்சுக்க நான் யாருடீ அவளுக்கு? இங்கே வந்து தங்கியிருக்கிறதாலே சொல்ல வேண்டியிருக்கு. மடத்து முத்திராதிகாரி வீட்டிலே உடம்பிலே துணியே இல்லாமே ஒரு வெள்ளைக்காரி வந்து தங்கியிருக்காளாம்னு ஊர்லே நாலு பேர் எங்களைப் பற்றிப் பேசாமப் பார்த்துக்கணுமோல்லியோ!"
"நான் அவகிட்டப் பக்குவமாச் சொல்லி வைக்கிறேன் மாமீ! இப்போ நீங்க கொஞ்சம் தயவு பண்ணி மாடிக்கு வரேளா...? அம்மானை..."
வசந்தி தன் வாக்கியத்தை முடிப்பதற்குள்ளேயே காமாட்சியம்மாளிடமிருந்து வெட்டினாற்போல் பதில் வந்தது.
"நான் மாடிக்கெல்லாம் வரலையடீம்மா! அவளுக்கு ஆத்திரம்னா அவளை இங்கே கூட்டிண்டு வா!... ஆடிக் காமிக்கிறேன்..."
"இதோ இப்பவே கூட்டிண்டு வரேன் மாமீ" என்று கூறிவிட்டு மறுபடியும் மாடிக்கு விரைந்தாள் வசந்தி. மாமி அதற்குச் சம்மதித்ததே ஒரு தேவதை வரம் கொடுத்தது போலிருந்தது.
காலையில் கமலியும், ரவியும் இரயில் நிலையத்திலிருந்து வந்தபோது காமாட்சியம்மாள் எவ்வளவு இறுக்கமாக இருந்தாளோ அவ்வளவு இறுக்கம் இப்போது இல்லையென்று தெரிந்தது. கமலி தங்களைக் கூப்பிட்டு அளித்த கைக்கடிகாரங்களைக் குமாரும் பார்வதியும் அம்மாவிடம் போய்க் காண்பித்துச் சொல்லியதாகவும், அம்மா அவை மிகவும் நன்றாயிருப்பதாகப் பாராட்டியதாகவும், பார்வதியே வசந்தியிடம் சொல்லியிருந்தாள். இப்படிச் செயல்களால் காமாட்சியம்மாளுக்கும் - கமலிக்கும் இடையில் சகஜமாகப் பழகும் ஒரு நிலையை உருவாக்க வேண்டுமென்றுதான் வசந்தி முயன்றாள். காமாட்சியம்மாளைப் பற்றிப் பெருமையாக நாலு வார்த்தை கமலியிடமும் கமலியைப் பற்றிப் பெருமையாக நாலு வார்த்தை காமாட்சியம்மாளிடமும் சொல்லுவதன் மூலம் இரு பக்கங்களிலும் மனங்களை இலகுவாக்க முயன்று கொண்டிருந்தாள் வசந்தி.
மாடிக்குப் போனதும் வசந்தி முதல் வேலையாகக் கமலி அணிந்திருந்த கையில்லாத 'ரவி'க்கைக் கழற்றி வேறு கையுள்ளதை அணிந்து கொள்ளச் செய்தாள்.
"கமலீ! நாம் கீழேயே போயிடலாம்! மாமி நம்மை அங்கே வரசொல்றா.... ஷீ... இஸ் ஏ ஸ்டாஞ்ச் டிரடிஷனலிஸ்ட்...."
"பீயிங் டிரடிஷனலிஸ்ட் இஸ் நாட் அட் ஆல் எ கிரைம்... வசந்தீ! போகலாம் வா" என்று காமிராவையும் பைண்டு பண்ணின புத்தகம் போலக் கையடக்கமாக இருந்த ரேடியோ கம் காஸெட் ரெக்கார்டரையும் எடுத்துக் கொண்டு கீழே புறப்பட்டாள் கமலி.
இந்தியத் தன்மை, இந்தியப் பழக்க வழக்கங்கள், ஆசார அநுஷ்டானங்கள் எதைப் பற்றியும் சிறிது கூச்சப் பட்டாற் போலவும் மன்னிப்பு கேட்பது போன்றும் எப்போது தான் பேசினாலும் அதை விரும்பாமலும் ஏற்றுக் கொள்ளாமலும் கமலியிடமிருந்து ஒரு பதில் வருவதை வசந்தி கவனித்திருந்தாள். இந்தியத் தன்மை, பழக்க வழக்கங்களுக்கு ஏற்பத் தன்னை இசைவாக மாற்றிக் கொண்டு விட்டுக் கொடுக்க அவள் தயாராயிருந்தாளே ஒழியத் தனக்காக அவையெல்லாம் விட்டுக் கொடுத்து விலக வேண்டும் என்று அவள் ஒரு போதும் எண்ணியதாகவோ எதிர்பார்ப்பதாகவோ தெரியவில்லை. பிறருடைய நாகரிகத்தையும், பண்பாட்டையும் பழக்க வழக்கங்களையும் மதிக்கின்ற கமலியின் இந்த இயல்பை வசந்தி வியந்தாள். அசல் கல்வியறிவின் கனிவு மனத்தில் வந்திருந்தால் ஒழிய இப்படிப் பக்குவம் ஏற்பட்டிருக்க முடியாது என்பதை அவள் உணர்ந்தாள். பிறருடைய தனிப்பட்ட பழக்க வழக்கங்கள், நடை, உடை, பாவனைகள், நாகரிகம், கலாச்சாரம் முதலியவற்றைச் சகித்துக் கொள்ளவும் ஏற்கவும் உயர்ந்த பட்சமாக மனம் பக்குவப்பட்டாலொழிய முடியாது. கலிசுரல் - ஈகோ அதாவது கலாசார ஆணவம் - காரணமாகவே உலகெங்கும் இனங்களுக்கிடையே, பிரதேசங்களுக்கிடையே மொழிகளுக்கிடையே, நாடுகளுக்கிடையே மனிதர்கள் போரிட்டுக் கொண்டிருக்கும் நிலைகளையும் நினைத்துப் பிறருடைய கலாசாரத்தை அதிக பட்சமாக மதிப்பது தான் அதை வெல்லும் மிகச் சிறந்த வழி என்பதைப் புரிந்து கொண்டிருக்கும் கமலியின் மென்மை - இங்கிதம் - இயைபு - யாவும் வசந்தியைச் சிந்திக்க வைத்தன. மெய்யான கல்வி அல்லது மனப்பக்குவம், ஓர் அழகிய பெண்ணை இரட்டை மடங்கு மேலும் அழகியாக்கி விடுவதை உணர்ந்தாள் வசந்தி.
அம்மானைக் காய்களையும் எடுத்துக் கொண்டு கமலியும், வசந்தியும் கீழே வந்த போது நேரம் நடு பகலுக்கு மேல் ஆகியிருந்தது. அம்மாவின் பாட்டு அம்மானை விளையாட்டு எதுவும் புதுமை இல்லையென்றாலும், கமலி காமிராவையும் ரெக்கார்டையும் எடுத்து வந்திருப்பதைக் கண்டு அவற்றினால் ஆவல் தூண்டப் பெற்றவர்களாகப் பார்வதியும் குமாரும் கூட வந்து வேடிக்கை பார்க்க நிற்பவர்களைப் போல் சூழ்ந்து கொண்டு நின்றார்கள்.
காமாட்சியம்மாள் சிறிதும் பதறவோ பயப்படவோ இல்லை. அலட்சியமாக அமர்ந்து அம்மானைக் காய்களை ஆடினாள். முதலில் மூன்று காய்களை ஆடிக் காட்டிய பின் விரைவு குன்றாமல், ஐந்து காய்களையும் ஆடினாள். இனிமையான ஒரு சிறிதும் பிசிறு தட்டாமல் கணீரென்ற குரலில், தான் பிறந்த ஊரில் சிறுவயதில் பாடிப் பழகிய ஓர் அழகிய பாட்டையும் அம்மானைக்கு இசைவாகப் பாடினாள் மாமி.
'இள நகை யரும்பு மிதழ்க்கடை
எழிலுறு தவள நகைப்படை
வளமது கொண்டு சிவன்தன
துளமதில் உறுதி தகர்த்திடு
களபகுங்கும கலச கொங்கயையிற்
கலாம் விளைவிப்பவட் கம்மானை
துளவ நாயகன் சோ தரிக் கம்மானை
மகர தோரண வீதியெங்கணும்
பளபளக்கு மொகுவிலாச நற்
பவளவல்லி திருவிளக்கு மம்மானை!
அநாயாசமாக இந்தப்பாட்டை பாடும்போது மாமி தன் எதிரே சிலர் கேட்கிறார்கள் அல்லது கவனிக்கிறார்கள் என்பதற்காகப் பாடியது போல் தெரியவில்லை. பித்தளைப் பந்துகளில் ஒன்றுகூடக் கீழே விழுந்து விடாமல் விரைந்து மாற்றி மாற்றிப் பிடிக்கும் சிரமமான செயலில் இருந்து வழுக்கி விடவோ தவறிவிடவோ செய்யாமல், தன்னைத் தானே உற்சாகப் படுத்திக் கொள்வதற்காகத் தன்னுள் இலயித்துப் பாடிய மாதிரியே இருந்தது. பாடலை ரெக்கார்டரிலும் பாடிய மாமியின் தோற்றத்தைக் காமிராவிலும் பிடித்துப் பதிவு செய்து கொண்டாள் கமலி. உள்ளே அதிக வெளிச்சமில்லாத அந்தக் கர்நாடகமான பழைய கிராமாந்தரத்து வீட்டின் சமையல் கட்டு முகப்பில் புகைப்படம் எடுக்க ஃபிளாஷ் தேவைப்பட்டது. கழங்காடல், பல்லாங்குழி, சோழி விளையாட்டு எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக அவற்றுக்குரிய கிராமீயப் பாடல்களுடன் ஆடிக் காட்டினாள் காமாட்சியம்மாள். சில பாடல்களில் அந்தப் பிரதேசத்துக் கொச்சை மொழி நிரம்பி வழிந்தது.
"இந்த விளையாட்டுக்களோட சேர்த்துப் பாடறதுக்குன்னே நிறையப் பாடல்கள் எல்லாம் ஏற்பட்டிருக்கு. கமலீ! அம்மானை ஆடற்ப்போ மாமி பாடிய பாட்டு பக்கத்திலே இருக்கிற பிரம்மபுரம் சிவன் கோவில் அம்மன் 'பவளநாயகி' மேலே யாரோ பாடினது. இந்த விளையாட்டோட இப்படிப் பாட்டெல்லாம் சேர்ந்த காரணம் தான் எனக்குப் புரியலே! சில பாட்டு கொச்சையாகவும், தப்பாகவும் கூட இருக்கு!"
"அசாதாரணமான திறமையைக் காட்டி முழு கான்ஸெண்ட்ரேஷனோட செய்யற விளையாட்டுக்கு 'ஸெல்ஃப் சப்போர்டிங்' ஆகவும் உற்சாகமாகவும் சோர்வு தெரியாமல் இருக்கிறதற்காகவும் தான் இப்படிப் பட்ட பாடல்கள் எல்லாம் உண்டாகியிருக்கணும். காட்டு வழியிலே தனியா நடந்து போகிறவன் தனக்கு ஒரு துணையும் தைரியமும் உல்லாசமும் உண்டாக்கிக் கொள்ளத் தானே சீட்டியடித்துப் பாடி அந்தப் பாட்டையே - தனக்கு வழித் துணையாக்கிக் கொள்கிற மாதிரிதான் இதுவும். 'ஃபோக்லோர்' ஆராய்ச்சியிலே இதைக் கண்டு பிடித்திருக்கிறார்கள் வசந்தீ! நாட்டுப் பாடல்கள், கிராமியப் பாடல்களில் வாய்மொழி அடையாளம்கிற 'ஓரல் டிரடிக்ஷன்' தான் ரொம்ப ரொம்ப முக்கியம். கொச்சைகளையும் தப்புகளையும் அவற்றிலிருந்து நீக்கி விட்டால் அப்புறம் அவை அசல் கிராமீயப் பாடல்களாக இருக்கவே முடியாது!'
"இங்கே சில பேர் இந்த மாதிரிப் பாடல்களைக் கூட இலக்கண சுத்தமாகத் திருத்தி விடுவதை ஒரு வழக்கமாக்கியிருக்காங்க..."
"சுமாரான விஷயங்களைப் பிரமாதப்படுத்திச் சீர்திருத்தம் செய்யப் புறப்படுவதும், பிரமாதமான விஷயங்களைக் கவனிக்காமலே பாழடைய விட்டு விடுவதும் அரசியல் வாதிகளால் புதிதாக உங்கள் தேசத்துக்கு வழங்கப்படும் 'நியு ஸப்கல்சர்' ஆகி வருகிறது."
இந்த வார்த்தைகளைக் கேட்ட போது மிகப்பெரிய விஷயத்தை - முந்நூறு நானூறு பக்கங்களில் விமர்சித்து எழுத வேண்டிய ஒன்றைச் சுலபமாக ஒரே ஒரு வாக்கியத்தில் கமலி கச்சிதமாகச் சொல்லி முடித்து விட்டாற் போல் உணர்ந்தாள் வசந்தி. சுதந்திரத்துக்குப் பின் வந்திருக்கும் இந்தியாவை இந்த ஒரு வாக்கியம் அத்தனை பொருத்தமாக விமர்சித்தது. பித்தளை அம்மாவைப் பந்துக்கள் கழற்சிக்காய்கள், சோழிகள், பல்லாங்குழி, விளையாடப் பயன்படும் முருங்கை முத்துகள், மரத்தில் அழகாகச் செதுக்கப் பெற்ற பல்லாங்குழி எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக உற்றுப் பார்த்து விவரம் விசாரித்துத் தெரிந்து கொண்டாள் கமலி.
அந்த வெள்ளை யுவதி தமிழ் பேசியது காமாட்சியம்மாளுக்குப் பெரிதும் ஆச்சரியமளித்தது. வாழ்நாளில் தன் குரலைத் தானே திரும்பிக் கேட்கும் வாய்ப்பு காமாட்சியம்மாளுக்கு இதுவரை வாய்த்ததே இல்லை. காமாட்சியம்மாளைச் சந்தோஷப்படுத்த வேண்டும் என்று கருதின வசந்தி கமலியிடம் ரிக்கார்டரை இயக்கி மாமியின் பதிவுசெய்த பாடலை அவளே திரும்பக் கேட்கும் விதத்தில் ஒலிக்கச் செய்யும்படி வேண்டினாள்.
"கவனமாக...ரெக்கார்டரிலே தோல் உறை மேலே போட்டிருக்கு...மாமி கிட்டக் கொண்டு போயிடாதே... தோல் மேலே பட்டுட்டா மாமி மறுபடியும் ஸ்நானம் பண்ணப் போயிடுவா..." என்று வசந்தி கமலியின் காதருகே மெல்லிய குரலில் எச்சரிக்கவும் செய்தாள்.
தான் சற்று முன் பாடியதெல்லாம் காஸெட் ரெக்கார்டரிலிருந்து திரும்ப ஒலிக்கவே மாமி சிறிது நாணினாற்போல் உட்கார்ந்து தன் குரலையே கேட்டுக் கொண்டிருந்தாள். பெரு மதிப்புக்குரிய ஒரு குருவுக்கு முன்னால் அமர்ந்திருக்கும் மாணவி போல் பவ்யமாக விலகியிருந்து, மரியாதையோடு மாமியின் முகத்தையே கவனித்துக் கொண்டிருந்தாள் கமலி. 'பருகுவது போன்ற ஆர்வம்' என்பார்களே அந்த ஆர்வம் கமலியின் பார்வையில் அப்போது தெரிந்தது.
தெரு வாசலில் கார் வந்து நிற்கும் ஓசை கேட்டது. அதை அடுத்து வேணுமாமாவின் குரலும் திண்ணையிலேயே 'சிரம பரிகாரம்' பண்ணிக் கொண்டிருந்த விசுவேசுவர சர்மா அவரை வரவேற்கும் குரலும் உள்ளே தெளிவாகக் கேட்டன.
"அப்பா பக்கத்து கிராமத்திலே ஒரு கலியாணத்துக்குப் போயிருந்தார், இப்பத்தான் திரும்ப முடிஞ்சது போலிருக்கு" என்று கூறியபடியே வாயிற் பக்கமாக எழுந்து போனாள் வசந்தி.
"என்ன வசந்தீ? எக்ஸ்டேர்னல் அஃபயர்ஸ், இண்டேர்னல் அஃபயர்ஸ் எல்லாம் எப்படி இருக்கு? ரிலேஷன்ஸ் 'இம்ப்ரூவ்' ஆறதா இல்லியா?"
அப்பா தன்னிடம் என்ன கேட்கிறார் என்று வசந்தி உடனே புரிந்து கொண்டு விட்டாள்.
"'கல்சுரல் எக்ஸ்சேஞ்ஜ் புரோகிராம்' மட்டும் சரியா நடந்துண்டிருக்குப்பா! மாமி அம்மானைப் பாட்டுப் பாடி கமலி அதை 'ரெக்கார்டு' பண்ணி மாமிக்கே திருப்பிப் போட்டுக் காமிச்சிண்டிருக்கா. வெளி தேசத்திலிருந்து வந்தவள் இதையெல்லாம் ஆர்வமாகக் கேட்கிறாளேங்கிற வரை மாமிக்கும் பிரியமாகத் தான் இருக்கு - ஆனா..."
"ஆனா...என்ன...?"
"ரவிக்கும் கமலிக்கும் இருக்கிற நெருக்கத்தை பத்திச் சொன்னா அதை மாமியலே ஜீரணிச்சுக்க முடியுமான்னுதான் தெரியலே..."
"உறவுகளுக்கு முதல் படியா இரண்டு தரப்பிலேயும் நம்பிக்கையை வளர்க்கணும். அது தான் 'டிப்ளமஸி' வசந்தி!" என்று புன்முறுவலோடு சொன்னார் வேணு மாமா.
"ரொம்ப அவசரப்பட்டு எந்த விஷயத்தையும் நேருக்கு நேராகச் சொல்லிக் காரியத்தைக் கெடுத்துடாதே அம்மா! காமு அவ ஏற்கனவே நெனச்சுண்டிருக்கிற படியே கொஞ்ச நாளைக்கு நெனைச்சுண்டிருக்கட்டும். உடனடியா ஆத்திலே ஒரு கலகம் வேண்டாம். விஷயத்தை அவளே மெல்ல மெல்லப் புரிஞ்சுக்க விடு! புரியறதுலே எத்தனைக்கெத்தனைத் தாமசமாறதோ அத்தனைக்கத்தனை நாம் கொஞ்ச நாள் நிம்மதியாயிருக்கலாம்" என்றார் சர்மா.
வேணு மாமாவும் வசந்தியும் எத்தனை சுபாவமாக ரவி கமலி உறவு பற்றிய உரையாடலைப் பரிமாறிக் கொண்டார்களோ அத்தனை சகஜமாகவோ சுபாவமாகவோ சர்மாவால் அதைப் பற்றிப் பேசவோ நினைக்கவோ முடியவில்லை. உண்மையில் அதைப் பற்றிக் கவலையும், பயமும் எண்ணற்ற தயக்கங்களும் அவருக்கு இருந்தன.
அன்று இரவு ரவியையும், கமலியையும் தம் வீட்டில் டின்னருக்கு அழைத்தார் வேணு மாமா.
"நீரும் வரலாமே...? வந்தால் என்ன?" என்று வேணு மாமா சர்மாவை அழைத்தபோது அவர் வருவார் என்பதை நம்பி அழைப்பதாகத் தோன்றவில்லை. வரமாட்டார் என்ற முடிவுடன் ஒப்புக்கு அழைத்ததாகவே தோன்றியது.
"உமக்கென்ன? எஸ்டேட் ஒனர். உங்க சிநேகிதாள் எல்லாரையும் கூப்பிடுவேள். 'காஸ்மாபாலிடனா' இருக்கும். நான் வைதீகன். எனக்கு ஒத்துக்காது! என்னை விட்டுடுங்கோ... ரவியையும் கமலியையும் நீங்க கூப்பிடறது தான் முறை. அவாதானே இப்போ ஊர்லேருந்து வந்திருக்கா... வேணும்னா எங்காத்துப் பிரதிநிதிகளாகப் பாருவையும் குமாரையும் அவா கூட அனுப்பி வைக்கிறேன்" என்று பதில் வந்தது சர்மாவிடமிருந்து.
ரவி மாடியில் தூங்கிக் கொண்டிருந்ததால் அவன் எழுந்திருந்ததும் சொல்லி அழைத்து விட்டுப் போகலாம் என்று ரவிக்காகக் காத்திருந்தார் வேணுமாமா.
அப்போது தெருவில் மிராசுதார்களுக்கே உரிய மிடுக்கு நடையும் வலது கையில் வெள்ளிப் பூண் பிடித்த வாக்கிங் ஸ்டிக்கும் வாயில் புகையிலைச் சாறுமாக நாலு விவசாயிகள் பயபக்தியோடு கைகட்டி வாய் புதைத்துப் பின் தொடர நடந்து வந்து கொண்டிருந்தார் ஒரு கட்டுக் குடுமிக்கார மனிதர். சரிகைக்கரை வேஷ்டி, மார்பு மறைய போர்த்தியிருந்த மேல் துண்டிலும் சரிகைக்கரை மின்னியது. நெற்றியில் சந்தனப் பொட்டுப் பளபளத்தது.
"என்ன ஓய் சர்மா. உம்ம பிள்ளை ஊர்லேருந்து வண்டிருக்கானாமே?"
புகையிலைச் சாற்றைக் கடைவாயில் ஒதுக்கியதில் பேச்சு வார்த்தை குழறியது.
"ஆமாம்! வாங்கோ சீமாவையர்வாள்!" என்று எழுந்து நின்று வரவேற்றார் சர்மா. ஆனால் வேணுமாமா எழுந்திருக்கவோ, வரவேற்கவோ, முகமன் வார்த்தைகள் கூறவோ செய்யாமல் வேறு திசையில் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் முகம் வெறுப்பை உமிழ்ந்தது. சர்மா அந்த மனிதரை வரவேற்று எழுந்து மரியாதை செய்ததே வேணுமாமாவுக்கு அப்போது அவ்வளவாகப் பிடிக்கவில்லை என்று தெரிந்தது.
"இல்லே... அவசரமாப் போயிண்டிருக்கேன். அப்படமா வந்து பார்க்கறேன்..." என்று வேணு மாமா சர்மாவோடு அமர்ந்திருப்பதைப் பார்த்தே ஒதுங்கினாற் போலத் தம்மைக் கத்தரித்துக் கொண்டு விலகிப் போய் விட்டார் சீமாவையர்.
"அயோக்கியன்! எந்த வயல் வரப்புச் சண்டைக்கு யாரைத் தூண்டிவிடப் போயிண்டிருக்கானோ?" என்று சர்மாவின் காதில் கேட்கும்படியாகவே முணுமுணுத்தார் வேணுமாமா. சர்மா இதற்குப் பதில் எதுவும் சொல்லவில்லை.
தூக்கத்திலிருந்து ரவி எழுந்ததும் அவனையும் கமலியையும் இரவு டின்னருக்கு அழைத்துவிட்டு அது சம்பந்தமான ஏற்பாடுகளைக் கவனிக்க வேணுமாமாவோடு வசந்தியும் தங்கள் வீட்டுக்குப் புறப்பட்டாள்.
*****
இரவு விருந்துக்குப் பத்து இருபது முக்கியமாகவர்கள் வந்திருந்தார்கள். 'கமலி'தான் சென்டர் ஆஃப் அட்ராக்ஷனாக இருந்தாள். பெரும்பாலோர் எஸ்டேட் உரிமையாளர்கள்.
கமலிக்கு எதிரே டேபிளில் வந்தமர்ந்திருந்த வேணுமாமாவின் நண்பர் சாரங்கபாணி நாயுடுவை அவளுக்கு ரவி அறிமுகப்படுத்தி வைத்தவுடன் அவர் பட்டையாக நெற்றியில் அணிந்திருந்த நாமத்தைப் பார்த்து, இவர் வைஷ்ணவராக இருக்கக் கூடும் என்று கருதிக்கொண்டு 'அஷ்டாட்சர மந்திரம்' பற்றியும் இராமாநுஜர் பற்றியும் அவரிடம் ஏதோ கேட்டாள் கமலி.
நாயுடுவுக்கு அவளுக்குப் புரியும்படி அதை விளக்கிச் சொல்ல வராததால் பேச்சை மாற்றிப் பாரிஸிலுள்ள 'நைட் கிளப்'களைப் பற்றி அவளிடம் விசாரித்தார் அவர்.
அஷ்டாட்சர மந்திரம் பற்றி அறிய ஆவல் காட்டும் பிரெஞ்சு யுவதியிடம் நைட் கிளப் பற்றி விசாரிக்கும் தென்னிந்திய நடுத்தரவயது வைஷ்ணவரைப் பார்த்து அந்த முரண்பாட்டைப் புன்னகை பூத்த முகத்தோடு தனக்கு உள்ளேயே இரசித்துக் கொண்டிருந்தான் ரவி.
-------------
அத்தியாயம் 9
ஸ்ரீ மடத்தின் சங்கரமங்கலத்து முத்திராதிகாரியான விசுவேசுவர சர்மாவின் பொறுப்பில் இருந்த முக்கியப் பணிகளில் ஒன்று மடத்துக்குச் சொந்தமான நிலங்களை யும் தோப்புத் துரவுகளையும் அவ்வப்போது குத்தகைக்கு ஒப்படைப்பது. அன்று மாலை மடத்து நிலங்களைக் குத்தகைக்கு எடுப்பவர்களின் கூட்டம் ஒன்று இருந்தது. அந்தக் கூட்டத்திலோ-இயலாவிட்டால் அடுத்த கூட்டத்திலோ அவ்வருடக் குத்தகைகள் முடிவாக வேண்டும். பெரும்பாலும் ஒவ்வோராண்டும் மேற்கே. மலையில் சாரல் பிடிக்கத் தொடங்கும்போது அவ்வூரில் குத்தகைகள் எல்லாம் தொகை பேசி முடிவாகி விடுவது வழக்கம்.
தன் பிள்ளை ரவி ஊரிலிருந்து வந்ததில் அன்று மாலை குத்தகைதாரர்களின் கூட்டம் இருப்பது அவருக்கு மறந்து போயிருந்தது.
ரவியும் கமலியும் அவர்களோடு பார்வதியும் குமாரும் வேனுமாமா வீட்டு விருந்துக்குப் புறப்பட்டுப் போவதற்கு முன் பூரீ மடம் ஆபீஸ் கிளார்க் வந்து நல்ல" வேளையாக அதை ஞாபகப்படுத்திவிட்டுப் போனான். மடத்திலிருந்து அவர் பெயருக்கு அன்று தபாலில் வந்திருந்த நாலைந்து கடிதங்களையும் அப்போது கிளார்க் அவரிடம் கொடுத்திருந்தான்.
அன்று நிலங்களைக் குத்தகைக்கு எடுப்போர் கூட்டம் இருப்பது ஞாபகம் வந்த பின்பே நாலைந்து விவசாயிகள் பின் தொடரச் சீமாவையர் தெருவில் மிடுக்காக நடந்து போன காட்சி மீண்டும் சர்மாவுக்கு நினைவு வந்தது.
இந்தக் கூட்டத்துக்கும் அந்தக் காட்சிக்கும் தொடர்பு இருக்கவேண்டும் என்று அவர் மனம் நினைத்தது. சோழியன் குடுமி சும்மா ஆடாது' என்பது போல் சீமா வையர் காரியமில்லாமல் "தெருவில் ஆள சேர்த்துக் கொண்டு போகமாட்டார் என்றும் புரிந்தது.
கிராமங்களில் பெரும்பாலும் இம்மாதிரிக் கூட்டங் கள் இரவு எட்டு மணிக்குமேல் தொடங்கிப் பத்து மணி பதினோரு மணி வரையில் நடப்பதுண்டு. எல்லா விவசாயிகளும் வந்து கலந்துகொள்ள அந்த நேரம் தான் வசதியாயிருக்கும். சங்கரமங்கலமோ நூற்றுக்கு நூறு சதவீதம் விவசாயத்தைத் தொழிலாகக் கொண்ட கிராமம், வான் பொய்த்தாலும் தான் பொய்யாத வளத்தை உடைய ஜீவநதியாகிய அகஸ்திய நதியின் தலைக்கால் பாசனத்தில் அமைந்திருந்ததால் மண்ணில் பொன் கொழித்தது. அதிலும் மடத்து நிலங்கள். எல்லாம் விளைச்சலுக்குப் புகழ் பெற்ற அகஸ்திய நதி யின் நல்ல கரைப் பகுதிகளில் இருந்தன. மடத்தின் பிரதானமான சொத்துக்களாகிய நல்ல நிலங்கள், தோப்புத் துரவுகள், இரண்டு மூன்று பசு மடங்கள், விவாகமண்டபம், வீடுகள், காலி மனைகள் எல்லாம் அந்த ஊரில்தான் இருந்தன.
இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னால்வரை மடத்தின் வைதிக விஷ்யங்களுக்கு மட்டுமே சர்மா பொறுப்பேற்றிருந்தார். நிலம் குத்தகை வருமானம், வீடு விவாக மண்டப வாடகைகள், வரவு செலவு போன்ற லெளகீக ஏற்பாடுகளைச் சீமாவையர்தான் கவனித்து வந்தார். குத்தகைப் பணவரவு செலவுகளில் ஊழலும், கையாடலும் பெருகியபின், நிறையப் புகார் கள் வரவே பின்னால் அந்தப் பொறுப்பும் சர்மா வுக்கே வந்து சேர்ந்தது. •
சீமாவையரை விரோதித்துக் கொள்ளச் சர்மா பயந் தார். ஆனாலும் வேறு வழி இல்லை. சுவாமிகளே சர்மாவை அழைத்து, ஊர் நன்மைக்காகவும், பூரீ மடத் தின் நன்மைக்காகவும் அந்தப் பொறுப்பை அவர் ஏற்க வேண்டும் என்றார். சர்மாவால் அதைத் தட்டிச் சொல்ல முடியவில்லை.
அதற்குப் பின்னால் சர்மாவும் சீமாவையரும் பேசிக் கொள்வது, ஒருவருக்கொருவர் சேஷமலாபம் விசாரித்துக் கொள்வது எல்லாம் பழையபடி தொடர்ந்தாலும் சர்மா வின் மேல் சீமாவையர் உள்ளூற ஒரு வன்மம் வைத்துக் கொண்டு காத்திருந்தார். உள்ளே பகையொடுங்கிய புற மலர்ச்சிகளாலும் புறச் சிரிப்புக்களாலும் அவர் சர்மா விடம் ஏமாற்றிப் போலியாகப் பழகி வந்தார்.
ஒரு யோக்கியன் போனால் போகிறதென்று அயோக்கினைச் சகித்துக் கொள்ளவும் மன்னிக்கவும் கூடத் தயாராக இருப்பான். ஆனால் கடைந்தெடுத்த ஒர் அயோக்கியன் ஒரு போதும் தன்னருகிலுள்ள யோக் கியனைச் சகித்துக் கொள்ளவோ, மன்னிக்கவோ தயாராக இருக்கமாட்டான். காரணம் யோக்கியதை உள்ளவனை அளவு கோலாகக் கொண்டுதான் எல்லா இடங்களிலும் எது அயோக்கித்தனம் என்பதே கண்டு பிடிக்கப் படுகிறது. ஆகவே அயோக்கியத்தனத்தைக் கண்டு பிடிக்க உதவி செய்கிற ஒவ்வொரு யோக்கியனும் அந்த விதத்தில் அயோக்கியர்களுக்கு இடையூறு ஆகிறான். சீமாவை யருக்கு அப்படி ஒர் இடையூறாகச் சங்கர மங்கலத்தில் வாய்த்திருந்தார் விசி வேசுவர சர்மா. யாரையும் எதிரி யாகப் பாவிக்காத சாத்துவீக குணம் இயல்பாகவே இருந்ததால் சர்மா- சீமாவையரிடம் கூட மரியாதை யாகவும், பண்பாகவும் பழகி வந்தார். வேணுமாமா போன்றவர்கள் சிறிதும் தாட்சண்யமில்லாமல் வெறுத்து ஒதுக்கிய சீமாவையர் போன்றவர்களிடமும் சர்மாவால் வித்தியாசமில்லாமல் பழக முடிந்ததென்றால் கல்வி யாலும் ஞானத்தாலும் வெறுப்பும், குரோதமும் என்ன வென்றே அறியாத ஒருவகை மனப்பக்குவம் அவருக்கு வந்திருந்ததுதான் காரணம்.
சீமா வையர் தெருவில் ஆட்கள் பின் தொடர நடந்து சென்றதைப் பற்றி யோசித்த சர்மா மடத்துக் குமாஸ்தா கொடுத்துவிட்டுச் சென்றிருந்த கடிதங்களை ஒவ்வொன் றாகப் பிரித்துப் படிக்கத் தொடங்கினார்.
முதல் கடிதமே இறைமுடிமணி அவரிடம் வந்து வாட கைக்குக் கேட்டுவிட்டுப் போயிருந்த வடக்குத் தெருவி லுள்ள மடத்துக்குச் சொந்தமான காலிமனையைப் பற்றியதாக இருந்தது.
'ஒழுங்காக வாடகை தரக்கூடிய யோக்கியமான" பார்ட்டிக்கு அந்த இடத்தைச் சர்மிாவாகப் பார்த்து வாடகைக்கு விட்டு விடலாம்" என்று பூரீ மடம் மானேஜர் பதில் எழுதியிருந்தார். இரண்டாவது கடிதத்தில் நிலங் களைக் குத்தகைக்கு அடைக்கும்போது பெரிய பணக். காரர்களிடமும் வசதியுள்ள மிராசுதார்களிடமும் அடைத்து விடாமல் பூரீமடத்துக்கு நாணயமாக நடந்து கொள்ளக் கூடிய உழைக்கும் திறனுள்ள ஏழை விவசாயி களுக்குப் பயன்படுமாறு பகிர்ந்து அடைப்பது நல்லது என்று சுவாமிகளே அபிப்பிராயப்-படுவதாகக் கடிதத்தில் எழுதியிருந்தது. சில ஏழைகளின் முகத்தைக் 'காட்டி. அவர்களுக்குப் பண உதவி செய்து அவர்கள் பெயரில் அவ்வூர் மிராசுதார்களே பெரும்பாலான நிலங்களைக் குத்தகைக்கு எடுப்பதாக மடத்துக்கு வந்திருந்த புகார்க். கடிதங்கள் இரண்டொன்றும் இணைக்கப்பட்டிருந்தன.
அடுத்த கடிதம் சுற்று வட்டாரத்துப் பள்ளிக்கூடங் களில் பயிலும் மாணவ மாணவிகளுக்குப் பகவத்கீதை, திருக்குறள் பகுதிகளில் மனப்பாடப் போட்டி வைத்துப் பரிசுகள் கொடுக்க வேண்டும் என்ற சுவாமிகளின் ஆக்ஞையை விவரமாகத் தெரிவித்தது.
மடத்திலிருந்து வந்த நான்காவது கடிதத்தில் சமஸ் கிருத வேத பாடசாலை பற்றிய சில விஷயங்களை விசாரித்திருந்தது. மற்றொரு கடிதத்தில் அகஸ்திய நதிக் கரையிலுள்ள கிராமங்களில் ஜிர்னோத்தாரணம் செய்ய வேண்டிய நிலையில் பாழடைந்திருக்கும் எல்லாக் கோவில்களைப் பற்றிய விவரங்களையும் உடனே திரட்டி அனுப்புமாறு கோரியிருந்தார் பூரீ மடம் மேனேஜர் . சுவாமிகளின் ஆக்ஞைப்படி அக்கடிதம் எழுதப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
கடிதங்களை வீட்டுக்குள் கொண்டுபோய் வைத்து விட்டுச் சந்தியா வந்தனத்துக்காக ஆற்றங்கரைக்குப் புறப்பட்டார் சர்மா. ஆறறங்கரையில் சந்தியா வந்தன ஜபதபங்களை முடித்துக்கொண்டு வீடு திரும்புகிற வழியில்தான் இறைமுடிமணியின் விற குக் க ைட இருந்தது.
கடையில் கூட்டமில்லை. அநேகமாகக் 556) -- மூடுகிற நேரமாயிருக்க வேண்டுமென்று தோன்றியது. இறைமுடிமணியின் இயக்க சம்பந்தமான ஆட்கள் சிலர் சுற்றி உட்கார்ந்து அவரிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். கடை வாசலில் விசுவேசுவர சர்மாவைப் பார்த்ததும் இறைமுடிமணியே எழுந்திருந்து எதிர் கொண்டு வந்து விட்டார்.
“என்ன சமாசாரம் விசுவேசுவரன் ? சொல்லியனுப்பி யிருந்தா நானே வந்திருப்பேனே ? நீ ஏன் இங்கே சிரமப் பட்டு அலையனும் ?”
"இதுக்குன்னு வரலே தேசிகாமணி 1 ஆத்தங் கரையி லேருந்து திரும்பிப் போற வழியிலே வந்தேன். நீ வாட கைக்குக் கேட்டியே அந்த வடக்குத்தெரு கா லி மனை. அது விஷயமா மடத்திலேருந்து பதில் வந்துடுத்து."
'என்னான்னு வந்திருக்கு?"
"ஒழுங்கா வாடகை கொடுக்கிற பார்ட்டி யாரா யிருந்தாலும் நானாப் பார்த்து வாடகைக்கு விட்டுக்க லாம்னு எழுதியிருக்கா. ”
"நான் ஒழுங்கா வாடகை கொடுக்கிற பார்ட்டீன்னு நீ நம்புநியா இல்லையா ?”
- இறைமுடி மணி சிரித்தபடியே இப்படிக் கேட்டார்.
"நம்பிக்கைக்கென்ன கொறைச்சல் ? நாளைக்கி வாயேன் பேசி முடிவு பண்ணிப்போம்" என்று சொல்லிய படியே புறப்பட இருந்த சர்மாவிடம் “சரி நாளைக்கி வரேன். முடிவு பண்ணிக்கலாம். ஒரு நிமிஷம் நில்லு ! உங்கிட்ட வேற ஒரு முக்கியமான சமாசாரம் காதிலே போட்டு வைக்கணும்" என்றார் இறைமுடி மணி.
“என்ன, சொல்லேன்" என்ற சர்மாவுக்குப் பதில் கூறாமல் கடையின் உட்புறம் உட்கார்ந்திருந்தவர்களின் பக்கம் திரும்பி "இந்தா மலர்க்கொடி, இங்கே வாம்மா” என்று ஒரு பெண்ணை நோக்கிக் குரல் கொடுத்தார் இறைமுடிமணி.
கருநிற வாயில் புடவை அணிந்த ஓர் இளம்பெண் எழுந்திருந்து வந்தாள். மாநிறமாயிருந்தாலும் கட்டழ கோடிருந்த அந்தப் பெண் அருகே வந்ததும்,
“இது மலர்க்கொடி ! இங்கே புனித அந்தோணியார் ஆரம்பப் பள்ளியிலே டீச்சரா வேலை பார்க்குது. நம்ம இயக்கத்திலே ரொம்ப ஈடுபாடுள்ள பொண்ணு. பதினெட்டு வருசத்துக்கு முந்தி நம்மூர் ஆற்றங்கரை மைதானத்திலே முதல் சீர்திருத்த மாநாடு நடந்திச்சே, அப்ப ஒரு வயசுக் குழந்தை இது. ராக்காயின்னு முன்னாடியே வைச்சிருந்த பேரை மாத்தி "ஐயா" கிட்டக் கொடுத்து வேறே பேரு வையுங்கன்னாங்க. ஐயா அப்பத்தான் இந்தப் பேரைச் சூட்டினாரு போகட்டும். அதெல்லாம் பழைய சமாசாரம். இப்போ நான் சொல்ல வந்தது வேறே கதை. அந்தி சந்தியிலே ஸ்கூல் விட்டு வீட்டுக்குத் திரும்பி நடந்து போறப்ப நடு வழிலே உங்க சீமாவையரு மாந்தோப்பு இருக்கு ; அந்த மாந்தோப்பு வழியாகத்தான் திரும்பிப்ப்ோகுது இது. ஒரு நா-ரெண்டு நா-வழி மறிச்சு வம்பு பண்ணி னாராம். இன்னொரு நா கையைப் புடிக்க வந்தாராம். ஒடித் தப்பியிருக்கு. நீ கொஞ்சம் அந்த ஆளைக் கண்டிச்சு வையி. நாங்க இயக்க ரீதியா இதைப் பெரிசு படுத்த முடியும். வேண்டாம்னு பார்க்கிறேன். எதுக்கும் நீ சொல்லிக் கண்டிச்சு வையேன், உன் னா லே. முடியும்னா." -
"தேசிகாமணி! அவன் பெரிய துஷ்டன் ! நான் சொல்லித் திருந்தறவன் இல்லே, ஊர்ல பெரிய மனுஷன், பணக்காரன். பணமுள்ளவனா இருந்தாலும் குண" வானா இருந்தா யோக்கியதை இருக்கும். இன்னிக்குக்கூட சாயரட்சை தெருவிலே நாலு ஆள் சகிதம் ஜரிகை அங்க வஸ்திரம் பளபளக்க மிடுக்கு நடை நடந்து போறப்போ * சீமாவையர் என் பிள்ளை ஊர்லேயிருந்து வந்தது பற்றி என்னிடம் விசாரிச்சான். நானும் சுமுகமாக இரண்டு வார்த்தை பதில்பேசினேன்.” 'தம்பிவந்தாச்சா ?" 'வந்தாச்சு; நாளை வர்றப்போ நீ பார்த்துப் பேச லாம். வீட்டுக்கு வாயேன்."
"ஏதோ காதல் பிரச்னைன்னு சொன்னியே, அது என்னாச்சு ?"
'பிரச்னையும் கூடவே தம்பியோடப் புறப்பட்டு வந்திருக்கு 1 வந்து பாரேன்."
“ஏன் அப்படிச் சொல்றே ? அவன் பிரச்னையில் வீணாக நீ தலையிட்டு அதிகாரம் பண்ணாதே." -
“தலையிடறதோ அதிகாரம் பண்றதோ எனக்குப் பழக்கமில்லே தேசிகாமணி !”
"சரி. நேரே வந்து தம்பிகிட்டப் பேசிக்கிறேன், நீ."
சர்மா விடை பெற்றுக் கொண்டு அங்கிருந்து புறப் பட்டார். இறைமுடிமணியிடம் சீமாவையரைப் பற்றிக் கேள்விப்பட்ட சம்பவம் போலப் பல சம்பவங்கள் பல புகார்கள் பல இடங்களிலிருந்து ட ல முறை அவர் காதுக்கு எட்டியிருந்தன. தேக்கு மரத்தில் செதுக்கிய சிலை போல் கவர்ச்சியாயிருந்த அந்தப் பெண் மலர்க் கொடியிடம் சீமாவையர் தப்பாக நடந்து கொண்டிருப் பாரா இல்லையா என்று சர்மா ஒரு சிறிதும் சந்தேகப் படவே இல்லை. சீமாவையர் போன்ற கோவில் காளை பேய்வதை ஒத்த தான்தோன்றித் தனமான மேய்ச்சல் குணமும் திமிருமுள்ளவர்கள் சிலரை அவர் அறிவார். அவர்களால் கிராமத்தின் பெயரே கெட்டுக் கொண்டிருந்தது. சில இடங்களில் அவமானப்பட்ட பின்பும் அவர்களுக்குப் புத்தி வந்ததாகத் தெரியவில்லை. இம்மாதிரிக் காரணங்களால் தான் மடத்துப் பொறுப்புக் கள் சீமாவையரிடமிருந்து விரைந்து பறிக்கப்பட்டன. ஆனால் சீமாவையரோ தான் தவறுகள் செய்ததால் தான் அந்தப் பொறுப்புக்கள் தன்னிடமிருந்து பறிக்கப் பட்டன என்று உணர்ந்ததாகத் தெரியவில்லை. தனக்கு எதிராக விசுவேசுவர சர்மா சதி பண்ணி மடத்து நிர்வாகத்தைச் சரிக்கட்டி அவர்கள் தயவில் அதை அடைந்திருப்பதாகவே கற்பனை செய்து கொண்டிருந்தார்.
“மனிதன் சில வேளைகளில் காமுகனாகவும் இருக்க லாம். ஆனால் எல்லா வேளைகளிலும் காமுகனாகவே திரியும் ஒரு மிருகம் எப்படி மனிதனா இருக்க முடியும் ?” என்று பொருள்படும் ஒரு பழைய நீதி ஸ்லோகம் உண்டு இப்போது அது சர்மாவுக்கு நினைவு வந்தது. சீமாவையர் போன்றவர்கள் மேல் த ட் டுக் களி ல் தோன்றினால் அவர்களைத் திருத்த இறைமுடிமணி களும் தோன்றத்தான் வேண்டும் என்று இப்போது சர்மாவே கோபமாக நினைத்தார். கோவில் காளைகளை யாராவது பிடித்துப் பவுண் டி ல் அடைக்கத்தான் வேண்டும் என்றும் தோன்றியது.
பொதுவாக சர்மா விளக்கு வைத்த பின் சமைத்த பண்டம் எதுவும் சாப்பிடுவது இல்லை. கறந்த பசுவின் பாலும் இரண்டு வாழைப் பழமுமே அவரது இரவு உணவு, வீடு சென்று அந்த "இரவு உணவை முடித்துக் கொண்டு குத்தகைதாரர் கூட்டம் நடக்க இருந்த பூரீ மடத்தின் "விவாக மண்டபம்' கட்டிடத்துக்குப் புறப்பட்டார் அவர். கடிதங்களையும் மட்த்துக்குக்குக் குத்தகை விவரங்களடங்கிய பெரிய பைண்டு நோட்டுப் புத்தகம் கையில் போட்டுக் கையில் எடுத்துக் கொண்டிருந்தார் அவர்.
போகிற வழியில் வேணுமாமாவின் வீட்டிலிருந்த கலகலப்பையும் விளக்கொளி அலங்காரத்தையும், வாசலில் நின்ற கார்களையும் பார்த்தால் விருந்து முடிந்து ரவியும் கமலி முதலியவர்களும் வீடு திரும்ப இரவு பதினொரு மணிக்கு மேலேகூட ஆகலாம் என்று தோன்றியது.
ஸ்ரீமடம் கல்யாண மண்டபத்திற்கு அருகே தெருவில் திரும்பி அவர் செல்லும் திசைக்கு எதிர்த் திசையிலிருந்து வந்து கொண்டிருந்த ஒரு விவசாயி மேலாடையை இடுப்புக்கு இறக்கியபடி, பணிவாக, “சாமி, குத்தகைக் கூட்டம் இன்னிக்கு இல்லேன்னாங்களே….. பெறவு எண்ணைக்கு வரணும்” என்று வினவினான்.
யார் சொன்னா அப்படி, கூட்டம் இன்னிக்குத் தான் நடக்கப் போவுது, வா” என்றார் அவர்.
சீமாவையரும் அவரு ஆளுங்களும் இன்னிக்கு இல்லேன்னு சொன்னாங்களே, சாமி”
“ நீ பேசாம எங்கூட வா சொல்றேன்” சர்மா அந்த விவசாயி பின் தொடரக் கல்யாணமண்டபத்துக்குள் நுழைந்தார். வழக்கமாக்க் குத்தகைக் கூட்ட்த்துக்கு வரும் திரளான் விவசாயிகள் யாரையும் அப்போது அங்கே காணவில்லை. கல்யாணக் கூட்த்தில் சீமாவையரும் அவருடைய கையாட்களாகிய நாலைந்து விவசாயிகளும் நடுவாவ அமர்ந்திருந்தனர்.
சற்றுப்புறத்துப் பதினெட்டுக் கிராமங்களிலிருந்தும் விவசாயிகள் வந்து ஆர்வத்தோடு குத்தகை கேட்கும் வளமான மடத்து நிலங்களைக் கேட்க அன்று யாருமே வரவில்லை என்பது மிகவும் ஆச்சரியமாகவும் நம்ப முடியாமலும் இருந்தது.,
மறவன் தாங்கல், நத்தம்பாடி, ஆனந்தக் கோட்டை, அலங்கார சமுத்திரம் ஆகிய சுற்றுப்புறத்து முக்கியமான ஊர்களிலிருந்தும் கூட யாரையும் காணவில்லை.
"வாங்கோ ! சர்மாவுக்கு அதிக வேலையில்லே. கொஞ்சம் பேர்தான் வந்திருக்கா. குத்தகை சீக்கிரம் முடிஞ்சிடும்" என்று தம்முடைய பினாமிகளே அவ்வளவு நிலத்தையும் மலிவாகக் குத்தகைக்குப் பிடித்து விடலாம் என்ற பகற்கனவுடன் உற்சாகமாக வரவேற்றார் அங்கு அமர்ந்திருந்த சீமாவையர். சர்மாவுக்கு அவருடைய குது புரிந்தது.
"நீங்க என்னை ரொம்ப கூடிமிக்கனும் சீமாவையர் வாள்! பூரீமடத்திலிருந்து எனக்கு வந்திருக்கிற ஆக்ஞை யிலே பதினெட்டு சுற்றுப்புற கிராமத்து ஜனங்களையும் வச்சுண்டுதான் நெலங்களைக் குத்தகைக்கு விடணும்னு ஸ்பஷ்டமா எழுதியிருக்கு."
"அப்போ இங்கே வந்திருக்கிற ரெண்டு மூணு கிராமத்து மனுஷாளை அவமானப்படுத்தித் திருப்பி அனுப்பறது மட்டும் என்ன முறை ?"
"இதிலே மான அவமானம் ஒண்ணும் இருக்கிறதா எனக்குத் தோணலை; பூரீமடத்து உத்தரவை நான் மீறமுடியாது. அதுக்கு நான் கட்டுப்பட்டா கணும்."
"எங்க நாளிலே இதெல்லாம் பார்க்கறதில்லை. நாள் கடத்தாம குத்தகைக்குச் சீக்கிரம் விட்டுடுவோம்."
சர்மா இதற்குப் பதில் சொல்லவில்லை. குமாஸ்தா வைக் கூப்பிட்டு, அடுத்த வாரம் இதே கிழமை இதே இடத்தில் இதே நேரத்தில் பூரீமடம் குத்ககைக்குக் கூட்டம் கண்டிப்பாக நடக்கும் என்று பதினெட்டு கிராமங்களுக்கும் தண்டோராப் போட்டுச் சொல்லி ஏற்பாடு பண்ணிவிடுமாறு கூறிவிட்டு வீடு திரும்பி விட்டார் சர்மா.
அவர் திரும்பியபோது காமாட்சியம்மாள் முத்து மீனாட்சிப் பாட்டியிடம் திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாள். பாட்டியின் விசாரணை கமலியைப் பற்றி இருந்ததைச் சர்மாவே தம் செவிகளால் கேட்ட வாறுதான் வீட்டுப் படியேறினார்.
காமாட்சியம்மாள் பாட்டிக்குக் கமலியைப் பற்றி என்ன சொல்ல இருந்தாளோ தெரியவில்லை ஆனால் அவள் பதில் சொல்வதற்குள் சர்மா படியேறி வந்து விட்டார்.
"அவாள்ளாம் இன்னும் வரலையா ?” “எவாளைக் கேக்கறேள்?" “பார்ட்டிக்குப் போனவாளைப் பத்தித்தான் கேட்கிறேன்."
“வரலை. இன்னும் நிறைய நாழியாகாதோ ? இத்தனை சீக்கிரமா எங்கே வரப்போறா ?”
சர்மாவைப் பார்த்ததும் பாட்டி எழுந்து போய்ச் சேர்ந்தாள். அரைமணி நேரத்தில் பார்வதியும் குமாரும் மட்டுமே வேணுமாமா வீட்டிலிருந்து திரும்பி வநதாாகள்,
‘ஏண்டா ? அவாள்ளாம் எங்கே ?வரலையா ?” "இல்லேப்பா பார்ட்டியிலே அந்த எஸ்டேட் ஒனர் சாரங்கபாணி நாயுடு வந்திருந்தார். அவர் திடீர்னு பார்ட்டி முடிஞ்சதும் அண்ணாவையும் அவன்கூட வந்திருந்தவாளையும் "வாங்களேன்! மலையிலேநம்ம எஸ்டேட் கெஸ்ட் ஹவுசிலே போய்த் தங்கிட்டுக் கார்த். தாலே திரும்பிடலாம்"னு கூப்பிட்டார். உடனே, நைஸ் ஜடியா'ன்னு அண்ணாவும் கமலியும் வேணு மாமாவும் வசந்தியுமா ரெண்டு கார்லே மலைக்குப் புொறப்பட்டுப் போயிட்டா."
"யாரு ? நாமக்கார நாயுடுதானே ?” "அவரே தாம்பா..." குமார் சொல்லியவற்றைச் சரியாகக் காதில் போட்டு கொள்ளாத காமாட்சியம்மாள், "ஏன்னா ? அவாள்ளாம எங்கே?" என்று அப்போதுதான் சர்மாவைக் கேட்டாள். சர்மா, குமார் தனக்குக் கூறிய அதே பதிலை இன்னும் அதிக வால்யூமுக்கு உயர்த்தி அவளிடம் சற்றே இரைந்து விளக்கிக் கூறினார்.
அத்தியாயம் 10
ரவிக்கும் கமலிக்கும் வேணுமாமா வீட்டில் நிகழ்ந்த விருந்து முடியும்போது இரவு பத்து மணிக்கு மேல் இருக்கும். எஸ்டேட் உரிமையாளர் சாரங்கபாணி நாயுடுவிடம் சொல்லி ரவியையும் கமலியையும் மலை மேலுள்ள அவரது பங்களாவில் தங்க அழைக்கும் படி தூண்டியதே வேணு மாமாவும் வசந்தியும் தான். அன்றிரவு இந்த இளம் காதலர்களுக்குச் சுதந்திரமான மகிழ்ச்சியை அளிக்க விரும்பி அவர்கள் இந்த ஏற்பாட்டைச் செய்தார்கள். காமாட்சியம்மாளின் கட்டுப்பாடுகளிலிருந்தும் வைதிகமான வீட்டின் கெடுபிடிகளிலிருந்தும் அந்த ஓர் இரவிலாவது அவர்களுக்கு விடுதலை கிடைக்கட்டுமே என்று எண்ணித்தான் இதை அவர்கள் செய்திருந்தார்கள்.
மலை மேல் வேணு மாமாவுக்கே எஸ்டேட் இருந்தாலும் அந்த எஸ்டேட நான்கு மணி நேரத்துக்கும் அதிகமாகப் பயணம் செய்ய வேண்டிய தொலைவில் இருந்தது. முப்பது முப்பத்தைந்து மைல் தொலைவில் ஒரு மணி அல்லது ஒன்றரைமணி நேரப் பயணத்தில் செல்கிறாற் போல மிக அருகிலேயே மலையில் இருந்தது நாயுடுவின் எஸ்டேட். அதையும் தவிர நாயுடுவின் எஸ்டேட்டுக்கு நடுவில் இருந்த பங்களாவும் விருந்தினர் விடுதியும் சகல வசதிகளும் உள்ளவையாகவும் பெரியதாகவும் இருந்தன. காரணம், நாயுடு எஸ்டேட்டுக்குள்ளேயே குடும்பத்தோடு வசித்து வந்தார். கீழே கிராமத்தில் வசித்து வந்த காரணத்தால் வேணு மாமா தமது எஸ்டேட்டில் போகிற போது வருகிற போது தங்கிக் கொள்ள ஒரு சிறிய விருந்தினர் விடுதி மட்டுமே கட்டியிருந்தார். அதனால் தான் நாயுடுவின் எஸ்டேட் பங்களாவுக்குக் கமலியும் ரவியும் மற்றவர்களும் அன்றிரவு தங்கச் சென்றிருந்தார்கள். ஒரு காரில் நாயுடு, வேணுமாமா, வசந்தி ஆகியோரும் மற்றொரு காரில் ரவி, கமலி ஆகியோருமாக அவர்கள் சங்கரமங்கலத்திலிருந்து புறப்பட்டிருந்தார்கள். காருக்குள் வீசிய குளிர்ந்த காற்றில் கமலி சிறிது தொலைவு செல்வதற்குள்ளேயே கண்ணயர்ந்துவிட்டாள். பகலில் நன்றாகத் தூங்கியிருந்ததால் ரவிக்குத்தான் உறக்கம் வரவில்லை. தன் மேலே சாய்ந்தபடி உறங்கிக் கொண்டிருந்த கமலியின் மேனி நறுமணங்கள் அவன் உள்ளத்தைக் கிளர்ச்சி கொள்ளச் செய்திருந்தன. குடை மல்லிகைப் பூவின் வாசனைக்கும் இளம் பெண்ணின் கூந்தலில் அதை நுகர்வதற்கும் ஏதோ ஒரு கவித்துவம் நிறைந்த இனிய சம்பந்தம் இருக்க வேண்டும் என்று தோன்றியது. சில பூக்களின் வாசனைகள் என்பவை எழுதப்படாத கவிதைகளாயிருந்தன. வார்த்தைகளால் எழுதப்பட்டு விடுகிற கவிதைகளின் அர்த்த வியாபகம் ஓர் எல்லைக்குட்பட்டு விடுகிறது. எழுதப்படாத கவிதைகளின் வார்த்தை வியாபகமும், அர்த்த வியாபகமும் எல்லையற்றவையாக விரிகின்றன. சிறந்த பூக்களின் மனத்தை மயக்கும் சுகந்தங்கள் எல்லாம் எல்லையற்றவையாய் விளங்கின. வாசனைகளுக்கும் ஞாபகங்களுக்கும் மிக நுண்ணிய நெருக்கமான தொடர்பு இருந்தது போல் தோன்றியது.
இப்போது இந்தப் பூக்களின் நறுமணம் ரவியை மிகப் பல ஆண்டுகள் பின்னுக்குக் கொண்டு சென்று நினைக்கச் செய்தது. சங்கரமங்கலத்தின் அதிகாலை மெல்லிருளில் இந்தப் பூக்கள் இதழ் விரிந்து மணம் பரப்பும் வீட்டுத் தோட்டத்தில் கிணற்றடியில் போய்க் குளிர்ந்த தண்ணீரில் பல் துலக்கி முகம் கழுவிக் கொண்டு திண்ணைக்கு வந்து தந்தைக்கு எதிரே அமர்ந்து அமர கோசமும் சப்த மஞ்சரியும், ராமோதந்தமும் வாய் மொழியாகப் பாடம் கேட்டு மனனம் செய்த பிள்ளைப் பருவம் நினைவு வந்தது. அதிகாலை மூன்றரை மணியிலிருந்து ஐந்து மணி வரை இப்படித் தந்தையிடம் வாய்மொழியாகப் பாடம் கேட்டுப் பாடம் கேட்டு மனனம் செய்த படிப்பு அவனுடையது. விடிந்ததும் மற்றப் பிள்ளைகளோடு பள்ளி சென்று முறையான ஆங்கிலப் படிப்பும் தொடர்ந்து நடக்கும்.
அந்நாளில் கிராமத்துக்கு மின்சாரம் வரவில்லை. அந்த வைகறை இருளில் அகல் விளக்கை ஏற்றுவதற்காகும் நேரத்தைக் கூட அவனை வீணாக்க விடமாட்டார் தந்தை. இருளில் அமர்ந்திருந்து கணீரென்ற குரலில் அவர் சொல்லி அவன் திருப்பிச் சொல்லிக் கற்ற கல்வி அது. 'ராமஹ ராமௌ ராமா; ராமம் ராமௌ ராமான் ராமேண ராமாப்யாம்' - என்று ராம சப்தம் நினைவு வந்தால் கூடவே காலைக் குளிரையும், கிணற்றடியையும் குடை மல்லிகைப் பூ வாசனையையும் நினைவு கூர்வது அவனுக்கு ஒரு பழக்கமாக ஆகி விட்டது. அவர் சொல்லி அவன் திருப்பிச் சொல்வது ஒரு கணம் தடைப்பட்டாலும் தந்தை அவன் தூங்கிவிட்டானோ என்று காதைப் பிடித்துத் திருகுவார். அந்த இரு குரல்களும் அக்ரகாரத்துத் திண்ணையில் ஒலிக்கத் தொடங்கிய பின்பே சங்கரமங்கலத்தில் பொழுது புலரும். நிகண்டு சப்தம் எல்லாம் முடிந்த பின் ரகுவம்சம் முதல் காவியங்களெல்லாம் இப்படியே தொடர்ந்து கற்ற நாட்கள் ஒவ்வொன்றாக நினைவு வந்தன. பணிந்து அடங்கிப் பயந்து கற்று வளர்ந்த சங்கரமங்கலத்துப் பிள்ளைப் பருவம், ஓரளவு விடுபட்ட கல்லூரிப் பருவம், முழுச் சுதந்திரமும் உல்லாசமும் நிறைந்த கட்டுப்பாடில்லாத பாரிஸ் நகர வாழ்வு, கமலியின் காதல் எல்லாமே மிக விரைவாக நிகழ்ந்து நிலைத்து விட்டவைபோல் இப்போது மலைச்சாலையில் வேகமாகப் பயணம் செய்யும் இந்த முன்னிரவில் அவன் மனத்துள் தோன்றின. மலைமேல் ஏறும் போதும் சீறிப் பொங்கி எழுந்து வரும் கடலலைகளை எதிர் கொள்ளும் போதும் எவ்வளவு வயதாகியிருந்தாலும் மனிதன் சிறு குழந்தையாகி விடுவதை ரவி உணர்ந்திருக்கிறான். இந்த இரண்டு இடங்களிலும் திடீரென்று மனிதனுக்கு வயது குறைந்து விடுகிறது. மூப்பு விலகி ஓடி விடுகிறது. தளர்ச்சி, தயக்கம் எல்லாம் பறந்து போய் உடனே உற்சாகம் வந்து விடுகிறது. மலையாயிருந்தாலும் உயரப் பறக்கும் விமானமாயிருந்தாலும் மேலே ஏறும் மாடிப் படியாயிருந்தாலும் - மேலே ஏறிச் செல்கிறோம் என்ற உணர்வே ஓர் உற்சாகம் தான்.
கார் தரை மட்டத்திலிருந்து சில ஆயிரம் அடி உயரம் வந்ததும் காற்றுக் காதை அடைத்தது. குளிர் அதிகமாகவே கார்க் கண்ணாடிகளை உயர்த்தி விட்டான் ரவி. கமலி இவன் மேல் துவளும் ஒரு மெல்லிய இதமான பூமாலையைப் போல் சாய்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள்.
நிர்த்தாட்சண்யமான கண்டிப்புடன் தந்தை எழுப்பி விட எழுந்திருந்து அந்த அதிகாலைக்கே உரிய சுகமான தூக்கத்தின் கிறக்கத்தோடு நடந்து போய்ப் பூக்களின் மதுரமான வாசனை நிறைந்த தோட்டக் கிணற்றடியில் சில்லென்ற பச்சைத் தண்ணீரின் குளிர்ச்சியில் தள்ளாடும் தூக்கத்தைக் கரைத்துவிட்டுத் தந்தைக்கு முன் பாடம் கேட்க அமர்ந்த வேளைகளில் இந்த அந்நிய நாடு உத்தியோகம், இப்படி ஓர் அழகிய காதல் எதையுமே அன்று அவன் கனவு கூடக் கண்டதில்லை.
ஆனால் நடந்தவையெல்லாம் - உண்மை என்பதற்கு அடையாளம் போல் கமலி அவன் தோளில் சாய்ந்தபடி தூங்கிக் கொண்டிருந்தாள். வாசனைகளின் உருவகமாய் உறங்கும் இனிமையின் நிசப்த சங்கீதமாய் நிகழ்ந்தவற்றின் நிலையான சாட்சியாய், இதமான தன்மையும் வெப்பமும் இணைந்த அந்த நளினம் அவன் தோளில் கொடியாய்ப் படந்திருந்தது.
இரவு நேரமாக இருந்ததாலும், மலைச் சாலையில் நிறைய 'ஹேர்ப்பின்' வளைவுகள் இருந்ததாலும் பதினொன்றரை மணிக்குத்தான் அவர்கள் மலைமேல் எஸ்டேட் பங்களாவை அடைய முடிந்தது.
தரைமட்டத்திலிருந்து உயரம் அதிகமாயிருந்ததால் எஸ்டேட் பகுதியில் குளிர் மிகுதியாயிருந்தது. வேணு மாமாவும் வசந்தியும் நாயுடுவின் பங்களாவிலேயே தங்கிக் கொண்டார்கள். அந்தப் பங்களாவைவிட இன்னும் சிறிது உயரமாக மேட்டுப் பாங்கான இடத்தில் தனியே ஒரு 'கெஸ்ட் ஹவுஸ்' இருந்தது. அதன் உச்சிப் பகுதியில் போர்ட்டிகோ வரை போவதற்கும் சுற்றி வளைத்துத் தார் ரோடு போடப்பட்டிருந்தது. ஏதோ தேன் நிலவுக்கு வந்தவர்களைத் தனியே கொண்டு போய் விடுவது போல் கமலியையும் ரவியையும் அங்கே கொண்டு போய் விட்டார் நாயுடு. குளிருக்கு இதமாகப் படுக்கை அறையில் 'ஹீட்டர்' இருந்தது. குளியலறை விளக்குகளுக்கான ஸ்விட்சுகள் இருக்குமிடம் எல்லாவற்றையும் நாயுடுவே, ரவிக்கு அடையாளம் காண்பித்து விட்டுச் சென்றார். சிறிது நேரத்தில் பிளாஸ்கில் பாலும் தட்டு நிறையப் பழங்களும் கொண்டு வந்து வைத்து விட்டுப் போனான் ஓர் ஆள்.
கமலிக்குத் தூக்கம் விழித்திருந்ததால் அவள் படுக்கையில் உட்கார்ந்திருந்தாள். ரவி அவள் அருகே வந்து அமர்ந்து கொண்டு மெல்ல அவளைக் கேட்டான்.
"கமலி! மத்தியானம் நீ ரெஸ்ட் எடுத்துக்கலை போலிருக்கே...என்ன பண்ணினே? எப்படிப் பொழுது போச்சு? மாடியிலேயும் உன்னைக் காணலியே?.... கீழே போய் அம்மாட்டப் பேசிட்டிருந்தியா?"
வசந்தியும் தானுமாகப் போய்க் காமாட்சியம்மாளிடம் அம்மானையாடச் சொல்லி இரசித்ததையும் 'ரெக்கார்ட்' செய்ததையும் ரவியிடம் விவரித்தாள் கமலி.
"அம்மா உங்கிட்ட எப்படிப் பழகினா? கோபமில்லாமே சுமுகாமா இருந்தாளா?"
"சுமுகமாய் இருந்ததாகச் சொல்ல முடியாது. அதே சமயத்திலே கோபமாக இருந்ததாகவும் சொல்றத்துக்கில்லே...."
"நீ கொஞ்சம் பொறுமையாயிருந்துதான் அவ மனசை ஜெயிக்கணும். என் அம்மாவின் வயசை ஒத்த தலைமுறையைச் சேர்ந்த இந்தியத் தாய்மார்களுக்கு நெஞ்சழுத்தம் அதிகம். சுலபத்தில் விட்டுக் கொடுக்க மாட்டார்கள்."
"நம் உறவின் நெருக்கத்தைப் பற்றிய சந்தேகமும் பயமும் இன்னும் உங்கள் அம்மாவுக்கு இருக்கும் என்று தோன்றுகிறது! நான் கையில்லாத ரவிக்கை அணிந்தது உங்கம்மாவுக்குப் பிடிக்கவில்லை என்று வசந்தி வந்து சொன்னாள். நான் உடனே கையுள்ள ரவிக்கையை மாற்றிக் கொண்டு தான் அம்மாவுக்கு முன்னால் போனேன்."
"நீ எதை அணிந்து கொள்ளக் கூடாது எதை அணிந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் அம்மா கோபித்துக் கவலைப்படுகிறாள் என்பதே ஒரு நல்ல ஆரம்பம்தான் கமலி! ஒரு பெண் எப்படி உடுக்க வேண்டும், எங்கே நிற்க வேண்டும், எப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் அந்தப் பெண்ணின் காதலனுடைய தாய் கவனிக்கவும் கண்காணிக்கவும், கவலைப் படவும் கோபித்துக் கொள்ளவும் ஆரம்பித்து விட்டாலே அவள் அந்தப் பெண்ணின் மாமியாராகத் தன்னைக் கருதிக் கொள்ளத் தொடங்கிவிட்டாள் என்று தான் அர்த்தம்."
இதைக் கேட்ட கமலி சிரித்தாள். ரவியும் அவளோடு சேர்ந்து வாய்விட்டுச் சிரித்து விட்டான். காமாட்சியம்மாளின் இனிய குரல் பாடும் திறமை, அம்மானையாடும் அழகு எல்லாவற்றையும் வியந்து கூறிவிட்டு, "உங்கள் நாட்டுப் பெண்கள் நுண்கலைக் களஞ்சியங்களாக இருக்கிறார்கள். எனக்கு அவர்கள் மேல் பொறாமையாக இருக்கிறது" என்றாள் கமலி.
"ஒரு பெண் தன்னை விட மூத்த இன்னொரு பெண் மேல் பொறாமைப்பட ஆரம்பித்து விட்டாளென்றால் இந்தியாவில் அவளுக்கு ஒரு மாமியாரின் மருமகளாவும் தகுதி வந்துவிட்டதென்று அர்த்தம்."
அப்போது அவனுடைய பேச்சிலிருந்து ரவி மிகவும் உற்சாகமாக இருக்கிறான் என்று தெரிந்தது. கமலி வேணு மாமா வீட்டு விருந்தில் சந்தித்த சிலர் தன்னிடம் அதிகம் கூச்சப்பட்டு நாணியதையும் வேறு சிலர் சம்பந்தமில்லாதவற்றைப் பேசியதையும், விசாரித்ததையும் பற்றி ரவியிடம் இப்போது குறிப்பிட்டாள்.
"ஒரு பெண்ணிடம் பலர் முன்னிலையில் அளவுக்கதிகமாக வளைந்து நெளிந்து, கூனிக் குறுகிப் பாவனை செய்யும் ஆண்களிடம் அவர்களைத் தனியே சந்திக்கும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் கமலி. தேவைக்கு அதிகமாக நாணப்படும் ஆண் பிள்ளையும் தேவையுள்ள போது தேவையான அளவு கூட நாணப்படாத பெண்ணும் சந்தேகத்துக்கிடமானவர்கள். விருந்தில் நீ சந்தித்த பலர் ஸ்பிளிட் பெர்சனாலிட்டிகள். உன்னைப் போல பல ஐரோப்பியர்கள் 'கிருஷ்ணா கான்ஷியஸ்னெஸ்', 'யோகா' 'ஸேக்ரெட் புக்ஸ் ஆஃப் ஈஸ்ட்' என்று கிழக்கே பார்த்து ஏங்குகிறீர்கள்! இங்கே இந்தத் தேசத்தில் சிலர் தாழ்வு மனப்பான்மையோடு எல்லாமே மேற்கில் தான் இருக்கிறது என்று மேற்கே பார்த்து ஏங்குகிறார்கள். அதனால் தான் நீங்களும் இவர்களும் சந்திக்கும்போது எதிரெதிர்த் திசையில் ஆர்வங்கள் செல்லுகின்றன. நீ நாயுடுவிடம் விசிஷ்டாத்வைதத்தைப்பற்றி விசாரிக்கிறாய். நாயுடு உன்னிடம் 'விடோ'வைப் பற்றியும், 'மௌலின் ரோஜ்' போல் பாரிஸில் 'ஃப்ளோர் ஷோ நடக்குமிடங்களைப் பற்றியும் விசாரிக்கிறார்.
"நீங்கள் சொல்வது சரிதான் என்றாலும் நாயுடுவும் அவரைப் போன்றவர்களுமே முழு இந்தியா ஆகிவிட மாட்டார்களே? இதே இந்தியாவில் தானே வேதங்களையும் காவியங்களையும் ஆகமங்களையும் சாஸ்திரங்களையும் புத்தகத்தைப் புரட்டிப் பார்க்கத் தேவையில்லாமல் மனத்திலேயே பொதிந்து வைத்திருக்கும் உங்கள் தந்தையும், நுண்கலைகளின் இருப்பிடமாக விளங்கும் உங்கள் தாயும் போன்றவர்கள் இருக்கிறார்கள்?"
"என் பெற்றோர்களை நீ அதிகமாகப் புகழ்கிறாய் கமலி!"
"அவர்கள் அதற்குத் தகுதியானவர்கள் தான்! அவர்களிடம் இல்லாததை நான் எதுவும் மிகைப்படுத்திச் சொல்லவில்லை."
சங்கரமங்கலமோ தன் பெற்றோர்களோ கமலியை ஒரு சிறிதும் சலிப்படையச் செய்துவிடவில்லை என்பதை அறிந்து ரவிக்குப் பெருமையாயிருந்தது. பிரெஞ்சுப் பெண்களுக்கே உரிய கவர்ச்சி, ஒழுங்கு, நேர்த்தி, கபடமில்லாமை, தெளிவு, சரசம் - இவையெல்லாவற்றிலும் ஒரு ஸ்மார்ட்னெஸ் இவற்றால்தான் கமலி அவனைக் கவர்ந்திருக்கிறாள். இப்போது தன் பேச்சின் மூலமும் தன்னைப்பற்றிய அவனது கணிப்பை அவள் உறுதிப் படுத்தினாள். நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த பின்பே அன்றிரவு அவர்கள் உறங்கப் போனார்கள்.
அது மலைப்பகுதியாக இருந்ததனால் காலை ஒன்பது மணிக்கு முன் யாருமே அங்கு எழுந்திருக்கவில்லை. விடிந்திருந்தும் எழுந்திருக்க முடியாதபடி மஞ்சு மூட்டமும் குளிரும் அதிகமாயிருந்தன. காலை பத்து மணிக்குத்தான் ரவியும் கமலியும் எழுந்திருந்தார்கள். பல் விளக்கி, முகம் கழுவிய பின் காப்பி அருந்தியதுமே கீழே ஊர் திரும்பத் தயாரானார்கள் அவர்கள். ஆனால் அப்படிச் செய்ய முடியாமல் நாயுடு வந்து குறுக்கே நின்றார். "நல்லாயிருக்குதே! மலைக்கு வந்து உடனேயே திரும்புவாங்க? பக்கத்திலே ஓர் அருவி இருக்குது. சுகமாய்ப் போய்க் குளிக்கலாம் அதுக்கப்புறம் பத்து மைலிலே 'எலிஃபெண்ட் வேலி'ன்னு ஒரு பள்ளத்தாக்கு இருக்குது! யானைங்க கூட்டம் கூட்டமா வரும். தூர நின்னு பைனாகுலர்ல பார்க்கலாம். எல்லாம் பார்த்துப் போட்டு மதியத்துக்கு மேலே கீழே திரும்புங்க போதும்!" என்றார் நாயுடு. வேணுமாமாவும் வசந்தியும் கூட அப்படியே செய்யலாம் என்றார்கள். அருவி நீராடுவதில், ஏலக்காய், தேயிலை, காபி எஸ்டேட்டுகளைச் சுற்றிப் பார்ப்பதில், யானைக் கூட்டத்தைக் காண்பதில் கமலியும் அதிகம் ஆர்வம் காட்டுவதாகத் தெரிந்தது.
மலையில் பகல் பதினொரு மணிக்கு மேல்தான் வெய்யில் தெரிந்தது. வெயில் கொஞ்சம் உச்சிக்கு வந்து உறைக்கத் தொடங்கிய பின்பே அவர்கள் அருவியில் நீராடச் சென்றார்கள். அவர்கள் போகிற வழியில் ஜீப்பை நிறுத்தி ஏலக்காய், தேயிலை, காப்பிச் செடிகளைக் காண்பித்துக் கமலிக்கு எல்லா விவரமும் சொல்லி விளக்கினார் நாயுடு.
அருவியில் பால் வெள்ளமாகத் தெளிந்த தண்ணீர் பெருக்கெடுத்துப் பாய்ந்து கொண்டிருந்தது. இவ்வளவு வேகமாக மேலே இருந்து கொட்டும் நீரில் நின்று குளித்தால் தலை வலிக்காதா என்று வசந்தியிடம் கேட்டாள் கமலி.
வலிக்காமல் இருப்பதற்காகத் தலையில் நிறையத் தேங்காய் எண்ணெய் வைத்துக் கொள்ள வேண்டும் என்றாள் வசந்தி. நிறையத் தேங்காய் எண்ணெயை வழியவிட்டுக் கொண்டு நின்ற வசந்தியைப் பார்த்து "இந்த எண்ணெய் முழுவதும் எப்படி நீங்கும்? குளித்து விட்டுத் திரும்பும் போது முகத்திலெல்லாம் வழியாதா?' என்று சந்தேகப்பட்டுக் கேட்டாள் கமலி.
"கவலைப்படாதே! தலை ஷாம்பூ போட்டுக் குளித்த மாதிரி ஆகிவிடும். வா சொல்கிறேன். நீயும் என்ணெய் தேய்த்துக் கொள்" என்று அவள் தலையில் எண்ணெயை வழிய விட்டாள் வசந்தி. கமலி அதைத் தடுக்கவில்லை.
"இந்த எண்ணெய் இல்லாமே வெறும் உடம்போட அருவி நீரில் போய் நின்னியோ கழுத்தும், பிடரியும் காதுகளும் அந்த வேகத்திலே ரத்தம் கன்றிச் சிவந்து போயிடும்" என்று எச்சரித்தாள் வசந்தி.
முதலில் வேணு மாமா, ரவி, நாயுடு ஆகியோர் அருவி நீராடலை முடித்துக் கரையேறினார்கள். கமலியும் வசந்தியும் விளையாட்டுக் குழந்தைகள் போல அருவி நீரைவிட்டு வெளியேற மனமில்லாமல் நீரில் திளைத்துக் கொண்டிருந்தார்கள்.
நேரமாகவே, ரவியும் வேணு மாமாவும் குரல் கொடுத்தார்கள். பின்பே அவர்கள் கரையேறினார்கள். வசந்தி சொன்னது போல் இப்போது எண்ணெய் முழுவதும் நீங்கித் தன் தலைமயிர் பட்டுப் போல் மென்மையாகவும் மழமழப்புள்ளதாகவும் ஆகியிருப்பதைக் கமலி தொட்டுப் பார்த்து உணர்ந்து வியந்தாள்.
குளித்துக் கரையேறிய நாயுடுவின் தலையில் எண்ணெயே உபயோகித்த மாதிரித் தெரியவில்லை. அவருடைய வழுக்கைத் தலை தேய்த்த செப்புப் பாத்திரம் போல் பளபளவென்று மின்னிக் கொண்டிருந்தது. வேணுமாமா நாயுடுவைக் கேலி பண்ணினார்.
"என்ன நாயுடுகாரு - தலையிலே ஒண்ணுமே இல்லையே? எல்லாம் சுத்தமாப் போயிடுத்துப் போலிருக்கே!"
"வாக்கியம் சரியா அமையலியே மாமா? வேற ஏதோ அர்த்தப்படறாப்பலே இருக்கே? கேட்கிற கேள்வியை எதுக்கும் தெளிவாக் கேட்டுடுங்கோ" என்றான் ரவி.
"கோட்டாப் பண்ணாதீங்க. மயிர் உதிர உதிர அத்தனையும் அநுபவ முதிர்ச்சியாக்கும். உங்களுக்கும் நடுவாக வழுக்கை விழத் தொடங்கிடிச்சு. சீக்கிரம் நம்ம கட்சிக்கு வந்திடுவீங்க! ஜாக்கிரதை" என்று பதிலுக்கு வேணுமாமாவைக் கிண்டல் செய்தார் நாயுடு.
"நாயுடுகாரு! நல்ல வேளையா நம்ம தேசத்திலே இன்னம் இது ஒண்ணுக்குத்தான் தனியா ஒரு கட்சி இல்லே. போற போக்கைப் பார்த்தால் இதுக்கும் கூட யாராவது ஒரு கட்சி தொடங்கிடுவீங்க போலிருக்கே!"
"தொடங்கினா என்ன தப்புன்னேன்?"
"தப்பு ஒண்ணுமில்லே எவ்வளவு மொத்தம் பாபுலேஷனா அவ்வளவு பேரும் ஆளுக்கொரு கட்சி தொடங்கிட்டா அப்புறம் ஓட்டுப் போடறதுக்குன்னு தனியா யார் தான் மீதமிருப்பாங்க? ஓரொரு கட்சிக்கும் ஓரொரு வோட்டுத்தான் விழும். எல்லோரும் இந்நாட்டு மன்னர்னு சொல்றாப்ல எல்லோரும் இந்நாட்டுத் தலைவர்னு ஆயிடும். மக்கள்னு தனியா யாரும் மீதமேயிருக்க மாட்டாங்க."
அருவி நீரில் குளித்த குஷியில் வேணுமாமாவும் நாயுடுவும் வாலிபர்களாகியிருந்தார்கள். அதனால் பெண்கள் உடை மாற்றிக் கொண்டு வரும்வரை நாயுடுவின் அரசியல் விமர்சனம் தொடர்ந்தது.
"பார்க்கப் போனா நம்ம நாட்டு அரசியலும் 'ப்ளாண்டேஷனும்' ஒரே மாதிரி தான் இருக்குதுங்க. பயிரிடறது, அறுவடை செய்யிறது, களையெடுக்கிறது எல்லாம் இரண்டுக்கும் பொதுவானதாக இருக்கும். 'ப்ளாண்டேஷன்' பாஷையிலேதான் அடிக்கடி அரசியலைப் பத்தியே பேசிக்கிறாங்க. யாராவது இளைஞர்கள் முன்னுக்கு வந்தா 'மொளச்சு மூணெலைப் போடறதுக்குள்ளே தலைவனாயிட்டான்' கிறாங்க. 'எலெஷன்ல' செலவழிச்சான். இப்ப 'அறுவடை' பண்ணிட்டான்கிறாங்க. புல்லுருவிகளைக் கட்சியிலேருந்து 'களையெடுத்துட்டோம்'கிறாங்க."
"ஏதேது? இதைப் பற்றி ஒரு பெரிய தீஸிஸ் எழுதற அளவு விஷயங்கள் சேகரிச்சு வச்சிருப்பீங்க போலிருக்கே?" என்று சொல்லிச் சிரித்தான் ரவி.
"அது மட்டுமில்லீங்க, விவசாயத்திலே எப்படி நெல்லைப் போட்டா மறுபடி நெல்லு முளைக்குதோ அது மாதிரி ஒரு குடும்பத்திலே ஒருத்தர் அரசியல்வாதியா வந்து பதவியோட சுகம் கண்டுட்டா, நம்ம தேசத்திலே அப்புறமா அந்தப் பரம்பரையிலே யாரும் அரசியலையோ பதவிங்களையோ விடறதே இல்லீங்களே?"
"எலிஃபண்ட் வேலிக்குப் போகலாம்னீங்களே? நேரமாகலியா நாயுடுகாரு?
வேணுமாமா நாயுடுவின் கவனத்தைத் திசை திருப்பினார். கமலியும் வசந்தியும் உடை மாற்றிக் கொண்டு புறப்படத் தயாராக வந்திருந்தார்கள்.
மறுபடி ஜீப்பில் புறப்பட்டார்கள் அவர்கள்.
"உங்க வீட்டிலேருந்து யாரையும் அருவியில் குளிக்கக் கூட்டிண்டு வரலியே நாயுடுகாரு?" என்று ஜீப்பில் போகும்போது நாயுடுவைக் கேட்டார் வேணுமாமா.
"யாரு இருக்காங்க கூட்டியாறத்துக்கு? குழந்தைங்கள்ளாம் ஸ்கூல், காலேஜ்னு 'ப்ளெய்ன்'ஸிலே படிச்சுக்கிட்டிருக்குதுங்க. என் மனைவி சீக்காளி. வெந்நீர்ல தான் குளிக்கும். அருவி கிருவி எல்லாம் அதுக்கு ஒத்துக்கிடாது."
பத்து பன்னிரண்டு மைல் போனதும் ஒரு வளைவில் திரும்பி நின்றது ஜீப். நூறு நூற்றைப்பதடி கீழே பசும்புல் அடர்ந்த பெரிய பள்ளத்தாக்கும் நீர் நிறைந்த ஓர் ஏரியும் தெரிந்தன. ஏரிக்கரையில் புல் வெளியில் கருங்குன்றுகள் போல் உருவங்கள் அசைவது தெரிந்தது.
"அதோ பாருங்க... யானைக் கூட்டம்" என்று பைனாகுலரை உறையிலிருந்து எடுத்துக் கமலியிடம் நீட்டினார் நாயுடு.
----------------
அத்தியாயம் 11
கமலி, நாயுடு தன்னிடம் அளித்த பைனாகுலரை வாங்கிப் பார்த்தாள். பத்திருபது பெரிய யானைகள்.... இரண்டு மூன்று குட்டி யானைகள் - பைனாகுலரில் மிக அருகில் நிற்பது போல் தெரிந்தன. அதிக நேரம் ஓர் ஆச்சரியத்தோடு அதைப் பார்த்துக் கொண்டிருந்தாள் கமலி. அவளைத் தவிர மற்றவர்கள் அங்கே பலமுறை வந்திருந்த காரணத்தாலும், அடிக்கடி யானைக் கூட்டத்தைப் பார்த்திருப்பதாலும் அதில் அதிக ஆச்சரியம் காண்பிக்கவில்லை. யானைகளைப் பற்றிக் கமலி பல கேள்விகள் கேட்டாள். எல்லாக் கேள்விகளுக்கும் வேணுமாமாவும் சாரங்கபாணி நாயுடுவும் மாற்றி மாற்றி பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
'எலிஃபெண்ட் வேலி'யிலிருந்து திரும்பும்போது கமலி நாயுடுவிடம் 'சாண்டல்வுட்' மரம் ஒன்றைப் பார்க்க வேண்டும் என்றாள். சிறிது தொலைவு சென்றதும் ஓரிடத்தில் ஜீப்பை நிறுத்தி, நன்றாக முற்றிய சந்தன மரம் ஒன்றைக் கமலிக்குக் காட்டினார் நாயுடு. இடுப்பு உயரத்தில் அந்த மரத்தின் முற்றிய கிளை ஒன்று பிரிந்த இடத்தில் யாரோ காட்டு இலாக ஆட்கள் அரிவாளால் ஒரு சிறு வெட்டு வெட்டி விட்டுப் போயிருந்தார்கள். நாயுடு அந்த வெட்டு வாயில் மூக்கை வைத்து மோந்து பார்த்து விட்டு, "அப்பாடீ! வாசனை ஆளைத் தூக்கி அடிக்குது" என்று கூறி விட்டுக் கமலியையும் அதை மோந்து பார்க்கும்படி வேண்டினார்.
கமலி தலையைக் குனிந்து அந்த வாசனையை நுகர்ந்தாள். வைரம் பாய்ந்த அந்தச் சந்தனமரத்தில் வாசனை கமகமத்தது. இரண்டு மூன்று நாட்களில் அதே வாசனையுள்ள சந்தனக் கட்டை ஒன்றைக்கீழே கொடுத்து அனுப்புவதாக அவளிடம் நாயுடு கூறினார்.
அங்கிருந்து நேரே எஸ்டேட் பங்களாவுக்குத் திரும்பினார்கள் அவர்கள். ஜீப்பில் ரவியும் கமலியும் பின் ஸீட்டில் அருகருகே அமர்ந்திருந்தார்கள். ரவி உற்சாகமாக இருந்தான். மலைக்காற்றின் சுகமான குளிர்ச்சியும், அருவியில் நீராடிய மதமதப்பும் அவனுடைய உற்சாகத்தைப் பல மடங்காக்கியிருந்தன. அவன் கமலியின் காதருகே மெதுவாகக் கேட்டான்.
"கமலீ! என்னைப் பொறுத்தவரை நீயே ஒரு சந்தன விருட்சம். உன் உடம்பில் இல்லாத வாசனையா அந்தச் சந்தனமரத்தில் இருக்கிறது? நான் அநாவசியமாக ஜீப்பிலிருந்து ஏன் கீழே இறங்கவில்லை தெரியுமா? இளமையும் வாசனையும் கமகமக்கும் ஒரு சந்தன விருட்சம் இங்கே என் அருகிலேயே இருப்பது தான் காரணம்! என்ன? நான் சொல்வது உண்மை தானே?"
கமலி அவனை ஏறிட்டு நிமிர்ந்து பார்த்துக் கனிவோடு புன்முறுவல் பூத்தாள். பங்களாவுக்குத் திரும்பும் போது சாரலும் மேகமூட்டமுமாக வானவில் வேறு போட்டிருந்தது. மலைச் சிகரங்களின் பின்னணியில் வானவில் மிகமிக அழகாயிருந்தது. மலைகளும், சாரலும், பசுமை நறுமணமும், வானவில்லும், அருவி நீராடலும் அவர்களைச் சிறு குழந்தையின் உற்சாகத்தைக் கொள்ளச் செய்திருந்தன. அருவியிலிருந்து திரும்பியதும் அன்று பகலில் நாயுடு எஸ்டேட் பங்களாவில் ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். விருந்து முடிந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்ட பின்பே அவர்கள் மலையிலிருந்து கீழே புறப்பட முடிந்தது.
"நீங்க இந்தியாவிலே இருக்கிறவரை எப்ப வேணாலும் இங்கே தாராளமா வந்து தங்கலாம். வித்தியாசமா நினைக்க வேண்டாம். இதை உங்க சொந்த வீடு மாதிரி நினைச்சுக்குங்க" - என்று புறப்படும்போது ரவியையும் கமலியையும் பார்த்துச் சொன்னார் நாயுடு. பச்சை ஏலக்காயில் செய்த மாலை ஒன்றைக் கமலிக்கு அவர் அளித்திருந்தார். அந்த மாலை தைத்துக் கோக்கப்பட்டிருந்த விதத்தை அவரிடம் வியந்து புகழ்ந்து கூறினாள் அவள்.
"வீக்-எண்ட்-பிரயாணம்னு வந்தா இதைவிட ஐடியல் பிளேஸ் சங்கரமங்கலத்துக்குப் பக்கத்திலே வேற ஒண்ணும் கிடையாது"- என்றார் வேணுமாமா.
"இவா இரண்டு பேரும் இங்கே வர போது ஒரு தடவை நம்ம எஸ்டேட் கஸ்ட் ஹவுஸ் சாவியைக் கூடக் கொடுத்து விடலாம் அப்பா" - என்றாள் வசந்தி.
அவர்கள் அனைவரும் நாயுடுவிடம் விடைபெற்றுக் கொண்டு மலையிலிருந்து கீழே புறப்படும் பொழுது பிற்பகல் மூன்று மணிக்கு மேலாகிவிட்டது.
ரவியும், கமலியும் சங்கரமங்கலம் திரும்பி வீட்டு வாசலில் காரிலிருந்து இறங்கும்போது பிற்பகல் நாலரை மணி. வருகிற வழியில் முதலிலேயே வேணுமாமாவும் வசந்தியும் தங்கள் வீட்டில் இறங்கிக் கொண்டிருந்தார்கள்.
வீட்டு வாயிலில் சர்மா இறைமுடிமணியோடு பேசிக் கொண்டிருந்தார். ரவியை உற்சாகமாக வரவேற்றார் இறைமுடிமணி. கமலியை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தான் ரவி. 'இறைமுடிமணி' - என்ற பெயரைத் திருப்பி உச்சரித்துச் சொல்லிப் பார்க்க முயன்றாள் கமலி. அந்தப் பெயரைப் பற்றி விசாரித்தாள்.
அது 'தெய்வசிகாமணி' - என்ற பெயரின் தமிழ் மொழி பெயர்ப்பு என்பதை ரவி விளக்கினான்.
"மறைமலை அடிகள், பரிதிமாற் கலைஞர் போல் தானே இந்தப் பெயரும்?" என்று கமலி ரவியிடம் பதிலுக்கு வினவிய போது,
"அடடே! தமிழ்ல கூட நல்லாப் பேசுறாங்களே! உட்காருங்க தம்பீ! அவங்களையும் உட்காரச் சொல்லுங்க" என்றார் இறைமுடிமணி. அவர் வேண்டிக் கொண்ட உடனே ரவி எதிர்த் திண்ணையில் உட்கார்ந்தான். கமலி உட்காரவில்லை. விசுவேசுவர சர்மா அங்கே இருப்பதைப் பார்த்து அவர் எதிரே அவள் உட்காரத் தயங்கினாற் போலப்பட்டது. சர்மாவும் அந்தத் தயக்கத்தை கவனித்தார்.
"நீங்க பேசிண்டிருங்கோ... நான் போய் மடத்துக் கிளார்க்கைக் கூட்டிண்டு வந்துடறேன்" - என்று சொல்லி விட்டு எழுந்திருந்து போனார் சர்மா. அவர் சென்ற பின் எஞ்சிய மூவருக்கும் பலவற்றைத் தயங்காமல் பேசிக் கொள்வதற்கு உரிய சுதந்திரம் கிடைத்த மாதிரி இருந்தது. சர்மா சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் கமலி ரவிக்கு அருகே மெல்ல ஒதுங்கி அமர்ந்து கொண்டாள்.
"தமிழ் மட்டும் சொல்லிக் கொடுத்ததோட நிறுத்திடாமே 'அவங்களுக்கு' நம்ம பண்பாடுகளையும் பழக்கப்படுத்தியிருக்கீங்க தம்பி! எனக்கு ரொம்ப மகிழ்ச்சி" - என்றார் இறைமுடிமணி.
அவருடைய கணீரென்ற குரல், தனிப்பட்ட உரையாடலிலும் உணர்ச்சி மயமாகி விடும்போது மேடைப் பிரசங்கம் போலப் பாய்ந்து பாய்ந்து பேசும் அவரது பேச்சு எல்லாவற்றையும் கவனித்த கமலி அவரைப் பற்றி நிறைய அறிந்து கொள்ள ஆவல் காண்பித்தாள். ரவி அவளுக்கு விவரித்துச் சொன்னான். அவன் கூறியதை இறைமுடிமணி பணிவோடு மறுத்தார்.
"தம்பி எம்மேலே இருக்கிற பிரியத்தாலே ரொம்ப மிகைப்படுத்திச் சொல்லுது. இந்த ஊர்ல நான் ஒரு சாதாரண விறகுகடைக்காரன். அறிவு இயக்கத்தைச் சேர்ந்த ஊழியன்."
"உங்கள் இயக்கத்தைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்ல முடியுமா?"
"ரொம்ப நாள் உபயோகத்திலே இல்லாமல் மூலையில் கிடக்கிற செப்புப் பாத்திரத்திலே அது செப்புங்கிறதே மறைஞ்சு போற மாதிரிப் பாசமும் களிம்பும் ஏறிப் படர்ந்து விடறாப் போல இந்த நாட்டிலே அறிவும் உண்மையுமே மறையிர அளவுக்குச் சாதி சமயச் சடங்குகளும் சம்பிரதாயங்களும் மூட நம்பிக்கைகளும் பெருகிப் போச்சு. அறிவையும் உண்மையையுமே மூடி மறைக்கிற சடங்குகளைத் தகர்க்கணும்கிறது எங்க கொள்கை. பாசமும் களிம்பும் பிடிச்சு நீலம் பாரிச்சுப் போன பாத்திரத்தைப் புளிப்போட்டுத் துலக்கி அதன் அசல் நிறத்தையும், பிரகாசத்தையும் காமிக்கிற மாதிரித்தான்னு வச்சுக்குங்களேன். சுய மரியாதை இயக்கம் ஆரம்பிச்சதே இதுக்குத்தான். சடங்குகளை விட உண்மையும் அறிவும் உயர்ந்தவை."
"சுய மரியாதை என்றால்... அதாவது?"
"எந்த நிலையிலும் பிறரால் அவமரியாதைப் படாமல் நம்மைக் காத்துக் கொள்வதும் நாம் பிறரை அவமரியாதைப் படுத்தாமல் வாழ்வதும் தான் சுயமரியாதை."
"உங்கள் விளக்கம் அழகாக இருக்கிறது" - என்று அவரைப் பாராட்டினாள் கமலி.
"ஆமாம்! அப்பா எதுக்காக மடத்துக் கிளார்க்கைக் கூட்டிண்டு வரப்போறார்?" என்று அதுவரை அவர்களுடைய அந்த உரையாடலில் கலந்து கொள்ளாமல் கவனித்துக் கொண்டிருந்த ரவி இறைமுடிமணியிடம் கேட்டான்.
வடக்குத் தெருவில் உள்ள மடத்துக்குச் சொந்தமான காலி மனையில் தான் ஒரு பலசரக்குக் கடை வைத்துக் கொள்வதற்காக ஒப்பந்தப் பத்திரம் எழுதிக் கொள்ள வந்திருக்கும் விவரத்தை இறைமுடிமணி ரவியிடம் தெரிவித்தார்.
அப்போது கமலி திண்ணையில் உட்கார்ந்திருப்பதைப் பார்க்க ஆவலோடு எதிர் வரிசை வீடுகளிலிருந்தும், பக்கத்து வீடுகளிலிருந்தும் முகங்கள் நீண்டு மறைவதை ரவியும், இறைமுடிமணியும் கவனித்தனர்.
"தங்கள் வீடுகளுக்கு யார் வருகிறார்கள், என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் கவனிப்பதை விட அடுத்த வீடுகளில் யார் வருகிறார்கள், என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைக் கவனிப்பதில் இந்தக் கிராமத்து ஜனங்களுக்குத் தான் எவ்வளவு அக்கறை?" -
"அது மட்டும் இல்லே சார்! இங்கே இப்போ 'டாக் ஆஃப் த வில்லேஜே' - நானும் கமலியும் தான்."
"ஆமாம்! பேசுவானுக... நல்லாப் பேசட்டும். அதுனாலே ஒண்ணும் அசந்துடாதீங்க தம்பி."
மடத்துக் குமாஸ்தாவுடன் சர்மா வந்து சேர்ந்தார். ரவியும் கமலியும் இறைமுடிமணியிடம் கூறி விடை பெற்றுக் கொண்டு மாடிக்குச் சென்றார்கள்.
"ஸ்டாம்ப் பேப்பர் நானே கொண்டாந்திருக்கேன். எழுத வேண்டியதை எழுதிக்கலாம். கடையை என் மருமகன் தான் நடத்தப் போறான்னாலும் 'அக்ரிமெண்ட்' என் பேருக்கே பண்ணிக்குவோம்." -
"ரெண்டு மாச அட்வான்ஸ் வேணும்னு ஸ்ரீ மடத்திலேருந்து உத்தரவு. கட்டிட வேலையோ, டெம்பரரி ஷெட்டோ எதுன்னாலும் இடத்தை லீஸுக்கு எடுத்துக்குற பார்ட்டி தன் செலவிலேயே போட்டுக்கணும்னு நிபந்தனை..."
"எனக்கு முழுச் சம்மதம். அட்வான்ஸ் பணம் இதோ கொண்டாந்திருக்கிறேன்."
சர்மாவுக்குப் பதில் சொல்லிவிட்டுப் பணத்தை எடுத்து எண்ணத் தொடங்கினார் இறைமுடிமணி. யாரோ படியேறுகிற செருப்புச் சத்தம் கேட்டது. ஒரே சமயத்தில் இறைமுடிமணி, சர்மா இரண்டு பேருமே நிமிர்ந்து பார்த்தார்கள். ஜவுளி வியாபாரி அஹமத் அலி படியேறிக் கைகூப்பிவிட்டுச் செருப்பை ஓரமாகக் கழற்றிக் கொண்டிருந்தார். சர்மா பதிலுக்குக் கை கூப்பிவிட்டு, "ஏது இவ்வளவு தூரம்?" என்று அஹமத் அலியைக் கேட்டார். அஹமத் அலி சிரித்துக் கொண்டே, "உங்க தயவு தான் வேணும். இந்தாங்க" என்று ஒரு கடிதத்தை எடுத்துச் சர்மாவிடம் நீட்டினார்.
"சீமாவையர் சார் உங்களைப் பார்த்து இதைக் கொடுக்கச் சொன்னாருங்க..."
கடிதத்தை வாங்கிப் பிரித்துப் படிக்கலானார் சர்மா. கடிதத்தில் இருந்த விஷயங்களினால் ஏற்படும் உணர்ச்சியை முகமோ கண் பார்வையோ காட்டிக் கொடுத்து விடாமல் சர்மா சுபாவமாக இருக்க முயன்றார்.
"லெட்டரைப் பார்த்துட்டேன்னு சீமாவையர் கிட்டச் சொல்லுங்கோ. நானே அப்புறமா உங்களுக்கு விவரம் சொல்லியனுப்பறேனே?"
"பணம் ஒண்ணும் பெரிசில்லே. நீங்க பண்ற முடிவுக்கு அப்படியே கட்டுப்படறேன் நான்."
"அதான் சொல்லி அனுப்பறேன்னேனே?"
"அப்போ சரி! வரட்டுங்களா, மறந்துடாமே ஞாபகமாச் சொல்லி அனுப்புங்க... இன்னைக்கே முடிவு பண்ணிக்கலாம்..."
"சொல்லி அனுப்பறேன்..."
அஹமத் அலி சர்மாவிடம் சொல்லி வணங்கி விடைபெற்றதோடு அமையாமல் இறைமுடிமணியிடமும் மடத்துக் குமாஸ்தாவிடமும் கூடச் சொல்லிக் கொண்டு புறப்பட்டார்.
"சாய்பு என்ன காரியமா வந்திட்டுப் போறாரு?" - என்று இறைமுடிமணி உடனே கேட்டு விடுவாரோ என்பதாக எதிர்பார்த்த சர்மாவுக்கு அவர் அப்படிக் கேட்காதது வியப்பை அளித்தது.
ஒப்பந்தப் பத்திரம் முடிந்து இறைமுடிமணியிடம் அட்வான்ஸை வாங்கி, "இந்தா! மடத்துக் கணக்கில் பாங்கிலே கட்டிடு" - என்று குமாஸ்தாவிடம் அதைக் கொடுத்து அவனை அனுப்பிய பின், "இந்தா தேசிகாமணீ! இதைக் கொஞ்சம் படிச்சுட்டுக் குடு" - என்று மடியிலிருந்த கடிதத்தை எடுத்து நீட்டினார் சர்மா.
இறைமுடிமணி அவர் கொடுத்த கடிதத்தைப் படிக்கலானார். கடிதம் சர்மாவுக்கு உள்ளூர் மிராசுதார் சீமாவையரால் எழுதப்பட்டிருந்தது. வடக்குத் தெருவிலுள்ள மடத்துக்குச் சொந்தமான காலி மனையை அஹமத் அலி சாய்புவின் புதிய ஜவுளிக்கடை பிராஞ்ச் ஒன்றைத் திறக்க லீஸில் ஓர் இருபது வருஷத்துக்கு விடச் சொல்லி சிபாரிசு செய்திருந்தார் சீமாவையர். சாய்பு எவ்வளவு வேண்டுமானாலும் வாடகையாகத் தரத் தயாராயிருக்கிறார் என்றும், முன் பணமாகவும் ஒரு பெருந்தொகை மடத்துக்குத் தருவதோடு கட்டிடத்தைத் தம் செலவில் கட்டிக் கொள்ள அவரால் முடியும் என்றும் அவருக்கு அந்த இடத்தை விடுவதால் மடத்துக்குப் பெரிய லாபம் என்றும் கடிதத்தில் எழுதியிருந்தது. படித்ததும் இறைமுடிமணி சர்மாவை நோக்கிக் கேட்டார்: -
"நம்ம ஒப்பந்தம் கையெழுத்தாறதுக்கு முந்தியே இந்தக் கடிதாசைச் சாய்பு கொண்டாந்து கொடுத்தும் நீ ஏன் பேசாமல் இருந்தே?"
"மனுஷனுக்கு வாக்கு நாணயம் வேண்டாமா? நீதான் முதல்லே அந்த இடத்தைக் கேட்டே. உனக்கு வாக்குக் குடுத்தாச்சு. அப்புறமா இன்னொருத்தர் வந்து கூடக் கொஞ்சம் ரூபாய் தரேங்கிறார்னு நான் வார்த்தை மாறலாமா? உனக்கு விடறேன்னு மடத்துக்கும் எழுதிக் கேட்டுண்டப்புறம் நான் யாருக்கும் எதுக்கும் பயப்பட வேண்டியதில்லே..."
"எப்படியோ தகவல் தெரிஞ்சுக்கிட்டு நல்ல சமயத்திலே குறுக்கே வந்து நுழைஞ்சிருக்காரு மனுஷன். சீமாவையருக்கும் அஹமத் அலி சாயபுவுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் கூட உண்டும்பாங்க..."
"எப்பிடியானா என்ன தேசிகாமணி! நான் ஏமாறலே... ஏமாற மாட்டேன். தெருமுனையிலே இருக்கிற காலி இடத்திலே பலசரக்குக் கடைபோட்டால் அக்கிரகாரத்து மனுஷாளுக்கும் மத்தவாளுக்கும் சௌகரியம். பலசரக்குக் கடை அளவு ஜவுளிக்கடை அன்றாடத் தேவைக்குப் பயன்படறதா இருக்கப் போறதில்லே. ஏற்கனவே பஜார்லே பத்து இருபது ஜவுளிக்கடை இருக்கு. அத்தனையிலேயும் பெரிய கடை வந்துட்டுப் போனாரே பாய், அவரோடது தான். இவ்வளவும் போறாதுன்னு புதுசா இன்னும் தெரு முனையிலே எதுக்கு ஒரு ஜவுளிக்கடை? சிங்கப்பூர் பணம் வெள்ளம் வெள்ளமா வரது. ஊர்ல முக்கால்வாசி வீடு நெலம் எல்லாவற்றையும் விலைக்கு வாங்கிப் போட்டாச்சு. இன்னம் ஆசை தீரலே. எதிலே, எதை லீஸுக்கு எடுக்கலாம் எங்கே கடை போடலாம்னு தேடிண்டு அலையறாங்க."
"நிஜமாவே கடை போடணும்கிறதை விடப் போட்டிக்கு நின்னு எனக்கு அந்த இடம் கிடைக்க விடாமப் பண்ணிடணும்னு வந்த மாதிரித் தோணுதில்லே... விஷயம் முன்கூட்டியே அவங்களுக்கு எப்படித் தெரிஞ்சிச்சுன்னுதான் எனக்குப் புரிய மாட்டேங்குது."
"எனக்கு இப்போ புறப்பட்டுப் போனானே மடத்துக் குமாஸ்தா இவன் மேலேயே சம்சயம் உண்டு! இவன் சீமாவையருக்கு ரொம்ப வேணுங்கப்பட்டவன் தேசிகாமணி!"
"இருக்கும்! யாரோ சொல்லித் தகவல் தெரிஞ்சு தான் சீமாவையரு சாய்புவை இங்கே ஏவிவிட்டு லெட்டர் குடுத்து அனுப்பிச்சிருக்காரு... நம்மைப் போலக் கூட்டாளிகளுக்கு ஒவ்வொரு செலவுக்கும் ரூபாய் ரூபாயாப் பணத்தைக் கஷ்டப்பட்டுத் தேடவேண்டியிருக்கு. அஹமத் அலி பாயைப் போல நாலு திசையிலேருந்தும் பணம் லட்சலட்சமாக் குவியறவங்களுக்கு அளவு மீறி அப்பிடிக் குவியற பணத்துக்கு எதைச் செலவு செய்யலாம், எந்த இடத்தை விலைக்கு வாங்கலாம், எதை அதிக வாடகைக்குப் பிடிக்கலாம்னு தேடி அலைய வேண்டியிருக்குது..."
"பணம் வெறும் சந்தோஷத்தைத்தான் குடுக்கும். ஒழுக்கமும் யோக்கியதையும் தான் மன நிம்மதியைக் குடுக்கும் தேசிகாமணி! பணம் வேணது இருந்தும் ஒழுக்கமும், யோக்கியதையும் இல்லாத காரணத்தாலே எத்தனை பேர் இராத் தூக்கமில்லாமத் தவிக்கிறான் தெரியுமா உனக்கு?"
"அதெல்லாம் தெரிய வேண்டாம்ப்பா நமக்கு! அயோக்கியனா இருந்து லாபம் சம்பாதிக்கிறதைவிட யோக்கியனா இருந்தே நாம நஷ்டப்படலாம். நமக்கு அது போதும்" என்ற இறைமணிக்கு, அஹமத் அலிபாயும் சீமாவையரும் விஷயத்தை இத்துடன் விட்டுவிடமாட்டார்கள் என்பது தெரிந்துதானிருந்தது. சர்மாவும் அதை உணர்ந்திருந்தார்.
-----------------
அத்தியாயம் 12
சர்மா இறைமுடிமணியை நோக்கிக் கூறினார்: "பேராசை, சூதுவாது, மத்தவங்களை ஏமாத்திச் சம்பாதிக்கிறது இதெல்லாம் முன்னே டவுன் சைடிலே தான் யதேஷ்டமா இருந்தது! இப்போ நம்பளுது மாதிரிச் சின்னச் சின்ன கிராமங்கள்ளேயும் அதெல்லாம் வந்தாச்சு. ஏமாத்திச் சம்பாதிக்கிறது ஒண்ணும் பெரிய தப்பில்லேன்னு நியாயப்படுத்திப் பேசவும் ஆரம்பிச்சுட்டா. பண்ற தப்புக்களை ஒண்ணொண்ணா நியாயப்படுத்திக்கிறது தான் நாகரீகம்னு நாசூக்குன்னும் இப்பல்லாம் புது 'பிலாஸபியே' வந்தாச்சாக்கும்...."
"விசுவேசுவரன்! இன்னைக்கு நீ செய்திருக்கிற இந்த உதவிக்கு உனக்கு நான் எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலே அப்பா. என்னை விட அதிக வாடகை, அதிக முன் பணம் எல்லாம் தரேன்னு விடாக்கண்டன் ஒருத்தன் போட்டிக்கு வந்தும் நீ அந்த மனையை எனக்கே வாடகைக்கு விட்டிருக்கே. இடமோ ஆத்திகர்கள் நிறைந்த மடத்துக்குச் சொந்தமான அக்கிரகாரத்துக்கு நடுவிலிருப்பது. நானோ ஊரறிந்த நாத்திகன். சுய மரியாதைக்காரன். அப்படி இருந்தும் நீ அந்த இடத்தை முதல்லே சொன்ன வார்த்தைக்குக் கட்டுப்பட்டு எனக்கு விட்டிருக்கே."
"நான் பெரிசா ஒண்ணும் பண்ணிடலே தேசிகாமணீ! நியாயம் எதுவோ அதைத்தான் செஞ்சிருக்கேன்!...."
"அப்படியில்லேப்பா! இது நிஜமாகவே பெரிய காரியம்தான். இந்த அக்கிரகாரத்து மூணு தெருவுங்களிலேயும் நான் யாரையும் பெரிசா மதிக்கறதில்லே. ஆனா அதே சமயத்தில் உன்னை மதிக்காமே இருக்கவும் என்னாலே முடியலே."
மிகவும் நெருங்கிய சிநேகிதரான இறைமுடிமணியே திடீரென்று நேருக்கு நேர் தன்னைப் புகழத் தொடங்கவே சர்மா திக்குமுக்காடிப் போனார். கூச்சத்தோடு சொன்னார்:-
"நமக்குள்ளே மூணாம் மனுஷா மாதிரி இப்படிப் புகழ்ந்துக்கறது நன்னா இல்லே."
"நிஜத்தைத்தானே சொல்றேன்?"
"ஒரு நிஜம், மனுஷனைத் தலை கனத்து வீங்கிப் போகச் செய்யும்படியானதா இருக்குமானா அதைச் சொல்லாம உள்ளேயே அந்தரங்கமா மனசுலே வச்சுண்டுடறது இன்னும் சிரேஷ்டம்."-
"நல்லதை - நல்லது செய்யிற யோக்கியனை உடனே புகழ்ந்துடணும்பாரு ஐயா. அப்பிடிப்பட்டவங்களைக் கொஞ்சம் முரட்டு வார்த்தைகளாப் பொறுக்கி எடுத்துப் போட்டுச் சொல்லிக்கூடப் புகழலாம்பாரு..."
"அதனாலேதான் புகழறத்துக்காக நல்லது செய்யறவாள்னும் புகழை எதிர்பார்த்து நல்லது செய்யறவாள்னும் புகழுக்கு ஏற்பாடு செய்துகொண்டு நல்லது செய்யறவாள்னும் பல புதுப்புதுப் பிரிவுகள் இப்பல்லாம் ஜனங்கள் மத்தியிலே உண்டாயிண்டிருக்கு. ஒரு புஷ்பம் அபார வாசனையோட இருக்கலாம். ஆனா அந்த வாசனை அதை மோந்து பாக்கறவா எல்லாருக்கும் மட்டும் புரிஞ்சாலே போறும். தான் இத்தனை வாசனைன்னு அந்தப் புஷ்பத்துக்கே புரியணும்னு அவசியமில்லே தேசிகாமணி! சாஸ்திரங்கள்ளே மதுபானப் பிரியனா வெறியோடவும் தாகத்தோடவும் அதைத் தவிச்சுத் தேடி அலையறவனோட ஒப்பிட்டுத்தான் புகழையும் ஸ்தோத்திரத்தையும் வலுவிலே தேடி அலையறதைச் சொல்லியிருக்கா. புகழும் ஒருவிதமான மதுபானம்தான் தேசிகாமணி!"
தாம் சொல்லி விடை பெற்றுக்கொண்டு புறப்படக் கருதிய இறைமுடிமணி பேச்சை உடனே வேறு விஷயத்துக்கு மாற்றினார்:
"நம்ம தம்பியோட வந்திருக்கே பிரெஞ்சுக்காரி, அது தங்கமான பொண்ணாத் தெரியுது. தமிழ் நல்லாப் பேசுதே? நீ இங்கேயிருந்து எந்திரிச்சுப் போறவரை உனக்கு முன்னாலே உட்காரவே இல்லேப்பா அந்தப் பொண்ணு! உம்மேலே நல்ல மரியாதைப்பா அதுக்கு...."
"அது மட்டுமில்லே. நல்ல படிப்புள்ளவள். புத்திசாலி"
"ஒரு பிரெஞ்சுப் பொண்ணு இத்தினி அருமையாத் தமிழ் பேசறது அபூர்வமான விஷயம்ப்பா. உனக்கு ஆட்சேபணையில்லாட்டி நான் கூட அவங்களுக்கு நம்ம படிப்பகத்திலே ஒரு கூட்டம் ஏற்பாடு பண்ணி வரவேற்புக் குடுத்துப் பேசச் சொல்லலாம்னு நினைக்கிறேன்... தம்பி ரொம்பக் குடுத்து வச்சிருக்கு. அழகு, அறிவு, இங்கிதம் மூணுமாகச் சேர்ந்து அமையற வாழ்க்கைத் துணை கிடைக்கிறது பெரிய காரியம்."
"வாழ்க்கைத் துணையா இல்லையான்னு இனிமேல் தான் முடிவாகணும்..." - சர்மா சிரித்தபடிதான் இதைச் சொன்னார். ஆனால் இறைமுடிமணி விடவில்லை - அப்போதே சாடத் தொடங்கி விட்டார்.
"ஒருத்தர் தன் துணையைப் பற்றி முடிவு பண்ணிக்கிறத்துக்கு மத்தவங்க யாருப்பா வேணும்?"
"நடைமுறை உலகத்திலே மத்தவங்க அபிப்பிராயமும் வேண்டியதாக இருக்கே! அப்பா, அம்மா, ஊர், உலகம் எல்லாரையும் எதிர்பார்த்துதானே இங்கே எல்லாம் செய்ய வேண்டியிருக்கு."
"குழந்தைங்க நல்லா மகிழ்ச்சியா இருக்கட்டும்பா! சாதி சம்பிரதாயம், குலம் கோத்திரம்னு நீ அவங்க வாழ்க்கையை அழிச்சிடப்படாது..."-
"பார்க்கலாம்...அப்புறம்...."
"சரி! நான் வரேன்ப்பா. அந்தப் பொண்ணுகிட்டவும் தம்பிகிட்டவும் சொல்லிடு. அப்புறம் பார்க்கிறேன். நம்ம புனித அந்தோணியர் ஸ்கூல் டீச்சர் மலர்க்கொடி விஷயமாச் சீமாவையாரைக் கொஞ்சம் கண்டிச்சு வை. மறந்துடாதே" என்று கூறி விடைபெற்றுக் கொண்டு போனார் இறைமுடிமணி.
இறைமுடிமணியின் தலை தெருத் திருப்பத்தில் மேற்குப் பக்கம் மறைந்ததுமே அஹமத் அலிபாய் - சீமாவையரோடு தம்மை நோக்கி வந்து கொண்டிருப்பதைக் கண்டார் சர்மா.
வீட்டுக்கு உள்ளே போக எழுந்திருந்தவர் அவர்கள் வருவதைப் பார்த்ததும் மீண்டும் திண்ணையிலேயே உட்கார்ந்தார்.
படியேறி வந்து அவர்கள் பேச்சைத் தொடங்குவதற்கு முன் சர்மாவே தொடங்கிவிட்டார்.
"என்ன பாய்? நான் தான் சொல்லி அனுப்பியிருந்தேனே? இதுக்குள்ளே அவாளைப் போய் ஏன் சிரமப் படுத்தினேள்?"
"இல்லீங்க... நம்ம ஐயாவே வந்துடறேன்னு புறப்பட்டுக் கூட வந்துட்டாங்க?"
"உட்காருங்க சீமாவையர்வாள்! இதுக்காக நீங்க சிரமப்பட்டு இத்தனை தூரம் வந்தே இருக்க வேண்டாம்..."
சீமாவையர் வெற்றிலைப் பெட்டியையும் பிரம்பையும் முதலில் திண்ணையில் வைத்து விட்டு அப்புறம் உட்கார்ந்தார்.
"வரவேண்டானுதான் பார்த்தேன். மனசு கேக்கலே. மடத்துச் சொத்து நல்ல மனுஷாளுக்குப் பிரயோஜனப்படணும், மடத்துக்கும் பிரயோஜனப்படணும்...."
"வாஸ்தவம். அதில் சந்தேகமென்ன? ரெண்டாவது அபிப்ராயத்துக்கே இடமில்லாத விஷயம் அது."
"பேசறதென்னவோ தேனொழுகப் பேசிடறேள், ஆனால் காரியத்திலே ஒண்ணும் பண்ண மாட்டேங்கறேளே?..."
அவர் சொற்படி கேளாமல் முந்திய நாள் ஸ்ரீ மடத்து நிலங்களைக் குத்தகைக்கு விடுவதைத் தான் ஒத்திப் போட்டுத் தள்ளி வைத்த கோபமும் சீமாவையருக்குள் சேர்ந்து இருக்கிறது என்று இப்போது சர்மாவுக்குப் புரிந்தது.
தெருத் திண்ணையில் வீட்டு வாசலில் மூன்றாம் மனிதரான அஹமத் அலி பாயையும் வைத்துக் கொண்டு சீமாவையரோடு குறைந்த பட்சம் ஒரு வாக்கு வாதத்துக்கோ, அதிக பட்சம் சண்டைக்கோ சர்மா தயாராயில்லை. அவருடைய படிப்பும் பண்பாடும் அநாவசியமாக இரைந்து கூப்பாடு போட முடியாதபடி அவர் மனத்தில் பக்குவத்தையும் அடக்கத்தையும் மெருகேற்றியிருந்தன. காது சற்று மந்தமான தன் மனைவி காமாட்சியம்மாளுக்குக் கேட்க வேண்டும் என்பதற்காக இரைந்து பேசும் சமயங்களில் கூட அதற்காகக் கூச்சப்பட்டுக் கொண்டேதான் அப்படிச் செய்வார் அவர். சீமாவையாரைப் போல் அட்டகாசமாகப் பேச அவருக்கு ஒரு போதும் வந்ததில்லை. கூடியவரை சுமுகமாகப் பேசிச் சீமாவையாரை இப்போது அனுப்பி வைக்க விரும்பினார் சர்மா.
சாயங்காலமாயிருந்தது. விளக்கு வைக்கிற நேரத்துக்கு வீட்டுத் திண்ணையில் சண்டை சத்தம் வேண்டாம் என்று எண்ணியவராய், "இப்போ நான் என்ன பண்ணணும்கறேள்? எனக்கு நாழியாச்சு, சந்தியா வந்தனத்துக்கு ஆத்தங்கரைக்குப் புறப்படணும். உங்களுக்கும் ஏகப்பட்ட ஜோலி இருக்கும். பெரிய மனுஷாளை நான் ரொம்பக் காக்க வைக்கப்படாது. வந்த காரியத்தைச் சொல்லுங்கோ" - என்றார் சர்மா.
"மறுபடியும் நான் சொல்லணுமா ஓய்? அதான் அப்பவே லெட்டர் எழுதிக் குடுத்தனுப்பிச்சேனே... நம்ம பாய்க்கு அந்த வடக்குத் தெரு எடத்தை விடணும்..."
"சரி! பாயோ, நீங்களோ ஒரு லெட்டர் எழுத்க் குடுத்துட்டுப் போங்கோ, அதை அப்படியே மேலே மடத்துக்கு அனுப்பிச்சு அங்கேயிருந்து பதில் வந்ததும் சொல்றேன்..."
"நான் முன்னாலே குடுத்தனுப்பின லெட்டரை அனுப்பினாலே போறும்." -
- சர்மா மறுபடியும் அந்தக் கடிதத்தை எடுத்துப் பிரித்துப் பார்த்துவிட்டு, "சீமாவையர்வாள்! இதிலே தேதி போடலே; தேதி போட்டுக் குடுத்திட்டுப் போங்கோ-" என்று அவரிடமே திருப்பி நீட்டினார்.
வீட்டுக்குள்ளேயிருந்து யாரோ சந்தியா கால விளக்கு ஏற்றி வரும் ஒளி இடைகழியிலிருந்து படர்ந்தது. சர்மா வீட்டின் இடைகழியைப் பார்த்தார். அவரே எதிர்பாராதபடி கமலி கையில் விளக்கோடு வந்து அதைப் பிறையில் வைத்து விட்டுப் போனாள். ஒரு சுவர்ண தீபம் இன்னொரு வெறுந் தீபத்தோடு வந்து போனதைச் சீமாவையாரும், அஹமத் அலியும் கூடப் பார்த்தனர்.
"யாரு? புதுசா இருக்கே?"
"இங்கே வந்திருக்கா...?"
"ஈரோப்பியன் மாதிரியின்னா இருக்கு?......"
"ஆமாம்! எனக்கு நாழியாறது... சந்தியா வந்தனத்துக்குப் போயாகணும், தேதி போட்டுக் குடுங்கோ...."
சீமாவையர் தேதியைப் போட்டுக் கடிதத்தைச் சர்மாவிடம் திருப்பிக் கொடுத்தார்.
"சரி! பதில் வந்ததும் நானே சொல்லியனுப்பறேன், நமஸ்காரம்" - என்று அவர்களுக்குப் பெரிதாக ஒரு கும்பிடு போட்டு விட்டு எழுந்திருந்தார் சர்மா.
சீமாவையரும் அஹமத் அலியும் புறப்பட்டார்கள். சர்மா உள்ளே சென்றபோது கமலி விளக்குடன் வந்து போனது பற்றியே அவர் சிந்தனை இருந்தது. அந்தக் காட்சி பல சமஸ்கிருதக் காவியங்களைப் படித்துப் படித்து நயம் சேர்ந்திருந்த அவர் மனத்தில் 'சிறிய தீபத்துடன் ஒரு சுவர்ண தீபம் உயிரோடு நடந்து வந்து திரும்பிச் சென்றது' போல் தோன்றினாலும் அது எப்படி நேர்ந்தது? அவளாக விளக்கேற்றிக் கொண்டு வந்தாளா? யாராவது சொல்லி அப்படிச் செய்தாளா? வெறும் வாயையே மெல்லுகிற சீமாவையர் வாய்க்கு அவல் கிடைத்த மாதிரியாகப் பண்ணிவிட்டாளே? - என்ற சிறு தயக்கமும் கூடவே இருந்தது.
கமலி என்ற பிரெஞ்சு யுவதி தன் மகன் ரவியுடன் வந்து தங்கியிருப்பதைப் பிறர் அறியாமல் வைத்திருப்பதென்பது அந்தச் சிறிய கிராமத்தில் இயலாத காரியம் என்பதையும் அச் செய்தி தானாகவே அதற்குள் கிராமத்திலும், சுற்றுப்புறங்களிலும் பரவியிருக்கும் என்பதையும் அவர் உணர்ந்தே இருந்தாலும் அயோக்கியனான சீமாவையரின் முன்னிலையில், கமலி இப்படி ஒரு தர்ம சங்கடத்தை உண்டாக்கி விட்டாளே என்று ஒரு சிறிய கலக்கமும் உள்ளூர இருக்கத்தான் செய்தது.
தன் மகனுடன் ஒரு பிரெஞ்சு பெண் வந்திருக்கிறாள் என்பது அதுவரை சீமாவையருக்குத் தெரியாமல் இருக்கவும் நியாயமில்லை. முன்பே தெரிந்திருப்பதை உள்ளேயே வைத்துக் கொண்டு, அப்போது தான் புதிதாகத் தெரிந்து கொண்டு விசாரிப்பது போல் வியந்து விசாரித்த சீமாவையரின் குள்ள நரித் தந்திரம் தான் அவருக்கு எரிச்சலூட்டியது.
கடிதங்கள், மடத்து விவரங்களடங்கிய நோட்டுப் புத்தகம் எல்லாவற்றையும் அதற்கென்றிருந்த மரப்பெட்டியில் கொண்டு போய் வைத்துவிட்டுச் சமையலறையில் எட்டிப் பார்த்தபோது புதிர் தானாக விடுபட்டது. உள்ளே தோசைக்கு மாவரைத்துக் கொண்டிருந்த காமாட்சியம்மாள் அவரைக் கேட்டாள்: "ஏன்னா வாசல்லே யாரோ புருஷாள் வந்து பேசிண்டிருந்த மாதிரி காதிலே விழுந்ததே? பாருவை விளக்கேத்தித் திண்ணைப் பெறையிலே வையின்னு குரல் குடுத்தேனே? செஞ்சாளோ? சனியன்... இங்கேயிருந்து எத்தனை தடவை தான் கத்தறது? செய்யறேன்... செய்யலேன்னு ஒரு வார்த்தை பதில் சொல்லப்பிடாதோ? பெண்கள் ரெண்டெழுத்துப் படிச்சிட்டாலே பிடிபடாமத் தலை கனத்துப் போயிடறதுகள் இந்த நாளிலே?...."
"இங்கே பாரு எங்கே இருக்கா? அவ இன்னும் வரவே இல்லியே?" - என்று வாய் நுனி வரை வந்து விட்டது சர்மாவுக்கு. ஆனால் அதைச் சொல்லாமல் "விளக்கேற்றி வச்சாச்சு. வாசல் திண்ணைப் பெறையிலே விளக்கைப் பார்த்தேன். நீ பாட்டுக்குக் கவலைப் படாமே உன் கைக்காரியத்தைப் பார்" - என்று வேறு வார்த்தைகளைச் சொல்லிச் சமாளித்தார் சர்மா. கமலிதான் அதைச் செய்தாள் என்று காமாட்சியம்மாளிடம் சொல்லி அப்போது கமலியை வம்பிலே மாட்ட வைக்க விருப்பமில்லை அவருக்கு.
நல்லவேளையாக அப்போது கமலியும் அங்கே இல்லை. மாடிக்குப் போயிருந்தாள். ரவியையும் தன்னோடு ஆற்றங்கரைக்கு அழைத்துப் போகக் கருதி மாடிக்குப் போகும் படிக்கட்டில் நாலைந்து படிகள் ஏறி அவன் பேரைச் சொல்லிக் கூப்பிட்டார் அவர்.
"அவர் இல்லை. நாலைந்து வீடுகள் தள்ளி இதே தெருவிலே யாரோ பழைய சிநேகிதரைப் பார்த்துப் பேசிவிட்டு வருகிறேன் என்று போயிருக்கிறார்" - என்று கமலி மாடியிலிருந்து எட்டிப் பார்த்து சர்மாவுக்குப் பதில் சொன்னாள். பதில் சொல்லியதோடு நிற்காமல் "ஏன்? ஏதாவது செய்யணுமா? நான் செய்யறேன் சொல்லுங்களேன்" - என்றும் தானே முன் வந்தாள்.
"ஒண்ணுமில்லேம்மா! நீ ஏதோ படிச்சிண்டிருக்கே போலிருக்கே... படி..." - என்று அவளுக்குப் பதில் கூறிவிட்டுப் புறப்பட்டார் சர்மா. முதலில் அவளை 'நீங்கள்' என்று தான் விளிக்க நினைத்தார் அவர். அப்புறம் அது மிகவும் செயற்கையான காரியம் என்று அவருக்கே தோன்றியது. கிராமத்தில் இளம் பெண்களையும் அவருக்கு மருமகள் ஆகிற முறைக்கு வயதுள்ள பெண்களையும், இரண்டு மூன்று குழந்தைகளுக்குத் தாயாகி விட்ட ஆனால் அவரைவிடப் பால்யமான பெண்களையும் 'நீ' என்று பேசித்தான் அவருக்குப் பழக்கம். திடீரென்று அதே வயதுள்ள ஓர் அந்நிய தேசத்துப் பெண்ணை மட்டும் 'நீங்கள்' என்று அழைக்க வரவில்லை. காரணம் அவருடைய உள் மனமோ, அந்தரங்கமோ அவளை அந்நியமாக எண்ணவில்லை. அவள் தனது அழகிய கம்பீரமான தோற்றத்தால், இரயிலிலிருந்து இறங்கிய முதல் கணமே இந்திய முறைப்படி அவருடைய கால்களைத் தொழுத பண்பால், விசாலமான அறிவு நுணுக்கத்தால், அவரை முக்கால்வாசி மனமிளகச் செய்திருந்தாள்.
காமாட்சியம்மாள் இருந்த இடத்திலிருந்தபடியே மாவரைத்துக் கொண்டு பாருவைக் கூப்பிட்டு விளக்கேற்றும்படி இரைந்த சொற்களைக் கேட்டுக் கமலி தானே வந்து விளக்கேற்றி வாசல் திண்ணைப் பிறையில் கொண்டு வந்து வைத்து விட்டுப் போன இங்கிதம் அவரை உள்ளேயே நினைந்து நினைந்து பூரிக்கச் செய்தது. அந்த இனிய பூரிப்பில் சிறு முள்ளாக உறுத்திய ஒரே ஒரு குறை, அவள் விளக்கேற்றிக் கொண்டு திண்ணைக்கு வரும்போது சீமாவையர் திண்ணையில் இருந்ததும் அவளைப் பற்றி விசாரித்ததும் தான்.
இறைமுடிமணி சென்றவுடன் சீமாவையர் அஹமத் அலியோடு வந்ததற்கும் மடத்துக் குமாஸ்தாதான் காரணமாயிருக்கும் என்று சர்மாவால் அநுமானித்துக் கொள்ள முடிந்தது. நேரே போய்ச் சீமாவையரிடம் விஷயத்தைச் சொல்லி விட்டுத்தான் அவன் போயிருப்பான் என்று அவருக்குப் பட்டது. வடக்குத் தெரு மனையை இறைமுடிமணிக்குப் பேசி விட்டாயிற்று என்று தெரிந்தும் அதை வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளாமல் சீமாவையர் தன்னிடம் தகராறுக்கு வந்ததைத் தாம் நாசூக்காகச் சமாளித்து விட்டதாகச் சர்மா எண்ணிக் கொண்டார். சீமாவையரின் கடிதத்தை மடத்துக்கு அனுப்பி வைத்து விவரம் எழுதினால், "ஏற்கெனவே ஒருவருக்கு வாக்களித்தபடி வடக்குத் தெரு மனையை வாடகைக்கு விட்டாயிற்று. எனவே ஸ்ரீ மடத்தின் முந்திய முத்திராதிகாரியும் சிஷ்யரும் ஆகிய தங்கள் சிபாரிசை ஏற்க இயலாததற்கு மன்னிக்கவும்" என்று மடத்திலிருந்தே சீமாவையருக்குப் பதில் வந்து விடும். அந்தப் பதிலை அப்படியே சீமாவையருக்குப் காண்பித்து விடலாம். இதனால் தமக்கும் அவருக்கும் நேரடியாக விரோதம் எதுவும் வராது என்று எண்ணிக் கொண்டிருந்தார் சர்மா.
இணையற்ற சாஸ்திர ஞானமும் பாண்டியத்தியமும் அவருக்கு அளித்திருந்த சஹ்ருதயப் பாங்கு யாரோடும் பூசலும், போட்டியும், சண்டையும், சச்சரவும் இடமுடியாத படி அவரைச் செய்திருந்தன. பிறரையும் பிறவற்றையும் துன்புறுத்தவோ கொல்லவோ கூடாது என்ற சாதாரண சன்மார்க்கத்திற்கும் ஒரு படி மேலே போய்ப் பிறர் மனம் புண்படும்படிப் பேசவும் சச்சரவிடவும் கூடச் செய்யாத உன்னதமான சன்மார்க்கத்தை வாழ்வில் அவர் கடைபிடித்து வந்த காரணத்தால் சீமாவையரோடும் கூடத் தகராறு வைத்துக் கொள்ள அவர் விரும்பவில்லை.
சந்தியா வந்தனத்துக்காக ஆற்றில் படித்துறையில் அவர் இறங்கின போது யாரோ உள்ளூர் வைதிகர்கள் இரண்டு மூன்று பேர் ஏற்கெனவே ஜபம் பண்ணிக் கொண்டிருந்தார்கள். ஜபம் முடித்தவர்கள் அருகே வந்து "பிள்ளை வந்திருக்கானாமே...?" - என்று அவரிடம் விசாரித்தார்கள். முதல் கேள்விக்கு அவரது பதில் கிடைத்ததுமே சிறிது தயக்கத்துடன், "அவன் கூட இன்னம் வேற யாரோ வந்திருக்காப்ல இருக்கே?" - என்று சந்தேகத்தோடு கூடிய அடுத்த கேள்வி பிறந்தது. "ஆமாம்" - என்பதற்கு அதிகமாக ஒரு வார்த்தை கூடவோ குறையவோ செய்யாமல், தயக்கத்தோடு கூடிய இந்த இரண்டாவது கேள்விக்குக் கத்தரித்தது போல் பதில் சொல்லியிருந்தார் சர்மா. அவர் பதில் சொல்லிய விதமே அதைப்பற்றி அவர்கள் மேலே எதுவும் கேட்கவிடாதபடி செய்தது.
சர்மா ஆற்றிலிருந்து வீடு திரும்பக் கிளம்பிய போது நன்றாக இருட்டி விட்டது. சிவன் கோவில் மணியோசை அந்த அழகிய சிற்றூரின் சாயங்கால மௌனத்தைப் புனித வனப்போடு கலைத்து விட்டுக் கொண்டிருந்தது. கோவிலுக்குப் போய்த் தரிசனம் செய்துவிட்டு அப்புறம் தான் வீடு சென்றார் அவர். கோவிலிலும் நடுவழியிலும் பல சந்திப்புகள். பல வழக்கமான கேள்விகள். சலிப்பில்லாத வழக்கமான அளவான ஒரே மாதிரியான பதில்கள்.
தெருவிலிருந்து வீட்டுப் படியேறி உள்ளே சென்ற போது இடைகழியிலேயே காமாட்சியம்மாள் எதற்கோ கூடத்தில் இரைந்து கொண்டிருப்பது அவருக்குக் கேட்டது. பாருவும், கமலியும், கூடத்தில் காமாட்சியம்மாளுக்கு முன்னால் நின்று கொண்டிருந்தார்கள். ரவி இன்னும் வீடு திரும்பவில்லை போலிருக்கிறது. சர்மா உள்ளே வருவதைக் கண்டு இரைச்சல் நின்று போய் ஒரு தற்காலிக அமைதி கவிழ்ந்தது.
ஏதோ ஒரு சிறிய மனஸ்தாபத்துக்குரிய மௌன மூட்டம் அந்தக் கூடத்தில் அப்போது நிலவிக் கொண்டிருந்தது. சர்மாவைப் பார்த்ததும், "நீங்களே சொல்லுங்கே, இது நன்னாவா இருக்கு?" - என்று காமாட்சியம்மாள் கேட்கத் தொடங்கி அதை விவரித்த போது தான் தாம் நாசூக்காகச் சமாளித்து விட்டதாக நினைத்துக் கொண்டு புறப்பட்டுப் போயிருந்த ஒரு விஷயம் இப்போது தற்செயலாகக் கண்டு பிடிக்கப் பட்டுச் சிறியதொரு சண்டையாய்த் தலையெடுக்க இருப்பது அவருக்கே புரிந்தது.
-----------------
அத்தியாயம் 13
காமாட்சியம்மாள் நேரடியாகக் கமலியைக் கடிந்து கொள்ளவில்லை என்றாலும் பார்வதியை அவள் கண்டித்துக் கொண்டிருந்த வார்த்தைகளின் வேகம் கமலியையும் பாதித்தது. சமையலறைக்குள் தோசைக்கு அரைத்துக் கொண்டிருந்த காமாட்சியம்மாள் பார்வதியைப் பார்த்ததும் முதல் கேள்வியாக "ஏண்டி! உன்னை சந்தி விளக்கை ஏத்தி வாசப்பெறையிலே வைக்கச் சொன்னா ஏத்தியாச்சுன்னு வந்து சொல்றதில்லையா? நீ பாட்டுக்கு ஏத்தி வச்சுட்டு ஊர் சுத்தப் போயிடறதோ" என்று கண்டித்து இரைந்திருக்கிறாள்.
"நீ எப்ப சொன்னேன்னே எனக்குத் தெரியாதும்மா? நான் வீட்டுக்கே இப்பத்தான் வரேன். நீ சொன்னதை நான் கேக்கவும் இல்லை. சந்தி விளக்கு ஏத்தவும் இல்லே" என்று பார்வதி இரைந்து பதில் சொல்லியது காதில் விழுந்து மாடியில் ஏதோ புத்தகம் படித்துக் கொண்டிருந்த கமலி கீழே இறங்கி வந்தாள்.
"நீங்க சொல்ற போது பார்வதி வீட்டிலேயே இல்லை. உங்கள் குரலைக் கேட்டு நான் தான் வந்து விளக்கேற்றி வைத்தேன்" என்று கமலி சொல்லி அதே சொற்களை இன்னும் உரத்த குரலில் அம்மாவுக்குக் காது கேட்கும்படி மறுபடி எடுத்துச் சொன்னாள் பார்வதி.
காமாட்சியம்மாள் இதைக் கேட்டு நேருக்கு நேர் கமலியைக் கடிந்து கொள்ளவில்லை. பார்வதியைத் தான் மேலும் கடிந்து கொண்டாள். ஆனால் அவள் பார்வதியைக் கண்டித்த சொற்களிலேயே கமலிக்கு மன வேதனை உண்டாக்கும் அர்த்தம் தொனித்தது.
"ஆத்து மனுஷா விளக்கேத்தணும்டீ! அப்பதான் லட்சுமி வீட்டிலே தங்குவா. வந்தவா போனவாள்ளாம் விளக்கேத்தறாப்பில விட்டுட்டு நீ பாட்டுக்கு ஊர் சுத்தப் போயிடறதாடீ?"
-அம்மா இப்படி எடுத்தெறிந்தாற் போல் பேசினது பார்வதிக்கே பிடிக்கவில்லை. மென்மையான இதயம் படைத்த கமலிக்கும் அது சற்றே உறைத்தது. இந்த சமயத்தில்தான் ஆற்றங்கரைக்குச் சந்தியா வந்தனம் செய்யப் போயிருந்த சர்மா திரும்பியிருந்தார். அப்போது அங்கே என்ன நடந்து கொண்டு இருந்தது என்பதைப் புரிந்து கொள்ள அவருக்கு அதிக நேரம் பிடிக்கவில்லை. எந்தத் தகராறு உருவாகாமல் தவிர்ப்பதற்காக ஆற்றங்கரைக்குப் புறப்படுவதற்கு முன் கமலி தான் விளக்கேற்றி வைத்தாள் என்பதை அவர் காமாட்சியம்மாளிடம் கூறாமல் போயிருந்தாரோ அந்தத் தகராறே மெல்ல உருவாகியிருந்தது இப்போது.
தன் மகனின் நட்பை நம்பி அவனிடம் தன்னைப் பூரணமாக ஒப்படைத்துக் கொண்டு பல்லாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து அவனோடு புறப்பட்டு வந்திருக்கும் ஒருத்தியைக் காமாட்சி இப்படிப் புண்படுத்தி விட்டாளே என்று சர்மாவுக்கு வருத்தமாக இருந்தது.
"நடக்கக் கூடாதது ஒண்ணும் நடந்துடலை. எதுக்காக இப்பிடிக் கூப்பாடு போட்டு இரையரே? பேசாம உள்ளே போய் உன் காரியத்தைப் பாரு" - என்று காமாட்சியம்மாளைக் கண்டித்துவிட்டுப் பார்வதியின் பக்கம் திரும்பி, "ஏய் பாரு! நீ அவளை மாடிக்குக் கூட்டிண்டு போ..." - என்று கமலியைச் சுட்டிக் காட்டினார். பார்வதியும் கமலியும் மாடிக்குப் போனார்கள். அவர்கள் சென்றபின் மேலும் காமாட்சியம்மாளைக் கண்டித்தார் அவர்:
"உனக்கு உன் பெண்ணைக் கண்டிக்கிறதுக்குப் பாத்தியதை உண்டு. அடுத்தவா மனசு புண்படறாப்ல பேசறதுக்கு நீ யாரு? நீ பேசினது கொஞ்சங் கூட நன்னா இல்லே. வீடு தேடி வந்திருக்கிறவாளைப் பேசற பேச்சா இது?"
"நான் பேசலே. ஊரே பேசிண்டிருக்குங்கறது உங்களுக்குத் தெரியாது போலிருக்கு."
-காமாட்சியம்மாள் போருக்குக் கொடி கட்டுகிறாள் என்பது சர்மாவுக்குப் புரிந்து விட்டது. இது ஒரு பெரிய சண்டையாகி மாடியிலிருக்கும் கமலியின் கவனம் மறுபடியும் கவரப்பட்டு இரசாபாசமாவதை அவர் விரும்பவில்லை.
"பேசாமே உள்ளே போய் உன் கைக் காரியத்தைப் பாரு" - என்றார் சர்மா. அவர் அதட்டிய குரலுக்குக் கட்டுப்பட்டுக் காமாட்சியம்மாள் உள்ளே சென்றாள்.
சீக்கிரமோ, அல்லது சிறிது காலந் தாழ்த்தியோ அந்த வீட்டில் ஏற்படக்கூடும் என்று அவர் எதிர்பார்த்த ஒரு பிரச்சனை இன்றே இப்பொழுதே விளைந்து விட்டது. விவரங்கள் தெளிவாகச் சொல்லப்படாமல் இருக்கும்போதே காமாட்சியம்மாள் சண்டைக்குக் கிளம்பியிருந்தாள். அதட்டியும் மிரட்டியுமே அதிக நாள் இந்தப் பிரச்னையைச் சமாளிக்க முடியாது என்பது சர்மாவுக்குத் தெரிந்துதான் இருந்தது.
மாமியாரும் மருமகளுமாக இல்லாமலே காமாட்சிக்கும் கமலிக்கும் மாமியார் மருமகள் சண்டையை விடக் கடுமையான சண்டைகள் வந்துவிடும் போலிருந்தது. இவற்றை எல்லாம் உத்தேசித்துதான் ரவியிடம் ஓரளவு விரிவாகப் பேசி விடலாம் என்று ஆற்றங்கரைக்குப் புறப்படும்போது அவனைத் தம்மோடு அழைத்துச் செல்வதற்காகத் தேடியிருந்தார் அவர். ரவியின் திட்டம் என்ன? அவன் என்ன செய்யப் போகிறான் என்பதை எல்லாம் அவனிடமே மனம் விட்டுப் பேசிவிடத் தீர்மானித்திருந்தார் அவர்.
அந்த விஷயத்தைத் தள்ளிப் போடலாம் என்று நினைக்கவும் முடியாதபடி நெருக்கடி உருவாகியிருந்தது. ஊர் உலகம் என்று வெளியிலிருந்து நெருக்கடிகளும் நிர்ப்பந்தங்களும் இன்னும் வந்துவிடவில்லை. என்றாலும் வீட்டுக்குள்ளேயே எதிர்பார்த்த நெருக்கடிகள் இன்று தொடங்கியிருந்தன. சீமாவையரின் கேள்வி, படித்துறையில் ஜபம் பண்ணிக் கொண்டிருந்த வைதிகர்களின் விசாரணை எல்லாமாகச் சேர்ந்து இந்தப் பிரச்சனை நாளைக்கோ, நாளன்றைக்கோ ஊரளாவியதாகவும் ஆகக்கூடும் என்பதற்கு அறிகுறிகளாகத் தோன்றின.
தம்முடைய மனைவி காமாட்சியம்மாள் அப்படிப் பேசியதற்குக் கமலியிடம் அவள் சார்பில் தானாவது மன்னிப்புக் கேட்க வேண்டுமென்று தோன்றியது அவருக்கு. அதற்காக மாடிப்படி ஏறியவரின் செவிகளில் மங்கலமான துர்க்கா சப்த ஸ்துதியின் அழகிய ஸ்தோத்திரம் விழுந்தது.
"ஸர்வ மங்கல மாங்கல்யே ஸிவே சர்வார்த்த ஸாதிகே
ஸ்ரண்யே த்ரியம்பகே தேவி நாராயணி நமோஸ்துதே."
பார்வதி முதலில் சொல்ல அதைத் திருப்பிச் சொல்லிக் கொண்டிருந்தாள் கமலி. கொஞ்சங்கூடக் குழப்பமில்லாத தெளிவான உச்சரிப்பில் கமலி அதைத் திருப்பிச் சொல்லியதைக் கேட்டுச் சர்மாவுக்கு மெய் சிலிர்த்தது. இப்படிப் பாந்தமாய் அழகாக ஸ்தோத்திரம் சொல்லுகிறவள் விளக்கேற்றியதால் லட்சுமி வீட்டில் தங்கமாட்டாள் என்று சாடியிருந்த காமாட்சியம்மாள் மேல் இப்போது மீண்டும் கோபம் கோபமாக வந்தது அவருக்கு. மேலே ஏறிச் செல்லாமல் நின்று கொண்டிருந்த படியிலிருந்தே அதை மேலும் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார் சர்மா. தேசம், ஆசாரம், கலாசாரம், இனம், நிறம் இவற்றையெல்லாம் மானிட ஜாதியின் ஒற்றுமைக்குப் பயன்படுத்தாமல் இடையூறுகளாகவும் தடைகளாகவும் பண்ணிவிட்டவர்கள் மேல் அந்த விநாடியில் கோபம் கோபமாக வந்தது அவருக்கு. மேலே படியேறிப் போய்க் கமலியிடம் பேசலாமா, அவர்கள் தனிமையைக் கலைக்காமல் அப்படியே திரும்பிக் கீழே போய் விடலாமா என்று படியிலேயே தயங்கினார் சர்மா. காமாட்சியம்மாள் நடந்து கொண்டதற்கு மாற்றாகக் கமலியிடம் இரண்டு வார்த்தை பேசி மன்னிப்புக் கேட்டாலொழிய மனம் நிம்மதியடையாது போலிருந்தது அவருக்கு.
மேலே படியேறி மாடிக்குள் பிரவேசித்தார் அவர். கமலியும், பார்வதியும் சொல்லிக் கொண்டிருந்த ஸ்தோத்திரத்தை நிறுத்திவிட்டு அவரைப் பார்த்ததும் எழுந்து நின்றார்கள்.
"காமாட்சிக்கு வயசாச்சு! யாரைப் பேசறோம், என்ன பேசறோம்னு தெரியாமே முன் கோபத்திலே ஏதாவது பேசிடுவா. அதெல்லாம் ஒண்ணும் மனசிலே வச்சுக்க வேண்டாம். உடனே மறந்துடறது நல்லது...."
தன்னை நோக்கித் தனக்காகத்தான் அவர் இதைச் சொல்கிறார் என்பதை அடுத்த கணத்திலேயே கமலி புரிந்து கொண்டாள். இதற்கு அவளிடமிருந்து என்ன பதில் வருகிறது என்பதை எதிர்பார்க்காமலே அவர் விடுவிடுவென்று படியிறங்கிக் கீழே போய்விட்டார். அவர் மனம் அப்போது ஒரேயடியாகக் கலங்கிப் போயிருந்தது. பேசாமல் முதலில் யோசித்திருந்தபடி கமலியையும் ரவியையும் அவர்கள் சங்கரமங்கலத்தில் இருக்கிற வரை வேணுமாமா வீட்டிலேயே தங்கவைத்து விடலாமா என்று கூட இப்போது தோன்றியது அவருக்கு. இதிலிருந்து வீட்டிலும், ஊரிலும் எந்தெந்த முனையில் எப்படி எப்படிப் பிரச்சனைகள் கிளைக்கக் கூடும் என்று நினைத்துப் பார்த்தார் அவர். வெளியே போயிருந்த ரவி வீட்டுக்கு வந்ததும் முதலில் அவனிடம் இந்தப் பிரச்னையைப் பற்றி விரிவாகப் பேசி ஒரு முடிவுக்கு வந்துவிட வேண்டும் என்று மனதுக்குள் தீர்மானித்துக் கொண்டார். ரவியும், கமலியும் தொடர்ந்து வீட்டிலேயே தங்கி இருப்பதைப் பொறுத்து, அவருக்கு ஏற்பட்ட ஒரே ஒரு மனத்தயக்கம் கவலையில்லாமல் வளர்ந்த செல்வக் குடும்பத்துப் பெண்ணான கமலியின் பூப்போன்ற மனம் அடுத்தடுத்து வேதனைப் படும்படியான சம்பவங்கள் அந்த வீட்டில் நடந்து விடுமோ என்பதுதான்.
காமாட்சியம்மாள் என்ன பேசுவாள், எப்படி நடந்து கொள்வாள் என்பதை ஒவ்வொரு கணமும் கண்காணித்துக் கமலிக்கு ஏற்பட இருக்கும் மனத்துன்பங்களைத் தவிர்ப்பது என்பது இயலாத காரியம். இதற்காக என்றே தானோ ரவியோ இருபத்து நாலுமணி நேரமும் வீட்டில் அடைந்து கிடந்து காமாட்சியம்மாளைக் கவனித்துக் கொண்டிருப்பது என்பதும் நடைமுறையில் சாத்தியமாகாத காரியம். கமலியின் மேலுள்ள அனுதாபத்தினாலேயே அவர் இப்போது இப்படி நினைத்தார். பச்சைக் கிளியைக் கூண்டிலடைத்த மாதிரி அவளை அந்த வீட்டின் கடுமையான ஆசார அனுஷ்டானங்களில் சிக்க வைப்பதற்கு அவரே தயங்கினார். கமலியும் ரவியும் சங்கரமங்கலத்தில் வந்து இறங்குவதற்கு முன் அவர் மனத்தில் பல தயக்கங்கள் அலை போதியிருந்தன. அவை வெறும் தயக்கங்களாகத் தான் இருந்தனவே ஒழிய வெறுப்புகளாக இல்லை. கமலி வந்து பழகியபின் அவரைப் பொறுத்தவரை அந்தத் தயக்கங்கள் கூட மெல்ல மெல்ல மாறி உள்ளூறப் பிரியமாக முகிழ்ந்திருந்தது. காரணமும் அர்த்தமும் இல்லாத ஒர் குருட்டுக் காதலாக அது அவருக்குப் படவில்லை. இவன் அவள் மனத்தைக் கவர்ந்ததற்கும் அவள் இவன் மனதைக் கவர்ந்ததற்கும் நியாயமான இயல்பான காரணங்கள் இருப்பதை இப்போது அவர் உணர்ந்தார். அந்நிய தேசத்துக்குப் போய்த் திரும்பும் சராசரி இந்திய இளைஞன் திமிருக்காகவும் ஊரார் வியப்பதற்காகவும் ஒரு வெள்ளைத் தோலுக்குரியவளை உடன் இழுத்துக் கொண்டு வருவதைப் போல் இது இல்லை.
ரவியே கடிதத்தில் எழுதியிருப்பதைப் போல் இது உண்மையிலேயே காந்தருவ சம்பந்தமாகத்தான் இருந்தது. இருவருடைய பிரியங்களிலும், அந்தரங்களிலும் அவருக்குச் சந்தேகம் எதுவும் இருக்கவில்லை. வெறும் உடல் சம்பந்தப்பட்ட பரஸ்பரக் கவர்ச்சி என்று மட்டும் அதை நினைக்க முடியவில்லை. உடலையும் தவிர அறிவுக்கும் ஒத்த உணர்வுகளுக்கும் ஒத்த எண்ணங்களுக்கும் இந்தக் காதலில் அதிக சம்பந்தம் இருப்பது புரிந்தது.
காமாட்சியால் இதை வெறுக்க முடிந்ததுபோல் அவரால் இதை வெறுக்க முடியவில்லை. பூரண ஞானத்தின் கனிவு எந்த மனத்தில் நிரம்பியிருக்கிறதோ, அந்த மனத்தில் மிகவும் கொச்சையான வெறுப்புகளும், தூஷணைகளும் ஒரு போதும் வருவதே இல்லை. எங்கு கொச்சையான வெறுப்புகளும், தூஷணைகளும் நிரம்பியிருக்கிறதோ அங்கே பூரண ஞானம் இருப்பதில்லை. கொச்சையான வெறுப்புகளும் தூஷணைகளும் பூரண ஞானத்தை அழித்து விடுகின்றன. 'தூஷணம் ஞான ஹீனம்' - என்பதை அவர் நினைத்தார்.
வெளியே போயிருந்த ரவி திரும்பி வந்தான். வாசல் திண்ணையிலிருந்த சர்மா அங்கேயே அவனை எதிர்கொண்டு தடுத்து உட்கார வைத்து விட்டார்.
"உன்னை அப்பவே ஆத்தங்கரைக்குப் போறப்போ தேடினேன். நீ ஆப்படலே. எனக்குத் தனியாக உங்கிட்டக் கொஞ்சம் பேசணும்."-
"மூணாவது வீட்டு சுந்தரராமன் கூப்பிட்டான், போய்ச் சித்தநாழி பேசிண்டிருந்துட்டு வந்தேன்."-
"நாம இங்கேயே பேசலாமா? இல்லே மறுபடியும் ஆத்தங்கரைக்கே பொறப்பட்டுப் போலாமா?"
"ஏன்? பொழக்கடைத் தோட்டத்துக் கிணத்தடியிலேயே உட்கார்ந்து பேசலாமே அப்பா!"
"சரி! வா... சொல்றேன்."
இருவருமாகக் கிணற்றடிக்குப் புறப்பட்டுப் போனார்கள். கிணற்றடி மேடையில் சிமெண்ட் தளம் போட்டிருந்தது. தோய்க்கிற கல்லை ஒரு ஸ்டூல் உயரத்துக்குத் தூக்கிக் கட்டியிருந்ததால் உட்கார வசதியாயிருந்தது. சர்மா அதில் உட்கார்ந்து கொண்டார்.
அதற்கு இணையான உயரத்தில் அருகே இருந்த சிமெண்ட்டுத் தொட்டியின் சுவரில் ரவி உட்கார்ந்து கொண்டான்.
தாம் பேசத் தொடங்குவதற்கு முன் அதற்குப் பயன்படும் சில பூர்வாங்கமான தகவல்களை ரவியிடம் முதலில் விவரிக்கத் தொடங்கினார் சர்மா. கமலியைப் பற்றிய காமாட்சியம்மாளின் சந்தேகங்கள், அவள் அடிக்கடி தம்மிடம் தூண்டித் துளைத்துக் கேட்கும் கேள்விகள், அன்று மாலை கமலி சந்தி விளக்கு ஏற்றி வைத்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறு, சீமாவையரின் விசாரிப்பு, படித்துறையில் ஊர் வைதிகர்களின் கேள்விகள் எல்லாவற்றையுன் ஒவ்வொன்றாய் விளக்கமாகச் சொல்லிவிட்டு, அதற்கு அவன் என்ன பதில் சொல்கிறான் என்று எதிர்பார்த்து அந்தப் பதிலுக்காகத் தம் பேச்சை நடுவே நிறுத்தினாற் போலச் சிறிது நேரம் நிறுத்தியிருந்தார் சர்மா.
"நீங்க சொல்றதெல்லாம் சரி அப்பா! இதிலே சிலது நான் ஏற்கெனவே எதிர்பார்த்தது தான். இப்போ நான் என்ன பண்ணணும்கறேள்...?"
"என்னைத் தப்பாப் புரிஞ்சுக்காதே! உன்னோட லெட்டர் கிடைச்சப்பவும் அதுக்கப்புறமும் இருந்த கோபமும் குழப்பமும் கூட இப்போ எனக்கு இல்லே, அந்தப் பெண் கமலியை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. உங்க சிநேகிதத்திலேயும் தப்பு இருக்கிறதாப் படலே. ஆனா உங்கம்மா, ஊர் உலகம் எல்லாரும் இதுக்குக் குறுக்கே இருக்காங்கிறதை நீ மறந்துடப்படாது."
"நீங்க தப்பாப் புரிஞ்சுக்கல்லேங்கிறதே எங்க பாக்கியம்தான் அப்பா!"
"தப்பாப் புரிஞ்சுக்கல்லைன்னாலும் சூழ்நிலைகளுக்கும் மற்றவர்களின் நிர்ப்பந்தங்களுக்கும் ஊர், உலகத்துக்கும் நான் கட்டுப்பட்டவன்கிறதை நீ மறந்துடாதே...."
"இந்தியாவின் மிகப்பெரிய துரதிருஷ்டமே அதன் பூரண ஞானவான்கள் எல்லாரும் பயந்தாங் கொள்ளிகளாக இருப்பது தான்..."
"அறிவு என்பது வேறு. சுற்றுப்புறத்தோடு ஒத்துப் போவது என்பது வேறு... நான் இதை எனக்காகச் சொல்லலே ரவி! இன்னிக்குச் சாயங்காலம் அவ தானா நல்லது செய்யறதா நெனச்சுண்டு விளக்கேத்தி வைக்கப்போக உங்கம்மா சத்தம் போட்டு இரைஞ்சாளே, அது மாதிரி ஒண்ணொண்ணா நடந்தா வீணா அவ மனசு புண்படுமேன்னுதான் யோசிக்கிறேன்."
"சரிப்பா... நீங்களே இதுக்கு வேற யோசனை சொல்லுங்கோ. என்ன செய்யலாம்? ஒரு நா இரண்டு நாளோட போற விஷயம் இல்லே இது. இந்தத் தடவை நான் ஒரு வருஷ 'லீவ்'லே வந்திருக்கேன். இந்தியாவிலே ஒரு காலத்திலே பிரெஞ்சுக் காலனிகளா இருந்து இன்னிக்கு இந்திய யூனியனாயிட்ட பிரதேசங்களிலே பிரெஞ்சுக் கலாசாரமும் இந்தியக் கலாசாரமும் எந்த அளவுக்கு இணைஞ்சிருந்தது என்கிறதை ஆராய்ஞ்சு எழுதறத்துக்காக அவ வந்திருக்கா. அதுக்காக அமெரிக்கன் ஃபவுண்டேஷன் ஒண்ணு அவளுக்கு உதவி செய்யறது. ஒரு வருஷம் இங்கே இருக்கப் போறா. நானும் ஏறக்குறைய இதே மாதிரி ஒரு 'அஸைன்மெண்ட்'டிலே தான் வந்திருக்கேன். சங்கரமங்கலத்தை ஹெட் குவார்ட்டர்ஸா வெச்சுண்டுதான் எங்க காரியத்தைச் செய்யறதா வந்திருக்கோம்..."
"எனக்கு ஆட்சேபணையில்லே. ஒரு வருஷம் நீ ஊர்ல தங்கப்போறேங்கிறதைப் பத்தி எனக்கு ரொம்ப சந்தோஷம்-"
"பின்னே நீங்க எதைப்பத்திக் கவலைப்படறேள்னு புரியலையே அப்பா?"
"லௌகீகமே தெரியாத ஒரு பழைய காலத்து பொம்மனாட்டியோட ஆதிக்கத்திலே இதே வீட்டில் இருந்துண்டு உங்களாலே நிம்மதியா அதைச் செய்ய முடியுமான்னு தான் கவலைப்படறேன். என் தயக்கமெல்லாம் விருந்தாளியா வந்திருக்கிறவளோட மனசு கொஞ்சமும் நோகப்படாதுங்கறதுதான்."
"கமலி விருந்தாளி இல்லே. இதுவரை எப்படியானாலும் இனிமே இந்த வீட்டிலே அவளும் ஒருத்தி...."
--------------
அத்தியாயம் 14
சர்மா சிறிது தயக்கத்திற்குப் பின் மீண்டும் ரவியைக் கேட்டார்:
"நீ சொல்றே. அதை நான் கூட ஒத்துண்டுடறேன்னே வச்சுக்கோ. உங்கம்மா ஒத்துக்கணுமேடா? அவளுக்கு இன்னம் முழுவிவரமும் தானாவும் தெரியலே. தெரிவிக்கப்படவும் இல்லே. அதுக்குள்ளேயே ஆயிரம் சந்தேகப்படறா... உங்கம்மாவுக்குப் பயந்து முதல்லே உன் லெட்டர் கிடைச்சதும் நானும் வேணுமாமாவுமாகக் கலந்து பேசி உன்னையும் கமலியையும் அவர் வீட்டு மாடியிலேயே தங்க வச்சுடலாம்ன்னு கூட ஆரம்பத்திலே யோசிச்சோம்." -
"இப்போ புரியறது அப்பா! நாங்க ரெண்டு பேருமாத் தொடர்ந்து இங்கேயே தங்கியிருக்கிறது சாத்தியமான்னுதானே நீங்க கேக்கறேள்?"
"நீ இங்கே தங்கிக்கிறதைப் பத்திப் பேச்சே இல்லே; இது உன் வீடு. உன் அப்பா உன் அம்மா உன் மனுஷா உனக்கும் அம்மாவுக்கும் பெரிசாச் சண்டை எதுவும் வந்துடப் போறதில்லே. கமலி தங்கிக்கிறதைப் பத்தி தான் இப்போ பிரச்சனை. உனக்கு ஆட்சேபணை இல்லேன்னாக் கமலியை மட்டும் வேணு மாமா வீட்டு மாடியிலே தங்க வச்சுடலாம். அவாளே காஸ்மாபாலிடன். ரொம்ப நாகரிகம்கிறதாலே அவா வீட்டிலே இவளாலே அவாளுக்கு எந்தச் சிரமமும் வராது."
"அப்படிப் போறதா இருந்தாக் கமலியை மட்டும் தனியா அவா வீட்டுக்குப் போகச் சொல்ல முடியாதுப்பா, இட் வோண்ட் லுக் நைஸ். நானும் கூடவே போயிட வேண்டியதுதான்."
"அவ போறதைப்பத்தி ஒண்ணுமில்லே. ஆனா நீயும் அவளோட சேர்ந்து போயிட்டாத்தான் அதுக்குக் கண்ணு மூக்குக் காது வச்சு ஊர்ல வீண் வம்பு வதந்தியெல்லாம் கிளம்பும்..."
"என் அபிப்பிராயம் கமலியும் இங்கேயே நம்கூட இருக்கலாம்கிறதுதான். அம்மாவாலே சிரமங்கள் ஏற்பட்டாலும் கமலியாலே அதைச் சமாளிச்சுக்க முடியும்..."
"நீ சொல்றே.... ஆனாக் கமலியும் என்ன நினைக்கிறாள்னு எனக்குத் தெரிய வேண்டாமா?"
"இதுலே ஒளிவு மறைவு எதுக்கு? என்னோட வாங்கோ! இப்ப அவளையே கேட்டுடலாம்..."
"நான் எதுக்குடா? நீயே கேட்டுச் சொல்லு... போறும்..."
"இல்லே! காரணமாத்தான் சொல்றேன். நீங்களும் வாங்கோ... அப்பத்தான் சந்தேகத்துக்கு இடமில்லாமே அவளை நீங்க புரிஞ்சுக்க முடியும்."
சர்மா தயங்கினார்.
"யோசனை ஒண்ணும் வேண்டாம்! இப்ப என்னோட வாங்கோ சொல்றேன்"-
என்று கூறியபடியே ரவி எழுந்திருந்து நடந்தான். சர்மா வேறு வழியில்லாமல் பின் தொடர்கிறவரைப் போல் தயங்கித் தயங்கி அவனைப் பின் தொடர்ந்தார்.
சர்மாவும் ரவியும் மாடிக்குப் போனபோது கூடக் கமலியும் பார்வதியும் தொடர்ந்து துர்க்கா சப்த ஸ்துதி ஸ்தோத்திரத்தைத்தான் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
"பாரு! நீ கொஞ்சம் கீழே போய் இரும்மா... நாங்க கொஞ்சம் பேசிட்டு அப்புறமா உன்னைக் கூப்பிடறோம்" - என்று சொல்லிப் பாருவைக் கீழே அனுப்பினார் சர்மா.
ரவிக்கு அப்பா அவளை அனுப்பியது பிடிக்க வில்லை.
"ஏன்? அவ இருந்தா என்ன? அவபாட்டுக்கு இருந்துட்டுப் போறா. அவளை ஏன் கீழே போகச் சொல்றேள் இப்போ?"
"இல்லே... அவ அப்புறம் வந்துக்கட்டும். நீ பேசாம இரு..."
ரவி இதற்கு மேல் தன் கோரிக்கையைத் தந்தையிடம் வற்புறுத்தவில்லை.
கமலி அவர்கள் உள்ளே வரக்கண்டதும் எழுந்து நின்றவள் இன்னும் நின்று கொண்டேதான் இருந்தாள்.
"இவளை நான் கேட்டா எனக்காகப் பதில் சொல்றதா நீங்க நினைச்சுப்பேள். உங்க சந்தேகத்தை நீங்கள் நேரே கேட்டுடுங்கோ" என்று சர்மாவிடம் சொன்னான் ரவி.
சர்மாவும் ரவியும் நாற்காலிகளில் உட்கார்ந்து கொண்டனர். கமலியையும் உட்காரச் சொல்லி ரவியே வேண்டினான். ஆனால் அவள் உட்காரவில்லை.
"உட்காரேம்மா... உங்கிட்டக் கொஞ்சம் பேசலாம்னு வந்திருக்கோம். எவ்வளவு நாழிதான் நின்னுண்டேயிருப்பே? உன் மரியாதை எனக்கும் புரியறதும்மா. இப்போ நானே சொல்றேன். நீ கொஞ்சம் உட்கார்ந்துக்கோ..."
"பரவாயில்லே. சொல்லுங்கள், நிற்பது எனக்கு ஒன்றும் சிரமமாகப் படவில்லை..."
"உனக்கு எதுவும் சிரமமா இருக்கோ இல்லையோ. நீ நிக்கறது எங்களுக்குக் கஷ்டமாயிருக்கும்மா..."
"கஷ்டம் ஒன்றுமில்லை, சொல்லுங்கள்..."
"மனசுலே ஒண்ணும் ஒளிவு மறைவில்லாமே எதுவும் தப்பா எடுத்துக்காமே நான் கேக்கறதுக்கெல்லாம் நீ பதில் சொன்னியானா எனக்குப் பெரிய உபகாரமா இருக்கும் அம்மா! நான் ரவியைத்தான் உன்னைக் கேக்கச் சொன்னேன். அவன் நீங்களே கேட்டுக்கோங்கோன்னு என்னைக் கொண்டு வந்து இங்கே நிறுத்திட்டான்."
"..."
"ஏம்மா நீ சாயங்காலம் சந்தி விளக்கு ஏத்தி வச்சதைப் பத்திக் காமாட்சி, பாருகிட்ட என்னென்னமோ இரைஞ்சிண்டிருந்தாளே, அதுலே உனக்கு ஒண்ணும் மனசு வருத்தம் இல்லியே? தயங்காமல் நீ எங்கிட்ட நிஜத்தைச் சொல்லலாம்."
"வருத்தப் படுவதற்கு இதில் என்ன இருக்கிறது? அவர்கள் பாருவைக் கண்டித்தார்கள். பாருவை அவர்கள் கண்டிக்கக் கூடாதென்று நான் எப்படிச் சொல்ல முடியும்? ஒரு வேளை பாருவைக் கண்டிக்காமல் அவர்கள் என்னையே நேருக்கு நேர் கூப்பிட்டுக் கண்டித்து இருந்தால் கூட நான் அதற்காக வருத்தப் பட்டிருக்க மாட்டேன். அவர்கள் உரிமையோடு என்னை ஏன் கண்டிக்க மாட்டேனென்கிறார்கள் என்பது தான் என் வருத்தமே தவிர ஏன் கண்டிக்கிறார்கள் என்பது வருத்தமில்லை. ரவியின் அம்மா உரிமை எடுத்துக் கொண்டு என்னை நேருக்கு நேர் கண்டித்திருந்தால் நான் இன்னும் எவ்வளவோ சந்தோஷப்பட்டிருப்பேன்..."
- இத்தனை அடக்கமும் விநயமும் நிறைந்த ஒரு பதிலை அப்போது அவளிடமிருந்து சர்மா எதிர்பார்க்க வில்லை. அதனால் சிறிது தயக்கத்துக்கும், மௌனத்துக்கும் பின் மேலும் அவர் அவளைக் கேட்டார்:-
"ஒரு வருஷத்துக்கும் மேலே இங்கே இருக்க நேரலாம்னு கேள்விப்பட்டேன். ரொம்ப சந்தோஷம். இந்த வீட்டிலேயே உன் சௌகரியங்களுக்கு ஒத்து வருமா? ஒத்து வருமானால் நீயும் ரவியும் தாராளமாக் இங்கேயே இருந்துக்கலாம். இல்லையானா இதைவிட சௌகரியமாகவும், தனியாகவும் வேற இடம் உங்களுக்காகப் பக்கத்திலேயே ஏற்பாடு பண்ண என்னாலே முடியும்."
"இங்கே எனக்கு எந்த அசௌகரியமும் இருக்கிறதாகப் படவில்லை. ஒரு வீடு என்பது சௌகரியங்களும் அசௌகரியங்களும் சேர்ந்ததாகதான் இருக்கும். தனியாகச் சௌகரியங்களே நிறைந்ததும், தனியாக அசௌகரியங்களே நிறைந்ததுமான ஒரு வீடு உலகம் முழுவதும் தேடினாலும் கூடக் கிடையாது."
"அப்படியில்லேம்மா! ஒத்துப் போகாத மனுஷா ஒருத்தர் இருந்தாலும் தினம் விடிஞ்சு எழுந்திருந்தாச் சண்டையும் பூசலுமான்னா இருக்கும்? சண்டையும் பூசலுமாகவே இருந்தா எப்போ மத்த காரியமெல்லாம் பாக்கறது?"
"நீங்கள் சொல்வதைக் கேட்டு நான் ஆச்சரியப்படுகிறேன். இதுவரை எந்த ஒரு சண்டையும் பூசலும் இங்கு என் வரையில் ஏற்பட்டதே கிடையாது. இந்த வீட்டில் தொடர்ந்து இருப்பதையே நான் விரும்புகிறேன். காமாட்சியம்மாளைப் பல விஷயங்களில் என் குருவாக நான் வரித்திருக்கிறேன். அவர்களிடமிருந்து நான் கற்றுக் கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கிறது."
"உன்னைச் சிஷ்யையாக ஏற்றுக்கொள்ளும் விருப்பமோ சம்மதமோ காமாட்சியம்மாளுக்கு இல்லாமலிருக்கலாம்."
"துரோணரின் விருப்பத்தையும் சம்மதத்தையும் எதிர்பார்த்தா ஏகலைவன் அவருக்குச் சிஷ்யனானான்? சிரத்தையும் பக்தியும் மட்டும் இருக்குமானால் எந்தக் குருவையும் வழிபட்டு பாவித்துக் கொண்டே கற்கவேண்டியதைக் கற்று விட முடியும்."
"அப்படியானால் இதைவிட மிகவும் சௌகரியமான தனிமையான வேறு எந்த இடத்திலும் வசிக்க நீ விரும்பலையா?"
"நிச்சயமாக இல்லை. 'ராமன் இருக்கும் இடம் அயோத்தி'.. என்பதற்காக உங்கள் நாட்டில் பழமொழி உண்டு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கும் அப்படித்தான். வசதிகளிலும், சௌகரியங்களிலும் ஏற்கனவே நான் அலுத்துப் போய்விட்டேன்..."
கீழ்த்திசைக் கலாசாரத்திலும் நூல்களிலும் தத்துவங்களிலும், அவளுக்கு இருந்த ஆழமான பிடிப்பை அவள் பதில்களிலிருந்து சர்மாவால் ஊகித்துக் கொள்ள முடிந்தது.
"சரி! உன்னை அநாவசியமாக இப்பிடி எல்லாம் கேள்வி கேட்டுத் தொந்தரவு செய்யறதுக்காக என்னை மன்னிச்சுடும்மா. இந்த வீட்டில் தவறுதலாகவோ, எங்கள் அறியாமையாலோ, உனக்கு ஏதாவது அசௌகரியங்கள் ஏற்பட்டால் தயவு பண்ணி அதை பொருட்படுத்தாதே. உனக்கு வசதிக் குறைவுகள் ஏற்பட்டு நீ மனசு நோகும்படி ஆயிடப் படாதேன்னுதான் முன்னெச்சரிக்கையா இதெல்லாம் உங்கிட்டக் கேட்டேன்... தப்பா நெனைச்சுக்காதேம்மா...."
"நீங்கள் ரவியின் தந்தை. பெரிய ஸ்காலர். இந்தியக் கலாச்சாரத்தின் பூரணமான தன்மைகள் நிரம்பியவர். உங்களை நான் என்றும் எதற்காகவும் தப்பாக எடுத்துக்கொள்ளும் நிலைமை உருவாகாது - உருவாகக் கூடாது."
சர்மா ரவியின் முகத்தைப் பார்த்தார். 'இப்போது உங்களுக்குத் திருப்திதானா?' என்று பதிலுக்கு முகக்குறிப்பினாலேயே கேட்பது போல் அவரை ஏறிட்டுப் பார்த்தான் ரவி.
"சரிம்மா! நான் கீழே போய்ப் பாருவை அனுப்பறேன்"... என்று கூறி விட்டு மாடியிலிருந்து கீழே புறப்பட்டார் சர்மா. "நீங்க போங்கோ அப்பா! இதோ ஒரு நிமிஷத்திலே வந்துடறேன்" என்றான் ரவி.
"மொள்ள வா... அவசரம் ஒண்ணுமில்லே" என்று அவனுக்குப் பதில் சொல்லியவாறே படியிறங்கினார் சர்மா. இந்தியக் கலாச்சாரத்தின் அழுத்தமான பழம்பெரும் தன்மைகள் நிறைந்த ஒரு சூழலில் அதன் பல அசௌகரியங்களைப் பொறுத்துக் கொண்டும் கூட அவள் வாழத் தயாராயிருப்பது சர்மாவுக்குப் புரிந்தது.
கமலியிடமிருந்து இவ்வளவு விவரங்களைக் கேட்டு தெரிந்து கொண்ட பின் இனி அவளை 'வேணு மாமா வீட்டில் தங்கிக் கொள்ள முடியுமா' என்று விசாரிப்பதே முறையில்லை என்று அவருக்குத் தோன்றிவிட்டது. கமலியைப் பற்றி ரவி கூறியது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை அவர் இப்போது உணர்ந்து கொண்டார். காமாட்சியம்மாளின் முரண்டுகளால் என்னென்ன அசந்தர்ப்பங்கள் ஏற்படுமோ என்று தான் அவர் இப்போது உள்ளூறத் தயங்கிக் கொண்டிருந்தார். அந்த முரண்டுகளால் கூடக் கமலி பாதிக்கப்பட் மாட்டாள் என்று இப்போது அவருக்குத் தோன்றியது.
விளக்கு ஏற்றி வைத்த சம்பவத்தால் காமாட்சியம்மாள் பார்வதியிடம் பேசுவது போல் தன்னைக் குத்திக் காட்டிப் பேசியதைக் கமலி எங்கே மனத்தில் வைத்திருந்து ரவியிடம் சொல்லிக் கலகம் மூட்டி விடுவாளோ என்று எண்ணியிருந்த சர்மாவுக்கு அவளது அடக்கம் முற்றிலும் புதுமையாயிருந்தது. காமாட்சியம்மாளின் பேச்சை ஒரு பெரிய தவறாகவே அவள் மனதில் வைத்துக் கொள்ளவில்லை என்பதோடு வேறு காரணங்களுக்காகக் காமாட்சியம்மாள் மேல் அவளுக்கு ஏற்பட்டிருந்த மதிப்பும், மரியாதைகளும் இதனால் ஒரு சிறிதும் குறையவில்லை என்பது தெரிந்தது.
கமலியால் பிரச்னைகள் எதுவும் வராது என்று தெரிந்தாலும் - காமாட்சியம்மாளாலும் ஊராராலும் விரோதிகளாலும் இது சம்பந்தமாகச் சில பிரச்னைகள் எழக்கூடும் என்ற பயம் இன்னும் அவர் மனத்தில் இருக்கவே செய்தது.
மாடியிலிருந்து ரவி கீழே இறங்கி வந்தான். மறுபடியும் அப்பாவும் பிள்ளையும் கிணற்றடிக்குப் போகவில்லை. கமலியைப் பற்றி மேலே விவாதிக்கவும் இல்லை.
மறுநாள் வேணு மாமாவிடம் கார் இரவல் வாங்கிக் கொண்டு ரவியும் கமலியும் பாண்டிச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்குப் போய் ஒரு வாரம் சுற்றிப் பார்க்கும் உத்தேசத்துடன் புறப்பட்டிருந்தார்கள்.
உதவிக்கும் துணைக்குமாகக் கிளீனர் மாதிரி யாராவது ஒரு வேலைக்காரப் பையனை அழைத்துக் கொண்டு போகுமாறு அப்பாவும், வேணு மாமாவும் எவ்வளவோ கூறியும் ரவி கேட்கவில்லை.
"நானும் கமலியுமா - மாத்தி மாத்தி ஓட்டிப்போம். ரெண்டு பேருமே ஆட்டோமொபைல் எக்ஸ்பர்ட்ஸ். எந்த 'ட்ரபிள்' வந்தாலும் நாங்களே சமாளிச்சுப்போம்" - என்றான் அவன்.
ஒரு வாரம் என்று புறப்பட்டிருந்தாலும் அவர்கள் திரும்பிச் சங்கரமங்கலம் வரப் பத்து நாட்கள் வரை ஆகி விட்டன. பத்து நாள் வீடு வெறிச்சோடிப் போயிருந்தது.
மறுபடி அவர்கள் இருவரும் காரில் ஊர் திரும்பிய ஒரு பிற்பகலில் - காமாட்சியம்மாள் வீட்டுக் கூடத்தில் சாவகாசமாக அமர்ந்து தன்னை மறந்த லயிப்போடு வீணையில் 'தாயே யசோதா'வின் தோடியைப் பெருகச் செய்து கொண்டிருந்தாள். முதலில் காரிலிருந்து இறங்கி உள்ளே நுழைந்த கமலி கூடத்தில் வீணையும் கையுமாக அமர்ந்திருந்த காமாட்சியம்மாளைப் பார்த்ததும் சாட்சாத் சரஸ்வதி தேவியையே எதிரே பார்த்தது போல் பயபக்தியுடன் அப்படியே பிரமித்து நின்று விட்டாள்.
அந்த வீடே அப்போது தோடியிலும் கிருஷ்ண கானத்திலும் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. கமலிக்கு அது ஒரு மெய்சிலிர்க்கச் செய்யும் அனுபவமாக இருந்தது. வீணையோடு அமர்ந்திருந்த கோலத்தில் காமாட்சியம்மாளின் முகத்திலிருந்த அபூர்வமான தேஜஸ் அவளை மிகவும் கவர்ந்தது. அவள் கண்களை அந்தத் தோற்றம் கவர்ந்தது என்றால் செவிகளை அந்த வீணாகானம் என்னும் மாதுர்ய மழை கவர்ந்திழுத்தது.
"என்னம்மா? இப்பத்தான் ஊர்லேயிருந்து வந்தியா? ஏன் இப்படிப் பிரமைபிடிச்ச மாதிரி மலைச்சுப் போய் நின்னுட்டே?" - என்று தற்செயலாக அங்கு வந்த சர்மா வினவிய பின் தான் அவளுக்குத் தன் நினைவே வந்தது. அதற்குள் கையில் காரிலிருந்து எடுத்து வந்த பிரயாணப் பெட்டிகளோடு ரவியும் வீட்டினுள் நுழைந்திருந்தான். கமலியோ வீணையோடு தரையில் பட்டுப் பாயில் அமர்ந்திருந்த காமாட்சியம்மாளின் தோற்றத்திலிருந்த கவனத்தை இன்னும் மீட்க முடியாமல் அதிலேயே மனம் இலயித்துப் போயிருந்தாள்.
------------
அத்தியாயம் 15
ஒரு புராதனமான வைதீகக் கலாசாரம் நிறைந்த தென்னிந்திய வீடும் அதன் அசௌகரியங்களும், முரண்டுகளும் மிக்க குடும்பத் தலைவியும் பழைய தழும்பேறிய பழக்க வழக்கங்களும், கமலியைப் போன்ற ஓர் ஐரோப்பியப் பெண்ணுக்குப் பெரிய இடையூறுகளாக இருக்கும் என்று சர்மா எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கமலி அந்த வீட்டையும், அதன் கலாச்சாரப் பிடிப்புகளையும் காமாட்சியம்மாளின் கட்டுப்பாடுகளையும் நேசித்து மதித்துக் கடைப்பிடிக்கத் தொடங்கினாளே ஒழிய வெறுக்கவில்லை. அந்த வீட்டின் நடைமுறைகளுக்கு ஏற்ப அவள் தன்னை மாற்றிக் கொண்டாளே தவிரத் தன்னுடைய வசதிகளுக்கு ஏற்ப அந்த வீட்டையும் அதன் பழங்காலத்து மனிதர்களையும் நடைமுறைகளையும் ஒரு சிறிதும் மாற்ற முயலவில்லை. கமலியைப் பொறுத்துச் சர்மாவின் மனநிலை நெகிழ்ந்து மெல்ல மெல்ல அவள் மேல் அநுதாபமாக மாறியதற்கு அவளுடைய இந்த நனி நாகரிகப் பண்பே காரணமாயிருந்தது.
ரவியும் கமலியும் பாண்டிச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு ஊர் திரும்பிய தினத்தன்று இரவு தனியாக ரவியிடம் பேசிக் கொண்டிருந்தபோது, "உங்கள் அம்மா வீணையும் கையுமாக அமர்ந்திருந்த காட்சி சரஸ்வதி தேவியே வாத்தியத்தோடு வந்து உட்கார்ந்து கொண்டிருந்த மாதிரித் தோன்றியது" என்று கமலி கூறினாள்.
'இப்போதெல்லாம் மிகவும் நவீனமான புதிய டிப்ளமஸி, ஓயாமல் புகழ்ந்தே எதிர்ப்பையும் எதிரியையும் அழிப்பதுதான் கமலி!' - என்று கேலியாக அதற்கு உடனே பதில் சொல்ல எண்ணிய ரவி அவள் காமாட்சியம்மாளைப் புகழ்ந்த குரலிலிருந்த பக்திபூர்வமான தொனியையும், மனப்பூர்வமான ஆழத்தையும் உணர்ந்து கொண்டு அதை வேடிக்கையாக்கிவிடப் பயந்து தயங்கியவனாகத் தன் எண்ணத்தையும் கேலியையும் தவிர்த்துக் கொண்டு பேசாமலிருந்தான். எண்ணியதை விட்டு விட்டு வேறு விதமாகப் பேசினான்:
"எங்க அம்மா ஒரு புராதனமான தென்னிந்திய வைதீகக் குடும்பத்தின் பூர்ணமான அம்சங்கள் அத்தனையும் சிறிதும் குறைவில்லாமல் உள்ளவள். பூர்ணமான என்றால் ப்ளஸ் பாயிண்ட் மைனஸ் பாயிண்ட் ரெண்டையும் சேர்த்துத்தான் சொல்றேன். ஆனா அம்மாவைப் பொறுத்தவரை எல்லாமே ப்ளஸ் பாயிண்டா மட்டும் தான் உன் கண்ணுக்குப் படறது..."
"ஒரு விஷயத்தின் சாதகப் பாதகத்தைக் கணக்கிடும் போது நமக்கு ஒத்து வராததை எல்லாமே மைனஸ் பாயிண்டாக் கணக்கிடறது அவ்வளவு சரியில்லை."
தன் அம்மாவிடம் குறைகளும் முரண்டுகளும் உண்டு என்று தானே சொல்வதைக் கூட அவள் ஒப்புக் கொள்ளாமல் மறுப்பதை அவன் அப்போது கவனித்தான். அம்மா பம்பரமாகச் சமையலறையில் வேலை செய்வது, பூஜை செய்வது, காலையில் நீராடியதும் துளசி வழிபாடு, பசு வழிபாடுகள் செய்வது, பல்லாங்குழியாடுவது, வீணை வாசிப்பது, ஸ்தோத்திரம் ஸ்லோகம் சொல்லுவது, எல்லாமே கமலிக்கு அதிசயமாக இருப்பதை அவன் கண்டான். தான் அளித்திருந்த பயிற்சிகள், பழக்க வழக்கங்கள், முன் தகவல்கள், அவளை ஓரளவு இந்திய வாழ்க்கைக்கு எந்தவிதத் தயக்கமுமின்றிப் பொருந்த வைக்கும் என்று அவன் அறிந்திருந்தாலும் இப்போது இங்கே வந்த பின் தான் எதிர்பார்த்ததை விட அதிகமாகவும் அவள் அதற்குக் கனிந்து பொருந்திப் பக்குவப்பட்டிருப்பது தெரிந்தது அவனுக்கு.
"உங்கள் அம்மா புடவை கட்டிக்கொள்வது போல் நானும் கட்டிக் கொண்டு பார்க்க வேண்டும் போல் எனக்கு ஆசையாயிருக்கிறது. அதைக் கற்றுக் கொடுப்பதற்கு நாளைக்கு வசந்தியை வரச் சொல்லியிருக்கேன்" - என்று தனது ஒரு விருப்பத்தைக் கமலி வெளியிட்ட போது அவனுக்கு வியப்பாகக்கூட இருந்தது. மடிசார் வைத்துப் புடவை கட்டுவது அநாகரிகமாகவும் பத்தாம் பசலித் தனமாகவும் ஆகி அப்படிக் கட்டுவதை வழக்கமாகக் கொண்டவர்களே அதிலிருந்து விடுபட்டுத் தங்களை அந்நியப் படுத்திக் கொண்டு மாறி வரும்போது எங்கோ ஆறாயிரம் மைல்களுக்கு அப்பாலிருந்து வந்த ஒரு பிரெஞ்சு யுவதி இப்போது அதற்கு ஆசைப்படுவது மிகவும் விநோதமாயிருந்தது.
*****
மறுநாள் காலையில் இறைமுடிமணி வடக்குத் தெருவில் மடத்து மனையில் தாம் தொடங்கும் புதுப் பலசரக்குக் கடைத் தொடக்க விழாவுக்கு வந்து கூப்பிட்டு விட்டுப் போனார். அவர் வந்த போது சர்மா எங்கோ வெளியே போயிருந்தார். ரவியிடமும் கமலியிடமும் தான் வந்த விவரம் சொல்லி விட்டுப் போயிருந்தார் அவர்.
"தம்பீ! உங்க அப்பாருக்குச் சம்மதம் இல்லாம இருக்கலாம். ஆனா எங்க இயக்க வழக்கப்படி ஐயா படத்தை மாட்டி நல்ல ராகுகாலமாப் பாத்துத்தான் நான் கடை தொறக்கறேன். அது என் கொள்கை சம்பந்தப்பட்ட விசயம். நட்புக்காக அவரை அழைக்கிறேன். முடிஞ்சா 'இவுங்களையும்' கூப்பிட்டுக்கிட்டு வாங்க" என்று கமலி பக்கம் சுட்டிக் காட்டி ரவியிடம் சொல்லி விட்டுப் போயிருந்தார் இறைமுடிமணி.
குமார் கல்லூரிக்கும், பார்வதி தனது பள்ளிக்கும் புறப்பட்டுப் போனபின் காலை ஒன்பதரை மணிக்கு மேல் அப்பா வீட்டுக்குத் திரும்பி வந்ததும் ரவி இறைமுடிமணி தேடி வந்து விட்டுப் போனது பற்றி அவரிடம் தெரிவித்தான்.
அவன் தெரிவித்ததற்குச் சாதகமாகவோ, பாதகமாகவோ அப்போது ஒரு பதிலும் சொல்லாமல் கவனிக்காதது போல் இருந்தார் சர்மா. முகக்குறிப்பிலிருந்து அப்போது அவர் மிகவும் கலக்கமாகவும் மனம் குழம்பியும் இருப்பது போல் காணப்பட்டது.
"அவரோட இயக்க வழக்கப்படி ஐயா படம் மாட்டி ராகு காலத்திலே தான் கடை ஆரம்பிக்கிறாராம். அதை நெனச்சுத் தயங்கிப் பேசாமே இருந்துடாமே சிநேகிதத்தை மதிச்சு நீங்க ஒரு நடை வந்துட்டுப் போகணும்னு சொல்லிவிட்டுப் போனார்.
"....."
"என்னப்பா? என்னமோ மாதிரி இருக்கேள்?...."
"எல்லாத் தகராறும் இதனாலேதான்! போறாக் குறைக்கு நான் அங்கே வேற போய் நின்னேன்னா அது வெறும் வாயை மெல்லற சீமாவையர் வாய்க்கு அவல் கிடைச்ச மாதிரி ஆயிடும்."
"எல்லாத் தகராறும்னா என்ன தகராறு அப்பா?"
"தேசிகாமணிக்கு அந்த வடக்குத்தெரு எடம் கிடைக்க விடாமப் பண்ணணும்கிறதுக்காக.... அவனுக்கு நான் வாக்குக் குடுத்து அடவான்ஸ் வாங்கினப்புறம்... சீமாவையர் அஹமத் அலிபாயைக் கூட்டிண்டு வந்து அவனுக்குத் தான் அந்த எடத்தை விட்டாகணும்னு ஒத்தைக்கால்லே நின்னார். நான் ஒத்துக்கல்லே. குடுத்த வாக்குப்படி தேசிகாமணிக்கு விட்டுட்டேன். மடத்திலேயிருந்தும் நான் செய்தது தான் நியாயம்னு லெட்டர் வந்துடுத்து. சீமாவையரிடமும் அதைக் காமிச்சாச்சு. பார்த்துட்டு ஆகாசத்துக்கும் பூமிக்குமாகக் குதிகுதின்னு குதிச்சார். சாமி பூதம் இல்லேங்கிற சு.ம. ஆளுக்கு மடத்து எடம் வாடகைக்குப் போறது பெரிய அக்ரமம்ன்னார். என்னைத் திட்டினார். முந்தாநாள் மடத்து நிலங்களைக் குத்தகைக்கு விட்டபோதும் அவர் சொன்னபடி எதையும் கேட்காம நான் நியாயமானவாளுக்காப் பார்த்து விட்டேன். அதிலே வேறே அவருக்கு என் மேலே மகா கோபம். இதுக்கு முந்தின கூட்டத்திலே அவருக்கு வேண்டிய பினாமி ஆள்களாச் சேர்த்துண்டு வந்து அவாளுக்கே எல்லா நிலத்தையும் குத்தகை முடிச்சிடப் பார்த்தார். நான் விடலே. கூட்டத்தையே அன்னிக்கி ஒத்திப் போட்டுட்டேன்."
"சரி. இதிலே வருத்தப்படறத்துக்கும் தயங்கறத்துக்கும் என்ன இருக்கு? எது நியாயமோ அதைத்தானே செஞ்சிருக்கேள்?"....
"வருத்தம் ஒண்ணும் படலேடா! அங்கே போறதுக்குத் தான் தயக்கமாயிருக்கு. ராகுகாலம், ஐயா படம்னு நீ வேற என்னென்னமோ சொல்றே. ஒண்ணொண்ணும் சீமாவையருக்கு எனக்கெதிரா ஒரு கலகத்தை மூட்டறதுக்குத் தான் பிரயோஜனப்படும்... கொள்கை எப்படி இருந்தாலும் தேசிகாமணியைப் பொறுத்தவரை யோக்கியன்..."
"நீங்க தயங்கறது ரொம்ப வேடிக்கையாத்தான் இருக்குப்பா! அயோக்கியன் ஒருத்தன் என்ன நினைச்சுப்பானோன்னு பயந்து யோக்கியன் ஒருத்தனை மதிக்கவும் ஆதரிக்கவும் தயங்கி நின்னுடற சுபாவம் நம்ம தேசத்துக்கே 'ஸ்பெஷாலிட்டி'யாப் போச்சு. மனத்தினால் சமூக விரோதிகளுக்கும் அயோக்கியர்களுக்கும் பயந்து நடுங்கிக் கொண்டே கையால் தெய்வத்தைக் கூப்பித் தொழும் தேசம் இது. நியாய வேட்கையும் அந்தரங்க சுத்தியோடு கூடிய சத்திய தரிசனமும் இல்லாத பக்தி கூடப் பிரயோஜனமில்லாத விஷயம் தான். யாரோ ஒரு கெட்டவன் என்னமோ நினைச்சுக்கப் போறான்கிறதுக்காக நீங்க உங்க பரம சிநேகிதரோட அழைப்பைப் பொருட்படுத்தாம விடறது எனக்குப் பிடிக்கலே. நீங்க வரேளோ, வல்லியோ; என்னையும் கமலியையும் அவர் கூப்பிட்டிருக்கார். நாங்க நிச்சயமாப் போகப் போறோம்."
"அதுக்குச் சொல்லலே... சரி... நானும் வரேண்டா.... சேர்ந்தே போயிட்டு வந்துடலாம்"... என்று ஒரு நிமிடத் தயக்கத்திற்குப் பின் சர்மாவும் வருவதற்கு இசைந்தார். ஆனால் அவர் மனம் இன்னும் நிம்மதியிழந்த நிலையில் தான் இருந்தது என்பதை முகம் காட்டியது. அவர் மனத்துக்குள் இன்னும் தயக்கம் தான் நிலவியது. மகனோடும் அவனோடு வந்திருக்கிற பிரெஞ்சு யுவதியுடனும் சேர்ந்து ஒன்றாகச் சங்கரமங்கலத்தின் வம்புகள் நிறைந்த தெருக்கள் வழியே நடந்து போய்ப் பரம வைதிகனாகிய தான் ராகு காலத்தில் திறந்து வைக்கப்படும் ஒரு கடைத் திறப்பு விழாவுக்கு விஜயம் செய்வது என்பதை நினைத்துப் பார்ப்பதிலேயே அவருக்கு ஆயிரம் தயக்கங்கள் இருந்தன.
தயக்கங்கள் எல்லாம் ஊராரையும் சீமாவையரையும் எதிரிகளையும் நினைத்துத்தான். தனிப்பட்ட முறையில் நினைக்கும்போது எந்தக் குழப்பமும் தயக்கமும் இல்லாமல் தேசிகாமணியின் மருமகனுக்காகத் திறக்கப்படும் பலசரக்குக் கடைத் திறப்பு விழாவுக்குப் போய் விட்டு வரவேண்டும் என்றுதான் தோன்றியது. 'நல்ல வேளை பார்த்துத் தொடங்குவதும் ராகுகாலத்தில் தொடங்குவதும் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. நாம் நிர்ப்பந்தப் படுத்த முடியாது. அதே போல் வாடகைக்குப் பேசி எடுத்துக் கொண்ட ஓர் இடத்தில் வாடகைக்கு இருப்பவருக்கு விருப்பமான எந்தப் படத்தையும் அவர் தாராளமாக மாட்டிக் கொள்ள உரிமை உண்டு. அதில் நாம் தலையிடமுடியாது' என்றே சரியாக நினைத்து மதிப்பிட்டார் அவர்.
"நீங்களெல்லாம் கையால் நியாயத்தைத் தொழுது கொண்டே மனத்தால் அநியாயத்துக்குப் பயப்படுகிறீர்கள்"... என்று மகன் சொல்லிக் குத்திக் காட்டிய பின்பே உடனடியாக அவனோடு போவதற்குச் சர்மா இசைந்திருந்தார். உடை மாற்றிக் கொண்டு கமலியையும் அழைத்து வர மாடிக்குப் போயிருந்தான் ரவி.
ரவியும், கமலியும் மாடியிலிருந்து கீழே வருவதற்குள் உள்ளே போய் காமாட்சியம்மாளிடம் தாம் வெளியே புறப்படப் போவதாக ஒரு வார்த்தை சொல்லிக் கொண்டு வந்தார் சர்மா.
அவர் முதலில் நினைத்தபடிதான் நடந்தது. சர்மாவும் ரவியும், கமலியும் தெருவில் சேர்ந்து நடந்து போவதை ஒரு விநோதமான புது ஊர்வலத்தைப் பார்ப்பது போலத்தான் பார்த்தார்கள். தெருக்களின் அத்தனை வீடுகளும், ஜன்னல்கள், வாசல்கள், திண்ணைகளைத் திறந்து வைத்துக் கொண்டு அதற்காகவே காத்திருந்த மாதிரி நடந்து கொண்டன.
எதிரே ஊர்ப் புரோகிதர் ஜம்புநாத சாஸ்திரி வந்தார். சர்மாவையும், ரவியையும் விசாரித்தார். கமலியைப் பார்த்துவிட்டுச் சர்மாவிடமே மறுபடியும் "அவா யாரு? புதுசா இருக்கே?" என்று கேட்டார் சாஸ்திரி.
"பிரான்ஸிலேருந்து வந்திருக்கா. நம்ம தேசம், கலாச்சாரம், பழக்க வழக்கம்லாம் பத்திப் படிச்சு எழுதிறதிலே ஆசை" - என்று சர்மாவிடமிருந்து பதில் வந்தது.
"சரி அப்புறமா வந்து பார்க்கிறேன்" என்று சாஸ்திரி விடை பெற்றுக் கொண்டு போனார். வடக்குத் தெரு முனையை அடைவதற்கு முன் இப்படியேயும் இதை விடச் சுருக்கமாகவும் இன்னும் இரண்டொரு சந்திப்புக்களுக்கும் விசாரணைகளுக்கும் சர்மாவோ ரவியோ பதில் சொல்ல வேண்டியனவாக நேர்ந்தன.
"அங்கெல்லாம் நம்மோட கூட வர்ற ஒரு பெண்ணையோ ஆணையோ நாமாச் சொல்லி இன்னார்னு அறிமுகப் படுத்தலேன்னா எதிரே சந்திக்கிறவா யார்னே கேட்க மாட்டாப்பா...." ரவி தந்தையிடம் சொன்னான். சர்மா சிரித்தபடி அதற்கு பதில் சொன்னார்.
"மேற்கத்திய தேசங்களைப் பத்தி நீ சொல்றே ரவி! நம்ம தேசத்திலே ஒவ்வொரு சிசுவும் ஒவ்வொரு தொப்புள் கொடியை நீக்கின மறு நிமிஷத்திலேயே மத்தவாளையும் மத்ததுகளையும் பத்தி அறிஞ்சுக்கிற ஆவல்லேதான் உயிர் வாழறதுங்கறதை மறந்துடாதே...."
அவர்கள் போய்ச் சேர்ந்தபோது இறைமுடிமணியின் புதுப் பலசரக்குக் கடையில் கூட்டம் அதிகம் இல்லை. மூன்று பக்கமும் செங்கல் சுவரெழுப்பி மேலே தகரக் கொட்டகையாக அமைத்தும் "சுயமரியாதைப் பல் பண்ட நிலையம்" - என்று புதிதாகப் பளபளத்து மின்னும் போர்டு மாட்டியிருந்தார் இறைமுடிமணி. வாழைமரம் மாவிலைத் தோரணம் கிடையாது. போர்டிலோ கதவுகளிலோ, முகப்பிலோ, எங்கும் குங்குமம், சந்தனப் பொட்டு எதுவும் இல்லை. போர்டிலும், கடைக்குள் பிரதானமாகப் பார்வையில் படும் இடத்திலும் இறைமுடிமணியின் இயக்கத் தலைவராகவும் வழிகாட்டியாகவும் விளங்கிய ஐயா படம் இருந்தது. கல்லாப் பெட்டியில் குருசாமி, அதாவது இறைமுடிமணியின் மருமகன் உட்கார்ந்திருந்தான். முகப்பில் நின்று இறைமுடிமணி வருகிறவர்களை வரவேற்றுக் கொண்டிருந்தார். வருகிறவர்களை உட்கார வைப்பதற்காகப் பக்கத்துக்கு ஒன்று வீதம் கடை முகப்பின் இருபக்கமும் இரண்டு நீளப் பெஞ்சுகள் போடப்பட்டிருந்தன.
----------------
அத்தியாயம் 16
இறைமுடிமணி அவர்களைத் தம்முடைய புதுக் கடைக்கு வரவேற்று உட்கார வைத்துச் சந்தனம் கல்கண்டு கொடுத்தார். சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு அவர்கள் புறப்படுவதற்கு முன், "கொஞ்சம் இப்பிடி வர்றியா விசுவேசுவரன்? உங்ககிட்ட ஒரு நிமிஷம் தனியாப் பேசணும்" - என்று சர்மாவைக் கூப்பிட்டார் இறைமுடிமணி. சர்மா எழுந்திருந்து இறைமுடிமணியோடு சென்றார்.
கடைக்கு வலது பக்கம் காலியாயிருந்த புல்தரையில் நின்று கொண்டு அவர்கள் இருவரும் பேசினார்கள்.
"அகமத் அலி பாய்க்கு நீ இந்த இடத்தை விடலேங்கிற கோபத்திலே அந்தச் சீமாவையன் ஊர் பூராத் துஷ்பிரசாரம் பண்ணியிருக்கான். நான் ஏதோ அக்கிரகாரத்து வாசிகளைச் சண்டைக்கு இழுக்கறதுக்காகத்தான் இங்கே கடை போட்டிருக்கேனாம். என் கடையிலே அக்கிரகாரத்து ஆளுங்க யாரும் சாமான் செட்டு வாங்கப்படாதுன்னு வேற இந்த ஊர் பூராப் பிரச்சாரம் பண்ணியிருக்கான் அந்த ஆளு. நான் நல்லவனுக்கு நல்லவன். பொல்லாதவனுக்குப் பொல்லாதவன். வியாபாரத்துக்காகக் கொள்கையைக் காத்திலே பறக்கவிடற ஆளு நான் இல்லே. அதே சமயத்திலே கடைக்கு வியாபாரத்துக்கு வர்றவங்க தலைமேலே எல்லாம் அரிப்பெடுத்துப் போய் வலிந்து என் கொள்கையைத் திணிக்கிறவனும் இல்லை. வியாபாரத்தை எப்பிடி நியாயமா வளர்க்கணுங்கிறது எனக்குத் தெரியும். ஆயிரம் சீமாவையரு வந்தாலும் என்னை ஒண்ணும் பண்ணிட முடியாது."
"அதெல்லாம் சரிதான் தேசிகாமணி! உன் உரிமையிலே நான் தலையிடறேன்னு தப்பா நெனைச்சுக்காதே. இந்த இடமோ மடத்துக்குச் சொந்தம். சூழ்நிலையோ முழுக்க முழுக்கத் தெய்வபக்தியுள்ள மனுஷாளுது. இங்கே நடத்தப் போற ஒரு பலசரக்குக் கடைக்கு இந்தப் பேரு, இந்தப் படம் எல்லாம் ஒரு விதத்திலே பெரிய எடைஞ்சலா இருக்கும்னு படலியா உனக்கு?"
"இடைஞ்சலா இருந்தா இருக்கட்டும்பா! அதுக்காக ஒவ்வொரு இடத்துலே நடத்தற கடைக்கும் ஒவ்வொரு வேஷம் போடற ஆளு நான் இல்லே. வியாபார நஷ்டத்தை விடக் கொள்கை நஷ்டத்தைப் பெரிசா மதிக்கிறவன் நான்..." - ஆவேசமாக இதைச் சொன்னார் இறைமுடிமணி.
இறைமுடிமணியின் அந்த ஒருமைப்பாடு; கள்ளங்கபடமில்லாத கொள்கைப் பிடிவாதம் எல்லாமே சர்மாவுக்குப் பிடித்திருந்தாலும் சீமாவையரின் எதிர்ப்பில் சில கலகங்கள் இன்றோ நாளையோ அங்கே விளையக் கூடும் என்றே எதிர்பார்த்தார் அவர்.
"நீ சொல்றது நியாயம்தான் தேசிகாமணி! உன் கொள்கையை, நீ விரும்பற படத்தை, உன்னோட வியாபார ஸ்தலத்திலே நீ வச்சுக்கறது எந்த விதத்திலேயும் தப்பில்லே. சீமாவையர் பண்ற வம்பைப் பத்தி நீ எங்கிட்டச் சொல்ல வந்ததாலே உன் சிநேகிதன்கிற முறையிலே உனக்கு என் யோசனையைச் சொன்னேன். அவ்வளவுதான். உன்னை நான் எதுவும் வற்புறுத்தறதா நீ நினைச்சுக்க வேண்டாம். நீ இஷ்டப்படறபடி உன் கடையை நடத்த உனக்கு உரிமை இருக்கு."
"என்ன நடந்துகிட்டுருக்குங்கிறதை உங்கிட்டச் சொல்லிடணும்னுதான் இதைச் சொன்னேன்" - என்று கூறி அந்த உரையாடலுக்கு அதோடு முற்றுப்புள்ளி வைத்தார் இறைமுடிமணி. அப்போது அவரைப் போலவே கருஞ்சட்டை அணிந்த நண்பர்கள் நாலைந்து பேர் கடைக்கு வரவே அவர்களை வரவேற்றுப் பேசி உபசரித்து அனுப்பிவிட்டு மறுபடியும் இறைமுடிமணி சர்மா நின்றுகொண்டிருந்த புல்தரைக்குத் திரும்பி வந்தார்.
"நீ மட்டும் வந்து தலையைக் காட்டிட்டுப் போயிடாமத் தம்பியையும், இந்தப் பிரெஞ்சுப் பெண்ணையும் உன் கூடக் கூட்டியாந்ததுலே எனக்கு ரொம்ப மகிழ்ச்சி விசுவேசுவரன்! நானே கண்டிப்பா எல்லாரும் வரணும்னு தான் நேரே வந்து சொல்லிப் போட்டு வந்தேன்." -
சிறிது நேர மௌனத்துக்குப் பின் சீமாவையர் தம்மிடம் நேருக்கு நேர் வந்து கூப்பாடு போட்டு மிரட்டியதைப் பற்றி இறைமுடிமணியிடம் கூறினார் சர்மா.
"அட அவன் கிடக்கிறான் விட்டுத் தள்ளப்பா... அந்த ஆளுக்கு அழிவுகாலம் வந்திரிச்சுன்னுதான் நினைக்கிறேன்..." - என்று வெறுப்போடு பதில் வந்தது இறைமுடிமணியிடமிருந்து.
சர்மா, ரவி, கமலி எல்லாரும் இறைமுடிமணியிடம் சொல்லி விடை பெற்றுக்கொண்டு புறப்பட இருக்கையில் தற்செயலாகக் கடையின் பெஞ்சில் ஒரு மூலையில் அடுக்கியிருந்த புத்தகங்களை எடுத்துப் புரட்டினான் ரவி.
1. ஆதிசங்கரரும் அவரது தத்துவங்களும் - பிரும்மஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய சாஸ்திரி எழுதியது.
2. போதாயனீயமும் பாஞ்சராத்ர வைகானஸ வழிபாட்டு முறைகளும் -
உபயவேதாந்தி ஸ்ரீ வைஷ்ணவ சண்டமாருதம் - பிரதிவாதி பயங்கரம், கோளூர் கோபாலாச்சாரியார் எழுதியது.
3. அண்ட கோள விருத்தி - மதுரைத் தமிழ்ச்சங்கக் கலாசாலைப் பிரதம ஆசிரியர் ஸ்ரீ உ.வே. திருநாராயணய்யங்கார் சுவாமிகள் இயற்றியது.
என்று மூன்று புத்தகங்கள் அடுக்காக இருந்தன.
"என்ன தம்பீ? அப்படிப் பார்க்கறீங்க? நம்பளுது தான். படிக்கிறத்துக்காக எடுத்து வச்சிருக்கேன்" - என்று அர்த்த புஷ்டியோடு சிரித்துக் கொண்டே ரவியிடம் சொன்னார் இறைமுடிமணி.
"ஒண்ணுமில்லே... சும்மா பார்த்தேன்" என்று கூறி விட்டுப் புறப்பட்டான் ரவி. தெருமுனை திரும்பியதும் தந்தையிடம் கேட்டான் அவன்.
"இதெல்லாம் ராகு காலத்திலே புதுக்கடை தொடங்கற ஒருத்தர் படிக்கிற புஸ்தகங்களான்னு நெனைக்கறப்போ ரொம்ப ரொம்ப ஆச்சரியமாத்தான் இருக்குப்பா!....."
"இதிலே ஆச்சரியமென்ன? எல்லா விஷயங்களையும் வெறுப்பில்லாமத் தெரிஞ்சுக்கணும்கிற சுத்தமான ஞான வேட்கை அவனுக்கு உண்டு. அவனோட இந்த முரண்பாடுகளுக்கு நடுவேயும் ஒரு முழுமை இருக்கு."
"அவை ரொம்பவும் ரம்யமான முரண்பாடுகளா இருக்குப்பா! இவரையும் நினைச்சுண்டுத் தெருத் திண்ணையிலே ஊர்ச் சோம்பேறிகளோட சீட்டாடிண்டே புகையிலையைக் குதப்பித் துப்பிண்டு இருக்கிற சீமாவையரையும் நினைச்சா, ஞான வேட்கைக்கும் ஜாதிக்கும் சம்பந்தமே இல்லேன்னு கூடத் தோண்றதே? இல்லையா?" - ரவி கேட்டான். சர்மா அதற்கு அப்போது உடனே அவனிடம் பதில் எதுவும் சொல்ல வில்லை.
ரவியின் வினாவுக்குத் தந்தை பிறகு பதில் சொல்லாவிட்டாலும் அந்த வினாவைப் பற்றி அவர் சிந்திக்கிறார் என்பதே அவனுக்குத் திருப்தியாக இருந்தது. அதை உடனே அவர் பதில் சொல்லி மறுப்பார் என்று அவன் எதிர்பார்த்தது தான் நடக்கவில்லை.
*****
அவர்கள் மூவரும் வீடு திரும்பியதுமே சீமாவையரின் துஷ்பிரசார வலிமை சர்மாவுக்குத் தெரியும்படியான நிகழ்ச்சி ஒன்றும் நடந்தது. ரவியும், கமலியும், சர்மாவும் வீட்டுப்படியேறி உள்ளே நுழைந்தபோதே திண்ணையில் அக்ரஹாரத்தின் மூன்று தெருக்களையும் சேர்ந்த பிரமுகர்கள் சிலர் சர்மாவை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். சர்மா அப்படியே அவர்களை வரவேற்று முகமன் வார்த்தைகள் கூறி அவர்களோடு திண்ணையில் அமர்ந்து கொண்டார். ரவியும் கமலியும் அவர்களுக்கு ஊடே நடந்து அவர்களைக் கடந்துதான் வீட்டுக்குள்ளேயே செல்ல வேண்டியிருந்தது அப்போது.
வந்திருந்தவர்களின் முகங்களை ஒவ்வொன்றாகப் பார்த்த போதே சர்மாவால் அவர்கள் எதற்கு வந்திருக்கக்கூடும் என்பதைச் சுலபமாகவே அனுமானித்துக் கொள்ள முடிந்தது.
பஜனை மடம் பத்மநாப ஐயர், வேத தர்ம சபைக் காரியதரிசி ஹரிஹர கனபாடிகள், கர்ணம் மாத்ருபூதம், மிராசுதார் சுவாமிநாதன் ஆகியோர் வந்திருந்தார்கள். ஹரிஹர கனபாடிகள்தான் முதலில் ஆரம்பித்தார்.
"எப்போ அது பொதுச் சொத்துன்னு ஆச்சோ அப்போ நீர் ஸ்ரீ மடத்துக்கு வேண்டியவா நாலு பேரைக் கலந்து பேசி - அக்ரஹாரத்து மனுஷாளே யாராவது கடைகிடை வச்சுப் பராமரிக்கத் தயாரா இருக்காளா, இல்லியான்னு முதல்லே தெரிஞ்சுண்டு அப்புறம் வெளியிலே வாடகைக்கு விட வேண்டாமோ?"
சர்மா பொறுமையாக இதற்குச் சமாதானம் சொன்னார். ஆனால் அப்போது அங்கு வந்திருந்த யாரும் அவரது சமாதானத்தை ஏற்கவில்லை.
"ஒரு டெண்டர் நோட்டிஸ் ஒட்டி ஏலம் போட்டு இன்னும் அதிக வாடகைக்கு விட்டிருக்கலாம். தெய்வ பக்தியில்லாத மனுஷாளுக்கு விட்டிருக்க வேண்டாம்" என்றார் பஜனை மடம் பத்மநாபன்.
"ஸ்ரீ மடத்திலே எழுதிக் கேட்ட்துக்கு மனுஷா யாராயிருந்தாலும் பரவாயில்லை. வாடகை ஒழுங்காகக் குடுக்கற யோக்கியமான பார்ட்டிக்கு விடலாம்னு பதில் வந்தது. அதான் விட்டேன்." -
"இத்தனை பெரிய ஊர்ல அந்தச் சூனாமானாக்காரன் தான் யோக்கியமானவனா உமக்குக் கிடைக்கணுமோ?"
"ஒருத்தர் யாரு என்கிறதை விட எப்படிப்பட்டவர்ங்கிறது தான் ரொம்ப முக்கியம்."
"அதையேதான் உம்மைத் திருப்பிக் கேக்கறோம்! எப்படிப்பட்டவர்னு தெரிஞ்சுதான் அவனுக்கு இந்த எடத்தை விட்டீரா?"
விவாதம் வளர்ந்தது. அவர்கள் அனைவரும் சீமாவையரால் தூண்டிவிடப்பட்டுப் புறப்பட்டு வந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகவே தெரிந்தது. போகிற போது சர்மாவைக் கடுமையான வார்த்தைகளால் கண்டித்துவிட்டு எழுந்திருந்து போனார்கள் அவர்கள்.
அன்று பிற்பகலில் சர்மா ஏதோ காரியமாகப் பூமிநாதபுரம் புறப்பட்டுப் போயிருந்தார். வசந்தி வந்திருந்தாள். ஒரு வாரத்தில் தான் பம்பாய் போக வேண்டியிருக்கும் என்று அவள் தெரிவிக்கவே கமலி அவளிடம் சில யோசனைகள் கேட்டாள். கமலிக்கு யோசனைகள் கூறியதோடு காமாட்சி மாமி கட்டிக் கொள்கிற மாதிரிப் புடைவை கட்டிக் கொள்வது எப்படி என்று அவளே வற்புறுத்திக் கேட்கவே அதையும் அவளுக்குக் கற்றுக் கொடுத்தாள் வசந்தி.
அப்போது ரவி எங்கோ வெளியே போயிருந்தான். ஆகவே மனம் விட்டுப் பேசிக்கொள்ள அவர்களுக்கு வசதியாயிருந்தது. சர்மாவின் குடும்பத்தைப் போன்ற மிகவும் வைதீகமான குடும்பங்கள், பழக்க வழக்கங்கள் - நடை முறைகள் பற்றிப் புத்தகங்களில் படித்தும் ரவியிடம் கேட்டும் கமலி நிறைய அறிந்திருந்தும், சில நுணுக்கமான சந்தேகங்கள் அவளுக்கு இன்னுமிருந்தன. அப்படிப்பட்டவற்றை அவள் வசந்தியிடம் இப்போது கேட்டறிந்தாள். அதில் ஒன்று மிகவும் நாசூக்கானது. வசந்தி அதற்குத் தெளிவாகவே பதில் சொன்னாள். கமலியை முன்னெச்சரிக்கை செய்தும் வைத்தாள்.
"அப்படி நாட்களில் இந்த வீட்டு வழக்கப்படி பின்னால் கொல்லைப்பக்கம் தனி அறை ஒண்ணு இருக்கு. அதிலே போய் இருந்துக்க வேண்டியது தான். நிறையப் புஸ்தகம் எடுத்து வச்சுக்கோ. படி, குளிக்கிற நாள் வர வரை ஒரு ஜெயில் மாதிரி தான்னு வச்சுக்கோயேன்."
தான் காமாட்சியம்மாளுக்குத் திருப்தியாக நடந்து கொள்ள வேண்டுமென்பதற்காக ஒவ்வொன்றாய்த் தூண்டித் தூண்டி விசாரித்து அறிந்து கொண்டாள் கமலி. தான் அந்தி விளக்கு ஏற்றியதனால் காமாட்சியம்மாள் செய்த சிறு பூசல், ரவியின் தந்தை தன்னிடம், 'ஒருவருஷத்துக்கு மேல் இந்த வீட்டிலே இருக்க உனக்கு வசதிப்படுமா?' என்று தன்னைக் கேட்டது எல்லாவற்றையும் வசந்தியிடம் மனம் விட்டுச் சொல்லிய பின்பே ஒவ்வொன்றாக யோசனை கேட்டிருந்தாள் கமலி.
ரொம்பச் சிரமமா இருந்தா எங்க வீட்டு மாடிக்குப் போயிடு. நான் அப்பாட்டச் சொல்லிட்டுப் போறேன்" என்று வசந்தி கூறியதற்குக் கமலி ஒப்புக் கொள்ளவில்லை.
"பார்க்கலாம். அதற்கு அவசியம் நேராது வசந்தி!" என்றாள் கமலி. புத்தகத்தில் படித்துத் தெரிந்து கொண்டிருப்பதைத் தவிரப் பூஜை, புனஸ்காரங்கள் பற்றியும் வசந்தியிடம் நிறையக் கேட்டறிந்து கொண்டாள் கமலி.
"நீ கொல்லைப் பக்கத்து அறையில் போய் உட்கார்றப்போ பாருவை வேணும்னா ஸ்கூலுக்கு லீவு போடச் சொல்லி உனக்குத் துணைக்கு வச்சுக்கோ. பல்லாங்குழி, சோழி எல்லாம் ஆடலாம்" என்று சிரித்த படி கூறினாள் வசந்தி.
"துணை எதற்கு? எனக்கென்ன பயமா?" என்று கேட்டாள் கமலி. அவள் விரும்பியபடி அன்று முன்னிரவில் அவளைப் பூமிநாதபுரத்திலிருந்த பெரிய சிவன் கோயிலுக்கு அழைத்துப் போனாள் வசந்தி. கையில் தேங்காய்ப்பழம். பூ ஊதுவத்தி அடங்கிய பூஜைக்கூடையுடன் வெள்ளைக்காரி ஒருத்தி புடவையும் குங்குமத் திலகமுமாகக் கோவிலுக்கு வந்ததைப் பெரிய அதிசயமாகப் பார்த்தார்கள் சங்கரமங்கலம், பூமிநாதபுரம் கிராமத்து மக்கள். கோவிலிலிருந்த சிற்பங்களைப் பற்றி அவற்றின் திருவிளையாடல் கதைக் குறிப்புகளை எல்லாம் வசந்தி கமலிக்கு விளக்கிக் கூறினாள்.
வசந்தியோடு கர்ப்பக் கிரகத்துக்கு நெருக்கமாக ஆலயத்திற்குள் சென்று சர்மாவின் குடும்ப ஷேமத்துக்காக என்று அர்ச்சனையும் செய்து வழிபட்டுப் பிரசாதம் வாங்கிக் கொண்டு திரும்பினாள் கமலி.
பூமிநாதபுரம் சிவன் கோவிலும் அதன் அழகும் அமைதியும் ஆயிரங்கால் மண்டப முகப்பிலிருந்த சிற்பங்களும் கமலிக்கு மிக மிகப் பிடித்திருந்தன.
-----------------
அத்தியாயம் 17
கமலி தன் மனத்தின் உருக்கம் தெரியும் குரலில் வசந்தியிடம் சொன்னாள் -
"உங்களுடைய பழைய கோவில்கள் கலைச் சுரங்கங்களாக இருக்கின்றன. ஆனால் உங்கள் நாட்டு மக்கள் இப்போது சினிமாத் தியேட்டர்கள் என்னும் புதிய 'கோவில்களின்' வாசலில் போய் பயபக்தியோடு நிற்க ஆரம்பித்து விட்டார்கள். பக்தி இடம் மாறிவிட்டது. கோயில்களும் தெய்வங்களும் தியேட்டர்களில் சிகரெட் புகையின் நெடி குமட்டும் புதிய சூழலில் பிரதிஷ்டை செய்யப்படுகிறார்கள் இன்று." -
"சரியாகச் சொல்கிறாய்! இங்கே கோயிலிலிருப்பதைவிட இதே நேரத்திற்கு இவ்வூர் ஆற்றங்கரையில் இருக்கும் டூரிங் தியேட்டரில் உள்ள கூட்டம் தான் அதிகம் கமலி." -
"மாக்ஸ் முல்லர் கால முதல் கிழக்கு நாடுகளின் கலாசாரத்தில் மேற்கே ஒரு மயக்கமும் பிரியமும் தோன்றி விட்டது. 'ஸேக்ரட் புக்ஸ் ஆஃப் தெ ஈஸ்ட்' என்று வேதங்களையும் உபநிஷதங்களையும் மாக்ஸ் முல்லர் ஆக்ஸ்போர்டில் வால்யூம் வால்யூமாக மொழி பெயர்த்து அச்சிட ஆரம்பித்தது தொடங்கி மேற்கேயிருந்து கிழக்கே திரும்பிப் பார்த்தல் ஆரம்பமாகிவிட்டது. ஆனால் அதே சமயம் கிழக்கே இருந்த நீங்கள் உங்களுடையவற்றை மறந்து ஆச்சரியத்தோடு மேற்கே திரும்பிப் பார்க்கவும் மேற்கின் லௌகீக வாழ்வை வியக்கவும் விரும்பவும் ஆரம்பித்து விட்டீர்கள்."
"உண்மை தான் கமலீ! ஆனால் இன்றைய இந்தியா முன்னைவிட இன்னும் லௌகீகமாகிவிட்டது. சுதந்திர இந்தியாவின் மிகப் பெரிய வறுமை கலாசார வறுமை தான்! வெறும் வயிற்றுப் பசியைவிடக் கலாச்சாரப் பசி மிகவும் பொல்லாதது." -
"ஆமாம்! கலாசார வறுமையும், ஆன்மீக வறுமையும் பயங்கரமானவை. ஒரு நாட்டைப் படுகுழியில் வீழ்த்தக் கூடியவை."
- இந்த உரையாடல் பூமிநாதபுரம் கோயிலிலிருந்து திரும்பும்போது அவர்களுக்குள்ளேயே நடந்தது. கமலி ஒரு முழுமையான இந்துவாக - இந்தியப் பெண்ணாக நடந்து கொள்ளுவதில் காட்டும் தாகத்தையும் தவிப்பையும் ஒவ்வொரு கணமும் கூர்ந்து கவனித்தாள் வசந்தி.
"பிறவியிலேயே இந்துக்களாகிய எங்களுக்கு இருப்பதை விடப் புதிதாக உங்கள் ஊரிலிருந்து வருகிற ஹரே கிருஷ்ணா இயக்கத்தினருக்கு அதிக இந்துமதப் பற்று இருப்பது ஆச்சரியமான விஷயம்."
"சீர்திருத்தம் - மறுமலர்ச்சி என்ற பெயரில் ஒரு புனிதமான பழைய கலாச்சாரத்தின் கங்கைப் பெருக்கிலிருந்து அவசர அவசரமாகக் கரையேறிச் சுளீரென்று வெயில் காய விரும்புகிறீர்கள் நீங்கள், நாங்களோ ஆவலோடு ஓடி வந்து அந்தப் புனிதமான கங்கைப் பெருக்கில் நீராடக் காத்திருக்கிறோம். இந்துவாகப் பிறப்பவன் மட்டுமே முழு இந்துவாக இருப்பதில்லை. எவன் ஒருவன் முழு இந்துவாகக் கனிந்து வாழ்கிறானோ அவனே முழு இந்துவாக இருக்க முடியும். இந்து மதம் என்பது ஒரு மதம் மட்டுமில்லை. மிகவும் பண்பட்ட ஒரு வாழ்க்கை முறை."
"கங்கையில் யார் தேடிப்போய் நீராடுகிறானோ அவனைத்தான் அது நனைக்க முடியும் கமலி!"
"கங்கை என்பது உங்கள் தேசத்தின் வடக்கே ஓடும் ஒரு நதி மட்டுமில்லை. அது இந்தியா முழுவதும் பரவியுள்ள ஒரு பவித்திரத் தன்மையின் பொதுப்பெயர் என்றே நான் நினைக்கிறேன். அதன் வியாபகமே உங்கள் நாட்டில் ஒரு கலாச்சார ஐக்கியமாக இருந்திருக்க வேண்டும். தேசத்தின் பல பகுதிகளில் முதலில் கங்கை நீரைக் கொணர்ந்து ஊற்றித்தான் புதிய ஏரிகள் குளங்கள் வெட்டியதாக உங்கள் வரலாறே சொல்கிறது. இமயமலை முதல் கன்னியாகுமரி வரை எந்த இந்து இறந்தாலும் கடைசியாக ஒரு துளி கங்கைத் தண்ணீரைப் பருகி விட்டு இறப்பது என்பது வேறு உங்களிடையே வழக்கமாயிருக்கிறது."
இதைச் செவிமடுத்ததும் தனக்குச் சொந்தமான ஒரு புனித வரலாற்றை அந்நியர் ஒருவர் உணர்ந்து சொல்லக் கேட்கும் சிலிர்ப்பை வசந்தி அப்போது அடைந்தாள்.
அடுத்த வாரம் அவள் பம்பாய் போகிறவரை கமலியோடு இப்படிப் பல மாலை வேலைகளைச் செலவிட்டாள். மனம் விட்டு அவளோடு உரையாடி மகிழ்ந்தாள்.
அவள் பம்பாய் போன இரண்டாம் வாரமோ மூன்றாம் வாரமோ எதிர்பாராத விதமாய் ஸ்ரீ மடத்திலிருந்து அவசரமாக ஒரு தந்தி வந்து காமாட்சியம்மாளுடன் சர்மா - அங்கே புறப்பட்டுப் போயிருந்தார். அவர் திரும்ப ஒரு வாரத்திற்கு மேல் ஆகும் என்று தெரிந்தது. கமலியும், ரவியும், குமாரும், பார்வதியும் தான் சங்கரமங்கலத்திலிருந்தார்கள். காமாட்சியம்மாள் வீட்டுப் பொறுப்பைப் பார்வதியிடம் விட்டிருந்தாள். மடிக் குறைவாகச் சமையலறையை உபயோகப் படுத்தாமல் கூடத்து மேடையிலேயே எல்லாம் செய்து முடித்துக் கொள்ள வேண்டும் என்று பாருவிடம் புறப்படுவதற்குமுன் கண்டிப்பாகச் சொல்லிவிட்டுப் போயிருந்தாள் காமாட்சியம்மாள்.
சர்மாவும், காமாட்சியம்மாளும் புறப்பட்டுப் போன மூன்றாம் நாளோ, நான்காம் நாளோ - யாரும் எதிர்பாராத அசம்பாவிதம் ஒன்று அந்த வீட்டில் நடந்து பொருள் சேதமும் மிகுந்த மனக் கஷ்டமும் உண்டாக்கியது. திட்டமிட்டு உண்டாக்கிய நஷ்டம்தான் - யார் அதைச் செய்திருக்கலாம் என்பதும்கூடப் புரிந்தது. ஆனால் நேரடியாக அந்த ஆள் மட்டும் அகப்படவேயில்லை. வீட்டுப் பின்புறம் தோட்டத்திற்கும் மாட்டுத் தொழுவத்திற்கும் நடுவே ஒரு பெரிய வைக்கோற் படைப்பு இருந்தது. அதிகாலை மூன்று மணி சுமாருக்கு யாரோ அதற்கு நெருப்பு வைத்து விட்டு ஓடியிருந்தார்கள். நெருப்புப் பற்றும் போதும் யாரும் அதைப் பார்க்க நேரவில்லை.
எல்லாரும் நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த நேரம். பக்கத்து வீட்டு முத்து மீனாட்சிப் பாட்டி கொல்லைப் பக்கம் எழுந்திருந்து போனவள் தான் முதலில் தீ எரிவதைப் பார்த்து விட்டுக் கூப்பாடு போட்டாள்; பாட்டி பார்த்ததே சிறிது தாமதமாகத்தான். அதற்குள் காற்று வாக்கில் அது மாட்டுத் தொழுவத்திற்கும் பரவி விட்டது. மாடியிலிருந்த ரவியும், கமலியும், கீழ் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பார்வதியும் குமாரும் எழுந்து போவதற்குள் அக்கம் பக்கத்தார் ஓடிவந்து கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்துத் தீயை அணைக்கத் தொடங்கியிருந்தார்கள். காற்று வேறு இருந்ததால் தீ சுலபத்தில் அணைவதாக இல்லை. மாட்டுத் தொழுவம் மேற்கூரை இடிந்து விழுந்து அப்படியே அமுக்கி விட்டதன் காரணமாகக் கட்டாமல் விடப்பட்டிருந்த இரண்டொரு கன்றுக் குட்டிகளைத் தவிர மற்றவை உள்ளேயே தீயிலிருந்து வெளியேற முடியாமல் தீனமாகக் கதறிக் கொண்டிருந்தன. பெரிய வைகோற் படைப் பாகையினால் அனல் வீட்டு முற்றம் வரை தகித்தது. வீட்டுக் கொல்லைப்புற நிலைப் படிக்கும் முற்றத்துக்கும் நடுவிலிருந்த துளசிச் செடியின் ஒரு பகுதி வாடிக் கருகி விட்டது. மாட்டுத் தொழுவம் மட்டும் அப்படியே அமுங்காமல் பக்க வாட்டில் சரிந்திருந்தால் துளசி மாடத்தின் மேலேயே அது சாய்ந்திருக்கும்.
பத்துப் பன்னிரண்டு பேர் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைக்கவும், வாளியில் வாங்கி எரியும் தீப்பிழம்புகளில் வாரி இறைக்கவுமாக இடை விடாமல் ஓடியாடி முயன்றும் மேல் காற்றின் காரணமாகத் தீயும் முழு மூச்சுடன் மனிதர்களை எதிர்த்துப் போராடியது. மாட்டுக் கொட்டத் தீயை அணைத்து எரிந்து கொண்டிருந்த போதே விழுந்து விட்ட கனமான கூரையை அகற்றி மாடுகளைக் காப்பாற்றிவிட வேண்டும் என்று ரவியும் அக்கம் பக்கத்தாரும் ஆனமட்டும் முயன்றார்கள். ஆனால் முடியவில்லை. இறுதியில் மாட்டுக் கொட்டத்தைத் தூக்கி நிறுத்தும் முயற்சி பயனளிக்காமல் வைக்கோற் படைப்புத் தீயோ, மாட்டுத் தொழுவத் தீயோ அக்கம் பக்கத்து வீட்டுக்குப் பரவி விடாமல் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டார்கள். அடுத்தடுத்து எல்லா வீட்டுக் கொல்லைப் புறங்களிலும் வைக்கோற் படைப்புகளும், கூரைச் சார்ப்பு இறக்கிய மாட்டுக் கொட்டகைகளும் இருந்தன. பயத்துக்கு அதுதான் காரணம்.
அதிகாலை ஐந்து மணிக்கு அக்ரகாரத்திலிருந்து போனவர்கள் யாரோ தகவல் சொல்லி இறைமுடிமணி பத்து பன்னிரண்டு ஆட்களுடன் ஓடிவந்தார். தீயை அணைக்கும் முயற்சியில் அவரும் அவரோடு வந்தவர்களும் சேர்ந்து கொண்டனர்.
பலபலவென்று விடிகிற நேரத்துக்குத்தான் தீ கொஞ்சம் அடங்கி கட்டுப்பட்டது. தரையோடு ஒட்டியிருந்த கீழ்ப்பகுதியைத் தவிர வைக்கோற் படைப்புப் பெரும்பகுதி எரிந்து சாம்பலாகி விட்டது. காமாட்சியம்மாள் கோபூஜை செய்து வந்த பசுமாடு உள்பட மூன்று மாடுகள் தீயில் சிக்கி இறந்து விட்டன. அதில் ஒன்று சினைமாடு.
அப்பாவும், அம்மாவும் ஊரில் இல்லாத போது இப்படி நடந்து விட்டதில் ரவிக்கு வருத்தம் தான். ஆனால் இது தானாக நேர்ந்ததில்லை. திட்டமிடப்பட்டுச் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதில் அவனுக்கு ஒரு சிறிதும் சந்தேகமில்லை. வந்திருந்தவர்களில் வேணு மாமா உள்பட அத்தனை பேரும், "ஏதோ நம்ம போறாத காலம். எந்தத் தெய்வத்துக்கு எது பொறுக்கலையோ" - என்றுதான் சொன்னார்கள்.
இறைமுடிமணி மட்டும், "மனுசன் கொழுப்பெடுத்துப் போயிச் செய்யிற கெடுதல்களுக்கு எங்கேயோ எதையோ உண்டாக்கி ஏன் செய்யாத குத்தத்தை இல்லாதது மேலே போடறிங்க. திராணி இருந்தாத் தீ வச்சது யாருன்னு கண்டு பிடியுங்க. இல்லாட்டித் தலையிலே முட்டாக்குப் போட்டுக் கிட்டுப் போங்க" - என்று கோபமாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.
ரவியும், இறைமுடிமணியும் சீமாவையர் மேல் சந்தேகப்பட்டார்கள். எல்லாரையும் போல் சீமாவையரும் நன்றாக விடிந்தபின் ரவியிடம் வந்து துக்கம் கேட்டு விட்டு, "என்ன தெய்வக் குத்தமோ தெரியலே - இல்லேன்னா பிராம்மணன் வீட்டிலே பசுமாடும் துளசிச் செடியும் தீப்பிடிச்சு எரியுமோ?" - என்று உருகிப் புலம்பினார். சீமாவையரின் இந்த வார்த்தைகளில் இருந்த குறும்பும் - இந்த நிகழ்ச்சியைப் பற்றி இனிமேல் அவரும் அவருடைய கையாட்களும் எப்படிப் பிரச்சாரம் செய்வார்கள் என்பதும் சேர்ந்தே தெரிந்தன. ரவி அவரிடம் சரியாக முகம் கொடுத்துப் பேசவில்லை. அவராக வந்தார் - பேசினார், போனார். தாம் வந்து கேட்கவில்லை என்று ஆகிவிடக்கூடாதே என்பதற்காகவே வந்து தலையைக் காட்டி விட்டுப் போன 'அலிபி' மாதிரி இருந்தது அவரது வரவு.
ரவி சந்தேகப்பட்டது போலத்தான் நடந்தது. அடுத்த இரண்டு மூன்று தினங்களில் "மடத்துச் சொத்தை நாஸ்திகனுக்கு வாடகைக்கு விட்டார். வீட்டிலே ஆசாரக் குறைவான மனுஷாளைச் சேர்த்துண்டார், தெய்வத்துக்கே பொறுக்கலே தீப்பிடிச்சுது" என்கிற பாணியில் சீமாவையர் அக்கிரகாரம் முழுவதும் பிரச்சாரம் செய்யத் தொடங்கியிருந்தார். சிலரிடம் அந்தப் பிரச்சாரம் நன்கு எடுபடவும் செய்தது.
காமாட்சியம்மாள் கிளம்பிப் போன பின் ஒருநாள் கூட விட்டுப் போகாமல் அதிகாலையில் நீராடிச் சிரமப்பட்டுப் பதினெட்டு முழம் புடவையை மடிசார் வைத்துக் கட்டிக் கொண்டு கோபூஜையும், துளசி பூஜையும் செய்து வந்த கமலி தீப்பிடித்த தினத்தன்று பூஜை செய்வதற்குப் பசு இல்லாமல் திக்பிரமை பிடித்தது போல் இருந்தாள். நல்ல வேளையாகத் துளசி ஒரு பக்கம் பட்டுப் போயிருந்தாலும் மறுபகுதியிலும் அடிப்பக்கமும் தளிர்த்து விடும் என்பதற்கு அடையாளமான பசுமை இருந்தது. தீப்பிடித்த தினத்தன்றும் அவள் துளசி பூஜையை நிறுத்த வில்லை.
இந்த அசம்பாவிதம் நடந்த இரண்டு நாட்களில் சர்மாவும், காமாட்சியம்மாளும் ஊர் திரும்பியிருந்தனர். இது தெரிந்ததும் சர்மா ஓரிரு கணங்கள் ஒன்றும் பேசாமல் இருந்தார். அப்புறம் அப்படி ஒன்று நடந்ததை மறந்தது போல் சகஜமாக இருக்கத் தொடங்கி விட்டார் அவர். அப்பாவின் இந்த இயல்பை ரவி ஒரு பழைய இதிகாச நிகழ்ச்சியோடு ஒப்பிட்டு நினைத்தான்.
ஒரு சமயம் ராஜரிஷி ஜனகரும், அவரை ஒத்த பெரிய அறிஞர்கள் சிலரும் மிதிலை நகருக்கு வெளியே ஓர் அழகான அமைதியான தனியான சோலை சூழ் இருக்கையில் அமர்ந்து வேதாந்த தத்துவ விசாரணையில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுக்கு இவ்வுலக நினைவே இல்லை. ஈடு இணையற்ற அறிவுத் திளைப்பு.
அப்போது யாரோ ஓர் ஆள் பரபரப்பாக ஓடிவந்து "மிதிலை நகரம் தீப்பற்றி எரிகிறது"... என்று ஜனகரிடம் கூறினானாம். அறிவு மயமான உரையாடலில் திளைத்திருந்த ஜனகர் சிறிதும் பரபரப்படையாமல் பதறாமல், "எரிந்தால் இழக்கும் படியான மீட்க முடியாத எந்த உயர்ந்த பொருளையும் நான் மிதிலையில் விட்டு விட்டு வரவில்லையே?" - என்று பதிலிறுத்தாராம். 'மிதிலை எரிந்திட வேதப் பொருளை வினவும் ஜனகன் மதி' - என்று மகாகவி பாரதியார் இந்த எல்லையற்ற அறிவுத் திளைப்பின் உச்ச நிலையை விவரித்து வியந்திருக்கிறார். ராஜ பதவியில் ஜனகருக்கு இருந்த பற்றற்ற நிலையையும் அதே சமயம் ஞானத்தில் அவருக்கு இருந்த அளவற்ற ஈடுபாட்டையும் இந் நிகழ்ச்சியால் தெரிந்து கொள்ள முடிந்தது.
வீட்டில் வைக்கோற் படைப்பு எரிந்து ஏற்பட்ட இழப்புகளைக் கேட்ட போது அப்பா ஜனகர் மாதிரி இருந்ததைக் கண்டான் ரவி.
------------
அத்தியாயம் 18
வைக்கோற் படைப்பும், பசுமாடுகளும் எரிந்து போனது பற்றி அப்பாவும் உள்ளூற வருந்தியிருக்கலாம்! ஆனால் அது தண்ணீரில் அம்பெய்த மாதிரிச் சுவடு தெரியாமல் உடனே மறைந்து போயிருந்தது. அது பற்றிய ஊர் வம்பும் அவர் காதில் விழுந்தது. அவர் அதைப் பெரிதாகப் பொருட்படுத்த வில்லை.
கறக்கிற நிலையிலுள்ள வேறு பசு ஒன்றை அனுப்பி வைக்கும்படி பூமிநாதபுரத்திலுள்ள தெரிந்த மனிதர் ஒருவருக்கு உடனே தகவல் மட்டும் சொல்லி அனுப்பினார்.
அம்மா அதற்கு நேர்மாறாக நடந்து கொண்டாள். ஊர் வம்பு அவள் காதிலும் விழுந்தது.
"மடத்து மனையைத் தெய்வ நம்பிக்கை இல்லாதவனுக்கு வாடகை பேசிவிட்டார். இங்கே வீட்டிலேயும் தீட்டுக் கலக்க விட்டார். தெய்வத்துக்கே பொறுக்கலைன்னு ஊர்லே பேசிக்கறாடீ காமு என்று பக்கத்து வீட்டுப் பாட்டி சொல்லிய பின் பார்வதியை விசாரித்துக் கமலி தான் ஊரில் இல்லாத போது கோபூஜை, துளசி பூஜை எல்லாம் செய்த விவரம் உட்பட அனைத்தும் காமாட்சியம்மாள் தெரிந்து கொண்டு விட்டாள்.
"இவளை யாரு இதெல்லாம் பண்ணச் சொன்னா இப்போ? பல் தேய்க்காமே பெட்காப்பி சாப்பிடற தேசத்திலிருந்து வந்தவள். ஆசார அனுஷ்டானம் தெரியாமே இதெல்லாம் இவள் ஏன் பண்ணணும்? அதனாலே தான் ஆத்துலே இப்படி அசம்பாவிதமெல்லாம் நடக்கிறது. வரவர இந்தாத்துலே கேள்வி முறையே இல்லாமே யார் எதை வேணும்னாப் பண்ணலாம்னு ஆயிடுத்து. தலைமுறை தலைமுறையா இந்தாத்துப் புருஷாளுக்குச் சமமாப் பெண்டுகளும் வைதீகமா இருந்து கோபூஜை, துளசிபூஜை எல்லாம் பண்ணிண்டு வாரோம். வீடு சிரேயஸ்ஸா இருக்குன்னா அந்தப் பூஜா பலனாலேதான் அப்பிடி இருக்கு. இதெல்லாம் பண்ண வெள்ளைக்காரி இவளுக்கு என்ன யோக்கியதை இருக்கு? வரட்டும்... இதை நான் வெறுமனே விட்டுடப் போறதில்லே. இந்தப் பிராமணன்கிட்டேயே நேருக்கு நேர் கேட்டுடப் போறேன். அவ யாரா இருந்தா நேக்கு என்ன? நேக்கொண்ணும் பயமில்லே..." என்று பார்வதியிடம் இரைந்து கூப்பாடு போட்டாள் காமாட்சி அம்மாள்.
"கமலி காலங்கார்த்தாலே ஸ்நானம் பண்ணிட்டுப் பக்தி சிரத்தையோட மடிசார் வச்சு நீ புடவை கட்டிப்பியே அது மாதிரி கட்டிண்டு அக்கறையோடு தான் எல்லாம் பண்ணினாம்மா" என்று அம்மா மனசு புரியாமல் கமலிக்காகப் பரிந்து கொண்டு பேசினாள் பார்வதி.
"வாயை மூடுடி! போதும். உன் சர்டிபிகேட்டை இங்கே யாரும் கேழ்க்கலே!..." என்று பெண்ணிடம் கோபமாகச் சீறி எரிந்து விழுந்தாள் காமாட்சி அம்மாள்.
அம்மாவின் கோபத்தையோ ஆத்திரத்தையோ பார்வதியாலேயே ஏற்க முடியவில்லை. அம்மா கமலியின் மேல் ஒரு காரணமும் இல்லாமல் அநாவசியமாகக் கோபப்படுகிறாள் என்றே பார்வதிக்குத் தோன்றியது.
பத்து பதினைந்து நாட்களிலேயே வாடியிருந்த பகுதி தவிர மறுபகுதியில் துளசி பொல்லென்று புதுத் தளிர்விட்டுப் பொலியத் தொடங்கிவிட்டது. பூமிநாதபுரத்திலிருந்து வந்த புதுப் பசுவும் வீட்டில் ஏற்கனவே எஞ்சியிருந்த கன்றுகளுமாகக் கூரையோ கீற்றோ இல்லாமல் ஆஸ்பெஸ்டாஸில் போடப்பட்டிருந்த புது மாட்டுக் கொட்டத்தை நிறைத்துக் கொண்டிருந்தன. ஆனாலும் ஊர் வம்பிலும் அரட்டைகளிலும் திண்ணைப் பேச்சிலும் இன்னும் கமலியின் தலைதான் உருண்டது. அவள் தான் வம்புக்கு இலக்காக இருந்தாள்.
"பரம வைதீகரான விசுவேசுவர சர்மா வீட்டிலே துளசிச் செடி பட்டுப் போனதற்கும் பசுமாடு எரிந்து போனதற்கும் கமலிதான் காரணம்" - என்று வெளியே இருப்பவர்கள் கண்மூடித்தனமாகப் பேசியது போதாதென்று வீட்டுக்குள்ளேயே காமாட்சியம்மாள் வெளிப்படையாகவும், சில சமயங்களில் ஜாடைமாடையாகவும் இப்படிப் பேசத் தொடங்கியிருந்தாள். சர்மாவிடம் அவள் சண்டை பிடித்துப் பார்த்தாள். அவர் அதற்கு அசையவில்லை. கமலியின் பவ்யம், பணிவு, மரியாதை, காரண காரியம் கேட்காமலே இந்து மதத்திலும், இந்தியக் கலாச்சாரத்திலும் உடனே விரைந்து கரையத் துடிக்கும் அவள் மனநிலை - எல்லாமே சர்மாவுக்குப் பிடித்திருந்தன. தங்களுக்கு ஒத்து வராததை எல்லாம் மூட நம்பிக்கை என்று ஒதுக்கி விட்டு எஞ்சியவற்றுக்கும் தட்டிக் கழிக்கும் நோக்குடன் காரண காரியம் கேட்டுக் கொண்டு தயங்கி நிற்கிற கலாசாரத்தை இழக்கத் தயாரான இந்தியர்களிடையே விஞ்ஞானத்திலும் ஞானத்திலும் மிக வளர்ந்த தேசத்திலிருந்து வந்திருக்கும் ஓர் இளம் பெண் நடந்து கொள்ளும் அடக்கமும் நளினமும் அவரை அவள் மேல் மரியாதை கொள்ளச் செய்திருந்தன.
கமலி மடிசார் வைத்துக் கொண்டு துளசி பூஜை, கோபூஜை செய்ததையும் தரையில் உட்கார்ந்து இலை போட்டுச் சாப்பிடப் பழகிக் கொண்டதையும் துர்க்கா சப்த ஸ்துதி ஸ்தோத்திரம் சொல்வதையும், காமுவைப் போலவோ ஊராரைப் போலவோ, வேடிக்கையாகவோ வம்பு பேசும் விஷயமாகவோ சர்மா கவனிக்கவில்லை. அதிலுள்ள அந்தரங்க சுத்தியை மதிக்கத் தெரியாதவர்கள் யாராயிருந்தாலும் அவர்களை நாகரிக மற்றவர்களாக எண்ண ஒரு போதும் அவர் தயங்கியதில்லை.
தினசரி காலையில் கமலி யோகாசனங்கள் செய்கிறாள் என்பது அவருக்கே தெரியும். டென்னிஸ் விளையாடும் போது பெண்கள் அணிவது போன்ற ஒரு வகை உடையில்... அரை டிராயர், பனியனோடு அவள், பத்மாசனமோ, சிரசாசனமோ போட்டுக் கொண்டிருந்தபோது ஒரு நாள் பாருவைத் தேடி மாடிப்படியேறிய காமாட்சியம்மாள் அதைப் பார்த்து விட்டாள். உடனே எதோ பார்க்கக் கூடாததைப் பார்த்து விட்டதைப் போல் பதற்றத்தோடு கீழே இறங்கிய காமாட்சியம்மாள் கொல்லையில் பூஜைக்காகத் தோட்டத்தில் பூக்கொய்து கொண்டிருந்த சர்மாவிடம் போய், "இதோ பாருங்கோ! இதெல்லாம் உங்களுக்கே நன்னா இருக்கா? சின்ன வயசுப் பொம்மனாட்டி மாடியிலே நட்ட நடுக்கூடத்திலே அரை நிஜாரைப் போட்டுண்டு தொடை தெரியறாப்பல மார்ச் சட்டையோட தலைகீழா நின்னுண்டிருக்காளே?" என்று இரைந்தாள். சர்மா புன்முறுவல் பூத்தபடி, "கமலி யோகாசனம் போடறா. உனக்குப் பிடிக்கலேன்னா அதையெல்லாம் நீ ஏன் போய்ப் பார்க்கணும்?"... என்று பதிலுக்குக் கேட்டார்.
சங்கரமங்கலத்தில் "தாசிமார் தெரு" என்றொரு பழைய பகுதி இருந்தது. அந்தத் தெருவில் அந்த நாளில் சிவராஜ நட்டுவனார் என்றொரு பிரபலமான நடன ஆசிரியர் இருந்தார். கமலி பரதநாட்டியமும், கர்நாடக சங்கீதமும் கற்க ஆவல் காட்டியதன் காரணமாக அந்தத் தெருவைச் சேர்ந்த ஒரு பழைய பாகவதரையும், சிவராஜ நட்டுவனாரையும் ஏற்பாடு செய்திருந்தான் ரவி. வாரத்தின் முதல் மூன்று நாட்கள் சங்கீதத்தையும் மற்ற மூன்று நாள் நாட்டியத்தையும் மீதமுள்ள ஒரு நாளில் சர்மாவிடம் சமஸ்கிருத மொழி நுணுக்கங்களையும் கற்று வந்தாள் கமலி. முதலில் பாகவதரும், நட்டுவனாரும் சர்மாவின் வீட்டு மாடியிலேயே கமலிக்குக் கற்றுக் கொடுத்தார்கள்.
"அவளுக்கு ஆத்திரம்னா அங்கே தேடிப் போய்க் கத்துக்கட்டும். நாட்டியம், சங்கீதம்னு வழக்கமில்லாத வழக்கமாக் கண்ட மனுஷாளை இந்தாத்துக்கு உள்ளே விட ஆரம்பிச்சா அப்புறம் ஊர் சிரியாச் சிரிக்கும்" - என்று காமாட்சியம்மாள் சண்டைக்கு வரவே நட்டுவனாரும், பாகவதரும் வீட்டுக்கு வருவது நிறுத்தப்பட்டு அவர்கள் வீடுகளுக்குக் கமலி போவதென்று ஏற்பாடாயிற்று.
சர்மாவும், ரவியும் ஒருநாள் மாலை பேசிக்கொண்டே ஆற்றங்கரைக்குப் போகும்போது தற்செயலாக ஒரு விஷயம் சர்மாவிடமிருந்து ரவிக்குத் தெரியவந்தது. சர்மாவே முன் வந்து அதை அவனிடம் தெரிவித்தார்.
"இந்த ஊர் ரொம்பப் பொல்லாதது ரவி! திடீர்னு ஸ்ரீ மடத்திலேருந்து தந்தி குடுத்து என்னை வரச் சொல்லியிருந்தாளே, எதுக்குன்னு உனக்குத் தெரியுமா? நீயா இதுவரை என்கிட்டக் கேழ்க்கலைன்னாலும் நானா இப்போ சொல்றேன். நீயும் கமலியும் இங்கே வந்து தங்கியிருக்கிறதைப் பத்தியும் தேசிகாமணிக்கு மடத்துமனையை வாடகைக்கு விட்டிருக்கிறதைப் பத்தியும் மொட்டைக் கடிதாசும் தந்தியுமா எழுதிப் போட்டு என்னை உடனே ஸ்ரீமடம் பொறுப்பிலேருந்து வெளியேத்தணும்னு புகார் பண்ணியிருக்கா. நான் வெள்ளைக்காரியை வீட்டிலே தங்க வச்சுண்டு அவளுக்கு முட்டை மாமிசம்லாம் சமைச்சுப் போடறேனாம். நாஸ்திகனை மடத்துமனையிலே வாடகைக்கு வச்சு அக்கிரஹாரத்து மனுஷாளுக்குத் தர்ம சங்கடங்களை உண்டு பண்ணியிருக்கிறேனாம். எல்லாம் அந்தச் சீமாவையர் வேலை. ஸ்ரீ மடத்து நிலங்களையும் மனையையும் அவர் சொன்ன படி அவர் சொன்ன மனுசாளுக்கு விடலேங்கிற எரிச்சல்லே இத்தனையையும் அவர் பண்ணியிருக்கார். நல்ல வேளையா ஸ்ரீ மடம் ஹெட்டாபீஸ் மானேஜர் இதையொண்ணும் நம்பலை. ஆசார்யாளுக்கும் என்மேலே இருக்கிற அன்பும், அபிமானமும் கொஞ்சம்கூடக் குறையலே. நான் ஆசார்யாளைப் பார்க்கப் போயிருந்தப்போ யாரோ அர்ஜெண்டீனவிலேருந்து ஒரு லேடி நம்ம கமலி மாதிரின்னு வச்சுக்கோயேன்... ருக்வேதத்தைப் பத்திப் பெரியவா கிட்டப் பேசிண்டிருந்தா.
'மனசாட்சிக்குத் துரோகம் பண்ணாமே நியாயமாகவும் அந்தரங்க சுத்தியோடவும் ஸ்ரீ மடத்துக் காரியங்களை அவ்விடத்து ஆக்ஞைக்குக் கட்டுப்பட்டுப் பண்ணிண்டிருக்கேன். என்மேலே துளி சந்தேகமிருந்தாலும் உடனே நான் இதை விட்டுடறதுக்கும் தயாராயிருக்கேன். ஸ்ரீ மடம் சம்பந்தப்பட்ட கைங்கரியமாச்சேன்னுதான் இதுக்கு நான் தலைக்குடுத்துண்டு இருக்கேனே தவிர லாபம் பார்த்தோ பிரயாசைக்குப் பலன் எதிர்பார்த்தோ இதை நான் ஒத்துக்கல்லே' - என்று தீர்மானமா நான் எடுத்துச் சொன்னப்புறம் தான் நிர்வாகஸ்தருக்கும் ஆசார்யாளுக்கும் நிஜம் புரிந்தது.
'உம்மமேலே பூர்ண நம்பிக்கையும் விசுவாசமும் இருக்கு. நீரே தொடர்ந்து ஸ்ரீமடத்துக் காரியங்களைக் கவனிக்கணும்கிறது தான் இவ்விடத்து ஆக்ஞை. ஏதோ இத்தனை பேர் எழுதியிருக்காளேன்னு கூப்பிட்டு விசாரிச்சதைத் தப்பா எடுத்துக்க வேண்டாம்'னா. அப்புறம்தான் எனக்கு நிம்மதியாச்சு. காமுவோட ஆசார்யாளைத் தரிசிக்க போனபோது நான் இந்த விஷயமெல்லாம் பேசலை. மறுபடி தனியாப் போய்ப் பேசினேனாக்கும். அதுனாலே உங்கம்மாவுக்குக் கூட இதெல்லாம் ஒண்ணும் தெரியாது. தெரிஞ்சா வேற வெனையே வேண்டாம். ஏற்கனவே கமலியைக் கரிச்சுக் கொட்டறவளுக்கு இன்னும் வேகம் வந்துடும்...."
இதைக் கேட்ட பின்புதான் ரவிக்கு ஓர் உண்மை புரிந்தது. தான் கமலியோடு வந்து தங்கியிருப்பதால் வீட்டுக்கும் அப்பாவுக்கும் புதிதாகத் தோன்றியிருக்கும் பிரச்னைகளை ஒவ்வொன்றாக அவன் உணர முடிந்தது.
"ஏன் தான் இப்படி வீண் வம்பளப்பிலே சந்தோஷப்படறாளோ? நம்ம மாதிரி மனுஷாளை விடத் தீவிரமான வெஜிடேரியன்ஸ் இப்போ ஐரோப்பிய சமூகத்திலேதான் புதுசா நெறைய உண்டாயிண்டிருக்கா. 'வெஜிடேரியனிஸம்' ஒரு பெரிய 'கல்ட்' ஆக அங்கே வளர்ந்துண்டிருக்கு. எங்க பழக்கத்துக்கப்புறம் கமலி ஏறக்குறையத் தீவிர வெஜிடேரியனாகவே மாறியாச்சு. வெஜிடேரியன் உணவு வகைகளுக்கு 'ஹெல்த் ஃபுட்ஸ்'னு பேர் குடுத்துக் கொண்டாடறவா உலகமெல்லாம் தோணிண்டிருக்கற காலம்ப்பா இது! நாகரிக வளர்ச்சியிலே எங்கெல்லாமோ ஒரு சுற்றுச் சுற்றி விட்டு 'வெஜிடேரியனிஸம்' கிற குழப்பமில்லாத எல்லைக்கு வந்து மறுபடி நிற்க மனிதர்கள் ஆசைப்படற காலத்திலே ஏன் தான் இந்த மாதிரி வம்பு பேசிச் சந்தோஷப்படறாளோ?" என்றான் ரவி.
"தப்பா நினைச்சுக்காதே. விஷயங்கள் உனக்குத் தெரிஞ்சிருக்கட்டும்னுதான் சொன்னேன். இதெல்லாம் பார்த்து நான் அசந்துடலே ரவி! ரொம்பத் தெளிவாயிருக்கேன். கமலியை உன்னைவிட நான் நன்னாப் புரிஞ்சிண்டிருக்கேன். முந்தாநாள் எங்கிட்ட ஸான்ஸ்கிரிட் படிக்கறப்போ, 'வாகர்த்தாவிவ'ங்கிற ரகுவம்ச ஸ்லோகத்தையும் 'ஜோதி ஸ்வரூபமாகிய சூரியனுக்குச் சிறிய தீபத்தினால் ஆரத்தி காட்டுகிற மாதிரியும், சந்திர காந்தக்கல்லானது மிகப்பெரிய சந்திரனுக்கே அர்க்கிய தீர்த்தம் விடுகிற மாதிரியும், சமுத்திரத்திற்கு அதன் நீரிலேயே ஒரு பகுதியை எடுத்து நீராட்டித் திருப்திப் படுத்துகிற மாதிரியும், நீ அளித்த சொற்களாலேயே உன்னை வழிபடுகிறேன்'- என்று சௌந்தரிய லஹரியின் நிறைவில் ஆதிசங்கரர் கூறும் கருத்தையும் நவீன மொழியியல் ஆராய்ச்சியோடு சம்பந்தப்படுத்திக் கமலி விளக்கினாள். அதைக்கேட்டு நான் ஆச்சரியப்பட்டுப் போயிட்டேன். நான் அவளுக்குச் சொல்லிக் குடுத்துண்டிருக்கேனா, அல்லது அவள் எனக்குச் சொல்லிக் குடுத்திண்டிருக்காளான்னேசந்தேகமாயிடுத்துடா ரவி.
"உலக மொழிகள் அனைத்தும் ஓர் அடிப்படையிலானவை என்பதை விளக்கற சமயத்திலே - 'சொல்லும் பொருளும் போல (அர்த்தநாரீசுவரனாக) இணைத்திருக்கிற உலகின் தாயும் தந்தையுமான பார்வதி, பரமேசுவரர்களாகிய உங்களைச் சொல்லினாலும் பொருளாலும் பயனை அடைவதற்காக நான் வணங்குகிறேன்' - என்கிற ரகுவம்ச ஸ்லோகத்தைச் சொல்லிக் குடுத்தேன் நான். அப்புறம் அவளா அதைப் போல வர ஒவ்வொரு ஸ்லோகத்தையும் இணைச்சுச் சிந்திக்க ஆரம்பிச்சுட்டாப்பா. 'கம்பேரிட்டிவ் ஸ்ட்டீ' என்பது வளர்ந்த நாடுகளில் தவிர்க்க முடியாத ஒரு அறிவுச் சாதனம் ஆகிவிட்டது."
"ரொம்ப ஆழமான சிந்தனைடா அவளுக்கு!"
இதைக் கேட்டு ரவிக்குப் பெருமையாயிருந்தது.
அந்த வார இறுதியில் அப்பாவின் அனுமதியோடு பக்கத்துக் கிராமத்தில் உறவினர் வகையில் நடைபெற்ற வைதிகமுறையிலான நான்கு நாள் கல்யாணம் ஒன்றிற்குக் கமலியையும் அழைத்துக் கொண்டு போனான் ரவி. ஹோமம், ஔபாசனம், காசி யாத்திரை, நலுங்கு, ஊஞ்சல், அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல், சப்தபதி என்று ஒவ்வொரு சடங்காக பிலிம் சுருளில் அடக்கி எடுத்துக் கொள்வதில் கமலி ஆவல் காட்டினாள். சடங்குகளின் பொருளையும், உட்பொருளையும் ரவி அவளுக்கு விளக்கினான். நலுங்கு ஊஞ்சல் ஆகியவற்றைக் கமலி மிகவும் இரசித்தாள். பழைய தலைமுறைப் பெண்கள் அருகிலிருந்து பாடிய நலுங்குப் பாட்டுக்களையும், ஊஞ்சற் பாட்டுக்களையும் கூட ரெக்கார்டரில் பதிவு செய்து கொண்டாள். 'டிரெடிஷனல் இண்டியன் மேரேஜ்' மிகவும் சுவாரஸ்யமாகவும் கலர் ஃபுல்லாகவும் மணமக்கள் இருவரின் ஆவல்களையும் மிகுவிப்பதாகவும் இருப்பதாய்க் கமலி கூறினாள்.
நலுங்கில் மணமக்கள் இருவரும் பரஸ்பரம் ஒருவர் தலையில் மற்றொருவர் அப்பளம் உடைத்ததைச் சிறு குழந்தை போல் கைகொட்டிச் சிரித்து இரசித்தாள் கமலி. அந்தத் திருமணம் நிறைந்தபின் ஐந்தாம் நாள் ஊர் திரும்பிய போது ரவியிடம் விநோதமான வேண்டுகோள் ஒன்றை விடுத்தாள் கமலி.
---------------
அத்தியாயம் 19
"நீ அந்நிய நாட்டுக்காரி. ஏதோ வேடிக்கையாக இதெல்லாம் செய்து கொள்கிறாய் என்று தான் ஜனங்கள் ஆச்சரியத்தோடு உன்னைப் பார்க்கிறார்கள். உண்மையில் எங்கள் ஊர் வழக்கப்படி கல்யாணமானவர்கள்தான் இப்படி மடிசார் வைத்து புடவைக் கட்டிக் கொள்ள வேண்டும்" - என்று ரவி விளக்கியபோது தான் கமலி தன் அந்தரங்கத்திலிருந்த அந்த ஆசையை அவனிடம் வெளியிட்டாள்.
"தயவுசெய்து இன்னொரு முறை அப்படிச் சொல்லாதீர்கள். உங்கள் சமயம், உங்கள் மதம், உங்கள் பழக்கவழக்கங்கள், உங்கள் கலாசாரம் எதையும் நான் வேடிக்கையாக அணுகவில்லை. மனப்பூர்வமாகவே அணுகுகிறேன். என்னுடைய அணுகுதலில் தவறு இருந்தால் உடனே என்னைத் திருத்துங்கள். மற்றவர்கள் கேலி செய்ய விட்டு விடாதீர்கள். உங்கள் காதலி என்ற நிலையிலிருந்து சாஸ்திர சம்மதத்தோடு உங்களை மணந்து கொண்டவள் என்ற பெருமையை எனக்கு அளியுங்கள். முறையாக ஒரு சிறு சடங்குகூட விட்டுப் போகாமல் நம் திருமணம் நான்கு நாட்கள் பழைய வழக்கப்படி நடக்க வேண்டும்." -
"நீ இப்படி ஆசைப்படுவாய் என்பது எனக்குத் தெரியும் கமலீ! எனக்கும் இதில் தயக்கமோ ஆட்சேபணையோ இல்லை. நீ வாய் திறந்து இப்படி என்னைக் கேட்கிறதுக்கு முன்னேயே இதை அப்பாவிடம் பிரஸ்தாபித்திருக்கிறேன் நான். ஆனால் இந்தியர்களாகிய எங்களிடம் உள்ள ஒரு குறையை உன்னிடம் சொல்றதிலே தப்பில்லேன்னு நினைக்கிறேன். வைக்கோற் படைப்பின் மேல் படுத்துறங்கும் நாய் போல இந்தப் பூர்விகமான கலாசாரத்தை நாங்களும் தொடர்ந்து அநுசரிக்காமல் இதற்கு ஆசைப்பட்டுத் தவித்து வருகிற பிறரும் அநுசரிக்க விடாமல் தடுக்கும் மனப்பான்மை இங்கு இருக்கிறது. நூறு வருஷங்களுக்கு முன் ஃப்ரெடரிக் மாக்ஸ் முல்லர் ஆக்ஸ்ஃபோர்டிலிருந்து வேதங்களையும் உபநிஷதங்களைய்ம் அச்சிட்டுப் பதிப்பிக்கத் தொடங்கிய போது, தாங்கள் அழிய விட்டுக் கொண்டிருக்கிற ஒன்றை அக்கறையோடு பதிப்பிக்கிற அந்த அந்நியனைப் பாராட்டாமல், 'ஒரு நீசன் வேதங்களைப் பதிப்பிப்பதாவது' என்று இங்கே ஆத்திரமாக எதிர்த்துக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். இந்தியர்களில் சுவாமி விவேகானந்தரும், மகரிஷி தேவேந்திரநாத தாகூரும் தான் மாக்ஸ் முல்லரைத் துணிந்து அவரது பணிக்காக மனமாரப் பாராட்டினார்கள் அன்றைக்கு."
"இருக்கலாம். ஆனால் இன்றைய நிலைமை மாறியிருக்கக்கூடும். முன்னைப் போல அவ்வளவு மோசமாக இராதென்று நினைக்கிறேன்." -
சிறிது காலம் பொறுத்துத் தன் தந்தையின் மனம் அதை ஏற்கிற பக்குவம் பார்த்து மீண்டும் இதை அவரிடம் தெரிவிப்பதாக ரவி அப்போது அவளுக்கு வாக்களித்தான். அவனது பதில் கமலிக்குத் திருப்தியளித்தது.
வசந்தி பம்பாய்க்குப் புறப்பட்டுச் சென்ற பின் கமலிக்கு மனம் விட்டுப் பழகுகிற சிநேகிதி என்று வேறு யாரும் சங்கரமங்கலத்தில் கிடைக்கவில்லை. காமாட்சியம்மாளின் வெறுப்புக்கும் சம்மதமின்மைக்கும் எதிர்ப்புக்கும் இடையே அவளிடமிருந்தே - அவளை மானஸீக குருவாகக் கொண்டே பலவற்றைக் கற்றுக் கொண்டாள் கமலி. நடுநடுவே அந்த வீட்டில் சில வேதனைக்குரிய சம்பவங்கள் நடந்தாலும் அது கமலி வரையில் தெரிந்து அவள் மனம் வருந்தாமல் சர்மாவும் ரவியும் பார்த்துக் கொண்டார்கள்.
இதற்கிடையில் காமாட்சியம்மாளின் பிறந்தகம் இருந்த கிராமத்திலிருந்து அவளுக்குப் பெரியம்மா முறை ஆகவேண்டிய ஒரு வயதான விதவைப் பாட்டி கோவில் திருவிழாவுக்காகச் சங்கரமங்கலம் வந்து சேர்ந்திருந்தாள். சிவன் கோயில் திருவிழாவுக்காக ஒரு வாரமோ, பத்து நாளோ தங்கி விட்டுப் போவது பாட்டியின் உத்தேசமாக இருந்தது. பாட்டி பரம வைதீகம். துணி மணிகள் ஜெபமாலை அடங்கிய கம்பளி மடிசஞ்சியோடு தன் கையாலேயே கிணற்றில் தண்ணீர் தூக்கிக் கொள்வதற்குத் தேங்காய்க் கமண்டலமும் கயிறும் கூடக் கையோடு கொண்டு வந்திருந்தாள் அந்தப் பாட்டி.
ஓர் இளம் வயசு வெள்ளைக்காரியை அந்த வீட்டில் பார்த்ததும் பாட்டி ஒரு சிறு கலகத்தையே மூட்டிவிட முயன்றாள்.
"இதென்னடீ காமு! யாரோ வெள்ளைக்காரியை வீட்டிலே தங்க வச்சிண்டிருக்கே? இதெல்லாம் நம்ம குலம் கோத்திரத்துக்கு அடுக்குமோடீ? நான் எப்படி மனசு துணிஞ்சு இனிமே இங்கே தங்கறது அம்மா?" - என்று பாட்டி காமாட்சியம்மாளைக் கேட்டாள்.
"என்ன பண்றது பெரியம்மா? எனக்கும் சுத்தமாப் பூண்டோடு இதெல்லாம் பிடிக்கலே. நீங்களே இந்தப் பிராமணரைக் கேளுங்கோளேன்... அப்பவாவது இவருக்கு உறைக்கறதான்னு பார்க்கலாம்" - என்று காமாட்சியம்மாளிடமிருந்து பாட்டிக்குப் பதில் கிடைத்தது. காமாட்சியம்மாள் புரிந்து கொண்டிருந்தபடி, அந்த வீட்டில் சர்மா, ரவி, பார்வதி, குமார் எல்லாருமே கமலியின் கட்சி. காமாட்சியம்மாள் மட்டும் இதிலே தனியாகக் கமலியை எதிர்த்து வந்தாள் என்றாலும் தன் எதிர்ப்பை அவளால் வெளிகாட்ட முடியாமலிருந்தது. இப்போது இந்தப் பெரியம்மாவுன் வரவு அந்த எதிர்ப்பை வெளிகாட்டப் பயன்பட்டது. பாட்டிகளுக்கே உரிய நச்சரிப்புக் குணத்தோடு ரவியிடம், குமாரிடம், பார்வதியிடம் என்று ஒவ்வொருவரிடமாக இதைக் கிளப்பிப் பார்த்தாள் அந்தப் பாட்டி. அந்த வீட்டில் காமாட்சியம்மாளைத் தவிர வேறு யாரும் கமலி விஷயமாகப் பாட்டியிடம் பிடி கொடுத்துப் பேசவே இல்லை. கடைசியாக சர்மாவிடமே கேட்டாள் பாட்டி. அதையும் வீட்டில் வைத்துக் கேட்காமல் சிவன் கோவில் ரிஷப வாகனப் புறப்பாட்டின் போது கோவில் மண்டபத்தில் நின்று கொண்டிருந்த சமயத்தில் சர்மாவிடம் இதைக் கேட்டாள் பாட்டி.
"எல்லா சாஸ்திரமும் தெரிஞ்சவாளே இப்பிடிப் பண்ணினா என்ன செய்யறது? இந்தக் கட்டைலே போற வயசுலே எனக்கு இப்படியெல்லாம் தீட்டுப் படணுமோ?" -
"அவளாலே உங்களுக்கு ஒரு தீட்டும் வந்துடாது. இந்த ஆசார அனுஷ்டானங்களைப் பொறுத்தவரை அவ நம்மை எல்லாம் விடப் படுசுத்தம்! கவலைப்படாம நீங்க பாட்டுக்கு இருங்கோ..." என்றார் சர்மா.
"அதெப்படி முடியும்? நம்ம மனசறிஞ்சே..." என்று விடாமல் மேலும் ஏதோ தொண தொணத்தாள் பாட்டி.
"சௌகரியப் படாட்டா வேறே எங்கே தங்கணுமோ தாராளமா அங்கே போய்த் தங்கிக்கலாம் நீங்க..." - என்று தன் வாயால் முந்திக் கொண்டு சொல்லி விடாமல் பாட்டியே அவள் வாயால் அதை சொல்லட்டும் என்று பொறுமையாகக் காத்திருந்தார் சர்மா.
"நான் சங்கர் சுப்பன் ஆத்துலே போய்த் தங்கிக்கலாம்னு பார்க்கிறேன்."
"நீங்களே இப்படிச் சொல்றப்போ நான் உங்களைப் போக விடமாட்டேன்னா தடுக்க முடியும்? அப்புறம் உங்க இஷ்டம்" - என்று அந்த உரையாடலை முடிக்க வேண்டிய இடத்தில் கச்சிதமாக முடித்தார் சர்மா. பாட்டி புறப்பட்டுப் போய் விட்டாள். ஆனால் காமாட்சியம்மாளுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டது.
"இருபது வருஷமா ப்ரம்மோத்ஸ்வத்துக்கு வந்து இந்தாத்துலே தங்கிண்டிருந்த பெரியம்மாவை ஒரு நிமிஷத்திலே எடுத்தெறிஞ்சு பேசித் துரத்தி விட்டுட்டேளே? எங்காத்து மனுஷாள்னா உங்களுக்கு அத்தனை எளக்காரமோ? புதுசு புதுசா யார் யாரோ இங்கே வந்து மினுக்கறாங்கறதுக்காகப் பழைய பந்துக்களைத் துரத்தணுமா இப்பிடி?" -
"நான் ஒண்ணும் யாரையும் துரத்தலை! அவளா வந்து 'என் ஆசாரத்துக்கு இனிமே இங்கே ஒத்துக்காது. நான் சங்கர சுப்பனாத்துக்குப் போலாம்னு பார்க்கறேன்'னாள். அப்புறம் நான் என்ன பண்ண முடியும்? 'இல்லே! நீங்க கண்டிப்பாய்ப் போகக்கூடாது. இங்கே தான் தங்கணும்'னு அவ கால்லே விழுந்து என்னைக் கெஞ்சச் சொல்றியா? அவளே 'நான் போகணும்'னா; சரி! உங்க இஷடம்னேன்." -
"ஊரெல்லாம் போய் என் தலையை உருட்டப் போறா? ஏற்கெனவே ஊர்லே உங்க தலை உருண்டுண்டிருக்கிறது போறாதுன்னு இதை வேற பண்ணியிருக்கேன்..."
சர்மா இதற்குப் பதில் பேசவில்லை. பெண்களுடன் பேசும்போது ஓர் எல்லையில் ஆண்கள் மௌனத்தைக் கடைப்பிடிப்பது அந்தப் பூசலை ஒரு கலகமாக நீடிக்க விடாமல் தடுக்க உதவும் என்பது சர்மாவின் நம்பிக்கை.
ஆனால் கமலியின் பொருட்டு அவளை மையமாக வைத்து இப்படி ஒரு குடும்பக் கலகம் நடந்தது என்பதை அவளை அறிய விடாமல் பார்த்துக் கொண்டார் சர்மா.
"நீ பண்ற கூத்தாலேதான் இப்பிடியெல்லாம் நடக்கறது. இப்பிடி எங்க பெரியம்மா வயித்தெரிச்சலை நீ ஏண்டா கொட்டிக்கணும்?" - என்று ரவியைச் சண்டைக்கு இழுத்துப் பார்த்தாள் காமாட்சியம்மாள்.
"நான் யார் வயித்தெரிச்சலையும் கொட்டிக்கலே அம்மா! உங்க பெரியம்மா அவளாப் புறப்பட்டுப் போனா அதுக்கு யார் என்ன பண்ண முடியும்? கமலி உன்னைத் தெய்வமா மதிச்சுப் பேசறா... நீதான் அநாவசியமா இப்போ அவ வயித்தெரிச்சலைக் கொட்டிக்கிறே" என்றான் ரவி.
"ஆமாண்டா! இவ ஒருத்தி வந்து என்னைத் தெய்வமா மதிக்கலேன்னு தான் நான் ராப்பகலாத் தவிச்சுண்டிருந்தேன். போடா போக்கத்தவனே..."
"எங்கேம்மா போகச் சொல்றே. மறுபடியும் பாரிஸுக்கு உடனே புறப்பட்டுடட்டுமா?"
காமாட்சியம்மாள் ஏதோ காரியமிருப்பது போல் பேசாமல் உள்ளே போய்விட்டாள்.
கமலியின் படிப்பு மட்டும் தடங்கள் இல்லாமல் சர்மாவிடம் தொடர்ந்தது. அன்று ஆனந்தவர்த்தனரின் தொனியோலோகம் பற்றியும், தொனிக்கும், வக்ரோக்திக்கும் உள்ள வித்தியாசங்கள் பற்றியும், கமலி சர்மாவிடம் கேட்டுக் குறிப்பு எழுதிக் கொண்டிருந்தாள். அவள் நுணுக்கமாக ஒவ்வொன்றாய்க் கேட்பது பற்றி மகிழ்ந்த சர்மா,
"சொல்லிக் கொடுக்க ஆளில்லாமே இதெல்லாம் எனக்கே கொஞ்சம் கொஞ்சமா மறந்து போக ஆரம்பிச்சாச்சு. நல்ல வேளையா, நீ வந்து கேக்கறதாலே நானும் இதெல்லாம் ஞாபகப்படுத்திக்கறேன். அறிவுக் களஞ்சியமாகவும் கலாச்சாரச் சுரங்கமாகவும் இருக்கிற சமஸ்கிருத மொழிக்கு இப்படி ஒரு நிலை இந்தத் தேசத்திலே ஏற்படும்னு மகான்கள் கூட நினைச்சுப் பார்த்திருக்க மாட்டா அம்மா..."
"பல ஐரோப்பிய மொழிகளின் தாயான லத்தீனுக்கு ஐரோப்பாவில் இன்று என்ன கதி ஏற்பட்டிருக்கிறதோ அது தான் இந்தியாவில் இன்று உங்கள் சமஸ்கிருதத்துக்கும் ஏற்பட்டிருக்கிறது. புராதனமான லத்தீன் மொழி சர்ச்சுக்கள், மத ஸ்தாபனங்கள், வைதீகச் சடங்குகளுக்கான மொழியாக மட்டும் இன்று எஞ்சி நிற்பது போல் தான் சமஸ்கிருதமும் உங்கள் நாட்டில் எஞ்சி நிற்கிறது. ஆனால் இந்தோ ஐரோப்பிய மொழிகளில் மிகமிகப் பழைமையான சமஸ்கிருதம், கிரீக், லத்தீன் மூன்றிலும் சமஸ்கிருதமே மூத்தது என்று பல உலகறிந்த மொழியியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள்."
லத்தீன் மொழியையும் சமஸ்கிருத மொழியையும் அவள் ஒப்பிட்டு விளக்கிய விதம் சர்மாவுக்குப் பிடித்திருந்தது. எட்டு, ஒன்பது, பத்து என்னும் மூன்று எண்களுக்கான பதங்களும் முதல் பத்து எண்களுக்கான மற்றப் பதங்களும் லத்தீன், கிரீக், சமஸ்கிருதம் மூன்றிலும் ஒரே விதமாக இருப்பதையும் சர்மாவுக்கு எழுதிக் காட்டி விளக்கினாள் அவள். அஷ்ட, நவ, தச என்ற மூன்று பதங்களையும் போலவே ஒலிக்கக்கூடிய பதங்கள், எட்டு, ஒன்பது, பத்து எண்களுக்கு அந்த மூன்று மொழிகளிலும் ஒரே விதமாக அமைந்திருப்பதைக் கண்டு சர்மா விவரிக்க முடியாத மகிழ்ச்சியை அடைந்தார். ஒன் என்ற ஆங்கிலப் பதத்தையும் ஒன்று என்ற தமிழ்ப் பதத்தையும் கூட ஒப்பிட்டு விளக்கினாள் அவள். அங்கே தங்கியிருக்கிற அந்த ஓராண்டுக்குப் பயன்படட்டும் என்று ரவி சென்னையிலுள்ள பிரிட்டிஷ் கவுன்ஸில் லைப்ரரியிலும், அமெரிக்கன் சென்டர் லைப்ரரியிலும், போஸ்டல் மெம்பர்ஷிப் எடுத்திருந்தான். புத்தகங்களைத் தபாலில் பெற்றுக் கொள்ள வசதியாயிருந்தது. ஓரிரு மாதங்களுக்கு இடையே ரவியும், கமலியும் அவ்வப்போது மேற்கொண்ட சில பிரயாணங்கள் ஐந்து நாட்கள் பத்து நாட்கள் என்று ஆயின.
அப்படி ஐந்து நாட்கள் பத்து நாட்கள் ரவியும் கமலியும் ஊரிலில்லாமல் போகும்போது வீடே வெறிச்சோடிப் போனாற் போலாகிவிடும் சர்மாவுக்கு. கமலியும் ரவியும் ஊரிலிருந்த நாட்களில் ஒன்றில் இறைமுடிமணி தம்முடைய பகுத்தறிவுப் படிப்பகத்தில் கமலி தமிழில் பேசும் கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தார். கூட்டத்திற்கு நல்ல விளம்பரம் செய்யப்பட்டிருந்ததாலும், ஒரு பிரெஞ்சுக்காரி தமிழில் பேசப் போகிறாள் என்பதாலும் நிறையப்பேர் திரளாக வந்திருந்தார்கள்.
இறைமுடிமணி கமலியை அறிமுகம் செய்து வைத்தும் பேசும்போது ஒளிவு மறைவின்றி அவள் விரைவில் விசுவேசுவர சர்மாவின் மருமகள் ஆகப் போகிறாள் என்னும் பொருள் தொனிக்கப் பேசியிருந்தார். அந்தக் கலப்புத் திருமணத்திற்கு அட்வான்சாகப் படிப்பகத்தின் சார்பில் வாழ்த்துக் கூறுவதாகவும் சொல்லியிருந்தார்.
'திராவிட மொழிக் குடும்பம்' என்ற தலைப்பில் தமிழ் மொழியைப் பற்றிய அறிவுப்பூர்வமான மொழியியல் கணிப்பை விவரித்தாள் கமலி. அவள் பதினைந்து நிமிஷங்களுக்கும் மேலாகத் தமிழிலே பேசியது கூட்டத்துக்குப் பெரிதும் வியப்பை அளித்தது. கூட்டத்தில் கமலிக்கு மாலையணிவிக்க விரும்பிய இறைமுடிமணி அங்கு வந்திருந்த பெண்கள் பகுதியிலிருந்து ஒருவரைத் தேடி அவர்கள் எழுந்திருந்து வரத் தயங்கிக் கூசியதால், ஒருவிநாடி யோசித்து விட்டு, 'வெண்ணெய் பக்கத்திலே இருக்கறப்ப நெய்க்கு ஏன் தவிக்கணும்? இந்தாங்க! நீங்களே அவளுக்கு இந்த மாலையைப் போடுங்க தம்பி....?' என்று ரவியிடமே மாலையை நீட்டினார். அவனும் சிரித்துக் கொண்டே மாலையை அவர் கையிலிருந்து வாங்கிக் கமலிக்குச் சூட்டினான். இந்த நிகழ்ச்சி அக்ரகாரம் முழுவதும் பரவியபோது சீமாவையரின் பழைய துஷ்பிரசாரம் சூடு பிடிக்க இதுவும் உதவியது. அவரும் தயாராகக் காத்திருந்தவர் போல இதைப் பயன்படுத்திக் கொண்டார். இறைமுடிமணி, விசுவேசுவர சர்மா இருவர் மேலும் சீமாவையருக்கு இருந்த கோபத்தை ஒரே சமயத்தில் காட்டுவதற்கு இது பயன்பட்டது. சங்கர மங்கலத்தில் மட்டுமின்றி அக்கம் பக்கத்துக் கிராமங்களிலும் பரவுகிறாற்போல் வதந்திகளைக் கிளப்பி விட்டார் சீமாவையர்.
"ஏண்டா நான் கேள்விப்பட்டது நிஜந்தானா? அந்தத் தேசிகாமணி நாடார் நடத்தின கூட்டத்திலே அத்தனை பேருக்கும் முன்னே கொஞ்சம் கூடக் கூச்ச நாச்சமில்லாமே அவளோட நீ மாலை மாத்திண்டயாமே?" -
ரவிக்கு இதைக் கேட்டுச் சிரிப்பு வந்தது. சிரித்தால் அம்மாவின் கோபம் அதிகமாகி விடப் போகிறதே என்று அடக்கிக் கொண்டு,
"வேறே யாரும் பொம்மனாட்டிகள் முன்வரத் தயங்கினதாலே அவர் என்னைக் கூப்பிட்டுக் கமலிக்கு மாலை போடச் சொன்னார். போட்டேன்." -
"தடி மாடா வளர்ந்திருக்கிற, அத்தனை பெரிய வயசு வந்த பொண்ணுக்கு நாலுபேர் முன்னாடி மாலை போடுன்னு ஒருத்தன் சொன்னா நீ போடலாமோ?"
"போட்டா என்ன தப்பு அம்மா?'
"போடா... உங்கிட்ட பேசிப் பிரயோஜனமில்லை. விதண்டாவாதம் பேசியே பழக்கமாப் போச்சுடா நோக்கு."
அது தான் சமயமென்று ரவி அம்மாவிடமிருந்து நழுவினான்.
இது நடந்து இரண்டு மூன்று நாட்கள் கழித்துப் பகல் பன்னிரண்டு மணிக்குத் தபாலில் அந்த வீட்டுக்கு இரண்டு ரிஜிஸ்தர் கடிதங்கள் வந்தன. அவற்றில் ஒன்று சர்மாவின் பெயருக்கும் மற்றொன்று கமலியின் பெயருக்கும் இருந்தன. சர்மாவும், கமலியும் கையெழுத்துப் போட்டுத் தங்கள் தங்கள் பெயருக்கு வந்திருந்த பதிவுத் தபால்களை வாங்கினார்கள். சர்மாவுக்குத் தன் பெயரில் பதிவுத் தபால் வந்தது ஆச்சிரியமில்லை. கமலிக்கு யார் ரிஜிஸ்தர் கடிதம் அனுப்பியிருக்கக்கூடும் என்பது தான் மிகப் பெரிய புதிராக இருந்தது.
--------------
அத்தியாயம் 20
தன் பெயருக்குப் பதிவுத் தபாலில் வந்திருந்த கடிதத்தைப் பார்த்து சர்மா எதுவும் வியப்போ பதற்றமோ அடையவில்லை. அமைதியாகக் கடிதத்தை மடித்து மறுபடியும் உறையில் வைத்துவிட்டு உட்கார்ந்திருந்தார். இது அவர் ஏற்கெனவே எதிர்பார்த்ததுதான்.
இதற்கு நேர்மாறாகக் கமலி தன் பெயருக்கு வந்திருந்த கடிதத்தைப் பிரித்துப் படித்துவிட்டு ஆச்சரியம் அடைந்தாள். இப்படி ஒரு நோட்டீஸ் ரிஜிஸ்தர் தபாலில் வருகிற அளவுக்கு எந்தப் பெரிய குற்றத்தையும் தான் செய்யவில்லையே என்பதுதான் அவளுடைய இந்த ஆச்சரியத்துக்குக் காரணமாய் இருந்தது. படித்து முடித்ததும் அவளே தன் பெயருக்கு வந்திருந்த கடிதத்தை ரவியிடம் கொடுத்தாள்.
அவளுக்கு வந்திருந்த கடிதத்தைப் படித்ததனால் அதே போல ஒரு பதிவுத் தபாலில் தந்தைக்கு வந்திருந்த கடிதத்தைப் பற்றியும் என்னவென்று தெரிந்து கொள்ளும் ஆவலில் தந்தையிடம் அதைக் கேட்டு வாங்கிப் படிக்கத் தொடங்கினான் ரவி.
அந்த இரண்டு ரிஜிஸ்தர் கடிதங்களும் ஒரே நோக்கத்தோடுதான் அனுப்பப்பட்டிருந்தன. 'லோகா சமஸ்தா சுகினோ பவந்து'(எல்லா உலகமக்களும் நன்றாக இருக்கட்டும்). 'சர்வே ஜனா சுகினோ பவந்து'(எல்லா மக்களும் நன்றாக இருக்கட்டும்) என்ற வேண்டுதலோடு தங்கள் வழிபாடுகளையும் பிரார்த்தனைகளையும் முடிப்பவர்கள் அடுத்த வீட்டுக்காரன் நன்றாயிருப்பதைக் கூடப் பார்க்கப் பொறாதவர்களாக இருப்பது புரிந்தது.
'பாதிக்கப்பட்ட' உள்ளூர் ஆஸ்திகப் பெருமக்களின் சார்பாக வக்கீல் நோட்டீஸ்களாக அவை அவர்களுக்கு அனுப்பப்பட்டிருந்தன.
"ஸ்ரீ மடத்து நிலங்களையும், சொத்துக்களையும், காலி மனைகளையும் ஆஸ்திகர்களின் உணர்வுகளைப் புண்படுத்துகிறவர்கள் வசம் விட்டிருப்பதாலும், மடத்து முத்திராதிகாரியாயிருந்தும், ஆசார அனுஷ்டானங்களுக்கு புறம்பானவர்களோடு பழகுவதும், அப்படிப் பட்டவர்களை வீட்டிலேயே தங்க வைத்துக் கொள்வதும், முறையற்ற செயல்களாகப் படுவதாலும் சரியான காரணமும், சமாதானமும் கூறாத பட்சத்தில் சட்ட ரீதியாக ஏன் அவர்மேல் நடவடிக்கை எடுக்கலாகாது?" - என்று சர்மாவைக் கேட்டது அந்த வக்கீல் நோட்டீஸ்.
'உள்ளூரில் இந்து மதத்தைச் சேர்ந்தவர்களின் நம்பிக்கைக்குரிய கோயில்களில் நுழைந்து கர்ப்பக்கிருஹத்துக்கு மிகச் சமீபம் வரை சென்று தரிசித்துக் கோவிலின் விதிகளையும், ஆகம சுத்தத்தையும் மீறுவதானது மனிதாபிமானிகளாகிய ஆஸ்திகர்களைப் பாதிப்பதனால் பிற மதத்தைச் சேர்ந்தவர்களாகிய கமலியின் மேல் சட்டப்படி ஏன் நடவடிக்கை எடுக்கலாகாது?' - என்று கமலியின் பெயருக்கு வந்திருந்த நோட்டீஸ் அவளைக் கேட்டது.
கமலிக்கு வந்திருந்த நோட்டீஸை அப்பா கேட்காமலே அவரிடம் படிப்பதற்கு நீட்டினான் ரவி. அவரும் அதை வாங்கிப் படித்தார். பின்பு இரண்டு கடிதங்களையும் ஒன்றாகச் சேர்த்துத் தம் வசமே வைத்துக் கொண்டார்.
"நீ ஒண்ணும் கவலைப்பட்டு மனசைக் குழப்பிக்காதேம்மா! எல்லாம் நான் பார்த்துக்கறேன்" - என்று கமலியை நோக்கிச் சர்மாவே சமாதானமும் சொன்னார்.
கமலிக்கு வந்திருந்த கடிதத்தில் கோவிலில் ஆகம ரீதியான சுத்தி பண்ணுவதற்கான செலவை அவள் ஏற்க வேண்டும் என்று வேறு மிரட்டியிருந்தது. சீமாவையர் நேரில் ஈடுபட்டதாகக் காட்டிக் கொள்ளவில்லை என்றாலும் அவர் தூண்டிவிட்டுத்தான் இப்படிக் காரியங்கள் நடக்கின்றன என்பதைச் சர்மாவால் வெகு சுலபமாக அநுமானித்துக் கொள்ள முடிந்தது. முன்பு சீமாவையர் மடத்து ஏஜெண்டாக இருந்த காலத்தில் அவர் ஸ்ரீமடத்து நிலங்களை அடைந்திருந்த பினாமி ஆள் ஒருவன் இப்போது நிலங்கள் தனக்கு அடைக்கப்படாத கோபத்தில் இருந்ததைப் பயன்படுத்தி அவன் மூலம் தான் வைக்கோற் படைப்புக்குத் தீவைக்க ஏற்பாடு செய்திருந்தார் என்ற இரகசியம் ஏற்கெனவே சர்மா காதுக்கு எட்டியிருந்தது.
ரவி கேட்டான். "நான் யாராவது வக்கீலிடம் போய்க் கன்ஸல்ட் பண்ணிண்டு வரட்டுமா அப்பா?"
"வேண்டாம். அவசியமானா அப்புறம் நானே உங்கிட்டச் சொல்றேன். கோர்ட், வக்கீல் இந்த மாதிரி விஷயங்களிலே வேணு மாமா பெரிய விவகாரஸ்தர். முதல்லே நான் இது விஷயமா அவரைப் போய்க் கலந்துக்கறேன்." -
"செய்யுங்கோ அப்பா! எனக்கும் அதுதான் நல்ல யோசனையாப் படறது."
இரண்டு கடிதங்களையும் எடுத்துக் கொண்டு வேணு மாமா வீட்டுக்குப் புறப்பட்டார் சர்மா.
தெருத் திரும்பும்போது வில் வண்டியில் அமர்ந்தபடி சீமாவையர் எங்கோ புறப்பட்டுப் போய்க் கொண்டிருப்பது தெரிந்தது. சர்மா எந்தத் திசையில் நடந்து போய்க் கொண்டிருந்தாரோ அந்தத் திசையிலேயே இவருக்கு முன்பாகச் சிறிது தொலைவில் அந்த வண்டி போய்க் கொண்டிருந்ததனால் வண்டியில் பின்புறம் பார்த்தபடி அமர்ந்து வெற்றிலை போட்டுக் கொண்டிருந்த சீமாவையர் சர்மா பின்னால் நடந்து வந்து கொண்டிருப்பதைப் பார்த்து விட்டார். உடனே அவர் வண்டியில் இருந்தபடியே உரத்த குரலில் சர்மாவிக் குசலம் விசாரித்தார். சர்மாவும் சிரித்தபடியே மறுமொழி கூறினார்.
"நீர் ஊரிலே இல்லாத சமயத்திலே படப்புத் தீப்பிடிச்சு எரிஞ்சுதுன்னா. போய்ப் பார்த்து உம்ம பையனிட்ட விசாரிச்சுட்டு வந்தேன். ஏதோ கஷ்டகாலம் போலிருக்கு."
"....."
அவர் அப்படி வண்டியில் உட்கார்ந்தபடியே பேசிக் கொண்டு வர தான் பின்னால் அதற்குப் பதில் சொல்லிய படியே தொடர்ந்து நடந்து செல்வதைச் சர்மா விரும்பவில்லை.
"வரேன்... அப்புறமாப் பார்க்கலாம்" - என்று கூறி விட்டு விரைந்து வண்டியைக் கடந்து அதற்கு முன்னால் நடக்கத் தொடங்கினார் அவர். ஓர் அயோக்கியனுக்குக்கூட நல்லவனைப் போலப் பிறருக்கு முன் தன்னைக் காட்டிக்கொள்ளும் பாவனையை விட முடியாமல் இருப்பதைப் பற்றிச் சிந்தித்தார் அவர். சில சமயங்களில் சுபாவமாகவே நல்லவனாயிருப்பவனை மிஞ்சிவிடும் அளவுக்குப் பாவனையினால் நல்லவராக இருப்பவர்கள் சாதுரியமாக நடித்து அதில் வெற்றியும் பெற்று விடுவதாகக் கூடத் தோன்றியது. -
பூர்வ ஜென்மத்து விட்ட குறையோ, தொட்ட குறையோ கமலி இந்தியக் கலாசாரம், இந்திய வழிபாட்டு முறை என்றால் அதற்காக மனம் நெகிழ்ந்து உருகுகிறாள். கோவிலுக்கு உள்ளம் மலர்ந்த பக்தியுடனும் சிரத்தையுடனும் ஓடுகிறாள்.
அந்த கலாசாரத்திலேயே அதன் வாரிசாகப் பிறப்பெடுத்திருப்பவராகச் சொல்லிக் கொள்ளும் சீமாவையருக்குச் சீட்டாடவே நேரம் போதவில்லை. அவர் கோயிலுக்குப் போய் வருஷக் கணக்கில் இருக்கும். ஆவலோடு கோவிலுக்குப் போகிறவளுக்கு ஏன் போகிறாய் என்று வக்கீல் நோட்டீஸ் மட்டும் அனுப்ப முடிகிறது. இந்த முரண்பாட்டை நினைத்துப் பார்த்த போது சர்மாவின் உள் மனம் கொதித்தது.
சர்மா தேடிச் சென்றபோது வேணுமாமா எங்கோ புறப்படத் தயாராயிருந்தாற் போல் தோன்றியது.
"எங்கேயோ கிளம்பிண்டிருக்கேள் போல் இருக்கே...? போயிட்டு அப்புறம் சாவகாசமா வரட்டுமா?"
"அவசரம் ஒண்ணுமில்லே! வாங்கோ, போஸ்டாபீஸ் வரை போலாம்னு புறப்பட்டேன். இப்போது உடனே போய்த்தான் ஆகணும்கிறதில்லே. அப்புறம் கூடப் போய்க்கலாம். நீங்க உட்காருங்கோ... அதென்ன கையிலே? லெட்டரா?"
சர்மா உட்கார்ந்தார். வேணுமாமாவின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் அந்தக் கடிதங்களையே அவரிடம் நீட்டினார்.
"படியுங்கோ... இது விஷயமாகத்தான் உங்ககிட்டப் பேசிட்டுப் போகலாம்னு வந்தேன்! இது ரெண்டும் இப்பத்தான் சித்தே முன்னாடி ரிஜிஸ்டர் தபால்லே வந்தது..."
"ஒண்ணு கமலி பேருக்கு வந்திருக்காப்லே இருக்கே?"
"ஆமாம்! அவ பேருக்கு ஒண்ணும் எம் பேருக்கு ஒண்ணுமா வந்திருக்கு..."
- வேணு மாமா அவற்றை ஒவ்வொன்றாகப் படித்தார்.
"ஓகோ! விஷயம் இவ்வளவு தூரத்துக்கு வந்துடுத்தா. யார் வேலை இதெல்லாம்? வைக்கோல் படப்புக்குத் தீவைச்சு நாசம் பண்ணினது போறாதுன்னு இது வேறயா?"
"யார்னு நான் சொல்லித்தான் தெரியணுமா? எல்லாம் சீமாவையர் வேலைதான்! என்னமோ ஆத்திரத்திலே, எது எதையோ பண்ணிண்டிருக்கார். என்மேலே தான் ஆத்திரம்; என் வீட்டிலே வந்து தங்கின பாவத்துக்கு அந்த பொண் மேலேயும் இப்படி விரோதம் காண்பிக்கணும்?"
"இப்போ என்ன பண்றதா இருக்கேள்?"
"என்ன பண்றதுன்னு உங்க கிட்டக் கலந்து பேசலாம்னு தான் இங்கே புறப்பட்டு வந்தேன்..."
"வந்த மட்டிலே ரொம்ப சந்தோஷம்! ஆனா இதுக்கு நீரோ கமலியோ பதிலொண்ணும் எழுத வேண்டாம். தூக்கி மூலையிலே எறிஞ்சிட்டுப் பேசாமே இரும். சொல்றேன்."
"எங்க மேலே ஏன் சட்ட ரீதியா நடவடிக்கை எடுக்கக் கூடாதுன்னு என்னமோ நோட்டீஸ் விட்ட மாதிரியின்னா அனுப்பிச்சிருக்கா? பதில் எழுதாமே எப்பிடிச் சும்மா இருக்கிறது?"
"நடவடிக்கை எடுக்கட்டுமே. அப்ப பாத்துக்கலாம்."
"'ஆஸ்திகாள் மனம் புண்படறாப்பிலேயோ, ஸ்ரீ மடத்து நெறிமுறைகளுக்குப் புறம்பாகவோ எதுவும் செஞ்சுடலே' ன்னு நானும் எனக்கு இந்து மதத்தின் மேலேயும் இந்து கலாசாரத்தின் மேலேயும் மதிப்பும் பக்தியும் இருக்கு. அந்த மதிபோடேயும், பக்தி சிரத்தையோடயும் தான் நான் கோவிலுக்குப் போறேன்'னு கமலியும் ஆளுக்கொரு பதில் எழுதிப் போட்டுட்டா நல்லதில்லையா?"
"வீண் வம்புக்காகவும் விரோதத்துக்காகவும் அனுப்பப்பட்டிருக்கிற இந்தக் கடிதாசுகளுக்கு அத்தனை மரியாதை தரவேண்டியது அவசியந்தானா சர்மா? நீரோ, கமலியோ, பதில் எழுதினாலும் எழுதாவிட்டாலும் அவா உங்க மேல் நடவடிக்கைன்னு கோர்ட்டுக்குப் போகப் போறதென்னவோ நிச்சயம். நீர் பதில் எழுதறதாலே அது ஒண்ணும் மாறவோ குறையவோ போறதில்லே. பேசாம இரும். மேற்கொண்டு அவா என்ன தான் செய்யறான்னு பார்ப்போம், அப்புறம் நாம் பண்ண முடிஞ்சதைப் பண்ணலாம்."
"சரி! நீங்களே சொல்றப்போ நான் வேற என்ன பண்றது? பதில் எழுதலே; விட்டுடறேன்."-
"ஓய்! சர்மா! தைரியமா இரும். உம்மைப் போல ஞானவான்கள் எல்லாம் வெறுமனே பூச்சாண்டி காட்டறவாளுக்குக் கூடப் பயப்படறதாலேதான் மத்தவா குதிரையேற முடியறது. கமலியையும் ரவியையும் இங்கே புறப்பட்டு வரச்சொல்றதுக்கே பயந்தேள். அப்பவும் நானும் என் பொண்ணும் தான் 'வரச் சொல்லி எழுதும்! பயப்படாதேயும்'னு உமக்கு உறுதி சொன்னோம். இப்பவும் நான் சொல்றேன் பயப்படாதேயும் பயமே இல்லாத கெட்டவனைக் கூட மதிச்சுப் பணிந்து விட்டுக் கொடுத்து விடுவதும் பயந்த சுபாவமுள்ள ஒரு நல்லவனைத் தொடர்ந்து மிரட்டிக் கொண்டேயிருப்பதும் வழக்கமாகிவிட்ட தேசம் இது!"
"பல சமயங்கள்ளே என்னோட சாத்வீக குணத்தை நீங்க பயம்னு தப்பாப் புரிஞ்சுக்கறேள். நான் நீங்க நினைக்கறது போல அத்தனை பயந்தவன் இல்லே. பயந்தவனா இருந்தாத் துணிஞ்சு பிள்ளையையும் கமலியையும் வரவழைச்சு ஆத்திலேயே தங்க வச்சிண்டிருக்க மாட்டேன். எங்காத்துக்காரியே அதற்குக் கடும் எதிர்ப்பு ஓய்! பயந்தவனா இருந்தா மடத்து இடத்தை இறைமுடிமணிக்கு வாடகை பேசி விட்டிருக்க மாட்டேன். நிலங்களைச் சீமாவையரின் பினாமி ஆட்களுக்குக் குத்தகை அடைக்க மறுத்து நியாயமான விவசாயிகளுக்கு விட்டிருக்க மாட்டேன். என் தைரியத்தை நானே விளம்பரப்படுத்தப்படாது..."
வேணுமாமா சர்மாவை நிமிர்ந்து பார்த்தார்.
"சபாஷ்! இப்போதான் நீ உண்மையான வேதம் படிச்ச பிராமணர்! தைரியமில்லாத ஞானம் சோபிப்பது இல்லை. தப்பாக வேதம் படித்தவனை விட நன்றாகச் சிரைப்பவனே மேல்னு மகாகவி பாரதியார் எதிலியோ எழுதியிருக்கார் ஓய்!"
சர்மா சொல்லியதை ஒவ்வொன்றாகச் சிந்தித்துப் பார்த்த போது அவர் பயந்த சுபாவமுள்ளவர் என்று தாமாக அவரது குடுமியையும் விபூதிப் பூச்சையும், பஞ்சகச்ச வேஷ்டியையும் செருக்குத் தெரியாத பவ்யமான நடையையும் பார்த்து நினைத்திருந்ததுதான் தவறோ என்று வேணு மாமாவுக்கே இப்போது தோன்றியது. 'சாது மிரண்டால் காடு கொள்ளாது' என்ற பழமொழி நினைவு வந்தது அவருக்கு. சிறிது நேரம் யோசனைக்குப் பின், "நீர் பதிலொண்ணும் எழுத வேண்டாம். ஆனா இன்னிக்குச் சாயங்காலமே ரவியிடம் நான் சொன்னேன்னு கமலியைக் கோவிலுக்கு அழைச்சுண்டு போகச் சொல்லும். போயி..." என்று அருகே நெருங்கி மீதி விஷயத்தைச் சர்மாவின் காதருகே குரலைத் தணித்துக் கொண்டு கூறினார் வேணு மாமா.
"இப்படிச் செய்யறதாலே என்ன பிரயோஜனம்னு புரியலே?"
"பிரயோஜனம் நிச்சயமா இருக்கு! ரசீது மட்டும் ஞாபகமா வாங்கிக்கச் சொல்லும். மறந்துடாதேயும்! நாளை, நாளன்னிக்கின்னு ஒத்திப் போட்டுடப்படாது. இதை இன்னிக்கே செஞ்சாகணும்..."
"சரி! நீங்க சொன்னபடியே பண்ணிடச் சொல்றேன். வரட்டுமா?" - என்று சர்மா புறப்பட்டார். வேணு மாமாவும் சர்மாவுக்கு உற்சாகமாக விடை கொடுத்தார்.
அன்று மாலை சர்மா ரவியையும் கமலியையும் அழைத்து "ஏய் ரவி! இன்னிக்கிக் கமலியை கோவிலுக்கு அழைச்சிண்டு போயிட்டு வா! அதோட அங்கே கோவில் அர்த்த மண்டபத்திலே திருப்பணி நிதி வசூல்னு போர்டு மாட்டிண்டு ஒரு கிளார்க் உட்கார்ந்துண்டிருப்பான். அவனிட்ட இந்த ஐநூறு ரூபாயைக் கமலி கையாலேயே குடுக்கச் சொல்லி நம்ம வீட்டு அட்ரஸ் போட்டு அவ பேருக்கே மறந்துடாமே ஒரு ரசீதும் வாங்கிக்கோ" -
என்று கூறி ஐந்து நூறு ரூபாய் நோட்டுக்களை அவனிடம் எடுத்து நீட்டினார் சர்மா.
"திருப்பணி உண்டியல்னு வச்சிருக்காளே; அதிலே பணத்தைப் போட்டுட்டா என்ன? இதற்குப் போயி ரசீது எதுக்குப்பா?"
"கண்டிப்பா ரசீது வேணும். அதுவும் நான் சொன்னபடி கமலி பேருக்கே வேணும். உண்டியல்லே போடப்பிடாது. நேரே குடுத்தே ரசீது வாங்கிண்டு வந்துடு" - என்று மீண்டும் வற்புறுத்திச் சொல்லி அனுப்பினார் சர்மா.
அப்பா சொல்லியபடியே அன்று ரவி கமலியை அழைத்துக் கொண்டு கோவிலுக்குப் போனான். கணவனுக்கு அருகே அடக்க ஒடுக்கமாகச் செல்லும் ஓர் இந்துப் பெண் போல் ரவியோடு தேங்காய் பழத்தட்டு ஏந்திக் கோவிலுக்குச் சென்றாள் கமலி.
--------------
அத்தியாயம் 21
ஓர் ஆணும் பெண்ணும் தங்களுக்கு இடையிலான உறவு என்ன என்பதைச் சொல்லாமலே சேர்ந்து தங்கியிருப்பது என்பது சங்கரமங்கலத்தைப் போன்ற ஓர் இந்தியக் கிராமத்தில் தொடர்ந்து சாத்தியமாகக் கூடியது இல்லை. அதுவும் பெண் முற்றிலும் புதியதும் அந்நியமானதுமான ஒரு நாட்டிலிருந்து வந்தவள் என்னும் போது வதந்திகளுக்கு ஒரு வரம்பே இருக்க வழியில்லை. ஒழுங்கும் நியாயமும் கூட இராது. வதந்திகளுக்கும் விவஸ்தை இராது. அந்த வதந்திகளைப் பரப்புகிறவர்களுக்கும் விவஸ்தை இராது. சாதாரண விஷயங்கள் பிரமாதப்படுத்தப்படுவதும் பிரமாதமான விஷயங்கள் சாதாரணப் படுத்தப்பட்டுக் கொச்சையாக்கப்படுவதும் அந்த வதந்திகளைப் பொறுத்தவரை மிகவும் சகஜம்.
ரவியும் கமலியும், ஊருக்கு வந்ததிலிருந்து இலைமறைகாயாக அவர்களைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தவர்களுக்கு இறைமுடிமணியின் பகுத்தறிவுப் படிப்பகத்தில் நடந்த கமலியின் சொற்பொழிவும் அந்தச் சொற்பொழிவில் கமலியை அறிமுகப்படுத்திய அவர் 'விசுவேசுவர சர்மாவின் எதிர்கால மருமகள்' என்கிற குறிப்புடன் கமலியைப் பற்றிக் கூறியிருந்ததும் ரவியைக் கொண்டே அவளுக்கு மாலையணிவிக்கச் செய்ததும் இப்போது வதந்திகளை வளர்த்து மிகவும் அதிகப்படுத்தியிருந்தன.
சர்மாவிடமே பகுத்தறிவுப் படிப்பகச் சொற்பொழிவில் 'அவரது எதிர்கால மருமகள்!' என்று கமலியை இறைமுடிமணி அறிமுகப்படுத்தியது பற்றி இரண்டொருவர் விசாரித்திருந்தனர். ஒளிவு மறைவாகப் பேசுவதோ விஷயங்களைப் பூசி மெழுகுவதோ, ஆஷாடபூதித்தனமோ இறைமுடிமணிக்கு அறவே பிடிக்காதென்பது சர்மாவுக்கு நன்றாகத் தெரியும். ஆனாலும் வக்கீல் நோட்டீஸ்களைப் பற்றியும், இதைப் பற்றியும் இறைமுடிமணியிடமே நேரில் பேச வேண்டுமென்று எண்ணினார் அவர்.
கமலியையும் ரவியையும் கோவிலுக்கு அனுப்பிவிட்டு இறைமுடிமணியைப் பார்க்கப் புறப்பட்டிருந்தார் சர்மா.
முதலில் பலசரக்குக் கடைக்குப் போய்ப் பார்த்தார். அங்கே அவர் இல்லை. அவருடைய மருமகன் குருசாமிதான் இருந்தான். அவனே விவரமும் சொன்னான்.
"மாமா விறகுக் கடையிலே இருக்காக. அங்ஙனே போனாப் பார்க்கலாம்."
பலசரக்குக் கடையில் நல்ல கூட்டம் இருந்தது. சீமாவையரின் துஷ்பிரசாரம் எதுவும் எடுபடவில்லை என்று தெரிந்தது. கலப்படமில்லாமல் விலையும் நியாயமாக வைத்து வியாபாரம் செய்ததால் அந்தக் கடையின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியவில்லை. கடைக்குச் சாமான் வாங்க வருகிற ஆண்களோ, பெண்களோ, சிறுவர்களோ, யாவரிடமும் காண்பிக்கப்பட்ட மரியாதையும், பண்பாடும், அக்கறையும், அந்தக் கடைக்குத் தனிப் பெருமையை அளித்திருந்தன. இறைமுடிமணி கடைக்கு வைத்திருந்த பெயர், கடையில் மாட்டியிருந்த படம், அவரது தனிப்பட்ட கொள்கைச் சார்புகள் எதுவும் விற்பனையைப் பாதிக்கவில்லை. சர்மாவுக்கே நிலைமை புரிந்தாலும் ஒரு வார்த்தைக்காக "வியாபாரம்லாம் எப்படி இருக்கு குருசாமி?" - என்று அவனையும் கேட்டு வைத்தார்.
"ரொம்ப நல்லாவே இருக்குங்க" என்று அவனிடமிருந்து பதில் வந்தது. பின்பு அங்கிருந்து இறைமுடிமணியின் விறகுக் கடைக்குப் போனார் அவர்.
விறகுக் கடைக்கு அவர் போனபோது இரண்டு மூன்று லாரியில் மூங்கில் சவுக்குக் கட்டைகள், கிடுகுக் கீற்று எல்லாம் வந்து இறங்கிக் கொண்டிருந்தன.
"தேசிகாமணீ! நாம தனியாக் கொஞ்சம் பேசணும். இங்கே ரொம்பக் கூட்டமா இருக்கே? ஆத்தங்கரைப் பக்கமாப் போகலாமா?"
"ஒரு பத்து நிமிஷம் உட்காரேன் விசுவேசுவரன்! லோடு இறக்கிக்கிட்டிருக்காங்க."
சொன்னபடி பத்து நிமிஷத்தில் இறைமுடிமணி வந்துவிட்டார். அவரும் சர்மாவும் பேசிக் கொண்டே ஆற்றங்கரைப் பக்கம் நடந்தார்கள்.
இறைமுடிமணியை ஆற்று மணலில் ஓரிடத்தில் உட்கார வைத்து விட்டுச் சர்மா - சந்தியா வந்தனத்தை முடித்துக் கொண்டு வந்து விடுவதாகச் சொல்லிச் சென்றார். அவர் வருகிறவரை இறைமுடிமணி ஆற்று மணலில் காத்திருக்க வேண்டியதாயிற்று.
சர்மா வந்ததும் அவரே பேச்சை ஆரம்பித்தார்:
"எனக்கும் கமலிக்கும் வக்கீல் நோட்டீஸ் வந்திருக்கு. வேணு மாமாவுக்கும் உனக்கும் தவிர வேறு யாருக்கும் நான் இதைச் சொல்லலே. கமலிக்கும் ரவிக்கும் மட்டும் தெரியும்."
"எதுக்கு வக்கீல் நோட்டீஸ்? யார் விட்டிருக்கானுவ?"
"யார்னு சொல்றது? எல்லாம் ஊர் ஜனங்கள் தான். என் நடத்தைகள் மடத்து முத்ராதிகாரிங்கிற பதவிக்கும், வைதிகத்துக்கும் பொருத்தமாயில்லையாம். கமலி இந்து ஆலயங்களுக்குள்ளே கேள்வி முறை இல்லாமத் தரிசனத்துக்குப் போறாளாம்..."
"உங்கள் ஆளுங்களைப் போலப் பொறாமை புடிச்சவங்க உலகத்துலேயே கிடையாதுப்பா! வரவரக் கோயிலுக்குப் போற ஆளுங்களே கொறைஞ்சி போச்சு. நமக்குப் புடிக்குதோ புடிக்கலியோ அதை நிஜமா நம்பிப் போற ஒருத்தர் ரெண்டு பேரையும் உங்கள் ஆளுங்களே கெடுத்துப் போடுவாங்கன்னு தோணுதுப்பா! அதுக்கு எங்க பிரச்சாரமே கூட வேணாம் போலிருக்கே."
"சீமாவையர் தான் தூண்டி விட்டு எல்லாக் காரியமும் பண்ணுவார்னு தோண்றது. என்னை நேரே பார்த்துட்டாத் தேனாப் பேசறார், விசாரிக்கிறார். ஆனாப் பின்னாலே பண்றதும் தூண்டி விடறதும் எல்லாம் இப்பிடிக் காரியங்களா இருக்கு."
"அவன் நாசமாப் போயிருவான். பாம்பு, தேளு, நட்டுவாக்கிலி மாதிரித் திரிஞ்சுக்கிட்டு இந்த ஊரைக் கெடுக்கிறான். எங்கடையை ஒழிச்சிப்பிடறதுன்னு தலை கிழே நின்னு பார்த்தான். முடியலே. ஜனங்க சரக்கு எப்படியிருக்குதுன்னு பார்த்தாங்களே ஒழிய ஆளு யாருன்னு பார்க்கலே." -
"இப்ப இந்த நோட்டீஸ்லேயும் உனக்குக் கடை வாடகைக்கு விட்டதை ஒரு குத்தமா எழுதியிருக்கா."
"அப்பிடியா?... உனக்கு இத்தினி தர்ம சங்கடம் என்னாலே வரும்னா நானே இதைக் கேட்டிருக்க மாட்டேனே? வாடகைக்கு யாருக்காவது விடப் போறதை நமக்குத்தான் விடட்டுமேன்னு கேட்டு வச்சேன்."
"நீ கேட்டதும் தப்பில்லே. நான் விட்டதும் தப்பில்லே தேசிகாமணி! எல்லாம் முறையாத்தான் நடந்திருக்கு. அஹமத் அலி பாய்க்கு விடலாம். உனக்கு விடப் படாதா?"
"கோவில் குளத்தை வெறுக்கிறவனைவிடக் கோவில் சிலைங்களையே பணங்குடுத்துத் திருடிக் கடத்தி அந்நிய நாட்டுக்கு விற்கிறவங்களே தேவலைன்னு பார்த்தாங்க போலிருக்கு! தவிரவும் பாய் சீமாவையருக்குப் பாட்டில், ஸெண்டு, ஃபாரின் சரக்குங்க, சமயத்திலே கைமாத்து எல்லாம் குடுக்கிறவரு வேற!"
"அதிருக்கட்டும்! உன்னோட படிப்பகத்துக் கூட்டத்திலே நீ ரவியோட கூட வந்திருக்கிற அந்தப் பெண்ணைப் பத்திச் சொல்றப் போ, ஏதோ 'என் எதிர்கால மருமகள்'னு சொன்னியாமே?"
"ஆமாம், சொன்னேன்! உள்ளதைச் சொல்றதுக்கு ஏனப்பா எல்லாரும் பயந்து பயந்து சாகறீங்க? கிழக்கே உதிக்கிற சூரியன் மேற்கே உதிச்சாலும் அந்தப் பொண்ணைத் தவிர வேறே யாரையும் கட்டிக்கிடப் போறதில்லைன்னு தனியாப் பேசிக்கிட்டிருக்கிறப்பத் தம்பியே எங்கிட்டச் சொல்லிடிச்சு. அந்தப் பெண்ணோ தம்பி மேலேயும் நம்ம நாடு, நம்ம நாட்டுப் பழக்க வழக்கங்கள் எல்லாத்து மேலேயும் உயிரையே வச்சிருக்கு. மூடநம்பிக்கை, மூடப் பழக்க வழக்கங்களைக் கூட ஏன்னுகேக்காமே கடைப்பிடிக்க அது தயாராயிருக்கு. எங்க படிப்பகத்திலே எந்தக் கூட்டத்திலேயும் கடவுள் வாழ்த்து - வெங்காயம் அது இது எல்லாம் கிடையாது. அன்னைக்குக் கூட்டத்திலே திடீர்னு யாரும் எதிர்பாராமே அந்தப் பொண்ணு என்னா செஞ்சிச்சிது தெரியுமா விசுவேசுவரன்? பேச்சைத் தொடங்கறதுக்கு முன்னாடி தானே தன் குரலிலே ஏதோ ஒரு கணபதி ஸ்தோத்திரத்தை முணுமுணுத்துப்பிட்டுத் தான் தொடங்கிச்சு.
"எங்க இயக்க ஆளுங்க ரொம்பப் பேருக்கு அது பிடிச்சிருக்காது. ஆனா அது தமிழிலே பேசின அழகிலே அத்தினி பேரும் அதை மறந்திட்டானுவ. ரெண்டொரு விடாக்கண்டங்க மட்டும் கூட்டம் முடிஞ்சதுமே எங்கிட்ட வந்து கேட்டானுவ. 'அதுனோட நம்பிக்கைப்படி அது கடவுள் வாழ்த்துப் பாடியிருக்கு! நம்மையோ படிப்பகத்தையோ அது பாதிக்காது'ன்னு பதில் சொல்லி அவனுகளை அனுப்பிச்சேன். உங்க ஐயமார் குடும்பத்திலேயே கூட இத்தினி நறுவிசாப் பதவாகமா ஒரு படிச்ச பொண்ணு ரவிக்குப் பொருந்தறாப்பல கிடைக்க மாட்டாப்பா. அந்தப் பொண்ணு கமலிக்கு நிறம் மட்டுமில்லே. குணமும் தங்கந்தானப்பா... எனக்கு இதிலே ஒளிவு மறைவு எல்லாம் தெரியாது. நிஜத்தைப் பேசினேன். மறைச்சுப் பேச எனக்குத் தெரியாதுப்பா!"
"வெளிப்பட வேண்டிய காலத்துக்கு முந்தி வெளிப்படற நிஜங்கள் வதந்தியாயிடும். சில நிஜங்களும் பிரசவிப்பதைப் போலப் பத்து மாதக் காலமோ, அதற்கு மேலோ நிறைந்து பின் வெளிவர வேண்டும். காலத்துக்கு முந்திய பிரசவம் குறைப் பிறவி ஆகியும் விடும் தேசிகாமணீ."
"சரிதான்! ஆனா ஒரு பொண் பிரசவிக்கப் போறாங்கிறது ஒண்ணும் அத்தினி இரகசியமா இருக்க முடியாதே?" -
இதைக் கேட்டுச் சர்மா சிரித்தார். இறைமுடிமணியின் வாதம் முரட்டுத்தனமாக இருந்தாலும் அதை எதிர்த்து சர்மா மேலும் விவாதிக்கவில்லை. இறைமுடிமணி தொடர்ந்தார்.
"அது மட்டுமில்லே விசுவேசுவரன்; இன்னொண்ணையும் தம்பி எங்கிட்டச் சொல்லிச்சு. நடுவிலே ஒருநாச் சாயங்காலம் இப்ப நீயும் நானும் பேசிக்கிட்டிருக்கிற மாதிரி இதே ஆத்தங்கரையிலே தம்பியும் நானும் பேசிக்கிட்டிருந்தோம். அப்ப மனசுவிட்டுப் பலதை எங்கிட்டச் சொல்லிச்சு. எல்லா வெள்ளைக்காரப் பொம்பளங்களையும் போலக் காதலிச்சாலே கல்யாணமாயிடிச்சின்னோ, மோதிரம் மாத்திக் கிட்டாக் கல்யாணமாயிடிச்சின்னோ அந்தப் பொண்ணு நினைக்கலியாம். 'இந்த ஊரு முறைப்படி சாஸ்திர சம்மத்தோட ஒரு சடங்குகூட விடாம, நாலுநாள் கல்யாணம் நடத்தணும்னு ஆசைப்படுது'ன்னு தம்பி சொல்லிச்சு! 'என்னப்பா பயித்தியக்காரத் தனமாயிருக்கு? இந்தூர்ல இருக்கறவங்களையே சீர்திருத்தத் திருமணத்துக்கும் பதிவுத் திருமணத்துக்கும் நாங்க தயாராக்கிட்டு வர்றோம். விஞ்ஞானம் வளர்ந்த தேசத்திலேருந்து வர்ற இளம் பொண்ணு ஒண்ணு இப்பிடிப் பத்தாம் பசலித்தனமா ஆசைப்படுதே'ன்னு நான் கூடத் தம்பியைக் கேலி பண்ணினேன்! 'இல்லே! இங்கே புறப்பட்டு வர்றப்பவும் வந்தப்புறமும் அதைக் கமலி வற்புறுத்துது'ன்னு தம்பி சொல்லுது. இந்த விஷயத்தை அது தன் பேரண்ட்ஸ் கிட்டவே சொல்லி அந்த மாதிரிக் கல்யாணத்துக்கு ஆகற செலவுக்குன்னு நெறையப் பணம் வேறே வாங்கிட்டு வந்திருக்குன்னும் தம்பி சொல்லுச்சுப்பா."
"ஊர் உலகம் ஒரு பக்கம் இருக்கட்டும் தேசிகாமணீ. என் மனைவி காமாட்சி இருக்கறவரை அது நடக்கவே நடக்காதுப்பா."
"நீதான் அவங்க மனசையும் மாத்தணும். ஒருத்தரோட முரண்டுக்காக மத்தவங்க தாங்க ஆசைப்படற நல்வாழ்வைக் கெடுத்துக்க முடியாது."
"வக்கீல் நோட்டீஸ் விஷயமா என்ன சொல்றே நீ?"
"சும்மா மிரட்டறானுவ! கோர்ட்டுக்கு வந்தா ஒரு கை பார்த்துடலாம். நீ தைரியமா இரு. எதுக்கும் பயப்படாதே!" -
வேணு மாமாவின் யோசனையை நண்பனிடம் கூறினார் சர்மா.
"நல்ல யோசனைதான்! நோட்டீஸுக்குப் பதில் எழுதாதே. விஷயம் கோர்ட்டுக்கு வரட்டும் பார்க்கலாம்."-
மேலும் சிறிது நேரம் பொதுவான பல விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்துவிட்டு இருவரும் புறப்பட்டார்கள். தம் கடை முகப்பு வந்ததும் இறைமுடிமணி விடைபெற்றார். அப்போது சர்மாவின் மனம் தெளிவாக இருந்தது. நண்பனிடம் மனம்விட்டுப் பேசியதில் கலக்கங்கள் நீங்கியிருந்தன.
சர்மா வீடு திரும்பியபோது பார்வதி விளக்கு ஏற்றி வைத்துத் தீப நமஸ்காரம் செய்து சுலோகம் சொல்லிக் கொண்டிருந்தாள். காமாட்சி பக்கத்து வீட்டுப் பாட்டியிடம் பேசுவதற்குப் புறப்பட்டுப் போயிருக்க வேண்டும் என்று தோன்றியது.
பார்வதியின் சுலோகம் முடிந்ததும், "பாரு! இங்கே வாம்மா!" - என்று சர்மா மகளைக் கூப்பிட்டார். பார்வதி அவரருகே வந்ததும் அவளைப் பூஜையறைக்கு அழைத்துச் சென்று, "ஒரு முக்கியமான விஷயமாப் பூக்கட்டிக் குலுக்கிப் போடறேன். சுவாமிக்கு நமஸ்காரம் பண்ணிட்டு ஒரு பொட்டலம் எடும்மா" - என்றார்.
பார்வதி அப்பா சொன்னபடியே செய்தாள். அவள் எடுத்துக் கொடுத்த பொட்டலத்தைப் பிரித்துப் பார்த்ததும், சர்மாவின் முகம் மலர்ந்தது.
"காயா பழமா அப்பா?"
"பழந்தான் அம்மா!" - பிரித்த பூப்பொட்டலத்தை அப்படியே கண்களில் ஒற்றிக் கொண்டார் அவர். வாசலில் யாரோ படியேறி வருகிற ஓசை கேட்டது. பார்வதி எட்டிப் பார்த்துவிட்டு, "அண்ணாவும் கமலியும் கோயில்லேருந்து திரும்பி வராப்பா..." என்றாள்.
பொன்நிற நெற்றியில் வெளேரென்ற விபூதிக் கீற்றும் குங்குமமுமாகக் கமலி சர்மாவுக்கு முன்வந்து, "கோவில் பிரசாதம் வாங்கிக் கொள்ளுங்கள்" - என்று தட்டில் காகிதங்களில் மடித்து வைத்திருந்த விபூதி, குங்குமம், வில்வத் தளங்களை அவர் முன் நீட்டினாள்.
-----------------
அத்தியாயம் 22
பரம வைதீகரான அப்பா எங்கே கமலியின் கையிலிருந்து பிரசாதம் வாங்காமல் நாசூக்காகத் தட்டிக் கழித்து விடுவாரோ என்று உடன் வந்து அருகே நின்ற ரவி மனத்தில் எண்ணித் தயங்கினான். ஆனால் அப்படி ஏதும் நடந்து விடவில்லை.
சர்மா புன்முறுவலோடு பிரசாதம் எடுத்துக் கொண்டார். கமலி கையிலிருந்த தட்டைக் கண்களில் ஒற்றிக் கொண்டு அவர் பிரசாதம் எடுத்துக் கொண்ட காட்சியை ரவியால் அப்போது நம்பவே முடியாமல் இருந்தது.
"திருப்பணிக்குப் பணம் குடுத்து ரசீது வாங்கினேளா?"
"இதோ ரசீது வாங்கியிருகோம்பா" - ரவி கோயில் திருப்பணிக்குப் பணம் கொடுத்துக் கமலி பேருக்கு வாங்கியிருந்த ரசீதை எடுத்து அப்பாவிடம் நீட்டினான்.
கமலி மாடிக்குப் போனாள். அவளைப் பின் தொடர்ந்த ரவியை, "நீ கொஞ்சம் இரு... உங்கிட்டப் பேச வேண்டியதிருக்கு" - என்று அவன் காதருகே கூறினார் சர்மா.
"இதோ வந்துடறேன்ப்பா; ஒரு நிமிஷம்" என்று அவருக்கு மறுமொழி கூறிவிட்டு மாடிப்படியேறினான் ரவி.
*****
அந்த வினாடியில் சர்மாவின் மனநிலை துல்லியமாகவும் தெளிவாகவும் இருந்தது. ஒரு பரிசுத்தமான பூரண ஞானியின் துணிச்சலுடனும், ஒரு கள்ளங்கபடமற்ற குழந்தையின் வெறுப்பற்ற மகிழ்ச்சியுடனும் இருந்தார் அவர்.
மாடிக்குப் போன ரவியை எதிர்பார்த்துக் கையில் பஞ்சாங்கத்துடனும் பென்சில் பேப்பருடனும் மனதுக்குள் ஒரு தீர்மானத்துக்கு வந்தவரைப் போல் கீழேயே காத்திருந்தார் அவர்.
ஏதோ இனம் புரியாமல் ரவிக்கும் மனத்தில் ஒரு குதூகலம் பிறந்திருந்தது. அப்பா தன்னைக் கூப்பிட்டுக் கமலியைக் கோயிலுக்கு அழைத்துக் கொண்டு போகச் சொன்னதும், கமலியின் கையிலிருந்து பிரசாதம் வாங்கிக் கொண்டதும் அதன்பின் உடனே 'உன்னோடு கொஞ்சம் பேச வேண்டும், வருகிறாயா?' - என்று தன்னைத் தனியே அழைத்ததும் நல்ல அடையாளங்களாகப் பட்டன அவனுக்கு.
அப்பா கொஞ்சமும் தயக்கமின்றிக் கமலியின் கையிலிருந்து கோயில் பிரசாதத்தை வாங்கிக் கொண்ட பெருந்தன்மையை அவளிடமே சொல்லி வியந்துவிட்டு, "இதுவே அம்மாவாயிருந்தா ஒரு ஸீன் கிரியேட் பண்ணியிருப்பா கமலி! என்னதான் இருந்தாலும் அப்பா அப்பாதான்" என்று கூறியபின் கீழே இறங்கித் தந்தையை சந்திக்க வந்தான் ரவி.
அவன் படியிறங்கத் தொடங்கியபோது, "உங்கள் அம்மாவும் இப்படி முகமலர்ச்சியோடு என் கையிலிருந்து பிரசாதம் வாங்குகிற நாள் ஒன்று வரும். அதையும் நீங்கள் உங்கள் கண்களாலேயே பார்க்கத்தான் போகிறீர்கள்" என்று கமலி உற்சாகமாகப் பதில் சொல்லியது அவன் காதில் விழுந்தது.
"தோட்டத்துக் கிணற்றடிக்குப் போய்ப் பேசலாமா" என்று கேட்ட ரவிக்கு, "வேண்டாம்! இங்கே மூணாம் மனுஷா யார் இருக்கா இப்போ? திண்ணையிலே உட்கார்ந்து பேசலாம் வா" என்று பதில் சொல்லியபடி திண்ணைக்கு அவனை அழைத்துச் சென்றார் சர்மா.
அப்பாவின் கையில் பஞ்சாங்கமும் பேப்பர் பென்சிலும் இருப்பதைப் பார்த்து இன்னும் அதிக வியப்பு உண்டாயிற்று ரவிக்கு. எதற்கும் அவரே விஷயத்தை முதலில் சொல்லட்டும் என்று சிறுவனாயிருந்தபோது அதிகாலையில் அவரிடம் படிப்பதற்காக அடக்க ஒடுக்கமாக அதே திண்ணையில் அதே இடத்தில் எப்படிப் பவ்யத்தோடு உட்காருவது வழக்கமோ அப்படியே இன்றும் இப்போதும் உட்கார்ந்தான் அவன்.
"ஏண்டா! உன் மனசிலே என்ன தான் இருக்கு? உனக்கு நான் என்ன பண்ணணும்கிறதை நீ முதல்லே எங்கிட்டச் சொல்லணுமே ஒழிய என்னை மூணாம் மனுஷன் மாதிரி நெனைச்சுண்டு மூணாம் மனுஷனா இருக்கிற தேசிகாமணி கிட்டவும், வேணு மாமா கிட்டவும் முதல்லே சொல்லி அப்புறம் அவா அதை எங் காதுலே போடற மாதிரி விடப்படாது. அது கொஞ்சம் கூட நன்னா இல்லே. இந்தச் சின்ன விஷயத்திலே நீ ஏன் இத்தனை இங்கிதம் இல்லாமே நடந்துக்கணும்னு தான் எனக்குப் புரியலே."
இதைக் கேட்டதும் திருடனுக்குத் தேள் கொட்டினது மாதிரி இருந்தது ரவிக்கு. என்ன பதில் சொல்லலாம் என்று அவன் தன் மனத்தில் வார்த்தைகளை யோசித்துத் திரட்டுவதற்கு முன் தந்தையே மேலும் தொடர்ந்தார்.
"நான் முடிவு பண்ண வேண்டிய சமாச்சாரத்தைப் போயி நீ தேசிகாமணி கிட்டவும் வேணு மாமா கிட்டவும் பிரஸ்தாபிச்சு என்ன பிரயோஜனம்?"
"தப்புத்தான் அப்பா! உங்களுக்கு ரொம்பவும் வேண்டியவாளாச்சேன்னு பிரஸ்தாபிச்சேன்."
"நான் முடிவு பண்ணியாச்சு! உங்கம்மா முதல் ஊரார் வரை யாருக்கும் என்ன உறவு, எதுக்கு வந்திருக்காள்னு கமலியைப் பற்றி ஓர் உறவும் சொல்லாமே இப்படி மெல்லவும் முடியாம விழுங்கவும் முடியாம வீட்டோட வச்சுண்டு வீண் வதந்திகளையும் ஊர் வம்பையும் அரட்டையையும் பெருக விடறத்துக்குப் பதில் துணிஞ்சு உனக்கும் அவளுக்கும் சாஸ்திரோக்தமாகவே ஒரு கல்யாணத்தைப் பண்ணிடறது எவ்வளவோ தேவலை. முன்னே எப்பவோ ஒரு நாள் வந்த புதிசிலே நீயே எங்கிட்டேக் கேட்டே. அப்போ நான் அதுக்குத் தயங்கினேன். இப்போ நானே அதுக்குத் துணிஞ்சிட்டேன்."
ரவிக்குத் தன் காதுகளையே நம்பமுடியவில்லை. பேசுவது அப்பாதானா என்றே சந்தேகமாயிருந்தது.
"அப்பா... நிஜமாவா...?" என்று உற்சாக மேலிட்டுக் கூவினான் ரவி.
"பின்னே என்ன? உங்கிட்ட விளையாட்டுப் பேச்சுப் பேசவா வேலைமெனக்கெட்டு இப்போ கூப்பிட்டிருக்கேன்? இந்த மாசக் கடைசியிலே ஒரே ஒரு முகூர்த்தம் தான் மீதமிருக்கு. பெத்தவனோ, பெத்தவளோ இங்கே இல்லாமே யாருடா அவளைத் தாரை வார்த்துக் குடுப்பா?"
"கேபிள் குடுத்தா கமலியோட அப்பா அம்மா ரெண்டு பேருமே கூட இங்கே வருவா அப்பா... ஆனா நீங்க சொல்ற முகூர்த்தத்துக்குள்ளே அது முடியாது. வேணு மாமாவை வேணாக் கேட்டுப் பார்க்கலாம்."
"ஏண்டா ஏற்கெனவே நீ அவரிட்டப் பேசி முடிவு பண்ணி வச்சாசா? என்னமோ தயாரா எல்லாம் ஏற்பாடு பண்ணிட்ட மாதிரிச் சொல்றியே?"
"இல்லே... கேட்டா ஒத்துப்பார்னு பட்டது. அதான் சொன்னேன்."
"சரி! வா, போகலாம். அவரிட்டேயே நேரக் கேட்டுடுவோம்."
"நான் எதுக்குப்பா? நீங்க கேட்டாலே ஒத்துப்பார். நானும் அவசியம் உங்க கூட வந்தாகணும்னா வரேன்."
"சும்மா கூட வாயேன் போயிட்டு வரலாம். நீ ஒண்ணும் பேசவேண்டாம். கேட்கிறதெல்லாம் நானே அவரிட்டக் கேட்டுக்கறேன்."
கூட வருவதற்கு ரவி சற்றே சங்கோஜப்பட்டாற் போலத் தோன்றியது. ஆனாலும் தட்டிச் சொல்லாமல் புறப்பட்டான். அந்த விஷயத்தில் அப்பாவின் திடீர் முடிவும் அவர் காட்டிய அவசரமும் உண்டாக்கிய சந்தோஷ அதிர்ச்சியிலிருந்து இன்னும் அவனால் முற்றாக மீள முடியவில்லை. அதனால் தெருவில் நடந்து போகிற போது அப்பாவிடம் அவன் எதுவுமே பேசக்கூட இல்லை. வீட்டிலிருந்தபடி இறங்கியதும் நிறைந்த தண்ணீர்க் குடத்தோடு ஒரு சுமங்கலி தெருவில் எதிர்ப்பட்டபோது, "சகுனம் ரொம்ப நன்னா ஆறது" என்றார் சர்மா.
வேணு மாமா வீட்டை அவர்கள் அடைந்த போது அவர் திண்ணையிலிருந்த மர பெஞ்சில் அமர்ந்திருந்தார். அவருக்கெதிரே ஒரு பெரிய பழுக்காத் தாம்பளம் நிறையப் பழம் - பூ வெற்றிலை பாக்கு - பச்சை ஏலக்காய்க் கொத்து எல்லாம் இருந்தன. வேணு மாமா அப்போது மிக மிக உற்சாகமாயிருந்தார்.
"வாங்கோ! என்னோட எஸ்டேட் மானேஜர் புதுசா வீடு கட்டிக் கிருகப் பிரவேசம் பண்றானாம். இப்பத்தான் வந்து அதுக்கு என்னை அழைச்சிட்டுப் போறான். ஏது... அப்பாவும் பிள்ளையுமா இப்படிச் சேர்ந்து வந்திருக்கேள்... ரவிக்கும் எவனாவது வக்கீல் நோட்டீஸ் அனுப்பிச்சிருக்கானா?"
"அதெல்லாம் ஒண்ணுமில்லே. கோவில் திருப்பணி டொனேஷன் விஷயம் நீங்க சொன்னபடி பண்ணியாச்சு ரவியே கூடப் போயிப் பணத்தைக் குடுத்துக் கமலி பேருக்கு ரசீதும் வாங்கிண்டு வந்துட்டான்."
"சபாஷ்! அப்புறம்?"
"சுபஸ்ய சீக்கிரம்னு பெரியவா சொல்லுவா. இந்த ஊர்க்காராளும், மத்தவாளும் பண்ற புரளியைப் பார்த்துப் பார்த்து நேக்கே தைரியம் வந்தாச்சு... நீங்க கொஞ்சம் பெரிய மனசு பண்ணி ஓர் ஒத்தாசை செஞ்சாகணும். இது மாதிரி ஒத்தாசையைப் பண்ற துணிச்சல் இந்த ஊர்ல உங்களைத் தவிர வேறு யாருக்கும் இருக்கிறத்துக்கில்லே."
"ஏதேது? பீடிகை ரொம்பப் பெரிசாப் போடறேளே? விஷயம் என்னன்னு முதல்லே சொல்லுங்கோ."
கூட்டி முழுங்கித் தட்டுத் தடுமாறி ஒரு வழியாக விஷயத்தைச் சொன்னார் சர்மா.
இதைக் கேட்டு உடனே பதில் எதுவும் சொல்லாமல் சிறு குழந்தை போல் வயதுக்கு மீறின உற்சாகத்தோடு உள்ளே ஓடிய வேணு மாமா கைப்பிடி நிறையச் சர்க்கரையோடு திரும்ப ஓடிவந்து சர்மாவை வாய் திறக்கச் சொல்லிப் பிடிவாதம் பண்ணி அதைக் கட்டாயமாக அவர் வாயில் போட்டார். உற்சாகம் கரை புரண்டது வேணு மாமாவுக்கு.
"இப்பவே வசந்திக்குத் தந்தி கொடுத்தாகணும். நீர் கொஞ்சம் கூடக் கவலைப்படாதேயும், எப்போ கமலியை நான் தாரை வார்த்துக் குடுக்கணும்னு நீரே சொல்றீரோ அப்போ பெண்ணுக்குப் பிறந்த வீடு இதுதான். கல்யாணமும் இந்த வீட்டிலேயே தான் நடக்கணும். லக்கினப் பத்திரிகை, முகூர்த்தக்கால் எல்லாத்துக்கும் உடனே ஏற்பாடு பண்ணிடறேன்."
"உம்ம ஆத்துக்காரியை ஒரு வார்த்தை கேட்டுக்க வேண்டாமோ?"
"கேட்கணும்கிறதில்லே. 'வசந்தி மாதிரி இவளும் நம்ப பொண்தான். இவளை நாமதான் தாரைவார்த்துக் குடுக்கணும். புதுப் புடவையைக் கட்டிண்டு மணையிலே வந்து என் பக்கத்திலே நில்லு'ன்னா மறு பேச்சுப் பேசாம வந்து நிப்பாள் என் ஆத்துக்காரி. அவளைப் பத்தி நீர் ஒண்ணும் கவலைப்பட வேண்டாம். உம்மாத்திலே தான் அந்தக் கஷ்டமெல்லாம். உம்ம ஒய்ஃப் இந்தக் கல்யாணத்தை ஒத்துண்டு மணையிலே வந்து நிப்பாளோ, சர்மா?"
"அதைப் பத்தி இப்போ நான் நிச்சயமா ஒண்ணும் சொல்றதுக்கில்லே. ஆனா அது சந்தேகம்தான்."
"அதனாலே ஒண்ணும் பாதகமில்லே. ஒத்து வராத மனுஷாளுக்காக உலகம் காத்துண்டு நிக்காது. இருபது முப்பது வருஷத்துக்கு முந்தி உம்ம கல்யாணமும் என் கல்யாணமும் நடந்த மாதிரி சாஸ்திரோக்தமா ஒரு சின்ன விஷயம் கூட விட்டுப் போகாமல் நாலு நாள் ஜாம் ஜாம்னு இதை நடத்திப்பிடலாம். நீர் எதுக்கும் கவலைப் படாதீயும். எல்லாத்தையும் என்கிட்ட விட்டுடும். நான் பார்த்துக்கறேன். இப்ப நீர் சம்பந்தி. பிள்ளை வீட்டுக்காரன். நீர் வந்திருந்து கல்யாணத்தை நடத்திக் கொடுத்தால் மட்டும் போறும். மத்ததெல்லாம் நான் பார்த்துக்கறேன்."
"நான் அப்படி விட்டுட முடியுமா? எல்லாக் கல்யாணமும் போல இல்லியே இது? நானும் சேர்ந்து கவலைப் பட்டாகணுமே? நாலு நாள் முகூர்த்தத்துக்கு வாத்தியார் ஒத்துண்டு வரணும். சீமாவையர் சொல்லி வச்சு மிரட்டித் தடுப்பார். 'இது சாஸ்திர சம்மதமான கல்யாணமில்லே. வரமுடியாது'ன்னு வைதிகாள் அட்டி சொன்னா என்ன பண்ணுவேள்? அப்படி ஏதானும் இடைஞ்சல் வரும்னு தான் தோன்றது, வந்தாலும் பரவாயில்லே. நானே எல்லாம் பண்ணிக்கிறேன். பிருஹஸ்பதி ஸ்தானத்திலே நானே இருந்துடறேன்."
"அதுக்கு அவசியம் இருக்காது சர்மா! இன்னிக்கி முக்காவாசிப் புரோகிதாளும் வைதிகாளும் சாஸ்திரத்தையும் மந்திரங்களையும் நல்ல ரேட்டுக்கு வித்திண்டு தான் இருக்கா. கூடப் பத்து ரூபா தட்சிணை தர்றதா இருந்தாச் சீமாவையர் ஆத்திலே பூர்வ காரியங்கள் பண்ணி வைக்கிற அதே வாத்தியாரே வந்து நம்ம கமலியோட கல்யாணத்தை நடத்தி வச்சாலும் ஆச்சரியப் படறதுக்கில்லே."
"இந்த ஈரோப்பியன்ஸ் வேடிக்கையான ஜனங்களா இருப்பா போலிருக்கு. இதுக்கெல்லாம் வேணும்னு ஆசைப்பட்டுத் தன்னோட அப்பாகிட்டவே சொல்லி வேண மட்டும் பணம் வாங்கிண்டு வந்திருக்கா அவ. நீங்க சிரமப்படணும்கிறதேயில்லே... அதையே கமலிகிட்டக் கேட்டு எல்லாச் செலவுக்கும் வாங்கிக்கலாம்..."
"உளறாதேயும் சர்மா! எனக்கென்ன சிரமம் இதிலே? நான் இதைப் போலப் பத்துக் கல்யாணத்தைச் சொந்தமாக் கையிலேருந்து செலவழிச்சுப் பண்ணி வைப்பேன். அத்தனை சௌகரியத்தைப் பகவான் எனக்குக் கொடுத்திருக்கான்... எனக்கு இன்னும் ஒரு பொண்ணிருந்து அவளுக்குக் கல்யாணம் பண்ண நேர்ந்தா அதுக்கு நான் தானே கையிலேருந்து செலவழிக்கணும்?"
"அதுக்கில்லே! நீங்க தப்பாப் புரிஞ்சுக்கப்படாது. கமலி இதை ஒரு ப்ரஸ்டிஜ் இஷ்யூவா எடுத்துக்காமே இருக்கணும் பாருங்கோ. அதுனாலே நீங்க இதுக்காகன்னே அவகிட்ட இருக்கிற டிராவலர்ஸ் செக்ஸை மாத்திப் பணம் எடுத்துக்கிறதுதான் முறை" என்று அதுவரை பேசாமல் இருந்த ரவி மெல்லக் குறுக்கிட்டு விளக்கினான்.
"அப்பிடியா? பொண்ணுக்கு அப்பாவைக் கல்யாணத்துக்குச் செலவழிக்கக்கூடாதுன்னு சொல்ற முதல் மாப்பிள்ளையை இப்போதாண்டா பார்க்கிறேன், ரவி" என்று சிரித்தபடியே அவனைப் பார்த்துக் கூறினார் வேணு மாமா.
சர்மாவோ ரவியோ அப்போது வேணு மாமாவை எதிர்த்து எதுவும் பேசவில்லை. உடனே புறப்பட்டு வரச் சொல்லி பம்பாயிலிருக்கும் தன் மகள் வசந்திக்கு ஓர் அவசரத் தந்தி கொடுத்துவிட்டு வரச் சொல்லி ரவியையே தபாலாபீசுக்குப் போகச் சொல்லி அப்போது அனுப்பினார் வேணு மாமா.
"கல்யாணத்துக்கு முன்னாடியே மாப்பிள்ளையை வேலை வாங்கறேனேன்னு நினைச்சுக்காதே அப்பா! எப்போ சாஸ்திரோக்தமான கல்யாணம்னு முடிவாயாச்சோ அப்புறம் பொண் பிறந்தாத்திலே தான் வந்து இருக்கணும். கமலி இங்கே வந்து தங்கிக்கணும்னா அவளுக்குத் துணை வேணும். அதனாலே வசந்தி உடனே வர வேண்டியதாயிருக்கு. அவ இருந்தாத்தான் இந்தக் கல்யாணம் சோபிக்கும். அதுவும் இந்தக் கல்யாணத்துலே அவளுக்குக் கொள்ளை ஆசை."
தந்தியைக் கொடுத்துவிட்டு வரப் புறப்பட்டான் ரவி.
"இன்னிக்கு என் மனசு சந்தோஷமா இருக்கறாப்பலே வேறே எந்த நாள்லேயும் இத்தனை சந்தோஷமா இருந்ததில்லே சர்மா! லக்கினப் பத்திரிகை எழுத ஒரு நல்ல நாள் நாழிகை பாருங்கோ."
"என் மனசிலே திருப்தியும் இருக்கு தயக்கமும் இருக்கு. இது தவிர்க்க முடியாதது. இதைச் செய்துதான் ஆகணும்கிற நிர்ப்பந்தமும் ஒரு புறம் இருக்க - ஊரார் வாயை மூடி அடைக்கவாவது இதைத் தாமசப்படுத்தறதை விடச் சீக்கிரமே பண்ணிடறது நல்லதுன்னுதான் நான் இந்த முடிவுக்கு வந்தேன். ஆனா இதிலேயும் பல சிரமங்கள் வரும்..."
"சிரமம் ஒண்ணும் வராது. நானாச்சு, இதை மங்களகரமா முடிச்சுவைக்க."
"நீர் மட்டும் இல்லை. உம்மைப் படைச்ச பிரும்மாவே வந்தாலும் என் ஆத்துக்காரி காமாட்சியை மனசு மாறும்படி பண்ண முடியாது. விஷயம் தெரிஞ்சதும் என்னை அவ பிடுங்கித் தின்னப்போறா."
"இதமா எடுத்துச் சொல்லிப் பார்த்துச் சமாதானப் படுத்த முடியாதோ சர்மா? உம்மை விடவா உம்ம ஆத்துக்காரி பெரிய வைதீகம்?"
"என்னைவிட வைதீகமோ இல்லியோ, முரண்டு அதிகம். அறிவு, காரண காரியத்துக்குச் செவி சாய்க்கும், முரண்டு எதுக்கும் செவி சாய்க்காது."
"ரவியையே விட்டுப் பேசிப் பார்க்கச் சொல்லு மேன்."
"யார் சொன்னாலும் அவ கேக்க மாட்டா, அது அவ பிறந்த ஊர் ராசி. தலைப்பை இழுத்து இழுத்துப் போர்த்திண்டு அடக்க ஒடுக்கமா அதிகப் படிப்பில்லாமத் தனக்குக் கட்டுப்படற மாதிரி ஒரு கிராமாந்தரத்து மாட்டுப் பொண்ணைக் கனவு கண்டுண்டிருக்கா அவ."
"கல்யாணம் பண்ணிக்கப் போறது அவளா உம்ம பிள்ளையான்னு கேக்கறதுதானே? அவன் வேலை பார்க்கற தேசம், அவனோட படிப்பு - சூழ்நிலை அதுக்கெல்லாம் பாந்தமா ஒரு பொண்ணைப் பார்க்கறதா? நம்ம கட்டுப் பெட்டித்தனம், மடிசஞ்சி மனப்பான்மை இதையெல்லாம் யார் கேக்கறா இப்போ? அதிர்ஷ்டவசமா அவனே அப்பிடி ஒரு நல்ல பொண்ணைத் தேடிண்டுட்டான். இதுக்கு ஏன் நாம குறுக்கே தடையா இருக்கணும்?"
"பணிவுக்கும் அடக்கத்துக்கும் கூட கமலிகிட்டக் குறையொண்ணும் இல்லே. இத்தனை அடக்கமாகவும் விநயமாகவும் இன்னிக்கி நம்ம தேசத்துப் பொண்டுகள் இருப்பாளான்னு எனக்கே சந்தேகம் தான்."
"நீர் இரண்டு நாள் கொஞ்சம் பொறுமையா இரும் சர்மா! எதுக்கும் வசந்தி வந்துடட்டும், அவளை விட்டு மாமிகிட்டப் பேசிப் பார்க்கச் சொல்லலாம். அநேகமா அவ பிளேன்லேதான் வருவா. இந்தக் கமலியோட கல்யாண விஷயத்திலே அவளாலே ஆவலை அடக்கிக்க முடியாது."
"தனக்கா மனசுலே பட்டாலொழியக் காமு இதுக்கு சம்மதிக்கமாட்டா. முரண்டுன்னா அப்படி ஒரு முரண்டு அவளுக்கு."
தந்தியைக் கொடுத்துவிட்டு ரவி தபாலாபீஸிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தான்.
--------------
அத்தியாயம் 23
வேணு மாமா ரவியைக் கேட்டார்.
"எக்ஸ்பிரஸ் டெலகிராமாக் குடுத்தியோ? ஆர்டினரியாக் குடுத்தியோ? இங்கே அவ சீக்கிரம் வந்தாகணும்."
"எக்ஸ்பிரஸ்தான் மாமா. எப்படியும் நாளைக் காலம்பரத்துக்குள்ளே வசந்திக்குக் கிடைச்சு அவ பம்பாயிலிருந்து இங்கே புறப்பட்டுடலாம்?"
சர்மா கையோடு பஞ்சாங்கம் கொண்டு வந்திருந்ததைப் பார்த்து முகூர்த்தக் கால் நடுவதற்கும் லக்கினப் பத்திரிகை வைப்பதற்கும் உடனே நாள் பார்த்துச் சொல்லும்படி அப்போதே அவரை வேண்டினார் வேணு மாமா. சர்மாவும் உடனே பொறுமையாகவும், நிதானமாகவும் பஞ்சாங்கத்தைப் புரட்டிப் பார்த்து விவரங்களைத் தெரிவித்தார்.
அன்று தமக்கு ஏற்பட்ட மகிழ்ச்சியில் ரவியையும் சர்மாவையும் வடை பாயசத்தோடு அங்கே தம் வீட்டிலேயே சாப்பிட்டு விட்டுத்தான் போக வேண்டுமென்று மன்றாடினார் வேணு மாமா.
"அதெல்லாம் இன்னிக்கி வேண்டாம். லக்கினப் பத்திரிகை எழுதற அன்னிக்கி வச்சிக்கலாம். உங்க வீட்டுச் சாப்பாடு எங்கே ஓடிப் போறது?" என்று சொல்லிக் கொண்டு வேணு மாமாவிடம் விடை பெற்றுத் தன் மகன் ரவியுடன் வீடு திரும்பினார் சர்மா.
திரும்பி வீட்டுக்கு நடக்கிற போது அவர்கள் ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. என்றாலும், "தங்கமான மனுஷன், உபகாரி. உபகார குணமும் மனோ தைரியமும் மனுஷா கிட்டச் சேர்ந்து அமையறது ரொம்பவும் அபூர்வம். சில பேர் இது மாதிரி நல்ல காரியத்துக்கு முன் வந்து உபகாரம் பண்ணணும்னு நினைப்பன். ஆனால் துணிஞ்சு முன் வந்து உபகாரம் பண்றதுக்கு வேண்டிய மனோ தைரியம் இராது" - என்று வேணு மாமாவைப் புகழ்ந்து சொல்லிக் கொண்டு வந்தார் சர்மா.
ரவி, அப்பா சொல்லியதை ஆமோதிப்பது போல் மௌனமாக இருந்தான். ஏற்பாடுகள் நிறைவெய்துகிறவரை இது பற்றிப் பிறரிடம் எதுவும் பேசுவதில்லை என்று இருவரும் பரஸ்பரம் தங்களுக்குள் எச்சரிக்கை உணர்வோடு கூறிக் கொண்டார்கள். காமாட்சியம்மாளிடம் இது பற்றிப் பேசுகிற பொறுப்பைக் கூட வேணு மாமா சொல்லியது போல் வசந்தியின் வசம் விட்டுவிடலாம் என்று தந்தை, மகன் இருவருமே கருதினார்கள். அன்றிரவு கமலியிடம் மட்டும் குறிப்பாக இந்த விஷயத்தைப் புலப்படுத்தினான் ரவி.
மறுநாள் காலை முதல் தபாலில் கிடைத்த ஒரு கடிதம் அவர்கள் ஏற்பாட்டில் சிறு மாறுதல் ஒன்றை உண்டாக்கியது. சர்மாவுக்கும் கமலிக்கும் வக்கீல் நோட்டீஸ்கள் அனுப்பியிருந்தவர்கள் அதன் நகல்களை ஸ்ரீ மடம் ஹெட் ஆபீஸ் மானேஜருக்கு அனுப்பியிருந்ததுடன், சர்மாவையும் ரவியையும் இல்லாததும் பொல்லாததுமாகக் குறை சொல்லி சில மொட்டைக் கடிதங்களும் கூடப் போட்டிருந்தார்கள் போலிருக்கிறது.
ஸ்ரீ மடம் மானேஜர் அவற்றைப் பொருட்படுத்தவில்லை, என்றாலும் ரவியையும், அவனோடு வந்திருக்கும் பிரெஞ்சுப் பெண்மணியையும் ஸ்ரீ மடத்துக்கு வரச் சொல்லி, பெரியவர்களைத் தரிசனம் செய்து விட்டுப் போகுமாறு யோசனை கூறியிருந்தார். எழுதியிருந்த பாணியிலிருந்து அந்தத் தரிசனமே இவர்களுக்கு ஒரு சோதனையாகவோ பரீட்சையாகவோ அமையும் போலிருந்தது. பெரியவர்களின் குறிப்பறிந்து அந்த மகா ஞானியின் சமிக்ஞையோ ஆக்ஞையோ பெற்றுத்தான் அந்தக் கடிதமே மானேஜரால் எழுதப்பட்டிருக்குமென்று சர்மாவால் சுலபமாக அனுமானிக்க முடிந்தது.
கடிதத்தை ரவியிடம் படிக்க கொடுத்து, "அவளைக் கூட்டிக் கொண்டு ஒரு நடை போய்விட்டு வா! பெரியவர்களின் ஆசீர்வாதமும் கிடைக்கும்" - என்றார் சர்மா. ரவி அதற்கு உடனே ஒப்புக் கொண்டான். ஆனால் சிறிது தயக்கத்தோடு தந்தையைக் கேட்டான்.
"இந்த ஊர்க்காரா ஒரு வண்டி குத்தம் சுமத்திக் கோள் சொல்லி எழுதின கடிதாசையும், வக்கீல் நோட்டிஸையும் பார்த்துட்டு மடத்திலேருந்து இதை எழுதியிருக்கா. என்ன நடக்குமோ? வரச் சொல்றது அவா. போகச் சொல்றது நீங்க. மகாஞானியும் பூர்ண திருஷ்டியும் உள்ள ஒருத்தரைத் தரிசிக்கப் போறதை எங்க பாக்கியம்னு நெனைச்சு நானும் கமலியும் போறோம். இதிலே வேற ஒண்ணும் சிரமமோ கஷ்டமோ வராதே?"
"ஒரு கொறையும் வராதுடா! போய் அவா அநுக்கிரகத்தையும் வாங்கிண்டு வந்து சேருங்கோ..."
யோசிக்கவோ, பிரயாணத்துக்குத் திட்டமிட்டுத் தயாராகவோ கூட அவர்களுக்கு நேரமில்லை. உடனே கிடைத்த பகல் நேர ரயிலைப் பிடித்து விரைந்தார்கள் அவர்கள். மறுநாள் அதிகாலை ஐந்து ஐந்தரை மணிக்குத்தான் அங்கே போய்ச் சேர முடிந்தது.
ஸ்ரீ மடத்தையும், பழம் பெருமை வாய்ந்த ஆலயங்களையும் தரிசிக்க வரும் பக்தர்களுக்காகவும், யாத்திரீகர்களுக்காகவும் அந்த ஊரில் தங்குவதற்கு சில நல்ல லாட்ஜுகளும் ஹோட்டல்களும் ஏற்பட்டிருந்தன. அவற்றில் ஒன்றில் தங்கி நீராடி உடைமாற்றிக் கொண்டு ரவியும் கமலியும் தயாரானார்கள். ஊருக்கு வெளியே இரண்டு மூன்று மைல் தொலைவில் ஒரு மாந்தோப்பில் ஆசார்ய சுவாமிகள் தங்கியிருப்பதாகவும் அப்போது சாதுர் மாஸ்ய விரதம் இருப்பதால் அவர் யாரோடும் பேசுவதில்லை என்றும் எல்லாம் சமிக்ஞைதான் என்றும் ஹோட்டல் மானேஜர் கூறினார். கூட்டம் சேருவதற்கு முன் சீக்கிரமே போய் விட்டால் சுலபமாக தரிசனம் ஆகும் என்று சொல்லி அவரே ரவியும் கமலியும் அந்த மாந்தோப்புக்குப் போவதற்கு ஒரு டாக்ஸியும் பேசி விட்டார்.
பழைய நாள் சுங்குடிப் புடவை போலத் தோன்றிய ஓர் எளிய கைத்தறிப் புடவை அணிந்து குங்குமத் திலகமிட்டு, நீராடிய ஈரம் புலராத கூந்தலை நுனிமுடிச்சிட்டுக் கொண்டு அதிகாலையின் புனித உணர்வுகள் நிறைந்த மனத்துடன் புறப்பட்டிருந்தாள் கமலி. நிறமும் கண்களும், கூந்தலும் வித்தியாசமாகத் தோன்றின என்பது தவிர மற்ற விதங்களில் அவள் ஓர் இந்தியப் பெண்ணாகவே காட்சியளித்தாள். சில நோட்டுப் புத்தகங்களும் டைரியும் அவள் கையில் இருந்தன.
அரையில் சரிகைக் கரையிட்ட பட்டாடையும், மேல் உத்தரியமும், பொன் நிற மார்பில் வெளேரென்று மின்னல் இழையாகத் துலங்கிய யக்ஞோபவீதமுமாகப் புறப்பட்டிருந்தான் ரவி. நடுவழியில் பழக்கடை, பூக்கடை இருந்த பகுதியில் நிறுத்தி ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, திராட்சைப் பழங்களும், ஒரு பச்சைத் துளசி மாலையும் வாங்கிக் கொண்டார்கள் அவர்கள்.
அதிகாலையில் கிழக்கு வெளுத்துக் கொண்டிருக்கும் போது அப்படி ஒரு தரிசனத்துக்காகப் போவது மனத்துக்கு ரம்மியமாக இருந்தது. ரவி கமலி இருவருடைய மனங்களும், சரீரங்களும் அப்போதுதான் பூத்த பூக்களைப் போல் சிலிர்ப்புடனும் நறுமணத்துடன் தண்ணென்றும் களங்கமற்றும் இருந்தன. மனங்களும் உடல்களும், உஷ்ணமின்றிக் குளிர்ந்திருந்தன.
அந்த அதிகாலையிலும் கூடப் பெரியவர்கள் தங்கியிருந்த மாந்தோப்புக்கு வெளியே நாலைந்து டூரிஸ்ட் கோச்கள், பத்துப் பன்னிரண்டு கார்கள், சில குதிரை வண்டிகள் நின்று கொண்டிருந்தன. அவர் தங்கியிருப்பதை ஒட்டி அந்த இடம் ஒரு க்ஷேத்திரமாகி இருந்தது. அந்தப் பெரிய மாந்தோப்பில் நடுவாக இருந்த ஒரு தாமரைப் பொய்கையின் கரையில் சிறு குடிசை போன்ற பர்ணசாலை ஒன்றில் அவர் தங்கியிருந்தார். கோயில் கர்ப்பக்கிருஹத்தில் இருப்பது போல் அந்த இடத்தைச் சுற்றித் துளசியும், கர்ப்பூரமும் சந்தனமும் - நெய்யும் கலந்த வாசனை நிலவியது. ஆணும் பெண்ணுமாக நிறைய பக்தர்கள் கையில் பழத் தட்டுக்களுடன் தரிசனத்துக்குக் காத்திருந்தனர். ரவி கமலியோடு ஸ்ரீ மடத்து நிர்வாகியைப் போய் பார்த்தான். அவர் பிரியமாக வரவேற்றுப் பேசினார். எங்கே தங்கியிருக்கிறார்கள், எப்போது வந்தார்கள் என்ற விவரங்களை எல்லாம் விசாரித்துக் கொண்டார். தங்கியிருக்கிற இடத்தில் எல்லாம் சௌகரியமாயிருக்கிறதா என்றும் கேட்டார். "நீங்கள் சமஸ்கிருதத்திலும், சாஸ்திரங்களிலும் இந்தியக் கலாசாரங்களிலும் நிரம்ப ஈடுபாடுள்ளவராயிருப்பதை அறிந்து பெரியவர்களுக்கு வெகு திருப்தி" என்று நடுவே கமலியைப் பார்த்துத் திடீரென்று ஒரு வாக்கியம் சொன்னார் அவர். தங்களைப் பற்றித் தாங்கள் அங்கே வருவதற்கு முன்பே நிறையப் பேச்சு நடந்திருப்பதை ரவியும் கமலியும் அதிலிருந்து புரிந்து கொள்ள முடிந்தது. பெரியவர்கள் சாதுர்மாஸ்ய விரதம் இருப்பதால் அவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டுப் புரிந்து கொள்வார்கள் என்பதையும் அவர்கள் எதுவும் பேச மாட்டார்கள் என்பதையும் கமலிக்கு விளக்கினார் அவர். மொட்டைக் கடிதாசுகள், வக்கீல் நோட்டீஸ்கள் பற்றி அவரும் எதுவும் பேசவில்லை. அவர்களும் பேசவில்லை.
அங்கே தரிசனத்துக்குக் காத்திருந்தவர்களோடு அவர்களும் போய் நின்று கொண்டார்கள். ஓர் ஐரோப்பிய யுவதி புடைவை குங்குமத் திலகத்தோடு தரிசனத்துக்கு வந்திருப்பது காத்திருந்த மற்றவர்களிடம் சிறிது வியப்பை உண்டாக்கியது. சிலர் ரவியிடம் வியந்து விசாரித்தார்கள். சிலர் கமலியிடமே ஆங்கிலத்தில் விசாரிக்க ஆரம்பித்து அவள் தமிழிலேயே பதில் சொல்லியது கண்டு ஆச்சரியப்பட்டார்கள். கமலியைச் சுற்றி இளம் பெண்கள், மாமிகளின் கூட்டம் கூடிவிட்டது.
பெரியவர்கள் பொய்கையில் நீராடிவிட்டுப் படித்துறையிலேயே ஈர ஆடையுடன் ஜபம் செய்து கொண்டிருப்பதாக அங்கிருந்தவர்கள் சொன்னார்கள். படித்துறையிலிருந்து அவர் குடிலுக்கு வந்ததும் தரிசனம் கிடைக்கலாம் என்று காத்திருந்தவர்களிடையே பேச்சு நிலவியது.
கிழக்கு நன்றாக வெளுத்து மாந்தோப்பில் பறவைகளின் குரல்கள் வீச்சுக் குறையத் தொடங்கியிருந்தன. ஸ்ரீ மடம் நிர்வாகி அப்போது அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்தை நோக்கி வந்தார்.
"நீங்க ரெண்டு பேரும் படித்துறைக்கே போயிடுங்கோ. பெரியவா உட்கார்ந்திருக்கிற படிக்கு ஒரு படியோ, ரெண்டு படியோ கீழே இறங்கிண்டா அங்கேயிருந்தே அவாளோட பேசச் சௌகரியமாயிருக்கும்."
அவர் கூறியபடி அவர்கள் இருவரும் படித்துறைக்கு விரைந்தனர். பொய்கையில் பூத்திருந்த பல செந்தாமரைப் பூக்களில் ஒன்று கரையேறிப் படிக்கட்டில் அமர்ந்திருப்பது போல் கிழக்கு நோக்கித் தேஜோ மயமாக அமர்ந்திருந்தார் அவர். கிழக்கே உதித்துக் கொண்டிருந்த இளஞ்சூரியனின் வரவு படித்துறையில் வீற்றிருந்த இந்த மூத்த ஞான சூரியனைக் காண வந்தது போலிருந்தது. அவர் பாதங்களின் அருகே பழத் தாம்பாளத்தை வைத்துவிட்டுக் கீழே சற்று அகலமாக இருந்த மற்றொரு படியின் அசௌகரியமான குறுகிய இடத்துக்குள்ளேயே சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார்கள் ரவியும், கமலியும்.
மலர்ந்த முகத்தோடு, ஆசி கூறுகிற பாவனையில் அவரது வலது கரம் உயர்ந்து தணிந்ததை அவர்கள் காண முடிந்தது. வெளிநாடுகளில் சுற்றிய பழக்கத்தாலும் அந்த மகானுக்குத் தான் யாரென்று நினைவிருக்குமோ, இராதோ என்ற தயக்கத்தாலும் தன்னைத் தானே அறிமுகப் படுத்திக் கொள்ளும் எண்ணத்துடன், "சங்கரமங்கலம் விசுவேசுவர சர்மாவின் ஜ்யேஷ்ட குமாரன்..." என்று தொடங்கிய அவனைப் புன்முறுவலுடன் "போதும், தெரிகிறது" - என்கிற பாவனையில் கையமர்த்திவிட்டு உட்காரும்படி இருவருக்குமே ஜாடை காட்டினார் அவர். கமலி நோட்டுப் புத்தகத்தில் ஒரு பக்கத்தைப் புரட்டி வைத்துக் கொண்டு அவர் முகத்தை நிமிர்ந்து பார்த்தாள். அவரோ அதே மலர்ந்த முகத்தோடு 'சரி தொடங்கு' - என்பது போலக் கையை அசைத்தார். தயக்கங்கள் இல்லாமல் தடைகள் இல்லாமல் சொல்லி வைத்தது போல் எல்லாம் நடந்தது.
"ஏதோ எனக்கு இருக்கும் குறைந்த ஞானத்தைக் கொண்டு கனகதாரா ஸ்தோத்திரம், ஸௌந்தர்யலஹரி இரண்டையும் பிரெஞ்சில் மொழிபெயர்த்திருக்கிறேன் பெரியவர்கள் கேட்டருள வேண்டும்!" - கமலி வேண்டினாள்.
புன்முறுவலோடு அவளை நோக்கி அவர் கையை அசைத்தார். ஒளி நிறைந்த அந்த விழிகளில் ஞானத்தின் நிறைவும் கனிவும் தெரிந்தன. முதலில் சமஸ்கிருத ஸ்லோகத்தையும் அப்புறம் பிரெஞ்சு மொழி பெயர்ப்பையும் அவள் படித்தாள். அவர்களுக்கிடையே ஒரு பவ்யமான சாட்சியைப் போல் அடக்க ஒடுக்கமாக அமர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான் ரவி.
அங்கே படித்துறைக்கு மேலே பக்தர்களின் கூட்டம் கூடி விட்டது. ஓர் ஐரோப்பியப் பெண்மணி ஸ்பஷ்டமான - குறையில்லாத உச்சரிப்போடு ஸௌந்தர்ய லஹரி ஸ்லோகத்தைச் சொல்லி, அதன் பிரெஞ்சு மொழி பெயர்ப்பையும் கூறுவதைக் கூட்டத்தினர் நிசப்தமாகக் கட்டுண்டு கேட்டுக் கொண்டிருந்தனர். கூட்டத்துக்கு அது ஒரு புதிய மெய் சிலிர்க்கச் செய்யும் அனுபவமாயிருந்தது.
சிற்சில இடங்களில் சைகையாலேயே 'மறுமுறையும் படி' - என்று தெரிவித்துக் கமலியைத் திரும்பக் கூறச் செய்து கேட்டார் அவர். எப்போது நிறுத்தச் சொல்லி ஜாடை காட்டுகிறாரோ அப்போது நிறுத்திவிடலாம் என்று படித்துக் கொண்டிருந்தவளை - அவர் நிறுத்தச் சொல்லாமலே சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டிருந்தார். நேரம் போவதை யாருமே உணரவில்லை. ஸௌந்தர்ய லஹரி, கனகதாரா ஸ்தோத்திரம் முடிந்து அவள் தாள்களை மூடியதும், "வேறு ஏதாவது மொழி பெயர்ப்பு வேலை நடக்கிறதா?"... என்று எண்ணி அதையும் சைகை மூலமே அவர் கேட்டபோது, கமலி அதைப் புரிந்து கொண்டு "பஜ கோவிந்தம் பண்ண முயன்று கொண்டிருக்கிறேன்" என்றாள். வாயருகே வலது கையை அடக்கமாகப் பொத்தி அவள் பதில் கூறிய பாணியின் இந்தியத் தன்மையை அனைவரும் வியந்து கொண்டிருக்கும் போதே, "பஜ கோவிந்தத்தைப் பிரெஞ்சு மொழியில் பண்ணத் தொடங்கியிருந்தால் அதிலிருந்தும் ஒன்று சொல்லேன்" - என்பது போல் சைகை செய்தார் அவர்.
"புனரபி ஜனனம், புனரபி மரணம்... புனரபி ஜனனி ஜடரே சயனம்..." - என்ற பகுதியைச் சொல்லிவிட்டு அதன் பிரெஞ்சு மொழி பெயர்ப்பைக் கூறினாள் கமலி.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவர் நினைத்தது - அந்த நினைப்பின் சைகையிலேயே அவளுக்குத் தவறாமல் புரிந்ததுதான். 'மகான்கள் பேசாமலே தங்களுடைய நினைப்பைப் பிறருடைய இதயத்தில் தெளிவாக்கி விடுவார்கள். வாயும் செவியும் பாமரர்களுக்குத் தான். அப்படிக் கேட்கவும் பேசவும் செய்யும் கருவிகள் இல்லாமலே கேட்பிக்கவும், பேசுவிக்கவும் செய்ய மகான்களால் முடியும்' என்பதை அவருடைய அந்த நிலைமை அவர்களுக்கு உணர்த்தியது.
நீண்ட நேரத்திற்குப் பின் அவருடைய பார்வை ரவியின் பக்கம் திரும்பியது. அவன் பவ்யமாகத் தன்னைப் பற்றிய விவரங்களையும், கமலியைப் பற்றிய சில தகவல்களையும் கூறினான். பிரான்சில் இந்திய மொழிகளைக் கற்கும் மாணவர்கள் பற்றிச் சொன்னான். அவர்களில் முதன்மையாகத் தேறிப் பக்குவம் பெற்றவள் கமலிதான் என்பதையும் கூறினான்.
பழத் தட்டிலிருந்து ஒரு மாதுளையையும், ஆப்பிளையும் துளசி மாலையையும் வலது கையால் தொட்டு ஆசீர்வாதம் செய்து அவர்களிடம் தனித்தனியே அளித்தார் அவர். அவனுக்கு ஆப்பிளும், அவள் கையில் மாதுளையும் வந்திருந்தன. இருவரையும் முகமலர்ந்து ஆசீர்வதித்தார் அவர். சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்த பின் புறப்பட இருந்த போது கமலி திடீரென்று ரவியே எதிர்பாராத விதமாக ஓர் ஆட்டோகிராப் நோட்டையும் பேனாவையும் எடுத்துப் பெரியவர்களிடம் நீட்டவே - அது சம்பிரதாயமில்லையே என்று ரவி தயங்கி நின்றான். பெரியவர்களோ முகமலர்ச்சியோடு புன்முறுவல் பூத்தபடி ஆட்டோகிராப் நோட்டின் அந்தப் பக்கத்தில் கொஞ்சம் அட்சதையையும் குங்குமத்தையும் தூவிக் கையை உயர்த்தி ஆசீர்வாதம் செய்தார். 'மறுபடி வாருங்கள்' என்று சைகையும் காண்பித்தார்.
படியேறி மேலே வந்ததும் ரவி கடிகாரத்தைப் பார்த்தான். காலை பத்தே முக்கால் மணி ஆகியிருந்தது. மாந்தோப்பில் வெயில் இன்னும் உறைக்கவில்லை. மடத்துப் பிரசாதங்கள், பிரசுரங்கள் அடங்கிய உறைகளோடு வந்த மானேஜர், "பெரியவா பேனாவைத் தொட்டு எழுதி ஆட்டோகிராப் போடறதுங்கறது எந்த நாளிலேயும் வழக்கமில்லை. ஆனாலும் இவா மேலே இருந்த பிரியத்தாலே அந்த ஆட்டோகிராப் தாளிலே அட்சதை குங்குமத்தை எடுத்துத் தூவினதே பெரிய அநுக்கிரகம்னு தான் சொல்லணும். இதுக்கு முன்னாடியும் இப்பிடி எத்தனையோ பேர் விவரம் தெரியாமல் ஆட்டோ கிராப்பை எடுத்து நீட்டியிருக்கா - ஆனால் அப்போ எல்லாம் பெரியவா மறுத்தாப் போலக் கையைத் தடுத்து நீட்டிப் போகச் சொல்லிடுவார். முதமுதலா இன்னிக்குத்தான் இப்படிச் சிரிச்சிண்டே சுமுகமா அட்சதை குங்குமத்தை எடுத்துத் தாளிலே இட்டதை நானே பார்க்கறேன். நீங்க ரொம்பக் குடுத்து வச்சிருக்கணும்" - என்றார்.
அவரிடம் நன்றி தெரிவித்து விடைபெற்றுக் கொண்டார்கள் அவர்கள். "ஸௌந்தர்ய லஹரி, கனகதாரா ஸ்தோத்திரம், பஜகோவிந்தம்லாம் பிரெஞ்சிலே அச்சானதும் மறந்துடாமே நீங்க மடத்து லைப்ரரிக்கு அனுப்பி வைக்கணும்" என்று கமலியிடம் கூறினார் அவர்.
ஹோட்டலுக்குத் திரும்பி ரவியும் கமலியும் சிற்றுண்டு காப்பி சாப்பிட்டுக் கொண்டிருந்த போது ஸ்ரீ மடத்து நிர்வாகி அனுப்பியதாகப் பித்தளை டவாலி அணிந்த மடத்து ஊழியன் ஒருவன் ஏதோ ஒரு கடிதத்தோடு அவர்களைத் தேடி வந்திருந்தான். கடிதம் உறையிட்டு ஒட்டி அவன் தந்தை பெயருக்கு எழுதப்பட்டிருந்தது.
ரவி ஊர் திரும்பியதும் தந்தையிடம் சேர்த்து விடுவதாகச் சொல்லி அதை வாங்கிக் கொண்டான்.
------------
அத்தியாயம் 24
ஊருக்குத் திரும்பும் போது கமலிக்கும், ரவிக்கும் மனம் நிறைவாக இருந்தது. 'சொல்லாமற் செய்வர் பெரியோர்' - என்பது போல் தர்ம சங்கடமான எதைப் பற்றியும் சொல்லாமல், கேட்காமல் அநுக்கிரகம் செய்து அனுப்பியிருந்தார் பெரியவர். அவரது அந்தப் பரந்த கருணையையும் பெருந்தன்மையையும் வியந்து கொண்டே சங்கரமங்கலம் திரும்பியிருந்தார்கள் அவர்கள். ரவியும், கமலியும் ஊர் திரும்பிய அதே நாளில் சில மணி நேரம் முன்னதாகவே வசந்தியும் அங்கே பம்பாயிலிருந்து வந்திருந்தாள். சென்னை வரை விமானத்தில் வந்து அப்புறம் இரயில் பயணம் செய்து சங்கரமங்கலத்தை அடைந்ததால் எதிர்பார்த்ததைவிட விரைவிலேயே அவள் வந்து சேர முடிந்திருந்தது. முதல் வேலையாக வசந்தி சர்மாவின் வீட்டுக்கு வந்து பெட்டி சூட்கேஸ்களுடன் கமலியைத் தங்கள் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போய் விட்டாள். நாலு நாள் கலியாணம் முடிந்து கிருஹப்பிரவேசத்துக்காகப் புகுந்த வீட்டுக்குள் நுழைவது வரை இனிமேல் கமலி வேணு மாமா வீட்டில்தான் இருப்பதென்று முடிவாகியிருந்தது. சர்மா, வேணு மாமா இருவருமே சேர்ந்து செய்த ஏற்பாடு தான் இது.
ஸ்ரீ மடத்திலிருந்து ஊருக்குத் திரும்பி வந்ததிலிருந்து ரவி தன் அம்மாவிடம் ஒரு மாறுதலைக் கவனித்து உணர முடிந்தது. அவள் அப்பாவிடமும், அவனிடமும் பேசுவதை அறவே நிறுத்தியிருந்தாள். அவர்களாக வலுவில் போய்ப் பேச முயன்றாலும், பதில் சொல்லாமல் கோபமாக முகத்தைத் திருப்பிக் கொண்டு போனாள்.
"நீ மடத்துக்குப் புறப்பட்டுப்போன மறுநாளிலேர்ந்தே எங்கிட்ட இப்படித்தான் முறைச்சிண்டிருக்கா. வேணு மாமாவும் நாமும் பேசிண்டிருந்ததெல்லாம் எப்படியோ இவ காது வரை எட்டியிருக்கும்னு தோண்றது" என்றார் சர்மா. அப்படித்தான் இருக்க வேண்டும் என்று ரவியும் நினைத்தான். அன்றைக்குச் சாயங்காலமே வசந்தியை அம்மாவிடம் பேசச் சொன்னால் அவள் கோபத்துக்குக் காரணம் என்னவென்று தெளிவாகப் புரிந்துவிடுமென்று சர்மாவும் ரவியும் எண்ணினார்கள். தற்செயலாகவே அன்று மாலை வேணு மாமாவின் பெண் வசந்தி ரவி கமலி கல்யாண விஷயமாகக் காமாட்சியம்மாளிடம் பேசிப் பார்ப்பதென்று ஏற்பாடாகியிருந்தது. ஸ்ரீ மடத்து மானேஜர் ரவி மூலம் சர்மாவுக்கு எழுதி அனுப்பியிருந்த கடிதத்தில் பெரியவர்கள் இவர்களிடம் எப்படி மிகவும் பிரியமாக நடந்து கொண்டார் என்ற விவரங்களை எல்லாம் விவரித்து விட்டு வேறு சில செய்திகளையும் குறிப்பிட்டிருந்தார். அந்தக் கடிதத்தை அப்படியே காமாட்சியம்மாளுக்குப் படித்துக் காட்டிவிடச் சொல்லலாமா என்று கூட எண்ணினார் சர்மா. தானோ ரவியோ இருவரில் யார் அந்தக் கடிதத்தைப் படித்துச் சொல்ல முயன்றாலும் பொய்யாக இட்டுக்கட்டி ஒரு கடிதத்தை வாசிப்பதாக அவளுக்குச் சந்தேகம் வரும் என்பதால் பார்வதியிடமும் குமாரிடமும் அதைக் கொடுத்தனுப்பினார். "தங்களை நம்பாததோடு அம்மா அதைப் படிக்கத் தொடங்குவதற்குக் கூட விடவில்லை" - என்று திரும்பி வந்து கடிதத்தைக் கொடுத்தார்கள் குமாரும் பார்வதியும். சர்மா தாமே நேரில் போய் மீண்டும் முயற்சி செய்யத் தயங்கினார். கடைசியாக அந்தக் கடிதத்தை வசந்தியிடம் கொடுத்துப் பார்க்க முடிவு செய்தார். ஏற்கனவே ரவியும் கமலியும் ஊரில் இல்லாத போது இந்த விஷயம் காதில் விழுந்ததுமே ஹிஸ்டீரியா வந்தது போல் அழுது கதறிக் கூப்பாடு போட்டு ஆர்ப்பாட்டம் பண்ணியிருந்தாள் காமாட்சி அம்மாள். சொல்லக் கூடாததை எல்லாம் சொல்லியிருந்தாள். கேட்கக் கூடாததை எல்லாம் கேட்டிருந்தாள். ரவியிடமும் கமலியிடமும் சொன்னால் அவர்கள் மனம் வீணில் புண்படுமே என்றுதான் அவற்றையெல்லாம் சர்மா அவர்களிடம் சொல்லாமல் மறைத்திருந்தார்.
காமாட்சியம்மாளுக்கு இரத்தக் கொதிப்பு உண்டு. வீட்டில் அவளைப் பொருட்படுத்தாமல், அவளுடைய அபிப்பிராயத்தை இலட்சியமே செய்யாமல் நடைபெற்றுக் கொண்டிருந்த இந்தக் கல்யாண ஏற்பாடுகள் அவள் உடல் நிலையையும், மன நிலையையும் பெரிய அளவில் பாதித்திருந்தன. குமாரிடம் சொல்லிக் கயிற்றுக் கட்டிலை எடுத்துக் கூடத்தில் போட்டு மெத்தென்று விரித்துத் தலைக்கு உயரமாக வைத்து அதில் படுத்துக் கொள்ளச் சொல்லியும் கேட்காமல் வேண்டுமென்றே ஈரத் தரையில் புடவைத் தலைப்பை விரித்துப் படுத்துக் கொண்டிருந்தாள் காமாட்சியம்மாள். சரியான அன்ன ஆகாரமின்றித் தளர்ந்தும் போயிருந்தாள். அன்றைக்குச் சாயங்காலம் வசந்தி காமாட்சியம்மாளிடம் பேச வரும் போதும், தானோ, ரவியோ வீட்டில் இருக்க வேண்டாம் என்று முடிவு செய்திருந்தார் சர்மா. காமாட்சியம்மாள் ஆத்திரப்பட்டுச் சீறினாலும், எரிந்து விழுந்தாலும் பொறுமையிழந்து விடாமல் அவளிடம் தொடர்ந்து பேசி எடுத்துச் சொல்லி விவாதிக்கும்படி வசந்தியிடம் கூறியிருந்தார் அவர். திட்டமிட்டிருந்தபடி மாலையில் சர்மா ஆற்றங்கரைக்குப் புறப்பட்டுப் போய்விட்டார். ரவி இறைமுடிமணியைப் பார்த்துப் பேசிக் கொண்டிருக்கலாம் என்று அவருடைய கடைக்குப் போனான். குமார் கல்லூரியில் அடுத்தவாரம் வரப்போகிற ஒரு பரீட்சைக்காகத் திண்ணையில் உட்கார்ந்து படித்துக் கொண்டிருந்தான். பார்வதி உள்ளே வீட்டுக்காரியங்களைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
எப்போது பம்பாயிலிருந்து வந்தாலும் மாமிக்கென்று சில சமயங்களில் அவளே பிரியப்பட்டுச் சொல்லியிருக்கிற பேரீச்சம்பழமும், உலர்ந்த திராட்சை, முந்திரிப் பருப்பு ஆகியவற்றையும் வாங்கிக் கொண்டு வந்து தருவது வசந்தியின் வழக்கம். அதிலும் பக்குவப்படுத்தப்பட்டு மெதுவாக்கப்படாமல் காய்ந்த ருத்ராட்சக் கொட்டைபோல் பேரீட்சை தான் வேண்டும் என்றாள் மாமி. அதுதான் பூஜைக்கு ஆகுமாம்.
அழகாகப் பாலிதீன் பைகளில் கட்டிய பேரீச்சை, உலர்ந்த திராட்சை, முந்திரிப்பருப்போடு, காமாட்சியம்மாளைச் சந்தித்தாள் வசந்தி.
"உங்க உடம்புக்கென்ன மாமீ! நாரா இளைச்சுப் போயிட்டேளே இப்படி?"
"வாடீயம்மா! நீ எப்போ ஊர்லேர்ந்து வந்தே!"
"காலம்பர வந்தேன் மாமி! மறக்காம உங்க பண்டம்லாம் வாங்கிண்டு வந்திருக்கேன்." -
"கலியாணத்துக்காகப் பொறப்பட்டு வந்திருக்கியாக்கும்?"-
குரலிலிருந்து மாமி சுபாவமாக அதைக் கேட்கிறாளா எகத்தாளமாகக் கேட்கிறாளா என்பதை வசந்தியால கண்டுபிடிக்க முடியாமலிருந்தது.
"நான் ஊருக்கு வரத்துக்குத் தனியா காரணம்னு ஒண்ணு வேணுமா மாமி? அடிக்கடி ஊருக்கும் பம்பாய்க்குமா வந்துண்டும் போயிண்டும் தானே இருக்கேன்..."
இருவருக்கும் இடையே சிறிது நேரம் எதைப் பேசுவது எப்படி மேற்கொண்டு முறியாமல் சுமுகமாக உரையாடலை வளர்ப்பது என்று தெரியாமல் மௌனம் நிலவியது.
சிறிது நேரத்திற்குப் பின் சம்பந்தமில்லாத ஏதோ ஒரு குழந்தைக்குப் பழைய கதையைச் சொல்லுவது போல் காமாட்சியம்மாளே ஆரம்பித்தாள்:- "புருஷா அக்னி சந்தானம்னு - ஔபாசனம் பண்ணி - நெருப்பு அணையாமக் காத்துண்டு வர மாதிரி இந்தக் குடும்பத்திலே பொண்டுகளும் தலைமுறை தலைமுறையா ஒரே வித்திலிருந்து வளர்ற துளசியை வளர்த்துப் பூஜை பண்ணிண்டு வரோம். இந்தக் குடும்பத்தோட சௌபாக்கியங்களும், லட்சுமி கடாட்சமும், விருத்தியும் நாங்க பரம்பரையாகச் சரீர சுத்தத்தோடயும் அந்தரங்கச் சுத்தத்தோடயும் பண்ணிண்டு வர துளசி பூஜையாலேதான்னு எங்களுக்கு நம்பிக்கை. நாங்க நல்ல நாள் தவறாமே, விரத நியமம் தப்பாமே துளசி மாடத்திலே ஏத்தற விளக்குத்தான் இதுவரை இந்தக் குடும்பத்தைப் பிரகாசப்படுத்திக் காப்பாத்திண்டு வரது. எத்தனையோ தலைமுறைக்கு முன்னே ராணிமங்கம்மா காலத்திலே விரத நியமம் தப்பாத ஒரு பிராமண சுமங்கலிக்கு தானம் பண்ணனும்னு தை வெள்ளிக்கிழமையும் அதுவுமா சொக்கத் தங்கத்திலே பண்ணின சொர்ண விளக்கு ஒண்ணை வச்சுண்டு கிராமம் கிராமமாகத் தேடினாளாம். கடைசியா அந்தச் சொர்ண தீபத்தை இந்தக் குடும்பத்து மாட்டுப் பொண் ஒருத்திதான் தானம் வாங்கிண்டாளாம். அன்னிலேர்ந்து இந்தக் குடும்பத்து மாட்டுப் பெண்கள் ஒவ்வொருத்தரா அந்த சொர்ண தீபத்தையும் துளசி பூஜை பண்ற உரிமையையும் முந்தின தலைமுறை பெரியவா கிட்டேருந்து பரம்பரை பரம்பரையா அடைஞ்சிண்டு வரோம். இன்னிக்கும் தை வெள்ளிக்கிழமை தவறாம அந்தத் தங்க விளக்கைத் துளசி மாடத்திலே நான் ஏத்தி வைக்கிறேன்." -
இப்படிச் சொல்லியபடியே தன் தலைமாட்டிலிருந்த ஒரு பழைய காலத்து ஒழுகறைப் பெட்டியைத் திறந்து அதிலிருந்து ஒரு பட்டுத் துணியில் சுற்றி வைத்திருந்த அந்தத் தங்க விளக்கை எடுத்து வசந்தியிடம் காட்டினாள் காமாட்சியம்மாள்.
"நான் இந்தாத்து மூத்த மாட்டுப் பெண்ணா வந்ததும் எங்க மாமியார் இதை எங்கிட்டக் குடுத்தா..." என்று கூறி ஒரு பெருமூச்சுடன் அந்தப் பேச்சை அப்படியே நிறுத்திவிட்டு வசந்தியின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள் காமாட்சியம்மாள்.
"ஒண்ணும் கவலைப்படாதீங்கோ மாமி! உங்க மாமியார் உங்ககிட்டக் குடுத்ததைப் போலவே நீங்களும் உங்க மூத்த மாட்டுப் பொண்ணிட்ட இதைக் குடுக்கலாம். அதுக்கு ஒரு கொறையும் வராது..."
"குமாருக்குக் கல்யாணமாயி ரெண்டாவது மாட்டுப் பொண்ணாவது இந்தக் குடும்பத்துக்கு ஏத்தவளா வந்தா அவகிட்டக் குடுக்கலாம்?"
"ஏன் மாமி! உங்க மூத்த மாட்டுப் பொண்ணுக்கு என்ன கொறை வந்தது?"
"போறும்டீ! அவளைப் பத்தியோ ரவியைப் பத்தியோ எங்கிட்டப் பேச்சே எடுக்காதே, என் வயிறு பத்திண்டு எரியறது. நம்ம ஆசாரம் அநுஷ்டானம் எதுவுமே புரியாத யாரோ ஒருத்தியை எந்த தேசத்திலிருந்தோ இழுத்துண்டு வந்துட்டு அவளைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு அவன் ஒத்தைக் கால்லே நிற்கிறதும், அதுக்கு எல்லாம் தெரிஞ்ச இந்தப் பிராமணனும் தலையாட்டறதும் எனக்குக் கொஞ்சம் கூடப் பிடிக்கலை. எல்லாம் சீரழிஞ்சு குட்டிச் சுவராத்தான் போகப் போறது. அவன் பாட்டுக்கு அவளைக் கட்டிண்டு அடுத்த மாசமே பிளேன்ல ஏறிப் பிரான்சுக்குப் போகப் போறான். மாட்டுப் பொண் வரான்னா வீட்டிலே விளக்கேத்தி வைக்க லட்சுமி வரான்னு எங்க நாள்லெ சொல்லுவா...? எங்கேருந்தோ வந்துட்டு அங்கேயே திரும்பிப் புருஷனையும் இழுத்துண்டு போகப் போற யாரோ ஒருத்தி எப்பிடி இந்தாத்து லட்சுமியாக முடியும்டீ?"
"மாமீ! நீங்க எதை வேணாச் சொல்லுங்கோ, ஆனா நம்ம ஆசார அனுஷ்டானம் தெரியாதவள்னு மட்டும் கமலியைப் பத்திச் சொல்லாதீங்கோ. நம்ம குடும்பங்களிலே இப்போ வளர்ற இளம் பொண்களைவிடக் கமலி எத்தனையோ சிரேஷ்டமானவள். அவள் தெரிஞ்சிண்டிருக்கிற அத்தனை ஆசார அநுஷ்டானம் இப்போ நம்மளவாளுக்குக் கூடத் தெரியுமாங்கறதே எனக்குச் சந்தேகம் மாமி! அப்பிடியில்லேன்னாப் பெரியவாளே ஸ்ரீ மடத்துக்கு அவளை வரச் சொல்லி அநுக்ரகம் பண்ணுவாளா? அவ பிரெஞ்சிலே மொழி பெயர்த்திருக்கிற ஸௌந்தரிய லஹரியையும், கனகதாரா ஸ்தோத்திரத்தையும், பஜ கோவிந்தத்தையும் கேட்டுட்டுப் பெரியவாளே ஆசீர்வாதம் பண்ணியிருக்கான்னா அது எத்தனை பெரிய விஷயம்? அதைப் பத்தி ஆச்சரியப்பட்டு ஸ்ரீ மடத்து மானேஜரே உங்காத்து மாமாவுக்குப் பெரிசா ஒரு லெட்டர் போட்டிருக்கார்... படிக்கிறேன்... கேக்கறேளா?"
"வேண்டாம்டீ! ஸ்ரீ மடத்து மானேஜருக்கு முந்தின மடம் ஏஜண்டாக இங்கே இருந்த சீமாவையர் மேலே ஏகக் கோபம். சீமாவையர் சங்கரமங்கலம் சம்பந்தப்பட்ட மடத்து ஆஸ்திகளை எல்லாம் ஊழல் மயமாப் பண்ணிப்பிட்டார்னு அவருக்குப் பதிலா இந்தப் பிராமணரைக் கூப்பிட்டு நியமிச்சதே அந்த மானேஜர் தான். அவர் இந்தப் பிராமணருக்கு நெருங்கின சினேகிதம். அவராலே இவரை விட்டுக்குடுத்து எழுத முடியாது. என்னைச் சரிப்படுத்தறதுக்காக இந்தப் பிராமணரே அவரை விட்டு இப்பிடி இங்கே ஒரு கடிதாசு எழுதச் சொல்லியிருந்தாலும் ஆச்சரியப்படறத்துக்கில்லேடீ!"
மாமியின் பிடிவாதத்தை எப்படிச் சமாளிப்பதென்று வசந்திக்குப் புரியவில்லை. பிள்ளை அந்தப் பிரெஞ்சுக்காரியை மணந்து கொள்வதன் மூலம் நிரந்தரமாக அவள் அவனைப் பிரான்ஸுக்கே இழுத்துக் கொண்டு போய் விடுவாள் என்ற மனக்குறை மாமியின் சொற்களில் தொனிப்பதைக் கவனித்தாள் வசந்தி. கமலியின் நற்பண்புகளையும் தன்னடக்கத்தையும், கோடீசுவரர்களாகிய தன் பெற்றோரிடமிருந்து அவள் ரவியை நம்பி அவனோடு புறப்பட்டு வந்திருக்கும் இணையற்ற எளிமையையும் ஒவ்வொன்றாக மாமியிடம் விவரித்தாள் வசந்தி. நல்ல வேளையாக அதைக் கேட்கவே அப்படியே நிறுத்தி மறுக்காமல் மாமி அப்போது எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டாள்.
"நேக்குத் தெரியும்டீ! நீ, ஒங்கப்பா, எல்லாருமே இந்தக் கலியாணத்துலே உள்கைகள். எல்லாருமாச் சேர்ந்து நேக்கு எதிராச் சதி பண்ணிண்டிருக்கேள்னு நன்னாத் தெரியும். இந்த விஷயத்திலே நீ இப்படித்தான் பேசுவேன்னும் நேக்கு முன்னாலேயே தெரியும்."
"தப்பா நான் ஒண்ணும் சொல்லலே மாமி! உள்ளதைத்தான் சொல்றேன். கமலி ரொம்பத் தங்கமான பொண்ணு."
"இருக்கட்டுமேடீ. யார் வேண்டாம்னது? தங்க ஊசீன்னா அதுக்காக அதை நாம எடுத்துக் கண்ணைக் குத்திக்கணுமா என்ன?"
"உங்க மேலே அவளுக்குத் தேவதா விசுவாசம் மாமி. 'புராதனமான இந்தியப் பெண்மையின் கலாசாரச் சின்னம்'னு உங்களைப் பற்றி அவ எங்கிட்டச் சொல்றது வழக்கம் மாமி..."
"அதாவது சுத்தக் கர்நாடகம், மடிசஞ்சீன்னு என்னைக் கேலி பண்றாளா?"
"சிவ, சிவ! அப்படியில்லே மாமி! வேடிக்கைக்காகக் கூட அந்த மாதிரி அவளைப் பத்திச் சொல்லாதீங்கோ. உங்களை அவ தேவதையா மதிக்கிறா."
"...நேக்கு அவளைக் கட்டோடப் பிடிக்கலைடீ."
"நீங்க அப்படிப் பாராமுகமா இருக்கக்கூடாது. மகாலட்சுமி மாதிரி சுமங்கலியா வந்திருந்து மாமாவோட மணையிலே கூட நின்னு கல்யாணத்தை நடத்தித் தரணும். நாங்க பொண்ணாத்துக்காராளா ஏத்துண்டிருக்கோம். நீங்க கட்டாயம் வந்து நடத்தித் தரணும்..."
"இந்தத் தட்டுக் கெட்டுப்போன கல்யாணத்துக்குச் சாஸ்திரம், பொண்ணாத்துக்காரா, புள்ளையாத்துக்காராள்னு இதெல்லாம் வேற கேக்கறதாக்கும்?"
"மாமி! நீங்க ரொம்பப் பெரியவா... மங்களமான காரியத்தைப் பத்தி உங்க வாயாலே இப்படி வார்த்தை சொல்லப்படாது. உங்களைக் கொறை சொல்ல எனக்கு அத்தனை வயசாகலை!"
"புள்ளைக்கு அம்மாவைக் கலந்துக்காமே - அவ சம்மதமே இல்லாமே நடக்கப்போற கல்யாணத்துக்கு - இப்படி வந்து அவளைக் கூப்பிடறது மட்டும் என்ன நியாயம்?"
"நீங்க வந்து கூட இருந்து ஆசீர்வாதம் பண்ணாமே இந்தக் கல்யாணம் நிறையாது."
"நான் ஏன் வரேன்? நேக்கு மான ரோஷம் இல்லையா என்ன? இந்தப் பிராமணர் என்கிட்ட ஒரு வார்த்தை கூடக் காதிலே போடாம இத்தனை தூரம் ஏற்பாடு பண்ணியிருக்கார். லக்கினப் பத்திரிகை முகூர்த்தக் கால் எல்லாம் கூட ஏற்பாடு பண்ணியாச்சாம். யாரிட்ட வந்து நீ காது குத்தறே? நான் இந்தக் கலியாணத்துப் பக்கமே தலைவச்சுப் படுக்கப் போறதில்லே. யாரோ ஒருத்தியை எவனோ ஒருத்தன் எங்கேயோ கல்யாணம் பண்ணிண்டா எனக்கென்ன வந்தது?"
மாமியின் கோபத்தை மறுபக்கமாகப் புரட்டிப் பார்த்தால் ரவியின் மேல் அவளுக்கு இருந்த பிள்ளைப் பாசம் புரிந்தது. மிகவும் பிரியமான விஷயத்தைப் பற்றி வெறுப்போடு பேசிக் கொண்டிருந்தாள் மாமி. அந்த வெறுப்பிலும், கோபத்திலுமே பிரியத்தின் அளவு தெரியக்கூடிய தொனி மறைந்திருந்தது. வசந்தி சுற்றி வளைத்து விதம் விதமாக முயற்சி செய்து மாமியின் மனத்தை இளக்க முயன்றாள். ஒன்றும் சரிப்பட்டு வரவில்லை. சுற்றுப்புறத்து கிராமங்களில் உள்ள ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணி வைத்தால் தான் பிள்ளைக்கு ஊரோடு தேசத்தோடு, தாய் தந்தையோடு சம்பந்தமும் தொடர்பும் இருக்க முடியும். கமலி போன்ற ஒரு பிரெஞ்சுப் பெண்ணை மணந்து கொண்டு பிரான்ஸுக்கே போவதால் ரவி நிரந்தரமாகத் தங்களை விட்டே நழுவிப் போய்விடுவானோ என்று இனம் புரியாத அச்சம் ஒன்று மாமியின் உள் மனத்தில் இருப்பது புரிந்தது. அதைத்தான் வசந்தியால் அப்போது புரிந்து கொள்ள முடிந்தது. கடைசி முயற்சியாக மாமியிடம்,
"கல்யாணம் பழைய முறைப்படி நாலு நாள் நடக்கப் போறது. நலுங்கு, ஊஞ்சல், பாலிகை வளர்க்கறது எல்லாம் நாலு நாளும் உண்டு" என்றாள் வசந்தி.
"எத்தனையோ விஷயத்திலே சாஸ்திரம் சம்பிரதாயம் எல்லாத்தையும் நீங்க மீறியாச்சு! இது ஒண்ணுலே மட்டும் எதுக்குச் சாஸ்திரம்? பேசாம அவா நாட்டு முறைப்படி ரிஜிஸ்டிரார் ஆபீஸிலே போய்ப் பதிவு பண்ணிக்க வேண்டியதுதானே? இல்லேனாச் சர்ச்சிலே போயி மோதிரம் மாத்திக்கலாமே?" என்று கசப்பாக எரிச்சலோடு பதில் சொன்னாள் மாமி.
-------------
அத்தியாயம் 25
தன் மூத்த பிள்ளையை அழகும் பண்பும் இளமையும் உள்ள அந்நிய நாட்டுப் பெண் ஒருத்தி தன்னிடமிருந்து பிரித்துக் கொண்டு போய்விடப் போகிறாள் என்ற எண்ணமும் அந்த எண்ணத்தின் அடிப்படையில் அவள் மேல் கொண்ட வெறுப்புமாக இருந்தாள் காமாட்சியம்மாள். வசந்தி எவ்வளவோ முயன்று பார்த்தும் காமாட்சியம்மாளிடமிருந்து சாதகமான மறுமொழியையோ சுமுகமான வார்த்தைகளையோ பதிலாகப் பெற முடியவில்லை. ஒரே முரண்டாக இருந்தாள் காமாட்சியம்மாள். உடல்நிலை சரியாயிருக்கிற காலங்களில் சூரியோதயத்திற்கு முன்பே ஆற்றங்கரைக்குப் போய்விட்டுத் திரும்புவதைத் தவிர வெளியில் எங்கும் நடமாடாத காமாட்சியம்மாளுக்கு எல்லா விவரமும் முன்கூட்டியே எப்படித் தெரிகிறதென்பது பெரிய புதிராயிருந்தது. பார்வதியை விசாரித்ததில் அந்தப் புதிர் விடுபட்டது. பக்கத்து வீட்டு முத்துமீனாட்சிப் பாட்டி திரிலோக சஞ்சாரி போல் அக்கிரகாரத்தின் மூன்று தெருக்களிலும் எங்கே யார் வீட்டில் என்ன நடக்கிறதென்று ஊர் வம்புகளைத் தெரிந்து கொண்டு வந்து அம்மாவுக்குச் சகலத்தையும் அவ்வப்போது காதில் போட்டுக் கொண்டிருப்பதாகப் பார்வதி வசந்தியிடம் தெரிவித்தாள்.
"புருஷா ஆயிரம் தப்புப் பண்ணலாம். பொம்மனாட்டி மட்டும் முரண்டு பண்ணி மூஞ்சியைத் தூக்கிண்டு நின்னாள்னா அப்புறம் தனியா அவா எதைச் சாதிச்சுட முடியும்?" - என்பதுதான் பக்கத்து வீட்டுப் பாட்டி அடிக்கடி காமாட்சியம்மாளிடம் சொல்லும் வாக்கியம் என்பதைக் கூடப் பார்வதியே தெரிவித்தாள்.
முரண்டும், அறியாமையும், அசூயையும், கொண்டது விடாக் குணமுள்ள சில பாட்டிகள் தான் கிராமங்களின் அரசியல்வாதிகளாக இருப்பார்களோ என்று எண்ணினாள் வசந்தி. நிச்சயமான கல்யாணங்களைக் கலைப்பது, நெருங்கிப் பழகுகிறவர்களிடையே மனஸ்தாபங்களை உண்டாக்குவது, மறைமுகமாகப் பழி தீர்த்துக் கொள்வது, வதந்திகளைப் பரப்புவது, புறம் பேசுவது, கோள் மூட்டுவது இவையெல்லாம் ஒவ்வோர் கிராமத்திலும் சில பாட்டிகளின் செயல்களாக இருந்தன. இந்த மாதிரிக் கெட்ட குணமுள்ள பாட்டிகளின் செயல்களை எதிர்த்து எதுவும் செய்ய முடியாமல் நல்ல சுபாவமுள்ள சில பாட்டிகள் கூட ஒதுங்கி இருந்து விடுவது வழக்கமாயிருந்தது. காமாட்சியம்மாளிடம் தான் பேசிப் பார்த்ததைப் பற்றி சர்மாவிடமும், தன் தந்தையிடமும் விவரங்களைத் தெரிவித்து விட்டாள் வசந்தி. தான் காமாட்சியம்மாளிடம் பேசியதைப் பற்றிக் கமலியிடமோ, ரவியிடமோ, வசந்தி எதையும் விவரிக்கவில்லை. வீணாக அவர்களைக் கலவரப்படுத்த வேண்டாமென்று தான் அதை விட்டிருந்தாள்.
வேணுமாமாவைப் பொறுத்தவரை வசந்தி காமாட்சியம்மாளைப் பார்த்து விட்டு வந்து கூறிய எதுவும் அவரது உற்சாகத்தைப் பாதிக்கவில்லை. கலியாண ஏற்பாடுகளைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தார் அவர். அந்த வட்டாரத்திலேயே செல்வாக்குள்ள நாதஸ்வர வித்துவான் ஒருவரிடம் முன்பணம் கொடுத்து இரட்டை நாதஸ்வரத்துக்கு ஏற்பாடாகியிருந்தது. மற்ற ஏற்பாடுகளும் தடபுடலாக நடந்து கொண்டிருந்தன. கலியாணம் நெருங்கி வந்து கொண்டிருந்தது.
இவற்றால் சீமாவையரின் ஆத்திரமும் வயிற்றெரிச்சலும் அதிகமாயிருந்தன. எரிகிற நெருப்பில் எண்ணெயை வார்க்கிறாற்போல் நடுவில் இன்னொரு சம்பவமும் நடந்துவிட்டது; சீமாவையர் அதில் வகையாக மாட்டிக் கொண்டு அகப்பட்டிருந்தார்.
சங்கரமங்கலம் புனித அந்தோணியார் ஆரம்பப்பள்ளியின் ஆசிரியை மலர்கொடி பள்ளிக்கூடம் முடிந்து சீமாவையரின் மாந்தோப்பு வழியாக வீடு திரும்பும் போது முன்பு பல முறை அவளை வழி மறித்து வம்பு பண்ணியது போல் வம்பு பண்ணிக் கையைப் பிடித்து இழுத்திருக்கிறார் அவர். தோப்பில் அவருக்குத் துணையாக அவர் அடியாட்கள் இரண்டு பேரும் இருக்கவே சீமாவையருக்குத் துணிச்சல் அதிகமாகிவிட்டது. அகமத் அலி பாயின் கடத்தல் சரக்குகளோடு சேர்ந்து இங்கே வந்து, அவருக்குப் பிரியமாகக் கொண்டு வந்து தரப்பட்டிருந்த 'சீமைச் சரக்கு' வேறு உள்ளே போயிருந்தது. சீமாவையரின் தோப்பில் இறைவைக் கிணற்றை ஒட்டிப் பம்ப் செட் மோட்டாருக்காக ஒரு சிறிய சிமெண்டுக் கட்டிடம் உண்டு. அவர் குடிப்பதற்காகவும் மற்ற லீலாவிநோதங்களுக்காகவும் இந்தக் கட்டிடம் பயன்பட்டு வந்தது. அவர் வீடு அக்கிரகாரத்துக்குள் நடுவாக இருந்ததனால் அங்கே ஒரு நாளும் இந்த விவகாரங்களை அவர் வைத்துக் கொள்வதில்லை. தோப்பு ஊரிலிருந்து ஒதுங்கி இருந்ததனால் இதற்கெல்லாம் வசதியாயிருந்தது. நீண்ட நாள் நழுவி நழுவிப் போய்க் கொண்டிருந்த மலர்க்கொடியை அன்று எப்படியும் வசப்படுத்தியே தீருவது என்று சீமாவையர் கையைப் பிடித்து இழுத்தவுடன் அவள் கூப்பாடு போட்டிருக்கிறாள். பின்னாலேயே அவளைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்த இறைமுடிமணியின் இயக்கத்து ஆட்கள் ஓடிவந்து சீமாவையரைக் கையும் களவுமாகப் பிடித்துத் தோப்பிலிருந்த தென்னை மரத்தில் கட்டிப் போட்டுவிட்டார்கள். இறைமுடிமணிக்குத் தகவல் அனுப்பி அவர் போலீஸுக்குச் சொல்லியனுப்பிவிட்டு வந்தார். சீமாவையரின் அடியாட்கள் எண்ணிக்கையில் அதிகமாயிருந்த பகுத்தறிவுப் படிப்பக இளைஞர்களை எதிர்க்க முடியாமல் உடனே போய் அகமத் அலி பாய்க்குத் தகவல் தெரிவித்தார்கள். பணம் விளையாடியது. போலீஸ், எதிர்பார்த்தபடி உடனே தோப்புக்கு வரவில்லை. ஆனால் சீமாவையரைத் தப்பச் செய்வதற்காக அகமத் அலிபாய் ஒரு கூலிப் பட்டாளத்தை அனுப்பியிருந்தார். இருட்டியதும் தோப்பில் புகுந்த அந்தக் கூலிப் பட்டாளம் முதல் வேலையாகச் சீமாவையரைத் தென்னை மரத்திலிருந்து அவிழ்த்துவிட்டுத் தப்பச் செய்து விட்டது. அப்புறம் நடந்த கலகத்தில் பகுத்தறிவுப் படிப்பக ஆட்களில் சிலருக்கும், அவர்களைத் தேடி அங்கு வந்திருந்த இறைமுடிமணிக்கும் அரிவாள் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டன. போலீஸ் வருவதற்குள் கூலிப் பட்டாளம் தப்பி ஓடிவிட்டது. அங்கே வந்து சேரப் போலீஸார் வேண்டுமென்றே அதிக நேரமாக்கினாற் போலப் பட்டது.
அவசர அவசரமாகத் தப்பி ஓடிய சீமாவையர் தான் எந்த நேரத்தில் மாந்தோப்பில் அந்தப் பெண்ணைக் கையைப் பிடித்து இழுத்ததாக அவர்கள் போலீசில் புகார் செய்திருந்தார்களோ அதே நேரத்தில் சிவன் கோவிலில் குடும்பத்தோடு சென்று அர்ச்சனை செய்து தரிசனம் பண்ணிக் கொண்டிருந்ததாகச் சாட்சிகளும், ஓர் அலிபியும் ஜோடனை செய்தார்.
போலீஸார் சீமாவையரின் தோப்பில் அத்துமீறிப் புகுந்து கலகம் விளைவிக்க முயன்றதாகப் பகுத்தறிவுப் படிப்பக ஆட்கள் மீதும் இறைமுடிமணி மீதும் வழக்குப் பதிவு செய்திருந்தார்கள்.
இறைமுடிமணிக்கு இடது தோள்பட்டையில் சரியான அரிவாள் வெட்டு. சங்கரமங்கலம் லோகல் பண்டு ஆஸ்பத்திரியில் கொண்டு போய் அவரைச் சேர்த்திருந்தார்கள். ஆஸ்பத்திரியில் சேர்க்க அதிக நேரமாகி விட்டதால் நிறைய இரத்தம் வீணாகி இருந்தது. தகவல் தெரிந்து சர்மா, ரவி, கமலி எல்லோரும் பதறிப் போய் ஆஸ்பத்திரிக்கு விரைந்திருந்தார்கள். ஏற்கனவே இறைமுடிமணியின் மருமகன் குருசாமியும், மனைவி மக்களும், குடும்ப நண்பர்களும், இயக்க நண்பர்களுமாக ஆஸ்பத்திரியில் கவலையோடு குழுமியிருந்தனர். இறைமுடிமணிக்கு நிறைய இரத்த இழப்பு ஏற்பட்டதனால் புது இரத்தம் செலுத்த வேண்டி இருந்தது. அவரது இயக்கத் தோழர்கள் போட்டி போட்டுக் கொண்டு இரத்தம் கொடுக்க முன் வந்தனர். ஆனால் சோதனை செய்து பார்த்ததில் ஒருவரது இரத்தமும் அவரது குரூப் இரத்தமாக இல்லை.
டாக்டர் சர்மாவைப் பார்த்தார். அவரைக் கேட்கலாமா வேண்டாமா என்று தயங்கினார்.
"என் இரத்தம் சேர்றதான்னு பாருங்கோ. ஒண்ணும் எனக்கு ஆட்சேபணை இல்லை" - என்று மகிழ்ச்சியோடு டாக்டரைப் பின் தொடர்ந்தார் சர்மா.
என்ன ஆச்சரியம்! சர்மாவின் இரத்தம் கச்சிதமாகச் சேர்ந்தது. சர்மா இறைமுடிமணிக்காக இரத்தம் கொடுத்தார். மறுநாள் காலை இறைமுடிமணி நல்ல பிரக்ஞையோடு பேச முடிந்த நிலையில் இருந்தபோது தன்னைப் பார்ப்பதற்காக ஹார்லிக்ஸ், பழம் எல்லாம் வாங்கிக் கொண்டு வந்திருந்த சர்மாவிடம், "எங்கள் ஆளுங்கள்ளாம் நான் பொழைச்சு எந்திரிச்சப்புறம் ஒரு வேளை ஆஸ்திகனா மாறிடுவேனோன்னு கூடப் பயப்படறாங்கப்பா! நீயில்ல எனக்கு இரத்தம் குடுத்தியாம்?" - என்று வேடிக்கையாகச் சிரித்துக் கொண்டே சர்மாவைக் கேட்டார். அப்போது அருகே இருந்த படிப்பக ஆள் ஒருவர், "ஒரு ஐயரு ரத்தவெறி பிடிச்சுப் போய் அதைச் சிந்த வைச்சாரு. இன்னொருத்தரு அதைக் குடுத்துச் சரிப்படுத்தினாரு" - என்று சொன்னார். இறைமுடிமணி அந்த ஆளை உறுத்துப் பார்த்தார். "இந்தா நீ கொஞ்சம் வெளியில இரு சொல்றேன். நானே பெறவு கூப்பிடுறேன்" - என்று சொல்லி அந்த ஆளைப் போகச் சொன்னார் இறைமுடிமணி. உடனே சர்மா "அவரை ஏன் கோபிச்சுக்கறே தேசிகாமணி! அவரு உள்ளதைத்தானே சொல்கிறார்?" - என்றார். ஆனால் அந்த ஆள் இறைமுடிமணியின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு உடனே வெளியேறி விட்டார். அவர் வெளியேறியதும் இறைமுடிமணி சர்மாவிடம் கூறினார்:
"செய்யிற அக்கிரமத்தையும் செஞ்சுப்போட்டு நானும் என் ஆளுங்களும் அவரு தோப்பிலே அத்து மீறி நுழைஞ்சி கலகம் பண்ணிச் சொத்துக்குச் சேதம் விளைவிச்சிருக்கோம்னு போலீஸிலே புகார் பண்ணியிருக்காரு சீமாவையரு. அந்த நேரத்திலே அவரு சிவன் கோவில்ல குடும்பத்தோட அர்ச்சனையில்லே பண்ணிக்கிட்டிருந்தாராம்? தனக்கு ஆபத்துன்னாச் சாமியைக் கூடப் பொய்சாட்சிக்கு இழுக்கிறானுவ" -
"யாரைச் சாட்சிக்கு இழுத்தா என்ன? அக்கிரமம் பண்றவா அழிஞ்சுதான் போயிடுவா..."
"அழிஞ்சு போகலியே விசுவேசுவரன்! நேர்மாறா அக்கிரமத்தை எதிர்க்கப் போன நாங்களில்லே கையும் காலும் வெட்டுப்பட்டு இப்படி ஆஸ்பத்திரியிலே வந்து அழிஞ்சு கிடக்கிறோம். நாலு காசு வசதியுள்ளவன் இங்கே நியாயம், சட்டம், போலீசு எல்லாத்தையும் கூட வெலைக்கி வாங்கிடறானே?"
"வாஸ்தவம், தெய்வத்தை நம்பறவாளைவிடப் பணத்தையும், வசதிகளையும் நம்பித் தொழறவா தேசத்திலே அதிகமாயிட்டா. யோக்கியமாயிருக்கணும், உழைச்சுச் சம்பாதிக்கணும்கிற நம்பிக்கையே போயிடுத்து. நல்லவனாயிருக்கணும்கிற நம்பிக்கையை விட நல்லவனைப் போல இருந்துட்டாப் போறும்னு திருப்திப் படறதே அதிகமாயாச்சு-"
"வேதத்தைச் சொல்லுற வாய் பொய்யையும் சொல்லுது. சீமாவையர் கடவுளை நம்பறதைவிட அதிகமாக அகமத் அலி பாயோடு பணத்தைத்தான் நம்புறாரு."
"என்னைப் பொறுத்தவரை எவன் யோக்கியனாயிருக்கானோ, எவன் மத்தவனை ஏமாத்தாமே உழைச்சு வாழறானோ, எவன்கிட்டச் சூதும், வாதும் வஞ்சனையும் இல்லியோ அவனெல்லாம் ஆஸ்தீகன் தான். எவன் அயோக்கியனாயிருக்கானோ, எவன் மத்தவனை ஏமாத்தி, உழைக்காமச் சுரண்டி வாழறானோ எவன்கிட்டச் சூதும் வாதும் வஞ்சனையும் நிரம்பியிருக்கோ அவனெல்லாம் தான் நிஜமான நாஸ்தீகன்!"
"நீ சொல்றே... ஆனால் உலகத்துனோட கண்ணிலே சீமாவையருதான் ஆஸ்தீகர், நான் நாஸ்தீகன். முரடன்! ஊரோட ஒத்துப் போகாதவன்..."
"அப்படி யார் யார் நெனைக்கறாளோ தெரியாது. ஆனா நான் அப்படி உன்னைப் பத்தி நெனைக்கலே தேசிகாமணி!"
"நீ நெனைக்க மாட்டப்பா... அதைக் கூடப் புரிஞ்சுக்கத் தெரியாதவனா நான்?"
இந்த உரையாடலின் போது இருவருமே மனம் நெகிழ்ந்த நிலையில் இருந்தார்கள். இறைமுடிமணி பத்து நாட்களுக்கு மேல் ஆஸ்பத்திரியில் இருக்க நேர்ந்தது. அப்படி அவர் ஆஸ்பத்திரியில் படுத்த படுக்கையாக இருந்த நாட்களில் சர்மா நாள் தவறாமல் ஆறுதலாக அவரைப் போய்ப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்படி ஒரு நாள் சர்மா ஆஸ்பத்திரிக்குப் போய்விட்டுத் திரும்பியபோது வழியில் சந்தித்த சாஸ்திரி ஒருவர் சர்மாவிடம் பேச்சுக் கொடுத்தார் - அந்தச் சாஸ்திரி சீமாவையருக்கு மிகவும் வேண்டியவர். அவரிடம் சர்மாவாக வலுவில் பேசப் போகவில்லை. பாதையில் எதிர்ப்பட்டு அவராகத் தம்மை நிறுத்தி க்ஷேமலாபம் விசாரிக்கவே சர்மாவும் பதில் பேசினார்.
"எங்கே போயிட்டு வரேள் சர்மா?"
"எனக்கு ரொம்ப வேண்டப்பட்ட சிநேகிதன் ஒருத்தன் ஒரு கலவரத்திலே வெட்டுக் காயப்பட்டு ஆஸ்பத்திரியிலே படுத்த படுக்கையா இருக்கான் - அவனைப் போய்ப் பார்த்துட்டு வாரேன்."
"யாரு? அந்தச் 'சூனா மானா'க்காரன் தானே, 'சாமியில்லே தெய்வமில்லே'ன்னு சதா நாஸ்தீகப் பிரசாரம் பண்ணிண்டிருக்கானோ இல்லியோ, அதான் தெய்வமாப் பார்த்து இந்த்த் தண்டனையை அவனுக்குக் குடுத்திருக்கு."
இதைக் கேட்டுச் சர்மாவுக்கு எரிச்சல் பற்றிக் கொண்டு வந்தது. கடவுளின் செயல்களுக்கு இப்படிக் கொச்சையாக அர்த்தம் கற்பிக்கிற ஆஸ்திகனைவிட மோசமான நாஸ்திகன் வேறொருவன் இருக்க முடியாது என்று பட்டது அவருக்கு. தெய்வ சிந்தனைகளில் மிகவும் மோசமான தெய்வ நிந்தனை, 'கடவுள் தம்மை எதிர்த்துப் பேசுகிறவன் வீட்டில் கொலை விழச் செய்வார், தம்மைத் துஷ்பிரசாரம் செய்கிறவனை உடனே கையைக் காலை வாங்கிப் பழி தீர்த்துக் கொள்வார்' என்று மூட பக்தியால் பாமரத்தனமாக விளக்கம் கொடுப்பதுதான். இந்த மூடத்தனமான விளக்கம் சரியாயிருந்தால் தோல்வியைப் பொறுத்துக் கொள்ள முடியாத, அல்லது வெற்றி மமதையில் நிதானமிழந்த ஒரு மூன்றாந்தர அரசியல்வாதியைப் போலக் கடவுளும் பழி வாங்கவும், பகை தீர்க்கவும், எங்கே எங்கே என்று தேடித் தவித்துக் கொண்டு திரிவது போலாகிவிடும். இவ்வளவு வேதங்கள் உபநிஷதங்களைக் கரைத்துக் குடித்திருந்தும் அதே சாஸ்திரி அத்தனை மௌட்டீகம் நிறைந்த ஒரு விளக்கத்தைக் கொடுத்தது கண்டு சர்மா அப்போது அருவருப்பு அடைந்திருந்தார். அவரை விட - அவற்றை எதிர்ப்பதற்காகவே சாஸ்திரம் சம்பிரதாயங்களைப் படித்துக் கொண்ட இறைமுடிமணி இன்னும் தெளிவாகவும் பிரக்ஞையுடனும் நன்றாகவும் படித்திருப்பதாகச் சர்மாவுக்குத் தோன்றியது.
சர்மா தன் மனத்தினுள் இருந்த எரிச்சலை அமைதிப் படுத்திக் கொண்டு "சாஸ்திரிகளே! நீர் சொல்றபடி வச்சுண்டுட்டாத் தனக்கு கெடுதல் பண்றவாளையும், தன்னை எதிர்க்கிறவாளையும் எப்படா தேடிப் பிடிச்சுக் கையைக் காலை வெட்டித் தண்டிக்கலாம்னு ஒருவிதமான சுயநலத்தோடு தெய்வம் தயாராக் காத்துண்டிருக்கற மாதிரின்னா ஆறது?" என்றார்.
"இல்லியோ பின்னே? தெய்வம் எப்பிடிப் பொறுத்துக்கும்னேன்?"
இதைக் கேட்டுச் சாஸ்திரிகளின் மௌட்டீகத்துக்காக மட்டுமின்றி மந்த புத்திக்காகவும் சேர்த்து இரக்கப்பட்டுக் கொண்டே மேலும் அவரையே கேட்டார் சர்மா:-
"பொறுமையே பூஷணம்னும் சகிப்புத் தன்மையே சத்தியம்னும் மனுஷாளுக்கெல்லாம் முன்மாதிரியாக் கத்துக்குடுக்க வேண்டிய தெய்வம், நீர் சொல்ற மாதிரி அத்தனை பொறுமையில்லாததாயும், அவசரக் குடுக்கையாகவும் சுயநலமாகவும் இராது சாஸ்திரிகளே-"
"நீங்க என்ன சொல்றேள் சர்மா? 'அவனோட' பழகிப் பழகி வரவர நீங்களே இப்பல்லாம் 'அவன்' மாதிரிப் பேச ஆரம்பிச்சுட்டேள்..."
"அதில்லே! சமயா சமயங்கள்ளே ஆஸ்தீகாளும் தங்களை அறியாமத் தெய்வத்தை அவமதிச்சுப் பேசிடறதுண்டு. அதுவும் கூடத் தெய்வ நிந்தனைதான். நீங்க சொன்னதையும் அதிலே தான் சேர்த்துக்கலாம். நம்ம துவேஷத்தை, நம்ம மௌட்டீகத்தை, நம்ம அஞ்ஞானத்தை நம்மோட பழி வாங்கற மனப்பான்மையை இதுக்கெல்லாம் அப்பாற்பட்ட பரம்பொருள் மேலே ஏத்தி வச்சு அது பழி வாங்கிடும், கண்ணை அவிச்சுப்பிடும், காலை ஒடிச்சிப்பிடும்னெல்லாம் சொல்றது எத்தனை அபத்தம்? 'வேண்டுதல் வேண்டாமை' இல்லாதவன்னு பகவானைப் பத்தி ஆயிரம் சாஸ்திரங்கள்ளே நீர் திரும்பத் திரும்பப் படிச்சு என்ன பிரயோஜனம் சாஸ்திரிகளே?"
எவ்வளவோ அடக்கிக் கொள்ள முயன்றும் சர்மா குரலில் கடுமை தொனித்து விட்டது. சாஸ்திரிகள் சர்மாவுக்குப் பதில் சொல்லாமல் கோபத்தோடு நேரே சீமாவையர் வீட்டுத் திண்ணைக்கு விரைந்தார். அங்கே அவர் எதிர்பார்த்தது போல் வம்பர் சபை கூடியிருந்தது. இவர் போவதற்கு முன்பேயே 'சர்மா எதிர்ப்புத்'தான் அங்கே நடந்து கொண்டிருந்தது. சீமாவையர் அத்தனை பேருக்கும் தாராளமாக வெற்றிலை சீவல் வழங்கிச் சர்மா எதிர்ப்பை உற்சாகப்படுத்தி விட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார்.
சாஸ்திரி வந்து சொன்னதைத் தொடர்ந்து கூடியிருந்தவர்களிடம் சீமாவையரே சர்மாவைப்பற்றி மேலும் குறை கூறித் தூபம் போட்டுவிட வசதியாயிருந்தது.
"என்னோட மாந்தோப்பிலே பம்ப்செட் மோட்டாரைக் கொள்ளையடிக்கணும்னு திட்டம் போட்டு ஆள் கட்டோட நுழைஞ்சவன் அந்த இறைமுடிமணி. நல்லவேளையா என் குத்தகைக்காரனோட ஆள்கள் சமயத்தில் வந்து என் ஆஸ்தியைக் காப்பாத்தியிருக்காங்க. அப்படிப்பட்ட கிராதகனுக்கு பரிஞ்சுண்டு போய் நிற்கிறார் சர்மா. அவருக்கு வரவரப் புத்தியே பேதலிச்சுப் போச்சு. ஒரே அடி மேலே அடியா வரது. புள்ளை என்னடான்னாப் பிரெஞ்சுக்காரியை இழுத்துண்டு வந்து நிற்கிறான். கடைசியிலே இவரே அவாளுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியதாயிடுத்து. சாஸ்த்ரோக்தமா நாலு நாள் கல்யாணமாம், சாஸ்திரம் ஒரு கேடு இவருக்கு! பண்ற கந்தரகோளம்லாம் பண்ணிட்டுச் சாஸ்திரமாம் சாஸ்திரம்!"
"அது மட்டுமில்லே சீமாவையர்வாள்! ஆஸ்பத்திரியிலே சாகக் கிடந்த அந்தக் கறுப்புச் சட்டைக்காரனுக்கு ஓடிப்போய் ரத்தம் குடுத்துக் காப்பாத்தியிருக்கார் இவர்..."
"இவருக்குத் தாத்தா வந்தாலும் அவனைக் காப்பாத்த முடியாது சுவாமீ! அவன் அகமத் அலி பாயைப் போய் விரோதம் பண்ணிண்டிருக்கான். பாய் கோடீசுவரன். அவரோட போட்டி போட இந்த வெறகுக் கடைக்காரனாலா ஆகும்?"
"ஆனா அவன் அக்ரகாரத்திலே வச்சிருக்கற பலசரக்குக் கடையிலே வியாபாரம் ரொம்ப நன்னா ஆறதுங்கறாளே ஓய்! விலை எல்லாம் ரொம்ப நியாயமாயிருக்குங்கறா, சரக்கும் கலப்படமில்லாமே சுத்தமாகவும் நன்னாவும் இருக்காமே... எல்லாரும் பேசிக்கிறாளே..."
"சும்மா ஒரு ஸ்டண்ட்! அதெல்லாம் கொஞ்ச நாள் ஜனங்களைக் கவரணும்கறதுக்காகக் குடுப்பன். போகப் போகத்தான் சுயரூபம் தெரியும்." - என்று அதை மறுத்தார் சீமாவையர். இறைமுடிமணியைப் பற்றியோ சர்மாவைப் பற்றியோ யாருக்கும் ஒரு சிறிய நல்லபிப்பிராயம் கூட ஏற்பட்டு விடாமல் கவனித்துக் கொள்வதில் சீமாவையருக்கு அளவு கடந்த அக்கறை இருந்ததென்னவோ உண்மை! 'இறைமுடிமணி'யின் கடை, வியாபாரம் எல்லாம் பற்றி ஊர் முழுவதும், மரியாதையும் நல்லெண்ணமும் பெருகுவதையே அவரால் பொறுத்துக் கொள்ள முடியாமல் இருந்தது. சர்மாவையும், இறைமுடிமணியையும் கோர்ட்டு, கேஸ் என்று இழுத்தடிப்பதற்கான செலவுகளை இரகசியமாக அகமத் அலிபாய் ஏற்றுக் கொண்டிருந்தார். அகமத் அலிபாயின் கோபத்துக்குக் காரணம் சர்மாவை வீடுதேடி போய்க் கையில் முன்பணத்தோடு கெஞ்சிப் பார்த்தும் கேட்காமல் அவர் அந்த இடத்தை இறைமுடிமணிக்கு விட்டிருந்தார் என்பதுதான். அதே காரணத்தாலும், தொழிற் போட்டியாலும் தனக்குக் கிடைக்காத இடம் அவருக்குக் கிடைத்து விட்டதே என்ற எண்ணத்தினாலும் இறைமுடிமணியின் மேலும் அவருக்கு எரிச்சல் ஏற்பட்டிருந்தது. சர்மாவையும் இறைமுடிமணியையும் அலைக்கழித்துக் கஷ்டப்படுத்துவதற்காகச் சீமாவையருக்கு எவ்வளவு வேண்டுமானாலும் பணம் கொடுக்கத் தயாராயிருந்தார் அகமத் அலிபாய்.
--------------
அத்தியாயம் 26
கமலி ரவி கல்யாண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த போதே ஸ்ப் கோர்ட்டிலிருந்து ஸம்மன் சர்மாவுக்கும் கமலிக்கும் வந்து சேர்ந்திருந்தது. கமலி போய்த் தரிசனம் செய்திருந்த சங்கரமங்கலம், பூமிநாதபுரம் கோவில்களின் தூய்மை கெட்டு விட்டதால் அவற்றுக்கு மறுபடி உடனே சம்ப்ரோட்சணம் செய்ய ஆகிற செலவு என்று ஒரு கணக்குப் போட்டுப் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் கோரி வழக்குத் தொடுத்திருந்தார்கள். வழக்குத் தொடுப்பதற்கான செலவு, தூண்டுதல் எல்லாம் சீமாவையர், அகமத் அலிபாய் ஆகியோருடையது என்றாலும், ஒவ்வொரு கோவிலுக்கும் சம்ப்ரோட்சணம், யாகசாலை, கும்பாபிஷேகம், மண்டலாபிஷேகச் செலவுகளுக்கு நஷ்ட ஈடு கோரி வழக்குத் தொடர்ந்திருந்தவர் பாதிக்கப்பட்ட உள்ளூர் ஆஸ்திகர் என ஒருவராகவோ சிலராகவோ முன் வந்திருந்தார்கள். கோவில் கமலி நுழைந்ததனால் தூய்மை கெட்டுப் போய் ஆஸ்திகர்களும் முறையான இந்துக்களும் தொழுவதற்குப் பயன்படாமற் போய் விட்டதென்றும், எவ்வளவு விரைவில் கும்பாபிஷேக ஏற்பாடு செய்ய முடியுமோ அவ்வளவு விரைவில் செய்தாக வேண்டுமென்றும் வழக்குத் தொடுத்தவர்கள் கோரியிருந்தார்கள். எனவே சர்மாவுக்கும், கமலிக்கும் வந்திருந்த கோர்ட் நோட்டீஸில் விரைவாக விசாரணைக்கு ஒரு தேதி குறிப்பிடப்பட்டிருந்தது. முன்பு செய்தது போலவே கோர்ட் நோட்டீஸுடன் வேணு மாமாவிடமே கலந்தாலோசித்தார் சர்மா. வேணு மாமா சிறிதும் கலங்காமல் யோசனை சொன்னார்.
"கலியாணத்துக்கு ஒரு வாரம் இருக்கறப்போ பார்த்து நீரும், கமலியும் கோர்ட்லே வந்து நிற்கிற மாதிரி நோட்டீஸ் அனுப்பிச்சிருக்கா, பரவாயில்லே, கவலைப்படாதேயும். ப்ராக்டீஸ் பண்ணாததாலே எனக்கு வக்கீலுக்குப் படிச்சதே மறந்து போச்சு, ஆனா இந்தக் கேஸுலே உமக்கும் கமலிக்கும் நானே வக்கீலா இருந்து கவனிச்சுக்கறேன். பைத்தியக்காரத்தனமா இந்தக் கேஸைப் போட்டவங்க மூஞ்சியிலே கரியைப் பூசிண்டு போறாப்ல பண்றேனா இல்லையா பாரும்!"
"இப்போ நீங்க எதுக்குச் சிரமப்படணும்? வேறு யாராவது வக்கீல்கிட்ட விட்டுடலாமே? இதுனாலே கல்யாண ஏற்பாடுகளை நீங்க கவனிச்சுண்டிருக்கிறது தடைப்படுமே?"
"ஒண்ணும் தடைப்படாது. இந்தக் கேஸுலே சில நுணுக்கமான ஆர்க்யுமெண்டுகள் இருக்கு. அதை எல்லாம் பத்தி நான் ஏற்கெனவே யோசிச்சு வச்சிருக்கேன். ஃபூன்னு உள்ளங்கையாலே ஊதி விடறாப்ல ஊதி விட்டுடலாம். கவலைப்படாதேயும் சர்மா..."
"என் தலையை உருட்டணும்கிறதுக்காகவோ என்னவோ எல்லாப் பேப்பர்லியும் கொட்டை எழுத்திலே பெரிய நியூசாப் போட்டுட்டா இதை. சாதாரணமா எத்தனையோ கேஸ் சப்கோர்ட்டிலே வரது. அதை எல்லாம் நியூஸாப் போடறதில்லே..."
"உம்ம தலையை உருட்டணும்னு பேப்பர்காராளுக்கு ஒண்ணும் இராது. 'வெள்ளைக்காரி கோவிலுக்குள்ளே நுழைஞ்சிட்டாள்'ன்னு வழக்குன்னா அதுலே ஒரு 'சென்சேஷன்' இருக்கோல்லியோ. அதுனாலே பெரிய நியூஸாப் போட்டிருப்பா."
"நஷ்ட ஈடு கேட்டு வழக்குப் போட்டிருக்கிற புள்ளிகளிலே ரெண்டொருத்தர் அந்தந்தக் கோவில்களோட தர்மகர்த்தாக் குழுவிலே கூட இருக்கா. அதுனாலே, அர்ச்சகாள், குருக்கள், எல்லாம் கூட வேணும்னே பயந்துண்டு நமக்கு எதிரா சாட்சி சொல்லலாம்." -
"இந்த ரெண்டு கோயில்லேயும் கமலி தரிசனத்துக்குப் போனப்போ இருந்த அர்ச்சகாள் யார் யாருன்னு நினைவிருக்கோ சர்மா?"
"கமலி கோவிலுக்குப் போறப்போ எல்லாம் உங்க பொண் வசந்தியோ, ரவியோ, அல்லது பாருவோ கூடத் துணைக்குப் போயிருக்கா. அவாளைக் கேட்டா அந்த சமயத்திலே அர்ச்சகா யார் யார் இருந்தான்னும் தெரிஞ்சுண்டுடலாம். அது ஒண்ணும் பெரிய சிரமமில்லே-"
"உடனே தெரிஞ்சுண்டு வந்து சொன்னீர்னா அந்த அர்ச்சகாளைக் கொஞ்சம் வரவழைச்சுப் பேசலாம். கேஸ் நமக்குச் சாதகமா முடியறத்துக்கு ரொம்ப உபயோகப்படப் போற விஷயம் இது."
"இன்னிக்கே விசாரிச்சுச் சொல்லிடறேன். வேற சாட்சி ஏதாவது வேணுமா?"
"உம்ம சிநேகிதன் அந்தப் பகுத்தறிவுப் படிப்பக ஆள் கோர்ட்டுக்கு வந்து சாட்சி சொல்லச் சம்மதிப்பாரா?"
"இதிலே அவரோட சாட்சிக்கு எந்த விதத்திலே இடம் இருக்கு? இது கோவில் குளம், பக்தி தரிசனம்னு வர்ற கேஸ், தேசிகாமணிக்கு அதிலே எல்லாம் நம்பிக்கை கிடையாது."
"நம்பிக்கை இருக்கறதும் இல்லாததும் வேற விஷயம். அவரோட தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள் அடங்கிய பகுத்தறிவுப் படிப்பகத்திலே போய்ப் பிரசங்கம் பண்றதுக்கு முந்திகூட ஏதோ கடவுள் வாழ்த்து மாதிரி ஒரு ஸ்தோத்திரத்தை முணுமுணுத்துட்டுத்தான் கமலி பிரசங்கம் பண்ணினாள்னு கேள்விப்பட்டேன். அப்படி அவள் செஞ்சதைத் தங்களுக்குப் பிடிக்காத விஷயமா இருந்தும் ஒரு நாகரிகம் கருதி அவர் யாரும் தடுக்கலேன்னும் கேள்விப்பட்டேன்."
"இருக்கலாம், ஆனா அது இந்தக் கேஸுக்கு எப்படிப் பிரயோஜப்படும்?"
"அதெல்லாம் நான் பார்த்துக்கறேன் சர்மா! நடந்ததைக் கோர்ட்ல வந்து அவர் சொல்லுவாரோ இல்லியோ?"
"தாராளமா வந்து சொல்லுவார். தேசிகாமணி நிஜத்தைச் சொல்றதுக்கு எங்கேயும் யார் முன்னாடியும் பயப்படறது இல்லே."
"அது போதும் எனக்கு."
"பாவம்! இந்தச் சீமாவையர் பண்ணுன அக்கிரமத்திலே வெட்டுக் காயம் பட்டு ஆஸ்பத்திரியிலே கெடந்துட்டு இப்பத்தான் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்திருக்கார் அந்த மனுஷன்."
"என்ன பண்றது சர்மா? விபூதிப் பூச்சு, தெய்வ நம்பிக்கைங்கிற வேஷம் எல்லாமாச் சேர்ந்து சீமாவையர் முதல் நம்பர் ஆசாரக்கள்ளனாயிருந்தும் அவரை நல்லவனா உலகத்துக்குக் காட்டிடறதே?"
"யாருக்கும் பயப்படாமே மனப்பூர்வமா உள்ளதைச் சொல்லணும்னாத் தேசிகாமணியை ஆஸ்திகனா ஒத்துக்கலாம். சீமாவையரைத்தான் உண்மையான நாஸ்தீகன்னு சொல்லணும். வேஷம் போடறவனை விட வெளிப்படையானவன் யோக்கியன். சீமாவையருக்குச் சாஸ்திரம், புராணம், சம்ப்ரதாயம், ஒரு மண்ணும் தெரியாது. தெரியறதாக வேஷம் போடறார். ஒண்ணைக் குறை சொல்லிப் பேசறதுன்னாக்கூட அதைப் பத்தி முழு விவரமும் தெரிஞ்சுக்காமப் பேசப்படாதுன்னு அத்தனையையும் முறையாக் கத்துண்டு ஒண்ணுமே தெரியாத பாமரன் மாதிரி நடந்துக்கற தேசிகாமணி எவ்வளவோ சிலாக்கியம்பேன்..."
"முடிஞ்சா சீமாவையரைக் கூட இதிலே சிக்க வைச்சுப் பாக்ஸ்லே ஏத்திக் குறுக்கு விசாரணை பண்ணணும்னு எனக்கு ஆசை."
"அவர் தான் நேரே வரவே மாட்டார். மத்தவாளைத் தூண்டிவிட்டு ஆழம் பார்க்கறதே அவர் வழக்கம். மத்தவாளுக்குக் கெடுதல் பண்றதையே ஒரு ஆர்ட்டா டெவலப் பண்ணிண்டவர் அவர். அவரோட பக்தி விசுவாசம் எல்லாமே வெறும் பாசாங்கு."
"கமலி கோயிலுக்கு வந்ததாலே கோயிலோட சுத்தம் கெட்டுப் போச்சுன்னு கேஸ் போட்டிருக்கிறதிலிருந்தே அது தெரியலியா?"
"சும்மா பேருக்குத்தான் கமலி மேலே கேஸ் போட்டிருக்காளே ஒழிய உண்மையிலேயே அவா கோபமெல்லாம் என் மேலேயும் தேசிகாமணி மேலேயும் தான். என்னைச் சிரமப்படுத்தணும், எனக்குத் தொந்தரவு குடுக்கணும்னு தான் எல்லாம் நடக்கிறது. சீமாவையர் பார்த்துண்டிருந்த ஸ்ரீ மடத்து முத்திராதிகாரி பதவியாலே பல வகையிலே அவர் நிறைய பணம் பண்ணிக்க வழி இருந்தது. அவராலே மடத்துப் பேரே கெட்டுடும்னு பயந்து பெரியவா எங்கிட்ட அதை மாத்தினா. அதனாலே ஒரு கோபம். ரெண்டாவது, அவர் சொல்றபடி நான் கேட்டுட்டாப் பரவாயில்லேன்னு முயற்சி பண்ணிப் பார்த்தார். நெலங்களைக் குத்தகைக்கு அடைக்கிறது, மடத்து மனையை வாடகைக்கு விடறதுலே எல்லாம் அவர் சொன்னதை நான் கேக்கல்லேன்னு வேறெ என் மேலே தாங்க முடியாத ஆத்திரம் அவருக்கு."
"சீமாவையர் மட்டும் விட்னெஸ்ஸாவோ, வேறெப்படியோ பாக்ஸ்லே ஏறினார்னா இத்தனையையும் பகிரங்கமா எக்ஸ்போஸ் பண்ணிடலாம் சர்மா..."
"அவர் சிக்கறது கஷ்டம். தண்ணிப் பாம்பு மாதிரி சுபாவம் அவருக்கு. தலையை மட்டும் வெளியிலே நீட்டுவார். கையிலே நாம கல்லை எடுத்தமோ முக்குளிச்சு ஓடிப்போய் ஒளிஞ்சுண்டுடறதுதான் அவர் வழக்கம்."
"உதாரணம் பிரமாதம் சர்மா!... இந்த மாதிரிக் கையாலாகாதவனை நல்ல பாம்போட கூட ஒப்பிட்டு நல்ல பாம்பை அநாவசியமா அவமானப்படுத்த நீர் தயாராயில்லேன்னு தெரியறது."
"நல்ல பாம்புக்குக் கொஞ்சம் மானரோஷம் உண்டு. அதை அடிக்கக் கம்பை ஓங்கினா எதிர்த்துச் சீறும்; படமெடுக்கும். கடிக்கக் கூட வரும்..."
சர்மா சீமாவையரைச் சித்தரித்த விதத்தைக் கேட்டு வேணு மாமா இரசித்துச் சிரித்தார். அப்புறம் சர்மாவிடம் வினவினார்:
"கோயில் திருப்பணிக்குக் கமலி பேரிலே நன்கொடை கொடுத்து ரசீது வாங்கச் சொன்னேனே; அந்த ரசீதைப் பத்திரமா வச்சிருக்கேளா? அதுலே என்ன எழுதியிருக்குன்னு இப்போ நினைவிருக்கோ?"
"இந்து ஆஸ்தீகப் பெருமக்களே! இது உங்கள் திருப்பணி; உவகையோடு முன் வந்து உதவுங்கள்'ன்னு தலைப்பிலே அச்சிட்டிருக்கான்னு நினைப்பு. அப்புறம் தேதி, பணம் குடுத்தவங்களோட பேர், கீழே தர்மகர்த்தாக்களில் ஒருத்தரோட கையெழுத்து எல்லாம் அதிலே இருக்கு."
"பலே! அதைப் பத்திரமா எடுத்துண்டு வந்து எங்கிட்டக் குடுத்துடும்."
"கேஸ், விசாரணை, வாய்தான்னு ரொம்ப இழுபடுமோ? அப்படி இழுபட்டா நம்ம கல்யாணக் காரியங்களையே கவனிக்க முடியாம இதுக்குன்னே அலைய வேண்டியதான்னா போயிடும்?"
"இழுபடாதுன்னு தோன்றது. 'பப்ளிக் இன்ட்ரஸ்ட் உள்ள அவசர விஷயம்'னு வற்புறுத்தி அவா கேஸ் போட்டிருக்கா. கமலி நுழைஞ்சதாலே கோவில் சாந்நித்யம் கெட்டு முறைப்படி தினசரி வழிபட வருகிற எல்லா இந்துக்களுக்கும் பயன்படாததாகி விட்டதுன்னும், உடனே சம்ப்ரோட்சணம் செய்தாகணும்ன்னும் தான் வழக்கு. அதனாலே கேஸை எடுத்துண்டாச்சுன்னா உடனே விசாரணை நடந்து முடிஞ்சுடறதுதான் வழக்கம். எப்பிடியும் ரெண்டுலே ஒண்ணு சீக்கிரமா முடிவாயிடும்."
------------
அத்தியாயம் 27
கமலி சங்கரமங்கலத்துக்கு வந்ததிலிருந்து அவள் சம்பந்தப்பட்ட அவர் பழகியிருக்கிற மனிதர்களைப் பற்றிய விவரங்களைச் சர்மாவிடமும், ரவியினிடமும், விசாரித்து அறிந்த பின் சாட்சியமாகப் பயன்படக் கூடியவர்கள் எனத்தாம் கருதிய பட்டியல் ஒன்றை முதலில் தயாரித்துக் கொண்டார் வேணு மாமா. சந்திப்பதற்காக அவர்களுக்கெல்லாம் தகவலும் சொல்லியனுப்பினார்.
சர்மாவிடம் ஏற்கெனவே அவர் சொல்லி அனுப்பியிருந்தபடி கமலி எந்தெந்தக் கோவில்களுக்குத் தரிசனத்துக்குப் போயிருந்தாளோ அந்தந்தக் கோவில்களில் அப்போது சந்நிதியிலிருந்த அர்ச்சகர்கள் வேணு மாமாவை வந்து சந்திக்கும்படி ஏற்பாடு ஆகியிருந்தது. அன்று மாலையில் அர்ச்சகர்கள் வருவதாகச் சொல்லி அனுப்பியிருந்தார்கள். உடனே வேணு மாமா கமலியைக் கூப்பிட்டு, அர்ச்சகர்கள் வரப்போகிற விவரத்தைச் சொல்லி, "அவாளை நான் இங்கே கூடத்திலே உட்கார வச்சுப் பேசப் போகிறேன். அவாள்ளாம் வர்றப்போ இதே கூடத்தில் காஸட் ரெக்கார்டரை ஆன் பண்ணிட்டு விளக்கு ஏத்தி வைச்சு நீ ஸ்லோகம் சொல்லிண்டிருக்கணும். அவா வந்ததும் ரெக்கார்டரை ஆஃப் பண்ணாமே அப்படியே விட்டுட்டு நீ போயிடலாம். அல்லது மௌனமா இங்கேயே இருந்தும் கவனிக்கலாம்" என்றார். கமலியும் அதற்குச் சம்மதித்தாள்.
அன்று சாயங்காலம் அர்ச்சகர்கள் வேணு மாமாவைத் தேடி வந்தார்கள். வேணு மாமா கூடத்து ஊஞ்சல் பலகையில் உட்கார்ந்திருந்தார். பக்கத்தில் தரையில் ஓர் உயரமான மணைப் பலகையில் திருவிளக்கு ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. மாக்கோலமிட்டு அலங்கரிக்கப்பட்ட மணைப் பலகையின் அடியில் காஸெட் ரெக்கார்டர் 'ஆன்' செய்யப்பட்டு வெளியே அதிகம் தெரியாமல் இயங்கிக் கொண்டிருந்தது.
"ஓங்கார பூர்விகே தேவி! வீணா புஸ்தக தாரிணீ!
வேதமாத: நமஸ்துப்யம் அவைதப்யம் ப்ரயச்சமே"
என்று ஸ்லோகத்தைச் சொல்லி முடித்துவிட்டு விளக்கை வணங்கி எழுந்திருந்தாள் கமலி. உள்ளே நுழைந்து வந்து கொண்டிருந்த அர்ச்சகர்களை வேணு மாமாவும் கமலியும் மரியாதையாக எழுந்து முன் சென்று நின்று வரவேற்றார்கள்.
அவர்களை ஒவ்வொருவராகப் பிரியத்தோடு பேர் சொல்லி அழைத்து விளக்கு வைத்திருந்த மணைப் பலகைக்கு அருகே போடப்பட்டிருந்த பெஞ்சியில் அமரச் செய்தார் வேணு மாமா. அவர் கேட்க வேண்டுமென்றே அவர்கள் காத்திருக்கவில்லை. அவர்களாகவே கமலியைச் சுட்டிக்காட்டி, "சாட்சாத் மகாலட்சுமி மாதிரி இருக்கா! சித்தே முன்னே இவ ஸ்லோகம் சொல்லிண்டிருக்கிறதைக் கேட்டப்போ மெய் சிலிர்த்தது. சரஸ்வதி தேவியே இங்கே வந்து சொல்லிண்டிருக்காளோன்னு தோணித்து. 'இவளுக்கு' எதிராக் கோர்ட்டிலே வந்து சாட்சி சொல்லணும்னு எங்களையெல்லாம் நிர்ப்பந்தப்படுத்தறா சுவாமி."
"அப்படி கோவில்லே இந்தக் கமலி என்னதான் பெரிய தப்புப் பண்ணிட்டா? எதுக்காக யார் வந்து உங்களை இப்போ நிர்ப்பந்தப்படுத்தறா?..."
"தப்பாவது ஒண்ணாவது? அப்படிச் சொன்னா நாக்கு அழுகிப் போயிடும். அதைப் போல அபசாரம் வேற இருக்க முடியாது. நிஜத்த அப்படியே சொல்லணுமானா ஆசார அநுஷ்டானம் தெரிஞ்ச நம்ம மதஸ்தர்களைவிட அதிக ஆசார அநுஷ்டானத்தோடவும் அடக்க ஒடுக்கமாகவும் இவ கோவில்லே நடந்துண்டான்னு சொல்லணும்."
"இதுதான் நெஜமானா நீர் இதை அப்படியே கோர்ட்டிலே வந்து சொல்ல வேண்டியதுதானே?"
"கோர்ட்டிலே வந்து என்ன சொல்லுவேனோ தெரியாது. ஆனா இதுதான் சத்தியம். நிர்ப்பந்தத்துக்காகவும் பொழைப்புக்காகவும் கோயில்லே எக்ஸிக்யூடிவ் ஆபீசர் சொல்றதுக்காகவும் சீமாவையருக்காகவும் பயந்து அவா வக்கீல் என்ன சொல்லிக் குடுக்கறாரோ அதை அங்கே வந்து ஒப்பிக்கிற பாவத்தைப் பண்ணணும் சுவாமி! நீங்க எங்களைத் தப்பா புரிஞ்சுக்கப்படாது. எங்களைத் தொந்தரவு பண்ணி நிர்ப்பந்தப் படுத்தறா! வேற வழியே இல்லை."
-இப்படி வருத்தப்பட்ட மூத்தவரான அந்த ஓர் அர்ச்சகரைத் தவிர உடன் வந்திருந்த மற்ற இரு அர்ச்சகர்களிடமும் சில கேள்விகள் கேட்டுப் பதில் சொல்ல வைத்தார் வேணு மாமா. அப்புறம் பேச்சை வேறு விஷயத்துக்கு மாற்றினார்.
"நான் உங்களை எல்லாம் வரச் சொன்னது இதைப் பத்திப் பேசறதுக்கில்லே. இவ ஏதோ ரெண்டு மூணு பிராமணாளுக்கு வஸ்திர தானம் பண்ணனும்னா, அதுக்காகத்தான் உங்களை எல்லாம் வரச்சொல்லி அனுப்பினேன்" - என்று கமலியைக் கூப்பிட்டு ஜாடை காட்டினார். மூன்று பெரிய பிளாஸ்டிக் தட்டுகளில் தயாராக வெற்றிலைப் பாக்குப் பழத்துடன் எடுத்து வைக்கப்பட்டிருந்த கோடி வேஷ்டி அங்கவஸ்திர செட்டுக்களைக் கமலியே அவர்கள் ஒவ்வொருவருக்காகக் கொடுத்துவிட்டு மிகவும் பவ்யமாகக் குனிந்து அவர்களை வணங்கினாள் அவர்களும் ஆசீர்வாதம் செய்தார்கள். அவர்கள் சென்ற பின் விளக்கு வைத்திருந்த மணைப் பலகைக்கு அடியிலிருந்து காஸெட் ரெக்கார்டரை எடுத்து 'ரீ வைண்டிங் பட்ட'னை அமுக்கி ரீவைண்ட் செய்து மறுபடி போட்டுப் பார்த்ததில் எல்லாம் கச்சிதமாகப் பதிவாகி இருந்தது. கேஸ் விசாரணைக்கு வருவதற்கு முன்பே மற்ற சாட்சிகளையும் வரவழைத்துப் பேசிவிட்டார் வேணு மாமா.
*****
விசாரணை நாள் வந்தது. ஏற்கெனவே தினசரிப் பத்திரிகைகளில் பிரமாதப்படுத்தப்பட்டுத் தடபுடலாகி இருந்ததனால் அன்று சப்-கோர்ட்டில் ஏகக்கூட்டம். சப்-ஜட்ஜ் ஆசனத்தில் வந்து அமர்ந்ததும் விசாரணை தொடங்கிற்று.
"நீர் உமது வீட்டிலே கமலியை விருந்தினராகத் தங்க வைத்துக் கொண்டதும், அவள் சங்கரமங்கலத்திலும் சுற்றுப் புறத்திலும் உள்ள இந்த ஆலயங்களைத் தரிசிக்க அவளுக்கு உதவி செய்ததும் உண்மைதானா?" என்று சர்மாவை விசாரித்தார் எதிர்தரப்பு வக்கீல். சர்மா உண்மைதான் என்று ஒப்புக் கொண்டார். கமலி சாட்சி சொல்லுமுன் சத்தியப் பிரமாணத்துக்காக அவர்கள் பைபிளை எடுத்துக் கொடுக்க - அவள் தானே பகவத் கீதையைக் கேட்டு வாங்கிப் பிரமாணத்தைச் செய்துவிட்டுத் தனது சாட்சியத்தைத் தொடங்கினாள்.
"இந்துக் கோவில்களில் தரிசிக்கப் போனது உண்மைதானா?" என்று கமலியிடம் கேட்கப்பட்டது. கமலி ஒரே வாக்கியத்தில் 'உண்மைதான்' - என்று மறுக்காமல் அதை ஒப்புக் கொண்டுவிட்டாள்.
"அப்படியானால் வேலை மிகவும் சுலபமாகப் போயிற்று. குற்றம் சுமத்தப்பட்டவர்கள் இருவருமே தாங்கள் செய்தவற்றை மறுக்காமல் செய்ததாக அப்படியே ஒப்புக் கொண்டு விட்டார்கள். மேற்கொண்டு விசாரிப்பதற்கு இனி எதுவுமில்லை. கனம் கோர்ட்டாரவர்கள் நியாயம் வழங்கிப் பாதிக்கப்பட்ட கோவில்கள் சுத்தி செய்யப்பட்டுச் சம்ப்ரோட்சணம் நடைபெற வழி செய்து கொடுக்க வேண்டும்" என்று வழக்குத் தொடுத்திருந்தவர்களின் வக்கீல் தம் வாதத்தைத் தொகுத்து முடித்தார்.
அப்போது வேணு மாமா கமலிக்கும் சர்மாவுக்கும் வக்கீல் என்ற முறையில் எழுந்திருந்து அந்த வாதத்தை ஆட்சேபித்தார். அவர் தரப்பு வாதத்தை அவர் எடுத்துச் சொல்லலாம் என்று சப்-ஜட்ஜ் கூறவே வேணு மாமா மேலும் தொடர்ந்தார்.
"இதை நான் ஆட்சேபிக்கிறேன். கமலி எந்த அந்நிய மதத்தையும் சேர்ந்தவள் இல்லை. அவள் பல ஆண்டுகளாக இந்து மதத்தையும் இந்து கலாசாரத்தையும் பழக்க வழக்கங்களையுமே அனுஷ்டித்து வருகிறாள்."
வேணு மாமா இவ்வாறு கூறியவுடன் கமலி அந்நிய மதத்தினள் இல்லை என்பதற்கும், இந்துப் பழக்க வழக்கங்களையே அவள் அனுசரித்து வருகிறாள் என்பதற்கும் போதிய சாட்சியங்கள் வேண்டும் என்று எதிர்த் தரப்பு வக்கீல் கேட்டார்.
சாட்சியங்கள் இப்போதே தயார் என்றும் கோர்ட்டார் விரும்பினால் அவர்களை ஒவ்வொருவராக ஆஜர்படுத்த முடியும் என்றும் வேணு மாமா நீதிபதியை நோக்கிக் கூறினார். நீதிபதி சாட்சியங்களை ஆஜர்ப்படுத்தி நிரூபிக்குமாறு கோரவே முதல் சாட்சியாகச் சங்கரமங்கலம் 'செயிண்ட் ஆண்டனீஸ் சர்ச்' பாதிரியாரை அழைத்தார் வேணு மாமா.
கமலி என்ற அந்தப் பிரெஞ்சு யுவதியை ஒருநாள் கூடத் தான் சர்ச்சில் பிரேயருக்காக வந்து பார்த்ததில்லை என்றும் மாறாகப் புடவை குங்குமத் திலகத்துடன் பிள்ளையார் கோயில், சிவன் கோயில் வாசல்களில் அடிக்கடி பார்த்திருப்பதாகவும் பாதிரியார் சாட்சி சொன்னார். எதிர்த் தரப்பு வக்கீல் பாதிரியாரிடம் ஏதோ குறுக்கு விசாரணைக்கு முயன்றார். ஆனால் அது அப்போது பயனளிக்கவில்லை.
அடுத்து, ரவி கூண்டிலேறிச் சாட்சி சொன்னான். பிரான்ஸில் பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் இந்திய இயல் பேராசிரியன் என்ற முறையில் மாணவியாக அவளைச் சந்தித்த நாளிலிருந்து கமலி இந்துக் கலாசாரத்தில் ஈடுபாடுள்ள பெண்ணாய் இருப்பதாக ரவியின் சாட்சியம் விவரித்தது. ரவியைத் தொடர்ந்து சங்கரமங்கலம் இரயில் நிலையத்தில் போளி ஆமவடை விற்கும் சுப்பாராவ், நியூஸ் பேப்பர் கன்னையா, பழக்கடை வரதன், வழித்துணை விநாயகர் கோயில் பூக்கடைப் பண்டாரம் ஆகியோர் பல மாதங்களுக்கு முன் சங்கரமங்கலத்துக்கு முதல் முதலாகக் கமலி வந்ததிலிருந்து தோற்றத்தாலும் நடை உடை பாவனையாலும், அவள் ஓர் இந்துப் பெண் போலவே நடந்து கொண்டு வருவது தங்களுக்குத் தெரியும் என்று சாட்சியமளித்தார்கள்.
அடுத்து ஏலக்காய் எஸ்டேட் ஓனர் சாரங்கபாணி நாயுடு சாட்சியளிக்கும்போது கமலி தன்னை முதன் முதலாகச் சந்தித்த சமயத்திலேயே தன்னிடம் அஷ்டாட்சர மந்திரம் பற்றி விவரித்து விசாரித்ததையும் தனது எஸ்டேட்டில் அவள் விருந்தாளியாகத் தங்கியிருந்தபோது கவனித்ததையும் வைத்து நடையுடை பாவனை பழக்க வழக்கங்கள் வழிபாட்டு முறைகளால் மட்டுமின்றி ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடனேயே அவள் இந்து கலாசாரப் பற்றைக் கொண்டிருப்பவள் என அவளைத் தான் புரிந்து கொண்டிருப்பதாகக் கூறினார்.
நாயுடுவைக் குறுக்கு விசாரணை செய்த எதிர்த் தரப்பு வக்கீல் "அஷ்டாட்சர மந்திரம் பற்றி அவள் உம்மிடம் விசாரித்ததிலிருந்தே அவளுக்கு அதைப் பற்றி அதற்கு முன்பு ஒன்றுமே தெரியாதென்று கொள்ளலாமல்லவா?" என்று குறுக்குக் கேள்வி கேட்டு மடக்கினார்.
"நான் அப்படிச் சொல்லவில்லையே? அஷ்டாட்சர மந்திரம் பற்றி விவரித்துவிட்டு எனக்கு அதுபற்றி எந்த அளவு தெரிந்திருக்கிறதென்று அறிவதற்காக என்னை அவள் விசாரித்தாள் என்று தானே சொன்னேன்" - என்றார் நாயுடு. கோர்ட்டில் ஒரு பெரிய சிரிப்பலை எழுந்து ஓய்ந்தது.
கமலிக்குப் பரதநாட்டியம் கற்பித்த சிவராஜ நட்டுவனாரும், கர்நாடக சங்கீதம் கற்பித்த பாகவதரும் அவளுக்கு இந்துமதப் பற்றுண்டென்றும், தங்களிடம் அவள் மிகவும் குரு பக்தியோடு நடந்து கொண்டாளென்றும் அவளது பூஜை புனஸ்காரங்களைப் பார்த்து அவளைத் தாங்கள் சாதாரண இந்துக்களைவிடச் சிறந்த இந்துவாக மதித்திருப்பதாகவும் சாட்சியமளித்தார்கள். தத்தம் வீடுகளுக்கு நுழையும்போது வாசல் நடையிலேயே செருப்பைக் கழற்றி விட்டுக் கை கால்களைச் சுத்தம் செய்து கொண்டபின் பூஜையறைக்கு சென்று வழிபட்ட பின்பே அவள் கற்றுக் கொள்ளத் தொடங்குவது வழக்கம் என்பதையும் அவர்கள் கோர்ட்டில் விவரமாகத் தெரிவித்தார்கள்.
கடைசியாக இறைமுடிமணி சாட்சியத்துக்கு அழைக்கப்பட்ட போது சத்தியப் பிரமாணத்தையே 'கடவுள் ஆணையாக' என்று செய்ய மறுத்து 'மனச் சாட்சிக்கு ஒப்ப' என்று தான் பண்ணினார் அவர். உடனே எதிர்த்தரப்பு வக்கீல் "கடவுள் நம்பிக்கையற்ற - மத நம்பிக்கையில்லாத அவரது சாட்சியம் இந்த வழக்கில் ஏற்றுக் கொள்ளப்படக் கூடாது" - என்று வன்மையாக மறுத்தார்.
"அவரது சாட்சியத்தைக் கூறட்டும். அதன்பின் அவசியமானால் நீங்கள் அவரைக் குறுக்கு விசாரணை செய்யலாம்" என்று நீதிபதி இடையிட்டுக் கூறவே இறைமுடிமணி சாட்சியத்தைத் தொடர்ந்தார்.
"இந்து கலாசாரத்தைக் கட்டிக் காப்பதாகக் கூறி மார்தட்டிக் கொள்ளும் ஜாதி இந்துக்களை விட மெய்யான இந்துவாக இருப்பவள் கமலி. என்னைப் போல் ஜாதிமத நம்பிக்கையும் தெய்வ நம்பிக்கையும் இல்லாதவர்கள் நடத்தும் பகுத்தறிவுப் படிப்பகத்தில் வந்து பேசும் போது கூட எங்கள் ஆட்சேபணையையும் பொருட்படுத்தாமல் தனக்குத்தானே கடவுள் வாழ்த்துப் பாடிவிட்டுத்தான் அவள் தன் பிரசங்கத்தைத் தொடங்கினாள்" - என்பதாகத் தன் சாட்சியத்தைக் கூறினார் இறைமுடிமணி.
இதில் எதையும் குறுக்கு விசாரணை செய்ய முடியாமல் போயிற்றே என்று எதிர்த்தரப்பு வக்கீலுக்குப் பெருத்த ஏமாற்றமாக இருந்தது. இறைமுடிமணியின் சாட்சியம் முடிந்தபின் வேணு மாமா தன் வாதத்தை முடித்துக் கூறும்போது மேலும் விவரித்துப் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் இருந்தன. அவற்றை அழகாகவும் கோவையாகவும் நிரல்படவும் எடுத்துரைத்து விவாதித்தார் அவர்.
"இந்து ஆசார அனுஷ்டானங்களுடன் கோவிலின் புனிதத் தன்மைக்கோ சாந்நித்தியத்துக்கோ எந்தப் பாதிப்புமில்லாமல் ஆலயங்களில் தரிசனத்துக்காகச் சென்றிருக்கும் என் கட்சிக்காரரை வம்புக்காக அவதூறு செய்யவேண்டும் என்ற கெட்ட எண்ணத்தோடு தான் இந்த வழக்குத் தொடரப்பட்டிருக்கிறதே ஒழிய வழக்குத் தொடுத்திருப்பவர்களின் கோரிக்கையில் எந்த நியாயமுமில்லை. சட்ட விரோதம் என்ற பேச்சுக்கே இதில் இடம் கிடையாது. மறுபடி சம்ப்ரோட்சணம் பண்ணிய பின்புதான் சுத்தமாக வேண்டுமென்ற அளவுக்குக் கோவில்களில் இப்போது எந்த சுத்தக் குறைபாடும் நடந்து விடவில்லை என்பதை வற்புறுத்திக் கூற விரும்புகிறேன்.
"தவிர நேற்றும் இன்றும் அதே கோவில்களில் முறைப்படி பூஜை புனஸ்காரம், பொது மக்களின் தரிசனம் எல்லாம் வழக்கம் போல் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. வழக்குத் தொடுத்திருப்பவர்கள் தெரிவித்திருப்பது போல் என் கட்சிக்காரர் சென்று தரிசித்ததால் பாதிப்பு ஏற்பட்டுப் பொது மக்கள் உபயோகத்துக்குப் பயன்படாதபடி இதில் எந்தக் கோவிலும் இழுத்து மூடிப் பூட்டப்பட்டு விடவில்லை என்பதையும் கனம் கோர்ட்டார் கவனிக்க வேண்டும்."
-இந்த இடத்தில் எதிர்த் தரப்பு வக்கீல் எழுந்திருந்து பலமாக ஆட்சேபிக்க முற்பட்டார், அதை நீதிபதி ஏற்காததால் வேணு மாமாவே தொடர்ந்தார்.
"மேலும் எனது கட்சிக்காரரை இந்த ஆலயங்களும் இவற்றைச் சேர்ந்தவர்களும் இதன் தர்மகர்த்தாக்களும் பரம ஆஸ்திகராகவும், மரியாதைக்குரிய இந்துவாகவும் சந்தேகத்துக்கிடமில்லாதபடி ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இதோ இந்த ரசீதே போதிய சாட்சியமாகும். சிவன் கோவிலின் புனருத்தாரணத் திருப்பணிக்கு இந்து ஆஸ்திகர்களிடம் கேட்டு வாங்கும் நன்கொடைக்காக அளிக்கப்படும் இரசீதுகளில் இதுவும் ஒன்று. இதில் இந்த ஆலய தர்மகர்த்தாவின் கையெழுத்துக்கூட இருக்கிறது. வேடிக்கையாகவும் முரண்பாடாகவுமுள்ள ஒரு விஷயம் என்னவென்றால் அதே தர்மகர்த்தா இந்த வழக்கைத் தொடுத்திருப்பவர்களில் ஒருவராகவுமிருக்கிறார். என் கட்சிக்காரர் ஆலயத்திற்குள்ளேயே நுழையத் தகுதியற்றவர் என இவர்கள் கருதியிருப்பது மெய்யானால் அர்த்த மண்டபம் வரை உள்ளே வர அனுமதித்து ரூபாய் ஐநூறு நன்கொடையும் பெற்றுக்கொண்டு அவளிடம் இந்த ரசீதைக் கொடுத்திருக்க முடியாது. அதுமட்டுமல்லாமல் இந்த ரசீதில் 'இந்து ஆஸ்திகர்களிடமிருந்து கோயில் திருப்பணிக்காக நன்கொடையாய்ப் பெற்ற தொகைக்கு இரசீது' என்று வேறு தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பணம் தேவைப்படுகிறபோது மட்டும் இந்து ஆஸ்திகராக ஏற்றுக் கொள்ளப்படுகிற ஒருவரைத் தரிசனத்துக்கு வரும்போது மட்டும் அந்நிய மதத்தினர் என்று தவறாகக் கருதி ஒதுக்குவது என்ன நியாயம்? எனது கட்சிக்காரர் தரிசனத்துக்குப் போயிருந்தபோது தான் இந்த நன்கொடையை ஆலயத் திருப்பணிக்கு அளித்திருக்கிறார் என்பதைக் கோர்ட்டாரவர்களுக்குத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன். இந்த நன்கொடையை வாங்கும்போதோ இதற்காக இரசீது கொடுக்கும்போதோ எனது கட்சிக்காரர் கோவிலுக்குள் நுழைந்தால் கோவில் புனிதம் கெட்டு 'சம்ப்ரோட்சணம்' செய்ய வேண்டிய நிலைமை ஏற்படும் என ஆலய நிர்வாகிகளுக்குத் தோன்றாமல், பின்னால் சிறிது காலம் கழித்து அப்படித் தோன்றியிருப்பதன் உள்நோக்கம் என்னவென்றுதான் எனக்குப் புரியவில்லை."
இப்போதும் எதிர்த்தரப்பு வக்கீல் ஏதோ ஆட்சேபிப்பதற்காகக் குறுக்கிட்டார். ஆனால் நீதிபதி வேணு மாமாவின் பக்கம் பார்த்து 'லெட் ஹிம் கன்டின்யூ' என்று கூறவே எதிர்த்தரப்பு வக்கீல் அமர வேண்டியதாயிற்று.
வேணு மாமா தம் வாதங்களைத் தொகுத்துரைத்து அந்தத் திருப்பணி ரசீதையும் நீதிபதியின் பார்வைக்கு வைத்துவிட்டு அமர்ந்தார். மறுநாள் வாதங்கள் தொடரும் என்ற அறிவிப்புடன் அன்று அவ்வளவில் கோர்ட் கலைந்தது.
அந்த வழக்கு விசாரணையைக் கவனிப்பதற்காக பூமிநாதபுரம், சங்கரமங்கலம் கிராமங்களிலிருந்து நிறையப் பொதுமக்கள் கோர்ட்டில் வந்து குழுமியிருந்தனர்.
கோர்ட் கலைந்து வெளியே வரும்போது பத்திரிகை நிருபர்கள் கமலியைப் புகைப்படமெடுப்பதில் போட்டி போட்டுக்கொண்டு முந்தினர். வேணு மாமா அந்த வழக்கைக் கொண்டு சென்று எடுத்துரைத்த முறையைப் பல வக்கீல்கள் முன் வந்து பாராட்டினார்கள்.
எல்லாரையும் போல் ஒரு பார்வையாளராக வந்து கோர்ட்டில் அமர்ந்திருந்த சீமாவையர் அங்கிருந்து மெல்ல நழுவிக் கொண்டிருந்தார்.
"ஏய் விசுவேசுவரன்! பன்றதை எல்லாம் பண்ணிப் போட்டுத் தண்ணிப் பாம்பு ஒண்ணுந் தெரியாத மாதிரி மெல்ல நழுவுது பார்த்தியா?" என்று சர்மாவின் காதருகே நெருங்கி முணுமுணுத்தார் இறைமுடிமணி. சீமாவையரைக் குறிப்பிட்டுப் பேச அவர்கள் இருவரும் தங்களுக்குள் வைத்திருந்த பெயர் 'தண்ணிப் பாம்பு' என்பதாகும். கோர்ட்டிலிருந்து திரும்புகிற வழியில் மார்க்கெட் முகப்பில் வாழை இலை மண்டி அருகே காரை நிறுத்திக் கல்யாணத்திற்காக இலை காய்கறி எல்லாவற்றுக்கும் வேணு மாமா அட்வான்ஸ் கொடுத்தபோது "இப்ப என்ன இதுக்கு அவசரம்? கேஸ் முடியட்டுமே?" - என்று தயக்கத்தோடு இழுத்தார் சர்மா.
"கேஸைப்பத்தி ஒண்ணும் கவலைப்படாதியும்" - என்று வேணு மாமா சர்மாவுக்கு உற்சாகமாகப் பதில் கூறினார். அவருடைய தன்னம்பிக்கையும், தைரியமும், உற்சாகமும் சர்மாவையும் மற்றவர்களையும் அப்போது மிகவும் வியப்பில் ஆழ்த்தின.
---------------
அத்தியாயம் 28
மறுநாள் விசாரணைக்காக கோர்ட் கூடிய போது இந்த வழக்கின் தனித் தன்மையை உத்தேசித்து மேலும் சில சாட்சியங்களை விசாரிக்க விசேஷமாக அநுமதிக்க வேண்டும் என்றும், வழக்கை முடிவு செய்ய அது மிகமிக உபயோகமாக இருக்கும் என்றும் எதிர்த்தரப்பு வக்கீல் வேண்டியபோது வேணு மாமா எழுந்திருந்து அதை ஆட்சேபித்தார். ஆனால் நீதிபதி அதற்கு அனுமதியளித்ததோடு, "அவரது சாட்சியங்களைக் குறுக்கு விசாரணை செய்யும் உரிமையும் வசதியும் உங்களுக்கு இருக்கும் போது கவலை எதற்கு?" என்று வேணு மாமாவுக்கு உணர்த்தினார்.
அன்றைக்கு எதிர்த்தரப்பு வக்கீல் என்னென்ன சாட்சியங்களை விசாரிப்பார் - வழக்கை எப்படி எப்படித் திரித்துக் கொண்டு போக முயல்வார் என்பதை எல்லாம் அப்போதே வேணு மாமாவால் ஓரளவு அநுமானம் செய்து கொள்ள முடிந்திருந்தது. சப்-ஜட்ஜ் கூறியது போல் எதிர்த்தரப்பு சாட்சியங்களைக் குறுக்கு விசாரணை செய்து வகையாக மடக்கலாம் என்ற நம்பிக்கையோடு அதற்கு இசைந்து அமர்ந்தார் அவர்.
வழக்கு எப்படிப் போகிறதென்று அறியும் ஆவலுடன், கமலி, சர்மா, ரவி, வசந்தி எல்லாரும் அங்கே கோர்ட்டில் வந்து அமர்ந்திருந்தார்கள். பொது மக்களும் முதல் நாள் போலவே அன்றும் கூட்டமாக வந்திருந்தார்கள்.
இந்து சமயப் பழக்க வழக்கங்கள், சம்பிரதாயங்கள் எதையும் கமலி அறியாதவள் என்பதை நிரூபிப்பதற்காகத் தயாரிக்கப்பட்டது போல் அமைந்திருந்தது முதல் சாட்சி.
சிவன் கோவில் பிரதான வாயிற் காவற்காரரான முத்து வேலப்ப சேர்வை என்பவர் இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு ஒருநாள் மாலை கமலி காலில் செருப்புக்களுடன் கோயிலில் நுழைந்ததாகச் சாட்சியமளித்தார். அது நிர்ப்பந்தித்து வற்புறுத்தி வலுக்கட்டாயமாகத் தயாரித்த சாட்சி என்பது முதலிலேயே தெளிவாகத் தெரிந்தது.
வேணு மாமா அந்தக் கோயில் வாட்ச்மேனைக் குறுக்கு விசாரணை செய்தார். முதலில் அது நடந்த நாள் நேரம் முதலியவற்றை மறுபடி விசாரித்தார். வாட்ச்மேன் அதற்குப் பதில் கூறியபின்,
"அப்படித் தரிசனத்துக்கு வந்தபோது கமலி தனியாக வந்தாளா? வேறு யாரும் உடன் வந்தார்களா?" என்று கேட்டார்.
"வேறு யாரும் உடன் வரவில்லை" என்று அவனிடமிருந்து பதில் வந்தது.
"உன் கடமைப்படி நீ காலில் செருப்புடன் உள்ளே போகக் கூடாது என்று அவளைத் தடுத்தாயோ இல்லையோ?"
"நான் தடுக்கத்தான் தடுத்தேன். ஆனால் அவங்க 'அப்பிடித்தான் போவேன்'னு - என்னை மீறி உள்ளே நுழைஞ்சிட்டாங்க."
"நீ எந்த மொழியில் தடுத்தாய்? அவங்க எந்த மொழியில் மாட்டேன்னு பதில் சொன்னாங்க..."
"நான் தமிழ்லேதான் சொல்லித் தடுத்தேன். அவங்க தான் என்னமோ புரியாத பாஷையிலே பேசினாங்க."
"புரியாத பாஷையிலே பேசினாங்கன்னு சொல்றியே? அப்பிடியானால் அவுங்க சொன்னது, 'செருப்பைக் கழற்றாமே அப்பிடித்தான் உள்ளே போவேன்'னு அர்த்தமுள்ளதா உனக்கு எப்பிடிப் புரிஞ்சுது...?"
"இல்லீங்க அவங்க... தமிழ்லேதான் பேசினாங்க..."
"முதல்லே புரியாத பாஷையிலே பேசினாங்கன்னு நீ சொன்னது நிஜமா? அல்லது இப்போ தமிழ்லே தான் பேசினாங்கன்னு சொல்றியே, இது நிஜமா?"
திகைத்துப் போன சாட்சி முழித்தார். பதில் சொல்லவில்லை. கூண்டில் கையைப் பிசைந்து கொண்டு நின்றார். வேணு மாமா குறுக்கு விசாரணையை முடித்துக் கொண்டு தமது இடத்தில் போய் அமர்ந்தார். தம்முடைய அடுத்த சாட்சிக்கு ஆயத்தமானார் எதிர்த்தரப்பு வக்கீல்.
அடுத்து சிவன் கோவில் அர்ச்சகர்கள் மூவரும் ஒவ்வொருவராகச் சாட்சி சொல்ல வந்தார்கள். முதல் சாட்சி கைலாசநாதக் குருக்கள், ஐம்பத்தெட்டு வயதானவர். சிவாகமங்களிலே தேர்ந்த ஞானமுள்ளவர். சங்கரமங்கலம் சிவன் கோவிலில் பிரதம அர்ச்சகராயிருந்தார் அவர்.
அவர் சாட்சிக் கூண்டில் ஏறிக் கடவுள் சாட்சியாக உண்மை பேசுவதாகச் சத்தியப் பிரமாணம் செய்த போது வேணு மாமா, சர்மா எல்லாருக்குமே மிகவும் வேதனையாயிருந்தது. இத்தனைப் பெரியவர், இவ்வளவு படித்தவர் பொய்ச் சாட்சி சொல்லத் துணிந்து வந்து விட்டாரே என்று உள்ளூற மனம் வருந்தினார்கள் அவர்கள்.
"அந்தப் பிரெஞ்சுப் பொண்ணுக்கு நம்ம சாஸ்திரம் சம்பிரதாயம் ஒண்ணும் தெரியாததோட அதை எல்லாம் அவ கொஞ்சமும் மதிக்காதவள்னும் தெரியறது. நான் சுவாமி சந்நிதியிலே அவளுக்குக் குடுத்த 'விபூதி - வில்வதளம்' எல்லாத்தையும் அவ உடனே காலடியிலே போட்டு மிதிச்சதை என் கண்ணாலேயே பார்த்தேன்" - என்று சாட்சியம் அளித்தார் கைலாசநாதக் குருக்கள்.
"குருக்களே! நீங்க இதை மனப்பூர்வமாகத்தான் சொல்றேளா? அல்லது ஏதாவது நிர்ப்பந்தத்துக்காகவா?"
-வேணு மாமா இப்படிக் கேட்கத் தொடங்கியதை எதிர்த்தரப்பு வக்கீல் ஆட்சேபணை செய்தார்.
அடுத்து மேலும் இரண்டு அர்ச்சகர்கள் இதே போல் கமலி கோயில் முறைகளுக்குப் புறம்பாக நடந்து கொண்டதாகவும், கோயில் பிரகாரத்தில் விவரந் தெரியாமல் அவள் அப்பிரதட்சணமாகச் சுற்றியதாகவும் சாட்சியம் அளித்தார்கள்.
"அப்படிப் பிரகாரத்தில் சுற்றும் போது அவள் தனியாயிருந்தாளா? வேறு யாராவது கூட இருந்தார்களா? எந்தத் தேதியன்று என்ன நேரத்தில் அது நடந்தது?" - என்று எல்லாரிடமுமே அடுத்தடுத்து ஒரே கேள்வியைக் கேட்டார் வேணு மாமா. எல்லாரும் ஒரே தேதி நேரம் கூறியதோடு கமலியைத் தாங்கள் தனியேதான் கோவிலில் பார்த்ததாகவும் தெரிவித்தார்கள். வேணு மாமா எல்லோரிடமும் ஏன் தேதி நேரம் கேட்கிறார் என்பது எதிர்த்தரப்பு வக்கீலுக்குப் புலப்படாமல் பெரிய புதிராயிருந்தது.
அடுத்தபடியாகப் பஜனை மடம் பத்மநாப ஐயர், வேததர்ம பரிபாலன சபை காரியதரிசி ஹரிஹர கனபாடிகள், கர்ணம் மாத்ருபூதம், மிராசுதார் சுவாமிநாதன் ஆகிய நால்வரும் "கோவிலின் இரண்டாவது பிரகாரத்தில் உள்ள ரதி மன்மத சிற்பத்தின் கீழே அந்தச் சிற்பத்தில் எப்படி ரதியும் மன்மதனும் கட்டித் தழுவிக் கொண்டிருந்தார்களோ அதே போலக் கமலியும், ரவியும் பகிரங்கமாகக் கட்டித் தழுவி முத்தமிட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்ததாகவும் நாலு பேராகச் சேர்ந்து தரிசனத்துக்காகப் போயிருந்த தங்கள் கண்களில் கோயிலின் புனிதத் தன்மைக்குப் பொருந்தாத இந்த அருவருக்கத்தக்க ஆபாசக் காட்சி தென்பட்டதாகவும்" ஒவ்வொருவராகக் கூண்டிலேறிச் சாட்சி கூறினார்கள். இந்த ஆபாசக் காட்சியைக் கண்டு அந்தச் சமயத்தில் பிரகாரத்தில் வலம் வந்து கொண்டிருந்த மற்ற ஆஸ்திகர்களின் மனம் புண்பட்டு அவர்கள் வருந்திக் கூறியதைத் தாங்கள் கேட்டதாகவும் மேலும் சாட்சிகள் தெரிவித்தார்கள். அதைக் கேட்டுக் கமலி, ரவி, சர்மா, வசந்தி ஆகியோருக்கு அந்த அபாண்டப் பழியையும் புளுகையும் பொறுத்துக் கொள்ள முடியாமல் நெஞ்சு குமுறியது. வேணு மாமா மட்டும் புன்முறுவலோடு எழுந்திருந்து தன் குறுக்கு விசாரணையைத் தொடங்கினார். அந்த நான்கு பேரிடமும் கிளிப்பிள்ளை போல ஒரே கேள்வியைத் தான் திரும்பத் திரும்பக் கேட்டார் அவர்:
"ரதி மன்மத சிற்பம் சங்கரமங்கலம் சிவன் கோவிலின் எத்தனையாவது பிரகாரத்தில் இருக்கிறது? எந்தத் தேதியில் எந்த நேரத்தில் இந்த நிகழ்ச்சி நடந்தது?"
"ரதி, மன்மத சிற்பம் சிவன் கோவிலின் இரண்டாவது பிரகாரத்தின் வடக்கு மூலையில் இருக்கிறது" என்று சொல்லிவிட்டுத் தேதியும் நேரமும் சொல்லத் தயங்கினார், முதலில் குறுக்கு விசாரணைக்கு ஆளான பஜனை மடம் பத்மநாப ஐயர்.
உடனே வேணு மாமா, "காலில் செருப்புடன் நுழைந்ததாக வாட்ச்மேன் சொன்ன அதே தேதியில் தான் இதுவும் நடந்ததா? அல்லது வேறு தேதியா?" - என்று குறுக்கிட்டு விசாரித்தார்.
"வாட்ச்மேன் கூறிய சம்பவம் நடந்த அதே தேதியில் அதே நேரத்தில்தான் இதுவும் நடந்தது" - என்று சாட்சியிடமிருந்து பதில் கிடைத்தது. மற்ற மூன்று சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்தபோதும் இதே பதில்தான் அவர்களிடமிருந்து கிடைத்தது.
கடைசியாக ஒரு தர்மகர்த்தர் சாட்சியம் அளித்தார்.
"கோவில் திருப்பணிக்கு என்று கமலியின் பேரில் அளிக்கப்பட்ட ரசீது கமலியால் நேரில் பணம் கொடுத்து வாங்கப்பட்டது அன்று என்றும் வேறு ஒருவர் பணத்தைக் கொடுத்து கோயிலுக்கு வராமல் வெளியிலேயே கமலியின் பெயருக்கு அந்த ரசீதை வாங்கிக் கொண்டிருக்க வேண்டும்" - என்றும் அவரது சாட்சியத்தில் கூறப்பட்டது. ரசீதிலிருக்கும் கையெழுத்தும் தம்முடையதுதான் என்பதை அவர் ஒப்புக் கொண்டார். உடனே வேணு மாமா எழுந்திருந்து,
"ஐந்து ரூபாய், பத்து ரூபாய் நன்கொடை வசூலுக்கான ரசீதுகளைத் தவிர நூறு ரூபாய்க்கு மேற்பட்ட வசூல் வேலையைத் தேவஸ்தான ஆபீஸே கோவிலுக்குள் வைத்துத்தான் செய்ய வேண்டும் என்று திருப்பணி நிதி வசூல் குழுவில் தீர்மானம் போட்டீர்களா இல்லையா?" - என்று கேட்டு மடக்கியதும் தர்மகர்த்தா திணறிப் போனார். நிதி வசூல் குழுவில் போடப்பட்ட அந்த இரகசியத் தீர்மானம் இவருக்கு எப்படித் தெரிந்தது என்பதே அவரது திணறலுக்குக் காரணம். 'கமலி கோவிலுக்குள் வந்து தேவஸ்தான அலுவலரிடம் பணத்தைச் செலுத்தி அந்த ரசீதை வாங்கவில்லை. வெளியே யாரோ அவள் பெயரில் பணத்தைக் கட்டி வாங்கிய ரசீது அது' - என்ற தமது பொய்ச் சாட்சியம் அடிபட்டுப் போனதைத் தர்மகர்த்தா அந்த நிமிஷமே உணர்ந்தார்.
வற்புறுத்தித் தயாரிக்கப்பட்ட எல்லாச் சாட்சியங்களும் தவிடு பொடியாகும்படி வாதத்தைத் தொடர்ந்தார் வேணு மாமா.
"கனம் கோர்ட்டாரவர்களே! கைலாசநாதக் குருக்கள் முதலிய மூவரும் நிர்ப்பந்தத்துக்குப் பயந்து இங்கே இதுவரை பொய்ச் சாட்சி சொன்னார்கள் என்பதை இதோ இந்த ஒலிப்பதிவு நிரூபிக்கும்!" - என்று சொல்லி காஸெட் ரெக்கார்டரை எடுத்து 'ஆன்' செய்தார் வேணு மாமா. எள் போட்டால் எள் விழுகிற ஓசை கேட்கும் அவ்வளவு அமைதியோடு கோர்ட்டு அதைக் கேட்டது. அந்த எதிர்பாராத ஒலிப்பதிவுச் சாட்சியம் அனைவரையுமே பிரமிக்க வைத்து விட்டது.
டேப் ஒருமுறை ஓடி முடிந்ததும் சாட்சியத்துக்குப் பயன்படும் பகுதியை மறுமுறையும் போட்டுக் காட்டினார் வேணு மாமா. கமலியின் குரல் ஒலியோடு கூடிய ஸ்லோகம் முடிந்தவுடன்,
"இவ ஸ்லோகம் சொல்லிண்டிருக்கறதைக் கேட்டப்போ சரஸ்வதி தேவியே வந்து சொல்லிண்டிருக்காளோன்னு தோணித்து. இவளுக்கு எதிராக கோர்ட்டிலே வந்து சாட்சி சொல்லணும்னு எங்களைக் கூப்பிட்டு நிர்ப்பந்தப்படுத்தறா சுவாமி!"
"ஆசார அநுஷ்டானம் தெரிஞ்ச நம்ம மதஸ்தர்களை விட அதிக ஆசார அநுஷ்டானத்தோடவும் அடக்க ஒடுக்கமாகவும் இவ கோவில்லே நடந்துண்டான்னு சொல்லணும்."
"கோர்ட்டிலே வந்து என்ன சொல்லுவேனோ தெரியாது. ஆனா இதுதான் சத்தியம். நிர்ப்பந்தத்துக்காகவும் பொழைப்புக்காகவும் கோயில் எக்ஸிக்யூடிவ் ஆபீஸர் சொல்றதுக்காகவும் சீமாவையருக்காகவும் பயந்து அவா வக்கீல் என்ன சொல்லிக் குடுக்குறாரோ அதை அங்கே வந்து ஒப்பிக்கிற பாவத்தைப் பண்ணனும் சுவாமி! நீங்க எங்களைத் தப்பாப் புரிஞ்சுக்கப்படாது. எங்களைத் தொந்தரவு பண்ணி நிர்ப்பந்தப்படுத்தறா, வேறு வழி இல்லை."
ஒலிப்பதிவை சப்-ஜட்ஜ் கூர்ந்து கேட்டார். ஏதோ குறித்துக் கொண்டார். தங்களுக்கு எதிராக்ச் 'சதி செய்து விட்ட' தங்கள் குரலையே கேட்டுக் குருக்கள்மார் மூவரும் ஆடு திருடின கள்ளர்கள் போல விழித்தனர். "இது உங்கள் குரல் தானே?" - வேணு மாமா குருக்களைக் கேட்டார். குருக்களில் எவரும் அதை மறுக்க முடியாமல் இருந்தது.
"என் வீட்டிற்கு வந்திருந்தபோது கமலியைப் பற்றி நீங்களாகவே முன்வந்து என்னிடம் இவ்வாறு நல்லபடி கூறியது உண்மைதானே?"
ரெக்கார்டரிலிருந்து ஒலித்தது தங்கள் குரல்தான் என்பதையோ தாங்கள் அவ்வாறு கூறியிருந்ததையோ அவர்கள் மறுக்கவில்லை.
"இந்த ஒலிப்பதிவு குருக்கள் மூவரையும் பயமுறுத்தி எங்கேயோ கடத்திக் கொண்டு போய்ப் பதிவு செய்ததாக இருக்க வேண்டும் என்றும் கொலை மிரட்டலுக்குப் பயந்து அவர்களை இப்படிப் பேசச்சொல்லி பதிவு செய்திருக்கிறார்கள்" என்றும் வழக்குத் தொடுத்திருந்தவர்களின் சார்பில் கூறப்பட்ட வாதத்திற்குப் போதிய ஆதாரமில்லாமற் போகவே நீதிபதி அதை ஏற்கவில்லை. முற்றிலும் எதிர்பாராத விதமாக இந்தக் காஸெட் ரெக்கார்டர் சாட்சியம் வரவே குருக்கள் மூவரும் ஸ்தம்பித்துப் போய்விட்டனர். அதன்பின் அவர்களால் எதையும் மறுக்க முடியவில்லை. மேற்கொண்டு புதிய பொய்களைப் பேசும் திராணியோ அல்லது தெம்போ அப்போது அவர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.
மிகவும் 'டிரமடிக்' ஆக அந்தக் காஸெட் ரெக்கார்டர் சாட்சியத்தை வழக்கில் கொண்டு வந்து அனைவரையும் திணற அடித்திருந்தார் வேணு மாமா. சாட்சிகளும் இதை எதிர்பார்க்கவில்லை. எதிர்த்தரப்பு வக்கீலும் இதை எதிர்பார்க்கவில்லை. தங்களுடைய பலவீனமான ஒரு பேச்சு இப்படிப் பதிவு செய்யப்பெற்று வைக்கப்பட்டிருக்கிறது என்பது சாட்சிகளுக்கே தெரியாமலிருந்ததுதான் அதிலிருந்த இரகசியம். இந்தத் திருப்பம் வழக்கின் போக்கையே மாற்றிவிட்டது. எதிர்த்தரப்பு வக்கீலுக்கு ஏறக்குறைய நம்பிக்கையே போய்விட்டது.
எதிர்த்தரப்பு வக்கீலின் முகம் வெளிறியது. காஸெட் ரெக்கார்டர் சாட்சியம் முடிந்தவுடன் வேணு மாமா தமது கட்சிக்காரர் ஸௌந்தர்ய லஹரி கனகதாரா ஸ்தோத்திரம், பஜ கோவிந்தம் முதலிய நூல்களை பிரெஞ்சு மொழியில் பெயர்த்திருப்பதையும் அதற்காக இந்து மதாசாரியர்களான மகான்களின் ஆசியையும், பாராட்டையும் அவர் பெற்றிருப்பதையும் கூறி ஸ்ரீ மடம் மானேஜர் அது சம்பந்தமாகச் சர்மாவுக்கு எழுதியிருந்த கடிதத்தையும் கோர்ட்டில் தாக்கல் செய்தார்.
ரதி மன்மத சிற்பத்தின் கீழ்க் கமலியும் ரவியும் தழுவி முத்தமிட்டுக் கொண்டிருந்ததாகவும் பஜனை மடம் பத்மநாப ஐயர் முதலியோர் கூறிய சாட்சியத்தை வேணு மாமா மிகச் சுலபமாகவே மறுக்க முடிந்தது. அவர்கள் சொன்ன தேதி நேரமும், வாட்ச்மேன் கமலி செருப்புக் காலுடன் கோவிலுக்குள் நுழைந்ததாகக் கூறிய தேதி நேரமும், குருக்கள் அவள் பிரசாதத்தைக் காலடியில் போட்டு மிதித்ததாகக் கூறிய தேதியும் நேரமும் - ஒன்றாக இருப்பதைச் சுட்டிக்காட்டி "முன் இரு சாட்சிகளும் அந்த நாளில் அதே நேரத்தில் கமலி மட்டும் தான் தனியாகக் கோயிலுக்குள் வந்தாள் என்று கூறும்போது மற்றவர்கள் அவள் ரவியோடு ரதிமன்மத சிற்பத்தின் கீழ் அலங்கோலமாகச் சேர்ந்து நின்றதைப் பார்த்ததாக கூறுவது கட்டுக்கதை. சாட்சியங்கள் முரண்படுகின்றன. அதை எல்லாம் விடப் பெரிய விஷயம் இந்த சாட்சிகள் சிவன் கோவிலுக்குப் போய் வருடக்கணக்கில் ஆகிறதென்றும் கோயிலில் எது எங்கிருக்கிறது என்றே இவர்களுக்கு மறந்து போய்விட்டது என்றும் இவர்கள் சாட்சியத்திலிருந்தே தெரிகிறது. சிவன் கோவில் ரதி மனமத சிற்பம் இரண்டாவது பிரகாரத்தில் இருக்கிறது என்றும் அதன் கீழ் தான் கமலியையும் ரவியையும் ஆபாசமான நிலையில் சேர்ந்து பார்த்ததாகவும் இவர்கள் கூறினார்கள். ஒருவேளை வாய் தவறிச் சொல்கிறார்களோ என்று மறுபடியும் நான் கேட்டேன். மறுபடி கேட்டபோது கூட எல்லோரும் இரண்டாவது பிரகாரத்தில் என்று தான் பதில் சொன்னார்கள். சங்கரமங்கலம் சிவன் கோவிலில் ரதி மன்மதன் சிற்பம் இருக்குமிடம் மூன்றாவது பிரகாரம் என்பது பிரசித்தமான உண்மை. இதிலிருந்தே இவர்கள் கூறிய நிகழ்ச்சி என் கட்சிக்காரரை அவமானப் படுத்த வேண்டுமென்று திட்டமிட்டு இட்டுக் கட்டியது என்பது தெரிகிறது" - என்று வேணு மாமா கூறியபோது, "நிகழ்ச்சிக்கு இடமான பிரகாரம் இரண்டாவதா, மூன்றாவதா என்பதல்ல இங்கு வாதம். சம்பந்தப்பட்டவர்கள் கோவிலுக்குள் அநாசாரமாகவும் ஆபாசமாகவும் நடந்து கொண்டார்கள் என்பதுதான் முக்கியம்" - என்று குறுக்கிட்டார் எதிர்த்தரப்பு வக்கீல். அதற்குமேல் பேச எதுவுமில்லாதது போல் அமர்ந்துவிட்டார் அவர்.
மேற்கொண்டு ஏதாவது சொல்ல வேண்டுமா என்று எதிர்த்தரப்பு வக்கீலிடம் கேட்கப்பட்டது. பேருக்குப் பழைய குற்றச் சாட்டுக்கள் சிலவற்றையே திரும்பக் கூறிவிட்டுக் கோவிலில் சம்ப்ரோட்சணம் விரைவில் நடக்கும்படி உத்தரவாக வேண்டுமென்று மீண்டும் கோரினார் எதிர்த்தரப்பு வக்கீல்.
தீர்ப்புக்குரிய நாளாக ஒரு வாரம் கழித்து ஒரு நாளைக் குறிப்பிட்டுக் கூறினார் நீதிபதி.
---------------
அத்தியாயம் 29
"கோவில் வழிபாடு - முதலிய பல உடனடியான பொது நன்மை சம்பந்தப்பட்ட அவசர விஷயங்கள் தீர்ப்பைப் பொறுத்துக் காத்திருப்பதால் ஒரு வாரம் என்பது மிகவும் அதிகமான காலதாமதமாக இருக்குமோ?" என்று கருத்துத் தெரிவித்தார் எதிர்த்தரப்பு வக்கீல். அவருடைய கோரிக்கைக்குப் பின் அடுத்த மூன்றாவது நாளே தீர்ப்புக் கூறுவதாக அறிவித்தார் நீதிபதி.
அன்று அவ்வளவில் கோர்ட்டு கலைந்தது. கோர்ட் வாசலில் கூடி நின்று கொண்டிருந்த அர்ச்சகர்கள் வேணு மாமா வெளியே வந்ததும், அவரருகே வந்து சூழ்ந்து கொண்டனர்.
"என்ன சுவாமீ! ஏதோ நம்பிக்கையிலே உம்ம கிட்டத் தனியாச் சொன்னதைப் பதிவு பண்ணிக் கோர்ட்டிலேயே போட்டுக் காட்டி மானத்தை வாங்கிட்டேளே? இப்படிப் பண்ணலாமா நீங்க?" - என்று கைலாசநாதக் குருக்கள் அவரிடம் பரிதாபமான குரலில் கேட்டார்.
"பொய் சொல்றவாளை எங்கே வேணுமானாலும் எப்பிடி வேணுமானாலும் மானத்தை வாங்கலாம் சுவாமி! அதுலே தப்பே இல்லே" - என்று தாட்சண்யமே இல்லாமல் கடுமையாக அவருக்குப் பதில் சொன்னார் வேணு மாமா. அர்ச்சகர்கள் அந்தக் கடுமையைத் தாங்கமுடியாமல் அவரை விட்டு விலகிச் சென்றனர்.
"பொய் சொல்றவாளுக்கு அவா சொந்த வாயும் நாக்கும் கூட ஒத்துழைக்காது. அந்த வாட்ச்மேன் கமலி புரியாத பாஷையில் பேசினாள்னு முதல்லே சொல்லிட்டு அப்புறம் தடுமாறிப் போய்த் தமிழிலேதான் பேசினாள்னு உளறினான் பாருங்கோ. பஜனை மடம் பத்மநாப ஐயரும் மத்தவாளும் என்னையும் கமலியையும் ரதி மனமதச் சிற்பத்தின் கீழே ஆபாசமான நிலையிலே பார்த்ததாகப் புளுகிட்டு ரதி மன்மத சிற்பம் இரண்டாவது பிரகாரத்திலே இருக்குன்னு சாதிச்சானே? பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டாமோ? நேத்து விசாரணையோடு விட்டிருந்தாலும் பரவாயில்லே இன்னிக்கு அவா வக்கீல் தயார்ப் பண்ணிக் கொண்டு வந்துவிட்ட அத்தனை சாட்சிகளும் நன்னா அசடு வழிஞ்சுட்டா" - என்றான் ரவி.
"அது மட்டுமில்லேடா! கடவுள் மேலே ஆணையா நெஜம் பேசறோம்னு பிரமாணம் பண்ணிட்டுப் பொய் புளுகின இந்தப் பக்த சிகாமணிகளைவிட மனசாட்சி மேலே ஆணையா நெஜம் பேசறே'ன்னு உள்ளதை உள்ளபடியே சொன்ன அந்த நாஸ்திகன் எத்தனையோ சிலாக்கியமானவன்" என்று இறைமுடிமணியைப் புகழ்ந்தார் சர்மா.
அன்று கோர்ட்டில் பஜனை மடம் பத்மநாய ஐயர் முதலியவர்கள் தங்கள் வயதுக்கும் படிப்புக்கும் சாஸ்திர ஞானத்துக்கும் கொஞ்சங்கூடப் பொருத்தமில்லாமல் ஆபாசமாக இட்டுக் கட்டிப் புளுகிய புளுகு சர்மாவை மிகமிக மனவேதனைப் படச் செய்திருந்தது. தன் மேலுள்ள விரோதம் ஒன்றையே நினைத்துத் தங்களைச் சிறுமைப்படுத்திக் கொள்ளக் கூட அவர்கள் தயங்கவில்லை என்பதும் அவருக்குப் புரிந்தது. கோர்ட் வாசலிலிருந்து வீடு திரும்பக் காரில் புறப்பட்டார்கள் அவர்கள்.
"நுணலும் தன் வாயால் கெடும்னு வசனம் சொல்வாளே சர்மா! அதுபோல அவா நிர்ப்பந்தப்படுத்தி இங்கே கொண்டு வந்து நிறுத்தின சாட்சியங்களே அவாளை நன்னாக் காமிச்சுக் குடுத்துடுத்து" என்றார் வேணு மாமா. கமலி எதுவும் பேசாமல் காரில் மௌனமாக அமர்ந்திருந்தாள்.
"இதை எல்லாம் பார்த்துட்டு எங்க தேசத்தைப் பத்தியே தப்பா நினைச்சுக்காதேம்மா! உயர்ந்த விஷயங்களும் சாஸ்திரங்களும் தத்துவங்களும் தோன்றின அளவு உயர்ந்த மனிதர்கள் அதிகம் தோன்றாததுதான் எங்களோட குறை. படிக்கறதுக்கும் வாழறதுக்கும் சம்பந்தமில்லாமப் போனதுதான் இன்னிக்கு இந்த தேசத்தோட கோளாறு" என்று உருக்கமான குரலில் மன்னிப்புக் கேட்பதுபோல் கமலியைப் பார்த்துச் சொன்னார் சர்மா.
"அறியாமையால் மனிதர்களில் யாரோ சிலர் செய்யும் தவறுகளுக்குத் தேசம் எப்படிப் பொறுப்பாகும்? தேசத்தைப் பற்றித் தப்பாக நான் ஏன் நினைக்க வேண்டும்?" - கமலியே பதிலுக்கு அவரைக் கேட்டதிலிருந்து தேசத்தைப் பற்றி அவள் தவறாக எதுவும் நினைக்கவில்லை என்று தெரிந்தது.
*****
கோர்ட் வழக்கு என்று மற்றவர்கள் அலைந்து கொண்டிருந்த சமயத்தில் காமாட்சியம்மாளின் உடல் நிலை மேலும் மோசமாகி இருந்தது. குமாரும் பார்வதியும்தான் வீட்டில் அம்மாவைக் கவனித்தும் கொண்டிருந்தார்கள். ஒரு கோபத்துடனும் முரண்டுடனும் மற்றவர்களைத் தன்னருகே அண்டவிடாமல் வீம்பு பிடித்தாள் அவள். சர்மா தன்னைக் கலந்து கொள்ளாமலும், பொருட்படுத்தாமலுமே ரவிக்கும் கமலிக்கும் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்கிறார் என்று அறிந்ததில் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்து காமாட்சியம்மாள் மீளவே இல்லை. அன்றிலிருந்து படுத்த படுக்கையாகி விட்டாள். சர்மாவையோ மற்றவர்களையோ பொருட்படுத்தக் கூடாதென்ற முரண்டில் தன் பிறந்தகத்து ஊருக்குக் குமாரைப் பஸ்ஸில் புறப்பட்டுப் போகச் சொல்லி முன்பு சங்கரமங்கலத்தில் பிரம்மோத்ஸவ சமயத்தில் வந்து தங்கள் வீட்டில் தங்கிவிட்டுச் சர்மாவுடன் கோபித்துக் கொண்டு வேறு வீட்டுக்குப் போய்த் தங்கிய தன் பெரியம்மாப் பாட்டியை அழைத்து வரச் செய்திருந்தாள் காமாட்சியம்மாள். கமலியே வேணு மாமா வீட்டுக்குப் போயிருந்ததனால் பாட்டி தன்னோடு வீட்டில் தங்க ஆட்சேபணை எதுவும் இராதென்று எண்ணித்தான் காமாட்சியம்மாள் அவளை வரவழைத்திருந்தாள். பத்து அரைத்துப் போடுவதற்கென்றும் நாட்டு வைத்தியம் சொல்வதற்கென்றும் பக்கத்து வீட்டு முத்து மீனாட்சிப் பாட்டி வேறு அடிக்கடி வந்து போய்க் கொண்டிருந்தாள்.
'அப்பாவைப் பற்றியோ, ரவி அண்ணாவைப் பற்றியோ, கமலியைப் பற்றியோ, பேசினாலே அம்மா எரிந்து விழுகிறாள், கோபப்படுகிறாள் - அவளுக்கு, அதனால் உடம்புக்கு அதிகமாகி விடுகிறது' என்று தெரிந்து குமாரும் பாருவும் அவர்களைப் பற்றியெல்லாம் அம்மாவிடம் பிரஸ்தாபிப்பதையே தவிர்த்துக் கொண்டிருந்தார்கள். கூப்பாடுகளும் வெளிப்படையான சண்டை சச்சரவும் இல்லை என்றாலும் வீட்டில் சண்டையின் அறிகுறியான ஒரு வேண்டத்தகாத அமைதி தொடர்ந்து நிலவிக் கொண்டுதானிருந்தது.
ஒத்தாசைக்காகக் குமார் பெரியம்மாவைக் கிராமத்திலிருந்து அழைத்துக் கொண்டு வந்து விட்ட தினத்தன்று மாலையிலேயே அந்தப் பெரியம்மா காமாட்சியம்மாளிடம் தற்செயலாகக் கமலியைப் பற்றி விசாரித்திருந்தாள்.
"ஏண்டீ காமு! இந்தாத்திலே மின்னே நா வந்திருக்கிறப்போ ஒரு வெள்ளைக்காரி உன் புள்ளையோட வந்து தங்கியிருந்தாளே அவ எங்கேடீ? ஊருக்குத் திரும்பிப் புறப்பட்டுப் போயிட்டாளா? அவளாப் போனாளா இல்லை நீங்களே போகச் சொல்லிட்டேளா?"
காமாட்சியம்மாள் முதலில் இதற்குப் பதிலே சொல்லவில்லை. ஒன்றுமே காதில் வாங்கிக் கொள்ளாதது போலப் பேசாமல் இருந்துவிட்டாள். ஆனால் கிழவி விடுகிற வழியாயில்லை. தொணதொணத்தாள்.
"இப்போ இதை ஏன் விசாரிக்கிறேன் தெரியுமோடீ காமு? ஒரு சமாசாரம் கேழ்வைப் பட்டேண்டீ! நம்மூர் மனுஷா கொஞ்சப்பேர் பெரியவாளைப் பார்க்கப் புறப்பட்டுப் போயிருந்தா, அவா திரும்ப ஊருக்கு வந்து சொன்னா: அந்த வெள்ளைக்காரியும் உன் புள்ளையுமாப் பெரியவாளைப் பார்க்க அங்கே வந்திருந்துதுகளாம். அந்த வெள்ளைக்காரி ஸௌந்தரிய லஹரி, கனகதாரா ஸ்தோத்திரம், பஜகோவிந்தம்லாம் பெரியவா மின்னாடி ஸ்பஷ்டமா பாடினதோட மட்டுமில்லாமே அவா பாஷையிலேயும் மொழி பெயர்த்துச் சொன்னாளாம். பெரியவா ரொம்பச் சந்தோஷமாக் கேட்டுண்டிருந்தாளாம். அவர் மௌனம்கறதாலே ஒண்ணுமே பேசலையாம். ஆனா ரொம்பப் பிரியமாக் கேட்டதோட மட்டுமில்லாமத் திருப்தியோட இவாளை ஆசீர்வாதம் பண்ணி அனுப்பிச்சார்னு அதைப் பார்த்துட்டு வந்து ஊர்லே மனுஷா ஒரேயடியாக் கொண்டாடறா. ஊர் முழுக்க இதே பேச்சுத்தாண்டி. நேக்கே ஆச்சரியமாப் போச்சு, நம்பறதுக்கும் முடியலே. நம்பாமே இருக்கறத்துக்கும் முடியலே. ஒரு விசேஷமில்லாதவாளை அவா அப்பிடிப் பிரியமா உட்கார வச்சுண்டு பேசறதும் வழக்கமில்லே. ரெண்டு வருஷத்துக்கு மின்னாடி இந்தூர்ச் சீமாவையர் மடத்துச் சொத்தைக் கையாடிப்பிட்டுப் பெரியவாளைப் பார்த்துத் "தாராள மனசோட க்ஷமிக்கணும்னு" போய் நின்னப்போ அவர் மௌனமாயில்லாமே இருந்தும் கூட ஒரு வார்த்தை கூடப் பேசாமல் "போயிடு!"ன்னு கையை மட்டும் மறிச்சு அசைச்சுப் போகச் சொல்லிட்டாராம். அப்பேர்க்கொத்தவர் இவாகிட்ட இப்படி பிரியமா இருந்தார்னா அதுலே என்னமோ விசேஷம் இருக்கணும்டீ காமு..."
"எங்கிட்டயும் வந்து சொன்னா... ஆனா நான் அதை நம்பலே பெரியம்மா! வேற யாரும் சொல்லலே... இந்தப் பிராமணரே தான் சொன்னார். என் மனசை மாத்தறதுக்காகக் கதை கட்டி அளந்து விடறார்னுதான் நெனைச்சேன். 'மடத்து மானேஜரே லெட்டர் போட்டிருக்கார்... படிச்சுக்காட்டறேன்... கேளு'ன்னார், அதையும் நான் கேட்கல்லே."
"பொய்யாயிருக்காதுடீ! நடந்திருக்கும்னு தான் தோண்றது. நம்மூர் மனுஷா அத்தனை பேர் வந்து வாய் ஓயாமக் கொண்டாடறாளே?... பொய்யாயிருந்தா அப்பிடிக் கொண்டாடுவாளோடீ?"
காமாட்சியம்மாள் மௌனத்தில் ஆழ்ந்தாள். மேற்கொண்டு பெரியம்மாளிடம் என்ன பேசுவதென்றே அவளுக்குத் தெரியவில்லை. கமலிக்கும் ரவிக்கும் கலியாணம் ஏற்பாடாகியிருப்பது முதல் சகலத்தையும் தெரிந்து கொண்டுதான் பெரியம்மா தன்னிடம் இப்படிப் பேச்சுக் கொடுத்து ஆழம் பார்க்கிறாளா, அல்லது சாதாரணமாகத் தனக்குத் தெரிந்திருப்பதைத் தெரிவிக்கிறாளா என்று காமாட்சியம்மாளால் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது அப்போது. பெரியம்மா அதற்குள் தன் பழைய கேள்வியையே இரண்டாம் முறையாகத் திரும்பவும் கேட்டுவிட்டாள்.
"என்னடீ! பதிலே சொல்ல மாட்டேங்கறே? அந்த வெள்ளைக்காரி இங்கே இருக்காளோ? ஊருக்குத் திரும்பிப் போயாச்சோ? உன்னைத் தாண்டீ கேழ்க்கறேன்..."
"இன்னம் போகல்லே பெரியம்மா! வடக்குத் தெருவிலே வேணு மாமா ஆத்திலே போய்த் தங்கியிருக்கா. அந்த மாமாவோட பொண் வசந்திக்கும் இவளுக்கும் ரொம்ப சிநேகிதம்! பம்பாயிலேருந்து அவளும் பொறப்பட்டு வந்திருக்கா. எங்கேயாவது போகட்டும். இப்போ இங்கே தொல்லையில்லாம நிம்மதியாயிருக்கு" - இந்த உரையாடல் இதற்கு மேல் நீளாமல் கவனித்துக் கொள்ளவே காமாட்சியம்மாள் மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது. ஆனால் தொடர்ந்து பெரியம்மாவை அவளால் அப்படித் தவிர்த்துவிட முடியவில்லை.
இரண்டு நாள் கழித்துப் பக்கத்து வீட்டு முத்து மீனாட்சிப் பாட்டி, "ஏண்டி காமு! நீ எங்கிட்ட ஒரு வார்த்தை கூடச் சொல்லலியேடீ? கோர்ட்டிலே கேஸு நடக்கறதாமே! ஊரெல்லாம் பேசிக்கிறாளே? உங்காத்துக்காரர் சாட்சி சொன்னாராம். உன் பிள்ளை சாட்சி சொன்னானாம்" - என்று பெரியம்மாவையும் வைத்துக் கொண்டு பேச்சை ஆரம்பித்தபோது தவிர்க்க முடியாமல் கமலியைப் பற்றிய பேச்சு வந்து விட்டது. காமாட்சியம்மாளே பாட்டியிடம் அதுபற்றி விசாரித்தாள்: "அது என்ன கேஸ் பாட்டீ! எனக்கொண்ணுமே தெரியாது. இப்போ இந்தாத்திலே இதெல்லாம் யாரும் எங்காதிலே போடறதும் இல்லே..."
"என்னமோ அந்த வெள்ளைக்காரப் பொண்ணு நம்ம கோவில்லே எல்லாம் நுழைஞ்சதாலே கோவிலோட சாந்நித்யம் கெட்டுப் போச்சு, மறுபடி கும்பாபிஷேகம் பண்ணியாகணும்னு ஊர்க்காரா பணம் கேட்டுக் கேஸ் போட்டிருக்காளாமே? அது செருப்புக் காலோட கோவிலுக்குள்ளே நுழைஞ்சுதாமே?"
"மத்தது எல்லாம் எப்பிடியோ எனக்குத் தெரியாது பாட்டீ? ஆனாக் கமலி செருப்புக் காலோட கோவில்லே நுழைஞ்சாங்கறதை நான் நம்பலே. இந்தாத்திலே அந்தப் பொண் தங்கியிருந்தப்போ நான் கவனிச்சவரை சுத்தம் ஆசார அநுஷ்டானத்திலே அவமேலே அப்பழுக்குச் சொல்ல முடியாது பாட்டீ! நம்ம மனுஷா இல்லே, நம்ம தேசம் இல்லே, நம்ம நிறம் இல்லேங்கறதைத் தவிர மரியாதை அடக்க ஒடுக்கம் - பணிவு, பவ்யம் இதிலெல்லாம் குத்தம் சொல்ல முடியாது."
இதைக் கேட்டு முத்துமீனாட்சிப் பாட்டியே தன் செவிகளை நம்ப முடியாமல் பேசுவது காமாட்சியம்மாள் தானா என வியந்து சந்தேகத்தோடு அவள் முகத்தைப் பார்த்தாள்.
"ஏன் பாட்டி அப்பிடிக் கண்ணை இடுக்கிண்டு என்னை என்னமோ மாதிரி பார்க்கறேள்? நான் இப்படிப் பேசறேன்னு சந்தேகப்படறேளா? நமக்கு வேண்டாதவங்கறதுக்காக ஒத்தரைப் பத்தி அபாண்டமாப் பொய்யும் புளுகும் பேசிடறது சரியில்லே. கமலி மேலே நேக்கிருக்கிற மனஸ்தாபம் வேறே. அவளும் ரவியும் போயிருக்கச்சே பெரியவா அவ ஸ்லோகம் சொல்லிக் கேட்டுத் திருப்தியா கேள்விப்பட்டுட்டு இங்கே வந்து சொல்றா. அதை நாம கொறை சொல்லலாமோ? ஒருத்தரை நமக்குப் பிடிக்கல்லேன்னா இல்லாததையும் பொல்லாததையும் எல்லாம் சொல்லிக் கோர்ட்டிலே போட்டு மானத்தை வாங்கறது இந்தூர்க்காராளுக்கு ஒரு வழக்கமாப் போச்சு-"
"கோர்ட்டிலே அந்த வடக்குத் தெரு வேணு கோபாலன் தான் கமலிக்கும் உங்காத்துக்காரருக்கும் வக்கீலாம். 'கமலி பத்தரைமாத்துத் தங்கம். சாட்சாத் சரஸ்வதியோட அவதாரம்னு' வேணுகோபாலன் வீட்டிலே போய்ப் பேசிப்பிட்டு வஸ்திரதானம் வாங்கிண்டு கோர்ட்டிலே போய், 'அவ கோவில் ஆசாரத்தையே கெடுத்துட்டா'ள்னு நேர் மாறாகச் சாட்சி சொன்னாராம் கைலாசநாதக் குருக்கள். அவர் தன்னாத்திலே வந்து சொன்னதை இரகசியமா டேப் ரெக்கார்டுலே பதிவு பண்ணி வச்சுண்டிருந்து கோர்ட்டிலே ஜட்ஜுக்குப் போட்டுக் காமிச்சிப் பொய்ச்சாட்சி'ன்னு வாதாடி குருக்களோட மானத்தை வாங்கிப்பிட்டாராம் அந்த வேணுகோபாலன்."
"பின்னே என்ன பாட்டீ? அத்தனை வயசானவர், கோவில்லே சுவாமியைத் தொட்டுப் பூஜை புனஸ்காரம்லாம் பண்றவர், வாய் கூசாமக் கூண்டிலே ஏறிச் சத்தியம் பண்ணிட்டுப் பொய் சொல்லலாமோ?"
"பொய் சொன்னதோட மட்டுமில்லாமே கமலியும் ரவியும் கோவில்லேயே என்னமோ அசிங்கமா நடந்துண்டான்னு வேற கதை கட்டி விட்டாளாம்டீ காமு!"
"கேஸ் எப்பிடி ஆகும்னு ஊர்ல பேசிக்கிறா பாட்டி?"
"உனக்கெதுக்குடி அம்மா இப்போ அந்தக் கவலை? ஏற்கெனவே அரை உடம்பாப் போயிட்டே, கிழிச்சுப் போட்ட நாராப் படுத்த படுக்கையா இருக்கே. இந்தக் கவலை வேற எதுக்கு? நோக்கு இருக்கற கவலை போறாதோடீ?"
"கவலையில்லே... தெரிஞ்சுக்கலாமேன்னுதான் கேக்கறேன்."-
"வேணுகோபாலனும் உங்காத்துக்காரரும் கேஸைப் பத்தியே கவலைப்படாமே தங்களுக்கு ஜெயிச்சுடும்கற நம்பிக்கையோட கலியாண காரியங்களைக் கவனிச்சுண்டிருக்காளாம். இன்னிக்குக் கூட வேணுகோபாலனாத்துலே சுமங்கலிப் பொண்டுகள் பிரார்த்தனையாம். அவரோட சொந்தப் பொண்ணோட கலியாணத்துக்கு முந்தி எப்பிடி சுமங்கலிப் பொண்கள் பிரார்த்தனை பண்ணறதுண்டோ அப்பிடியே இந்த வெள்ளைக்காரி கலியாணத்துக்கும் கூடப் பண்ணியாறதாம்..."
இந்த உரையாடலை இதுவரை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த காமாட்சியம்மாளின் பெரியம்மா இப்போது மெல்லக் குறுக்கிட்டாள்:
"என்னடீ காமு! பாட்டி ஏதோ கலியாணம்கறாளே? என்னதுடீ?"
முதலில் காமாட்சியம்மாள் சிறிது தயங்கினாள். அப்புறம் எதையும் மறைப்பதைவிட உண்மை பேசுவது நல்லதென்று, பெரியம்மாவிடம் எல்லா விவரமும் சொல்லித் தன் மனஸ்தாபத்தையும் கூறிவிட்டாள். இந்தக் கலியாண ஏற்பாடு காரணமாகவே தனக்கும் தன் கணவருக்கும் பேச்சு வார்த்தை இல்லாமற் போய்விட்டது என்றும் கூறினாள் காமாட்சியம்மாள்.
"கலி முத்திப் போச்சு! அதுனாலேதான் இப்பிடி எல்லாம் நடக்கறது டீ" - என்றாள் பெரியம்மா.
காமாட்சியம்மாள் அதற்குப் பதில் எதுவும் சொல்லவில்லை.
"உன் பிள்ளை ரவிக்குத்தான் புத்தி இப்பிடிப் போச்சுன்னா சகல் சாஸ்திரமும் வேதமும் படிச்ச உங்காத்துக்காரருக்கு ஏண்டீ இப்பிடிப் புத்தி போச்சு?"
"... விட்டுத் தள்ளுங்கோ... இனிமே அதைப் பத்தி நாம பேசிப் பிரயோஜனமில்லே பெரியம்மா, நாம் சொல்லி இங்கே யாரும் கேக்கறவா இல்லே..."
இதைச் சொல்லும்போது காமாட்சியம்மாளுக்குத் தொண்டை கமறியது, குரல் கரகரத்து நைந்தது. உணர்வும் சொற்களும் கலந்து குமுறின. கண்களில் ஈரம் பளபளத்தது.
"வியாகரண சிரோமணி குப்புசாமி சர்மாவோட வம்சத்திலே இப்பிடி ஒண்ணு நடக்கணும்னு தலையிலே எழுதி இருக்கு... கிரகசாரம் தான்... போ..."
-காமாட்சியம்மாள் தன் முகம் பெரியம்மாவுக்கும் முத்து மீனாட்சிப் பாட்டிக்கும் நேரே தெரியாதபடி படுக்கையில் மறுபுறம் ஒருக்களித்தாற் போலத் திரும்பிப் படுத்துக் கொண்டாள். அவள் கண்களில் நீர் வழிந்தோடியது. ரவியின் கலியாணத்தைப் பற்றி அவள் வருடக்கணக்காகக் கட்டி வைத்திருந்த கோட்டைகள் தகர்ந்த வேதனையில் மெல்ல அழத் தொடங்கியிருந்தாள் அவள்.
"கஞ்சி சாப்பிடறயாடீ? வெறும் வயத்தோட எத்தனை நாழிதான் இருப்பே?"
"வேண்டாம் பெரியம்மா! பசியே தோணலை. மந்தமா இருக்கு! சித்தே நாழி கண் மூடறேன். ரொம்ப அசதியா இருக்கு."
அவர்களோடு சம்பாஷணையைத் தவிர்க்க விரும்பிக் காமாட்சியம்மாள் பொய்யாகக் கற்பித்துக் கொண்ட தூக்கம் அது.
*****
நாளைக் காலையில் கேஸ் தீர்ப்பு என்றால் முதல் நாள் முழுவதும் சர்மாவும், வேணு மாமாவும் பரஸ்பரம் வேண்டியவர்களைப் பார்த்துக் கலியாணத்திற்கு அழைப்பதும் பத்திரிகை கொடுப்பதுமாக இருந்தனர். கோர்ட்டைப் பற்றியோ கேஸைப் பற்றியோ, தீர்ப்பைப் பற்றியோ கவலையில்லாமல் அலைந்து கொண்டிருந்தார்கள் அவர்கள். சென்னையிலிருந்து ஒரு வாரப் பத்திரிகை ஆசிரியர் இந்த விநோதமான கலியாணத்தை - நான்கு நாளும் ஒரு நிகழ்ச்சி கூட விடாமல் புகைப்படம் எடுக்க வரலாமா என்று அனுமதி கேட்டு எழுதியிருந்தார். 'ஆட்சேபணையில்லை; வரலாம்' - என்று பதில் எழுதியவுடன், அந்தப் பத்திரிகையாசிரியருக்கு ஒரு திருமண அழைப்பிதழையும் தபாலில் அனுப்பி வைத்தார் வேணு மாமா. தினசரிப் பத்திரிகைகளில் கோர்ட் செய்தியும், கேஸ் நடப்பது பற்றிய செய்தியும், போதாதென்று ஒரு பிராம்மண இளைஞருக்கும் ஒரு பிரெஞ்சுக்காரக் கோடீசுவரரின் மகளுக்கும் சாஸ்திர முறைப்படி, நான்கு நாள் நடக்கப் போகும் திருமணம் பற்றிய செய்தியும் பளிச்சென்று வெளி வந்து தடபுடல் பட்டுக் கொண்டிருந்தது. அது ஒரு பரபரப்பான செய்தியாகிப் பரவிவிட்டதால் எங்கும் அதைப் பற்றிய பேச்சாகவேயிருந்தது.
சர்மா இறைமுடிமணிக்குக் கலியாணப் பத்திரிகை கொடுக்க அவருடைய விறகுக்கடைக்குப் போனபோது, அவர் அப்போது தான் கிடைத்த தமது இயக்க நாளேடான 'சீர்திருத்தச் செய்தி'யைத் தபாலிலிருந்து தனியே பிரித்து எடுத்துப் படித்துக் கொண்டிருந்தார். 'சீர்த்திருத்தச் செய்தி' ஒரே பிரதிதான் தபாலில் சங்கரமங்கலத்துக்கு வந்து கொண்டிருந்தது. இருபத்தைந்து ஆண்டுகளாக அதற்குச் சந்தாக்கட்டி அதை விடாமல் வரவழைத்துக் கொண்டிருந்தார் இறைமுடிமணி. அதிகம் கடைகளுக்கோ நியூஸ் ஸ்டால்களுக்கோ வந்து தொங்காத தினசரி அது. அதிலும் அந்த அதிசயத் திருமணத்தைப் பற்றி அக்ரகாரத்திலும் ஓர் அதிசயம் - என்ற தலைப்பில் செய்தி பிரசுரமாகியிருந்தது. இறைமுடிமணி, சிரித்தபடியே அதை சர்மாவிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னார். சர்மா அதைப் படித்துவிட்டு இறைமுடிமணியிடமே திருப்பிக் கொடுத்தார். திருமண அழைப்பிதழை வாங்கிக் கொண்ட இறைமுடிமணி, "வேறே ஒரு கோர்ட்டில் சீமாவையர் எங்க மேலே போட்ட கேஸ் நடந்துக்கிட்டிருக்கு. அந்த பொண்ணு மலர்க்கொடியை உங்க சீமாவையரு கையிலேருந்து காப்பாத்துறதுக்காக அவரு மாந்தோப்பில் நாங்க நுழையப் போக தோப்பிலே திருட நுழைஞ்சதாக எங்க மேலே கேஸ் போட்டுக் கோர்ட்டிலே நடக்குது விசுவேசுவரன்! நானும் எங்க ஆளுங்களும் ஜெயிலுக்குப் போயிடணும்னு சீமாவையருக்கு கொள்ளை ஆசைப்பா. அவரு ஆசைப்படி நடந்து நான் ஜெயிலுக்குப் போகாமே வெளியிலே இருந்தேன்னாக் கலியாணத்துக்குக் கட்டாயமா வர்றேன்ப்பா" என்றார்.
"அதெல்லாம் நடக்காதுப்பா... ஜெயிலுக்கெல்லாம் நீ போகமாட்டே. கலியாணத்துக்குக் கட்டாயம் வந்துடு தேசிகாமணீ!" என்று வற்புறுத்திச் சொல்லிவிட்டு வந்தார் சர்மா. மறுநாள் விடிந்தது. சப்கோர்ட்டில் கேஸ் நடந்தபோது கூடியிருந்ததைவிட அதிகக் கூட்டம் தீர்ப்பைக் கேட்கக் கூடி விட்டது. அன்று கமலி, சர்மா ஆகியோரின் மேல் உள்ளூர் ஆஸ்திகர்கள் போட்டிருந்த வழக்கின் மேல் தீர்ப்புக் கூறப்பட இருந்தது. கமலி வசந்தி, ரவி, சர்மா, வேணு மாமா, இறைமுடிமணி எல்லோருமே நீதி மன்றத்துக்கு வந்திருந்தார்கள். சீமாவையர் முதலிய பிரமுகர்களும் வந்திருந்தார்கள். பத்திரிகை நிருபர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்ததற்குக் காரணம் ஏற்கெனவே எல்லாப் பத்திரிகைகளும் இந்த வழக்கைப் பற்றிய செய்திகளை முக்கியத்துவம் கொடுத்துப் பிரசுரித்திருந்ததுதான். தீர்ப்பை மக்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இது பற்றி எங்கும் பரபரப்பான பேச்சு இருந்தது.
நீதிபதி தமது இருக்கையில் வந்து அமர்ந்ததும் கோர்ட் அமைதியடைந்து நிசப்தமாகியது. நிறையப் பக்கங்களில் எழுதப்பட்டிருந்த அந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி படிக்கத் தொடங்கினார். முதற் சில பக்கங்களைப் படித்து முடிக்கும்வரை அதிலிருந்து யாரும் வழக்கின் முடிவைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்து மதத்தின் நிலைகள் பழக்க வழக்கங்கள், அதில் மத மாற்றத்துக்கான சாஸ்திர பூர்வமான - அதிகார பூர்வமான ஒரு சடங்கு என எதுவும் இல்லாமலிருப்பது ஆகியவை பற்றி முதலில் விரிவாக விவரிக்கப்பட்டிருந்தது. நீதிபதி தொடர்ந்து தம்முடைய தீர்ப்பைப் படித்துக் கொண்டிருந்தார்.
--------------
அத்தியாயம் 30
"இந்து மதத்தைச் சேர்ந்தவர்களே அதை வளர்ப்பதற்கும், வளர்ப்பதற்குத் துணை செய்கிறவர்களுக்கும் தடையாக இருப்பது போன்ற நிகழ்ச்சிகளைப் பொது வாழ்வில் இங்கே பல சமயங்களில் பார்க்க முடிகிறது. சுயநலமும், பொறாமையும் பிறர் நன்றாக இருக்கப் பொறாத இயல்புமுள்ள தனி மனிதர்களால் ஒரு கூட்டமோ, ஒரு சமூகமோ மட்டுமல்லாமல் ஒரு மதமே கூட வளர்ச்சி தடைபட்டுக் குன்றிப் போக முடியுமோ என்று கூடத் தோன்றுகிறது. கிறிஸ்தவ மதத்திற்கும், இஸ்லாம் மதத்திற்கும் இருப்பது போல பல நாடுகள், பலவகை மக்கள் என்றில்லாமல் இந்தியாவிலும் அண்டை நாடாகிய நேபாளத்திலும் மட்டுமே பெரும்பான்மையாக இருக்கும் இந்து மதம் உண்மையான பக்தி சிரத்தையோடு தன்னை அணுகி அனுசரிபவர்களுக்கு எல்லாம் தாராளமாகத் தன்னுள் இடமளிப்பதுதான். முறையான திட்டமிடப்பட்ட சமயம் அங்கீகரித்த 'கன்வர்ஷன்' அல்லது 'மாற்றி ஏற்றுக்கொள்ளுதல்' என்பதின்றி அநுசரிப்பவர்களும், சுவீகரித்துக் கொள்ளுபவர்களும் கூட உள்ளே வருமாறு அனுமதிக்கும் பரந்த பண்பு இந்துக்களுக்கும் இந்தியாவுக்கும் புதியது இல்லை. நீண்ட நாட்களாக வழக்கமான ஒன்றுதான். அன்னி பெஸண்ட் முதல் பலர் இப்படி இந்தியக் கலாசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஏராளமான ஐரோப்பியர்கள் இப்படிப் பக்திசிரத்தையோடு இந்து தர்மத்தை அநுசரிப்பவர்களாக மாறி இருந்திருக்கிறார்கள். இதற்குப் பல முன் மாதிரிகள் காட்டலாம் (சில முன்மாதிரிகள் நீதிபதியால் விவரிக்கப்பட்டன). இங்கே இந்த வழக்கின் சாட்சியங்களைக் கொண்டு கவனிக்கும் போது குற்றம் என்பதாகச் சாட்டியிருப்பவற்றுக்கு நிரூபணமில்லாததோடு அவை வேண்டுமென்றே வலிந்து தயாரிக்கப்பட்டவையாகத் தோன்றுகின்றன. கமலி என்ற பிரெஞ்சுப் பெண்மணி இந்துவாகவே தோன்றி வாழ்ந்து வருவதற்கான ஆதாரங்கள் நியாயமாகவும் செம்மையாகவும் உள்ளதுடன் சத்திய பூர்வமாகவும் தென்படுகின்றன. அவள் நுழைந்ததனால் ஆலயங்கள் பரிசுத்தம் கெட்டுவிட்டன என்று ஆட்சேபிப்பவர்களின் பரிசுத்தம் தான் இங்கே சந்தேகத்துக்கு இடமானதாகத் தெரிகிறது.
சொல்லப்போனால் சாட்சியங்களிலிருந்தும், விவரங்களிலிருந்தும் உள்ளூர் இந்துக்களை விட அதிக பக்தி சிரத்தையுடனும், முறையுடனும், தூய்மையுடனும் அவள் இந்துக் கோவில்களில் சென்று வழிபட்டிருப்பதாகத் தெரிகிறது. ஆகவே கோவில்களில் எந்தப் பரிசுத்தமும் எந்தப் புனிதத் தன்மையும் இதனால் கெட்டுவிடவில்லை. இக் காரணங்களால் இவ் வழக்கை நான் தள்ளுபடி செய்கிறேன்" - என்று தீர்ப்பு வாசித்து முடிக்கப்பட்டது. தீர்ப்பில் பிரதிவாதிகளாகிய கமலி சர்மா முதலியோருக்கு வாதிகள் உரிய செலவுத் தொகையைத் தரவேண்டும் என்று கூறப்பட்டிருந்தது - எதிர்பார்த்ததுதான் என்றாலும் வேணு மாமா உற்சாகமாக முகமலர்ந்து, "பார்த்தீரா? இந்தத் தீர்ப்பைத்தான் நான் எதிர்பார்த்தேன்" என்றார் சர்மாவிடம். ரவி ஓடிவந்து வேணு மாமாவைப் பாராட்டிக் கை குலுக்கினான். கமலி மனப்பூர்வமாக நன்றி சொன்னாள். அன்றைய மாலைச் செய்தித் தாள்களுக்கும் அடுத்த நாள் காலைச் செய்தித் தாள்களுக்கும் இதுதான் தலைப்புச் செய்தியாக இருந்தது. சீமாவையர் கோஷ்டி, தீர்ப்பைக் கேட்டபின், "கலி முத்திப் போச்சு! உலகம் நாசமாத்தான் போகப் போறது. உருப்படப் போறதில்லை" - என்று வயிற்றெரிச்சலோடு சொல்லத் தொடங்கியிருந்தது. பழிவாங்கும் வேலை, கமலி-ரவி கல்யாணத்துக்குப் புரோகிதர், சமையற்காரர்கள் கிடைக்காதபடி செய்வது ஆகிய சில்லரைக் குறும்புகளில் உடனே ஈடுபட்டார் சீமாவையர். புரோகிதர்களை எல்லாம் அவரால் தடுத்துவிட முடிந்தது.
"ஓய் ஜம்புநாத சாஸ்திரி! இன்னிக்கு வேணு மாமா பணத்தை வாரிக் குடுக்கப் போறார்னு சாஸ்த்ரோக்தமா அங்கீகரிக்கப்படாத கல்யாணத்துக்கெல்லாம் புரோகிதரா போய் உட்கார்ந்து நீர் அதை நடத்திக் குடுத்துடறது சுலபம். நிறைய வருமானமும் கிடைக்கும். ஆனால் இதுக்கப்புறமும் நாளைப் பின்னே ஊர்லே நாலுபேர் உம்மை மதிச்சு நல்லது கெட்டதுக்கு வாத்தியாரா ஏத்துப்பாளாங்கறதை யோசியும்" என்று புரோகிதரைக் கூப்பிட்டுக் கலைத்தார் சீமாவையர்.
புரோகிதர் ஜம்புநாத சாஸ்திரி தயங்கினார். பயப்பட்டார். திடீரென்று காசி யாத்திரை போவதாகச் சொல்லிக் கொண்டு ஊரை விட்டுத் தலைமறைவாகி விட்டார்.
"கலியாணத்துலேதான் காசியாத்திரை வரும். ஆனா அதுக்கு முன்னாடி இவரே காசியாத்திரை புறப்பட்டுவிட்டாரோ?" என்று அதைப்பற்றிக் கேலியாகச் சர்மாவிடம் கூறிவிட்டுச் சீமாவையர் போன்றவர்களுக்குப் பயப்படவும் தயங்கவும் செய்யாத நகர்ப்புறப் புரோகிதர் ஒருவரைத் தந்தி கொடுத்து வரவழைத்தார் வேணு மாமா. புரோகிதரிடம் பலித்ததுபோல் உள்ளூர்ச் சமையற்காரரிடம் சீமாவையரின் ஜம்பம் சாயவில்லை. சமையல்காரச் சங்கரையர், "நான் பத்தாளை வச்சுண்டு எப்படா கலியாணங்கார்த்திகை நல்லது கெட்டது வரப்போறதுன்னு தேடி அலைஞ்சிண்டு காத்திண்டிருக்கேன். வர்ற வேலையை உமக்காக என்னாலே விட முடியாது. அதுவும் அபூர்வமாக நாலுநாள் கல்யாணம். முன்னே ஒருநாள்; பின்னே ஒருநாள்னு சமையல்காராளுக்கு ஆறு நாள் வேலை. பேசாமே உம்ம வேலையைப் பார்த்திண்டுபோம். இதிலே எல்லாம் வீணாத் தலையிடாதியும். ஊர்லே யார் யாரோட கல்யாணம் பண்ணிண்டா உமக்கென்ன வந்தது?" - என்று சீமாவையரிடம் கறாராக மறுத்துச் சொல்லிவிட்டார் சமையற்காரர். சீமாவையரால் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை.
புரோகிதர் ஜம்புநாத சாஸ்திரி பயந்து போய்க் காசியாத்திரை புறப்பட்டதைச் சர்மாவிடம் கேள்விப்பட்ட இறைமுடிமணி, "இந்த மாதிரிப் புரோகிதங்களை நம்பாதீங்க. பதிவுத் திருமணமோ, சீர்திருத்தத் திருமணமோ பண்ணிக்குங்கன்னு எங்க இயக்கம் ரொம்ப நாளாச் சொல்லிட்டு வாரதே இதுக்காவத்தான்" - என்று சொல்லிச் சிரித்தார். சர்மாவும் பதிலுக்கு விடவில்லை. கேட்டார்: "இப்போ அதிலே மட்டும் என்ன வாழுதாம்? தலைவர், வாழ்த்துரை வழங்குவோர்னு ஒரு புரோகிதருக்குப் பதில் ஒன்பது புரோகிதன் வந்தாச்சே? எந்தக் கட்சி சர்க்காரோ அந்தக் கட்சியைச் சேர்ந்தவா கல்யாணம்னா மந்திரியே புரோகிதரா வந்து எல்லாம் பண்ணி வச்சுடறார்."
"அட நல்ல ஆளுப்பா நீ! நீயும் உன் முரண்டிலேருந்து மாறப் போறதில்லை. நானும் என் முரண்டிலேருந்து மாறப் போறதில்லே. விட்டுத் தள்ளு" - என்றார் இறைமுடிமணி. கருத்து வேறுபாடுகள், சர்ச்சைகள் அவர்களுக்கு வந்தாலும் அவை கண்ணியமான முறையில் இருந்தன. நட்பைப் பாதிக்கவில்லை. இவர் அவரைக் கேலி பண்ணுவது போல் பேசுவதும் அவர் இவரைக் கேலி பண்ணுவதுபோல் பேசுவதும் சகஜமாயிருந்தாலும் இருவரும் தங்களுக்குள் ஒரு போதும் எல்லை கடந்து போனது கிடையாது. கலியாணத்துக்கு முதல் நாள் மாலை வழித்துணை விநாயகர் கோவிலிலிருந்து அவ்வூர் வழக்கப்படி மாப்பிள்ளை அழைப்புக்கு ஏற்பாடாகியிருந்தது. பிரசித்தி பெற்ற வாத்தியக் கோஷ்டியின் இரட்டைத் தவில் நாதஸ்வரக் கச்சேரி என்பதால் ஊரே அங்கு திரண்டு விட்டது.
"மாப்பிள்ளை அழைப்புக்குப் புது சூட், ஷூ எல்லாம் ரெடி!" - என்று வசந்தி வந்து ரவியிடம் சொன்னபோது,
"வர வர பிராமணக் குடும்பங்களில் கல்யாணம்கிறதே ஒரு 'ஃபேன்ஸி டிரஸ் காம்பெடிஷன்' மாதிரி ஆயிண்டு வரது! இது எப்படி நம்ம கலியாணத்திலே நுழைஞ்சுதுன்னே புரியலே. அழகா லட்சணமா வேஷ்டி அங்கவஸ்திரம் போட்டுண்டு மாப்பிள்ளை அழைப்புக்கு வந்தா என்ன கொறஞ்சுடப் போறது? இதெல்லாம் வேண்டாம். எடுத்துண்டு போ. மாப்பிள்ளைக்கு சூட் கோட்டுன்னாக் கலியாணப் பொண்ணுக்கும் 'ஸ்கர்ட்' போட்டுக் கொண்டு வந்து நிறுத்தலாமே? இதென்ன பைத்தியக்காரத்தனம்? இண்டியன் மேரேஷ் ஷுட் பி ஆன் இண்டியன் மேரேஜ்" - என்று சொல்லி ரவி சூட் அணிய மறுத்துவிட்டான். அவன் இப்படிக் கூறியதைக் கேட்டு சர்மாவுக்கு மிகவும் பெருமையாக இருந்தது. வெளிநாட்டில் வேலைபார்க்கும் படித்த மாப்பிள்ளை பட்டு வேஷ்டி அங்கவஸ்திரத்தோடு ஜானவாஸத்துக்கு வந்ததை ஊரே பெரிய ஆச்சரியத்தோடு பார்த்தது.
மாப்பிள்ளை அழைப்பைப் பார்க்கவும், புகழ்பெற்ற இரட்டையர்களின் நாதஸ்வர இன்னிசையைக் கேட்கவும் ஊரே வழித்துணை விநாயகர் கோவிலைச் சுற்றியும், வீதிகளிலும் கூடிவிட்டது. சங்கரமங்கலத்தையே திருவிழாக் கோலங்கொள்ளச் செய்திருந்தது அந்தத் திருமணம். கோர்ட், கேஸ் என்று வேறு நடந்து விளம்பரமாகி இருந்ததனால் அந்தத் திருமணத்தைப் பற்றிய செய்தி உள்ளூரிலும் அக்கம் பக்கத்து ஊர்களிலும் அதிகப் பரபரப்பை உண்டாக்கியிருந்தது.
கையில் ரிஸ்ட் வாட்ச், கழுத்தில் தங்கச் சங்கிலியோடு இளம் வயதினரான ஒரு நகர்ப்புறத்துப் புரோகிதர் தமது உதவியாளரோடு வந்து வைதிகச் சடங்குகளை நடத்தி வைத்தார். கமலியை அசல் கிராமாந்தரத்து அழகியை எவ்வாறு அலங்கரிப்பார்களோ அப்படி மணப்பெண்ணாக அலங்கரித்திருந்தாள் வசந்தி. கைகளிலும் பாதங்களிலும் முதல் நாள் மருதாணி அரைத்து இட்டுக் கொண்டதன் விளைவாகச் சிவப்புப் பற்றி அவளுடைய நிறத்துக்கு அந்தச் சிவப்பு மிகவும் அழகாக எடுத்துக் காட்டியது. அலங்காரம் முடிந்ததும் வசந்தி தன் கண்களே திருஷ்டி பட்டு விடுமோவென்று கமலிக்குத் தானே கண்ணேறு கழித்தாள்.
வேணு மாமாவின் ஏற்பாடு எல்லாமே பிரமாதமாயிருந்தன. ரவி-கமலி திருமணத்தை ஒரு சவாலாகவே ஏற்றுக் கொண்டு பிரமாதமாக நடத்திக் கொண்டிருந்தார் அவர். உள்ளூரில் அக்கிரகாரத்தின் மூன்று தெருக்களையும் சேர்ந்தவர்கள் ஒரு சிலரைத் தவிர அநேகர் இந்தக் கலியாணத்தை ஏதோ ஒரு வேடிக்கை போலப் பார்த்தார்கள் என்றே சொல்ல வேண்டும். அவர்களிற் சிலர் இந்தக் கல்யாணத்தைக் கேலி பண்ணினார்கள். வேறு சிலர் ஒதுங்கி நின்று புறம் பேசினார்கள். வழித்துணை விநாயகர் கோவிலில் இருந்து மாப்பிள்ளை காரில் ஊர்வலம் புறப்பட்ட அதே நேரம் சீமாவையர் வீட்டுத் திண்ணணயில் வம்பர் சபை கூடியிருந்தது. ஆனால் சபையின் ஆட்கள் சுரத்தில்லாமல் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள்.
"என்ன ஓய் ஹரிஹரையர்! மாப்பிள்ளை அழைப்புக்கு நீர் போகலியா? ஜானவாஸ விருந்து பிரமாதமா ஏற்பாடு பண்ணியிருக்காளாம். மாட்டுப் பொண் பிரெஞ்சுக்காரியோ இல்லியோ, அதுனாலே ஆட்டுக்கால் சூப், மீன் குழம்பு, மட்டன் பிரியாணீன்னு..." என்று வேண்டுமென்றே சீமாவையர் வம்பைத் தொடங்கினார்.
சமையல் சங்கரையர் தான் கல்யாணத்தில் நளபாகப் பொறுப்பேற்றிருக்கிறார். முழுக்க முழுக்க சைவச் சமையல்தான், எல்லாம் வைதீக சம்பிரதாயப்படிதான் நடக்கிறது என்பதெல்லாம் சீமாவையருக்கு முழுமையாகத் தெரிந்திருந்தும் எப்படியாவது விசுவேசுவர சர்மாவின் பெயரைக் கெடுக்க வேண்டும் என்ற முரண்டு தான் இப்படி எல்லாம் அவரைத் தாறுமாறாகப் பேச வைத்திருந்தது. ஆனால் ஹரிஹர ஐயர் விடவில்லை.
"என்னை யார் ஓய் கூப்பிடக் காத்துண்டிருக்கா. நீர் தான் முந்தின ஸ்ரீமடம் ஏஜெண்ட். இப்போ உம்ம ஸ்க்ஸஸராத்தான் சர்மாவே ஏஜெண்டா இருக்கார். உம்மையே அழைக்கல்லேன்னா என்னை யார் அழைக்கப் போறா?" - என்று சீமாவையரைப் பதிலுக்குக் கேட்டார்.
"என்னைச் சர்மா அழைக்கல்லேன்னு உமக்கு யார் சொன்னா? என் பேருக்குப் பத்திரிகை அனுப்பிச்சிருக்கார். நான் தான் போகலை. கண்ட தறுதலைக் கல்யாணத்துக்கெல்லாம் போறது எனக்குப் பிடிக்கல்லே" - என்று அத்தனை வெறுப்புக்கிடையேயும் ஜம்பமாகப் பேசினார் சீமாவையர். உள்ளூறத் தாங்க முடியாத எரிச்சல் அவருக்கு. சர்மாவை அப்படியே கடித்துத் துப்பிவிட வேண்டும்போல அவர் மேல் அத்தனை கோபம் வந்தது சீமாவையருக்கு. கேஸ் வேறு தள்ளுபடி ஆகிவிட்டதால் அந்த எரிச்சலும் கோபமும் முன்பிருந்ததை விட இரண்டு மடங்கு ஆகி இருந்தன. எப்படியாவது சர்மாவை தலையெடுக்க விடாமல் பண்ணி அவமானப்படுத்தி விட வேண்டுமென்று சீமாவையரின் உள்மனம் கறுவிக் கொண்டிருந்தது.
"நாம் தான் இங்கே வேலையத்துப் போய் உட்கார்ந்திண்டு இருக்கோம். ஊரே அங்கே மாப்பிள்ளை அழைப்பிலேதான் கூடியிருக்கு. வாண வேடிக்கைக்கு மட்டும் சிவகாசிக்காராளுக்குப் பத்தாயிர ரூபாய்க்குக் காண்ட்ராக்ட்டாம்; நாதஸ்வரத்துக்கு ஐயாயிரமாம்! அந்த வேணு கோபாலையர் பணத்தைத் தண்ணியாச் செலவழிக்கிறாராம். சர்மாவோட புள்ளையைக் கல்யாணம் பண்ணிக்கப்போற அந்தப் பிரெஞ்சுக்காரியே அவள் அப்பாகிட்டே சொல்லிக் கையோட இதுக்குன்னே நிறையப் பணம் வேற கொண்டு வந்திருக்காளாம். எல்லாம் ஜாம் ஜாம்னு நடக்கறது. நீரும் நானும் வரலேன்னு அங்கே யார் ஓய் கவலைப்படறா? பெரிய பெரிய கோட்டீஸ்வர வியாபாரியெல்லாம் வேணு கோபாலய்யருடைய சிநேகிதன்கிற முறையிலே வந்து உட்கார்ந்துண்டிருக்கான். மலைமேலேருந்து அத்தனை எஸ்டேட் ஓணரும் வந்தாச்சு. ரோட்டரி கிளப் மெம்பர்ஸ் பூரா ஊர்வலத்திலே காருக்கு முன்னாடி நடந்து வரா. சர்மாவுக்கு என்ன குறைங்காணும்?" என்று ஹரிஹர ஐயர் மேலும் விவரங்களைச் சொல்லிச் சீமாவையரின் வயிற்றெரிச்சலைக் கிளப்பிவிட்டார்.
"பார்த்திண்டே இரும்! பகவான் ஒருத்தன் இருக்கான். இந்த அக்ரமம் பொறுக்காமே அவன் ஏதாவது பண்ணத்தான் போறான். தெய்வக் குத்தம் சும்மா விடாது" - என்று கையைச் சொடுக்கி நெரித்தார் சீமாவையர். அவரால் தாங்கிக் கொள்ள முடியாமலிருந்தது.
"நமக்குப் பிடிக்கறதோ பிடிக்கலியோ! நல்ல காரியம் நடக்கறபோது துக்கிரி மாதிரி ஏன் இப்படிக் கையைச் சொடக்கி அஸ்துப் பாடணும்? பேசாம இருமேன்" - என்று ஹரிஹர ஐயரே தமது செயலைக் கண்டு அருவருப்பு அடைந்தபோது சீமாவையருக்குச் சிறிது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் கூட இருந்தது. கேஸ் தோற்றுப் போய்த் தள்ளுபடியாகிய பின் தான் வலிந்து தன்னுடன் சர்மாவை எதிர்க்கக் கட்சி சேர்த்தவர்களில் பலரும் சோர்ந்து துவண்டு போயிருப்பது சீமாவையருக்கே மெல்ல மெல்லப் புரிந்தது. அதிகநாள் அவர்களை எல்லாம் சர்மாவின் எதிரிகளாக நிறுத்தி வைத்துத் தொடர்ந்து சர்மாமேல் விரோதத்தையும் வெறுப்பையும் ஊட்டிக் கொண்டிருப்பது என்பது நடவாத காரியமாக இருக்குமோ என்று அவருக்கே தோன்றியது. இறைமுடிமணிமேல் பொய் வழக்குப் போடப் போக அவர் வேறு, சீமாவையரைப் போன்ற வேஷதாரிகளைத் தொலைத்து விட்டுத்தான் மறுவேலை என்று ஆக்ரோஷமாகக் கிளம்பியிருந்தார். சீமாவையருடைய கேடுகாலம் ஆரம்பமாகியிருந்தது. சர்மா போன்ற ஆஸ்திகரையும் அவர் எதிர்த்தார். இறைமுடிமணி போன்ற நாஸ்திகரையும் அவர் எதிர்த்தார். இருவருடைய விரோதத்தையும் அவர் சம்பாதித்துக் கொண்டிருந்தார். நேர்மாறாகச் சர்மா இருசாராருடைய அன்பையும் சம்பாதிக்க முயன்று கொண்டிருந்தார். சூழ்நிலை மெல்ல மெல்ல மாறிக் கொண்டிருந்தது. கோயில் கேஸ் தள்ளுபடியான பின் சீமாவையரின் மதிப்பு ஊரில் குறைந்திருந்தது. என்றாலும் அவரது அடாவடித் தனங்கள் என்னவோ குறையவில்லை. கடைசி முயற்சியாகச் சமையற்காரரைக் கலைத்து விட்டோ புரோகிதரைக் கலைத்து விட்டோ கல்யாணத்தைக் கெடுப்பதில் முனைந்து பார்த்துத் தோற்றிருந்தார் சீமாவையர். சீமாவையருக்கு இருந்த சமூக அந்தஸ்தைவிட அதிகமான சமூக அந்தஸ்தும், படிப்பும், பணச் செல்வாக்கும் வேணு மாமாவுக்கு இருந்ததனால் சீமாவையரின் எதிர்ப்பை அவர் ஒரு சிறிதும் லட்சியம் பண்ணவே இல்லை.
அன்று மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் முடிந்து விருந்தினர்கள் சாப்பிட்டு முடிய இரவு பதினொரு மணியாயிற்று. இரண்டு பந்தியோ மூன்று பந்தியோ - சிக்கனமே பாராமல் வந்தவர்களுக்கெல்லாம் - ஜாதி வித்தியாசமில்லாமல் எல்லோரையும் ஒரு சேர உட்காரச் செய்து விருந்தளித்தார் வேணு மாமா.
--------------
அத்தியாயம் 31
பொழுது விடிந்தால் முகூர்த்தம். கலியாண வீடு அரவம் அடங்கி உறங்க இரவு இரண்டு மணிவரை ஆயிற்று. இரண்டரை மணிக்குச் சமையற்காரர்கள் கூடத் துண்டை விரித்து அடுப்படியிலேயே தலை சாய்த்து விட்டார்கள்.
நடு இரவு இரண்டே முக்கால் மணி சுமாருக்கு வாசலில் சுமார் ஆயிரம் பேர் வரை உட்காருகிற மாதிரி போட்டு அலங்கரித்திருந்த கல்யாணப் பந்தலில் தீப்பிடித்துவிட்டது. ஒரே கூச்சலும் கூப்பாடுமாகத் தூக்கக் கிறக்கத்தில் இருந்து விழித்து என்ன நடந்திருக்கிறது என்று சுதாரித்துக் கொள்ளவே எல்லோருக்கும் சில விநாடிகள் பிடித்தன. தீயை அணைக்க அந்தக் காற்று வீசிய காலை வேளையில் யாவரும் மிகவும் சிரமப்பட்டனர். காலை எட்டரையிலிருந்து ஒன்பது மணிக்குள் முகூர்த்தம். ஏறக்குறைய முகூர்த்தத்துக்கு மணமேடை போட்டிருந்த இடம் உட்பட எரிந்து சாம்பலாகி விட்டது.
சிறிதும் கலங்காமல் வேணுமாமா சாரங்கபாணி நாயுடுவைக் கூப்பிட்டு, "நீர் என்ன பண்ணுவீரோ தெரியாது நாயுடு! எவனோ கொலைகாரப் பாவி - கிராதகன் இங்கே இந்த அக்கிரமம் பண்ணியிருக்கான். காலம்பர ஆறுமணிக்குள்ளே மறுபடியும் பந்தலை நீர் போட்டாகணும். லட்ச ரூபாய் செலவானாலும் பரவாயில்லே. காரியம் நடக்கட்டும்" - என்று உணர்ச்சி மயமாகி உரிமையோடு நாயுடுவுக்கு உத்தரவு போட்டார்.
"ஆகட்டுங்க...! நானாச்சு" - என்றார் நாயுடு. காலை ஐந்தரை மணிக்குத் தீப்பிடித்த சுவடே தெரியாதபடி, ஜிலுஜிலுவென்று பழைய அலங்காரத்தோடு மறுபடியும் புதுப்பொலிவுடன் விளங்கிற்று அந்த மணப்பந்தல்.
*****
கமலியின் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் கொண்டு போய்ப் போட்டுக் காண்பிப்பதற்காக மூவி காமிராவில் மாப்பிள்ளை அழைப்பு முதல் அந்தக் கலியாண நிகழ்ச்சிகள் எல்லாம் ஒன்றுவிடாமல் கலர் பிலிமில் படமாக்கப்பட்டது. அதிகாலையிலிருந்து வைதீகச் சடங்குகள் நடந்து கொண்டிருந்தன. வசந்தி கடைசி முயற்சியாக ஒரு முறை போய்க் காமாட்சியம்மாளை அழைத்துப் பார்க்கலாம் என்று புறப்பட்டுச் சென்று முயன்று பார்த்தாள். ஆனால், காமாட்சியம்மாள் எழுந்து நடமாடக் கூட முடியாத நிலைக்குத் தளர்ந்திருந்தாலும், "மாமீ! மனசிலே ஒண்ணும் வச்சிக்காமே வந்து சந்தோஷமாக் கல்யாணத்தை நடத்திக் குடுங்கோ. இது உங்காத்துக் கல்யாணம்" என்று வசந்தி வேண்டியபோது அதற்கு உற்சாகமாகவோ எதிராகவோ இசைவாகவோ பதில் சொல்லாததாலும் வசந்தியே மேற்கொண்டு அதை வற்புறுத்தவில்லை.
"எல்லாம் ரொம்ப லட்சணமாகத்தான் இருக்குடி உங்க காரியம்! பிள்ளைக்கு அம்மா இங்கே இப்பிடிக் கிழிச்ச நாராக் கெடக்கறா, நீங்க பாட்டுக்கு அங்கே ஜாம் ஜாம்னு மேளதாளத்தோட கல்யாணத்தை நடத்திண்டிருக்கேளே!" என்று முத்து மீனாட்சிப் பாட்டியும் கிராமத்திலிருந்து வந்திருந்த காமாட்சியம்மாளின் பெரியம்மாவும் வசந்தியிடம் குறைப்பட்டு அலுத்துக் கொண்டார்கள். ஆனால் காமாட்சியம்மாள் உற்சாகமாக இல்லையென்றாலும் அப்போது வசந்தியைச் சினந்தோ கடிந்தோ எதுவும் பதில் சொல்லவில்லை. அதே சமயம் காமாட்சியம்மாளின் அந்த பதிலில் எந்த இசைவும் கூடத் தெரியவில்லை.
"நான் தான் இப்படிக் கெடக்கிறேனே? எங்கே வரது? எதுக்குப் போறது?" - என்று கிணற்றுக்குள்ளிருந்து வருவதுபோல வார்த்தைகள் தளர்ந்து நலிந்து வெளி வந்தன அவளிடமிருந்து.
"தொடங்கறச்சேயே அச்சான்யம் மாதிரி அபசகுனமாக் கல்யாணப் பந்தல்லே நேத்து ராத்திரி தீப்பிடிச்சுடுத்தாமேடீ?" - என்று முத்துமீனாட்சிப் பாட்டி நீட்டி முழக்கிக் கொண்டு ஆரம்பித்தாள். வசந்தி அதற்குப் பதில் சொல்லவில்லை. மனிதர்களின் சூழ்ச்சியால் நடைபெறும் காரியங்களுக்கு எல்லாம் அச்சான்யம், அபசகுனம் என்று பெயர் சூட்டிவிடும் பழங்கால மனப்பான்மையை எண்ணி வியந்தாள் வசந்தி. முன்பு சர்மா வீட்டு வைக்கோற் படைப்பில் தீப்பற்றிய போதும் இதே போலத்தான் கமலியின் தலையில் அந்தப்பழி போடப்பட்டது என்று அவளுக்குத் தெரிந்திருந்தது. காமாட்சியம்மாள் கல்யாணத்துக்கு வருகிற நிலையில் இல்லை என்று தெரிந்ததுமே அவள் அங்கே அதிக நேரம் தங்கவில்லை. ஊர் முறைப்படி மீண்டும் காலையில் வீடுவீடாக நேரில் சென்று அழைக்க வேண்டியவர்களை அழைத்துவிட்டுத் திரும்பினாள். கமலி-ரவி மேலிருந்த சீற்றம் இயற்கையாகவே காமாட்சியம்மாளிடம் இப்போது தணிந்திருக்கிறதா அல்லது உடல் நிலையின் தளர்ச்சி காரணமாகக் குறைந்திருக்கிறதா என்பதை வசந்தியால் கண்டுபிடிக்க முடியாமலிருந்தது. எனினும் கல்யாணத்துக்கு அழைக்கப்போன தன்னிடம் சீறி விழுந்து வசைமாரி பொழியக்கூடும் என்று தான் எதிர்பார்த்ததற்கு மாறாகக் காமாட்சியம்மாள் நிதானமாகவே நடந்து கொண்டது வசந்திக்கு ஆச்சரியத்தை அளித்திருந்தது.
திருமணத்தில் எந்தச் சடங்கும் எந்த மந்திரமும் விட்டுப் போகக் கூடாது என்பதில் கமலி அக்கறை காட்டினாள். சர்மாவும், வேணுமாமாவும் கூட அதைப் புரோகிதரிடம் வற்புறுத்தியிருந்தார்கள். "சீக்கிரமா முடியுங்கோ. நாழியாறது" - என்று உள்ளூர் வைதீகக் குடும்பங்களிலேயே சடங்குகளையும் மந்திரங்களையும் தட்டிக் கழித்துவிட்டு விரைவாக முடித்துக் கொண்டு போக விரும்பும் இந்தக் காலத்தில் எங்கிருந்தோ வந்த ஒரு பிரெஞ்சு யுவதி இதில் இத்தனை அக்கறை காட்டுவது புரோகிதருக்கு வியப்பை அளித்தது.
முரண்டும், பொறாமையும் நிறைந்த உள்ளூர் மனிதர்கள் சிலர் தான் வரவில்லையே ஒழியக் கலியாணம் ஜேஜே என்றிருந்தது. கூட்டத்துக்கோ, ஆர்வத்துக்கும் கலகலப்புக்குமோ குறைவில்லை. இறைமுடிமணி மேல் சீமாவையர் போட்டிருந்த பொய் வழக்கு கோர்ட்டில் முடிவாகாமல் இன்னும் இழுபட்டுக் கொண்டிருந்ததனால் - அவர் திருமணத்துக்கு வர முடிந்திருந்தது. நிறையத் தொழிலதிபர்களும், வர்த்தகர்களும், பிரமுகர்களும்கூட வந்திருந்தார்கள்.
"உம்மை சாட்சாத் ஆஞ்சநேயர்னுதான் சொல்லணும் நாயுடு! அநுமார் சஞ்சீவி மலையைக் கொண்டு வந்த மாதிரி ராத்திரியோட ராத்திரியா எல்லாச் சாமானையும் கொண்டு வந்து எப்படியோ கல்யாணப் பந்தலைப் பழையபடி போட்டு முடிச்சுட்டீர்..." என்று நாயுடுவைப் பாராட்டினார் வேணுமாமா. பெண்மணிகளின் கூட்டத்தைப் பொறுத்தவரை உள்ளூர் வைதீகக் குடும்பத்துப் பெண்களும் உறவுக்காரர்களின் வீட்டுப் பெண்களும் அதிகம் தென்படவில்லை என்றாலும், சற்றே நாகரிகமடைந்த குடும்பத்துப் பெண்களும், உத்தியோக நிமித்தம் வெளியூர் சென்றிருந்தவர்களும் வேணு மாமா, சர்மா ஆகியோரின் உறவு வகையினருமான பெண்களும் வித்தியாசம் பாராட்டாமல் அந்த திருமணத்துக்கு இயல்பாக வந்திருந்தார்கள்.
பாணிக்ரஹணம், ஸப்தபதி, அம்மி மிதித்து அருந்ததி பார்த்தல் முதலிய திருமணச் சடங்குகளைப் பற்றி ஏற்கெனவே புத்தகங்களில் படித்தும், ரவியிடம் கேட்டும் அறிந்திருந்த கமலி இப்போது ஒவ்வொன்றையும் தன் சொந்த அனுபவமாகவே இரசித்து மகிழ்ந்தாள். அவற்றை அப்போது அவள் அந்தரங்கமாக விரும்பினாள் என்றே சொல்லலாம்.
"ஏழு அடிகள் என்னோட உடன் நடந்து வந்து விட்ட நீ இனி என் தோழியாகிறாய். நாம் இருவரும் உயிர் நண்பர்களாகி விட்டோம்! உன்னோடு இன்று நான் அடையும் சிநேகிதத்திலிருந்து இனி என்றும் பிரிக்கப்பட்டவனாக மாட்டேன். என்னுடைய சிநேகிதத்திலிருந்து நீயும் பிரிக்கப் பட்டவளாக மாட்டாய். நாம் இருவரும் ஒன்றுபட்டவர்களாவோம். நாம் இனிமேல் செய்யவேண்டிய அனைத்திற்கும் இன்னின்னவற்றை இப்படி இப்படிச் செய்ய வேண்டும் என்று ஒன்றாகச் சங்கல்பம் பண்ணிக்கொண்டு நாம் செயற்படுவோம். ஒத்த மனத்தோடு பிரியமுள்ளவர்களாகவும் ஒருவர்க்கொருவர் பிரகாசிப்பவர்களாகவும், நல்லெண்ணம் உடையவர்களாகவும், உணவையும், பலத்தையும் சேர்ந்தே அநுபவிக்கிறவர்களாகவும் வாழ்வோம். எண்ணங்களால் நாம் ஒத்த கருத்துடையவர்களாவோம். விரதங்களையும் நோன்புகளையும், சேர்ந்தே அனுஷ்டிப்போம். நம்முடைய விருப்பங்கள் ஒத்தவையாக இருக்கட்டும். நீ 'ரிக்' வேதம் ஆகவும் நான் 'ஸாம' வேதம் ஆகவும் இருப்போம். நான் விண்ணுலகமாக இருக்கிறேன். நீ பூமியாக இருக்கிறாய். நான் வித்துக்களாகவும் நீ விதைக்கப்படும் நிலமாகவும் இருக்கிறோம்! நான் சிந்தனை! நீ சொல்! என்னுடையவளாக என்னை அனுசரித்தவளாக நீ ஆவாய்! பிள்ளை பேற்றுக்காக, வற்றாத செல்வத்துக்காக இன்சொல்லுக்கு உரியவளே, நீ என்னுடன் வருக."
என்ற பொருளுள்ள 'ஸப்தபதி'யைக் கேட்டுக் கமலி ரவியை நோக்கிப் புன்முறுவல் பூத்தாள். நான்கு நாள் மாலையும், ஊஞ்சல் நலுங்கு வைத்துப் பாடுதல் முதலிய பெண்களின் சடங்குகள் எல்லாம் குறைவில்லாமல் அந்தக் கலியாணத்தில் இருந்தன. ஒவ்வொரு சடங்கிலும், ஒவ்வொரு நிகழ்ச்சியிலும், கமலி பெருமகிழ்ச்சி அடைந்தாள். ஒரு கிராமாந்தரத்துக் கலியாணத்தில் உள்ள சின்னச் சின்ன மகிழ்ச்சிகளும் சுவாரஸ்யங்களும், உல்லாஸங்களும், சந்தோஷங்களும் சிலிர்ப்புக்களும் சிரிப்புக்களும் அந்தத் திருமணத்திலும் இருந்தன. கண்ணுக்கு மையிட்டுக் கைகளுக்கும் கால்களுக்கும் செம்பஞ்சுக் குழம்பு தீட்டிக் கூந்தலைச் சவுரி வைத்து நீளப் பின்னிப் பட்டுக் குஞ்சலங்கள் கட்டித் தமிழ் நாட்டு மணப்பெண்ணாகவே கமலியைத் தோன்றச் செய்திருந்தாள் வசந்தி. நிறமும், இதழ்களின் வெளுத்த ரோஸ் வண்ணமும்தான் வித்தியாசமாகத் தெரிந்தன. மையூட்டியிருந்த காரணத்தால் கமலியின் விழிகளில் கூட அப்போது அதிக வேறுபாடு தெரியவில்லை.
திருமண நாளன்றும், அடுத்த சில நாட்களிலும் குமார், பார்வதி, இருவரும்கூடக் கலியாண வீட்டிலேயே செலவழித்துவிட்டதால், காமாட்சியம்மாள் பெரியம்மாவுடனும், முத்துமீனாட்சிப் பாட்டியுடனும் வீட்டில் தனித்து விடப்பட்டாள். அந்த வீடும் கல்யாணத்துடன் சம்பந்தப்பட்டது என்பதைக் காட்டுவதைப் போல வாசலில் குலை தள்ளிய வாழைமரங்களும், மாவிலைத் தோரணமும் கட்டப்பட்டிருந்தன. சுவரில் வெள்ளைச் சுண்ணாம்புப் பட்டைகளும், புதிய செம்மண் பட்டைகளும் அடிக்கப்பட்டிருந்தன. வாசலில் செம்மண் கோலம் பெரிதாகப் போடப்பட்டிருந்தது. ஆனால் வீட்டின் உள்ளே மட்டும் நிசப்தம் நிலவியது. சில சமயங்களில் காமாட்சியம்மாளின் இருமல், முனகல் ஒலிகள் மட்டும் கேட்டன. பாட்டியின் பேச்சுக்குரல் இடையிடையே கேட்டது. மற்றபடி வீட்டை ஒரு முறைக்காக மங்கல அடையாளங்களோடு அலங்கரித்துவிட்டு வெளியூரில் நடைபெறும் கலியாணத்துக்குப் புறப்பட்டுப் போயிருந்தவர்களின் இல்லத்தைப் போலவே அரவமற்றிருந்தது அந்த வீடு. "நலங்கு பஞ்சத் தேங்காய் எல்லாம் ஒரே தடபுடல் படறதாண்டீ காமு! இந்த அக்கம் பக்கத்து ஊர்களிலேயே நலங்கு பாடறதுலே கெட்டிக்காரின்னு பேரெடுத்தவள் நீ! ஆனா உங்காத்துப் பிள்ளை கல்யாணம் நீ போகாமலேயே நடக்கறது" - என்று முத்துமீனாட்சிப் பாட்டி காமாட்சியம்மாளிடம் ஆரம்பித்தாள். காமாட்சியம்மாள் முதலில் இதற்குப் பதில் எதுவுமே சொல்லவில்லை. ஆயிரம் அபிப்பிராய பேதங்கள் இருந்தாலும் வீட்டுத் தகராறுகள் பாட்டி மூலம் ஊர் வம்பாகப் பரவுவதைக் காமாட்சியம்மாள் விரும்பவில்லை என்று தெரிந்தது. சிறிது நேரம் கழித்து ஆவலை அடக்க முடியாமல் காமாட்சியம்மாளே கலியாணத்தைப் பற்றிப் பாட்டியிடம் ஏதோ விசார்த்தாள்.
"உங்காத்திலே தங்கியிருந்துதே அந்த வெள்ளைக்காரப் பொண்தானா இதுன்னு நம்பவே முடியலேடீ காமு! அப்பிடி அலங்கரிச்சு நம்ம கல்யாணப் பொண்களை மாதிரி மணையிலே கொண்டு வந்து உட்கார்த்தியிருக்கா" - என்று பாட்டி கூறியதைக் கேட்டு காமாட்சியம்மாளுக்கு உள்ளூறப் போய்ப் பார்க்க வேண்டும்போல ஆசையிருந்தாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. முத்து மீனாட்சிப் பாட்டியும், பெரியம்மாவும் என்ன நினைப்பார்களோ என்று பயந்து தயங்கிப் பேசாமல் இருந்தாள் காமாட்சியம்மாள். ஆனால் பாட்டி பேச்சை நிறுத்தாமல் தொடர்ந்து ஏதாவது சொல்லிக் கொண்டே இருந்தாள்.
"உள்ளூர் வாத்தியார் ஜம்புநாத சாஸ்திரி இந்தக் கலியாணத்துக்குப் புரோகிதரா இருக்க மாட்டேனுட்டாராம். இன்னிக்கு நிறையப் பணம் கெடைக்கும்னு இதுக்கெல்லாம் வந்து நின்னுட்டேன்னா நாளைக்கி ஊர்லே நாலு பெரிய மனுஷர் நல்லது கெட்டதுக்கு என்னை மதிச்சுக் கூப்பிடமாட்டான்னு ஒதுங்கிட்டாராம். அப்புறம் வேணுகோபாலன் நெறையப் பணம் செலவழிச்சு மெட்ராஸ்லேருந்து யாரோ ஒரு புது வாத்தியாருக்கு ஏற்பாடு பண்ணினானாம். அந்தப் புது வாத்தியார்தான் இப்ப எல்லாம் பண்ணி வைக்கிறாராம். தானங்கள் தட்சிணைகள் வாங்கறதுக்குக்கூட உள்ளூர் வைதீகாள் யாரும் போகல்லையாம். ஆனா வெளியூர்லேருந்து நெறைய வைதீகாள் வந்திருக்காளாம்... என்னதான் கோர்ட்டிலே அந்தப் பிரெஞ்சுப் பொண்ணு நம்ம மனுஷாளை விடச் சுத்தமானவள்னு ஜட்ஜ் தீர்ப்புச் சொல்லிவிட்டாலும், உள்ளூர் வைதிகாள் தயங்கறா. ஆனால் வெளியூர்லேயிருந்து நெறைய வைதிகாளை வரவழைச்சிருக்காளாம்..."
"பொண்ணை யார் தாரை வார்த்துக் குடுத்தாளாம்."
"இதுவரை நோக்கு அது தெரியாதாடி காமு? வேறெ யாரு! அந்த வேணுகோபாலனும் அவள் ஆத்துக்காரியும்தான் தாரை வார்த்துக் குடுத்தாளாம். அதான் இந்தக் கல்யாணத்துக்காக அவாத்துலே சுமங்கலிப் பிரார்த்தனை கூட நடந்ததுன்னேனே?"
இதற்கு மேல் காமாட்சியம்மாளாக யாரிடமும் எதுவும் வலிந்து விசாரிக்கவில்லை.
முகூர்த்தம் முடிந்த மறுநாள் பிறபகல் பெரியம்மா அப்போதுதான் தூங்கி விழித்திருந்த காமாட்சியம்மாளிடம் சொன்னாள்.
"உன்னைப் பார்த்துட்டுப் போறதுக்காக உங்காத்துக்காரரும் அந்த வேணுகோபாலனும் வந்துட்டு போனாடீ காமு! நீ நன்னா அசந்து தூங்கிண்டிருந்ததை அவாளே பார்த்தா, 'எழுப்பட்டுமா'னு கேட்டேன். 'எழுப்ப வேண்டாம். தூங்கட்டும்! அப்புறமா வந்து பார்த்துக்கறோம்'னு உன் உடம்பைப் பத்தி விசாரிச்சுட்டுப் பொறப்பட்டுப் போயிட்டா."
"இவா வந்து பார்க்கல்லேன்னுதான் இப்போ குறையா? வரலேன்னு இங்கே யார் அழுதாளாம்?"
"இவாள்ளாம் வரா - வரலேங்கறது ஒரு பக்கம் இருக்கட்டும்டீ! நீ பத்து மாசம் சொமந்து பெத்த பிள்ளை கல்யாணத்தைப் பண்ணிண்டு 'ஆசீர்வாதம் பண்ணும்மா'ன்னு வந்து நமஸ்காரம் பண்ணினானோடீ? அவனுக்கு எங்கே போச்சுடீ புத்தி?" என்றாள் முத்து மீனாட்சிப் பாட்டி.
"வந்தா வரா, வராட்டாப் போறா. யார் வரலேன்னும் இங்கே நான் ஒண்ணும் தவிக்கலே பாட்டீ?"
"அப்பிடிச் சொல்லாதே! நீ விரும்பலே விரும்பறேங்கறது ஒரு பக்கம் இருக்கட்டும். மொறைன்னு ஒன்னு இருக்கோல்லியோ? அவாளாத் தேடிண்டு வந்து உன்னை நமஸ்காரம் பண்ண வேண்டாமோ?" இதைக் கேட்டுக் காமாட்சியம்மாளுக்குக் கண்களில் நீர் முட்டிக் கொண்டு வந்தது. அழுகையை அடக்க முடியவில்லை. அந்தக் கல்யாணத்தைப் பொருட்படுத்தாதவள் போலவும், புறக்கணித்தாற்போலவும் அவள் பாசாங்கு பண்ணினாலேயொழிய, மனம் என்னவோ அங்கேதான் இருந்தது. ஒவ்வொரு விநாடியும் அங்கே அந்தக் கல்யாண வீட்டில் என்னென்ன நடக்கும் என்பதைப் பற்றித்தான் அவள் மனம் சதா கற்பனை செய்து கொண்டிருந்தது. ரவியையும், கமலியையும், வசந்தியையும், சர்மாவையும், கல்யாண வீட்டையும் பற்றியே அவள் உள் மனம் நினைத்து உருகிக் கொண்டிருந்தது. கல்யாண வீட்டைப் பற்றி முத்து மீனாட்சிப் பாட்டியும், பெரியம்மாவும் எதையாவது கூறிய போதெல்லாம் சிரத்தையின்றிக் கேட்பது போல் மேலுக்குக் காட்டிக் கொண்டாளே தவிர அவற்றை உண்மையில் அவள் மிகவும் சிரத்தையோடு கூர்ந்து விரும்பிக் கேட்டுக் கொண்டிருந்தாள்.
நான்கு நாளும் ஔபாசனம், ஊஞ்சல், நலங்கு - நிறைவு நாளன்று மாப்பிள்ளை பெண்ணுடன், கல்யாண வீட்டார் ஊர்வலமாகப் போய் அகஸ்திய நதியில் 'பாலிகை' கரைக்கப் போகிறார்கள் - என்று ஒவ்வொன்றாகக் கலியாண வீட்டுத் தகவல்களை அறிந்து வந்து காமாட்சியம்மாளுக்குச் சொல்லிக் கொண்டிருந்தாள் முத்துமீனாட்சிப் பாட்டி. ஒரு விஷயம் பற்றிக் காமாட்சியம்மாளே ஞாபகமாகப் பாட்டியை விசாரித்தாள்:
"கிருஹப் பிரவேசம்னு ஒண்ணு உண்டே, அதை என்னிக்கு வச்சிக்கப் போறாளாம் பாட்டீ?"
"நான் அதை ஒண்ணும் விசாரிக்கல்லேடீ காமு!"
"விசாரியுங்கோ, அன்னிக்கி எல்லாரும் இங்கேதானே வருவா... நாம தடுக்க முடியாதே... அவா வீடு, அவா வாசல், நாம என்ன பண்ண முடியும்?"
"அதுவும் அப்படியா சமாசாரம்? எனக்கு அது நெனைவே இல்லையேடீ?" - என்றாள் பெரியம்மா. அன்று மாலையிலேயே முத்துமீனாட்சிப் பாட்டி அந்தத் தகவலை விசாரித்துக் கொண்டு வந்து சொன்னாள்:
"பாலிகை கரைச்ச மத்தா நாள் கிருஹப் பிரவேசத்துக்கு ஏத்ததா இருக்காம்டீ காமு! அதனாலே அன்னிக்கிக் காலம்பர ஆறு மணியிலேருந்து ஏழரை மணிக்குள்ள ஒரு முகூர்த்தத்திலே இங்கே கிருஹப் பிரவேசத்துக்காக வராளாம். நீ உடம்பு சௌகரியமில்லாமப் படுத்துண்டுட்டதாலே சமையல் மத்ததுக்கு எல்லாம் அவாலே மனுஷாளை இங்கே முன்கூட்டியே அனுப்பிச்சுடுவான்னு நினைக்கிறேன்" என்று காமாட்சியம்மாள் மனத்தில் வெறுப்பை வளர்க்க நினைத்துப் பேசினாள்.
"கிருகப் பிரவேசத்துக்கு மட்டும் ஏன் இங்கே தேடிண்டு வரணும்டீ? அதையும் அங்கேயே எங்கேயாவது பண்ணிட்டுப் போக வேண்டியதுதானே? சாஸ்திரப்படி புள்ளையாத்திலேதான் பண்ணணும்னு இவாளுக்கு என்னடீ நிர்ப்பந்தம் வந்தது?" என்று கிராமத்திலிருந்து வந்து தங்கியிருந்த பெரியம்மா குறுக்கிட்டுச் சொன்ன போது காமாட்சியம்மாள் அதை அவ்வளவாக வரவேற்கவோ, இரசிக்கவோ இல்லை என்று தெரிந்தது.
-------------
அத்தியாயம் 32
காமாட்சியம்மாளின் அந்தரங்கத்தில் இந்தக் கலியாணம், இதன் வைபவங்கள், இது தொடர்பான கிருஹப் பிரவேச முகூர்த்தம் எல்லாவற்றின் மேலும் வெறுப்புத்தான் நிரம்பிக் கிடக்கிறதென்று தாங்களாகவே கற்பித்து நினைத்துக் கொண்டு அவளிடம் பேசிக் கொண்டிருந்தார்கள் பாட்டியும் பெரியம்மாவும்.
ஆனால் காமாட்சியம்மாளின் உள்மனமோ கமலியையும் ரவியையும் விதம்விதமாக மணக்கோலத்தில் கற்பனை செய்து கொண்டிருந்தது. நெற்றிச் சரமும், மாட்டலும், பின்னல் குஞ்சலமும் குண்டலமும், கூரைப் புடவையுமாகக் கமலியை நினைத்து நினைத்துத் தன் அகத்திலேயே ஓர் அழகிய மணக்கோலத்தை உருவாக்கி உருவாக்கித் திருப்தியும் அதிருப்தியுமாக மாறி மாறி அடைந்து கொண்டிருந்தது காமாட்சியம்மாளின் உள்ளம்.
"நீயானா இப்படிப் படுத்த படுக்கையாகக் கெடக்கறே! படியேறி வரபோது பொண்ணையும் மாப்பிள்ளையையும் மஞ்சநீர் சுத்திக் கொட்டி வரவேற்கறதுக்குக் கூட மனுஷா இல்லே இங்கே. உன் பொண் பாருவோ, வேணுகோபாலன் பொண் வசந்தியோ முன்னாடியே வந்து மஞ்சநீர் கரைச்சு வச்சுண்டு நின்னால்தான் உண்டு" - என்று யோசனை சொன்னாள் முத்து மீனாட்சிப் பாட்டி.
"நீக்க சொல்றது நியாயந்தான். நமக்குப் பிடிச்ச கல்யாணமோ, பிடிக்காத கலியாணமோ புள்ளை நம்மாத்துப் பிள்ளை. கல்யாணத்தைப் பண்ணிண்டு புது வேஷ்டியும் காப்புமாப் பொண்ணைக் கூட்டிண்டு வாசல்லே வந்து நின்னுட்டா 'வாங்கோ'ன்னு மஞ்சநீர் சுத்திக் கொட்டி வரவேத்துத்தானே ஆகணும். வேறே என்ன பண்ணமுடியும்?" என்று பெரியம்மாவும் பாட்டியோடு சேர்ந்து கொண்டாள். உண்மையில் அந்த விஷயத்தைச் சாதகமாகவோ பாதகமாகவோ தீர்மானிக்க வேண்டிய காமாட்சியம்மாள் மட்டும் இன்னும் ஒரு முடிவுக்கு வர இயலாதவள் போல் கண்களில் நீர் நெகிழப் படுத்திருந்தாள். பாட்டி மீண்டும் காமாட்சியம்மாளை ஆழம் பார்த்தாள்.
"ஆயிரமிருந்தாலும் நல்லது கெட்டதுலே விட்டுக் குடுத்துட முடியுமோ? நம்மாத்துப் பிள்ளை நம்மாத்துக் கலியாணம்" -
"இந்த மாதிரிச் சமயத்துலே விட்டுக் குடுத்து முகத்தை முறிச்சுண்டுட்டா ஊரிலே நாலு பேர் நாலு தினுசாப் பேசறத்துக்கு எடமாயிடுமோன்னோ?" - இது பெரியம்மா.
"நீங்க ரெண்டு பேரும் சித்தே பேசாமே இருங்கோ! எனக்கு மூளையே கொழம்பிப் பைத்தியம் பிடிச்சிடும் போலே இருக்கு பாட்டி!" என்று அழுகைக்கிடையே இருவரையும் வேண்டிக் கொண்டாள் காமாட்சியம்மாள். அவளை அவர்களால் அப்போது உடனே புரிந்து கொள்ள முடியவில்லை. அவள் என்ன மனப்போக்கில் இருக்கிறாள் என்பதை அறிய அவர்கள் செய்த எந்த முயற்சியும் பலிக்கவில்லை.
நாளைக்கு இரவு பாலிகை கரைக்கிறார்கள். நாளன்றைக்குப் பொழுது புலர்ந்தால் கிருஹப் பிரவேசம். காமாட்சியம்மாள் என்ன நினைக்கிறாள் என்பது யாருக்கும் புரியாத புதிராயிருந்தது. அவள் முகத்தில் தெம்பும் இல்லை. உடலில் சக்தியும் கிடையாது. கண்களில் அழுகையும் நிற்கவில்லை. யாரிடமும் மனம் விட்டு அவள் பேசவும் இல்லை.
கிருஹப்பிரவேசத்திற்கு முதல் நாளே முத்துமீனாட்சிப் பாட்டி, "நல்ல காரியத்திலே வெள்ளைப் புடவைக்காரி அங்கே நின்னா இங்கே நின்னான்னு இந்தாத்திலே எனக்குக் கெட்ட பேர் வரப்பிடாதுடீம்மா" - என்று காமாட்சியம்மாளிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டுப் போய் விட்டாள். முத்துமீனாட்சிப் பாட்டி போனபின் பார்வதியிடமும், குமாரிடமும், காமாட்சியம்மாளைப் பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டுத் தெரிந்தவர்கள் வீட்டுக்குப் புறப்பட்டுப் போய்விட்டாள் கிராமத்திலிருந்து வந்திருந்த காமாட்சியம்மாளின் பெரியம்மா.
காமாட்சியம்மாள் மிகவும் வைதிகமாகக் கட்டிக் காத்து வந்த சமையலறைக்குள் தங்களை நுழைய விடுவாளோ மாட்டாளோ என்கிற பயத்தில் பின்புறம் தோட்டத்தில் கீற்றுப் பந்தல் போட்டுச் சமையலுக்குக் கோட்டையடுப்பு ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள் சமையற்காரர்கள். மறுநாள் காலையில் கிருஹப்பிரவேசம் என்றால் முதல் நாள் இரவே தன் வீட்டுத் திண்ணையில் வந்து படுத்துக் கொள்ள விரும்பியும், ஒரு சுபமுகூர்த்தத்துக்கு முன்னால் அநாவசியமாகக் காமுவுக்கும் தனக்கும் சண்டை மூண்டு விடுமோ என்ற முன்னெச்சரிக்கையாலும், தயக்கத்தினாலும் சர்மா அதைத் தவிர்த்திருந்தார். வாசலில் கட்டியிருந்த வாழை மரங்களும் மாவிலைத் தோரணமும், செம்மண் கோலமும் தவிர வேறு கலகலப்போ ஆரவாரமோ பரபரப்போ இன்றி விளங்கியது அந்த வீடு. உள்ளேயிருந்த காமாட்சியம்மாள் வேதனையால் ஈனஸ்வரத்தில் முனகும் ஒலியும், இருமல்களும் கேட்டுக் கொண்டிருந்த நிலையில் அந்த வீட்டில்தான் மறுதினம் அதிகாலையில் கமலியும் ரவியும் கிருஹப்பிரவேசம் செய்யப் போகிறார்கள் என்பதற்கான முன்னறிகுறி எதுவுமே இல்லாதிருந்தது. அக்கம் பக்கத்தார் வந்து போகிற கலகலப்போ ஆரவாரமோ கூட அப்போது அவ்வீட்டில் இல்லை.
மறுநாள் அதிகாலை நான்கு மணிக்கே காமாட்சியம்மாளுக்குத் தூக்கம் கலைந்து விழிப்பு வந்து விட்டது. தற்செயலாக அன்று வெள்ளிக்கிழமை வேறு. அம்மாவுக்குத் துணையாகக் கல்யாண வீட்டிலிருந்து புறப்பட்டு வந்து படுத்திருந்த பார்வதியும், குமாரும் நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். காமாட்சியம்மாள் தான் முதலில் விழித்துக் கொண்டிருந்ததனால் தட்டுத் தடுமாறி எழுந்திருந்து கிணற்றுப் பக்கம் சென்றாள். அப்போது அவளைத் தடுப்பதற்கு அந்த வீட்டில் யாரும் இல்லை. அதிகாலைக் குளிர்காற்று சில்லென்று முகத்தில் வந்து உராய்ந்தது. தோட்டத்தில் மலர்ந்திருந்த பூக்களின் வாசனையைச் சுமந்து கொண்டு வந்து பரப்பியது அந்தக் காற்று. கிணற்றில் தானே தண்ணீர் இறைத்து நீராடினாள் காமாட்சியம்மாள். உள்ளே திரும்பி வந்து விசேஷ நாட்களில் தான் விரும்பி அணியும் கருநீல நிறத்துச் சரிகைப் பட்டுப் புடவையை அணிந்து தலையைத் துவட்டி ஈரத்தோடு நுனி முடிச்சுப் போட்டு நெற்றிக்குத் திலகமிட்டுக் கொண்டாள். மாட்டுத் தொழுவத்துக்குப் போய் பால் கறந்து வைத்தாள். தோட்டத்தில் போய் பூக்கொய்து கொணர்ந்து தொடுத்துக் கொஞ்சம் தன் தலையில் செருகிக் கொண்டு மீதத்தை அப்படியே வைத்தாள். வீட்டின் புராதனமான ஆகிவந்த வெள்ளித் தாம்பாளத்தை உள்ளேயிருந்து எடுத்துத் துலக்கி அதில் ஆரத்திக்கு மஞ்சள் நீர் கரைத்து வைத்தாள். வாசல் தெளித்துக் கோலம் போட்டாள்.
பார்வதி கண் விழித்த போது அம்மாவே எழுந்து நீராடிய கூந்தல் ஈரம் புலராமல் கூடத்திலிருந்து குத்து விளக்கு ஏற்றிக் கொண்டிருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டுப் போனாள்.
"இந்த உடம்போட உன்னை யாரும்மா எழுந்திருக்கச் சொன்னது! ஐயையோ... பச்சைத் தண்ணியிலே குளிக்க வேறே செஞ்சிருக்கியா? ஏம்மா இதெல்லாம் பண்ணினே? அதான் இதெல்லாம் கவனிக்கிறதுக்குன்னு நான் வந்திருக்கேனே?"
"சரிதான் போடீ... நீ பெரிய மனுஷி! உனக்கென்ன தெரியும்டீ இதெல்லாம்... போ... நீயும் போய்ச் சீக்கிரமாக் குளிச்சிட்டு வா..."
அம்மாவின் இந்தத் திடீர் மாறுதலும் உற்சாகமும் பார்வதியால் உடனே நம்ப முடியாதபடி இருந்தன. பல நாட்களாகச் சரியான உணவு இன்றி வெறும் கஞ்சியும், பழங்களுமே சாப்பிட்டுக் கொண்டிருந்த அம்மாவின் குரலிலோ, செயல்களிலோ மிடுக்கு இல்லை என்றாலும் தானே ஏற்படுத்திக் கொண்ட உற்சாகத்தினாலும் நலிந்திருந்தும் வலிந்து பெறுவதற்கு முயன்ற சக்தியினாலும், காமாட்சியம்மாள் அந்த அதிகாலையில் அவ்வீட்டின் சுமங்கலியாகவும் கிருஹ லட்சுமியாகவும் பொலிவுடன் நடமாடிக் கொண்டிருந்தாள்.
கிராமத்துக்கே உரிய சோபையுடன் கிழக்குத் திசை வெளுத்துக் கொண்டிருந்தபோது, தெருக்கோடியிலிருந்து மேளம் நாதஸ்வர இசையுடன் கூட்டமாக மனிதர்கள் வரும் ஒலியரவங்கள் கேட்டன. காமாட்சியம்மாள் தெருத் திண்ணைக்கு வந்து எட்டிப் பார்த்துக் கமலியும் ரவியும் மற்றவர்களும் தான் வடக்குத் தெருவில் கல்யாண வீட்டிலிருந்து புறப்பட்டுக் கிருஹப் பிரவேசத்துக்காக ஊர்வலமாக வருகிறார்கள் என்று புரிந்து கொண்டாள். மகிழ்ச்சியாலும், வலிந்து ஏற்படுத்திக் கொண்ட உற்சாகத்தினாலும் தனது உடல் நிலைக்கு மீறிய செயல்களை அப்போது அவள் செய்து கொண்டிருந்தாள். தலைசுற்றிக் கீழே மயங்கி விழுந்து விடாமல் திண்ணைத் தூணை இறுகப் பற்றிக் கொண்டாள்.
கண்களுக்கு நேரே பூச்சி பறந்தது. நெஞ்சு படபடவென்று வேகமாக அடித்துக் கொண்டது. உடம்பு நடுங்கியது. அப்போதுதான் குளித்து உடை மாற்றிக் கொண்டு வந்திருந்த பார்வதி அம்மாவைப் பார்த்துப் பதறிப் போய், "என்னம்மா இது? மயக்கமா வரதா? நிற்கவே தள்ளாடறயே?... உன்னை யார் இதெல்லாம் பண்ணச் சொன்னது? நான் பார்த்துக்கறேன். நீ பேசாமப் போய்க் கம்பளியைப் போர்த்திண்டு உள்ளே படுத்துக்கோ..." என்று இரைந்தாள்.
"கத்தாதேடீ! இப்ப எனக்கு ஒண்ணுமில்லே... உள்ளே சுவாமி படத்தண்டே தாம்பாளத்திலே ஆரத்தி கரைச்சி வச்சிருக்கேன்... போய் எடுத்துண்டு வா..." என்று மிகவும் தளர்ந்த குரலில் காமாட்சியம்மாளிடமிருந்து பதில் வந்தது.
பறவைகளின் கலவையான எழுச்சிக் குரல்களும், அதிகாலைக் குளிர்ச்சியும் மூன்றாவது வீட்டில் யாரோ ஒரு மூத்த வைதிகர் வேதம் சொல்லிக் கொண்டிருந்த கணீரென்ற குரலும் நாதஸ்வரக்காரரின் பூபாளமுமாக அந்த வைகறையை அதிகம் அர்த்தமுள்ளதாக்கிக் கொண்டிருந்தன.
அக்கம்பக்கத்திலும் எதிர்வரிசையிலும் வீடுகளில் எழுந்து வந்து சிலர் எட்டிப் பார்த்தார்கள். பாருவை ஆரத்திக்காக உஷார்படுத்த முன்கூட்டியே ஓட்டமும் நடையுமாக எதிர்கொண்டு வந்த வசந்தி திண்ணையில் காமாட்சி மாமியைப் பார்த்து வியப்பும் திகைப்பும் அடைந்தாள்.
"என்ன மாமி இது? இந்த உடம்போட நீங்க எதுக்கு இதெல்லாம் வந்து அலட்டிக்கறேள்...? போய்ப் படுத்துக்குங்கோ..."
"எனக்கு ஒடம்புக்கு ஒண்ணும் இல்லேடீ... வெள்ளிக்கிழமையும் அதுவுமாய் படுக்கையிலே விழிப்போடப் படுத்திண்டிருக்கப் பிடிக்கலே... வா... இப்பிடி உட்கார்ந்துக்கோ. ஆரத்தியை எடுத்துண்டுவரப் பாரு உள்ளே போயிருக்கா."
உள்ளேயிருந்து பார்வதி மஞ்சள் நீர்த் தாம்பாளத்தோடு வந்தாள். காமாட்சியம்மாளை வாசலில் பார்த்ததும் எடுத்த எடுப்பில் 'கலியாணப் பெண்ணையும் பிள்ளையையும் வீட்டுக்குள் விடமாட்டேன்' என்று சண்டை போட்டுத் தடுக்கத்தான் அந்த உடல் நிலையையும் பொருட்படுத்தாமல் எழுந்து வந்து உட்கார்ந்திருக்கிறாளோ என்று முதலில் எண்ணித் தயங்கிய வசந்தி சிறிது பேச்சுக் கொடுத்துப் பார்த்த பின்பே மாமிக்கு இடைஞ்சல் செய்யும் எண்ணம் எதுவும் இல்லை என்பதையும் அவள் தானாகவே கொஞ்சம் மனம் மாறிச் சுமுகமான நிலைமையில் தான் வந்து உட்கார்ந்திருக்கிறாள் என்பதையும் புரிந்து கொண்டாள். காமாட்சியம்மாளின் இந்தச் சிறிதளவு மனமாற்றம் கூட வசந்திக்குப் பெரிய ஆச்சரியத்தை அளித்தது. எதிர்பாராத புதிய திருப்பமாகவும் இருந்தது.
"என்ன மாமீ... குளிச்சேளா... ஈரத்தலையோட நுனி முடிச்சிப் போட்டிண்டிருக்கிற மாதிரித் தெரியறதே?" என்று மாமியின் தோற்றத்தைப் பார்த்து விசாரித்தாள் வசந்தி.
"ஆமாண்டி நல்ல நாளும் அதுவுமா 'அபிஷ்டு' மாதிரிக் குளிக்காமப் படுத்துண்டிருக்க முடியறதா?"
இப்படிக் காமாட்சியம்மாள் பதில் சொல்லிக் கொண்டிருந்த போதே ஊர்வலமும் மனிதர்களும் வீட்டை நெருங்கி வந்திருந்தனர்.
சர்மா, ரவி, கமலி, வேணு மாமா எல்லோருக்குமே காமாட்சியம்மாளை ஆரத்தித் தட்டுடன் வாசலில் பார்த்ததும் பெரிய ஆச்சரியமாயிருந்தது. ஆரத்தி சுற்றிக் கொட்டும் போது பாடும் பாட்டுக்காக மேளமும் நாதஸ்வரமும் சகல வாத்தியங்களும் சில நிமிஷங்கள் ஒலிப்பது தவிர்த்து நின்றன. காமாட்சியம்மாளும் வசந்தியும் தான் ஆரத்தி சுற்றிக் கொட்டினார்கள். காமாட்சியம்மாளே பாட்டும் பாடினாள். "பத்திரம்! வலது காலை எடுத்து முன்னே வச்சு உள்ளே வா..." என்று காமாட்சியம்மாளே கமலிக்குச் சொல்லி அழைத்துக் கொண்டு போனது இன்னும் நம்ப முடியாததாக இருந்தது. யாரும் கவனிக்காமல் பேசாமல் கொள்ளாமல் விட்டுவிட்ட தனிமையில் தனக்குத் தானே நினைத்து நினைத்து காமு மெல்ல மனம் மாறியிருக்க வேண்டும் என்று நினைத்தார் சர்மா. காமாட்சியம்மாளே, "ரெண்டு பேரும் சித்தே இப்பிடி என் பின்னாடி வாங்கோ..." என்று மணமக்களைத் தன் படுக்கையருகே அழைத்துச் சென்றாள். அதுதான் நல்ல சமயமென்று வேணு மாமா, "இந்தாடா ரவி! அம்மாவை ஆசீர்வாதம் பண்ணச் சொல்லு!..." என்று அட்சதை நிரம்பிய வெள்ளிக் கிண்ணத்தை அவனிடம் நீட்டினார்.
ரவி அட்சதையை அம்மா கையில் கொடுத்துவிட்டுக் கமலியோடு அவளை நமஸ்காரம் செய்தான். "தீர்க்காயுஸா இருக்கணும்" - என்று அம்மாவின் மெல்லிய குரல் சாதகமாக ஒலித்ததுமே அவர்கள் மனத்தில் பாலை வார்த்தாற்போல இருந்தது.
தான் கறந்து வைத்திருந்த பாலில் தன் படுக்கையருகே வைத்திருந்த மலைப்பழங்களில் இரண்டு மூன்றை உரித்து விண்டு போட்டுக் கொஞ்சம் சர்க்கரையும் சேர்த்தபின், "கல்யாணத்திலே பொண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் பாலும் பழமும் கொடுக்கணும்னு சாஸ்திரம்டா! நான் அங்கே தான் வரமுடியலே... இந்தா! முதல்லே இரண்டு பேருமா இதைக் கொஞ்சம் சாப்பிடுங்கோ சொல்றேன்" - என்று கமலிக்கும், ரவிக்கும் பாலும் பழமும் கொடுத்தாள் காமாட்சியம்மாள். அந்தப் பரிவு - ஒன்றுமே வித்தியாசமாக நடந்து விடாதது போன்ற காமாட்சியம்மாளின் அந்த அன்பு எல்லாம் ரவியையும் கமலியையும் மற்றவர்களையும் திணற அடித்தன.
திடீரென்று நின்று கொண்டிருக்கும்போதே தலை சுற்றி மயங்கி விழுவது போல தள்ளாடும் அம்மாவை ரவி பாய்ந்து தாங்கிக் கொண்டான்.
"நீ சித்தே புருஷா பக்கம் போய் இருடாப்பா. இப்போ எனக்கு என் மாட்டுப் பொண்ணோட தனியா ரெண்டு வார்த்தை பேசணும்..."
ரவி விலகிப் போய் மற்றவர்களோடு சேர்ந்து கொண்டான். தள்ளி நின்று கொண்டிருந்த கமலியை ஜாடை செய்து அருகே அழைத்தாள் காமாட்சியம்மாள். அப்படி அழைத்த அவள் முகமும் பார்வையும் நிஷ்களங்கமாக இருந்தன.
காமாட்சியம்மாள் அப்போதிருந்த தளர்ச்சியைப் பார்த்துக் கமலி அவளை அப்படியே அணைத்தாற் போலத் தாங்கிச் சென்று கட்டிலில் உட்கார வைத்துவிட்டு, "உங்களுக்கு இருக்கிற தளர்ச்சியில் நீங்கள் நிற்கக் கூடாது! உட்கார்ந்து கொண்டே சொல்லுங்கள்" - என்று அருகே பவ்யமாக நின்று கொண்டாள். காமாட்சியம்மாள் அப்படியே அவளை விழுங்கி விடுகிறவளைப் போல வைத்த கண் வாங்காமல் பார்த்து அவளது இன்னும் காப்புக் களையாத கையுடன் கூடிய அழகிய மணக்கோலத்தைச் சில விநாடிகள் தன்னுள் இரசித்தாள்.
அதிகாலையில் தானே தொடுத்துத் தனக்கு வைத்துக் கொண்டது போக மீதியிருந்த பூவைப் பாருவிடம் எடுத்துக் கொண்டு வரச்சொல்லித் தன் கையாலேயே கமலிக்குச் சூட்டி விட்டாள்.
"நீ ஏன் நிற்கிறே? நீயும் இப்பிடிப் பக்கத்திலே உட்கார்ந்துக்கோ. சொல்றேன்" -
கமலி அப்படியே கட்டிலுக்குக் கீழே காமாட்சியம்மாளின் காலடியில் அமர்ந்தாள்.
"நீ ரொம்பக் கெட்டிக்காரி... எல்லாம் உன் மனசு போலவே நடந்திருக்கு. எனக்கும் இப்போ இந்த நிமிஷம் உன் மேலயோ அவன் மேலேயோ எந்த மனஸ்தாபமும் இல்லை. ஆனா மனஸ்தாபம் இருந்ததுங்கறது நிஜம். எனக்கு இப்போ மனசு திருப்தியா நெறைஞ்சு இருக்கு. நீயும், என் புள்ளையும் தீர்க்காயுஸா - படு சௌக்கியமா இருப்பேள் - அதிலே சந்தேகமில்லே. என்னமோ என் அக்ஞானம்... நான் முரண்டு பிடிச்சேன். குறுக்கே நின்னேன். இப்போ அதை நானே மறந்துட்டேன். நீயும் மறந்துடணும். மன்னிச்சிடணும்னுகூடச் சொல்வேன்."
"ஐயையோ நீங்கள் அப்படியெல்லாம் சொல்லக் கூடாது. நான் ரொம்பச் சிறியவள். உங்களிடம் நிறையக் கற்றுக் கொள்ள வேண்டியவள். நான் யாரு உங்களை மன்னிக்க?"
"நீ அகந்தையில்லாதவள்... நிஜமான படிப்பாளி. அதுனாலேதான் நான் இத்தனை கடுமையாச் சோதனை பண்ணினப்புறமும் நீ எங்கிட்டப் பவ்யமாக இப்பிடிச் சொல்றே. பரவாயில்லே இப்போ நான் உங்கிட்ட ஒண்ணே ஒண்ணு மட்டும் வேண்டிக்கிறதுக்கு மீதம். இருக்கு."
"நீங்கள் வேண்டிக் கொள்ளக் கூடாது, உங்கள் மருமகளுக்கு நீங்கள் உத்தரவிட வேண்டும்" -
"நான் வேண்டுதல்னுதான் சொல்லுவேன்ம்மா! நீ உத்தரவுன்னு எடுத்துண்டா அதைப்பத்திச் சந்தோஷப்படறேன்."
"உன்னைப்போல் நான் இந்தாத்து மாட்டுப் பொண்ணா உள்ளே நுழைஞ்சப்போ என் மாமியார் எனக்கு எதைச் சொன்னாளோ அதை நான் உனக்குச் சொல்லியாகணும்! ஆனா ஒரு வித்தியாசம், நாங்கள்ளாம் இந்த தேசத்துக்காரா. நீ வேற தேசத்திலேருந்து வந்துருக்கே. இந்தத் தேசத்து ஆசார அநுஷ்டானங்களைப் புரிஞ்சுண்டிருக்கே. கொண்டாடறே. படிப்பும் பணிவும் சேர்ந்து அமையறது கஷ்டம். உங்கிட்ட ரெண்டுமே அமைஞ்சிருக்கு."
"எப்போது அக்கினி சாட்சியாக உங்கள் பிள்ளையைக் கல்யாணம் செய்து கொண்டு நான் உங்கள் மருமகள் ஆகிவிட்டேனோ அப்புறம் என்னை ஏன் வேறு தேசம் என்று நீங்கள் சொல்லணும்?"
"இனிமே அப்படிச் சொல்லலேடீ! தேசம் எதுவாயிருந்தா என்னம்மா? பிரியம், பாசம், உபகாரம், மனுஷத்தன்மை, சத்யம், சகிப்புத் தன்மை, நியாயம், சிரத்தைங்கறதெல்லாம் அத்தனை தேசத்துக்கும் ஒண்ணுதான். இந்த தேசத்துக்காராளைவிட இந்த தேசத்து விஷயங்கள்ளே உனக்கு அதிகமான பக்தி சிரத்தை இருக்குன்னு கோர்ட்டிலேயே தீர்ப்பாயிருக்குன்னு எல்லாரும் பேசிண்டா.
"என் ஆசையெல்லாம் வேறொண்னுமில்லே. என் பிள்ளையோட நீ இங்கேயே கிருஹலட்சுமியா இருந்து இந்தாத்துலே பெற்றுப் பெருக்கி விளக்கேத்தணும்கறதுதான். இது கலப்புக் கல்யாணம். இங்கே இருக்கறவா - பார்க்கறவா - கொறை சொல்லிண்டே இருப்பான்னு தயங்கியோ பயந்தோ வேற தேசத்திலேயே நிரந்தரமா இருந்துடலாம்னு நீ நெனைக்கப்படாது. இங்கேயே இருந்து இந்தாத்திலே விளக்கேத்திண்டு வரணும். புருஷா அக்னி சந்தானம் ஔபாசனம்னு பண்ணி நெருப்பு அணையாமக் காத்துண்டு வர மாதிரி இந்தக் குடும்பத்திலே பொண்டுகளும் தலைமுறை தலைமுறையா ஒரே வித்திலேருந்து வளர்ற துளசியைச் சம்ரட்சணம் செஞ்சு பூஜை பண்ணிண்டு வரோம். பூஜை பண்ண மனுஷா இல்லாமல் இந்தாத்துத் துளசி மாடம் ஒரு காலத்திலேயும் வாடப்பிடாது. அதிலே நாள் கிழமைகளில் மட்டுமில்லாமே எல்லா நாள்ளேயும் தீபம் பிரகாசிக்கணும்.
"இங்கே இந்தக் குடும்பத்தோட சௌபாக்கியங்களும், லட்சுமி கடாட்சங்களும், விருத்தியும் நாங்க பரம்பரையா சரீர சுத்தத்தோடேயும் அந்தரங்க சுத்தத்தோடேயும் பண்ணிண்டு வர துளசி பூஜையாலேன்னுதான் எங்களுக்கு நம்பிக்கை. நாங்க நல்ல நாள் தவறாமே விரத நியமம் தப்பாமே துளசி மாடத்திலே ஏத்தற விளக்குத்தான் இதுவரை இந்தக் குடும்பத்தைப் பிரகாசப்படுத்திக் காப்பாத்திண்டு வரது. எத்தனையோ தலைமுறைக்கு மின்னே ராணி மங்கம்மா காலத்திலே விரத நியமம் தப்பாத ஒரு பிராம்மண சுமங்கலிக்குத் தானம் பண்ணணும்னு தை வெள்ளிக்கிழமையும் அதுவுமா சொக்கத் தங்கத்திலே பண்ணின சொர்ண விளக்கு ஒண்ணை வச்சுண்டு அந்த ராணி, கிராமம் கிரமாமாத் தேடிப் பார்த்தாளாம். கடைசியா அந்தச் சொர்ண தீபத்தை இந்தக் குடும்பத்து மாட்டுப் பொண் ஒருத்திதான் தானம் வாங்கிண்டாளாம். அன்னியிலேருந்து இந்தக் குடும்பத்து மாட்டுப் பொண்கள் ஒவ்வொருத்தரா அந்தச் சொர்ண தீபத்தையும் துளசி பூஜை பண்ற உரிமையையும் முந்தின தலைமுறைப் பெரியவா கிட்டேருந்து பரம்பரை பரம்பரையா அடைஞ்சிண்டு வரோம். இன்னிக்கும், நாளையும் தை வெள்ளிக்கிழமை தவறாமே நான் அந்தத் தங்க விளக்கைத் துளசி மாடத்திலே ஏத்தி வைக்கிறதுண்டு! இந்தா இப்போ அதை நீ வாங்கிக்கோ. இனிமே நீ அந்தப் பூஜையைத் தொடர்ந்து பண்ணிண்டு வா" - என்று காமாட்சியம்மாள் எழுந்திருந்து பெட்டியிலிருந்து அந்தத் தங்க விளக்கை எடுத்துத் திரியிட்டு ஏற்றிக் கமலியிடம் நீட்டினாள்.
"உங்கள் கட்டளைப்படியே இந்த வீட்டின் கிருஹ தீபம் அணையாமல் - துளசிமாடம் வாடாமல் இங்கிருந்து குடும்பம் நடத்தறேன். ஆனால் தயவு செய்து நானும் 'இவரு'மாக ஒரே ஒரு தடவை என் பெற்றோரைப் பார்த்து வருவதற்காகப் போய் வர மட்டும் அனுமதி தாருங்கள் அம்மா" - என்று கூறி வணங்கி அந்தத் தீபத்தை இரண்டு கைகளாலும் அணையாமல் பயபக்தியோடு வாங்கிக் கொண்டாள் கமலி. காமாட்சியம்மாள் கமலியின் கோரிக்கைக்கு இணங்கினாள். அப்போது அவளுடைய கண்களில் நீர் நெகிழ்ந்தது. அவள் தளர்ச்சியோடு படுக்கையில் சாய்ந்து கொண்டாள். சிறிது தொலைவிலிருந்து வசந்தியும், ரவியும் இதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சர்மா, வேணு மாமா முதலியோர் புரோகிதருடன் கிருஹப் பிரவேசத்துக்கான வைதிக காரியங்களை ஆயத்தம் செய்து கொண்டிருந்தனர். பார்வதி அவர்களுக்கு ஒத்தாசை செய்து கொண்டிருந்தாள். குமார் அப்போதுதான் தூங்கி எழுந்திருந்து தோட்டத்துக் கிணற்றுக்கு நீராடப் போயிருந்தான். பளபளவென்று விடிந்து ஒளி பரவிக் கொண்டிருந்தது.
காமாட்சியம்மாள் ஏற்றிக் கொடுத்த தீபத்தை அப்படியே கைகளில் ஏந்தியபடி பின்புறம் கிணற்றடியில் துளசி மாடத்துக்குச் சென்றாள் கமலி. அடுத்த சில விநாடிகளில், துளசிமாடத்தருகே இருந்து,
"துளசி! ஸ்ரீசகி சுபே பாபஹாரிணி புண்யதே
நமஸ்தே நாரத நுதே நாராயண நம ப்ரியே..."
என்ற கமலியின் இனிய குரல் ஒலிக்கத் தொடங்கியது. அவள் துளசி பூஜையை முடித்துக் கொண்டு உட்பக்கம் திரும்பியபோது கூடத்தில் இயல்பை மீறிய அமைதி நிலவியது. ரவி, சர்மா, வேணு மாமா, வசந்தி, பார்வதி, குமார் எல்லோரும் காமாட்சியம்மாளின் படுக்கையருகே கூட்டமாக நின்று கொண்டிருந்தார்கள். கமலியும் அங்கே விரைந்தாள். காமாட்சியம்மாள் மயங்கினாற் போலப் படுக்கையில் சாய்ந்து துவண்டு கிடந்தாள்.
சர்மா காமாட்சியம்மாளின் பொன்நிற உள்ளங்காலில் சூடுபறக்கத் தேய்த்துக் கொண்டிருந்தார். எல்லார் முகத்திலும் கவலையும் பரபரப்பும் தெரிந்தன. ரவி அம்மாவின் கையைப் பிடித்து 'பல்ஸ்' பார்த்துக் கொண்டிருந்தான். வேணு மாமா குமாரைக் கூப்பிட்டு "டாக்டரைக் கூப்பிட்டுண்டு வா! ஓடு! வாசல்லே கார் நிக்கறது, உங்கம்மாவுக்கு இங்கிலீஷ் டாக்டர்ன்னாப் பிடிக்காது. ஆனாலும் பரவாயில்லே. வடக்குத் தெருவுக்குப் போய் எங்காத்துக்கு நாலு வீடு தள்ளி இருக்கிற டாக்டரைக் கூட்டிண்டு ஓடிவா" - என்று அவனை அவசர அவசரமாகத் துரத்தினார். குமார் ஓடினான். பார்வதி அதற்குள்ளேயே பயந்து அழத் தொடங்கியிருந்தாள். சர்மா காலைத் தேய்ப்பதை நிறுத்திவிட்டு வேணு மாமாவையும் ரவியையும் நோக்கி உதட்டைப் பிதுக்கினார். நேரே பூஜை அறைக்குப் போய் இது மாதிரிச் சந்தர்ப்பங்களில் பயன்படுத்துவதற்கென்று காசிச் செம்பில் எப்போதோ சேமித்து வைக்கப்பட்டிருந்த கங்கா தீர்த்தத்தைக் கொண்டு வந்து காமாட்சியம்மாளின் வாயில் இரண்டு உத்திரணி சேர்த்தார். தீர்த்தம் கடை வாயிலும் கன்னங்களிலும் சரிந்து வழிந்தது.
அதுவரை அமைதியாகப் பொறுத்துக் கொண்டிருந்த சர்மா சிறுகுழந்தை போல் விசும்பி விசும்பிக் கோவென்று கதறியழுதார்.
"கொடுத்தவச்ச மகராசி! வெள்ளிக்கிழமையும் அதுவுமாப் பார்த்துப் பூவும் குங்குமமுமாப் போய்ச் சேர்ந்துட்டா?" - என்று கிருஹப் பிரவேசத்துக்கு வந்திருந்த பட்டினத்து வாத்தியார் தம் உதவியாளரின் காதருகே மெல்ல முணுமுணுத்துக் கொண்டிருந்தார். ரவிக்குக் கண் கலங்கியது. கமலி, வசந்தி எல்லாருமே வாய்விட்டு அழுது விட்டார்கள்.
துளசி மாடத்தில் அந்தக் குடும்பத்தின் குலவிளக்கான புராதனமான சொர்ண தீபம் சுடர்விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருந்த போது, கிருஹ தீபமாக விளங்கிய காமாட்சியம்மாள் ஏதோ வீட்டுக்கு மருமகள் வந்ததும் அவளிடம் சொல்லிக் கொண்டு போவதற்காகவே காத்திருந்தது போல் போய்ச் சேர்ந்தாள். வசந்தி கமலியின் காதருகே மெல்லச் சொன்னாள்: - "மாமி உங்களை ஆசீர்வாதம் பண்ணிட்டுப் போகணும்னே காத்துண்டு இருந்த மாதிரின்னா இருந்துட்டுப் போயிட்டா?"
கமலியால் இதற்குப் பதில் சொல்ல முடியவில்லை. மேலும் வாய்விட்டு விசும்பி அழத் தொடங்கி விட்டாள் அவள்.
"அழாதேடி! கமலி! நீ ரவியைக் கல்யாணம் பண்ணிண்டு உங்க நாட்டோட போயிடுவியோங்கறது தான் சதா மாமியோட கவலையா இருந்தது. உங்கிட்ட என்ன சொன்னா மாமீ?"
"நான் இங்கேயே இருந்து குடும்பம் நடத்தி இந்தத் துளசி பூஜையை விடாமப் பண்ணணும்னு என்னிடம் வாக்கு வாங்கிக் கொண்டு அந்தத் தங்க விளக்கை எடுத்துக் கொடுத்தாள்." -
"பின்னே என்ன? மாமிக்குக் குடுத்த வாக்கைக் காப்பாத்து! அந்தத் துளசிச் செடி வாடாமையும், விளக்கு அணையாமையும் பார்த்துக்கோ" - என்று உணர்ச்சி பொங்கும் குரலில் கமலிக்குப் பதில் சொன்னாள் வசந்தி.
சங்கரமங்கலத்தில் பொழுது நன்றாக விடிந்து சூரியனின் கதிரொளி கோவில் கோபுரக் கலசங்களில் பட்டுப் பளீரென்று சுடர்விட்டு மின்னத் தொடங்கியிருந்தது.
--------------
முடிவுரை
இது வரை துளசிமாடம் கதையை ஆர்வத்தோடு படித்து வந்த வாசகர்களுக்கு இப்போது இங்கே இப்படி ஒரு சிறிய முடிவுரை எழுத வேண்டியதாகிறது. கிழக்கத்திய கலாசாரம் மேற்கத்திய மக்களாலும், மேற்கத்திய கலாசாரம் கிழக்கத்திய மக்களாலும், மாறி மாறி அழுத்தமாகக் கொண்டாடப்படுவதைச் சில சமயங்களில் சிலரிடம் காண்கிறோம். உலகம் சிறியதாகி வருகிறது. மனிதர்களிடையே முரண்டுகளும், வெறுப்புக்களும் தணிந்து வருகின்றன. 'ஆஸ்திகரான' சீமாவையரை விட நாஸ்திகரான இறைமுடிமணி பண்பட்டவராயிருக்கிறார். சங்கரமங்கலத்து இந்துப் பெண்களைவிட அதிக இந்தியத் தன்மையை விரும்பி நேசிக்கிறாள் பிரெஞ்சுப் பெண்ணான கமலி. வைரம் பாய்ந்த காமாட்சியம்மாளின் மனத்தையே கடைசியில் இளகச் செய்து அறவே மாற்றிவிட அவளால் முடிகிறது. நேர் எதிர் இலட்சியங்களுள்ள சர்மாவும், இறைமுடிமணியும் நெருங்கிய நண்பர்களாகப் பழக முடிகிறது.
நம்மைச் சுற்றி உலகெங்கும் 'Transfer of values' (மதிப்பீடுகளின் மாறுதல்) மதங்களையும், சமய நம்பிக்கைகளையும் பூர்வீகமான கலாசாரப் பழக்க வழக்கங்களையும் மெல்ல அசைத்துக் கொண்டு இருந்தாலும் ஏதோ ஒரு வகையில் ஓரிடத்திலிருந்து பெருகும் நீர்ப் பெருக்கு மற்றோரிடத்தில் சென்று தவிர்க்க முடியாதபடி நனைந்து பாய்ந்து பரவுவது போல் கலாசாரப் பரிமாற்றம் (Cultural Exchange) அல்லது கலாசார மடை மாற்றங்கள் (Cultural transformation) நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. அதை யாராலும் அழித்து விடமுடியாது.
இக்கதையில் கமலியும், ரவியும் அந்தக் கலாசாரப் பரிமாற்றங்களின் சின்னங்களே. ஆயிரம் வேறுபாடு இருந்தாலும் பாசமும் அரவணைத்து ஏற்றுக் கொள்வதுமே முடிவாக இந்தியத் தாய்மார்களின் நிறைவான பண்பு என்பதைத் தன் வாழ்விலும், மரணத்திலும் ஒருசேர நிரூபிக்கிறாள் காமாட்சியம்மாள்.
பண்பாடு என்பது பரவலாகும்போது வெறும் தேசீய அடையாளப் புள்ளி (National identity) நீங்கி 'மானிடம்' என்ற சர்வ தேசிய அடையாளம் (Inter-national Identity) உடனே வருகிறது. இந்தக் கதை 'சங்கரமங்கலம்' என்ற ஒரு சின்னக் கிராமத்தில் நடந்தாலும் இதில் வரும் மனிதர்கள் அந்தக் கிராமத்தை விடப் பரந்த உலகத்தைப் பாதிப்பவர்கள், பாதித்தவர்கள், பாதிக்கப் போகிறவர்கள்.
(நிறைந்தது)
-----------------
This file was last updated on 25 Oct. 2017.
Feel free to send correction to the webmaster.