நடராச சதகம்
ஆசிரியர் ஸ்ரீமத் சிதம்பரநாத முனிவர்
naTarAca catakam of
citamparanAta munivar
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Tamil Virtual Academy for providing a scanned image
version of this work for the etext preparation. This work has been prepared using the
Google Online OCR tool to generate the machine-readable text and subsequent proof-reading.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2017.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
நடராச சதகம்
ஆசிரியர் ஸ்ரீமத் சிதம்பரநாத முனிவர்
Source:
நடராச சதகம்
ஆசிரியர் :
திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் ஸ்ரீமத் சிதம்பரநாத முனிவர்
இது இவ்வாதீன இருபத்தைந்தாவது மகாசந்நிதானம்
ஸ்ரீ-ல-ஸ்ரீபூ சுப்பிரமணியதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய
சுவாமிகள் அவர்கள் ஆணையின்படி வெளியிடப்பெற்றது.
தருமபுர ஆதீனம், 1946,
வெளியீடு எண் 111, பிரதிகள் 500
தருமபுர ஆதீனம் ஞானசம்பந்தம் பதிப்பகத்தில் பதிப்பிக்கப்பெற்றது.
--------
திருச்சிற்றம்பலம் -குருபாதம்
முகவுரை
செல்வ நெடுமாடஞ் சென்று சேணோங்கிச்
செல்வ மதிகோயச் செல்வ முயர்கின்ற
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
செல்வன் கழலேத் துஞ் செல்வம் செல்வமே.
நடராச சதகம் என்பது சிதாகாசமாகிய தில்லை நகரிலெழுந்தருளியிருககும் ஆனந்தக்கூத்தரைப் பாட்டுடைத் தலைவராகக்கொண்டு எழுந்த ஒரு பிரபந்தம். 103 பாட்டுக்களைக் கொண்டது. ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் 'சிவசிதம்பரவாச சிவகாமி யுமைநேச செகதீச நடராசனே' என்ற மகுடம் பெற்று விளங்குவது. அதிலும் "தில்லை மூவாயிரவர்தொழும்" எனத் தில்லை வாழந்தணர்கள் ஆகம விதிப்படி வழிபாடு செய்வதை மிகப் பாராட்டிச் செல்லுகிறது. "பாலுண் குழவி பசுங்குடர் பொறாதென நோயுண் மருந்து தாயுண்டாங்கு" ஆனந்தக்கூத்தன் அருட்பெருக்கை ஏற்று ஆன்மாக்களது பக்குவநிலைக்கேற்பப் பாலித்தருளும் பராசத்தியாகிய சிவகாமியம்மைக்கு மூவகையான்மாக்களு முய்ய மூலாகம உபாகமங்களை விதிமுறை நடக்க மொழிந்ததாகக் கூறுவது. ஆசிரியவிருத்தத்தானமைந்தது.
சதகமென்பது ஒருபொருள்பற்றி எழுந்த நுாறு பாக்களை யுடையது. தொண்ணூற்றாறுவகைப் பிரபந்தங்களுள் ஒன்றானது. ஆனால் இதனைப்பற்றிய இலக்கணம் பன்னிருபாட்டியல் முதலிய பழைய இலக்கண நூல்களிற் கூறப்படவில்லை. பிற்காலத்து ஐந்திலக்கணங் கூறும் செந்தமிழ் நூலாகிய இலக்கண விளக்கப் பாட்டியலில் ’விளையு மொருபொருண் மேலொரு நூறு, தழைய வுரைத்தல் சதகமென்ப’ என்று இலக்கணம் வகுக்கப் பெற்றுள்ளது. இதற்குரையெழுதிய சதாசிவ நாவலர் 'கற்று வல்லோரால் விரும்பும் அகப்பொருளொன்றின் மேலாதல், புறப்பொருளொன்றின் மேலாதல் கற்பித்து நூறுகவி பாடுதல் சதகமாம்' என்று பொருள் கண்டார். ஆகவே இச்சிறுநூல் அகப்பொருளைளேயும் புறப்பொருளையும் பொருளாகக்கொண்டு எழுந்ததென்பது துணிபு.
இச்சதகத்தின் தந்தையாராக முதற்கண் விளங்குபவர்கள் அறிவாற் சிவனேயாய அமைச்சராம் வாதவூ ரடிகளேயாவர். தனிநூலாக அவர்கள் செய்யாவிடினும் திருவாசகத்துத் திருச்சதகம் என்ற பகுப்பு அமைந்திருத்தல் ஆராய்தற்குரியது. ஆனால் அது கட்டளைக்கலித்துறை
யானமைந்தது, பிற்காலத்து நாட்டு வரலாறுணர்த்தும் நூறு பாடல்களிலடங்கிய சதகங்கள் எழுந்தன, அவை தொண்டைமண்டல சதகம், சோழமண்டல சதகம், பாண்டி மண்டல சதகம் முதலிய பலவாம். இவ்வாறு சதகச் செய்யுட்கள் பொருட்டொடர்பாலும் தண்ணென்ற
செய்யுணடையாலும் எல்லார் மனத்தும எளிதிற்பதியத் தொடங்கவே கவிஞர் பெருமக்கள் இப்பிரபந்தத்தின் வாயிலாக அன்றாட வாழ்வுக்கு இன்றியமையாத அருங்கருத்துக்களையும் நீதிகளையும் உலகியலறிவையும் ஊட்டத் தொடங்கினார்கள். அதன் விளைவாக எழுந்தனவே தண்டலையார் சதகம், குமரேச சதகம், அறப்பளிச்சர சதகம் முதலியனவாம். அவை பொதுவாகக் கடவுள் உணர்ச்சியையும், கடமைகளையும் உணர்த்துவனவேயன்றி, சிறப்பாக உணர்த்துவனவல்ல. அந்தக் குறையை நீக்க எழுந்ததே இந்த நடராச சதகமென்னலாம்.
இச்சதகத்துள் பல ஆகமங்களில் பலகாற் பயின்று, நினைவுவன்மையோடு அரிதின் முயன்று அறிந்து கொள்ளப்படும் அருங்கருத்துக்கள் பலவும் அடைவே மிளிர்கின் றன. சைவசமயத் தொடர்புடைய பல நுணுக்கங்கள் ஒருசேர உணர்த்தப்படுகின்றன. இக்கருத்தை, பஞ்ச
பூதஸ்தலங்கள், ஆறுகாசி, அட்டவீரட்டம், இருபத்தைந்து மாகேசுவர வடிவங்கள். இவை முதலானவைகளைத் தொகுத்துணர்த்தும் பகுதிகள் நன்கு வலியுறுப்பனவாம். சிவபூசை, அதற்கேற்ற உபகரணங்கள், சிவலிங்கவகைகள், அவற்றை வழிபடுதற்குரியார், வழிபடுமுறை, மாத வருட விசேட அபிடேகங்கள், அபிடேக திரவியங்களைப் பற்றிய அருங்கருத்துக்கள், பயன்கள், அருச்சனைக்குரிய பத்திர புட்பங்கள், முதலியவைகளை நன்கு விளக்கிச் செல்கின்றது. ஒரு சைவசமயி மேற்கொள்ளவேண்டிய சாதனங்களாகிய விபூதிருத்திராட்சங்களி னிலக்கணங்கள், அணியுமுறை, பயன் இவைகள் அறிவிக்கப்படுகின்றன. எல்லாமாக இந்நூல் சைவப்பெருமக்கள் ஒவ்வொருவருடைய உள்ளத்திலும் இருத்தல் இன்றியமையாதது.
இந்நூலின் பாடல் கரும்பின் கட்டி யென இனிய சொல்லொழுக்கால் இயங்குகின்றது. சில ஆகமங்களை உணர்ந்தார்களுள்ளத்தை இக்கவிபோக்குத் தட்டிஎழுப்பி இப்பாடற்பகுதி இன்ன ஆகமசுலோகத்தின் கருத்து என்ற ஒப்புமை உணர்ச்சியை யுண்டாக்கிச் செல்வதாய் முதல்வன் நூல்வழி வந்த முதனூல் என்ற எண்ணத்தை உண்டாக்குவது. வடமொழிச் சொற்களைத் தமிழ் மொழிக்கு ஏற்ப மாற்றியும் எதுகைமோனைகட்கு இடர்ப் பாடுண்டாயின் ஆரிய மொழியினமைதிப்படியே எடுத்து இணைத்தும் செல்கின்றது. பதியியல்பு கூறும்பாடல் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
இந்நூலை ஆக்கியவர்கள் திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் பத்தாவது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சிவஞானதேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளிடத்தில் உபதேசம்பெற்ற சிதம்பரநாத முனிவர் அவர்கள் ஆவார்கள். இதனை யறிவிப்பது இந் நூல் "தருமை யாதீனமிகப் பருதிமதி யுன்ளனவும் வாழி, சிவஞானர் அருளும் வாழி' என்ற பாடற் பகுதிகளாம். இவர்களுடைய ஆகம அறிவிற்கு - வடமொழிவன்மைக்கு - கவிதையின் கவினுக்கு எடுத்துக்காட்டாயிலங்குவன இவர்களியற்றிய நித்திய கன்மநெறிக்குறளும் இந்நூலுமே.
இந்நூல் ஆதீனத்துக் கலைமகள் நிலையமாகிய புத்தகசாலையில் ஏட்டுப்பிரதியிலிருந்தது. இவ்வாதீன ஏட்டுப்பிரதிகளை ஆராயநேர்ந்த காலத்து இதன் கவி யருமையினையும், கருத்து மேம்பாட்டினையும், சைவம் விளக்கும் தனிமாட்சியினையும், இவ்வாதீனத்து இருபத்தைந்தாம் குருமகா சந்கிதானமாக எழுந்தருளிக் கல்விப் பணியும், சமயப்பணியும் செய்துகளிக்கும் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்களிடம் விண்ணப்பித்துக் கொண்டேன். அவர்கள் இதுபோல வெளிவராத நூல்கள் பலவற்றையும் விரைவில் வெளியிட்டு எட்டில் மறைந்துகிடக்கும் எண்ணரிய புலவர் புகழை - எண்ணத்தை எல்லோரும் அறிந்து இன்பம் நுகரச்செய்யவேண்டும் - தமிழ் பரவவேண்டும் சைவம் தழைக்க வேண்டும் என்ற அருளானயைத் தந்தார்கள். தமது குருமூர்த்திகளாக இருந்து, தமக்கு ஞானச் செல்வத்தையும் தானச்செல்வத்தையும் தந்தருளி முத்திநிலை யெய்திய 34-வது மகா சந்நிதானம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அவர்கட்குப் புதிதாகக் கோயில் எடுப்பிக்கவும் அப்பொழுது இந்நூலை வெளியிடவும் திருவுளங்கொண்டார்கள். அவ்வண்ணமே விய ஆண்டு வைகாசித்திங்கள் 26-ம் நாள் நடைபெறும் ஆலய மகாகும்பாபிடேக நினைவுமலராக வெளிவருகிறது.
இந்நூலாராய்ச்சிக்குத் தருமையாதீனப் பிரதியோடு மற்றும் இரண்டு பிரதிகள் கிடைத்தன. அதனாலாகிய திருத்தங்களும் சில. ஆயினும் பாடல்களின் ஒசைப் போக்கிலும், சீரமைப்பிலும் சிதைவுற்ற இடங்களுமுள. இப்பதிப்பில் நூலாசிரியராகிய சிதம்பரநாத முனிவர் வரலாறும், இம்மலரைத் தாங்கும் எழிற் குரவர் ஸ்ரீ-ல-ஸ்ரீ சண்முகதேசிகர் வரலாறும் சுருக்கமாகச் சேர்க்கப் பெற்றுள்ளன. இத்தகைய பணிகளே இயற்றிவரும் பரமாசாரிய சுவாமிகளுன்டய துறவரசாட்சி நீடுவாழ்க என் ஆலவாய்ப்பெருமான் அடியிணை இறைஞ்சுகின்றேன்.
அமிழ்தனைய வாக்கால் அடியேனை என்றும்
தமிழடிய னாக்குங் தகையான் - இமிழுலகை
தன்சீர்த்தி யான்மறைத்துச் சைவ மணம்பரப்பு
மன்சுப்ர மண்ய குரு.
- இங்ஙனம்,
தருமபுர ஆதீனத் தமிழ்ப்புலவர்,
வித்துவான் ச. தண்டபாணி தேசிகர்,
தமிழ்ப்பேசாசிரியர், திருப்பனந்தாள்,
5-6-46. தருமபுரம்,
--------------
நூலாசிரியர்:
ஸ்ரீமத் சிதம்பரநாதமுனிவர்
இவர்களுடைய இளமைவரலாறு அறியப்பெறவில்லை. பத்தாவது அருட்குருமூர்த்திகளாக எழுந்தருளியிருந்த ஸ்ரீ-ல-ஸ்ரீ சிவஞான தேசிகசுவாமிகள் தலயாத்திரையாகச் சென்று திருவாரூரில் எருந்தருளியிருக்குங் காலத்தில் இவர்கள் சென்று வணங்கி குருமூர்த்திகள் திருவடிக்குத் திருப்பதிகம் என்ற ஒர் பாமாலை சாத்தினர். சில நாள் கழித்துக் குருமூர்த்திகளிடத்தில் உபதேசம் பெற்றுக் கொண்டார்கள். பின் சிவஞானங் கைவந்தவர்களாய்த் தருமையம்பதியில் அடியார்களுடன் வசித்துவரு நாளில் இவ்வாதீனத்துக்குச் சொந்தமான திருக்கடவூர் ஸ்ரீஅமிர்த கடேசுவர சுவாமி கோயில் கட்டளை விசாரணையாக எழுந்தருளியிருந்த பஞ்சாக்கரமுனிவர் கேட்டுக் கொண்டபடி சிவாகம சாரமான நித்திய கன்மநெறியைக் குறள் வெண்பாவால் நித்தியகன்மநெறி என்னும் பெயருடன் அருளிச்செய்தனர். ‘அத்தனரு ளாகமத்தி னாராய்ந்து அவாவினிற்செய், நித்திய கன்ம நெறி தனக்கு" என்பது இக்கருத்தை வலியுறுத்தும் அந்நாலின் காப்புச் செய்யுட் பகுதியாகும்.
இவர்கள் ஆகமசாஸ்திரத்தில் நல்ல பயிர்ச்சியுடை யவர்களாயிருந்தமையின், சிவபூஜைக்கு இன்றியமையாத ஆகமக் கருத்துக்களையெல்லாம் திரட்டி நடராச தோத்திர நூலாகிய நடராச சதகம் என்ற இந்தப் பிரபந்தத்தை யியற்றினார்கள்.
தக்கன் இறைவனை மதியாது செய்யப் புகுந்தயாகத்தை - ஸ்ரீ வீரபத்திரக்கடவுள் அழித்து, உதவிபுரியவந்த தேவர்களை யெல்லாம் வென்று, அவனது தலையையும் தடிந்த வரலாற்றைப் பொருளாக அமைத்து ஒட்டக்கூத்தரா லியற்றப்பட்ட தக்கயாகப் பரணிக்கு உரைவகுத்தவர் இம்முனிவர் பெருமானெனக் கருதப்படுகிறது.
பிறகு குருவாணைப்படி சீகாழி ஆலய நிர்வாகப் பணியை ஏற்று நடத்தி வந்தார்கள். இவர்களோடு பூர்வாசிரமத்தில் உடன் கல்வி கற்றவர் தில்லையாடியில் பிறந்த அருணாசலக் கவிராயர். அவர் ஒருபோது வியாபார நிமித்தமாகப் புதுச்சேரிக்குப்போகும் வழியில் சீகாழிக்கு வர அங்கே கட்டளை விசாரணையில் சுவாமிகள் இருப்பது அறிந்து பார்க்கச் சென்று அளவளாவினர் சுவாமிகள் தாம் சீகாழிக்கு ஒரு பள்ளுப் பிரபந்தம் பாடத் தொடங்கியிருப்பதையும், அதனை முடிக்க அவகாசமின்மையையும் உணர்த்தி 'இதனை இருந்து முடித்துச்செல்க' என்று கூறினார்கள். சுவாமிகளது அன்புரையை எதிரேயே மறுத்துச்செல்லும் மனவாற்றலில்லாதவரான கவிராயர் பிரபந்தத்தைப் பாடி முடித்து அங்கிருந்து மறுநாள் இரவு அப்பிரபந்தத்தை மற்றொருவர் கையிற் கொடுத்துச் சுவாமிகளிடம் சேர்ப்பிக்கச்செய்துவிட்டு தாம் புதுவைக்குச் சென்றார்.
முனிவர்பிரான் கவிராயர் சென்றுவிட்டார் என்பதைக் காலையி லறிந்துகொண்டு எவ்வாற்றானும் இங்கேயே இருத்திவிடவேண்டும் எனத் திருவுளங் கொண்டு கவிராயர் அழைப்பதுபோலக் கடிதம் அனுப்பி அவர்கள் குடும்பத்தாரை வரவழைத்துச் சீகாழியில் வீடொன்றுவாங்கி அதில் இருக்கச் செய்தார்கள். சில நாளில் கவிராயர் மீண்டுவந்தனர். சுவாமிகளைத் தெரிசித்துச் சின்னாளுடனிருந்தனர். ஒருநாள் சுவாமிகள் வீதிவலம் வருவோம்' என்று கூறி உடனழைத்து வருங்கால் வடக்குவீதி அடைந்ததும் தம் குடும்பம் ஒரு வீட்டில் இருப்பதை அறிந்து ஆச்சரிய மடைந்தார் கவிராயர். சுவாமிகள் 'உம்மை உடனிருத்துவதற்காகவே இக்காரியம் நம்மால் செய்யப்பெற்றது' என்று அறிவித்தார்கள். கவிராயர், கல்வியை நுகரும் சுவாமிகள் கருத்தை
மெச்சிச் சீகாழியிலே வசிப்பா ராயினர். அதுமுதல் அப்புலவர் தில்லையாடி அருணாசலக் கவிராயர் என்ற பட்டம் நீங்கிச் சீகாழி அருணாசலக் கவிராயர் என வழங்கப்பெற்றார். சீகாழியில் இருக்கும்போது முனிவரானைப்படி சீகாழிக்குத் தல புராணமுஞ் செய்தனர். இதனை விளக்குவது 'இனைய காதை மீண்டியம்பவும் வல்லனோ' என்னும் சீகாழித் தலபுராணத்துக் கடவுள் வாழ்த்து இருபத்தைந்தாம் பாடலாகும்.
இவர்கள் பத்தாவது குருமூர்த்திகளிடம் உடதேசம் பெற்றார்கள் ஆதலாலும், சீகாழி அருணாசலக் கவிராயரோடு உடன் பயின்றவர்களாக வரலாறு அறிவிப்பதாலும் அவ்விருவர் காலமே இவர்களுடைய காலமும் என அறியப்பெறுகின்றது. 10-வது குருமூர்த்திகட்கு, தஞ்சை துளசா மகாராஜா பரிபாலன காலத்தில் சீகாழிச் சீமை முகாசு ஸ்ரீ மல்லாசிகாடேராயரவர்கள் தாம் அநுக்கிரகம் பெற்ற அருமைக்காக வேளூர் தேவஸ்தானத் திருப்பணிகள் செய்வித்ததாக எழுதப்பெற்றுள்ள கல்வெட்டுக்கள் சாலிசகம் 1669 என்றும், கலியுகசகம் 4868 என்றும் குறிக்கின்றன. ஆதலால் இவர்கள் இற்றைக்கு 205 ஆண்டுகளுக்கு முன் இருந்தார்கள் என்பது துணிபு.
----------
திருக்கயிலாய பரம்பரைத் தருமபுர ஆதீனம் உச-வது மகா சங்கிதானம்
ஸ்ரீ-ல-ஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்,
உச-வது மகாசங்கிதர்னம் ஸ்ரீ-ல-ஸ்ரீ சண்முக தேசிகர் குருமூர்த்த ஆலயம்.
------
இம்மலர் தாங்கும் எழிற்குரவர்:
ஸ்ரீ-ல-ஸ்ரீ சண்முகதேசிக பரமாசாரியசுவாமிகள்
இவர்கள் அவதார ஸ்தலம் நன்னிலம். மரபு சைவாசாரிய மரபு. இவர்கள் இளமைப் பருவம் இலக்கண இலக்கிய ஆராய்ச்சியிலும் திருமுறைப் பாராயணத்திலுமாக முதுமை எய்திற்று, உங-வது குருமூர்த்திகள் ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரிடத்தில் சைவ சந்நியாசமும் தீக்ஷையும் பெற்றார்கள். குருமூர்த்தியின் பெருங் கருணைக்கு இலக்காக இவர்கள் வாழ்ந்துவந்தமையால் குமாரசாமித் தம்பிரான் என்ற திருநாமத்தோடு ஒடுக் கத்து இருந்தார்கள். அப்பொழுது குருவானயைச் சிர மேற்றாங்சிச் சிவபோகசார முதலிய நூல்களை அச்சிடு வித்தார்கள். இவர்களது வருங்கால சமயப்பணியும், தமிழ்ப்பணியும் அப்பொழுதே விளங்குவதாயிற்று.
பின்பு 1938-ம் ஆண்டு ஜூன் மீ 26ம் நாள் பீடாதி பத்தியத்தை ஏற்றார்கள். அதுமுதல் அவர்கள் செய்த அறப்பணிகள் மிகப்பல. சமயசாத்திரங்களையும் சம்பிரதாய நூல்களையும் அச்சிட்டு வழங்கினார்கள். ஆதீன மடாலயத்தை ஞானநூற்பதிப்பகமாக நலம்பெறுவித்தார்கள்; கலைமகள் கவினும் இடமாக - திருமகள் திகழும் திருக்கோயிலாகச் செய்வித்தார்கள். ஆதீன முகப்பைப் புத்தகசாலையாக ஆக்கி அறிவு வழங்கச்செய்தார்கள். ஆகம தேவார பாடசாலைகளை நிறுவித் திருக்கோயிலையும் சைவவுலகையும் அன்புமயமாக - தமிழ்மயமாகச் செய்தார்கள். ஆரம்பப் பாடசாலை அமைத்து அனைவர்க்கும் அறிவுக் கண்ணைத் திறப்பித்தார்கள். சிவஞானபோத மகாநாடுபோன்ற பல மகா நாடுகளைக் கூட்டிச் சித்தாந்தத் தேனைச் செகத்துயாவரும் சுவைக்கச் செய்தார்கள். “ஞான சம்பந்தம்” என்னும் திங்கள் வெளியீட்டினால் சைவமும் தமிழும் தழைக்கச் செய்தார்கள். அதற்காக "ஞான சம்பந்தம்' என்னும் பதிப்பகத்தையும் நிறுவினர்கள். இவ்வளவும் இவர்கள் செய்த சமயக்கல்வித் தொண்டுகள்.
தருமபுர நகரத்தை ஒருமாதிரிக் கிராமமாக அறிவாளிகளும் அரசியலாளர்களும் மதிக்கச்செய்தது இவர்களுடைய அருமுயற்சியே யாகும். திருப்பணி செய்யும் இவர்களது தனித்திறத்தை ஆட்சியிலுள்ள ஆலயங்கள் அனைத்திலும் நேரிற் காணலாம். நிர்வாகத் துறையில் காரியஸ்த அதிகார வரையறை, வருஷத் திட்டம், மாதக் கணக்கு, திட்ட ஜாப்தா முதலிய பல ஒழுங்குகள் இவர்களால் ஏற்படுத்தப்பெற்றன.
வளர்ச்சித்துறையில் பலகாலும் பயன்தரு மரங்கள் பல வைக்கப்பெற்றன. விவசாயத்துறையில் பல முன்னேற்ற முறைகள் கையாளப் பெற்றன. தேவஸ்தானங்களுடையவும் மடாலயத்தினுடையவும் பொருளாதார முன்னேற்றத்திற்குப் பல வழிகள் வகுக்கப்பெற்றன. இவர்களுடைய ஆட்சித்திறத்தினை அறிந்த அறிவாளிகள் பலரும், அரசியல் பின்னப்புடையார் பலரும் பத்தாண்டு ஆட்சியினை ஒரு பெருவிழாவாக 5-9-1943-ல் கொண்டாடினார்கள். அவ்விழாவில் ஆட்சித்திறத்தை விளக்கும் மலர் வெளிவந்து தமிழ் நாடெங்கும் மணம் தந்து நிற்கின்றது.
இவ்விழாவின் ஞாபகார்த்த தருமமாகவே மாயூரநகரில் பெண் மருத்துவசாலை கட்ட அஸ்திவாரம் போடப்பட்டது. இம்மருத்துவசாலைக்குச் சென்னை கவர்னர் ஆர்தர் ஹோப் துரையவர்கள் விசயஞ்செய்து அஸ்தி வாரக்கல் அமைத்தார்கள்.
இவ்வாறு பன்னிரண்டாண்டுகள் அருட்செங்கோல் செலுத்திய இவர்கள் எல்லாவகையிலும் தன் வழிபற்றி நடப்பவர்களும், ஞானசம்பந்தம் பத்திராதிபராயிருந்து உலகியலறிவும்,
ஒடுக்கத்திலிருந்து வைதிக நெறியும்பெற்று விளங்குபவர்களும் ஆகிய ஒடுக்கம் ஸ்ரீமத்
சிவகுருநாதத் தம்பிரான் சுவாமிகளை 7-5-45- ல் ஞானபீடத்திலமர்த்தி ஸ்ரீ-ல-ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் எனத் தீக்ஷாநாமந்தந்து, அருட் செங்கோலோச்சிவர அருள்பாலித்து 20-5-45-ல் சிவாத்துவித முத்திநிலை எய்தினார்கள்.
என் வடிவ நின்வடிவாக் கொண்டா யெளியேற்குன்
றன் வடிவ கல்கத் தகுங்கண்டாய் மன்வடிவால்
வெம்பந்த நீக்கும் விமலகீ மெய்ஞ்ஞான
சம்பந்த னென்பதனாற் றான்.
------------
சிவமயம்
நடராச சதகம்
காப்பு
பூமருவுஞ் சோலைப் புலியூ ரரன்சதகத்
தாம மியற்றத் தமிழுதவு - மாமன்
றருவா னனத்தான் றகையருளு மாச்சீர்
தருவா னனத்தான் சரண்.
அவையடக்கம்
கங்கைக்கு நுரையுண்டு பூவினுக் களறுண்டு
கருதுநெற் குமிகளுண்டு
கவின் மலர்க் குப்புலித ழுண்டரா வுண் கிரண
காலமுண் டெழுகதிர்க்குத்
திங்கட்கு நடுவிற் களங்கமுண் டினியபூந்
தேனுக்கு ளெச்சிலுண்டு
தேவர்கட் காணவா தியமும் மலப்பவஞ்
செறிவதுண் டுயர்கமலைநேர்
மங்கையர் தமக்குமதி தொறும்விலக் குண்டுசுவை
மல்குநற் கனியாசினி
மாமுதற் றருவினிற் பயினுண்டு முனியுண்ட
வாரிதிக் குவருண்டதால்
எங்கவிதை முழுதினும் புன்சொலுண் டதை நீக்கி
ஏற்றமிகு சிதம்பரப்பே
ரிசைதலாற் கொண்டக மகிழ்ந்திடுவர் முத்தமி
ழிலக்கண வருங்கவிஞரே.
-----------------
நூல்
சிதம்பர மான்மியம்
சீர்பெருகு கங்கைமுத லறுபத்தொ டறுகோடி
தீர்த்தமங் கையர்படிந்து
தீமையுறு தம்பவ மொழித்திடுங் காவிரித்
தெய்வமா நதியும் வடபால்
நீர்பெருகு நிவவென வடைந்தெல்லை யுறுதலா
னின் மலத் துவமருடலம்
நிலைபெறு பகீரதி யணைந்து சிவ கங்கையென
நின் பெயர டைந்துயர்தலம்
ஏர்பெருகு சிவகலைக ளாயிர நிறைந்ததல
மிதயமத் தியமாந்தலம்
எண்ணவிதி நண்ணவுரை பண்ணவுயர் போகம்வீ
டெளிதினரு ளிய நற்றலம்
சேரகில வுயிரெலாஞ் சிவமாக நீநடஞ்
செய்பதிக் கிணையதுண்டோ
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 1.
இதுவுமது
மறைகள் பல வாகமபு ராணமிரு திகளோது
மான்மியமி ணங்குந்தலம்
மனுமறைசொ லைந்தெழுத் தாதிமந் திரமெலா
மன்றின்வடி வாகுந்தலம்
முறையினா வின் குளப் படிநீரி னதிகோடி
மூழ்கிமுற் பவமொழிதலம்
முதல்வர்சொற் படிநம்பி யடியனென் றுரைதில்லை
முனிவர்பூ சனைபுரிதலம்
குறைவிலவ் வங்தணர்க டினமுமம ரர்க்கவி
கொடுத்துமக மாற்றுந்தலம்
கோபுரவி மானமதில் சூழவுய ரைந்துசபை
கொண்டெழி லுறுந்தலமதன்
திறமிவள வென்றுபல மறையொடயன் மாலாதி
சேடனுமு ரைக்கவெளிதோ
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 2
தில்லை மூவாயிரவர் பெருமை
பெருமைசேர் வேதாக மாதிமா தாவெனப்
பேசுகா யத்திரிதனைப்
பேணியே திரிகால சந்திபஞ் சாட்சரப்
பெரியமனு முறைசெபிப்பார்
பிரமன்மா லரனையுநி தம்பிரா ணாயாம
பேதரே சகபூரகப்
பீடுதரு கும்பகா திச்செயலி னின்றுளப்
பிரபையாற் கண்டுமகிழ்வார்
இருபதொரு வேள்விசெய் தமரர்க்கு மூவர்க்கு
மீந்திடுவ ரவியுணவினை
என்றுமறு தொழில்விடார் மன்றினட மிடுமுன்னை
யெழிலுறப் பூசைபுரிவார்
திருமருவு சுந்தரன் றமிழடிமு னீசொன்ன
செல்வர்மகி மைக்களவிலை
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 3
பதியியல்பு
சிவமெனும் பொருளது பராற்பரஞ் சூக்குமம்
சிந்திதந் தேசோமயம்
சின்மய நிரஞ்சன நிராலம்ப நிர்க்குணங்
திகழவ்ய யஞ்சர்வகம்
மவுனமன பாவனா தீதமன கஞ்சுத்தம்
வளரநூ பந்நிர்மலம்
மன்னுமப் பிரமேய நித்திய மனாமய
மகாபரம சுகமனாதி
பவரகித மறைபயில நாதார நாதாந்த
பரமசஞ் சலநிட்களம்
பன்னரு மகண்டித பரம்பிர மநீயாம்
பரசுகம கோததியதின்
திவலைதனி லாயிரத் தொருகூற தாகுமுயர்
தெய்வவடி வங்களன்றே
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 4
இதுவுமது
ஒன்றாகி நின்றசிவ மதுபரா சத்தியெனு
முருவங்கொ டிருவடிவதா
யொருமூன்று தேவராய் நான்மறைப் பொருளாகி
யுயர்பஞ்ச மூர்த்தியாகிக்
குன்றாத வாதார மாறாகி யேழெனக்
கொளும்வியா கிருதிமனுவாய்க்
குலவட்ட மூர்த்தியா யெண்குணம தாய்ப்பரங்
கொண்டநவ தத்துவமதாய்
இன்றாகி யன்றாகி யெதிர்கால வடிவாகி
யெங்கும்வி யாபியாகி
எல்லா வுயிர்க்குமுயி ரதுவாகி யருளிநின்
றியலுலக முயநினைந்தே
சென்றாதி பரவெளி பழுத்தருட் கனிந்தநின்
செயல்சிறி துரைக்கவெளிதோ
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 5.
இருபத்தைந்து தத்துவமூர்த்தியுஞ் செயலுங் கூறியது
ஒதரிய வையைந்து தத்துவம தாகியெவ்
வுலகுகின் செயலாவதென்
றுணரும்வகை யாதிசந் திரதாரி யாயுலகி
னுறுசெனன துரிதமாற்றி
ஆதியுமை யுடனிருந் துயிர்வகை புணர்த்திவிடை
யாரூட னாயினிதுபே
ரருள்புரிந் துயர்நடன மூர்த்தியாய்ப் பெரிதுவகை
யானந்த மயமதாக்கிக்
காதலி யெனக்கவுரி செங்கைதொட் டருள் பெருகு
கலியான சுந்தரனெனக்
காட்டிநல் வதுவைகொண் டாண்பெண்ணா டுறைதரக்
கருதியுயர் பிட்சாடனத்
தீதிலுரு வங்கொண் டெவர்க்குமெய்ஞ் ஞானஞ்
சிறந்திட வளிப்பையன்றோ
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 6.
இதுவுமிது
காமனைக் காய்ந்தவடி வங்கொண் டுயிர்க்கெலாங்
காமநீத் திடநினைத்துக்
காலாரி யாயுயிர்ப் பயமொழித் தேமுனர்க்
கசடர்புர மூன்றெரித்துத்
தாமத மிரா சதஞ் சத்துவ மெனாவருந்
தக்கமுக் குணமாற்றியே
சலந்தர வதஞ்செய்வடி வாகியுயர் மாதவர்
தவம்வளர்த் தருளை நல்கிப்
பூமிசை கிருத்திவா சத்திறைய தாகியே
பொங்குபா சங்கழித்துப்
புகழ்தக்கன் மகமழித் திடுவீர னாகியே
பொருந்து துற வினையளித்துத்
தீமை தவிர் நாரிபங் குடையனா யுட்பகைக
டீர்த்திடப் புரிவையன்றோ
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 7
இதுவுமது
அம்பிகை மெய் பாதிகொண் டாண்பெண் புணர்ந்திட
வமைத்துக் கிராத வடிவா
யகமருவு மூர்க்கரை யொழித்தரிய கங்காள
னாயுயிர்க் கோகளித்துப்
பம்புசண் டேசர்க் கனுக்கிரக வடிவதாய்ப்
பத்தியன் பர்களெவர்க்கும்
பாலித்து விண்புரங் தருணீல கண்டனாய்ப்
பயிலுமும் மலமொழித்துக்
கம்புளணி மாயனுக் காழியருள் வடிவதாய்க்
கருதுபோ கங்களீந்து
கருணைதரு விக்கினப் பிரசாத னாயுட்
களங்கம தொழித்துமுருகன்
செம்பரையி னோடமர்ந் துலகின்மனே சேயொடு
சிறந்திடப் புரிவையன்றோ
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 8
இதுவுமது
பகரேக பாதனாய்ச் சரியைகிரி யாதிய
பயன் றந்து தருமமுய்யப்
பரமசுக வாதனத் திறையாகி வைகிமறை
பயிறெக்க ணாமூர்த்தியாய்த்
தகைகொள்குரு வருடந்தி லிங்கவுற் பவபீட
சத்தியொ டிருந்து புவனத்
தாய்தந்தை யெனவுறைந் தருள நீ யையைந்து
தக்துவப் படிவமானாய்
உகமுடிவி லரியய னுருத்திரன னந்தமறை
யும்பருயிர் பல்புவனமும்
ஓங்குமுச் சுடாாறு சமயமனு மற்றது
மொடுங்குவ்டி வங்கொடனியாய்ச்
செகமுடிவி னரியசங் காரதாண் டவமிடுஞ்
சிற்பரா காசமுதலே
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 9.
பதி திருக்கோயில் கொண்டமை
கோடிமறை மாயன் விதி தேடரிய பிரமநீ
கூறுசுரர் முனிவராதிக்
கோதில்பல வுயிரெலாம் பூசைமுறை புரியவுங்
குலவுமைந் தொழில்பெருகவுங்
நாடிய சுயம்பாதி யெழுவகை யிலிங்கமென
நற்புவியி னற்புதமதாய்
நவிலுகிக மாகம மமைத்தெளிதி னருளவே
நற்கோயில் கொண்டனையதால்
நீடுசப ரியைசெய்து ருத்திர னழித்திடுவ
னெடியமால் காவல்புரிவன்
நித்தம்ப டைப்பணய னகிலசுர ராதியர்தம்
நிலையிலின் பெய்திவாழ்வார்
தேடிமறை காணாத நீடுசர ணாதீத
சின்மயா னந்தவாழ்வே
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 10
சிவலிங்கபூசை செய்தவர்கள்
பிரமனரி பதினே ருருத்திரரொ டிந்திரன்
பெருந்திசைப் பாலருரகர்
பீடுகந் தருவர்கின் னரராதி கணநரர்
பிணக்கிலா முனிவரமரர்
கருது பல சமயவா னவர்கள் பல மறையரசர்
கயமுரக மிடபமந்தி
கபிலைமுத லூர்ந்திடுபி பீலிகாந் தத்துட்
கணக்கறு விலங்கினோடுபுள்
ளரசுகழு நாரைவலி யானனஞ் சரபமுத
லளவிலாப் பறவைமற்றும்
அலகில்பல் லுயிருகின் னிலிங்கபூ சனைசெய்
தடைந்தனர்கள் போகமோட்சம்
திரிகரண சுத்தியொரு சிறிதுமில் லாதவிச்
சிகடனுக் கருள்புரிகுவாய்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 11
சிவசின்ன மில்லாதவர்
பூதியணி யார்வதன நீசர்சுடு காடதாம்
புரகரவு னக்கமணியைப்
புனையார்கண் மெய்புலைத் தெருவெச்சி லுண்டுமெய்
புழுத்திறங் திடு நாயுடல்
நாத நின் பூசனைசெ யாத கை யீமத்தி
னடுவவிந் திடுஞெகிழிகை
நற்கோயில் வலமுறாக் கால்கொலைக் களமதனி
னட்டமுட் கழுமரக்கால்
போது சிவ தெரிசன முறாரதவர்கண் விழுப்புணவை
பொங்குமெட் டித்தருக்கள்
போதவுனை நினையாத நெஞ்சமே கற்பாறை
புகாண்ட வாளமலையாம்
தீதுபெறு மிவரைப்ப டைத்திட்ட நான்முகன்
செயலெலாஞ் வீண்பாழதாம்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 12
சிவபூசையும் சிவதரிசனமும் ஒரு காலமாவது செய்யவேண்டுமெனல்
முப்பொழுது மனுதினஞ் சிவபூசை செயவேண்டு
முனிவர்சுரர் மறையவர்க்கும்.
மொழியினிஃ தன்றியிரு பொழுதினொரு பொழுதேனு
முயன்றதைப் புரிக நாளுந்
தப்பொழிய வுயர்காலை யுச்சிமா லையொடரைச்
சாமத்தெ னுந்தெரிசனம்
தருசுவா யம்புவ விலிங்கங் தனைப்புரிக
தக்கமா லையிலேனுநீள்
கைப்பதும மலர்குவித் தேத்துதலு மின்றியே
காரிரவி னுக ரவிழெலாம்
காலனு ரிற்கிருமி மலைபோற் குவிந்திடக்
கண்டிவரை யுண்கவென்றே
செப்பியுண வைத்துநர கத்திடுவ ரென்றுமறை
தேவிக்குநீ மொழிந்தாய்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 13
இலிங்கமெலாஞ் சுயம்புவெனல்
வாணாசு ரன்பூசை செய்திடுமி லிங்கத்தெண்
மாகோடி சதமளவிலை
மன்னுமொன் பதுகோடி யாலயங் கண்டனன்
மருவுதெ னிலங்கைவேந்தன்
கோணாம லொருவளவ னித்தம்ப்ர திட்டைபுரி
கோயில்கோ டிக்கதிகமாம்
குவலயங் தன்னிலடி யர்க்கருள் புரிந்து நீ
கோயில்கொண் டனையனந்தம்
தூணானை கட்டுதறி மாக்குடைந் திடுகுளவி
தூயநெற் கொளுமரக்கால்
தொகுநெல் லுலக்கைமுத லானவடி வத்தடியர்
தொழுதிட விலிங்கமாகிச்
சேணாடர் தொழநின்று போருள் புரிந்த நின்
சீர்க்கருணை யாடலெளிதோ
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 14
மூவர்திருமுறைத் தலங்கள்
பொங்கிவரு காவிரி நதிக்குவட பாலிற்
பொருந்து மறு பத்துமூன்று
புண்ணிய தலங்கடென் பாலினூற் றிருபதேழ்
பூவிலுயர் பாண்டிநாட்டில்
தங்குபதி யீரேழு மலைநாட்டி லொன்றேழ்
தலங்கொங்கி னடுநாடதில்
சாருமிரு பாணிரண் டீழத் திரண்டொன்று
தலமுறுந் துளுவமதனில்
துங்கமுற வெண்ணான்கு நற்பதிக ளாகுமுயர்
தொண்டைநா டதனின் வடபால்
தொல்பதிக ளைந்திவைகண் மூவர்பா டியதலம்
சொல்லின முளவனந்தம்
திங்களொடு கங்கைபுனை யுஞ்சடை யசைந்திடத்
திருநடம் புரிசரணனே
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 15
பஞ்சபூதம், அட்டமூர்த்தி, சட்காசி, சப்தவிடங்கத் தலங்கள் இவையெனல்
தலைமையுறு கமலைதிரு காவலம் பதியருணை
சாற்றுகா ளத்திநகரஞ்
சச்சிதா நந்த நட னஞ்செய்புலி யூரிவை
தகும்பஞ்ச பூதத்தலம்
நலமருவு மைம்பூத நகரொடு சிராமலை
நவின்றகரு வூராலவாய்
நண்ணுமிவை யட்டமூர்த் திப்பதிகள் வாஞ்சிய
நலங்கொளை யாறர்ச்சுனம்
குலவு திரு வெண்காடு கவுரிமா யூரங்
குளிர்ந்த சா யாவனமென
கூறுபதி சட்காசி திருநாகை நள்ளாறு
கோளிலிசொன் மறைவனம்பூத்
திலகுகம லாலயங் காறாயல் வான்மியூர்
செப்பிலிவை யேழ்விடங்கம்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 16
சடாதாாத்தலம் அட்டவீசட்டத்தலம்
மூலமா ரூர்சுவா திட்டான நிலைநாவன்
மொழியுமணி பூரமருணை
முக்கியவ நாகதங் தில்லைநகர் காளத்தி
முனிவர்சொல் விசுத்திகாசி
சீலமிகு மாக்கினைப் பதிதிருக் கயிலைமலை
சேர்பிரம ரந்திரமதாஞ்
சிவமருவு திருமதுரை துவாத சாங் தத்தலஞ்
செப்பியவி ராட்புருடனுக்
கேலுமிவை யாதார நிலையதாங் கண்டியூ
ரெழிலதிகை யணிகொறுக்கை
எய்தும்விற் குடிகோவல் பறியல்வழு வூர்சினத்
தியமனைக் காய்ந்தகடவூர்
சேலிலகு கண்ணியுட னிப்பதியுள் வீரட்ட
சிவமாகி நீயுறைந்தாய்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 17
எழுவகையிலிங்கமும் உலோகலிங்கமும்
எழுவகை யிலிங்கஞ்சு வாயம்பு தெய்விகமி
ராக்கதங் திருமானுடம்
எழில்கொளா ரிடமுடன் காணபம் வாணமென
வெண்ணிநின் பூசைபுரிவார்
அழகுறுந் தமனிய விலிங்கபூ சனைபுரியி
னளவில்செல் வந்தருவைமிக்
கவனிநல் குவைவெள்ளி வடிவினிற் பூசைசெயி
னாயுள் நல் குவைபித்தளை
தழைகஞ்ச வடிவத்தின் வித்துவே டணமுடன்
தாமிரக் தன்னின் மகவும்
தருவையீ யத்தினோப் துத்தநா கத்திற்
சமைந்துருவி லுச்சாடனம்
செழிதரு மயங்தனிற் சத்துரு வொழித்துச்
செயந்தருவை யன்பர்கட்கே
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 18
பார்த்திவலிங்கமும் பயனும்
வாலுகமி ருத்திகைபல் லவங்கந்த மாவரிசி
வாசமல ருதகங்குளம்
மருவுகோ மயநீறு நவநீத மோதனம்
வளம்பெறு பவித்திரமுடிக்
கோலமுறு கடர்ச்சமொ டெழுத்துருத் திரமணிக்
குறிகளி ரெண்வடிவினும்
குளிர்பூசை செயமுறையின் முத்தியாத் துமசுத்தி
கூர்சவுக் கியமெய்யழகு
சாலவரு மிட்டகா மியமின்ப நற்குணஞ்
சாம்பிராச் சியமகிழ்வுடன்
சாற்றுநோ யின்மைபாக் கியமங்க திடமாயு
டருகாந்தி யறிவிகபரச்
சீலசுக வாழ்வருள்வை நின்கருணை வரலாறு
செப்பவென் வசமதாமோ
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 19
இரத்தினலிங்க பூசையும் பயனும் விக்கிரகாபிடேக காலமும்
மாணிக்க பதுமரா கமுநல்ல வாழ்வுதரும்
வச்சி ரவி லிங்கபூசை
மாற்றலரை மாய்க்கும்வயி டூரிய மரம்பைசுக
மருவுமக வும்படிகநிர்
மாணித்தி லிங்கபூ சனையாற்றின் மெய்ஞ்ஞான
மரகதம் லியோகநல்கும்
மணிநீல நிதிதரும் பவளமோ நிறைசகல
வாழ்வுகற் கோமேதகம்
வேணித்த மகிழழகு நல்குமனு தினமுமே
மிளிர் சிலைக் கபிடேகமரம்
மிக்கபூ ரணையுலோ கத்துருவி லோவியம்
வியன் படா தியவடிவதில்
சேணிலகு மபிடேக மாடிமுன் புரிகெனச்
செப்பினாய் மறையாகமம்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 20
எழுவகையிலிங்கபூசைக்குரிய ஆகமம்
சொல்லரிய வாகம மொரேழு நான்குவகை
சுவாயம்பு வந்த னிலுனைச்
சூக்குமங் காரணம் வாதுளா கமமுடன்
றோன்று சுப் பிரபேதமே
நல்லவர்சொ லிந்நான்கின் வழிபூசை புரிதரவு
நற்றெய்வி கந்தனிலுனை
நவில்சுவா யம்புவங் காமிகம் விசயமுட
னாடுமன லாகமத்தும்
மல்கா ணவஞ்சிதைய சிந்தியங் தீப்த மொடு
வளர்சகத் திரமசிதமா
வழிபுரிக் திடவுமா ரிடமதை யஞ் சுமா
னிரெளரவம் யோகசஞ்சேர்
செல்லுகிசு வாசமுறை நற்பூசை நாடொறுஞ்
செய்யவடி யர்க்கமைத்தாய்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 21
இதுவுமது
மேவுமா னுடலிங்க மதனைவிம லோற்பேக
மிக்கசந் திரஞானமே
வீரமுயர் விம்பாக மத்துமுறை புரியவும்
வீறிராக் கதவடிவினை
தாவியபு ரோற்கீத லளிதமுயர் சித்தமொடு
சந்தான வாகமத்தும்
சந்ததமும் வாணமதை மகுடமுயர் கீரணஞ்
சருவோத்த வாகமமுடன்
ஒவில்பர மேச்சுரா கமவிதியி னுலுமன்
புடையநல் லோர்களென்றும்
ஓங்குபூ சனை புரிவ ரென்று பா கத்துறைந்
துலகீன்ற தாய்க்குரைத் காய்
தேவர்புகழ் முனிவர்மூ வாயிரவர் நற்பூசை
தெய்வமறை வழியினாற்றும்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 22
க்ஷணிகலிங்கபூசைக்கு வருணமுறை
வாலுகந் தண்டுலமொ டன்னலிங் கார்ச்சனைகள்
மறையோது பூசுரர்க்காம்
மாசில்கோ மயம்வெண்ணெய் நன் மிருத் திகை மூன்று
மன்னவர்செய் பூசனைக்காம்
கோலமுறு பல்லவ விலிங்கமாக் கந்தமிவை
கூறுமுறை வைசியர்க்காம்
கூர்ச்சமலர் மாலைகுள மூவிலிங் கார்ச்சனைகள்
கோதறு சதுர்த்தருக்கே
நாலுளது சேடலிங் கந்தனை மரசைவ
நான்மறைப் புனித ராதி
நால்வகைச் சொன்மரபர் யாவர்க்கு மாமென்று
நலிலஞ்சு மானுரைத்தாய்
சீலமறை முனிவர்மூ வாயிரவர் விதிப்படி
தினம்பூசை செய்துவாழும்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 23
இரதலிங்கபூஜா விசேஷம்
இரதலிங் கந்தனைத் தெரிசித்த வக்கணத்
தெப்பெரும் பவமுநீங்கும்
இவ்விலிங் கந்தன்னை யொருதின மருச்சிக்கி
லெண்ணில்கா மியபலனுறும்
பரிவொடிரு தினமருச் சனைகள் செய் தாற்சகல
பாக்கியமு மேன்மேலுறும்
பத்தியொடு மூன்று தின மர்ச்சனைக ளாற்றிலோ
படிவான மதலத்தும்வாழ்
பெரியசிவ லிங்கமுழு தும்பூசை யாற்றுமுயர்
பேறுதரு மவ்விலிங்கம்
பேணியனு தினமாற்றி னாலயுத மாயிரம்
பிரமகத் திகள்போமெனத்
திருவாது ளாகமத் தனிலம்பி கைக்குநீ
செப்பினா யுலகமுய்யச்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 24
ஆகம கிரந்தசங்கியை
காமிகத் தொகையது பரார்த்தங்கி ரந்தமாங்
கனயோக சஞ்சிந்தியம்
கருதிலக் கங்கார ணங்கோடி யசிதமே
காணுமயு தந்தீப்தமே
நேமமுறு மனுநியுத முயர்சூக்கு மம்பதும
நீள் சகத் திரவாகம
நெடியதொகை சங்கமா மஞ்சுமா னோரைந்து
நேரிலக் கங்கோடியே
யாமறிஞர் பேசுசுப் பிரபேதம் விசயமோ
வாகுமொரு மூன்றுகோடி
யணிகொணிசு வாசமொரு கோடியத னிற்பாதி
யாகுஞ்சு வாயம்புவம்
தீமைகெட நீபுகல்வ ரம்புணர்க் திடுமறைச்
செல்வர்மூ வாயிரவர் வாழ்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 25.
ஆகமசேடமும் புராணமும்
பாரமேச் சுரமிருப தாறிலக் கஞ்சொலும்
பயிலுமொரு கிரணமதுவும்
பஞ்சகோ டியதாமி லக்கம்வா, துளமெனப்
பகர்ந்தனைபல் புவனமுய்யச்
சீருலவு பதினெண்பு ராணமதி லீரைந்து
சிவபுரா ணம்பவுடிகஞ்
செப்பிய விலிங்கமார்க் கண்டம்வா மனமுடன்
றிருமச்ச முயர்வராகம்
பேருதவு சைவமுயர் கூர்மமே காந்தமொடு
பிரமாண்ட மெனவுரைத்தாய்
பெரியமால் காதையது நாரதம் வயிணவம்
பீடுதரு பாகவதமே.
சேரனிகொள் காருடபு ராணமின் னான்கெனச்
செய்யமுனி வர்க்கமைத்தாய்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 26
புராணசேடமும் உபபுராணமும்
பிரமமொடு பதுமமு மயன்காதை கனல் சரிதை
பேசரிய வாக்கினேயம்
பீடிரவி காதை சவு ரமியாவுங் கிரந்தவெண்
பேசிலொரு நான்கிலக்கம்
உரைசெய்கபி லங்காளி யங்கிரஞ் சிவதன்ம
முசனஞ் சனற்குமார
முயர்நந்தி சவுரமே துருவாச மாரீச
முணர்சாம்ப வம்பாற்கவம்
நரசிங்க மொடுபரா சரியமா ணவமிக்க
நாரதீ யம்வாருணம்
நல்லார்சொல் வாசிட்ட லிங்கமீ தொன் பதினை
நாட்டினைகொ லுபபுராணம்
திருமருகன் முழவமறை விதிகஞ்ச வொலியுஞ்
சிறக்கநட மிடு சரணனே
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 27
இதுவுமது
இதிகாச மூன்றுசிவ ரகசியம் பாரத
மிராமா யணஞ்சுருதிநான்
கேதெனி லிருக்கெசுரு வேதமுயர் சாமமோ
டியம்புமதர் வணவேதமாம்
விதிசெயுப சுருதியா யுண்மறை யருத்தமறை
மிக்ககந் தருவந்தனுர்
வேதமா றங்கமது மந்திரம்வி யாகரணம்
வியனிருத் தஞ்சோதிட
முதியசங் தோபிசித மீமாங்கி சஞ்சுருதி
மொழிந்தனை கவிஞர்தேற
மூதுணர்ந் திடுபரம யோகியர்க ளுய்யமறை
முடிவுரைத் தருளினைகொலாம்
சிதமதியொ டரவுபகி ரதியறுகொ டிதழியணி
செஞ்சடா டவியழகனே
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே 28
ஆலயாங்கமும் சப்தலிங்கமும்
மேவுகெற் பக்கிரக முடியர்த்த மண்டபம்
விதித்தமார் பிட்மதாகும்
வியனாபி யேதபன் மண்டப நடிம்புரியு
மிக்கமண் டபமுழங்தாள்
தாவிலாத் தானமே மேவுநற் சங்கமாங்
தாண்மகா கோபுரமெனச்
சாற்றினை யிலிங்கவடி வேழ்கோபு ரம்பீட
தலமுடன் பிரகார நற்
றூபியோ டருச்சகன் மூலலிங் கத்தோடு
துவாரமெம் கோயிலுயிரே
சுடரிலிங் கஞ்சிவக் குறியுட்ப ராத்தும
சொரூபவெளி யாகிநின் றாய்
தேவருணர் வரியவச் சிவமாய் நடஞ்செயுஞ்
சின்மயா னந்த வாழ்வே
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே 29
சிவாலயப்பிரதிட்டைக்குரிய திரவியபாகம்
புண்ணியர்க ணற்பொருள்சி வாற்பிதமி தென்றே
புகன்றுதவ வதனையாசான்
பொறையுடன் கைக்கொண்டு பங்குபத் தாக்கியப்
பொருளினெரு பங்கதனையே
நண்ணுமபி டேகந்த னக்குவேள் விக்கொன்று
நவிலோம திரவியத்தி
னாடுபங் கொன்றுதே சிகர் தமக் கொருபங்கு
நல்லமூர்த் திக்கிருமடங்
கெண்ணரிய மறைமந்தி ராதிய செபத்தினுக்
கியலுமொரு பங்குதான
மீதலுக் கொருமடங் கன்பர்போ சனமதற்
கேற்றவொரு பங்கிவளவே
திண்ணியர்க ளோ துநை வேத்தியத் திற்கொன்று
சிந்தியந் தனிலுரைத்தாய்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 30.
அட்டபந்தனநிறை கூறியது
கொம்பரக் கொருபங்கு திரிபங்க தேகருங்
குங்கிலிய மூன்று சுக்கான்
கொண்டமுக் காற்பங்கு காவிக்கல் வெண்மெழுகு
கூறு நவ நீதமூன்று
செம்பஞ்ச தத்தொகை யிலிங்கமே காற்பங்கு
சேர்த்திடித் திளமெழுகுபோற்
செய்வதுய ரட்டபந் தனவிதிய தென்றுமறை
செப்பினை யிலிங்கமாதி
விம்பபீ டத்தணிந் துயர்சம்பு ரோட்சணம்
வியன் பொழுதி லபிடேகமா
விதிசெய வமைத்தனைகொ லதுபெயர்ந் திடிலரசு
வியனிராச் சியவிநாசம்
செம்பதும வல்லிதன தம்புயநல் வீடெனத்
தினமுமக லாதுவாழுஞ்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 31
அட்டாதசக்கிரியை
ஒதரிய லிங்காதி பிரதிட்டை புரியினி
ரொன்பா னெனுங்கிரியைமுன்
புறுமிருச் சங்கிாண மங்குராற் பணமணிக
ளுய்த்தரு னியாசமுடனே
கோதினய னோன்மீல னம்விம்ப சுத்தியது
கூறுநகர் வலமேகுதல்
குளிருதக வாசமொ டிரட்சைபந் தனமணிகொ
ளும்வாத்து பூசையானைந்
தேதமி லுருத்திர மகாமண்ட பஞ்சுத்தி
யெழிலுறு சமற்காரமிக்
கினியசய னம்வேள்வி தாபனம் பந்தன
மிணங்குமந் திரநியாசந்
தீதிலவி டேகம்வி வாகாந்த முறையெனச்
செப்பினாய் மறையாகமம்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 32
பிரதிட்டாவிம்பதெரிசனம்
முந்தவுயர் தெரிசனங் கன்றினொ டிணங்குமான்
மொழியிரண் டிற்கண்ணிகை
மூன்றினிற் பாலினொடு கவ்வியம் புகனான்கின்
முறைசொனவ தானியந்தான்
ஐந்தினிற் சகலதா னியமாடி யாறினே
ழதுதனிற் சன்னியாசி
யருமறையி னெலியெட்டி னென்பதிற் சிவபத்த
ரையிரண் டியமானன்முற்
றந்திடு மகாசன மியாவரு மிலிங்காதி
தாபனஞ் செய்த கால
தரிசனஞ் செய்யமுறை யென்றுநிக மாகமஞ்
சாற்றினைகொ லுலகமுய்யச்
சிந்துர முகன்குகனும் வந்துபணி தங்தையாந்
தெய்வமே பரமகுருவே
சிவசிதம் பரவுரச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 33
காலதெரிசனபலன்
சங்கர சதாசிவ பராபர வுனக்கால
சந்தியிற் றொரழுதவர்க்குச்
சகலபிணி களுமொழியு மத்தியா னத்திற்
றணம்பெருகு மந்தியமையத்
தங்கணவு னடியிணையை வந்தனைசெ யடியவர்க்
களவில்பா தகமொழிக்கு
மர்த்தசா மத்திலுறு முத்தியென நான்மறையொ
டளவிலா கமமுரைத் தாய்
பொங்குமடி யவர்திருச் சிற்றம்ப லத்தினொரு
பொழுதேனுங் தொழநினைவுறப்
பொதுநடங் கண்டுதுதி செய்திடத் தாலுவாற்
புகலவொரு விசையெளிதினிற்
றிங்களின னுளவளவு மழியாத நற்பெருஞ்
சீரொடுபின் முத்தியருள் வாய்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 34
பூசனைசெய்யுங் காலங் கடிகை கூறியது
உதயமுதல் மூன்றைந்து கடிகையா மாந்தமட்
டுயர்கால சந்திபூசைக்
குத்தமமொ டிடையதம மென்றுரைத் தனைமறைக
ளுயர்பனிரு கடிகையளவில்
விதியினுச் சிப்பொழுதி னற்சபரி புரிதரவு
மேவுசா யங்காலையின்
மிக்கபிர தோடகா லந்தனிற் பூசைசெய
விதியெனவு மர்த்தசாமக்
ததினுரிய பூசையீ ரைந்து நா ழிகையளவு
மாற்றமுறை யெனவுமன்றி
யபிடேக பூசனைய காலத்தி னாற்றுபய
னசுரர்கைக் கொள்வரென் றாய்
சிதவிடையி னுமையொடர கரவென்று சுரர்முனிவர்
சேவிக்க வருபரமனே
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 35
காலங்களின் தீர்த்த வஸ்திர மந்திரங்கள்
காலசந் தியிலுனக் காட்டுதிரு மஞ்சனக்
கமலமே யைக் துபாரங்
கருதுவெண் டுகின்மறை சடங்கமைம் பிரமமாங்
கதித்தவுச் சிப்பொழுதினிற்
சீலமிகு சலிலமு மீரைந்து பாரமாம்
செய்யவுடை யைக்தெழுத்தாந்
திருமந்தி ரம்புகல்வ தந்தியி லுனக்காட்டு
தீர்த்தமொரு மூன்றுபாரங்
கோலமுட னீண்மனுவி யோமவ்வி யாபியாங்
கூறுமுடை பீதாம்பரங்
குலவர்த்த சாமத்தி லொருபார ரோடை
கொளுநீல மனுமூலமாம்
சேலிலகு கண்ணிக் கிதாகமத் துணிபென்று
செப்பின யுலகமுய்யச்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 36
காலங்களுக்குரிய புட்பங்கள்
பங்கயங் துளபமா தவிபுன்னை சண்பகி
பலாசமொழி நவமல்லிகை
பகர்நந்தி மந்தாரை கைதைமல ரென்னுமிவை
பதுகால சந்திமலராம்
தங்குகர வீரம்ப லாசமுற் பலமோடு
தண்டுளபம் வெண்டாமரை
சாற்றுகோ வீதமல ரேகபத் திரமொடு
தழைங்ககு ரவங்கூவிளம்
பொங்குமுற் பலமலரு முச்சியம் பொழுதினிற்
பூசனைக் குரியதென்றாய்
புகல்குமுத முல்லைமல் லிகைசாதி கூவிளம்
பூந்தமன மருவெண்டுழாய்
செங்கமல மணவே ரிராப்பொழுதி னரையிரவு
திகழட்ட புட்பமென்றாய்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செதீகச நடராசனே. 37
வாரபுட்பம் மாதபுட்பம் வாரபத்திரம்
அலரிமுத லெழுவார மலர்புகலின் வனசநல்
லாம்பனீள் குவளைமணமிக்
கலரிகுவ லயமுடன் றவளசத தள நீல
மாகுமென மறைபுகின்றாய்
குலவுகூ விளை துளப முயர்விளா மாதுளை
குறித்தபச் சறுகுநாவல்
கூறுமால் காந்தியிவை வாரபத் திரமதிக்
கொறிமுதற் கயலினீறாய்த்
தலமகிழ் பலாசுபுனை வெள்ளெருக் கலரிமலர்
சண்பகங் கொன்றைதும்பை
சாற்றுகத் தரிபட்டி கஞ்சமலர் காவியொடு
தழையுமல் லிகையுகந்தாய்
சிலையிதென நடுமலை குனித்துநகை செய்தரிய
திரிபுரமெ ரித்தபரனே
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 38
நடராசருக்குரிய புட்பமும் அட்டபுட்பமும்
மத்தம்கிழ் மந்தாரை சாதிபுனை நந்தியா
வர்த்தமா தவிதுரோணம்
மல்லிகை குராவலரி கொக்கிற கருக்கமலர்
வன சமுத லானதளவச்
சுத்தமண மலர்கொன்றை கல்லார மம்புயஞ்
சொற்பலா சங்கடம்பு
சூழ்மணங் தருபட்டி பாதிரியு மெந்தை நீ
சூட்டியணி தற்குரியவாம்
கொத்தல ரருக்க மலர் சண்பகம் பாடலங்
கோகனக மலரிபுன்னை
குளிர்நந்தி யாவர்த்த மலர்தும்பை யெட்டுமாங்
கூறரிய வட்டபுட்பம்
சித்தர்முனி வராமரர் பத்தரிவ் வகைபூசை
செய்யமுறை யெனவுலரத்தாய்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 39
பருவநசஷத்திரபூசையும் பயனும்
மறிமுதற் பங்குனி வரைக்குமம் மதிதொறும்
வருபருவ நக்ஷத்திரம்
மன்னுதின மதினுளிய பூசைதம னங்கந்த
மருவுமுக் கனியினியபால்
உறுமதுர சர்க்கரை யபூபமோ தனயூசை
யுயர்தீப பூசைகெய்தே
னுறுகிருத கம்பளங் தயிரிவைக் குறுசபல
னோங்குசீர் சாலோக்கியம்
பெறுமிட்ட சித்தியரி நாசம்பி ரீதியாம்
பெருகுதன மதிபலமுடன்
பெரியபழி கெடுமாயு ளாரோக்கி யம்மகப்
பேறுசே யுதவுமென்றாய்
சிறுபொழுது முன்னையக லாதுநற் பூசைபுரி
தில்லைமூ வாயிரவர்வாழ்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 40
மாதவபிடேகமும் பயனும்
மறியிடப மதியதனி லீரொன்ப தாடகம்
வாசநல் லுதகமாட்டின்
வருடநா லொன்பதினி லிங்கபூ சனையாற்று
மாபயன் பெறுவரானிக்
குறுவில்வ நற்குழம் பாடிடலைம் பதுவருட
முரர்பூசை செய்த பேறாம்
மொருதினம் பதினாறு தெங்கினிள நீர்தன்னை
யோங்குகட கத்தாட்டினோர்
பெறுபயன் சதவருட மாபூசை புரியுநற்
பேறதா மாவணித னிற்
பெருகுமா வின் பாலொர் தினமாட்டி லறுகுறுணி
பெரியவா யிரவருடமே
செறிதர விலிங்கபூ சனைசெய்த பேறடைவர்
தில்லைமூ வாயிரவர்வாழ்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 41
இதுவுமது
கன்னிதனில் நல்லெண்ணெய் நான்குசே ரதையிலிங்
கத்தினபி டேகஞ்செயக்
கருதருய வாண்டயுக பூசைபுரி பயனுறுங்
கதிருறுங் கோன்மதிதனிற்
பன்னுமொன் பானுழக் காவினெய் யாட்டியுற்
பலநெய்தல் கூவிளத்துட்
பயிலுமொன் றெண்ணான் கருச்சனை புரிந்திடப்
பகருமொ ரிலக்கமாண்டிற்
றுன்றுபூ சாபலங் கெளவியங் கார்த்திகை
துலங்கியவ ளந்தவருடங்
தூயபூ சைப்பயன் றனுவின் மகி டத்தயிர்ச்
சுவையோத னத்தொடிஞ்சிச்
சின்னமுறு பச்சடி நிவேதிக்கி லீராறு
சிவபூசை யாண்டின்பயன்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 42
இதுவுமது
நவின்மகர குடமதியி னறுசுவைக் கருணையுட
நற்சுவைப் பலகாரநெய்
நாடுபர மான்னமுக் கனிபான் மரீசிநீர்
நவிலுமண வெந்நீருடன்
சுவைபெருகு மோதன நிவேதித்து வழிபடுங்
தூயரைம் பதுவற்சாஞ்
சுபரிலிங் கார்ச்சனைசெய் புண்ணியம் பெறுவரிம
தோயசந் தனமைம்பலன்
கவனமொடு சிவலிங்க முடியினபி டேகஞ்செய்
கனபுண்ணி யத்தைவினவிற்
கருதுபதி னாறாண்டு சிவபூசை புரிபயன்
கைவல்ய மீன்மதிதனிற்
றிவசமொன் றதினல்கு மென்னவீ ராகமஞ்
செப்பின யடியருய்யச்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 43
சோடசோபசாரம்
வினவுசோ டசபூசை யுபசார முறைபகரின்
மேவுமா வாகனமுடன்
மிக்கவா தனமிலகு பாத்திய மருக்கியம்
விதித்தவா சமனமொடுமஞ்
சனவிவித மணியாடை கந்தமுப வீதமிழை
சாற்றுமலர் தூப தீபந்
தருநிவே தனம்வேள்வி பலிகணித் தியவிழாத்
தாமிதென நூல்புகன்றாய்
பனகதா கந்தமலர் புகை சுடர் நிவேதனம்
பஞ்சோப சாரமென்னப்
பத்தருய மிக்கமறை யாகமபு ராணநூல்
பயில்தரவெ டுத்துரைத்தாய்
தினமுமறை முனிவர்மூ வாயிரத் தவர்பூசை
செய்தக மகிழ்ந்துபோற்றுஞ்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 44
சோடசோபசாரி மாத்திரை
ஆதனமொ டாவாக னம்பனிரு மாத்திரைசொ
லைந்துமாத் திரைபாத்தியம்
ஆசமன மூன்றுமாத் திரையொன் றருக்கியம
தாறுமாத் திரைகந்தமாஞ்
சீதமலர் மாலைபனி ரண்டுமூ வைந்துபுகை
தீபமாத் திரையாறதாந்
திகழ்கருப் பூரமீ ரெட்டுமாத் திரைபூதி
செய்வலங் கணமேழதா
மோதுமாத் திரைமூன்று விசிறிசா மரைபத்த
தோரைந்து குடைமாத்திரை
யுயராடி யேழ்சுளிக மொருபத்து மூவைந்தி
னேங்குபலி நைவேதனம்
சீதவிடை பூர்தியா யிம்முறையின் முகமனது
செய்யவா கமமுரைத்தாய்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 46
அபிடேக விதி
சுத்தசல நற்கந்த தயிலமா நெல்லியொடு
துரண்மஞ்ச ணன்குறுமணத்
துகள்கல்வி யத்தொடைந் தமுதுநெய் தீம்பா
றுலங்குததி தேன்கரும்பிற்
றத்திவரு சாறஞ்ச ருக்கரை யரம்பைமுற்
சாற்றுகனி வகையவுதகஞ்
சாருமிள நீரனங் கந்தமா தபன நீர்
தாராபி டேகமுடனே
பத்திரோ தகமுயர் கவைச்சிருங் கோதகம்
பகர்பொன்னி ரத்னதோயம்
பைங்குசைத் தோயமுயர் சங்காபி டேகமுறை
பயிலுமா கமமறைசொலுஞ்
சித்தமுறை தயிலாந்த தபனதோ யந்தனைத்
தில்லைமுனி வரர்களாட்டுஞ்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 46
அபிடேக நிறை
ஐயைந்து கதலியின் கனிபலாக் கனியதொன்
றாகுமெலு மிச்சை யையைந்து
ஆகுமூ வைந்துமாங் கனிபத்து மாதுளையு
மத்தகை குளஞ்சி வகையும்
பெய்யுமிள நீர்த்தெங்கு பத்தாறி ரண்டெனப்
பேசியந ரந்தமதுரம்
பெருசருக் கரைமூன்று பலமதுவு ழக்குகெய்
பீடுகரு நாழியொன்றான்
தூயவா னைந்துசிவ மாறுபடி கீரமாந்
தோய்ந்த தயிர் முக்குறுணியாந்
துகள்மஞ்சள் பலமெண்ணெ யொருபடிக் காமெனச்
சொல்லினாய் நிகமாகமம்
செய்யமறை முனிவர்மூ வாயிரவ ரிவ்வாறு
தினமும பி டேகஞ்செயுஞ்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடரரசனே. 47
இதுவுமது
அரிசியொரு படியிடிய தாமலக மூன்றுபல
மறையுமா டத்தொடுபய
றாதிதுகள் படிமூன்றொர் படிகரும் பின்சா
றழக்கினிய துரயபனிநீர்
வருபுனற் றிரவியமி ரண்டுபல மாங்குறுணி
மருவுமன் னாபிடேக
மஞ்சனநி வேதனச்சுத் தானமோர் குறுணியாம்
மணமிகுங் கந்ததோயம்
பெருகுமைந் தமுகமுங் குறுணியவ் வண்ணமே
பேசுமலர் பத்திரம்பொன்
பெரியாத் னோதகமு மோரொரு மரக்கால்
பிரத்ததயி லத்தினுக்காந்
திரிகரண பரிசுத்த வடியருய விவ்வகை
சிவாகமங் தனிலுரைத்தாய்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 48
இதுவுமது
வாசமான் மதமகில் கருப்பூர மிமசல
மணங்கொள்கோ ரோசனையுடன்
கருவுகத் தூரிகுங் குமபங்க சந்தனம்
வகுத்தபல மிருநான்கதாம்
பூசனைசெய் பத்திரம லங்கன்மல ராடகம்
புனையாடை யோரெண்கரம்
பொற்புறுமி லிங்கமுத் தரியமுழ நான்கதாம்
போற்றியநி வேதனத்திற்
காசுதவிர் தண்டுலத் தொகையுமிரு துணியா
மட்டபலன் வர்க்கவகையா
மணிதீப தைலம்பி ரத்ததயி லத்தினுக்
காமென்று நூல்புகன்றாய்
தேசுபெறு முனிவர்மூ வாயிரவ ரிவ்வகை
சிறந்தபூ சனை செய்துவாழ்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 49
அபிடேகத்திரவியபலன்
இறைவகிற் கனுதினமு மாட்டுமுத கத்தினுக்
கெழிற்பயன் பரமசாந்தம்
யினியதயி லந்தனக் கின்பமே சுசிநல்கு
மேற்றகவ் வியமதற்கே
முறைகொள்பஞ் சாமிருதம் வெற்றுநெய் யாட்டி லுயர்
முத்திதீம் பாலினுக்கு
முதிராயுள் வர்த்திக்கு மிக்கபிர சாவிர்த்தி
மொழியுந்த திக்குமாவுக்
கறைகடன் றீர்க்குமெய்ப் பிணியறுத் திடுநெலிக்
கரசவசி யம்மஞ்சளுக்
காரோக் கியங்கரும்பு தகங்தனக் கென்னவா
கமந்தனி லுரைத்திட்டனை
சிறையிலொரு பிரமனை யடைத்துயிர் படைத்திடுஞ்
சேயையுத வியவத்தனே
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 50
இதுவுமது
சுகமளித் திடுதே னரம்பையிற் பயிர்விர்த்தி
சுதனுதவும் வில்வகமலக்
தொல்லுலக வசியமா மா துளை குரோதந்
தொலைக்குமகி ழுதவும்பலா
வகைதரு குளஞ்சியின் கனிசோக மாற்றுமுயர்
மந்த்ரப்பி ரதநரந்த
மாற்றல ரொழிக்குஞ் சருக்கரைய திளநீர்
வழங்கிடுமி ராசயோகம்
நிகரின்ம றலிப்பய மொழிக்குமெலு மிச்சையென
நித்யசாம்ப் ராச்யநல்கும்
நிதிபெருகு சீர்தரும் தந்தாபி டேகமென
நீபுகன் றனையாக மஞ்
சிகரிவட வரையினெழ முகில்பொழிலி னுலவவுயர்
திருமதிலின் மதியுலாவுஞ்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 51
பஞ்சகவ்விய பஞ்சாமிர்த நிறை
கிருதமொரு பங்குததி யிருபங்கு பயமூன்று
கிருத நேர் கோசலமயம்
கிளர்குசைப் புனன்மூ வுழக்கிவை கலந்தே
கேடிலீ சானாதியா
முருமமுறு சுருதிகரும் பஞ்சகவ் வியமுறையி
தோங்குமைந் தமுதமாக்க
லொருநூ றரம்பையின் கனியதற் கிருதெங்கு
வந்த சர்க் கரையெண்பலங்
தருமூ வுழக்குமது நெய்யதி னிரட்டியிவை
தானெலா மொன் றுபடவே
சமைவதா மெனவுமை யவட்குமறை யாகமஞ்
சாற்றின யுலகமுய்ய
திரிநயன புரதகன சின்மய பராபர
சிவாநந்த வருணிதியமே
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 52.
அபிடேககால நிவேதனம்
நறியதயி லாதியபி டேகதிர வியமாட்டி
நவிலுமொவ் வொன்றினிடையே
நம்புமுற் கோதனநி வேதனஞ் செயவேண்டு
நாளுமது புரியாவிடிற்
பெறுமரிய சைவமறை யோனாயுள் திடமொடு
பெருத்தவீ ரியநாசமாம்
பிழையற வுணர்ந்துதக மதுகவையி னுச்சியிற்
பீடுறும் சிருங்கவளவா
யுறவிலிங்கத்தின் மீ தீரிரண் டங்குலத்
தொக்கவயி டேகமெதுவா
யுள்ளன்பொ டாட்டியே தேனு நிவே தனமீத
லுறுமெமக் கென்றுரைத்தாய்
சிறுகணிரு பெரியசெவி விகடதட மும்மதச்
சிந்துரமு கன்றாதையே
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 53
வில்வார்ச்சனையின் பயன்
சென்னமூன் றிற்செய்த பாதக மொழிக்குமுன்
சென்ற குல மெழுமூன்றையுஞ்
சிவபுரத் துய்க்குமை யாயிரங் கரிகளொடு
செப்பருங் கபிலேகோடி
வினவுசுப லட்சண மிகுந்தகன் னிகைகோடி
வேண்டிய பயனுதவுமேன்
மேதகுஞ் சாளக்கி ராமமா யிரமுதவல்
விரிதடமி ரைந்துகோடி
கனகமக மாயிரங் கோடிபுரி பயனுநற்
கதிபெற விரும்பினுமெமைக்
கருதியுள் ளன்பொடொரு கூவிளஞ் சாத்தியே
கசிந்தவர்க் கெய்துமென்றாய்
தினமுமுன தாயிரங் திருநாம வர்ச்சனைகள்
செய்துமூ வாயிரவர்வாழ்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 54
வில்வமும் துளபமும் எடுக்கலாகாத நாள்
மதியுதய தினமுவா விணையொன்ப தீரேழு
வளரெட்டு நான்குமென்ன
வருதிதிகள் சோமவா ரந்தனிற் கூவிள
மகேசநின் பூசைக்கெடார்
விதிபதமொ டோணஞா யிறுவெள்ளி சேயென்ன
மேவுவா ரமுவாவிணை
மிக்கவப ரானமொ டிராக்கால மாலையும்
வியன்றுவா தசியட்டமித்
திதிசதுர்த் தசியுதயம் வைகறைப் பொழுதினுஞ்
சீர்த்துள வெடுத்தல்செய்யார்
சேருமறு மதிவருட நேர்கூவி ளந்துளவு
சேர்த்துவைத் தருச்சனைசெய்வார்
திதியுயிர் படைத்தழித் துத்திரோ பவமருட்
செயனடத் தியமுதல்வனே
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 55
இன்னாருக் கின்னபுட்பமாகாதெனல்
உந்திபூத் தொளிருமா லவனையட் சதைகளா
லுலகிலர்ச் சிக்கலாகா
துமையவளை யலர்பாதி ரிப்பூவி னலவட்
கொருபங் களித்தவுனைமுன்
வந்துபொய்ச் சான்றுபுகல் கேதகையின் மலராலு
மாவிநா யகனைவாச
வண்டுழா யிலையாலு மிரவியைத் தும்பையொடு
வயிரவரை யலரிவாச
நந்தியா வர்த்தமுட னறுகினால் விந்தையையு
நாளுமர்ச் சிக்கலாகா
நவிலிதனி லிவரையர்ச் சிக்கினர குறுவரென
நல்லவா கமமுரைத்தாய்
செந்திருவனந்தவடி வங்களொ டுறைந்தெழில்
சிறந்திடுபெ ரும்பதியதாஞ்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 56
நிவேதன முறை
சுருதிசொ னிவேதன மீசான வதனத்திற்
சுத்தான மினியதாமால்
தூயதத் புருடவ தனத்திற்கு ளோதனஞ்
சொலுமகோ ரத்திற்றிலம்
தரைபுகழும் வாமதே வானன மதிற்கவைகொ
டயிரனநி வேதனமதாஞ்
சக்தியோ சாதத்தின் முற்காண முறைசெயிற்
றருபய னிராச்சியந்தான்
உரைசெய்பா கிலையுதவின் மிக்க சுக மேநல்கு
மோங்கும்வெண் சங்கபூசைக்
கோங்குபுண் ணியமுறுங் குச்சிப்பு லன்பொடெம்
உறுப்பிடப் பயமறுமெனத்
திரிபுசை மனோண்மணி யெம்மனைக் குநீமுனஞ்
செப்புமறை நீதியன்றே
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 57
தீபாராதனை முறை
வரமுதவு பரமகின் றிருமுனா ராதனை
வரன்முறை சொலிற்றூபமேல்
வளரொளி செய்புட்ப தீபத்தோ டராவிடப
மருவுபுரு டாமிருகமு
முரியபூ சனையாற்று குடதீப மைப்பிரம
வுருவவா ரத்திதீப
முடுவினற் சுடர்மேரு தீபிகை யதன் பின்ன
றுருமிரட் சாதீபமும்
பெருகுநீ ருதவல்கண் ணாடிகுடை கவரியெழில்
பெறுதால வட்டம்விசிறி
பேணுஞ்சி ருக்குக் கருப்பூர வொளியென்று
பெரிதுமா கமமுரைத்தாய்
திரிநயன பரசுதர திகழுமறை யாதியே
சிற்சபையு ணிறைசோதியே
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 58
தீப பூசாவிதி
புனைதீப மேன்மல ரளித்துட னிரீக்கண
புரோக்கணமு மாற்றியதன்மேற்
போற்றுமைம் பிரமமே நியசித்து னாகமம்
புகறிக்கு பங்தனமுடன்
வினவுமவ குண்டனந் திரிசூல முத்திரை
விளங்கப் புரிந்திதயநேர்
மேவியக ராஞ்சலி யுடன்சுளிக மந்திரம்
விளம்பியச் சுடர்வகிக்தே
நினதுமுகம் விழிநாசி கண்டமார் படியினு
நிறுத்தியொளிர் தாரகம்போல்
நீடுபிர தட்சிண மிலங்குமும் முறைபுரித
னெறியென்று நீபுகன்றாய்
தினமுமிவ் வகைதீப முகமனா ராதனைசெய்
தில்லைமூ வாயிரவர்வாழ்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 59
தீபங்களின் அதிதேவர்கள்
விரைகொடூ பாதியாய்க் தாலவட் டம்வரையின்
விதியினவ் வதிதேவரை
வினவினழல் பரமநீ கேதுகரு மத்தெய்வம்
விண்டுருத் திரனாகமத்
துரைகொளீ சானாதி யைம்பிரம மூவொன்ப
துயர்கணஞ் சங்கரனென
வுற்றநீ சிவமெனவு நிற்றனீ யிரவிமதி
யோங்குதிரு வயன னிலனிப்
புரையிலதி தேவரா மென்று மறை தன்னினீ
புகலுமல் வழியுணர்ந்தே
பொன்னம்ப லந்தனிற் றன்னந்த னித்தாடல்
புரியுனக் காற்றிமறையோர்
திரையுளி னிறைந்திடு சிகாகாச பூசனைசெய்
தில்லைமூ வாயிரவர்வாழ்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 60
மந்திரவில் வார்ச்சனையின் பயன்
தெரிசனங் கண்டுபரி சிக்கின்மா பாதகத்
தீங்கொழியும் வந்தனைசெயிற்
சேருமா புண்ணியம தொருகூவி ளந்தனாற்
சிவபூசை புரியும்பயன்
உரைசெய்சா லோகமதி ரண்டுசா மீபமூன்
றுற்றசா ரூபமொருநான்
குறுகூவி ளங்கொண் டுனைப்பூசை செயுமடிய
ருறுவர்சா யுச்சியபதம்
வருடமதி னறுமதிவ ரைக்கும்வைத் தர்ச்சிப்பர்
மகிமையுறு கூவிளத்தை
வனதுளசி மூன்றுமதி கமலமெழு தினமலரி
மலர்குவளே மருவாசவேர்
திரிதின மலர்க்கைதை யைந்திராச் சண்பகமோர்
தின மருச் சிக்கவென்றாய்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 61
இவ்வகைப் பத்திரபுட்பம் பூசைக்காகாதெனல்
அங்கையிற் கொய்தமல ராடையி னெடுத்தமலர்
கல்பூமி தனில்வீழ்ந்தபூ
வர்க்கபத் திரமதனி லாமணக் கிலைதனி
லமைத்தமலர் பூசனைசெயிற்
பங்கமுறு முன்செய்த புண்ணியமெ லாம்பூசை
பத்திரங் கிள்ளியாற்றிற்
பகைவரை யொழிக்குநன் மலர்கிள்ளி யாற்றிலோ
பாக்கியமெ லாநசிக்கும்
பொங்குமது பிரமகத் தியினுறும் பாவமாம்
புண்ணிய ரறிந்துனைநிதம்
பூசனைபு ரிந்திடவு ரைத்தனைகொல் பாதகப்
புலையரா யினுமோர்தினம்
செங்கையி லுனைக்கண்ட வுடன் முத்தி சேரவவர்
சென்னகோ டிகளறுக்குஞ்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நட ராசனே. 62.
உபசாரபலன்
புகையிடப் பாவமறு நற்றீப மறலியைப்
போக்கும்வி யாளதீபம்
பொங்கரா விடபய மொழிக்கும்வி டைமேத
புண்ணியம் புருடதீபம்
மகவளிக் குங்குட்ஞ சாந்திநீ ராஞ்சன
மகாபலன் றாரலகயதோ
மகிழ்சருவ சித்திதரு மிரததீ பிகைவசியம்
வண்பூதி யுதவன்மூன்று
சகமதனி லிரட்சணைக் காகுந்த ருப்பணஞ்
சகலலோ கவிவர்த்தனஞ்
சத்திரமி ராச்சியங் கவரிபாக் கியந்தருங்
தாலவட் டஞ்சுகமதாஞ்
சிகரமிகு கனக கிரி யென்னுநாற் கோபுரந்
தெய்வமறை நான்குமாகுஞ்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 63.
இதுவுமது
நிலைமைதரு விசிறியே சகலமங் கலமுதவு
நிகமபா ராயணபலன்
நிமலபர முத்தியா மகிழுருக் திரகான
நினையுதவு மத்துவிதமாய்த்
தலைமைபெறு பாத்தியம் பாவமறு முயர்சீர்
தழைக்குமா சமனமுதவல்
தருமருக் கியமீதல் கருமசா பலனெனத்
தானுரைத் தனையாகமம்
பலசுருதி பலமிருதி பலகலைக ளாகமம்
பலதந் திரங்களாய்ந்தே
பரமரக சியபரா காசலிங் கார்ச்சனைகள்
பண்ணிமகிழ் புனிதவேதத்
திலகமென வுலகினடு வாகியசி தாகாச
சிற்சபையி னற்பொதுவில்வாழ்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 64.
வாத்தியபலன்
அனகநின் றிருமுன்மத் தளமுழங் கச்செயி
னவர்க்கதிக சுகமளிக்கும்
அயனுடைய தாளமது சோகமாற் றும்படக
மளவில்பா வந்தவிர்க்கும்
வினவுபே ரிகைடக்கை காந்தரஞ் சர்ச்சரிகண்
மேவுகுட முழவுமடைவே
மெய்த்திடம் பிரீதியொடு சுகமிட்ட காமியம்
விளங்குமுத் தியுகல்குமா
லனுதின நரம்புதுளை தோற்கருவி கோடிக
மணிக்குலமி குத்தல்விசய
மாகும்வளை பகையறுகி ருத்தவாத் தியநடமு
மாயுளவை யோங்குமென்றாய்
தினமுமதி ரியவொலிக ளெழுகட லடங்கவெழு
தேவதுந் துபியினோங்குஞ்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 65
உபசாரவினம்
சம்புவுனை வழிபடும் பூசையீ னஞ்செயிற்
சடமதி னுரோகமூடுஞ்
சாத்துமல ரீனமே குலநசித் திடுமணச்
சந்தனமி லாமைகுட்ட
மம்பிலாப் பூசனை மனோதுக்க நற்றூப
வானிமக விலைதீபமே
யானிதன நாசநனி வேதனங் குறையிலோ
வதிகதுர்ப் பிட்சபயமாம்
பம்புமந்திரமின்மை வறுமையாங் தூசின்மை
படர்மகா ரோகமெய்தும்
பயிலோம வானியாற் குலமறும் பலியின்மை
பதிகாச மாகுமென்றாய்
செம்பதும வல்லிகுடி கொண்டுள மகிழ்ந்துபணி
செய்தரித னாகமெனவாழ்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே 66.
இதுவுமது
நித்திய மகத்தவி குறைந்திடிற் சாவென
நிகழ்த்துமணி யோசையீன
நீள்செவிடு வில்வமட் சதையறுகி லாமையது
நிச்சயஞ் சத்துருபயம்
முத்திரைக ளலதசுர பயநேரு மோமகென்
முதலதா னியமின்மைநம்
முனிவுதரு நித்தியாக் கினியோம வீனமிது
முழுதுகிட் பலமகாகு
நித்தியோற் சவவீன மரசர்புவி நாசமென
நீயுரைத் தனையாகமம்
நிருபரிட முகமனர விற்பயங் குருபத்தி
நிகழ்வாஞ்சை மகவிடம்போற்
சித்த மகிழ் வோடுமறை வித்தகர்மூ வாயிரவர்
தினம்பூசை முறையினாற்றுஞ்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 67
சாங்கோபாங்கபூசையும் பஞ்சகிர்த்தியபூசையும்
ஆட்டுதிரு மஞ்சனம் பாத்தியா சமனமுடை
யாபரண மொடுசுகந்த
வாரலே பனமருக் கியநறிய கந்தமல
ராகுமிமை சாங்கபூசை
நீட்டுநற் புகைசுடர் கிருத்தமுறை துதிமுழவு
நிலைபெரு முபாங்கமாகு
நைவே தனம்பலி கடாம்பூல மோமமு
நிகழ்த்திய பிரத்தியாங்க
மூட்டுதிரு மஞ்சனச் செயல்படைத் திடுதலா
முறைசெயினி வேதனமதே
யுலகிரட் சணைபலி யழித்தறீ பங்காட்ட
லுறுதிரோ பாவமனலிற்
றீட்டுமனு வோமமரு ளாம்பூசை யோரைந்து
செயவென்று மறைபுகன்றாய்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 68
இன்னகாலத்திற் றெரிசிக்கலாகா தெனல்
ஒதுமுய ராலய மதிற்றிருக் காப்பிட்
டுறும்பொழுத காலத்தினு
முற்சவப் பவனிவரு பொழுதுமஞ் சனமாடி
யுறுபூசை யமையத்தினுக்
தீதக நிரைப்படா மிடினுமுட் சென்றெமைத்
தெரிசித்தி டாருணர்ந்தோர்
செய்யினர குறுவரபி டேககா லந்தனிற்
றேவிகே ணமதுகோயின்
மேதகு ப்ரதட்சணஞ் செய்தவர்க் காயுள்கெடு
மிக்கமுன் புரிபுண்யமும்
வீயுமென நான்மறையொ டாகமபு ராணம்
விளம்பினைமு னம்மைகேட்பச்
சீதர னயன்சுருதி மாமுடிக ணாடரிய
தெய்விக பரப்பிரமமே
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 69
நமஸ்கார விதி
சிரமட்டு மேவணங் கிடுதலே காங்கமச்
சிரமிசையோர் கைபொருந்தச்
செய்தறு விதாங்கமா மிருகரங் கூப்பியே
சென்னிமிசை வைத்திடுகையே
யுரியமூன் றங்கமிரு கையிணை முழந்தா
ளுறுஞ்சிரமொ டீதங்கமைந்
தோங்குசிர மிருகர மிணைச்செவி முழந்தா
ளுயர்ந்தமார் பிவைபூமியிற்
பரிசமுற வேபணித லட்டாங்க நம்முனது
பஞ்சமுறை பணிதல்வேண்டும்
பத்தியுடன் மூன்றுவிசை குருமுன்னர் மற்றையப்
பரிசனர்க் கொன்றதேனும்
திருவுள மகிழ்ந்தேக சித்தமொடு வந்தனை
செய்த்தக்க தெனவுரைத்தாய்
சிவசிதம் பரவாச சிவகாமி புமைநேச
செகதீச நடராசனே. 70
பிரதட்சணவிதி
செப்பரிய விருகரங் தொங்கப்ர தட்சணம்
செய்யிற் பசாசமாவர்
சேர்ந்தகைப் பந்தன முடன்செயி னிராக்கதச்
செனனமுறு மிடைதனிற்கை
யொப்பினா சுரராவ ராதலா லிருகரமு
முச்சிமிசை கூப்பியீரைந்
துறுமதி நிறைந்தசூ லாயிழை ததும்பற
லுதக்குட மொடுசெல்லல்போல்
யிப்புவியி லொருவலங் கணபதிக் கிரவிக்
கிரண்டெமக் கொருமூன்றுநான்
கிமையமகண் மாலுக்கு மரசினுக் கேழ்வலமி
தெண்குறை வுறாதுமென்மேற்
றிப்பிய சிவாலயத் திருவலஞ் செய்கென்று
செப்பினாய் மறையாகமம்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே 71
சோமசூத்திர வலம்
விடையினின் றிடமா யடைந்துசண் டீசரிட
மேவியவ் வழிதிரும்பி
விடைகண்டு வலமா யடைந்துகோ முகைகண்டு
மேவுவழி யேமீண்டுபின்
தொடரும்விடை கண்டுசண் டேசனைச் சார்ந்துமேற்
றூயகோ முகையடைந்து
சொற்பெருகு சண்டே சனைக்கண்டு விடைகண்டு
தொழுதுபிர தோடகாலத்
தடைவினிவ் வொருவல மனந்தபிர தட்சிண
மடிக்கொரய மேதப்பயன்
அபசவ்வி யஞ்சவ் வியாபசவ் வியவலமொ
டணிசவ்வி யம்புரிதனற்
றிடமருவு மெதிகளில் லறநடைய ரன்னியர்
தினம்புரிய முறைமையென் றாய்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 72
இடபதெரிசனம்
நினதுதெரி சனமுடிவி னால்வேத பாதமாய்
நிலவுபொழி மெய்தருமமாய்
நீடுபரை வதனமாய் நாதஞ்சி ருங்கமாய்
நீள்விழிக ளேவிந்துவாய்
கனகுடிலை கன்னமாய்ப் பாவனைய தண்டமாய்க்
கதிர்வாறி ரோதை வடிவாய்க்
கருதுவிடை யடிதொழுது துதிகள்செய் தலரினைக்
கைகளாற் றூவியந்தப்
புனைவிடையி னிருகொம்பி னடுவினோங் காரம்
புகன்றரோ மரகரவெனப்
போற்றியுனை வாயிலி னிருந்துதெரி சித்தல்
பொருந்த முறை யென்றுரைத்தாய்
சினவிடையின் மீதெழுந் தமரர்முனி வர்க்குஞ்
சிறந்தவர மருணம்பனே
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 73
உய்யும்வழியறியாமை
வெண்படிவ நீறக்க மணியுந் தரிக்கவுள
துரைக்கதிரு நாமமுளது
வினவவுய ரைந்தெழுத் துளதுட் செபிக்கவுள
விாதமெழு மூன்றுநோற்க
வொண்புகழ் பராவிய புராணங்க ளீரொன்ப
துபடிரா ணங்கேட்கவுண்
டுயர்பூசை தொண்டுவல முறல்பணிதல் தெரிசனைக்
குனதுநற் கோயிலுளதாங்
கண்குளிர வேகாண நின்றிருப் படிவமுங்
கருதவு னடிக்கமலமுங்
காணியா யுள்ளதிவ் வகையிலொரு செயலையுங்
கருதாரு னருள்பெறுவரோ
திண்புவியி னின்றிரு நடங்கண்டு தொழுதிடுஞ்
செல்வர்க்கு முத்தியருளும்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 74
விபூதிதரிக்கும்காலம்
தடநதிகண் மூழ்கிடல் செபம்புரித லோமநற்
றவம்விரத முரியபூசை
தானமுப தேசாதி தீக்ஷைடிபிதிர் கன்மந்
தருப்பணஞ் செயல்சிரார்த்தம்
நடைபெறுந் தருகரு மாதிக ளியற்றிடினு
நவில்பூதி யொடுவடஞ்சேர்
நாட்டமணி பூண்டுசெயி னொன்றளவி லாதபய
னல்குமவை யல்லதவமாம்
படர்மிருதி சூதகா செளசமல மூத்திரம்
பார்கழித் திடல்போசனம்
பாவைசம் போகமிவை யாறுசம யத்துநின்
பார்வைமணி பூணலாகா
திடமிலகு முயலவுணன் முதுகுநெளி படவுட
றிடுக்கிட நடஞ்செய்சரணா
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 75
இதுவுமது
சுருதிபுகழ் பூதிதனை யங்குட்ட விரலினாற்
றொட்டுதவ வணியின்வெந்நோய்
சூழ்ந்திடுந் தர்ச்சனியி னாலீதன் மரணமே
சொல்லுநடு வங்குலிதனாற்
றருதல்புத் திரநாச மேசிறிய வங்குலி
தன்னிலே பெருந்தோடமாஞ்
சாற்றிய வநாமிகை யொடங்குட்ட மெய்திடத்
தான் றெய்வ சன்னிதியினுங்
குருமுகத் தினுமுதவு வெண்ணீறு பூசிடிற்
கோலமுறு மெய்யுரோமக்
குறியெலாம் வெவ்வே றிலிங்கவடி வாமென்று
குறைவிலா கமமுரைத்தாய்
சிரகர முரங்கண்ட மதிலக்க மாலைபுனை
தில்லையந் தணர்கள்வாழுஞ்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 76
விபூதியமைத்தற்குரிய பசுவிலக்கணம்
ஈனமுறு கன்னியாக் கொடுவைசெவி கொம்புவா
லிவையறுதன் முதுமைசூலா
மிழிதரு மலம்புசித் திடுமான்ம லட்டா
னிலக்கண மிலாதவானோய்
தானுடைய தேனுவுட னீன்றுபதி னைந்துநா
டன்னிலுட் படுபசுக்கள்
தழைசெவிடு குருடுமுட மாய்ந்தகன் றுடையகோச்
சாற்றுமிக் குற்றமதெலா
முனமுள திவையலது நற்றேனு பூசனைசெய்
துறைகொளைம் பிரம்மனுவா
லுயர்கற்ப மனுகற்ப முபகற்ப மறைநூ
லுரைத்திடுங் கற்பமுறையாற்
றேனுமனு வோதிநல் விபூதிவிளை விக்கச்
சிவாகமங் தனிலுரைத் தாய்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே 77
உருத்திராக்ஷவடிவம்
அக்கமணி யொருமுகஞ் சிவமிரண்டு மைமூன்ற
தங்கிநால் வதனமறையோ
னைந்துருத் திரனாறு முருகவேள் சேடனே
ழைங்கரக் கடவுளெட்டாந்
தக்கவொன் பதுவடுக னரிபத்து வதனமாஞ்
சாற்றுபதி னொருமுகந்தான்
சதுமறைசொல் பதினே ருருத்திரர்கள் பனிரண்டு
தானிரவி பதின்மூன் றுசேய்
மிக்கபதி னான்கது சிவஞ்சத்தி பதினைந்து
மேவுமுகம் விந்து நாதம்
வினவுமுச் சியிலொன்று நாலொன்ப தாஞ்சிரம்
வியன்கழுத் தெண்ணான்கதாஞ்
செக்கர்மணி பதினாறு கைக்குமார் பைம்பது
செவிக்காற தெனவுரைத்தாய்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 78
செபமாலிகை
முத்திதரு மையைந்து மணியக்க மாலைகொடு
முறையிற்செ பங்கள்புரியின்
மொழியிருப தாறது சிவார்த்தமத னிற்பாதி
மூசு சத் துருவினாசம்
ஒத்தவிரு பானேழு செல்வமிரு பதினெட்ட
தோங்குமெய்த் திடமூன்றுபத்
துயர்புண்ணி யங்கண்மிரு மாபிசா ரந்தனக்
குற்றபதி னைந்தாகுமா
லத்தகைய மனிதனைக் காணவே பாவமறு
மதிகசித் திகளுறுமுடற்
கதுபரிச முறினளவில் புண்ணியம் பூணவென்
றளவிலா கமமுரைத்தாய்
சித்தமகிழ் நடனம் புரிந்துயிர்க் களவிலாச்
செல்வமொடு முத்தியருளுஞ்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 79
செபவாதனமும் பயனும்
கழையாத னத்திற் செபம்புரிந் திடின்வறுமை
கல்லினுற் றிடநோய்தரும்
காசினி தனிற்றுக்க முத்திசீன் ரெய்திடுங்
கான் புலித் தோலினுறவே
பிழைதவிரு மான்றொக்கின் மெஞ்ஞான மெய்து மெழில்
பெறுகம்ப ளந்தன்னிலோ
பேதமுறு துக்கமறு முயர்கீர்த்தி யானியாம்
பேசுதிர ணாதனமதிற்
றழையுமுட் பிரமையாம் பல்லவ வணைக்காடை
தருபாக்கி யங்களெய்துஞ்
சாற்றுபெண் வசியங் கருப்பைதா ருவின்முத்தி
தருமணிக் கம்பளமதிற்
செழிதருஞ் சித்திக ணலந்கரு மெனச்சுருதி
செப்பி னுயுலகமுய்ய
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 80
செபஞ்செய்யுமிடமும் திக்கின் விசேஷமும்
கோலமுறு பஞ்சாக்ஷ ராதிசெப தானமுங்
குலவுதன் மனையிற்செயிற்
கூறுபய னொன்றுபத் தாவுறுங் கோட்டமுட்
குளிர்வனந் தன்னினூறு
சீலமுறு வாவிதனி லாயிரமி லக்கநதி
தீரததி லுயர்கிரிதனிற்
செய்த பய னொருகோடி யாலயத் திருகோடி
திகழ்பதின் கோடிமான்முற்
காலனை யுதைத்தபர மேசநின் றிருமுன்
கணக்கறு மனந்தகோடி
கருதுவசி யந்துக்க மறுமாபி சாரமே
கனவித்து வேடணநிதி
சீலரிக லுச்சா டன்ஞ்சாந்தம் வீடுகீட்
டிசைமுதற் பயனதென்றாய்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 81
செபமாலிகை விசேஷம்
எழுகோடி மனுவினுயர் பஞ்சாக்ஷ ராதிசெய
மெண்ணவங் குலியினொருபங்
கெய்துபய னெட்டிறையி னீரைந்து துளபமணி
யேற்றசங் கின்மணிசதம்
பழுதிலாப் பவளமா யிரமயுத மம்புயம்
படிகவட மொருகோடியாம்
பைங்குசை முடிப்பிலீ ரைந்துகோ டியதாகும்
பகர்ந்த சத கோடிதரளம்
அழகுறுங் தமனிய வடத்தினா யிரகோடி
யக்கமணி வடமனந்தம்
அங்குட்ட முதனான்கின் வடநடத் திடின்முத்தி
யரிநாச நிதிநோயறுஞ்
செழியனொரு மந்திரிக் குபதேச நல்கத்
திருக்குருங் துற்றகுருவே
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 82.
மந்திராரம்பமாசபலன்
வருடைமதி தனின் மந்தி ராரம்ப மதுசெயின்
வரும்பெரிய துக்கமிடப
மதியினவ மணியிலா பங்கண்மிகு மிதுனத்தின்
மரணமாங் கடகமதியிற்
பெருகுமுற முறையினர்வி நாசமா மரிதனிற்
பேசுபய னபிவிர்த்தியாம்
பிள்ளைக ணசிக்கும்பு ரட்டாசி மதிதனிற்
பீடுதுலை யிற்சுகமுறு
மருவுமா ரவின்ஞான மார்கழி தனிற்சுபம்
மகரத்தில் ஞானவீனம்
மாகத்தி னறிவுதரு மீனத்தின் வசியமென
மறையாகமத் துரைசெய்தாய்
திரிபுரம தெரிபுகுத விளநகைபு ரிந்திடுஞ்
சின்மய மகா தேவனே
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 83
பசுவின்பெருமை
அத்தனிற் கைந்துகவ் வியநெய்ப யந்தயிர்க
ளாட்டிடுத லுக்குதவலா
லவ்வைந்தி னாசெளச நீக்கியுட் சுத்திதனை
யனைவர்க்கு மீந்திடுகலாற்
பத்தர்மறை யோர்கண்மெய் தரித்தரிய வீடுறும்
பானிறு விளைவித்திடப்
பகர்கோம யந்தந்தி யாகாதி களிலவிர்ப்
பாகங்கொ டுத்தாகுதி
நித்திய மியற்றிடச் சுரருக்கு முனிவர்க்கு
நெய்யுதவி டும்பெருமையா
னீடமர ரகலர்நர ருக்குமா வேசகல
நிதியாகு மெனவியந்து
சித்தமகிழ் வுடனாளு மற்றதைப் பூசனைகள்
செய்யவா கமமுரைத்தாய்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 84
சிவவிரதங்கள்
இந்துதர நஞ்சமய விரதமெழு மூன்றதி
லெழிற்சோம தினமாதிரை
யேர்தருமு மாமகேச் சுரவிரத மணவிாத
மிடபவிர தஞ்சிவநிசி
முந்துகே தாாநோன் புயர்சூல நோன்பெட்டு
மொழிதருஞ் சிவவிரதமா
மூலபரை விரதமது வெள்ளியுத் திரநவமி
மூன்றுமும் மதகடதடத்
தந்திமுகன் விரதமொரு சட்டிபுகர் வாரஞ்
சதுர்த்தியா மாரல்வெள்ளி
சட்டிகுக னுக்கிணைப் பரணிசேய் வயிாவர்
தனக்கிணையில் வீரனுக்குச்
செக்தழ னிறத்தமங் கலவார மாமென்று
செப்பினாய் மறையாகமம்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 85
சிவவிரதபலன்
கன்னிகர தானமோ ரயுதநி யுதம்வாசி
கபிலையொரு கோடிதானம்
கமலையிறை யானவரி பிறிதுருவ மொருசதங்
கனாககிரி யொருகேர்டிநேர்
சொன்னமணி தானமக மாயிரமி லக்கந்
தொகுத்தவே காதசிபலன்
றுகளில்சிவ பூசையணு தினமாற்ற வுறுபய
சோமவா ரமொடாதிரை
பன்னுசிவ நிசிமுதற் பகர்நமது விரதமறை
பகர்வழியி னாற்றினோர்க்குப்
பாலிக்கு மெனவம்பி கைக்குநீ முன்னம்
பகர்ந்திடு பயன்களிவைதாஞ்
சின்னமுர செக்காளம் வளைதாள முதலியந்
திரைகட லடங்கவார்க்குஞ்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 86.
பரமபாசுபதரும் பாகவதரும்
நந்தீசர் விண்டுமிரு கண்டுஜன் குறுமுனிவ
னடுதுரு வாசர்பிருகு
நவில்ததீ சிபுளிக்கர் சண்டேசர் கண்ணுவர்
நலங்குலவு வாணாசுரன
சிந்தைமகி ழுபமன்ய முனிவர்கவு தமனாதி
செப்புமிவ ரொப்பிலாத
சீர்ப்பரம பாசுபத ராம்பிரக லாதன்
சிறந்த நா ரதன் வியாசன்
தொந்தவீட் டுமர்பரா சரர்புண்ட ரீகர்பலி
சுகன் விசய னம்பரீடன்
றூயருக் மாங்கதன் சவுனகன் வதிட்டனொடு
சொல்விபீ டணனிவரெலாஞ்
செந்திருவை யன்புட னுரங்கொள்மால் பாகவத
சிட்டரா மெனவாக்கினாய்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 87
ஆசௌசவிதி
பத்திரவு மறையவர்க் கரசர்வசி யர்க்குநாள்
பதினுறு சுத்த சைவப்
பாங்குடைய சூத்திர ருருத்திரக ணகைக்குநாள்
பதினைந்த தாகும்புலான்
மெத்துநுகர் வணிகருக் கிருபதா மிரவென்றும்
வினையுழவ ருக்குமுப்பான்
மேலிரண் டிரவுசூ தகமதிற் பூசைசெபம்
வேள்விகண் முயன்றுபுரிதற்
கொத்தமுறை யன்றவைகள் பாவனைய தாற்செயவு
மொண்ணாது பிறர்புரிதன் மற்
றொருவருக் குத்தன்னி லீவதொப் பெனவீர
வுடையுட னிலிங்கபூசை
சித்தபரி சுத்தமுட னற்றன்முறை யென்றே
சிறந்தவா கமமுரைத்தாய்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 88
நடராசரபிடேகதினம்
உம்பருக் கொருவருட மொருதினம தாதலி
னுரைத்தசட் காலபூசைக்
குறுபொழு தமைத்துமார் கழியாதி ரைத்தின
முஷக்கால பூசனைகொள்வாய்
கும்பமதி தனில்வளர் பிறைச்சதுர்த் தசிதனிற்
குளிர்கால சந்திபூசை
குலவுசித் திரையோண மத்தியா னச்சபரி
கொள்வையா முத்தரமதில்
எம்பரம நிற்குரிய சாயான்ன பூசனை
யிரண்டுறுங் காலபூசை
யெழிலரிச் சுக்கில சதுர்த்தசி சொலத்திதி
யிருங்கன்னி யர்த்தசாமம்
செம்பவள வல்லியுட னெங்தைநீ யாடியரு
டிருமஞ்ச னங்கொடினமாம்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 89
சரியை
பரமசிவ திரிநயன பசுபதி யுனைத்தொழும்
பழவடியர் செயனுன்கதைப்
பகரிலுயர் சரிதைகிரி யாயோக ஞானநம்
பதிகணதி யாத்திரைசெயல்
விரைகொண்ங் தனம்வைக் தன் மலர்பிணைத் தவைசாத்தன்
மேவுசின கரமமைத்தன்
மின்விளக் கிடுதலொடு மெழுகறிரு வலகிடுதன்
மேலவற் காணில்வலமுற்
றிருகரங் கூப்பிவந் தனைசெயல் குளங்கிண
றியற்றனல் விரதமாற்ற
லெழுகாதை கேட்டலிவை சரிதையிது நோற்றவர்க்
ளெமதுலக மடைவரென்றாய்
தெரிதரு பதஞ்சலி புலிப்பாத ரனுதினங்
திருநடந் தொழுதுவாழுஞ்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 90
கிரியை
சுருதியா கமமுறையின் மஞ்சன நிவேதனஞ்
சுடர்தூப வாடைvஆசங்
சூழுமல ராதிகொடு நற்பூசை யாற்றுவர்க
டோன்றுபுண் ணியபாவமும்
புரையற வுணர்ந்துரைசெய் வார்மறைக ளாகம
புராணமுத னூலுணர்ந்தே
பொங்குபல வுயிர்வதை செயார்வேள்வி யாற்றுவார்
புகழ்பெறுங் கிரியைநெறியோர்
உரைசெய்வர் தருமார்த்த காமாதி யின்பவகை
யுலகத தடைந்துவானத்
துருவசி யரம்பையர்த மின்புற்று நமதருகி
லுறுவரென மறைபுகன்றாய்
திரைகடற் புவிபரவு சரியைகிரி யாயோக
சித்தியொடு முத்தியுதவுஞ்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 91
யோகம்
மிக்கபூ தங்களோ ரைந்துஞா னேந்திரிய
மேவுகன் மேந்திரியமும்
வினவிலொவ் வொன்றினிற் கைந்துதன் மாத்திரை
விளம்பினோ ரைந்துகரணங்
தக்கவொரு நான் கிவையொ டறுநான்கு முயரான்ம
தத்துவம தாம்வித்தியா
தத்துவமொ ரேழுசிவ தத்துவமொ ரைந்திவைகள்
சாற்றுமுட் கருவியாகும்
ஒக்கும்பு றக்கருவி யானதச வாயுகுண
முயர்நாடி தாதவத்தை
யொடுமண்ட லந்தூட ணத்தொடே டணைகோச
முறைதொணூற் றலுதத்துவஞ்
சிக்கற வுணர்த்தியம் நியமாதி யெட்டுந்
தெளிந்தவரி யோகியென்றாய்
சிவசிதம் பரவாச. சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 92
ஞானம்
மூலமுத னதவெளி மேலுறு துவாதச
முடிந்தவிட மீறாகவே
மூதண்ட கூடத்தொ டளவில்பிர மாண்டமதை
மூடுபர வெளியின் முடிவின்
மேலும்ப ரஞ்சோதி வடிவாகி யெங்கும்வி
யாபியாய்ப் பரமவணுவாய்
விரிபுவன முடலுயிரின் மயிர்முனைக் கிடமின்றி
மேவிநிறை பரிபூரணக்
கோலமாய் நின்றவொரு பரமென்றி யாமென்று
கூறுசெய் யாதொன்றெனக்
கொண்டுரைசெ பந்துயில் சமாதிவல நடையுணவு
கொளலுனானு குதிசெயலெலாஞ்
சீலமுறு பூசனைக ளாக வெத் தொழிலுநின்
செயலென் றிருத்தல்ஞானஞ்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 93
சிவாபராதம்
ஒருவல நமக்கார் மெச்சில்கான் றுமிழ்தலங்
குறுசூத கத்தின் வருதல்
ஓமம்செ பம்புரிதல் கெற்பநற் கிரகமதி
லூயர்பதங் கழுவாதுறல்
பரிகரிகண் முகலூர்தி மீதுதிரு முன்புறுதல்
பாகிலேய ருக்கல்சயனம்
பலகார மோதனா திகளுணலி லிங்கவிடை
பலிபீட நடுவேசெலல்
தருமங்க காடனம் பொய்பகர்த லாசியம்
சாற்றலழு திடலபானங்
தங்குவா யுவைவிடுதல் கஞ்சுகா திகளணிதல்
தாரம்ப ரத்தை முகலாந்
தெரிவைய ருடன் கலந் துரையாடன் முதலான
தீங்கால யக்குற்றமாஞ்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 94
இதுவுமிது ་
அகமமதை கொண்டுவர மியாவர்க்கு மீதல்விற
லதிகார மாக்கினைசெயல்
அங்ககஞ் சுகிமாக்கள் புடைசூழ வருதல்பிற்
ராசிரிய வந்தனை செயன்
மிகவுநர ரைப்புகழ்தல் பரநிக்கை குருநிந்தை
விண்டுபுக் ழோகல்கோயில்
மேம்பொருள் கவர்ந்திடுதல் கோமுகைக டந்திடுதல்
விடையினொடு பலிகொள்பீடஞ்
சிகரிதிரு மேனிசுட ரைந்தினிழல் படிதறன்
தேகநிழ லாங்குபடிதல்
சிக்குமல சலசுத்தி யின்றியுறல் தயிலாதி
தேய்த்துற லகாலத் துறல்
செகநடுங் குறுமிந்த நாலெட்டு மன்றியுஞ்
செப்பிலின முளநவைகளாஞ்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 95
சிவாபராதம் நீங்காதெனல்
அதிகதரு மம்புரிந் தாலும்வர நதியமுனை
யாதிநதி மூழ்கினாலும்
ஆயிரஞ் சுருதிதின மோதினும் பலதான
மந்தணர்க் குதவினாலும்
விதிமுறையி னூறுபரி மேதமுத லெழுமூன்று
வேள்வியு மியற்றினாலு
மெய்கருக வுண்ணாது சாந்திரா யணமாதி
விரதங்க ளாற்றினலு
மதியிலகு சடிலநின் னபராத முறுதோட
மட்டுநின் னுபயகமல
மலரடித் தொண்டன்றி நீங்காது கருதிடினு
மாலயனு மஞ்சுவார்கள்
சிதவிடையி னுலவிவர மருள்மகா தேவவத்
தீங்கொழிய வெற்கருள்செய்வாய்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 96
ஆசாரியவிலக்கணம்
எண்ணரிய சைவா கமத்துட்கி ரந்தமொ
ரிலக்கமாய்ந் தவனுத்தமன்
ஏருறு மதிற்பாதி கற்றறிந் துரைவிதி
யியம்புதே சிகன்மத்திமன்
தண்ணளியொ டிருபதா யிரநற்கிரந்தந்
தனக்கற்று ளோன தமனாஞ்
சாற்றுமயு தங்கிரந் தங்களா யினுமோது
தகுதியோ னதமாதமன்
நண்ணுமதி னுட்படவு ணர்ந்துசிவ பூசைசெய
நண்ணினோன் றேவலகனா
நவிலுநூல் விதிகள்கற் றுணர்வொன்றி லாதவஞ்
ஞானிதெய் வத்துரோகி
திண்ணமவ னைக்கண்ட வுடனேகு வோமென்று
சிவமறைகள் பலவுரைத்தாய்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 97
சண்டேசுர தெரிசனம்
முகமனீ ரெட்டுட னிலிங்கபூ சனையாற்று
முடிவதினு முனதுசேவை
முற்றினுஞ் சண்டேசர் திருமுன்னரெய்துபு
முறைச்சபரி செய்தடிபணிக்
தகமகிழ்க் தருளுதவு சண்டேச வோநமோ
வணிநீல கண்டசிவபா
தாம்புய தியானபா ராயண நமோபரனை
யாற்றுபூ சனைதெரிசனத்
திகபர பலன்றேகி யென்றுகர மொலிசெய்ய
விருமுறை கரந்தொனித்தா
லெய்திடும் பிரமகத் தியினுறுந் தோடமா
மிதுசண்ட வழிபாடெனச்
செகதலந் தனிலடியர் பயனடையு மாறெனச்
செய்யவா கமமுரைத்தாய்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 98.
அபராதநிவர்த்தி
கருதரிய பிரதோட காலத்தின் மஞ்சனக்
கமலநின் முடியினாட்டிற்
கனகுற்ற மொருபது பொறுத்தருள்வை பால்சதங்
கருதாயி ரந்தயிர்க்குக்
கிருதமொரு பதினாயி ரங்குற்ற நற்சுவை
கிளைத்தெழு கரும்பிலக்கங்
கிளர்பத்தி லக்கமது கோடிதெங் கிளநீர்
கிடைத்த சந் தனக்குழம்பிற்
பெருகவுனை யாட்டிடி னனந்தமள வில்லாப்
பெரும்பிழைபொ றுத்தருள்வையப்
பெற்றியது போலுனது சதகமதி லெப்பிழை
பிறந்திடினு நீபொறுத்துத்
திருவருள் சுரந்தெளிய நாயினுங் கடையனென்
சிறுதமிழ்க் குகந்தருளுவாய்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 99
மேன்மை
கருதரிய செல்வமது பெறுவதே மேன்மையுயர்
கல்வியது தனினுமேன்மை
கற்பதினு மேன்மையது வாமினிய மூதறிவு
காசினியெ லாமதிக்கும்
பெருகியவு தாரசற் குணமுடைய ததின்மேன்மை
பிழையிலில் லறகடாத்திப்
பிதிர்தெய்வ முடன்விருந் தொக்கல்மன மகிழவே
பெறுதலது தனினுமேன்மை
யரியபல வுயிரெலாந் தன்னுயிர்க் கொப்பவன்
படைதலது தனினுமேன்மை
யறையுமிவை யாவுமொரு வர்க்குள்ள தாயிலுன்
னருட்செல்வ ரவராதலாற்
றிரிநயன பரசுகுண கருணாக டாக்ஷநின்
றிருவரு ளெனக்குதவுவாய்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 100.
கலிமகிமை
பொய்யுரை பகர்ந்திடினு முயிர்வதைத் தென்றுமே
புலான்மது புசிப்பரெனினும்
பூசைசெய் பெரியோரை யவமதித் தவருளம்
புண்பாடு செய்வரெனினும்
நொய்யவரு ணத்தவர்க ளாயினும னாசார
நோன்புடைய ரெனினுமழல்கால்
நோக்கஞ்சி வந்துட்சி னத்தெளியர் கவிஞரை
நொடித்துநொய் தவிடுமீயா
வெய்யபா தகரெனினு மிகுகுடி கெடுப்பதே
விரதமுடை யவரென்னினும்
வெகுபணக் காரர்கமை யெவருமிக் கவரென்று
வினவுகலி மகிமையையா
செய்யவுன திருசரண மறவாத மனமொடத்
தீயர்முனுறாதருள்செய்வாய்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நட்ராசனே. 101
*ஆசிரியர் வேண்டுகோள்
நினதுதெரி சனமுறை யிலேனமல நீசொன்ன
நிகமாதி நூல்க ளுணரேன்
நீதியா கமபுரா ணத்தினுரை செவிகொளே
னீடுசரி யைமுதலதா
முனதுபணி விடைபூசை கனவிலு நினைத்திடே
னோங்குசப ரியைபுரியுமவ்
வுயரடிய ரோடிணங் கேனின் றிருப்பதிக
ளுலவிலே னதிகள்மூழ்கேன்
வினைகெட விபூதிகண் மணிவட மணிந்திலேன்
விமலனா மத்திலொன்றும்
வினைவிடப் பாவியே னொருதவமு மில்லாத
வீணனின் றிருவடிக்கே
தினையளவு மன்பிலே னெனினுமென் றமிழ் கொண்டு
திருவரு ளெனக்குதவுவாய்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீச நடராசனே. 102
* இந்தப்பாடல் சிலபிரதிகளில் காணப்படவில்லை
------
வாழி
பார்வாழி கோயின்மிக வாழிசிவ கங்கையாம்
பரமதடம் வாழிவாழி
பரமவை திகசைவ தருமையா தீனமிக
பருதிமதி யளவும்வாழி
கார்வாழி மாதமும் மாரிகள் பொழிந்துநீள்
காசினி தழைத்துவாழி
கருதரிய தெய்வமறை சைவமறை யந்தணர்கள்
கனவேள்வி யோங்கவாழி
நீர்வாழி யரசர்செங் கோல்வாழி தனதனென
நிதியோங்க வணிகர்வாழி
நீடுவே ளாளர்முத லானவா னுடர்களு
நிமலனன் போங்கவாழி
சீர்வாழி யடியர்குலம் வாழிகா டொறுமிக்க
சிவஞான ரருளும்வாழி
சிவசிதம் பரசதக மோதினோர் கேட்டுளோர்
தேவரினு மிகவாழியே.
நடராச சதகம் முற்றியது.
திருச்சிற்றம்பலம்
-------------------
பாட்டு முதற்குறிப்பு அகராதி (பாடல் எண்)
அக்கமணி 78
அகமமதை 95
அங்கையிற் 62
அத்தனிற் 84
அதிக தருமம் 96
அம்பிகை 8
அரிசியொரு 48
அலரிமுதல் 38
அனகவின் 65
ஆட்டுதிரு 68
ஆதனமொடா 45
இதிகாச 28
இந்து தர 85
இரதலிங்க 24
இறைவ நிற் 50
ஈனமுறு 77
உதயமுதல் 35
உந்திபூத் 56
உம்பருக்கொரு 89
எண்ணரிய சை 97
எழுகோடி 82
எழுவகை 18
ஐயைந்து 47
ஒருவல நமக் 94
ஒன்றாகி 5
ஒதரியவை 6
ஒதரியலிங் 32
ஒதுமுயர் 69
கங்கைக்கு 0
கழையாத 80
கன்னிகாதான 86
கன்னிதனில் 42
காமனைக் 7
காமிகத்தொ 25
கருதரியசெல் 100
கருதரியபிர 99
காலசந்தி 36
கிருதமொரு 52
கொம்பரக் 31
கோடிமறை 10
கோலமுறு 81
சங்கரசதா 34
சம்புவுனை 66
சுகமளித்திடு 51
சுத்தசல 46
சுருதிசொ 57
சுருதிபுகழ் 76
சுருதியாகம 91
சிரமட்டு 70
சிவமெனும் 4
சீர்பெருகு 1
செப்பரிய 71
சென்னமூன் 54
சொல்லரிய 21
தடநதிகண் 75
தலைமையுறு 16
தெரிசனங் 61
நந்தீசர் 87
நவின் மகர 43
நறியதயி 53
நித்தியமகத் 67
நிலைமைதரு 64
நினதுதெரி 73
நினதுதெரி 102
பகரேக 9
பங்கயந் 37
பத்திரவு 88
பரமசிவதிரி 90
பார்வாழி
பாரமேச்சர 26
பிரமமொடு 27
பிரமணரி 11
புகையிட 63
புண்ணியர் 30
புனைதீப 59
பூதியணி 12
பூமருவும்
பெருமைசேர் 3
பொங்கிவரு 15
பொய்யுரை 101
மத்தமகிழ் 39
மதியுதய 55
மறிமுதற் 40
மறியிடப 41
மறைகள் பல 2
மாணிக்க 20
மிக்கபூதங்க 92
முகமணி ரெட்டு 98
முத்திதரு 79
முந்தவுயர் 33
முப்பொழுது 13
மூலமாரூர் 17
மூலமுதனாத 93
மேவுகெற்ப 29
மேவுமானுட 22
வரமுதவு 58
வருடைமதி 83
வாசமான் 49
வாணாசுரன் 14
வாலுகந் 23
வாலுகமி 19
விடையினி 72
விரைகொடு 60
வினவுசோட 44
வெண்படிவ 74
-------
This file was last updated on 28 Oct. 2017
Feel free to send corrections to the webmaster.