முது மொழிக் காஞ்சி
சுந்தர சண்முகனார் உரையுடன்
mutumozik kAnjci
with meaning by cuntara caNmukanAr
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Tamil Virtual Academy for providing a scanned image
version of this work for the etext preparation. This work has been prepared using the
Google Online OCR tool to generate the machine-readable text and subsequent proof-reading.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2017.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
முது மொழிக் காஞ்சி
சுந்தர சண்முகனார் உரையுடன்
Source:
முது மொழிக் காஞ்சி
சுந்தர சண்முகனார் உரையுடன்
வெளியீட்டகம் :
புதுவைப் பைந்தமிழ்ப் பதிப்பகம், புதுச்சேரி -11, 1991
--------
நூல் அறிமுகம்
கழக (சங்ககால) இலக்கியங்களுள், பெரிய அளவுள்ள பாடல்களைக் கொண்ட பதினெட்டு
நூல்கள் பதினெண் மேற்கணக்கு எனவும், சிறிய அளவுள்ள பாடல்களைக் கொண்ட
பதினெட்டு நூல்கள் பதினெண் கீழ்க் கணக்கு எனவும் வழங்கப் பெறும். கணக்கு என்றால்
நூல். பதினெண் கீழ்க் கணக்கு நூல்களுள் முது மொழிக் காஞ்சி என்னும் இந்த நூலும்
ஒன்றாகும். இதனை இயற்றியவர். மதுரைக் கூடலூர்க் கிழார் என்னும் கழகப் புலவர் பெருமானாவார்.
முது மொழிக் காஞ்சியாவது: எல்லோரும் கொண்டாடும் அறிவுடையோர் குற்றம்
நீக்கி ஆராயும் உலகத்தியலுள் முடிந்த பொருளாகிய அறம் பொருள் இன்பத்தை அறியச்
சொல்வது முது மொழிக் காஞ்சியாகும். இப்பெயரைத் தாங்கிய இந்நூலுள் பத்துப் பத்துகள்
உள்ளன. ஒவ்வொரு பத்திலும் தனித் தனிக் குறள் தாழிசைகள் பத்து இருக்கும். முதல் பாடல்
இரண்டடி கொண்டதாகவும் மற்றவை ஒரடியாகவும் இருக்கும். முதல் பாடல்களில் உள்ள
"ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்" என்னும் முதல் அடியைப் பின்னுள்ள ஒன்பது
அடிகளோடும் சேர்த்துப் பொருள் கொள்ளல் வேண்டும்.
இந்நூலுள் பரிந்துரைக்கப்பட்டுள்ள முதுமொழிகளை வாழ்க்கையில் பின்பற்றி
ஒழுகின் வீடும் திருந்தும் - நாடும் திருந்தும் - மக்களினம் உயர்வடையும்.
புதுச்சேரி-11 சுந்தர சண்முகன்
---------------
உள்ளடக்கம்
1. சிறந்த பத்து
2. அறிவுப் பத்து
3. பழியாப் பத்து
4. துவ்வாப் பத்து
5. அல்ல பத்து
6. இல்லைப் பத்து
7. பொய்ப் பத்து
8. எளிய பத்து
9. நல்கூர்ந்த பத்து
10. தண்டாப் பத்து
--------
1. சிறந்த பத்து
1. ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
ஒதலின் சிறந்தன்று ஒழுக்க முடைமை.
2. காதலின் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல்.
3. மேதையின் சிறந்தன்று கற்றது மறவாமை.
4. வண்மையின் சிறந்தன்று வாய்மை உடைமை.
5. இளமையின் சிறந்தன்று மெய்பிணி இன்மை.
6. நலன் உடைமையின் நாணுச் சிறந்தன்று.
7. குலன் உடைமையின் கற்புச் சிறந்தன்று.
8. கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று.
9. செற்றாரைச் செறுத்தலின் தன் செய்கை சிறந்தன்று.
10. முன்பெருகலின் பின் சிறுகாமை சிறந்தன்று.
1. சிறந்த பத்துக் கருத்துகள்
1. கடல் சூழ்ந்த இவ்வுலகத்தில் உள்ள மக்களுக்கு எல்லாம், கல்வியைக் காட்டிலும் நல்லொழுக்கம் உடைமை சிறந்ததாகும்.
2. ஒருவரிடம், அன்பைக் காட்டிலும், தமது உயரிய பண்பைக் கண்டு மதிக்கும் முறையில் அவர் அஞ்சி ஒழுகும் படி நடந்து கொள்ளுதல் சிறந்தது.
3. கல்வியில் பெரிய மேதையாய் வல்லமை பெற்று இருப்பதைக் காட்டிலும், கற்றவரைக்கும் மறவாமல் அதன் படி ஒழுகுதல் சிறந்தது.
4. வளமான செல்வம் உடைமையைவிட, உண்மை யான (முறை தவறாத) வாழ்வு உடைமை சிறந்தது.
5. நோயோடு கூடிய இளமையைவிட, நோயின்றி ஒரளவு முதுமை இருப்பினும் அது நல்லது.
6. எல்லாச் செல்வ நலன்களைக் காட்டிலும், நாணமும் மானமும் உடைய வாழ்க்கை சிறந்தது.
7. உயர் குலத்தோர் என்னும் பெருமையினும், கற்புகல்வி உடையவர் என்னும் பெருமை சிறந்தது.
8. ஒருவர் தாம் கற்பது போதாது; கற்றவர்களைப் போற்றி வழிபடுதல் சிறந்தது.
9. பகைவரை ஒறுத்தலைவிட (தண்டித்தலைவிட), அவரினும் தம்மை உயர்ந்தவராக்கிக் காட்டுதல் சிறந்தது.
10. முன்னால் ஆரவாரமாக வாழ்ந்து வளம் குன்றிப் போவதினும், பின்னால் நிலைமை குறையாமல் நிறையுடன் வாழ்தல் சிறந்தது.
--------
2. அறிவுப் பத்து
1. ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
பேரில் பிறந்தமை ஈரத்தின் அறிப.
2. ஈரம் உடைமை ஈகையின் அறிப.
3. சோரா நன்னட்பு உதவியின் அறிப.
4. கற்றது உடைமை காட்சியின் அறிப.
5. ஏற்றம் உடைமை எதிர்கோளின் அறிப.
6. சிற்றில் பிறந்தமை பெருமிதத்தின் அறிப.
7. குத்திரம் செய்தலின் கள்வனாதல் அறிப.
8. சொற்சோர்வு உடைமையின் எச் சோர்வும் அறிப.
9. அறிவு சோர்வு உடைமையின் பிறிது சோர்பு அறிப.
10. சீருடை ஆண்மை செய்கையின் அறிப.
2. அறியத் தக்க பத்துக் கருத்துகள்
1. கடல் சூழ்ந்த உலகில் உள்ள மக்களுக்குள் யாவரா யினும், அவருடைய குளிர்ந்த அருளுடைமையைக் கொண்டு தான் அவர் உயர் குலத்தார் என அறியப்படுவார்.
2. ஒருவர் பிறர்க்கு அளிக்கும் கொடையைக் கொண்டு அவர் குளிர்ந்த அருளுடையவர் என்பதை அறியலாம்.
3. ஒருவர் செய்யும் உதவியை அளவுகோலாகக் கொண்டு, அவர் தளராத நட்பு உடையவர் என்பதை அறியலாம்.
4. ஒருவரது உண்மை காணும் திறத்தைக் கொண்டு, அவரது கல்வி வல்லமையை அறியலாம்.
5. ஒருவர் உயர்ந்த ஆராய்ச்சி உடையவர் என்பதை, அவர் எதிர்காலத்தில் வரக் கூடியதை முன் கூட்டி நுனித் துணர்ந்து செயல்படுவதைக் கொண்டு அறியலாம்.
6. ஒருவர் தம்மைப் பெருமைப்படுத்திக் கொண்டு செருக்குற்று இருப்பதைக் கொண்டு, அவர் அற்பக் குடும்பத்தில் பிறந்தவர் என்பதை அறியலாம்.
7. ஒருவர் செய்யும் வஞ்சகச் சூழ்ச்சிச் செயலைக் கொண்டு, அவர் கள்ளத்தனம் உடையவர் என்பதை அறியலாம்.
8. ஒருவரின் சொல் சோர்வைக் கொண்டு - அதாவது சொன்ன சொல்லைக் காப்பாற்றாததைக் கொண்டு, அவர் எல்லாவற்றிலும் சோர்ந்து தவறுவார் என்பதை அறியலாம்.
9. ஒருவர் அறிவுடைமையில் குறைபாடு உடையவரா யிருப்பின், அவர் எல்லாவற்றிலும் குறைபாடு உடையவரா யிருப்பார் என்பதை அறியலாம்.
10. ஒருவரது சிறப்பான ஆளுமைத் தன்மையை, அவர் செய்யும் செயல் திறமையைக் கொண்டு அறியலாம்.
------------
3. பழியாப் பத்து
1. ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
யாப்பிலோரை இயல்பு குணம் பழியார்.
2. மீப்பிலோரை மீக்குணம் பழியார்.
3. பெருமை உடையதன் அருமை பழியார்.
4. அருமை உடையதன் பெருமை பழியார்.
5. நிறையச் செய்யாக் குறைவினை பழியார்.
6. முறையில் அரசர்நாட்டு இருந்து பழியார்.
7. செய்தக்க நற்கேளிர் செய்யாமை பழியார்.
8. அறியாத் தேசத்து ஆசாரம் பழியார்.
9. வறியோன் வள்ளியன் அன்மை பழியார்.
10. சிறியார் ஒழுக்கம் சிறந்தோரும் பழியார்.
3. பழியாமை கூறும் பத்துக் கருத்துகள்
1. கடல் சூழ்ந்த உலகில் உள்ள மக்களுக்குள், எந்தக் கட்டுப்பாடும் இல்லாதவரது இயற்கையான தாழ் குணத் தைப் பழிப்பதில் பயனில்லை.
2. பெருந்தன்மை யில்லாத அற்பர்கள் தம்மைத் தாமே பெருமைப் படுத்திக் கொள்வதைப் பழிப்பதில் பயனில்லை.
3. மிக்க பெருமைக்கு உரிய செயல், செய்வதற்கு அரியதாய் (கஷ்டமாய்) இருப்பின், அதற்காக நொந்து (பழித்து) விட்டுவிட லாகாது.
4. ஒரு செயல் முடிப்பதற்கு அரியதாய் (கஷ்டமாய்) இருப்பின், அதற்காக அதன் உயர்வினைப் புறக்கணிக்கக் கூடாது.
5. ஒருவர் ஒரு செயலை நிறைவுபெற முடிக்காமல் குறையாய் விட்டிருப்பின், அதற்காக அவரைப் பழிக்க லாகாது; பின்னர்த் தொடர்ந்து முடிக்கலாம்.
6. செங்கோல் முறை தவறிய அரசனது நாட்டில் இருந்துகொண்டு அறிஞர்கள் அவனைப் பழித்துக் கொண் டிருப்பதில் பயனில்லை.
7. உதவி செய்ய வேண்டிய உரிய சுற்றத்தார் உதவி செய்யாராயின், அதற்காக உயர்ந்தவர்கள் அவர்களைப் பழிக்காமல் பொறுத்துக் கொள்வர்.
8. முன்பின் அறியாத புதிய நாட்டிற்குச் சென்றால், அங்கே உள்ள பழக்க வழக்கங்களின் மாறுதலைக் கண்டு உயர்ந்தவர்கள் பழித்துரையார்.
9. வறியவன் வள்ளல்போல் வழங்கவில்லையே என அவனை எவரும் பழித்துரையார்.
10, கீழ்மக்களின் இழி செயல்களைக் கண்டு, சிறந்த பெரியவர்கள் பழிக்காமல் - கண்டும் காணாமல் விலகி விடுவர்.
------------
4. துவ்வாப் பத்து
1. ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம் ,
பழியோர் செல்வம் வறுமையின் துவ்வாது.
2. கழி தறுகண்மை பேடியின் துவ்வாது.
3. நாணில் வாழ்க்கை பசித்தலின் துவ்வாது.
4. பேணில் ஈகை மாற்றலின் துவ்வாது.
5. செய்யாமை மேற்கோள் சிதடியின் துவ்வாது.
6. பொய் வேளாண்மை புலைமையின் துவ்வாது.
7. கொண்டு கண்மாறல் கொடுமையின் துவ்வாது.
8. அறிவிலி துணைப்பாடு தனிமையின் துவ்வாது.
9. இழிவுடை முப்புக் கதத்தின் துவ்வாது.
10. தானோர் இன்புறல் தனிமையின் துவ்வாது.
4. துவ்வாமை கூறும் பத்து உரைகள்
1. கடல் சூழ்ந்த உலகில் உள்ள மக்களுள் பழியுடையவரிடம் உள்ள செல்வம், வறுமையைப் போலவே துய்க்கப் படாது (நுகரப்படாது).
2. அளவுக்கு மீறிய மறம் (வீரம்) காட்டுதல் பேடித் தன்மையைப் போலவே நல்ல பயன் தராது.
3. மானத்தோடு பசித்திருப்பதைவிட, நாணம்-மானம் இன்றி மற்றொருவரிடம் வாங்கி உண்பது உண்மையான உணவாகாது.
4. உண்மையான விருப்பம் இன்றிக் கடமைக்கு ஈவது, ஈயாத கஞ்சத்தனத்தைப் போலவே பெறத் தகுதியற்றது.
5. செய்யக் கூடாத செயல்களை மேற்கொண்டு செய்வது, மடத்தனமாய்க் கருதப்பட்டு நல்ல பயனை நல்காது.
6. பொய்யான உள்ளத்துடன் நடித்துச் செய்யும் உதவி, கீழ்மையினும் கீழ்மையானது.
7. ஒருவருடன் நட்பு கொண்டு, அவருக்குத் துன்பம் வந்தபோது நழுவி விடுதல் கொடுமையினும் கொடுமை யாகும்.
8. அறிவில்லாத முடனுடைய துணை, தனிமையினும் தாழ்ந்தது - பயனில்லாதது.
9. மிகவும் தளர்ந்து தாழ்ந்து இழிந்த நிலையில் உள்ள முதுமை, சினம் எந்த நற்பயனையும் அடையச் செய்யாதது போல் தக்க பயனை எய்தச் செய்யாது.
10. ஒருவர் தம் செல்வத்தைத் தாம் மட்டும் துய்த்து மகிழ்தல், ஒன்று மற்ற ஏழைமையைப்போல் துய்க்காத தாகவே கருதப்படும்.
-----------
5. அல்ல பத்து
1. ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
நீரறிந்து ஒழுகாதாள் தாரம் அல்லள்.
2. தாரம் மாணாதது வாழ்க்கை அன்று.
3. ஈரம் இல்லாதது கிளைநட்பு அன்று.
4. சோராக் கையன் சொல்மலை அல்லன்.
5. நேரா நெஞ்சத்தோன் நட்டோன் அல்லன்.
6. நேராமல் கற்றது கல்வி அன்று.
7. வாழாமல் வருந்தியது வருத்தம் அன்று.
8. அறத்தாற்றின் ஈயாதது ஈகை அன்று.
9. திறத்தாற்றின் நோலாதது நோன்பு அன்று.
10. மறுபிறப்பு அறியாதது முப்பு அன்று.
5. அல்லாதது. (ஆகாதது) கூறும் பத்து மொழிகள்
1. கடல் சூழ்ந்த உலகில் உள்ள மக்களுக்குள், நல்ல கணவனது இயல்பு அறிந்து ஒழுகாதவள் நல்ல மனைவியாகாள்.
2. மனைவியிடம் நல்ல மாட்சிமை - மாண்பு இல்லையெனில், அவளிருக்கும் குடும்பத்தின் வாழ்க்கை சிறப்புடையதாகாது.
3. ஒருவர்க்கு ஒருவர் குளிர்ந்த அன்பின்றிக் கொள்ளும் தொடர்பு, உறவும் ஆகாது - நட்பும் ஆகாது.
4. பிறர்க்கு ஒன்றும் உதவாத கையையுடைய கருமி புகழாகிய மலைக்கு - மலையத்தனைப் புகழுக்கு உரியவன் ஆகான்.
5. ஒன்று கலந்து பொருந்தாத உள்ளம் உடையவன் உயர்ந்த நண்பனாகக் கருதப்படான்.
6. ஆசிரியர்க்கு ஒருதவியும் செய்யாமல் வஞ்சித்துக் கற்கும் கல்வி உண்மையான கல்வியாகாது.
7. தான் வளத்துடன் வாழாவிடினும், பிறர் அவ்வாறு வாழமுடியாமையைக் கண்டு வருந்தும் வருத்தம் உண்மை யான வருத்தமாகாது.
8. அறவழியில் ஈட்டிய பொருளை நன்முறையில் - நல்லதற்குக் கொடாத கொடை உண்மைக் கொடையாகாது.
9. உரிய முறையில் நோற்காத நோன்பு (தவம்) உண்மை நோன்பு ஆகாது.
10. மறுபிறப்பு என்பதை முன்கூட்டி அறிந்து அதற்கு ஏற்றபடி ஒழுகாமல், ஆண்டில் மட்டும் மூத்த மூப்பு, உண்மையான பயனுள்ள மூப்பாகாது.
-----------
6. இல்லைப் பத்து
1. ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
மக்கள் பேற்றின் பெரும்பேறு இல்லை.
2. ஒப்புரவு அறிதலின் தகுவரவு இல்லை.
3. வாய்ப்புடை வழக்கின் நல்வழக்கு இல்லை.
4. வாயா வழக்கின் தீவழக்கு இல்லை.
5. இயைவது கரத்தலின் கொடுமை இல்லை.
6. உணர்விலன் ஆதலின் சாக்காடு இல்லை.
7. நசையின் பெரியதோர் நல்குரவு இல்லை.
8. இசையின் பெரியதோர் எச்சம் இல்லை.
9. இரத்தலி னூஉங்கு இளிவரவு இல்லை.
10. இரப்போர்க்கு ஈதலின் எய்தும் சிறப்பு இல்லை.
6. இல்லை - இல்லை எனக் கூறும் பத்து மொழிகள்
1. கடல் சூழ்ந்த உலகில் உள்ள மக்களுக்கு எல்லாம், பிள்ளைப்பேற்றை விட வேறு பெரிய பேறு இல்லை.
2. உலக நடைமுறை அறிந்து ஒருவர்க்கு ஒருவர் உதவி வாழ்வதைக் காட்டிலும் தக்க செயல் - தக்க வரவு இல்லை.
3. நல்ல வாய்ப்பு - வசதி தரும் பழக்க வழக்கத்தைக் காட்டிலும் சிறந்த பழக்கவழக்கம் இருக்க முடியாது.
4. நல்ல வாய்ப்பு - வசதி தராத பழக்கவழக்கத்தைக் காட்டிலும் வீண் செயல் வேறு இன்று.
5. தன்னால் செய்ய முடிந்த நல்ல செயலையோ - கொடையையோ மறைத்தலினும் கொடுமை வேறொன்றும் இல்லை.
6. நல்லறிவும் நல்லுணர்ச்சியும் இல்லாத மரக்கட்டை யாய் வாழ்தலைவிட வேறு சாவு இல்லை. இந்த வாழ்வே சாவுக்குச் சமம்.
7. பேராசையைக் காட்டிலும் பெரிய வறுமைத்தனம் வேறு இருக்க முடியாது.
8. நமக்குப் பின் விட்டுப் போகக்கூடிய எச்சப்பொருள் புகழினும் வேறேதும் இன்று.
9. ஒருவரிடம் சென்று கெஞ்சிக் கேட்டு இரத்தலைக் காட்டிலும் இழிவு வேறு யாதும் இலது.
10. தம்மிடம் வந்து ஒன்று கேட்டு இரப்பவர்க்குக் கொடுப்பதைவிட உயர்ந்த சிறப்பு வேறு இருத்தற்கு இல்லை.
-----------
7. பொய்ப் பத்து
1. ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
பேரறிவினோன் இனிது வாழாமை பொய்.
2. பெருஞ் சீரோன்தன் வெகுளி இன்மை பொய்.
3. கள் ளுண்போன் சோர்வின்மை பொய்.
4. காலம் அறியாதோன் கையுறல் பொய்.
5. மேல்வரவு அறியாதோன் தற்காத்தல் பொய்.
6. உறுவினை காய்வோன் உயர்வு வேண்டல் பொய்.
7. சிறுமை நோனாதோன் பெருமை வேண்டல் பொய்.
8. பெருமை நோனாதோன் சிறுமை வேண்டல் பொய்.
9. பொருள்நசை வேட்கையோன் முறைசெயல் பொய்.
10. வாலியன் அல்லாதோன் தவம்செய்தல் பொய்.
7. பொய்யான பத்து உரைகள்
1. கடல் சூழ்ந்த இவ்வுலகில் வாழும் மக்களுக்குள், உயர்ந்த பெரிய அறிவாளர் இனிமையாய் வாழ்வதில்லை என்பது பொய்; அவர் உள்ளம் இனியதாகவே இருக்கும்.
2. மிகப் பெரிய செல்வமும் செல்வாக்கும் பெற்றவன் பிறரிடம் சினம் (கோபம்) காட்டமாட்டான் என்பது பொய். செருக்கினால் அவன் சுடுமுகம் காட்டலாம்.
3. கள் உண்பவன் எதிலும் சோர்வடையான் - தாழ்வடையான் என்பது பொய்.
4. செய்ய வேண்டிய செயலை உரிய காலம் அறிந்து செய்யாதவனுக்குச் செயல் கைகூடி வரும் என்பது பொய்.
5. எதிர் காலத்தில் நேரக் கூடியதை நுனித்துணர்ந்து (உத்தேசமாகவாவது அறிந்து) அதற்கு ஏற்ப முன்கூட்டி நடந்து கொள்ளாதவன் தன்னைக் காத்துக் கொள்வான் என்பது பொய்.
6. உற்ற செயலைக் காய்ந்து வெறுத்துச் செய்யா தவன் உயர்வு பெறுதல் இயலாது.
7. எதையும் பொறுத்து அடக்கமாய் இல்லாதவன், பெருமையை வேண்டிப் பெறுதல் இயலாது.
8. தனக்குப் பெருமை வேண்டாதவன், - அதாவதுதற்பெருமையை விரும்பாதவன் சிறுமை அடைதல் இல்லை.
9. பொருளின்மேல் பேரவாக் கொள்பவன், முறை யாகப் பொருள் ஈட்டுவான் என்பது பொய்.
10. தூய்மையான உள்ளத்தான் அல்லாதவன், உயர்ந்த தவம் செய்வான் என்பது பொய்.
----------
8. எளிய பத்து
1. ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
புகழ் வெய்யோர்க்குப் புத்தேள்நாடு எளிது.
2. உறழ் வெய்யோருக்கு உறுசெரு எளிது.
3. ஈரம் வெய்யோர்க்கு நன்கொடை எளிது.
4. குறளை வெய்யோர்க்கு மறைவிரி எளிது.
5. துன்பம் வெய்யோர்க்கு இன்பம் எளிது.
6. இன்பம் வெய்யோர்க்குத் துன்பம் எளிது.
7. உண்டி வெய்யோர்க்கு உறுபிணி எளிது.
8. பெண்டிர் வெய்யோர்க்குப் படுபழி எளிது.
9. பாரம் வெய்யோர்க்குப் பாத்துண் எளிது.
10. சார்பு இலோருக்கு உறுகொலை எளிது.
8. உறுதல் எளிதான பத்து மொழிகள்
1. கடல் சூழ்ந்த உலகில் வாழும் மக்களுள், புகழான செயல்களை விரும்பிச் செய்பவர்க்குத் தேவர் வாழும் இன்ப உலகம் எளிதில் கிடைக்கும்.
2. போரை ஏற்று உண்மையாய்ப் போரிடுபவருக்குப் பெரிய போரில் வெற்றி கிடைத்தல் எளிது.
3. குளிர்ந்த உள்ளன்பு உடையவர்கட்கு, பிறர் விரும்பும் பொருளைக் கொடுத்தல் எளிது.
4. பிறர்மேல் கோள் சொல்லுதலை விரும்புபவர், எந்த மறை பொருளையும் (இரகசியத்தையும்) எளிதில் வெளியிட்டுவிடுவர்.
5. உழைப்பினால் உண்டாகும் துன்பத்தைப் (சிரமத் தைப்) பொருட்படுத்தாது உழைப்பவர்க்கு இன்பம் கிடைப்பது எளிது.
6. உழைக்காமல் இன்பத்தை மட்டுமே விரும்புபவர்கள் எளிதில் துன்பம் எய்துவர்.
7. பெருந் தீனியை விரும்பி உட்கொள்பவர்க்கு, மிகுந்த பெரிய நோய்கள் எளிதில் உண்டாகும்.
8. தன் மனைவி யில்லாத மற்ற பெண்களை விரும்பு பவர்க்குப் பெரும் பழி நேர்தல் எளிது.
9. பிறர் பாரத்தைத் (பிறர் சுமையைத்) தாங்கிக் காக்க வேண்டும் என்னும் அருள் உடையவர்கள், மற்ற வர்க்கும் பகுத்துக் கொடுத்து உண்ணுதல் எளிய செயலே; முடியாத தன்று.
10. எந்தப் பொறுப்பும் கவலையும் இல்லாதவர்க்கு, பிறரைப் படுகொலை செய்தல் எளிது
-----------
9. நல்கூர்ந்த பத்து
1. ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
முறைஇல் அரசன்நாடு நல்கூர்ந் தன்று.
2. மிக மூத்தோன் காமம் நல்கூர்ந்தன்று.
3. செற்று உடன் உறைவோனைச் சேர்தல் நல்கூர்ந்
தன்று.
4. பிணி கிடந்தோன் பெற்ற இன்பம் நல்கூர்ந்தன்று.
5. தன் போற்றாவழிப் புலவி நல்கூர்ந்தன்று.
6. முதிர்வுடையோன் மேனி அணி நல்கூர்ந்தன்று.
7. சொல் செல்லாவழிச் சொலவு நல்கூர்ந்தன்று.
8. அகம் வறியோன் நண்ணல் நல்கூர்ந் தன்று.
9. உட்கு இல்வழிச் சினம் நல்கூர்ந் தன்று.
10. நட்பு இல்வழிச் சேரல் நல்கூர்ந் தன்று.
9. நல்கூர்தலாகக் (வறியதாகக்) கூறும் பத்துக் கருத்துகள்
1. கடல் சூழ்ந்த உலகில், மக்களை ஆளும் அரசன் செங்கோல் முறை தவறின், அவன் ஆளும் நாடு நல்கூர்ந்த தாகும் - வறுமை யுடையதாகும்.
2. மிகவும் அகவை (வயது) முதிர்ந்தவன் காமத்தை விரும்புதல் - அதாவது மேலும் புதிதாகத் திருமணம் செய்து கொள்ள விரும்புதல் பயனற்றதாகும்.
3. உடன் இருந்துகொண்டே உள்ளத்தில் பகை கொண்டு செயலாற்றுபவனுடன் சேர்ந்திருத்தல் வறி தானதே - வீணானதே.
4. பெரிய பிணியாளி பெறுகின்ற இன்பம் என்பது உண்மையான பயன் உடையதாகாது.
5. தன்னைப் பொருட்படுத்தாது புறக்கணிப்பவ ரிடத்தில் சினம் கொள்வது செல்லாது - பயனற்றது.
6. மிகவும் அகவை முதிர்ந்த மூத்தோன் தன்னை ஆடையணிகலன்களால் ஒப்பனை (அலங்காரம்) செய்து கொள்வது அவ்வளவாக எடுபடாது.
7. தனது பேச்சு எடுபடாத இடத்தில் பேசுதல் என்பது பயனற்ற வீண்செயலாகும்.
8. உள்ளத்தில் குளிர்ச்சி யின்றி வறட்சியுற்றிருப்ப வனோடு - அதாவது - உள்ளன்பு இல்லாதவனோடு சேர்ந் திருத்தல் பயன் தராததாகும்.
9. தமது பெருமையைக் கண்டு அஞ்சி மதிப்பு கொடாத இடத்தில் சினம் காட்டுதலால் பயனில்லை.
10. உண்மையான நட்பு இல்லாதவரிடத்தில் இன் சொல்லையோ - ஓர் உதவியையோ பெற உள்ளத்தில் விரும்பிச் செல்லுதலால் ஒரு பயனும் இராது.
-----------
10. தண்டாப் பத்து
1. ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
ஓங்கல் வேண்டுவோன் உயர்மொழி தண்டான்.
2. வீங்கல் வேண்டுவோன் பல்புகழ் தண்டான்.
3. கற்றல் வேண்டுவோன் வழிபாடு தண்டான்.
4. நிற்றல் வேண்டுவோன் தவம்செயல் தண்டான்.
5. வாழ்க்கை வேண்டுவோன் சூழ்ச்சி தண்டான்.
6. மிகுதி வேண்டுவோன் வருத்தம் தண்டான்.
7. இன்பம் வேண்டுவோன் துன்பம் தண்டான்.
8. துன்பம் வேண்டுவோன் இன்பம் தண்டான்.
9. ஏமம் வேண்டுவோன் முறைசெயல் தண்டான்.
10. காமம் வேண்டுவோன் குறிப்புச் செயல் தண்டான்.
10. தவறாமை பற்றிய பத்து உரைகள்
1. கடல் சூழ்ந்த உலகில் வாழும் மக்களுக்குள், தான் ஓங்கி உயர்வு பெற விரும்புபவன், உயர்ந்த மொழிகளை - பிறரைப் பற்றி உயர்வான புகழுரைகளைக் கூறத் தவிர மாட்டான் (தண்டான்).
2. தான் பெருமையில் பெருக விரும்புபவன், பல புகழ்ச் செயல்களைச் செய்யத் தவிரான்.
3. கல்வி கற்க விரும்புபவன் ஆசிரியரை வணங்குவதில் பின் வாங்கமாட்டான்.
4. உலகில் புகழுடன் நிலைத்து நிற்க விரும்புபவன் உயர்ந்த தவம் இயற்றுதலைத் தவிர்க்கமாட்டான்.
5. தான் நன்முறையில் வாழ வேண்டுபவன், பெரியோருடன் சூழ்ந்து (ஆலோசித்து) வாழும் வழி அறிதலைத் தவிரான்.
6. தான் மேன்மேலும் வளர விரும்புபவன், முயற்சி யுடன் உழைப்பதை விடமாட்டான்.
7. இன்பம் பெற விழைபவன், அதைப் பெறும் முயற்சியினிடையே ஏற்படும் இன்னல்களைக் கண்டு சோர மாட்டான்.
8. பின்னால் துன்பம்பட இருப்பவன், முன்னால் தேவையில்லாத சிற்றின்பங்களை விடாது நுகர்வான்.
9. குடிமக்களின் நன்மையை விரும்பும் அரசன், செங்கோல் முறை தவறாமல் ஆளுதலைக் கைவிட மாட்டான். -
10. இன்பம் விரும்புபவன், பெரியோரின் குறிப்பறிந்து செயலாற்றுதலினின்றும் நீங்கான்.
-----------