ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்
முனைவர் சுந்தர சண்முகனார்
Az kaTalil cila ANimuttukkaL
(essays on tirukkuRaL verses)
by cuntara caNmukanAr
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Tamil Virtual Academy for providing a scanned image
version of this work for the etext preparation. This work has been prepared using the
Google Online OCR tool to generate the machine-readable text and subsequent proof-reading.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2017.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்
முனைவர் சுந்தர சண்முகனார்
Source:
ஆழ்கடலில் சில ஆணிமுத்துகள்
ஆசிரியர்: ஆராய்ச்சி அறிஞர் முனைவர் சுந்தர சண்முகனார்
தமிழ்ப் பேரவைச் செம்மல் (மதுரைப் பல்கலை)
புதுச்சேரி-11
வெளியீடு:
முனைவர் சுந்தர சண்முகனார்
புதுவைப் பைந்தமிழ்ப் பதிப்பகம்
38, இரண்டாம் தெரு, வேங்கட நகர், புதுச்சேரி - 605 011
முதல் பதிப்பு: நவம்பர் 1991
----------
அறிமுக உரை
"ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்ற முறையில், இந்நூலின் சிறப்புக்கு 70ஆம்
பக்கத்தில் தொடங்கும் கொடும் புருவக் கோட்டம்' என்னும் தலைப்பில் உள்ள விளக்கம்
ஒன்றே போதுமே!
ச. அறவணன் , பேராசிரியர் பயிற்சிக் கல்லூரி
புதுவைப் பல்கலைக் கழகம்
பக்கம்: 200 விலை: ரூ. 26-00
அச்சிட்டோர்: சபாநாயகம் பிரிண்டர்ஸ்,
73-A, கீழரதவீதி, சிதம்பரம்-608 001. போன்: 2350
---------
முன்னுரை
கடுகும் அணுவும்:
திருவள்ளுவனாரின் திருக்குறளைத் திறனாய்வு செய்த இடைக்காடர் என்னும் புலவர்,
"கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்”
எனக் கூறியுள்ளார். மிகவும் சிறிதளவு என்பதற்குக் ’கடுகளவு’ எனக் கூறும் மரபு உண்டு. ஒரு
சிறிய கடுகைத் துளைத்து அதனுள் ஏழு கடலைப் புகுத்தமுடியுமா? முடியாது. ஆனால், அந்த
அரிய செயலைத்தான் திருவள்ளுவர் தம் ஒவ்வொரு குறட்பாவிலும் ஆற்றியுள்ளதாக
இடைக்காடர் இயம்பியுள்ளார். ஒளவையார் என்னும் புலவர் பெருமாட்டியோ,
'அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்
குறுகத் தறித்த குறள்'
என்று பாராட்டியுள்ளார். அணு என்பதைக் குறிக்கும் ஆங்கிலச் சொல் Atom என்பது.
இந்த Atom என்பதற்குப் பிளக்க முடியாதது என்பது பொருளாம். ஆனால், இருபதாம்
நூற்றாண்டில் அணு பிளக்கப்பட்டதை உலகு அறியும். அணுவைப் பிளத்தல் - துளைத்தல்
என்ற ஒரு குறிப்பைப் பல நூற்றாண்டுகட்கு முன்பே ஒளவையார் அறிவித்துள்ளார்.
பிளக்க முடியாத துளைக்க முடியாத அணுவையும் துளைத்து அதனுள் ஏழுகடலைப்
புகுத்துவது போன்ற அரிய பெரிய செயலைத் திருவள்ளுவனார் செய்துள்ளாராம். அதாவது
ஒவ்வொரு குறளிலும், அரிய பெரிய - ஆழ்ந்த உயர்ந்த - பரந்த விரிந்த கருத்துகள் உள்ளன
என்பது இதன் பொருளாகும்.
ஆணி முத்துகள்:
எனவே, திருக்குறள் நூலை ஒரு மாபெருங்கடல் என்று கூறலாம். கடலிலே முத்துகள் இருக்கும்.
திருக்குறளாகிய மாபெருங்கடலில் ஆயிரத்து முந்நூற்று முப்பது ஆணிமுத்துகள் இருக்கும்.
முத்துகளுள் மிகவும் உயர்ந்த முத்துகளை ஆணிமுத்துகள் எனல் மரபு. அந்த 1330 ஆணி
முத்துகளுள் ஒர் ஐம்பத்தொரு முத்துகளை மாதிரியாக எனது இந்த நூலில் அறிமுகப்படுத்தி-
யுள்ளேன். யான் எழுதியுள்ள உரை விளக்கம் அறிமுகம் என்றால், இன்னும் அரிய பெரிய
கருத்துகள் அமைந்திருக்கும் என்பது பெறப்படும்.
வைப்பு முறை:
யான் குறள்களை அமைத்திருக்கும் முறை புதுமையாகத் தெரியலாம். முதலில் காமத்துப்பால்,
அடுத்துப் பொருட்பால், மூன்றாவதாக அறத்துப்பால் என்ற முறையில் எனது வைப்புமுறை
இருக்கும். ஒரு பாலின் குறள்களையே தொடர்ந்து சொல்வதினும், முப்பால் குறள்களையும்
மாறி மாறி அமைத்துக்கொண்டு செல்லின், படிப்பவர்க்கு ஒரு வகைப் புத்துணர்வு
உண்டாகலாம். அதனால் இவ்வாறு அமைத்துள்ளேன். வாழ்க்கையில் எந்தக் கேடும்
செய்யாத மாறுதல் ஏற்கக் கூடியதுதானே!
கருத்து வேற்றுமை:
எனது உரை விளக்கத்தில் சில கருத்து வேற்றுமைகள் இருக்கலாம். மணக்குடவர் உரையும்
பரிமேலழகர் உரையும் தரப்பட்டுள்ளன. பரிதியார் உரையும் காலிங்கர் உரையுங் கூட,
பெரும்பாலும் இவ்விருவரின் உரைகளோடு ஒத்திருக்கும். இவர்கட்குள் கருத்து வேற்றுமையும்
சிறுபான்மையாக இருக்கும். எனவே, எனது உரை விளக்கத்திலும் கருத்து வேற்றுமை
இருப்பதில் வியப்பில்லை. கருத்து வேற்றுமை, ஒரு வகையில் புதுமை காணும் திறன்
வளர்ச்சிக்கு அறிகுறி.
திருக்குறள் நூல் முழுவதற்கும் இப்படி ஒர் உரை விளக்கம் எழுதவேண்டும் என்பது
எனது வேணவா. அன்பர்களின் சார்வும் (ஆதரவும்) அகவை நீட்சியும் உடல்நலமும்
பொருள் வளமும் இருப்பின் அது கைகூடலாம்.
எனது இந்த உரை விளக்க நூலைத் திறனாய்வு செய்பவர்களிடத்தில் என்னோடு கருத்து
வேற்றுமை தோன்றலாம். ஏதோ துணிந்து இறங்கியுள்ளேன். அறிஞர்களின் நல்லாதரவை
நாடுகிறேன்.
அறிமுக உரை எழுதிய பேராசிரியர் திரு, ச. அறவணனுக்கும், இந்நூலை நன்முறையில்
அச்சிட்டுத் தந்த சிதம்பரம் சபாநாயகர் அச்சகத்தாருக்கும் மிகவும் நன்றி செலுத்துகிறேன்.
வணக்கம்.
சுந்தர. சண்முகன் 5—11—1991
----------
ஆழ் கடலில் சில ஆணி முத்துகள்
தோற்றுவாய்
பெறுதற்கரிய காதலி ஒருத்தியைப் பெற்ற பெறுதற்கரிய காதலன் ஒருவன், தான் அவள் மாட்டு
நுகர்ந்த இன்பத்தின் சுவையைப் புனைந்துரைக்கவில்லை, உண்மையாகவே உரைக்கின்றான்:
அவன் அவள் கனிவாயை நுகர்ந்தானாம். அந் நுகர்ச்சியின் பயனை எவ்வாறு வெளியிடுவது?
அவனுக்குப் பட்டதைச் சொல்லி விடுகிறான். இல்லை, அவன் சொல்ல வேண்டும் என்று
எண்ணிச் சொல்லவில்லை. அவனையறியாது அந்நுகர்ச்சியின் தேக்கெறிவு சொற்களாக
வெளிப்படுகின்றது. அந்தக் கனிவாய்ச் சுவை அவனது உயிர்க்கு இனிதாம்-இனிக்கின்றதாம்.
அது மட்டுமா? அமிழ்தமாகி அவனது ஆருயிர்க்கு எழுச்சி நல்குகின்றதாம். ஒரு முறையா?
இரு முறையா? பலப்பல முறையும் இனிக்கின்றதாம். ஆருந்தோறும் ஆருந்தோறும்
அனுபவிக்குந்தோறும் அனுபவிக்குந்தோறும் அமிழ்த மகிழ்வு மிகுகின்றதாம்; மிகுந்து
கொண்டே-யிருக்கின்றதாம்.
இது அவனது பட்டறிவு. அதாவது தலைசிறந்த தமிழ் மகனது பட்டறிவு. ஆண்டுக்கு
இருமுறை மும்முறை மணவிலக்கு செய்து கொண்டு மறு மணம் புரிந்துகொள்ளுகின்ற,
மனவளர்ச்சியற்ற மாக்களுக்கு இது விந்தையினும் விந்தை! வியப்பினும் வியப்பு! பழகப்
பழகத் தமிழனுக்கு மனைவி மேல் இனிப்பு மிகுகின்றதே தவிர, குறையவே யில்லை; கசப்பாக
மாறவும் இல்லை. எதைப்போல.. ?
இங்கேதான் பார்த்துப் பதிலிறுக்கவேண்டும். கனிவாய் இன்பத்துக்கு எதனை
உவமையாக்குவது? 'பகழப் பழகப் பாலும் புளிக்கும்' என்கின்றனரே! பாலே-தீம் பாலே
இத்தகையது எனின் வேறு எத்தகைய இனிப்புப் பொருளை ஈண்டு இயம்புவது?
அப்பழமொழியே சொல்லுகிறதே. ’பாலும்’ என்பதிலுள்ள - உயர்வு சிறப்பு உம்மையே
தெரிவிக்கிறதே. நாடோறும் நமக்கு நல்லுணவாகின்ற பாலுமே புளிக்கும் என்றால்,
பின்னைப் பேசுவானேன்?
கனிவாய் இன்பத்துக்கு ஒர் உவமை கூற இவ்வளவு திண்டாட்டமா? திணறலா?
திக்குமுக்காடலா? அவன் அக்கனிவாய் இன்பினை நுகர்ந்தவன் ஏதேனும் உவமை
கூறியிருக்கின்றானா? ஆம், கூறியிருக்கின்றான். ஒன்றன் சிறப்பை உணர்த்துதற்கு
உவமை கூறுவதென்றால் அதனினும் சிறந்த பொருளை எடுத்துக் கூறுதல்தானே
மரபு? நன்கு சுடர் விடும் விளக்கு ஒன்றிற்கு மின்மினியையா ஒப்பிடுவது?
கதிரவனைப் போல் ஒளிர்கிறது இவ்விளக்கு, எனல்தானே உவமையியல்?
ஆயின், கனிவாய் இன்பத்துக்கு அவன் என்ன உவமை-ஒப்புமை கூறியுள்ளான்?
தமிழர்களே, நம்புவீர்களா? அவன் கூறியிருப்பதை நம்புவீர்களா? அன்றைய தமிழன்
தன் பட்டறிவிற்கு எட்டியதைச் சொன்னான். ஆனால் இன்றைய தமிழனோ, அதனைப்
புரிந்துகொள்ளும் நிலையில்-நம்பக்கூடிய நிலையில், தன்னுணர்ச்சி உடையவனாய்
-தன்னம்பிக்கை உடையவனாய் இல்லை. அந்தோ தமிழகமே! நீ அளியை! நீ
நல்லை! நீ வாழ்க!
அவன் அப்படி என்ன சொல்லியிருக்கிறான்? என்ன உவமை கூறியிருக்கிறான்?
'தேருந்தோறும் தேருந்தோறும் - ஆராயுந்தோறும் ஆராயுந்தோறும் இனிக்கின்ற
செந்தமிழைப் போல, இவள் செங்கனிவாய் ஆருந்தோறும் இனிக்கிறது; தேருந்தோறும்
அமிழ்தாகின்ற செந்தமிழைப் போல, இவள் செங்கனிவாய் ஆருந்தோறும்
அமிழ்தாகின்றது’- என்பதுதான் அவன் செம் மொழி.
இப்பொருள் செறிந்த உவமையில் எத்துணை உண்மை பொதிந்து கிடக்கின்றது!
இக்கருத்து எத்துணை ஆழமுடை யது. எத்துணை அகலமுடையது, எத்துணை
உயர்ச்சி யுடையது! இஃது எங்கிருந்து பெறப்பட்டது? இங்கிருந்து தான:
”தேருந்தொறும் இனிதாந் தமிழ்போன்று இவள் செங்கனிவாய்
ஆருந்தொறும் இனிதாய் அமிழ்தாம் என தாருயிர்க்கே”
(தஞ்சை வாணன் கோவை-59)
என்னுஞ் செய்யுட் பகுதியிலிருந்துதான். இச் செய்யுள் எவர் வாயிலிருந்து வந்தது?
'பொய் பிறந்தது புலவர் வாயிலே' என்பர் சிலர். இல்லையில்லை; புலவர்கட்குள்ளேயே
பொய்யாமொழிப் புலவர் பாடிய செய்யுள் இது, ஈடுபாடு கொள்ள ஈடுபாடு கொள்ளத்
தமிழ் மிக மிக இனிக்கும் என்பது முடிந்த கருத்து, தமிழில் ஈடுபாடு கொண்டவர்கள்
இதனை உணர்வர், நம்புவர். கற்கண்டின் இனிமையைச் சுவைத்தே உணரவேண்டும் -
உணரமுடியும் அல்லவா?
பொய்யாமொழிப் புலவர் பெண் இன்பத்திற்கும் தமிழ் இன்பத்திற்கும் ஒத்தநிலை
தந்துள்ளார். பாரதிதாசனோ,
'மங்கை ஒருத்தி தரும் சுகமும்-எங்கள்
மாதமிழ்க்கு ஈடு இல்லை'
எனத் தமிழின்பத்தை உயர்த்தியுள்ளார்.
தமிழை ஆராய்ந்து இன்புறுதல் என்றால் என்ன? தமிழிலுள்ள தலைசிறந்த நூல்களை
ஆராய்ந்து இன்புறல் தானே! அங்ஙனமெனின், தமிழ் நூல்களை ஆராய ஆராய இனிமை
மிகும் என்பது போதருமன்றோ? முதல் பொய்யா மொழிப்புலவராகிய திருவள்ளுவரே
கூறியுள்ளாரே! படிக்கப் படிக்க நூலின் நயம் இனிப்பதைப் போல, பழகப் பழகப்
பண்புடையவரது நட்பு இனிக்கும், என்பது அவர் கருத்து.
’நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு'
என்பது அக்கருத்தமைந்த குறளாம்.
உண்மை அஃதெனில், ஆராய ஆராயத் தெவிட்டாது இனிக்கும் தமிழ் நூல்களுள்
தலைசிறந்த ஒன்றினைத் தேர்ந்தெடுத்து வைத்துக்கொண்டு ஆராய்ந்து ஆராய்ந்து
அவ்வின்பத்தைத் துய்க்கலாமே! இழப்பதேன்?
அத்தகையதொரு தமிழ் நூலைத் தேர்ந்தெடுத்தல் அரிதன்று; எளிது, மிக எளிது.
அவ்வேலையை உலகம் நமக்குத் தரவில்லை. அதனை முன்னமேயே அது செய்து முடித்து
விட்டது. அந்த நாடறிந்த நூலை - ஏன், உலக மறிந்த அத்தலை நூலை ஏறக்குறைய ஒரீராயிரம் ஆண்டு கட்கு முன்பே, சங்கத் தமிழ்ப் புலவர்களே - பன்னூல்கள் எழுதிய தமிழ்ப் பாவாணர்களே விரும்பு வெறுப்பின்றி ஒரு முகமாய்த் தேர்ந்தெடுத்து விட்டனர். ஆம்; உள்ள உள்ள உள்ளம் உருக்கும் அந்தத் தமிழ் நூலை-ஆராய ஆராய அறிவு ஊற்றெடுக்கும் அந்தத் தமிழ் நூலை - சிந்திக்கும் சிந்தைக்கு இனிய, அது மட்டுமா, கேட்கும் செவிக்கும் இனிய, அம்மட்டுமா, சொல்லும் வாய்க்கும் இனிய அந்தத் தமிழ் நூலை அவர்கள் அப்போதே தேர்ந்தெடுத்து விட்டனர்.
'அருங் குறளும் பகர்ந்ததற்பின் போயொருத்தர்
வாய்க் கேட்க நூலுளவோ'
என்றார் நத்தத்தனார்.
'உள்ளுதொறு உள்ளுதொறு உள்ளம் உருக்குமே
வள்ளுவர் வாய்மொழி மாண்பு'
என்றார் மாங்குடி மருதனார்.
"வாய்மொழி வள்ளுவர் முப்பால் மதிப்புலவோர்க்கு
ஆய்தொறும் ஊறும் அறிவு'
என்றார் உருத்திர சன்ம கண்ணர்.
சிந்தைக் கினிய செவிக்கினிய வாய்க்கினிய...
வள்ளுவனார் பன்னிய இன்குறள் வெண்பா'
என்றார் கவுணியனார்.
'உலகடைய உண்ணுமால் (வள்ளுவர்)
வண்டமிழின் முப்பால் மகிழ்ந்து'
என்றார் ஆலங்குடி வங்கனார். இப்படி இன்னும் பலர், பற்பலர்.
அக்காலப் புலவர்கள் மட்டுமா அதன் அருமை பெருமையினை அறிந்திருந்தனர்?
இக்காலத்தும் பல்வேறு இந்திய மொழிப் புலவர்கள் உட்படப் பல்வேறு உலக மொழிப்
புலவர்களும் அதன் ஈடு இணையற்ற சிறப்பினை நுனித்துணர்ந்தனர். தத்தம் மொழிகளிற்
பெயர்த்துக் கொண்டனர். பிற மொழியாளர்கள் அத்தமிழ் நூலை மொழி பெயர்த்துக்
கொண்ட செயல், அவர்தம் பரந்த மனப்பாங்கையோ, பரந்த அறிவின் பெருக்கையோ
அறிவிப்பதாகப் பொருள் இல்லை; அத்தமிழ் நூலின் கருத்தாழத்தை-எவரையும் கவர்ந்து
தன் வயப்படுத்தும் அந்நூலின் தனி மாண்பினை அறிவிப்பதாகவே பொருள் அல்லவா?
காலங் கடந்த, கண்டங் கடந்த, சாதி சமயங் கடந்த அத்தகு உலகப் பொது நூல்- உலகப்
பொது மறை திருவள்ளுவரின் தெவிட்டாத திருக்குறளன்றோ? வள்ளுவன் தன்னை
உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு' என்று சுப்பிரமணிய பாரதியார்,
திருக்குறள் உலகப் பொது நூல் என்பதற்கு நற்சான்றிதழ் (Certificate) கொடுத் திருப்பதாகக்
கூறுவது வழக்கம். இல்லை, இஃது அவரது சொந்தச் சரக்கு இல்லை. ஒருவேளை
அவ்வாறே எடுத்துக் கொண்டாலும், இக்கருத்தை முதலில் வெளியிட்டவர் அவரல்லர்.
இதனைத் திருவள்ளுவர் காலத்திலேயே புலவர் பெருமக்கள் பறைசாற்றித் தெரிவித்து
விட்டனர்:
"வள்ளுவர் பாட்டின் வளமுரைக்கின் வாய்மடுக்குங்
தெள்ளமுதின் தீஞ்சுவையும் ஒவ்வாதால்-தெள்ளமுதம்
உண்டறிவார் தேவர் உலகு அடைய உண்ணுமால்
வண்டமிழின் முப்பால் மகிழ்ந்து.'
என ஆலங்குடி வங்கனார் அப்போதே அறிவித்துப் போந்தார். ’உலகு அடைய-உலகம்
முழுவதும்-உண்ணும்' என அப்போதே குறி (ஆருடம்) சொல்லிவிட்டுப் போனார்.
எதிர்காலத்துக்கும் இடம் வைத்து, ’உண்ணும்' என்று செய்யும் என்னும் வாய்பாட்டு
வினைமுற்றில் கூறிப் போந்தமையின் நுணுக்கத்தினை நுனித்து நோக்கி மகிழ்க.
’வள்ளுவர் உலகங் கொள்ள மொழிந்தார் குறள்'
என நரி வெரூஉத் தலையாரும் கூறியுள்ளார்.
ஆம், உலகினர் உட்கொளகின்றனர்; ஆனால் தமிழர்களின் நிலை என்ன? 'வள்ளுவன்
குறளை வையகமெல்லாம் வாரியிறையடா தமிழா' என்று பாடுகிறோம், ஆடுகிறோம்;
ஆனால் செய்தோமா? செய்கின்றோமா? போகட்டும், இனியேனும் செய்வோமா?
தமிழர்கள் திருக்குறளை மறந்தது உண்மைதான் - அதனை அனைத்துலகிற்கும் அறிமுகப்
படுத்த அவர்கள் மறந்தது உண்மைதான். ஆனால், திருக்குறள் தமிழர்களை மறக்கலில்லை.
அவர்களை அனைத்துலகிற்கும் அறிமுகஞ் செய்து வைக்க அது மறக்க வில்லை. தன்
கருத்தின் திண்மையால் உலக மக்களைக் கவர்ந்ததன் வாயிலாக, 'திருக்குறள் என
ஒரு நூலுண்டு, அஃது எழுதப்பட்டது தமிழ் மொழியில், அம்மொழியினைப்பேசுபவர்
தமிழர்கள், அவர்கள் அத்தகையதொரு நூலை உலகிற்கு அளிக்க வல்ல ஆற்றலும்
அனுபவமும் நிரம்பியவர்கள்' என அனைத் துலகினரும் அறிந்து வியக்கச் செய்தது நம்
அருமைத் திருக் குறளன்றோ?
உலகிற்கு அறிமுகஞ் செய்து பரப்புவது அப்புறம் இருக்கட்டும், முதலில் நீங்கள்
படியுங்கள்! என்று திருத்குறள் சொல்லுவது போல்-திருவள்ளுவர் சொல்வது போல்
தோன்ற வில்லையா?
திருக்குறளை ஒரு முறை படித்தால் போதுமா? இரு முறை படித்தால் போதுமா? ஒரு
கருத்துரையைக் கற்றால் போதுமா? ஒரு குறிப்புரையைக் கற்றால் போதுமா? திருக்குறளோ
ஒரு வாழ்க்கை நூல்-வாழ்க்கைத் துணை நூல். இளமையில் ஒரு முறை படித்துச்
சுவைத்தோம். இன்னும் இல்லாண்டுகள் சென்ற பின்னர்-சில அனுபவங்களைப் பெற்ற
பின்பு திருக்குறளை மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்தால் தெரியும். புது
அழகு-புது நயம்-புதுப்பொலிவு காணப்படும். இவ்வாறே ஆண்டுகளுக்கு ஆண்டு,
அனுபவத்துக்கு அனுபவம் திருக்குறள் தெவிட்டாது இனிக்கும், 'உள்ளுதொறு
உள்ளுதொறு உள்ளம் உருக்குமே வள்ளுவர் வாய்மொழி' என மாங்குடி மருதனாரும்,
’முப்பால் ஆய்தொறும் ஊறும் அறிவு’ என உருத்திரசன்மகண்ணரும் உரைத்திருப்பதை
இப்போது ஒருமுறை ஊன்றி நோக்குக.
----------
அமைப்பு முறை ஆய்வு
அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என்ற வரிசையில் இப்பொழுது காணப்படும்
திருக்குறளின் அமைப்பு முறையில் மாறுதல்செய்ய இடமிருக்கின்றது. இம்மூன்று
பால்களையும் தன்னகத்துக் கொண்டிருப்பது காரணமாகத் திருக்குறள் பெற்றிருப்பதாக
நாம் எண்ணிக் கொண்டிருக்கும் 'முப்பால்' என்னும் பெயரையே ஆட்டங் காணும்படிச்
செய்யத் தெம்பிருக்கிறது.
காதில் விழுகிறது; சிறு சலசலப்பு அன்று; பெருங் கூக்குரல்கள்-அறை கூவல்கள் காதைத்
துளைக்கின்றன. 'பழைய சங்கப் புலவர்களே முப்பால்’ என்று திருவள்ளுவ மாலையில்
குறிப்பிட்டிருக்கின்றனரே. அறம் பொருள் இன்பம் வீடு என்னும் வரிசையில் உறுதிப்
பொருள்களை உரைப்பதுதானே தொன்று தொட்ட முறை' என்றெல்லாம் பலர் போர்
முழக்கம் இடுவது புரிகிறது.
பழைய சங்கப் புலவர்கள் சிலர் திருக்குறளுக்கு மதிப்புரை (விமர்சனம்) வழங்கியுள்ளனர்.
அவர்கள் எழுதிய பாக்களின் தொகுப்பாக, திருவள்ளுவ மாலை' என்னும் பெயரில் ஒரு
நூல் உலவுவது பலர்க்கும் தெரிந்திருக்கலாம், அந்த நூலை நன்கு துருவிப் பார்க்கவேண்டும்.
அறம் பொருளின்பம் முப்பால், 'அறம் பொருளின்பம் முப்பால்’ என இளமையிலிருந்து
பார்த்துப் பார்த்துப் படித்துப் படித்துப் பழகிப்போன பழங்கண்களால் திருக்குறளையும்
திருவள்ளுவ மாலையையும் பார்க்கக்கூடாது. ஆராய்ச்சி அறிவுக்கண் கொண்டு பார்க்க
வேண்டும், படிக்கவேண்டும். அப்பொழுது புரியும் திருக்குறளின் அமைப்பு முறை.
திருக்குறளுக்குச் சிறப்புப்பாயிரம் எழுதியுள்ள பழைய புலவர்களே ’சனி சரன்’ கோயில்
சாமிகளைப்போலக் காட்சியளிக்கின்றனர். அக்கோயிலில், ஒன்று கிழக்கே பார்க்கும்;
இன்னொன்று மேற்கே பார்க்கும்; மற்றொன்று தெற்கே பார்க்கும்; வேறொன்று வடக்கே
பார்க்கும். இவ்வாறே அப்புலவர்களும் பல்வேறு வகையான கருத்துக்களை
வெளியிட்டுள்ளனர்.
அவை வருமாறு
(1) திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பிரிவினது. (திருவள்ளுவமாலை-9-
கல்லாடர், 10-சீத்தலைச்சாத்தனார், 11-மருத்துவன் தாமோதரனார்,. 12-நாகன் தேவனார்,
15-கோதமனார், 17-முகையலூர்ச் சிறு கருந்தும்பியார், 18-ஆசிரியர் நல்லந்துவனார்,
19-கீரந்தையார், 30-பாரதம் பாடிய பெருந்தேவனார், 31-உருத்திரசன்மகண்ணர்,
39-உறையூர் முது கூற்றனார், 46-அக்காரக்கனி நச்சுமனார், 49-தேனீக்குடிக்கீரனார்,
53-ஆலங்குடி வங்கனார்).
(2) திருக்குறள் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பிரிவினது. (7-நக்கீரனார்,
8-மாமூலனார், 20-சிறு மேதாவியார், 33-நரிவெரூஉத்தலையார், 40-இழிகட்
பெருங்கண்ணனார்.)
(3) திருவள்ளுவர் மூன்றிலேயே நான்கையும் அடக்கி யிருக்கிறார். (22-தொடித்தலை
விழுத்தண்டினார், 44-களத் தூர்க்கிழார்).
(4) திருவள்ளுவர் வேதக்கருத்தைத் தமிழில் எழுதினார். (4-உக்கிரப் பெருவழுதியார்,
28-காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார், 37-மதுரைப் பெரு மருதனார்,
42-செயலூர்க் கொடுஞ் செங்கண்ணனார்.)
(5) திருவள்ளுவர் திருக்குறளைத் தாமாகவே, சொந்த அறிவு அனுபவங்களின்
துணைகொண்டே செய்தார். (7-நக்கீரனார்.)
(6) திருக்குறளில் முதலிலுள்ள பாயிரம் என்னும் பகுதிதான் வீட்டுப்பால் (20-சிறு
மேதாவியார்.)
(7) நான்கையும் இன்பம் (காமம்), பொருள், அறம், வீடு என்னும் முறையில் வரிசைப்
படுத்தியமைத்தல். (33-நரிவெரூஉத்தலையார்.)
(8) பொருட்பால் ஏழு பிரிவுகளையுடையது. (22-தொடித்தலை விழுத்தண்டினார்,
26-போக்கியார்.) ஆனால், உரையாசிரியர்களுள் மணக்குடவர் ஆறு பிரிவாகவும்,
பரிமேலழகர் மூன்று பிரிவாகவும் பிரித்துக்கொண்டுள்ளனர். பிரிவு இயல்களின்
பெயர்களும் ஒருவர்க்கொருவர் வேறு படுகின்றன.
(9) காமத்துப்பால் மூன்று பிரிவுகளையுடையது, (22-தொடித்தலை விழுத்தண்டினார்,
27-மோசிகீரனார்.) ஆனால், உரையாசிரியர்கள் இருவரும் இரண்டாகப் பிரித்துள்ளனர்.
பிரிவுகளின் பெயர்களும் வெவ் வேறானவை.
இவ்வாறு இன்னும் மாறுபட்ட பல்வேறுவகைக் கருத்துகளைப் பழைய புலவர்கள்
வெளியிட்டுள்ளனர். இதனால் தெரிவது என்ன? திருவள்ளுவரால் எழுதிப் போட்டுவிடப்
பட்டுப்போன திருக்குறள் ஒரு நேரம் எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்திருக்கிறது.
அதன் அமைப்பு முறையில் பலரும் தத்தம் கைவண்ணங் காட்டியிருக்கின்றனர்
என்பது வரையும் நன்கு புரிகின்றதன்றோ?
பால்களின் அமைப்பில் மட்டுந்தானா வேறுபாடு? பாலின் உட்பிரிவாகிய இயல்களின்
அமைப்பில் மட்டுந்தானா வேறுபாடு? இயலின் உட்பிரிவாகிய அதிகாரத்திலும் வேறுபாடு
காணக்கிடக்கின்றது. (அதிகாரம் என்பது, பத்துக் குறள்கள் கொண்ட ஒரு தலைப்பு).
புதல்வரைப் பெறுதல்' என்று சிலரும் அதனையே ’மக்கட்பேறு' என்று சிலரும்
கூறுகின்றனர். அதிகாரத்தின் வேறுபாட்டோடு, குறள்களின் வரிசை-யமைப்பிலும்
பெரிய வேறுபாடு காணக்கிடக்கின்றது. மணக்குடவர், பரிதி, காலிங்கர், பரிமேலழகர்
முதலியோர் உரைகளை எடுத்துப் பாருங்கள். ஒவ்வோர் அதிகாரத்திலும் குறள்களை
எப்படி முன் பின்னாக ஒவ்வொருவரும் மாற்றியமைத்திருக்கின்றனர் என்பதைப்
புரிந்து கொள்ளலாம்.
அப்படியென்றால், திருவள்ளுவர் அமைத்த முறைதான் எது? ஏன் இத்தகைய மாறுதல்கள்
ஏற்பட்டன? எப்படி ஏற்பட்டன? எவரால் ஏற்பட்டன? எப்போது ஏற்பட்டன? இதற்கு
முடிவுகட்டித் தக்க விடையிறுப்பவர் எவர்? ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்!
எனவேதான், 'இன்பம் பொருள் அறம் வீடு என்னும் இந்நான்கும்' என நரிவெரூஉத்
தலையார் கூறியாங்கு, யானும் ஈண்டு இன்பத்துப் பாலாகிய காமத்துப்பாலை முதலில்
தொடங்கிக் கொள்கிறேன். அவ்வாறு தொடங்குவதிலோர் அழகு இருப்பது மட்டுமன்று:
பொருத்தமும் இருக்கிறது.
இன்பத்திலே காதல் வாழ்வும், பொருளிலே அரசியலும், அறத்திலே அறநெறியும்,
வீட்டிலே கடவுள் நெறியும் பேசப்படுகின்றன. உளநூல் (Psychological) நியதிப்படி
இது தான் இயற்கையான அமைப்பு முறையாகும். இந்த வரிசையில்தான் - இந்தப்
படிகளில்தான் மனித உள்ளம் செல்லும் இயல்பினது. மேலும், சமூக வாழ்வியல்
(Socialogical) நியதியின்படி நோக்கினும் இந்த வரிசையே சாலப்பொருந்துகிறது.
இந்த வரிசையிலேயே மக்கள் சமூகத்தின் வாழ்வு தொடர்கிறது. உளநூல் வல்லுநர்,
மக்கள் மனத்தின் இயற்கைப் பண்புகளை, தற்காப்பு ஊக்கம், இனக்காப்பு ஊக்கம்,
சமூக ஊக்கம் என மூவகையாகப் பிரித்துள்ளனர். உணவு உணர்ச்சி முதலியன தற்காப்பு
ஊக்கத்தில் அடங்கும். காதல் உணரிச்சி, குழந்தைப் பற்று என்னும் இரண்டும்
இனக்காப்பு ஊக்கமாகும். கூட்டுணர்ச்சி, முதன்மையுணர்ச்சி முதலியன சமூக
ஊக்கமாம். இந்த வரிசை முறையினையும் ஊன்றி நோக்குக. மேலும் இக்கருத்துகளை,
தமிழ்த் திருவடிகளார் அப்பர் பெருமானார் அருளிய,
'பாலனாய்க் கழிந்த நாளும் பனிமலர்க் கோதைமார்தம்
மேலனாய்க் கழிந்த நாளும் மெலிவொடு மூப்பு வந்து
கோலனாய்க் கழிந்த நாளும் குறிக்கோளிலாது கெட்டேன்
சேலுலாம் பழனவேலித் திருக்கொண்டிச் சரத்துளானே'
’கனியினும் கட்டி பட்ட கரும்பினும்
பனிமலர்க் குழல் பாவைநல் லாரினும்
தனிமுடி கவித்து ஆளும் அரசினும்
இனியன் தன்னடைந்தார்க்கு இடைமருதனே'
என்னும் தேவாரப் பாக்களோடு ஒத்திட்டு மகிழ்க.
எனவேதான் ஈண்டு இன்பத்துப் பால் தொடங்கப் பெறுகிறது. வள்ளுவர் வீடு, அறம்,
பொருள், இன்பம் என வைத்திருந்தாலும், இன்பத்தினும் பொருளும், அதனினும் அறமும்,
அதனினும் வீடும் சிறப்பு மிகவுடையனவாதலால், சிறப்பு கருதி அவ்வரிசை தரப்பட்டிருக்கலாம்.
இருப்பினும், நூல்களைப் பிறருக்கு விளக்குங்கால் தெரிந்ததிலிருந்து தெரியாததற்கும்
எளிமையிலிருந்து அருமைக்கும், இன்பமான சூழ்நிலையிலிருந்து கடுமைக்கும் ஆசிரியர்
அழைத்துக் கொண்டு செல்லவேண்டும் என்னும் உளநூல் விதிப்படி,ஈண்டு இன்பத்துப்
பாலிலிருந்து தொடங்குவதால் நேரும் பெருந்தவறு ஒன்றும் இல்லை.
என்ன சொல்லியும் ஒத்துக் கொள்ளாது, பழைய காலணா, அரையணாவே வேண்டும்
நயா பைசாவைத் தொடவே மாட்டோம் - வாங்கவே மாட்டோம் என்று வாதாடுகிற
அளியர்க்கு நாம் என் செய்வது! காலந்தான் அவர்களைத் திருத்த வேண்டும். இங்கும்
அப்படியே! பரிமேலழகர் ’தாசர்கள்' நிலையும் இதுவே தான்!
--------
காமத்துப்பால்
திருக்குறள் காமத்துப்பால் பலரை மிரட்டியிருக்கின் றது. திருவள்ளுவரா இதனைப் பாடினார்!
இவ்வாறு பாடினார்! அவர் பாடலாமா? என்றெல்லாம் எண்ணச் செய்துள்ளது,
பேசச்செய்துள்ளது. அறத்துப்பால் பொருட்பால் மட்டும் கற்றவர் உண்டு. அம்மட்டும் பாடஞ்
சொன்னவர் உண்டு. திருக்குறளை இலத்தீன் மொழியில் பெயர்த்த வீரமா முனிவர்
(பெஸ்கி) என்னும் இத்தாலி நாட்டுத் துறவியார் கூட காமத்துப்பாலை விட்டுவிட்டார்.
ஏனைய பால்களினும் முதலில் காமத்துப்பால்தான் பரவவேண்டும்; உலகெங்கணும்
பரவவேண்டும். பரவினால், விலங்குகள் போலவே மக்களிடம் இன்று காணப்படுகின்ற
இழிநிலைக் காம உணர்ச்சி மாறும். மணவிலக்குக் குறைந்து மறையும். ஒருவனுக்கு
ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன் என்ற உயரிய வாழ்வுமுறை உலகெங்கணும் நின்று
நிலைக்கும். அதற்கு வழிகோலுகிறது வள்ளுவரின் காமத்துப்பால். இதனினும்
இவ்விருபதாம் நூற்றாண்டில் செய்யவேண்டிய தலையாய பணி வேறு யாதோ?
வீடு திருந்தின் நாடு திருந்தாதா? இனிக் காமத்தைப் பற்றிச் சிறிது ஆய்வாம்.
காம உணர்வு பசியுணர்ச்சியைப்போன்ற தொன்றாம். ஆயினும், அவ்வளவு கொடிய
தன்று; அதற்கு அடுத்த வரிசையில் நிறுத்தலாம். பசியில்லாதவர் இலர்; காமம்
இல்லாதாரும் இலர்; பசியை ஒழித்தவர் இலர்; காமத்தை ஒழித்தவரும் இலர். பசியை
எவராலும் ஒழிக்கவும் முடியாது; காம உணர்வையும் எவராலும் ஒழிக்கவும் முடியாது.
எந்தத் துறவியாயினும், மணமாகாத எந்த ஆண் பெண்ணாயினும் காம உணர்வை
ஒழிக்கவே முடியாது. இதனை நான் நாற்பதாயிரங் கோவில்களில் சொல்லுவேன்.
இதனால், துறவியரையோ, மணமாகாதோரையோ நான் பழித்தவனல்லன். அவர்களுட்
பலர் களங்க மிலாளர், மாசு மறுவற்றவர். அங்ஙனமெனின், இதில் பொதிந்து
கிடக்கும் உண்மை யாது?
பசியை இனி வராதபடி ஒழிக்கமுடியாது; ஆனால் அடக்க முடியும். சினத்தை இனி
எழாதபடி ஒழிக்கமுடி யாது; ஆனால், வந்த சினத்தை அடக்கி வெல்ல முடியும்.
அதுபோலவே காமத்தையும் ஒழிக்கமுடியாது; அதனை அடக்கியாண்டு வெற்றிபெற
முடியும். (ஒரு சில பேடிய ரிடத்தே இஃது ஒடுங்கி உறக்கத்திலாழ்ந்துள்ளது. இது
விதிவிலக்கு, அதனாலேயே இது பசிக்கு அடுத்தபடி எனப் பட்டது.)
இவ்வுணர்ச்சிகள் எல்லாம் எல்லோருக்கும் உண்டு. இவற்றை உள நூலார்
(Psychologist) ’இயல்பூக்கங்கள்' (Instincts) என்கின்றனர். இவை சூழ்நிலைவசத்தால்
சிலரிடத்தே அடக்கமாகவும் சிலரிடத்தே முனைப்பாகவும், சில நேரத்தே அடக்கமாகவும்
சில நேரத்தே முனைப்பாகவும் இருப்பதுண்டு. இவற்றை இவற்றின் போக்கிலேயே
விட்டு விடாமல், நேரிய-தூய பாதையில் திருப்பிச் செலுத்த வேண்டும். அவ்வாறு
செய்வதைத்தான் 'துய்மை செய்தல்' (Sublimation) என உளநூலார் குறிக்கின்றனர்.
இதைத்தான் கற்பிக்கின்றது திருக்குறள்.
பசியெடுத்தால் நமது உணவை உண்கின்றோம். பிறருணவை அவர் அறியாமல்
அவர் விரும்பாமல் வலிய உண்பதை இழிவாகக் கருதுகிறோம். காமமும் அதுபோலவே
கருதப்படவேண்டும். வருந்தியழைத்தாலும் விருந்துக்குச் செல்லாத பெரிய மனிதர்
சிலர் பிறர்பெண்களை விரும்பு கின்றனர். இந்த எச்சில் உண்ணிகளை என்னென்பது!
இந் நிலையைச் சாடி, உண்மைக் காதல் வாழ்வை உலகிற்கு வற்புறுத்தும் வள்ளுவர்
குறள்களைக் காண்பாம்.
காமத்துப்பால்
ஒருவன்-ஒருத்தியின் காதல் இன்பவாழ்வைப் பற்றிக் கூறுவது காமத்துப்பால்.
பண்டைத் தமிழறிஞர்கள், மக்கள் வாழ்வை அகம் புறம் என இரண்டாகப் பிரித்தனர்.
ஒருவன் ஒருத்தியின் அகம் கலந்த-உள்ளம் ஒத்த காதல் வாழ்வு அகமாகும். அஃதல்லாத
புறவாழ்வு-வெளியுலக வாழ்வு புறமாகும். இதன்படி நோக்கின், திருக்குறள் காமத்துப்பாலை
அகம் எனவும், ஏனையவற்றைப் புறம் எனவும் கொள்ளல் வேண்டும்.
களவியல்
அகக் காதல் வாழ்வாகிய காமப்பகுதி களவியல், கற்பியல் என இரண்டாகப் பகுக்கப்
பட்டுள்ளது. தலைவனும் தலைவியும் பிறரறியாமல் மறைமுகமாகக் கொண்டொழுகும்
காதல் வாழ்வு களவியலாகும். பின்னர், திருமணம் புரிந்துகொண்டு வாழும் வாழ்க்கை
கற்பிய லாகும். முறையே ஈண்டு முதலில் களவியல் பேசப்படும்.
தகையணங்குறுத்தல்
கவின் மிக்கவனாகிய கட்டிளங்காளை ஒருவன் கவின் மிக்க கட்டிளங் கன்னி ஒருத்தியைக்
கண்டான். அவள் அழகு-பேரழகு அவனை வருத்திற்றாம். அதைச் சொல்கிறான். அதுதான்
தகையணங்குறுத்தல், தகை= அழகு; அணங்கு = வருத்தம்; உறுத்தம் = மிக உண்டாக்குதல்.
அஃதாவது, அழகு மிகவும் வருத்துதல் - அழகு மயக்குதல் என்பது பொருள். இக்கருத்துத்தான்,
தகையணங்குறுத்தல் என்னும் தலைப்பின்கீழ், பத்துக் குறள்களில் பேசப்படும். அவை
வருமாறு.
மாலும் நெஞ்சு
'அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலுமென் னெஞ்சு'
(தெளிவுரை) இதோ ஓர் உருவம்! என்ன! ஒரு தெய்வப் பெண்ணோ? அன்று. ஒருவேளை
உயர்ந்தவகை மயில் தானோ? அன்று அன்று ஆயின், கனத்த தோடு அணிந்த காரிகை
தானோ? என்ன வியப்பு! எதையும் பகுத்தறியவல்ல என் நெஞ்சம், இங்கே இன்ன தென்று
துணிய முடியாமல் மயங்குகின்றதே!
(பதவுரை) அணங்கு கொல் = (இஃது ஒர்) தெய்வப் பெண்ணோ? ஆய்மயில் கொல்லோ =
ஆய்ந்து தேர்ந்தெடுக் கத்தக்க மயிலே தானோ? கனம் குழை = கனத்த தோடு (காதணி)
அணிந்த, மாதர் கொல்-மனிதப் பெண்ணோ? என் நெஞ்சு மாலும்=(எதையும் துணிய வல்ல)
என் மனம் (இதைத் துணியமாட்டாது) மயங்குகிறதே! அணங்கு= தெய்வப்பெண்;
குழை=காதணி, மாலும்=மயங்கும்)
மணக்குடவர் உரை:- இக்கணங்குழையை யுடையாள் தெய்வங் கொல்லோ! நல்லதோர்
மயில் கொல்லோ? அன்றி மக்களுள்ளாள் கொல்லோ? என் மனம் மயங்கா நின்ற வற்றுள்
யாதோ?
பரிமேலழகர் உரை:- இக் கனவிய குழையை யுடையாள், இப்பொழிற்கணுறை-வாளோர்
தெய்வ மகளோ? அன்றி யொரு மயில் விசேடமோ? அன்றி யொரு மானுட மாதரோ?
இவளை யின்னளென்று துணியமாட்டாது என் நெஞ்சு மயங்கா நின்றது. 'ஓ' அசை.
(ஆராய்ச்சி விரிவுரை) இக்குறட்பாவிலுள்ள ’கொல்', 'கொல்லோ’ என்னுஞ் சொற்கள்
இலக்கணங் கல்லாதார்க்கு என்னவோபோல் தோன்றலாம்; புரியாதிருக்கலாம். வட மொழி
இலக்கணம், தமிழ்மொழி இலக்கணம் எல்லாங் கற்ற மிக மிகப் பெரிய உரையாசிரியரகிய
பரிமேலழகரே இங்கே கோட்டை விட்டு விட்டாரே! [#] 'ஒ' என்பதை 'அசை' என
ஒதுக்கிவிட்டாரே! இப்பாட்டின் உயர்நிலைக் கட்டமே (climax) இந்த ’ஒ' என்பது
தானே! (கொல் - 'ஒ'= கொல்லோ) இதை அசை' என்னலாமா? அசை என்பது, பாட்டை
நிரப்புவதற்காக - இடம் அடைப்பதற்காகப் பெய்யப்படுவதாகும். அதற்கென்று பொருள்
மதிப்பு ஒன்றும் இல்லை. தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், அரிசியில் கலந்து
விற்கும் கல் போன்றது அது. வள்ளுவரா அந்தக் குற்றம் புரிவார்? அவரிடம் சரக்கு
மிக உண்டு. கற்றுக்குட்டிப் புலவர் வேண்டுமானால் அவ்வாறு செய்து பாட்டைச் சரி
கட்டலாம். இப்போது பொருளுக்கு வருவோம்.
--------
[#] "ஒ அசை என்று தொல்காப்பியர் ஒத்துக் கொள்ளவில்லை. நன்னூலாரே கூறியுள்ளார்.
கொல், ஒ என்பவற்றைத் தனியே நோக்குங்கால் பொருள் மதிப்பு இல்லை. சொற்களோடு
சேர்ந்து வரும் போது பொருள் மதிப்பு உண்டு. இதைச் செய்தவன் அவன்' என்ற தொடருக்கும்,
'இதைச் செய்தவன் அவன் கொல்' என்ற தொடருக்கும் வேறுபாடு தெரிய வில்லையா?
அவன் கொல் என்பதில் கொல் என்பது. இதை அவனா செய்தான். அவன் செய்திருக்க
முடியுமா என ஐயப்பொருளைத் (சந்தேகம்) தருகின்றது.
இக்குறளிலும் அதே ஐயப்பொருள் தான். தெய்வப் பெண்ணோ-அல்லது மயிலோ-
அல்லது மனிதப் பெண்ணோ என ஐயுறுகிறான். ஒ என்பது ஐயப்பொருள் தரும் என
எவரும் இலக்கண நூல்களில் வெளிப்படையாய்ச் சொல்ல வில்லைதான். ஆனால்
திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார். இலக்கியங் கண்டதற்குத்தானே இலக்கணம்?
அந்தப் பொருள் அழகைக் காண்போம்.
மனித இயல்புக்கு அப்பாற்பட்ட அழகும் தோற்றமும் கொண்டு நின்றிருந்த அவ்வுருவைக்
கண்டதும், முதலில், அணங்கோ என ஐயுற்றான். ஆடவனைக் கண்ட அவ்வுருவம்
மயில் போல் அப்பால் சாய்ந்து ஒதுங்கிற்று. உடனே அவனுக்கு மயிலின் சாயல்
நினைவுக்கு வந்தது. அணங்கென்று ஐயுற்றோமே. இது மயிலோ என்று மேலும்
ஐயத்தின்மேல் ஐயம் அழுத்தமாகக் கொள்கின்றான். அவனது ஐய உணர்ச்சியின்
இருமடங்கு அழுத்தத்தைத் தான் கொல்லோ என்பதில் உள்ள 'ஒ' அறிவிக்கின்றது.
ஐயோ என்பது முதல் படி; ஐயையோ என்பது அதற்கும் மேல் படி. பலே என்பது
முதல்படி பலே பலே என்பது அதற்கும் மேல்படி: இவை போலவே, கொல் (அணங்கு
கொல்) என்பது முதல் படி; கொல்லோ (ஆய் மயில் கொல்லோ) என்பது முன்னதற்கும்
மேல்படி. இந்த நுட்பத்தை உணர்ந்து சுவைத்து மகிழவேண்டாவா?
இதைத்தான் இக்குறளின் உயர்நிலைக் (உச்சி) கட்டம் என்று குறித்தேன். கொல்,
கொல்லோ புரியாமல் இக்குறளைக் கற்பது எவ்வாறு? பின்வரும் இடங்களிலும் உதவும்
என்று கருதி ஈண்டு விரிவாக எழுதிவிட்டேன்.
மேலும், அவ்வுருவம் தன்னை மாறி மாறி நோக்கியதால், இது ஒரு மனிதப் பெண்தானோ
என்ற ஐயம் அவனுக்கு எழுந்தது. உண்மையும் அதுதானே? உச்சியிலே-வானவூர்
தியிலே திரிந்தவன் தரைக்கு வந்துதானே தீரவேண்டும்?
பழைய உரையாசிரியர்கள், கணங்குழை என்பதை முதலில் எடுத்துக் கொண்டு,
கனங் குழையை உடைய இந்தப் பெண், தெய்வப்பெண்ணோ மயிலோ, மனிதப்
பெண்ணோ என்று பொருள் கூறியுள்ளனர். இவ்வாறு பொருள் கோடல், காலணா
அடை யொன்றைக் கையில் எடுத்துக் கொண்டு, இந்தக் காலணா அடை அரையனாவோ
முக்காலணாவோ அல்லது காலணா தானோ என்று கூறுதற்கொப்பாகும். இது
பொருந்தாது. எனது பொருளுக் கேற்பவே, குறளின் ஆற்றொழுக்கு நடை அமைந்திருப்
பதையும் நோக்குக.
அக்காலத்தில், மிகக் கனமான காதணி அணிந்தனர் என்பதைக் ’கனங்குழை'
என்பது காட்டுகின்றதன்றோ?
அடுத்துப் பொருள் பாலும் அதனை அடுத்து அறத்துப் பாலும் இடம் பெறும், இவ்வாறே
தொடர்ந்து மூன்று பால்களும் மாறி மாறி வரும்.
பொருட்பால்
பொருட்பால் என்பது பணங்காசைப் பற்றியதன்று. பொருட்பாலில் பெரும்பாலும்
அரசியல்தான் (Politics) பேசப்பட்டுள்ளது. மக்கள் வாழ்வுக்கு வேண்டிய வளமான
பொருளாதாரத்தைச் செழிக்கச் செய்வது அரசியல் அமைப்புதானே? - திறமான ஆட்சி
முறைதானே? உலகில் ஒரு நாடு பொருளாதாரத்தில் செழித்திருக்கிறதென்றால்,
அதற்காக அந்நாட்டு மக்கள் அரும்பாடு பட்டிருந்தாலுங் கூட, அப்பேரை ஆட்சியாளரே
தட்டிக்கொண்டு போய் விடுகிறார்களல்லவா?
இவ்வரிய கருத்தைக் கூறும் திருக்குறளின் பொருட் பால், பழைய உரையாசிரியர்களால்
பல்வேறு வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அரசியல், அங்கவியல், ஒழிபியல் என
மூன்றாகப் பகுத்துக்கொண்டார் பரிமேலழகர். மணக்குடவரோ, அரசியல், அமைச்சியல்,
பொருளியல், நட்பியல், துன்பவியல், குடியியல் என ஆறாகப் பகுத்துக்கொண்டார்.
இன்னும் பலர் பலவிதமாகப் பகுத்துக் கொண்டனர். உண்மையில் திருவள்ளுவர்
எவ்வாறு பகுத்திருந்தாரோ? அதனை ஆரறிவார்? ஐயோ குறளே! ஆயினும், நாம்
அரசியலை முதல் இயலாகத் தொடங்கிக் கொள்ளலாம். அரசியலோடு இன்னார்
இன்னாரே தொடர்பு கொள்ளலாம்; இன்னார் இன்னாரெல்லாம் தொடர்பு கொள்ள லாகாது,
என்பது ஒரு பொது விதி. ஆயினும், நாம் இப்போது திருவள்ளுவரின் திருக்குறள்
அரசியலோடு தொடர்பு கொள்வோம்.
அரசியல்
அரசனுக்கு வேண்டிய இயல்புகளைச் சொல்லும் பகுதி அரசியலாம். முடியரசுக் காலத்தில்
அரசு-அரசன் என்று சொல்லியிருப்பதை, குடியரசுக்காலத்தில் அரசாங்கம் அரசியல்
தலைவன் என அமைத்துப் பொருள் கொள்ளலாம். இனி அரசனது இயல்பை நோக்குவாம்.
இறைமாட்சி
இறைவனது (அரசனது) மாண்புகளை - சிறப்பியல்புகளை -நற்குண நற்செய்கைகளைக்
கூறுவது இறைமாட்சி யாகும். நல்ல அரசனே கண்கண்ட இறைவன் (கடவுள்). ஆதலின்,
அவன் இறை எனப்பட்டான். அரசன் என்பவனுக்கு இருக்கவேண்டிய இன்றியமையாத்
தகுதிகள் 'இறைமாட்சி' என்னும் தலைப்பின்கீழ், பத்துக் குறள்களில் பேசப்படும். அவை
வருமாறு:
அரசருள் ஏறு
(தெளிவுரை) படை, குடிமக்கள், உணவுப்பொருள், அமைச்சர், நட்பரசர், பாதுகாப்பிடங்கள்
ஆகிய ஆறும் குறைவின்றி நிறைவு பெற்றிருப்பவனே அரசர்க்கு அரசன் (சக்கரவர்த்தி)
ஆவான்.
'படைகுடி கூழமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு'
(பதவுரை) படை = (வன்மைவாய்ந்த) படைகளும், குடி = (உயர்ந்த) குடிமக்களும், கூழ் = சிறந்த
உணவுப் பொருளும், அமைச்சு = (மதி நுட்பம் மிக்க) அமைச்சர்களும், நட்பு = (உண்மையான
தூய) நட்பரசர்களும், அரண் = (அழிக்கமுடியாத) பாதுகாப்பு இடங்களும் ஆகிய, ஆறும்
உடையான் = ஆறு பொருளையும் தன் உடைமையாகப் பெற்றிருப்பவனே, அரசருள்
ஏறு= அரசர்களுக்குள் எல்லாம் ஆண் சிங்கம் போல் தலைமை பெற்ற அரசன் ஆவான்.
(கூழ் = உணவு: அரண் = பாதுகாப்பு இடம்; ஏறு = ஆண் சிங்கம்.)
(மணக்குடவர் உரை) படையும் குடியும் கூழும் அமைச்சும் நட்பும் அரணும் என்னும்
ஆறு பொருளினையும் உடையவன் அரசருள் ஏறு போல்வான். (பரிமேலழகர் உரை)
படையுங் குடியுங் கூழும் அமைச்சும் நட்பும் அரணுமென்று சொல்லப்பட்ட ஆறங்
கங்களையு முடையவன் அரசருள் ஏறு போல்வான்.
(ஆராய்ச்சி விரிவுரை) இக்குறளில்தான் எத்துணை நுணுக்கங்கள் படை, குடி முதலிய
ஆறும் உடையவன் அரசருள் ஏறு என்றால், ஆறுள் ஒரு சில குறைந்தவன் அரசன் எனப்
பெறானா? உலகில் வாழ்ந்த அரசர் அனைவரும் ஆறும் உடையவராய் இருந்தனரா?
ஒன்றிரண்டு குறைய ஆண்ட அரசர்கள் இருந்ததே யில்லையா?
உடம்பில் இன்னின்ன ஆற்றல்கள் (வைடமின் சத்து) இருக்கவேண்டும் என்று கூறுகின்றனர்.
அவை அனைத்தும் பெற்றிருப்பவர் முழுவாழ்வு வாழ்வர். அவற்றுள் ஒரு சில குறைந்தவர்
அரை குறை வாழ்வே அடைவர். அது போன்றதே அரசர்கள் வாழ்வும். மேற்கூறிய ஆறனுள்
ஒரு சில குறைந்தவர் அரைகுறை அரசரே! அவர்களைச் சிற்றரசர் - குறுநில மன்னர் என்றெல்லாம் குறிப்பிடுவர், அந்த ஆறும் பெற்றவனே முழு அரசன்-அதாவது-அரை குறை அரசர்க்கெல்லாம் பெரிய அரசனாவான். என்பது இக்குறட் கருத்து.
இங்கே ஓர் ஐயம் அகலாமல் மனத்தை உறுத்தலாம், அரசர்கள் குறைந்துபோன இக்குடியரசுக்
காலத்தில். சனநாயகக் காலத்தில் அரசரைப் பற்றிப் பேசும் திருக்குறள் ஏன்? என்ற ஐயம்
எழுவது இயற்கைதானே!
யார் சொன்னது இப்போது அரசர்கள் இல்லையென்று? குடியரசாவது? சனநாயகமாவது?
இப்போதும் எங்கே பார்த்தாலும் எந்த ஆட்சியும் பெரும்பாலும் ஒரிருவர் கைகளில்தான்
சிக்கிக்கொண்டுள்ளது. அவர்கள்தாம் அரசர்கள். ஆனால் அப்போது அரசுரிமை குடும்ப
உரிமையாக இருந்தது. இப்போதோ ஆரும் (அன்னக் காவடிகளும்) அரசராய் வரலாம்.
அவ்வளவுதான் வேற்றுமை! இப்போதுள்ளவரை நாட்டுத் தலைவர் என்கின்றனர்.
அரசன், இறைவன், வேந்தன், மன்னன் என்றாலும் அதே பொருளே!
இனி இக்குறளின் உட்பொருளை நோக்குவாம்:
படை:- அரசனுக்குப் படைவேண்டும். படையின்றி ஆட்சியில்லை. சுற்றி வளைக்காமல்
துணிவுடன் சுருக்கமாகச் சொல்லின், நாட்டை ஆள்வது படைதான். சான்று, இக்காலப்
படைப் (இராணுவப்) புரட்சியே. படை, அன்று யானை, குதிரை, தேர், காலாள் என்பன.
இன்றோ தரைப்படை, கடல்படை, வானப்படை என்பன. அன்று வில், வாள், வேல்
முதலியன. இன்றோ குண்டு விகற்பங்கள், இப்படைகளைத் தன் உடைமையாக உடையவன்
அரசன் என்பது குறள். படைகளுக்குப் பணிபவனோ, அல்லது பிறவல்லரசுகளிடமிருந்து
பிச்சையாகப் படைகளைப் பெறு பவனோ அரசனாகான்.
அடுத்தது குடி குடிமக்கள் இல்லாத அரசும் உண்டா? இதையும் வள்ளுவர் கூறவேண்டுமா?
இங்கே இரண்டினை ஊன்றி நோக்கவேண்டும். மேல் நாட்டினர் மக்கள் தொகையைப்
பெருக்க ஊக்கம் அளிப்பது ஏன்? ஒரு நாட்டிற்கு மக்கள் வளம்-மக்கட் செல்வம் வேண்டும்.
அடுத்து, ஒரு நாட்டின் குடிகள், பிறநாட்டிடம்-பிறநாட்டுத் தலைவரிடம் உயிரை
வைத்துக் கொண்டிருந்தால் சொந்த நாடு உருப்படுமா? அவர்கள் பிறந்த நாட்டின்
குடிகளாவாரா? உடைமையா வாரா? எனவே, நாட்டுப்பற்றுடைய மக்களை அரசன்
உடைமையாகப் பெற்றிருக்க வேண்டும்.
அடுத்தது கூழ் - உணவுப் பொருள்: தன் மக்களுக்கு வேண்டிய உணவுப் பொருள் முழுவதும் உடையவனே அரசன் , பிறரிடம் கப்பல் கப்பலாய்க் கையேந்துபவன் அரசனல்லன். பின்னர் அமைச்சு: அறிவுரை வழங்கி ஆட்சியைக் கவனிக்கும் அமைச்சர்கள் தேவைதானே! பிறகு நட்பு: துன்ப வேளையில் துணைபுரியும் நட்பரசர்களும் (நேசநாட்டினரும்) மன்னனுக்கு வேண்டும். அந்த வேலையை இப்போது அமெரிக்காவும், ரழ்சியாவும் தங்கள் தலைமேல் தூக்கிப்போட்டுக் கொண்டுள்ளன. இறுதியாக அரண்: கோட்டை-கொத்தளங்கள், கடல், மலை, படைத் தளங்கள் முதலிய பாதுகாப்பளிக்கும் சூழ்நிலையும் வேண்டும்.
இந்த ஆறும் உடையான் அரசன். ’உடையான்' என்னுஞ் சொல்லை ஊன்றி நோக்குக. தன்னுடையனவாக - தனக்குரியனவாக உடையவனே அரசன்-அரசருள் அரசன். பிறரிடம் பெறுபவன் அவனுக்குக் கீழ்ப்பட்டவனே. உண்மைதானே இது! இனி அறத்துப்பால் வருக.
அறத்துப்பால்
மக்கள் ஒழுகவேண்டிய - பின்பற்றி நடக்கவேண்டிய நல்ல நீதி நெறி முறைகளைக் கூறும் பகுதி அறத்துப்பால். இதனை இல்லறவியல், துறவறவியல் என இரண்டாகப் பகுத்துள்ளனர். முதலில் உள்ள இல்லறத்தினை முதலில் கற்ற காமத்துப்பாலின் தொடர்ச்சியாகவும், அடுத்துள்ள துறவறத்தினை இரண்டாவதாகக் கற்ற பொருட்பாலின் தொடர்ச்சியாகவும் அக உள்ளத்தில் அமைத்துப் பார்ப்பதும் ஒர் அழகே! எனவே. காமத்துப்பால் - பொருட்பால்களின் முடிமணியாக அறத்துப்பாலைக் கொள்ளலா மன்றோ?
மக்களே, காமத்திலேயே தோய்ந்து விடாதீர்கள், காதல் வாழ்விலேயே திளைத்து விடாதீர்கள், இல்லறம் ஒழுங்காக நடைபெற வேண்டும் எனவும், பொருளிய லிலேயே வீழ்ந்து கிடக்காதீர்கள், உலகியலிலேயே ஆழ்ந்து எதிலும் தன்னலங் கருதாத துறவுள்ளம் வேண்டும் எனவும் உலகிற்கு உணர்த்தும் எச்சரிக்கை மணியாக அறத்துப்பாலைக் கொண்டால் அது மிகையாகாது. காமக்கடலையும் பொருட் கடலையும் கடக்க உதவும் கலங்கரை விளக்கமுமாகும் அவ்வறத்துப்பால்.
அவ்வறத்துப்பாலின் உட்பிரிவாகிய இல்லறவியல், துறவறவியல் எனும் இரண்டனுள் முறையே முதற்கண் இல்லறவியலை ஈண்டு எடுத்துக்கொள்வாம்:
இல்லறவியல்
இல்லறம் என்றால் மனையறம். இல் என்றால் மனை அல்லது வீடு, வீட்டிற்கு உரிய காரணத்தாலேயே. மனைவிக்கு இல், இல்லாள், இற்கிழத்தி என்னும் பெயர்கள் எழுந்தன. எனவே, இல்லறம் என்றால் வீட்டில் மனைவிமக்கள் முதலியோர் சூழ இருந்து, அறநெறி தவறாமல் குடும்பம் நடாத்தும் வாழ்க்கை ஒழுங்கு என்பது பெறப்படும். இல்லற இயல் என்றால், அவ் வில்லறத்தின் இலக்கணங்களை அஃதாவது இல்லறத்தில் இருப்பவர்கள் இயற்றவேண்டிய கடமைகளைக் கூறும் பகுதி என்பது பொருள். முதற்கண் இல் வாழ்க்கை' என்னும் தலைப்பு வருமாறு:
இல்வாழ்க்கை
இல்வாழ்க்கை என்பதற்கு ஆடவன் மனைவியுடன் வீட்டில் இருந்து நடத்தும் குடும்ப வாழ்க்கை என்பது பொருள். இல்லறத்தின் பெருமையினையும், அதனால் உண்டாகும் நன்மையினையும். இல்லறத்தாரின் கடமையினை யும் தொகுத்து, சுருங்கச் சொல்லல் விளங்கவைத்தல் என் னும் அழகுபெற இப்பகுதியில் கூறியிருத்தலின், இது முன் வைக்கப்பட்டது.
இயல்புடைய மூவர்
(தெளிவுரை) இல்லறத்தான், இயல்பாகவே தன்னோடு உரிமை உடைய தன் பெற்றோர், பெண்டாட்டி, பிள்ளை என்னும் மூவகையர்க்கும் நல்ல துணையாய் நின்று காக்கக் கடமைப் பட்டவனாவான்.
'இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.’
(பதவுரை) இல்வாழ்வான் என்பான் - வீட்டில் மனைவியுடன் இருந்து வாழும் குடும்ப வாழ்க்கையான் என்று சிறப்பித்துச் சொல்லப்படுபவன். இயல்பு உடைய - இயற்கையாக உரிமை உடையவர்களாக உள்ள, மூவர்க்கும் -(பெற்றோர், மனைவி, மக்கள் என்னும்) மூவகையார்க்கும், நல் ஆற்றின்-(நல்வாழ்வு என்னும்) நல்ல வழியிலே, நின்ற துணை-(உதவியாகக் கிடைக்கப்பெற்று) நின்ற துணை யாவான்.
(விரிவுரை) ஒரு பெண், தன் இளம்பருவத்தில் பெற்றோரின் உதவியாலும், இடைத்தரமான பருவத்தில் கணவனின் உதவியாலும், கிழப்பருவத்தில் பிள்ளையின் உதவியாலும் வாழ்வதாகக் கூறுவதியல்பு. அதுபோவே ஒர் ஆண் மகனும், இளம்பருவத்தில் பெற்றோர் உதவியாலும், இடைத்தரமான பருவத்தில் மனைவியின் உதவியாலும், கிழப்பருவத்தில் பிள்ளையின் உதவியாலும் வாழ்கின்றான். இம்முறையாக நோக்குங்கால். ஒர் இல்வாழ்வான் ஒரு சேரத் தன் பெற்றோரையும் மனைவியையும் மக்களையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயக் கடமை உடையவனாய்க் காணப்படுகின்றான் என்பது தெளிவு. பொருட்செறி வுடைய கதையொன்றும் புகலப்படுவது உண்டு நம் நாட்டில்!
ஒரு நாள் ஒருவிறகு வெட்டி ஆறுபணம் ஈட்டினானாம். அவற்றை அன்றைக்கே செலவழித்து விட்டானாம். மெய், தானே! ஆறுபணம் எப்படிப் போதும் ஒரு குடும்பத்திற்கு! ஆனால் அவன் அன்றிரவு தன் பக்கத்து வீட்டுக்காரனிடம் பின்வருமாறு பகர்ந்தானாம். இன்றைக்கு நான் ஆறுபணம் ஈட்டினேன். அவற்றுள் இரண்டு பணத்தைப் பழைய கடனுக்காகக் கொடுத்து விட்டேன். இரண்டு பணத்தைக் குடும்பத்திற்காகச் செலவழித்துவிட்டேன். மீதி இரண்டு பணத்தைப் பின்னால் உதவுவதற்காக உண்டிப்பெட்டியில் போட்டுவைத்துள்ளேன் என்பது விறகு வெட்டியின் செலவு விளக்கம். கேட்டான் பக்கத்து வீட்டுக்காரன். வியப்புடன், இக்காலமான காலத்தில் ஆறுபணம் முழுவதுமே போதாதே! அப்படியிருக்க, கடன் எப்படித் தந்தாய்? மிச்சப்படுத்தியது எப்படி? என்று வினவினான். பின் விறகுவெட்டி பழைய கடனைக் கொடுத்தல் என்றால், இதற்குமுன் என்னைப் பெற்று வளர்த்துச் செலவு செய்து காப்பாற்றிய என் பெற்றோர்க்காக இரண்டு பணம் ஒதுக்குதல்; குடும்பத்திற்குச் செலவழித்தல் என்றால், எனக்கும் என் மனைவிக்குமாக இரண்டு பணம் ஒதுக்குதல்; மிச்சப்படுத்துதல் என்றால், எதிர்காலத்தில் காப்பாற்றும் கடமைப்பட்டுள்ள பிள்ளை கட்காக இரண்டு பணம் ஒதுக்குதல்-என்று மேலும் விளக்கம் செய்தானாம். இப்போது விளங்குமே இக்குறட் கருத்து.
இனி முறையே மணக்குடவர் உரையும் பரிமேலழகர் உரையும் வருமாறு:
(மண-உரை) இல்வாழ்வான் என்று சொல்லப்படுபவன் (பிரமச் சாரி, வானப் பிரத்தன், சந்நியாசி என்னும்) இயல்புடைய மூவர்க்கும் நல்ல வழியின் கண்ணே நின்ற ஒரு துணை.
(பரி உரை) இல்லறத்தோடு கூடி வாழ்வான் என்று சொல்லப் படுபவன் (பிரம சரிய ஒழுகத்தானும், வனத்தின் கண் தீயோடு சென்று மனையாள் வழிடத் தவம் செய்யும் ஒழுக்கத்தானும், முற்றும் துறந்த யோக ஒழுக்கத்தானும் ஆகிய) அற இயல்பினையுடைய ஏனை மூவர்க்கும் அவர் செல்லும் நல்லொழுக்க நெறிக்கண் நிலை பெற்ற துணையாம்.
(ஆராய்ச்சி உரை) திருமணம் ஆவதற்கு முன் உள்ள நிலைக்குப் பிரமசரியம் என்பது பெயர். திருமணமாகி மனைவியோடு வீட்டில் வாழும் நிலைக்குக் கிருகத்தம் என்பது பெயர். வீட்டை விட்டு மனைவியுடன் காட்டை யடைந்து தவம் செய்யும் நிலைக்கு வானப் பிரத்தம் என்பது பெயர். எல்லாவற்றையும் துறந்த தனித்த நிலைக்குச் சந்நியாசம் என்பது பெயர். இது வடநூல் வைப்பு முறை. இந்நான்கு திறத்தாருள், கிருகத்தனாகிய இல்வாழ்வான் ஏனைய மூன்று திறத்தாரையும் காப்பாற்றவேண்டும் என்றே இக்குறளுக்கு உரையாசிரியர்கள் பலரும் உரை தீட்டிவிட்டனர். தமிழர்தம் கோட்பாடு இன்னதன்று. இதனினும் வேறுபட்டது.
காமத்துப்பால்
களவியல்-தகையணங் குறுத்தல்
நோக்கெதிர் நோக்குதல்
(தெளிவுரை) என்னை அவ்வுருவம் மாறி மாறி நோக்குவதால் அது மக்கள் இனப் பெண்ணே. ஆயின், அப்பெண் இயற்கையாகத் தன் வடிவழகால் என்னை வருத்துவதல்லாமல், என் பார்வைக்கு எதிர் எதிராக மாறி மாறி என்னை நோக்கித் தன் மனக் குறிப்பாலும் என்னை வருத்துகிறாளே. இயற்கையாகவே தானே பிறரைத் தாக்கி வருத்தக்கூடிய ஒரு துடுக்குத் தெய்வம் (துஷட தேவதை) தனக்குதி துணையாகப் பெரிய படையையும் அழைத்துக்கொண்டு வந்திருப்பதுபோலல்லவா இருக்கிறது இது?
'நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து.'
(பதவுரை) நோக்கினாள் = நல்ல தோற்றமுடைய அந்தப் பெண், நோக்கு எதிர் நோக்குதல் = என் பார்வைக்கு எதிர் எதிராக-அதாவது நான் பார்க்கும் போதெல்லாம்தானும் பார்ப்பது, தாக்கு அணங்கு = தானே தாக்கி வருத்தக் கூடிய ஒரு துடுக்குத் தெய்வம், தானை கொண்டன்னது உடைத்து = படையையும் தன்னுடன் கொண்டு வந்திருப்பது போன்ற தன்மையை உடையதாம். நோக்கு = அழகுத் தோற்றம், கண் நோக்கு அணங்கு = வருத்தும் தெய்வம்; தானை = படை (சேனை) அன்னது = அது போன்றது; கொண்டன்னது கொண்டு வந்திருப்பது போன்றது.)
(மணக்குடவர் உரை) இவ்வழகினை யுடையவள் எனது நோக்கின் எதிர் நோக்குதல், தானே வருத்த வல்ல தெய்வம் அஞ்சாமல் வரும் தானையைக் கொண்டுவந்தது போலும்.
(பரிமேலழகர் உரை) இப்பெற்றித்தாய வனப்பினை யுடையாள் என்னோக்கிற் கெதிர் நோக்குதல், தானே தாக்கி வருத்துவதோ ரணங்கு தாக்குதற்குத் தானையையுங் கொண்டு வந்தாற் போலும் தன்மையை யுடைத்து.
(விரிவுரை) நோக்கெதிர் நோக்குதல் என்றால் என்ன? ஏதோ ஒர் உள்நோக்கு-உள் கருத்து ஒன்றிருந்தால்தான் நோக்கெதிர் நோக்குதல் நடைபெறும். நோக்கெதிர் நோக்குகிறாள் என்ற போதே, ஏதோ...ஆமாம். உள்பொருள் இருப்பது புரிகிறது. அவன்மேல் கருத்து இல்லை யென்றால், அவனை ஒரு முறைக்கு மேல் மறு முறை அவள் பார்த் திருக்கக் கூடாது. அவன் பார்க்குந் தோறும் அவளும் பார்க்கிறாள் என்றால் அதற்கு என்ன பொருள்? நாம் இரவில் மோட்டார் வண்டியில் செல்லும்போது, எதிரே ஒரு வண்டி வரும். இரண்டிலும் விளக்கு எரியும். ஒவ்வொரு சமயம் வண்டியோட்டிகள் இருவரும் மாறி மாறி விட்டு விட்டு விளக்கை நிறுத்தி எரியவைப்பார்கள். அது போலவே இங்கும்! தலை குனிதல்-எதிர் நோக்குதல், தலை குனிதல் எதிர்நோக்குதல். இந்த நுட்பமான குறிப்பைத்தான் நோக்கெதிர் நோக்குதல்' என்னும் தொடரில் அடக்கி வைத்துள்ளார் ஆசிரியர். அணுவுக்குள் ஆழ்கடல் அல்லவா அது?
முதலிலேயே அந்த ஆரணங்கின் மேனி யழகிலே மயங்கித் தவித்துத் தத்தளிக்கும் அவனை அவளது 'குறு குறு’ குறும்புப் பார்வைவேறு வாட்டி வதக்குகிறது. வலியவன் ஒருவன் தன்னினும் மெலியவன் ஒருவனைத் தான் தாக்குவதல்லாமல் தன் ஆட்களையும் விட்டுத் தாக்குகிறான். இதைத்தான் தாக்கணங்கு ஒப்புமை வாயிலாகக் கூறியுள்ளார் வள்ளுவர். இந்த நோக்கெதிர் நோக்கிய போரில் அவன் கண்ணடி தாளாமல் கலங்கி விட்டான்; படுதோல்வியும் அடைந்து விட்டான். கண் நோக்கு அவ்வளவு கனமானது போதும்!
இந்த எளிய செய்தியை எவ்வளவு சுவைபடச் சொல்லி யிருக்கிறார் ஆசிரியர். இந்தக் குறளைக் கற்காமல், கத்தரிக்காய்-காதல் கதை வெளியீடுகளைக் கட்டியழுது கொண்டிருக்கின்றார்களே நம்மவர்கள்! உலகில் காதல் இலக்கியம் வேண்டுபவர்கள், வள்ளுவரின் காமத்துப்பாலை வந்து பார்க்கட்டும் - என்று அறைகூவல் விடுகிறேன்.
எமனைப் பார்த்தேன்
(தெளிவுரை) உலகில் எமன் எமன் என்று பலரும் சொல்லக் காதால் கேட்டிருக்கிறேனே தவிர, அந்த எமனை இதற்கு முன்பு நேரில் கண்டதில்லை; ஆனால், பெண் தன்மையோடும் போரிடும் பெரிய கண்களோடும் அந்த எமன் என் எதிரில் நிற்பதை இதோ நேரில் காண்கிறேன்.
'பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு'
(பதவுரை) கூற்று என்பதனை = எமன் என்று சொல்லப் படுவதை, பண்டு அறியேன் = முன்பு பார்த்தறியேன்; (ஆனால் அது) பெண்தகையால் = பெண் தன்மையோடு, பேர் அமர் கட்டு = பெரிய போர் செய்கின்ற கண்களையும் உடையது என்பதை, இனி அறிந்தேன் = இப்போது (நேரில் பார்த்து) அறிந்து கொண்டேன். (கூற்று = எமன்; இனி = இப்பொழுது; பெண்தகை = பெண் தன்மை, அமர் = போர்; கட்டு (கண் + டு) = கண்களை உடையது.)
(மண-உரை) பண்டு கூற்றின் வடிவு இன்ன பெற்றித் தென்பதை அறியேன். இப்பொழுது அறிந்தேன்: அது பெண்டகைமையோடே பெருத்து அமர்த்த கண்களை யுடைத்து.
(பரி-உரை) கூற்றென்று நூலோர் சொல்வதனைப் பண்டு கேட்டறிவதல்லது கண்டறியேன், இப்பொழுது கண்டறிந்தேன்; அது பெண்டகையுடன் பெரியவாய் அமர்த்த கண்களை யுடைத்து.
(விரிவுரை) கூற்று-கூற்றுவன் என்றால் எமன், எமனது வேலை, உடல் வேறு உயிர் வேறாகக் கூறு போடுதல் அதாவது கொல்லுதல் என்றும், அவனது அலுவலகம் (ஆபீசு) தென்திசையில் இருக்கிறதென்றும் கூறுகின்றனர்.
அது என்னவோ? அதைப் பற்றிய ஆராய்ச்சி இங்கு வேண்டியதில்லை உயிரைக் கொல்லும் ஆற்றலைக் கூற்று என்பது உலகியல். உயிர் போக்குவதைப் போல மிகுந்த தாங்கமுடியாத துன்பம் கொடுப்பவரை நோக்கி, அட எமனே' என்று நோவது உலகில் கண்கூடு.
இங்கே, அப்பெண் அவனுக்கு எமனாகத் தோன்றுகிறாள். அவளது பெண்தகை அதாவது பெண் தண்மை அதாவது பெண் தோற்றம் அதாவது நாணிக் கோணி ஒடிந்து வளைந்து சாய்ந்து சரிந்து நிற்கும் அழகுப் பொலிவு அவனது காமத்தைத் தூண்டித் துலங்கச் செய்து விட்டது. அதனோடு, நெருப்பில் நெய்வார்த்தாற் போல, நோக்கெதிர் நோக்கிப் போர் புரியும் பெரிய கண்களும் சேர்ந்து கொண்டன. அவளைப் பெறமுடியாமல் காமத் தீயால் வருந்துகின்றானாதலின், அதற்குக் காரணமான அவளை எமன் என்கிறான். அவளை மணந்தால் அவனுக்கு வாழ்வு: அவள் கிடைக்கவில்லையானால் சாவே, எனவே, இன்னும் கிடைக்கப் பெறாத அவள் அவனுக்கு எமனாகத் தோன்றுவதில் வியப்பு ஒன்றும் இல்லையல்லவா?
இன்னொரு கோணத்திலும் இக்கருத்தைப் பொருத்திப் பார்க்கலாம். இசையரங்கில் ஒருவர் மிக நன்றாகப் பாடினார் என்றால், ’இன்றைக்குக் கொன்று விட்டார் கொன்று' என்று கூறுவது வழக்கம். அதே போலே, தன் பேரழகுத் தோற்றத்தாலும், குறும்புப் பார்வையாலும் அவள் தன்னைக் கொன்று விட்டதாக அவன் கூறியிருக் கிறான். பார்க்க முடியாத எமனைப் பார்த்ததாகக் கற்பனை செய்து காட்டியுள்ள வள்ளுவரின் கலைத்திறன்தான் என்னே!
---------------
பொருட்பால்
அரசியல் - இறைமாட்சி
வேந்தர்க்கு ஒளி
'கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி'
(பதவுரை) கொடை = கொடுக்குங் குணமும், அளி = அருளும், செங்கோல் = செங்கோல் ஆட்சியும், குடி ஓம்பல் குடிமக்களைக் காக்கும் பொறுப்பும், உடையானாம் = நிலையாக உடையவன்தான், வேந்தர்க்கு ஒளி = அரசர்க் கெல்லாம் விளக்கு. (அளி = அருள் - கருணை - இரக்கம்; ஒம்பல் = பாதுகாத்தல்; ஒளி = ஒளி விடும் சுடர் விளக்கு).
(மணக்குடவர் உரை) கொடுத்தலும், தலையளி செய்தலும், செங்கோன்மையும், குடிகளைப் பாதுகாத்தலுமென்று சொல்லப்படுகின்ற இந்நான்கினையு முடையவன் வேந்தர்க் கெல்லாம் விளக்காம். (கொடுத்தல் = தளர்ந்த குடிக்கு விதை ஏர் முதலியன கொடுத்தல்.)
(பரிமேலழகர் உரை) வேண்டுவார்க்கு வேண்டுவன கொடுத்தலும், யாவர்க்குந் தலையளி செய்தலும், முறை செய்தலும், தளர்ந்த குடிகளைப் பேணலுமாகிய இந்நான்கு செயலையு முடையவன் வேந்தர்க் கெல்லாம் விளக்காம்.
(விளக்கவுரை) கொடை, அளி, செங்கோல், குடி ஒம்பல் என்னும் நான்கும் உடையவன், சுடர்களுக்கெல்லாம் சுடரளிக்கும் ஞாயிறே (சூரியனே) போல, வேந்தர்களுக்குள்ளே ஒளி வீசும் விளக்காவான். ஒளி என்றால் புகழ் என்ற பொருளும் உண்டு. விநாடிக்கு 1,86,000 கல் வேகத்தில் பரவும் ஒளியை (வெளிச்சம்) போலவே ஒருவரது புகழும் விரைந்து உலக முழுவதும் பரவி அவரை விளக்குவதால், அப்புகழுக்கு ஒளி யென்னும் பெயர் தரப்பட்டது. போலும், எனவே, இந்நான்கும் உடையவனது புகழ் உலக நாடுகள் அனைத்திலும் பரவும் என்பதும் போதருகிறது. வேந்தர்க்கு ஒளி என்பது அதுதானோ?
பழைய உரையாசிரியர்கள், இக்குறளில், 'உடை யானாம்' என்பதன் பின்னுள்ள ஆம் என்பதை 'ஒளி' என்பதன் பின் நிறுத்தி. ’உடையான் வேந்தர்க்கு ஒளி ஆம்' என மாற்றிப் பொருள் கண்டுள்ளனர். இம் முறையை நான் விரும்பவில்லை. ’உடையானாம் வேந்தர்க்கு ஒளி' எனக் குறளில் உள்ளதுபோலவே கொள்வதுதான் தகுதி. 'உடை யானாம்' என்பதிலுள்ள "ஆம்" என்பது, உடையவன் தான். உடையவனே என்ற உறுதிப் பொருளை - தேற்றப் பொருளை-வலியுறுத்தற் பொருளை அழுத்தம் திருத்தமாக அறிவித்து நிற்கிறது. அதாவது 'நான்கும் உடையவனே வேந்தர்க்கு ஒளி' எனப் பொருள் காணவேண்டும். இந்த அரும் பெருஞ் சொல்லாட்சியுள் அடங்கியுள்ள அந்நுண் பொருள் அழகினை 'உடையானாம் வேந்தர்க்கொளிஉடையானாம் வேர்தர்க்கொளி' என்று சொல்லிச் சொல்லிப் பார்த்தால் உணர்ந்து துய்க்கலாம்.
இன்னும், இக்குறளில் உள்ள கொடை என்னும் சொல் பழைய உரையாசிரியர்களை ஒர் உலுக்கு உலுக்கி யிருக்கிறது. என்னென்று காண்போம். அரசனுக்குக் "கொடை" வேண்டுமென இக்குறளிலும் ஈகைவேண்டுமென அடுத்து வரப்போகும் குறளிலும் வள்ளுவர் கூறி யுள்ளார். பார்த்தார்கள் உரையாசிரியர்கள்! ஒரு குற ளிலே கொடை மற்றொன்றிலே ’ஈகை’; ஆனால் இரண்டும் ஒன்று தானே! இதற்கு எவ்வாறு பொருள் காண்பது! என்று நினைத்திருக்கிறார்கள். மணக்குட வரோ, கொடை என்பதற்கு-’தளர்ந்த குடிக்கு விதை ஏர் முதலியன கொடுத்தல்' என்று பொருள் கூறி, ஈகை என்பதற்கு ஈகை என்றே பொருள் எழுதி நழுவி விட்டார். பரிமேலழகரோ, கொடை என்பதற்கு ’வேண்டுவார்க்கு வேண்டுவன கொடுத்தல்' என்று பொருள் கூறி, ஈகை என்பதற்கு ஈகை-கொடை. (இந்த) ஈகை ’படைக்குரித்து' என்று எழுதி ஒருவாறு தள்ளிவிட்டுத் தப்பித்துக்கொள்ள முயன்றிருக்கிறார். இவ்வுரைகள் பொருத்தமாய்ப் புலப் படுகின்றனவா? இங்கே நான் சொல்லும் பொருள் என்ன?
ஈ. தா, கொடு என மூன்று சொற்கள் நெருக்கமான பொருள் உடையனவாய்த் தமிழில் இருப்பதை நாம் அறி வோம். அவற்றுள் ஒவ்வொன்றிற்கும் வேற்றுமையும் உண்டு. ஈதல் (ஈகை) என்பது, ஒருவன் தன்னிலும் தகுதி யில் தாழ்ந்தவருக்கு உதவுதலாம். வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை' என வள்ளுவரே, ஈகை' என்னும் தலைப் பின் முதல் குறளில் கூறியுள்ளார். தருதல் (தா) என்பது தன்னோடு தகுதியில் ஒத்தவருக்கு உதவுவது. கொடுத்தல் (கொடை) என்பது, தன்னிலும் தகுதியில் மிக்கவருக்கு உதவுவது. இக்கருத்துகளை.
”யென் கிளவி இழிந்தோன் கூற்றே"
"தா வென் கிளவி ஒப்போன் கூற்றே"
'கொடு வென் கிளவி உயர்ந்தோன் கூற்றே"
என்னும் தொல்காப்பிய (சொல்லதிகாரம் - எச்சவியல்49, 50, 51) நூற்பாக்களாலும். -
'ஈ தா கொடு வெனும் மூன்றும் முறையே
இழிந்தோன் ஒப்போன் மிக்கோன் இரப்புரை”
என்னும் நன்னூல் (சொல்லதிகாரம்-பொதுவியல் - 56) நூற்பாவாலும் நன்கு உணரலாம்.
எனவே, இக்குறளில் 'கொடை என்றது, அரசன் தன்னிலும் உயர்ந்தோர்க்கு உதவுவதையேயாகும். அடுத்த குறளில் ஈகை' என்றது, அரசன் தன்னிலும் தாழ்ந்தவருக்கு உதவுவதையேயாகும். ஆனால் இச்சொற்கள் எல்லா இடங்களிலும் இதே பொருளில் வரும் என்று சொல்ல முடியாது. ஒன்றுக்கொன்று வேற்றுமை யுடைய உண்மை, வாய்மை, மெய்ம்மை என்பவை கலந்து பயன்படுத்தப் படுவதைப் போலவே, இவையும் கலந்து பயன்படுத்தப்படும். ஆனால், அரசனுக்குக் கொடை, ஈகை இரண்டும் வேண்டும் என்று சொல்லியிருக்கிற இந்த இடத்தில் இவ்வாறு பொருள் கோடலே அமைதி,
அரசன் தன்னிலும் உயர்ந்தோர்க்குக் கொடுத்தல் (கொடை) என்றால், புலவர்க்கும் கலைஞர்க்கும் பரிசு வழங்கல். புலவரையும், கலைஞரையும் தம்மிலும் மிக்கோராக அரசர்கள் கருதினர் என்பதை, புறநானூறு போன்ற சங்க இலக்கியம் கற்றவர் நன்கறிவர்.
இக்குறளில் அளி என்பது, எல்லாரிடத்தும் அருள் செலுத்துதல் - இரக்க உணர்ச்சி கொள்ளல். செங்கோல் என்பது, ஒருதலைச் சார்பு இன்றி நேர்மையாய் ஆளுதல். குடி ஓம்பல் என்பது, குடிமக்களுக்கு எந்தக் குறையும் வராதபடி நன்கு காத்தல்.
எனவே, கல்வி கலைகளை வளர்த்து, அருள் உள்ளந் தாங்கி, நேர்மையுடன் குடிகளை நன்கு காப்பவனது புகழ் உலகநாடுகள் எங்கும் பரவி ஒளி வீசுந்தானே!
இக்குறளை மணக்குடவர் 7-ஆம் குறளாகவும், பரிமேலழகர் 10-ஆம் குறளாகவும் இன்னும் பிறர் பிறவித மாகவும் அமைத்துக் கொண்டுள்ளனர். ஆனால் நானோ, முதல் குறளில் 'அரசருள் ஏறு' என்று இருப்பதால், அது போலவே வேந்தர்க்கு ஒளி' என்றிருக்கும் இக்குறளை இரண்டாவதாகத் தொடர்ந்து கொண்டேன். மற்ற குறள் களின் தொடர் வரிசை யமைப்பையும் கூர்ந்து நோக்கி உண்மையுணர்க.
வேந்தர்க்கு இயல்பு
'அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இக்கான்கும்
எஞ்சாமை வேந்தற் கியல்பு'
(பதவுரை) அஞ்சாமை - (அஞ்சக்கூடாதவற்றுக்கு) அஞ்சாதிருத்தலும், ஈகை = ஏழை எளியார்க்கு உதவலும், அறிவு = சிறந்த கூரிய அறிவும், ஊக்கம் = தளராத மன எழுச்சியும், இந்நான்கும் = ஆகிய இந்த நான்கு பண்புகளும், எஞ்சாமை = குறையாதிருப்பது அதாவது நிறைந்து நிலைத் திருப்பது, வேந்தர்க்கு இயல்பு = ஓர் அரசனுக்கு இருக்க வேண்டிய தன்மை (இலட்சணம்) ஆகும். (எஞ்சுதல் = குறைதல்; எஞ்சாமை = குறையாமை)
(மணக்குடவர் உரை) அஞ்சாமையும், ஈகையும் அறிவுடைமையும் ஊக்கமுடைமையு மென்னும் இந்நான்கு குணமும் ஒழியாமை வேந்தனுக் கியல்பு. (பரிமேலழகர் உரை) அரசனுக்கியல்பாவது, திண்மையும் கொடையும் அறிவும் ஊக்கமுமென்னும் இந்நான்கு குணமும் இடைவிடாது நிற்றல். இவற்றுள் அறிவு ஆறங்கத் திற்கு முரித்து: ஈகை படைக்குரித்து ஏனைய வினைக்குரிய.
(விளக்கவுரை) அஞ்சுபவர்கள் அரச பதவியில் நீடிக்க முடியுமா? 'கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசையா?' அஞ்சி அஞ்சி எந்தக் காரியத்தை இயற்ற முடியும்? அதனால் 'அஞ்சாமை' வேண்டும் என்றார். பின்னர் ஈகை. ஈகை படைக்கு உரித்து, என்றார் பரிமேலழகர். எந்த அகராதியில் இவ்வாறு சொல்லியிருக்கிறதோ? நான் முன் குறள் உரையில் ஆராய்ந்துள்ளபடி, ஈகை என்பது, அரசன் தன் கீழ் உள்ளார்க்கும் எளிய இரவலர்களுக்கும் ஏற்ற உதவிகளைச் செய்தலாம். இதற்குத் தொல்காப்பியம், நன்னூல் ஆகிய இலக்கண நூல்களிலிருந்து ஆதாரமும் அங்குக் காட்டியிருக்கிறேன். அடுத்தது அறிவு, ஒருவன் ஒழுங்காகக் காரியம் பார்க்கவில்லையென்றால் - நடந்து கொள்ளவில்லையென்றால், 'உனக்கு அறிவு இருக்கிறதா? என்று கேட்பது உலகியல். அரசனுக்கு இது மிக மிக வேண்டுமே! இறுதியாக ஊக்கம், ஆக்கத்திற்குக் காரணமான ஊக்கத்தைப் பற்றிப் பேசவும் வேண்டுமோ?
இந்நான்கும் அரசற்குச் சிலநாள் சிலவேளை இருந்தால் போதாது. எஞ்ஞான்றும் எஞ்சாது நின்று நிறைந்து நிலைத்திருக்க வேண்டும்; அதுதான் அரசற்குத் தகுதி!
அறத்துப்பால்
இல்லறவியல் - இல்வாழ்க்கை
துறந்தார் முதலோர்க்குத் துணை
'துறந்தார்க்கும் துவ்வா. தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை'
(பதவுரை) இல்வாழ்வான் என்பான்-இல்லறத்தான் என்று சொல்லப்படுபவன், துறந்தார்க்கும்-(பற்றுக்களைத் துறந்த பெரியாருக்கும், துவ்வாதவர்க்கும்-(ஏழமையால் எவ்வித இன்பத்தையும்) அனுபவிக்கமுடியாத ஏழை எளிய வருக்கும், இறந்தார்க்கும் - (ஆதரவின்றித் தம் பார்வையில்) இறந்து கிடப்போருக்கும் (அஃதாவது அனாதைப் பிணங் களுக்கும்.) துணை-(தக்க) துணையாவான்.
(தெளிவுரை) 'து' என்றால் அனுபவித்தல், துவ்வாதவர் என்றால் அனுபவிக்காதவர்.அஃதாவது, இன்பம் அனுபவிக்க முடியாத ஏழை எளியவர்கள். இல்வாழ்வான் துறவிகளுக்கும் ஏழை எளியவர்களுக்கும் உணவு, உடை முதலியன உதவ வேண்டும்; ஆதரவற்ற (அனாதைப்) பிணங்களை அப்புறப் படுத்தி இறுதிக்கடன் இயற்றவேண்டும் என்பது கருத்து. ஆதரவில்லாப் பிணங்களை அப்புறப்படுத்துவது அறங்களுள் ஒன்றாக அக்காலத்தில் கருதப்பட்டது.
(மண-உரை) வருணத்தினையும் காமத்தினையும் துறந் தார்க்கும் துறவாது நல்குரவாளராய் உண்ணப்பெறாதார்க் கும், பிறராய் வந்து செத்தார்க்கும் இல்வாழ்வான் என்று சொல்லப்படுபவன் துணையாவான்.
(பரி-உரை) களைகண் ஆனவரால் துறக்கப்பட்டார்க் கும், நல்கூர்ந்தார்க்கும், ஒருவரும் இன்றித் தன்பால் வந்து இறந்தார்க்கும் இல்வாழ்வான் என்று சொல்லப்படுவான் துணை. –
(ஆராய்ச்சி உரை) உரையாசிரியர்கள் பலரும், முன் குறளில் சொல்லப்பட்டுள்ள மூவருள் துறந்தாரையும் ஒருவராகச் சேர்த்துவிட்டார்கள் ஆதலின், இக்குறளில் உள்ள துறந்தார்க்கும்' என்ற சொல்லைக் கண்டு திகைத்து, வேறு என்னென்ன பொருள்களையோ விளம்பி இடர்ப்படு கின்றனர். மணக்குடவர், முன் குறளில் உள்ள மூவருள் ஒருவராகிய துறவி, வருணத்தினையும் நாமத்தினையும் (சாதி சமயங்களையும்) துறவாதவர் என்றும் இக் குறளில் உள்ள துறவி, வருணத்தினையும் நாமத்தினையும் துறந்தவர் என்றும் வேற்றுமைகாட்டிச் சரிசெய்யப் பார்க் கின்றார். துறவிகளுக்குள்ளேயே, வருண நாமங்களைத் துறந்தவர் என்றும் துறவாதவர் என்றும் இருவகை உண்டா? இல்லையே! வருண நாமங்களைத் துறவாதவர்களை எப்படித் துறவிகள் என்னும் பெயரால் அழைக்க முடியும்? வருண நாமங்களையே துறவாதவர்கள் வேறு எவற்றைத் தாம் துறக்க உடன்படுவார்கள்? நிற்க
பரிமேலழகரும், முன் குறளிலேயே துறந்தாரைக் கூறி விட்டாராதலின், இக்குறளில் உள்ள துறந்தார் என்பதற்கும் துறவி எனப் பொருள் கூற உடன்பட்டிலர், ஆனால் இவரும் வேறு விதமாகச் சரிசெய்யப் பாடுபட்டு உள்ளார். அஃதாவது :- துறந்தார் என்றால், இவ்வளவு நாள் காப்பாற்றி வந்தவர்களால் கைவிடப்பட்டவர்கள் (துறக்கப்பட்டவர்கள்) என்று கூறியுள்ளார். இங்ஙனம் துரத்தப்பட்டு இன்பம் அனுபவிக்க முடியாமல் தவிப்பவர் களைத் துவ்வாதவர்' என்பதற்குள் அடக்கி விடலாமே! மற்றும். துறந்தார் என்னும் செய்வினையை, துறக்கப் பட்டார் எனச் செய்யப்பாட்டு வினையாக வலிந்து கொண்டு இடர்ப்படவும் வேண்டியதில்லையே! எனவே ஈண்டு துறந்தார் என்பதற்குப் பற்றுக்களைத் துறந்த பெரியோர்கள் என்று பொருள் கொள்வதே சாலப் பொருந்தும், அச்சொல்லுக்குரிய இயற்கைப் பொருளும் அதுவே. தமக்கென ஒரு வருவாயும் தேடாமல். பிறர் நலத்திற்கே பாடுபடும் துறவிகளுக்கு உணவு, உடை முதலியனவற்றை இல்லறத்தான் தானே கொடுக்க வேண்டும். இன்னும், கண், கால், முதலிய உறுப்புக் குறைந்தவராகித் தொழில் செய்ய முடியாமல் பிச்சை எடுப்போரைத், துவ்வாதவர் என்பதனுள் அடக்க வேண்டும்.
ஐம்புலத்து ஆறு
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தான் என்றாங்
கைம்புலத்தா றோம்பல் தலை.
(பதவுரை) ஆங்கு-அவ்வில் வாழ்க்கையில், தென் புலத்தார் (இறந்துபோய்த்) தென் திசையில் இருப்பவராகக் கருதப்படும் முன்னோரும், தெய்வம்-கடவுளும், விருந்து(இதற்கு முன் வராத புதிய) விருந்தினரும். ஒக்கல்சுற்றத்தார்களும், தான்-தானும் (அதாவது இல்வாழ் வானும்), என்ற - என்று சொல்லப்படுகின்ற ஐம்புலத்துஐந்து வகையார் இடத்திலும் செய்யவேண்டிய, ஆறு-அற நெறியை, ஒம்பல் - தவறாமல் செய்தல் தலை-தலை சிறந்ததாகும்.
(விரிவுரை) தென்புலம்- தென்திசை. இறந்து போனவர் களின் உயிர் தெற்கே செல்வதாக அக்காலத்து மக்கள் எண்ணிவந்தனர். அதற்கேற்பவே வள்ளுவரும் அறிவித் துள்ளார். எனவே, இறந்துபோனவர்களை ஒம்புதல் என்றால் என்ன? தாய்தந்தையரோ, புலவர்களோ, துறவிகளோ, வள்ளல்களோ இறந்துவிட்டார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்களின் உயிர் தென்புலத்தில் இருந்தால்தான் நமக்கென்ன? இல்லாவிட்டால் தான் நமக்கென்ன? இது பற்றிய கவலை வேண்டியதில்லை. அவர்கள் இவ்வுலகில் வாழ்ந்ததற்கு அறிகுறியாக-அவர்கள் இவ்வுலகிற்குத் தொண்டாற்றியதற்கு அடையாளமாகஅவர்களைப் போலவே ஏனையோரும் நல்லவழியில் நடக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்தும் நெறியாக-அவர் களால் நன்மை பெற்ற நாம், அவர்கட்கு நன்றி செலுத்தும் வாயிலாக- அவர்கட்கு நினைவு நாள் கொண்டாட வேண்டும். இப்போதும் திருவள்ளுவர் திருநாள் கொண்டாடு கின்றோம் அல்லவா? இறந்துபோன தாய்தந்தையரை ஆண்டுதோறும் எண்ணி நன்றி பாராட்டுபவராக நடந்து கொள்கின்றோம் அல்லவா? இவைபோல்வனவற்றையே தென்புலத்தாரை ஒம்பல் எனத் தெரிவித்துள்ளார் திருவள்ளுவர்.
தெய்வத்தை ஒம்புதல் என்றால், ஒய்வும் உறுதியும் பெறுவதற்காகக் கடவுளை வழிபடுதல்.
விருந்து என்பதற்கு நேர் பொருள் புதுமை. விருந்து புதுமை’ என்பது திவாகரம் (8:123). வெள்ளை கறக் கிறது என்றால், வெள்ளையான பசு கறக்கிறது என்று பொருள் கொள்வதைப்போல, விருந்து வந்தது என்றால் புதிதான மனிதர் வந்தார் என்று பொருள் கொள்ளல் வேண்டும். இதற்குத்தான் ஆகுபெயர் என்று பெயர், ஆகுபெயர் என்றால் ஒன்றைக் குறிக்கும் ஒரு பெயர் அதனோடு தொடர்புடைய மற்றொன்றுக்கு ஆகிவருவது. புதுமையைக் குறிக்கும் விருந்து என்னும் பெயர், புதிதாய் வருகின்ற மனிதர்க்கு ஆகிவருவதால் இஃது ஆகுபெய ராகும். எனவே, முன்பின் வந்துகொண்டிருக்கும் தொடர் புடைய உறவினர்கள் விருந்தினர் ஆகமாட்டார் என்பதும் திடீரெனப் புதிதாக வருபவரே விருந்தினர் ஆவர் என்பதும் வெட்ட வெளிச்சம். திருக்குறள் விருந்தோம்பல் என்னும் பகுதியிலுள்ள வருவிருந்து வைகலும் ஒம்புவான்', செல் விருந்தோம்பி வரு விருந்து பார்த்திருப்பான்' என்னும் குறட்பகுதிகளாலும் இதனைக் குறிப்பாய் உணரலாம். மேலும் இக்குறளிலேயே ஒக்கல் (சுற்றம்) என ஒன்று தனியாகக் கூறியுள்ளமையே, உறவினர் விருந்தினர் ஆகார் என்பதற்கு மறுக்க முடியாத அகச்சான்றாகும். சரி நல்லது; புதிதாக வருபவரே விருந்தினர் என்பீராயின், அவர்களை முன் குறளில் உள்ள துறந்தார், துவ்வாதவர் என்பவர்க்குள் அடக்கிவிடக்கூடாதா? என்று வினவலாம். அடக்க முடியாது; ஏன்?
ஒர் ஊரில் விழா நடக்கின்றது. மாநாடு நடக்கின்றது. இன்ன பிற சிறப்புகள் நடைபெறுகின்றன என்று வைத்துக் கொள்வோம். அவ்வூர்க்குப் புதிய மக்கள் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் திரண்டு வருவார்கள். அப்புதியோர்க்கு, ஊரினர் தங்க இடம் அளிக்கலாம்; குளிக்கவும், குடிக்கவும் தண்ணீர் வசதி செய்து தரலாம்; இயலுமேல், வந்தவர்க்கும் உடன்பாடாகில் உணவும் அளிக்கலாம். செய்யப்பட வேண்டிய தொன்றுதானே இஃது! இன்றும் நாட்டில் நடை பெறுகின்றதே இத்தகைய நிகழ்ச்சி! அன்றியும், புதிதாக வந்த இடத்தில் குறிப்பிட்ட சிலரைத் தவிர ஏனையோர் என்ன செய்ய முடியும்? ஊரார் உதவி இருந்தே தீர வேண்டும். இத்தகைய புதியோரைத் துறந்தார் என்று சொல்ல முடியுமா? அல்லது, துவ்வாதவர் என்றுதான் மொழிய முடியுமா? முடியவே முடியாதே? உண்மையான விருந்தினர் என்பவர் இப்புதியோரே? இன்னும் சிலர் (பிரயாணம்) வழி நடந்து செல்கின்றார்கள். அவர்கள், வெய்யில் கடுமையாகக் காயும் நேரத்திலோ, இரவிலோ, மழைபெய்யும் நேரத்திலோ வழியில் உள்ள ஓர் ஊரில் தங்கிவிடுவார்கள். அவர்களும் அவ்வூரார்க்கு விருந்தினரே யாவர். ஏன்? இப்புதியோர், ஊராரின் உதவியின்றித் தம் கைப்பணத்தைக் கொண்டு தம்மைத்தாமே காப்பாற்றிக் கொள்ள முடியாதா என்று சிலர் ஐயுறலாம். இங்கொரு செய்தியை நினைவுபடுத்தினால் இவ்வையத்திற்கு இட மிருக்காது, அஃதென்ன?
புகைவண்டி, மோட்டார்', வான ஊர்தி முதலிய வற்றின் மூலமாக வழி கடப்பது இந்தக் காலம்; பெரும் பாலும், கட்டை வண்டி, கால்நடையின் மூலமாக வழி கடந்தது அந்தக்காலம். தம்மூரில், தம் வீட்டில் காலை உணவு உண்டு, பின் தொலைவில் உள்ள வெளியூர்கட்குச் சென்று வேலையை முடித்துக் கொண்டு தம் வீடு திரும்பி வந்து அடுத்த வேளை உணவு உண்ணுவது இந்தக்காலம்; கட்டு சோறு கட்டிக்கொண்டு நாட் கணக்கில், வாரக் கணக்கில், மாதக்கணக்கில் வெளியூர் சென்று மீண்டது அந்தக்காலம்; கண்ட இடங்களில், கண்ட நேரங்களில், கண்ட உணவுச்சாலைகட்குள் புகுந்து காசை இறைத்து வயிற்றை நிரப்புவதற்கு வாய்ப்பு மிகமிகக் கிடைக்கப் பெற்றிருப்பது இந்தக் காலம்; கட்டுசோற்று முட்டை கரைந்த பின்பு, ஊர்க்குள் புகுந்து ஊராரின் உதவி பெற்றது அந்தக்காலம். எனவே, இல்லறத்தான் விருந்தோம்ப வேண்டும் என்று அந்தக் காலத்தில் வள்ளுவர் வற்புறுத்தி யிருப்பது பொருத்தந்தானே! எல்லாம் வளர்ச்சி பெற்ற இந்தக் காலத்திலும் இவ்விருந்தோம்பல் தேவைப்படுகின்ற தென்றால் மேலும் கூறுவானேன்?
எள்ளிலிருந்து எடுக்கப்பட்ட நெய்க்கே (எள் + நெய்) எண்ணெய் என்று பெயர்; அந்தப் பெயர், பின்பு தன்னோடு ஒரளவு ஒப்புமை உடைய ஏனைய எண்ணெய்களுக்கும் வழங்கப்பட்டதைப்போல, புதியோரைக் குறிக்கும் விருந்து என்னும் பெயர், பின்பு அவரைப்போல் வந்து போகும் உறவினர்களுக்கும் வழங்கப்பட்டுவிட்டது. எனவே, இது காறும் கூறியவற்றால், தம்மை நாடி வரும் புதிய விருந்தினரை ஒம்பவேண்டியது இல்லறத்தாருக்குரிய கடமை களுள் ஒன்று என்பது உணரப் பெறும்.
ஒக்கல் என்றால் சுற்றத்தார்கள். இல்லறத்தான் தன்னைச் சேர்ந்த சுற்றத்தார்களையும் ஒம்பதேண்டும். செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்கல்’ என்பது நாம் அறிந்ததுதானே?
முதல் குறளில் உள்ள இயல்புடைய மூவர்' என்ப தற்கு, பெற்றோர், பெண்டாட்டி, பிள்ளை என்னும் மூவகையினர் எனப் பொருள் உரைத்தேன் யான். ஏன்அம்மூவரையும் இக்குறளில் உள்ள சுற்றத்தாருக்குள் அடக்கிவிடக்கூடாதா? என்ற வினா எழலாம். ஈண்டு அடக்க முடியாது. ஏன்?
ஒருவன் தன் பெற்றோர், மனைவி, மக்கள் எனும் மூவகையாரோடு கொள்ளும் தொடர்புக்கும், ஏனைய சுற்றத்தார்களோடு கொள்ளும் தொடர்புக்கும் வேற்றுமை மிக உண்டு. வெளியூருக்குச் சென்ற பெற்றோரோ மனைவியோ, மக்களோ திரும்ப வீட்டிற்கு வந்தால், வீட்டிற்குரியவன் பிறரை நோக்கி, என் வீட்டிற்குச் சொந்தக்காரர் வந்திருக்கிறார் என்றோ விருந்தாளிகள் வந்திருக்கிறார்கள் என்றோ சொல்லும் வழக்கம் எங்கும், என்றும் இல்லை. ஏனைய உறவினர் வந்தால் அப்படிச் சொல்லுவது உண்டு. தமையன், தமக்கை, தம்பி, தங்கை என்பவரும் தனித்தனிக் குடும்பத்தினராக ஆய்விடுவதால் அவர்களும் விருந்தாளிகளாகக் கருதப்பட்டு விடுவதை நாம் வாழ்க்கையில் கண்டே வருகின்றோம். மேலும், - ஒருவன் தன் பெற்றோர், பெண்டாட்டி, பிள்ளை என் பவர்க்கு உரிய உடைமைகளை யெல்லாம், ஏறக்குறையத் தனக்கும் உரியனவாக எண்ணுகின்றான், ஏனையோர் உடைமைகளை அங்ஙனம் எண்ணுவது இல்லை, எனவே இம்மூவரும், ஏனையோரைப்போலச் சுற்றத்தார் என்னும் சொற்குள் கட்டுப்படாமல், பிரிக்க முடியாத குடும்ப உறுப்பினர்களாகக் கருதப்படுகின்றார்கள் என்பது இனிது புலனாகும், இதற்கு அகச்சான்று வேண்டுமானால், 'இயல் புடைய மூவர்க்கும்’ என்பதில் உள்ள இயல்புடைய' என்னும் சொற்றொடர் ஒன்றே போதுமே! சுற்றம் ஒம்புதலாவது:- பல வேலைகளின் நிமித்தம் வெளியூரி லிருந்து வந்து போகும் சுற்றத்தார்க்கு உணவு முதலியன உதவுதல், ஆதரவற்ற சுற்றத்தார்களைத் தம்மோடு வைத்து ஆதரித்தல், அன்னோரின் பிள்ளைகட்குக் கல்வி வசதி செய்தல், அன்னோர்க்கு ஏதேனும் வருவாய்க்கு வழி தேடித்தருதல் முதலியனவாம். இவ்வுதவிகளையெல்லாம் இல்லறத்தான் இயன்றவரை இயற்றலாமே!
ஐந்தாவதாக (தான்) இல்லறத்தான் தன்னையும் ஒம்பவேண்டும் என்று தெரிவித்துள்ளார் திருவள்ளுவர். இஃது சிலர்க்கு வியப்பையும் அளிக்கலாம். அப்படி யொன்றும் இங்கு வியப்பிற்கு இடமில்லை. பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் பாதுகாத்துக் கேடுகெட்ட மக்கள் எத்துணையோ பேர் உண்டு. இல்லாதவனைப் பற்றி இங்கு எடுத்துரைக்கவில்லை. சிலர் அரும்பாடுபட்டுச் செல்வத்தைக் குவித்து வைத்திருப்பார்கள், ஆனால் நல்ல உணவினையோ, உடையினையோ, உறக்கத்தினையோ, உறையுளையோ, (இடம்), இன்ன பிற இன்பங்களையோ வேண்டிய அளவு பெற்றிருக்கமாட்டார்கள். என்னே இவர்தம் இரங்கத்தக்க நிலை! தன்னைப் பாதுகாத்துக் கொண்டால்தான், மேன்மேலும் பல நல்ல காரியங்களைச் செய்ய முடியும். எனவே மேற்கூறிய ஐந்தும் இல்வாழ்வான் இயற்ற வேண்டியவை என்பது இக்குறட் கருத்து.
(மண -உரை) பிதிரர், தேவர், புதியராய் வந்தார், சுற்றத்தார், தான் என்னும் ஐந்திடமாகிய நெறியைக் கெடாமல் ஒம்புதல் தலையான இல்வாழ்க்கை
(பரி-உரை) பிதிரர், தேவர், விருந்தினர், சுற்றத்தார் தான் என்று சொல்லப்பட்ட ஐந்திடத்தும் செய்யும் அறநெறியை வழுவாமல் செய்தல் இல்வாழ்வானுக்குச் சிறப்புடைய அறமாம். பிதிரர் ஆவார் படைப்புக் காலத்து அயனால் படைக்கப்பட்டதோர் கடவுட்சாதி; அவர்க்கு இடம் தென் திசை ஆதலின், தென்புலத்தார் என்றார்.
(ஆராய்ச்சி உரை) தென்புலத்தார் என்பதற்கு, முதல் முதல் உலகத்தை உண்டாக்கிய போதே நான்முகனால் (பிரமனால்) உண்டாக்கப்பட்ட ஒரு தெய்வசாதி என்று பரிமேலழகர் பகர்ந்தார் உரை. ஏன் - இவர்களை, தெய்வம் என்பதற்கு அவர் கூறும் பொருளான தேவர்க்குள் அடக்கி விடலாமே! தென்திசையில் இருக்கும் இத்தெய்வ சாதியார்கள் நமக்காக என்ன செய்கின்றார்களோ? நாம் இவர்களுக்கு என்ன செய்யவேண்டுமோ? ஒன்றும் புரிய வில்லை. ஏனைய தெய்வங்களைப் போலவே இவர்களும் அருள் புரிகின்றார்கள் என்றால், இவர்களையும் தெய்வக் கூட்டத்துள் சேர்த்துவிடுவதால் என்ன இடையூறு? எனவே இப்பொருள் பொருத்தம் அன்று.
மேலும், இப்பொருள் உரைத்தால், யான் உரைத்தபடி முன்னோரின் நினைவு விழாவிற்கு இடமில்லாமலேயே போய்விடும். இறந்துபோன வீரர் முதலியவர்களுக்கு விழாக்
கொண்டாட வேண்டாவா? கொண்டாடியதாகக் கூறுகின்றனவே சங்க கால இலக்கண
இலக்கியங்கள்! வீர மங்கை கண்ணகிக்கு விழாக் கொண்டாடினானே ஒரு தனித்
தமிழ் மன்னனாம் சேரன் செங்குட்டுவன். சிலப்பதிகாரத் திற்குள் சென்று பார்த்தால்
தெரியும். எனவே, தென் புலத்தார் என்பதற்கு, சிறந்த செயல்கள் செய்து சென்று பட்ட
முன்னோர் எனப் பொருள் கூறலே சாலப் பொருந்தும்.
காமத்துப்பால்
களவியல் - தகையணங்குறுத்தல்
உயிர் உண்ணும் தோற்றம்
(தெளிவுரை) பெண் தன்மையுடைய இப்பேதைக்குக் கண்கள், கண்ணுக்குரிய கண்ணோட்டம் இன்றி, எதிர்மா றாக, பார்த்தவரது உயிரைத் தொலைக்கும் பார்வை யுடையனவாய் உள்ளன.
'கண்டா ருயிருண்ணுங் தோற்றத்தாற் பெண்டகைப்
பேதைக் கமர்த்தன எண்'
(பதவுரை) பெண் தகை = (உருவத்தால்) பெண் தன்மை பெற்றுள்ள, பேதைக்கு = இந்தப் பேதைப் பெண்ணுக்கு, கண் = கண்களானவை, கண்டார் = பார்த்தவரது, உயிர் உண்ணும் தோற்றத்தால் = உயிரைத் தொலைக்கும் பார்வையைப் பெற்றிருப்பதால், அமர்த்தன - (கண்ணுக்கு இருக்க வேண்டிய தன்மையின்றி) எதிர்மாறாய் உள்ளன. (தோற்றம் = பார்வை, பெண்டகை-பெண் தகை = பெண் தன்மை, பேதை = அறியாத இளம் பேதைப் பெண்; அமர்த்தல்-மாறுபடுதல், அமர்த்தன - மாறுபாடாயுள்ளன.)
(மணக்குடவர் உரை) தம்மைக் கண்டவர்கள் உயிரை யுண்ணும் தோற்றத்தாலே, பெண் தகைமையையுடைய பேதைக் கொத்தன கண்கள்.
(பரிமேலழகர் உரை) பெண்டகையை யுடையவிப் பேதைக்கு உளவாய கண்கள், தம்மைக் கண்டா ருயிருண்ணுந் தோற்றத்துடனே கூடி அமர்ந்திருந்தன.
(ஆராய்ச்சி விரிவுரை) உயிர் உண்ணல் என்றால் உயிரைப் போக்குதல்-தொலைத்தல். இந்தப் பொருள் எந்த அகராதியில் உள்ளது? வேண்டியதில்லை-பணம் போட்டு வாங்கிய எந்த அகராதியும் இங்கு வேண்டிய தில்லை. மக்கள் அகராதியில் இதனைக் காணலாம்; அதா வது, மக்களது பேச்சு வழக்கில் இதனைக் காணலாம். ஒருவன் ஒரு பொருளைத் தொலைத்து விட்டால், அதைத் தொலைச்சு வாயில் போட்டுக் கொண்டாயா' என்று பெரியவர்கள் அவனைக் கண்டிப்பதை நாம் அறிவோம். வாயில் போட்டுக் கொள்ளலும் உண்ணலும் ஒன்றுதானே! இன்னும் சிலர் தம் எதிரியைக் குறிப்பிட்டு, அவன் என்னை என்ன செய்து விடுவான்? சாப்பிட்டு விடுவானோ?” அப்படியே எடுத்து விழுங்கி விடுவானோ?” என்று காய் வதும் உண்டல்லவா? எனவே,
உண்ணல், வாயில் போட்டுக் கொள்ளல், சாப்பிடுதல், விழுங்கல் என்னும் சொற்கள், தொலைத்தல் - அழித்தல் என்னும் பொருள் தருவதை நோக்குக. இச்சொல் வழக்கு மக்களது பேச்சில் எவ்வாறு புகுந்தது? எப்போது புகுந்தது? மிக மிகப் பழங்காலத்தில் உயிரைத் தொலைத்துத்தானே உண்டார்கள்? அதாவது மக்கள் வேட்டையாடித்தானே உண்டார்கள்? மக்களுக்கு மக்கள் கொன்றும் உண்டார்களாம். பின்னரே பயிர்த் தொழில் வளர்ந்தது? இப்போதும், மக்கள் விலங்கு முதலியவற்றை, உயிர் போக்கி உண்ணல் நடைபெறு கிறதே! இந்த அடிப்படையில் அன்று தொட்டு எழுந்தது தான் இச்சொல் வழக்கு!
அடுத்து, இக் குறளில், தோற்றம்' என்பதற்குப் பார்வை என்பது பொருள். இப்பொழுதெல்லாம் எனக்குத் தோற்றம் சரியாய்ப் புலப்படுவதில்லை' என்று கிழங்கள் முணுமுணுப்பதை நாம் கேட்கின்றோம்' அல்லவா? பார்வை என்ற பொருளில்தானே தோற்றம் என்று சொல் கின்றனர் முதியோர்கள்.
வள்ளுவர், மற்றோரிடத்தில் 'கண்ணோட்டம்' என் னும் தலைப்பில், கண்ணைப் பற்றிப் பத்துக் குறள்கள் இயற்றியுள்ளார். அங்கே, இனிய பார்வை - இரக்கப் பார்வை, அன்புப் பார்வை-அருள் பார்வை உடையது தான் கண் எனப்படும்; கண் என்றால் கண்ணோட்டம் அதாவது இரக்கம் என்றெல்லாம் கருத்தமைத்து வைத் துள்ளார். உலக வழக்கில் கூட, 'உனக்குக்கண் இல்லையா? என்கின்றனரே! இல்லையா என்றால் இரக்கம் இல்லையா என்பதுதானே பொருள்!
உண்மை நிலைமை இப்படியிருக்க, இந்தப் பேதைப் பெண்ணின் கண்களோ, இயற்கைக்கு எதிர் மாறாயுள்ளன -அதாவது-பார்த்தவரது உயிரைப்பருகுகின்றன. இதுதான் இக்குறளின் கருத்து. இதனுள் இன்னுஞ் சில நயங்கள் இருக்கின்றன.
இவளோ பெண் தகைப் பேதையாவாள். பெண் தகை என்றால் பெண் தன்மை-அதாவது விரும்புதற்குரிய தன்மை - அன்புக்குரிய தன்மை. அன்பு என்னும் பண்பு இருக்கவேண்டிய இடத்தில் கொலை புரியும் வன்பு உள்ளதே! இது இயற்கைக்கு மாறுதானே?
மேலும், பேதை என்றால், ஒன்றும் அறியாத இளஞ் சிறுமி என்பது பொருள். பெண்களின் பருவ நிலையை ஏழாகப் பிரித்துள்ளனர் ஆன்றோர். பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை தெரிவை, பேரிளம்பெண் என்பன அவை. இவற்றுள் பேதைதான் முன் நிலை. ஐந்து வயதுக்குமேல் ஏழு வயது வரையும் பேதைப் பருவம் எனக் கணக்குஞ் செய்துள்ளனர். எனவே, பேதை என்பவள் ஒன்றும் அறியாத இளஞ் சிறுமி என்பது இப்போது நன்கு விளங்குமே! பேதை என்பதற்கு அறியாமை என்ற பொருளும் உண்டு. இனிக் குறளுக்கு வருவோம். இவள் பார்வைக்கு ஒன்றும் அறியாத இளஞ்சிறுசிறுமிபோல் காணப் படுகிறாள். (இவள், உண்மையில், ஏழு வயது நிரம்பாத இளஞ் சிறுமியல்லள். இளம் பெண் என்பதை அறிவிக்கும் ஒரு கற்பனையே.) ஆனால், அவள் பார்வையிலோ கொலைக் கொடுமை இருக்கிறதே! இஃதென்ன வியப்பு. இயற்கைக்கு மாறாயுள்ளதே! இவ்வாறெல்லாம் இக் குறளுக்குப் பொருள் நயம் உரைத்துக் கொள்க.
கண் பார்வையின் கொடுமை படிப்படியாக மிகுகிறது. இக்குறளுக்கு முன்முன் குறளில் கண்ணோக்கை, அணங்கு படை கொண்டுவந்து தாக்குவதாகப் புனைந்தார் (வருணித்தார்); முன் குறளில் எமனென எடுத்தோதினார்; இக்குறளிலோ கண்டவரது உயிரை உண்ணுவதாக உரைத்துள்ளார். படைகொண்டு தாக்குங்காலும், படை உடம்போடு தொடர்பு கொண்டால்தான் உயிர்போகும்; எமன் உயிரைப் பிடிக்க வந்தாலும், அருகே வந்து ஏதோ (பாசக்) கயிற்றை வீசி எறிந்து கட்டியிழுப்பதாகக் கதை யளப்பது வழக்கம். ஆனால் இவள் கண் பார்வையோ படையையும் எமனையும் மிஞ்சிவிட்டது. அருகே வராமலேயே, உடம்போடு தொடர்பு கொள்ளாமலேயே, தொலைவிலே இருக்கும்போதே, கண்ணால் பார்த்த அளவிலேயே உயிரைக் கொல்லுகிறதே! என்ன கொடுமை! எவ்வளவு கொடுமை! இதைத்தான் கண்டார் உயிர் உண்ணும் தோற்றம்' என்று கற்பனை செய்தார் ஆசிரியர். என்ன அழகு! என்ன அழகு! அணுவுக்குள் ஆழ்கடல் என்பது திருக்குறளுக்கு முழுக்க முழுக்கப் பொருந்தும்!
கூற்றமோ கண்ணோ பிணையோ
(தெளிவுரை) இப்பெண்ணின் கண் நோக்கு, கூற்றுவனது கொலைத்தொழில் உடையதா? அல்லது, கண்ணுக்குரிய கண்ணோட்டம் பெற்றதா? அல்லது, மானினது மருண்ட பார்வை உடையதா? என்று கேட்டால், இம்மூன்று தன்மை களையுமே கலந்து பெற்றிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
’கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்று முடைத்து'
(பதவுரை) மடவரல் நோக்கம் = இந்த இளம் பெண்ணின் கண்பார்வை, கூற்றமோ = (என்னைக் கொல்வது போல் பார்ப்பதால்) எமப் பார்வையோ? கண்ணோ = (ஒவ்வொரு நேரம் என்னை உள்ளன்போடு பார்ப்பதுபோல் தெரிவதால்) உண்மையான கண்பார்வைதானோ? அல்லது, பிணையோ= (சில நேரம் மருண்டு மருண்டு மிரண்டு மிரண்டு பார்ப்பதால்) பெண்மானின் பார்வைதானோ? (இல்லையில்லை) இம் மூன்றும் உடைத்து = இந்த மூன்று தன்மைகளையுமே ஒருங்கு கலந்து பெற்றுள்ளது.
(கூற்றம்-எமன் ; பிணை-பெண்மான், மடவரல்-இளம் பெண்.)
(மணக்குடவருரை) கொடுமை செய்தலால் கூற்றமோ? ஒடுதலால் கண்ணோ? வெருவுதலால் மானோ? மடவரலே? நினது நோக்கம் இம்மூன்று பகுதியையும் உடைத்து.
(பரிமேலழகருரை) என்னை வருத்துதலுடைமையாற் கூற்றமோ? என்மேலோடுதலுடைமையாற் கண்ணோ? இயல்பாக வெருவுதலுடைமையாற் பிணையோ? அறிகின் றிலேன். இம்மடவரல் கண்களினோக்கம் இம்மூன்றன் தன்மையையு முடைத்தாயிராநின்றது.
(விரிவுரை) அவளது கண்பார்வை தன்னை வருத்தியதால் கூற்றமோ என்றான் அவன். சிலநேரம் அன்போடு ஆசையோடு பார்ப்பதாகப் பட்டதால் உண்மையான கண்ணோ என்றான், வெளியிடத்திலே புதிய ஆண்மகனைக் கண்டதால் ஏற்பட்ட நாணத்தோடும் அச்சத்தோடும், சுழல் விளக்குபோல் மேலுங் கீழும் சுற்றிச் சுழற்றி மிரண்டு மிரண்டும் பார்ப்பதால், மருண்டு மருண்டு பார்த் தோடும் மான் பிணையோ என்றான். இவற்றுள் எந்த ஒன்றாகத் துணிந்து கூறுவது? நேரத்துக்கு ஒரு நிற மளிக்கும் வெல்வெட் (Velvet) பட்டுத் துணியைப் போல, நேரத்துக்கு ஒரு குணம் தெரிகிறது. எனவே, அவளது கண் பார்வையில் மூன்று தன்மைகளுமே ஒருங்கு அமைந் திருப்பதாக உரைத்தான் அவன்.
இங்கே யானை பார்த்த குருடர்கள் கதை நினைவிற்கு வருகிறது. வாலை மட்டும் தடவிப் பார்த்த குருடன், யானை விளக்குமாறுபோல் இருக்கிறது என்றானாம். காலை மட்டும் தடவிப் பார்த்த குருடன் யானை உரல் போல் இருக்கிறது' என்றானாம். காதை மட்டும் தடவிப் பார்த்த குருடன் யானை முறம்போல் இருக்கிறது’ என்றானாம். தும்பிக்கையை மட்டும் தடவிப் பார்த்த குருடன் யானை உலக்கைபோல் இருக்கிறது என்றானாம். ஆனால், இந்த ஒவ்வொன்றும் மட்டும் யானையாகாதே! இத்துணையும் யானையிடம் உள்ளன. இதுபோலவே, அம் மூன்று தன்மைகளும் அவளது கண் பார்வையில் உள்ளன.
இந்தக் குறளில் சுருதி கொஞ்சம் இறங்கியிருக்கிறது. கொலை நோக்கோடு ஏதோ குறிப்பு நோக்கும் கலந்திருப்ப தாகக் கூறப்பட்டிருக்கின்றதல்லவா? ஆம்; பின்னர் திருமணம் புரிந்துகொள்பவர்களாயிற்றே!
பொருள்பால்
அரசியல் - இறைமாட்சி
நீங்கா கிலன் ஆள்பவற்கு
'தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா கிலனாள் பவற்கு'
(பதவுரை) தூங்காமை = சோம்பல் கொள்ளாமையும், கல்வி = சிறந்த கல்வி உடைமையும், துணிவுடைமை = நல்ல துணிச்சல் உடைமையும் ஆகிய, இம்மூன்றும் = இந்த மூன்று பண்புகளும், நிலன் ஆள்பவற்கு = நாடாளும் வேந்தனுக்கு, நீங்கா = நீங்காது இருக்க வேண்டியவை யாகும். (தூங்குதல்-சோம்புதல், தூங்காமை - சோம்பல் கொள்ளாமை, நிலன்-நிலம்-நாடு.)
(மணக்குடவர் உரை) மடியின்மையும் கல்வியுடைமையும் ஒரு பொருளை ஆராய்ந்து துணிதலுடைமையும் என்று சொல்லப்பட்ட இம்மூன்றும் பூமியை யாள்பவனுக்கு நீங்காமல் வேண்டும்.
(பரிமேலழகர் உரை) நிலத்தினை யாளுந் திருவுடை யாற்கு அக்காரியங்களில் விரைவுடைமையும் அவை யறி தற்கேற்ற கல்வி யுடைமையும் ஆண்மையுடைமையுமாகிய இம்மூன்று குணமும் ஒருகாலும் நீங்கா.
(விரிவுரை) தூங்காமை, கல்வி, துணிவு என்னும் மூன்றும் இல்லாத சோம்பேறி மடக் கோழை எவ்வாறு நாடாள முடியும்? வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் தெரியுமே!
இங்கே தூங்காமை என்பது. கண்ணை முடிக்கொண்டு தூங்குவதைத் தடுக்கவில்லை. தூங்காமல் இருக்க முடியுமா? சோம்பல் இன்றி, விறு விறுப்பும் சுறு சுறுப்பும் விரைவும் வேகமும் உடைத்தாயிருத்தல் என்பதுதான் இங்கே பொருள். உலகில் ஒருவர் விரைந்து வேலை செய்யாமல் மெள்ளச் செய்வாராயின், 'அலுவலகத்தில் அவர் தூங்குகிறார்' என்று கேலி பேசுவது வழக்கம். உண்மை யில் அவர் அலுவலகத்தில் படுத்தா தூங்குகிறார்? அவர் படுத்துத் தூங்கவும் இல்லை. நாற்காலியில் சாய்ந்தபடித் தூங்கவும் இல்லை. விழித்துக் கொண்டுதான் இருக்கிறார். அவர் அவ்வளவு வேகமாக - அதாவது ஆமை வேகத்தில் வேலை பார்க்கிறார் என்பது தான் இதற்குப் பொருள். உண்மையில் உறங்கியே விடுகின்ற ஒரு சில (ஊக்கக்காரர் களால்தான் இல்லை யில்லை) தூக்கக்காரர்களால்தான் இந்தப் பொல்லாத விருது' எல்லார்க்கும் ஏற்பட்டது போலும்! இங்கேயும் இதே கருத்துத்தான்!
ஆகவே, ஆளும் அரசனுக்குச் சுறு சுறுப்பு வேண்டும். எதையும் உரிய காலத்தில் விரைந்து முடிக்க வேண்டும். 'உயிர் போன பிறகு தண்ணிர் கொண்டுவந்து என்ன பயன்?' 'இராசா சிங்காரிப்பதற்குள் பட்டணம் பறிபோய் விட்டது' என்னும் பழமொழி இத்தகைய துப்புக்கெட்ட "தூங்கு மூஞ்சி' ஆட்சியாளர்களுக்காகவே எழுந்தது.
இங்கே தூங்காமை என்பதற்கு இன்னொரு பொருளும் இயம்பலாம். அதாவது எதிலும் எப்போதும் கண்ணும் கருத்துமாய், கவனமாய், விழிப்புடன் இருத்தல் என்பதே அப்பொருள், அதாவது ஏமாந்து போகாதிருத்தல் என்பது பொருள். உலக வழக்கில், தன் உடைமையைப் பிறர்பால் இழந்த ஒருவனை நோக்கி, நீ தூங்கிக் கொண்டிருந்தாய்; அதனால் அவன் அடித்துக்கொண்டு போய் விட்டான்என்று கூறுவது வழக்கம். இவன் ஒன்றும் தூங்கவில்லை, கவன மின்றி இருந்தான்; அதனால் ஏமாந்து போனான். அவ்வளவுதான். இங்கும் அதே கருத்துத்தான்.
அக்காலத்தில் ஊருக்கு ஊர் அரசர்கள் இருந்தனர். தூங்குபவனது ஆட்சியை அடுத்தவன் தட்டிக்கொண்டு போய் விடுவான். அதனால் அரசர்கள் எப்போதும் விழிப் புடன் இருத்தல் வேண்டும். அரசர் இல்லாத இக்காலத் திலோ - அதாவது, கட்சிக்காரர்கள் ஆளுகின்ற இக்காலத் திலோ, ஆளுங்கட்சிக்காரன் தூங்கினால், அயல்கட்சிக் காரன் பதவியைப் பறித்துக்கொள்வான். அதனாலேயே ஒவ்வொரு கட்சிக்காரரும் கண்ணுக்கு விளக்கெண்ணெய் போட்டுக் கொண்டு விழிப்புடன் இருப்பது வழக்கம். அது கிடக்க பாராண்ட பழந்தமிழ் மன்னரின் பரம்பரை எங்கே? எங்கே? ஐரோப்பியர்களின் வருகைக்கு முன்பே அது அழிந்து ஒழிந்து விட்டதே! அந்தோ ஐயோ. அது அழிந்து ஒழிந்து விட்டதே! ஏன் என்ன காரணம்? பிற்காலத் தமிழ் மன்னரின் பெருந்துாக்க மே! ஆமாம், பெருந் தூக்கமே! எனவே, இனியேனும் தமிழர்கள் உறக்கத்தினின்று விழித்தெழுவார்களாக!
அடுத்து, ஆள்பவனுக்குக் கல்வி வேண்டும். எல்லோ ருக்குமே கட்டாயக்கல்வி வற்புறுத்தப்படுகின்ற இக்கா லத்தில், அரசனுக்குக் கல்வி வேண்டும் என்பதைப் பற்றி அவ்வளவாகப் பேச வேண்டியதில்லை. பழந்தமிழ் மன்னர் பலர் பல்கலைப் புலவர்களாகத் திகழ்ந்தமையைப் பழைய நூல்களே பறைசாற்றுகின்றன அல்லவா? இக்காலத்தில் அரசாள்பவர் எந்தக் கல்வி பெறாவிடினும் அரசியல் கல்வியாவது பெறுவார்களாக! வள்ளுவரின் பொருட்பாலைப் படித்தால்கூடப் போதுமே!
அடுத்தபடியாக, ஆள்பவனுக்குத் துணிவுடைமை' வேண்டும். துணிவு என்பதற்கு தைரியம் என்றும், துணிதல் அதாவது தீர்மானித்து ஒர் உறுதியான முடிவுக்கு வருதல் என்றும் இரு பொருள் கூறலாம். இவ்விரண்டு கருத்துக் களுமே ஏறக்குறைய ஒன்றோ டொன்று தொடர்புடை யனவே! தைரியம் உடையவன்தானே எதிலும் திட்ட வட்டமான, ஒரு முடிவுக்கு விரைந்து வருவான்? இல்லா தவன். வெண்டைக்காய் போல் வழ வழா குழ குழா என்று வளர்த்திக் குட்டை குழப்புவான். இப்படி யிருந்தால் அரசாங்கத்தில் எந்தக் காரியத்தை நிறைவேற்ற முடியும்? தீர்மானத்தை ஒத்திப்போட்டபடியே போகவேண்டியது தான். அப்புறம் நாடு, நட்டாற்றில் அவிழ்த்துவிட்ட கட்டுமரந்தான்! இப்போது புரியுமே இக்குறட் கருத்து!
மான முடையது அரசு
(தெளிவுரை) அறநெறி வழுவாமலும், தீமைகளைக் களைந்தும், வீரங்குன்றாதும் மானத்துடன் விளங்குபவனே அரசன்.
'அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மான முடைய தரசு'
(பதவுரை) அறன் இழுக்காது அறநெறி தவறாமல், அல்லவை நீக்கி = நல்ல செயல்களல்லாத தீய செயல் களைப் போக்கி, மறன் இழுக்கா (த) க வீரத்துக்குப் பழுதில்லாத, மானம் உடையது அரசு = மானம் உடையவனே அரசன். (அறன் - அறம், இழுக்குதல்தவறுதல்-வழுவுதல்; அல்லவை-தீயவை; மறன்- மறம்வீரம்.)
(மணக்குடவர் உரை) அறத்திற்றப்பாம லொழுகி, அறமல்லாத காம வெகுளியைக் கடிந்து, மறத்திற்றப்பாத மானத்தை யுடையவன் அரசன்.
(பரிமேலழகர் உரை) தனக்கோதிய அறத்தின் வழுவா தொழுகி, அறனல்லவை தன்னாட்டின் கண்ணும் நிகழாமற் கடிந்து, வீரத்தின் வழுவாத தாழ்வின்மையினை யுடையான் அரசன்.
(விரிவுரை இக்குறளில் மிக மிக நுணுக்கமான தொரு பொருள் பொதிந்து கிடக்கின்றது. அதனைப் பழைய உரையாசிரியர் எவரும் உணர்ந்தாரிலர். அவரெல்லோரும், அறனிழுக்கா திருப்பதைத் தனி ஒன்றாகவும், அல்லவை நீக்குதலைத் தனி ஒன்றாகவும், மறனிழுக்கா மானம் உடைமையைத் தனி ஒன்றாகவும் பிரித்து வைத்துப் பேசி யிருக்கின்றனர். 'மூன்று நிலையும் அமைந்திருப்பதே மானம் உடைமையாகும்’ என்றே வள்ளுவர் கூறியுள்ளார் என நான் சொல்லுகிறேன். இதனை இன்னுஞ் சிறிது விளங்க நோக்குவாம்:
அரசன் அறன் இழுக்கினும் மானம்போம்; அல்லவை நீக்காவிடினும் மானம்போம்; மறன் இழுக்கினும் மானம் போம். எனவே, அறன் இழுக்காமையும் மானம் உடைமை தான்; அல்லவை நீக்குதலும் மானம் உடைமைதான்; மறன் இழுக்காமையும் மானம் உடைமைதான். இன்னுங் கேட்டால், இந்த எல்லாப் பண்புகளும் அமைந்திருப்பதே மானம் உடைமையாகும்.
முதலில், அம்மானத்தின் கூறாகிய அறன் இழுக்காமை யைப் பார்ப்போம். அரசன் தான் கடைப்பிடிக்க வேண் டிய அறநெறியிலிருந்து - கடமைகளிலிருந்து தவறாது நடத்தலே அறனிழுக்காத மானம் ஆகும். அரசனின் கடமைகள் முன்னும் பின்னும் பரக்கப் பேசப்பட்டுள்ளன. ஆங்காங்கே கண்டுகொள்க. ஒருவன் தன் கடமைகளி லிருந்து வழுவுவானேயாயின்-தான் பின்பற்றவேண்டிய நல்லொழுக்கக் கடப்பாட்டிலிருந்து தவறுவானே யாயின், அவன் தடம் புரண்ட புகைவண்டியாகி விடுகிறான். அவனை மானம் உடையவன் என்று எவ்வாறு உலகம் மதிக்கும்? 'மானங்கெட்டவனே என்று வையத்தான் செய்யும்.
அடுத்தது, அல்லவை நீக்கும் மானம் உடைமையாம். நல்லவை என்னும் சொல்லின் எதிர்மொழியே அல்லவை என்பது, அதாவது தீயவை என்று பொருள். இச் சொல் வழக்கை, 'நல்லது செய்தல் ஆற்றிராயினும் அல்லது செய்தல் ஒம்புமின்' என்னும் புறநானூற்றுப் (195) பாடல் பகுதியாலும் உணரலாம். அரசன் தான்மட்டும் அறநெறி பிறழாது கடைப்பிடித்தால் போதாது; அறநெறி யல்லாத தீமைகளைத் தன் நாட்டினின்றும் - நாட்டு மக்களினின்றும் நீக்கவேண்டும். ஒரு நாட்டு மக்களிடையே தீய எண்ணங்களும் - தீய செயல்களும் நிறைந்திருப்பின், உலகம் அந்நாட்டின் தலைவனைக் காறித் துப்பி எள்ளி நகையாடும். எனவே, மானம் விரும்பும் அரசன், நல்லற நெறிகளைத் தான் கடைப்பிடிப்பதோடு நாட்டிலும் நிலை நாட்ட வேண்டும்.
இங்கே ஒரு கதை நினைவிற்கு வருகிறது; இரண்டு நாட்டு முதல் அமைச்சர்கள் ஒரிடத்தே எதிர்ப்பட்டனராம். ஒருவர் மற்றவரிடம், "எங்கள் நாட்டில் மருத்துவ மனைகளும், நீதி மன்றங்களும், சிறைச்சாலைகளும் வேலையின்றிக் கிடக்கின்றன' என்றாராம். அதாவது அவர் நாட்டில் நோயாளிகளோ குற்றவாளிகளோ இல்லை என்பது பொருள். இதனைக் கேட்ட அடுத்த அமைச்சர், எங்கள் நாட்டில் மருத்துவ மனையோ - சிறைச்சாலையோ இல்லவே யில்லை' என்று அவரிடம் சொன்னாராம். இதுதான் அல்லவை நீங்குதல்' என்பது.
அடுத்தது மறனிழுக்கா மானம் உடைமையாகும்; அதாவது வீரங்குன்றாத மானம், வீரங்குன்றினால் மானம் போயிற்றுத்தானே! இந்த மானம் இருபதாம் நூற்றாண்டில் மருந்துக்கும் கிடையாது. வெற்றிகரமாகப் பின்வாங்குங் காலமாயிற்றே இது! கீழே விழுந்தாலும் மீசையில் மண் படாத காலமாயிற்றே இது! ஆனால் அக்காலத் தமிழ் மன்னர்கள் இந்த மானமே உருவானவர்கள். போரிலே, குழந்தைகள், கிழவர்கள், பெண்கள், பேடிகள் மற்றும் கையாலாகாதவர்கள் யாரையும் கொன்றதில்லை. புற முதுகிட்டு ஓடினும், புறமுதுகிட்டு ஒடுபவன்மேல் அம்பு போடினும் மானம் போனதாகக் கருதினார்கள், புறநானூறு போன்ற இலக்கியங்களுள் புகுந்து பார்த்தால் இந்த மானமுடைமை விளங்கும். ஒரு பிணக்குக் காரணமாக, கோப்பெருஞ் சோழன் என்னும் சோழமன்னன் உண்ணா நோன்பு கொண்டு உயிர் துறந்தான். கரிகாலனால் தன் மார்பிலே எய்யப்பட்ட அம்பு முதுகுவரையும் துளைத்துக் கொண்டு போய்விட்டதால், அம் முதுகுப் புண்ணுக்கு நாணி, பெருஞ்சேரலாதன் என்னும் சேரமன்னன் உண்ணா நோன்புற்று உயிர் விட்டான். இன்னும் என்ன சொல்ல வேண்டும்?
அறத்துப்பால்
இல்லறவியல் - இல்வாழ்க்கை
வழி எஞ்சல் இல்
'பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழிஎஞ்சல் எஞ்ஞான்றும் இல்.'
(பதவுரை) வாழ்க்கை = (ஒருவனுடைய) இல்வாழ்க்கை யானது, பழி அஞ்சி = (பொருள் தேடுதல் முதலிய வற்றில் உண்டாகும்) பழிக்கு அச்சப்பட்டு, பாத்து = (அப்படி நல்ல வழியில் வந்த செல்வப்பயனைப் பலர்க்கும்) பகுத்துச் கொடுத்து, ஊண் = (தானும்) உண்ணுதலை, உடைத்தாயின் = உடையதாக இருக்குமேயானால், வழி = (அந்நல்வாழ்க்கையின்) தொடர்ச்சி, எஞ்சல் = அற்றுப் போதல், எஞ்ஞான்றும் இல் = எப்பொழுதும் இல்லை. (பாத்தல் = பகுத்தல்; எஞ்சுதல் = அற்றொழிதல்)
(மண-உரை) இல்வாழ்க்கையாகிய நிலை பழியையும் அஞ்சிப் பகுத்துண்டலையும் உடைத்தாயின், தனதொழுங்கு இடையறுதல் எக்காலத்தினும் இல்லை.
(பரி-உரை) பொருள் செய்யுங்கால் பாவத்தை அஞ்சி ஈட்டி அப்பொருளை இயல்புடைய மூவர் முதலாயினார்க்கும் தென்புலத்தார் முதலிய நால்வர்க்கும் பகுத்துத் தான் உண்டலை ஒருவன் இல்வாழ்க்கை உடைத்தாயின், அவன் வழி உலகத்து எஞ்ஞான்றும் நிற்றலல்லது இறத்தல் இல்லை.
(ஆராய்ச்சி விரிவுரை) கெட்ட வழியில் பணம் தேடினும், தான் மட்டுமே உண்ணினும், உலகம் பழிக்கும் என்று அஞ்சி, நல்ல வழியில் தேடி, அதனைப் பலர்க்கும் பகுத்துக் கொடுத்து உண்பவனுடைய வாழ்க்கை தொடர்ந்து நல்ல விதமாக நடக்கும் என்பது வள்ளுவரின் வாய்மொழி, இஃது என்னே விந்தை! உலக நடை ஒன்றும் திருவள்ளுவர்க்குத் தெரியாது போலும்! என்று வியக்கலாம் சிலர். ஏன்?
கெட்டவழியில் பொருள் தேடாவிட்டால் பலர்க்கும் பகுத்துக்கொடுக்கும் அளவு பொருள் சேர்வது எப்படி? நல்ல வழியில் பொருள் தேடும் நல்லோர் சிலர், தம்மையே நன்கு பாதுகாத்துக்கொள்ள முடியாமல் தவிக்கின்றார்களே! அவர்கள் பலர்க்கும் பகுத்துக்கொடுப்பது எப்படி? செல்வம் சேர்ந்திருந்தாலும், பலர்க்கும் பகுத்துக் கொடுத்துக் கொண்டேயிருந்தால் அக்குடும்பம் விரைவில் நொடித்து விடாதா? பின்பு இடையறாமல் எப்போதும் விளங்குவது எப்படி? என்பவற்றை யெல்லாம் எண்ணும்போது இக் குறளில் நம்பிக்கை தோன்றாது தானே! இதனைச் சிறிது ஆராய்வோம்:
திருவள்ளுவர் இந்தக் குறளில் தெரிவித்திருப்பது என்ன? நல்ல வழியில் பொருள் ஈட்டவேண்டும்; அப் பொருளை, (பெற்றோர், பெண்டாட்டி, பிள்ளை. துறந் தார், துவ்வாதவர், இறந்தார், தென்புலத்தார், தெய்வம், விருந்து, சுற்றத்தார். தான் என்னும்) பலர்க்கும் பயன் படுத்தி வாழவேண்டும் என்பதுதானே! இல்வாழ்வான் தன்னையும், தன் பெற்றோர், மனைவி, மக்களையும் காப்பாற்ற வேண்டும் என்றும் திருவள்ளுவர் கூறியிருப்பதால் ஒருவன் தன் செல்வம் முழுவதையும் பிறர்க்கே செலவிட்டுத் தன் குடும்பத்தை, அழித்துவிட வேண்டும் என்பதன்று. போதுமான அளவு தன் குடும்பத்தையும் காப்பாற்றி, இயன்றவரை ஏனையோரையும் ஆதரிக்க வேண்டும் என்பது இனிது புலப்படுகின்றதல்லவா? எனவே, பிறர்க்கு ஓரளவு உதவுவதால் தன் குடும்பம் நொடித்துவிடும் என்பதற்கு இடமில்லை. பலர்க்கும் உதவிப் பலருடைய நன்மதிப்பையும் பெறுவதால், தப்பித்தவறித் தன் குடும்பத்திற்கு ஒரு துன்பம் ஏற்பட்டாலும் அப்பலரும் உதவுவர். பலருள் சிலர்கூடவா நன்றி பாராட்ட மாட்டார்கள்? பிறர்க்கு உதவாதவ னுடைய குடும்பத்திற்கு ஒரு துன்பம் ஏற்பட்டால், அதிலும் அவன் கெட்ட வழியில் பொருள் ஈட்டி யிருந்திருப்பானே யானால் அவன் குடும்பத்தை அனைவரும் வெறுத்து ஒதுக்குவார்கள்.
மேலும், கெட்ட வழியில் மிக்க பொருள் திரட்டி வாழ்வது வெள்ளத்தை நம்பி வாழ்வது போலாகும். வெள்ளம் எப்போதும் வருமா? ஆனால், நல்ல வழியில் ஈட்டி வாழ்வதோ, ஊற்றுநீரை நம்பி வாழ்வதுபோலாகும். ஊற்று எப்போதும் சுரக்குமன்றோ? எனவே, நல்வழியில் பொருளிட்டி, நாலாபேர்க்கும் உதவி வாழ்வானுடைய குடும்பம் தொடர்ந்து விளக்கம் பெறும் என்னும் இக்குறட் கருத்து இப்போது ஏற்புடையதாய்த் தோன்றுமே!
சிலர் இன்னொருவருடைய பொருளை எடுத்துத் தம் முடையதுபோல வழங்குவார்கள். கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையார்க்கு உடைப்பது” என்றால் இது தான்! இன்னும் சிலர், பிறரை வருத்திப் படாதபாடு படுத்தி அவரிடம் உள்ள பொருளைப் பறித்து, நல்லவர்போலத் தாங்கள் வழங்குவார்கள். 'மாட்டைக்கொன்று செருப்புத் தானம் செய்வது' என்றால் இதுவேதான்! இவ்விதம் பழிப் புக்கிடமான முறையில் பொருள் தேடிச் செய்பவை யெல்லாம் உண்மையான உதவியாகா. இது குறித்தே, பழியஞ்சிப் பாத்துரண்' என்றார் ஆசிரியர்.
பண்பும் பயனும்
'அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது'
(பதவுரை) இல்வாழ்க்கை = (ஒருவனுடைய) இல்லற வாழ்க்கையானது, அன்பும்=(யாவரிடத்தும்) அன்பினையும், அறமும் = அறச் செயலினையும், உடைத்தாயின் = உடைய தாய் இருக்குமேயானால், பண்பும் = (அவ்வில்வாழ்க்கையின்) இலக்கணமும், பயனும் = நன்மையும், அது = அந்த அன்பும் அறமும் உடைத்தா யிருக்கின்ற அச்செயலே.
(தெளிவுரை) பண்பு என்றால் இலக்கணம்; அஃதாவது தன்மை. இல்வாழ்க்கைக்கு இருக்கவேண்டிய இலக்கணம் அன்பும் அறமும் உடைமையே - இல்வாழ்க்கையின் பயனும் அந்த அன்பும் அறமும் உடையதாய் இருப்பதே. அன்பும், அறமும் இல்லாதவன் இனிமையாக இல்வாழ்க்கையை எப்படி நடத்தமுடியும்? முடியாது. அதனாலேயே அவ் விரண்டும் உடைமை இல்வாழ்க்கையின் இலக்கணம் என்றார். யாவரிடத்தும் அன்பு காட்டுவதும், அறம் செய் வதுமே இல்வாழ்க்கையின் நோக்கம் ஆதலால், அவ்விரண்டும் உடைமை இல்வாழ்க்கையின் பயனும் ஆகும் என்றார்.
இஃதென்ன! ஒன்றையே இலக்கணமாகவும், பயனாகவும் கூறித் தியங்கச் செய்துள்ளாரே திருவள்ளுவர் என்று திகைக்கலாம் சிலர். இத்தியக்கத்தாலேயே பரிமேலழகர் வேறு விதமாக உரை பகர்வாராயினார். கூர்ந்து நோக்கின், இங்குத் திகைப்பிற்கே இடம் இல்லை. எடுத்துக்காட்டு ஒன்று வருக!
பிள்ளையின் இலக்கணம் பெற்றோரைக் காப்பாற்று தலும், உலகிற்குத் தொண்டு செய்தலும் ஆகும் என்று ஒருவர் கூறுவதாக வைத்துக் கொள்வோம். அவ்விரண்டுந்தானே பிள்ளையினால் உண்டாகும் பயனுங்கூட? எனவே, ஒன்றையே இலக்கணமாகவும், பயனாகவும் திருவள்ளுவர் குறிப்பிட்டிருப்பதைக் குறித்துத் தியங்கவேண்டாவன்றோ?
(மண - உரை) இல்வாழ்க்கையாகிய நிலை யாவர் மாட்டும் அன்பு செய்தலையும், அறம் செய்தலையும் உடைத்தாயின் அதற்குக் குணமாவதும் பயனாவதும் அவ் விரண்டினையும் உடைமைதானே.
(பரி-உரை) ஒருவன் இல்வாழ்க்கை, தன் துணைவிமேல் செய்யத்தகும் அன்பினையும், பிறர்க்குப் பகுத்துண்டலாகிய அறத்தினையும் உடைத்தாயின் அவ்வுடைமை அதற்குப் பண்பும் பயனும் ஆம். இல்லாட்கும் கணவற்கும் நெஞ்சு ஒன்றாகா வழி இல்லறம் கடை போகாமையின் (நட வாமையின்) அன்புடைமை பண்பாயிற்று, அறனுடைமை பயனாயிற்று.
(ஆராய்ச்சி உரை) அன்பு என்பதற்கு மனைவிமேல் உள்ள அன்பு என்று பகர்ந்துள்ளார் பரிமேலழகர். இங்கே வள்ளுவர் காதல் என்னும் சொல்லை வைத்திருந்தாலும் பரிமேலழகர் பகரலாம்; அவ்விதம் இல்லையே! ஆகவே, அன்பு என்பதற்கு யாவரிடத்தும் உள்ள அன்பு என்று பொருள் கூறினால், அவ்வில்வாழ்வானுக்கும் பெருமை - திருவள்ளுவர்க்கும் பெருமை! எல்லோரிடத்திலும் அன்பு உள்ளவன் தன் மனைவியிடத்திலா அன்பு இல்லாதவனாகப் போய்விடுவான்? பரிமேலழகர் கூறியபடியே வைத்துக் கொண்டாலும், தம் மனைவியின்மேல் அளவு மீறி அன்பு கொண்ட சிலர், பிறரை நோகச் செய்கின்றனரே! பிறரை என்ன? பெற்றோரையே பேதுற-மயங்கச் செய்கின்றனரே! இதுதானா இல்வாழ்க்கையின் இலக்கணம்?
மேலும் பரிமேலழகர், அன்பை இல்வாழ்க்கையின் இலக்கணமாகவும், அறத்தைப் பயனாகவும் பகர்ந்துள்ளார். இங்குக் கூர்ந்து நோக்க வேண்டும். பண்பும் பயனும் அது’ என்பது குறள். 'அது' என்னும் ஒருமை அன்பையும் அறத்தையும் உடைத்தாயிருக்கும் செயலைக் குறிக்கின்றது. எனவே, பண்பும் அச்செயல்தான்-பலனும் அச்செயல்தான். பரிமேலழகர் உரைப்படி இரண்டையும் தனித்தனியாகப் பிரித்துக் கூறும் நோக்கம் வள்ளுவர்க்கு இருந்திருக்குமே யானால், 'பண்பும் பயனும் அவை' என்று பாடியிருப்பார். அன்பு இலக்கணமாகும்போது, அறம் மட்டும் இலக்கணம் ஆகாதா? அறம் பயனாகும்போது, அன்பு மட்டும் பயனாகாதா? ஆகுமே! ஆய்க அறிஞர்.
காமத்துப்பால்
களவியல்-தகையணங் குறுத்தல்
கொடும் புருவக் கோட்டம்
(தெளிவுரை) இந்தப் பெண்ணின் பொல்லாத புருவங் கள் கோணி வளைந்து கண்களின் மேல்புறம் செல்லாமல் ஒரே நேர் நெட்டாய்க் கண்களினூடே சென்று திறக்க வொட்டாதபடி அவற்றை மறைத்திருக்குமாயின், அக்கண்கள் இப்போது எனக்கு இவ்வளவு துன்பம் செய் திருக்க மாட்டா.
'கொடும்புருவங் கோடா மறைப்பின் கடுங்களுா
செய்யல மன்னிவள் கண் '
(பதவுரை) கொடும் புருவம் = (இவளுடைய கொடிய) வளைந்த புருவங்கள், கோடா (து) = அவ்வாறு வளை யாமல், மறைப்பின் - (கண்களின் நேர் குறுக்கே சென்று திறக்க முடியாதபடி) மறைத்திருக்கு மாயின், இவள் கண் = இவளுடைய கண்கள், நடுங்கு அஞர் = நடுங்கக்கூடிய துன்பத்தை, செய்யல மன் = உண்டாக்கி யிருக்கமாட்டா; அவ்வாறு அந்தப் புருவங்கள் மறைக்காமையினாலேயே இவள் கண்கள் என்னைத் துன்புறுத்துகின்றன.
கொடுமை கொடிய பொல்லாத தன்மை, வளைவு; கோடுதல் கோணுதல் - கோடாது = கோணாது - வளை யாது; அஞர் = துன்பம். மன்= சொல்லாது ஒழிந்த 'ஒழி) யிசை'ப் பொருள் தருவதோர் இடைச்சொல்.
(மணக்குடவர் உரை) வளைந்த புருவங்கள் தாம் செப்ப முடையனவாய் விலக்கினவாயின், இவள் கண்கள் அவற்றைக் கடந்து போந்து எனக்கு நடுங்குந் துன்பத்தைச் செய்யலாற்றா.
(பரிமேலழகர் உரை) பிரியா நட்பாய கொடும் புருவங் கடாஞ் செப்ப முடையவாய் விலக்கினவாயின், அவற்றைக் கடந்து இவள் கண்கள் எனக்கு நடுங்குந் துயரைச் செய்ய மாட்டா.
(ஆராய்ச்சி விரிவுரை) இந்தக் குறளில், உயர்ந்த சொல் நயங்களையும் பொருள் நயங்களையும் உலகப் பெரும் புலவனாம் வள்ளுவன் வாரி வாரிக் கொட்டியிருக்கிறான். ஆமாம், வாரி வாரிக் கொட்டியிருக்கிறான்! அவற்றை நாம் அள்ளிக் கொள்ளுவோமா? தலைமகளின் கண்வலையில் சிக்கித் தவிக்கும் தலைமகன், அவள் கண்ணின் மேல்புறத் துள்ள புருவத்தைக் காய்கிறான். புருவம் கண்ணுக்குத் துணை செய்கிறதாம். அழகாய் அமைந்ததும் மேலே மை பூசப்பட்டதுமான புருவத்தின் தோற்றப் பொலிவு கண்ணுக்கு மேலும் மேலும் அழகு தருவது இயற்கைதானே! இயற்கையாகவே வருத்துங் கண்ணோடு இந்தப் புருவமும் சேர்ந்து கொண்டால் இவன் என்ன ஆவான்? அதனால் தான் புருவத்தைக் கொடும் புருவம் என்கிறான்.
இங்கே சொல்லப்பட்டுள்ள கொடுமை' (கொடும்) என்னுஞ் சொல்லுக்கு, பொல்லாத கொடியதன்மை எனவும் வளைவு எனவும் இரு பொருள் உண்டு. இவற்றுள் முதல் பொருளை எல்லோரும் எளிதில் அறிவர். வளைவு என்ற பொருள்தான் பலருக்குத் தெரியாது. அவர்களும் தெரிந்தும் தெரியாமல் இச் சொல்லை இப்பொருளில் வைத்துப் பேசுகின்றனர். மக்கள் அகராதியைப் (பேச்சு வழக்கை) புரட்டுவோம். கொடுவாள் கத்தி, கொடுக்காய்ப் புளி மரம் என்னும் பேச்சு வழக்குத் தொடர்களிலுள்ள கொடு' (கொடுமை) என்னும் சொல், வளைந்தவாள், வளைந்தகாய் என வளைவுப் பொருளைத் தருவ துணர்க. இந்த இரு பொருள் (சிலேடை) அழகு தோன்றக் கொடும்புருவம்' என்றான் அவன். புருவம் வளைந்துதானே இருக்கும்? புருவம் வில்போல் வளைந்திருப்பதால், விற்புருவம்-புருவ வில் என்றெல்லாம் புலவர்கள் உவமமும் உருவகமும் செய்வது வழக்கம், அதனால் கொடும் (வளைந்த) புருவம்' என்றது சரியே! மேலும், வருத்துகின்ற கண்ணுக்குத் துணையாய் நின்று கொடுமை செய்வதால் கொடும் (பொல்லாத கொடிய) புருவம் என்றதும் சரியே! ஒரே சொல்லில் இருபொருள் அமைத்து விளையாடும் வள்ளுவரின் சொல் நயமும் பொருள் நயமும் என்னே, என்னே! மேலும் சில அழகு காண்பாம்.
புருவத்தின் புற்ப்பாட்டைக் காணுங்கால், அது கண்ணை மறைக்க வேண்டுமென்றால் மறைத்திருக்கலாம்; ஆனால், அவ்வாறு செய்யவில்லை என்பது புலனாகும். இரண்டு கண்களுக்கும் நடுவிடம் இருக்கிறதே, அங்கிருந்து தான் புருவம் புறப்படுகின்றது. அதாவது, ஒவ்வொரு புருவமும் ஒவ்வொரு கண்ணின் முதல் பகுதியிலிருந்து புறப்பட்டு, கண்ணைப் பாதியளவு சுற்றி வளைத்து, கடைக் கண் முனையில் வந்து முடிந்து விடுகிறது. வில்லின் இரு முனைகளைப் போலுள்ள புருவத்தின் இரு முனைகளும், கண்ணின் இரு முனைகளைத் தொட்டுக்கொண்டுள்ளன. புருவம் இவ்வாறு கோடாமல்-வளையாமல், கண்ணின் நீள் குறுக்கிலே நேர்க் கோடாய் நீண்டிருக்குமாயின், ஏன் அப்புருவத்தின் கோணலை நிமிர்த்திவிடின், அப்புருவத்தின் அடர்ந்த மயிர்ப் பகுதி, திறந்துகாண வொட்டாமல் கண்ணை மறைத்துவிடும். அங்ங்னம் மறைத்திருப்பின், அக்கண் பார்வையால் அவன் கலங்கியிருக்கமாட்டான். இதைத்தான், கொடும் புருவம் கோடா மறைப்பின்' என்றார்.
இந்தப் புருவம் பொல்லாத புருவமாய் இல்லாமல் நல்ல புருவமாய் இருந்திருந்தால், உண்மையில் என்ன செய்திருக்கவேண்டும்? தன் நண்பனாகிய கண்ணைப் பார்த்து, ஏ. கண்ணே! நீ ஏன் அந்த ஆடவனை வருத்து கிறாய்? அது முறையன்று' என்றல்லவா கடிந்திருக்க வேண்டும்? அவ்வாறு இடித்துரைப்பதற்கு இதனிடம் நேர்மை யிருந்தால்தானே முடியும்? இதுதான் கோணி யுள்ளதே! கோணல் குணம் (ஒரவஞ்சனை) உடையவர்க ளிடம் நேர்மையை எதிர்பார்க்க முடியுமா? அவர்கள், தம் நண்பன் பிறரைத் தாக்கி வருத்துவதைப் பார்க்காதவர் போல் வளைந்து ஒதுங்கித்தான் போவார்கள்! நண்பனுக்கு ஆதரவாகச் சுற்றி வளைத்துத்தான் பேசுவார்கள்! இந்த நயங்களை யெல்லாம் அமைத்துத்தான், கொடும் புருவங் கோடா(து) மறைப்பின், என்றார். சிறிது இடைவெளி தெரியினும் அதன் வாயிலாக அக்கண் வருத்தும்; ஆதலின் அதனை முற்றும் மறைத்துவிட வேண்டும் என்பதற்காக 'மறைப்பின்' என்றார்.
புருவத்துக்கும் கண்ணுக்கும் உள்ள தொடர்பு வில்லுக்கும் அம்புக்கும் உள்ளது போன்றதாம். புருவ வில்லிலிருந்து கண்ணம்பு பாய்ந்து தாக்குகிறது. அதற்கு ஆற்றாது நடுங்குகிறான் அவன். அதனால்தான் 'நடுங்கு அஞர் என்றார். (அடுத்த குறளில் ஒ' என்று அலறி அழவே போகிறான் தலைமகன்). வில் வணக்கம் தீங்கு குறித்தமையான்' என்று வள்ளுவர் மற்றோரிடத்தில் கூறியுள்ளபடி, வில் வளைவின் நோக்கம் பிறரைத் துன்புறுத்தலே. வஞ்சகர் நல்லவர்போல் வளைந்து கொடுப் பதும் பிறகு துன்புறுத்தவே. இந்தக் கொடும் புருவத்தின் கோட்டமும் அதுவேதான். அதனால்தான் அவன் நடுங்கு கிறான், என்ன செய்யுமோ என்று! புருவமும் கண்ணும் ஒன்றுக்கொன்று தோழமை பூண்டு ஒத்துழைப்புடன் செயலாற்றுவதாக இவ்வளவு நேரம் பேசினோம். இஃது உண்மையா? இஃதோர் இலக்கிய மரபு. அவ்வளவுதான்! இதுபோலவே அம்பிகாபதி கோவையிலும் ஓர் ஒற்றுமைக் கருத்து உள்ளது; ஒருத்தியின் கண்கள் ஒருவனைக் கண்டன. காதல் பிறந்தது. காதலராயினர். பின்னர் பிரிந்தனர். பிரிவு தாளாது தலைவியின் உடல் சோர்ந்தது. கைகள் மெலிந்தன. அதனால் வளையல்கள் கழன்றன. வளையல் இழந்த கைகளைக் கண்கள் கண்டு, ஐயோ நமக்கு மை பூசிய கைகளாயிற்றே! நாம் தலைவனை முதல் முதல் கண்டத னாலல்லவோ, இவ்வாறு நேர்ந்தது என்று அழுதனவாம். அதாவது, தலைவனைப் பிரிந்த துயரால் தலைவி அழுதாள். அதனை இங்ஙனம் கற்பனை செய்து விட்டார் புலவர். இதனை,
'பண்டு நமக்குப் பரிந்துமையூட்டிய பங்கயக்கை
ஒண்டொடிசோர உயங்குத னோக்கித் தயங்குழுது
தண்டலை தன்னில் தலைப்பட்ட நாளில் தலைவனைநாம்
கண்டது கொண்டல்லவோ என்று போலுங்கலுழ் கின்றதே'
என்னும் அம்பிகாபதிகோவைச் (338) செய்யுளால் அறியலாம். உறுப்புகளின் ஒற்றுமைக்காக இங்கே இது எடுத்துக் காட்டப்பட்டது.
மன்னிக்கவும்! வடமொழியில் காளிதாசனது கைப் புனைவு ஒன்று இங்கே நினைவிற்கு வருகின்றது. அதையுங் கூற ஒப்புதலளிக்க வேண்டுகிறேன். ஒரு பெண் ஒரு நீர்த் துறையில் தன் மார்புக்கச்சைக் கல்லில் அடித்துத் துவைத்துக் கொண்டிருந்தாள். அதனைக் கண்டு கற்பனை செய்கிறான் காளிதாசன். அந்தக் கச்சானது, மார்பிலுள்ள கொங்கைகளைக் கட்டியடக்கிச் சிறைப்படுத்தி இவ்வளவு நேரம் வருத்திற்றாம். அக்கொடுமையைக் கண்டு பொறுக்க முடியாத கைகள், அந்தக் கச்சினைக் கல்லில் அடித்துப் பழிக்குப்பழி வாங்கினவாம். அடிவாங்குபவன் சோர்ந்து விழுந்துவிடாமல் இருப்பதற்காகத் தண்ணீர் கொடுத்துக் கொடுத்து அடிப்பதைப் போல, அந்தக் கச்சைத் தண்ணிரில் நனைத்து நனைத்துக் கைகள் அடித்தனவாம், இஃதுமோர் இலக்கிய இன்பம், அவ்வளவுதான்! இதுவும் உறுப்புகளின் ஒற்றுமைக்காக இங்கே எடுத்துக் காட்டப்பட்டது!
அம்பிகாபதி கோவையின்படி கண் கைகளின் சோர்வுக்காக அழுதிருப்புதும், காளிதாசனது கவியின்படி கொங்கைகளுக்காகக் கைகள் கச்சினைக் கல்லில் அடித்திருப் பதும், தும்பை விட்டுக் கொம்பைப் பிடிப்பதுபோல்”, இப்பிறவியில் விட்டு மறு பிறப்பில் வருத்துவதுபோல, முதலில் விட்டுப் பின்னர்ச் செயலாற்றும் மடிமையாகும். ஆனால், புருவம் முதலிலிருந்தே கண்ணோடு ஒத்துழைப்ப தாகக் கற்பனை செய்து காட்டியுள்ள வள்ளுவர்க்குக் கைம்ம்ாறு யாதோ?
இந்தக் குறளில் மொழியழகு ஒன்று பொதிந்து கிடக் கிறது. மறைப்பின் நடுங்கு அஞர் செய்யல மன்' என்பது குறள் பகுதி. புருவங்கள் கண்களை மறைத்திருந்தால் அவை துன்பம் செய்திருக்கமாட்டா என்ற கருத்தை 'மறைப்பின் நடுங்கு அஞர் செய்யல' என்ற பகுதியும், 'மறைக்காததனாலேயே இவ்வாறு என்னைத் துன்புறுத்து கின்றன என்ற கருத்தை மன்' என்னும் ஒரே சொல்லும் அறிவிப்பதை நுனித்துணர்ந்து மகிழ்க. "மறைக்காததால் துன்புறுத்துகின்றன என்ற கருத்து, குறளில் வெளிப் படையாய்ச் சொல்லா தொழிந்த கருத்து. இந்த ஒழிந்த (விட்ட) கருத்தை மன்' என்பது இசைத்துக் கொடுப்பதால், இதற்கு 'ஒழியிசைப்பொருள்' என்று இலக்கணத்தில் பெயராம். இரண்டெழுத்தில் இத்துணைப் பெரிய பொருள் பொதிந்து கிடக்கிற மொழியழகுதான் என்னே! என்னே இது விளங்காமல் இக்குறளைக் கற்று என்ன பயன்?
ஊசி முனையில் நிற்பதே கடினம். கூத்தாடுவதோ அதனினும் அருமை! இந்த அருஞ்செயலைத்தானே இந்தக் குறளில் வள்ளுவர் செய்திருக்கின்றார். இப்படி ஒரு கருத் தைக் கற்பனை பண்ணுவ தென்பது கிள்ளுகீரையா?
பொருட்பால்
அரசியல் - இறைமாட்சி
வல்லது அரசு
(தெளிவுரை) செல்வம் வருதற்குரிய வழிதுறைகளைத் திட்டமிட்டுச் செய்து, நிரம்பச் சேர்த்து, சிதறாமல் காத்து, எல்லோருக்கும் கிடைக்கும்படிப் பகுத்து அளிக்க வல்லவனே அரசனாவான்.
‘இயற்றலு மீட்டலுங் காத்தலுங் காத்த
வகுத்தலும் வல்ல தரசு'
(பதவுரை) இயற்றலும் = (பொருள் வரும் வழி களைத் தேடி யாராய்ந்து திட்டமிட்டுச்) செயலாற்று தலும், ஈட்டலும் = (அவ்வாறு செயலாற்றி) நிரம்பச் சேர்த்துத் தொகுத்தலும், காத்தலும் - (தொகுத்த பொருளைச் சிதறாமல் அழியாமல்) காப்பாற்றுதலும், காத்த வகுத்தலும் = அவ்வாறு காப்பாற்றிய பொருளை எல்லோர்க்கும் உதவும்படிப் பகிர்ந்து அளித்தலும், வல்லது அரசு = (ஆகியவற்றில் எல்லாம்) வல்லமை உடையவனே அரசன் (வல்லது அரசு - வல்லவன் அரசன்.)
(மணக்குடவர் உரை) பொருள் வரும் வழியியற்றலும், அதனை அழியாம லிட்டலும், அதனைச் சோர்வு படாமற் காத்தலும், காத்த அதனை வேண்டுவனவற்றிற்குப் பகுத் தலும் வல்லவன் அரசனாவான்).
(பரிமேலழகர் உரை) தனக்குப் பொருள்கள் வரும் வழிகளை மேன்மேலுளவாக்கலும், அங்ஙனம் வந்தவற்றை ஒருவழித் தொகுத்தலும், தொகுத்தவற்றைப் பிறர் கொள்ளாமற் காத்தலும், காத்தவற்றை அறம் பொருளின் பங்களின் பொருட்டு விடுத்தலும் வல்லவனே அரசன்.
(விரிவுரை) இந்தப் பகுதியை அரசியலிலே ஓர் உயிர் நாடி எனலாம். அரசனுக்கு எந்தத் திறமை இருந்தாலும் இல்லாவிடினும், முதலில் இந்தத் திறமை இருந்தாக வேண்டுமல்லவா? இந்தத் திறமையை உரைகல்லாக வைத்தே அரசாங்கத்தின் தகுதி உரைத்துப் பார்க்கப் படுவதை இக்காலத்தில் செய்தித்தாள் படிப்பவர்-அரசியல் அறிவு பெற்றவர் அனைவரும் உணர்வர். இந்தத் திறமை யில்லாமல், மக்களது சொந்த முயற்சியால் மட்டும் கிடைக்கும் பொருள்களைச் சுரண்டிச் சுருட்டிக் கொண்டு "தாம்தீம் பண்ணி ஆரவாரமாய்ப் பொழுது கழிக்கும் அரசன் எதற்கு அதற்கு, சீட்டாட்டத்தில் வரும் அட்டைப் பட ஆடுதன் ராசாவே போதுமே! இத்தகையோனை மக்கள் மன்னனாக மதித்து ஏற்றுக்கொள்வரா? மனைவி எவ்வளவு தான் நாணம், மடம், அச்சம், பயிர்ப்பு உடைய வளாயினும், கல்லானாலும் கணவன் - புல்லானாலும் புருழ்சன் என்ற மூலமந்திரத்தை நாடோறும் ஆயிரத் தெட்டு உருப்போடுபவளாக இருப்பினும், வருமானம் இல்லாத-துப்புக்கெட்ட கணவனை நோக்கி, ஒரு நாள் இல்லாவிட்டாலும் ஒரு நாளைக்காவது, "நீ வெட்டுகிற வெட்டுக்கு இது வேறா?' என்று சுட்டிக் காட்டித் திட்டி மட்டத்தட்ட மாட்டாளா? இதே விருதுதான் ஆக்கத் தெரியாத அரசியல் தலைவனுக்கும் இது குறித்தே "வல்லது அரசு' என வல்லது' என்னுஞ் சொல்லை வள்ளுவர் பெய்துள்ளார். இதுவே பெரிய வல்லமை போலும்! இனி இவ்வல்லமையின் உட்பிரிவு ஒவ்வொன் றினையும் ஒரு சிறிது ஊன்றி நோக்குவோம்:
இக்குறளில், இயற்றல், ஈட்டல், காத்தல், வகுத்தல் என நான்கு நிலைகள் பேசப்பட்டுள்ளன. இவை ஒன்றுக் கொன்று இளைத்தனவல்ல; ஒத்தன; ஒன்றோடொன்று தொடர்புடையன. இவற்றுள் ஒன்றின்றி ஒன்றில்லை என்னலாம். ஏன்? ஏனா? ஆண்டிமடங்கட்டுவது போல ஏட்டில் திட்டங்களைத் தீட்டி விட்டால் போதுமா? அவற்றைச் செயல் முறைக்குக் கொண்டுவரவேண்டும். கொண்டு வந்தும், புசுபுசு வாணம் போல் புகைந்து விட்டால் போதுமா? போதிய அளவுக்கு மேலும் பொருள் கள் உருப்படியாகவேண்டும். பொருள்கள் உருவானால் போதுமா? அவற்றை 'இரண்டு கால் செல்லுகள்' அரித்து விடாதபடி, ஏறப் படித்த எலிகள் இழுத்துக்கொண்டு போகாதபடி, பதவிப் பூனைகள்' பாய்ந்து பறிக்காதபடிக் கட்டிக்காக்க வேண்டும். காக்கிறேன் என்று காத்துக் கொண்டேயிருந்து விடக்கூடாது. அப்பொருளுக்காக மக்கள் காத்துக்கொண்டிருப்பார்கள். அனைவர்க்கும்-அனைத்துக் கும் போதிய அளவு பகிர்ந்தளிக்க வேண்டும். அவ்வாறு செய்யின், அரசன் என்றால் அரசன் தான்! ஆட்சி என்றால் ஆட்சிதான்!
(ஆராய்ச்சி உரை) இயற்றல் என்பது யாது? பொருள் வருதற்கான ஆக்க வேலைகளைப் புரிதல்தான் இயற்றல். அவையாவன:- பகைவரை வென்று பறிக்கும் பொருளுக் கும், சிற்றரசரிடமிருந்து பெறும் கப்பப் பொருளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கவேண்டியதுதான். காலம் மாறிப் போயிற்றல்லவா? அடுத்து, வரிப்பொருளும் சுங்கப் பொருளும் இயற்கையாகக் கிடைக்கக் கூடியனவே! இதற்கு அரசனது முயற்சி அவ்வளவாக வேண்டற்பாற்றன்று, பின் அரசன் ஆற்றவேண்டிய ஆக்கவேலை தான் என்ன? உணவுப்பொருள்கள், சுரங்கப்பொருள்கள், தொழிற் சாலைப் பொருள்கள் முதலியவற்றை மிகுதியாக உண்டு பண்ணுவதின் வாயிலாகவும் அவற்றை விற்கும் வாணிகத் தின் வாயிலாகவும் நாட்டில் பெருஞ்செல்வம் கொழித்துச் செழிக்க வேண்டும். அதற்கு ஆவன புரிதலே இயற்றுதல்.
ஈட்டல் என்றால், வேற்கூறிய பலவழிகளிலும் பல்வகைப் பொருள்களை மிகுதியாகத் திரட்டிச் சேர்த்தல். இங்கே கூர்ந்து கவனிக்கவேண்டும். ஈட்டம் என்றால் கூட்டம்-மிகுதி என்று பொருள். பொருள்வரும் வழி களும் பல; ஒவ்வொரு வழியிலும் வரும் பொருள்களின் வகைகளும் பல; ஒவ்வொரு வகையிலும் ஒவ்வொரு பொருளிலும் எண்ணிக்கையும் அளவும் மிகுதி; இவ்வாறு சேர்த்தல்தான் ஈட்டல், எடுத்துக்காட்டாக, உணவுப் பொருள்களை எடுத்துக்கொள்வோம். நெல், கம்பு, கேழ்வரகு, வரகு, சாமை, தினை, சோளம், கோதுமை, கரும்பு, இன்னும் பல பல பற்பலவகைப் பொருள்கள்; நெல் என்று எடுத்துக்கொண்டால், சாலி, சிறுமணி, மிளகு எனப் பலப்பல; இந்த நெல்வகை ஒவ்வொன்றிலும் கோடிக்கணக்கான மூட்டைகள் விளைதல், இவ்வாறு கணக்கிடுக.
அடுத்தபடியாக, காத்தல் என்பதில் கருத்து மிக உண்டு. பொருள்கள் தாமே அழியாமலும், பிறரால் அழிக்கப் படாமலும் காத்தல் மட்டும் காத்தல் ஆகாது. பின் வேண்டுமென்று சேமித்து வைப்பதும் காத்தல் தான். இதுவும் மிக இன்றியமையாதது தானே? எடுத்துக்காட்டு ஒன்று தருவேன். இந்த மழைக்காலத்தில் மேட்டுர் அணையில் நிரம்பத் தண்ணீரைச் சேர்த்துச் சேமித்து வைத்துக் காக்கின்றோமே, அதுதான்! இருக்கும்போது எல்லாவற்றையும் எடுத்து விளாவி விட்டால் பிறகு என்ன செய்வது? எனவே காக்க வேண்டும்.
நான்காவதாக, வகுத்தல் என்பதில், எல்லா வகையான சோழ்சலிசமும், கம்யூனிசமும் அடங்கிவிட்டன. ஆனைக்கு அல்வா வாங்கினது ஐயாயிரங்கோடி, குதிரைக்குக் "குருமா செலவு ஆயிரங்கோடி, புலிக்குப் பூரிகிழங்கு' இரண்டாயிரங்கோடி என்று கணக்குக் காட்டி ஒருவனே ஏப்பம் விடாமல், பலர்க்கும் பலவற்றுக்கும் பயன்படும் படியாகப் பணத்தைப் பரவலாகச் செலவு செய்யவேண்டும். ஒரு நாட்டில் ஒருவனுக்கு உணவில்லை என்றாலும் நாட்டின் தலைவன் நாணமடைய வேண்டும், அதற்கு ஆவணபுரிய வேண்டும். எல்லோரையும் பணியில் ஈடுபடுத்தி வாழ வைக்க வேண்டும். இவ்வளவும் 'வல்லது அரசு' என்பது தான் வள்ளுவர் வாக்கு.
அரசன் இல்லாத எதிர்காலத்துக்கும் இடம்வைத்து, வல்லது அரசு-அதாவது வன்மையுடையதே அரசாங்கம் என அஃறிணை முடியில் அமைத்துப் போந்துள்ள ஆசிரியரின் ஆற்றலை ஒர்ந்துணர்க!
மீக்கூறும் மன்னன் கிலம்
(தெளிவுரை) வந்து காண்பவரிடம் எளிமையாய்ப் பழகி, கடுஞ்சொல்லின்றி ஆவன புரியும் அரசனது நாடு மேலானதாக மதிக்கப்படும்.
'காட்சிக் கெளியன் கடுஞ்சொல்ல னல்லனேல்
மீக்கூறும் மன்ன னிலம்'
(பதவுரை) காட்சிக்கு எளியன் = தன்னைக் காண வருவோர்க்கு எளிதில் காட்சி கொடுத்து எளிமையாய்ப் பழகுபவனாயும், கடுஞ்சொல்லன் அல்லனேல் = கடுஞ்சொல் பேசாதவனாயும் ஒர் அரசன் இருப்பானேயானால், மன்னன்=அம்மன்னனை, நிலம் = உலகமானது, மீக்கூறும்= மேலாக மதிக்கும். (மீ = மேன்மை; மீக்கூறுதல் = மேலாக மதித்துக் கூறுதல்).
(மணக்குடவர் உரை) காண்கைக்கு எளியனாய்க் கடுஞ் சொற் கூறுதலும் அல்லனாயின், அம்மன்னனை உலகத்தார் உயர்த்துக் கூறுவர்.
(பரிமேலழகர் உரை) முறை வேண்டினார்க்குங் குறை வேண்டினார்க்குங் காண்டற் கெளியனாய், யாவர்மாட்டும் கடுஞ்சொல்ல னல்லனுமாயின், அம்மன்னனது நிலத்தை எல்லா நிலங்களினும் உயர்த்துக் கூறும் உலகம்.
(விரிவுரை) மீக்கூறும் மன்னன் நிலம் என்னுந் தொடருக்குப் பலவிதமாகப் பொருள் கூறலாம். மன்னனை இந்நிலவுலகம் மேலாக மதிக்கும் எனவும், மன்னன் உலகில் மேலாக மதிக்கப்படுவான் எனவும், மன்னது நாடு (நிலம்) மேலாக மதிக்கப்பெறும் எனவும் கூறலாம்.
'காட்சிக்கு எளியன் என்பதற்கு இரு பொருள் கூறலாம். பிறருக்கு எளிதில் காட்சி கொடுப்பவன் - அதாவது யாரும் எப்போதும் எளிமையாய்க் காணக்கூடியவன் என்ற பொருள் எல்லோரும் அறிந்ததே. மற்றொரு பொருள் தான் புதிது. கையில் கத்தி கம்பு வைத்துக்கொண்டிருக்கிற கடுந்தெய்வங்களைப் போலல்லாமல், காந்தியடிகளைப் போலக் காண்பதற்கு எளிய தோற்றம் உடையவன் என்பதுதான் புதிய பொருள்.
ஒரு சிறிது படிப்போ, பட்டமோ, பதவியோ, பணமோ வந்துவிட்டாலே, தங்களைப் பெருமக்கள் என்று தாங்களே தவறாக எடையோட்டுக்கொண்டு, பலரோடு பழகாமல், பேசாமல், தனியிடத்தில் தங்களைத் தாங்களே சிறைப்படுத்திக்கொள்கின்ற அற்பர்களுக்காக இந்தக் குறள் இயற்றப்படவில்லை. இந்தப் பதர்கள் எக்கேடுகெட்டால் என்ன? இவர்தம் செயலால் ஆவதோ, அழிவதோ ஒன்றும் இல்லை. மன்பதையோடு (சமுதாயத்தோடு) இரண்டறக் கலந்து பழகாத இந்த மரமண்டைகள் செத்தவர்க்கு நிகர். செத்தவர் எவ்வாறு வந்து பழகமுடியும்? இவ்வாறு குறுக்குவழியில் சுருக்கப் பெருமக்கள் ஆக முயல்கின்ற இன்னோர்க்காகவே,
'சிறியரே மதிக்கு மிந்தச் செல்வம் வந்துற்ற ஞான்றே
வறியபுன் செருக்கு மூடி வாயுளார் முகராவர்
பறியணி செவியுளாரும் பயிறரு செவிடராவர்
குறியணி கண்ணுளாரும் குருடராய் முடிவரன்றே'
(பிறரை ஏறெடுத்துப் பாராமையால் குருடர்; பிறர் சொல்வதை மதித்துக் கேளாமையால் செவிடர்; பிறரிடம், பேசாமையால் ஊமையர்) என்ற குசேலோபாக்கியானப் பாடலும்,
'பெருத்திடு செல்வமாம் பிணிவங் துற்றிடின்
உருத்தெரி யாமலே ஒளி மழுங்கிடும்
மருத்து உளவோ எனில் வாகடத்திலை
தரித்திரம் என்னுமோர் மருந்தில் தீருமே'
என்ற தனிப்பாடலும் எழுந்தனபோலும். ஆனால் இக்குறள் எழுந்தது, நாட்டு மக்களின் தலையெழுத்தை விதிக்கின்ற நாட்டுத் தலைவனுக்காகவே யாம். மேலும் இக்குறள் எழுந்தது இந்தக் குடியரசுக் காலத்தில் அன்று; எல்லாம் வல்ல முடியரசன் காலத்தில். அங்ங்னமெனில் இக்காலை எப்படி நடந்துகொள்ள வேண்டும்?
வேந்தன் எளியவனாய் இருக்க வேண்டும் என்றால் இளித்தவாயனாய் இருக்க வேண்டும் என்பதன்று; கடுகடுப்பு சிடுசிடுப்பு, வீரம்-வேகம் எல்லாம் இருக்க வேண்டிய இடத்தில் இருக்கவேண்டும்; தன்னை நாடியவரிடம் இருக்கக்கூடாது. அதியமான் என்னும் அரசனை ஒளவையார் பாடியுள்ளார். 'யானைப்பொம்மையுடன் விளையாடுவதைப் போலச் சிறுவர்கள் தன்னுடன் விளையாடித் தன் கொம்பு களை நீரில் கழுவுமளவிற்குக் காட்டி நிற்கும் ஒரு பெரிய யானையைப்போல, அதியமான் தன்னைச் சேர்ந்தோரிடம் இனிமையாய்ப் பழகுவானாம்; அந்த யானை மதம்பிடித்துத் திரிந்தாற்போலத் தன் பகைவரிடம் நடந்து கொள்வானாம்' என்பது ஒளவையார் பாடலின் கருத்து. இதனை,
ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்
நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
இனியை பெரும எமக்கே மற்றதன்
துன்னருங் கடாஅம் போல
இன்னாய் பெருமகின் ஒன்னா தோர்க்கே
என்னும் புற நானூற்றுப் (94) பாடலால் அறியலாம். இப்படிப்போல, சங்க நூல்களில் இன்னும் பலப்பல எடுத்துக் காட்டுகள் உள. எனவே, மன்னன் தன்னை நாடிவந் தோர்க்கு எளிதில் கிடைக்கும் பொருளாயிருக்க வேண்டும். அவ்வாறிருந்தால்தான், மக்களின் குறைகளையும் முறை களையும் நேரில் அறிந்து போக்கவியலும், இன்னும், காட்சிக் கெளியன் என்பதற்கு, எங்கும் தோன்றிப் பழகுவான் என்றும், எங்கும் சென்று காணலாம் என்றும் மேலும் இருபொருள் கூறலாம்.
அடுத்து, கடுஞ்சொல்லன் அல்லனேல்’ என்றார் ஆசிரியர். ஏன் இன் சொல்லன்' என்றிருக்கலாமே! இல்லை; இன்சொல்கூட வேண்டியதில்லை; கடுஞ்சொல் இல்லாதிருந் தால் போதும். அரசன் சில குற்றங்களைக் கண்டிக்கும் போது இன்சொல் கூறமுடியாமற் போகலாம். ஆனால் கடுஞ் சொல்லின்றி நடு நிலையில் நடந்து கொள்வது நன்று.
இந்தக் குறளினை இக்கால முறைக்கு வைத்துப் பார்ப்போம். இப்போது பொதுமக்கள் அரசாங்கத்துக்கு ஒரு குறை தெரிவித்தால், அது பல கைக்கு மாறிப் பதிலுரு வத்தில் மக்களின் கைக்கு வரப் பல நாட்கள் (திங்களும்) ஆகலாம். அந்தத் தாள்கட்டு 'சிவப்பு நாடாவால் கட்டப் பட்டுக் கிடக்கும். இதற்குத்தான் 'சிவப்பு நாடாமுறை" என்று பெயர். இந்நிலை கூடாது. மக்கள் வேண்டுகிற குறைகளையும் வெளியிடுகின்ற முறைகளையும் அரசன் நேரில் அறிந்து உடனுக்குடன் ஆவன புரியவேண்டும், அதாவது சிவப்பு நாடா முறை ஒழிய வேண்டும் என வள்ளுவர் கூறுகின்றார். இப்போது அரசியலார் இதில் கண் செலுத்தியிருப்பதாகத் தெரிகிறது.
அறத்துப்பால்
இல்லறவியல் - இல்வாழ்க்கை
அறத்தாறும் புறத்தாறும்
'அறத்தாற்றி னில்வாழ்க்கை யாற்றிற் புறத்தாற்றிற்
போஒய்ப் பெறுவ தெவன்'
(பதவுரை) அறத்தாற்றின் - அறவழியிலே, இல் வாழ்க்கை ஆற்றின் = (ஒருவன்) இல்லறத்தை நடத்துவானே யாயின், புறத்தாற்றில் = அறவழிக்குப் புறவழியான மறவழியில் அதாவது தீயவழியில், போஒய்ப் பெறுவது = சென்று பெறக்கூடிய நன்மை, எவன் = என்ன? (ஒன்றுமில்லை).
(விளக்கவுரை) அற ஆறு - அறத்தாறு; புற ஆறு க புறத்தாறு. அறத்துக்குப் புறம் அதாவது புறம்பு மறம் அதாவது தீமை. ஆறு-வழி, நெறி. 'போய்' என்பதுதான் போஒய்" என்றாயிற்று. எவன், என்ன, என் என்னுஞ் சொற்கள் ஒரே பொருள் உடையவை. எவன் என்பது பழைய வழக்கு.
உலகில் சிலரது குடும்ப வாழ்க்கை செம்மையுற நடத்தலைக் காண்கின்றோம். அந்தக் குடும்பத்தாரிடைக் குறையொன்றுங் கூறவியலாது. கணவன் மனைவி ஒற்றுமை, பெற்றோர் பிள்ளை ஒற்றுமை, விருந்தோம்பல், சுற்றம் தழுவல், பிறர்மனை நயவாமை, கள்-களவு-பொய்சூது முதலியன இன்மை, இன்பத்தில் துள்ளாமை, துன்பத்தில் கலங்காமை முதலிய பண்புகளுடன் வாழ்தல் தான் 'அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றுதல்' என்பது. இதற்கு எதிர்மாறான வாழ்க்கை புறத்தாற்றில் போகும் இல்வாழ்க்கை” யாகும். பெரும்பான்மையோர்க்கு அறத் தாற்று இல்வாழ்க்கையில் இன்பமோ, பெருமையோ, விறுவிறுப்போ இருப்பதாகத் தெரியவில்லை; அன்னோர்க்குப் புறத்தாற்று இல்வாழ்க்கையிலேயே பூரிப்புப் பொங்கு கிறது; இன்பங் கொழுந்து விடுகிறது; விறுவிறுப்பு முறுக் கேறுகிறது. ஆனால், புறத்தாற்று இல்வாழ்க்கை முதலில் முன்னேற்றமாய்த் தென்படினும் பின்னர்க் கவிழ்த்து விடும்; ஆதலின் அறத்தாறே என்றும் நின்று நிலைத்து நீடிக்கும் என எச்சரிக்கின்றது இந்தக் குறள்.
(மணக்குடவர் உரை) இல்வாழ்க்கையாகிய நிலையை அறநெறியிலே செலுத்தவல்லவனாயின், புறநெறியாகிய தவத்தில் போய்ப் பெறுவது யாதோ?
(பரிமேலழகர் உரை) ஒருவன் இல்வாழ்க்கையை அறத்தின் வழியே செலுத்துவனாயின், அவன் அதற்குப் புறமாகிய நெறியில் போய்ப் பெறும் பயன் யாது? புறத்தாறு-இல்லைவிட்டு வனத்துச் செல்லு நிலை.
(ஆராய்ச்சி விரிவுரை) இந்தக் குறளில் அறத்தாறு புறத்தாறு என இரண்டு நெறிகள் பேசப்பட்டுள்ளன. அறநெறிக்குப் புறநெறி (எதிர்மாறான நெறி) மறநெறி (தீய வழிகள்) என இயற்கையாய்ச் சொல்லமைப்புதொடர் அமைப்புகளை ஒட்டி யான் உரை எழுதினேன். ஆனால் பழைய உரையாசிரியர்கள், இங்கே எனக்கு மேல் பெரும் புரட்சிப் பொருள் புகன்றுள்ளனர். அவர்தம் துணிவைப் பாராட்டுகிறேன். புறத்தாறு என்பதற்கு, இல்லற வாழ்க்கைக்குப் புறம்பான துறவற வாழ்க்கை தவவாழ்க்கை என அவர்கள் பொருள் எழுதியுள்ளனர். நல்லமுறையில் இல்வாழ்க்கை நடத்தினால், துறவறத் திற்குச் சென்றுதான் தீரவேண்டும் என்பது கட்டாயம் இல்லை; துறவறத்திற்குச் சென்று பெறக்கூடிய நன்மைகளையெல்லாம் இவ்வில்லறத்திலேயே பெறலாம் என்பது அவர்தம் கருத்து. உண்மைதானே!
உள்ளத்தில் ஒழுங்கு இல்லாமல், முற்றத் துறந்த முனிவரெனச் சொல்லிக்கொண்டு, காட்டில் திரிந்துதான் என்ன பயன்? காற்றை உண்டுதான் என்ன பயன்? கந்தலைக் கட்டி ஒட்டைச் சுமந்து இரந்து உண்டுதான் என்ன பயன்? ஒன்றும் இல்லை. எல்லாம் வெளிப்பகட்டே! ஆனால், பெண்ணுடன் விட்டிலே யிருந்து சிற்றின்ப வாழ்க்கையில் ஈடுபட்டிருந்தாலும், உள்ளத்தில் ஒழுங்கு உடையவர்கள் பேரின்பத்தையும் பெறுவார்கள். இதனை முற்றத் துறந்த முனிவரும் நுகர்ந்து கண்டவரும் (அனுபவ சாலியும்) ஆகிய பட்டினத்தாரே பகர்ந்துள்ளார்:
‘காடே திரிந்தென்ன காற்றே புசித்தென்ன கங்தை சுற்றி
ஒடே எடுத்தென்ன உள்ளன்பு இலாதவர் ஓங்கு விண்ணோர்
நாடேய் இடைமரு தீசர்க்கு மெய்யன்பர் காரியர்பால்
வீடே யிருப்பினும் மெய்ஞ்ஞான வீட்டின்பம் மேவுவரே'
என்பது பட்டினத்தடிகளின் பாடல். (நாரியர்= பெண்டிர்) பெண்ணுடன் இருப்பவர்கள் வீட்டுலகப் பேரின் பத்தையும் பெறுவார்கள் எனில், இவ்வுலக இன்பங்கள் எல்லாவற்றையுங்கூட எய்த முடியும் என்பதில் எள்ளளவு ஐயமும் இல்லை யன்றோ? இன்னும் இப்பாடலுக்கு, வீட்டுலகம் (மோட்சம்) சென்று பெறும் பேரின்பத்தை, இவ்வுலகிலேயே இல்லறத்தில் மனைவியுடன் இருந்து வாழ்ந்துகொண்டே பெற்றுவிடலாம் என்றும் பொருள் உரைத்துக் கொள்ளலாம். இந்தப் பாடலுக்கு எடுத்துக் காட்டு வேண்டுமானால் திருவள்ளுவர் வாழ்க்கை வரலாறே போதுமே!
எனவே, பழைய உரையாசிரியர்கள் கூறியுள்ள இந்தப் புரட்சியான கருத்து நன்றாய்த்தான் உள்ளது. வள்ளுவரே பின்வரப்போகும் ஒரு குறளில் இந்தப் புரட்சியைக் கையாண்டுள்ளார். அந்தப் புரட்சியின் அனல் இங்கேயும் வீச, உரையாசிரியர்கள் இங்கேயே குளிர்காயத் தொடங்கிவிட்டனர். ஆயினும், இந்தப் பொருளுக்கு இந்தக் குறள் அமைப்பு இடம் தரவில்லை என்றே உணர்கிறேன். அறத்தாறு என்று சொல்லி, பின் புறத்தாறு என்றால், அது அறநெறிக்குப் புறம்பான மறநெறிதான். புறவாழ்க்கை என்று சொல்லியிருப்பின், இல்வாழ்க்கைக்குப் புறம்பான துறவு வாழ்க்கை எனப் பொருள் கொள்ளலாம், அவ்வாறு இல்லையாதலின், பழைய உரை பொருந்தாது என்பது இப்போது புரிகிறது. பிறர்தம் மதம் மேற்கொண்டு களைவு" என்னும் கொள்கையைப் பின்பற்றி யான் இக் குறளுக்கு உரை எழுதியிருக்கும் நுணுக்கத்தை இலக்கணம் கற்றோர் உணர்வர். தீயன கண்டிப்பதற்கும் இடம் இது.
இந்தக் குறளில் போஒய்' என ஒரு சொல் உள்ளது. இதன் உண்மையான உருவம் போய்' என்பதுதான். இதன் நடுவே 'ஒ' என்னும் ஒர் எழுத்து சேர்ந்துள்ளது. இந்த எழுத்துக்கும் இங்கே தனி ஒலி இல்லை. 'போ' என்பதை நீட்டிச் சொல்லும்போதே ஒ' என்பதற்கும் சேர்த்து நீட்டிவிட வேண்டும். போ-ஒய்' எனப் பிரித்துப் படிக்காமல், போஒய் என ஒரே நீட்டாய் நீட்டிச் சொல்லி விட வேண்டும். போ' என்பதில் உள்ள (ப் + ஒ) உயிர் எழுத்தின் அளவை மிகுதியாக எடுத்து ஒலிப்பதற்கு அறிகுறியாக ஒ' என்பது சேர்க்கப்பட்டது. ஆதலின், இதனை இலக்கணத்தில் உயிர் அளபெடை' என்பர். இங்கே இந்த உயிர் அளபெடை இடம் அடைப்பதற்காகக் கையாளப்பட்டது - என்பது இலக்கண நூலாரின் கருத்து. இதை நான் ஒத்துக் கொள்வதில்லை. இடம் அடைப்பதற்கு வள்ளுவர்க்கு வேறு சொல் கிடைக்காதா? எனவே, ஒரு பொருள் கருதியே வள்ளுவர் இங்ஙனம் அமைத்துள்ளார். அதாவது, அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றாதவர்களை நோக்கி, நீங்கள் புறத்தாற்றில் போஒய் கிழிப்பது என்ன? என்று நீட்டி நெளித்து இளித்துக் காட்டி ஏளனம் செய்கி றார். இந்த 'ஒ' என்னும் ஓர் எழுத்தை இடையில் புகுத்தி அளவை மிகுதியாக எடுத்ததில் இத்துணைப் பொருட்சுவை பொதிந்து கிடப்பதை நுனித்துணர்ந்து மகிழ்க.
காமத்துப்பால்
களவியல் - தகையணங் குறுத்தல்
ஓஒ உடைந்ததே
(தெளிவுரை) போர்க்களத்தில் பகைவரும் நாணி அஞ்சத்தக்க என் வலிமை, இப்பெண்ணின் நெற்றியழகைக் கண்டதும் உடைந்து அழிந்து விட்டதே.
'ஒண்ணுதற்கு ஒஒ உடைந்ததே ஞாட்பினுள்
கண்ணாரும் உட்குமென் பீடு'
(பதவுரை) ஞாட்பினுள் = போரிலே, நண்ணாரும் = பகைவரும், உட்கும் = நாணி அஞ்சக்கூடிய, என் பீடு = எனது பெரிய வல்லமை, ஒண்துதற்கு=(இந்தப் பெண்ணின்) அழகிய நெற்றிக்கு (அதாவது, நெற்றியைக் கண்டதும்), ஒஒ = ஐயையோ, உடைந்ததே = உடைந்து ஒழிந்து விட்டதே - என்செய்வேன்.
(ஒண்மை=அழகு, நுதல் = நெற்றி, ஞாட்பு = Gf. Irrtř; நண்ணார் = பகைவர்; உட்குதல் = அஞ்சுதல்- நாணுதல்; பீடு = பெருமை, வலிமை.)
(மணக்குடவர் உரை) இவ்வொள்ளிய துதற்கு மிகவுங் கெட்டது போரின்கண் கிட்டாதாரும் உட்கும் எனது வலி.
(பரிமேலழகர் உரை) போர்க்களத்து வந்து நேராத பகைவரும் நேர்ந்தார் வாய்க் கேட்டஞ்சுதற் கேதுவாய என்வலி, இம்மாதர தொள்ளிய நுதலொன்றற்குமே அழிந்து விட்டது.
(ஆராய்ச்சி விரிவுரை), ஆசிரியர் இந்தக் குறளில் உயிர் இயல்புகளுள் ஒன்றினைப் பிழிந்து வைத்துள்ளார். இக் குறளைப் படிக்குங்கால், அந்தக் கருத்தே என் நெஞ்சை அள்ளுகிறது. உயிர்களின் உள்ள இயல்பை இங்கே ஒளிப்பதில் ஒரு சிறிதும் பயனில்லை; தெள்ளென எடுத்துக் காட்டுவல். காலனுக்கும் அஞ்சாத கடுங்கண் மறவர்கள் கூட, கருத்துக் கினிய காதல் நல்லாரிடம், வறுக்குஞ் சட்டியில் இட்ட வெண்டைக்காய் போல வாடி வதங்கிச் சுருண்டு மடங்கி விடுகின்றனரே! பறவை, விலங்குகளி னிடமும் இவ்வியல்பைக் காணலாம். இஃதோர் உயிரியல்பு, இன ஊக்கங்களுள் ஒன்றாகிய காதல் ஊக்கம்' (Mating) என உளநூலார் இதனைக் குறிப்பிட்டிருப்பது நினைவு கூரத் தக்கது. போர்க்களத்தில் பகைவர்களையெல்லாம் கலங்கச் செய்யும் பேராண்மையுறு தலைமகன், ஒரு பெண்ணின் நெற்றி யழகுக்கு உடைந்தே போன எளிமையை என்னென்பது! அலுவலகத்தில் ஆரவாரஞ் செய்கின்ற ஐயா அடுப்பங் கரையில் அம்மாவிடம் அடக்கந்தான்' என்று உலகியலில் பேசப்படுவதும் இந்தக் கருத்தைத் தழுவியது தானோ?
காதல் சுவையில் விறுவிறுப்புடையவர்கள் இந்தக் குறளை ஊன்றிக் கவனிக்கவேண்டும். இன்று சில நாடகக் கதைகளாலும் நாட்டியங்களாலும் பரப்பப்படுகின்ற நாய்க் காதல் அன்று இக்குறளில் சொல்லப்படுங் காதல். பகைவர் களை முறியடித்துத் தாய் நாட்டுக்குத் தொண்டாற்றும் தறுகண் மறவனது தமிழ்க் காதலாகும் இது. வீரமற்ற கோழை நெஞ்சங்களுக்கு-சேலை கட்டிய உருவங்களின் பின்னே மோப்பம் பிடித்துத் திரிந்து வெம்பிப்போகும் இளம் பிஞ்சுகளுக்கு நினைவிருக்கட்டும் இது! இன்னோர்க்குக் காதலைப்பற்றி நினைக்க உரிமை ஏது?
இந்தக் குறளில் 'நண்ணாரும்' என்ற சொல்லுக்கு, போர்க்களத்தில் வந்து நண்ணாத-சேராத பகைவர்' எனப் பரிமேலழகர் உரை பகர்ந்துள்ளார். இவ்வாறு பொருள் கூறுதல் தமிழிலக்கிய மரபாகாது. இவர் இவ் வாறு பொருள் உரைத்ததற்குக் காரணம், நண்ணாரும் (நண்ணார்-உம்) என்பதில் உள்ள 'உம்' மை இறந்தது தழுவிய எச்ச உம்மை எனக் கொண்டதுதான். அண்ணனும் வந்துவிட்டார்’ என்றால், இதற்குமுன்பு இன்னும் யாரோ வந்திருக்கிறார் என இறந்துபோன - அதாவது நடந்துபோன எச்சமாய் உள்ள-அதாவது மறைந்திருக்கிற மற்றொரு கருத்தையும் தழுவுகிற 'உம்' தான் இறந்தது தழுவிய எச்ச உம்மை (உ.ம்)" எனப்படுவது. எனவே நண்ணாரும் அஞ்சுவர் என்றால், இன்னும் யாரோ அஞ்சி யுள்ளார் என மனத்திற் கொண்டு, போர்க்களத்தில் வந்த பகைவர் அஞ்சுவதல்லாமல், வராத பகைவரும் அஞ்சுவர் என்று பரிமேலழகர் கூறியுள்ளார். தமிழில் நண்ணார்' என்ற சொல்லுக்கு இஃதன்று பொருள். அதாவது, நண்ணுபவர்-நண்ணாதவர் என்றால், போர்க்களத்தில் வருபவர்-வராதவர் எனல் தமிழ் மரபு அன்று. நண்ணுபவர்-நண்ணாதவர் என்றால், வந்து நட்பு கொள்பவர்-கொள்ளாதவர் எனலே சரி.
எப்போதுமே பகைவன் அஞ்சமாட்டான் - அவ்வாறு அஞ்சுபவன் பகைவனாக மாட்டான். தன்னால் முடியாவிட் டாலும் பகைவன் பணியமாட்டான். அஞ்சுபவனே பணிவான் - பணிபவனே அஞ்சுவான் - அடிமையே அஞ்சுவான். ஆனால், நண்ணாரும் உட்கும் பீடு' என்பது குறட் பகுதி. இங்கே நண்ணாரும் என்பதிலுள்ள 'உம்' "உயர்வு சிறப்பு உம்மை யாகும். அதாவது, அஞ்சாத உயர்ந்த சிறப்புடைய பகைவரையும் அஞ்சி வெட்கித் தலைகுனியச் செய்கின்ற அவ்வளவு பெரிய பீடு எனப் பொருள் கொள்க. 'நண்ணாரும் உட்கும் பீடு' என்பது, 'குறவரும் மருளும் குன்று என்பது போன்ற தொடர் என்பதைப் பரிமேலழகர் உணராவிடினும், இலக்கணங் கற்ற ஏனையோராயினும் உணர்க. மேலும், இங்கே உட்குதல் என்றால், வெறும் பணிவு அச்சம் அன்று; தன் முடியாமைக்கு நாணித் தலை குனியும் படியான தோல்வியச்சமே உட்குதல் ஆகும்.
அடுத்து, பீடு' என்னும் சொல்லுக்குப் பொருள் காண வள்ளுவர் அகராதி'யையே புரட்டுவோம். வள்ளுவர் மற்றோரிடத்தில் ஏறுபோல் பீடு நடை' என்றுள்ளார். ஏறு=ஆண்சிங்கம். ஆண்சிங்கம் போன்ற பெருமித நடை என்பது அதன் பொருள். எனவே, அனைவரையும் ஆட்டிப் படைக்கும் ஆண்பிள்ளைச் சிங்கம் ஆகிய தலைமகன், ஒருத்தியின் நெற்றியழகுக்குத் தன் ஆண்மையைக் கோட்டை விட்டுவிட்டான், என்பது புலனாகிறது.
இக்குறளில் உள்ள ஒஒ' என்பது உயிர் அளபெடை. இலக்கணக்காரர்கள் இப்போது சொல்லட்டும். இந்த உயிரளபெடை இடம் நிறைப்பதற்காகவா என்று? ஒஒ' என்று நீண்ட நேரம் கத்திக் கதறுவதுதானே இதன் பொருள்! இந்த ஒ' என்னும் இடைச்சொல் கழிவிரக்கப் பொருளில் உள்ளது. முன்பு இருந்து, இப்போது கழிந்து போனதற்காக வருந்துவதுதான் கழிவிரக்கம்'. முன் பிருந்த தனது பீடு இப்போது ஒழிந்து போனதாக ஒஒ' என வருந்துகிறான் அல்லவா? இந்த 'ஒ' என்னும் இடைச் சொல்லும், நண்ணாரும் என்பதிலுள்ள உம் இடைச் சொல்லும் கப்பலில் 'சுக்கான் திருப்புவது போன்ற இலக்கணத் திருப்பங்களாம். நண்ணாரும் என்பதிலுள்ள 'உம்' என்பது தலைவனுக்கு முன்பிருந்த பெருமையையும், 'ஒஒ' என்பது இப்பொழுது ஏற்பட்டுள்ள சிறுமையையும் எடுத்துக்காட்டும் இரு துருவங்களுமாகும்.
அடுத்து, உடைந்ததே என்னும் சொல்லைக் காண் பாம், உடைதல் என்பது, அழிவின் இறுதி எல்லையே. ஒரு கலமோ (பாத்திரமோ), ஒரு கண்ணாடிப் பொருளோ ஒட்டையானாலும் கீறல் விழுந்தாலும் ஒரளவு பயன் படுத்த முடியும்; ஆனால் உடைந்து போயின் முடியவே முடியாதன்றோ? இப்பொழுது காண்க, பீடு உடைந்ததே' என்பதிலுள்ள பொருள் நுணுக்கத்தை! மேலும், 'உடைந்தது’ என்பதோடு நில்லாமல், இறுதியில் "ஏ" சேர்த்து 'உடைந்ததே' என்று கூறியிருப்பது, உடைந்தே விட்டது என்ற உறுதிப் பாட்டையும், உடைந்தது உடைந்ததுதானே என்ற வருத்தத்தின் அழுத்தத்தையும் அறிவிப்பதை ஒர்க!
ஒருவரின் முகக் கவர்ச்சிக்கு நெற்றியின் அழகிய அமைப்புச் சிறந்ததொரு காரணம் என்னும் உடற்கூற்றியல்பு இக்குறளால் விளங்குகிறதன்றோ? மயக்கத்தைப் போக்கும் திருநீறு (விபூதி), மாயை' என்னும் பெண்ணின் மயக்குகிற நெற்றியில் இடப்பட்டதும், காணும் இளைஞர்களின் காமமயக்கத்தை மிகுதியாக்கிவிட்டது என்னும் பிரபுலிங்க லீலை நூற்கருத்து ஈண்டு ஒப்பு:நோக்கற்பாலது. (செய்யுள்191).
படாஅ முலைமேல் துகில்
(தெளிவுரை) இந்தப் பெண்ணின் சாயாத கொங்கை களின் மேல் அணியப்பட்டுள்ள ஆடையானது, மதம் பிடித்த யானையின் மத்தகப்பகுதியில் அணிந்துள்ள கட்படாம் போன்றுள்ளது.
'கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேற் றுகில்'
(பதவுரை) மாதர் = இந்தப் பெண்ணுடைய, படாஅ முலைமேல் துகில்=சாயாத கொங்கைகளின்மேல் அணிந் துள்ள (மாராப்புத்) துணியானது, கடாஅ = மதமுடைய, களிற்றின்மேல்=ஆண் யானையின் மேல் அணிந்துள்ள, கட்படாம்=கட்படாம் போன்றுள்ளது.
(மணக்குடவருரை) மதயானை முகத்துக் கண்மறை வாக இட்ட படாம்போலும், மாதரே, நினது படாமுலை மேல் இட்ட துகில்,
(பரிமேலழகருரை) இம்மாதர் படாமுலைகளின் மேலிட்ட துகில், அவை கொல்லாமற் காத்தலின், கொல்வ தாயமதக்களிற்றின் மேலிட்ட முகபடாத்தினை யொக்கும்.
(விளக்கவுரை) கடாம்=மதம், களிறு=ஆண்யானை, கட்படாம் = யானை முகத்தில்-கண்பகுதியில் அணியும் உடை, படுதல் = சாய்தல்-படா - சாயாத = தளராத; துகில் = மெல்லிய பருத்தியாடை. கடாஅ, படாஅ என்னும் உயிர் அளபெடைகள், யானையின் மதத்தின் மிகுதியையும் கொங்கையின் தளராத உறுதியையும் உணர்த்துகின்றன. ஒர் அழகிய பெண்ணின் உருவத்தை வரையும் ஓவியப் புலவன், கொங்கைகளுக்கு என்ன தோற்றம் கொடுக் கிறானோ, அதே தோற்றத்தைத்தான் புலவர்கள் இலக்கி யங்களில் சொற்களால் புனைகின்றனர். சிற்பமும் இப்படித் தான். எனவே, இது போன்ற இலக்கியப் பகுதிகளைக் கலைக்கண்கொண்டு கற்றலே நன்று! காமக் கண்கொண்டு கற்கவேண்டா! இதனை இதோடு நிறுத்திக்கொள்வோம்.
பொருட்பால்
அரசியல்-இறைமாட்சி
தான் கண்டனைத்து
(தெளிவுரை) இன்சொல்லுடன் உதவியும் செய்து மக்களைக் காக்கும் மன்னன் சொன்னால் சொன்னபடி, நினைத்தால் நினைத்தபடி இவ்வுலகம் ஆடும்.
"இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு”
(பதவுரை) இன்சொலால் = இன் சொல்லுடன், ஈத்து=ஈதலையும் செய்து, அளிக்க வல்லாற்கு=மக்களைக் காக்கவல்ல மன்னனுக்கு, இவ்வுலகு=இந்த உலகமானது, தன் சொலால்=தான் சொல்லுகிற சொல்லின்படியும், தான் கண்டனைத்து=தான் கருதுகிறபடியும் இயங்கும். (அளித்தல்=அருளுடன் காத்தல்; காணுதல் - கருதுதல்: அனைத்து=போன்றது; தான் கண்டனைத்து=தான் கருது வது போலவே நடக்கும்.)
(மணக்குடவர் உரை) இனிய சொல்லோடே கொடுத்துத் தலையளி செய்யவல்ல அரசனுக்குத் தன்னேவ லாலே இவ்வுலகம் தான் கண்டாற்போலும் தன் வசத்தே கிடக்கும்.
(பரிமேலழகர் உரை) இனிய சொல்லுடனே ஈதலைச் செய்து அளிக்கவல்ல அரசனுக்கு, இவ்வுலகந் தன் புகழோடு மேவித் தான் கருதிய வளவிற்றாம்.
(விளக்கவுரை) இந்தக் குறளில் வேந்தனுக்கு மூன்று நிலைகள் பேசப்பட்டுள்ளன. இன்சொல், ஈதல், அளித்தல் என்பன அவை. இம் மூன்றும் ஒருங்கு அமையப்பெற்ற அரசன் சொல்படியே, நினைத்தபடியே மக்கள் நடப்பர் என்பது குறட் கருத்து, அங்ங்னமெனில், இதிலுள்ள மறை பொருள் (இரகசியம்) யாது?
’பணம் பத்தும் செய்யும்', பணம் பாதாளம் வரையும் பாயும்', 'பணக்காரனைச் சுற்றிப் பத்துப்பேர் என்றும் இருப்பர்' என்னும் பழமொழிகள் அறிவிப்பது என்ன? பணம் படைத்த பலர், பணத்தை எலும்புத் துண்டாகப் போட்டு, பாமரர் முதல் படித்தவர்வரை பணியவைத்து, நீர் சொட்ட நாக்கைத் தொங்கவிட்டு வால் குழைக்கச் செய்கின்றனர் - என்பதுதானே இப்பழமொழிகளின் உட்கிடை? இந்தப் பணக்காரர்கள் காலால் இட்ட வேலையை அந்த நாய்கள் தலையால் செய்வதெல்லாம் பணம் கொடுக்கும் வரையில்தான். பாராட்டுவது எல்லாம் எதிரில் மட்டுந்தான். இதற்குக் காரணம் என்ன? பணம் கொடுப்பவர்கள் வாங்குபவரின் நன்மைக்காகக் கொடுப்ப தில்லை; தங்கள் நன்மைக்காகவே கொடுக்கிறார்கள். ஆனால், இந்தக் குறளில் குறிப்பிடப்பட்டுள்ள மன்னனிடத்தில் மக்களுக்கிருக்கும் ஈடுபாடு, மகாகனம் பண மூட்டைக்கும் உயர்திருவாளர்' எலும்புத் துண்டுக்கும் இடையே உள்ள ஈடுபாடு போன்ற தன்று. பின் என்ன? பெற்றோர்க்கும் பிள்ளைக்கும் உள்ள ஈடுபாடாகும் அது! பெற்றோர் - பிள்ளை என்ற பிறகு, விளக்கம் வேறு வேண்டியதில்லை. மன்னனும் மக்களும் அப்படித்தானே?
ஒவ்வொரு சொல்லையும் தொடரையும் ஊன்றி நோக்கல் வேண்டும். இன்சொலால் அளித்தல் - ஈத்து அளித்தல் - இன்சொலால் ஈதல் - இன்சொலால் ஈத்து அளித்தல் - இவ்வாறெல்லாம் கொண்டுகூட்டிப் பொருள் கொள்க, இந்த உயர்நிலை எல்லோர்க்கும் இயலுமா? அதனால்தான் 'வல்லாற்கு", (வல்லவனுக்கு) என்றார். இனி அடுத்த தொடருக்குச் செல்வாம்:
'தன் சொலால் தான் கண்டனைத்து இவ்வுலகு என் பதில், உலகு என்பதற்கு முன்னுள்ள "இ" (இ + உலகு = இவ்வுலகு = இந்த உலகம்) என்னும் சுட்டு, வள்ளுவர் நம் பக்கத்தில் இருந்து கொண்டு இந்த இருபதாம் நூற்றாண்டைச் . சுட்டிக்காட்டுவது போல் காணப் படுகின்றது. அதாவது, இந்த உலகம் - ஒருவரையொருவர் மதிக்காமல், ஒருவர்க்கொருவர் கட்டுப்படாமல், ஒருவரோ டொருவர் பொறாமையுடன் போட்டியிட்டுப் போர் செய்து கொள்கின்ற இந்த உலகமுங்கூட, இன்சொலால் ஈத்தளிக்க வல்லானுக்கு அடங்கிக் கட்டுப்படும் - என்னும் நுண் பொருளை இந்த இ (இவ்வுலகு) என்ற ஒரு சுட்டெழுத்து அறிவிக்கவில்லையா?
தன் சொலால்' என்பது தான் சொல்லுகிறபடி நடக்கும் என்பதைக் குறிக்கிறது. அவர் சொல்லுக்கு அங்கே நிறைய மதிப்பு உண்டு’, ‘அவர் சொல்லுக்கு அங்கே இரண்டாவது இல்லை', 'அவர் சொன்னால் போதும் அவர் சொன்னால் சொன்னதுதான்', 'அவர் ஒரு வார்த்தை சொன்னால் போதும்' ஆகிய உலக வழக்குகள் இதே கருத்தை அறிவிப்பனவேயாம்.
அடுத்து, 'தான் கண்டனைத்து' என்பது. தான் கருது கிறபடி - எண்ணுகிறபடியே உலகமும் நடக்கும் என்பது இதன் பொருள். இங்கே உளநூல் (Psychology) கருத்து ஒன்று என் உள்ளத்தை உந்துகின்றது. அதனைச் சுருங்கத் தருகிறேன்:- மக்களுக்கு இளமையிலிருந்தே - இயற்கை யிலேயே சில பொதுவான மனப்போக்குகள்' (General Tendencies) உள்ளன. அவற்றுள், ஒத்துணர்வு (Sympathy), குறிப்பு உணர்தல் (Suggestion), பின்பற்றல் (Imitation) என்பன இன்றியமையாதன. இம்மூன்றும் ஒருசார் ஒப் புமை யுடையன வெனினும், இவற்றுக்குள் வேற்றுமையும் உண்டு. ஒருவர் உணர்ச்சிகளைப் பிறரும் எதிரொலித்தல் 'ஒத்துணர்வு ஆகும். ஒருவர் எண்ணக் குறிப்புகளையும் நோக்கங்களையும் பிறரும் எதிரொலித்தல் குறிப்புணர்தல்' ஆகும். ஒருவர் செய்யும் செயல்களைப் பிறரும் செய்தல் "பின்பற்றுதல் ஆகும், இவற்றுள் நடுவண் கூறப்பட்டுள்ள 'குறிப்பு உணர்தல்' என்பது இக்குறள்ளில் எதிரொலிக் கின்ற தன்றோ? மக்களுக்குக் குறிப்புணர்தல் என்னும் மனப்போக்கு இயற்கையிலேயே அமைந்து கிடப்பதால் தான், அவர்களை, அரசியல் கட்சித் தலைவர்களும், மதத் தலைவர்களும், வாணிக விளம்பரக்காரர்களும் ஆட்டிப் படைக்க முடிகிறது. இவர்களுள்ளும், மிக்க சீரும் சிறப்பும் - பேரும் பெருமிதமும் உடையவர்களின் எண்ணப் படியே பொதுமக்கள் ஆடுவர். இதற்குத்தான் பெருமிதக் குறிப்புணர்தல் (Prestige Suggestion) என்று பெயர்.. இந்தச் சீரும் சிறப்பும்-பேரும் பெருமிதமும் யார்க்குக் கிடைக்கும்? 'ஈவார்மேல் நிற்கும் புகழ்' என வள்ளுவர் ஓரிடத்தில் கூறியுள்ளபடி இன் சொலால் ஈத்தளிக்க வல்லாரே இந்தப் பெருமிதக் குறிப்புணர்தலுக்கு இலக் கியமாவர். இதைத்தான் தான் கண்டனைத்து' என்னும் தொடர் உணர்த்தி நிற்கிறது 'யான்கண்டனையர் என் இளையரும் என்னும் பிசிராந்தையாரின் புறநானூற்றுப் பகுதியையும் நோக்குக.
’தான் கண்டனைத்து' என்பதற்கு, தான் கருதுகிறபடி மக்கள் நடப்பர் என்று பொருள் பண்ணினோம். இன்னும், தான் கண்குறிப்புக் காட்டுகிறபடி நடப்பர் என்றும் கூறலாம், மற்றும், தான் எல்லா இடங்களுக்கும் சென்று நேரில் பார்வையிட்டால் எப்படி யிருக்குமோ, அப்படியே தான் ஒரே இடத்தில் இருக்கும்போதும் எல்லாம் ஒழுங்காய் இயங்கும் என்றும் உரைக்கலாம். மேலும், காணுதல் என்பதற்குச் செய்தல் என்ற பொருளும் உண்மையின், தனக்கு எப்படி எப்படி இருக்கவேண்டுமோ, அப்படி அப்படி எல்லாம் புதிதாய் ஓர் உலகத்தைச் செய்து அமைத்துக் கொண்டதுபோல் இவ்வுலகம் இருக்கும் என்றும் உரை கூறலாம். செய்து வைத்தாற்போல இருக்கிறது' என்று உலகவழக்கில் கூடச் சொல்லுகிறோம் அல்லவா? இன்னும் இப்படி எத்தனை நயங்கள்! எத்தனை கற்பனைகள்! அம்மம்மா!
அறத்துப்பால்
இல்லறவியல்-இல்வாழ்க்கை
முயல்வாருள் எல்லாம் தலை
"இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவ னென்பான்
முயல்வாரு ளெல்லாங் தலை”
(பதவுரை) இயல்பினான் = இயல்பான ஒழுக்க முறை யுடன், இல் வாழ்க்கை வாழ்பவன் என்பான் = குடும்ப வாழ்க்கை நடத்துபவன் என்று புகழ்ந்து பேசப்படுபவன், முயல்வாருள் எல்லாம் தலை=(வேறு நன்மை பெற முயல்ப வர்களுக்குள் எல்லாம் முதன்மையானவன் ஆவான், (இயல்பினான் என்பதின் இறுதியிலுள்ள ஆன் மூன்றாம் வேற்றுமை உருபு.)
(மணக்குடவர் உரை) நெறியினானே யில்வாழ்க்கை வாழ்பவ னென்பான், முயல்வா ரெல்லாரினுந் தலையாவான். முயறல்-பொருட்கு முயறல்.
(பரிமேலழகர் உரை) இல்வாழ்க்கையினின்று அதற்குரிய இயல்போடு கூடி வாழ்பவனென்று சொல்லப்படுவான், புலன்களை விட முயல்வா ரெல்லாருள்ளும் மிக்கவன்.
(விளக்கவுரை) இக்குறளில் உள்ள இல்வாழ்க்கை வாழ்பவன்' என்னும் தொடர் ஒர் அரிய அணுத்தொடர் ஆகும். இத்தொடரில் இரண்டு முறை வாழ்(தல்) என்னும் சொல் வந்துள்ளது. இதற்கு வள்ளுவர் அகராதியில் என்ன பொருள்? கணவனும் மனைவியுமாய் இல்லில் இயைந்து வாழ்தலையே வாழ்தல் என வள்ளுவர் கூறியிருப்பதாகத் தெரிகிறது. இல்வாழ்க்கையே வாழ்க்கையாக அவர்க்குப் புலப்பட்டிருக்கிறது. மற்ற வாழ்க்கையெல்லாம், 'வாழாது வாழ்கின்றேன்’ என ஒரு காரணம் பற்றி ஓரிடத்தில் மணிவாசகர் கூறியிருப்பது போல, வாழாத வாழ்க்கையே போலும் வள்ளுவர் வாழ்க்கைத் துணைநலம்’ என்னும் பகுதியில், மனைவியை வாழ்க்கைத்துணை எனக் கூறு கிறார். அங்ங்னமெனில், "வாழ்க்கை என்பது எது? என நாமே உய்த்துணர்ந்து கொள்ளலாமே. இல்வாழ்க்கையே வாழும் வாழ்க்கை என்னும் கருத்தை உள்ளடக்கியே இல் வாழ்க்கை வாழ்பவன்' என இக்குறளில் ஆசிரியர் கூறினார். (வாழ்க்கையை வாழ்தல்-அதாவது வாழும் வாழ்க்கை).
இத்தொடரில் இன்னும் ஒரு நயங் காணலாம். எங்கள் அகத்துக்காரரும் கச்சேரிக்குப் போகிறார் என்பது போல இல்வாழ்க்கையில் உள்ள எல்லோருமே வாழ்ந்தவராகி விடு வார்களா? இல்லறமென்னும் நல்லறத்தைப் புல்லறமாக்கிக் கொண்டவர்கள் எத்துணையோ பேர்! 'கலியாணம் பண்ணியும் பிரமச்சாரி' என்றபடி, பேருக்குத் திருமணம் செய்து கொண்டு பேதுறுகின்ற பேதைப்பித்தர்கள் எத்துணையோ பேர்! இவர்களெல்லாம் இல்வாழ்க்கை வாழ்பவராக மாட்டார்கள். இல்வாழ்க்கை வாழவேண்டிய இயல்பின்படி, வாழ்பவரே வாழ்வாராவர் என்ற கருத்தையும் அடியொற்றித்தான் இயல்பினான் இல் வாழ்க்கை வாழ்பவன்' என்றார் வள்ளுவப் பெருமானார்.
இல்வாழ்க்கை வாழவேண்டிய இயல்பு' என்பது என்ன? இயல்பு என்பதற்கு, இயற்கை, தன்மை, உண்மை, ஒழுக்கம், நேர்மை, முறை என்றெல்லாம் பல பொருள் உண்டு. போதிய அளவு உழைத்து, உண்டு, உடுத்து, நுகர்ந்து, உறங்கி, பிறருக்கும் உதவி வாழும் வாழ்வு இயல்பான வாழ்வுதான். இக்காலத்தில் பலரிடம் செயற்கையான போலி வாழ்வே காணப்படுகின்றதன்றோ? எண்ணத்திலும் பேச் சிலும் செயலிலும் இயல்பான உண்மையின்றி, செயற்கையில் உண்மைபோல் நடிக்கின்ற போலித்தனமே காணப் படுகின்றதல்லவா? இது கூடாது. செயற்கையான போலித் தனமின்றி, இயல்பான ஒழுங்கு முறையுடன் இல்வாழ்க்கை வாழ்பவன், வேறு துறைகளில் முயல்பவர்களுக்கெல்லாம் தலைமையானவன் ஆவான் என்பதே இக்குறட்கருத்து.
இக்குறளில் உள்ள முயல்வார்' என்பதற்கு, உலகியல் பொருளியல் துறையில் முயலுபவர் என்னும் கருத்தில் மணக்குடவரும் தவநெறியில் முயலுபவர் என்னும் கருத்தில் பரிமேலழகர் போன்றோரும் பொருள் கூறியுள்ளனர். இயல்பான இல்வாழ்க்கை யல்லாத வேறு துறைகளில் முயல்பவர் என்று நாம் பொருள் எடுத்துக்கொள்ளலாமே.
உலகில் எந்த உயிர்ப்பொருளை எடுத்துக்கொண்டாலும் ஆணும் பெண்ணுமா யிருப்பதையும், இவ்விரண்டின் சேர்க்கையாலேயே தோற்றம் ஏற்படுவதையும் நாம் கண்டு வருகின்றோம். எனவே, இயற்கைப் படைப்பின் அமைப்பு நோக்கம், ஈரினமும் இயல்பாய் இணைந்து வாழ்தலே? இவ் வாறு அமையாத வாழ்வெல்லாம் அரைக்கிணறு தாண்டும் அரைகுறை வாழ்வே மனைவி மக்களுடன் வாழ்ந்தறி யாதவன், பெரிய பணக்காரனாய் அல்லது பெரிய படிப்பாளியாய் அல்லது பெரிய துறவியாய் நூறாண்டு வாழ்ந் திருந்தாலும் அவனது வாழ்வு பதினெட்டு வயதுப் பையனது வாழ்வேயாகும். சாவு - வாழ்வுக் காரியங்களில் சமூகம் அவனுக்கு முதன்மை கொடுப்பதில்லை. நல்ல பிள்ளை குட்டி பெற்ற நரைத்த தலைகளையே நாடுவர் மக்கள், அவர்களுக்குத்தான் மனித வாழ்வின் முழுப் பூட்டுத்திறப்பும் தெரியும். அவர்களே - அவர்தம் அறிவுரைகளே மற்றவர்க்கு வழிகாட்டியாகும். எனவேதான், இயல்பினால் இல் வாழ்க்கை வாழ்பவன், அங்ஙனம் வாழாது வேறு வழியில் வாழ முயலுகின்ற மற்றவர்க்கெல்லாம் தலைமை தாங்கு கிறான். இப்போது புரிந்திருக்குமே இக்குறளின் உட்கிடை!
நோற்பாரின் கோன்மை உடைத்து
”ஆற்றி னொழுக்கி யறனிழுக்கா வில்வாழ்க்கை
நோற்பாரின் கோன்மையுடைத்து"
(பதவுரை) ஆற்றின் ஒழுக்கி=(ஒர் இல்லறத்தான் தன் -மனைவி மக்கள், துறவிகள் முதலானோரையும்) நல்ல வழியில் நடக்கச் செய்து, அறன் இழுக்கா இல்வாழ்க்கை = (தானும்) நல்லறத்திலிருந்து தவறாது நடத்துகின்ற இல் வாழ்க்கையானது, நோற்பாரின் தவஞ்செய்வாரைக் காட் டிலும், நோன்மை உடைத்து = தவவலிமை உடையதாகும், (ஆற்றின் - ஆறு = நல்ல நெறி; இழுக்குதல் = தவறுதல் - இழுக்கா(த) = தவறாத.)
(மணக்குடவர் உரை) பிறரையும் நன்னெறியிலே ஒழுகப் பண்ணித் தானும் அறத்தின்பா லொழுகும் இல் வாழ்க்கை தவஞ்செய்வாரினும் வலியுடைத்து.
(பரிமேலழகர் உரை) தவஞ்செய்வாரையுந் தத்தம் நெறியின்க னொழுகப் பண்ணித் தானுந் தன்னறத்திற் றவறாத இல்வாழ்க்கை அத்தவஞ் செய்வார் நிலையினும் பொறையுடைத்து.
(விளக்கவுரை) ஆற்றின் ஒழுக்கி' என்பது குறட் பகுதி. ஒழுகுதல் தன்வினை - அதாவது தான் நடத்தல்: ஒழுக்குதல் பிறவினை - அதாவது பிறரை நடக்கச் செய்தல். குறளில் ஒழுக்கி எனப் பிறவினையாகக் கூறியிருத்தலின், 'மனைவி, மக்கள் முதலிய மற்றவரை நல்ல வழியில் நடக்கச் செய்து' என்று பொருள் பண்ண வேண்டும். இல் வாழ்க்கை நோன்மை உடையது என்றால், இழ்வாழ்வான் நோன்மை உடையவன் என்பது கருத்து.
நோன்மை என்றால் தவவன்மை, தவம் என்றால் ஏதோ தனிப்பட்டது - அப்பாற்பட்டது என்று எவரும் தயங்கவேண்டா. ஒழுங்கான முறையில் இல்லறம் நடத்து வதும், ஒர் உயர்ந்த தவமே. மேலும் இந்த இல்லறத் தவம், துறவிகளின் துறவுத்தவத்தைவிட வலியதும் சிறந்ததும் ஆகும். சமயநூலார் இல்லறத் துறவு’ என்று சொல்வது இந்த இல்லறத் தவத்தைத்தான் என்பது எனது கருத்து. இல்லறத் துறவு என்றால் வேறு எதுவும் இல்லை; பொழுது விடிந்து பொழுது போகும் வரையும் தம் மனைவி மக்களை மட்டுமே கட்டியழுது கொண்டு - அவர்கட்கு வேண்டிய வற்றைமட்டுமே தேடி உழன்று கொண்டு கிடக்காமல், மற்ற மன்பதைக்கும் (சமுதாயத்துக்கும்) தொண்டாற்று தலே இல்லறத்துறவு. இத்தகைய தொண்டு புரிவோரே "இல்லறத் துறவிகள்' என்பது கருத்து.
'தவஞ்செய்வார் தங்கருமம் செய்வார்' என மற்றொரு குறளில் கூறியுள்ளபடி, தாம் மட்டுமே தனியே அமர்ந்து "முக்கு விழிகளை' மூடிக்கொண்டு செய்யும் துறவுத் தவத்தைவிட, மனைவி மக்களுடன் மக்கள் சமுதாயத்துக் கும் தொண்டாற்றும் இல்லறத்தவம் எவ்வளவோ சிறந்தது தானே! இது குறித்தே, இல்வாழ்க்கை நோற்பாரின் நோன்மை யுடைத்து' என்றார் வள்ளுவர். ஆனால், "எல்லோரையும் ஆற்றின் ஒழுக்கித் தானும் அறனிழுக்காது நடத்துகின்ற் இல்வாழ்க்கையே நோற்பாரின் நோன்மை யுடைத்து' என்பதும் ஈண்டு நினைவிருக்க வேண்டும். எனவே, இல்லறத் தவத்துக்குரிய இலக்கணம், அனைவர்க்கும் ஆகவேண்டிய உதவிகளைச் செய்து அவரவரையும் நல்ல வழியில் நடத்துதல், தானும் நல்ல வழியில் நடத்தல் என்னும் இரண்டும் உடைமை எனத் துணிக.
இதைத்தானே பிசிராந்தையார் என்னும் சங்கப் புலவர் செய்தார்! அவர் தமது பண்பாட்டால் மனைவி, மக்கள், தொழிலாளர் முதலிய எல்லோரையும் திருத் தினார்; அரசனும் நல்லவன்: ஊராரும் சான்றோர்கள்; அதனால் அமைதியான நல்ல சூழ்நிலையில் நல்வாழ்வு வாழ்ந்தார் புலவர். இந்த இனிய இல்லறவாழ்வால், வயது மிக நிரம்பியும், என்றும் நரைதிரை யில்லாத இளைஞராகவே அவர் காணப்பட்டார். என்றும் இளமை பெற்ற இதனினும் பெரிய தவம்-பெரிய யோகம் வேறு என்ன? இதனை, தம் என்றுங் குன்றா இளமை பற்றி அவரே பாடிய,
'யாண்டு பலவாக நரையில ஆகுதல்
யாங்காகியர் என வினவுதி ராயின்.
மாண்டஎன் மக்களொடு மனைவியும் நிரம்பினர்;
யான் கண்டனையர் என் இளையரும்...
சான்றோர் பலர் யான் வாழு மூரே'
என்னும் புறநானூற்றுப் (191) பாட்டா லறியலாம்.
அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை
(தெளிவுரை) உலகில் எது எதுவோ அறம் என்று சொல்லப்படினும், உண்மையில் அறம் என்று சொல்லப் படுதற்கு உரியது இல்வாழ்க்கைதான்! அந்த இல்வாழ்க்கை யும் பிறனொருவன் பழிக்காதபடி இருந்தாலே சிறந்ததாம்.
'அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று'
(பதவுரை) அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை= அறம் அறம் என்று சிறப்பித்துச் சொல்லப்பட்டதெல்லாம் இல்வாழ்க்கைதான்; அஃதும் = அப்பேர்ப்பட்ட சிறப்புடைய இல்வாழ்க்கையும், பிறன் பழிப்பது இல்லாயின் = பிறன் எவனும் பழிப்பதற்கு இடமில்லாதிருக்குமானால் தான், நன்று=நல்லதாகும் -சிறந்ததாகும். (அறன்-அறம்)
(மணக்குடவர் உரை) அறனென்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க்கையே; அதுவும் நன்றாவது பிறனொருவனாற் பழிக்கப் படுவதொன்றை யுடைத்தல்ல வாயின். பழிக்கப்படுவதென்றது இழிகுலத்தாளாகிய மனையானை.
(பரிமேலழகருரை) இருவகை யறத்தினும் நூல்களான் அறனென்று சிறப்பித்துச் சொல்லப்பட்டது இல்வாழ்க் கையே; ஏனைத் துறவறமோவெனின், அதுவும் பிறனாற் பழிக்கப்படுவதில்லையாயின், அவ்வில்வாழ்க்கையோடு ஒரு தன்மைத்தாக நன்று.
(விளக்கவுரை) 'அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை' என்பதற்கு வாடிக்கையாக ஏதேதோ பொருள் சொல்வது வழக்கம். இல்லறம், துறவறம் என அறம் இருவகை; அவற்றுள் இல்லறமே சிறந்தது என்னுங் கருத்தில் பரிமேலழகர் எழுதியுள்ளார். இன்னும் எத்துணையோ அறங்கள் (முப்பத்திரண்டு அறங்கள்) சொல்லப்படுவதுண்டு; அவற்றுள் இல்லறமே சிறந்தது என்றெல்லாம் சொல்லுவ துண்டு. இங்கே நான் என்ன சொல்லுகிறேன்? அறமே இல்வாழ்க்கை-இல்வாழ்க்கையே அறம், கரும்பே கன்னல். கன்னலே கரும்பு என்பதுபோல. அகராதி தொகுப்பவர்கள், அறம் என்பதற்கு நேரே இல்வாழ்க்கை எனவும், இல்வாழ்க்கை என்பதற்கு நேரே அறம் எனவுங்கூட எழுதிவைக்கலாம். இதற்கு நிகண்டு போன்றதொரு சான்று, 'அறன் எனப்பட்டதே இல்வாழ்க்கை' என்பதே.
'அறன் எனப்பட்டதே' என்பதின் இறுதியிலுள்ள 'g' துறவறத்தினின்று இல்லறத்தைப் பிரித்துக் காட்டும் பிரிநிலை ஏகாரம் ஆகும் எனப் பொருள் கொண்டு, 'அஃது என்ற சொல்லுக்கு அந்தத் துறவறமும்' எனப் பொருள் கூறியுள்ளார் பரிமேலழகர் ஏகாரத்தைத் தேற்ற ஏகாரமாகக் கொள்ளின் இந்தக் குழப்பத்துக்கு இடமில்லை. 'அஃது' என்னும் சுட்டு எவ்வாறு துறவறத்தைக் குறிக்க முடியும்? முதலில் இல்வாழ்க்கையைக் கூறி, பின்பு அது என்று சுட்டிக்காட்டினால் எது என்று எண்ணுக.
இல்வாழ்க்கையில் இருந்து கொண்டுதான் எல்லா அறமும் செய்ய முடியுமாதலின் "அறனெனப் புட்டதே இல்வாழ்க்கை என்றார். இல்வாழ்க்கையே அறம் எனத் தேற்றப்படுத்திக் கூறிவிட்டதால், குடும்பத்தில் இருந்து கொண்டு எவ்வளவு கொடுமை வேண்டுமானாலும் செய்யலாமா? பிறர் பழிக்காதபடி நடந்துகொண்டால் தானே நல்லதாகும் என்பதை அறிவிக்கவே பிறன் பழிப்ப தில்லாயின் நன்று என்றார் ஆசிரியர். இங்கே பழிப்பது: என்னுஞ் சொல்லுக்கு, பழித்தலுக்குரிய தாழ்ந்த குலத்து மனைவி எனப் பொருள் எழுதியுள்ள மணக்குடவருக்கு நமது கழிபேரிரக்கம் உரித்தாகுக!
காமத்துப்பால்
களவியல்-தகையணங்குறுத்தல்
அணி எவனோ
(தெளிவுரை) மான்பிணை போன்ற மருண்ட பார்வையும் நாணமும் இயற்கையில் இருக்கும்போது, இவளுக்கு அயலான அணிகலன்களை அணிந்தது ஏனோ?
'பிணையேர் மடநோக்கும். நாணு முடையாம்
கணிஎவனோ ஏதில தந்து'
(பதவுரை) பிணை ஏர்=பெண்மானைப் போன்ற, மட நோக்கும்=மருண்ட பார்வையும், நானும் உண்டியாட்கு= நாணமும் இயற்கையாய் உடிைய இந்தப் பெண்ணுக்கு, ஏதில தந்து அணி எவனோ?=அயலான அணிகலன்களைக் கொண்டு வந்து அணிந்திருப்பது எதற்கோ? (ஏதில்க அயல்ானவை-ஏது இல-ஏதும்-எந்தத் தொடர்பும் இல்லாதவை; தந்து=கொண்டு வந்து தந்து: பிண்ை=பெண் மான், ஏர்தல்=போலுதல்-ஏர்-போன்ற மடிம்:மருட்சிமருண்ட தன்மை, மான்போன்ற மட நோக்கு என்றால், மருண்டு மருண்டு பார்க்கும் நோக்குத்தானே!)
(மணக்குடவர் உரை) பிணையை யொத்த மடப் பத்தினையுடைய நோக்கினையும் நாணினையும் உடைய வட்குப் பிறிது கொணர்ந்து அணிவது யாதினைக் கருதியோ? பிறரை வருத்துதற்கு இவைதாமே அமையும்.
(பரிமேலழகர் உரை) புறத்து மான் பிணை யொத்த மட நோக்கினையும் அகத்து நாணினையு முடையவளாய விவட்கு, ஒற்றுமையுடைய இவ்வணிகளே யமைந்திருக்க வேற்றுமையுடைய அணிகளைப் படைத்தணிதல் என்ன பயனுடைத்து? .
(விரிவுரை) இந்தக் குறளில், தலைமகளின் நலனைப் புனைந்துரைக்கும் தலைமகன் வாயிலாக, வள்ளுவர் உலக மக்களைச் சாடுவதான குறிப்பின் வாடை வீசுகின்றது. மான் போன்ற மருண்ட பார்வையையும் நாணத்தையும் விட, ஒரு பெண்ணுக்கு அழகு தரும் அணிகலன் (ஆபரணம்) வேறு என்ன இருக்க முடியும்? அந்த இயற்கை அணிகலன் இரண்டும் உடையவளுக்கு வேறு நகைகளும் வேண்டுமா? 'அல்வா' துண்டுக்குச் சர்க்கரை தொட்டுக் கொள்வ துண்டா? மட நோக்கும் நாணமும் இல்லாதவளுக்கு எவ்வளவு நகை போட்டாலும் எடுக்குமா? கசக்கும் காஞ்சிரங்காயானது, எவ்வளவு இனிப்புச் சேர்த்தாலும் இனிக்குமா? பலரோடு பொருத்திப் பார்க்கும்போது, இந்தக் கருத்துகள் எல்லாம் உண்மை என்பது புலனாகும்.
இங்கே கூறப்பட்டுள்ள இயற்கையணிகள் இரண்டினை .யும் இன்னுஞ் சிறிது ஊன்றிக் கவனிக்க வேண்டும். மட நோக்கு என்பது, புற உறுப்பாகிய கண்ணுக்கு அணிகலம்; நாணம் என்பது, அக உறுப்பாகிய மனத்துக்கு அணிகலம். இவையிரண்டும் தொடர்புடையன. அகத்தில் நாணம் இருந்தால்தான், முகத்தில்-கண்களில் மடநோக்கு இருக்க முடியும் அகத்தின் அழகு முகத்தில் தெரியுமல்லவா? அகத்தில் நாணம் இல்லாத காளிகளுக்கு-உள்ளத்தில் கூச் சம் இல்லாத பேய்-பிசாசு-பிடாரிகளுக்கு மடநோக்காவது, மண்ணாங்கட்டியாவது!
எனவே, உலக மக்களே! இரவல் நகை கூடாது; சொந்த நகையே போட்டுக் கொண்டிருக்க வேண்டும். இரவல் நகை என்றால். ஒருவன், நகையில்லாத தன் மனைவிக்குப் போடுவதற்காக, நகை வைத்திருக்கின்ற மற்றொருவனிடம் சென்று, மான மின்றி-தன் கையாலா காத்தனத்தைத் தானே வெளிப்படையாய் ஒத்துக்கொள் பவன் போல இரவல் கேட்கிறானே, அந்த இரவல் நகையைக் குறிப்பிடவில்லை. ஒருவன், தன் மனைவிக்கு, நல்நோக்கும் நாணமுமாகிய நகைகளுக்குப் பதிலாக, தன் சொந்தப் பணத்தில் தானே வாங்கிப்போட்டுள்ள சொந்த நகையைத்தான் இரவல் நகை என்று சொல்கிறேன் நான். இல்லை யில்லை; மன்னிக்கவும்; இவ்வாறு நான் சொல்ல வில்லை; வள்ளுவர்தான் சொல்லியிருக்கிறார் அணி எவனோ ஏதில' என்று! இங்கே ஏதில என்றால் அயலானவை -இரவலானவை என்று பொருளாம். ஏதிலான் என்றால் அயலான்-ஏதில என்றால் அயலானவை, எனவே மடநோக்ககும் நாணமுமே சொந்த நகைகள், தலைமகளுக்கு அவைகளே போதும், என்கிறான் தலைமகன்.
மேலும், அணி எவனோ? என்று அங்கலாய்க்கிறான் தலைமகன். எவன் என்றால் ஏன்-எதற்கு என்று பொருள். மேலும் 'ஒ' சேர்த்து எவனோ-எதற்கோ என்று வன்மை யாகக் கண்டிக்கிறான். அவன் மற்ற அணிகலன்களைப் பொருட்படுத்தவில்லை, புறக்கணிக்கிறான் என்பதை ஏதில தந்து' என்னும் 'ஏனோ தானோ தொடர் அறிவிக் கின்றது. அதாவது வேண்டாத வேற்றுப் பொருளை வலியக் கொண்டு வந்து புகுத்துகிறார்கள் என்ற கருத்தைத்தான் ஏதில தந்து' என்பது அறிவிக்கின்றது.
அணிகலன் அணிவது - அழகு தருவதற்காக! இவளுக்கோ அது இயற்கையிலேயே இருக்கிறது. அங்ஙன மிருக்க, அணிகலன் அணிவிக்கும் காரணம் என்ன? எங்க ளிடம் இவ்வளவு செல்வம் இருக்கிறது என்பதை வெளியில் காட்டும் தற்பெருமை விளம்பரமா இது? அல்லது, இந்த நடிகையும் இதைத்தான் பயன்படுத்துகிறாள் என்று நடிகையின் படத்துடன் ஆடம்பரப் பொருளை அறிமுகப் படுத்தி அவள் மூலம் அப்பொருளுக்குப் பெருமை தேடுகின்ற வாணிக விளம்பரம் போல, தலைமகளுக்கு அணிவதன் மூலம் இந்த நகைகளுக்கு அழகு தேடவேண்டும் என்ற அவாவா இது? அல்லது, தலைவியின் இயற்கை யழகைப் புரிந்துகொள்ள முடியாத குருட்டு மடமையா இது? அல்லது, இவளுக்கு மேலும் மேலும் அழகு செய்து என்னைப் போன்ற இளிச்சவாய்' இளைஞர்களை இன்னற் படுத்த வேண்டுமென்ற இழிநோக்கந்தானா இது? பின்னே என்ன காரணம்? என்று காலால் தரையை இடித்துக் கையால் பலகையைக் குத்திப்பேசிக் கேட்பவனைப் போல அணி எவனோ” என்று அலறியுள்ளான் அவன்.
இந்தக் குறளிலிருந்து, குறிப்பாகப் பெண்மணிகள்அவருள்ளும் சிறப்பாகச் செல்வ மங்கையர் தெரிந்து கொள்ளவேண்டிய தென்ன? ஆடவர்கள் அவர்தம் செல்வத்தின் அளவை அறிவிக்கும் விளம்பர வண்டியாகத் தங்களைப் பயன் படுத்திக்கொள்ள இடந்தரலாகாது. நாங்களென்ன அலங்காரப் பதுமைகளா? அல்லது சுமை தாங்கிகளா? என்று ஆடவரைக் கேட்கவேண்டும். ஆடவர் நகை வாங்கிப் போடாவிட்டால், போடும்படி அவர்களை வற்புறுத்துகின்ற மங்கையர்க்கு நமது இரக்கம் உரித்தாகுக!
பொருள்பால்
அரசியல்-இறைமாட்சி
பண்புடை வேந்தன்
(தெளிவுரை) காது கசக்கும்படித் தாங்கள் சொல்லுங் குறைகளைப் பொறுத்துக்கொண்டு ஆவன புரியும் உயர்ந்த பண்பாடுடைய அரசனது ஆட்சியில்தான் மக்கள் தங்குவர்.
"செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கு முலகு”
(பதவுரை) செவி கைப்ப = கேட்கும் காது கசக்கும் படி, சொல் பொறுக்கும் = மக்கள் சொல்லும் குறைச் சொற்களைப் பொறுத்துக் கொள்ளக்கூடிய, பண்புடை வேந்தன்= உயர்ந்த பண்பாட்டினையுடைய மன்னனது, கவிகைக்கீழ் = குடைநிழலின் கீழே, உலகு தங்கும்=உலகம் தங்கி வாழும். (கைத்தல்=கசத்தல்; சொல்=சொல்லுங் குறை; கவிகை = குடை, உலகு = உலக மக்கள்).
(மணக்குடவர் உரை) தன் செவி வெறுக்கும்படியாகப் பிறர் செய்த குற்றங்களைக் கேட்டுவைத்தும், அதனைப் பொறுக்கவல்ல குணமுடைய வேந்தனது குடைக்கீழே உலகுதங்கும். சொற்பொறுக்கும் என்பதற்குப் புரோகிதர் தன்னிடத்துச் சொல்லுஞ் சொற்களைப் பொறுக்கவல்ல' என்பாரு முளர். (இந்த உரை பொருந்தாது.)
(பரிமேலழகர் உரை) இடிக்குந் துணையாயினார் சொற்களைத் தன் செவி பொறாதாகவும் விளைவு நோக்கிப் பொறுக்கும் பண்புடைய அரசனது குடை நிழற்கண்ணே தங்கும் உலகம்.
(விரிவுரை) இந்தக் குறளை இருபதாம் தூற்றாண்டினர் துருவித்துருவி ஆராய வேண்டும். இந்தக் காலமோ குடியரசுக் காலம், வள்ளுவர் காலமோ முடியரசுக் காலம்; ஆனால் உண்மையில் எது முடியரசு? எது குடியரசு? என்று பார்ப்போம்.
‘செவி கைப்பச் சொல் பொறுத்தல்' என்றார். சில உணவுப் பொருள்கள் நாக்குக்குக் கசப்பது போன்றே, சில சொற்கள் காதுக்குக் கசக்கும். நம்மைப் பாராட்டிப் புகழுஞ் சொற்கள் காதுக்கு இனிக்கும்; குறைகூறி யிகழுஞ் சொற்கள் காதுக்குக் கசக்கும். இதைத்தான் 'செவி கைப்பச் சொல்' என்றார். வாய்ச்சுவை போலவே செவிச்சுவையும் உண்டன்றோ? "செவியிற் சுவையுணரா என்னும் குறளை நோக்குக,
தம்மைப் புகழ்ந்து பேசுபவரை வீடுவரைக்கும் அழைத்துச் சென்று பாய் போட்டு அமரச் செய்து, சிற் றுண்டியும் நல்கி, விடிய விடிய விரிவாகத் தம் புகழைப் பேசச்சொல்லிக் கேட்டு மகிழ்வதென்றால் மக்களுக்கு விருப் பந்தான். ஆனால் அவரே ஏதேனும் ஒரு குற்றங்குறை சொல்லத்தொடங்கி விடுவாராயின், 'சரி நல்லது போய் வருகிறீர்களா?' என்று உடனே அவ்விடத்தை விட்டுக் கிளப்பிவிடுவார்கள். இஃது உலகியற்கை யன்றோ? ஏன் இந்நிலை? தமது குறையைப் பிறர் சொன்னவுடனே கசப்புத் தோன்றிச் சினமாக மாறுகின்றது. அதனைப் பொறுத்துக் கொள்ளும் ஆற்றல் இல்லை. இது ஒரு பெரிய வலுக்குறை (பலவீனம்), இங்கே பொறுத்துக் கொள்ளுதல் என்றால் குற்றத்தை உணர்ந்து திருந்துதல் என்பது பொருள்; அது மட்டுமன்று-தன் குற்றத்தை யுணர்ந்து தான் திருந்தும் விதத்தில் அக்குற்றத்தை எடுத்துக்காட்டிய வருக்கு நன்றி செலுத்துதலும் ஆகும். தம்மிடம் உள்ள குறையைப் பிறர் சுட்டிக் காட்டியபோது, உணர்தலும், திருந்துதலும், நன்றி செலுத்துதலும் உயர்ந்த பண்பாடு. ஆதலினாலேயே பொறுக்கும் பண்பு' என்றார் ஆசிரியர். இஃது எல்லோர்க்கும் இயலாது என்பதைப் பொறுக்கும் பண்பு' என்னும் தொடர் அறிவிக்கவில்லையா? கூர்ந்து கவனியுங்கள்!
தாங்கள் பிறர்மேல் எவ்வளவு குற்றம் வேண்டுமானா லும் சொல்லலாம்; தங்கள்மேல் மட்டும் எவரும் எந்தக் குற்றமும் சொல்லக் கூடாது என்பதில் எளிய மக்களும் கண்டிப்பாய்க் கவனமாய்க் கண்ணுங் கருத்துமாய் இருக்கும் போது, நாடாளும் மன்னன்மேல் குற்றம் சொல்லலாமா? சொல்லத்தான் முடியுமா? சொன்னால்தான் விடுவானா? அவ்வாறு குறைசொல்ல விடுபவனே சிறந்த மன்னன். அவனது ஆட்சியே உண்மையான குடியரசு ஆட்சி-அவனது நாடே உண்மையான குடியரசு நாடு. மொடுக்கென்று வாயைத் திறந்ததுமே தலையைச் சீவுகின்ற நாட்டில் சோற்றுமழை பெய்தாலும் நான் அங்கு வாழ விரும்பேன். பட்டினி கிடந்தாலும் பேச்சுரிமை-எழுத்துரிமை உள்ள நாடே எனது இன்பபுரி. இதைத்தான் 'சொற்பொறுக்கும் வேந்தன் கவிகைக்கீழ் உலகு தங்கும்' என்றார்.
மேலும், தங்களுக்கு ஏற்படும் இன்னல்களை எடுத்துச் சொல்லத்தான் மக்கள் விரும்புவர். தமது துன்பத்தைப் பிறர் தீர்த்தாலும் தீர்க்காவிட்டாலும், வெளியில் எடுத்துச் சொல்வதே ஒரு பெரிய ஆறுதல்-ஒரு பெரிய மருந்து. இதற்குத்தான் 'வெளிப்பாட்டு மருத்துவம்' Expressive Theory என்று பெயராம். ஆரொடு நோகேன் ஆர்க்கு எடுத்து உரைப்பேன் ஆண்ட நீ அருளிலையானால்' என இறைவனை நோக்கி மணிவாசகர் முறையிட்டுள்ள திருவாசகப் பகுதியினை ஈண்டு ஒத்திட்டு நோக்குக. மணிவாசகர் கண்காணா இறைவனை (கடவுளை) நோக்கி நீ அருள் புரியவில்லை எனக் குறை சொன்னார். மக்களோ கண்கண்ட இறைவனை (மன்னனை) நோக்கிக் குறை சொல்வர். இதற்கு மன்னன் இடங்கொடுக்க வேண்டும். அன்னவன் கவிகையின் கீழேதான் உலகு தங்கும்.
பிறர் சொல்வதையெல்லாம் பொறுத்துக்கொள்வது அரசனுக்குக் கோழைமையல்லவா என்று சிலர் கருதலாம். இல்லை, பொறையுடைமை ஒரு பெரிய வலிமையாகும். "வன்மையுள் வன்மை பொறை' என்று வள்ளுவர் மற்றோரிடத்தும் கூறியுள்ளார். மேலும் இஃது ஒர் அரசியல் திறமையும் (இராச தந்திரமும்) ஆகும்.
இந்தக் காலத்து அரசுகள் சில, ஒறுக்கும் நோக்குடன் -கொல்லும் குறிக்கோளுடன், அரசாங்கத்தைத் தாக்கிப் பேசுபவர் யார்-தாக்கி எழுதுபவர் யார் என ஒற்றர்கள் (C.I.D.) மூலம் துருவித் தேடுகின்றன. ஆனால் அக்காலத் திலோ, குறையைப் போக்கி நலமுண்டாக்க வேண்டும் என்னும் நல்ல நோக்குடன், அரசர்கள் தாங்களே மாறு கோலம் புனைந்து, மக்கள் என்ன குறைபாடு பேசிக்கொள்கின்றனர் என்று துருவித் தேடினர். இந்த நிலை என்றென்றும் நீடிக்க வேண்டும் என்பதற்காகவே செவிகைப்பச் சொற் பொறுக்கும் பண்புடை வேந்தன்' என்றார்.
மக்கள் சொல்லியும் திருந்தாத மன்னர்களை அன்று அறிஞர்களும் அமைச்சர்களும் இடித்துரைத்தனர். இக் காலத்தில் இடித்துரைத்தாலோ சீட்டுக் கிழிந்துவிடும். பெருஞ் சித்திரன்ார், பெருந்தலைச் சாத்தனார், வெள்ளைக் குடி நாகனார், கோவூர்கிழார், ஒளவையார் முதலிய பழங்காலப் புலவர்கள் பாடியுள்ள புறநானூற்றுப் பாடல் களைப் புரட்டிப் பாருங்கள்! நாக்கைப் பிடுங்கிக் கொண்டு சாகிற அளவுக்கு மன்னர்களை நேரில் தாக்கிப் பேசி யுள்ளனர். அம்மன்னர்களும் திருந்தியதாகத் தெரிகிறது. இதுதான் 'சொல் பொறுக்கும் பண்பு ஆகும்.
இந்தக் குறட் கருத்தை இக்கால நிலைக்கு வைத்துப் பார்ப்போம். 'உலைவாயை மூடினாலும் ஊர்வாயை மூட முடியாது' என்றபடி, மக்கள் ஆட்சியில் மக்கள் எதிர்த்துப் பேசத்தான் செய்வார்கள். மக்கள் பேசாவிடினும், அவர் களுக்குப் பதிலாகச் சென்றிருக்கும் பாராளுமன்ற எதிர்க் கட்சி உறுப்பினர்கள், அரசாங்கத்தின் குற்றங் குறைகளைச் சுட்டிக்காட்டிக் காது கைக்கப் பேசுவார்கள்தாம். அப் பொழுதுதான் அரசாங்கம் விழிப்புடன் இருக்கும். "தட்டிப் பேச ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்' ஆகிவிடுவானல்லவா? நல்லதொரு கட்சி நாட்டையாள, அதற்கு உரங்கொடுக்க வலுவானதோர் எதிர்க்கட்சி வேண்டும் என்பது இதற்காகவே! இவ்வாறு காது கைக்கப் பேசுபவரைப் பெற்றிருப்பது, அரசாங்கம் திருந்தி மக்களுக்கு நன்மை புரிந்து நல்லபேர் எடுப்பதற்கு நல்லதொரு வாய்ப்பாகும். இவ்வாறு செய்தால் மக்கள் கூட்டம் வந்து தம்பால் விழும். அதனாலேயே, பொறுக்கும் வேந்தன் கவிகைக்கீழ் உலகு தங்கும்' என்றார்.
கவிகை என்றால் குடை. கவிந்திருப்பதால் கவிகை எனப் பெயர் பெற்றதோ? மன்னனது குடையின் கீழே உலகமே தங்கும் என்கிறாரே, இஃதென்ன பெரிய புதிர்? ஒருகுடை ஒருவருக்கே போதவில்லையே, உலக முழுவதும் எப்படி ஒரு குடையின்கீழ்த் தங்க முடியும்? உண்மையில் ஒரு குடையின்கீழ் வந்து தங்குவதில்லை. இவ்வாறு சொல்வது ஒர் இலக்கிய மரபு. அவ்வளவுதான்! கோடை வெயிலிலே குடைநிழல் எத்தகையதோ, அத்தகையதே குடிமக்களுக்குப் பண்புடைய வேந்தனது ஆட்சி. மன்னனது குளிர்ந்த ஆட்சியின் அறிகுறிதான் குடை எனப்படுவது. பண்புடைய வேந்தனது குளிர்ந்த ஆட்சி யென்னும் குடை நிழலை விட்டு உலகம் அப்படியிப்படிக் கூட அசையவே அசையாது - அகலவே அகலாது என்பதை அறிவிக்கவே "தங்கும்' என்ற சொல்லைப் பெய்தார் ஆசிரியர். ஒரு சிலர் மட்டுமல்லர். எல்லோருமே இன்புற்றுத் தங்குவர் என்பதை அறிவிக்கவே 'உலகு என்ற சொல்லை இட்டார் ஆசிரியர். இப்பொழுது ஒருமுறை குறளைப் படிப்போம்: "செவிகைப்பச் சொல் பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக் கீழ்த் தங்கும் உலகு.”
இதுவரையும் இந்தக் குறளைப் பற்றி இவ்வளவு விரிவாகப் பார்த்தோமே; இப்பொழுது இவ்வளவையும் ஒரு வரியில் சுருக்கிச் சொல்லி முடித்துக் கொள்வோமா? பொறுத்தார் பூமி யாள்வார்!"
மக்கட்கு இறை
'முறைசெய்து காப்பாற்று மன்னவன் மக்கட்
கிறையென்று வைக்கப் படும்'
(பதவுரை) முறைசெய்து = ஒழுங்கான முறையில் ஆட்சி புரிந்து, காப்பாற்றும் மன்னவன் = குடிமக்களைக் காப்பாற்றுகின்ற அரசன், மக்கட்கு இறை= அம்மக்களுக்குக் கடவுள் ஆவான், என்று வைக்கப்படும் = என்று உயர்த்தி வைத்து மதிக்கப் பெறுவான். முறைசெய்தல் = செங்கோ லாட்சி புரிதல்: இறை = இறைவன்-கடவுள்.)
(மணக்குடவர் உரை) குற்றஞ் செய்தாரை அதற்குச் செய்யும் முறைமை தப்பாமற் செய்து, எல்லா வுயிரையுங் காத்தலைச் செய்கின்ற அரசன், மனிதர்க்கு நாயகனென்று எண்ணப்படுவான்.
(பரிமேலழகருரை) தான் முறைசெய்து பிறர் நலியாமற் காத்தலையுஞ் செய்யுமரசன், பிறப்பான் மகனே யாயினும், செயலான் மக்கட்குக் கடவுளென்று வேறு வைக்கப்படும்.
(விளக்கவுரை) இந்தக் குறளில் 'இலைமறைகாய்' ஒன்று ஒளிந்துள்ளது. மேலோடு பார்த்தால் அதுதெரியாது. உள்ளே ஏதோ இருக்கிறது என்ற எண்ணத்தோடு நுனித்து நோக்கினால்தான் அது புலப்படும். அது என்னவாய் இருக்கக் கூடும்? அரசனது இலக்கணம் கூறும் பகுதி இது. ஆனால் அதற்குப் பதிலாக ஆண்டவனது இலக்கணந் தான் இந்தக் குறளில் இயம்பப் பெற்றுள்ளது. இதுதான் அந்த இலை மறைகாய். மன்னவன் மக்கட்கு இறை என்று வைக்கப்படும்? எதனால்? முறை செய்து காப்பாற்றுவதால்! கடவுளே முறைசெய்து உலகைக் காப்பதாகக் கூறுவது வழக்கம். அவரைப்போல மன்னனும் காப்பதால், அவன் மக்களுக்குக் கடவுளாவான்.
இந்தக் கடவுள் தத்துவத்தை ஆசிரியர் திருவள்ளுவர் வேறு எங்கேயும் சொல்லவில்லை; இங்கே தான் குறிப்பிட் டிருக்கிறார், 'கடவுள் வாழ்த்து' என்னும் பகுதியில் பல குறள்களில், கடவுளை வணங்கினவர் வாழ்வார். என்று கூறியுள்ளார். ஆனால் மன்னனோ, தன்னை வணங்கினும் வணங்காவிடினும் மக்களை வாழவைக்க வேண்டும். அது அவனது கடமை. நாட்டில் வறுமை என்றால் கடவுள் தப் பித்துக் கொள்கிறார். மன்னன்தான் அகப்பட்டுக் கொண்டு கிடந்து விழிக்கிறான். ஆளத் தெரியவில்லை என்று ஆண்ட வனை யாரும் பழிப்பதில்லை; மன்னனது தலையைத்தான் மக்கள் உருட்டுகிறார்கள். எனவே, மாதேவனைவிட மன்னனுக்குத்தான் மக்களைக் காப்பதில் பொறுப்பு மிகுதிஅக்கறை அளவு கடந்தது. ஆகவே, உண்மையில் மக்களுக்கு இறைவன் எனப்படுபவன் அந்த ஆண்டவன் கூட அல்லன்: முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் தான் மக்களுக்கு இறைவன்' என்றார் ஆசிரியர். எனவே, இந்தக் குறளுக்கு மன்னவன் மக்கட்கு இறைவன் போன்றவன் என்று பொருள் பண்ணாமல், மன்னவனே மக்கட்கு இறைவன் என்று பொருள் கூறுக. இதனாலன்றோ 'திருவுடை மன்ன ரைக் காணின் திருமாலைக் கண்டேனே என்னும்' என ஆழ்வார் திருவாய் மொழியில் அருளிச் செய்துள்ளார்; கடவுள் தத்துவத்தை மன்னனிடத்தில் கண்டிருக்கிறார்.
கடவுளர்கள் தம் வேலைகளை மக்கள் தலைவரிடம் ஒப்படைத்து விட்டுக் கவலையின்றி இன்பமுடன் பொழுது போக்குவதாகக் கண்டியரசன்' தெரிவித்திருக்கிறான், இலங்கையில் ஒருகால் வறுமை தலைவிரித்தாடியது. மக்களைக் காப்பாற்றக் கடமைப் பட்ட கண்டி யரசன் தமிழகத்துச் சோழநாட்டில் வாழ்ந்த சடையப்ப வள்ளலிடம் உதவி வேண்டினான். சோழ நாட்டிலிருந்து கப்பல் கப்பலாய்க் கண்டிக்கு நெல் கிடைத்தது. நன்றி பாராட்டு முகத்தான் கண்டி மன்னன் பாடல் ஒன்று எழுதி வள்ளல் தலைவற் கனுப்பினான். அதில் என்ன எழுதியனுப்பினான்? "சிதம்பரத்தில் ஒருகடவுன் (சிவன்) ஆடிப் பாடிக் களியாட்டத்தில் மூழ்கிக் கிடக்கிறார்; திருவரங்கத்தில் ஒரு கடவுள் (திருமால்) காவிரி நடுவே இன்ப உறக்கத்தில் ஆழ்ந்து கிடக்கிறார். இதற்குக் காரணம் என்ன? உயிர் களைக் காப்பாற்றும் வேலையை நம் சடையப்பன் பார்த்துக் கொள்வான் என்ற துணிவே' என்று எழுதியனுப்பினான்.
'கருது செம்பொனின் அம்பலத்திலோர்
கடவுள் கின்று கடிக்குமே
காவிரித்திரு நதியிலே யொரு
கருணை மாமுகில் துயிலுமே
தருவுயர்ந்திடு புதுவை யம்பதி
தங்கு மானிய சேகரன்
சங்கரன் தரு சடையன் என்றொரு
தரும தேவதை வாழவே'
என்பது கண்டி மன்னன் பரராச சேகரனது பாடற்பகுதி யாம். எனவே, மக்களுக்குக் கண்கண்ட இறைவன் மன்னனே என்பது புலப்படும். ஆசிரியர்கூட, அரசனது மாட்சிமையைப் பற்றிச் சொல்லும் இந்தப் பகுதிக்கு 'இறை மாட்சி' என்று பெயர் வைத்திருக்கும் நுணுக்கத்தில் மிளிரும் நயத்தினைக் காண்க. இறைமாட்சி என்னும் இந்தப் பகுதிக்கு, இறையைப் பற்றிச் சொல்லும் இந்தக் குறள், முடிந்த முடிபாக-உயர்ந்த உச்சி மணி விளக்காக மிளிர்வதைக் கண்டுபிடித்தே, நான் இந்தக் குறளை இறுதிக் குறளாக-அதாவது பத்தாவது குறளாக அமைத்திருக் கிறேன். ஆனால், பழைய உரையாசிரியர்களுள், காலிங்கர் என்பவர் இதனை ஏழாவது குறளாகவும், பரிமேலழகர் எட்டாவதாகவும், மணக்குடவரும் பரிப்பெருமாளும் ஒன்பதாவதாகவும், பரிதியார் பத்தாவதாகவும் தத்தம் உரைகளில் அமைத்துள்ளனர். இம்மட்டில் நான் பரிதியார் பக்கத்தைச் சேர்ந்தவனே. நீங்கள் எப்படியோ? ஆராய்க.
இனி, இந்தக் குறளிலுள்ள சொல் நயங்களில் சிறிது திளைப்பாம்: காப்பாற்றுபவன் எவனோ அவனே இறைவன் அல்லது மன்னவன்; அதுபற்றியே மன்னனுக்குக் காவலன், புரவலன் (காத்தல்=புரத்தல்) என்ற பெயர்களும் தமிழ் மொழியில் உண்டு; இந்தக் கருத்தை அறிவிக்க வந்தவர்போல் 'காப்பாற்று மன்னவன்' என்றார் ஆசிரியர். காப்பாற்றுபவன் என்றால் கடனுக்கு அழுபவ னல்லன்; யார் யார்க்கு என்னென்ன தீர்ப்பு வழங்க வேண்டுமோ - யார் யாரிடத்தில் எப்படி யெப்படி நடந்து கொள்ளவேண்டுமோ, அந்தந்த முறைப்படி செங்கோலாட்சி செலுத்துபவன் என்பதை யறிவிக்கவே "முறை செய்து காப்பாற்று மன்னவன்' என்றார். மக்களுக்கும் மன்ன னுக்கும் உள்ள உறவு முறையின் இறுக்கத்தை, "மக்கட்கு இறை' என்பதிலுள்ள நான்காம்வேற்றுமை உருபாகிய 'கு' அறிவித்து நிற்கிறது என்பதை இலக்கணம் நன்கு கற்ற எல்லோரும் உணர்வர். முரட்டு நாத்திகரும் அல்லாதகுருட்டு ஆத்திகரும் அல்லாத நம் திருவள்ளுவர் மன்னனே மக்கட்கு இறை என்று 'ஏ' இட்டு உறுதிப்படுத்திக் கூறி னால், எங்கே தமக்கும் நாத்திகப் பட்டம் வந்து விடுமோ என்று சூழ்ந்து, "அப்படி நான் கருதவில்லை; மன்னன் உலகினரால் இறையென்று வைக்கப்படுவான்' என உலகி னரின் தலைமேலே பழியைப் போட்டுத் தாம் பட்டுக் கொள்ளாமல் தப்பித்துக் கொள்ள முயல்பவரைப் போல, 'இறை யென்று வைக்கப்படும்' என மூன்றாந்தர முடிபில் கூறியுள்ள அழகுதான் என்னே!
'ஆண்டவன் நிலையில் உள்ள அரசியல் தலைவர்களே! நீங்கள் உலகத்தைக் காத்து ஆளப்போகின்றீர்களா? அல்லது அழிக்கத்தான் போகின்றீர்களா? என்ன செய்ய இருக்கின் lர்கள்?' என்று இன்றைய சில அரசியல் சூதாட்ட அரங் கினரை எச்சரிப்பதுபோல் இந்தக் குறள் தோன்றுகிற தல்லவா?
அறத்துப்பால்
தெய்வத்துள் வைக்கப்படும்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்
(பதவுரை) வையத்துள் = மண்ணுலகத்திலே, வாழ் வாங்கு வாழ்பவன் = (இல்லறத்தில் இருந்து) வாழவேண்டிய முறைப்படி வாழ்ந்து வருபவன், வான் உறையும் = விண் ணுலகத்தில் அமர்ந்திருக்கின்ற, தெய்வத்துள் வைக்கப்படும் = தெய்வங்களுள் ஒருவனாக வைத்து மதிக்கப்பெறுவான். (வையம் = மண்ணுலகு வான் = மேலுலகு)
(மணக்குடவர் உரை) இல்வாழ்க்கை வாழும்படியிலே வாழுமவன் உலகத்திலே தேவருள் ஒருவனாக மதிக்கப் படுவன். (பரிமேலழகர் உரை) இல்லறத்தோடு கூடி வாழுமியல் பினால் வையத்தின்கண் வாழ்பவன் வையத்தானே யெனி னும் வானின்கணுறையுங் தேவருள் ஒருவனாக வைத்து கன்கு மதிக்கப்படும்.
(விளக்கவுரை) இந்தக் குறளில் உலக வழக்கில் உள்ள உண்மை யொன்று பொதிந்து கிடப்பதாகப் புலப்படுகின்றது. உலகில் ஒழுங்கான முறையில் நல் வாழ்வு நடத்திப் பின்னர் இறந்து போனவரைக் குறித்துச் சுட்டி, "அவர் செத்துத் தெய்வமாகப் போய் விட்டார்' என்று மக்கள் பேசிக் கொள்வதை நான் பல முறை கேட்டிருக்கிறேன். நீங்களும் கேட்டிருப்பீர்கள் என்றுதான் நம்புகிறேன். நாமே பலரைப் பற்றி அவ்வாறு சொல்லியிருப்போம். ஆனால், தீய செயல்கள் செய்து இறந்துபோன கொடியவர்களை அவ்வாறு குறிப்பிட்டுச் சொல்வது வழக்கத்திலில்லை; அவர்கள் அலகையாய் அலைவதாகச் சொல்வது தான் வழக்கம். ஆனால், நல்வாழ்வு வாழ்ந்து இறந்துபோன நல்லவரைக் குறிப்பிட்டுத் தான், 'சும்மா சொல்லக்கூடாது; அவர் செத்துத் தெய்வ மாய்ப் போய்விட்டாரு; அவர் எவ்வளவு பாடுபட்ட மனுழ்சன் தெரியுமா! அவர் மட்டும் இப்பொழுது இருந் திருந்தால் இது இப்படியா நடந்திருக்கும்? இந்நேரம் எவ்வளவோ மேல் நோக்கத்துக்குக் கொண்டுவந்திருப்பாரு' என்றெல்லாம் சொல்வது உலகியல். மக்களது பேச்சு வழக்கை இங்கே எழுத்துக்கு எழுத்து அப்படியே கொடுத் திருக்கிறேன். உண்மைதானே இது? இதே கருத்தைத்தான், 'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்' என்றார் திருவள்ளுவனார்.
எனவே, தெய்வநிலை யடைவதற்குரிய நேர்ப்பாதை வையத்துள் வாழ்வாங்கு வாழ்தல் போலும்! தெய்வங்கள் எல்லாம் இப்படி மேல் வகுப்பு மாறி வந்தவைதாமோ? நம் திருக்கோவில்களுக்குள் நுழைவோமேயாயின், தெய்வங் களின் பட்டாளங்களைப் பரவலாகப் பார்க்கலாம். அவற் றையும் கூர்ந்து நோக்கின், ஆழ்வார்களாக-அல்லது நாயன் மார்களாக இருக்கக் காணலாம். அண்மைக் காலத்தில் மனிதர்களாக இருந்து பின் தெய்வமாக மாறிய இவை எல்லாம் ஜானியர் தெய்வங்கள் (பிந்தியவை) ஆகும். அவதார புருழ்சர்களாக வந்து தோன்றிய தெய்வங்கள் எல்லாம் "சீனியர் தெய்வங்கள் (முந்தியவை) ஆகும்.
இவையன்றி, இன்னும் இக்குறளின் உண்மைக்கு ஒரு சான்று தருவேன்:- உலகில் நல்லவரோ-கெட்டவரோ எவர் இறந்தாலும், சிவலோக பதவி யடைந்தார்' "வைகுண்ட பதவி யடைந்தார்' என்றுதானே கருமாதிப் பத்திரிகை” யில் அச்சிடுகின்றோம். இதிலுள்ள உண்மை யாது? செத்தவரைத் தெய்வமாக மதிக்கிற உண்மைதான், செத்தவருக்கு எவ்வளவு படையல்கள் - வழிபாடுகள் நடக்கின்றன தெரியுமா? செத்துப்போன கெட்டவனையும் சமூகம் மதித்துத் தெய்வமாக ஏற்றுக்கொள்ளுகிறது எனில், 'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் தெய்வத்துள் வைக்கப் படும்' என்று வள்ளுவர் சொல்லியிருப்பதில் என்ன தவறு? என்ன தடை யிருக்க முடியும்?
தெய்வங்கள் மண்ணுலகில் நம் நடுவே வெளிப்படை யாய்க் காணப்படாமையின், அவை விண்ணுலகில் எழுந்தருளி யிருக்கக் கூடும் என்ற மக்களின் எண்ணத்தை எதிரொலிப் பவர்போல் வானுறையும் தெய்வம்' என்றார் வள்ளுவர். அவன் வானத்துக்குச் சென்ற பிறகுதான் தெய்வமாவான் என்பதில்லை; வாழ்வாங்கு வாழுமவன் வையத்துள் இருக்கும்போதே கூட தெய்வமாக மதிக்கப் படுவான் என்ற குறிப்புப் பொருள் வையத்துள் ... ... வைக்கப்படும்' என்பதிலிருந்து கிடைக்கின்றதல்லவா?
வாழ்வாங்கு வாழ்பவன் என்று கூறியுள்ளாரே - வாழ்வாங்கு வாழ்தல் என்றால் என்ன? இல்லறத்தான் இப்படி யிப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று இத்தனை குறள்களில் கூறி வந்தாரே-இன்னும் எத்தனையோ குறள் களில் கூறப்போகிறாரே, அப்படி யப்படி யெல்லாம் நடந்து கொள்வதுதான் வாழ்வாங்கு வாழ்தல்' என்பது. இயற்கை நியதியின்படி இல்லறத்தில் வாழ்வதே வாழ்வாங்கு வாழ்தல் தானே! இல்வாழ்க்கையின் முற்ற முடிந்த தனிப்பெருஞ் சிறப்பு. இந்தக் குறளில் கூறப் பெற்றுள்ளது.
காமத்துப்பால்
களவியல் - தகையணங் குறுத்தல்
கள்ளும் காமமும்
(தெளிவுரை) கள்ளானது, உண்டால்தான் மகிழ்ச்சி யளிக்குமே தவிர, காமத்தைப்போல் கண்ட மாத்திரத்தில் மகிழ்ச்சி தருவதில்லை. 'உண்டார்க ணல்ல தடுகறாக் காமம்போற் கண்டார் மகிழ்செய்த லின்று' (உண்டார்கண் அல்லது அடு நறா காமம்போல் கண்டார் மகிழ் செய்தல் இன்று)
(பதவுரை) அடு நறா = அடப்பட்ட அதாவது செய்து உண்டாக்கப்பட்ட கள்ளானது, உண்டார்கண் அல்லது = அருந்தியவர்களிடத்தில்தான் மகிழ்ச்சியை உண்டாக்குமே தவிர, காமம் போல் = காமத்தைப் போல, கண்டார் மகிழ் செய்தல் இன்று = பார்த்தல் மட்டும் செய்தவரிடத்தும் மகிழ்ச்சியை உண்டாக்குவதில்லை. (அடுதல் = உண்டாக் குதல்-தயாரித்தல்; நறா = கள். கள் உண்டாக்கப் படுவதால் 'அடுநறா' எனப்பட்டது.)
(மணக்குடவர் உரை) அடப்பட்ட நறவு உண்டார் மாட்டல்லது காமம்போலக் கண்டார் மாட்டு மகிழ்வு செய்தலின்று.
(பரிமேலழகர் உரை) அடப்படு நறா தன்னை யுண்டார் மாட்டு மகிழ்ச்சியைச் செய்வதல்லது, காமம்போலக் கண்டார் மாட்டு மகிழ்ச்சியைச் செய்தலுடைத் தன்று.
(விளக்கவுரை) உங்கள் பிள்ளைகளுக்குள் எந்தப் பிள்ளை நல்ல பிள்ளை' என்று வந்தவர் கேட்டாராம். அதற்கு, அதோ கூரைமேல் ஏறிக் கொள்ளி வைக்கிறானே, அவன்தான் இருப்பவர்களுக்குள் நல்ல பிள்ளை' என்று வீட்டுக்காரர் பதில் சொன்னாராம். இதே கதைதான் இந்தக் குறளில் கள்ளைக் காட்டிலும் காமம் சிறந்தது' என்று சொல்லியிருப்பதும்! ஒரு தலைமகளைக் கண்டு, அவளது அழகுத் தோற்றத்தில் ஈடுபட்டுத் தன்னை மறந்து மகிழ்ச்சி கொள்கிற ஒரு தலைமகன் கூற்றாக வைத்து வள்ளுவர் வேடிக்கை செய்துள்ளார். அவ்வளவுதான்!
அவன் அவளது அழகுத் தோற்றத்தைக் காணுகிறான். அந்தக் காட்சியின்பத்தில் இரண்டறக் கலந்து திளைக் கிறான். இன்னும் அவளை நெருங்கவும் இல்லை; அவளோடு பேசவும் இல்லை; அவளைத் தொடவும் இல்லை. 'கண்டதே காட்சி' என்றபடி, கண்ட அளவிலேயே காமச்சுவை நுகர்கிறான். கள் என்றால் இது கைவரப்பெறுமா? காசு கொடுக்கவேண்டும் கலயத்தைக் கையில் எடுக்கவேண்டும்! 'கடகட வென்று உள்ளே நெட்ட வேண்டும்! அதன் பின்னர்தான் ஆட்ட பாட்டமெல்லாம்! ஆனால் காமத்துக்கு அவ்வளவு வேண்டியதில்லை யன்றோ? அதனால்தான், 'காமம்போல் கண்டார் மகிழ் செய்தல் இன்று' என்றான் தலைமகன்.
தெரிகிறது தெரிகிறது! இந்தக் குறட் கருத்தை மறுப்பவரைப் பற்றிப் புரிகிறது புரிகிறது! 'காமத்தைப் பற்றியாவது மனைவி மூலம் அறிந்திருப்பார்; கள்ளைப் பற்றி வள்ளுவர்க்கு என்ன தெரியும்? அதனை அவர் அருந்தி யறிந்திருக்க மாட்டார். அதனால்தான் இப்ப எழுதிவிட்டார்' என்று, கள் கிடைக்காத காலத்திலேகிடைக்காத இடத்திலே, கள்ளைக் கண்டல்ல - கள்லை எண்ணி யெண்ணிச் சொக்குபவர் கூறும் மதிப்பு.ை காற்றில் மிதந்து வருகிறது! இஃது என்ன சிக்கலாயிருக் கின்றதே!
மெய், வாய், கண், மூக்கு, செவி என்னும் ஐம்பொறி களின் வாயிலாக மக்கள் உலகத்தோடு - உலகப் பொருள் களோடு தொடர்பு கொள்கின்றனர். நாம் உலகப்பொருள் களுள் சிலவற்றை மெய்யின் (தோலின்) மூலம் தொட்டுச் சுவைக்கிறோம்; சிலவற்றை வாயின் (நாக்கின்) மூலம் உண்டு சுவைக்கிறோம்; சிலவற்றைக் கண்ணின் மூலம் கண்டு சுவைக்கிறோம்; சிலவற்றை மூக்கின் மூலம் மோந்து சுவைக்கின்றோம்; சிலவற்றைச் செவியின் மூலம் கேட்டுச் சுவைக்கிறோம். இவற்றுள் எது மிக எளிது? எது மிக அரிது? இந்த வினாவுக்கு விடைகண்டு விட்டால் இந்தக் குறட் கருத்தின் சிக்கலை அவிழ்த்து விட்டவர்களாவோம். அது மட்டுமன்று; வேறு எத்தனையோ வகை இன்பப் பொருள்கள் இருக்க, இந்தக் குறளில் உணவுப்பொருளான கள்ளை எடுத்துக் கொண்டதின் காரணமும் விளங்கும்.
மேற்கூறிய ஐந்தனுள், கண்ணால் காணுவதன் மூலம் பொருள்களோடு தொடர்பு கொள்ளுதல் மிக எளிது - எதையும் எளிய முயற்சியில் கண்டுணர்ந்து கொள்ள முடியும். காணுதற்கு அவ்வளவு பெரிய கவனம் வேண்டுவ தில்லை. இதனினும் காதால் கேட்டு உணர்வதற்கு மிகுதி யான கவனமும் முயற்சியும் வேண்டும். இதனினும் மூக்கால் மோந்து உணர்வதற்கு இன்னும் மிகுதியான கவனமும் முயற்சியும் வேண்டும் - பொருளினிடம் முன் னைய இரண்டினும் மிகவும் நெருங்கவேண்டும். இதனினும் மெய்யால் - தோலறிவால் தொட்டு உணர்வதற்கு மேலும் மிகுதியான கவனமும் முயற்சியும் வேண்டும் - முன்னைய மூன்றினும் பொருளை மிகமிக அணுகி உடல் தொடர்பு கொள்ளவேண்டும். இதனினும் வாயால் உண்டு தொடர்பு கொள்வதற்கு முயற்சியும் நெருக்கமும் மேலும் மிக மிக வேண்டும். உணவு உடலோடு இரண்டறக் கலந்துவிடுகிறது.
ஒருவர் வீட்டிலுள்ள ஒப்பனைகளை (அலங்காரங்களை) காசின்றிக் காணக் கூசுவதில்லை. அவர் வீட்டில் எழும் இன்னிசையைக் காசின்றிக் கேட்க வெட்குவதில்லை. அவர் வீட்டு நறுமணப் புகையைப் பணமின்றி நுகர நாணுவ தில்லை. அவர் வீட்டுக் காட்சிப் பொருள்களைக் காசின்றித் தொட உட்குவதில்லை. ஆனால் அவர் வீட்டு உணவை மட்டும் காசின்றி (இலவசமாக) உண்ண வெட்கப்படு கின்றோம். பல முறை வருந்தி அழைத்தால்தான் ஒரு முறை தயக்கத்துடன் அருந்துகின்றோம். எனவே, உணவுப் பொருளை நுகர்வதற்கு அரிய முயற்சி-உழைப்பு வேண்டும் என்பது விளங்கும். இதனினும், ஒரு பெண்ணை மணந்து தொடர்பு கொள்வதற்கு அரும் பெரும் முயற்சியும் நெருக்கமும் வேண்டும். மேற்கூறிய ஐந்து முயற்சிகளும் ஒருங்கே பெண்ணின்பத்தில் உள்ளன என்பதை, "கண்டு கேட்டு உண்டு உயிர்த்து உற்று அறியும் ஐம்புலனும் ஒண்டொடி கண்ணே உள' என்னும் வேறொரு குறளில் வள்ளுவரே தெரிவித்துள்ளார். இனி நாம் கள்ளுக்கும் காமத்துக்கும் வர இவ்வளவு அடிப்படைக் கருத்துகள் போதும்.
கள் போன்ற உணவுப் பொருளைப் பெற்றுத் துய்ப்ப தற்கு மிகுதியான துணிவும் ஆற்றலும் முயற்சியும் செலவழிக்க வேண்டும். அதனினும் மிகுதி காமத்துக்கு! அதனால்தான், காமத்துப்பாலில் காமத்தைப் புகழவந்த இடத்தில், கள்ளை அளவு கோலாக வைத்து, அதனினும் சிறந்ததாகக் காமத்தைக் கூற நேர்ந்தது. கிட்டத்தட்ட இரண்டையும் ஓர் ஏரில் கட்டலாம் போல் தோன்றினும் இங்கே ஒரு நுட்பம் நோக்கத்தக்கது. ஐந்து முயற்சிகளுள், காணுதல் மிகவும் எளிது என்றும், உண்ணுதல் மிகவும் அரிது என்றும் முன்னர் ஆராய்ந்து கண்டிருக்கிறோம். இந்தக் குறளிலோ, உண்டாரை மகிழச்செய்யும் கள்ளைவிட, கண்டாரை மகிழச்செய்யும் காமம் உயர்ந்ததாகப் பேசப்பட்டுள்ளது. இதிலுள்ள உண்மை யாது?
பழைய தமிழ் நூலோர் காம இன்பத்தை, உள்ளப் புணர்ச்சி, மெய்யுறு புணர்ச்சி என இரண்டாகப் பிரித் துள்ளனர். ' உள்ளப் புணர்ச்சியும் மெய்யுறு புணர்ச்சியும் கள்ளப் புணர்ச்சியுள் காதலர்க் குரிய' என்பது நம்பியகப் பொருள் நூற்பா. உள்ளப்புணர்ச்சி என்பது கண்ட அளவில் மனத்தால் கூடுதல். மெய்யுறு புணர்ச்சி என்பது உடல் தொடர்பு. எனவே, காமம் என்பது கண்டார் கண்ணும் மகிழ்செய்யும்-கள்ளைப் போல உண்டார் கண்ணும் அதாவது உடலோடு தொடர்பு கொண்டார் கண்ணும் மகிழ்செய்யும். ஆகவே, உண்டார்கண் மட்டும் தொடர்பு கொள்ளும் கள்ளைவிட, கண்டார் கண்ணும் தொடர்பு கொள்ளும் காமம் உயர்ந்ததென அவன் புகழ்ந் துள்ளான். அவன் இப்பொழுதுதான் அவளை முதல் முதல் கண்டு காதலித்து உள்ளப் புணர்ச்சிக் கட்டத்தை அணுகி யிருக்கிறான் அன்றோ? ஐந்து முயற்சிகளுள் எளிதான காணுதலைக் கொண்டே, ஐந்து முயற்சிகளுள் அரிதான உண்ணுதலுக்கு மேலே போய்விட்ட அவன், ஏன் சொல்ல மாட்டான் 'உண்டார்கண் அல்லது அடு நறாக் காமம் போல் கண்டார் மகிழ்செய்த லின்று' என்று! ஐந்து பேரறிவும் கண்களே கொள்ள' எனப் பெரிய புராணத்தில் சேக்கிழார்கூட மொழிந்துள்ளாரே. ஆனால் அது பேரின் பத் துக்கு; இக் குறளோ சிற்றின்பத்துக்கு!
பொருட்பால்
அரசியல் - இறைமாட்சி
கல்வி
இறைவனுக்குக் கல்வி வேண்டும்; முதன்மையாக நாட்டு மக்களிடையும் அவன் கல்வியை வளர்க்கவேண்டும். இது பற்றித்தான் இறைமாட்சி என்னும் பகுதியையடுத்துக் "கல்வி' என்னும் பகுதி அமைக்கப்பட்டுள்ளதோ! கல்வி என்றால் என்ன? இதற்கு விளக்கம் வேண்டுவ தின்று. எல்லோர்க்கும் தெரியும். கல்வி பற்றிய பழங்காலக் கொள்கைக்கும் இக்காலக் கொள்கைக்கும் வேற்றுமை மிக உண்டு. ஆனால், வள்ளுவர் கொள்கை என்ன என்று ஆராய்ந்து காண்பதுதான் இங்கே நம்வேலை. வள்ளுவரின் கல்விக் கொள்கை, பிற்காலப் பெரிய கல்வி வல்லுநர்களின் கொள்கைகளுக்கு (Doctrines of Great Educators) ஒத்து வருகிறதா என்றுதான் பார்த்து விடுவோமே!
கற்றலும் கிற்றலும்
(தெளிவுரை) கற்க வேண்டியவற்றைப் பழுதறக் கற்க வேண்டும். அதன்படியே நடக்கவும் வேண்டும்.
'கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க வதற்குத் தக'.
(பதவுரை) கற்பவை=கற்கக்கூடியவற்றை, கசடு அறக் கற்க=குற்றமறக் கற்கவேண்டும். கற்றபின்=கற்றதும், அதற்குத் தக நிற்க=அவ்வாறு கற்றதற்கு ஏற்றபடி நின்றொழுக வேண்டும். (கசடு=குற்றம்; தக=ஏற்ப= பொருந்த நிற்றல்=ஒழுகுதல்-நடத்தல்.)
(மணக்குடவர் உரை) கற்கப்படுவனவற்றைக் குற்ற மறக் கற்க, கற்ற பின்பு அக் கல்விக்குத் தக வொழுகுக.
(பரிமேலழகர் உரை) ஒருவன் கற்கப்படு நூல்களைப் பழுதறக் கற்க, அங்ங்னங் கற்றால் அக்கல்விக்குத் தக அவை சொல்லுகின்ற நெறிக்கண்ணே நிற்க.
(ஆராய்ச்சி விரிவுரை) கற்கவேண்டும், அதன்படி நிற்க வேண்டும், என்பது குறள். கல்வி என்னும் பெயரில் உலகில் மக்கள் செய்துகொண்டு வருவது என்ன? பல நூல்களை வைத்துப் படித்துக் கொண்டிருக்கின்றனர். நூல்கள் என்பன யாவை? பல அறிஞர்கள் தங்கள் வாழ்க்கையில் வாழ்ந்து கண்ட முடிபுகளை எழுதி வைத்து விட்டுப் போயிருக்கின்றனர்; அந்த வாழ்க்கை யனுபவக் குறிப்புகளின் தொகுப்பைத்தான் நாம் நூல் (புத்தகம்} என்கின்றோம். அத்தகைய நூல்களைப் படிக்கின்றோம், ஏன் படிக்கின்றோம்? நாம் முட்டின்றி வாழ்வதற்காகப் படிக்கின்றோம். அந்த நூல்கள் நம் வாழ்க்கைக்கு எவ்வாறு துணை செய்கின்றன? முதல் முதலில் அமெரிக்கா சென்று வந்தவன், இப்படியிப்படிப் போக வேண்டும்; இப்படியிப்படி நடந்துகொள்ள வேண்டும்' என்று தன் அனுபவத்தை எழுதிவைத்தான். அதைப்படித்துவிட்டுச் செல்பவனுக்கு வழிப்பயணம் எளிதாகிறது. இந்த வழி காட்டி (Guide) வேலையைத்தான் முன்னோர் எழுதிவைத்த நூல்களும் செய்கின்றன. இவற்றைப் படித்துத்தானா தெரிந்துகொள்ள வேண்டும்? நாமே வாழ்ந்து பார்த்துத் தெரிந்து கொள்ளக் கூடாதா? செய்யலாம்; ஆனால் காலமும் முயற்சியும் மிகவும் வீணாகும். வாழ்க்கையின் பூட்டுதிறப்புகளைத் தெரிந்துகொள்வதிலேயே காலங் கழிந்துவிடும். ஆக்க வேலைகளுக்குக் காலம் போதாது. முட்டின்றி வாழ்க்கை வாழமுடியாது. ஆகையால்தான் முன்னோர் நூல்களைக் கற்கவேண்டும்.
ஒருவனுக்கு இப்போது வயது முப்பது. அவன் மூவாயிரம் ஆண்டுகளாக எழுதப்பட்டு வந்துள்ள நூல் களையெல்லாம் படித்திருக்கிறான் என்றால் அவனுக்கு இப்போது வயது வெற்று முப்பது அன்று; மூவாயிரத்து முப்பது (3000+30=3030) ஆகும்; அந்த நூல்களைப் படிக்காத எண்பது வயதுக்கிழவன் ஒருவன் இவனுக்கும் சிறியவனேயாவான். மூவாயிரத்து முப்பதுக்கும் வெற்று எண்பதுக்கும் எவ்வளவோ இடைவெளி இருக்கிறதல்லவா? இதனால்தான்,
'ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக என்னாது அவருள்
அறிவுடையோன் ஆறு அரசும் செல்லும்'
எனப் பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ் செழியன் புறநானூற்றுப் பாடல் (183) ஒன்றில் கூறியிருக்கிறான் போலும்,
'கற்றான் இளமை பாராட்டும் உலகு'
என்பது நான்மணிக்கடிகை.
எனவே, கற்றல் என்பது, எதிர்கால நல்வாழ்வுக்காக முன்கூட்டியே பெறும் பெரியதொரு பயிற்சியே என்பது விளங்கும். பெற்றுள்ள சூழ்நிலைக்கு ஏற்பத் தன்னைப் பொருத்தி வாழக் கற்றுக்கொள்ளுதலே-பயிற்சி பெறு தலே கல்வியாகும்' - என்பது இக்காலக் கல்விக்கொள் கையின் முற்ற முடிந்த துணிபாகும். இதைத்தான் வள்ளுவர் 'கற்க நிற்க' என அறிவிக்கின்றார். கற்பது எதற்காக? நிற்பதற்காகத்தான்! கற்றுவிட்டோமே என்பதற் காக நிற்பதில்லை. கல்வியின் நோக்கமே நிற்பதுதான்! நிற்றல் என்பது வாழவேண்டிய முறைப்படி வாழ்வதுதான். வாழ்வதற்கு வழிகாட்டுவதுதானே கல்வி! அதனால்தான் கற்க நிற்க' என்றார் ஆசிரியர்-
"புரட்சி யகராதி' என்னும் பெயரில் ஓர் அகராதி தொகுக்கும்படி எனக்கு ஆணையிட்டால், கற்றல் என்றால் நிற்றல் என்றேகூட நான் பொருள் எழுதி வைத்து விடு வேன். இதற்கு நிகண்டு போன்ற மேற்கோள் சான்றாக இந்தக் குறளையே எடுத்துக்காட்டி விடுவேன். பின்னே என்ன? படிப்புக்கும் வாழ்க்கைக்கும் தொடர்பே இல்லாமல் எத்தனையோ பேர் தருக்கித் தடுமாறித் திரிகிறார்களே, அவர்களைப் படித்தவர்கள் என்று எவ்வாறு அழைப்பது? இந்தக் கறிக்கு உதவாக ஏட்டுச் சுரைக்காய்களையும், "புள்ளிக்கு உதவாத பள்ளிக் கணக்கர்களையும்' என்னென்பது! அதனால்தான், அண்ணல் காந்தியடிகள் கூட வாழ்க்கைக்குப் பயன்படும்படியான வாழ்க்கைக்கு ஆதாரமான கல்வியைப் பயிற்றுங்கள் என்று அறிவுரை தந்தார்கள். அவர்களது முறையினை நாம் ஆதாரக்கல்வி (Basic Education) என்றழைக்கிறோம், இதைத்தான் வள்ளுவப் பெருமானார், கற்று நிற்க-நிற்கக் கற்க என்று அப்போதே அறிவித்துப் போந்தார். இனி இக்குறளின் சொல் நயங்கட்குச் செல்வாம்:
பள்ளிக்கூடத்துக்கு வெளியிலே பயனற்ற ஏடுகளைப் படிப்பது மட்டுமல்ல - பள்ளிக்கூடத்திலேயுங் கூட பிற்கால வாழ்க்கைக்குப் பயன்படாத பல செய்திகள் படிக்கப்படு கின்றனவே, அது கூடாது. வாழ்க்கைக்குப் பயன்படுவனவே கற்கப்படவேண்டியனவாம். கற்கக் கூடாதவற்றைக் கற்றுக் காலத்தைக் குறைத்துக் கொள்ளற்க; கற்கவேண்டிய வற்றையே கற்பீராக, என்று சொல்ல வந்தவர் போல் 'கற்பவை கற்க' என்றார் ஆசிரியர். மூன்றாண்டுகள் முற்றுங்கற்றாலும் முடிவுபெறாத ஒரு தேர்வுக்கு (பரிட்சைக்கு) உரிய நூல்களை நான். மூன்றே திங்களில் கற்று முடித்துத் தேர்வு எழுதி வெற்றியும் பெற்று. விட்டேன் என்று வெட்கமில்லாமல் மார்புதட்டிப் பெருமை பேசுகின்ற பேயர்களே! முக்கியமாய்த் தேர்வுக்கு வரக் கூடியது எது என்று பார்த்துக் கோடு கிழித்துப் படித்துத் தேர்வு எழுதிவிட்டு, தேர்வுத்தாள் திருத்துபவரைத் துரத்து கின்ற பித்தலாட்டப் பேடியர்களே! உங்களால் எல்லோருக் கும் கெட்ட பெயராம். எனவே, நீங்கள் இப்படிக் கற்றால் போதாது. பிழையற - ஐயந்திரிபறக் கற்க வேண்டும், என்று சொல்ல விரும்பியவர்போல் கசடறக் கற்க என்றார் ஆசிரியர். 'கல்வி என்பது பின்னால் பயனளிப்பதுதான்' என்னும் கல்விக் கொள்கைக்கு அகச்சான்றாக, கற்றபின் நிற்க என்னும் தொடரிலுள்ள பின் என்னும் ஒரு சொல்லே போதுமே! 'கற்றபின் அதற்குத்தக ஒழுகுக- அல்லது-நடக்க' என்று சொல்லாமல் நிற்க' என்றது ஏன்? ஒழுகுதலில் தளராத உறுதிவேண்டும் என்பதை வற்புறுத்துவதற்காகவே "நிற்க' என்றார். நிற்றல் என்றால் நிலையாய் நிற்றல் தானே! இந்தக் காலத்தில் என்னவோ கட்டாயக் கல்வி (Compulsory Education) என்கிறார்களே -இந்தக் கட்டாயத்தை, 'க' என்னும் விகுதிபெற்று விதித்தல் பொருளில் வந்துள்ள கற்க நிற்க' என்னும் வியங்கோள் வினைமுற்றுக்கள் உணர்த்தி நிற்கும் நுண் பொருள் அழகினை நுனித்தறிந்து மகிழ்க! (வியங்கோள் வினை முற்றைப் பற்றியும், அதன் விதித்தற் பொருளைப் பற்றியும் இலக்கண நூலுள் கண்டு தெளிக) .
மேலும், இந்தக் குறளில் இருபத்தேழு எழுத்துகள் உள்ளன. அவற்றுள் இருபத்து மூன்று எழுத்துகள் கடின ஓசையுடைய வல்லெழுத்துகள். இப்பொழுது இந்தக் குறளை இரண்டு மூன்று முறை படித்துப் பாருங்கள்! வள்ளுவர் மிகுந்த காரசார உணர்ச்சியுடன் கல்வியைக் கட்டாயப் படுத்தியுள்ளார்! - மிகுந்த வல்லோசையுடன் வற்புறுத்தியுள்ளார்! அவர் வல்லெழுத்துகளை மிகுதியாகச் சேர்க்கவேண்டும் என்று எண்ணியா சேர்த்தார்? இல்லை. அவரது உள்ளத்தில் ஏற்பட்ட உணர்ச்சியின் ஊற்றமானது, அவரை யறியாது ஊற்றெடுத்து வெளிப் போந்து விட்டது. இதுதான் இயற்கைப் புலவர்களின் இயல்பு. எனக்கு எப்படி இது தெரிந்தது? இந்தக் குறளைப் படித்ததுமே, இதற்கும் ஏனையகுறள்கட்குமுள்ள ஒலிவேற்றுமைவிளங்கிவிட்டதே! இதற்காகத்தான், செய்யுட்களை யெல்லாம் நன்கு வாய் விட்டுப் படிக்கவேண்டும்; திரும்பத் திரும்பப் படித்துப் பார்க்க வேண்டும்!
எண்ணும் எழுத்தும்
”எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழு முயிர்க்கு”
(பதவுரை) எண் என்ப = எண்கள் என்று சொல் லப்படுவனவாகிய க, உ, ங், முதலானவும், ஏனை = மற்ற, எழுத்து என்ப = எழுத்துகள் என்று சொல்லப்படு வனவாகிய அ, ஆ, இ, ஈ. முதலானவும் ஆகிய, இவ்விரண் டும் - இந்த இருவகையாலான கல்விப் பொருள்களும், வாழும் உயிர்க்கு = வாழ்கின்ற மக்கள் உயிர்கட்கு, கண் என்ப = கண்களாம் என்று உண்மை யுணர்ந்தவர் சொல்லுவர். (எண் = கணிதம்; ஏனை = மற்ற; எழுத்து = எழுத்தாலான நூற்கல்வி.)
(மணக்குடவர் உரை) எண்ணென்று சொல்லப்படு வனவும் மற்றை எழுத்தென்று சொல்லப்படுவனவுமாகிய இவ்விரண்டு பொருளையும் உலகின்கண் வாழுமுயிர்களுக் குக் கண்ணென்று சொல்லுவர் அறிவோர்.
(பரிமேலழகர் உரை) அறியாதார் எண்ணென்று சொல்லுவனவும் மற்றை எழுத்தென்று சொல்லுவனவு மாகிய கலைகளிரண்டனையும் அறிந்தார் சிறப்புடையுயிர் கட்குக் கண்ணென்று சொல்லுவர்.
(விளக்கவுரை) இந்தக் குறளைப் படித்ததுமே வயிற் றெரிச்சல் கிளம்பிவிட்டது. இருக்கும் இழிநிலைக்கு நாணு கின்ற மான உணர்ச்சி ஏற்பட்டு விட்டது. இருந்த கண் களைக் கெடுத்துக்கொண்டு கண்ணாடி மாட்டிக்கொண்ட எளிய நிலை கூட அன்று நம் நிலை - இருந்த கண்களைத் தோண்டி எடுத்து விட்டு இரவல் கண்களைப் பொருத்திக் கொண்ட ஏளன நிலைதான் நமது நிலை. எண்ணும் எழுத்தும் இருகண்கள் என்றுள்ளாரே - தமிழர்களுடைய அந்தச் சொந்தக் கண்கள் எங்கே? மிக மிகச் சின்ன சின்ன பின்னத்துக்கு (Fraction) எல்லாம் தமிழ்க்கணக்கில் வாய்பாடு இருக்கிறதே! நாம் ஏன் படிக்கவில்லை? இப் போது ஒரு பின்னக்கணக்கைப்போட இரண்டு பக்கங்களை வீணாக்குகிறோமே - ஏன்? இப்போது பெரும்பாலோர்க்குக் கணக்கு வருவதில்லையே - ஏன்? பள்ளிக்கூடத்தில் படிப்பதல்லாமல், கணக்குக்கு என்று தனி ஆசிரியர் வேறு வைத்துப் பணத்தைக் கொட்டி யழுகிறார்களே - பயன் என்ன? எண்ணெய் செலவே தவிர, பிள்ளை பிழைத்த பாடு உண்டா? ஏன் இந்நிலை? தாய்மொழிக் கல்வி போய்விட்டது - அவ்வளவுதான்! இந்த வயிற்றெரிச் சலைச் சிறிது நேரம் மறந்து குறளுக்குள் செல்வோம்.
வள்ளுவனார் கல்வியை எண்ணும் எழுத்தும் என இரண்டாகப் பிரித்தார். இப்பொழுதும் நாம் படிக்கும் இலக்கியம், இலக்கணம், இசை, நாடகம், வரலாறு, நில நூல், தத்துவம், அறநூல், சட்டநூல், உளநூல், பொருளியல், அரசியல், வாணிகவியல், கணக்கு, அறிவியல், மருத்துவம், பொறியியல் முதலியவற்றுள் ஒவ்வொன்றையும் இந்த இரண்டனுள் ஏதாவது ஒன்றில் அடக்கலாம். இருப்பினும், ஒன்றுக்குள்ளே மற்றொன்றும் ஊடுருவி நிற்கும். இந்த இரண்டு மின்றிக் கல்வி ஏது? கலை தான் ஏது? ஆனால் நாம் இன்றைக்கு இரண்டு கண் குருடராகவும், ஒரு கண் பொட்டையராகவும், அல்லது, 'ஒன்றரைக் கண்ணன் கண்டீர் ஒற்றியூருடைய கோவே' என்று ஆண் டவனை அப்பரடிகள் அன்புக்கிண்டல் செய்திருப்பது போல ஒன்றரைக் கண்ணராகவும் காணப்படுகின்றோம். அதாவது பலருக்கு எண் எழுத்து இரண்டுமே தெரியா; எண் தெரிந்த சிலருக்கு எழுத்துத் தெரியாது; எழுத்துத் தெரிந்த சிலருக்கு எண் தெரியாது. சிலர் அது அதிலும் அரை - முக்கால் தெரிந்தவராயிருப்பர். இது இக்கால நிலைமை - உண்மைதானே! ஆனால் வள்ளுவர் சொல்லி யிருப்பதைப்பார்த்தால், மக்களுள் மிகவும் பெரும்பாலோர் இரண்டு கண்களும் பெற்றிருப்பதுபோல, எண் எழுத்து இரண்டும் அக்காலத்தவர் கற்றிருந்தனர் என்று கருதலாம்.
ஆசிரியர் கல்வியைக் கண் என்று சொல்லியுள்ளார். உறுப்புகளுள் கண்ணுக்கு எந்த இடம் கொடுக்கப்பட் டிருக்கிறதோ அந்த இடம் (முதலிடம்) இங்கே கல்விக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மக்கள் கூட, கல்வி வேறு - கண்வேறு என்பதை மறந்து, இரண்டையும் ஒன்றாகவே வழங்குகின்றனர். "நீங்கள்தாம் என் பிள்ளைக்குக் கண் திறந்துவிடவேண்டும், 'ஐயாதான் என் பிள்ளைக்குக் கண் திறந்து வைத்தார்' என்னும் வழக்குத்தொடர்களில் காணப்படும் "கண்" என்பது கல்விதானே? மேலும், கண் என்னும் சொல்லுக்கும் கணக்கு என்னும் சொல்லுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை ஒர்க. கண் என்ற அடிப்படையின்மேல் உருவானதுதான் கணக்கு என்னுஞ் சொல்லோ? கண்ணுவது கண்-கணக்கு. உருவத்தைக் காண உதவுவது கண் - உண்மையை உணர உதவுவது கணக்கு கணக்கு என்றால் கண்ணிதம் மட்டுமன்று; கணக்கு என்றாலே பொதுவில் நூல் என்று பொருள். புறநானூறு முதலிய பதினெட்டு நூல்களுக்குப் பதினெண் மேற் கணக்கு என்றும், நாலடியார் முதலிய பதினெட்டு நூல்களுக்குப் பதினெண் கீழ்க்கணக்கு என்றும் பெயர். கணக்காயர் என்றால் ஆசிரியர். கண்ணுக்கும்-கணக்குக்கும் -கல்விக்கும் உள்ள உறவை விளக்கவே இவ்வளவு எழுதப் பட்டது.
இந்தக் குறளில் மூன்றிடத்தில் என்ப' என்னும் சொல் வந்துள்ளது. எண் என்ப - எழுத்து என்ப என்னும் ஈரிடங்களிலும் என்ப' என்பதற்கு என்று சொல்லப் படுபவை' என்று பொருளாம். இது அஃறிணைப் பலவின் பால் வினையாலணையும் பெயர் முடிபு. பிறகு 'கண் என்ப' என்ற விடத்தில், என்ப' என்பதற்கு, என்று சொல்லுவர்' என்று பொருளாம். இது உயர்திணைப் பலர்பால் வினைமுற்று முடிபு. எண் என்ப ஏனை எழுத் தென்ப இவ்விரண்டும் கண் என்ப' என்ற தொடரில் எத்தனை இனிமை! எத்தனை அழகு! உண்மையில் கண்ணல்லாத - ஒரு தனி முழுப்பொருளாகிய தன் குழந்தையை நோக்கி, என் கண்ணே, என் கண்மணியே என்று தாயானவள் கொஞ்சிக் கொஞ்சிக் குலவுவதைப் போல, "எண் என்றா அதற்குப் பெயர் சொல்வது? எழுத் தென்றா அதற்குப் பெயர் சொல்வது? இரண்டு கண் என்றல்லவா அவற்றை அழைக்கவேண்டும்' என்று கொஞ்சிக் கொஞ்சி-குழைந்து குழைந்து வாயூறிப் போகிறார் வள்ளுவர். தார்போட்ட பாதையிலே புதுவண்டி வழ வழ' என்று போவதைப் போல் அமைந்துள்ள இந்தக்குறளை இன்னும் இருமுறை படியுங்கள்! "எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டுங் கண்ணென்ப வாழு முயிர்க்கு”, "எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டுங் கண் ணென்ப வாழு முயிர்க்கு”.
இந்தக் குறளிலுள்ள 'என்ப" என்னும் சொல்லின் மூன்றிடங்கட்கும் இதற்கு முன் குறிப்பிட்டுள்ள - முன்னையோர் கூறியுள்ன இலக்கண முடிபுகளை இப்போது அடியோடு மாற்றப் போகிறேன். இந்த மாற்றத்தினால் இந்தக் குறளின் அழகு மேலும் கூரிட்டுச் சுடர்வதை நோக்கலாம். இப்போது புது மாற்றத்தின்படி பொருள் சொல்லுகிறேன்; எண் என்ப, எழுத்து என்ப, இவ்விரண்டும் கண் என்ப' = எண் என்று சொல்லுவார்கள்; எழுத்தென்று சொல்லுவார்கள்; உண்மையில் இவ்விரண்டும் கண்ணென்று சொல்லத் தக்கவை-என்பதுதான் புது மாற்றம். முன் சொன்ன பொருளோடு இப்பொருளின் வேற்றுமையை நுனித்துணர்க. இப்பொருளின்படி, எண் என்ப-எழுத்து என்ப, என்னும் என்ப" இரண்டும் பலர்பால் வினைமுற்று முடிபு. கண் என்ப என்பதிலுள்ள என்ப’, பலவின்பால் வினைமுற்று முடிபாகும்.
எழுதப் படிக்கத் தெரியாவிட்டாலும், வாய் மூல மாவது எண்ணிக் கணக்கிடத் தெரிந்தால்தான் பொருளைக் கொடுத்து வாங்கி உலகில் வாழமுடியும் என்ற நம்பிக்கை பாமர மக்களிடமும் உண்டு. பள்ளிக்கூடம் போனால் தானே நாலு கணக்கு வரும்-நாலுபேரிடம் பற்று வரவு செய்து வாழ முடியும் என்ற குறிக்கோளுக்காகவே பிள்ளை யைப் பள்ளிக்கு அனுப்புபவர் பலர் உளர். இதைக் கருதித் தான், எண்ணென்ப என எண்ணை முன்னர் நிறுத்தி, ஏனை' என்னும் வரப்பை நடுவே இட்டுப் பிரித்து எழுத் தென்ப' என எழுத்தைப் பின்னால் தள்ளிவிட்டாரா ஆசிரியர்: ஒருவேளை எண் வலக்கண்ணோ? எழுத்து இடக் கண்ணோ? உடலுக்குக் கண்ணைப்போல் உயிருக்குக் கல்வி என்று சொல்ல வந்தவர் கண் என்ப வாழும் உயிர்க்கு என்றார். கண்ணின்றி உயிர் வாழ்வது கடினந்தானே? இந்தக் குறளை அடியொற்றித்தான் எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” என ஒளவையார் அருளினாரோ?
அறத்துப்பால்
இல்லறவியல் - வாழ்க்கைத்துனை நலம்
வாழ்க்கைத் துணை நலம்
வாழ்க்கையில் கணவனுக்குத் துணையாக இருக்கின்ற மனைவியின் குணநலங்களைப் பற்றிக்கூறும் பகுதியாதலின், இதற்கு வாழ்க்கைத் துணைநலம் என்னும் பெயர் வழங்கப்பட்டது. கணவனின் கடமைகளைக் கூறும் இல் வாழ்க்கை என்னும் பகுதிக்குப் பின், மனைவியின் மாண்பு களைக் கூறும் இப்பகுதியை அமைத்தது இயைபுடையது தானே!
வாழ்க்கைத்துணை
(தெளிவுரை) குடும்பப் பெண்ணுக்குரிய குணச்சிறப் புடன், கணவனது வருவாய்க்கேற்பச் செலவு செய்பவள் எவளோ அவளே நல்ல வாழ்க்கைத் துணைவியாவாள்.
'மனைத்தக்க மாண்புடைய ளாகித் தற்கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை'.
(பதவுரை) மனைத்தக்க மாண்புடையள் ஆ கி= குடும் பத்துக்குத் தகுந்த மாட்சிமை உடையவளாய், தற்கொண் டான் = தன்னை மணந்துகொண்ட கணவனது, வளத் தக் காள் = செல்வ வளப்பத்துக்குத் தகுந்தாற்போல் நடந்து கொள்பவளே, வாழ்க்கைத்துணை = உண்மையில் வாழ்க் கைக்குத்துணையாவாள். (மனை = மனையறம்-குடும்பம்; மாண்பு = மாட்சிமை - நற்குண நற்செய்கைகள்; தற் கொண்டான் - தன் கொண்டான் = கணவன். வளம் = வந்துகொண்டிருக்கும் செல்வ வளம்).
(மணக்குடவர் உரை) தான் பிறந்த குடிக்குத் தக்க வொழுக்கத்தை யுடையாளாய்த் தன்னைக் கொண்டவனது வருவாய்க்குத் தக்க செலவினையுடையவள் இல்வாழ்க்கைக் குத் துணையாவாள்.
(பரிமேலழகர் உரை) மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகளை யுடையளாய்த் தன்னைக்கொண்டவனது வருவாய்க்குத் தக்க வாழ்க்கையை யுடையாள் அதற்குத் துணை.
(விளக்கவுரை) வாழ்க்கைத் துணையாகிய மனைவிக்கு இந்தக் குறளில் இலக்கணம் சொல்லப்பட்டுள்ளது. என்ன? ஒருவனுக்கு மனைவிதான் வாழ்க்கைத்துணையா? அவன் தாய் தந்தையர் என்ன ஆவது? அவன் உடன் பிறந்தார்கள் என்ன ஆவது? உற்றார் உறவின்முறையார் ஊரார் உலகத்தார் என்ன ஆவது? இவர்கள் எல்லாம் இருக்க நேற்றுவந்த பெண்டாட்டி வாழ்க்கைத் துணையாகி விடுவாளா? அவளுக்கு அவ்வளவு பெரியபேரா? ஆம், அவளே வாழ்க்கைத்துணை. தாய்தந்தையரோ இறுதிவரை இருப்ப தில்லை. இருக்கும்போதும் அவர்களது அன்பு பல பிள்ளை களுக்கும் பங்கிடப்படுகிறது. உடன் பிறந்தார்களைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை. அவரவர்கட்கும் தனிக்குடும்பம் உண்டாகிவிட்டால், அதன் பிறகு அண்ணனாவது, தம்பியாவது! அண்டை வீட்டுக்காரனே மேல். உற்றார் - உறவின் முறையார், ஊரார் - உலகத்தாரோ, வாழ்ந்தாலும் பொறுக்கமாட்டார்கள் - தாழ்ந்தாலும் மதிக்கமாட்டார்கள். நண்பரோ, மனைவி யோடு அவர் போய்க்கொண்டிருக்கும் போது ஏறிட்டுப் பார்க்கமாட்டேன் என்கிறார் - சில சமயம் தெருவாயிற் படியோடு நிற்கவைத்துப் பேசியே வழியனுப்பி விடுகிறார். பிள்ளைகளுக்குள் பெண்பிள்ளைகளோ, அகப்பட்டவரையும் சுருட்டிக்கொண்டு அயலார் சொத்தாய்ப் போய் விடுகின்றனர். ஆண்பிள்ளைகளோ, திருமணம் செய்து வைத்துவிட்டால் அடியோடு மாறிவிடுகின்றனர். அவர் களுக்கு மனைவி என்ன - மாமனார் என்ன - மாமியார் என்ன - மைத்துனர்கள் என்ன - மைத்துணிகள் என்ன - இவர்களே நெஞ்சத்திரையில் நிழற்படம்போல ஒடிக்கொண்டிருக்கின்றனர். இப்படி ஒவ்வொன்றாகப் புடைத்துத் தூற்றிப் பார்த்தால் கடைசியாகத் தேறுவது மனைவி என்னும் ஒரு பொருள்தான். அவன் வாழ்வு அவள் வாழ்வு - அவன் தாழ்வு அவள் தாழ்வு. இன்ப துன்பம் இரண்டிலும் இறுதிவரையும் இணைந்து நிற்பவள் அவளே! நான் இவ்வளவு எழுதியதைக்கொண்டு என்னைப் பெரிய பெண்டாட்டிதாசன்' என்று எவரும் எண்ணிவிடவேண்டா! இதனை நானாகச் சொல்லவில்லை. வள்ளுவர் சொல்லி யிருக்கிறார் வாழ்க்கைத்துணை' என்று!
"இங்கே வள்ளுவர் அளவுமீறிப் புனைந்துரைத்து விட் டார். ஒருவேளை அவர் மனைவியார் அவ்வாறு நடந்திருக்க லாமோ, என்னவோ? சில பெண்டிரால், அவர்தம் கணவரது வாழ்க்கை பெரிதும் இடர்ப்படுகின்றதே - வாழ்க்கைக்கே இறுதி நேர்ந்து விடுகின்றதே! அவர்தமை "வாழ்க்கைத் துணை' எனல் வள்ளுவர்க்கு அடுக்குமா? என ஐயுறலாம் சிலர். வள்ளுவர் என்ன கொக்கா? அவர் அவ்வளவு தெரியாதவரா? ஆழம் தெரியாமல் காலை விட்டு அகப்பட்டுக்கொண்டு திணறுபவர் அல்லர் அவர். அதனால்தான், எல்லா மனைவியரும் வாழ்க்கைத் துணைகளாகி விடமுடியாது; மனைத்தக்க மாண்புடை யளாகித் தற்கொண்டான் வளத்தக்காளே வாழ்க்கைத் துணையாவாள் என்றார் வள்ளுவப் பெருந்தகையார்.
‘மனைத்தக்க மாண்பு' என்பது என்ன? முறை தெரி யாத பெண்ணொருத்தியை நோக்கி, குடித்தனம் செய்கின்ற பெண்ணா காரணமா தெரியவில்லையே என்று உலகியலில் பேசுவது வழக்கம். எனவே, குடும்பப்பெண் என்றால், அவ ளிடம் என்னென்னவோ நற்குண நற்செய்கைகளை மன் பதை (சமூகம்) எதிர்பார்க்கிறது, என்பது புலனாகும். "நல்ல பெண்மணி' என்னும் தலைப்பில் இப்போது நாட்டில் ஒரு பாட்டுப் பாடுகின்றார்களே, அதன்படி ஒழுகினாலேயே கூட ஏறக்குறைய மனைத்தக்க மாண்புதான்.
அடுத்து தற்கொண்டான் வளத்தக்காள்' என்றால் என்ன? கணவனும் மனைவியுமாக வெளியூரில் தனிக்குடும் பம் செய்கின்றனர் என வைத்துக்கொள்வோம். அங்கு மாமி இல்லை; மைத்துணி இல்லை, ஓரகத்தி இல்லை; ஊர்வம்புக் காரி ஒருத்தியுமே இல்லை. ஆயினும் அடிக்கடி இருவர்க் குள்ளும் இரும் பெரும் போராட்டம் நடக்கின்றது. அதற் குரிய காரணங்களுள் முதலிடம் பெறுவது, மனைவி விரும் பும் பொருள்கள் எல்லாம் வீட்டிற்கு வந்து சேராமையே! 'அதனால்' அவள் கணவனை மதிப்பதில்லை - பணிவிடை செய்வதில்லை. வேலைகளையும் செவ்வனே செய்து முடிப்பதில்லை. செலவாளிகளாக இருக்கின்ற அண்டை வீட்டு ஆறு முகத்தையும் எதிர் வீட்டு ஏகாம்பரத்தையும் எடுத்து ஈடு காட்டுகின்றாள். நீயும் ஒர் ஆண்மகனா என்று மானத்தை வாங்குகிறாள். குறைந்த வருவாயுடைய கணவன் என்ன செய்வான்? தன் எளிமையை வெளிக் காட்ட வெட்கி, கடன் வாங்கியாவது தொலைக்கிறான். அதன் பிறகு, ஆகா! இத்தகைய கணவர் கிடைப்பாரா என்ற புகழ்மாலை வீட்டில்! வாங்கிய கடனைக் கொடுக்க வழியற்றவன் என்ற இகழ்மாலை நாட்டில்!
செலவானது வரவுக்கு மேற்படாமல் உட்பட்டிருக்கு மானால், குறைந்த வருவாயினால் தாழ்வு ஒன்றும் இல்லை என்னும் கருத்தில், 'ஆகு ஆறு அளவு இட்டிதாயினும் கேடு இல்லை போகு ஆறு அகலாக்கடை' எனத்திருவள்ளு வரே தெரிவித்துள்ளார் மற்றோரிடத்தில். எனவே, நூறு காசு ஈட்டி மேலும் பத்துக்காசு கடன் வாங்குபவனைக்காட் டிலும், ஐம்பது காசு ஈட்டி அதில் ஐந்து காசு மிச்சப் படுத்துபவனே மேலானவன் என்ற மந்திரத்தை மனத்தில் இருத்தும் மங்கை நல்லாளே சிறந்த வாழ்க்கைத்துணை யாவாள். இது குறித்தே தற்கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத்துணை' என்றார் ஆசிரியர். ஆகவே, மனைவி ஆடம்பரச்செலவுகளை அறவே அகற்ற வேண்டும். கணவன் அவ்வாறு செய்தாலும் அவனைத் திருத்தவேண்டும்.
இங்கே இன்னொன்றும் கவனிக்கவேண்டும். கருமித் தனமாய் இருக்கவேண்டுமென ஆசிரியர் சொல்லவில்லை. கணவனது வருவாய் வளப்பத்துக்குத் தக ஒழுகவேண்டும் என்றுதான் சொல்லியுள்ளார். எனவே, குறைந்த வருவா யானால் சிக்கனமா-யிருக்கவேண்டும். நிறைந்த வருவா யானால் கூடியவரை பிறருக்கு உதவவும் செய்யலாம். இங்கே வளத்தக்காள் என்பதற்கு வேறொரு பொருளும் சொல்லலாம். அதாவது, கணவனது செல்வமாக இருக்கத் தக்கவள் - இவளே கணவனுக்குப் பெரிய செல்வவளம்' என்ற அழகு உரைதான் அது! இப்போது தீர்ப்பு வழங்குங்கள் - இத்தகையோளை வாழ்க்கைத்துணை என்று வாய்குளிர வழுத்துவதற்கு என்ன தடை? மேலும் துணை என்ற சொல்லுக்கு இணை - இரட்டை என்ற பொருளும் உண்டு என்பதும் இங்கே நினைவிருக்கட்டும்!
பெண் வைத்திருப்பவர்களே! மாப்பிள்ளையின் சொந்த வருமானத்தைக் கருதிப் பெண் கொடுப்பீராக! முன்னோர் சொத்தில் பிழைக்கும் தலையில்லாத முண்டங் களுக்குப் பெண் கொடாதீர்கள் என்று எச்சரிப்பது போல் தற்கொண்டான் வளம்' என்னும் தொடர் அமைந் திருக்கின்றதல்லவா? பெண் பார்ப்பவர்களே! பணத்துக் காகவும் பளபளப்புக்காகவும் பெண் கட்டாதீர்கள்! பண்புக்காகப் பெண் கட்டுவீர்களாக என்று எச்சரிப்பது போல் 'மாண்புடையள்' என்னுந்தொடர் அமைந்திருக் கின்றதல்லவா! என்ன அழகு!
காமத்துப்பால்
குறிப்பறிதல்
குறிப்பறிதல் என்பது, தலைமகன் தலைமகளது உள்ளக் குறிப்பை அறிதலாம். அதாவது, அவளுக்குத் தன் மேல் காதல் இருப்பதாகக் குறிப்பாய் உணர்தல். மழைக் காக ஏங்கியிருந்தவர்களுக்கு மழைபெய்யும் அறிகுறி தென் பட்டாற்போல, அவளது காதலுக்காக இதுவரை ஏங்கியிருந்த அவனுக்கு அது கைகூடப் பெறும் குறிப்புக் கிடைத்துள்ளது. அதனால்தான் 'தகையணங் குறுத்தல்' என்னும் பகுதிக்குப் பின் குறிப்பறிதல்' என்னும் இப் பகுதி வைக்கப்பட்டதோ:
நோயும் மருந்தும்
(தெளிவுரை) இவள் கண்களின் பார்வை இருவகை யாய்த் தென்படுகின்றது. அவற்றுள் ஒரு பிரிவு நோய் செய்யும் நோக்காகும்; மற்றொன்று அந்நோய்க்கு மருந் தாகும்.
“இருகோக் கிவளுண்க ணுள்ள தொருகோக்கு
நோய்கோக்கொன் றந்நோய் மருந்து”
(இரு நோக்கு இவள் உண் கண் உள்ளது: ஒரு நோக்கு நோய் நோக்கு; ஒன்று அந்நோய் மருந்து.)
(பதவுரை) இவள் உண் கண்=இவளுடைய மையுண்ட கண்களிலே, இரு நோக்கு உள்ளது = இரட்டை நோக்கம் இருப்பதாகத் தெரிகிறது. ஒரு நோக்கு நோய் நோக்கு = அவற்றுள் ஒரு பார்வை (காம) நோயை உண்டாக்கும் பார்வையாகும்; ஒன்று அந்நோய் மருந்து=மற்றொரு பார்வையோ அந்த (காம) நோயைத் தீர்க்கும் மருந்தாகும். -என்னே வியப்பு (உண்ணுதல்=மைபூசுதல்-உண் கண்= மையுண்ட கண்-மைபூசிய கண்.)
(மணக்குடவருரை) இவள் உண் கண்ணிலுள்ள நோக்கம் இரண்டு வகைத்து; அவ்விருவகையினும் ஒரு நோக்கு நோய் செய்யும் ஒரு நோக்கு அதற்கு மருந்தாம்.
(பரிமேலழகர் உரை) இவளுடைய வுண்கணகத்ததாய நோக்கு இது பொழுது என்மேலிரண்டு நோக்காயிற்று; அவற்றுள் ஒரு நோக்கு என்கணோய் செய்யு நோக்கு, ஏனையது அந்நோய்க்கு மருந்தாய நோக்கு
(விரிவுரை) இக் குறளைப் பற்றிய செய்தியொன்று யான் அறிந்து வைத்துள்ளேன். திருக்குறள் முழுதுக்கும் ஆங்கில மொழிபெயர்ப்பு உண்டல்லவா? டாக்டர் கிரெளல் (Dr. Graul) என்னும் ஐரோப்பியர்-செர்மனிக் காரர் என்று கருதுகிறேன்-நூலை ஒரு புரட்டுப் புரட்டிய போது, தற்செயலாய் இந்தக் குறள் அகப்பட்டதாம். அப்படியே மெய்ம்மறந்து விட்டாராம். 'ஆ' இப்படியும் ஒரு கருத்துள்ள பாடல் இருக்கிறதா? ஒருத்தியின் நோக்கி லேயே இருநோக்கு அவற்றுள் ஒன்று நோய் தருகிறது: மற்றொன்று அதற்கு மருந்தாகிறது. என்ன அழகான கருத்து! எவ்வளவு அருமையான கற்பனை! இந்நூல் முழுதும் படிக்கவேண்டும்; மொழி பெயர்த்துக் கொள்ளவும் வேண்டும்’-என்று பலவாறு பாராட்டி, அவ்வாறே படித்து, செர்மனியிலும் இலத்தீனிலும் மொழி பெயர்ப்பும் செய்தாராம். எனவே, தமிழர்களே! இனியாயினும் திருக்குறள் இன்பத்தை ஒத்துக் கொள்வீர்களா? திருக்குறள் பெருமையை நம்புவீர்களா? திருக்குறளை ஐயந்திரிபற முற்றும் படிப்பீர்களா? எங்கே பார்ப்போம்!
இங்கே இருநோக்கம் என்றால், இரண்டு நோக்கங்கள் இல்லை; ஒரே நோக்கந்தான். இரண்டு கண்கள் இருந் தாலும், இரண்டும் இணைந்துதான் நோக்க முடியும்அதுவும் ஒரு நோக்கந்தான் செய்ய முடியும். இங்கே இரு' என்றது ஒருவனது இரட்டை நடிப்பு (Double Act) போல, ஒருநோக்கின் இரட்டை நிலைமையைக்குறிக்கிறது. அதனால் தான் ஆசிரியர் இருநோக்கு’ என்று ஆரம்பித்திருந்தும் 'உள்ளது' என ஒருமையில் முடித்துப் போந்தார். இந்த இரட்டை நடிப்பில், ஒன்று நோய் செய்கிறது, மற்றொன்று மருந்தாகிறது. அப்படி என்றால் என்ன?
மாலை நான்கு அல்லது ஐந்து மணியானால் சிலருக்குத் தலைவலி ஏற்பட்டு விடும். தேநீர் அருந்தினால்தான் அது போகும். அந்தத் தலைவலிக்கு மருந்து எது? தேநீர். அந்தத் தலைவலிக்குக் காரணம் என்ன? அதுவும் அந்தத் தேநீர் தான். கிடைக்காதபோது நோய்-கிடைத்தபோது மருந்து. மதுவும் அப்படியே-மங்கையும் அப்படியே! இந்தக் கருத்தை 'குண நாற்பது' என்னும் நூலிலுள்ள
'மருந்தின் தீராது மணியின் ஆகாது
அருந்தவ முயற்சியின் அகறலும் அரிதே
தான்செய் கோய்க்குத் தான்மருந் தாகிய
தேனிமிர் கறவின் தேறல் போல
நீதர வந்த நிறையழி துயரம் கின்
அருளின் அல்லது பிறிதின் தீராது'
என்னும் பாடற் பகுதியோடு ஒத்திட்டு நோக்கி மகிழ்க! (நறவின் தேறல் = மது: நீ என்றது தலைமகளை.) எனவே தலைமகளது நோக்கம், பிள்ளையையும் கிள்ளிவிட் டுத் தொட்டிலையும் ஆட்டி விடுகின்ற கதையாயுள்ளது என்பது புலனாம். உண்மையில் அவ்வாறு செய்யவேண்டும் என்பதா அவளது நோக்கம்? இல்லை. அவளது பார்வை யிலே உள்ள கவர்ச்சி இயற்கையாய் அவனது காம நோயைத் தூண்டுகிறது; அவளது பார்வையிலே உள்ள காதல் குறிப்பு அவனுக்கு அமிழ்த மருந்தாகி ஆறுதல் அளிக்கிறது. அவ்வளவுதான்! நாடகத்திலே கூத்தடிக் கிறார்களே, அவ்வாறா நம் வள்ளுவர் படைப்பாகிய தலை மகள் நடந்து கொள்வாள்? இல்லை; அவள் நாணமுடை யவளாதலின், கண் வீச்சிலே காதலைச் சொரிகிறாள். அந்தக் குறிப்பை அறிந்து கொள்கிறான் அவன். அதுதான் 'குறிப்பறிதல்' எனப்படுவது. முன்குறித்த குணநாற்பது' பாடலின் கருத்து, இந்தக் குறள் கொடுத்த கொடையாக இருக்குமோ!
பொருள்பால்
கண்ணும் புண்ணும்
(தெளிவுரை) கற்றவர்களே கண்ணுடையவர் ஆவார் கள்; கல்லாதார் முகத்தில் இருப்பவை கண்கள் அல்லஇரண்டு புண்களே!
'கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர்'
(பதவுரை) கண்ணுடையர் என்பவர் கற்றோர் = உண்மையில் கண் உடையவர் என்று சிறப்பித்துச் சொல்லப் படுதற்கு உரியவர்கள் கற்றவர்களே யாவார்கள். கல்லா தவர்= கற்காதவர்களோ, முகத்து இரண்டு புண்ணுடையர் -முகத்திலே கண்கள் அல்ல-இரண்டு புண்கள் உடையவர் களாகவே கருதப்படுவார்கள்,
(மணக்குடவர் உரை) கற்றோர் கண்ணுடைய ரென்று சொல்லப்படுவர்; கல்லாதவர் முகத்தின் கண்ணே இரண்டு புண்ணுடையரென்று சொல்லப்படுவர்.
(பரிமேலழகர் உரை) கண்ணுடையரென்று உயர்த்துச் சொல்லப்படுவார் கற்றவரே; மற்றைக் கல்லாதவர் முகத்தின் கண் இரண்டு புண்ணுடையர், கண்ணிலர்.
(விரிவுரை) வள்ளுவர் இந்தக் குறளில் கல்லாதாரை அச்சுறுத்தி மிரட்டியிருக்கிறார்-இல்லையில்லை-உண்மையை எடுத்துரைத்து எச்சரித்திருக்கிறார். ஆம், இஃதோர் எச்சரிக்கையே! சென்னையை அடுத்துள்ள பூவிருந்தவல்லி (பூந்தமல்லி) என்னும் ஊரிலுள்ள அரசினர் கண்ணில்லார் பள்ளிக்கு ஒருமுறை யான் சென்றிருந்தேன் - சொற் பொழிவும் ஆற்றினேன். அன்றைய நாள் எனக்கு ஒரு மறுபிறவியாகும். கண்ணிலாரை நூற்றுக்கணக்கில் காணும் எவரும்-கல் நெஞ்சினராயினும்-கலங்கிவிடுவர்; கோழை நெஞ்சினராயின் கோவென்று கதறி அழுதேவிடுவர். அங்கே அவர்களைக் கண்ட பிறகுதான், எனக்குக் கண்ணென ஒரு பொருள் இருப்பதாகவும், அது மிக மிக இன்றியமையாத தாகவும், அதைக் கவனமுடன் காக்கவேண்டும் என்பதாகவும் அது போய்விட்டால் வாழ்க்கையில் பெரிதும் இடர்ப்பட நேரிடும் என்பதாகவும், அங்கே கண்ணில்லாத அவர்களே பல தொழில்களைச் செய்யும்போது நாம் எவ்வளவோ செய்யக் கடமைப்பட்டிருக்கிறோம் என்பதாகவும் உணர்ந் தேன். அங்கேதான் அப்பொழுதுதான் எனக்கு உண்மை யிலேயே கண்கள் திறந்தன. என் கண்களைத் திறப்ப தற்காகத் தங்கள் கண்களைப்போக்கிக் கொண்ட கண்ணப்பர்கள் அல்லவா அவர்கள்? இவற்றையெல்லாம் அவர்களிடம் ஒளியாது எடுத்துச் சொன்னேன். அவர்கட்குத் துணிவும் தன்னம்பிக்கையும் ஊட்டினேன். எனக்குக் கண்ணிருந்தும் கண்ணாடி மாட்டிக் கொண்டிருப்பதாகச் சொன்னேன். கண்ணாடி போட்டும் இரவிலே ஒன்றும் தெரியவில்லை என்று சொன்னேன் அந்த இரவு பகலற்ற தத்துவ ஞானிகளிடம். நீண்ட நேரம் எழுதினாலோ படித்தாலோ நெரிந்து நீர் கசிவதாகச் சொன்னேன் என் புண்ணைப் பற்றி-இல்லையில்லை என் கண்ணைப் பற்றி. இத்தகைய புண்ணுக்கண்ணை அவர்கள் இழந்துவிட்டார் களே யொழிய, அவர்கள் அங்கே எழுதப்படிக்கக் கற்றுக் கொண்டிருப்பதால், அவர்கள் கல்வியென்னும் உண்மையான கண்ணைப் பெற்றிருப்பதாகக் குறிப்பிட்டேன். 'கண்ணு டையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லாதவர்' என்னும் இந்தக் குறளையும் எடுத்துக் கூறி விளக்கினேன். இப்போது நீங்களே சொல்லுங்கள்! கண்ணிழந்தும் கல்வி கற்றுள்ள அவர்கள் குருடர்களா? அல்லது, கண்ணிருந்தும் கல்வி கற்காத வெறுஞ் சோற்றுத் துருத்திகள் குருடர்களா? எனவே, இப்பொழுது புரிகிறதா இந்தக் குறளின் உட்கிடை? இதை விளக்கவே இவ்வளவு சொன்னேன். என்னைப் பற்றி எழுதியதற்காகப் பொறுத் தருள்க!
அப்படியே கல்லாதவருக்கும் கண்ணிருப்பதாக வைத்துக் கொண்டாலும், இந்தப் புண்ணுக் கண் (ஊனக்கண்), வெளிச்சத்தில் உள்ள பொருளை மட்டும் ஒரு குறிப்பிட்ட தொலைவுக்குள் உள்ள பொருளை மட்டுமே காண முடிகின்றது; ஆனால் கல்விக்கண்ணோ (ஞானக்கண்ணோ) ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பொருள்களையும் நிகழ்ச்சிகளையும் காண்கின்றது - ஆயிரமாயிரம் கல் தொலைவிற்கு அப்பாலுள்ள பொருள்களையும் நிகழ்ச்சி களையும் காண்கின்றது. அதனாலேயே 'கண்ணுடையர் என்பவர் கற்றோர் என்றார் ஆசிரியர்.
கல்வியைக் கண் என்று சொல்லிவிட்டதால், எழுதப் படிக்கத் தெரிந்தவரெல்லோரும் – கொக்கோகங்களையும் கொலை நூல்களையுமே படித்துக்கொண்டிருப்பவ ரெல் லோரும் கற்றவராகிவிடமுடியாது. ஆசிரியர் முதல் குற ளில் கூறியுள்ளபடி, கற்பவை கற்று அதன்படி நிற்பவரே கற்றவராவர்-அவரே கண்ணுடையரு மாவர் என்பதைக் கருத்தில் நிறுத்தவேண்டும். வாழ்க்கையில் ஒழுங்குற நடந்து கொள்ளாதவனை - தவறி நடப்பவனை நோக்கி, "அடே குருட்டுப் பயலே’ என்று வைவதும் இங்கு நினைவுக்கு வரவேண்டும். இந்த நுட்பத்தை உள்ளடக்கியே 'கண்ணு டையரென்பவர் கற்றோர்' என்றார் வள்ளுவனார்.
'கண்ணுடையர் என்பவர் கற்றோர் என்ற வரையும் சரி! மேலும் வேண்டுமானால், கல்லாதவர் கண்ணில்லாத குருடர் என்று சொல்லிவிட்டுப் போயிருக்கலாமே! இதை விட்டு, மிக மிகக் கடுகடுப்புடன், முகத்திரண்டு புண் ணுடையர் கல்லாதவர்' என்று ஆசிரியர் சொல்லியிருப்பது ஏன்? காணுகின்ற கண்களைப்புண்கள் எனல் பொருந்துமா?
கல்வி யில்லாததற்காக மட்டும் வள்ளுவர் அப்படிச் சொல்லி விடவில்லை. மேலும் காணுவதும் செய்வதால் தான் ஆசிரியர் புண் என்றார். உண்மைக் கல்வி-அறிவுக் கல்வி இல்லாதவனின் கண்கள், காணக்கூடா தவற்றை யெல்லாம் கண்டு கொண்டு - ஒன்று கிடக்க ஒன்று புரிந்து கொண்டு, உடையவனுக்குத் துன்பம் தருவதால், துன்பமே செய்யும் புண்ணாக உருவகித்து விட்டார் ஆசிரியர். புண் என்றது பொருந்தவே பொருந்தாது என்கின்றீர்களா? கண்ணின் மேலே மாட்டிக்கொண்டிருக்கும் கண்ணாடி என்பது என்ன? கண் என்னும் புண்ணுக்குப் போடும் மருந்துதானே கண்ணாடி யென்பது! எனவே, நாகரிக இளைஞர்களே, நீங்கள் கண்ணாடி போட்டுக்கொள்வதன் மூலம், உங்கள் கண்களைப் புண்கள் என மெய்ப்பித்துக் காட்டுகிறீர்கள். உண்மையில் உங்களுக்குத் துணைக்கண் வேண்டுமானால் அந்தக் கண் கல்வியே; ஆதலின் கருத் துடன் கற்பீராக! என்று எச்சரிப்பதுபோல் இருக்க வில்லையா இந்தக் குறள்? ஈங்கு, கற்றறிவாளர் கருத் திலோர் கண்ணுண்டு 'கல்லாதார் நெஞ்சத்துக் காண வொண்ணாதே, கணக் கறிந்தார்க்கன்றிக் காண வொண்ணாது' என்னும் திருமூலர் திருமந்திரப் பகுதிகளின் உள்ளீட்டை ஒத்திட்டு நோக்குக! "ஞானக்கண் ஒன்று இருந் திடும் போதினிலே, ஊனக்கண் இழந்ததால் உலகினிற் குறையுண்டோ' என்ற பாட்டு வேறுதான் இருக்கவே இருக்கிறதே!
உடைமையும் இன்மையும்
(தெளிவுரை) செல்வரது வீட்டுக் கடைவாயிலிலே ஏங்கிக்காத்து நிற்கும் வறியவர்போல, கற்றவரது கடை வாயிலிலே காத்து நிற்றற் குரியர் கல்லாதவர்.
'உடையார்முன் இல்லார்போ லேக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.'
(பதவுரை) உடையார் முன் இல்லார் போல் ஏக்கற்றும் -செல்வ முடையவர்களின் முன்னே அச்செல்வம் இல்லாத ஏழைகள் எதிர்பார்த்து ஏங்கி நிற்றல் போல ஏங்கி நின்றும், கல்லாதவர் கற்றார் கடையரே-படிக்காதவர்கள் படித்தவர்களுக்குக் கடைப்பட்டவர்களே-அதாவது படித் தவரின் கடைவாயிலில் நிற்றற்கு உரியவரேயாவர். (உடையார் - செல்வர்; இல்லார்-வறியவர்; ஏக்கறுதல்ஏங்கித்தாழ்தல்.
(மணக்குடவர் உரை) பொருளுடையார் முன்பு பொரு ளில்லாதார் நிற்குமாறு போல, அதனைக் காதலித்து நிற்றலுமன்றிக் கற்றாரிடத்தாவர் கல்லாதார்,
(பரிமேலழகர் உரை) பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றாதலான், செல்வர் முன் நல்கூர்ந்தார் நிற்குமாறு போல, தாமும் ஆசிரியர் முன் ஏக்கற்று நின்றுங் கற்றார் தலையாயினார்; அந்நிலைக்கு நாணிக் கல்லாதவர் எஞ்ஞான்று மிழிந்தாரே யாவர்.
(ஆராய்ச்சி உரை) இங்கே பரிமேலழகர்களுக்கு ஒர் அறைகூவல் பரிமேலழகரை விட்டால் திருக்குறளுக்கு வேறு புகல் இல்லை என்னும் கூட்டம் ஒன்று இருந்தது மட்டு மில்லை-இன்னும் இருக்கிறது. ஆமாம், அது என்ன செய்யும்! தானிருக்கும் கிணறு மட்டுந்தானே தனக்குத் தெரியும். எனவே. கிணற்றுத் தவளையைப் போல, எவரும் தம் குட்டையனுபவத்தைக் கொண்டு உலகத்தை அளக் கவோ - ஆழம் பார்க்கவோ கூடாது. பரிமேலழகர்கள் இங்கே பதில் சொல்லட்டும்!
நான் இளமையில் படித்ததெல்லாம் பரிமேலழகர் உரைத்ான். எனக்குப் பாடம் சொன்னவர்கள் எல்லோரும் பரிமேலழகர் உரையைப் பின்பற்றித்தான் சொன்னார்கள். நானும் நம்பியிருந்தேன். நாளடைவில், இந்தக் குறளுக்கு அவர் சொல்லும் உரையின் பொருத்தமில்லாமையை உணர்ந்தேன். என் கருத்துக்கு மணக்குடவர் உரையும் ஊக்கந் தந்தது. இனிக் குறளுக்கு வருவோம்.
இப்பொழுது ஒருமுறை குறளையும் பரிமேலழகர் உரை யையும் படித்துப்பாருங்கள்! எனது உரையையும் படித்துப் பாருங்கள்! நான் இந்தக் குறளை ஒரே வாக்கியமாகக் கொண்டு, கல்லாதவர் கற்றவரது கடைவாயிலில் நிற்றற்கு உரியவர் - எது போல - இல்லாதவர் இருப்பவர் எதிரில் ஏங்கி நின்றிருப்பதைப் போல், என்று பொருள் பண்ணினேன். பரிமேலழகரோ, குறளை இரண்டு வாக்கியங்களாகப் பிரித்து எடுத்துக் கொண்டு, கற்றார் தலையாயினார் என்றும், கல்லாதவர் கடையர் என்றும் பொருள் பண்ணியுள்ளார். அவர் உரைப்படி, குறளில் இல்லாத தலையாயினார் என்ற சொல்லை வலிந்து கொண்டு வந்து புகுத்தாவிட்டால் உரை சரியாய் வராது. ஏன் இந்தத் தொல்லை? மேலும், உடையார் முன் இல்லாதவர் போல ஆசிரியர் முன் மாணவர் இருக்கவேண்டு மென்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்தக் கருத்தை இக் காலக் கல்வி வல்லுநர்கள் மிகவும் வன்மையாகக் கண்டிப்ப துடன், ஏளனமும் செய்கின்றனர். இக்கால உளநூல் (Psychology), மாணவர் ஒன்றும் இல்லாதவர் அல்லர் - எல்லாம் உடையவரே - அவரை இழிவாகக்கருதக்கூடாது என்கிறது. பாருங்கள், வள்ளுவரை இந்த நுண்ணிய உண்மையை அறியாதவராய்ப் படைத்துக் காட்டிப் பழி யேற்றுகிறார் பரிமேலழகர். அன்றியும், ஆசிரியர் - (மாணவர்) என்ற சொற்களுக்கே குறளில் இடமில்லையே! உடையார்முன் இல்லார் - கற்றார் முன் கல்லாதவர், இது தானே இந்தக்குறளின் இயற்கையான அமைப்பு! எவ்வளவு அழகான அமைப்பு! எவ்வளவு அருமையான கருத்து!
முன் குறளில், கற்றோர்க்கும் கல்லாதவருக்கும் ஒரு வேறுபாடு காட்டினார் ஆசிரியர். அதாவது, கற்றாரைக் கண்ணுடையராகவும், கல்லாதவரைப் புண்ணுடையராக வும் சொல்லிக்காட்டினார். இந்தக் குறளிலோ இன்னொரு வேறுபாடு காட்டுகிறார். அதாவது, கற்றவரை உடையவ ராகவும், கல்லாதவரை இல்லாதவராகவும் படைத்துக் காட்டியுள்ளார் ஆசிரியனார். இந்தக் குறளில் உடையார்’ என்றது செல்வரை; இல்லார்’ என்றது வறியரை. உலக வழக்கில் கூட, பணக்காரனை உடையவன் - இருக்கிறவன் என்றும், ஏழையை இல்லாதவன் - எளியவன் என்றும் சொல்லுவது உண்டல்லவா?
இந்தக் குறளின்படி நோக்கின். கல்வி ஒருவகை உடைமை (செல்வம்) ஆகும்; கல்லாமை ஒருவகை இன்மை (ஏழமை) யாகும். எனவே, உடையவர் முன் இல்லாதவர் ஏங்கி நிற்றல்போல, கற்றார் முன் கல்லாதார் கைகட்டி நிற்றற் குரியர் என்பது கருத்து, உலகில் நடப்பது தானே இது!
அறத்துப்பால்
மனைமாட்சி
(தெளிவுரை) மனைவியிடம் குடும்பப் பண்புகள்சிறப்புகள் இல்லையாயின் வேறு எது நிறைந்திருப்பினும் வாழ்க்கை சிறவாது.
’மனைமாட்சி யில்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்'
(பதவுரை) இல்லாள்கண் = மனைவியிடத்தில், மனை மாட்சி இல்லாயின் = மனையறத்துக்கு (குடும்பத்துக்கு) வேண்டிய சிறப்புப் பண்புகள் இல்லாமற்போனால், வாழ்க்கை = (அவளைத் துணையாகக்கொண்டு நடாத்தும்) குடும்ப வாழ்க்கையானது. எனை மாட்சித் தாயினும் = வேறு எத்தகைய மாட்சிமையை - அதாவது - செல்வம், புகழ் போன்ற சிறப்பினை உடையதாக இருந்தாலும், இல் =ஒன்றும் இல்லாததாகவே கருதப்படும். (இல்லாள்= மனைவி; எனை= எந்தவிதமான).
(மணக்குடவர் உரை) குடிக்குத் தக்க வொழுக்கம் மனையாள் மாட்டு இல்லையாகில், அவ்வில்வாழ்க்கை எத்துணை நன்மைகளை யுடைத்தாயினும் ஒரு நன்மையும் இன்றாம்.
(பரிமேலழகர் உரை) மனையறத்திற்குத் தக்க நற்குண நற்செய்கைகள் ஒருவனில்லாளிடத் தில்லையாயின் அவ்வில் வாழ்க்கை செல்வத்தான் எத்துணை மாட்சிமை யுடைத்தா யினும் அஃதுடைத்தன்று.
(விளக்கவுரை) மனைமாட்சி மனைவிக்கு இருக்கத் தானே வேண்டும். அதனால்தானே அவளுக்கு மனைவி என்னும் பெயரும் கொடுக்கப்பட்டது. மனைக்கு உரியவள் மனைவி. வள்ளுவரோ இல்லாள்" என்று அழைக்கிறார். இல் என்றால் வீடு. இல்லுக்குரியவள் - வீட்டுக்குரியவள் இல்லாள். இந்தச் சொல்லோடு தொடர்புடைய நயமான செய்தியொன்று நினைவிற்கு வருகிறது. தமிழினம் மனை விக்குக் கொடுத்திருக்கும் மதிப்புக்கு, மனைவி. இல்லாள் என்னும் சொற்களே சான்று பகருமே! மேலும், ஆடவர் தம் மனைவியரை எங்கள் வீட்டிலே’ என்னுஞ் சொல்லால் குறிப்பிடுவது மரபு, ஆண்மகன் தான் சிறுவனாய் இருக்கிற போது எங்கள் வீட்டிலே கேட்டார்கள்' எனத் தன் பெற்றோரை வீட்டிலே’ என்னுஞ் சொல்லால் குறிப்பிடு கிறான்-அவனே தனக்குத் திருமணமாகிவிட்ட பின்பு, தன் பெற்றோர் இருக்கும்போதே, எங்கள் வீட்டிலே கேட்டார்கள்' எனத்தன் மனைவியை வீட்டிலே’ என்னும் சொல்லால் குறிப்பிடுகிறான். என்ன விந்தை இது ஒருவர் தம் நண்பரிடம், எங்கள் வீட்டிலே வாங்கிவரச் சொன் னார்கள் என்பார். வீட்டிலே என்றால் உன் தந்தையார் வாங்கிவரச் சொன்னார்போலும் என்பார் நண்பர். இல்லை யையா, எங்கள் வீட்டிலே என்கிறேன். - நீ என்னவோ தந்தையாரா என்று கேட்கிறாயே என்பார் இவர். உடனே நண்பர், ஒகோ! உன் தாயார் வாங்கிவரச் சொன்னாரா? சரிதான், அப்படிச் சொல்லு என்பார். அதற்கு இவர், இல்லையையா இல்லை, எங்கள் வீட்டிலே வீட்டிலே என்று அடித்துக் கொள்கிறேன், மறுபடியும் தாயாரா என்று கேட்கிறாயே, வீட்டிலே என்றால் வேறு யாரையா? என் மனைவிதான் வாங்கிவரச் சொன்னாள் என்பார். உடனே நண்பர். ஓ அப்படியா! தாய்தந்தையரைவிட மனைவி இருந்தால்தான் உனக்கு வீடு வீடாகத் தெரியும் போலும் எனக்கூறி நகையாடுவார். நான் இவ்வளவு நேரம் வீண்கதை எழுதவில்லை. எழுத்துக்கு எழுத்து இந்தக் குறளின் விளக்கமேயாகும். வள்ளுவர் இல்லாள்இல்லாள் என்று சொல்லியிருப்பதிலுள்ள உண்மை இது தான்! ஒரு சிலர் இந்தத் 'தத்துவத்தை இன்னும் கூர்மை யாகப் புரிந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. மனைவி பேரால் வீடு வாங்குபவர்களைத்தான் சொல்லு கிறேன். ஆனால், அவர்கள், பங்காளிக்குப் பாய்ச்சல் காட்டுவதற்காகவும், கடன்காரர்களுக்குக் கடுக்காய் கொடுப் பதற்காகவும், பெண்டாட்டி பேரால் வீடுகளை வாங்கிப் போட்டு விட்டதாக உலகினர் சொல்கின்றனர். அவர் களைக் கேட்டால், நாங்கள் இல்லாள்" என்னும் திருவள்ளுவர் வாக்குக்கு மதிப்புக் கொடுக்கிறோம் என்று சொல்வார்களோ என்னவோ! தீர்ப்பை உங்கள் பொறுப்பிலேயே விட்டுவிடுகிறேன்.
சில குடும்பங்களில் கணவன் கட்டிக்கரும்பாய் இனிக் கிறான்; மனைவியோ எட்டிக்காயாய்க் கசக்கிறாள். எனவே, கணவனுக்குப் பண்பாடு இருந்தால் போதாது; மனைவிக்கு மாட்சிமை வேண்டும் என்பதை வற்புறுத்தவே, "இல்லாள் கண் இல்லாயின் இல்' என்று அடுக்கினார் ஆசிரியர். இங்கே, இல்லாள் என்பதன் இறுதியில் உள்ள ள் என்னும் எழுத்தையும். கண் என்னும் ஏழாம் வேற்றுமை உரு பில் உள்ள ண் என்னும் எழுத்தையும் நன்கு அழுத்தந் திருத்தமாக ஒலிக்க (உச்சரிக்க) வேண்டுமல்லவா? அவ்வாறு அழுத்தி ஒலிக்கும்போது. அந்த வற்புறுத்தல் குறிப்புத் தோன்றுவது காண்க. இன்னும் இரண்டு முறை சொல்லிப் பார்ப்போம், மனைமாட்சி இல்லாள் கண் இல்லாயின் மனைமாட்சி இல்லாள் கண் இல்லாயின். என்ன சொல் நயம்! எவ்வளவு பொருள் நயம்! நேரில் பாடம் சொல்லும் பொழுது, இந்த நுணுக்கங்களையெல்லாம் இன்னும் நன்றாக எடுத்துக் காட்ட முடியுமல்லவா?
கணவனோ பட்டம் பல பெற்றவன்; பதவிமேல் பதவி வந்து மோதுகிறது; பணங்காசோ மிகுதி - இன்னும் எல்லாம் இருக்கின்றன. ஆனால் ஒரே ஒரு குறை. அதுதான் மாட்சிமையுடைய மனைவி கிடைக்காத குறை. அது இல்லாமல் வேறு எது இருந்துதான் என்ன பயன்? அவளை விரட்ட முடியாது. அன்றைக்கு ஆயிரம் பேருக்கு முன்னாலே தாலி கட்டினாயே - அவர்களையெல்லாம் அழைத்துக் கொண்டுவா! எனக்கு ஆக வேண்டியதைத் தீர்த்துவிடு என்று மிரட்டுவாள். எனவே, இவன்தான் கூறாமல் 'சந்நியாசம் கொள்ளவேண்டும். இவ்வாறு கொள்ளலாமா? இதுவா இல்வாழ்க்கைக்கு அழகு? இதனால்தான், வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல்' என்றார் வள்ளுவனார். "பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு-பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு என்பது பழமொழியன்றோ?
இங்கே வள்ளுவர்க்கு ஒன்றும் ஒடவில்லை-ஒன்றும் புரியவில்லை - ஒரே குழப்பம் - உணர்ச்சி வயப்பட்டு விட்டார். பிற மாட்சிகளினும், மேலானதாக மனை மாட்சியைச் சிறப்பிக்கவந்த ஆசிரியர், இந்த மாட்சி இருந்தாலும் போதாது. அந்த மாட்சி இருந்தாலும் போதாது என்று எவையேனும் சில மாட்சிகளையாயினும் குறிப்பிட்டிருக்க வேண்டுமல்லவா? எதைக் குறிப்பிட்டாலும் ஈடாகாதுபோல் தெரிகிறது. எனவே, போங்களையா, அது எந்த மாட்சியாயிருந்தாலும் முடியாது என்னும் கருத்தில், 'எனைமாட்சித்தாயினும் என்று சொல்லிவிட்டார். மனை மாட்சி இல்லாவிடின், வாழ்க்கை இனிக்காது-சிறக்காது என்று சொல்லியிருக்கலாமே எனின், வாழ்க்கை இருந் தல்லவா அதன்பிறகு இனிப்பது-சிறப்பது? வாழ்க்கையே இல்லை போங்களையா என்று சொல்பவர்போல் எனை மாட்சித்தாயினும் இல்' என்று ஒரே அடியாய் அடித்து, விட்டார். எனவே, மனைக்கு வாய்த்துள்ள மங்கையர்களே! என்ன செய்ய இருக்கின்றீர்கள்?
காமத்துப்பால்
களவியல் - குறிப்பறிதல்
பொதுநோக்கு நோக்குதல்
(தெளிவுரை) தொடர்பில்லாத அயலாரைப் போலப் பொதுவாகப் பார்க்கும் போக்கு, புதிதாகக் காதல் கொள்வோரிடம் உண்டு.
'ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே யுள'
(பதவுரை) ஏதிலார் போல : (முன்பின் தொடர்பில் லாத) அயலாரைப்போல, பொது நோக்கு நோக்குதல் = பொதுவான பார்வையுடன் ஒருவரை யொருவர் பார்ப்பது, காதலார் கண்ணே உள = (புதிதாகக்) காதல் கொள்பவ ரிடம் உண்டு. (ஏதிலார் = அயலார்).
(மணக்குடவர் உரை) அயலார் போலப் பொதுநோக்கத் தால் நோக்குதல் காதலித்தார் மாட்டே யுளதாம். (பரிமேலழகர் உரை) முன்னறியாதார் போல ஒருவரை யொருவர் பொதுநோக்கத்தா னோக்குதல், இக் காதலை யுடையார் கண்ணே யுளவாகா நின்றன - (தோழி சொல்லியது)
(விளக்கவுரை) நாம் வெளியே தெருவே போய்க் கொண்டிருக்கும்போது பலரைப் பார்க்கிறோம்; அறிமுகமானவரையும் பார்க்கிறோம்-அயலாரையும் பார்க்கிறோம். அறிமுகமானவரைப் பார்க்கும் பார்வைக்கும் அயலாரைப் பார்க்கும் பார்வைக்கும் வேற்றுமையுண்டு. அயலார் எல்லோரையும் பொதுவில் பார்க்கிறோம். அறிமுகமான வரைச் சிறப்பாய் நோக்குகிறோம். எனவே, நோக்கிலே, பொது நோக்கு, சிறப்பு நோக்கு என இருவகை யுண்டு.
எந்தத் தொடர்பும் இல்லாத காளை யொருவனும் கன்னி யொருத்தியும் கண்ணுறும்போது பொதுநோக்கே நோக்கிக் கொள்வர். காதல் தொடர்புடைய காளையும் கன்னியுமோ சிறப்பு நோக்கு நோக்கிக் கொள்வர். ஏன் - இதற்கு முன்பு தொடர்பில்லாத காளையுங் கன்னியுங்கூட, முதல் முதல் தொடர்பு கொள்ளும்போது, உள்ளத்திலே ஆர்வம் இருந்தாலும் அதனை வெளிக்காட்டாது, ஒன்றும் அறியாதார் போலவே - பார்த்தும் பாராதவர் போலவேபட்டுக்கொள்ளாதவர் போலவே பொது நோக்கு நோக்கிக் கொள்வர். இது, மூன்று தாள் திருப்பும் வேலைக்கு அண்ணனாகும்.
மூன்று தாள் திருப்பிக் காசு பறிக்கும் சூதாட்டக் காரன், மூன்று சீட்டாட்டத் தாள்களை மாற்றி மாற்றிக் காட்டிக் கவிழ்த்துப் போட்டுவிட்டு, இதிலே வை . அதிலே வை-எதிலே வேண்டுமானாலும் வை காசு' என்று கூவிக்கொண்டிருப்பான். அவனைச் சூழ்ந்து பலர் நின்று கொண்டிருப்பர். அவர்களுள், அவனுடைய கையாட்களும் அங்கும் இங்குமாக இறைந்து நிற்பர். அந்தக் கையாட்களும் ஒன்றும் அறியாதவர் போலக் காசு வைப்பர். சூதாட்டக் காரனோடு நேர்மையாக வாதாடுபவர்போல நடிக்கவுஞ் செய்வர். இவர்களும் தாள் திருப்புபவனும் பிறரை ஏய்ப்ப தற்காகத் தமக்குள் தொடர்பில்லா-தவரைப் போல் நடிக்கின்றனர். ஆனால், முதல் முதலாகக் காதல்கொள்ளும் காளையும் கன்னியுமோ, தமக்குள்ளேயே ஒருவரை யொருவர் ஏய்ப்பதற்காகக் கபடமற்றவர்போல் நடிக் கின்றனர். இதனால்தான் இவர்தம் நடிப்பை, மூன்று தாள் திருப்பும் வேலைக்கு அண்ணன் எனக் கற்பனை செய்தேன் நான். இவர்தம் நடிப்புத் திறனை, ஏதிலார் போலப் பொது நோக்கு நோக்குதல்' என்னுந் தொடரிலுள்ள போல’ என்னும் உவமச் சொல்லால் சுட்டிப் போந்தார் திருவள்ளுவனார். காதலர் ஏதிலர் போல நோக்குதல் என்றால் அது நடிப்புத் தானே! காதலர் எங்கே? ஏதிலர் எங்கே? இருதிறத்தார்க்கு மிடையே, இரு துருவங்களின் தொலைவு உள்ளதே!
இன்னொன்று:- காதலர் ஏதிலர் போல நோக்குவதில் ஒரு தனிச் சுவையும் உண்டு-நெஞ்சத்திலே ஒரு தனிப் பெருமிதமும் உண்டு-அதனால்தான். ஏதிலார் போல நோக்குதல் காதலார் கண்ணே யுள' என்றார் ஆசிரியர். இவர்கள் உள்ளத்திலே கள்ளத்தனம் உடையவர்கள் என்பதைக் காதலார்' என்னும் சொல்லும், வெளியிலே 'அரிச்சந்திரன் ஆட்டம் ஆடுகிறார்கள் என்பதை 'ஏதிலார்' என்னும் சொல்லும் அறிவித்து நிற்பதை அறிந்து மகிழ்க.
இவர்கள் பொதுநோக்கு நோக்குவது ஒருமுறையா? இருமுறையா? இல்லை, பல முறை - பற்பல முறையாம். இவ்வாறு வள்ளுவர் குறளில் சொல்லவில்லையே! இல்லை யில்லை சொல்லியிருக்கிறார். பொதுநோக்கு நோக்குதல் காதலார் கண்ணே யுள' என்னும் தொடரில் உள' எனப் பன்மையில் முடித்திருப்பதின் உட்கருத்து இதுதான்! உளது என ஒருமையில் சொல்லியிருந்தால் ஒரு முறை நோக்கியதாகக் கொள்ளலாம். நோக்குதல் காதலார் கண்ணே யுள' என்றதால், காதலர்களிடையே பலமுனை நோக்கங்கள் நடைபெற்றமை புலனாகும். எனவே, இதனை 'ஒருமைபன்மை வழு என எவரும் எண்ணவேண்டா! இவர்கள் உண்மையில் ஏதிலரா யிருந்திருப்பின் ஒருமுறை நோக்கியதோடு விட்டிருப்பர். ஆனால், இவர்கள் 'விடாக் கண்டர் தொடாக்கண்டர்கள் ஆகிய காதலர்கள் ஆதலின், ஏதிலார் போல நோக்கும்போது பலமுறை நோக்கித் தான் இருப்பார்கள். இந்நுட்பத்தை உள' என்னும் பன்மைமுடியில் அடக்கிக்காட்டிய திறனே திறன்!
பரிமேலழகர் இந்தக் குறளைத் தோழி கூற்றாகக் கொண்டுள்ளார். சிவபூசையில் கரடி விடுவது போல, முதல் கண்ணுறுகையிலேயே (முதல் சந்திப்பிலேயே), தோழி தலையிடுவதாக எந்த அகப்பொருள் நூலும்' சொல்லவில்லை யாதலின், இதனைக் கவிக்கூற்றாகக் கொள்ளலாமே! அதனினும், தலைமகன் கூற்றாகவே கொள்ளலாமே! அவள் ஏதிலார்போலப் பொதுவாக நோக்குவதால் நம்மேல் காதல் இல்லை என்று பொருள் இல்லை; காதலை உள்ளே வைத்துக்கொண்டும் வெளியிலே அயலார் போல நோக்குவது உண்டு எனத் தலைமகன் தன் உள்ளத்துக்குச் சொல்லி ஊக்குவதாகக் கொள்ளலாமே இந்தக்குறளை ஆகவே, அவள் அடிக்கடி நோக்கும் பொது நோக்கத்தைக் கொண்டே, அவளுக்குத் தன்மேல் காதல் இருப்பதாகக் குறிப்பாய் அறிந்து கொண்டான் தலைமகன்.
பொருள் பால்
ஊறும் அறிவு
(தெளிவுரை) தோண்டிய அளவிற்கு ஏற்ப மணற் கேணி நீர் சுரக்கும்; அதுபோல, படித்த அளவுக்கேற்ப அறிவியல் பெருகும்.
'தொட்டனைத் துறு மணற்கேணி
மாந்தர்க்குக் கற்றனைத் தூறு மறிவு'
(பதவுரை) தொட்டனைத்து = தோண்டிய ஆழம் அக லத்திற்கு ஏற்ப, மணல்கேணி ஊறும் மணற்பாங்கில் உள்ள கேணியில் நீர் ஊறும்; (அதுபோல) மாந்தர்க்கு = மக்களுக்கு, கற்றனைத்து = கற்ற நூல்களின் - காலத்தின் அளவுக்கு ஏற்ப, அறிவு ஊறும் = அறிவுத்துறை வளரும். (தொடுதல் = தோண்டுதல்; மாந்தர் = மக்கள்; அனைத்து= அந்த அளவு.)
(மணக்குடவருரை) அகழ்ந்த அளவு மணற்கேணி நீருண் டாம்; அது போல, மாந்தர்க்குக் கற்ற அளவும் அறிவுண்டாம்.
(பரிமேலழகருரை) மணலின்கட் கேணி தோண்டிய வளவிற்றாக ஆறும்; அதுபோல, மக்கட்கறிவு கற்ற வளவிற்றாக ஆறும்.
(ஆராய்ச்சி விரிவுரை) இந்தக் குறளில் கவனிக்க வேண்டிய நுட்பங்கள் பல உள்ளன. இக்காலக் கல்வி நெறியாளர்கள். முற்காலக் கல்வி நெறியாளரின் கல்விக் கொள்கையை மறுத்து நகையாடுகின்றனர். 'மாணாக்கர்கள் ஒன்றும் அறியாதவர்கள் - ஓர் ஆற்றலும் இல்லாதவர்கள்: அவர்களின் மனம் வெற்றிடம்; அம்மனத்தில் ஆசிரியர் பலவற்றைப் புதிதாகப் புகுத்துகிறார். நம்மிடம் இல்லாத பொருளை நாம் கடைக்குச் சென்று வாங்கி வருவதைப் போல, மாணாக்கர்கள் தம்மிடம் இல்லாத பொருளைப் பள்ளிக்கூடம் சென்று பெற்று வருகிறார்கள்' என்றெல்லாம் பழைய காலத்தில் எண்ணிக் கொண்டிருந்தார்களாம். இக் காலத்திலும் இவ்வாறு எண்ணுபவர் உளரல்லவா? ஆனால், இக்காலக் கல்வித்துறை உளநூல் (Educational Psychology) கூறுவ தென்ன ? மாணவன் மனம் இயல்பாகவே பல ஆற்றல்களையுடையது; அவ்வாற்றல்கள் அடங்கியுள்ளன; அவற்றுக்குத் தக்க வாய்ப்புகள் கொடுத்து வெளிப்படுத்தி நல்ல முறையில் வளர்த்து, சூழ் நிலைக்கு ஏற்பப் பொருந்தி வாழ மாணவனைப் பயிற்றுவது தான் ஆசிரியர் வேலை - பள்ளிக்கூடத்தில் செய்ய வேண்டிய பணி' என்றெல்லாம் இக்காலக் கல்விக் கொள்கை பறை சாற்றப்படுகிறது. சரி நல்லது! இக்காலக் கல்விக் கொள்கை வாழ்க!
ஆனால், இங்கே நான் சொல்லவிரும்புவது என்ன வெனில், பழைய பத்தாம் பசலிக் கொள்கையை மற்ற வர்போல் தாமும் நம்பியிராமல், இக்காலக் கல்விக் கொள் கையை அக்காலத்திலேயே இந்தக் குறளில் வள்ளுவர் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார் - என்பதே. இதனைச் சிறிது விளங்க நோக்குவாம்:
தோண்டிய அளவிற் கேற்பக் கேணி சுரப்பதுபோல், கற்ற அளவிற் கேற்ப அறிவு சுரக்கும் - என்பது குறட் கருத்து. கேணி தோண்டுபவர்கள், வெளியிலிருந்து புதுத் தண்ணிர் கொண்டு வந்தா கேணிக்குள் கொட்டுகின்றனர்? இல்லை; கேணிக்குள் முன்னமேயே இயற்கையாகவே இருக்கும் தண்ணீரைத்தான் தோண்டி வெளிப்படுத்து கின்றனர். அது போலவே, கல்வித்துறையில் பார்த்தாலும், புதிதாக ஒருவர் மற்றொருவர்க்கு அறிவைக் கொண்டு போய்ப் புகுத்திவிட முடியாது; இருக்கிற அறிவைத்தான் வெளிப்படுத்தி வளர்க்கின்றனர். இதுதான் இந்தக் குறளின் கருத்து - இக்காலக் கல்விக் கொள்கையும் இதுதான்! எனவே, ஆசிரியர், மாணவனை நோக்கி, மண்டுவே. மடையனே! நீ எங்கே உருப்படப் போகிறாய்? என்றெல்லாம் வைது ஊக்கத்தைக் குறைக்கலாகாது. முயன்றால் எதையும் முடிக்கும் எல்லா ஆற்றலும் ஏற்கெனவே பெற்றிருக்கின்ற ஓர் உயர்ந்த உயிர்ப்பொருளாக அவனை மதித்து, கெட்டிக்காரன் என்று தட்டிக்கொடுத்து ஊக்கப்படுத்தி, அவனுடைய அறிவாற்றலை வளர்த்துவிட வேண்டும். இப்பணியில் ஆசிரியருடன் பெற்றோர்க்கும் போதிய பங்கு இருக்கவேண்டும். மாணாக்கர்களும் அகல ஆழப்படித்து அறிவை மேன்மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும். இதுதானே, கற்றனைத் தூறும் அறிவு' என்று திருவாய் மலர்ந்தருளிய திருவள்ளுவனாரின் நோக்கமாக இருக்க முடியும்?
தோண்டிய அளவிற்கேற்ப நீரூறும் என்பதில், தோண்டிய அளவு என்பது என்ன? கேணியை அகல மாய்த் தோண்டுதல் - ஆழமாய்த் தோண்டுதல் என்பது தானே! அதுபோலவே கல்வியையும் அகலமாய்க் கற்க வேண்டும் - ஆழமாய்க் கற்கவேண்டுமல்லவா? அப்படி யென்றால் என்ன? பலகாலம் கற்றல்-பல நூல்களைக்கற்றல் -பலகலைகளையுங் கற்றல்தான் அகலமாய்க் கற்றல் என்பது. ஒவ்வொன்றையும் துருவித் துருவி ஐயந்திரிபற முற்ற முடிய நுண்ணிதின் கற்றுத் துறைபோதல் தான் ஆழமாய்க் கற்றல் என்பது. இவ்வளவு விரிந்த கருத்துகளைக் 'கற்றனைத் தூறு மறிவு' என்னும் தொடருக்குக் கொள்ள வேண்டும் என்பதை, தொட்டனைத் தூறும் மணற்கேணி என்னும் எடுத்துக்காட்டால் பெறவைத்தார் ஆசிரியர். இதற்கு எடுத்துக்காட்டு உவமையணி எனப் பெயர் கொடுத்துள்ளனர் அணியிலக்கண நூலார்.
தொடுதல் என்றால் தோண்டுதல் என்று பொருள் கண்டோம். அது எப்படி? அது மிகவும் என் உள்ளத்தைத் தொட்டது என்று உலக வழக்கில் பேசுகிறோம். உள்ளே யிருக்கும் உள்ளத்தைத் தொடுவதென்றால் எவ்வளவு ஊடுருவிச் சென்றிருக்க வேண்டும்! அதுபோலவே, கேணி தொடுதல் என்றால், மண்ணை ஊடுருவிச் சென்று உள்ளே யிருக்கும் தண்ணீரைத் தொடுதலோ? இங்கே இன்னும் ஒரழகு என்னவென்றால் கற்றல் (கல்வி) என்பதின் பகுதி யாகிய கல் (கல்லுதல்) என்பதற்கும் தோண்டுதல் - துருவுதல் என்றுதான் பொருள். மேலும் இங்கே ஊறும்' என்ற சொல்லையும் ஊன்றி நோக்கவேண்டும். ஊறுதல் - ஊற்றெடுத்தல் என்றால், உள்ளேயிருக்கிற பொருள் வெளிப் பட்டுப் பெருகுதல் தானே! கல்வி பற்றிய உளநூல் கொள்கையும் இதுதானே!
இன்னும் இங்கே, மணற்கேணி', 'மாந்தர்க்கு' என்னும் சொற்களையும் துருவி நோக்கவேண்டும். 'கற்றனைத் தூறும் அறிவு என்று சொன்னால் போதாதா? "மாந்தர்க்கு" என்று வேறு சொல்லவேண்டுமா? அவ்வாறு சொல்லாவிடின் மாட்டுக்கு அறிவு ஊறும் என்று சொன்னதாக எவரேனும் எண்ணி விடுவாரா? மாந்தர்க்கு என்று கூறியதில் கருத்து மிகவுண்டு. மாந்தருள் பலர், விலங்குகளைப் போலப் படிக்காதவரா யுள்ளனர். விலங்குகள் அன்றைக்கு இருந்தாற் போலவே இன்றைக்கும் இருக்கின்றன-அன்றைக்கு வாழ்ந்த வாழ்க்கையே இன்றைக்கும் வாழ்கின்றன. அந்தோ! மக்களுள்ளும் பலர் அவற்றைப் போலவே இன்றும் இருக் கின்றனரே! என்ன எளிமை!
விலங்குகளின் தலையெழுத்து இவர்களுக்கு வேண்டிய தில்லையே. இவர்கள் அவற்றினும் தனியறிவு பெற்றவர் களாயிற்றே! அவ்வறிவை மேலும் கல்வியினால் வளர்த்துக் கொள்ளலாமே! அப்படியிருந்தும் விலங்கு வாழ்க்கை வாழ்கின்றனரே! இனியாயினும் உணர்ந்து திருந்துவார் களாக!' என்றெல்லாம் சுட்டிக்காட்டி எச்சரிக்க விரும்பியவர் போல் மாந்தர்க்கு ஊறும் அறிவு என்றார் ஆசிரியர் வள்ளுவனார். இதற்கேற்பவே உவமையினையும் அமைத்துக் கொண்டார். அதாவது கேணி என்று கூறியுள்ளார். கேணி என்றால், சிமிட்டியால் கட்டப்பட்ட சின்ன (Tank) நீர்நிலைத் தொட்டியா? கீழே தோண்டப்பட்ட சின்ன குளம் - அல்லது - பெரிய கிணறுதான் கேணி என்பது. அதிலும் பாறையிலோ, கட்டாந்தரையிலோ தோண்டப் பட்ட கேணியா? இல்லை; மணலிலே தோண்டப்பட்ட கேணி. அந்த மணற்கேணியிலே நீர் ஊறச் சொல்லவா வேண்டும்? அதுபோல, உயர்திணையாகிய மாந்தர்க்கு அறிவு ஊறக் கேட்கவா வேண்டும்?-என்று மாந்தர்களைத் தட்டிக்கொடுத்து ஊக்கியுள்ளார் ஆசிரியர்.
'கற்றனைத் தூறும் அறிவு என்ற கருத்தின் வாடை, "தான் கற்ற நூலளவே யாகுமாம் நுண்ணறிவு' என்னும் ஒளவையின் மூதுரையிலும் வீசுகின்ற தன்றோ?' இந்த நுண்ணறிவைப் பற்றி, ஆங்கில மனநூல் அறிஞரான ஸ்பியர்மன் (Spearman) என்பவர் கூறியுள்ள கருத்துகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை யாகும்.
சாந்துணையுங் கற்க!
(தெளிவுரை) கல்வி யுடையவனுக்கு எந்த நாடும் சொந்த நாடாகுமாதலாலும், எந்த ஊரும் சொந்த ஊராகுமாகையாலும் ஒருவன் சாகும்வரை அவ்வுயர்ந்த கல்வியைக் கற்காததற்குக் காரணம் என்ன?
'யாதானு நாடாமா லூராமா லென்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு'
(பதவுரை) யாதானும் நாடாமல் = (கற்றவனுக்கு) எந்தநாடும் தன் நாடாகு மாதலானும், (யாதானும்) ஊரா மால் = எந்த ஊரும் தன் ஊராகு மாதலானும், ஒருவன் சாம்துணையும் கல்லாதவாறு என் : (அத்தகைய உயர் வளிக்கும் கல்வியை) ஒருவன் சாகும் வரையும் படிக்காமல் இருப்பது ஏன்? (யாதானும் = எதுவாயினும் - எந்த நாடும் - எந்த ஊரும்; என்:என்ன- என்ன காரணம்? சாம் துணையும் சாகும் துணையும்; துணை : இங்கே கால அளவு)
(மணக்குடவருரை) யாதோரிடத்தே செல்லினும் அதுவே தனது நாடும் ஊரும் போலாம்; ஆதலால் ஒருவன் சாந்தனையுங் கல்லா தொழுகுதல் யாதினைக் கருதி?
(பரிமேலழகருரை) கற்றவனுக்குத் தன்னாடுந் தன்னும் ருமேயன்றி யாதானுமொரு நாடும் நாடாம்; யாதானுமோ ரூரும் ஊராம்; இங்ஙனமாயின் ஒருவன் தானிறக்கு மளவுங் கல்லாது கழிகின்றது என் கருதி?
(ஆராய்ச்சியுரை) வள்ளுவர்க்குச் சினம் வந்து விட்ட தாக இந்தக் குறளிலிருந்து தெரிகிறது. படிக்காதவனை அவரால் மன்னிக்க முடியவில்லை. ஏன் அவன் படிக்கவில்லை என்று கேட்கிறார். படிப்பினால் அவனுக்கு நன்மையே தவிரத் தீங்கொன்று மில்லை என்று கூறுகிறார். நன்மை யென்றால் சிறிய நன்மையா? அங்கிங் கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் இறைவனைப்போல, படித்தவன் எங்கும் திகழலாம் என இனிப்புக் காட்டுகிறார்.
சிலர்க்கு இந்தக் குறளின் கருத்துப் புரிந்து செரிமானம் ஆவது அருமை. என்ன? படித்துவிட்டால் எந்த நாட்டுக்கும் போகலாமாம்-எந்த ஊருக்கும் போகலாமாம். இஃதென்ன விந்தை! எல்லா நாட்டுக்கும் எல்லா ஊருக்கும் படிப்பிருந் தால்தான் போகமுடியுமா? ஏன் பணமிருந்தால் எந்த நாட்டுக்கும்-எந்த ஊருக்கும் போகமுடியாதா? எங்கே செல்லினும் நிரம்பப் பணம் கொடுப்பவனுக்கு முதல் வகுப்பும் முதல் மதிப்பும் கிடைக்குமா? அல்லது நிரம்பப் படித்தவனுக்குக் கிடைக்குமா? இஃதென்ன சிக்கல்?
பணக்காரன் பணத்தைச் செலவழித்துப் பெறுகின்ற நன்மைகளை யெல்லாம், படித்தவன் பணமின்றியே பெற்று விடுவான். அதுவும் உலகத்தார் தாங்களாகவே படித்தவனை வலியத் தேடியழைத்துச் சிறப்புச் செய்வர். இஃது, அந்தக் காலப் புலவர் பெருமக்களிலிருந்து இந்தக் கால ஆராய்ச்சி வல்லுநர்கள் வரை சாலப் பொருந்தும். அன்று தொட்டு இன்றுவரை உலக வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள் உண்மை விளங்கும்.
'யாதானும் என்றார் ஆசிரியர். அதாவது, செல்லும் இடம், வளமுள்ளதாயினும் அல்லது வறண்ட தாயினும், நல்லோர் வாழ்வதாயினும் அல்லது தீயோர் உறைவதாயி னும், தன் அரசனுக்கு நட்புள்ள தாயினும் அல்லது பகையுடையதாயினும் இன்னும் யாதாயினும் சரியே, படித்தவனுக்கு அங்கே சிறப்பான வரவேற்பு உண்டு. இவ்வளவும் உள்ளடக்கியே யாதானும் என்றார். எவரும் முதலில் தம் நாட்டைக் குறிப்பிட்டு, அதன் பிறகே நகரத்தையோ அல்லது அதைச் சார்ந்த சிற்றுரையோ பிறநாட்டாரிடம் தெரிவிப்பது வழக்க மாதலின் நாடாமால் ஊராமால் என நாட்டை முன்னும் ஊரைப் பின்னுமாக அமைத்தார். இவற்றை நாடு ஆம் ஆல் - ஊர் ஆம் ஆல் என்று பிரித்து, ஆல் என்பதைப் பொருளற்ற அசையாக ஒதுக்குவர். அப்படி வேண்டியதில்லை. இந்த 'ஆல்' என்பதற்கு இங்கே 'ஆதலால்' என்பது பொருள். 'படித்தவனுக்கு எதுவும் தன் நாடாதலாலும் தன் ஊராத லாலும் சாகும் வரை படிக்கவேண்டும் என்று வாக்கியம் அமைத்தே பொருள் எழுதவேண்டும். இந்த நுட்பத்தை உணராத பரிமேலழகர் ஆல்'கள் இரண்டையும் வெட்டி யெடுத்து விட்டு, அடுத்த வாக்கியத்தோடு இணைப்பதற்காக, இடையே இங்ங்ன மாயின்’ என்ற ஓர் ஒட்டுப் போட்டு ஒட்டியுள்ளார். அவர் உரையை மற்றொருமுறை படித்துப் பாருங்கள். 'மணக்குடவர், பரிப்பெருமாள், பரிதியார், காலிங்கர் முதலிய அனைவருமே இந்த வெட்டுவேலையும் ஒட்டு வேலையுந்தான் செய்துள்ளனர். முதலில் வெட்ட வில்லை என்றால் பிறகு ஒட்ட வேண்டியதில்லை. இந்த 'ஆல்' என்பதை வள்ளுவர் அந்த ஒட்டுச் சொல்லாக அமைத்துள்ளார் என்பதைச் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்ப் பேரகராதி (Lexicon) தொகுத்தவர்களும் உணராமல் அசை' என எழுதிவைத்துள்ளனர். இவற்றை யெல்லாம் சொல்லப் போனால், பரிமேலழகருக்குமேல் உரையெழுதத் தெரிந்தவன் யாரடா என்று மீசையை முறுக்குகிறார்கள். நான் என்ன செய்வேன்! வள்ளுவர் இந்த அரிய சொல்லாட்சியை இன்னும் பல குறள்களில் அமைத்து வைத்திருப்பதை ஆங்காங்கே காணலாம்.
"இவ்வளவு நன்மையிருந்தும் ஏனையா ஒருவன் செய்யக் கூடாது?’ என்று உலக வழக்சில் வியந்து வினவுவதுபோல் என் ஒருவன் கல்லாதவாறு என்று ஆசிரியர் வினவுகிறார்வியக்கிறார்! மேலும் சாகும்வரை படிக்கவேண்டும் என்கிறார். இப்போது நம் நாட்டில் நூற்றுக்கு முப்பதுநாற்பது பேர் படித்திருப்பதாகக் கணக்கெடுத் திருக் கிறார்க்ளல்லவா? இந்தக் குறைந்த அளவுங்கூட, கையெழுத்துப் போட்டால் ஒர் எழுத்துக் குறைபவர்கள் உட்பட (கையெழுத்துக்கே இந்தக்கதி என்றால்..), பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதைக்காரர்கள் உட்பட, ஏன்மாமியார் வீட்டில் அஞ்சல் கடிதத்தைப் படிக்க நேர்ந்த போது நான் இளமையில் அட்டையில் பார்த்ததற்கு இதில் எழுத்துகள் அநியாயமாய் இளைத்து விட்டனவே என்று 'ஒ'வெனக் கதறி ஒப்பாரி வைத்தழுத மாப்பிள்ளை மக்குச் சாம்பிராணி' உட்பட எடுத்த கணக்காகத்தான் இருக்கக் கூடும். இதுவா படிப்பு: மாணவர்களே பள்ளிப்படிப்பை முடித்ததும் நூல்களை ஏறக்கட்டி விடுவீர்களோ? அது கூடாது. எந்தத் தொழில் செய்யினும் ஒய்வு கிடைக்கும் போதெல்லாம் படிப்பீராக! என்கிறார், ஏன்? கற்றது கைம்மண் அளவு கல்லாதது உலகளவு', 'கல்வி கரையில கற்பவர் நாள்சில'-ஆதலின், சாந்துணையும் கற்கச் சொல்கிறார்.
இப்பொழுது இக்குறட் கருத்தில் ஒரு புரட்சிப் புயல் வீசப்போகிறது:- "எந்த நாட்டாரும் எந்த ஊராரும் படிக்கலாம். இங்கே வசதியில்லை என்று ஏய்க்காதேஎந்த நாட்டுக்கும் எந்த ஊருக்கும் சென்று படிக்கலாம். உடல்நலம் இல்லை-பணவசதியில்லை என்று ஏய்க்காதே -படிப்பினால் செத்தாலுஞ் சரி - சாகும்வரை படி. படிப் பவனுக்கு எந்த நாட்டிலும் எந்த ஊரிலும் இடங்கொடுத்து மதித்து, சாகும் வரையுங் கூட ஆதரிக்கவேண்டும்'.- இது தான் சிந்தனையைச் சுழற்றும் அந்தப் புரட்சி புயல்!
அறத்துப்பால்
இல்லறவியல் - வாழ்க்கைத் துணை நலம்
இல்லதென்? உள்ளதென்?
(தெளிவுரை) மனைவிக்கு மாண்பு இருந்தால், குடும்பத் தில் இல்லாதது என்ன? எல்லாம் இருக்கும். மனைவிக்கு மாண்பு இல்லையானால், குடும்பத்தில் உள்ளது என்ன? ஒன்றும் இருக்காது.
'இல்லதெ னில்லவண் மாண்பானா லுள்ளதெ
னில்லவண் மாணாக் கடை'
(இல்லது என் இல்லவள் மாண்பானால், உள்ளது என் இல்லவள் மாணாக்கடை).
(பதவுரை) இல்லவள் மாண்பானால்=மனைவி மாட்சி மையுடன் விளங்கினால், இல்லது என்=வீட்டில் இல்லாத பொருள் என்ன? இல்லவள் மாணாக்கடை = மனைவி மாண்பின்றி யிருந்தால், உள்ளது என் = வீட்டில் இருக்கக் கூடிய பொருள் யாது? ஒன்றும் இராது. (இல்லவள் = மனைவி; மாண்பு = நற்குண நற்செய்கை தகுதி திறமை முதலியன உடைத்தா யிருத்தல்.
(மணக்குடவருரை) ஒருவனுக்கு மனையாள் மாட்சிமை யுடையாளானால், எல்லா மிலனே யாயினும் இல்லாதது யாது? மனையாள் மாட்சிமை இல்லாளானால் எல்லா முடையானாயினும் உண்டானது யாது?
(பரிமேலழகருரை). ஒருவனுக்கு இல்லாள் நற்குண நற்செய்கையளாயினக்கால் இல்லாததியாது! அவள் அன்ன ளல்லாக்கால் உள்ளது. யாது?
(விளக்கவுகரை) இந்தக் குறள், குடும்ப அறிவியலின் (Home Science) எல்லைக்கோட்டைத் தொட்டுவிட்டது -இல்லை, எல்லைக்கோட்டையும் தாண்டிவிட்டது. இதற்கு மேல் இன்னும் எந்தெந்தச்சொற்களால் குடும்பக் கலையின் உயர்நிலையை உரைத்துக் காட்டமுடியும்? வீட்டில் ஒன்றும் இல்லாவிடினும் மனைவிக்கு மாண்பு மட்டும் இருந்து விட் டால், மனைக்கு வேண்டிய மற்ற எல்லாம் இருப்பதாகவே பொருளாம். வீட்டில் எல்லாமே இருந்தாலும் மனைவிக்கு மாண்பில்லையாயின் ஒன்று ம்இல்லாததாகவே பொருளாம். இதனை இல்லது என்? உள்ளது என்? என்னும் வினாக்க ளால் விளங்கவைத்துள்ளார் ஆசிரியர். இங்கே வள்ளுவர், திட்டவட்டமாகத் தெளிவான ஒரு முடிவுக்குத் துணிந்து வந்து விட்டவராகக் காணப்படுகிறார். வேறு எது இருந்தா லும் இல்லாவிட்டாலும், குடும்பத்துக்கு உண்மையான மூலதனம் (Capital) மனைவியே.அதுவும் மாண்புமிக்க மனைவியே என்பது வள்ளுவர் கருத்து. இதனை இந்தக் குற ளில் இல்லவள் - இல்லவள் என இருமுறை கூறியிருப்பதும், மாண்பானால், 'மாணாக்கடை' என்னும் இருவகை உடன்பாட்டு, எதிர்மறை எச்ச முடிவுகளும் உணர்த்தி நிற்கின்றன. வன்றோ? மாண்பானால், மாணாக்கடை என்ப வற்றின் இறுதியில் உள்ள ஆனால்', 'கடை என்னும் இரண்டும் ஒருவகை வினையெச்ச விகுதி முடிவுகளாம். (Adverbial clause).
இனி இக்குறட் கருத்தைச் சிறிது விளங்க நோக்கு வாம்:- வீட்டில் போதிய பொருள்கள் இல்லாவிடினும், போதிய திறமையும் ஊக்கமும் உடைய மனைவி, எல்லாம் இருக்கும் வீட்டைவிடத் தன் குடும்பத்தைச் சீர்திகழச் செய்வாள்; திறமையும் ஆர்வமும் இல்லாதவளோ, எல்லாம் இருப்பினும், ஒன்றும் இல்லாத வீட்டை விடத் தன் குடும் பத்தைப் பாழ்படுத்துவாள். முன்னவள் செட்டாகப் புதிய பொருள்களைச் சேகரிப்பாள் - நீண்டநாள் வைத்துப் படைப்பாள். பின்னவளோ, புதிய பொருள்களைச் சேகரிப் பதுஞ் செய்யாமல் உள்ள பொருள்களையும் விரைவில் அழித்து ஒன்றும் இல்லையாக்குவாள். முன்னவள், வீட் டிற்கு விருந்தினர் வந்தால், குறைந்த பொருளைக்கொண்டே பலவகைக் கறிகள் செய்து உணவு படைப்பாள்; பின்ன வளோ, எல்லாம் இருப்பினும், இரண்டொன்றும் சரியாய்ச் செய்யாது கடனைக் கழித்தனுப்புவாள். முன்னவள் தன் ஏழைக் கணவன் இன்று காய் கறி வாங்கக் காசு இல்லையே என்றால், நேற்று வாங்கி வந்தவற்றுள் மிச்சம் உளது என் பாள்; பின்னவளோ, தன் கணவன் இன்றைக்கு என்ன வேண்டும் என்றால், நேற்று வாங்கி வந்தவை போதவில்லை, இன்றைக்கு இன்னும் நிறைய வாங்கிவர வேண்டுமெனக் கட்டளையிடுவாள். மேலும், இருப்பதைக் கொண்டு கணவன் முதலியோரை இன்புறுத்தித் தானும் இன்புறுவாள் முன் னவள்; எல்லாம் இருப்பினும், ஒரு விழுங்கு வெந்நீருக்கு வழியின்றித்
திண்டாடித் தவிக்கவிடுவாள் பின்னவள். வேறு துறைகளிலும் இவ்விதமே - இவ்விதமே! ஆவது
முன்னவ ளால் அழிவது பின்னவளால், இதனாலேயே, முன்னவள் வீடு எல்லாம்
உடையதாகவும், பின்னவள் வீடு ஒன்றும் இல்லாததாகவும் வள்ளுவரால் உரைக்கப்பட்டன.
இக் குறட் கருத்தே, இல்லாள் அகத்து இருக்க இல்லாதது ஒன்றில்லை என்னும் ஒளவையின்
மொழிக்குச் செவ்வி யளிக்கின்றது. இங்கே, திருவள்ளுவரின் மனைவியார், இளை யான்குடி
மாறரின் மனைவியார் போன்ற நற்பெண்டிரின் வரலாறுகள் நமக்குப் போதிய சான்று பகரும்.
மாண்பு அற்ற பத்து மாட்டுக்காரி, மாண்பு பெற்ற ஒரு மாட்டுக் காரியிடம் பால் வாங்கிய
கதை பலரும் அறிந்ததே!
சோர்விலாள் பெண்
(தெளிவுரை) தன்னையும் காத்துக்கொண்டு, தன் கண வனையும் போற்றி, புகழ்ச்சொல்லை நிலைநிறுத்தி, என்றும் சோர்வுபடா திருப்பவளே பெண்ணாவாள்.
'தற்காத்துத் தற்கொண்டான் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்'
(பதவுரை) தற்காத்து = (ஒழுக்கம், உடல் நலம் முதலியவற்றால்) தன்னையும் காப்பாற்றிக்கொண்டு, தற் கொண்டான் பேணி=தன்னை மணந்துகொண்ட கணவனை யும் உணவு முதலியவற்றால் காத்துப் போற்றி, தகைசான்ற சொல் காத்து = தகுதி நிறைந்த புகழ்மொழியினையும் காத்து நிலை நிறுத்தி, சோர்விலாள் பெண் = (இவற்றிலும் வேறு எந்தக் காரியத்திலும்) என்றும் சோர்வு கொள்ளா தவளே சிறந்த பெண்ணாவாள். (தற்கொண்டான் = கணவன்; பேணுதல் = உபசரித்தல்-காத்தல்; தகைசான்ற சொல்=புகழ் மொழிகள்).
(மணக்குடவருரை) தன்னையுங் காத்துத் தன்னைக் கொண்ட கணவனையும் பேணி, நன்மை யமைந்த புகழ்களையும் படைத்துச் சோர்வின்மை புடையவள்ே பெண் ணென்று சொல்லப்படுவாள்.
(பரிமேலழகருரை) கற்பினின்றும் வழுவாமற்றன்னைக் காத்துத் தன்னைக் கொண்டவனையும் உண்டி முதலிய வற்றாற் பேணி, இருவர் மாட்டும் நன்மை யமைந்த புகழ் நீங்காமற் காத்து, மேற்சொல்லிய நற்குண நற்செய்கை களிலுங் கடைப்பிடி யுடையாளே பெண்ணாவாள்.
(விளக்கவுரை) முன்னர், இல்வாழ்க்கை என்னும் பகுதி யின் முதற் குறனில், இயல்புடைய மூவர்க்கும்' என்பதற்கு இயல்பான உரிமையுடைய பெற்றோர், மனைவி, மக்கள் என்னும் மூவகையார்க்கும் - எனப்பொருள் எழுதினேன் நான். பின்னர், மூன்றாவதான 'தென்புலத்தார்' என்னும் குறளில், தான் என்பதற்குக் கணவன் (குடும்பத் தலைவன்) எனப்பொருள் உரைத்தேன். 'தான்' என்பதி லேயே தன்னைச்சேர்ந்த மனைவி அடங்கிவிட மாட்டாளா? "இயல் புடைய மூவர்' என்பதற்குள் அவளை அடக்க வேண்டுமா? அது பொருந்தாது - என என்னை மறுத்து நகையாடினர் சிலர். இங்கே இந்தக் குறளைக் கூர்ந்து நோக்க வேண்டுகிறேன். தன்னைக் காப்பதோடு தன் கணவனையும் காப்பது மனைவியின் கடமை எனத் தனித் தனியே பிரித்து இங்கே கூறியிருப்பது போலவே, அங்கேயும் தன்னைக் காப்பதோடு தன் மனைவியையும் காப்பது கணவன் கடமை என்னும் கருத்தை உட்கொண்டு, "இயல்புடைய மூவர்' என்பதில் மனைவியை அடக்கி ஆசிரியர் கூறியிருக்கலா மல்லவா? மூவருள் மனைவிபோக ஏனைய பெற்றோரும் மக்களும் உதவிக்கொள்வதை "மக்கட்பேறு என்னும் அடுத்த பகுதியில் ஆசிரியர் அமைத்து வைத்துள்ள அழகினை ஆண்டறிந்து மகிழ்க!
இனி, பாயிரம் எனவும் வீட்டுப்பால் எனவும் வழங்கப் பெறும் பகுதியிலிருந்து சில முத்துகளைக் காண்பாம்.
அறன்வலியுறுத்தல்
ஒல்லும் வகை
'ஒல்லும் வகையான் அறவினை யோவாதே
செல்லும்வா யெல்லாம் செயல்'
(ப-ரை) அறவினை - அறச்செயல்களை, ஒல்லும் வகையான் - முடிந்த அளவிலே, ஒவாதே-விடாமல், செல்லும் வாய் எல்லாம் - செய்யக்கூடிய வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம், செயல் - (l) செய்வாயாக.
(தெ-ரை) உடல் வளம் இல்லாதவன் பிறர்க்கு மிகுதி யாக உழைத்து உதவவேண்டியதில்லை; பொருள் வளம் இல்லாதவன் பிறர்க்கு மிகுதியாகக் கொடுத்து உதவ வேண்டியதில்லை: தங்கள் தங்களால் முடிந்த அளவு உதவினால் போதும்; ஒரு சிறிதும் உதவ முடியாவிட்டாலும் ஒரு தீமையும் செய்யாமல் இருந்தாலே பன்மடங்கு மேல்: எல்லாவளமும் இருக்கப் பெற்றவர்கள் ஏராளமாகப் பிறர்க்கு உதவவேண்டும்-என்னும் கருத்துகளையெல்லாம் உள்ளடக்கியே 'ஒல்லும் வகையான்' என்றார்.
'மனிதனுடைய தொழில்கள் மூவகைப்படும். அவை:நினைத்தல், பேசுதல், செய்தல் என்பனவாம். மனிதன் இம் மூன்று தொழில்களையும் ஒரு நொடிப்பொழுதும் ஓயாமல் மாறிமாறிச் செய்துகொண்டே யிருக்கிறான். எனவே, தீயன நீக்கி நல்லனவற்றையே நினைக்கவேண்டும்; பேசவேண்டும்; செய்யவேண்டும். கனவிலுங்கூட நல்லன. வற்றையே நினைக்கவும், பேசவும், செய்யவும்வேண்டும். அஃது எப்படி முடியும் எனின், விழித்துக்கொண்டிருக்கும் போது நல்லவிதமாக நடந்துகொண்டால் கனவிலும் அப்படியே நடக்கும். விழித்துக்கொண் டிருக்கும்போது கெட்டவிதமாக நடந்து கொண்டால் கனவிலும் அப்படியே நடக்கும். இஃது ஒருவகை உயிர்த் (தத்துவம்) தன்மை என உணர்க. எனவே, மனிதன் நாடோறும் இருபத்து நான்குமணிநேரமும் அறவழியில் நிற்கவேண்டும் என்பது புலனாகும். இக்கருத்துகளையெல்லாம் உள்ளடக்கியே ஒவாது (விடாமல்) செய்க என்றார் ஆசிரியர். பிறர்க்கு உதவி செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடின் தட்டாது செய்தே தீரவேண்டும். கட்டாயம் ஏற்படா விடினும் தாமாகவே பரிந்து சென்றும் செய்யவேண்டும். இவ்விருவகையாகத் தாம் செய்யும் உதவியை ஏற்றுக் கொள்ள ஆள் கிடைக்காவிட்டாலும், வழியில் உள்ள கல் முள், கண்ணாடி ஒடு முதலியவற்றை நடக்கும்போதே அப்புறப்படுத்தலாம்; தனியாக அமர்ந்து நல்ல நூல்களை எழுதலாம்; கைத்தொழில் செய்யலாம்; இவ்விதம் இன்னும் பல இயற்றலாம் - இக்கருத்துகளை யெல்லாம் உள்ளடக்கியே செல்லும்வாய் எல்லாம் செயல்' என்றார் இந்நயங்கள் இனிக்கச் செய்கின்றன. அன்றோ? எனவே, எம்மால், எப்போதும், எப்படி அறச்செயல் செய்யமுடியும் என்றியம்பி, எவரும் வாளா (வீணாக) காலங் கழிப்பதற்கு வழி யில்லையல்லவா?
நீ-தோன்றா எழுவாய்; செயல்-பயனிலை, செயல் என்பது அல்விகுதி பெற்ற வியங்கோள் வினைமுற்றாம்.
(மண-உரை) தமக்கியலும் திறத்தானே, அறவினையை ஒழியாதே செய்யலாம் இடமெல்லாம் செய்க.
(பரி-உரை) தத்தமக் கியலும் திறத்தான், அறமாகிய நல்வினையை ஒழியாதே அஃது எய்தும் இடத்தான் எல்லாம் செய்க.
அறத்தாறு
'அறத்தா றிதுவென(ல்) வேண்டா சிவிகை
பொறுத்தானோ டுர்ந்தா னிடை."
(ப-ரை) சிவிகை-பல்லக்கை, பொறுத்தானோடு-சுமந்து செல்பவனுக்கும், ஊர்ந்தான் - (பல்லக்கின் மேல்) ஏறிச் செல்பவனுக்கும், இடை - நடுவில் உள்ள, அறத்து ஆறு - அறத்தினுடைய தன்மை, இது - இன்னது, என(ல்) வேண்டா-என்று (யாம்) சொல்ல(ல்) வேண்டியதில்லை. நீங்களே உணர்ந்து கொள்ளலாம்.
(தெ-ரை) அறச்செயலே செய்யும் பெரியார் ஒருவரைப் பிறர் போற்றிப் பல்லக்கில் ஏற்றிச் சிறப்பு (மரியாதை) செய்கின்றார்கள். எனவே, அறச்செயல் புரிந்த ஒரு மனிதன், தன்னைப்போல அறச்செயல் செய்யாத மற்றைய மனிதனால் சிறப்பிக்கப் பெறுகின்றான் என்பது புலனாகும். ஆகவே, அறம் எத்தகைய பெருமையுடையது என்பது சொல்லாமல் விளங்குமே!
(மண-உரை) நீங்கள் அறநெறி இத்தன்மைத்து என்று அறிய வேண்டா, சிவிகையைக் காவுவானோடு செலுத்து வானிடைக் காணலாம்.
(பரி-உரை) அறத்தின் பயன் இது என்று யாம் ஆகம அளவையான் உணர்த்தல் வேண்டா, சிவிகையைக் காவுவானோடு செலுத்துவானிடைக் காட்சியளவை தன்னானே உணரப்படும்.
(ஆராய்ச்சி உரை) இக்குறளுக்குப் பலர் பலவிதமாகப் பொருள் உரைக்கின்றனர். அறம் செய்யாத தீயோன் (பாவி) பல்லக்கைச் சுமந்து துன்புறுவான்; அறம் செய்த நல்லோன் (புண்ணியசாலி) பல்லக்கின் மேல் ஏறி இன்புறுவான் என்ற கருத்தில் பழைய உரையாசிரியர்கள் பலர் உரை எழுதியுள்ளனர்.
'பல்லக்கைச் சுமந்து உதவி செய்பவனே அறம் செய்யும் நல்லோன் ஆவான். பல்லக்கின்மேல் ஏறிச் சுமப்பவனுக்குச் சுமைதந்து வருத்துபவனே கொடுமை செய்யும் கொடியோன் ஆவான்' என்பது பிற்காலத்திய சிலரின் பேருரை.
எமது கருத்து இவ்விரண்டும் அன்று. அஃதாவது:சுமப்பவனும் பாவியல்லன், ஊர்ந்து செல்பவனும் பாவி யல்லன். சுமப்பவனைக் காட்டிலும் ஊர்ந்து செல்பவன் உயர்ந்தவன் என்பதே. உயர்ந்தவன் என்றால் எவ்விதத் தில்? சாதியாலா? சமயத்தாலா? செல்வத்தாலா? தொழிலாலா? அல்லது வேறு பிறவற்றாலா? இல்லை யில்லை. எண்ணம், பேச்சு, செயல் என்னும் மூன்றும் நல்லனவாய் இருப்பதனாலேயே உயர்ந்தவன். இதனைப் பற்றிச் சிறிது ஆராயலாம்:
முன்பு அயல்நாட்டில் ஒருவர் தம் கழுத்தில் இருந்த வெள்ளைத் தழும்பை (வெண்குஷ்டம்) வெளியில் காட்ட வெட்கப்பட்டு, அதனை மறைப்பதற்காக "டை (தற்காலத் தில் கழுத்தில் கட்டப்பட்டுத் தொங்கும் உடை) கட்டிக் கொண்டாராம். அது பிறர் கண்ணுக்கு அழகாகவும் ஆடம்பரமாகவும் காணப்பட்டதாம் பின்பு அனைவரும் அங்ஙனமே செய்ய ஆரம்பித்தார்களாம். அஃது இப்போது ஆடம்பர உடையில் ஒரு கட்டாய இடம் பெற்றுவிட்ட தன்றோ?
செல்வர் ஒருவர் தம் மகள் மேல் உள்ள அன்பாலும், மருமகன்மேல் உள்ள ஆர்வத்தாலும், தம் செல்வ வளத்தாலும், மருமகனுக்கு அளவுமீறிச் சிறப்புச் செய்திருப் பார். அதனைக் கண்டு மற்றொருவரும் அங்ங்ணமே செய்திருப்பார். அது நாளடைவில் கட்டாயமாகிவிட்டது. ஒர் ஆடு குதித்தபடி மற்றைய ஆடுகளும் குதிக்குமாம்!
உண்மைப் பெரியார் ஒருவர், எண்ணம், பேச்சு, செயல் களால் நல்லவரா யிருந்திருப்பார். ஏனையோர் அவர்க்குப் பெருஞ் சிறப்புச் செய்திருப்பார்கள். அவர்மேல் உள்ள பெருமதிப்பால் அவரை நடக்கவிடாமல் பல்லக்கில் ஏற்றித் தாமே சுமந்திருப்பர். விசிறி விசிறியிருப்பர், இன்னும் பல சிறப்புகளை இயற்றியிருப்பர். பின்பு, எப்போதும் அப்பெரியாரைப் பல்லக்கில் ஏற்றிச் சுமப்பது தம்மால் முடியாது ஆதலின், அதற்கெனக் கூலியாள் வைத்திருப்பர். எனவே, பெரியாரைச் சிறப்பிக்கச் செய்யத் தொடங்கிய இப்பழக்கம், பின்பு அரசர்களையும் பெருஞ் செல்வர் களையும் அடைந்திருக்கலாம். நாளடைவில், நல்லவரோகெட்டவரோ - செல்வமும் செல்வாக்கும் உடையோர் பலரும் பல்லக்கு ஏறத் தொடங்கிவிட்டார்கள். இக்கொள்ளையால், இக்காலத்தில் பல்லக்கு என்னும் ஊர்தியின் பயனே பிழையாகக் கருதப்பட்டுவிட்டது. இயற்கைதானே! .
ஒத்துக்கொண்டிருந்தால், காந்தியடிகளாரை நடக்க விட்டிருப்பார்களா இவ்விருபதாம் நூற்றாண்டில்? அல்லது ஊர்தியில் ஏறத்தான் விட்டிருப்பார்களா? சிற்றுார்தோறும் தாமே சுமந்து செல்வதைப் பெரும் பேறாகக் கருதியிருப் பார்களே பல்லாயிர மக்கள் அக்காலத்தில் அரசர் பலர், புலவர்களுக்கு அணுக்கத் தொண்டு (விசிறுதல் முதலியன) செய்ததாக அறிவிக்கின்றனவே சங்க இலக்கியங்கள்! எனவே, சுமப்பவர் எல்லோரும் பாவிகளே என்றோ, அல்லது ஊர்பவர் எல்லோரும் பாவிகளே என்றோ இயம்புவது முறையா? இக்காலத்திய கை வண்டியை (ரிக்ஷா) எடுத்துக் கொள்வோம். இழுப்பவர் எல்லோரும் பாவிகளா? நல்லவரும் பலர் உளர். உட்கார்ந்து செல்பவர் எல்லோரும் பாவிகளா? நல்லவரும் பலர் உளர். இல்லாதவன் இழுக்கின்றான். சோம்பேறி ஏறிச் செல்கின்றான். ஒருவன் வாங்கிய ஒரு வண்டி விறகை மற்றொருவன் கோடாரி கொண்டு பிளக்கவில்லையா? இது மட்டும் நீதியா? இது மட்டும் பிளப்பவனுக்கு இன்பமாகவா தோன்றும்? இல்லையே! எனவே இவையெல்லாம் வயிற்றுக்காகச் செய்யும் ஒருவித வாணிகம் (வியாபாரம்) ஆகும். இவற்றோடு இக்குறளையும் இயைக்கலாமா? மேலும், 'அறம் செய்வதால் சிறப்பும் நன்மையும் உண்டு என்பதை வலியுறுத்துவது இவ்வதிகாரம் என்பதும் நினைவில் இருக்க வேண்டும்.
நீத்தார் பெருமை
பெரியர்-சிறியர்
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
(ப-ரை) செயற்கு- (எல்லோராலும்) செய்வதற்கு, அரிய-அருமையான (முடியாத) செயல்களை, செய்வார்செய்யவல்லவர்களே, பெரியர்-பெரியார் ஆவார்கள். செயற்கு அரிய-செய்வதற்கு அருமையான செயல்களை, செய்கலாதார்-செய்யும் வல்லமை யில்லாதவர்கள், சிறியர்- சிறியவர் ஆவார்கள்.
(தெ-ரை) செயற்கரிய செயல்களாவன:- ஒழுக்கத்து நீத்தல், இருமைவகை தெரிந்து ஈண்டறம் பூணுதல், உரன் என்னும் தோட்டியால் ஒரைந்தும் காத்தல், ஐந்தின்வகை தெரிதல், குணமென்னும் குன்றேறி நிற்றல், எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகுதல் முதலியனவாம்.
இக்குறளில், செயற்கரிய செய்வார் பெரியர் என்ற மாத்திரையானே, செய்யாதவர் சிறியர் என்பது தானே பெறப்படுமே! அப்படியிருக்க மீண்டும் ஒருமுறை திருவள்ளுவர் கூறியிருப்பது கூறியது கூறல்" என்னும் குற்றத்தின்பாற் படாதோ எனின் படாது;
'கூறியது கூறினும் குற்றம் இல்லை
வேறொரு பொருளை விளைக்கு மாயின்'
என்பது சான்றோர் மொழியன்றோ? இங்கு வேறென்ன பொருளை விளைக்கின்றது எனின், விளம்புதும்: - செயற்கரிய செய்வர் பெரியர் என்பதை மட்டும் கூறி நிறுத்திவிட்டால், செய்யாதவர்கள் நடுத்தரமானவர்கள் என்ற பொருள் பட்டுவிடு மல்லவா? அங்ஙனம் படக்கூடா தென்பதற்காகவே, செய்யாதவர்கள் தாழ்ந்தவர்கள் என்று விளக்கிக் காட்டுகின்றார் ஆசிரியர். மேலும், சிறந்த செயல் ஒன்றும் செய்யாத சிலர் தம்மைப் பெருமையடித்துக் கொள்கின்றார்க ளல்லவா? அவர்களைச் சுட்டிக்காட்டி நீங்கள் தாழ்ந்தவர்களே என்று இடித்துரைப்பதாகவும் இஃது எண்ணக்கிடக்கின்ற தன்றோ?
(மண-உரை) செயற்கு அரியன செய்வாரைப் பெரியோரென்று சொல்லுவர்; அவற்றைச் செய்யமாட்டா தாரைத் துறந்தாராயினும் சிறியோரென்று சொல்லுவர்.
(பரி-உரை) ஒத்த பிறப்பினராய மக்களுள் செய்தற் கெளியவற்றைச் செய்யாது அரியவற்றைச் செய்வார் பெரியார். அவ்வெளியவற்றைச் செய்து அரியவற்றைச் செய்யமாட்டாதார் சிறியர்.
ஐந்தின் வகை
சுவையொளி யூறோசை காற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே யுலகு.
(ப-ரை) உலகு-உலகமானது, சுவை-(உண்டுணரும்) சுவையும், ஒளி-(கண்டுணரும்) ஒளியும், ஊறு-(தொட்டால் உணரும்) ஊறும். ஒசை - (கேட்டுணரும்) ஒலியும், நாற்றம் - (மோந்துணரும்) வாசனையும், என்ற-என்று சொல்லப் படுகின்ற, ஐந்தின் வகை-ஐந்தின் திறத்தினை, தெரிவான் கட்டே - ஆராய்ந்தறிந்தவ னிடத்திலேயே அடங்கிக் கிடக்கும்.
(தெ-ரை) மேற்கூறிய ஐந்தின் திறத்தைத் தெரிதல் என்றால் என்ன? அஃது வருமாறு: தேனுறப் பேசித் தித்திப்பான தின்பண்டங்களைத் தருகின்றாள் மனைவி. வாயூற உண்டு வயிற்றை நிரப்பி விட்டான் கணவன். மேலும் தருகின்றாள். போதும் என்கின்றான். தாங்கள் இப்படி இரவு பகலாக உழைப்பது இதற்குத் தானே! இன்னும் கொஞ்சம் தின்னும் என்று கொஞ்சுகின்றாள். அவ்வறிவுரைக்கு அகமகிழ்ந்து அடைக் கின்றான் மேலும், அளவு மீறியதால் அமிழ்து நஞ்சாயிற்று. உடல் நலம் கெட்டது. ஊதியம் குறைந்தது. ஒன்றன்பின் ஒன்றாய்த் துன்பங்கள் பல தோன்றின. இஃது நாக்குச் சுவையால் வந்த நலக்கேடு. ஏனையவும் இவ்விதமே!
உண்ணுவதற்காக உயிர்வாழவில்லை; உயிர்வாழ்வதற் காகவே உண்ணுவது என்னும் கருத்துடைய பழமொழி யொன்று ஆங்கிலத்தில் உண்டு. உடம்பினை முன்னம் இழுக்கென்று இருந்தேன்', 'உடம்பினுக்குள்ளே உறு பொருள் கண்டேன்', 'உடம்பார் அழியில் உயிரார் அழிவர்", 'உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே' என்பன திருமூலர் மொழிகள். இவற்றின் கருத்தை அறிந்தவர் மிகச் சிலரே! அவரும் நடைமுறையில் காட்டுவதில்லை.
உயிர் சிறந்த செயல்களைச் செய்யவேண்டிய கடமை உடையது. அதற்காக அவ்வுயிர் உடம்பில் நீண்டநாள் நிலைத்து வாழவேண்டும். அதற்காக உண்ணவேண்டும்; காணவேண்டும்; கேட்கவேண்டும்; முகரவேண்டும்; உடலினைத் தூய பொருளால் தூய்மைசெய்து ஒம்ப வேண்டும். இவ் ஐவகை யின்பங்களே சுவை, ஒளி, ஒசை, நாற்றம், ஊறு என்பன.
மண், நீர், தீ, காற்று, விண் என்னும் ஐந்தால் ஆனதே உலகம், ஐம்பூதம் என்பன இவையே. உடம்பும் இவ்வைம் பூதங்களின் திரிவே. இவ்வைந்தும் உடம்பிலும் உள்ளன. உடம்பிற்குள் வெளி இடங்கள் (துவாரங்கள்) இருப்பதால் விண் உள்ளது எனவும், மூச்சுவிடுவதால் காற்று உள்ளது எனவும், எவ்வளவு உண்டாலும் எரித்து விடுவதாலும் - ஈரத்துணி காய்ந்து விடுவதாலும் நெருப்பு உள்ளது எனவும், உணவுப் பொருள்களை அரைத்துக் கொடுப்பதற்கு வாயிலிருந்து நீர் ஊறுவதால் தண்ணீர் உள்ளது எனவும், மயிர், நகம் முதலியன வெட்ட வெட்டத் தோன்றி முளைப்பதால் மண் உள்ளது எனவும் உணரலாம். மற்றும், வாய் நீரின் உதவியால் உணவுச் சுவையைப் பெறுகின்றது; கண் நெருப்பின் (விளக்கு, கதிரோன், நிலா) உதவியால் ஒளி பெறுகின்றது; மெய் காற்றின் உதவியால் ஊற்றின்பம் (ஊறு) பெறுகின்றது; செவி விண்ணின் உதவியால் ஒசை பெறுகின்றது (வானொலி); மூக்கு மண் உதவியால் நாற்றம் (வாசனை) பெறுகின்றது (வானுலக மலருக்கு வாசனையில்லை யென்று புராணங்கள் புளுகுவதின் பொருத்தமும் இதுதான் போலும்). இவையெல்லாம் ஆராய்ச்சியாளர்கள் அறிந்த செய்தியே! எனவே, வெட்டு வதற்குக் கையும் வாளும் கருவியாக இருப்பதைப்போல, சுவை முதலிய ஐவகை இன்பங்களையும் அடைவதற்கு, மெய், வாய் முதலிய ஐம்பொறிகளும், மண், நீர் முதலிய ஐம்பூதங்களும் உதவியாக இருக்கின்றன. இவற்றின் உதவியால் ஐவகை இன்பங்களை அளவாக அடைந்து, உயிரை உடம்பிலே நெடுநாள் நிலைக்கவைத்துச் சிறந்த செயல் பல செய்ய மிகமிகக் கடமைப்பட்டுள்ளான் மனிதன்.
நிலைமை இப்படியிருக்க, ஐவகை இன்பமும் உயிர் வாழ்வதற்காகவே என்றெண்ணாமல், இன்பத்திற்காகவே உயிர் வாழ்வது என்றெண்ணி அளவுமீறி உண்டு உடல் நலத்தைக் கெடுத்துக்கொண்ட ஒருவனைப்போல, ஐவகை யின்பங்களையும் அளவின்றி நுகர்ந்து அழிவது அறிவுடைமை. யாகுமா? காய், கணிகளை அரியக் கொடுத்த கத்தியால் கையையே அரிந்து கொள்ளலாமா? சமைப்பதற்கு மூட்டிய நெருப்பால் வீட்டையே கொளுத்திவிடலாமா? எனவே, சுவை முதலிய ஐந்தினையும், அவை காரணமாக உள்ள ஐம்பூதம், ஐம்பொறி முதலியவற்றின் அமைப்பையும் ஆராய்ந்துணர்ந்து அதற்கேற்ப நடந்துகொள்பவரே உலகில் உயர்ந்தவராகி, நினைத்தவற்றையெல்லாம் வெற்றியுடன் முடிப்பார்கள். இத்தகைய பெரியோர்க்கு உலகம் கட்டுப் படாமல் என்ன செய்யமுடியும்? உடலமைப்பினையும், நோயினையும், அதன் காரணத்தையும், போக்கும் வழி யினையும் அறிந்து அதற்கேற்ப மருத்துவம் செய்யும் மருத்துவர்க்கு நோயாளி கட்டுப்பட்டுத் தானே தீர வேண்டும்? இது போல!
உலகு-எழுவாய்; தெரிவான்கட்டு-பயனிலை. கண்-டுகட்டு. கண் இடப்பொருளை உணர்த்தும் ஏழாம் வேற்றுமை உருபு. டு குறிப்பு வினைமுற்று விகுதி.
(மண-உரை) சுவை முதலாகக் கூறிய ஐந்து புலன்களின் வகையை ஆராய்வான் கண்ணதே உலகம்,
(பரி-உரை) சுவையும், ஒளியும், ஊறும், ஒசையும், நாற்றமும் என்று சொல்லப்பட்ட தன் மாத்திரைகள் ஐந்தனது கூறுபாட்டையும் ஆராய்வான் அறிவின் கண்ணதே உலகம்.
வெகுளி காத்தல்
குணமென்னும் குன்றேறி கின்றார் வெகுளி
கணமேயும் காத்த லரிது.
குணம் என்னும் குன்று ஏறி நின்றார் வெகுளி கணமேயும் காத்தல் அரிது.
(பரை-குணம் என்னும்-நல்ல குணம் என்னும், குன்று-மலையின்மேல், ஏறிநின்றார் -ஏறி நிற்கும் பெரியார் களின், வெகுளி-சினத்தை, கணமேயும்-(அஃது இருப்பது) கணப்பொழுதேயாயினும், காத்தல்-(அதனால் தீங்கு வராதபடித்) தடுத்துக் காத்தல், அரிது - (பிறர்க்கு) முடியாது.
(தெ-ரை) பெரியார்கட்குப் பெரும்பாலும் சினம் தோன்றாது. தோன்றினும் ஏனையோரைப்போல அடிக்கடித் தோன்றாது; பெரிதாகத் தோன்றாது; தோன்றியதும் நீண்ட நேரம் நிலைத்து நின்றுகொண்டே இருக்காது; ஏதோ ஒரு நேரத்தில் மட்டும் ஒருகண நேரமே தோன்றும்; பின் உடனே மறைந்துவிடும். கணநேரம் நிற்கும் அச்சினத் தையும் பிறர் தடுத்துத் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது. அவர்கள் சினந்து, ஒன்றை நினைத்தலோ, சொல்லுதலோ, நிகழ்த்துதலோ செய்வார்களாயின் அப்படியே நடந்தே தீரும். இதனால் பெரியார்களின் பெருமை விளங்கும். கணம் என்பது மிகமிகச் சிறிய கால அளவைக் குறிக்கும். காத்தல் என்றால் வாராமல் தடுத்துக் காத்தல் என்பது பொருள். இப்பொருளைக் குற்றமே காக்க' என்னும் குறளானும் உணரலாம்.
(மண-உரை) குணமாகிய மலையை மேற்கொண்டு நின்றார் மாட்டு உளதாகிய வெகுளியால் வருந்தீமையைச் சிறிது பொழுதாயினும வாராமற் காத்தலரிது. (பரி-உரை) துறவு, மெய்யுணர்வு, அவாவின்மை முதலிய நற் குணங்களாகிய குன்றின் முடிவின்கணின்ற முனிவரது வெகுளி தானுள்ள வளவு கணமேயாயினும் வெகுளப் பட்டாரால் தடுத்தல் அரிது.
(ஆராய்ச்சியுரை) பெரியாருடைய சினத்திலிருந்து பிறர் தப்பிக்க முடியாது என்னும் கருத்திலேயே உரையாசிரியர் பலரும் உரைத்துள்ளனர். ஆனால் சிலர், இக்குறளுக்கு வேறுவிதமாகப் பொருள் உரைக்கின்றனர். அது வருமாறு:
குணமென்னும் குன்றேறி நின்றவர்கட்கு ஒரு நாளும் ஒரு கண நேரங்கூடச் சினந்தோன்றாது. அஃதாவது, அவர்கள் தம்மிடத்தில் சிறிதும் சினத்தைப் பாதுகாத்து வைத்திருக்க மாட்டார்கள் என்பது அவர் கூறும்பொருள். மேலும் அவர்கள், பெரியோர்கள் குணமென்னும் குன்றேறி நின்றவராதலின் அவர்க்கு இழிந்த சினம் தோன்றாது; அப்படித் தோன்றினால் அவர்கள் குணமென்னும் குன்றேறி நின்ற பெரியா ராகாமல் சிறியவ ராவார்கள் என்று தம் கொள்கைக்குக் காரணமும் காட்டுகின்றார்கள். இப்பொரு ளிலா திருவள்ளுவர் இக்குறளை யமைத்திருப்பார்? என்று இங்கு ஆராய வேண்டும்.
‘பெரியோர்க்குத் தப்பித் தவறிச் சினம் சிறிது வந்து விடுமேயாயின் பிறரால் தடுக்க முடியாது’
என்று திருவள்ளுவரே உரையெழுதி யுள்ளார். ஒருமுறை யன்று, இருமுறை யல்ல, பலமுறை
இவ்வுரையை எழுதியுள்ளார். எங்கோ வெனின், இயம்புவம்:- திருக்குறளுள் பொருட் பாலுள்,
பெரியாரைப் பிழையாமை என்னும் பகுதியில் உள்ள,
‘எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார்’,
’வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின்’,
’குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றன்னார் மாய்வர் கிலத்து',
'ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்',
’இறந்தமைந்த சார்புடைய ராயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின்'
முதலிய குறள்கள், பெரியார்க்குச் சிறுபான்மை சினம் தோன்றுமாயின் பிறர் தடுக்கமுடியாது என்னும் பொருளை அறிவிக்கவில்லையா? எனவே, குணமென்னும் குன்றேறி நின்றார் என்னும் குறளுக்கு, மேற்கூறிய குறள்களை யெல்லாம் விளக்கவுரையாக அமைத்தார் ஆசிரியர் என்றி யம்புவதால் வரும் தடையென்ன? மற்றும், ஏனையோர்க்கு மிகுதியாகச் சினந்தோன்ற, பெரியோர்க்குமட்டும் எப்போதோ ஒரு கண நேரமே தோன்றுவதற்குக் காரணம், அவர்கள் குணமென்னும் குன்றேறி நின்றவர்கள் என்று ஆசிரியர் இயம்பியுள்ள குறிப்புக் குறிப்பா யுணர்வோர்க்குப் புலனாகும். மேலும் அன்பு நெறியும் (அகிம்சை) அளவுமீறி யிருத்தலாகாது. அளவுமீறின் அதுவும் நஞ்சாய்க் கொல்லும். ஆதலின் ஏதோ ஒரு நேரத்திலாயினும் மாதிரிக்காயினும் சினங்காட்டினால்தான் சீர்திருந்தும் உலகம். இல்லாவிடின் ஏய்க்கும். ஏன், திருவள்ளுவரிடம் பாடம் படித்துப் பழகிக் கொள்ளலாமே! அவர் பல இடங்களில் உலகைச் சீறியுள்ளாரே தம் பாடல்களால்!
ஈண்டு, சிவப்பிரகாச அடிகளாரின் பிரபுலிங்க லீலை - சித்தராமையர் கதியில் உள்ள
மேவுறு தவமத வெகுளி தானினி
ஓவுறும் தரத்த தன்று ஒருவரானுமே (35)
என்னும் பாடல் பகுதி ஒப்பு நோக்கத்தக்கது.
உறுதி, உயர்பெருமை ஆகியவை காரணமாகக் குணம் குன்றாக உருவகிக்கப்பட்டுள்ளது.
வான் சிறப்பு
நெடுங்கடலும்
நெடுங்கடலுங் தள்ளீர்மை குன்றுக் தடிக்தெழிலி தானல்கா தாகி விடின். (விளக்கம்) கடல் நீர், கதிரவன் வெப்பத்தால் குறைந்து ஆவியாக மாறுகின்றது. அந்நீராவியின் தொகுப்பே மேகம் எனப்படுவது. அம்மேக்த்தில் குளிர்ந்த காற்றுப்பட்டால் மழைபெய்யும். மழை கடலிலும் பெய்யும். தரையில் பெய்யப் பட்ட தண்ணீரும் ஆற்றின் வழியாகக் கடலையடையும். இச்செய்தி இங்கு நினைவில் இருக்கவேண்டும்.
(ப-ரை) எழிலி-மேகமானது, தான்-தான், தடிந்து(கடல்நீரைக்) குறைத்து, நல்காதாகிவிடின்--(திரும்பவும் அத்தண்ணிரைப் பெய்து கடலுக்குக்) கொடுக்காவிட்டால், நெடும் கடலும்-மிகப் பெரிய கடலும், தன்நீர்மை-தன் இயற்கை வளம். குன்றும்-குறைந்துவிடும்.
(தெ-ரை) மலையனைய அரசச் செல்வமும் புதிய வருவாயில்லாது போயின் பொலிவு குன்றும். இருக்கும் செல்வத்துள் ஒரளவைச் செலவிட்டுப் புதிய வருவாயைத் தேடினாலேயே புதியதொரு பொலிவு பெறும். அது போலவே, கடல்நீரும் நீராவியாக மாறிப் பின்பு மழை நீரால் நிறைக்கப்படாவிடின் இயற்கைவளம் குன்றும்.
கடல், நீராவியாக மாறிக் குறைவதும், பின்பு மழையால் நிறைவதும், இன்றல்ல-பல நூற்றாண்டுகட்கு முன்பே தமிழன் அறிந்த செய்தி. இங்கு, “கடல் குறைபடுத்த நீர் கல்குறைபட எறிந்து' என்னும் பழைய பரிபாடல் அடி ஒப்பு நோக்குதற் குரியது. மேலும், நீராவியால் கடல் குறையும்போது, ஆற்றின் வழியாகப் புதுநீர் புகுந்து நிறைந்துகொண்டேயும் இருக்கின்றது; புதுநீர் புகுந்து நிறையும்போது நீராவியாகக் குறைந்து கொண்டேயும் இருக்கின்றது. ஆதலின் கடல்நீர் குறையவோ மிகவோ வழியில்லை என்னும் கருத்துடைய,
'மழைகொளக் குறையாது புனல்புக மிகாது
கரைபொரு திரங்கு முந்நீர்'
என்னும் மதுரைக்காஞ்சியின் அடிகளும் குறிப்பாகவும், நயமாகவும் மேற்சொல்லப்பட்ட கருத்தையே வலியுறுத்து கின்றன. மற்றும், ஊற்று நீர், ஆற்று நீர், மழை நீர் என்னும் மூவகையான நீரையுடைய காரணத்தால், கடலுக்கு 'முந்நீர்' எனும் பெயர் வழங்கப்பட்டது என்னும் ஒரு செய்தியும் இங்கே இக்கருத்துக்கு அரண் செய்யும்.
எனவே, கடல்நீர் நீராவியாக மாறி மழையாகப் பெய்தல் இன்றி, பனியாகவோ, வேறு விதமாகவோ சிதைந்துவிட்டால் வளம் குன்றவேண்டியதுதானே! கடல் வளம் குறைதல் என்றால், நீர்வாழ் உயிர்கள் தோன்றி வாழாமையும், முத்து முதலிய மணிகள் உண்டாகாமை யுமாம். வலைஞர்க்கு வலைவளம் சிறக்க வேண்டுமானால் பாட்டம் (மழை) பொய்யாது பெய்யவேண்டும் என்பதை, நற்றிணை யென்னும் சங்க நூலில் உள்ள (38) 'பாட்டம் பொய்யாது வலைவளம் சிறப்ப' என்னும் அடியும் அறிவிக்கின்றது. எனவே, கடல்வாழ் உயிர்கள் தாம் வாழும் கடலில் புதுத்தண்ணீர் புகுவதை, நிலத்திற்குப் புதிய எரு இடுவதைப்போன்று விரும்பி வரவேற்கின்றன என்பது வெளிப்படை.
கடலினும் மழை உயர்ந்தது என்றுரைக்க வந்த திருவள்ளுவர் இங்கு நயமான சொற்களைப் பெய்திருக்கும் திறம் தேனினும் தித்திக்கின்றது. அஃது வருமாறு:- கடல் தான் மிகப் பெரியதாயிருப்பினும் மழையில்லாவிட்டால் பெருமை குன்றும் என்பதை அறிவிப்பதற்காக 'நெடுங் கடலும்' என்றார். தன்னிடத்தே மிக்கநீர் இருப்பினும் பயனில்லை என்பதை அறிவிப்பதற்காகத் தன்மை குன்றும் என்னாது 'நீர்மை' குன்றும் என்றார். மேகம் கடலினிடத் திலிருந்து நீரைக் கடன் வாங்குகின்றது என்னும் இழிவு தோன்றாதபடியும், கடல் நீரைக் குறைக்கின்றது என்னும் ஆற்றல் தோன்றும்படியும், வாங்கி என்னாது தடிந்து' என்றார். மேகத்தின் வள்ளல் தன்மை தோன்றுவதற்காகப் பெய்தல் என்னாது 'நல்காதாகி' என்றார். மழையில்லா விட்டால் கடல் அழியும் என்று கூறினால், ஆசிரியர் வலிந்து புனைந்துரைத்து மழைக்குப் பெருமை தேடுகின்றார் என்று உலகம் தம்மைப் பழிக்கும் எனக் கருதி அழியும் என்னும் சொல்லைப் பெய்யாமல், மழையில்லாவிட்டால் கடலின் வளமும் ஒரளவு குறையும் என்னும் பொருளில் "குன்றும்' என்னும் சொல்லைப் பெய்து திருவள்ளுவர் தப்பித்துக் கொண்டுள்ளதை நோக்கின் மனம் மகிழ வில்லையா? ஆசிரியரின் நுண்மாண் நுழை புலத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு வேண்டுமானால் இக்குறள் ஒன்றே போதுமே!
(மண-உரை) நிலமேயன்றி நெடிய கடலும் தனது தன்மை குறையும், மின்னி மழையானது பெய்யாவிடின்.
(பரி-உரை) அளவில்லாத கடலும் தன்னியல்பு குறையும், மேகந்தான் அதனைக் குறைத்து அதன்கட் பெய்யாது விடுமாயின்.
துப்பாய மழை
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை.
துப்பார்க்கு துப்பு ஆய துப்பு ஆக்கி துப்பார்க்கு துப்பு ஆயதுாடம் மழை.
(ப-ரை) துப்பார்க்கு-உண்பவர்களுக்கு, துப்புஆயவலிமையான, துப்பு ஆக்கி - உணவுப் பொருள்களை உண்டாக்கியளித்து, துப்பார்க்கு -அவ்வுணவுப் பொருள் களை உண்பவர்களுக்கு, துப்பு ஆயது உம்-(தானும் தாக வேட்கைக்கு) உணவாக ஆகியிருப்பதும், மழை-மழைநீரே.
(தெ-ரை) துப்பு என்பதற்கு, உணவு, வலிமை என்பன பொருள். வலிமையைக் கொடுக்கும் உணவை வலிமையான உணவு (துப்பாய துப்பு) என்றார் ஆசிரியர்.
எவரிடமும் மண்ணைக் கொடுத்துத் தின்னு என்றால் தின்னமாட்டார்கள். தண்ணீரைத் தந்து குடி என்றால் குடிப்பார்கள். ஆனால், மக்கள் யாவரும் மண்ணையும் தின்கின்றார்கள். எப்படியென்று நோக்குவோம்: நாம் உண்ணும் சோறு, காய் கனி முதலியன எப்படி உண்டாயின என்று ஆராயின், மண்ணும் தண்ணீரும் சேர்ந்தே உண்டா யின. என்பது அறுதியிட்டு உறுதி கட்டப்படும். அரிசியைத் தண்ணீருடன் கலந்து அப்பமாக்குகின்றாள் ஒரு மங்கை. அதுபோலவே, மண்ணைத் தண்ணீருடன் கலந்து உண வாக்குகின்றாள் இயற்கை யென்னும் நங்கை. ஆராய்ச்சி யாளர்கள் உணவின் வகைகளாகக் கூறியுள்ள - மாவுப் பொருள், கொழுப்புப்பொருள், உலோகப்பொருள் முதலிய யாவும் தண்ணிருடன் கலந்த மண்ணின் திரிவே. எனவே, தண்ணீர் தனித்து உணவாவதைப்போல மண் தனித்து உணவாகாது; அதற்குத் தண்ணிரின் உதவியும் தேவை என்பது இப்போது நன்கு புலப்படுமே! மண்ணையும், தண்ணிரையும் கொட்டினால் எரிகின்ற நெருப்பு அணையும். அதுபோல, மண் - தண்ணிர்களின் திரிவாகிய உணவை உண்டால் பசித்தீ அணையும். இங்கு, "உணவெனப்படுவது நிலத்தொடு நீரே' என்னும் புறநானூற்று வரியின் பொருத்தத்தை உற்று நோக்குங்கால், பண்டைத் தமிழனின் பலதுறை ஆராய்ச்சிவன்மை புலப்படும்.
ஆ! ஆ! மேற்கூறிய விரிந்த கருத்துகளையெல்லாம் உள்ளடக்கி, 'மழை நீரானது ஏனைய உணவுப் பொருள் களை உண்டாக்கித் தானும் (தாகத்திற்கு) உணவாக அமைந்துள்ளது' என்னும் சுருத்தை ஒன்றே முக்கால் அடியில் உரைத்துள்ள திருவள்ளுவரின் திறந்தான் என்னே!
ஆயது உம்-எழுவாய்; மழை-(பெயர்ப்) பயனிலை, ஆயதும் என்பதில் உள்ள உ (து), ஊஉ (தூஉ) என நீண்டு அளபெடுத்துச் செய்யுளோசையை நிரப்பி அழகு தந்தது என்பர்.
இந்த அளபெடையை வேறு பொருளில் கூறின், அது இன்னும் சிறப்புடைத்து. அதாவது: இடம் நிரப்புவதற்காக இந்த அளபெடை அமைக்கப்பட்ட வில்லை. துப்பு ஆக்குவதோடு துப்பு ஆவதும் ஆகிய எல்லாம் மழை தானையா என்று நீட்டிப் பலகையைத் தட்டி அடித்துப் பேசுவது போன்ற வலியுறுத்தல் பொருளில் துப்பாய தூஉம்' என்னும் அளபெடை அமைந்திருப்பதாகக் கொள்ளல் வேண்டும்.
(மண-உரை) பிறிதொன் றுண்பார்க்கு அவர் உண்டற் கான உணவுகளையும் உண்டாக்கித் தன்னை உண்பார்க்குத் தானே உணவாவதும் மழையே.
(பரி-உரை) உண்பார்க்கு நல்ல உணவுகளை உளவாக்கி, அவற்றை உண்கின்றார்க்குத் தானும் உணவாய் நிற்பது உம் மழை. துப்பு என்பது, உண்ணுதல், உணவு, வலிமை என்னும் பொருள்களுடன் திரும்பத் திரும்ப வந்திருப்பதால், இந்த அமைப்பை, சொல் பொருள் பின்வரு நிலை அணி என்பர் அணியிலக்கண நூலார்.
கடவுள் வாழ்த்து
எண்குணத்தான்
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
(ப-ரை) எண்-மதிக்கத்தக்க, குணத்தான்-குணத்தை உடைய கடவுளுடைய, தாளை-திருவடியை, வணங்காவணங்காத, தலை-தலைகள், கோள் இல்- (காணுதல், கேட்டல் முதலிய உணர்வுகளைக்) கொள்ளுதல் இல்லாத, பொறியின்-(குருட்டுக்கண், செவிட்டுக்காது முதலிய) உறுப்புகளைப் போல, குணம் இல-பயன் உடையன அல்ல. ஏ-தேற்றம்.
(தெ-ரை) காணும் வன்மை இல்லாவிட்டால் கண்ணுக்கு இழிவு; கேட்கும் வன்மை இல்லாவிட்டால் காதுக்கு இழிவு: நடக்கும் வன்மை இல்லாவிட்டால் காலுக்கு இழிவு: இவற்றைப் போலவே, கடவுளை வணங்குந் தன்மை இல்லாவிட்டால் தலைக்கு இழிவு என்று திருவள்ளுவர் கூறியிருக்கும் உவமை நயம் நுணுகியுணர்ந்து மகிழ்தற் குரியதாகும்.
எண்ணுதல் என்னும் சொல்லுக்கு மதித்தல் என ஒரு பொருள் உண்டு. எனவே, எண்குணத்தான் என்பதற்கு மதிக்கத்தக்க குணத்தை உடையவன் என்று பொருள் கூறப்பட்டது. குமரகுருபர அடிகளாரும், மதுரைக் கலம்பகம் என்னும் நூலில், மதிக்கத்தக்க மதுரை என்னும் பொருளில் "எண்தரு மதுரை எனக் கூறியிருப்பது இங்கு ஒப்பு நோக்கு தற்குரியதாகும். எண் குணத்தான் என்பதற்கு எட்டு வகையான குணங்களை உடையவன் என்றும் பொருள் கூறலாம்.
(மண-உரை) அறிவில்லாத பொறிகளையுடைய பாவை கள் போல ஒரு குணமும் உடையனவல்ல; எட்டுக் குணத்தினை யுடையவன் திருவடியினை வணங்காத தலையினையுடைய உடம்புகள்.
(பரி-உரை) தத்தமக்கேற்ற புலன்களைக் கொள்கை யில்லாத பொறிகள் போலப் பயன்படுதல் உடையவல்ல, எண்வகைப்பட்ட குணங்களையுடையானது தாள்களை வணங்காத் தலைகள். எண் குணங்களாவன:- தன் வயத்தனாதல், தூயஉடம்பினனாதல், இயற்கைஉணர்வின னாதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களின் நீங்குதல், பேரருள் உடைமை, முடிவில் ஆற்றல் உடைமை, வரம்பில் இன்பம் உடைமை என இவை. இவ்வாறு சைவாகமத்தில் கூறப்பட்டது. அணிமாவை முதலாக உடையன எனவும், கடையிலா அறிவை முதலாக உடையன எனவும் உரைப்பாரும் உளர்.
(ஆராய்ச்சியுரை) எண் குணத்தான் என்பதற்கு, எட்டுக் குணங்களையுடையவன் என்றே பரிலேழகர் முதலியோர் பொருள் கூறியுள்ளனர். அது ஒரு நல்ல பொருள்தான். ஆனால், பரிமேலழகர் சைவ ஆகமத்தில் கூறப்பட்டுள்ள எட்டுக் குணங்களைக் குறிப்பிட்டுள்ளார். வேறு சிலர், வட நூலில் உள்ள அணிமா முதலிய எட்டைக் குறிப்பிட்டுள்ளனர். இன்னும் சிலர், சமண நூலில் உள்ள கடையிலாவறிவு முதலிய எட்டைக் குறிப்பிட்டுள்ளனர். இதற்கு ஏன் இவ்வளவு தொல்லை? இவற்றையா எண் குணம் என்று திருவள்ளுவர் இயம்பியிருப்பார்? கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவது ஏன்? இறைவனின் எட்டுக் குணங்கள் இன்னின்னவை என்று திருவள்ளுவரே தெரிவித்துள்ளாரே. கோளில் பொறியின்' என்னும் இக்குறள் ஒன்பதாவது குறளாகும். இதற்குமுன் எட்டுக் குறள்களிலும், இறைவனை எட்டுக் குணங்கள் உடையவனாகக் கூறியுள்ளார் வள்ளுவர். முறையே அவை வருமாறு:
ஒன்று-உலகின் முதற் பொருளாயிருப்பவன்; இரண்டுவாலறிவன்; மூன்று-மலர்மிசை யேகினான்; நான்குவேண்டுதல் வேண்டாமை யிலான்; ஐந்து-இறைவன் (இறைவன் என்றால் எங்கும் எல்லோர்க்கும் தலைவனாய்த் தங்கியிருப்பவன் என்பது பொருள்); ஆறு-பொறிவாயில் ஐந்தவித்தான்; ஏழு-தனக்குவமையில்லாதான்; எட்டுஅறவாழி அந்தணன் என்பனவாம். இங்ங்ணம் முதல் எட்டுக் குறள்களிலும் எட்டு இயல்புகளைச் சொல்லிக்கொண்டு வந்து, பின்பு ஒன்பதாவது குறளில் எண்குணத்தான் என்றால், முன்கூறிய எட்டுக் குணங்களை உடையவன் என்று பொருள் கூறுவதில் என்ன பிழை? பத்தாவது குறளில் புதிதாக ஒரு குணமும் சொல்லவில்லை. முற்கூறிய இறைவன் என்பதையே குறிப்பிட்டுள்ளார். எனவே, வலிந்து பிற கொள்கைகளைக் கொண்டுவந்து திணிப்பதைக் காட்டிலும், ஆசிரியரின் கூற்றையே கொள்வது நல்ல குறிக்கோ ளல்லவா? இவ்வெட்டினையும் எச்சமயத்தார் தான் இல்லையென்று மறுக்கமுடியும்?
'தலையே நீ வணங்காய்' (திரு அங்கமாலை 1)
’தாழ்த்தச் சென்னியும் தந்த தலைவனை' (பொது)
என்னும் நாவுக்கரசரின் நன்மொழிகள் ஈண்டு ஒப்புநோக்கத் தக்கன.
பிறவிக் கடல் நீந்தல்
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
(மண-உரை) பிறவியாகிய பெரிய கடலை நீந்தி யேறுவர் இறைவனது அடியைச் சேர்ந்தவர்; சேராதார் அதனுள் அழுந்துவர்.
(பரி-உரை) இறைவன் அடியென்னும் புணையைச் சேர்ந்தார் பிறவியாகிய பெரிய கடலை நீந்துவர்; அதனைச் சேராதார் நீந்தமாட்டாராய் அதனுள் அழுந்துவர். சேர்ந்தார் என்பது சொல்லெச்சம்.
நமது உரை: இறைவனடி சேராதார்-இறைவனின் திருவடிகளை வணங்காதவர்கள், பிறவிப் பெருங்கடல்பிறவியாகிய பெரிய கடலை, நீந்துவர்-நீந்திக்கொண்டே யிருப்பார்கள்; நீந்தார்-ஆனால் நீந்திக் கரையேற மாட்டார்கள்.
ஆய்வுரை: மணக்குடவர், பரிமேலழகர், பரிதியார், காலிங்கர் முதலான உரையாசிரியர்கள் பலரும் சேர்ந்தார்’ என்னும் சொல் எச்சமாய் (குறைவாய்) உள்ளது எனக் கொண்டு அச்சொல்லை வருவித்துப் பொருள் கூறியுள்ளனர். இது தேவையில்லை. மேலே நமது உரையில் கூறியுள்ளதே பொருத்தமானது. இதற்குக் கம்பனது சுந்தரகாண்டச் சூடாமணிப் படலப்பாடல் ஒன்று துணை செய்கிறது: அது,
’நீந்தா இன்னலின் ந்ேதாமே
தேய்ந்தா நாத பெருஞ்செல்வம்
ஈந்தானுக்கு உனை ஈயாதே
ஓய்ந்தால் எம்மின் உயர்ந்தோர்யார்' (43)
என்பது. நீந்த முடியாத துன்பக் கடலை நீ நீந்திக் கொண்டே யிராதபடி உன்னை இராமனிடம் சேர்க்க வேண்டும் என அனுமன் சீதைபால் கூறினான் - என்பது இதன் கருத்து. சீதை இராமனைப் பிரிந்து இராவணனிடம் அகப்பட்டுக் கொண்டு வருந்துவது, நீந்த முடியாத துன்பக் கடலை நீந்திக்கொண்டிருப்பதாகும். ஆனால், இராமனை அடையாவிடின், நீந்திக்கொண்டே தான் இருக்கவேண்டுமே தவிர, நீந்திக் கரையேற முடியாது - என்பது இதன் விளக்கம். இது போலவே, இறைவனடி சேராதார் பிறவிப் பெருங்கடலை நீந்திக்கொண்டே யிருக்கவேண்டுமே தவிர, நீந்திக் கரையேற முடியாது - என இக்குறளுக்குப் பொருள் காணவேண்டும்.
வேண்டாத சொல்லை வருவிப்பதும், இருக்கும் சொல்லை நீக்குவதும் ஆகிய ஒரு பழக்கம் பரிமேலழகரிடம் உண்டு.
'உடையார் முன் இல்லார்போல்'
என்னும் குறளிலும் ஒரு சொல்லை வருவித்து எழுதி யுள்ளமை தேவையில்லை என இந்நூலுள் முன் ஒரிடத்தில் விளக்கப்பட்டுள்ளது. மற்றும்.
'அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை’(1228)
என்னும் குறளில் குழல் போலும் என்பதில் உள்ள போலும் என்பதை அசை எனத் தள்ளிவிட்டார், இக் கருத்துகளையெல்லாம் அறிஞர்கள் ஆய்க. இறைவனடிகளை வணங்காதவர்கள் வீடுபேறு எய்த இயலாது என்பது இந்தக் குறளின் கருத்தாகும்.
---------------
குறள் முதற் குறிப்பு அகர வரிசை
(இந்நூலில் விளக்கம் பெற்றுள்ள குறள்களின் அகர வரிசை)
அஞ்சாமை 42 | கூற்றமோ 56 |
அணங்குகொல் 22 | கொடையளி 38 |
அறத்தாற்றின் 85 | கொடும்புருவம் 70 |
அறத்தாறு 175 | கோளில் பொறியின் 192 |
அறனிழுக்கா 53 | சுவையொளி 180 |
அறனென 105 | செயற்கரிய 179 |
அன்பும் அறனும் 68 | செவிகைப்ப 110 |
ஆற்றினொழுக்கி 102 | தற்காத்து 172 |
இயல்பினான் 99 | துப்பார்க்கு 189 |
இயற்றலும் 77 | துறந்தார்க்கும் 43 |
இரு நோக்கு 143 | தூங்காமை - 58 |
இல்லதென் 169 | தென்புலத்தார் 45 |
இல்வாழ்வான் 31 | தொட்டனைத்து 161 |
இன்சொலால் 95 | நெடுங்கடலும் 187 |
உடையார் முன் 150 | நோக்கினாள் 34 |
உண்டார்கண் 123 | படைகுடிகூழ் 26 |
எண்ணென்ப 133 | பண்டறியேன் 36 |
ஏதிலார் 158 | பழியஞ்சி 65 |
ஒண்ணுதற்கு 89 | பிணையேர் 107 |
ஒல்லும் வ்ன்கயான் 174 | பிறவிப்பெரும் 194 |
கடாக்களிறு - 94 | மனைத்தக்க 138 |
கண்டார்கண் 22 | மனைமாட்சி 153 |
கண்ணுடையர் 146 | முறைசெய்து 115 |
கற்ககசடற 128 | யாதானும் 165 |
காட்சிக்கு 81 | வையத்துள் 120 |
குணமென்னும் 183 | |
-------
சுந்தர சண்முகனாரின் உழைப்புகளுள் சில:
தமிழ் அகராதிக்கலை 40–00
தமிழ் இலத்தீன் பாலம் 30–00
கெடிலக்கரை நாகரிகம் 50 – 00
அம்பிகாபதி காதல் காப்பியம் 20–00
கெளதமப் புத்தர் காப்பியம் 30–00
மர இனப் பெயர்த் தொகுதி-1 - 140–00
மர இனப் பெயர்த் தொகுதி-2 200–00
உலகு உய்ய ! 30–00
பாரதிதாசரொடு பல ஆண்டுகள் 12–00
கருத்துக் கண்காட்சி - 20–00
தமிழ்க் காவிரி 12–00
கடவுள் வழிபாட்டு வரலாறு 15–00
தொல் திராவிட மொழி கண்டுபிடிப்பு 20–00
u:: குழு ஒப்பந்தம் 15 – 00
மர இனப் பெயர் வைப்புக் கலை 18–00
மருந்தாகித் தப்பா மர இனப் பெயர்கள் 20–00
மாதவம் புரிவாள் 22 – 00
பால காண்டப் பைம்பொழில் 25–00
அயோத்தியா காண்ட ஆழ்கடல் 20–00
சுந்தர காண்டச் சுரங்கம் 18–00
தமிழ்நூல் தொகுப்புக் கலைக் களஞ்சியம் 100-00
ஆழ்கடலில் சில ஆணி முத்துகள் 26–00
சிலம்போ சிலம்பு
- அச்சிலே - தித்திக்கும் ...}
சபாநாயகம் ஆப்செட் பிரிண்டர்ஸ், சிதம்பரம்
----------
This file was last updated on 09 Nov 2017.
Feel free to send corrections to the webmaster.