புதிய தமிழகம்
மா. இராசமாணிக்கனார்
putiya tamizakam (essays)
of mA. rAcamANikkanAr
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Tamil Virtual Academy for providing a scanned image
version of this work for the etext preparation. This work has been prepared using the
Google Online OCR tool to generate the machine-readable text and subsequent proof-reading.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2017.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
புதிய தமிழகம்
(கட்டுரைகள்)
மா. இராசமாணிக்கனார்
Source:
புதிய தமிழகம்
டாக்டர் மா. இராசமாணிக்கனார்
ஸ்ரீமகள் கம்பெனி
122, வரதாமுத்தியப்பன் தெரு சென்னை-1.
வெளியீடு: உரிமையுடது
முதற் பதிப்பு: மே 1959, விலை ரூ. 1-00
------
பதிப்புரை
டாக்டர் இராசமாணிக்கனார், தமிழரின் இத்தலைமுறையின் சிறந்த மேதைகளுள் ஒருவராவார். அவர் கல்லூரியில் மாணவர்க்கு மட் டும் தமிழறிவு புகட்டி வரவில்லை; தமிழரனவருக்கும் புத்துணர்வும், புதுத்தெம்பும் ஊட்டி வருகிறர்.
"கலைமன்றம்" இதழில் அவ்வப்போது அவர் எழுதி வந்த க ட் டு ைர களைத் தொகுத்து இங்கு வெளியிட் டிருக்கிருேம். இவை தமி ழர்க்கு என்றென்றும் நின்று நிலைத்து ஒளி காட் டும் வலிமையுடையவை.
-------------------
புதிய தமிழகம்
வட எல்லை
அடுத்த ஆண்டு புதிய தமிழகம் உருவாகிச் செயலாற்ற விருக்கும் நிலையில், அப்புதிய தமிழகம் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்று எண்ணுவதும், புதிய தமிழகத்தில் செய்ய வேண்டுவன எவை என்பதைக் கூறத் தமிழன் விரும்புதலும் இயல்புதானே ! முதலில் புதிய தமிழகம் எதனை வட எல்லையாகப் பெற்றிருத்தல் வேண்டும் என்பதைக் காய்தல் உவத்தலின்றிக் காண வேண்டும். "வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம்' என்று தொல்காப்பியர் காலத்தில் எழுந்த குரல் கி. பி. 17-ஆம் நூற்றண்டு வரை வேங்கடமே தமிழகத்தின் வட எல்லை என்பதை வலியுறுத்தி வந்துள்ளது. சங்க இலக்கியங்களும், சங்க காலத்தை அடுத்துத் தோன்றிய பல்வர் காலத்து இலக்கியங்களும், கல்வெட்டுக்களும், பின் வந்த சோழர் கால இலக்கியங்களும், கல்வெட்டுக்களும், அவருக்குப் பின் வந்த விசயநகர வேந்தர் காலத்து இலக்கியங்களும், கல்வெட்டுக்களும் வேங்கடத்தைத் தமிழகத்தின் வடஎல்லை என்றே கூறுகின்றன. இவ்வாறே காளத்தியும் தமிழகத்தின் வடஎல்லையாகும். இந்த உண்மையைப் பெரியபுராணத்தைக் கொண்டு தெளியலாம். திருக்காளத்தி, திருவேங்கடம் முதலிய ஊர்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் தமிழ் பேசும் மக்கள், தமிழையும் தெலுங்கையும் உறழ்ந்து பேசிவருதலைக் கொண்டு, அத்தமிழர் மீண்ட காலமாக இருந்து வருபவர் என்னும் உண்மையை உணரலாம். திருப்பதியில் உள்ள கல்வெட்டுக்களுள் பெரும்பாலும் தமிழக் கல்வெட்டுக்களாக இருப்பதைக் கொண்டு இவ்வுண்மை வலியுறும். மேலும், திருவேங்கடம் பற்றிய சமயப் பாடல்களை ஆராயுமுன் அவற்றைப் பாடிய ஆந்திரரைவிடத் தமிழரே எண்ணிக்கையிலும், காலப் பழமையிலும் மிக்கவர் என்பதை அறியலாம். இவையனைத்தும் வேங்கடம் தமிழகத்தின் வட எல்லைலே என்பதை நன்கு வலியுறுத்தும் உண்மைகளாகும்.
’சிற்றூர்' என்பது சித்துளர் ஆகி இன்று தெலுங்கு மாவட்டமாகக் கருதப்படுகிறது. அம் மாவட்டத்திலும் தமிழ்க் கல்வெட்டுக்களே மிகுதி. பல தாலுக்காக்களில் தமிழரே மிகுதியாக இருக்கின்றனர். தணிகைப் புராணம் பாடப்பெற்ற திருத்தணிகையும், அதன் சுற்றுப் புறப் பகுதிகளும் தமிழ்நாட்டைச் சேரவேண்டுவனவே. ஆதலால், எல்லையைப்பற்றி விவாதிக்க இருக்கும் தமிழ் நாட்டு அமைச்சர்கள் இவற்றை ஆந்திரநாட்டு அமைச்சர்களுக்குத் தெளிவாக எடுத்துக் கூறி, பண்டைக் காலத்தில் இயற்கையாக அமைந்த மலைநாட்டு எல்லையைத் தமிழகத்து வட எல்லையாக நிலை நிறுத்துதல் மிகவும் இன்றியமையாதது.
தென்-மேல் எல்லப்புறம்
தமிழகத்தின் தெற்கில் குமரிமுனை பண்டைக் காலத்துத் தெற்கெல்லையாக இருந்தது;
இடைக்காலத்தில் மலையாள நாட்டில் சேர்ந்துவிட்டது. மகாண அமைப்புக் குழுவினர் முடிவுப்படி குமரிமுனை தமிழகத்தைச் சேரவேண்டும். அத்துடன் தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றின் கரை இவையும் குழுவினர் வகுத்துள்ள பிற தாலுக்காக்களுடன் சேர்ந்து புதிய தமிழகத்தில் இடம் பெறுதல் வேண்டும். இத்தாலுக்காக்களில் தமிழர்களே திருவாங்கூர் சட்ட அவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்னும் உண்மையிலிருந்தே இவற்றில் பெரும்பாலராக உள்ள மக்கள் தமிழ் மக்கள் என்னும் உண்மை ஐயமற விளங்குகின்றது. எனவே, நேர்மையான முறையில் இவ்வுண்மைகளை விளக்கி நமது மாநில அமைச்சர்கள் இவற்றைப் புதிய தமிழகத்தில் சேர்க்க வேண்டும். இத்துறையில் நமது முதலமைச்சர் திரு. காமராசர் மேற்கொண்டுள்ள முயற்சி பெரிதும் போற்றத் தக்கது. இத்துறையில் எல்லாக் கட்சியினரும் அவரை ஆதரித்து வருதல் பாராட்டத் தக்கது. இந்த எல்லைப்புறப் பகுதிகள் நல்ல முறையில் தமிழகக்தோடு சேர்க்கப்படுதல் வேண்டும் என்பதற்காக, இரவு பகலாக உழைத்துவரும் தமிழரசுக் கட்சித் தலைவர் திரு. ம. பொ. சிவஞானம் அவர்களைத் தமிழர் பாராட்டக் கடமைப்பட்டுள்ளனர். இவர் முயற்சிக்கு உறு துணையாகப் பிற கட்சியினரும் இருந்துவருதல் பாராட் டற்குரியது. பல மொழியாளர் இன்றைய தமிழகத்தில் தமிழர் மட்டும் இடம் பெற்றிருக்கவில்லை. விசயநகர ஆட்சி காலத்தில் தென்னாட் டில் குடியேறிய தெலுங்கர், கன்னடியர், செளராட்டிரர்கள் இந்நாட்டில் வாழ்கின்றனர். இவர்கள் வீட்டளவில் தத்தம் தாய் மொழியிற் பேசினும் தமிழ் மக்களுள் தமிழராக இணைந்து வாழ்ந்து வருவது மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். தமிழ் மொழி வளர்ச்சியிலும், தமிழ் இலக்கிய வளர்ச்சியிலும், தமிழ்நாட்டு அரசியலிலும், பிற எல்லாத் துறைகளிலும் இவர்கள் தீவிரமாகப் பங்கு கொண்டு வாழ்ந்து வருகின்றனர். எனவே, இவர்களைக் தமிழராகக் கருதியே புதிய தமிழகத்து நிகழ்ச்சிகள் நடைபெறு மென்பதில் ஐயமில்லை. இந் நன்மக்களும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், தமிழகத்து ஆக்க வேலைகளுக்கும் மனமுவந்து பணியாற்றுவர் என்று
நாம் நம்பலாம்.
புலவர் கல்லூரிகள்
கலைக் கல்லூரிகளையும், பிறத்துறைக் கல்லூரிகளையும் அரசாங்கம் ஏற்று நடத்தி வருவது போலப் புலவர் கல்லூரிகளையும் அரசாங்கமே ஏற்று நடத்தி வருவது நல்லது. இன்றையப் புலவர் கல்லூரிகள் மடங்களிலும், சாவடிகளிலும், கூரைகளிலும் நடப்பது, தமிழ்வளர்ச்சி எந்த அளவில் இருக்கிறது என்பதற்கு ஏற்ற சான்றாகும். நாடு உரிமை பெற்று இத்துணை ஆண்டுகளாகியும் நாட்டு மொழிக் கல்லூரிகள் உருப் பெறவில்லை என்னும் உண்மையை அரசாங்கம் உணர்தல் வேண்டும், தமிழ், ஆட்சிமொழியாக வரவிருக்கும் இந்த நேரத்தில் ‘நான் இனித் தமிழில்தான் பேசுவேன்' என்று கல்வியமைச்சர் கூறிவரும் இந்நாளில் தமிழ்க் கல்லூரிகள் இரங்கத் தக்க நிலையில் இருக்கின்றன என்னும் உண்மையை எடுத்துக் கூறுவது நம்முடைய கடமையாகும். நன்முறையிலமைந்த கட்டிடங்கள், அறிவு வளர்ச்சிக்கேற்ற நூல் நிலையங்கள், சமுதாய அறிவையும் உலக அறிவையும் ஊட்டும் பலதிறப்பட்ட செய்தித் தாள்கள், விளையாட்டு வெளிகள் முதலியவை புலவர் வகுப்பு மாணவர்க்கு இன்றியமையாதவை. இன்று இந் நலங்களெல்லாம் குறைந்துள்ளன. இவை யனைத்தையும் விட வெட்கப்படத் தக்கது, இப்பரந்துபட்ட தமிழ் நாட்டில் பெண்களுக்கென்று தனிப்பட்ட புலவர் கல்லூரி இல்லாமையே. இதைப் பற்றிக் கவலைப்படுவார் ஒருவருமில்லை. பெண் கல்வி வளர்ந்துவரும் இக்காலத்தில், பெண்களுக்கு உயர் நிலைப் பள்ளிகள் பெருகிவரும் இக்காலத்தில், பெண் புலவர்களைத் தயாரிக்கும் கல்லூரி ஒன்று இல்லையென்பது வருந்தத் தக்கதொன்று. நமது நாட்டு அரசாங்கம் அடுத்த ஆண்டிலேனும் பெண்களுக்கென்று புலவர் கல்லூரிகளைச் சென்னையிலும், திருச்சிராப்பள்ளியிலும், மதுரையிலும், கோவையிலும், திருநெல்வேலியிலும் வைத்தல் நலமாகும்.
தமிழக வரலாறு
அழிந்து போன கொற்கை, காவிரிப்பூம்பட்டினம், உறையூர், பழையாறை முதலிய இடங்களை அகழ்ந்து ஆய்வுகள் நடத்திச் சங்ககால வரலாற்றைச் செப்பனிடுதல் வேண்டும். நடுநிலை ஆராய்ச்சியிவிருந்து பிறழ்ந்து எழுதப்பட்டுள்ள வரலாற்று நூல்களை ஒழித்துத் தென்னாட்டு வரலாற்றைச் சாத்திரீய முறையில் எழுதி வெளிப் படுத்துதல் வேண்டும். தமிழில் அவ்வப்போது வளர்ச்சிக்குள்ள வகையில் அரசாங்கத்திற்கு யோசினைகள் கூற உண்மைத் தமிழ்ப் பற்றுடைய புலவர் பெருமக்களையே அரசாங்கம் அமர்த்திக்கொள்ளல் வேண்டும். தமிழின் தூய்மையைப் பாதுகாக்கும் முறையில் அக்குழு அமைக்கப்பட வேண்டும். எக்கட்சி நாட்டை ஆளி னினும் மொழி பற்றிய சிக்கலில் இக்குழுவின் தீர்ப்பே முடிவானதாக இருத்தல் வேண்டும். புதிய தமிழகத்திற்கு இக்குழு மிக மிக இன்றியமையாத தாகும். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசித் தமிழருக்குக் குழி தோண்டும் கீழ்மக்கள் இக்குழுவில் இடம் பெறக்கூடாது.
அறிவுடைக் கல்வி
நாட்டு மக்களுக்கு இன்று தேவைப்படுவது விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்கும் கல்வியேயாகும். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகக் கற்பிக்கப்பட்டு வரும் அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் பொருந்தாத கட்டுக் கதைகளைக்கொண்ட மூடநம்பிக்கைகளை ஊட்டி வளர்க்கும் பாடங்களைக் கொண்ட பாடத் திட்டங்கள் மாய்ந்தொழிதல் வேண்டும். கல்வி கற்கும் சிறுவர்களுக்குத் தங்கள் நாடு, தங்கள் சமுதாய அறிவு, தங்கள் நாட்டிலேயே தாங்கள் முன்னேறுதற்குரிய வழி வகைகள், பிறநாட்டு இளைஞர்கள் கல்வித்துறையிலும், பிற துறையிலும் முன்னேறும் விவரங்கள், பயிர்த்தொழில், கைத்தொழில், வாணிகம் பற்றிய விளக்கங்கள், அறிவுத் துறை, கலைத்துறை, சமயத்துறை பற்றிய செய்திகள் இவை பற்றிய பாடங்களைக் கொண்ட பாடத் திட்டம் விஞ்ஞான அடிப்படையில் அமைத்தல் வேண்டும். இப் பலதுறைப்பட்ட பொருள்களைப் பற்றிய பாடங்கள் தூய, எளிய, செந்தமிழ் நடையில் எழுதப்பட வேண்டும். இந்நூல்களைப் பார்வையிடும் பாடக் குழுவினருள் பெரும்பாலோர் புலமையும், உலக அறிவும் படைத்த சான்ற ராய் இருத்தல் வேண்டும்.
முடிவுரை
புதிய தமிழகத்தில் சங்ககாலத் தமிழக வாழ்வு வாழ வசதி அமைத்தல் வேண்டும். இன்று தெரு மேடைகளிலும், ஒதுக்கிடங்களிலும் வாழுகின்ற தமிழர் கூட்டம் புதிய தமிழகத்தில் காணப்படலாகாது. ஒவ்வொரு தமிழனும் இருக்க வீடும், வாழ வழியும் பெற்றவகை இருத்தல் வேண்டும். உண்டி, உடை, உறையுள் என்னும் மூன்றும் ஒவ்வொரு தமிழனுக்கும் இருத்தல் வேண்டும். இங்ஙனம் இருக்கச் செய்வது எல்லாத் தமிழ் மக்களின் பொதுக் கடமையாகும். அரசாங்கத்தின் சிறப்புக் கடமையாகும். உண்மைத் தமிழரான காமராசர் ஆட்சியில் தமிழர் வாழ்வு நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாகச் சிறப்படையும் என்று நம்புதல் தவறாகாது. அவரது ஆட்சி, நிலைபெற்றிருக்கத் தமிழர் அனைவரும் உள்ளக் கிளர்ச்சியோடு உழைப்பார்களாக. அப்பொழுதுதான் எல்லா இன மக்களும் அரசாங்க அலுவல்களிலும் பிற துறைகளிலும் தத்தமக்குரிய இடத்தைப் பெற்றுப் பொருளாதாரத் துறையில் கவலையின்றி வாழ முடியும்.
இதுகாறும் கூறப் பெற்றவை உருப்பெறுமாயின் புதிய தமிழகம் மெய்யாகவே நாட்டு மக்களுக்கு நலம் விளைப்பதாக விளங்கு மென்பதில் ஐயமில்லை.
--------------
நாடகத் தமிழ்
சங்க காலத்தில்
கூத்து என்னும் சொல் முதலில் நடனத்தையும், பின்பு கதை தழுவி வரும் கூத்தாகிய நாடகத்தையும் குறித்தது. இயற்றமிழைப் புலவரும், இசைத் தமிழைப் பாணரும் பேணி வளர்த்தாற் போலவே நாடகத்தையும் நடனத்தையும் கூத்தர் என்பவர் பேணி வளர்த்தனர். நடனம் ஆடும் மகளிர் விறலியர் எனப்பட்டனர்; உள்ளக் குறிப்புப் புறத்தில் தோன்றும்படி திறம்பட நடிப்பவள் விறலி எனப்பட்டாள். கூத்தி, ஆடுமகள், ஆடுகளமகள் என நடனமாடிய மகள் சங்க காலத்தில் பல பெயர்களைப் பெற்றிருந்தாள். நடனமாடிய மகன் கூத்தன், ஆடுமகன், ஆடுகளமகன் என்று பெயர் பெற்றான். இவர்களை கதை தழுவிவரும் கூத்துக்களை ஆடினர். அங்ஙனம் ஆடிய பொழுது ஆண் மகன் 'பொருநன்’ என்றும் பெயர் பெற்றான்.
தமிழ் தொன்று தொட்டு இயல், இசை, நாடகம் என மூன்று பிரிவுகளைப் பெற்றிருந்தது. கூத்த நூல், செயிற்றியம், பரதம், முறுவல், அகத்தியம், சயந்தம், குணநூல், மதிவாணர் நாடகத் தமிழ் நூல் என்பன சங்ககால நாடக நூல்கள் என்று உரைகளால் அறிகின்றோம். இவையெல்லாம் அழிந்து விட்டன. சிலப்பதிகாரம் ஒன்றே இன்று நாடகக் காப்பியமாக இருந்து வருகின்றது.
சிலப்பதிகார காலத்தில் வடமொழியாளர் கூட்டுறவு தமிழகத்தில் மிகுதியாக இருந்தது. அக்காலத்தில் நாடகம் என்ற சொல் கூத்து என்ற சொல் போலவே நடனத்தையும் கதை தழுவி வரும் கூத்தையும குறித்தது, “நாடகக் காப்பிய நன்னூல் நுனிப்போர்" (மணிமேகலை, 19. 80) என வரும் தொடரில் உள்ள 'நாட கம்' என்னும் சொல்லுக்குக் “கதை தழுவி வரும் கூத்து' என்று டாக்டர் உ. வே. சாமிநாத அய்யர் அவர்கள் எழுதியிருப்பது கவனிக்கத்தகும். எனவே, நாடகம் பற்றிய காவியங்கள் மணிமேகலை ஆசிரியர் காலத்தில் (கி. பி. 2-ஆம் நூற்றாண்டில்) இருந்தன என்பது தெளிவு. மணிமேகலைக்கு முற்பட்ட திருக்குறளிலும் “கூத்தாட்டு அவை’ (குறள், 333) குறிக்கப் பட்டுள்ளது. இங்குக் கூத்தாடுதல் - நடித்தல் என்னும் பொருளில் வந்துள்ளது.
கூத்து அல்லது நாடகம் என்பது நுண்கலைகளுள் ஒன்றாகும். வெளி நாடுகளுடன் பன்னெடுங்காலமாக வாணிகம் செய்து வந்த தமிழர் - இயல், இசைக்கலைகளில் வல்லரா யிருந்த தமிழர்-நாடகக் கலையிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தனர் என்று கொள்வது தவறாகாது. இயல், இசை என்னும் இரண்டு பிரிவுகளும் கேட்பவருக்கு இன்பத்தைத் தருவன; நாடகம் கேள்வி இன்பத்தோடு காட்சி இன்பமும் பயப்பதாகும். எனவே, நாடகமே மிக்க பயனுள்ளதாக அறிவுடை யோர் கருதுவர். நாடகத்தில் இயல், இசை, ஆகிய இரண்டும் கலக்கின்றன. நாடகத்தில்தான் முத்த மிழையும் ஒருங்கே காண இயலும்.
கோவில் விழாக்களில்தான் நாடகம் தோற்றம் எடுத்தது என்பது அறிஞர் கருத்து. ஆடல், பாடல் என்னும் இரண்டின் சேர்க்கையாக முதலில் நாடகம் அமைந்திருந்தது. பின்பு பாட்டாக அமைந்த உரைநடை இடையிடையே கலந்தது. அதன் பின்னர்ப் பேச்சு நடையில் அமைந்த உரை நடை சேர்ந்தது. எனவே, ஆடல், பாடல், பாடல் வடிவில் அமைந்த உரை நடை, பேச்சு உரை நடை என்பன சேர்ந்து நாடகத்தை அழகு செய்தன. இங்ஙனம் வளரத் தலைப்பட்ட நாடகம், பொதுமக்களுக்கென்றும் அரசர்க்கு என்றும் இருவகையாகப் பிரிந்தது. அவை ”வேத்தியல் ”, ”பொதுவியல்” எனப்பட்டன.
நாடகம் நன் முறையில் வளர்ந்து வந்தபொழுது, இந் நாட்டில் வந்து தங்கி செல்வாக்குப் பெற்ற ஆரியரும், சமணரும் நாடகம், காமத்தை மிகுதிப் படுத்துவதென்று தவறாக எண்ணினர்; அதனால் தாம் செய்த நூல்களில் நாடகத்தின் மதிப்பைக் குறைத்தனர். அவர்கள் செல்வாக்கு மிகுதிப்பட்டிருந்த காலத்தில் நாடகத்தமிழை வளர ஒட்டாது தடுத்தனர். எனவே, நாடக வளர்ச்சி படிப்படியாகக் குறைந்தது. [§]
-----
[§] வி. கோ. சூ. தமிழ் மொழியின் வரலாறு. பக், 45,
இடைக் காலத்தில்
கி. பி. 7-ஆம் நூற்றண்டில் மகேந்திர பல்லவன் மத்தவிலாசப் பிரகசனம் என்னும் வேடிக்கை நாடகத்தை வடமொழியில் இயற்றினன்.[#]; மேலும் வடமொழியில் சிறு நாடகங்கள் சில இராச சிம்ம பல்லவன் காலத்தல் செய்யப்பட்டன. பக்தி இயக்கம் பரவத் தொடங்கிய அக்காலத்தில் சமயத் தொடர்பான நாட கங்கள் தலைத்தூக்கின என்பது இதனால் தெரிகிறது. கி. பி. 8-ஆம் நூற்றண்டில் செய்யப் பெற்ற உதய ணன் வரலாறு கூறும் பெருங்கதையிலும் நாடகம் பற்றிய செய்திகள் சில காணப்படுகின்றன:
“நயத்திறம் பொருந்த நாடகம் கண்டும்' (1, 58, வரி 66)
“நண்புணத் தெளித்த நாடகம் போல’ (3, 2, வரி 12)
“வாயிற் கூத்தும் சேரிப் பாடலும்
கோயில் நாடகக் குழுக்களும் வருகென' (1.37, வரி. 89.)
-----
[#] பல்லவர் வரலாறு. பக். 109.
கோயில்: நாடகக்குழு - அரண்மனையில் நடிப்போர் கூட்டம் என வரும் டாக்டர் உ. வே. சாமிநாதய்யர் அடிக் குறிப்புக் காணத்தகும். கி. பி. 8-ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் நாடகம் நடிக்கப் பட்டதையும், நாடகக் குழுவினர் இருந்ததையும் இவ்வரிகள் தெரிவிக்கின்றன அல்லவா?
கி. பி. 9-ஆம் நூற்றண்டில் வாழ்ந்த மாணிக்க வாசகர், ’நாடகத்தால் உன்னடியார் போல் கடித்து,' என்று கூறியிருத்தலாலும், நம்மாழ்வார், 'பிறவி மாமாயக் கூத்தினையே’ என்று கூறியிருத்தலாலும், கி. பி. 9-ஆம் நூற்றண்டிலும் நாடகங்கள் நடித்துக் காட்டப்பட்டன என்பதை நன்கறியலாம்.
கி. பி. 10-ஆம் நூற்றாண்டில் தோன்றிய சிவக சிந்தாமணி, நாடகம் காமத்தை மிகுவிக்கிறது என்று கூறியுள்ளது காணத்தகும்:
”இளைமையங் கழனிச் சாயல் ஏருழு தெரிபொன் வேலி
வளை முயங் குருவ மென்றோன் வரம்புபோய் வனப்பு வித்திக்
கிளைநரம் பிசையுங் கூத்தும் கேழ்த் தெழுந் தீன்ற காம
வினைபயன் இனிதிற் றுய்த்து வீணை வேந் துறையு மாதேர்." -2598
“நாடகத்தை விரும்பிக் காண்பவர் கண்களைத் தோண்டியும். . .இவ்வாறு பிறரை ஐம்பொறியால் நுகராமல் தடுத்து யாமும் நுகர்ச்சியைக் கைவிட்டோம்.” எனவரும் வாக்கியம், சமணர் நாடகத்தை எந்த அளவு வெறுத்தனர் என்பதை நன்கு காட்டவல்லது.
'நாடக நயந்து காண்பார் நலங்கிளர் கண்கள் சூன்றும்'
-முத்தியிலம்பகம், 2989
இவற்றால் சிந்தாமணி எழுதப்பெற்ற கி. பி. 10-ஆம் நூற்றண்டில் நாடகங்கள் தமிழ் நாட்டில் நடிக்கப் பெற்றன என்னும் உண்மையை உணரலாம்.
பிற்காலச் சோழர் காலத்தில் ஆண்டுதோறும் வைகாசி விழாவில் தஞ்சை இராசராசேசுவரத்தில் இராசராசேசுவர நாடகம் நடித்துக் காட்டப்பட்டது. அதனை நடித்துக் காட்டிய விசயராசேந்திர ஆசாரியனுக்கு ஆண்டுதோறும் 120 கலம் நெல் தரப்பட்டது. [#]இராசராசன் தஞ்சையில் பெரிய கோவில் கட்டிய முறை, அவனது வரலாறு, அவன் மனைவியர் அக்கோயிலுக்கு அளித்த நிவந்தங்கள், அக்கோவிலைப் பற்றிக் கருவூர்த்தேவர் பாடியது போன்ற பல செய்திகள் இந் நாடகத்தில் பல காட்சிகளாக அழைந்திருக்கலாம்.
-----
[ #] S. I. I. 2, 67.
விக்கிரமாதித்த ஆசாரியன் என்று இராசராச நாடகப் பெரியன் என்பவன் பந்தனை நல்லூரில் நட்டுவப் பங்கு, மெய்மட்டிப் பங்கு (நாடகக் காணி) இவற்றைப் பெற்றவனாய் இருந்தான் என்று அவ்வூர்க் கல்வெட்டுக் [§] கூறுவதால், இராசராச நாடகம் (முதலாம் இராசராசனைப் பற்றியது) என ஒன்று இருந்தது. அந்நாடகம் நடிக்கப்பட்டது என்பன அறியலாம்.
-------
[§] தமிழ்ப் பொழில், தொகுதி. 23, பக்-152’-3.
இந் நூலில் இராசராசனது இளமைப் பருவம், அவன் அரசன் ஆனமை, போர்ச் செயல்கள், ஆட்சி முறை, இராசராசேசுவரம் எடுப்பித்தமை, திருமுறைகளைத் தொகுத்தமை, முதலிய செய்திகள் பல காட்சிகளாக இடம் பெற்றிருக்கலாம்.
முதற் குலோத்துங்கன் காலத்தில் பூம்புலியூர் நாடகம் என்ற ஒன்று செய்யப் பட்டது. செய்தவனுக்கு பரிசு தரப் பட்டது [#]. அது திருப்பாதிரிப்புலியூரைப் பற்றியது. அம்மன் கன்னிகையாக இருந்து சிவனை வழிபட்டமை, அப்பர் சமணராயிருந்தமை, பின் சைவரானமை, சமணருடைய கொடுமைகட்கு ஆளானமை, பிறகு கடலில் மிதந்து கரைசேர்ந்து அவ்வூர்க் கோவிலில் பதிகம் பாடினமை, மகேந்திரன் அங்கிருந்த சமணப் பள்ளியை இடித்துக் குணபர ஈசுவரம் கட்டினமை போன்றவற்றைக் காட்சிகளாகக் கொண்ட நூலாக இருக்கலாம். அது நடிக்கப் பெற்றமைக்குச் சான்று இல்லையாயினும், சமயப்பற்று மிக்கிருந்த அக் காலத்தில் அது நடிக்கப் பட்டதெனக் கருதுதல் தவறாகாது. இங்ஙனம் சைவ அரசர்களையும் நாயன்மார்களையும் பற்றிய நாடகங்களில் சிலவேனும் அக்காலத்தில் நடிக்கப்பட்டன எனக் கொள்ளலாம்.
-------
[§] 129 of 1902
சோழர்க்குப் பின்
கி. பி. 14-ஆம் நூற்றண்டில் மாலிக்காபூர் படையெடுப்புக்குப் பிறகு சேர, சோழ, பாண்டிய அரசுகள் நிலை தளர்ந்தன. விசயநகர வேந்தர் ஆட்சி சிறிது காலம் சமயத்தைப் பாதுகாத்தது. அப்பொழுது இசை, நடனம், நாடகம் முதலிய கலைகள் புத்துயிர் பெற்றன. தென்னாட்டில் நாயக்கராட்சி மறையும் வரையில் இக் கலைகள் ஓரளவு உயிர் பெற்று மாழ்ந்தன. 17-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு நாடு பல துறைகளிலும் அல்லற் பட்ட காரணத்தால் நாடகம் முதலிய கலைகள் கவனிப் பாரற்றுக் கிடந்தன.
“கி. பி. 17-ஆம் நூற்றாண்டினிறுதி தொட்டுக் கூடத்து நூல்கள் சில வேரற்று வீழ்ந்த நாடகத் தமிழினின்றும் இளைப்பனவாயின. இடையிடையே கவிக் கூற்று மேவி, இழிசினர் நடக்கும் இயல்பினவாகிக் கூத்தும் பாட்டும் கொண்டு நடப்பனவெல்லாம் கூத்து நூல்களாம். சீகாழி அருணாசலக் கவிராயர் செய்த ‘இராம நாடகமும்’, குமரகுருபர சுவாமிகள் செய்த 'மீனாட்சியம்மை குறமும்’, திரிகடராசப்பக கவிராயர் செய்த 'குற்றாலக் குறவஞ்சியும்’ இக் கூத்து நூலின் பாற் படுவனவாம். ’முக்கூடற் பள்ளு’, 'பருளை விநாயகர் பள்ளு’ முதலியனவும் கூத்து நூல்களேயாம். இவையெல்லாம் இயற்றமிழ்ப் புலமை சான்ற பாவலர் இயற்றினவாம். ‘சுத்தாநந்தப் பிரகாசம்' என்றதோர் பரத நூல் இடைக் காலத்தின் தொடக்கத்தில் ஏற்பட்டது வெளிப்படாமல் இருக்கின்றது. பின்னர்க் கி.பி. 16-ஆம் நூற்றண்டின் தொடக்கத்திலிருந்த அரபத்த நாவலர் என்பாய் ’பாதசாஸ்திரம்’ என்றதோர் நூல் செய்துள்ளார்.”[#]
--------
[#] வி. கோ. சூ. தமிழ் மொழியின் வரலாறு, பக்-46-47.
19-ஆம் நூற்றண்டின் முற்பாதியில் கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர் தஞ்சையை ஆண்ட சரபோஜி மன்னர் மீது பாடிய குறவஞ்சி நாடகம் குறிப்பிடத்தக்கது. அந் நாடகம் தஞ்சைப்பெரிய கோவிலில் நடிக்கப்பட்டு வந்தது. அதே நூற்றாண்டின் கடைப் பகுதியில் பேராசிரியர் சுந்தரம் (பிள்ளை) பாடிய மனோன்மணிய நாடகமும் போற்றத் தக்கதாகும்.
20-ஆம் நூற்றாண்டில்
நாம் வாழும் இவ்விருபதாம் நூற்றாண்டின் முற்பாதியில் நாடகக் கலை நன்கு வளர்ந்தது. பம்மல் சம்பந்த முதலியார் எழுதியுள்ள பல நாடகங்கள் நாடெங்கும் நடிக்கப் பெற்றன. சிறந்த நாடக ஆசிரியரான சங்கரதாஸ் சுவாமிகள் எழுதியுள்ள நாடகங்கள் பலவாகும். அவற்றுள் அபிமன்யு சுந்தரி, பார்வதி கல்யாணம், பிரபுலிங்க லீலை, வள்ளி திருமணம், பாதுகா பட்டாபிஷேகம், இலங்கா தகனம், அல்லி அர்ச்சுனா, சிறுத்தொண்டர், சதிஅனுகுயா, பவளக்கொடி, சதி சுலோசனா, மணிமேகலை, மிருச்சகடி, சீமந்தனி, சாவித்திரி, கோவலன், பிரகலாதன், ரோமியோவும் ஜூலியத்தும் என்பன குறிப்பிடத்தக்கவை.
கண்ணைய (நாயுடு) நாடகக் குழுவினர் நடித்து வந்த கிருஷ்ண லீலை, தசாவதாரம் முதலிய நாடகங்கள் முப்பது ஆண்டுகளுக்கு முன் நாட்டில் சிறந்து விளங்கின.
இந் நூற்றண்டின் முற்பாதியில் சங்கரதாஸ் சுவாமிகள் இணையற்ற நாடக ஆசிரியராக இலங்கினார். இவருடைய மாணவர்கள் தமிழகம் முழுவதும் பரவி யிருக்கின்றனர். அவிர்கள் ஆங்காங்கு இருந்துகொண்டு இக் கலையைத் தடமால் இயலும் அளவு வளர்த்து வருகின்றனர். தழிழ் வளர்த்த மதுரையில் இவருடைய மாணவர்கள் சங்கங்களை அமைத்து நாடகப் பயிற்சி அளிக்கின்றனர்; மதுரை, இராமநாதபுரம், திருச்சி மாவட்ட ஊர்களில் நாடகங்களை நடித்து வருகின்றனர்.
சங்கரதாஸ் சுவாமிகளின் மாணவர்களாகிய டி. கே. சண்முகம் சகோதரர்கள் இன்றைய நாடகத் துறையிலும் நடிப்புக் கலையிலும் சிறந்து விளங்குகின்றனர். அக் கலைக் கேற்ற ஒழுக்கமும் அவர்கள்பால் அமைந்துள்ளமை குறிப்பிடத்தகும். அவர்கள் நடித்துவரும் நாடகங்களுள் அவ்வையார், மனிதன், இன்ஸ்பெக்டர், இராசராச சோழன் என்பன குறிப்பிடத் தக்கவை. இவற்றுள்ளும் இராசராச சோழன் இணையற்ற நாடகமாகும். காண்பவர் உள்ளங்களைக் கொள்ளை கொள்ளும் மிகச் சிறந்த நாடகம் என்று இதனைக் கூறலாம். சோழர் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு வரையப் பெற்றுள்ள இந்நாடகம், மக்களுக்கு வரலாற்று உணர்ச்சியையும் பக்தியையும் ஒருங்கே ஊட்டவல்லது. இது போன்ற நாடகங்கள் பல வரையப்பெற்று நடிக்கப் பெறுதல் வேண்டும். நவாபு இராசமாணிக்கத்தின் குழுவினர் வள்ளி திருமணம், சம்பூர்ண இராமாயணம் முதலிய நஈடகங்களை நடித்து வருகின்றனர்.
காலத்திற் கேற்ற சீர்திருத்தங்களைக் கொண்ட நாடகங்கள் பல இப்பொழுது பலரால் நடிக்கப்பட்டு வருகின்றன. என். எஸ். கிருஷ்ணன்[§] குழுவினர், எஸ். எஸ். இராசேந்திரன் குழுவினர், எம். ஜி.இராமச்சந்திரன் குழுவினர், கே. ஆர். இராமசாமி குழுவினர், கே. ஏ. தங்கவேலு குழுவினர், சிவாஜி கணேசன் குழுவினர் முதலியோர் பயன் தரத்தக்க நாடகங்களை நடத்தி வருகின்றனர்.
-----
[§] கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் அவர்கள் மறைந்தது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
தமிழகத்தில் பல்லாயிரம இளைஞர்களை நல்ல தமிழில் பேசப் பழக்கிவரும் அறிஞர் அண்ணாதுரை சந்திர மோகன், நீதிதேவன் மயக்கம், ஓர் இரவு, வேலைக்காரி, சுவர்க்கவாசல், இரங்கோன் இராதா என்ற நாடகங்களை வரைந்துள்ளார். அவற்றுள் சந்திரமோகனில் ஆசிரியரே கங்கு பட்டராக நடிப்பது வழக்கம். பேச்சுக் கலையில் சிறந்து விளங்குவது போலவே அண்ணாதுரை நடிப்புக்கலையிலும் சிறந்து விளங்குகிறார்.
ஸ்ரீதேவி நாடக சபாவின் உரிமையாளரான கே. என். இரத்தினம் குழுவினர் பல நாடகங்களை நடத்தி வருகின்றனர். அவற்றுள் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது நந்திவர்மன் நாடகமாகும். தெள்ளாறு எறிந்த நந்திவர்மன் வரலாற்றுப் புகழ் பெற்றவன்; சிறந்த போர் வீரன்; மிகச் சிறந்த சிவபக்தன், நந்திக் கலம்பகம் பாடப்பெற்றவன். அப்பெருமகனைப்பற்றிய நாட கம் மிகவும் நல்ல முறையில் அமைந்துள்ளது.
முடிவுரை
தமிழ் நடிகர் தமிழகத்து வரலாற்றையும் இலக்கியத்தையும் நன்கு பயிலுதல் நல்லது; தூய எளிய தமிழ் நடையில் உரையாடல்களை அமைத்து நடித்தல் வரவேற்கத் தக்கது; பாடல்கள் சிலவாகவும் உரையாடல்கள் பலவாகவும் அமைந்துள்ள நாடகங்களையே நடித்தல் ஏற்புடையது. பொருத்தமற்ற இடங்களிலெல்லாம் பாடுதல் வெறுப்பைத் தரும். இவை அனைத்திற்கும் மேலாக, நடிகரிடம் கட்டுப்பாடும் ஒழுக்கமும் மிகுந்திருத்தல் வேண்டும். வருங்காலத் தமிழகத்தில் பட்டம் பெற்ற இளைஞர்களும் இக்கலையில் பயிற்சி பெறுதல் நல்லது. கல்விமான்கள் நாடகத்தில் நடிப்பது வர வேற்கத் தக்கது. தமிழுணர்ச்சி வீறு கொண்ட இக்காலத்தில், தமிழ் நடிகர் நாடகக்கலை வளர்ச்சியில் ஊக்கம் கொள்ளுதல் நல்லது. நன்முறையில் அமையும் நாடகங்களைத் தமிழ்மக்கள் எப்பொழுதும் வரவேற்பர் என்பது திண்ணம்,
-------
வரலாறு உண்டாக்கிய நாட்டுப் பிரிவுகள்
கடல்கோள்கள்
மிகப் பழைய காலத்தில் தமிழகம் இன்றுள்ள இலங்கைத் தீவை தன்னகத்தே பெற்றிருந்த பெரு நிலப் பரப்பை குமரி முனைக்கு தென் பால் பெற்றிருந்தது என்றும் அப்பகுதி ஏழ்தெங்க நாடு, ஏழ்பனை நாடு முதலிய நாற்பத்தொன்பது நாடுகளை உடையதாக இருந்தது என்றும் அந் நிலப் பரப்பில் குமரிமலைத் தொடர் இருந்தது என்றும் அம்மலையிலிருந்து குடிரியாறு அப்பெரு நிலப் பரப்பில் பாய்ந்தது என்றும் ஒரு பெருங் கடல் கோளால் அந் நாடுகளும் குமரி மலையும் கடலுள் ஆழ்ந்தன என்றும் பழைய தமிழ் நூல்கள் சொல்லுகின்றன. ஒரு பெரிய கடல்கோள் ஏறத்தாழ கி.மு. 2300ல் நிகழ்ந்தது என்றும் அப்பொழுது இலங்கை இந்தியாவினின்று பிரிந்தது என்றும் இலங்கை வரலாறு கூறுகிறது. அக் கடல்கோளே குமரி நாட்டை அழுத்தியிருக்கலாம்.
அக் கடல் கோளுக்குப் பிறகு குமரியாறும் அது பாயப்பெற்ற நிலப் பகுதியும் தமிழகத்தின் தெற்கெல்லையாகக் கூறப்பெற்றன. பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு இக் குமரியாறு பாயப்பெற்ற நிலப்பகுதியும் கடலுள் அமிழ்ந்தது. இலங்கையில் உண்டான இரண்டாம் கடல் கோள் கி. மு. 504ல் நிகழ்ந்தது என்றும் அக் கடல் கோளால் இலங்கையின் பெரும் பகுதி அழிந்தது என்றும் இலங்கை வரலாறு கூறுகிறது. குமரியாறு கடலால் கொள்ளப்படுவதற்கு முன் தொல்காப்பியம் செய்யப்பட்டது என்பது அறிஞர் கருத்து. இக் கடல்கோளால் இரண்டாம் தமிழ்ச் சங்கம் நிகழ்ந்த அலைவாய் (கபாடபுரம்) என்னும் நகரம் அழிந்தது என் பது கூறப்படுகிறது.
இந்த இரண்டு கடல் கோள்களுக்குப் பிறகு மதுரை பாண்டியர் தலைநகரமாயிற்று. அப்பொழுது இன்றுள்ள குமரிமுனை தமிழகத்தின் தெற்கெல்லையாகக் கொள்ளப்பட்டது. இக்காலம் கடைச்சங்க காலம் என்று அறிஞர் கூறுவர். முதற் கடல் கோள் காலம் முதற் சங்க காலம் என்றும் இரண்டாம் க டல்கோள் காலம் இடைச் சங்க காலம் என்றும் கூறுவர்.
புதிய மேற்கு எல்லை
இம் மூன்று காலங்களிலும் வேங்கடமே தமிழகத்தின் வட எல்லையாகக் குறிக்கப் பட்டுள்ளது. கிழக்கிலும் மேற்கிலும் கடலே எல்லையாகக் கூறப்பட்டுள்ளது. இதனால் பன்னெடுங்கால முதலே தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே - வேங்கடம் தமிழகத்தின் வட எல்லையாகவும் கிழக்கிலும் மேற்கிலும் கடல் எல்லையாகவும் தெற்கே முதலில் நாடு இருந்தது - பின்பு கடல் எல்லையாக மாறியது என்னும் உண்மைகள் மேலே கூறப்பட்ட செய்திகளைக் கொண்டு தெளியலாம். இந்த நிலை ஏறத்தாழ கி. பி. 16-ஆம் நூற்றரண்டு வரையில் இருந்ததால் இதற்கிடையில் மலையாளத்தில் பேசப்பட்டு வந்த பழந்தமிழ், நில அமைப்பால் தனித்து வழங்கலாயிற்று. அங்குக் குடியேறிய ஆரியர்கள் ஆதிக்கத்தால் பழந்தமிழ் தன் செல்வாக்கை இழந்தது; படிப்படியாக வடமொழிக்கு அடிமையாகி கொடுந்தமிழ் என்று பிற தமிழ் நாட்டு மக்களால் பெயர் வழங்கப் பட்டது. தமிழும் வட மொழியும் கலந்த அக் கொடுந்தமிழே நாளடைவில் மலையாளம் என்ற பெயர் பெற்றது. மேற்கு மலைத் தொடர்ச்சியின் அமைப்பால் சோழ, பாண்டிய நாட்டு மக்கள் சேரநாட்டு மக்களோடு நெருங்கிய தொடர்பு கொள்ள வழியில்லை. எனவே அந்நாடு தனித்து இயங்க வேண்டிய நிலையிலிருந்தது. ஆரியர் செல்வாக்கால் அந்நாட்டு மொழி, பழக்க வழக்கங்கள் இன்ன பிறவும் முற்றிலும் மாறுபட்டு வி ட்டன. எனவே கி. பி. 17 ஆம் நூற்றாண்டிலிருந்து தமிழகத்தின் மேற்கு எல்லை மேற்குத் தொடர்ச்சி மலையெனவே கூற வேண்டியதாயிற்று.
வட எல்லையில் மாறுதல்
விசய நகர ஆட்சிக் காலத்தில் கன்னடரும் தெலுங்கரும் முசுலிம்களின் படையெடுப்பால் தாக்குண்டு தெற்கு நோக்கி ஓடிவந்தனர்; திருப்பதி முதலிய தமிழகத்து வட பகுதிகளில் மிகுதியாகக் குடியேறினர். அக் குடியேற்றம் வரவர மிகுதிப் பட்டது. அதன் விளைவால் திருப்பதியைத் தன்னகத்தே கொண்ட சித்தூர் மாவட்டம், நெல்லூர் மாவட்டத்தின் தென்பகுதி, செங்கற்பட்டு மாவட்டத்தின் வட பகுதி, வட ஆற்காடு மாவட்டத்தின் வடபகுதி என்பவை தெலுங்கும் கன்ன டமும் பேசப்படும் மக்களை மிகுதியாகக் கொண்டுள்ள பகுதிகளாக மாறிவிட்டன. அண்மையில் மொழிவாரி மகாணம் பிரிக்கவேண்டிய நிலைவந்தபொழுது பிற மொழி மக்களை மிகுதியாகப் பெற்ற இத் தமிழகப் பகுதிகள் தெலுங்கு நாட்டுடனும் கன்னட நாட்டுடனும் சேர்க்க வேண்டிய துன்பத்தைப் பெற்றன. இதன் காரணமாக, இன்றைய தமிழகத்தின் வட எல்லே வேங்கடம் என்று கூற முடியவில்லை. வேங்கடம் 18 ஆம் நூற்றாண்டு வரையில் தமிழ் நாட்டைச் சார்ந்தது என்று கல் வெட்டுக்களும் கூறுகின்றன.
----------
தமிழ் வேந்தர் ஒழுக்கம்
ஏறத்தாழ ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகம் தமிழ் மன்னரால் ஆளப்பட்டு வந்தது. சேர, சோழ, பாண்டியர் என்ற தமிழ் வேந்தர் இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழிலும் வல்ல புலவர், பாணர், கூத்தர் என்போரை ஆதரித்தனர். வேந்தருட் சிலர் கவி பாடும் ஆற்றலும் பெற்றிருந்தனர். அவர் தம் பாக்ககளும், புலவர்கள் தமிழ் முடி மன்னரையும், குறுநில மன்னரையும், பிற வள்ளல்களையும் பற்றிப் பாடிய பாக்களும் மிகப் பல. அவற்றுள் அழிந்தன போக, எஞ்சிய பாக்கள் புறநானூறு என்னும் தலைப்பில் ஒரு நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
இந் நூலிலுள்ள பாக்கள் பல நூற்றண்டுகளில் பல புலவர்களால் பாடப் பெற்றவை; அப்புலவர்கள் பல நாடுகளைச் சேர்ந்தவர்கள். புறநானூற்றுப் பாடல் களால் பண்டைத் தமிழ் வேந்தர் செங்கோற் சிறப்பும், போர் முறையும், அவர்கள் புலவர்களைப் போற்றிய திறனும், தமிழ் மக்களுடைய பழக்க வழக்கங்களும், நாகரிகமும், நாகரிகத்தின் தலைமணியான பண்பாடும் நன்கறியலாம்.
பூதப் பாண்டியன்
இன்றைய மதுரை, இராமநாதபுரம், திருநெல் வேலி என்னும் மூன்று மாவட்டங்களும் பண்டைக் காலத்தில் பாண்டிய நாடு எனப் பெயர்பெற்றது.
மதுரையைத் தலைநகராகக் கொண்ட பாண்டிய நாட்டை ஆண்ட பாண்டிய மன்னருள் பூதப்பாண்டியன் என்பவன் ஒருவன். இப் பூதப்பாண்டியன் மீது பகை யரசர் படையெடுக்கத் துணிந்தனர். அதனைக் கேள்வி புற்ற பாண்டியன் மிக்க சீற்றம் கொண்டான். அவ் வேந்தர் பெருமான் தனது அவைக் களத்தில் இருந்தோரைப் பார்த்து,
”பகை வேந்தர் ஒன்று சேர்ந்து என்னேடு போர் புரிவதாகச் சொல்லுகின்றனர். அவர்கள் மிக்க படையையுடையவர்கள்; சிங்கம் போலச் சினந்து புறங் கொடாத மன வலிமை யுடையவர்கள், கடும் போரில் நான் அவர்களை வெல்வேன். அங்ஙனம் நான் அவர்களை வெல்லேனாயின், என் மனைவியைவிட்டு நான் பிரிந்தவனாவேன்; ஆகக் கடவேன். அறநெறி மாறுபடாத அறங்கூறவையத்தில் அறநெறி அறியாத ஒருவனை வைத்து நீதி பிழைக்கச் செய்த கொடியவன் ஆகுக. மாவன், ஆந்தை, அந்துவன், சாத்தன், ஆதன், அழிசி, இயக்கன் என்பவரும் பிறருமாகிய என் உயிர் நண்பரைவிட்டும், பல உயிர்களையும் பாதுகாக்கும் அரசர் குலத்தில் பிறவாதும் மாறிப்பிறப்பேனாகுக,” என்று சூள் உரைத்தான்.
இச் சூளுரையிலிருந்து நாம் பாண்டியனைப் பற்றி அறிவன யாவை?
1. இப் பெருமகன் தன் மனைவி மீது நீங்காத அன்புடையவன்-அவளை விட்டுப் பிரிய மனமில்லாதவன் என்பன நன்கு புலனாகின்றன.
2. அறங்கூறவையத்தில் அறநெறி தெரிந்த சான்றோரே இருந்து வழக்குகளை விசாரித்து முறை வழங்குதல் வேண்டும் - இதற்கு மாறாக, அறநெறி தெரியாத ஒருவனை நீதிபதியாகவைத்து நீதி வழங்கச்செய்தல் குடிமக்கட்குத் துரோகம் செய்வதாகும். அந்நிலையில் அரசன் கொடுங்கோலன் என்று கருதப்படுவான் என்பன காவலன் கருத்துக்கள் என்பது நன்கு விளங்குகின்றது.
3. உயிரொத்த சிறந்த நண்பர்களை விட்டுப் பிரிதலும், உயிர்களைப் பாதுகாக்கும் அரச பரம்பரையிலிருந்து ஒருவன் மாறிப் பிறத்தலும் கொடிய நிகழ்ச்சிகள் என்பது பாண்டியன் கருத்தாதல் அறியலாம்.
இவ்வுண்மைகளை நோக்க, (1) பாண்டியன் தன் மனைவியை நன்கு நேசித்துவந்தான் என்பதும், (2) அற நெறி உணர்ந்த சான்றோரையே அறங்கூ றவையத்தில் நீதிபதியாக அமர்த்தி முறை வழங்கிவந்தான் என்பதும், (3) தன் நண்பர்களைவிட்டுப் பிரிய மனமில்லாதவன் என்பதும், (4) உயிர்களைக் காக்கும் அரசகுடியிற் பிறத்தல் சிறந்தது என்ற கருத்துடையவன் என்பதும் நன்கு வெளியாகின்றன. இத்தகைய சீரிய ஒழுக்கமுடைய வேந்தனது ஆட்சி செங்கோலாட்சியாக இருந்திருத்தல் வேண்டும் என்பதில் ஐயமுண்டோ?
பாண்டியன் நெடுஞ்செழியன்
”நெடுஞ்செழியன் வயதில் இளையவன்; சிறிய படையை உடையவன். எம்மிடம் நால்வகைப் படை களும் நல்ல நிலையில் இருக்கின்றன, என்று பகைவர் கூறிக்கொண்டு" என் மீது போருக்கு வருகின்றனர். இங்ஙனம் வரும் பகைவரை யான் வெல்லேனாயின்
1. என் குடை நிழலில் வாழும் குடி மக்கள் நிற்க நிழல் காணாமல் ‘எங்கள் அரசன் கொடியவன்' என்று கூறிக் கண்ணிர் சிந்திப் பழி தூற்றும் கொடுங்கோல் மன்னன் ஆகக்கடவேன்;
2. கல்வி, கேள்வி, ஒழுக்கம் இவற்றிற் சிறந்த மாங்குடி மருதனைத் தலைவனாகக் கொண்ட புலவர் கூட் டம் எனது பாண்டிய நாட்டைப் பாடாதொழிவதாக;
3. வறியவர்க்குக் கொடுக்க முடியாத நிலையில் யான் வறுமையை அடைவேனாக',
என்று மதுரை மன்னன் நெடுஞ்செழியன் சூள் உரைத்தான். இச் சூளுரையிலிருந்து நாம் அறியும் உண்மைகள் யாவை?
1. குடிகளுக்கு நிழலை அருளி அவர் மனம் மகிழ ஆட்சி புரிபவனே செங்கோல் அரசன்,
2. கல்வி, கேள்வி, ஒழுக்கங்களிற் சிறந்த புலவர் பெருமக்களது பாராட்டுப்பெறுதலே காவலன் கடமை, (செங்கோல் அரசனையே ஒழுக்கம் மிகுந்த சான்றோர் பாராட்டுவர்)
3. "இல்லை' என்று இரப்பவர்க்கு இல்லை” என்று சொல்லாத செல்வ நிலையும், மன்நிலையும் அரசனுக்கு இருத்தல் வேண்டும்-என்னும் மூன்று உண்மைகளும் இச் சூளுரையிலிருந்து தெளிவாகத் தெரிகின்றன.
சோழன் நலங்கிள்ளி
இன்றைய தஞ்சை, திருச்சி மாவட்டங்களும், தென்னாற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த சிதம்பரம் தாலுகாவும் சங்க காலத்தில் சோழ நாடாக இருந்தன. இதனை ஆண்ட முடிமன்னர் பலர். அவருள் கவி பாடும் ஆற்றல் பெற்ற காவலர் சிலரே. அச்சிலருள்ளும் போர்த் திறனினும் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கியவன் நலங்கிள்ளி என்பவன். ஒருமுறை அவன்மீது பகைவர் படையெடுத்தனர். அதுகேட்டுச் சினந்த அப்பெரு மகன்,
”இப் பகைவர் என்னே வணங்கி, ’எமக்கு நினது நாட்டைத் தர வேண்டும்' என்று வேண்டுவாராயின், மனமகிழ்ச்சியோடு கொடுத்து விடுவேன். அங்ஙனம் பணிவோடு வராமல் படைச் செருக்குடன் வருவதால், இவர்களை எதிர்த்துப் பொருதலே முறை. இவர்களை நான் வெல்லேனாயின், பொதுப் பெண்டிரது சேர்க்கையில் எனது மாலை துவள்வதாக, " என்று சூளுரை புகன்றான்
இச் சூளுரையால் இவனைப்பற்றி நாம் அறிவன யாவை?
1. வலிமை மிகுந்த இப்பேரரசன் அடியவர்க்கு எளியவன் - பணிவாரிடம் பண்புடன் நடப்பவன் என் மதும்;
2. பொதுமகளிரது சேர்க்கையை விரும்பாதவன் பொதுமகளிரைச் சேர்தல் வெறுக்கத் தக்கது என்ற கருத்துடையவன் என்பதும் நன்கு தெளிவாகின்றன.
முடிவுரை
இம்மூன்று சூளுரைகளிலிருந்தும்-பழந்தமிழரசர்
1. இல்லற வாழ்க்கையை இனிது நடத்தியவர்; 2. பெண்டிர் சேர்க்கையை வெறுத்தவர்; 3. சிறந்த நண்பர்களை விட்டுப் பிரியாதவர்; 4. குடிகள் வருத்தங் காணப் பொறாதவர்;
5. சான்றோராகிய புலவர்பெருமக்கள் பாராட்டுதலை மதித்தவர்; 6. வறியவர்க்கு வழங்கி மகிழ்ந்தவர்; 7. ஆட்சிப் பொறுப்பை அணுவளவும் தவற விடாதவர் என்னும் உண்மைகள் புலனாதல் காணலாம்.
--------
சங்க காலத்தில் தமிழ் வளர்ந்த முறை
மூவகைத்தமிழ்
மனிதன் உரை நடையிலும் செய்யுள் நடையிலும் செய்திகளை அறிகின்றான். இவ்விரண்டு இயல் எனப்படும், பண்இசைத்துத் தாள வரையறை செய்து பாடப்படுவதும் ஒரு வகை. அது இசை எனப்படும். இயலும் இசையும் கலந்து காண்பார் கண்களுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்க வல்லதாய் நடித்துக் காட்டப் படுவது நாடகம் எனப்படும். இம்மூன்றும் ஒவ்வொரு மொழியிலும் அமைந்துள்ளன. ஆனல் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மொழியை இங்ஙனம் மூன்று பிரிவுகளாகப் பிரித்து வளர்த்த பெருமை தமிழ் ஒன்றுக்கே உரியது என்பது தவறாகாது. அப் பண்டைக்காலத்தில் தமிழ் - இயற்றமிழ், இசைத் தமிழ், நாடகத்தமிழ் என மூன்று பிரிவுகளாக வகுக்கப் பட்டிருந்தது. இயற்றமிழில் வல்லவர் புலவர் என்றும், இசைத் தமிழில் வல்லவர் பாணர், பாடினியர் என்றும் நாடகத் தமிழில் புலமை பெற்றவர் கூத்தர், கூத்தியர் என்றும் பெயர் பெற்றிருந்தனர்.
முத்தமிழ்ப் பயிற்சி
இக்காலத்தில் இருத்தலைப் போலச் சங்க காலத்தில் கல்லூரிகள் இருந்தன என்று துணிந்து கூறுதல் இயலாது. ஆயினும், நாட்டின் மொழியாகிய தமிழை நலமுறக் கற்பிக்க எண்ணிறந்த திண்ணைப் பள்ளிகளோ உயர்நிலைப் பள்ளிகளோ இருந்திருத்தல் வேண்டும் என்பதில் எள்ளவும் ஐயமில்லை. இயற்றமிழ்ப் பள்ளிகள் மிகப் பலவாக இருந்திருத்தல் வேண்டும்; இசைத்தமிழ்ப் பள்ளிகள் பல இருந்திருத்தல் வேண்டும். இங்ஙனமே நாடகத் தமிழ்ப் பள்ளிகளும் நன்முறையில் நடை பெற்றிருத்தல் வேண்டும். இவை இருந்திராவிடில், நானூற்றுக்கு மேற்பட்ட இயற்றமிழ்ப் புலவர் களையும் எண்ணிறந்த இசைவாணர்களையும் மிகப் பல ராகிய கூத்தரையும் சங்ககாலம் பெற்றிருக்க வழி இல்லை.
இயற்றமிழில் வல்ல புலவர்கள் எண்ணிறந்த இலக்கண நூல்களையும் மிகப் பல இலக்கிய நூல்களையும் கற்றவர். இசைத் தமிழ்ப் புலவராகிய பாணர்களும் பாடினியர்களும் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்னும் ஏழு இசைகளிலும் வல்லவராய் அக்காலத்தில் விளங்கிய சீறியாழ், பேரியாழ், செங்கோட்டு யாழ் முதலிய பல வகை யாழ்களையும் வாசிக்கும் திறன் வாய்ந்தவராய் விளங்கினர். அக்காலத் தமிழிசை பற்றிய செய்திகள் மிகப்பலவாகும். இன்றுள்ள சிலப்பதிகாரம் முதலிய நூல் உரைகளில் இவை பற்றிய செய்திகள் இருத்தலை நோக்க மிகப் பல இசை நூல்கள் அக்காலத்தில் இருந்திருத்தல் வேண்டு மென்பது ஐயமற விளங்குகின்றது. உள்ளக் கருத்தை உடற் குறிப்புகளால் காண்போர்க்கு உணர்த்துவது நடனமும் நாடகமும் ஆகும். இக்கலையில் வல்லவர் கூத்தர், கூத்தியர் எனப் பட்டனர். இக்கலை பற்றியும் பல நூல்கள் தமிழகத்தில் இருந்தன என்பது இன்றுள்ள சங்கத் தமிழ் நூல்களால் அறியப் படுகின் றது. உள்ளக் குறிப்பை வெளியில் தெரியும்படி நடிப்பதில் விறல் படைத்தவள் விறலி எனப்பட்டாள்.
தமிழ் வளர்ந்த முறை
படித்துப் புலமை பெற்ற புலவர் பலர் பள்ளி ஆசிரியர்களாய் அமைந்தனர். வேறு பலர் முடிமன்னர் அவைகளிலும் சிற்றரசர் அவைகளிலும் அவைப் புலவராக அமர்ந்தனர். பின்னும் பலர், ஊர்தோறும் சென்று பேரிகை கொட்டி வாணிகம் நடாத்திய பேரிசெட்டிமார் போலவும், பழமரம் நாடிச் செல்லும் பறவைகளை போலவும் தமிழைப் பேணி வளர்த்த தகை சான்ற மன்னர்களை நாடிச் சென்று, தம் புலமையை வெளிப்படுத்தி, அவர் தந்த பரிசினைப் பெற்றுவாழ்ந்து வந்தனர். அப்பரிசில் பேர்ந்தவுடன் பிற மன்னர்பால் சென்று தம் புகழ் நிறுவிப் பரிசு பெற்று மீண்டு வந் தனர். இத்தகைய புலவர் பெருமக்கள் பாடியனவே சங்க காலப் பாடல்கள்.
போர்க்களத்தில் வெற்றி பெற்ற அரசர்களைப் புலவரும் பாணரும் கடத்தரும் சென்று பாடுதல் மரபு. விறல் வேந்தர் அம்முத்தமிழ்ப் புலவர்களைப் பாராட்டி அவர் மனம் மகிழும்படி பரிசளித்தல் வழக்கம். சேரன், சோழன் என்னும் முடியுடை அரசர் இருவரையும் அவரோடு இணைந்து வந்த பெருவேளிர் ஐவரையும் தலையாலங்கானத்தில் முறியடித்த பாண்டியன் நெடுஞ்செழியனைக் கல்லாடனர், மாங்குடிகிழார், இடைக்குன்றூர் கிழார் என்ற புலவர் பெருமக்கள் உளமாரப் புகழ்ந்து பாராட்டியுள்ள பாடல்களைப் புறநானூற்றில் காணலாம். வேந்தர்களது வெற்றிச் சிறப்பையும், கொடைச் சிறப்பையும், குணநலன்களையும் புலவர்கள் பாராட்டிப் பரிசு பெற்றனர். அங்ஙனமே தக்க காலங்களில் அவர்களுக்கு அரிய அறிவுரைகளைக் கூறினர். அவர்தம் அறிவுரைகளைப் பாராட்டிய வேந்தர்கள் அவர்களுக்கு மனமுவந்து பரிசளித்தனர். அரசர் இருவருக்குள் போர் நிகழ இருத்தலை உணர்ந்து, அப்போர் நடை பெருமற் காத்த புலவர்களும் உண்டு. அப்புலவர் பெரு மக்களும் பரிசில் பெற்றனர். ஆட்சி முறையிலும் தனிப் பட்ட வாழ்க்கை முறையிலும் அரசர்க்கு அறிவுரை கூறிய அருந்தமிழ்ப் புலவர்களும் அக்காலத்தில் வாழ்ந்தனர். தன் மனைவியைத் துறந்த பேகனுக்குக் கபிலர் பாணர் முதலிய சான்றோர் அறிவுரை பகன்றனர் என்பதைப் புறநானூற்றில் காணலாம். தம் மன்னனோடு போர்க்களம் புகுந்து, அவனை அவ்வப்போது ஊக்கப்படுத்தி, அவனோடு இன்புற்றும் துன்புற்றும் வாழ்ந்த புலவர்களும் உண்டு. கபிலரும் ஒளவையாரும் இத்துறைக்கேற்ற சான்றோவர்.
’புலமை புலமைக்காகவே’ என்பது பண்டைக் காலக் குறிக்கோளாகும். மருத்துவர், கொல்லர், கூல வாணிகர், பேரிகை அடித்து வாணிகம் செய்தவர், வள மனையைப் பாதுகாத்த காவற்பெண்டிர், குயத்தியர், குறத்தியர் முதலிய பலரும் தத்தம் தொழில்களைச் செய்து கொண்டே பெரும் புலவர்களாகத் திகழ்ந்தனர். இவர்கள் மக்களிடம் காணப்பட்ட வீரம், கொடை, அன்பு, அருள் முதலிய நற்பண்புகளைப் பாராட்டிப் பாடிய பாடல்கள் பலவாகும்.
புலவர்கள் அரசர்பால் பரிசில் பெற்று மீண்டும் தம் ஊர் செல்லும்போது வள்ளல்களை நாடிச் செல்லும் புலவர்களை வழியில் சந்திப்பதுண்டு. உடனே அவர்தம் வறுமையைப் போக்க விழைந்து, அவர்களைத் தமக்குப் பரிசில் ஈந்து மகிழ்ந்த மன்னர்பால் ஆற்றுப்படுத்துதல் வேண்டும். தமக்குப் பரிசில் தந்த மன்னனுடைய சிறப்பியல்புகள், அவனது அரண்மனைச் சிறப்பு, நாட்டுச் சிறப்பு, நகரச் சிறப்பு, அந்நகரத்திற்குச் செல்லும் வழி பற்றிய விவரங்கள் இன்ன பிறவற்றைப் பரிசில் பெற்று மீளும் புலவர், வழியில் காணப்பட்ட புலவர்க்கு விரித்துரைத்து அவரை அவ்வள்ளல்பால் ஆற்றுப் படுத்தல் ஒரு நீண்ட பாவாக அமையும். இங்ஙனம் அமைந்த பாட்டு புலவர் ஆற்றுப்படை எனப்படும், இங்ஙனமே பாணரை ஆற்றுப் படுத்தலும் உண்டு. அது பாண் ஆற்றுப்படை எனப்படும். இவ்வாறே விறலியை ஆற்றுப் படுத்தலும் உண்டு. அது விறலி ஆற்றுப்படை எனப்படும். இப்படியே கடத்தரை ஆற்றுப்படுத்தலும் வழக்கம். அது கூத்தர் ஆற்றுப்படை எனப் பெயர் பெறும். இத்தகைய ஆற்றுப்படைப் பாடல்களைப் பத் துப்பாட்டில் காணலாம். புற நானூற்றிலும் பல பாடல் கள் உண்டு.
-------------
கொற்கை
பொருநையாறு இன்று கடலொடு கலக்கும் இடத்திற்கு நான்கு கல் உள் தள்ளி, அவ்வாற்றின் வடகரையில் கொற்கை என்னும் பெயருடன் ஒரு சிற்றூர்
இருக்கின்றது. பண்டைக் காலத்தில் பொருநையாறு. இவ்வூர் அருகிற்றான் கடலொடு கலந்து வந்தது. பொரு நையாற்று மண்ணும் மணலும் பல நூற்றாண்டுகளாக வந்து படிப்படியாக மேடிட்டுக் கடலைப் பின்னோக்கிச் செல்லும் படி செய்து விட்டதால், கொற்கை, துறை முகத்திற்குரிய வசதியை இழந்து விட்டது. இன்றுள்ள கொற்கையிலும் சுற்றுப் புறங்களிலும் கிளிஞ்சல்களும் முத்துச் சிப்பிகளும் தரைக்கடியில் சிறிது ஆழத்தில் கிடைத்தலை, கடல் இந் நிலப்பகுதியை அடுத்து இருந்தமைக்கு ஏற்ற சான்றாகும். கொற்கைக்குப் பின்னர்க் காயல் (இன்றைய “பழைய காயல்') பாண்டியர் துறைமுக நகரமாக விளங்கத் தொடங்கியது. கி. பி. 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காயலே சிறந்த துறைமுக நகரமாக இருந்தது என்பதை மார்க்கோபோலோ குறித்துள்ளார். பின் நூற்றண்டுகளில் கொற்கை பற்றிய பேச்சே யாண்டும் காணப்படவில்லை. எனவே, ஏறத்தாழ கி. பி. 12ஆம் நூற்றண்டுடன் கொற்கைப் பொலிவு மறைந்துவிட்டது என்று கொள்ளுதல் தவறாகாது.
கொற்கை நகரம் சங்கநூல்களில் பேசப்படுதலால், அதன் பழைமையை நாம் நன்கு உணரலாம். கி.பி. முதல் நூற்றண்டில் தென் இந்தியக் கரையோரமாக வந்த "பெரிப்ளுஸ்” என்ற பிரயாண நூலின் ஆசிரியரும், அடுத்த நூற்றண்டில் வந்த தலாமியும் இப்பண்டை நகரத்தைச் சிறந்த துறைமுக நகரம் என்று குறிப்பிட்டுள்ளனர்; குமரிமுனையைச் சுற்றிவந்த கிரேக்க வணிகர் முதலில் இத்துறைமுகத்துக்குத்தான் வந்தனர் என்று குறித்துள்ளனர். மேலும், அவர்கள் மன்னர் வளைகுடாவைக் கொற்கை வளைகுடா என்றே குறித்துள்ளமை, அவர்கள் காலத்தில் கொற்கை பெற்றிருந்த பெருஞ் சிறப்பினை நன்கு விளக்குவதாகும்.
சங்க நூல்களிற் பாராட்டிப் பேசப் பெற்ற கொற்கைத் துறைமுகம் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே புகழ் பெற்றிருந்தது என்று கருதுதல் தவறாகாது.
பாரசீகர், அரேபியர், பொனீஷியர், எத்யோப்பி யர், கிரேக்கர், உரோமர் போன்ற மேலே நாட்டவரும், பர்மியர், சீனர் முதலிய கீழை நாட்டவரும் வாணிகத் துறையில் கொற்கைத் துறைமுகத்துடன் தொடர்பு கொண்டிருந்தனர் என்று ஆராய்ச்சியாளர் அறைகின்றனர். கொற்கைப் பெருந்துறை முத்தெடுக்கும் தொழிலிலும் சங்குகளை எடுத்துப் பொருள்களைத் தயாரிப்பதிலும் பெயர் பெற்றிருந்தது. எனவே, முத்துக்களும் சங்குகளும் சங்கால் செய்யப் பெற்ற பலவகைப் பொருள்களும் மிக்க அளவில் அயல் நாடுகட்கு ஏற்றுமதி யாயின. மேலும், தமிழ் நாட்டிற் கிடைத்து வந்த தங்கம், யானைத்தந்தம், கருங்காலி, சந்தனம் முதலிய விலையுயர்ந்த மரங்கள், மணப் பொருள்கள், பட்டாலும் பருத்தியாலும் இயன்ற ஆடைகள், அரிசி முதலியன அயல்நாடுகட்கு அனுப்பப்பட்டன.
ஏறத்தாழக் கி. மு. 1400 இல் வாழ்ந்து வந்த அத் தீனிய அரசர்கள் இக் கடல் வாணிக உறவினால் பாண்டியர்களை மதித்துப் போற்றினமைக்கு அறிகுறியாகப் ‘பாண்டியோன்’ என்ற பெயரைச் சூட்டிக் கொண்டனர். கருங்கடலின் கரையிற் கட்டப்பட்ட வாணிக நகரங்களும் பாண்டியனது துறைமுகப்பட்டினத்தின் பெயரால் "கொல்கீஸ்' (கொற்கை என வழங்கப் பெற்று வந்தன). பின் நூற்றாண்டுகளில் உரோமப் பேரரசர்களான அகஸ்டஸ், கிளாடியஸ், முதலியோர் பாண்டி வேந்தருடன் நெருங்கிய வாணிகத் தொடர்பு கொண்டிருந்தனர்; பாண்டியர் அவைக்குத் தூதர்கள் மூலம் பரிசுப் பொருள்களை அனுப்பித் தங்கள் அன்பையும் நட்பையும் அறிவித்துக் கொண்டனர்.
“ஐரோப்பிய நாடுகட்கு மிகுதியான அரிசியை ஏற்றுமதி செய்த நகரம் பொருநைக் கரையில் இருந்த கொற்கையே யாகும். இத்தகைய வாணிகம் அக்காலத்தில் கிரேக்கர் வசம் இருந்தது. கிரேக்கர்க்கு முன்பு இந்திய வாணிகம் பாரசீகர், பொனீஷியர் என்பவரிடமே பெரும்பான்மை இருந்து வந்தது. தமிழ்ச் சொற்களாகிய தோகை, அரிசி இஞ்சி முதலியன ஹிப்ரு முதலிய மொழி நூல்களில் காணப்படுகின்றமை இப்பண்டைக் கடல் வாணிக உண்மையை வலியுறுத்துவ தாகும்,' என்று ஆராய்ச்சி அறிஞர் கூறுகின்றனர்.
சங்க காலத்திற்குப் பிறகு கொற்கை பெற்றிருந்த சிறப்பை நன்கு அறிவிக்கும் சான்றுகள் மிகுதியாக இல்லை. பாண்டிய நாடு கி. பி. 6-ஆம் நூற்றாண்டு முதல் 10-ஆம் நூற்றாண்டு வரை பாண்டியர் ஆட்சியில் இருந்தது; பின்னர் ஏறத்தாழ முன்னூறு வருட காலம் சோழராட்சியில் இருந்தது. அக்காலத்தில் பாண்டிய நாடு இராசராசப் பாண்டிய நாடு எனவும், கொற்கை சோழெந்திர சிம்ம சதுர்வேதிமங்கலம் எனவும் பெயர்களைப் பெற்றிருந்தன. அக்காலத்திற்றான் ஆட்சி மாறுபட்டாலும் முன்னர்க் கூறப் பெற்ற இயற்கைக் கேடுகளாலும் கொற்கை தன் பொலிவை இழந்துவிட்டது. கி. பி. 12-ஆம் நூற்றண்டிற்குப் பின் வந்த பாண்டியர் காலத்தில் கொற்கையின் சிறப்பைக் காயல் துறைமுகம் பெற்று விட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தின் கீழ்க்கரையில் ஏறத்தாழ நாற்பதாண்டுகள் தங்கிக் கிறிஸ்தவ சமயத் தொண்டு செய்தவரும், ’திராவிட மொழிகளின் ஒப்பி லக்கணம்' என்ற இணையற்ற நூலை எழுதி அழியாப் புகழ்பெற்றவருமான கால்டுவெல் ஐயர் சென்ற நூற்றாண்டில் இக் கொற்கையைப் பார்வையிட்டார்; ஆங்காங்குச் சில இடங்களைத் தோண்டி ஆராய்ச்சி நிகழ்த்தினர்; கொற்கையில் சங்குத் தொழிற்சாலை ஒன்று இருந்தமைக்குரிய அறிகுறிகளைக் கண்டார்; அங்குப் பல வகை நாணயங்கள் அவருக்குக் கிடைத்தன. அப்பெரியார் வேலைப் பாடமைந்த பெரிய தாழிகள் பலவற்றைக் கண்டார்; அங்குள்ள 'அக்கசாலை' என்னும் சிற்றூரைப் பார்வையிட்டு, அவ்விடத்தில் பண்டைப் பாண்டி யர் நாணயங்களைச் செய்துவந்தனர் என்ற கருத்தை வெளியிட்டார். நெல்லை மாவட்டத்தின் கிழக்குப் பகுதி களில் பழைய நாணயங்கள் மிகப் பலவாகக் கிடைக்கின்றன. வேறு இடங்களில் கிடைக்காத சதுர நாணயங்கள் இங்கு மிகுதியாகக் கிடைக்கின்றன. அவை யனைத்தும் கொற்கைப் பாண்டிய-ருடையனவே என் பதில் ஐயம் இல்லை.
“கொற்கையில் கிடைத்த செப்பு நாணயங்கள் சிலவற்றில் முதலாம் இராசேந்திர சோழன் (கி. பி. 1012-1044) உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. நாணயத்தின் ஒரு புறத்தில் அவனது நின்ற கோலமும் மற்றொரு புறத்தில் அவனது இருந்த கோலமும், பொறிக்கப் பட்டுள்ளன. இத்தகைய நாணயங்கள் சோழ நாட் டின் வட எல்லை முதல் குமரிமுனைவரையுள்ள தென் இந்தியப் பகுதிகளில் காணப்படுகின்றன. இதனால், சோழர் கொற்கை உள்ளிட்ட பாண்டிய நாட்டைக் கைப்பற்றி யாண்டனர் என்பது தெளிவாகிற தன்றோ?' என்று கால்டுவெல் பாதிரியார் கூறியிருத்தல் கவனிக்கத் தகும்.
சிறந்த முறையில் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து கடல் வாணிகம் நடைபெற நிலைக்களமாக இருந்த கொற்கை, சோழரது கடற்றுறைப் பட்டினமாகிய காவிரிப்பூம்பட்டினம் போன்று, அயல்நாட்டு வணிகர் தங்கி யிருக்கத் தக்க மாட மாளிகைகளைக் கொண்ட தெருக்களையும், நம் நாட்டு வணிகர் வாழ்த் தக்க வளம் மிகுந்த தெருக்களையும், பல துறைத் தொழிலாளர்கள் வாழத்தக்க தெருக்களையும், பல தொழிற்சாலைகளையும், வணிக இடங்களையும், கப்பல்களில் ஏற்றத் தகும் பொருள்களை வைக்கத் தக்க பண்ட சாலைகளையும் இறக்குமதியாகும் பொருள்களை வைக்கத் தக்க பண்ட சாலைகளையும், பெரிய கடைத் தெருக்களையும், கோவில்களையும், பிறவற்றையும் தன்னகத்தே பெற்றிருந்தது என்பது கூறாதே அமையு மன்றே? அஃது அரசன் வாழ்ந்த இடமாகவும் இலங்கியது என்று சிலப்பதிகாரம் முதலிய தொன்னூல்கள் செப்புவதால், அரண்மனையையும் பெற்றுப் பெரும் பொலிவுடன் விளக்கமுற்றிருந்தது என்று கருதுதல், பொருத்தமே யன்றோ? சுருங்கக் கூறின், அமேரியர் நாகரிகத்தின் உயிர்நாடியாக விளங்கிய பாபிலோன் நகரம் போலப் பாண்டியரது நாகரிக வளத்திற்கு உயிர் நாடியாகக் கொற்கைப் பெருநகரம் விளங்கியது என்று சொல்வது ஏற்புடையது.
கொற்கை தனது பெருந்துறை முத்துக்களாலும் கடல் வாணிகத்தாலும் பாண்டியர்க்குப் பெருஞ் செல்வம் அளித்து வந்த காரணத்தாற்றன், பாண்டியனை ’கொற்கைக் கோமான்' என்றும், ’கொற்கை யாளி' என்றும் புலவர்களும் குடிமக்களும் உளமகிழ்ந்து பெருமிதத்தோடு பாராட்டலாயினர்.
[#]இன்றைய கொற்கை
இன்றைய கொற்கை மிகச் சிறிய சிற்றூராக இருக்கின்றது. இச்சிற்றூருக்கும் ’அக்க சாலை' என்னும் இடத்திற்கும் இடையே ஏரி போன்ற பரந்த இடம் அமைந்திருக்கிறது. இப்பரந்த இடத்தின் நடுவில் சிறு கோவில் ஒன்று இருக்கிறது. அது வெற்றிவேல் அம்மன் என்று பெயர் பெற்றுள்ளது. அங்குப் பழைய காலத்தில் கண்ணகியின் உருவச் சிலை இருந்ததாகவும், அஃது எவ்வாறோ மறைந்து போனதாகவும் அவ்விடத்தில் இப்போது துர்க்கையின் சிலை வைக்கப் பட்டிருப்பதாகவும் எங்களுக்குப் பல இடங்களைக் காட்டி வந்த பெரியார் ஒருவர் கூறினர்.
---------
[#] நான் கொற்கையை 1-10-56 இல் சென்று கண்டேன். இதனைப் பார்க்க எனக்குப் பேருதவி செய்தவர் ஸ்ரீவைகுண்டம் கோட்டைப் பிள்ளைமாருள் ஒருவரான திருவாளர் இரா. இலக்குவன் என்பவர். கொற்கை பற்றிய பல செய்திகளை எனக்குத் தெரிவித்தவர் கொற்கையில் உள்ள திரு. கொ.ச. சிவராமபிள்ளை என்பவர்.
கோவலன் மதுரையில் கொலையுண்டதற்குப் பதிலாகக் கண்ணகி சீற்றம் பொங்கி மதுரையை அழித்தாள் அல்லவா? அப்பத்தினித் தெய்வத்தின் உள்ளத்தைக் குளிர்விக்க அப்பொழுது கொற்கையை ஆண்ட வெற்றிவேற் செழியன் ஆயிரம் பொற்-கொல்லரைப் பலியிட்டான் என்று சிலப்பதிகாரம் செப்புகிறது. அந்த வெற்றி வேற்செழியன், தான் ஆண்ட கொற்கையில் கண்ணகியம்மனுக்குக் கோவில் எடுப்பித்திருத்தல் இயல்பே. அவன் அவ்வம்மனை வழிபட்டிருத்தலும் பொருத்தமே யாகும். வெற்றிவேற் செழியனுல் வழி படப்பட்ட அம்மன், ‘வெற்றி வேல் அம்மன்’ எனப்பெயர் பெற்றதில் வியப்பில்லையன்றோ?
இப்பொழுது கோவிலிலுள்ள அமமனுக்குச் ’செழுகை நங்கை' என்பது பெயர் என்று ஊரார் உரைக்கின்றனர். செழிய நங்கை (செழியன் - பாண்டி யன்) என்ற பெயரே இவ்வாறு ’செழுகை நங்கை' என மாறி வழக்குப் பெற்றிருக்கலாம். செழியனால் பூசிக்கப் பெற்ற நங்கை ’செழிய நங்கை' எனப் பெயர் பெற்றாள் போலும். இக் கோவிலுக்கு அருகில் சில இடங்களில் பழைய உறை கிணறுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. நாங்கள் அவற்றுள் ஒன்றன் நீரைப் பருகினோம், அது குடிநீராகவே இருக்கின்றது. ஏரிபோன்ற அவ்வகன்ற இடமெங்கும் பண்டைக்கால மட்பாண்டச் சிதைவுகள் காணப்படுகின்றன. இவையும், உறை கிணறுகளும், கோவிலும் அங்கு இருத்தலை நோக்க, அப்பரந்த இடம் முழுமையும் பண்டைக் காலத்தில் கொற்கை நகரின் ஒரு பகுதியாக இருந்திருத்தல் வேண்டும் என்று கருத இடந்தருகிறது. அப்பரந்துள்ள பகுதி பிற்காலத்தில் பள்ளமாகி நீர் நிற்கும் இடமாக மாறியிருத்தல் வேண்டும்.
வெற்றி வேலம்மன் கோவிலுக்கு நேர்மேற்கில் பழுதுபட்ட சிவன் கோவில் ஒன்று வாழைத்தோட்டத்துக் கிடையில் இருக்கிறது. அதனில் இப்பொழுது சிவலிங்கம் இல்லை; பிள்ளையார் திருவுருவம் இருக்கின்றது. கோவிலின் கருவறை மட்டுமே எஞ்சி நிற்கின்றது. அதன் சுவர்களில் பல கல்வெட்டுகள் காணப்படுகின் றன. அவற்றில் ஒருபகுதியைப் படத்திற் பாருங்கள். அக்கோவிலை ‘அக்கசாலை ஈசுவரமுடையார் கோவில்' என்று கல்வெடடுக்கள் குறிக்கின்றன. அக்கசாலை என்பது முன் சொல்லப்பட்ட ஏரிபோன்ற பரந்த வெளிக்கு அப்பால் உள்ள சிற்றூர் ஆகும். பண்டை காலத்தில் அக்கசாலை என்பது, அச்சிவன் கோவில் உள்ள பகுதியையும் உள்ளடக்கியதாக இருந்ததென்று கருத இக் கோவிற் கல்வெட்டு இடந்தருகிறது. அக்க சாலையில் இன்றும் நிலத்தைத் தோண்டும் பொழுது பல நாணயங்கள் கிடைக்கின்றன என்றும், அங்குப் பல காலமாக வாழ்ந்து வந்தவருட் பெரும்பாலர் பொற் கொல்லரே என்றும், அவர்கள் இப்பொழுது பிழைப்பைக் கருதிப் பல ஊர்கட்கும் சென்றுவிட்டனர் என்றும் ஊரார் உரைக்கின்றனர்.
முன் சொல்லப் பெற்ற கோவில் கல்வெட்டுக்களில் கொற்கை ’மதுரோதய நல்லூர்’ என்று குறிக்கப் பட்டுள்ளது. பாண்டிய நாட்டின் தலைநகரமான மதுரையின் சிறப்புக்குச் செல்வம் கொழித்த கொற்கை பெருங் காரணமாக இருந்தமை கருதியே கொற்கைக்கு 'மதுரோதய நல்லூர் எனப்பிற்கால மன்னர்கள் பெயரிட்டனர் போலும்!
கொற்கைச் சிற்றூரிலும் அதன் சுற்றுப் புறங்களிம் ஒன்றேகால் அடிச்சதுரச் செங்கற்கள் கிடைக்கின்றன. நிலத்தை ஐந்தடி ஆழத்தில் தோண்டும் பொழுது களிமண்ணும், பத்தடி ஆழத்தில் சங்குகளும் நிரம்பக் கிடைக்கின்றன; பதினைந்தடி ஆழத்தில் தோண்டும் பொழுது ஒருவகைச் சேறு கிடைக்கின்றது. இங்கு உப்பங்கழி இருந்ததென்பதற்கும் கடல் அருகில் இருந்ததென்பதற்கும் இவை உரிய அறிகுறிகள் என்று ஊர் முதியவர் உரைத்தனர்.
கொற்கையம்பதியில் பல நூற்றாண்டுகளாகப் புகழ் பெற்றது என்று ஊரார் உரைக்கும் வன்னிமரம் ஒன்று இருக்கிறது. அது நேரே நிமிர்ந்து இராமல் தரையை ஒட்டியபடியே பத்தடி சென்று, மேலே நிமிர்ந்துள்ளது, அதன் அடிப்பாகத்தில் பெரிய பொந்து அமைந்திருக்கிறது, அதற்கு எதிரில் சாலை நடுவே சமணதீர்த்தங்கரர் சிலை யொன்று மண்ணுள் பாதியளவு புதையுண்டு இருக்கின்றது. மற்றோரு தீர்த்தங்கரர் சிலை ஊரை யடுத்த தோட்டம் ஒன்றில் காணப்படுகிறது. இவை இங்கு இருத்தலை நோக்க, இவ்வூரில் பண்டைக் காலத் தில் சமண சமயத்தவரும் வாளந்திருந்தனர் என்பதை அறியலாம்.
கொற்கையைப்பற்றிப் பல குறிப்புக்களைச் சேர்த்து வைத்துள்ளவரும் கொற்கைக்கு வரும் ஆராய்ச்சியாளர்க்கு உறுதுணையாக இருப்பவருமாகிய சிவராம பிள்ளை என்னும் முதியோரிடம் ஒரு செப்பேட்டு நகல் இருக்கின்றது. “ஸ்ரீவரகுணமகா ராயர்க்கு யாண்டு 13" என்பது காணப்படும் அப்பட்டயத்தில் ” ’பழங்காசு ஆயிரத்துநானூறு,’ ’பொன் எட்டு', அரண்மனைக்கு மரக்கலராயர் ஆயிரம் பொன்னும், உப்பு லாபத்தில் நூறு பொன்னுக்கு இருபத்தைந்து பொன்னும் செலுத்தக் கடவர்… ஒருபொன் எடையும் அதற்கு மேற்பட்ட ஆணிமுத்தும் வலம்புரிச் சங்கும் அகப் பட்டால் அவைகளை மாக்கலராயர் அரண்மனைக்குச் செலுத்திவிடவும்.” என்னும் வாசகங்கள் காணப் படுகின்றன.
இவற்றை நோக்க, அக்காலத்தில் 'பழங்காசு' என்றொரு பழைய நாணயம் வழக்கில் இருந்தது, 'பொன்’ என்பது ஒரு நாணயத்தின் பெயர், கடல் வாணிகத்துக்காகப் பல மாக்கலங்களை வைத்திருந்தவர் "மரக்கல ராயர்’ எனப்பெயர் பெற்றார், உப்பு உண்டாக்கும் தொழிலும், உப்புவாணிகமும் கொற்தைக்கருகில் நடைபெற்றிருக்கலாம், பொன் என்னும் பெயர் நிறுத்தல் அளவைப் பெயராகவும் இருந்தது, ஆணிமுத்து என்பது முத்துக்களில் சிறந்தது, சங்குகளில் 'வலம் புரிச்சங்கு உயர்ந்தது, இவை இரண்டும் அக் காலத்தில் கொற்கைப் பெருந்துறையில் கிடைத்து வந்தன என்னும் விவரங்களைத் தெளிவாக அறியலாம்,
கொற்கையில் இன்று வாழும் முதியவர்கள் கொற்கை வளநாடு பற்றிக் கீழ்க்காணப் பெறும்[§] பழம் பாடல் ஒன்றினைப் பாடுகின்றனர்.
”ஆலமரம் அரசமரம் ஆனதிந்த நாடு
அதன்பிறகு புன்னைமரம் ஆனதிந்த நாடு
நாலாம்யுகம் தன்னில் வன்னிமரமான காடு
நாற்றிசையும் கீர்த்தி பெற்று நலமிகுந்த நாடு
அக்கரையும் மதிபுனையும் சொக்கலிங்க ஈசன்
அழகுமுடி கொடைஐயன் அருள்புரியும் வண்மை
திக்கனத்தும் புகழ்நின்ற ஜெகதேவி செழுகி நங்கை
சென்னிவெற்றி வேல்தாய் முக்கியமாய் அருள்புரியும்
கோட்டைவாழ் ஐயன் முகனையுடன் சிறந்திருக்கும்
நாவலடி மெய்யர்…..
தக்கார்புகழ் முக்காணி வடக்குவாழ் செல்லி
மனமகிழ்ந்து அரசுசெய்யும் [#] பொற்கைவள நாடு
சீரான தென்மதுரைக் தேசமது செழிக்கத்
திருவளரும் பொற்கையென்று தினம்புகழப் பெற்றோம்
காராளர் வம்சமிது நகரமிது செழிக்கக்
கணையோகன் அரசு செய்யும் பொற்கைவள நாடு"
[§]கொற்கை ஈசுவரமூர்த்தியா பிள்ளை என்ற முதியவர் எங்கள் முன்னிலையில் இப் பாடலைப் பாடிக்காட்ட, தென்காசி வித்துவான் குற்றாலம் என்பவர் இதனை எழுதினார்.
[#] சிலப்பதிகாரத்திற் கூறப்பெற்றுள்ள பொற்கைப் பாண்டியன் இங்கு ஆண்டான் என்றும், அதனால் "பொற்கை" என்பது இவ்வூரின் பெயராயிற்று என்றும் ஊரார் உரைக்கின்றனர். ஆயின், சங்க நூல்களில் இவ்வூர் "கொற்கை" என்றே பேசப்படுகின்றது.
------------------
பூங்குன்றனர் பொன்மொழிகள்
சங்ககாலப் புலவர்
சங்ககாலத்தில், இன்று நமது சமுதாயத்திலுள்ள முதலியார், பிள்ளை, செட்டியார், ஐயர், ஐயங்கார் என்ற சாதிப் பெயர்களோ சாதிகளோ இருந்தமைக்குச் சான்று இல்லை. இயற்பெயர் 'சாத்தன்' என்று இருந்தால், அச்சாத்தன் மரியாதைக்குரியவனுக மாறும் பொழுது 'ஆர்' விகுதி கொடுக்கப்படும். அவன் 'சாத்தனார்' என வழங்கப்படுவான், கபிலன், கபிலர் என்று வழங்கப்படுவான். அவன் இன்ன ஊரினன் என்பதைக் குறிக்க ஊர்ப்பெயர் பெயருக்குமுன் குறிக்கப் படும்; “சித்தலைச் சாத்தனார்’, ‘உறையூர் மோசியார்’ என்றற்போல வரும். ஒரே ஊரில் ஒரே பெயர் கொண்ட புலவர் பலர் இருப்பின், அவர் செய்து வந்த தொழிலால் வேறுபாடு குறிக்கப்படும்; ’கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனுர்’ என்றாற்போல வரும். பிறந்த ஊர் வேறாகவும் தங்கித் தொழில் நடத்தும் ஊர் வேறாகவும் இருந்தால் இவ்விரண்டு ஊர்களையும் அவன் செய்யும் தொழிலையும் அவனது இயற்பெயரையும் சேர்த்து வழங்குதல் பண்டை மரபு; சீத்தலை என்னும் ஊரிலே பிறந்த சாத்தனர் மதுரையில் கூலவாணிகராக இருந்தார் என்பதை உணர்த்த 'மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்’ என்று குறிக்கப்பட்டார்.
மயிலையார், நாகையார் என்றாற் போலப் பிறந்த ஊரால் பெயர் பெற்றோர் பலர். பூங்குன்றம் என்பது பாண்டியநாட்டு ஊர்களில் ஒன்று. இன்றைய இராம நாதபுரம் மாவட்டத்தில் உள்ள மகிபாலன் பட்டியே சங்ககாலத்தில் பூங்குன்றம் எனப் பெயர் பெற்றிரு ந்தது என்பது கல்வெட்டால் தெரிகின்ற உண்மை யாகும். கோள் நிலைகளைக் கணக்குப் பார்த்து மக்களுக்கு நேரும் நலன் தீமைகளைக் கணித்துக் கூறுபவன் இக்காலத்தில் சோதிடன் எனப்படுகிறான். அக்காலத்தில் ‘கணியன்' எனப்பட்டான். பூங்குன்றம் என்ற ஊரில் வாழ்ந்த கணியன் ஒருவன், கணியன் பூங்குன்றன் என்று பெயர் பெற்றான். அக்கணியன் தன் தொழிலோடு நில்லாது, பைந்தமிழ்ப் பாங்குறக் கற்றுப் பெரும் புலவனாகவும் விளங்கினான்.
சங்ககாலப் பெரும் புலவர்களான நக்கீரர், கபிலர், பரணர் இவர்தம் வரிசையில் வைத்து எண்ணத் தக்க பெரும் புலவனாக அப்பெருமகன் விளக்கமுற்றிருந்தான். அப்பெரியோன் அருளிய பாடலொன்று புற நானூற்றில் (192) உள்ளது. பழந்தமிழர் கொண்டிருந்த சீரிய கருத்துக்களை அப்பாவில் வைத்துப் புலவன் பாடியுள்ளான்.
புலவர் பொன்னுரை
(1) ”எமக்கு எந்த ஊரும் எமது ஊரே, எல்லோரும் எம்முடைய சுற்றத்தார். (2) ஒருவனுக்குக் கேடோ ஆக்கமோ வருவது அவனாலேயே தவிரப் பிறரால் அன்று; (3) சாதல் என்பது புதியதன்று; கருவில் தோன்றிய நாளே தொடங்கியுள்ளது. ஆதலால் வாழ்தலை இனியது என்று மகிழ்ச்சி அடையவில்லை. ஒரு வெறுப்பு வந்தபோது இது கொடியது என்று எண்ணவுமில்லை. (4) பேரியாற்று நீரின் வழியே செல்லும் மிதவை போல நமது அரிய 'உயிர் ஊழின் வழிப்படும்’ என்பது அறிஞர் நூலால் தெளிந்திருக்கிறோம். ஆகவே நாம் நன்மையால் மிக்கவரை மதிப்பதும் இல்லை; அவ்வாறே நன்மையால் சிறியோரைப் பழித்தலும் இல்லை."
விளக்கம்
1. இக்கூற்றின் கருத்து யாது? பண்டைக்காலத் தமிழர் பல நாடுகளுக்கும் சென்று வாணிகம் செய்தவர்; உள்நாட்டு வாணிகத்திலும் வெளிநாட்டு வாணிகத்திலும் சிறந்த பழக்கம் உடையவர். அவர்கள் வாணிகத்தின் பொருட்டுக் கடல் கடந்து பல நாடுகளுக்கும் சென்றனர். அங்கங்குத் தங்கி அவ்வங்காட்டு மக்களோடு பழகித் தங்கள் வாணிகத்தைப் பெருக்கினர். அயல் நாடு செல்வோர் அந்நாட்டு மக்களோடு அகங்கலந்து பழகினற்றான் வாணிகம் சிறந்த முறையில் நடைபெறும், அந்நாட்டு மொழியையும் ஓரளவு அறிந்து அம்மக்களோடு பேசி அம்மக்கள் உள்ளத்தைத் தம் பால் ஈர்க்க வேண்டும். இத்துறைகளில் எல்லாம் பண் பட்ட தமிழ் வணிகர் தம் நாட்டைப் போலவே, தாம் தங்கி வாணிகம் நடாத்திய பிற நாடுகளையும் மதித்தனர்; அம்மதிப்பு மிகுதியாற்றான் பல நூற்றண்டுகள் பல நாடுகளோடு வாணிகத் தொடர்பு வலுப்பெற்று வந்தது. தமிழகத்துச் செல்வநிலைக்கு இவ்வயல் நாட்டு வாணிகம் ஒரு சிறந்த காரணமாகும். இந்த உண்மையைத் தமிழ் மக்கள் நன்கு அறிந்திருந்தனர்; அயல் நாட்டு வணிகரைத் தம் நாட்டில் வாழ்வித்தனர்; வசதிகள் அளித்தனர்; நன்கு கலந்து பழகினர். சீனர், அராபியர், யவனர் முதலிய பல நாட்டாரும் சங்ககாலத் தமிழகத்தில் தங்கி வளமுற வாழ்ந்தனர் என்பதைச் சங்க நூல்களால் அறிகின்றோம். அயல் நாட்டார் குறிப்புக்களும் இவ்வுண்மையை வலியுறுத்தும் சான்முக நிற்கின்றன. இந்த உண்மையை உளம்கொண்ட கணியன் பூங்குன்றனர் என்ற புலவர், ”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று சுருங்கக் கூறினார்.
இவ்வுயரிய கருத்து இன்று ஈழம், பர்மா முதலிய நாடுகளுக்கு இல்லாது ஒழிந்தது வருந்தத்தக்கது. தமிழ் வணிகர் அந்நாடுகளில் படும் துன்பம் சொல்லக்கூட வில்லை. ஆனல் வந்தவர்க்கெல்லாம் வாழ்வளித்த தமிழ் நாடு, இந்த விரிந்த மனப்பான்மையால் இன்றும் வட நாட்டவர்க்கும் அயல் நாட்டவர்க்கும் வாழ்வளித்து வருகின்றது. ‘இது பிறநாட்டார் கடை. இங்கே பொருள் வாங்குதல் கூடாது' என்ற எண்ணம் அவனது பண்பட்ட உள்ளத்தில் தோன்றவில்லை. இவ்வுயரிய பண்பாடு தமிழனை வாழ வைப்பதாக இல்லை; அஃதாவது, பண்பாட்டு அளவில் வாழ வைக்கின்றது; பொருளாதார அளவில் வாழ்விக்கவில்லை.
2. ‘மனிதன் தன் நற்செயல்களால் தன்னை உயர்த்திக் கொள்கிறான். தன் தீச்செயல்களால் தன்னைத் தாழ்த்திக் கொள்கிறான்' என்று விவேகானந்த அடிகள் கூறியுள்ளார். ‘மனிதன் ஆவதும் அழிவதும் தன்னாலே தான்' என்று ஜேம்ஸ் ஆலன் என்னும் மேனாட்டு அறிஞன் புகன்றுள்ளான். இப்பேருண்மையையே ஏறத்தாழ 1800 ஆண்டுகளுக்கு முன் கணியன் பூங்குன்றனார் கழறியுள்ளார்.- “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்று.
மனித வாழ்க்கையைப் பக்குவப்படுத்தும் இவ்வுயரிய உண்மையை அறிந்தவர் எத்துணையர்? மனிதன் தன் சொல்லாலும் செயலாலும் பொதுமக்கள் உள்ளங்களைக் கவர்கிறான்; அவ்வாறே தன் தீய சொல்லாலும் செயலாலும் பொதுமக்கள் வெறுப்புக்கு ஆளாகிறான்; கோள் சொல்லுவது, பிறர் வெறுக்கும் செயல்களைச் செய்தல் முதலிய இழிசெயல்களால் பலராலும் வெறுக்கப் படுகிறான். இங்ஙனம் பலர் வெறுப்புக்கும் காரணம் அவனை தவிரப் பிறர் அல்லர். ’நான் அவனால் கெட்டுவிட்டேன், இவரால் இக்கேடு நேர்ந்தது' என்று தன் கேட்டிற்குப் பிறரைக் குறைகூறும் மக்கள் இந்த உண்மையை உணர்வதில்லை.
இந்த உண்மையை ஒவ்வொரு மனிதனும் உணர்ந்துவிட்டால், அவனது வாழ்வு செம்மைப்படும். கணக்கற்ற அறநூல்களைப் படிப்பதாலோ சமய நூல்களைப் படிப்பதாலோ ஒருவன் பெறும் பயனைவிட இப் பயன் மிகப் பெரியது; உயர்ந்தது. மனிதனது இன்ப வாழ்வுக்கு உயிர்நாடியான இப்பேருண்மையை மிகச் சுருக்கமாக உரைத்தருளிய புலவர்பெருமானுக்கு நமது நன்றி உரியதாகுக.
3. உலகில் மலர்ந்த பூ வாடுதல் இயல்பு; தோன்றிய ஒன்று மறைவதும் இயல்பு; அதுபோல் பிறந்தவர் இறத்தலும் இயல்பு. ‘பிறந்த நாம் இறவாமல் இருக்கப் போகிறோம்; இவ்வுலக இன்பங்களே எல்லாம் நுகரப் போகிறோம்' என்று எண்ணுதல் அறிவற்றர் இயல்பு. அறிவு படைத்தவர் பிறந்தவர் இறத்தலால் எப்பொருளும் நிலையுடைய தன்று என்னும் உண்மையை உணர்வர். அதனால் பற்றற்ற நிலையில் வாழ்வர். அறிவுடைய செல்வர் ஊர் நடுவில் உள்ள பழுத்த மரம் போல மக்கட்குப் பயன்படுவர்; வாழ்வைப் பெரிதாக எண்ணி, வறுமையால் வாடும் எளியவர்பால் இரக்கம் கொள்ளாதிரார். இச் சிறந்த மனிதப் பண்பை ஊட்டி வளர்க்கத் தக்கது கணியன் பூங்குன்றனரின் பொன்மொழி. அது,
“சாதலும் புதுவதன்றே; வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே' என்பது.
முடிவுரை
இப்பொன்னுரைகளையும் இவற்றின் பரந்த பொருளையும் உள்ளத்தில் ஆழப் பதித்தல் நன்று. மனிதன் தன்னைப் போலவே பிறரை நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்; அந்நிலையில் அவன் எந்த நாட்டையும் தன்னாடென்று மதிப்பான். மனிதன் எந்த நாட்டவனாயினும் எங்கும் சென்று வாழலாம் என்னும் மனஅமைதி பெற்றிருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் அவன் ”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று மனம் மகிழப் பாடுவான். தான் உயர்வதும் தாழ்வதும் தன்னாலேதான் என்பதை உணரும் அறிவு மனிதனை வாழ்விக்கும். தோன்றுவது அழியும் என்ற உண்மை மனிதனுக்குச் சுயநலத்தை மிகுதியாக உண்டாக்காது. இவ்வுயரிய பண்புகள் மனிதனிடம் கருக் கொள்ளுமாயின், மனித வாழ்வு மாண்புடைய வாழ்வாகும்.)கணியன் பூங்குன்றனாரின் அரிய பாடலைக் கீழே காண்க :
"யாதும் ஊரே யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றோன்ன;
சாதலும் புதுவதன்றே வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்ன தென்றலும் இலமே; மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியிற்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே”.
------------
திருக்குறள்
குறள் கூறுவது
உலகில் மனிதன் ‘வாழ்வாங்கு வாழ்தல்' வேண்டும். வாழ்வாங்கு வாழ்தல் என்பது யாது? மனிதன் வாழ மனையும் மனையாளும் மக்களும் பொருளும் தேவை; மனிதன் வாழ்வது நாடாதலின் அந்நாட்டுக்கொரு மன்னனும் அறந்திறம்பா ஆட்சியும் தேவை; மனிதன் வாழும் மனையில் இன்பம் நிலைக்க, மனையிலுள்ள அனைவரும் ஒன்றுபட்ட உள்ளத்தினராய் இருத்தல் வேண் டும். அவ்வாறே மன்னன் ஆட்சியிலமைந்த மக்கள் அனைவரும் ஆட்சிக்குக் கட்டுப்பட்டு நடந்தால் நாட்டில் இன்பமே நிலவும். இவ்வாறு மனையிலும் நாட்டிலும் இன்பம் நிலவ வாழ்தலே “வாழ்வாங்கு வாழ்தல்" எனப்படும்.
மனிதன் ஒழுக்கத்தோடு வாழ்தல் வேண்டும்; பணம் ஈட்டுதல் வேண்டும். அதனைப் பாதுகாத்தல் வேண்டும்; உற்றார் உறவினருக்கு உதவுதல் வேண்டும்; இல்லற இன்பத்தை நன்கு நுகர்தல் வேண்டும்; படிப் படியாக உள்ளத்துறவு கொண்டு அருளாளனாக வாழ்தல் வேண்டும்; உலகத்தைப் படைத்துக் காத்து அழிக்கும் இறைவனைப் பற்றிய உணர்ச்சி உடையவனாக வாழ்தல் வேண்டும்.
குறளின் குறிக்கோள்
கல்வியும் ஒழுக்கமுமே மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதவை. இவற்றுள் ஒன்று இருந்து, மற்றொன்று இல்லாவிடினும் மனிதன் தூய வாழ்க்கையை நடத்துதல் இயலாது. மனிதன் இவ்விரண்டாலும் உலகத்தினை ஆராய்ந்து, தன் வாழ்க்கைக்கு ஏற்றவற்றைக் கொண்டு, ஏலாதவற்றை விடுத்து வாழ்க்கை இன்பத்தை நுகர்தல் வேண்டும்.
கடவுட் கொள்கை
திருவள்ளுவர் கடவுளை அறிவுருவ வழிபாட்டு முறையில் அறிவிக்கின்றார். கடவுள் முற்றறிவுடையவர்; விருப்பு வெறுப்பு அற்றவர்; இறை, செம்பொருள் என்ற பெயர்களால் வழங்கப் படுபவர்; நினைப்பவர் உள்ளமே அவருக்கு உறையுள்; விருப்பு வெறுப்பு அற்ற கடவுளை விரும்புவோர்க்கு விருப்பும் வெறுப்பும் இல்லை யாகும்; செம்பொருளைக் காண்பதாகிய உண்மை அறிவு தோன்றும். அதுவே வீட்டிற்கு வாயில்.
வள்ளுவர் கருத்துக்கள்
உயிர்க் கொலை வேள்வியை வள்ளுவர் விரும்ப வில்லை; விருந்தோம்பலையே வேள்வியென்று விருப்பத்துடன் குறிக்கின்றார். யாகப் பசுவைக் கொன்று தேவர்க்குத் தானம் பண்ணி விருப்பத்தைத் தேடுவதைவிட, ஒர் உயிரையும் கொல்லாது விருந்தோம் பலே உண்மை வேள்வியாகும் என்பது இவரது முடிவு.
மக்கள் அனைவரும் ஓரினம்; மறை ஒதுபவன் பார்ப்பான், மண்ணை ஆள்பவன் மன்னன்; உணவை உதவுபவன் உழவன்; பொருள்களை விற்பவன் வணிகன். இவ்வாறு மக்களுள் தொழில் பற்றிய பிரிவுகள் உண்டு; தொழில் மாறினால் பிரிவும் மாறும். அந்தணர், முனிவர், நீத்தார், துறந்தார் எனும் பெயர்கள் முற்றத் துறந்த முனிவர்களையே குறிக்கும் என்னும் முறையில் திருவள்ளுவர் திருக்குறள்கள் விளக்குகின்றன. வேதம் ஒதுபவன் பார்ப்பான். அஃது அவனது பிறப்பு ஒழுக்கம். வேதம் ஓதத் தவறுவானுயின், அவன் பார்ப்பானா கான். அவன் வாணிகம் செய்யின் வாணிகன் எனப் படுவான்: உழுதொழில் செய்யின் உழவன் எனப்படுவான். பிறவியால் சாதி இல்லை என்பதே வள்ளுவர் கருத்து. வள்ளுவர் கையாளும் வேட்டுவன், வாணிகன், உழவன் முதலிய பெயர்கள் தொழில் பற்றிப் பிறந்தனவாகும். ’பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்' என்பதே அவர் முடிபு.
மக்கள் விருந்தினரைப் பேணுதலும், தென்புலத் தாரைப் பேணுதலும் குறளில் வற்புறுத்தப் பட்டுள்ளன. தென்புலத்தார் என்பவர் ஒவ்வொரு குடியிலும் இறந்த முன்னோர். இத் தென்புலத்தாரை நினைந்து வழிபாடு செய்தல் அவரவர் குடும்பத்தினர் கடனாகும். இறந்தவரை ஒம்புதல் எங்ஙனம்? இஃது அவரவர் நம்பிக்கைக்கும் அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் ஏற்றவாறு வேறுபடும். “மனிதன் கிழிந்த ஆடைகளை நீக்கிவிட்டுப் புதிய ஆடைகளை உடுத்துக் கொள்வது போல உயிர் பழுதடைந்த இந்த உடலை விட்டு வேறோர் உடலுள் புகுகின்றது” என்பது பகவத்கீதையில் கண்ணன் வாக்கு, மனிதன் கிழிந்த ஆடையை நீக்கிவிட்டுப் பின் சிறிது நேரம் பொறுத்துப் புதிய ஆடையை உடுத்துக் கொள்வதில்லை; புதிய ஆடையை மேலாகச் சுற்றிக் கொண்டே, தான் உடுத்தியுள்ள கிழிந்த ஆடையை நீக்குதல் வழக்கம். அதுபோலவே பழுதடைந்த உடலை விட்டு உயிர் திடீரென்று நீங்கிவிடுவதில்லை; புதிய உடலைத் தயாராக வைத்துக் கொண்டே பழைய உடலை விட்டு நீங்கி அதற்குள் நுழைகிறது. அஃதாவது, உயிர் பழைய உடலை விட்டு நீங்குவதும் புதிய உடலில் நுழைவதும் ஒரே சமயத்தில் நிகழ்வன என்பது கண்ணன் கருத்து. இதே கருத்தினை,
”உறங்குவது போலும் சாக்காடு, உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு,”
என்னும் குறளில் காணலாம். உ றக்கத்தின் இறுதியும், விழிப்பின் தொடக்கமும் இணைந்து நிகழ்வன. எனவே, உடலை விட்டுப் பிரியும் உயிர் தனித் திருப்பதில்லை என்பது கருத்து. இங்ஙனம் கூறும் கண்ணன் திருவாக்கு மதிக்கப் படுவதாயின், பிரிந்த உயிர் புதிய உடம்பில் புகுந்து விடுவது என்று கொள்ளலாம். அங்கு அதற்கு வேண்டிய உணவு முதலியன தாயின் உணவு முதலியவற்றால் அமைகின்றன. எனவே, இறந்தவர் பெயரால் புரோகிதருக்குக் கொடுக்கப்படுவன எல்லாம் வீண் என்பது வெளியாகும். ஆகவே, வள்ளுவர் “தென்புலத்தார் கடன்' என்றது. “புரோகிதருக்கு வழங்குதல்' என்பதாக இருத்தல் இயலாது. ஒரு குடும்பத்தில் இறந்த முன்னேர்களை அவர் பின்னோர் நினைந்து வழிபட்டு “அவர் மரபினர்” என்னும் பெயரை உலகில் நிலைநிறுத்தி வாழ்தலையே வள்ளுவர் குறித்தனர் என்று கூறல் பொருத்தமாகும். “அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்" என்ற பொன் மொழிப்படி இறந்த தாய் தந்தையரைத் தெய்வமாக வழிபட்டு, அவர் நினைவைப் பாதுகாத்தல் அவர்தம் மக்களுக்கு அமைந்த நற்பண்பு தானே!
இவ்வாறு இறந்தார் வழிபாடும், இறைவழிபாடும், விருந்தினரைப் போற்றுதலும், சுற்றத்தினரைப் பாதுகாத்தலும், தன் குடும்பத்தைப் பாதுகாத்தலும், என்னும் ஐம்பெருங் கடமைகளும் இல்வாழ்வான் மேற் கொள்ளத் தக்கன என்பதே,
"தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்
கைம்புலத்தா றோம்பல் தலை"
என்னும் குறளின் திரண்ட கருத்தாகும்.
துன்ப நீக்கம்
இங்கிலாந்தில் சிறந்த அயல் நாட்டு வணிகரொருவர் இருந்தார். ஒரு முறை அவருடைய கப்பல்கள் இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவிற்குப் பொருள்களை ஏற்றிச் சென்றன. அவற்றுள் இரண்டு கப்பல்கள் எக்காரணத்தாலோ கடலில் மூழ்கிவிட்டன. இச்செய்தியை அறிந்ததும் அவருக்கு நெருக்கமான நண்பரொருவர் அவரிடம் சென்றார். வணிகர் தமது நஷ்டத்தைப் பற்றிப் பேசவேயில்லை. சென்ற நண்பர் தாமாகவே அதுபற்றிப் பேசினார். உடனே வணிகர் நகைத்து, “இந்த நட்டம் சாதாரண விஷயம். இதுபற்றிக் கவலைப் பட்டால் உலகத்தில் வாழமுடியுமா? இலாபமும் நட்டமும் பகலும் இரவும் போல மாறிமாறி வருவன. ஆதலால், நட்டத்திற்கு அஞ்சுபவன் வாழ முடியாது. இந்த நட்டத்தை விரைவில் ஈடு செய்து விடலாம். நான் இதனை மிகச் சாதாரண விஷயமாகக் கருதுகிறேன்.” என்று கூறினுர். இந்த நிகழ்ச்சியை நினைவில் வைத்து,
”இடுக்கண் வருங்கால் நகுக, அதனை
அடுத்தூர்வ தஃதொப்பதில்,"
என்னும் குறளின் பொருளை எண்ணிப் பாருங்கள். பொருள் எளிதில் புலப்படும்.
ஒழுக்கந் தவறிய மக்கள்
நாம் தலைமயிரை மிக்க கவலையோடு பாதுகாக்கின்றோம். அதற்கு எண்ணெய் பூசுவதிலும், அதனை ஒழுங்காகச் சீவுவதிலும் பொழுதைச் செலவழிக்கிறோம். இவ்வாறு நம்மால் விரும்பி வளர்க்கப்படும் தலைமயிரில் ஒன்று தலையிலிருந்து விழுந்து விடுமாயின், நாம் அதற்காகத் துக்கம் கொண்டாடுவதில்லை. விழுந்த மயிரை விழுந்த அக்கணமே மறந்து விடுகின்றோம்.
நமது தெருவில் கல்வி கேள்விகளால் சிறந்த பெரியோர் இருக்கின்றார். நாம் அவரைக் காணும் பொழுதெல்லாம் மகிழ்ச்சியோடு கை குவித்து வணங்குகின்றோம். இவ்வாறு நம்மால் மதிக்கப் பட்டுவரும் அவர் ஒருநாள் சிறுமதியால் நெறி தவறிவிடுகிறார். இதனை உணர்ந்த நமக்கு அவர் மீது வெறுப்பு உண்டாகிறது. அவரிடம் கொண்டிருந்த அன்பும் மதிப்பும் நம்மைவிட்டு நீங்கிவிடுகின்றன. அவரை ஒருபொருளாக நாம் மதிப்பதில்லை.
தலையில் இருந்த வரையில் தலைமயிர் சிறப்புப் பெற்றிருந்தது; தலையிலிருந்து நீங்கிய பிறகு சிறப்பை இழந்தது. அது போலவே ஒழுக்க நெறியில் இருந்த வரையில் பெரியவர் மதிப்புப் பெற்றார்; ஒழுக்க நெறியிலிருந்து தவறியவுடன் தமக்குரிய மதிப்பை இழந்தார். சுருங்கக் கூறின், அப்பெரியவர் தலையிலிருந்து உதிர்ந்த மயிருக்குச் சமமானர்.
”தலையி னிழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையி னிழந்தக் கடை"
என்னும் குறளின் விளக்கந்தான் இது. இவ்வாறு உயிரினும் சிறந்த ஒழுக்கத்தை வற்புறுத்தும் குறள்கள் பல. வாழ்க்கைக்கு இன்றியயைாத இத்தகைய உயரிய கருத்துக்களைப் பின்பற்றி நடத்தல் அறிவுபடைத்த மக்கள் கடமையாகும் என்பதில் ஐயமுண்டோ?
ஐந்து அவித்தான்
மெய், வாய், கண், மூக்கு செவி என்னும் ஐம்புலன்களால் நுகரப்படும் ஊறு, சுவை, ஒளி, ஓசை நாற்றம் என்னும் ஐந்து புலன்களையும் வென்றவன் 'ஐந்து அவித்தான்’ என்று சொல்லப்படுவான். அவனது ஆற்றல் மிகப்பெரியது. ஐந்தவித்த பெரியோன் உலகில் தோன்றுவானுயின், இந்திரன் அரியண்மீது இடப் பட்டுள்ள பாண்டுகப்பளம் அசையும். உடனே இந்திரன் உண்மை யுணர்ந்து எழுந்து நிற்பான், தன்னைச் சூழவுள்ள தேவர்களுக்கு உண்மையைக் கூறுவான். பிறகு ஐந்தவித்தானிடம் வந்து அவனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வான். இச்செய்தி மணிமேகலை என்னும் காவியத்தில் கூறப்பட்டுள்ளது. சாதாரண மனிதன், ஐந்தவித்த பெருமையால் தேவேந்திரனும் மதித்து உதவி செய்யும் நிலையை அடைவான் என்பதே இதன் பொருள். அஃதாவது, ஐந்தவித்தான் ஆற்றல் தேவேந்திரனையும் மதிக்கச் செய்கிறது என்பது. இக்கருத்தினையே,
“ஐந்தவித்தான் ஆற்றல அகல்விசும்புளார்கோமான்
இந்திரனே சாலுங் களி.”
என்னும் குறள் கூறுகின்றது என்னலாம். இக்கருத்துப் பெளத்த நூல்களிலும், சமண நூல்களிலும் கூறப்படுவது. ஆயினும், திருக்குறளுக்கு உரை வகுத்த பரிமேலழகர் கெளதமனை “ஐந்தவித்தான்’ என்று கூறி, அகலிகை-இந்திரன் கதையை இக்குறளுக்குத் தொடர்பு படுத்துகிறர் அகலிகையோடு வாழ்ந்த கெளதமன் ஐந்தவித்தானாதல் எப்படி?
“கண்டுகேட்டுண்டுயிர்த் துற்றறியும் ஜம்புலனும்
ஒண்டோடி கண்ணே உள,”
என்பது திருக்குறள். இங்ஙனம் ஐம்புல நாட்ட முடைய இல்லாளோடு கூடிவாழும் கெளதமன், ஐந்த வித்தான் என்று கூறுதல் பொருந்தாது. எனவே, அகலிகை கதையும் இக்குறளுககுப் பொருத்தமாகாது.
முடிவுரை
திருக்குறள் கருத்துக்கள் எல்லா சமயங்கட்கும் பொதுவானவை; எனினும், பெளத்த-சமண சமயக் கருத்துக்களும் இடம் பெற்றுள்ளன என்பதை உரை காண்பவர் மறந்து விடலாகாது. பரிமேலழகர் தம் சமயக் கருத்துக்களையும், வடமொழி நூல்களையும், தம் காலத்து இருந்த சாதிக் கட்டுப்பாடுகளையும் நினைவிற் கொண்டே, பல இடங்களில் தவறு செய்கின்றார் என்பதை அறிஞர் அறிவர். அத்தகைய இடங்களை நன்கு ஆராய்ந்து பயன்பெறுதலே திருக்குறள் படிப்பவரது கடமையாகும.
-------
அகநானூறு-1
சங்க நூல்கள்
இற்றைக்கு 1700 ஆண்டுகளுக்குமுன் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் தமிழ்ப் புலவர் பலர் இருந்து தமிழாராய்ந்தனர். அக்காலத்தில் செய்யப்பட்ட நூல்கள் ‘சங்க நூல்கள்' என்றும், அக்காலம் 'சங்க காலம்' என்றும் பெயர் பெற்றன. அக்காலப் புலவர்கள் பேரரசரையும் சிற்றரசரையும் நாடிச் சென்று தனிப் பாடல்கள் பாடிப் பரிசு பெற்றனர். அப்பாடல்கள் “அகப் பாடல்கள்’ என்றும், 'புறப்பாடல்கள்’ என்றும் இருவகையாகப் பிரிக்கப் பட்டுள்ளன. ஒருவனும் ஒருத்தியும் காதல் கொண்டு வாழும் வாழ்க்கை பற்றிய பாக்கள் “அகப் பாக்கள்” எனப்படும். அறம், பொருள், வீடு பற்றிய பாக்கள் “புறப்பாக்கள்’ எனப் படும்.
அகப்பாக்கள் அகநானூறு, நற்றிணை, குறுந் தொகை, ஐங்குறுநூறு, கலித்தொகை என ஐந்து நூல்களாகத் தொகுக்கப் பெற்றன. புறப்பாக்கள் புற நானூறு, பதிற்றுப் பத்து, பரிபாடல் என்று மூன்று நூல்களாகத் தொகுக்கப் பெற்றன.
அகப்பொருள் விளக்கம்
பண்டைக் காலத்தில் ஒருவனும் ஒருத்தியும் தாமே எதிர்பட்டுக் காதல்கொண்டு மணந்து கொள்ளும் வழக்கம் தமிழகத்தில் இருந்தது. அம்மணம் ’களவு’, ‘கற்பு’ என்று இருவகைப்படும். பெற்றேரும் பிறரும் அறியாமல் காதலர் வாழ்கின்ற நிலை ‘களவு’ எனப்படும். பெற்றேர் அறிய மணந்து வாழும் வாழ்க்கை ’கற்பு’ எனப்படும். களவு மணம் குறிஞ்சித் திணை என்றும், கணவன் மனைவியை வீட்டில் விட்டு ஒரு காரணமாகப் பிரிதல் பாலத்திணை என்றும், அப்பிரிவில் மனைவி ஆறுதல் பெற்றிருத்தல் முல்லை என்றும், மனைவி கணவனோடு கற்பு மணத்தில் வாழ்தல் மருதம் என்றும், கணவன் ஒரு காரணமாகப் பிரிந்து சென்ற பொழுது மனைவி இரங்குதல் நெய்தல் என்றும் பெயர் பெறும். இந்த ஐவகை ஒழுக்கங்களையும் பற்றிய பாடல்களே அகப் பாடல்கள் என்று பெயர் பெறும்.
அகநானூறு கணவன் தன் இல்லற வாழ்க்கையில் கற்பதற் காகவும், வாணிகத்திற் காகவும் வேறு அலுவல் காரணமாகவும் மனைவியை விட்டுப் பிரிதல் உண்டு. அங்ஙனம் அவன் பிரிந்து சென்று மீண்டதும், தான் சென்ற ஊர்களில் அல்லது நாடுகளில் தான் கண்ட சிறந்த காட்சிகளையும் நிகழ்ச்சிகளையும், தான் கேட்ட சிறந்த நிகழ்ச்சிகளையும் தன் இல்லத்தாரிடம் கூறுவது வழக்கம். இங்ஙனம் கூறப்பெற்ற செய்திகளில் பல நாட்டு வரலாற்றுச் செய்திகள் அடங்கும்; பல ஊர்களின் இயற்கைச் சிறப்பும் பொருளாதாரப் பொலிவும் பிறவும் அடங்கியிருக்கும். அவன் இல்லாத பொழுது அவன் மனைவியும் தோழியும் அவை பற்றிப் பேசுவதுண்டு.
பாடலிபுரம்
சந்திரகுப்த மெளரியன் அரசன் ஆவதற்கு முன்பு பாடலியைத் தலைநகராகக் கொண்ட மகத நாட்டை ஆண்டு வந்தவர் நந்தர் என்பவர். மகா பத்ம நந்தன் தன் எட்டுப் பிள்ளைகளோடும் மகத நாட்டை ஆண்டு வந்தான். அதனால் இவர்கள் “நவநந்தர்கள்" என அழைக்கப் பட்டனர். இந் நந்தர் செல்வச் சிறப்பு வாய்ந்தவர். இந்த உண்மையை ‘நந்தரது செல்வம் பெறுதற்கு வாய்ப்பு இருந்தாலும் என் தலைவர் அதற்காக அங்குத் தங்காமல் குறித்த காலத்தில் இங்கு வந்து விடுவார்,' என்று ஒரு தமிழ்ப் பெண்மணி தன் தோழியிடம் கூறுகிறாள்:
”நந்தன் வெறுக்கைப் பெறினும் தங்கலர் வாழி தோழி”
நந்தர் செல்வம் பெற்றவர் என்ற செய்தியைத் தமிழ்ப் பெண் அறிந்திருந்தாள் என்பது இதனால் தெரிகிறதன்றோ?
அலெக்சாந்தர் படையெடுப்பு
நந்தர்கள் பாடலியை ஆண்டபொழுது அலெக் சாந்தர் என்ற கிரேக்க மன்னன் இந்தியாவின் மீது படையெடுத்தான், பஞ்சாப் மாகாணத்தில் புருசோத்தமனுடன் போரிட்டு வென்றான். அவன் கங்கைச் சமவெளியின் மீது படையெடுப்பான் என்ற செய்தியைக் கேட்ட நவநந்தர் அச்சம் கொண்டனன். உடனே பாடலி நகரத்தில் ஒன்று கூடி ஆலோசித்தனர். அலெக்சாந்தர் மகத நாட்டின் மீது படையெடுப்பின், தமது செல்வம் அவனிடம் அகப்படாமல் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர்; அதனை எவ்வாறு மறைத்து வைக்கக் கூடும் என்று ஆலோசித்தனர்; நீண்ட யோசனைக்குப் பின்பு ஒரு முடிவுக்கு வந்தனர்.
கங்கையாற்றில்
நந்தர்கள் தங்கள் செல்வத்தைக் கங்கை யாற்றின் அடியில் புதைத்து வைப்பது என்று முடிவு செய்தனர். ஆற்றின் நடுவில் நீரோட்டத்தை இரு பிரிவுகளாகப் பிரித்தனர். இரண்டு பிரிவுகளுக்கு இடையே இருந்த மணற்பரப்பின் கீழ் உறுதியான நிலவறையைக் கட்டினர்; கற்சுவர்களில் ஈய்த்தை உருக்கி வார்த்தனர். இங்ஙனம் உறுதியாக அமைக்கப் பெற்ற அந்த நிலவறையில் ஐந்து அறைகளைக் கொண்ட பெட்டியை வைத்தனர்; அப் பெட்டியில் பொன்னையும் மணியையும் நகைகளையும் குவித்து நிரப்பினர்; நிலவறையை மூடி அம் மூடியின் மீது ஈயத்தை உருக்கி வார்த்தனர். பின்பு முன் போலவே நீரோட்டத்தை ஒழுங்காகச் செல்ல விடுத்தனர்.
இச் செய்தி சந்திரகுப்தன் வரலாறு என்னும் தெலுங்கு நூலில் குறிக்கப் பட்டுள்ளது. இச் செய்தியை ஒரு தமிழ்ப் பெண் அறிந்திருந்தாள்; அவள், “மிக்க புகழ் வாய்ந்த நந்தர்கள் பாடலிபுரத்தில் கூடிக் கங்கை யாற்றின் அடியில் புதைத்து வைத்த செல்வம், நம் தலைவர் குறித்த காலத்தில் வராமைக்குக் காரணமாக இருக்குமோ?” என்று ஐயப்பட்டாள். இச் செய்தியை அக நானூற்றுப் பாடலொன்று அறிவிக்கின்றது:
“பல் புகழ் நிறைந்த வெல்போர் நந்தர்
சீர் மிகு பாடலிக் குழீஇக் கங்கை
நீர்முதல் கரந்த நிதியம் கொல்லோ?”
இத்தகைய பல அரிய செய்திகள் அக்காலத் தமிழ்ப் பெண்கள் அறிந்திருந்தனர் என்பதை அக நானூறு அறிவிக்கின்றது.
------
அகநானூறு-2
தமிழர் திருமணம்
இக்காலத்து திருமணம்
இக்காலத் தமிழர் திருமணத்தில் புரோகிதன் இடம் பெறுகிறான்; எரி ஒம்பப்படுகிறது; மணமக்கள் தீவலம் வருகின்றனர்; அம்மி மிதிக்கப்படுகிறது; அருந்ததி காட்டப் படுகிறது; மணமகன் காசி யாத்திரை போகிறான், புரோகிதன் தமிழர் திருமணத்தில் தமிழர்க்குப் புரியாத வேற்று மொழியில் மந்திரங்களைச் சொல்கிறான். இவை எல்லாம் அகநானூறு போன்ற பழந் தமிழ் நூல்களில் கூறப்பட்டிருக்கின்றனவா? இவை தமிழருக்குரிய திருமணச் சடங்குகளா?
செய்யுள் 86/
அகநானூறு என்னும் தொகை நூலில் இரண்டு பாக்களில் இரண்டு திருமண நிகழ்ச்சிகள் கூறப்பட்டுள்ளன. அவற்றுள் செய்யுள் 86 குறிக்கும் திருமணச் சடங்குகளை இங்குக் காண்போம்:
திருமண வீட்டு முற்றத்தில் வரிசையாகக் கால்களை நிறுத்திப் பந்தல் போடப் பட்டிருந்தது, மணவறையில் மாலைகள் தொங்கவிடப் பட்டிருந்தன; விளக்கு ஏற்றப் பட்டு இருந்தது; ஒருபால் உழுத்தம் பருப்புடன் கூட்டிச் சமைத்த பொங்கலோடு மணவிருந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. சந்திரனும் உரோகணியும் கூடிய விடியற் காலையில் முதிய மங்கல மகளிர் மணப் பெண்ணை நீராட்டுதற்குரிய நீரைக் குடங்களில் கொண்டு வந்து தந்தனர். மக்களைப் பெற்ற வாழ்வரசிகள் நால்வர் அக்குடங்களை வாங்கி, “கற்பு நெறியினின் றும் வழுவாமல் பல நல்ல பேறுகளையும் தந்து கணவனை விரும்பிப் பேணும் விருப்பத்தையுடையை ஆகுக” என்று வாழ்த்திக் கொண்டே மணமகளை நீராட்டினர். அந்நீரில் மலர்களும், நெல்மணிகளும் இடப்பட்டிருந்தன. இங்ஙனம் நீராட்டப் பெற்ற மணமகள் புத்தாடை யணிந்து மணப் பந்தலில் அமர்ந்தாள். பின்பு சுற்றத்தார் விரைந்து வந்து, “பெரிய மனைக்கிழத்தி ஆவாய்,' என்று வாழ்த்தினர்.
அன்று இரவு மணமக்கள் ஒன்று கூடினர்.
"உழுந்துதலைப் பெய்த கொழுங்களி மிதவை
பெருஞ்சோற் றமலை சிற்ப நிரைகால்
தண்பெரும் பந்தர்த் தருமணல் ஞெமிரி
மனைவிளக் குறுத்து மாலை தொடரிக்
கனையிருள் அகன்ற கவின்பெறு காலைக்
கோள்கால் நீங்கிய கொடுவெண் டிங்கள்
கேடில் விழுப்புகழ் நாடலை வந்தென
உச்சிக் குடத்தர் புத்தகல் மண்டையர்
பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறைமுறை தரத்தரப்
புதல்வற் பயந்த திதலையவ் வயிற்று
வாலிழை மகளிர் நால்வர் கூடிக்
‘கற்பினின் வழாஅ கற்பல உதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை யாகெ’ன
நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி
பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க,
வதுவை நன்மணம் கழிந்த பின்றைக்
கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து
"பேரிற் கிழத்தி யாகெனத் தமர்தர
ஓரிற் கூடிய உடன்புணர் கங்குல்.”
செய்யுள் 136
திருமண நாளன்று இறைச்சியுடன் கூட்டி ஆக்கிய நெய்மிகுந்த வெண் சோறு மணத்திற்கு வந்த அனைவருக்கும் படைக்கப்பட்டது. பின்பு சந்திரனும் உரோகணியும் கூடிய நல்ல நேரத்தில் மணவறையில் கடவுள் வழிபாடு நடைபெற்றது. முரசம் முதலிய வாத்தியங்கள் ஒலித்தன. முன் சொன்ன முறைப்படி மணமகள் மன நீராட்டப் பட்டாள். மணமகள் தூய உடையிற் பொலிந்தாள். அப்பொழுது சுற்றத்தார் அவளை வாழ்த்தி மணமகனுக்குக் கொடுத்தனர்.
”மைப்பறப் புழுக்கின் கெய்க்கணி வெண்சோறு
வரையா வண்மையொடு புரையோர்ப் பேணிப்
புள்ளுப்புணர்ந் தினிய வாகத் தெள்ளொளி
அங்கண் இருவிசும்பு விளங்கத் திங்கட்
சகட மண்டிய துகடிர் கூட்டத்துக்
கடிநகர் புனைந்து கடவுட் பேணிப்
படுமண முழவொடு பரூஉப்பணை யிமிழ
வதுவை மண்ணிய மகளிர் விதுப்புற்றுப்
பூக்கணு மிமையார் நோக்குபு மறைய,
மென்பூ வாகைப் புன்புறக் கவட்டிலை
பழங்கன்று கறித்த பயம்பமல் அறுகைத்
தழங்குகுரல் வானின் றலைப்பெயற் கீன்ற
மண்ணுமணி யன்ன மாயிதழ்ப் பாவைத்
தண்ணறு முகையொடு வெண்ணூல் சூட்டித்
தூவுடைப் போலிந்து மேவரத் துவன்றி
மழைபட் டன்ன மணன்மலி பந்தர்
இழையணி சிறப்பிற் பெயர்வியர்ப் பாற்றித்
தமர்நமகி கீத்த தலைநா ளிரவின்…."
இவ்விருவகைத் திருமணங்களிலும் இக்காலத் திருமணச் சடங்குகள் இடம் பெருமையைக் காண்க. மணமகளை வாழ்வரசியர் வாழ்த்தி மண நீராட்டுதலும் சுற்றத்தார் பெண்ணைக் கணவனோடு சேர்ப்பித்தலுமே சிறந்த சடங்குகளாகக் கருதப்பட்டன என்பது தெளிவு. ‘கற்பு நெறியினின்றும் வழுவாமல் கணவன் உள்ளங் கவர்ந்த காரிகை ஆகுவார்,' என்று வாழ்வரசியரால் கற்பிக்கப்பட்டதால், மணமகள் கற்புடையவள் ஆயினுள். அங்ஙனம் கற்பிக்கப் பட்டபடி நடந்தவள் “கற்புடை மனைவி” எனப்பட்டாள்.
திருமணத்திற்கு இன்றியமையாதது, பலரறிய இருதிறத்துப் பெற்றோரும் மணமக்களை ஒன்று படுத்தலே ஆகும். இன்னவர் மகள் இன்னவர் மகனை மணந்து கொண்டாள் என்பதை அறியச் செய்வதே திருமணத்தின் சிறப்பு நிகழ்ச்சியாகும்.
இவவிரண்டு திருமண முறைகளையும் படித்துத் தெளிந்த வரலாற்றுப் பேராசிரியர் திரு. பி. டி. சீநிவாச அய்யங்கார் அவர்கள், “இவ்விரு திருமண முறைகளிலும் எரி வளர்த்தல் இல்ல; தீவலம் வருதல் இல்ல. தட்சிணைப்பெறப் புரோகிதன் இல்ல. இவை முற்றும் தமிழர்க்கே உரியவை,’ என்று கூறியிருத்தல் கவனிக்கத்தக்கது.
-------
புலவர் பெருந்தகை
சங்க காலப் புலவர்
சங்க காலப் புலவர்கள் சிறந்த கல்விமான்கள்; அதே சமயத்தில் வறுமையால் வாட்டமுற்றவர்கள்; ஆயினும் வணங்கா முடியினர்; தவறு செய்பவன் அரசனாயினும் வலிந்து சென்று கண்டிக்கும் இயல்புடையவர்; பிறர் துயர் கானாப் பெற்றியினர்; தாமே சென்று அத்துயர்களையும் மனப்பண்பு நிறைந்தவர். அரசரிருவர் போர் செய்யுங்கால் அவரிடம் சென்று இரு நாடுகளுக்கும் ஏற்படும் இன்னல்களை எடுத்துரைத்துப் போர் நிறுத்தம் செய்யும் புகழ்மிக்க மனவலி படைத்தவர். இங்ஙனம் தமக்கென வாழாது பிறர்க்கென வாழ்ந்த சங்க காலப் புலவர்களில் தலை சிறந்த பெரியார் கோவூர் கீழார் என்பவர்.
நலங்கிள்ளி-நெடுங்கிள்ளி-போர்
சோழப் பெருவீரனன காரிகால் வளவனுக்குப் பின்பு அரசு கட்டில் ஏறிய நலங்கிள்ளிக்கும் நெடுங்கிள்ளி என்னும் அவன் பங்காளிக்கும் சோழ நாட்டில் போர் மூண்டது. இரு திறத்தாரும் தத்தம் படைகளை முடுக்கிப் போரிட்டனர். உறையூரை ஆண்டுவந்த நெடுங்கிள்ளி நலங்கிள்ளிக்குத் தோற்றுக் கோட்டையுள் ஒளிந்து கொண்டான். நலங்கிள்ளி அவனை விடாமற் சென்று உறையூர்க் கோட்டையை முற்றுகை யிட்டான். முற்றுகை பன்னாள் நீடித்தது. கோட்டையுள் இருந்த மக்கள் வெளியிலிருந்து பொருள்கள் வாராமையால் துன்புற்றனர்; வழக்கம்போல் கோட்டைக்கு வெளியே வந்துபோகும் வாய்ப்பிழந்து வருந்தினர். கோட்டைக்கு வெளியிலிருந்த மக்களும் நலங்கிள்ளி படையினரால் துன்புற்றனர்; தம் உரிமையோடு பல இடங்களில் நடமாட இயலாமல் வருந்தினர்.
புலவர் வருகை
இச்செய்தி கோவூர் கிழாருக்கு எட்டியது. அருள் உளம் கொண்ட அப்புலவர் போர்க்களத்தருகில் விரைந்து வந்தார் - போரினால் இருதிறத்து மக்களும், மாக்களும் படும் துன்பங்களைக் கண்டு அவர் மனம் நெகிழ்ந்தது தமிழ் நாட்டு மூவேந்தர்களும் தம் வேந்த ரென்னும் ஒரு குடியில் பிறந்தவர்களே. அவ்வாறிருந்தும் அம் மூவரும் தம்முள் இருந்த மாறுபாட்டால் பல போர்கள் நிகழ்த்தி நாட்டை அவல நிலைக்குள்ளாக்கிக் கொண்டிருந்த செயல் முன்னரே புலவர் நெஞ்சை வருத்தியது. இங்கு நடைபெறுகின்ற போரோ ஒரே சோழர் குடியில் தோன்றிய இரு மன்னரால் நடை பெறுவதன்றோ? பகைவர் இருவர் போர் செய்வது இயல்பு. ஒரு குடிப்பிறந்தோர் இவ்வாறு போரிட்டு நாட்டையும், நாட்டு மக்களையும் அழிக்கும் செயல் கண்டு ஒருபுறம் வியப்பும் ஒருபுறம் இரக்கமும், ஒருபுறம் இகழ்வும் புலவர் நெஞ்சில் எழுந்தன.
புலவர் அறிவுரை
புலவர், போரிடும் மன்னரிருவரின் இடையிலும் சென்று நின்றார். சோழ நாட்டுப் பெருவேந்தர்களே! நிறுத்துங்கங் போரினை. உங்கள் முன்னோரில் முதலானவர்கள் தமிழ் நாட்டுக்கும் அப்பாலுள்ள பிறநாடுகளை வென்று வாகை சூடிப் புகழ் பெற்றார்கள். உங்கள் முன்னோரில் பின்னோர் சிலர் பிற நாடுகளை வெல்லும் ஆற்றலின்றிச் சேர பாண்டியரையாவது வென்று விளங்கினர். நீங்களோ அத்துணையும் ஆற்றலின்றி உங்களுள்ளேயே போரிட்டு வெற்றிகாண விழைந்தீர் போலும், மிக நன்று உங்கள் செயல்! உங்களுடன் எதிர் நின்று பொருபவன் பனைமாலை யணிந்திருக்க வில்லையே; பனை மாலையணிந்த சேரனுடன் போர் உடற்றி வென்றி யெய்துவீராயின் அச்செயல் பாராட்டுதற்குரிய தாகுமே; அல்லது வேப்பந் தாரையணிந்த பாண்டியனுகவும் தோற்ற வில்லையே; எதிர்த்து நின்ற இரு வீரரும் ஆத்தி மாலையை யல்லவா அணிந்திருக்கிறீர்கள். ஒரே சோழர் குடியில் தோன்றியவர்களல்லவா நீங்கள்?அயல் நாட்டு மன்னரை வென்றி கொண்டீரில்லை; அன்றி உள்நாட்டுச் சேர பாண்டியருடனும் போர் செய்து வெற்றி எய்த நினைந்திலீர். ஒரு நாட்டு மன்னராகிய உங்களுள்ளேயே போரிட உறுதிகொண்டீர் போலும் உங்களில் ஒருவர் எப்படியும் தோற்பது உறுதி; இருவரும் வென்றியெய்துதல் எங்கும் காணாத செயல். உங்களில் யார் தோற்பினும் சோழர் குடி தோற்றோழிந்தது என்றல்லவா உலகம் பழிக்கும்? நீங்கள் பிறந்த குடிக்குப் புகழ் தேடாதொழியினும் பழியையாவது தேடா திருத்தல் கூடாதா? இச் செயல் நும் சோழர் குடிக்கே பெரும் பழி விளைப்பதன்றோ; தம் குடியைத் தாமே அழித்து, தம் குடிக்குத் தாமே பழிதேடி, மகிழ நினைக்கும் உங்கள் இருவர் செயலும் மிகமிக நன்று! நீங்கள் செய்யும் இவ்வதிசயப் போர் பிற நாட்டு மன்னர்களுக்கு விடா நகைப்பை யன்றே விளைவிக்கும் என்று உள்ள முருகக் கூறினார்.
செல்லுஞ் சொல் வல்லாராகிய கோவூர்கிழாரின் அறிவுரை கேட்ட இருபெரு வேந்தர் மனமும் நாணின; தங்கள் இழி செயலுக்கு வருந்தித் தலையிறைஞ்சிப் புலவர் பெருமானை வணங்கினர். புலவரும், தம் குற்றத்தை யுணர்ந்து வருந்திய மன்னர்களை நோக்கி, “புவிபுரக்கும் மன்னர் பெரு மக்களே! கழிந்ததற் கிரங்காமல், இனி யேனும் நீங்கள் ஒன்றுபட்டு வாழ்வதுடன், தமிழ் நாட்டுப் பிற மன்னருடனும் சேர்ந்து பகையின்றி நெடிது வாழுங்கள்,' என வாழ்த்திப் போரை நிறுத்தி ஏகினார்.
----------
2
கோவூர் கிழாரது பெருந்தன்மையை விளக்கப் பிறிதொரு சான்றும் காணலாம். மேற் கூறப்பெற்ற நலங்கிள்ளியும் நெடுங்கிள்ளியும் உறையூர் முற்றுகையில் ஈடுபட்டிருந்தகாலை, கோவூர் கிழார் அங்குத் தோன்றி முற்றுகையால் உண்டான துன்ப நிலையைக் கண்டு மன வருந்திக் கொண்டிருந்த பொழுது ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது.
இளந்தத்தன்
சங்க காலப் புலவர் பெருமக்கள் “திருவேறு தெள்ளிய ராதலும் வேறு" என்னும் இலக்கணத்திற்கு ஓர் இலக்கியமாக விளங்கினர். அறிவும் வறுமையும் ஒன்று பட்டுக் கைகோத்துச் சென்று புலவர் வாழ்வில் பங்கு கொண்டன. ஆயினும் பெருந்தன்மையையே அணிகலனாகக் கொண்ட அப்பெரு மக்கள் “பழுமரங்தேரும் பறவை போல” வள்ளலே நாடி வளம் பெற்று வறுமை யொழிவர், வாங்கி வந்த வளமனைத்தையும் வைத்தினிது வாழாமல், ஏங்கிக் கிடக்கும் ஏழை பலர்க்கும் வாரி வழங்கும் வள்ளல் தொழிலில் இறங்கிப் பின்னும் வறுமையில் இறங்குவர். இங்ஙனம் நாடாறு திங்களும் காடாறு திங்களும் வாழ்ந்த பிற்கால விக்கிரமாதித்தனைப் போலவே முற்காலப் புலவர்கள் சில காலம் வள்ளலாகவும் சிலகாலம் வறியராகவும் மாறி மாறி வாழ்ந்து வரலாயினர். இவ்வாறு வாழ்வு நடாத்திய புலவர் பெரு மக்களுள் இளந்தத்தரும் ஒருவராவர்.
நலங்கிள்ளிபால் இளந்தத்தர்
சோழன் நலங்கிள்ளி புவி மன்னனாகவும் கவி மன்னனாகவும் விளங்கியவன்; கல்வியும் ஒழுக்கமும் ஒருங்கு வாய்க்கப் பெற்றவன்.
”தீதில் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப்
பல்லிருங் கூந்தல் மகளிர்
ஒல்லா முயக்கிடைக் குழைகவென் தாரே'
என்று அவ்வேந்தன் பாடும் வஞ்சினப் பாட்டு அவன் புறப் பகைவரை வென்றி கொள்ளும் போராண்மை யினையும் காமம் என்னும் அகப்பகைவனை வென்றி கொள்ளும் பிறர் மனைவிழையாய்ப் பேராண்மையினையும் ஒருங்கு காட்டுமன்றோ? ஒழுக்கமும் கல்வியும் உயிரும் உடம்புமாகக் கொண்ட இப்பெரு வேந்தன், அத்தகையினராகிய புலவர் பெருமக்களுக்கு வாரி வழங்கும் வள்ளன்மை யுடையனாகவும் விளங்கினான் என்பது கூறவும் வேண்டுமோ. இம்மன்னன் புகழைக் கேள்வி யுற்ற புலவர் இளந்தத்தர் அவனைக் கண்டு பாடி பரிசு பெறும் வேட்கை மிகுந்தார், நீலங்கிள்ளி அரசு புரியும் புகாரை நோக்கி விரைந்தார்; புகாருள் புகுந்தார்; வளவன் கோயிலை வந்தடைந்தார்; நலங்கிள்ளியைக் காணாமல் வருந்தினார்; நெடுங்கிள்ளியின் உறையூரை முற்றுகையிட்டு, ஆண்டு அவன் படையுடன் உறைகின்றான் என்பதை அறிந்தார். போர்க்களத்தில் சென்றா பரிசு கேட்பது எனப் புலவர் மனம் வாடியது; எனினும், புலவர் தம் வறுமை பின்னிருந்து தள்ள, மன்னரின் பண்பு நலம் முன்னிருந்து இழுக்க, உறையூர்க்கு விரைந்தார் இளந்தத்தர். உறையூர் முற்றிய நலங் கிள்ளியை முற்றுகை யிட்டார் தத்தர்; புகார் வேந்தன் பால் தம் வறுமையைப் புகார் செய்யாமல் அமைதியு டன் இனிது எடுத்தியம்பினன். போரிலேயே ஊக்கம் செலுத்திய நலங்கிள்ளியின் மனம் புலவர் பக்கல் யது. புலவர்தம் ஒட்டிய கன்னமும் கட்டிய கந்தையும், நரைத்த தலையும் திரைத்த உடலும் வாடிய மேனியும் பாடிய வாயும் கிள்ளியின் உள்ளத்தை உருக்கின. "புகாரை அமைதியுடன் அரசு புரிந்த அந்த நாள் வந்திலீர்! அருங்கவிப் புலவீர் உறையூர் முற்றிய இந்த நாள் வந்தெனை நொந்து நீர் எய்தினிர். பெரும் பரிசு தரும் பேற்றினையான் பேற்றேனில்லையே! என வருந்தி, இயன்ற பரிசிலை இனிது நல்கிப் புலவரை மகிழ்வித்தான் நலங்கிள்ளி.
நெடுங்கிள்ளி பால் இளந்தத்தர்
கோட்டைக்கு வெளியே நலங்கிள்ளி பால் பரிசு பெற்று மகிழ்ந்த புலவர் உள்ளே யிருந்த நெடுங்கிள்ளியை மட்டும் விடுவாரா? அவன்பாலும் சென்றார். அரண்மனை மாடியில் நெடுங்கிள்ளி பலவகைச் சிந்தனையுடன் உலாவினான். நலங்கிள்ளியை வெல்லும் வழிகளை அவன் மனம் ஆராய்ந்தது. அவ் வேளை இளந்தத்தர் அரசர் தெருவழியே வந்தார்; நெடுங்கிள்ளியின் பார்வைக்கு இலக்கானார், சோழன் நலங்கிள்ளியின் ஒற்றருள் ஒருவனே இவன்’ என நெடுங்கிள்ளியின் நெஞ்சு துணிந்தது. வறுமையெனும் இருளால் புலமையெனும் ஒளி மறைக்கப்பட்டு மாசுண்ட மணிபோல் வந்த தத்தரைப் பிடித்து வர ஏவலாளரை அனுப்பினான் வேந்தன். போர் என்னும் அச்சமே மன்னன் மனத்தில் நிலவியது; அச்சம் நிறைந்த அவன் மனம் புலவரை புலவராகத் தெளியவும் இயலாமல் ஒற்றனெனவே துணிந்தது. ‘இவ்வொற்றனை வெட்டி, வீழ்த்தினால் தான் நாம் உய்வோம்' என எண்ணிய வேந்தன், புலவரைக் கொல்ல வாளை உருவி ஓங்கினன். “உடுக்கை யிழந்தவன் கைபோல' ஆண்டு ஓடி வந்து மன்னன் கையைப் பற்றி நிறுத்தி நின்றர் கோவூர் கிழார்.
கோவூர் கிழார் அறிவுரை
மன்ன! என்ன காரியம் செய்யத் துணிந்தாய்! ஆண்மை இருள்கின் அறிவுக் கண்ணே மறைத்தது கொல்! புலவர் வாழ்க்கையை நீ அறிவாயோ? பழுமரம் நாடும் பறவை போல வள்ளலை நாடும் தெள்ளியோர்தம் வறுமையிற் செம்மையை நீ உணர்வாயா? அரிய நெறிகளையும் நெடிய வெனக்கருதாமல் வள்ளலை நாடி யடைந்து கற்றது பாடிப் பெற்றது கொண்டு சுற்றம் அருந்தி மற்றது காவாது உண்டு வழங்கி உவந்து வாழும் பரிசில் வாழ்க்கை பிறர்க்குக் கொடுமை நினைந்தறியுமா? அறியாதன்றே வறுமையில் வாடினும் பெருமிதத்தில் நும்போன்ற வேந்தர்களுக்குக் குறையாததன்றோ? புலவர் வாழ்வு தம் வறுமையைப் பிறர் எள்ளினும் பொறுத்திடும் புலவர், தம் புலமையை எள்ளும் புல்லறி வாளாரை ஒரு போதும் விடார்காண். “தமிழைப் பழித்தவனை என் தாய் தடுத்தாலும் விடேன்’ என வீறு கொண்டெழுந்து புலமையைப் பழித்த புல்லறி வாளரைத் தம் அறிவு மதுகையால் வாதிட்டு வென்று, “தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா” எனக் கூறி நிமிர்ந்து செல்லும் கவியரசர் வாழ்வு புவியரசர் வாழ்விற்கு எட்டுண்யும் குறைந்ததன்று. பூமாதும் புகழ் மாதும் திருமாதும் பொருந்திய நும் போன்ற வேந்தரை யொத்த தலைமை யுடையது புலவர்தம் பரிசில் வாழ்க்கை என்பதை நன்குணர்ந்து நடப்பாயாக,” என்று சினந்து கூறினர் கோவூர் கிழார்.
பகைவர் சினத்திற்கும் அஞ்சாதி நெடுங்கிள்ளி புலவர் சினத்திற்கு அஞ்சித் தலை வணங்கினன்; தன் தவறுணர்ந்தான்; ‘அறிவுத் தெய்வமாக விளங்கும் புலவரைக் கொன்று உலகம் உள்ளளவும் நீங்காப் பழியைத் தேடிக் கொள்ளத் துணிந்தேனே!" என்று மனங்கவன்று, இருபெரும் புலவர்பாலும் மன்னிப்பு வேண்டினான், புலவர்க்குப் பெரும் பரிசிலை நல்கி உவந் தனுப்பினான்.
-------------------------
This file was last updated on 10 Nov.2017
Feel free to send corrections to the webmaster.