வனதேவியின் மைந்தர்கள்
ராஜம் கிருஷ்ணன்
vanatEviyin maintarkaL
(Tamil Social Novel)
by rAjam kirushNan
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Tamil Virtual Academy for providing a soft copy of this work.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2019.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
வனதேவியின் மைந்தர்கள்
ராஜம் கிருஷ்ணன்
Source:
வனதேவியின் மைந்தர்கள்
ராஜம் கிருஷ்ணன்
தாகம்
34, சாரங்கபாணித் தெரு, தி. நகர், சென்னை -600 017
முதல் பதிப்பு ஆகஸ்டு 2001, இரண்டாம் பதிப்பு ஜனவரி 2007
Vanadeviyin maindargal ( Tamil Social Novel)
By Rajam Krishnan
Second Edition Jan. 2007, pages 264
Dhagam, 34 Sarangapani Street, T. Nagar, Chennai-600 017
Price Rs. 90.00
------------
வனதேவியின் மைந்தர்கள் : முன்னுரை
இதற்கு முன் சத்திய வேள்வி என்ற புதினத்தை எழுதினேன். அது வாசகர், திறனாய்வாளரால் பெரிதும் வரவேற்கப்பட்டிருக்கிறது. வேதப் பாடல்கள், உபநிடத கதைகள், இராமாயண இதிகாசம் ஆகியவற்றில் காணப்பட்ட ஆதாரங்களைக் கொண்டு புனையப் பெற்ற நவீனம் அது. சில வரலாறுகளின் ஆதாரங்களில் நெருப்புத்துண்டு போன்று உண்மை சுடும். வயிரம் பாய்ந்த மரம் இறுகிக் கரியாகி, ஒளியை வாரி வீசும் மணியை உள்ளடக்குவது போன்று, உண்மையும் மறுக்க முடியாததாக ஒளிரும். மாமன்னர் சனகர், ஏரோட்டிய போது, உழுமுனையில் கண்டெடுத்த பெண் குழந்தை இராமயண மகா காவியத்தின் நாயகியாகிறாள். இராமாயண காவியம், சக்கரவர்த்தித் திருமகன் இராமசந்திரனின் பெருமை மிகு வரலாற்றைச் சொல்வதாக ஏற்றி வைக்கப்பட்டாலும், காவியத்தின் ஆதார சுருதியாகத் திகழ்பவள் நாயகி சீதைதான். இவள் மண்ணிலே கிடைத்தவள். குலம், கோத்திரம் விளக்கும் பெற்றோர் அறியாதவள். பூமித்தாய், நிணமும் குருதியுமாக ஒரு சிசுவைப் பிரசவிக்க முடியுமா? இது அறிவுக்குப் பொருந்தாத ஒரு கற்பனையே. அலங்காரமான இந்தக் கற்பனை, கசப்பான ஓர் உண்மையைப் பொதித்து வைக்கப் பயன்பட்டிருக்கிறது. இந்த எண்ண ஓட்டமே, பூமியில் கிடைத்த பெண் சிசுவுக்கு, பிறப்பென்ற ஓர் ஆதி கட்டம் உண்டென்று புனையத் துணிவளித்தது. அந்தக் கால சமுதாயத்தில் நால்வகை வருணம் அழுத்தமாகக் கூறு போடவில்லை என்றாலும் வருண தருமங்கள் மிக அழுத்தமாகத் தம் ஆதிக்கத்தைப் பெண் மக்களின் வாழ்க்கையிலும் உணர்வுகளிலும் பதிக்க, மன்னராதிக்கம் துணையாக இருந்தது எனலாம். நூற்றுக்கணக்கான, பணிப்பெண்டிரும், போக மகளிரான அந்தப்புர நாயகியரும், செவிலியரும் எவ்வாறு உருவாயினர்? இதே போல் ஆண் அடிமைகளும் இருந்தனர் என்றாலும், பெண் மக்கள் போல் எந்த உரிமையும் அற்ற பரந்த எல்லைகளில் அவர்களின் சேவை இருந்ததில்லை. உடலால் அவர்கள் ஆணினம் முகர்ந்து பார்க்கவோ, கசக்கி எறியவோ ஆட்படும் போது, எந்த எதிரொலியும் எழுப்ப இயலாதவர்களாகவே உட்பட்டிருக்கிறார்கள். இவர்கள் எல்லோருமே குலம் கோத்திரம் அறியாதவர்கள். தந்தை வழி முத்திரைக்கு அப்பால் உதித்தவர்கள். பெண் குழந்தைகள் அரச மாளிகைகளில், பிரபுக்களின் - மேல் வருணத்தாரின் மனைகளில், கணிகையர் விடுதிகளில், உல்லாசம் அநுபவிக்கக்கூடிய பொது இடங்களில் ஊழியம் செய்ய விலைப்படுத்தப்பட்டனர். அரசர்கள், மேல் வருண ருஷி முனிவர்களுக்கு இந்தப் பெண்களை, பசுக்களையும் பொன்னையும் வழங்குவது போல், தானமாக வழங்கினர். இத்தகைய அடிமைகளின் தொடர்பினால் உயர் வருண ருஷித் தந்தைக்கு மகன்கள் உண்டானால், அவர்கள் ஏற்றம் பெறுவதும் இருந்தது. ஆனால் இந்த ஆண்மக்களும் பெரும்பாலும் உபநயனம் பெறும் உரிமை இல்லாதவராகவே இருந்தனர் என்றே தெரிய வருகிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக பெண் பிறந்து விட்டால், அவள் 'அடிமை' என்றே விதிக்கப் பெற்றாள். அழகிய பெண்ணாக இருந்து விட்டால், மன்னர்களும், பிரபுக்களும் அந்தப்புரக் கிளிகளாகக் கொள்வர். அவர்களில் எவருக்கேனும் ஒரு 'வாரிசு' உதயமாகும் என்ற நிலைமை எய்தினால் போட்டி, பொறாமையில் அவள் சுருண்டு போவாள். சந்ததியைப் பெற்றுத் தர இயலாத பட்ட மகிஷிகளின் ஆணைகள் அந்தப் பேதைப் பெண்ணைக் காட்டுக்கு அனுப்பவும் செய்தன. அந்த வாரிசு உண்மையில் மன்னருடையதாக இல்லாமல் மன்னர் குடும்பத் தொடர்புடையவருடைய சந்ததியாக இருந்தாலும் கூட அவள் மன்னருக்குரிய 'அந்தப்புரத்தில்' இருந்த குற்றத்துக்காக நாடு கடத்தப்படுவாள்.
தசரத மன்னர், நூற்றுக்கணக்கான அந்தப்புரப் பெண்களை 'ஆண்டு' வந்தார். அவர் இறந்த போது, அத்தனை மனைவியரும் கதறித் துடித்தனர் என்ற செய்தி வருகிறது. 'பட்ட மகிஷி'களான தேவியருக்கும் சந்ததி உருவாகவில்லை. எனினும் மன்னனின் 'ஆண்மை' குறித்த கரும்புள்ளி எந்த இடத்திலும் வரவில்லை. மாறாக 'யாகம்' என்ற சடங்கும், 'யாக புருடன்' வேள்வித் தீயில் தோன்றி, பாயசம் கொணர்ந்து தேவியர் பருகச் செய்தான் என்று மாயப்புதிரும் புனையப் பெறுகிறது. மிதிலாபுரி மன்னருக்குப் பெண் சந்ததி இருந்தது. அந்த மன்னரின் அந்தப்புரக் கிளி ஒருத்தி கருவுற்றதும், அவள் சந்ததியைத் தந்துவிடக் கூடுமோ என்ற அச்சத்தில் மற்றவர்களால் கானகத்துக்கு அனுப்பப் பெறுகிறாள். அந்தத் தாயின் மகன் வழித் தோன்றலாக வந்த பெண் குழந்தையை அந்த அன்னையே, அரசன் ஏரோட்டும் பூமியில் பொதித்து வைத்தாள் என்று நான் கற்பனை செய்தேன். 'சத்திய வேள்வி' இச்செய்திகளைக் கொண்ட நவீனம்.
அதே பூமகள், இராமசந்திரனின் கரம் பற்றிய நாயகியான பின், தொடரும் வரலாறே, இந்தப் புனைவு. இவள் இராம கதையின் நாயகியாகும் வகையில், இராமசந்திரனின் கல்யாண குணங்களை மிகச் சிறப்பாக ஒளிரச் செய்யும் வகையில், பொற்கூட்டுப் பின்புலமாக உருவாக்கப் பெற்றிருக்கிறாள். இந்தப் பின்புலம், கரும்புள்ளிகள் உள்ள வயிரத்தையும், தன்னுள் அப்புள்ளிகளை ஏற்று விழுங்கி, அந்த வயிர மணிக்கு மேலும் கண்பறிக்கும் வண்ண ஒளிக் கதிர்களைக் கூட்டும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது.
இந்த வகையில் இந்தக் காவியம், சீதையின் கதையாகவே விரிந்தாலும், இது இராமயணம் என்றே சிறப்பிக்கப்படுகிறது.
'குலம் கோத்திரம்' அறியாத இந்தப் பெண்ணுக்கு, எந்த வகையில் உரிய மணவாளனைத் தேட முடியும் என்று சனக மன்னன் கவலைப்பட்டிருக்கிறான். வில் இங்கே ஒரு காரணமாக அமைகிறது. வில் உடைந்தது. நாயகன் கிடைத்தான். குலம் கோத்திரம் கேட்காமல், மன்னனின் வளர்ப்பு மகளை, பேரழகும் பொறுமையுமே வடிவாகத் திகழ்ந்த கன்னியைக் கைபிடித்தான். அவள் நாயகனுடன் செல்லும் போது, வழியனுப்பி வைக்கும் தந்தை, தான் கவலைப்பட்டதையும், அது ஆதவனைக் கண்ட பனியாகக் கரைந்து ஓர் ஒப்பற்ற அரசகுமாரனை மருகராகக் கிடைக்கப் பெற்றதையும் எடுத்துரைத்து, "மகளே, உன்னை ஓர் உயரிய நாயகருக்கு உரித்தாக்கி விட்டேன். இனி இந்த நாயகரே உனக்கு எல்லாமும். 'அன்னை, தந்தை, குரு, தெய்வம்' எல்லாமுமாக ஆகிறார். இவர் இருக்குமிடமே உனக்கு உரிய இடம்" என்று உரைத்து ஆசி வழங்குகிறார்.
பெற்றோர், பிறந்த இடத்து உறவுகள் எல்லாமே ஒரு பெண்ணுக்கு மேலே போர்த்துக் கொண்ட பாதுகாப்புகள் போன்றவை; 'மணாளர் என்று ஒருவர் உறவான பின், அந்தப் பாசங்கள் கழற்றி விடப்பட வேண்டும்' என்பதே இன்று வரையிலும் இந்தியப் பெண்ணின் 'தருமமா'கப் பாலிக்கப்பட்டு வருகிறது. திருமணம் தான் அவள் வாழ்வை உறுதி செய்கிறது.
பூமகள் ஒரு நாயகரைச் சேர்ந்துவிட்டாள். நாயகன் மாதா - பிதாவின் வாக்கிய பரிபாலனம் செய்ய, வனம் ஏகும் போது, இவள் தங்குவாளா? இவளுக்கு ஏது பிறந்த இடம்? 'இராமன் இருக்குமிடமே அயோத்தி' என்ற மரபு வழக்குக்கு ஆதாரமாக வனம் ஏகினாள்.
வனத்தில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள், இவள் கற்புக்கு நெருப்புக் கண்டம் வைத்தது.
இராமன், அரக்க வேந்தனைக் கொன்று, இவளை மீட்க வந்த போது என்ன சொன்னான்?
"அரக்கர் மாளிகையில் அறுசுவை உணவுண்டு உயிர் துறந்தாயில்லை. கடல் கடந்து வந்து அரக்கரைக் கொன்றது, உன்னை மீட்டு அழைத்துச் செல்வதற்காக இல்லை. வீரனின் மீது விழுந்து விட்ட பழியைப் போக்கிக் கொள்வதற்காகவே இலங்கையை வென்றேன்?"
'வீரம்' என்பது பழி தீர்க்கும் வன்மத்தில் விளைவதா? யாருக்கு யார் மீது பழி?
இத்தகைய சொற்களால் அந்த அருந்தவக் கொழுந்தைச் சுட்டதுடன் அவன் நிற்கவில்லை.
அவளை எரிபுகச் செய்கிறான். இத்துடன் முடிந்ததா, பழியும் சந்தேகமும்?
ஊர் திரும்பி, முடிசூட்டிக் கொண்ட பின், தன்னால் கருவுற்ற நாயகியின் மீது எங்கோ ஒலித்த தீச்சொல்லின் கருநிழல் விழுந்ததென்று கானகத்துக்கு விரட்டினான். இது வெறும் நாடு கடத்தலா? எரிபுகுந்து புடம் போட்ட சொக்கத் தங்கமாக வெளியே வந்த நாயகியை - கருவுற்ற செல்வியை, மீண்டும் உயிருடன் கொளுத்தும் துரோகச் செயல் அல்லவோ? இந்தச் செயலின் பின்னே கற்பிக்கப்படும் 'தொத்தல்' நியாயத்தை யாரால் ஏற்க முடியும்?
இப்படி ஒரு நிகழ்வு, ஆதிகவியின் இதிகாசத்தில் இடம் பெற வேண்டுமா? ஆதிகவியின் நோக்கம் யாதாக இருக்க முடியும்?
தமிழ்க் காவியத்தைக் கம்பன் ஆதிகவியை ஒட்டியே புனைந்தாலும், மகுடாபிஷேகத்துடன் கதையை முடித்துக் கொண்டது அரிய சிறப்பாகும்.
இராமனுடைய அரசில் ஓர் ஆண் சலவைத் தொழிலாளியின் பேச்சுக்குக் கூட இத்துணை கனம் உண்டு; அந்தப் பளு நிறைசூலியை நிராதரவாக வனத்துக்கு அனுப்புமளவுக்கு நாயகனின் மனச்சான்றை அழித்துவிடும் வலிமை வாய்ந்தது என்பது விளக்கமாகிறது. இந்த நீதி தருமம், சாதாரணமான மக்கள் எவரும் புரிந்து கொள்ளக் கூடியதாக இல்லை.
வால்மீகி மகரிஷி இந்த மகா காவியத்தை இயற்றியதன் நோக்கம் யாதாக இருக்கும் என்பதைக் கூடத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. கிரௌஞ்ச பட்சிகளில் ஆணை வேடன் கொன்றான்; பெண் சோகம் தாங்காமல் கதறியது. இந்தச் சோகத்தைக் கண்டதும் மனம் தாளாமல் அவர் வேடனைச் சுடு சொற்கள் கொண்டு சபித்தார். அப்போது வெளி வந்த அந்த சுலோகமே இவருடைய கவித்துவத்திற்கான தோற்றுவாய் என்று சொல்லப்படுகிறது.
பெண் பட்சியின் துயரம் சீதையின் துயராக மாற்றப் படுகிறதா? ஆனால், அது இயல்பாக இல்லையே?
பெண் துயரப்படுவதற்கே பிறக்கிறாள். ஆனால் ஆண் மகிமைப்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தை அல்லவோ இந்தக் காவியம் எதிரொலிக்கிறது? இன்னும் நுட்பமாக நோக்கினால், ஆண் நாயகன், ஓர் இலட்சிய மாதிரியாக உருவாக்கப்பட்டிருப்பதாகவும் புலப்படுகிறது. பாரதத்தில் வரும் கண்ணனைப் போல் இவன் மூன்றாம் வருணத்தவன் அல்ல; அதருமத்தை அதரும வழியைக் கையாண்டு வெல்லலாம் என்று துணிந்தவன்; பல பெண்டிருக்கு லோலனாகச் சித்தரிக்கப் பட்டவன் அவன்.
ஆனால் இந்த நாயகன் இலட்சிய புருடன், க்ஷத்திரிய வித்து; சக்கரவர்த்தித் திருமகன்; ருஷி முனிவர்களின் கண்ணுக்குக் கண்ணாக ஒழுகுபவன். மேல் வருண வருக்கமே இவனுடைய சமுதாயம். அந்தணப் பிள்ளை பிழைக்க, அந்தணனல்லாத சம்பூகன் கொலை செய்யப் படுகிறான். அவன் முற்பிறவியில் பாவம் செய்துவிட்டு, பாவம் தீரத் தவம் செய்கிறான் என்று கொலைக்குக் காரணம் சொல்லப்படுகிறது. இந்தத் தரும நியாயங்கள் க்ஷத்திரிய குலத்தை மேன்மைப்படுத்தக் கூடியவை. உத்தர இராமாயணத்தில், சீதையை நாடு கடத்திய நிகழ்ச்சியைத் தொடர்ந்து, க்ஷத்திரிய மன்னரின் தர்ம நியாயங்கள் ஒவ்வொன்றாக விளக்கப்படுகின்றன. 'அசுவமேதம்' ஏகாதிபத்திய நியாயத்தைத் தெளிவாக்குகிறது. அசுரன் என்ற காரணமே, 'லவணாசுரன்' போன்ற மன்னர்களின் பராக்கிரமம் வீழ்த்தப்படுவதற்குரிய நியாயமாகிறது.
மேலும் இத்தரும நியாயங்கள் வன்முறையாலேயே நிலை நாட்டப்படுகின்றன.
நிறை சூலியான மனைவியை, குரூரமாக வனத்துக்கு அனுப்பும் முறையிலேயே அது தெளிவாகிறது. இந்தச் செயல், அவதார புருடன் என்று கொண்டாடப்படுவதற்குரிய மன்னனுக்குரியதல்ல. இதற்கெல்லாம் ஒரே காரணம், சீதையின் குலம் கோத்திரம் தெரியாத பிறப்பே என்று கொள்ளலாம். வருண தர்மமும், ஆண் ஆதிக்கமும், பெண்ணை ஓர் அடிமை நிலையிலும் இழிந்து, தருமம் என்ற விலங்கால் பிணித்து வைத்த நிலை துலங்குகிறது. வால்மீகி முனிவர், இராமரிடம் அவர் மைந்தர்களைக் காட்டி, "இராமா, இவர்கள் உன் மைந்தர்களே... சீதை அப்பழுக்கற்ற செல்வி. இவர்களை ஏற்றுக் கொள்" என்று ஒப்படைக்க முனைந்த போதும் இராமன் தயங்குகிறான்.
அந்த நிலையிலும் இராமன் சீதையிடம் சான்று கோருவது, க்ஷத்திரிய அரக்கத் தனத்தின் உச்சநிலையை விள்ளுகிறது.
"இன்னும் எவ்வாறு நான் சான்று காட்டுவேன்?" என்று சீதை முறையிடுகையில் பூமி பிளக்கிறது. உள்ளிருந்து ஒரு நேர்த்தியான ஆசனம் வந்து அவளை ஏந்திக் கொள்ள, பூமிக்கடியில் அவள் செல்கிறாள். பூமிப் பிளவு மூடிக் கொள்கிறது என்று நாடகப் பாணியில் சீதையின் முடிவு விவரிக்கப்படுகிறது.
பின்னர் இராமர் அந்த இரு மைந்தர்களையும் தயக்கமின்றி ஏற்றுக் கொண்டு நாடு திரும்புவதாக இராமாயண வரலாறு இயம்புகிறது.
அரக்கன் மாளிகையில் பத்து மாதங்கள் இருந்த காரணத்தால் அவள் மாசு படிந்தவளானாள். எந்த அக்கினியாலும் அவள் மாசை அழிக்க முடியவில்லை. ஆனால் அவள் பெற்ற குழந்தைகள், ஆண்மக்கள் அரசுக்கு உரிய சந்ததியினராக ஏற்றுக் கொள்ளப்படுகின்றனர்.
பவபூதி - எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த வடமொழி நாடகாசிரியர். வால்மீகியின் முடிவை இவர் ஏற்றிருக்கவில்லை. 'உத்தர ராம சரிதம்' என்ற நாடகத்தின் வாயிலாக, அந்த முடிவை மாற்றியமைத்தது மட்டுமின்றி, தம்மை உறுத்தும் வேறு சில செய்திகளையும் வெளியிட்டிருக்கிறார். சம்பூகனைக் கொலை செய்யுமுன் இராமர், "வலதுகரமே, நீ வேதியன் மகனை வாழ்விக்க, சூத்திர முனிவர் மீது உடைவாளை வீசுவாய்? நிறை சூலி சீதையை வனமனுப்பியவன் அங்கமல்லவா? உனக்கு கருணை ஏது?" என்று நெஞ்சோடு கடிந்து கொண்டதாக எழுதியுள்ளார். அது மட்டுமன்று; வால்மீகி ஆசிரமத்துச் சீடர்கள் நகைச்சுவை மேலிட ருஷி - தாடிகள் வரும்போது, பசுங்கன்றுகள் விழுங்கப்படுகின்றன என்று பேசிக் கொள்வதாகச் சித்திரிக்கின்றனர்.
அவருடைய நாடகத்தில் அந்தண முனி ஆதிக்கங்களுக்கு எதிரான குரல் இழையோடுகிறது.
இவருடைய நாடக முடிவில் சீதையைப் பூமி விழுங்கவில்லை. மன்னருடன் தாயும் மைந்தர்களும் சேர்ந்து விடுகின்றனர். சீதை உயிர்க்குலத்தை வாழ வைக்கும் செல்வி. அஹிம்சை வடிவானவள். இராமன் வனமேகும் போது வில்லும் அம்பும் கொண்டு வருவது எதற்கு என்று வினவிய பெருமாட்டி. எனது இந்தப் பார்வையே சீதையை ஒரு புதிய வடிவில் இசைக்கிறது. இவள் தன் மவுனத்தால் இராமனைத் தலைகுனியச் செய்கிறாள். அஹிம்சையின் ஆற்றல் சொல்லற்கரியதாகும். கடப்பாரைக்கு நெக்குவிடாத பாறையும் பசுமரத்து வேருக்குப் பிளவு படும் அன்றோ? சீதையின் ஆற்றல் ஆரவாரமற்றது. அது ஆழத்தில் பாய்ந்து தீமையைச் சுட்டெரிக்கவல்லது. என் சீதை இத்தகைய ஆற்றலை அகத்தே கொண்டு வனத்தையே அன்பு மயமாக ஆளுகை செய்யும் தாய். அவள் பூமிக்குள் செல்லவில்லை. அவள் மைந்தர்களும் அரசன் பின் செல்லவில்லை.
இந்தப் புனைவு ஏற்கெனவே நிலை நிறுத்தப்பட்ட பிம்பங்களைத் தகர்க்கலாம். அப்படியானால் நான் என் நோக்கில் வெற்றி பெற்றதாகக் கருதுவேன்.
எப்போதும் போல் இந்த "வனதேவியின் மைந்தர்கள்" நூலையும், தாகம் பதிப்பகத்தார் வெளியிடுகிறார்கள். இடைவிடாமல் எனது நூல்களை வெளியிட்டு வரும் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டு இந்தப் புதிய முயற்சியை வாசகர் முன் வைக்கிறேன்.
வணக்கம் ராஜம் கிருஷ்ணன்
5-5-2001
--------------
வன தேவியின் மைந்தர்கள் : அத்தியாயம் 1
பனிக்காலத்து வெயில் உடலுக்கும் உள்ளத்துக்கும் தேனாய், தீஞ்சுவையாய், இங்கிதமளிக்கக் கூடியதுதான். ஆனாலும் பூமகளுக்கு அப்படி ஓர் இனிமை படியவில்லை. மாளிகையின் மேலடுக்குச் சாளரத்தின் சல்லாத் திரையை தளிர் விரல்களால் நீக்கி, கீழே மாளிகையின் பின்புறத்தின் விரிந்த சுற்றுச் சூழலில் பார்வையைப் பதிக்கிறாள்.
பனிக்காலத்தில் பசுமை இத்துணை அழகாகத் தென்பட்டதாக நினைவில் வரவில்லை. புல்வெளிகள்... பசுங்குவியல்களில் நட்சத்திரம் பதிந்தாற் போன்று பூம்புதர்கள்... மாமரங்கள். இந்தா இந்தா என்று கதிரவனுக்குக் காணிக்கையாக்கும் அரும்புக் கொத்துகள்... விரிந்து தெரியும் சிவப்பும் நீலமுமான அரவிந்தத் தடாகம்... அதில் வெண் மலர்கள் போல் தெரியும் அன்னங்கள்.
எல்லாம் பார்த்துப் பார்த்து, மாளிகையைச் சேர்ந்த உழைப்பாளர் உருவாக்கியிருக்கும் அந்தப்புரத் தோட்டம். எட்டி ஓர் ஆலமரம். அதைச் சுற்றி அழகிய மேடை உண்டு. அங்கே மன்னரும் அவளும் சந்தித்துப் பேசுவதுண்டு. கானகம் செல்லுமுன்பு, அவள் பேதைப்பருவ அறியாமைகள் அகல, மன்னரின் அன்புப் பார்வையின் பொருளைப் புரிந்து கொண்ட இடம். அதை நினைக்கும் போது இப்போது, மெய் சிலிர்க்கிறது. பூம்பட்டு மேலாடையை நழுவாமல் பற்றிக் கொள்கிறாள்.
"தேவி!..."
"உச்சிப் போது தாண்டி நேரமாகி விட்டது. உணவு சித்தமாகி, ஆறிப் போகிறது..."
அவள் திரும்பிப் பார்க்கிறாள்.
கைகழுவக் கலமும் நீரும் ஏந்தி நிற்கும் பணிப் பெண்.
பணிப்பெண்ணா? முன் நெற்றிக் கூந்தல் நரை பட்டையாகத் தெரிகிறது.
நெற்றியிலும், கன்னங்களிலும் மோவாயிலும், காலமும் உழைப்பும் சேர்ந்து கீறிய கீறல்கள்...
வெறும் காலமும் உழைப்பும் மட்டுமா? மன இறுக்கமும் கூடத்தான்.
இடுப்பில் ஓராடை; வெளுத்துச் சாயம் போன ஆடை. மாளிகை எசமானிகள் உடுத்துக் கழித்த ஆடை... மார்பை மூடும் கச்சைகளும் கூட இவர்களுக்கு இல்லை. ஆனால் அவந்திகா, அவள் அன்னை. அவள் பால் குடித்த மார்பகங்களைத் துகில் கொண்டு மூட அவள் முனைந்து வெற்றி பெற்றிருக்கிறாள். மாளிகைச் சாளரங்கள் கூட உயர்துகில் அணிகின்றன. என் அவந்திகாவுக்கு மேலாடை வேண்டும் என்று, விவரம் தெரிந்த நாளில் அவள் தந்தையிடம் கேட்டு அந்த மேலாடை உரிமையைப் பெற்றுத் தந்தாள்.
அவந்திகா நீர்ச் சொம்பைக் கீழே வைத்து விட்டு ஒரு கையால் அவள் முக மலரைப் பரிவுடன் தொட்டு, முன் நெற்றிச்சுரி குழலை ஒதுக்குகிறாள். "தேவி, நேரம் மிகவாகியிருக்கிறது. பாருங்கள், நிழல்கள் நீண்டு விழுகின்றன. இந்த நிலையில் உணவு கொள்ளாமல் இருக்கலாகாது, தேவி..."
அவளை மெதுவாகப் பற்றி எழுப்பி, நீர்ச் செம்பை எடுத்து, கழுவும் கலத்தைப் பிடித்து, அவள் மென்கரங்களை வெதுவெதுப்பான நீரில் கழுவச் செய்கிறாள். இன்னொரு பணிப்பெண் வந்து, அந்தக் கலங்களை வாங்கிச் செல்ல, அவந்திகா மெல்லிய பட்டுத்துகிலால் அவள் கரங்களைத் துடைக்கிறாள். செம்பஞ்சுக் குழம்பின் பட்டுச் சிவப்பு தெரியும் மலர்க்கேசரங்கள் போன்ற விரல்கள்...
"அவந்திகா, மன்னர் உணவு கொண்டாரா?"
"மன்னர் உணவு மண்டபத்துக்கு வரவேயில்லை, தேவி; குலகுரு, மந்திரிபிரதானிகளுடன் அரசாங்க யோசனைகளில் ஆழ்ந்திருப்பதாகச் சொல்கிறார்கள். பல ஆண்டுகள் மன்னனில்லாத நாட்டில் எத்தனையோ அலுவல்கள் இருக்கலாமல்லவா?..."
'இளையவர் ஆட்சி புரியவில்லையா அவந்திகா? உணவு கொள்ளக்கூட வர இயலாத அளவுக்கு என்ன யோசனைகளாம்?'
பூமகள் கேட்கவில்லை.
இளையவர்... நிழல் போல் தொடரும் இளையவரும் உனவு கொள்ளவில்லையா? ஊர்மிளையைச் சந்திக்கவில்லையா? ராணி மாதாவின் மாளிகைப் பக்கம் செல்லவில்லையா?
அடுக்கடுக்காக வினாக்கள் மின்னுகின்றன. ஆனால் சொற்களாக உயிர்க்கவில்லை.
விமலை, விசயை, இருவரும் பின்னே உணவுத் தட்டுகள், கிண்ணங்கள், அமரும் பாய் ஆகியவற்றுடன் வந்து கடை பரப்புகிறார்கள். அவந்திகா, அவளைப் பரிவுடன் பற்றி, மென்மையாக கோரை கொண்டு மெத்தென்று முடையப் பெற்ற சித்திரப்பாயில் அமர்த்துகிறாள்.
பெரிய வாழையிலைகளைப் பரப்பி, அதில் உணவுப் பண்டங்களை வைக்கிறார்கள். மிளகும் உப்பும் கூட்டித் தயாரித்த நெய்யமுது; மாதுளங்காய்த் துவையல், தயிர் பிசைந்த சுவையமுது; கீரையும் பருப்பும் கூட்டிய மசியல், இனிப்புக் கூட்டிய புளிப்புப் பச்சடி...
"எனக்குப் பசியே இல்லை, தாயே!"
"மகளே? பசி இல்லை என்று இருக்கலாமா? இன்னோர் உயிரைத் தாங்கி நிற்கும் அன்னை நீங்கள். இந்த மாதுளங்காயும், புளிப்பும் இனிப்புமான பச்சடியும் ருசிக்கு ஆரோக்கியமாக இருக்கும்... உண்ணுங்கள் தேவி!"
"ஏனோ தெரியவில்லை அவந்திகா, எனக்குப் பசியும் இல்லை, ருசியும் இல்லை..."
அப்போது சாமளி ஒரு பொற்கிண்ணத்தில் பானம் எடுத்துக் கொண்டு விரைந்து வருகிறாள். இவள் கேகய அரசகுமாரியான இளைய ராணி மாதாவின் அந்தப்புரப் பணிப்பெண்.
"தேவி, ராணி மாதா, இதைத் தாமே தயாரித்து, மகாராணிக்குக் கொடுத்தனுப்பியுள்ளார்..."
அவந்திகா ஓர் இலையால் மூடப்பெற்ற அந்தப் பொற் கிண்ணத்தைக் கையில் வாங்கி முகர்ந்து பார்க்கிறாள். இந்தப் பூமகள், மதுவின் வாசனையே நுகராதவள். புலால் உணவை வெறுக்கும் பூதேவி இவள். இவளுக்கு உணவு தயாரிக்கவே இங்கே சிறப்பாக அநுபவம் பெற்ற ஊழியப் பெண்கள் இருக்கிறார்கள். கேகயகுமாரியான ராணி மாதாவின் மீது அவந்திகாவுக்கு அளவு கடந்த நம்பிக்கையும் பரிவும் அன்பும் உண்டு. இந்தப் பானத்தில், இஞ்சியும் புளிப்பும் தேனும் கலந்திருப்பதை இரண்டு துளிகள் கையில் விட்டுச் சுவைத்த பின் கண்டு கொள்கிறாள்.
"தேவி! ராணிமாதா சகல கலைகளிலும் வல்லவர். பதினான்கு ஆண்டுகள் தாங்கள் கானகத்தில் இருந்த காலத்து மன்னர் வர்க்கத்தினரால் கசக்கி எறியப்பட்டு அந்தப்புர அறைகளில் சிறையிருந்த அத்தனை பெண்களுக்கும் வெளிச்சமும் வாழ்வும் கொடுக்க எத்தனை கலைகள் பயிற்றுவித்தார்!... இது கரும்புச்சாறும், இஞ்சியும், புளிப்புக்கனியும் சிறிது தேனும் கூட்டிய பானம். சிறிது அருந்துங்கள். பசி எடுக்கும்..."
பூமகள் கிண்ணத்தை வாங்கி பானத்தை அருந்துகிறாள்.
உண்மையாகவே நாவுக்கு ஆரோக்யமான ருசி... புளிப்பும் இஞ்சிச் சுவையும், இனிப்பும்... மந்தித்துப் போன நாவில் நீர் சுரக்கும் நயமும்...
இளைய ராணி மாதாவுக்குத்தான் எத்துணை அன்பான இதயம்? கல்லைப் போல் ஊரார் பழியையும் உலகோர் சாபங்களையும் மட்டும் வாங்கிக் கொள்ளவில்லை; பெற்ற மகனாலேயே வெறுத்து ஒதுக்கப்பட்ட அபாக்கியவதி... இதை நினைக்கும் போது கண்கள் பனிக்கின்றன.
"தேவி, குழந்தாய், இஞ்சிச்சுவை காரமாக இருக்கிறதா?..."
அவளுடைய மென் துகில் கொண்டு கலங்கிய விழிகளை ஒத்துகிறாள் அவந்திகா. தன் உணர்ச்சிகளை விழுங்கிக் கொள்ளும் முகமாகக் கண்களைச் சிறிது மூடிக் கொள்கிறாள்...
உணவு கொண்ட பின் மற்ற பணிப்பெண்கள் சுத்தம் செய்துவிட்டு அகல்கின்றனர்.
"அவந்திகா, மன்னர் ஏன் முன் போல் இங்கே வருவதில்லை? அப்படி என்ன அரசாங்க அலுவல்கள்?"
"பெண்களாகிய எமக்கென்ன தெரியும்? தேவி, இரண்டே கவளம் தான் உணவு கொண்டிருக்கிறீர்கள். உடல் வெளுத்து, இளைத்து விட்டது. ராணி மாதா எங்களைத் தாம் குறை சொல்வார்கள்..."
பூமகள் தன் மனச்சுமையை எப்படி வெளியிடுவாள்? அரக்கர்கோனின் அந்தப்புரத் தோட்டத்தில் அவள் நெருப்பு வளையத்துள் சிறையிருந்த போது கூட, இத்துணை மனச்சுமை இருக்கவில்லை போல் தோன்றுகிறது... இந்நாட்களில் மிக அதிகமாக ஒரு வெறுமை அவளை ஆட் கொண்டிருக்கிறது. இத்தனை வசதிகளும் பணியாளரும், தன்னை அன்னைக்கு அன்னை போல் மடியிலிருந்து, மார்புப்பால் கொடுத்து வளர்த்த செவிலியும் கூட உணர்ந்து கொள்ள முடியாத, பகிர்ந்து கொள்ள முடியாத சுமையாகக் கனக்கிறது.
அவளை உணவு கொண்ட களைப்புத் தீர, மஞ்சத்தில் இருத்துகிறாள் அவந்திகா. நந்தினி மயில்தோகை விசிறியுடன் வருகிறாள்.
இதை மென்மையாக மேனியில் தடவும் போது உறக்கம் வரும்; மன அமைதி கிட்டும் என்பது அவந்திகாவின் அநுமானம்.
அப்போது, வெற்றிலைப் பெட்டியை எடுத்துக் கொண்டு விமலை ஓடி வருகிறாள். நந்தினி விசிறியை வைத்துவிட்டு, உமிழும் எச்சிற் தம்பலத்தைக் கொண்டு வருகிறாள்.
"ஓ! எனக்குத்தான் எத்தனை மறதி, தேவி! வெற்றிலை மடித்துக் கொடுக்கும் நினைவே இல்லை..."
அவந்திகா தன்னையே கடிந்து கொண்டு, வெற்றிலைகளை எடுத்துத் துடைத்து, வாசனைப் பொருட்கள் சுண்ணம் சேர்த்து, மடித்து அவளிடம் தருகிறாள். அவள் மனதில், அந்த ஆலமரத்து மேடையில், அவள் புக்ககம் வந்த புதிதில், மருட்சியை நீக்கும் வகையில் மென்மையாகச் சரசமாடியதும், வெற்றிலை மடித்துத் தந்ததும் நினைவுக்கு வருகிறது.
இந்த வெற்றிலை கசக்கிறது.
கானகத்தில் வெற்றிலை பாக்கு எதுவும் இல்லை. ஆனால் மிகுந்த மணமுள்ள மூலிகைகள் உண்டு. ஒரு வித வாசனைப் புல்... அது புத்துணர்ச்சி தரும்.
பணிப்பெண்... நந்தினி, அருகில் எச்சிற் கலத்தை ஏந்தி நிற்கிறாள். மாநிறமுள்ள இளம் பெண். முடியை இறுகக் கோதி உச்சியில் முடிந்திருக்கிறாள். அகன்ற கண்கள், நெற்றியில் முக்கோணம் போல் பச்சைக்குத்து. செவிகளில், வெண்மையான நெட்டிக் குழைகள். மார்பகங்கள் மொட்டுப் போல் குவிந்து, கஞ்சுகத்தின் இறுக்கத்தை விள்ளுகின்றன. முன்பெல்லாம் இந்த அரண்மனைப் பணிப்பெண்கள் கஞ்சுகம் அணிய மாட்டார்களாம். மேலாடையும் கிடையாது. இதெல்லாம் இளையா ராணி மாதாவின் சீராக்க நடவடிக்கைகளாம். இதனாலேயே ஏனைய மாதாக்களுக்கு இவளைப் பிடிக்காது போலும்!
நந்தினியின் கழுத்தில் ஒரு மண் பவழ மாலை தவழ்கிறது...
அரக்கர் கோன் மாளிகையின் அடிமைப் பெண்களும் மேலாடை, கஞ்சுகம் போன்ற எதுவும் அணிந்திருக்கவில்லை. உயர்குலப் பெண்களுக்கு மட்டுமே அந்த உரிமைகள் உண்டு... பணிப்பெண்களாகிய அடிமைகள் கழுத்தில் ஏராளமான சங்கு மாலைகளையும், அழகிய சிப்பிகளிலும் மணிகளிலும் செய்த அணி பணிகளையும் அணிந்திருப்பார்கள். கூந்தலைச் சிறு சிறு பின்னல்களாகப் பின்னி அழகு செய்து கொண்டிருப்பார்கள். இடையில் தார்பாய்ச்சாமல் முழங்கால் வரை மட்டுமே வரும் ஆடை அணிந்து, அவர்கள் சுறுசுறுப்பாக இயங்கிய காட்சிகள் எல்லாம் இப்போது மனக்கண்களில் வருகின்றன.
கானகத்தில் இருக்கையில் வஞ்சமகள் ஒருத்தி அவள் நாயகனை மயக்க வந்து நடமாடியதும் உயிர்க்கிறது.
எத்துணை அழகாக இருந்தாள்? மான், மயில், புறா எல்லா உயிர்களின் சாயல்களையும் கொண்டிருந்தாள். "முனிகுமாரா! பிறவி எடுத்ததன் பயனை இன்றே உணர்ந்தேன். என்னை ஏற்றுக் கொள்வீர்!" என்று அருகில் வந்து அவள் அமர்ந்ததற்கு இளையவர் கொடுத்த தண்டனை! மூக்கையும் செவிகளையும் கூர்ந்த ஆயுதத்தால் அரிய அவள் இரத்தம் சொரியத் துடிதுடித்து ஓடிய காட்சியில் அவள் அடிவயிறு சில்லிட்டுப் போயிற்று. அச்சம்... மானைக் கொன்று உணவு பக்குவம் செய்து தருவார்கள். கொல்லும் குரூரம் தவிர்க்கும் அச்சம் தான் அவளை அன்று அந்த மானை உயிருடன் பிடித்துத் தரக் கேட்கச் செய்தது.
அது மாய மானாக இருந்தாலும் அன்பு செலுத்தி வளர்த்தால் தீய எண்ணம் மாயுமே என்று பேதையாக நினைத்தாள். பிடிவாதமாகப் பிடித்துத் தரவேண்டினாள்... ஆனால், என்னவெல்லாம் நடந்து விட்டது!
"தேவி, வெற்றிலையை மெல்லாமல் துப்பிவிட்டீர்களே?" என்று எச்சிற் கலத்தைப் பார்த்தபடி அவந்திகா கேட்கிறாள்.
"எனக்கு எதுவும் இப்போது பிடிக்கவில்லை தாயே!"
'தாயே' என்று சொல்லும் போது குரல் தழுதழுக்கிறது... இவள் தாய் தான். ஆனால் பணிப்பெண்ணாகிய அடிமை...
"நீங்கள் எல்லாரும் போங்கள். தேவி சற்று தனிமையில் இளைப்பாறட்டும்" என்று அவந்திகா அவர்களை அப்புறப்படுத்துகிறார்கள்.
பூமகளை மெல்ல மஞ்சத்தில் சாய்த்தவாறு, துகில் கொண்டு மேலே போர்த்துகிறாள்.
இதமாக நெற்றியை வருடுகிறாள்.
"...தாயே, மன்னர் இந்தப் பக்கம் வந்து மூன்று நாட்களாகின்றன..."
நெஞ்சம் பொறாமல் வரும் சொற்கள்...
"தேவி, இதற்காகவா வருந்துகிறீர்கள்? அரசாங்கக் காரியங்கள் என்றால் அவ்வளவு எளிதா? இப்போது, தங்கள் பதி என்பதுடன், இந்த நிலையில் தங்களுக்கு அமைதியும் ஓய்வும் வேண்டும் என்ற கடமை உணர்வும் கட்டிப்போடும்... கண்களை மூடிச் சற்றே உறங்குங்கள்..."
ஆனால் அமைதி வரவில்லை.
அவள் இட்டிருந்த நெருப்பு வளையத்தை அவர் அறிந்திருப்பாரா? திரிசடை மட்டுமே இதமாக அவளைப் புரிந்து கொண்டவள். மற்றவர் எவரேனும் இலங்கை வேந்தனின் பராக்கிரமங்களின் புகழ்பாடி அவளை மனம் கொள்ளச் செய்ய வந்தால், உயிரை விட்டு விடுவாள் என்பதே அந்த வளையம். அவ்வளையத்தை உயிர்ப்பித்து அவர்களை அச்சுறுத்தி வைத்திருந்தவள் திரிசடைதான். அக்காலத்தில் அசோகவனத்தின் எழிலார்ந்த அருவிக் கரையில் தன் பதியுடன் கோதாவரிக் கரையில் கழித்த இனிய பொழுதை உன்னுவாள். அந்தக் காற்றும், அருவி நீருமே அவளுக்கு அன்னமும் பருகு நீருமாய் இருந்தன. அசைக்க முடியாத நம்பிக்கையால் கோட்டை ஒன்று கட்டி இருந்தாள். அதனுள், ஒரு சிறு திரியிட்டு ஒளித்தீபம் ஏற்றி வைத்திருந்தாள்... பத்து மாதங்கள்...
அவளுடைய நம்பிக்கைக் கோட்டை தகரவில்லை. அவள் பதி வந்து, இலங்கையில் வெற்றிக் கொடியை ஏற்றி வைத்தார். ஆனால்... ஆனால்... அவள் ஏற்றி வைத்திருந்தாளே, சிறு திரிகொண்டு ஒளித் தீபம்...? அதை அவர் அணைத்து விட்டார்.
அவள் விம்மி விம்மி அழுகிறாள். தோள்கள் குலுங்க அழுகிறாள்... அவந்திகா பதறிப் போகிறாள்.
"தேவி? தேவி!... நான் அருகிருக்கையில், மகாராணிக்கு என்ன துயரம் வந்தது?..."
குளிர் நீர் கொண்டு முகத்தைத் துடைக்கிறாள்.
"தீபம் அணைந்துவிட்டது, தாயே? தீபம்... சிறு திரி இட்ட தீபம்..."
"எந்த தீபம்...? எது? ஓ, மாடத்தில் இருக்கும் தூங்கா விளக்கா? அடீ விமலை? விசயை?..." என்று அவந்திகா குரலெடுத்துக் கூறிக் கொண்டு போகிறாள்.
அப்போது, ஒற்றை நாண் தம்பூரின் சுருதி செவியில் ஒலிக்கிறது. ஒற்றை நாண்... தம்பூரு...
பரபரப்புடன் அவள் இறங்கி, சாளரத் திரையை அகற்றி வெளியே பார்க்கிறாள்.
------------
அத்தியாயம் 2
ஒற்றை நாணின் மீட்டல்.
கிய்... கிய்... கிய்... கில்... ரீம்... ரீம்...
இது ஏதேனும் வண்டின் ரீங்காரமோ?
அந்த மீட்டொலி அவள் செவிகளில் நிறைந்து, நாடி நரம்பெல்லாம் பரவுவதாக உடல் புல்லரிக்கிறது. நினைவுகளில் முன்னறியாத ஓர் ஆனந்தம்.
"அவந்திகா?... ஏதோ ஓர் இசை கேட்கவில்லை?"
"இசையா?"
அவள் புருவம் சுருக்குகிறாள். வந்தியும் மாதுரியும் ஏதேனும் இசை பயின்று கொண்டிருப்பார்கள். அரண்மனையில் நடனமாடுபவள் வந்தி. அவர்கள் பயிலும் இடம் இங்கே இல்லையே? அதுவும் இந்தப் பிற்பகல் நேரத்தில் அழைத்தாலொழிய எவரும் யாழை எடுத்துக் கொண்டு வர மாட்டார்களே?
"...தெரியவில்லையே தேவி?"
"ரீம்... ரீம்... ரீம்..." சுருதி துல்லியமாகக் கேட்கிறது. பாடலின் சொற்கள் புரியவில்லை. ஆனால் இசை, அவளைச் சிலிர்க்க வைக்கும் இசை... பூமகள் சாளரத்தின் வழியே கீழே தோட்டமெங்கும் பார்வையால் துழாவுகிறாள். அந்த நாதம், அவளை அற்புதமாகக் கழித்த கனவுலகுக்குக் கொண்டு செல்கிறது.
ஆம்... மரக்கிளைகளின் பசுமைக் குவியல்களிடையே சத்தியத்தின் குறுத்துப் போல் ஓர் உருவம் தெரிகிறது.
நினைவுக் குவியல்களில் மின்னல் அடித்தாற் போல் பாடலின் வரிகள் உயிர்க்கின்றன.
"தாயே, தருநிழலே, குளிர் முகிலே..."
இந்தப் பாட்டுக்குரியவர்...
அவள் பிஞ்சுப் பாதம் பதித்தோடும் ஐந்து வயசுச் சிறுமியாகிறாள்.
பாத சரங்கள் ஒலிக்க, படிகள் இறங்கி, கீழ்த்தளத்து முற்றத்துக்கு வருகையில், அந்த ஒற்றை நாண் இசைக்கருவிக்குரியவர் செய் குளம் தாண்டி வருகிறார்.
உச்சியில் முடிந்த முடி; அடர்த்தி தெரியாத தாடி. எலும்பு தெரியும் வெற்று மேனி. வற்றி மெலிந்த முகத்தின் கண்களில் எத்தகைய அமைதியொளி! மகிழ்ச்சிப் பெருக்கு அவளை ஆட்கொள்கிறது.
அவர் கண்களை மூடியிருக்கிறார். சொற்கள் வரவில்லை. விரல் மட்டும் அந்த ஒற்றை நாணை மீட்டுகிறது.
"நீ தந்தையின் மகள் தான்; என் தாய் உன் தாயல்ல. உன் தாய் பூமி தான். அதனால் தான் நீ பூமை, பூமகள் என்று பெயர் பெற்றாய்... கணவர் கானேறியதும், அவள் தாய் வீடு சென்றாள். ஆனால் உன் தந்தை உனக்குக் கூறிய அறிவுரை... உன் நாயகர் இருக்கும் இடம் தானம்மா, உனக்குத் தலை நகரம், மாளிகை எல்லாம்...! உனக்கு இனி அவர் தாம் சகலமும்..." தந்தையின் சொற்கள் காரணம் தெரியாமல் செவிகளில் மோதுகின்றன. அவள் "சுவாமி!" என்று கண்ணீர் மல்க அவர் பாதங்களில் பணிகிறாள். "குழந்தாய், எழுந்திரம்மா, நலமாக இருக்கிறாயா?..."
அவர் காலடித்துகளைச் சிரத்தில் அணிந்தவாறே, மகிழ்ச்சி பொங்கும் குரலில் "அவந்திகா, தெரியவில்லை? நந்தசுவாமி, நந்த பிரும்மசாரி... என் தாய் இவர்... நீ ஒரு தாய், இவர் ஒரு தாய்... இன்னும், சுவாமி, பெரியம்மா, அம்மம்மா... அவர் சுகமாக இருக்கிறாரா?... ஊர்மிக்கு ஒரு தாய்தான். எனக்கோ எத்தனை பேர் என்று விரல் மடக்குவேனே?... குழந்தை, பூதலம் உனக்குத் தாய்... நீ பூமிக்குத் தாய் என்பீர்களே?..." என்றெல்லாம் மடைதிறக்கிறாள். அவந்திகா அருகில் வந்து அவரைப் பணிகிறாள். "சுவாமி, உள்ளே வரவேண்டும். இந்தச் சமயத்தில் தாங்கள் தெய்வத்திருவருளே போல் வந்திருக்கிறீர்கள். குழந்தையை ஆசீர்வதியுங்கள் சுவாமி."
"சுவாமி, எத்தனை நாட்கள்! தாங்கள் அன்று கண்ட வடிவமாகவே இருக்கிறீர்கள். என் மனம் சஞ்சலப்படும் நேரத்தில் சஞ்சீவியாக வந்தீர்கள். இந்த இடம் பேறு பெற்றது. சுவாமி! ஓ கங்கைக் கரையிலும், தண்டகாரணியத்திலும், சிறையிருந்த அரக்கர் மாளிகையை ஒட்டிய சோலைகளிலும், எத்தனை முறைகள் தாங்கள் வந்துவிட மாட்டீர்களா என்று நெஞ்சு ஏங்கியது!... சுவாமி, வாருங்கள்..."
தன்னை மறந்து, பூம்பந்தலின் பக்கம் இருக்கும் நீர்க்கலத்தில் இருந்து நீர் மொண்டு வருகிறாள். பூம்பந்தரின் மேடையில் சருகுகளை அகற்றி இருக்கையைச் சித்தமாக்குகிறாள் அவந்திகா. நடந்து நடந்து மெலிந்து புழுதி படிந்த பாதங்களைக் கழுவ, பொற்றாலம் வருகிறது. பூமகள் அந்தப் பாதங்களைக் கழுவும் போது, அவர் கண்கள் கசிகின்றன. புன்னகையுடன் அவள் உச்சியில் கை வைத்து ஆசி மொழிகிறார். "தாயே, என் பாவங்கள் கழுவப் படுகின்றன. என் அன்னையால்... நீ பூமகள், பூதலத்தின் அன்னை..."
"இமயத்தின் மடியில், கங்கை பெருகிவரும் சரிவுகளில் பனிபடர்ந்த சூழலில் பலகாலம் இருந்துவிட்டேன். இந்த மகளின் நினைவு, இந்த அன்னையின் நினைவு, என்னை உந்தித் தள்ளிக் கொண்டு வந்துவிட்டது. பல செய்திகள் கேள்விப்பட்டேன் அம்மா!"
அவர் குரல் கரகரக்கிறது.
அவள் துணுக்குறுகிறாள்.
'அரண்மனை வாயிலில் மன்னரின் காவலர் தடுத்தனரோ? அதனால் தான், பின்புறம் கானகத்து வழியில் அந்தப்புரச் சோலையினூடே வருகிறாரோ?' பேதை இப்படியே நினைத்துக் குறுகி நிற்கிறாள்.
"நான் மன்னரையோ, அரசியையோ பார்க்க வரவில்லையே? எனக்கு அயோத்தியின் மாமன்னர் அவையில் வந்து நிற்பதற்குத் தகுதியான புலமையோ, ஆன்மிக - வேதாந்தங்களில் வல்லமையோ, இல்லையம்மா! வேதபுரி அரண்மனைத் தோட்டத்தில், பறவைகளுடனும், மான், பசு, முயல், அணில் என்ற உயினினங்களுடனும் தோழமை கொண்டு உலகை அன்பால் ஆளவந்ததொரு சிறுமியை நினைத்துக் கொண்டு வந்தேன். அந்தச் சிறுமி, அரண்மனையின் பெருந்தோளர்களினால் தூக்க இயலாத மூதாதையர் வில்லை, அனாயசமாகத் தூக்கி அடிபட்டு விழுந்ததொரு கிளிக் குஞ்சைக் கையிலெடுத்து, தன் அன்பு வருடலாலேயே உயிர்ப்பித்த அதிசயம் கண்டிருக்கிறேன். தாய்-தந்தை தெரியாத இந்தக் குழந்தைக்குரிய மணாளனை எப்படித் தேடுவேன் என்று உன்னை வளர்த்த தந்தையின் கவலையை நீ எப்படித் தீர்த்து வைத்தாய்!..."
"சுவாமி, நான் பேதையாக இங்கேயே அதர வைத்தேனே! உள்ளே வாருங்கள்!" இன்ன செய்வதென்றறியாதவர் போல் தன் பட்டு மேலாடைத் துகிலால் அவர் பாதங்களைத் துடைக்கிறாள் பூமகள். மலர்த்தட்டை ஏந்தி விரைந்து வருகிறாள் விமலை...
மணமிகுந்த சம்பங்கி, பன்னீர் மலர்கள்.
"உள்ளே வரவேண்டும், சுவாமி!..."
அந்த இசைக்கருவியை, கையில் எடுத்துக் கொள்கிறாள்.
"குழந்தாய், இந்த இடமே நன்றாக இருக்கிறது. இதுவே என் அன்னையின் இடம்... எத்துணை அழகான வேலைகள்! செய்குளங்கள்...! உன் மன்னரின் வீரச் செயல்கள் பற்றிக் கேட்டேன். கடல் கடந்து அரக்கர் குலத்தை அழித்து, உன்னை மீட்ட பெருமை - புகழ் எட்டுத் திக்கிலும் பரவி இருக்கிறது தாயே!..."
அவள் மலர் முகம் முள் தைத்தாற் போன்று சோர்ந்து வாடுகிறது.
"நான் கண்டு அறிந்த செல்வி, மாசு மறு ஒட்டாத நெருப்பு. ஈரேழ் உலகும் போற்றக்கூடிய ஒரு மனிதரின் நாயகி. இந்த மனிதர், அந்த மாமணியை நெருப்புக் குண்டலத்தில் இட்டுப் பரிசோதித்தார் என்ற செய்தி பொய்யாகத்தானிருக்கும் என்று கருதினேன்."
இந்த மக்கள் தாம் எப்படி மணலைக் கயிறாகத் திரிக்கிறார்கள்! கொடிய நஞ்சுப் பாம்பு என்று அச்சுறுத்துகிறார்கள்!...
அவள் இதயத்தை முறுக்கிப் பிழிவது போல் இருக்கிறது. அவள் ஏற்றி வைத்திருந்த திரி அணைந்து போனதை எப்படிச் சொல்வாள்?
"அவந்திகா! உள்ளே எல்லாத் திரிகளையும் ஏற்றச் சொல்வாய்! சுவாமி. அமுது கொள்ள உள்ளே வரவேண்டும்..."
அவந்திகா, 'இந்நேரத்தில் திரிகளை ஏற்றச் சொல்' என்ற ஆணையை ஏற்கத் திகைப்பது புரியவுமில்லை. புரியாமலுமில்லை.
"குழந்தாய், எனக்கு உள்ளே வருவதைக் காட்டிலும் இந்த இருக்கையே மனம் நிறைந்த ஆறுதலைத் தருகிறது. உன் முகம் பார்த்த மகிழ்ச்சியே போதும். நீ படைக்கும் அமுது எனக்குக் கிடைத்தற்கரிய இன்னமுது. இங்கேயே அதைக் கொள்கிறேன் மகளே!"
மாதுளை, கொய்யா, வாழை ஆகிய கனிகள் திருத்தப்பட்டு உணவுக் கலத்தில் கொண்டு வரப்படுகின்றன. தேன், பால், பருகுநீர் வருகின்றன. சுவை மிகுந்த வெண்ணெய்க் கனி பிளந்தாற் போன்று விரித்து வைக்கப்பட்டிருக்கிறது. உள்ளே கறுப்பு விதைகள். இடை முழுதும் வெண்ணெயில் தேன் பெய்த சுவையுள்ள சதை.
அவள் ஒவ்வொன்றாக அவர் கையில் எடுத்து வைக்கு முன் அவர், தன் சுருதி மீட்டும் குடுவையில் இருந்து ஒரு புதையல் போன்ற பொருளை எடுக்கிறார். சிவப்பும் கறுப்புமாகக் கல்லிழைத்த குணுக்குப் போன்ற கனிக்கொத்து.
"மகளே! உனக்கு நான் எப்போதும் கொண்டு வரும் பரிசு..." அவள் ஆவலோடு அதை நாவில் வைத்து ருசிக்கிறாள். கண்ணீர் இனிப்பும் கரிப்புமாக வழிகிறது.
"தந்தையே, தாயே, எத்தனையோ இடங்களில் அலைந்து விட்டோம். இந்தச் சுவையை நான் உணர்ந்ததில்லை. பெரியம்மா, கைநிறையக் கொண்டு வருவார்கள். தம் ஆடை மடியில் புதையலாக வைத்துத் தருவார்கள். அவர் கழுத்தைக் கட்டிக் கொண்டு முத்தம் வைப்பேன். ஊர்மி கேட்டால் ஒன்று கூடக் கொடுக்க மாட்டேன். ஆடையை விரித்து அதில் அந்த பழங்களைச் சித்திரம் போல் வைத்து ஒவ்வொன்றாக ருசிப்பேன்."
"சுவாமி, என்னைக் குஞ்சம்மை என்று கூப்பிடும் அந்தத் தாயை எப்படிப் பார்ப்பேன்? நான் மணமாகி மன்னருடன் இரதத்தில் புறப்படும் நேரத்தில் இந்தக் கனியுடன் ஓடோடி வந்தார். எனக்கு இறங்கி ஓடிச் சென்று, அறியாப் பருவத்தில் செய்ததுபோல் ஆடையை விரித்துச் சித்திரமாக வைத்து அக்கனிகளை, அவர் சொல்லும் கதைகளைக் கேட்டுக் கொண்டே உண்ண வேண்டும் என்று தோன்றிற்று. 'ம்... நேரமாகிறது. இரதத்தை ஓட்டப்பா!' என்று மாமன்னர் ஆணையிட குதிரைகள் பறந்து சென்றன..."
அவளுடைய ஆற்றாமை பொல பொலவென்ற சொற்களாகக் கொட்டுகிறது. "மகளே, பெரியம்மை, உன்னை எப்போதும் நினைவு கூறுகிறாள். 'அவள் சக்கரவர்த்தி மருமகள், திருமகள், இப்போது, இந்தப் பஞ்சை யார்?' என்பாள். ஆனாலும் மிகுந்த மகிழ்ச்சிதான் உள்ளூர. இப்போது நானும் யாவாலி ஆசிரமம் விட்டு வெகுகாலமாகிவிட்டது. நான் அங்குதான் போகிறேன். உன் செய்தி எல்லாம் சொல்வேன்!"
"சுவாமி... நான் பெரியன்னையை எப்போதும் நினைத்துக் கொள்வேன். அவர் அப்படி ஓர் உயர்ந்த தோற்றம் உடையவர். அசோக வனத்தில், எனக்குத் துணை போல் வந்த பெண்களில் ஒருவர் அப்படிப் பெரியன்னை போலவே இருப்பார். அவர் என்னிடம் வாய்திறந்து மற்றவர் போல் அரக்க மன்னனின் புகழ் பாட மாட்டார். என்னை எட்ட இருந்து பார்த்துக் கொண்டே இருப்பார்.
வயதானதால் கூந்தல் நரைத்திருக்கும். விரித்துக் கொண்டிருப்பார். கைகளில் காப்புகளும் மார்பில் மணிமாலைகளும் அணிந்திருப்பார்.
ஒருநாள் அவரே அருகில் வந்து, "பெண்ணே, மன்னர் ஆணைக்காக மட்டும் நான் இங்குக் காவல் இருக்கவில்லை. உன்னைப் போல் ஒரு மகள் வேண்டும் என்று நான் பல காலமாக விரும்பி இருந்தேன். நீ எங்கேனும் உயிரை மாய்த்துக் கொண்டு விடுவாயோ என்ற அச்சமே என்னை இங்கே இருத்தி வைக்கிறது. உன் கூந்தலை வாரி முடித்து மலர் அலங்காரம் செய்து நல்ல உடை உடுத்தி, உணவு கொடுத்து நான் மகிழ வேண்டும்... நீயோ தவமிருக்கிறாய். ஒரு பெண்ணின் தூய்மை, அவளால் குலைக்கப்படுவதில்லை. ஆணே அதற்குக் காரணம். இந்த மன்னனைச் சேர எத்தனை பெண்களோ விரும்பி வந்திருக்கிறார்கள். ஆனால் மன்னனோ, உன்னை அடைய ஆசைப் படுகிறான். உன்னை அணுகி விடாதபடி நெருப்பு வளையம் தடுக்கிறது" என்று சொன்னாள்... எனக்கு அவள் பெரியம்மை தானோ, ஏதோ ஓர் அசாதாரண சக்தி அவளை என்னிடம் கொண்டு வந்து விட்டிருக்கிறதோ என்று தோன்றும்..."
"ஓ அவள் தான் தம்பி வீடணன் மகளா, குழந்தாய்?"
"இல்லை சுவாமி. அவள் இளையவள். திரிசடை மூன்று பின்னல்கள் போட்டு அழகாக முடிந்திருப்பாள். என் அருகில் வளையம் தாண்டி வரும் ஒரே பெண். அந்த அரக்கர் குலப் பெண்கள் எல்லோருமே அழகானவர்கள்..." என்று சொல்லி வரும் போது, தாடகை நினைவு வர, வெண்ணைய்க் கனியை அவள் அவருக்கு உண்ணக் கொடுக்க, அவர், வெண்ணெய்க் கனியைப் பிட்டு அங்கையில் வைக்கிறார்.
உண்வு கொள்ளல் நீளும் பொழுதில், பணிப் பெண்கள் ஆங்காங்கு கொத்த்க் கொத்தாக நிற்பதை அவள் கருத்தில் கொள்ளவில்லை.
"குழந்தாய், பெரியம்மையை நான் கண்டு இந்தச் செய்தியைச் சொன்னால் பேரானந்தமடைவாள்..."
"சுவாமி, நீங்கள் சொல்வீர்கள், குரு சத்திய முனிவர் பற்றி, அவர் தாம் என் தந்தையை அந்த வனத்தில் உழவு செய்ய அழைத்தார், ஏரோட்டுகையில் நான் கிடைத்தேன் என்று. எனக்கு அந்த இடம், அந்த முனிவரின் ஆசிரமம் எல்லாம் பார்க்க வேண்டும் என்று ஆசை. எங்கெங்கோ கானகங்களில் சென்று வாழ்ந்தோம். கடல் கடந்தும் பாவியானேன். ஆனால் எனக்குப் பிறவி கொடுத்த தாய் மண்ணை இன்னமும் தரிசிக்கவில்லையே?..."
அவள் முகம் மின்னுகிறது! அந்த ஒளியில் உணர்ச்சியின் நிழல்கள் ஆடுவதை அவர் கவனிக்கிறாரோ என்று தலை குனிந்து கொள்கிறாள். அவந்திகா முன் வருகிறாள்.
"சுவாமி, இந்த மாதிரியான பருவத்தில் தாய் வீடு செல்ல ஆசைப்படுவது இயல்பு என்று சொல்வார்கள். தேவியின் விருப்பம் நிறைவேற வேண்டும், ஆசி மொழியுங்கள்!..."
பூமகளுக்கு ஆசுவாசமாக இருக்கிறது. அவந்திகாவின் அன்பில் நெகிழ்ந்து போகிறாள்.
"குழந்தாய்! மாமன்னரும், உன் அத்தைமாராகிய தாயரும், இந்த அரண்மனையின் அநுகூலங்களையும் வழிகளையும் விட்டு விட்டு, காட்டுக்கு அனுப்பச் சம்மதிப்பார்களா... சத்திய முனிவர் இன்னும், காட்டு மக்களுக்கு நலம் கருதும் பயன் செய்யும் நல்ல நல்ல வேள்விகளை மேற்கொண்டிருக்கிறார். தாயே, நீ கட்டாயமாக வந்து பார்க்கத்தான் வேண்டும். யாவாலி ஆசிரமத்தின் எல்லையில் அக்காலத்தில் நான் சிறுவனாக இருந்த நாட்களில் பூச்சிக்காடு என்ற வனம் இருந்தது. அங்கு மிகுதியாகப் பட்டுப் பூச்சிகள் கூடு கட்டும். அதை எடுக்க நகரங்களில் இருந்து சாலியர் கூட்டம் கூட்டமாக வருவார்கள். ஆனால், பூச்சிக்காட்டு மக்கள் அக்காலத்தில் 'நரமாமிசம்' கொள்பவர்களாக இருந்தார்கள். பூச்சிக்கூடுகள் அறுந்து அறுந்து காற்றிலே பறந்து எங்கள் எல்லைக்குள்ளும் வரும். இங்கும் ஒரு காலத்தில் எத்தனையோ வன்முறைகள் இருந்தன. அக்கரை முனி குமாரர்கள், அரச குலத்தோர் இங்கு வந்து பசுக்கூட்டங்களைக் கவர்ந்து செல்வர். வியாபாரிகளை மடக்கி இவர்கள் கொலை கொள்ளை என்று ஈடுபடுவார்கள். அதெல்லாம் பழங்கதை. வாழை வனத்தை யானைக் கூட்டம் கூட அழிப்பதில்லை. முறை வைத்துக் கொண்டு உண்டு விட்டுப் போகும். ஒரு மரத்தின் விழலில் வாழும் எத்தனையோ ஜீவராசிகளைப் போல் வாழப் பயிற்றுவிக்கிறார் சத்தியமுனி. பயிர்த்தொழில் பயிற்றுவித்தார். பிறகும் எத்தனையோ சிக்கல்கள். எல்லாம் உனக்கு, என் நிலம், உன் நிலம் என்ற சண்டைகள் வரும். ஆனால் எப்படியும் மக்களை நல்வழிப்படுத்தும் அமைதி முறையில் அவருக்கு அளவில்லாத நம்பிக்கை. மகளே, நான் முன்பே தீர்த்த யாத்திரை என்று கிளம்பி இமயத்தின் அடிவரையிலே தங்கிவிட்டேன்... இப்போது எனக்கு விடை கொடு. நான் சென்று செய்தி சொல்வேன். உன்னையும் மன்னரையும் அழைத்துச் செல்ல வருவேன்... இதை விட எங்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி... பணி என்ன இருக்கிறது?"
"சுவாமி! நீங்கள் இப்படித் தோட்டத்தில் வந்து விட்டு மன்னரைக் காணாமல் மரியாதைக் குரியவரை வரவேற்கும் பண்பை எனக்கு மறுத்து விட்டுப் போகலாமா? அந்நாட்களில் நான் விவரம் புரியாத சிறுமி; தந்தை என்னிடம் தங்களை உள்ளே அவைக்கு அழைத்து வரச் சொல்வார். எனக்கு அந்த அவை நாகரிகம் எதுவும் பிடிக்காது. தங்களுடன் அணிகளைத் தொட்டுப் பார்ப்பதும், கிளிகளுடன் கொஞ்சிப் பேசவும், புறாக்கள் வரும் அழகைப் பார்த்து ரசிக்கவும் கற்றேன். ஒரு சமயம் பெரிய பாம்பைத் தொட்டுத் தடவிக் கொடுக்கச் சொன்னீர்கள். 'மகளே, அச்சம் கூடாது. அதற்கும் அச்சம், உன்னிடம் வராது' என்றீர்கள். தடவிக் கொடுத்தேன். குளிர்ந்திருந்தது. பிறகு கூட ஓடிப் போகாமல் நாம் பேசுவதை, பாடுவதைக் கேட்டுக் கொண்டிருந்தது. எனக்கு அதனால் தானோ போலும் வனவாசம் என்ற அச்சமே இல்லை."
"'உன் நண்பரை உள்ளே அழைத்து வர வேண்டாமா மகளே? உள்ளே அழைத்து உபசரிக்க வேண்டாம்?' என்று தந்தை நம் இருவரையும் கண்டபோது மொழிந்தார். நீங்கள் சிரித்துக் கொண்டே, 'உபசாரமா? இவளே, இந்தக் குழந்தையே என் தாய். இதை விட என்ன உபசாரம்' என்றீர்கள். நினைவு இருக்கிறதா, சுவாமி?"
"குழந்தாய், நான் கற்ற அறிவாளி அல்ல... கவிபாடும் குரவரும் அல்ல. எனக்கு எந்த நாகரிகமும் தெரியாது. ஒரு காட்டு மனிதன். இந்த வாழ்வுப் பிச்சையே எனக்கு ஒரு தாயின் அருளால் வாய்த்தது. அந்த வடிவத்தை இந்தத் தாய் குழந்தை உருவில் உணருகிறேன். எனக்கு விடை கொடு குழந்தாய்?"
"சுவாமி, மன்னர் உங்களைப் பார்த்தால் மகிழ்ச்சி அடைவார். வனவாசத்தில் அவர்கள் பலரைக் கண்டிருக்கிறார்கள். சபரி என்ற மூதாட்டி அவர்களை உபசரித்ததைச் சொல்வார். அப்போது கூடத் தங்களையோ பெரியன்னையையோ காணவில்லை என்று ஆறுதலடைந்தேன். ஏனெனில் எனக்கு நேர்ந்த விபத்தைத் தாங்கள் அறிந்திராதது எனக்கு ஆறுதலாக இருந்தது. ஆனால் இப்போது, என் இளவயதுத் தோழர், என் குரு, என் காப்பாளர் என்று கூறி மகிழ்ச்சி கொள்வேன். திருமணத்தின் போது கூடத் தங்களை மன்னருக்குக் காட்டி மகிழ, வாய்க்கவில்லை."
அவர் அன்பு நிறைந்த விழிகளால் அவளை நோக்கியவாறு வாளா விருக்கிறார்.
அவள் மனப்பரப்பில் தலை தூக்கும் ஆசை இதுதான்.
வனத்துக்கு இவருடன் அனுப்பி வைக்க மாட்டாரா? மூன்று நாட்களாக இங்கே வர நேரமில்லாத மன்னர், இவளை அழைத்துக் கொண்டு அவர்களை எல்லாம் காண வனத்துக்குச் செல்வாரோ?... ஆனால்... இப்போது இப்படிக் கேட்டால்... தாய்வீட்டுக்கு... தாய்வீடுதானே அந்த வனம்?
"குழந்தாய், என்னம்மா தயக்கம்? எனக்கு விடை கொடு! நான் பெரியம்மையிடம் சொல்வேன். குஞ்சுப் பெண் மகாராணியாக வளர்ந்துவிட்டாள், நம்மை அழைத்திருக்கிறாள், போகலாம் என்று கூட்டி வருவேன்..."
"...சுவாமி, மன்னரிடம் அனுமதி பெற்று நான் இப்போதே உங்களுடன் வரலாமல்லவா? மன்னர், அரசாங்க அலுவல்களால் ஓய்வாக நேரம் ஒதுக்கவே முடியாதவராக இருக்கிறார். இன்று உணவு மண்டபத்துக்கும் கூட வரவில்லை." அவர் புன்னகை செய்கிறார்.
"அப்படித்தானம்மா இருக்கும். நாடாளும் மன்னர் என்றால் எத்தனை பொறுப்புகள், கடமைகள்? தவிர, இந்த ஆண்டி, சக்கரவர்த்தித் திருமகளின் தேவியை, தாயாக இருக்கும் திருமகளை நான் அழைத்துச் செல்வதா? மன்னரே, எல்லாப் பரிவாரங்களுடன் தேவியை அழைத்து வந்து அவள் விருப்பத்தைப் பூர்த்தி செய்வார். நாங்கள் எதிர்பார்த்து இருப்போம் விடை கொடு, தாயே?"
அவருடைய கரம், அவள் உச்சியில் பதிகிறது. வாழ்த்தி விடை பெறுகிறார்.
அடுத்த கணம் அவர் திரும்பிச் செல்கிறார். ரீம்... ரீம்... ரீம்... என்ற சுருதி ஒலிக்கிறது. அந்த சுருதியில் எழும் கீதம்... அது என்ன கீதம்? பறவைகளின் இன்னொலி, அணிலின் குரல், வண்டின் ரீங்காரம்... பாம்பின் சீறல்... யானையின் பிளிறல், நாயின் செல்லக் குலைப்பு... எல்லாம்... எல்லாம் புவியின் இசை. பூமகளின் சுவாசமாகிய சுருதியில் எழும் கீதங்கள்... யாரோ குழலூதுகிறார்கள் யார்...?
சூரியனின் வெப்பம் தணிந்த கதிர் அவள் மீது விழுகிறது.
அவந்திகா தோட்டத்துக்குள் ஆடுகளை ஓட்டி வந்து விட்ட பையனை விரட்ட ஓடுகிறாள். அவன் தான் குழல் ஊதியிருப்பான்.
அவன் ஆடுகளை விரட்ட, அவை மே, மே என்று கத்துகின்றன.
அபசுரம்...
"அவந்திகா!"
"தேவி!..."
"வாயில்லாப் பிராணிகள். ஏன் விரட்டி அடிக்கிறீர்? பையன் குழலூதினானா? அவனை அழைத்து வா?"
"அத்துணை பூஞ்செடிகளையும் மேய்ந்து விட்டன, தேவி. பையன் குழலூதுவதில் கவனிக்கவில்லை. வேண்டாம், தேவி. அவன் அப்போதே அஞ்சி ஓடிவிட்டான்!"
அப்போது சாமளி ஓடி வருகிறாள்.
"மூத்த மகாராணியார், தங்களைக் காண ஒரு பட்டு வணிகரை அனுப்பியுள்ளார்!..."
அவள் திரும்புகிறாள். ஆனால் ஏனோ உள்ளம் கனக்கிறது.
------------
அத்தியாயம் 3
பட்டு வணிகர் குட்டையாக, கறுத்த நிறமுடையவராக இருக்கிறார். கூர்த்த நாசியில்லை. முகத்தை நன்கு மழித்துக் கொண்டு, நெற்றியில் செஞ்சந்தனம் தரித்திருக்கிறார். மேனியில் பாலாடை வண்ணத்தில் மெல்லிய அங்கி அணிந்து தார்பாய்ச்சிய ஆடையும் அணிந்துள்ளார். கழுத்தில், உருத்திராட்சமும், தங்கமும் முத்தும் இசைந்த மாலைகளை அணிந்திருக்கிறார். தலைப்பாகையை ஓர் அடிமை வைத்திருக்கிறான்.
"மகாராணிக்கு மங்களம்!" என்று அவளை வணங்குகிறார், அந்த முதிய வணிகர்.
நாலைந்து அடிமைகள், பொதிகளை இறக்குவதற்கு விமலையும் சாமளியும் பாய்களை விரிக்கின்றனர். உயர்ந்த வேலைப்பாடு செய்த பூம்பட்டு மெத்தை இருக்கையை மகாராணிக்கு இடுகின்றனர்.
அவள் அமரும் போது, வணிகருக்கும் ஓர் இருக்கையை இடுகின்றனர். மூட்டைகளைப் பிரித்து, அவர்கள் கடை பரப்புகிறார்கள்.
ஆகா! என்ன நேர்த்தியான நெசவு! மென்மை... பளபளப்பு... கடல் நீலம், கிளிப்பச்சை, அந்தி வானம், மாந்தளிர்... என்று பல பல வண்ணங்கள் கண்களைக் கொள்ளை கொள்கின்றன. ஆடைகளின் சருகுகளில், முந்திகளில், எத்துணை வண்ணக் கோலங்கள்! பூங்கொத்துகள், அன்னபட்சிகள், சங்குகள், கொடியோடும் மலர்ச்செண்டுகள், இவை பட்டு நெசவா, சரிகை இழைகளா? இவற்றை உருவாக்கிய கலைஞர் மானுடர் தாமா?
கண்ணிமைக்கவும் மறந்து அந்தக் கண்காட்சியில் சொக்கி நிற்கின்றனர்.
"இவ்வளவு நேர்த்தியாக நெய்யும் சாலியர், வேதபுரிக்காரர்களா? காசியா?..."
அவந்திகா தான் அந்த பிரமிப்பைச் சலனப்படுத்துகிறாள்.
"இல்லை தாயே, காமரூபம். நாங்கள் காடுகளில் இருந்து பட்டுக் கூடுகள் கொண்டு வருவதில்லை. பட்டுப் பண்ணையே வைத்திருக்கிறோம். நேர்த்தியான பட்டு உற்பத்தி செய்யும் பண்ணை எங்களுடையது. அற்புதமான கலைஞர்கள் எங்கள் பண்ணையில் இருக்கிறார்கள். பொற் சரிகை காசியில் இருந்து தருவிப்போம். வேதபுரிச் சாலியர் தொழிலில் பிரசித்தம். நேர்த்தியான தறிகளை, இப்போது மிதுனபுரித் தொழிலாளர் உருவாக்கியுள்ளனர். இழைகளில் புகுந்து, செல்லும் குருவி கண்களுக்குப் பிரமிப்பூட்டும். மூலிகைகளில் இருந்து சாயம் தயாரிப்போம். தேவி, இந்த விலை மதிப்பற்ற ஆடைகள், மகாராணிக்கே காணிக்கையாகக் கொண்டு வந்துள்ளோம்..." பூமகள் அசையாமல் ஏதோ கனவுக் காட்சியில் மிதக்கும் உணர்வுடன் அமர்ந்திருக்கிறாள்.
'இந்த இளம் பச்சை ஆடை, பெரியம்மைக்கு என் பரிசாக இருக்கும். அவள் உயரம், நரைக் கூந்தல், அந்த கம்பீரம்... இதை அவள் மீது நான் சென்று போர்த்தும் போது... என்ன செய்வார்? அன்று பிஞ்சுப் பருவத்தில் அவளை அணைத்து முத்தமிட்டு மகிழ்வது போல் மகிழ்வாரோ?' அந்த மென்மையான தொட்டுணர்வை இப்போதே அநுபவித்து விட்டாற் போன்று குதுகுதுக்கிறது இதயம்...
"கண்ணே, நீ ஓர் அரசகுமாரனை மணந்து செல்லும் போது, இந்தப் பெரியம்மையை நினைப்பாயோ? தேரில் உன் பதியுடன் நீ தலைகுனிந்து நாணம் காக்கும் போது, இந்த அம்மையை நினைவு கொள்வாயோ?" என்று அந்த அம்மையின் மார்பில் முகம் பதிக்காத குறுகுறுப்பு அவளை வதை செய்கிறது. இதற்குப் பரிகாரம் தேட வேண்டும். இந்த நேரத்தில், அவளைத் தவிர யாரே தாய் போல் இருக்க முடியும்?
எப்படியும் நந்த முனி சுவாமி, அந்த அம்மையை அழைத்து வருவார். அப்போது, இத்தனை வரிசைகளுடன் அவளை வரவேற்பேன். இந்த அரண்மனை அவருக்கு உரித்தாகும். பேரப்பிள்ளையைக் கண்டு மகிழ்வார்; என் சிறு உள்ளம் மகிழப் பாடிய பாடல்களை அவர்களுக்குப் பாடுவார்!
அந்த ஆடையைத் தடவிப் பார்த்துக் கொண்டே கற்பனையில் ஆழ்ந்து விட்ட மகாராணியின் சிந்தையை, அவந்திகா தான் நினைவுலகுக்கு இழுத்து வருகிறாள்.
"தேவி, இந்த மாந்துளிர் வண்ணமும் கடல் பச்சை நிறமும் உங்களுக்கு மிகவும் இசைவாக இருக்கும்..."
நிமிர்ந்து பார்க்கும் பூமகளின் பார்வையில் ஜலஜை படுகிறாள். எடுப்பான சிவப்பு, பூனைக் கண் விழிகள், செம்பட்டைச் சுருள் முடி. இவள் மூத்த மகாராணியின் மாளிகைப் பணிப் பெண். மகாராணி இவளை மன்னருக்குக் குற்றேவல் செய்ய அனுப்பி வைப்பதாக சாமளியும், விமலையும் பேசிக் கொண்டது நினைவுக்கு வருகிறது.
"ஜலஜை மன்னர் எங்கு இருக்கிறார்?"
இப்படி ஒரு பணிப்பெண்ணிடம் கேட்க நாணமாக இருக்கிறது. அப்போது எங்கிருந்தோ தத்தம்மா பறந்து வந்து அவள் தோள்களில் அமருகிறது.
"மகாராணி... மகாராணி மங்களம்..."
அவள் அதைக் கையில் பற்றி முத்தமிடுகிறாள்.
"இங்கே பட்டாடை கடை விரித்திருக்கிறது, தத்தம்மா. உனக்குப் பட்டும் வேண்டாம். ஆடையும் வேண்டாம். நீ இங்கே எந்தக் குறும்பும் செய்யாமல் பறந்து போய்விட்டு அப்புறமாக வா! இல்லாவிட்டால் அவந்திகா உன்னைக் கூண்டில் பிடித்துப் போட்டு விடுவாள்?"
"அவந்திகா, அவந்திகா!" என்று அவள் தோள்களில் குதித்து ஒரு கொத்தலைச் செல்லமாகப் பரிசளித்து விட்டுப் பறந்து போகிறது, தத்தம்மா.
"அபூர்வமாக இருக்கிறது, இந்தக் கிளி பார்த்தீர்களா? மகாராணியின் வளர்ப்புக் கிளியா? இதன் உடல் வண்ணம் பஞ்சவர்ணக் கிளியை விட நேர்த்தியானது. ஒரு மாதிரி இள நீலம் தெரியும் பசுமை. இந்த ஆடையின் வண்ணம் பாருங்கள்!"
"வணிகரே, இதே போல் எனக்கு இன்னொரு ஆடை நெய்து வாருங்கள்..."
"நிச்சயமாகத் தருவோம். ஆனால் ஓராண்டாகும். ஏனெனில் இந்தப் பட்டுக்கூடு, இயற்கையிலேயே இத்தகைய நிறம் கொண்டிருக்கும். எப்போதும் கிடைக்காது. அபூர்வமாகவே கிடைக்கும். அதனாலேயே விலை மதிப்பற்றது. மகாராணி கேட்பதால் நிச்சயமாக அடுத்த பருவத்தில் கொண்டு வருவோம்..."
வேறு யாரும் எதுவும் கூறு முன், ஜலஜை, "வணிகரே, மகாராணி, இந்த நிலையில் கேட்கும் போது, அடுத்த பருவம் என்று சொல்கிறீரே? ராணி மாதா என்ன சொல்லி அனுப்பி வைத்தார்? இவை அனைத்தும் எம் பரிசாகக் கொடுத்து விட்டு இன்னும் என்ன விரும்பினாலும் கேட்டு வாரும் என்று தானே சொன்னார்? சக்கரவர்த்தியின் தேவியாருடன் பேசுவதான நினைவில் ஆம் - சொல்ல வேண்டாமா?" வணிகரின் முகம் இறுகிப் போகிறது.
பூமகள் துணுக்குறுகிறாள். இந்தப் பணிப் பெண் எதனால் இவ்வாறு பேசுகிறாள்? அவர் கூறுவதில் என்ன தவறு?
"சரி வணிகரே, உங்களுக்கு மிகவும் நன்றி. அற்புதமான கலைஞரின் படைப்புகள் இவை. தெய்வாம்சம் பொருந்திய விரல்களால் மட்டுமே இப்படிப் படைக்க முடியும். நான் மிகவும் நேசிக்கும் ஓர் அன்னைக்கு இது போல் ஓர் ஆடை வேண்டுமென்று விரும்புகிறேன். உரிய பருவத்தில் நெய்து கொண்டு வந்தாலே போதும். அந்தக் கலைஞர்களை நான் பாராட்டுகிறேன்..."
"அவந்திகா, வணிகரிடம் தனியாக ஓர் ஆயிரம் பொன் பரிசு கொடுக்கச் சொன்னதாகப் பெற்றுக் கொடுப்பாய்!" என்று முடிக்கிறாள். அவந்திகா ஜலஜையை உறுத்துப் பார்த்துவிட்டுச் செல்கிறாள்.
பணிப்பெண்கள் குசுகுசுவென்று பேசிக் கொண்டு செல்ல வணிகர் விடை பெறுகிறார். அடிமைகள் ஆடைகளை மீண்டும் அடுக்க, விமலை அவற்றை உள்ளறையில் உள்ள மரப்பெட்டிகளில், பூந்தாதுப் பொடிகளின் நறுமணம் கமழும் அறைகளில் வைக்கிறார்கள்.
"ஜலஜை, மன்னர் ராணி மாதாவின் மாளிகையில் இருக்கிறாரா?"
"மாளிகையின் கீழ்ப்புறத்துத் தாழ்வரையில் அமர்ந்து அமைச்சருடன் பேசிக் கொண்டிருக்கிறார். அவர்கள் இருவருக்கும் அங்குதான் நான் உணவு கொண்டு போனேன்..."
"சரி, நீ போகலாம்..."
"மகாராணிக்கு மங்களம்..."
பட்டாடைகளைப் பத்திரமாக வைத்துவிட்டுப் பணியாள அடிமைகள் சென்று விட்டனர். விமலையும் சாமளியும் மட்டுமே இருக்கின்றனர். விமலை ஏதோ ஒரு விளக்கைப் பளபளப்பாக்கிக் கொண்டிருக்கிறாள். அது நாய்த்தோல் என்று கூறினார்கள். நாய்... வேட்டைக்கு மனிதருக்குத் துணையாகும் நாய். நன்றி மறவாத பிராணி. காட்டு நாய் கூட வீட்டு நாயாக மாறி இருப்பதை அவள் அநுபவித்திருக்கிறாள். வாலை ஆட்டி வரும், உணவு வகைகளைப் போடுவாள். காகம், நாய், இரண்டுமே பங்கு போட்டுக் கொள்ளும். அத்தகைய நாயின் தோல், பளிங்கையும், பொன்னையும் மினுமினுப்பாக்குகிறது! வேடுவப் பெண்கள் இவ்வாறு தோல்களை உரித்துப் பதமாக்கிக் கொண்டு வருவார்கள். அடிமைப் பெண்கள் இது போன்ற பணிகளைச் செய்து, முனிவருக்கும் வசதியாக உடுக்க, இருக்க, படுக்க, தோல்கள் தயாரிப்பார்கள்...
எதை எதையோ மனம் நினைக்கிறது. நந்தமுனி வந்து உள்ளே முகிழ்ந்திருந்த ஆசைக்கனலுக்கு உயிரூட்டி விட்டார்...
"தேவி?..."
அவந்திகா இவள் முகத்தைப் பார்த்துத் துணுக்குற்றாற் போல் அழைக்கிறாள். கண்ணிதழ்கள் ஈரம் கோத்திருக்கின்றன.
"தேவி, என்ன இது?... மன்னர் வருவார்." ஆதரவாக அவள் பூம்பட்டாடை நுனி கொண்டே கண்ணிதழ்களை ஒத்தி எடுக்கிறாள்.
"அவந்திகா, அந்த ஜலஜை, யவன மகளோ?"
"எந்த அடிமை மகளோ? சிறுக்கி. பூனைக் கண்காரிகளே கபடர்கள். மனசுக்குள் பெரிய அழகி என்ற கர்வம். மூத்த மகாராணிக்கும் சிறிதும் இங்கிதம் தெரியவில்லை. இவளைத் துணி வெளுக்க, பாண்டம் சுத்தம் செய்ய அனுப்ப வேண்டியதுதானே? இல்லையேல் சமையற்கட்டில் அறுக்கவோ, தேய்க்கவோ, இடிக்கவோ, புடைக்கவோ வைத்துக் கொள்ளட்டும். இளைய மகாராணிக்கு அவளைக் கட்டோடு பிடிக்காது. மன்னருக்கும் அமைச்சருக்கும் இவளிடம் உணவு கொடுத்து அனுப்புகிறார். அத்துடனா? எச்சிற்கலம், தாம்பூலத்தட்டு எல்லாம் இவள் கொண்டு போகிறாள். கவரி வீசவும், எச்சிற்கலம் ஏந்தவும் இவள் அருகில் நிற்க வேண்டுமா? மன்னரைப் பார்த்தால் ஒரு சிரிப்பு; நெளிப்பு; ஒய்யாரம். படியேறி வருகையில் இவள் பாதம் கழுவ முன்வருவது சரியாகவா இருக்கிறது. இந்த மன்னர் சத்திய வாக்கைக் கடைப்பிடிப்பவரல்லவா? அவரிடம் சென்று சீண்டினால், அவளல்லவோ துரும்பாகப் பற்றி எரிவாள்? இவரென்ன அந்தப்புரத்தில் சிறைக்கூடம் கட்டிப் பட்சிகளை சிறகொடித்து அடைத்திருக்கிறாரா?... சக்கரவர்த்தி மகாராஜாவின் சிறைக்கூடத்தையே இளைய மகாராணி திறந்து, அந்தச் சுவர்களை இடித்து, விடுதலை செய்து விட்டாரே? இந்த ஜலஜைக்கு முதலில் ஒரு சம்பந்தக்காரன் குதிரைக்காரன் வந்தான். அவன் குதிரை தள்ளியதில் இடுப்பொடிந்து மாண்டான். இப்போது இவளுக்கு ஒரு வயசுக்குழந்தை இருக்கிறது. சலவைக்காரர் சந்திரிதான் புருசன். இவள் அவனோடு துறைக்குப் போக வேண்டியவள் தானே? தாய் வீட்டில் என்ன வேலை?... மகாராணி இதையெல்லாம் கவனிக்க வேண்டாமா?..."
அவந்திகா பேசிக் கொண்டே போகிறாள். அந்த வார்த்தைகளுள் பொதிந்த காரம் நெருப்புப் பொறிகள் போல் மென்மையான உணர்வில் பதிகின்றன. "இல்லை, தேவி. நான் தான் கேட்கிறேன். மன்னருக்குப் பணி செய்ய, எதற்காக இத்தகைய இளசுகளை அனுப்ப வேண்டும்? என் போன்ற மூத்த பெண்கள் இல்லையா? பல் விழுந்தவள், சதை சுருங்கியவள், முடி நரைத்தவள் என்றால், ஒரு மகனைப் போல் வாஞ்சையுடன் பழகுவாள், பணி செய்வாள். தோல் சுருங்கிய காலத்தில் ஒரு பிடிப்பு என்று பக்தியுடன் எல்லாம் செய்வாள்..."
சாதாரணமாக இப்படி அவந்திகா ஏதேனும் பேசினால் பூமகளுக்குச் சிரிப்பு வந்து விடும். நேராக விஷயத்துக்கு வராமல், தொடாமல், பொருளை உணர்த்திவிடும் தனித்தன்மை உண்டு அவளிடம்.
"இந்த ஜலஜையின் தாயார் கணிகை மகளா?"
"யார் கண்டார்கள்? எல்லாம் ஒரு பொழுது மோகம். அது தீர்ந்ததும் சிறகுகள் முறியும். இந்த மோகம் அரசனுக்கில்லாமல் ஆண்டிக்கு வந்து ஒரு பிள்ளையைப் பெற்றிருந்தால் காட்டில் பிள்ளையுடன் அலைந்து கொண்டிருப்பாள். ஆண்டியே மன்னன் நிழலை அண்டுபவன் ஆயிற்றே! பிள்ளையானால் உபநயனம் இல்லாமல் குற்றேவல் செய்யும். பெண்ணானால் ஓர் அடிமை வருக்கத்தைப் பெருக்கும். காட்டுக்கு வேட்டைக்கு வரும் அரசன் எவனேனும் முகர்ந்து பார்த்து, கருப்பையை நிரப்புவான். தேவி, இந்தச் சனியன் பிடித்தவர்கள் பேச்சு இப்போது எதற்கு? நானே மன்னரைப் பார்த்தேன்... உங்களைப் பற்றி விசாரித்தார். 'பட்டாடைகள் நன்றாக இருக்கின்றனவா? உன் தேவியை நீ இரு கண்களைப் போல் இந்த நேரத்தில் பார்த்துக் கொள்ள வேண்டும்! என்ன விரும்பினாலும் இச்சமயம் கொடுக்கக் கடமைப்பட்டவன். நீ வந்து என்னிடம் தெரிவிக்க வேண்டும். தேவி எக்காரணம் கொண்டும் இந்தச் சமயத்தில் வாட்டமுறலாகாது. கோசல நாட்டின் இந்தச் சூரிய குலத்தில் கொழுந்தைத் தாங்கி இருக்கிறாள். அவளை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும்!' என்று சொன்னார்."
பூமகள் அவந்திகாவை உறுத்துப் பார்க்கிறாள்.
'இவளுக்குத்தான் எத்தனை அன்பு? உண்மையாகவே மன்னர் இதெல்லாம் சொன்னாரா? நிசமா? நம்பலாமா?'
"அவந்திகா! நீ பார்க்கும் போதும் ராஜாங்க ஆலோசனை மண்டபத்தில்தான் இருந்தாரா? இன்னும் யாரெல்லாம் இருந்தார்கள்? இளையவர்கள் இருந்தார்களா?"
"ஆமாம். இளையவர்கள் இல்லை. இளைய மகாராணியிடம் மன்னரை வரச் சொல்லிக் கேட்டு விட்டு வந்தேன். தேவி... நீங்கள் என் மடியில் வளர்ந்த குழந்தை. நீங்கள் மனம் சஞ்சலப்பட என்னால் பார்க்க முடியுமா?..." அவந்திக்காவுக்குக் குரல் கரகரக்கிறது.
பூமையின் நெஞ்சம் விம்மித் தணிகிறது.
அவந்திகாவின் மார்பில் தலைசாய்த்துக் கொண்டு உணர்ச்சிகளை அடக்கிக் கொள்கிறாள்.
"தேவி, எனக்கு என்ன பயம் தெரியுமா? காட்டிலே அரக்கர் தங்கை வந்து சீண்டிய போது அவள் மூக்கையும் காதையும் இளையவர் அரிந்தார். அதனாலேயே தேவியை அரக்கன் பழிவாங்கச் சிறையில் இருத்தக் கொண்டு போனான். அது போல் இவள் ஏதேனும் தெரியாமல் விட்டில் பூச்சி போல் நெருங்க, அதனால் இந்தச் சமயத்தில் ஏதேனும் அவம் நேர்ந்து விடக் கூடாதல்லவா?... தேவி, இது குறித்து மகாராணியிடம் நான் எச்சரிக்கை செய்ய முடியாது. இளைய மகாராணி, அன்பானவர். எங்களை மனிதர்களாய் மதிக்கிறவர். மற்ற இருவரும் அப்படி இல்லை. அவர்களுக்கு நான் வெறும் அடிமைப் பெண். பூமகளுடன் வந்த அடிமை. என்னால் எதையும் சொல்ல முடியாது; செய்ய முடியாது. தாங்கள் இது குறித்து, அன்பாகப் பழகும் இளைய மகாராணியிடம் எடுத்துச் சொல்லலாம்..."
அவள் முடியை அன்புடன் கோதிக் கொண்டே அவந்திகா பேசுவது, பூமகளின் இதயத்துள்ளே ஒளிந்திருக்கும் அபசுரத்தை மெல்ல மீட்டி விட்டாற் போலிருக்கிறது. யாழின் நாண் தளர்ந்து விட்டால் இப்படித்தான் ஒலிக்கும். நாண் தளர்ந்து கிடக்கிறது. அதற்கு எப்படி முறுக்கேற்றுவது?
அவள் பதி, ... சத்திய வாக்கை மீறாதவர் தாமே?
பத்து மாதங்கள் அவள் சருகும் நீரும் காற்றும் உணவாகக் கொண்டு உயிர் தரித்திருந்தாள். அந்தப் பத்து மாதங்களும் அக்கினி வளையம் கடந்து வந்திராத அரக்கர் கோனின் புகழும் குறைந்தது அல்ல! என்றாலும் அவள் அக்கினி குண்டத்தில் இறங்கி வெளிவந்தாள். ஆனால்... அவள் பதி... அவர் அவளைப் போல் சிறையிருந்தாரா? வேடப் பெண்கள், அசுர குலப் பெண்கள், கிஷ்கிந்தையின் வானர குலப் பெண்கள் யாருமே அவர் மீது மையல் கொண்டிருக்கவில்லையா? அரக்கர் கோன் நெஞ்சில் இவள் புகுந்தது, இவள் குற்றம் என்றால்...? ஒரு விம்மல் உடைந்து கண்ணீர் கொப்புளிக்கிறது.
அவந்திகா குலுங்குகிறாள்.
"தேவி... தேவி... என்ன இது?..."
கண்ணீரைத் துடைக்கிறாள். ஆறுதல் செய்கிறாள்.
"சாமளி, கொஞ்சம் கனிச்சாறு கொண்டு வாம்மா. பலவீனம், சரியாக உணவருந்தவில்லை..."
விமலை உறுத்துப் பார்க்கையில் சாமளி ஓடுகிறாள்.
"தேவி, வந்து கட்டிலில் ஆறுதலாக இளைப்பாருங்கள்..."
அவந்திகா அவளை மெல்ல அழைத்துச் சென்று கட்டிலில் அமர்த்துகிறாள். கனிச்சாறு வருகிறது. பொற்கிண்ணத்தில் ஊற்றிக் கொடுக்கிறாள்.
"இது மதுவா?..."
"இல்லை மகளே, இந்த மாளிகையில் மது இல்லை. இது புளிப்புக் கனியின் சாறு. கரும்பு வெல்லம் கலந்தது. இஞ்சி சேர்த்தது; பருகுங்கள்; ஆரோக்கியமாக இருக்கும்..."
ஒரு வாய் வாங்கி அருந்துகிறாள்.
"அவந்திகா, ஒரு பேச்சுக்குச் சொல்கிறேன். என்னை மாசு பற்றியிருக்குமோ என்று சந்தேகப்பட்டாரே, அதுபோல்... நானும் படலாம் அல்லவா? ஏன் எனில், அரசர்கள், க்ஷத்திரியர்கள் பல பெண்களைத் தொட்டுக் கன்னிமை குலைக்கலாம். இது மன்னர் குலத்துக்குப் பெருமையும் கூட! அவர் தந்தையைப் போல் இருக்கமாட்டார், இல்லை என்று நம்புகிறோம். ஆனாலும் விருப்பம் தெரிவிக்காத பெண்களைக் குலைத்து ஒதுக்குவதும், விருப்பம் தெரிவித்த பெண்களை மானபங்கம் செய்வதும் ஏறக்குறைய ஒரே மாதிரிதானே?..."
அவந்திகா உறுத்துப் பார்க்கிறாள்.
"நீங்கள் என்ன சொல்கிறீர்கள் தேவி?... எப்படி இருந்தாலும், அரக்கர் குலத்தில் பிறந்தாலும், அந்தண குலத்தில் பிறந்தாலும், மன்னர் குலத்தில் பிறந்தாலும் பெண் ஒரு போகத்துக்குரிய பண்டம் தானே? ஆண்கள் முகர்ந்து பார்ப்பதில்தான் பெண் நிறைவடைகிறாள். ஒரு தாயாகும் பேறு கிடைக்கிறது. கணிகையரும், விலை மகளிரும் ஆடவர்களின் இச்சைகளை நிறைவேற்றுவதற்காகவே, பல வித்தைகளைக் கற்றிருந்தாலும், ஒரு மகவு தன் மார்பில் பாலருந்தித் தன்னைப் பிறந்த நேரத்தின் பயனை அநுபவிக்கச் செய்யும் பேறில் அல்லவோ வாழ்கிறார்கள்?... அந்தப்புரங்களில் ஒழுங்கற்ற நாற்றுகள் என்றால், கணிகையர், விலைமகளிர், கரும்பைப் பிழிந்து உறிஞ்சிச் சக்கையாக எறிவது போல் அல்லவோ துப்பப் படுகின்றனர்? மகளே, வேதபுரியின் கணிகையர் வீதிகளின் முகப்பில், சத்திரங்களில் அப்படித் துப்பப் பெற்ற மூதாட்டிகளை நான் இளம் பருவத்தில் பார்த்ததுண்டு. கணிகை வீட்டு அடிமையாக என்னை விலை கொடுத்து வாங்க எவரும் வரவில்லை. என் தாய், என்னை அரண்மனைப் பணிக்கு விற்றாள்..."
அவந்திகாவின் கண்ணீரைப் பூமகள் துடைக்கிறாள்.
"தாயே, இந்தத் துன்பமான கதைகள் வேண்டாம்... விமலையைக் கூப்பிடு. அவள் ஏதேனும் பாட்டுப் பாடட்டும்..."
பூமகள் திரும்பிக் கண்களை மூடிக் கொள்கிறாள். மாலைப் பொழுது இறங்கும் நேரம். யார் யாழ் மீட்டுகிறார்கள் என்று தெரியவில்லை.
கூவிடுவாய் - பூங்குயிலே...
கூவிடுவாய் - கூவிடுவாய்!
தேன்சுனையில் திளைத்தனையோ,
தீயின் வெம்மை சகித்தனையோ!
வானுலகின் இனிமையெல்லாம்
வாரி வாரிப் பருகினையோ?
கூவிடுவாய்... பூங்குயிலே!
கூவிடுவாய்!
அன்புக்கடல் கடைந்து வந்த
அமுதம் நிரப்பி வந்தனையோ?
என்புருகும் சோகமெல்லாம்
இழைத்து ஒலி நீட்டுவையோ?
எங்கோ ஓர் உலகுக்கு அந்தச் சோகம் அவளைக் கொண்டு செல்கிறது. கண்களை மெள்ள விரித்துப் பார்க்கிறாள்... யார் யாழிசைத்துப் பாடுகிறார்கள்?
யாருமில்லை. திரைச்சீலைகள் வெளி உலகை மறைக்கும் வண்ணம் இழுத்து விடப்பட்டிருக்கின்றன...
அவள் கண்களை உள்ளங்கைகளால் ஒத்திக் கொண்டு மீண்டும் பார்க்கிறாள். கட்டிலைச் சுற்றிய திரைச்சீலைகளை ஒதுக்குகிறாள்.
மாடத்தில் ஓர் அகல் விளக்கு எரிகிறது.
அவள் அருந்திய கனிச்சாறு கீழே சிந்திய இடத்தில் எறும்புகள் தெரிகின்றன.
சிறை மீட்டு மகாராணியாகக் கொண்டு வந்து இங்கே சிறைப்படுத்தி விட்டார் போன்று மனம் ஏன் பேதலிக்கிறது?
இவளுக்கு இப்போது என்ன குறை? மன்னரின் மீது இவளுக்கு அவநம்பிக்கையா? ஏதோ ஓர் உண்மை சிக்கென்று பிடிபட எட்டாமல் வழுவிப் போவது போல் தோன்றுகிறது.
'அப்படி என்ன ராஜாங்க காரியம்? தலை போகும் காரியம்? இளையவர்கள் இப்படி இருக்கிறார்களா? காட்டில் இருந்த போது மட்டும் என்ன நிம்மதி? எப்போதும் வில்லும் அம்புமாகத் திரிந்தார்கள். அதனால்தானே பகையும் விரோதங்களும் கொலைகளும் நிகழ்ந்தன! ஜனஸ்தானக் காட்டில் அரக்கர்கள் இருந்தால் இவர்களுக்கென்ன? அவர்களும் காட்டிலே எதையேனும் கொன்று தின்று வாழ்ந்துவிட்டுப் போகிறார்கள். மகரிஷிகள் சாபம் இட்டு விடுவார்கள் என்று இந்த மன்னர்கள் நடுநடுங்குவதாம்! இவர்கள் எதற்காக ஆயிரக்கணக்கில் உயிர் வதை செய்யும் யாகங்கள் நடத்த வேண்டும்?'
கேள்விகள் மேலும் மேலும் எழ, கிணறு ஆழம் காண முடியாமல் போகிறது. உள்ளே நிச்சயம் தரை இருக்கும். அதைத் தொட்டுக் காட்டும் போது இதயமே குத்துண்டாற் போல் நோகும்.
சக்கரவர்த்தி, இளைய குமாரர்களைத் தாய் மாமன் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, மூத்தவள் பெற்ற பிள்ளைக்குப் பட்டாபிஷேகம் செய்ய நிச்சயித்தது நியாயமா?
நியாயமில்லைதான். அதுவும் அந்த மந்தரைப் பாட்டிக்கு என்ன விரோதம்?... அவந்திகாவைப் போல் ராணி மாதாவை எடுத்து வளர்த்தவள். அக்காலத்தில் அவர் தந்தை கேகய மன்னர், ஏதோ ஓர் அற்ப காரணத்துக்கா, குழந்தைகளின் தாயைக் காட்டில் விட்டு விட்டு வந்தாராம். என்ன கொடுமை?
அரசகுமாரியைத் தாய் போல் அன்பைப் பொழிந்து வளர்த்த அம்மை வயதான காலத்தில் இடுப்பு வளையக் கூன் விழுந்த கூனியானாள். அவளைப் பூமகள் பார்த்திருக்கிறாள். தலை தரையைத் தொட்டுவிடுமோ என்ற அளவில் ஒரு குச்சியை ஊன்றிக் கொண்டு எழும்பி நடப்பாள்.
அவளுக்கு இந்த மூத்த இளவரசர் மீது என்ன விரோதம்?
சின்னஞ்சிறு இளவரசர், அந்தக் கூனை முதுகில் வில் மண் உருண்டை வைத்து அடிப்பாராம். கூனல் நிமிரவில்லை. ஆனால் வலி... அது நல்ல எண்ணத்துடன் எய்யப்பட்ட உருண்டை அல்லவே? கேலியில் விளைந்த விளையாட்டல்லவோ? வயசு இரண்டு தலை முறை மூத்திருந்தாலும், அடிமை - பணிக்கிழவி. அவளுக்கு முதுகு மட்டும் வலிக்கவில்லை. நெஞ்சும் வலித்திருக்கும். மன்னரிடம் வரம் கேட்கச் சொல்லிப் பழி தீர்த்துக் கொண்டாள்...
அவந்திகாவை, இப்போது அவளுக்குப் பிறக்கப் போகும் பிள்ளை இப்படி உதாசீனம் செய்தால்...
அவள் கை தன்னையறியாமல் வயிற்றைத் தொட்டுப் பார்க்கிறது.
...ஓ க்ஷத்திரிய வித்து... வில் அம்புடன் பிறக்குமோ?... குப்பென்று வேர்க்கிறது.
"தேவி!... என்ன இது? நீங்கள் உறங்கவில்லையா? ஏனிப்படி முகமெல்லாம் வேர்த்திருக்கிறது? யாரடி, விமலை? தீபத்தில் எண்ணெய் இல்லை... பார்க்க வேண்டாமா?"
அவந்திகாவின் தொட்டுணர்வில் கசிந்து போகிறாள்.
அவள் கையை மெலிந்த விரல்களால் முகத்தில் தடவிக் கொள்கிறாள்.
"அவந்திகா, உன்னை நான் எப்போதும் விடமாட்டேன்! நீ என் தாய்!"
-----------
அத்தியாயம் 4
"தேவி, மன்னர் இன்று மாலை செண்பகக் குளக்கரையில் தோட்டத்துக்கு வருகிறாராம். சேதி சொல்லச் சொன்னார்..."
அவந்திகா பூமகளின் கூந்தலில் தைலம் பூசிக் கொண்டிருக்கிறாள். செய்தி கொண்டு வந்தவள் சலவைக்காரனின் மகள், கனகாவோ ஏதோ பெயர். கறுப்பிதான். அழகான நீண்ட கண்கள். பருத்த தனங்கள், தோள்கள். இவள் போட்டுக் கொண்டிருக்கும் மணிமாலைகள் மேடேறி இறங்குவதை உறுத்துப் பார்க்கும் அவந்திகா, "மன்னர் உன்னிடம் சொல்லி அனுப்பினாரா? மன்னருக்குக் கவரி போடச் சென்றாயா?" என்று சொற்களைக் கடித்துத் துப்புகிறாள்.
"...ஐயோ இல்லையம்மா, பெரிய மகாராணியார் சொல்லி அனுப்பினார். நான் ஏன் அங்கெல்லாம் போகிறேன்?..."
"சரி போ..."
பூமகள் அவள் செல்லும் திசையையே நோக்குகிறாள்.
'மன்னருக்கு, மனைவியை வந்து நேரில் மாளிகையில் பார்க்க முடியவில்லையா? இந்த ஏற்பாடு மகாராணியால் செய்யப்பட்டதா? மன்னருக்குச் சுயசிந்தனை இல்லையா? சடாமுடி குலகுருவோ, வேறு யாரோ சொன்னால் மட்டுமே கைபிடித்த மனையாளைப் பார்க்க - செண்பகத் தோட்டத்துக்கு வர வேண்டுமா?'
இவள் மனசுக்குள் கேட்டுக் கொண்ட வினாக்களுக்கு எதிரொலியே போல், அவந்திகா, "மகாராணி மாதா, மகன் இந்த மாளிகைக்கு வரவேண்டாம் என்று நினைக்கிறாரா?" என்று கேட்டுக் கொண்டே சிக்கெடுத்த முடியை விரலில் சுற்றிக் கொள்கிறாள்.
"அதில்லை, செண்பகத் தோட்டம், குளக்கரை, அதன் மீன்கள், அன்னப்பறவைகள், அவருக்கு மனங்கவர்ந்த இடங்கள். அதனால் நேராக வந்து அங்கே மகிழ்ந்திருக்கலாம் என்று எண்ணுவாராக இருக்கும். எது எப்படியானாலும் நாம் செய்குளத்துக்குப் போகிறோம். அங்குதான் நீராடல். அங்கே இப்போது நீர் வெதவெதப்பாக உடலுக்கு இதமாக இருக்கும். அவந்திகா, வேதபுரி பக்கம் இப்படி வெந்நீர்க் குளங்கள் யட்சவனத்தில் பக்கத்தில் பக்கத்தில் வெந்நீரூற்றும், குளிரருவியும் இருக்கும் அதிசயம் அற்புதம்..."
"இங்கும் கோமுகி ஊற்று இருக்கிறதாம். மூன்று ஊற்றுகளில் நீராட வசதி இருக்குமாம்."
"அங்கு ஒரு நாள் எல்லோருமாகப் போகலாம். ஊர்மிளா தேவி, சுதாதேவி, ராணி மாதாக்கள் எல்லோருமே போகலாம். இந்த நேரத்தில் தேவை எதுவானாலும் நிறைவேற்ற வேண்டும்..."
"அவந்திகா, என்ன தான் உயர்வுகள் இங்கு இருந்தாலும் நம் வேதபுரி மாளிகையின் தாமரைக்குளம் போல் இங்கு இல்லை..."
"அது எனக்குத் தெரிந்து, மன்னர் வெட்டி நேர்த்தியாகக் கட்டிய குளம். பளிங்கு போல் தரையும் கொத்துக் கொத்தாக வண்ண வண்ணங்களாக மீன்களும் தெரியும். இக்குளத்தின் ஓரங்களில் தாமரை மலர்கள் நிறைந்து இருக்கும். செந்தாமரை, வெண்தாமரை மாறி மாறி மலர்ந்திருக்கும்... பிறகு, நீங்கள் வந்த பிறகு, குளத்தைச் சுற்றிச் செவ்வரளி கொத்துக் கொத்தாய் பூத்துக் குலுங்கும். உங்களுக்கு நினைவிருக்குமே?"
"நினைவா?..."
பூமகள் நினைவில் ஆழ்ந்து போகிறாள். நந்தமுனியின் விரலைப் பற்றிக் கொண்டு அவள் நடந்த காலம்... கால்களைப் பளிங்கு நீரில் தொங்கப் போட்டுக் கொண்டு அமர்ந்திருப்பாள். நந்தமுனி கல் படியில் உட்கார்ந்து ஒற்றை நாண் மீட்டிப் பாடுவார்.
"நீரும் நிலமும்
வானும் கானும்
கிளியும் கீரியும்
குயிலும் மயிலும்
எல்லாம் எல்லாம் நான்... நான்...
எல்லாம் நானா?"
"ஆமாம். நினைத்துப் பார் குழந்தை? மீன் உன் காலை முத்தமிட்டுப் பார்க்கிறதே ஏன்? நீ தண்ணீரைத் தொட்டுப் பார்க்கிறாயே, ஏன்? வெயிலில் கை வைத்துப் பார்க்கிறாயே, ஏன்? எல்லாவற்றிலும் உயிர்த்துடிப்பு இருக்கிறது." "இந்தக் கல்லில்?" என்று படித்துறைக் கல்லைக் காட்டுவாள்.
"ஆம் இருக்கிறது. நீ செவிகளை வைத்துப் பார் தெரியும்..."
"நந்த சாமி, என் அம்மா பூமிக்கு என்னைத் தெரியுமோ இப்போது?"
"ஓ! நிச்சயமாகத் தெரியும்!..."
"பின் ஏன் என் அம்மா, ஊர்மி, சுதா இவர்களுடைய அம்மாவைப் போல் முகம், முடி, உடம்பு, கை, கால் என்று நடந்து வரவில்லை?"
"வருகிறாளே? பூமித்தாய்... ரொம்ப ரொம்பப் பெரியவள். இந்த நீர் நீ தொடும் போது எப்படி இருக்கிறது? மீன் எப்படி இருக்கிறது? நீ சிரிக்கும் அழகைப் பார்க்கத்தான் இப்படி எல்லாம் மாறி உன்னைக் கவருகிறாள். அரளிப் பூவில், தாமரைப் பூக்களில், பெரிய இலைகளில் பனித்துளிகளில் மயிலின் சிறகுகளில் எல்லாவற்றிலும் தாய் இருக்கிறாள். அவள் சிறு குஞ்சாக உன்னுள்ளும் இருக்கிறாள்..."
"எனக்கு என் அம்மாவைப் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது..."
"ஓ! நிச்சயமாகப் பார்ப்பாய், ஒரு நாள்..."
"எப்போது?..." என்று ஒருவகையான பிடிவாத ஆவலுடன் அவள் சிணுங்குவாள்.
"நீ இவ்வளவு உயரம் வளர்ந்த பிறகு!" என்று தன் தலை உயரத்துக்கு அவர் கைகளை உயர்த்துவார்...
அவ்வளவு உயரம் வளர்ந்த பின்னரும் அவள் கனவுகள் மட்டுமே வளர்ந்தன. அவள் பிறப்பின் இரகசியம் புகைக்குள் பொதிந்த சுடர் போல் அவளுக்கு எட்டவில்லை.
பூமை கணவருடன் கானகத்தில் வாழ்ந்த நாட்களில், மர உரிகளை வேடுவர்கள் கொண்டு வருவார்கள். குளிரும் மழையுமாக இருந்த நாட்களில், அந்த ஆடைகள் போதுமானதாக இருக்காது. இளையவர் முனி கூடங்களில் இருந்து ஆடைகள் வாங்கி வருவார். முனி வருக்கத்துக்கு க்ஷத்திரிய மன்னர்கள் வாரி வாரி வழங்குவார்களே? கம்பளி ஆடைகள், மெல்லிய தோலாடைகள், சில பட்டாடைகள் என்று அணிந்து கொள்வாள். அருவிகளிலோ தடாகத்திலோ நீராடும் போது, நீரின் மடியே தாய் மடிபோல் தோன்றும். "தாயே! நீதான் என்னை ஈன்றாயா? உன் முகம் எப்படி இருக்கும்?" என்று நீரினுள் தன்னைப் பார்ப்பாள். இந்த நீரின் மென்மை, உன் கரங்களா? இந்தக் குளிர்மை, உன் புன்னகையா? அதிகாலையில் வந்து தொடும் போது வெதுவெதுப்பாக இருக்கிறாயே, அது உன் மேனியில் என் கை தொடும் போது எழும் வாஞ்சையா?
பூத்திருக்கும் தாமரைகள், உன் கண்களா?
தாயே? உன் உயிருடன் கலந்த என் தந்தையே உன் மணாளரா? என்னை எடுத்து வளர்த்த தந்தை உன் மணாளரா?... ஊர்மி என்னை விடப் பெரியவள் என்று சொல்லுகிறார்கள். நீ ஒருகால் அரண்மனைப் பணிப்பெண்ணாக இருந்தாயோ? நானும் அடிமைப் பெண்ணாக ஊழியம் செய்யலாகாது என்று என்னை மன்னர் உழவோட்டும் மண்ணில் விடுத்தாயோ? மன்னர் அதற்குப் பிறகு மேழி பிடிக்கச் செல்லவே இல்லையாம்! அவந்திகாவும் விமலையும் வாசனைப் பொடிகளும் துடைக்கும் துண்டுகளும் கூந்தலை ஆற்றிக் கொள்ளும் தூபக் கலசங்களும் கொண்டு வருகிறார்கள். இந்தச் செய்குளம் வட்ட வடிவமாக அமைக்கப்பட்டிருக்கிறது. கல்படித்துறையைச் சுற்றிலும் மலர்ச்செடிகள் வண்ண வண்ணமாகப் பூத்திருக்கின்றன. இவற்றுக்கு வாசனை இல்லை. அருகில் உடைமாற்றும், கூந்தல் ஆற்றிக் கொண்டு இளைப்பாறும் மண்டபம். இந்தச் செய்குளத்தை அரண்போல் பசுங்கொடிகளும் முட்புதர்களும் காக்கின்றன. மாமன்னர் தேவியர் நீராடும் இடம் அல்லவா?
குளப்படிகளில் பூமை மட்டுமே இறங்குகையில் அவந்திகாவும் விமலையும் மேலே நிற்கிறார்கள்.
நீர் மித வெப்பமாக இந்தப் பின்பனிக் காலத்துக்கு இதமாக இருக்கிறது. பூமியில் இருந்து வரும் மித வெப்ப ஊற்றில் நிரம்பும் குளம். இந்த நீரையே மடைவெட்டி இன்னொரு குளத்துக்குக் கொண்டு செல்கிறார்கள். பிறகு அது கானகப் பாதையில் சென்று பரவிவிடும்.
முதுவேனில் பருவத்தில், இங்கே ஊற்றே இருக்காது. இந்தப் பூமகள் நீராட, பூமிதேவி, நீராட்டி விடுகிறாள்.
முழங்கால் அளவே ஆழம். அடியில் சுட்ட செங்கல் பாவிய தளம். கழுத்து வரை அமிழ்ந்து கொள்கிறாள். நீர் மேல் கூந்தலைப் பரவவிடுகிறாள்.
வயிற்றில் சிசுவின் சலனம். அவள் மேனியில் சுகமான ஓர் அனுபவத்தைப் பரவ விடுகிறது.
'தாயே! உனக்கும் நான் வயிற்றில் இருக்கும் போது இப்படி உணர்ந்தாயா? நீ என்னைப் பூமியில் விடும்போது, உனக்குச் சோகமாக இல்லையா? அந்தச் சோகங்களே மீண்டும் என்னுருவில் உயிர்க்கின்றனவோ?'
இதமான வெம்மையில் மின்னல்கள் போல் கதிர்கள்...
ஒரு கால் அவந்திகாவே என் அன்னையோ? அவள் மார்பில் பாலருந்த விதி எப்படி விட்டது?
நரைத்த முடியை உச்சியில் சுற்றிக் கொண்டு நந்த பிரும்மசாரியுடன் வரும் பெரியன்னை. ஒற்றை ஆடையை மார்புக்கு மேலும் முழங்காலோடும் சுற்றிக் கொண்டு வருவாளே, கால்களில் முரட்டுத்தோல் செருப்பு அணிந்து இலைப் பொதிகளில் அவளுக்குப் பரிசில் கொண்டு வருவாளே, அந்த முதியவள் யார்?
வேடுவர்கள் தயாரித்த கொம்புச் சீப்பினால் அவள் அடர்ந்த முடியை வாருவாள். காட்டுப் பூக்களை விதம் விதமாகத் தொகுத்து இணைத்து மலர்க்கிரீடம் சூட்டி, கன்னத்தை வழித்து திருஷ்டி கழிப்பாள். முத்தமிடுவாள். சில நாட்களில் ஊர்மி, சுதா, பணிப்பெண் தோழிகள் எல்லோருடனும் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அப்போது, அவள் வருவாள் இவளை மட்டும் அணைத்து முத்தமிடுவாள். முத்துச் சிவப்புப் பழங்களோ, வெண்ணெய் இனிப்புப் பழங்களோ, கருநாவல் கனிகளோ, இலைகளில் வைத்து எல்லோருக்கும் கொடுப்பாள்.
ஊர்மிக்கு அவளைக் கண்டால் பிடிக்காது. ஏன், அரண்மனையில் இருந்த வேறு பல செவிலியருக்கும் அவளைப் பிடிக்காது. அவள் வந்து விட்டால், அவர்கள், "வாடி நாம் போய் தனியே விளையாடலாம்!" என்று, அவளை மட்டும் விட்டு விட்டு வேறு பக்கம் போய் விடுவார்கள். அந்த அம்மை கொடுக்கும் கனிகளையோ, தேன் சுளைகளையோ, தொடமாட்டார்கள்.
ஒரு நாள் சுரமா அதற்குரிய காரணம் ஒன்று கூறினாள்.
"அவள் வேடுவப் பெண் மட்டுமல்ல, நரமாமிசம் உண்பவள். நம்மைப் போன்ற இளம் பெண்களை இப்படி ஏதேனும் கொடுத்து மயக்கிக் கானக நடுவில் கொண்டு சென்று, கிழித்து..."
அவள் சொல்லும் போதே பூமகளுக்கு உடல் நடுங்கியது. அன்றிரவு, அவள் அவந்திகாவின் அருகில் படுத்திருக்கையில் அவள் முகம் தோன்றிற்று... உச்சியில் முடி சுற்றிக் கொண்டு அந்தம்மை "நான் தான் உன் அம்மை... உன்னை மண்ணில் விட்டேன். இப்போது எனக்குப் பசி. நீ வேண்டும்..." என்று கோரைப் புற்கள் போன்ற நகங்களை அவள் முதுகில் பதிக்கிறாள்.
பூமை 'அம்மா' என்று அலறும் போது அவந்திகா தான் திடுக்கிட்டுத் தட்டுகிறாள்...
"குழந்தாய் கனவு கண்டாயா? இதோ பாரு அவந்திகா, இருக்கேம்மா?"
"அம்மா... அம்மா... யாரு?"
"அம்மா தா... அம்மா இதோ இருக்காங்க. கூட்டி வரேன்..."
சற்று நேரத்தில் அப்பா வந்தார். பெரிய ராணி வந்தார்.
"என்னம்மா?... இதோ... இதோ அம்மா..."
மங்கலான வெளிச்சத்தில் நரை தாடி தெரியத் தந்தை. அம்மா, ராணி... குழலவிழ, கண்கள் சுருங்க... கன்னத்தில் கறுப்புப் புள்ளியுடன்...
"இது ஊர்மியின் அம்மா..."
"அப்பா, என் அம்மா, அரக்கியா? நரமாமிசம் சாப்பிடுவாளா?" அப்பா அவள் கூந்தலைத் தடவி மென்மையாக உச்சி முகர்ந்தார். அம்மா, ராணி மாதா அவளை மடியில் கிடத்திக் கொண்டாள்.
"யாரோ இல்லாத பொல்லாத கதைகளைச் சொல்லியிருக்கிறார்கள்! பயந்து போயிருக்கிறாள் குழந்தை!"
"உன் அம்மா, விண்ணில் இருந்து வந்தவள். தெய்வம் உன்னைப் பெற்று இந்த மாதா மடியில் தவழவிட்டுப் போனாள். நீ தெய்வ மகள்..."
"அப்பா, அரக்கர் அம்மா எப்படி இருப்பார்கள்? சுரமை சொல்கிறாள், அவர்கள் விரும்பிய வடிவம் எடுப்பார்களாம். அழகான தாய் போல் வந்து, எங்களைப் போல் குழந்தைகளைத் தூக்கிச் சென்று வள்ளிக்கிழங்கைக் கடித்துத் தின்பது போல் தின்பார்களாம்!"
"சிவ சிவ...! குழந்தாய், அதெல்லாம் பொய்! சுரமாவை நான் தண்டிக்கப் போகிறேன்! கதைகளில் தான் அப்படியெல்லாம் வரும்... நீ தூங்கம்மா! அவந்திகா, குழந்தையை அருகில் அணைத்துக் கொண்டு படு." அவளை அவர் தூக்கிக் கட்டிலில் பஞ்சணையில் கிடத்தியது இப்போது நடந்தாற் போல் இருக்கிறது.
அவந்திகா தன் உருண்டையான, உறுதியான கைகளால் அணைத்துக் கொண்டதும், அந்த வெம்மையின் இதம் பரவியதும் நினைவில் உயிர்க்கிறது.
அடுத்த சில நாட்களில் அந்தப் பெரியம்மா, தனியாகவே வந்தாள். தோட்டத்தில் அவந்திகா, அவளுக்குப் பொற்கிண்ணத்தில் பாலும் சோறும் ஊட்டிக் கொண்டிருந்தாள்.
ஆடை மடிப்பில் இருந்து ஏதோ ஓர் ஓலையினால் முடைந்த சிறு பையை எடுத்தாள். அந்த ஓலைப்பை நிறைய அவளுக்கு மிகவும் பிடித்த வெண்ணெய்க் கனிகள் இருந்தன.
"சோறுண்ட பின் பழம்..."
தின்று முடியுமுன் பூமகளின் இதழ்கள், கன்னங்களிலெல்லாம் அந்தச் சோறு ஒட்டியிருக்கும். குளத்துப்படியில் வைத்து அவள் வாயைக் கழுவுவார்கள். அந்தக் கொட்டைகளையும் கழுவுவாள். எண்ணெய் தடவினாற் போன்று பளபளவென்று, வழுவழுப்பாக இருக்கும்.
பிறகு கல்பாவிய தரையில் அந்த விதைகளை ஒரு கோலமாக வைப்பார்கள். அன்றும் இந்த விளையாட்டை ஆடுகையில், பெரியம்மா, வண்ண வண்ணச் சிறுமலர்களைப் பறித்து வந்து விதைக்கொட்டை வடிவுக்கு உயிரூட்டினாள். அழகிய தாமரைப்பூ உருவாயிருந்தது. புற்களில் பூத்திருந்த ஊதா நிறச் சிறு பூக்களைக் கொண்டு வந்து அந்தப் பெரிய தாமரையை உருவாக்கினாள்.
அப்போது திடீரென்று அவள் கேட்டாள்,
"பெரியம்மா? நீங்கள் அரக்கரா?"
அவர் ஒரு கணம் திகைத்ததும் நினைவில் உயிர்க்கிறது.
"அப்படி ஒன்றும் கிடையாது குழந்தை! எல்லாரும் மனித குலம் தான்..."
"அரக்கர்களுக்கு நரமாமிச ஆசை வந்து, கோரைப் பற்களும் குரூர வடிவமும் வந்து விடுமாம். அப்போது அவர்கள் அழகான பெண்கள் போல் வந்து குழந்தைகளைத் தூக்கிச் சென்று ஒடித்து கடித்துத் தின்பார்களாம். சுரமை இல்லை சுரமை, அவள் சொன்னாள். அவளுடைய அம்மா அப்படிச் சொன்னாளாம். சுரமை எங்களுடன் விளையாடுவாள். மணிக்கல்லை மேலே போட்டு கீழே மூன்று தட்டு தட்டும் வரை அது கீழே வராமலிருக்கும்..."
"அப்படி எல்லாம் இல்லை குழந்தை. முன்பு எப்போதோ அப்படி மனிதர்களும் ஓநாய், புலிகள் போல் பற்களுடன் பிறந்திருப்பார்கள். ஏனெனில், அப்போது உணவைச் சமைத்துச் சாப்பிட அவர்களுக்குத் தெரியவில்லை. பிறகு மனிதர்கள் அறிவால் எத்தனையோ கற்றுக் கொண்டு விட்டார்கள். தானியங்கள், நெய், தேன், பால் எல்லாம் நமக்குக் கிடைக்கின்றன. அதனால், யாருக்கும் அப்படிக் குரூரம் வராது. வேறு வேறு வடிவம் எடுக்க முடியாது. வேடம் போட்டுக் கொண்டு நாடகம் தான் ஆடுவார்கள். அதுவும், பெண்கள் அரக்கியர்கள் வடிவம் மாறி குழந்தைகளைத் தூக்கிச் சென்று தின்பதெல்லாம் முழுப் பொய். ஏன் தெரியுமா?"
"ஏன்?..."
"அவள் பெரியவளாவாள், அவளை ஒரு நல்ல மனிதன் திருமணம் செய்து கொள்வான். அன்போடு இருப்பார்கள். அப்போது அவளும் கருப்பம் தரிப்பாள். அவள் வயிற்றில் ஒரு குழந்தை உயிர்க்கும். அவள் உலகம் முழுவதையும், அன்பாய், தாய் போல் நினைப்பாள்..."
அவளுக்கு நீரின் வெம்மையில் உடல் முழுவதும் ஒரு பரவசச் சிலிர்ப்பு பரவுகிறது.
'அம்மா! உனக்கு நான் வயிற்றில் இருக்கும் போது, இப்படி உணரவில்லையா? ஏன்? உலகம் முழுவதையும் தாங்கும் தாய் போன்ற பரிவு வரவில்லையா? ஏன்? அதனால் தான் பூமியில் விட்டாயோ?...'
இன்னொரு நாளின் நினைவு உள்ளத்திரையில் படிகிறது.
ஊர்மி, சுதா, சுரடை, எல்லோருடனும் கண்ணாமூச்சி ஆடினார்கள். முதிய சண்டி அவள் கண்களைப் பொத்திக் கொண்டிருந்தாள்.
அப்போது, பெரியம்மா தோட்டத்துக்கு வந்து விட்டார். முரட்டுச் செருப்பொலி கேட்டதுமே, சண்டியின் பிடி தளர்ந்தது.
"இந்த ராட்சசி, இப்படிக் குழந்தைகளை வந்து வந்து கெடுக்கிறாள். இவள் கபடம் மன்னருக்கும் தெரியவில்லை; மாதாவுக்கும் தெரியவில்லை!..." என்று முணுமுணுத்து, உரத்த குரலில், "அடியே சுரமா? எல்லாரையும் உள்ளே கூட்டிச் செல்! பனிக்காற்று உடலுக்கு நல்லதல்ல. கண்ட காட்டுப் பழங்களையும் வாங்கிக் கொள்ளாதீர்கள்!" என்று எச்சரித்தாள்.
ஆனால் பெரியம்மா தயங்கவில்லை.
"குழந்தைகளா, அத்தையுடன் கண்ணாமூச்சி விளையாடுறீங்களா? என்னையும் சேத்துக்குங்கம்மா!" என்று அருகில் வந்து அவளைப் பற்றி குனிந்து உச்சி முகர்ந்து கண்ணேறு கழித்தாள்.
சண்டியை நேராகப் பார்த்துப் புன்னகை செய்தாள்.
"என்னைப் பார்த்தால் பயமாக இருக்கிறதா? நான் அரக்கி என்ற பயமா? அப்படி ஒரு தனிக்குலம் இல்லை தாயே! கொன்று தின்னும் புலியும் விஷம் கக்கும் பாம்பும் கூட அரக்க குலம் இல்லை; உயிர்க்குலம் நாமெல்லாரும் மனிதர்குலம். நம்மிடத்தில் 'அரக்கர், தேவர்' என்ற இரண்டு குலங்களும் ஒளிந்திருக்கின்றன. நாம் பயப்படும் போது, கோபப்படும் போது, பொறாமைப்படும் போது, பேராசை கொள்ளும் போது, அடுத்தவருக்குத் தீங்கு நினைக்கும் போது, நமக்குள் இருக்கும் அரக்கர் வெளிபபடுவார். ஆனால், இன்னொருவர் தேவர் ஒளிந்திருக்கிறாரே, அவரால் இந்த அரக்கரைத் தலையில் தட்டி அடக்கிவிட, அன்பு அதுதான் சத்தியம், அதுதான் இம்சை செய்யாமை... இந்த ஆயுதத்தை அந்த அரக்கருக்கு நினைவுறுத்தி, "சாந்தமடை அரக்கா, நீயும் தேவராகி விடுவாய்!" என்று அமுக்கி விடுவார்..." என்று கதை போல் அந்த அம்மை சொல்லும் போது, அவை அமுத மொழிகளாகவே இருக்கும்.
"அப்படியானால், நம் உள்ளே இரண்டு பேர் எப்போதும் இருக்கிறார்களா?"
"ஆம் கண்ணே! அரக்கருக்கு நாம் தீனி போட்டால் அவர் உரிமை பெற்று விடுவார். பொறாமை, இம்சை, பேராசை, சுயநலம், இதெல்லாம் அவர் தீனிகள். இதனால் நமக்கு மகிழ்ச்சியே வராது; சிரிக்கவே மாட்டோம்... தூக்கத்தில் கூட கெட்ட கனவுகள் வரும்... அதனால் அன்பு பெருக, யாருக்கும் தீங்கு நினைக்காமல், சுயநலம் பாராட்டாமல் மற்றவர் சந்தோஷம் பெரியதாக எண்ணினால், அரக்கர் எழும்பவே மாட்டார். உணவு இல்லையெனில் எப்படித் தலை தூக்க முடியும்! குழந்தைகளே, தின்ன வரும் புலி கூட சத்தியத்துக்குக் கட்டுப் படும்; அன்பின் வடிவமாகும்!"
"எப்படி?..."
"ஒரு கதை சொல்லட்டுமா?"
"சொல்லுங்கள் பெரியம்மா!"
"இது கதை இல்லை. உண்மையில் நடந்ததுதான்.
ஒரு சமயம் ஒரு புலிக்குப் பசித்தது. அந்தப் பசியைப் போக்கிக் கொள்ள அதன் கண்களுக்கு ஒரு மிருகம் கூட அகப்படவில்லை. பசியரக்கன் அதன் உள்ளே எழும்பியதால் அதற்குக் கோபத்தைத்தான் தீனியாக்க முடிந்தது. ஆத்திரத்துடன் உறுமிக் கொண்டு வருகிறது. அப்போது ஆற்றுக்கரைப் புற்றடத்தில் வெள்ளை வெளேரென்று ஒரு பசு மேய்ந்து கொண்டிருந்தது. புலி உடனே ஒரே எழும்பு எழும்பிப் பாய முனைந்தது. சாதாரணமாக யாருக்கும் அப்போது என்ன தோன்றும்?... அச்சம்... அச்சம் தான் தோன்றும். முன்பே சொன்னேனில்லையா? அச்சமும் ஒரு வகையில் அரக்கனுக்குக் கொடி பிடிக்கும் குணம் தான். அது வந்தால் மனசு குழம்பிப் போகும். நகரக் கூடத் தெரியாது. உடனே அழிவு தான். புலியின் வாய்க்குள் போவதற்குத் தப்பி, பசு ஓட முயற்சி செய்யவில்லை. மாறாக, நிலைத்து நேராகப் புலியைப் பார்த்து, "நண்பரே!" என்று கூப்பிட்டது. "கொஞ்சம் நில்லுங்கள். நான் உமக்கு உணவாவதில் ஒரு தடையும் இல்லை. நீங்கள் உங்கள் குட்டிகளை விட்டு, உணவு தேட வந்திருக்கிறீர்கள். எனக்கு உங்கள் பசி உங்கள் தாபம் எல்லாம் புரிகிறது... எனவே ஒரே ஒரு விண்ணப்பம்" என்று இறைஞ்சியது.
"என்ன அது?" என்று புலி உறுமிற்று.
"ஆற்றுக்கு அக்கரையில் என் கன்று நிற்கிறது. அங்கே எனக்கு உணவு கிடைக்காததால், அதற்கு வேண்டிய பால் என்னிடம் சுரக்கவில்லை. இந்த ஆற்றைக் கடந்து வரும் வலிமை அதன் கால்களுக்கு இல்லை. நான் இங்கே வயிறார மேய்ந்து விட்டு அக்கரை சென்று கன்றுக்குப் பால் கொடுக்க வேண்டும். அது தானாக உணவு கொள்ளும் வரையில் அதற்கு உணவூட்டிப் பாவிப்பது தாயாகிய என் கடமை. இந்த உலகத்தில் பெண்ணாகப் பிறந்து தாயாகும் பேறு பெற்றவர் அனைவரும் இதை உணருவார்கள். இந்தப் பூமியே நம் அனைவருக்கும் தாய். இந்தப் புல்லை, தாவர உயிர்களைத் தந்து எங்களைப் பாலிக்கிறார்கள். பூச்சி, புழு, பறவை, மான், முதலிய விலங்குகள் எல்லாமும் அப்படி ஓர் அன்பு வளையத்தில் இயங்குகின்றன. என் கன்றை நான் எப்படிப் பார்க்கிறேனோ, அப்படியே உங்களையும் பார்க்கிறேன். ஆதலால் நீங்கள், எனக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். நான் அக்கரை சென்று, என் கன்றுக்குப் பாலூட்டிவிட்டு உங்களிடம் வருவேன்... நீங்கள் உங்கள் பசியைப் போக்கிக் கொள்ளலாம்; குட்டிகளின் பசியையும் தீர்க்கலாம்" என்றது பசி.
அதற்குப் புலி, "நீ நிச்சயமாகத் திரும்பி வருவாய் என்பதை நான் எப்படி நம்புவேன்?..." என்று கேட்டது.
"நீங்கள் என்னைத் தொடர்ந்து வந்து பாருங்கள். நிச்சயமாக நான் வாக்குத் தவற மாட்டேன். இது சத்தியம்" என்று வாக்குக் கொடுத்தது பசு. "இந்த உலகை வாழ வைப்பதே சத்தியம் தான். மழையும், காற்றும், வெயிலும், ஆறும், பசுமையும் சத்தியத்தினால் தான் நிலைக்கின்றன. வான வீதியில் உதிக்கும் சூரியன் சத்தியம். சத்தியம் செத்தால் எல்லாம் அழியும். என் கன்றுக்குப் பால் ஊட்டிவிட்டு நான் திரும்பி வந்து உணவாவதால் அழிந்து விட மாட்டேன். என் கன்று அந்த சத்தியத்தால் வளரும். எனவே என்னை நம்புங்கள்" என்று வாக்குக் கொடுத்து விட்டு அக்கரை சென்றது பசு.
புலி, எதுவும் செய்ய இயலாமல் நின்றது. பாய முற்பட்ட அதன் அரக்க வேகம் கட்டுப்பட்டு விட்டது. அக்கரையில் பசு, கன்றை முகர்ந்து நக்கிக் கொடுத்துப் பாலூட்டியது. "குழந்தாய், அக்கரையில் ஒரு புலியின் பசி தீர்க்க நான் வாக்குக் கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன். சற்று நேரத்தில் நான் இரையாகப் போகிறேன். நீ நன்கு பசியாறி, தானாக உணவு தேடிக் கொள்ள உறுதி கொள். சத்தியம் தவறாமல் வாழ்க்கையில் கருணை வடிவாக நில்" என்று, அதை முகர்ந்து ஆசி கூறிவிட்டுப் பசு புலியை நோக்கி ஆறு கடந்து வந்தது.
"புலியே, என்னை உணவாக்கிக் கொண்டு பசியாறுங்கள்!" என்றது. புலி உடனே, "பசுவே, நீ சத்தியத்தின் வடிவம். என்னுள் கிளர்ந்த பசி அடங்கி விட்டது. பசி இல்லாத போது நான் யாரையும் கொல்ல மாட்டேன்" என்று கூறிவிட்டு உடனே திரும்பி விட்டது.
"எப்படி கதை?"
அந்தக் கதை எத்துணை உயிர்ப்புடன் அவளுடைய மனதை ஆட்கொண்டது! பசுவாகவும் புலியாகவும், சித்திர விளையாட்டு விளையாடியிருக்கிறாள். கோசல அரசகுமாரர் அந்தப் பழைய வில்லை ஒடித்து விட்டார் என்ற சேதி கேட்ட போது, அந்தப் புலி திரும்பிப் போய் விட்டதை நினைத்துக் கண்ணீர் துளிக்க மகிழ்ந்தாளே!...
"தேவி...! மன்னர் தங்கள் மாளிகைக்கு வருகை தந்துள்ளார்!" படிகளின் மேல், பூஞ்செடிகளுக்கிடையே இருந்து தெரிவிப்பவள்... ஜலஜை.
அம்பு மானின் மீது பாய்ந்து விட்டாற் போன்ற குலுக்கலுடன் அவள் எழுந்திருக்கிறாள்.
--------------
அத்தியாயம் 5
நீரில் இருந்து வெளி வந்தவளை, கை பற்றி அழைத்து வருகிறாள் அவந்திகா.
'மன்னர் தோட்டத்தில் வந்து சந்திப்பார் என்றார்கள். இப்போது மாளிகை என்று இவள் சேதி சொல்கிறாள்! என்ன மாயமோ!' அவந்திகா, விரைந்து கூந்தலின் ஈரத்தைப் போக்க மெல்லிய பருத்தித் துண்டினால் துடைத்து எடுக்கிறாள். தூபப்புகை காட்டி, வாசனைகள் ஏற்றிக் கூந்தலைச் சிங்காரம் செய்கிறாள். பின்னல் போட முடியாது. மேலும் மகிழ்ச்சியாக இருக்கும் நேரம் பின்னல் போடலாகாது. நீண்டு அடர்ந்து இடுப்புக்குக் கீழ் வரும் கூந்தலை ஈரம் ஒத்தி வெவ்வேறாக்கி விடுவதே பிரயாசம்.
பூமகளோ பரபரக்கிறாள். "போதும் அவந்திகா, அப்படியே முடிந்து விடு..."
முத்துச்சரங்களைச் சுற்றி ஒருவாறு கூந்தல் அலங்காரம் நிறைவேறுகிறது. "வனதேவியைப் போல் மலர்ச்சரங்களைக் கைகளிலும் கழுத்திலும் சூட்டி விடுகிறேன். கனத்த ஆபரணங்கள் வேண்டாம்!" என்று அவந்திகா மேனியில் மகரந்தப் பொடி தூவி, பட்டாடைக்கு மேல் மலர்ச்சரங்களைத் தொங்க விட்டு அழகு பார்க்கிறாள்.
அப்போது, பணிப்பெண்கள் செண்பகத் தோட்டத்தின் பக்கம், பட்டுத்துண்டு மூடிய தட்டங்களைச் சுமந்து செல்வதை விமலை பார்த்து விட்டு விரைந்து வருகிறாள்.
"தேவி! மன்னர் செண்பகத் தோட்டத்துப் பக்கம் தான் செல்கிறார் போல் இருக்கிறது. உணவுப் பொருட்கள், கனி வகைகள் எல்லாம் அங்கே கொண்டு செல்கிறார்களே?"
"நான் மாளிகைக்கே செல்கிறேன். அங்கே வந்திருக்கிறார் என்று தானே இவள் சொன்னாள்?"
பூமகள் விடுவிடென்று கல் பாவிய பாதையில் நடக்கிறாள். மாளிகையின் பின் வாசல் பூம்பந்தலின் கீழ் மன்னர் நிற்கிறார். சற்று எட்ட, ஜலஜை, சாமளி இருவரும் நிற்கின்றனர். சுலபாக் கிழவி மன்னருக்கு வரவேற்பு வாசகம் சொல்லி நடுங்கும் குரலில் பாடுகிறாள்.
"கோசல குமாரருக்கு மங்களம், குவலய வேந்தருக்கு மங்களம், அரக்கர் குலம் அழித்தவர்க்கு மங்களம், அவனியாளும் மன்னருக்கு மங்களம்..."
அவளையும் அருகில் இருத்தி ஆரத்தி எடுத்து, கண்ணேறு கழித்து, அந்தக் கிழவி சடங்கு செய்கிறாள்.
பூமகளுக்கு இதொன்றுமே உவப்பாக இல்லை. மன்னர் என்றால் இப்படியா? ஓர் அந்தரங்க - நேர்ச்சொல் உரைக்கவும் இடமில்லாத அரண்மனைக் கட்டுப்பாடுகள்!...
"தேவி, நீராடப் போயிருந்தாயா?"
"அதுதான் தெரிகிறதே?" என்று முகத்தில் சுணக்கம் காட்டுகிறாள். "உங்கள் அரச நெறிகள், கட்டுப்பாடுகள் எல்லாம் அந்த அவையோடு இருக்கலாம். சொந்த மனைவியுடன் இரண்டு பேச்சுப் பேசக் கூட இவ்வளவு விதிகள் - வரைமுறைகளா?"
அவள் உரத்த குரலில் கேட்கவில்லை. தலை குனிகிறாள். மன்னர் அவள் மென் கரத்தைப் பற்றுகிறார்...
"இரண்டு மூன்று நாட்களாக எனக்கு இங்கு வர வேண்டும் என்று உள்ளம் விரும்பவும், இயலாதபடி அலுவல்கள். மகாராணி இந்த மன்னரான அடியவனை மன்னிக்க வேண்டும்..."
காதோடு சொல்லும் இவ்வார்த்தைகளில் அவள் முகத்தில் வெம்மை ஏறுகிறது.
"செண்பகத் தோட்டத்துக்குப் போகலாமா? உனக்குத் தான் அந்தக் குளத்தில் வந்திறங்கும் பறவைகளை அன்னங்களைப் பார்க்க மிகவும் பிடிக்குமே? நாம் மகிழ்ந்த கோதாவரிக் கரைத் தோட்டங்களைப் போல் சரயு ஆறு வரையிலும் தோப்பாக, தோட்டங்களாக அமைத்து விடலாம். அதே மாதிரி பொய்கைகள், யானைக் குட்டிகள்..."
"அரச காரியம் பற்றிப் பேதையான எனக்கு எதுவும் தெரியாதுதான்... என்றாலும், தந்தையிடம் அநுபவம் பெற்ற மூத்த அமைச்சர் பிரான், சுமந்திரர் கவனிக்க மாட்டாரா?..."
"தேவி, அவரிடம் நான் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் இருக்கின்றனவே. பதினான்கு ஆண்டுகளில் பத்து மாதங்கள் தானே உன்னை விட்டுப் பிரிந்து இருந்தேன்?..."
'பத்து மாதங்கள் தவிர...' அந்தச் சொல் பொன் ஊசியாகக் குத்துகிறது. அவந்திகா அங்கே நிற்கும் பணிப்பெண்களை குறிப்பாக ஜலஜையை, விரட்டுகிறாள். "இப்போது எதற்கு நீங்கள் மன்னருக்கும் மகாராணிக்கும் இடையில்! அவரவர் வேலையைப் பாருங்கள்!"
பூமைக்கு மன்னருடைய கை, தொட்டுணர்வு, குளிர்ச்சியாக இருக்கிறது. வழி நெடுக அவள் எதையும் பார்க்கவில்லை. பேசவுமில்லை. காட்டில் இருந்த அந்தக் காலத்தில், வில்லையும் அம்பையும் சுமந்து திரிந்தீர்கள். இப்போது அரசாங்க காரியம்...
ஒரு மனிதராக... சாதாரண மனிதரின் ஆசாபாசங்கள் உங்களிடம் இல்லையோ?
மனதுக்குள் மூர்க்கமாக எழும் பாம்புகளைப் போல் இவ்வினாக்கள் சீறுகின்றன.
அடங்கு... அடங்கு... அடங்கு மனமே!... அடங்கு!
மெல்லிய பட்டுத் தைத்த தோல் காலணிகளை அவள் அணிந்திருக்கிறாள். செண்பகத் தோட்டத்தின் பறவையொலிகள் மிக இனிமையாகக் கேட்கின்றன. ஒரு மகிழ மரம் கிளைகளை வீசிக் கொண்டு, 'நான் இங்கே உங்கள் பாட்டன் முப்பாட்டன் காலத்து ஆளாக இருக்கிறேன்!' என்று தன் பழம் பெருமையை சாற்றிக் கொண்டு அவர்களை ஆசிர்வதிப்பது போல் மலர்களைச் சொரிகிறது.
"என்ன வாசனை? இதற்கு ஏன் செண்பகத் தோட்டம் என்று பெயர்?" என்று வியந்து அதன் அடியிலுள்ள மேடையில் அவள் அமருகிறாள்.
"அதைப் பற்றி நானும் கேட்டேன். எங்கள் மூதாதையர் ஒரு பெண்ணை விரும்பினாராம். அவர் இந்த மரத்தடியில் தான் அவளைச் சந்திப்பாராம். மகிழ்ந்திருப்பாராம். அவள் கருவுற்று மகப்பேறு பெறாமல் இறந்து போனாளாம். அவள் பெயர் செண்பகவல்லி. அதனால் அவள் பெயரை இந்தத் தோட்டத்துக்கு வைத்து, மேற்கே செண்பக மலர்கள் சொரியும் மரங்களை நட்டாராம்..."
"அப்படியானால், இந்த மரத்தடியில்..." என்று சொல்ல வருபவள் நாவைக் கடித்துக் கொள்கிறாள்.
மன்னர் அவள் கையை அழுத்தமாகப் பற்றுகிறார்.
"பிரியமானவளே, நாம் எப்போதும் போல் அன்னப் பொய்கைக்குப் போவோம். வட்ட வடிவப் படிகளில் அமர்ந்து பறவைகளைப் பார்ப்போம்..."
அவர்கள் அங்கே வந்து, சுத்தம் செய்து விரிப்புகள் போடப்பட்ட இருக்கைப் படிகளில் அமர்ந்து கொள்கின்றனர்.
இதமான மஞ்சள் வெயில் அவர்களுக்குப் பொன் பட்டுப் போர்த்துகிறது.
வெள்ளை அன்னங்கள் உலவும் அழகைப் பார்த்துக் கொண்டே, மன்னர் அவள் கரத்தைத் தன் மடியில் வைத்து, அந்தத் தொட்டுணர்வை அநுபவித்தவாறே, "பிரியமானவளே, உன்னை நான் மிகவும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும். என் கடமையை நான் மறக்கவில்லை. இந்த வம்சத்தின் கொடியை நீ உன்னுள் தாங்குகிறாய். உனக்கு எந்த ஆசை இருந்தாலும் அதை நான் நிறைவேற்ற வேண்டும். அன்புக்கினியவளே, காமரூபத்தில் இருந்து வந்த பட்டு வணிகர்கள் கொண்டு வந்த ஆடைகள் மிக நன்றாக இருந்தன. அன்னையிடம் அனுப்பி உனக்குச் சேர்க்கச் சொன்னேன். உனக்குப் பிடித்ததா?" என்று கேட்கிறார்.
"உம்..." என்று முத்துதிர்க்கிறாள்.
மனசுக்குள், இங்கும் நேர்முகப் பரிமாறல் இல்லையா என்ற வினா உயிர்க்கிறது. ஒரு தம்பி, ஒரு வானரன், ஒரு வேடன்... இப்போது அன்னை... அன்னை சொல்லித்தான் இங்கு என் ஆவலைத் தீர்த்து வைக்க வந்திருக்கிறீர்?
"என் மீது கோபமா தேவி?" மன்னர் தணிந்து அவள் முகவாயைத் தன் பக்கம் திருப்புகையில் எங்கிருந்தோ அவள் வளர்த்த தத்தம்மா அவள் தோளில் வந்து குந்துகிறது.
"மகாராணி! மகாராஜா! மகாராணிக்கு மங்களம்!"
அவள் அதைக் கையிலேந்தி இருக்கையில், "மகாராணி! மகாராசாவிடம் கோபிக்கக் கூடாது. மன்னர்... பாவம்" என்று குறும்பு செய்கிறது.
அப்போது, ஜலஜை கனிகளையும், உண்ணும் பண்டங்களையும் அவர்கள் அருகில் கொண்டு வைக்கிறாள். தாம்பூலத் தட்டும் வருகிறது.
"ஜலஜா... ஜலஜா... பூனைக்கண்ணு..." என்று கிளிப் பேசுகிறது.
"சீ!" என்று அவள் விரட்டுகிறாள்.
மன்னர் அவளை அப்பால் போகும்படி சைகை காட்டுகிறார். அவள் செல்லுமுன் கிளியும் பறந்து செல்கிறது.
"இது பொல்லாத கிளி..."
"ஏன்?"
"நம் இருவருக்கிடையில் குறுக்கிடுகிறதே?"
"புத்திசாலிக்கிளி. ஒரு நாள் என் முற்றத்தில் இது அடிபட்டு விழுந்தது. பாலும் பழமும் ஊட்டி வளர்த்து பேசப் பயிற்றுவித்தேன். இது இப்போது சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளையாக இல்லாமல் ஏதேதோ சொல்கிறது. எங்கெங்கோ கேட்டவற்றையெல்லாம் கோவையாக அடுக்குகிறது. ஆச்சரியமாக இருக்கிறது..."
"சொல்லப் போனால் எல்லா உயிர்களுக்கும் அவை அவைக்குரிய மொழிகள் உண்டு. இளைய மாதாவின் தகப்பனாருக்கு அத்துணை மொழிகளும் தெரியுமாம். ஆனால் அவற்றை வெளியில் உரைப்பது அவற்றின் தனி உரிமையில் மனிதர் தலையிடுவது போன்று குற்றமே. அதனால் தான் எல்லோரும் ஒற்றுமையாக அவரவர் தருமத்தைப் பாலித்து வாழ வேண்டும். இல்லையேல் ஆபத்தை விளைவிக்கும் என்று ஆன்றோர் எச்சரித்திருக்கிறார்கள்..."
அவளுக்கு அவர் பேச்சில் மகிழ்ச்சி தோன்றவில்லை.
அவரவர் தருமம் என்றால் என்ன? க்ஷத்திரியனுக்குக் கொல்லும் தருமம், அதுதானே?... என் கையைப் பற்றியிருக்கும் இந்தக் கரம், எளியோரைப் பாதுகாக்கும் ஆதரவுக் கரம் என்று நம்புகிறேன். ஆனால் இது, பெண், விலங்கு, மனிதர் என்று பாகுபாடில்லாமல் கொன்று குவித்திருக்கிறது. அரக்கர்களைக் கொல்லுவது தான் க்ஷத்திரிய தருமம் என்றால், அந்த வன்முறை உயிர் வாழத் தேவையா? என் குலத்துக்கு வரும் இழுக்கைப் போக்கவே அரக்கர் குலமழித்தேன்...
இந்தச் சொற்கள் மின்னலாய் தோன்ற, அவள் தன் செம்பஞ்சுக் குழம்பு ஏறிய மலர்க்கரங்களை விடுவித்துக் கொள்கிறாள்.
அவள் பேசாமல் தலை குனிந்திருக்கும் கோலம் அவருக்கு உவப்பாக இருக்காது. உறுத்தட்டும், உறுத்தட்டும் என்று செவ்விதழ்களைப் பிரிக்காமலே அமர்ந்திருக்கிறாள். தட்டில் இருக்கும் பட்டுத்துண்டை நீக்கியதும், நெய் அப்பத்தின் மணம் நாசியில் ஏறுகிறது. பாலடைக் கட்டி தானிய மாவினால் செய்த உப்புப் பண்டம்...
அப்பத் துண்டை விண்டு அவள் வாயருகில் கொண்டு வருவார் என்று எதிர்பார்த்து ஊடலுக்குத் தன்னைச் சித்தமாக்கிக் கொள்கிறாள். ஆனால் நடந்தது வேறு.
ஒரு பாலடைத் துண்டை எடுத்து அவர் குளத்தில் விட்டெறிய, அதை நீர் மட்டத்துக்கு மேல் ஒரு மீன் வந்து கவ்வ முயலுகையில் மேலே பறந்தாற் போல் வந்த ஒரு பறவை அதைக் கவ்வி, அதன் பெட்டைக்குக் கொண்டு செல்ல முங்கி மீனை எடுத்து மேலே போட, அதன் இணை இலாகவமாக அதைப் பற்றிக் கொள்கிறது.
மன்னர் கலகலவென்று சிரிக்கிறார்.
பெண் அன்னம் முன்னே செல்ல, ஆண் தன் சிறகுகளை மெல்ல நீரில் அடித்தாற் போல் அதனுடன் உரசிக் கொண்டு சல்லாபம் செய்கிறது. பெண் குபுக்கென்று நீரில் மூழ்கிச் சிறிது அப்பால் செல்கிறது. மீண்டும் மன்னர் ஒரு பாலடைத் துண்டை தூக்கிப் போட, ஒரு மீன் எழும்பி அது ஒரு வெண் பறவைக்குப் பலியாகிறது.
"... இது என்ன உயிர் விளையாட்டு? பாவம்!"
"... நீ பேச வேண்டும் என்று தான் சீண்டினேன். தேவிக்கு என் மீது மிகவும் அதிகமான கோபம் என்று தெரிகிறது. நான் என்ன செய்யட்டும்? மீண்டும் நான் நாட்டை விட்டு உன்னிடம் வரவேண்டுமானால், என்னை விட மாட்டார்களே?..."
"ஏன் இப்படி உயிர்க் கொலை செய்ய வேண்டும் பாலடையைக் காட்டி?"
"அம்மம்ம... நான் அந்த அன்னத்துக்கு உணவல்லவோ அளித்தேன்? சரி, பிரியமானவளே, என்னைத் தண்டித்து விடு!" என்று அவள் செவிகளோடு கூறி அவளைத் தன் மார்பில் இழுத்துச் சார்த்திக் கொள்கிறார். அவள் நாணமுற்ற முகத்தை அந்த மார்பில் பதித்துக் கொள்கிறாள். மன்னரின் நெஞ்சத் துடிப்பை அவளால் உணர முடிகிறது.
"அன்புக்கினியவளே, எனக்கு எப்போதும் உன் நினைவுதான். நான் விழித்திருக்கும் போதும், உறங்கும் போதும், அலுவல்களில் ஈடுபட்டிருக்கும் போதும், இந்தத் துடிப்பு உன் பெயரையே உட்கொண்டு சுவாசிக்கிறது. தேவி, கேள்!..."
"அப்படியானால், அன்று 'உனக்காக நான் அரக்கரை வெல்லக் கடல் கடந்து வரவில்லை' என்று சொன்னதெல்லாம்..."
வார்த்தைகள் குத்திட்டு நிற்கின்றன.
ஆனால் அவர் அந்தச் சொற்களால் அவள் இதயத்தைச் சுட்டு அக்கினி குண்டத்தில் இறக்கினாலும், அவள் அவர் இதயம் நோகும்படியான சொல்லம்புகளை வெளியாக்க மாட்டாள்.
அவளை வளர்த்த தந்தை கூறினாரே! "மகளே!... தந்தை தாய் தெரியாமல் என் கையில் வந்த உன் அழகுக்கும் குணத்துக்கும் பண்பு நலங்களுக்கும் மேன்மையுடன் உன்னை ஏற்றிப் போற்றிக் காப்பாற்றக் கூடிய அரச குமாரனை எப்படித் தேடுவேன் என்று கவலை கொண்டேன். ஆனால் சில விநாடிகளில் அந்தப் பெருங்கவலையைத் தீர்த்து வைத்தாய். வில்லின் கீழ் புகுந்த பறவைக் குஞ்சு வெளியே பறந்து வர இயலாமல் தவித்த போது, அநாயசமாக அதை உன் கருணைக் கரத்தால் தூக்கி, விடுவித்தாய். அந்த வில்லை எடுத்து நாணேற்றுபவனே உனக்கு மணாளன் என்று தீர்மானித்தேன். விசுவாமித்திர மகரிஷி பையன்களைக் கூட்டி வந்தார். சொந்த மகள், வளர்ப்பு மகள், தம்பி மக்கள் எல்லோருக்குமே மணமாலை நாள் கூடிவிட்டது. தாய்-தந்தை குலம் கோத்திரம் தெரியாத உன்னை அயோத்தி மன்னர் ஏற்றுக் கொண்டதே பெருமைக்குரிய செயல். இனி அவர் - உன் மணாளனே, தாய், தந்தை, குரு, தெய்வம் எல்லாமுமாகிறார். அவர் இருக்குமிடமே உனக்கு மேலான இடம்..." என்று மொழிந்த உரைகள்...
எல்லாம் இவரே... இவர் உடமை, அவள். உடமைப் பொருள்... இப்போது அவள் வயிற்றில் உருவாகியிருக்கும் உயிரும் அவர் உடமை. அவள் நெற்றியை மெல்ல வருடிக் கொண்ட அவர், "பிரியே, உன் முகம் ஏன் வாட்ட முற்றிருக்கிறது?... உடல் நலமில்லையா?" என்று கேட்கிறார்.
அவள் எதைச் சொல்வாள்?
"இல்லையே?"
"உன்னைக் காண ஒரு முனி வந்திருந்தாராமே?..."
அவள் விருட்டென்று தலை தூக்குகிறாள்.
"சுவாமி, அவரைத் தாங்கள் பார்த்தீர்களா?"
"பார்த்தேன் என்று சொல்லவில்லையே! யாரந்த முனிவர்? அந்தப் பெரியவரை நான் வந்து வணங்கி நிற்பேனே? எனக்கு ஏன் சொல்லி அனுப்பவில்லை? யார் தேவி, அவர்?"
"தாங்கள் பார்க்கவில்லை என்றால், அவர் வந்ததை யார் தங்களிடம் தெரிவித்தார்கள்?..."
"ஒரு பணிப்பெண்... மூத்த அன்னையின் மாளிகைப் பெண். இப்போது கூட இங்கே நின்றிருந்தாளே? அவள் தான் நான் வரும் போது முனிவர் ஒருவர் வந்திருந்தார் என்று தெரிவித்தாள்..."
"ஓ, பணிப்பெண்கள் இது போன்ற செய்திகளைக் கூட மன்னரிடம் தெரிவிப்பார்களா?..."
"இல்லை. அன்று நான் கேட்டேன், தேவி நலமாக இருக்கிறாளா என்று. அதற்கு அவள், அவர் மகிழ்ச்சியாகவே இருக்கிறார். தோட்டத்து மாமரத்தடியில் ஒரு முனிவர் வந்திருக்கிறார். அவரை உபசரித்துக் கொண்டிருந்தார் என்றாள். எனக்கு இப்போதுதான் நினைவுக்கு வந்தது, கேட்டேன்."
"... ஓ... அப்படியா? அவள் பார்த்தாளோ?" என்று அவள் ஆறுதல் கொள்கிறாள்.
"முனி மக்கள் எவராக இருந்தாலும், வாயில் வழி வருவார்கள். வரவேற்று உபசரிப்பதற்காக நானே வந்து எதிர் கொள்வேன். இவர் யாரோ, எனக்குத் தெரியாமல் போயிற்றே என்று எண்ணினேன் தேவி..."
இந்தப் பேச்சில் என்ன குத்தல்...? இவள் கபட வேடம் தரித்து வந்து கவர்ந்து சென்ற இலங்கை மன்னனை உபசரித்ததைச் சொல்லிக் காட்டுகிறாரோ?...
"சுவாமி, இவர் முனியுமல்ல, தாங்கள் நினைக்கும்படியான குலத்தவருமல்ல. பெற்றவர் முகம் அறியாத என்னை என் தந்தை மேழி பிடித்த போது கண்டெடுத்த வனத்தில் சிறுவராக அந்தச் சம்பவத்தைப் பார்த்தாராம். ஒற்றை நாண் யாழ் மீட்டி அற்புதமாகப் பாடுவார். என்னைக் காண வேதபுரி அரண்மனைத் தோட்டத்துக்கு வருவார். பாட்டும் கதையும் சொல்லித் தருவார். மகிழ்ச்சியுடன் அந்த இளமைப் பருவம் கழிந்தது. என்னுடைய குணங்களில் ஏதேனும் நலன்கள் படிந்திருக்கின்றன என்றால், அந்த பிரும்மசாரியின் பழக்கம் தான். அவர் தாம் என்னைக் காண வந்திருந்தார். வேதபுரியில் என் வளர்ப்புத் தந்தையும் இதையே சொல்லி அழைத்திருக்கிறார். 'மன்னரே, நான் தத்துவம் அறிந்த வித்தகனல்ல; கவி பாடும் குரவனுமல்ல... இந்தக் குழந்தையைப் பார்க்க வந்தேன்; போகிறேன். மன்னர் அவையில் வந்து நிற்க எனக்கு எந்த முகாந்தரமும் இல்லை' என்பார்... இப்போதும் அதையே சொல்லிவிட்டுப் போனார் அரசே!"
மன்னர் சில விநாடிகள் வாளாவிருக்கையில் அவள் மேலும் தொடருகிறாள். "சுவாமி, எனக்கு ஓர் ஆசை உண்டு. அதை நிறைவேற்றுவீர்களா?" அவளை மார்போடு அணைத்து கூந்தலை வருடியபடி, "பிரியே, இந்தச் சமயத்தில் நிச்சயமாக உன் ஆசையை நிறைவேற்றுவேன். அந்த முனி வருக்கத்தை அழைத்து, நான் பெருமைப்படுத்துவேன். வேடுவர்களாகவும், அடிமையின் மக்களாகவும் இருந்தவர்கள், ஆன்மானுபவம் பெற்று, வனத்தில் வாழும் மக்களுக்கெல்லாம் உபநயனம் செய்து வைக்கும் முனிவர் ஒருவர் பற்றி நான் கேள்விப்பட்டதுண்டு. அவர்களை இங்கு அழைத்து உலக நன்மைகளுக்காக பெரிய வேள்வி நடத்த ஏற்பாடு செய்வோம்... சரியா தேவி?"
"வேள்வி நடத்துவது, தங்கள் சித்தம். ஆனால் என் ஆசை அதுவல்ல, சுவாமி!"
"பின் என்ன ஆசை? தயங்காமல் சொல் தேவி! இந்த அயோத்தி மன்னன், உன் பிரிய நாயகன், உன் கோரிக்கையை நிறைவேற்ற உலகின் எந்த மூலையில் இருக்கும் பொருளாக இருந்தாலும் கொண்டு வருவான். சொல் தேவி!"
"உலகில் எந்த மூலைக்கும் தாங்கள் செல்ல வேண்டாம் சுவாமி! நாம் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்தோம் ஆனால் நான் உதயமான இடத்தை இன்று வரை தரிசிக்கவில்லை. வேடுவ மக்கள், மன்னருடன் பிறந்தவர் போல் தோழமை காட்டுகிறார்கள். ஆனால் நான் உதயமான இடத்தில் இருந்து ஒரு மூதாட்டி இந்த பிரும்மசாரிச் சிறுவருடன் என்னைக் காண வந்து அன்பைப் பொழிவாள். அந்தக் கானக மக்களிடையே சென்று நான் உறவாடவில்லை. அந்த மூதாட்டி, மார்க்க முனி ஆசிரமத்தில் நெடுங்காலம் இருந்திருக்கிறாராம். என்னை இந்த அவந்திகாவுக்கு மேல் தாய்க்குத் தாயாகச் சீராட்டிக் கதைகள் சொல்லி விளையாட்டுக் காட்டி மகிழ்விப்பார். அவர் இப்போது மிகவும் நலிந்து முதுமையில் தளர்ந்து நடக்க முடியாமல் இருக்கிறாராம். அவரைச் சென்று பார்த்து, இந்த அரண்மனை மாளிகையில் என்னுடன் அழைத்து வர ஆசை. ஆனால் அவரும் இந்த நந்த பிரும்மசாரி - முனியைப் போல் அரண்மனைக்குள் வர மாட்டார். என்றாலும், நம் குலக் கொடியை நான் தாங்கியிருக்கும் இந்த நேரத்தில் நாம் இருவரும் சென்று பார்த்து அழைத்தால் வருவார். இதுதான் சுவாமி என் ஆசை!"
"பிரியே, நிச்சயமாக உன் ஆசை நிறைவேறும். விரைவில் உன் விருப்பத்தை நான் பூர்த்தி செய்வேன்..."
-------------
அத்தியாயம் 6
மன்னர் வாக்குக் கொடுத்து விட்டார். மகிழ்ச்சியில் பூமையின் உள்ளம் சிறகடித்துப் பறக்கிறது. ஏதேதோ எண்ணங்களிலும் கற்பனைகளிலும் அவள் அந்த மகிழ்ச்சியை அநுபவிக்கையில் மன்னர் அந்தச் சந்திப்புக்குப் பிறகு மூன்று நாட்களான பின்னரும் மாளிகையில் உணவு கொள்ள வரவில்லை என்பது உறுத்தவில்லை. அதற்குக் காரணம் உண்டு. அவள் தாவர உணவும் தானியப் பண்டங்களையும் உண்ணும் சீமாட்டி; அவரோ க்ஷத்திரியருக்குரிய ராஜச உணவை உண்பவர். கானகத்தில் இருந்த நாட்களில், இருவருக்கும் இந்த உணவுப் பழக்கங்கள் நெருடும். அவரே மான் கறி சமைத்து இலைத் தொன்னையில் வைத்து அவளை உண்ணச் சொல்வார். அவளுக்கு விருப்பம் இருக்காது. பிறகு தேடித் திரிந்து அவளுக்காக மாங்கனி தேங்கனி என்று கொண்டு வருவார்.
"நீ இந்த உணவில் மிக மெலிந்து போனாய்; தன் மனையாளைப் பாதுகாத்து, அவளுக்கு உணவு தேடிக் கொடுக்கக் கையாலாகதாவன் என்று உன் தந்தை என்னை இகழ்வார், தேவி!" என்பார்.
"என் தந்தை நிச்சயமாக அப்படிச் சொல்ல மாட்டார். குலம் கோத்திரம் தெரியாத என்னை மனமுவந்து ஏற்றுக் கொண்டீர். 'அந்த நன்றிப் பெருக்கை நீ எப்போதும் காட்ட வேண்டும்' என்று தான் எனக்கு அறிவுரை கூறினார்" என்று சொல்லும் போது நா தழு தழுக்கும். இப்போதும் அந்த அறிவுரையை எண்ணிக் கரைந்தவாறு, முற்றத்தில் வந்திருக்கும் பறவைகளுக்குத் தானிய மணிகளை இறைக்கிறாள்.
"குலகுரு... சதானந்தர் வருகிறார், தேவி!..."
விமலைதான் அறிவிக்கிறாள்.
வேதபுரித் தந்தையின் குலகுரு...
"இங்கே வருகிறாரா?"
"பெரிய ராணி மாதாவின் அரண்மனைப் பக்கம் மன்னர், இளையவர், எல்லோருடனும் வந்து கொண்டிருந்தார்..."
அவள் மனசில் மெல்லிய சலனங்கள் தோன்றுகின்றன. அவற்றைத் தவிர்ப்பவள் போல், சிறு சிறு குருவிகள் தானிய மணிகளைக் கொத்தி உண்பதும், விர்ரென்று பூம்பந்தலின் மேல் பறந்து செல்வதும், மூக்குடன் மூக்காய் உரசிச் சரசமாடுவதும் கண்டு அந்தக் காட்சிகளில் ஒன்றியிருக்கிறாள். இங்கு வரும் ஒவ்வொரு பறவை இணையும் இவளுக்குப் பரிச்சயமானது. கழுத்தில் கறுப்புப் புள்ளிகள், பிடரியில் சிவப்புக் கோலம், அடிவயிற்றின் பஞ்சு வெண்மை, பறக்கும் போது பூச்சக்கரம் போல் தெரியும் வண்ணக்கோலம்... அனைத்திலும் மனம் பறி கொடுத்திருக்கிறாள். ஒரு வகையில், இந்தக் கூட்டுச் சிறை அரண்மனைக் கிளிக்கு, வெளியே சென்று வரும் இந்தப் பறவைகளின் தோழமை மிகுந்த ஆறுதல் தருகிறது... இவை எங்கெங்கே முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கின்றன என்பதை ஆவலுடன் கவனிக்கிறாள். தாயும் தந்தையுமாகச் சிட்டுக் குருவிகள் ஓடி ஓடி உணவு கொண்டு வந்து குஞ்சுகளுக்கு ஊட்டும் போது அவற்றின் கூச்சல் இன்ப வாரிதியாகச் செவிகளில் விழுகின்றன.
அந்தக் குஞ்சுகள்... இறகு முளைக்காத குஞ்சுகளுக்கு வாயே உடலாக இருப்பது போல் தோன்றுகிறது...
இவள் பூம்பந்தலின் மூலையில் இந்த உணவூட்டும் காட்சியில் ஒன்றி இருக்கையில், அவந்திகா வருகிறாள்.
"தேவி, குலகுரு சதானந்தர் வந்திருக்கிறார்..."
பூமை கண்களைத் திருப்பவில்லை.
"ஸீமந்த முகூர்த்தம் குறித்துக் கேட்க வந்திருப்பதாகத் தெரிகிறது..."
அவள் முகத்தில் வெம்மை பரவுகிறது.
"அவந்திகா, ஆண் பறவை அடைக் காக்குமா?"
அவந்திகாவின் பார்வை அவளை ஊடுருவுகிறது.
"தெரியவில்லையே தேவி, பெண்களே கருவைச் சுமக்கிறார்கள். பறவைகளிலும் பெண் பறவையின் உயிர்ச்சூட்டில் குஞ்சு வெளிவருமாக நினைக்கிறேன்."
"மனிதர்களோடு பறவைகளை ஒப்பிட வேண்டாம். பறவைகளை மட்டும் கேட்டேன்."
"தெரிகிறது. மனிதர், விலங்கு, பறவை எல்லா உயிர்களிலும் ஆண் - பெண் பிரிவுகள் பொதுவானவைதானே?"
"ஊர்வன வெல்லாம் பூமிக்குள் முட்டை வைக்கின்றன. பூமித்தாய் அடைகாத்து உயிர் கொடுக்கிறாள்... இல்லை...?"
"தாங்கள் சொல்வது சரிதான் தேவி..."
அவளுக்கு அப்போது பெரியம்மா நினைவு வருகிறது.
அவள் தளிர்நடை பழகுப் பருவத்தில் அவர் அவளைத் தோளில் ஏற்றிக் கொள்வார். மரம், செடி, கொடிகள் எல்லாவற்றையும் காட்டிக் கதை சொல்வார். ஒரு கதை... பூமி வானில் இருக்கும் நட்சத்திரத்தை உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. "நீ கீழிறங்கி வர மாட்டாயா?..." என்று கேட்டது. நட்சத்திரத்தால் எப்படி வர முடியும்? அது கீழே வந்தால் பூதலம் பற்றி எரியாதா? ஆனாலும் நட்சத்திரத்துக்கு, பூமித்தாய்க்கு மகளாக அவள் மடியில் தவழ வேண்டும் என்று ஆசை இருந்தது. நட்சத்திரத்தின் கோடானு கோடி அணுத் துகளில் ஒன்று அன்பாய்க் குளிர்ந்து, பூமிக்குள் இறங்கியது. பூமித்தாய் அழகிய பெட்டிக்குள் மெத்தையாய் மாறினாள். அந்தப் பூவை ஏந்தினாள். மூன்றே முக்கால் நாழிகையில் ஓர் அழகிய குழந்தை பெட்டிக்குள் உயிர்த்தது. உன் தந்தை செய்த தவத்தால், நீ அவர் கரத்தில் வந்தாய்...
இந்தக் கதை அவளுக்கு அப்போது எவ்வளவு பெருமையாக இருந்தது?
இந்தப் பெருமைகளை, 'குலம் கோத்திரம் தெரியாத' என்று சொல்லைப் போட்டு அவரே அழித்து விட்டார்!...
அரவம் கேட்கிறது. பணிப்பெண்கள் வரிசைகளுடன் வருகிறார்கள். பூமை, பாதசரம் சிலுங்க, சுதானந்தரை எதிர்கொள்ளச் செல்கிறாள்.
அவள் கண்கள் வந்திருந்தவர்களில் மன்னரைத் தேடுகிறது. இளையவர்... ஊர்மியின் கணவர் தாம் வணக்கம் தெரிவிக்கிறார். அவள் தந்தையின் குலகுருவுக்குப் பாதங்களைக் கழுவி மலர் தூவி வணங்குகிறாள். உபசரித்து மாளிகைக்குள் அழைத்துச் செல்கிறாள்.
"குழந்தாய், மங்களம் உண்டாகட்டும்! நலமாக இருக்கிறாயா? தாயாக இருக்கும் உன்னையும், உன் தங்கையரையும் கண்டு வர, ஸீமந்த முகூர்த்தம் பற்றிச் சேதி அறிய உன் தந்தை என்னை அனுப்பி வைத்தார். முகம் வாட்டமாக இருக்கிறதே? உடலும் உள்ளமும் நலமாக இருக்கிறாயா, குழந்தாய்? மன்னருக்கு உன்னைப் பற்றியே கவலை. என்னைக் குறிப்பாக அதற்கே அனுப்பி வைத்தார்... இங்கே அன்னையரின் அரவணைப்பில் மன்னரின் அருகாமையில் நீ இந்த வம்சத்துக்கான மகனைப் பெற்றுப் புகழும் பெருமையும் அடைவாய். உனக்கு இனி ஒரு குறையும் வராது..."
"வணக்கத்துடன் வழிபடுகிறேன், குருவே. தங்கள் ஆசிகளே என் பேறு. மன்னரிடம் நான் உதித்த வேதவதியாற்றுக் கரை பூமிக்கு அழைத்துச் சென்று அங்குள்ள மக்களைக் கண்டு, சில நாட்கள் தங்கி வர வேண்டும் என்று சொன்னேன். மன்னர் விரைவில் என்னை அங்கெல்லாம் அழைத்துச் சென்று என் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதாக வாக்களித்திருக்கிறார் சுவாமி!"
"உன் தந்தை மன்னரிடம் தெரிவிப்பேன். அவர் மகளையும் மருமகனையும் வரவேற்க மிகவும் மகிழ்ச்சி கொள்வார்... உனக்கு அழகிய பட்டாடைகளை, ஆபரணங்களை, ராணி மாதா அனுப்பியுள்ளார். வசந்த விழா வருகிறதல்லவா?"
"ஊர்மிளாவும் இளையவரும், சுதாவும், மாண்டவியும் கூட வசந்த விழாவுக்கு அங்கு வருவார்களா குருவே?"
கேட்டுக் கொண்டே அடிமைகள் சுமந்து வந்த மரப்பெட்டியை இறக்கிப் பட்டாடைகளையும் முத்துச் சரங்களையும் விதவிதமான காதணிகளையும் பூமகள் பார்க்கிறாள்.
தாமரையின் இள நீலச் சிவப்பு வண்ணத்தில் சரிகைக் கொடிகள் ஓடும் பட்டாடை மிகமிக மென்மையான துகில்...
அவள் கைவிரல்களால் அதைத் தொட்டுப் பார்த்து, "வேதபுரிச் சாலியர் நெய்ததா சுவாமி? மிக மிக அருமை...!" என்று வியக்கிறாள்.
"ஆமாம்; சீனம், சாவகம், புட்பகம் ஆகிய தொலைநாட்டு வணிகரெல்லாம் நம் வேதபுரிச் சாலியரின் இந்தக் கைநேர்த்தியைக் கண்டு வியக்கின்றனர். இந்த ஆடை, தாயாக இருக்கும் பூமகளுக்கென்று சிறப்பாக நெய்யப்பட்டது. வேதபுரித் திருமகளாக நீ வந்த நாட்களில் இருந்தே அந்த நகருக்கு ஒரு புதிய செழிப்பும் பெருமையும் வந்து விட்டது. திருமகள் மைந்தரைப் பெற்று எடுத்துக் கொண்டு தாயாக அங்கு வரவேண்டும். இது தந்தையின் ஆசை" சிறு முள் விரலில் பட்டாற் போல் முகம் சுருங்கி, உடனே அது சுவடு தெரியாமல் மறைகிறது. "வேதபுரியில் சுரமை, வினதை, எல்லோரும் நலமா சுவாமி? தாயார் எப்படி இருக்கிறார்கள்? நாங்கள் விளையாடும் பூந்தோட்டத்தில், ஒரு பவள மல்லிகை மரம் இருக்குமே? அது இன்னமும் நன்றாக இருக்கிறதா?" அதன் மலர்கள் நள்ளிரவில் பூத்துத் தோட்டமெங்கும் வாசனை பரப்பி, சாளரத்தின் ஊடே வந்து என்னிடம் கொஞ்சும். அந்த மலர்களை நார் கொண்டு நான் கோத்து வைப்பேன். பவளச் சரட்டில் முத்துக் கோத்தாற் போல் கூம்பு கூம்பாக அந்த மலர்கள் இருக்கும். "ஏன் வாயை மூடிக் கொண்டிருக்கிறாய்? இதழகற்றிச் சிரிக்க மாட்டாயா?" என்று பேசுவாள். அந்த மரத்தின் பூச்சிறப்பு அது... குலகுரு கண்களில் நீர் மல்க, அவள் உச்சியை வருடி ஆசிர்வதிக்கிறார். "குழந்தாய், அந்த மரமும் உன்னிடம் தன் அன்பைத் தெரிவிக்கிறது. உன்னை உன் மைந்தருடன் வரவேற்கக் காத்திருக்கிறது?" என்று தெரிவிக்கிறார்.
அவள் மீண்டும் பணிந்து எழுகிறாள்.
அவர்களைப் பின் தொடர்ந்து தோட்டம் வரையிலும் செல்கிறாள்.
சற்று முன் வரை நெல்மணிகளைக் கொத்திக் கொண்டு ஆரவாரித்த குருவிகள் இல்லை! பொழுது சாயும் நேரம். புற்றடத்தில் மெல்லடிகள் தோய நடந்து மரமேடைக்கு வருகிறாள்.
கிளி பறந்து வந்து அவள் தோள்களில் அமருகிறது.
"தத்தம்மா?..." என்று கையிலேந்திக் கொஞ்சுகிறாள்.
"மன்னர்... மன்னர்..."
"பொய் சொல்லாதே? மன்னர் எங்கே வருகிறார்? அவர் தாம் வருவதை மறந்து போனாரே? மன்னாதி மன்னர்... அந்தப்புரத்தைக் கண்ணாலும் பார்க்க நேரமில்லை?"
அந்தப் பொல்லாத கிளி விர்ரென்று பறந்து சென்று கொடி படர்ந்த புதர் ஒன்றில் அமர்ந்து கொள்கிறது. கொவ்வைக் கனிகளும் இலைகளுமாய் உள்ள சுவர் போன்ற புதர். அவள் எழுந்து செல்கிறாள். கிளியின் மூக்குக்கும் கொவ்வைக் கனிகளுக்கும் வேறுபாடு தெரியவில்லை. ஒரு கனியைக் கொத்தி உண்ணுகிறது.
"தத்தம்மா? நீயும் கோபிக்கிறாயா? நீ பொய் சொல்லவில்லை. வா?" கிளி மறுபடியும் அவள் தோளில் வந்து அமருகிறது.
"சரி... மன்னர் எங்கே? பார்த்தாயா?"
"மன்னர்... ஜலஜா..."
"என்ன உளறல்? ஜலஜாவா?" என்று அவள் அதட்டுகிறாள்.
"ஆம். நான் பார்த்தேன். ஜலஜா மன்னர்..."
"எங்கே? நீ மட்டும் பொய் சொன்னால்...?"
அது மெல்லப் பறப்பதும் அவள் தோளில் அமருவதுமாக அழைத்துச் செல்கிறது.
இனம் தெரியாத மனவெழுச்சியில் படபடப்பு உண்டாகிறது. செவிகள் குப்பென்று அடைப்பது போல் இருக்கிறது.
மல்லிகைப் பந்தலின் பக்கம் ஓர் இளங்கதம்ப மரம் நிற்கிறது. அதன் கிளைகளில் பறவைகள் அவள் வரவுக்குக் கட்டியம் கூறுபவை போல் காச்மூச்சென்று கத்துகின்றன. கீழெல்லாம் உதிர்ந்த மலர்கள்... பறவை எச்சங்கள்... சருகுகள்... அங்கே சிவப்பாக வெற்றிலைத் தம்பலம் எச்சில்... யாரோ துப்பியிருக்க வேண்டும். சுத்தம் செய்யப்படாமல் இருக்கிறது. இந்த இளமரம் புதியது. மல்லிகைப் பந்தல் பழையது... "இங்கே தான்..."
"இளவரசரா?..."
"மன்னர் உமிழ்ந்தது. அவள் கொண்டு வந்து இங்கே கொட்டினாள்."
அந்தக் கிளியைப் பற்றி அதட்டத் துடிக்கிறாள்.
ஆனால், கிளி அவளுக்கு மிகுந்த நெருக்கம்.
"தத்தம்மா, மன்னர் உணவுக் கூடத்துக்கு வந்திருக்கிறாரா, பார்?" என்பாள்.
அது பார்த்து வந்து சொல்லும்.
கொலு மண்டபத்தில் மன்னர் இருக்கிறாரா, யார் யார் வந்து பார்க்கிறார்கள் என்று வந்து சொல்லும்.
மன்னர் தனியாக இருந்தால் அது சிறகடித்துப் பறந்து வந்து காதோடு இழையும். அவள் கையிலேந்தி இதம் செய்வாள். அதற்குப் பெருமை பிடிபடாது. சிறகடித்துப் பறந்து வந்து சில நாட்களில் அவள் மடியில் வந்து இறங்கும். உடனே அவள் பற்ற முடியாத உயரத்தில் போய்க் குந்தும். மூக்கை வளைத்து அழகு பார்த்துக் கொள்ளும். சிறகுகள் உப்ப, பூரிப்பது போல் காட்டும்.
"ஓகோ? மன்னர் உன்னைக் கையிலெடுத்துக் கொஞ்சினாரா? சரி, நீ அங்கேயே இருந்து கொள்! வரவேண்டாம் தத்தம்மா!" என்பாள். "ஏன் உங்களுக்குக் கோபம் வருகிறது, ராணியம்மா? நானா அவர் தோளிலோ மடியிலோ சென்றமர்ந்தேன்? என் அருமைத் தோழிக்கு நான் தீங்கு செய்வேனா? அவர் தாம் கையை வீசி என்னைப் பற்றினார். எனக்கு ஒரே..." என்று நாணிக்கோணும்.
"சரி, சரி, இங்கு நீ நாடகம் நடிக்காதே, பிறகு என்ன நடந்தது சொல்?"
"நாடகம் நடிக்காதே என்று சொல்லி விட்டுக் கதை கேட்கிறீர்களே? நான் கதையா சொல்கிறேன்?"
"சரி இல்லை, பிறகு என்ன நடந்தது?"
"என்ன நடந்தது? எனக்குச் சொல்ல வெட்கமாக இருக்கிறது."
"சரி, சொல்ல வேண்டாம், போய் விடு!"
"நீ என்னைக் கையில் எடுத்து, கன்னத்தோடு இழைய விடு. அவர் என்ன சொன்னார் என்று சொல்வேன்."
"தத்தம்மா, நீ சாகசக்காரி. உன்னை இனி கூட்டில் தான் அடைக்க வேண்டும்."
"உக்கும்... கூட்டில் எனக்கு ஏது இடம்? அதுதான் ஏற்கெனவே மன்னர் இருக்கிறாரே?"
"நீ ரொம்பப் பொல்லாதவள். உனக்கு வாய் அதிகமாகி விட்டது. மன்னரை நானா கூட்டுக்குள் அடைத்திருக்கிறேன்?"
"ஆமாம். இங்கெல்லாம் அப்படித்தான் சொல்கிறார்கள். அந்தப்புர விடுதி என்று ஒன்று இருப்பதையே அவர் அறியவில்லையாம். இதற்குள் எந்த மன்னர் பரம்பரையிலும் இப்படி ஒரே பத்தினி என்று இருந்ததில்லையாம்!"
"ஓகோ!" என்று கேட்கும் போது பொய்க் கோபம் வந்தாலும் உள்ளத்தில் பெருமை துளும்புமே?...
இப்போது?
அவள் பறவை எச்சங்கள், அசுத்தங்களைப் பொருட்படுத்தாமல் அங்கு நிற்கிறாள்... கடலலையே ஓய்ந்து விட்டாற் போன்ற அமைதி நிலவுகிறது. கிளியைக் கையில் எடுத்து அதன் மேனியைத் தடவிக் கொடுக்கிறாள்.
"தத்தம்மா, என்ன நடந்ததென்று சொல்ல மாட்டாயா? ஜலஜா அவரைத் தனிமையில் சந்தித்தாளா, இங்கு? பறவைகள் எச்சமிட்டனவா? அவர் வெற்றிலைத் தம்பலத்தைத் துப்பி விட்டுப் போனாரா?"
"முதலில் மன்னர் மட்டுமே இங்கு கவலையுடன் இருந்தார். அவர் கையில் ஓர் அடுக்கு மல்லிகை இருந்தது... ஒவ்வோர் இதழாக எடுத்துப் போட்டுக் கொண்டிருந்தார்..."
பூமையின் உயிர் நரம்பில் முள் குத்தியிட்டாற் போல் துடிப்பு ஏற்படுகிறது. வலக்கண் துடிக்கிறது; இதழோரங்கள் துடிக்கின்றன.
"அப்போதுதான் அவள்... ஜலஜா பூனைக்கண் வந்தது..." பூமை துடிப்புத் தெரியாமலிருக்க வலக்கையால் அந்தக் கண்ணை மூடிக் கொள்கிறாள். அரக்கர் கோன் சிறையில் இருந்து மீண்ட மகிழ்ச்சியில் மன்னரைப் பார்க்கப் போகிறோம் என்ற செய்தி வந்ததும் அந்த அரக்கர் குல மூதாட்டி அவளை அருவியில் நீராடச் செய்து, எப்படி எல்லாம் அலங்கரித்தாள்? புத்தாடை கொணர்ந்து அணிவித்தாள், இளம் பச்சை நிறம். அப்போது... இப்படித்தான் இருந்தது. வலக்கண் துடித்தது. "இது ஆனந்தமில்லையடி பெண்ணே, உன் முன் நெருப்புக் குண்டம் இருக்கிறது..." என்று அறிவித்த சூசகம்... கண்களில் நீர் கோக்கிறது. தத்தம்மாவை எடுத்துக் கன்னத்தோடு இழைய விட்டுக் கொள்கிறாள். கண்ணீர்த் துளி அதன் சிறகில் படுகிறது. "மகாராணி, அதெல்லாம் நடக்காது. கூட்டுக் கதவை டொக் டொக் கென்று தட்டினால் திறக்குமா? கூட்டில் இடம் கிடைக்காது. ஆனால்... அது வருத்தமில்லை. அவள் அவதூறு பேசினாள். பூனை... பெற்றவரால் மறுக்கப்பட்டு, குலம் கோத்திரம் அறியாதவளுக்காக மன்னர் வருத்தப்படலாமா? அப்படி உயர்குல மங்கையாக இருந்தால் அரக்கர் வேந்தனுடன் தேரில் சென்று இறங்கும் வரை உயிர் தரித்திருப்பாளா? தாங்கள் பார்க்கும் போது அன்றலர்ந்த மலராக ஆபரணங்கள் சூடி வந்திருப்பாளா? அவள் உயர் குல மங்கையாக இருந்தால் உங்களுடன் கானகம் ஏகி, அங்கும் உங்களுக்கும் இளையவருக்கும் அவளைப் பாதுகாக்கும் பெருஞ்சுமையை வைத்திருப்பாளா? இங்கேயே தங்கி ஊனை ஒடுக்கித் தவமியற்றியிருப்பார்."
"'...சுவாமி, தங்களையே நினைத்து ஊனுறக்கம் விட்டுப் பித்தியானேன். தாங்கள் என்னை மறுத்தால் நான் உயிர்த்தியாகம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை...' என்று அவர் கால்களில் வீழ்ந்தாள்."
பூமகள் நடுநடுங்கிப் போகிறாள்.
கானகத்தில் மூக்கறுபட்டவள் நினைவு வருகிறது. அந்நாள் இவர்கள் கையில் ஆயுதம் இருந்தது. கூரான கல், வில்... அம்பு...
மாளிகையில் ஆயுதம் தரித்த படைகள் இருக்கும்... எனவே அவரே கொடுஞ் செயல்களில் ஈடுபட்டிருக்க மாட்டாராக இருக்கும்.
"தத்தம்மா? என்ன நடந்தது?..."
"ஒன்றும் நடக்கவில்லை. எழுந்து போய்விட்டார்."
"அவள்..."
"அவள் புருஷன், அந்தத் துணி வெளுப்பவன் அவளைத் தேடி வந்தான். நையப் புடைத்தான். அவன் துப்பிய எச்சில்..."
அமைதி கூடவில்லை.
"தத்தம்மா, நீ நல்ல செய்தி கொண்டு வருவாய். இப்போது நீ எனக்குத் தோழியாக இல்லை...!"
"இது நல்ல சேதி மகாராணி. மன்னரின் இதயத்தில் உங்களைத் தவிர வேறு எவருக்கும் இடமில்லை!"
கிளி பறந்து செல்கிறது.
-----------
அத்தியாயம் 7
"மகளே, நாம் அதிகாலை நேரத்தில் கிளம்பி, கோமுகி ஊற்றுக்குச் செல்கிறோம். ராணி மாதாக்கள் அங்கே உங்களுக்கு வனவிருந்து ஏற்பாடு செய்திருக்கிறார்கள். தேவையான பொருட்கள் எல்லாம் அங்கே கொண்டு செல்கிறார்கள் பணியாளர்..."
அவளுக்கு உற்சாகம் முகிழ்க்கிறது.
"யார்? பெரியன்னையா? மன்னரும் வருகிறாரா?"
"பெரிய மாதா சொன்னதாகத் தெரியவில்லை. இளைய மாதாவின் ஏற்பாடுதான். சுமித்ரா தேவியம்மையும் வருகிறார்கள். தாங்கள், இளவரசி ஊர்மிளா, சுதா, எல்லோருடனும் பணிப்பெண்கள், ஏவலர், பாதுகாவலாக வில்லேந்தி மிக இளைய குமாரர், சத்ருக்னர் எல்லோரும் செல்கிறோம்..." எழும்பிய உற்சாகம் சப்பென்று வடிந்து போகிறது.
"அவந்திகா? எனக்காக நீ ஓர் உதவி செய்வாயா?"
"நீங்கள் மகாராணி, உங்களுக்குப் பாலூட்டும் பாக்கியத்தைக் கொடுத்து, என்னை இன்றும் பாதுகாத்து, சிகரத்தில் வைக்கிறீர்கள். என்னிடம் நீங்கள் உதவி என்று கோரலாமா, தேவி? ஆணையிடுங்கள்!"
"அந்தப் பணிப்பெண்ணை... அவள் தான், பூனைக்கண்ணி, அவளை இரகசியமாக என்னிடம் கூட்டி வா, யாருக்கும் தெரியக்கூடாது. ஏனெனில் மன்னரின் மீது எந்தக் களங்கத்தின் நிழலும் படியலாகாது. ஊர்மி, சுதா, மாதாக்கள், யார் செவிகளுக்கும் அரசல் புரசலாகக் கூடப் போய்விடக் கூடாது, அவந்திகா!" அவள் சிறிது நேரம் பேசவில்லை.
"நான் கேட்கிறேன், வெற்றிலை மடித்துக் கொடுக்க, கவரி வீச, உடைகள் எடுத்துத் தர, உணவு கொண்டு வைக்க, மன்னர் இளவரசர் மாளிகைகளில் பணிப்பெண்கள் எதற்கு? வேண்டுமானால் தீபமேற்றி விட்டுப் போகட்டும். ஆடவரே பணியாளனாக இருக்கலாமே?"
"மகாராணி இந்தக் கருத்தை ராணி மாதா - ஏன் மன்னரிடமே சொல்லலாமே?"
"அந்தப்புரக் கிளிகளுக்கு விடுதலை என்று சொல்கிறார்கள். இதுவும் ஒருவகை அடிமைத்தனம் தானே?... அவந்திகா அன்று குளக்கரையில் சந்தித்த பிறகு, மன்னர் என்னைக் காண வரவில்லை. உணவு மண்டபத்தில் பார்த்தும் பாராமலும் போய் விடுகிறார். நானே இன்று, அமுது பரிமாறினேன். நிமிர்ந்து பார்த்து விட்டு, "நீ எதற்கு இந்தப் பணி எல்லாம் செய்ய வேண்டும்? நீ போய் ஓய்வு கொள்" என்றார். எனக்கு... துயரம்... சொல்லும் போதே நெஞ்சு முட்டுகிறது. இப்படி அவர் முன்பு இருந்ததேயில்லை. அவந்திகா... மன்னர் பத்தரை மாற்றுத் தங்கம். அப்படியும் என் மனம் அலைபாய்கிறது. என் மாமியார் எத்துணை பொறுமை காத்து இருப்பார்கள்? அரக்க வேந்தனின் பட்டத்து ராணியை நினைத்துப் பார்க்கிறேன். அத்தனைப் பெண்களும் மங்கலங்கள் இழந்து, காப்பாரில்லாமல் அழிந்தார்கள். மன்னனின் வீரதீர பராக்கிரமங்கள் எல்லாம் ஒன்றுமில்லாமல் ஆயிற்று. என் மாமன், சக்கரவர்த்திப் பெருமானுக்கு இத்தகைய இறுதி நேர்ந்திருக்குமா? ஒரே மனைவியாக இருந்திருந்தால்...?"
அவந்திகா, இவள் நெஞ்சை நீவி இதம் செய்கிறாள்.
"ஆறுதல் கொள்ளுங்கள் மகாராணி, ஒரு உயிரை உங்களுள் தாங்கும் இந்த நேரத்தில் இத்தகைய வீண் கவலைகளுக்கு இடம் கொடுக்கலாகாது. கிளி சொன்ன செய்திகள் வெறும் அபத்தம். தாங்கள் அதற்குப் பாலூட்டி, மொழி சொல்லிப் பழக்கினீர்கள். சென்ற பிறவியில் அது தந்திரக்கார நரியாக இருந்திருக்கும். என்ன பேச்சுத் திறமை இருந்தாலும், அதற்கு நம்மைப் போல் அறிவு ஏது? விடுங்கள்! அது உங்களைக் கிண்டி விளையாடுகிறது" என்று அவந்திகா எத்துணை ஆறுதல் மொழிந்தும் சஞ்சல மேகங்கள் அகலவில்லை.
கருவுற்ற மகளிரை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கில் கோமுகி ஊற்றுப் பக்கம் வனவிருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறார்கள். பூமிஜா இதுநாள் வரையிலும் இந்த இடத்தைப் பார்த்திருக்கவில்லை. வேதபுரிப்பக்கம் உள்ள வெந்நீரூற்றுகள் அவளுக்குத் தெரியும். "கொதிக்கும் நீரே வரும். இங்கே அப்படி இருக்குமா?"
"தெரியாது மகாராணி, சொல்லிக் கேட்டதுதான்..."
"பதினான்கு ஆண்டுகள் இந்த மாளிகை அடிமையாக நீ என்ன செய்தாய்?"
"உண்ணுகிறோம்; உறங்குகிறோம்; மூச்சு விடுகிறோம். அப்படி ஒரு வாழ்வு. இளைய மாதா, கேகய ராணி, எத்தனை கலைகள் தெரிந்தவர்? நூல் நூற்பதிலிருந்து, வண்ணப் பொடிகள் தயாரிப்பது வரை அத்தனையிலும் வல்லவர். அவருக்குத் தாம் ராணிமாதா என்ற எண்ணமே கிடையாது. அவரில்லை என்றால், நானும் எங்கோ வழிதவறிய தாய்ப் பசுவாகச் சென்று மாண்டிருப்பேன்!..."
வேதபுரியைச் சார்ந்த இடங்கள், குன்று போலும் மேடு பள்ளங்களுமாக இருக்கும். இந்த இடங்கள் அப்படி இல்லை. வீரர்கள் காளை வண்டிகளை ஓட்டிக் கொண்டு வருகிறார்கள். அதில் பணிப்பெண்கள், ஆடல் பாடல் கருவிகள் இருக்கின்றன. ஒரு சிவிகையில் பூமையும் ஊர்மியும் அமர்ந்திருக்கின்றனர். இன்னொன்றில், சுதாவும், சுமத்திராதேவியும் அமர்ந்துள்ளனர். இன்னொரு ராணிமாதா, சுரமையுடன் வேறொரு சிவிகையில் பயணம் செய்கிறார். சில காவல் வீரர் தொடர, தேரில் சத்ருக்னர் பின்னே வருகிறார்.
சிவிகை சுமப்போரின் ஆஹீம்... ஆஹீம் என்ற ஒலி அவள் செவிகளில் விழுகின்றன. மாட்டு வண்டிப் பலகையில் பணிப்பெண்கள் ஏதேதோ பேசி வருகிறார்கள் என்று புரிகிறது. சாமளியின் சிரிப்பொலி கேட்கிறது. இந்தப் பட்டாளத்தில் ஜலஜை இடம் பெறவில்லை. மூத்த மகாராணியும் இல்லை. ஸீமந்த வைபவத்துக்கு ஏற்பாடுகள் செய்கின்றனராம்.
உடன் இருக்கும் ஊர்மி இப்போது வாய் மூடி மௌனியாக இருக்கிறாள். கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்தபடியே உறங்குகிறாள்...
அதிகாலையில் யார் எழுந்திருப்பார்கள்?
காட்டு வழியில் செல்லும் போது பூமை, திரைச்சீலையை ஒதுக்கிப் பார்க்கிறாள். காட்டுக்கே ஒரு வாசனை உண்டு. மரங்களின் மணம், மூலிகைகளின் மணம். வனவிலங்குகள் எதிர்ப்படாத வண்ணம் ஊதுகுழலால் ஊதிக் கொண்டும், தப்பட்டை கொட்டிக் கொண்டும் பணியாட்கள் செல்ல, அசைந்து அசைந்து சிவிகையில் செல்வது ஊர்மிக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. கண்களை விழித்துக் கொண்டு பல்லக்குத் தூக்கிகளின் மூச்சுக்கேற்ப தாளம் தட்டுகிறார். 'மன்னரும் இளையவரும் வந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? எப்போது பார்த்தாலும் என்னதான் அரசாங்கமோ!... மாண்டவி வரக்கூடாதா? அவள் மகா தபஸ்வி போல் இப்போதுதான், விரதம், தானம், தவம் என்று மைத்துனரைப் பிரியாமல் இருக்க வழி தேடிக் கொள்வாள், அவர்கள் இட்ட பணியைச் செய்பவள்!...'
"இதுவும் ஒரு விதத்தில் சுதாவுக்கு நல்ல பேறாக வாய்த்திருக்கிறது..."
பூமை எதுவும் பேசவில்லை.
"எப்போது பார்த்தாலும் என்னம்மா யோசனை? பேசாமல் நான் ராணிமாதாவுடன் உட்கார்ந்திருக்கலாம்..."
சிணுங்களும் சீண்டலுமாக அவள் தொடர, பயணத்தின் இறுதிக் கட்டம் வரும் போது, முற்பகல் நேரமாகிறது.
அவர்களை வரவேற்க வேடுவப் பெண்கள் தேனும் மீனும் காணிக்கைப் பொருட்களாகக் கொண்டு வருகிறார்கள். காட்டுப் புற்களால் வேயப்பட்ட தாழ்வரைகளில் அவர்கள் அமர இருக்கைகள் தயாராக இருக்கின்றன. அரசகுலப் பெண்கள் அமரவும், இளைப்பாறவும், விளையாடி மகிழவும் ஆடல் பாடல்களில் ஈடுபடவும், கானகம் ஒழுங்கு செய்யப்பட்ட இடத்துக்கு வெகு அருகில் தான் கோமுகம் போல் செதுக்கப்பட்ட பாறை வளைவில் இருந்து ஊற்று வெளிப்படுகிறது. நீர் இதமான, மிதமான சூட்டுடன் பெருகி வந்து அருகிலுள்ள தாமரை வடிவிலான செய்குளத்தை நிறைக்கிறது.
சற்று எட்ட பெரும் விழுதுகளை ஊன்றிக் கொண்டு கணக்கிட முடியாத வயதென்று இயம்பிக் கொண்டு ஓர் ஆலமரம் இருக்கிறது.
அந்த மரத்தில் இருந்து வரும் பறவைக் கூச்சல் பூமிஜாவைப் பரவசம் கொள்ளச் செய்கிறது. ஒரு கிளிக் கூட்டம் சிவ்வென்று பறந்து செல்கிறது.
"எத்தனை பெரிய மரம்? இது போன்ற மரங்கள் நான் கண்டதில்லை!"
"நீங்கள் சுற்றி வந்த தண்டகாரணியத்தில் கூடவா?"
"இல்லை..."
"அதோ அதுதான் நீலகண்டப் பறவை. கழுத்து நீலமாக இருக்கிறது பார்!"
"இன்னும் கொஞ்சம் நடந்தால், பெரிய ஏரி இருக்கிறது. தேவி! அங்குப் பல்வேறு வகைப் பறவைகளைப் பார்க்கலாம்!"
"நாம் ஏரிக்கரைப் பக்கம் போகலாமா, ஊர்மி?"
"அம்மாடி! என்னால் இப்ப நடக்க முடியாது... அத்துடன் இப்போது நாம் ஊற்று நீரில் நீராடுவோம். பிறகு பசி ஆறுவோம்... உண்ணுவோம்... உறங்குவோம்" என்று சைகையால் அபிநயிக்கிறாள்.
"இந்த மூன்றைத் தவிர வேறு எதுவும் நம் வாழ்க்கையில் கிடையாதா?"
பூமை எதுவும் பேசவில்லை.
அவந்திகா எண்ணெய்க் கிண்ணங்களுடன் வருகிறாள்.
"அவந்திகா? இந்த ஆலமரத்துக்கு எத்தனை வயசிருக்கும்?"
"...மகாராஜா வயசிருக்கும்?"
ஊர்மிளா உதட்டைப் பிதுக்கி, பூமிஜாவைப் பார்க்கிறாள். மன்னரின் வித்தியாப்பியாச காலத்தில் அவர் கையால் நட்ட மரமாக இருக்கலாம்.
பேசிக் கொண்டே பரிமளங்களை அவிழ்க்கிறார்கள். உடலெங்கும் மணக்கும் மூலிகைப் பொடிகளைப் பூசிக் கொண்டு இதமான வெந்நீர் ஊற்றில் அரச குலப் பெண்கள் நீராட, பணிப் பெண்கள் கரையில் தூபகலசங்களைக் கொண்டு வந்து கூந்தலைத் துடைத்து உலர்த்திப் பிடிக்கச் செய்கின்றனர். ஊர்மிக்குச் சுருண்ட கூந்தல், அலையலையாகப் புரள்கிறது. சுதாவுக்கும் பூமிஜாவைப் போன்றே நீண்ட கூந்தல். பூமிஜாவுக்கு மிக அடர்ந்த கூந்தல். இடுப்புக்குக் கீழ், பின்புறம் மறைய விழுகிறது.
கால்களில் செம்பஞ்சுக் குழம்பை இறகில் தேய்த்து, சாமளி கோலம் செய்கிறாள். அரும்பரும்பாகக் கோலத்தின் நடுவே ஓர் அழகிய மயிலின் ஓவியம் விரிகிறது.
மயில் கண்முன் உயிர்த்தாற் போல் இருக்கிறது. "சாமளி இந்தக் கலையை எங்கு, யாரிடம் கற்றாய்?"
"யார் கற்றுக் கொடுப்பது? பார்த்துப் பார்த்துக் கற்றுக் கொண்டேன். இந்த மயில், கிளி, குயில் எல்லாம் நினைத்த மாத்திரத்தில் பறந்து சென்று எங்கோ மரக்கொம்பில் முகப்பில் உட்காருகின்றன. நமக்கு முடியவில்லை. ஏதோ குறைந்த பட்சம் அவற்றைச் சித்திரத்தில் வரையலாமே. என் தாயார், தாமரை, மாங்கனி, மாதுளை என்று வரைவாள்..."
"அது கிடக்கட்டும், சாமளி, உன் கால்களில் நீ இப்படி அழகு செய்து கொள்வாயா?" அவள் இல்லையென்று தலையை அசைப்பதுடன் செயலில் கண்ணாக இருக்கிறாள்.
"நான் கேட்டேனே, ஏன் சாமளி? நீ உன்னை அழகுபடுத்திக் கொள்ள மாட்டாயா?"
அவள் தலை நிமிராமல், கையில் பற்றிய இறகுடன் "நான் அரசமகளா?... பிரபு வருக்கமா? அல்லது... அழகு செய்து கொண்டு ஆடவரைக் கவரும் வருக்கமா? இந்தக் கலையின் விலை என் வாழ்க்கை."
"அப்படி என்றால்?"
"தேவி, அவள் எதையோ பிதற்றுகிறாள். அழகு செய்தது போதும். காலையில் இருந்து கனிச்சாறு கூட உள்ளே போகவில்லை. சாமளி, உன் கடையைக் கட்டு!" என்று அவந்திகா அவளை அனுப்புகிறாள். அவள் சிணுங்கி அவற்றை எடுத்துப் பெட்டிக்குள் வைக்கிறாள். அப்போது, கொட்டென்று ஒரு பெரிய பறவை கழுத்தறுப்பட்டாற் போல் அங்கு வீழ்கிறது. பறவைப் பட்டாளமே சோகக் குரல் கொடுக்க பெரும் அமளி உண்டாகிறது.
"இது என்ன விபரீதம்? இங்கே யார் பறவையை அடித்து வீழ்த்தினார்கள்? மகாராணியின் முன் அது வீழ்கிறது? யார்...?"
பூமகள் துணுக்குற்று அதைத் தாங்குகிறாள். சாம்பலும் நீலமும் கலந்த கழுத்தில் புள்ளிகள்... சிவந்த சிறு மூக்கு, கால்கள், வெண்மை அடி வயிறு. "என்ன அழகு! இதை இப்போது யார் எதற்காக அடித்தார்கள்?"
ஊர்மி சிரிக்கிறாள். "விருந்துக்குத்தான். அந்தக் குதிரைக்காரர்தான் வெறும் வில் - உருண்டை கொண்டு அடித்தார். என்ன குறி."
அவள் கண்கள் நெருப்புக் கோளமாகி விட்டாற் போன்று நிற்கிறாள்.
"விருந்துக்கா?"
"ஆம் தேவி. கருவுள்ள பெண்களுக்கு இதன் ஊனைப் பக்குவம் செய்து கொடுப்பது வழக்கமாம்! முக்கியமாக இங்கு வன விருந்துக்கு வருவதன் பொருளே, இத்தகைய அபூர்வமான பறவைகள், மூலிகைகளுக்காகத்தான்!"
கபடில்லாத உற்சாககங்கள் தீப்பற்றி எரிந்தாற் போல் இருக்கின்றன.
"அரக்கர் ராச்சியத்தில் கூட இப்படிக் கொடுமை நடக்கவில்லை! உயிர்கொலை தவிர, உங்கள் சந்தோஷங்கள் வேறு கிடையாதா? ஐயோ! ஆணும் பெண்ணுமாய்க் கூடுகட்டு, குஞ்சு பொரித்து, அதற்கு உணவூட்டும் பறவை இனம்..." என்று அவள் தன்னை மறந்து புலம்புகிறாள்.
ஆட்டமும் பாட்டமும், சிரிப்பும் களை கட்டவில்லை.
"தேவி, ராணிமாதா உத்தரவில் இது நடந்தது. இது வழக்கம் தான். மான், மீன் பறவை வீழ்த்திய பணியாளன் பாதம் பணிந்து மன்னிப்புக் கேட்கிறான்."
"அவந்திகா, எனக்கு இன்று எந்த உணவும் வேண்டாம். இந்தச் சூழலே பிடிக்கவில்லை. என்னைத் தனியாக விடுங்கள்..."
தாழ்வரையில் ஓர் ஓரமான இருக்கையில் சென்று சாய்கிறாள் பூமகள்.
அடுத்து, கானகத்தில் காய்ந்த விறகுகள் சுள்ளிகளைக் கல்லைக் கூட்டி அடுப்பாக்கி எரிய விட்டு உணவு தயாரிக்கும் கோலாகலம் நடக்கிறது. பூமகள் கண்களை மூடிக் கொள்கிறாள். இப்போது வலது கண் துடிப்பது போல் இருக்கிறது. இடது கண் துடித்தது; இலங்கைச் சிறையில் இருந்து விடுதலை கிடைத்தது. ஆனால் என்ன? எத்தனையோ கண்டங்கள்; நெருப்புக் குண்டங்கள். அவள் மகிழ்ச்சியின் துளிகளில் நனைந்து தாயாகப் போகிறாள். ஆனாலும் மகிழ்ச்சி என்ற முழுமையில் அவள் மனம் நனையவில்லை. வாழ்க்கை என்பதே இப்படி மேடு பள்ளங்கள் தானோ? அவள் மாமியார், அவந்திகா, சாமளி... ஜலஜா...
அவளுக்கு ஏதேனும் கெடுதல் நேர்ந்து விடுமோ? பெண்ணாகப் பிறந்தவள் ஆசை கொள்ளலாகாதா? மன்னரின் இதயத்தைப் பிடித்து, குன்றேற வேண்டும் என்று ஆசை கொண்டது தவறா? ஆனால் அவருக்கென்று ஒரு மனைவியும், அவளுக்கென்று ஒரு நாயகனும் இருக்கையில்... என்ன? அவள் ஒருவனின் உடமை. அடிமையானவளுக்கு நாயகனை மீறி நாட்டம் தோன்றுவது சரியல்ல. நாட்டம் தோன்றவில்லை என்றாலும், பத்து மாதங்கள் அவன் நிழலில் இருந்த காரணமே அவளை மாசுபடுத்தி விட்டதே? அந்த சலவைக்காரன் அவளை நெருப்பில் இறக்கி இருக்க மாட்டான் என்பது என்ன நிச்சயம்?
ஊர்மி கூந்தல் அலைய, காரசாரமாக நெய்யில் பொரித்த இறைச்சித் துண்டத்தைக் கடித்துக் கொண்டு வருகிறாள். அவள் முகத்தில் பளபளப்பு மின்னுகிறது. பொங்கும் மார்பகம் தெரியாமல் தொள தொளவென்று ஓர் இளம்பச்சை ஆடை அணிந்திருக்கிறாள்.
"அக்கா, உனக்கு இனி போகும் போதும் வரும் போதும் முன்னே இருவர் கவரி வீசி வர வேண்டும்" என்று சிரிக்கிறாள்.
சொல்லிவிட்டு, கையில் மீதி இருந்த எலும்புத் துண்டை வீசி எறிய, அதை ஒரு காகம் கொத்திச் செல்கிறது.
"அக்கா, மன்னிக்கவும், நான் ஏதேனும் தப்பாகச் சொல்லி விட்டேனா?"
"இல்லை ஊர்மி, என்னால் இந்த உலக வழக்கங்களைப் புரிந்து கொள்ள, ஒத்துக் கொள்ள முடியவில்லை..."
சுதாவும் அங்கே வருகிறாள்.
"கருப்பஞ்சாறு சேர்த்த பொங்கல் மிக நன்றாக இருக்கிறது அக்கா. இன்று உபவாசமா? மன்னர் வரவில்லை என்று கோபமா?" என்று கிண்டுகிறாள்.
"உனக்கென்னம்மா! பேசுவாய்! உன்னுடையவரை உன் மேலாடை முடிச்சில் கோத்து வைத்திருக்கிறாயல்லவா? நாங்கள் தாம் ஏமாளிகள். உன் இன்னோர் அக்கா, விரதம், தவம் என்று தன் நாயகரை அங்கு இங்குத் திரும்ப விடாமல் கட்டிப் போட்டு விட்டாள். நானும் பூமையுமே ஏமாளிகள்!"
பூமகள் செவிகளைப் பொத்திக் கொள்கிறாள்.
"போதுமடி குற்றம் சுமத்தலெல்லாம்! என்னை இப்போது தனியே விட்டு விட்டுப் போங்கள்!"
அப்போது சுமித்ரா தேவி, ராணிமாதா அங்கு வருகிறாள்.
"ஒத்தவன் - ஓரகத்தி என்ற காய்ச்சல் வர இடமில்லாமல் சகோதரிகளாக என் மருமக்கள் இருக்கிறார்கள் என்று நினைத்தேன். இங்கே என்ன பலத்த வாக்குவாதம்...? உணவு கொள்ள வாருங்கள். இலை விரித்து எல்லாம் பரிமாறக் காத்திருக்கிறார்கள். வெந்நீர் ஊற்றில் 'தைல' நீராட்டு முடிந்து வெறும் வயிற்றுடன் இருக்கக் கூடாது; பூமா... வாம்மா!"
"அம்மா, அவர்கள் உணவு கொள்ளட்டும். எனக்குப் பசியே இல்லை."
"ஓ... இது நன்றாயிருக்கிறது! நீலன் சமையல் மூக்கை இழுக்கிறது. ஏதேதோ வாசனைகள் சேர்த்து, பக்குவம் செய்து இருக்கிறான். எழுந்திரு மகளே, வா... இந்த நேரம், உயிர்க்கருவைப் பாலிக்க இரு மடங்கு உணவு கொள்ள வேண்டும்..."
"தாயே, எனக்கு இந்த ஊன் உணவு எதுவும் பிடிக்கவில்லையே?"
"தெரியும், உனக்கென்று பாலமுதம், கீரை, காய்கள், கனிகள், வியஞ்சனங்கள், உப்பிட்ட கிழங்கு, எல்லாம் செய்திருக்கிறோம். அவந்திகா, மகாராணியைக் கூட்டிச் சென்று பரிமாறு. காட்டுக் கறிவேப்பிலை என்ன மணம்? புளியும் மிளகும் கூட்டி, அரைத்து, மாவில் செய்த ரொட்டியில் தடவி, அற்புதமான பக்குவம் செய்திருக்கிறாள்..."
பெரிய வேம்பு கிளை பரப்பும் இடத்தில், பாய் விரித்து அவளுக்கு அமுது படைக்கிறார்கள். கேகய குமாரி மாதாவும் அவளுடன் சாத்துவிக உணவு கொள்கிறாள். உணவு கொண்ட அசதியில், அவள் அதே இடத்தில் இளைப்பாறுகிறாள். இலைகள் எடுத்துத் துப்புரவு செய்த பின் அதே இடத்தில், அவள் ஒரு பஞ்சணையை வைத்துச் சாய்ந்தவாறு, அப்படியே உறங்கிப் போகிறாள்.
அந்தக் கானகச் சூழலில் அமைதித்திரை சுருள் அவிழ்ந்து வீழ்கிறது. ஏதேதோ ஒலியோவியங்கள் அவள் செவிகளில் தீட்டப்படுகின்றன. குக் குக் குக் என்ற ஓர் ஒலி, கிர்... கிர்...ரென்று யாழ் நரம்பை இழுத்து மீட்டும் ஒலி... ஆனால் இது நந்த சுவாமியின் ஒற்றை நாண் ஒலி இல்லை என்று உள்ளுணர்வு பதிக்கிறது. பூமகள் தன் இடையில் உள்ள பட்டாடையை விரித்துக் கொண்டு அதில் முத்துக்களைக் குவிக்கிறாள்! பரப்புகிறாள். விரல்களால் அளைந்து சிறுமி போல் விளையாடுகிறாள். அப்போது நீல கண்டப் புறா ஒன்று வந்து அங்கே இறங்குகிறது. அது ஒவ்வொரு முத்தாகக் கொத்தி, அடுக்கி வைக்கிறது. கோபுரம் போல் அடுக்கி வைக்கிறது. அடி பரவலாக உச்சி கூம்பாக வருகையில் ஏழு முத்துக்கள்; பிற்கு மூன்று, உச்சியில் ஒன்று...
பூமைக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதைக் கையில் எடுத்துத் தடவிக் கொடுக்கிறாள்... "உனக்குப் பாலும் பழமும் கொடுக்கிறேன்... வா!" என்று அதைக் கையிலேந்தி மாளிகைக்குள் வருகிறாள்.
"அவந்திகா! பொற்கிண்ணத்தில் பாலும் பழமும் கொண்டா!" அவந்திகா பதறினாற் போல், "தேவி! இது தத்தம்மா இல்லை. இதைப் பழமும் பாலும் கொடுத்து வளர்க்க முடியாது. இது சிறு பூச்சி, விலங்குகள் தின்னும் க்ஷத்திரியப் பறவை!..."
"பொய்! இது எவ்வளவு அழகாக முத்துக்கோபுரம் கட்டி இருக்கிறது? இது ஊன் உண்ணும் கொலைப் பறவை இல்லை."
ஆனால் அவள் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே, அது அவள் முன் கையைக் கூரிய அலகினால் குத்திவிட்டுப் பறந்து உயர வானில் மறைகிறது. குத்திய இடத்தில் சிவப்பாய்... குங்குமச் சிவப்பாய்க் குருதி...
"கொலைகாரப் பறவை; நான் சொன்னேன், கேட்டீர்களா?..."
"என் முத்துக்கள்... மு... முத்துக்கள்."
அவள் பெருங்குரலெடுத்து அழுகிறாள். ஆனால் ஓசை வரவில்லை.
"மகளே... மகளே! என்னம்மா?..."
குளிர்ந்த நீரின் இதம் கண்களில் படுகிறது. அவள் மெல்லக் கண்களை விழிக்கிறாள். மார்பு விம்மித் தணிகிறது.
அருகிலே, ராணிமாதா இருவரும், அவந்திகாவுடன் குனிந்து பார்க்கின்றனர். அவளுக்கு நாணமாக இருக்கிறது.
"கனவாம்மா? உணவு கொண்டு தாம்பூலம் கூடச் சுவைக்காமல் உறங்கி விட்டாய்..."
இன்னும் அந்தப் பறவை கண் முன் நிற்கிறது.
--------------
அத்தியாயம் 8
தாரை தப்பட்டை ஒலி வலுக்கிறது. அவர்கள் நகரின் வாயிலுள் நுழைகிறார்கள். 'வேட்டைக்குச் சென்று திரும்பும் இளவரசர் வாழ்க! பட்டத்து அரசி வாழ்க! ராஜமாதாக்கள் வாழ்க! இளவரசிகள் வாழ்க!...'
வேட்டை மிருகமான ஒரு வேங்கைப் புலியைச் சுமந்து முன்னே செல்லும் தட்டு வண்டிச் சக்கரங்கள் கிறீச் கிறீச் சென்று ஒலிக்கின்றன. பூமைக்கு அது, இனிய இசையின் அபசுரமாகச் செவிகளில் விழுகிறது.
இப்போது அருகில் அவந்திகாவை அமர்த்தியிருக்கிறாள் கேகயத்துச் சீமாட்டி. பூமை செவிகளைப் பொத்திக் கொள்கிறாள்.
"இளவரசர் வேட்டைக்கு வந்தாரா, எங்களுக்குத் துணையாக வந்தாரா அவந்திகா?"
"இரண்டுந்தான். இந்தக் கொடிய வேங்கைப் புலி அரசரின் ஓர் அம்பில் சாய்ந்து விட்டது. பெண் புலியாம். நான்கு முழம் இருக்கிறதாம்!"
"ஐயோ, பாவம், அது இவர்களுக்கு என்ன தீங்கு செய்தது? அதன் மாமிசமும் தின்பார்களா?"
"மகாராணி நீங்கள் பச்சைக் குழந்தையாக இருக்கிறீர்கள். மகரிஷிகளுக்குப் புலித் தோலாடை - ஆசனங்கள் எப்படிக் கிடைக்கும்? மேலும், இந்தப் புலிகளைப் பெருக விட்டால் ஊருக்குள் நுழைந்து மனித வேட்டையாடாதா?"
அவள் பேசவில்லை.
அரண்மனைக்குள் நுழைகையில் மங்கல வாழ்த்துகளின் பேரொலி செவிகளை நிறைக்கிறது.
வாயிலில் இவர்களை வரவேற்க மாமன்னர் தலைகாட்டவில்லை. அவர் அன்னை மட்டும் முகம் காட்டி "நலமாக வந்தீர்களா? ஓய்வு எடுத்துக் கொள் மகளே!" என்று வாழ்த்தி விட்டுத் திரும்புகிறாள்.
இவள் மாளிகையில் பெண்கள் மங்கள ஆரத்தி எடுத்து, கண்ணேறு படாமல் கழிக்கிறார்கள்.
ஊர்மி, சுதா எல்லோரும் அவரவர் இருப்பிடங்களுக்குச் சென்று விட்டார்கள். முற்பகல் தாண்டும் நேரம், வெயில் தீவிரமாக அடிக்கிறது.
தன் மாளிகைத் தோட்டத்துப் பசுமைகள் வாடினாற் போன்று காட்சி அளிக்கின்றன. இரண்டு நாட்கள் மட்டுமே சென்றிருக்கின்றன. ஏதோ நெடுங்காலம் வெளியே சென்று விட்டுத் திரும்புவது போல் இருக்கிறது.
முதியவளான கணிகை பத்மினி, தன் நடுங்கும் குரலில்,
"சீர்மேவும் கோசலத்தின் நாயகனின்
தோள் தழுவும் தூமணியே!
பார்புகழும் மாமன்னன், பார்த்திபன் தன்
கண்மணியே..."
என்று பாடி ஆரத்தி எடுத்து நெற்றியில் திலகம் இடுகிறாள்.
ஆனால் இதெல்லாம் உண்மையல்ல என்ற மந்திரம் ஒன்று உள்ளே மெள்ள ஒலிக்கிறது.
வாசவி சமையற்கட்டிலிருந்து அகன்ற பாண்டத்தில் வெதுவெதுப்பான நீர் கொண்டு வருகிறாள்.
தாழ்வரையில் கால்களை முற்றத்தில் தொங்கப் போட்டுக் கொண்டு அமர்ந்த பூமகளின் பாதங்களில் சாமளி வரைந்த மயில் சிரிக்கிறது. அவந்திகா, கால்களைக் கழுவ வந்தவள் சற்றே நிற்கிறாள்.
"இத்துணை அழகுக் கலையை மன்னர் பார்த்து மகிழ வேண்டாமா? இந்தத் திருப்பாதங்களில், பொன்னின் சரங்களும், வண்ணச் சித்திரங்களும், மன்னரல்லவோ கண்டு மகிழ வேண்டும்?"
வாசவி வாளாவிருக்கிறாள். "சாமளி எங்கே?... அவளை அனுப்பி, மகாராணி அழைத்து வரச் சொன்னார் என்று சொல்லலாமா?"
வாசவி விருட்டென்று உள்ளே செல்கிறாள்.
உள்ளிருந்து, ராதையின் ஐந்து பிராயச் சிறுமி கண்டி அழுத முகத்துடன் வந்து மகாராணியின் முன் அழுது கொண்டே பணிகிறது.
பூமகள் பதறிப் போகிறாள். சிறுமி விம்மி விம்மி அழுகையில் பூமகள் அக் குழந்தையைத் தூக்கிக் கண்களைத் துடைக்கிறாள்.
"ஏனடி பெண்களா? இதெல்லாம் என்ன நாடகம்? அழுக்கும் சளியுமாக இவளை இங்கே அனுப்பி...?" என்று அவந்திகா அதட்டுகிறாள்.
ராதை அந்த அதட்டலைப் பொருட்படுத்தவில்லை.
"ஏண்டி, சனியனே? சொல்லித் தொலையேன்? நீ செய்த செயலுக்கு நானே உன்னை வெட்டி அடுப்பில் போடுவேன்!"
"அம்மம்மா! உங்கள் வாயில் இம்மாதிரி வார்த்தைகளைக் கேட்கவோ நான் வந்தேன்? குழந்தையை ஏன் வருட்டுகிறீர்? என்ன நடந்து விட்டது?"
"மகாராணி! நாங்கள் எதைச் சொல்ல? கிளிக் கூட்டைத் திறந்து விட்டு அதைப் பூனைக்கு விருந்தாக்கி விட்டாள்!"
"எந்தக் கிளிக்கூடு? தத்தம்மா எப்போதும் கூட்டில் இருக்காதே?" அதுவும்... மாளிகையில் அவள் இல்லாத நேரத்தில், கூட்டில் வந்து அமர்ந்ததா?
"ஆம் தேவி. நேற்று முன்னிரவில் வந்தது. தேவி இல்லையே என்று அதற்குப் பாலும் பழமும் வைத்துக் கூட்டில் அடைத்தேன். இந்தச் சனியன் காலையில் அதைத் திறந்து விட்டிருக்கிறாள்! எங்கிருந்தோ ஒரு நாமதாரிப் பூனை குதித்துக் கவ்விக் கொண்டு போய் விட்டது!"
மனதில் இடி விழுந்தாற் போல் பூமை குலுங்கிப் போகிறாள்.
"என் தத்தம்மாவா?"
"அதுதான்..."
"இருக்காது. அது வேறு கிளியாக இருக்கும்..."
மனசுக்குள் அவளே ஆறுதல் செய்து கொள்கிறாள்.
ஆனால் குழந்தை அழுது கொண்டே, "அது மூக்கால் தட்டி, திறந்து விடு திறந்துவிடுன்னு கொஞ்சிச்சி..." என்று தன் செய்கையின் நியாயத்தை விளக்குகிறாள்.
வலக்கண் துடித்தது. வளர்த்த கிளி... நெஞ்சம் கலந்த தோழி போன்ற பறவை, பூனைக்கு விருந்தா?...
"பூனைக்கண்ணி" என்று அக்கிளி கூறிய சொல் நெஞ்சைப் பிடிக்கிறது.
என்ன ஓர் ஒற்றுமை? இந்த மாளிகையில் இது வரையிலும் இப்படி ஒரு விபரீதம் நிகழ்ந்ததே இல்லையே? சமையற்கட்டில் மீன் திருத்தும் போது பூனைகள் வரும். அவள் சாடை மாடையாகப் பார்த்து வெறுப்பைப் புலப்படுத்தி இருக்கிறாள்.
பூனைக்குப் பாலோ மீனோ கொடுப்பதுதானே? கூட்டில் இருக்கும் பால் கிண்ணத்தை நக்கி விட்டுப் போக வந்ததோ?
பச்சைக்கிளி... அவள் தத்தம்மா... தெய்வமே? இது எந்த நிகழ்வுக்கு அறிகுறி?
"நீசகுலத்தாளே, பூனை பற்றிய சேதியை உடனே வந்தவிழ்க்கிறாள்?"
"இல்லை தாயே, எப்படி இந்த விபரீதம் நேர்ந்ததென்றே தெரியவில்லை. நம் அரண்மனைப் பூனை இல்லை இது. நம் பூனைகள் இங்கே கிளிகளோடு சல்லாபம் செய்யும். இரை கொள்ளாது. இது எப்படி எங்கிருந்து வந்ததென்று தெரியவில்லை. முழங்கால் உயரம் இருந்தது... நாமநாமமாக... புலிக்குட்டி போல் இருந்தது..." என்று அஞ்சிய வண்ணம் ராதை விவரிக்கிறாள்.
"போதும், இப்போது யாரும் இதைப் பற்றிப் பேச வேண்டாம். தேவி, பயணக்களைப்பில் சோர்ந்திருக்கிறீர்கள் வெதுவெதுப்பாக நீராடி, சிறிது உணவு கொண்டு உறங்குங்கள். மாலையில் மன்னர் நிச்சயமாக வருவார்..." என்று அவள் மனமறிந்து அவந்திகா இதம் சொல்கிறாள்.
உடல் அசதி தீர நீராடுகிறாள். துடைத்து, முடி காய வைத்துக் கொண்டே உணவு கொண்டு வருகிறாள். பால் கஞ்சி, கீரை வெண்டை, கத்திரி, பூசணி காய் வகைகளும் பருப்பும் சேர்த்த ஒரு கூட்டு, மிளகு சேர்த்த காரமான ஒரு சாறு... உணவு அவந்திகாவே தயாரித்துக் கொண்டு வந்து அருந்தச் செய்கிறாள். அறையை இருட்டாக்கி, திரைச் சீலைகளை இழுத்து விட்டு, பஞ்சணையில் அவளைப் படுக்கச் செய்கிறாள்.
பூமை சிறிது நேரத்தில் உறங்கிப் போகிறாள். மனதில் ஒன்றுமே இல்லை... நடப்பது நடக்கட்டும். ஆம், நடப்பது நடக்கட்டும்... என்ற உறுதியை அவள் பற்றிக் கொண்டிருக்கிறாள்.
ஆழ்ந்த உறக்கம், கனவுகளும் காட்சிகளும் தோன்றாத உறக்கம் விழிப்பு வரும் போது எங்கோ மணி அடிக்கிறது... மணி... விடியற்காலையில் அருணோதயத்துக்கு முகமன் கூறும் மணி அல்லவோ இது!...
பூமகள் மெள்ளக் கண்களை அகற்றுகிறாள்.
படுக்கையைச் சுற்றி மெல்லிய வலைச் சீலையை விலக்கிப் பார்க்கிறாள். மாடத்தில் மினுக் மினுக் கென்று ஓர் அகல் வெளிச்சம் காட்டுகிறது. அவந்திகா கீழே அயர்ந்து உறங்குகிறாள். அவளுடைய தளர்ந்த சுருக்கம் விழுந்த கை, அதைத் தலைக்கு அணையாகக் கொண்டு ஒரு கோரைப் பாயில் உறங்குகிறாள். வெளியே அரவம் கேட்கிறது...
"மகாராணிக்கு மங்களம்..." என்று சொல்லிவிட்டு, கிழட்டுக் குரல்,
"செம்மை பூத்தது வானம்...
செந்தாமரைகள் அலர்ந்தன.
செகம்புகழ் மன்னரின் பட்டத்து அரசியே,
கண் மலர்ந்தருள்வீர்..."
என்று பள்ளியெழுச்சி பாடுகிறது.
தாம் எப்போது படுத்தோம் என்று சிந்தனை செய்கிறாள். கூடவே, மன்னர் இரவு வந்து பார்த்துவிட்டுப் போயிருப்பாரோ என்ற இழப்புணர்வும் அடிவயிற்றில் குழி பறிப்பது போன்ற வேதனையைத் தோற்றுவிக்கிறது.
"யாரங்கே...?"
"மங்களம், மகாராணிக்கு. சாமளி..."
சலத்தில் நீரேந்தி வருகிறாள்.
"சாமளி, மன்னர் இரவு வந்தாரா?..."
அவள்... "இல்லையே?" என்று கூறு முன் அவந்திகா விருட்டென்று எழுந்திருக்கிறாள்.
"நீ கண்டாயா? நீ உன் புருசனைப் பார்க்க ஓடி விட்டாய். அவன் எந்தப் பொம்புள பின் ஓடுகிறானோ என்ற கவலையில். இங்கே மகாராணி இல்லை என்ற நினைப்பில் நீ எதையும் கவனித்திருக்க மாட்டாய். நான் உன்னையே முதலில் நேற்று வந்ததில் இருந்து பார்க்கவில்லை. இப்போது மன்னர் வந்தாரா என்று கேட்டால், இல்லை என்று பார்த்தாற் போல் சொல்கிறாய்! மன்னர் ராத்திரி வந்தார். என்னிடம் விசாரித்தார். நலமாகத்தானே இருக்கிறாள் என்று கேட்டார். நான் சொன்னேன். தூங்கட்டும், எழுப்ப வேண்டாம், காலையில் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டுப் போனார். இத்தனை நடந்து இருக்கிறது, இவள் மன்னர் வரவில்லை என்கிறாள். இங்குத் தீபச் சுடர் தட்டிக் கரிந்து போனாலும் அதைத் தூண்டி எண்ணெய் விட நாதி இல்லை. பேசுகிறார்கள் கூடிக் கூடி!"
பூமகளுக்கு அவந்திகாவின் பேச்சு ஏன் இயல்பாகத் தோன்றவில்லை?
சாமளி இங்கு தான் சுற்றிக் கொண்டிருக்கிறாள். அவள் கூறியது ஏன் உண்மையாக இருக்கலாகாது?
ஊடே கிளியைப் பூனை கவ்வும் தோற்றம் சிந்தனையில் வேலாய்ப் பாய்கிறது. தத்தம்மா, என் தத்தம்மா, சத்தியம், அதையா பூனை கவ்வி விட்டது? திடீரென்று நினைவு வந்தாற் போல், "அந்தப் பணிப்பெண்ணைக் கூட்டி வா என்று சொன்னேனே, அவந்திகா? நினைவிருக்கிறதா? கூட்டி வாயேன்!" என்று மெல்லிய குரலில் நினைவூட்டுகிறாள்.
"யார் தேவி? பூவாடை நெய்யும் ஒண்ரைக் கண் பிந்துவா?..." அவந்திகாவும் வேண்டுமென்றே தாண்டிச் செல்வதாகப் படுகிறது.
"இல்லை... அவள்... பெரிய ராணி மாளிகையில் செம்பட்டை முடி..." அப்போது, "வாழ்க! வாழ்க! இளவரசர் வாழ்க! மூத்த இளவரசர் வாழ்க!" என்ற வாழ்த்தொலிகள் கேட்கின்றன.
பூமை வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல் விரைந்து கீழே படியிறங்கி வருகையில் முன்முற்ற வாயிலைச் சுத்தம் செய்யும் பணியாளர் திகைத்தாற் போல் பரபரத்து ஒதுங்குகின்றனர். அவந்திகா விரைந்து வந்து அவள் தோளைத் தொடுகிறாள்.
"பதற்றம் வேண்டாம் மகாராணி! மன்னர் பார்த்து வரச் சொல்லி இருப்பார். அதனால் தான் ஆரவாரமின்றி வருகிறார்..."
"இருக்கட்டும் இளையவரை நான் வரவேற்க வேண்டாமா?"
முன்முற்றத்துக்கு அவர் வந்து விடுகிறார். இவள் முகமலர அவருக்கு முகமன் கூறி வரவேற்கு முன் அவர் சிரம் குனிய அவள் பாதம் பணிகிறார்.
"அரசியாரை இளையவன் வணங்குகிறேன்!"
அவர் குரல் ஏனிப்படி நடுங்குகிறது? முகத்திலும் ஏனிப்படி வாட்டம்?
"மன்னர் நலம் தானே, தம்பி? நேற்று வந்திருந்தாராம். நான் ஆழ்ந்த நித்திரையில் இருந்ததால் எழுப்ப வேண்டாம் என்று திரும்பி விட்டாராம்!"
"தேவி, தாங்கள் கானகத்தில் முனிவர் ஆசிரமங்களில் சென்று தங்க வேண்டும் என்று ஆசைப்பட்டீர்களாம். அதை நிறைவேற்றி விட வேண்டும் என்று மன்னர் விரும்புகிறார். என்னை இப்போதே பயணத்துக்குச் சித்தமாகத் தேரைக் கொண்டு வரச் சொல்லி இருக்கிறார். நான் மன்னர் பேச்சை ஆணையாக ஏற்று வந்துள்ளேன்..." எந்த நெகிழ்ச்சியுமில்லாத குரல்.
"அவந்திகா!..." மகிழ்ச்சி வெள்ளத்தில் கண்ணீர் முத்துக்களாக உதிர்கின்றன.
"அடி! சாமளி! விமலை! இளவரசர் வந்திருக்கிறார், உபசரியுங்கள். அருந்துவதற்குப் பானம் கொண்டு வாருங்கள்..." என்று ஆரவாரிக்கிறாள்.
ஆசைப்பட்ட இடங்கள்... வேதவதிக்கரை... அவள் பிறவி எடுத்த பூமி, அங்குள்ள மக்கள்... நந்தமுனி, பெரியம்மா... அவந்திகாவுக்கு உவப்பாகப் படவில்லை.
"இது என்ன அவசரம்? இப்போது தான் ஒரு பயணம் முடிந்து வந்திருக்கிறீர்கள்? என்ன பரபரப்பு?"
கால் கழுவ நீரும், இருக்கையும், கனிச்சாறும் ஏந்தி வரும் பணிப்பெண்கள் முற்றத்தில் இளவரசனைக் காணாமல் திகைக்கிறார்கள்.
"மன்னர் தாமே வந்து இதைச் சொல்லக்கூடாதா? இளையவர் ஏதோ காலில் கஞ்சியைக் கொட்டிக் கொண்ட வேகத்தில் ஓடுகிறாரே?"
"அவந்திகா, நான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். இப்போது ஏதும் குறை சொல்ல வேண்டாம். மன்னர் என் விருப்பத்தை நிறைவேற்றுகிறார். அதுவே பேறு. அவருக்குப் பயணத்துக்கு முன் அநேக அலுவல்கள் இருக்கும். தம்பியை அனுப்பியுள்ளார். எனக்கென்ன ஓய்வு? ஓய்வு, ஓய்வு, ஓய்வு! நான் என்ன வேலை செய்தேன்? நீர் கொண்டு வந்தேனா? குற்றினேனா? இடித்தேனா? புடைத்தேனா? உணவு பக்குவம் செய்தேனா? இப்போது நான் விரைந்து சித்தமாக வேண்டும்" என்று பரபரக்கிறாள்.
அவந்திகா மவுனமாகிறாள்.
-------------
அத்தியாயம் 9
அவளுடைய உடலில் புதிய சக்தி வந்து விட்டாற் போலிருக்கிறது. பட்டாடைகள், அணிபணிகள் வைத்திருக்கும் மரப்பெட்டிகளைத் திறக்கிறாள். வண்ண வண்ணங்களாகக் கண்களுக்கு விருந்தாய்க் கலைப்படைப்புகள்... பெருந்தேவி அன்னைக்கு, இந்தப் பட்டாடை; இந்தக் கம்பளிப் போர்வை. நந்த முனிவருக்கு ஒரு கம்பளி ஆடை. வேடுவப் பெண்களுக்குச் சில ஆடைகள். கஞ்சுகங்கள். இங்கே இந்தப் பெண்களைப் போலில்லாமல்... அவர்கள் சுதந்தரமானவர்கள்... கானகம் செல்கையில், மன்னரைக் காண மீனும் தேனுமாக உபசரித்த படகுக்காரன், அவன் மனைவியின் குஞ்சு குழந்தைகள் கண்முன் பவனி வருகிறார்கள்... சிறை மீண்டு வருகையில் வேடுவப் பெண்கள் - தோலாடையும் மணிமாலையும் அணிந்து வந்த காட்சி தெரிகிறது. ஒரு குழந்தை வெண்முத்துப் பற்களைக் காட்டச் சிரித்த வசீகரத்தில் அவள் அருகே சென்று தொட்டணைத்தாள். அந்த மக்கள் கூட்டத்துக்கே உரித்தான வாடை - மறந்து போயிற்று. மூக்கில் ஒரு வளையத்துடன் அந்தப் பெண் குழந்தையின் முகம் தெரிகிறது. மகாராணி தொட்டதை எண்ணி, அவர்கள் மேலும் மேலும் பரவசப் பட்டதை நினைத்தவாறே, ஆடைகளை, அணிகலன்களைப் பொறுக்கி எடுத்துச் செல்லவிருக்கும் பெட்டியில் வைக்கிறாள்...
"அவந்திகா, நான் விரைந்து நீராட வேண்டும். மன்னர் அருகில் இப்படி உறக்க சோம்பேறியாக இருந்தால் பரிகசிப்பார்..."
அவந்திகா வாசனைப் பொடிகள், தைலம், சீப்பு, ஆகியவற்றுடன் நீராடும் முற்றத்துக்கு அவளை அழைத்துச் செல்கிறாள்.
பூமகளுக்குப் பரபரப்பில் என்ன பேசுகிறாள் என்பதே உணர்வில் படியவில்லை. சொற்கள் தன்னிச்சையாக நாவில் எழும்பி உயிர்க்கின்றன.
சுடுநீரில் போதுமான வெம்மை ஏறவில்லை.
"போதும் அவந்திகா! கூந்தலை நனைக்க வேண்டாம்!" எல்லாம் விரைவில் முடிகிறது.
"கூந்தல் சிங்காரத்துக்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளாதே. அவர் விரைந்து வந்து விடுவார். பொறுமை கிடையாது! 'இந்தப் பெண்களே இப்படித்தான் அலங்கரித்துக் கொள்ளத் தொடங்கி விட்டால் நேரம் தெரியாது' என்பார்! நாங்கள் விரைவில் சென்றாலே பொழுது போகு முன் நல்ல இடத்தில் இரவைக் கழிக்க முடியும்... போகும் வழியில் யாரேனும் முனி ஆசிரமத்தில் தான் தங்குவோம். கோமதி ஆற்றின் கரையில் இப்போதெல்லாம் அடர்ந்த காடுகளே இல்லை. விளை நிலங்களாகிவிட்டன. இப்போது என்ன விதைத்திருப்பார்கள்...?" அவந்திகாவுக்கு மென்மையான கை. அவள் கூந்தலைச் சிக்கெடுத்துச் சீராக்கக் கை வைக்கும் போது இதமாக உறக்கம் வந்துவிடும். கூந்தலை, மூன்றாக, நான்காக வகுத்து, சிறு பின்னல்கள் போட்டு, சுற்றிக்கட்டி, முத்துக்களும், பொன்னாபரணங்களுமாக அழகு செய்வாள். வண்ண மலரச்சரங்களாலும் அழகு செய்வாள். இந்த அலங்காரங்கள் முன்பு செய்யத் தெரியாது. பதினான்கு ஆண்டுக்காலம், இந்த அரண்மனையில், இளைய மாமி, கேகய அரசகுமாரியிடம் கற்றுக் கொண்டிருக்கிறாள். அந்தப் பெருமாட்டி அறுபத்து நான்கு கலைகளிலும் தேர்ச்சி பெற்றவராம்.
செண்பக மலர்களைக் கொண்டு வந்து கொட்டுகிறாள்.
"செண்பகச் சரங்கள் சுற்றும் கூந்தல் சிங்காரமா? அவந்திகா, இதற்கு வெகுநேரம் ஆகுமே? அவந்திகா வேண்டாம்... ஒவ்வொரு காலிலும் மலர்களைச் செருகி பின்னல்களை நாகபட வடிவில் எடுத்துக் கட்டுவதற்குள் பொழுது போய்விடும்..."
"தேவி, மன்னர் பார்த்து மகிழ வேண்டாமா? இந்த அலங்காரங்களை, நான் எப்போது யாருக்குச் செய்து காட்ட முடியும்?..."
"போதும். நாங்கள் இப்போது, புனிதப் பயணம் போல் முனி ஆசிரமங்களுக்குப் போகிறோம். கொலு மண்டபத்துக்குப் போகவில்லை. இப்போது தவசிகளின் மனவடக்கம் பாலிக்க வேண்டும்! இப்படியெல்லாம் அலங்கரித்துக் கொண்டு போனால், மன்னர் என்னைத் தீண்டக் கூட மாட்டார்..."
"தேவி!" என்று அவந்திகா உரக்கக் கூவுகையில் பூமகள் நாவைக் கடித்துக் கொள்கிறாள்.
... உடல் குலுங்குவது போல் ஓர் அதிர்ச்சி. அவளையும் மீறி விழுந்து விட்ட சொல்லா அது?...
"அவந்திகா? என்ன சொன்னேன்? எதற்காக அப்படி அலறினீர்?"
"அலறினேனா? இல்லை. நீங்கள் அசைந்தீர்கள். சீப்பின் கூரிய பல் முனைப்பட்டு வருந்தப் போகிறதே என்ற அச்சத்தால் உரத்துக் கூவிவிட்டேன்."
"மன்னர் தீண்டமாட்டார் என்ற சொல் எப்படி வந்தது?..." என்று பேதையாகப் புலம்புகிறாள்.
"அதெல்லாம் ஒன்றுமில்லை. இப்போது மன்னருடன் ஆசைப்பட்டதற்கு ஏற்பப் போகப் போகிறீர்கள். அந்த வருத்தமெல்லாம் ஆதவனைக் கண்ட பனியாகக் கரைந்து விடும்; எழுந்திருங்கள், குலதெய்வத்தைத் தொழுது உணவு கொள்ளச் சித்தமாகுங்கள். தேர் வந்துவிடும். மன்னர் உணவு கொண்டு தான் வருவாராக இருக்கும்... ராதை உணவு கொண்டு வருவாள். நான் சென்று தாங்கள் கொண்டு செல்லும் பொருட்கள், ஆடைகளைப் பெட்டியில் எடுத்து வைத்துவிட்டு வருகிறேன்!"
அவந்திகா விரைகிறாள்.
பூமை, குலதெய்வமாகிய தேவன் இருக்கும் மாடத்தின் முன், தாமரை மலர்களை வைத்துக் கண்மூடி அருள் வேண்டுகிறாள். வணங்குகிறாள். தூபம் புகைகிறது; தீபம் சுடர் பொலிகிறது.
"தேவனே, இந்தக் குலக்கொடிக்குத் தங்கள் ஆசியை அருளுங்கள். வம்சம் தழைக்க, ஒரு செல்வனை அருளுவீர்!"
பட்டாடை சரசரக்க, ஊஞ்சலில் போடப்பட்ட இருக்கையில் வந்து அமருகிறாள். முன்றிலில் இரண்டு அணில்கள் கீச்சுக் கீச்சென்று கூவிக்கொண்டே ஒன்றை ஒன்று துரத்துகிறது. கிளிக்கூண்டுகளில் கிளிகள் இல்லை. எப்போதும் எல்லாவற்றையும் திறந்து விடுவாள். அவை விருப்பம் போல் வந்தமர்ந்து பணிப்பெண்கள் வைக்கும் பால்-பழம் அருந்தும். இவளுடைய தத்தம்மா இல்லை... அது இருக்கும். பூனை கவ்வியது அவள் தத்தம்மா இல்லை...
அப்போது அங்கே கண்டி வந்து எட்டிப் பார்க்கிறது. இடையில் வண்ணம் தெரியாத ஒரு சிறு துண்டு ஆடை அழுக்கும் சளியும் துடைக்கப் பெறாத முகம். பிரிந்த தலை.
"குழந்தை இங்கு வா!"
இவள் அழைத்த குரல் கேட்டதுதான் தாமதம், அவள் விரைந்து உள்ளே சமையற்கட்டுக்குள் மறைகிறாள்.
ராதை தட்டில், உணவுக் கலங்களை ஏந்தி வருகிறாள்.
நெய் மணக்கும் அப்பம் போல் சேர்த்த பொரிக்கஞ்சி, இனிய கனிகள்... இலை விரித்து, அதில் அப்பங்களை, ஆவி மணக்கும் இனிய பண்டங்களை எடுத்து வைக்கிறாள்.
"ராதை, உன் மகள் கண்டியைக் கூப்பிடு? எட்டிப் பார்த்துவிட்டு ஓடுகிறது. நான் கூப்பிட்டால் பயமா?"
"தேவி, நீங்கள் மன்னருடன் புறப்படும் நேரம். அவள் எதற்கு? அந்தச் சோம்பேறியை மீனைத் தேய்த்துக் கழுவச் சொன்னேன். ஒரு வேலை செய்வதில்லை. இங்கே வேடிக்கை பார்க்க முற்றத்துக்கு வருகிறாள். தேவி, இது கிழங்குமாவில் செய்த அப்பம். ருசி பாருங்கள்!"
பூமகள் அப்பத்தை விண்டு சிறிது சுவைக்கிறாள்.
"மிக ருசியாக இருக்கிறது. நீ குழந்தையை இங்கே கூப்பிடு!"
அவள் சொல்வதற்கு முன் கண்டி, அவசரமாக முகத்தை நீரில் துடைத்துக் கொண்ட கையுடன் சிரித்த வண்ணமாக வருகிறாள்.
"அடி தரித்திரம்! போடி! இங்கே ஏன் வந்தாய்? மனசுக்குள் பெரிய அரசுகுமாரி என்ற நினைப்பு?" என்று ராதை குழந்தையை அடித்து விரட்ட, அவள் அழும் குரல் செவிகளில் துன்ப ஒலியாக விழுகிறது.
"ராதை?" என்று கடுமையாக பூமை எச்சரிக்கிறாள்.
"எதற்கு உன் கோபத்தைக் குழந்தையின் மீது காட்டுகிறாய்? இந்த, உன் அப்பமும் வேண்டாம், ஒன்றும் வேண்டாம்! என் முன் உனக்கு இத்துணை கடுமை காட்ட, உன் மனசில் ஏன் அவ்வளவு வெறுப்பு?"
"தேவி!" என்று நிலந்தோய ராதை பணிந்து எழுகிறாள். அவள் மேலே போட்டிருக்கும் துண்டு ஆடை நிலத்தில் வீழ்கிறது.
"மன்னிக்க வேண்டும். தாங்கள் அவளிடம் காட்டும் அன்பும் சலுகையும் மற்றவர்களின் பொறாமையைத் தூண்டி விடும்! ஏழை அடிமைகளுக்குப் பெருந்தன்மை கிடையாது!"
அவளுடைய சொற்கள் சுருக்சுருக்கென்று ஊசிகள் போல் தைக்கின்றன.
"ஏழையாவது, அடிமையாவது? என் செவிகள் கேட்க, இந்த அரண்மனையில் இப்படிப் பேசாதே ராதை! அப்படிப் பார்க்கப் போனால் நானும் குலம் கோத்திரம் அறியாத அநாதையே!"
"சிவ சிவ... நான் மகாராணியைக் குற்றம் சொல்வேனா? அவரவர் அவரவர் இடத்தில் பொருந்தி இருப்பதே உகந்தது. ஊர்க்குருவி, ஊர்க்குருவிதான். கருடப்பறவை கருடப்பறவைதான். உயர்ந்த குலத்தில் உதித்த, சாம்ராச்சிய அதிபதியின் பட்டத்துராணி தாங்கள். தங்களுக்குப் பூரண சந்திரன் போல் ஒரு மகன் பிறக்க வேண்டும். இந்த அழுக்குப் பண்டத்தை மடியில் வைத்துக் கொஞ்சுவது பொருந்துமா? இந்த ஏழைகளின் நெஞ்சில், பட்டாடைகள், முத்துக்கள், பாலன்னங்கள், பஞ்சணைகள் என்றெல்லாம் ஆசைகளை வளரவிடலாமா? கல்திரிகையில் கலம் தானியம் கட்டி இழுத்து மாவாக்க வேண்டும்... மணி மணியாக தானியம் குற்றி உமி போகப் புடைத்து வைக்க வேண்டும்... ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?..."
அவளுடைய நெஞ்சை இனந்தெரியாத சுமை அழுத்துகிறது.
அந்தப் பருவத்தில், அரண்மனைத் தோட்டத்தில் தான் ஆடிப்பாடி மகிழ்ந்ததை நினைவூட்டிக் கொள்கிறாள்.
உணவு இறங்கவில்லை.
கை கழுவ நீரும் தாலமும் ஏந்தி வருகிறாள்.
"உனக்கு எத்தனை குழந்தைகள்?"
"இரண்டு பிள்ளைகள்..."
"அவர்கள் குருகுல வாசம் செய்கிறார்களா?"
"எங்களுக்கேதம்மா குருகுல வாசம்? அப்பனுடன் உழுவதற்குப் போகிறான். இளையவன் ஆறு வயசு. கொட்டில் சுத்தம் செய்யும். ஆடு மேய்க்கும். இவள் அவனுக்கும் இளையவள். வீட்டில் தனியாக இருந்தால் ஓடிப் போய்விடும்."
"ஏன் ராதை, உங்கள் பிள்ளைகள் குருகுல வாசம் செய்யக்கூடாதா?" அவள் சிரிக்கிறாள். வெறுமை பளிச்சிடுகிறது.
"மன்னர் ஆட்சியில் வாழ்கிறோம். நேரத்துக்குச் சோறு, ஏதோ பணி கிடைக்கிறது. மந்திரக் கல்வியும் தந்திரப் போரும் உயர்ந்த குலத்தோருக்கே உண்டு..."
பூமை கைகழுவவும் மறந்து சிந்தையில் ஆழ்கிறாள்.
எத்துணை உண்மை? மந்திரக் கல்வி... தந்திரப் போர்...
இதெல்லாம் யாரிடமிருந்து யாரைக் காப்பாற்ற?
மன்னர்கள் யாரிடமிருந்து யாரைக் காப்பாற்ற வில்லும் அம்பும் சுமந்து திரிய வேண்டும்?
இவள் பிள்ளைக்கும் வில் வித்தை பயிற்றுவிப்பார்கள். நீ உன் அரசைக் காப்பாற்றப் பகைவர்களை அழிக்க வேண்டும். யார் பகைவர்கள்? பகைவர்கள் எப்படித் தோன்றுகிறார்கள். முனிவர்களுக்கு அரக்கர்கள் எப்படிப் பகைவர்களானார்கள்?
சுற்றிச் சுற்றி ஒரே இடத்தில் வந்து நிற்கிறாள். அதை விட்டு வெளியே வர முடியவில்லை.
திடீரென்று ஓர் அச்சம் புகுந்து கொள்கிறது. இப்போது மன்னரும் இவளும் மட்டும் கானகத்துக்குச் செல்லும் போது, முனிவர்களின் ஆசிரமங்களில் தங்கும் போது, ஆபத்து நேரிடாது என்பது என்ன நிச்சயம்?
பகைமை கொடியது... ஒரு கால் யாரேனும் மன்னரைத் தூக்கிச் சென்றால் அவள் என்ன செய்வாள்?
இவளுக்கு இளைய ராஜாமாதா போல் தேரோட்டத் தெரியாது. அம்பெய்யத் தெரியாது. ஈ எறும்பைக் கூடக் கொல்ல மாட்டாள்... ஆனால் அந்த அன்னை அவ்வளவு தேர்ந்தவளாக இருந்ததாலேயே மாமன்னரைக் காப்பாற்றினாள். அதுவே பல குழப்பங்களுக்கு அடித்தலமாயிற்று. இரண்டு வரங்கள்... புத்திர சோக சாபம்...
கையில் வில்லும் அம்பும் இருந்தாலே கொலை வெறி வந்து விடுமோ? இல்லாது போனால், அந்த மாமன்னர் கண்ணால் பார்க்காத ஒரு விலங்கை, அது தண்ணீர் குடிப்பதாக அநுமானித்து, ஓசை வந்த இடம் நோக்கிக் கொலைகார அம்பை எய்வாரா? அந்த யானையைக் கொல்லலாகாது என்று ஏன் நினைக்கவில்லை? தெய்வம் தந்த கானகம்; தெய்வம் தந்த நீர்நிலை; தெய்வம் தந்த உயிர். இன்னாருக்கு இன்ன உணவு இயற்கை நியதி. இதெல்லாம் மெத்தக் கல்வி பயின்றிருந்த மாமன்னருக்கு ஏன் தெரியவில்லை? குருட்டுப் பெற்றோரின் ஒரே மகனை அந்த அம்பு கொலை செய்தது. எந்த ஒரு கொலைக்கும் பின் விளைவு இல்லாமல் இருக்காது!... இப்போது... ஏன் மனம் குழம்புகிறது?
"அம்மா? ஏனிப்படி வாட்டமாக அமர்ந்திருக்கிறீர்கள்? அரச மாதாக்களை வணங்கி ஆசி பெற வேண்டாமா?.. அவந்திகா இன்னமும் பெட்டிகளைச் சித்தமாக்குகிறார். பிறகு என்னைக் கோபிப்பார். மன்னர் வந்துவிட்டார் என்றால்..."
இவள் சொல்லி முடிக்கு முன், நிழல் தெரிகிறது. பட்டாடை அசையும் மெல்லொலி...
இளையவர்... தம்பிதான்.
கோபமா, அல்லது துக்கமா?
முகம் ஏன் கடுமை பாய்ந்த அமைதியில் ஆழ்ந்து போயிருக்கிறது? சினம், துயரம், இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டை இந்த முகத்தில் காண முடியாது.
"தேவி, இரதம் முற்றத்தில் வந்து நிற்கிறது. வந்து ஏறுங்கள்!"
அவள் உள்ளத்தின் எதிர்பார்ப்புகள் வண்ணமிழக்கின்றன.
"இதோ..."
அவள் எழுந்து அவனைப் பின் தொடருகிறாள்.
-------------
அத்தியாயம் 10
அரண்மனையின் வெளிவாயிலில் தான் இரதங்கள் வந்து நிற்பது வழக்கம். உள்ளே அந்தப்புர மாளிகைகளுக்குச் செல்லும் முற்றத்தில் பல்லக்கு மட்டுமே வரும். ஆனால் இரதம் உள்ளே வந்திருக்கிறதென்று சொல்லிவிட்டு, "உடனே வர வேண்டும்" என்று அவர் முன்னே விரைந்து நடக்கிறார். சிறிது தொலைவு சென்றதும் திரும்பிப் பார்த்து உறுதி செய்து கொண்டு நடக்கிறார்.
கோசலாதேவியின் மாளிகைக்குத்தான் செல்வார். மன்னர் அங்கேதான் இருப்பாராக இருக்கும்... அவளுக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் மிகவும் கோபமாக இருப்பாரோ என்று உள்ளுணர்வில் ஒரு கலக்கம் படிகிறது. இது... இவர் செய்வது, தமையனின் ஆணையா? தமையனில்லை; கணவர் என்ற உறவும் இல்லை... மன்னர் மாமன்னர் ஆணை... இந்தச் சூழலிலும் அவளுக்குச் சிரிப்பு வரும் போல இருக்கிறது.
கானகத்தில் வாழ்ந்த போது மான் இறைச்சி பதம் செய்து அவளுக்கு ஊட்டவே முன் வருவார். அவள் மறுப்பாள்... "இங்கே வேறு நல்ல உணவு கிடையாது. வெறும் புல்லையும் சருகையும் உண்டு நீ தேய்ந்தால், ஏற்கெனவே நூலிழை போல் இருக்கும் இடை முற்றிலும் தேய்ந்து விட, நீ இரு தண்டுகளாகிப் போவாய். மனைவியை வைத்துக் காப்பாற்றத் தெரியாத மன்னன் என்ற அவப்புகழை எனக்கு நீ பெற்றுத்தரப் போகிறாயா, பூமிஜா?..." என்பார். "எனக்கு வேண்டாம் என்று மறுக்கிறேன். நீங்கள் என்ன செய்வீர்கள்!" என்று அவள் பிடிவாதமாக அந்த உணவை ஒதுக்குவாள். உடனே கணவர் என்ற காப்பாள உறை கழன்று விழும். 'மன்னர் ஆணை!' என்ற கத்தி வெளிப்படும். "மன்னன்... நான் மன்னன் ஆணையிடுகிறேன். காலத்துக்கும் நீ அடி பணிய வேண்டும். பூமகளே!" என்று குரலை உயர்த்துவார்.
அவள் அப்போது அந்தக் குரலை விளையாட்டாகக் கருதிக் கலகலவென்று சிரிப்பாள்.
ஆனால், சிரிக்கக்கூடிய குரல் அல்ல அது.
அவளை அனற்குழியில் இறங்கச் செய்த குரல். ஆணை அது... அதை அப்போது அவள் உணர்ந்திருக்கவில்லை. ஆனால் இப்போது?
அவளை அவர் வெளி வாயிலுக்கு அல்லவோ அழைத்துச் செல்கிறார்? அச்சம் இனம் புரியாமல் நெஞ்சில் பரவுகிறது.
முதுகாலைப் பொழுது, மாளிகையின் அனைத்துப் பகுதிகளும் சுறுசுறுப்பாக இயங்கும் நேரம். வாயிற் காப்பவர்கள், பணிப்பெண்கள், ஏவலர்கள் அனைவரும் தத்தம் பணிகளில் ஈடுபட்டிருக்கும் நேரம். குஞ்சு குழந்தைகள் முதல் அங்கும் இங்கும் போய்க் கொண்டிருக்கும். அவள் வெளியே தென்பட்டால் 'மகாராணிக்கு மங்களம்' என்று வாழ்த்தி வணங்கும் குரல் ஒலிக்கும்...
ஆனால் சூழல் விறிச்சிட்டுக் கிடக்கிறது. ஏதேனும் அசம்பாவிதம் நேர்ந்து விட்டதோ?...
துடிப்பு கட்டுக்கடங்காமல் போகிறது.
அவரைக் குரலெடுத்துக் கூப்பிடவும் முடியவில்லை. அத்துணை தொலைவில் தன்னை இருத்திக் கொண்டிருக்கிறார். வரிக்கொம்பில் ஒற்றைக் காகம் ஒன்று சோகமாகக் கரைகிறது...
வாயில்... வாயிலில் தேர் நிற்கிறது. அதில் பூமாலை அலங்காரங்கள் எதுவும் இல்லை. தேரை ஓட்டும் பாகனாக... மன்னரோ, வேறு எவரோ இல்லை. மன்னர் அதில் அமர்ந்திருக்கவில்லை.
நால்வர் அமரும் பெரிய தேர். உச்சியில் மன்னர் செல்லும் போது பறக்கும் கொடியும் இல்லை. ஓரங்களில் கட்டப்பட்ட மணிகள், வெயிலில் பளபளக்கின்றன. அப்போது தான் அவள் கூர்ந்து பார்க்கிறாள். வெண்புரவிகளின் கயிற்றைப் பற்றிக் கொண்டு சுமந்திரர் நிற்கிறார். ஏதோ கனவில் நிகழ்வது போல் இருக்கிறது.
"தேவி, ஏறி அமரலாமே?..."
அவள் ஏறுவதற்கான படிகள் தாழ்ந்து பாதம் தாங்குகின்றன.
"மன்னர் வரவில்லையா?"
இளையவர் அதற்கு விடையிறுக்காமல் எங்கோ பார்க்கிறார்.
"நான் மட்டுமா போகிறேன்?"
"தாங்கள் ஆசையைத் தெரிவித்தீர்களே?"
"ஆனால் தனிமையில் இல்லையே?"
"மன்னரின் ஆணை; நான் செயலாற்றுகிறேன்."
"இருக்கட்டும் நான் ராணிமாதாக்களை வணங்கிச் சொல்லிக் கொள்ள வேண்டாமா? அதற்கு முனி ஆசிரமங்களுக்கு, வேடர் குடிகளுக்கு ஆடைகள், தானியங்கள் பரிசிலாகக் கொண்டு செல்ல வேண்டுமே?" அவள் குரலுக்கு எதிரொலி இல்லை. சுமந்திரர் தேரைக் கிளப்பி விடுகிறார். அவள் முகம் தெரியாதபடி இளையவர் காவல் போல் அமர்ந்திருக்கிறார். மிகப் பெரிய பெட்டியை அவந்திகாவும், விமலையும் சுமந்து கொண்டு விரைந்து வருவது தெரிகிறது. ஆனால் அவளுக்கு ஒலி எழுப்ப முடியவில்லை. நகர வீதிகளைக் கடந்து குதிரைகள் பாய்ந்து செல்கின்றன. அவளுக்கு உடலும் உள்ளமும் குலுங்குகின்றன. நெஞ்சம் வாய்க்கு வந்துவிடும் போல் குலுக்கம். ஒரு மிகப்பெரிய இருள் பந்தாக வந்து எந்தக் குலுக்கலுக்கும் அசையாமல் அவளை விழுங்கி விட்டதாகத் தோன்றுகிறது.
குதிரைகள் குளம்படி ஓசை மட்டுமே ஒலிக்கிறது. குலுக்கல்... உடல், உள்ளம்... தனக்குள் இருக்கும் உயிர்... அதற்கும் அதிர்ச்சி ஏற்படுமோ? தன் மலர்க் கரத்தால் வயிற்றைப் பற்றிக் கொள்கிறாள்... உயிர்த் துடிப்புகள் மவுனமாகி விட்டனவோ?... இல்லை... இது, ஒரு விளையாட்டாகவும் இருக்கலாம். மன்னர் கோமதி நதிக்கரையில் காத்திருப்பார். முனி மக்களுக்குரிய பரிசிற் பொருட்களைச் சுமந்து முன்னமே தேர்கள் சென்றிருக்கலாம். அவளை எதற்காக அவர் இந்நிலையில் சோதிக்க வேண்டும்?... ஒரு கால் ஊர்மியின் விளையாட்டோ? ஊர்மியும் வருகிறாளோ? சதானந்தர் வந்திருந்தாரே? ஊர்மியை அழைத்துச் செல்லப் போகிறாரா? ஸீமந்த முகூர்த்தம் என்றார்கள்?...
ஊர்மிளையின் நினைவு வந்ததும் சிறிது ஆறுதலாக இருக்கிறது. இருக்கட்டும் இருக்கட்டும். இந்தப் போக்கிரிதான் இதற்கெல்லாம் காரணமா?... ஆனால் இந்தச் சுமந்திரர் அன்று எங்களை நாடு கடத்தத் தேரோட்டி வந்தாற் போல் எதற்கு வருகிறார்? பெண்கள் விஷயத்தில் இவர் எதற்கு மூக்கை நுழைக்க வேண்டும்?... சுமந்திரர்... முப்பாட்டன் காலத்து மந்திரி. பிடரியில் நரை தெரிய சாயம் மங்கிய பாகை... செவிகளில் குண்டலங்கள் இல்லை; முதுமையே செவிகளை இழிந்து தொங்கச் செய்து விட்டது. மலையே அசைந்தாலும் பேச்சு வராது... பெரிய மன்னருக்கு, சக்கரவர்த்திக்கு - இப்போதைய மன்னருக்கு - இவர் மகனுக்கு இருப்பாரோ? மெய்க்காப்பாளர், அமைச்சர், ஆலோசகர், தேர்ப்பாகன்...
அப்போது ஊரே இவர்கள் பின் அழுது கொண்டு வந்தது. ஆற்றின் கரையில் மக்கள் உறங்கச் சென்ற நேரம் பார்த்து இரவுக்கிரவே இவர்களை ஆறு கடக்க ஏற்பாடு செய்தார். அப்போது அதெல்லாம் விளையாட்டுப் போல் உற்சாகமாக இருந்தது.
ஆற்றங்கரை தெரிகிறது.
ஊர்மியோ, மன்னரோ, எங்கு இருப்பார்கள்?
ஆற்றில் அதிக வெள்ளப் பெருக்கில்லை. ஆற்றின் கரையில் உள்ள வயல்களைக் கடந்து தேர் செல்கையில் ஆங்காங்கு முற்றிய தானியக் கதிர்களைக் கொத்த வரும் பறவைகளின் மீது கவண் கற்கள் எறியும் உழவர் குடிப்பிள்ளைகளை அவள் பார்க்கிறாள். இவர்கள் தேரைப் பார்த்துவிட்டு ஆங்காங்கு தென்படும் சிறுவர்கள், பெண் மக்கள் வியப்புடன் கண்களை அகல விரிக்கிறார்கள்.
"ஏய்... மகாராணி! மகாராணி! ராஜா...!"
நிலத்தில் வேலை செய்யும் பெண்கள் சரேலென்று மார்பு மறைய, தலை குனிகிறார்கள்.
"மகாராணிக்கு மங்களம்..."
அரவங்கள் மடிந்து போகின்றன. வானமே சல்லென்று கவிழ்ந்து விட்டாற் போல், தோன்றுகிறது. ரொட்டி விள்ளலும் பாற் கஞ்சியும் நெஞ்சிலேயே குழம்புகின்றன. இத்தனை நேரமாகியும் இத்தனை குலுங்கலிலும் அது சீரணமாக ஏன் குடலுக்கு இறங்கவில்லை? அவள் புளிப்புக் காய்க்கு ஆசைப்பட்ட போது மரங்கள் பூக்கவில்லை. இப்போது பிஞ்சும் காயுமாக மரங்கள். பொன்னிறக் கனிகளைக் குரங்குகள் கடித்துப் போடுகின்றன... அணில்கள் கண்களில் படவில்லை...
இளையவரும் சுமந்திரரும் கூடப் பேசவில்லை.
ஆற்றில் நீர் மிகக் குறைவாக இருக்கும் பக்கம் தேர்ச்சக்கரம் இறங்கிச் செல்கிறது. நடுவில் மணல் திட்டில் சக்கரம் புதைகிறது. இளையவர் இறங்கித் தள்ளுகிறார். பிறகு புல்லும் புதர்களும் உடைய இடங்கள். ஆறு கடந்து விட்டார்கள்... எங்கே? எங்கே போகிறார்கள்? யாரோ எப்போதோ கட்டிய மண் குடில்கள்; பிரிந்த கூரைகள். தேர் வருவதைக் கண்ணுற்ற வேடர்கள் சிலர் ஓடி வருகின்றனர். தேர் நிற்கவில்லை. அவர்கள் மேனி குறுக்கி, வாய் பொத்தி, தேருடன் விரைந்து தொடருகின்றன. அந்தி சாயும் நேரம். மாடுகளை மேய்த்துத் திரும்பும் சிறுவர் வியப்புடன் அவளையும் இளையவரையும் மாறி மாறிப் பார்க்கின்றனர். தேர் நிற்கிறது; குதிரைகள் கனைக்கின்றன. சுமந்திரர் தட்டிக் கொடுக்கிறார்.
"பிள்ளைகளா, பக்கத்தில் தங்குமிடம் இருக்கிறதா?"
"இருக்குங்க மகாராசா! நேராகப் போனால் சாமி ஆசிரமங்கள் இருக்கும்..."
வேடர் குடிமகன் ஒருவன் விரைந்து வருகிறான்.
"சாமி, வாங்க... நம்ம பக்கம் நல்ல இடம் இருக்கு. ரா தங்கி, இளைப்பாறிப் போகலாம்..."
குதிரைகள் மெதுவாகச் செல்கின்றன. முட்டு முட்டாக வேடர் குடில்கள். மரங்களில் தோல்கள் தொங்குகின்றன. நிணம் பொசுங்கும் வாடை... பறவை இறகுகளின் குவியல்கள்... கண்டியைப் போல் ஒரு குழந்தை அம்மணமாக வருகிறது.
தேரைக் கண்டதும் நாய்கள் குரைக்கின்றன.
தீப்பந்தங்களுடன் பலர் வருகின்றனர். தேர் நிற்கிறது.
பூமகளை ஒரு வேடுவ மகள் கை கொடுத்து, அணைத்து இறங்கச் செய்கிறாள்.
"மகாராணி! வாங்க! அடிமை ரீமு நான்..."
தீக்கொழுந்தின் வெளிச்சத்தில், அவள் முன் முடி நரைத்து, முன்பற்கள் விழுந்து கோலம் இணக்கமாகத் தெரிகிறது.
"என்ன சந்தோசமான ராத்திரி... மகாராணி..."
மெள்ள அணைத்து அவளை நடத்திச் செல்கிறார்கள்.
பந்தங்கள் வழி காட்டுகின்றன. ஆடுகள் கத்தும் வரவேற்பொலி குலவையிடும் வரவேற்பு.
தோலாடை விரிப்பில் அமர்த்து முன், குடுவையில் நீர் கொண்டு வருகிறார்கள் பெண்கள். இருளில், சுளுந்து வெளிச்சங்களில் இணக்கமான அன்பு முகங்கள்... கால்களைக் கழுவி விடுகிறார்கள். முகம் துடைக்கச் செய்கிறார்கள். புத்துணர்வு கூடுகிறது.
இதுதான் என் பிறந்த வீடோ? பிரசவத்துக்கு இந்தத் தாய்வீட்டுக்கு மன்னர் அனுப்பி இருக்கிறாரோ?
முகத்தைக் கழுவிக் கொண்ட பின் வாயில் நீரூற்றிக் கொப்பளித்ததை ஏந்த ஒரு மண் தாலம் வருகிறது.
ஓங்கரித்து வரும் புரட்டல் அடங்கி, சமனமாகிறது.
அங்கிருந்து இதமாகப் புல் பரப்பிய இன்னொரு குடிலுக்கு அழைத்துச் செல்கிறார்கள். கனிகளைச் சுமந்து ஒரு வேடுவப் பெண் வருகிறாள். பிரப்பந்தட்டில், அரிந்த மாங்கனிகள், இருக்கின்றன. அவள் குனிந்து வைக்கையில், வேடுவருக்கே உரிய ஒரு வாடை வீசுகிறது.
மன்னர் முன்பு தங்களுக்கு ஒரு வேடுவக் கிழவி, கடித்துக் கடித்து ருசி பார்த்த கனிகளைத் தந்து உபசரித்ததை விவரித்த வரலாறு நினைவில் முட்டுகிறது. இவரும் கிழவிதான். முன்பற்கள் இல்லை. தாடையோரம் ஒரு பல் தொத்திக் கொண்டு இருக்கிறது. முடி உதிர்ந்து முன் மண்டை தெரிகிறது. இழிந்த செவிகள். மார்பகம் பையாகத் தொங்குகிறது. அரையில் அதிகப்படியாக ஒரு நார் ஆடை மானம் மறைக்கிறது.
அவள் இவள் பட்டுப் போன்ற கூந்தலைத் தேய்ந்த கரத்தால் மென்மையாகத் தடவி, "தேவி, உங்களுக்கு வணக்கம்" என்று கரைகிறாள். இது வணக்கமா? வாழ்த்தா? பூமகளின் நெஞ்சம் உருகுகிறது.
"மகாராணி, பயணத்தில் களைத்திருக்கிறீர்கள். இந்தக் கனிகளை உண்டு இங்கே படுத்து இளைப்பாறுங்கள். எங்கள் குலதெய்வம் வந்தாற் போல் வந்திருக்கிறீர்கள்..." என்று பொருள் பட கொச்சை மொழியில் தழுதழுக்கிறாள் அந்த அம்மை.
அந்தக் கனிகள், புளிப்பும், இனிப்பும் கலந்ததாக, நாரும் தோலுமாக இருந்தாலும், அவர்கள் அன்பு அவளுக்கு அமுதமாக அந்த உணவை மாற்றி விடுகிறது. ஒரு குடுவையில், காரசாரமான விறுவிறுப்பான பானம் ஒன்று கொண்டு வந்து தருகிறார்கள். அவள் அதை அருந்திய பின் அந்தப் புல் படுக்கையில் தலை சாய்க்கிறாள். சற்றைக்கெல்லாம் கண்கள் சுழல, உறக்கம் வந்து விடுகிறது.
கனவுகளே இல்லாத உறக்கம். எங்கோ ஆனந்தம் தாலாட்டும் அமைதி. அன்னை மடி என்பது இதுதானோ? என் அன்னை... என் தாய் என்னைப் பத்து மாதங்கள் வைத்துப் பேணிய மணி வயிறு. எனக்கு உயிரும், நிணமும், அறிவும், பிரக்ஞையும் அளித்த கோயில், எனக்கு ஆதாரமுண்டு; எனக்கு நிலையான உணர்வு உண்டு. அதெல்லாம் தந்தவள் அம்மை. அம்மையே, தாங்கள் என் தந்தையறியாமல் என்னைப் பெற்றெடுத்தீரோ? தாயே என்னை உன்னதமான குலத்தில் சேர்க்க, மன்னர் உழும் இடத்தில் என்னைக் கிடத்தினீரோ, அதற்காக என்னைத் துறந்தீரோ?... தாயே, நான் வேடுவகுல மகளாகவே இருந்திருப்பேனே? மன்னரின் மாளிகைப் பஞ்சணைகள் முள் முடிச்சுகள் நிரம்பியவை. அந்தப் பளபளப்பும் பட்டு மென்மைகளும் ஒளியும் குளிர்ச்சியும் கூடியவை அல்ல. மனிதருக்கு மனிதர் வேலி போடும், தனிமைப்படுத்தும் முட்கள்... அரக்கர் வேந்தனின் மாளிகைத் தோட்டம் மட்டுமே சிறையன்று. மன்னர் குடிகள் எல்லாமே பெண்களுக்குச் சிறைதான்... என்னை அந்தச் சிறையில் இருந்து மீட்டு வர, தாயே, எனக்கு இப்படி ஒரு சந்தர்ப்பத்தைத் தந்தீரோ?...
டகடகடகங்கென்று ஓசை அதிர்கிறது. ஓ... யாரோ அரசகுமாரர் வேட்டைக்கு வந்துள்ளார். நான்கு முழ நீளமுள்ள வேங்கைப் புலி, பெண் புலியை அம்பெய்து வீழ்த்தி விட்டார். அதற்கான வெற்றிக் கொட்டு...
யாருக்கு... யாருக்கு வெற்றி! அந்தப் புலி இரையெடுத்துக் குடும்பம் புலர்த்தும்! அது தப்பா?...
ஏய்... போதும்... போதுமப்பா! போதும்.
யாரோ சிரிக்கிறார்கள்.
பட்டென்று விழிப்பு வருகிறது. அவள் கண்களை மலர மலரக் கொட்டிக் கொண்டும், அங்கையினால் அழுத்திக் கொண்டும் தெளிவு துலங்கப் பார்க்கிறாள். கிழக்கு வெளுத்து உதயவானின் செம்மையும் கரைந்து வருகிறது.
"இவ்வளவு நேரமா தூங்கி விட்டேன்?"
"மன்னித்துக் கொள்ளுங்கள், மகாராணி? ராஜா, காலையில் வந்து, கங்கை கடந்து செல்ல வேண்டும் என்று அழைத்தார். தாங்கள் அயர்ந்து உறங்கினீர்கள்..."
திரை விலகி, நினைவுகள் குவிகின்றன.
அவள் கண்கள் அங்குக் கூடியிருந்த முகங்களில் யாரையோ தேடுகிறது. அந்த அம்மை, அவள் அன்னை போல் இதம் செய்த அம்மை எங்கே?
"அவர் எங்கே? எனக்குக் கனிகள் அரிந்து கொடுத்து, இதமாகக் கால்களைப் பிடித்து விட்ட அன்னை, எங்கே?"
"இவள் தான்... ரீமு..."
"தாயே, நான் தான் கொடுத்தேன்..."
முடியுல் பறவை இறகுகளைச் செருகிக் கொண்டு மோவாயில் முக்கட்டி போல் பச்சைக் குத்துடன் ஓர் இளம் பெண் முத்து நகை சிந்துகிறாள்.
"என் அம்மா... நான் தங்களுக்குக் குடுவையில் குடிக்கப் பானம் கொண்டு வந்தேன்..."
அவர்கள் எல்லோரையும் அணைந்து கொள்ள வேண்டும் போல் இருக்கிறது.
"நீங்கள் அன்னை, தமக்கை, தங்கை, எல்லா எல்லா உறவுகளும் எனக்கு இங்கே இருக்கின்றன. நான் இப்போது எதற்கு, எங்குச் செல்ல வேண்டும்!"
ஆனால் கேட்க நா எழும்பவில்லை. "மன்னர் ஆணையை, இளையவர் நிறைவேற்றுகிறார். யாரேனும் சடாமுடி முனி வர்க்கங்களைப் பணிந்து ஆசி பெற்று வர வேண்டும்!"
அவள் அவர்களிடம் பிரியா விடை பெறுகிறாள்.
கங்கை... குறுகலாகத் தெரிகிறது. படகோட்டி ஒருவன் சிறு படகைத் தயாராக வைத்திருக்கிறான். அக்கரை கரும்பச்சைக் கானகம் என்று அடர்த்தியாக விள்ளுகிறது.
சுமந்திரர் படகில் ஏறவில்லை. இளையவர் மட்டுமே இருக்கிறார். காலை நேரத்து வெளிச்சம் சிற்றலைகளில் பிரதிபலிப்பது வாழ்க்கையின் கருமைகள் துடைக்கப்படும் என்ற நம்பிக்கையாக உள்ளத்தில் படிகிறது. ஆழங்காணாத கிணற்றில் தன் கையைக் கொண்டு தரைக்காகத் துழாவுவது போல் எதிர்க்கரையை வெறித்துப் பார்க்கிறாள்.
அக்கரையில் மனித அரவமே தெரியவில்லை. ஒன்றிரண்டு பறவைகள், வெண் கொக்குகள், பறந்து செல்கின்றன... பெரிய அடர்ந்த மரங்கள். கதம்ப மரங்கள். ஓங்கி உயர்ந்த மருத மரங்கள். அவர் இறங்கி முன்னே செல்கிறார். அவளைத் தொடர்ந்து வரப் பணிப்பது போல் நின்று நின்று பார்த்துச் செல்கிறார். குற்றிச் செடிகள்; ஒற்றையடிப் பாதைகள். மா, ஆல், அத்தி என்று பல்வேறு மரங்கள்; கானகத்துக்கே உரிய மணங்கள். பல்வேறு பறவைகள் இவள் வரவுக்குக் கட்டியம் கூறுபவை போல் வெவ்வேறு குரல்களில் ஒலி எழுப்புகின்றன.
மிகப்பெரிய ஆலமரம் ஒன்று பெரிய பெரிய விழுதுகளுடன் அங்கே பரந்திருக்கிறது.
"ஆகா! ஏதோ மன்னர் அரண்மனை போல் இல்லை?" பூமகள், முதன் முதலாக எழுப்பும் குரல் அது. இளையவர் நிற்கிறார்.
"ஆம், தேவி! இனி இதுவே தங்கள் அரண்மனை!" பச்சை மரத்தில் ஒரு கத்தி செருகினாற் போன்று அந்த விடை பதிகிறது. அவள் சட்டென்று அந்த முகத்தில், அந்தக் குரலில் செருகப்பட்ட இரகசியத்தைப் பற்றிக் கொள்கிறாள். இதுகாறும் இழைந்த இழை, அறுந்து தொங்குகிறது.
"இது மன்னர் ஆணை. தேவி என்னை வேறெதுவும் தாங்கள் கேட்காமல் மன்னித்தருளுங்கள்!"
அவள் முகம் இருண்டு போகிறது.
திரும்பிச் செல்கிறான்.
-----------
அத்தியாயம் 11
அவன் செல்வதையே அவள் பார்த்துக் கொண்டு நிற்கிறாள். கண்கள் அவன் வரிவடிவக் கோட்டில் தன்னுணர்வின்றி ஒன்றுகின்றன. இளையவர்... இளையவர்...
அந்நாளில் மானின் பின் அதைக் கொல்லச் சென்ற அண்ணனுக்குத் துணை போகாத இளையவன். அண்ணன் அதைக் கொல்லுமுன், அதை அவர் அம்பிலிருந்து காப்பாற்று என்று போகச் சொன்னாள். இளையவன் மறுத்தான். இவனுக்கென்று ஒரு தனி எண்ணம் கிடையாது. அண்ணன் கொலை செய்வதை ஆதரிப்பவன். அவன் நிழல்... அவள் ஆத்திரத்துடன் போ... போ... போ! ஏன் இங்கே நிற்கிறாய்? எனக்கு காவலா? எனக்கு நீ காவலா, அல்லது சமயம் பார்த்திருக்கிறாயா என்று தீச்சொல்லை உமிழ்ந்தாள். அந்தத் தீச்சொல்லும் அவனை விரட்டவில்லை. ஒரு கோட்டைப் போட்டுவிட்டுச் சென்றான்.
"நீ என்ன எனக்குக் கோடு போடுவது! நான் உன் அடிமையா! கானகம் என்னுடையது; என் அன்னை மடி; நான் எங்கும் திரிவேன்" என்று அந்தக் கோட்டை அழித்தாள்.
இன்று எந்தக் கோடும் இல்லை. அவன் போகிறான்.
அவன் கையில் வில்லும் அம்பும் இல்லை.
அண்ணன் அரக்கர்களை அழித்து விட்டான். எனவே கானகம் அபாயமற்றது என்று நினைத்தானா? கானகம் அவளுடையது; ஆசைப்பட்டாள்; கொண்டு வந்து விட்டிருக்கிறான்... ஆசை... கருவுற்றவள், நிறை சூலியாக இருக்கும் போது ஆசையை நிறைவேற்ற தன்னந்தனியாக... அனுப்பி வைத்திருக்கிறான்...
அவளுக்கு உடலில் சிலிர்ப்பு உண்டாகிறது.
கானகம்... தண்டனையா? அடிமைப் பெண்களும் அறுசுவை உண்டியும், பஞ்சணை இனிமைகளும் இல்லாத கானகமும், தனிமையும் தண்டனை என்று மெய்ப்பித்திருக்கிறார்களா?
அவந்திகா! சாமளி! பெட்டியைத் தூக்கிக் கொண்டு மகாராணியைப் பரிசில்களுடன் அனுப்பி வைக்க வந்தீர்களே! உங்கள் மகாராணி நாடு கடத்தப்பட்டிருக்கிறாள்... பேதைப் பெண்களா! உங்கள் மகாராணி இனி மகாராணி இல்லை. முழுதுமான பேதை. நீங்கள் இனி யாருக்கு ஊழியம் செய்யப் போவீர்கள்?
அவளுடைய இந்த எண்ண மின்னல்கள், மதுக்குடம் பொங்கிவரும் நுரை போன்ற சிரிப்பாய்ப் பொங்கி வருகிறது; அவள் உரக்கச் சிரிக்கிறாள். அந்தக் காட்டில் பெரிய மாளிகை போல் விழுது பரப்பி நின்ற ஆலமரத்தினடியில், அங்குக் குடியிருந்த பல்வேறு உயிரினங்களின் அரவங்களும் அடங்கி விட, இவளுடைய சிரிப்பு மட்டும் நெடுநேரம் இவளுக்கு ஒலிப்பதாக உணருகிறாள். அந்தச் சிரிப்பு அவளுக்கே அந்நியமாகப் படுகிறது. அவள் சிரிப்பை நிறுத்தியதும் அங்கிருந்த பறவைக் கூட்டங்கள் சிறகடித்து வட்டமாகப் பறக்கின்றன. தங்கள் தங்கள் மொழியில் கூச்சல் போடுகின்றன. ஆலமரப் பொந்தில் சுருண்டு கிடந்த கருநாகம் ஒன்று விருவிரென்று வெளியே வந்து, குடை விரிப்பது போல் படம் எடுத்து அவளுக்குச் சற்று எட்டிய தொலைவில் முகம் காட்டி வரவேற்பு அளிக்கிறது.
சற்று எட்ட, கூட்டமாகச் செல்லும் மானினம், அவள் அங்கு இருப்பதைக் கண்டு விட்ட நிலையில் கூட்டத்தோடு நின்று பார்க்கிறது.
இப்போது அவளுக்கு இன்னும் சிரிப்பு பொங்கி வருகிறது.
"தோழிகளே, தோழர்களே, வாருங்கள் இங்கு வில், அம்பு, வாள், ஈட்டி, கவண்கல் எதுவும் கிடையாது. என்னை நம்புங்கள்... நான், நான் மட்டுமே இங்குள்ளேன்!"
அவள் சருகுகள் கால்களில் மிதிபடும் மெல்லோசை கேட்க, மான் கூட்டத்தின் அருகே சென்று ஒரு குட்டி மானைப் பற்றித் தன் மென் கரங்களால் தடவிக் கொடுக்கிறாள். அதன் கழுத்தோடு அணைந்து இதம் அநுபவிக்கிறாள். அதன் உறவுக்குழு, அவளால் ஆபத்தொன்றுமில்லை என்றுணர்ந்து அருகில் உள்ள தடாகக்கரைக்கு நகருகிறது. இவளும் தடாகக் கரைக்கு வருகிறாள். எத்தனை நீர்ப்பறவைகள்! அன்னப் பறவைகள் - சிவந்த மூக்கும் வெண் தூவிகளுமாக... ஒற்றைக்கால் தவமிருக்கும், கொக்கு முனிகள்... கதிரவனைப் பார்த்து மலர்ந்து நேயம் அநுபவிக்கும் தாமரைகள்... நீலரேகை ஓடும் செந்தாமரைகள். வட்டவட்டமான இலைகளில் முத்துக்கள் இழைவதும் சிதறுவதுமான கோலங்கள்... வண்டினம் வந்தமர்ந்து தேன் நுகரும் ஆரவாரங்கள்.
பூமகள், அருகில் ஓடும் ஒரு மரத்து வேர்த்தண்டில் அமர்ந்து தடாகத்தில் கால்களை நனைத்துக் கொள்கிறாள். பளிங்கு போன்ற நீர்... மீன்கள் அவள் பொற்பாதங்களில் மொய்த்து, பாதசேவை செய்கின்றன.
"அடி, தோழிகளா, போதுமடி சல்லாபமும் சேவையும்! நான் தன்னந்தனியாக வந்திருக்கிறேன். புதுமணப்பெண் அல்ல, குறுகுறுத்து நாணுவதற்கு?" என்று கூறிக் கொண்டு கரங்களால் நீரை அள்ளி எடுத்து அவற்றை விரட்டுகிறாள். அது பெரிய தடாகம். மான்கள் எட்ட எதிர்க்கரைக்கு நகர்ந்து போகின்றன. அருகே, புதரிலிருந்து வெளிப்படும் கரடி ஒன்று, சட்டென்று நீரைக் கலக்கிக் கொண்டு மூழ்கி, எழும்புகையில் அதன் வாயில் ஒரு பெரிய மீன் சிக்கி இருக்கிறது.
இவள் கலீரென்று சிரிக்க, அது திடுக்கிட்டாற் போல் அதிர, மீன் நழுவித் தண்ணீரில் விழுகிறது.
"... கரடி மாமி? உனக்குப் பழமில்லையா? புற்றாஞ்சோறு இல்லையா? தேனில்லையா? ஏன், பாவம், மீனைப் பிடித்து வதைக்கிறீர்கள்?" என்று அருகில் சென்று அதன் தலையைத் தடவிக் கொடுக்கிறாள். பொச பொசவென்ற முடி நனைந்திருக்கிறது. பட்டுப்போல் மென்மையாக உணருகிறாள்.
"ஓ! உனக்கும் மசக்கையா? அதனால் தான் மீன் பிடிக்க வந்தாயா?... எனக்கும் மசக்கை ஆசை; ஆனால் இப்போதுதான் மன்னர் என்னை உங்களிடம் அனுப்பி வைத்திருக்கிறார்..."
இவள் கைச்சுகத்தில் அந்தக் கரடி கட்டுப்பட்டாற் போல் நிற்கிறது. "உனக்கு மன்னர் இருக்கிறாரா?... இருக்கமாட்டார். இருந்திருந்தால் உன்னைக் காடு கடத்தி, நாட்டு மனிதர்களிடம் அனுப்பி வைத்திருப்பாராக இருக்கும். மாற்றான் வீடு, சிறை, அக்கினிகுண்டம், ஆண்டான், அடிமை எதுவும் இல்லாத உங்கள் உலகம் எனக்குப் பாதுகாப்பானதுதானே?..."
வெயில் ஏறுவது உறைக்காமல் குளிர்ச்சியின் பாயல் படிகிறது. இதமான ஒலிகளும், நீரும் நிழலும், ஒளியும் அவளுக்கு இதமான தாலாட்டுப்போல் சூழலோடு ஒன்ற வைத்து பேரின்பப்படிகளில் ஏற்றுகின்றன. கரடி மீண்டும் மீன் பிடிக்க நீரில் முழ்குகிறது.
ஓர் எறும்புச்சாரி, வாயில் வெண்மையாக எதையோ கவ்விக் கொண்டு மரத்தின் மேல் ஏறுகிறது. அவள் நிமிர்ந்து பார்க்கிறாள். இது என்ன மரம்? அரசா? இலைகள் சிறியவை; சூரிய ஒளியில் துளிர்கள் வெள்ளிக்காசுகள் போல் மின்னுகின்றன; நீரில் நிழல்கள் ஜாலம் செய்கின்றன. சரசரவென்று பறவைகளின் இறக்கைகள் படபடக்கும் ஓசை கேட்கிறது. மரக்கிளைகள் குலுங்குகின்றன. சிவப்பும் மஞ்சளுமாகக் கனிகள் இரைகின்றன...
ஓ...? அநுமனின் குலத்தாரோ?
அநுமன் செய்தி அனுப்பியிருப்பானோ? அந்தக் கனிகளைப் பொறுக்கி முன் மரத்தின் மேல் நிமிர்ந்து பார்க்கிறாள். அந்தக் குரங்கு, குட்டியை மடியில் இடுக்கிக் கொண்டு தாவித்தாவிப் போகிறது. மரத்துக்கு மரம் தாவிச் செல்கின்றன. பல குரங்குகள். அவள் காத்துக் காத்து அருகே செல்கிறாள். எந்தச் சேதியும் யாரும் அனுப்பவில்லை. குரங்கினம் அப்பால் சென்று விட்டது.
கீழே செங்காயாகக் கிடக்கும் கனி ஒன்றை எடுத்துக் கடிக்கிறாள். விருவிரென்று இனிப்பும் துவர்ப்புமாக ஒரு சுவை ஆரோக்கியமாகப் பரவுகிறது. நந்தமுனியின் நினைவு வருகிறது.
அவர் இப்போது எங்கே இருப்பார்?... அவர் இங்கே இப்போது வந்தால் எத்துணை நன்றாக இருக்கும்? அப்போது ஓசைப்படாமல் அவள் தோளில் வந்திறங்குகிறது ஒரு கிளி.
அவள் கையிலிருக்கும் செங்கனியைக் கொத்துகிறது.
"தத்தம்மா! தத்தம்மா? என் உயிர்த்தோழி தத்தம்மா தானா? எனக்கு இது கனவல்லவே?..."
அது அந்தக் கனியை உண்ணவில்லை. கொத்திக் கொத்தித் திருவிப் போடுகிறது.
"என் தத்தம்மா இல்லை. ஆனாலும், நீ என் தோழியாக வந்திருக்கிறாய். என் தனிமையைப் போக்குவாய். உனக்கு நான் கதைகள் சொல்வேன்; பாடல்கள் இசைப்பேன். உன்னைக் கூட்டில் அடைக்கும் சாதியில் பட்டவளல்ல நான். நான் பூமகள்... பூமிஜா, உன் பிரியமான தோழி. சொல்லு!" என்று அதைத் தடவிக் கொடுக்கிறாள்.
"ஏய், உன்னை நான் தத்தம்மா என்றே கூப்பிடுகிறேன். ஏன் குரலே காட்டாமலிருக்கிறாய்! ஊமையா நீ? பறவைகளில் ஊமை உண்டா? நீ என் தத்தம்மா போலவே இருக்கிறாய். அது ஒரு நாள் காயம்பட்டு வீழ்ந்தது. அதை எடுத்து இதம் செய்தேன். தோழியாக்கிக் கொண்டேன். மன்னர் பெயரைச் சொல்லப் பழக்கினேன். பேச்சுப் பழக்கினேன். பிறகு ஒருநாள் அது மன்னர் பெயரைச் சொல்ல மறுத்து விட்டது. 'மன்னர் பெயரை நான் ஏன் சொல்ல வேண்டும்? நீதான் எனக்குத் தோழி, எல்லாம் தருகிற தாய். உன் பேரைத்தான் சொல்வேன். பூமிஜா - பூமிஜா - பூமகள் - பூமகள்... என்று எப்போதும் பேசும்."
இவள் கூறி முடித்துக் கன்னத்தோடு பட வைக்கையில் கண்களில் இருந்து வெம்பனி உருகி வழிகிறது.
"தத்தம்மா, தத்தம்மா... நீ... நீயா...? நீயா...? ஆம், உன் அடிவயிற்றில் வடு..." என்று தடவுகிறாள்.
"தத்தம்மா? நீ காட்டுப் பூனைக்கு விருந்தாகி விட்டாய் என்றார்கள்... எங்கேயடி போயிருந்தாய்? ஊர் சுற்றி விட்டு என்னைத் தேடிக் கண்டுபிடித்தாயா? தத்தம்மா?"
அதை மார்போடு அணைத்துக் கொள்கிறாள். கன்னத்து வெம்பனியில் சிறகு நனைகிறது.
"பூமிஜா, தாயே, எனக்கு உன்னைப் பார்க்க தாளவில்லை. அநியாயம் நடக்கிறது. அந்தப் பெரிய அரண்மனையில் என்ன நடந்தது என்று உனக்குத் தெரியாது. அந்த ஜலஜை, நஞ்சருந்தித் தன் உயிரை மாய்த்துக் கொண்டாள்..." ஒரு கணம் உலகத்துத் துடிப்புகளே நின்று விட்டாற் போன்று அவள் திகைக்கிறாள்.
"ஆம், நச்சரளி விதையருந்தி மாண்டு கிடந்தாள். நீங்கள் வனவிருந்தாடச் சென்றீர்களே அப்போது. அன்று காலையில்..."
"அதனால் தான் எங்களை அவசரமாக அனுப்பி வைத்தார்களா, தத்தம்மா?"
"இருக்கும்... 'என்னால் இப்பிறவியில் உங்களை அடைய முடியவில்லை, அடுத்த பிறவியில் உங்களை அடைவேன்...' என்றாளாம். இந்தப் பேச்சு அனைத்துப் பணிப்பெண்கள் வாயிலும் அரைபட்டது. அரக்கனின் நெஞ்சில் தகாத இச்சை பிறந்த குற்றம் உங்களுக்குத் தண்டனையாயிற்று. சிறையிருந்தீர்கள். எரி புகுந்தீர்கள். சத்தியத்தை நிரூபித்தீர்கள். இப்போது அதே புள்ளி விழுந்திருக்கிறது. சத்தியத்தை நிரூபிக்க வேண்டும்?"
"தத்தம்மா!"
நெஞ்சிலிருந்து வெடித்து வரும் அலறல் போல் ஒலிக்கிறது.
"தாயே, உங்களுக்குக் கோபம் வரும். அந்த ஜலஜாவின் புருசன், துணி வெளுப்பவன், அவளை வெகுண்டு கடிந்தானாம். உன் சரிதை எனக்குத் தெரியும்; வராதே என்றானாம். அவள் வ்ந்து முறையிட்டு விட்டு, மாண்டு போனாள். அப்போது, மன்னர் எந்த வகையில் நியாயம் செய்ய வேண்டும்?"
எந்த வகையில்...? அக்கினி குண்டமும் நாடு கடத்தலும் பெண்ணுக்கு மட்டுமா?
"தாயே, தங்களைப் பார்க்குந்தோறும் அவர்களுக்கு மனச்சாட்சி கூர்முள்ளாக உறுத்தும். எனக்கு உயிர்வாழவே பிடிக்கவில்லை. காட்டுப் பூனை கவ்வட்டும் என்று நானே வலியச் சென்றேன். அது என்னைத் தோட்டம் வரைக்கும் கொண்டு சென்ற பின் அஞ்சி விட்டு விட்டது. பிறகு..."
அவள் மனதில் கரும் படலத்தில் வரும் மங்கிய காட்சிகளாக இளையவன் வந்ததும் ஆணை என்றதும், கிழட்டுச் சுமந்திரர் தேரோட்டியதும் வருகின்றன.
முள் உறுத்தாமலிருக்க, சத்தியத்தைக் கொல்வதா? எது சத்தியம்? எது முள்? முள்ளை மறைக்க முள் படலத்தையே அதன் மீது போடுவதா? இளையவருக்கு, நான் இந்த அநியாயம் செய்ய மாட்டேன் என்று சொல்ல அறிவு இல்லையா? அன்னை கைகேயிக்கு இது தெரியுமா? கிழட்டு மந்திரிக்கு நியாய உணர்வே செத்து விட்டதா? ஊர் மக்கள் இதை ஒத்துக் கொள்கின்றனரா?...
ஒருகால் இவள் குலம் கோத்திரம் அறியாத அநாதை என்பதால் இந்த நியாயம் செல்லுபடியாகிறதோ?
ஜலஜாவின் முகம் கண்களில் தெரிகிறது.
பெண்ணொருத்திக்கு ஓர் ஆண்மகனை விரும்ப உரிமை கிடையாது. அன்று மூக்கையும் செவியையும் அரிந்தார்கள். பெண் கொலைக்கு இவர்கள் கூசியதில்லையே? பொன்னிறமான சுருண்ட கூந்தலும்... பளிங்கு விழிகளும், பொன் மேனியுமாக உலவிய ஜலஜையின் மீது அளவிறந்த இரக்கம் மேலிடுகிறது.
...அடிப்பாவிப் பெண்ணே! உயிர் உனக்கு அவ்வளவு எளிதாகி விட்டதா?
தத்தம்மா ஒரு வட்டம் சுற்றி விட்டு அவள் முன் வந்து அமருகிறது.
"நான் தோட்டத்தில் தான் இருந்தேன். உன் சுவாசக்காற்று இழையும் இடமாகப் பறந்து வந்தேன். உன் கவடறியாத துயரத்தில், நானும் பங்கு கொண்டு தேரின் பின்புறமும், படகின் பின் விளிம்பிலும் ஒளிந்து வந்தேன். எனக்கு இளவரசரைக் குத்திக் காயப்படுத்த வேண்டும் என்று வெறியே ஏற்பட்டது. ஆனாலும் உனக்குப் பதட்டம் ஏற்படக்கூடாதே என்று பொறுத்தேன்..."
மன்னர் செய்த இந்த அநியாயத்தின் நிழல், காலமெல்லாம் ஒளி பாய்ச்சினாலும் போகாது.
அவள் துயரத்தை விழுங்கிக் கொண்டு சிலையாய் இறுகினாற் போல் அமர்ந்து இருக்கிறாள்.
அகலிகை நினைவுக்கு வருகிறாள். சதானந்தரின் தாய்... அவள் மீது பாவத்தின் கருநிழல் படிந்தது; முனிவர் விட்டுச் சென்றார். கல்லாய் இறுகினாற் போல் வாழ்ந்தாளாம் அவள். மன்னர் வந்ததும் எழுந்து வந்து, திரும்பி வந்த முனிவரையும் சேர்ந்து பணிந்தாளாம். கல்லைப் போல் கிடந்தவள் உம்மைக் கண்டதும் இளகி வந்தாளாம். கதை சொல்கிறார்கள். இப்போது... அந்த கோதம முனியையும் மிஞ்சி விட்டீரே?
தத்தம்மா, பறந்து பறந்து கனிகளைக் கொத்தி வந்து அவள் மடியில் போடுகிறது.
"மகாராணிக்கு நான் தான் உணவு கொடுக்கிறேன்."
"தத்தம்மா! நீ இருக்கையில் எனக்கென்ன அச்சம்?..." என்று கரையோர தடாகத்து நீரில் முகத்தையும் கைகால்களையும் கழுவிப் புதுமை செய்து கொள்கிறாள்.
நேரம் குறுகி, அந்திச் செக்கர் பரவுகிறது. பறவைகளின் ஆரவாரங்கள் அடங்க, இரவில் உலவும் இனங்கள் கானகத்தைத் தங்கள் ஆட்சியில் கொண்டு வருகின்றன.
"தத்தம்மா, எனக்கு வனத்தில் ஒரு பயமுமில்லை. இங்கேயே இளைப்பாறுவேன். நீ ஒரு உதவி செய்ய வேண்டும்" என்று கோருகிறாள்.
"சொல்லுங்கள் மகாராணி, நான் உயிர் பிழைத்திருப்பது அதற்காகவே..."
"இங்கே கங்கை தாண்டி வடக்கே வந்திருக்கிறார்கள். எனக்கு வடக்கா, தெற்கா, கிழக்கா எதுவும் புரியவில்லை. வேதவதிக் கரையில் யாவாலி அம்மை ஆசிரமத்தில் ஓர் அம்மை இருக்கிறார். நந்தமுனி... நந்த பிரும்மசாரி - அவரை உனக்கும் தெரிந்திருக்கலாம். நம் மாளிகைத் தோட்டத்துக்கு ஒற்றை நாண் தம்புராவை மீட்டிப் பாடிக் கொண்டு வருவார். அரண்யானி அன்னையைப் புகழ்ந்து பாடுவார். அவரிடம் சென்று நீ என் செய்தி தெரிவிக்க வேண்டும். செய்வாயா தத்தம்மா?"
"நிச்சயமாக. நான் அவர் எப்படியும் இங்கு வரச் செய்வேன். மகாராணி - மங்களம். சுகமாக உறங்குவீர்..."
-------------
அத்தியாயம் 12
நினைவுகள் பாலாய்க் குளிர்ந்து, பனியாய் உருகி, நெஞ்சு நிறைந்தாற் போல் புளகம் சூடுகின்றன. தெய்வீக இசையா இது? பறவைகளில் கூட்டுக் கலவையொலிகளா? பசிய மரங்களின் பெரிய பெரிய இலைகளில் நீர்த்துளிகள்... அவற்றில் கதிரொளி பட்டுச் சுடர் தெறிக்கிறது... அந்தச் சுடர் அவள் கண்களில் குளிர்ச்சியாக வருகிறது. இத்தகைய வாசக் கலவையை அவள் எங்கும், எப்போதும் நுகர்ந்ததாகப் புரியவில்லை. அரண்மனையின் கஸ்தூரி, சந்தனம், அகில் போன்ற வாசனைகளை அவள் நுகர்ந்திருக்கிறாள். அன்னத்தூவிகளின் பஞ்சணையில் நறுமண மலர்களின் மென்மையான இதழ்களை அவள் உணர்ந்திருக்கிறாள். ஆனால், இங்கே, காட்சி, செவிப்புலன், நுகர்புலன் எல்லாமே இணைந்து முன்பின் அறிந்திராத ஓர் இலயத்துள் அவளை ஒன்றச் செய்திருக்கின்றன. இதுவே மானுடப் பிறவி எடுத்திருப்பதனால் எய்தக் கூடிய வீடு பேறோ? இது கணமோ? யுகமோ? அவள் மானோ? மயிலோ? கரடியோ? மீனோ? தத்தம்மாவோ? தாமரைத் தண்டோ? பாடித்திரியும் சிறு வண்டோ?... எல்லாம் எல்லாம் அவள்...
அவள் அன்னையாகப் போகிறாள். அவள் குழந்தை. அன்னை மடியில், அவள்; குழந்தை...
ஓரிடத்தில் கங்கை நடுவே அவள் இருக்கிறாள்; பல்லக்கில் அவள் அசைந்து செல்கையில் தத்தம்மா தோளில் இருந்து மழலை பேசுகிறது. அதன் இனிமை ததும்புகிறது. சொல் புரியவில்லை. அந்தப் புரியாத மழலையைக் காலமெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கலாம்.
"தேவி! பொழுது புலர்ந்து விட்டது; பூபாளம் இசைக்கிறார்கள். கண் மலருங்கள்!" அவந்திகாவின் குரல்...
"இனிய இலயங்களில் ஒன்றி இருக்கிறேன். அவந்திகா, எனக்கு மாளிகைச் சட்டதிட்டங்கள் எதுவும் வேண்டாம்!"
"மன்னர் வந்து காத்திருக்கிறார், தேவி! அவசரச் செய்தி போல் இருக்கிறது!"
அவள் திடுக்கிட்டுக் கண் விழிக்கிறாள். உணர்வுகள் கலைகின்றன.
அவள் கானகத்தில் புல் படுக்கையில் கண்ணயர்ந்திருக்கிறாள். காலை இளம்பரிதியின் கிரணங்கள் இதமாக அவளுக்கு முகமன் கூறுகின்றன. வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்திருக்கிறாள்.
பறவைகள் அவளுக்கு உதய கீதமிசைக்கின்றன. "தத்தம்மா..." என்று கண்களை மேலே நிமிர்த்திப் பார்க்கிறாள்.
தத்தம்மாவைக் காணவில்லை.
தடாகக் கரையோரம்... உச்சியில் முடிந்த முடியும் வற்றி உலர்ந்த மேனியும், ஒற்றை நாண் யாழுமாக... "டொய்... டொய்... நீ...ம்...ரீம்..." சரக்கென்று எழுந்திருக்கிறாள். "நேசமுள்ளாரை நெஞ்சிலே நினைத்தாலே, போதும்..." "எந்தையே என்னை வாழ்த்துங்கள்..." புற்றரையில் ஒரு முரட்டுக் காலணியுடன் நடந்து வரும் அவர் முன் பணிகிறாள். நீர் முத்துக்கள் அந்தக் காலணியின் இடைப்பட்ட மெலிந்த பாதங்களுக்கு அணிகளாய் வீழ்கின்றன.
அவர் அவளை மெல்லத் தோள்களைப் பற்றி எழுப்புகிறார்.
"நீ மங்களச் செல்வி; ஆற்றுக் கரையில் உன் கிளி எனக்குச் சேதி கூறிற்று. உன் மீது எந்த மாசும் ஒட்டாது. உனக்கு எந்தத் துயரும் வராது, தாயே. உன் அருள் நெஞ்சில் எந்தச் சோகத்தின் நிழலும் கரையும்... வா, குழந்தாய்?"
"சுவாமி, மன்னருடன் கானகம் வந்த நாட்களில், உங்களை எங்கேனும் சந்திப்பேனோ என்று நாள்தோறும் நினைப்பேன். பல நாட்கள், காதம் காதமாக நடந்தோம். அப்போதெல்லாம் நீங்கள் காணக் கிடைக்கவில்லை. இப்போது, என் உள்ளார்ந்த தாபமே தங்களை இங்கே கொண்டு வந்து விட்டது. பெரியம்மா நலமாக இருக்கிறாரா? என்னை அவரிடம் அழைத்துச் செல்லுங்கள் சுவாமி!"
"நிச்சயமாக அங்கே தான் செல்கிறோம். உண்மையில், நீ சொன்னதை மனசில் எண்ணிக் கொண்டு, மன்னரையும் கண்டு உங்களை அழைத்துச் செல்லவே நான் வந்து கொண்டிருந்தேன். ஓடக்காரர் ஒருவர், காலையில் தான் இளவரசரும் மகாராணியும் ஆறு கடந்து சென்றார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்டேன். புரியவில்லை. உடனே உன் கிளி 'உண்மை, உண்மை' என்று சொல்லிப் பறந்து சென்றது."
தடாக நீரில் புதுமை பெற்று, கனிகளைப் பறித்துப் பசியாறிக் கொண்டு அவர்கள் நடக்கிறார்கள். பூமைக்குக் களைப்பே தெரியவில்லை. வழியெல்லாம், சிறுமிப் பருவ நினைவுகளை மகிழ்ச்சி பொங்கப் புதுப்பித்தவளாய் அவருடன் நடக்கிறாள். பசியாறக் கனிகளுக்குப் பஞ்சமில்லை. மேலாடை, உள்ளாடைகள் தவிர, அணிகளில்லாத நிலையில், அந்தக் கோமகள் கருவுற்ற நிலையில், அற்பமான இன்னல்கள் என்ற அவற்றை வென்ற வண்ணம் நடக்கிறாள். வழியில் வேடர் குடில்கள் வருகின்றன.
அவர்கள் இந்தப் பூமகளுக்கு மாற்று மரவுரிகளும் தோலாடைகளும் தருகிறார்கள். பட்டாடைகள் தூய்மை பெற்று, மீண்டும் அவள் இடையில் இசைகின்றன. "உங்களுக்கெல்லாம் நான் ஆடைகள் எடுத்து வைத்தேன். என் விதி இப்படி ஆயிற்றே" என்ற சோகம் முக சந்திரனின் நிழலாகப் படிகிறது.
அவர்கள் பதமான இறைச்சி உணவும், இலுப்பைப் பூவின் மதுவும் தருகிறார்கள். அவள் இன்ன உணவென்று தெரியாமலே அவற்றைக் கொண்டு, களைப்பும் சோர்வும் மாறுகிறாள். பிரியா விடை பெற்று, தாயை, தன் தாயிடத்தைக் காண மீண்டும் பயணம் புறப்படுகிறாள்.
வானாளவும் மரங்கள், பெரிய பெரிய இலைகள், சுற்றிச் சுற்றிக் கொடிகள் மூலிகை மணங்கள்... புற்றரையில் குளிர்ச்சி படிந்திருக்கிறது.
அங்கிருந்து பார்க்கையில், ஏதோ நிலத்தில் கருமேகம் படை திரண்டு வந்தாற் போல் தோன்றுகிறது.
அங்கேயே நின்று உற்றுப் பார்க்கிறாள்.
அது யானைக் கூட்டம்... தலைவன் குஞ்சு குழந்தைக் குடும்பங்கள் ஆண், பெண் என்று செல்கின்றன.
அமைதியாக அவை செல்வதைக் கண்டு அவள் வியப்படைகிறாள். இவை எத்துணை ஒற்றுமையாகச் செல்கிறன? முன்னால் செல்லும் யானை தும்பிக்கையில் தான் செல்லும் இடம் - தரைப்பகுதி உறுதியுடன் கூடிய நிலமா, அல்லது, பத்திரமில்லாமல் கால் வைத்த உடன் உள்ளே இழுக்கும் பொறியா என்று சோதிப்பது போல் பார்த்துக் கொண்டே செல்வதைப் பார்க்கிறாள்.
"மனிதர்... அதுவும் மன்னர்கள் எத்துணைக் கொடியவர்கள்! இந்த விலங்குகளைத் தந்திரமாகப் பிடித்து, இவர்களுடைய மண்ணாசைக்குப் பலியாக, போரிடப் பழக்குகிறார்கள். மதுவைக் குடிக்கச் செய்து பகை மன்னரின் கோட்டைச் சுவர்களைத் தகர்க்கச் சொல்வார்களாம்! அப்படியா சுவாமி!"
நந்தமுனி புன்னகை செய்கிறார்.
"அதைப் பற்றி நாம் ஏன் இப்போது சிந்திக்க வேண்டும். நாமும் இப்போது அந்த யானைக் கூட்டத்தோடு போகிறோம். நமக்கு அவர்கள் நண்பர்கள். அவர்கள் எங்கே போகிறார்கள் தெரியுமா?"
"எங்கே?..."
"நாம் எங்கே போக வேண்டுமோ அங்கே தான் போகிறார்கள். வாழை வனம்."
"வாழை வனத்தில் யானை புகுந்து அழிக்குமா?"
"யானைகள் அழிக்காது. யானைகளோ வேறு விலங்குகளோ வனங்களை அழிக்கா. மனிதர் தாம் அழிப்பவர். யானைகள் உணவு இந்தந்தக் கால இடைவெளியில் கொள்ளலாம் என்ற உணர்வு அவைகளுக்கு உண்டு. வாழை வனம் வந்து இந்த மந்தை இப்போது உண்டு சென்றால், மீண்டும் ஒரு பருவம் வந்த பின் வரும் போது செழித்திருக்கும். யானைகள் உண்டு வனங்கள் அழிந்ததாக வரலாறே இல்லை. முன்பு ஒரு முறை மிதுனபுரி மன்னன் அவ்வனத்தை அழித்தார் என்பார்கள். யானைகள் வருவதைத் தடுக்க முடியவில்லை. நாம் அவைகளுக்குத் தீமை செய்யவோ, கிடங்கில் தள்ளிப் பட்டினி போட்டுச் சித்திரவதை செய்து அடிமைகளாக்கவோ முயலுகிறோம் என்றால் காடு கொள்ளாமல் பிளிறி, நாசம் செய்யும். எத்தனைக் கயிறுகள் கட்டினாலும் அறுத்து விடும். மனிதர் கிட்ட வரவொட்டாமல் குதித்து, அறைந்து கொல்லும். ஏன், குட்டியைப் பற்றி விடுவார்களோ என்று தாய் குட்டியைக் கூடக் கொன்று விடும். அதுவும் உண்ணாமல் இருந்து மடியும். மனிதர் செய்யும் பாவங்களில் தலையாயது இத்தகைய பிராணிகளை அடிமையாக்குவது தான்!..."
"என்னை அது பற்றிச் சிந்திக்க வேண்டாம் என்று சொல்லி விட்டு தாங்கள் பேசுகிறீர்களே?"
"இல்லையம்மா..."
"வையம் குளிர்ந்தெழ, கான்பசுங்குடை விரிய, நெஞ்சில் அன்பு சுரக்கும்; பஞ்சமில்லை; பசியுமில்லை."
ஒற்றை நாணின் ஒலியில் வையமே ஒன்றுவது போல் தோன்றுகிறது. எங்கோ வானவெளியில் சஞ்சரிப்பது போல் அவள் காற்றைப் போல் இலேசாகிறாள். பூமகள் பயிற்சி பெற்ற யானைகளின் அணி வகுப்பைப் பார்த்திருக்கிறாள்.
பொன்னின் முகபடாம் தரித்த பட்டத்து யானை மீது பொற்பீடப் பட்டு ஆசனத்தில் அவள் ஏறி அமர்ந்து ஊர்வலம் வந்திருக்கிறாள். இப்போது அதை எல்லாம் நினைத்து உள்ளூற நாணி, வருத்தம் கொள்கிறாள்.
அருகில் வரும் போதுதான், யானைகளின் முதுகுகளில் படிந்த செம்புழுதியும், ஒருவித வாசமும், இவை திருந்தா யானைகள் என்ற உணர்வைத் தருகின்றன. முரட்டுத்தனமாக ஒன்றையொன்று விஞ்சிக் கொண்டு முன்னேறிச் செல்கின்றன. ஒரு தாய் யானை, சிறு குட்டியை இரண்டு கால்களுக்கிடையில் பாதுகாப்பது போல் நடந்து செல்லும் விந்தையைப் பார்க்கிறாள். முன்னே செல்லும் கரிய கொம்பன், தலைவன் போலும்! அது முன்னே சென்று, சிறிது நேரத்துக்கொரு முறை திரும்பிப் பார்த்து நின்று கூட்டம் தொடருகிறதா என்று பார்க்கிறது.
மான் கூட்டமும் இப்படித்தான் ஒரு தலைவர், அல்லது மன்னர், வழிகாட்டலில் எதிர்ப்புகளை, இன்னல்களை வென்று முன்னேறி, உணவு தேடிப் பசியாறி, இனம் பெருக்கி...
அவள் அம்மையின் அரவணைப்பில் அபாயம் அறியாமல் திமிறிச் செல்லும் குட்டியையே பார்க்கிறாள். அந்தக் குட்டியைப் பற்றி அதைக் கொஞ்ச வேண்டும் போல் இருக்கிறது.
"அந்தக் குட்டியை நான் தொட்டுக் கொஞ்சலாமா, சுவாமி?"
அவர் சிரிக்கிறார். பிறகு அவளைப் பற்றி அருகே அழைத்துச் சென்று தாய் யானையைத் தொடச் செய்கிறார். அவள் பரவசமடைகிறாள். யானைக் கூட்டமே நிற்கிறது. முதலில் சென்ற கொம்பன் திரும்பிப் பார்க்கிறது. அப்போது, நாடி நரம்புகளில் அச்சத்தின் குளிர் திரி ஓடச் சிலிர்க்கிறாள்.
காட்டு யானைக் கூட்டத்தின் இடையே புகுவது சரியன்று; மனிதர்கள் அருகில் கண்டால் இழுத்துத் தள்ளி மிதித்துக் கொல்லும் என்று சொல்வார்கள். கோதாவரிக் கரையில் யானைகள் நீர் குடிக்க வரும். அப்போது, அவள் நாயகர் எச்சரித்து, இளையவரை வில்-அம்புடன் நிற்கச் செய்வார்.
அருகில் இருந்து அக்கூட்டத்தைப் பார்த்தவாரே, குட்டியானையைக் குனிந்து தடவிக் கொடுக்கிறாள். அப்போது தான் கூட்டத்தில் நான்கைந்து யானைக் கன்றுகள் இருப்பது தெரிகிறது. ஆண்கன்று ஒன்று முளைத்த கொம்புடன் மற்றவரை நெட்டித் தள்ளுகிறது. தும்பிக்கை வளைத்து ஆட்டம் ஆடித் தன் துருதுருப்பை வெளியாக்குகிறது. குடுகுடென்று அது ஓடி, ஏதோ ஒரு கிளையை ஒடித்து வாயில் திணித்துக் கொள்கிறது. அதன் தாயோ, தந்தையோ, அதன் வாயைப் பற்றி இழுத்து, 'ஏய் சும்மா இரு' என்று மிரட்டுகிறது.
பூமகள் எல்லாவற்றையும் மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டு அந்தக் குட்டியானையைத் தடவிய வண்ணம் இருக்கிறாள்.
அப்போது நந்தமுனி, "கஜராஜா!" என்று குரல் கொடுக்க்றார். முன்னே சென்ற கொம்பன் திரும்பிப் பார்க்க, நந்தமுனி அதன் அருகில் செல்கிறார். குறும்பு செய்யும் கன்று குடுகுடுவென்று வருகிறது. குட்டி ஒன்று தாயின் மடியை முட்டுகிறது; செல்லமாகக் குரல் கொடுக்கிறது ஒரு கிழட்டு யானை. முன்னே வந்த தலைமைக் கொம்பனுடன் உராய்கிறது.
நந்தமுனி கொம்பனைத் தட்டிக் கொடுக்கிறார். அது துதிக்கையை நீட்டுகிறது. அவர் இரண்டுக் கனிகளை முடிந்து அரைக்கச்சில் வைத்திருக்கிறார். அதைக் கொடுக்கிறார்.
யானை அதை வாங்கி வாயில் போட்டுக் கொள்கிறது. பிறகு, தழைத்து குனிந்து, முன் காலை மடித்து, படி போல் நீட்டுகிறது.
"குழந்தாய், இந்தக் கொம்பன் ஒன்றும் செய்யாது, ஏறிக்கொள்..."
அவள் கையைப் பற்றி வந்து, துதிக்கையைத் தடவிக் கொடுக்கச் சொல்கிறார். முன்னங்காலைத் தடவி விட, இன்னம் இன்னம் என்று காட்டுகிறது. பிறகு நன்றாக அமர, முதுகைத் தடவி விடுகிறாள்.
"பார்த்தாயா மகளே? இவற்றுக்கு நம் அன்பு வேண்டும். ஆனால் நாம் அன்பு செய்யாமல் கொலை வெறி ஊட்டுகிறோம். நாசம் செய்யத் தூண்டுகிறோம். ஒவ்வோர் உயிரும் வாழத்தான் உயிர்க்கிறது; உண்டு இனம் பெருக்கி, மடிந்து உயிர்ச்சங்கிலியை மாயாமல் வைக்கிறது. இதுதான் இயற்கை நமக்குச் சொல்லித் தரும் பாடம்..."
"மத்தா, கஜராஜா, இவளை முதுகிலேற்றி வருகிராயா? உன்னால் முடியுமே? பலவீனருக்கு உதவுவது உன் தர்மமாயிற்றே?"
பூமகளுக்கு, என்றுமில்லாமல் ஓர் உவகை மலர்கிறது. அடிமனதில் கனத்தோடு கூடிய ஒரு மரியாதை மேவுகிறது. அதன் முதுகில் ஏறி அமருகிறாள். "மத்தா, உன் குறும்பையோ, ஆட்ட பாட்டத்தையோ தாங்க மாட்டாள். ஓர் உயிரைச் சுமக்கிறாள். கவனமாகச் செல்..." என்று உரைக்கிறார்.
அது அடி எடுத்து வைக்கையில் அவள் அஞ்சி அதன் பிடரியைப் பற்றிக் கொள்கிறாள். மரக்கிளையில் ஊஞ்சலாடுவது போலும் குலுங்குவது போலும் விழுந்து விடுவது போலும் அச்சம் பரபரக்கிறது. மத்தன் அவளை ஏற்றி இருக்கும் உற்சாகத்தில் கர்வம் கொண்டு நடந்து செல்வது போல் தோன்றுகிறது. நந்தமுனி பின் தங்கிவிட்டார்.
இவள் "சுவாமி, சுவாமி!" என்று குரல் கொடுக்கிறாள். புல்வெளிகள் கடந்து, மரங்கள், பறவைகள் மரங்களின் உயரத்தில் பறக்கும் ஓசைகள், எல்லாமே அச்சமூட்டுகின்றன.
வழியில் மரக்கிளைகளை ஒடித்து அவை உண்ணுகின்றன. பூமகளுக்கு இறங்கி விடலாம் போல் இருக்கிறது.
"அஞ்சாதே குழந்தாய், உனக்கு ஓர் அபாயமும் வராது. உன் வயிற்றில் வளரும் குழந்தைக்கு எந்த ஆபத்தும் வராது..."
அவர் எவ்வளவு கூறியும் பூமகளுக்கு அமைதி வரவில்லை. இது என்ன விளையாட்டு? மானைப் பிடித்துத் தரச் சொன்னேன், கொன்று விடக்கூடாதென்று. அது போல் யானைக்கன்றிடம் சிநேகம் பாராட்டியது இந்த விளைவுக்கு ஆதாரமாகி விட்டதே? விதியின் சூழ்ச்சியா?
இன்னும் என்ன விதியின் சூழ்ச்சி இருக்கிறது?
திடமாக இரு, மனமே! நந்தமுனி, காப்பாளர். இந்த நேரத்தில் நேயமுடன் வந்த மாமனிதர்... அவர் சொல்வதில் சத்தியம் உண்டு.
யானைகள் அந்திசாயும் நேரத்தில் ஓர் ஆற்றங்கரைக்கு வருகின்றன. கரை முழுவதும் வரிசையாகச் செவ்வரளிப் பூக்கள்...
அந்தச் சூரியனின் ஒளியில் அந்த ஆறு பொன்னாய்த் தகதகக்க ஓர் அற்புத உலகம் அவள் கண் முன் விரிகிறது.
"இறங்கலாமம்மா! நம் இடம் வந்து விட்டோம். இதுவே வேதவதி ஆறு...!"
அவள் இறங்க வசதியாக, மத்தன் குனிந்து தழைந்து, காலை மடித்து, அவள் பாதம் ஏந்துகிறான். அவள் இறங்குகிறாள்.
ஒரு கணம் உலகமே சுழல்வது போல் தோன்றுகிறது. கண்களை மூடிக் கொள்கிறாள். என் இடம்... வேதவதிக்கரை. என் தாய் மண்... தாயே உனக்கு வணக்கம்... நான் அநாதை இல்லை...
உணர்ச்சிகள் கொப்புளிக்க அவள் விம்மி அழுகிறாள்.
-------------
அத்தியாயம் 13
நந்தமுனி, அவள் முகத்தில் அந்த ஆற்று நீரைக் கைகளில் முகர்ந்து வந்து, துடைக்கிறார். புளிப்பும் இனிப்புமான கனிகளை அவள் உண்ணக் கொடுக்கிறார். யானைகள் ஆற்றில் இறங்கிச் செல்கின்றன.
எல்லாம் கனவு போல் தோன்றுகிறது.
"சுவாமி, இங்குதான் என் தந்தை ஏர் பிடித்து உழுதாரோ?"
"ஆற்றுக்கு அக்கரை. நாம் பார்ப்போம். அந்த இடத்தில் இப்போது தானிய வயல்கள் விரிந்திருக்கின்றன. அப்பால் வாழை வனத்துக்கு யானைகள் செல்கின்றன. அதையும் கடந்தால், சத்தியமுனியின் இருக்கை, வேடர் குடில்கள் வரும். யாவாலி அம்மை இருந்த ஆசிரமம். இக்கரையில் சிறிது தொலைவு சென்றால், மார்க்க முனியிருந்த ஆசிரமம் தெரியும். அவர் இப்போது இல்லை. அவர் இருந்த இடத்தில் தான் பெரியன்னை இருந்தார், முன்பு. எனக்குக் கூட நினைவு தெரியாத நாட்கள் அவை. இப்போது, நாம் தங்கப் போவது, பூச்சிக்காடு என்று முன்பு அழைக்கப்பட்ட வனப்பகுதி. பெரியம்மை அங்கே செல்கிறார்... கிழக்கே சென்றால் மிதுனபுரி..."
இவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஓர் ஒற்றை ஓடம் வருகிறது. முனி கைதட்டி அழைக்கிறார்.
மாநிற முகம்; அரையில் வெறும் நார்க்கச்சை. முடியை மேலே முடிந்த கோலம், மீசை முளைக்காத பாலகன். அவன் தான் துடுப்புப் போட்டு வருகிறான்.
"சம்பூகா? தேவியை அக்கரை கொண்டு செல்ல வேண்டும். பெரியம்மா நலமா? நீ மிதுனபுரிக்கா போய் வருகிறாய்?"
"ஆமாம் சுவாமி. அங்கே படைத்தலைவருக்கு, மஞ்சள் பரவும் நோய் வந்துவிட்டது. மூன்று நாட்களாய்ச் சென்று அவருக்குப் பணி செய்து விட்டு வருகிறேன். நிறையப் பேருக்கு இந்த நோய் வந்துவிட்டது சுவாமி!"
"இனி எல்லாரும் நலமடைவார்கள். நீ வாழ்க! சம்பூகா, உன் தொண்டு அரியது. நீ அருள் பெற்ற பாலகன்..."
அவர்கள் உரையாடலில் பூமகள் மகிழ்ச்சியடைகிறாள்.
"சுவாமி, இந்தச் சிறுவன் வைத்தியனா?"
"இவன் அரண்யானியின் அருள் பெற்றவன். எந்த நோயானாலும், இவன் மூலிகை கொண்டு சென்றாலே நோய் தீரும். மூலிகைக்கும் இவன் கைக்கும் ஓர் அரிய தொடர்பு உள்ளது; அமைதி கிடைக்கும்..."
"ஆச்சரியமாக இருக்கிறது சுவாமி. இவன் பெயர்... என்ன சொன்னீர்கள்?"
"சம்பூகன். மிதுனபுரியைச் சேர்ந்த வணிகர் வீட்டு வாயிலில் குழந்தையாகக் கிடந்தான். இவனைச் சத்திய முனி தளர்நடைப் பருவத்தில் கொண்டு வந்தார். யாரோ அந்தணர் பார்த்து, இந்தப் பிள்ளை முற்பிறவியில் பலரைக் கொன்று பாவத்தின் பயனாக வந்திருக்கிறான். இவனை உங்கள் வீட்டில் ஏற்றால் நாசம் வரும் என்றாராம்! சத்திய முனிவர் எடுத்து வந்தார். வந்த புதிதில் பேச்சு வராது. செய்கையாகவே உலகம் அறிந்தான். இப்போதும் மிகக் குறைவாகவே பேசுவான்.
மனசுக்குள் கொக்கி போல் வினா எழும்புகிறது.
குழந்தை பிறந்ததும் இப்படியும் சோதிடம் கூறுவரோ? அதற்காகப் பெற்ற பிள்ளையை அநாதையாக விடுவதோ? அழிவு என்றால், யாருக்கு எப்படி வரும்?
"சுவாமி! சத்திய முனிவரை நான் பார்க்க வேண்டும். வணங்க வேண்டும்; ஆசி பெற வேண்டும்..."
படகில் ஆறு தாண்டி அவர்கள் கரையேறுகிறார்கள். வேடர்குலச் சிறுவர் சிறுமியர் சிலர் கண்டு சேதி சொல்ல ஓடிப் போகிறார்கள். இருள் இன்னுமும் ஒளியைத் துடைத்து விழுங்கவில்லை.
என்றாலும் அவர்கள் வந்ததை அறிந்த சிறுவர் பலர் பந்தம் கொளுத்திக் கொண்டு வருகிறார்கள். ஆரவாரத்துடன் வரவேற்கிறார்கள்.
ஏதோ ஒரு தேவதையைப் பார்ப்பது போல், வியப்பு மலர அவளைச் சூழ்ந்து கொள்கிறார்கள். நந்தபிரும்மசாரி, அவர்களுக்குப் புரியும் மொழியில் பேசுவது புரிகிறது. அவர்கள் அவள் முன் வணங்கி, 'வனராணிக்கு மங்களம்' என்று முகமன் கூறுகிறார்கள். அவர்கள் யாரும் அரைக்கச்சைக்கு மேல் ஆடை அணிந்திருக்கவில்லை. பெண்களும் ஆண்களும் - சிறுவர் சிறுமியர் வேறுபாடு தெரியவில்லை. ஒரு சிறு பையன் அம்மணமாக அவளைக் கண்களை இடுக்கிக் கொண்டு கூர்ந்து நோக்குகிறான். அடுத்த கணம், அவன் கையில் கவண்கல் போல் ஓர் ஆயுதம் இருப்பதை அவள் பார்த்து விடுகிறாள்.
அதற்குள் அந்தச் சிறுவனின் தாய் போன்ற அம்மை வந்து அதைப் பறித்து எங்கோ வீசுகிறாள்.
அந்தப் பெண்மணி சிரிக்கிறாள். பற்கள் கருப்பு. நெற்றி மோவாய் நெடுக பச்சைக்குத்துக் கோலம்...
ஓ, இவர்களுக்கெல்லாம் ஒன்றும் கொண்டு வராமல் வந்திருக்கிறேனே...! என்று தன்னைச் சபித்துக் கொள்கிறாள்.
நிறையப் பெண்கள் அவர்கள் வழியில் எதிர்ப்பட்டு குலவை இட்டு வரவேற்புச் செய்து அழைத்துச் செல்கின்றனர்.
வளர்ப்பு நாய்கள் குரைக்கின்றன.
ஒரு வேடுவப் பெண் அவற்றை அதட்டி அமர்த்துகிறாள்.
நன்றாகத் துப்புரவு செய்யப்பட்ட பெரிய முற்றம். அரண்போல் மணமலர் சொரியும் மரங்கள்; செடி கொடிகள் புல்வேய்ந்த நீண்ட சதுரமான ஒரு கூடம் தெரிகிறது. அருகில் சிறிய இரண்டு குடில்கள்... நந்தசுவாமி அவளை ஒரு குடிலுக்குள் அழைத்துச் செல்கிறார். குனிந்து அவர் முன் சென்று அவளையும் உள்ளே வரச் செய்கிறார். ஓர் அகல் சுடர்விட்டு எரிகிறது. கோரைப் பாய் விரிப்பில் நிழலுருவமாகத் தெரிபவர்... எடுப்பான நாசி; அகன்ற நெற்றி; நூலிழைப் போல் வெண் கூந்தல் விரிந்து தோள்களில் விழுந்திருக்கிறது. எத்தனையோ ஆண்டுகளுக்கு முன் பார்த்த அதே உருவம். தன் கையைப் பற்றி அவளை அழைத்துக் கொண்டு மரம், செடி, கொடி என்று காட்டிக் கதை சொன்ன அதே அன்னை... ஆனால், முகத்தில் காலம் இட்ட கோடுகள், கிறுக்கல்கள், அவள் வாழ்க்கையின் புதிர்போல் விளங்கிக் கொள்ளாமல் இருக்கின்றன.
முதியவளின் கண்களில் ஒளி திரண்டு கூர்மையாகிறது.
"அம்மா...!" என்று பூமகள் அவள் பாதம் தொட்டுப் பணிகிறாள்.
"தாயே, உங்களுக்குத் தேவையான சஞ்சீவனி - இனி உங்களுக்கு, அலுப்பும் ஆயாசமும் இருக்கலாகாது!"
"எனக்குப் புரியவில்லையே, நந்தா? அயோத்தி மன்னனின் பட்டத்து அரசியா? அவளா இந்தக் கானகத்துக் குடிலில் வந்திருக்கிறாள்? பதினான்காண்டுகள் கானகத்தில் இருந்ததும், மாற்றான் தோட்டத்தில் சிறை இருந்ததும் காற்று வாக்கில் செய்திகள் வந்தன. வேதபுரிச் சாலியர் வந்து சொன்னார்கள். அந்த என் குழந்தையா இங்கு வந்திருக்கிறாள்? என்னைக் கூட்டிச் செல்லுங்கள் என்று தானே சொன்னேன்? மறுபடியும் கானகமா? அதுவும் இந்த நிலையில்..." அவள் கூந்தலை அன்புடன் தடவி, "பயணத்தில் களைத்திருப்பாய். தேர்ப்பாதை கூடச் சரியாக இருக்காதே? மன்னர் வெளியிலிருக்கிறாரா? அயோத்தியின் பட்டத்து அரசி, இங்கே வந்திருக்கிறாய், மகளே, நான் என்ன பேறு பெற்றேன்!" என்று தழுவி முத்தமிடுகிறாள்.
"திருமணத்துக்குப் புறப்பட்டு வரவேண்டும் என்று வந்தவளால் பார்க்க முடியவில்லை. நீ மன்னரோடு தேரில் கிளம்பும் போதுதான் வந்து பார்த்தேன். குழந்தாய், தேரை விட்டிறங்கி இந்தத் தாய் அன்போடு உனக்குப் பிரியமான கனிகளை இலைப்பையில் போட்டுத் தந்தேனே..."
கண்ணீர் பெருகுகிறது. அவளால் விம்மலை அடக்க முடியவில்லை.
"மன்னர் வரவில்லை. தாயே, நான்... நான் இனி இங்குதான் இருப்பேன். எந்தப் பெண்ணுக்கும் நேரக்கூடாத துன்பம், குலம் கோத்திரம் அறியாத இந்த அபலைக்கு நேரிட்டிருக்கிறது. ஆனால், அம்மா, இதுவே இனி என் இடம். என் குழந்தைக்கும் இதுவே வாழ்விடம்..."
பெரியம்மை பதறிப் போகிறாள். என்றாலும் சுதாரித்துக் கொள்கிறாள்.
"என் கண்ணம்மா, என் வாழ்நாள் ஏன் நீண்டு போகிறது என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்தேன். என் வாழ்நாளில் நான் மிகப்பெரிய ஒரு காரணத்துக்காக உயிர் வாழ்ந்திருக்கிறேன்... குழந்தாய், இந்த இடம், உன்னை அன்பு மயமாக அணைத்துக் கொள்ளும்..." என்று மடியில் அவளைச் சாத்திக் கொள்கிறாள். அன்னை மடி... அன்னை மடி...
"என்னை நாடு கடத்தினீர்; ஆனால் நான் பெறற்கரிய பேறு பெற்று விட்டேன். மாளிகைச் சிறையில் இருந்து, இந்த இதமான இடத்துக்குக் கொண்டு சேர்த்த உமக்கு நன்றி..." என்று மனசோடு கூறிக் கொள்கிறாள்.
சலசலவென்று நீரோடும் ஓசையில் செவிகள் நனைவது போன்ற உணர்வில் திளைக்கிறாள். உடல் முழுவதும் ஏற்படும் சிலிர்ப்பில், கனத்த போர்வையை மேலே போர்த்து விடுவது போன்ற இதம். இது உறக்கமா, விழிப்பு நிலையா? அவள் கர்ப்பத்துச் சிசுவாகி விட்டாளா? உண்மையா? உண்மைதானா? ஒரு கால் அவள் ஓர் உயிரை வெளியாக்கி ஜனனியாகி விட்டாளா?
அவள் விருட்டென்று எழுந்திருக்கிறாள்.
"தாயே, இந்த விளைநிலம் எந்தக் குலத்துக்கு உரியது?" அவளையறியாமல் அவள் கை மணி வயிற்றில் படிகிறது.
"கண்ணம்மா, விளை நிலங்களுக்குக் குலமேது? அது உயிர்களைப் பிறப்பித்து, வித்துக்கு வீரியம் அளிக்கிறது. அனைத்து மலங்களையும் உட்கொண்டு மேலும் மேலும் புனிதமாகிறது. புனிதமாகும், புனிதமாக்கும் மாட்சிமை உடையது. அதுவே முழு முதற்குலம்..."
"பின் பிரும்மகுலம், க்ஷத்திரிய குலம் என்றெல்லாம் எப்படி வருகிறது?..."
"குழந்தாய், குலங்களை விளைநிலம் தோற்றுவிப்பதில்லை. பேராசை தோற்றுவிக்கிறது. காமம, குரோதம், லோபம் ஆகிய புன்மைக் குணங்கள் தோற்றுவிக்கின்றன. இந்தப் புன்மைக் குணங்களால் ஆண் விளை நிலத்தை அரவணைக்காமல் ஆக்கிரமிக்கிறான். சுயநலங்களும் பேராசையும், இரணகளரியும் இரத்தம் பெருகும் கொடுமைகளும் விளையக் காரணமாகின்றன."
"என் செல்வமே, இந்த இடத்தில் அகங்கார ஆதிக்கங்களும் அடிமைத்தனத்தின் சிறுமைகளும் இல்லை. இங்கே மிகப்பெரிய மதில் சுவர்கள் இல்லை. காவலுக்கு என்ற பணியாளரும் இல்லை. எம்மிடம் உள்ள செல்வங்கள் பலருக்கும் பயன்படுவதால் மேலும் பெருகக் கூடியவை. நீ இங்கு நலமாக இருப்பாய்; உன் உதரத்தில் கண்வளரும் உயிர், இந்தக் குடிலை மட்டுமல்ல; இந்த வனத்தையே பாவனமாக்கட்டும். துன்ப நினைவுகள் இங்கே அன்பின் ஆட்சியில் அழிந்து போகும்..."
உண்மையிலேயே இந்தவனம், இங்கு வாழும் மக்கள், விலங்குகள், அனைத்துமே ஓர் அபூர்வமான இசையை அவளுள் இசைக்கின்றன. யாவாலி ஆசிரமத்தில் இருந்து பிள்ளைகளும், பெண்களும் வருகிறார்கள். சத்தியமுனிவர் தீர்த்த யாத்திரை சென்று இருக்கிறாராம். உழு நிலங்களில் அவர்கள் தானியம் விளைவிக்கிறார்கள். மரங்களில் பரண் கட்டிக் கொண்டு தானியங்களைக் கொத்த வரும் பறவைகளை விரட்டுகிறார்கள். ஆனால் அடுத்து வீழ்த்துவதில்லை...
அடுத்த நாள் அவர்கள் அருகிலிருந்த ஓர் அருவிக்கு நீராடச் செல்கிறார்கள். வழியெல்லாம் மூலிகைகளின் நறுமணம் உற்சாகமளிக்கிறது. குன்று போல் மேடாக அமைந்த அடர்ந்த கானகப் பகுதியில் செல்லும் போது அச்சம் தெரியவில்லை.
"வனதேவியே எங்கள் முன் வந்தாற் போல் இருக்கிறது" என்று சொல்லும் வேடுவப் பெண்ணின் பெயர் உலும்பி என்று சொன்னாள். ஆனால் உலு என்று பெரியன்னை அழைத்தாள். பாதங்களில் மணிக்கற்கள் உறுத்தாமலிருக்க, இளந்தோலினால் செய்யப்பட்ட காலணிகளை அவளுக்கு அளித்திருக்கிறார்கள். செல்லும் வழியில் பசும் குவியல்களாக ஒரே மாதிரியான செடிகளும் மரங்களும் தென்படுகின்றன. அவற்றில் சிலவற்றில் இளமஞ்சள் நிறத்திலும், வெண்மையாகவும் மலர்களோ, முட்டைகளோ என்று புரிந்து கொள்ள முடியாத விசித்திர மலர்களைப் பார்க்கிறாள்... தோளில் பெரிய பிரப்பங்கூடைகளில், அவற்றைச் சேமிக்கும் சிலரையும் பார்க்கிறாள்.
"அவர்கள், மிதுனபுரிச் சாலியர். இவைதாம், பட்டுக் கூடுகள். அரசர்கள், பெருமக்கள் விரும்பி வாங்கும் பட்டாடைகள் நெய்வார்கள்."
உலு இந்தச் செய்திகளைக் கண்களை உருட்டியும், கைகளை அசைத்தும் சாடையாகத் தெரிவித்தாலும் அவள் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்ததால் புரிந்து கொள்கிறாள். வேடர் குடியில் இருந்து இளவட்டப் பெண்கள், குன்பி, மரீசி, ரீமு என்று பலரும் வருகிறார்கள். அரையில் வெறும் கச்சையணிந்து இருக்கும் இப்பெண்கள், நறுமண இலைகளைக் கொணர்ந்து கல்லில் தேய்த்து நீராடச் செய்கிறார்கள்.
"முன்பு இந்த வனத்துக்கு யாருமே வரமாட்டார்கள். யாரேனும் வந்தால்... நஞ்சு தோய்ந்த அம்பை எய்து விடுவார்கள். குறி தவறாமல் போய் விழும். ஆள் அங்கேயே விழுந்து இறப்பர்..."
"ஏன்?..."
"ஏனென்றால், ராசாக்கள் வந்து எங்களைப் பிடிச்சிப் போராங்க."
"எதற்கு?..."
கண்களை அகற்றி, "உங்களுக்குத் தெரியாது?" என்று கேட்கிறாள்.
"அரண்மனைக்குக் கொண்டு போவாங்க" என்று சொல்லி, வெட்டுவது போலும் குத்துவது போலும் சைகை செய்கிறாள்.
"எதற்கு?"
"எதற்கு? யானை, ஆடு, மாடு, எல்லாம் புடிச்சிட்டுப் போறாப்பல எங்களையும் கொண்டு போவாங்க. இந்த எல்லையிலேந்து ஒருத்தர் கூடப் போனதில்ல. நச்சுக்கொட்டை காட்டுகிறேன் பார்...!" என்று அடர்ந்த புல் பகுதியில் முழங்கால் மறையும் பசுமைக்குள் அடி வைத்து ஒரு வேர், கொட்டை இரண்டும் கொண்டு வருகிறாள். "இதை அரைத்து, ஒரு மூங்கில் குடுவையில் வைத்திருப்போம். அம்பில் தோய்த்து விடுவோம்... எங்கள் பிள்ளைகளில் சின்னஞ்சிறிசு கூடக் கவண்கல் குறி தவறாமல் விடும்..."
அப்போது அவளுக்கு முதல் நாளைய வரவேற்பில் ஒரு சிறுவன் கையில் அதைக் கண்ட நினைவு வருகிறது.
"இப்போதும் அடிப்பார்களா உலூ?..."
"முன்னே நடந்திச்சி. மிதுனபுரிலேந்தும் வேதபுரிலேந்தும் யாரும் வரமாட்டார்கள். இந்த பட்டுக்கூடுகள் அறுந்து பறந்து கிடக்கும். பூச்சிகள் பறக்கும். யாரேனும் திருட்டுத்தனமாக அறுந்து தொங்கும் இழைகளை எடுக்க வரும் போது அம்பு பாயும்..."
"உங்களுக்கு இப்போது எப்படித் தைரியம் வந்தது?"
"சத்தியமுனிவர்... ஒருநாள் அவரையே அடித்துவிட்டார்கள். அப்படியும் அவர் திரும்பத் திரும்ப வ்ந்தார். அப்படியெல்லாம் யாரையும் யாரும் பிடிச்சிட்டுப் போக விடமாட்டோம்னு சொன்னாங்க. இப்ப அந்தக் காடு, இந்தக் காடு எல்லாம் ஒண்ணாப் போச்சி. சாலியர் வந்து இதெல்லாம் கொண்டு போவாங்க. நாங்களும் மிதுனபுரிச் சந்தைக்குப் போவோம். வேணுங்கிற சாமானெல்லாம் கிடைக்கும். பானை, துடுப்பு, தட்டு, இந்த மூங்கில் வெட்டிக் கூடை பண்ணுவோம்... பெரிய சந்தை. நந்தசாமிக்கு அதான் ஊராம். அங்கே கூட வயசான ராணியம்மா இருக்காங்களாம்..."
இவள் பேச்சில் சைகையே மிஞ்சி இருப்பதால் கொச்சை மொழியையும் புரிந்து கொள்கிறாள். இந்த மரங்கள், செடிகளை நட்டு வளர்த்திருக்கிறார்கள்... இவர்கள் எல்லோரும் காட்டும் அன்பு, அரண்மனைக்குள் அவள் கண்டிருந்த மகாராணி பணிப்பெண் அன்பு அல்ல. இவர்களுடன் கூட்டமாக உணவு கொள்வதே புதுமையாக இருக்கிறது.
பெரிய பானையில் பொங்கிய தானிய உணவு. அவித்த கிழங்கோ, மீனோ தெரியாத ஒரு மசியல். தேனில் பிசைந்த மாவு... எல்லோரும் கையில் தேக்கிலையோ வாழை இலையோ, ஏதாவதோர் இலையை வைத்துக் கொண்டு, சமமாக லூவோ, குல்பியோ போடுகிறார்கள். குடுவையில் நல்ல நீர்...
இது மீனா, இறைச்சியா என்றறியாமலே அவள் உண்ணுகிறாள். பகிர்ந்து உண்ணுதல். பிள்ளைகளும் அவளிடம் வந்து வாங்கிக் கொள்கிறார்கள்...
பெரியம்மா, வனதேவிக்குப் புட்டு செய்து கொடுக்கச் சொன்னார். ராக்கன் வேதவதியில் இருந்து பெரிய மீன் பிடித்து வந்தான்... அரண்மனையில் இது போல் இருக்குமா?
கவளம் நெஞ்சில் சிக்கிப் புரையேறிக் கொள்கிறது.
பெரியம்மா அவள் உச்சியை மெல்லத் தட்டி குடுவை நீரைக் குடிக்கச் செய்கிறாள்.
"அரண்மனையில் யாரோ நினைப்பார்கள்!" சொல்லிச் சிரிக்கிறாள்.
"பெரியம்மா... அரண்மனையில் இந்த மாதிரி உணவு கிடைக்குமா என்று கேட்டாளே? நிச்சயமாக கிடைக்காது. இந்த மகாராணிக்கு ஒரு சிறு குழந்தைக்கு, சமையலறை ராதையின் பஞ்சைக் குழந்தைக்கு ஒரு விள்ளல் விண்டு கொடுக்க முடியாது. அங்கு அன்பு இல்லை. முள் வேலிகள்; முட் சுவர்கள். பெரியம்மா, இவர்கள் முன்பு நச்சம்பு போட்டு வெளியாட்களைக் கொன்று விடுவார்களாமே?"
"ஆமாம். முள் வேலிகளுக்கிடையில் இருந்து ஊழியம் செய்வதைக் காட்டிலும் தன்மானத்துடன் பட்டினி அநுபவிக்கலாம் என்று நினைத்தார்கள். வெளியாள் தென்பட்டால் கொன்று இழுத்து வந்து, அவன் எலும்புகளை மட்டுமே இக்காட்டின் அரணாகப் போட்டு விடுவார்கள். அந்த இடத்தில் தான் நீ இருக்கிறாய்... இங்கே தான் இந்த அன்பு விளைந்திருக்கிறது..."
பூமகள் எதுவுமே சொல்லத் தோன்றாதவளாக இருக்கிறாள்.
----------------
அத்தியாயம் 14
வசந்தத்துக்குப் பின் தொடர்ந்த வெப்பம் முடிவு பெறுகிறது. புதிய மழையின் இளஞ்சாரலில் வனமே புத்தாடை புனைந்து பூரிக்கிறது. சீதளக்காற்று மெல்ல மயில் தோகை கொண்டு வருடுகிறது. பூமகள் நிறை சூலியாக, குடிலுக்கு வெளியே உள்ள கல் இருக்கையில் அமர்ந்து, வயிரச்சுடர் போல், நீர்த்துளிகளிடையே ஊடுருவும் கதிர்களைப் பார்த்துப் பரவசப்படுகிறாள். அப்போது, வேடுவர் குடியில் இருந்து, விதவிதமான உணவு வகைகளைக் கொண்டு வந்து, ஆண்களும் பெண்களும் அந்த நீண்ட கொட்டடியில் வைக்கின்றனர். இளம் பெண்கள் எல்லோரும் முடி சீவி, மலர் சூடிச் சிங்காரித்துக் கொண்டிருக்கின்றனர். மிதுனபுரிச் சந்தையில் வாங்கிய வண்ணமேற்றிய நார் ஆடைகளை முழங்காலில் இருந்து மார்பு மூடும் வகையில், உடுத்த பெருமை பொங்க, நாணம் பாலிக்கின்றனர்.
'கிடுவி' என்ற மூதாட்டி, பல்வேறு மலர்களைத் தொடுத்த மாலை ஒன்றைக் கொண்டு வந்து பூமகளின் கழுத்தில் சூட்டுகிறாள். எல்லோரும் குலவை இடுகிறார்கள். விரிந்தலையும் முடியில் சேர்த்து மலர்ச்சரங்களைச் சுற்றி அழகு செய்கிறாள் உருமு.
பெரியம்மை எழுந்து வந்து அவள் முகமண்டலத்தைக் கைகளால் தடவி, சில சிவந்த கனிகளைச் சுற்றிக் கண்ணேறு படாமல் கழிக்கிறாள்.
பெண்களும் ஆண்களும் வட்டமாக நின்று பாடல் இசைக்கிறார்கள். ஓரமாக அமர்ந்திருக்கும் முதிய ஆண்களும், பெண்களும், மடியில் குழந்தைகளை வைத்துக் கொண்டும் அந்தப் பாடலில் கலந்து கொள்கின்றனர்.
பூமகளுக்கு அப் பாடல், விழா எதுவும் புரியத்தானில்லை.
முதல் நாள் வரையிலும் யாரும் எதுவும் சொல்லவில்லை.
"இதெல்லாம் என்ன பெரியம்மா?"
"முதல் சாரல், மழை வரும் போது கொண்டாடுவார்கள். இப்போது, வனதேவி வந்திருப்பதன் மகிழ்ச்சி..."
கன்னங்களில் வெம்மை படரும் நாணத்துடன் அவள் அந்த சோதிச் சுடரின் கதிர்களையே பார்த்துக் கொண்டிருக்கிறாள்.
முதல் நாள், உணவு கொண்டிருக்கையில் 'கிடுவி' என்ற அந்த முதியவள் கனவு கண்டதை வந்து கூறினாள்.
"வன தேவிக்கு ரெண்டு புள்ள இருப்பதாகக் கனவு வந்தது. எங்க பக்கம் ஒரு புது வாழக்குலை... பூ தள்ளி இருக்கு. அது தங்கமா மின்னுது. நான் எல்லாரையும் கூட்டிட்டு வந்து காட்டுறேன். குலை பிரிஞ்சி, பூ உதிர்ந்து, பிஞ்சு வந்து முகிழ்க்கும். ஆனா இது... நா தங்கமாதிரி இருக்கேன்னு கைவச்சப்ப, மடல் பிரிஞ்சி ரெண்டு பெரிய பழம் தெரியுது. அப்ப மரம் பேசுது 'கிடுவி, எடுத்து வச்சிக்க, வனதேவி குடுக்கிறேன். உங்களுக்கு ராசாவூட்டு ஆளுங்க வந்து கொண்டு போயிடாம, பத்திரமா வச்சிக்குங்க. இந்த வனத்துக்கு மங்களம் வரும்...'னு மரம் பேசிச்சி... சரின்னு, நா, வனதேவியக் கும்பிட்டு, அந்தப் பழத்துல கை வைக்கேன். என்ன அதிசயம்? ரெண்டு ரெண்டு புள்ளங்க. தங்கமா, அழகின்னா அத்தினி அழகு. எடுத்து இந்தப் பக்கம் ஒண்ணு, அந்தப் பக்கம் ஒண்ணு இடுக்கிக்கிறேன். குதிக்கிறேன். கூத்தாடுறேன். வாய்க்கு வந்ததெல்லாம் பாடுறேன். புள்ளங்க கக்கு கக்குன்னு சிரிக்குதுங்க. இடுப்பிலேயே குதிக்கிதுங்க... நான் சிரிக்கிறேன், குதிக்கிறேன்.... அப்பத்தான், இந்த ஆளு வந்து கத்துது... 'ஏ கிடுவி! என்ன ஆச்சி! குதிச்சிக் குதிச்சிச் சிரிக்கிற? கனவா? உனக்குக் கிறுக்கிப் பிடிச்சிச்சா? உடம்பத் தூக்கி தம்தம்முனு போடுற?...' அப்பத்தா எனக்கு அது கனான்னு புரிஞ்சிச்சி..."
"கெனவா? பாட்டிக்குக் கருப்பஞ்சாறு உள்ளே போயிரிச்சி. அதான் தங்க தங்கமா கெனா வருது! மிதுனபுரிச் சந்தையிலே போயி, அஞ்சு குடுவ வாங்கி வந்திருக்கு. நாம செய்யிற சாரம் இப்படி வராது!" என்று இளைஞன் ஒருவன் சிரிக்கிறான். இப்போதும் குடுவைகளில் இலுப்பை மதுவோ, தானிய மதுவோ வைத்திருக்கிறார்கள்.
ஆட்டமும் பாட்டமும் நிகழ்கையில், பூமகள் தன்னை மறந்திருக்கிறாள். கிடுவி கனவில், 'அந்த இரண்டையும் நீயே பறித்து வைத்துக் கொள். ராசா வீட்டு ஆளுகள் வந்து கொண்டு போகப் போகிறார்கள்' என்ற செய்தி மட்டும், பாயசத்தில் படியும் துரும்பாக உறுத்துகிறது. இந்த மனிதர்களின் அன்பும் அரவணைப்பும் அவளுக்கு எந்நாளும் இருக்கும். அவளையே உதறியவர்கள், அவள் பிள்ளையைச் சொந்தம் கொண்டாட முடியுமா?..
பெரிய இலைகளில், உணவை வைத்து முதலில் அவளுக்குக் கொடுக்கிறார்கள். குடுவை மதுவில் ஓர் அகப்பையில் ஊற்றி அவளைப் பருகச் சொல்கிறார்கள். அவள் மறுப்புக் காட்டிய போது, பெரியம்மை அருகில் வந்து, "சிறிது எடுத்துக் கொள் தாயே, உனக்கு நல்லது. உடம்பு தளர்ந்து கொடுக்கும்" என்று அருந்தச் செய்கிறாள்.
இங்கே விருந்து நடைபெறும் வேளையில் சம்பூகனும் குழலூதி வருகிறான். பூமகள் அருகே அந்த இசை கேட்கையில் மனம் ஒன்றிப் போகிறது. அந்த இசையில் உடலசைப்பும் ஆட்ட பாட்டமும் அடங்குகிறது. கண்களில் நீர் துளிக்கும் உருக்கம் அது. யாரையோ? எதற்கோ? இருக்கும் சிறு பிள்ளைகளில் கண்பார்வையற்ற ஒரு பிள்ளை அமர்ந்திருக்கிறது. முடியே இல்லை, வழுக்கை. கண்பார்வை இல்லை. "அரிவியின் பிள்ளையைப் பாரு! அது அந்தப் பாட்டுக்கு எழுந்து அந்தப் பக்கம் போகிறது!"
பூமரத்தின் பக்கம் உட்கார்ந்து குழலூதும் சம்பூகன், அந்தப் பிள்ளையை அழைத்து அருகில் அமர்த்திக் கொள்கிறான்.
இப்போது அந்த இசை கேட்டு அந்தச் சிறு உடல் அசைகிறது. கைகள் பரபரக்கின்றன.
"இந்தச் சிறுவனுக்கு எப்படி இப்படிப் பாட வருது?"
"நந்தசுவாமி சொல்லிக் கொடுத்தாங்க. சாமி அருள் இது. இப்படி ஒரு குழல் ஊதல் யாருமே ஊதி கேட்டதில்லை..." என்று முதியவன் ஒருவன் சொல்கிறான்.
ஒரே மகிழ்ச்சிப் பெருக்கு, பரவசம்.
பொழுது சாயத் தொடங்கும் போது, திமுதிமுவென்று யார் யாரோ ஓடி வரும் ஓசை கேட்கிறது.
சத்தியமுனி வருகிறாரா?... அந்தப் பக்கத்துப் பிள்ளைகள் அல்லவோ ஓடி வருகிறார்கள்!
இரைக்க இரைக்க ஓடி வரும் இளைஞன் "அக்கரையில் ராசா படை கொண்டிட்டு வராங்க! அல்லாம் வில்லம்பு எடுத்து வச்சிருங்க!" என்கிறான்.
கொல்லென்று அமைதி படிகிறது.
அவள் சில்லிட்டுப் போனாற் போல் குலுங்குகிறாள்.
"அட, துப்புக்கெட்ட பயலே? யாரடா ராசா படை இங்கே கொண்டு வரது? நந்தசாமி இல்ல?" என்று பெரியம்மை கேட்கிறாள்.
"நந்தசாமி அக்கரையில் இருக்காங்க. ஆனா, யானை, குதிரை, தேரு, படை, குடை எல்லாம் போகுது. நாம் எதுக்கும் கருத்தா இருக்கணுமில்ல? எப்பவுமின்னா யாரும் இங்க வரமாட்டாங்க. இப்ப அப்படி இல்ல பாருங்க?"
"எப்போதும் போல் இல்லாம, இப்ப என்ன வந்திட்டது? போடா, போ! வீணாக அதுவும் இதுவும் சொல்லி நீ காட்டுத் தீ கீளப்பாதே. நந்தசாமி அங்க இருக்காங்க இல்ல? ஒரு படை இங்க ஆறு தாண்டாது. நமக்குக் காவல் ஆறு. நெஞ்சுலே கவடு வச்சி வாரவங்கள, அது காவு வாங்கும். அதும், வனதேவிக்கு எந்த ஒரு ஆபத்தும் வராம, அந்தத் தாய் காப்பாத்துவா!"
அவள் உள்ளூற அமைதி குலைகிறாள்.
"முன்பு வனம் சென்றவர்களைத் திருப்பி அழைக்க, கைகேயி மைந்தன் வந்தாரே, அப்படி அந்தத் தாய் இவரை அனுப்பி இருப்பாளோ?..."
"ஏன் பெரியம்மா? என்ன கொடி, என்ன தேசத்து ராசா, எதுக்கு வந்தாங்கன்னு கேளுங்க!"
"நீ கவலையே படாதே கண்ணம்மா, அவர்கள் யாரும் இங்கே வர மாட்டார்கள். இந்த அரச குலத்தைப் பற்றி நான் நன்றாக அறிவேன்..."
"மாட்டார்களா?"
அவள் விழிகளில் நீர் மல்குகிறது.
அவ்வளவு இரக்கமற்றவர்களா? தமக்குத் தெரியாமல் நிகழ்ந்து விட்ட இந்தக் கொலை பாதகம் போன்ற செயலுக்கு யாருமே வருந்தி, பரிகாரம் செய்ய வரமாட்டார்களா?... எப்படியானாலும் இந்த நிலையில் அவள் நாடு திரும்ப முடியுமோ? எப்படியும் அவள் பிள்ளை பெற்று எடுத்துக் கொண்டு நாடு திரும்பும் நேரம் வராமலே போய் விடுமோ?
எரிபுகுந்து பரிசுத்தமான பின், மன்னரின் வித்தைத்தானே அவள் மணி வயிறு தாங்கி இருக்கிறது? குலக்கொடி, வம்சம் தழைக்க வந்த வாரிசு, பட்டத்துக்குரிய இளவரசு என்றெல்லாம் சிறப்புடைய உயிரை அல்லவோ அவள் தாங்கி இருக்கிறாள்?...
எப்படியும் ஒரு நாள் தவறை உணர்ந்து அவர்கள் வராமலிருக்க மாட்டார்கள். போகும் போது, கிடுவிக் கிழவி, லூ, எல்லோரையும் அழைத்துச் செல்ல வேண்டும். இவர்கள் மாளிகைச் சிறப்புகளைப் பார்த்தால் எத்தனை அதிசயப் படுவார்கள்! பட்டாடைகளும் பணியாரங்களும் கொடுத்து மகிழ்விக்க, நன்றி தெரிவிக்க, அவளுக்கும் ஒரு சந்தர்ப்பம் வரவேண்டுமே?
இந்தச் செய்தி அங்கிருந்த மகிழ்ச்சிக் கூட்டத்தின் சூழலைப் பாதித்து விட்டது. உணவுண்ட பின் எஞ்சியவற்றை எடுத்து வைத்து விட்டு இடங்களைக் கும்பாவும், சதிரியும் சுத்தம் செய்கிறார்கள். மற்றவர்கள் கலைந்து போகிறார்கள். சம்பூகன் இவற்றை கவனிக்கவேயில்லை. ஓர் இலையைப் பறித்து ஊதல் செய்து, குருட்டுப் பையனின் இதழ்களில் பொருத்தி ஊதச் செய்கிறான். ஓசை வரும் இன்பத்தில் குழந்தை மகிழ்ச்சி ஆரவாரம் செய்கிறான். சூழலின் கனம் அவர்களைப் பாதிக்கவில்லை.
ஆனால், சற்றைக்கெல்லம் வேடர் குடிப் பிள்ளைகள், தோல் பொருந்திய தப்பட்டைகளைத் தட்டிக் கொண்டும் கூச்சல் போட்டுக் கொண்டும் ஆற்றை நோக்கிப் படை செல்கிறார்கள். வில் அம்பும் காணப்படுகின்றன. பூமகள் மெல்ல எழுந்து முற்றம் கடந்து பசுங்குவியல்களுக்கிடையே செல்லும் பிள்ளைகளைப் பார்க்கிறாள். பம்பைச் சத்தம் காதைப் பிளப்பது போல் தோன்றுகிறது.
"அம்மா... அம்மா... அவர்களைத் தடுத்து நிறுத்துங்கள்! அவர்கள் நச்சம்புகளை எய்துவிடப் போகிறார்கள்! தாயே!..." குரல் வெடித்து வருகிறது. அவள் அங்கேயே புற்றரையில் சாய்கிறாள். சாய்பவளை லூ ஓடி வந்து தாங்கிக் கொள்கிறாள். எந்தத் துணியும் மறைக்காத மார்பகம், உண்ட உணவு - மது எல்லாம் குழம்பும் ஒரு மணம் வீசும் மேனி.
"அவங்க இங்கே வரமாட்டாங்க, வனதேவி. நமக்கு ஓராபத்தும் வராது. பயப்படாம வாம்மா. நந்தசாமி அவங்க யாரையும் வரவிடமாட்டார்!" அவள் நிமிர்ந்து, கறுத்த பற்கள் தெரியும் பச்சைக்குத்து முகத்தைப் பார்க்கிறாள். "அவர்கள் மேல், நச்சம்பு விட வேண்டாம் என்று சொல்லுங்கள் தாயே! வேண்டாம்..."
"ஓ, அதுதானா? இப்ப ஏது? இவங்க யாருக்கும் அந்த நஞ்சு ஏதும் தெரியாது. இப்ப அந்தச் செடியும் இல்ல. சத்தியமுனிவரும் சம்பூகனும் இப்ப மருந்துக்குத்தான் எல்லாச் செடியும் வச்சிருக்காங்க! இங்க, தாயே, பாம்பு கூடக் கடிக்காது இருக்கணும்ங்கறதுக்காக வச்சிருக்கு. அதில்லன்னா, அத்தையும் அடிச்சிக் கொன்னு போடுவோம். அழிச்சிடுவம். சத்தியசாமி அதும் வாயிலேந்து விசம் எடுத்து, ஒருக்க தீராத நோயைத் தீர்த்து வச்சாங்க. இங்க எல்லாம் நல்லபடியா இருக்கத்தான் சாமி படைச்சிருக்குது. நீ கலங்காத தாயி..."
லூ... லூ... நீயும் என் அன்னையா?...
அவள் கழுத்தைச் சுற்றி இதமாகக் கைகளை வைத்துக் கொள்கிறாள்.
அஞ்சியபடி எதுவும் நடக்கவில்லை. ஆனால் இருள் கவியும் நேரத்தில் நந்தசுவாமி அவளைப் பார்க்கத் தம்பூரை இசைத்துக் கொண்டே வருகிறார். பூமகள் ஒளிச்சுடரின் முன், அன்னையைத் தொழுகிறாள்.
ஆதிநாயகன் அன்னையே போற்றி;
அகிலம் விளங்கும் அருளே போற்றி!
சோதிச் சுடரின் சக்தியே போற்றி;
சொல்லொணாத நற்சுவையே போற்றி!...
இன்பத்துடிப்பினில் துன்பம் வைத்தனை;
துன்பவலியிலும் இன்பம் வைத்தனை!
புரிந்தவை யனைத்தும் பூடகமாயின.
பூடகமெல்லாம் புரிந்து போயின!
போற்றி போற்றி பூதலத்தாயே!
ஆதிநாயகன் அம்மை உனையே
சரணடைந்தேன்...
வெறும் ரீம் ரீம் ஒலி மட்டுமே கேட்கிறது.
அவள் சட்டென்று நிமிருகிறாள். "சுவாமி வணங்குகிறேன்" என்று நெற்றி நிலம் தோய வணங்குகிறாள்.
பெரியன்னை மூலையில் இருந்து குரல் கொடுக்கிறாள்.
"யாரப்பா அரசர் படை? அவர்கள் தாமா?"
"ஆமாம் தாயே. கடைசி இளவலுக்குப் பட்டாபிஷேகம் செய்து மேற்கே அனுப்பியிருக்கிறார்கள்..."
"ஓ, எந்த சத்துருக்களை வெல்லப் போகிறான்? இன்னும் அசுரப் படைகள் இவர்கள் சங்காரம் செய்யக் காத்திருக்கிறார்களா?"
"லவணனோ, பவணனோ... ஒரு பெரிய கடப்பாறை போன்ற சூலாயுதம் வைத்திருக்கிறானாம். இவர்களுக்கு அச்சம் வந்து விட்டது. அதனால் முன் கூட்டியே பட்டாபிசேகம் செய்து எல்லா விமரிசைகளுடனும் புறப்பட்டுச் செல்கிறார்கள். அவன் உறங்கும்போதோ எப்போதோ அந்த ஆயுதத்தை இவர்கள் அபகரித்து அவனைக் கொன்ற பின், அந்த ஊருக்கு நன்மை பிறக்கும். அந்த அரசகுலம் அங்குத் தழைக்கும்..."
"அப்பாடா..." என்று பெரியன்னை பெருமூச்சு விடுகிறாள். "அக்கரையோடு... அவர்கள் சென்று, வேதம் வல்லார் முனி ஆசிரமங்கள் எதிலேனும் தங்குவார்கள். இங்கே எதற்கு வரப்போகிறான்!"
பூமகளுக்கு ஒவ்வொரு சொல்லும் இடி கொள்வது போல் வேதனையைத் தோற்றுவிக்கிறது.
இவளை நாடு கடத்திய மறுகணமே சாம்ராச்சிய ஆசையா? அதற்குத்தான் இவள் தடையாக இருந்தாளா?
ஆமாம்; அண்ணனை வெல்லுமுன் தம்பி விபீஷணனுக்குப் பட்டாபிஷேகம் செய்து வைக்கவில்லையா?
இந்தத் தம்பி தனக்கொரு ராச்சியம் உரித்தாக்கிக் கொள்ள ஓர் அசுர ஊரை நோக்கிப் பட்டாபிஷேகம் செய்து கொண்டு போகிறாரோ?
அவர்களுக்கு அவள் இங்கிருப்பது தெரியுமோ? அறிவார்களோ? அந்த ஊருக்குச் செல்லும் வழி இதுதானோ?
அவள் பேசவில்லை. இந்தப் பிள்ளைகளைப் போல் அவர்களும் நச்சம்பு வைத்திருந்தால்...?
ஏன் இவளுக்குத் துடிக்கிறது? அவர்கள் தவறு செய்தால் இவளுக்கென்ன? ஏன்? இவளைக் காட்டுக்கு அனுப்பவில்லை என்றால், இவளால் அவர்கள் செய்யும் போர்களைத் தடுத்து நிறுத்த முடியுமா? முடியாது. ஏனெனில் எல்லாம் குலகுரு என்ற பெயருடன் அங்கு வீற்றிருக்கும் சடாமகுடதாரிகளின் யோசனைகளாகவே இருக்கும்.
இவளால் அமைதியாக இருக்க முடியாது என்று தெரிந்தோ என்னவோ... பெரியம்மா இவளுக்கு அந்த மூலிகைப் பானத்தைக் கொடுக்கச் செய்கிறாள். உறங்கிப் போகிறாள்.
விடியற்காலையில், நோவு நொம்பரம் எதுவும் இன்றி அவள் தாயாகிறாள்... லூ தான் மருத்துவம் செய்கிறாள். ஏதோ எண்ணெய் கொண்டுத் தடவி, எந்த ஒரு துன்பமும் தெரியாத வண்ணம் ஒரு சேயை வெளிக் கொணர்ந்தாள். அடுத்து இன்னொரு சேய்... இரண்டும் வெவ்வேறு கொடியுடைய இரட்டை. வேடர் குடியே திரண்டு வந்து மகிழ்ச்சிக் குலவை இடுகிறது.
கண்களைத் திறந்து சிசுக்களின் மேனி துடைத்து அவள் மார்பில் ஒரு சிசுவை வைக்கிறாள்.
பட்டு மலரின் மென்மையுடன் மூடிய சிறு கைகளுடனும் நீண்ட பாதங்களுடனும் கருகருவென்று முடியுடனும் மெல்லிய இதழ்கள் அவள் அமுதம் பருகத் துடிக்கும் போது...
அவள் பெண்மையின் உயர் முடியேறி நிற்கிறாள். இன்பம் துன்பம் இரண்டும் கலந்த ஒரு பேரின்பம்... தாய்... அவள் ஒரு தாய்... இரண்டு மக்கள்... ஒன்று வெண்மை மேவிய தந்த நிறம். மற்றது செம்மை மேவிய நிறம். ஒன்று வாளிப்பாக இருக்கிறது; மற்றது சற்றே மெலிந்து இருக்கிறது. லூ லூ லூ... என்று பெண்கள் ஓடி வந்து குலவை இடுகிறார்கள். மிதுனபுரியில் இருந்து பெற்று வந்த கரும்புக் கட்டியைக் கிள்ளி வாயில் வைக்கிறாள் பெரியன்னை.
இளங் காலை நேரத்தில் கொட்டும் முழக்குமாகப் பிள்ளைகள் பிறந்ததை அவர்கள் கொண்டாடுகிறார்கள்.
"வனதேவி தாயானாள் மங்களம்
மக்கள் இரண்டு பெற்றெடுத்தாள் மங்களம்
ஈ எறும்பு ஈறாக, ஊரும் உலகம் அறியட்டும்
காக்கைக் குருவி கருடப்புள், அத்தனையும் அறியட்டும்!
யானை முதல் சிங்கம் வரை, வனம் வாழ்வோர் அறியட்டும்.
வானைத் தொடும் மாமரங்கள் செடி கொடிகள் பூண்டு வரை,
தேவியை வாழ்த்தட்டும்; பூமகளை வாழ்த்தட்டும்...
வான்கதிரோன் வாழ்த்தட்டும்; நிலவும் நீரும் வாழ்த்தட்டும்"
கரவொலியும் வாழ்த்தொலியும் கானகமெங்கும் பரவும் போது, பூமகள், நிறை இன்பப் பரவசத்தில் கண்களை மூடுகிறாள்; நித்திரையில் ஆழ்கிறாள்.
--------
அத்தியாயம் 15
பூமிஜா குடிலைச் சுத்தம் செய்து கொண்டிருக்கிறாள். அவள் பிள்ளைகள், இப்போது தளர் நடை நடந்து, பெரியன்னைக்கு ஓயாமல் தொல்லை கொடுக்கிறார்கள். குடிலுக்குள் ஓசைப் படாமல் அவர்கள் குற்றி வைத்த தானியத்தை இரைத்து அதில் நீரோ, சிறுநீரோ பெய்து வைத்திருக்கிறார்கள். பெரியன்னைக்குப் பார்வை துல்லியமாக இல்லை. வேடுவமக்கள் சோமாவோ, மோரியோ அவர்களைத் தூக்கிச் சென்று விடுவார்கள். பெரியன்னைக்கு அந்த வட்டத்திலேயே பிள்ளைகள் இருக்க வேண்டும் என்று விருப்பம். பூமகள் இப்போதெல்லாம், ஒரு சாதாரணப் பெண்ணாக, பக்கத்தில் குளத்தில் இருந்து நீர் கொண்டு வருவதும், தானியம் குற்றுவதும், புடைப்பதும், வீட்டுத் தீக்குத் தேவையான பொருட்கள் சேகரிப்பதும், கன்று காலிகளைப் பேணுவதும், எல்லோருடனும் கூடி வாழ்வதும், பொருந்தி விட்டது. அவளுக்குத் தேவையான தானியங்கள், கனிகள், போதாத நேரங்களில் வேறு உணவு, எல்லாம் கொண்டு வருகிறார்கள். மிதுனபுரியில் இருந்து, நார் ஆடைகளோ, பஞ்சு நூலாடைகளோ வருகின்றன. அவளை 'வனதேவி' என்று தெய்வாம்சம் பொருந்திய தேவியாகப் போற்றுகின்றனர்.
ஈரம்பட்ட தானியத்தைக் கழுவி, ஒரு முறத்தில் போட்டு வைக்கிறாள். வானம் மூடுவதும் திறப்பதுமாக இருக்கிறது. மழைக்காலத்தின் இறுதி இன்னும் எட்டவில்லை. எப்போது வேண்டுமானாலும் கொட்டலாம். இங்கே சடங்கு செய்து அக்கினி மூட்டுபவர் இல்லை. அடுப்புச் சாம்பற் குவியலில் எப்போதும் நெருப்பைக் காப்பாற்ற வேண்டும். சாணத்தினால் செய்யப்பட்ட எரி முட்டைகள், சருகுகள், சுள்ளிகள் ஆகிய்வற்றை மழை நாட்களில் பாதுகாப்பது மிகக்கடினம். காரியோ, மாரியோ கட்டை கடைந்தோ கல்லில் தீப்பொறி உண்டாக்கியோ அவளுக்கு உதவிகள் செய்வார்கள். இல்லையேல், லூவோ சோமாவோ, அவளுக்கும் அன்னைக்கும் எப்படியோ உணவு தயாரித்துக் கொடுக்கிறார்கள்.
பூச்சிகள் இழை கொண்டு தவக்கூடு படைக்கும். பின்னர் தவம் கலைய சிறகுடன் வெளிவரும் போது, அந்த இழைகளும் அறுந்து குலையும்.
அவற்றைப் பிள்ளைகள் சேகரித்து வருவார்கள். பெரியன்னை ஒரு 'தக்ளி'யில் அதைத் திரிப்பாள். அந்த வித்தையைப் பூமகளும் கற்று மிகவும் ஆர்வமுடன் நூல் திரிக்கிறாள். மிதுனபுரிச் சந்தைக்குப் பிள்ளைகள் அவற்றை எடுத்துச் செல்வார்கள்.
"அடீ கண்ணம்மா! இப்படி ஒரு துட்டப் பிள்ளைகளைப் பெற்றிருக்கிறாய்! வந்து பார்!"
பெரியம்மை முன்பெல்லாம் பேசவே மாட்டாராம்! இப்போது கத்திக் கத்திக் குரல் மிகப் பெரியதாக ஒலிக்கிறது. இந்த முதிய வயசில், அவளுக்கு நடுக்கம் கூட இல்லை.
"என்ன ஆயிற்று?" என்று ஓடி வருகிறாள்.
ஒரு கரும்பறவை, கீழே தீனமாகக் குரல் கொடுத்துத் துடிக்கிறது. இவள் பிள்ளைகள் கையில் ஆளுக்கொரு குச்சியுடன் நிற்கின்றனர். இருவர் கைகளிலும், கள்ளிக்குச்சிகள். அவள் அடுப்புத் தீக்குச் சேமித்து வைத்தது.
அந்தப் பறவை, குயில் குஞ்சு போலிருக்கிறது.
"பாரடி! இந்தக் குஞ்சு குயில் போல் இருக்கு. காக்கைக் கூட்டில் இருந்தது. காக்கைச் சனியன்கள் குஞ்சு பொரித்து வளர்த்த பிறகு தன் இனமில்லை என்று தள்ளிவிட்டிருக்கு போல. இது தீனமாகக் கத்துது. உன் பிள்ளைகள் ரெண்டும் அதை இன்னும் அடிச்சுக் கொல்லுதுங்க!" என்று குச்சியைப் பிடுங்கி எறிகிறாள். குச்சி போன ஆத்திரத்தில் ஒல்லியான பிள்ளை அவளை அடிக்கக் கை ஓங்குகிறது. ஒல்லிதான் மூத்தது. குண்டு இளையதாம். அதுதான் முதலில் வந்தது.
பூமகள் பரபரப்புடன் கூடை போன்ற ஒரு மூங்கில் தட்டைக் கொண்டு வந்து, இலை சருகுகளைப் போட்டு அப்பறவையைப் பக்குவமாக எடுத்து வருகிறாள். தடவிக் கொடுக்கிறாள்; இதம் செய்கிறாள். சிறகொடிந்த நிலையில் தொங்குவது போல் காயம்.
"பெரியம்மா, நீங்கள் கொஞ்சம் பார்த்துக் கொண்டிருங்கள். சம்பூகனைக் கூட்டி வருகிறேன்! அவன் வந்தால் நிச்சயமாகப் பறவையைப் பிழைக்க வைத்து விடுவான்!"
"முதலில் இந்த துஷ்டப் பிள்ளைகளின் கையைக் கட்டிப் போடு! க்ஷத்திரிய வித்து... தானாக வருகிறது... கொலைத் தொழில்... அது பரிதாபமாகக் கத்துகிறது. இதுங்க ரெண்டும் மாறி மாறி அடிச்சிச் சிரிச்சுக் கும்மாளி போடுதுங்க! உன் வயிற்றில் போய் இதுங்க பிறந்ததே!"
இரண்டு பேரையும் இழுத்து வருகிறாள் பெரியன்னை. இரண்டும் பெருங்குரல் எடுத்து அழுகின்றன. சிறுகுடிலின் பக்கம் முறத்தில் தானியம் உலர வைத்திருக்கிறார்கள். இந்தப் பெருங்குரலின் ஓசையில், புல் பறித்துக் கொண்டிருந்த கோமா ஓடி வருகிறாள். பருத்த தனங்கள் அசைய, பிள்ளை பெற்றதன் அடையாளமான வரிகள் தெரிய, மரவுரி நழுவ அவள் "ஏன் புள்ளைய அடிக்கிறீங்க!" என்று வருகிறாள். "சோமா, நீ முதலில் உன் இடுப்புக் கச்சையை ஒழுங்காகக் கட்டு! இந்த வாண்டுகளுக்கு அப்புறம் பரிந்து வா! இது காக்கைக் கூட்டத்துக் குயில்களில்லை. குயில் கூட்டத்துக் காக்கைகள்! உக்காருங்க, இங்கே! எழுந்திருந்தா அடிச்சிடுவேன்!" என்று அதட்டி, ஒரு மரத்தடியில் உட்கார வைக்கிறாள்.
"சோமா, நல்லவேளை, நீ வந்தாய், போய் எங்கிருந்தாலும் சம்பூகனைக் கூட்டி வா! அவன் தொட்டாலே இந்தப் பறவை எழுந்து விடும்..."
"வனதேவிக்கு மேலா? என்ன ஆச்சு, என்ன பறவை?... பறவை சோர்ந்து கிடக்கிறது. அதன் இதயத் துடிப்பைப் பார்க்கும் போதே உணர முடிகிறது."
"காக்கா கூட்டுல முட்ட வக்கிற கரும் பறவை. பெரிசான பிறகு நம் இனமில்லன்னு த்ள்ளிவிடும். அதுக்குப் பெரியம்மா ஏன் பிள்ளைங்களைக் கோவிக்கணும்?"
"கோவிக்கணுமா? ஆளுக்கொரு குச்சியெடுத்திட்டு அதை அடிச்சி வதைக்கிறாங்க. அது ஈனமாக் கத்துறதப் பார்த்துச் சிரிக்கிதுங்க! அதே போல் இதுங்கள அடிச்சி, அந்த வலி என்னன்னு தெரிய வைக்கணுமில்ல?"
சோமா அவர்கள் இருவரையும் இரண்டு இடுப்பிலும் இடுக்கிக் கொண்டு கன்னங்களில் முத்தம் வைக்கிறாள்.
"புள்ளங்களுக்கு என்ன தெரியும்? அது கத்தறது வேடிக்கையாக இருக்கும்..."
பூமகள் விருவிரென்று புதர்கள் கடந்து செல்கிறாள். குயில் கூட்டத்தில் பட்ட காக்கைகளா அவள் பிள்ளைகள்? இங்கு பொருந்தாத பிள்ளைகளா?... எது குயில் கூட்டம், எது காக்கைக் கூட்டம்? குயிலுமில்லை, காக்கையுமில்லை... 'க்ஷத்திரிய வித்து! மேல் குல வித்து!' என்று அவள் இதயத்தில் அடி விழுவது போல் பெரியன்னையின் சுடுமொழி சுடுகின்றது.
வாயைக் குவித்துக் கொண்டு "சம்பூகா!" என்று கத்துகிறாள். அன்று துன்பம் அவளைச் சூழ்ந்து கவ்விய போது நந்தசுவாமியை நினைத்த போது வந்தாரே, அந்த சந்தர்ப்பத்தை நினைத்துக் கொள்கிறாள். மனதின் ஒரு பக்கம் அந்தப் பறவையின் இதயம் துடிப்பது போல் உணர்வு படிகிறது.
"சம்பூகா...! எங்கிருந்தாலும் வா!..."
விர்ரென்று ஒரு சாரல் விசிறியடிக்கிறது. உடல் சிலிர்க்கிறது.
பறவை அடிப்பட்டதை விட, அந்த இளங்குறுத்துகளின் செய்கை அவளை அதிகமாக நோக வைக்கிறது. 'க்ஷத்திரிய வித்து!... கொலைக்கு நியாயம் கற்பிக்கும் அறிவு இந்த மதலைக்கு வளரும். இப்போது அந்த அறிவு இல்லை...'
எங்கிருந்தோ குழலோசை கேட்கிறது. மனசில் தெம்பு தலைதூக்குகிறது. சுரங்கள் புரியாத இசை... ஆம், இது கண் பார்வையில்லாத முடியில் ரோமம் இல்லாத, ஒரு சிறுவன். அவனுக்கு இவள் மாதுலன் என்று பெயர் வைத்திருக்கிறாள். "மாதுலன்! மாதுலா? சம்பூகனைக் கண்டாயா?"
"இதோ இருக்கிறேன், வனதேவி?..."
"எங்கே?..."
புதர்களுக்குள்ளிருந்து வெளிப்படுவது போல் வெளிப்படுகிறார்கள்.
மாதுலன் ஊதுகிறான்.
சம்பூகனின் கையில் ஒரு நாய்க்குட்டி...
"சம்பூகா? அது நாய்க்குட்டியா?... வாலும் முகமும்..."
வால் அடர்ந்தாற் போல் இருக்கிறது. கண்கள் சிறு கங்கு போல் தெரிகின்றன. முகத்தில் ஒரு வித்தியாசம் தெரிகிறது.
"இது நாயா?..."
"தெரியவில்லை வனதேவி. ஏதோ பிராணி கடித்துக் கழுத்தில் காயம். பச்சிலை போட்டேன். வனதேவி, என்னைக் கூப்பிட்டீர்களே?..."
"வா, உனக்கு ஒரு வேலை இருக்கிறது..."
அவன் வரும்போது மாதுலன் ஊதிக் கொண்டும் ஆடிக் கொண்டும் வருகிறான்.
அந்தப் பிராணி செவிகள் நிலைத்திருக்க அந்த ஓசையைக் கேட்பது போல் இருக்கிறது.
அவள் முகமலர்ச்சியுடன் விரைந்து வந்து நீண்ட கொட்டகையில் கூடையில் வைத்த கரும்பறவையைக் காட்டுகிறாள்.
சம்பூகன் அங்கே அந்த நாய்க்குட்டியை வைத்துவிட்டு, விரைந்து செல்கிறான். அந்த நேரமெல்லாம் மாதுலன் குழலூதிக் கொண்டிருக்கிறான்.
அப்போது, சோமா இரண்டு குழந்தைகளையும் அங்கே கொண்டு வந்து உட்கார வைக்கிறாள். மாதுலன் ஊதுவதை இரண்டும் அசையாமல் பார்க்கின்றன. பூமகள் மெய்ம்மறந்து போகிறாள். "மாதுலா, இந்தப் பிள்ளைகளின் பக்கம் வந்து ஊதுகிறாயா? எவ்வளவு சுகமாக ஊதுகிறாய்? உன் இதயத்து ஏக்கமல்லவா, இப்படி ஒலிக்கிறது? உயிர்கள் அனைத்தையும் அணைக்கும் ஏக்கமா இது?" முடியில் ரோமமில்லாத பார்வையற்ற ஒரு சிறுவன்... இவனை அரசகுலத்தவர், முகத்தில் விழிக்கக் கூடாத அபாக்கியவான் என்று இகழ்வார்கள். ஆனால், இவன் வணக்கத்துக்குரியவன். இந்தக் குழலை இவன் வாயில் பொருத்தி, இவனுடைய நெஞ்சின் அலைகளை நாதமாக்கிய பிள்ளை சம்பூகன். அந்தச் சடாமகுட குல குருக்களைக் காட்டிலும் பன்மடங்கு உயர்ந்த குரு...
அவள் கண்கள் பசைக்கின்றன. சம்பூகன் மூலிகை கொண்டு வந்து காயத்தில் வைக்கிறான்.
மாதுலன் இசை பொழிகிறான். மறுநாளே கரும்பறவை தெம்புடன் தலை நிமிர்த்தி, சிறகடித்துப் பறக்க முயற்சி செய்கிறது. அந்த நாய்க்குட்டி, தத்தித் தத்தி, விளையாடுகிறது. ஒடிந்த காலும், கடிபட்ட கழுத்தும் இன்னும் முழுதுமாகத் தேறவில்லை.
லூ வருகிறாள். "வனதேவி! இந்தக் குட்டியை இங்கு யார் கொண்டு வந்தார்கள்?..."
"ஏனம்மா? சம்பூகன் தான், பாவம் கடிபட்ட இந்தக் குட்டியைக் கொண்டு வந்திருக்கிறான். நாய்தானே இது? இந்தப் பறவை பார், இது கூடப் பறக்க முயற்சி செய்கிறது. மாதுலனின் குழலோசையில் நோயும் துன்பமும் ரணமும் கூடக் குணமாகிறது, லூ!"
"அது சரி, ஆனால் இது வெறும் நாயல்ல. ஓநாய். இதற்குக் கருணை காட்டுவது சரியல்ல. இது பெரிசானா பிள்ளைகளைக் கவ்விட்டுப் போகும்! ஏய்! அத்த முதல்ல கொண்டு ஆத்தோடு போட்டுட்டு வா! இல்லாட்டி மூங்கிக் காட்டுக்கு அப்பால் தூக்கி எறி!"
பூமகளுக்குத் தன் சிறுமிப் பருவத்தில் அரக்கர் வேறு உருவம் எடுத்துப் பிள்ளைகளைத் தூக்கிச் சென்று தின்பார்கள் என்று கேட்ட செய்தி நினைவில் வருகிறது. அதே அறியாமை, தன் பிள்ளைகளுக்கு ஏதேனும் தீங்கு வருமோ என்ற அச்சமாக அவள் தெளிவை மறைக்கிறது.
"ஆமாம் சம்பூகா! அதனதன் இனம் முதிர்ந்ததும், அதன் வாசனையைக் காட்டும். நாய் தான் நாம் வளர்க்கிறோம். அது நன்றி காட்டுகிறது. மந்தைகளுக்குக் காவலாக இருக்கிறது. இது அப்படியிருந்தால்... இருக்குமா?"
"தேவி, கொஞ்சம் வலிமை வந்ததும் அதுவே ஓடி விடும். நீங்கள் அஞ்ச வேண்டாம். ஏனெனில் இது அண்டி வாழும் மிருகம் அல்ல... " என்று சம்பூகன் முற்றும் உணர்ந்தவனாக உறுதி கூறுகிறான்.
பிள்ளைகள் மாதுலன் அருகில், இசைக்கு வசப்பட்டவர்கள் போல் அமைதியாக இருக்கிறார்கள்.
மாதுலன் தன் கைகளால் அவர்கள் முகத்தை, மேனியை வருடுகிறான். பிறகு, தன் குழலை அவர்கள் வாயில் வைக்கிறான்.
குழந்தைகள் அரும்புப் பற்களைக் காட்டிச் சிரித்து மகிழ்கிறார்கள்.
பெரியன்னை கட்டியணைத்து முத்தமிடுகிறாள்.
"நீங்கள் இந்த இடத்தில் இருந்து அன்பால் உலகாள வேண்டும்" என்று ஆசி மொழிகிறாள்.
சூழலும், வாழ்முறையும், இயல்பை மாற்றுமா? குழந்தைகளின் முரட்டுத் தனத்தை மாற்றுவதில், பெரியன்னை மிகக் கருத்தாக இருக்கிறாள். பூமகளுக்கு இது மிகவும் உகப்பாக இருக்கிறது. தானியத்தை உரலில் இட்டு அவள் மெதுவாகக் குத்துகிறாள்.
மர உலக்கையின் ஓசை நயத்துக்கேற்ப பிள்ளைகள் கை கொட்டி ஆடும்படி பெரியன்னை பாடுகிறாள்.
கை கொட்டு ராசா, கை கொட்டு!
காட்டு சனமெல்லாம் கை கொட்டு!
வானத்துச் சந்திரன் கை கொட்டு!
வண்ணம் குலுங்கக் கை கொட்டு...
குழந்தைகள் இருவரில் குண்டுப் பையன் தொந்தி சரியக் குலுங்குகிறான். சதைப் பிடிப்பில்லாதவனோ, எழும்பி எழும்பிக் குதிக்கிறான். பூமியில் சிற்றடி பதிகையிலேயே துள்ளும் அழகு காணக் காணப் பரவசம் அடைகிறாள்.
"கண்ணம்மா, உனக்கு, அரண்மனையில் தங்கத் தொட்டிலில் பஞ்சணையில், பணிப்பெண்கள் கொஞ்சித் தாலாட்டுப் பாட, அரையில் கிண்கிணியும், முடியில் முத்துச்சரமும், கைவளை, கால் சதங்கை குலுங்க, இந்தப் பிள்ளைகள் வளர வேண்டியவர்களாயிற்றே, காட்டு வேடர்களிடையே, இப்படி வளர்கிறார்களே என்ற வருத்தம் இருக்கிறதா அம்மா?" இப்படி ஒரு கேள்வியை எதிர்பார்த்திராத பூமிஜா ஒரு கணம் திகைக்கிறாள். வினோதமான உணர்வுகள் அவள் நெஞ்சுக் குழியில் திரண்டு வருகின்றன. அவளால் எதுவும் சொல்ல முடியவில்லை.
"நீ குழந்தை பெற்ற நாள் காலையில் அவன் இங்கு வந்தான்" பெரியன்னை தக்ளியை உருட்டியவாறு, அவளை நிமிர்ந்து பாராமலே மெதுவாகச் சொல்கிறாள்.
திடுக்கிட்டவளாகப் பூமகள் அவளை ஏறிட்டு நோக்குகிறாள். அவன் என்றால் யார்? மன்னரா? இளவரசா? அன்று யாரோ படை கொண்டு செல்கிறார், பட்டாபிஷேகம் செய்திருக்கிறார்கள் என்று செய்தி கொண்டு வந்தார்களே? அதெல்லாம் உண்மையா? வினாக்கள் எழும்புகின்றன. ஆனால் அவள் நாவில் உயிர்க்கவில்லை.
"அவன் தான், இளைய மைத்துனன், அசுரன் யாரையோ கொல்ல, மகுடாபிஷேகம் செய்து கொண்டு போகும் வழியில், இங்கே பெண்கள் குலவையிட்டு சோபனம் பாடினார்களாம். யாருக்குக் குழந்தை பிறந்திருக்கிறது என்று கேட்டு வந்தான். 'காட்டில் யாருக்கோ குழந்தை பிறந்தால் யாரோ இளவரசனுக்கு என்ன வேலை? போய் வா!' என்றேன்."
"'நான் கோசல நாட்டு இளவரசன். இங்கே வனதேவி பிள்ளை பெற்றாள் என்று பாடினார்களே' என்றான். 'எந்த இளவரசனுக்கும் இங்கே ஒரு வேலையுமில்லை, மூக்கை நுழைக்க. இந்தப் பூச்சிக் காட்டுக் குடிமக்கள் நச்சம்பு விடுவார்கள். உங்கள் ஜிரும்பகாஸ்திரங்கள் இங்குப் பலிக்காது. போ. ஏதேனும் விபரீதம் நிகழ்ந்து விடும் என்று எச்சரித்தேன்" என்று அமைதியாகப் பேசும் பெரியன்னையைப் பார்த்த வண்ணம் அவள் சிலையாக நிற்கிறாள்.
"நீ அப்போது உறக்க மயக்கத்தில் இருந்தாய். அவர்கள் ஏதோ எச்சிலைத் துப்புவது போல் துப்பிய பின், இங்கென்ன வேலை? இப்போது அந்த அரசுப் போகமும் மன்னர் உறவுகளும் நீ துப்பிய எச்சில் கண்ணம்மா?"
அவளுக்கு ஏனோ தெரியவில்லை, உடல் நடுங்குகிறது.
--------------
அத்தியாயம் 16
சங்கொலி தீர்க்கமாகக் கேட்கிறது. டமடமடம வென்று பறை கொட்டும் இணைந்து கேட்கிறது.
"என்ன சமாசாரம்? ஏதேனும் புலியைக் கொன்றார்களா? காட்டுப் பன்றி வீழ்ந்ததா? விருந்துக் கொட்டா? வெற்றி விழாவா? எதற்கு இப்படிக் கொட்டுகிறார்கள்?..."
பெரியன்னையின் முகத்தில் ஒரு புறம் மகிழ்ச்சியொலி, ஒரு புறம் வெறுப்பு நிழலாடுகிறது. காதுகளைப் பொத்திக் கொள்கிறாள்.
"இவர்கள் சந்தோசம் தலைகால் புரியவில்லை என்றால் பறை கொட்டித் தீர்த்து விடும்..."
அருகே ஆரவாரங்கள் வருகையில், கார்காலம் முடிந்த பின், பசுமையில் பூரித்துத் தாய்மைக் கோலம் காட்டும் இயற்கையன்னையின் மாட்சி கோலோச்சும் சூழல் வரவேற்பளிக்கிறது.
"வாழ்க! சத்திய முனிவர் வாழ்க! நந்தபிரும்மசாரி வாழ்க!" தலைமேல் வாழைக்குலைகள் தெரிகின்றன; கருப்பந்தடிகள்; கனிகள், தானிய கூடைகள்...
ஓ... நந்தசுவாமியின் ரீம்... ரீம்... சுருதி ஒலிக்கிறது.
பூமகள் விரைந்து அவர்களை எதிர்கொள்ளச் செல்கிறாள்.
நந்தமுனி - உயர்ந்து உலர்ந்த மேனியுடன் - அருகே குட்டையாகக் கறுத்து குறுகிய சத்திய முனி... முடிமழித்த கோலம், இடையில் வெறும் கச்சை, முடியில் நார்ப்பாகை சுற்றியிருக்கிறார்.
பூமகள் குடுவையில் நீர் கொணர்ந்து வந்து அவர்களுடைய பாதங்களைக் கழுவி, ஆசி பெறுகிறாள். அவர்கள் உள்ளே பெரிய கொட்டகைக்கு வருகிறார்கள். பெரியன்னையினால் எழுந்திருக்க முடியவில்லை. சத்தியமுனியும், நந்தமுனியும் அவள் பாதங்களில் பணிந்து வணங்குகின்றனர்.
"தாயே, நலமாக இருக்கிறீர்களா?"
"இருக்கிறேன் சாமி. இது எனக்கு இன்னொரு பிறவி, மூன்றாவது பிறவி. இன்னும் எத்தனைப் பிறவிகள் சேர்ந்து இதே உடலில் வாழப் போகிறேனோ?"
"அன்னையே, ஒவ்வொரு பிறப்புக்கும் ஏதோ ஒரு காரண காரியம் இருக்கிறது. வாழ்க்கையில் நேரும் துன்பங்கள், முட்டல்கள், முடிச்சுகள், எல்லாவற்றையும் கடந்து, பிறவியின் பயனை விளங்கிக் கொள்வதுதான் வாழ்க்கையே. முன்னறியாத இடத்தில் அடி வைக்கும் போது, புதுமையின் கிளர்ச்சி. ஒரு புறம் துன்பமும் உண்டு; இன்பமும் உண்டு. துன்பங்களைத் தாங்கிக் கடக்கும் சக்தியும் எழுச்சியும் உள்ளத்தின் உள்ளே ஓர் இனிய அநுபவத்தைத் தரும். மேலெழுந்த வாரியான புலனின்பங்களில், சுயநலங்கள், பேராசைகள், அகங்காரங்கள் பிறக்கக்கூடும். அதுவே, அறியாமையாகிய திரையைப் போட்டு, உள்ளார்ந்த இன்பங்கள் எவை என்ற தெளிவில்லாமல் மறைத்து விடும்..."
சத்தியர் சொல்லிக் கொண்டே போகிறார்.
"சாமி, இங்கே தத்துவங்களுக்கு இடமில்லை; பொழுதுமில்லை. இந்த மக்கள், உடல் வருந்த உழைத்தாலே உணவு கொள்ளலாம். அந்த நிலையில் ஆடியும் பாடியும் மகிழ்வதே இன்பம். இந்தப் பூச்சிக்காட்டு நச்சுக் கொட்டை மக்களை இந்நாள் எப்படி நல்வழிக்குக் கொண்டு வந்து விட்டீர்கள்? சுவாமி, இவள்... இவள், இந்தப் பிறந்த மண்ணுக்கே வந்து சேருவாள் என்று நான்... எதிர்பார்த்தேனா?"
முதியவள் பூப்பிரிவது போன்று துயரத்தை வெளிப்படுத்தும் போது, பூமகள் வெலவெலத்துப் போகிறாள்.
சத்தியமுனி சற்றும் எதிர்பாரா வகையில் குனிந்து அவள் முதுகைத் தொட்டு, "வருந்தாதீர் தாயே! எல்லாமே நன்மைக்குத்தான் நடக்கிறது. நீங்கள் பேறு பெற்றவர்கள். துன்பங்கள் மனங்களைப் புடம் போட்டுப் பரிசுத்தமாக்குகின்றன. அதன் முடிவில் எய்தும் மகிழ்ச்சியில் களங்கமில்லை. மனித தருமம் என்பது, எல்லா உயிர்களும் நம்மைப் போன்றவையே என்ற ஒருமைப்பாட்டில் தழைக்கக் கூடியது. மனித சமுதாயத்தைக் கூறு போடும் எந்த தருமமும் எப்போதும் நிலைத்திருக்க முடியாது. மேலோட்டமாக எல்லாம் நன்மை போல் தெரிந்தாலும் உள் மட்டத்தில் கொந்தளிப்பும் அமைதியின்மையும் இருந்து கொண்டே இருக்கும். இந்தக் கானக சமுதாயத்தில், எல்லா உயிர்களும் நம் போல் என்ற இசைவை, இணக்கத்தைத் தோற்றுவிப்பதில் நீங்கள் ஈடுபட்டிருக்கிறீர்கள்..."
அவர்களெல்லாரும் அமர, பாய்களை விரிக்கிறாள் லூ. யாவாலி ஆசிரமத்தைச் சேர்ந்த பிள்ளைகளும், பெண்களும் கொண்டு வந்த வரிசைகளை வைத்துவிட்டு, இரண்டு பிள்ளைகளையும் சூழ்ந்து கொள்கின்றனர்.
அப்போது, மாதுலனின் குழலோசை கேட்கிறது.
சம்பூகன் மூங்கில்களைத் தேர்ந்து, தீக்கங்கு கொண்டு கட்டுத் துவாரங்களை உருவாக்குகிறான்.
ஒவ்வொன்றாக மாதுலன் ஊதிப் பார்க்கிறான்.
பூமகள் குழலூதும் இசைஞர்களைப் பார்த்திருக்கிறாள், கேட்டிருக்கிறாள். ஆனால் அந்தக் குழலில் இசையை நாதமாக்க, ஒரு கலைப் பொருளாக்கும் அரிய செய் நுட்பத்தை இப்போதுதான் பார்க்கிறாள். நூல் பிரிசலை முறுக்கேற்றுவது; அதை ஆடையாக நெய்யும் நேர்த்தி, இயற்கை இந்த உலகில் எத்தனை இன்பங்களை இசைத்திருக்கிறதென்று எண்ணியவாறு, அவள் நிற்கையில் சத்தியமுனி கேட்கிறார்.
"இந்த அமுத இசையை இங்கே யார் இசைக்கிறார்கள்? நான் இந்தக் கானகம் விட்டுச் சென்று ஐந்து கோடைகளும் மாரிக்காலங்களும் கழிந்து விட்டன. எனக்குத் தெரிந்து குரலெடுத்து நந்தன் பாடுவது அமுத கானமாக இருக்கும். சம்பூகன்... சம்பூகனோ?"
"இப்போது ஊதுபவன் சம்பூகனில்லை சுவாமி. ஆனால் அவன் தான் இதை ஊதும் மாதுலனுக்குக் குழலை வாயில் வைத்து இசைக்கப் பயிற்றியவன்..."
நந்தபிரும்மசாரி இசை எங்கிருந்து வருகிறது என்று தேடுபவர் போல் பார்க்கிறார்.
"மாதுலன்... நெய்கியின் நான்காவது பிள்ளை. இதன் அப்பன் வேதவதியை வெள்ளத்தில் கடக்கும் போது, போய்விட்டான். முதல் மூன்று பெண்களில் ஒன்று மரித்துவிட்டது! இது வனதேவியின் வரமாக வந்திருக்கிறது. யாரேனும் அந்நியர் வருகிறார் என்றால் வெட்கப்பட்டு மறைவான்... அடி, சோமா, வாருணி! அவன் இங்கே தான் இருப்பான், அழைத்து வாருங்கள்!" என்று பெரியன்னை விவரிக்கிறாள்.
"அற்புதம். பூச்சிக்காட்டில் ஊனை உருக்கும் அமுத இசை பொழியும் சிறுவன்..." என்று அவர் வியந்து கொள்கிறார்.
பூமகளுக்கு வானிலே ஏதோ பறவைகள் பறப்பது போலும், வண்ண மலர்க் கலவைகள் வான்வெளியெங்கும் நிறைவது போலும், அமுதத்துளிகளை உடலின் ஒவ்வோர் அணுவும் நுகருவது போலும் தோன்றுகிறது. இந்தப் பண்... எப்படிப் பிறக்கிறது?... என்னென்னவோ கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், சொற்கள் உருவாகவில்லை. இங்கே பெண் விருப்பப்படி மகவைப் பெற்றுக் கொள்கிறாளே! யாரும் யாரையும் ஆக்கிரமிக்கும் இயல்பே இல்லை. மரங்கள் பருவத்தில் பொல்லென்று பூப்பது போல் அது இதழ் உதிர்த்துப் பிஞ்சுக்கு இடமளிப்பது போல் எல்லாவற்றையும் இயல்பாக எடுத்துக் கொள்கிறார்கள். போட்டியும், பொறாமையுமாக நஞ்சை வளர்த்துக் கொள்ளும் பெண் - ஆண் உறவுகள் இல்லை என்று காண்கிறாள். 'நச்சுக் கொட்டை'கள் இருந்தன. அதை அவர்கள் தங்கள் சமுதாயத்தை அடிமையாக்காமல் காத்துக் கொள்ளவே பயன்படுத்தினார்கள். சத்தியமுனியின் வெளிச்சத்தில், அந்த அச்சமும் கரைந்து விட்டதாகச் சொல்கிறார்கள். மாதுலனை வாருணி அழைத்து வருகிறாள். அவள் அவன் தமக்கை. சிறுவனை அழைத்து முனிவர் அருகில் இருத்திக் கொள்கிறார். பிறகு அவன் கைக் குழலை வாங்கித் தம் இதழ்களில் வைத்து ஊதி ஒலி எழுப்புகிறார். நாதஒலி, ஓம் என்ற ஓசை போல் சுருள் அவிழ மெல்ல ஒலிக்கிறது! அப்போது, வனதேவியின் இரு பிள்ளைகளும் ஓடி வந்து முனிவரிடம், எனக்கு, எனக்கு என்று அந்தக் குழலைக் கேட்கிறார்கள்.
மாதுலனின் கச்சையில் இன்னமும் இரண்டு குழல்கள் இருக்கின்றன. முனிவர் அவர்கள் இருவரையும் தம் இரு மருங்கிலும் அமர்த்திக் கொண்டு குழல்களைக் கொடுக்கிறார்.
அவர்கள் இதழ்களில் வைத்து ஊதத் தெரியாமல் உண்ணும் பண்டம் போல் ரசிக்கிறார்கள்.
எல்லோருக்கும் சிரிப்பு வருகிறது.
சத்தியமுனிவர் அதை வாங்கி ஊதிக் காட்டுகிறார்.
உடனே பிடித்துக் கொண்டு இருவரும் வினோதமான ஓசைகளை எழுப்பி முயற்சி செய்கிறார்கள்.
பூமகள் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறாள்.
"சுவாமி! இந்தப் பிள்ளைகளைத் தாங்கள் ஏற்று, பூமியின் மைந்தர்கள் ஆக்க வேண்டும். வில்-அம்பு என்ற உயிர் வதைக் கருவிகளை இவர்கள் ஏந்துவதை விட, இவ்வாறு இசைபாடும் பாணராகச் சுதந்தர மனிதர்களாக உலவ வேண்டும். அன்றாட நியமங்களில் ஆதிக்கங்களும், கொலைச் செயலும் தலைதூக்கும் சூழல் இவர்களுக்கு அந்நியமாகவே இருக்கட்டும்... இங்கே, பச்சை மரங்களை யாரும் வெட்டுவதில்லை. வனவிலங்குகள் கூட இங்கே சத்திய நெறிக்கு உட்பட்டு இயங்குகின்றன. இப்பிள்ளைகளின் இயல்புக் குணங்கள் தலைநீட்டாத வகையில், இவர்களைத் தாங்களே ஏற்க வேண்டும். தளிர்களைக் கசக்குவதும், சிற்றுயிர்களைத் துன்புறுத்துவதும், ஈனக்குரலில் மகிழ்ச்சி கொள்வதும் என்னை மிகவும் சஞ்சலப்படச் செய்கின்றன. இவர்களுக்கு அறிவுக் கண்ணோடு, மனிதக் கண்களையும் திறந்துவிட வேண்டும் சுவாமி! நந்தமுனியும் பெரியன்னையும் குலம் கோத்திரம் அறியாத என்னை, அரச மாளிகைக்கு வந்து பேணினார்கள். அந்த நியமங்களுக்குள் நான் தொலைந்து விடாமல் மீட்டார்கள். இன்றும் இந்தக் கானகமே என் தாயகம்; இவர்களே என் மக்கள், உறவினர், எல்லாம், எல்லாம். எனவே என் பிள்ளைகளையும் இப்படியே தாங்கள் காத்தருள வேண்டும்!" என்று உணர்ச்சிவசப்பட்டு அவர் பாதங்களில் பணிகிறாள்.
அவர் அவளை மெல்ல எழுப்புகிறார்.
"மகளே, கவலைப்படாதே. நந்தன் உன்னை இங்கே கொண்டு வந்து சேர்த்ததில் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறேன். இங்கே அக்கரைக்கும் இக்கரைக்கும் முன்பு பகைமை இருந்தது. ஆனால் இவர்கள் சுயச்சார்பு பெற்றுவிட்டார்கள். தங்கள் தேவைகளைத் தாங்களே நிறைவேற்றிக் கொண்டு கலந்த வாழ்வும் தெரிந்து கொண்டுவிட்டார்கள். மிதுனபுரிச் சாலியர், வேதபுரிச் சாலிய வணிகர், எல்லோரும் இங்கு வருகிறார்கள். இவர்களும், வனதேவியைப் பாலித்து அவள் கொடைகளை ஏற்று முரண்பாடில்லாமல் வாழ்கிறார்கள். பிறரை வருத்தாமல் இருப்பதுதான் இங்கு முதல் பாடமாக இருந்து வருகிறது... மகளே, நீ தைரியமாக இங்கு இருக்கலாம்..."
பிள்ளைகளைத் தழுவி உச்சிமோந்து, அவர்களிடம் ஆளுக்கொரு வாழைக்கனியைச் சீப்பிலிருந்து பிய்த்துக் கொடுக்கிறார்.
அப்போது எங்கோ மந்தையில் ஏதோ ஒரு தாய்ப் பசு "அம்மா..." என்று துன்பக் குரல் கொடுக்கும் ஒலி செவிகளில் விழுகிறது.
பூமகள் வில்லிலிருந்து விடுபடும் அம்பு போல் முற்றம் கடந்து, புதர்களுக்குள் புகுந்து குரல் வந்த திசை நோக்கி ஓடுகிறாள்.
புற்றரையில் ஐந்தாறு பசுக்கள் மலங்க மலங்க நிற்கின்றன. குரல் கொடுக்கும் பசுவின் கண்களில் ஈரம் தெரிகிறது.
ஆங்காங்கு மேயும் கன்றுகள், காளைகள் அஞ்சினாற் போல் மருண்டு வருகின்றன. அப்போதுதான் அவள் பார்க்கிறாள், கன்றொன்றைக் கவர்ந்து, ஒருவன் செல்வதும், சம்பூகன் துரத்திக் கொண்டு ஓடுவதும் தெரிகிறது.
"ஓ, இப்போதுதானே முனிவர், பகையும் வன்முறையும் இல்லை என்று சொல்லிக் கொண்டிருந்தார்?"
அப்போது, சம்பூகன், கன்றைத் திரும்பத் தூக்கிக் கொண்டு திரும்புகிறான்.
அவன் எய்த அம்பு கன்றின் மேல் தைத்து இரத்தம் பெருகுகிறது.
"சம்பூகா? யார் செய்த வேலை இது?"
"ஒன்றுமில்லை தாயே! எதிர்க்கரையில் யாரோ பெரியவர்கள் வந்திருக்கிறார்கள். சீடப்பையன் ஒருவன் இங்கு வந்து விருந்துக்கு இதைக் கவர்ந்து செல்லத் துணிந்து அம்பெய்திருக்கிறான். அதே சாக்காகத் தூக்கிச் சென்றான். நான் நல்ல நேரமாகப் பார்த்தேன். அதே அம்பைப் பிடுங்கி எறிந்துவிட்டு மீட்டு வருகிறேன்."
அதன் தாயிடம் விட்டுவிட்டு அது காயத்தை நக்குவதைப் பார்க்காமல், ஓடுகிறான். மூலிகைகள் எவற்றையோ தேடிக் கசக்கி வந்து அப்புகிறான்.
சற்றைக்கெல்லாம் கன்று தாயின் மடியை முட்டிப் பால் குடிக்கிறது. பூமகளுக்கு உடலே துடிக்கிறது.
அவள் இருந்திருக்கும் இத்தனை நாட்களில் இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்ததில்லை. இப்போது சத்தியமுனிவர் வந்து அடி வைத்ததும் இது நிகழ வேண்டுமா?
பசுவும் கன்றும் முற்றத்தில் வந்து நிற்கின்றன.
சம்பூகன் முனிவரைப் பணிந்து வணங்குகிறான்.
"மகனே, மறுபடியும் தொந்தரவா?.."
"இல்லை சுவாமி. தாய்ப்பசு குரல் கொடுத்ததும் நான் பார்த்துவிட்டேன். காயத்துக்கு மருந்து போட்டேன்."
"அதுசரி, வேம்பு வன ஊரணிக் கரைக்குப் போயிருக்கிறாயா?"
"இல்லை சுவாமி!"
"அது குன்றின் மேலிருக்கிறது. அங்கு அபூர்வ மூலிகைகள் உண்டு. நச்சரவங்களும் மிகுதி. அங்கு நாம் சென்று சில மூலிகைகள் கொண்டு வருவோம். மாதுலனின் பார்வை வருமா என்று பார்ப்போம்..."
நந்தசுவாமி ஒற்றை நரம்பு யாழை மீட்டுகிறார்.
பாட்டுப் பிறக்கிறது.
"வானரங்கின் திரைவில குதாம்!
வானும் மண்ணும் துயில் நீங்குதாம்
வனதேவி கண் விழிக்கிறாள்...
வானும் மண்ணும் கண்விழிக்குதாம்.
வனதேவி அசைந்து மகிழ்கிறாள்
வானும் மண்ணும் இசைந்தியங்குதாம்
வனதேவி சாரல் பொழிகிறாள்...
வானும் மண்ணும் புதுமை பொலியுதாம்.
வனதேவி சுருதி கூட்டுறாள்...
வானும் மண்ணும் குழலிசைக்குதாம்...
வனதேவி யாழிசைக்கிறாள்...
வானும் மண்ணும் எழில்துலங்குதாம்..."
நந்தமணி கையில் ஒற்றை நாண் யாழுடன் எழுந்தாடுகிறார். பிள்ளைகள் கைகொட்டி ஆடிப்பாடுகின்றனர்.
"வனதேவி எங்கள் வனதேவி.
அவள் சுவாசம் - எங்கள் பசுமை
அவள் மகிமை - எங்கள் மகிமை.
ஓம் ஓம் ஓமென்று புகழ்ந்தாடுவோம்.
ஆம் ஆம் ஆமென்று குதித்தாடுவோம்...
துன்பமில்லை - துயரமில்லை.
அன்பு செய்வோம் - இன்பமுண்டு...
வனதேவி - எங்கள் வனதேவி..."
கன்றும் பசுவும் முற்றத்தில் அமைதியாக இக்காட்சியைக் காண்கின்றன. பூமகள் துயரங்கள் விலகிவிட்டதாக மகிழ்ச்சி கொள்கிறாள். பிள்ளைகள், கூடியிருந்த பெண்கள், எல்லோரும் உணவுண்டு, இளைப்பாறும் நேரம் அது.
புதர்களுக்குப் பின் சலசலப்பு... யார் யாரோ பேசுங் குரல்கள் செவியில் விழுகின்றன.
லூ வாய் மூடாமல் கண் மூடி உறங்குபவள், திடுக்கென்று எழுந்திருக்கிறாள். வாருணி எழுந்து ஓடுகிறாள்.
"சாமி யார் யாரோ வராங்க! யாரோ அந்தப் பக்கமிருந்து வாராங்க!"
"யாரு?"
சம்பூகன் முற்றம் தாண்டிச் செல்கிறான். பட்டுத் திரித்துக் கொண்டிருக்கும் நந்தசுவாமியும், பட்டிலவ மரத்தடியில் பஞ்சு திரிக்கும் சத்தியமுனியும் என்ன கலவரமென்றறிய விரைந்து முற்றத்துக்கு வருகிறார்கள். பூமகள் உணவுண்ட இடத்தைச் சுத்தம் செய்ய முனைந்திருக்கிறாள்.
"என்ன? வேதபுரிச் சாலியரா?..."
இல்லை. வந்தவர்கள் முப்புரிநூல் விளங்கும் அந்தணப் பிள்ளைகள். ஒரு சிறுவனைத் தூக்கி வந்திருக்கிறார்கள். அவன் விலாவில் அம்பு பாய்ந்து இருக்கிறது.
பூமிஜா திடுக்கிடுகிறாள்.
"யார்... யார் செய்தது?"
"இந்தக் குலம் கெட்ட பயல் இப்படி பிரும்மஹத்தி செய்திருக்கிறான்..." சம்பூகன் அருகில் சென்று அந்த அம்பை எடுக்கிறான். காயம் பெரிது இல்லை. அது பேருக்குத் தொத்தி, சிறிது காயம் விளைவித்துக் குருதிச் சிவப்பு தெரிகிறது.
"இதோ, இவன், இந்தச் சண்டாளன் செய்தான்!" என்று ஆங்காரத்துடன் கத்துகிறான் பெரியவனாகத் தோன்றும் அந்தணன். பூமிஜா குலை நடுங்க, செவிகளைப் பொத்திக் கொள்கிறாள்.
-------------
அத்தியாயம் 17
நகரமெருகு தெரியும் தோற்றம். அரையாடை, மேலாடை என்று விள்ளும் நாகரிகம். செவிகளில் குண்டலங்கள். குடுமி விளங்கும் நெற்றி பளபளக்கும் சினம். அடிக்கொருமுறை சண்டாளர், சண்டாளர் என்ற சொற்கள் தெரிக்கின்றன. சண்டாள குரு, சண்டாள முனி... அந்தணப் பிள்ளையை அம்பெய்திக் கொல்ல எத்தனைத் துணிச்சல்? தருமங்கள் செத்துவிட்டன. கேட்பார் இல்லை! இவர்கள் வேதமோ தவம், கவிபாடுவதும் தர்மதேவதையைக் காப்பாற்றவா? சத்தியமுனிக்கு முகம் சிவக்கிறது.
முன்னே வருகிறார்.
"அந்தணப் பிரபுக்களே! எங்கள் யாரிடமும் இதுபோன்று நுனியில் இரும்பு முனை கூர்த்த அம்பே இல்லையே? ஏன் அபாண்டமாகப் பழி சுமத்துகிறீர்கள்? எங்கள் சம்பூகனுக்கு, வில்லும் அம்பும் பரிசயமே இல்லையே? அவனுக்கு மூலிகைகள் தாம் தெரியும். அவன் உயிர்களைப் போக்க மாட்டான். அவன் மட்டுமல்ல, நாங்கள் உயிர்களை நேசிப்பவர்கள்! உங்கள் எல்லை கடந்து, பிள்ளைகள் கன்றைக் கொண்டு செல்ல, பசுக் கூட்டத்தில் அம்பெய்தியவர் யார்?..."
சத்தியமுனியின் இந்த விவரம் அவர்களைப் பின்னும் துள்ளச் செய்கிறது. "அது எங்கள் பசு; கன்றுகள். நீங்கள் தாம் எங்கள் பசுக்களைக் கவர்ந்து செல்வது வழக்கம். அரசரிடம் தானமாகப் பெற்ற பசுக்கள் இங்கே எப்படி வந்தன?..."
"எப்படி வந்தனவா? எங்கள் பசுக்கள் வனதேவியின் கொடை! நாங்கள் பசுங்கன்றுகளை எரியில் சுட்டுத் தின்பதில்லை!..." நந்தசுவாமிக்கும் முகம் சிவக்கிறது.
"பேசாதீர்கள்! நரமாமிசம் தின்னும் நீசகுலத்துக்குப் பரிந்து வரும் நீங்களும் அதே வழி தானே!... இதற்கெல்லாம் இப்படி முடிவு கட்ட முடியாது. எங்களுக்கும் தெரியும்! கோசல இளவரசர் மகுடாபிஷேகம் செய்து கொண்டு இராவணனைக் கொன்று அங்கே தருமராச்சியம் செய்யச் சென்ற போது வழங்கிய பசுக்கள் எங்களிடம் உள்ளன. அதே கோசல மன்னரிடம் உங்கள் அதர்மச் செயல்களை, அந்தணச் சிறுவனை அம்பால் தாக்கியதைச் சொல்லி நியாயம் கேட்போம்!" என்று சூளுரைத்துவிட்டு அவர்கள் செல்கின்றனர்.
பூமிஜா இடி விழுந்தாற் போல் நிலைகுலைந்து போகிறாள்.
தான் நின்ற இடத்தில் உள்ள இளமரத்தைப் பற்றிக் கொள்கிறாள். புதிய மாவிலைகள் அவள் முடியில் படுகின்றன.
அப்படி நடக்குமோ? தீங்கு வருமோ? இதெல்லாம் ஏன் நேருகின்றன.
"சம்பூகா? என்னப்பா நடந்தது? நம் பிள்ளைகள் பசுக்களைக் கவர்ந்து வந்தனரா?" என்று சத்தியர் கேட்கிறார்.
"சுவாமி, நம்மிடம் பசுக்கள் பெருகுகின்றன. ஏனென்றால் அவை கொல்லப்படாதவை என்று தாங்கள் தாமே சொல்லி இருக்கிறீர்கள்? அவர்களுடைய பசுக்கூட்டங்கள் பெருகுவதில்லை. இது வீணான வாதம்..." என்று நந்தமுனி விளக்குகிறார்.
சம்பூகன் முன் வந்து நடந்ததை விள்ளுகிறான். அவர்கள் அம்பெய்தார்கள். ஆறு தாண்டிப் படகில் வந்தார்கள். அம்புபட்ட கன்றைத் தூக்கிச் செல்கையில் பசு கதறியது. அவன் சென்று தைத்த அம்பை வீசி எறிந்து விட்டு, கன்றை மீட்டு மருந்து போட்டான். இதுதான் நடந்தது. அவன் யாரையும் தாக்கவில்லை.
பூமகளுக்குப் புரிகிறது. அந்த அம்பு விழுந்த வேகத்தில் அந்தப் பையனின் மீது காயம் ஏற்படுத்தி இருக்கலாம். இல்லையேல் இதை ஒரு காரணமாகக் காட்ட அவர்களே காயம் செய்து கொண்டிருக்கலாமோ?...
இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு, பூமகளுக்கு எப்போது என்ன வருமோ என்ற அச்சம் பற்றிக் கொள்கிறது. வழக்கம் போல் தான் எல்லாம் நடக்கின்றன. இவர்கள் தங்கி இருக்கும் குடில்களை வேடுவப் பிள்ளைகள் புதுப்பிக்கிறார்கள். அந்த நாட்களில் பெரியன்னையுடன் பூமகள் பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு வாழை வனத்துக்கப்பால் சத்திய முனிவர் இருக்கும் யாவாலி ஆசிரமம் செல்கிறார்கள். அங்கே புதிதாக நீண்ட சதுரங்களாகக் கூடங்கள், புதிய கூரை வேயப்பட்டு, சாணம் மெழுகப்பட்டு பச்சென்று துலங்குகின்றன. தீ அணையாமல் இருக்க, தனியாக ஒரு குடிலில் குண்டம் இருக்கிறது. அங்கே அவள் பல பழைய பொருட்களைப் பார்க்கிறாள். அரணிகடையும் கோல்... பழைய கல் உரல்... எல்லாம் அவர் தாய் பயன்படுத்திய பொருட்களாம்.
அன்னையின் சமாதி மேடாக இருக்கிறது. அதைச் சுற்றிலும் துளசிவனம். அங்கு அமர்ந்து பிள்ளைகள் செங்கதிர்த் தேவனை, தீக்கதிரை, காற்றை, விண்ணை, மண்ணைப் புகழ்ந்து பாடல்களை இசைக்கிறார்கள். கூடவே இவள் பிள்ளைகளும் மழலை சிந்துகின்றன. பின்னே ஓர் அழகிய தடாகம் இருக்கிறது. அதில் நீலரேகை ஓடும் தாமரைகள் மலர்ந்திருக்கின்றன.
அந்தத் தடாகத்தில் இருந்து நீர் கொண்டு வரும் போது ரீமு என்ற மூதாட்டி வருகிறாள். உடல் தளர்ந்து முடி நரைத்துக் கண்கள் சுருங்கி இருந்தாலும் பேச்சுத் தெளிவாக இருக்கிறது.
"குழந்தே... நீதான் வனதேவியா?... உன் பிள்ளைகளா இவர்கள்? ராசகுமாரர்களைப் போல் இருக்கிறார்கள். நீயும் ராசகுமாரிதான். இதே இடத்தில் முன்னே குருமாதாவாக ஒரு ராசகுமாரி வந்தாள். அவள் உன்னைப்போல் இருப்பாள்... அப்போதுதான், எனக்கு நினைப்பிருக்கிறது. ராசா வந்து இங்கே முதல்ல உழவோட்டுறார். நாங்கல்லாம், இங்கே ஏர் செல்வதை வேடிக்கை பார்த்து நிப்போம்... ராசா வராரு. ஆறுதாண்டி வராங்க. சனமோ சனம். ராசா தங்க ஏர் புடிச்சி உழுறப்ப..."
பூமகள் அந்தக் கிழவியின் முகத்தை உன்னிப்பாகப் பார்க்கிறாள். "பொட்டி... பொட்டி வந்திச்சி. அதில், பட்டுத்துணி வச்சி ஒரு அழவான புள்ள... ராசா கொண்டுட்டுப் போனாரு. அப்பல்லாம் அந்தக்காடு இந்தக்காடுன்னு போக்குவரத்தில்ல. இங்க வந்து நாங்க பாக்குறப்ப, குருமாதா இல்ல... அவுங்க மனிசப் பெறப்பே இல்ல. தேவதை வந்திருந்ததுன்னு சொல்லுவோம். அந்த தேவதைதான் மறுக்க புள்ளையா பூமிக்குள்ளாற போயிட்டாங்கன்னு சொல்லிக்கிட்டோம். வனதேவிக்குப் பூசை வச்சோம்... உன்ன மாதிரிதா அவங்க வந்தாங்க... நா ரொம்ப சின்னவ... இத இங்க உக்காந்து, பூவெல்லாம் பறிச்சி மாலை கட்டி எனக்குப் போடுவாங்க..."
அவளுக்கு உடல் சிலிர்க்கிறது.
"குருமாதான்னு சொன்னா... யாரு?"
"இந்த சாமிதா, இங்கக் கூட்டி வந்தாங்க. அவங்க தாய் சொல்லி இருந்தாங்க... வாழை வனத்தில் யானை வந்தது. அது மிதிச்சி அடக்கமாயிட்டாங்க. இங்கதா பொதச்சாங்க. எனக்கு அதெல்லாம் நினைப்பில்ல... சாமி வந்த பிறகு தான் நாங்கல்லாம் இங்க ஒண்ணா உக்காந்து பாடுவோம்..."
அன்னையின் குரல் கேட்கிறது. பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு வருகிறாள்.
"யாரு... கிழவி?... நீங்க கருப்பந்தடி பயிர் பண்ணி இடிச்சுச்சாறு பண்ணி புளிப்பேத்தி பானகம் காய்ச்சுறீங்க?" என்று கேட்கிறாள். அவள் பொக்கைப் பல் தெரியச் சிரிக்கிறாள்.
"ஆமாம் பெரியம்மா... முன்னெல்லாம் இலுப்ப பூ நொதிக்க வச்சி எடுப்போம். இப்ப இதும் செய்யிறாங்க..."
"அதான் நீ குடிச்சிட்டு வந்து கதை சொல்லுற, நல்லாக் கதை சொல்லுவா."
"எம்புள்ளங்களும் இதான் சொல்லும்..." முகமலர்ந்த சிரிப்பு...
"கருப்பந்தடி இருக்கா? ஒடிச்சி, இந்தப்புள்ளங்க பல்லுல கடிக்கக் கொண்டாயேன்?"
கிழவி திரும்பிப் போகிறாள்.
தன்னுடைய பிறப்பின் இரகசியம் தெரியக்கூடாதென்று இந்த அன்னை பாதுகாக்கிறாளோ?...
"பெரியம்மா அவளை ஏன் அனுப்பினீர்கள்? அவள் குருமாதா? தேவதை என்றெல்லாம் என்ன பேசினாள்?"
"குருமாதா என்று சொன்னது, குருமாதாவை - யாவாலி அம்மை. அடிமையின் மகன் குருவைத் தேடி குருகுல வாசம் முடித்துத் திரும்பி வரும் வரை இருந்தாள். அவர் வருவதற்குள் யானை மிதித்து அடக்கமானாள். அந்தக் கதையைச் சொன்னாள். குருமாதாவே பிறகு அரசர் மாளிகையில் வளர, பூமிக்குள் குழந்தையாகச் சென்றாள் என்று கதை சொல்கிறாள்..."
"பெரியம்மா, நீங்களும் இந்த இடத்துக்கு உரியவரில்லை. நீங்கள் எப்படிக் கானகத்துக்கு வந்தீர்கள்?"
"நீ எப்படி வந்திருக்கிறாயம்மா?..."
மெல்லிதழ்கள் துடிக்கின்றன. அவளைத் தழுவிக் கொள்கிறாள்.
"அரச மாளிகையில் அடி எடுத்து வைக்கும் ஒவ்வொரு பெண்ணைச் சுற்றியும் இப்படிச் சிலந்தி வலைகள் பின்னப்பட்டிருக்கும். சில சமயங்களில் ஒட்டடைகள் களையப்படும். இப்படிக் கானகத்தில் வந்து விழுபவர்கள் உண்டு. யாவாலி பட்டயம் போட்ட அடிமை. உத்தமமான ஒரு பிள்ளையை அவள் உருவாக்கினாள். அவன் ராச ஊழியம் செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை; அரசனாக வேண்டும் என்றும் நினைக்கவில்லை; மனிதனாக்க வேண்டும்; அடிமைக்குலம், இழிக்குலம் என்ற நாண் அறுபட வேண்டும் என்று எண்ணினாள். முப்புரிநூலுக்கு இவனும் தகுதியாக வேண்டும் என்று வளர்த்தாள். அந்த மகன் முப்புரிநூல் இல்லாமலே, நல்ல மனிதர்களை உருவாக்குகிறான். முப்புரிநூலே அகங்காரத்தின் சின்னமாகி விட்டது. மகளே..."
பூமகள் பேசவில்லை.
தோல் மேடிட்ட இரணங்களைக் கிளறுவதில் என்ன பயன்?
ஏனெனில் இந்த இரணங்கள் ஏற்படுவதற்கான காரணங்கள் மிக ஆழமான அடித்தளம் கொண்டிருக்கின்றன. அவற்றை அசைப்பது, எளிதல்ல. இந்த ஆசிரமம் அவளுக்கு மிகவும் இசைந்ததாக, அச்சமே இல்லாத பாதுகாப்புடன் இருப்பதாகத் தோன்றுகிறது. ஒரு திங்கள் - மாறுதலுக்கு என்று வந்தவர்கள், குளிர்காலம் முழுவதும் தங்கி இருக்கிறார்கள். பிள்ளைகள் இருவரும், இங்கேயுள்ள வேடுவப் பிள்ளைகளுடனும் பெண்களுடனும் ஓடியாடி மழலை பேசி, பாடி, அந்தச் சூழலுக்கே உயிரூட்டுகிறார்கள்.
இளவேனில் துவக்கத்தில் புதிய தளிர்கள், புதிய அரும்புகள் கானகச் சூழலையே மாற்றுகின்றன. இணைதேடும் பறவைகள்; விலங்கினங்கள்... மண்ணே புதிய மணம் கொண்டு வீசுவது போன்ற மலர்கள் இதழ்களை உதிர்க்கின்றன. நள்ளிரவில் மலர்ந்து மணம் சொரிந்துவிட்டு, காலையில் மண்ணில் விழும் மலர்களை எடுத்துக் காலில் மிதிபடாதபடி பூமகள் சேகரிக்கிறாள். 'நீங்கள் இந்த மனிதர்கள் காலடி படாத இடங்களில் உதிரக் கூடாதா?' என்று ஒவ்வொரு மலரையும் கண்களில் ஒத்திக் கொள்கிறாள். வழித்தடம் முழுதும், பவள மல்லிகை, மரமல்லிகை மலர்கள் பொல்லென்று உதிரும் மாட்சியை அவள் இதுபோல் பார்க்கவில்லையா?...
கானகம் புதிதில்லை என்றாலும் அப்போது புதியதொரு பட்டாடை கொண்டு பழைய நினைவுகளை மூடிவிட்டுப் புதியவளாக இயங்குவதாக உணருகிறாள்.
ஒருநாள், முற்பகலில் அவள் இதுபோன்று மலர் சேகரிக்கும் நேரத்தில், திடுமென்று கருமையாகத் திரண்ட வானில் பளீரென்று மின்னுவது போல் ஒரு குலுக்கல் அவளுக்கு ஏற்படுகிறது. ஓர் அதிர்வு? என்ன ஓசை? இடியோசையா? இல்லையே? வில்லில் நாணேற்றி விடும் ஓசையா? அந்நாள் அவள் தந்தை பாதுகாத்து வைத்திருந்த வில்லை எடுத்து நிறுத்தி நாணை இழுத்து எழுப்பிய ஓசை... இப்படித்தானே இருந்தது? அவள் உள்ளமும் உடலும் பொல்லெனப் பூரித்த உணர்வு மறக்கக் கூடியதா என்ன? வானமே பூச்சொரிந்தாற் போல் உணர்ந்தாள். சுரமை, ஊர்மி எல்லாரும் அவளைக் கேலி செய்தார்கள். நாணம் கொண்டு முகம் மறைத்தாள்.
அவளுக்கு மணமாலையை உறுதி செய்த ஒலி அது. அடுத்து, அவள் எப்போது அந்த ஒலியைக் கேட்டாள்? காட்டில் இளையவனை, 'போ' என்று விரட்டினாளே, அப்போது அந்த ஒலி கேட்டது. அந்த நாண் இழுபடு ஓசை, அவளைக் கொண்டவனின் கையால் யாருக்கோ ஏற்படும் மரணம் என்று உணர்த்தியது. அவள் சூர்ப்பனகையாக இருப்பாளோ என்று கூட அப்போது பேதலித்தாள். இப்போது... அந்த நாண் இழுபடு ஓசையல்லாமல், வேறு எந்த அதிர்வு அவள் உள்ளுணர்வைக் குலுக்கிறது? பெரியன்னையிடம் ஓடி வருகிறாள். குழந்தைகள் இருவரும் பெரியன்னை திரிக்கும் நூலைச் சிக்கலாக்கி மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அருகில் இரண்டு பெண்கள் மூங்கில் கிழித்துக் கூடை முடைகிறார்கள்.
"பெரியம்மா, இப்போது பூமி அதிர்ந்தாற் போல் ஓர் இடிமுழக்கம் கேட்கவில்லை?"
அவள் இவளை உற்றுப் பார்க்கிறாள்.
"இருக்கும். கோடையில் இப்படித் திடுமென்று எங்கேனும் வானம் கறுத்து இடிக்கும். எனக்குத்தான் செவிகள் மங்கலாகி விட்டன. ஏம்மா, பஞ்சமி? இடி இடித்தது?"
இவள் பற்களைக் கறுப்பாக்கிக் கொள்ளவில்லை. பளீரென்று சிரிக்கிறாள். "எங்கோ யானை கத்திச்சி... அதா. இங்க வராது!" என்று நிச்சயமாக அச்சமின்றி உரைக்கிறாள்.
"யானையின் பிளிறலா அது?..."
ஆம்; உண்மையாகவே யானையின் பிளிறல் கேட்கிறது. பஞ்சி கைவேலையை விட்டுவிட்டு முற்றம் கடந்து போகிறாள். காற்றுக்கு ஆடும் தளிர்போல் அவள் பெரியன்னை கையைப் பற்றிக் கொள்கிறாள்.
சற்றைக்கெல்லாம், சோமியும் கைவேலையைப் போட்டு விட்டு யாரையோ அழைத்தவாறு ஓடுகிறாள்.
சத்தியமுனி, செய்குளத்தைத் துப்புரவு செய்த கோலத்தோடு, "என்ன கலவரம்?" என்று வருகிறார். அவர் முகத்தில் இருந்து வியர்வை பெருகுகிறது.
"மகளே, குழந்தைகளுடன் குடிலுக்குப் போங்கள்" என்று கூறியவராய் அவர் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு செல்கையில், பசுவினங்கள் மணிகுலுங்க ஓடி வருகின்றன. பறவைகள் நேரமில்லா அந்த நேரத்தில் வானில் வட்டமிடுகின்றன. காடன், ஒலி, மாரி, ஆகிய வேடர் கூட்டம், வில் அம்புகள் ஏந்தியவர்களாய் வருகிறார்கள்.
"...எல்லோரும் நில்லுங்கள்! என்ன ஆயிற்று இப்போது?..."
"சாமி, ஏதோ ஆபத்து நடந்திருக்கு. யானைகள் இப்படிக் கத்தியதில்லை. பசு-பறவை எல்லாம் நிலைகுலையுமா? நம்ம கரும்புத் தடியத் தின்ன யானை வரும். நந்தமுனி ஒடிச்சிக் குடுப்பார். பிள்ளைங்க வாங்கிட்டுப் போறாப்புல போகும். இப்ப அதுங்க ஏன் ஆபத்து வந்தாப்புல அலறணும்?"
"சரி, நீங்க வில் அம்பப் போட்டுட்டுப் போயி என்னன்னு பாத்திட்டு வாங்க!"
அவளால் குடிலுக்குள் சென்று அமைதியாக இருக்க முடியவில்லை. சிறுவர்களைக் குடிலுக்குள் கட்டிப் போட முடியுமா? அவர்களால் நொடிப் பொழுது கூட அமைதி காக்க முடியாதே?
தபதபவென்று சிறுவர்கள் ஓடுவதை உணர்ந்தாற் போல் இவர்களும் வெளியே ஓடிப் புதர்களுக்கிடையில் கைகொட்டிச் சிரிக்கிறார்கள். அப்போது ஓர் அணில் குதித்துப் போகிறது. வால் நீண்ட குருவி புதரில் இருந்து ஓடுகிறது.
"வா... வா... விளையாடலாம்!" என்று பெரியவன் அழைக்கிறான்.
"அஜயா, விஜயா, இங்கே பாட்டன் பக்கம் வாருங்கள்!" என்று சத்தியர் அவர்களை அருகில் அழைத்துக் கொள்கிறார்.
பூமகளின் கலவர முகம் பார்த்துப் பெரியன்னை தேற்றுகிறாள்.
"ஒன்றும் நேராது. இந்த வனத்தில் எந்த அசம்பாவிதமும் நேராது. அமைதி கொள் மகளே..."
"இல்லை தாயே. இந்த ஓசை... எங்கோ ஒரு கொலை விழும் ஓசை. இந்தப் பிள்ளைகளுக்குப் பாட்டன், யானை தண்ணீர் குடிக்கும் ஓசை என்று ஓசை வந்த திக்கை நோக்கி அம்பெய்ததன் பயனாக, கண்ணில்லாப் பெற்றோரின் ஒரே மகன் மாண்டான். தொலைவில் இருந்து கண்காணாதபடி மந்திர வித்தையைப் பிரயோகித்து அம்பெய்தும் திறமை என்று பெருமை பேசுவார்கள்..."
இவள் பதை பதைக்கையில், முயல்கள், முள்ளம்பன்றிகள், ஏதோ நேர்ந்துவிட்டாற் போன்று பரபரப்புடன் புதர்களை விட்டு வெளியேறுகின்றன.
பூமகள் தன் நிலை மீறி முற்றம் கடந்து செல்கிறாள். பாம்புகள் ஊருகின்றன.
"வனதேவி! தாயே! அறியாமல் செய்யும் பிழைகளை மன்னித்தருள்வீர்! இவர்கள் எல்லோரும் உன் மைந்தர். நிரபராதிகள் வீழக்கூடாது. என்னை உன் மடியில் கொண்டு சேர்த்து, பழியையும், பாவத்தையும் வாழ்நாள் முழுவதும் அநுபவிக்கிறாரே, அந்தத் தண்டனையே போதும். இன்னும் பழிபாவம் நேரிட வேண்டாம்..." என்று உள்ளூற இறைஞ்சுகிறாள்.
இடையே ஓர் ஆசைக் குறுத்தும் குறுகுறுக்கிறது.
"நான் தான், மண்ணாசை, கொல்லும் திறன், எல்லாம் துறந்து, வருகிறேன். தேவி, உன் விருப்பப்படியே வன்முறை இல்லை என்பதற்கடையாளமாக, அந்நாள் வில்லொடித்தது போல் ஒடித்தேன்" என்று சொல்ல வருகிறாரோ? படைகள், ஆடம்பரங்கள், பணியாளர், மனமழிக்கும் ஆசைகள் எதுவும் இல்லாமல் இயற்கையின் நியதிகளில் குறுக்கிடாமல் அன்பு கொண்டு வாழ முடியாதா?... இதோ உங்கள் மைந்தர்கள். முனிவர் இவர்களை அஜயன் - விஜயன் என்றழைக்கிறார். இங்கே வாழ்க்கை தான் வேள்வி. பகிர்ந்துண்ணும் மாண்பு. எவரையும் பட்டினி கிடக்க விடுவதில்லை. இங்கே வில்வித்தை, மல்யுத்தம் எல்லாம் தற்காப்புக்கு என்று தான் முனிவர் பயிற்றுவிக்கிறாராம். வேள்வி என்று சொல்லி, ஆவினங்களைக் கொன்று நிறைவேற்றுவதில்லை.
அவள் மனத்திரையில் மின்னற் கோடுகளாக இந்த வாசகங்கள் பளிச்சிடுகின்றன.
அவள் சோகமே உருவெடுத்தாற் போன்று நிற்கையில் பிள்ளைகள் ஓடி வருகிறார்கள். அவள் பாதங்களில் விழுந்து நீலன் கதறுகிறான்.
"...தேவி, வனதேவி? ஏனிப்படி ஆயிற்று? சம்பூகன்... சம்பூகன் போய்விட்டான். ஓர் அம்பு பாய்ந்து அவனை வீழ்த்திவிட்டது..."
பிள்ளைகள் தேம்பித் தேம்பி அழுகிறார்கள்.
அவள் அலறல் கானகமெங்கும் எதிரொலிக்கிறது.
அவள் தான் நிறைசூலியாக வனத்தில் தனியாக விடப் பட்ட போது கூட இவ்வாறு நிலை குலையவில்லை.
"இருக்காது, கூடாது... கூடாது" என்று கத்தியபடியே முனிவரை நோக்கி ஓடுகிறாள்.
-----------
அத்தியாயம் 18
கடலலைகள் பொங்கிப் பிரளயம் வருவது போலும், பூங்காக்கள் தீப்பற்றி எரிவது போலும் அந்த அமைதிப் பெட்டகம் கலங்கிப் போகிறது.
"சம்பூகன் இந்த உலகத்துக்கெல்லாம் உற்றவனாயிற்றே? அவனை அம்புபோட்டுக் கொன்றவர் யாரப்பா?"
"குருசாமி, நாங்கள் வனதேவிக்கு மங்களம் சொல்லி, ஆற்றோரம் கோரை பிடுங்கிக் கொண்டிருந்தோம். அங்கே சில தானியக் கதிர்களும் இருந்தன. சம்பூகன் அவற்றைக் கொய்வதற்காகக் குனிந்த போது விர்ரென்று கழுத்தில் அந்த அம்பு பாய்ந்து வந்து குத்தியது. உடனே வீழ்ந்து விட்டான். அது அக்கரையில் இருந்துதான் வந்தது சாமி!..."
"அன்னிக்கு அவங்க, சபதம் வச்சிட்டுப் போகல?... அந்தக் குடுமிக்காரங்க! பிராமண குலமாம். அவங்கதான் மந்திர அம்பை ஏவி இப்படிச் செய்திருக்காங்க... நாங்க நச்சுக் கொட்டை அம்பு செய்யக் கூடாதுன்னு சொன்னீங்க. கேட்டோம். இப்ப, நம்ம பசுவை அவங்க கொண்டு போனதை மீட்டோம். அதுக்கு இப்படி அநியாயம் செய்திருப்பது நியாயமா, குருசாமி!"
பூமகள் உறைந்து போயிருக்கிறாள். அது நடந்து வெகு நாட்கள் ஆயினவே?
"இந்தப் பாவத்தை, அவன் தான் செய்திருப்பான்..." என்று முணுமுணுக்கிறார்கள்.
பழிபாவச் சொல்லுக்கு இடம் தந்துவிட்டீரே! ஒரு குடம் பாலுக்கு ஒரு நஞ்சு போதும் என்பார்கள். உங்கள் சரிதையில் நஞ்சே பரவுவதைத் தடுக்க இயலாதவர்?... நாளை உங்கள் மைந்தர்கள் தேன் பிளிற்றும் மழலையில், 'எங்கள் தந்தை' எப்படி இருப்பார், அவர் எங்கே என்று கேட்காமலிருப்பார்களா? அவர்கள் கேட்கலாகாது, என்று அஞ்சித் தானே நான் வேடப்பிள்ளைகள், அவர்கள் குரு முனிவர் என்று ஆடியும் பாடியும் அவர்கள் 'குலத்' தொழிலை மறக்கச் செய்கிறேன்? இது நீசத்தனம் அன்றோ? நீர் தாடகையைக் கொன்ற வரலாற்றை நான் நம்பவில்லை. எனினும் தர்மம் என்று சொல்லப்பட்ட இனிப்புப் பூச்சை ஏற்றிருந்தேன். எது தர்மம் சுவாமி! அரக்கன் பிறன் மனையாளைக் கவர்ந்தான் என்று இகழ்ந்து, அந்த நகரையே அழித்து சிறை மீட்டதாகச் சொல்லி உங்கள் தர்மத்துக்காக என் மீது மீண்டும் பழி சுமத்தி நாடு கடத்தினீர். இப்போது, இந்தச் சம்பூகன்... யாருக்கும் தீங்கிழைக்காத பாலகன். அவன் உங்கள் எல்லைக்கு வந்தானா? உங்கள் உடமைகளைக் கவர்ந்தானா?...
பறந்து சென்று, சுமந்தரர் - குலகுரு முதலியோர் புடைசூழ வீற்றிருக்கும் மன்னன் முன் நியாயம் கேட்க வேண்டுமென்று குருதி கொந்தளிக்கிறது. இதுவரையிலும் பூமித்தாயின் மேனி அவளை உறுத்தியதில்லை. கல்லும் கரைய மென்மையாக வருடும் அடிகளை அவள் உணர்ந்திருக்கிறாள். இப்போதோ, முட்களும் கல்லும் குத்திக் கிழித்து குருதி பொசியும் பரபரப்பில் வருகிறாள். அவளே அவளுக்குப் புதியவளாகி இருக்கிறாள்.
அவளுக்கு மிகவும் பழக்கமான, நெருக்கமான, ஒன்றி அறியப்பட்ட முகங்கள்; வாசகங்கள்; வாடைகள்... எல்லாமே அந்நியமாகத் தோன்றுகின்றன. மாதுலன்... முடி வழுக்கையான அந்தப் பிள்ளை ஓய்ந்து ஒடிந்து மரத்தோடு சாய்ந்திருக்கிறான். குழல்கள் கீழே உயிர் இழந்த நிலையில் கிடக்கிறது. அவன் அன்னை பொங்கிப் பெரும் குரல் எடுத்து ஓலமிடுகிறாள்.
சம்பூகன் - பால்வடியும் வதனங்கள் - கண்களை மூடி மென் துயில் கொள்ளும் நிலையில்... அந்த மகிழ மரத்தின் வேர் மீது இலைப்படுக்கையில் வைத்திருக்கிறார்கள். கரிகுழல் கற்றைகள் முன் நெற்றியில் தவழ்கின்றன. சிறு மூக்கு... மென்மையான காதுகள். எலும்பு தெரியும் மார்பகம்... நந்தமுனி திரித்து பட்டு நூலில் கோத்த ஒற்றை உருத்திராக்க மணி.
பூமகள், தன் நிலை இழந்து 'மகனே' என்று அவன் மீது விழுந்து கதறுகிறாள். அண்டமே குலுங்குவது போல் உயிர்களனைத்தும் துடிக்கின்றன. இந்தத் துடிப்பை, அந்த க்ஷத்திரிய மன்னன், அவள் நாயகன் உணர்ந்திருக்க மாட்டானா? அவன் என்ன கல்லா?
அப்படி மேற்குலம் மட்டுமே வாழவேண்டும் என்ற ஒரு தர்மம் உண்டா? இந்த உலகில் அவர்கள் ஆதிக்கம் செலுத்துவது தர்மம் என்றால், அந்த தர்மம் நிலைக்குமா?...
நந்தசாமி வருந்தித் துடிக்கும் அவள் தோள்பட்டையை மெல்லத் தொடுகிறார்.
"குழந்தாய், நீ வருந்தலாகாது. இந்த அநியாயம் நியாயமாகாது."
"எந்தக் கொலைக்கும் நியாயம் கிடையாது. ஆறறிவு இல்லாத விலங்குகளுக்கு இயற்கை விதித்த கிரமப்படி இரையாகும் உயிர்களுக்கும் ஒரு நியதி இருக்கிறது. பசி இல்லாத போது, எந்த ஒரு விலங்கும் இன்னொரு விலங்குக்கு ஊறு செய்யாது. அதற்காகப் பழியும் வாங்காது... மகளே, தெம்பு கொள்..." சத்தியமுனி அவள் மைந்தர்களை அழைத்துக் கொண்டு வருகிறார். முதியவளும் மெள்ள நடந்து வருகிறாள்.
தங்கள் தாயின் வருத்தம் கண்ட மதலையர் அவளை மெல்ல வருடி, மழலை சிந்துகின்றனர்...
"சம்புகனுக்கு என்ன? ஏன் எல்லோரும் அழுகிறார்கள்?" இவள் இரு குழந்தைகளையும் அணைத்துக் கொண்டு கண்ணீர் பெருக முத்தமிடுகிறாள்.
"சம்பூகன் எழுந்திருக்க மாட்டான். கண்மணிகளே... அவன் பூதேவியுடன் ஐக்கியமாவான்..."
"ஏன்... ஏன்?..."
"நாங்கள் யாருமே அம்பெய்ய மாட்டோம். குருசாமி யாருமே அம்பு எய்யக் கூடாது என்று சொன்னார். அம்பு போன்ற முள்ளினால் பூமியைத் தான் கிளறுவோம். கரும்பு எங்களை விட உயரமாக வளர்ந்தது. அப்போது சம்பூகன், மாதுலன் குழலூதினால் வனதேவி சந்தோசப்பட்டு நிறைய மாங்கனி, கரும்பு, தேன் எல்லாம் தருவாள் என்றான். நாங்கள் முன்பெல்லாம் ஓணானைப் பிடித்துக் கல் தூக்கச் சொல்வோம்; நத்தைக் கூடுகளை உடைப்போம். அதெல்லாம் ஒன்றுமே செய்வதில்லை. எங்கிருந்து யார் அம்பு போட்டார்கள்? யார்... யார்... யார்..."
யார்... யார்... என்று அந்தக் கானகம் முழுவதும் எதிரொலிப்பது போல் அவளுக்குத் தோன்றுகிறது.
மௌனமாக நிற்கும் சத்திய முனிவரின் முன் விழுந்து பணிகிறாள்.
"எந்தையே, இந்தப் பாவம் செய்தவர் யாராக இருந்தாலும், அவரை அவர் செயலாகிய பாவமே தண்டிக்கட்டும்..."
கண்ணீர் முத்துக்கள் சிதறி அவர் காலடியில் வீழ்கின்றன.
அவர் அவளை எழுப்புகிறார். "மகளே, வருந்தாதே? இயற்கையை அழிக்கும் செயல்புரியும் எவருக்கும் அதுவே பிறவிப் பிணியாகும். சம்பூகனைக் கொல்வது அவர்கள் அந்தணர்களைக் காப்பாற்றும் தருமத்தில் பட்டது என்பார்கள்."
"அவன் பிறப்பே, ஏதோ பாவத்தின் பயன் என்று அநாதையாக விட்டார்கள். நாம் அவனை மனிதனாக வாழ வைக்க முயன்றோம்... மூவுலகும் புகழ்வதாகச் சொல்லிக் கொள்ளும் ஒரு முடி மன்னன், இந்தக் குற்றமற்ற சிறுவனை வீழ்த்தியது, ஒரு சிங்கம் ஒரு சிற்றெரும்பைக் கண்டஞ்சி, அதை அறைந்து கொன்றாற் போல் இருக்கிறது... அவர்கள் உடல் சம்பந்தப்பட்ட வலிமையை விட, இந்தச் சிறுவனின் உயிராற்றல் ஆன்ம வலிமை கண்டஞ்சி, அழிக்க முற்பட்டிருக்கிறார்கள். வேதம், கல்வி, மேலாம் அறிவு, ஞானம், எல்லாம் பிறப்பினால் மேற்குலத் தந்தையின் வழி வந்தவருக்கே உரியது என்று தீர்த்துவிட்ட நியாயத்தை நான் உடைக்க முயன்றேன். இது என்னை நோக்கி வந்த அம்பு மகளே..."
"ஆயுதங்களால் உடலை அழிக்கலாம். ஆனால் இந்தச் சம்பூகன் விதைத்த விதைகள், பேராற்றலாக வளரும். மேலும் மேலும் வேறு உருவங்களில் கிளைத்துச் செழித்து வரும்..."
"சுவாமி, இந்தத் தத்துவங்கள் எதுவும் எனக்கு அமைதி தரவில்லை."
"ஆமாம் குழந்தாய், அரசரவைகளில் போக போக்கியங்களைத் துய்த்துக் கொண்டு, பேசுவதற்குத்தான் தத்துவங்கள். இதற்கப்பால் இது, அதற்கப்பால் அது, ஏகம் பிரும்மம், மற்றதெல்லாம் மாயம் என்று பேசுவார்கள்; வாதம் செய்வார்கள்..."
உடனே பெரியன்னை, துயரம் வெடிக்க, "நிறை சூலியை வனத்துக்கு அனுப்புவார்கள். என்ன தத்துவம் வேண்டிக் கிடக்கிறது?... மகளே, அதை மறந்து விடு. அவர்களுக்கு அச்சம். ஏனெனில் மனசில் ஆசை என்ற கருப்பு இருக்கிறது. ஆசை, சாம்ராச்சிய ஆசை; ஆதிக்க ஆசை. ஆசை இல்லை என்றால் அச்சம் இல்லை. நந்தனைப் பார்; அபூர்வமான பிள்ளை; இந்தச் சம்பூகன் அப்படி வளர்ந்தான். இவர்களை... அழிக்க வேண்டும் என்று குலகுரு, மந்திரம் சொல்வார்; மன்னன் மதிப்பில்லாமல் கேட்பான்! 'தாழ்ந்த குலப்பிள்ளைகள் மந்திரம் சொல்வதா? அந்தி தொழுவதா? சந்தி வந்தனம் செய்வதா?... இவர்கள் முற்பிறவியில் பாவம் செய்து, அதைத் தொலைக்க, தவ வாழ்வு வாழ்கிறார்கள். அந்தப் பாவங்கள் நம் குலத்தைத் தொத்திக் கொள்ளும் மன்னவா! நீ இந்த மந்திரம் செபித்து அஸ்திரம் எய்து, அவனை அழி; பிரும்ம குலத்தைக் காப்பாற்று" என்று ஓதியிருப்பான்! பூமகள் அந்த அன்னையின் சுடுசொற்களின் வீரியம் தாங்காமல் செவிகளைப் பொத்திக் கொள்கிறாள்.
"எந்தையே, எது தருமம்? எது பாவம்? எது புண்ணியம்? எனக்கு எதுவுமே புரியவில்லை. ஒரு கால் இந்த மைந்தர்களை அவர்களிடம் கொண்டு செல்லவோ இந்த சூழ்ச்சிகள்?"
"குழம்பாதே, மகளே, நீ உறுதியாக இரு. சத்தியம் என்றுமே பொய்த்ததில்லை. அது கருக்கிருட்டில் மின்னலைப் போல் தன்னை விளக்கிக் காட்டும்!"
அழுது கொண்டே பிள்ளைகளும் நந்தமுனியும் சம்பூகனுக்கு இறுதிக்கடன் செய்கிறார்கள். வேதவதி ஆற்றில் இருந்து நீர் கொண்டு வந்து அவனை நீராட்டி, புதிய நார் ஆடையை அரைக் கச்சையாக்கி, அந்த மகிழ மரத்தடியிலேயே அவனை வைக்கக் குழி தோண்டுகிறார்கள். அந்த இடம் அவனுக்கு விருப்பமான இடம். அங்கே அமர்ந்துதான் குழலிசைப்பான். குழல்களில் துவாபாரம் செய்து ஊதிப் பார்ப்பான். அங்கே அமர்ந்து தான் வாழை நார் தூய்மை செய்து, நூல் நூற்று சுற்றி வைப்பான்...
வானவனும் இந்தப் பிள்ளைக்கு அஞ்சலி செய்வது போல் அந்தியின் துகில் கொண்டு போர்த்துகிறான். பசுந்துளிர்களையும் மலர்களையும் கொய்து அவன் உடலை மூடுகிறார்கள். அகழ்ந்த குழியில் அவனை இறக்கிய பிறகு அனைவரும் கதறியழுது, மேல் மண்ணைத் தூவுகிறார்கள். சத்தியமுனி தாய் மண்ணைப் புகழ்ந்து பாடுகிறார்.
"உயிர் கொடுத்த அன்னையே,
உனைப் போற்றுகிறோம்.
உயிர் தந்தனை; உண்டி தந்தனை;
மனம் தந்தனை; அறிவு தந்தனை
ஒளி ஈந்தனை; உறவு கொண்டனை
அன்பு தந்தனை; இன்பம் தந்தனை
இன்னல் தீர்த்தனை; வாழச் செய்தனை
இதோ உன் மைந்தன்; ஈரேழு வளர்ந்த பாலகன்.
உன் மடியில் இடுகிறோம்; அவன் துயிலட்டும்.
உறுத்தாமல், வருத்தாமல் துகில் கொண்டணைப்பாய்,
தாயே, தயாபதி, உனைப் போற்றுகிறோம்..."
சங்கம் கொண்டு ஊதுகிறார்கள். சிறுவர்கள் இருவரும் பார்த்துக் கொண்டே இருக்கிறார்கள்.
"அம்மா, சம்புகன் வர மாட்டானா?"
குழந்தைகளின் கேள்விக்கு விடையளிக்க இயலாமல் அவர்களைத் தழுவிக் கொண்டு பூமகள் கண்ணீர் உகுக்கிறாள்.
"அஜயா, விஜயா, அதோ பார்!" என்று சத்தியர் சிறுவர்களைப் பற்றிக் கொண்டு வானத்தைக் காட்டுகிறார்.
வானில் ஒளித்தாரகை ஒன்று மின்னுகிறது.
"அதோ பார்த்தீர்களா? சம்பூகன் அங்கேயிருந்து நம்மைப் பார்த்துக் கொண்டே இருப்பான்!"
நந்தமுனி குழலை எடுத்து மண்ணைத் தட்டித் துடைத்து, மாதுலனிடம் கொடுக்கிறார்.
"பையா, குழலூது; சம்பூகன் எப்போதும் கேட்டுக் கொண்டிருப்பான். இன்னும் இன்னும் இந்தத் தாயிடம் எண்ணில்லாச் சம்பூகர்கள் தோன்றுவார்கள். குழல் ஊது! குழல் ஊது! குழல் ஊது!"
மாதுலன் குழலை உதடுகளில் பொருத்தி இசைக்கிறான்.
சோகம் பிரவாகமாக அந்த இசையில் பொங்கி வருகிறது.
------------
அத்தியாயம் 19
"செங்கதிர்த் தேவனை வந்தனை செய்வோம்...
எங்கள் உள்ளங்களில் ஒளி பரவட்டும்!
மங்கல ஒளியோய், மலர்களின் நாயக!
எங்கள் மனங்களின் மலங்கள் அகற்றுவீர்!
எங்கள் செயல்களில் வந்து விளங்குவீர்!
எங்கள் சொற்களில் இனிமை கூட்டுவீர்..."
வேடப்பிள்ளைகளோடு அவள் பிள்ளைகள் காலை வணக்கம் பாடும் போது, பூமகளின் மனம் விம்முகிறது. சம்பூகனின் மறைவு ஏற்படுத்திய வடு காய்ந்து, ஒன்பது வேனில்கள் கடந்திருக்கின்றன. வேடப்பிள்ளைகளைப் போன்றே இவர்களும் முடியை உச்சியில் முடிந்து கொண்டு, அரைக் கச்சையுடன் கனிகளைச் சேகரித்தும், தானியங்கள் விளைவிக்கும் பூமியில் பணி செய்தும், ஆடியும் பாடியும் திரிந்தாலும், இவர்கள் தோற்றம் தனியாகவே தெரிகிறது. மொட்டை மாதுலனும் இவர்களுடன் திரிகிறான். அவனுக்குச் சிறிது கண்பார்வையும் கூடியிருக்கிறது. அவர்கள் காலை வந்தனம் பாடும் போது பூமகள், இவர்களுக்கான காலை உணவைச் சித்தமாக்குகிறாள்.
இளவேனில் மரங்கள் செடிகளெல்லாம் புதிய தளிர்களையும் அரும்புகளையும் சூடித் திகழ்கிறது. பனிக்குளிர் கரைந்து மனோகரமான காலை மலர்ந்து விண்ணவன் புகழ் பாடுகிறது.
தானிய மாவில் கூழ் செய்து, பிள்ளைகளுக்கெல்லாம் அவள் இலைக் கிண்ணங்களில் வார்க்கிறாள். கிழங்குகளைச் சுட்டு வைத்திருக்கிறாள்.
"இன்று குருசுவாமி, எங்களை வேம்பு வனத்துக்கு அழைத்திருக்கிறார். அங்கு ஒரு பொறி சுழலும். அதைக் கண்ணால் பார்க்காமல் சுழலும் ஓசையைக் கேட்டவாறே அம்பெய்து வீழ்த்த வேண்டும். அசையும் போது குறிபார்க்க வேண்டும்..."
அஜயன் இதைக் கூறும் போது பூமகள் திடுக்கிடுகிறாள்.
"முனிவர் - உங்கள் குரு, அப்படியா பயிற்சி கொடுக்கிறார்?"
"ஆமாம்! யந்திரம் - காற்றசையும் போது சுழலும். அப்போது அதில் பொருத்தப்பட்ட பறை அதிரும். அந்த ஓசை எங்கிருந்து வருகிறதோ அதை மனதில் கொண்டு எய்வோம். நேற்று, பறவை பறப்பது போல் ஒரு பஞ்சுப் பிரதிமை செய்து மரங்களிடையே வைத்து அசைத்து, எப்படிக் குறிபார்க்க வேண்டும் என்று கற்பித்தார். அம்மா, அஜயன் குறி விழவில்லை. நான் தான் வீழ்த்தினேன்!" என்று விஜயன் பெருமைப் பூரிக்க பேசுகிறான்.
"குழந்தைகளே, நீங்கள் வில் வித்தை பயிலுங்கள். ஆனால் இந்த மாதிரியான விளையாட்டுக்கள் வேண்டாம்! ஓசை வந்த பக்கம் எய்வது தவறான செயல்... அத்துடன் இந்த வில்வித்தை யாரையும் அழிப்பதற்குப் பயன்படாது. வெறும் தற்காப்பு வித்தை தான். இயற்கை அம்மை இதற்காக நம்மைப் படைக்கவில்லை. இயற்கையில் எந்தப் படைப்பையும் அழிக்க யாருக்கும் உரிமை இல்லை. ஆனால் குருசாமி இப்படிச் சொல்லித்தானே உங்களுக்கு வித்தை பயிற்றுகிறார்?..."
"ஆமாம், அவர் சொல்லாமல் நாங்கள் ஆயுதங்களைத் தொடவே கூடாது என்று சொல்லி இருக்கிறார்..."
"அதை நீங்கள் உறுதியாகக் காக்க வேண்டும். இந்த உறுதியினால், தீங்கு விளைவிக்க வரும் எதிரியோ, பகைவரோ கூட அம்பைக் கீழே போட்டுவிடுவார். போரும் அழிவும், இருவரும் மோதுவதாலேயே நேரிடுகிறது. நெருப்புப் பிடிக்கும் போது, காற்று வீசினால் அது பல இடங்களுக்குப் பரவும். அழிவு நிகழக் காரணமாக இருக்கலாகாது... நந்தசுவாமி மதயானையைக் கூட சாந்தமாக்கும் தன்மை படைத்திருக்கிறார். நாம் காட்டில் எப்படி வாழ்கிறோம். அந்த விலங்குகளும் நாமும் ஒருவருக்கொருவர் அச்சமில்லாமல் இருப்பதால் தான்..." தன் இதயத்தையே வெளிக்காட்டும்படி அவள் மைந்தருக்கு உரைக்கிறாள்.
"இப்போது சொல்லுங்கள்... குருசுவாமி தாமே உங்களுக்கு இந்த விளையாட்டு வித்தை பயிற்றுகிறாரா?"
விஜயனின் பார்வை தாழ்ந்து நோக்குகிறது.
"வனதேவி, இந்த மாதிரி ஓசையைக் கேட்டே அம்பெய்த முடியும் என்று அஜயன் சொன்னதால் குருசுவாமி இதைச் செய்து பார்க்கலாம் என்றார். அந்தப் பொறி போல் செய்யவும் விஜயனுக்கும் அவனுக்கும் அவர் கற்பித்தார். அந்தப் பொறி மெல்லிய நாராலான பொம்மை. அதை இன்று சரியாக அவர் அமைத்திருப்பார். அதுதான் ஒரே ஆவல்..." நீலன் உடல் பரபரக்க, கண்கள் இடுங்க மகிழ்ச்சியுடன் புதுமையை அநுபவிக்கிறான்.
"நாங்கள் மிதுனபுரிச் சந்தைக்குப் போனபோது அங்கு இப்படி ஒன்று வேடிக்கையாக வைத்திருந்தார்கள். அம்மா, அப்போது அங்கு தமனகன் என்ற காவலாளி இதைப் பற்றிச் சொன்னான். அங்கே படை வீரர்களுக்கு அதை நிறுத்தி வைத்து, வில்-அம்புப் பயிற்சி சொல்வார்களாம். அப்போது, இந்த மாதிரி ஒரு பொறி பற்றியும் சொன்னான். முனிவரிடம் விஜயன் கேட்டான். அவர் அதைச் செய்து, வித்தையும் கற்கலாம், வேம்பு வனத்துக்கு வாருங்கள் என்றார்..."
பிள்ளைகள் விடை பெற்றுச் செல்கின்றனர்.
பூமகள் கவலையிலாழ்கிறாள்.
பிள்ளைகள் குமரப்பருவம் உடையும் வேகத்தில் இருக்கிறார்கள்.
"கண்ணம்மா, க்ஷத்திரிய வித்து!" என்று பெரியன்னை பேச்சுக்குப் பேச்சு நினைவூட்டுவது செவியில் ஒலிக்கிறது.
வானவன் வெண் கொற்றக் குடை பிடித்து உச்சிக்கு ஏறும் நேரம். பூமகள் பிள்ளைகள் உணட பின் கலங்களைச் சுத்தம் செய்யவும் மனமில்லாமல் நிற்கிறாள்.
லூ, உருமு, சோமா ஆகியோர் சில கொட்டைகளைக் கூடைகளில் சேகரித்துக் கொண்டு வருகிறார்கள். கிடுவிக் கிழவி மண்ணில் மடிந்து விட்டாள். உருமுவுக்கு இப்போது ஐந்து பிள்ளைகள் இருக்கிறார்கள். லூவின் பிள்ளைக்கே இரண்டு சந்ததியை அவள் தந்திருக்கிறாள். சோமாவின் மகள் சென்ற திங்களில் குமரியானாள். இவர்கள் கொட்டைகளைக் கொண்டு வந்து உடைப்பார்கள். அவற்றில் விதைப் பருப்பு உண்ணவும் நன்றாக இருக்கும். மீதமானவற்றை மிதுனபுரி வணிகரிடம் கொடுத்து, மாற்றாக வேண்டும் பொருட்களைப் பெற்று வருகிறார்கள். தோல், மிக முக்கியமான வாணிபப் பொருள்.
"பெரியம்மா, இன்றைக்குப் பெரிய மீன் கொண்டு வந்தாங்க, ரெய்கி புட்டு அவிச்சி எடுத்து வரும். பிள்ளைகள் அந்திக்கு வரும்போது, இன்றைக்கு விருந்தாடலாம். நல்ல நிலா இருக்கும்..."
"அடியே, நல்ல நிலான்னு சொல்லி ஊரியும், பாமுவும் மிதுனபுரிக் கரும்புச் சரக்கைக் குடத்தில் கொண்டு வந்து வார்க்கக்கூடாது! அதெல்லாம் உங்கள் குடிகளில் வைத்துக் கொள்ளுங்கள். பிள்ளைகள் மனம், அறிவு திரிய நீங்கள் எல்லாவற்றையும் ஊற்றிவிடுவீர்கள்! ஏதோ பதினாரு ஆனால் அவர்களே தீர்மானிப்பார்கள். சத்தியரோ, நந்தமுனியோ அதெல்லாம் பாவிப்பதில்லை. அறிவு மயங்கக்கூடாது!"
கொட்டை உடைக்கும் ஓசையும், அவர்கள் கைகளில் போட்டிருக்கும் மணிகள் சேர்த்த வளையல்கள் செய்யும் ஓசையும் மட்டுமே கேட்கின்றன.
காத்யாயனிப் பசு, மூன்று ஈற்றுகள் பெற்றெடுத்து, பாட்டியாகிவிட்டது. அதைப் பிற பசுக்களுடன் ஓட்டி விட்ட போது, அது குட்டையில் கால் தடுக்கிச் சரிந்துவிட்டது. அதனால் அதற்கு ஒரு கால் சிறிது ஊனமாகி இருக்கிறது. அதற்கு மூலிகை வைத்தியம் செய்து, புல்லும் நீரும் வைக்கிறாள். மர நிழலில் அது படுத்து அசை போடுகிறது.
சரசரவென்று குளம்படிகளின் ஓசை கேட்கிறது. பொதி சுமந்த கழுதைகள் பாதையில் தெரிகின்றன. வேதபுரிச் சாலியர், பட்டுக்கூடு சேகரித்துக் கொண்டு செல்கிறார்கள் போலும்?... வேதபுரிச் சாலியர்... அறிமுகமான சச்சலர்...
"வனதேவிக்கு மங்களம்! பெரியம்மா இருக்கிறாரா?..." 'வேதபுரி' என்று சொல்லைக் கேட்டதும் உடல் புல்லரிக்கிறது. முன்பெல்லாம் பருவந்தோறும் வருவார்கள். இப்போதெல்லாம் பட்டுக்கூடுகளை, இந்த வேடர்களே சேகரித்து மிதுனபுரிச் சந்தைக்குக் கொண்டு செல்கிறார்கள்.
"வேதபுரியில் மன்னர் நலமா?"
"ஆம், வனதேவி, மன்னர் நலம்..."
தாடி, மீசை, முடி நரைத்த கச்சலர், அவள் இங்கு வந்த நாட்களாக வருபவர் தாம். பெரியன்னை அவரை ஓரிரு நாட்கள் தங்க வைத்து விடுவார். மற்றவர் கூடுகள் சேகரித்து வருவார்கள். இவர் வரும்போது, தானிய மூட்டை வரும்; ஆடைகளும் கூட வரும். சில சமயங்களில் தடாகக் கரையில் அமர்ந்து பெரியன்னை பேசுவதைக் கண்டிருக்கிறாள். தன் பிறப்பைப் பற்றியே ஏதோ சில உண்மைகள் பட்டு இழைகள் போல் சங்கேதங்களால் மறைக்கப் பட்டிருப்பதாக எண்ணுவாள். இப்போது அவள் நிறைவாக, அமைதியாக இருப்பதால் அந்த சந்தேகங்கள் எவையும் அவளுடைய ஆர்வத்தைத் தூண்டுபவையாக இல்லை.
"பெரியம்மை, கச்சலன் வந்திருக்கிறேன்...!"
மரத்தடியில் புற்றரையில் இருக்கும் பெரியன்னை பார்வையை நிமிர்த்திப் பார்க்கிறாள்.
"யாரோ, ராசா வூட்டு ஆள் போல்" என்று லூ சாடை காட்டுகிறாள். வாய்கள் மூட, நா உள்ளே அமைதி காக்க, கொட்டை உடைபடும் மெல்லோசை மட்டும் கேட்கிறது.
"உருமு, வந்தவருக்குத் தண்ணீர் கொண்டு வந்து கொடு..."
"இல்லை தாயே, தடாகக் கரையில் எல்லாம் செய்து கொண்டு இளைப்பாறி வருகிறோம். கொஞ்சம் தானியம் கொண்டு வந்திருக்கிறோம். இங்கே கொண்டு வருவார்கள்..."
அவர் சொல்லி முடிக்கு முன், தானிய மூட்டைகளைச் சுமந்து இரண்டு ஆட்கள் அங்கே வந்து, நீள் சதுரக் கொட்டடியில் இறக்குகிறார்கள்.
"அது சரி, நான் சொன்ன விசயம்...?" பெரியன்னையின் குரல் இறங்குகிறது.
"சொன்னேன். குரு சதானந்தரைப் பார்த்தேன். அவர்கள் இப்போது அதிகமாகப் பரபரப்பாக இருக்கிறார்கள். அயோத்தியில் பெரிய யாகம் செய்ய ஏற்பாடெல்லாம் நடக்கிறது. ராசகுமாரி ஊர்மிளா, மாண்டவி எல்லாரும் வந்து போனார்கள். அரசகுமாரர்களுக்கு எல்லாம் பயிற்சி குருகுல வாசம் முடியப் போகிறதாம். கொண்டாடப் போகிறார்கள்."
அவள் ஆவல் ஊறிய விதையில் எழும்பும் முளைபோல் நிமிர்ந்து கொள்கிறது...
குருகுல வாசம்... எல்லோருக்கும் பிள்ளைகள்... "என் பிள்ளைகளும் குருகுல வாசம் செய்கிறார்கள். நாடு பிடிப்பதற்கல்ல..." ஓரக்கண்ணால் அவர்கள் பக்கம் பார்த்தவாறு, பூமகள், வேடுவப் பெண்களுடன் கொட்டை உடைக்கும் பணியில் ஈடுபடுகிறாள்.
"இந்தப் பருப்பை அரைத்துக் கூழாக்கி, உண்டால் பசி தெரியுதே இல்ல. இந்தத் தடவை, அருவிக்கு பின்ன தொலை தூரம் போயிப் பார்த்தால் குரங்கு கடிச்சிப் போட்ட கொட்டை நிறையக் கிடந்தது. எல்லாம் வாரிக்கட்டிட்டு வந்திருக்காளுவ. அதான் இங்க எடுத்திட்டு வந்தோம். வனதேவிக்கு, காட்டுக்கறி, பன்னி, மானு, எதுவும்தான் ஆகாது. கொண்டைக்கோழி, மயில், குயில் இதெல்லாம் இப்பப் பிள்ளைகள் பாத்து ஆடுறாங்க, பாடுறாங்க, ரசிக்கிறாங்க. முன்ன திருவி எறிந்திட்டு, சுட்டுத் தின்னுவம். ஒருக்க, மிதுனபுரி ஆளு, உப்புக் கொண்டாந்தான். அதைப் போட்டு சாப்பிட்டா ருசின்னு சொல்றாங்க. அதென்ன ருசி? கடல்ல மீனு ருசியாம். அதெல்லாம் நமுக்கு எதுக்கு? இங்கே தலைமுறை தலைமுறையா பசி போக சாப்புடல? உசிர் வாழல? புள்ள பெறல? கிழங்கு புளிக்க வச்சிக் குடிக்கிறதுதா. ஆனா, இப்பதா புதுசு புதுசா, ருசி..."
லூவுக்கு நா எதையேனும் பேசித் தீர்க்க வேண்டும். சில சமயங்களில் அது இதமாக இருக்காது. இப்போது இந்தப் பேச்சு, மனதை இலேசாகச் செய்கிறது...
கச்சலன் எழுந்து செல்லுமுன் அவளைப் பார்க்க வருகிறான்.
"வனதேவிக்கு மங்களம். பிள்ளைகள் எங்கே தேவி?"
அவள் இமைகளை உயர்த்தாமலே, "குருகுல வாசம் செய்பவர்கள் இங்கே இருப்பார்களா?" என்று வினவுகிறாள்.
"...ஓ... ஆம்." கச்சலன் மன்னிப்புக் கேட்கிறான்.
"மன்னிப்பு எதற்கு? அரசகுமாரர்களுக்கும் அந்தணர்குலக் கொழுந்துகளுக்கும் மட்டும் குருகுல வாசம் என்பது சட்டமில்லையே? இந்த வன சமூகத்தில் எல்லாரும் சமம், சொல்லப் போனால் இந்த வன சமூகம் தான், அரசகுலங்களையும் அந்தண குலங்களையும் வாழவைத்துக் கொண்டிருக்கிறது. உங்கள் மன்னர், எங்களுக்குப் பிச்சை போடுவது போன்ற இந்தத் தானிய மூட்டைகளை அனுப்புவது எங்கள் தன்மானத்தைக் குத்துவது போல் இருக்கிறது. எனவே, இவற்றை நீங்கள் எடுத்துச் செல்லாலாம் கச்சலரே?"
"அபசாரம், அபசாரம்! வனதேவியின் மனம் வருந்தும்படி, நான் எதுவும் பேசவில்லையே? வனதேவி, நீங்கள் வழங்குகிறீர்கள்; இந்தக் கொடைக்கு நன்றியாகச் சிறு காணிக்கை போல் இவை. வனதேவி இங்கே வந்த பிறகு, இந்த வனமே எப்படி மாறிவிட்டது? எனக்குத் தெரிந்து இந்தப் பன்னிரண்டு ஆண்டுகளில், இங்கே பஞ்சமில்லை; ஆற்று வெள்ளமில்லை; காட்டுத்தீ இல்லை; சூறைக்காற்று இல்லை. அதது, அததன் தருமப்படி இயங்கும் ஒழுங்கில் உலகம் தழைக்கிறது..." அவர் பணிந்து விடை பெறும் வரை அவள் பேசவில்லை; இவர்கள் சென்ற பிறகு, பெரியன்னையின் நா வாளாவிருக்காது. தானே செய்தி வெளிவரும் என்று பூமகள் எதிர்பார்க்கிறாள்.
வேடுவப் பெண்கள் கொட்டைகளை உடைத்துப் பருப்புகளைத் தனியாகக் கொண்டு குடிலுக்குள் வைக்கிறார்கள். பிறகு தோடுகளை ஒரு பக்கம் குவிக்கிறார்கள். பொழுது சாய்கிறது.
பெரியன்னை இப்போதெல்லாம் மிகச் சிறிதளவே உணவு கொள்கிறாள். ஒரே நேரம் தான்.
இருந்த இடத்திலேயே அமர்ந்திருக்கிறாள். நூல் நூற்பதோ, திரிப்பதோ செய்ய இயலவில்லை. ஆனால் தடாகக் கரையில் சென்று, நீரை முகர்ந்து ஊற்றிக் கொள்வது மட்டும் குறையவில்லை. முகம் சுருங்கி, உடல் சுருங்கி, குறுகி, முன் முடி வழுக்கையாகி...
இவள் பிறப்பு, வளர்ப்பு எப்படியோ?
நானும் ஒரு பிள்ளையை இக்கானகத்தில் வளர்த்தேன் என்ற பேச்சு வாயில் இருந்து வந்திருக்கிறது. அது குறும்புகள் செய்யாதாம். தாய் சொன்னதைக் கேட்டுக் கொண்டு அமைதியாக இருக்குமாம்.
அந்தப் பிள்ளை எங்கே? அதன் தந்தை யார்?
அடிமைப் பெண்ணுக்குப் பிள்ளையேது, பெண்ணேது? உறவே கிடையாது என்ற சொல் ஒரு நாள் பொதுக்கென்று நழுவி வந்தது.
மன்னர் மரபுகளைக் கடித்துத் துப்பும் வெறுப்பு இவளிடம் வெளிப்படுகிறது. ஆனாலும் இவள் வேதபுரிக்காரி. வேதபுரி அரண்மனையில் சேடி போல் இருந்தவளோ? ஜலஜாவைப் போல் பேரழகியாக இருந்திருப்பாள். யாரோ ஒரு பிரபு இளைஞன் இவளைக் கருவுறச் செய்தானோ? அல்லது...
சுரீரென்று ஓர் உண்மை மின்னல் போல் சுடுகிறது.
இவள் அந்தப்புரக் கிளிகளில் ஒருத்தியோ? முறையற்ற சந்ததி உருவாகிறது என்று வனத்திற்கு அனுப்பி இருப்பார்களோ? அவன் படைவீரர்களில் ஒருவனாகி எந்தப் போரிலேனும் இறந்திருப்பானோ?... ஒருகால்... இவள் அவன் சந்ததியோ?... இவள் அன்னை ஓர் அடிமைப் பெண்ணோ?... மின்னல்களாய் மண்டைக் கனக்கிறது. சத்திய முனிவரின் ஆசிரமத்தில் மகவைப் பெற்று இறந்தாளோ? மன்னர் அரண்மனைக்கு இவளைக் கொண்டு சேர்க்கச் சூழ்ச்சி செய்திருப்பாளோ இந்த அன்னை?
மேக மூட்டங்கள் பளிச் பளிச் சென்று விலகுவன போல் இருக்கிறது.
"பெரியம்மா...!" என்ற குரல் தழுதழுக்கிறது.
"சிறிது கூழருந்துங்கள் தாயே!..."
உட்கார்ந்து அவள் கையைப் பற்றுகையில் பூமகளின் விழிகள் நனைகின்றன.
"யாகம் செய்கிறார்களாம், யாகம்? யாகத்துக்குப் பொருட்கள் சேகரிக்கிறார்களாம்... உன் தந்தை.. தந்தை, ஒரு தடவை இங்கே வந்து இந்த மகளை, இந்தப் பேரப்பிள்ளைகளைக் காண வரவேண்டும் என்று நினைக்கவில்லையே அம்மா? ஏன்? ஏன்? தானியம் அனுப்புகிறான்... யாருக்கு வேண்டும் இந்தத் தானியம், இந்தப் பட்டாடைகள்? கொண்டு உன் பிள்ளைகளை வேதவதியில் கொட்டச் சொல்!..."
"அம்மா...! அம்மா... அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். அவர் என்னை அந்தப் பிஞ்சுப் பருவத்தில் அன்னையைப் போல் மடியில் இருத்தி வளர்த்தவர். தாயும் தந்தையுமாகத் திகழ்ந்தவர்..."
"இருக்கலாமடி, பெண்ணே. உலகு பொறுக்காத ஓர் அநியாயம் உன்னை இங்கே கொண்டு விட்டிருக்கிறதே? அதை ஏற்கிறானா அந்த மன்னன்? இப்போது, அவன் 'அசுவமேதம்' செய்யப் போகிறானாம்! பத்தினி இல்லாத மன்னன், யாகம் செய்கிறானாம்! சத்தியங்களைக் கொன்ற பிறகு யாகம் என்ன யாகம்? எனக்கு நெஞ்சு கொதிக்குதடி, மகளே..." என்று அந்த அன்னை கதறுகிறாள்.
பிள்ளைகள், அந்தி நேரத்துச் சூரியக் கொழுந்துகள் போல் நண்பர் புடைசூழ ஆர்ப்பரித்துக் கொண்டு வருகிறார்கள். கழுத்தில் கட்டிய மணிகள் அசைய கன்று காலிகள் வருகின்றன. மாதுலனின் இனிய குழலிசையின் ஓசை, துயரங்களைத் துடைக்கிறது.
----------
அத்தியாயம் 20
தானிய மணிகளை உரலில் இருந்து எடுத்து, அஜயன் வாரி இறைக்கிறான். குருவிகள், மைனாக்கள், புறாக்கள், என்று பல வண்ணங்களில், செண்டுகட்டினாற் போன்று வந்து குந்தி அந்த மணிகளைக் கொத்துகின்றன. அவை மகிழ்ச்சியில் வெளியிடும் குரலொலியும் ஏதோ ஓர் இனிய ஒலிச் செண்டாக இன்ப மூட்டுகிறது.
"எத்தனை அழகான பறவைகள்! அம்மா! வந்து பாருங்கள்" அஜயன் தாயைக் கூவி அழைக்கும் போது, விஜயன் சிரிக்கிறான்.
"அதோ பார்த்தாயா, மரத்தின் மேல்? ஒரு 'மூப்பு' பார்த்துக் கொண்டு இருக்கிறது. நீ செய்யும் இந்தத் தானம், அந்த 'மூப்பு'க்குக் கொண்டாட்டமாக இருக்கிறது! லபக்கென்று குதித்து ஒரு கொத்தாக வாயில் கவ்விக் கொண்டு செல்ல நல்ல சந்தர்ப்பம் கொடுக்கிறீர் அல்லவா?"
"ஓ... அதெல்லாம் நம் அன்னை இருக்கும் இந்த இடத்தில் நடக்காது. அதனால் தான் நான் தைரியமாக இந்தப் பறவைகளுக்கு விருந்து வைக்கிறேன்."
"அப்படியா? நம் அன்னை ஏதேனும் மந்திர - தந்திரம் வைத்திருக்கிறார்களா? அப்படியெல்லாம் நடக்காது என்று நீர் உறுதி மொழி வைக்க! அன்றொரு நாள் இதே இடத்தில் தான் இங்கு வந்து குந்திய கிளியை, இதே போல் ஒரு 'நாமதாரி' மூப்பு லபக்கென்று விழுங்கிச் சீரணம் செய்தது."
"அப்போது ஒருகால் நம் அன்னை இங்கே இருந்திருக்க மாட்டார். அவர் சுவாசக்காற்று இங்கே கலந்திருக்காது..."
"இந்த விதண்டா வாதம் தேவையில்லை. நீர் என்ன சொன்னாலும் நான் நம்ப மாட்டேன். ஒரு விஷயத்துக்கு இரண்டு பக்கங்கள் உண்டு." அஜயன் மிகவும் கூர்மையாக முகத்தை வைத்துக் கொள்வதைப் பூமகள் குடிலின் வாயில் ஓரம் நின்று பார்க்கிறாள். அவளுக்குச் சிரிப்பு வருகிறது.
மெல்ல நழுவிக் குடிலின் பக்கம் புதிதாகக் கன்று போட்ட பசுவுக்குப் புல் வைக்கிறாள்.
"அதென்ன, இரண்டு பக்கம்?"
"அம்மா இருக்குமிடத்தில் வன் கொலை நடக்காதென்றீர். அதற்கு இன்னொரு பக்கம் உண்டென்றேன்."
"இன்னொரு பக்கம் என்று ஒன்றும் கிடையாது. நடக்காது என்றால் நடக்காது. உண்மை, சத்தியம் என்றால் முழுமை. இதை எடுத்தாலும் குறைத்தாலும் முழுமையே. உண்மை; சத்தியம்; தூய்மை..."
"எனக்குப் புரியவில்லை."
"புரியவில்லை என்றால் இந்த மரமண்டை தமனகனிடம் கேள்! மிதுனபுரியில் இருந்து வந்தானே, காவலன், அவனிடம்..."
"நீர் தாம் இப்போது எனக்கு விளங்கத் தெரியாத மரமண்டை போல் பேசுகிறீர்!..."
இவர்கள் வாக்குவாதம் செய்து கொண்டிருக்கையில் மரத்தில் இருந்து உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த கிழட்டு நாமதாரிப் பூனை, கரகரவென்றிரங்கி நொடிப் பொழுதில் ஒரு புறாவைக் கவ்விச் சென்றுவிட்டது. அது சென்றதைப் பார்த்த பூமகள் திடுக்கிடுகிறாள். விஜயனின் சிரிப்பொலி கேட்கிறது.
"உம் சத்தியத்தைப் பூனை கவ்விக் கொண்டு சென்று விட்டது?"
அஜயன் எத்தகைய சலனமுமின்றி அதே கூர்மையுடன் விடையிறுக்கிறான். "இதுவும் சத்தியமே. அந்தப் பூனை பசியாக இருந்திருக்கும். அது மூப்பினால் ஓடியாடி இரை பிடிக்க முடியாது. பறவைக்குத் தானியம் தூவியதால், பறவைகள் சேர்ந்து வந்தன. அவற்றில் ஒன்று பூனையின் பசிக்குமாகிறது. எனவே, இதுவே சத்தியம் தான்!"
"ஒரு பறவையை யமனிடம் இருந்து உம்மால் காப்பாற்ற முடியவில்லை. இதை ஒத்துக் கொள்ளுங்கள். பின் எதற்காக, நமது குருநாதர் வில் - அம்பு, போர்ப் பயிற்சி என்று கற்பித்திருக்கிறார்? வில் - அம்பு - வித்தை இந்த மாதிரியான நேரங்களில் பயன்படவில்லை என்றால், விரோதிகளிடம் இருந்து எப்படி மக்களைக் காப்பாற்ற முடியும்?"
"விரோதிகள் என்பவர் இருந்தால் தானே, அந்தச் சங்கடம் வரும்?" விஜயன் கேலியாகச் சிரிக்கிறான்.
"இது மிக நல்ல யோசனைதான். அப்படியானால் குருநாதர், நமக்கு 'மந்திர அஸ்திரம்' என்ற வித்தையையும் கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லையே?"
"தெரிந்திருக்க வேண்டும். ஆனால் பயன்படுத்த வேண்டியதில்லை; பறவைகளும், விலங்குகளும் நமக்குப் பகைவர்கள் இல்லை. நம்மைப் போன்று அறிவு பெற்ற மனிதர், தங்கள், சினம், பேராசை ஆகிய தீக்குணங்கள் மேலிட, மற்றவரை அழிக்க அத்தகைய வித்தையைப் பயன்படுத்தி நிரபராதிகளை அழிக்க முன் வரும் போது நாம் அவற்றைப் பயன்படுத்தி, சத்தியத்தைக் காப்பாற்ற வேண்டும். அதுவும் நம் குருநாதர், அனுமதிக்கும் போதுதான்..."
"சரி, ஒத்துக் கொள்கிறேன் - நமக்குள் இப்போது சண்டை எதற்கு?" என்று விஜயன் இறங்கி வருகையில் பூமகள் குடில் மறைவில் இருந்து வெளிப்பட்டு வருகிறாள்.
"அம்மா, நமக்கு விரோதிகள் இருக்கின்றனரா?"
விஜயனின் வினாவில் ஒரு கணம் அவள் தடுமாறிப் போகிறாள்.
ஆனால் அஜயனே இதற்கு மறுமொழி கூறுகிறான்.
"எல்லோருக்கும் இதம் நினைக்கும் அம்மா இருக்கையில் எங்கிருந்து விரோதிகள் வருவார்கள்?... இல்லையா அம்மா?"
"அக்கரையில் இருக்கும் குருகுலத்து அந்தணப் பிள்ளைகள் சிலர் நாங்கள் விளை நிலங்களில் ஏர் பிடிக்கையில் ஏளனமாகச் சிரித்தார்கள். நாங்கள் அந்தண குலத்துக்கும் க்ஷத்திரிய குலத்துக்கும் பொருந்தாத நீசர்களாம். அப்படி என்றால் என்ன அம்மா?" விஜயனின் இந்த வினாவுக்கும் அவள் மவுனமாக இருக்கிறாள்.
"அம்மா! நாங்கள் எல்லோரும் உணவு சேகரிக்கின்றோம். தாங்கள் அதை எல்லாம் நாம் சுவையாக உண்ணும்படி பக்குவம் செய்து தருகிறீர்கள். வேள்வித் தீயில் இட்டு, அதன் விளைவான மிச்சத்தை உண்பதுதான் அந்தண தருமமாம். நாம் உபநயனம் செய்து வைக்கத் தகுதி இல்லாதவராம்!"
அவள் முகத்தில் சூடேறுகிறது.
"குழந்தைகளே, அவர்கள் சொல்லும் வேள்வி, கொல்லும் செயல். சத்திய முனிவரும், நந்த சுவாமியும் மேற்கொண்டு நம்மையும் ஈடுபடுத்தும் வாழ்க்கையே வேள்விதான். வேள்வி என்பது ஓம குண்டத்தில் போடும் சமித்துகளும் உயிர்ப்பிண்டங்களும் அல்ல. நல்ல உணவைப் பக்குவப்படுத்துவதும் வேள்வித் தீதான். அதை நாம் காத்து வைக்கிறோம். அதே தீ, நமது நல் ஒழுக்கங்களாகிய சமித்துகளால் நம்முள் எப்போதும் அணையாமல் நம்மைப் பாதுகாக்கிறது. அது நம் உணவைச் செரிக்கச் செய்கிறது. நமக்கு ஆற்றலைத் தருகிறது. அது நமக்கு அறிவைத் தருகிறது. அது நமக்கு நல்ல தெளிவைத் தருகிறது; வீரியத்தையும் தருகிறது. அந்த ஒளி என்றும் அணையாமல் இருக்க, மேலும் மேலும் நம்மைப் புதுப்பித்துக் கொள்வோம். மூர்க்கத்தனம், பேராசை, சினம் எல்லாவற்றையும் அத்தீயில் இட்டுப் பொசுக்கிக் கொள்வோம். வேள்வி என்பது வெறும் சடங்குகளில் இல்லை. அன்றாடம் காலை, மாலைகளில், வானத்து தேவனையும், காற்றையும் மண்ணையும் நாம் தொழுதேற்றி நிற்பது, இந்த வேள்விக்கு ஆதாரசுருதிகள். 'காயத்ரி' மந்திரத்தை எவரும் உச்சரித்து அறிவொளியும் வீரியமும் நல்கும் தேவனை வழிபடலாம். நம் சித்தத்தைத் தூய்மையாக்கிக் கொள்ள, முப்புரி நூல் அடையாளம் எதற்கு? நம்முள் இச்சக்திகளை எழுந்தருளச் செய்து ஆற்றலைப் பெற அடையாளம் எதற்கு?..."
அன்னையின் குரலில் அவர்கள் கட்டுண்டவர்களாய் இருக்கிறார்கள். கச்சலன் வந்து சென்று, இரண்டு பருவங்கள் கடந்து விட்டன. மாரிக் காலம் முடிந்து, பனிமலர்கள் பூக்கும் பருவம். ஆனால் இந்தச் சூழலில், எது இளவேனில், எது முதுவேனில் எதுவும் தெரிவதில்லை. முன்பு, பிள்ளைகள் சுவைத்துத் துப்பிய மாங்கொட்டைகளில் இரண்டு இந்நாள் இளமரங்களாகப் பூரித்து, பூக்குலைகளுடன் பொலிகின்றன.
பிள்ளைகள் இருவரும், கூரைக்குப் புல் சேகரிக்கக் கிளம்புகின்றனர். பெரியன்னை வருகிறார்.
"தனியாக எங்கே செல்கிறீர்கள் குழந்தைகளே?... நீலன், கேசு, மாதுலன் யாரையும் காணவில்லை?"
"அவர்கள் தேனெடுக்கப் போயிருக்கிறார்கள் பெரியம்மா..."
"மாதுலனுமா?" என்று விழியைச் சரித்துக் கொண்டு பார்க்கிறார். அவள் உடல் அந்த வெயிலிலும் குளிரில் இருப்பது போல் நடுங்குவது தெரிகிறது.
"ஏன் இப்படி நடுங்குகிறீர்கள், தாயே! அம்மம்மா... இப்போது, குளத்தில் நீராடினீர்களா?"
"நான் தனியாக இல்லையடி பெண்ணே, புல்லி இருந்தாள். உடலெல்லாம் புழுதியாக இருந்தது. அழுக்குப் போக நீராடினேன். நீர் பட்டதும் இதமாக இருந்தது..."
பூமகள் விரைந்து உள்ளே சென்று, உலர்ந்ததோர் ஆடையைக் கொண்டு வருகிறாள். அவளை மெல்ல அழைத்துச் சென்று, ஆடையை மாற்றச் சொல்கிறாள். பிறகு ஈர ஆடையைப் பிழிந்து, ஓரத்து மரக் கிளையில் போடுகிறாள்.
"கண்ணம்மா, பிள்ளைகளை எங்கும் போகச் சொல்லாதே! நம் கண்முன்னே இருக்கட்டும்..."
"நீங்கள் அஞ்ச வேண்டாம் பெரியம்மா. அவர்கள் குழந்தைகள் இல்லை. யாரும் தூக்கிச் செல்ல. அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளும் போது நான் ஊமையாகிறேன்..."
முதியவர் நிமிர்ந்து பார்க்கின்றார். கனிந்த பழத்தின் விதைகள் போல் முதிர்ந்த விழிகள் ஒளிருகின்றன. "என்ன பேசிக் கொள்கிறார்கள்?"
"அந்தண குலம், க்ஷத்திரிய குலம் என்பதெல்லாம் எப்படி என்று பேசிக் கொண்டார்கள். சத்திய முனிவருக்கும் நந்த சுவாமிக்கும் உபநயனம் செய்து வைக்கத் தகுதி இல்லை என்று அக்கரை குருகுலக் கொழுந்துகள் சொன்னார்களாம். என்னிடம் கேட்டார்கள்."
"ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனையே கடிக்கச் சொல்லி வைத்தார்களா?..."
தாயின் இழிந்து தொங்கும் செவிகளைப் பார்த்த வண்ணம் நிற்கிறாள். கன்னங்கள் வற்றி... சப்பிய மாங்கொட்டையாய்த் தலையும், அகன்ற நெற்றியும்... எந்த இரகசியத்தைக் கட்டிக் காக்கின்றன?
"அடி, கண்ணம்மா, புல்லின் ஆண், பெரிய பன்றி அடித்துக் கட்டிக் கொண்டு போகிறான். வலையில் விழுந்தது என்றான்... அவன் சொன்ன சேதி கேட்டதிலிருந்து எனக்கு வெலவெலத்து வருகிறது. கச்சலன் வந்த போது அரசல் பொரசலாகக் கேள்விப்பட்டது, நிசந்தான். யாகம் செய்கிறார்களாம், யாகம். மந்திரம் சொல்லி நீர் தெளித்துக் குதிரையை விரட்டியாயிற்றாம். அந்தக் குதிரை அடி வைத்த மண்ணெல்லாம் அவர்களுக்குச் சொந்தம். மிதுனபுரிப் பக்கம் வந்திருக்கிறதாம். அவர்கள் கோட்டைக் கதவுகளை மூடி விரட்டி விட்டார்களாம். என்ன அநியாயம் பாரடி?" அவள் எதுவும் பேசவில்லை.
"இந்தப் பிள்ளைகளும் மற்ற பிள்ளைகளுடன் தேனெடுக்கப் போகிறோம் என்று நின்றார்கள். உடம்பெல்லாம் பச்சிலையைப் பூசிக் கொண்டு தேனெடுக்கப் போவது விளையாட்டாக இருக்கிறது... எனக்கென்னமோ இன்று அனுப்ப வேண்டாம் என்று தோன்றிற்று. அடுத்த முறை போகலாம் என்றேன்..." என்று காரணம் புரியாமல் மழுப்புகிறாள்.
இவளுடைய அடிமனதில் கச்சலர் கூறிய 'யாகம்' மனதில் படிந்து இருக்கிறது. இப்போது கேள்விப்பட்டிருக்கும் செய்தி...?
யாகக் குதிரையுடன் ஒரு படையும் வரும்...
"அவன் வேறு என்னவெல்லாமோ உளறுகிறான். யாகம் செய்யும் ராசாவுக்கு ராணி இல்லையாம். ராணியைப் போல் தங்கத்தால் ஒரு பிரதிமை செய்து வைத்திருக்கிறார்களாம். பெரிய பெரிய ரிசி முனிவர்கள், ராசாக்கள், எல்லாரும் கூடிச் செய்யும் யாகமாம். ஒரு வருசம் ஆகுமாம்..." முதியவள் முணுமுணுத்துவிட்டு அவளைப் பார்க்கத் தலை நிமிருகிறாள். "என்னது? தாயே? என் தந்தைக்குப் பட்டத்தரசி இருக்கிறார்களே? ஊர்மிளியின் தாயார்? அவர் எதற்குப் பொற் பிரதிமை செய்து வைக்க வேண்டும்?..."
அன்னை பேசவில்லை. தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு புற்றரைக்கு நகர்ந்து போகிறாள்.
மாதுலன் குழலூதிக் கொண்டு வருகிறான். அஜயன், விஜயன், நீலன், காந்தன் எல்லோரும் வருகிறார்கள். அரிந்த புல் கட்டைக் கூரை பின்னுவதற்கு வசதியான இடத்தில் போடுகிறார்கள்.
"நாம் நீராடி வருவோம்... அம்மா, இன்றைக்கு நாங்கள் எல்லோரும் இங்கு உணவு கொள்ளவில்லை. சாந்தன் வீட்டுக்குப் போகிறோம்..." உடலைத் தட்டிக் கொண்டு ஆடிப்பாடிக் கொண்டு குளக்கரைக்குச் செல்கிறார்கள்.
பூமகளுக்கு ஒன்றுமே தோன்றவில்லை. மலைகள் கரைவது போலும், ஆறுகள் பொங்குவது போலும் கடல் ஊரை அழிப்பது போலும் மனசுக்குள் விவரிக்க இயலாத அச்சம் கிளர்ந்து அவளை ஆட்கொள்ளுகிறது.
"கண்ணம்மா? பிள்ளைகள் எங்கே போகிறார்கள்?"
"சாந்தன் கூட்டிப் போகிறான். யாவாலி ஆசிரமத்துப் பக்கம் போகிறார்கள். மானோ, மீனோ எதுவோ சமைத்து இருப்பார்கள். சத்தியரும், நந்த முனியும் அங்கே தானே இருப்பார்கள்? அவர்களுக்குத் தெரியாமல் இருக்குமா?"
"... அடியே கண்ணம்மா, உனக்கு, அரண்மனையில், இளவரசுப் பட்டம் கட்டி நாடாள வேண்டிய பிள்ளைகளை இங்கே வேடக் கூட்டத்துடன் வைத்திருக்கிறோம் என்ற மன வருத்தம் இருக்கிறதா? சொல்!"
இறுகிப் போன உணர்வுகளைப் பெரியம்மா தூண்டில் கொக்கிப் போட்டு நெம்புவது போல் வேதனை தோன்றுகிறது.
ஒருகால் மந்திரக் குதிரை இங்கு வந்துவிட்டால்? வராது என்று என்ன நிச்சயம்? இந்தப் பிள்ளைகளுக்குத் தந்தையைப் பற்றி விவரங்களைக் கூறாமல் எத்தனை நாட்கள் இரகசியமாக வைத்திருக்க முடியும்?...
தாய்-தந்தை இவளை மண்ணில் விட்டார்கள்; வளர்த்தவர், உனக்குச் சகலமும் நாயகனே என்று தாரை வார்த்துக் கொடுத்தார். அவரோ உன் பந்தம் வேண்டாம் என்று வனத்துக்கனுப்பிக் கை கழுவிக் கொண்டார்.
இவள் தன் வயிற்றில் பேணி வளர்த்தாலும், குமரப் பருவத்து எழுச்சியில், அரும்பி மலருவது, அந்த வித்தின் 'பௌருசம்' அல்லவோ? குதிரையின் வாலைப் பற்றிக் கொண்டு அடி பணிந்து போய் விடுவார்களோ? உடல் நினைக்கவே நடுங்குகிறது.
அந்நாள் கானகத்தில் இவள் நிராதரவாக விடுபட்ட போது இவளை முத்தை ஏந்தும் சிப்பி போல் காத்துக் கொண்டு வந்தாரே, அந்த நந்த முனி என்ன சொல்வார்!
எது நீதி? எது அநீதி?
அவள் முதியவளுக்கு இலைக் கிண்ணத்தில் கூழ் கொண்டு வந்து வைக்கிறாள். கிழங்குக் கூழ், ஒரு துண்டு இனிப்புக் கட்டியும் வைத்துவிட்டு,
"அம்மா, நான் இப்போது, சத்தியமுனிவரையும் நந்த சுவாமியையும் பார்த்து விட்டு வருகிறேன். போகும் போது புல்லியோ, கும்பியோ தென்பட்டால் இங்கே வந்து இருக்கச் சொல்கிறேன்... வரட்டுமா?" என்று நிற்கிறாள்.
அப்போது, கூட்டமாகத் தேனெடுக்கச் சென்ற பிள்ளைகள் வரும் கலகலப்புக் கேட்கிறது. மரங்களுக்கும் புதர்களுக்கும் இடையில் எங்கேனும் உறங்கிவிட்டு மறுநாள் பகலிலோ, மாலையிலோ தானே திரும்புவார்கள்?...
அவர்களை எதிர் கொள்ள பூமகள் விரைகிறாள்.
அவர்கள் மூங்கில் குழாய்களில் தேன் கொண்டு வரவில்லை. வெற்றுக் குழாய் கயிறு என்று சென்ற கோலத்திலேயே காட்சியளிக்கிறார்கள்.
"வனதேவி... நாங்கள் ஓர் அதிசயம் பார்த்தோம்..."
மீசை அரும்பிவிட்ட பூவன், ஐம்பின்னல் போட்டிருக்கும் சிறுபிள்ளை, ரெங்கியின் மகளின் மகள், எல்லோரும் ஒரே குரலில், "குதிரை வந்திருக்குது... குதிரை..!" என்று ஆர்ப்பரிக்கிறார்கள்.
இந்த வனங்களில் குதிரை என்ற பிராணி கிடையாது. அவர்கள் வரும் போது கூட தேர்களில் காளைகள் கட்டி இழுப்பதாகவே சொல்லியிருக்கிறார்கள்.
"மிதுனபுரியில் இருந்து வந்ததா?"
"இல்லை வனதேவி! இது வெள்ளைக்குதிரை. பசு மாட்டை, காளையை விடப் பெரிசு. குச்சமாக... பெரிய வால்..." என்று இரண்டு கைகளை நீட்டி, நிமிர்த்திச் சைகையாகவும் சொல்கிறார்கள். கழுத்தில் மணியாரம் போட்டிருக்கிறதாம். ஒரு பட்டுப் போர்வை போர்த்து, கால்களில் பொன் மின்ன அது நடந்து வருகிறதாம்.
தலையை அப்படியும் இப்படியும் ஆட்டி அது வருவதைச் சோமன் விவரிக்கிறான்.
"எங்கே வந்திருக்கிறது?"
"கிழக்கே... வேம்புவனம் தாண்டி மலை போல் மேடாக இருக்குமே, அங்கே தான் நாங்கள் பாறைத்தேன் எடுக்கப் போனோம். அங்கே ஆற்றுப் பக்கம் புல் தரையில் அது மேய்ந்து கொண்டிருந்தது. நாங்கள் கிட்டச் சென்று தொட்டுப் பார்க்கலாம் என்று போனோமா? அது ஓர் உதை விட்டது... யாரு. இவன் தான்! பின்னே போய்ச் சுகமாக உட்கார்ந்திட்டான்..." என்று பூவனைக் காட்டிச் சோமன் சிரிக்கிறான்...
"இல்லை வனதேவி. அது என்னை விரட்டவில்லை. அங்கே ஒரு குரங்கு வந்தது. அதை விரட்டியது. வனதேவி, அந்தக் குதிரை, ராசா வீட்டுக் குதிரையா?" என்று பூவன் கேட்கிறான். அவள் கலவரமடைகிறாள்.
-----------
அத்தியாயம் 21
பூமகளுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.
"வாருங்கள். நாம் சத்திய முனியிடம் போய்ச் சொல்வோம். அஜயன், விஜயன், நீலன் எல்லோரும் அங்குதான் போயிருக்கிறார்கள்..."
அவர்கள் செல்கிறார்கள். வாழை வனத்தின் குறுக்கே நடந்து செல்கின்றனர். உச்சிக்கு வந்த பகலவன் மேற்கே சாயும் தருணம். கானகத்தின் ஆரவாரங்கள் இனிமையான சில ஓசைகளுள் அடங்கும் நேரம்.
ஆசிரமத்தில் பிள்ளைகள் எல்லோரும் இருக்கிறார்கள். நந்தமுனி மட்டுமே அவர்களுக்கு ஏதோ ஓர் ஆட்டம் பயிற்றுவித்துக் கொண்டிருக்கிறார். மரங்களின் மேலிருந்து பிள்ளைகள் பறவை போலும், விலங்குகள் போலவும் ஓசை எழுப்புகிறார்கள்.
எந்தப் பறவை எந்த மரத்தில் இருந்து ஓசை எழுப்புகிறது என்று கீழிருக்கும் பிள்ளை சொல்ல வேண்டும். அவன் பார்வை மறைக்கப் பட்டிருக்கிறது.
ஒரே காலத்தில், பல்வேறு பறவைக் குரல்கள் ஒலிக்கின்றன.
பையன் இங்கும் அங்கும் ஓடுகிறான். அஜயன் தான்.
இதோ நாகண வாய்ப்புள்... இதோ, நீலகண்டப் பறவை.
இதோ... இதோ இதுதான் செம்போத்து...
"ஹி ஹி... ஹி... ஈ... ஈ..." என்ற ஒலி விசித்திரமாகக் கேட்கிறது.
மகிழமரக் கிளையில் அவள் பார்க்கிறாள். விஜயன்.
"இது ஒன்றும் பறவை இல்லை!"
"பொய்... பறப்பது எதுவும் பறவை தானே?"
"ஒத்துக் கொள்ள முடியாது. ஈ... ஈ... என்ற ஒலி, குதிரைக் கனைப்பு" என்று அஜயன் கண் கட்டை அவிழ்த்துப் போடுகிறான்.
"குதிரை பறக்குமோ?..."
"ஏன் பறக்காது? அந்த அசுவமேதக் குதிரை பறந்துதானே நம் வனத்துக்கு வந்து இறங்கி இருக்கிறது?"
பூமகள் அடுத்த அடியை எடுத்து வைக்காமல் மரத்தோடு சாய்ந்து நிற்கிறாள்.
"குதிரை பறப்பது என்பது புரளி. அப்படியே பறந்தாலும் ஈ... ஈ... என்று கனைக்காது, விர் விர்ரென்று பெரிய சிறகுகளை அடித்துக் கொண்டு நீண்ட ஒலி எழுப்புமாக இருக்கும்!"
"சரி அப்படியே வைத்துக் கொள்வோம். அது எப்படி ஆறு தாண்டி, நமது வனத்துக்குள் வந்தது?"
"நீந்தி வந்திருக்கும்!..."
"அதன் மேலுள்ள பட்டுப் போர்வை, நனையவில்லை, கலையவில்லை, உடம்பு நனைந்திருக்கவில்லை..."
"சூரியனின் ஒளியில் ஈரம் காணாமல் போகும் என்பது கூடவா தெரியாது?"
"அஜயா, விஜயா, அந்தப் பக்கம் இருந்து ஓடத்தில் ஏற்றி, இங்கே கொண்டு விட்டிருக்கலாம் இல்லையா?" என்று நீலன் கூறுகிறான்.
"எதற்கு அப்படி விட வேண்டும்? யார் விட்டிருப்பார்கள்?"
"மிதுனபுரிக்கப்பால் ராசா படை வந்திருக்குதாம். நேத்தே எங்க அப்பன் பார்த்துச் சொன்னார். மிதுனபுரி போய், தோல் கொடுத்து விட்டு, பெரிய பானை வாங்கிட்டு வரப் போனார். அப்ப குதிரை, யானை, கொடி, குடை, எல்லாம் பார்த்தாராம். கோட்டைக்கு வெளியே, பெரிய மரத்தடியில் கூரை கட்டி அங்கு ராசா இருந்தாராம்!"
"மிதனபுரிக் கோட்டைக்குள் போக அங்கே இடமே இல்லையாம். 'தோலை எல்லாம் ராசாவின் ஆளுங்களே வாங்கிட்டு, தங்கக்காசு குடுத்தாங்களாம். எங்காயா சண்டை போட்டுது. தோலைக் கொண்டு குடுத்திரே, பானையிலே கூழு பண்ணுவோம், புளிக்க வைப்போம். இந்தக் காசில என்ன பண்ண? வேதவதியில் கொண்டு வீசு'ன்னு கத்தினாங்க..."
"ராசன்னா தங்கக் காசுங்கதா சாப்புடுவாங்களா?"
ஒரு பொடிப்பயல் மென்று 'அம் அம்' என்று உண்பதைப் போல் கேலி செய்கிறான். எல்லோரும் அதையே செய்து சிரிக்கிறார்கள்.
"அப்பாடா..." என்று விஜயன் வயிற்றைத் தடவி ஏப்பம் விடுகிறான்.
அப்போதுதான் அவள் அங்கு இருப்பதைப் பிள்ளைகள் பார்க்கிறார்கள்.
மரங்களில் உள்ள பிள்ளைகள் அவளை வந்து சூழ்கிறார்கள். "அம்மா...! நாங்கள் அந்தக் குதிரையைப் பார்க்கப் போகிறோம்! இதோ இந்த மாயன் பார்த்து விட்டானாம். கதை கதையாகச் சொல்கிறான். வெண்மையாகப் பால் நுரை போல் இருக்கிறதாம். கறுப்பு மூக்காம். பச்சைப் பசேலென்று மொத்தை மொத்தையாகச் சாணி போடுகிறதாம்!" என்று விஜயன் இரு கைகளாலும் அதன் அளவைக் காட்ட கொல்லென்று எல்லோரும் சிரிக்கிறார்கள்.
"எங்கே இருக்கிறதாம், அது?"
"வேம்பு வனத்து அருகில் புல் தரையில் மேய்கிறதாம்..."
"அதன் பின் யாரும் உரியவர்கள் வரவில்லையா?"
"யாரும் இல்லை வனதேவி. அவர்கள் அந்தக் குதிரையை அதன் கால் போன போக்கில் மேய விடுவார்களாம். அது தடம்பதித்த இடமெல்லாம் அரசருக்குச் சொந்தமாம்?"
"அதெப்படி நாம் நடக்கும் இடத்தை அவர்கள் சொந்தமாக்கிக் கொள்ள முடியும்? நாம் இங்கே நடமாடுகிறோம்; உணவு சேகரிக்கிறோம்; படுத்து உறங்குகிறோம். இது வனதேவிக்கு உரிய இடம். அந்த வனதேவிதான் இவர்கள் என்று எங்கள் குடியில் எல்லோரும் சொல்கிறார்கள். நாம் எல்லோரும் வனதேவியின் பிள்ளைகள். அவர்கள் இங்கு வந்தால் நம்மை மகிழ்ச்சியாக இருக்க விடமாட்டார்கள்!"
"அதெப்படி குதிரையை விரட்டிவிட்டு ஒன்றுமறியாத நம் இடத்தை ராசா பறிப்பது?"
"மந்திரம் போட்டிருக்கிறார்கள் சடா முடி முனிவர்கள்... மந்திர சக்தியில் நெருப்பு எரியும்; வெள்ளம் வரும்; காற்று அடிக்கும்."
"...முன்னே சம்பூகன் இறந்தது நினைவிருக்கா?" என்று பூவன் கேட்கிறான்.
சம்பூகன் பெயர் கேட்டதுமே அவள் நடுநடுங்கிப் போகிறாள்.
"அம்மா நாம் எல்லோரும் அங்கே போய்ப் பார்க்கிறோம்! பூவன், காட்டுகிறாயா?" விஜயனுக்குத்தான் துருதுருப்பு.
நந்தமுனி ஒற்றை யாழின் சுருதி இல்லாமலே வருகிறார். அது மவுனமாகத் தொங்குகிறது.
பிள்ளைகள் அவரைச் சூழ்ந்து கொள்கிறார்கள்.
"குருசுவாமி, யாகக்குதிரை வந்திருக்கிறது! நாங்கள் போய்ப் பார்க்க வேண்டும்!"
"பார்க்கலாமே? அதைச் சுற்றி நின்று கொண்டு பாட்டுப் பாடுவோம். அது வந்த வழியே போகிறதா என்று பார்ப்போம்!"
இது நல்ல முடிவாக அவளுக்குத் தோன்றுகிறது...
பிள்ளைகள் கூறிய இடத்தைக் குறிப்பாக நோக்கி அவர்கள் நடக்கிறார்கள். அவர்களுக்கு நன்கு பரிசயமான தாவரங்கள்; பறவைகள்; சிறு விலங்குகள்; நீர் நிலைகள்...
வேம்பு வனத்தில் புதிய சாணம் இருக்கிறது.
"ஓ! இங்குதான் அது வந்திருக்கிறது! இது அதன் சாணம் தான்!" என்று அதன் மேலேறிக் குதிக்கிறான் மாயன்.
"இல்லை... இது போன்ற சாணம் இதுவரையில் இந்தக் காட்டில் நான் பார்த்ததில்லை..." என்று உடன் வந்த இளம் பெண் கும்பி கூறுகிறாள்.
புற்றரை பசுமையாக ஆற்றுக்கரை வரை விரிந்து கிடக்கிறது.
ஆனால் அங்கு எந்தக் குதிரையும் மேயவில்லை. இவர்கள் ஆற்றுக்கரையின் ஓரம் அடர்ந்த கோரைப் புற்கள், புதர்கள் இடையிலெல்லாம் குதிரைக்காகத் தேடுகிறார்கள். அது தென்படவில்லை. காட்டுப் பன்றிகள், எருமைகள், மான்கள் கூடத் தென்படுகின்றன. தேடி வந்த குதிரை இல்லை.
"நான் அந்தக் குதிரையைப் பிடித்து அதன் முதுகில் ஏறிச் சவாரி செய்ய ஆசைப்பட்டேன்..."
"அது பின்னங்காலால் உதைக்க முடியாதபடி நாங்கள் பிடித்துக் கொள்வோம்!"
"இந்தக் காட்டில் எத்தனையோ மிருகங்கள் இருக்கின்றன. குதிரைகள்... அதுவும் வெள்ளைக் குதிரைகள் தென்படவே இல்லையே?..."
"முன்பே வந்து ராசாவின் ஆட்கள் வலை வைத்துப் பிடித்துப் போயிருப்பார்கள்!"
"அந்த வெள்ளைக் குதிரை, சூரிய ராசாவின் தேரில் பூட்டிய குதிரை போல் இருந்தது!"
ஆற்றோரமாக அவர்கள் நடந்து வருகிறார்கள். மாதுலன் குழலிசைக்க, நாதமுனி ஒற்றை நாணை மீட்ட அவர்கள் குதிரையை வரவேற்கச் செல்வது போல் நடப்பதாக அவளுக்குப் படுகிறது.
"எனக்கு அந்தக் குதிரையில் ஏறி இந்தப் பூமண்டலம் முழுதும் ஒரு சுற்று வர வேண்டும் என்று தோன்றுகிறது..." என்று விஜயன் வழியில் பட்ட கருப்பந்தடிகளை உடைத்துக் கொண்டு கூறுகிறான்.
கரும்புத் துண்டுகள் கடிபடுவது போல், குதிரை பற்றிய கற்பனைகளும் சுவைக்கப்படுகின்றன. "ஒரு கால் மாயன் சொன்னாற் போல் அது பறந்து அக்கரை போய்விட்டிருக்கும்!"
"அதெல்லாமில்லை, இவர்கள் அப்படியே தூங்கி, கனவு கண்டிருப்பார்கள். குதிரை துரத்தி வருவதாக நினைத்துத் தேனெடுக்காமல் ஓடி வந்திருப்பார்கள்!"
"இல்லை அஜயா? நாங்கள் இரண்டு கண்களாலும் பார்த்தோம்! அது உதைத்ததில் எனக்குப் பாரும், காயத்தை!"
"ஒரு கால் இங்கே வரவேற்பு இருக்காது என்று ஆற்றின் மேல் பறந்து அது மிதுனபுரிப் பக்கம் போயிருக்கும்!"
"அங்கே தமனகனோ, சரபனோ உள்ளே விடாமல் கோட்டைக் கதவுகளை அடைத்திருப்பார்கள். அது அவ்வளவு உயரக் கோட்டைச் சுவர் மேல் பறக்க முடியுமா?... அப்படி உள்ளே போனால், தேவதைக்குப் பலியாகும்!" நந்தமுனி ஒற்றை நாண் அதிரும்படி மீட்டுகிறார்.
"பிள்ளைகளே, இந்தக் குதிரைப் பேச்சை விட்டு இப்போது எல்லோரும் பாடிக் கொண்டே நம் இருப்பிடம் போகலாம்! இந்தக் காட்டுக்கு எத்தனையோ பேர் நமக்கு நண்பர்களாக வருகிறார்கள். அப்படி அதுவும் வந்து விட்டுப் போகட்டுமே?... பாடுங்கள்..." அவர் ஒற்றை நாணை மீட்டுகிறார்.
"வனதேவி பெற்ற மைந்தர்கள் யாம்...
அவள் மடியில் நாங்கள் வாழ்கின்றோம்"
ஏற்றமும் இறக்கமுமாகக் குரல்கள் ஒலிக்கின்றன.
"தன தானியங்கள் அவள் தருவாள்!
தளரா உழைப்பை யாம் தருவோம்!
அத்திர சாத்திரம் அறிந்தாலும்,
ஆருக்கும் தீம்புகள் செய்யோம் யாம்!
கோத்திர குலங்கள் எமக்கில்லை.
குண தேவி பெற்ற மைந்தர்கள் யாம்..."
மனசுக்கு இதமாக இருக்கிறது. திருப்பித் திருப்பிப் பாடிக் கொண்டே அவர்கள் தங்கள் இருப்பிடத்துக்கு வருகிறார்கள்.
அங்கே இலுப்பை மரத்தின் அடியில்... வெண்மையாக, பசுவோ? காத்யாயனிப் பசுவுக்கு இப்படி வாலில்லை.
அஜயனும் விஜயனும் பிள்ளைகளும் கூச்சல் போட்டு ஆரவாரம் செய்கிறார்கள்...
"அதோ... நம் குடிலுக்குப் பக்கத்தில், குதிரை, நம்மைத் தேடி வந்திருக்கிறது. நாம் அதைத் தேடிப் போயிருக்கிறோம்!"
ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் அச்சம் மறந்து அஜயன் ஓடுகிறான்.
விஜயன் அவனை முந்திக் கொண்டு அதன் முதுகில் கை வைக்கிறான்.
அது உடலை ஒரு குலுக்குக் குலுக்குகிறது. வண்ணப் பட்டுத்துண்டு போர்த்து, தோல் வாரால் பிணித்திருக்கும் முதுகு வானவில்லின் ஏழு நிறங்கள் கொண்டாற் போன்று கண்களைக் கவருவதுடன், 'அருகே வந்து தொடாதீர்கள், நான் எட்டி உதைப்பேன்' என்று அச்சுறுத்துவது போலும் இருக்கிறது.
இவர்கள் பின்னே நகர, பூமகள் எச்சரிக்கை செய்கிறாள்.
"பிள்ளைகளே, நீங்கள் யாரும் அருகிலே போகாதீர்கள். சத்திய முனிவர் யோசனையின்படி நாம் நடப்போம்..."
"குருசாமி மூலிகை தேடி மலைப்பக்கம் போனார். நத்தியின் குழந்தைக்கு இரண்டு கால்களும் பின்னினாற் போல் நிற்க முடியவில்லை. அதற்காக ஒரு மூலிகை கொண்டு வரச் சென்று நான்கு நாட்களாகின்றன. கூடவே சிங்கனும் போயிருக்கிறான்..." என்று அவர் செய்தி தெரிவிக்கிறார்.
இவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, குதிரை பொன்மின்ன, பின் கால்களால் பூமியைச் சீய்க்கிறது.
"குளம்புக்குப் பூண் கட்டியிருக்கிறார்களா?" விஜயன் கேட்கிறான்.
"அறியேன், குழந்தாய்... நீ அருகில் போகாதே!"
"இதை நமக்கே வைத்துக் கொண்டால் என்ன?... இப்போது கூட இதன் முதுகில் நான் தாவி ஏறி அமர்ந்து விடுவேன்..."
அவன் இளமுகத்தில் ஆவல் மின்னுகிறது.
"குழந்தைகளே, இது யாகக் குதிரை. இதை ஏவியவர்கள் எங்கேனும் மறைந்து இருப்பார்கள். அவர்களால் நமக்கு வீணான சங்கடம் உண்டாகும். இதை மெள்ள அப்பால் துரத்தி விடுவோம். நீங்கள்... ஒரு கூடையில் தானியமோ, புல்லோ காட்டுங்கள். அது அந்தப் பக்கம் நகரும்..." என்று அப்போது மெல்ல பெரியன்னை வருகிறாள்.
"நீங்கள் எல்லோரும் எதற்கு இப்படி அதைச் சூழ்ந்து ஆரவாரம் செய்கிறீர்கள்? இருந்து விட்டுப் போகட்டும்! கண்ணம்மா, பொழுது சாய்ந்து அந்தி வேளையாகிறது. அவரவர் வீண் விவாதம் செய்யாமல் உங்கள் கடமைகளைச் செய்யுங்கள். அந்தி வந்தனம் செய்து விட்டு, இருப்பதை உண்டு, உறங்குமுன் உட்கார்ந்து யோசனை செய்யுங்கள்... போங்கள்!"
அவள் குரலுக்கு அனைவரும் கட்டுப்பட்டாலும், அஜயன் மட்டும் அன்னையின் காதோடு, "அதற்கு அடைக்கலம் என்று பெரியன்னை ஏன் சொன்னார்? அதை யார் கொல்ல வந்தார்கள்?" என்று வினவுகிறான்.
"மேதாவி அண்ணா, மிதுனபுரிக்காரியின் கோபத்துக்குத் தப்பி இங்கே வந்திருக்கிறது! புரிகிறதா? இதை எந்த தேசத்து மன்னர் ஏவி விட்டிருந்தாலும், அவர்கள் எவ்வளவு பராக்கிரமசாலிகளானாலும், மிதுனபுரி எப்போதும் தலை வணங்காது. அவர்கள் சுதந்திரமானவர்கள்; நண்பருக்கு நண்பர்கள்!"
விஜயன் இவ்வாறு கூறுவது அவளுக்கு ஆறுதலாக இருக்கிறது.
----------
அத்தியாயம் 22
பூமகள் காலையில் வழக்கம் போல் முற்றம் குடில் சுத்தம் செய்துவிட்டுக் காலை வந்தனம் செய்யச் சென்றிருக்கும் பிள்ளைகளை எண்ணியவாறு, தயிர் கடைந்து கொண்டிருக்கிறாள். மரத்தில் கடைந்த அந்த மத்து, அழகாகக் குழிந்தும் நிமிர்ந்தும் வரைகளை உடையதாகவும், எட்டு மூலைகளை உடையதாகவும் இருக்கிறது. மிதுனபுரிக் கலைஞர்கள், இத்தகைய சாதனங்களை எப்படி உருவாக்குகிறார்கள்? இம்மாதிரியான பொருட்களை நந்தமுனி அவளுக்கு வாங்கி வந்து தருகிறார். அருமை மகளுக்குச் சீதனம்... ஒரு கால்... அவர்... ஒரு காலத்தில் அபசுரம் எழுப்பி இருப்பாரோ? நெஞ்சு உறுத்துகிறது. இல்லை. அபசுரம் இழைத்த நாணை நீக்கி, வேறு நாண் போட்டு எனக்கு, இந்த சுரம் எழுப்ப உயிர்ப்பிச்சை அளித்தவர் குருசுவாமி... இப்படி ஒரு நாள் பேச்சு வாக்கில் வந்தது செய்தி. நேர்ச்சைக் கடனுக்கு, மகனைப் பலி கொடுக்க இருந்த போது சத்தியர் மீட்டு, பாலகனைத் தமக்குரியவனாக்கிக் கொண்டாராம். காலை நிழல் நீண்டு விழுகிறது.
"மகளே! வெண்ணெய் திரண்டு விட்டதே! இன்னமும் என்ன யோசனை?" சத்திய முனிவரும் நந்தசுவாமியும் தான்.
அவள் உடனே எழுந்து கை கழுவிக் கொண்டு அவர்கள் முன் பணிந்து ஆசி கோருகிறாள்.
"எழுந்திரு மகளே, உனக்கு மங்களம் உண்டாகும். இந்த வனம் புனிதமானது..." இருக்கைப் பாய் விரிக்கிறாள். உள்ளே மூதாட்டி இருக்கிறாள்.
"பார்த்தீர்களா? குதிரையை இங்கு அனுப்பி மேலும் பதம் பார்க்கிறார்கள், இது நியாயமா? நீங்கள் தருமம் தெரிந்தவர்கள்... சொல்லுங்கள்?" அவள் முறையிடும் குரல் நைந்து போகிறது.
"வருந்தாதீர்கள் தாயே! எப்படிப் பார்த்தாலும் தருமம் நம் பக்கலில் இருக்கிறது..."
"என்ன தருமமோ? இந்தப் பிள்ளைகள், விவரம் புரியாத முரட்டுத் தனத்துடன் விளையாடப் புறப்பட்டாற் போல் குதிரையுடன் போகிறார்கள். அச்சமாக இருக்கிறது சுவாமி! விஜயன் அந்தக் குதிரை மீது ஏறிக் கொண்டு உலகை வலம் வருகிறேன் என்கிறான். அஜயன் அதை ஒரு தும்பு கொண்டு மரத்தில் கட்டு, யாரும் கொண்டு போகக் கூடாது என்று பாதுகாக்கிறான். நம் பிள்ளைகள் கபடற்றவர்கள். விருப்பம் போல் கானக முழுவதும் திரிவார்கள். மிதுனபுரியோடும் நமக்குப் பகை எதுவும் இல்லை. சம்பூகனுக்குப் பிறகு இத்தனை நாட்களில் நமக்கு அந்த கோத்திரக்காரர்களுடனும் மோதல் இல்லை. இப்போது, இந்தக் குதிரையினால் விபரீதம் வருமோ என்று அஞ்சுகிறேன் சுவாமி!"
"வராது, நம் எண்ணங்களில் களங்கம் இல்லை..."
"வெறும் குதிரை மட்டும் வந்திருக்குமா? பின்னே ஒரு படை வந்திருக்குமே?"
"ஆம் மகளே, கோசல மன்னன் சக்கரவர்த்தியாக வேண்டுமே? படைகள் நாலுபக்கங்களிலும் இருக்கும். குதிரையை ஆறு தாண்டி எவர் அனுப்பி இருப்பார்கள்? ஒன்று மட்டும் நிச்சயம். நம் பிள்ளைகள் என் ஆணையை மீறி வில் அம்பு எடுக்க மாட்டார்கள். ஆனால், மிதுனபுரிக்காரர்கள், இந்தப் பூச்சிக் காட்டு வேடர்களுடன் சேரும்படி, ஏதேனும் நிகழ்ந்தால்... அப்படி நிகழக்கூடாது என்று அஞ்சுகிறேன். ஏனெனில், இவர்களும் நச்சுக்கொட்டை - நரமாமிச பரம்பரையில் வந்தவர்கள். வழி திரும்புவதற்குப் பல ஆண்டுகள் ஆகும். ஆனால், சத்தியத்திலிருந்து அசத்தியத்துக்கு ஒரு நொடியில் சென்று விட முடியும்!... எதற்கும் நீ கவலைப்படாமல், கலக்கம் இல்லாமல் இருப்பாய். நான் அக்கரை சென்று, யாகக் குதிரையுடன் யார் வந்திருக்கிறார்கள், யாகம், யார் எங்கே செய்கிறார்கள் என்பன போன்ற விரிவான தகவல்களைப் பெற்று வருகிறேன்..."
அவர் விடை பெற்றுச் செல்கிறார் என்றாலும் பூமகளுக்கு அமைதி கூடவில்லை.
"கண்ணம்மா."
முதியவளின் குரல் நடுங்குகிறது.
பூமகள் விரைந்து அவள் பக்கம் சென்று அன்புடன் அணைக்கிறாள்.
"உனக்கு ஏனம்மா இத்தனைச் சோதனைகள்? ஆறு தாண்டி அசுவமேதக் குதிரையை அனுப்பலாமா? உன்னிடமிருந்து பிள்ளைகளைக் கவர்ந்து செல்ல இது ஒரு தந்திரமா? குழந்தாய், உன் பிள்ளைகள் இளவரசுப் பட்டம் சூட்டிக் கொண்டு அரசாளும் பேறு பெற வேண்டாமா? தவறை உணர்ந்து உன்னையும் அழைத்துச் செல்வார்களோ?"
பூமகளுக்கு இதயம் வெடித்து விடும் போல் கனக்கிறது.
"தாயே, அப்படியானால் யாகத்துக்குப் பொற் பிரதிமை செய்து வைப்பார்களா?"
தாய் விக்கித்துப் போனாற் போல் அமர்ந்திருக்கிறாள்.
"பொற் பிரதிமையின் கையில் புல்லைக் கொடுத்தால் அது பெற்றுக் கொள்ளுமோ? இவர்களுக்கு உயிரில்லாத பொம்மை போதும்... இப்படி ஓர் அநீதி, பெண்ணுக்கு நடக்குமா? இவன் சக்கரவர்த்தி, குல குருக்கள், அமைச்சர் பிரதானிகள், பெண் மக்கள்... யாருக்குமே இதைக் கேட்க நாவில்லையா? ஒரு தாய் வயிற்றில் அவள் சதையில் ஊறி, அவள் நிணம் குடித்து, உருவானவர்கள் தாமே அத்தனை ஆண்களும்? அவர்கள் வித்தை ஏந்தவும் ஒரு பெண்தானே வேண்டி இருக்கிறது? அப்போது தங்கப் பிரதிமை உயிருடன் வேண்டும்! இதெல்லாம் என்ன யாகம்? உயிரில்லா யாகம்! பசுவை குதிரையைக் கொல்லும் யாகம்! தருமமா இது...?..."
பூமகள் இந்தச் சூனியமான நிலையில் இருந்து விடுபடுபவள் போல், பிள்ளைகளைத் தேடிச் செல்கிறாள். அப்போதுதான் அன்று தானிய அறுவடை நாள் என்று கூறியது நினைவுக்கு வருகிறது. பிள்ளைகள் விளை நிலத்தில் கதிர்கள் கொய்கிறார்கள். அஜயனும் விஜயனும் அந்தக் கூட்டத்தில் தனியாகத் தெரிகிறார்கள். உழைப்பினால் மேனி கறுத்தாலும், கூரிய நாசியும், உயரமும் அவர்கள் வித்தியாசமானவர்கள் என்று தோற்றம் விள்ளுகிறது.
ஆனால் இவர்கள் ஆடிக்கொண்டும் பாடிக் கொண்டும் அறுத்த கதிர்களை ஒரு புறம் அடுக்குகிறார்கள். புல்லியும், கவுந்தியும் பெரியவர்களாக நின்று கதிர்களில் இருந்து சிவந்த மணிகள் போன்ற தானியங்களைத் தட்டுகிறார்கள்.
பிள்ளைகள் கையில் அள்ளி இந்தப் பச்சைத் தானியத்தை வாயில் போட்டு மென்று கொண்டே பால் வழியும் கடைவாய்களுடன் உழைப்பின் பயனை, எடுக்கிறார்கள். மேலே பறவைக் கூட்டம் எனக்கு உனக்கு என்று கூச்சல் போடுகின்றன.
புல்லி ஒரு வைக்கோல் பிரியை ஆட்டி விரட்டுகிறாள்.
"இத இப்ப எல்லாத்தையுமா எடுப்போம்? நீங்க தின்ன மிச்சந்தான். எங்களுக்கு இது குடுக்கலேன்னா, உங்களையே புடிப்போம். ஓடிப் போங்க!" என்று அவற்றுடன் பேசுகிறான்.
"வனதேவி... வாங்க. இன்னைக்கு, இதெல்லாம் கொண்டு போட்டிட்டு, நாளைக்குப் பொங்கல்... எங்க முற்றத்தில், எல்லாரும் சந்தோசமா பூமிக்குப் படைச்சி, விருந்தாடுவோம்..."
பூமகள் சுற்று முற்றும் பார்க்கிறாள்.
"குதிரை எங்கே?... மாடுகள் மேயும் இடங்களில் இருக்குமோ?"
"மாடுகள் இங்கே இல்லை. இருந்தால் எல்லாத் தானியத்தையும் தின்று போடும். அங்கே விரட்டி விட்டிருக்கிறோம். குதிரையை, தோப்புப் பக்கம் கட்டிப் போட்டு, காவல் இருக்கிறாங்க. யாரோ சொன்னார்களாம், ராசா வந்திருக்கிறாரு. புடிச்சிட்டுப் போவாங்கன்னு. நம்ம இடத்துல அது வந்திருக்கு. வுடறதில்லைன்னு சொல்லி, அந்தப் பக்கத்துப் பிள்ளைங்க புடிச்சிக் கட்டிப் போட்டிருக்காங்களாம்..."
"யாரு அப்படிச் செய்தது? வீண் வம்பு? நந்தசுவாமி இல்லையா?"
"அவங்க இருக்காங்க. இந்தப் பூவன், குழலூதும் மாதுலன் எல்லாம் அங்கே தான் இருக்கிறாங்க..."
"அஜயா, விஜயா, எல்லோரும் போய் குதிரையை அவிழ்த்து விடுங்கள். அது எங்கே வேண்டுமானாலும் போகட்டும்! நமக்கெதற்கு?" அஜயனும் விஜயனும் மேனியில் படிந்த கதிர்களை, தொத்தும் வைக்கோல் துகள்களைத் தட்டிக் கொள்கிறார்கள். வாதுமை நிற மேனி கறுத்து மின்னுகிறது. அஜயனுக்கு விஜயன் சிறிது குட்டை. முக வடிவம் ஒரே மாதிரி; அவள் நாயகனை நினைவுபடுத்தும் விழிகள்; முகவாய்; காதுகள்...
நெஞ்சை யாரோ முறுக்கிப் பிழிவது போல் தோன்றுகிறது. ஆனால், பிள்ளைகளே, நீங்கள் உயர்ந்த வாழ்கிறீர்கள்; பிறர் உழைப்பில் ஆட்சி புரியவில்லை!
"அம்மா! நந்த சுவாமியே எங்களை இங்கே அனுப்பி வைத்தார். அரசகுமாரர் யாரோ வந்திருப்பதாகச் செய்தி வந்ததாம். அவர்கள் வந்தால் கட்டிப் போட்ட குதிரையை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று அவர் அங்கேயே காவல் இருக்கிறார். மாதுலன் குழலூத, அது சுகமாகப் பாட்டுக் கேட்டுக் கொண்டு அசை போட்டுக் கொண்டிருந்தது..."
"யாரிடமும் வில் அம்பு இல்லையே?"
"நாங்கள் குருசுவாமி சொல்லாமல் தொடுவோமா?"
அப்போது, சங்கொலி செவிகளில் விழுகிறது; பறையோசை கேட்கிறது. எல்லோரும் நிமிர்ந்து பார்க்கிறார்கள்.
"ராசா... பிள்ளைங்களா! தானியத்தைக் கூடையில் அள்ளுங்க!" எல்லோரும் விரைவாகக் கூடைகளில் அள்ளுகிறார்கள். தானியம் உதிர்க்காத கதிர்களைக் கட்டுகிறார்கள். ஏதோ ஓர் அபாயம் நம் உழைப்புப் பறி போகும் வகையில் வந்து விடுமோ என்று அஞ்சுகிறார்கள்.
பூமகளும், தங்கத் தட்டுகளில், அப்பமும், பாலன்னமும் வேறு பணியாரங்களும் அடுக்கிய காட்சியை நினைக்கிறாள். இப்படி உழைத்து, அந்த விளைவைத் தானே மேல் வருக்கம் ஒரு துன்பமும் அறியாமல் உண்ணுகிறது! தேனீக் கொட்டல்களுக்குத் தப்பித் தேன் சேகரித்தல்; காடு காடாகச் சென்று பட்டுக்கூடு சேகரித்தல்...
இவை எதுவும் அறியாத அறிவிலிகள், அசுவமேதம் செய்கிறார்கள்! இந்த இடத்தில் ஓர் அம்பு விழக்கூடாது. விழுந்தால் வனம் பற்றி எரியும்! முற்றம் முழுதுமாகத் தானியக் கதிர்கள் அடைந்து விடுகின்றன.
அவர்கள் நீராடி வரும் போது கூழ் சித்தமாக்கி, கனிகளுடனும் தேனுடனும் வைக்கிறாள். வேடர்குடியில் இருந்து அவித்த உணவும் வருகிறது. "நந்தசுவாமி, பூவன், மாதுலன் எல்லோருக்கும் யார் உணவு கொடுப்பார்கள்?"
விஜயனின் உச்சி மோர்ந்து நெற்றியில் முத்தம் வைக்கிறாள் அன்னை.
"நந்தசுவாமிக்கு, யாவாலி ஆசிரமத்துப் பெண்களும் ஆண்களும் எல்லாம் கொடுப்பார்கள். கவலைப்படாதீர்கள்!"
"பூமியில் எல்லாத் தானியங்களும் ஒட்ட எடுக்கவில்லை. ஒட்ட எடுத்தால் இரண்டு கூடை இருக்கும். நல்லா தீட்டிப் புடைத்து, இடிச்சி மாவாக்கி, கூழு கிளறிக் கொஞ்சம் வெல்லக்கட்டி கடிச்சிட்டா..." நாக்கை சப்புக் கொட்டுகிறது வருணி.
"ஒரு பானை கூழு பத்தாது!"
"முன்பெல்லாம் இந்தக் கூழே தெரியாது. நான் சின்னப்புள்ளயா இருக்கையில், புகையில் கட்டிப் போட்ட இறைச்சிதா. கடிச்சி இழுத்து தின்னுவம்..."
"வனதேவி, யாகக் குதிரைன்னா என்ன அது? வெள்ளையாக இருந்தா யாகக் குதிரையா?"
"எனக்குத் தெரியாது, புல்லி அக்கா!"
"வனதேவிக்குத் தெரியாதது இருக்குமா? பெரியம்மா, நீங்க சொல்லுங்கள்!"
"அது வர்ற எடமெல்லாம் ராசாக்கு சொந்தம்னு அர்த்தம். முதல்ல நச்சுக்கொட்ட அம்பு தயாரா வச்சிக்குங்க!" என்று பெரியம்மை கடித்துத் துப்பும்போது திக்கென்று பூமகள் குலுங்குகிறாள்.
"அய்யோ, அதெல்லாம் வாணாம்மா! நாம குதிரைய அவுத்துவிட்டாப் புடிச்சிட்டுப் போறாங்க. அது என்னமோ வழி தவறி வந்திட்டது..."
உழைப்பின் அயர்வில் அவர்கள் படுத்தவுடன் உறங்கிப் போகிறார்கள். வேடர்குடிப் பிள்ளைகள் சற்று எட்டி உள்ள தங்கள் இருப்பிடங்களுக்குச் சென்று விட்டனர். புல்லி இங்கே தான் முற்றத்தில் உறங்குகிறாள். பசுக்கள் கொட்டிலுக்குள் திரும்பிப் படுத்து விட்டன. உறங்காத இரண்டே உயிர்கள்... அவளும் அன்னையுமே... அவர்களுக்குள் பேசிக் கொள்ள நிறைய இருக்கின்றன. ஆனால் பேச்சு எழவில்லை.
ஒரு சிறு அகல் விளக்கு குடிலின் மாடத்தில் எரிகிறது. கீழே மூதாட்டி கருணை போல் குந்திக் கொண்டு இருக்கிறார்கள். அருகில் வனதேவி, ஒரு புல் மெத்தை விரிப்பில் படுத்திருக்கிறாள். உறக்கம் பிடிக்கவில்லை. கடந்த காலத்துக் காட்சிகள்... படம் படமாக அவிழ்கின்றன. அவந்திகா, தேர் கிளம்பும் சமயத்தில் பெட்டியைத் தூக்கி வந்ததும், அப்படியே பார்வையில் இருந்து மறைந்ததும்... "அடி, சாமளி, ஏதேனும் நல்ல பண் பாடு என்றால் துக்கம் இசைக்கிறாயே?" என்று கடிந்த காட்சி... "அம்மா, இது, இளையராணி மாதா அனுப்பிய பானம், பருகினால் சுகமாக உறக்கம் வரும்..." பொற் கிண்ணத்தில் வந்த அந்தப் பானம்...
"மகளே, இந்த நேரத்தில் நீ துன்புறலாமா? நீ பட்டதெல்லாம் கனவு என்று மறந்துவிடு! இனி அதெல்லாமில்லை..." என்று இதம் கூறிய ராணி மாதா...
இவர்களெல்லோருக்கும் அவள் நிலைமை தெரியுமா?
அந்தப்புரம் என்ற கட்டை மீறிக் கொண்டு ஒருவரும் வெளியில் வர முடியாதா?... ஆற்றுக்கரை வேடர் குடியிருப்பில் ஒரு நாள் உறங்கினாளே?...
"செண்பக மலர் அலங்காரம் வேண்டாம்! மன்னர் காத்திருப்பார். நேரம் ஆகிறது!..."
துண்டு துண்டாய்க் காட்சிகள்... பேச்சொலிகள்... வழக்கமான பள்ளி எழுப்பும் பாட்டொலிகள்... அரண்மனையின் அலங்காரத்திரைகள், பளபளப்புகள், எல்லாமே ஒன்றுமில்லாத பொய்யாக விளக்கமாகிவிட்டன.
அவளைப் போல் குலம் கோத்திரம் அறியாத பெண்ணுக்கு மகாராணி மரியாதையா?
அடி வயிறோடு பற்றி எரிகிறது.
எழுந்து சென்று, குடிலுக்குள், மண் குடுவையில் இருந்து நீர் சரித்துப் பருகுகிறாள். முற்றத்தில் இருந்து பார்க்கையில் வானில் வாரி இறைத்தாற் போல் தாரகைகள் மின்னுகின்றன. கானகமே அமைதியில் உறங்குகிறது.
மீண்டும் படுத்துப் புரண்டு எப்போது உறக்கம் வந்தது என்று தெரியவில்லை. அமைதியைப் பிளந்து கொண்டு ஓர் அலறல் ஒலி கேட்கிறது. அவள் திடுக்கிட்டுக் குலுங்குகிறாள். குடிலின் பக்கம் ஓர் ஓநாய், வாயில் எதையோ கவ்விக் கொண்டு செல்கிறது. அது மானோ, ஆடோ, பசுவின் பகுதியோ என்று இரத்தம் உறைய நிற்கிறாள். மயில் கூட்டம் கூட்டமாகப் பறந்து ஓலம் இடுகிறது. மயில் அகவும்; அதன் ஓலமா இது? கானகமே குலுங்குவது போல் இந்த ஓலம் நெஞ்சைப் பிளக்கிறது. ஓநாய், மயிலையா கவ்விச் சென்றது? ஓநாய்... சம்பூகன் ஓநாய்க் குட்டிக்குப் பால் கொடுத்து வளர்த்தான். சம்பூகன்... அவளுக்கு அடி வயிற்றில் இருந்து சோகம் கிளர்ந்து வருகிறது. "அம்மா..." என்று துயரம் வெடிக்கக் கதறுகிறாள். ஆனால் என்ன சங்கடம்? குரலே வரவில்லையே?...
ஓ... இதுதான் மரணத்தின் பிடியோ?... என்னை விட்டு விடு... நானே உன் மடியில் அமைதி அடைகிறேன் தாயே...
"கண்ணம்மா... கண்ணம்மா!..."
அன்னையின் கை அவள் முகத்தில் படிகிறது. "மகளே, கெட்ட கனவு கண்டாயா?"
"புரண்டு புரண்டு துடித்தாயே!... நீ எதையோ நினைத்து அச்சம் கொண்டிருக்கிறாய். நந்தசுவாமியும், சத்திய முனிவரும் இருக்கையில் ஒரு துன்பமும் வராது. கிழக்கு வெளுத்து விட்டது. எழுந்திரு குழந்தாய்?..."
அவள் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவிக் கொள்கிறாள். பிள்ளைகள் எழுந்து காலைக்கடன் கழிக்கச் சென்று விட்டனர். புல்லி முற்றம் பெருக்கிச் சுத்தம் செய்கிறாள்.
இவளால் ஓநாய் வாயில் நிணம் கவ்விச் சென்ற காட்சியை மறக்க முடியவில்லை.
"தாயே எனக்கு நந்த முனிவரின் அருகே சென்று ஆசி பெறத் தோன்றுகிறது..."
"போகலாம். புல்லியையோ வருணியையோ அழைத்துச் செல். அவனே வருவான், மகளே என்று அழைத்துக் கொண்டு. நீராடி, கிழக்கே உதித்தவனைத் தொழுது வருமுன் பிள்ளைகள் வந்து விடுவார்கள். வருணியோ, புல்லியோ உணவு பக்குவம் செய்யட்டும். நீ அமைதியாக இரு, குழந்தாய்..."
அவள் எழுந்து நீர்க்கரைக்குச் செல்கிறாள். நீராடி வானவனின் கொடையை எண்ணி நீரை முகர்ந்து ஊற்றும் போது, அவள் முகத்தில் அவன் கதிர்கள் விழுந்து ஆசி கூறுகின்றன. தடாகத்தில் மலர்ந்திருக்கும் மலர்களைப் பறிக்க அவளுக்கு மனமில்லை. "வானவனுக்கு நீங்களே காணிக்கை! மகிழுங்கள்! நான் கொய்ய மாட்டேன்!" என்று உரையாடுவது போல் மனதை இலேசாக்கிக் கொள்கிறாள். புத்துயிர் பெற்று ஈர ஆடையுடன் அவள் திரும்பி வருகையில்... அவர்கள் முற்றத்தில் அந்த யாகக் குதிரை நிற்கிறது. அஜயன், விஜயன், மாதுலன், பூவன், நீலன், எல்லோரும் ஆரவாரம் செய்கின்றனர். குதிரை சதங்கை குலுங்கத் தலை அசைக்கிறது. தும்பு ஒன்றும் இணைத்திருக்கவில்லை.
"அம்மா! பாருங்கள்! குதிரை தானாக இங்கு வந்துவிட்டது! அதிகாலையிலேயே புறப்பட்டு நம் முற்றத்துக்கு வந்திருக்கிறது! மூத்தம்மையே, வந்து பாரும்! குதிரை... சூரியனார் தேர்க் குதிரைகளில் ஒன்று நம் முற்றத்துக்கு இறங்கி வந்திருக்கிறது! நம் விருந்தினர் இன்று இவர். புதிய தானியம் வைப்போமா?"
அஜயன் முதல் நாள் சேகரித்த தானிய மணிகளை ஒரு மூங்கிற்றட்டில் போட்டு வைக்கிறான்.
"உமக்கு முறை தெரியவில்லை! விருந்தினருக்கு, முதலில் கால் கழுவ நீர் தந்து உபசாரம் செய்ய வேண்டாமா?..." என்று விஜயன், நீர் முகர்ந்து வந்து அதன் கால்களில் விடப் போகிறான்.
"குதிரையாரே, குதிரையாரே வாரும்! எங்கள் விருந்தோம்பலை ஏற்று மகிழ வாரும்!"
இவன் பாடும் போது அது கால்களைத் தூக்கி உதறுகிறது.
விஜயன் பின் வாங்குகிறான்.
"அது பொல்லாத குதிரை; உதைத்தால் போய் விழுவாய்! கவனம்!" என்று நீலன் எச்சரிக்கிறான்.
தானியத்தைச் சுவைத்துத் தின்னுகிறது. அங்கேயே அது சாணமும் போடுகிறது.
கலங்கிப் போயிருக்கும் பூமகள், வேறு ஆடை மாற்றிக் கொண்டு குடிலின் பின்புறம் நடந்து செல்கிறாள். நந்தமுனியின் சுருதியோசை கேட்கிறது. அவரைத் தொடர்ந்து தாவரப் பசுமைகளினிடையே, அரண்மனைக் காவலரின் பாகைகள் தெரிகின்றன. வில்லும் அம்பும் தாங்கிய தோள்கள் அவள் குலை நடுங்கச் செய்கின்றன.
பின்னே... ஒரு பாலகன்... அஜயனையும் விஜயனையும் போன்ற வயதினன்... வருகிறான்.
பட்டாடை, முத்துச்சரங்கள் விளங்கும் மேலங்கி; செவிகளில் குண்டலங்கள். கற்றையான முடி பளபளத்துப் பிடரியில் புரள, முத்து மணிகள் தொங்கும் பாகை; அவளுக்கு மயிர்க்கூச்செறிகிறது.
இவன் யார்? ஊர்மியும் அப்போது கருவுற்றிருந்தாள். அவள் மகனோ? அந்தப் பாலகனை ஆரத்தழுவி மகிழும் கிளர்ச்சியில் முன் வருகிறாள்.
"மைந்தா! வாப்பா, நீ எந்த நாட்டைச் சேர்ந்த அரசிளங் குமரன்?" என்று வினவுகிறாள்.
நந்தமுனிக்கு கண்ணீர் வழிகிறது.
பையன் தயங்கி ஒதுங்கி நிற்கிறான்.
"இவளும் உன் அன்னையைப் போல்... வனதேவி அன்னை!... வனதேவி, குதிரையைத் தேடி வந்திருக்கிறார்கள்..."
"அப்படியா? அது இங்கே தான் முற்றத்தில் வந்து நிற்கிறது. உங்கள் குதிரையா? இந்த வில் அம்பெல்லாம் எதற்கு? அது சாதுவாக நிற்கிறது. யாரும் கட்டிப் போடவில்லை. அழைத்துச் செல்லுங்கள்!"
வானவனுக்கு நன்றி செலுத்துபவளாக அரசகுமாரனை அவள் முற்றத்துக்கு அழைத்து வருகிறாள்.
-----------
அத்தியாயம் 23
"கண்ணம்மா!..." என்று குடிலுக்குள் இருந்து நைந்த குரல் வருகிறது. நைந்திருந்தாலும், அதில் ஒரு தீர்மானம் ஒலிப்பதைப் பூமகள் உணருகிறாள். உடனே உள்ளே செல்கிறாள்.
"யாரம்மா?..."
"அ... அவர்கள்... குதிரைக்கு உரியவர்கள்!"
"யார், உன் நாயகனா? அவன் தம்பியா?"
"இருவரும் இல்லை. ஒரு பிள்ளை. நம் அஜயன் விஜயன் போல் ஒரு பிள்ளை..."
"படை வந்திருக்குமே?"
அவள் வாளாவிருக்கிறாள்.
"ஏனம்மா மவுனம் சாதிக்கிறாய்! வந்திருப்பவன் பட்டத்து இளவரசனா? உன் பிள்ளைகளின் உடம்பிலும் க்ஷத்திரிய ரத்தம் தான் ஓடுகிறது. நினைவில் வைத்துக் கொள்!"
"நான் என்ன செய்யட்டும் தாயே? அந்தப் பிள்ளை வில் அம்பு சுமக்கவில்லை. காவலர் மட்டும் இருவர் வந்திருக்கிறார்கள்."
"நீ தலையிடாதே. எப்படியேனும் குதிரையைக் கொண்டு செல்வார்கள். ஒன்றுமே நடவாதது போல் இரு!"
"எப்படி?" என்று பூமகள் சிந்திக்கிறாள். வந்திருப்பவன் ஊர்மிளையின் மகன். அவள் சாயல், அப்படியே இருக்கிறது... ஊர்மி... கவடில்லாமல் இருப்பவள். அவள் பிள்ளை, அவன் வில்லும் அம்பும் இல்லாமல் தான் வந்திருக்கிறான். அவனைக் கூப்பிட்டு உட்கார வைத்து, நம் பிள்ளைகளுடன் ஒரு வாய் கூழோ, எதுவோ கொடுக்காமல் பாரா முகமாக இருக்கலாமா?
"கண்ணம்மா? நீ என்ன நினைக்கிறாய் என்று புரிகிறது. நீ இவர்களை உறவு கண்டு புதுப்பிக்கப் போகிறாயா? அவர்கள் தந்திரமாக உன் பிள்ளைகளை வெல்ல வந்திருக்கிறார்கள். கோத்திரம் தெரியாத பெண்ணின் வயிற்றுப் பிள்ளை பட்டத்து இளவரசனாக முடியாது..."
இந்த முதியவள் எதற்காக இன்னமும் இருக்கிறாளோ என்று கூட பூமகளுக்கு இப்போது தோன்றுகிறது.
"குதிரையை நாங்கள் கட்டிப் போடவில்லை. நீங்கள் அழைத்துச் செல்லலாம்" என்று நந்தமுனி கூறுகிறார்.
காவலர்களில் ஒருவன் குதிரையின் அருகில் சென்று அதன் பின்புறம் தட்ட முற்படுகிறான். மின்னல் வெட்டினாற் போல் இருக்கிறது. அடுத்த கணம் அவன் எங்கோ மரத்தில் சென்று மோதிச் சுருண்டு விழுகிறான். குதிரை ஓர் எழும்பு எழும்பிக் காற்றாய்ப் பறந்து தாவரப் பசுமைகளுக்கு அப்பால் செல்வதும் தெரிகிறது.
பூமகள் கண் கொட்டாமல் நிற்கையில் பிள்ளைகள் எல்லோரும் ஹோவென்று கைகொட்டிச் சிரிக்கின்றனர். அரசகுமாரனுக்கு முகம் கறுத்துச் சிறுக்கிறது. நந்தமுனிதான் அமைதியாக, "குதிரை சென்று விட்டது அரசகுமாரா, கூட்டிச் செல்லுங்கள்!" என்று கூறுகிறார். நீலனும் சாம்பனும் குதிரை உதைவிட்டதைப் போல் செய்து காட்டிச் சிரித்து மகிழ்கின்றனர். அரசகுமாரன், அந்தக் காவலனுடன் திரும்பிச் செல்கிறான்.
பூமகள் பெருமூச்செறிகிறாள்.
"பிள்ளைகளே, விளையாடியது போது! காலைக் கடன்களை முடியுங்கள்" என்று அவர்களைத் தூண்டி விட்ட பின் அவள் தன் பணிகளில் ஈடுபடுகிறாள். வழக்கம் போல் நீராடி, அகழ்ந்தெடுத்த கிழங்குகளைப் பக்குவம் செய்ய, அக்கினியை எழுந்தருளச் செய்ய முனைகிறாள். பிள்ளைகளும் அவளுடன் சேர்ந்து கொள்கிறார்கள். சுற்றியுள்ள மண்ணனைக்குள் தீக்குண்டம். பானை நீர், கிழங்கு, இந்த அக்கினி உயிர்களை வதைக்காது, வாழ வைக்கும்.
"சத்தியத்தின் நித்தியமாக ஒளிர்பவரே! ஒரு குழந்தை தந்தையை அணுகும் எளிமையுடன் அணுகுகிறோம். எங்களுக்கு நயந்து, எந்நாளும் அருள் பாலிப்பீராக! உங்கள் மக்கள் யாம்! எங்களை வாழ வைப்பீர்!"
குண்டத்தில் தீக்கங்குகள் மாணிக்கமாய் மின்னுகின்றன. பானையில் நீர் கொதித்துக் கிழங்குகள் வேகும் போது ஓர் இனிய மனம் கமழ்கிறது.
"இந்த வேள்வி பயனுடையதாகட்டும்!
இந்த வேள்வி அழிவில் இருந்து உயிர்களைக் காக்கட்டும்!
இந்த வேள்வி தீய எண்ணங்களைப் பொசுக்கட்டும்!"
மனசுக்கு இதமாக இருக்கிறது. ஒன்றும் நேரவில்லை. குதிரை தானாக வந்தது; தானாகவே அது இந்த எல்லையை விட்டுப் போய்விட்டது. பிள்ளைகள் காலைப் பசியாறி வழக்கம் போல் நந்தமுனிவருடன் செல்கிறார்கள். பூமகளுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முதியவளை அழைத்துச் சென்று நீராட்டுகிறாள்.
"பெரியம்மா, அந்த அரசகுமாரனின் பெயர் கூடக் கேட்கவில்லை. ஆனால் அவன் ஊர்மிளையின் மகன் என்பதில் ஐயமேயில்லை. அந்தக் காதோரச் செம்மை, மோவாய், அகன்ற துருதுருத்த விழிகள் எல்லாம் அப்படியே இருக்கின்றன..."
"நீ வந்தவருக்கு விருந்து படைக்க நினைக்கிறாய், என் கண்ணம்மா! உனக்கு எத்தகைய மனசு! அதை அந்த வாயில்லாக் குதிரை கூடப் புரிந்து கொண்டிருக்கிறது! முற்றத்தில் நின்று உன்னை வணங்கிவிட்டு, அது... ஓடிவிட்டது..."
"வெறுமே ஓடவில்லை. காவலனை எட்டி உதைத்துத் தள்ளிவிட்டு ஓடிற்று..."
"அப்படியா? அட அறிவிலிகளா! இது வனதேவி வாசம் செய்யும் மங்கள பூமி. இங்கே உங்கள் கரிச்சுவடுகளைப் பதிக்காதீர்கள் என்று உதைத்துத் தள்ளிவிட்டுப் போயிருக்கும்...!"
சிறுவர்கள் அன்றிரவு, குடிலுக்குத் திரும்பவில்லை.
அடுத்த நாளும் திரும்பவில்லை. அவர்கள் அப்படி இருப்பது சாதாரண வழக்கம் தான். யாவாலி ஆசிரமத்தில் தங்கி விடுவார்கள். இந்த வனத்தில் அவர்கள் எங்கு திரிந்தாலும் அச்சமில்லை. ஆனால், இப்போது ஒரு 'முட்டு' தடுக்கிறது. வேடுவர் குடியிருப்பின் பக்கம் கூட்டமாக இருக்கிறது.
"என்னம்மா?..."
"மாயன்... மாயன்" என்று எதையோ சொல்ல முன் வந்து விழுங்குகிறாள் புல்லி.
"மாயனுக்கென்ன?"
மாயன் கேலனுக்கும் மரிசிக்கும் பிறந்த மகன். அவனுக்கு ஒழுங்காகப் பேச்சு வராது. ஆனால் மிகவும் வலிமையுள்ள, முரட்டுத்தனமான பையன். இவர்களுடன் சேர்ந்து இருக்க மாட்டான். பச்சை நிணம் உண்பான் என்று அவர்களுக்குள்ளே மறைவாகப் பேசிக் கொண்டது இவள் செவிகளில் விழுந்திருக்கிறது. நந்தமுனி அவனுக்குப் பேச்சுச் சொல்லிக் கொடுக்க வேதவதி ஆற்றுக்கரைக்கு அழைத்துச் சென்று முயற்சி செய்கிறார் என்று சொல்வார்கள். அவன் பக்கம் ஒரு சிறு குழந்தையைத் தனியே கூட விட்டு வைத்திருக்க மாட்டார்களாம். அவன்.. அவனுக்கு என்ன?...
"ஒண்ணுமில்ல வனதேவி..." என்று மென்று விழுங்குவதை நினைத்தால் உடல் சிலிர்க்கிறது...
"யாரையேனும் அடிச்சிட்டானா?"
"அதெல்லாம் அவன் ஒண்ணும் செய்யிறதில்ல. இப்பல்லாம் நந்தசாமி சொல்லி, சொல்லி, வூட்டுல வச்சதுதான் தின்னுறான்..."
"பின் இந்தக் கலவரம் எதுக்கு?"
"பய நச்சுக்கொட்டை எடுத்து அம்புக்குப் பூசித் தயார் பண்ணுறான். அதால் குறி தவறாமல் அடிக்கிறான். ராசா படையைக் கொன்னு இழுத்திட்டு வருவேன்னு நிற்கிறான்."
அவள் திகைத்து நிற்கிறாள்.
"ராசா படைதான் இல்லையே? குதிரை போய் விட்டதே?..."
"எங்கே போயிருக்குது? அது, புல்லாந்தரையில் மேயுது. அந்த ராசா புள்ள, படை எல்லாம் அங்குதா கூடாரம் போட்டிருக்காங்க, ஆத்துக்கு அந்தக்கரையில். குதிரை என்ன முடுக்கியும் நகராம நிக்கிதாம். இல்லாட்டி உதைத்துத் தள்ளுதாம்!" என்று சோமா விவரிக்கிறாள்.
"தெய்வமே!" என்று பூமகள் கலக்கத்துடன் வானைப் பார்க்கிறாள்.
"நம் பிள்ளைகள் யாரும் அதனால் தான் இங்கே வர வில்லையா?"
"எப்படி வருவார்கள் தேவி! இவர்கள் பின்னே தான் அந்தக் குதிரை வருதாமே? நந்தசாமி கூட இருக்காங்க. அதனால் நமக்கு எதுவும் வராது. இப்ப இந்த மாயன் 'நச்சுக் கொட்டை அம்பு போட்டுத் துரத்துவேன். இல்லாது போனால் இவர்கள் இங்கே புகுந்து நம்மை அழிப்பார்கள்' என்று ஒரே குறியில் இருக்கிறான். பாட்டா, அடிக்கக் கூட அடிச்சிட்டார். ஏலேய், உன்னுடைய பெண்டாட்டி, ரெண்டு பிள்ளைங்க சுகமா இருக்க வாணாமா? ரெட்டையாப் பொண்ணு பிறந்திருக்குங்க... இப்பவே அது முகம் பார்த்துப் பேசுதுங்க, இவ மரக்கட்ட போல் கிடந்தான்... நல்லவளவா, அழகா இருக்கு. நீங்க வந்து புத்தி சொல்லுங்க வனதேவி!" என்று அவள் பூமகளை அழைக்கிறாள்.
அவன் குடிலின் முன் ஓர் அழகிய மரம், வட்டமாகக் கிளை பரப்பி இருக்கிறது. மஞ்சள் மஞ்சளாகப் பூக்கள் கொத்துக் கொத்தாக மலர்ந்து, அழகாக இருக்கிறது. சுத்தமாகப் பெருக்கிய மண் தரையில், கலயத்தில் நஞ்சு வைத்துக் கொண்டு, மாயன் கூரிய அம்பை இன்னமும் கூரியதாக்கிக் கொண்டிருக்கிறான்.
"வனதேவி... வனதேவி வாராங்க... டேய், எந்திருந்து கும்பிடு! கால் தொட்டுக் கும்பிடு! அந்த மிதி மண்ணை எடுத்து வச்சுக்க!" என்று அவனுடைய அன்னை நெட்டித் தள்ளுகிறாள். ஆனால் அவன் எழுந்திருக்கவில்லை. கூரிய அம்பு முனையை இன்னும் கூர்மையாக்குவதிலேயே முனைந்திருக்கிறான்...
"உள்ளே வாங்க வனதேவி! வாங்க..." என்று பெண்கள் அவளை ஒரு குடிலுக்குள் அழைத்துச் செல்கிறார்கள். மாட்டுக் கொம்பில் சீப்பு அராவிக் கொண்டிருந்த ஒரு வேடன், நிமிர்ந்து அவளுக்கு வணக்கம் சொல்கிறான். அந்தச் சீப்பு மிக அழகாக இருக்கிறது. மேலே கைப்பிடி ஒரு பூங்கொடிபோல் நேர்த்தியாக அமைக்கப்பட்ட சீப்பு.
'ஓ, கைத்திறமை இங்கே எப்படி மலர்ந்திருக்கிறது!...'
அவள் வியந்து நிற்கையிலே அவளைப் பாயில் உட்காரச் செய்கிறார்கள் அந்தப் பெண்கள். கைவசமுள்ள புளிப்பிலந்தைக் கனிகளைக் கொண்டு வந்து உபசரிக்கிறார்கள். பிறகு, அந்தப் பெண் இரட்டைக் குழந்தைகளை அவள் மடியில் கொண்டு வந்து வைக்கிறார்கள். மடி கொள்ளவில்லை, ஒரு குழந்தைக்கே. குழந்தை அவளைப் பார்த்துச் சிரிக்கிறது. உள்ளமெல்லாம் பாலில் குளிர்ந்தாற் போல் மகிழ்கிறாள். இனிப்புப் பகுதிப் பழத்தைக் கையில் தொட்டு அதன் வாயில் வைக்கிறாள். இரண்டு குழந்தைகளும் ஒரே மாதிரி இருக்கின்றன.
"வனதேவி, உங்களுக்கு இரண்டு பிள்ளைகள்... இவை இரண்டும் பெண்கள்..." என்று முகத்தில் மகிழ்ச்சி பொங்கச் சிரிக்கிறாள். வந்த வேலையே நினைக்கவில்லை. குதிரை இங்கே இருக்கிறது; மாயன் நச்சம்பு தயாரிக்கிறான். யார் சொல்லுக்கும் அவன் வளையவில்லை. இவள் மகிழ்ச்சிப் பாலைக் கருநிலா வந்து மூடிவிட்டது.
இந்த மக்கள் எளியர் தாம். ஆனால் இறுகினால் அசைக்க இயலாத இயல்புடையவர்கள். இனம் புரியாத அச்சம் அவளைப் பிள்ளைகளைத் தேடிச் செல்லச் செய்கிறது. ஆற்றுக்கரைப் புற்றரையில் தான் இருப்பதாக அவள் தெரிவித்ததை இலக்காக்கிக் கொண்டு செல்கிறாள். வானவன் சுள்ளென்று சுடுவதாகத் தோன்றுகிறது. புற்றரையில் எல்லோரும் உட்கார்ந்திருக்கிறார்கள். அரசகுமாரனுக்கு ஒரு பாதுகாவலன் குடை பிடிக்கிறான். குஞ்சம் தொங்கும் பட்டுக்குடை. அவள் புதல்வர்களுக்கும் அந்த மரியாதை உரியதே!...
பொங்கும் இதயத்துடன் அவள் அருகே செல்கிறாள். அரண்கட்டினாற் போல், தாழைப் புதர்கள் இருக்குமிடத்தில் அவள் நிற்கிறாள். அங்கிருந்து நான்கு முழத் தொலைவில் அரசகுமாரன் இருக்கிறான். அங்கிருந்து பார்க்கையில், எட்ட, குதிரை வெள்ளையாக நிற்பது தெரிகிறது. காவலர்கள் ஏழெட்டுப் பேர் இருக்கின்றனர். ஒருவன் மூட்டு முறிவில், பச்சிலை போட்டுக் கொண்டு குந்தி இருக்கிறான்.
அப்போது, பல வண்ணங்களுடைய கொண்டையுடன் வால் நீண்ட காட்டுச் சேவல் ஒன்று கண்கவரும் வகையில் பறந்து, ஓரத்தில் உள்ள மரத்தில் அமருகிறது.
"இந்த வனம் மிக அழகாக இருக்கிறது..." என்று அரசகுமாரன் கூறுகிறான்.
"உங்கள் அரண்மனைத் தோட்டத்தை விடவா?"
"... அரண்மனைத் தோட்டம் அழகுதான். அங்கு இப்படிச் சேவல், அழகாகப் பறந்து செல்லாது. கூட்டமாக மான்கள் போவதைப் பார்க்க முடியாது."
அஜயன் புருவங்களைச் சுருக்கிக் கொண்டு பார்க்கிறான்.
"ஏன்? தோட்டத்துக்கப்பால் வனங்கள் இருந்தால் மான்கள் வரும் இல்லையா? இங்கே எல்லா விலங்குகளும் வரும்..."
"நீங்கள் வேட்டையாட மாட்டீர்களா?..."
"வீணாக எதற்கு வேட்டையாட வேண்டும்? மான்கள், பறவைகள் எல்லாமே அழகு... ஆனால் எப்போதேனும் வலை வைத்து, பன்றி அல்லது எருமை பிடிப்பார்கள். நாங்கள் வில் அம்பு வைத்து அடிக்க மாட்டோம்..."
"ஏன்? நீங்கள் வில் வித்தை பயிலவில்லையா? உங்கள் குரு என்று சொல்கிறீர்கள். நீங்கள் க்ஷத்திரியர் போலும் இருக்கிறீர்கள்; அந்தணர் போலும் பேசுகிறீர்கள். விசுவாமித்திரர் க்ஷத்திரியர்; அவர் ராஜருஷியானார். காயத்ரி மந்திரமே அவர் அருளிச் செய்தது. எங்கள் குல குரு உயர் குலம்..."
"அதனால் மான்களை வேட்டையாடச் சொல்லிக் கொடுப்பார்களா?" என்று அஜயன் கேட்கிறான்; விஜயன் சிரிக்கிறான். வேடப்பிள்ளைகள் எல்லோரும் சிரிக்கிறார்கள்.
காவலர்களில் ஒருவன் எழுந்து தரையைத் தட்டி உரக்கக் கத்துகிறான்.
"துட்ட வேடப்பிள்ளைகளே! எங்கள் அரசகுமாரன் சந்திர கேதுவையும், அரசகுலத்தையும் பழிப்பதே உங்கள் நோக்கமாக இருக்கிறது! நீங்கள் ஏழுலகும் புகழும் அயோத்தி மாமன்னரின் வழித்தோன்றலுடன் பேசுவதாக நினைவிருக்கட்டும். இப்போது எங்கள் யாகக் குதிரை இங்கே தடம் பதித்ததால், இந்த இடம் எங்கள் மாமன்னருக்கு உரியதாகிறது..." என்று கையில் உள்ள தண்டத்தினால் மீண்டும் தட்டுகிறான்.
குதிரையின் அருகில் நின்றிருந்த நந்தமுனி, யாழை மீட்டியவாறு வெளிப்பட்டு வருகிறார்.
"குதிரை தடம் பதித்தால் உங்களுக்குச் சொந்தமோ? அது என்ன சாத்திரம் ஐயா? நீங்கள் இங்கே வரும் முன்பே நாங்கள் தடம் பதித்து விட்டோம்! உங்கள் குதிரையின் குளம்படிகளை விட எங்கள் தடம் சிறந்தது. இந்த வனதேவியின் மைந்தர்கள் நாம்!..."
நந்தமுனி புன்னகை செய்கிறார்.
"அதெப்படி? நீங்கள் க்ஷத்திரிய குலமல்ல; அந்தணரும் அல்ல; முப்புரி நூல் இல்லை; வில் வித்தை பயிலவில்லை... பூமி சொந்தமோ?" சிரிப்பு ஏளனமாக ஒலிக்கிறது.
"ஏ, மூட அரசகுமாரா? யார் வில் வித்தை பயிலாதவர்கள்! எங்கள் குரு எங்களுக்குச் சகல வித்தைகளையும் கற்பித்துள்ளார். ஆனால் அந்த வித்தையை உயிர்க் கொல்லியாகப் பயன்படுத்த மாட்டோம்! நீங்கள் விளையாட்டுக்கு வேட்டையாடுவீர்கள்; கொல்வீர்கள்..."
விவாதம் கூர்மையாக முற்றுகிறது. ஆனால் இதில் நன்மை விளையும் என்று தோன்றவில்லை. கனி இனிமை; அதன் சதையில் முள் இருப்பதை நீக்கியாக வேண்டும்?
"க்ஷத்திரிய தர்மம் கொல்வதை அநுமதிக்கிறது. எங்கள் மாமன்னர், யாரும் இது நாள் கண்டிராத அளவில் பெரும் வேள்வியைச் செய்து கொண்டிருக்கிறார். நீங்கள் அவர் பெருமையை அறியாமல் குதிரையை, மடக்கி வைத்திருக்கிறீர்கள்! நாங்கள் உங்களையே கட்டித் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டி இருக்கும்!"
"ஆஹாஹா..." என்று விஜயன் சிரிக்கிறான்.
"நாங்கள் குதிரையைக் கட்டியா போட்டிருக்கிறோம்? அதுவாக வந்தது. நீங்கள் கை வைத்ததால் உதைத்துத் தள்ளுகிறது. அந்தக் குதிரையை விரட்டி ஏவி விட்டதும் நீங்கள். இப்போது நாங்கள் மடக்கி இருக்கிறோம் என்று பழி சுமத்துகிறீர்கள்! உங்கள் தருமம் மிக நன்றாக இருக்கிறதைய்யா?..." என்று அஜயன் கேட்கும் போது பூமகள் பூரித்துப் போகிறாள்.
"குதிரையை ஓட்டிச் செல்ல முடியாத நீங்கள், எங்களைத் தூக்கிச் செல்லப் போவதாக அச்சுறுத்துகிறீர்கள்! என்ன நியாயமய்யா? உங்களுக்கு முடிந்தால் குதிரையைத் தூக்கிச் செல்லுங்கள்! அதை விடுத்து வீணாக நீங்கள் வேறு வழிகளில் இறங்கினால் நாங்கள் கையைக் கட்டிக் கொண்டிருக்க மாட்டோம்!..."
பூமகள் மறைவிடத்தில் இருந்து வருகிறாள்.
"வேண்டாம் குழந்தைகளே, நாம் நம்மிடம் செல்வோம், எழுந்திருங்கள். அவர்கள் குதிரையைப் பற்றிக் கொண்டு செல்லட்டும்!"
அவள் தன் மைந்தர்களையும் வேடப் பிள்ளைகளையும் அழைத்துக் கொண்டு நடக்கிறாள். நந்தமுனி பாடுகிறார்; மாதுலன் குழலிசைக்கிறான். இரவு தீப ஒளியில், மகிழ்வுடன் உணவுண்டு, ஆடிப்பாடிக் களைத்து எல்லோரும் உறங்குகின்றனர். பூமகளும் துன்ப நினைவுகளைத் துடைத்து விட்டு உறங்குகிறாள்.
------------
அத்தியாயம் 24
அதிகாலையில் புள்ளினங்களின் ஓசை கேட்டதும், அவள் குடத்தை எடுத்துக் கொண்டு தடாகக் கரைக்கு வருகிறாள்.
அங்கே, அவள் காண்பது மெய்யா?...
கண்களைத் துடைத்துக் கொண்டு பார்க்கிறாள். குதிரை.
'நான் தான் வனதேவி' என்று சொல்வது போல் அது கனைக்கிறது.
ஒரு பக்கம் மகிழ்ச்சி; ஒரு புறம் அச்சம்; அதோடு இணையும் கவலை... அவள் இதைத் தெரிவிக்கவில்லை என்றாலும் பிள்ளைகள் காணாமல் இருப்பார்களா?
மகிழ்ச்சி ஆரவாரம்; ஆட்டபாட்டங்களுடன் குதிரை வனத்தை வலம் வருகிறது.
"இந்தக் குதிரைக்கு க்ஷத்திரிய தருமம் பிடிக்கவில்லை..."
"பிள்ளைகளா, பேசாமல் ஆற்றுக்கரையில் இறக்கி விடுங்கள். இப்போது நீர் வற்றிச் சுருங்கிய இடத்தில் இறக்கி விட்டால் தாண்டி அக்கரை போய் விடும். நமக்கு எதற்கு வீணான வேதனைகள்!"
நந்தமுனியினால் எந்த ஒரு தீர்வையும் கொண்டு வர இயலவில்லை.
அன்று பகல், வனமே கலகலத்துப் போனாற் போல் பறவைக் கூட்டங்கள் கல்லடியோ வில்லடியோ பட்டாற் போல் விழுகின்றன. அமைதியாகக் கிடந்த நாகங்கள் அமைதி குலைந்தாற் போல் வெளியே நடமாடுகின்றன.
பூமகள் கனவு கண்டாளே, அது மெய்ப்பட்டு விட்டாற் போல் நடுங்குகிறாள். பிள்ளைகளைத் தேடியவாறு செல்கையில், பச்சைக்கிளி ஒன்று அவள் காலடியில் வீழ்கிறது. நெருப்பில் துவண்டாற் போல் விழுந்த அதை அவள் கையில் எடுத்துத் தடவுகிறாள். நெஞ்சம் பதைபதைக்க அவள் "அஜ்யா, விஜயா, நீலா!... புல்லி..." என்று கூவுகிறாள். இது வேனில் காலம். எங்கேனும் காட்டுத் தீயா? காட்டுத் தீ பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாள். ஆனால் கண்டதில்லை. குடில்களனைத்தும் காய்ந்த புல்லினால் வேயப்பட்டவை. மரங்கள் எதுவும் மொட்டையாக இல்லை. பட்டிலவுகூடத் துளிர் விட்டிருக்கிறது. அது காய் வெடித்துப் பட்டிழைகளைப் பறக்க விடும்போது சிறுமியர் அதைச் சேகரித்து வருவார்கள். இப்போது அந்த மரத்தினும் செந்துளிர்... அவள் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே புறாக்கள், மைனாக்கள், காகங்கள் வீழ்கின்றன.
எங்கோ சிங்கம் உறுமுவது போல் ஒரு பேரோசை கேட்கிறது.
அப்போது அங்கே மாயன் எதிர்ப்படுகிறான்.
"மாயா? நீயா நச்சம்பு விட்டாய்?"
அவன் கையில் வில்லும் கூரம்பும் இருக்கின்றன.
"இனிமேல் தான் விடவேண்டும். என்ன செய்திருக்கிறார்கள் பார்த்தீரா வனதேவி? 'மந்திர அஸ்திரம்' என்று விட்டிருக்கிறார்கள். பேய் பிசாசுகள், பறவைகளைச் சாக அடிக்கின்றன. பசுக்கள் மூர்ச்சித்து விழுந்திருக்கின்றன..."
அவன் பேசுவது சாடையாகவே இருக்கிறது.
"நீ நச்சம்பா வைத்திருக்கிறாய்?"
"ஆமாம்..."
"வேண்டாம். நம்மவருக்கு அதனால் ஆபத்து வரும்..."
"வராது. அவர்களெல்லாரும், அருவிக்கரை தடாகத்தில் பத்திரமாக இருக்கிறார்கள். நான் ஒரே ஒரு அம்பு போட்டு இவர்களுக்கு நம்மை யாரென்று காட்டுவேன். வனதேவி! இதோ பாரும் பட்சி துடிதுடித்து விழுவதை?..."
கொத்தாகத் தேன் சிட்டுகள் புற்றரையில் விழுந்திருக்கின்றன.
"குதிரையை விரட்டி விடவில்லையா?"
"அது போக மறுக்கிறது... வனதேவி, அதை அறுத்து யாகம் செய்வார்களாம். அதற்கு அது தெரிந்துதான் போக மறுக்கிறது. இந்த உயிர்களுக்கெல்லாம், நம்மை விட முன்னுணர்வு..."
"சரி, நீ இப்போது யாரைக் கொல்லப் போகிறாய்?"
"யாரை என்று குறி இல்லை. ஆறு கடந்து அவர்கள் கூடாரத்துக்கு முன் நின்று கூப்பிடுவேன். 'கோழை போல் பசு பட்சிகளைச் சாக அடிக்கும் 'மந்திர அம்பு' விட்டிருக்கிறாயே, என் எதிரே வா' என்று கூப்பிடுவேன்..."
"வேண்டாம், மாயா, நான் சொல்வதைக் கேள்! சத்திய குரு வந்து விடுவார். அவர் வந்ததும் அவர் சொல் கேட்டு நடப்போம்!"
"அதற்குள் நம் வனம் அழியும். வனதேவி, என்னைத் தடுக்காதீர்கள்!"
அவன் விரைந்து போகிறான்.
பிள்ளைகளை அவள் தடுத்தும் அவர்கள் செவி சாய்க்கவில்லை. நந்தமுனியோ, தனியிடத்தில் அமர்ந்து, ஒற்றை நாணை மீட்டிய மவுனத்துள் மூழ்குகிறார்.
பூமகள் முதியவளிடம் வந்து அரற்றுகிறாள்.
"அம்மா, மந்திர அஸ்திரம் பட்சியை அழிக்குமோ?"
"எனக்கென்னம்மா தெரியும்? நீதான் க்ஷத்திரிய நாயகனுடன் வாழ்ந்தவள். பெரிய பெரிய போர்களை, வதங்களை, 'அஸ்திர' சாகசங்களைக் கண்டிருக்கிறாய்!"
அவளுக்கு நினைவுக்கு வருகிறது. ஓர் அரக்கன், ஓடிச் சென்று கடலில் வீழ்ந்து வீழ்ந்து எழுந்தானாம். அப்படி அத்திரம் துரத்திச் சென்றதாம்... அது, தீயாய், வெப்பம் உமிழுமோ?...
மனம் பதைப்பதைக்கிறது. இந்தக் கவடறியாப் பிள்ளைகளின் மேனி கருகும் வெப்பத்தை உமிழும் அத்திர வித்தைகளை அவிழ்த்து விடுவார்களோ, தெய்வமே! வானத்தில் இருந்து ஆட்சி செய்யும் மாசக்தியே! நீ கொடுப்பது தானே வெப்பக்கதிர்? அது இவ்வாறு மனித நேயமற்ற செயல்களுக்கு உதவலாமோ? மந்திரமாக இருந்தால் அது பயன்படாதவாறு நீயே தடுப்பாய்? ஒரு மழையைப் பொழிவிப்பாய். குளிர் காற்றோடு எங்கள் உள்ளங்களைக் குளிரச் செய்வாய்..." என்று பலவாறு வேண்டி நிற்கிறாள். அன்று முழுவதும் அவள் தீயை உயிர்ப்பிக்கவில்லை. பிள்ளைகளுக்காக உணவு சேகரித்துப் பக்குவம் செய்யவில்லை.
வானில் கருமேகங்கள் கவிந்தாற் போல் ஒளி மங்குகிறது. ஒரே இறுக்கம். ஓர் இலை அசையவில்லை. ஓர் உயிரின் சலசலப்பும் தெரியவில்லை. நந்தமுனியைத் தேடி அவள் செல்கிறாள். அவர் மரத்தடியில் வீற்றிருந்த கோலத்தில் காணப்படவில்லை.
நீண்ட மவுனம்... நீண்ட நீண்ட நிழல்கள் தென்படவில்லை. கிழட்டுக் கத்யாயனியப் பசுவும், பெரியன்னையும் மூச்சுப் பேச்சின்றி முடங்கி இருக்கிறார்கள். அந்த அரக்கர் கோனுடனான போரின் போது கூட அவள் மனமழியவில்லையே? இப்போது... இது போரும் இல்லை... அமைதியும் இல்லை. போர்க்களத்துக்குப் பெண்கள் சென்றதாக அவள் அறிந்திருக்கவில்லை.
எனினும், உயிரின் ஒரு பகுதியாகவே உள்ள பிள்ளைகள் அவளிடம் இருந்து பறிக்கப் படுவார்களோ? இரவும் பகலுமாக ஒரு நாள் செல்கிறது. இருப்புக் கொள்ளவில்லை.
பூமகள் ஓடுகிறாள் வாழைவனம் தாண்டி, கருப்பஞ் சோலைகள் சின்னாபின்னமாக்கப்பட்ட பகுதிகள் கடந்து, பெரிய ஆலமரம்... அங்கே என்ன நடக்கிறது? அவள் காலடியில், அந்தி மங்கும் அந்த நேரத்தில் யாரோ விழுந்து கிடப்பது புலனாகிறது. நா அண்ணத்தில் ஒட்டிக் கொள்கிறது. ஒரு காவலன் வீழ்ந்திருக்கிறான். எங்கு பார்த்தாலும் மரக்கிளைகள் முட்செடிகள் ஒடிந்து கிடக்கின்றன.
மங்கி வரும் பொழுதில் இனம் புரியாத ஒரு வேடப்பிள்ளை விரைந்து வருகிறான். அவள் கையைப் பற்றி இழுத்துச் செல்கிறான். "வனதேவி, அங்கே சண்டை நடக்கிறது. அவர்கள் அம்பு போட்டு நம் மாடுகளைக் கொன்று விட்டார்கள். நீலனும் மாலியும் மரங்களை ஒடித்து அவர்களை அடித்தார்கள். குருசுவாமி சொல்லாமல் வில் அம்பைத் தொடக்கூடாதல்லவா? இப்ப மாயன் அம்பு விட்டு எல்லோரையும் ஆற்றுக்கு அக்கரையில் துரத்தி விட்டான்... ஆற்றில் காவலர் ஒருவர் விழுந்து போய்விட்டார்..."
"அஜயன் விஜயன் எங்கே? நந்தசுவாமி போரிடச் சொன்னாரா?"
"நந்தசுவாமி படகில் அக்கரை செல்கிறார். அஜயனும் விஜயனும் அவருடன் செல்கின்றனர். அங்கே போய் நியாயம் பேசப் போகிறார்கள். வனதேவி, நம் பசுக்கள், கன்றுகள், காளைகள் எல்லாவற்றையும் பார்த்து பார்த்து அந்தக் காவலர்கள் கொல்கையில் நம்மால் கைகட்டிக் கொண்டு இருக்க முடியுமா?... அங்கே வந்து பாருங்கள்!"
அவன் அவளை அழைத்துச் செல்கிறான். மேய்ச்சல் இடம்... மங்கி வரும் இருளில், ஏதோ கனவுக் காட்சி போல் மாடுகள், உயிர் கொடுக்கும், உணவு கொடுக்கும், உழைப்பாளி மாடுகள் மலை மலையாகச் சாய்ந்து கிடக்க, காகங்கள் அவற்றின் மீது குந்திப் பறந்து சோகமாகக் கரையும் காட்சியைக் காண்கிறாள். 'உம்மீது குந்தி இருந்து விருந்தாடுவோமே, உங்கள் உடல்களில் சிலிர்ப்போடும் போது எங்களுக்கும் அது ஓர் அநுபவமாக இருக்குமே. இப்போது உயிரோட்டம் இல்லாமல் விழுந்து விட்டீர்களே' என்று அவை கரைவதாகத் தோன்றுகிறது. கண்ணீர் குருதி போல் பொங்குகிறது. குடிலுக்குத் திரும்பி வந்தவளின் விம்மல் ஒலி முதியவளை உலுக்குகிறது.
புல்லி வந்து ஒளித்திரி ஏற்றி வைக்கிறாள்.
"கண்ணம்மா, குழந்தாய்..." என்று அழைக்கும் குரல் நடுங்குகிறது.
"இந்நேரம் உன் பிள்ளைகள் யாரென்று அவர்களுக்குத் தெரிந்திருக்கும். இவர்கள் பக்கம் குதிரை அவர்கள் விரட்டாமல் வந்ததும் நன்மைக்கே... இப்போது, உன் நாயகனோ, மைத்துனர்களோ வரக்கூடும். பிள்ளைகள் அவர்களுடன் ஒளிரட்டும்!" பூமகள் இறுகிப் போகிறாள்.
அந்த அழுத்தத்தினிடையே இருந்து சன்னமான நாண் எழுப்பினாற் போன்று உறுதியான குரல் ஒன்று ஒலிக்கிறது.
"தாயே, பெற்றவர் கை கழுவினர்; வளர்த்தவர் கை கழுவினார்; கணவர் கை கழுவினார். இப்போது, என் உதரத்தில் ஊறிய இவர்களை நான் அனுப்புவேனா? மாட்டேன், அவர்கள் என் உயிரின் உயிர்!"
மூதாட்டி வாஞ்சையுடன் அவள் முகத்தை இதமாகத் தடவுகிறாள்.
"உனக்கு உன் நாயகர், குழந்தைகளுடன் சேர வேண்டும் என்ற தாபம் இல்லையா?"
அவள் சிறிது நேரம் பேசவில்லை.
"அந்தத் தாபம் குளிர்ந்து சாம்பற் குவியலாகி நெடு நாட்களாகி விட்டன தாயே!"
ஊனுறக்கமின்றி அன்றிரவு பொழுது ஊர்ந்து செல்கிறது. அதிகாலைப் பொழுதில் யாரோ சங்கு ஊதுகிறார்கள். அது வெற்றி முழக்கச் சங்காக இல்லை. நரிகளின் ஊளையொலி போல் ஒலிக்கிறது. திடுக்கிட்டு அவள் வெளி வருமுன் பிள்ளைகளின் அரவம் கேட்கிறது. வேடுவப் பெண்களின் அலறலொலி உதயத்தின் கீழ்வானச் செம்மையை குருதிக் குளமாகக் காட்டுகிறது.
"என்ன அநியாயயம்மா! மாயன், நீலன், பூவன் எல்லோரும் மாண்டு மடிந்தார்கள். குரு ஏனம்மா, அம்பெடுக்க வேண்டாம் என்று சொன்னார்? அவர்கள் நம் விளை நிலங்களை அழித்தார்கள்..."
அவள் தன் இரு மைந்தர்களையும் தழுவிக் கொள்கிறாள். அப்போது அங்கே, அந்த யாகக் குதிரை, பட்டப் போர்வை கிழிக்கப்பட்டு, பொன்மாலை அகற்றப்பட்டு மங்கலமிழந்த நிலையில் வந்து கனைக்கிறது.
"ஏ குதிரையே! நீ வந்த வழியே திரும்பிச் செல்! எங்கள் அமைதியில் இப்படிப் புகுந்து கொலைக் களமாக்கினாயே! போய்விடு!" அவள் அதன் பின் பக்கத்தைப் பிடித்துத் தள்ளி விடுகிறாள்.
"அம்மா, மாயன், நூறு நூறாக அவர்கள் படையைக் கொன்று குவித்து விட்டான். நாங்கள் குரு சொல்லை மீறவில்லை. மரக்கொம்புகளையும் கற்களையுமே எறிந்து தற்காத்துக் கொண்டோம்..."
"நந்தசுவாமி எங்கே?..."
"அவர் ஆற்றங்கரையில் நின்று சந்திரகேதுவைப் பின் வாங்கச் சொன்னார். நம் முனிவர் தூது சென்றுள்ளார். வரும் வரையிலும் அவர்கள் வன்முறையில் ஈடுபடலாகாது என்று சொல்லிக் கொண்டிருந்த போது தான் மாயனின் நச்சம்பு, படையினரின் மீது பாய்ந்து கொன்றது. சந்திரகேது கூட மூர்ச்சையாகி விட்டான் என்று நளன் கூறினான். நாங்கள் ஆற்றிலிருந்து இக்கரை வந்து, ஓடி வருகிறோம்..."
"நந்தமுனி எங்கே?..."
அவள் மனம் கட்டுக்கடங்காமல் நின்று கனைக்கிறது.
பிள்ளைகள் விரைகின்றனர்.
அடுத்த கணம், "அம்மா...!" என்ற ஒலி கானகம் முழுதும் எதிரொலிக்கிறது.
உதயத்தின் கதிர், நந்தமுனிவரின் நிச்சலன முகத்தில் வீழ்கிறது.
-----------
அத்தியாயம் 25
அவளால் எதையும் புரிந்து கொள்ள முடியவில்லை. இது போரா? இரவு நேரத்தில் நடந்த வன்முறையா? எப்போது பிள்ளைகள் ஆறு கடந்தார்கள்? எப்போது மாயன் அவன் கூட்டத்தாரின் மானம் காக்க நச்சம்பு விட்டான்? படைகள் திரும்பி அம்பெய்தி... கூட்டத்தில் யார் வேண்டுமானாலும், மாடு, கன்று, பறவை, மனிதர், மரம், மட்டை என்று அழிக்க முனைந்தார்களா?...
குனிந்து நந்தமுனையை அசைவற்று நோக்குகிறாள்.
"மகளே கலங்காதே..." என்று அவளுக்கு ஆறுதல் சொல்கிறாரா?... புன்னகை வாடாத சாந்தம் ததும்பும் முகம். முடி அதிகமில்லாத தாடி, ஒட்டிய தாடைகள், கண்கள்... எல்லா உலகமும் அமைதியுடன் வாழ வேண்டும் என்று பாட்டிசைத்த அந்த நா... எல்லாம் நிலைத்து விட்டன. வேதவதியே, நீ ஓடுகிறாயே, எனக்கு இது தகுமா? அஜயன் அவர் விலாவில் அம்புதைத்த இடம் பார்க்கிறான். யாரோ அந்த நாசகார அம்பைக் கொண்டு வருகிறார்கள். தர்புர்... ஒற்றை நாண், அது ஓய்ந்து விட்டது.
சம்பூகனை இழந்த போது சோகம் கரைபுரண்டு வர அரற்றினாள். இப்போது நாவே எழவில்லை.
இளமைப் பருவ நினைவுகள் படலங்களாக உயிர்க்கின்றன. அவர் மடியில் அமர்ந்து, மழலையில், "தாயே, தயாபரி..." என்று அவருடன் இணைந்து பாடியதும், அந்த ஒற்றை நாணைப் பிஞ்சு விரலால் மீட்டியதும் நினைவில் வருகிறது.
"என் தாய் யார் சுவாமி?"
"இந்த பூமிதான். நீ பூமகள், பூமிஜா, பூமா... எல்லாம் நீதான்!" என்று சிரிப்பார்.
"காட்டிலே எப்படி பயமில்லாமல் இருப்பீர்? பாம்பு, யானை, புலி, சிங்கம் எல்லாம் இருக்குமே?"
"அவையும் இந்த பூமியில் வாழலாமே? இந்த பூமித்தாய் அவற்றையும் படைத்திருக்கிறாள் அல்லவா?..."
நீண்ட முகம்... கூர்மையான நாசி... ஒழுங்கில்லாத பற்கள்... அந்நாள் பார்த்த அதே வடிவம். சிறிதும் மாறவில்லை. மேல் முடியைக் கோதி உச்சியில் சுற்றி இருக்கிறார். அதில் எப்போதுமே அடர்த்தி இல்லை... வற்றி மெலிந்த மார்புக் கூடு. அது எழும்பித் தணியவில்லை.
சோகம் தன்னைச் சுற்றிப் பிரளயமாகக் கவிந்த போதும் அவள் அசையவில்லை. யாரோ, மாதுலனைத் தூக்கி வருகிறார்கள். அவனால் நடக்க முடியவில்லை. அதனால் தூக்கி வந்து அவள் அருகில் அமர்த்துகிறார்கள்.
குழலை அவன் கையில் ரெய்கி கொடுக்கிறாள். அவன் மறுக்கிறான். கண்களில் இருந்து ஆறாய் நீர் வழிகிறது. மாயனின் இரட்டைப் பெண் குழந்தைகளைக் கொண்டு வந்து அவள் பக்கம் விடுகின்றனர். அவை சோகம் புரிந்தோ, புரியாமலோ வீரிட்டுக் கத்துகின்றன.
ஒரு தடவை அவர் உயிர்ப் பாம்பைக் கழுத்தில் போட்டுக் கொண்டு வந்தார். அவந்திகாவுக்கு ஆத்திரம் வந்தது.
"என்ன சாமி இது? குழந்தை பயப்பட மாட்டாளா?" என்று கடிந்து அவளைப் பற்றிச் செல்ல முயன்றாள்.
"ஒன்றும் ஆகாது. அஞ்சாதே, குழந்தாய்... இதோ பார், இது உனக்கு நண்பர்... தொடு..." என்று அவள் பூங்கரம் பற்றி அதைத் தொடச் செய்தார்... அது பூவைப் போல் குளிர்ச்சியாக இருந்தது. 'இன்னும் இன்னும் இன்னும்...' என்று தலையோடு வால் பூங்கரத்தால் தடவிக் கொடுத்தாளே?...
இந்நாள் கானகத்தில் தன்னந்தனியளாய் அவள் வந்து விழுந்த போது, நாகங்கள் வந்து வரவேற்றதை எண்ணிக் கண்ணீர் பொங்குகிறது.
"அத பாருங்க! பாம்பெல்லாம்..."
அந்த வனமே சோகத்திலிருக்கிறது. ஊர்வன, பறப்பன், நடப்பன ஆகிய அனைத்து உயிர்களுக்கும் தோழனாக ஓம் ஓம் என்று ஒலிக்கும் தம்புருடன் இதம் செய்தவர். அந்த இசைக் கருவி நாதனை இழந்துவிட்டது. பகல் உச்சிக்கு ஏறி இறங்கத் தொடங்குகிறது. அவர் வீழ்ந்த இடம், மரமல்லிகைகள் சொரியும் அரண். பூச்சிக்காட்டையும், வாழை வனங்களையும், பிரிப்பது போல் அரணாக நிற்கும் மரங்கள்... உச்சிக்கு ஏறிய ஆதவன் திடீரென்று குளிர்ந்தாற் போல் சாரல் வீசுகிறது. அந்த வேனிலில், சரேலென்று ஒரு சாரல் விசிற, வானவன் அவர் பொன்மேனியை நீராட்டுவது போல் குளிர் பூஞ்சாரலாகப் பொழிகிறான். இத்தகைய சாரல் வந்தாலே மரமல்லிகை பொல்லென்று மணம் சொரிந்து அவனியை அலங்கரிக்கும். நந்தமுனியை இயற்கை நீராட்டி அலங்கரிக்கிறது...
அப்போது... மத்தன்... யானைக்கூட்டம் பிளிறலுடன் வந்து அஞ்சலி செய்ய வருகின்றது. வேடமக்கள் அனைவரும் ஒதுங்குகின்றனர். அவள் அந்த யானையின் அருகில் சென்று அதன் காலைப் பற்றிக் கொண்டு கண்ணீர் உகுக்கிறாள்.
"இம்சையில் இருந்து அனைவரையும், விலகச் செய்த எந்தையை யாரோ கொடிய அம்பு கொண்டு துளைத்திருக்கின்றனர், மத்த ராஜனே!" என்று புலம்புகிறாள்.
மிதுனபுரியில் இருந்து ஒரு கூட்டம் வருகிறது. பாதம் வரை தொங்கும் ஆடை அணிந்த பெண்கள்... தலையில் துண்டு அணிந்து திறந்த மார்புடன் ஆண்கள், மூங்கில் கொம்புகளாலான ஒரு பல்லக்கில், ராணியம்மாவைச் சுமந்து வருகிறார்கள்.
"பெரிய ராணி வாராங்க!..."
பூமகள் கண்கள் அகலப் பார்க்கிறாள். ஒரு கால் கேகயத்து மாதாவோ?
சிவிகையைக் கீழே வைக்கிறார்கள். மெல்ல இருவர் சிவிகையில் இருந்த அவளைத் தூக்கிப் புற்பரப்பில் அமர்த்துகின்றனர். அந்த அன்னை, கூரிய நாசியும் அகன்ற நெற்றியும்...
ஓ... இவர் தாம் மிதுனபுரி ராணி மாதாவா? தலை மூடிய துண்டு. பாதம் வரை, ஆடை. அந்த அன்னை மயிலிறகுகளால் ஆன ஒரு விசிறி போன்ற சாதனத்தால், கால் முதல் தலைவரை தடவுகிறாள். சுருங்கிய விழிகள் பளபளக்கின்றன. மெல்லிய சுருங்கிய உதடுகள் துடிதுடிக்கின்றன. பேச்சு எழவில்லை. அப்போதுதான் சத்திய முனிவர் விரைந்து வருவதை அவள் பார்க்கிறாள். அவர் முகத்தை மூடிக் கொண்டு விம்முவதை அவள் முதல் தடவையாகப் பார்க்கிறாள்.
மிதுனபுரி ராணி மாதாவின் பக்கம் வந்து நின்று குலுங்குகிறார்.
"அம்மையே பாவத்தின் கருநிழல் விழுந்துவிட்டது."
அந்த அம்மை முனிவரின் பாதங்களில் நெற்றியை வைக்க முன் நகருகிறாள். அவர் குனிந்து அவளைத் தூக்குகிறார்.
"தாயே, நான் வந்தனைக்குரியவன் அல்ல. தாங்களே வந்தனைக்குரியவர்கள். எனக்கு இந்த மரியாதை உகந்ததல்ல. தங்களுக்குக் கொடுத்த வாக்கை, என் எல்லையில் வன்முறை நிகழாது என்ற வாக்கை, நான் நிறைவேற்றத் தவறிவிட்டேன்..." என்று அரற்றுகிறார்.
பூமகளுக்கு இதெல்லாம் கனவோ, நினைவோ என்று தோன்றுகிறது. இந்தப் பிரமையில் நின்றவள், அங்கு கோசலத்து ராணி மாதா கேகயத்து அன்னை வந்ததையோ, அவந்திகா உரத்த குரலில் கதறியதையோ கூடப் புரிந்து கொள்ளவில்லை.
அவரை, வில்வ மரத்தின் பக்கம் அம்பு தைத்திருக்க வேண்டும் என்று இடம் காட்டுகிறான், சோமன். அங்குதான் நாலைந்து அம்புகள் மரத்திலும் கீழும் சிதறி இருந்தனவாம். அங்கிருந்து நடந்து வந்து வீழ்ந்திருக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள். இறந்தவரின் சடலங்களை எல்லாம் கொண்டு வந்து, வேதவதியில் இருந்து நீர் கொணர்ந்து வந்து அந்திமம் செய்கிறார்கள். நந்தமுனிவரின் அருகில் மாயன், பூவன், நீலன்... எல்லோரும் இடம் பெறுகிறார்கள். நந்தமுனியின் தம்பூரை, அஜயன் எடுத்துக் கொள்கிறான். அதைக் குழியில் வைக்க அவன் அநுமதிக்கவில்லை.
மாதுலன் தன் சோகமனைத்தையும் கரைக்கும் வண்ணம் இசைக்கிறான். தேனாய், தீயாய், தீங்குழலாய் அது கானகத்தில் ஒலிக்கிறது. வானத்து ஒளி மங்க, கரும்பட்டுப் படுதா விரிகிறது. ஆயிரமாயிரமாக விண்மீன்கள் அவர்களை வரவேற்க உதயமாகின்றன. சத்தியமுனி குரலெழுப்ப, அஜயன் அந்த ஒற்றை நாண் யாழை மீட்ட, அது ஓம்... ஓம்... ரீம்... என்று ஒலிக்கிறது.
"எங்கள் அன்னை நீ! இறைவி நீ!
நீயே நாங்கள்! நாங்களே நீ!
வையம் நீ! வானம் நீ!
இந்த நீரும், மாமரங்களும் மூலிகைகளும்,
அறுசுவையும் எண்ணற்ற வடிவங்களும்,
நீயே யாவாய்!
துன்பம் நீ! இன்பமும் நீ!
நீயே மரணம்! நீயே பிறப்பு!
பாவத்தின் கருநிழல்கள் படிந்துவிட்டன.
அன்னையே உன்னைப் போற்றுவோம்!
அவை எங்களை விழுங்காமல் காத்தருள்வாய்!"
கீதம் முடியும் போது விம்மி விம்மி அழாதவர் எவரும் இல்லை என்று தோன்றுகிறது. அஜயனும் அந்தச் சோகத்தில் கரைகிறான். ஆனால் விஜயன் மட்டுமே வேறாக நிற்கிறான்.
"தாத்தா! பாவத்தின் கருநிழல் என்று எதைச் சொன்னீர்கள்? எங்களை வில் அம்பு எடுக்கக் கூடாது என்று ஆணையிட்டு விட்டுத் தாங்கள் இங்கே இல்லாமல் போய் விட்டீர்களே. அவர்கள் குறிபார்க்கத் தேவையில்லாத போர்க்கால வில்-அம்பு சாதனங்களால் மரம் மட்டை பசுக்கள் இன்னார் இனியவர் என்றில்லாமல் நம்மை அழிக்க முன் வந்தது எதனால்? நம் பசுக்கள் கண் முன் இறந்தன. மாயன் பொங்கி எழுந்து நச்சம்பு போட்டு, பத்துப் பத்தாக, நூறாக, அவர்கள் பக்கம் ஆறு கடந்து கொன்றான். அவன் வீரன்! வீரனாக உயிரைக் கொடுத்தான். நாங்கள் குரு வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, கோழை போல் நின்றோம். எது பாவத்தின் கருநிழல்?"
"விஜயா!" என்று பூமகள் கத்துகிறாள்.
"பாவத்தின் கருநிழல் எங்கிருக்கிறது என்று என்னிடம் கேள்! இவர்கள் பாவத்தின் கருநிழலைத் துடைக்க வாழ்கிறார்கள். அத்தகைய ஒரு பெருமகனை இப்போது அந்த நிழல் விழுங்கிவிட்டது. மகனே, உன் அன்னை கர்ப்பத்தில் உங்களைச் சுமந்து கொண்டு எந்நாள் அநாதரவாகத் திக்குத் தெரியாத கானகத்தில் விடப்பட்டாளோ அன்றே பாவத்தின் கருநிழல் விழுந்துவிட்டது. பெண்ணொருத்தி எந்நாள் கோத்திரமில்லாதவள் என்று சபிக்கப்பட்டாளோ, அன்றே பாவத்தின் கருநிழல் இந்த பூமியில் படிந்து விட்டது. மண் அன்னை, தன் மக்களுக்கு அமுதூட்ட கோத்திரம் பார்ப்பதில்லை; குலம் பார்ப்பதில்லை. ஆனால்... மனிதகுலம் எந்நாள் தம்மைப் பெற்ற அன்னைக் குலத்துக்கு இத்தகைய விலங்குகளைப் பூட்டிற்றோ, அந்நாளே பாவத்தின் கருநிழல் இந்தச் சமுதாயத்தில் படிந்து விட்டது!..."
பூமகளின் இந்தக் குரலை எவரும் கேட்டதில்லை.
அமைதித் திரை கொல்லென்று படிகிறது.
சத்திய முனிவர் அவள் அருகில் வருகிறார்.
அவள் முடியில் கை வைக்கிறார். "மகளே, அமைதி கொள். பாவம், புண்ணியம், இருள், ஒளி ஆகிய இருமைகள் வையகத்தின் இயக்கத்தில் வரும் இயல்புகள். அந்த இரண்டையும் கடந்த மேலாம் ஞானத்தை எய்தும் முயற்சியே அமைதிப் பாதை! அமைதி கொள்வாய்."
"தாயே, நீங்கள் சொல்லும் செய்திகள் புரியவில்லை. கோத்திரமில்லாதவர் என்பவர் யார்? அந்தக் கருநிழல் எப்படி உங்கள் மீது விழுந்தது? நாங்கள் துடைத்தெறிவோம்!..."
பூமகள் மக்களை அணைத்துக் கொள்கிறாள்.
"மக்களே, நான் பேறு பெற்றவள். என் மீதும் உங்கள் மீதும் எந்தக் கருநிழலும் விழாது. இந்த வனமே பாவனமானது..."
அப்போதைக்கு இந்த வினாக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதே தவிர, பூமகளின் உள்மனம் ஓலமிட்டுக் கொண்டுதானிருக்கிறது.
நந்தமுனி வீழ்ந்த பிறகு, மிதுனபுரி மக்கள் வாளாவிருப்பாரா? மாயனும், பூவனும் நீலனும் அழிந்த பிறகு இந்த மக்களும் இன்னமும் அஹிம்சை என்று கைகட்டி இருப்பாரோ? விஜயன்... விஜயனின் துடிப்பை, கிளர்ச்சியை அவளால் உணர முடிகிறது. அஜயன் அவள் பக்கம் இருப்பான். ஆனால் விஜயனின் உடலில் அன்னை கூறினாற் போல் க்ஷத்திரிய இரத்தம் தான் ஓடுகிறது. அவன் பழிவாங்கத் துடிக்கிறான். மின்னலைத் தொடர்ந்து இடி வரும்.
இடி வருகிறது. அண்ட சராசரங்களை உருட்டிப் புரட்டும் இடி.
மிதுனபுரிப் பெண் படை, சந்திரகேதுவின் படையோடு மோதுகிறது.
தலைகள் உருள்கின்றன; பயிர்கள் அழிகின்றன; வனவிலங்குகள் அமைதி குலைந்து தறி கெட்டு ஓடுகின்றன. வேதவதியில் குருதி கலக்கிறது.
அஜயனும் விஜயனும் சோமனும், வேதவதிக்கரை, எல்லைக் கோட்டில், தங்கள் வில் - அம்பு கொலைக் கருவிகளுடன் நிற்கின்றனர்.
இவர்கள் அனைவருமே யாவாலி அன்னையின் ஆசிரமத்தில் தான் குடியேறி இருக்கிறார்கள்.
கேகயத்து மாதாவும், பெரியன்னையும், ஒரு புறம் முடங்கி இருக்கிறார்கள். அவந்திகா, கின்னரி, ரீமு ஆகியோர் உணவு தயாரிப்பதும் நீர் கொண்டு வருவதுமாக இயங்குகின்றனர்.
சத்திய முனியும் பிள்ளைகளுக்குக் காவல் போல் செல்கிறார்.
அன்று வானம் கறுத்து, மழைக்காலத்தின் துவக்கத்தை அறிவிக்கிறது.
ஆவணிப் பௌர்ணமிக்கு இன்னமும் நாட்கள் இருக்கின்றன.
இவ்வாண்டு முன்னதாக மழைகாலம் தொடங்கிவிடுமோ?
எரிபொருள், காய் - கனி கிழங்குகள் முன்னதாகச் சேமித்துக் கொள்வார்கள். இவ்வாண்டு...
"பிள்ளைகளே, நாம் இன்று உணவு சேகரித்து வருவோம்!" என்று அழைக்கிறார்.
யாவாலி அன்னையின் சமாதி மேட்டுக்கருகில் இருந்து, அவர் நெஞ்சுருகக் காலை வணக்கம் சொல்லி இறைஞ்சுகிறார்.
"வானும் மண்ணும் அமைதியடையட்டும்!
வளி மண்டலம் அமைதியடையட்டும்!
நீரும் காற்றும் அமைதியடையட்டும்!
உயிரின் துடிப்புகள் விளங்கட்டும்!
தறிகெட்ட ஒலிகள் சீர் பெறட்டும்!
சுருதியும் இலயமும் இணையட்டும்!
சோகங்கள் யாவும் கரையட்டும்!
சுருதி நாயக! உனை நம்பினோம்!"
---------
அத்தியாயம் 26
மழையில் நனைந்தவண்ணம், கனிகளும் கிழங்குகளும் சேகரித்து வந்து பிள்ளைகள்; குடிலில் வைப்பதைப் பூமகள் எடுத்துச் சீராக்கிப் பதனமாக வைக்கிறாள்.
நெருப்பு... அதைக் காத்து வைப்பது மிகக் கடினமாக இருக்கிறது. பசுக்களும் காளைகளும் அழிந்து போன நிலையில் சாண எரி முட்டைகள் சேமிக்கப்படவில்லை. கிழட்டுக் காத்யாயனிப் பசு மட்டுமே ஓர் ஓரம் ஒண்டி இருக்கிறது. காட்டு நாய்கள், மரக்கிளைகளில் தங்கி இருக்கும் பறவைகள் அவ்வப்போது தங்கள் மீதுள்ள நீரை விசிறியடிக்கும் போது மேனிகளை ஆட்டி அசைக்கும் ஓசைதான், மழையின் இசைக்குத் தாளமாக இருக்கிறது.
கல்திரிகையில் அவந்திகாவும் ரீமுவும் தானியம் அரைக்கிறார்கள்.
"குழந்தாய்..." என்று குரல் எழுப்பும் போதே அவந்திகாவுக்கு உணர்வுகள் மேலோங்கித் தழுதழுக்கிறது.
அந்த மாவில் சிறிது தேனை ஊற்றிப் பிசைந்து, கரைத்துப் பிள்ளைகளுக்கு ஊட்டமாகக் கொடுக்கிறார்கள்.
பெரிய கொட்டிலில் அமர்ந்து முனிவர் அவர்களுக்கெல்லாம் பாடல்களாகக் கல்வி கற்பிப்பார். அவர்களும் சேர்ந்திசைப்பார்கள்.
பூமகள், அவர்கள் அருகில் இருப்பதால், 'மழையே, நீ வாழ்க! எங்கள் இன்னல்களை நீயே இப்போதைக்குத் துடைக்கிறாய்!' என்று வாழ்த்துகிறாள். வீட்டைச் சுற்றி நச்சமைந்த நாகங்களும், கொடிய விலங்குகளும் சூழ்ந்தாலும் அச்சமில்லை. ஆனால், அக்கரையில் உள்ள படைகள் இங்கே வரலாகாது. இத்துணை குழப்பங்களுக்கும் தானே காரணம் என்பதை உணர்ந்திராத அந்த வெள்ளைக் குதிரையும் அவர்கள் வளைவில் மரத்தடியில் வந்து ஒதுங்குகிறது.
"அம்மா, குதிரை வந்திருக்கிறது!" என்று அவந்திகா கத்துகிறாள்.
"அடித்து விரட்டு!" என்று கடித்துத் துப்புகிறாள் கேகய அன்னை.
"குதிரை என்ன செய்யும்? அது காட்டில் திரிந்த பிராணி தானே? நாடு பிடிக்க ஓடி வா என்று மனிதர் சொன்னதைக் கேட்காதது அதன் உரிமை இல்லையா?"
"தாயே, நீங்கள் யார் என்று தெரியவில்லை, சத்திய முனிவர் யாவாலி அன்னை பற்றிக் கேள்விப்பட்டுள்ளோம். நந்தமுனியும் பூமையும் இளம்பருவத்தில் இருந்தே அறிமுகமானவர். ஆனால் தாங்கள்...?"
"நானும் நல்லது செய்கிறேன் என்று ஒரு பாவத்தைச் செய்தேன். எதற்காக இன்னும் உயிரோடு இருக்கிறேன் என்றே புரியவில்லை சகோதரி!"
"காரணம் இல்லாமல் எதுவும் நடப்பதில்லை. இந்தப் பன்னிரண்டாண்டுகள், இந்த அவந்திகாவும் நானும், நினைத்து நினைத்து வெதும்பிக் கொண்டிருந்தோம். கோத்திரம் அறியாதவர், கோத்திரம் அறிந்தவர் எல்லோருக்கும் நியாயங்கள் ஒரே மாதிரி என்று நான் சொன்னால் நீங்கள் நம்ப மாட்டீர்கள்.
கேகய மன்னனின் புதல்வி நான். ஆனால் என்னை வளர்த்தவள் என் அன்னை அல்ல. அந்த அன்னை, என் தந்தையிடம், அவளுக்குத் தெரிவிக்காத இரகசியம் ஒன்றைச் சொல்லும்படி வற்புறுத்தினாள். காரணம் ஒன்றுமில்லை. அவருக்கு ஈ, எறும்பு, பறவை மொழிகள் எல்லாம் தெரியுமாம். அவை ஏதோ கதை பேசிக் கொண்டிருந்தன. இவர் சிரித்தார்; அருகில் இருந்த என் அன்னை ஏன் சிரிக்கிறீர்கள் என்று கேட்டாள்.
'உனக்குச் சொல்ல முடியாது' என்று மறுத்தார். ஏன், ஏன்... என்று அவள் கேட்ட போது, அதைச் சொல்ல முடியாது என்று பிடிவாதமாக இருந்தார். இந்த அரசர்கள் நாளொரு மங்கையரை விரும்பி மாளிகைக்கு கொண்டு வரும் வழக்கம் தானே. என் தாய் சந்தேகப்பட்டுச் சொல்லியே ஆக வேண்டும் என்று அடம் பிடித்தார். 'சொன்னால் தலை வெடித்துவிடும்' என்று எந்த முனிவனோ அச்சுறுத்தினானாம். அதற்காகப் பிடிவாதம் பிடித்த என் அன்னையை, என் தந்தை அங்கேயே பாழுங்கிணறொன்றில் தள்ளிவிட்டார் என்ற செய்தியை நான் எப்படி அறிவேன்? அன்னைக்காக நள்ளிரவிலும், பகலிலும் கூவி அழுவேன். மந்தராதான் என்னை அரவணைத்து வளர்த்தவள். அரசகுலத்தின் துரோகங்களை அறியாத பணிப் பெண்டிர் யார்?...
அப்போது, இந்தப் பூமகளைக் கானகத்துக்கு அனுப்ப அவளே கருவியானாள். ஆனால் சகோதரி, பெற்ற மகனாலும் வெறுத் தொதுக்கப்பட்ட பாவி நான். இந்த சீதேவியை, கருப்பிணியாகக் கானகத்தில் விட்டு வா என்று சொன்னவனின் குடையின் கீழ் நான் முள்ளில் இருப்பது போல் இருந்தேன். சகோதரி உங்கள் வரலாற்றை அறிவதில் எனக்கு எந்தக் கருத்தும் இல்லை. இந்த பூமகளை, அந்த நிலையில் அரவணைத்து அன்புடன் பேணி வாழ வைத்திருக்கிறீர்கள். இதுவே என் வாழ்வில் நான் அடையும் அமைதி..."
மழை பயிர்களை, உயிர்களைத் தழைக்கச் செய்கிறது. குளம், குட்டைகள், ஆறுகளில் மீன்கள் களித்துப் பெருகுகின்றன. நெருப்புக் காத்துப் பக்குவப்படுத்தி, பிள்ளைகளுக்காக மாதுலன் மீனுணவு கொண்டு வருகிறான்.
பெரியன்னை உணவே கொள்வதில்லை. நாளுக்கு நாள் நலிந்து, பேசுவதும் நூலிழையாக நைந்து போகிறது.
"தாயே, சிறிது கூழ் அருந்துங்கள். ஏதேனும் உட்கொண்டு மூன்று நாட்களாகின்றன."
பூமகளின் முகத்தை நலிந்த கரங்களினால் தடவுகிறாள்.
"பிள்ளைகள் எங்கே?..."
பூமகள் குடிலின் வெளியே வந்து பிள்ளைகளைக் கூப்பிடுகிறாள். அந்த முற்பகல் நேரத்தில் சுற்றுச் சூழல் தோட்டம் சீரமைக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.
மழைக்காலம் ஓய்ந்ததற் கடையாளமாக, வானவன் வயிரச் சுடர் பொலிகிறான். அமுதம் அருந்திய தாவரங்கள் எத்துணை வண்ணங்களில் அவனுக்கு நன்றி சொல்கின்றன? ரீமுவின் செவலைப் பசு கன்றை ஈன்றிருக்கிறது. அது நிலை கொள்ளாமல் துள்ளி விளையாடுகிறது. யாகக் குதிரை... அதுவும் சற்று எட்ட, இந்த வானகத்திலேயே புல் மேய்ந்து கொண்டிருக்கிறது. தாறு மாறாக வளர்ந்திருக்கும் பசுமைகளைச் சீராக வெட்டிக் கழிக்கிறான் விஜயன். அஜயன் அவற்றை ஓரமாக அப்புறப்படுத்துகிறான்.
"அஜயா, விஜயா, நாநியம்மா கூப்பிடுகிறார். வாருங்கள்!" அவர்கள் உடனே கைகால்களைச் சுத்தம் செய்து கொண்டு வருகிறார்கள். வரும் போது அழகிய மலர்க்கொத்துகளைக் கொய்து கொண்டு வருகிறார்கள்.
"நாநியம்மா, அஜயனும் விஜயனும் வணங்குகிறோம்..."
பூங்கொத்துக்களை அவள் நலிந்த கரங்களில் வைக்கின்றனர். வெண்மையாக மலர்ந்த அடுக்கு நந்தியாவட்டை, அரளி ஆகிய மலர்கள்.
முதியவளுக்குப் பார்வை துள்ளியமில்லை. இருந்தாலும் அவள் காட்டிக் கொள்வதில்லை. மலர்களைக் கண்களில் ஒத்திக் கொள்கிறாள்.
"குழந்தைகளா, அம்மா சொல்லித்தான் நாநியம்மாவை வந்து பார்ப்பீர்களா?" அவர்களை அருகில் வைத்து, தழுவி உச்சி மோந்து கண்ணீர் சொரிகிறாள் பெரியன்னை.
சூடு செய்த நீர் சிறிது கொண்டு வந்து பிள்ளைகளிடம் தருகிறாள் பூமை. மிதுனபுரியில் இருந்து நந்தசுவாமி வாங்கி வந்த மரக்குடுவையில் வெதுவெதுப்பான நீரை, பிள்ளைகள் வாங்கி, அவளை அருந்தச் செய்கின்றனர்.
ஓமப்புல்லின் வாசனை...
நிறைவுணர்வுடன் அருந்துகிறாள்.
"குழந்தைகளா?... நீங்கள்... இந்தக் காட்டிலேயே இருப்பதை விரும்புகிறீர்களா?" அவர்கள் வியப்புடன் அவளை நோக்குகின்றனர்.
"இந்த இடம் எங்கள் இடம்; எங்கள் அன்னையின் இடம்; நாங்கள் இங்கே இருப்பதை விரும்பாமல் எப்படி இருப்போம்...?"
குடிலின் இன்னொரு புறத்தில் இதுகாறும் அமைதியாக இருந்த கேகய அன்னை, உடனே, "குழந்தைகளா, உங்கள் தந்தை மாமன்னர் என்பது தெரியுமோ உங்களுக்கு?" என்று பருத்தி வெடித்தாற் போல் உண்மையைச் சிதற விடுகிறாள்.
அவர்கள் சட்டென்று திரும்பிப் பார்க்கின்றனர்.
"ராஜமாதா, என்ன சொல்கிறார்?..."
"குழந்தைகளா, நான் உங்களுக்கு ராஜமாதா இல்லை; உங்கள் பாட்டி... நீங்கள் ஆசையோடு 'நாநியம்மா' என்றழைக்க வேண்டியவள்... இங்கே வாருங்கள்..."
அவர்கள் திகைத்து நிற்கையில் பூமகள் தலைகுனிந்து மவுனம் சாதிக்கிறாள். "பூமகளே, ஏன் மவுனம் சாதிக்கிறாய்? எத்தனை நாட்களுக்கு இப்படி ஒருவரை ஒருவர் அறியாத வண்ணம் கண்ணாமூச்சி ஆட முடியும்? ஊர் அபவாதம் என்று உனக்குப் பெரும்பாதகம் செய்து விட்ட உன் நாயகனைப் பற்றிய உண்மையை இந்தப் பிள்ளைகளும் தெரிந்து கொள்ளட்டும்! பாவத்தின் கருநிழல் எங்கே தொடங்கியது என்று புரிந்து கொள்ளட்டும்!"
"அம்மா...!" என்று நடுங்கும் குரலுடன் அவள் காலில் வீழ்ந்து பணிகிறாள்.
"அதெல்லாம் தெரியாத உண்மைகளாக மேடிட்ட குவியல்களுள் இருக்கட்டும் தாயே!..."
அந்த அன்னை, அன்புடன் அவள் முகத்தில் விழுந்தலையும் கூந்தலை ஒதுக்குகிறாள். "வாழ்நாளெல்லாம் தவக்கோலத்தில் கழியும் உன்னால் இந்த மனித குலமும் பாவனமாகிறதம்மா! குமரப்பருவத்தின் தலை வாயிலில் நிற்கும் பிள்ளைகள் தம் தந்தையின் செய்கை பற்றி அறியட்டும்! அசுவமேதக் குதிரை, அவர்களுக்கு உயிர்கொடுத்த தந்தையின் அரசிலிருந்து ஏவி விடப் பட்டதென்று அறியட்டும்! உயிர் விளக்கை இருட்கானகத்துக்கு அனுப்பிவிட்டு உயிரில்லாப் பொற்பதுமையை வைத்து வேள்வி செய்யும் பொய்மையை உணரட்டும்!... குழந்தாய், உனக்கிழைக்கப்பட்ட இந்த அநீதி உலகறிய வேண்டும்!..."
கிளர்ந்தெழுந்த சொற்கள் எதிரொலியில்லாமல் நிற்கின்றன. அன்னைக்கு மூச்சு வாங்குகிறது. மரக்குவளையில் நீர் கேட்டு வாங்கி அருந்துகிறாள்.
சத்திய முனியும் அங்கே நிற்கிறார். "மகளே, உன் மைந்தர்களின் எதிர்காலம் பற்றி நீ எதுவும் சிந்திக்கவில்லையா?..."
அவள் தரையைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். "தாங்கள் போர் மூளக்கூடாது என்ற எண்ணத்தில் அவர்களிடம் தூது சென்றீர்கள். ஆனால் தூது செல்லக்கூடிய தகுதியே இல்லை என்பது போல் இங்கே வன்முறைகள் நிகழ்ந்திருக்கின்றன. க்ஷத்திரிய வம்சத்தின் பராக்கிரமங்கள், வில்-வாள், தோள் வலியில் தான் இருப்பதாக நிரூபித்து வருகிறார்கள். என் மைந்தர்களுக்கு அவர்கள் யார் என்று தெரிந்து விட்டது. இனி முடிவெடுக்க வேண்டியது அவர்களே!..."
"போர் இப்போதும் தொடர்ந்திருக்கிறது. ஒரே ஆறுதல் ஆறு தாண்டி வரவில்லை. மிதுனபுரியையே அழிக்க முனைந்திருக்கிறார்கள். யாருடைய வெற்றி, எதற்கு வெற்றி என்று புலப்படவில்லை. குதிரை இங்கே இருக்கிறது. அது இப்போது யாகக் குதிரை இல்லை..."
"யாகம் செய்யும் ஆசான்களுக்கு, இப்படிக் குதிரை கட்டறுத்துக் கொண்டு ஏவியவரை உதைத்தால் என்ன செய்வது என்ற சிக்கலில் இருந்து மீளத் தெரியவில்லை போலும்!..."
இப்போது யாருக்கு வெற்றி, யாருக்குத் தோல்வி?... நந்தமுனியைக் கொன்ற காரணத்தால், மிதுனபுரியே போர்க்கோலம் கொண்டு இவர்கள் படையை அழிக்க முன்வந்து விட்டது...
மாதுலன் வருகிறான்...
அவன் ஏதோ செய்தி கொண்டு வந்திருக்கிறான் என்று புரிகிறது.
"என்னப்பா?..."
"ராஜா!... சேனை... குடை" என்று சைகை செய்கிறான். முனிவர் வெளியே செல்கிறார். பையன்களும் வெளியே தயக்கத்துடன் நின்று பார்க்கின்றனர்.
"வரவேண்டும் மாமன்னா?... வாருங்கள்..."
உள்ளே வந்து, அவர்களை உபசரிக்க, நீர், இருக்கை எல்லாம் எடுத்துச் செல்கின்றனர்.
"அஜயா, விஜயா, பாட்டனை வந்து வணங்குங்கள்! குழந்தாய், மகளே, வேதபுரி மன்னர்..."
வேதபுரி மன்னர்...
அந்நாள் அரக்கமன்னன் அவரை வெட்டிவிட்டதாக அவள் முன் தலையைக் கொண்டு வந்து காட்டச் செய்த போது அவள் சுருண்ட அடிவயிறு தொய்ய அழுது துடித்தாளே, அது நினைவுக்கு வருகிறது. அந்த உணர்வுகள் அனைத்தும் இப்போது இறுகி விட, அவள் கல்லாகி விட்டாள்.
மகிமை பொருந்திய, மாமன்னர், தருமபரிபாலனம் செய்யும் கோசல நாட்டுப் பிரான், அந்தத் திருமகனின் பக்கம் தானே இவருடைய வெண்கொற்றக் குடையும் சாயும்? அத்துணை இடைஞ்சலிலும் கடல் தாண்டித் தூது வந்த வானர வம்சத்தினனும் இவள் பக்கம் இளகவில்லையே? நியாயங்கள் மண்ணையாளும் வேந்தர் பக்கமே! நியாயங்கள் எல்லாம் மேற்குல ஆதிக்கங்களுக்கே...
"கண்ணம்மா..."
நைந்த குரல் அவளை உலுக்குகிறது. பெரியன்னைக்கு மூச்சுத் திணறுகிறது.
"அவரைப் பணிந்து கொள்ளம்மா! நீயும் உன் மக்களும் இந்தக் கானகத்தில் உணவுக்கும் உடைக்கும் இருப்புக்கும் நெருப்புக்கும் பொழுதெல்லாம் போராடும் வாழ்வுக்கோ உனை விதித்தது? மேலும் இந்தப் போர் முடிவு பெற வேண்டும். அவரே நடுநிலையில் நிற்கக் கூடியவர்..."
பூமகள் அவள் கையை அழுந்தப் பற்றுகிறாள். அவள் எழும்பும் மார்பை மடியில் சாத்திக் கொண்டு நீவி விடுகிறாள்.
"குழந்தாய், நாம் எதிர்த்துக் கேட்க இயலாத அபலைகளாகிப் போனோம். அதனால் இலகுவில் தியாகிகள் என்ற பெயரை வாங்கிக் கொள்ள வருத்திக் கொள்கிறோம். நீ தியாகியாகி இந்த மண்ணில் மடிய வேண்டாம். உன் தந்தை உன்னை மீண்டும் ஏற்க வந்துள்ளார்..."
"இல்லை தாயே, நான் இப்போது சுதந்தரமானவளாக இருக்கிறேன். என் மைந்தர்களுக்கும் தம் ஆதிக்க குலம் பற்றிய தன்னுணர்வு வரவேண்டாம். இந்தக் கானகத்தில் மனிதர்களோடும் விலங்குகளோடும், இயற்கையோடும் வாழும் வாழ்வே எங்களுக்கு ஏற்புடையது!"
"மகளே, உன் மீது அபாண்டப் பழி சுமத்தியவர்களுக்கு உன் நியாயத்தை நிரூபிக்க வேண்டாமா?..."
கேகய அன்னைக்கு அவள் தலையசைக்கிறாள்.
"யாருக்கு யாரும் நிரூபிக்க வேண்டாம்; அவரவர் உள்ளங்களில் விழுந்துவிட்ட நிழலே வதைக்கும். அதையும் நான் விரும்பவில்லை. தேவி, அந்த அரண்மனை வாழ்வு நான் ஏற்க முடியாமல் விட்ட வாழ்வு..."
அப்போது வேதபுரி மன்னரின் நெடிய உருவம், குடிலுக்குள் தலை வணங்கி நுழைவதைப் பூமகள் காண்கிறாள்.
அவள் முன் தலை மீது கைவைத்து ஆசி மொழிகிறார்.
"மகளே, என் மீது உன் மனத்தாங்கல் புரிகிறது. என்னால் எதையும் செய்ய முடியவில்லை. உன் மகத்துவத்தை நீ உன் மவுனத்தினாலேயே புரிய வைத்துவிட்டாய். இந்த சத்திய முனிவருக்கு நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன்..." என்று தழுதழுக்கிறார்.
"அதற்காகத் தங்கக் கொப்பி போட்ட மாடுகளும் அடிமைகளும் பரிசாக வழங்குவீர்களா என்று கேளுங்கள் முனிவரே!..."
இந்தக் காரமான குரல் எங்கிருந்து வருகிறது என்று திடுக்கிட்டாற் போல் பூமகள் திரும்பிப் பார்க்கிறாள்.
மன்னர் தலை குனிந்து நிற்கிறார்.
"எந்தையே, மகளைப் பார்த்துவிட்டீர்கள்; போய் வாருங்கள். நான் தங்களை வருத்தத்துடன் போகச் சொல்லவில்லை. எனக்கு இனி எந்த அரண்மனையிலும் இடமில்லை. தேடித் தேடி வில்லை வளைத்தொடித்த வெற்றி வீரர் என்று கோத்திரம் தெரியாத மகளைத் தாரை வார்த்துக் கொடுத்தீர்கள். இத்துணை அவலங்களுக்கும் நானே காரணமாயிருக்கிறேன். முதலில் பதினான்காண்டுகள்; இப்போது பன்னிரண்டாண்டுகள்... எனக்கு உகந்த இடம் இதுவே..."
"மகளே, சக்கரவர்த்தித் திருமகனின் உள்ளத்தை நான் அறிவேன். ஒவ்வொரு கணமும் நெக்குருகிக் கொண்டு இந்த வேள்வியைத் தொடங்கினார். இது நிமித்தமாக, பிள்ளைகள் தந்தையைக் கண்டு சேர வேண்டும், நீங்கள் உரிய வாழ்வுக்கு வர வேண்டும் என்பது என் அவா... இந்த வேள்வி இப்படி இரணகளத்தில் முடியாமல் நிற்கலாமா, மகளே?"
கேகய மாதா வெடிக்கிறாள். இது பூகர்ப்பத்தில் இருந்து பிறக்கும் அனல் பொறிகளைப் போல் சிதறுகின்றன.
"வேள்வி! ஆயிரம் பதினாயிரங்களாகப் பொன்னை இறைத்து யாகசாலை அமைக்கும் போது, குடியிருந்த வேடுவ மக்கள் நிலைகுலைகிறார்களே, அது வேள்வியா? திரவியங்கள் சேகரிப்பதும் மந்திரங்கள் சொல்பவரைக் கூப்பிடுவதும், மேற்குலத்தாருக்கே தானங்கள் என்று வாரி வழங்கி அகந்தைக் கிழங்கை ஆழ இறக்குவதும், பிறர் மண்ணை ஆக்கிரமிக்கக் குதிரையை விரட்டுவதும், பிறகு அதையே பலியிடுவதும் வேள்வியா? அதைப் புரிந்து கொண்ட அந்த உத்தமப் பிராணி, காவலரை உதைத்துத் தள்ளி இங்கே அடைக்கலம் புகுந்திருக்கிறது. எனக்குப் பட்டும் பொன்னும் அலங்காரமும் வேண்டாம் என்று சுதந்தரமாகத் திரிகிறது. கண்டீரா? உமது மகள் தியாகம் என்ற அக்கினி வேள்வியில் இருபத்தெட்டு ஆண்டுகளாகக் குளித்துப் பொன்னாய் ஒளிருகிறாளே, அந்த வேள்வி எப்போது, யாரால் நிறைவேற்றப்பட இருக்கிறது. இதற்கு மறுமொழி கூறுங்கள்!"
இந்த வேள்விக் குண்டத்தில், யாருடைய சுகங்களை, யாருடைய தருமங்களை ஆஹூதியாக்கியிருக்கிறார்கள்?
காலம் காலமாக ஒவ்வொரு தாயின் கருப்பைச் சுவர்களையும் உதைந்து கொண்டு வளர்ந்து முழுமையும் அறிவும் ஆண்மையும் பெறும் வருக்கம், யாருடைய நலன்களை வேள்விக் குண்டத்தில் ஆஹூதியாக்கிக் கொண்டிருக்கிறது?...
தாயையும் பிள்ளைகளையும் ஒதுக்கிவிட்டு வேள்வியாம். பரிபூரணமம்? பொற் பிரதிமை...
ஆஹாஹா என்று அந்த அன்னை சிரித்த சிரிப்பு, ஏதோ ஊழித்தாண்டவத்துக்கான முன்னுரை போல் பூமகளுக்கு விதிர்விதிர்ப்பைத் தோற்றுவிக்கிறது.
குனிந்து அந்த அம்மையின் தோள்களைப் பற்றித் தழுவுகிறாள்.
----------
அத்தியாயம் 27
போரின் சுவடுகள் இக்கரையில் பதியவில்லை. வேதபுரி மன்னர் வந்து சென்ற பிறகு, ஓரளவுக்கு அமைதியாக இருப்பதாகவே பூமகளுக்குத் தோன்றுகிறது. என்றாலும், இதை அமைதிக்கான நிறைவு என்று கொள்வதை விட, ஒரு புயலுக்கு முந்தைய கட்டமோ என்றும் தோன்றுகிறது.
கேகய மாதாவின் அனல்பொறிச் சிரிப்பில் உதிர்ந்த எது வேள்வி? எது வேள்வி? என்ற வினா பூமகளுக்கு இரவிலும் பகலிலும், நீரெடுக்கும் போதும், பிள்ளைகள் கொண்டு வரும் கனிகளையும் கிழங்குகளையும் பக்குவம் செய்யும் போதும், தானியங்களை மாவாக்கும் போதும் ஒலிக்கின்றன. திடீரென்று அரண்மனையில் பணிபுரிந்த பிஞ்சுச் சிறுவர் சிறுமிகளை நினைக்கிறாள். கல்திரிகையைக் கட்டி இழுக்கும் தளிர்விரல்களைப் பார்ப்பது போல் தோன்றும். வேள்வி... குஞ்சும் பிஞ்சும் தம் உழைப்பை எந்த வேள்விக்கு நல்குகின்றன...
இவள் தானியம் குற்றும் போது, வேடுவர் குடியில் இருந்து பூரு வருகிறது. கொழுவிய கன்னங்கள், ஆறே வேனில் பருவங்கள் தாண்டாத சிறுமி. இடையில் வெறும் இலை மறைவுதான். வேனில் பருவமாயிற்றே? கூந்தல் கற்றை கற்றையாக விழுகிறது. மாநிற மேனி... சிரிப்பு... முன்பற்கள் விழுந்து முளைக்கும் கோலம். ஈறுகள் கறுத்து, வெள்ளையாகப் பற்கள்... இது விடுதலைச் சிரிப்பு; கொத்தாக மீன் கொண்டு வந்து அவந்திகாவிடம் கொடுத்துவிட்டு மீண்டும் சிரிக்கிறது.
இந்தச் சிரிப்பு மொழிக்குத் தேவையில்லாத அடையாளம். இவர்கள் பேசும் திருத்தமில்லாத மொழி முதலிலெல்லாம் பூமகளுக்குப் புரியாது. ஆனால் அவள் மைந்தர்கள் அதே மொழியில் தான் வளர்ந்தார்கள். சத்திய முனிவரின் பயிற்சியில் பல்வேறு மொழிகளை அவர்கள் இப்போது அறிந்திருக்கிறார்கள்.
தானியம் புடைக்கும் பூமகள், தேய்த்த பால் மணியரிசியை அந்தக் குழந்தையிடம் கொடுக்கிறாள். பூரு, சிரித்துக் கொண்டே வாங்கித் தின்னும் அழகை மகிழ்ச்சியைப் பார்க்கிறாள்.
அப்போது, சிரித்துக் கொண்டே பால்கிழங்குகள் சருகுப்பை நிறையச் சுமந்து கொண்டு வந்து போடுகிறாள், அதன் அன்னை...
"தீனியா? எப்போதும் வாய் அரைபடுகிறது! இதுதான் இதற்கு யாகம்..." என்று சொல்லி எச்சில் பதியும் முத்தமொன்று அதன் கன்னத்தில் வைக்கிறாள். பூமகளுக்கு ராதையின் நினைவு வருகிறது. தாய் மக்கள் என்ற இயல்பான கசிவுகள் கூட வறண்டு ஊசிக் குத்தல்களாகும் அரண்மனை உறவுகள்...
"வனதேவி! பெரியம்மா, படுத்தே கிடக்கிறாரே? ஏதேனும் கஞ்சி குடித்தாரா?..."
பூமகள் உதட்டைப் பிதுக்குகிறாள்.
இந்த ஆசிரமத்தின் வாயிலில் வரிசையாக அசோக மரங்கள் எழும்பியிருக்கின்றன. இவற்றைச் சிறு பதியன்களாக வைத்த நாட்களைப் பூமகள் அறிவாள். அவள் பிஞ்சுப் பாலகர்கள் கையால் முனிவர் நடச் செய்தார். அந்த மரங்கள் குளிர்ச்சியான இலைகளுடன் இருண்ட மேகம் போல் கவிந்து இடை இடையே செங்கொத்து மலர்களுடன் மிக அழகாக இருக்கின்றன. மரத்தில் பறவைகள் வந்து தங்குகின்றன. முட்டையிட்டுக் குஞ்சு பொரித்துப் பாதுகாக்கின்றன. வேனிலின் வெம்மையே இல்லை. பின்புறமுள்ள தாமரைக் குளத்தில் நீர் படிகமாகத் தெரிகிறது. கேகயத்து மாதாவுக்குக் குளக்கரையும், தோப்பும் மிகவும் உவப்பாக இருக்கின்றன. பூருவின் தாய் குந்தி, இன்று பல செய்திகளைப் பாடம் கேட்டுக் கொண்டிருக்கிறாள்.
முற்றத்தில் அவற்றைச் செவி மடுத்துக் கொண்டே தனக்குள் சிரித்தவளாய், பூமகள் தானியம் உலர வைக்கையில் பேச்சுக்குரல் கேட்கிறது.
அவள் முற்றத்து ஓரம் நடைபாதையிலே காவலர், குடை வருவதைப் பார்க்கிறாள். உடலிலும் உள்ளத்திலும் ஒரு சிலிர்ப்பு ஓடுகிறது. அசோக மரத்தடியில் தான் அன்னை இருக்கிறார் போலும்!
பேச்சுக் குரல் கேட்கிறது...
மெல்லிய இழையைச் சுண்டினால் ஏற்படும் அதிர்வுகள் போல் அதிர்வுகள்...
"தாங்கள் யாருக்கும் எதுவும் தெரிவிக்காமல் தனியே வரலாமா? தங்கள் விருப்பம் இதுவென்பதை அறிவித்திருந்தால் தக்க பாதுகாப்புடன் கூட்டிக் கொண்டு வந்திருப்போமே, தாயே?"
இவர்... குரலுக்குரியவர்... இளையவர்...
"ஆமாமப்பா! பாதுகாப்பாக வனத்தில் கொண்டு வந்து விடுவதில் அநுபவம் வாய்ந்த பிள்ளையாயிற்றே!... இப்போது என்னைத் தேடி இங்கு வர, உன் தமையன், சக்கரவர்த்தி ஆணையிட்டானா?..."
"மன்னிக்க வேண்டும் தாயே! தமையனாரும் இங்கு வந்துள்ளார்; அக்கரையில் இருக்கிறார்..."
பூமகளுக்கு உடல் முழுவதும் குப்பென்று வெம்மை பரவுகிறது. கையில் பற்றியுள்ள முறம் நழுவுகிறது.
அவர் வந்திருக்கிறாரா? எதற்கு? எதற்கு?
வில்லும் அம்புமாய், யாகக்குதிரையை மீட்டுச் சென்று யாகத்தை நிறைவேற்ற வந்திருக்கிறாரா? குலகுரு, குலமில்லாத குரு என்று தர்மசாத்திரங்கள் அனுப்பி வைத்திருக்கின்றனவா?
ராணி மாதாவின் வினாக்களை ஏந்த அவள் செவி மடல்கள் சித்தமாகின்றன.
"ஏனப்பா? யாகக் குதிரை யாகம் வேண்டாம் என்று அடைக்கலம் புகுந்திருப்பதை அறிந்து அதைப் பற்றிச் செல்ல வந்தீர்களா? அது யாகக் குதிரையுமில்லை; போகக் குதிரையுமில்லை. எந்தப் பொற்பிரதிமை பட்ட மகிஷியையும் அது மகிழ்விக்காது!"
"தாயே! தாங்கள் சாந்தமடைய வேண்டும். தமையனார், சக்கரவர்த்தி. க்ஷத்திரிய தர்மம் மீறி எந்தச் செயலையும் செய்யவில்லை. குடிமக்களின் அவநம்பிக்கையை அகற்ற வேண்டியது அரச தருமம்..."
"இந்த அரச தருமம் நிறை சூலியை வனத்தில் விட்டு வரச் செய்யும். அத்தகைய அரச தருமத்தில் எங்களுக்கு ஏது இடம்? இந்தத் தரும உரையாற்றத்தான் அண்ணனும் தம்பியும் வந்திருக்கிறீர்கள்?"
"மீண்டும் மன்னிப்புக் கோருகிறேன். தாயே, மன்னரின் ஆணையை நிறைவேற்ற வேண்டிய நிலையில் நான் எப்போதும் இருக்கிறேன். எனக்கென்று தனியான விருப்பு வெறுப்புகளுக்கு இடமில்லை..."
பூமகள் அவர்களை மறைவாக நின்று பார்க்குமிடம் தேடி நிற்கிறாள். இளையவன் தான். அந்தக் காலத்து இளமையின் செறிந்த முகம் வாடியிருக்கிறது. முடியும் உடலும் மாசுபடிந்திருக்கின்றன. வில்-அம்பு இல்லாமல் வெறும் மேலாடை போர்த்திய மேனி... கீழ் நோக்கிய பார்வை...
சத்திய முனிவர் அங்கு வந்து, தேவியும் மைந்தர்களும் வனத்தில் வாழ்வதைத் தெரிவித்து, அவர்கள் அங்கு இருக்கையில் வெறும் பொற் பிரதிமையை வைத்து வேள்வி செய்வது தருமம் அன்று என்று எடுத்துரைத்தாராம். இது யுகயுகத்துக்கும் சக்கரவர்த்தித் திருமகன் பெயருக்குக் களங்கம் விளைவிக்குமே ஒழிய, புகழ் பரப்பாது என்றும் அறிவுறுத்தினாராம்... மன்னர் தம் அமைச்சர், குலகுரு ஆகியோரைக் கலந்தாலோசித்த போது, அவர்கள் இந்த யோசனை கூறினார்களாம்...
அவன் அந்த யோசனையைப் பற்றி எதுவும் முத்துத் தெறிக்குமுன், கேகயத்து அன்னையின் குரல் அனலில் காய்ந்த வெம்மையுடன் வெளிப்படுகிறது.
"என்ன யோசனை? பிள்ளைகள் வயிற்றில் இருக்கும் போது அக்கினிப் பிரவேசம் தகாது; வனத்துக்கு விரட்டினீர்கள். இப்போது ஓர் அக்கினிப் பிரவேசம் செய்து அழைத்துக் கொண்டு அசுவமேதம் புதிதாகச் செய்யலாம் என்றார்களா?"
"தாயே, மன்னருக்குத் தேவியைப் பிரிந்திருந்த காலம் சுகமென்று கருதிவிட்டாற் போன்று சொல்லால் சுடுகிறீர்கள். அவர் படும் வேதனை சொல்வதற்கரியது... இப்போது யோசனை நான் சொல்கிறேன். குழந்தைகள் இருவரும் சென்று தந்தையைப் பார்க்க வேண்டும். அவருடைய புண்ணான இதயத்துக்கு அது ஓரளவு ஆறுதலாக இருக்கும். நான் குழந்தைகளை அழைத்துச் செல்ல அநுமதி தர வேண்டும்..."
பூமகள் இதை எதிர்பார்க்கவில்லை.
அஜயனும் விஜயனும் அங்குதான் நிற்கிறார்கள். ஆனால் சத்திய முனிவர் இதில் தாம் தலையிடக்கூடாதென்று கருதினாற் போன்று, "மகளே, வந்திருப்பவர் நம் விருந்தினர். அவரை முற்றத்துக்கு அழைத்துச் சென்று, நீரும் இருக்கையும் தந்து உபசரிக்க வேண்டும். பிறகு மாதாவின் யோசனைப் படி செய்யுங்கள்" என்று கூறிவிட்டு நழுவுகிறார்.
பூமகள் நீர் கொடுக்கிறாள்; அவந்திகா இருக்கையளிக்கிறார்.
கனிகளும், தாவர உணவுமாகக் கொண்டு வைக்கின்றனர்.
"தேவிக்கு வணக்கம்" என்று நடுங்கும் குரலில் கூறி இளையவன் அவளை வணங்குகிறான். அவள் நிமிர்ந்து பார்க்கவில்லை.
கேகய அன்னை, பேரப்பிள்ளைகளை அருகில் அமர்த்திக் கொள்கிறாள்.
"குழந்தைகளே, உங்கள் தந்தை கோசல மாமன்னரைச் சென்று பார்க்கிறீர்களா? அக்கரையில் தங்கி இருக்கிறாராம்! அசுவமேதக் குதிரையை இங்கு அனுப்பியவர். உங்களுக்கு வேறு ஏதேனும் விளையாட்டுப் பொருட்களைக் கொடுத்து, குதிரையை மீட்டு விடலாம் என்று நினைக்கிறார் போலிருக்கிறது. நீங்கள் க்ஷத்திரியர் தாம். போர் செய்வீர்களா?"
"நாநியம்மா, எங்கள் குரு சொற்படி நாங்கள் நடப்போம். இந்தச் சக்கரவர்த்தித் தந்தையை எங்களுக்குத் தெரியாது! எங்களுக்கு குருசாமிதாம் எல்லாமும்!"
சத்தியமுனிவர் அங்கு வந்து, "போய் வாருங்கள். பார்த்து விட்டு வாருங்கள்..." என்று விடை கொடுக்கிறார்.
உடனே எதிர்க்க முடியவில்லை. ஆனால் பூமகளுக்கு மனம் அமைதியிழக்கிறது.
பிள்ளைகளை அனுப்பியது சரிதானா?
இளையவன் உணவு கொள்ளும் போது கசிந்துருகிக் கண்ணீர் கலங்க, அவர்களை அழைத்து உச்சிமோந்தான். தான் எடுத்த கனிகளைப் பிளந்து அவர்கள் வாயில் ஊட்டிவிட்டுத் தானருந்தினான். அவளுக்கே நெஞ்சு கசிந்தது. ஆனாலும், அவள் ஏமாந்திருக்கிறாள்; பேதை என்று நிரூபிக்கப் பட்டிருக்கிறாள்... வந்தவர் நேராக இங்கே வர வேண்டியது தானே? அக்கரையில் நின்று கொண்டு இளையவனை அனுப்பி எதற்காக நாடகம் ஆட வேண்டும்?
சத்திய முனிவரும் அவருடன் சேர்ந்து நாடகம் ஆடுகிறாரா?...
நந்தசுவாமியின் இழப்புணர்வு இப்போது குழி பறிக்கிறது. துயரம் தாளாமல் வெதும்புகிறாள்.
பெற்றோர், வளர்ப்புத் தந்தை, கணவர் எல்லோரும் அவளைத் தனிமைப் படுத்தினார்கள். இப்போது இந்தப் பிள்ளைகளும் அவளை அந்நியப்படுத்தி விடுமோ?...
அவள் குடிலுக்குள் சுருண்டு கிடக்கும் முதியவளிடம் சென்றமருகிறாள். கேகய அன்னை வந்த பிறகு, தன் பொறுப்பை அவளிடம் ஈந்துவிட்டதாகத் தோன்றுகிறது. மூலையில் ஒடுங்கிச் சுருண்டு கிடக்கிறாள்.
"பெரியம்மா..." என்று எழுப்புகிறாள். விழித்துப் பார்க்க வெகு நேரம் ஆகிறது.
"கண்ணம்மாவா? அரண்மனையில் இருந்து எப்போது வந்தாயம்மா?..."
"நான் இங்குதான் உங்களுடன் இருக்கிறேன் தாயே... அக்கரையில் மன்னர், என் நாயகர் இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு வந்திருக்கிறாராம். அவர் பிள்ளைகளைப் பார்க்க விரும்புகிறாராம். இளையவர் வந்திருந்தார். சத்திய முனிவர் அனுப்பலாம் என்றார்; அழைத்துச் சென்றிருக்கிறார்... எனக்கு என்ன செய்வதென்று புரியாமல் கவலையாக இருக்கிறது, தாயே!" அவளுக்கு இவள் குரல் கேட்டதாகவே மறுமொழி வரவில்லை.
"அம்மா... எனக்கு... ஒரு வேளை பிள்ளைகளை வைத்துக் கொண்டு என்னைத் தனிமைப்படுத்தி விடுவார்களோ என்று அச்சமாக இருக்கிறது..."
அன்னை ஓய்ந்து போயிருக்கிறாள். எல்லாத் துடிப்புகளும் ஓய்ந்து இறுதிச் சொட்டுகளில் நிலை பெற்றிருக்கின்றன. அணையும் பொறி... சாம்பல் மூடிவிடாது.
"அம்மா... பெரியம்மா, உங்கள் கண்ணம்மா, என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள்!"
"எனக்குக் களைப்பாக இருக்கிறது. மகளே, ராணி மாதாவிடம் கேள். உனக்கு ஒன்றும் வராது; உன் பிள்ளைகள் உன்னை விட்டுப் போக மாட்டார்கள்..."
பொழுது சாய்ந்து இருள் பரவிவிட்டது. அவர்கள் வரவில்லை. ராணிமாதாவுக்குப் பாலைக் கறந்து கொடுக்கிறாள்.
அந்தி வந்தனத்துக்குப் பிறகு, வேடுவக்குடி சீடப்பிள்ளைகளுடன் முனிவர் இனிய குரலில் தெய்வங்களைப் போற்றும் பாடல் ஒலியில் சிறிது மன ஆறுதல் கிடைக்கிறது. மாடத்தில் திரி போட்டுத் தீபம் ஏற்றி வைத்துச் செல்கிறாள் குந்தி. பொக்கை வாயுடன் முற்றத்தில் பூரு குதித்தாடுகிறது. நிலவும் நட்சத்திரங்களும் செய்யும் மாயம் தோன்றுகிறது.
ஒருகால் இரவு நிலவில் நடந்து வருவார்களோ?
என்ன பேதமை...?
"ஆமாம் அவந்திகா எங்கே?... அன்னையே, அவந்திகா எங்கே? வேடுவர் குடிக்கு, இறைச்சி பக்குவம் படிக்கப் போய் இரவு தங்குகிறாளா? அவர்கள் குடில்களில் மதுக்குடங்களுக்கும் பஞ்சமிருக்காது..."
"இல்லை மகளே, அவள் பிள்ளைகளுடன் சென்றிருக்கிறாள். நாளை பிள்ளைகளை அவளே திரும்ப அழைத்து வருவாள். ஒருமுறை ஏமாற்றப்பட்டது அவளால் மறக்க முடியாத வடுவாகி உறுத்திக் கொண்டிருக்கிறது..."
அவந்திகா... நம்பற்குரிய தாய். அரண்மனை, க்ஷத்திரிய குலம், தரும சாத்திரங்கள், எல்லாம் அறிந்தவள். குழந்தைகள் மீது அவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது என்று தீவிரமாக நடப்பாள். இந்த ஆறு, வனம், காயும் பரிதி, வளி மண்டலம், இவை எல்லோருக்கும் பொதுவானவை. 'க்ஷத்திரிய' ஆண் வாரிசுகள் என்று உரிமையாக்கிக் கொள்ள முடியாது... பூமகள் ஆறுதல் கொண்டு இரவைக் குழப்பமின்றிக் கழிக்கிறாள்.
---------
அத்தியாயம் 28
பொழுது ஊக்கமும் உற்சாகமுமாகப் புலருகிறது.
இலைகளும் துளிர்களும் அசையக் கானகமே எழில் முகம் காட்டுகிறது. விதவிதமான வண்ணத்துப் பூச்சிகள் கும்பல் கும்பலாகச் செல்கின்றன. மணவிழாவா? யாருக்கு...? என்று கேட்டுக் கொண்டே வானவனுக்கு நீர்ப் பூசனை செய்கிறாள். சத்தியர் ஒன்றிரண்டு பசுக்களை அவிழ்த்து விட்டுத் துப்புரவு செய்கிறார்.
நேரம் செல்லச் செல்ல இறுக்கம் மேலிடுகிறது. பெரியம்மா, "கண்ணம்மா!" என்று கூப்பிடும் குரலில் மலர் கொய்து கொண்டிருந்த பூமகள் விரைகிறாள்.
தூய்மையான நீரால் முகம் துடைத்து, சுத்தம் செய்கிறாள்.
அவள் இவளையே உற்றுப் பார்க்கிறாள்.
"கண்ணம்மா? பிள்ளைகளை அழைத்துச் சென்று விட்டார்களா? உன் மாமி ராஜமாதா இதற்குத்தான் வந்தாளா? கண்ணே! உன்னை, இதற்காகவா தாயின் மடியில் இருந்து பிரித்து மண்ணில் பதித்தேன்? ஏர் முட்டும்; அரசமகளாவாள் என்று கணக்குப் போட்டேன்..."
பூமகள் ஒரு கணம் உலக இயக்கமே நின்று விட்டாற் போல் உணருகிறாள். சிப்பி வெடித்து முத்துக்கள் சிதறுகின்றன.
"என் வாரிசு... அரச வாரிசு... ஆனால் அரண்மனை மதில்களுக்குள் அரச தர்மம் என்பது, பெண்களின் உரிமைகளைத் தறிக்கும் கொடுவாள் என்பதை உணர்ந்தும்... மதி மயங்கி உன்னை அரச மாளிகையில் சேர்த்தேன்... மேல் வருண தருமங்களில், மண், பொண், பெண் ஆதிக்கங்களே முதன்மையானவை. அங்கே மனித தருமத்துக்கே இடமில்லை... கண்ணே... உன் பிள்ளைகளை அனுப்பாதே!"
"போதும்... போதும் அம்மா!" என்று பூமகள் அலறுகிறாள்.
அந்தக் குரல் சத்திய முனிவரை அங்கு வரச் செய்கிறது.
"இந்தக் கானகத்தின் உயிர் இவள். இவள் வனதேவி. இவள் மைந்தர்கள் இந்த வனதேவியின் மைந்தர்கள். அரச வாரிசுகளாகப் போக மாட்டார்கள். அவர்கள் அருந்திய பால்... மனித தருமப் பால், அன்னையே அமைதி கொள்வீர்!" என்று ஆறுதல் அளிக்கிறார்.
உச்சி கடந்து பொழுது இறக்கும் நேரம், பாதையில் தலைகள், குடை தென்படுகிறது.
ஆனால், தாரை, தப்பட்டை, சங்கொலி, ஆரவாரம் எதுவும் இல்லை. அவந்திகா தான் விரைந்து முன்னே வருகிறாள்.
பூமகளும் சத்திய முனியும் முற்றத்தில் நிற்கின்றனர். கேகய அன்னை அசோக மரத்தின் கீழ்ப் புற்றரையில் அமர்ந்திருக்கிறாள்.
முதலில் அவளை வணங்குகிறார்கள்.
"தேவி, மன்னர், இளையவர் இருவரும் வருகிறார்கள்..."
பூமகள் சரேலென்று குடிலுக்குள் செல்கிறாள்.
அவந்திகா, விருந்தினர் உபசரிப்புக்கான நீர், இருக்கைப் பாய்கள், எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு செல்கிறாள்.
"அரசே... அமர வேண்டும்... இங்கே வந்தது பெரும் பாக்கியம்..."
குந்தியும் கும்பியும் இறைச்சி பக்குவம் செய்து கொண்டு வரும் மணம் அவள் நாசிக்கு எட்டுகிறது. பிள்ளைகள் இருவரும் வந்து அவள் இருபக்கங்களிலும் நிற்கிறார்கள். வாழை இலைகள் அறுத்துச் செல்கிறான் களி. இதெல்லாம் வெறும் கனவோட்டங்கள். நிகழப் போவது என்ன? இந்த விருந்துபசாரம், சந்திப்பு, பேச்சு வார்த்தைகள், எந்தக் கருத்தை மையமாக்குகின்றன?
"முனிவரே, நாங்கள் முடிவு செய்து விட்டோம். பிள்ளைகள் இருவரும், இக்ஷவாகு பரம்பரையின் சந்ததி என்று ஒப்புகிறோம். எங்களுடன் அழைத்துச் செல்ல அநுமதி கொடுக்க வேண்டும்!"
இந்தக் குரல் அவள் இதயத்தைக் கீறும் கூர் முள்ளாக ஒலிக்கிறது. முனிவர் கூறுகிறார்.
"நான் யார் அனுமதி கொடுக்க? உங்கள் பிள்ளைகளை, அவர்கள் தாயைக் கேளுங்கள் அரசே! அவர்களை அழைத்துச் சென்றீர்கள். இரவு தங்க வைத்துக் கொண்டீர்கள்... கேளுங்கள்..."
பிள்ளைகள் தாயிடம் வருகிறார்கள்.
"அன்னையே, இவர் - இந்த மன்னர், எங்கள் தந்தை என்றும் நாங்கள் அவருடன் செல்ல வேண்டும் என்றும் விரும்புகிறார். ஆனால், மன்னர் பொற்பிரதிமையை வைத்து எதற்காக யாகம் செய்ய முனைந்தார்? இந்தக் காட்டில் நாம் ஏன் தங்க வேண்டி வந்தது என்பதெல்லாம் புரியவில்லை... நாங்கள் எப்படித் தங்களை விட்டு அங்குச் செல்வோம்..." என்று அஜயன் கேட்கிறான்.
"மக்களே, மன்னரிடமே இதைக் கேளுங்கள்!" என்று பூமகள் அவர்களுக்குக் கேட்கும் குரலில் கூறுகிறாள்.
அவர்கள் வெளியே வந்து மன்னரைப் பணிகின்றனர்.
விஜயன் தான், 'பிசிறில்லாத குரலில்' பேசுகிறான்.
"மாமன்னரே! நாங்கள் வனதேவியின் மைந்தர்கள். வனமே எங்கள் தாயகம். நாங்கள் ஒரு போதும் தங்களுடன் வந்து வாழச் சம்மதிக்க மாட்டோம். இங்கு நாங்கள் சுதந்திரமானவர்கள்! உழைத்து விளைவைப் பகிர்ந்துண்டு, எல்லோரும் வாழ நாங்களும் இன்பமுடன் வாழ்வோம். உங்கள் குதிரையை நாங்கள் பிடிக்கவில்லை; கட்டவில்லை. அதுவே இந்த எல்லையை விட்டு அகல மறுத்து உங்கள் காவலரை விரட்டியடித்தது. அதன் விளைவாக, எங்கள் கண்ணுக்குக் கண்ணான நந்தசுவாமி மறைந்தார். எனவே எங்கள் அன்னை இசைந்தாலும் நாங்கள் சம்மதியோம். மன்னிக்க வேண்டும் மாமன்னரே!"
கரங்கள் குவித்து, அவன் மறுப்பைத் தெரிவிக்க இருவரும் உள்ளே வருகின்றனர்.
"கண்ணம்மா..." என்ற குரல் வெளிப்பட, பூமகள் திரும்பிப் பார்க்கிறாள். பெரியன்னையின் மூச்சுத் திணறுகிறது; கண்கள் நிலைக்கின்றன.
(முற்றும்)
-------
This file was last updated on 20 Oct. 2019
Feel free to send the corrections to the webmaster.