உதயணகுமார காவியம் :
பொ. வே. சோமசுந்தரனார் உரையுடன்
utayaNakumAra kAviyam
verses with commentaries
of P.V. cOmacuntaranAr
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Tamil Virtual Academy for providing a scanned image
version of this work for the etext preparation. This work has been prepared using the
Google Online OCR tool to generate the machine-readable text and subsequent proof-reading.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2017.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
உதயணகுமார காவியம் : செய்யுளும்
பொ வே சோமசுந்தரனார் உரையும்
Source:
உதயணகுமார காவியம் :செய்யுளும்
திரு பொ வே சோமசுந்தரனார் அவர்கள் உரையும்
திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,
1/140, பிரகாசம் சாலை, (சென்னை-1)
2nd edition, 1972
-----------
உள்ளடக்கம்
உதயண குமார காவியம் ஐஞ்சிறு காப்பியங்களுள் ஒன்று.
இதன் ஆசிரியர் இன்னாரென்று தெரியவில்லை.
இந்நூலில் ஆறு காண்டங்கள் உள்ளன :
உஞ்சைக் காண்டம், இலாவாணக் காண்டம், மகத காண்டம், வத்தவ காண்டம்,
நரவாகன காண்டம் மற்றும் துறவுக் காண்டம். இக்காப்பியத்தின் முதற்பகுதி உதயணன்
வரலாற்றையும், பிற்பகுதி அவனது மகனாகிய நரவாகனனது வரலாற்றையும் கூறுகிறது.
உதயண குமார காவியம் மொத்தம் 367 பாடல்களை உள்ளடக்கியது.
0. கடவுள் வாழ்த்து/ அவையடக்கம் (1-4)
1. உஞ்சைக் காண்டம் (5- 120)
2. இலாவாண காண்டம் (121- 150)
3. மகத காண்டம் (151 -185)
4. வத்தவ காண்டம் (186 - 241)
5. நரவாகன காண்டம் (242 -302)
6. துறவுக் காண்டம் (303 -367 )
-----------
உதயணகுமார காவியம் -- செய்யுளும் உரையும்
முதலாவது -உஞ்சைக் காண்டம்
1. கடவுள் வாழ்த்து
(அறுசீர்க் கழிநெடிலடியாசிரிய விருத்தம்)
மணியுடன் கனக முத்த மலிந்தமுக் குடையி லங்க
அணிமலர்ப் பிண்டி யின்கீ ழமர்ந்தநே மீசர் பாதம்
பணிபுபின் வாணி பாதம் பண்ணவர் தாள்க ளுக்கெம்
இணைகரஞ் சிரத்திற் கூப்பி யியல்புறத் தொழுது மன்றே.
(இதன் பொருள்) அழகிய மலரையுடைய அசோக நீழலின் கண், மணிகளும் பொன்னும் முத்தும் மிக்குள்ள மூன்று குடைகளும் நீழல் செய்து விளங்காநிற்ப எழுந்தருளியிருக்கின்ற நேமிநாதருடைய திருவடிகளை முற்படத் தொழுது வணங்கிப் பின்னர்க் கலைமகளுடைய திருவடிகளையும், சாதுக்களின் அடிகளையும் எம்முடைய இரண்டு கைகளையும் தலையின்மேல் கூப்பித் தொழுதற்குரிய இலக்கணப்படி தொழுவேமாக! என்பதாம்.
முக்குடை: சந்திராதித்தியம், நித்திய வினோதம், சகலபாசனம் என்பன ‘பொன்னுநன்
மணியுமுத்தும் புனைந்தமுக் குடை’ என (சூடா.க) நிகண்டிலும் வருதல் காண்க. பண்ணவர் - சாதுக்கள். நேமீசர் - நேமிநாதர் என்னும் இருபத்திரண்டாந் தீர்த்தங்கரர். (1)
----------
2
2. பொன்னெயில் நடுவ ணேங்கும் பூநிறை யசோக நீழல்
இன்னிய லாலயத்து ளேந்தரி யாச னத்தின்
மன்னிய வாமன் பாதம் வந்தனை செய்து வாழ்த்தி
உன்னத மகிமை மிக்கா னுதயணன் கதைவிரிப்பாம்.
(இ - ள்.) பொன்னாலியன்ற மதிலிடையே உயர்ந்துள்ள மலர் நிறைந்த அசோக நீழலின்கண்; காண்டற்கினிய அழகையுடைய சமவ சரணம் என்னும் திருக்கோயிலினூடே, அரிமான் சுமந்த இருக்கையின்மேல் வீற்றிருந்தருளாநின்ற அருகக் கடவுளின் திருவடிகளை வாயார வாழ்த்தி வணங்கி வழிபாடு செய்து உயரிய பெருமை மிகுந்தவனாகிய உதயண மன்னனுடைய வரலாற்றினை விரித்துக் கூறுவேம். கேண்மின்! என்பதாம், எயில்-மதில். ஆலயம், ஈண்டுச் சமவசரணம் என்னும் கோயில். (2)
----------
3. அவையடக்கம்
மணிபொதி கிழியு மிக்க மணியுட னிருந்த போழ்தில்
மணிபொதி கிழிய தன்னை மணியுட னன்கு வைப்பார்
துணிவினிற் புன்சொ லேனுந் தூயநற் பொருள்பொ திந்தால்
அணியெனக் கொள்வார் நாமு மகத்தினி லிரங்கல் செல்லாம்.
(இ - ள்.) மாணிக்கமுதலிய மணிகளையிட்டுப் பொதிந்துள்ள துணிதானும், அந்த மணிகளைத் தன்னுட் கொண்டிருந்த காலத்திலே மணிபொதிந்த அந்தத் துணியை இகழாமல் அந்த மணிகளோடே சேர்த்து நன்கு மதித்து வைப்பார் உலகத்தினர். அங்ஙனமே அறிஞர்கள் தம் ஆராய்ச்சியின்கண் எம்முடைய சொற்கள் குற்றமுடைய சொற்களாயவிடத்தும் அச்சொற்கள் தூய்மையுடைய நல்ல உறுதிப் பொருளைத் தம் மகத்துக் கொண்டவிடத்தே அணிகலன்களைப் போற்றுமாறு போற்றிக்கொள்ளாநிற்பர்; ஆதலாலே, யாமும் எம் சொற்களின் சிறுமை நோக்கி நெஞ்சத்தின்கண் வருந்துவேமல்லேம் என்பதாம்.
இதனோடு,
நாவலந் தீவிற் கிட்டா நவமணி பொதிந்து வைத்த
மேவருங் கிழியு மந்த மணியுடன் விரும்பு மாபோற்
பாவரும் குற்ற மாமென் கவிதையின் பழுதும் பாரா
தியாவருங் கொள்வாரீசன் பெயரதி லிருக்கை யாலே?
எனவரும் செவ்வந்திப் புராணத்து அவையடக்கச் செய்யுள் ஒப்புக்காணற் பாலது. (3)
------------
4. பயன்
ஊறுந்தீ வினைவாய் தன்னை யுற்றுடன் செறியப் பண்ணும்
கூறுநல் விதிபு ணர்ந்து குறையின்றிச் செல்வ மாமுன்
மாறுறு கருமந் தன்னை வரிசையி னுதிர்ப்பை யாக்கும்
வீறுறு முதிர்ப்பின் றன்மை விளம்புதற் பால தாமோ.
(இ - ள்.) இந் நூலை அன்புற்று ஒதுபவர்க்கு அந்தப் புண்ணியம் அவருடைய பழைய தீவினை வருகின்ற வழியைப் பொருந்தி நின்று அவற்றை வாராமல் தடுத்து நிறுத்தும், அத்தீவினை தடையுறவே அவர்தம் நல்வினையெல்லாம் தடையின்று அவர்பாற் சேர்தலால் யாதொரு குறையுமுண்டாகாமல் செல்வங்கள் வந்து நிரம்பும். மாறுபாடுடையனவாய் அவருயிருடன் முன்னரே சேர்ந்து பிணித்துள்ள வினைகளைப் படிப்படியாகக் குறைக்கின்ற உதிர்ப்பைத் தோற்றுவிக்கும். பெருமைபொருந்திய அந்த உதிர்ப்பினது சிறப்பு யாம் கூறிக்காட்டும் எண்மைத்தன்று என்பதாம்.
இந்நூல் புண்ணிய நூலாகலின் இதனை ஓதுவார்க்கு இனிவரக்கடவ தீவினைகள் வாரா. வரக்கடவ நல்வினையெல்லாம் வந்து செல்வ முண்டாக்கும் என்றவாறு. மாறுறு முன்கருமம் என்றது முன்னரே உயிரைப் பிணித்துள்ள வினைகளை. இவற்றைச் சிறிது சிறிதாக நீக்கும் என்பார் வரிசையின் உதிர்ப்பை ஆக்கும் என்றார். உதிர்ப்பு என்னுந் தத்துவம் கைவரப் பெறுவோர் வீடுபெறுதல் ஒருதலை ஆகலின் அதன் பெருமை பேசலாகா தென்றார்.
இதன்கண் நற்காட்சி எய்துதற்குரிய ஏழு தத்துவங்களில் ஊறு செறிப்பு, உதிர்ப்பு என்னும் மூன்று தத்துவங்கள் கூறப்பட்டன.
ஏழு தத்துவங்கள்: உயி்ர், உயிரில்லது, ஊற்று, செறிப்பு, உதிர்ப்பு. கட்டு, வீடு என்பன. இவற்றில், ஊறு - மாறுறு கருமம் என்பதனானும், செறிப்பு - செறியப்பண்ணும் என்பதனானும், உதிர்ப்பு - உதிர்ப்பை ஆக்கும் என்பதனானும் பெற்றாம். ஊறாவது - வினைகள் உயிருடன் சேரவரும் வாயில். செறிப்பு - அவ்வினை வருவாயைத் தடுப்பது, உதிர்ப்பு - உயிருடன் முன்னமே சேர்ந்து பிணித்துள்ள வினைகளைச் சிறிது சிறிதாகத் தேய்ப்பது. இவ்வுதிர்ப்பே வீடு பேற்றிற்கு இன்றியமையாக் கருவியாகலின் இதன் தன்மை விளம்புதற்பாலதாமோ என்றார். (4)
----------
உதயணகுமார காவியம்- நூல்
5. நாட்டுச் சிறப்பு
இஞ்சிமூன் றுடைய கோமா னெழில்வீர நாத னிந்தப்
புஞ்சிய நிலத்தோர்க் கெல்லாம் பொற்புநல் லறநன் மாரி
விஞ்சவே சொரியுங் காலம் வெண்மதிக் குடைக்கீழ் வாழும்
எஞ்சலில் காட்சி மன்ன னிருக்கைநா டுரைத்து மன்றே.
(இ - ள்.) மூன்று மதில்களையுடைய நம் கோமானாகிய அழகிய வீரநாதர் என்னும் ? சீ வர்த்தமானர்? குறிஞ்சி முதலிய வாகத் தொகுப்புற்ற இந்த நிலவுலகத்து மக்கட்கெல்லாம் பொலிவுடைய நல்லறமாகிய நல்ல சொன்மழையை மிகுதியாகப் பொழிந்து அவரையெல்லாம் உய்யக் கொண்டருளிய காலத்திலே வெள்ளிய திங்கள் மண்டிலம் போன்ற குடைநீழலிருந்து அம்மக்களை இனிது பாதுகாத்துவந்த குறைவற்ற மெய்க் காட்சியையுடைய (சதானிகன் என்னும்) அரசன் ஆட்சி செய்தருளிய நாட்டின் சிறப்பினை இனிக் கூறுவேம் கேண்மின் என்பதாம்.
இஞ்சி மூன்று-மூன்று மதில். அவை உதயதரம், பிரீதிதரம், கல்யாணதரம் என்பன. வீரநாதர் - சீவர்த்தமானர் என்னும் 24 ஆம் தீர்த்தங்கரர். புஞ்சம் - தொகுதி. (1)
-------------
6. நாவலந்தீவு
பூவுநற் றளிருஞ் செற்றிப் பொழின்மிகச் சூழ்ந்தி லங்கும்
நாவலா மரத்தி னாலே நாமமாய்த் துலங்கி நின்று
தீவுநற் கடல்க டாம மொன்றிற்கொன் றிரட்டி சூழ்ந்த
நாவலந் தீவு நந்தி னன்மணி போன்ற தன்றே.
(இ - ள்.) பூவும் நல்ல தளிர்களுஞ் செறிவுற்று எண்ணிறந்த பொழில்கள் சூழப்பெற்று விளங்குகின்றதொரு நாவல் என்னும் மரமுண்மையாலே அந்த மரத்தின் பெயரே தன் பெயராகக் கொண்டு விளக்கமெய்தி நிலைபெற்று நின்று மேலும், தீவுகளும் கடல்களும் ஒன்றற்கொன்று இவ்விரண்டு மடங்கு அளவுடையனவாகத் தன்னைச் சூழ்ந்துள்ள இந்த நாவலந்தீவு இந்தப் பேருலகமாகிய சங்கீன்ற நன்முத்துப் போன்று திகழ்வதாம் என்க. (2)
------------
7. வத்தவநாடு
வேதிகை சிலைவ ளைத்து வேதண்ட நாணே றிட்டுப்
போதவும் வீக்கி னாற்போற் பொற்புடைப் பரதந் தன்னில்
ஓதிய தரும கண்டத் தோங்கிய காவு நின்று
வாதத்தாற் சுகந்தம் வீசும் வத்தவ னாட தாமே.
(இ - ள்.) உவர்க்கடலுக் கப்பாலுள்ள சுவராகிய வில்லை வளைத்து வெள்ளிப் பெருமலையாகிய நாணை யேற்றி மிகுதியாக வளைத்து வைத்தாற்போன்ற தோற்றப் பொலிவினையுடைய இப்பரதகண்டத்தின்கண், தருமகண்டம் என்று கூறப்பட்ட பகுதியிலுள்ள நாடுகளில் வைத்து, வானுற வளர்ந்துள்ள பொழில்கள் நிலைத்து நின்று தம் மணத்தை நாற்றிசையினும் காற்றினாலே பரப்புதற் கிடனான அந்த நாடு வத்தவன் நாடு என்னும் பெயருடைய நன்னாடாகும் என்க. (7)
----------
8. கோ நகரம்
இஞ்சிமிக் கெழுந்தே யோங்கி யிலங்கிய வமர லோகம்
எஞ்சலி லெல்லை காணா வெழில்பெற நிற்ற னோக்கி
அஞ்சலில் வருக வென்றே யணிபெற விலங்கி நீண்ட
குஞ்சிநன் கொடிக்க ரத்தாற் கூவியிட் டழைக்கு மன்றே.
(இ - ள்.) அந்த நாட்டின் தலைநகரத்தைச் சூழ்ந்துள்ள மதில்கள் மிகவும் உயர்ந்து விளங்குவன வானவருலகத்தின் குறைவற்ற எல்லையைக் கண்டு அழகுற நிற்றலைக் கண்டு அவ்வானவர் நாடு அஞ்சுதலாலே அவ்வெல்லையிலேயே நின்று நீ ஈண்டு வருவாயாக! என்று தம்முச்சியிலே அழகுண்டாகத் திகழ்ந்து நீண்டு நிற்கின்ற தம் கொடிகளாகிய கையை அசைத்துக் கூப்பிடுவன போற் றோன்றின என்க.
இதனோடு, ?இஞ்சி மாக நெஞ்சுபோழ்ந் தெல்லை காண வேகலின், மஞ்சுசூழ்ந்து கொண்டணிந்து மாக நீண்ட நாகமும், அஞ்சு நின்னை யென்றலி னாண்டு நின்று நீண்டதன், குஞ்சி மாண்கொ டிக்கையாற் கூவி விட்ட தொத்ததே? எனவரும் சிந்தாமணிச் செய்யுளை (143) ஒப்பு நோக்குக. அமரலோகம் அஞ்சலில் என்க. (4)
-----------
9. இதுவுமது
முகிறவழ் மாட மீதின் முத்தணி மாலை நான்றே
இகலுறு மமளி யின்மே லெழின்மங்கை மைந்தர் தாமும்
பகலிர வின்றிப் போகம் பண்பினாற் றுய்த்தி ருப்பார்
நகரிகௌ சாம்பி யென்னு நாமமார்ந் திலங்கு மன்றே.
(இ - ள்.) அந்நகரத்தின் முகில்கள் தவழாநின்ற வாயின் மாடத்தின்மீது முத்துக்களாலியன்ற அழகிய மாலைகள் தொங்க விடப்பட்டு, ஊடுதற்கிடனான படுக்கையின்மேல் அழகிய மகளிரும் மைந்தரும் பகல் இரவென்னும் வேற்றுமையின்றி எப்பொழுதும் காமவின்பத்தை அதற்குரிய நலங்களோடு நுகர்ந்திருப்பாராக; அந்நகரமானது ?கௌசாம்பி? என்னும் இசைதிசை போய பெயரோடு பொருந்தித் திகழ்வதாயிற்று என்க. (5)
---------
10. அரசன்
ஊனுமிழ்ந் திலங்கும் வேலா னுன்னத முகிலெ ழுந்து
வானுமிழ் வாரி யன்ன வண்கையன் வண்ட ரற்றும்
தேனுமி ழலங்கற் றோளான் செல்வத்திற் குபேர னன்னான்
தானுமிழ் கிரண மார்பன் சதானிகனரச னாமே.
(இ - ள்.) அவ்வத்தவ நாட்டிற்குப் பகைவருடைய ஊனைச் சுவைத்துக் கொப்பளித்து வெற்றியால் விளங்குகின்ற வேற்படை ஏந்தியவனும், முகிலானது வானத்திலே கருவுற்றெழுந்து மழை பொழியுமாறு போல இரவவலர்க்குப் பொருளை வழங்குகின்ற வள்ளன்மையுடைய கைகளை யுடையவனும் வண்டுக ளிசைபாடுதற் கிடனான தேன்துளிக்கும் மலர்மாலையை அணிந்த தோளையுடையவனும், செல்வச் சிறப்பினாலே குபேரனை ஒத்தவனும் அணிகலன்கள் வீசுகின்ற ஒளியையுடைய மார்பினையுடையவனும் ஆகிய சதானிகன் என்பவன் அரசனாவான் என்க. (6)
------------
11. கோப்பெருந்தேவி
மன்னவ னுள்ளத் துள்ளாண் மாமணி மயிலஞ் சாயல்
அன்னமென் னடைவேற் கண்ணா ளருந்ததி யனைய ஙங்கை
பொன்னணி சுணங்கு பூத்த புணர்முலை யமிர்த மன்னாள்
மின்னு நுண் ணிடையா ணாம மிகாவதி யென்று மிக்காள்.
(இ - ள்.) அச்சதானிக வேந்தன் நெஞ்சிலே உறையும் கோப்பெருங்தேவியோ, பெண்டிருள் சிறந்த மாணிக்கம் போல்பவளும் மயில் போன்ற சாயலையும் அன்னம் போன்ற நடையினையும் வேல் போன்ற கண்ணையும் உடையவளும், கற்பினால் அருந்ததியை ஒத்தவளும் ஆவள்; பொன் போன்ற தேமல் படர்ந்த புணர்தற்கினிய கொங்கையையுடைய அந்நங்கை மன்னனுக்கு அமிழ்தம் போல்பவளாம், மின்னல் போன்ற நுண்ணிய இடையையுடைய அவ்வரசி ?மிருகாபதி? என்னும் பெயரோடு புகழால் மிக்கு விளங்குவாளாயினள் என்க. (7)
----------
12.
கற்புடைத் திருவி னங்கை காரிகை தன்வ யிற்றிற்
சற்புரு டொருவன் வந்து சார்ந்தவ தரித்து மி்க்க
நற்புடைத் திங்க ளொன்பா னன்கமைந் திருக்கு மோர்நாட்
பொற்புடை மஞ்ச மீதிற் பொலிவுட னிருந்த போழ்தில்.
(இ - ள்.) கற்புடைய திருமகளை யொத்த நங்கையாகிய அம்மிருகாபதி என்னும் அரசியினது வயிற்றின்கண் வாய்மையிலுயர்ந்த தேவன் ஒருவன் வந்துற்றுக் கருவாயுருவாகி நன்மையையுடைய ஒன்பது திங்களும் நன்கு வளர்ந்திருக்க, ஒருநாள் அவ்வரசி மேனிலை நிலாமுற்றத்தே பொலிவுடைய படுக்கைக் கட்டிலின்மேல் வீற்றிருந்தாளாக அப்பொழுது என்க. (8)
------------
13. மிருகாபதியை ஒரு பறவை எடுத்துப் போதல்
செந்துகின் மூடிக் கொண்டு திருநிலா முற்றந் தன்னில்
அந்தமாய்த் துயில்கொள் கின்ற வாயிழை தன்னைக் கண்டே
அந்தரத் தோடு கின்ற வண்டபே ரண்டப் புள்ளொன்
றந்தசை யென்று பற்றி யன்றுவான் போயிற் றன்றே.
(இ - ள்.) நிறைகருவுடைய அக்கோப் பெருந்தேவி அனந்தரான் மயங்கி அழகிய அந்நிலா முற்றத்தே அப்படுக்கையிலேயே சிவந்த பட்டாடையாலே திருமேனி முழுதும் போர்த்துக் கொண்டு துயிலும் பொழுது அவளை அங்கே வானத்தே பறந்து செல்கின்ற அண்ட பேரண்டப்புள் என்னும் ஒரு பறவை கண்டு அழகிய ஊன் பிண்டம் என்று கருதி மெல்லெனக் கால்களாற் பற்றி எடுத்துக்கொண்டு அற்றை நாளிலேயே வான்வழியே பறந்து போயிற்று; என்க. (9)
-----------
14.
மற்றவ டந்தை தானு மாமுனி யாகி நிற்கும்
சற்கிரி விபுல மன்னுஞ் சாரலவ் வனத்திற் சென்று
நற்றவ னருகில் வைப்ப நற்றுயில் விட்டெ ழுந்தாள்
பற்றுயி ருண்ணாப் புள்ளும் பறந்துவான் போயிற் றன்றே.
(இ - ள்.) அவ்வாறு எடுத்துச் சென்ற அந்தப் பறவை தானும் அம்மிருகாபதியின் தந்தையாகிய சேடகமன்னன் உலகினைத் துறந்து போய்ச் சிறந்த முனிவனாகி அவ்வொழுக்கத்தே நிற்கின்ற விபுலம் என்னும் நல்ல மலையைச் சூழ்ந்துள்ள அழகிய காட்டிற் சென்று அம்முனிவன் பக்கலிலே நிலத்திலே வைக்கும்பொழுது அத்தேவி இனிய துயில் கலைந்து விழித்தெழுந்தாள்; (ஊனைத் தின்பதன்றி) உயிரைக் கொன்று தின்னாத நல்லியல்புடைய அப்பறவை தானும் அவட்குயிருண்மை கண்டு வாளா வானத்தே பறந்தோடிப் போயிற்றென்க. (10)
--------
15. அரசி கருவுயிர்த்தல்
நிறைமதி முகநன் மங்கை நிரம்பிய கெர்ப்ப மாதல்
பொறைவயி னோய்மீக் கூரப் பொருவில்வான் கோள்க ளெல்லாம்
முறையினல் வழியை நோக்க மொய்ம்பனத் தினத்திற் றோன்ற
அறையலை கடலிற் சங்க மாணிமுத் தீன்ற தொத்தாள்.
(இ - ள்.) நிறை வெண்டிங்கள் போன்ற அழகிய முகத்தையுடைய அம்மிருகாபதி நிரம்பிய கருவுடையளாதலாலே, அக்கருப் பொறையாலே வருத்தம் மிகாநிற்பவும். ஒப்பற்ற வானத்து ஞாயிறு முதலிய கோள்களெல்லாம் முறைப்படி நன்னெறியை நோக்கா நிற்பவும் வலிமை மிக்க ஆண்மகன் அந்நல்ல முழுத்தத்திலேயே பிறந்தானாக, அவ்வரசி தானும் ஒலிக்கின்ற அலையையுடைய கடலின்கண் வலம்புரிச் சங்கமொன்று ஆணி முத்தினை ஈன்றதனை ஒத்து விளங்கினள் என்க. (11)
----------
16
பொருகயற் கண்ணி னாடான் போந்ததை யறிந்த ழுங்கித்
திருமணி கிடந்த தென்னச் செழுமகன் கிடப்பக் கண்டு
பெருகிய காத லாலே பெருந்துயர் தீர்ந்தி ருப்ப
மருவுநற் றாதை யான மாமுனி கண்டு வந்தான்.
(இ - ள்.) ஒன்றனோடொன்று போரிடுகின்ற இரண்டு கயல்மீன்களை ஒத்த கண்களையுடைய அவ்வரசி, தான் பறவையாற் பற்றப் பட்டுக் காட்டினூடே வந்திருப்பதனை அறிந்து அந்நிலைமைக்குப் பெரிதும் துயருற்றுத் தன்பக்கத்தே அழகிய மாணிக்கம் ஒன்று கிடப்பது போலத் தன்னருமந்த மகன் கிடப்பதனையும் கண்டு தன் னெஞ்சிலே பெருகிய அன்பு காரணமாகத் தனக் கெய்தியுள்ள பெரிய துயரத்தையும் விடுத்து மகிழ்ந்திருப்ப, அவ்வழியே நீராடச் சென்ற அவளுடைய நல்ல தந்தையாகிய அச்சேடக முனிவன் அவளைக் கண்டு அவ்விடத்திற்குவந்து சேர்ந்தான் என்க. (12)
-----------
17. மகவிற்குப் பெயரிடல்
தவமுனி கொண்டு சென்று தாபதப் பள்ளி சேர்த்தி
அவணினி தோம்ப வப்பா லருக்கன துதய காலத்
துவமையின் றுதித்தா னாம முதயண னாக வென்றார்
இவணமத் தாயுஞ் சேயு மிருடிபா லிருந்தா ரன்றே.
(இ - ள்.) தவவொழுக்கத்தையுடைய தந்தையாகிய சேடக முனிவர் மிருகாபதியை மகவுடனே அழைத்துச் சென்று தாம் வதிகின்ற தவப்பள்ளியின்கண் சேர்த்தி அப்பள்ளியிடத்தேயே இனிதாகப் பாதுகாவாநிற்ப, ஆங்குறையும் துறவோர்கள் “இவன் ஞாயிறு தோன்றும்பொழுது பிறந்தமையாலே இவன் பெயர் ‘உதயணன்’ என்று வழங்குவதாக” என்று பெயரிட்டு வாழ்த்தினர். இவ்வண்ணமாக அந்தத் தாயும் பிள்ளையும் அத் துறவோர் பள்ளியின்கண் உறைவாராயினர் என்க. (13)
-------------
18. உதயணன் பெற்ற பேறுகள்
பிரமசுந் தரயோ கிக்குப் பிறந்தவன் யூகி யோடும்
இருவரும் வளர்ந்தே யின்பக் கலைக்கட னீந்திக் கானக்
கரிணமும் புள்ளு மற்றுங் கண்டடி வீழுங் கீதப்
புரந்தரன் கொடுத்த யாழும் பொறைமுனி யருளிற் பெற்றான்.
(இ - ள்.) சேடக முனிவருடைய தவப்பள்ளியிலிருந்த உதயணன் பிரமசுந்தர முனிவருடைய மகனாகிய யூகி என்பானோடு நட்புக் கிழமை பூண்டு அவனும் தானுமாகிய இருவரும் இனிதாக நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து இன்பமிக்க கலைகளாகிய கடலை நீந்திக் கரை கண்டிருக்கும் பொழுது உதயணன், காட்டின்கண் வாழ்கின்ற யானையும் பிறவுமாகிய விலங்குகளும் தன்னெதிர் வந்து கண்டு தன் அடிகளிலே வீழ்ந்து வணங்குதற்குக் காரணமான தெய்வத் தன்மையுடைய இசையினையுடையதும் தேவேந்திரனால் பிரமசுந்தர முனிவருக்குப் பரிசிலாக வழங்கப் பட்டதுமாகிய ‘கோடவதி’ என்னும் தெய்வயாழைப் பொறுமை மிக்க அப்பிரம சுந்தர முனிவர் அருளினாலே பரிசிலாகப் பெற்று மகிழ்ந்தான். (14)
---------
19. உதயணன் தெய்வயானையைக் கோடவதியின் உதவியாற் பெறுதல்
மைவரை மருங்கி னின்ற மலையென விலங்கு கின்ற
தெய்வநல் லியானை கண்டு சென்றுதன் வீணை பாடப்
பையெனக் களிறுங் கேட்டுப் பணிந்தடி யிறைஞ்சி நின்று
கையது கொடுப்ப வேறிக் காளையும் பள்ளி சேர்ந்தான்.
(இ - ள்.) ஒருநாள் உதயணகுமரன் அக்காட்டின்கண் ஒரு மலையின் பக்கலிலே மற்றொரு மலை இயங்குமாறு போலே இயங்குகின்ற ஓர் அழகிய தேவயானையைக் கண்டு அதன்பாற் சென்று தனது கோடவதி என்னும் பேரியாழை இயக்கிப்பாட, அத்தெய்வயானை தானும் அத்தெய்வயாழினது இன்னிசை கேட்டு மெல்ல உதயணன் முன்பு வந்து முழங்காற்படியிட்டு வணங்கி எழுந்து நின்று தன் பிடரிலேறுதற்பொருட்டு உதயணனுக்குத் தனது கையினைப் படியாகக் கொடுப்ப அக்குறிப்புணர்ந்த உதயணனும் அத்தெய்வயானையின் மேலேறி ஊர்ந்து போய்த் தவப்பள்ளியை எய்தினன் என்க. (15)
-----------
20. தெய்வயானை உதயணன் கனவிற்றோன்றிக் கூறுதல்
நன்றிருட் கனவி னாக நயமறிந் தினிது ரைக்கு
பன்னிடும் பாகன் வந்து பற்றியே யேறி னாலும்
இன்றைநாண் முதலா நீநா னின்றியே முன்னுண் டாலும்
அன்றுன்பா னில்லே னென்றே யக்கரி யுரைப்பக் கேட்டான்.
(இ - ள்.) அந்தத் தெய்வ யானையானது ஒருநாள் இரவின் கண் உதயணன் துயிலின்கண் கனவிலே தோன்றிச் சொன்னயந் தேர்ந்து அவன் இனிதாகக் கேட்கும்படி “கோமகனே! நின்னை யன்றி யானைகட்குக் குறிப்பு மொழி பயிற்றும் யானைப் பாகன் என்பால் வந்து என்னைப்பற்றிக் கயிறிட்டுப் பிணித்தாலும், என் பிடரில் ஏறினாலும், இற்றைநாள் தொடங்கி எதிர்காலத்திலே நீ எப்பொழுதாவது நானுணவின்றியிருக்க நீ எனக்கு முன்பு உண்டாயாயினும், இக்குற்றங்கள் ஏதேனும் ஒன்று நிகழின் அந்த நாளிலேயே யான் நின்னைவிட் டகன்று போவேன் காண்!” என்று இவற்றை (அந்த யானை) கூறக் கேட்டனன். (16)
--------
21. உதயணன் மாமனாகிய விக்கிரமன் அத்தவப் பள்ளிக்கு வருதல்
செல்லுமக் காலந் தன்னிற் செறிதவன் புதல்வ னான
வெல்களிற் றியானை வேந்தன் விக்கிரன் றனக்கு மக்கள்
இல்லையென் றெவ்வங் கூர்ந்தே யினிமையின் வந்து நல்ல
சொல்லருண் முனிவன் பாதந் தொழுதுநன் கிருந்தா னன்றே.
(இ - ள்.) இவ்வாறு உதயணன் வாழ்க்கை இனிதாகச் செல்கின்ற காலத்திலே நிறைந்த தவத்தையுடைய சேடகமுனிவருடைய மகனாகிய வெல்லும் மறக்களிற்றி யானையையுடைய வேந்தன் விக்கிரமன் என்பவன் தனக்கு மகப்பேறில்லாமையாலே பெரிதும் நெஞ்சம் வருந்தியவன் மனம் ஆறுதல் பெறும்பொருட்டு இனிய மொழியையும் அருளையுமுடைய சேடகமுனிவருடைய தவப்பள்ளிக்கு வந்து அவருடைய அடிகளில் வணங்கி அவர் வாழ்த்தினையும் பெற்று அத்தவப் பள்ளியி்லே இன்புற்று நன்குறைந்தனன். (19)
-----------
22. விக்கிரமன் உதயணனையும் யூகியையும் கண்டு இவர்கள் யார் என முனிவரை வினாதல்
புரவல னினிய ராமிப் புதல்வர்க ளார்கொ லென்ன
வரமுனி யருளக் கேட்டு மகிழ்ந்துதன் னாய மெல்லாம்
சிரசணி முடியுஞ் சூட்டிச் செல்வற்குக் கொடுத்துப் போக்கி
விரவிய தவத்த னாக வேண்டுவ தெண்ண மென்றான்.
(இ - ள்.) இவ்வாற்றால் தவப்பள்ளியிலிருந்த விக்கிரம வேந்தன் அப்பள்ளியிலிருக்கின்ற உதயணகுமரனையும் யூகியையு நோக்கி வியப்புற்று ‘முனிவர் பெருமானே! காண்டற்கினிய தோற்றமுடைய இச்சிறுவர்கள் யார்? என்று வினவ, பெருமையுடைய அம்முனிவனும் அவர்கள் வரலாற்றினை விக்கிரமனுக்கு அறிவித்தருளுதலாலே, உதயணன் தன் தங்கை மகனென்றறிந்தமையாலே பெரிதும் மகிழ்ந்து தந்தையாகிய சேடகமுனிவனைப் பின்னும் தொழுது, பெரியீர்! உதயணன் வரலாறு அறிந்தவுடன் என் நெஞ்சம் என்னுடைய தாயப் பொருள் முழுவதையும் அச்செல்வனுக்கே வழங்கி என்நாட்டிற்கு அரசனாக்கித் தலையிலணிகின்ற முடியுஞ் சூட்டி, என்நாட்டிற்குப் போகச் செய்துவிட்டு உன்னோடு பண்டே கலந்த தவவொழுக்கத்தையே மேற்கொள்ள விரும்புகின்றது என்று விண்ணப்பித்தான். (20)
------------
23. உதயணன் அரசுரிமை பெறுதல்
முனியொடு தங்கை தன்னை முயன் றிரந் தெய்தி நாகம்
தனையன வெங்க யத்திற் றனையனை யேற்றிப் போய்த்தன்
மனனிறை நாட்டை யந்த மருகனுக் கீந்து போந்து
முனிவனம் புகுந்து மாமன் முனிவனாய் நின்றா னன்றே.
(இ - ள்.) மாமனாகிய விக்கிரம மன்னன் தன்னெண்ணத்தைச் சேடக முனிவன் பாற் கூறிப் பெரிதும் முயன்று உதயணனையும் மிருகாபதியையும் தன்னுடன் உய்க்கும்படி வேண்டிப் பெற்று மலையை ஒத்த அந்த வெவ்விய தெய்வயானையில் உதயணனையும் (சிவிகையில்) மிருகாபதியையும் ஏற்றிச் சென்று தன் மனத்திற்கு அதுகாறும் நிறைவுதந்த தனது நாட்டினை உதயணனாகிய அந்த மருமகனுக்கு வழங்கித் துறவியாகி முனிவர்களுறைகின்ற தொரு காட்டிற் புகுந்து தவமேற் கொண்டிருந்தனன் என்க. (19)
---------
24. சதானிகன் மிருகாபதியைக் காண்டல்
இளமையை இகந்து மிக்க வினியநற் குமர னாகி
வளமையிற் செங்கோ றன்னை வண்மையி னடத்தி னானாங்
கிளமயி லனைய தேவிக் கிரங்கிய சதானி கன்றான்
உளமலி கொள்கை யான்ற வொருதவற் கண்டு ரைத்தான்.
(இ - ள்.) மாமனுடன் சென்று கோமுடி கொண்ட உதயண வேந்தன் இளமைப் பருவங்கடந்து கட்டிளங்காளைப் பருவமடைந்து அந்நாட்டினை வள்ளன்மைப்பண்போடு செங்கோல் செலுத்தினானாக; இனி வத்தவ நாட்டின்கண் கௌசாம்பியில் சதானிகன் தன் கோப்பெருந்தேவியாகிய இளமயில் போலுஞ் சாயலையுடைய மிருகாபதியின் பிரிவிற்குப் பெரிதும் வருந்தியவனாய் முக்கால நிகழ்ச்சிகளையும் அறிந்து கூறும் நெஞ்சு நிறைந்த கோட்பாடு மிக்கானொரு துறவியின்பாற் சென்று தன் வருத்தத்தைக் கூறினான் என்க. (20)
-----------
25. மிருகாபதி மீண்டும் மக்களைப் பெறுதல்
தேவியின் வரவு நல்ல திருமகன் செலவுங் கேட்டு
மாவலன் மனம கிழ்ந்து வந்தூர்புக் கிருக்கு நாளில்
தேவியும் வந்து கூடிச் சிறந்தநற் புதல்வர் தம்மைத்
தேவிளங் குமரர் போலச் செவ்வியிற் பயந்தா ளன்றே.
(இ - ள்.) அந்தத் துறவி தனது ஓதி ஞானத்தாலுணர்ந்து கூறுதலாலே யானைப் போர், குதிரைப் போர் வல்லவனான அந்தச் சதானிகமன்னன் மிருகாபதி சேதிநாடு வந்துற்றதும் செல்வமிக்க உதயணனும் அவளொடு போந்தமையும் அறிந்து உளம் மகிழ்ந்து தன்கோநகரம் புக்கு மிருகாபதியின் வரவினை எதிர்பார்த்திருந்த காலத்திலே அம்முனிவன் கூறியநாளிலே அம்மிருகாபதியும் சேதி நாட்டினின்றும் வத்தவநாடு புக்குத் தன் காதலனாகிய சதானிகனோடு கூடியிருந்து மீண்டும் அறிவு முதலியவற்றாற் சிறந்த தேவ மக்கள் போன்ற இரண்டு ஆண்மக்களைத் தகுந்த செவ்வியி லீன்று மகிழ்ந்தாள் என்க. (21)
---------------
26
பிங்கல கடக ரென்று பேரினி திட்டு மன்னன்
தங்கிய காத லாலே தரணியாண் டினிது செல்லக்
குங்கும மணிந்த மார்பக் குமரனும் யூகி யும்போய்
அங்குள தேச மெல்லா மடிப்படுத் தினிதி ருந்தார்.
(இ - ள்.) இவ்வாறு மீண்டும் மக்கட் பேறெய்திய அச் சதானிகமன்னன் அம்மக்கட்குப் பிங்கலன் என்றும் கடகன் என்றும் பெயர்சூட்டி அம்மனைவி மக்கள்பால் அழுந்திய காதலோடு அந்நாட்டினை இனிது ஆட்சிபுரிந்து வாழும் நாளிலே, ஆண்டுச் சேதி நாட்டின்கண் செங்கோலோச்சிய குங்குமமணிந்த மார்பினையுடைய உதயண வேந்தனும் யூகியும் போர் மேற்கொண்டு சென்று ஆங்குத் தம் நாட்டின் மருங்கேயுளவாகிய பிற நாடுகளை யெல்லாம் வென்று தம் மாட்சியின் கீழ்ப்படுத்து வெற்றிச் சிறப்போடு இனிதாக வாழ்ந்திருந்தனர் என்க. (22)
-----------
27. சதானிகன் துறவியாதல்
உதயண குமரன் றன்னை யுற்றுட னழைத்துப் பூமிப்
பதமுனக் காக வென்று பார்த்திபன் கொடுத்துப் போகிக்
கதமுறு கவலை நீங்கும் காட்சிநற் றவத்த னாகி
இதமுறு யோகந் தன்னி லெழில் பெறநின்றா னன்றே.
(இ - ள்.) பின்னர்ச் சதானிக மன்னன் சேதிநாட்டிலிருந்த உதயணன்பாற் சென்று அவனை வத்தவ நாட்டிற்கு அழைத்துவந்து மைந்தனே! நீ ஆள்கின்ற அச் சேதி நாடே யல்லால் இவ்வத்தவ நாட்டு அரசுரிமையும் உன்னதே ஆகுக! என்று கூறி அந்த நாட்டினையும் உதயணனுக்கே வழங்கிக் காட்டகத்தே சென்று சின முதலிய தீக்குணங்களும் துன்பங்களும் ஒருசேர நீங்குதற்குக் காரணமான நற்காட்சியை யுடையவனாய்த் தவவொழுக்கந்தாங்கி இன்பமுறுதற் கிடனான யோக நிலையின்கண் அழகுற நிலைத்திருந்தான் என்க. (23)
---------
28. உதயணனுடைய அமைச்சர்கள்
மணிமுடி கவித்த போழ்தின் வத்தவர்க் கிறைவ னானான்
அணியுநாற் படையுஞ் சூழ்ந்த அமைச்சரு நால்வர் நாமம்
தணிவில்சீர் யூகி யோடு சாருரு மண்ணு வாவும்
துணைவயந் தகனுந் தொல்சீர் விடபக னென்ப வாமே.
(இ - ள்.) சதானிக மன்னனால் முடி சூட்டியபொழுது உதயணமன்னன் சேதி நாட்டினர்க்கேயன்றி வத்தவநாட்டு மக்களுக்கும் மன்னவனாகினன். அப்பொழுது அவனை அணிவகுத்தற்குரிய தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என்னும் நான்குவகைப் படைகளும் சூழ்ந்தன. அமைச்சர் தாமும் நால்வராயினர். மற்று அந்த அமைச்சர்களுடைய பெயர்கள் குறைதலில்லாத புகழையுடைய யூகியும், அவனைச் சார்ந்த (இரண்டாம் அமைச்சன்) உருமண்ணுவாவும் அவர்க்கெல்லாம் துணையாகிய வயந்தகனும் பழைய புகழையுடைய இடபகனும் என்று கூறப்படுனவாம் என்க. (24)
-----------
29. உதயணன் யானையின் அறிவுரையைக் கடத்தல்
அரசனுக் கினிய ராகி யமைச்சிய னடத்திச் செற்றே
வருபகை பலவுந் தேய வரச்செங்கோ லுய்க்குங் காலை
அரியநா டகங்கள் கண்டே யரசனு முளமா ழாந்து
கரிணத்தை மறந்துவிட்டுக் காதலி னடிசி லுண்டான்.
(இ - ள்.) மேலே கூறிய அமைச்சர் நால்வரும் உதயணவேந்தனுக்கு உயிரினுமினிய கேண்மையுடையராகிச் சிறந்த அமைச்சியலைத் திறம்பட நடத்துமாற்றால் உதயணகுமரன் தனக்கு வருகின்ற பகைமன்னர் பலரும் அழிந்து போம்படி போரின்கட் கொன்று தீர்த்து உயரிய செங்கோலை முட்டின்றிச் செலுத்துங் காலத்திலே, அம்மன்னவன் காண்டற்கரிய நாடகங்கள் பலவற்றையும் நாடொறும் கண்டு களிப்பவன் ஒருநாள் மனமயங்கித் தனது தெய்வயானையை மறந்து அதனோடுண்ணாமல் தான்மட்டும் அவாவோடு அடிசிலை உண்டொழிந்தான். (25)
-------------
30. தெய்வயானை மறைந்து போதல்
மன்னிய தெய்வ யானை மாயமாய் மறைந்து போக
மன்னனு மனந்த ளர்ந்து மணியிழந் தரவு போலத்
துன்னிய சோக மேவித் துயரெய்தித் தேடுகென்றான்
பன்னருஞ் சேனை சென்று பாரெங்குந் தேடிற்றன்றே.
(இ - ள்.) உதயணகுமரன் தெய்வயானை தன் கனவிற் றோன்றிக் கூறிய உறுதிமொழியினைக் கடந்து அதனையின்றியே உண்டமையால் தன்பாலிருந்த அந்த யானை மாயவித்தைபோல மறைந்து போய்விட்டதாக; உதயணன் அதனைக் காணாமையாற் பெரிதும் மனம்வருந்தி மணியை இழந்துவிட்ட நல்ல பாம்பு போலக் கையறவுற்றுத் துயரம் மிக்குத் தன் சேனையை ஏவி அதனைத் தேடிக்
கொடு வம்மின்! என்று கட்டளையிட அச்சேனை நாடெங்கும் பரவிச் சென்று தேடுவதாயிற்று என்க. (26)
-------------
31. கலிவிருத்தம்
சிந்து கங்கைநீர் சேர்ந்து வளம்படும்
அந்த மாகு மவந்திநன் னாட்டினுள்
இந்து சூடிய விஞ்சி வளநகர்
உந்து மாளிகை யுஞ்சையெனும்பதி.
(இ - ள்.) சிந்துநதி என்னும் பேரியாறும் கங்கைநதியென்னும் பேரியாறும் சேர்ந்து மிகவும் வளமுண்டாக்குதற்கிடனான அழகிய அவந்தி நாட்டின்கண், அதன் தலைநகராய்த் திங்கள் மண்டிலத்தைத் தம்முச்சியிலே சூடுமளவு உயர்ந்துள்ள மதிலரணையுடைய தாய் வேந்தன் வீற்றிருந்து காவற் சாகாடுகைக்கு மிடனாகத் திகழும் அரண்மனையையுடையது ‘உஞ்சைமா நகரம்’ என்னும் நகரம் என்க.
(27)
-----------
32.பிரச்சோதன மன்னன்
உரைப்ப ரும்ப டைப்பிரச் சோதனன்
நிரைத்த மன்னர் நிதிமிக் களப்பவே
தரித்த நேமி யுருட்டித் தரணியாண்
டிரைத்த மாகளிற் றேறொடு மன்னுவான்.
(இ - ள்.) அம்மாநகரத்தின்கண் அரசு கட்டிலிலேறியிருந்து, இத்துணையென்று அறுதியிட்டுரைக்க வொண்ணாத பெரும்படை களையுடைய பிரச்சோதனன் என்னும் பெயரையுடைய வெற்றி வேந்தன் இடம்பெறுதற்கு வந்து நிரல்பட்டு நிற்கும் பிறநாட்டு வேந்தர்கள் தனக்கு மிகவும் அடங்கித், திறைப்பொருள் கொணர்ந்து செலுத்தும்படி சிறப்புடன் ஆணைச் சக்கரமுருட்டி இந்நிலவுலகத்தை ஆட்சி செய்து முழங்கா நின்ற பெரிய பட்டத்தியானையோடு நிலை பெற்றிருப்பானாயினன் என்க. (28)
-------------
33
பொருவின் மன்னன் பொன்றிறை கேட்புழித்
திருவ மன்னர் திறைதெரி யோலையுள்
ஒரும கன்புள்ளி யிட்ட தறிந்திலன்
மருவிக் கூறலு மன்னன் வெகுண்டனன்.
(இ - ள்.) ஒப்பற்ற அப்பிரச்சோதன மன்னவன் பிறமன்னர் செலுத்துகின்ற பொன்னாகிய திறைப்பொருளின் கணக்குக் கேட்குங்காலத்தே ஓரரசன் பெயர்க்கு முன்னர்த் திறை செலுத்தாமைக்கு அறிகுறியாகப் புள்ளியிட்டிருந்தமையை அதுகாறும் அறிந்திலனாய்
அப்பொழுதுணர்ந்து கணக்க மாந்தரை நோக்க, அவர் அருகில் வந்து அம்மன்னன் திறை செலுத்தாமையைக் கூறியவுடன் அம்முடிவேந்தன் பெரிதும் சினமெய்தினன;் என்க. (29)
------------
34. பிரச்சோதனன் அமைச்சரை வினாதல்
தாம ரைக்கண் டழலெழ நோக்கியத்
தீமை செய்த திரைக்கடன் மன்னனை
நாம றந்திட நன்கு மறைத்ததென்
ஆம மைச்சரென் றண்ணல் வினவினன்.
(இ - ள்.) சினமுற்ற அச் செங்கோல் வேந்தன் அமைச்சரை நோக்கி “நண்பரீர்! நந்திறத்திலே அச்சமின்றி இத்தகைய தீங்கியற்றத் துணிந்த அந்தத் திறைகடன்பட்ட மன்னன் செய்தியை யாமறிந்திடாதபடி நீயிர் இத்துணை நாளும் நன்றாக மறைத்துவைத்தமைக்குக் காரணந்தான் என்னையோ? என்று வினவினன். (30)
--------------
35. அமைச்சர் விடை
உறுக ளத்தினி லுன்னிய வாண்மையும்
பெறுபொ ருள்செறி பீடுடைக் கல்வியும்
தறுகண் வேழந் தகைக்குறு பெற்றியும்
மறுவில் வீணையின் வாய்த்தநல் விஞ்சையும்.
(இதுவும் அடுத்த செய்யுளும் ஒரு தொடர்)
(இ - ள்.) அதுகேட்ட நல்லமைச்சர் வணங்கி வேந்தர் பெரும! திறைக்கடன் செலுத்தாமல் விட்ட மன்னவனாகிய உதயணகுமரன் திறை செலுத்தாமைக்குரிய காரணங்களும் உள;் அவை அம்மன்னன் போர் நிகழ்தற்குரிய களத்தினில் மறவரெல்லாம் கருதிப் பார்த்தற்கியன்ற பேராண்மையும், பெறுதற்குரிய பொருள் நிரம்புதற்குக் காரணமான பெருமையுடைய கல்விச் சிறப்பும், அஞ்சாமையையுடைய களிற்றினை அடக்கும் ஆற்றலும், குற்றமற்ற கோடவதியென்னும் யாழினாற் சிறப்பாக வாய்த்துள்ள வித்தையும் என்க. (31)
-----------
36
வளமை யின்வந்த மன்னிய செல்வமும்
இளமை யின்ப மெழில்கல நற்குலம்
உளவ னாதலி னுற்ற கடனென
அளவு நீதி யமைச்ச ருரைத்தனர்.
(இ - ள்.) தன்னாட்டினது வளப்பமிகுதியா லுண்டான நிலை பேறுடைய செல்வப் பெருக்கமும் இளமை நலனும் அழகிய அணி கல மிகுதியும் உயர்குடிப் பிறப்பும் ஆம் இவற்றை உடையவனாதலாலே அவன் நந் திறைக்கடன் செலுத்தாதவனாயினன். எனவே அத்திறைக்கடன் தங்குவதாயிற்று என்று அளவையும் நீதியுமுடைய அவ்வமைச்சர்கள் கூறினர். (32)
----------
37. பிரச்சோதனன் சினவுரை
வேந்தன் கேட்டு வெகுண்டுரை செய்தனன்
போந்த வற்பற்றிப் போதரு வீரெனக்
சேர்ந்த மைச்சர்கள் செய்பொரு ளென்னென்று
மாந்தி மற்றவர் மற்றொன்று செய்கின்றார்.
(இ - ள்.) அமைச்சர் கூறிய மாற்றம் கேட்டு அப் பிரச்சோதன மன்னவன் மிகவும் வெகுண்டு அவ்வமைச்சரை நோக்கி, “ஆயின் நீயிர் இன்னே சென்று அச்சிறுவனைச் சிறைப்படுத்தி எம்பாற் கொணர்வீராக” என்று கட்டளையிட, அது கேட்ட இவ்வமைச்சர்கள் மதிமயங்கி வேறோர் உபாயம் செய்யலானார் என்க. (33)
------------
38. அமைச்சர் சூழ்ச்சி
ஊன மாற்றர்மேல் யூகிபோர் போனதும்
ஆனை போக வரச னிரக்கமும்
கான யானை காட்டிப் பிடிப்பதும்
மான வேலவர் மந்திரித் தொன்றினர்.
(இ - ள்.) மானமிக்க வேற்படையினையுடைய அவ்வமைச்சர்கள், உதயணன் அமைச்சனாகிய யூகி என்பான் தன் பகைவர் மேல் போர் மேற்கொண்டு போன செய்தியையும் உதயண குமரன் தன் தேவயானை மறைந்து போனமையாலே வருந்தியிருப்பதும் (ஒற்றராலுணர்ந்து) இச் செவ்வியில் மாய யானை செய்து அதனை அவனுக்குக் காட்டி அவனைப் பிடித்துக் கொள்வதும் ஆகிய இவற்றை ஆராய்ந்து துணிந்து அவ்வழியே மனமொன்றி ஈடுபடலானார். (34)
-------------
39. அமைச்சர் மாயயானை செய்தல்
அரக்கி னும்மெழு காக்கிய நூலினும்
மரத்தி னுங்கிழி மாவின் மயிரினும்
விரித்த தோலினும் வேண்டிய வற்றினும்
தரித்த யானையைத் தாமி யற்றினார்.
(இ - ள்.) தாம் ஆராய்ந்து லுணிந்தபடியே அவ்வமைச்சர் தாமும் அரக்கினாலும், மெழுகூட்டிய நூலானும், மரத்தினாலும், துணியாலும், விலங்குகளின் மயிராலும், விரித்துலர்த்திய தோலினாலும், பின்னும் அதற்கு வேண்டிய பிறவற்றாலும் யானையின் உருவந்தாங்கிய பொய்யானை ஒன்றினை அத்தொழிலில் மிகவும் முயன்று செய்து முடித்தனர். (35)
-----------
40. அமைச்சர்கள் அந்த யானையைச் செலுத்துதல்
பொறிய மைகரிப் பொங்கு முதரத்தில்
உறையு மாந்தரோர் தொண்ணூற் றறுவரை
மறையு மாயுதம் வைத்தத னோருடல்
நெறிகண் டூர்ந்தனர் நீல மலையென.
(இ - ள்.) பொறிகளமைந்த அந்தப் பொய் யானையினது பருக்கும் வயிற்றினூடே தங்கும் மறவர் தொண்ணூற்றறுவரையும் அந்த யானையின் ஓருடம்பிலேயே பின்னும் அம்மறவருடைய போர்க் கருவிகளையும் மறைத்துவைத்து நீலமலையை இயக்குமாறு போல அந்த யானையை வழிகண்டு செலுத்தினர் என்க. (36)
---------------
41. சாலங்காயன் அதனை ஊர்ந்து காட்டல்
கார்மு ழக்கிற் களிறொலி செய்யவே
போர்மிக் கானையைப் பொற்புடை மன்னன்முன்
ஊர்ந்து காட்டினா னுற்ற வமைச்சருட்
சார்ந்த மந்திரி சாலங்கா யென்பவன்.
(இ - ள்.) பிரச்சோதன மன்னனுக்குற்ற அமைச்சர்களுள் ஒருவனான சாலங்காயன் என்பவன் அம்மாய யானையானது முகில் முழங்குவதுபோல முழக்கம் செய்யும்படி போர்த்திறமிகுந்த அந்த யானையைப் பொலிவுடைய அந்த மன்னன் முன்னிலையிலேயே அதனூடிருந்தே செலுத்திக் காட்டினன் என்க. (37)
-----------------
42. சாலங்காயன் உதயணனைச் சிறைபிடிக்கச் செல்லல்
சாலங் காயநீ சார்ந்து தருகென
ஞாலங் காக்கு நரபதி செப்பலும்
வேலுங் கொண்டுநல் வேந்தர்கள் வெண்குடைக்
கோலும் பிச்சமுங் கொண்டு பறந்தனன்.
(இ - ள்.) உலகத்தைப் பாதுகாக்கின்ற பிரச்சோதன மன்னன் சாலங்காயனுடைய அறிவாற்றலைக் கண்டு வியந்து “சாலங்காயனே! நீயே அவ்வுதயணன்பாற் சென்று அவனைப் பிடித்துவருதி!” என்று பணிப்ப, அப்பணிபெற்ற அச் சாலங்காயனும் வேற்படையேந்தி நல்ல வேந்தர்களோடே வெண்குடையும்
கோல் முதலிய படைகளும் பிச்சமும் தன்னுடன்கொண்டு விரைந்து சென்றான் என்க. பிச்சம் - ஒருவகைக் குடை. கோல் - முதலியன.
(38)
----------
43. நாற்பெரும் படையின் அளவு
ஈரெண் ணாயிர மெண்வரை யானையும்
ஈரெண் ணாயிர மீடில் புரவியும்
ஈரெண் ணாயிர மின்பணித் தேருடன்
ஈரெண் ணாயிர விற்படை யாளரே.
(இ - ள்.) பதினாறாயிரம் என்னும் எண்ணினளவுள்ள யானைகளும் பதினாறாயிரம் ஒப்பற்ற குதிரைகளும் பதினாறாயிரம் கண்ணுக்கினிய மணியழுத்திய தேர்களும் பதினாறாயிரம் வில் மறவரும் என்க. (39)
--------------
44
இத்த னையு மியல்புடன் கூடியே
மெத்தெ னாவரு கென்று விடுத்தனன்
ஒத்த நற்பொறி யோங்கிய யானையும்
வத்த வன்றன் வனத்திடை வந்ததே.
(இ - ள்.) இத்துணைப் பெரும்படைகளும் தத்தமக்குரிய அணிவகுப்பு முறையோடுகூடி மெல்ல மெல்ல வருவனவாக வென்று சாலங்காயன் கட்டளையிட்டுச் செலுத்த, அவற்றோடு பொருந்திய நல்ல பொறியாகிய உயரிய அந்தப் பொய்யானையும் வத்தவ நாட்டரசனாகிய உதயணன் தேவயானையைத் தேடித் திரிகின்ற காட்டினூடே வந்தது என்க. (40)
-------------
45. பொய்யானையை வேடர்கள் கண்டு உதயணனுக் கறிவித்தல்
அவ்வ னத்தினி லான பிடிகளும்
கவ்வு கைத்தழைக் காரிடி யானைதன்
மவ்வ லம்மத வண்டெழ வீசலும்
அவ்வ னச்சர ரன்புடன் கண்டனர்.
(இ - ள்.) அந்தக் காட்டின்கண் வாழ்கின்ற வேடர்கள் முகில் இடித்து முழங்கினாற்போன்று பிளிறுகின்ற அந்தக் களிற்று யானையையும், அக்காட்டிலுள்ள பிடியானைகள் அதனைக் காமுற்று அதன் கவுள் முதலிய உறுப்புக்களில் ஒழுகா நின்ற முல்லை மணங் கமழும் மதநீரையுண்ண மொய்க்கின்ற வண்டுகள் அகலும்படி தங்கையிற் பற்றிய தழையை வீசி அன்புடைமையாலே ஒச்சுதலையும் கண்டனர் என்க. அன்புடன் வீசலும் எனக் கூட்டுக. (41)
---------
46
எம்மி றையது வேழ மெனவெண்ணித்
தம்மி லோடி யுதையற் குரைத்தலும்
கொம்மை வண்மணிக் கோலக் கலினமாச்
செம்ம லுஞ்சிறந் தேறி நடந்தனன்.
(இ - ள்.) அவ்வேடர் இந்த யானையே எம்பெருமானுடைய தெய்வ யானைபோலும் என்று கருதித் தாமே விரைந்து சென்று உதயண குமரனுக்கு அந்த யானையின் வருகையை அறிவித்தலும் அம் மன்னனும் மகிழ்ச்சியுற்று அழகிய வளப்பமுடைய மணிமாலைகளால் ஒப்பனை செய்யப்பட்ட குதிரையின் மேலேறி விரைந்தனன் என்க.
(42)
----------
47. உதயணன் மாய யானையைத் தேவயானை என்று கருதி யாழ் மீட்டல்
(அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்)
புள்ளிடை தடுப்பத் தீய பொய்க்குறி செய்யக் கண்டும்
வள்ளலு நடப்பா னாக வயந்தகன் விலக்கப் போந்து
கள்ளவிழ் மலர்க்கா னத்துக் கள்ளநல் லியானை கண்டே
உள்ளமெய் மொழிக டம்மா லுணர்ந்தவ னினிய னானான்.
(இ - ள்.) பறவைகள் அவ்வுதயணனை யிடையிலே தடுக்கும் பொருட்டுத் தீ நிமித்தத்தாலே அந்த யானை பொய் என்று குறி செய்தலைக் கண்டுவைத்தும் வள்ளலாகிய அவ்வுதயண குமரன் மேலும் விரைந்து செல்வானாக; அது கண்ட வயந்தகன் அத் தீ நிமித்தங்காட்டி நீ செல்லற்க! என்று தடுப்பவும் நில்லானாய்ச் சென்று எதிரே தேன் பொழியும் மலர் நிரம்பியதொரு காட்டினூடே அழகிய அந்தப் பொய் யானையைக் கண்டு இது நம் தேவயானையே என்று தன் மனமொழி மெய்களாலே உண்மையை யுணர்ந்த பெரியோனாகிய அம் மன்னனும் மயங்கி மகிழ்வானாயினன் என்க. (43)
---------
48. கலி விருத்தம்
நக்க ணத்தை நயந்துட னோக்கிலன்
அக்க கணத்தி லகமகிழ் வெய்தித்தன்
மிக்க வீணையை மெய்ந்நரம் பார்த்துடன்
தக்க ராகத்திற் றான்மிக வாசித்தான்.
(இ - ள்.) இவ்வாறு மகிழ்ந்த நம்பி அவ்வியானையைத் தொடர்ந்து வருகின்ற சிறந்த பிடியானைக் கூட்டத்தையும் விரும்பிப் பார்த்திலன் அந்த ஒரு நொடிப்பொழுதிலேயே நெஞ்சம் மகிழ்ந்து வீணையிற் சிறந்த வீணையாகிய தனது கோடவதியின் நரம்பினை யிறுக்கி அப்பொழுதே அந்த யானை மயங்குதற்குரிய தோரிசையிலேயே மிகவும் பண்ணிசைப் பானாயினன் என்க. ந+கணம் - சிறந்த பிடிக்கணம். (44)
--------------
49. பொய்யானை உதயணன்பால் வருதல்
பொறியின் வேழத்தின் பொங்கு செவியுற
உறும னத்துட னூர்ந்துமுன் னேவர
மறையு மாந்தர்கைம் மாவை யழித்திடப்
பொறிக ழன்றது போர்ப்படை யானதே.
(இ - ள்.) பொறியாகிய யானையினது மதநீர் பொங்குகின்ற செவியிலே அந்த யாழிசை புகுதலும் அந்த மாய யானை அவ்விசையிற் பொருந்திய மனமுடையது போலவே நடந்து உதயணன் முன் அணுகி வந்தவுடனே, அதன் உடலினுள் கரந்திருந்த போர் மறவர் அப்பொய்யானை யுருவத்தை அழித்து விட்டமையாலே அதன் பொறி கழன்று வீழ்ந்தது அவ்வளவிலே அந்தப் பொய்யானை ஒரு போர்மறவர் குழாமாகி விட்டது என்க. (45)
------------
50. போர் நிகழ்ச்சி
செறுநர் செய்தது சித்திர மாமென
முறுவல் கொண்ட முகத்தின னாகத்தன்
னுறுவ யந்தக னுற்றவைந் நூற்றுவர்
மறுவில் வீரியர் வந்துடன் கூடினர்.
(இ - ள்.) அப்போர் மறவர் குழாத்தைக் கண்ட உதயண குமரன் இது நம் பகைவர் செய்ததொரு வியத்தகு செயலே என்றுண்மையுணர்ந்து போர் கிடைத்தமையாலே மகிழ்ந்து முறுவல் பூத்த முகத்தையுடையவனாக; அவ்வளவிலே அவனோடு சேர்ந்து வந்த வயந்தகனும் அவனைத் தொடர்ந்து வந்த குற்றமற்ற வீரமுடைய ஐந்நூறு போர்மறவர்களும் விரைந்து வந்து உதயணனுடன் கூடினர் என்க. (46)
-------------
51
கரந்தி ருந்த களிற்றினுட் சேனையும்
பரந்து முன்வந்த பாங்கில் வளைத்தபின்
விரிந்து வத்தவன் வெகுண்டு நூறினான்
முரிந்து சேனை முனையின் மடிந்ததே.
(இ - ள்.) அப்பொழுது அந்தப் பொய்யானையுருவத்துள் மறைந்திருந்து வெளிப்பட்ட படைஞர்களும் பரவி முன்பக்கத்தே சென்று உதயணனை வளைத்துக் கொண்டபின்னர் அவ்வத்தவ வேந்தனும் மனஊக்கமிக்குச் சினந்து தனது விற்படையாலே போர் செய்து நுறுக்கித் தள்ளினான். அப்பகைப்படை மறவர் தோற்று அப்போர்க்களத்திலேயே மாண்டு வீழ்ந்தனர் என்க. (47)
-----------
52
சாலங் காயனுஞ் சார்ந்து வெகுண்டிட
நாலு மாப்படை வந்துநாற் றிக்கிலும்
மேலெ ழுந்து மிகவும் வளைத்தன
காலன் போன்மனன் கண்கள் சிவந்தன.
(இ - ள்.) அந்தப் போர் மறவர் அழிவுற்றமை கண்டு சாலங்காயன் என்னும் அமைச்சனும் உதயணன் முன்பு வந்து சினவா நிற்ப, மேலும் தேரும் யானையும் குதிரையும் காலாளுமாகிய நாற்பெரும்படைகளும் அணுகி வந்து நான்கு திசைகளினும் உதயணன் மேன் மண்டி மிகவும் அணுகி வளைத்துக் கொண்டன; அதுகண்ட கூற்றுவனை ஒத்த வத்தவமன்னனுடைய கண்கள் சினத்தாற் பெரிதும் சிவந்தன வென்க. (48)
---------------
53.
புல்வாய்க் கூட்டத்துப் புக்க புலியெனக்
கொல்வா ளோச்சியே கூற்றம் விருந்துண
வில்வா டம்முடன் வீர ரழிந்திட
வல்வாள் வத்தவன் வாட்கிரை யிட்டனன்.
(இ - ள்.) சினத்து மான் கூட்டத்துட் புகுந்த புலிபோன்று பகைமறவர் கூட்டத்துட் புகுந்து கொல்லும் தனது வாட்படையை வீசி மறலி அப்பகை மறவர் உயிரை விருந்தாகப் பருகும்படியும், தாம் கொணர்ந்த வில்லும் வாளும் பிறவுமாகிய படைக்கலன்களுடனே அப்பகைமறவர் அழிந்து வீழும்படி வலிய வாட்படையையுடைய அவ்வத்தவவேந்தன் போராற்றித் தனது வாட்படைக்கு இரைகொடுத்தனன் என்க. (49)
---------------
54.
கொன்ற போரிற் குருதியா றோடவு
நின்ற மாந்தர்க ணீங்கிவிட் டோடவும்
கன்றி யுட்சாலங் காயனு மேல்வர
மன்றன் வாளவன் சென்னியில் வைத்தனன்.
(இ - ள்.) இவ்வண்ணம் உதயணகுமரன் பகைவரைக் கொன்று வீழ்த்திய அந்தப் போர்க்களத்தின்கண் குருதி ஆறுபோல ஒழுகவும், எஞ்சி நின்ற மறவர் அஞ்சிப் புறமிட்டோடவும் அது கண்ட சாலங்காயன் நெஞ்சு கன்றி உதயணன் முன்வந்து போர்
புரிய அப்பொழுது உதயணமன்னன் தனது வாளினை அந்தச் சாலங்காயன் தலையிலே வைத்தான் என்க. மன்+தன் வாள் எனக் கண்ணழித்துக் கொள்க. (50)
------------
55. உதயணன் சாலங்காயனைக் கொல்லாது விடுதல்
மந்திரீகளை மன்னர் வதைசெயார்
புந்தி மிக்கோ ருரைபொருட் டேறித்தன்
செந்தி வாளை யழுத்திலன் செல்வனும்
அந்த மைச்சனை யன்பின் விடுத்தனன்.
(இ - ள்.) சாலங்காயனைக் கொல்லற்குரிய செவ்விபெற்று அவன் தலையில் வாள்வைத்த செல்வனாகிய உதயணன் அரசர்கள் அமைச்சர்களைக் கொல்வதிலர் என்று அறிவுடையோர் நன்மொழியை நினைந்து சிவந்த தீயிலிட்டு வடித்த தனது வாளை அழுத்தாமல் அன்புடனே அந்த அமைச்சனை உயிரோடு விட்டனன் என்க. மந்திரீ, அந்தமைச்சன: விகாரம். தி - தீ; விகாரம். (51)
---------------
56. உதயணன் யானை குதிரை தேர்ப்படைகளை அழித்தல்
திரளு டைக்கரி சேர்ந்து வளைத்தலும்
வரைகள் வீழ்வென வாரணம் வீழவும்
நிரைம ணித்தேர் நிலத்திற் புரளவும்
புரவி கள்பொங்கிப் பூமியில் வீழவும்.
(இ - ள்.) சாலங்காயனுக்கு உயிர்ப்பிச்சையளித்து விட்டவுடன் கூட்டமான யானைப் படைகள் ஒன்று சேர்ந்து வந்து உதயணகுமரனை வளைத்துக் கொள்ளவே அவ்வேந்தன் அவ்ற்றோடும் போர்புரிந்து அந்த யானைகள் மாண்டு விழவும் பின்னர்த் தேர்ப்படைகள் நிலத்திலே புரண்டு வீழவும், குதிரைப்படைகள் குருதி பொங்கி நிலத்திலே வீழவும் என்க. (52)
---------------
57.
வெஞ்சி னம்மனன் வேறணி நூறலும்
குஞ்ச ரத்தின்கோட் டின்வா ளொடியவத்
தஞ்ச மின்றிய தாருடை வேந்தனை
வெஞ்சொன் மாந்தர் வெகுண்டுடன் பற்றினார்.
(இ - ள்.) வெவ்விய சினமுடைய உதயணமன்னன் இவ்வாறாக வேறுவேறு படைவகுப்புக்களை அழித்து நூழிலாட்டுங் காலத்தே அவனுடைய கூர்வாள் ஒரு யானைக் கோட்டிற் பட்டு ஒடிந்ததாக; அதனால் படைக்கலன் இன்றி வறுங்கையனாய் நின்ற மாலையணிந்த அவ்வுதயணமன்னனை வெவ்விய சொற்களையுடைய பகைமறவர் பலர் அற்ற நோக்கிச் சினந்து சுற்றிக் கொண்டனர் என்க. மனன் - மன்னன். தஞ்சம் - உதவி. (53)
-----------
58. நூலாசிரியரின் இரங்கன் மொழிகள்
நங்கை மார்குழ னாண்மலர் சூட்டுங்கை
திங்கள் போலத் திலத மெழுதுங்கை
பொங்கு கொங்கையிற் குங்குமம் பூசுங்கை
பங்க யத்தடிப் பாடகஞ் சூட்டுங்கை.
(இ - ள்.) ஐயகோ! இந்தச் செவ்வியில் அப்பகைமறவர் பலர் நெருங்கிவந்து, சிறந்த மகளிருடைய கூந்தலிலே அன்றலர்ந்த புதிய மலர்களைச் சூட்டுகின்ற அருமைக் கைகளை - அம்மகளிர் நெற்றியிலே திங்கள் மண்டிலம் போலத்திலகமிடுகின்ற கைகளை - அம்மகளிருடைய பருத்த கொங்கைகளிலே குங்குமச் சாந்துபூசி மகிழுகின்ற இன்பக்கைகளை - அம்மகளிருடைய செந்தாமரை மலர்போன்ற திருவடிகட்குப் பாடகம் என்னும் அணிகலனை அணிந்து மகிழும் அன்புக்கைகளை; என்க. (54)
-----------
59.
கீத வீணைசெங் கெந்த மளையுங்கை
ஈதன் மேவி யிரவலர்க் காற்றுங்கை
ஏத மில்குணத் தென்முடி மன்னன்கை
போத வெண்டுகி லாற்புறத் தார்த்தனர்.
(இ - ள்.) இன்னிசைக் கருவியாகிய யாழ்நரம்புகளையும் செவ்விய நறுமணச் சாந்தத்தையும் துழாவுகின்ற கைகளை, ஈதல் என்னும் அறத்தை மிகவும் விரும்பி இரவலர்கள் விரும்பியவற்றை யெல்லாம் அருளுடன் வழங்கும் வள்ளன்மையுடைய கைகளை, குற்றமற்ற குணங்களையுடைய ஒளிமுடி வேந்தனாகிய அவ்வுதயணமன்னனுடைய சிறந்த கைகளை மிகவும் வெள்ளிய துகில்கொண்டு புறத்தே கட்டினர் என்க. கெந்தம் - மணப்பொருள். எல்+முடி. (55)
-----------------
60. உதயணன் ஓலையெழுதி வயந்தகன்பாற் சேர்த்தல்
சிலந்தி நூலிற் செறித்தநற் சிங்கம்போல்
அலங்கல் வேலினா னன்புடை யூகிக்கே
இலங்க வோலை யெழுதி வயந்தகன்
நலங்கொள் கையி னவின்று கொடுத்தனன்.
(இ - ள்.) சிலந்தியினது நூலாலே கட்டுண்டு நிற்குமொரு நல்ல அரிமானேறு போன்ற மாலையணிந்த வேலையுடைய அவ்வுதயணமன்னன் தன்பாற் பேரன்புடைய யூகிக்குமட்டுமே விளங்கும்படி குறிப்பு மொழிகளாலே ஒரு திருமந்திரவோலை வரைந்து அதனை யூகியின்பாற் கொடுக்கும்படி குறிப்பாற் கூறி வயந்தகனுடைய நன்மையுடைய கையிலே கொடுத்து விட்டனன் என்க. (56)
-------------
61. பிரச்சோதனன் மகளாகிய வாசவதத்தை கனாக்காண்டல்
காசி றேர்மிசைக் காவ லுடன்செலப்
பேச ரும்பெரு மைப்பிரச் சோதனன்
ஆசை யின்மக ளாடகப் பாவைபோன்ம்
வாச வதத்தை வண்மைக் கனவிடை.
(இ - ள்.) பிரச்சோதனன் அமைச்சனாகிய சாலங்காயனும் மறவரும் கட்டுண்ட உதயணனைக் குற்றமற்றவொரு தேரிலேற்றிப் பெரிதும் பாதுகாப்புடன் உஞ்சை நகர்க்குச் செல்வாராக! இனி அவ்வுஞ்சை நகரத்தின்கண் சொல்லொணாத சிறப்பினையுடைய அப்பிரச்சோதன மன்னவனுடைய பேரன்பிற்கெல்லாம் கொள்கலனாயமைந்த நன்மகளும் பொற்பாவைபோல்பவளுமாகிய வாசவதத்தை நல்லாள் துயிலிடையே தோன்றிய வளப்ப மிக்கதொரு கனவின்கண் என்க. (57)
----------
62.
பொங்கி ளங்கதிர் போந்த தமளியில்
கொங்கை யைத் தழீஇக் கொண்டு டன்செல
நங்கை கண்டுநற் றாதைக் குரைத்தனள்
அங்கந் நூலின றிந்தவர்க் கேட்டனன்.
(இ - ள்.) ஒளிமிகுமிளமையுடையதொரு ஞாயிறு தன்னெதிர் வந்தது; அது கையிடத்தே தன் கொங்கைகளைத் தழுவிக் கொண்டு தன்னையும் அழைத்துக்கொண்டு அப்பொழுதே போகக் கனவு கண்டு அந்தவாசவதத்தை இவ்வினிய கனவினைத் தன் அன்புடைய தந்தைக்குக் கூற அவ்வரசனும் அப்பொழுதே அக்கனவினைக் கனா நூலறிந்த மேலோர்க்குச் சொல்லி அதன் பயன் யாதென வினவினன் என்க. (58)
-----------
63.
ஆசிரிய விருத்தம்
இவண்மு லைக்கி யைந்தநல் லெழின்ம ணம்ம கன்வந்தே
துவளி டையி ளமுலை தோய்ந்து கொண்டு போமென
அவள்க னவு ரைப்பக்கேட் டண்ண லும்ம கிழ்ந்தபின்
திவளு மாலைத் தேர்மிசைச் செம்மல் வந்த டைந்தனன்.
(இ - ள்.) கனா நூலறிந்தவர் ‘பெருமானே! இவ்வாசவதத்தை இளமுலைப் போகந் துய்த்தற்கியைந்த ஆகூழையுடையா னொரு பேரழகுடைய மணமகன் ஈண்டுவந்து துவளுமிடையையுடைய இவளுடைய இளமுலைப்போகமும் நுகர்ந்து தன்னுடன் அழைத்துச் செல்வான் என்று அக்கனவின் பயன்கூறக் கேட்டு அப்பிரச்சோதன மன்னனும் பெரிதுமகிழ்ந்திருக்கும் பொழுது முற்கூறப்பட்ட உதயணகுமரனும் தேரிலே உஞ்சை நகரத்திற்கு வந்து சேர்ந்தான். (59)
------------
64. உதயணன் சிறைக் கோட்டம் புகுதலும் வயந்தகன் யூகியைக் காண்டலும்
மன்ன னைமி கவும்நொந்து மாந கரி ரங்கவும்
துன்னி வெஞ்சி றைமனையிற் றொல்வி னைது ரப்பவும்
இன்ன நற் படியிருப்ப வியல்வ யந்த கனுந்தான்
சென்று யூகி தன்னிடைத் திருமு கத்தைக் காட்டினான்.
(இ - ள்.) உதயணனைச் சிறையாகப் பற்றிக் கொணரக்கண்ட அம்மாநகரத்து மாந்தரெல்லாம் பிரச்சோதன மன்னன் பெரிதும் மதிகெட்டான் எனப் பழித்து உதயணன் பொருட்டு வருந்தா நிற்பவும், உதயணனது பழவினை வந்து அவனை வெவ்விய சிறைக் கோட்டத்துள்ளே புகுத்தாநிற்பவும் இவ்வாறு இருப்ப நல்லியல் அமைச்சனாகிய வயந்தகன் உதயணன் கூறியவாறு விரைந்து சென்று யூகியந்தணன்பால் உதயணன் திருமந்திர வோலையைக் கொடுத்தனன் என்க. (60)
-------
65. ஓலைகண்டு யூகி துன்புறுதல்
அண்ணல் கோயி லெங்கணு மரற்றி னும்பு லம்பினும்
கண்ணி னீர ருவிகள் கால லைத்தொ ழுகவும்
அண்ண லோலை வந்தசெய்தி மான யூகி கேட்டுடன்
புண்ணில் வேலெ றிந்தெனப் பொற்ப ழிந்து வீழ்ந்தனன்.
(இ - ள்.) உதயணகுமரன் வரைந்துவிடுத்த திருமந்திரவோலைச் செய்தி கேட்டவுடன் யூகியின் அரண்மனையில் எங்கெங்கும் அழுதலாலும் புலம்புதலாலும் கண்ணீர் அருவிபோல வீழ்ந்து மாந்தருடைய கால்களில் வழிந்து ஒழுகாநிற்பவும் அந்த யூகி பழம் புண்ணில் வேல் செருகினாற் போன்று வருந்திப் பொலிவிழந்து நிலத்திற் சாய்ந்தனன் என்க. (61)
----------
66. யூகியின் கோட்பாடு
தேறி னனெ ழுந்திருந்து தீயர் கள்ள யானையை
மாறு தரக் காட்டியெம் மன்ன னைப்பி டித்தனர்
வீறு தர வந்நகரை வெங்க யத்த ழித்துப்பின்
கூறு மன்ம களுடன் கொற்ற வனை மீட்குவம்.
(இ - ள்.) நிலத்திலே வீழ்ந்த யூகி ஒருவாறு தெளிந்து எழுந்திருந்து எம்மரசனைப் பொய்யானையைத் தேவயானைபோல மாறுபடக் காட்டிப் புல்லர்கள் சிறைப்பிடித்தனர். நன்று! நன்று! யாமோ எமக்குப் பெருமையுண்டாகும்படி அப்பகை மன்னனுடைய உஞ்சை நகரத்தை வாய்மையான யானையாலேயே அழித்துப் பின்னரும் அவ்வோலையிற் கூறப்பட்ட அப்பிரச்சோதன மன்னனுடைய மகளாகிய வாசவதத்தையையும் சிறைப்பிடிபிப்த்து எம்மரசனையும் மீட்கக் கடவேம் என்றும் என்க. (62)
---------
67.
மீள்கு வம்யா ருமென் றெணி வெகுண்டு போர்க்க ளத்தினில்
வாண்மு னைக டந்தவர்க்கு வஞ்ச னைசெய் வோமென
நீள்வி ழிநன் மாதரோடு நின்ற சுற்றத் தோர்களைக்
கோள் களைந்து புட்பகத்திற் கொண்டு வந்து வைத்தனன்.
(இ - ள்.) எம்மரசன் மீண்டபின்னர் யாமும் மீளக்கடவேம் என்றும், சினந்து போர்க்களத்தினில் வாட்போரில் வஞ்சனை செய்து வென்ற அப்பகைவர்க்கு யாமும் வஞ்சனை செய்தே வெல்வோமென்றும் தன்னுட் கருதி நெடிய கண்களையுடைய தன் மனைவிமாரோடும் ஆங்கிருந்த சுற்றத்தார்களையெல்லாம் அவரவர் கொள்கைகளை மாற்றிப் புட்பக நகரத்திற்கு அழைத்து வந்து ஆங்கு இருப்பித்தான் என்க. (63)
------------
68.
உருமண் ணுவா வினுட னிடப கன்ச யந்தியும்
திருநி றைந்த புட்பகமுஞ் சேர்ந்தி னிதி ருக்கவென்
பெரும கன்க ணிகை மைந்தர் பிங்க லக டகரை
அரசு நாட்டி யாள்கவென்றே யன்பு டன்கொ டுத்தனன்.
(இ - ள்.) உருமண்ணுவாவினோடு இடபகனும் முறையே சயந்தி நகரத்தையும் செல்வம் நிறைந்த புட்பக நகரத்தையும் எய்தி இனிதாக ஆட்சி புரிந்திருப்பாராக! எம்பெருமான் சதானிக வேந்தனுடைய கணிகை மக்களோடு இளங்கோக்களாகிய பிங்கல கடகர்கள் கௌசாம்பியிலிருந்து நமதரசாட்சியினை நிலைநிறுத்தி ஆள்க என்றும் கூறி அன்புடனே அந்நகரங்களை அவர்க்கு வழங்கினன் என்க. உதயணன் ஆட்சி யூகியின் கண்ணதாகலின் அவன் வழங்க வேண்டிற்று. (64)
-------------
69. யூகியின் சூழ்ச்சி
மன்ன வற்கி ரங்கியூகி மரித்த னனென் வார்த்தையைப்
பன்னி யெங்க ணும்முறை பரப்பி வைய கந்தன்னில்
அன்ன தன தொப்புமை யமைந் ததோர்ச வந்தனை
உன்னி யூகி கான்விறகி லொள்ளெரிப்ப டுத்தனன்.
(இ - ள்.) யூகி நீள நினைந்து உதயண மன்னன் சிறைக்கோட் பட்டமைக்கு மனநொந்து இறந்தொழிந்தான் என்னுமொரு செய்தியைப் பலர் வாயிலாய்ப் பன்முறையும் கூறுவிக்குமாற்றால் முறையே யாண்டும் பரப்பி நாட்டின்கண் தன்னுடைய உருவத்தோடு ஒப்புமையுடையதொரு பிணத்தை ஊரறியக் கொடுபோய்ச் சுடுகாட்டில் ஈம நெருப்பிலிடுவித்தான். கான் - காடு; சுடுகாடு. (65)
-------------
70. யூகி பிறரறியாவண்ணம் அவந்தி நாடேகுதலும் பகைமன்னர் நாட்டினைப்
பற்றிக் கோடலும்
தன்ன கர்பு லம்பவெங்குந் தன்னை யுங்க ரத்தலின்
உன்னி வந்து மாற்றரச ரோங்கு நாடு பற்றினர்
என்ற றிந்து யூகியு மினிச்சி றையின் மன்னனைச்
சென்ற வட்காண் டுமென்று தேய முன்னிச் சென்றனன்.
(இ - ள்.) இங்ஙனமொரு சூழ்ச்சி செய்தபின்னர் யூகி தன்னகர மாந்தரும் யாண்டும் அழாநிற்பத் தன்னை யாருமறியாதபடி
மறைந்து போதலாலே பகையரசர்கள் அற்ற நோக்கி வந்து உயரிய வத்தவ நாட்டினைக் கைப்பற்றலாயினர், என்று மறைவிருந்த அந்த யூகி அறிந்து கொண்ட பின்னர், யாம் இனிச் சென்று சிறையிருக்கின்ற எம்மன்னன் உதயணகுமரனை அச்சிறையிடத்தே காண்பேம் என்று கருதி அந்த அவந்தி நாட்டை நோக்கிச் சென்றனன் என்க. (66)
----------
71.
துன்ன ருநற் கானமோடு தொன்ம லையிற் சாரலும்
செந்நெல் கள்வி ளைவயற் செழும்பு னன திகளும்
மன்னு நாடுந் தான்கடந்து மாகொ டிநி றைந்திலங்கு
நன்ன கருஞ் சேனையி னன்க மைச்சன் சென்றனன்.
(இ-ள்.) ஊடுபோதற்கரிய காடுகளையும் முதிய மலைச்சாரல்களையும் சிவந்த நெற்கள் விளைதற்கிடனான வயல்களையும் மிக்க நீரையுடைய பேரியாறுகளையும் செல்வம் நிலைபெற்ற நாடுகளையுங் கடந்து போய் உதயணன் அமைச்சனாகிய யூகி பெரிய கொடிகள் நிறைந்து விளங்குகின்ற நல்ல நகரமாகிய உஞ்சையின்கண் புகுந்தான்; என்க. உஞ்சேனை - உஞ்சை (67)
------------
72. உஞ்சை நகரத்தின்கண் யூகியின் செயன்முறைகள்
(கலி விருத்தம்)
ஒலிகட லன்ன வோசையுஞ் சேனைதன்
புலிமுக வாயிற் பொற்புடைத் திலங்கும்
மலிகுடிப் பாக்க மதின் மறைந்திருக்க
வலியதன் சேனை வைத்தன னன்றே.
(இ - ள்.) முழங்கா நின்ற கடல்போன்ற ஆரவாரத்தை யுடைய அந்த உஞ்சை நகரத்தின் புலிமுக மாடவாயிலின் அழகிய பக்கத்தே விளங்காநின்ற குடிமக்கள் நிறைந்த ஊர்மதிலில் வேற்றுருவில் மறைந்துறையும்படி வலிய தன்னுடைய படைமறவர்களை வைத்தனன;் என்க. (68)
-------------
73. யூகி மாறுவேடம் புனைந்து நகர்வீதியில் வருதல்
இன்னவை கேட்கி னின்னவை தருகென
மன்னவ னறியு மருளுரை பயிற்றி
மன்னிய வேடம் வகுத்துடன் கொண்டு
நன்னகர் வீதி நடுவினில் வந்தான்.
(இ - ள்.) இன்ன மொழிகளைக் கூறி வினவின் அவற்றிற்கு இன்னின்ன விடைதரல் வேண்டும் என்று தமக்குள் வரையறை செய்யப்பட்டுள்ள குறிப்பு மொழிகளைப் பண்டே உதயணன் நன்
கறிகுவனாதலின் பிறர் மயங்குதற்குக் காரணமான அக்குறிப்பு மொழிகளைப் பேசிக்கொண்டு நிலைபெற்றதொரு மாறுவேடம் பூண்டுகொண்டு உதயணனைக் காணும்பொருட்டு நல்ல அந்நகர வீதியினடுவே வந்தான் என்க. (69)
---------
74. யூகியின் மாறுவேடத்தின் இயல்பு
இருள்படு குஞ்சி யியல்படத் தூற்றி
மருள்செய மாலை வகுத்துடன் சுற்றி
உருநிறச் சுண்ண முடலினிற் பூசிப்
பொருணலச் சுட்டி பொருந்துறச் சேர்த்தி.
(இ - ள்.) இருள்போன்று கறுத்த தன் தலைமயிரை விரித்து விட்டு அதன்மேல் கண்டோர் மயங்குமாறு மலர்மாலை பலவற்றைப் பலவகையாகச் சுற்றிக்கொண்டு, அழகிய நிறமுடைய நறுமணப் பொடியை உடனிரம்பப் பூசியும் பொருளில் நன்மைமிக்க சுட்டியென்னும் அணிகலன் நெற்றியிற் பொருந்தும்படி வைத்தும், என்க. உரு - அழகு. (70)
-------------
75. இதுவுமது
செம்பொற் பட்டஞ் சேர்த்தி நுதலில்
அம்பொற் சாந்த மணிந்த மார்பன்
செம்பொற் கச்சைச் சேர்த்தின னரையில்
அம்படக்கீறி யணிந்த வுடையான்.
(இ - ள்.) நெற்றியி்ன்கண் செம்பொன்னாலியன்ற பட்டத்தையுமணிந்து அழகிய பொன்னிறச் சாந்தத்தை அணிந்த மார்பையுடையனாய், செம்பொன்னிழையாலியன்ற கச்சையைக் கட்டியவனாய் இடையின்கண் அழகாகக் கிழித்துடுத்த ஆடையையுடைய வனாய் என்க. (71)
----------------
76. இதுவுமது
கோதையுத் தரியங் கொண்ட கோலத்தன்
காதிற் குழையினன் காலிற் சதங்கையன்
ஊதுங் குழலின னுலரிய வுடுக்கையன்
போதச் சிரசிற் பொருநீர்க் கலசன்
(இ - ள்.) மலர் மாலைகளானும் மேலாடையானும் ஒப்பனை செய்து கொண்டவனாய்ச் செவியிற் குண்டலமணிந்தவனாய்க் காலிற் சதங்கை கட்டியவனாய் வேய்ங்குழலிசைப்போனாய் உலர்ந்ததோல் போர்த்த உடுக்கையையுடையவனாய்த் தலையின்மேல் மிகுதியாகப் பொருந்திய நீர்க் குடத்தையுடையவனாய் என்க. போதம் அறிவுமாம். (72)
-------
77. இதுவுமது
கொடியணி மூதூர்க் கோலநல் வீதி
நடுவட் டோன்றி நாடக மாடிப்
படுமிசைக் கரணம் பாங்கிற் றாண்டி
இடியென முழங்கி யினிதினின் வந்தான்.
(இ - ள்.) இவ்வண்ணமாக வேடம் புனைந்து கொண்டு கொடிகளாலே அழகு செய்யப்பட்ட பழைதாகிய அவ்வுஞ்சை நகரத்தின் அழகிய நல்ல தெருவின் நடுவே தோன்றி, தோன்றுகின்ற இசைக்கரண விலக்கணங்களையும் தன்னியல்பாலே கடந்து இடிபோல அத்துடியை முழக்கிக் கொண்டு இனிதாக வந்தனன் என்க. (73)
--------------
78. யூகி கூற்று
இந்திர லோகம்விட் டிந்திரன் வந்தனன்
அந்தரத் திருந்தியா னன்பினின் வந்தேன்
இந்திர னெனக்கிறை யீண்டும் புதல்வர்க்குத்
தந்திரக் குமக்குத் தானிறை யாமென.
(இ - ள்.) அங்ஙனம் வந்த யூகி ஆங்குக் குழுமிய மாந்தர் கேட்கும்படி “மாந்தர்காள் கேளுங்கள்! வானவர் நாட்டிலிருந்து அவ்வானவர் கோமானாகிய இந்திரன் இந்நகரத்திற்கு வந்தனன்; யான் அவ்விந்திரன்பாற் கொண்டிருந்த அன்புடைமையாலே வான் வழியே இங்கு வந்தேன். அந்த இந்திரன் எனக்கு அரசனாவான;் இங்குள்ள படைகளுக்கும் நுங்களுக்குங்கூட அவனே அரசன் ஆவன் காண்!” என்றான் என்க. (74)
-----------
79. இதுவுமது
புற்றினி லுறையும் பொறிவரி யைந்தலைப்
பற்றரு நாகம் பற்றிவந் தினிதா
உற்றவிந் நகரத் துட்சிறை வைத்தார்
அற்றதை யெங்கு மறியக் காட்டினார்.
(இ - ள்.) “மாந்தர்களே! நும்மனோர் தனக்குரிய புற்றில் வாளாவிருந்த புள்ளிகளையும் வரிகளையும் உடைய ஐந்து தலைகளையுடைய பற்றுதற் கரியதொரு நச்சுப் பாம்பினைப் பிடித்துவந்து இதுகாறும் இனிதே வாழ்ந்த இந்நகரத்திற் சிறைக்கோட்டத்தே வைத்தனர். அப்பாம்பினை இனிதாயதொரு காட்சியாக எவ்விடத்தும் எல்லோரும் அறியக் காட்டவுங் காட்டினர்; என்றான் என்க. (75)
---------
80. இதுவுமது
மருளுந் தெருளும் வரம்பில பயிற்றித்
திரளுறு செனங்கள் திறவதிற் சூழப்
பெருந்தெரு வெல்லாம் பிற்படப் போந்தே
அருஞ்சிறைப் பள்ளி யருகினிற் சேர்ந்தான்.
(இ - ள்.) இவ்வாறு யூகி கேட்போர் பொருளறியாது மயங்குதற் குரியனவும் ஒருவாறு குறிப்பாற் பொருள் விளங்குதற்குரியனவுமாகிய மொழிகள் எண்ணிறந்தவற்றைப் பலகாலும் சொல்லித் தன்னைச் சூழ்ந்து குழுமுகின்ற அந்த மாந்தர் தன்னைத் திறம்பட விடாது சூழ்ந்துவரும்படி பெரிய பெரிய தெருக்கள் எல்லாம் பிற்படக் கடந்துபோய் உதயணனிருந்த தப்புதற்கரிய சிறைக் கோட்டத்தின் பக்கலிலே சேர்ந்தான் என்க. (76)
-----------
(அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்)
81. யூகி சூழ்வினையொன்றால் தன்வரவினை உதயணனுக்குணர்த்திப் போதல்
கிளைத்தலை யிருவர் கற்ற கிளர்நரப் பிசையுங் கீதம்
தளைச்சிறை மன்னன் கேட்பத் தான்மகிழ் குழலினூத
உளத்தியல் பாட்டைக் கேட்டு யூகியா மென மகிழ்ந்து
களைந்தனன் கவலை யெல்லாங் காவலற் குணர்த்திப் போந்தான்.
(இ - ள்.) சிறைக் கோட்டத்தயலே சென்ற யூகி தானும் உதயணனும் இளமையின் தம் சுற்றத்தாரிடையே பயின்றதும் கிளர்ச்சியுடைய யாழிற்கு மிகவும் பொருந்துவது மானதோரிசையின் விலங்கு பூட்டி வைத்தற்கிடனான அச்சிறைக் கோட்டத்துறை கின்ற மன்னனாகிய உதயணன் கேட்குமாற்றால் தான் பெரிதும் சுவைத்து மகிழ்கின்ற வேய்ங்குழலின்கண் வைத்து ஊதா நிற்ப; தன் நெஞ்சின்கண் ஊடுருவி மகிழ்விக்கின்ற அவ்விசையைக் கேட்குமளவிலே உதயணகுமரனும் இவ்விசை யூதுவோன் யூகியே என்று தெளிந்து மகிழ்ந்து தன் கவலையெல்லாம் விடுத்திருந்தனன். இவ்வாறு யூகி உதயணனுக்குத் தன் வரவினை உணர்த்திச் சென்றான் என்க. கிளைத்தலை - சுற்றத்தார் சூழல். (77)
---------
82. பிரச்சோதனன் மறவர் யூகியை அணுகி ஆராய்ந்துபோதல்
பலகொடி வாயிற் செல்லப் பார்மன்னன் சேனை வந்து
நலமுறு வடிவு நோக்க நாகத்தின் கோடு பாய்ந்த
கலனணி மார்வ டுவ்வைக் கஞ்சுகத் துகிலின் மூடத்
தலைமுத லடியீ றாகத் தரத்தினாற் கண்டு போந்தார்.
(இ - ள்.) இந்நிகழ்ச்சியினை ஒற்றராலுணர்ந்த பிரச்சோதனனுடைய படைமறவர் அவ்வியூகி பலவேறு கொடி நுடங்குகின்ற மாடவாயிலிடத்தே செல்லும்பொழுது வந்து அவனுடைய அழகிய வடிவத்தைக் கூர்ந்து நோக்காநிற்ப, அதுகண்ட யூகியும் (தன் சிறப்படையாளமாய்த்) தன் மார்பின்கண் பண்டு போர்க்களத்தே களிற்றியானைக் கோடுழுதமையாலுண்டான வடுவைக் குப்பாயத்தாலே (சட்டையாலே) மூடியிருப்ப எஞ்சிய பகுதிகளைத் தலைமுதல் அடியீறாக நன்றாக நோக்கிச் சென்றனர் என்க. யூகிக்கு மார்பில் வடுவுண்டென்பதனை “வலிந்துமேற் சென்ற கலிங்கத் தரசன், குஞ்சர மருப்பிற் குறியிடப்பட்டுச் செஞ்சாந்து மெழுகிய சேடுபடு செல்வத்து, மார்பினது வனப்பும்,” என (பெருங்கதை, 1, 25: 20-25) முதனூலும் கூறுதலறிக. (78)
-----------
83. யூகி யானைக்கு வெறியூட்டுதல்
பித்தனற் பேய னென்று பெருமகற் குரைப்பக் கேட்டு
வெற்றிநற் சேனை மற்றும் வெஞ்சிறை காக்க வென்றான்
மற்றினி யூகி போந்து மலிகுடி பாக்கஞ் சேர்ந்தே
அற்றைநா ளிரவில் யானை யனல்கதம் படுக்க லுற்றான்.
(இ - ள்.) யூகியைக் கூர்ந்து நோக்கிச் சென்ற மறவர் அரசனை அணுகி இங்ஙனம் வந்த புதுவோன் யாரோ ஒரு பித்தனாதல் வேண்டும், இன்றேற் பேயேறியவன் ஆதல் வேண்டும் என்று தம்மரசனுக்கு அறிவித்தனராக; அப்பால் யூகி தன் மறவர் உறையும் குடிமக்கள் மிக்க மதிற்பாக்கத்தை அடைந்து அற்றை நாளிரவிலேயே பிரச்சோதனன் பட்டத்து யானையைப் புகையூட்டி
வெறிகொள்ளச் செய்ய முனைந்தான் என்க. அனலும் கதம் எனினுமாம். (79)
-----------
84. இதுவுமது
வாளொடு கைவில் லேந்தி வயந்தகன் றன்னோ டெண்ணித்
தோளன தோழன் கூடத் தூபத்துக் கேற்ற வத்தும்
வேளையீ தென்று கொண்டு விரகினாற் கயிறு பற்றித்
தாளொத்த கொம்மை மீதிற் றரத்தினா லிழிந்தா னன்றே.
(இ - ள்.) பாக்கத்தை எய்திய யூகி தகுந்த செவ்வி இஃதென்றுட் கொண்டு வயந்தகனோடு கூடி ஆராய்ந்து துணிந்து தனது தோள்போன்றுதவு மியல்புடைய தோழனாகிய அவ்வயந்தகனும் தன்னோடு வர மயக்கமருந்திட்டுப் புகையூட்டுதற்கு வேண்டிய பொருள்களோடு வாட்படையையும் கையிலேந்திச் சென்று உபாயமாகக் கயிறொன்றினை வீசி அதனைப் பற்றிக் கொண்டு மதிலின்மேலேறி யானைக்கால் போன்ற மதிலுறுப்பாகிய கொம்மையின் மேலிறங்கித் தன்னாற்றலாலே அரண்மனையகத்துட்புக்கான் என்க. (80)
------------
85. நளகிரியென்னும் அக்களிற்றியானையின் செயல்
ஆனைதன் னிலைகண் டெய்தி யகிலிடும் புகையு மூட்டிச்
சேனைமன் னகர ழித்துச் சிறைவீடுன் கடனே யொன்று
மானநல் யூகி யானை செவியின்மந் திரத்தைச் செப்ப
யானைதன் மதக்கம் பத்தி லருந்தளை யுதறிற் றன்றே.
(இ - ள்.) அரண்மனையின்கண் அவ்வரசனுடைய பட்டத்தி யானை யாகிய நளகிரியினைப் பிணிக்கும் கொட்டிலைத் தேடிக் கண்டு அதனூடு சென்று அகிற்புகையோடு மருந்துப்புகையு மூட்டி அந்நளகிரியின் செவியிலே “களிற்றரசே! படைகள் மிக்க பிரச்சோதன மன்னனுடைய இந்நகரத்தைச் சிதைத்தழித்து நங்கோமகனைச் சிறைவீடு செய்தல் நினது தலையாய கடமைகாண்! அக்கோமகன் நுங்கள்பாற் பேரன்புடையனல்லனோ!” என்று செவியறிவுறுத்துப்
பின்னரும் மானக்குணமிக்க நல்லோனாகிய அந்த யூகி அக்களிற்றினது செவியிலே மந்திரமோதியவளவிலே அம்மதக்களிறு தன்னைத் தறியோடு பிணித்திருந்த அறுத்தற்கரிய சங்கிலியை அறுத்துத் துகளாக்கியது என்க. (81)
-----------
86. யானை பாகரைக் கொல்லுதல்
நீங்கிட மிதுவென் றெண்ணி நிலைமதி லேறிப் போகத்
தூங்கிரு டன்னி லானை சுழன் றலைந் தோடப் பாகர்
பாங்கினால் வளைப்பப் பொங்கிப் படுமுகின் முழக்க மென்ன
ஆங்கது பிடுங்கிக் கையா லவரைக்கொன் றிட்டதன்றே.
(இ - ள்.) யூகி களிறு காற்பிணியுதறினமை கண்டு யாம் இனி இவ்விடத்தினின்றும் நீங்குதற்குரிய செவ்வியிதுவே என்று கருதி நிலைத்த மதிலின்கண் ஏறிப் புறமே போக, அக்களிறு உலகெலாந் துயிலுகின்ற அவ்விருட்பொழுதிலே விரைந்து சுழன்று சுழன்று யாண்டும் ஓட, அதுகண்ட யானைவலவர் பக்கங்களிலே சென்று மறித்தலாலே அக்களிறு பின்னரும் வெகுண்டு முகிலிற்றோன்றும் இடிபோல முழங்கி அவர்தம் கருவியைப் பிடுங்கித் தன் கையால் அவர்களை அறைந்து கொன்றது என்க. (82)
-----------
87.பிரச்சோதனன் களிற்றின் வெறிச்செயல் காண்டல்
வேழமும் மதங்கொண் டோட வேந்தன்கேட் டினிதெ ழுந்து
வேழநன் வேட்டங் காண வெம்முலை மாத ரோடும்
ஆழிநல் லிறைவன் றானு மணிமிகு மாட மேறிச்
சூழநன் மாதர் நிற்பத் துளக்கின்றி நோக்கி னானே.
(இ - ள்.) நளகிரி வெறிகொண்டு மனம்போன வழி யாண்டும் ஓடுகின்ற செய்தியைக் கேள்வியுற்ற ஆழியையுடைய பிரச்சோதன மன்னன் இனிதே எழுந்து அக்களிற்றினது நல்ல வேட்டத் தொழிலைக் காண்டற்கு வெவ்விய முலைகளையுடைய மனைவிமாரொடு அழகுமிக்க மேனிலை மாடத்திலேறித் தன்னைச் சூழ்ந்து உரிமை மகளிர் நிற்ப அச்சமின்றி நோக்கினான் என்க. வேட்டம் - கொலைத் தொழில்.
(83)
----------
88. நளகிரியின் தீச்செயல்கள்
கூடமா ளிகைக ளெல்லாங் கோட்டினாற் குத்திச் செம்பொன்
மாடமு மதிலு மற்று மறித்தஃதி டித்துச் செல்ல
ஆடவர் கூடி யோடி யயில்குந்தந் தண்ட மேந்தி
நாடி நற்கையாற் றட்டி நாற்றிசை சூழ்ந்து நின்றார்.
(இ - ள்.) அப்பொழுது அந்த யானை கூடங்களையும் மாட மாளிகைகளையும் இன்னோரன்ன பிறவற்றையுமெல்லாம் தனது மருப்பினாற் குத்திச் சிதைத்து மேலும் மாடங்களையும், மதிலையும், மீண்டும் அது இடித்து வீழ்த்திப் போகாநிற்ப, ஆண்டுள்ள மறவரெல்லாம் ஒருங்கு கூடி யானையின்பால் ஓடி, வேலும் குந்தமும் தண்டும் பிறவுமாகிய படைக்கலன்களை ஏந்தி அக்களிற்றின் கொடுஞ்செயலைக் கண்டஞ்சி வறிய கைகளைத் தட்டி நான்கு திசைகளிலுஞ் சூழ்ந்து நின்றனர் என்க. (84)
--------
89. இதுவுமது
கூற்றுரு வெய்தி யோடிக் கோட்டிடைக் குடர்க ளாடக்
காற்றென முழக்கி வேழங் கண்டமாந் தரைதத்ன் கையால்
நாற்பத்தெண் பேரைக் கொன்று நடுவுறப் பிளந்திட் டோடி
மாற்றருங் கோட்டை வாயின் மதிற்புறம் போந்த தன்றே.
(இ - ள்.) மக்களின் ஆரவாரங்கேட்டு அக்களிறு கூற்றுவனே உருவங்கொண்டு வந்தாற்போன்று ஓடிச் சென்று அம்மாந்தர்களிற் பலரைக் குத்தித்தன் கோட்டின்கண் அவர்கள் குடல் கிடந்தசையும் படி சூறைக் காற்றென ஆரவாரித்துத் தன் கண்ணிலே கண்ட கண்ட மாந்தரைக் கையாற் புடைத்து நாற்பத்தெண்மரைக் கொன்று அம்மக்கட் கூட்டத்தை ஊடறுத் தோடிப் பகைவரால் மாற்றுதற் கியலாத அவ்வரண்மனையினது மாடவாயிலின் மதிற்புறத்தே வந்தது என்க. (85)
------------
90. இதுவுமது
அறுநூற்றின் மீதி லைம்ப தானநற் சேரி தானும்
உறுநூற்றி லேழை மாற வுள்ளநாற் பாடி யோடும்
நறுமலர்க் கந்தம் வீசு நன்குள காவு மற்றும்
பெறுமத யானை கோட்டாற் பெருநக ரழித்த தம்மா.
(இ - ள்.) மதிற்புறத்தே வந்த களிறு ஆண்டுள்ள அறுநூற்றைம்பது நல்ல சேரிகளையும் எழுநூற்று நான்கு பாடிகளையும் பிறவற்றையும் மதவெறி பிடித்த அந்தக் களிற்றியானை தன் கோட்டாலேயே குத்தி அழித்தொழித்தது என்க. (86)
--------------
91. உஞ்சை மாந்தர் அலமரல்
பாடுநன் மகளி ரெல்லாம் பாட்டொழிந் தரற்றி யோட
ஆடுநன் மாதர் தாமு மாடல்விட் டலந்து செல்லக்
கூடுநன் மங்கை மைந்தர் குலைந்தவ ரேகிச்செம்பொன்
மாடநன் மேனிலைப்பான் மன்னினார் பலரோ டாங்கே.
(இ - ள்.) அப்பொழுது அம்மாநகரத்தே பண் பாடிய அழகிய மகளிரெல்லாம் பாடுதல் விடுத்து அழுதுகொண் டோடவும், கூத்தாடிய மகளிர்களும் கூத்தொழிந்து மனம் நொந்து போகவும், தம்முட் காதலாற் புணர்ச்சியுற்ற அழகிய மகளிரும் ஆடவரும் அப்புணர்ச்சி குலைந்தவராய்ச் சென்று செம்பொன்னாலியன்ற மேனிலை மாடங்களிலேறி ஆங்கு நிற்கின்ற பலரோடுங் கூடி நிற்பாராயினர் என்க. (87)
---------------
92. அமைச்சர் அக்களிற்றை யடக்குதல் உதயணன் ஒருவனுக்கே முடியும் எனல்
மத்துறு கடலின் மிக்கு மறுகிய நகரத் தாரும்
வற்றிநல் வேந்த னோடு வினவினா ரமைச்ச ரெண்ணி
இத்தின நகரம் பட்ட விடரது விலக்க னல்ல
வத்தவன் கைய தென்ன வகுத்துரை கேட்ட மன்னன்.
(இ - ள்.) மந்தரமலையாகிய மத்தாற் கடையப் பட்டுக் கலங்கிய பாற்கடல் போன்று நளகிரியாலே துன்புறுத்தப்பட்ட நகரமாந்தரனைவரும் வெற்றியுடைய தம் செங்கோன் மன்னனை யடைந்து குறை வேண்டினராக மன்னவனும் அமைச்சரோடு சூழ்ந்து வினவிய வழி அவர் இற்றை நாள் நமக்குத் தோன்றிய இவ்விடையூற்றை விலக்கி நம்மைப் பாதுகாத்தல் நன்மையுடைய வத்தவ நாட்டு மன்னனாகிய உதயணனுக்கே முடிவதாம், ஆதலால் நம் வாழ்க்கை அவன் பாலது என்று விளக்கிக் கூற அது கேட்ட மன்னவன் என்க. (88)
--------
93. மன்னன் மறுத்துக் கூறுதல்
போரினி னிற்க லாற்றாம் பொய்யினிற் றந்த மைந்தன்
சீரொடு சிறப்பும் வௌவிச் சிறையினில் வைத்த தன்றிப்
பேரிடிக் கரிமுன் விட்டாற் பெரும்பழி யாகு மென்று
தாருடை வேந்தன் சொல்லத் தரத்தினா லமைச்சர் சொல்வார்.
(இ - ள்.) அதுகேட்ட மன்னன் பழிக்கஞ்சியவனாய் அமைச்சியலீர்! யாமோ அம்மன்னன் மகனோடு போர் செய்தற்கு ஆற்றலிலேமாய் வஞ்சித்துச் சிறைபிடித்துக் கொணர்ந்து அவனுடைய சீரையுஞ் சிறப்பையும் பறித்துக் கொண்டதொரு பழியும் கிடக்க, பின்னரும் பேரிடிபோலும் கொடுமையுடைய நளகிரிக் கூற்றத்தின் முன்புங் கொடு போய் விட்டால் அது பெரியதொரு பழியாகுமன்றோ என்று வெற்றி மாலையுடைய அப் பிரச்சோதன மன்னன் மறுத்துக் கூற அவ்வமைச்சர்கள் தந்தகுதிக்கியையக் கூறுவார் என்க. (89)
------------
94.அமைச்சர்கள் அதுபழியன்று புகழேயாமெனல்
இந்திர னானை தானு மிவன்கையா ழிசைக்கு மீறா
திந்திரன் வேழ முங்கேட் டேழடி செல்லு மற்றிக்
கந்திறு கைம்மா விக்கோன் கைவீணை கடவா தென்ன
மந்திரத் தவர்சொற் கேட்டு மன்னனப் படிச்செய் கின்றான்.
(இ - ள்.) பெருமானே! இவ்வுதயணன் கையதாகிய கோடவதி என்னும் பேரியாழினது இன்னிசை கேட்பின் இந்திரனுடைய ஐராவதமேயாயினும் அடங்குவதன்றி மீறிச் செல்லாது. அவ்விந்திரன் களிறும் அவனை வழிபட்டு அவன்பின் ஏழடி செல்லுமே இங்ஙனமாகலின் தறிமுறித்த நமது களிற்றியானை இம்மன்னனுடைய யாழினது இசைக்கு அடங்குவதன்றிக் கடந்து போகாது; ஆகவே அது நமக்கும் அவனுக்கும் புகழேயன்றிப் பழியாகாது என்று ஆராய்ந்து அவ்வமைச்சர் கூறிய மொழி கேட்டு மன்னனும் அவ்வாறே செய்யத் துணிந்தனன் என்க. (90)
----------
95. அமைச்சன் பிரச்சோதனன் சீவகன் என்பான் உதயணனைக் கண்டு கூறல்
சீவகன் வத்த வற்குச் செவ்விதிற் செப்பு கின்றான்
தேவ விந் நகரிடுக் கண் டீர்க்கைநின் கடன தாகும்
போவதுன் றேசத் தென்றல் புரவலன் கடன தாகும்
பூவல னுரைத்தா னென்னப் புகழ்ந்தவன் சிறை விடுத்தான்.
(இ - ள்.) பிரச்சோதனன் வேண்டுகோளுடன் சென்ற சீவகன் என்பான் சிறைக்கோட்டம் புக்கு உதயணனுக்கு நன்கு கூறுவான். ?அரசர்க்கரசே இவ்வுஞ்சைமாநகர் மாந்தர்க்கு இற்றை நாள் களிறு செய்யும் துன்பம் தீர்ப்பது உன் கடமையாமென்றும், இதற்குக் கைம்மாறாக நீ சிறை வீடுபெற்று நின்னாடு சேர்தலைச் செய்வது எம் மன்னன் கடமையாம் என்றும் எம் மன்னன் உரைத்தனன்? என்று அவ்வுதயணனைப் புகழ்ந்து கூறி அவனைச் சிறைவீடுஞ் செய்தனன் என்க. (91)
------------
96.
உருவுள சிவிகை யேறி யுயர்மன்னன் மனைபு குந்து
திருமயி ரெண்ணெ யிட்டுத் திறத்தினன் னீரு மாடி
மருவிநன் பட்டு டுத்து மணிக்கல னினிது தாங்கித்
தெருவிடைத் திகழப் புக்கான் றிருநகர் மகிழ் வன்றே.
(இ - ள்.) சிறைவீடுபெற்ற உதயணகுமரன் அந்நகர் மாந்தர் மகிழும்படி அழகிய சிவிகையிலேறி
உயரிய பண்புடைய பிரச்சோதன மன்னன் அரண்மனை புகுந்து அழகிய மயிரின்கண்
எண்ணெய் நீவித் திறம்பட நல்ல நீரிலே ஆடிச் சென்று பட்டாடையுடுத்து மணியணிகலன்
காண்டற்கினிதாக அணிந்து கொண்டு அரச வீதியில் அழகுறச் சென்றனன் என்க. (92)
--------------
97. உதயணன் யாழிசைத்தலும் களிறு அடங்குதலும்
பருந்துபின் றொடர யானை பறவைகண் மற்றுஞ் சூழப்
பெருந்தெரு நடுவுட் டோன்றப் பீடுடைக் குமரன் றானும்
திருவலித் தடக்கை வீணை சீருடன் பாட லோடும்
மருவலிக் களிறுங் கேட்டு வந்தடி பணிந்த தம்மா.
(இ - ள்.) அங்ஙனம் சென்ற உதயணகுமரன் ஆங்கொரு பெரிய தெருவின் நடுவே அக்களிற்றியானை தன்னைப் பருந்துகள் பின் தொடர்ந்து பறப்பவும், பிற பறவைகளும் சூழ நிற்பவும் எதிர் வந்து தோன்ற, அதனைக் கண்ட பெருமையுடைய அவ்வத்தவ வேந்தனும் அழகும் வலிமையுமுடைய தன் பெரிய கையின்கண்ணதாகிய யாழினைப் பண்ணுறுத்திச் சீரோடு பண் எழுப்பிப் பாடியவுடனே ஆங்கு வந்த வலிமையுடைய அக்களிறு தானும் அவ்வின்னிசை கேட்டு மகிழ்ந்து அவன் திருமுன்னர் வந்து அடிகளில் முழந்தாட் படியிட்டு வணங்கிற்று என்க. (93)
-----------
98. உதயணகுமரன் நளகிரியின் மேலேறுதல்
பிரிந்தநற் புதல்வர் வந்து பெற்றதந் தந்தை பாதம்
பரிந்தநற் காத லாலே பணிந்திடு மாறு போலே
இருந்துதற் பணிந்த யானை யெழின்மருப் படிவைத் தேறிப்
பெருந்தகை யேவிக் கோட்டு பெருங்கையாற் றோட்டி கொண்டான்.
(இ - ள்.) பிரிந்து போன மைந்தர் மீண்டு வந்து தம்மைப் பெற்ற தந்தையின் அடிகளிலே மிக்க அன்புடன் வீழ்ந்து வணங்குவது போலத் தன்னைப் பணிந்த அந்த நளகிரியின் குறிப்பறிந்து அதன் மருப்பிலே அடியை வைத்து ஏறிப் பிடரின்கண் வீற்றிருந்து அந்தப் பெருந்தகையாகிய உதயணன் அதனையே ஏவி அதுதன் வளைந்த கையினாலேயே எடுத்துக் கொடுப்பத் தோட்டியையும் தன் கையிற் கொண்டனன் என்க. ஏறியிருந்து என மாறுக. (94)
--------
99. உதயணன் அக்களிறூர்ந்து வருதலும் பிரச்சோதனன் மகிழ்தலும்
வைத்தநன் மணியும் யாழும் வரிக்கயி றதுவு நீட்ட
வெற்றிநல் வேந்தன் வாங்கி வீக்கிமிக் கார்த்துக் கொண்டே
உற்றநல் வீதி தோறு மூர்ந்துநற் சாரி வட்டம்
பற்றிநன் கோட்டக் கண்டு பார்த்திபன் மகிழ்ச்சி கொண்டான்.
(இ - ள்.) பின்னர் அக்களிறு ஏவாமலும் ஆங்கு உதயணன் நிலத்திலே வைத்துள்ள நல்ல மணியையும் கோடவதியையும் புரோசைக் கயிற்றையும் தானே எடுத்துக் கொடுப்ப வெற்றிமிக்க நல்ல வேந்தனாகிய அவ்வுதயணன் அவற்றையுங் கைக்கொண்டு கயிற்றை அதன் கழுத்திலே வரிந்து மிகவும் இறுக்கிக் கட்டிப் பின்னர் அந்நகரிற் பொருந்திய சிறப்புடைய வீதிகளிலெல்லாம் சாரி வட்டம் என்னும் களிற்று நடை வகைகளாலே நன்றாக ஊர்ந்து வருதலை அப்பிரச்சோதன மன்னன் கண்டு பெரிதும் மகிழ்ச்சியுற்றான் என்க. சாரி, வட்டம் என்பன யானையின் நடை வகைகள். (95)
-----------
100. பிரச்சோதனன் உதயணனுக்குப் பரிசு வழங்குதல்
பிடிப்புப்பொன் விலைமட்டில்லாப் பெருவலி யாரந் தன்னை
முடிப்புவி யரச னீய மொய்ம்பனு மணிந்து கொண்டு
கொடிப்புலி முகத்து வாயிற் கோட்டையுட் கொண்டு வந்தான்
இடிக்குரற் சீய மொப்ப விலங்கிய குமரன் றானே.
(இ - ள்.) பொற்கம்பியாற் கட்டப்பெற்ற விலைமதிக்க வொண்ணா மிக்க வன்மையுடையதொரு முத்து மாலையை அந்நாட்டு முடிமன்னனாகிய பிரச்சோதனன் பரிசுப் பொருளாக உதயணனுக்கு வழங்க இடிபோன்று முழங்கும் அரிமானேறு போல வீறுடையனாகத் திகழ்ந்த அவ்வுதயணகுமரன் அம்முத்து மாலையை மகிழ்ந்தேற்று மார்பிலணிந்து கொண்டு அக்களிற்றினைக் கொடியுயர்த்திய அக் கோட்டையின் புலிமுக வாயில் மாடவழியாக உள்ளே ஊர்ந்து வந்தான் என்க. (96)
-------
101. பிரச்சோதனன் உதயணனைத் தழுவிக் கோடல்
சால்கவென் றிறைவன் செப்பத் தன்னுடைக் கையி னோச்சிக்
கால்களின் விரலி னெற்றி கனக்கநன் கூன்றி நின்று
மால்கரி கால் கொடுப்ப மன்னனு மகிழ்ந்து போந்து
வேல்கவின் வேந்தன் காண வியந்துடன் தழுவிக் கொண்டான்.
(இ - ள்.) அவ்வளவிலே பிரச்சோதன மன்னன் தன்கையை வீசிக் கோமகனே இனிக் களிறூர்தல் அமைவதாக வென்று கூற, மன்னன் கருதியாங்கு உதயணகுமரனும் தன் கால் விரல்களை அக்களிற்றின் நெற்றியிலே நன்கு அழுந்த ஊன்றி அக்களிறு இறங்குதற்குக் காலைமடித்துயர்த்திக் கொடுப்பக் கீழிறங்கினனாக; வேலேந்திய அழகுடைய அப்பிரச்சோதனன்றானும் மகிழ்ச்சியுடனே அவன்பால் வந்து அனைவரும் காணும்படி வியந்து, ஆர்வத்துடன் தழுவிக் கொண்டனன் என்க. (97)
---------
102. பிரச்சோதனன் உதயணனுக்கு முகமன்கூறி உறவு கொள்ளல்
மருமக னீயே யென்று மன்னவ னினிமை கூறி
வருமுறை நயந்து கொண்டு மகிழ்ந்துட னிருந்த போழ்தில்
திருமகள் கனவு கூறிச் செல்வநீ கற்பி யென்னப்
பெருவலி யுரைப்பக் கேட்டுப் பெருமக னுணர்த்த லானான்.
(இ - ள்.) தழுவிக் கொண்ட பிரச்சோதனன் எம்மருமை மருமகன் நீயே காண்! என்று இன்மொழி கூறி அவ்வுதயணன் தன் கருத்திற்கிணங்கு முறையாலே அவனைப் பெரிதும் நயந்து உறவு கொண்டு அவனுடன் வீற்றிருந்த பொழுது ஒருநாள் மிக்க பேராற்றலுடைய அப்பிரச்சோதன மன்னன் உதயணனை நோக்கி அருமந்த திருமகள் போலும் மகள் வாசவதத்தை நல்லாள் கண்ட கனவினையும் கூறி இறைமகனே நீயே எம்மக்கட்கு வித்தை பயிற்றுவாயாக என்று வேண்டிக் கொள்ள அது கேட்ட உதயணனும் அம்
மக்கட்கு அரிய வித்தைகளை உணர்த்தலாயினான் என்க. பெருவலி, அன்மொழி.
----------
103. உதயணன் பிரச்சோதனன் மக்கட்கு வித்தை கற்பித்தல்
வேந்தன்றன் மக்கட் கெல்லாம் வேன்முதல் பயிற்று வித்தும்
பூந்துகில் செறிம ருங்குற் பொருகயற் கண்ணி வேய்த்தோள்
வாய்ந்தவா சவதத் தைக்கு வருவித்தும் வீணை தன்னைச்
சேர்ந்தவ ணிகரி லின்பிற் செல்வனு மகிழ்வுற் றானே.
(இ - ள்.) பிரச்சோதனன் வேண்டுகோட்கிணங்கிச் செல்வ மிக்க வுதயணகுமரனும் அவனுடைய மைந்தர்களுக்கெல்லாம் வேல் முதலாய படைக்கலவித்தைகளை நன்கு பயிற்றியும் பூவேலை நிரம்பிய துகிலுடுத்த நுண்ணிடையும் மூங்கில் போன்ற மென்றோளும் வாய்ந்த ஒன்றனோடொன்று போரிடுகின்ற கயல் மீன் போன்ற கண்ணையுடைய வாசவதத்தைக்கு யாழ்வித்தை நன்குவரப் பயிற்றியும் அவர்களுடன் பெரிதும் உறவு பூண்டு நிகரற்ற இன்பத்தாலே மகிழ்ந்திருந்தான் என்க. (99)
-------------
104. மன்னன் மைந்தர் அரங்கேறுதல்
உரையினி லரிய னாய வுதயண குமர னோர்நாள்
அரசிளங் குமரர் வித்தை யண்ணனீ காண்க வென்ன
வரைநிகர் யானை யூர்ந்து மாவுடன் றேரி லேறி
வரிசையிற் காட்டி வாள்வில் வகையுடன் விளக்கக் கண்டான்.
(இ - ள்.) சொல்லொணாப் பெருமையுடையவனாகிய உதயணகுமரன் ஒருநாள் பிரச்சோதனனைக் கண்டு “பெருமானே! நீ நின்மைந்தர் பயின்று முற்றிய வித்தையையெல்லாம் அரங்கேற்றிக் கண்டருள்க,” என்று கூறாநிற்ப அம்மன்னனும் அவ்வாறே மக்கள் அரங்கேற்றங்காண்பவன் அம்மக்கள் மலைபோன்ற யானையேறி
ஊர்ந்தும் குதிரையேறியும் தேரிலேறியும் முறைமையாகத் தங்கள் வித்தையின் சிறப்புக்களைக் காட்டிப் பின்னர் வாளும் வில்லும் பிறவுமாகிய படைக்கல வித்தைகளும் செய்து காட்டக் கண்டு மகிழ்ந்தனன் என்க. (100)
-----------
105. வாசவதத்தை யாழரங்கேறுதல்
வாசவ தத்தை வந்து மன்னனை யிறைஞ்ச நல்யாழ்
பேசவை தளரக் கேட்டுப் பெருமக னினிய னாகி
ஆசிலா வித்தை யெல்லா மாயிழை கொண்டா ளென்றே
ஏசவன் சிறைசெய் குற்ற மெண்ணுறேல் பெருக்க வென்றாள்.
(இ - ள்.) பின்னர் வாசவதத்தை நல்லாள் வந்து தந்தையை வணங்க அவன் வாழ்த்துப்பெற்றுப் புகழ்ந்து நின்ற அவ்வாசவதத்தை இசைத்த யாழி னின்னிசையுங் கேட்டு உதயணனைச் சிறை செய்தமை குறித்து அப்பேரவையோர் இரங்கி மனந்தளர்ந்திருப்ப, அப்பிரச்சோதனன் பெரிதும் இன்பமுற்று ‘ஆ! ஆ! குற்றமற்ற யாழ்வித்தை முழுதும் எஞ்சாமல் இவ்வாசவதத்தை அறிந்து கொண்டாள்’ என்று பாராட்டி ஆசிரியனாகிய உதயணனை நோக்கி, “பெருந்தகாய!் இப்பேருலகம் என்னை இகழ்ந்து பேசும்படி யான் உன்னை வலிய சிறையிலிட்ட எனது குற்றத்தைப் பெரிதும் நின்னெஞ்சத்தே எண்ணாது விட்டருள்க” என்று வேண்டினன். (101)
---------------
106. வாசவதத்தை யாழிசையின் மாண்பு
விசும்பியல் குமரர் தாமும் வியந்துட னிருப்பப் புல்லும்
பசும்பொனி னிலத்தில் வீழப் பாவையர் மயக்க முற்றார்
வசம்படக் குறுக்கி நீட்டி வரிசையிற் பாட லோடும்
அசும்பறாக் கடாத்து வேழத் தரசனு மகிழ்ந்தா னன்றே.
(இ - ள்.) அவ்வவையிலுள்ளோர் இசையின் வயப்பட்டுத் தம்மை மறப்பவும், வானத்திலியங்குகின்ற கந்தருவன் மைந்தர்
தாமும் அவ்விசை கேட்டு, வியந்து வந்து அவ்வவையினரோடிருந்து மகிழவும் பறவைகள் அவ்வின்னிசையான் மயங்கிப்பசும் பொன்னா லியன்ற அவ்வரங்கின்கண் வீழாநிற்பவும் இசையைக் குறுக்கியும் நீட்டியும் இசையிலக்கண முறைமையாலே பாடியபொழுது மதநீர் துளித்தலொழியாத களிற்றினையுடைய அப்பிரச்சோதன மன்னன் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தான். மகளிரெல்லாம் அவ்வின்னிசையாலே பெரிதும் மயங்குவாராயினர் என்க. (102)
-------------
107. பிரச்சோதனன் உதயணனை வத்தவ நாட்டிற்குப் போக்கத் துணிதல்
வத்தவன் கையைப் பற்றி மன்னவ னினிது கூறி
வத்தவ னோலை தன்னுள் வளமையிற் புள்ளி யிட்டும்
வத்தவ நாட்டுக் கேற வள்ளலைப் போக வென்ன
வத்தவநாளை யென்றே மறையவர் முகிழ்த்த மிட்டார்.
(இ - ள்.) இவ்வாறு பெரிதும் மகிழ்ந்த பிரச்சோதனன் எழுந்துவந்து உதயணன் கைகளைப் பற்றிக் கொண்டு இனியமுகமன் மொழிந்து அவ்வுதயணன் செலுத்தற்குரிய திறைப் பொருளைக் கணக்கோலையில் வரவு வைத்துக் கொண்டு அவ்வுதயணனை நோக்கி “பெருந்தகாய்! இனி நீ நினது வத்தநாடெய்துதற்குப் புறப்படுதி!” என்று பணிப்ப, மறையுணர்ந்த அந்தணரும் உதயண மன்னனே நீ புறப்படுதற்குரிய நன்னாளும் நாளையே ஆகும் என்று கூறி நல்ல முழுத்தத்தையும் குறிப்பிட்டனர் என்க. (103)
------------
108. பிரச்சோதனன் உதயணனுக்குச் சிறப்புச் செய்தல்
ஓரிரண் டாயி ரங்க ளோடைதாழ் மத்த யானை
ஈரிரண் டாயி ரங்க ளெழின்மணிப் பொன்னின் றேரும்
போரியல் புரவி மானம் பொருவிலை யாயி ரம்மும்
வீரர்க ளிலக்கம் பேரும் வீறுநற் குமரற் கீந்தான்.
(இ - ள்.) பிரச்சோதன மன்னன் வீறுடைய உதயணகுமரனுக்குப் பரிசிலாக இரண்டாயிரம் பொன்முகபடாம் அணிந்த மத யானைகளும் நாலாயிரம் அழகிய மணிகளையுடைய தேர்களும் ஐயாயிரம் எண்ணளவுடைய ஒப்பற்ற போர்ப் பயிற்சியுடைய குதிரைகளும் நூறாயிரம் காலாண் மறவரும் வழங்கினான் என்க. (104)
--------------
109. யூகி குறத்தி வேடம் புனைந்து குறி சொல்லல்
யூகியும் வஞ்சந் தன்னை யுற்றுச்சூள் வழாமை நோக்கி
வாகுடன் குறத்தி வேடம் வகுத்தனன் குறிகள் கூற்றாம்
நாகத்தி னகர ழிந்த நடுக்கங்க டீர வெண்ணிப்
போகநன் னீரி லாடப் புரத்தினி லினிது ரைத்தான்.
(இ - ள்.) இனி உதயணனைச் சிறை வீடு செய்யச் சூள் செய்து கொண்டு செவ்வி நோக்கியிருந்த யூகி வஞ்சத்தாற் சிறைப் பிடித்த பிரச்சோதனனுக்கும் வஞ்சனை செய்தே உதயணனை சிறை மீட்டல் வேண்டும் என்னுந் தன் சூள் தப்பாதபடி முயலத் துணிந்து அழகிய வொரு குறப்பெண் வேடம் புனைந்து கொண்டு அந்நகர வீதியிலே சென்று பலர்க்கும் குறிகள் வகுத்துக் கூறுபவன் இந்நகரத்தார்க்கு மறலிபோன்ற நகரகிரியாலே இந் நகரம் சிதைந்த துன்பம் தீரும் பொருட்டு நல்ல திருநீர்ப் பொய்கையில் நீராடப் போகுமாறும் அங்ஙனம் நீராடாவிடின் மீண்டும் அக் களிற்றால் நகரம் சிதைவுறும் என்றும் அந் நகரத்தார்க்கு இனிதாகக் குறி கூறினான் என்க. (105)
-----------
110. பிரச்சோதனன் முதலியோர் நீராடச் செல்ல யூகி நகரத்திற்றீயிடுதல்
மன்னவன் றன்னோ டெண்ணி மாநகர் திரண்டு சென்று
துன்னிய நீர்க்க யத்திற் றொல்புரப் புறத்தி லாட
நன்னெறி வத்த வன்றான் னன்பிடி யேறி நிற்ப
உன்னிய யூகி மிக்க வூரிற்றீ யிடுவித் தானே.
(இ - ள்.) யூகி கூறிய குறிகேட்ட அம்மாநகரத்து மாந்தர் பெரிதும் அஞ்சி அரசன்பாற் சென்று அறிவித்து அவனுடன் பாடு பெற்று அம் மன்னனோடு திரள்திரளாகக் கூடிப்போய் அந்நகர்ப்புறத்தேயுள்ள நீர் நிரம்பிய அத் திருநீர்ப் பொய்கையின்கண் நீராடா நிற்பச் செவ்விதேர்ந்து உதயண குமரனும் பத்திராவதி என்னுமொரு பிடியானையின் மீதேறி நிற்பச் செவ்வி இஃதே என்று கருதிய யூகிதானும் தன் மறவர்களைக் கொண்டும் மகளிரைக் கொண்டும் அவ்வுஞ்சை நகரத்திற் றீக்கொளுவினன் என்க. (106)
---------
111. உதயணன் வாசவதத்தையைக் கைப்பற்றிக் கொண்டு போதல்
பயந்துதீக் கண்டு சேனை பார்த்திபன் றன்னோ டேக
வயந்தகன் வந்து ரைப்ப வத்தவ குமரன் றானும்
நயந்துகோன் மகளை மிக்க நன்பிடி யேற்றத் தோழி
கயந்தனை விட்டு வந்த காஞ்சனை யேறி னாளே.
(இ - ள்.) நகரத்தின்கட் பற்றி யெழுகின்ற நெருப்பினைக் கண்டு படைஞர்கள் அஞ்சிப் பிரச்சோதன மன்னனோடு சொல்லா நிற்ப அச் செவ்வி தெரிந்து வயந்தகன் உதயணன்பால் வந்து யூகியின் கருத்தினைக் கூற அவ்வத்தவ வேந்தனும் பிரச்சோதன மன்னன் வாசவதத்தையைப் பாதுகாக்க வேண்டித் தனது நல்ல பிடியானையி லேற்றிவிட அவள் தோழியாகிய காஞ்சனை என்பாளும் அப்பொழுது அப் பொய்கையை விட்டு வந்து அப்பிடியிலேறினள் என்க. (107)
----------------
112. இதுவுமது
வயந்தகன் வீணை கொண்டு வன்பிடி யேறிப் பின்னைச்
செயந்தரக் கரிணி காதிற் செல்வன்மந் திரத்தைச் செப்ப
வியந்துபஞ் சவனந் தாண்ட வேயொடு பற்ற வீணை
வயந்தகன் கூற மன்னன் மாப்பிடி நிற்க வென்றான்.
(இ - ள்.) காஞ்சனை யேறலும் ஆண்டு நின்ற வயந்தகனும் கோடவதியினைக் கைக் கொண்டு வலிய அந்தப் பிடியானை மிசை ஏறாநிற்பவவும், பின்னர் உதயணன் தனக்கு வெற்றியுண்டாக்குமாறு அந்தப் பிடியானையின் செவியில் மந்திரம் கூறவே அப்பிடிதானும் வியப்புற்று விரைந்து பஞ்சவனம் என்னுமிடத்தைத் தாண்டிச் செல்லும் பொழுது வழியினின்ற தொரு மூங்கிற் கிளை கோடவதி யிற் சிக்கி வீழ வயந்தகன் அதனை உதயணனுக்குக் கூற அவனும் பெருமை பொருந்திய பிடி நங்காய் நிற்பாயாக! என்று கூற வென்க. பஞ்சவனம் - ஐந்து காடுகளை எனினுமாம். (108)
-------
113. இதுவுமது
நலமிகு புகழார் மன்ன நாலிரு நூற்று வில்லு
நிலமிகக் கடந்த தென்ன நீர்மையிற் றந்ததெய்வம்
நலமிகத் தருமின் றென்ன பண்ணுகை நம்மா லென்னக்
குலமிகு குமரன் செல்லக் குஞ்சர மசைந்த தன்றே.
(இ - ள்.) யானை நிற்றலும் வயந்தகன் நன்மை மிக்க புகழுடைய பெருமானே! யாழ் வீழ்ந்த இடத்தினின்றும் எண்ணூறு விற்கிடைத் தொலை நிலம் கடந்துவிட்டது என்று கூற, அது கேட்ட குலச் சிறப்பு மிக்க உதயண குமரன் பண்போடு முன்னர் அந்த யாழைத் தந்த தெய்வந்தானே நம் நலம் மிகும்படி இன்னுந் தருவதாம்; தெய்வத்தாலன்றி யாம் என் செய்யக் கடவேம் காண்! என்று கூறி, மீண்டும் ஊர்ந்து செல்ல அப்பிடியானை இளைப்புற்றது என்க. (109)
----------------
114. பிடி வீழ்ந்திறத்தல்
அசைந்தநற் பிடியைக் கண்டே யசலித மனத்த ராகி
இசைந்தவரிழிந்த பின்னை யிருநில மீதில் வீழத்
தசைந்தகை யுதிரம் பாயச் சாலமந் திரமங் காதில்
இசைந்தவர் சொல்லக் கேட்டே யின்புறத் தேவா யிற்றே.
(இ - ள்.) இளைப்புற்று நடுங்கிய யானையின் நிலைமை கண்டு உதயணன் முதலியோர் கையறவு கொண்ட நெஞ்சினையுடையவராகி அதன் மீதிருந்து இறங்கிய பின்பு அப்பிடியானை பெரிய நிலத்திலே வீழ அதன் தசைமிக்க கையினின்றுங் குருகி சொரிய அது கண்ட உதயணன் முதலியோர் அப்பிடியின் செவிமருங்கிற் சென்று ஐந்தெழுத்து மந்திரத்தைப் பன்முறையும் ஓத அப்பிடியும் இன்பமாகக் கேட்டு இறந்து தெய்வப் பிறப்பெய்திற்று என்க. (110)
--------
115. உதயணன் முதலியோர் ஊர் நோக்கி நடந்து செல்லல்
உவளகத் திறங்கிச் சென்றே யூர்நிலத் தருகு செல்லப்
பவளக்கொப் புளங்கள் பாவை பஞ்சிமெல் லடியிற் றோன்றத்
தவளைக்கிண் கிணிகண் மிக்க தரத்தினாற் பேச லின்றித்
துவளிடை யருகின் மேவுந் தோழிதோள் பற்றிச் செல்வாள்.
(இ - ள்.) பிடியானை இறந்த பின்னர் உதயணன் முதலியோர் தம்மூர் நிலத்தினருகே செல்லுதற் பொருட்டுப் பள்ளமான நிலத்திலே இறங்கி நடந்து செல்லுங்காலத்தே பாவை போல் வாளாகிய வாசவதத்தையின் அலத்தக மூட்டிய மெல்லடியில் சிவந்த கொப்புளங்கள் தோன்றுதலாலே தவளை வாய் போன்ற வாயையுடைய கிண்கிணிகள் பண்போடு ஒலித்தலின்றி நுடங்குமிடையையுடைய அச் செல்வி தன் பக்கலிலே வருகின்ற காஞ்சன மாலையின் தோளினைப் பற்றிக் கொண்டு சென்றாள் என்க. இறங்கிச் சென்று - இறங்கிச் செல்ல. (111)
-------------
116. வயந்தகன் அவர்களை வீட்டுப் புட்பகம் போதல்
பாவைதன் வருத்தங் கண்டு பார்த்திபன் பாங்கி னோங்கும்
பூவைவண் டரற்றுங் காவுட் பூம்பொய்கை கண்டி ருப்ப
வாவுநாற் படையுங் கொண்டு வயந்தகன் வருவே னென்றான்
போவதே பொருளூர்க் கென்று புரவல னுரைப்பப் போந்தான்.
(இ - ள்.) வாசவதத்தையின் நடைவருத்தங் கண்டு உதயண மன்னன் மனங் கசிந்து பக்கத்திலே உயர்ந்துள்ள நாகணவாய்ப் புள்ளும் வண்டுகளும் இசை பாடுதற் கிடனானதொரு பூம் பொழிலினகத்தே மலர்ந்த பொய்கை யொன்றனைக் கண்டு அதன் கரையிலே இளைப்பாறி வாசவதத்தை முதலியோரோடு இருப்ப; அப்பொழுது வயந்தகன் உதயணனை வணங்கிப் பெருமானே யான் புட்பக நகர் சென்று விரைகின்ற குதிரை முதலிய நான்கு படைகளும் கொண்டு வருவேன். அதுகாறும் பெருமான் இளைப்பாறுக! என, அது கேட்ட மன்னனும் அங்ஙனம் நீ ஊர்க்குச் செல்வது
நல்ல காரியமே என்று கூற வயந்தகனும் விரைந்து புட்பக நகர் நோக்கிச் சென்றான் என்க. (112)
------------
117. வேடர்கள் உதயணனை வளைத்துக் கோடல்
சூரியன் குடபாற் சென்று குடவரை சொருகக் கண்டு
நாரியைத் தோழி கூட நன்மையிற் றுயில்க வென்று
வீரிய னிரவு தன்னில் விழித்துட னிருந்த போழ்து
சூரிய னுதயஞ் செய்யத் தொக்குடன் புளிஞர் சூழ்ந்தார்.
(இ - ள்.) ஞாயிற்றுமண்டிலம் மேற்றிசையிலே மேலைமலையின்கட் சென்று மறைவதனைக் கண்டு உதயணகுமரன் வாசவதத்தையை நோக்கி “கோமகளே! நின்றோழி காஞ்சன மாலையோடு நன்றாகத் துயில்வாயாக!” என்று பணிப்ப அவ்வாறே அவர் துயிலுங்கால் மாவீரனாகிய அவ்வேந்தன் அற்றை இரவு முழுவதும் துயிலானாய் விழித்து அவர்களைப் பாதுகாத்திருப்ப; அப்பொழுது ஞாயிற்று மண்டிலம் குணதிசையிற் றோன்றும் விடியற் காலத்திலேயே வேடர் பலர் ஒருங்கு கூடி வந்து உதயணன் முதலியோரை வளைத்துக் கொண்டனர் என்க. (113)
------------
118. உதயணனுடன் வேடர் போர்செய்தல்
வந்தவ ரம்பு மாரி வள்ளன்மேற் றூவத் தானும்
தந்தனு மேவிச் சாராத் தரத்தினால் விலக்கிப் பின்னும்
வெந்திறல் வேடர் வின்னாண் வெந் நுனைப் பகழி வீழ
நந்திய சிலைவ ளைத்து நன்பிறை யம்பி னெய்தான்.
(இ - ள்.) விடியலிலே வந்து சூழ்ந்த அவ்வேடர்கள் உதயணன் மேல் அம்புகளை மழைபோல மிகவும் பொழிய அது கண்ட உதயணனும் ஆக்கமுடைய தன் வில்லை வளைத்து அம்புகளை ஏவி அவ்வேட ரம்பு தங்கள் உடம்பிற் படாதபடி விலக்கி மேலும் நல்ல தொரு பிறைவா யம்பினாலே வெவ்விய ஆற்றலுடைய அவ்வேடர் களுடைய விற்களும் நாண்களும் வெவ்விய அம்புகளும் நிலத்திலே அற்று வீழும்படி எய்தனன் என்க. (114)
-----------
119. வேடர்கள் உதயணனிருந்த பொழிலிலே தீயிடுதலும், வயந்தகன் வரவும்
செய்வகை யின்றி வேடர் தீவனங் கொளுத்த மன்னன்
உய்வகை யுங்க ளுக்கின் றுறுபொரு ளீவ னென்ன
ஐவகை யடிசில் கொண்டே யானநாற் படையுஞ் சூழ
மெய்வகை வயந்த கன்றான் வீறமைந் தினிதின் வந்தான்.
(இ - ள்.) வில் முதலியவற்றை இழந்த வேடர்கள் தங்கள் செயலறுதியினாலே உதயணன் முதலியோரிருந்த அக் காட்டிலே தீக் கொளுவக் கண்ட உதயணமன்னன் அவ்வேடர்களை நோக்கி “அன்பர்களே! நீங்களெல்லாம் இனிதே வாழும்படி உங்கட்கு நிரம்ப யான் பொருள் தருவேன் கண்டீர்!” என்று கூறி அந்த வுபாயத்தாலே அவர்களை வயப்படுத்தி யிருக்கும்பொழுது ஊர் சென்ற மெய் நண்பனாகிய வயந்தகன் அழகிய வகைவகையான இனிய அடிசிலும் கொண்டு தமக்கான நால் வேறு படையும் தன்னைச் சூழ்ந்து வருமாறு சிறப்புடனே இனிதாக அவ்விடத்திற்கு வந்து சேர்ந்தான் என்க. உய்வகையுங்களுக்கினியில்லை என்றும் ஒரு பொருள் தோன்றுதலறிக. (115)
----------
120. உதயணன் வாசவதத்தை முதலியோரொடு சயந்தி நகரம் புகல்
அன்புறு மடிசி லுண்டே யற்றைநாளங்கி ருந்தார்
இன்புறு மற்றை நாளி னெழிற்களிற் றரசனேற
நன்புறச் சிவிகை யேற நங்கைநாற் படையுஞ் சூழப்
பண்புறு சயந்தி புக்குப் பார்த்திப னினிதி ருந்தான்.
(இ - ள்.) அன்பு மிகுதியாலே வயந்தகன் கொணர்ந்த உணவினையுண்டு அனைவரும் அற்றை நாள் அக் காட்டிலேயே தங்கியிருந்தனர். மறுநாள் உதயணகுமரன் ஓர் அழகிய களிற்றியானையில் ஏறிவரவும் மகளிரிற் சிறந்த வாசவதத்தை நல்லாள் அழகிய வெளித்தோற்ற மமைந்த தொரு சிவிகையிலேறி வரவும் தேர் யானை குதிரை காலாள் என்னும் நால்வகைப் படைகளும் சூழ்ந்து வரவும் உதயண மன்னன் பண்பாடு மிக்க சயந்தி நகரம் புகுந்து ஆங்கு இனிதே உறைவானாயினன் என்க. (116)
முதலாவது உஞ்சைக் காண்டம் முற்றும்.
---------
இரண்டாவது - இலாவாண காண்டம்
121. நூலாசிரியர் நுதலிப்புகுதல்
(ஆசிரிய விருத்தம்)
உஞ்சைநகர் விட்டகன் றுதயணகு மாரனும்
தஞ்சமாய்ச் சயந்தியிற் றளர்வின்றிப் புகுந்தபின்
என்செய்தன னென்றிடி னியம்புதும் மறியவே
கொஞ்சுபைங் கிளிமொழிதன் கூடலை விரும்பினான்.
(இ - ள்.) நமரங்காள!் இனி நீயிர் உதயணகுமரன் உஞ்சை நகரத்தை விட்டு இவ்வாறு சயந்தியைப் புகலிடமாய்க் கொண்டு அதன்கண் மனந்தளராமல் புக்கபின்னர் யாது செய்தனன்? என்று வினவுதிராயின் நுமக்கு அறியக் கூறுவேம் கேண்மின!் சயந்தி நகரத்தே அவ்வுதயணன் திருமணம் புரிந்து கொண்டு கொஞ்சிப் பேசுகின்ற கிளிபோலும் மொழியினையுடைய அவ்வாசவதத்தையோடு கூடி மகிழ்தலைப் பெரிதும் விரும்பினான் என்க. (1)
----------
122. உதயணன் வாசவதத்தையை மணம் புணர்தல்
இலங்கிழைநன் மாதரை யினிமைவேள்வித் தன்மையால்
நலங்கொளப்பு ணர்ந்தனன் நாகநற் புணர்ச்சிபோல்
புலங்களின்மி குத்தபோகம் பொற்புடன் னுகர்ந்தனன்
அலங்கலணி வேலினா னன்புமிகக் கூரினான்.
(இ - ள்.) மலர் சூடிய வேற்படையேந்தியவனும் வாசவதத்தையின்பால் மாபெருங் காதல் மிக்கவனுமாகிய உதயணகுமரன் விளங்காநின்ற அணிகலன்களையுடைய பேரழகியாகிய வாசவதத்தையைக் காண்போர்க்கு இனிமை தருகின்ற திருமண வேள்வி முறைமையாலே நன்மை மிக மணந்தனன;் பின்னர் ஐம்புலவின் பங்களும் ஒருங்கே மிக்க காமவின்பத்தை நாக நாட்டினர் புணர்ந்தின் புறுமாறு போலே புணர்ந்து பொலிவுண்டாக நுகர்ந்தனன் என்க. (2)
-----------
123. இதுவுமது
கைம்மிகுகா மங்கரை காண்கிலன் னழுந்தலில்
ஐம்மிகும் கணைமத னம்புமீக் குளிப்பவும்
பைம்மிகும்பொ னல்குலாள் படாமுலை புணையென
மைம்மிகுங் களி ற்றரசன் மாரன்கட னீந்துவான்.
(இ - ள்.) ஐந்துமலரம்புகளாலே வெற்றியில் மிகுகின்ற காமவேள் எய்கின்ற அம்மலர்க் கணைகள் தன்மேற் பாய்ந்தூடுருவா நிற்ப அவற்றிற்கு ஆற்றாதவனாய் அளவு கடந்து மிகாநின்ற காமக் கடற்கு எல்லை காணாதவனாய் அக்கடலின்கண் முழுகுதலாலே பாம்பின் படத்தினும் அழகுமிகுகின்ற அல்குலையுடைய வாசவதத்தையின் தளராத முலைகளையே அக்காமக்கடல் நீந்தும் தெப்பமாகக் கொண்டு மயக்கமிக்க களிற்றினையுடைய உதயணகுமரன் அக்காமக் கடலை இடையறாது நீந்தா நின்றான் என்க. மை - கருமையுமாம். (3)
-------------
124. உதயணன் கழிபெருங்காமத் தழுந்திக் கடமையை நீத்தல்
இழந்ததன் னிலத்தையும் மெளிமையுந் நினைத்திலன்
கழிந்தறமு மெய்ம்மறந்து கங்குலும் பகல் விடான்
அழிந்தியன்பிற் புல்லியே யரிவையுடை நன்னலம்
விழுந்தவண் மயக்கத்தில் வேந்தனினிச் செல்கின்றான்.
(இ - ள்.) இவ்வாறு காமக் கடலில் விழுந்த வேந்தன் பகை மன்னர் கைப்பற்றினமையாலே தான் இழந்துவிட்ட தன்னாட்டினையும் தனது சிறுமையையும் நினைத்திலன்; அரசனாகிய தனக்குரிய அறத்தையும் கைவிட்டு இரவும் பகலும் இடையறாது அவ்வாசவதத்தையைப் பிரியாமல் அவ்வரிவையினுடைய பேரின்பத்திலே பெரிதும் அழுந்தி அன்பாலே தழுவி மயக்கத்தில் விழுந்து கிடப்பானாயினன். (4)
------------
125. யூகியின் செயல்
ஒழுகுங்காலை யூகியா முயிரினுஞ் சிறந்தவன்
எழில்பெருகுஞ் சூழ்ச்சிக்க ணினியதன் வரவதாற்
பழுதின்றிச் சிறைவிடுத்துப் பாங்குபுகழ் வத்தவன்
எழின்மங்கை யிளம்பிடி யேற்றியேகக் கண்டவன்.
(இ - ள்.) உதயணன் செயலிங்ஙனமாகிய காலத்தே அவன் உயிரினுஞ் சிறந்தவனும், அழகு மிகும் தனது சூழ்ச்சியில் அவ்வுதயணனுக் கினிமையாகிய தான் உஞ்சைக்கு வந்தது குறைவின்றி உதயணனைச் சிறைவீடு செய்து பக்கத்தார் பாராட்டிப் புகழ்தற்குக் காரணமாக வத்தவநாட்டரசனாகிய அவ்வுதயணகுமரன் வாசவ தத்தையாகிய அழகிய நங்கையை இளமையுடைய பிடியானை மிசை ஏற்றிக் கொண்டு போகும்படி செய்தவனும் ஆகிய அந்த யூகி என்னும் அமைச்சன் என்க. (5)
------------
126. இதுவுமது
மிஞ்சிநெஞ்சி லன்புடன் மீண்டுவர வெண்ணினன்
உஞ்சைநகர்க் கரசன்கேட் டுள்ளகத் தழுங்கினன்
விஞ்சுபடை மேலெழாமை விரகுட னறிந்தந்த
உஞ்சையெல்லை விட்டுவந்து யூகிபுட்ப கஞ்சென்றான்.
(இ - ள்.) உதயணன் பிரிந்தமையாலே அவன்பால் அன்பு மிகுந்த நெஞ்சத்தோடு யூகிதானும் மீண்டும் வத்தவ நாட்டிற்கு வர நினைத்தான். அச்செவ்வியில் பிரச்சோதனன் யூகியின் செயலிது வென்று ஒற்றர் கூறக்கேட்டு மனம் புழுங்கினன்; யூகி அவன் கருத்தறிந்து அம்மன்னவனுடைய மிக்க படைகள் தன்மேல் போர்க்கு எழுமுன்பே உபாயமாக அந்த உஞ்சை நகரத்தின் எல்லையைக் கடந்து வந்து வத்தவநாட்டுப் புட்பக நகரத்தை அடைந்தான் என்க. (6)
------------
127. யூகி இடபகன்பால் உதயணனைப் பற்றி வினாதலும் அவன் விடையும்
இடபகற்குத் தன்னுரை யினிதுவைத்து ரைத்துப்பொன்
முடியுடைய நம்மரசன் முயற்சியது வென்னென
பிடிமிசை வருகையிற் பெருநிலங் கழிந்தபின்
அடியிட விடம்பொறாமை யானைமண்ணிற் சாய்ந்ததே.
(இ - ள்.) ஆண்டுப் புட்பக நகரத்திருந்த இடபகனுக்குத் தான் உஞ்சையிற் செய்தனவெல்லாம் இனிதே அவனைத் தனியிடத்து வைத்துக் கூறி அறி்வித்த பின்னர், யூகி இடபகனை நோக்கி பொன்முடியணிந்த நம்மன்னவன் உதயணன் இப்பொழுது செய்வது யாதென்று வினவ அவ்விடபகன் “நண்பனே! நம்பெருமான் உஞ்சையினின்றும் பிடியேறி ஊர்க்கு வரும்பொழுது மிக்க நிலத்தைக் கடந்து வந்தபின்னர் அப்பிடியானையைப் பற்றிய நச்சு நோய் அது நிலத்தில் அடிவைக்கப் பொறாமல் அதனை நலிதலாலே அப்பிடியானை நிலத்திலே வீழ்ந்திறந்தது” என்றான் என்க. விடம் - விடநோய். (7)
-----------
128. இதுவுமது
சவரர்தாம் வளைந்ததும் தாமவரை வென்றதும்
உவமையில் வயந்தகன்ற னூர்வந்துடன் போந்ததும்
தவளவெண் கொடிமிடை சயந்தியிற் புகுந்ததும்
குவிமுலைநற் கோதையன்பு கூர்ந்துடன் புணர்ந்ததும்.
(இ - ள்.) பின்னும் அக்காட்டினில் வேடர்கள் குழுமிவந்து உதயணனை வளைத்துக் கொண்டதனையும் ஒப்பற்ற வயந்தகன் காட்டினின்றும் தன் நகரமாகிய புட்பகத்திற்கு வந்து உடனே சென்ற தனையும் உதயணன் அவர்களை வென்றதனையும், பின்னர் வெண்கொடி செறிந்த சயந்திநகரத்தே உதயணன் முதலியோர் புகுந்ததனையும், பின்னர்க் குவிந்த முலைகளையும் மலர்மாலைகளையுமுடைய வாசவதத்தைபாற் காதல் மிகுந்த அவளுடன் திருமணம் புணர்ந்த செய்தியினையும் கூறினன் என்க. (8)
------------
129. இதுவுமது
இழந்தபூமி யெண்ணில னினியபோகத் தழுந்தலும்
குழைந்தவ னுரைப்பயூகி கூரெயிறி லங்கநக்கு
விழைந்தவேந்தன் றேவியை விரகினாற் பிரித்திடின்
இழந்தமிக் கரசியல்கை கூடுமென வெண்ணினான்.
(இ - ள்.) பகைவர் கைப்பற்றியதனாற் றான் இழந்துவிட்ட நாட்டையும் நினைந்திலனாய் இனிய காமநுகர்ச்சியிலே அழுந்திக் கிடத்தலையும் இடபகன் நெஞ்சு நெகிழ்ந்து கூற அதுகேட்ட யூகி கூர்ந்த தன் பற்கள் திகழும்படி நகைத்துத் தன்னுள் நம்மரசன்
இவ்வாறு பெரிதும் விரும்பியுள்ள வாசவதத்தையை அவனிடத்தினின்றும் யாதானுமோருபாயத்தாலே பிரித்துவிடின் அவன் இழந்திருக்கின்ற அரசியல் அவனுக்குக் கைகூடிவருவதாம்; இல்லையே லில்லை என்று எண்ணினான் என்க. (9)
-------------
130. யூகியின் செயல்
சாங்கிய மகளெனுந் தபசினியைக் கண்டுடன்
ஆங்கவ ளறியக்கூறி யானயூகி தன்னுயிர்
நீங்கினது போலவு நின்றமைச்சர் மூவரும்
பாங்கரசன் ரூபமும் படத்தினில் வரைந்தனன்.
(இ - ள்.) பின்னர் யூகி சாங்கியத்தாய் என்னும் தவமூதாட்டியைக் கண்டு அவளுக்குத் தன் கருத்தெல்லாம் தெரியக் கூறியான பின்னர் யூகி ஒரு படத்தின்கண் தன்னுயிர் நீங்கிவிட்டாற் போன்ற தன் பிணத்துருவினையும் ஏனைய மூன்றமைச்சர் உருவங்களையும் அவ்வமைச்சர் பக்கத்தே உதயணன் உருவத்தையும் வரைந்தனன் என்க (இவ்வரலாறு முதனூலினின்றும் சிறிது வேறுபடுகிறது). (10)
---------------
131. இதுவுமது
படத்துருவி லொன்றினைப் பரந்தமேற்கண் ணாகவைத்
திடக்கணீக்கி யிட்டுமிக் கியல்புடன் கொடுத்துடன்
முடிக்கரசற் கறிவியென்ன முதுமகளும் போயினள்
இடிக்குரனற் சீயமா மிறைவனையே கண்டனள்.
(இ - ள்.) பின்னர் யூகி அப்படத்திலமைந்த அரசன் உருவத்தில் ஒரு கண்ணைப் பரந்து மேனோக்கும் கண்ணாக அமைத்து இடக்கண்ணை அழித்துப் பண்போடு அப்படத்தினைச் சாங்கியத்தாயின் பாற் கொடுத்து “அன்னாய்! நீ இப்படத்தைக் கொண்டுபோய் அரசனுக்குக் காட்டுக!” என்று வேண்ட அத்தவமுதுமகளும் சென்று இடிபோல் முழங்கும் அரிமானேறு போன்ற உதயணனைக் கண்டனள் என்க. (11)
------------
132. சாங்கியத்தாய் அரசனைக் கண்டு வினாதல்
வேந்தனுங்கண் டேவிரும்பி வினயஞ்செய் திருக்கெனப்
பாந்தவக் கிழவியும் பண்பினிய சொல்லிப்பின்
சேந்தநின் சிறைவிடுத்த செல்வயூகி நின்னுடன்
போந்துபின் வராததென்ன புரவலநீ கூறென்றாள்.
(இ - ள்.) சாங்கியத்தாயின் வரவுகண்ட உதயணமன்னனும் பெரிதும் விரும்பி அவட்கு வழிபாடு செய்து இருக்கை ஈந்து இதன் மிசை எழுந்தருள்க! என்று வேண்ட அவன்பாற் பண்டே உறவுப் பண்புடைய அத் தவமூதாட்டியும் பண்புடைய இனிய வாழ்த்துரைகளும் பிறவுங் கூறி அளவளாவிய பின்னர், “முருகனை ஒத்த பேரழகனே! நின்னுடைய சிறையை வீடு செய்த செல்வனாகிய யூகி நின்னோடு தொடர்ந்து ஈங்கு வாராமைக்குக் காரணம் என்னையோ? வேந்தே நீ கூறியருளுக!” என்று வேண்ட என்க. சேந்த-விளி. சேந்தன்-முருகன். பாந்தவம்-பந்துத்தன்மை. (12)
------------
133. உதயணன் செயல்
அவனுரை யறிந்தில னறிந்தநீ யுரைக்கெனத்
தவிசிடை யிருந்தவ டான்படத்தைக் காட்டினள்
புவியரசன் கண்டுடன் புலம்பிமிக வாடிப்பின்
தவமலி முனிவனைத் தான்வணங்கிக் கேட்டனன்.
(இ - ள்.) அதுகேட்ட வுதயணகுமரன் பெரியோய்! யான் யூகியைப் பற்றிய செய்தி ஏதும் அறிந்திலேன் நீ அறிவதுண்டாயிற் கூறுக! என்று வேண்ட; இருக்கையில் வீற்றிருந்த அச்சாங்கிய மகள் தான் கொணர்ந்த படத்தை மன்னனுக்குக் காட்டினளாக! (அப்படத்தின்கண் யூகியின் பிணவுருவத்தைக் கண்டமையால்) மிகவும் அழுது உடல் மெலிவுற்றுப் பின்னும் ஆற்றாதவனாய் முக்காலமுமுணர்ந்த முனிவனொருவன்பாற் சென்று வணங்கி யூகியைப் பற்றி அறிதற்குக் குறிகேட்டான் என்க. (13)
-------------
134. உதயணன் விரிசிகைக்கு மலர்மாலை சூட்டுதல்
முடிமுத லரசினோடு முனிவறநின் றுணைவனை
வடிவுடன் பெறுவையென்ன வன்மையிற் றேறிமீக்
கடிகமழச் சாரலிற் கண்டமாத வன்மகள்
துடியிடை விரிசிகையைத் தோன்றன்மாலை சூட்டினான்.
(இ - ள்.) அம்முனிவன் “பெருமகனே! நீ இழந்த கோமுடி சூடுதற்கு முதலாகவுள்ள அரசுரிமையோடு வெறுப்பின்றி நின் துணையாகிய யூகியையும் முன்னை வடிவத்துடன் பெறுவாய் என்று கூற உதயணகுமரன் அம்முனிவன் மொழியை ஐயுறாது தெளிந்து மீள்பவன் மணங்கமழும் அம்மலைச் சாரலில் ஒரு பூம்பொழிலே கண்ட சிறந்த துறவியின் மகளாகிய உடுக்கை போன்ற இடையையுடைய விரிசிகை என்னும் ஒரு பேதைப் பருவத்தாள் வேண்டுகோட்கிணங்கி மலர்மாலை புனைந்துசூட்டி விடுத்தனன் என்க. (14)
---------------
135. உதயணனன் தழைகொணரப் போதல்
கலந்தன னிருந்தபின் கானகத் தழைதர
நலந்திகழ்நன் மாதர்செப்ப நரபதியும் போயினன்
கலந்திகழும் யூகியுங் காவலன் றன் றேவியைச்
சிலதினம் பிரிவிக்கச் சிந்தைகூரத் தோன்றினான்.
(இ - ள்.) விரிசிகைக்கு மாலை சூட்டிய உதயணகுமரன் மீண்டு வந்து வாசவதத்தையோடு கூடி இலாவாண நகரத்தினிதிருந்தனர். ஒருநாள் அழகு திகழ்கின்ற கற்புநலமிக்க அவ்வாசவதத்தை வேண்டிக் கோடலால் உதயண வேந்தன் அவட்கு நற்றளிர் கொணரக் கானகத்திற்குச் சென்றனனாக, அச்செவ்வியறிந்த அணிகலன் திகழுகின்ற யூகிதானும் தான் ஆராய்ந்து துணிந்தபடி உதயணன் கோப்பெருந்தேவியாகிய வாசவதத்தையை ஒருசில நாள்கள் அவனிடத்திலிருந்து பிரிவித்தற்கு எண்ணமிக்கு இலாவாண நகர் வந்து தோன்றினான் என்க. (15)
------------
136. யூகியின் செயல்
மன்னவன் மனைதனின் மறைந்திருக்கும் மாந்தரைத்
துன்னுநன் கிருவரைத் தொக்குட னிருக்கவென்று
மன்னன்மனை தன்மனைக்கு மாநிலச் சுருங்கைசெய்
தன்னவன் மனைமுழுது மறைந்தவர் தீயிட்டனர்.
(இ - ள்.) உதயணமன்னன் அரண்மனையிலே தன்னேவலாலே கரந்திருக்கும் மாந்தருள்ளிருந்த இருவரைத் தன்னுடன் கூடியிருக்க வென்று கூறி அவர்களைக் கொண்டு உதயணன் தேவியாகிய வாசவதத்தை யுறைகின்ற உவளக மாளிகையினின்றும் ஒரு சுருங்கை வழியுண்டாக்கிய பின் அந்த மாளிகை முழுவதினும் (யூகி கூறியபடி) அங்குக் கரந்திருந்த ஏனையோர் தீக்கொளுவினர் என்க. (16)
-----
137. சாங்கியத்தாய் வாசவதத்தையை யூகி இருக்கைக்கு அழைத்து வருதல்
நிலந்திகழ் சுருங்கையி னீதிமன்னன் றேவியை
இலங்குசாங்கி யம்மக ளெழில்பெறக் கொண்டுவந்
தலங்கலணி வேலினா னமைச்சன் மனைசேர்த்தனள்
துலங்கிவந் தடிபரவிச் சொல்லினிது சொல்லினான்.
(இ - ள்.) உவளகமாளிகையிற் றீக்கொளுவியபொழுதே நீதி மிக்க உதயண மன்னன் மனைவியாகிய வாசவதத்தையை (யூகி அறிவித்தபடி) தவவொழுக்கத்தால் விளங்குகின்ற சாங்கியத்தாய் நிலத்தினூடு திகழ்கின்ற சுருங்கை வழியினூடே அழகுற அமைத்துக் கொண்டுவந்து எதிர்பார்க்கின்ற மாலையணிந்த வேற்படையினை யுடைய அமைச்சனாகிய யூகி கரந்துறைந்த மனையிற் சேர்த்தாள் என்க. (17)
-------------
138. யூகி வாசவதத்தையை வரங் கேட்டல்
என்னுடைநற் றாயேநீ யெனக்கொரு வரங்கொடு
நின்னரச னின்னைவிட்டு நீங்குஞ்சில நாளன்றி
நன்னில மடந்தைநமக் காகுவது மில்லையே
என்னவுடன் பட்டன ளியல்புடன் கரந்தனன்.
(இ - ள்.) வாசவதத்தை வந்து சேர்ந்தவுடன் யூகி அவள் திருமுன்சென்று வணங்கி அடியேனுடைய அன்புமிக்க அன்னையே! நீ அடியேனுக்கு ஒரு வரந்தருதல் வேண்டும். அஃதியாதெனில் நீ என் வேண்டுகோட்கிணங்கி மன்னனைச் சிலநாள் பிரிந்துறைதல் வேண்டும். (அஃதெற்றுக்கெனின்) நின் தலைவன் நின்னைப் பிரிந்து தனித்துறையும் சில நாளில் அல்லது, நாமிழந்த நல்ல நிலமடந்தை மீண்டும் நம்மை அடையமாட்டாள் (ஆதலின்) என்று வேண்ட அப்பெருமகளும் யூகியின் வேண்டுகோட்கிணங்கினள். ஆதலின் அப்பெருந்தேவியோடு யூகி மறைவானாயினன் என்க. (18)
------------
139. உதயணன் மீண்டுவந்து வருந்துதல்
சவரர்வந்து தீயிட்டெனத் தஞ்செயலி னாக்கிமிக்
கவகுறிகள் கண்டரச னன்பிற்றேவிக் கேதமென்
றுவளகத் தழுங்கிவந் துற்றகரு மஞ்சொலக்
கவற்சியுட் கதறியே கலங்கிமன்னன் வீழ்ந்தனன்.
(இ - ள்.) உதயணகுமரன் காட்டினின்று மீண்டும் விரைந்து வரும் வழியிலே தீச்சகுனங்களும் நிமித்தங்களும் மிக மிகக் கண்டு கேட்டு இவற்றால் தன்னன்பிற்குரிய வாசவதத்தைக்குத் துன்பமுண்டாகுமென்றுணர்ந்து பெரிதும் வருந்தி அவள் உறைகின்ற உவளக மருங்கே வந்துழி ஆங்கு நின்ற அமைச்சர்கள் தீக்கொளுவினமையைத் தம் பகைவரான வேடர் வந்து தீயிட்டுப் போயினர் என அவர் செயலில் வைத்து ஆங்கு நிகழ்ந்த பிறவற்றையும் கூற அது கேட்ட உதயணன் கவலையுள் அழுந்தி வாய்விட்டுக் கதறியழுது நெஞ்சு கலங்கி நிலத்தின்மேற் சாய்ந்தனன் என்க. அமைச்சர் சவரர் வந்து தீயிட்டென வவர்தஞ் செயலினாக்கி உற்ற கருமஞ் சொல எனக்கொண்டு கூட்டியும் வருவித்தும் கூறிக் கொள்க. (19)
----------
140. இதுவுமது
பூண்டமார்ப னன்னிலம் புரண்டுமிக் கெழுந்துபோய்
மாண்டதேவி தன்னுடன் மரித்திடுவ னானென்றான்
நீண்டதோ ளமைச்சரு நின்றரசற் பற்றியே
வேண்டித்தா னுடனிருந்த வெந்தவுடல் காட்டென்றான்.
(இ - ள்.) அணிகலன் கொண்ட மார்பை யுடைய உதயணகுமரன் அந்த நிலத்திலே கிடந்து புரண்டழுது துயரம் மிகுந்து எழுந்து யான் இனி உயிர்வாழேன், தீயில் மாண்ட வாசவதத்தை யோடொருங்கே இத்தீயில் விழுந்து இறந்தொழிவேன் என்று தீயை நோக்கி விரைந்துழி, விழிப்புடன் நின்ற நெடிய கைகளையுடைய உருமண்ணுவா முதலிய அமைச்சர்கள் உதயணனை விடாது பற்றிக் கொள்ளவே அவர்களிடமிருந்து உருமண்ணுவாவை வேண்டி, நண்பனே! வெந்து கரிந்த அவ்வாசவதத்தையின் உடம்பையேனும் எனக்குக் காட்டுதி! என்றான் என்க. (20)
-----------
141. உதயணன் வாசவதத்தையின் அணிகலன்கண்டழுதல்
கரிப்பிணத்தைக் காண்கிலர் காவலர்க ளென்றபின்
எரிப்பொன்னணி காட்டென வெடுத்துமுன்பு வைத்தனர்
நெருப்பிடை விழுந்தமை நினைப்ப மாயமன்றென
விருப்புடைநற் றேவிக்கு வேந்தன்மிக் கரற்றுவான்.
(இ - ள்.) அதுகேட்ட அமைச்சர்கள் பெருமானே! கரிப்பிணத்தைக் காவல் மன்னர் கண்ணாற் காண்டல் அறக்கழிவாம்; என்று மறுப்பப் பின்னர் உதயணன் மனஞ்சுழன்று ஐய! அந் நல்லாள் அணிந்திருந்த தீப்பிழம்பன்ன பொன்னணிகலங்களையேனும் எனக்குக் காட்டுக! என்று வேண்ட அமைச்சர்கள் அங்கு வாசவதத்தை கைவிட்டுப்போன பொன்னணிகலங்களை ஆராய்ந்தெடுத்துக் கொணர்ந்து அரசன் முன்பு வைத்தனர். அவற்றைக் கண்ட உதயணகுமரன் தேவி தீயிடைச் சிக்கி மாண்டது நினைக்குங்கால் வாய்மையே என்று கருதித் தன் காதலையுடைய நல்ல தேவியாகிய அவ்வாசவதத்தையின் பொருட்டுப் பின்னரும் மிகவும் அழுது புலம்பினன் என்க. (21)
-----------
142. உதயணன் மனம் நொந்து அழுது புலம்புதல்
மண்விளக்க மாகிநீ வரத்தினெய்தி வந்தனை
பெண்விளக்க மாகிநீ பெறற்கரியை யென்றுதன்
கண்விளக்கு காரிகையைக் காதலித் திரங்கவான்
புண்விளக் கிலங்குவேற் பொற்புடைய மன்னவன்.
(இ - ள்.) பகைவர் மார்பிற் புண்திறந்து காட்டும் விளக்க முடைய வேற்படையினையுடைய அழகுடைய உதயணமன்னன் வாசவதத்தையை நினைத்து நங்காய!் நீ பிரச்சோதன மன்னன் செய்தவத்தினாற் பெற்ற வரமாகப் பிறந்தனையே! இப்பேருலகிற்கு ஒரு விளக்காகவும் நீ பிறந்தனை! அம்மட்டோ? நீ பெண்குலத்தின் பெருவிளக்காகவு மிருந்தனையே! அந்தோ! பெறற்கரிய பெண்ணருங்கலமே! என்று தன் கண்களைத் தன் பேரெழிலாலே விளக்கும் பெண்டகையாளைப் பெரிதும் அவாவி அழுவான் என்க. (22)
----------
143. இதுவுமது
மானெனும் மயிலெனும் மரைமிசைத் திருவெனும்
தேனெனுங் கொடியெனுஞ் சிறந்தகொங்கை நீயெனும்
வானில மடந்தையே மாதவத்தின் வந்தனை
நானிடர்ப் படுவது நன்மையோநீ வீந்ததும்.
(இ - ள்.) பின்னரும் மான்போல்வாளே! என்பான். மயில் போல்வாளே! என்பான். தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகள் போல்வேளே! என்பான். தேன்போலும் எனக்கினிய சேயிழையே! என்பான். பூங்கொடி போல்வாளே! என்பான். சிறந்த கொங்கையுடைய தெரிவையே ந!ீ என்பான். வானுலகத்துத் தெய்வ மடந்தை போல்வாளே! யான் செய்த தவத்தின் பயனாக எனக்கு மனைவியாக வந்தனை. அளியேன் இவ்வாறு இடர்ப்படுவது நினக்கு அறமாமோ? என்னைவிட்டு நீ மாண்டதுவும் நினக்குத் தகுமோ? என்றும் அழுவான் என்க. (23)
----------
144. இதுவுமது
நங்கைநறுங் கொங்கையே நல்லமைக் குழலியெம்
கொங்குலவு கோதைபொன் குழையிலங்கு நன்முகம்
சிங்கார முனதுரையும் செல்வி சீதளம்மதி
பொங்காரம் முகமெனப் புலம்பினான் புரவலன்.
(இ - ள்.) நங்கையே! நறிய கொங்கையுடையாளே! அழகிய கரிய மை போன்ற கூந்தலையுடையோய!் எமக்கு மணங்கமழும் மலர்மாலை போல்வாளே! பொற்குழை விளங்கும் அழகிய நின் முகமும் மொழியும் காமச்சுவைப் பிழம்புகளல்லவோ? செல்வீ! நினது அழகிய முகந்தான் குளிர்நிலவு பொங்குதல் ஆர்ந்த திங்கள் மண்டிலமன்றோ? என்று பற்பல கூறி உதயணவேந்தன் அழுவான் என்க. (24)
-----------
145. இதுவுமது
வீணைநற் கிழத்திநீ வித்தக வுருவிநீ
நாணின்பாவை தானுநீ நலந்திகழ் மணியுநீ
காணவென்றன் முன்பதாய்க் காரிகையே வந்துநீ
தோணிமுகங் காட்டெனச் சொல்லியே புலம்புவான்.
(இ - ள்.) பின்னும் நீ யாழ்வித்தைக் குறைவிடமானவள!;் நீ கலையுருவமானவள்!; நீ நாண் என்னும் பண்பாலியன்ற பாவை போல்வாள், அழகு திகழ்கின்ற மாணிக்கமும் நீயே! காரிகையே நீ அளியேன் முன்னர்த் தோன்றி நின்னுடைய முகத்தைக் காட்டி உய்யக் கொள்க! என்று சொல்லி அழுதான் என்க. (25)
---------------
146. அமைச்சர் தேற்றுதல்
துன்பமிக வும்பெருகச் சொற்கரிய தேவிக்கா
அன்புமிக் கரற்றுவதை யகல்வது பொருளென
நன்புறு மமைச்சர்சொல்ல நரபதியுங் கேட்டனன்
இன்புறும் மனைவிகாத லியல்புட னகன்றனன்.
(இ - ள்.) வாசவதத்தையின் பிரிவினாலே துன்பம் பெருகுதலாலே இவ்வாறு புகழ்தற்கரிய அத்தேவியை நினைந்து காதல்மிக்கு இங்ஙனம் அழுவது நின்போலும் மெய்யுணர்வுடையார்க் கழகன்று. ஆதலால் அழாதே! என்று நன்மையுடைய அமைச்சர்கள் பலவும் கூறித் தெளிவித்தலாலே அவர் கூறியவாறு உதயண மன்னனும் தேறி ஒருவாறு அழுகை தவிர்ந்து இன்புறுதற்குக் காரணமான அத்தேவியின்பால் நீங்காத காதற் பண்புடையனா யிருந்தனன் என்க. (26)
-----
கலிவிருத்தம்
147. யூகி உருமண்ணுவாவிற் குரைத்தல்
அண்ண றன்னிலை யறிந்த யூகியும்
தி்ண்ணி தின்னியல் செய்கை யென்றுரு
ண்ணு வாவினை மன்ன னண்டையில்
எண்ணுங் காரிய மீண்டுச் செய்கென்றான்.
(இ - ள்.) உதயணகுமரன் அமைச்சர்களால் வெளிநிலை யெய்தியது தெரிந்த யூகி, உருமண்ணுவாவினைக் கண்டு இனி நீ திட்பமுற நிகழ்த்தவேண்டிய செயல் இஃதாம் என்று கூறி இனி நீ உதயணன்பாற் சென்றுயாம் ஈண்டு ஆராய்ந்து துணிந்த செயலை இச் செவ்வியிற் செய்யக் கடவை என்று பணித்தான் என்க. (27)
------------
148. அமைச்சர்கள் ஆராய்ந்து துணிந்தபடி வயந்தகன்
உதயணனுக்குக் கூறுதல்/
தன்னிலைக் கமைந்த தத்துவ ஞானத்தான்
துன்னருஞ் சூழ்ச்சித் தோழன் வயந்தகன்
மன்னற் குறுதி மறித்தினிக் கூறும்
பொன்னடி, வணங்கிப் புரவலன் கேட்ப.
(இ - ள்.) அமைச்சர்கள் தம்முள் ஆராய்ந்து துணிந்தபடி செயலின் கண் ஈடுபட்டு நல்லமைச்சனாகிய தனது பெருந்தகைமைக் கேற்ற மெய்யுணர்ச்சியுடையவனும் பகைவர் அறிதற்கரிய சூழ்ச்சித் திறனுடையானும் உதயணன் தோழனுமாகிய வயந்தகன் உதயணனுக்கு உறுதி பயக்கும் காரியத்தை அம்மன்னன் இனிது கேட்கு மாற்றாலே செவ்வியறிந்து பொன்னடி வணங்கிக் கூறுவான் என்க. (28)
----------------
149. இதுவுமது
வெற்றிவேன் மகதவன் வேந்தன் றேசத்தில்
இற்றவர்க் காட்டு மியல்பின னூலுரை
கற்றுவல் லவனற் காட்சி யறிவுடன்
தத்துவ முனியுள னாமினிச் சார்வோம்.
(இ - ள்.) பெருமானே! வெற்றி தரும் வேலேந்திய மகத மன்னன் நாட்டிலே மெய்ந் நூல்களை ஐயந்திரிபறக் கற்று வல்லுந னாயவனும் நன்ஞானம் நற்காட்சி நல்லொழுக்கம் என்னும் மும்மணியும் கைவசப் பெற்றவனும் ஆகிய தத்துவந்தேர் துறவி யொருவனுளன். அவன் இறந்த மாந்தரை மீண்டும் உயிருடன் வரவழைத்துக் காட்டும் வித்தையிலும் மிக்கவன் ஆதலால் யாம் இனி அம்மகதநாடு சென்று அவனைக் காண்பாம் என்றனன் என்க. (26)
-------------
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
150. உதயணகுமரன் நாற்படையும் சூழ மகதநாடு செல்லுதல்
வத்தவ குமரன் கேட்டு வயந்தகன் றன்னை நோக்கி
அத்திசை போவோ மென்றே யகமகிழ்ந் தினிய கூறி
வெற்றிநாற் படையுஞ் சூழ வெண்குடை கவரி மேவ
ஒத்துடனிசைந்து சென்றான் உதயண குமரன் றானே.
(இ - ள்.) வயந்தகன் மகதத்தில் இறந்தாரை மீட்டுத் தரும் துறவி யொருவனுளன் என்று கூறிய மொழி கேட்டு உதயணகுமரன் மனம் பெரிதும் மகிழ்ந்து அவ்வயந்தகனை நோக்கி அங்ஙனமாயின் ஒரு தலையாக அந்நாட்டிற்கு யாம் போகக் கடவேம!் என்றுடன்பட்டு அவ்வமைச்சனுக்கு முகமன் பல கூறி வெற்றியுடைய நால்வேறு படைகளும் தன்னைச் சூழ்ந்துவரவும் வெண்குடை நிழற்றவும் கவரி யிரட்டவும் அமைச்சருடன் கூடி மகதநாடு நோக்கிச் சென்றான் என்க. (30)
இலாவாண காண்டம் முற்றிற்று.
-------------
மூன்றாவது - மகத காண்டம்
151. உதயண குமரன் மீண்டும் வாசவதத்தையை நினைந்து வருந்துதல்
சயந்தியி னெல்லை விட்டுச் சாலவு மகத நாட்டுக்
கியைந்துநன் கெழுந்து சென்றே யிரவியி னுதய முற்றான்
நயந்தனன் றேவி காத னன்மனத் தழுங்கிப் பின்னும்
வியந்துநல் லமைச்சர் தேற்ற வெங்கடுங் கானம் புக்கான்.
(இ - ள்.) உதயணகுமரன் சயந்தி நகரத்தினது எல்லையை விட்டகன்று மகதநாடு செல்லற்கு மிகவு முடன்பட்டு நன்கு விரைந்தெழுந்து சென்று ஞாயிற்று மண்டிலம் தோற்றஞ் செய்தலைக் காணப் பெற்றான். போம்பொழுதும் தன் தேவியாகிய வாசவதத்தையின்பாற் பெருங்காதல் கொண்ட மன முடைமையாலே வருந்திப் பின்னும் அவன் காதற் பெருமை கண்டு நல்லமைச்சர்கள் வியந்து தேற்ற வெவ்விய காட்டினூடே சென்றனன் என்க. (1)
-------------
152. இதுவுமது
செத்தநற் றேவி தன்னைத் திருப்பவு மீட்க லாமென்
றத்திசை முன்னி நல்ல வருவழிப் பட்டுச் செல்ல
அத்தியும் பிணையு மேக வாண்மயி லாடக் கண்டு
வத்தவன் கலுழ்ந்து ரைக்கு மனனமை மனையை யோர்ந்தே.
(இ - ள்.) உதயணமன்னன் இறந்துபட்ட தன் தேவியை மீளவும் பெறலாமென்னும் அவாவினாலே அம்மகத நாடிருக்குந் திசையை நோக்கி நல்ல நடைவழியிலே செல்லுங்கால் எதிரே யானையும் மானும் செல்லவும், மயிற்சேவல் ஆடவுங் கண்டு தன் னெஞ்சமர்ந்த அத்தேவியை நினைந்து பெரிதும் இரங்கி வருந்தினான் என்க. (2)
---------
153. உதயணன் மகதநாடெய்துதல்
கோட்டுப்பூ நிறைந்தி லங்குங் கொடிவகைப் பூவுங் கோலங்
காட்டுநந் தேவி யென்று கால்விசை நடவா மன்னன்
காட்டினன் குன்ற மேறிக் கானகங் கழிந்து போந்து
சேட்டிளஞ் சிங்க மன்னான் திருநிறை மகதஞ் சேர்ந்தான்.
(இ - ள்.) மேலும் செல்லும் வழியிலே காணப்படுகின்ற கோட்டுப் பூக்களையும் நிறைந்து திகழுகின்ற கொடிப் பூவகைகளையுங் கண்டு இவை நம்முடைய தேவியின் உறுப்புக்களின் அழகையுடையவனவாய் அருளுருவத்தைக் காட்டுகின்றன என்று புலம்பியவனாய்க் காற்றெனக் கடுகி நடந்து அக்காட்டின்கண் ணமைந்த மலைகளிலே ஏறியும் இழிந்தும் அக்காட்டினைக் கடந்து சென்று பெருமை பொருந்திய இளைய அரிமானேறுபோன்ற அவ்வத்தவன் செல்வமிக்க மகதநாட்டினை எய்தினான் என்க. (3)
------------
154. உதயணன் முதலியோர் இராசகிரிய நகரத்துப் புறஞ்சேரியிற் றங்குதல்
மருவிய திருவி னானம் மகதவர்க் கிறைவ னாமம்
தருசக னென்னு மன்னன் றானைவேற் றலைவன் மாரன்
இருந்தினி துறையு மிக்க விராசநற் கிரியந் தன்னிற்
பொருந்திச்சென் னகர்ப்பு றத்திற் பொலிவுட னிருந்தா னன்றே.
(இ - ள்.) பொருந்திய பெருஞ் செல்வமுடையவனும், அந்த மகதநாட்டு மக்கட்கு அரசனும் தருசகன் என்னும் பெயரை யுடையவனும், நாற்படைகளையுடையவனும், வெற்றிவேல் ஏந்துகின்ற வீரர் தலைவனும், காமவேள் போலும் பேரழகுடையவனும் ஆகிய மன்னன் அரசு கட்டிலில் ஏறி இனி துறைகின்ற தலை நகரமாகிய இராசகிரியம் என்னும் மாநகரத்திற் சென்று அந்நகரத்தின் புறஞ்சேரியில் அவ்வுதயணன் தன் தமருடன் பொலிவுற்றுறைந்தனன் என்க. (4)
------
155. வயந்தகன் காகதுண்ட முனிவனுக்குச் சூழ்ச்சி கூறுதல்
காமநற் கோட்டஞ் சூழக் கனமதி லிலங்கும் வாயிற்
சோமநற் றாப தர்கள் சூழ்ந்தமர் பள்ளி தன்னில்
நாமநல் வயந்த கன்னும் நன்கறி காக துண்ட
மாமறை யாளற் கண்டு வஞ்சகஞ் செப்பி னானே.
(இ - ள்.) அவ்விராசகிரியத்தின் புறநகரின்கண் ணமைந்த காமன் கோயிலைச் சூழ்ந்து பொன்மதில் திகழ்கின்ற வாயிலின் மருங்கே அமைதியுடைய துறவோர் குழுமியுறைகின்ற பள்ளியின் கண் வயந்தகண் அறமுணர்ந்த ‘காகதுண்டகன்’ என்னும் பெரிய வேதங்களையுணர்ந்த முனிவனொருவனைக் கண்டு தம்முடைய சூழ்ச்சியினைத் தெரிவித்தனன் என்க. சோமம் - அமைதி. (5)
------------
156. காகதுண்டகன் உதயணனைக் கண்டு கூறுதல்
திருநிறை மன்னன் றன்னைச் சீர்மறை யாளன் கண்டே
இருமதி யெல்லை நீங்கி யிப்பதி யிருப்ப வென்றும்
தருவனீ யிழந்த தேவி தரணியுங் கூடவென்ன
மருவியங் கிருக்கு மோர்நாண் மகதவன் றங்கை தானும்.
(இ - ள்.) வயந்தகன் அறிவித்தபடியே சிறந்த அக்காகதுண்டகன் என்னும் மறைமுனிவன் செல்வமிக்க உதயண மன்னனைக் கண்டு அரசே! நீ இரண்டு திங்கள் முடியுந்துணையும் இறந்தாட்கு இரங்குதல் நீங்கி இந்நகரத்தே நோன்பாற்றி இருக்கவேண்டும் என்றும், அங்ஙனம் இருப்ப, யான் நீ இறந்த மனைவியையும் நாட்டினையும் என் வித்தையால் நினக்கு மீட்டுத் தருவேன் என்றும் அறிவித்தமையாலே அம்மன்னவனும் அவன் கூற்றைப் பொருந்தி அங்கிருக்கும்பொழுது ஒரு நாள் மகதமன்னன் தங்கை, என்க. (6)
----------------
157. பதுமாபதியும் உதயணனும் காட்சியெய்துதல்
பருவமிக் கிலங்குங் கோதைப் பதுமைதே ரேறி வந்து
பொருவில்கா மனையே காணப் புரவலன் கண்டு கந்து
மருவும்வா சவதத் தைதான் வந்தன ளென்று ரைப்பத்
திருநகர் மாதுங் கண்டு திகைத்துளங் கவன்று நின்றாள்.
(இ - ள்.) பெதும்பைப் பருவம்மிக்கு விளங்குகின்ற மலர் மாலையணிந்த பதுமாபதி என்பாள் தேரிலேறி வந்து காமகோட்டத்துள் ஒப்பற்ற காமவேளைக் கண்டு வணங்க அப்பொழுது ஆங்கிருந்த உதயண மன்னனும் அவளைக் கண்டு விரும்பித் தான் மருவுகின்ற வாசவத்தையே உயிருடன் மீண்டுவந்தனள் என்று தன் மனத்தினுள் தனக்குத் தானே கூறாநிற்பத் திருமகளை ஒத்த அப்பதுமாபதியும் அவ்வுதயணனைக் கண்டு மனந் திகைத்துக் காமுற்று வருந்தி நின்றாள் என்க (7)
-------------
158. உதயணனும் பதுமாபதியும் களவுமணங் கூடுதல்
யாப்பியா யினியா ளென்னு மவளுடைத் தோழி சென்று
நாப்புகழ் மன்னற் கண்டு நலம்பிற வுரைத்துக் கூட்டக்
காப்புடைப் பதுமை யோடுங் காவலன் கலந்து பொன்னின்
சீப்பிடக் கண்சி வக்குஞ் சீர்மங்கை நலமுண் டானே.
(இ - ள்.) பதுமாபதி உதயணன்பாற் காதன்மிக்குக் கலங்குதலும் அவளுடைய உசா அத்துணை ஆருயிர்த் தோழியாகிய யாப்பியாயினி என்பவள் செந்நாப்புலவர் புகழ்தற்குக் காரணமான உதயணமன்னனைக் கண்டு நலம் வினவிப் பிறவுங் கூறி, அவ்விருவரையும் களவுப் புணர்ச்சியாகக் காம கோட்டத்திற் கூட்டிய காரணத்தாலே தன்னைக் காப்பாற்றும் தகுதி வாய்ந்த அப்பதுமாபதியோடு உதயணமன்னன் கூடித் தலைமயிரை வாருதற்கு அழகிய சீப்பினைக் கூந்தலிலே இடுமளவிலே கண்கள் சிவத்தற்குக் காரணமான மென்மைத்தன்மையுடைய வளும் புகழ் மிக்கவளுமாகிய அப்பதுமாபதியின் இளநல நுகர்ந்தனன் என்க. (8)
-------
159. உதயணன் தோழர்க்குக் கூறுதலும் அவருடன்பாடும்
எழில்பெறு காமக் கோட்டத் தியற்கையிற் புணர்ந்து வந்து
வழிபெறு மமைச்ச ரோடு வத்தவ னினிய கூறும்
மொழியமிர் தந்ந லாளை மோகத்திற் பிரியே னென்னத்
தொழுதவர் பெறுக போகந் தோன்றனீ யென்று சொன்னார்.
(இ - ள்.) உதயணகுமரன் அழகிய காமவேள் கோயிலின்கட் பதுமாபதியைக் கண்டு யாழோர் மணவியல்பினாலே தோழியிற் கூட்டங்கூடி மீண்டு இருக்கைக்கு வந்து அங்கு உறைகின்ற தன் அமைச்சரிடம் இனிய இம்மணச்செய்தியைக் கூறுவான்:- அன்பரீா!் அமிழ்தம் போன்ற மொழியினையுடைய அப்பதுமாபதி நல்லாளை யான் பெரிதும் காமுறுகின்றமையால் அவளைப் பிரியலாற்றேன் என்றுகூற அது கேட்ட அவ்வமைச்சர் தாமும் உதயணமன்னனைக் கைகூப்பித் தொழுது புகழ்மிக்கோய!் தக்கதே கருதினை! அவளின் பத்தை நீ நீடூழி பெறக் கடவை என்று உடம்பட்டோதினர் என்க. (9)
----------------
160. உதயணன் பதுமாபதியுடன் கன்னிமாடம் புகுதல்
மாட்சிநற் சிவிகை யேறி மடந்தைதன் னோடும் புக்குத்
தாழ்ச்சியின் மாளி கைக்குட் டக்கவண் மனங்கு ளிர்ப்பக்
காட்டினன் வீணை தன்னைக் காவலன் கரந்தி ருப்ப
ஓட்டிய சினத்த னாய வுருமண்ணு விதனைச் செப்பும்.
(இ - ள்.) உதயணமன்னன் தோழ ருடன்பாடு பெற்ற பின்னர் ஒரு சூழ்ச்சியாலே பிறர் அறியாவண்ணம் மாண்புடைய அழகிய சிவிகையின்கண் பதுமாபதியுடன் ஏறிக் கரவிற்சென்று அவள் தன் கன்னிமாடம் புகுந்து தாழ்வற்ற அம்மாளிகைக்குள் தனக்குத் தகுந்தவளாகிய அக்கோமகளோடு மனங்குளிரக் கூடியிருந்து அவட்கு யாழ்நலம் உணர்த்தி அங்கேயே கரந்துறையாநிற்ப, சினமில்லாத சீரிய உளம் படைத்த உருமண்ணுவா இம்மொழியைத் தன் தோழர்க்குக் கூறுவான் என்க. (10)
--------------
161. உருமண்ணுவா வயந்தகன் முதலியோர்க்குக் கூறுதல்
ஆகிய தறிந்து செய்யு மருளுடை மனத்த னான
யூகியங் குஞ்சை தன்னை யுற்றருஞ் சிறைவி டுக்கப்
போகநற் றேவி யோடும் போந்தது போல நாமும்
போகுவ மன்னன் மாதைப் புதுமணம் புணரு வித்தே.
(இ - ள்.) உற்றது கொண்டு மேல்வந்துறு பொருளை அறிந்து ஆவன செய்யும் அறிவாற்றலுடைய அருளுடைய மனத்தையுடைய நல்லமைச்சனாகிய யூகி நம் மன்னன் சிறைப்பட்டிருந்த பொழுது உஞ்சை மாநகரத்தையடைந்து அங்கு அவனைச் சிறை வீடு செய்துழி அம்மன்னவன் அந்நகரத்து மன்னன் மகளும் இன்பமிக்க வளுமாகிய வாசவதத்தையோடு நம் நாட்டிற்கு வந்தது போலவே நாமும் இந்நாட்டுக் கோமகளை நம் மன்னனுக்குத் திருமணம் புணருவித்து நாட்டிற்குச் செல்வோம்; என்றான் என்க. (11)
-------------
162. உருமண்ணுவாவின் செயல்
உருமண்ணு வாவ னுப்ப வுற்றமுந் நூறு பேர்கள்
மருவிய விச்சை தன்னான் மன்னவன் கோயி றன்னுள்
மருவினர் மறைந்து சென்றார் மன்னவன் றாதை வைத்த
பெருநிதி காண்கி லாமற் பேர்க்குநர்த் தேடு கின்றான்.
(இ - ள்.) இவ்வாறு கூறிய உருமண்ணுவா ஏவுதலாலே அவன் சூழ்ச்சிக்குப் பொருந்திய முந்நூறு மறவர்கள் தாம் கற்ற விச்சையாலே மாறுவேடத்தில் மறைந்து அம் மகதமன்னன் அரண்மனைக்குட் புகுந்து வதிந்தனர். இனி அம்மகத மன்னனாகிய தருசகன் தன் தந்தை அரண்மனைக்குள் கரந்து வைத்துப் போன பொருளிருக்கு மிடமறியாமல் அதனைக் கண்டெடுப்பவரைக் காண்டற்கு ஆராய்ந்திருந்தான் என்க. (12)
---------
163. உதயணகுமரன் மகதமன்னனைக் கண்டு கேண்மை கோடல்
யானறிந் துரைப்ப னென்றே யரசனைக் கண்டு மிக்க
மாநிதி காட்டி நன்மை மகதவ னோடுங் கூடி
ஊனமில் விச்சை தன்னா லுருமண்ணு பிரித லின்றிப்
பானலங் கிளவி தன்னாற் பரிவுட னிருக்கு நாளில்.
(இ - ள்.) அங்ஙனமிருப்புழி உதயணகுமரன் பதுமாபதியைப் பிரிந்து ஒருநாள் அரண்மனைக்குச் சென்று தருசக மன்னனைக் கண்டு நின் தந்தை வைத்துப் போன பொருளை யான் குற்றமற்ற வித்தை யுண்மையாலே அறிந்து கூறுவேன் என்று கூறி அவனுடம்பாடு பெற்று காண்டற்கரிய அப் பொருளையும் அவனுக்குக் காட்டி நன்மை மிக்க அவ்வரசனோடு கேண்மை கொண்டவனாய் உருமண்ணுவாவினைப் பிரியாமல் பால்போலும் நன்மையுடைய மொழிகளையுடைய பதுமாபதியின் பிரிவினால் வருந்தி யிருக்கின்ற காலத்தில் என்க. (13)
-------------
164. சங்க மன்னர்கள் மகதநாட்டின் மேற் படையெடுத்து வருதல்
அடவியா மரசன் மிக்க வயோத்தியர்க் கிறைவன் றானைப்
படையுறு சாலி யென்பான் பலமுறு சத்தி யென்பான்
முடிவிரி சிகையன் மல்லன் முகட்டெலிச் செவிய னென்பான்
உடன்வரு மெழுவர் கூடி யொளிர்மக தத்து வந்தார்.
(இ - ள்.) அடவி மன்னன்; மிக்க அயோத்தி வாழும் மாந்தர்க்கரசன், மிக்க படைகளையுடைய சாலியரசன், ஆற்றல் மிக்க சத்தியரசன், முடிக்கலன் அணிந்த விரிசிகை மன்னன், மல்லன், முகட்டில் வாழும் எலிச்செவியன் என்னு மன்னன் ஆகிய இந்த ஏழு மன்னர்களும் ஒருங்குகூடி விளங்குகின்ற அந்த மகத நாட்டிலே போரிட வந்தனர் என்க. (14)
---------------
165. அம்மன்னர் நாடழித்தல்
தருசகற் கினிதி னாங்க டருதிறை யிடுவ தில்லென்
றெரியென வெகுண்டு வந்தே யினியநா டழிக்க லுற்றார்
தருசக ராசன் கேட்டுத் தளரவப் புறத்த கற்ற
உருமண்ணு வாம னத்தி லுபாயத்தி லுடைப்ப னென்றான்.
(இ - ள்.) அம்மன்னரெழுவரும் பண்டு தருசகமன்னனுக்குத் தாமளந்த திறைப்பொருளை இனி அளப்பதில்லை என்று துணிந்த வராய்த் தீயெனச் சினந்து வந்து வாழ்வோர்க்கினிய அம்மகத நாட்டினை அழிக்கத் தொடங்கினர். இவர்தம் செயலை ஒற்றராலுணர்ந்து தருசகமன்னன் மனந்தளர, அஃதறிந்த உருமண்ணுவா அப்பகைவர்களை அந்நாட்டினின்று துரத்தற்குக் கருதித் தன் மனத்திலாராய்ந்து ஒரு பாயத்தால் அவர்களை உடைந்தோடச் செய்வேன் என்று எண்ணினான் என்க. (15)
-------------
166. உருமண்ணுவாவின் சூழ்வினை
கள்ளநல் லுருவி னோடுங் கடியகத் துள்ளே யுற்ற
வள்ளலை மதியிற் கூட்டி வாணிக வுருவி னோடு
தெள்ளிய மணிதெரிந்து சிலமணி மாறப் போந்து
பள்ளிப்பா சறைபு குந்து பலமணி விற்றி ருந்தார்.
(இ - ள்.) கள்ள வேடம் புனைந்து காவலுடைய கன்னி மாடத்திலிருந்த வள்ளலாகிய உதயணமன்னனையும் ஒரு சூழ்ச்சியினாலே தம்மொடு கூட்டிக் கொண்டு உருமண்ணுவா முதலியோர் மணிவணிகராக வேடந்தாங்கி ஆராய்ந்தெடுத்த மணிகளைக் கொண்டு அவற்றுள் சில மணிகளை விற்றற்கு அப்பகையரசர் பாசறையிற் புகுந்து அங்குப் பல்வேறு மணிகளையும் விலைசொல்லி விற்பாராயினர் என்க. (16)
-------------
167. கலிவிருத்தம்
மன்னன் வீர மகதற்குக் கேளாத்தம்
இன்னு ரைக ளியல்பின் வரவரத்
துன்னு நாற்படை வீடுதோன் றிரவிடை
உன்னி னர்கரந் துரைகள் பலவிதம்.
(இ - ள்.) பகற்பொழுதிலே மணிவணிகராய் மணிவிலைகூறி வீற்றிருந்த உருமண்ணுவா முதலியோர் இரவுவந்துறவுற வீரமுடைய மகத மன்னனுக்குத் தாம் கேண்மையுடையோர் போல இனிய மொழிகள் பலவற்றை அப்பகைவருடைய நான்கு வகைப் படையும் பாசறைக்குள் வந்து சேருந்தோறும் அம்மறவர் ஐயுறும் படி பல்வேறு கரவு மொழிகளை நினைந்து அவர் ஐயுறும்படி பல்வேறு வகையிற் பேசலாயினர் என்க. (17)
------
168. பகையரசர் ஐயுற்று ஓடுதலும் மீண்டுங் கூடுதலும்
உரையு ணர்ந்தவ ருள்ளங் கலங்கிப்பின்
முரியுஞ் சேனை முயன்றவ ரோடலிற்
றெருளி னர்கூடிச் சேரவந் தத்தினம்
மருவி யையம் மனத்திடை நீங்கினார்.
(இ - ள்.) உருமண்ணுவா முதலியோர் பேசுகின்ற கரப்பு புரைகளை அறிந்து இவர் வணிகரல்லர், பகைமன்னன் மறவரே என்றஞ்சி மனங்கலங்கி அப்பகைப்படை மறவர் தாம் உயிர்தப்ப முயன்று ஓடுதலாலே அப்பகை மன்னர்கள் மறுநாள் ஓரிடத்தே கூடி வந்து அவர் பகைவரே யென்றுணர்ந்தவராய் ஐயம் நீங்கினர் என்க. (18)
------------
169. இதுவுமது
இரவு பாசறை யிருந்தவர் போனதும்
மருவிக் கூடியே வந்துடன் விட்டதும்
விரவி யொற்றர்கள் வேந்தர்க் குரைத்தலின்
அரசன் கேட்டுமிக் கார்செய லென்றனன்.
(இ - ள்.) இ்னி முன்னாளிரவின்கண் பாசறையிலிருந்த பகை மன்னர் படையுடன் ஓடிய செய்தியையும் மீண்டும் ஒருங்கு கூடி வந்து மற்றோரிடத்தே தங்கிய செய்தியையும் அப்பகைப் படைகளிலே மாறுவேடத்திற் கலந்து ஒற்றிவந்த ஒற்றர்கள் தருசக மன்னனுக்குக் கூற, அது கேட்ட அம்மன்னவன் மகிழ்ச்சி மி்குந்து அவ்வாறு அவரை ஒட்டிய செயல் யார் செயல் என்று அவ்வொற்றரை வினவினன் என்க. (19)
-------------
170. ஒற்றர் அங்ஙனம் செய்தது உதயண மன்னன் எனலும் உருமண்ணுவா தருசகனைக் கண்டு கூறலும்
வார ணிக்கழல் வத்தவன் றன்செயல்
ஓரணி மார்ப னுருமண்ணு வாவுமிக்
கேரணி யரச ருக்கியல் கூறலும்
தாரணி மன்னன் றன்னுண் மகிழ்ந்தான்.
(இ - ள்.) அவ்வொற்றர்கள் அச்செயல் வார்கழல் கட்டிய அடிகளையுடைய வத்தவமன்னனாகிய உதயணன் செயலே என்று கூறப், பின்னர் அணிகலனணிந்த உருமண்ணுவாவும் அழகிய அணிகலனணிந்த தருசகனைக் கண்டு மிகவும் ஆங்குற்ற நிகழ்ச்சியினை அறிவிக்கவும் வெற்றிமாலையையுடைய அவ்வேந்தன் தன்னுள் மிகவும் மகிழ்ந்தனன் என்க. ஓர்: அசைச்சொல். என்று கூற என வருவித்தோதுக. (20)
---
171. தருசகன் உதயணனை எதிர்சென்று கேண்மை கோடல்
ஆரா வுவகையுள் ளாகி யரசனும்
பேரா மினியயாழ்ப் பெருமகன் றன்னையே
சேரா வெதிர்போய்ச் சிறந்து புல்லினன்
நேரா மாற்றரை நீக்குவ னென்றான்.
(இ - ள்.) நுகர்ந்தாராத பெருமகிழ்ச்சியுள் முழுகிய அத்தரு சகமன்னனும் புகழுடைய இனிய யாழறிபுலவனாகிய உதயண மன்னனை அப்பொழுதே எதிர்சென்று வரவேற்று மகிழ்சிறந்து தழுவிக் கொண்டனன். இனி உதயணன்றானும் மகிழ்ந்து நினக்குத் திறைப்பொருள் கொடாத நின் பகைமன்னர்களை யானே சென்று துரத்தி விடுவேன் என்று கூறினன் என்க. (21)
------------
வேறு
172. உதயணன் படையுடன் சென்று பகைவரை வெல்லுதல்
உலம்பொருத தோளுடை யுதயண குமரனும்
நலம்பொருத நாற்படையு நன்குடனே சூழப்போய்ப்
புலம்பொருத போர்ப்படையுட் பொருதுதவத் தொலைத்துடன்
நலம்பெறத் திறையுட னரபதியு மீண்டனன்.
(இ - ள்.) திரள்கல்லை யொத்த தோள்களையுடைய அவ்வு தயணகுமரன் நன்மை சேர்ந்த தேர்முதலிய நான்கு படைகளும் தன்னைச் சூழ்ந்து வருமாறு போர்மேற் சென்று அந்நாட்டினில் வந்து அழிவு செய்த அப்பகைப் படையுட் புகுந்து பெரிதும் அழித்து அப் பகைமன்னர் தோல்வியுற் றஞ்சித் திறைப்பொருள் அளித்து வணங்குதலாலே அந்நாட்டிற்கு நன்மையுண்டாகும்படி மீண்டனன் என்க. (22)
------------
தருசகன் உதயணனுக்குப் பதுமாபதியை மணஞ்செய்து கொடுத்தல்
வருவவிசை யத்துடன் வத்தவற் கிறைவனைத்
தருசகனெ திர்கொண்டு தன்மனை புகுந்துபின்
மருவநற் பதுமையா மங்கைதங்கை தன்னையே
திருநிறைநல் வேள்வியாற் செல்வற்கே யளித்தனன்.
(இ - ள்.) தனக்கியல்பாக வருவனவாகிய வெற்றிகளுடனே வருகின்ற வத்தவ மன்னனாகிய உதயணகுமரனை மகத மன்னனாகிய தருசகன் எதிர்கொண்டு வரவேற்று மகிழ்ச்சியுடன் தனது அரண்மனை புகுந்து, பின்னர் அம்மன்னன் மருவுதற்கினிய பதுமாபதி என்னும் தன் தங்கையாகிய நங்கையைச் செல்வ மிக்க நல்ல திருமண வேள்விவாயிலாய் அச்செல்வச் சிறப்புடைய உதயணமன்னனுக்கு வழங்கினன் என்க. (23)
--------
174. உதயணன் தருசகன் உதவியுடன் தன் பகைமேற் சேறல் இதுமுதல் ஐந்து
செய்யுட்கள் ஒரு தொடர்
புதுமணக் கோலமிவர் புனைந்தனரியற்றிப்பின்
பதியுடையை யாயிரம் பருமதக் களிற்றுடன்
துதிமிகு புரவிகள் தொக்கவிரண் டாயிரம்
அதிர்மணி யாற்றுந்தே ராயிரத் திருநூறே.
(இ - ள்.) உதயணனும் பதுமாபதியுமாகிய இம்மணமக்களிருவர்க்கும் புதிய மணக்கோலம் புனைவித்து மணவேள்வியில் திருமணம் புணர்வித்த பின்னர் அம்மகத மன்னன் தன்னரண்மனைக் கண்ணவாகிய ஐயாயிரம் புதிய மதக்களிறுகளுடனே புகழ் மிக்கனவாய்க் கூடிய இரண்டாயிரம் குதிரைகளையும் அதிருகின்ற மணிகள் ஒலிக்கின்ற ஆயிரத்திருநூறு தேர்களையும் வழங்கிப் பின்னும் என்க. (24)
-----------
175.
அறுபதினெண் ணாயிர மானபடை வீரரும்
நறுமலர்நற் கோதையர் நான்கிருநூற் றிருபதும்
பெறுகவென் றமைத்துடன் பேர்வருட காரியும்
உறுவடிவேற் சத்தியு முயர்தரும தத்தனும்.
(இ - ள்.) அறுபத்தெண்ணாயிரம் காலாண்மறவரையும், நறிய மலர்மாலையணிந்த எண்ணூற்று எண்பது மகளிர்களையும் இவற்றையெல்லாம் உதயணகுமரன் பெறுவானாக என்று அமைத்துவைத்துப் பின்னரும் வருடகாரி என்னும் படைத் தலைவனையும் பொருந்திய கூரிய வேலேந்திய சத்தியென்பவனையும் உயரிய மறப்பண்புடைய தருமதத்தனையும் என்க. (25)
------------
176.
சத்தியகா யன்னுடன் சாலவு மமைச்சரை
வெற்றிநாற்ப டைத்துணை வேந்தவன்பிற் செல்கென
முற்றிழைநல் அரிவைக்கு முகமலரச் சீதனம்
பற்றின்பி னாலளித்துப் பாங்குடன் விடுத்தனன்.
(இ - ள்.) சத்தியகாயன் என்பவனையும் அழைத்து அவ்வமைச்சரை நோக்கி நீவிரெல்லாம் வெற்றியையுடைய நால்வேறுபடைகளுடன் துணையாக உதயண மன்னன் பிற் செல்வீராக! என்று கட்டளையிட்டுப் பின்னர் நிறைந்த அணிகலன் அணிந்த தங்கையாகிய பதுமாபதியும் முகமலர்ந்து மகிழும்படி சீதனம் வழங்கும் முறைமை பற்றி நிரம்ப வழங்கி முறைப்படி விடைகொடுத்து விட்டனன் என்க. (26)
------------
177.
வெல்லுமண்ணலை ம்மிக வேந்தனன் னயஞ்சில
சொல்லிநண்பி னாலுரைத்துத் தோன்றலை மிகப்புலிச்
செல்கெனா விடுத்தரச் செல்வனங்குப் போந்தனன்
எல்லைதன்னா டெய்துழி யினியதம்பியர் வந்தனர்.
(இ - ள்.) செல்லும் போர்தொறும் வெல்லுமியல்புடைய உதயண வேந்தனை நோக்கி அம்மகத வேந்தன் மிகவும் அழகிய நயமொழிகள் சில கூறிக் கேண்மையாலே அப்புகழாளனை மிகவும் பொருந்தத் தழுவிக் கொண்டு பின்னர் நீ இனி நின் நாட்டிற்குச் செல்க! என்று விடை யீந்து விடுப்பச் செல்வமிக்க உதயண நம்பியும் தன் நாடு நோக்கிச் சென்று தன் நாட்டின் எல்லையை அடைந்துழி, இனிமை மிக்க தம்பியராகிய பிங்கலகடகரும் அங்கு வந்துதமையனொடு கூடினர் என்க. புலி-புல்லி. இடைக்குறை. (27)
--------------
178. பிங்கல கடகர் படைகொடு வருதல்
பிங்கல கடகரெனப் பீடுடைக் குமரரும்
தங்குபன்னி ராயிரம் தானைவல்ல வீரரும்
அங்குவந்தவ் வண்ணலை யடிவணங்கிக் கூடினர்
பொங்குபுறங் கௌசாம்பியிற் போர்க்களத்தில் விட்டனர்.
(இ - ள்.) பிங்கலனும் கடகனும் என்று கூறப்படுகின்ற அந்தப் பெருமைமிக்க இளைஞரும் தம்பாலிருந்த பன்னீராயிரம் படை மறவரும் அவ்வெல்லையிலே வந்து அவ்வுதயண குமரன் திருவடிகளிலே வீழ்ந்து வணங்கி அவனுடன் சேர்ந்தனர்; பின்னர் அங்கு நின்றும் சென்று அனைவரும் செல்வம் பொங்குகின்ற கோசம்பி நகரத்தின் புறத்தே படைவீடியற்றித் தங்கினர் என்க. (28)
----------
179. உதயணகுமரன் வருடகாரனுக்குக் கூறுதல்
வருடகா ரனையழைத்து வத்தவ னியம்புமிப்
பருமிதநற் சேனையுள்ள பாஞ்சால ராயனிடம்
திருமுடி யரசரைத் திறத்தினா லகற்றெனப்
பொருளினவன் போந்தபின்பு போர்வினை தொடங்கினர்.
(இ - ள்.) அந்தப் பாசறை யிருப்பின்கண் மகதப் படைத் தலைவருள் ஒருவனும், அமைச்சனுமாகிய வருடகாரனை உதயணன் அழைத்து அவனிடம் ஒருபாயங் கூறி நீ சென்று செருக்குடைய நல்ல படைகளையுடைய நம் பகைவனாகிய ஆருணி என்னும் பாஞ்சால ராயனிடம் சென்று அவனுக்குத் துணையாக வந்துள்ள ஏனைய மன்னர்களை இந்த வுபாயத்தாலே துணையாகாவண்ணம் பிரித்து விடுக என்று பணிப்ப, அவ்வருடகாரனும் அக்காரியம் செய்வது பொருளாகப் போன பின்பு போர்ச் செயலைத் தொடங்குவராயினர் என்க. பருமிதம் - செருக்கு. (29)
----------
180. வருடகாரன் துணையரசரைப் பிரித்தலும் ஆருணி போர்தொடங்கலும்
அமைச்சனுஞ்சென் றவ்வண்ண மதிர்கழனல் வேந்தரைச்
சமத்தினி லகற்றினன் சாலவும்பாஞ் சாலனும்
அமைத்தநாற் படையுட னமர்ந்துவந் தெதிர்த்தனன்
அமைத்திருவர் விற்கணைக ளக்கதிர் மறைத்தவே.
(இ - ள்.) மகத நாட்டமைச்சனாகிய அவ்வருடகாரனும் அந்த ஆருணியரசன்பாற் சென்று உதயணன் கூறியபடியே உபாயத்தாலே அவ்வாருணி மன்னனுக்குத் துணையாக வந்திருந்த ஒலிக்கின்ற வீரக் கழலணிந்த அரசர் பலரையும் போர்க்களத்தில் ஆருணிக்குத் துணைபுரியாமல் பிரித்து விட்டனனாக; அவ்வாருணி மன்னனும் உதயணன் படை வரவுணர்ந்து அணிவகுத்துள்ள நால்வேறு படைகளுடனும் பெரிதும் போரை விரும்பி வந்து உதயண குமரனை எதிர்த்தனன்; அப்பொழுது அந்த ஆருணி மன்னனும் உதயணனும் ஆகிய இரு பேரரசரும் தத்தம் வில்லிலமைத் தேவிய அம்புகள் வானத்திலியங்கும் அந்த ஞாயிற்று மண்டிலத்தின் ஒளியை மறைத்தன என்க. (30)
----------
181. வேறு -போர் நிகழ்ச்சி
விரிந்த வெண்குடை வீழவும் வேந்தர் விண்ணுற வேறவும்
பரிந்து பேய்க்கண மாடவும் பலவா நரிபறைந் துண்ணவும்
முரிந்த முண்டங்க ளாடவும் முரிந்த மாக்களி றுருளவும்
வரிந்த வெண்சிலை மன்னவன் வந்த வன்கண் சிவந்தவே.
(இ - ள்.) அப்பொழுது அப் போர்க்களத்திலே ஆருணி.யரசன் படை நடுவே விரிந்த வெள்ளைக் குடைகள் விழும்படியும் மன்னர்கள் துறக்கம் புகும்படியும் பேய்கள் உணவு கிடைத்ததென்று மகிழ்ந்து ஆடாநிற்பவும் நரிகள் பலவும் ஊளையிட்டுக் கொண்டு ஊன் உண்ணாநிற்பவும்; தலையழிந்த முண்டங்கள் ஆடவும் தோற்றபெரிய களிறுகள் களத்திலுருண்டுயிர் நீப்பவும் வரிந்து கட்டிய வெள்ளிய வில்லையுடைய உதயண மன்னன் கண்கள் வென்க. (31)
-------------
182. உதயணன் ஆருணி மன்னனைக் கொன்று வீழ்த்துதல்
மாற்ற வன்படை முறிந்தென மன்ன வன்படை யார்த்திடத்
தோற்ற மன்னன்வந் தெதிர்த்தனன் றூய காளைதன் வாளினால்
மாற்ற லன்றனைக் கூற்றுண வண்மை யிவ்விருந் தார்கென
ஏற்ர வகையினி லிட்டன னிலங்கு வத்தவ ராசனே.
(இ - ள்.) அப்பொழுது ஆருணி மன்னவன் படைகள் தோற்றமை கண்டு உதயணகுமரன் படைஞர்கள் ஆரவாரஞ் செய்ய. அது கண்டு தோல்வியுற்ற ஆருணி மன்னன் மீண்டும் வந்து உதயணனை எதிர்த்துழி தூயவுள்ளமுடையவனாகி விளங்கும் உதயணகுமரன் தன் வாட்படையினாலே அப் பகையரசனை மறலி விருந்தாக உண்ணும்படி அதற்கேற்பத் துண்டந்துண்டமாக வெட்டி வீழ்த்தினன் என்க. (32)
-----------
183. உதயணகுமரன் கோசம்பி நகருட் புகுதல்
பகைய றவேயெ றிந்துடன் பாங்கிற் போர்வினை தவிர்கென
வகைய றவேப டுகளங் கண்டு நண்ணிய மற்றது
தொகையு றுந்தன தொல்படை சூழ வூர்முக நோக்கினன்
நகையு றுந்நல மார்பனு நகர வீதியில் வந்தனன்.
(இ - ள்.) இவ்வாறு தன் பகைவன் அற்றொழியுமாறு அவனைக் கொன்று விழுத்தியவுடன் இனி நம் படைகள் பக்கத்தே செய்யும் போர்த்தொழிலைக் கைவிடுக! என்று கட்டளையிட்டுப் பின் படுகளக் காட்சி வகைகளை எஞ்சாமற் கண்டு தனக்காக அப்போர்க்களம் வந்தெய்திய துணைப்படையோடு எண் மிகும் தன் பழைய படையும் தன்னைச் சூழ்ந்து வருமாறு ஒளியுடைய அழகிய மார்பையுடைய உதயணகுமரன் தன் தலைநகரத்தை நோக்கிச் சென்று அக்கோநகரத்து வீதியிலே வந்தனன் என்க. (33)
-----------
(வேறு)
184. உதயணன் அரண்மனை புகுதல்
மாடமா ளிகைமிசை மங்கையரு மேறிமீக்
கூடிநின் றிருமருங்குங் கொற்றவனை வாழ்த்தினார்
பாடலவர் படித்திடப் பலகொடி மிடைந்தநல்
ஆடகநன் மாளிகை யரசனும் புகுந்தனன்.
(இ - ள்.) உதயண மன்னன் நகர் வலம் வரும் பொழுது அந்நகர்வாழ் மாதர் தாமும் இருபக்கங்களினுமுள்ள மாடமாளிகையின் மேலேறிக் கூடிநின்று வெற்றியோடு வருகின்ற அக் கொற்றவனை வாழ்த்துப்பாடி வரவேற்றனர். பாடகர்கள் பல்லாண்டு பாடிவரப் பல்வேறு கொடிகளும் நெருங்கியழகு செய்கின்ற பொன்னாலியன்ற தனது அரண்மனையிற் புகுந்தனன் என்க. (36)
----------
185. உதயணன் போரில் விழுப்புண் பட்ட மறவர்க்கு ஆவன செய்து பின்
திருமுடி சூடி ஆட்சி செலுத்துதல்
படுகளத்தி னெந்தவர்க்குப் பலகிழிநெய் பற்றுடன்
இடுமருந்து பூசவு மினிப்பொரு ளளித்தபின்
தொடுகழ லரசர்கள் சூழ்ந்தடி பணிந்திட
முடிதரித் தரசியன் முகமலர்ந்து செல்லுநாள்.
(இ - ள்.) இனி உதயண மன்னன் வாகை சூடி அரண்மனை புக்கபின்னர்ப் போர்க்களத்திலே விழுப்புண் பட்ட மறவர்க்கெல்லாம் பலவாகிய கிழிகளிலே நெய்யூட்டி இடுகின்ற மருந்து பூசும் பொருட்டு வேண்டிய பொருள்களை வழங்கி அவர்கட்கு முகமன் கூறிய பின்னர் வீரக் கழல் கட்டிய வேற்று நாட்டு மன்னரெல்லாம் சூழ்ந்து தன் திருவடிகளிலே வீழ்ந்து வணங்காநிற்பத் திருமுடிசூட்டு விழாக்கொண்டு தனது அரசியலை யாவர்க்கும் செவ்வி எளியனாய் முகமலர்ந்து காட்சியீந்து செங்கோல் செலுத்தும் நாளில் என்க. (35)
-----------
மூன்றாவது மகதகாண்டம் முற்றும்.
நான்காவது - வத்தவ காண்டம்
(அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்)
186. உதயணகுமரன் திருவோலக்க மண்டபத்தில் வீற்றிருத்தல்
மின்சொரி கதிர்வேற் றானை வீறடி பணிய வெம்மைப்
பொன்சொரி கவரி வீசப் பொங்கரி யாச னத்தில்
தண்சொரி கிரண முத்தத் தவளநற் குடையி னீழல்
மின்சொரி தரள வேந்தன் வீற்றி ருந்த போழ்தின்.
(இ - ள்.) ஒளி வீசுகின்ற கதிர்களையுடைய வேலேந்திய படைத்தலைவர்கள் தனது மாபெருஞ் சிறப்புடைய திருவடிகளில் வீழ்ந்து வணங்கவும், விருப்பமுண்டாக்கும் பொற்காம்புடைய சாமரைகள் இரட்டவும், சினமிகுகின்ற அரிமான் சுமந்த அரசு கட்டிலின்மிசை குளிர்ந்த ஒளியைப் பொழிகின்ற கதிர்களையுடைய முத்தாலியன்ற வெள்ளிய அழகிய குடையினது நீழலிலே ஒளி வீசும் முத்தமாலை அணிந்த உதயணவேந்தன் எழுந்தருளிய பொழுதில் என்க. (1)
----------------
187. உதயண மன்னன் அளியும் தெறலும்
மாற்றலர் தூதர் வந்து வருதிறை யளந்து நிற்ப
ஆற்றலர் வரவ வர்க்கே யானபொன் றுகில ளித்தே
ஏற்றநற் சனங்கட் கெல்லா மினிப்பொரு ளுவந்து வீசிக்
கோற்றொழி னடத்தி மன்னன் குறைவின்றிச் செல்லு கின்றான்.
(இ - ள்.) பகை மன்னவருடைய தூதர்கள் வந்து தனக்கு வரவேண்டிய திறைப் பொருளை அளவாநிற்பவும், தன் படை மறவர் வந்துழி அவர்க்கெல்லாம், பொன் ஆடை முதலிய பரிசுகளை வழங்கியும், தன்பால் வந்து இரந்த இரவலர்கட்கெல்லமாம் அவர்க் இனியவாம் பொருள்களை மகிழ்ந்து வழங்கியும், தன் கடமையாகிய செங்கோன்மைத் தொழிலைச் சிறப்புற நடத்தியும் உதயணமன்னன் யாதொரு குறையுமின்றி இனிதே வாழ்வானாயினன் என்க. கினிய - ஈறுகெட்டது. (2)
-----------
188. உதயணன் பத்திராபதி என்னும் பிடிக்கு மாடமும் உருவமும் எடுத்தல்
மதுரவண் டறாத மாலை மகதவன் றங்கை யாய
பதுமைதன் பணைமு லைமேற் பார்த்திபன் புணர்ந்து செல்ல
துதிக்கைமா வீழ்ந்த கானந் தோன்றலு மாடம் பண்ணிப்
பதியினு மமைத்துப் பாங்கிற் படிமமு மமைத்தா னன்றே.
(இ - ள்.) இனிய விசைபாடுகின்ற வண்டுகள் மொய்த்தலொழியாத மலர்மாலை யணிந்த மகதமன்னவன் றங்கையாகிய பதுமாப.தியின் பரிய முலைகளின்மேற்றங்கி, உதயணகுமரன் இன்ப நுகர்ந்து செல்லாநின்ற நாளிலே, பத்திராபதி என்னும் பிடியானை தனக்குதவி செய்து நோய்வாய்ப்பட்டு வீழ்ந்திறந்த காட்டின்கண் அச் செய்ந்நன்றியை நினைந்து புகழ் மிக்க அம் மன்னன் அதற்கு நினைவுச்சின்னமாக மாடம் எடுப்பித்து மேலும் கோசம்பி நகரத்தினும் அதற்கு மாடமெடுப்பித்து அழகாக உருவச்சிலையும் அமைத்தனன் என்க. (3)
--------------
189. உதயணன் கோடவதி யென்னும் யாழை மீண்டும் பெறல்
அருமறை யோதி நாம மருஞ்சன னந்த ணன்றான்
திருவுறை யுஞ்சை நின்று திகழ்கொடிக் கௌசாம் பிக்கு
வருநெறி வேயின் மீது வத்தவன் வீணை கண்டு
பொருந்தவே கொண்டு வந்து புரவலற் கீந்தா னன்றே.
(இ - ள்.) உணர்தற் கரிய மறைகளை ஓதியுணர்ந்து அருஞ்சனன் என்னும் தன் பெயர் பொறித்த புகழுடைய பார்ப்பனன் ஒருவன் செல்வம் மிக்குக் கிடக்கின்ற உஞ்சை நகரத்தினின்றும் விளங்குகின்ற கொடிகளையுடைய கோசம்பி நகரத்திற்கு வருகின்ற வழியிலே மூங்கிற்கிளையிலே சிக்குண்டு கிடந்த கோடவதியென்னும் அவ்வுதயணனுடைய தெய்வப் பேரியாழைக் கண்டெடுத்து ஏனைச் செல்வவரவோடு பொருந்தும்படி கொணர்ந்து உதயணவேந்தனுக்கு வழங்கினன் என்க. (4)
--------
190. பதுமாபதி உதயணனிடம் யாழ் பயில விரும்புதல்
மதுமலர்க் குழலி விண்மின் மாலைவேல் விழிமென் றோளி
பதுமைவந் தரசற் கண்டு பன்னுரை யினிது கூறும்
மதியின்வா சவதத் தைதன் வண்கையி னதனைப் போல
விதியினான் வீணை கற்க வேந்தநீ யருள்க வென்றாள்.
(இ - ள்.) தேன் கெழுமிய கூந்தலையுடையவளும் விண்ணின் மின்னற் கொடி போன்றவளும் வெற்றிமாலை யணிந்த வேல்போன்ற விழிகளையுடையவளும் மென்மையான தோள்களையுடையவளுமாகிய பதுமாபதி ஒரு நாள் உதயணன்பாற் செவ்விதேர்ந்து வந்து கண்டு இனிதாகப் பேசுகின்ற சில மொழிகளைக் கூறுவாள் ; -- “பெருமானே! அறிவுடைமையாலே மிக்க வாசவதத்தை தன் கையிலுள்ள யாழினை வாசிக்குமாறு போல யானும் வாசித்தற்கு இசை நூல் விதிப்படி யானும் நின்பால் யாழ்வித்தை பயில்வதற்குத் திருவருள் செய்தல் வேண்டும் என்று வேண்டினள் என்க. (5)
---------------
191. உதயணன் வாசவதத்தையை நினைந்து வருந்தித் துயில்தலும்
கனவு காண்டலும்
பொள்ளென வெகுண்டு நோக்கிப் பொருமனத் துருகி மன்னன்
ஒள்ளிதழ்த் தத்தை தன்னை யுள்ளியே துயிலல் செய்ய
வெள்ளையே றிருந்த வெண்டா மரையினைக் கொண்டு வந்து
கள்ளவிழ் மாலைத் தெய்வங் கனவிடைக் கொடுப்பக் கண்டான்,
(இ - ள்.) பதுமாபதி, வாசவதத்தை போல என்று தன்னை வாசவதத்தைக்கு ஒப்பாகக் கூறிய சொல் தன் செவிசுட உதயண மன்னன் அப்பதுமாபதியை ஞெரேலெனச் சினந்து பழைய நினைவுகளாலேயே தன்னுள்ளே போர் நிகழ்த்தப் பெறுகின்ற மனத்தாலே அவ்வாசவதத்தையை நினைந்து உருகி ஒள்ளிய மலர்சூடிய அவ்வாசவதத்தையையே நினைத்து அரிதின் துயிலா நிற்புழித் தான் கண்டதொரு கனவின்கண் தேன் துளிக்கும் மலர்மாலை யணிந்த தெய்வம் ஒன்று ஒரு வெள்ளிய காளைபடுத்திருக்கின்ற பொகுட்டினை யுடையதொரு வெண்டாமரை மலரைக் கொணர்ந்து தன் கையிற் கொடுப்பக்கண்டனன் என்க. (6)
------------
192. உதயணன் ஒரு முனிவனிடம் சென்று கனவின் பயன் வினாதல்
கங்குலை நீங்கி மிக்கோர் கடவுளை வினவச் சொல்வார்
அங்கயற் கண்ணி் தானு மாரழல் வீந்தா ளல்லள்
கொங்கைநற் பாவை தன்னைக் கொணரநீ பெறுவை யின்பம்
இங்குல கெங்கு மாளு மெகழிற்சுதற் பெறுவ ளென்றார்.
(இ - ள்.) உதயணன் அந்த இரவு கழிந்த வழிநாளிலே ஊக்கமிக்க ஒரு துறவியின்பாற் சென்று அக்கனவின் பயன் யாதென வினவ, அத்துறவி கனவுப் பயன் கூறுபவர், வேந்தே! கேள், அழகிய கயல்மீன் போன்ற கண்ணையுடைய வாசவதத்தை நிறைந்த நெருப்பிலே அகப்பட்டு இறந்தாளலள்; இன்னும் உயிருடனிருகின்றனள்காண்! அழகிய கொங்கைகளையுடைய நல்ல பாவைபோல்வாளாகிய அவ்வாசவதத்தையைச் சிலர் நின் பால் அழைத்து வருதலாலே அவளை நீ மீண்டும் எய்தி அவளோடு இன்னும் இன்பம் நுகர்வைகாண்! அவ்வரசிதானும் இந்நகரத்தின் கண்ணே பிறவுலகங்களையும் ஆளுகின்ற ஊழுடைய ஓர் அழகிய ஆண்மகளைப் பெற்றெடுப்பள் காண்!, இவையே அக்கனவின் பயன் என்று இயம்பினர் என்க. (8)
-------------
193. உதயணன் கனாப்பயன் கேட்டுக் களிகூர்தல்
வெள்ளிய மலையின் மீதே விஞ்சைய ருலக மெல்லாம்
தெள்ளிய வாழி கொண்டு திக்கடிப் படுத்து மென்ன
ஒள்ளிய தவத்தின் மிக்கோ ருறுதவ ருரைத்த சொல்லை
வள்ளலு மகிழ்ந்து கேட்டு மாமுடி துளக்கி னானே.
(இ - ள்.) அவ்வாசவதத்தை ஈனும் மகன் வெள்ளிப் பெருமலையின் உச்சியிலுள்ள விச்சாதரர் உலக முழுவதையும் ஒளியாற்றெளிவுற்ற தனது ஆணைச்சக்கரத்தாலே எல்லாத் திசைகளையும் தன்னடிப் படுத்துவன் காண்! என்று புகழ்மிக்க தவப்பள்ளியிலுறைகின்ற வித்தையான் மிக்கவரும் மிக்கதவத்தை யுடையவருமாகிய அத்துறவியார் கூறிய மொழியைக் கேட்டு வள்ளலாகிய அவ்வுதயண குமரனும் மனமகிழ்ந்து தனது சிறந்த தலையை அசைத்தனன் என்க. (8)
-------------
194. உருமண்ணுவா சிறைவீடு பெற்றது
என்றவ ருரைப்பக் கேட்டே யிறைஞ்சிநன் கடிப ணிந்து
சென்றுதன் கோயில் புக்குச் சேயிழை பதுமை தன்னே
டொன்றினன் மகிழ்ந்து சென்னா ளுருமண்ணு வாவு முன்பு
வென்றிவேன் மகதன் மாந்த ரால்விடு பட்டி ருந்தான்.
(இ - ள்.) நின்புதல்வன் ஆழிகொண்டு அடிப்படுத்தும் ’ என்று அம்முனிவர் கூறக்கேட்டு உதயண குமரன் அம் முனிவர் அடிகளில் வீழ்ந்து நன்கு அன்புடன் வணங்கித் தன்னரண்மனை சென்று ஆங்குச் செவ்விய அணிகலன் அணிந்த பதுமாபதியோடு உளமொன்றிக் கலந்து மகிழ்ந்திருக்கின்ற நாளிலே முன்பு மகத நாட்டின்கண் சங்க மன்னரால் சிறைகொளப்பட் டிருந்த உருமண்ணுவா என்னும் நல்லமைச்சன்றானும் வெற்றி வேலேந்திய அம் மகத மன்னனுடைய சான்றோரால் சிறைவீடு பெற்று அம்மகத நாட்டிலேயே உறைந்தனன் என்க. (9)
-------------
195. உருமண்ணுவா உதயணன்பால் வருதல்
மீண்டவன் வந்தூர் புக்கு வேந்தனை வணங்கி நிற்பக்
காண்டறி வாள னென்றே காவலன் புல்லிக் கொண்டு
மாண்டவன் வந்த தொப்ப வரிசையின் முகமன் கூறி
வேண்டவாந் தனிமை தீர்ந்தே விரகுட னின்புற் றானே.
(இ - ள்.) சிறையினின்று மீண்ட உருமண்ணுவா மகதத்தினின்றும் வந்து கோசம்பி நகரிலே புகுந்து உதயணன் திருமுன் சென்று அடிகளிலே வீழ்ந்து வணங்கி எழுந்து வாய்வாளாநிற்ப; உதயணன் தன்னெதிரே நிற்பவன் உருமண்ணுவா வென்னும் அறிவுமிக்க அமைச்சனே என்றுணர்ந்து கொண்டு ஆர்வத்துடன் எழுந்துசென்று தழுவிக்கொண்டு இறந்தொழிந்தவன் உயிர்பெற்று எதிரே வந்தாற்போன்று வந்த அவ்வமைச்சனுக்கு அவன் றகுதிக் கேற்ற முகமன் கூறி மிக்க அவாவுடைய தன் தனிமைத் தன்மை யுந் தீர்ந்து அன்புணர்ச்சியினா லின்பமுற்றான் என்க. (10)
------------
196. யூகி முதலியோர் வாசவதத்தையைக் கோசம்பிக்குக் கொணரல்
வாரணி கொங்கை வேற்கண் வாசவ தத்தை தானும்
ஊரணி புகழி னான யூகியு மற்றுள் ளாரும்
தாரணி கொடியி லங்குஞ் சயந்தியி னின்றும் போந்து
பாரணி கோசம் பிப்பாற் பன்மலர்க் காவுள் வந்தார்.
(இ - ள்.) இனி, கச்சணிந்த முலையினையும் வேல்போலும் கண்களையும் உடைய வாசவதத்தையாகிய கோப்பெருந்தேவியும், தன் புகழினால் தன்னகரத்திற்கு அணிகலனாகத் திகழ்கின்ற யூகி என்னும் அமைச்சனும் சாங்கியத்தாய் முதலிய ஏனையோரும் மாலை சூட்டப்பெற்ற கொடிகள் விளங்குகின்ற சயந்தி நகரத்தினின்றும் வந்து உலகிற்கு அணிகலனாகத் திகழ்கின்ற கோசம்பி நகரத்தின் கண்ணமைந்த தொரு பல்வேறு மலர்களையுடைய பூம் பொழிலினுடே புகுந்தனர் என்க. (11)
------------
197. உதயணன் யூகி முதலியோரை வினவுதல்
நயந்தநற் கேண்மை யாளர் நன்கமைந் தமைச்சர் தம்முள்
வயந்தக னுரைப்பக் கேட்டு வந்தவன் காவு சேரப்
பயந்தவ ரடியில் வீழப் பண்புடன் றழுவிக் கொண்டு
வியந்தர சியம்பு நீங்கள் வேறுடன் மறைந்த தென்னை.
(இ - ள்.) உதயண குமரனைப் பெரிதும் விரும்பிய நல்ல கேண்மையுடையோராய் நன்கு பொருந்திய அமைச்சர்களுள் வைத்து வயந்தகன் என்னும் அமைச்சன் யூகி முதலியோரின் வரவினைத் தனக்குக் கூற அதுகேட்ட அம்மன்னவன் அவர் உறைகின்ற பூம்பொழிலை எய்தாநிற்ப, அவன் வரவுகண்ட யூகி முதலியோர் அஞ்சியவராய் அவன்திருவடிகளிலே வீழ்ந்து வணங்க, உதயணன் நட்புப்பண்போடு அவர்களை அன்போடு வியந்து தழுவிக் கொண்டு பின்னர் அவ்வரசன் நீங்கள் வேற்றுருவிலே இங்ஙனம் கரந்துறைதற்குக் காரணம் என்னையோ? என்று வினவ என்க; என்று வினவ என்று வருவித்து முடிக்க. (12)
-------------
198. யூகி காரணம் கூறுதல்
இருநில முழுதும் வானு மினிமையிற் கூடி னாலும்
திருநில மன்ன ரன்றிச் செய்பொரு ளில்லை யென்று
மருவுநூ னெறியி னின்றி வன்மையாற் சூழ்ச்சி செய்தேன்
அருளுடன் பொறுக்க வென்றா னரசனு மகிழ்வுற் றானே.
(இ - ள்.) அது கேட்ட யூகி “பெருமானே! பெரிய இந்நில வுலகத்தே யாண்டும் வாழ்கின்ற மாந்தரும் தேவருலகத்தே வாழுகின்ற எல்லாத் தேவர்களும் அன்பினால் இனிதே ஒருங்கு கூடினாலும் தம் அழகிய உலகத்தை ஆளுகின்ற செல்வமிக்க மன்னரைப் பெறாராயின் தாங்கள் செய்தற் கியன்ற காரியம் யாதுமில்லையாகிவிடும்; ஆதலாலே (பெருமான் அரசுரிமையைக் கைவிட்டிருந்தமையாலே மீண்டும் அவ்வுரிமையை மேற்கோடற் பொருட்டு) பொருந்திய அரசியனூல் கூறுமாற்றாலன்றியும் வன்மையாலே இச்சூழ்ச்சியை அடியேனே செய்தேன்! எம்பெருமான் அருள் கூர்ந்து அடியேன் செய்த பிழையைப் பொறுத்தருளுக! என்று வேண்டினன், அதுகேட்ட மன்னவனும் பெரிதும் மகிழ்ந்தனன் என்க. (13)
-----------
199. உதயணன் வாசவதத்தை முதலியோரொடு மகிழ்ந்திருத்தல்
ஆர்வமிக்க கூர்ந்து நல்ல வற்புதக் கிளவி செப்பிச்
சீர்மைநற் றேவி யோடுஞ் செல்வனு மனைபு குந்தே
ஏர்பெறும் வாச வெண்ணெ யெழிலுடன் பூசி வாச
நீர்மிக வாடி மன்ன னேரிழை மாதர்க் கூட.
(இ - ள்.) மகிழ்ச்சியுற்ற உதயணமன்னன் யூகியின்பால் பேரார்வமுடையவனாய் நன்மையுடைய வியத்தகு முகமன் மொழிகளைக் கூறிப் பாராட்டிச் சிறப்புடைய நல்ல கோப்பெருந்தேவியாகிய வாசவதத்தையோடும் அரண்மனைக்குச் சென்று ஆங்கு அழகிய நறுமண வெண்ணெயை அழகுறப் பூசி நறுமண நீரிலே ஆடி, நேரிய அணிகலன் அணிந்த அவ்வாசவதத்தையுடன் கூடா நிற்ப என்க. (14)
--------------
200. பதுமாபதியின் வேண்டுகோள்
யூகியு நீரி னாடி யுற்றுட னடிசி லுண்டான்
நாகநேர் கால மன்ன னன்குட னிருந்த போழ்தின்
பாகநேர் பிறையா நெற்றிப் பதுமையு மிதனைச் சொல்வாள்
ஏகுக செவ்வித் தந்தை யெழின்மனைக் கெழுக வென்றாள்
(இ - ள்.) இனி, யூகியும் அங்ஙனமே தன் நோன்பினைமுடித்து நன்னீரிலே குளித்துச் சென்று உதயணகுமரனுடன் ஒருங்கிருந்து அறுசுவையடிசிலுண்டு யானையை ஒத்த நோன்றாண் மன்னனோடு வீற்றிருந்த காலத்தே பாதித்திங்கள் போன்ற நெற்றியையுடைய பதுமாபதி நங்கை மன்னனைத் தொழுது “பெருமானே! அடிச்சியுடன் அளவளாவியிருந்த அத்துணைக்காலம் இனிய பருவத்தாற்றிகழா நின்ற வெம்பெருமாட்டி வாசவதத்தையாருடைய மாளிகையிலேவதிக! எழுந்தருள்க!” என்று வேண்டினள் என்க. (15)
--------------
201. உதயணன் வாசவதத்தை மாளிகைக்கெழுந்தருளலும், அவள் ஊடுதலும்
என்றவள் சொல்ல நன்றென் றெழின்முடி மன்னன் போந்து
சென்றவண் மனைபு குந்து செல்வனு மிருந்த போழ்தின்
வென்றிவேற் கண்ணி னாளும் வெகுண்டுரை செப்பு கின்றாள்
கன்றிய காமம் வேண்டா காவல போக வென்றாள்.
(இ - ள்.) ‘தத்தையார் மனைக்கெழுந்தருள்க’! என்று பதுமாபதி வேண்டிக்கொண்டவளவிலே அழகிய முடியணிந்த அம்மன்னனும் பதுமாபதியின் பெருந்தகைமையைக் கருதி நன்று! நன்றென்று பாராட்டி அவ்வண்ணமே வாசவதத்தையின் மாளிகைக்குச் சென்று ஆண்டோரிருக்கையின்கண் இருந்தபொழுது வெற்றியையுடைய வேல்போலுங் கண்ணையுடைய அவ்வாசவதத்தை பெரிதும் வெகுண்டு கூறுபவள், “வேந்தே! நம்பாற் கன்றிய காமத் தொடர்பு இனி வேண்டா! பெருமான் விரும்பியவாறே யாண்டேனும் செல்க!” என்று ஊடினள் என்க. (16)
-------------
202. உதயணன் வாசவதத்தை ஊடலைப் போக்குதல்
பாடக மிரங்கும் பாதப் பதுமையி னோடு மன்னன்
கூடிய கூட்டந் தன்போற் குணந்தனை நாடி யென்ன
ஊடிய தேவி தன்னை யுணர்வினு மொளியினாலும்
நாடினின் றனக்கன் னாடா னந்திணை யல்ல ளென்றான்
(இ - ள்.) ஊடிய வாசவதத்தையை நோக்கி, மன்னவன் “நங்காய்! பாடகங்கிடந்து திகழும் அடிகளையுடைய அந்தப் பதுமாபதியோடு யான் கூடிய கூட்டத்திற்குக் காரணம் அம்மடந்தைபால் நின்னுடைய குணம்போன்ற நற்குணமிருக்கக் கண்டமையாலேதான்; இதற்கு நீ வெகுளாதேகொள்!” என்று கூறவும் அது கேட்டுப் பின்னரும் ஊடுகின்ற அவ்வாசவதத்தையை நோக்கி, “நங்காய்! நற்குணத்தாலே அவள் நின்னை ஒப்பாளாயினும், உணர்வுடைமையினும் ஒளியுடைமையிலும் ஆராய்ந்து காணுமிடத்து அந்தப் பதுமாபதி ஆக்கமான ஒப்புமையுடையள் ஆகாள்காண்!” என்றான் என்க. நந்து - ஆக்கமுறுகின்ற. (17)
--------------
203. உதயணன் வாசவதத்தை யூடல்தீர்த்துக் கூடுதல்
நங்கைதன் மனங்க லங்கா நலம்புகழ்ந் தூட னீக்கி
வெங்களி யானை மற்றப் பிடியொடு மகிழ் வதேபோற்
பொங்கிள முலையில் வாசப் பூசுசாந் தழியப் புல்லிச்
சிங்கவே றனைய காளை செல்வியைச் சேர்ந்தா னன்றே.
(இ - ள்.) பின்னரும் அரிமாவேறு போன்றவனும் காளைப் பருவத்தினனுமாகிய அவ்வுதயண குமரன் அவ் வாசவதத்தையின் நெஞ்சம் குழம்பாத வகையினாலே அவளது நலம் பாராட்டி மெல்ல மெல்ல அவளது ஊடலை அகற்றி வெவ்விய களிப்பையுடைய களிற்றியானை தன் காதற்பிடியானையோடு கூடி மகிழ்வதேபோன்று பூரித்த அவ்வாசவதத்தையின் இளமுலைமேற் பூசப்பட்ட நறுமணச் சாந்தம் அழியும்படி உறத் தழுவி அச்செல்வியைப் புணர்ந்து மகிழ்ந்தான் என்க. (17)
---------
204. இதுவுமது
உருவிலி மதன்க ணைக ளுற்றுடன் சொரியப் பாய
இருவரும் பவளச் செவ்வா யின்னமிர் துண்டு வேல்போல்
திருநெடுங் கண்சி வப்ப வடிச்சிலம் போசை செய்ய
மருவிய வண்டு நீங்க மலர்க்குழல் சரிய வன்றே.
(இ - ள்.) அவ்விருவர்மீதும் உருவமில்லாத காமவேளும் தன் மலரம்புகளை ஒருங்கே ஏவுதலாலே உதயணன் அச்செல்வியின் பவளம்போன்று சிவந்த வாயூறலாகிய இனிய அமிழ்தினைப் பருகியும் வேல்போல மிளிருகின்ற கண்கள் சிவப்பாயும் அடியிலணிந்த சிலம்புகள் முரலவும் பொருந்திய வண்டினங்கள் அஞ்சியகலவும் மலர்சூடிய கூந்தல் சரிந்து வீழவும் என்க. (19)
------------
205. இதுவுமது
கோதையும் சுண்ணத் தாதுங் குலைந்துடன் வீழ மிக்க
காதலிற் கழுமி யின்பக் கரையழிந் தினிதி னோடப்
போதவும் விடாது புல்லிப் புரவல னினிய னாகி
ஏதமொன் றின்ரிச் செங்கோ லினிதுடன் செலுத்து நாளில்.
(இ - ள்.) மலர் மாலையும் நறுஞ்சண்ணப்பொடியும் குலைந்து வீழவும், மிகுந்த காதலில் நிறைந்து இன்பவெள்ளம் வரம்பு கடந்து இனிதாக ஒழுகாநிற்பவும், அவள் பிரிந்துபோகவும்விடமனமின்றித் தழுவிப் பேரின்பமுடையவன் ஆகி அரசியலிலும் சிறிதும் பிழை படாவண்ணம் செங்கோல் செலுத்துகின்ற நாளிலே என்க. (20)
--------
206. உதயணன் உருமண்ணுவாவைச் சிறப்பித்தல்
ஆனதன் னாம மிட்ட வாழிமோ திரத்தை யீந்தே
ஊனுமிழ் கதிர்வேன் மன்ன னுருமண்ணு வாவு தன்னைச்
சேனைநற் பதிநீ யென்று திருநிகர் பதுமை தோழி
ஈனமி லிராச னையை யெழில்வேள்வி யாற்கொ டுத்தான்.
(இ - ள்.) மன்னனான தனதுபெயர் பொறித்த மோதிரத்தை உருமண்ணுவா வென்னும் அமைச்சனுக்கு வழங்கி ஊன் கொப்பளிக்கும் ஒளிவேலுடைய உதயணன் அவ்வமைச்சனைப் படைகட்கெல்லாம் தலைவன் நீயே என்று அப்பதவியையும் வழங்கித் திருமகளை நிகர்த்த பதுமாபதியின் தோழியாகிய குற்றமற்ற இராசனை என்னும் நங்கையையும் அழகிய திருமண வேள்வி வாயிலாய் அவ்வமைச்சனுக்கு மனைக்கிழத்தியாக வழங்கினன் என்க. (21)
---------------
207. உருமண்ணுவாவிற்கும் இடபகனுக்கும் ஊர் வழங்குதல்
சயந்தியம் பதியுஞ் சால விலாவாண நகரு மீந்தே
இயந்தநல் லிடப கற்கு மினியபுட் பகத்தைச் சூழ்ந்த
செயந்தரு வளநன் னாடு சிறந்தவைம் பதும ளித்து
வயந்தகன் றனக்கு வாய்ந்த பதினெட்டூர் கொடுத்தா னன்றே.
(இ - ள்.) பின்னர் அம்மன்னவன் அவ்வுருமண்ணுவாவிற்குச் சயந்தி நகரத்தையும் மிகுதியாக இலாவாணக நகரத்தையும் வழங்கி, அவனோடு அமைச்சனாக வியைந்த இடபகனுக்குப் புட்பக நகரத்தைச் சூழ்ந்த வெற்றி நல்கும் வளமிக்க நல்ல ஐம்பதூர்களை வழங்கிப் பின்னர் வயந்தகனுக்குப் பொருந்திய பதினெட்டூர்களையும் வழங்கினன் என்க. (22)
-------
208. யூகிக்கு ஊர் வழங்குதல்
ஆதிநன் மாமன் வைத்த வருந்திறை யளக்கு நல்ல
சேதிநன் னாட்டை யூகிக் காகநற் றிறத்தி னீந்து
சோதிநல் லரசன் மிக்க சூழ்ச்சியின் மற்றோர்க் கெல்லாம்
வீதிநன் னகர்கள் விட்டு வீறுடன் வீற்றி ருந்தான்.
(இ - ள்.) புகழொளி படை.த்த உதயணமன்னன் பண்டு தன் மாமனாகிய விக்கிரமன் தன்பால் அரசுரிமை செய்து வைத்த சேதி நாடென்னும், பெறற்கரிய திறைப்பொருளைப் பிற மன்னர்கள் கொணர்ந்து அளத்தற்குக் காரணமான நல்ல நாட்டினை யூகிக்குப் பரிசிலாகச் சிறப்புடன் வழங்கி, மிக்க ஆராய்ச்சியினாலே ஏனையோர்க்கும் வரிசையறிந்து தெருக்களையுடைய நல்ல நகர்கள் பலவற்றையும் முற்றூட்டாக விட்டு வேறொரு வேந்தனுக்குமில்லாத சிறப்போடே அரசு கட்டிலில் வீற்றிருந்து செங்கோலோச்சினன் என்க. (23)
-----------
209. உதயண குமரன் பிரச்சோதனன் உய்த்த திருமந்திரவோலை பெறல்
பேசரும் பெருமை சால்ப்ரச் சோதனன் றூதர் வந்து
வாசகந் தன்னைக் காட்ட வந்தவன் மனம கிழ்ந்து
வாசவ தத்தை யோடு மன்னிய வமைச்சர் கூட
வாசகஞ் சொல்க வென்று வரிசையிற் கேட்கின் றானே.
(இ - ள்.) இங்ஙனம் நிகழுநாளில் ஒரு நாள் சொல்லுதற்கரிய பெருமை மிக்க அவந்தியரசனாகிய பிரச்சோதனன் விடுத்த தூதர் சிலர் வந்து அவ்வேந்தனுடைய திருமந்திர வோலையை உதயணனுக்கு வழங்க, தன் மாமடிகள் உய்த்த ஒலை பெற்ற மன்னவன் மன மகிழ்ந்து வாசவதத்தை நல்லாளும் நிலைபெற்ற அமைச்சர்களும் தன்னுடனிருப்புழி ஏடு படிப்பானிடம் அவ் வோலையை யீந்து இதன்கண் வரையப்பட்ட மொழிகளை ஓதுக! வென்று பணித்து ஆர்வத்தோடு கேட்பானாயினன் என்க. (24)
------
210. பிரச்சோதனன் ஓலையிற் கண்ட செய்தி
பிரச்சோத னன்றா னென்னும் பெருமக னோலை தன்னை
உரவுச்சேர் கழற்கான் மிக்க உதயண குமரன் காண்க
வாவுச்சீர்க் குருகு லத்தின் வண்மையான் கோடல் வேண்டி
வரைவனச் சார றன்னில் வன்பொறி யானை விட்டேன்.
(இ - ள்.) “அவந்தியர் கோமானாகிய பிரதச்சோதனன் என்னும் வேந்தன் வரைந்த இந்தத் திருமந்திர வோலையினை வலிமை மிக்க மறக்கழலணிந்த மன்னருள் மிக்க மன்னனாகிய உதயண குமரன் கண்டருளுக! பெருஞ்சீர்த்தி இடையறாது வருதலையுடைய குருகுலத்தின்கண் யான் மகட் கொடை செய்துறவுகோடலைப் பெரிதும் விரும்பி மலையையுடைய காட்டின்கண் வன்மையுடைய பொறியானையை நின்பால் விடுத்தேன் என்க. (25)
------------
211. இதுவுமது
211. கலந்தவை காண வந்த காவலர் நின்னைப் பற்றிச்
சிலந்திநூ றன்னா லார்த்த சிங்கம்போ லார்த்துக் கொண்டு
நலந்திகழ் தேரி னேற்றி நன்குவுஞ் சையினி தன்னிற்
பெலந்திரி சிறையில் வைத்த பிழையது பொறுக்க வென்றும்.
(இ - ள்.) கண்டேன் அரசவையத்தாரொடு கலந்து ஆராய்ந்தவாறே அக்களிற்றின் பின்னர்க் காவலாக நின்னைக் காண வந்த மறவர் நின்னைப் பற்றிச் சிலந்தி நூலாலே சிங்கவேற்றினைக் கட்டினாற் போன்று நின்னைக் கட்டி அழகாற் றிகழுந்தேரிலேற்றி நலமாக எமது உஞ்சைமா நகரிற் கொணர்ந்து வலிமை குன்றுதற்குக் காரணமான சிறைக்கோட்டத்தில் வைத்ததாகிய எமது பெரிய பிழையினைப் பெருமான்! பொறுத்தருளுக! எனவும், என்க. (26)
-----------
212. இதுவுமது
கோமானே யெனவே யென்னைக் கோடனீ வேண்டு மென்றும்
மாமனான் மருக னீயென் மாமுறை யாயிற் றென்றும்
ஆமாகும் யூகி தன்னை யனுப்ப யான் காண்டல் வேண்டும்
பூமாலை மார்ப வென்றும் பொறித்தவா சகத்தைக் கேட்டான்.
(இ - ள்,) பெருமானே நீ அப்பிழை பொறுத்து என்னை நின் தந்தையாகிய சதானிக வேந்தனுக்குச் சமமாக நினைத்தல் வேண்டும் என்றும், யான் இப்பொழுது நினக்கு மாமன் என்றும் நீ தானும் என்னருமை மருகன் என்றும் உலகினர் கூறுகின்ற பெரிய கேண்மை நம்முள் உண்டாயிற்றன்றோ ஆம், இன்னும் அக் கேண்மை ஆக்கமெய்தும், அது நிறிக, இனி நின் நல்லமைச்சனாகிய யூகியை நீ என்பால் உய்க்க அவ்வறிஞனை யான் காண்டலும் வேண்டும்! மலர்மாலை யுடைய மார்பையுடையோய் இஃதென் வேண்டுகோள் என்றும் வரையப்பட்டிருந்த மொழிகளை உதயண மன்னன் திருச்செவி யேற்றருளினன் என்க. (27)
-------------
213. யூகி உஞ்சைக்குப் போதலும் பிரச்சோதனன் வரவேற்றலும்
மன்னவ னனுப்ப யூகி மாநக ருஞ்சை புக்கு
மன்னர்மா வேந்தன் றன்னை வணங்கினன் கண்டிருப்ப
மன்னனு முடியசைத்த மைச்சனை நெடிது நோக்கி
மன்னிய வுவகை தன்னான் மகிழ்வுரை விளம்பி னானே.
(இ - ள்.) திருமந்திரவோலை வாயிலாகப் பிரச்சோதன மன்னன் வேண்டிய வேண்டுகோட் கிணங்கி வத்தவ மன்னனும் யூகியை உய்த்தலாலே அவ்வமைச்சன் கோநகரமாகிய உஞ்சைமாநகர்க்குச் சென்று ஆங்குப் பிரச்சோதனன் திருமுன் எய்தி வணங்கியவனாய் அம்மன்னன் காட்டிய இருக்கையி லமர்ந்திருப்ப அந்த யூகியின் வருகையாலே மனமகிழ்ந்த அம்மன்னவன் பேரழகுடைய அவ்வமைச்சன் நீண்டபொழுது பார்த்துத் தன்றிருமுடியை அசைத்துத்
தன்னெஞ்சத்தே நிலை பெற்ற மகிழ்ச்சி காரணமாக அவ்வமைச்சன் மகிழ்தற்குக் காரணமான முகமன் மொழிகளைக் கூறினன் என்க. (28)
-------------
214. பிரச்சோதனன் முரசறைவித்தல்
(கலிவிருத்தம்)
சீர்ப்பொழி லுஞ்சையுஞ் சீர்க்கௌ சாம்பியும்
பார்தனில் வேற்றுமை பண்ணுதல் வேண்டோம்
ஆர்மிகு முரச மறைகென நகரில்
தார்மிகு வேந்தன் றரத்தினிற் செப்பினன்.
(இ - ள்.) யூகியை வரவேற்ற பின்னர்ப் பிரச்சோதன மன்னன் முரசவள்ளுவரை அழைத்து இற்றை நாள் தொடங்கி நம் குடி மக்கள் சிறந்த பொழிலையுடைய நந்தமுஞ்சை நகர்க்கும் சிறப்புடைய கோசம்பி நகர்க்கும் இவ்வுலகின்கண் வேற்றுமை சிறிதும் கொள்ளுதல் வேண்டா! இரண்டு நாட்டு மாந்தரும் ஒரு நாட்டு மாந்தராகவே ஒற்றுமையுடன் வாழக்கடவர்! இது நம்மாணை என்று நகரெங்கும் ஆரவாரமிக்க முரசினை முழக்கி, அறிவிப்பீராக! என்று தகுதியோடு பணித்தவன் என்க. (29)
--------------
215. யூகியை அரசன் பாராட்டல்
தருமநன் னூல்வகை சாலங் காயனோ
டருமதி யூகியு மன்பி னுரைத்தான்
பெருவிறல் வேந்தனும் பெறுத லரிதெனத்
திருநிறை யூகியைச் செல்வன் மகிழ்ந்தான்.
(இ - ள்.) நல்ல அற நூல்களை வகுக்கும் தருக்கத்தைப்பற்றி யூகி அவந்தியமைச்சன் சாலங்காயன் என்பவனோடு அன்போடு சொற்போர் புரிந்து வென்று மகிழ்ந்திருந்தனனாக, பெரிய வெற்றியையுடைய பிரச்சோதன மன்னன்றானும் செல்வமிக்க யூகியை நோக்கிச் “சான்றோனே! நின் கேண்மை எம்மனோர்க்குப் பெறுதற்கரியதொரு பேறேயாம்!” என்று கூறி மகிழ்ந்தனன் என்க. (30)
--------
216. இதுவுமது
கவ்விய தகலமுங் காட்சிக் கினிமையும்
சொல்லருஞ் சூட்சியுஞ் சொற்பொருட் டிண்மையும்
வல்லமை யிவனலான் மாந்த ரில்லையின்
றெல்லையில் குணத்தின னென்றுரை செய்தனன்.
(இ - ள்.) பின்னரும் அப்பிரச்சோதன மன்னன் அவையோரை நோக்கி “இந்த நல்லமைச்சன் யூகி எல்லையற்ற குணக்கடலாகத்திகழ்கின்றனன்; கல்லவி.யறிவுப் பெருக்கத்தானும், காண்டற்கினிய பேரழகுடைமையானும், சொல்லுதற்கரிய ஆட்சித்திறத்தினானும், சொல்லும் பொருளினது திட்பத்தானும் வல்லமையுடைய இவனுக்கு நிகர் இற்றைநாள் இவனேயன்றிப் பிறர் யாருமிலர்!” என்று பாராட்டிப் பேசினன் என்க. (31)
----------
217. இதுவுமது
இன்னவற் பெற்றவர்க் கேற்ற வரசியல்
இன்னவ ரின்றி யிலையர சென்றே
இன்னன நீடிய வியல்பிற் பிறவுரை
மன்னவ னாடி மகிழ்வித் திருந்தபின்.
(இ - ள்.) பின்னும் இத்தகைய பெருஞ்சிறப்புடைய இந்த யூகியை அமைச்சனாகப் பெற்றவராகிய உதயணமன்னருக்கும் தாமேற்கொண்டுள்ள அரசியற் சிறப்பினாலே அவ்வுதயண மன்னருக்கு நிகர் அவரேயன்றி வேறு அரசர் யாருமில்லை என்று கூறி இன்னோரன்ன தன்மையுடைய வேறு பல முகமன் மொழிகளையும் அம்மன்னவன் ஆராய்ந்தெடுத்து அவ்வவைக்கட் கூறி யூகியைப் பெரிதும் மகிழ்வித்திருந்தபின்னர் என்க. (32)
----------
218. பிரச்சோதன மன்னன் யூகிக்குத் திருமணஞ் செய்வித்தல்
சாலங் காயன் சகோதர மானநன்
னீலங் காய்ந்த நெடுவேல் விழிநுதற்
பாலங் கோர்பிறை யாம்படா வெம்முலைக்
கோலங் காரன்ன கூரெயி றாப்பியும்.
(இ - ள்.) அவ்வந்தி வேந்தன், சாலங்காயன் என்னும் தன் அமைச்சன் தங்கையான கருங்குவளை மலரைக் கடிந்ததும் நெடிய வேல்போல்வதுமாகிய கண்ணையும் பாதிப் பிறையென்னத் தகுந்ததான அழகிய நெற்றியினையும் தளராத வெவ்விய முலையினையும் ஒப்பனை செய்யப்பட்ட முகில் போன்ற கூந்தலையும் கூர்த்த பற்களையும் உடையவளாகிய ‘யாப்பி’ என்பவளையும், என்க. (33)
-------------
219. இதுவுமது
பரதகன் றங்கை பான்மொழி வேற்கணி
திருநி லம்புகழ் திலதமா சேனையும்
பெருநில மறிய மணமிகப் பெற்றுடன்
அரிய யூகிக் கரசன் கொடுத்தனன்.
(இ - ள்.) பரதகன் என்னும் அமைச்சனுடைய தங்கையான பால் போன்ற மொழியினையும் வேல் போன்ற கண்ணையும் உடையவளும், ஆகிய செல்வமிக்க இந்நிலவுலகத்து வாழ்வோரெல்லாம் புகழ்தற்குக் காரணமான திலதசேனை என்பவளையும் இப்பேருலகம் அறியும்படி திருமணம் புணர உடன்பாடு பெற்றுப் பெறற்கரிய அறிஞனாகிய யூகிக்கு வழங்கினன் என்க. (34)
---------
220. யூகி வத்தவ நாடு புகுந்து உதயணனைக் காண்டல்
சென்மதி நீயெனச் செல்ல விடுத்தனன்
நன்முது நகர்முன் னாடிப் போவெனப்
பன்மதி சனங்கள் பரவி வழிபட
வென்மதி யூகிபோய் வேந்தனைக் கண்டனன்.
(இ - ள்.) பின்னர் அப்பிரச்சோதன மன்னவன் யூகியை நோக்கி, “அறிஞனே! நின் மன்னன் நிற் பிரிந்து வருந்தியிருப்பனாகலின் நீயினி நல்ல பழைய நகரமாகிய கோசம்பிக்குச் செல்லுதல் வேண்டும்; ஆதலால் நீ செல்க!” என்று விடுப்ப வெல்லுதற்கியன்ற பேரறிவுபடைத்த யூகியும் உடம்பட்டுப் பல்வேறு அறிவுத்திறம் படைத்த மாந்தரெல்லாம் ஒருங்கே வாழ்த்தி வழிபடவும் அவ்வுஞ்சையினின்றும் போய்க் கோசம்பி புகுந்து உதயணமன்னனைக் கண்டு வணங்கினன் என்க. (35)
----------
தேவிமார் உதயணனைப் பந்தடிகாண அழைத்தல்
(அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
வத்தவ குமரன் பாதம் வந்தனை செய்த மைச்சன்
இத்தல முழுது மாளு மினியநன் மாமன் சொன்ன
ஒத்தநன் மொழியைக் கேட்டே யுவந்துட னிருந்த போழ்தில்
சித்திரப் பாவை மார்கள் செல்வனை வணங்கிச் சொல்வார்.
(இ - ள்.) யூகி கோசம்பி நகரம் புகுந்து தன் கொற்றவனாகிய உதயணகுமரன் திருவடிகளை வணங்கி இந் நிலவுலகம் முழுதும் ஆளாநின்ற மன்னனான இனிய மாமடிகள் கூறிய தமக்கும் பொருந்திய நல்ல மொழிகளையும் அந்த யூகி கூறக்கேட்டு மகிழ்ந்து அவ்வமைச்சனுடன் இன்புற்றிருந்த பொழுது ஓவியத்தில் வரையப்பட்ட பாவை போன்ற அழகிய தேவிமார்கள் உதயணன்பால் வந்தெய்தி வணங்கிக் கூறுவார்; என்க. (36)
---------------------
222. உதயணன் பந்தடி காணல்
பந்தடி காண்க வென்னப் பார்த்திப னினிய னாகிக்
கந்துகப் பூசல் காணக் கலிற்றின்மீ தேறி வந்து
கொந்தலர் மாலை மாதர் குழுவுடன் சூழ நிற்ப
வந்தனள் பதுமை தோழி வனப்பிரா சனையென் பாளாம்.
(இ - ள்.) தேவிமார் உதயணனைத் தொழுது பெருமான் இற்றைநாள் மகளிராடும் பந்தாட்டத்தைக் கண்டருள வேண்டுமென்று வேண்ட, அதுகேட்ட அம்மன்னன் மிகவும் மகிழ்ச்சியுடையனாகி அந்தப் பந்துப் போரினைக் கண்டு களிக்கும்பொருட்டு ஒரு களிற்றியானையின் மேலேறிப் பந்தாடு களத்திற்கு வந்து, கொத்தாக மலர்ந்த மலர்மாலை யணிந்த மகளிர் கூட்டந் தன்னைச் சூழ்ந்து நிற்கும்படியாத நிற்கும்பொழுது பதுமாபதியின் தோழியாகிய அழகுமிக்க ’இராசனை’ என்பவள் பந்தாடு களத்தில் வந்தனள் என்க. (37)
---------
223. மகளிர் பந்துப் போர் இராசனை
ஓரேழு பந்து கொண்டே யொன்றென்றி னெற்றிச் செல்லப்
பாரெழு துகளு மாடப் பலகல னொலிப்ப வாடிச்
சீரெழு மாயிரங்கை சிறந்தவ ளடித்து விட்டாள்
காரெழு குழலி நல்ல காஞ்சன மாலை வந்தாள்.
(இ - ள்.) பந்தாடுதலிற் சிறந்த அவ்விரசனை என்பவள் ஏழு பந்துகளை ஒருங்கே கைக்கொண்டு ஒரு பந்து மற்றொரு பந்தினைப் புடைத்து ஒன்றன்பின் னொன்றாகச் செல்லும்படியும் நிலத்திலே எழுகின்ற துகளெழுந்து ஆடும்படியும் தனது பல்வேறு அணிகலன்களும் ஆரவாரிப்பவும் சிற்ப்புத் தோன்ற ஆயிரங்கை இடையறாது அடித்து நிறுத்ினளாக; அவளின் பின் வாசவதத்தையின் தோழியாகிய முகில்போன்ற கூந்தலையுடைய நல்லாள் ‘காஞ்சனமாலை’ என்பவள் களத்தில் வந்தனள் என்க. (38)
------
224. காஞ்சனமாலை
வேய்மிகு தடக்கை தன்னால் வியந்துபந் துடனே யேந்திக்
காய்பொனின் கலன்க ளார்ப்பக் கார்மயி லாட்டம் போல
ஆயிரத் தைஞ்ஞா றேற்றி யடித்தன ளகல வப்பால்
ஆய்புகழ்ப் பதுமை தாதி யயிராப திபந்து கொண்டாள்.
(இ - ள்.) காஞ்சனமாலை மூங்கிலினும் அழகுமிக்க தன் கையால் யாவரும் வியக்கும்படி பந்துகளை ஏந்திக்கொண்டு, உலையிற் காய்ந்த தனது பொன்னணிகலன்கள் ஆரவாரிக்கும்படி கார்காலத்து மயிலாடுமாறு போல ஆயிரத்தைந்நூறு கையாக ஏற்றியடித்துச் சென்றனளாக; அப்பால் ஆராய்தற்கியன்ற புகழையுடைய பதுமாபதியின் தோழியாகிய ‘அயிராபதி’என்பவள் வந்து பந்தினைக் கொண்டனள் என்க. வியந்து - வியப்ப. (39)
---------
225. அயிராபதி
சீரேறு மிமில்போற் கொண்டைச் சில்வண்டுந் தேனும் பாடப்
பாரோர்க ளினிது நோக்கும் பல்கலஞ் சிலம்போ டார்ப்ப
ஈராயி ரங்கை யேற்றி யிருகரத் தடித்து விட்டாள்
தோராத வழகி தத்தை தோழி விசுவ லேகை வந்தாள்.
(இ - ள்.) அயிராபதி தானும் சிறப்புமிகும் காளையினது திமில்போன்ற தனது கொண்டையின்கண் சிலவாகிய ஆண் வண்டுகளும் பெண் வண்டுகளும் இசைபாடாநிற்ப, உலகினர் வியந்து இனிது கூர்ந்து நோக்குதற்குக் காரணமான தனது பல்வேறணிகலங்களும் சிலம்பினோடு சேர்ந்து ஆரவாரிக்கும்படி இரண்டாயிரங்கையாக ஏற்றித் தனது இரண்டு கைகளாலும் இடையறாதடித்து நிறுத்தினளாக; அப்பால், தோலாத பேரழகுடைய வாசவதத்தையின் தோழியாகிய விச்சுவலேகை என்பவள் களத்தில் வந்தனள் என்க. சீர் ஏறும் இமில் என்க. (40)
--------
226. விச்சுவலேகை
கருங்குழ னெடுவேற் கண்ணாள் காரிகை பந்தெ டுத்துப்
பெருங்கல னினிதி னார்ப்பப் பெய்வளை கலக லென்ன
ஒருங்குமுன் கையின் மீதி லோரைஞ்ஞூ றடித்து விட்டாள்
கருங்கணி பதுமை தோழி காரிகை யொருத்தி வந்தாள்
(இ - ள்.) கரிய கூந்தலையும் நெடிய வேல்போன்ற கண்களையும் உடைய அழகியாகிய அவ்விச்சுவலேகை தானும், பந்தினை எடுத்துத் தன் பேரணிகலன்கள் இனிதாக ஆரவாரிக்கவும், கையிற் பெய்யப்பட்ட வளையல்கள் கலகலவென்று ஒலிக்கவும் ஒருங்கே முன் அயிராபதி அடித்த இரண்டாயிரங்கைக்கு மேலும் ஐந்நூறு கையடித்து நிறுத்தினளாக; அப்பால் கரிய கண்களையுடைய பதுமாபதியின் தோழியாகிய அழகியொருத்தி களத்தில் வந்தனள் என்க. (41)
-----------
227. ஆரியை
ஆரியை யென்னு நாம வரிவைகைக் கொண்டு பந்தைச்
சேரமின் சிலம்பு மார்ப்பச் சிறுநுதன் முத்த ரும்பச்
சீரின்மூ வாயி ரங்கை சிறந்தவ ளடித்த பின்பு
பேரிசைத் தத்தை யாயம் பெருங்குழாத் தினிதி னோக்காள்.
(இ - ள்.) பந்தாடு களத்தில் வந்த ஆரியை என்னும் பெயரையுடைய அத்தோழி பந்தினைக் கைக்கொண்டு தன்னிரு சிலம்புகளும் ஒருங்கே ஆரவாரிப்பவும், தனது சிறிய நுதலிலே வியர்வை முத்துப்போன்று அரும்பவும், சிறப்பாக மூவாயிரங்கை முன்னையோரினும் சிறந்தவளாக அடித்து நிறுத்திய பின்னர்ப் பந்தாடற்கு யாரும் துணிந்து வாராமையாலே அவ்வாரியை வெற்றிச் செருக்கோடு மாற்றாராகிய வாசவதத்தையின் தோழிமார் குழாத்தை இனிதாக நோக்கினள் என்க. (42)
-------
228. மானனீகை வருதல்
அருவரு மேற்பா ரின்றி யோர்ந்தவ ணெஞ்சங் கூர்ந்து
திருநுதன் மாது நொந்து சிறப்பின்றி யிருந்த போழ்தின்
மருவுகோ சலத்து மன்னன் மகளுரு வரிவை நாமம்
சுரிகுழன் மான னீகை சொலற்கருங் கற்பி னாளே.
(இ - ள்.) பதுமாபதியின் தோழியாகிய ஆரியை மூவாயிரங்கை இடையறாது அடித்து நிறுத்திய பின்னர் ணாற்றாராகிய வாசவதத்தை தோழிமார் குழுவினுள் அப்பந்தினை ஏற்று ஆடத்துணிவார் யாருமில்லை யாகவே அரசனை யுணர்ந்த அழகிய நுதலையுடைய வாதவதத்தை மனங்குன்றி பொலிவிழந்து வாளா விருந்துழி, வளம்பொருந்திய கோசலநாட்டு மன்னன் மகளும் கரிந்த கூந்தலையுடையவளும் உருவத்தாற் சிறந்தவளும் ‘மானனீகை’ என்னும் பெயரை யுடையவளும் புகழ்தற்கரிய கற்பினையுடையவளும் என்க. (43)
-----------
229. இதுவுமது
இளம்பிறை நுதல்வேற் கண்ணி யினியவிற் புருவ வேய்த்தோள்
இளங்கிளி மொழிநற் கொங்கை யீடில்பொற் கலச மல்குல்
இளமணிப் படம்பொன் வாழை யிருகுறங் காலம் பண்டி
இளம்புற வடிக ளாமை யிடைமின் பூங் குழலி னாளே.
(இ - ள்.) இளம்பிறை போன்ற நுதலையுடையவளும் வேல் போன்ற கண்ணையுடையவளுங் காண்டற்கினிய விற்போன்ற புருவமுடையவளும் மூங்கில்போன்ற தோள்களையுடையவளும் இளைய கிளிபோலும் மழலை மொழியுடையவளும் ஒப்பற்ற பொன்னாலியன்ற கலசங்களை ஒத்த அழகிய முலைகளை யுடையவளும் மணியுடைய இளைய நாகத்தின் படம் போன்ற அல்குலையுடையவளும் பொன்னாலியன்ற வாழைத்தண்டுகளை ஒத்த இரண்டு தொடைகளையுடையவளும் ஆலிலைபோன்ற வயிற்றையுடையவளும் ஆமைப்பார்ப்புப்போன்ற புறவடிகளையுடையவளும், மின்னல்போன்ற இடையினையுடையவளும் ஆகிய மலரணிந்த கூந்தலையுடைய அக்கோமகளும் என்க. குறங்கு - தொடை; ஆலம் - ஆலிலை; பண்டி - வயிறு. (44)
----------
230. இதுவுமது
ஆங்கொரு கார ணத்திற் றத்தைபால் வந்தி ருந்தாள்
பூங்கொடி தோல்வி கண்டு பொறுப்பிலா மனத்த ளாகித்
தீங்குறு தத்தை தன்னைச் சீருடன் வணங்கிப் போந்து
பாங்குறு மிலக்க ணங்கள் பந்தடி பலவுஞ் சொன்னாள்.
(இ - ள்.) கோசம்பியரண்மனையில் ஒரு காரணத்தாலே வாசவதத்தையினது தோழியருள் ஒருத்தியாக வந்து கரந்துறைபவளும் ஆகிய அம்மானனீகை மலர்க்கொடி போல்வாளாகிய வாசவதத்தை இப்பந்துப் போரின்கண் தோற்றமை கண்டு பொறாத நெஞ்சை யுடையவளாகித் துன்புறுகின்ற அவ் வாசவதத்தையை வணங்கி விடைபெற்றுப் பந்தாடு களத்திலே வந்து அழகிய பந்தாட்டத்தின் வகைகளையும் அவற்றின் இலக்கணங்களையும் பலவாக விரித்துக் கூறினள் என்க. (45)
-----------
(கலிப்பா)
231. காஞ்சனமாலை பந்தடித்தல்
மூன்றுபத் திரண்டுநன் மூரிப்பந்தெ டுத்துடன்
தோன்றிரண்டு கையினுந் தொடுத்தினி தடித்தலும்
ஆன்றகையி னோட்டலு மலங்கலுட் கரத்தலும்
ஈன்றரவி னாடலு மிறைஞ்சிநிமிர்ந் தாடினாள்.
(இ - ள்.) பந்தாட்டத்தினிலக்கணங் கூறிய அப்பைந்தொடி முப்பத்திரண்டு நல்ல பெரிய பந்துகளை எடுத்துக்கொண்டு தோன்றிதனது இரண்டு கைகளாலும் அம் முப்பத்திரண்டு பந்துகளையும் மாலைபோலத் தோன்றும்படி தொடர்பாக அடித்தலும் பொருந்திய கையாலே மறித்து ஒட்டலும் மாலையிலே அப் பந்துகளை மறைத்துக்கோடலும் பார்ப்பீன்ற பாம்புபோல ஆடலும் ஆகிய ஆட்ட வகைகளைக் குனிந்தும் நிமிர்ந்தும் ஆடினள் என்க. (46)
----------
232. இதுவுமது
முட்டில்கோல வட்டணை முயன்றுபத்தி யிட்டுடன்
நட்டணை நடனமு நயந்தினிதி னாடவும்
பட்டுடையின் வேர்நுதற் பாங்கினிற் றுடைப்பவும்
இட்டிடை துவளவு மினியபந் தடித்தனள்.
(இ - ள்.) முட்டில்லாத அழகையுடைய வட்ட வடிவமாகப் பந்துகள் தொடர்ந்து வானிலே தோன்றும்படி முயன்றடித்தலும் வரிசையாகத் தோன்றும்படி அடித்தலும் இடையிலே நகைக் கூத்தாட்டத்தையும் விரும்பி இனிதாக ஆடுதலும் பந்தடிக்கும் பொழுதே தன் பட்டாடையாலே வியர்க்கும் நுதலை அழகாகத் துடைத்துக் கோடலும் செய்து தன் சிற்றிடை நுவளும்படி காண்டற்கினிய பந்துகளை அடித்தனள் என்க. நட்டணை - நசைச்செயல். (47)
----------
233. மானனீகையை அனைவரும் பாராட்டுதல்
பரிவுகொண் டனைவரும் பண்டறியோ மென்மரும்
விரிவுவான் மடந்தையோ வியந்திரியோ வென்மரும்
தரிவுவிச்சை மங்கையோ தான் பவண நாரியோ
விரிவுறிந் நிலத்திடை வேறுகண்ட தில்லென்பார்.
(இ - ள்.) மானனீகையின் பந்தாட்டங்களைக் கண்ட அக்களங் காணும் மக்கள் அனைவரும் அவள்பால் அன்புடையராய் இங்ஙனம் பந்தாடுவாரை யாம் பண்டென்றும் கண்டறிந்திலேம் என்று கூறுவாரும், இவள் விரிவுடைய வான நாட்டுத் தெய்வ மகளோ? அல்லது, வியந்தர தேவப் பெண்ணோ என்று வியப்பாரும், வித்தையினைத் தரித்தலுடைய விச்சாதர மகளோ அல்லது நாகநாட்டு மகளோ? பரந்த இந்த நிலவுலகத்திலே இவள் போல் வார் பிறரை யாங் கண்டதில்லை என்பாரும் ஆயினர் என்க. (48)
--------
234. மானனீகையின் பந்துகளின் செலவு வகைகள்
காந்தணன் ஒருமுன் கைக் கன்னியன் விரலினின்
ஏந்தினளெ டுத்தடிக்க விறைவளை யொலிவிடப்
போந்தன விசும்பினும் பொங்குநன் னிலத்தினும்
சூழ்ந்துகந் தெழுந்தன சூறாவளிக் ளென்னவே.
(இ - ள்.) செங்காந்தள் மலர் போன்ற நறிய முன்கையையுடைய கன்னிகையாகிய அம்மானனீகை தன் அழகிய விரலாலே பந்தினை ஏந்தி எடுத்து அடிக்குங் காலத்தே அவள் முன் கையின் வளையல்கள் முரலவும், அப் பந்துகள் விசும்பினும் சென்றன. நல்ல நிலத்தின்கண் மோதி நான்கு திசையினும் சூறைக் காற்றே போற் கழன்றுயர்ந்து மீண்டும் வானத்தே உயர்ந்துஞ் சென்றன என்க. உகந்து - உயர்ந்து. (49)
-----------
235. பந்தாடுங்காலத்து மானனீகையின் நிலைமை
சிலம்புகிண் கிணிசில சீர்க்கலன்க ளார்ப்பவும்
வலம்புரி மணிவடம் வளரிள முலைமிசை
நலம்பெற வசைந்திட நங்கைபத் தடித்திடப்
புலம்புவண்டு தேனினம் பூங்குழன்மே லாடவே.
(இ - ள்.) அவள் பந்தாடும் பொழுது அவள் சிலம்புகளும் கிணகி்ணிகளும் சில சிறந்த பிற வணிகலன்களும் ஆரவாரிப்பவும், வலம்புரி யீன்ற முத்துமாலையானது வளருகின்ற இளமுலைமேற் கிடந்து அழகுண்டாக அசையா நிற்பவும் இசை முரலுகின்ற வண்டினமும் தேனினமும் அழகிய கூந்தன்மே லாடாநிற்பவும் பந்துகளைப் புடைத்தனள் என்க. (50)
---------------
236. மானனீகையின்பால் உதயணன் காதல் கோடல்
பாடகச்சி லம்பொலி பண்ணினு மினிதெனச்
சூடகத் தொலிநல சுரருடைய கீதமே
ஆடகம ணித்தொனி யரசுளங் கவர்ந்துடன்
கூடகம னத்தினற்கு மரனினிய னாயினன்.
(இ - ள்.) இவள் பந்தாட்டங் கண்டு நின்ற நல்லோனாகிய உதயண குமரனுக்கு அவளடியிலணிந்த சிலம்பொலி பண்ணொலியினும் காட்டில் இனிதாகப் பொன்மணி யணிகலன்கள் ஒலியும் கைவளையலின் ஒலியும் தேவ கீதங்களே ஆயின; இவ்வாற்றால் அரசனாகிய அவன் மனம் பெரிதும் கவரப் பட்டு அவளோடு கூடும் உள்ளமுடைமையாலே மிகவும் இன்புறுவானாயினன் என்க. சூடகம் - ஒருவகை வளையல். (51)
237. மானனீகை எண்ணாயீரங்கை பந்தடித்து நிறுத்தல்
மாறுமா றெழுவதும் வகையுடன் னிழிவதும்
வீறுமாத ராடவும் வேந்தனுடன் மாதரும்
கூறுமிவ ளல்லது குவலயத்தி னில்லையென்
றேறுபந்தி னெற்றிக்கை யெண்ணாயிர மடித்தனள்.
(இ - ள்.) பந்துகள் மாறு மாறாக எழுவதும் முறையே நிலத்தி லிழிவதமாக வீறுடைய அம்மானனீகை பந்தாடவும் உதயண வேந்தனும் கோப்பெருந்தேவியர் முதலிய மகளிரும் மானனீகை என்று கூறப்படும் இவளுக்கு இந் நிலவுலகத்திலிவளே நிகராதலல்லது பிறர் யாருமிலர் என்று பாராட்டும்படி வானிலேறுகின்ற அப் பந்துகளைப் புடைத்து எண்ணாயிரம் கையடித்து நிறுத்தினள் என்க. (52)
----------
238. மானனீகை புணர்வும் வாசவதத்தை சினமும்
அறுசீர்க்கழி நெடிலடி யாசிரிய விருத்தம்
பிடிமிசை மாதர் போந்து பெருமணக் கோயில் புக்கார்
கடிமலர்க் கோதை மன்னன் காவிநன் விழிமா னீகை
இடிமின்னி னுசுப்பி னாளை யின்புறப் புணர்ந்தி ருப்பத்
துடியிடைத் தத்தை கேட்டுத் தோற்றிய சீற்றத் தானாள்.
(இ - ள்.) வாசவதத்தை முதலிய மகளிர்கள் பிடியானை முதலியவற்றில் ஏறித் தத்தம் மாளிகை புகுந்த பின்னர் மணங்கமழும் மலர்மாலை யணிந்த உதயண மன்னன் குவளை மலர் போன்ற அழகுடைய நல்ல விழிகளையும், இடிக்குங்காற் றோன்றும் மின்னல் கொடி போன்ற இடையினையும் உடைய அம்மானனீகையை யாழோர் முறைமையாலே களவு மணம் புணர்ந்திருப்ப, அச்செய்தியினை உடுக்கை போன்ற இடையினையுடைய வாசவதத்தை கேள்வியுற்று வெளிப்பட்டுத் தோன்றும் வெகுளியை யுடையளாயினள் என்க. மானிீகை: விகாரம். (53)
------------
239. மானனீகை மணம்
துன்னிரு ணீங்கிக் காலை தூமலர் கொண்டு தத்தை
மன்னவ னடிவ ணங்க மனமகிழ் வின்றி நின்ற
அன்னமென் னடையி னாளை யகமகிழ் குளிரக் கூறி
மன்னன்மா னீகை தன்னை மணமிகச் செய்து கொண்டான்.
(இ - ள்.) செறிந்த இருளையுடைய அற்றைநாளிரவு புலர்ந்து வழிநாட் காலையான பொழுது வாசவதத்தை தூய மலர் கொண்டு உதயணன் திருவடிகளை வணங்காநிற்ப ஊடலால் மனமகிழ்ச்சியில்லாமல் திருமுகம் வாடி நின்ற அன்னம் போன்ற நடையினையுடைய அவ்வாசவதத்தையின் மனம் பெரிதும் மகிழும்படி ஊடல் தீர்த்தற்கியன்ற பணிமொழி கூறி ஊடல் போக்கி அவளுடன்பாடு பெற்று அம் மன்னவன் கோசல மன்னவன் மகளாகிய மானனீகையை மிகச் சிறப்பாகப்பலரறிய மணஞ் செய்து கொண்டனன் என்க. (54)
-------------
240. விரிசிகை மணம்
தேவியர் மூவர் கூடத் தேர்மன்னன் சேர்ந்து சென்னாட்
காவின்முன் மாலைசூட்டிக் காரிகை கலந்து விட்ட
பூவின்மஞ் சரியைப் போலும் பொற்புநல் விரிசி கையைத்
தாவில்சீர் வேள்வி தன்னாற் றரணீசன் மணந்தா னன்றே.
(இ - ள்.) வாசவதத்தையும் பதுமாபதியும் மானனீகையும் ஆகிய கோப்பெருந்தேவியர் மூவரும் தன்னோடு மனமகிழ்ந்து மணந்திருப்பத் தேரையுடைய உதயண மன்னன் அவர்களோடு இனிது இல்லறம் நடத்தி வருகின்ற நாளிலே முன்பொரு காலத்தே காட்டகத் தொரு சோலையிலே மலர்மாலை புனைந்து சூட்டி அவளழகை உள்ளத்தால் நுகர்ந்து விடப்பட்ட பூங்கொத்துப் போன்ற பொலிவுடைய நல்லாளாகிய விரிசிகையையும் அம் மாநில மன்னன் மணஞ் செய்து கொண்டான் என்க. (55)
---------
241. மன்னன் ஆட்சிச் சிறப்பு
நட்புடைக் கற்பு மாதர் நால்வரு மன்ன னுள்ளத்
துட்புடை யிருப்ப நாளு மொருகுறை வின்றித் துய்த்துத்
திட்புடை மன்னர் வந்து திறையளந் தடிவ ணங்க
நட்புடை நாட்டை யெல்லா நரபதி யாண்டு சென்றான்.
(இ - ள்.) அன்புடைய கற்புடைய மகளிராகிய தேவிமார் ஒரு நால்வரும் உதயண மன்னனுடைய உள்ளத்தே சரியாதனத்தில் ஒழிவின்றி வீற்றிருப்பாராக, அம்மன்னன் அரசு கட்டிலில் வீற்றிருந்து எல்லாவின்பங்களையும் ஒரு சிறிதும் குறைபாடின்றியே இனிது நுகர்ந்து திட்பமுடைய பிற நாட்டு மன்னரெல்லாம் வந்து அடிவணங்கித் திறையளப்ப நட்புடைய நாட்டையெல்லாம் அவ்வேந்தர் வேந்தன் இனிது ஆட்சி செய்திருந்தனன் என்க. (56)
நான்காவது வத்தவகாண்டம் முற்றும்
-----------
ஐந்தாவது - நரவாகன காண்டம்
242. வாசவதத்தை வயிறு வாய்த்தல்
242. எத்திக்கு மடிப்ப டுத்தி யெழில்பெறச் செங்கோல் செல்லும்
பெற்றிசெய் வேந்தன் றன்னைப் பெருமைவேற் றானை மன்னை
வித்தைசெய் சனங்கண் மாந்தர் வியந்தடி வணங்க மின்னும்
முற்றிழை மாலைத் தத்தை முனிவில்சீர் மயற்கை யானாள்.
(இ - ள்.) இவ்வாறு எல்லாத் திசைகளிலுமுள்ள நாட்டையெல்லாம் வென்று தன் அடிப்படுத்திக்கொண்டு தனதுசெங்கோன் முறை தடையின்றி யாண்டுஞ் செல்லும் வண்ணம் அரசாட்சி செய்கின்றவனும் பெருமை மிக்க படைகளையுடையவனுமாகிய உதயண வேந்தனைக் கலைவாணர்களும் குடிமக்களும் வியந்து அடிவணங்கி வாழ்த்தாநிற்ப ஒளிவீசும் நிறைந்த அணிகலன்களையும் மலர்மாலையினையும் அணிந்த கோப்பெருந்தேவியாகிய வாசவதத்தை விரும்பத் தகுந்த சிறப்பையுடைய வயா நோயுற்றனள் என்க. மகப்பேற்றிற்குக் காரணமாதலின் மயற்கையை ‘முனிவில் சீர் மயற்கை’ என்றார். மயற்கை - மசக்கை; வயாநோய். (1)
----------
243. வாசவதத்தையின் வயாவிருப்பம் அறிதல்
நிறைபுகழ் வனப்பு நங்கை நிலவிய வுதரந் தன்னுட்
பிறையென வளரச் செல்வன் பேதையும் விசும்பிற் செல்லும்
குறைபெறு வேட்கை கேட்ட கொற்றவன் மனத்தி னெண்ணி
அறைபுக ழமைச்சர் தம்மை யழைத்தனன் வினவி னானே.
(இ - ள்.) உலகெல்லாம் நிறைந்த பெரும்புகழையும் பேரழகையும் உடைய பெருந்தகையாளாகிய வாசவதத்தையின் வயிற்றின்கட் கருவாகிய மகன் வளர்பிறை போன்று நாடொறும் நன்கு வளர்தலாலே அப்பேரரசி தானும் வானத்திலே பறந்துபோய்ப் பல்வேறு காட்சிகளைக் காண்டல் வேண்டும் என்னும் அவாவுடையளாக; நிறைவேறாக் குறையையுடைய அந்த விருப்பத்தைக் கேட்டறிந்த அவ்வெற்றி வேந்தன் அவ்விருப்பத்தை நிறைவேற்ற வேண்டுமென்று தன்னுளத்திலே நினைத்து அதற்குரிய நெறிகாண்டற்கு யாண்டும் கூறப்படுகின்ற புகழையுடைய தன் அமைச்சர்களை அழைத்து அதற்குரிய வழியை வினவினன் என்க. (2)
------------
244. உருமண் ணுவா கூற்று
உருமண்ணுவா விதனைச் செப்பு முன்னொரு தினத்தின் வேட்டைப்
பெருமலை வனத்தி னீரின் வேட்கையாற் பிறந்த துன்பம்
மருவுறு வருத்தங் கண்டோர் வானவன் வந்து தோன்றிப்
பெருமநீ ருண்ணக் காட்டிப் பெரிடர் தீர்த்தானன்றோ.
(இ - ள்.) உதயணவேந்தன் வினவலும் அமைச்சருள் உரு மண்ணுவா என்பான் கூறுகின்றான், “பெருமானே! முன்னொரு நாள் யாமெல்லாம் வேட்டையாடுதற் பொருட்டுப் பெரிய மலைகளையுடைய காட்டிற் சென்று ஆண்டு நீர்வேட்கையாலே உண்டாகிய துன்பத்தாலே நம்மை எய்திய வருத்தத்தைத் கண்டு அவ்விடத்தே ஒருதேவன் தானாகவே வந்து நம்முன் தோன்றி நாம் நீருண்ணும்படி செய்து அப்பெரிய துன்பத்தைப் போக்கி நம்மை உய்வித்தானல்லனோ!” என்றான் என்க. (3)
----------
245. இதுவுமது
இன்னமோ ரிடர்வந் தாலு மென்னைநீர் நினைக்க வென்று
மன்னுமோர் மந்தி ரந்தான் வண்மையி னளித்துப் போந்தான்
சொன்னமா மந்தி ரத்தைச் சூழ்ச்சியி னினைக்க வென்றான்
பின்னவ னினைத்த போழ்தே பீடுடை யமரன் வந்தான்.
(இ - ள்.) “அரசே! அத்தேவன் நம்பாலன்பினாலே நீங்கள் இனி எப்போதாயினும் நுமக்கு இவ்வாறு இடுக்கண் வந்தாலும் என்னை நினைவீராக! என்று கூறி அவனை நினைத்தற்குரிய நிலை பேறுடையதொரு மந்திரத்தையும் தனது வள்ளன்மையாலே நமக்குச் செவியறிவுறுத்துப் போயினனல்லனோ! அத்தேவன் கூறிய அந்தச் சிறந்த மந்திரத்தை ஆராய்ந்து இப்பொழுது பெருமான் ஓதுக!” என்று கூறினன் அது கேட்ட பின்னர் உதயணகுமரனும் அம்மந்திரத்தாலே அத்தேவன் நினைத்தவுடன் பெருமையுடைய அந்தத் தேவனும் அவர்கள் முன்வந்து தோன்றினன் என்க. (4)
------------
246. தேவன் கூற்று
பலவுப சாரஞ் சொல்லப் பார்மன்னற் கிதனைச் செப்பும்
நலிவுசெய் சிறையிற் பட்ட நாளிலுஞ் சவரர் சுற்றி
வலியவந் தலைத்த போதும் வாசவ தத்தை நின்னைச்
சிலதினம் பிரிந்த போதுஞ் செற்றோரைச் செகுத்த போதும்.
(இ - ள்,) தேவன் வரவு கண்ட உதயணகுமரன் அத்தேவனுக்குப் பல்வேறு முகமன் மொழிகளைக் கூறி மகிழ்வித்த பின்னர் அம்மாநில மன்னனை நோக்கி அத்தேவன் இம்மொழிகளைக் கூறுவான்-- “வேந்தே! நீ பகைவரால் நின்னைத் துன்பப்படுத்தப்பட்ட உஞ்சை நகரத்துச் சிறைக் கோட்டத்தில் இருந்த காலத்திலாதல் அல்லது, காட்டினூடே வேடர்கள் வலிய வந்து வளைத்துக்கொண்டு வருந்திய காலத்திலாதல், அல்லது சிலநாள் நின்னை வாசவதத்தை பிரிந்திருந்த நின் இன்னாக் காலத்திலாதல், அல்லது நீ நின் பகைவரை எதிர்த்துப் போர்புரிந்த காலத்திலாதல்,” என்க. (மேலே தொடரும்)
-----------
247. இதுவுமது
மித்திர னென்றே யென்னை வேண்டிமுன் னினைத்தா யில்லை
பொற்றிரு மார்ப விந்நாட் புதுமையி னினைத்த தென்னை
உத்தரஞ் சொல்க வென்ன வொளியுமி ழமரன் கேட்கச்
சித்திரப் பாவை வானிற் செலவினை வேட்டா ளென்றான்.
(இ - ள்.) “யான் நினக்குற்ற நண்பன் என்று கருதி என் வருகையை விரும்பி முன்பு என்னை நினைத்திலையல்லையே? திருமகள் வீற்றிருக்கும் அழகிய மார்பினையுடைய அரசே! இற்றைநாள் என்னை நினைத்த இந்தப் புதுமைக்குக் காரணம் என்னையோ? இதற்கு விடை கூறுக” என்று ஒளிவீசும் மேனியையுடைய அத்தேவன் வினவ, அதுகேட்ட உதயணகுமரன் நண்பனே! இற்றைநாள் ஓவியத்தெழுதிய பாவைபோல்வாளாகிய வாசவதத்தை வயாவினாலே வானிலே செல்லும் செலவினை விரும்பினாள் (இதுவே காரணம்)’ என்று கூறினன் என்க. (6)
-------------
248. இதுவுமது : உதயணன் கூற்று
எங்களிற் கரும மாக்கு மியல்புள் தீர்த்துக் கொண்டோம்
திங்களின் முகத்திற் பாவை செலவுநின் னாலே யன்றி
எங்களி லாகாதென்றிப் பொழுதுனை நினைந்தே னென்ன
நன்கினி யமரன் கேட்டு நரபதி கேளி தென்றான்.
(இ - ள்.) பின்னரும் அப்பெருந்தகை கூறுவான் “அன்பனே! .யாங்களே செய்து முடிக்கும் இயல்புடையனவாகிய செயல்களை யாங்களே செய்து முடித்துக் கொண்டோம்; திங்கள் போன்ற திருமுகமுடைய என் தேவி வயா விருப்பத்தால் வானிலேறப் பறக்க நினைக்கின்ற இக்காரியம் நின்னுதவியாலாவதன்றி யாங்களே செய்து கோடற்குரிய தொன்றல்லாமையாலே இப்பொழுது உன்னை நினைத்தேன் காண்!” என்றுகூற இதனை அத்தேவன் நன்கு கேட்டு, வேந்தே! இனி யான் கூறுவதனைக் கேட்பாயாக!‘ என்று கூறினன் என்க. (7)
--------
249. தேவன் மீண்டும் மந்திரம் செவியறிவுறுத்தல்
வெள்ளிய மலையிற் றேவன் விரைக் குழலாள் வயிற்றின்
உள்ளவின் பத்தி னாலே வுலவுவான் சிந்தை யானாள்
கள்ளவிழ் மாலை வேந்தன் கதிர்மணித் தேரி னேறிப்
புள்ளெனப் பறக்க மந்த்ர மீதெனக் கொடுத்துப் போந்தான்.
(இ - ள்.) பின்னர் அத்தேவன் “அரசே! மணங்கமழுங் கூந்தலையுடைய வாசவதத்தையின் மணிவயிற்றின்கண், பண்டு வெள்ளியம் பொருப்பில் வதிந்த தேவனொருவன் கருவாகி வளர்கின்ற காரணத்தினாலே அம்மகவிற் கியன்ற இன்பமே தனது இன்பமாக வருதலாலே வானத்திலே பறந்துலாவுமொரு விருப்பமுடையளாயினள், என்று கூறித், தேன்துளிக்கும் மலர்மாலையணிந்த அவ்வுதயண மன்னன் அத்தேவியோடு ஒளிமணி பதித்த தேரின்கண் ஏறிப் பறவைபோல வானத்திலே பறத்தற்குரிய மந்திரம் இஃதாம் என்று அறிவித்து அம்மந்திரத்தை அவ்வுதயணனுக்கு அறிவித்து மறைந்து போயினன் என்க. (8)
----------
250. உதயணன் முதலியோர் தேரிலேறி வானத்தே பறந்து போதல்
வெற்றித்தே ரேறி வென்வேல் வேந்தனுந் தேவி தானும்
மற்றுநற் றோழன் மாரும் வரிசையி னேறி வானம்
உற்றந்த வழிய தேகி யுத்தர திக்கி னின்ற
பெற்றிநல் லிமயங் கண்டு பேர்ந்துகீழ்த் திசையுஞ் சென்றான்.
(இ - ள்.) அத்தேவன் அறிவுறுத்த மந்திரத்தின் உதவியாலே வெற்றிவேலையுடைய அவ்வுதயண வேந்தன்றானும் பெருந்தேவியாகிய வாசவதத்தையும் இன்னும் நண்பராகிய யூகி முதலியவரும் முறைப்படி வெற்றிதரும் ஒரு தேரிலேறி வானவெளியிலே பறந்து அவ்வானின் வழிச் சென்று வடதிசையிலே நிற்கின்ற இமயமலையின் இனிய காட்சியைக் கண்டு மகிழ்ந்து பின்னர் அவ்விடத்தினின்றும் கீழ்த்திசை நோக்கிச் சென்றான் என்க. (9)
-----------
251. இதுவுமது
உதயநற் கிரி.யும் கண்டே யுற்றுடன் றெற்திற் சென்று
பொதியமா மலையும் காணாப் பொருவில்சீர்க் குடபா னின்ற
மதிகதி ரவியு மத்த வான்கிரி கண்டு மீண்டும்
இதமுள தேசம் பார்த்தே யினியதம் புரி.ய டைந்தார்.
(இ - ள்.) ஆங்கு ஞாயிறு தோன்றுமிடமாகிய மலையையும் அடைந்து அதன் அழகையும் கண்டு பின்னர் அவ்விடத்தினின்றும் தென்றிசையிற்போய் ஆண்டுள்ள பொதியமலைக் காட்சியையுங் கண்டு களித்து ஒப்பற்ற சிறப்புடைய மேற்றிசையிலே நிற்கின்ற திங்கள் மண்டிலமும் ஞாயிற்று மண்டிலமும் சென்று மறைதற்கிடமான உயரிய மறைமலையின் எழிலையுங் கண்டு மகிழ்ந்து மீண்டும் இன்பமுடை.ய வேறுபலநாட்டின் அழகுகளையும் கண்டு தமக்கினிய கோசம்பி நகரத்தை எய்தினர் என்க. (10)
-----------
252. நரவாகனன் பிறப்பு
மாதுதன் வயாநோய் தீர்ந்து வளநகர் புக்க பின்பு
தீதின்றிக் கோள்க ளெல்லாஞ் சிறந்துநல் வழியை நோக்கப்
போதினற் குமரன் றேன்றப் புரவல னினிய னாகிச்
சோதிப்பொன் னறைதி றந்து தூவினன் சனங்கட் கெல்லாம்.
(இ - ள்.) இவ்வாறு வாசவதத்தை வானத்தே பறந்து மகிழ்ந்து தனது மயற்கை நோய் தீரப்பெற்றுத் தீதின்றிக் கோள்களெல்லாஞ் சிறந்து நன்னெறி நோக்கி நிற்குமொரு நல்ல முழுத்தத்திலே அக்கோப்பெருந்தேவி வயிற்றில் அழகிய ஆண்மகவு பிறந்ததாக அச்செய்தியறிந்த வேந்தன் பெரிதும் மகிழ்ந்கவனாகி ஒளியுடைய பொன்னிறைந்த கருவூலத்தைத் திறந்து மாந்தர்க்கெல்லாம் பொன்னை வாரி வழங்கினன் என்க. (11)
------
253. உதயணன் முதலியோர் மக்கட்குப் பெயரிடுதல்
நரவாக னன்னே யென்று நரபதி நாமஞ் செய்தான்
விரிவாகு மதிய மைச்சர் மிக்கநாற் குமரர் பேர்தாம்
பரிவார்கோ முகனும் பாங்காந் தரிசக னாக தத்தன்
குரவம்பூ மேனி யான குலமறி பூதி யாமே.
(இ - ள்.) உதயண வேந்தன் தன் மகவிற்கு நரவாகனன் என்று பெயரிட்டனன். இனி விரிந்த அறிவினையுடைய யூகி முதலிய நான்கு அமைச்சர்கட்கும் அப்பொழுது பிறந்த அழகு மிக்க நான்கு மகவுகளுக்கு நிரலே அவ்வமைச்சர் இட்ட பெயர்கள் அன்பு பொருந்திய ‘கோமுகனும்’ அவனுக்கு நட்பான ‘தரிசகனும்’ ‘நாகதத்தனும்’ குராமலர் போன்ற திருமேனியையுடைய குலத்தின் சிறப்பறிந்த பூதிகனும் என்பவனாம் என்க. (12)
-----------
254. நரவாகனன் கலைபயிலல்
நால்வருந் துணைவ ராகி நறுநெய்பா லுடன ருந்தி
பான்மரத் தொட்டி லிட்டுப் பரவியுந் தவழ்ந்து மூன்றாம்
மால்பிறை போல்வ ளர்ந்து வரிசையி னிளமை நீங்கிப்
பான்மொழி வாணி தன்னைப் பாங்கினிற் சேர்த்தா ரன்றே.
(இ - ள்.) யூகி முதலிய அமைச்சர்மக்களாகிய கோமுகன் முதலிய நால்வரும் நரவாகனனுக்குத் தோழராக அவ்வைந்து மக்களும் நறிய நெய்யும் பாலுமாகிய சிறப்புணா வுட்கொண்டும், செவிலிமார்பாலுடைய மரத்தாலியன்ற தொட்டிலிலிட்டுப் புகழ்ந்து வாழ்த்தித் தாலாட்டவும், தவழ்ந்தும் மூன்றாநாட்டோன்றும் பெரிய பிறைத் திங்கள் வளருமாறுபோல வளர்ந்து முறைமையாக அக்குழவிப்பருவம் நீங்காநிற்ப, அம்மக்கட்குக் குரவன்மார் பால்போலும் ஆக்கமுடைய மொழிவடிவமான கலைமகளை முறைப்படி மணம் புரிவித்தனர் என்க. கல்விபயிற்றினர் என்றவாறு. (13)
--------------
255. நரவாகனன் உலாப்போதல்
ஞானநற் குமரி தன்னை நலமுழு துண்டு மாரன்
மானவிற் கணைக்கி லக்கா மன்மத னென்னக் கண்டோர்
வானவக் குமரர் போல வாரண மேறித் தோழர்
சேனைமுன் பின்னுஞ் செல்லச் சீர்நகர் வீதி சென்றான்.
(இ - ள்.) நாமகளின் இன்பத்தை யெல்லாம் நன்கு நுகர்ந்து (கலையுணர்ந்து) நரவாகனன் காளைப்பருவமெய்திய பின்னர்த் தன்னைக் கண்ட மகளிர் காம வேளின் மலர்க்கணைகளுக் கிலக்கமாகி இவன்றான் காமவேள் என்பவனோ? என்று மருண்டு மயங்கும்படி ஒருநாள் தோழரும் தானும் தேவமைந்தர்கள் போலக் களிற்றியானைகளிலே ஏறி முன்னும் பின்னும் படைகள் செல்லாநிற்ப, புகழுடைய அக்கோசம்பி நகரவீதியிலே திரு உலாப் போயினன் என்க. (14)
-----------
256. நரவாகனன் மதனமஞ்சிகையைக் கண்டு காமுறுதல்
ஒளிர்குழற் கலிங்க சேனை யுதர்த்தி னுற்ப வித்த
வளிநறும் பூஞ்சு கந்த மதனமஞ் சிகைதன் மேனி
குளிரிளந் தென்றல் வீசக் கோலமுற் றத்துப் பந்தைக்
களிகயற் கண்ணி யாடக் காவல குமரன் கண்டான்.
(இ - ள்.) உலாப்போங் காலத்தே அக்கோமகன் ஒளிருகின்ற கூந்தலையுடைய ‘கலிங்கசேனை’ என்னும் ஒரு கணிகை வயிற்றிற் பிறந்தவளும், காற்றிற் கலந்து யாண்டும் பரவும்நறிய மலர்மணத்தையுடையவளும் ‘மதனமஞ்சிகை’ என்னும் பெயரையுடையவளுமாகிய களிக்கின்ற கயல்மீன் போன்ற கண்ணையுடையாள் ஒரு பெதும்பையானவள் தனது திருமேனியில் குளிர்ந்த இளந்தென்றல் தவழுமாறு அழகிய மேனிலை மாடத்து நிலா முற்றத்து நின்று பந்தாடுதலைக் கண்ணுற்றான் என்க. (15)
----
257. நரவாகனன் மதனமஞ்சிகையை மணத்தல்
மட்டவிழ் கோதை தன்னை மன்னவ குமரன் கண்டு
இட்டநன் மார னம்பா லிருவரு மயக்க முற்று
மட்டவிழ் மலர்ச்சோ லைக்குள் மன்னவ குமரன் மின்னின்
இட்டிடை மாதைத் தந்தே யின்புறப் புணர்ந்தா னன்றே.
(இ - ள்.) தேன்சொரிகின்ற மலர்மாலை யணிந்த அம்மதன மஞ்சிகையை நரவாகனன் கண்டவளவிலே அழகுடைய காமவேள் தன்மேல் ஏவிவிட்ட மலரம்புகளாலே வேறொன்றானும் தீர்தலில்லாத காமநோயால் மயங்கி மின்னல்போன்ற சிற்றிடையாளாகிய அம்மடந்தையை ஒரு தேன்றுளிக்கும் பூம்பொழிலிலே வருவித்துப் பேரின்பமெய்தும்படி அவளோடு கூடினன் என்க. (16)
--------------
258. மானசவேகன் மதனமஞ்சிகையைக் கொண்டுபோதல்
இருவரும் போகந் துய்த்தே யிளைத்துயில் கொள்ளும் போழ்து
மருவிய விச்சை மன்னன் மானச வேக னென்பான்
திருநிற மாதைக் கண்டு திறத்தினிற் கொண்டு சென்று
பெருவரை வெள்ளி மீதிற் பீடுறு புரம்புக் கானே.
(இ - ள்.) நரவாகனனும் மதனமஞ்சிகையுமாகிய அவ்விருவரும் இன்ப நுகர்ந்து நுகர்ச்சியிளைப்பாலே இன்றுயில் கொண்டிருக்கும்பொழுது அங்கு வந்த விச்சாதர மன்னனாகிய ‘மானசவேகன்’ என்பவன், திருமகள் போன்ற செய்யமேனிச் செல்வியாகிய அம்மதனமஞ்சிகையைக் கண்டு காமுற்று தன்னாற்றலாலே அவளை எடுத்துக்கொண்டு வானத்தே சென்று, வெள்ளிப் பெருமலையிலிருக்கும் பெருமையுடைய தன்னகரத்தை யெய்தினன் என்க. (17)
-------
259. மானசவேகன் மதனமஞ்சிகையை வயப்படுத்த முயலுதல்
தன்னுடை நோயு ரைக்கத் தையலு மோனங் கொண்டே
இன்னுயிர்க் கணவன் றன்னை இனிமையி னினைத்தி ருப்ப
மின்னிடைத் தங்கை யான வேகநல் வதியை யேவி
மன்னிய நிறை யழிக்க வாஞ்சையின் விடுத்தா னன்றே.
(இ - ள்.) மதனமஞ்சிகையை எடுத்துப்போன வித்தியாதர மன்னன் அவளைத் தான்பாடும் காமத்துயரங்களைக் கூறித் தனக்குடம்படும்படி வேண்டாநிற்ப, கற்புமிக்க அக்காரிகைதானும் தன்னின்னுயிர்க் கணவனாகிய நரவாகனனையே நெஞ்சத்திருத்தியவளாய் அம்மானசவேகனுக்கு மறுமொழி யாதுங் கொடாளாய்வாளாவிருப்ப, அவளைத் தன்வயப்படுத்தும்பொருட்டுத் தன்தங்கையாகிய மின்னல்போன்ற இடையினையுடைய வேகவதி என்பவளை அம்மதனமஞ்சிகையின்பால் நிலைபெற்ற கற்பினையழிக்க ஏவினன் என்க. (18)
-------------
260. வேகவதி நரவாகனன் சிறப்பினைக்கேட்டு அவனைக் காமுறல்
அன்புற வவளுஞ் சொல்ல வசலித மனத்த ளாகி
இன்புறுந் தன்னோர் நாத னிந்திரன் போலு மென்னப்
பண்புணர் மொழியைக் கேட்டுப் பரவச மனத்த ளாகி
நண்பொடு விசும்பின் வந்து நரவாக னனைக்கண் டாளே.
(இ - ள்.) வேகவதி மதனமஞ்சிகையின்பாற்சென்று அவளை மானசவேகன்பால் அன்புற்று இணங்கும்படி பல்லாற்றானும் கூறவும், அவள் ஒரு சிறிதும் அசையாத மனத்தையுடையளாகி அவ்வேகவதிக்குத் தான் இன்புறுதற்குக் காரணமான ஒப்பற்ற தன் கணவன் இந்திரனையே ஒப்பானவன் என்று கூற, வேகவதி மதனமஞ்சிகை கூறிய அவள் கணவன் பண்புகளை அறிதற்குக் காரணமான மொழிகளைக் கேட்டவளவிலே மனநெகிழ்ந்து அவன்பாற் கேண்மையுடையளாகி வான் வழியாக வந்து அந்த நரவாகனனைக் கண்கூடாகவும் கண்டனள் என்க. (19)
----------
261. வேகவதி மதனமஞ்சிகை வடிவத்தோடு நரவாகனனைக் காண்டல்
கண்டபின் காமங் கூர்ந்து கார்விசும் பதனி னிற்பப்
புண்டவழ் வேலிற் காளை பூங்குழ லாட்கி ரங்கி
வண்டலர் சோலை மாடம் வனமெங்குந் தேடு கின்றான்
தொண்டைவா யுடைய வேக வதியுஞ்சூ தினிலே வந்தாள்.
(இ - ள்.) வேகவதி நரவாகனனைக் கண்ட பின்னர் அவன்பாற் பெரிதும் காமமுடையவளாய் அவனை நோக்கிய வண்ணம் முகில் உலாவும் வானத்திடையே நிற்குங்காலத்தே பகைவர் புண்களிலே தவழுகின்ற வெற்றிவேலையுடைய அந்த நரவாகனனோ காணாமற்போன மலர் சூடிய கூந்தலையுடைய மதனமஞ்சிகை பொருட்டாக மிகவும் வருந்தி வண்டுகள் முரல மலருகின்ற அப்பூம்பொழிலிடத்தும், மாடங்களிடத்தும் காட்டின்கண்ணும் சென்று சென்று கூவிக் கூவி அவளைத் தேடலானான். அதுகண்ட கொவ்வைக்கனி போன்ற வாயினையுடைய அந்த வேகவதி அம் மதனமஞ்சிகை வடிவந்தாங்கிச் சூதாக வந்தனள் என்க. (20)
--------------
262. மதனமஞ்சிகையென்று கருதி மன்னன் அவளைக் கூடுதல்br>
கலிவிருத்தம்
மதன மஞ்சிகை மான்விழி ரூபம்போல்
வதன நன்மதி வஞ்சியங் கொம்பனாள்
இதநல் வேடத்தை யின்பிற் றரித்துடன்
புதரின் மண்டபம் புக்கங் கிருந்தனள்.
(இ - ள்.) முழுத்திங்கள் போன்ற முகத்தையுடைய வஞ்சிக் கொடிபோன்ற அவ்வேகவதி அம்மன்னன் தேடுகின்ற மான் போன்ற விழிபடைத்த அந்த மதனமஞ்சிகையின் வடிவம்போன்றதும் அம்மன்னனுக்குப் பெரிதும் இன்பந்தருவதுமாகிய வடிவத்தை இன்புற மேற்கொண்டு பூம்புதரின் ஊடே யமைந்ததொரு மாதவிக்கொடி வீட்டில் புகுந்து அங்கு அவன் வரவினை எதிர் பார்த்திருந்தாள் என்க. (21)
--------
263. இதுவுமது
தாது திர்ந்து தரணியிற் பம்பிட
மாத விப்பொதும் பின்மயிற் றோகைபோல்
பேதை யைக்கண்டு பீடுடைக் காளையும்
தீதறுந் திறந் தேர்ந்து புணர்ந்தனன்.
(இ - ள்.) பெருமையுடைய அந்நரவாகனனும் தேனது துன்பந்தீரும்பொருட்டு மதனமஞ்சிகையைத் தேடிவருபவன் தோகை மாமயில்போல்வாளாகிய அவ்வேகவதியினை மதனமஞ்சிகை யென்றே கருதிக்கண்டவனாய் அவளைப் பூந்தாதுதிர்ந்து பரவுகின்ற அம்மாதவிப் பூம்பந்தரின்கீழே அவளைக் கூடியின்புற்றான் என்க. (22)
----------
264. மன்னவன் வேகவதியை ஐயுற்று வினவுதல்
ஆங்கொர் நாளி லரிவை துயிலிடைத்
தேங்கொள் கண்ணியைச் செல்வனுங் கண்டுடன்
பூங்கு ழா அல் நீ புதியைமற் றியாரெனப்
பாங்கில் வந்து பலவுரை செய்தனள்.
(இ - ள்.) இவ்வாறு நிகழுங்காலத்தே ஒருநாள் வேகவதியின் துயிலின்கண் தேன்பொதுளிய மலர்மாலையணிந்த அவளுடைய உண்மை வடிவத்தை நரவாகணன் கண்டு திகைத்து ‘மலர் சூடிய கூந்தலையுடைய மடந்தாய்! நீ புதியையாக விருக்கின்றனை! நீ யார்?’ என்று வினவ அவள் அரசன்பக்கத்தே மதனமஞ்சிகை வடிவத்தில் வந்து தன் வரலாற்றினைப் பல மொழிகளாலே கூறினாள் என்க. (23)
-------------
265. நரவாகனன் வேகவதியை விரும்புதல்
கேட்ட வள்ளலுங் கேடினன் மாதரை
வேட்ட வேடம் விரும்பிநீ காட்டெனக்
காட்டவே கண்டு காளை கலந்தனன்
ஊட்ட வேகணை யுன்னத மாரனே.
(இ - ள்.) வேகவதியின் வரலாறு கேட்ட அந்நரவாகனனும் குற்றமற்ற அழகுடைய அந்த வேகவதியினை நோக்கி ‘யான் விரும்புகின்ற நின் பழைய வடிவத்தை மீண்டுங் காட்டுக’ என்று வேண்டவே அவளும் தன் உண்மை வடிவத்தைக் காட்ட அது கண்ட அம்மன்னனும் அவ்வுருவத்தையே பெரிதும் விரும்பி உயரிய காமவேள் கணைகள் மிக்கு ஏவுதலாலே அவ்வேகவதியைக் கூடி மகிழ்ந்தனன் என்க. (வேடம் - ஈண்டுருவம்.) (24)
------
266. மானசவேகன் நரவாகனனையும் வேகவதியையும் பற்றிப்போதல்
மன்னு விஞ்சையின் மானச வேகனும்
துன்னு தங்கையாந் தோகையைக் காண்கிலன்
உன்னி வந்தவள் போன தறிந்துரை
பன்னி வந்திரு வோரையும் பற்றினன்.
(இ - ள்.) நிலைபெற்ற வித்தைகளையுடைய அந்த மானசவேசன் என்னும் வித்தியாதரன் தன்னேவலிற் பொருந்திய தங்கையாகிய வேகவதியை யாண்டும் காணப் பெறானாய், அவளை நினைத்துத் தன் தெய்வ அறிவாலே அவள் நரவாகனனை நயந்து போன செய்தியை அறிந்து சினவுரை பல பேசி நிலவுலகிற்கு வந்து நரவாகனனும் வேகவதியும் துயிலும்பொழுது இருவரையும் மந்திரத்தால் மயக்கிக் கைப்பற்றிக்கொண்டவனாய் என்க. (25)
-----------
267. மாவசவேகன் நரவாகனனை நிலத்திற் றள்ளிவீடுதல்
வான கஞ்சென்று வள்ளலை விட்டபின்
ஈனகஞ் செல வேலக் குழலியும்
தான கம்விஞ்சை தானுடன் விட்டனள்
கான கத்திடைக் காளையும் வீழ்ந்தான்.
(இ - ள்.) இருவரையும் கைப்பற்றிக்கொண்டு ஒரு வானவூர்தியிற் செல்கின்ற மானசவேகன் இடைவெளியிலே நரவாகனனைத் தள்ளிவிட்டானாக மயங்கியிருக்கின்ற அந்நரவாகனன் நிலநோக்கி வீழுகின்றபொழுது மணங்கமழும் கூந்தலையுடைய அவ்வேகவதிதானும் அவனைத் தாங்கி நிலத்திலே கிடத்தும்படி தன்னுள்ளத்தின் கண்ணதாகிய ஒரு மந்திரத்தை ஓதிவிடுத்தனள், நரவாகனன்றானும் மெல்ல மெல்ல நிலநோக்கிவந்து ஒரு காட்டின் கண் வீழ்ந்தான் என்க. (26)
------------
268. நரவாகனனைச் சதானிக முனிவன் காண்டல்
வெதிரி லையென வீழ்ந்தவன் றன்னிடைக்
கதிர்வேல் வத்தவன் காதனற் றந்தையாம்
எதிர்வ ரும்பிறப் பெறிகின்ற மாமுனி
கதிரி லங்குவேற் காளையைக் கண்டனன்.
(இ - ள்.) வேகவதி ஓதிய மந்திரத் தெய்வம் தாங்கிவிடுதலாலே வானின்று நிலத்தில் மூங்கிலிலை விழுமாறுபோல மெத்தென வீழ்ந்தவனாகிய ஒளி திகழும் வேற்படையினையுடைய நரவாகனனை அந்தக் காட்டிலேயிருந்து இனி வருகின்ற பிறப்பினை வாராமல் அறுக்கும் சிறந்த முனிவனும் ஒளிவேலேந்தும் உதயணவேந்தன் அன்புடைய நல்ல தந்தையுமாகிய சதானிகன் கண்ணுற்றான் என்க.(27)
------------
269. இதுவுமது
போதி தன்வலிப் போத வுணர்ந்துதன்
காத லிற்சென்று காளைதன் னாமமும்
ஏத் மில்தந்தை யெய்திய நாமமும்
போதச் செப்பலும் போந்து பணிந்தனன்.
(இ - ள்.) நரவாகனன் காட்டினிடை வீழ்ந்தமையை அச்சதானிக முனிவன் தனது அவதி ஞானத்தால் நன்குணர்ந்து தன் அன்புடைமை காரணமாகத் தானே வலிய அக்கோமகன்பாற் சென்று அவனுடைய பெயரையும் குற்றமற்ற அவன் றந்தைக் கெய்திய பெயரையும் நன்கு கூற, அவற்றைக் கேட்ட நரவாகனன் வியந்து எழுந்துபோய் அவன் திருவடிகளிலே வீழ்ந்து வணங்கினன் என்க. (28)
--------------
270. நரவாகனன் சதானிக முனிவனை வினவுதல்
தந்தை யென்முதல் தாமறிந் திங்குரை
அந்த மில்குணத் தையநீ ராரென
முந்து நன்முறை யாமுனி தாஞ்சொலச்
சிந்தை கூர்ந்து சிறந்தொன்று கேட்டனன்.
(இ - ள்.) பணிந்தெழுந்த அம்மன்னன் முனிவனை நோக்கி “ஐய! என் தந்தை பெயரையும் என் பெயரையும் யான் கூறு முன்பே அறிந்து இவ்விடத்தே கூறுகின்ற தாங்கள் யார் என அறிய விரும்புகின்றேன்” என்று வேண்ட, அதுகேட்ட முதன்மையுடைய நல்ல துறவுநெறி நிற்கின்ற அம்முனிவர் தாமும் தம்மை அறிவிப்பு. அதுகேட்ட நரவாகனன் மனமிகவும் மகிழ்ந்து அம்முனிவனை ஒன்று வினவினன் என்க. (29)
-------------
271. இதுவுமது
விஞ்சை யம்பதி வெற்றிகொண் டாளுமென்
றஞ்ச மென்றநற் றக்கோ ருரையுண்டு
எஞ்ச லின்னிலை மையது வென்றென
விஞ்சு மாதவன் மெய்ம்மையிற் கூறுவான்.
(இ - ள்.) பெரியீர்! “என்னைச் சுட்டி இவன் எளிதாகவே விச்சாதர நாட்டினை வென்றடிப்படுத்துவான்” என்று கூறிய சான்றோர் மொழியுமொன்றுளது, குறைவற்ற எனது அச்சிறப்பு நிலைமை எனக்கெய்துவது எக்காலத்திலோ? கூறியருளுக! என்று வேண்ட, மிக்க பெரிய தவத்தையுடைய அச்சதானிகன் கூறலானான் என்க. (30)
------------
272. முனிவன் கூறுதல்
வெள்ளி யம்மலை மேனின்ற ராச்சியம்
உள்ள தெல்லா மொருங்கே யடிப்படுத்
தெள்லில் செல்வமு மீண்டுனக் காமென்றான்
கள்ளவிழ் கண்ணிக் காளையுங் கேட்டபின்.
(இ - ள்.) “இளைஞனே! மேலோர் மொழி பொய்யாதுகாண்! அந்த வெள்ளிப் பெருமலையின் மேலமைந்துள்ள விச்சாதர நாட்டினை யெல்லாம் நீ அண்மையிலேயே ஒருசேர வென்று நின்னடிப் படுத்துவை காண் அதனால் இன்னே இளிவரவில்லா அப்பெருஞ்செல்வமெல்லாம் உனக்கு எய்துங்காண்!” என்று கூறினன். அவ்வினிய மொழியைத் தேன்றுளும்பும் மலர்மாலையினையுடைய அந்த நரவாகனன் கேட்டபின்னர்; என்க. (31)
-----------
273. நரவாகனன் இருமுதுகுரவர்க்கும் முனிவன் கூற்றை அறிவித்தல்
மாத வன்விட வள்ள னகர்புக்குத்
தாதை தாய்முதற் றான்கண் டிருந்தபின்
தீது தீர்ந்ததுஞ் செல்வி பிரிந்ததும்
ஆத ரித்தவர்க் கன்னோன் விளம்பினன்.
(இ - ள்.) பெருந்துறவியாகிய சதானிகன் விடைகொடுத்த பின்னர் வள்ளலாகிய அந்நரவாகனன் அக்காட்டினின்றும் போய்த் தன் தந்தை தாய் முதலியோரைக் கண்டு வணங்கி இனிதே யிருந்த வழி, அவர்கட்கெல்லாம் மதனமஞ்சிகை பிரிந்தமையையும், தனக்கு மானசவேகனாலே தீமை வந்து உடனே தீர்ந்துபோனமையையும் இருமுதுகுரவர்க்கும் அந்நரவாகனன் அறிவித்தனன் என்க. (32)
------------
274. இதுவுமது
மேனி கழ்வென மெய்த்தவர் கூறின
தான வின்றுதன் றாய்துயர் தீர்த்தனன்
வானு ழைச்செல்லு மன்னிய தேர்மிசை
ஈன மில்கும ரன்னினி தேறினான்.
(இ - ள்.) மதனமஞ்சிகை பிரிவு முதலியவற்றைக் கேட்ட வாசவதத்தை பெரிதும் வருந்தினாளாக; அதுகண்ட நரவாகனன் உண்மையான தவத்தினையுடைய சதானிக முனிவர் எதிர்காலத்தே தனக்கு நிகழ்வன வினவ யென்று கூறியவற்றையெல்லாம் அத்தாய்க்குக் கூறி அவள் துன்பத்தைப்போக்கினன். பின்னர் வானத்திலே இயங்குமியல்புடையதாகத் தம்மிடத்தேயுள்ள தேர்மேலே குற்றமற்ற அந்நரவாகனன் இனிதாக ஏறினன் என்க. (33)
-----------
275. நரவாகனன் வித்தியாதரருலகஞ் செல்லுதல்
அன்பால் வான்வழி யாய்மணித் தேர்செலத்
தென்பாற் சேடியிற் சீதர லோகத்தில்
இன்பாற் பொய்கை யெழிற்கரை வைகென
மின்பூண் மார்பனும் வேண்டித் திளைத்தனன்.
(இ - ள்.) அம்மணித்தேர்தானும் வானின் வழியாகப் பறந்து செல்லும்பொழுது மின்னுமணிகலன் அணிந்த மார்பையுடைய அந்த நரவாகனன் அன்புடைமையாலே வழிபாடு செய்து அத்தேரினை நீ வெள்ளிப் பெருமலையின் தென்பாலமைந்த வித்தியாதர நாட்டின்கண் சீதரலோகம் என்னும் இடத்தின்கண்ணதாகிய இனிய பகுதிகளையுடைய பொய்கையின் கரையிடத்தே இறங்கித் தங்குவாயாக! என்று வேண்டினன் என்க. (34)
--------------
276. நரவாகனனை அப்பொய்கைக் கரையில் ஒரு வித்தியாதரன் காண்டல்
நெடுங்க ரைமிசை நீர்மையி னின்றனன்
நடுங்க லின்றிவாய் நானநீர் பூசியே
கடிக மழ்கண்ணிக் காளை யிருந்தனன்
அடிகண் டோர்மக னன்பிற் றொழுதனன்.
(இ - ள்.) மணங்கமழும் மலர்மாலையினையுடைய நரவாகனன் கருதியபடியே அத்தெய்வத் தேர் அப்பொய்கைக்கரையிலிறங்கிய பொழுது அவன் துன்பமின்றி அப்பொய்கையின்கண் கண் வாய் முதலிய உறுப்புக்களை நீராற் றூய்மைசெய்து இளைப்பாறி இருந்தானாக; அப்பொழுது ஒரு வித்தியாதரன் அங்குவந்து அன்போடு அவனடிகளிலே வீழ்ந்து வணங்கினன் என்க. (35)
------------
277. நரவாகனன் வித்தியாதரனை வினவுதலும், அவன் விடையும்
அண்ணல் கண்டுநீ யாருரை யென்றலும்
தண்ணென் வாய்மொழித் தானவன் சொல்லுவான்
அண்ணல் கேட்க வரிய வரைமிசைக்
கண்ணோ ளிர்கொடிக் கந்தரு வப்புரம்.
(இ - ள்.) பெருமைமிக்க நரவாகனன் அந்த வித்தியாதரனை நோக்கி “ஐய! நீ யார்? நின் வரலாற்றை எனக்குக் கூறுக!” என்று பணித்தலும், குளிர்ந்த மெய்ம்மொழியையுடைய அந்த வித்தியாதரன் வரலாறு கூறுபவன்:--
“மாண்புடையோய்! கேட்டருளுக! பிறர் எய்துதற்கரிய இந்த வெள்ளிமலைமிசை கண்ணுக்கு அழகாக விளங்குகின்ற கொடிகளையுடைய கந்தருவபுரம் என்னும் நகரமொன்றுளது” என்றான் என்க. (36)
------------
278. இதுவுமது
காவ லன்னீல வேகற்குக் காரிகை
நாவி ளங்குஞ்சீர் நாகதத் தையெனும்
பூவி ளங்கொடி புத்திரி நாகமும்
மேவி ளங்கு மநங்கவி லாசனை.
(இ - ள்.) “அந்நகரத்தரசனாகிய நீலவேகன் என்பான் மனைக் கிழத்தியாகிய புலவர் நாவால் விளக்கமுறும் அழகும் புகழுமுடையாள் நாகதத்தை என்னும் பெயரினள் ஆவாள், இளைய மலர்க்கொடி போன்ற அவள் மகள் பெயர் தானும் மேன்மையுற்று விளங்குகின்ற அநங்க விலாசனை என்பதாம்.” என்றான் என்க. (37)
-------------
279. இதுவுமது
சுரும்பார் மாலை யமளித் துயிலிடைக்
கரும்பார் நன்மொழி காதற் கனவிடை
விரும்பு சிங்கமீன் வீரியச் சாபந்தான்
பரம்பு மண்ணின்று பாங்கி னெழுந்ததே.
(இ - ள்.) “வண்டுகள் ஆரவாரிக்கும் மலர்மாலை தூக்கிய படுக்கையின் கண்ணே கரும்பு போன்ற இனிய மொழியையுடைய அவ்வநங்க விலாசனை துயிலுங்காலத்தே காதற் பண்புடைய தொரு கனவின் கண்ணே கண்டோர் விரும்புதற்குக் காரணமான மறமிக்க ஓர் அரிமான் குட்டி பரந்த மண்ணுலகினின்றும் தன் குகைப் பக்கத்தை விட்டெழுந்தது” என்றான் என்க. (38)
----------------
280. இதுவுமது
வரைமி சைவந்து மன்னிய தன்முலை
அரிய முத்தணி யாரத்தைக் கவ்வியே
விரைசெய் மாலையை வீறுடன் சூட்டவும்
அரிவை கண்டுத னனையர்க்கு ரைத்தனள்.
(இ - ள்.) “எழுந்த அச்சிங்கக் குருளை வெள்ளிமலை மிசையேறிவந்து தன் முலைமேற்பொருந்திய பெறற்கரிய முத்துமாலையைக் கௌவிப் பின்னர் மணங் கமழ்கின்ற மலர் மாலையைத் தனக்குச் சூட்டவும் அவ்வரிவை கண்டு அக்கனவினைத் தன் தாய்மார்க்குக் கூறினள்,” என்றான் என்க. (39)
-------------
281. இதுவுமது
வெல்ல ரும்வேலின் வேந்தனுங் கேட்டுடன்
சொல்ல ருந்தவச் சுமித்திர நன்முனி
புல்ல ரும்பதம் பொற்பி னிறைஞ்சினன்
நல்ல ருந்தவ னற்கனாக் கேட்டனன்.
(இ - ள்.) “பகைவரால் வெல்லுதற் கரிய வேற்படையினையுடைய அந்த நீலவேகன் என்னும் அரசன்றானும் அத்தாயர் வாயிலாய் அநங்கவிலாசனையின் கனா நிகழ்ச்சியினைக் கேட்டு அப்பொழுதே சென்று புகழ்தற் கரிய தவத்தையுடைய சுமித்திரன் என்னும் ஒரு நல்ல துறவியைக் கண்டு புன்மையில்லாத அம்முனிவனுடைய அடிகளைப் பொலிவுடன் வணங்கியவனாய்ச் சிறந்த செயற்கரிய தவத்தையுடைய அம் முனிவனிடம் அநங்கவிலாசனை கண்ட நல்ல கனவின் பயன் யாதென வினவினன்,” என்றான் என்க. (40)
-------------
282. இதுவுமது
அறிந்த ருள்செய் தனனம் முனிவனும்
செறிந்த பூமிவாழ் திருமரு கன்வரும்
அறைந்த நின்மகட் காகு மணவரன்
நிறைந்த நேமியிந் நிலமு மாளுவன்.
(இ - ள்.) “அந்தத் துறவிதானும் அக்கனா நிகழ்ச்சியைக் கேட்டு ஆராய்ந்து அதன் பயன் இஃதெனக் கூறினன், (அஃதாவது, வேந்தே மணிதிணிந்த நிலவுலகத்தினின்றும் நின்னுடைய மருமகன் நின்பால் வருவன். நீ கூறிய நின் மகட்கு மணமகனாகும் அம்மன்னன் செல்வம் நிறைந்த இந்த வித்தியாதர ருலகத்தையும் தனது ஆணையாலே ஆட்சி செய்வன் காண்! என்பது,” என்றான் என்க. நேமி - ஆணைச்சக்கரம். (41)
-------------
283. இதுவுமது
அம்மு னிவன்சொ லரசன் கேட்டுடன்
தம்மி லெண்ணினன் சார்ந்து காண்கெனச்
செம்மை யெண்ணியே செப்பி விட்டனன்
உம்மைக் கண்டனன் செல்க வென்றனன்.
(இ - ள்.) “அத்துறவியின் மொழி கேட்ட எம் மன்னன் மகிழ்ந்து தன் கேளிருடனிருந்து செம்மையாக ஆராய்ந்து தெளிந்த பின்னர் என்னையழைத்து ‘நீ அம்முனிவன் கூறியாங்கு அப்பொய்கைக் கரையை அடைந்து காண்!” என்று கூறி விடுத்தனன். அரசன் பணித்தாங்கே யானும் இங்கு வந்துபெருமானே! உம்மைக் கண்டேன். ஆதலால் பெருமான் என்னுடன்எழுந்தருளுக!” என்று வேண்டினன் என்க. (42)
------------
284. நரவாகனனை நீலவேகன் எதிர்கொள்ளல்
போவ தேபொருள் புண்ணி யற்கொண்டு
தேவ னேயெனச் செல்வ னுஞ்செலும்
காவலன் னெதிர் கண்டு கண்மகிழ்
ஏவ லாளரோ டினிதி னெய்தினான்.
(இ - ள்.) பெருமானே! அநங்கவிலாசனையை மணந்து வித்தியாதரருலகையும் ஆள்கின்ற ஆகூழுடைய நும்மை அழைத்துக் கொண்டு போவதே யான் வந்த காரியமாகும்; ஆதலாற் போந்தருளுக! என்று வேண்டவே அந்நரவாகனனும் செல்வானாக, அவன் வரவுணர்ந்த நீலவேக மன்னனும் எதிர் கொண்டு கண்டு கண் களிகூர்கின்ற தன் ஏவலாளரோடும் தன்னரண்மனையை அக்கோமகனோடும் எய்தினான் என்க. (43)
----------------
285. நீலவேகன் நரவாகனனுக்கு முகமன் மொழிதல்
கன்னல் விற்கணை யில்லாக் காமனை
இன்னி லக்கண மேற்ற காளையை
மன்ன னின்னுரை மகிழ்ந்து கூறினான்
பின்ன மைச்சரைப் பேணிக் கேட்டனன்.
(இ - ள்.) கரும்பு வில்லும் மலர்க்கணையும் இல்லாமல் உருக் கொண்டு வந்த காமவேள் போன்றவனும் ஆடவர்க்கியன்ற நல்விலக் கணமெல்லாம் பொருந்திய காளைப் பருவத்தினனுமாகிய நரவாகனனுக்கு அந்நீலவேகன் மனமகிழ்ந்து இனிய முகமன்மொழிகள் கூறி மகிழ்வித்த பின்னர் அமைச்சரைத் தனியிடத்தே அழைத்து அநங்கவிலாசனையின் திருமணம் பற்றி அவர் கூறவனவற்றையும் பேணிக் கேட்பானாயினன் என்க. (44)
---------------
286. அநங்கவிலாசனை சுயம் வரம்
தனித்தி வர்மணந் தரத்தி யற்றினால்
சினத்தொ டுமன்னர் சேர்வ ராலென
மனத்த மைச்சரு மகிழ்ந்து மன்னரை
இனத்தொர் மாவர மியம்பி விட்டனர்.
(இ - ள்.) அவ்வமைச்சர் ஆராய்ந்து கூறுபவர் பிற வித்தியாதர வேந்தருணராமல் இவ்விருவர்க்கும் தகுதியோடு யாம் திருமண வினை நிகழ்த்தினால் நிலவுலகத்து மக்கட் பிறப்பினனுக்கு இவன் மகட்கொடை நேர்ந்தனன் என்பது தலைக்கீடாக நம் வித்தியாதர வேந்தர் ஒருங்கு கூடி நமக்குத் தீங்கு செய்ய முற்படுபவர் என்று கூற, மன்னன் மகிழ்ந்து தன்னினத்து மன்னர்க்கெல்லாம் அநங்கவிலாசனைக்குச் சுயம்வரம் என்னும் செய்தியோடு தூதுவரை விடுத்தனன் என்க. (45)
------------
287. அநங்கவிலாசனை நரவாகனனுக்கு மாலை சூட்டுதல்
மன்ன ரீண்டியே வந்தி ருக்கையில்
அன்ன மென்னடை யமிர்த மன்னவள்
மின்னின் மாலையை விரகி னேந்திமுன்
சொன்ன காளைமேற் சூட்டி நின்றனள்.
(இ - ள்.) சுயம்வரச் செய்தி கேட்ட வித்தியாதர வேந்தர் மைந்தரெல்லாம் வந்து சுயம்வர மன்றத்தே குழுமியிருக்கும் பொழுது அன்னம் போன்ற மெல்லிய நடையினையுடைய அமிழ்தத்தை நிகர்த்த அந்த அநங்கவிலாசனை தானும்ஒளிதிகழும் மணமாலையைச் சூழ்ச்சியோடு கைக் கொண்டு சென்று முற்கூறப்பட்ட அந்நரவாகனன் தோளிலே சூட்டி மகிழ்ந்து நின்றனள் என்க. (46)
------------
288. மணமக்கள் மகிழ்ந்து இனிதே வாழ்தல்
அரசன் மிக்குநன் கமைத்த வேள்வியின்
திரும ணஞ்செய்து செல்வ னின்புற
இருவ ரும்புணர்ந் தின்ப மார்ந்தனர்
வெருவு மானச வேகன் றன்மனம்.
(இ - ள்.) அவ்வித்தியாதர வேந்தனாகிய நீலவேகன் ஊக்கமிகுந்து நன்றாக அமைத்த திருமண வேள்விச் சடங்கின்கண் நரவாகனன் அநங்கவிலாசனையைத் திருமணஞ் செய்து மகிழ, அம் மணமக்கள் இருவரும் மனமொன்றிக் கூடி இன்ப நுகர்ந்திருந்த பொழுது மானசவேகன் நரவாகனனுக்குப் பெரிதும் அஞ்சிய மனத்தையுடைய னாயினன் என்க. (47)
குறிப்பு:--இவ்விடத்தில் மானசவேகன் நரவாகனனுக்கு அஞ்சி மதன மஞ்சிகையைக் கொணர்ந்து நரவாகனன் பால் விட்டுப் போயினன் என்னும் பொருளுடைய செய்யுள் ஒன்று விடுபட்டிருத்தல் வேண்டு மென்று தோன்றுகின்றது.
-------------
289. நரவாகனன் திருவுலா
வேக யானைமே லேறி வீரனும்
நாக நீள்புர நடுவிற் றோன்றலும்
காம னேயெனக் கன்னி மங்கையர்
தாம ரைக்கணாற் றான்ப ருகுநாள்.
(இ - ள்.) வீரப்பண்புமிக்க நரவாகனன் வெள்ளி மலைமிசை உயர்ந்து விளங்கும் நாகபுரம் என்னும் நெடிய நகரத்தின்கண் சினமுடைய களிற்றியானையிலேறிச் திருவுலாச் சென்றானாக; அப்பொழுது அந்நகரத்துக் கன்னி மகளிர் இவன் காமவேள் போலும் என்று கருதி அவன் பேரழகாகிய அமுதத்தைத் தாமரைமலர் போன்ற தம் கண்ணாகிய வாயாலே பருகி இன்புறா நின்றனர். இங்ஙனம் நிகழ்வுழி; என்க. (48)
-------------
290. நரவாகனன் எய்திய பேறுகள்
நேமி யாளவே நினைத்த தோன்றலும்
வாம நாகர்தம் மலையிற் சென்றனன்
தாம மார்பனைத் தரத்திற் கண்டவர்
நேமி தான்முத னிதிக ளொன்பதும்.
(இ - ள்.) வித்தியாதரருலகத்தை முழுதும் ஆள்வதற்கெண்ணிய புகழாளனாகிய அந் நரவாகனன் அந்நாட்டினை வெல்லுதற்கு அழகிய நாகர் மலை மேல் சென்றனன், மாலை மார்பனாகிய அம்மன்னனைக் கண்ட அம்மலை நாகர் முறையோடு எதிர் சென்று வரவேற்றுக் கேளிராயினர்; பின்னர்ச் சக்கர நிதி முதலிய ஒன்பது வகை நிதிகளையும், என்க. (49)
-------------
291. இதுவுமது
நாம விந்திர னன்க ருள்செயக்
காம னுக்கீந்து கண்டு சேவித்துத்
தாம வந்தரர் தாம்ப ணிந்திடத்
தோமி னாலிரண் டொன்ற வாயிரம்.
(இ - ள்.) நரவாகனன்பாற் பேரன்புடைய புகழுடைய தேவேந்திரன் குற்றமற்ற தேவமகளிர் எண்ணாயிரவரையும் அவன்பாற் சேர்க்கும்படி நன்கு வழங்கினமையாலே தேவர்கள் கொணர்ந்து காமவேள் போல்பவனாகிய அந் நரவாகனன்பால் வந்து கண்டு வாழ்த்தி அவற்றை வழங்கிப் பணியா நிற்ப என்க.
இந்திரன் நரவாகனனை யுவந்து சக்கரநிதி முதலிய ஒன்பது வகை நிதிகளையும் எண்ணாயிரம் மகளிரையும் வழங்க, அவற்றைத் தேவர்கள் கொணர்ந்து நரவாகனனுக்கு வழங்கி வணங்கினர் என்றவாறு, தோம் - குற்றம், எண்ணாயிரம்: மகளிர்க்கு ஆகுபெயர் மேல்-294 ஆம் செய்யுளில் ‘எண்ணாயிரமான தேவியர்’ எனவருவதூஉ முணர்க. (50)
----------
292. நரவாகனனைச் சக்கரப் படை வந்து வணங்கல்
சக்க ரம்வலம் சார்ந்தி றைஞ்சின
மிக்க புண்ணியன் மீட்டு வந்துடன்
தக்க விஞ்சையர் தம்ப தியெல்லாம்
அக்க ணத்தினி லடிப்ப டுத்தினன்.
(இ - ள்.) சக்கரப் படைகளும் நரவாகனனை வலம் வந்து வணங்கி அவன் ஏவல்வழி நிற்பச் சமைந்தன. இப்பேறுகளையெல்லாம் பெற்ற மிக்க அறவோனாகிய அந்நரவாகனன் மீண்டும் வித்தியாதர நாட்டிற்கு வந்து அப்பொழுதே தகுதியுடைய அவ்விச்சாதர நகரங்களை யெல்லாம் வென்று தன் னடிப்படுத்தினன் என்க. (51)
-----------
293. நரவாகனன் வாகைசூடி வருதல்
விஞ்சை யர்திறை வெற்றி கொண்டவன்
தஞ்ச மென்றவர் தரத்தின் வீசியே
எஞ்ச லில்புர மிந்தி ரன்னென
மிஞ்ச மாளிகை வீரன் சென்றனன்.
(இ - ள்.) விச்சாதர வேந்தரை யெல்லாம் வென்று திறைப்பொருளும் பெற்ற வீரனாகிய நரவாகனன் அப்பொருளை யெல்லாம் தன்னைத் தஞ்சம் என் றடைந்தவர்க் கெல்லாம் வாரி வழங்கிக் குறைவில்லாத கந்தருவ புரத்தின் கண்ணே இந்திரனேபோல வீறு பெற்றுயர்ந்த அரண்மனைக்கட் சென்றான் என்க. (52)
-----------
294. நரவாகனன் அரசு வீற்றிருத்தல்
மதன மஞ்சிகை மனங்கு ளிர்ந்திட
விதன மின்றிநல் வேக வதியுடன்
அதிக போக வநங்க விலாசனை
அதிக வெண்ணா யிரமான தேவியர்.
(இ - ள்.) மானசவேகனால் மீண்டும் கணவனுடன் சேர்க்கப்பட்ட மதன மஞ்சிகை தானும் பெரிதும் மனமகிழா நிற்பவும், நரவாகனன் துன்பம் சிறிதும் இன்றி வேகவதி நல்லாளுடனும் அம் மதன மஞ்சிகையோடும் அநங்க விலாசனையோடும் எண்ணாயிரந் தேவ மகளிரோடும் கூடி மிக்க வின்ப மெய்தி என்க. (53)
-----------
295. இதுவுமது
இனிய வேள்வியா லின்ப மார்ந்துபின்
இனிய புண்ணிய மீண்டி மேல்வரத்
தனிய ரசினைத் தானி யற்றியே
நனிய தொன்றினன் னாம வேலினான்.
(இ - ள்.) பின்னரும் தேவர்கட் கினியனவாகிய அறக்கள வேள்விகள் பலவும் செய்யுமாற்றானும் பேரின்ப மெய்திப் பின்னரும் அவ் வறப்பயனெலாம் ஒருங்கு கூடி மேன்மேல் வருதலாலே ஒப்பற்ற அரசாட்சியினையும் செய்து பகைவர்க்கு அச்சந்தரும் வேலினையுடைய அந்நரவாகனன் பேரின்ப வாழ்விலே மிகவும் பொருந்தினன் என்க. (54)
------------
296. நரவாகனன் தந்தையைக் காணவருதல்
விஞ்சை யர்தொழ வீறுந் தேவியர்
பஞ்சின் மெல்லடிப் பாவை மாருடன்
மஞ்சு சூழ்மலை விட்டு வானவர்
தஞ்ச மானதன் தந்தை பாற்சென்றான்.
(இ - ள்.) விச்சாதர மன்னர் அடிவணங்கி வாழ்த்தி வழி விடாநிற்ப அந்நரவாகன மன்னவன் வீறுடைய தன் மனைவிமாராகிய அலத்தகமூட்டிய மெல்லிய அடியினையுடைய பாவைபோல் வாரோடு முகில் சூழ்கின்ற அவ் வெள்ளிமலையினின்றும் தேவருக்கும் புகலிடமாகத் திகழுகின்ற தன் தந்தையாகிய உதயணகுமரன் பால் வந்துற்றனன் என்க. (55)
-------------
297. இதுவுமது
புரம திக்கப்பூ மாலை தோரணம்
வரம்பி னாற்றியே வான்கொ டிம்மிடை
அரும்பு மாலைவே லரசன் சென்றெதிர்
விரும்பிக் கொள்ளவே வியந்து கண்டனன்.
(இ - ள்.) அக்கோசம்பி நகரம் நரவாகனன் வருகையை நன்கு மதியாநிற்ப மலர்மாலை தூக்கியும், தோரணம் கட்டியும் நகரத்தை அணிசெய்து உயரிய கொடி முதலியன நெருங்கிவர நாண்மலர் மாலையணிந்த உதயணவேந்தன் அவன் வருகையைப் பெரிதும் விரும்பி எதிர்சென்று வரவேற்ப நரவாகனனும் அவர்தம் வரவேற்பினைக் கண்டு வியந்து தன் தந்தையைக் கண்டு வணங்கினன் என்க. (56)
------------
298. நரவாகனன் தந்தைதாயரை வணங்கல்
298. தந்தை தாய்பதந் தான்ப ணிந்தபின்
இந்து வாணுத லெழின்ம டந்தையர்
வந்து மாமனை வணங்கி மாமியை
அந்த மில்வனத் தடியி றைஞ்சினார்.
(இ - ள்.) நரவாகனன் தன் தந்தைதாய் திருவடிகளை வணங்கியபின்னர்த் திங்கள் மண்டிலம் போன்று ஒளி திகழுந் திருநுதலையும் அழகையுமுடைய தேவிமாரும் வந்துமுற்பட மாமடிகளாகிய உதயணகுமரனை வணங்கிப் பின்னர் வாசவதத்தையின் எல்லையற்ற அழகுடைய திருவடிகளிலே வீழ்ந்து வணங்கினர் என்க. வனம் - அழகு. (57)
----------
299. உதயணன் செயல்
மகிழ்ந்து புல்லியே மனைபு குந்தபின்
நெகிழ்ந்த காதலா னேமிச் செல்வனும்
மிகுந்த சீருடன் வீற்றி ருந்தனன்
மகிழ்ந்து மைந்தரை வரவ ழைத்தனன்.
(இ - ள்.) மாமிமார் மருகிமாரை மகிழ்ந்து தழுவி வாழ்த்திய பின்னர்ச் சக்கரவர்த்தியாகிய உதயணன் மிக்க புகழுடனே இனிதே யிருந்தனன், பின்னொருநாள் உதயணன்றானும் பெரிதும் மகிழ்ந்து நரவாகனன் முதலிய தன் மைந்தர்களை அவையின்கண் வரவழைத்தனன் என்க. (58)
----------
300. பதுமாபதியின் மைந்தனாகிய கோமுகனுக்கு முடிசூட்டல்
பதுமை தான்மிகப் பயந்த நம்பியாம்
கொதிநு னைவேலின் கோமு கன்றனை
இதம ளித்திடு மிளவ ரைசென
அதுல நேமிய னரசு நாட்டினான்.
(இ - ள்.) அம்மைந்தருள் வைத்துப் பதுமாபதி ஈன்ற செல்வனாகிய கொதிக்கும் நுனையையுடைய வேலையுடைய கோமுகன் என்னும் நம்பியின் முகநோக்கி “மைந்தனே! இனி நீ நமது வத்தவ நாட்டின் இளவரசனாகி இன்புறப் பாதுகாத்திடுக!” என்று பணித்து ஒப்பற்ற ஆணையையுடைய அம்மன்னன் அவனுக்கு முடிசூட்டியருளினான் என்க. (59)
-----------
301. நரவாகனன் வித்தியாதர ருலகம் போதல்
தந்தை மேன்மிகுந் தளர்வில் காதலாற்
றந்த தான்பிரி தலைக்க ருத்தெணி
வெந்து யர்கொடு விடுப்பச் செல்வனும்
இந்தி ரன்றனூ ரியல்பி னேகினன்.
(இ - ள்.) பின்னர்த் தந்தையாகிய உதயணகுமரன் மேல் குறைவில்லாத பேரன்பினாலே வந்த நரவாகனன் அவனைப் பிரிதற்கு மனத்திலே நினைந்து வெவ்விய துயரமுடையனாய் அவ்வுதயணகுமரன் விடை கொடுப்பக் கோசம்பியினின்றும் புறப்பட்டுத் தேவேந்திரன் நகரமாகிய அமராபதிக்கு முறைமையோடு சென்றனன் என்க. (60)
------------
302. நரவாகனன் வித்தியாதர ருலகம் புகுதல்
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
செலவநற் குமரன் சென்று தெய்வவிந் திரனைக் கண்டு
செல்வநல் வாமன் பூசைச் சீர்கண்டு வணக்கஞ் செய்து
செல்வவிந் திரன னுப்பத் திருமணித் தேரி னேறிச்
செல்வமார் புரம்பு குந்து சிறப்பினோ டிருந்தா னன்றே.
(இ - ள்.) செல்வச் சிறப்பு மிக்க நரவாகனன் அமராபதி நகர்க்குச் சென்று ஆண்டுத் தேவர் கோமானாகிய இந்திரனைக் கண்டு வணங்கி அத் தெய்வ நாட்டின்கண் அருகக் கடவுளுக்குத் தேவர்கள் செய்யும் வழிபாட்டுச் சிறப்பினையுங் கண்டு அக்கடவுட்கு வணக்கஞ் செய்து பின்னர், செல்வ மிக்க அவ்விந்திரன் சிறப்புடன் வழிவிட அழகிய மணித் தேரில் ஏறிச் செல்வச் சிறப்பு மிக்க வித்தியாதர நாட்டுக் கந்தருவபுரத்தே சென்று சிறப்போடு அரசு புரிந்தனன் என்க. (61)
ஐந்தாவது நரவாகன காண்டம் முற்றும்.
------------
ஆறாவது - துறவுக் காண்டம்
303. உதயணகுமரன் தவம்புரியக் கருதுதல்
வளங்கெழு வத்த வற்கு மன்னிய காதன் மிக்க
உளங்கெழு கற்பி னார்க ளோதிமம் போலு நீரார்
இளங்கிளி மொழியி னார்க ளினிமையி னால்வ ரோடும்
துளங்கலி றிருமின் போர்மின் தூயசொன் மடந்தை தாமும்.
(இ - ள்.) எல்லா வளங்களும் பொருந்திய வத்தவ நாட்டு மன்னனாகிய உதயணகுமரனுக்கு நிலைபெற்ற காதற் பண்பு மிக்க நெஞ்சம் பொருந்திய கற்புடையவரும் அன்னம்போலும் நடையினையுடையவரும் இளங்கிளிபோலும் மழலை மொழியினை யுடையவரும் இனிமை மிக்கவருமாகிய வாசவதத்தை, பதுமாபதி, மானனீகை, விரிசிகை என்னும் மனைவிமாராகிய நான்கு நங்கைமாரோடும் அசைதலில்லாத திருமகளும், வெற்றிமகளும், தூய சொல்லையுடைய கலைமகளும் என்க. (1)
----------
304. இதுவுமது
மண்ணியன் மடந்தை யோடு மருவினார் மிக்க மன்னன்
புண்ணிய முன்னாட் செய்த போதந்தே யுதவி செய்ய
எண்ணிய கரும மெல்லா மியைபுட னாகப் பின்னும்
புண்ணிய நோன்பு நோற்கப் பொருந்திய மனத்த னானான்.
(இ - ள்.) நிலமகளும் ஆகிய நான்கு மகளிரும் வந்து சேர்ந்தனர்; இவ்வாற்றாற் பெருஞ் சிறப்புற்ற வேந்தன் யாம் இத்தகைய சிறப்புக்களை யெல்லாம் எய்தி இன்புறும்படி யாம் முற்பிறப்பிலே நோற்ற நோன்பே பயனாக இப்பிறப்பில் வந்துதவின; ஆதலால், இன்னும் யாம் எண்ணிய காரியமெல்லாம் இனிது நிறைவேறும் பொருட்டு அறமாகிய அத்தவத்தையே மேற்கோடல் வேண்டுமென்று கருதிய மனத்தையுடையனாயினன் என்க. (2)
------------
305. உதயணன் தவத்தின் பெருமையை நினைத்தல்
கலிவிருத்தம்
ஆசை யென்றனக் கருளுந் தோழனா
ஓசை வண்புகழ் யூகி யானதும்
வாச வதத்தை மனைவி யானதும்
பேச ரும்மகப் பெற்றெ டுத்ததும்.
(இ - ள்.) உலகெலாம் வழங்குதற்குக் காரணமான வளவிய புகழையுடைய யூகியானவன் யான் அவாவியவற்றை யெல்லாம் எனக்குத் தேடித் தருகின்ற நண்பனாக வமைந்ததூஉம், ஒப்பற்ற வாசவதத்தை நல்லாள் எனக்கு மனைக்கிழத்தியானதூஉம், புகழ்தற்கரிய மக்களை யான் பெற்று வளர்த்ததூஉம் என்க. (3)
--------
306. இதுவுமது
நரவாக னன்மக னாம மானதும்
வரைமிசைத் தானவர் வாழு நாட்டையங்
கரண நேமியா லடிப்ப டுத்ததும்
பொருவில் வேந்தர்கள் புகழ்ந்த டைந்ததும்.
(இ - ள்.) புகழ்தற் கரிய அம்மக்களுள் நரவாகனன் புகழாலே ஆக்கமெய்தியதூஉம், அந்நரவாகனன்றானும் வெள்ளியம் பொருப்பில் வித்தியாதரர் வாழுகின்ற நாட்டையெல்லாம் தனக்குப் பாதுகாவலான தனது சக்கரப்படையாலே வென்று தன்னடிக்கீழ்க் கொணர்ந்து ஆளாநிற்பதூஉம், ஒப்பில்லாத வீரமன்னர்கள் பலரும் அவன் திருவடியைப் புகழ்ந்தேத்தி அவனைத் தஞ்சம் புக்கதூஉம் என்க. (4)
------------
307. இதுவுமது
மிக்க விந்திரன் மேவி விட்டதும்
தக்க புத்திரன் றரத்திற் சென்றதும்
தொக்க வானவர் தொல்சி றப்புடன்
அக்க ணம்விட வண்ணல் போந்ததும்.
(இ - ள்.) தேவர்களுட் சிறந்த இந்திரன் நரவாகனனை விரும்பி ஒன்பான்வகை நிதியங்களையும் அவனுக்குப் பரிசிலாக உய்த்ததூஉம், தகுதியுடைய என் மகனான நரவாகனன் முறைமையோடே அவ்வமார்கோமான்பாற் சென்றதூஉம், அவனைக் கண்டு களித்தற்குக் குழுமிய தேவேந்திரனையுள்ளிட்ட அத் தேவர்கள் அவனுக்குப் பழைய முறைமைப்படி யியற்றிய சிறப்புக்களுடனே விடை கொடுத்துவிட்டதூஉம். அப்பெருமைமிக்க நரவாகனன் தேவநாட்டினின்றும் வித்தியாதர நாட்டிற்குச் செனறதூஉம் என்க. (5)
--------------
308. இதுவுமது
போந்து புண்ணியன் பொருவில் போகத்துச்
சேர்ந்தி ருந்ததுஞ் செய்த வத்தெனா
வேந்த னெண்ணியே வெறுத்து மாதரைக்
காந்தி வாமனைக் கண்ட டிதொழும்.
(இ - ள்.) அறவோனாகிய நரவாகனன் வித்தியாதரருலகிற் சென்று ஒப்பற்ற பேரின்பத்தே முழுகியிருப்பதூஉம் முற்பிறப்பிலே யான்செய்த தவப்பயனாலேயே; இதிலையமில்லை என்று அவ்வுதயணவேந்தன் நீள நினைந்து பார்த்து மீண்டும் அத்தவமே பேணற்பாலதென்று துணிந்து மாதர் தரும் காமவின் பத்தைக்கடிந்தொரீஇச் சென்று அருகக் கடவுளின் திருவுருவினைக் கண்குளிரக் கண்டு அவன் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினன் என்க. (6)
-----------
309. மகளிர் உதயணன் துறவுபூ ணாவகை மயக்குதல்
எண்ணம் வந்துநல் லெழிற்பெ ரும்மகன்
புண்ணி யநோன்பு போந்த வேளைவேற்
கண்ணின் மாதர்கள் காவ லன்மனம்
உண்ணக் காமத்தை யுருவு காட்டினார்.
(இ - ள்.) உதயணகுமரனுக்குத் தவம்பண்ண வேண்டும் என்னும் நினைவு வந்துறுதிப்பட்டமையாலே அப்பெருமகன் அறமாகிய அத்துறவு மேற்கொள்ளக் துணிந்தபொழுது வேல்போன்ற கண்ணையுடைய வாசவதத்தையை யுள்ளிட்ட அவன் தேவிமார் அவள் மனம் துறவிற் செல்லாது மீண்டும் தம்பாலெய்தித் தாமீயும் காமவின்பத்தையே நுகரக் கருதித் தமது இயற்கை யழகினைப் பின்னரும் ஒப்பனையான் மிகுத்து அம்மன்னனுக்குக் காட்டுவாராயினர் என்க. (7)
---------
310. உதயணன் மீண்டும் காமவின்பத்தே யழுந்துதல்
மன்னு மன்பினீண் மாதர் மோகத்திற்
றுன்னு மால்கடற் றோன்ற னீந்துநாட்
சொன்ன மும்மதந் தோன்ற வேழமும்
உன்னிக் காற்றளை யுதறி விட்டதே.
(இ - ள்.) புறவழகேயன்றி அகவழகாகிய அன்புடைமையினும் மிக்க அந்தத்தேவிமார்பால் தனக்குண்டான மோகங்கா ரணமாகத் தன் கருத்தை இழந்து நிலைபெற்ற பெரிய காமவின்பக் கடலிலே அப்புகழாளன் ஆர்வத்துடன் நீந்தி விளையாடுகின்றபொழுது நூலோர் சொன்ன மூன்று வகை மதமும் பெருகித் தோன்றுதலாலே பட்டத்துக் களிற்றியானையானது பிடியானையை மனத்தினினைந்து தன் காலிலிட்ட தளைகளை அறுத்துதறிவிட்டுப் புறப்பட்ட தென்க. (8)
-----------
311. மதவெறி கொண்ட களிற்றியானையின் செயல்
காய்ந்து வெம்மையிற் காலன் போலவே
பாய்ந்து பாகரைப் பலச னங்களைத்
தேய்ந்து காலினேர் தீயு மிழ்வபோல்
ஆய்ந்த கண்களு மருவ ரையென.
(இ - ள்.) காலின் தளையுதறிய அக்களிறு வெவ்விய சினத்தாலே கூற்றுவனையே ஒப்பதாய்ப் பாகர்களை வெகுண்டு நகரத்தே ஓடிச் சென்று எதிர்ப்பட்ட பற்பல மாந்தரையும் காலானிடறித்றரையிற் றேய்த்து நெருப்பை வீசுகின்றவை போன்று தோன்றுகின்ற எதிர்வருவோரை யாராய்கின்ற கண்களோடே கடத்தற்கரிய மலை இயங்குதல் போன்று என்க. தேய்த்து, தேய்ந்து என்பதன் விகாரம். (9)
-----------
312. இதுவுமது
வெடிப டும்முழக் கிடியே னவிடும்
கொடியு டைமதில் கிடுகி டென்றிடும்
விடுபற் கோட்டினில் வெட்டி விட்டிடப்
படப டென்னவே பயண மானதே.
(இ - ள்.) இயங்கி நிலம் பிளக்கும்படி பிளிறுகின்ற முழக்கத்தை இடி இடிப்பது போன்று முழங்கும்; அந்நகரத்துக் கொடியுயர்த்திய மதில்களெல்லாம் அப்பொழுது கிடுகிடு என்றசையா நிற்கும். பாகர்கள் இடை வெளியிடப்பட்ட அதன் பல்லாகிய கொம்பிலே வெட்டி யடக்க முயன்றும் அடங்காமையாலே விட்டு விட்டமையாலே தன் மனம் போனபடி படபடவென விரைந்தோடலாயிற்று என்க. (10)
----
313. நகரமாந்தர் செயல்
அடிய டிய்யென வாயு தர்செலப்
படுப டுவ் வெனப் பறைகள் கொட்டிட
திடுதி டென்றோலி தெறித்த பேரிகை
நடுந டுங்கினார் நகர மாந்தரே.
(இ - ள்.) படைக்கல மேந்திய மறவர்கள் புடையுங்கள் என்று ஆரவாரித்து அக்களிற்றைப் பின் தொடர்ந்து செல்லாநிற்பவும் ‘படு படு’ என்னும் ஒலியுண்டாகப் பறைகள் கொட்டி வெருட்டவும் முரசங்கள் திடுதிடுவென்று முழக்க முண்டாக்கவும் நகர்வாழ் மாந்தர்கள் மிகவும் அச்சமடைந்தார்கள். (11)
-------------
314. களிற்றின் செயல்
பிடிசில் பாகரைப் பிளந்தே றிந்திடக்
குடரின் மாலைகள் கோட்ட ணிந்துடன்
கடவுள் யானையைக் காலிற் றேய்த்திட
இடர்ப டுங்களி றெய்தி யோடுமே.
(இ - ள்.) அக்களிற்றியானையானது தன்னைப் பிடிக்கத் துணிந்த பாகர்கள் உடலைக் கோட்டாற் குத்திப் பிளந்தெறியா நிற்றலாலே அவர்தம் குடர்மாலைகளையும் தன் கோட்டிலே அணிந்து கொண்டு கடவுட்டன்மையுடைய பத்திராபதி என்னும் பிடியானையின் படிமத்தையும் காலாலிடறித் தேய்த்தற்பொருட்டு மறவர்களால் அலைக்கப்படும் அக்களிற்றியானை அதனருகிற் சென்று (மறவர்கள் தடுத்தலாலே). அவ்விடத்தினின்றும் ஓடாநிற்கும் என்க. கடவுள் யானை என்றது பத்திராபதியின் படிமத்தை. (12)
-------------
315. நகரமாந்தர் அரசனுக்கறிவித்தல்
நகர மாந்தர்க ணடுங்கிச் சென்றுநற்
சிகரம் போன்முடிச் சீர ரசற்குப்
பகர வாரணம் பலரைக் கொன்றதென்
சிகர மாடநீர் சேர்ந்தி ருக்கென்றான்.
(இ - ள்.) யானைக்கு அஞ்சிய அந்நகரத்து மாந்தர்கள் பெரிதும் நடுங்கிச் சென்று அழகிய மலைமுடி போன்று விளங்கும் முடியையும் புகழையும் உடைய உதயண மன்னனுக்கு, “பெருமானே! களிற்றியானை பல மாந்தரைக் கொன்ற” தென்று முறையிட அது கேட்ட மன்னன் வருந்தி “நீயிரெல்லாம் கோபுரத்தையுடைய நம் மரண்மனை மாடங்களிலே ஏறி அஞ்சாதிருக்கக் கடவீர்!” என்று பணித்தான் என்க. (13)
-------------
316. நகரமாந்தர் செயல்
அடிய டிய்யென வாயு தர்செலப்
படுப டுவ் வெனப் பறைகள் கொட்டிட
திடுதி டென்றோலி தெறித்த பேரிகை
நடுந டுங்கினார் நகர மாந்தரே.
(இ - ள்.) படைக்கல மேந்திய மறவர்கள் புடையுங்கள் என்று ஆரவாரித்து அக்களிற்றைப் பின் தொடர்ந்து செல்லாநிற்பவும் ‘படு படு’ என்னும் ஒலியுண்டாகப் பறைகள் கொட்டி வெருட்டவும் முரசங்கள் திடுதிடுவென்று முழக்க முண்டாக்கவும் நகர்வாழ் மாந்தர்கள் மிகவும் அச்சமடைந்தார்கள். (11)
-----------
317.
வழிவ ருவாரை மார்கி ழித்திடும்
எழில்வனம்பொய்கையீட ழித்திடும்
இழிவு றுந்தொழி லீண்டிச் செய்யுநாட்
பொழிலுண் மாதவர் பொருந்தினார்களே.
------------
318. சாரணர் சார்ந்திருந்த பொழில்
வேத நான்கையும் விரித்த ருளுவர்
மாத வர்வினை மாயச் செய்குவார்
ஏதில யாத்திரைக் கெழுந்து வந்தந்தப்
போத விழ்பொழில் புகுந்தி ருந்தனர்.
-------------
319. அச்சாரணர் மாண்பு
இனம லர்மிசை யேகு வார்களும்
புனல லைமிசைப் போகு வார்களும்
கனிகள் காய்மிசை காணுஞ் சாரணர்
இனிய நூன்மிசை இசைந்து செல்வரும்.
(இ - ள்.) கூட்டமாகிய மலர்மிசைச் செல்வதனாலே ‘புட்ப சாரணர்’ எனப்படுவோரும், நீர் அலையின்மேற் செல்வதனாலே ‘சல சாரணர்’ எனப்படுவோரும், கனி காய்களின்மேற் காணப்படுதலாலே ‘பலசாரணர்’் எனப்படுவோரும், இனிய நூன்மிசைச் செல்வதனாலே ‘தந்துசாரணர்’ எனப்படுவோரும் என்க. (17)
------------
320. இதுவுமது
மலைத்த லைமிசை வானிற் செல்வரும்
நிலத்தி னால்விர னீங்கிச் செல்வரும்
தலத்தி னன்முழந் தரத்திற் செல்வரும்
பெலத்தின் வானிடைப் பெயர்ந்து செல்வரும்.
(இ - ள்.) இலையுச்சியின்மேலே வானத்தே செல்வதனாலே ‘ஆகாயசாரணர்’் எனப்படுவோரும், நிலத்தினின்றும் நால்விரன் மேலே செல்வதனால் ‘சதுரங்குல சாரணர்’் எனப்படுவோரும், நிலத்தினின்றும் நன்மையுடைய ஒரு முழம் உயரத்தே செல்வதனால் ‘தலசாரணர்’் எனப்படுவோரும், மலைமுழைஞ்சுகளிலே கூடியிருந்து வானத்தே செல்வதனால் ‘சங்கசாரணர’் எனப்படுவோரும் என்க. (18)
-------------
321. இதுவுமது
மலைமு ழைஞ்சுண் மன்னி னான்மறை
உலகெ லாமவ ரொருங்கி டவிடும்
அலம தீரவே வறம ழைபெய்யும்
மலம றுந்தர மாமு னிவரும்.
(இ - ள்.) மலைமுழைஞ்சுகளிலே நிலைபெற்று நைவாரேனும் நான்கு மறைப்பொருளையும் உலகெலாம் வாழும் மாந்தர் மனம் ஒருங்கிக் கேட்குமாறும் அவர்க்கு ஊழ்வினை கூட்டுகின்ற துன்பங்களை அறுக்க அறமாகிய மழை பெய்கின்ற முகில்போல் வாடும் துன்பற்ற மெய்யுணர்வுடைய தகுதியையுடைய முனிவர்களும் என்க.(19)
----------
322. இதுவுமது
பக்க நோன்புடைப் பரம மாமுனி
மிக்க பாணிமீ தடிசின் மேதினி
புக்கு முண்டிடப் போது வார்பகல்
தக்க வர்குணம் சாற்ற ரிதென்றே.
(இ - ள்.) பல பகுதிகளையுடைய நோன்பை மேற்கொண்ட மேலான முனிவராகிய இவர்கள் மிகவும் தமது கைகளிலேயே உலகின்கண் இல்லறத்தாரிடம் சென்று பிச்சைபுக் குண்ணற்பொருட்டு ஒரொருகாற் பகற்பொழுதிலே போவர், தகுதியுடைய இவர்தம் மாண்பினைக் கூறிக் காட்டல் அரிதாம் என்க. (20)
-----------
323. தருமவீரர் அறங் கூறல்
தரும வீரரென் றவருட் டலைவன்பால்
வெருவருந் துன்ப விலங்கும் வாழ்க்கையை
மருவி யோதவே வந்த யாவரும்
திருமொ ழியினைத் திறத்திற் கேட்டனர்.
(இ - ள்.) அச்சாரணர் குழுவினுட் டலைவராகிய தருமவீரர் என்பவர் அஞ்சத்தகுந்த பிறவித் துயரந் தீர்தற்குரிய மெய்யாய வாழ்க்கையை எடுத்து ஓதாநிற்ப அத்தலைவன்பால் ஆங்குவந்தவர் எய்தி அவர் கூறுகின்ற அழகிய அறமொழிகளைக் கேட்பாராயினர் என்க. வந்த யாவரும் தலைவன்பால் மருவிக் கேட்டனர் என்று கூட்டுக. (21)
------------
324. யானையின் செயல்
வருந்த சைநசை வானிற் புள்ளுகள்
இரைந்து மேலுங்கீ ழினும்ப டர்ந்திடப்
பருந்து முன்னும்பின் பரந்து செல்லவும்
விருந்த வையுண விட்ட தியானையே.
(இ - ள்.) ஊனுண்ணும் விருப்பத்தோடு வானிற் பறந்து வரும் பறவைகள் ஆரவாரித்து மேலும் கீழுமாய்த் தன்னைச் சூழ்ந்து வாராநிற்பவும் பருந்துகள் முன்னும் பின்னும் பரவிப் பறந்து வரவும் அவையெல்லாம் விருந்துண்டு மகிழும்படியும் அக்களிற்றியானை உயிரினங்களைக் கொன்று அவற்றின் ஊன்களை வழங்கியது என்க. (22)
---------
325. அந்த யானை சாரணர் அறவுரை கேட்டுத் தன் பழம் பிறப்பினை யுணர்தல்
கூற்றெ ழுங்கரி கொதித்தே ழுந்ததால்
ஆற்ற லம்முனி யறவு ரையுற
ஏற்ற ருஞ்செவி யிறைஞ்சித் தன்னுடை
மாற்ற ரும்பவ மறித்து ணர்ந்ததே.
(இ - ள்.) மறவிபோன்றெழுந்து உயிரினங்களை அழிக்கும் அக்களிற்றியானை அவ்வறங்கேட்கும் குழுவினரைக் கண்டு மேலும் சினந்து அக் கூட்டத்தை நோக்கி வந்துழி அங்குத் தவவாற்றல்மிக்க அத் தருமவீரர் திருமாய்மலர்ந்தருளிய அறவுரை ஆகூழுண்மையின் அக்களிற்றியானையின் செவியிற் புகுதலாலே அதனை ஏற்று அம் முனிவனை வணங்கி மாற்றுதற் கரிய தனது பிறப்பின் வரலாற்றினை மீண்டும் உணர்வதாயிற்று என்க. (23)
-------------
326. களிறு தன் செயலுக்கு வருந்துதல்
குருதியாறிடக் கொன்ற தீவினை
வெருவு துக்கமும் விலங்கி னுய்த்திடும்
அருந ரகினு ளாழ்ந்து விட்டிடும்
பெருந்து யரெனப் பேது றுக்குமே.
(இ - ள்.) ஊழ்வினை காரணமாகத் தருமவீரருடைய அறவுரைகளைச் செவியேற்ற அக்களிறு தமது அறியாமையாலே குருதி ஆறாகப் பெருகி ஓடும்படி தான் உயிரினங்களைக் கொன்றமையாலே தனக்கெய்திய தீவினையானது அஞ்சத்தகுந்த துன்பத்தையும் மேலும் விலங்குப பிறப்பினையும் கொடுக்குமே என்றும், பெருந்துயருக்குக் காரணமான அரிய நரகத்தினும் அழுத்திவிடுமே என்றும் எண்ணிப் பெரிதும் வருந்தியது என்க. (24)
-------------
327. களிற்றியானை மெய்யுணர்வெய்தி அமைதியுறுதல்
327. நெஞ்சு நொந்தழு நெடுங்க ணீருகும்
அஞ்சு மாவினுக் கறிவு தோன்றிடக்
குஞ்ச ரம்மினிக் கோன கருன்னி
இஞ்சி வாய்தலி னெய்தி நின்றதே.
(இ - ள்.) இவ்வாறு தன் பிறப்புணர்ந்த அக் களிற்றியானை தான் செய்த தீவினையை எண்ணி உளம் நொந்து கண்ணீர் சொரிந்து தன்னுள் அழுது அஞ்சாநிற்கும;் இங்ஙனம் அக் களிற்றியானைக்கு அப்பொழுது நன்ஞானம் தோன்றுதலாலே தன் மன்னனாகிய உதயணகுமரனுடைய அரண்மனையை நினைத்து மீண்டு சென்று அவ்வரண்மனை மதில் மாடவாயிலிலே அமைதியாக நின்றது என்க. (25)
------------
328. உதயணகுமரன் அக்களிற்றைக் காண வருதல்
அறுசீர்க் கழிநெடிலடி யாசிரிய விருத்தம்
கடையுடைக் காவ லாளர் கதவினைத் திறக்கப் போந்தே
நடுநகர் வீதி சென்று நரபதி மனையைச் சார்ந்து
நெடுவரை போல நின்ற நீர்மையை வாயி லாளர்
முடிமனற் குரைப்ப முன்னிப் பெருமக னெழுந்து வந்தான்.
(இ - ள்.) அரண்மனையின் கோபுரவாயிற் காவலர் யானையின் அமைதி நிலை கண்டு கதவைத் திறந்து அதனை அரண்மனைக்குள் விடுதலாலே அக் களிற்றியானை வீதிவழியே அரண்மனையின் நடு விடத்தை எய்தி ஆங்குள்ள மன்னன் மாளிகை முன்றிலையடைந்து நெடிய மலைபோன்று அமைதியாக நின்ற தன்மையினை அம் மாளிகையின் வாயில்காவலர் கண்டு அரசன்பாற் கூற அவ்வரசனும் அதனைக் காணும் அவாமுற்பட இருக்கையினின்றும் எழுந்து யானையின்பால் வந்தனன் என்க. (26)
------
329. யூகி உதயணனை அக்களிற்றின் மிசை ஏறுக வென்னல்
திருமுடி மன்ன னின்ற திருநிறை யானை கண்டு
மருவிய வமைச்சர் தம்மை மன்னவ னினிதி னோக்கப்
பெருவிரல் யூகி சொல்வான் பெருந்தவர் பால றத்தை
மருவியே கேட்ட தாகும் மன்னநீ யேற வென்றான்.
(இ - ள்.) அழகிய முடிக்கலன் அணிந்த அம்மன்னவன் அந்த யானை நின்ற நிலையினைக்கண்டு வியந்து ஆங்கு வந்த அமைச்சரை இனிதாக நோக்க, அவர் தம்முள் பெரிய வெற்றியையுடைய அரசனுடைய குறிப்புணர்ந்து “பெருமானே! இக் களிறு பெரிய தவத்தையுடைய துறவோர்தம் அறவுரையைக் கேட்டமையாலே இவ்வாறமைதி பெற்றதுகாண்! ஆதலால், நீ அதன்மேல் ஏறி.யருளுக!” என்று கூறினன் என்க. (27)
-----------
330. களிற்றியானை உதயணனை முனிவர்பாற் கொண்டு போதல்
வேந்தனுங் கேட்டு வந்து வெண்கோட்டி னடிவைத் தேறிச்
சேந்தன னெருத்தின் மீதிற் றிரும்பிக்கொண் டேகி வேழம்
பூந்தளிர் நிறைந்தி லங்கும் பொழில்வலஞ் சுற்ற வந்து
காந்துநன் மணிப்பூண் மார்பன் கைம்மாவிட் டிழிந்தா னன்றே.
(இ - ள்.) யூகியின் மொழிகேட்ட வுதயணகுமாரனும் மகிழ்ந்து அக்களிற்றின் வெள்ளிய மருப்பிலே அடிவைத்தேறி அதன் பிடரிலே இனிதாக இருப்ப அக்களிறு தானும் அம்மன்னனையும் தன்மிசை கொண்டு திரும்பிச் சென்று பூவுந்தளிரும் நிறைந்து திகழ்கின்ற அம்முனிவருறையும் பூம்பொழிலை வலஞ் சுற்றிவந்து அம் முனிவர் முன்னிற்க; ஒளி வீசுகின்ற அழகிய மணிப்பூண் அணிந்த மார்பையுடைய அம் மன்னனும் அக்களிற்றியானையினின்றும் இறங்கினன் என்க. சேர்ந்தனன் - இருந்தனன். (28)
----------------
331. உதயணகுமரன் அத்துறவோர்பால் அறங்கேட்டல்
விரைகமழ் பூவு நீரும் வேண்டிய பலமு மேந்திப்
பரிசனஞ் சூழத் சென்று பார்த்திப னினிய னாகி
மருமலர் கொண்டு வாழ்த்தி மாதவ ரடியி றைஞ்ச
இருவென விருக்கை காட்ட விருந்துநல் லறத்தைக் கேட்டான்.
(இ - ள்.) களிற்றினின்று மிறங்கிய காவலன் அப்பொழுது மணங்கமழுகின்ற புதுமலரும் நன்னீரும் அம்முனிவர் உண்ண வேண்டிய பழங்களும் ஏந்திக்கொண்டு தன் பரிசனம் தன்னைக் சூழ்ந்து வருமாறு அம்முனிவர்பாற் சென்று கண்டு இன்பமிக்கவனாய் அந்நறு மணமலர் முதலியவற்றைக் கொண்டு அம் மாதவருடைய அடிகளை வழிபாடு செய்து வணங்காநிற்ப அம்முனிவர் தாமும் “ஈண்டெழுந்தருள்க!” என்று ஒர் இருக்கையைக் காட்டலாலே அவ்விருக்கையின்கண் இனிது வீற்றிருந்து அவர் கூறுகின்ற சிறந்த அறவுரைகளை விழிப்புடன் கேட்டனன் என்க. (29)
------------
332. முனிவர் கூறும் அறவுரைகள்
அறத்திற முனிவன் சொல்ல வரசனுங் கேட்க லுற்றான்
பெறற்கரு மருங்க லங்கள் பேணுதற் கரிய வாகும்
திறத்தறி பொருள்க ளாறுந் தேர்ந்துபஞ் சாத்தி காயம்
மறித்தறி தத்து வங்கள் வரிசையி னேழ தாமே.
(இ - ள்.) முனிவன் அறத்தினிலக்கணங்களை விரித்துக் கூற உதயணமன்னனும் ஆர்வத்தோடு கேட்பானாயினன், பெறுதற்கரிய அருங்கலங்களாகிய நன்ஞானம் நற்காட்சி நல்லொழுக்கம் என்பனவற்றைப் பேணுதல் யாவர்க்கும் அரியசெயலேயாம். அறிவாற்றலாலே அறிதற்கியன்ற சீவன் புற்கலம் தருமம் அகருமம் ஆகாயம் என்னும் ஐந்தத்திகாயங்களும் இவற்றோடு காலஞ் சேர்தலாலாகிய அறுவகைப் பொருள்களும் மீண்டும் அறிதற்குரிய சீவன் அசீவன் ஆசுவரம் சம்வரம் நிச்சரம் கட்டு வீடு என்னும் முறைமையாற் கூறப்படும் எழுவகைப் பொருள்களும் என்க. (30)
------------
333. இதுவுமது
சீரிய நவப தங்கள் செப்பிய காய மாறும்
வீரியப் பொறிக ளாறும் வேண்டிய வடக்க மாகும்
ஓரிய லறம்பத் தோடு மொருங்குபன் னிரண்டு சிந்தை
ஆரிய ரறிந்து நம்பி யதன்வழி யொழுக்க மாகும்.
(இ - ள்.) சிறப்புடைய சீவன் அசீவன் புண்ணியம் பாவம் ஆசுவரம் நிச்சரம் கட்டு வீடு என்னும் ஒன்பது பொருளும் ஆறுவகைச் சீவநிகாயங்களும் வீரியமுடைய பொறிகளாறும் அவற்றை அடக்க வேண்டிய அடக்கமாகின்ற பத்துவகை அறங்களோடு பன்னிரண்டு வகைச் சிந்தையும் ஆகிய இவையிற்றை யெல்லாம் மேலோர் அறிந்தவழி நல்லொழுக்கம் உண்டாகும் என்றார் என்க. (31)
-----------
334. இதுவுமது
தலைமகார் சிறப்புச் செய்து தன்மைநல் வாய்மை யான
கலையினற் கரையைக் கண்டு காதனூல் வழியைச் சென்று
மலைவில்சீர் மாத வர்க்கு வண்மையிற் றானஞ் செய்தார்
தொலைவிலாப் பிறவி நீங்கித் தொல்சுகக் கடலு ளாழ்வார்.
(இ - ள்.) தலைமையுடைய மக்களாய்த் தோன்றி அப்பிறப்பிற்குரிய சிறப்புச் செயல்களைச் செய்து நற்பண்பென்னும் உண்மை பொதிந்த மெய்ந் நூல்களின் நல்ல எல்லை தேர்ந்து அன்போடு அம்மெய்ந்நூல் கூறும் நெறியிலே சென்று மாறுபாடில்லாச் சிறப்பையுடைய பெரியோராகிய துறவோர்க்கு வள்ளன்மையினாலே தானம் செய்தவர் ஒழியாத பிறப்பிணியினின்றும் நீங்கிப் பழைமையான வீட்டின்பம் என்னும் கடலிலே மூழ்கித் திளைப்பர் என்றார் என்க.(32)
-----------
335. இதுவுமது
கலிவிருத்தம்
தரும வீரர் தரும முரைத்திடப்
பெருமை மன்னனும் பேர்ந்து வணங்கினன்
மருவு வல்வினை மாசி னுதிர்த்திட
தெரிச னவ்விளக் கஞ்சிறப் பானதே.
(இ - ள்.) தருமவீரர் என்னும் அம்முனிவர் இவ்வாறு நல்லறங்களை விரித்துக் கூறுதலாலே பெருமையுடைய அவ்வுதயண வேந்தன்றானும் அவர்பால் நன்மதிப்பும் அன்பும் உடையனாய் மீண்டும் அவர் திருவடிகளை வணங்கினன். அம்மன்னவனுடைய வலிய வினைகள் தாமும் துகள்பட்டுதிர்ந் தொழிந்தன. உதயணனுக்கு நன்ஞானம் முதலியன நன்கு விளங்கிச் சிறப்புற்றன என்க. (33)
-----
336. உதயணன் அம்முனிவன்பால் களிற்றின் வரலாறு வினவுதலும் முனிவன் கூறலும்
காது வேன்மன்னன் களிறு கதமெழற்
கேது வென்னென யெதிவ ரன்சொலும்
தாது பூம்பொழிற் சாலிநன் னாட்டிடை
வேதி யர்குழு வாய்விளங் கும்புரம்.
(இ - ள்.) பகைவரைக் கொல்லும் வேற்படையினையுடைய அவ்வேந்தன் அம்முனிவரை நோக்கிப் “பெரியீர்! இக்களிற்றியானை இவ்வாறு சினந்தெழுதற்குக் காரணம் என்னையோ?” என்று வினவலும், அம்முனிப்பெரியோன் கூறுவான்-- “வேந்தே! கேள், மகரந்தத்தையுடைய மலர்ப்பொழின் மிக்க சாலி என்னும் நல்ல நாட்டின்கண் பார்ப்பனக்குடிகளே கூட்டமாய் வாழாநின்ற விளக்கமுடைய ஊரொன்றுளதுகாண்,” என்றான் என்க. (34)
-----------
337. இதுவுமது
கடக மென்பதூர் காதற் பிராமணன்
விடப கன்னெனும் பேரினன் மற்றவன்
இடைமின் றேவியுஞ் சானகி யென்பவள்
கடையில் காமங் கலந்துடன் செல்லுநாள்.
(இ - ள்.) “கடகம் என்னும் பெயரையுடைய அவ்வூரின்கண் விடபகன் என்னும் அன்புமிக்க அந்தணன் ஒருவனும் அவனுடைய மனைக் கிழத்தியாகிய மின்னிடையுடைய சானகி என்னும் பார்ப்பனியும் இறுதியில்லாத காமமுடையவராய்க் கூடி வாழ்கின்ற நாளிலே” என்றான் என்க. (35)
----------------
338. இதுவுமது
அமரி யென்னு மணிமுலை வேசிதன்
அமையுங் காமத் தழுங்கி விழுந்தவன்
சமைய வேள்வியுஞ் சார்ந்த வொழுக்கமும்
அமைவி லன்பவ மஞ்சின னில்லையே.
(இ - ள்.) அவ்வந்தணன் ‘அமரி’ என்னும் பெயரையுடைய அழகிய முலையினையுடைய ஒரு கணிகையின்பாற் றன் மனத்திலெழுந்த காமத்தாலே பெரிதும் வருந்தி அவளோடுகூடி இன்பத் தழுந்திக் கிடப்பவன் தன் பிறப்பிற்குரிய சமய வேள்வியையும் அது சார்ந்த பிற அறவொழுக்கங்களையும் அஞ்சாது கைவிட்டனன்” என்றான் என்க. (36)
-----
339. இதுவுமது
காமங் கள்ளுண்டு கைவிட லின்றியே
தாம நற்குழ லாடுணை யாகவும்
யாம மும்பக லும்மறி யாதவன்
ஆமர ணத்தின்பி னானைய தாயினன்.
(இ - ள்.) “மேலும் அப்பார்ப்பனன் காமத்தோடு கள்ளுமுண்டு அக்கணிகையைக் கைவிடுதலின்றி மலர்மாலை யணிந்த கூந்தலையுடைய அக்கணிகையே தனக்குறுதுணையாகும்படி பகலிது இரவிது என்று எண்ணாது அவளோடு கிடந்தவன் இயல்பாக உண்டாகும் சாவின் பின்னர், அத்தீவினை காரணமாக இக் களிறாகிய விலங்குப் பிறப்பெய்தினன்” என்றார் என்க. (37)
--------------
340. முனிவர் உரைகேட்ட முடிமன்னன் செயல்
அந்நிலை யுணர்ந் தடங்கியதென்றனர்
மன்னன் கேட்டுடன் வந்துநற் பாகர்க்குச்
சொன்ன யானையைத் தூயநீ ராட்டெனும்
அன்னம் பானெய்யி னன்புட னூட்டெனும்.
(இ - ள்.) “பண்டுசெய்த நல்வினை காரணமாக ஈண்டு யாம் கூறிய அறவுரையைக் கேட்புழித் தன் பழம்பிறப்புணர்வு வரப்பெற்று இவ்வாறு அடங்கியது காண்” என்று அறிவித்தனர், அக்களிற்றின் வரலாற்றினைக் கேட்டதுணையானே உதயணன் அதன்பாலிரக்க முடையவனாய்த் தன் அரண்மனை யடைந்து ஏவலரை விளித்து இக் களிற்றினைத் தூய நீரிலே ஆட்டுவீராக! வென்றும், அதற்கு அன்போடு பாலும் நெய்யுங் கலந்து கவள மூட்டுமின்! என்றும் கட்டளையிட்டான் என்க. (38)
------------------
341. இதுவுமது
கவள நாடொறு மூட்டெனுங் காவலன்
பவள மாமெனும் பண்ணவர் தம்மடி
திவளு மாமுடி சேர்த்து வணங்கியே
உவள கத்துன்னி மற்றொன்று கேட்டனன்.
(இ - ள்.) அன்பு காரணமாக அக் களிற்றியானைக்கு இனிய கவளத்தை நாள்தோறும் ஊட்டுக! என்று கட்டளையிட்ட அம்மன்னவன் மீண்டும் சென்று அத்தரும வீரருடைய பவளம் போன்று சிவந்த திருவடிகளில் ஒளி திகழ்கின்ற சிறந்த முடியையுடைய தன்றலையினைச் சேர்த்தி வணங்கித் தன்னெஞ்சம் உழலுதற்குக் காரணமான மற்றோர் ஐயத்தையும் தீர்த்துக் கோடற்கு எண்ணி வினவினன் என்க. (39)
-----------
342. உதயணன் முனிவரை மற்றொன்று வினவுதல்
மதக்க ளிற்றின்மேன் மன்னிய வன்பெனக்
குதவக் காரண மென்னெனக் கூறலும்
சிதைவில் காட்சிநற் சீரொழுக் கத்தவர்
மதமின் மாட்சியர் மன்னநீ கேளென்றார்.
(இ - ள்.) “பெரியீர்! அக்களிற்றின் வரலாறன்னதாகுக!; எனக்கு அம் மதகளிற்றின் மேல் நிலைபெற்ற அன்பு வருதற்கியன்ற காரணந்தான் என்னையோ? என்று அம் மன்னவன் வினவுதலும் குற்றமற்ற நன் ஞானத்தையும் சிறப்புடைய நல்லொழுக்கத்தையும் தன்முனைப்பற்ற மாண்பினையும் உடையவராகிய அம் மாமுனிவர் “அரசே கேள்!” என்று கூறலானார் என்க. (40)
-------------
343. முனிவர் கூற்று
உள்ள நற்றவ ருற்றுரை செய்கின்றார்
கள்ள விழ்பொழிற் கார்முகில் சூடியே
வெள்ளி யம்மலை மேல்வட சேடியில்
வள்ளலார் பொய்கை மத்திம நாட்டினுள்.
(இ - ள்.) நெஞ்சம் நல்ல தவத்தாலே நிரம்பிய அம்முனிவர் அவ் வினாவைச் செவியேற்று அதற்கு விடை கூறுகின்றவர், “வேந்தனே! தேன்றுளிக்கும் மலர்ப் பொழில்கள் மிக்கதும் கரிய முகில்களைச் சூடிக் கொண்டிருப்பதும் ஆகிய வெள்ளிமலையின் மேல் வடசேடியின்கண் வள்ளன்மை பொருந்திய பொய்கைகள் மிகுந்த நடுநாட்டின்கண்” என்றார் என்க. (41)
---------------
344. இதுவுமது
சுகந்தி யூர்க்கிறை சொற்புகழ் மாதவன்
அகந்தெ ளிந்த வயந்தன் மனைவியாம்
செகந் தனிப்புகழ் சீரார்கு லாங்கனை
உகந்து பெற்றன ளோர்புகழ்க் கோமுகன்.
(இ - ள்.) சுகந்தி என்னும் ஊர்க்கு அரசனும், புலவர் சொல்லாலே புகழ்தற்கியன்ற பெரிய தவத்தையுடையவனும், உள்ளந் தெளிந்தவனும் ஆகிய வயந்தன் என்பவன் மனைவியும் உலகமே சிறப்பாகப் புகழ்தற்குரிய சீர்மை பொருந்திய குலாங்கனைஎன்னும் பெயரையுடையவளுமாகிய மடந்தை மனமுவந்து ஒப்பற்ற புகழையுடைய கோமுகன் என்பவனை ஈன்றாள்” என்றார் என்க. (42)
345. இதுவுமது
காம னெனனுமக் காளைகைத் தாய்பெயர்
சோம சுந்தரி யென்னுஞ் சுரிகுழல்
நாம வேன்மக னன்மை விசையனும்
சேம மித்திர ராகச் சிறந்தனர்.
(இ - ள்.) காமவேளை யொத்த கோமுகன் என்னும் அக்கோமகனும் அவன் செவிலித் தாயாகிய சோமசுந்தரி என்னும் பெயரையுடைய சுரிந்த கூந்தலையுடைய மடந்தையின் மகனாகிய அச்சந்தரும் வேலேந்திய மறநலம் பெற்ற விசையன் என்பானும் ஒருவர்க் கொருவர் பாதுகாவலாகிய நண்புடையராகச் சிறந்து திகழ்ந்தனர் என்றார், என்க. (43)
------------
346. இதுவுமது
ஒழியாக் காத லுடன்விளை யாடியே
வழுவில் போகம் வரம்பின்றித் துய்த்தலும்
நழுவில் காட்சிய னாமவேற் கோமுகன்
ஒழிய நல்லுயிர் ஓங்கிநீ யாயினை.
(இ - ள்.) “அவ்விருவரும் தீராத பேரன்புடனே கூடி விளையாடிக் குற்றமற்ற நல்வின்பங்களையும் எல்லையின்றி நுகர்வாராயினர். அவருள் கெடுதலில்லாத நற்காட்சியினையும் அச்சந்தரும் வேற்படையினையும் உடைய கோமுகன் என்பான் நல்லுயிர் நீங்கிப் புகழால் ஓங்கிய நீயாகப் பிறந்தான்,” என்றார் என்க. (44)
-----------
347. இதுவுமது
விசையன் றன்னுயிர் விட்டந் தணனாய்
வசையில் காம மயங்கிய மோகத்தின்
இசையி னாலுயிர் நீங்கியே யிங்குவந்
தசையு ணாக்களி றாயின தாகுமே.
(இ - ள்.) “எஞ்சிய அவ்விசையனும் உயிர் நீத்து அந்தணனாகி அப்பிறப்பிலே வசையோடே மிக்க காமத்தாலே மயங்கிய மயக்கங் கூடியதாலே இறப்புற்று இந்நகரத்தே வந்து அசைந்துண்ணுமியல்புடைய இக் களிற்றியானையாகப் பிறந்தான்” என்றார் என்க. ஆயினது: திணைவழு. (45)
------------
348. இதுவுமது
மித்தி ரன்முன்பு வீறுநற காதலால்
அத்தி மேலுனக் கன்புமுண் டானதால்
வெற்றி வெண்குடை வேந்தேயிவ் வேழத்தின்
ஒத்த வாயுவு மேரெழு நாளென்றார்.
(இ - ள்.) “வெற்றியையுடைய வெள்ளைக்குடையினையுடைய வேந்தே! முன்னொரு பிறப்பிலே இக் களிறு உனக்கு நண்பன் ஆதலால் அப்பிறப்பிலே மிக்க பேரன்புடையையாயிருந்தமையாலே இக்களிற்றின் மேல் உனக்கு அன்புண்டாயிற்றுக் காண்! உதயண! இந்தக் களிறு இன்னும் வாழும் நாள்கள் ஏழே எஞ்சியிருக்கின்றன; அவ்வேழுநாளும் கழிந்தால் இஃதிறந்துபோம்” என்றும் கூறினர்; எனக. (46)
----------
349. உதயணன் வருந்திக் கூறுதல்
திருந்து ஞானத்திற் றேர்ந்த முனியுரை
பொருந்தக் கேட்ட புரவலன் றுக்கமாய்
வருந்திச் சென்றந்த வாரணந் தன்னிடைச்
சரிந்த காதலிற் றானுரை செய்கின்றான்.
(இ - ள்.) திருந்திய மெய்யுணர்வினாலே தெளிந்த அத்துறவியின் மொழிகளை மனம் பொருந்தக் கேட்ட உதயண வேந்தன் ஏழு நாளில் அக்களிறு இறந்தொழியும் என்றுணர்ந்தமையாலே பெரிதும் வருந்தி அந்த யானையின்பால் சென்று அதன் மிசை அழுந்திய தனது பேரன்பாலே கூறுகின்றவன் என்க. (47)
--------------
350.உதயணன் செயல்
வஞ்ச கத்தின் வரிந்துங் கயிற்றினால்
வெஞ்செம் முள்ளினை வீறிட வூன்றியும்
மிஞ்சிக் கால்விலங் கிற்சிறை செய்தனன்
குஞ்ச ரம்பொறை கொள்ளுதி யென்னவே.
(இ - ள்.) “களிறே! யான் நின்னைக் கயிற்றால் ஏனைய யானையைக் கட்டுமாறே கட்டியும் வெவ்விய செவ்விய இருப்பு முள்ளினை நீ வருந்தி அலறும்படி நின் உடம்பிற் பாய்ச்சியும் மிகையாகவே நின் காலில் விலங்கு பூட்டியும் நின்னைச் சிறை செய்தேன். அறியாமையால் யான் செய்த பிழைகளைப் பொறுத்தருளுக!” என்று வேண்டினன் என்க. (48)
-----
351. இதுவுமது
காதல் யானையைக் கையின்மெய் தீண்டியே
போத வெங்கும் புரவலன் றைவரப்
போத கம்மிகப் பொற்பி னிறைஞ்சலிற்
காத லிற்றிண் களிற்றியல் கூறெனா.
(இ - ள்.) தன் பேரன்பிற்குரிய அந்த யானையைப் பின்னரும் அவ் வேந்தன் தன் கைகளாலே தீண்டி மிகவும் உடலெங்கும் தடவியன்பு செய்ய அக்களிறுதானும் மிகவும் பொலிவுடையதாய் அவனை வணங்கலாலே, அது கண்ட மன்னன் யானைப்பாகனை நோக்கி இக் களிற்றியானையை விழிப்புடனிருந்து பேணி அதன் நிலைமை.யை எனக்கு அறிவித்திடுக! என்று பணித்தென்க. (49)
----------
352. உதயணன் அரண்மனை புகுதல்
யானை யாளர்க் குரைத்தெழின் மன்னவன்
தேனெய் தோய்ந்த திருமொழி மாதவர்
ஆன வர்பத மன்பிற் றொழுதுபோய்ச்
சேனை சூழத் திருமனை சேர்ந்தனன்.
(இ - ள்.) இவ்வாறு யானைப்பாகர்க்குக் கட்டளையிட்டபின் அழகிய அம் மன்னன் தேனும் ஆனெயும் விரவியதன்ன பயன்மிக்க அழகிய மொழிகளையுடைய அந்த முனிவருடைய திருவடிகளை அன்போடு தொழுது அவணின்றும் நீங்கித் தன் படைகள் சூழ்ந்துவரச் சென்று தன் அரண்மனை புகுந்தனன் என்க. (50)
---------------
353. உதயணகுமரன் இறைவழிபாடு செய்தல்
ஆசிரிய விருத்தம்
சீலமும்வ ளங்களுஞ் செறிந்தவேழத் தன்மையை
காலையவ்வு ழையர்வந்து கண்டுரைப்ப மன்னனும்
ஆலையம் வலமதா யருகனைவ ணங்கிப்பின்
பாலடிசி னெய்யருந்திப் பாரரசன் செல்லுநாள்.
(இ - ள்.) வழிநாட் காலையில் யானைப்பாகர் அரசன்பால் வந்து வணங்கி அக்களிற்றியானையின் நல்லொழுக்கங்களையும் அதன் பண்பு வளங்களையும் உணர்ந்து அம்மன்னனுக்குக் கூறா நிற்ப அதுகேட்ட மன்னன் மனவமைதியுடையவனாய் அருகக் கடவுளின் திருக்கோயிலுக்குச் சென்று நாடோறும் வலம் வந்து அவ் விறைவனை வணங்கிய பின்னரே பாலடிசிலை நெய் பெய்தருந்தி இனிதே வாழ்கின்ற நாளிலே என்க. (51)
-----------
354. உதயணன் செயல்
சல்லகீணை கொண்டுடன் சமாதிவந்தே யெய்தலும்
நல்லவானிற் றேவனாய் நாகமுறை செய்யக்கேட்டுச்
சொல்லரிய வேந்தனுஞ் சூழ்ந்தவனி போகமும்
நில்லலவென் றுணர்ந்தன னேமியனைவா வென்றனன்.
(இ - ள்.) அக் களிற்றியானையின் அகவை நாள் ஏழும் கழிந்தவுடன் அது மெய்ஞ்ஞானம் பிறந்து சமாதி கூடுதலாலே அவ் விலங்குப் பிறப்பிற் றீர்ந்து நன்மையுடைய மேனிலை யுலகத்தே சென்று தேவப் பிறப்பெய்தினமையையும் உதயணன் முனிவர்பாற் கேட்டுணர்ந்து சொல்லுதற்கரிய புகழையுடைய அவ் வேந்தனும் தன்னுள் ஆராய்ந்து இவ்வுலக வின்பங்கள் நிலையுதல் உடையன வல்ல, என்று உணர்ந்து வித்தியாதர சக்கரவர்த்தியாகிய நரவாகனன் ஈண்டு வருக! என்று கருதினன் என்க. (52)
-------------
355. நரவாகனன் வருதலும் உதயணன் அவனுக்குக் கூறலும்
அவனும்வந்து தந்தையை யடியிணைவ ணங்கினான்
அவனியுன தாகவா ளென்னமன்னன் செப்பினன்
தவனிதை யாளநான் றாங்குதற்குப் போவனே
உவமமிலா ராச்சிய முற்றதெதற் கென்றனன்.
(இ - ள்.) அந் நரவாகனனும் தந்தை நினைத்தாங்கு வித்தியா தரருலகினின்றுமிழிந்து கோசம்பி நகரெய்தி தந்தையின் திருவடிகளை வணங்கினன். அவன் வரவு கண்ட மன்னனும் மகிழ்ந்து “அருமை மைந்தனே! இந்நிலவுலக ஆட்சியும் நின்னுடையதாக நீயே இதனை ஆள்வாயாக” என்று கூறினன். அதுகேட்ட நரவாகனன் “தந்தையே! தவத்தால் பெறக்கிடந்த கேவலஞான நன் மடந்தையை மணந்தின்புறக் கருதி அத்தவத்தை மேற்கோடற்குத் துறந்து போவேன் ஆகலின் ஒப்பற்ற இந்நிலவுலக ஆட்சி எனக்கு எதற்காம்?” என்றும் கூறினன் என்க. (53)
-----------
356. கோமகனுக்கு முடி சூட்டுதல்
வத்தவன் னிறைவனாக மன்னுகோ முகனுக்கு
வெற்றிநன்ம ணிமுடியை வீறுடனே சூட்டியே
ஒத்துலக மாள்கவென் றுரைபல வுரைத்தபின்
சித்திரநேர் மாதரைச் செல்வனோக்கிக் கூறுவான்.
(இ - ள்.) மைந்தன் கூறக்கேட்ட அவ் வத்தவ மன்னன் இளங்கோவாக முன்னரே நிலைபெற்றுள்ள கோமுகனுக்கே வெற்றி யுடைய அழகிய கோமுடியை வீறு பெறச் சூட்டி, “மைந்த! நீ நம் முன்னோர் போன்று இவ்வுலகினை ஆள்வாயாக!” என்று பணித்து அவனுக்கின்றியமையா அரசியலறம் பலவற்றையும் அறிவுறுத்திய பின்னர் ஓவியமே போன்ற உருவ மாண்புடைய தன் மனைவிமாரை நோக்கி அவ்வுதயண வேந்தன் கூறுவான் என்க. (54)
--------------
357. உதயணன் மனைவிமார்க்குக் கூறுதலும், அவர் கூறுதலும்
தேவியீர்நீர் வேண்டியதென் திருமனை துறந்துபின்
மேவுவனற் றவமென்ன மின்னிடைய மாதரும்
போவதுபொ ருளெமக்கும் புரவலனே நின்னுடன்
தாவில்சீர் விழுத்தவமுந் தாங்குதுமென் றிட்டனர்.
(இ - ள்.) “எம்மருமை வாழ்க்கைத் துணைவியீர்! யான் அழகிய இம் மனைவாழ்க்கையைத் துறந்து தவமேற்கொண்டு செல்வேன்; ஆகலின் நீயிர் வேண்டியதியாது? கூறுமின!்” என்று வினவ, மின்போன்ற நுண்ணிடையை யுடைய அத் தேவிமார் தாமும், “புரவலனே! எமக்கும் தவத்தின்மேற் செல்வதே பொருளாகும்; ஆகவே நும்முடனே வந்து யாமும் எமக்காகும் குற்றமற்ற சிறந்த தவத்தையே கேற்கொள்வேம்” என்று கூறினர் என்க. (55)
-------------
358. தேவிமாரும் அமைச்சரும் அரசனுடன் செல்லுதல்
உருமண்ணு விடபகன் யூகிநல் வயந்தகன்
பொருவினா லமைச்சரும் பொற்பரசன் மாதரும்
மருவுநன் மலர்ப்பொழில் வண்மைவலங் கொண்டுமிக்
கருண் முனிவர் பாதத்தி லன்புடன் பணிந்தனர்.
(இ - ள்.) பொலிவுமிக்க அரசனுடைய தேவிமாராகிய வாசவதத்தை, பதுமாபதி, மானனீகை, விரிசிகை என்னும் நால்வரும் ஒப்பற்ற அமைச்சராகிய யூகி உருமண்ணுவா இடபகன் வயந்தகன் என்னும் நால்வரும் ஆகிய எண்மரும் உதயண மன்னனுடனே சென்று தருமவீரர் என்னும் முனிவர் உறையும் வளமிக்க நல்ல மலர்ப் பொழிலை வலமாக வந்து மிக்க அருளைப் பொழிகின்ற அம்முனிவர் திருவடிகளிலே வீழ்ந்து அன்புடன் வணங்கினர் என்க. (56)
-------------
359. உதயணன் முனிவரைத் தவந்தர வேண்டல்
நாத்தழும்ப மன்னனு நயமுறு மினிமையின்
தோத்திரங்கள் கொண்டுமீத் தொடுத்தொலியின் வாழ்த்தியே
ஏத்தற முரைத்தி்ட வினிமைவைத்துக் கேட்டனன்
ஏத்தரிய நற்றவமு மெங்களுக் களிக்கென்றான்.
(இ - ள்.) முனிவரை வணங்கிய உதயண வேந்தன்றானும் தனது நாத்தழும்பும்படி நயமிக்க இனிய குரலாலே அம் முனிவனுக்கு வாழ்த்துப் பாடல் பல புனைந்து பண்ணோடு பாடி வாழ்த்திய பின்னர் அம்முனிவர் பெருமான் தேவரும் புகழும் நல்லறங்களை அறிவுறுத்த இனிமையோடு கேட்டனன். பின்னரும் பெரியீா!் புகழ்தற் கரிய நல்ல தவத்தையும் அடியேங்கட்கு அறிவித்தருளுக! என்று வேண்டினன் என்க. (57)
------------
360. உதயணன் முதலியோர் தவக்கோலங் கோடல்
காலமிது காட்சிதலை கண்டுணர்த்தக் கைக்கொண்டு
ஞாலநிகழ் ஞானமு நன்குமிகவே யுணர்த்திச்
சீலமாதி யாயொழுக்கஞ் சீருட னளித்தபின்
கோலமான குஞ்சிமுதல் வாங்கித்தவங் கொண்டனர்.
(இ - ள்.) அம்முனிவர் பெருமானும் இவர்க்குத் துறவற முணர்த்தற் குரிய காலமும் இஃதேயாம் என்று துணிந்து, உலகத்தைப்பற்றி யுண்டாகும் நன்ஞானமும் நற்காட்சியும் நல்லொழுக்க முதலிய ஒழுக்கத்தையும் சிறப்புறவே நன்கு அவர்கட்குணர்த்திய பின்னர் அம் மன்னன் முதலியோர் அழகான தம் குஞ்சியும் கூந்தலுமாகிய தலைமயிரைப் பறித்து நீக்கித் தவக்கோலந் தாங்கினர் என்க. (58)
-----------
361. உதயணன் முதலியோர் தவநிலை
அறுவகைய காயங்களை யருண்மிக்குற் றோம்பியும்
பொறிகளை மனத்தடக்கிப் புண்ணியமா நோன்புகள்
அறிகுறி யநசன மாற்றுதற் கரிதென
மறுவறு தியானமு மதியகந் தெளிந்தவே.
(இ - ள்.) உதயணன் முதலியோர் ஆறுவகைப்பட்ட சீவ நிகாயங்களையும் அருட்பண்பு மிக்குப் பாதுகாத்தும் பொறிகளைப் புலன்களிற் செல்லாமல் மனத்தினுள்ளடக்கியும், அறமாகிய சிறந்த நோன் புகட்கெல்லாம் அறிகுறியாகிய உண்ணாமை முதலிய நோன்புகளைக் கண்டோர் இவர் போல ஆற்றுதல் பிறர்க்கரிதாம் என்னும் படி ஆற்றிக் குற்றமற்ற தியானத்திருத்தலாலே அவர் உள்ளமும் நன்கு தெளிந்தன என்க. (59)
------------
362. இதுவுமது
புறத்தினும் மகத்தினும் போகத்தொடர்ப் பாடுவிட்
டறத்திடை யருளினா லாருயிரை யோம்பியும்
திறத்துடன் சமிதியும் சிந்தையி னடக்கமும்
திறத்திறத் துணர்ந்துபின் றியானமுற்றி னார்களே.
(இ - ள்.) புறத்திலும் உள்ளிலும் இன்ப நுகர்ச்சியின் தொடர்ப்பாட்டினை விட்டு அறத்தினுள் வைத்து அருளுடைமை யாலே அரிய உயிரினங்களைப் பாதுகாத்தும் ஆற்றலோடு ஈர்யாச மிதி பாடணாசமிதி ஏடணாசமிதி ஆகான நிக்கேப சமிதி உச்சர்க்க சமிதி என்னும் ஐவகைத் துறவாசாரங்களையும் மனவடக்கத்தையும் படிப்படியாக வுணர்ந்து பின்னர்த் தியானத்தாலும் முதிர்வு பெற்றனர் என்க. (60)
-----------
363. இதுவுமது
ஒருவகை யெழின்மன மிருவகைத் துறவுடன்
மருவுகுத்தி மூன்றுமே மாற்றிநான்கு சன்னையும்
பொருவிலைம் புலம்மடக்கிப் பொருந்தியவா வச்சமூ
விருவகைச் செவிலியு மெழுவரையும் வைத்தனர்.
(இ - ள்.) ஒருவழிப்படுத்த அழகிய மனமும் உட்டுறவும் புறத்துறவும் என்னும் இருவகைத்துறவும் அத்துறவோடு பொருந்திய மனவடக்கம் மொழியடக்கம் மெய்யடக்கம் என்று கூறப்படும் மூன்று வகை அடக்கங்களும் உடையவராய், உணவு எண்ணம் பெண்ணெண்ணம் அச்சவெண்ணம் கைப்பற்றுமெண்ணம் என்னும் நான்கு வகை எண்ணங்களை மாற்றி ஒப்பற்ற ஐம்புலன்களையும் அடக்கி நிலைபெற்றபடியே அறுவகை ஆவச்சமுமாகிய செவிலிமாரையும் எழுவகைக் குணங்கள் என்னும் நண்பரையும் தந்தவமாகிய குழந்தை வளர்தற்கு நியமித்து வைத்தனர் என்க. (61)
----------
364. இதுவுமது
சுத்திமிக எட்டினோடுஞ் சூழ்ந்தயோகு ஒன்பதாம்
பத்துவகை யூற்றடைத்துப் பயின்றவங்கம் பத்தொன்றும்
சித்தம்பனி ரெண்டுசீர்க் கிரியைபதின் மூன்றுடன்
ஒத்தபங்க மீரேழும் ஒருங்குடன் பயின்றனர்.
(இ - ள்.) தூய்மை மிகும்படி கேசேலுஞ்சனம் முதலிய எண்வகைக் குணங்களோடு ஒன்பது வகையான யோகங்களையும் உடையராய் வெப்பந்தட்பம் முதலியவற்றைத் தாங்கலாகிய பத்துவகைப் புறப்பரிசைகளையும் உடையராய் வினைவரும் வாயிலை அடைத்துப் பயின்ற பதினொருவகை யுறுப்புக்களோடும் பசி நீர்வேட்கை முதலியவற்றைப் பொறுத்தலாகிய பன்னிரண்டு அகப்பரிசைகளையும் உடையவராய்ச் சிறந்த பதின்மூன்றுவகைக் கிரியைகளையும் ஒத்த பதினான்கு பங்கங்களையும் ஒருசேரப் பயின்றனர் என்க. இவற்றிற் சுருக்கமாகக் கூறப்பட்டவற்றை அட்டபதார்த்தசார முதலியவற்றால் விளக்கமாக அறிந்து கொள்க; ஈண்டுரைப்பிற் பெருகும். (62)
--------------
365. உதயணன் கேவலஞான மெய்துதல்
உதயண முனிவனு மோங்குமா வரைதனில்
இதயமினி தாகவே யெழில்பெறநல் யோகமாய்
இதமுறு தியானத்தி னிருவினை யெரித்துடன்
பதமினிது சித்தியெய்திப்
பரமசுகத் தினிதிருந்தனன்
(இ - ள்.) இவ்வாறு உதயண முனிவனும் உயர்ந்த பெரிய மலையிலே தனது நெஞ்சம் இனிதாகும்படி அழகிய யோகத்திருந்து இன்புறுதற்குக் காரணமான தியானத்தினாலே இருள் சேர் இரு வினைகளையும் சுட்டெரித்துக் கேவல ஞானம் கைவறப் பெற்றுக் கடையிலாப் பேரின்பத்தே இனிதாக நிலைபெற்றிருப்பானாயினன் என்க. (63)
-----------
366. தேவிமாரும் அமைச்சரும் நோன்பு செய்து தேவராதல்
அமைச்சரா மநகரு மானவன்ன மாதரும்
சமைத்த நோன்பு நோற்றுயர்ந்து சமாதிநன் மரணத்தின்
இமைத்தலில் லமரரா நிறைந்தசோத மாதியாய்
அமைத்தவச் சுதம்மள வானபடி யின்புற்றார்.
(இ - ள்.) யூகி முதலிய அமைச்சர்களும் துறந்துவந்தவரான அக் கோப்பெருந்தேவிமாரும் நூல்களில் விதிக்கப்பட்ட நோன்புகளை மேற்கொண்டு நின்று உயர்ந்தவராய்ச் சமாதி கூடிய நல்ல தம் சாக்காட்டின் பின்னர் அவ்வவர் நோன்பின் தகுதிக்கேற்பச் சௌதரும கற்பயோகம் முதல் அச்சுத கற்பயோக மீறாகவுள்ள தேவலோகங்களிலே பிறப்பெய்தித் தத்தம் தகுதிக்கியன்ற இன்ப வாழ்வினை யெய்தினர் என்க. (64)
-------------
367. தேவிமாரும் அமைச்சரும் தேவலோகத்தின் புற்றிருத்தல்
பொற்புடைநன் மாதரைப் புணர்ந்துமேனி தீண்டலும்
அற்புதமாய்க் காண்டலு மானவின்சொற் கேட்டலும்
கற்புடைம னத்திலெண்ணிக் காணற்கரி தாகவே
விற்பனநன் மாதவர் வேண்டுசுகந் துய்த்தனர்.
(இ - ள்.) வித்தகமுடைய அமைச்சரும் தேவிமாருமாகிய அத்தவத்தினர் மேனிலை யுலகத்தே தேவர்களாய்த் தோன்றி அங்கு அழகிய தேவமாதர்களைப் புணர்ந்து அவர் தம் திருமேனியைத் தீண்டலாலும் அவர்களை வியப்பாக நோக்குதலாலும் அவர் கூற வனவாகிய இனிய சொற்களைக் கேட்டலாலும் கற்பு மிக்க தம் மனத்தாலும் ஆராய்ந்து காண்டற்கரிதாகவே தாம் தாம் விரும்பு மாற்றாலே விரும்பிய இன்பத்தை நுகர்ந்தினிது வாழ்வாராயினர்; என்க. (63)
ஆகச் செய்யுள் 367
உதயணகுமார காவியமும் உரையும் முற்றும்
---------------
உதயணகுமாராவியம் : காண்டங்களின் & செய்யுட்டொகை
அறுசீர்கழிநெடிலடிாசிரிய விருத்தம்
உஞ்சைநற் காண்டந் தன்னி லுயர்கவி நூற்றீ ரெட்டு
மிஞ்சவே யிலாவா ணத்தின் வீறுயர் முப்ப தாகும்
எஞ்சலின் மகத காண்ட மெழிலுடை முப்பத் தஞ்சாம்
அஞ்சுட னைம்பத் தொன்றா மரியவத் தவத்திலன்றே
நறுமலர் மாலை மார்ப னரவாக காண்டந் தன்னில்
அறுபது மொன்றுமாகு மாகிய துறவுக் காண்டம்
அறுபது மஞ்சு மாகு மன்புவைத் தோது வோர்க்குந்
திறவதிற் கேட்ப வர்க்குஞ் சிவகதி யாகு மன்றே
நூற்றீரெட்டு நூற்றுப்பதினாறு முதலில் உள்ள கடவுள் வாழ்த்து அவையடக்கம்
பயன்கூறும் நான்கு செய்யுளையும் நீக்கி உஞ்சைக் காண்டச் செய்யுட் டொகை காண்க
--------------
This file was last updated on 12 Nov. 2017
Feel free to send corrections to the webmaster.