சோழர் வரலாறு (பாகம் 2)
டாக்டர். மா. இராசமாணிக்கனார்
cOzar varalARu -part 2
by mA. rAcamAnikkanAr
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Tamil Virtual Academy for providing a scanned image
version of this work for the etext preparation. This work has been prepared using the
Google Online OCR tool to generate the machine-readable text and subsequent proof-reading.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2017.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
சோழர் வரலாறு (பாகம் 2)
டாக்டர். மா. இராசமாணிக்கனார்
Source:
சோழர் வரலாறு
டாக்டர். மா. இராசமாணிக்கனார்
பூரம் பதிப்பகம்
சென்னை - 33(மேற்கு மாம்பலம்)
முதற் பதிப்பு 1947, மறுபதிப்பு 1985, 1999, 2005
பக்கங்கள் 354
--------
உள்ளடக்கம்
இரண்டாம் பாகம்
1. சோழரது இருண்ட காலம்
2. சோழர் எழுச்சி
3. முதற் பராந்தக சோழன்
4. பராந்தகன் மரபினர்
5. முதலாம் இராசராசன்
6. இராசேந்திர சோழன்
7. இராசேந்திரன் மக்கள்
------------
சோழர் வரலாறு (பாகம் 2)
2.1. சோழரது இருண்ட காலம்
பல்லவர்-களப்பிரர்: சங்கத்து இறுதிக் காலத்தில் வேங்கடத்திற்கு அப்பாற்பட்ட நிலப்பகுதியைக்
கங்கையாறுவரை சாதவாஹனர் என்னும் ஆந்திர நாட்டு மன்னர் ஆண்டு வந்தனர்.
அவர்கட்கடங்கித் தென் பகுதியை ஆண்ட மரபினர் பல்லவர் என்பவர். இப்பல்லவர்
சாதவாஹனப் பேரரசு வீழ்ச்சியுற்றதும் கிருஷ்ணையாறு முதல் பெண்ணையாறு
வரைப்பட்ட நாட்டிற்குத் தாமே உரிமையாளர் ஆயினர்; ஆகித் தெற்கே இருந்த அருவா
வடதலைநாடு, அருவா நாடுகளைக் கைப்பற்ற முனைந்தனர். அப்பொழுது அருவா
வடதலை நாட்டில் கடப்பைவரை இருந்த பெருங்காட்டுப்பகுதிகளில் வாழ்ந்து வந்த
களவர் என்னும் வீரமரபினர் பல்லவர் படையெடுப்பால் நெருக்குண்டனர்; நெருக்குண்டு தம்
நாட்டில் இருக்க முடியாராய் அருவா நாட்டினுட் புகுந்தனர். இங்ஙனம் இக்குழப்பம்
ஏற்பட்ட காலம் ஏறத்தாழக் கி.பி.300 என்னலாம். களவரை விரட்டி அருவாவடதலை
நாட்டைக் கைப்பற்றிய பல்லவர், மேலும் அவருடன் பொருது பாலாற்றுக்குத் தெற்கே
அவரை விரட்டி; ஏறத்தாழக் கி.பி. நான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில் காஞ்சிபுரத்தைக்
கோநகராகக் கொண்டு தொண்டை நாட்டின் வடபகுதியை ஆளலாயினர். இங்ஙனம்
ஆண்ட முதற்பல்லவ வேந்தன் சிவ ஸ்கந்தவர்மன் என்பவன்.[1]
களப்பிரர்-சோழர்-பாண்டியர்: சிவ ஸ்கந்தவர்மனால் தோற்கடிக்கப்பட்ட களப்பிரர் வேறு
வழியின்றிப் பாலாற்றின் தெற்குமுதல் காவிரியாறு வரை பரவினர்; பின்னர்ச் சோணாட்டின்
உட்பகுதியிலும் புகுந்தனர்; சோழர் அரசு நிலைகுலைந்தது. களப்பிரர் சோணாட்டுடன் நின்று
விடாது, பாண்டிய நாட்டிலும் புகுந்து பாண்டியனை ஒடச் செய்தனர். இங்ஙனம் சோழ
பாண்டியர் தம் அரசிழந்தகாலம் ஏறத்தாழக் கி.பி. 350-450 எனக் கொள்ளலாம். இங்ஙனம்
முடியிழந்த பாண்டிய நாடு, ஏறத்தாழ கி.மு. 590-இல் பாண்டிய அரசனான கடுங்கோனால்
நிலைபெற்றது. அதுமுதல் வன்மைமிக்க பாண்டிய மன்னர் பல்லவப் பேரரசரையே எதிர்க்கத்
தக்க பேராற்றல் பெற்றனர். ஆதலின், களப்பிரர் வன்மை குன்றிப் பாண்டியரிடம்
சிற்றரசராயினர்.
சோணாட்டில் இருந்த களப்பிரர் ஏறத்தாழக் கி.பி. 575 வரை பேரரசராக இருந்தனர்; பின்னர்
சிம்மவிஷ்ணு என்ற பல்லவனால் முற்றிலும் முறியடிக்கப்பட்டனர்; சோழ அரசை இழந்தனர்;
தஞ்சை, வல்லம், செந்தலை, புதுக்கோட்டை முதலிய இடங்களில் சிற்றரசர் ஆயினர்.
வலுத்தவர் பக்கம் சேர்ந்து காலத்திற்கு ஏற்றாற்போல நடந்து வந்தனர்.
களப்பிரர் ஆட்சியினின்றும் பாண்டியர் விடுதலை பெற்றாற்போலச் சோழர் கி.பி. 6-ஆம்
நூற்றாண்டில் விடுதலை பெறக்கூடவில்லை. ஏன் எனில், அக்களப்பிரரினும் வன்மை
மிக்க பல்லவர் களப்பிரரை அடக்கி நாட்டைக் கவர்ந்து கொண்டமையின் என்க.
இங்ஙனம் நாட்டைக் கவர்ந்த பல்லவர் கி.பி. 875 வரை சோழ நாட்டை விட்டிலர். ஆதலின்,
சோழர் ஏறத்தாழக் கி.பி. 350 முதல் முடி இழந்து வாழ வேண்டியவர் ஆயினர் என்பது
கவனித்தற்கு உரியது.[2] இனி, இந்த இருண்டகாலத்தில் சோழரைப் பற்றிய செய்திகள்
குறிக்கும் சான்றுகளைக் காண்போம்.
புத்ததத்தா: இவர் ஒரு பெளத்த சமயப் பெரியார். இவர் 'அபிதர்மாவதாரம்’ என்னும் நூலைச்
சோழநாட்டில் இருந்து எழுதியவர். இவர், “காவிரிப்பூம்பட்டினம் செல்வ வணிகரைக்
கொண்டது; மாட மாளிகைகள் நிரம்பியது; இனிய பல பூஞ்சோலைகளை உடையது;
அரண்மனைகளை உடையது; கண்டதாசன் கட்டிய புத்த விஹாரத்தில் நான் இருந்து,
என் மாணவி சுமதியின் வேண்டுகோளால் இந்நூலை எழுதினேன்[3]" என்று மேற்சொன்ன
தமது நூலின் ஈற்றிற் குறித்துள்ளார். அவரே தமது விநயவிநிச்சியம்' என்னும் நூலின்
இறுதியில், "இந்நூல் புத்த சீடர்களால் வரையப்பட்டது. நான் சோணாட்டில் உள்ள
பூதமங்கலத்தில்[4] வேணுதாச விஹாரத்தில் தங்கி இருந்தபொழுது இதனை எழுதினேன்.
அச்சுத விக்கந்தன் என்னும் களப்பிர மரபரசன் உலகத்தை ஆண்ட பொழுது இந்நூலைத்
தொடங்கி எழுதி முடித்தேன்[5]" என்று கூறியுள்ளார். இவர் காலம் ஏறத்தாழக் கி.பி. 450
ஆகும்.[6]
களப்பிரரும் பெளத்தரும்: அச்சுதன் என்னும் களப்பிர அரசன் மூவேந்தரையும் விலங்கிட்டு
வைத்ததாக 'தமிழ் நாவலர் சரிதை கூறுகின்றது. கி.பி. 10-ஆம் நூற்றாண்டினரான
அமிதசாகரர் என்னும் பெளத்தர் இந்த அச்சதனைப்பற்றிய சில பாக்களைக் குறித்துள்ளார்.
இக்குறிப்பாலும், புத்த தத்தர் இவனைக் குறித்திருப்பதாலும் இவன் பெளத்தனாக
இருந்திருக்கலாம் எனக் கோடலில் தவறில்லை. இவன் 'உலகத்தை ஆண்டான்' எனப்
புத்ததத்தர் கூறலால், அச்சுதன் சோழ-பாண்டிய நாடுகளை ஆண்டனன் என்று கொள்ளலாம்.
இவன் காலத்தவரே பெரிய புராணம் கூறும் மூர்த்தி நாயனார். இவன் பெளத்தனாக
இருந்ததாற்றான் சைவத்திற்குப் பெரும் பகைவனாக இருந்தான் போலும்!
“களப்பிரர் இடையீடு. அப்பொழுது பேரரசரும் சார்வபெளமரும் ஆண்டு மறைந்தனர்.
பின்னர்க் கடுங்கோன் களப்பிரரை விரட்டிப் பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான்” என்று
வேள்விக்குடிப்பட்டயம் எடுத்து இயம்புகின்றது. இக்களப்பிரர், வழிவழியாக வந்த
பிரம்மதேயத்தை அழித்தனர். அதனைக் கோச்சடையன் கி.பி.எட்டாம் நூற்றாண்டில்
புதுப்பித்தான். இச்செயலைக் கொண்டும் களப்பிரர் தொடக்கத்தில் பெளத்தராகவும்
சமணராகவும் இருந்தனர் எனக் கோடலில் தவறில்லை.
மணிமேகலை காலத்தில் சோழ நாட்டில் பூதமங்கலம் பெளத்தர்க்குரிய இடமாகக்
குறிக்கப்பட்டிலது. ஆனால், களப்பிரர் காலத்தில் புத்ததத்தரால் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த இடத்தில் ஏறத்தாழக் கி.பி. 660-இல் புத்தர்கள் இருந்தனர்; சம்பந்தரோடு வாதிட்டுத்
தோற்றனர் என்பதை நோக்க. கி.பி. 575-இல் களப்பிரர் வலியை அடக்கிப் பல்லவர்
சோழ நாட்டை ஆண்டு வந்த பொழுதும் பூதமங்கலம் சம்பந்தர் காலம் வரை பெளத்த
இடமாக விளங்கிவந்தது என்பதை அறியலாம். எனவே பூதமங்கல விஹாரம் களப்பிரர்
காலத்தே தோன்றியதென்னல் தவறாகாது.
களப்பிரரும் சமணரும்: கி.பி. 470-இல் மதுரையில் திகம்பர சமணர் அனைவரும் கூடிச்
சங்கம் ஒன்றை நிறுவினர். அதன் தலைவர் வச்சிரநந்தி ஆவர் என்று 'திகம்பர தரிசனம்'
என்னும் சமணநூல் செப்புகின்றது. இக்காலத்திற் பாண்டிய நாட்டு அரசராக இருந்தவர்
களப்பிரரே ஆவர். அவர்கள் காலத்தில் 'திகம்பர சங்கம்’ மதுரையிற் கூடியதெனின்,
அத்திகம்பர சமணரே சம்பந்தர் காலம் (கி.பி. 670) வரை பாண்டிய நாட்டில் பாண்டிய
அரசனையும் தம் வயப்படுத்தி இருந்தனர் எனின், அச்செல்வாக்குப் பிற்கால (கி.பி. 5-ஆம்
நூற்றாண்டு)க் களப்பிர அரசராற்றான் உண்டாகி இருத்தல் வேண்டும் என்பது
பெறப்படுகின்றன்றோ?
எனவே, இதுகாறும் கூறியவற்றால், களப்பிர அரசருள் முற்பகுதியினர் பெளத்த சமயத்தையும்,
பிற்பகுதியினர் சமண சமயத்தையும் வளர்த்தவர் என்பதும், அவற்றுள் சம்பந்தர் காலத்தில்
சோழநாட்டில் பெளத்தமும் பாண்டிய நாட்டில் சமணமும் இருந்தது என்பதும் அறியத்தக்கன.
களப்பிரர்: சிம்மவிஷ்ணு முதலிய பிற்காலப் பல்லவர் பட்டயங்களிலும் மேலைச்
சாளுக்கியர் பட்டயங்களிலும் பிறவற்றிலும் களப்பிரர் பெயர் காணப்படுகின்றது. எனவே,
இப்புதிய மரபினர் தமிழ் நாட்டில் பேரரசர்களாகவும் சிற்றரசர்களாகவும் இருந்தனர்
என்பது நன்கு தெரிகிறது.
சோழரைப்பற்றிய குறிப்புகள்: சோணாட்டு வரலாற்றில் இருண்ட பகுதியாகிய
(கி.பி. 300 - கி.பி. 875) ஏறத்தாழ 6 நூற்றாண்டுகள் கொண்ட காலத்தில் சோழரைப்
பற்றிப் பட்டயங்களும் இலக்கியங்களும் கூறுவன காண்போம்:
---------
[1]. Vide Author's Pallavar Varalaru for more details.
[2]. Vide the Author's History of the Pallavas' chap 4.
[3]. K.A.N. Sastry’s cholas’ Vol. I, pp. 120-121.
[4]. இப்பூதமங்கலமே பெரியபுராணம் கூறும் போதி மங்கை; சம்பந்தர் புத்தரோடு வாதிட்டு
வென்ற இடம்.
[5]. K.A.N. Sasiry’s cholas, 1, p. 121.
[6]. B.C. Law’s History of Pali Literature, vol.2. pp. 984, 385&389. புத்ததத்தர் வரைந்த
நூல்களிற் காணப்படும் குறிப்புகளைப்பற்றி J.O.R. Vol. 2. பார்க்க.
கி.பி. 400 முதல் 600 வரை கோச்செங்கணான்
இவன் சங்க காலத்தவனா?: இவன் சங்க காலத்தவன் என்பதற்குக் காட்டப்படும் காரணங்கள்
இரண்டு: (1) 74ஆம் புறப்பாட்டின் அடிக்குறிப்பில் 'சேரமான் கணைக்கால் இரும்பொறை
சோழன் செங்கணானோடு போர்ப் புறத்துப் பொருது பற்றுக்கோட்பட்டுக் குடவாயிற்
கோட்டத்துச் சிறையிற் கிடந்து ‘தண்ணிர் தா’ என்று, பெறாது, பெயர்த்துப் பெற்றுக்
கைகொண்டிருந்து உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு எனவரும் செய்தி, (2)
பொய்கையார் சோழன் மீது களவழிப்பாடிச் சிறைப்பட்ட அரசனை மீட்டார் என்பது
களவழி ஏடுகளின் ஈற்றில் எழுதப்பட்டுள்ள செய்தி. இவ்விரு கூற்றுகளையும் ஆராய்வோம்.
(1) மேற்சொன்ன 74-ஆம் செய்யுளில் கோச்செங்கணான் என்ற பெயர் இல்லை. அடிக்குறிப்பு,
பாடிய புலவன் எழுதியதும் அன்று என்பது ‘உண்ணான் சொல்லித் துஞ்சிய பாட்டு’ என்பதால்
அறியப்படும். புறநானூற்றுப் பாடலின் கீழ் உள்ள (பிற்காலத்தார்) எழுதிய அடிக்குறிப்புகள்
பல இடங்களில் பொருத்த மற்றவை என்பது அறிஞர் நன்கறிந்ததே. சான்றுக்காக ஒர்
இடம் குறித்துக் காட்டுதும்; புறம் 389ஆம் செய்யுளில் ‘ஆயுதங்களைப் போல நீ
கொடுப்பாயாக’ என வரும் தொடரைக் கண்டதும், அஃது உவமையாகக் கூறப்பட்டது
என்பதையும் கவனியாமல், ‘இஃது ஆதனுங்கனைப் பாடிய பாட்டு’ என்று அடிக்குறிப்பு
வரையப்பட்டுள்ளது. இங்ஙனம் பிழைபட்ட இடங்கள் பல பொருத்தமற்ற அடிக்குறிப்புகள்
பல - இத்தகைய அடிக்குறிப்புகளில் செங்கணானைக் குறிக்கும் அடிக் குறிப்பும் ஒன்றாகலாம்.
களவழிப்பாக்களைக் காண, கொச்செங்கணான் பேரரசன் என்பதும், வீரம் வாய்ந்த
பகைவரைக் கொன்றவன்[7] என்பதும் போரில் கொங்கரையும் வஞ்சிக் கோவையும்
கொன்றவன்[8] என்பதும் தெரிகின்றன. பாக்களால், இச்சோழனை எதிர்த்த வஞ்சிக்கோ
(சேர அரசன்) போரில் கொல்லப் பட்டான் என்பது விளக்கமாகிறது. கணைக்கால்
இரும்பொறை பற்றிய பேச்சே களவழியிற் காணப்பட வில்லை.
(2) முன்சொன்ன 74-ஆம் பாடல் தமிழ் நாவலர் சரிதையில், “சேரமான் கணைக்கால்
இரும்பொறை செங்கணானாற் குடவாயிற் கோட்டத்துத் தளைப்பட்ட போது பொய்கையார்க்கு
எழுதி விடுத்த பாட்டு” என்ற தலைப்பின் கீழ்க் காணப்படுகிறது. புறநானூற்று அடிக்குறிப்பும்
இதுவும் வேறுபடக் காரணம் என்ன?
(3) புறநானூறு 74-ஆம் செய்யுள் அடிக்குறிப்பு. கனைக்கால் இரும்பொறை சிறைக்கண்ணே
இறந்தான் என்பதைக் குறிக்கிறது. ஆயின், தமிழ் நாவலர் சரிதையில் உள்ள செய்யுள்
அடியில்,
“இது கேட்டுப் பொய்கையார் களவழிநாற்பது பாடச் செங்கணான் சிறைவிட்டு அரசளித்தால்”
என்பது குறிக்கப்பட்டுள்ளது. இவ்விரு கூற்றுகளும் தம்முள் மாறுபடுவதைக் கண்ட
நாவலர்-பண்டித ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்கள், “துஞ்சினான் கணைக்கால்
இரும்பொறையாகச் சிறைவீடு செய்து அரசளிக்கப்பட்டான் பிறனொரு சேரனாவன்
என்று கொள்ளவேண்டும்” என்று கூறி அமைந்தனர்.[9] இங்ஙனம் பேரறிஞரையும்
குழப்பத்திற்கு உட்படுத்தும் பொருத்தமற்ற அடிக்குறிப்புகளைக் கொண்டு கோச்செங்கணான்
போன்ற பேரரசர் காலத்தை வரையறுத்தல் வலியுடைத்தாகாது.
2. கோச் செங்கணான் எழுபது சிவன் கோவில்கள் கட்டினான் எனத் திருமங்கையாழ்வார்
குறித்துள்ளார்.[10] சங்க காலத்தில் எந்த அரசனும் சிவன் கோவிலோ, திருமால் கோவிலோ
கட்டியதற்குச் சான்றில்லை. சிவன் கோவில்கள் பலவாக ஒரே அரசனால் கட்டப்பட்ட
காலம் சைவ உணர்ச்சி வேகம் மிகுதிப்பட்ட காலமாதல் வேண்டும். சங்க காலத்தில்
அத்தகைய உணர்ச்சி வேகம் மிக்கிருந்ததாகக் கூறச் சான்றில்லை. சங்க காலத் தமிழகத்தில்
பல சமயங்களும் அமைதியாக இருந்தன என்பதே அறியக் கிடக்கிறது. அவ்வமைதியான
நிலையில் ஒர் அரசன் 70 கோவில்கள் கட்டுதல் அசம்பாவிதம். ஆயின், சங்க காலத்திற்குப்
பின்னும் அப்பர்க்கு முன்னும் களப்பிரர்-பல்லவர் போன்ற வேற்றரசர் இடையீட்டால்
பெளத்தமும் சமணமும் தமிழகத்தில் மிகுதியாகப் பரவலாயின. சங்க காலப் பாண்டியன்
அளித்த பிரம்மதேயவுரிமையையே அழிக்கக்கூடிய நிலையில் களப்பிரர் சமயக் கொடுமை
இருந்தது என்பது வேள்விக் குடிப்பட்டயத்தால் தெரிகிறது. அக்களப்பிரர் காலத்திற் நான்
மதுரையில் மூர்த்தி நாயனார் துன்புற்றார். சோழ நாட்டில் தண்டியடிகள், நமி நந்தியடிகள்
போன்ற சிவனடியார்க்கும் சமணர்க்கும் வாதங்கள் நடந்தன. இத்தகைய சமயப்பூசல்கள்
நடந்து, சைவசமய வுணர்ச்சி மிகுந்து தோன்றிய பிற்காலத்தேதான் கோச்செங்கணான்
போன்ற அரசர் பல கோவில்கள் கட்டிச் சைவத்தை வளர்க்க முற்பட்டிருத்தல் வேண்டும்.
---------
[7]. செ.6-16.
[8]. செ. 14 & 39.
[9] அவர் பதிப்பு, முகவுரை, பக்.5 (கழகப் பதிப்பு)
[10]. திருநறையூர்ப் பதிகம், 8.
3. கோச்செங்கணானைப் பற்றித் திருமங்கை யாழ்வார் வெளியிடும் கருத்துகள்
இவையாகும்[11];
(1) உலகமாண்ட தென்னாடன்[12] குடகொங்கன் சோழன்.
(2) தென் தமிழன் வடபுலக்கோன்.
(3) கழல் மன்னர் மணிமுடிமேல் காகம் ஏறத் தெய்வ வாள் வலங்கொண்ட சோழன்.
(4) விறல் மன்னர் திறல் அறிய வெம்மாவுய்த்த செங்கணான் கோச் சோழன்.
(5) படைமன்னர் உடல் துணியப் பரிநாவுய்த்த தேராளன் கோச்சோழன்.
இக்குறிப்புகளால் இவன் (1) வலிபொருந்திய அரசர் பலரைப் போரில் கொன்றவன்-வென்றவன்
என்பதும், (2) கொங்குநாடு வென்றவன் என்பதும், (3) சோழ நாட்டிற்கு வடக்கிருந்த
நிலப்பகுதியை (தொண்டை நாட்டை) வென்றவன் என்பதும், (4) சிறந்த யானைப்படை,
குதிரைப்படைகளை உடையவன் என்பதும் தெரிகின்றன.
'கழல் மன்னர், விறல் மன்னர், படை மன்னர்’ என்றதால் சோழனை எதிர்த்தவர் மிக்க
வலிமையுடைய பகையரசர் என்பது பெறப்படும். அவர்களைச் செங்கணான் 'தெய்வ வாள்'
கொண்டு வென்றான் என்பதாலும் பகைவரது பெருவலி உய்த்துணரப்படும். சங்க
காலத்தில் இத்தகைய மன்னர் பலருடன் செங்கணான் போரிட்டது உண்மையாயின்,
அப்போரைப்பற்றிய சில செய்யுட்களேனும் அக்கால நூல்களில் இருந்திருக்க வேண்டும்.
இல்லையாயின் அவர்கள் இன்னவர் என்ற குறிப்பாவது இருத்தல் வேண்டும்.
கோச்செங்கணான் செங்குட்டுவனுக்குப் பிற்பட்டவன் (கி.பி. 200 - 250) என்பது
வரலாற்று ஆசிரியர் கருத்து. அங்ஙனமாயின், அக்காலத்தில் அவனுடன் போரிட்ட
கழல்-விறல்-படை மன்னர்’ யாவர்? சங்க காலத்தில் தொண்டை நாடும் சோழர்
ஆட்சியில் இருந்தமை மணிமேகலையால் அறியலாம். அதற்கும் அப்பாற்பட்ட
வடபுலத்தை இவன் வென்றான் எனக் கொள்ளின், அப்பகையரசர் யாவர் எனக்
கூறுவது? சுருங்கக் கூறின், (1) இவன் அரசன் பலரை வென்றான் என்பதற்குச் சங்க
நூல்களிற் சான்றில்லை; (2) இவன் அரசர் பலரை வென்றவனாகக் காண்கிறான்;
(3) சங்க இறுதிக்காலத்திலேனும் இங்ஙணம் ஒர் அரசன் இருந்தான் என்று கூறத்தக்க
சான்றுகள் இல்லை; (4) இவன் சிவன் கோவில்கள் பல கட்டினவன். இந்நான்கு
காரணங்களால் கோச்செங்கணான் சங்க காலத்திற்குப் பிற்பட்டவனாக இருத்தல்
கூடும் என்ற எண்ணமே பலப்படும்.
4. கோச்செங்கணான் தில்லையில் சமயத் தொண்டு செய்தவன் என்பது சேக்கிழார்
கூற்று. 'தில்லை ஒரு சிவத்தலமாகச் சங்கச் செய்யுட்களில் கூறப்படாமை நோக்கத்தக்கது.
அது கோச்செங்கணான் காலத்திற் சிறப்புப் பெற்றது. அவன் அங்கு மறையவரைக்
குடியேற்றி மாளிகைகள் பல அமைத்தான்[13]. இங்ஙனம் தில்லை சிவத்தலமாகச்
சிறப்புற்றமை சங்க காலத்திற்குப் பிறகே என்பது தவறாகாது.
5. கோச்செங்கணானது தந்தை பெயர் சுபதேவன் என்பது. தாய் பெயர் கமலவதி
என்பது[14]. இப்பெயர் களைச் சோழப் பேரரசின் முதல் அமைச்சரான சேக்கிழார்
தக்க சான்று கொண்டே கூறினராதல் வேண்டும். இப்பெயர்கள் தூய வடமொழிப்
பெயர்கள். இவ்வாறு சங்க காலத்து அரச குடும்பத்தினர் வடமொழிப் பெயர்களை
வைத்துக் கொண்டனர் என்பதற்குப் போதிய சான்றில்லை. சம்பந்தர் காலத்திற்கு
முற்பட்ட சுமார் 6 அல்லது 5-ஆம் நூற்றாண்டினர் என்று கருதத்தக்க காரைக்கால்
அம்மையார்க்குப் புனிதவதி என்பது பெயர். அப்பெயருடன் மேற்சொன்ன கமலவதி”
என்ற பெயர் ஒப்பு நோக்கத்தக்கது.
இத்தகைய பல காரணங்களால் கோச்செங்கணான் சங்க காலத்தவன் ஆகான் எனக்
கொள்ளலாம். ஆயின், அவன் அப்பர் சம்பந்தராற் பாடப்பட்டவன். ஆதலின், அவன்
காலம் மேற்சொன்ன சங்க காலத்திற்குப் பிறகும் அப்பர் சம்பந்தர் காலத்திற்கு முன்னும்
ஆதல் வேண்டும்; அஃதாவது, அவன் காலம் ஏறத்தாழ கி.பி. 300 - 600 - க்கு உட்பட்டது
எனக்கூறலாம். இப்பரந்துபட்ட காலத்துள் அவன் வாழ்ந்திருக்கத் தக்க பொருத்தமான
காலம் யாதெனக் காண்போம்.
---------
[11]. திருநாறையூர்ப் பதிகம், 3,4,5,6,9.
[12]. ‘தென்னவனாய் உலகாண்ட செங்கணான்’ என்ற சுந்தரர் தொடர் இதனுடன்
ஒப்புநோக்கத் தக்கது.
[13]. கோச்செங்கட் சோழர் புராணம், 15,16.
[14]. கோச்செங்கட் சோழர் புராணம், 7.
கோச்செங்கணான் காலம்: வேள்விக்குடிப் பட்டயப் படி, சங்க காலத்திற்குப் பிறகு
பாண்டிய நாடு களப்பிரர் ஆட்சியில் இருந்தது. அக்களப்பிரர் கையிலிருந்தே கடுங்கோன்
தன் நாட்டைக் கைப்பற்றினான் என்பது தெரிகிறது. ஆயின், சோழநாடு எவ்வளவு
காலம் களப்பிரர் கையில் இருந்தது? கி.பி. 5ஆம் நூற்றாண்டின் முற்பாதியில் புத்ததத்தர்
குறித்த அச்சுதனுக்கும் பிறகு சோழநாட்டை ஆண்ட களப்பிரர் இன்னவர் என்பது
தெரியவில்லை. கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின் இடையில், 'குமார விஷ்ணு' என்ற
பல்லவன் காஞ்சியை மீளவும் கைப்பற்றினான். அவன் மகனான புத்தவர்மன் கடல்
போன்ற சோழர் சேனைக்கு 'வடவைத்தீப் போன்றவன்' என்று வேலூர்ப் பாளையப்
பட்டயம் பகர்கின்றது. கி.பி. 6-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தவனாகக்
கருதப்படும் முதலாம் நந்தி வர்மன் என்பவன் காஞ்சிபுரத்திலிருந்து பட்டயம்
விடுத்துள்ளான்[15]. ஏறத்தாழ கி.பி. 575-இல் சிம்மவிஷ்ணு என்ற பல்லவன் மீண்டும்
காஞ்சியைக் கைப்பற்றினான்; சோழர், மழவர், களப்பிரர் முதலியோரை வென்று
காவிரிக்கரை வரை பல்லவ நாட்டை விரிவாக்கினான் என்பது வேள்விக் குடிப்பட்டயமும்
கசாக்குடி பட்டயமும் குறிக்கும் செய்தியாகும்[16]. இக்குறிப்புகளால் முன்சொன்ன
குமாரவிஷ்ணுவுக்குப் பிறகும் சிம்மவிஷ்ணுவுக்கு முன்பும் காஞ்சி பல்லவர் வசம்
இல்லாது அடிக்கடி கை மாறியதாக நினைக்க இடமுண்டு. அச்சுதவிக்கந்தர்க்குப்
பிறகு, சிம்ம விஷ்ணு சோணாட்டை வெல்லும் வரை களப்பிரரே சோணாட்டை
ஆண்டனர் என்பதற்குரிய சான்றும் இல்லை. மேற்குறித்த பல்லவர் செய்திகளைக்
காண்கையில், சிம்மவிஷ்ணுவுக்கு முற்பட்டவர் நிலையாகக் காஞ்சியில் தங்கித்
தொண்டை மண்டலத்தை ஆண்டனர் என்பது கூறப்படவில்லை. கி.பி. 5ஆம்
நூற்றாண்டில் இடையில் புத்தவர்மன் கடல்போன்ற சோழர் சேனையோடு போரிட
வேண்டியவன் ஆனான்; 6ஆம் நூற்றாண்டின் இறுதியில் சிம்ம விஷ்ணு சோழரை
வென்றான். இவற்றுடன் புத்தவர்மன் போரைக் காணின் அச்சுதக்களப்பிரனுக்குப்
பிறகு (கி.பி. 5ஆம் நூற்றாண்டில்) சோழர் கடல் போன்ற சேனையை வைத்திருந்தனர்;
அவர் பல்லவருடன் போரிட்டனர் என்பன தெரிகின்றன. இங்ஙனம் கடல் போன்ற
சேனையை வைத்துக் கொண்டிருந்த சோழன் சங்ககாலத்திற்கும் பிற்பட்டவனாகக்
கருதத்தக்க கோச்சோழன் ஆகலாம். அவன் அரசர் பலரை முறியடித்தவன்; பெரிய
யானைப்படை, குதிரைப் படைகளை உடையவன் என்பன களவழியாலும்
திருமங்கையாழ்வார் பாசுரங்களாலும் தெரிகின்றன. அச்சோழன், தன் நாட்டைக்
கைப்பற்றிக் கொண்ட களப்பிரரை அடக்கிப்பின் வடபுலத்திருந்த புத்தவர்மனுடன்
போரிட்டு வெற்றி கொண்டனன் போலும்! அவனை "வடபுலக்கோன்’ என்று
திருமங்கையாழ்வார் குறித்தமை இதுபற்றிப் போலும்! இங்ஙனம் கொள்ளின்,
கோச்செங்கணான் காலம் புத்தவர்மன் காலமாகிய கி.பி. ஐந்தாம் நூற்றாண்டின்
இடைப்பகுதி எனலாம். கோச்செங்கணான் மீது பாடப்பெற்ற களவழியின் காலம்
ஏறத்தாழக் கி.பி. 450-600 என்ற இராவ் சாஹிப் திரு. எஸ். வையாபுரிப் பிள்ளை
அவர்கள் கருத்தும்[17] இந்த முடிவிற்கு அரண் செய்தல் இங்குக் கருதத்தகும்.
புகழ்ச்சோழர் காலம்: நடுவுநிலையினின்றும் மேற்சொன்ன காரணங்கள் பலவற்றையும்
ஆராய்ந்தும் இம்முடிவு கொள்ளப்படின், இக்கோச்சோழனை அடுத்து, மேற்சொன்ன
இடைக்காலத்தில் இருந்தவராகப் (பெரிய புராணம் கூறும்) புகழ்ச்சோழரை எடுத்துக்
கொள்ளலாம். இவர் பெயர் சங்க நூல்களில் இல்லாததாலும் சிம்ம விஷ்ணுவுக்குப்
பிறகு பல்லவர் காலத்தில் இத்தகைய சோழப் பேரரசர் இருக்க முடியாமையாலும்,
இந்த இடைக்காலமே புகழ்ச் சோழர் வாழ்ந்த காலம் எனக்கோடல் பொருத்தமே ஆகும்[18].
அச்சுதன் போன்ற களப்பிரப் பேரரசனும் கோச்செங்கணான், புகழ்ச்சோழர் போன்ற
சோழப் பேரரசரும் கி.பி. 5, 6-ஆம் நூற்றாண்டுகளில் இருந்தமையாற் போலும் பல்லவர்
சோழநாட்டைக் கைப்பற்றக் கூடவில்லை!
கோச்செங்கணான், புகழ்ச்சோழர், களப்பிர அரசர்களாகிய கூற்றுவ நாயனார்[19] (அச்சுத
விக்கந்தன்?) இவர்களை இவ்விடைப்பட்ட காலத்தவராகக் (சுமார் கி.பி.450-550)
கொள்ளின், தென் இந்திய வரலாற்றில் இருண்டபாகம் எனப்பட்ட காலத்தின் ஒருபகுதி
வெளிச்சமாயிற்றெனக் கொள்ளலாம். 'இவ்விருண்ட காலம்-பல்லவர் காஞ்சியைத் துறந்து
தெலுங்கு நாட்டில் வாழ்ந்த காலம்- சோழர் இடையீட்டுக் காலமாக இருத்தல் வேண்டும்'
என்று வெங்கையா போன்ற கல்வெட்டறிஞர் கொண்ட கருத்தில்[20] பேரளவு
உண்மையுண்டு என்பதும் இதனால் உறுதிப்படும்.
----------
[15]. Ep. Indica, III. y. 145.
[16]. Ibid. Heras's ‘Studies in Pallava History,’ p. 20
[17]. பல்கலைக்கழகப் பதிப்பு - திரிகடுகமும் சிறுபஞ்சமூலமும், பக்.10-11, 75
[18]. C.V.N. Aiyar’s origin and Development of Saivism in S. India.’ p.183.
[19]. Ibid pp. 180-181.
[20]. Ind Ant. 1908. p. 284.
கி.பி. 600 முதல் 850 வரை:
(1) ‘பல்லவன் சிம்ம விஷ்ணு (கி.பி. 575-615) காவிரி பாயப் பெற்ற வளமிக்க சோழநாட்டைக்
கைப்பற்றினான். அவன் இம்முயற்சியில் தன்னை எதிர்த்த களப்பிரர், சோழர், பாண்டியர்
முதலிய தென்னாட்டரசரை வென்றான்’ என்று வேலூர் பாளையச் செப்பேடுகள்
செப்புகின்றன[21].
(2) சோழரை வென்றதாகச் சாளுக்கியர் பட்டயம் கூறுகிறது. இவர்கள் ரேனாண்டுச்
சோழராக இருத்தல் வேண்டும்[19]
(3) சிம்மவிஷ்ணு மகனான மஹேந்திரவர்மன் சோணாட்டின் பேரழகைக் கண்டுகளிக்கச்
சிவனார்க்குத் திருச்சிராப்பள்ளி மலைமீது குகைக்கோவில் அமைத்ததாகக் கல்வெட்டிற்
கூறியுள்ளான். அம்மலை சோணாட்டின் தலைமுடி என்று கூறப்பட்டுள்ளது[22].
(4) இரண்டாம் புலிகேசி பல்லவரைக் கச்சிநகர்க் கோட்டைக்குள் புகவிட்டுச் சோழர்,
பாண்டியர், சேரர்க்கு நன்மைவரச் செய்தான் என்று அய்ஹோளே கல்வெட்டுக் கூறுகிறது.
அதன் காலம் கி.பி. 634 ஆகும்[23].
(5) மஹேந்திரன் மகனான முதலாம் நரசிம்மவர்மன் சோழர் உள்ளிட்ட பல தென்னாட்டு
அரசரை வென்றதாகப் பட்டயம் பகர்கின்றது.
(6) முதலாம் பரமேசுவரவர்மன் சோழநாட்டை வென்றதாகக் கூரம் பட்டயம் கூறுகின்றது[24].
(7) பரமேசுவரவர்மனை முதலில் தோற்கடித்த முதலாம் விக்கிரமாதித்தன் சோணாட்டு உறையூரில்
தங்கியிருந்தான். அப்பொழுது 'கத்வல்' பட்டயம் விடுத்தான். அதன் காலம் கி.பி. 674. அவன்
அதனில், தான் சோழ நாட்டை வென்றதாகக் குறித்துள்ளான்[25]. பல்லவரும் தமிழ் அரசரும்
அவனைத் தாக்கி வென்றனர் என்று அவன் மகன் கூறியுள்ளான்.
(8) இரண்டாம் நந்திவர்மனை நந்திபுரத்தில் முற்றுகையிட்டவர் தமிழ் அரசர் என்று
உதயேந்திரப் பட்டயம் உரைக்கின்றது[26].
(9) இவன் பெயரனான மூன்றாம் நந்திவர்மன் சோழ, பாண்டியரைத் தெள்ளாற்றுப் போரில்
முறியடித்தான்[27].
(10) பாண்டியன் கோச்சடையன் தணதீரன் சோழன் செம்பியன் என்று கூறிக்கொள்கிறான்
என்று வேள்விக்குடிப் பட்டயம் விளம்புகிறது[28].
(11) முதலாம் வரகுண பாண்டியன் (மாறன் சடையன் - கி.பி. 765-816) தன்னைச் சோழ
பாண்டியர் மரபில் வந்தவன் எனத் திருச்சிராப்பள்ளிக் கல்வெட்டிற் குறித்துள்ளான்[29].
ரேனாண்டு-சோழர்: கடப்பை-கர்நூல் கோட்டங்களைத் கி.பி. 7-ஆம் நூற்றாண்டில்
ஆண்டிருந்த நான்கு அரசர்கள் பெயர்களைக் கொண்ட பட்டயமும் சில கல்வெட்டுகளும்
கிடைத்துள்ளன. அவர் தம்மை 'ரேனாண்டுச் சோழர்' என்றும் 'கரிகாலன் மரபினர்’ என்றும்
கூறிக்கொண்டனர். அவர்கள் ஆண்ட பகுதியில் ஏழாயிரம் சிற்றூர்கள்[30] இருந்தன.
அவர்கள் நாட்டைக் கி.பி. 639-640-இல் பார்வையிட்ட ஹியூன்-ஸங் தன் குறிப்புப் புத்தகத்தில்,
தான் சோழ நாட்டைப் பார்த்ததாகக் குறித்துள்ளான்[31]. அவர்கள் எந்தக் காலத்தில் அந்த
வடபகுதிக்குச் சென்றனர் - கரிகாலன் காலத்திலா? அல்லது சிம்ம விஷ்ணு சோணாட்டைக்
கைப்பற்றிச் சோழ மரபினரைத் தன் வடபகுதி நாட்டைத் தனக்கடங்கி நடக்க
ஆளனுப்பினானா?- என்பன விளங்கவில்லை. அவர்களை வென்றதாகப் புலிகேசி
கூறுவதால், அச்சோழர் பல்லவர்க்கு அடங்கி - ஆனால் தம் உரிமையோடு ஆண்டவராவர்
எனக் கோடலே பொருத்தமாகும். அந்தச் சோழர் இலச்சினை சிங்கம் ஆகும். அவர் பரம்பரை
இதுவாகும்.[32]
--------------
[21]. S.H. I. II. p.208.
[22]. S,I.I. Vol.I. pp. 33-34.
[23]. Ep. Indica, Vol. 6, p.6.
[24]. S.I.I. Vol. I. p. 151.
[25]. S.I.I. Vol. 10. p. 103.
[26]. S.I.I. Vol. II, p.365.
[27]. Ibid, II. p.508.
[28]. Ep. Ind. Vol. 17, p. 291-293
[29]. A.S. of India. 1903-4, p.275.
[30]. கிராமங்கள் என்பர் சிலர், 'மக்கள்' என்பர் சிலர்.
[31]. Watters, 2, pp. 225 and 341.
[32] Ep. Ind. Vol. 10, p. 103.
pallava05 jpg here
இப்பெயர்களுள் பல பல்லவ மன்னர்கள் பெயர்கள் அல்லவா? நந்திவர்மன், முதல்
நந்திவர்மனைக் குறிப்பது. சிம்ம விஷ்ணு, மகேந்திர வர்மன் என்பன பல்லவர் பெயர்கள்.
எனவே, இச்சோழர் தம் பேரரசர் பெயர்களைத் தாமும் வைத்துக் கொண்டனர் போலும்!
மகேந்திர விக்ரமவர்மன் என்பவன் தன்னை 'முத்தமிழ் வேந்தன் தலைவன்’ என்று கூறியதை
நோக்க, அவன் பல்லவர் பொருட்டு முத்தமிழ் மன்னரைப் பொருதனன் போலும் என்பது
எண்ண வேண்டுவதாக இருக்கிறது. இறுதி அரசனான புண்ணிய குமரன் பிருதிவி வல்லபன்
என்னும் பெயர் கொண்டிருத்தலால், சாளுக்கியர்பால் சார்பு கொண்டவன் போலும்!
அவன் மனைவி பெயர் 'வசந்த போற்றிச் சோழ மாதேவி என்பது. இப்பெயரும் சாளுக்கியர்
தொடர்பையே உணர்த்துகிறது.
இப்பட்டியலிற் கண்ட அரசர் அன்றி, சோழ மகா ராசாதி ராசன் விக்கிரமாதித்த சத்தியாதித்யன்
என்பவன் ஒருவன் இருந்தான். அவன் மனைவி இளஞ்சோழமாதேவி என்பவள். அவன்
பேரரசன் என்பது அவனது பட்டத்தால் விளங்குகின்றது. அவன் ரேனாண்டு ஏழாயிரத்துடன்
சித்தவுட்[33] ஆயிரமும் சேர்த்து ஆண்டவன். இங்ஙனமே தெலுங்கு, கன்னடப் பகுதிகளிலும்
பலர் தம்மைக் கரிகாலன் மரபினர் என்று கூறிக்கொண்டு ஆண்டனர். இவற்றை நோக்கச்
சங்ககாலச் சோழர் மரபு அழியாது தொடர்ந்து வந்தமை நன்கறியலாம்[34].
சோழரும் பெரிய புராணமும்: இந்த இருண்டகாலச் சோழரைப் பற்றிய குறிப்புகள் கூறத்தக்க
சிறப்புடைய நூல்கள் பெரிய புராணமும் திருமுறைகளுமே ஆகும். தேவாரக் குறிப்புகளும்
வழி வழியாகச் சோணாட்டில் பேசப்பட்ட குறிப்புகளும் அக்காலத்திலிருந்து இன்று
கிட்டாமற் போன வரலாற்றுக் குறிப்புகளும் கொண்டே சேக்கிழார் பெருமான் பெரிய
புராணம் பாடி இருத்தலால், நாம், தாராளமாக அந்நூற் குறிப்புகளை இவ்விருண்ட
காலத்தனவே எனக் கோடலில் தவறில்லை.
(1) களப்பிர அரசருள் ஒருவரான கூற்றுவ நாயனார் அப்பர்க்கு முற்பட்டவர்[35].
அவர் பல நாடுகளை வென்று, தமக்கு முடிசூட்டுமாறு தில்லைவாழ் அந்தணரை வேண்ட,
அவர்கள் 'பழைமையான சோழற்கே முடி புனைவோம் - புதியவர்க்கு முடி புனையோம்'
எனக்கூறி மறுத்து, அவர் சீற்றத்துக்கு அஞ்சிச் சேரநாடு சென்றனர்.[36]
(2) ஏறத்தாழக் கி.பி. 6-ஆம் நூற்றாண்டில் தண்டி அடிகள் நாயனார் திருவாரூரில்
சமணருடன் வாதிட்ட பொழுது நடுவனாக இருந்தவன் சோழ அரசன், ஆவன். அவன்
திருவாரூரில் இருந்தான். அவன் தண்டியடிகட்குத் தோற்ற சமணரை அவர் சொற்படியே
திருவாரூரை விட்டுப் போகச் செய்தான்.[37]
(3) பழையாறை என்பது கும்பகோணத்திற்கு அண்மையில் இருப்பது. அங்குச் சோழவேந்தன்
அரண்மனை இராசேந்திரன் காலத்திலும் இருந்தது. திருநாவுக்கரசர் காலத்தில் அந்நகரில்
சோழன் இருந்தான். அவனுக்கு அமைச்சர் இருந்தனர். அவன் அப்பரது உண்ணாவிரதத்தை
அறிந்து, சமணரை விரட்டி, அவர்கள் மறைத்திருந்த சிவலிங்கத்தை அப்பர் கண்டு
தரிசிக்குமாறு செய்தான்.[38]
(4) அப்பர் காலத்தவரான குங்கிலியக் கலய நாயனார் திருப்பனந்தாளுக்குச் சென்றார்.
அங்குள்ள சிவலிங்கம் ஒரு பால் சாய்ந்திருந்தது. சோழ மன்னன் யானைகளைப் பூட்டி
லிங்கத்தை நேரே நிறுத்த முயன்றும் பயன்படாமையைக் கண்டார்; தாம் முயன்று அதை
நிறுத்தினார். அது கேட்ட சோழன் அப்பெரியவரைப் பணிந்து மகிழ்ந்தான்.[39]
(5) பெரும்பாலும் இந்தச் சோழ அரசன் மகளாகவே நெடுமாறன் மனைவியாரான
மங்கையர்க்கரசியார் இருத்தல் வேண்டும். என்னை? இந்நிகழ்ச்சி அப்பர் காலத்தே
நடந்ததாகலின் என்க.
(6) ஏயர்கோன் கலிக்காம நாயனார் என்பவர் காவிரியின் வடகரையில் உள்ள திருப்பெரு
மங்கலத்தவர். அவர் முன்னோரும் அவரும் தொன்று தொட்டுச் சோழ அரசன் படைத்
தலைவராக இருந்தவர். அவர் சுந்தரர் காலத்தவர்.[40]
(7) சுந்தரர் காலத்திலே கோட்புலியார் என்னும் வேளாளர் இருந்தார். அவரும் சோழர்
சேனைத் தலைவரே ஆவர். அவர் தம் அரசனுக்காகப் பெருஞ் சேனையுடன் சென்று
போரிட்டார் என்று பெரிய புராணம் புகல்கின்றது.[41]
(8) சுந்தரர் சேரமான் பெருமாள் நாயனாருடன் பாண்டியனிடம் சென்றார். அங்கு அவன்
மருமகனான சோழன் இருந்தான். நால்வரும் பல தளிகளைத் தரிசித்தனர்.[42]
சோழரும் வைணவ நூல்களும்
(1) தொண்டர் அடிப்பொடியாழ்வார் திருமங்கையாழ்வார் காலத்தவர். அவர் உறையூருக்கு
வந்திருந்தார். அவரைத் தேவ தேவி என்பவர் தாம் உறையூரில் சோழர் அரண்மனையிலிருந்து
வெளிவந்தபோது தான் முதல் முதலிற் கண்டதாகத் திவ்விய சூரி சரிதம் கூறுகிறது.
(2) திருமாலை அன்றி வேறு எவரையும் மணக்க இசையாதிருந்த உறையூர் நாச்சியார் 'தரும
வருமன்' என்னும் சோழ அரசன் மகளார் ஆவர்.
(3) திருமங்கை என்பது சோழநாட்டின் கண்ணதோர் ஊர். திருமங்கை ஆழ்வார் கள்ளர்
மரபினர். அவர் முதலில் சோழன் சேனைத் தலைவராகவே இருந்தனர்.[43]
முடிபு: இதுகாறும் பட்டயங்கள், கல்வெட்டுகள், இலக்கியங்கள் என்பவற்றிலிருந்து
கூறிவந்த குறிப்பு களால், சோழர் சிற்றரசராக உறையூர், பழையாறை, திருவாரூர் முதலிய
இடங்களில் அரண்மனைகளை அமைத்துக் கொண்டிருந்தனர்; சிறந்த சமயத் தொண்டு
செய்து வந்தனர்; அமைச்சர், படைத் தலைவர்களைப் பெற்றிருந்தனர்; பாண்டியர்க்குப்
பெண் கொடுத்துப் பெண்பெற்று வந்தனர்; இந்த இருண்ட காலத்தில் வலியிழந்து சிற்றரசராக
இருந்தும் கோவிற் பணிகளைக் குறைவின்றிச் செய்து வந்தனர் என்பன போன்ற பல
செய்திகளை நன்கு அறியலாம் அன்றோ?
--------
[33]. இதன் ஒரு பகுதியே இன்று சித்தவட்டம் என்பது
[34]. K.A.N. Sastry’s Cholas ‘Vol.1, pp. 124, 125.
[35]. C.V.N. Iyer's Saivism in S. India', p.181.
[36]. கூற்றுவர் புராணம், 4.
[37]. தண்டியடிகள் புராணம், செ. 13-24.
[38]. அப்பர் புராணம், செ. 296-299.
[39]. குங்கிலியக்கலயர் புராணம், செ, 23-31
[40¨. ஏயர்கோன் புராணம், செ. 5.
[41]. கோட்புலி நாயனார் புராணம், செ. 1.4.
[42]. கழறிற்றறிவார் புராணம், செ. 92-95.
[43]. K.A.N. Sastry's Cholas, “Vol.I.p.121.
-----------
2.2. சோழர் எழுச்சி
விசயாலய சோழன் - ஆதித்த சோழன் (கி.பி. 850 - 970)
திருப்புறம்பியப் போர்: விசயாலய சோழன் கி.பி. 850-இல் உறையூர் அரசு கட்டில் ஏறினான்.
அவன் தன் முன்னோரைப் போலப் பல்லவர்க்கு அடங்கியவனாகவே இருந்தான். அக்காலத்தில்
பல்லவப் பேரரசனான மூன்றாம் நந்திவர்மன் தன் நாட்டைச் சிறிது சிறிதாக வென்று
தெள்ளாறுவரை வந்துவிட்ட பாண்டியன் வரகுணனையும் சோழரையும் பிறரையும்
தெள்ளாற்றுப் போரில் முற்றும் முறியடித்தான். இப்போரில் விசயாலயன் அல்லது
அவனுக்கு முற்பட்ட சோழ மன்னன் பாண்டியனோடு சேர்ந்திருந்தனன். பிறகு
பல்லவர்க்கும் பாண்டியர்க்கும் குடமூக்கில் போர் நடந்தது. அப்போரில் முதலாம் வரகுணன்
மகனான பூனிமாறன் பூர்வல்லவன் வெற்றிபெற்றான். பிறகு அரிசிலாற்றங் கரையில்
நந்திவர்மன் மகனான நிருபதுங்க பல்லவன் பூரீமாறன் படைகளை வெற்றி கொண்டான்.
பூரீமாறனுக்குப் பின் கி.பி. 862-இல் அவன் மகனான இரண்டாம் வரகுணன் பல்லவர்
மீது போர் தொடுத்தான். அப்பொழுது அபராசிதவர்மன் என்னும் பல்லவன், தன் பாட்டனான
கங்க அரசன் பிருதிவீபதியோடு வந்து கடும்போர் செய்தான். அப்போரில் விசயாலயன்
பல்லவன் பக்கமாக நின்று போரிட்டான். தஞ்சையை ஆண்ட முத்தரையர் (களப்பிரர் மரபினர்)
பாண்டியன் பக்கம் நின்று போரிட்டனர். போரில் பிருதிவீபதி தோற்றான்; ஆயினும்,
பாண்டியன் தோற்றோடினான். அபராசிதன் வெற்றி பெற்றான். அதனால், அவனுடன்
சேர்ந்திருந்த விசயாலய சோழன் முத்தரையருடைய தஞ்சையைக் கைப்பற்றிக் கொண்டான்.
திருப்புறம்பியப் போரில் பெரும் பங்கு கொண்ட விசயாலயன் மகனான ஆதித்த சோழன்
சோழ நாட்டின் ஒரு பகுதிக்கு உரியவன் ஆனான். திருப்புறம்பியப் போர் ஏறக்குறைய
கி.பி. 880-இல் நடந்ததென்னலாம்.[1]
இப்போரின் சிறப்பு: இப்போர் தமிழக வரலாற்றில் பெரிய மாறுதல்களைச் செய்து விட்டது.
இப்போரில் தோற்ற பாண்டிய நாடு மீண்டும் உயிர்ச்சி பெற வழி இல்லாது போயிற்று.
இதற்கு முன் தெள்ளாறு, அரசிலாறு முதலிய இடங்களில் ஏற்பட்ட படு தோல்விகளும்
இத்தோல்வியுடன் ஒன்றுபடப் பாண்டியர் பலரது மதிப்பும் குறைந்தன. இவை ஒன்று
சேர்ந்து பாண்டியர் பேரரசின் உயிர் நாடியைச் சிதறடித்துவிட்டது. பல்லவர் நிலைமை
என்ன? ஒயாது மேலைச் சாளுக்கியருடனும் பிறகு இராட்டிரகூடருடனும் வடக்கில்
போர்கள் நடந்த வண்ணம் இருந்தமையாலும், தெற்கில் முதலாம் வரகுணன் காலமுதல்
மூன்று தலைமுறை ஒயாப் போர்கள் நடந்து வந்தமையாலும் பல்லவர் பேரரசு ஆட்டங்
கொண்டது. பல்லவப் பேரரசின் வடபகுதியை இராட்டிரகூடர் கைப்பற்றிக் கொண்டனர்,
தென் பகுதியை, புதிதாக எழுச்சிபெற்ற ஆதித்த சோழன் பையப்பையக் கவரலானான்.
இது நிற்க.
விசயாலய சோழன் (கி.பி. 850 - 880): இவனே, இந்தியப் பேரரசுகளில் ஒன்றாகக் கருதத்தக்க
பிற்காலச் சோழர் பேரரசைத் தோற்றுவித்த முதல்வன். இவன் முத்தரையரை வென்று
தஞ்சாவூரைக் கைக்கொண்டான்; அங்குத் துர்க்கைக்குக் கோவில் கட்டினான் என்று
திருவாலங் காட்டுச் செப்பேடுகள் செப்புகின்றன.[2] (1) திருச்சிராப் பள்ளிக் கல்வெட்டொன்று
‘விசயாலயன் தன் பெயர்க் கொண்ட விசயாலயச் சதுர்வேதி மங்கலம்’ என்னும் சிற்றுரைப்
பிரம்மதேயமாக விட்டான்” என்று கூறுகிறது. வடஆர்க்காடு கோட்டத்தில் உள்ள
கீழ்ப்புத்துரரில் இவனது நான்காம் ஆண்டுக் கல்வெட்டு ஒன்று இருந்ததென்பது பிற்கால
விக்கிரம சோழன் கல்வெட்டால் தெரியவருகிறது.[3] அதனால், இவனது ஆட்சி தொண்டை
நாட்டின் ஒரு பகுதி வரை பரவியிருந்தது எனலாம். ஆயினும் இவ்வரசன் பல்லவ வேந்தனுக்கு
அடங்கி இருந்தவன்; எனினும், தன் ஆட்சியாண்டைக் குறிக்கும் உரிமை பெற்றிருந்தான்.
ஆதித்த சோழன் (கி.பி. 880 - 907) : இவனது 24ஆம் ஆட்சியாண்டின் கல்வெட்டுக்
கிடைத்திருப்பதால், இவன் 24 ஆண்டுகள் அரசாண்டான் என உறுதியாக உரைக்கலாம்.
இவன் முன்சொன்ன திருப்புறம்பியப் போரினால் மேலுக்கு வந்தவன். இவன் அபராசித
வர்மனைப் போரில் முறியடித்துத் தொண்டை நாட்டைக் கைப்பற்றினான்’ என்று திரு
ஆலங்காட்டுப் பட்டயம் பகர்கின்றது. “பெரிய யானைமீது இருந்த அபராசிதவர்மன்மீது
ஆதித்தசோழன் பாய்ந்து அவனைக் கொன்றான்; கோதண்டராமன் என்னும் பெயர் பெற்றான்”
என்று கன்னியாகுமரிக் கல்வெட்டுக் கூறுகின்றது.[4] இவற்றால், ஆதித்த சோழன்
அபராசிதனைத் தருணம் பார்த்து வென்று தொண்டை நாட்டைக் கைப்பற்றினான் என்பது
தெரிகிறது. இந்தக் காலம் ஏறக் குறைய கி.பி. 890 எனக் கொள்ளலாம்.
ஆதித்தனும் கங்க அரசனும்: கங்க அரசனான பிருதிவீபதி திருப்புறம்பியப் போரில் ஆதித்தனுடன்
இருந்து போரிட்டு இறந்தவன். அவன் மகனான பிருதிவீபதியார் என்பவன் ஆதித்த
சோழனது உயர்வை ஒப்புக் கொண்டு நண்பன் ஆனான். அவன் இராசகேசரி ஆதித்த
சோழனது 24ஆம் ஆட்சி ஆண்டில் தக்கோலப் பெருமானுக்கு வெள்ளிக் கெண்டி ஒன்றை
அளித்ததைக் குறிக்கும் கல்வெட்டில், ஆதித்த சோழன் உயர்வைக் குறித்துள்ளான்.[5]
ஆதித்தனும் பல்லவரும்: ஆதித்தன் மனைவியின் தாயார் ‘காடுபட்டிகள்’ என்று ஒரு
கல்வெட்டுக் கூறுகிறது. அதனால் சோழ மாதேவி பல்லவர் மரபினர் என்பது நன்கு
தெரிகிறது.[6] இடைக்காலப் பல்லவ அரசனான கந்தசிஷ்யன் திருக்கழுக்குன்றத்துக்
கடவுளுக்கு அளித்த தேவதானத்தை ஆதித்த சோழன் புதுப்பித்தான்.[7] மூன்றாம் நந்திவர்மன்
மனைவியாகிய அடிகள் கண்டன் மாறம்பாவையார் என்பவள் நியமம் கோவிலுக்குச்
சில தானங்கள் செய்துள்ளாள்.அவளே அங்குள்ள பிடாரிகோவிலுக்கு ஆதித்தனது
18-ஆம் ஆட்சியாண்டில் தானம் செய்துள்ளாள்.[8] ஆதித்தனும் கொங்குநாடும்: ஆதித்த
சோழன் தஞ்சாவூரில் முடிசூடிக் கொண்டதும் கொங்குநாடு சென்று அதனை வென்றான்.
அதனைத்தன் நாட்டுடன் சேர்த்துக்கொண்டான்; ‘தழைக்காடு’ என்னும் நகரத்தையும்
கைப் பற்றினான்’ என்று ‘கொங்குதேசராசாக்கள்’ என்னும் நூல் நுவல்கிறது, ஆதித்தன்
மகனான முதலாம் பராந்தகன் காலத்துப் பட்டயங்கள் கொங்குநாட்டில் காணப்படலாலும்,
தான் அந்நாட்டை வென்றதாகப் பராந்தகன் தன் பட்டயங்களிற் கூறாமையாலும்,
ஆதித்தனே கொங்குநாட்டைவென்றனன் என்பது தெரிகிறது. இஃதன்றி,‘ஆதித்தன்
காவிரியின் கரை முழுவதும் (சகஸ்யமலை முதல் கடல்வரை) சிவன் கோவில்களைக்
கட்டினான்’ என்று அன்பில் பட்டயம் கூறுதலும் இம்முடிவுக்கு அரண் செய்வதாகும்.
ஆதித்தனும் சேரனும்: ஆதித்தன் காலத்துச் சேரவேந்தன் தாணுரவி என்பவன்.அவன்
ஆதித்தனுக்கு நண்பன் என்பதற்கு திருநெய்த்தானத்துக் கல்வெட்டு ஒன்று சான்று பகர்கிறது.
அதில், ‘சேரனும்,ஆதித்தனும் கடம்ப மாதேவி என்பாள் கணவனான விக்கி அண்ணன்
என்பானுக்கு முடி, பல்லக்கு, அரண்மனை, யானை முதலியன கொள்ளும் உரிமை அளித்தனர்’
என்பது கூறப்பட்டுள்ளது; ‘செம்பியன் தமிழவேள்’ என்ற பட்டமும் தரப்பட்டது.[9] இதனால்
இவ்வீரன் சோழனும் சேரனும் விரும்பத்தக்க முறையில் ஏதோ வீரச்செயல்கள் செய்தனனாதல்
வேண்டும். ஆதித்தன் மகனாக பராந்தகன் சேரன் மகளை மணந்தவன் தாணுரவி என்பவன்
கோக்கந்தன் ரவி என்பவன் என்று ஆராய்ச்சி யாளர் கூறுவர். கொங்கு நாட்டைப் பாண்டிய
அரசனிட மிருந்து சேரன் படைத் தலைவனான விக்கி அண்ணன் சோழனுக்காகக் கைப்பற்றி
இருத்தல் வேண்டும். அதனாற்றான் சோழனும் சேரனும் சேர்ந்து அவனுக்குச் சிறப்புச்
செய்தனர் என்பது தெரிகிறது.[10]
ஆதித்தேசுவரம்: ஆதித்தன் தொண்டை நாட்டில் காளத்திக்கு அருகில் இறந்தான். அவன்
மகனான பராந்தகன் அவன் இறந்த இடத்தில் ஒரு கோவிலைக் கட்டினான். அது ‘கோதண்ட
ராமேச்சரம்’ எனவும், ‘ஆதித்தேச்சரம்’ எனவும் வழங்கியது. விழாக் காலங்களில் ஆயிரம்
பிராமணர்க்கு அன்னமிட ஏற்பாடு செய்தான்.[11]
சோழர் சமய நிலை: சோழர் வழிவழியாகச் சைவராகவே இருந்தவர் ஆவர். விசயாலயன்
மரபினரும் அங்ஙனமே இருந்தனர். விசயாலயன் தஞ்சாவூரில் துர்க்கைக்குக் கோவில்
கட்டினான். அவன் மகனான ஆதித்தன் பல சிவன் கோவில்களைக் கட்டினான். அவன்
மகனான முதற் பராந்தகன் முதலில் தந்தைக்கே கோவில் கட்டிய சிறந்த மகனானான்.
இப்பிற்காலச் சோழ ராற்றான் சமயாசிரியர் போற்றி வளர்த்த சைவ சமயம் தமிழ்நாடு
முழுவதும் - ஏன்? கோதாவரி வரையும் பரவி இருக்கும் பெருமை பெற்றது.
-------
[1]. 1. K.A.N. Sastry’s ‘Pandyan Kingdom,’ pp.76-71.
[2]. S.I.I. Vol. 3. No 205
[3]. 164 of 1915.
[4]. 675 of 1909
[5]. 5 of 1897
[6]. 167 of 1894
[7]. 161 of 1928
[8]. 13 of 1899
[9]. S.I.I. vol 3. part 3, 221; 286 of 1911.
[10]. K.A.N. Sastry’s ‘Cholas’ Vol, 1.pp. 138-139.
[11]. 286 of 1906
---------
2.3. முதற் பராந்தக சோழன் (கி.பி. 907 - 953)
பராந்தகன் குடும்பம்: ஆதித்த சோழனது திருமகனான முதற்பராந்தக சோழன் ஏறத்தாழப்
பன்னிரு மனைவியரைப் பெற்றிருந்தான். அவர்கள் கோக்கிழான் அடிகள், சேர அரசன் மகள்
முதலியோர் ஆவர். பிள்ளைகள் - (1) இராசாதித்தன் (2) கண்டராதித்தன் (3) அரிகுல கேசரி
(4) உத்தமசீலன் (5) அரிஞ்சயன் என்பவர். வீரமாதேவி, அநுபமா என்பவர் பெண்மக்கள்
ஆவர். வீரமாதேவி என்பவள் கோவிந்த வல்லவரையன் என்னும் சிற்றரசனை மணந்திருந்தாள்;
அனுபமா என்பவள் கொடும்பாளுர் முத்தரையனை மணந்திருந்தாள். இராசாதித்தன் தாய்
கோக்கிழான் அடிகள்; அரிஞ்சயன் தாய் சேரன் மகளாவாள், அரிகுலகேசரி என்னும் இளவரசன்
கொடும்பாளுர் அரசன் மகளான பூதி ஆதிக்க பிடாரி என்பவளை மணந்திருந்தான். இத்தகைய
கொடுக்கல்-வாங்கல்களால் சேர அரசனும் முத்தரையரும் பராந்தகனுக்கு உறுதுணைவராக
இருந்தனர். இவருடன் கங்க அரசனான இரண்டாம் பிருதிவீபதி உற்ற நண்பனாக இருந்தான்.
பராந்தகன் ‘பரகேசரி’ என்ற பட்டம் உடையவன்.
பாண்டிநாட்டுப் போர்: முதற் பராந்தகன் பாண்டியருடனும் ஈழவருடனும் பாணருடனும்
வைதும்பருடனும், இறுதியில் இராட்டிரகூடருடனும் போர் செய்ய வேண்டியவன் ஆனான்.
இவற்றுள் முதற்போர் பாண்டிய நாட்டுப் போராகும். பராந்தகன் காலத்தில் பாண்டிய நாட்டை
ஆண்டவன் இரண்டாம் இராசசிம்மன் ஆவன். பராந்தகன் பாண்டிய நாட்டைக் கைப்பற்ற
விரும்பியே போர் தொடுத்தான். அப்போரில் பராந்தகனுடைய நண்பரான சேரன், முத்தரையர்,
பிற சிற்றரசர் பராந்தகருக்கு உதவி புரிந்தனர். இராசசிம்மன் தஞ்சை அரசனை நெய்ப்பூரில்
தோற்கடித்தான். கொடும்பாளுரில் கடும்போர் செய்தான். வஞ்சி நகரைக் கொளுத்தினான்.
‘நாவல்’ என்னும் இடத்தில் தென் தஞ்சை அரசனை முறியடித்தான்” என்று இராசசிம்மன்
பட்டயம் பகர்கின்றது. பாண்டிய நாட்டுப் போர் பல ஆண்டுகள் நடந்ததாகத் தெரிகிறது.
ஆதலின் இரு திறத்தாரிடத்தும் வெற்றி தோல்விகள் நடந்திருத்தல் இயல்பே ஆகும்.
இப்போரைப் பற்றிப் பாண்டியருடைய சின்னமனூர்ப்பட்டயம், கங்க அரசனது உதயேந்திரப்
பட்டயம், இலங்கை வரலாறாகிய மகாவம்சம் முதலியன கூறுதல் ஏறத்தாழ ஒன்றாகவே
இருத்தல் கவனித்தற்குரியது.
முதற்போரில் இராசசிம்மன் தோல்வியுற்று மதுரையை இழந்தான். பராந்தகன் மதுரையைக்
கைக்கொண்டான்; அதனால் ‘மதுரை கொண்ட கோப்பரகேசரி’ என்று தன்னை அழைத்துக்
கொண்டான்[1]. மதுரையை இழந்த இராசசிம்மன், அப்பொழுது இலங்கையை ஆண்டுவந்த
ஐந்தாம் கஸ்ஸ்பன் (கி.பி. 913-923) துணையை வேண்டினான். அவ்விலங்கை வேந்தன்
பெரும்படை திரட்டிப் பாண்டிய நாட்டிற்கு அனுப்பினான். அப்படையின் துணை கொண்டு
இராசசிம்மன் பராந்தகனை எதிர்த்தான். போர், வெள்ளுர் என்னும் இடத்திற் கடுமையாக
நடந்தது. சோழன் பக்கம் பழுவேட்டரையர், கந்தன் அமுதனார் என்னும் சிற்றரசன் இருந்து
போர் செய்தான். சோழனது ஒருபகுதி சேனைக்குத் தலைவனாக இருந்தவன் சென்னிப்
பேரரையன் என்பவன்.[2] சோழ மன்னன் அப்பொழுது நடந்த கடும்போரில் அப்படையையும்
வெற்றி கொண்டான்; பண்டு இலங்கைப் படைகளை வென்ற இராகவன் போலத்தான்
இலங்கைப் படையை வென்றமையால், தன்னைச் சங்கிராம இராகவன் என்று
அழைத்துக் கொண்டான். இறுதியாக ஈழப்படையின் தலைவனான சக்க சேனாபதி
என்பவன் எஞ்சிய தன் சேனையைத் திரட்டி இறுதிப் போர் செய்ய முனைந்தான்;
அப்பொழுது உண்டான கொடிய விட நோயால் இறந்தான்; படைவீரர் மாண்டனர்.
எஞ்சிய வீரர் ஈழநாடு திரும்பினர். வெள்ளுரில் நடந்த போரின் காலம் ஏறத்தாழக் கி.பி. 915
என்னலாம்[3]. இப்போரில் உண்டான படுதோல்வியால், இராசசிம்மன் இலங்கைக்கு
ஓடிவிட்டான். பாண்டியநாடு முழுவதும் சோழன் ஆட்சிக்கு உட்பட்டது. களப்பிரரை
முறியடித்துக் கி.பி. 575-இல் கடுங்கோனால் ஏற்படுத்தப்பட்ட பாண்டிய அரசு கி.பி.
915-இல் பராந்தக சோழனால் அழிவுற்றது.
ஈழநாட்டுப்போர்: ஈழநாட்டு மன்னன் இராசசிம்மனுக்குத் தனிமாளிகை அளித்து மரியாதை
செய்தான். ஆயினும் அங்கு இருப்பது பயனற்றது என்பதை உணர்ந்த இராசசிம்மன், தன்
ஆடையாபரணங்களையும் முடியையும் இலங்கையிலே வைத்து விட்டுத் தன் தாய்
வானவன்மாதேவி நாடான சேர நாட்டை அடைந்தான்.[4] இதனைத் திருவாலங்காட்டுச்
செப்பேட்டுச் செய்தியும் உறுதிப்படுத்துகிறது. பராந்தக சோழன் மதுரையில் முடிசூடிக்
கொள்ளவிழைந்தான் பாண்டியனுக்குரிய முடி முதலியன இலங்கையில் இருப்பதை
அறிந்தான்; உடனே இலங்கை இறைவற்கு ஆட்போக்கினான். அவன் அவற்றைத் தர
இசையவில்லை. அதனால் பராந்தகன் சினங்கொண்டு, பெரும் படையை இலங்கைக்கு
அனுப்பினான். இலங்கைப் படையும் சோழன் படையும் கடும்போர் புரிந்தன. போரில்
இலங்கைத் தளபதி இறந்தான். உடனே இலங்கை மன்னனான நான்காம் உதயன்
(கி.பி. 945-953) ‘ரோகணம்’ என்னும் கடிநகரை அடைந்தான். சோழப்படை அங்குச்
சென்றது; ஆனால் நகருக்குள் புகும் வழி அறியாது தத்தளித்தது; அச்சமேற்கொண்டு
திரும்பிவிட்டது.
பாணருடன் போர்: பாலாற்றுக்கு வடக்கே புங்கனூரிலிருந்து காளத்தி வரையுள்ள
நிலப்பகுதியை நெடுங்காலமாக ஆண்டு வந்தவர் பாணர் எனப்பட்டனர். அவர் ஆண்ட
நாடு பாணப்பாடி அல்லது பெரும்பாணப் பாடி எனப்படும். அவர்கள் பல்லவர் காலத்தில்
அனந்தப்பூர்க்கு அண்மையில் இருந்தவர்கள். சாளுக்கியர் பலம் மிகுதிப்பட்டதால், அவர்கள்
தெற்கே வரவேண்டியவர் ஆயினர். இரண்டாம் விசயாதித்தன் பாணப்பாடியைக் கி.பி. 909
வரை ஆண்டான். இவனது பெயரன் இராட்டிர கூட அரசனான மூன்றாம் கிருஷ்ணன்
காலத்தவன். இந்த இருவருக்கும் இடையில் இரண்டாம் விக்கிரமாதித்தன், மூன்றாம்
விசயாதித்தன் (புகழ்விப்பவர் கண்டன்) என்பவர் ஆண்டனர். கங்க அரசனான இரண்டாம்
பிருதிவீபதி பராந்தகன் நண்பன். அவன் பராந்தகன் ஏவலால் இவ்விரண்டு பாண
அரசரையும் எதிர்த்துப் போராடி வென்றான். பராந்தகன் அவனுக்குப் பாணாதிராசன்
என்ற பெயரைத் தந்து பாணப்பாடியை அவனது ஆட்சியில் விட்டனன் என்று சோழசிங்கபுரக்
கல்வெட்டு கூறுகிறது.[5] தோற்றோடிய பாண அரசர் இராட்டிர கூட அரசனிடம்
சரண்புக்கனர்.
வைதும்பருடன் போர்: வைதும்பர் என்பவர் ரேனாண்டு ஏழாயிரம் என்னும் நிலப்பகுதியை
ஆண்டவர். ‘ரேனாண்டு’ என்பது கடப்பை, கர்நூல் கோட்டங்களைக் கொண்ட நாடு.
வைதும்பர் தெலுங்கர். அவர்கள் பாணருடன் நட்புக் கொண்டவர். அதனால் பாணரை
எதிர்த்த கங்கருடனும் துளம்பருடனும் போரிட்டவர். கி.பி. 915-இல் பராந்தகன் வைதும்பரைத்
தோல்வியுறச் செய்து நாட்டைக் கைப்பற்றினான். அதனால் வைதும்ப அரசன் இராட்டிரகூட
அரசரிடம் சரண்புகுந்தான்.
வேங்கி நாட்டுடன் போர்: வேங்கிநாடு என்பது கிருஷ்ணை, கோதாவரி, ஆறுகட்கிடையில்
இருந்தது. அது பல்லவர் வீழ்ச்சிக்குப் பிறகு நெல்லூர்வரை பரவி விட்டது. பராந்தகன்
தானைத் தலைவருள் ஒருவனான மாறன் பரமேசுவரன் என்பவன் சீட்புலி என்பவனைத்
தோற்கடித்து நெல்லூரை அழித்து மீண்டான் மீள்கையில், தன் வெற்றிக்காகத் திருவொற்றியூர்
இறைவற்கு நிலதானம் செய்தான். அவன் தானம் செய்த காலம் கி.பி. 941 ஆகும்.[6]
சீட்புலி என்பவன் கீழைச் சாளுக்கிய இரண்டாம் பீமனின் சேனைத் தலைவன் ஆவன்.
துன்பத் தொடக்கம்: கங்க அரசனான இரண்டாம் பிருதிவீபதி கி.பி. 940-இல் இறந்தான்.
அவன் மகனான விக்கி அண்ணன் முன்னரே இறந்து விட்டதனால் பட்டம் ஏற்க மகன்
இல்லை. அப்பொழுது இராட்டிரகூடப் பேரரசனாக வந்த மூன்றாம் கிருஷ்ணன்
என்பவனது உடன் பிறந்தாளான ‘ரேவகா’ என்பாளை மணந்திருந்த இரண்டாம் பூதுகன்
எதிர்ப்பவர் இன்றிக் கங்க அரசன் ஆனான்.[7] இங்ஙனம் புதிதாக வந்த கங்க அரசன்
இராட்டிரகூடர் உறவினனானதும், பாணரும் வைதும்பரும் இராட்டிரகூடருடன்
சேர்ந்து விட்டமையும் பராந்தகன் பேரரசிற்கு இடையூறாயின.
பராந்தகன் முன் ஏற்பாடு: பராந்தகன் சிறந்த அரசியல் நிபுணன் ஆதலின், தன் பேரரசைக்
காக்க முன் ஏற்பாடு செய்திருந்தான். நடு நாட்டில் ஒரு நாடான திருமுனைப் பாடிநாட்டில்
திருநாவலூரை அடுத்த ‘கிராமம்’ என்னும் இடத்தில் பராந்தகன் முதல் மகனான
இராசாதித்தன் பெரும் படையுடன் இருந்து வந்தான். அப்படைக்கு ‘வெள்ளங்குமரன்’
என்னும் சேர நாட்டுத் தானைத் தலைவன் தலைமை பூண்டிருந்தான். அவன் கி.பி.943-இல்
பெண்ணையாற்றங்கரையில் சிவனுக்குக் கோவில் ஒன்றைக் கட்டினான். திருநாவலூர்
‘இராசாதித்தபுரம்’ எனப் பெயர் பெற்றது. இராசாதித்தனுக்கு உறுதுணையாக அவன் தம்பி
அரிகுல கேசரியும் உடன் இருந்தான். இந்த முன் ஏற்பாட்டால் பராந்தகன், பாணர், வைதும்பர்
என்பாரால் துன்பம் உண்டாகும் என்பதை எதிர்நோக்கி யிருந்தான் என்பதை அறியலாம்.[8]
தக்கோலப் போர்: இராட்டிரகூட அரசனான மூன்றாம் கிருஷ்ணனுக்கும் சோழர்க்கும் கி.பி.
949-இல் தக்கோலத்திற்கும் கடும் போர் நடந்தது. அதற்கு முன் ஒரு முறை இராசாதித்தன்
கிருஷ்ணனை முறியடித்தான். ஆனால் பின்னர் நடந்த தக்கோலப்போர் கடுமையானது.
தக்கோலம் அரக்கோணத்திற்குத் தென்கிழக்கில் ஆறுகல் தொலைவில் உள்ளது.
இராசாதித்தன் பகைவரைக் கடுமையாகத் தாக்கிப் போர் புரிந்தான். ஆனால், புதிய கங்க
அரசனான இரண்டாம் பூதுகன், யானைமீதிருந்த இராசாதித்தன் மீது திடீரெனப் பாய்ந்து
கொன்றான்.இதனால் சோழர் சேனை போரில் தோற்றது. மூன்றாம் கிருஷ்ணன் தன்
மைத்துனனுக்கு வனவாசி பன்னிராயிரமும் பெள்வோலம் முன்னூறும் தந்து பெருமைப்
படுத்தினான்.இப்போரினால் பராந்தகன் தான் வென்ற பாணப்பாடி, தொண்டை நாடு,
வைதும்ப நாடு இவற்றை இழந்தான். இந்த இடங்களில் கிருஷ்ணனுடைய கல்வெட்டுகள்
கிடைக்கின்றன. இரண்டாம் பூதுகன் சோணாட்டிலும் புகுந்து அல்லல் விளைத்ததாகச்
சில பட்டயங்கள் செப்புகின்றன. கிருஷ்ணன் தன்னை, ‘கச்சியும் தஞ்சையும் கொண்ட’
என்று கூறிக் கொண்டதாகச் சில பட்டயங்களிலிருந்து தெரிகிறது. பூதுகன் இராமேசுவரத்தில்
வெற்றித்துரண் ஒன்றை நாட்டியதாகக் கூறிக் கொண்டான். ஆயின், புதுச் சேரிக்குத் தெற்கே
இதுகாறும் பூதுகனுடைய அல்லது கிருஷ்ணனுடைய கல்வெட்டோ- பட்டயமோ
கிடைத்தில. இஃது எங்ஙனமாயினும், ஆதித்தனும் பராந்தகனும் அரும்போர் செய்து
சேர்த்த பேரரசு துகளாயது என்பதில் ஐயமே இல்லை.[9]
விருதுப் பெயர்கள் : பராந்தகன் பல பெயர்களைக் கொண்டவன். இவன் மதுரையை
அழித்தமையால் மது ராந்தகன் எனப்பட்டான், சிங்கள நாட்டை வென்றமையால்
சிங்களாந்தகன் எனப்பட்டான். இவன் முதலில் நடந்த போரில் கிருஷ்ணனை வீரம்
காட்டி வென்றமை யால் வீர சோழன் எனப்பட்டான் என்று கன்னியா குமரிக் கல்வெட்டு
கூறுகிறது. இவனுக்குச் சோழகுலப் பெருமானார், வீர நாராயணன், சமர கேசரி, விக்கிரம
சிங்கன், குஞ்சரமல்லன், சோழ சிகாமணி, சூரசிகாமணி என்னும் விருதுப் பெயர்களும் உண்டு.
சமயப்பணி: பராந்தகன் வீரநாராயணபுரம் போன்ற பல கிராமங்களை வேதம் வல்லார்க்கு
முற்றுாட்டாக அளித்தனன். இவன் சிறந்த சிவபக்தன். புலியூர்ச் சிற்றம்பலத்தைப் பொன்
வேய்ந்தவன் என்று லீடன் பட்டயம் கூறுகிறது. இதனை விக்கிரம சோழன் உலாவும்
ஆதரிக்கிறது.[10] இவன் நாட்டை 46 ஆண்டு அரசாண்டவன்; உத்தரமேரூர் அவையிற் பல
சீர்திருத்தங்களைச் செய்தவன் ஏமகர்ப்பம், துலாபாரம் செய்து புகழ் பெற்றவன். இவன்
‘சிவனது பாத தாமரையில் உறையும் வண்டு’ என்று திருவாலங்காட்டுச் செப்பேடு
கூறுகிறது. இவன் காலத்தில் பல கோவில்கள் கட்டப்பட்டன. ஆதித்த சோழன் கட்டாது
விட்ட பல கோவில்கள் இவன் காலத்தில் முற்றுப் பெற்றன. இவன் மகனான இராசாதித்தன்
காளத்திக்கு அருகில் கோதண்ட ராமேச்சரமும் (கோதண்டராமன் என்று இராசாதித்தன்
பெயர்) அரக்கோணத்திற்கு அருகில் கீழைப் பாக்கத்தில் உள்ள ஆதித்தேச்சரமும்
கட்டினான். இவன் மனைவி பெயர் ஈராயிரவன் தேவி அம்மனார் என்பது. இவன் தன்
பெயரால் காட்டுமன்னார் குடிக்கு அடுத்த ‘வீரநாராயண ஏரி’ (வீரான ஏரி-வீராநத்தம் ஏரி)
எடுப்பித்தான், வீர நாராயணநல்லூர் (வீரான நல்லூர்), வீர நாராயண சதுர்வேதி மங்கலம்
இவற்றை உண்டாக்கினான்; காட்டு மன்னார்குடியில் அளந்தேச்சுரர் கோவிலைக்
கட்டினான்.[11]
----------
[1]. 11 of 1931.
[2]. S.I.I. Vol.3. No.99.
[3]. Mahavamasa, Chap. 5.
[4]. Mahavamsa, chap. 53
[5]. Ep. Ind. Vol. 4.pp, 221-225, S.I.I. Vol. 2. No. 76.
[6]. 160, 236 of 1912.
[7. Rice's Mysore & Coorg from Inscription, pp. 45.
[8]. K.A.N. Sastry’s cholas’ vol.I, pp. 155.
[9]. K.A.N. Sastry’s “Cholas’ Vol. I. pp. 159-62.
[10]. Kanni 16
[11]. A.R.E. 1921. II. 27.
----------
2.4. பராந்தகன் மரபினர் (கி.பி. 953-985)
பராந்தகன் மரபினர் : திருவாலங்காட்டுச் செப்பேடு லீடன் பட்டயம் முதலியவற்றை
ஆராய்கையில், பராந்தகனுக்குப் பிறகும் அவன் காலத்தும் அரசுரிமை தாங்கியவர் இவர்
என்பது தெரிகிறது.
கண்டராதித்தன் (கி.பி. 949-957): இவனுக்கு முற்பட்ட வனான இராசாதித்தன் விட்டமையால்,
பராந்தகர்க்குப் பிறகு கண்டராதித்தனே பட்டம் பெற்றான். இவன் தந்தை இருந்தபொழுதே
தன் பெயரால் கல்வெட்டுகளை வெளியிட்டவன்.
----------
pallava06.jpg to be inserted here
---------
இவன் இராசகேசரி யாவன். இவன் மழவரையன் மகளார் செம்பியன்
மாதேவியார் என்பாரை மணந்து, உத்தமசோழன் (மதுராந்தகன்) என்பவனைப்பெற்றான்.
இவன் காவிரியின் வடகரையில் 'கண்டராதித்த சதுர்வேதி மங்கலம்’ எனத் தன்பெயரால் ஊர்
உண்டாக்கி இறந்தனன். இவன் படிமத்தைக் கோனேரிராசபுரத்துக் கோவிலுட் காணலாம்.
இவனுக்கு வீர நாராயணி என்றொரு மனைவியும் இருந்தனள். இச்சோழ மன்னன்
இராட்டிரகூட மன்னன் வென்ற தொண்டை நாட்டைக் கைப்பற்ற முனைந்தான், ஒரளவு
வெற்றியும் பெற்றான் என்று நினைக்க இடமுண்டு.[1]
கண்டராதித்தன் சிறந்த சிவபக்தன். இவனே சிதம்பரத்தைப் புகழ்ந்து திருவிசைப்பா
பாடியவனாதல் வேண்டும். அப்பாவில் பராந்தகன் பாண்டி நாட்டையும் ஈழத்தையும்
வென்று, பேரம்பலத்தைப் பொன் வேய்ந்தான் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இவன்
அந்தப்பாவில் தன்னைக் கோழிவேந்தன் (உறையூர் வேந்தன்), தஞ்சைக் கோன் என்று
கூறியுள்ளான். இவனை மேற்கு எழுந்தருளிய தேவர் என்று ஒரு கல்வெட்டு கூறுகிறது.
கொள்ளிடத்தின் வடகரையில் உள்ள திருமழபாடி என்னும் தலத்திற்கு மேற்கே ஒரு
கல்தொலைவில் உள்ள ‘கண்டராதித்த சதுர்வேதிமங்கலம்’ என்ற நகரம் இவன் அமைத்ததே
ஆகும்.
இவன் மனைவியாரான செம்பியன் மாதேவியார் சிறந்த சைவப் பெண்மணியார். இவர்
இராசராசன் ஆட்சியிலும் உயிரோடு இருந்தவர்; தம் கணவன், மகன், மருமகளார் பலர்,
சுந்தர சோழன் முதலிய எல்லாராலும் பாராட்டப்பட்டவர். இவர் தேவாரப்பாடல் பெற்றுள்ள
பல கோவில்களைக் கற்கோவில்கள் ஆக்கினர்; பல கோவில்கட்கு ஆடை அணிகள்
வெள்ளிப் பாத்திரங்கள் முதலியன அளித்தனர்; பல கோவில்கட்கு நிலங்களைத் தானமாக
விட்டனர். இங்ஙனம் இவர் செய்துள்ள திருப்பணிகள் மிகப் பலவாகும். அவற்றை
இறுதிப் பகுதியில் ‘சோழர் கோவிற் பணிகள்’ என்னும் தலைப்பில் விளக்கமாகக்
காணலாம்.
அரிஞ்சயன் : (கி.பி. 956 - 957) : இவன் கண்டராதித்தன் தம்பி. கண்டராதித்தன் மகன்
மதுராந்தகன் குழந்தையாக இருந்ததால், இவன் தன் தமையனுக்குப் பின் பட்டம் பெற்றான்;
ஆயின், சுருங்கிய ஆட்சி பெற்று மறைந்தவன். இவன் ‘பரகேசரி’ என்னும் பட்டம் பெற்றவன்.
இவனுக்கு மனைவியர் பலர் உண்டு. அவருள் வீமன் குந்தவ்வையார், கோதைப் பிராட்டியார்
என்னும் இருவரும் நீண்டகாலம் இருந்து பல திருப்பணிகள் செய்தனர். வீமன் குந்தவ்வையார்
கீழைச் சாளுக்கிய வீமன் மகள் என்பர் சிலர், அவ்வம்மையார் ‘அரையன் ஆதித்தன் வீமன்’
என்னும் சிற்றரசன் மகள் என்பர் சிலர். அரிஞ்சயன் மேல் பாடிக்கு அருகில் உள்ள ஆற்றுார்
என்னும் இடத்தில் இறந்தான்.[2] அந்த இடத்தில் முதல் இராசராசன், இறந்த தன்
முன்னோர்க்குப் பள்ளிப்படை (கோவில்) கட்டியதாகக் கல்வெட்டொன்று கூறுகிறது.[3]
அரிஞ்சயன் தொண்டை நாட்டைக் கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுப் போர் நிகழ்த்தி,
உயிர் இழந்தனன் போலும்! ‘இவன் பகைவராகிய காட்டுக்குத் தீயை ஒத்தவன்’ என்று
திருவாலங்காட்டுப் பட்டயம் பகர்தலால், இவன் போர்த்திறம் பெற்றவன் என்பது
தெளிவாகிறது. இவன் ஒரே ஆண்டு அரசனாக இருந்து இறந்தான்.
இரண்டாம் பராந்தகன் (கி.பி.956-973): இவன் அரிஞ்சயன் மகன்; வைதும்பராயன்
மகளான கல்யாணிக்குப் பிறந்தவன்; இராசகேசரி என்னும் பட்டம் உடையவன்; இவன்
‘மதுரை கொண்ட இராசகேசரி’ எனப்பட்டான். இவ்வரசன் பட்டம் பெற்றதும், பாண்டிய
நாட்டைத் தனித்து ஆட்சி செய்துவந்த வீரபாண்டியனை எதிர்த்தான். சேவூர் என்னும்
இடத்திற் கடும்போர் நடந்தது. செந்நீர் ஆறாக ஓடியது; பல யானைகள் மடிந்தன.
பராந்தகன் மகனான இரண்டாம் ஆதித்தன் சிறுவனாக இருந்தும், போரில் கலந்து
கொண்டான், வீர பாண்டியனுடன் விளையாடினான்’ என்று லீடன் பட்டயம் பகர்கின்றது.[4]
இச்செயலை மிகைப்படுத்தியே திருவாலங்காட்டுச் செப்பேடு ‘வீரபாண்டியன் தலை
கொண்ட ஆதித்தன்’ என்று கூறியுள்ளது.
சேவூரில் நடந்த போருக்குப் பின், சோழர் பக்கல் நின்று போரிட்ட கொடும்பாளுர்ச்
சிற்றரசனான ‘பராந்தக சிறிய வேளார்’ என்பவன் பாண்டிய நாட்டிற்குள் படையொடு
சென்று பாண்டியனைக் காட்டிற்குள் புகுமாறு விரட்டினான்; வீர பாண்டியற்குத்
துணையாக வந்த இலங்கைப் படைகளைத் தாங்கிக் கொண்டே இலங்கைக்கும்
சென்றான்; அங்குக் கடும்போர் செய்து, போர்க்களத்தில் கி.பி.959 -இல் மடிந்தான்.[5]
வீரபாண்டியனை எதிர்த்த ஆதித்த கரிகாலனுக்கு உறுதுணையாக இருந்தவர் சிலர்.
அவருள் முற்கூறிய வேளார். ஒருவன். ‘பூதி விக்கிரம கேசரி’ என்னும் கொடும்பாளுர்ச்
சிற்றரசன் மற்றொருவன். இவனுக்குக் கற்றளிப் பிராட்டியார், வரகுணப் பெருமானார்
என்னும் மனைவியர் இருந்தனர். இவருள் பின்னவர் சோழ அரசன் (ஆதித்தன்?) உடன்
பிறந்தவர் என்று கல்வெட்டு கூறுகிறது. இவனுடைய மக்கள் இருவர்க்கும் ‘பராந்தகன்,
ஆதித்தவர்மன்’ என்னும் பெயர்கள் இடம்பெற்றிருந்ததையும் நோக்க, சோழ மன்னர்
கொடும்பாளுர்ச் சிற்றரசரிடம் பெண் கொடுத்தும் கொண்டும் வந்தனர் என்பது
உள்ளங்கை நெல்லிக்கனி போல விளக்கமாதல் காண்க.
விக்கிரமகேசரி பல்லவனை வென்றதாகக் கல்வெட்டு ஒன்று கூறுகிறது. அச்சொல்
வல்லபன் (இராட்டிரகூட அரசன்) என்றிருத்தல் வேண்டும் என்று அறிஞர் அறைவர்.
இரண்டாம் பராந்தகன் தன் தந்தை, பெரிய தாதை இவர்களைப் பின்பற்றித் தொண்டை
நாட்டைக் கைப்படுத்த முயன்றான். அம்முயற்சியில் விக்கிரம கேசரியும் ஈடுபட்டானாதல்
வேண்டும். இப்பராந்தகன், ஆதித்த கரிகாலன் இவர்தம் கல்வெட்டுகள் தொண்டை
நாட்டில் மிகுதியாகக் கிடைப்பதையும், மூன்றாம் கிருஷ்ணனுடைய கல்வெட்டுகள்
குறைந்து காணப் படலையும் நோக்க, முதற்பராந்தகன் இறுதிக் காலத்தில் இழந்த
தொண்டை மண்டலம் அவன் மரபினனது இடைவிடா முயற்சியால் சிறிது சிறிதாகக்
கைப்பற்றப் பட்டு வந்தது என்பது தெரிகிறது. இரண்டாம் பராந்தகன் காஞ்சிபுரத்தில்
தனக்கென்று இருந்த அரண்மனையில் இறந்தான்; அதனால் ‘பொன்மாளிகைத் துஞ்சிய
தேவர்’ எனப்பட்டான்.[6] இதனால், இவன் காலத்தில் முழுத் தொண்டை நாடும் சோழர்
ஆட்சிக்கும் மீண்டும் உட்பட்டுவிட்டது என்பது விளங்குகிறதன்றோ?
இரண்டாம் பராந்தகன் மனைவியருள் குறிப்பிடத் தக்கவர் இருவர். இவரே தம்
கணவனுடன் உடன் கட்டை ஏறினர்.[7] இவர் இறந்தபொழுது இராசராசன் குழந்தையாக
இருந்தான் என்று திருக்கோவலூரில் உள்ள முதல் இராராசன் கல்வெட்டு உணர்த்துகிறது.
மற்றவர் சேரன் மாதேவியார்.[8] வானவன் மாதேவியார்க்கு ஆதித்த
கரிகாலன், இராசராசன், குந்தவ்வை என்னும் மக்கள் மூவர் இருந்தனர். இப்பேரரசன்
காலத்திற்றான் வீரசோழியம் என்னும் இலக்கண நூல் புத்தமித்திரர் என்பவராற்
செய்யப்பட்டது.[9] குந்தவ்வையார் பெற்றோர் படிமங்களைத் தஞ்சாவூர்ப் பெரிய
கோவிலில் எழுந்தருளுவித்தார்.[10]
ஆதித்த கரிகாலன் (கி.பி. 956 - 969) : இவன் பட்டம் பெற்று ஆண்டிலன்; ஆயினும்
தந்தைக்கு உதவியாக இருந்தனன்; தன் பெயரால் பல கல்வெட்டுகள் வெளிவரக்
காரணமாக இருந்தான். இரண்டாம் பராந்தகன் உயிருடன் இருந்த பொழுதே இவன்
கொலை செய்யப்பட்டான்.[11] இதற்குக் காரணம் என்ன? கண்டராதித்தன் மகனான
உத்தம சோழன் (மதுராந்தகன்) தக்க வயதடையாததால், சிற்றப்பனான அரிஞ்சயன்
நாட்டை ஆண்டான், பின்னர் அவன் மகனான இரண்டாம் பராந்தகன் அரசன்
ஆனான்; அவனுக்குப் பின் பெரு வீரனான ஆதித்த கரிகாலனே பட்டம் பெறவேண்டியவன்.
அவன் பட்டம் பெற்றால் தான் தன் வாழ்நாளில் அரசனாதல் இயலாதென்பதை
அறிந்த மதுராந்தகன் (ஆதித்தனது சிற்றப்பன்) ஏதோ ஒரு சூழ்ச்சியால் ஆதித்தனைக்
கொலை செய்துவிட்டான். சோணாட்டுக் குடிகள் ஆதித்தனுக்குத் தம்பியான
அருள்மொழித் தேவனையே (இராசராசனை) பட்டம் ஏற்குமாறு தூண்டினர்.
ஆயினும் இராசராசன் அதற்கு இணங்கவில்லை; தன் சிற்றப்புனான மதுராந்தகனுக்கு
நாடாள விருப்பம் இருந்ததை அறிந்தான்; அவனை அரசனாக்கினான்; தான்
அவனுக்கு அடங்கிய இளவரசனாக இருந்து நாட்டைக் கவனித்து வந்தான்.
அவனுக்குப் பின் தானே அரசனாவன் என்னும் ஒப்பந்தப்படி இச் செயலைச் செய்தான்.[12]
உத்தம சோழன் - மதுராந்தகன் (கிபி 969 - 986) : இவன் கண்டராதித்தன் மகன். இவன்
அரசு கட்டில் ஏறுவதற்கு முன்பே காஞ்சி வரையுள்ள தொண்டைமண்டலம் சோழர்
ஆட்சிக்குட்பட்டு விட்டது. ஆதித்த கரிகாலனுடைய கல்வெட்டுகள் உத்தரமேரூர்,
காஞ்சிபுரம், தக்கோலம், திருவண்ணாமலை முதலிய இடங்களில் மிகுதியாகக்
கிடைத்துள்ளன. இக் கல்வெட்டுகள் நிலவிற்பனை, அறச்செயல், திருப்பணி,
அரசியல் தொடர்பானவையாகக் காணக்கிடத்தலின், ஆதித்தன் காலத்திலேயே
தொண்டை நாட்டில் அமைதி உண்டாகி விட்டதென்பதை அறியலாம். உத்தம
சோழன் காலத்திய கல்வெட்டுகள் பலவும் செப்பேடு ஒரு தொகுதியும் கிடைத்துள்ளன.
இவன் பரகேசரி என்னும் பட்டம் பெற்றவன். பெயரின்றிப் ‘பரகேசரி’ என்பது மட்டுமே
கொண்டுள்ள கல்வெட்டுகள் எல்லாம் இவன் காலத்தனவே என்று சில சான்றுகள்
கொண்டு ஆராய்ச்சியாளர் துணிகின்றனர். சோழர் நாணயங்களில் இவன் காலத்ததுவே
பழைமையானதாகும். இவன் காலத்ததான பொற்காசு ஒன்று கிடைத்தது. அதன்
இருபுறங்களும் ஒருபடித்தாகவே இருக்கின்றன, நடுவில் ஒரு புலி உட்கார்ந்து கொண்டு
வலப்புறமுள்ள மீனை நோக்குகிறது. நாணயத்தைச் சுற்றிலும் உத்தம சோழன் பெயர்
கிரந்த எழுத்துகளிற் குறிக்கப்பட்டுள்ளது. அப்பொற்காசு 40 முதல் 60 குன்றிமணி
நிறையுள்ளது என்று நாணய ஆராய்ச்சியாளரான எலியட் கூறியுள்ளார்.[13]
அரசியல் : உத்தம சோழன் செப்பேட்டுத் தொகுதியால் அக்கால அரசியல் முறையை
நன்கு உணரலாம். இதன் விளக்கம் ‘அரசியல்’ என்னும் பகுதியிற் கூறப்படும். இவன்
காலத்தில் அம்பலவன் பழுவூர் நக்கன் என்னும் உயர்தர அலுவலாளன் சோழர் அரசியலில்
வேலை பார்த்து வந்தான். அவன் குவலாளம் (கோலார்) என்ற ஊரினன்; கொள்ளிடக்
கரையில் அப்பராற் பாடப்பெற்ற விசைய மங்கலம் பழங்கோவிலைக் கற்கொண்டு
புதுப்பித்தவன். உத்தம சோழன் அவனுக்கு ‘விக்கிரம சோழ மாராயர்’ என்னும் பட்டத்தை
அளித்துப் பெருமைப் படுத்தினான். இதனால் உத்தம சோழன் ‘விக்கிரம சோழன்’
என்னும் பெயரையும் பெற்றிருந்தான் என்பது வெளியாகிறது. அவ்வலுவலாளன்
இராசராசன் காலத்தில் ‘மும்முடிச் சோழமாராயர்’ எனவும் ‘இராசராசப் பல்லவராயன்’
எனவும் அழைக்கப்பட்டான்.
உத்தம சோழன் குடும்பம் : உத்தமசோழற்கு மனைவியர் பலர் இருந்தனர். அருள் - பட்டன்
தான தொங்கி, மழபாடி தென்னவன் மாதேவியார், வானவன் மாதேவியார், விழுப்பரையன்
மகளார், பழுவேட்ட ரையன் மகளார் குறிப்பிடத் தக்கவர். இவ்வைவரும் சேர்ந்து தம்
மாமியாரான செம்பியன் மாதேவியாரது பிறந்த நாள் பூசனைக்காகச் செம்பியன்மாதேவி
(கிராமம்)யில் உள்ள அவையாரிடம் காசு கொடுத்தனர் என்று கல்வெட்டு ஒன்று
கூறுகிறது.[14] பட்டத்து அரசியார் ‘உரத்தாயன் சொரப்பையார்’ (கன்னடப் பெயர்)
என்பவர். இவர் ‘அக்கமாதேவியார்’ என்றும் ‘மூத்த நம் பிராட்டியார்’ என்றும்
அழைக்கப்பட்டனர். இவர் ‘திரிபுவன[15]மகாதேவியார்’ என்றும் பெயர் பெற்றனர்.
உத்தம சோழன் மனைவியர் அனைவரும் தம் மாமியார் பெயர் கொண்ட (தஞ்சாவூர்க்
கோட்டத்தில் உள்ள) ‘செம்பியன்மாதேவி’ என்னும் சிற்றுாரில் உள்ள சிவன்
கோவிலுக்கே பல தானங்களைச் செய்தனர். இதனால் இம்மரபினர் அப்பெருமாட்டியிடம்
வைத்திருந்த அன்பு நன்கு விளங்குகிறதன்றோ? உத்தம சோழனுக்கு எத்துணை
மக்கள் இருந்தனர் என்பது தெரியவில்லை. ஆயின், மதுராந்தகன் கண்டராதித்தர்
என்பவன் ஒருவன் பெயர் மட்டும் கல்வெட்டுகளில் காணப்படுகிறது. அவன்
இராசராசன் ஆட்சியில் கோவில்களை மேற்பார்த்து வந்தான்.
இதுகாறும் கூறப்பெற்ற அரசர் அனைவரும் மிகச் சுருங்கிய கால எல்லைக்குள் இருந்து
மறைந்தோர் ஆவர். இவர்களது பெரு முயற்சியால் தொண்டை மண்டலம் மீட்கப்பட்டது.
பாண்டிய நாடு சோழராட்சியிற் சேர்க்கப்படவில்லை. இவர்கட்குப் பின்வந்த இராசராச
சோழனே சோழப் பேரரசன் விரிவாக்கி நிலை பெறச் செய்த பேரரசன் ஆவன்.
-----------
[1]. K.A.N. Sastry’s ‘Cholas’, Vol. I. pp. 182-184
[2]. 537 of 1920.
[3]. S.I.I. Vol.3. No. 17.
[4]. E.I. Vol. 22. Ieyden Grant, 25, 28.
[5]. 302 of 1908.
[6]. S.I.I. Vol. 3, p.288.
[7]. 236 of 1902.
[8]. இவர் பெயரால் அமைந்த ஊரே இன்று ‘சேர்மாதேவி’ என வழங்குகிறது.
[9]. ‘Cholas’ Vol. 190. 4.
[10]. S.I.I. Vol II, Part 1, pp.69-70.
[11]. 577 of 1920.
[12]. Thiruvalangadu plates, S.I.I. iii.
[13]. Vide his ‘coins of Southern India’ p. 132, No. 151.
[14]. 494 of 1925.
[15]. புதுவையை அடுத்துள்ள ‘திரிபுவனை’ என்னும் சிற்றுார் பழங்காலத்தில் இவர்
பெயராற்றான் அமைக்கப்பட்டதென்று கூறுவர்.
-------------
2.5. முதலாம் இராசராசன் (கி.பி. 985 - 1014)
இராசராசன் பிறந்த நாள்: சுந்தரசோழனாகிய இரண்டாம் பராந்தகனுக்கும் வானவன்
மாதேவிக்கும் பிறந்தவன் இராச கேசரி முதலாம் இராசராசன். இவன் கி.பி. 985 சூன் திங்கள்
25-ஆம் நாள் அரசு கட்டில் ஏறினான்,[1] தஞ்சை இராசராசேச்சரத்தில் ‘உடையார் இராசராச
தேவர் திருச்சதயத் திருவிழா’ எனவும், திருவையாற்று உலோகமாதேவீச்சரத்தில் ‘உடையார்
திங்கள் சதய விழா’ எனவும், செங்கற்பட்டுத் திருவிடந்தை வராகப் பெருமான் கோவிலில்,
யாண்டுதோறும் ஆவணித் திங்கள் சதயநாள் தொட்டு, ‘இராசராசன் திருவிழா’ என ஏழுநாள்
நடந்தது எனவும், வரும் கல்வெட்டுகளை நோக்க, இவன் பிறந்த நாள் சதயநாள் என்பது
தெரிகிறது. சேரநாட்டுத் திருநந்திக் கரை என்னும் ஊரில் உள்ள சிவன் கோவிலுக்குத் தன்
பிறந்த நாளாகிய ஐப்பசி மாதச் சதயநாளில் திருவிழா நடத்தற்காக ‘முட்டம்’ என்னும் ஊரை
அளித்தனன் என்பதை அங்குள்ள கல்வெட்டு அறிவித்தலால், இராசராசன் ஐப்பசித் திங்கள்
சதயநாளிற் பிறந்தவன் என்பது தெளிவாகிது.இப்பெருமான் பிறப்பைத் திருவாலங்காட்டுச்
செப்பேடுகள் அழகாகச் சிறப்பித்துள்ளன.
இவனது சிறப்பு: விசயாலயற்குப் பின் வந்த சோழர்களிற் சோழப் பேரரசை நன்கனம் அமைத்து
நிலைபெறச் செய்த பேரரசன் இராசராசனே ஆவன். இவன் உண்டாக்கிய பேரரசு
ஏறக்குறைய இரண்டு நூற்றாண்டுகள் நிலையுற்றிருந்தது எனின், இவன் இட்ட அடிப்படை
எவ்வளவு உறுதி வாய்ந்ததாக இருந்திருத்தல் வேண்டும்! இராசராசன் தன் தந்தையிடத்தும்
பிறகு சிற்றப்பனிடத்தும் இருந்து அரசியல் அமைப்புகளை அழகுற அறிந்திருந்தான்; தான்
பட்டம் ஏற்ற பிறகு இன்னின்ன வேலைகளைச் செய்து சோழப் பேரரசை உண்டாக்குதல்
வேண்டும் என்று முன்னமே திட்டம் செய்திருந்தான்; பட்டம் பெற்ற பின்னர் அத்திட்டத்தைச்
செவ்வனே நிறைவேற்றி வெற்றி கண்டவன். இவனது ஆட்சிக் காலத்திலேயே இவன்
தன் மைந்தனான இராசேந்திரனைப் பெரு வீரனாக்கிவிட்டமை பாராட்டற்பாலது.
அதனாலன்றோ, அப்பெருமான் கடற்படை செலுத்திக் கடாரம் கைக்கொண்டான்!
இராசராசன் ஆண்ட காலமே சோழர் வரலாற்றில் ‘பொற்காலம்’ என்னலாம். இவனது
ஆட்சியில் ஒவியம், சிற்பம், நாடகம், நடனம், இசை, இலக்கியம் இன்ன பிறவும்நன்குவளரத்
தலைப்பட்டன, இவன் காலத்திற்றான் தேவாரத் திருமுறைகள் நாடெங்கும் பரவின,
சைவ சமய வெள்ளம் நாடெங்கும் பரந்து மக்கள் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது.
சோழப் பேரரசை உண்டாக்கப் பெரும்படை திரட்டியவன் இராசராசனே ஆவன்; அப்படை
இவன் நினைத்தன யாவும் தடையின்றிச் செய்துவந்தது பாராட்டற்பாலது. அரசியல்
அமைப்பைத் திடமாக அமைத்தவனும் இராசராசனே ஆவன். நாகரிகம் மிகுந்த இக்கால
அரசியல் அமைப்பிற்கும் இராசராசன் அரசியல் அமைப்பிற்கும் எள்ளளவும் வேறுபாடில்லை.
இராட்டிரகூடர் படையெடுப்பால் துன்புற்ற சோழநாடு இராசராசன் காலத்தில்
கிருஷ்ணையாறுவரை பரவியது; மேற்கே அரபிக்கடல் வரை பரவியது; தெற்கே இலங்கை
வரை பரவியது எனின் இராசராசன் போர்த்திறனை என்னெனப் புகழ்வது!
இப்பெருவேலையைச் செய்ய இவனுக்கு இருந்த சாதனங்களைவிடப் பெருமை பெற்றது
இவனது திருவுருவமே என்னல் மிகையாமோ? இவனது திருவுருவம் கண்டவர் உள்ளத்தை
ஆர்க்கத்தக்கதாக இருந்திருத்தல் வேண்டும். இவனுடைய திருவுருவமும் கோப்பெருந்தேவியின்
திருவுருவமும் சிலை வடிவில் திருவிசலூர்க்கோவிலில் இருக்கின்றன. சுருங்கக் கூறின்,
இராசராசன் அரசியலிற் பண்பட்ட அறிவுடையவன்; சிறந்த போர்த்தொழிலில் வல்லவன்;
சிறந்த சமயப்பற்று உடையவன்; பேரரசை உண்டாக்கும் தகுதி முற்றும் பொருந்தப்
பெற்றவன் எனலாம். சோழர் வரலாற்றை இன்று நாம் அறிந்து இன்புற வழிவகுத்தவன்
இப்பேரறிஞனே ஆவன். எப்படி?
மெய்க்கீர்த்தி : ‘இச்சோழற்கு முற்பட்ட பல்லவர், பாண்டியர் பட்டயங்களும் கல்வெட்டுகளும்
பல கிடைத்துள்ளன. அவற்றில் அரசமரபு கூறப்பட்டிருக்கும். அந்தந்த அரசன் சிறப்புச்
சிறிதளவே கூறப்பட்டிருக்கும்; முற்றும் கூறப்பட்டிராது: விளக்கமாகவும் குறிக்கப்பட்டிராது.
இம்முறையையே விசயாலயன் வழி வந்தவரும் பின்பற்றி வந்தனர். ஆனால், இராசாசன்
இந்த முறையை அடியோடு மாற்றிவிட்டான்; தனது ஆட்சியாண்டுகளில் முறையே
நடைபெற்ற போர்ச் செயல்களை முறையே வெளிவந்த கல்வெட்டுகளில் முறைப்படி
குறித்து வரலானான். சான்றாக ஒன்று கூறுவோம்: இராசராசன் முதலில் காந்தளூர்ச்
சாலையில் கலம் அறுத்தான். இந்த வெற்றியே இவன் கல்வெட்டுகளில் முதல் இடம்
பெற்றது. இதன் பின்னர்ச் செய்த போர் இரண்டாம் இடம்பெற்றது. இப்படியே ஒன்றன்பின்
ஒன்றாக முறைப்படி குறிக்கப் பட்டன. இங்ஙணம் இப்பெரியோன் ஒழுங்குபெறக்
குறித்தவையே பிற்கால அரசராலும் பின்பற்றப்பட்டன. அக்குறிப்புகளே இன்று
சோழர் வரலாற்றுக்கு உறுதுணை செய்கின்றன. பட்டயம் அல்லது கல்வெட்டுக்குத்
தொடக்கமாக ஒரு தொடரை அழகாக அமைத்தவனும் இராசராசனே ஆவன். ‘இஃது
இவனது பட்டயம் அல்லது கல்வெட்டு’ என்று எளிதில் கூறிவிடத் தக்கவாறு அத்
தொடக்கம் இருக்கிறது. அது ‘திருமகள் போல...’ என்பதாகும். இவனது வீரமகனான
இராசேந்திரன் கல்வெட்டும் பட்டயமும் வேறு தொடக்கம் உடையவை. இங்ஙனமே
பின்வந்தார் பட்டயங்களும் கல்வெட்டுகளும் வேறுவேறு தொடக்கம் கொண்டவை.
இத்தகைய ஒழுங்கு முறையை அமைத்த இப்பேரரசனின் அறிவாற்றலை என்னெனப்
பாராட்டுவது!
சுற்றுப்புற நாடுகள்: இராசராசன் பட்டம் பெற்ற காலத்தில் சோழ அரசு வடக்கில்
தொண்டைநாடுவரையும் தெற்கில் பாண்டியநாட்டு வட எல்லை வரையுமே பரவி
இருந்தது. எனவே, வடக்கே கீழைச் சாளுக்கியர் ஆட்சி நெல்லூர் வரை பரவியிருந்தது;
தெற்கே பாண்டியநாடு தனித்து இருந்தது; மேற்கே சேர நாடு கங்கநாடு, குடகு,
நுளம்பபாடி, தடிகைபாடி, மேல் கடற்கரை நாடு முதலியன தனித்தனிச்சிற்றரசுகளாக
இருந்தன. வடமேற்கே இராட்டிரகூடரை அழித்துப் புதிய பேரரசை இரட்டபாடியில்
அமைத்த மேலைச் சாளுக்கியர் ஆண்டு வந்தனர். இலங்கையில் ஐந்தாம் மகிந்தன்
ஆண்டுவந்தான்.
சேர பாண்டியருடன் போர் : இராசராசன் பட்டம் பெற்ற ஆண்டு கி.பி. 985, இவன்
சேர நாட்டிற் படையெடுத்த ஆண்டு கி.பி.989.எனவே இவன் ஏறத்தாழ நான்காண்டுகள்,
தன் படையைப் பெருக்குவதிற் செலவழித்தான் எனலாம். சேர நாட்டின்மீது சென்ற
படைக்குத் தலைமை பூண்டவன், பஞ்சவன்மாராயன் என்னும் பெயர்கொண்ட
இராசேந்திர சோழனே ஆவன். மலைநாடு, அடைதற்கு அரியதாய் மலையும் கடலும்
குழ்தரப் பரசுராமனால் அமைக்கப்பட்டதென்று திருவாலங்காட்டுச் செப்பேடு
செப்புகிறது. இம்மலை நாட்டுத் துறைமுகப் பட்டினமான காந்தளூர்ச் சாலையில்
போர் நடந்தது. அப்போரில் சேரனும் பாண்டியனும் சேர்ந்து சோழரை எதிர்த்தனர்.
பாண்டியன் அமரபுசங்கன் என்பவன்;[2] சேரன் பாஸ்கர ரவிவர்மன் திருவடி
(கி.பி. 978-1036) என்பவன்.[3] போரில் சோழர்படை வெற்றி பெற்றது. இராசராசனது
4ஆம் ஆண்டுக் கல்வெட்டு ‘காந்தளூர்ச் சாலையில் கலம் அறுத்தருளி’ எனக்
குறிப்பதால்,[4] இராசராசன் காந்தளூரில் இருந்த சேரர் மரக்கலங்களை அழித்தவன்
என்பது புலனாகிறது. ஆயினும், கி.பி 993 முதலே இராசராசன் கல்வெட்டுகள்
சேர நாட்டிலும் பாண்டிய நாட்டிலும் காணக் கிடைத்தலால், இரண்டு நாடுகளையும்
வென்று சோழர் ஆட்சியை அங்கு உண்டாக்கி அரசியல் அமைதியை நிறுவ
நான்காண்டுகள் ஆகி இருத்தல் வேண்டும் என்பது தெரிகிறது. சேர நாட்டை
வென்ற இராசராசன் அந்நாட்டில், தான் பிறந்தநாளைக் கொண்டாட ஏற்பாடு
செய்தான் என்பது முன்னமே கூறப்பட்டதன்றோ? பஞ்சவன் மாராயன் பாண்டியனை
ஒடச்செய்தான்; விழிஞம் என்னும் துறைமுகத்தைக் கைக்கொண்டான். இராசராசனுக்குத்
தென்ன பராக்கிரமன் என்னும் விருதுப்பெயர் இருத்தலாலும், பாண்டி நாட்டிற் பற்பல
இடத்தும் இவன் கல்வெட்டுகள் இருத்தலாலும், பாண்டிய மண்டலம் 'இராசராச
மண்டலம் என வழங்கப் பெற்றமையாலும், இராசராசன் பாண்டிய நாட்டை முழுவதும்
வென்று அடக்கி ஆண்டான் என்பது வெள்ளிடை மலைபோல் விளங்குகிறதன்றோ?
மலை நாட்டுப் போர் : குடமலை நாடு என்பது குடகு நாடாகும். அந்நாட்டில்
உதகை என்பது
அரண் மிகுந்த இடமாக இருந்தது. இராசராசன் தன் தூதனைக் குடமலை நாட்டிற்கு
அனுப்பினான். அவனைக் குடமலை நாட்டரசன் சிறை செய்தனனோ, அல்லது
கொன்றனனோ புலப்படவில்லை. இராசராசன் அங்குப் படையெடுத்துச் சென்றான்,
உதகையை அடைய 18 காடுகள் தாண்டினான்; காவல்மிகுந்த உதகையை அழித்தான்
குடமலைநாட்டைக் கைப்பற்றினான். இச்செயல் கி.பி. 1008 - க்குச் சிறிது முன்
நடைபெற்றதாகும். இப்போரைப் பற்றிய குறிப்புகள் கலிங்கத்துப் பரணியிலும் மூவர்
உலாவிலும் காணலாம். இப்படையெடுப்பில் தலைமை பூண்ட தானைத்தலைவன்
இராசேந்திரன் போலும்![5] இப்படையெடுப்பின்போது குடமலை நாட்டை ஆண்டவன்
மீனிசா என்பவன். போர் நடந்த இடம் பனசோகே என்பது. மீனிசா, போரில் திறம்பட
நடந்துகொண்டதால், அவன் வீரத்தைப் பாராட்டிய இராசராசன், அவனுக்குச் சத்திரிய
சிகாமணி கொங்காள்வான் என்ற பட்டம் சூட்டி, மாளவி என்னும் ஊரை
நன்கொடையாகக் கொடுத்தான்.[6]
கொல்லம், மேற்கரை நாடுகள் : இராசேந்திரன் பிறகு கொல்லத்தின்மீது சென்று, கொல்லம்,
கொல்ல நாடு, கொடுங்கோளுர் முதலிய பகுதிகளில் இருந்த சிற்றரசரை வென்று
மேலைக் கடற்கரை நாட்டையும் கைப்பற்றி, எங்கும் பெருவெற்றி பின்தொடர மீண்டான்.
இவ்வெற்றிகட்குப் பின் இராசராசன் ‘கீர்த்தி பராக்கிரம சோழன்’ என்னும் விருதுப்பெயர்
பெற்றான்.
கங்கபாடி : கங்கபாடி என்பது மைசூரின் பெரும் பகுதியாகும். தலைநகரம் தலைக்காடு
என்பது. இவர்கள் சோழர் பேரரசை எதிர்த்து நின்றவர்; பல்லவர் கால முதலே பல
நூற்றாண்டுகளாகக் கங்கபாடியை ஆண்டு வந்தவர். நுளம்பர் என்பவர் இவர்கட்கு
அடங்கியவர். இராசராசன் கொங்கு நாட்டிலிருந்து காவிரியைத் தாண்டிக் கங்கபாடியில்
நுழைந்தான்; முதலில் தடிகைபாடியைக் கைக்கொண்டான்; கங்கபாடியையும்
கைப்பற்றினான்.[7]
நுளம்பபாடி : நுளம்பபாடி என்பது மைசூரைச்சேர்ந்த தும்கூர், சித்தல் துர்க்கம் கோட்டங்களும்,
பெங்களுர் கோலார், பெல்லாரிக் கோட்டங்களும் சேர்ந்த நிலப்பரப்பாகும். இதனை
ஆண்டவர் நுளம்பப் பல்லவர் என்பவர். இவராட்சியில் சேலம், வட ஆர்க்காடு
கோட்டங்களின் வடபகுதியும் சேர்ந்திருந்தது.[8] இந்நிலப் பகுதி இராசராசன் பேரரசிற்
கலந்துவிட்ட பிறகு, நுளம்பப் பல்லவர் சிற்றரசராகவும் சோழ அரசியல் அலுவலாளராகவும்
இருக்கலாயினர். ஐயப்பன் மகனான கன்னராசன் என்பவன் தடிகைபாடியின் ஒரு
பகுதியை இராசராசற்கு அடங்கிய சிற்றரசனாக இருந்து ஆண்டு வந்தான் : ‘நொளம்பாதி
ராசன்’ என்பவன் இராச ராசன் தானைத் தலைவனாக இருந்தான். ‘நொளம்பாதி ராசன்
சொரபையன்’ என்னும் சிற்றரசன் ஒருவன் இருந்தான்.
தெலுங்க நாடு : தொண்டை நாட்டிற்கு வடக்கே கீழைச்சாளுக்கியர் ஆட்சி நெல்லூர்
வரை பரவியிருந்தது. கிருஷ்ணையாறு முதல் வடபெண்ணையாறு வரை இருந்த நாடு
சீட்புலிநாடு, பாகிநாடு என்று பெயர் பெற்றிருந்தது. இராசராசன் காருகுடியைச் சேர்ந்த
பரமன் மழபாடியார் என்னும் மும்முடிச்சோழன் என்ற சேனைத் தலைவனைப்
பெரும்படையோடு அங்கு அனுப்பினன். அத்தலைவன் பீமன் என்னும் அரசனை
வென்று அந்நாடுகளைச் சோழப் பேரரசில் சேர்த்தான் மந்தை மந்தையாக ஆடுகளையும்
பிற பொருள்களையும் கைக் கொண்டு மீண்டான் என்று காஞ்சிபுரக் கல்வெட்டொன்று
கூறுகிறது.[9] நெல்லூர்க் கோட்டத்தைச் சேர்ந்த ரெட்டி பாளையத்துக் கல்வெட்டில்
இராசராசனது 8ஆம் ஆட்சி ஆண்டைக் குறிப்பிட்டு அவனது சிற்றரசன் அல்லது அரசியல்
அலுவலாளனான மும்முடி வைதும்ப மகாராசன் ஆன துரை அரசன் என்பவன் தானம்
செய்த செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.[10]
கீழைச் சாளுக்கிய நாடு : இராசராசன் காலத்தில் கீழைச் சாளுக்கிய நாடு பெருங்குழப்பத்தில்
இருந்தது. அந்நாடு கிருஷ்ணை, கோதாவரியாறுகட்கு இடைப்பட்டது. அந்நாட்டு
அரசமரபினருள் இரண்டு கிளையினர் தோன்றி ஒருவரை ஒருவர் நாட்டைவிட்டு
விரட்ட முயன்றனர்.நாடு கலகத்திற்கு உட்பட்டது. சக்திவர்மன் என்பவன் ஒரு கட்சியினன்.
அவனை மற்றொரு கட்சியினர் நாட்டைவிட்டு விரட்டி விட்டனர். ஏறத்தாழ 27
ஆண்டுகள் சக்திவர்மன் மரபினர் நாட்டை ஆள இடமின்றித் தவித்தனர். இப்போராட்டம்
கி.பி. 925-லிருந்து நடந்துவந்ததெனினும், உச்சநிலை பெற்றது இராசராசன்
காலத்திலே ஆகும். சக்திவர்மன் மரபினர் அரசுக்குரிய மூத்த குடியினர். இளங்குடியினர்
நாட்டைக் கவர்ந்து ஆண்டனர். சக்திவர்மன் இராசராசனைச் சரண் அடைந்தான்.
ஏறத்தாழக் கி.பி. 999-இல் இராசராசன் வேங்கி நாட்டைக் கைப்பற்றிச் சக்திவர்மனை
அரசனாக்கினன். சக்திவர்மன் சோழனுக்கு அடங்கிய சிற்றரசனாக- ஆனால் தனி
அரசனாக இருந்து வேங்கி நாட்டை ஆண்டுவந்தான். இவன் இளவலான விமலாதித்தனுக்கு
இராசராசன் தன் மகளான குந்தவ்வையை மணம் செய்து கொடுத்தான்.[11] இவ்விரண்டு
செயல்களாலும் கீழைச் சாளுக்கிய நாடு சோழப் பேரரசின் சிறந்த உறுப்பாக விளங்கியது.
கீழைச் சாளுக்கிய மரபு சோழமரபுடன் ஒன்றுபட்டுவிட்டது; சோழப் பேரரசிற்கும்
வடக்கில் அச்சம் இல்லாதொழிந்தது. இராசராசன் மருமகனான விமலாதித்தன்
திருவையாற்றில் தம் மாமியார் கட்டிய கோவிலுக்குத்தானம் செய்துள்ளான்.[12]
கலிங்கநாடு : இராசராசன் தான் கலிங்கத்தை வென்றதாகக் கூறியுள்ளான்.
மகேந்திர
மலையில் இரண்டு கல்வெட்டுகள்[13] கிடைத்தன. அவற்றில், ‘விமலாதித்தன் என்னும்
குலூத நாட்டு அரசனை இராசேந்திரன் வென்றான்; வென்று மகேந்திரமலை உச்சியில்
வெற்றித்துரண் ஒன்றை நாட்டினான்’ என்னும் செய்தி பொறிக்கப்பட்டுள்ளது. ஆயின்,
இச் செய்தியை இராசேந்திரன் ஆட்சியில் நடந்ததாக அவனுடைய கல்வெட்டுகள்
கூறவில்லை. ஆதலின், இப் படையெடுப்பும் வெற்றியும் இராசராசன் காலத்திற்றான்
நடந்திருத்தல் வேண்டும். குலுரத நாடு என்பது மகேந்திர மலையைத் தன் அகத்தே
கொண்ட கலிங்கநாடு போலும்! இங்குக் குறிப்பிட்ட விமலாதித்தன் சாளுக்கிய (முன்
சொன்ன) விமலாதித்தன் எனத் தவறாகக் கொண்டு வரலாறு எழுதினோரும் உண்டு.
---------
[1]. Ep Ind. Vol. 9. p. 217.
[2]. Thiruvalangadu plates.
[3]. Travancore Archaeological States Vol.2, p. 31-32
[4]. T.A.S. II. p.4.
[5]. Ep. Carnataka. Vol. 8, 125.
[6]. 623 of (Appendix B).
[7]. Ind Ant, VII. 30, p. 109.
[8¨. Ep. Ind. VII. 10, p.87.
[9]. 79 of 1921.
[10]. Nellore Ins. No 239.
[11]. Ind. Ant. Vol. 14.p.52
[12]. 215 of 1894
[13]. 396,397, of 1896; Archaeological Survey of India, 1911-12, pp. 171-172.
ஈழ மண்டலம் : கி.பி. 993-இல் வெளிவந்த கல்வெட்டுகளிலேயே
இராசராசன் ஈழ
மண்டலத்தை வென்றமை குறிப்பிடப்பட்டுள்ளது. “இராமன் குரங்குகளின் துணையைக்
கொண்டு பாலம் கட்டி அரும்பாடுபட்டு இராவணனைக் கொன்றான். ஆயின்,
இராசராசன் பாலம் கட்டாமலே படைகளைக் கப்பல் மூலமாகக் கொண்டுசென்று
இலங்கை இறைவனை எரிக்கு இரையாக்கினான். இதனால் இவன் இராமனினும்
சிறந்தவனே ஆவன்” என்று திருவலாங்காட்டுப்பட்டயம் பகர்கின்றது. இராசராசன்
காலத்தில் இலங்கையில் குழப்பம் மிகுதியாக இருந்தது. இலங்கை அரசனான ஐந்தாம்
மகிந்தன் தென்கிழக்கில் இருந்த மலை அரணையுடைய ‘ரோஹணம்’ என்னும் இடத்திற்குச்
சென்று விட்டான். அச்சந்தர்ப்பத்தில் இராசராசன் வட இலங்கையைக் கைப்பற்றி,
அதற்கு[14] மும்முடிச் சோழ மண்டலம் என்னும் பெயரிட்டான்.
இப்படையெடுப்பினால் அநுராதபுரம் அழிவுற்றது. பொலநருவா சோழர் தலைநகரம்
ஆனது; அது ‘ஜனநாத மங்கலம்’ என்று பெயர் பெற்றது; இராசராசன் அத்தலை நகரில்
சிவன் கோவில் ஒன்றைக் கட்டினான். இக்கோவில் சுதை, செங்கல் முதலியன கொண்டு
அழுத்தமாகவும் அழகாகவும் கட்டப்பட்டது. சுற்றிலும் மதிலையுடைய கோநகரத்தில்
இக்கோவில் அழகுற அமைந்துள்ளது. இஃது இன்றும் தன் எழில் குன்றாது இருத்தல்
வியப்புக்குரியது.[15] தாழி குமரன் என்னும் சோழ அரசியற் பணியாளன் ஒருவன்
மாதோட்டத்தில் (இராசராச புரத்தில்), அழகிய கோவில் ஒன்றைக் கட்டி ‘இராசரா
சேச்சரம்’ எனப் பெயரிட்டான்; அதற்குப் பல தானங்கள் செய்துள்ளான்.[16] இராசராசன்
தான் தஞ்சாவூரிற்கட்டிய பெரிய கோவிலுக்கு ஈழத்திலிருந்து பணமும் இலுப்பைப் பாலும்
அனுப்ப ஏற்பாடு செய்திருந்தான்.[17]
மேலைச் சாளுக்கியர் : இரட்டபாடி என்பது இராட்டிரகூடர் அரசாண்ட
நிலப்பகுதி.
இதுவே பல்லவர் காலத்தில் மேலைச்சாளுக்கியர் ஆண்ட நாடு. கி.பி. 975-இல் இரட்டரை
வலிதொலைத்து மீட்டும் மேலைச் சாளுக்கியர் தம் பண்டைப் பேரரசை நிலைநிறுத்தினர்.
அவருள் முதல்வன் இரண்டாம் தைலபன் எனப்பட்ட ஆகவமல்லன் ஆவன். இப்பேரரசன்
கி.பி. 992-இல் இராசராசனை வென்றதாகக் கல்வெட்டு ஒன்றில் கூறிக்கொண்டான்.[18]
ஆனால், இதைப் பற்றி விளக்கம் இதுகாறும் கிடைத்திலது. கி.பி. 992-க்கும் பிறகு
அரசனான சத்தியாஸ்ரயன் இராசராசனுடன் போரிட்டான் போலும் இராசராசன்
சத்யாஸ்ரயனுடன் போரிட்டு அவனது செல்வத்தைத் தஞ்சைப் பெரிய கோவில் கட்டச்
செலவழித்தான் என்று கல்வெட்டுகள் குறிக்கின்றன.[19] “சத்யாஸ்ரயன் போர்க்களத்திலிருந்து
புறங்காட்டிஓடிவிட்டான். அவன் ‘கஷ்டாஸ்ரயன்’ ஆனான்’ என்று திருவாலங்காட்டுப்
பட்டயம் பகர்கின்றது. சத்யாஸ்ரயனுடைய தார்வார் (ஹொட்டுர்) கல்வெட்டு, (கி.பி.1005)
“சோழர் மரபுக்கணியான இராசராச நித்தியவிநோதனது மகனான சோழ இராசேந்திர
வித்யாதரன் தோணுார் (பீசப்பூர்க் கோட்டத்தில் உள்ளது) வரை வந்தான்; அவன் 9 லக்கம்
துருப்புகளுடன் வந்தான்; நாடு முழுவதையும் கொள்ளை அடித்தான்; பெண்கள் குழந்தைகள்
முதலியவர்களைக் கொன்றான். தமிழரை ஒழிக்கும் சத்யாஸ்ரயன் இராசேந்திரனைப்
புறங்காட்டி ஒடச்செய்தான்” என்று கூறுகிறது.[20]
இக்குறிப்புகளால், முதலில் சத்யாஸ்ரயன் தோற்றனன் என்பதும், பிறகு சோழர்
அந்நாட்டை ஆள முடியாமல் திரும்பிவிட்டனர் என்பதும் சத்யாஸ்ரயன் படைவலி
மிக்கவன் என்பதும் தெரிகின்றன. இதுகாறும் கூறிவந்த செய்திகளால், இராசராசன்
வடக்கே கிருஷ்ணையாறு முதல், வடமேற்கே துங்கபத்திரையாறு முதல் தெற்கே
குமரிமுனை வரை, கிழக்கிலும் மேற்கிலும் கடலை எல்லைகளாகக் கொண்டதென்இந்தியா
முழுவதையும் பிடித்து ஆண்டவன் என்பது நன்கு விளங்குமன்றோ? இவற்கு முன்
இங்ஙனம் சோழப் பேரரசை உண்டாக்கினோர் ஒருவரும் இலர் இலர்! இராசராசன்
கங்கபாடி, வேங்கி மண்டலம் இரண்டிற்கும் தன் மகனான பேராற்றல் படைத்த
இராசேந்திரனையே மகா தண்டநாயகனாக வைத்திருந்தான். இங்ஙனம்செய்துவைத்த
பாதுகாவலால், மேலைச் சாளுக்கியர் சோழநாட்டின் மீது படையெடுக்கக் கூடவில்லை.
மேலும், மேலை சாளுக்கியர் வடக்கே பரமாரர் என்னும் மாளுவநாட்டு அரசரால்
அடிக்கடி துன்பத்திற்கு உள்ளாயினர். வடக்கே பரமாரராலும் தெற்கே சோழராலும்
சாளுக்கியர் அடைந்த இன்னல்கள் பலவாகும்.
பழந்திவு பன்னிராயிரம்: இராசராசன் அலைகடல் நடுவிற் பலகலம் செலுத்தி, முந்நீர்ப்
பழந்தீவு பன்னிராயிரமும்[21] கைப்பற்றினன். இங்ஙனம் சென்ற இடம் எல்லாம் வெற்றிச்
சிறப்பெய்திய இராசராசன் சயங்கொண்ட சோழன் எனப்பட்டான். அதுமுதல் தொண்டை
மண்டலம் ‘சயங்கொண்ட சோழ மண்டலம்’ எனப்பட்டது. இராசராசன் உய்யக் கொண்டான்
மலை (திருக்கற்குடி) நாயனார்க்குப் பொற்பட்டம் ஒன்றை அளித்தனன். அதன் பெயர்
'சயங்கொண்டசோழன்’ என்பது[22]. கங்கைகொண்ட சோழபுரத்திற்கு அருகில்
உள்ள ஊரும் ‘சயங்கொண்ட சோழபுரம்’ எனப்பட்டது.
சிற்றரசர் : பழுவேட்டரையர் கந்தன் மறவன் என்பவன் ஒரு சிற்றரசன். இப்பழுவேட்டரையர்
கீழ்ப் பழுவூர். மேலப்பழுவூர்களை ஆண்டுவந்தவர். இவர் மரபிற்றான் முதற்பராந்தகன்
பெண் எடுத்தான். அதுமுதல் இம்மரபினர் சோழர்க்குப் பெண் கொடுக்கும் உரிமை
பெற்றிருந்தனர். இவர்கள் இராசராசனுக்குக் கீழ்த் தம்மாட்சி நடத்தினோர் ஆவர்.[23]
கந்தன் மறவன் மேலப்பழுவூரில் திருத்தோட்டம் உடையார்க்குக் கோவில் கட்டினவன்;
நந்தி புரத்தில் இருந்த வரிமுறையைத் தன் ஊரிலும் ஏற்படுத்தியவன்.[24] வட ஆர்க்காடு
கோட்டத்தில் இலாடராயர் என்னும் சிற்றரச மரபினர் ஆண்டுவந்தனர். இவர்கள்
பஞ்சபாண்டவர் மலை என்னும் இடத்தில் ஆட்சி புரிந்தோர் ஆவர். இவருள் உடையார்
இலாடராயர் புகழ்விப்பவர் கண்டன் ஒருவன். அவன் மகன் உடையார் வீரசோழர்
என்பவன் ஒருவன். இவனே இராசராசன் காலத்தவன்; தன் மனைவி வேண்டுகோளுக்கு
இணங்க ஒரு சமணப் பள்ளிக்குத் தானம் செய்தவன்.[25] கடப்பைக் கோட்டத்தில் மகாராசப்
பாடியை ஆண்டு வந்த துக்கரை என்னும் பெயருடைய வைதும்பராயன் மகன்
நன்னமராயர் என்பவன் திருவல்லம் (வடஆர்க்காடு) கோவிலுக்குத் தானம்
செய்துள்ளான்[26]. கி.பி. 993-இல் மும்முடி வைதும்ப மகாராசன் என்பவன் ரெட்டிபானையம்
கோவிலுக்குத் தானம் செய்தான். சளுக்கிவீமன் என்பவன் ஒரு சிற்றரசன். அவன் மனைவி
‘விமயன் வம்பவை’ திருவையாற்றுக் கோவிலில் விளக்குவைக்கப் பொருள் உதவி செய்தாள்.
அச் சிற்றரசன் எந்தப் பகுதியை ஆண்டவன் என்பது விளங்கவில்லை[27]. இங்ஙனம்
சிற்றரசர் பலர் சோழர் பேரரசில் இருந்தனர். மறவன் நரசிம்மவர்மன் என்னும் பாண அரசன்
தென் ஆர்க்காடு கோட்டத்தில் ‘சம்பை’ என்னுமிடத்தருகில் இருந்தவன் ஆவன். இவன்
அந்த இடத்தில் ஓர் ஏரியை வெட்டுவித்தான்.[28]
---------
[14]. S.I.I. Vol. No. 92.
[15]. Archaeological Survey of Ceylon, 1906 pp. 17-27.
[16]. S.I.I. Vol 4, 616 of 1912
[17]. 618 of 1912
[18]. Ind Ant. Vol. S. p 17.
[19]. S.I.I. Vol. II. No. 1. 1.
[20]. Ep, Indica, Vol, 6, p.74 2.
[21]. மால்டிவ் தீவுகளின் அரசன் தன்னைப் ‘பன்னிராயிரம் தீவுகட்கு அரசன்’ என்று கூறல் மரபு.
[22]. S.I.I. Vol. 2. p. 312
[23]. 115 of 1895
[24]. 365, 367, 394 of 1924
[25] 4, 19 of 1890
[26]. S.I.I. Vol. 3. No. 52
[27]. 227 of 1894
[28]. 84, 86 of 1906
அரசியல் அலுவலாளர் : கல்வெட்டுகளிற் கண்ட குறிப்பிடத்தக்க அரசியல் அலுவலாளர்
இவராவர் - மகா தண்ட நாயகன் பிஞ்சவன் மாராயன் என்பவன் இராசராசன் மகனான
இராசேந்திரன் என்பர் ஆராய்ச்சியாளர். வேறு சிலர் அவன் இராசேந்திரன் அல்லன்
என்பர். உத்தம சோழன் (மதுராந்தகன்) மகனான கண்டராதித்தன்[29] நாடு முழுவதும்
சுற்றிக் கோவிற் பணிகளைப் பார்வை யிட்டுவந்த பேரதிகாரி ஆவன். இவனே
திருவிசைப்பாப் பாடிய கண்டராதித்தர் என்று சிலர் தவறாகக் கொண்டனர். பரமன்மழபாடியார்
என்னும் மும்முடிச் சோழன் சீட்புலி நாடு, பாகிநாடு என்பவற்றை வென்ற தானைத்
தலைவன் ஆவன். சேனாதிபதி ஸ்ரீ கிருஷ்ணன் இராமன் என்பவன் ஒருவன். இவன்
அமண்குடியைச் சேர்ந்தவன். இவன் பெரிய கோவிலில் திருச்சுற்றாலையையும்
மண்டபத்தையும் கட்டியவன் ஆவன்[30]. சேனாதிபதி குரவன் உலகளந்தான் என்பவன்
ஒருவன். இவன் ‘இராசராச மகாராசன்’ எனப்பட்டான். இவன் சோழப் பேரரசு முழுவதும்
அளந்து வரிவிதிக்கப் பொறுப் பாளியாக் இருந்த பெரும் அரசியல் அறிஞன் ஆவன்[31],
உலகளவித்த திருவடிகள் சாத்தன் என்பவன் ஒருவன். இவனும் மேற்சொன்ன பணியில்
ஈடுபட்டிருந்தனன்[32]. ஈராயிரவன் பல்லவரையன் - மும்முடிச் சோழன் என்பவன்
அரசியல் வருவாயைக் கவனித்த பெருந்தரக்காரன் ஆவன்[33], கோலாரை ஆண்ட கங்கர்
மரபினனான திருவையன் சங்கரதேவன் என்பவன் ஒர் உயர்தர அலுவலாளனாக
இருந்தான். அவன் தன் தந்தை பெயரால் திருவல்லத்தில் ‘திருவைய ஈச்சரம்’ என்னும்
கோவிலைக் கட்டினான்[34]. இவருள் கிருஷ்ணன் இராமன், ஈராயிரவன்,
பருத்திக்குடையான் வேளான் உத்தம சோழன், மதுராந்தக மூவேந்த வேளான் என்பவர்
அமைச்சராக இருந்தனர் என்பர்[35]. ‘அதிகாரி இராசேந்திர சிங்க மூவேந்த வேளார்’,
‘அதிகாரி காஞ்சி வாயிலுடையார் உதயதிவாகரன் தில்லையாளியாரான இராசராச
மூவேந்த வேளார்’ முதலியோர் உடன் கூட்டத்து அதிகாரிகளாக இருந்தனர்[36].
அரசியல் அலுவலைக் கவனிக்க ஆரூரன் அரவணையனான பராக்கிரம சோழ மூவேந்த
வேளான். தத்தன் சேந்தனான செம்பியன் மூவேந்த வேளான், அருங்குன்றம் உடையான்
பொற்காரி, மீனவன் மூவேந்த வேளான் முதலியோர் இருந்தனர் என்று ஆனைமங்கலச்
செப்பேடு செப்புகிறது[37]. வரியைக் கணக்கில் பதிவு செய்யும் வரியிலார், ‘வரியை
இன்னவாறு செலவிடுக’ எனப்பாகுபாடு செய்யும் வரிக்குக் கூறுசெய்வார், காரியக்
குறிப்பெழுதும் பட்டோலைப் பெருமான், வந்த ஒலைகளைப் பார்வையிட்டு விடை
வரையும் விடை அதிகாரி, நாட்டை வகைப்படுத்துவோர், நாட்டைக் கண்காணிப்பவர்,
நாட்டைச் சுற்றிப்பார்த்து நன்மைதீமைகளை ஆராய்பவர், நீதிமன்றத்தார், நாணய
அதிகாரிகள் முதலிய பல திறப்பட்ட அரசியல் அலுவலாளர் இராசராசன் ஆட்சியில்
இடம்பெற்று இருந்தனர் என்பது எண்ணிறந்த கல்வெட்டுகளால் அறியக்கிடத்தல்
காண்க. ‘சோழர் அரசியல்’ என்னும் பகுதியில் விரிவு காண்க. பாண்டிய நாட்டுப்
பழைய வட்டெழுத்துக் கல்வெட்டுகள் இராசராசன் காலத்தில் புதிய தமிழில் மாற்றி
எழுதப்பட்டன என்பது இங்குக் குறிப்பிடத்தக்க செய்தியாகும்.[38]
இராசராசன் அரசியல் இன்றைய நாகரிக அரசியல் போன்றது. இவன் நாடு முழுவதும்
அளப்பித்தான்; இறையிலி நிலங்களைப் பிரித்தான் பிற நிலங்கட்குத் தரம் வாரியாக
வரிவிதிக்க ஏற்பாடு செய்தான்; வரியை வசூலிக்கப் பல அதிகாரிகளை ஏற்படுத்தினான்;
எல்லா வகை வரிகளும் கவனிக்க உயர்தர அலுவலாளர் குழுவை வைத்தான். தனித்தனி
மண்டல காரியங்களைக் கவனிக்கும் தனித்தனி அலுவலாளர் ஒருபால், எல்லா
மண்டலங்களைக் கவனிக்கப் பேரலுவலாளர் ஒருபால் ஆக, அரசியல் அமைப்பு வியத்தகு
வண்ணம் அமைந்திருந்தது. ஊர் அவைகள் ஊராட்சியைக் குறைவற நடத்தின. ஒவ்வொரு
மண்டலத்தும் திறம்பட்ட படைகள் நிறுத்தப்பட்டன; எல்லைப் புறங்களில் காவற்படைகள்
இருந்தன. புகழ்பெற்ற கப்பற் படை இணையின்றி இலங்கியது. சுருங்கக் கூறின்,
தென் இந்தியாவில் பேரரசை ஏற்படுத்திய பேரரசர்களில் இராசராசனே சிறந்தவன்
என்னல் மிகையாகாது.
----------
[29]. S.I.I. Vol. 3. No. 49; M.E.R. 1904, Para 2.
[30]. S.H.I. Vol. 2. No 31
[31]. S.I.I. Vol. 2. p.459
[32]. 199 of 1917.
[33]. S.I.I. Vol.2, No.55
[34]. 11 of 1890.
[35]. I. Ulagnatha Pillai’s Rajaraja I, p.59
[36]. Ibid. p. 59
[37]. Ibid. p. 69
[38]. 455 of 1917.
சமயக்கொள்கை : இராசராசன் சிறந்த சிவ பக்தன். இவன் கட்டிய பெரிய கோவிலே
இதற்குப் போதிய சான்றாகும். எனினும், இவன், இந்தியப் பேரரசைப் போலவே தன்
பெருநாட்டில் இருந்த எல்லாச் சமயங்களையும் சமமாகவே மதித்து நடந்தவன். பெரிய
கோவிற்கவர்களில் உள்ள சிற்பங்கள், மைசூரில் இவன் கட்டிய விஷ்ணு கோவில்களும்,
விஷ்ணு கோவில்கட்கு இவன் செய்துள்ள தானங்களும் இவனது சமரசப்பட்ட மனப்போக்கை
விளக்குவதாகும். நாகப்பட்டினத்தில் புத்த விகாரம் கட்டப் பொருள் உதவி புரிந்த
உத்தமன் இவன் இவனது ஆட்சியில் இருந்த சிற்றரசர் சிலர், சமணர் கோவில்கட்குத்
தருமம் செய்துள்ளனர் என்பதையும் நோக்க, இப்பேரரசன், தன் சிற்றரசரையும்
குடிகளையும் தத்தமது விருப்பத்துக்கியைந்த சமயத்தைப் பின்பற்ற உரிமை அளித்திருந்தனன்
என்பது நன்கு புலனாகின்றது. இவனது ஆட்சிக் காலத்திற்றான் பாடல் பெற்ற பல
கோவில்கள் கற்றளிகளாக மாறின, புதிய பல சிவன் கோவில்கள் கட்டப்பட்டன.
பல கோவில்கள் பலரால் ஆதரிக்கப்பெற்றன. கோவிற் பணிகள் வியத்தகு முறையிற்
பெருகின. அவற்றின் விவரமெல்லாம் ‘சோழர் கோவிற் பணிகள்’ என்னும் பகுதியிற்
பரக்கக் காண்க.
பெரிய கோவில் : சோழ மன்னரது ஆட்சிக்குப் பெரிய அறிகுறியாகவும் சிறப்பாகத்
தமிழகத்தின் கலை அறிவை உணர்த்தவல்லதாகவும் இருப்பது தஞ்சைப் பெரிய
கோவிலே ஆகும். இத்தகைய புதிய அமைப்புடைய கோவிலை முதன் முதல் கட்டி
முடித்தவன் இராசராச சோழனே ஆவன். இக்கோவில் கோபுரம் சிறியது. உள்ளறைமீது
கட்டப்பட்டுள்ள தூபி பெரியது. கோவிலின் அளவு, அமைப்பு முதலியன பொருத்தமாக
அமைந்துள்ளன. இக்கோயிலின் பெயர் இராச ராசேச்சரம் என்பது. எனவே, இவன்
பெயர் இராசராசன் என்பதும் பெற்றோம். இவன் கி.பி. 1004-இல் தில்லைச்
சிற்றம்பலத்திற்கு நிபந்தங்கள் பல இயற்றி வழிபட்டதன் பயனாகத் தில்லைவாழ்
அந்தணரால் ‘இராசராசன்’ என்பது வழங்கப்பட்டதாகும். இப்பெயர் இவனது
19-ஆம் ஆண்டுக் கல்வெட்டிற் காணப்படுகிறது. எனவே, இக்கோவில் கி.பி.
1005-இல் தொடங்கப்பெற்றது என்று கோடல் பொருந்தும். இராசரானுடைய
23ஆம் ஆண்டு முதல் 29-ஆம் ஆண்டுவரை இக்கோவிலுக்கு வேண்டிய நிபந்தங்கள்
பல கொடுக்கப்பட்டன. ஆதலின், இப்பெரிய கோவில் இவனது 20-ஆம் ஆண்டு
முதல் 23 வரை கட்டப்பட்டதாகலாம்; அஃதாவது இக்கோவில் கட்டி முடிக்க
ஏறத்தாழ 4 ஆண்டுகள் ஆகியிருக்கலாம். “யாண்டு இருபத்தைந்தாவது நாள்
275-இல் உடையார் ஸ்ரீ இராசராச தேவர் ஸ்ரீ ராசேச்சுரமுடையார், ஸ்ரீ விமானத்துச்
செம்பின் தூபித் தறியில் வைக்கக் கொடுத்த செப்புக் குடம் ஒன்று. நிறை 3083
பலத்தில் சுருக்கின தகடு பலபொன் ஆடவல்லான் என்னும் கல்லால் நிறை 2926
கழஞ்சு” என்ற கல்வெட்டுப் பகுதியால், இராசராசன் 25ஆம் ஆண்டிற்றான்
திருப்பணி முடிவுற்றுக் கும்பாபிடேகம் முடிவுற்றதெனக் கூறலாம்.
கோவில் அமைப்பு : இக்கோவில் சிவகங்கைச் சிறு கோட்டைக்குள் உள்ளது. முதற்கோபுரம்
கடந்ததும் இராச ராசன் கட்டிய மற்றோர் அகன்ற கோபுரம் உண்டு. உள் நுழைந்ததும்,
கருங்கல், செங்கற்களால் பரப்பப் பெற்ற சுமார் 500 அடி நீளமுள்ள 250 அடி
அகலமும் உள்ள ஒரு பரந்த போர்வைபோன்ற வெளிமுன் மேடை இருக்கின்றது.
அதன் மீது ஒரே கல்லாலான நந்தியும் அதனைப் பாதுகாக்கக் கட்டிய நாயக்கர்
மண்டபமும் உள்ளன. எதிரில் இறைவன் கோவில் விமானமும் அடுத்து அம்மன்
திருக்கோவிலும் உள. உட்கோயில் இறையறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம்,
தியாகராசர் சந்நிதியுள்ள தாபன மண்டபம், நர்த்தன மண்டபம், வாத்திய மண்டபம்
என்ற ஆறு பகுதிகளை உடையது. கோவிலிலுள்ள ஏழு வாயில்களிலும் 7 மீ
உயரமும் 3 மீ. அகலமும் உள்ள 14 வாயிற்காவலர் சிலைகள் உள.
முதற் கோபுரவாயில், ‘கேரளாந்தகன் திருவாயில்’ என்பது: மற்றது ‘இராசராசன் திருவாசல்’
என்பது; கோவில் உள்வாயில் 'திரு அணுக்கன் திருவாசல் என்பது. விமானத்தின் தெற்கிலும்
வடக்கிலும் வாயில்கள் உள்ளன, அவை படிகளை உடையது. தெற்குவாசல் விக்கிரமன்
திருவாசல் எனப்படும். (இப்பெயர் விக்கிரம சோழன் பெயரால் பிற்காலத்தில் வழங்கப்
பெற்றது போலும்) இவ்வாயிலின் கீழ்ப்பாகத்துத் திருமகள் வடிவமும் வடக்கு வாயிலின்
கீழ்ப்பாகத்து நாமகள் வடிவமும் வனப்புறத் திகழ்கின்றன. திரு அணுக்கன் திருவாயில்
இருபுறமும் அமைந்த படிகளாலேயே முன்னாளில் சந்நிதியை அடைவது வழக்கம்.
இப்படிகளே கோவில் எடுப்பித்த போது உடன் உண்டானவை. இக்காரணம் கொண்டும்
நிலப் பரப்புக்குமேல் உயர்ந்த மேடையில் நிறுவப் பெற்ற தன்மையினாலும் இக்கோவில்
மாடக்கோவில் என்பதற்கேற்ற இலக்கணம் பெற்றதென்னலாம். திரு அணுக்கன்
திருவாயிலுக்கு எதிரே இப்போதுள்ள நேரான படிகள் பிற்காலத்தில் சரபோசி மன்னன்
காலத்தன ஆகலாம். கோவிலின் நீட்டளவு 265 மீ) குறுக்களவு 132.மீ[39].
சிவலிங்கம் : உள்ளறையில் உள்ள சிவலிங்கம் மிகப் பெரியது. அதற்கு
ஆதிசைவரைக் கொண்டு மருந்து சாத்திப் பந்தனம் செய்வித்தபொழுது, ஆவுடையார் வடிவம்
பெரியதாதலின், மருந்து இளகிப் பந்தனமாகவில்லை. இராசராசன் மனம் கவன்றான்.
அக்கவலையை நீக்கக் கருவூர்த் தேவர் என்னும் சைவமுனிவர் எழுந்தருளிச் சிவலிங்கத்தை
ஆவுடையாருடன் சேர்த்துச் செவ்வனே நிறுத்திப் பந்தனம் செய்வித்தார் என்று கருவூர்ப்
புராணம் கூறுகிறது. இக் கருவூரார் தஞ்சை இராசராசேந்திரன் மீது பதிகம் பாடியுள்ளார்.
அப்பதிகம் ஒன்பதாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
இப்பெரியார் இக்கோவிலிற்றானே சமாதி ஆயினர். இராசராசேச்சரத்து மேலைத்
திருச்சுற்றில் கிழக்கு நோக்கிய மேடை ஒன்று இருக்கிறது. அதன் அருகில் வேப்பமரமும்
வில்வமரமும் நிற்கின்றன. பிற்காலத்தார் அம்மேடையிற் சிறு கோவில் எடுத்து, யோகியாரது
உருவச்சிலை ஒன்றை அமைத்தனர். இன்றும் இக்கோவில் பலர் தொழும் இடமாக
இருந்து வருகிறது.
கோபுர வாயில்கள் : இப்பெரிய கோவிலில் பண்டைக் கால
வழக்குப்படியே மூன்றுவாயில்கள் உண்டு.பண்டைக் கோவில் வாயில்கள் மூன்றும்
முறையே தோரண வாயில், திருமாளிகை வாயில், திரு அணுக்கன் வாயில் எனப்பட்டன
என்று பெரிய புராணம் கூறும். ஆனால், இராசராசன் அவற்றுக்கு முறையே கேரளாந்தகன்,
இராசராசன், அணுக்கன் எனப் பெயரிட்டான்.
விமானம்-தளம்-தூபிக்குடம் : கோவில் விமானம் 75 மீ உயரமுடையது;
அடி பருத்து நுனி சிறுத்த அமைப்புடையது. இதன் உச்சியில் போடப்பட்டுள்ள தளம்
ஒரே கருங்கல் ஆகும். இதன் நிறை 80 டன்[40]. விமானத்தின் மேல் தூபித்தறியில்
வைக்கப்பட்டுள்ள செப்புக்குடம் நிறை 3083 பலம் ஆகும். அதன்மேல் போர்த்துள்ள
பொற்றகடு 2926.5 கழஞ்சு நிறையுள்ளது.
இராச ராசேச்சரத்து விமானம் ‘தக்கண மேரு’ எனப்படும். வராகமிஹிரர் இயற்றிய பிருகத்
சம்ஹிதையில் கூறப்பட்டுள்ள மேரு மந்தரம், கயிலாயம், குஞ்சரம், ரிஷபம், சிம்மம்
முதலிய 20 வகைப்பட்ட விமானங்களுள் இது மேரு அமைப்புடையது; தென்னாட்டில்
இருப்பது; ஆதலின் ‘தக்கன மேரு’ எனப்பட்டது. இறைவன் பெயர் விடங்கர் என்பது,
‘உளியாற் செய்யப்படாதவர்’ என்பது பொருள். விமானம் சதுரமானது; 13 கோபுரமாடிகள்
கொண்டது. விமான தளக்கல் நிறை 80 டன். இது தஞ்சைக்கு 20 கி.மீ. தொலைவிலுள்ள
சாரப்பள்ளம் என்ற சிற்றுாரிலிருந்து ‘சாரம்’ போட்டு இவ்வுச்சிக்கு ஏற்றப்பட்டதாம்.
சதுரக்கல்லின் நான்கு மூலைகளிலும் முறையே இரண்டு நந்திகள் உள்ளன. அவை
தனித்தனி 2மீ. நீளமும் 2 மீ. அகலமும் கொண்டவை.
திருச்சுற்று மாளிகை : இதன் பெரும்பகுதி எடுத்தவன் சேனாதிபதி
கிருஷ்ணன் இராமனான மும்முடி சோழப் பிரமராயன் ஆவன். இவன் இராசராசன்
ஆணைப்படியே இதனைச் செய்து முடித்தான்[41]. திருச்சுற்றாலையில் எட்டுப் புறத்திலும்
திக்குப்பாலர் எண்மர்க்கும் கோவில்கள் சமைக்கப்பட்டன. அவற்றுள் கல்லில் செதுக்கிய
திசை காப்பாளர் அழகைக் கண்டு களிக்கலாம். ஒவ்வொரு கோவிலுக்கும் பொன் தகடு
சுருக்கின. செப்புக் குடங்கள் இராசரானின் குருக்களான ஈசான சிவபண்டிதர் கொடுத்தனர்[42].
ஆயின், இன்று இருப்பவை கற்கலசங்களே ஆகும். இன்றுள்ள பிள்ளையார் கோவில்
மராட்டிய மன்னர் கட்டியதாகும். முருகர் கோவிலும் பிற்காலத்ததே ஆகும். திருச்சுற்றில்
சண்டேசர் ஒருவர்க்கே கோவில் எடுத்தல் பண்டை மரபாகும். அவரே கோவில்
கண்காணிப்பாளர் என்பது முன்னோர் கொள்கை. அதனால் கோவிற்செயல்கள் யாவும்
அவர் பெயரால் நடைபெற்று வந்தன. இம்முறையே இராசராசேச்சரத்தும் காணப்பட்டது.
இன்றும் கோவிலுக்குச் சென்று மீள்பவர் சண்டேசர் கோவிலை அடைந்து,
‘சிவசொத்துகளில் ஒன்றையும் கொண்டு செல்வோமில்லை; எம் கரங்களைப் பார்த்தருளும்’
என்பார் போலத் தம் கையோடு கையைத் தட்டிக் காட்டிச் செல்லும் வழக்கு இருத்தல்
காண்க.
அம்மன் கோவில் : அம்மன் கோவில், இன்றுள்ள பெரிய கோவிற்கு
வடபுறத்தில் உள்ள சிவகெங்கைத் தோட்டத்தில் இருந்திருத்தல் வேண்டும். அது
நாயக்க மன்னர் காலத்தில் அழிக்கப்பட்டதாம். இன்றுள்ள அம்மன்கோவில்
பிற்காலத்தது. இதனை நோக்க, இன்றுள்ள பெரிய கோவில் வடபால் அகன்றிருத்தல்
வேண்டும் என்பது தெரிகிறதன்றோ?
பெரிய நந்தி : பெரிய கோவிலில் உள்ள நந்தி ஒரே கல்லிற்
செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீ நீளம் 7 மீ; அகலம் 3 மீ; இப்பொழுதுள்ள
நந்தி மண்டபம் நாயக்க மன்னர் காலத்தது.
திருமேனிகள் : இக்கோவிலில் இராசராசனும் அவன் அரசமாதேவியாரும் பிறரும் எடுப்பித்த
திருமேனிகள் பல. அவற்றுள் சிலவே ஈண்டுக் கூறுதும் : ஒர் இலிங்கம் - அதிணின்று
நான்கு கரங்களுடன் தோன்றிய சிவவடிவம் - அதனை அடுத்துப் பிரமனும்
பன்றிமுகமுடைய திருமாலும் நிற்கும் இலிங்கபுராண தேவர் திருமேனி ஒன்றாகும்.
பிரமன் இருந்து சடங்கு செய்யத் திருமால் நின்று நீர்வார்க்கப் பிராட்டியோடு நான்கு
கைகளுடன் எழுந்தருளி நின்ற கலியான சுந்தரர் திருமேனி ஒன்று; இருடிகள் நால்வர்
பக்கத்தில் இருப்பப் புலியும் பாம்பும் கிடக்கும் இரண்டு சிகரங்களையுடைய ஒருமலை
உச்சியில் ஒன்பது பனையும் நாற்பத்திரண்டு கிளைகளும் போக்கிப் பொக்கணம் ஒன்று
தூங்க நின்ற ஒர் ஆலமரத்தடியில் முயலகனைத் திருவடியிற் கிடத்தி நான்கு கைகளுடன்
வீற்றிருக்கும் தக்கிணாமூர்த்தி திருமேனி ஒன்றாகும். சண்டேசர்க்குப் பிராட்டியோடு
எழுந்தருளித் தமது திருக்கரத்தால் மலர் மாலை நல்கும் சண்டேசப் பிரசாததேவர்
திருமேனி ஒன்றாகும். சதாசிவத்தினின்றும் பிரமன், திருமால், உருத்திரன், மகேச்சுரன்
என்பார் தோன்றிய நிலையை விளக்கும் பஞ்ச தேக மூர்த்திகள் திருமேனி ஒன்றாகும்.
இனி, நாயன்மார் படிவங்களில் மலாடுடையார் படிமம் (மெய்ப்பொருள் நாயனார்)
ஒன்றாகும். இவர் காலத்தால் மிக முற்பட்டவர். காடவர்கோன் கழற்சிங்கனான (மூன்றாம்
நந்திவர்ம பல்லவன் கி.பி.840-865) காலத்திலேயே திருநாகேசுவரத்தைச் சேர்ந்த குமார
மார்த்தாண்டபுரத்தில் இவர்க்கு ஒருகோவில் இருந்தது.[43] அப்பர், சம்பந்தர், சுந்தரர்,
சிறுத்தொண்டர், சண்டேசுவரர் முதலியோர் படிமங்கள் வைக்கப்பட்டி ருந்தன.
ஆயின், திருவாதவூர ர் (மாணிக்க வாசகர்) படிமம் வைக்கப்பட்டிலது. இதனால்,
இராச ராசன் காலத்தில் திருவாசகம் எடுக்கப்படவில்லை-திருமுறைகளிற் சேர்க்கப்
படவில்லை என்பது உண்மையாதல் காண்க. இதற்கு மாறாகக் கூறும் திருமுறை கண்ட
புராணக் கூற்றுத் தவறாகும். பெரிய கோவில்கள் கல்வெட்டுகளை ஆராயின்
அக்காலத்தில் வாகனங்கள் செய்யப்பட்டில என்பதை நன்கு அறியலாம்.
திருமஞ்சனமும் திருவிளக்கும் : விடங்கப் பெருமானுக்கு மூன்று கால
பூசனை நடைபெற்றது.
சண்பக மொட்டு, ஏல அரிசி, இலாமச்சவேர் கலந்த நன்னீரால் திருமஞ்சனம் நடைபெற்றது.
நாள் தோறும் எண்ணிறந்த நெய்விளக்குகள் ஏற்றப்பட்டன. நாடோறும் ஒரு விளக்குக்கு
ஒர் உழக்கு வீதம் நெய் அளக்கப் பசு, பருமை, ஆடு என்ற மூவினமும் இடையர்
பெற்றிருந்தனர். ஆடாயின் 96-ம், பசுவாயின் 8-ம், எருமை எனிற் 16-ம் பெற்றனர்.
திரு அமுது : பழ அரிசியாற் சமைத்த அமுது, கறிய முது, பருப்பமுது, நெய்யமுது, தயிர்
அமுது, அடைக்காய் அமுது, வெள்ளிலை அமுது என்பன நாள் தோறும் மூன்று
பொழுதிலும் திருவமுது செய்விக்கப்பட்டன.
திருவிழாநாளில் திருவமுது : திங்கள் தோறும் திருவிழா எழுந்தருளும் திருமேனிகட்குப்பழ
அரிசியாற் சமைத்த அமுதும் அப்பக் காய்க்கறி யமுதும் புளியங்கறி அமுதும், காய்கறி
அமுதும், பொறிக்கறி அமுதும் பிறவும் படைக்கப்பட்டன.
விழாக்கள் : இராசராசன் பிறந்த நாளான திருச்சதயத் திருவிழா திங்கள் தோறும் நடைபெற்றது.
கார்த்திகை விழா நடைபெற்றது. இம்மாத விழாக்கள் அன்றி, ஆண்டு விழா ஒன்பது
நாள் நடைபெற்றது. உடையார் உலாவிற் பின்வரும் சிவயோகியர் பதின்மர் உடையார்
சாலையில் உணவு பெற்றனர். ஆண்டுவிழா வைகாசித் திங்களில் நடைபெற்றது.
அப்பொழுது, பெரிய கோவிலில் இராச ராசேசுவர நாடகம் நடைபெறுதல் வழக்கம்.
நடிகன் ஆண்டு தோறும் 120 கல நெல் பெற்று வந்தான். இக்காலத்திற் குறவஞ்சி
நாடகம் நடந்து வருகிறது.
சின்னங்கள் : இராசராசன் தான் வென்ற நாடுகளிலிருந்து கொணர்ந்த பொன்னால்
காளங்கள் பல செய்தான்; அவற்றுக்குச் சிவபாத சேகரன், இராசராசன் எனப் பெயரிட்டான்
அவற்றைப் பெரிய கோவிலுக்குத் தானமாக அளித்தான்.
அணிகள் : பொன்னால் அமைந்த திருப்பள்ளித் தொங்கல் மகுடம், முத்து மகுடம்,
திருக்கொற்றக் குடை மகுடம் முதலியனவும்; பொன்னிற் செய்து நவமணி பதித்த
அணிகலன்கள் பலவும் இராசராசன் மனமகிழ்ச்சியோடு ஆடவல்லார்க்கு அளித்தான்.
இவனுடைய தமக்கையான குந்தவ்வையார் பல அணிகளும் பாத்திரங்களும்
கொடுத்தனர்; அரசமாதேவியார் செய்த அறப்பணிகள் சில. அணிகலங்களை எவரும்
மாற்றிடா வண்ணம் அரக்கு, செப்பாணி, சரடுகளை நீக்கிப் பொன்னை மட்டும்
நிறுத்து விலை கண்டிருக்கிறது; அவற்றில் நவமணிகள் இருப்பின், அவை இத்துணைய,
அவற்றின் நிறை இவ்வளவு, இன்னின்ன தன்மையன என்று குறிக்கப்பட்டு விலையும்
கண்டிருத்தல் வியத்தற்குரியதே.
கோவிற் பணியாளர் : இராசராசேச்சரத்தில் கோவிற் பணியாளர் தலைவனாக இருந்தவன்
பொய்கை நாட்டுக் கிழவன் ஆதித்தன் சூரியனான தென்னவன் மூவேந்த வேளான்
என்பவன். கோவிற்பணியைக் கண்காணி நாயகமாக இருந்து செய்தவன் பாண்டி
நாடான இராசராச மண்டலத்துத் திருக்கானப் போர்க் கூற்றத்துப் பாளுர் கிழவன்
அரவணையான் மாலரிகேவன் என்பவன். அருச்சகர் சிவாசாரியன் பவன பிடாரன்
ஆவர். திருப்பதிகம் விண்ணப்பம் செய்பவர் 48 பேர்; இவரே பிற்காலத்தில் ‘ஒதுவார்’
எனப்பட்டனர். உடுக்கை வாசிப்பவன் ஒருவன்; கொட்டிமத்தளம் வாசிப்பான் ஒருவன்.
இவரன்றிக் கானபாடி, ஆரியம் பாடுவார், தமிழிசை பாடுவார் எனச் சிலரும் இருந்தனர்.
கோவிற்பணிகளைக் குறைவறச் செய்யப் பல இடங்களிலிருந்து 400 தேவரடியார்
குடியேற்றம் பெற்றிருந்தனர். கோவிலை அடுத்து வடக்கிலும் தெற்கிலும் இவர்க்கு
மனைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டன. ஒவ்வொருவர்க்கும் ஒவ்வொரு வேலி
நிபந்தம் கொடுக்கப்பட்டது. இப்பெண்மணிகள் பெயர்கட்குமுன்னர் நக்கன் எடுத்த
பாதம், நக்கன்ராசராசகேசரி, நக்கன் சோழகுல சுந்தரி என்றாற்போல ‘நக்கன்’ என்னும்
பெயர் சேர்க்கப்பட்டிருந்தது. இசையில் வல்ல பெண்கள் காந்தர்விகள் எனப்பட்டனர்.
இசை வல்ல ஆடவர் காந்தர்வர் எனப்பட்டனர். காந்தர்வர் 75 பேர் இருந்தனர். கொட்டி
மத்தளக்காரர், பக்கவாத்தியர், வீணை வாசிப்பவர், வங்கியம்பாடவியம்-மொரலியம் -
உடுக்கை முதலியன முழக்குவோர் பலர் இருந்தனர். கரடிகை, சகடை உவச்சுப்பறை
முதலிய பறைகளை அடிப்பவர் பலர் இருந்தனர். கோவில் பண்டாரிகள் (பொக்கிஷத்தார்),
கணக்கர், மெய்காப்பார், பரிசாரகம் செய்பவர், திருவிளக்கிடுவார், மாலைகட்டுவோர்,
வண்ணமிடுவோர் (கோலம் போடுவோர்), சோதிடர், தச்சர், தட்டர், கன்னார்,
குடியர், தய்யார் (தையற்காரர்), நாவிதர், வண்ணார் முதலியவரும் நியமனம்
பெற்றிருந்தனர்.இவர்க்கு வழிவழி வேலை கொடுக்கப்பட்டு வந்தது. அவரனைவரும்
பெற்றுவந்த சம்பளம் நெல்லாகும். பெரிய கோவில் மூல பண்டாரம் ‘தஞ்சை விடங்கன்’
எனப் பெயர் பெற்றிருந்தது. கோவில் மரக்கால் ‘ஆடவல்லான்’ எனப் பட்டது.
பெரிய கோவில் கல்வெட்டுகள் : இராசராசன் காலத்துக் கல்வெட்டுகளே மிகப் பல.
அவை அக்காலத்துப் பலரும் எழுந்தருளுவித்த திருமேனிகள், அவற்றுக்காக அவர்கள்
கொடுத்த விளைநிலங்கள், பாத்திரங்கள், சின்னங்கள், நகைகள் முதலியவற்றுக்கு
விவரமும், உப்பு முதல் கற்பூரம் வரை உள்ள எல்லாப் பண்டங்கட்கும் செய்யப்பட்டுள்ள
ஏற்பாடுகளும் குறிப்பனவாகும். இராசராசன் கல்வெட்டுகளும் இவன் தமக்கையார்
குந்தவ்வையார் கல்வெட்டுகளும் விமான நடுவிடத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. இராசராசன்
மனைவியர், மக்களுடைய கல்வெட்டுகள் திருச்சுற்று மாளிகையில் வெட்டப்பட்டுள்ளன.
இராசராசன் மனைவியர், மக்களுடைய கல்வெட்டுகள் திருச்சுற்று மாளிகையில்
வெட்டப் பட்டுள்ளன. இக்குறிப்பால், இவன் தன் தமக்கையாரிடம் வைத்த பெருமதிப்பு
நன்கு விளங்குகிறது. இக்கோவிலில் உள்ள கல்வெட்டுகளில் இராசராசன்
காலத்தவை 64; இராசேந்திரன் காலத்தவை 29; முதல் குலோத்துங்கன் காலத்தது
1; விக்கிரம் சோழனது 1; கோனேரின்மை கொண்டான் காலத்தவை 3; பிற்கால
நாயக்கர், மராட்டியர் கல்வெட்டுகள் சில ஆகும்.
தேவதானச் சிற்றுார்கள் 35 : இராசராசன் பெரிய கோவில் வேலைகள் குறைவின்றி
நடைபெற 35 சிற்றுார்களை விட்டதாகக் கல்வெட்டுகள் குறிக்கின்றன.பெரிய
சிற்றுார் 1000 ஏக்கர்க்கு மேற்பட்டது. நான்கு சிற்றுார்கள் 500 முதல் 1000 ஏக்கர்
பரப்புள்ளவை; மூன்று 300 முதல் 400 ஏக்கர் பரப்புள்ளவை ஏழு 200 முதல் 300
ஏக்கர் பரப்புள்ளவை: ஆறு 100 முதல்200 ஏக்கர் பரப்புள்ளவை மூன்று 50 முதல்
100 ஏக்கர் பரப்புள்ளவை; ஆறு 5 முதல் 50 ஏக்கர் பரப்புடையவை; 25 ஏக்கர்க்கும்
குறைந்த பரப்புடையவை இரண்டு[44].
----------
[39]. I.M.S. Pillai’s Solar Koyir Panikal' pp. 20-21.
[40]. Tanjore Dt. Gazetteer.
[41]. S.I.I. 2. Part II. Nos 31, 33, 45
[42]. Ibid, part IV. No. 90
[43]. 222 of 1911
[44]. S.I.I. Vol. II. Nos. 4.5; Altaker’s ‘Rashtra kutas and their times,’ p.148. 1939;
செப்டம்பரில் நான் இவற்றை நேரே பார்வையிட்டேன். எனக்கு உடனிருந்து உதவி
புரிந்தவர் அக்கோவில் அதிகாரியான திரு. J.M. சோமசுந்தரம் பிள்ளை, பி.ஏ. பி.எல்,
அவர்கள். இவற்றை முதன் முதல் கண்டறிந்தவர் S.K. கோவிந்தசாமி பிள்ளை, எம்.ஏ, ஆவர்.
உள்ளறை ஒவியங்களும் சிற்பங்களும் : பெரியகோவில் உள்ளறைத் திருச்சுற்றுச் சுவர்
மீது இருவகைப் படைகள் இருக்கின்றன. மேற்புறப் படை மீது நாயக்க மன்னர்
கால ஒவியம் காணப்படுகிறது. அதன் உட்புறம் இராசராசன் காலத்து ஒவியங்கள்
காண்கின்றன. அவற்றின் விரிவை இரண்டாம் பகுதியிற் காண்க
இராசராசனது அளவு கடந்த சைவப் பற்றும் விரிந்த சமயநோக்கும் இப்பெரிய கோவில்
விமானத்திலும் மற்றும் பல பகுதிகளிலும் மலிந்து கிடக்கும் சைவ வைணவ புராண
சம்பந்தமான சிலைகள், சிற்பங்கள் ஆகியவற்றால் அறிவுறுத்தப் பெறுகின்றன. கோவிலின்
நாற்புறமும் உயர்ந்த மதில்களின் மேலிருந்து விழுந்தும் பிறர் எடுத்துப் போனவையும்போக,
எஞ்சிநிற்கும் 343 நந்தி உருவங்களும் இதனையே வலியுறுத்துவன. கோவில்
விமானத்தின் தென்புற மதில் பக்கத்தில் சோழவீரர்தம் உருவங்களும், பிள்ளையார்,
திருமால், பிச்சாடனர், சூலதேவர், தென்முகக் கடவுள், மார்க்கண்டேயர், நடராசர்
சிலைகளும் . மேல் பக்கத்தில் லிங்கோற்பவர், அர்த்த நாரீசுவரர் சிலைகளும்; வட
பக்கத்தில் கங்காதரர், கலியாணசுந்தரர், மகிடாசுர மர்த்தினி படிமங்களும் வனப்புடன்
உள்ளன. மற்றும், திருச்சுற்று மாளிகையின் நாககன்னியர், சமயக்குரவர் படிமங்கள்
முதலியன நிலைபெறச் செய்துள்ளமை காணலாம்.
கோவில் எடுப்பித்த காரணம் : உலகளந்த ஈசுவரர் என்கிற சிவலிங்கசாமி, சிவகங்கைக்
கோட்டை, சிவகங்கைத் திருக்குளத்துக்குள் தென்புறத்துள்ள ஒரு மேடைமீதுள்ள
சிவலிங்க பொருபமாக அமைந்துள்ளது. இதுவே அப்பர் சுவாமிகள் ‘தஞ்சைத்
தனிக்குளத்தார்’ என்று அழைத்த சிவபெருமானாக இருக்கலாம். அல்லது
அம்முற்காலத்திலிருந்தே இத்தலத்தில் ஒரு கற்கோவில் இருந்து, பின்பு அதனை
இராசராசன் பரந்த சைவப் பற்றிற்கு இலக்காக இப்போது இருக்கும் நிலையில்
கட்டியிருக்கலாம்.
அறுமுகன் கோவில் முதலியன : இது நாயக்க மன்னர் காலத்தது. இது யானை குதிரைகள்
பூட்டிய இரதம்போல அமைந்திருத்தல் காணத்தக்கது.
கணபதி கோவில் சரபோசி மன்னன் காலத்தது. நடராசர் சந்நிதியும் பிற்காலத்ததே.
வேளைக்காரப்படை : இப்படையைப் பற்றி விவரங்கள் அறிதல்
இன்றியமையாதது.
இப்படைவீரர் உற்ற விடத்து உயிர் வழங்கும் தன்மையோர். இவர் படைகள் 14
இருந்தன. இவர் ‘இன்னவாறு செய்வேன், செய்யா தொழியின் இன்ன கேடுறுவேன்’
என வஞ்சினம் மொழிந்து, சொன்னவாறு நடப்பவர், தம் சோர்வால் அரசர்க்கு ஊறுநேரின்,
தாமும் தன் உயிரை மாய்ப்பர். தம் அடியார்க்கும் கேடு உண்டாகாது காத்தலின் முருகனை
வேளைக்காரன் என்பர் திருவகுப்பு நூலுடையார் எனின், இவர் தம் சிறப்பினை
என்னென்பது![45] ‘வேல’ என்னும் வடசொல் ‘ஒப்பந்தம்’ முதலிய பொருள்களைத் தருவது.
அது தமிழில் வேளை என வரும். அரசனிடத்தில் உண்டு உடுத்து அவனைக் காக்கவும்
சமயம் நேரின் அவனுக்காக உயிர் விடுவதாகவும் ஒப்பந்தம் செய்து கொண்டு
உடனுறைபவரே வேளைக்காரர் எனப்படுவர். இங்ஙனம் அமைந்த வேளைக்காரர் பல
படைகளாக அமைந்திருப்பர்[46].
சீனர் உறவு : இராசராசன் கடல் வாணிகத்தைப் பெருக்கினான்; கி.பி.1015-இல் முத்துகள்
முதலிய பல உயர்ந்த பொருள்களைக் கையுறையாகத் தந்து தூதுக் குழு ஒன்றைச் சீனத்துக்கு
அனுப்பினான். அக்குழுவினர்பேச்சை அரசனுக்கு நடுவர் மொழி பெயர்த்தனர். அரசன்
அவர்களைத் தன் அரண்மனைக்கு அடுத்திருந்த விடுதியில் தங்கவிட்டான். அவர்கள்
சென்ற காலத்தில் சீன அரசனது பிறந்தநாள் விழா நடந்தது. அரசன் அவர்கட்குப் பல
பல பரிசுகள் அளித்துப் பெருமைப் படுத்தினான். இக்குறிப்புச் சீனர் நூல்களிற்
காணப்படுகிறது.
விருதுப்பெயர்கள் : இராசராசன் கொண்ட விருதுப் பெயர்கள் மிகப் பலவாகும். இராசராசன்,
மும்முடிச் சோழன்[#], மும்முடிச் சோழன்[47], சயங்கொண்ட சோழன்[48] என்னும்
பெயர்கள் மண்டலப் பெயர்களாகவும் வளநாடுகளின் பெயர்களாகவும் வழங்கின.
இவையன்றி, இராசராசற்குச் சோழேந்திர சிம்மன், சிவபாதசேகரன், க்ஷத்திரிய சிகாமணி,
ஜனநாதன், நிகரிலி சோழன், இராசேந்திர சிம்மன், சோழ மார்த்தாண்டன், இராசாச்ரயன்,
இராச மார்த்தாண்டன், நித்திய விநோதன், பாண்டிய குலாசனி[49], கேரளாந்தகன்,
சிங்களாந்தகன், இரவிகுல மாணிக்கம், தெலுங்க குல காலன் முதலியனவும் வழக்கில்
இருந்தன. இப்பெயர்கள் பல சேரிகட்கு[50] இடப்பட்டிருந்தன என்பதைக் கல்வெட்டுகளால்
நன்கறிவோம். சான்றாகத் தஞ்சாவூர்க் கோட்டத்தில் உள்ள திருக்களித்திட்டையில் பின்வரும்
பெயர்கொண்ட சேரிகள் இருந்தன; அருள்மொழிதேவச் சேரி, ஜனநாதச் சேரி,
நித்தவிநோதச் சேரி, இராசகேசரிச் சேரி, நிகரிலி சோழச் சேரி, அழகிய சோழச் சேரி,
சிங்களாந்தகச் சேரி, குந்தவ்வை சேரி, சோழகுல சுந்தரச் சேரி, இராசமார்த்தாண்டச் சேரி,
இராசராசச் சேரி என்பன[51].
--------
[45]. J.M.S. Pillai’s ‘Solar Koyil Panikal’, p.31.
[46]. Pandit, L. Ulaganatha Pillai’s ‘Rajaraja’ pp.39,40Vol. 14 Part II, pp. 97-111-இல்
இவர்களைப்பற்றிய முழு விவரங்கள் காண்க.
[#] மும்மடங்கு பலமுடையவன்; அஃதாவது தன் முன்னோர் பெற்றிருந்த அரசியல்
வன்மைபோல மும்மடங்கு வன்மை பெற்றவன் என்பது பொருள்.
[47]. சேர, சோழ, பாண்டியர் முடிகளை ஒன்றாக அணிந்த பேரரசன்.
[48]. இப்பெயர் கொண்ட ஊர் திருச்சிக் கோட்டத்தில் இன்றும் இருக்கிறது.
[49]. பாண்டிய மரபிற்கு இடியேறு போன்றவன்.
[50]. Wards
[51]. 292 of 1908.
குடும்பம் : இராசராசனுக்கு மனைவிமார் பலராவர். கல்வெட்டுகளில் மட்டும்
15 பேர் குறிப்பிடப்பட்டுள்ளனர். அவர் உலகமகா தேவியார், திட்டைப்பிரான் மகள் சோழ
மாதேவியார், அபிமானவல்லியார், திரைலோக்கிய மாதேவியார், பஞ்சவன் மாதேவியார்,
பிருதிவி மாதேவியார், இலாட மாதேவியார், மீனவன் மாதேவியார், நக்கன் தில்லை அழகியார்,
காடன் தொங்கியார், கூத்தன் வீராணியார், இளங்கோன் பிச்சியார் முதலியோர் ஆவர்.
இவர்களை இராசராசன் ‘நம் பெண்டுகள்’ என்று கல்வெட்டில் குறித்தனன். இவருள்
உலகமாதேவியார் பெயரே கல்வெட்டுகளில் முதலில் குறிக்கப்பட்டுள்ளது. திருவிசலூரில்
இராச ராசன் துலாபாரம் புக்கபோது பட்டத்தரசியான தந்திசக்தி விடங்கியார்
இரணியகருப்பம் புக்கனர்; திருவிச நல்லூர்ப் பெருமானுக்குச் சர்க்கரைப் பொங்கல்
செய்ய 45 பொற் காசுகள் தானமளித்தார்[52]. இந்த அம்மையாரே திருவையாற்றில்
கற்றளி ஒன்று எடுத்து அதற்கு ‘உலகமாதேவீச்சரம்’ எனத் தம் பெயரிட்டார். இதனைக்
குறிக்கும் கல்வெட்டில், உடையார் இராசராச தேவர் நம்பிராட்டியார் தந்திசக்தி
விடங்கியாரான பூர் உலக மகா தேவியார்...[53] என்பது காணப்படலால், இரணிய
கருப்பம் புக்கவர் உலக மகாதேவியாரே என்பது வெளிப்படை தஞ்சைப் பெரிய
கோவிலில் இராசராசன் பிரதிமமும் உலகமகாதேவியார் பிரதிமமுமே எழுந்தருளப்
பெற்றன[54]. இவற்றால், இவரே இராசராசன் முதற் பெருந்தேவியார் என்பது விளங்கும்.
வானவன் மாதேவியார் எனப்பட்ட திரிபுவனமா தேவியார் மகனே இராசேந்திர
சோழன்[55]. இளங்கோன் பிச்சியார் என்பவர் வல்லவரையன் மகளார். வல்லவரையார்
வாண்டிய தேவர் என்பவன் இராசராசன் தமக்கையாரான குந்தவியைார் கணவன்.
எனவே, பிச்சியார் என்பவர் இராசராசன் அத்தை மகளார் ஆவர். இராசராசனுக்குப்
பெண்மக்கள் மூவர் இருந்தனர். ஒருத்தி சாளுக்கிய விமலாதித்தனை மணந்து கொண்ட
குந்தவ்வை என்பவள். மற்றொருத்திமாதேவடிகள் என்பவள். இவள் நடுவிற்பெண்
என்று திருவலஞ்சுழிக் கல்வெட்டுக் கூறுகிறது.[56] மூன்றாம் மகள் பெயர் தெரியவில்லை.
இராசராசன் தன் முன்னோர்பால் மிக்க மதிப்பு வைத்திருந்தான். அருங்குணங்கள்
ஒருங்கே அமையப் பெற்ற அவ்வண்ணல் தம் முன்னோனான (பாட்டனான) அரிஞ்சயன்
என்பானுக்கு மேல்பாடியில்[@] கோவில் கட்டி 'அரிஞ்சிகை ஈச்சுரம் எனப்
பெயரிட்டான்[57];திருமுக்கூடவில் ஒரு மண்டபம் கட்டி அதற்குத் தன் பாட்டியான
செம்பியன் மாதேவியின் பெயரிட்டு அழைத்தான்[58].
திருமுறை வகுத்தது : நாயன்மார் வரலாறுகளும் திருப்பதிகங்களைக்
கோவில்களில் ஒதலும் பல்லவர் காலத்திலேயே பரவிவிட்டன; விசயாலயன் முதலிய
சோழர் பாடல் பெற்ற கோவில்களைக் கற்கோவில்களாக மாற்றினர். அவர் காலக்
குடிகள் அக் கோவில்கட்குப் பலவகை நிபந்தங்கள் விடுத்தனர்; திருப்பதிகங்கள்
கோவில்களில் விண்ணப்பம் செய்யப் பெற்றன[59]. இங்ஙணம் நாயன்மார் வரலாறுகளும்
தேவாரம் ஒதுதலும் பரவியுள்ளதை அறிந்த இராசராசன் தேவாரப் பாக்களைத் திரட்டி
முறைப்படுத்த உளங்கொண்டான். அதற்கு உதவிசெய்யத் தக்கவர் திரு நாரையூரில்
வாழ்ந்த சைவ அந்தணப் பெரியாரான நம்பியாண்டார் நம்பி என்பவரே ஆவர்
என்பதை வல்லார் கூறக்கேட்ட அரசன் திருநாரையூர் சென்றான்; அவரிடம்தன்
கருத்தை அறிவித்தான். அவர் பொல்லாப்பிள்ளையார் பக்தர் ஆதலின், ஏடுகள்
சிதம்பரத்தில் பொன்னம்பலத்தின் மேற்றிசையில் மூவர் கையிலச்சினை பெற்ற
காப்பினையுடைய அறையில் இருத்தலை உணர்த்தினார்.உடனே அரசர் அவருடன்
பொன்னம்பலம் சென்று, தில்லைவாழ் அந்தணர் கூறியபடி அப்பர், சம்பந்தர், சுந்தரர்
படிமங்களை ஊர்வலமாக வரச்செய்து, அரண்மிக்க அறையில் இருந்த தேவார
ஏடுகளை எடுத்தான். சில ஏடுகள் புற்றினால் அழிந்து கிடந்தன. எஞ்சியவற்றை
நம்பிகள் முறைப்படுத்தினார்; திருஞான சம்பந்தர் பாடிய பதிகங்களை முதல் மூன்று
திருமுறைகளாகவும், திருநாவுக்கரசர் பதிகங்களை 4,5,6ஆம் திருமுறைகளாகவும்,
சுந்தரர் பதிகங்களை 7-ஆம் திருமுறையாகவும் வகுத்தனர்[60]. இத்திரு முறைகளைக்
கோவில் தோறும் ஒத ஒதுவார்கள் நியமனம் பெற்றனர். தஞ்சைப் பெரிய கோவிலில்
திருப்பதிகம் ஒத 48-பேர் அமர்த்தப்பட்டனர் என்பது கொண்டு,தேவாரப்பாடல்கள்
நாடெங்கும் பரவச் சிவபாத சேகரனான இராசராசன் பெருமுயற்சி எடுத்துக் கொண்டான்
என்பது நன்கு விளங்குகிறதன்றோ? தேவாரம் ஒத 48 பேரை நியமித்த இவன்
காலத்திற்குள் திருமுறைகள் முறைப்படுத்தப்பட்டன என்பது ஐயமற விளங்குதல்
காண்க. ‘இம்முறை வைப்பு இவன் காலத்தில் ஏற்பட்டிலது. பிற்காலத்தே தான்
ஏற்பட்டதாதல் வேண்டும்’ எனக் கூறும் அறிஞரும் உளர். அவர் கூற்று மறுக்கற்பால
தென்பதை அறிஞர் உலகநாத பிள்ளை அவர்கள் ஆய்வுரைகொண்டு தெளிக[61].
இராசராசன் சைவ உலகில் அழியாப் புகழினைப் பெற்றான். தேவாரத் திருமுறைகள்
இவ்வுலகில் உள்ளளவும் இவன் பெயர் அழியாது நிற்கும் என்பதில் ஐயமில்லை. தமிழ்
அரசர் ஆற்றலை தகூழின அரசர்க்கும் பிறர்க்கும் உணர்த்திச் சமயப்பற்றோடு சிறந்த
அரசியல் அறிவும் பெற்று வாழ்ந்த இப்பெருமான் பெயர் என்றும் வரலாற்றுலகிலும்
சைவவுலகிலும் சிறப்பிடம் பெற்றுள்ள தென்பதை அறியாதார் யாவர்!
--------------
[53]. 635 of 1902
[54]. S.I.I. Vol. 2. part 2. p. 155
[55]. 448 of 1918
[56]. 633 of 1902
[@] மேல்பாடி என்பது வட ஆர்க்காட்டில் உள்ளதிருவல்லத்துக்கு வடக்கே 6-கல் தொலைவில்
உள்ள நகரமாகும். இஃது ‘இராசாச்ரயபுரம்’ என இராசராசன் காலத்தில் வழங்கியது.
[57]. S.I.I. Vol. 3, Part, I.p.23
[58]. 178 of 1915
[59]. 373 of 1903, 349 of 1918, 129 of 1914, 99 of 1929 and 139 of 1925.
[60. திருநாவுக்கரசர் பதிகம் பாடியதில் காலத்தால் சில ஆண்டுகளேனும் முற்பட்டவர்.
அங்ஙணம் இருந்தும் சம்பந்தர் பாடல்கள் முன் வைக்கப்பட்டமைக்குத் தக்க காரணம்
புலப்படவில்லை. இராசராசன் காலத்தில் மூவர்க்கும் படிமங்கள் செய்யப்பட்டன.
மணிவாசகர்க்குச் செய்யப்பட வில்லை என்பதை நோக்கத்திருவாசகம் இராசராசற்குப்பிறகே
கண்டு பிடிக்கப்பட்டது எனத் தெரிகிறது. அதற்குப் பிறகுள்ள நூல்களும் பின் முறையிற்
சேர்க்கப்பட்டிருத்தலால் அவை யாவும் பிற் காலத்தாராற் சேர்க்கப்பட்டிருத்தல் வேண்டும்
எனக் கோடல் அறிவிற்கும் ஆராய்ச்சிக்கும் பொருத்தமாக இருத்தல் காண்க.
[61]. Vide “Rajarajan I” pp. 100-105. திருமுறை கண்ட புராணம் முதலியன சந்தான குரவராகிய
உமாபதி சிவனார் செய்ததன்று. யாரோ ஒருவர் செய்து அப்பெரியார் பெயரை வைத்து விட்டனர்
என்பது அவற்றை நன்கு வாசித்தார் உணர்ந்திருப்பர். ‘திருத்தொண்டர் புராண வரலாறு’ பாடியவர்
பெரிய புராணத்தை நன்கு படியாதவர் என்பது ஐயமற விளங்குகிறது. ஆதலின் இத்தகையோர்
பாடல்களைக் கொண்டு வரலாறு கூறல் பெருந்தவறாகும் உண்மை வரலாறாகிய பாலமிழ்தில்
நஞ்சு கலப்பதொப்பாகும்.
------------
2.6. இராசேந்திர சோழன் (கி.பி. 1012 - 1044)
பிறப்பு :இராசராசனது ஒரே மகனான பரகேசரி இராசேந்திரன் ‘உடைய
பிராட்டியார் தம்பிரான் அடிகள் வானவன் மாதேவியாரான திரிபுவன மாதேவியார்க்கு[1]
மார்கழித் திங்கள் திரு ஆதிரை நாளிற்[2] பிறந்தவன். வேறு இவனது இளமைப் பருவத்தைப்
பற்றிக் கல்வெட்டுகளைக் கொண்டு ஒன்றுமே அறியக் கூடவில்லை. இவன் கல்வெட்டுகள்
‘திருமன்னி வளர’ என்னும் தொடர்புடையன.
பெயர் : இராசராசனது இயற்பெயர் ‘அருள் மொழி’ என்று திருவாலங்காட்டுச்
செப்பேடுகள் செப்புகின்றன. அங்ஙனமே இவன் இயற்பெயர் மதுராந்தகன் என்று
அச்செப்பேடுகள் குறிக்கின்றன.[3]
வளர்ப்பு : விசயாலயன் வழிவந்த மன்னர்க்குப் பழை யாறையில்
அரண்மனை ஒன்று உண்டு.அங்கு இராசராசன் தம்க்கையாரான குந்தவ்வையார் இருந்தார்.
இராசராசன் பாட்டியாரான (கண்டராதித்தன் மனைவியாரான) செம்பியன் மாதேவியார்
இருந்தார்.இவ்விருவரும் சிவபக்தி நிறைந்தவர். இராசேந்திரன் இம்மூதாட்டியரிடம்
வளர்ச்சி பெற்றவனாதல் வேண்டும்.[4]
இளவரசன் : இராசராசன் தன் தந்தையான இரண்டாம் பராந்தகன்,
தமையனான ஆதித்தன், சிற்றப்பனான மதுராந்தகன் ஆகிய மூவரும் ஆண்டு இறந்த
பிறகு பட்டம் பெற்றவன் ஆதலின், அவன், தான் பட்டம் பெற்ற கி.பி. 985-லேயே
முதியவனாக இருந்திருத்தல் வேண்டும். அதனால், அவன் பட்டம் பெற்ற காலத் திற்றானே
அவன் மகனான இராசேந்திரன் வயது வந்த இளைஞனாக இருத்தல் கூடியதே ஆம்.
அதனாற்றான் இராசராசன் நான்காம் ஆண்டுக் கல்வெட்டில் (கி.பி. 988) ‘இராசேந்திர
சோழ தேவன்’ குறிப்பிடப்பட்டுள்ளான்[5]. இராசராசன் ஏறத்தாழ 30 ஆண்டுகள் அரசாட்சி
செய்துள்ளான். இராசேந்திரன் அந்தக் காலம் முழுவதும் தந்தையுடன் இருந்து பல
போர்களில் ஈடுபட்டிருந்தான். எனவே, இராசேந்திரன் பட்டம் பெற்ற காலத்தில்
ஏறத்தாழ 50 வயது உடையவனாக இருந்தானாதல் வேண்டும்.
சென்ற பகுதியிற் கூறப்பட்ட இராசராசன் ஆட்சியில் நடந்த போர்களில் எல்லாம்
இளவரசனாக இருந்த இராசேந்திரற்குப் பங்குண்டு என்பது முன்னரே கூறப்பட்டதன்றோ?
இராசேந்திரன் ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் போர்த்திறத்திலும் அரசியலிலும் நன்கு
பண்பட்டிருந்தான். இராசராசன் தன் ஒப்பற்ற மகனான இராசேந்திரனிடமே தனது
முதுமைப்பருவத்தில் அரசியலை ஒப்புவித்தான். அவன் உயிருடன் இருந்தபோதே
கி.பி.1912-இல் இராசேந்திரற்கு முடிசூட்டினான் என்பது ஐயமற விளங்குகிறது.
என்னை? இராசராசன், தன் மகனான இராசேந்திரனது மூன்றாம் ஆட்சி ஆண்டில்
ஒரு தேவதானம் கொடுத்தான் என்று திருமுக்கூடல் கல்வெட்டு[6] கூறுதலால் என்க.
நாட்டு நிலை : இராசேந்திரன் பட்டம் பெற்ற காலத்தில் (கி.பி.
1012-ல்)[7] சோழப்பேரரசு வடக்கே கிருஷ்ணை துங்கபத்திரை வரை பரவி இருந்தது.
சோழநாடு போகப் புதிதாக வென்ற நாடுகளைத் திறமுற ஆள நம்பிக்கையுடைய
அதிகாரிகள் இருந்தனர். சில நாடுகளில் பழைய அரசர்களே ஆட்சி புரிய விடப்பட்டிருந்தனர்.
நன்றாகப் பயிற்சி பெற்ற ‘தெரிந்த’ படையினர் ஆங்காங்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.
இங்ஙனம் புதிய நாடுகளைப் படைப் பலமும் அரசியல் அறிவும் பெற்ற அதிகாரிகள்
ஆண்டு வந்தமையின், பேரரசன் கவலை இன்றிப் பிற நாடுகளை வெல்ல வசதி
பெற்றிருந்தான்; பேரரசிலும் அமைதி நிலவி இருந்தது.
இளவரசன் - இராசாதிராசன் : இராசராசன் தன் ஆட்சியின்
இறுதியிற்றான் இராசேந்திரற்கு முடிசூட்டினான். ஆனால், இராசேந்திரன் தன்
ஆட்சியின் ஏழாம் ஆண்டிலேயே (கி.பி.1018-இல்) தன் மகனான இராசகேசரி
என்பாற்கு முடிசூட்டி வைத்தான்.[8] அது முதல் தந்தையும் மைந்தனும் ஏறத்தாழ 25
ஆண்டுகள் சேர்ந்தே அரசு புரிந்து வந்தனர் என்பது, இராசாதிராசன் மெய்ப்புகழால்
நன்குணரலாம்.[9] இப் பழக்கம் போற்றத்தக்கதும் புதியதும் ஆகுமன்றோ? நாட்டின்
பெரும் பகுதியை இராதிராசனே ஆண்டு வந்தான்.[10] திரு மழபாடியில் கிடைத்த
இராசாதிராசனது 26-ஆம் ஆண்டுக் கல்வெட்டு, ‘தன் தந்தையின் வெண் கொற்றக்குடை
நிழலைப்போால இராசாதிராசன் குடை இருந்தது. வடக்கே கங்கையையும் தெற்கே
ஈழத்தையும் மேற்கே மகோதையையும் கிழக்கே கடாரத்தையும் கொண்ட இராசேந்திரன்
பேரரசை இராசாதிராசனே ஆண்டுவந்தான்,’ என்று கூறுகிறது[11]. மகன் தன் தந்தையின்
ஆட்சியிலேயே முடிசூடப் பெற்றது சிறப்பு: அதனுடன் தந்தையுடனே இருந்து
ஏறத்தாழ 26 ஆண்டுகள் ஆட்சி அறிவு சிறக்கப்பெற்றமை மிக்க சிறப்பு. இவ்வரிய
செயல், இராசேந்திரன் இந்திய அரசர் எவரும் செய்யாத பெரியதொரு அரசியல்
நுட்பம் வாய்ந்த வேலை செய்தான்-சிறந்த அரசியல் அறிஞன் என்பதை
மெய்ப்பித்துவிட்டது. இராசாதிராசன் முதல் மகனல்லன். இராசேந்திரன் அவனை
இளவரசன் ஆக்கிப் பேரரசை ஆளும் பொறுப்பை ஒப்படைத்தான் எனின், இந்த
இளவல் ஏனை மக்களினும் பல்லாற்றானும் சிறப்புப் பெற்றவனாக இருந்திருத்தல்
வேண்டும் அன்றோ? இங்ஙனம் அவரவர் ஆற்றல் அறிந்து அவரவர்க்கேற்ற அரசப்
பதவி அளித்த பெருமை இராசேந்திரன் ஒருவர்க்கே உரியதாகும், என்னல் மிகையாகாது.
தென் இந்திய வரலாற்றிலே இது குறிப்பிடத்தக்க செய்தியாகும்.
--------
[1]. S.I.I. vol 5, No.982
[2]. 271 of 1927.
[3]. S.I.I. iii, p.422.
[4]. 639 of 1909; 463 of 1908.
[5]. விக்டோரியா அம்மையார்க்குப் பின்வந்த ஏழாம் எட்வர்ட் மன்னர் வயது இங்கு
நினைவு கூர்தற்குரியது.
[6]. 196 of 1917.
[7]. Ep. Indica, Vol.8, p.260.
[8] Ep. Ind, Vol. 9. p. 218.
[9]. 75 of 1895.
[10]. இராசாதிராசன் கல்வெட்டுகள் ‘திங்களேர் தரு’ என்னும் தொடக்கத்தையுடையன.
[11]. 75 of 1895.
இளவல்-சுந்தரசோழன் : இராசேந்திரன் தன் மற்றொரு மகனான
சுந்தரசோழன் என்பானைப்பாண்டிய நாட்டிற்குத் தலைவன் ஆக்கினான். இவ்விளவல்
கல்வெட்டுகளில் சடாவர்மன் சுந்தர சோழ பாண்டியன் எனப் படுகிறான். பாண்டிய
நாட்டை ஆண்டதால் ‘பாண்டியன்’ எனப்பட்டான்; அப்பாண்டியர் சடாவர்வன்,
மாறவர்மன் என்பவற்றில் ஒன்றை வைத்திருந்ததைப் போலச் ‘சடாவர்மன்’ எனப் பெயர்
தாங்கினான்; தனது இயற் பெயரான ‘சுந்தர சோழன்’ என்பதையும் கொண்டு விளங்கினான்.
இவ்விளவல் பின்னர்ச் சேர நாட்டையும் சேர்த்து ஆளும் உரிமை பெற்றான். அதனால்,
சோழ கேரளன் எனப்பட்டான். இங்ஙனம் இவ்விளவரசன் தன் தந்தை காலம் முழுவதும்
சேர, பாண்டிய நாடுகளை ஆண்டுவந்தான்.
இங்ஙனம் மண்டலங்களை ஆண்டவர் தம் பேரரசன் மெய்ப்புகழைக் கூறியே தம் பெயரில்
கல்வெட்டுகள் விடுதல் மரபு. ஆயின் ஆட்சி ஆண்டு அவரதாகவே இருக்கும். இராசேந்திரன்
தன் மக்களிடமும் தன் நம்பிக்கைக்குரிய பிற அரசியல் தலைவர்களிடமுமே மண்டலம்
ஆளும் பொறுப்பை விட்டிருந்தான். பேரரசன் தன் மக்களையே மண்டலத் தலைவர்கள்
ஆக்கி வைத்தமையால், பேரரசு குழப்பம் இன்றிச் செவ்வனே நடைபெற்று வந்தது.
போர்ச் செயல்கள் : இராசேந்திரன் காலத்துப் போர்ச் செயல்கள்
மூன்றுவகையின. அவை (1) இவன் இளவரசனாக இருந்து நடத்தியவை, (2) அரசனாக
இருந்து நடத்தியவை, (2) இவன் காலத்தில் இளவரசனான இராசாதிராசன் நடத்தியவை
எனப்படும். முதற் பிரிவு இராசராசன் வரலாறு கூறும் பகுதியிற் காணலாம். இரண்டாம்
பகுதியை இங்கு விளக்குவோம்.
இடைதுறை நாடு : இது கிருஷ்ணைக்கும் துங்க பத்திரைக்கும்
இடைப்பட்ட சமவெளி. அஃதாவது இப்போது ‘ரெய்ச்சூர்’ எனப்படும் கோட்டம்
என்னலாம்.[12] இஃது ‘எடதொறே இரண்டாயிரம்’ என்று கன்னடர் கல்வெட்டுகளில்
கூறப்பட்டுள்ளது.
கொள்ளிப் பாக்கை : இஃது ஐதராபாத்துக்கு நாற்பத்தைந்து கல்
வடகிழக்கே உள்ளது. இதன் இன்றைய பெயர் ‘கூல்பாக்’ என்பது. இது ‘கொள்ளிப்
பாக்கை ஏழாயிரம்’ எனப்படும். இந்நாடு 13-ஆம் நூற்றாண்டுவரை சிறப்புற்றிருந்தது.[13]
இதன் மதில் சுள்ளிமரங்கள் நிறைந்தது. இஃது ஆறாம் விக்கிரமாதித்தனின் காலத்தில்
அவனுடைய மகனான மூன்றாம் சோமேசுவரனால் ஆளப்பட்டு வந்தது.
மண்ணைக் கடக்கம் : இஃது இராட்டிரகூடர்க்குக் கோநகராக
இருந்த இடம். இது, பிறகு வந்த மேலைச் சாளுக்கியர்க்கும் சிறிதுகாலம் தலை நகரமாக
இருந்தது. வடக்கே பரமார அரசரும் தெற்கே சோழரும் இதனைத் தாக்கத் தாக்க,
சாளுக்கியர் தமது தலைநகரைக் கலியான புரத்துக்கு மாற்றிக் கொண்டனர். மண்ணைக்
கடக்கம் இப்பொழுது மான்யகேடம் எனப்படும். இதன் மதி: கடக்க முடியாத வன்மை
உடையது.
இந்நாடுகளை இராசேந்திரன் வென்றான் என்று இவனது மூன்றாம் ஆண்டுக் கல்வெட்டுகள்
குறிக்கின்றன.[14] திருவொற்றியூர் மண்டபம் ஒன்றுக்கு ‘மண்னை கொண்ட சோழன்’
என்னும் பெயர் இடப்பட்டது.[15]
ஈழப்போர் : இராசராசன் காலத்தில் நடந்த ஈழப்போரில் தோற்றோடி
ஒளிந்த ஐந்தாம் மஹிந்தன் என்னும் ஈழ அரசன், சில ஆண்டுகள் கழித்துப் பெரும் படை
திரட்டிச் சோழர் ஆட்சிக்குட்பட்ட ஈழப்பகுதியை மீட்க முயன்றான். அதைக் கேள்வியுற்ற
இராசேந்திரன் பெரும்படையுடன் சென்றான்; போரில் வெற்றி கொண்டான். ஈழத்து
அரசனுக்கும் அவன் மனைவியர்க்கும் உரிய முடிகளையும் அணிகலன்களையும்
பொன்மணிகளையும் பிற சின்னங்களையும் கைப்பற்றி மீண்டான்; இவற்றுடன் ஒரு
நூற்றாண்டுக்கு முன் இராசசிம்ம பாண்டியன் விட்டிருந்த மணிமுடி முதலியவற்றையும்
கைப்பற்றினான்.[16] இப்போர் நிகழ்ச்சி கி.பி. 1017-18-இல் நடைபெற்றதாதல் வேண்டும்.
சோழ சேனைகள் இலங்கையைச் சூறையாடின, தோல்வியுற்ற மஹிந்தன் மீட்டும்
காட்டிற்கு ஒடிவிட்டான்’ என்று மகாவம்சம் கூறுகிறது. ஆயினும், அவன் எவ்வாறோ
சோணாட்டிற்குப் பிடித்துச் செல்லப்பட்டான். அங்கு அவன் சோழர்க்கு முற்றும் பணிந்து
விட்டான்[17]. அவன் சோழ நாட்டிலே கி.பி. 1029-இல் இறந்தான். இப்போரினால்
ஈழநாடு முற்றிலும் சோழர் ஆட்சிக்கு உட்பட்டு விட்டது. இராசேந்திரன் கல்வெட்டுகள்
இலங்கையிற் கிடைத்துள்ளன.[18]
சோழ நாட்டில் இறந்த மஹிந்தனது மகன் மறைவாக ஈழத்தவரால் வளர்க்கப்பட்டான்.
அவன் தன் தந்தை சோணாட்டில் மடிந்ததைக் கேட்டு, ரோஹணப் பகுதிக்குத் தானே
அரசனாகி, முதலாம் விக்கிரமபாகு என்னும் பெயருடன் கி.பி. 1029 முதல் 1041 வரை
ஆண்டுவரலானான்.[19]
தென்னாட்டுப் போர் : பாண்டியநாடு இராசராசன் காலத்திற்றானே அடிமைப்பட்டுவிட்டது.
அப்படி இருந்தும், இராசேந்திரன் அங்குச் சென்று பாண்டியனைத் தோற்கடித்து விரட்டி,
அந்நாட்டை ஆளத் தன் மகனான சுந்தர சோழனை நிலைநிறுத்தி மீண்டான். பிறகு
பரசுராமனது சேர நாட்டைக் கைக்கொள்ளப் பெரும்படையுடன் மலையைத் தாண்டிச்
சென்றான்; அங்கு இருந்த அரசருடன் போர் செய்து வென்றான்; கிடைத்த
நிதிக்குவியல்களுடன் தன் நாடு திரும்பினான்’ என்று திருவாலங்காட்டுச் செப்பேடுகள்
செப்புகின்றன. இதனுடன் இராசேந்திரனது மூன்றாம் ஆட்சி ஆண்டில் ஸ்ரீ வள்ளுவர்
என்னும் பெயர்கொண்ட ஸ்ரீ வல்லப பாண்டியன் மனைவி திருவிசலூர்க்கோவிலுக்கு
நிவந்தம் கொடுத்தாள்[20] என்பதையும் இராசேந்திரன் மதுரையில் பெரிய அரண்மனை
ஒன்றைக் கட்டினான்[21] என்பதையும் நோக்க, சோழர் ஆட்சியில் இருந்தபோதிலும்,
பாண்டியர் தலைமறைவாகப் பாண்டிய நாட்டில் இருந்து கொண்டே கலகம் விளைத்தனரோ
என்பது எண்ண வேண்டுவதாக இருக்கிறது. இராசேந்திரன், இராச ராசனைப் போலக்
காந்தளூர்ச் சாலையில் கலம் அறுத்தான்.[22] இக்குறிப்புகளால் சேரபாண்டிய நாடுகளில்
அமைதியை நிலை நாட்டவே இராசேந்திரன் முனைந் திருத்தல் வேண்டும் என்பதே
பெறப்படுகிறது.
-------
[12]. Ep. Ind. Vol. 12, pp.295-296.
[13]. J.A.S., 1916, pp.-17.
[14]. ‘நெடிதியல் ஊழியுள இடைதுறை நாடும்
தொடர்வன வேலிப் படர் வென வாசியும்
சுள்ளிச் சூழ்மதில் கொள்ளிப் பாக்கையும்
கண்ணரு முரண மண்ணைக் கடக்கமும்’ என்பது மெய்ப் புகழ்.
[15]. 103 of 1912.
[16]. 4 of 1890; 247 of 1903
[17]. 642 of 1909
[18]. 595, 618 of 1912.
[19]. Chola Vamsam, Chap. 55
[20] 46 of 1907
[21]. 363 of 1917
[22]. 363 of 1917
சாளுக்கியப் போர் : இராசேந்திரனது 9-ஆம் ஆண்டுக் கல்வெட்டில், இராசேந்திரன்
காஞ்சியினின்றும் புறப்பட்டுச் சென்று, ‘ஜயசிங்கனது’ இரட்டைப்பாடி ஏழரை லக்கம்
வென்று நவநிதிகளைக் கைப்பற்றிய செய்தி காணப்படுகிறது. இப்போர் திருவாலங்காட்டுச்
செப்பேடுகளில் காப்பிய நடையில் பத்துச் சுலோகங்களால் சிறப்பிக்கப்பட்டுள்ளது[23].
கி.பி. 1016-இல் ஐந்தாம் விக்கிரமாதித்தனது தம்பியான ஜயசிம்மன் சாளுக்கிய நாட்டை
ஆளத்தொடங்கினான். அவன் பல்லாரி, மைசூர் என்னும் பகுதிகளைக் கைப்பற்றினான்.[24]
சேர சோழரை வெற்றி கொண்டதாகக் கூறிக் கொண்டான். இராசேந்திரன் ஜயசிம்மனை
முயங்கி (முசங்கி) என்னும் இடத்தில் பொருது வென்றான். ‘முயங்கி’ என்பது பல்லாரிக்
கோட்டத்தில் உள்ள ‘உச்சங்கி துர்க்கம்’ என்பர் சிலர்[25]. ஐதராபாத் சமஸ்தானத்தில்
உள்ள ‘மாஸ்கி’ என்பதாகும் என்பர் சிலர்.[26]
கங்கை கொண்டான் : இராசேந்திரனது 41-ஆம் ஆண்டில் இவனது வட நாட்டுப்
படையெடுப்புக் கூறப்பட்டுள்ளது. எனவே, இவன் கி.பி.1023-இல் வடநாடு நோக்கிச்
சென்று மீண்டிருத்தல் வேண்டும். இப் படையெடுப்பில் இராசேந்திரனது சேனைத்
தலைவன் பல நாடுகளை வென்றான்; இராசேந்திரன் அத்தலைவனைக் கோதாவரிக்
கரையில் சந்தித்தான். சேனைத் தலைவன் முதலில் (1) சக்கரக் கோட்டத்தை வென்றான்.
அந்த இடம் ‘மத்திய பிரதேசத்தில்’ உள்ள பஸ்தர் சமஸ்தானத்தின் தலைநகரமான
இராசபுரத்திற்கு 12 கிமீ தொலைவில் உள்ள ‘சித்திரகோடா’ என்னும் ஊராகும்[27].
இந்தப் பகுதியிற்றான் மதுரமண்டலம் (ஒரிஸ்ஸாவில் உள்ள ‘மதுபன்’ என்பது),
நாமனைக்கோலம், பஞ்சப் பள்ளி ஆகிய இடங்களும் இருந்திருத்தல் வேண்டும். (2)
ஆதிநகரில் இந்திராதனை வென்று கோசல நாட்டையும் காடுகள் செறிந்த ஒட்டர
தேசத்தையும் கைக்கொண்டான். திருவாலங்காட்டுச் செப்பேடுகள், இராசேந்திரன்
ஒட்டரதேசத்து அரசனைக்கொன்று, அவன் தம்பியிடம் பன்மணிக்குவியலைத் திறை
கொண்டான் என்று குறிக்கின்றன. (3) பிறகு, இவன், தன்மபாலனது தண்டபுத்தி
இரணசூரன் ஆண்ட தென்லாடம், கோவிந்தசந்திரன் ஆண்டகிழக்கு வங்காளம்
இவற்றை முறையே அடைந்தான். தண்டபுத்தி என்பது ஒட்டர தேசத்துக்கும்
வங்காளத்துக்கும் நடுவில், சுவர்ணரேகையாற்றுக்கு இருகரையிலும் உள்ள நாடு[28].
இது படைகாப்பாக ஒரு தலைவனுக்குக் கொடுக்கப்பட்டு அவனால் நுகரப்பட்ட நிலம்’
எனக் கொள்ளலாம். வங்காளத்தில் ஒரு பகுதி ராடா எனப்பட்டது. அதுவே கல்வெட்டு
குறிக்கும் லாட தேசம் ஆகும். இம்மூன்று நாடுகளையும் ஆண்ட அரசர்கள் ஏறத்தாழ
வரலாற்றில் இடம்பெற்றவரே ஆவர். ஆதலின், இவர்கள் பெயர்கள் பொய்ப்பெயர்கள்
அல்ல. மகிபாலன் வங்க நாட்டை ஆண்டுவந்தான். அவன் சோழர் தானைத் தலைவனது
சங்கொலிக்கு அஞ்சிப் போர்க்களம் விட்டு ஓடிவிட்டான். உடனே சோழர் சேனைத்
தலைவன் அவ்வரசனுடைய யானைகளையும் பெண்டிர் பண்டாரங்களையும் பற்றிக்
கொண்டு கங்கைக்கரையை அடைந்தான்.
தோல்வியுற்ற வேந்தர் தலைகளில் கங்கைநீர் கொண்டுவரப்பட்டது[29]. இது மிகைபடக்
கூறலோ, உண்மையோ, தெரியவில்லை. பெருமகிழ்ச்சியோடு திரும்பிவந்த சேனைத்
தலைவனை இராசேந்திரன் கோதாவரி யாற்றங்கரையிற் சந்தித்து மகிழ்ந்தான்.[30]
இந்த வட நாட்டுப் படையெடுப்பில் ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் கழிந்திருக்கலாம்.
இராசேந்திரன் தான் வென்ற வட நாடுகளை ஆள விரும்பவில்லை. அதற்காக அவன்
படையெடுத்திலன்; தான் புதிதாக அமைத்த கங்கை கொண்ட சோழபுரத்தையும்
சோழகங்கம் என்னும் ஏரியையும் கங்கை நீரால் தூய்மை ஆக்க விரும்பியே படைகளை
வடக்கே அனுப்பிக் கங்கை நீரைக் கொண்டுவர முயன்றான். வேற்றரசன் படை தன்
நாட்டு வழியே செல்லப் புதிய நாட்டினர் இடந்தரார் ஆதலாலும், வடவரை வென்ற புகழ்
தனக்கு இருக்கட்டுமே என இராசேந்திரன் எண்ணியதாலுமே இப்போர்கள் நிகழ்ந்தனவாதல்
வேண்டும்.
வங்கத் தமிழ் அரசர் : இப் படையெடுப்பில் ஈடுபட்ட படைத்தலைவனோ அரசியல் தந்திரியோ
ஒருவன் (கருநாடகன்) மேற்கு வங்காளத்தில் தங்கிவிட்டான். அவன் வழிவந்தவன்
சாமந்த சேனன் என்பவன். அவனே பிற்காலத்தில் வங்காளத்தை ஆண்டுவந்த சேன மரபின்
முதல் அரசன் ஆவன்[31]. மிதிலையை ஆண்ட கருநாடர் இங்ஙனம் சென்ற தென்னாட்டவரே
ஆவர். கங்கைக் கரை நாடுகளில் இருந்த சிவ பிராமணர் பலர் இராசேந்திரன் காஞ்சியிலும்
சோழ நாட்டிலும் குடியேறினர்[32]. அறிவும் ஆற்றலும் உடையவர் எந்நாட்டாராலும்
போற்றலுக் குரியரே அல்லரோ?
கடாரம் முதலியன : இராசேந்திரன் கடல் கடந்து கடாரம் முதலியன கொண்ட செய்தி
இவனது 13-ஆம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டிற்றான் காண்கிறது.[33] எனவே, இவன்
கி.பி. 1024-25-இல் அவற்றை வென்றிருத்தல் வேண்டும். கடல்கடந்து சென்ற இம்முயற்சியில்
இராசராசன், முதலில் கடாரத்து அரசனை வென்று அவனுடைய யானை, செல்வம்,
வித்தியாதரத் தோரணம் முதலியன கவர்ந்தான்; பின்னர்ப் பல நாடுகளையும் ஊர்களையும்
பிடித்தான்; இறுதியிற் கடாரத்தையும் கைக்கொண்டான். இனி இவன் கொண்ட நாடுகளும்
ஊர்களும் எவை என்பதைக் காண்போம்.
---------
[23]. V. 99-108
[24]. Ep. Car Vol. 7, sk. 202, 307
[25]. S.I.I. Vol. 2.pp. 94-95.
[26]. Dr. S.K. Aiyangar Sir Asutosh Mookerjee Commemoration Vol 9, pp. 178-9.
[27]. Ep. Ind. Vol. 9, pp. 178-9.
[28]. R.D. Banerji’s ‘Palas of Bengal’, p.71
[29]. Kanyakumari Inscription
[30]. Thiruvalangadu Plates.
[31]. R.D. Banerji “Palas of Bengal”, pp.73, 99
[32]. K.A.N. Sastry’s ‘Cholas’, Vol.I, P.254.
[33]. S.I.I. Vol. 2, p. 109.
ஸ்ரீவிஷயம் : இது சுமத்ரா தீவில் உள்ள ‘பாலம்பாங்’ என்னும் மாகாணம் ஆகும். இது
மலேயாத் தீவுகளில் வாணிகத் தொடர்பால் கி.பி. 8 முதல் 13-ஆம் நூற்றாண்டு வரை
சிறப்புற்று விளங்கியது. இதனைச் சீனர் ‘ஸ்ரீ விஜயம்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப்
பகுதி கிழக்கு-மேற்கு வாணிக வழிகட்கு நடு இடமாக இருந்து, செழிப்புற்றது. ஸ்ரீ-திரு,
விஷயம்-நாடு; திருநாடு என்பது பொருள்.
கடாரம் : இது, தென்திரைக் கடாரம் எனப்படலால், கடற்கரையைச் சேர்ந்த பகுதி என்பது
விளங்கும். இது வட மொழியில் ‘கடாஹம்’ என்றும் தமிழில் ‘காழகம், கடாரம்’ எனவும் பட்டது.
காழகம் என்பது பத்துப்பாட்டிற் காணப்படலால், சங்கத் தமிழர் நெடுங்காலமாகக்
கடாரத்துடன் கடல்வழி வாணிகம் செய்துவந்தமை அறியலாம். சீனரும் நெடுங்காலமாக
வாணிகம் செய்துவந்தனர். அவர்கள் எழுதி வைத்த குறிப்புகளால், மலேயா தீபகற்பத்தின்
தென்பகுதியில் உள்ள ‘கெடா’ என்னும் இடமே ‘கடாரம்’ ஆதல் வேண்டும் என்பது
தெரிகிறது. இதனை ஆண்டவன் ‘சங்கிராம விசயோத்துங்க வர்மன்’ என்பவன்[34].
மாயிருடிங்கம், இலங்காசோகம், மலையூர் என்பன மலேயாத் தீபகற்பத்துப் பகுதிகள்
ஆகும். மாப்பப்பாமை, தலைத்தக்கோலம் என்பன ‘க்ரா’ பூசந்திக்குப் பக்கத்துப் பகுதிகள்
ஆகும். மாதமாலிங்கம் என்பது மலேயாவின் கீழ்ப்புறத்தில், குவாண்டன் ஆறு கடலோடு
கலக்கும் இடத்தில் உள்ள தெமிலிங் அல்லது ‘தெம்பெலிங்’ எனப்படுவதாகும். வளைப்பந்துறு
என்பது இன்ன இடம் என்பது தெரியவில்லை. பண்ணை என்பது சுமத்ராத் தீவின்
கீழ்க் கரையில் உள்ள பனி அல்லது ‘பனெய்’ என்னும் ஊராகும்.
இலாமுரி தேசம் - இது சுமத்ரா தீவின் வடபகுதியில் உள்ள நாடாகும். அரேபியர் இதனை
லாமுரி என்று குறித்துளர்.
மாநாக்கவாரம் - இது நிக்கோபார் தீவுகளின் பழம் பெயர் ஆகும்.
இக்காடுகளும் ஊர்களும் அக்காலத்தில் ஸ்ரீ விஷயப் பேரரசிற்கு உட்பட்டு இருந்தன என்று
சீன நூல்கள் கூறுகின்றன. இந்தப் பகுதிகளில் நல்ல துறைமுகங்கள் இருந்தன. சீன நாட்டுக்
கப்பல்களும் தமிழ் நாட்டுக் கப்பல்களும் சந்திக்கவும், பண்டங்களை மாற்றிக் கொள்ளவும்
மலேயா நாடுகளுடன் வாணிகம் செய்யவும் இந்த இடங்கள் பேருதவியாக இருந்தன.
இங்ஙனம் தமிழக வாணிகத்திற்கு உதவியாக இருந்த இடங்களை இராசேந்திர சோழன்
வலிந்து வென்றதன் காரணம் இன்னது என்பது விளங்கவில்லை; அங்குத் தங்கி வாணிகம்
செய்த தமிழர்[35] உரிமைகளைக் காக்கவோ அல்லது ஸ்ரீ விஷய அரசன் செருக்கை அடக்கவோ
தெரியவில்லை. வென்ற அந்நாடு களைச் சோழன் ஆண்டதாகவும் தெரியவில்லை. ஆதலின்,
மேற் கூறப்பெற்ற காரணங்கள் பொருத்தமாக இருக்கலாம்.
இராசாதிராசன் செய்த போர்கள் :
இராசேந்திர சோழன் காலத்திற்றானே இராசாதிராசன் செய்த
போர்களும் தந்தையையே சாருமாதலின், அவையும் இவன் செய்த போர்கள் என்றே
கொள்ளற்பாலன. இனி, அவற்றின் விவரம் காண்போம்.
ஈழப் போர் : இராசேந்திரன் ஆட்சியின் தொடக்கத்தில் உண்டான ஈழப்போருக்குப் பிறகு
கி.பி.1042-இல் மீண்டும் இராசாதிராசன் இலங்கையில் போர் நிகழ்த்த வேண்டி யிருந்தது.
விக்கிரமபாகு 13 ஆண்டுகள் அரசாண்டு இறந்தான். அவன் சோழருடன் போர் செய்து
இறந்தான் என்று சோழர் கல்வெட்டுகள் செப்புகின்றன. அவனுக்குப் பின் கித்தி என்பவன்
எட்டே நாட்கள் ஆண்டான் பிறகு மஹாலான கித்தி என்பவன் மூன்றாண்டுகள் ரோஹன
நாட்டை ஆண்டான். அவன் சோழருடன் போரிட்டுத் தோற்றுத் தற்கொலை செய்து கொண்டான்.
துளுவ நாட்டிற்கு ஒடவிட்ட அவன் மகன் விக்கிரம பாண்டியன் (சிங்கள அரசனுக்கும்
பாண்டியன் மகளுக்கும் பிறந்தவன்) ரோஹணத்தை அடைந்து அரசன் ஆனான். அவன்
‘ஜகதீபாலன்’ என்பவனுடன் செய்த போரில் இறந்தான். இந்த ஜகதீபாலன் அயோத்தியை
ஆண்ட அரசகுமாரன் என்று மகாவம்சம் கூறுகிறது. அவன் கன்யா குப்ஜம் என்னும்
நாட்டிலிருந்து ஓடிவந்தான்; அவன் பெயர் ‘வீரசலாமேகன்’ என்று சோழர் கல்வெட்டுகள்
கூறுகின்றன. இலங்கை வேந்தரை வென்ற அவனையும் சோழர் கொன்றனர்; அவன்
தமக்கை, மனைவியரைச் சிறை கொண்டு, தாயை மூக்கரிந்து அவமானப்படுத்தினர்.
விக்கிரம பாண்டியன் மகன் பராக்கிரமன், சோழர் அவனையும் வென்று முடிகொண்டனர்[36].
பாண்டியருடன் போர் : பாண்டிய நாட்டில் சுந்தர பாண்டியன் சிற்றரசனாக இருந்து ஒரு
பகுதியை ஆண்டுவந்தான். அவன் ஒரு படைதிரட்டிக் கலகம் விளைத்தான். இராசாதிராசன்
அவனைப் போரில் முறியடித்து நாட்டை விட்டு விரட்டி விட்டான். இஃது எந்த ஆண்டு
நடந்தது என்பது கூறக்கூடவில்லை.
மலைநாட்டுப் போர் : இராசாதிராசன் மலை நாட்டை ஆண்ட அரசர் பலரைப் பொருது
வெற்றிகொண்டான் என்று அவனது மெய்ப்புகழ்[37] கூறுகிறது. இராசாதிராசன் பாண்டி
மண்டலத்தினின்றும் காந்தளுர்ச்சாலையில் கலம் அறுக்கச் சென்றான்; வழியில் வேள்நாட்டு
அரசனைத் தாக்கிக் கொன்று, கூபக நாட்டு (தென் திருவாங்கூர்) அரசனை விடுவித்தான்[38].
எலிமலைக்குப் பக்கத்தில் இருந்த, நாடு ‘இராமகுடம்’ என்பது ‘எலி நாடு’ எனவும் படும்.
அதன் அரசன் மூவர் திருவடி எனப்பட்டான்[39]. இராசாதிராசன் அவனை வென்று,
சேரனைத் துரத்தி அடித்தான், இச்செய்திகளை இவனது “திங்களேர்தரு’ என்று தொடங்கும்
கல்வெட்டிற் காணலாம்.
மேலைச் சாளுக்கியப் போர் : இராசேந்திரனது இறுதிக் காலத்தில் மேலைச் சாளுக்கியர்
சோழருடன் மீண்டும் போர் தொடுத்தனர். கி.பி.1042-இல் சாளுக்கிய மன்னன் இரண்டாம்
ஜயசிம்மன் இறந்தான். அவன் மகனான முதலாம் சோமேசுவரன் அரசன் ஆனான்.
அவனுக்கு ஆகவமல்லன், திரைலோக்கிய மல்லன் என்னும் வேறு பெயர்களும்
உண்டு. சோழர் கல்வெட்டுகளில் அவன் ‘ஆகவமல்லன்’ என்றே குறிக்கப்பட்டான்.
இதனாற் போர் மூண்டது. இராசாதி ராசன் சாளுக்கிய சேனையைப் புறங்கண்டான்.
சேனைத் தலைவர்களான தண்டப் பையன், கங்காதரன் என்போரைக் கொன்றான்.
சோமேசுவரன் மக்களான விக்கிரமாதித்தனும் விசயாதித் தனும் சங்கமையன் என்ற
தானைத் தலைவனும் போர்க்களத்தினின்றும் ஓடி மறைந்தனர். இராசாதித்தன் பகைவர்
பொருள்களைக் கைக்கொண்டு கொள்ளிப் பாக்கையை எரியூட்டினான்[40]. சிறு துறை,
பெருந்துறை, தைவ பீமகசி என்னும் முத்துறைகளிலும் [#] யானைகளைக்
குளிப்பாட்டிச் சாளுக்கியரது பன்றிக்குறி பொறிக்கப் பட்ட குன்றுகளில் புலிக்குறி
பொறித்தான்[41].
----------
[#] இவை துங்கபத்திரை, கிருஷ்ணை, பீமா என்னும் ஆறுகள்;
K.A.N. Sastry’s ‘Cholas’ I, p.277.
சோழரை வெல்ல முடியாதென்பதை உணர்ந்த ஆகவமல்லன் தூதுவர் சிலரை இராசாதிராசனிடம்
அனுப்பினான். சோழன் அவருள் இருவரைப்பற்றி ஒருவற்கு ‘ஐங்குடுமி’ வைத்தும்,
மற்றவர்க்குப் பெண் உடை தரித்தும் அலங்கரித்தான்; அவர்க்கு முறையே ஆகவமல்லன்,
ஆகவமல்லி’ என்ற பெயரிட்டுத் திருப்பி அனுப்பினான். இதனாற் சிறந்த ஆகவமல்லன்
‘பூண்டி’ என்னுமிடத்திற் போர் செய்து படுதோல்வி அடைந்தான். இராசாதிராசன்
கலியாணபுரத்தைக் கைக்கொண்டு, அங்கு வீராபிடேகம் செய்து விசய ராசேந்திரன்
என்ற பட்டம் சூடிக்கொண்டான்[42]. இவன் அப்பெரு நகரத் தையும் சூறையாடிப் பல
பொருள்களைக் கைப்பற்றினான். அவற்றுள் குறிப்பிடத்தக்கது வாயிற்காவலர் சிலை
ஒன்று. அதன் பீடத்தில், “ஸ்வஸ்தி ரீ உடையார் பூர் விசயராசேந்திர தேவர் கலியாணபுரம்
எறிந்து கொடுவந்த துவார பாலகர்” என்பது பொறிக்கப் பட்டுள்ளது. அச்சிலை தாராசுரம்
ஐராவதேச்சுரர் கோவிலில் இருந்தது; இப்பொழுது தஞ்சைப் பெரிய கோவிலில் இருக்கிறது[43].
----------
[34]. பர்மாவில் உள்ள ‘பெகு’ தான் ‘கடாரம்’ என்று பலர் கூறியது தவறு. அங்குக் கிடைத்த
இரண்டு துண்கள் இராசேந்திரன் வெற்றித் தூண்கள் அல்ல; Wide A.R.B. 1919 & 1922.
[35]. A.R.E. 1892, p. 12
[36]. S.I.I. Vol. 3, pp. 26. 56; 172 of 1894, 92 of 1892.
[37]. S.I.I. Vol. 3, p. 56.
[38]. 75 of 1895; M.E.R. 1913. ii. 26.
[39]. M.E.R. 1930. p.86; 523 of 1930.
[40]. S.I.I. Vol. 4. No 539; Vol. 5. No.465
[41]. 172 of 1894; 92 of 1892.
[42]. 172 of 1894; 244 of 1925
[43]. இதனை என் நண்பர் திரு. J.M. சோமசுந்தரம் பிள்ளை அவர்கள் (பெரிய கோவில் நடைமுறை
அலுவலாளர்) எனக்குக் காட்டினார்கள்.
கங்கைகொண்ட சோழபுரம்[#] : இஃது இராசேந்திர சோழனால் புதிதாக அமைக்கப்பட்ட
பெரிய நகரம் ஆகும். இது திருச்சிராப்பள்ளிக் கோட்டத்தில் உடையார் பாளையம்
தாலுக்காவில் இப்பொழுது ஒரு சிற்றுாராக இருக்கின்றது.இராசேந்திரன் வடநாடு
வென்ற பெருமைக்கு அறிகுறியாக கங்கைவரை இருந்த நாடுகளை வெற்றி கொண்டதற்கு
அடையாளமாகவே இக் கங்கை கொண்ட சோழபுரம் கட்டினான்[44]; இதிற்கிடைத்த
பழைய கல்வெட்டு வீர ராசேந்திர சோழ தேவனதே ஆகும்[45]. இவன் தஞ்சைப் பெரிய
கோவிலைப் போலக் ‘கங்கை கொண்ட சோழேச்சரம்’ என்னும் அழகு மிக்க கோவிலைக்
கட்டினான்; ‘சோழ கங்கம்’ என்னும் வியத்தகு ஏரி ஒன்றை எடுத்தான்.
---
[#] இதனை யான் 25-4-42-இல் சென்று பார்வையிட்டேன். எனக்கு அங்கு வேண்டிய
உதவி செய்த பெரு மக்கள் திருவாளர் க. முத்துவேலாயுதம் பிள்ளை, கோவில் நடைமுறை
அலுவலாளர் (Executive Officer) ஞானப்பிரகாசம் பிள்ளை என்போர் ஆவர்.
இராசேந்திரன் கங்கைநீர் கொணர்ந்து பெரு வெற்றியுடன் மீண்டுவந்த தன் தானைத்
தலைவனையும் படைகளையும் கோதாவரிக் கரையில் சந்தித்தான்; திரும்பி வருகையில்
தளிதோறும் தங்கித் தரிசித்து இறுதியில் தன் நகரை அடைந்தான்; கங்கை நீரைக்
கொண்டு தான் புதிதாகக் கட்டிய மாநகரையும் கோவிலையும் ஏரியையும் துய்மைப்
படுத்தினான். இக்கங்கைப் படையெடுப்பு மக்களால் வரவேற்கப்பட்டது[46].
நகர அமைப்பை அறியத்தக்க சான்றுகள் இல்லை. அங்குச் சோழ, கேரளன் என்னும்
அரண்மனை ஒன்று இருந்தது.[47] அரண்மனை ஏவலாளர்தொகுதி ஒன்று இருந்தது.
அதன் பெயர் ‘திருமஞ்சனத்தார் வேளம்’ என்பது. பெரிய கடைத்தெருவும் இருந்தது[48].
கோவிலுக்கு ஒரு கி.மீ. தொலைவில் மாளிகை மேடு எனப்படும் திடர் ஒன்று இருக்கிறது.
அங்குதான் சோழரது அரண்மனை இருந்ததாம். அத்திடரின் அடியில் கட்டடத்தின் பகுதிகளும்
அவற்றின் சின்னங்களும் காணப்படுகின்றன. அந்த இடம் அகழப் பெறுமாயின், பல
குறிப்புகள் கிடைக்கலாம். ஏரியின் தென்கரை ஓரத்தில் சிற்றுரர் இருக்கிறது. அதன் பெயர்
கங்கை கொண்ட (சோழ) புரம் என்பது. அதைச் சுற்றிக் காடு இருக்கிறது. அதற்கு
அண்மையில் அழகிய பாழைடந்த கட்டடச் சிதைவுகள் பல காட்டிற்குள் இருக்கின்றன.
இவை பழைய பாபிலோன் நகர அடையாளங்களாக இருந்த மேடுகளைப் போல
இருக்கின்றன. இந்நகரம் செழிப்பாக இருந்த காலத்தில் சோழகங்கம் உதவிய நன்னீர்
செய்த தொண்டு அளப்பரிதாக இருத்தல் வேண்டும்; இப்பொழுது காடாகக் கிடக்கும்
பெரிய நிலப்பரப்பு அக் காலத்தில் பசுமைக் காட்சியைப் பரப்பி இருக்குமன்றோ?[49]
கங்கை கொண்ட சோழேச்சரம் : இது கங்கைகொண்ட சோழன் கட்டியதால் இப்பெயர்
பெற்றது. இதன் அமைப்பு முழுவதும் இராசராசன் கட்டிய பெரிய கோவிலைப்
போன்றதாகும். இஃது ஆறு கோபுரங்களைக் கொண்டிருந்தது இக்கோவில் பெரிய
கோவிலைவிடச் சிறியதாக இருப்பினும், சிற்பவேலையில் அதைவிட மிகச் சிறந்தது.
இச்சிறந்த கோவில் இப்பொழுது அழிந்து கிடக்கிறது. இதன் திருச்சுற்றுகள்
காணப்படவில்லை. கோபுரங்களில் கீழைக்கோபுரம் ஒன்றே இப்பொழுது இடிந்த
நிலையில் இருக்கின்றது. உள்ளறையும் அதைச் சுற்றியுள்ள திருச்சுவருமே இப்பொழுது
ஒரளவு காணத்தக்க நிலையில் இருக்கின்றன.
விமானம்: இது தஞ்சைப் பெரிய கோவில் விமானத்தைப் போன்றது. இதன் உயரம்
50 மீ. இது 30 மீ. சதுரமாக அமைந்துள்ளது; ஒன்பது அடுக்குகளை உடையது. இவற்றுள்
முதல் இரண்டு அடுக்குகள் ஒன்றன்மேல் ஒன்றாக நிமிர்ந்து நிற்கின்றன. மற்றவை
மேலே செல்லச் செல்ல சிறுத்துச் சரிவாக அமைந்துள்ளன; விமானத்தின் நாற்புறங்களிலும்
வாயில்களும் மாடங்களும் இருக்கின்றன. விமானம் முழுவதும் அழகிய பதுமைகள்
காட்சி அளிக்கின்றன. விமான உச்சியில் பெரிய கோவில் விமானத்தில் உள்ளதைப்
போலவே ஒரே கல்லாலான சிகரம் ஒன்று இருக்கிறது. அதன் கலசம் இப்பொழுது இல்லை.
சிவலிங்கம் : தஞ்சைப் பெரிய கோவிலில் உள்ள சிவலிங்கத்தைப்போலவே இது
பெரியது. இஃது ஒரே கல்லால் ஆனது. இஃது இடி விழுந்து இப்பொழுது இரண்டாகப்
பிளந்துள்ளது என்பது கூறப்படுகிறது. இச் சிவலிங்கப் பெருமானைப் பெரிய கோவிற்
பெருமானைப் பாடிய கருவூர்த் தேவர் ஒரு பதிகத்தாற் சிறப்பித்துள்ளார். அஃது
ஒன்பதாம் திருமுறையிற் சேர்க்கப்பட்டுள்ளது. கொள்ளிடத்தில் கீழணைக்கட்டுக்
கட்டிய பொழுது இக்கோவிற்பகுதிகளும் திருச்சுற்றுகளும் தகர்த்துக்கொண்டு
போகப்பட்டனவாம். எளிய சிற்றுாரார் தடுத்தனர். பயன் என்ன? தடுத்தவர்
தண்டிக்கப்பட்டனர்.இடித்த கற்சுவருக்குப் பதிலாகச் செங்கற் சுவர் வைப்பதாக
வாக்குறுதி அளிக்கப்பட்டதாம்.ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை[50].
------
[44]. Ep. Ind. Vol. 15, p. 49.
[45]. 82 of 1892.
[46]. M.E.R. 1932, p.50; Kalaimagal Vol.II p.326.
[47]. S.I.I. Vol. 2, No. 20.
[48]. 102 of 1926.
[49]. Ind. Ant. Vol. iv, p.274.
[50]. Ind. Ant. Vol. in p.274; K.A.N. Sastry’s ‘Cholas’, p.289.
இன்றைய காட்சி
திருமதில் : நீளம் ஏறத்தாழ 200 மீ அகலம் 150 மீ; கனம் 1 மீ. முழுவதும் கற்களால்
இயன்றதே ஆகும். அத்திரு மதிலை அடுத்து இரண்டு அடுக்குத் திருச்சுற்று மாளிகை
இருந்தது. இன்று ஒரு பகுதி மட்டுமே காணக்கிடக்கிறது.
திருச்சுற்று : (திருச்சுற்றில் இன்று பல கோவில்கள் காண்கின்றன; சந்திரசேகரர் கோவில்
அழிந்து கிடக்கிறது. இவை யனைத்தும் (சண்டீசர் சிறு கோவில் தவிர) பிற்பட்டவையே
ஆகும். அம்மன் கோவில் பிற்காலத்தே உள்ளே கொணர்ந்து கட்டப்பெற்றதாகும்.)
திருமதிலின் முன்புற மூலைகள் இரண்டிலும் பின்புறமதிலின் நடுப்பகுதியிலும் அரை
வட்டமான ‘காவற்கூடம்’ போன்ற கட்டட அமைப்பு இருந்திருத்தல் வேண்டும் என்பதற்குரிய
குறிகள் காண்கின்றன.
உட்கோவிலுக்கு எதிரே முற்றும் செங்கற்களாலான பெரிய நந்தி ஒன்று படுத்துள்ளது.
அதன் தலை வரை உயரம் 6 மீ. முதுகு வரை உயரம் 4 மீ. அதற்கு வலப்புறம் நேர் எதிரே
சிங்கமுகக் கிணறு ஒன்று அற்புதமாக அமைந்துள்ளது. அருகில் உள்ள கிணற்றுக்குச்
செல்லும் படிக்கட்டுகள் டகர வரிசையில் அமைந்துள்ளன. அப் படிக்கட்டுக்கு மேல்
செங்கற்களாலான சிங்கம் காட்சி அளிக்கிறது. அதன் வயிற்றில் உள்ள வாசல் வழியே
படிக்கட்டுகளில் இறங்கிச் சென்றால், பக்கத்தில் உள்ள கிணற்று நீரைக் காணலாம்.
ஏறத்தாழ 30 படிக்கட்டுகள் நீருள் இருக்கின்றனவாம்; நீருக்குமேல் 20 படிகள் உள.
படிகள் அனைத்தும் கருங்கற்களே யாகும்.
உட்கோவில் : இதன் நீளம் 260 மீ., அகலம் 250மீ, இதனுள் மகா மண்டபம் 57மீ.
நீளமும் 30 மீ. அகலமும் உடையது. இறை அறைக்கும் இம்மண்டபத்திற்கும் இடையே
உள்ள அர்த்த மண்டபத்தின் இருபக்கங் களிலும் தெற்கிலும் வடக்கிலும் அழகிய
திருவாயில்கள் படிகளுடன் உள்ளன. கோவிலை அணுகும் திருவாயில் கிழக்கே உள்ளது.
மகா மண்டபத்தில், எட்டுப்பந்தி களாய் 140 கற்றுண்கள் அணி அணியாக உள்ளன.
நடுப்பகுதி 6.மீ. உயரமுடையதாய், இரு பக்கங்களும் 5 மீ. உயரம் கொண்டனவாய்
மேலே கல் கொண்டு மூடிய மண்டபமாகும். அர்த்த மண்டபம் இருவரிசைகளாலான
பெரிய சதுரக் கற்றுாண்களாலானது. விமானம் 60 மீ. உயரமுடையது. கோவிலின்
அடிப்பாகம் 30 மீ சதுர மானது. இதன் உயரம் 10 மீ. இரண்டு மேல் மாடிகளை
உடையது, இதற்குமேல் உள்ள பகுதி எட்டு மாடிகள் உள்ளதாய் விளங்கும்.
லிங்கம் : லிங்கம் 13 முழச் சுற்றுடையது; பீடம் 30 முழச் சுற்றுடையது; லிங்கத்தின்
உயரம் 4 மீ. பீடத்தைத் தாங்கச் சிறிய கற்றுாண்கள் உள்ளன. பீடம் இரண்டாக
வெடித்துள்ளது. மூல அறையைச் சுற்றியுள்ள திருச்சுற்றின் அகலம் 3 மீ. ஆகும். இது
கோவில் தரை மட்டத்திற்குமேல் 6 மீ. உயரத்தில் அமைந்துள்ளது.
அர்த்த மண்டபம் : அர்த்த மண்டபத்துத் துாண்கட்கு மேல் நடனச் சிலைகள் பல
செதுக்கப்பட்டுள்ளன. அவை பலவகை நடன நிலைகளைக் குறிக்கின்றன. இலிங்கத்தை
நோக்கிய எதிர்ச்சுவர் மீது (காஞ்சி வைகுந்தப் பெருமாள் கோவில் சுவரில் உள்ள
சிற்பங்கள் போல) 6 வரிசைச் சிற்பங்கள் இருக்கின்றன. அவை, (1) சண்டீசர் வரலாறு
(2) தடாதகை திருமணம் (3) பார்த்தனும் பரமனும் போரிடல் (4) மார்க்கண்டன் வரலாறு
முதலியன உணர்த்துகின்றன. அவை அனைத்தும் உயிர் ஒவியங்களாகக் காட்சி
அளிக்கின்றன.
மகா மண்டபம் : இத்தகைய மண்டபமே பிற்கால ஆயிரக்கால் மண்டபத்திற்கு
அடிகோலியதென்னலாம். இங்கு சம்பந்தர் கற்சிலை மிக்க அழகோடு காணப்படுகிறது,
துர்க்கையம்மன் சிலை அற்புத வேலைப்பாடு கொண்டது. நவக்கிரக அமைப்பு
வேறெங்கும் காணப்படாத புதுமை வாய்ந்தது. சூரியன் தேர்அட்டதிசைப் பாலகர் -
அவர்க்கு மேல் நவக்கிரக அமைப்பு-நடுவண் பதும பீடம், இவை அனைத்தும் ஒரே
வட்டக்கல்லில் அமைந்துள்ள காட்சி கண்டு வியத்தற் குரியது. மகா மண்டபத்தில்
உள்ள இரண்டு அறைகளில் விமானத்தின் கலசமும் பல சிலா விக்கிரகங்களும்
திருமேனிகளும் இருக்கின்றன.
வாயிற் காவலர் : ஏறத்தாழ 4 மீ. உயரம் கொண்ட கம்பீரத் தோற்றமுள்ள வாயிற்
காவலர் சிலைகள் உள. அவருள் முதல் இருவர் சிலைகள் கோபுரச் சிதைவில் உள.
எஞ்சிய பத்தும் கோவில் வாயில், அர்த்த மண்டப வாயில், உள்ளறை வாயில், வடக்கு -
தெற்கு வாயில்கள் இவற்றண்டை இருக்கின்றன.
சிற்பங்கள் : விமானத்தில் நிறைந்துள்ள சிற்பங்களும் கோவிலின் வெளிப்பாகத்தில்
உள்ள சிற்பந்திகழ் உரு வங்களும் மிக்க வனப்புற்றவை. தென் இந்தியாவிலுள்ள
சிற்பங்களிலும், அவற்றைப் பின்பற்றிச் சாவகத்திலுள்ள உயர்ந்த சிற்பங்களும்
இவை மேம்பட்டன என்று அறிஞர் கூறுகின்றனர். தென்மேற்கில் சபாபதியும்,
மேற்கில் இலிங்கோற்பவ அருணாசல ஈசுவரரும், தெற்கில் விநாயகரும், வடக்கில்
திருவாயிலுக்கு அணித்தாய், சண்டேசுவரர்க்கு இறைவன் அருள் புரிகின்ற
அருட்கோலமாய்ச் சண்டேசுவர அருள்புரி மூர்த்தியும் அருமையான வேலைப்பாடு
உடையன. மற்றும் கணங்களும், அப்சர மாதரும், இராக்கதக் கூட்டங்களுமாக
எவ்விடத்தும் அமைந்துள்ளதை நோக்குங்கால், இக்கோவிலின் கம்பீரமான
தோற்றத்திற்கு வனப்பை அவை தருவன என்னலாம். இவற்றுட் பெரும்பாலான
வற்றிற்கு நரசிம்மவர்மனுடைய மாமல்ல புரத்துச் சிற்பங்களே அடிப்படையானவை;
எனினும், இவை அவற்றினும் மேம்பட்டுச் சிற்பக்கலை வளர்ச்சியை நன்கு
விளக்குவனவாகும். மற்றும், இக்கோவில் சோழர் காலத்துக் கோவில்களுள், அழகிலும்,
சிற்பத் திறனிலும் ஒரு தனி நிலை எய்தியுள்ளது என்பதைக் கூறலாம்[51]. இச்
சிற்பங்களின் விரிவு சோழர் சிற்பங்கள் என்னும் பிரிவில் விளக்கப்பெறும்.
மாளிகை மேடு[§] : இந்த இடம் அரண்மனை இருந்த இடமாகும். இது மிகப் பரந்த
இடத்தில் அமைந்துள்ளது, இப்போது இவ்விடம் திருத்திய வயலாக விளங்குகிறது.
வயல்களில் ஆங்காங்கு மேடுகள் இருக்கின்றன. அவற்றிலும் வயல்களிலும் உடைந்த
மட்பாண்டச் சிதைவுகள் நிரம்பிக் கிடக்கின்றன. செங்கல் 38 செ.மீ. நீளம், 20 செமீ
அகலம், 10 செ.மீ. கனம் உடையதாக இருக்கின்றது. பெரிய மாளிகை மேட்டைத்
தோண்டிக் கற்றுரண்கள் எடுக்கப் பட்டுப் புதுச்சாவடிக் குளத்தின் படிக்கட்டுகள்
கட்டப்பட்டனவாம். காறைக் கலப்புண்ட செங்கற் சிதைவுகள் நிரம்பக் கிடைக்கின்றன.
இம்மேட்டின் கிழக்கில் வெங்கற்சுவர் நீளமாகப் போவதை இன்றும் காணலாம்.
வழி நெடுகச் செங்கற் கவர்த் தளம் காணப் படுகிறது. பழைய அரண்மனைக் கழிவு நீர்,
மழை நீர் செல்ல வாய்க்கால் இருந்தது. ஒருவகைக் கல்லால் ஆகிய மதகின் சிதைவுகள்
இன்றும் காணக் கிடைக்கின்றன. கோவிலுக்குப் பின்னே இன்றுள்ள ஒடை புதியது.
அதன் இரு புறமும் செங்கற்சுவர்களின் சிதைவுகள் காண்கின்றன.மாளிகைமேடு தெற்கு
வடக்கில் இரண்டு கி.மீ. நீளமுடையது. கிழக்கு மேற்கில் ஒன்றரை கிமீ நீளமுடையது.
-------
[§]. கோவில் வேலை பார்க்கும் சுப்பராயபிள்ளை (72 வயது) யுடன் நான் ஒரு மணி நேரம்
இம் மேட்டைப் பார்வையிட்டேன்.
பண்டை நகரம் : இராசேந்திரன் அமைத்த புதிய நகரத்தின் நான்கு புறங்களிலும் நான்கு
காளிகளை எல்லைத் தெய்வங்களாக நிறுத்தினான் போலும் மேற்கு வாசல் காளி கோவில்
5 கி.மீ. தொலைவில் இருக்கிறது; வடக்கு வாசல் காளி கோவில் இரண்டு கல்
தொலைவில் (சலுப்பை என்னும் சிற்றுாரில்) உள்ளது; செங்கம் மேடு என்ற கிராமத்தில்
உள்ளது; கிழக்கு வாசல் காளிகோவில் இரண்டு கல் தொலைவில் இருக்கிறது.
தெற்கு வாசல் காளிகோவில் இரண்டு கல் தொலைவில் (வீராரெட்டி என்னும்
கிராமத்தண்டை இருக்கிறது. அங்குத் தீர்த்தக் குளம் (தீர்த்தம் கொடுக்கப் பிரகதீச்சுரர்
அங்குப் போதல் வழக்கமாக இருந்ததாம்) இருக்கிறது. இக்குறிப்புகளால், பண்டை
நகரம் ஏறத்தாழ 6 கி.மீ. சதுர அமைப்புடைய தாக இருந்த தென்னலாம்.
சுற்றிலும் சிற்றுார்கள் : கோவிலைச் சுற்றிலும் இரண்டு கல் தொலைவு வரை உள்ள
சிற்றுார்களாவன: சுண்ணாம்புக் குழி (கோவில் பணிக்குச் சுண்ணாம்பு தயாரித்த இடம்),
கணக்கு விநாயகர்கோவில், பொன்னேரி (சோழங்க ஏரியைச் சார்ந்த சிற்றுரர்), பள்ளி
ஒடை, பாகல்மேடு, சலுப்பை,செங்கம்மேடு, முத்து சில்பா மடம், சப்போடை மண்மலை
(இது முக்கால் கல் தொலைவில் உள்ளது; கோவில் தேர் இங்குத்தான் இருந்ததாம்.
அங்கு ஒருமேடு தேர்மேடு என்னும் பெயருடன் இருக்கிறது), மெய்க்காவல் புத்துார்,
வீரசோழபுரம், வாண தரையன் குப்பம் (இஃது இன்று ‘வானடுப்பு’ எனப்படுகிறது),
குயவன் பேட்டை, தொட்டி குளம், கழனி குளம், உட்கோட்டை (இது 2 கல்
தொலைவில் உள்ளது) என்பன. பரணை மேடு என்னும் சிற்றுார் கோவிலுக்கு
7 கல்தொலைவில் உள்ளது.அங்கிருந்து பருத்தி மூட்டைகளை அடுக்கிப் பரணை
கட்டி விமானத்தில் கொண்டு செல்லப்பட்டதாம்.
சுரங்கம் : அரண்மனையையும் கோவிலையும் இணைக்கும் சுரங்கம் ஒன்று இருந்தது.
அதன் உண்மையை இன்று கோவிற்கும் மாளிகைமேட்டிற்கும் இடையில் உள்ள
ஒடையிற் காணலாம். செங்கற் சுவர்களுடைய நிலவறைப் பகுதி ஒடையிற்
காணப்படுகின்றது.
கோவிற்கு 365 காணிநிலம் இருக்கின்றது. ஒரு காணிக்கு ரூ. 5-10-0 ஆண்டு வருவாய்.
இங்ஙனம் இருந்தும் தக்க கண்காணிப்பு இன்மையால், வரலாற்றுப் புகழ்பெற்ற
இக்கோவில் இழிநிலையில் இருக்கின்றது. இந்நிலை நீடிக்குமாயின், இதன் சிறப்பே
அழிந்து படும் என்பதில் ஐயமில்லை. நல்லறிவும் பக்தியுமுள்ள பெருமக்களிடம்
கோவிற் பணியை ஒப்படைத்துக் கோவிலை நன்னிலையில் வைக்கச் செய்தல்
அறநிலையப் பாதுகாப்பாளர் கடமையாகும். -
உறை கிணறுகள் முதலியன : கோவிலுக்கு ஒரு கல் தொலைவுவரை நாற்புறங்களிலும்
உறை கிணறுகள் அகப்படுகின்றன. பழைய செங்கற்கள் நிரம்பக் கிடைக்கின்றன,
கருங்கற்கள் எடுக்கப்படுகின்றன.
கோவில் கோபுரம் : இன்று, இடிந்து கிடக்கும் கோபுரம் ஏறத்தாழ 25மீ. உயரமாக
இருந்ததாம். அது முழுவதும் கருங்கல் வேலைப்பாடு கொண்டது; மேலே சாந்தாலான
கலசங்கள் ஏழு இருந்தனவாம். அக்கோபுரம், அணைக்கட்டிற்கு கல் வேண்டி 75
ஆண்டுகட்கு முன் வெடி வைத்தபோது இடிந்து விழுந்துவிட்டதாம். அச்சிதைவுகள்
அப்புறப்படுத்தப்பட்டில; கோவில் திருச்சுற்று முழுவதும் முட்செடிகள் நிறைந்துள்ளன;
செருப்பின்றி நடத்தல் இயலாத கேவல நிலையில் உள்ளது.
சோழ கங்கம் : இஃது இராசேந்திரனால் வெட்டப்பட்ட ஏரி. இஃது இப்போது ‘பொன்னேரி
எனப் பெயர் பெற்றுள்ளது. இஃது இப்பொழுது மேடாக இருக்கிறது. ஊருக்கு வடக்கே
உள்ள இந்த ஏரி, தெற்கு வடக்காக 25 கி.மீ. நீளமுடையது; உயர்ந்த கரைகளை உடையது.
இந்த ஏரிக்கும் கொள்ளிடத்திற்கும் இடையில் அறுபது கல் தொலைவு. அங்கிருந்து பெரிய
கால்வாய் ஒன்று வெட்டப்பட்டது. அதன் வழிவந்த நீரே இந்த ஏரியை ஒரளவு நிரப்பியது.
மற்றொரு கால்வாய் வெள்ளாற்றிலிருந்து வந்தது. தெற்கும் வடக்கும் இருந்த
இக்கால்வாய்கள் இரண்டு ஆறுகளிலிருந்தும் நீரைப் பெய்து வந்தமையால் ஏரி
எப்பொழுதும் கடல் போலக் காட்சி அளித்தது. இக் கால்வாய்களின் கரைகள் இன்றும்
காணக்கூடிய நிலையில் உள்ளன. இந்த ஏரி நீர் திருச்சிராப்பள்ளி, தென் ஆர்க்காடு
கோட்டங்களுக்கு நீரை உதவியதாகும். இதன் பாய்ச்சலால் பயன் பெற்ற விளை
நிலங்கள் பலவாகும். ஆனால் இன்று இந்தப் பெரிய ஏரி தன் பழைமையை மட்டுமே
உணர்த்திக் கிடப்பது வருந்தற்குரியதே. இந்த ஏரி இப்பொழுது காடடர்ந்த இடமாகி
விட்டது. பிற்காலத்தில் படை எடுத்தவர் இதனைப் பாழாக்கினர் என்று ஒரு மரபு
கூறப்படுகிறது.[52]
இந்த ஏரி இப்பொழுது புதுப்பிக்கப்படுகிறது; வேலை நடைபெற்று வருகிறது. இது தன்
பண்டைய நிலை எய்துமாயின், நாடு செழிப்புறும்.
மலையோ, குன்றோ இல்லாத சமவெளியில் 26 கி.மீ. நீளம் பலமான கரை போடுதல்,
நீரைத் தேக்குதல், 100 கி.மீ. நீளமுள்ள கால்வாய் வெட்டி நீரைக் கொணர்தல் என்பன
எளிதான செயல்கள் ஆகா. இவ்வரிய செயல்களைச் செய்து முடித்த இராசேந்திரன்
நோக்கம், தன் குடிகள் நல்வாழ்வு வாழக் கண்டு, தான் இன்புறல் வேண்டும்
என்பதொன்றே அன்றோ? இத்தகைய பேரரசனைப் பெற்ற தமிழ் நாடு பேறு பெற்றதே
அன்றோ?
அரசன் விருதுகள் : இராசேந்திரன் விருதுப் பெயர்கள் பலவாகும். அவற்றுள் மருராந்தகன்,
உத்தம சோழன், விக்கிரமசோழன், வீரராசேந்திரன்[53] என்பன இவன் முன்னோர்க்கும்
பின்னோர்க்கும் இருந்த பெயர்கள். இவனுக்கே உரியவை முடிகொண்ட சோழன்[54],
கங்கை கொண்ட சோழன், கடாரம் கொண்டான், பண்டித சோழன்[55] என்பன.
அரச குடும்பம் : அரச குடும்பம் பெரும்பாலும் பழையாறையில் இருந்ததுபோலும்
பழையாறை அக்காலத்தில் ‘முடிகொண்ட சோழம்’ எனப் பெயர் பெற்று இருந்தது.
இராசேந்திரன் முதல் மனைவியான பஞ்சவன் மாதேவிக்கு அங்குப் பள்ளிப்படை
அமைக்கப்பட்டது[56]. இராசேந்திரனுக்கு மனைவியர் பலர் இருந்தனர். அவருள்
பஞ்சவன் மாதேவியார், திருபுவன மாதேவியார் எனப்பட்ட வானவன் மாதேவியார்[57].
முக்கோக்கிழான் அடிகள்[58]. வீர மாதேவியார் என்போர் குறிப்பிடத் தக்கவராவர்.
வீரமாதேவியார் இராசேந்திர னுடன் உடன்கட்டை ஏறினவர் ஆவர்[59]. இப் பேரரசர்க்குப்
பிள்ளைகள் பலர் இருந்தனர். அவர் நமக்குத் தெரிந்தவரை இராசாதிராசன்,
இராசேந்திரதேவன், வீர ராசேந்திரன் என்போர் ஆவர். இம் மூவருள் சடாவர்மன் சுந்தர
சோழன் ஒருவனா அல்லது வேறானவனா என்பது விளங்கவில்லை. பிரானார்
எனப்படும் அருமொழி நங்கை ஒரு பெண்; அம்மங்கா தேவி ஒரு பெண். அருமொழி
நங்கை இராசாதிராசன் ஆட்சி முற்பகுதியில் திருமழப்பாடிக் கோவிலுக்கு விலை
உயர்ந்த முத்துக்குடை அளித்தி ருக்கிறாள்[60]. இராசராசன் மகளான குந்தவ்வைக்கும்
சாளுக்கிய விமலாதித்தற்கும் பிறந்த இராசராச நரேந்திரன் என்பவன் இராசேந்திரன்
மகளான அம்மங்கா தேவியை மணந்து கொண்டான். இவ்விருவர்க்கும் பிறந்தவனே
பிற்காலப் பேரரசனான முதற் குலோத்துங்கன்.
இராசேந்திரன் தாய் வானவன் மாதேவி என்பவள். இராசேந்திரன் தாய்க்கு ஒரு படிமம்
செய்தான்; அதை நாகப்பட்டினத்தைச் சேர்ந்த “செம்பியன் மாதேவி” என்னும் ஊரில் உள்ள
கோவிலில் நிறுவினான்; அதை வழிபடற்குரிய தானங்கள் அளித்தான்[61]. இறந்தவரைக்
கோவிலில் வழிபட ஏற்பாடு செய்தல் பெரிதும் வழக்கமில்லை. இந்த அம்மை சிறந்த
சிவபக்தி உடையவளாய் இருந்தமையால், இவள் வடிவம் வழிபடப்பட்டது போலும்!
-----------
[51]. J.M.S. Pillai’s ‘Solar Koyir Panigal’, pp. 44-45.
[52]. Ind Ant. IV. P. 274.
[53]. 61 of 1914.
[54]. காவிரியின் கிளையாறு ‘முடிகொண்டான்’ என்னும் பெயரை உடையது. அஃது
இவனால் வெட்டப் பட்டது போலும்!
[55]. S.I.I. Vol.3, No. 127.
[56]. 271 of 1927.
[57]. 624 of 1920.
[58]. 73 of 1921.
[59]. 260 of 1915.
[60]. 71 of 1920.
[61]. 481 of 1925.
இராசராச விசயம் : இந்நூல் இராசராசனைப் பற்றியது போலும்; இந்நூல் விசேட காலங்களில்
படிக்கப்பட்டது. இதனை அரசற்குப் படித்துக் காட்டியவன் நாராயணன் பட்டாதித்தன் என்பவன்.
அரசன் அவனுக்கு நிலம் அளித்துள்ளான்[62]. இந்நூல் இப்பொழுது கிடைக்க வில்லை.
இஃது இருந்திருக்குமாயின், இராசராசன் வரலாற்றை விரிவாக அறிந்து இன்புறக்
கூடுமன்றோ?
அரசன் ஆசிரியர் : இராசராசன் காலத்தில் பெரிய கோவிலில் சர்வசிவ பண்டிதர்
இராசராசேந்திரன் பெரு மதிப்புக்கு உரியவராக இருந்தார். அவரும் அவருடைய
சீடர்களும் எந்த நாட்டில் இருந்தபோதிலும் கொடுக்கும் படி ஆசாரிய போகமாக
ஆண்டுதோறும் நெல் அளப்பதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது.[63] லகுலீச பண்டிதர்
என்பவர் மற்றோர் ஆசிரியர்[64]. அவர் சைவத்தின் ஒரு பிரிவாகிய காளாமுக சமயத்தைச்
சேர்ந்தவர். இச்சமயத்தவர் பலர் பண்பட்ட பண்டிதராக அக்காலத்தில் விளங்கினர்.
அவர்களே சில அறநிலையங் களைப் பாதுகாத்து வந்தார்கள்.
பெளத்த விஹாரம் : இராசராசன் காலத்தில் நாகப் பட்டினத்தில் கட்டத்தொடங்கிய பெளத்த
விஹாரம் இராசேந்திரன் காலத்தில் சிறப்புற்று இருந்தது. அது முன்சொன்ன ஸ்ரீ
விசய நாட்டு அரசனான சைலேந்திர மரபைச் சேர்ந்த மாரவிசயோத்துங்கவர்மன்
கட்டிய தாகும். அவன் நாட்டுப் பெளத்தர் நாகையில் தொழுவதற்கென்றே அது கட்டப்பட்டது.
அவன் வேண்டுகோட்கிசைந்து இராச ராசன் இடம் தந்து ஆதரித்தான். அஃது
இராசேந்திரன் காலத்திற்றான் கட்டி முடிக்கப்பட்டது. பூரீ விசயநாட்டு அரசன்
அக்கோவிலுக்குத் தன் தந்தை பெயரை இட்டான். அதன் பெயர் ‘சூடாமணி வர்ம
விஹாரம்’ என்பது. அதற்கு ஆனை மங்கலம்’ என்னும் கிராமம் தானமாக (பள்ளிச்சந்தம்)
விடப்பட்டது. அத் தானப் பட்டயமே ‘லீடன் பட்டயம்’. எனப்படுவது. ‘லிடன்’ என்பது
ஹாலந்து நாட்டில் உள்ள நகரம். ஆனைமங்கலப் பட்டயம் அங்கு எடுத்துச்
செல்லப்பட்டது; அதனால் இப்பெயர் பெற்றது.
சீனர் உறவு : முன்னர் இராசராசன் சீனத்துக்குத் தூதுக் குழுவைப் பரிசிற் பொருள்களோடு
அனுப்பினாற் போலவே, இராசேந்திரன் கி.பி. 1033-இல் தூதுக் குழு ஒன்றைச் சீன
அரசனிடம் அனுப்பினான். சீன அரசன் அவர்களை வரவேற்று வேண்டியன செய்தான்
என்று சீன நூல்கள் கூறுகின்றன. இந்த உறவால் சோழநாடு சீனத்துடன் கடல்
வாணிகம் சிறக்க நடத்திவந்தது என்பதை நன்குணரலாம்.
நாட்டுப் பிரிவுகள் : இராசேந்திரன் காலத்தில் தொண்டை நாடு - சயங்கொண்ட
சோழமண்டலம் என்றும், பாண்டி நாடு இராசராசப் பாண்டி மண்டலம் என்றும்,
இலங்கை - மும்முடிச் சோழ மண்டலம் என்றும், கங்கபாடி - முடிகொண்ட சோழ
மண்டலம் என்றும், நுளம்பபாடி - நிகரிலி சோழ மண்டலம் என்றும் பெயர் பெற்றன.
சோழ மண்டலம், மலைமண்டலம், கொங்கு மண்டலம், வேங்கி மண்டலம் என்பன
பண்டைப் பெயர்களைக் கொண்டே இருந்தன. நாட்டு உட்பிரிவு முதலியன பற்றிய
செய்திகள் நான்காம் பாகத்திற் கூறப்படும். ஆண்டுக் காண்க.
அரசியல் அலுவலாளர் சிற்றரசர் : அரசியலை நடத்த அலுவலாளர் பலர் இருந்தனர்.
அவர்கள் ‘கருமிகள்’ ‘பணியாளர்’ என இருதிறப்பட்டனர். முன்னவருள் பெருந்தரம்,
சிறுதரம் என இருவகையினர் இருந்தனர்.இவர் அரசியல் தொடர்பான பல பிரிவுகளைக்
கவனித்து அரசியலைக் குறைவற நடத்திவந்தனர். உயர் அலுவலாளர் தம் தகுதிக்கேற்ப
அரசனிடமிருந்து நிலம் அல்லது அதன் வருவாய் பெற்றுப் பணிசெய்து வந்தனர்.
இராசேந்திரன் ஆட்சியில் அவன் பெற்ற வெற்றிகட்குக் காரணமாக இருந்தவர் மூவர்
ஒருவன் அரையன் இராசராசன். இவன் சாளுக்கியர் போர்களிற் புகழ் பெற்றவன்.
இவன் படையொடு சென்றதைக் கேட்ட வேங்கி மன்னன். ஒடிவிட்டான் என்று
ஒரு கல்வெட்டு கூறுகிறது[65]. இவன் ‘நால்மடி பீமம், சாமந்தா பரணம், வீரபூஷணம்,
எதிர்த்தவர் காலன்’ முதலிய விருதுகளைப் பெற்றவன். இவன் இராசராசன் கால முதலே
சோழர் தளகர்த்தனாக இருந்தவன்[66] கிருஷ்ணன் இராமன் என்பவன் மற்றொரு
சேனைத் தலைவன். இவனும் இராசராசன் காலத்தவன். இவன் மகனான மாராயன்
அருள்மொழி ஒருவன். இவன், இராசேந்திரன் கி.பி.1033-இல் கோலாரில் பிடாரி
கோவில் ஒன்றை எடுப்பித்தபொழுது உடன் இருந்து ஆவன செய்தவன்[67]. இவன்
‘உத்தமசோழப் பிரம்மராயன்’ என்னும் பட்டம் பெற்றவன். அரசன் அவரவர்
தகுதிக்கேற்பப் பட்டங்களை அளித்துவந்தான், அமைச்சர், தானைத் தலைவர்
முதலிய உயர் அலுவலாளர்க்குத் தனது பட்டத்துடன் அல்லது விருதுடன் ‘மூவேந்த
வேளான்’ என்பதைச் சேர்த்து அளித்துவந்தான் வேறு துறையிற்சிறந்தார்க்கு
‘மாராயன், பேரரையன்’ என்பனவற்றை அளித்தான். ‘வாச்சிய மாராயன்’, ‘திருத்தப்
பேரரையன்’ போன்றன கல்வெட்டுகளிற் பயில்வனவாகும்.
இராசராசன் தமக்கையான குந்தவ்வையார் கணவனான வல்லவரையர் வாண்டிய தேவர்
என்பவன் வடஆர்க்காடு கோட்டத்தில் பிரம்ம தேசத்தைச் சுற்றியுள்ள பகுதிக்குத்
தலைவனாக இருந்தான். இவனுடைய வேறொரு மனைவி குந்தள தேவி என்பவள்;
மற்றொருத்தி குந்தா தேவியார் என்பவள். குந்தவ்வைப் பிராட்டியார் பழையாறையில்
இருந்த அரண்மனையிலேயே இருந்தவர்[68]. இவ்வல்லவரையன் சாமந்தர் தலைவன்
(பெரிய சேனாதிபதி) போலும்! இவன் பெயர்கொண்ட நாடு சேலம்வரை பரவி
இருந்தது[69].
தென் ஆர்க்காடு கோட்டத்தில் திருக்கோவிலுரைச் சார்ந்த மலைநாட்டுப் பகுதிக்கு
யாதவ பீமன் என்ற உத்தம சோழ மிலாடுடையார் கி.பி. 1016-இல் சிற்றரசனாக
இருந்தான்[70]. கி.பி. 1023-24-இல் கங்கை கொண்ட சோழ மிலாடுடையார் என்பவன்
காளத்தியில் உள்ள கோவிலுக்கு விளக்கிட்டதைக் கல்வெட்டு ஒன்று குறிக்கிறது[71],
சங்காள்வார் என்பவர் மைசூரை ஆண்ட சிற்றரசர். கொங்காள்வார் என்பவர் சிற்றரசர்
ஆவர். ஆண்டுகள் செல்லச் செல்லக் கொங்காள்வார் தம்மைச் சோழர் மரபினர்
என்றே கூறலாயினர்; அங்ஙனமே சில தெலுங்கு-கன்னட மரபினரும் கூறிக்கொண்டனர்.
படைகள் : அரசனிடம் யானைப்படை, குதிரைப்படை, காலாட்படைகள் இருந்தன;
தேர்ப்படை இல்லை. தேர் இருந்ததாக ஒரு கல்வெட்டிலும் குறிப்பில்லை. எந்த
வீரனும் போர்க்களத்தில் தேரைச் செலுத்தி வந்தான் என்னும் குறிப்பே இல்லை.
அரசராயினார் யானை அல்லது குதிரை மீது இருந்து போர் செய்தனர் என்பதே
காணப்படுவது. காலாட்படை 'கைக்கோளப் பெரும்ப டை எனப்பட்டது. ஒவ்வொரு
படையும் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ‘வில்லிகள், வாள்பெற்ற கைக்கோளர்’
என்னும் பெயர்கள் கல்வெட்டுகளிற் காண்கின்றன. இவற்றால், போரில், வில் அம்பு,
வேல், வாள் முதலியனவே பயன்பட்டன என்பது அறியக் கிடக்கிறது. படைகள்,
வென்று அடக்கிய நாடுகளில் எல்லாம் நிறுத்தப்பட்டு இருந்தன. சோழர் கடற்படை
குறிப்பிடத்தக்க சிறப்புடையது; கடல் கடந்து சுமத்ரா, மலேசியா முதலிய நாடுகட்கும்
படைவீரரைக் கொண்டு சென்றது; கடல் வாணிகத்தைப் பெருக்கி வளர்த்த பெருமை
பெற்றது.
காசுகள் : இராசேந்திரன் காலத்து அரசியற் செய்திகள் ‘சோழர் அரசியல்’ என்னும் பகுதியிற்
காண்க. இவன் தன் பெயரால் காசுகளை அச்சிட்டு வழங்கினான். அவை ‘இராசேந்திரன்
மாடை’ எனவும். இராசேந்திர சோழக் காசு எனவும் கல்வெட்டுகளிற் கூறப்பட்டுள்ளன.
கல்வித்துறை-தமிழ் : இராசேந்திரன் ‘பண்டித சோழன்’ எனப் பெயர் பெற்றவன். அதனால்
இவன் தமிழில் சிறந்த புலமை எய்தியவனாதல் வேண்டும். இவனுடைய 'மெய்ப் புகழ்'
பல கல்வெட்டுகளில் சிறந்த புலமை உணர்ச்சியுடன் வரையப்பட்டுள்ளது. அதனால்
இவனது அவையில் தமிழ்ப் புலவர் சிலரேனும் இருந்திருத்தல் வேண்டும் என்பது
தெரிகிறது. யாப்பருங்கலம், காரிகை என்பன செய்த ‘அமித சாகர’ரும் இவற்றுக்கு
உரை வகுத்த ‘குணசாகர’ரும் இக்காலத்தவர் எனக்கூறலாம். சிறந்த சிவனடியாரான
கருவூர்த் தேவர் இக்காலத்தவரே ஆவர். இராசேந்திரன் மகனான வீரராசேந்திரன்
தமிழ்ப் புலமை அவன் பெயரைக் கொண்ட ‘வீர சோ புத்தமித்திரர் இக்காலத்தவரே.
திருமுறை வகுத்த நம்பியாண்டார் நம்பியையும் இராசேந்திரன் பார்த் திருத்தல் கூடியதே.
வடமொழி : இராசேந்திரனைப் பற்றிய வடமொழிப் பட்டயங்களும் கல்வெட்டுகளும்
காவிய நடையில் அமைந்தவை. சிறப்பாகத் திருவாலங்காட்டுச் செப்பேடு களை
வரைந்த நாராயண கவி சிறந்த வடமொழிப் புலவர் ஆவர். தென் ஆர்க்காட்டுக் கோட்டத்தில்
எண்ணாயிரம் என்பது ஒர் ஊர். அஃது ‘இராசராசச் சதுர்வேதி மங்கலம்’ எனப்பட்டது.
அங்கொரு பெரிய வடமொழிக் கல்லூரி நடந்து வந்தது. அதைப்பற்றிய விவரங்களும்[72]
பிறவும் ‘சோழர் காலத்துக் கல்வி நிலை’ என்னும் பகுதியிற்பார்க்க. இங்ஙனமே
‘திரிபுவனை’ என்னும் இடத்திலும் வட மொழிக் கல்லூரி நடந்துவந்தது[73]. அதன்
விவரங்களும் ஆண்டுக் காண்க.
அரசன் சிறப்பு : இராசராசன் சோழப் பேரரசை நிலை நிறுத்தினான்: இராசேந்திரன்
அதனை மேலும் வளப்படுத்தினான்; கடல்கடந்து வெற்றி பெற்றான்; சோழர் புகழை
நெடுந்துரம் பரப்பினான். இராசராசன் கோவில் கட்டித் தன் பக்திப் பெருமையை நிலை
நாட்டினான்; இராசேந்திரன் அதனைச் செய்ததோடு, புதிய நகரையும் வியத்தகு பெரிய
ஏரியையும் அமைத்தான். இராசராசன் சிவபக்தனாக இருந்தது போலவே இவனும்
இருந்து வந்தான்; தந்தையைப் போலவே பிற சமயங்களையும் மதித்து நடந்தான் கடல்
வாணிகம் பெருக்கினான்.இவனது செப்புச் சிலை ஒன்று தஞ்சைப் பெரிய கோவிலில்
இருக்கின்றது. இராசேந்திரன் எல்லாச் சமயங்களிடத்தும் பொதுவாக நடந்து கொண்டான்.
இவன் தனது 24-ஆம் ஆட்சி ஆண்டில், சேர அரசனான இராசசிம்மன் திருநெல்வேலி
கோட்டத்தில் மன்னார்கோவிலில் கட்டிய இராசேந்திர சோழ விண்ணகர்க்கு
நிலதானம் செய்துள்ளான்[74]. இப்பேரரசன் ஒப்புயர்வற்ற நிலையில் அரசாண்டு
கி.பி.1044-இல் விண்ணக வாழ்வை விழைந்தான்.
----------
[62]. 120 of 1931.
[63]. S.I.I. Vol.2, No.20
[64]. 271 of 1927.
[65]. 75 of 1917.
[66]. 23 of 1917.
[67]. 480 of 1911
[68]. 350 óf 1907; 639 of 1909
[69].. 157 of 1915.
[70].. 20 of 1905
[71]. 291 of 1904, Ep. Carnataka, Vol, I, Int. 12-13; Vol. V. Int. 7.
[72]. 338 of 1917; M.E.R. 1918, p.147; 343 of 1947
[73]. 176 of 1919
[74]. 112 of 1905
--------------
2.7. இராசேந்திரன் மக்கள் (கி.பி. 1044 - 1070)
முன்னுரை: பேரரசன் இராசேந்திர சோழர்க்குப் பின் அவன் மக்கள் மூவரும் அடுத்தடுத்து
அரசராயினர். தங்கள் ஆட்சிக்காலத்தில் தந்தை விட்ட பேரரசை நிலை நிறுத்தி ஆண்டனர்;
அதனை நிலைநிறுத்தப் பல போர்கள் செய்தனர். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை மேலைச்
சாளுக்கியருடன் நடத்திய போர்களே ஆகும். கொடிய போர் ஒன்றின் இடையில் இராசாதிராசன்
கொல்லப்பட்டான். உடனே சோழர் படை தளர்ந்தது. அவ்வமயம் பின் இருந்த இராசேந்திரசோழ
தேவன் (இராசாதிராசன் தம்பி) அப்போர்க்களத்திற்றானே முடிசூடி வீராவேசத்துடன்
போராடிப் போரை வென்றான். இங்ஙணம் நடைபெற்ற வடநாட்டுப் போர்கள் ஒரு
பாலாகத் தெற்கே இலங்கை அரசன், பாண்டியன்,சேரன் ஆகிய மூவரும் ஒன்று சேர்ந்து
தத்தம் சுயாட்சியை நிலைநிறுத்தக் கலகம் விளைத்தனர். இத்தகைய குழப்ப நிலைகளை
இம்மக்கள் மூவரும் அவ்வப்போது அடக்கிப் பேரரசு நிலை தளராதவாறு பாதுகாத்தனர்;
இறுதியில் கீழைச் சாளுக்கியர் உதவியையும் பேரரசின் பலத்துடன் கலந்து பின்னும் ஒரு
நூற்றாண்டு சோழப் பேரரசு நிலைத்திருக்க வழிதேடினர்; அஃதாவது சாளுக்கிய சோழ
இராசேந்திரன் எனப்பட்ட முதற் குலோத்துங்கன் சோழப் பேரரசைப் பெறச் செய்தனர்.
ஆட்சி முறை : இராசேந்திரன் முதலியோர் ஆண்ட ஆண்டுகளை வரையறை செய்து
பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியார் அவர்கள் இங்ஙனம் கூறியுள்ளனர்[1].
1. இராசகேசரி - இராசாதிராசன் கி.பி.1018-1054.
2. பரகேசரி - இராசேந்திர சோழ தேவன் கி.பி.1052-1064. (இவன் மகன் இராசகேசரி -
இராசமகேந்திரன் தந்தை காலத்தில் (கி.பி. 1060-1073) இளவரசனாக இருந்து இறந்தான்).
3. இராசகேசரி - வீர இராசேந்திரன் கி.பி. 1063-1059. (இவனுக்கு வீரசோழன்,
கரிகால்சோழன், என்னும் பெயர்கள் உண்டு.
4. பரகேசரி - அதிராசேந்திரன் கி.பி. 1069-1070 (இவன் வீர இராசேந்திரன் மகன்).
இராசாதிராசன் (கி.பி. 1018 - 1054)
இராசாதிராசன்தன்தந்தையுடன் 26ஆண்டுகள் சோழப் பேரரசை ஆட்சி புரிந்தான். தந்தை
காலத்தில் நடைபெற்ற எல்லாப் போர்களிலும் கலந்து கொண்டான்; தந்தை இறந்தவுடன்
தான் அரசனானான். உடனே தன் தம்பியான இராசேந்திரசோழ தேவனை இளவரசனாக
முடிசூட்டினான்.
சாளுக்கியப் போர் :
(1) இராசேந்திரன் இறக்குந் தறுவாயில் அல்லது இறந்தவுடன் கி.பி.
1044-45-இல் சோழர்க்கும் சாளுக்கியர்க்கும் போர் நடந்தது. இராசாதிராசன், அப்போரில்,
சாளுக்கியர்க்கு உதவியாக வந்த சிற்றரசர் பலரையும் சாளுக்கியர் சேனையையும்
முற்றிலும் முறியடித்தான்; காம்பிலி நகரத்தில் இருந்த சாளுக்கியர் அரண்மனையை
அழித்தான்[2].
(2) கிருஷ்ணையாற்றின் இடக்கரையில் ‘பூண்டுர்’ என்னும் இடத்தில் கடும்போர் நடந்தது.
அப்போரில் சோமேசுவரனுடைய சிற்றரசர் பலரும் பெண்டுகளும் சிறைப்பட்டனர்.
பூண்டுர் அழிக்கப்பட்டது; கழுதைகளைக் கொண்டு உழப்பட்டது; ‘மண்ணந்திப்பை’
என்ற இடத்திருந்த அரண்மனைக்குத் தீ வைக்கப்பட்டது; புலிக்கொடி பொறித்த வெற்றித்
தூண் நடப்பட்டது[3].
கொப்பத்துப் போர் (கி.பி.1054): இராசாதிராசனுக்கும் ஆகவமல்லனான சோமேசுவரனுக்கும்
கிருஷ்ணை யாற்றின் வலக்கரையில் ‘கொப்பம்’ என்னும் இடத்தில் கொடிய போர்
நடந்தது. ‘கொப்பம்’ இப்பொழுதுள்ள ‘சித்ராபூர்’ என்பர். இருதிறத்தாரும் வன்மையுடன்
போர் புரிந்தனர். பகைவர் அவனையே குறிபார்த்து அம்புகளை ஏவினர். அதிகம்
அறைவதேன்? அவன் ஏறியிருந்த பட்டத்து யானை இறந்தது; பெருவீரனான
இராசாதிராசன் பகைவர் அம்புகட்கு இலக்காகி இறந்தான். உடனே பகைவர் வெற்றி
முழக்கத்துடன் முன் பாய்ந்தனர். நிலை கலங்கிய சோழவீரர் பின் பாய்ந்தனர். அந்த
அலங்கோல நிலை மையைக் கண்டு பின் நின்ற இராசேந்திர சோழ தேவன் “அஞ்சேல்,
அஞ்சேல்” என்று கூவிக்கொண்டு முன் பாய்ந்தான்; சோழ வீரர் ஒன்று பட்டனர்;
வீராவேசம் கொண்டனர்; பழிக்குப் பழி வாங்கும் எண்ணத்துடன் போர் புரிந்தனர்.
முன் போலவே சாளுக்கியர் இராசேந்திர சோழ தேவனை வீழ்த்தப் பல அம்புகளை
எய்தனர். எனினும் பயனில்லை. சோழவேந்தன், சாளுக்கிய அரசன் உடன் பிறந்தானான
ஜயசிம்மனையும், புலிகேசி, தசபன்மன், நன்னி நுளம்பன் முதலியோரையும் கொன்றான்.
பகைவனைச் சேர்ந்த சிற்றரசர் வன்னிரேவன், பெரும்படையுடைய துத்தன்,
குண்டமையன், இளவரசர் சிலர், சாளுக்கிய ஆகவமல்லன் முதலியோர் போர்க்களம்
விட்டு ஓடினர். பகைவருடைய யானைகள், குதிரைகள், ஒட்டகங்கள் பன்றிக்கொடி,
விலைமதிப்பற்ற சத்திய விவை, சாங்கப்பை முதலிய அரச மாதேவியர், உயர்குலப்
பெண்மணிகள்[4], பிற பொருள்கள் எல்லாம் இராசேந்திர சோழன் கைக் கொண்டான்.
உடனே இராசேந்திரன் அதுகாறும் எவரும் செய்யாத ஒன்றைச் செய்தான். அஃதாவது,
பகைவர் அம்புகளால் உண்டான புண்கள் உடம்பில் இருந்த அப்பொழுதே போர்க்களத்தில்
சோழப் பேரரசனாக முடிசூடிக் கொண்டான்[5]. பின்னர் இராசேந்திரன் கோல்ஹாப்பூர்
சென்று, அங்கே வெற்றித்துாண் ஒன்றை நாட்டிக் கங்கை கொண்ட சோழபுரம் மீண்டான்.[6]
இராசாதிராசன் யானைமேல் இருந்தபோது இறந்ததால், ‘யானைமேல் துஞ்சிய தேவர்’ எனப்
பெயர் பெற்றான்; இங்ஙனமே தன் பின்னோர் கல்வெட்டுகளிற் குறிப்பிடப்பட்டான்.
குடும்பம் : இராசாதிராசன் பூர்வ பல்குனியிற் பிறந்தவன்[7]. இவன் கங்கைகொண்ட
சோழபுரத்திலிருந்து அரசாண்டான். இவன் மனைவியருள் பிராட்டியார் எனப்பட்ட
திரைலோக்கியமுடையார் ஒருவர். மற்றவர் பெயர்கள் தெரியவில்லை. இவன் தன்
சிற்றப்பன், தம்பியர், மக்கள் இவர்களை அரசியல் அலுவலாளராக வைத்திருந்தான் என்று
இவனது மெய்ப்புகழ் கூறுகிறது. இஃது உண்மையாயின், இவனுக்கு மக்கள் இருந்தனர்
என்பது தெரிகிறது[8]. அவர்கள் யாவர் - என்ன ஆயினர் என்பன விளங்கவில்லை.
விருதுப் பெயர்கள் : இராசாதிராசன் - விசயராசேந் திரன் (கலியாண புரத்திற்கொண்ட பெயர்)
வீரராசேந் திர வர்மன், ஆகவமல்ல குலாந்தகன், கலியாணபுரம் கொண்ட சோழன்
முதலிய பெயர்களைப் பெற்றிருந்தான்[9]
சிற்றரசரும் அரசியலாரும் : இராசாதிராசன் காலத்தில் சிற்றரசராகவும் பேரரசின் உயர்
அலுவலாளராகவும் பலர் இருந்தனர். ‘தண்டநாயகன் சோழன் குமரன் பராந்தகமாராயன்’
எனப்பட்ட ‘இராசாதிராச நீலகங்க ராயர்’ என்பவன் ஒருவன்[10], ‘பஞ்சவன் மாதேவியார்’
என்பவள் கணவனான பிள்ளையார் சோழ வல்லப தேவன், ஒருவன். கடப்பைக்
கோட்டத்தில் மகாராசப் பாடி ஏழாயிரம், ஆண்ட தண்ட நாயகன் அப்பிமையன்
என்பவன் ஒருவன்[11]. ‘பிள்ளையார் வாசுவர்த்தன தேவர், எனப்பட்ட சாளுக்கிய
இராசராசன் ஒருவன்[12]. அவன் மனைவியே இராசேந்திரன் மகளும் இராசாதிராசன்
தங்கையுமான அம்மங்காதேவி என்பவள். அவள் கி.பி. 1050-இல் திருவையாற்றுக்
கோவிற்கு வேங்கி நாட்டுப் பொற்காசுகளான இராசராச மாடைகள் 300 தானம்
செய்தாள். சேனாபதி இராசேந்திர சோழ மாவலி வாணராயர் என்பவன் ஒருவன்.
‘உலகளந்த சோழப் பிரம்மமாராயன்’ ஒருவன். இவன் ‘அதிகாரிகள் பாராச்ரயன் வாசு
தேவ நாராயணன்’ எனவும் பெயர் பெற்றவன். இவன் இராசாதிராசன் ‘குருதேவன்’
எனப்பட்டான்[13]. ‘உலகளந்தான்’ என்பதால், இராசாதி ராசன் காலத்திலும் நிலம்
அளக்கப்பட்டிருக்கலாம் என்பது பெறப்படுகிறது. திருக்கழுக்குன்றம் இராசாதி ராசன்
26-ஆம் ஆட்சி ஆண்டில் ‘உலகளந்த சோழபுரம்’ எனப்பட்டது[14].
குணச்சிறப்பு : இராசாதிராசன் தனது வாழ்க்கையைப் போர்களிலேயே கழித்தான்
என்னல் மிகையாகாது; தந்தையோடு கழித்த ஆண்டுகள் 26; தனியே அரசனாகக் கழித்த
ஆண்டுகள் 10 ஆக 36 ஆண்டுகள் போர்களிலே கழிந்தன. இவன் பிறவியிலேயே போர்
வீரனாகத் தோன்றியவன் போலும்! இப்பெரு வீரனது போர்த் திறனாற்றான் சோழப்
பேரரசு நிலைத்து நின்றதென்னல் மிகையாகாது. இவனது பேராற்றலை இளமையில்
உணர்ந்தே இராசேந்திரசோழன், மூத்தவனை விட்டு இவனைத் தன் இளவரசாகக்
கொண்டான். இவன் தன் தந்தையின் காலத்திலேயே நிகரற்ற பெருவீரனாக விளங்கினான்.
இவனுடைய கல்வெட்டுகள் ‘திங்களேர் பெறவளர்’ ‘திங்களேர் தரு’ என்ற தொடக்கம்
உடையவை.
இராசேந்திர சோழ தேவன் (கி.பி. 1052-1064)
இளவரசன் : இராசேந்திர சோழ தேவன் கி.பி. 1044லேயே இளவரசன் ஆனான்; அன்று
முதல் தன் தமையனான இராசாதிராசனுடன் அரசியலைக் கவனித்து வந்தான். இவன்
‘பரகேசரி’ என்னும் பட்டமுடையவன்.
முடி அரசன் : கி.பி.1054-ல் நடந்த கொப்பத்துப்போரில் இராசாதிராசன் இறந்தான்.
உடனே இராசேந்திரன் அங்கு வீராவேசத்துடன் போர் செய்து, பகைவர் சேனையை
அழித்து ஆட்களையும் பொருள்களையும் கவர்ந்து, அவ்விடத்திற்றானே முடி சூடிக்
கொண்டான் என்பது முன்னரே கூறப்பட்டதன்றோ?
ஈழப்போர் : கி.பி. 1055-ல் வெளியான இராசேந்திரன் கல்வெட்டுகள்[15] ‘இராசேந்திரன்
ஈழத்திற்குப் பெரும் படை ஒன்றை அனுப்பினான். அப்படை வீரசலா மேகனை வென்று,
ஈழத் தரசனான மானாபரணனுடைய புதல்வர் இருவரைச் சிறைப்படுத்தியது’ என்று
கூறுகின்றன. ஈழ நாடு இவனது ஆட்சிக்கு உட்பட் டிருந்தது என்பதற்குச் ‘சங்கிலி
கனதராவ’ என்னும் இடத்திற்கிடைத்த இராசேந்திரன் கல்வெட்டே சான்று பகரும்[16].
இலங்கையிற் கிடைத்த சோழர் காசுகளில் இராசாதிராசன், இராசேந்திர தேவன் இவர்
தம் காசுகள் கிடைத்துள்ளன[17]. இவற்றால் ஈழநாட்டின் பெரும்பகுதி சோழப் பேரரசிற்கு
உட்பட்டிருந்ததென்பது வெள் ளிடைமலை. ரோஹனம் என்னும் தென்கோடி மாகாணமே
தனித்திருந்தது.
‘கித்தி’ என்பவன் கி.பி.1058-இல் ‘விசயபாகு என்னும் பெயருடன் ரோஹண மாகாணத்-
தரசனாகிச் சோழருடன் போரைத் தொடங்கினான். இராசேந்திர தேவன் காலத்தில்
அவன் முயற்சி பயன்பெறாது போயிற்று[18].
----------
[1]. Vide ‘his’ Cholas’, Vol.I.p.293.
[2]. S.I.I. Vol. 3, No.28.
[3] 6 of 1890, 221 of 1894, 81 of 1895.
[4]. போர்க்களத்திற்கு அரசமாதேவியரும் உயர்குலப் பெண்டிரும் போதல் மரபு என்பது
இதனால் தெரிகிறதன்றோ?
[5]. 87 of 1895
[6]. S.I.I. Vol.3, No.55; Vol.2, p. 304; 87 of 1895.
[7] 258 of 1910.
[8]. S.I.I. Vol. 3, No.28.
[9]. 78 of 1920, 188 of 1919, 258 of 1910, 102 of 1912.
[10]. 85 of 1920.
[11]. 279 of 1895.
[12]. 221 of 1894.
[13]. 413 of 1902.
[14]. 17 of 1894.
[15]. S.I.I. Vol. 3, No. 29.
[16]. 612 of 1912.
[17]. Codrington’s ‘Ceylon coins’, pp.84 85.
[18]. Maha Vamsa, chapter 57, S. 65-70.
---------
This file was last updated on 07 Nov. 2017
Feel free to send corrections to the webmaster.