சோழர் வரலாறு (பாகம் 3)
டாக்டர். மா. இராசமாணிக்கனார்
cOzar varalARu -part 3
by mA. rAcamAnikkanAr
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Tamil Virtual Academy for providing a scanned image
version of this work for the etext preparation. This work has been prepared using the
Google Online OCR tool to generate the machine-readable text and subsequent proof-reading.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2017.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
சோழர் வரலாறு (பாகம் 3)
டாக்டர். மா. இராசமாணிக்கனார்
Source:
சோழர் வரலாறு
டாக்டர். மா. இராசமாணிக்கனார்
பூரம் பதிப்பகம்
சென்னை - 33(மேற்கு மாம்பலம்)
முதற் பதிப்பு 1947, மறுபதிப்பு 1985, 1999, 2005
பக்கங்கள் 354
--------
உள்ளடக்கம்
1. முதற் குலோத்துங்கன்.
2. விக்கிரம சோழன் .
3. இரண்டாம் குலோத்துங்கன்.
4. இரண்டாம் இராசராசன்.
5. இரண்டாம் இராசாதிராசன் .
6. மூன்றாம் குலோத்துங்கன். .
7. மூன்றாம் இராசராசன். .
8. மூன்றாம் இராசேந்திரன்
-----------------
சோழர் வரலாறு (பாகம் 3)
3.1. முதற் குலோத்துங்கன் - கி.பி. (1070 - 1122)
குலோத்துங்கன் பட்டம் பெற்ற வரலாறு (கி.பி. 1070)
பிறப்பும் இளமையும் : இராசேந்திர சோழன் மகளான அம்மங்காதேவி இராசராச நரேந்திரனை
மணந்து, கி.பி. 1043-ஆம் ஆண்டில் பூச நாளில் ஒரு மகனைப் பெற்றாள்[1]. அவனுக்குத்
தாய்-பாட்டன் பெயரான ‘இராசேந்திரன்’ என்பது இடப்பட்டது. அவன் சாளுக்கிய
மரபுக்கு ஏற்ப ‘ஏழாம் விஷ்ணுவர்த்தனன்’ என்று பெயர் பெற்றான்[2].
குடும்ப நிலை : இராசராச நரேந்திரனது சிறிய தாய் மகனான (தந்தையான விமலாதித்தற்குப்
பிறந்த) ஏழாம் விசயாதித்தன் என்பவன் இருந்தான். இராசராச நரேந்திரன் கி.பி. 1018
முதல் 1059 வரை (41 ஆண்டுகள்) வேங்கி நாட்டை அரசாண்டான். அப்பொழுது
விசயாதித்தன் அவனுக்கு உதவியாக இருந்து நாட்டை ஆண்டு வந்தான். அவனுக்குச்
‘சக்திவர்மன்’ என்னும் மகன் இருந்தான். குலோத்துங்கன் இளவரசுப் பட்டம் பெற்றுத்
தந்தையுடன் இருந்தான்.
குழப்பம் : கி.பி. 1050-இல் இராசராசன் இறந்தான். ஆனால் இளவரசுப் பட்டம் பெற்ற
குலோத்துங்கன் நாடாளக்கூடவில்லை. அவன் தன் சிறிய தந்தையிடம் நாட்டை ஒப்புவித்து
வடக்கு நோக்கிச் சென்றான்; வயிராகரம், சக்கரக்கோட்டம் முதலிய இடங்களைக்
கைப்பற்ற முனைந்தான். மேலும், அவனது எண்ணம் முழுவதும் சோழப் பேரரசின் மீதே
இருந்தது. இதற்கிடையில் ஆறாம் விக்கிரமாதித்தன் வேங்கியைக் தைப்பற்றச்
சாமுண்டராயனைப் பெரும் படையுடன் அனுப்பினான். இதனை உணர்ந்த வீரராசேந்திரன்
கூடல் சங்கமத்திலிருந்து நேரே சென்று பகைவரை வென்று வேங்கியை மீட்டு
விசயாதித்தனிடம் கொடுத்தான். இது சென்ற பகுதியிலே கூறப்பட்டதன்றோ?
அதிராசேந்திரன்: வீரராசேந்திரன் கி.பி.1059-1070-இல் இறந்தான். அவன் மகனான
அதிராசேந்திரன் பரகேசரி என்னும் பட்டத்துடன் அரசன் ஆனான். அவனை அரசனாக்கிய
பெருமை சாளுக்கிய விக்கிரமாதித்தற்கே உரியது. அவன் வீரராசேந்திரன் இறந்தவுடன்
காஞ்சிக்கு வந்தான் பின் கங்கைகொண்ட சோழபுரம் சென்றான்; தன் மைத்துனனான
அதிராசேந்திரற்கு முடிசூட்டி ஒரு திங்கள் தங்கி இருந்தான்; பிறகு தன் மைத்துனன்
அச்சமின்றி நாடாள்வான் என்று எண்ணித் தன் நாடு மீண்டான்.
முடி சூடல் : அவன் சென்ற பிறகு சோணாட்டில் குழப்பம் உண்டாயிற்று. அக்குழப்பத்தில்
அதிரா சேந்திரன் கொல்லப்பட்டான். நாடு அல்லலுற்றது. இதனை அறிந்த குலோத்துங்கன்
வேங்கிக்கும் வடக்கே சக்கரக் கோட்டத்தில் போரிட்டிருந்த குலோத்துங்கன் சோழ நாட்டை
அடைந்தான்; கி.பி. 1070-இல் கங்கைகொண்ட சோழபுரத்தில் சோழப் பேரரசனாக
முடிசூடிக்கொண்டான்: “வேங்கி நாட்டைத் தன் சிறிய தந்தையான ஏழாம் விசயாதித்தன்
ஆட்சியில் விட்டான்.
போர்கள்
சக்கரக் கோட்டம் : வீரராசேந்திரனது இறுதிக் காலத்தில் முதற் குலோத்துங்கன் பெரும்
படையுடன் வேங்கிக்கு வடக்கே சென்றான்; நடு மாகாணத்திலுள்ள ‘வயிராகரம்’ என்ற
ஊரில் எண்ணிறந்த யானைகளைக் கைப்பற்றிக் கொண்டு அவ்வூரை எரியூட்டினான்[3];
தாரா வர்ஷனைப் போரில் வென்று தனக்குத் திறை செலுத்தும்படி செய்தான். சக்கர
கோட்டம்’ என்பது இப்பொழுது ‘சித்திரகூடம்’ என்பது. இது நடு மாகாணத்தில்
ஜகதல்பூருக்கு மேற்கே 25 கல் தொலைவில் உள்ளது. குருஸ்பால் என்ற இடத்துக்
கல்வெட்டு, ‘சக்கரகூடா தீசுவரனாம்...... தாராவர்ஷ நாமே நரேசுவரா’[4] என்று
குறிப்பதால், தாராவர்ஷன் என்பவன் சக்கரக் கோட்டத்தரசனே என்றல் மெய்யாதல் காண்க.
சாளுக்கியருடன் போர் : இஃது ஆறாம் விக்கிரமாதித் தற்கும் முதற் குலோத்துங்கற்கும்
நடந்த பேராகும். இது கி.பி. 1076-இல் நடந்தது - தன் மைத்துனனான அதிராசேந்திரன்
கொல்லப்பட்டான், குலோத்துங்கன் சோழப்பேரரசன் ஆனான் என்பதைக் கேள்வியுற்ற
விக்கிரமாதித்தன் கலங்கினான்; சோழப் பேரரசும் வேங்கி நாடும் ஒரே அரசன் ஆட்சிக்கு
மாறியது, தனக்கு நன்மை யன்று என்பதை எண்ணிப் புழுங்கினான். அவ்வமயம்
விக்கிரமாதித்தற்கும் அவன் தமையனான இரண்டாம் சோமேசுவரற்கும் மனத் தாங்கல்
மிகுதிப்பட்டது. அதனால் விக்கிரமாதித்தன் கலியாணபுரத்தைவிட்டுத் தம்பியான
ஜயசிம்மனுடன் வெளியேறினான்[3]. அதனால் இரட்டபாடி இரு பகுதிகள் ஆயின.
ஒன்று சோமேசு வரனாலும் மற்றொன்று விக்கிரமாதித்தனாலும் ஆளப்பட இருந்தன.
இப்பிரிவினை உணர்ந்த குலோத்துங்கன் சோமேசுவரனைத் தன் பக்கம் சேர்த்துக்
கொண்டான். உடனே போர் மூண்டது. திரிபுவனமல்ல பாண்டியன், கதம்பகுல
ஜயகேசி, தேவகிரியை ஆண்ட யாதவ அரசன், ஹொய்சளனான எறியங்கன் முதலிய
அரசர் விக்கிர மாதித்தன் பக்கம் நின்றனர். விக்கிரமாதித்தன்[5] முதலிற் படையெடுத்துக்
கோலார் வரை சென்றான். குலோத் துங்கன் அவனைத் தடுத்துத் துங்கபத்திரைவரைத்
துரத்திச் சென்றான்; வழியில் அளத்தி, மணலூர் என்னும் இடங்களிற் போர் நடந்தது.
முடிவில் போர்துங்கபத்திரை ஆற்றங்கரையில் கடுமையாக நடந்தது. போரில்
சோமேசுவரன் தோற்று, விக்கிரமாதித்தனிடம் சிறைப்பட்டு நாட்டை இழந்தான்[6].
குலோத்துங்கனை வெல்ல முயன்ற விக்கிரமாதித்தன் இறுதியில் தன் தமையனை வென்று,
இரட்டபாடி முழுவதும் தன் ஆட்சிக்கு உட்படுத்திக் கொண்டான். ஜயசிம்மன்
வனவாசியைத் தலை நகராகக்கொண்டு இரட்டபாடியின் தென் பகுதியை ஆண்டான்.
இப்போரில், மைசூர் நாட்டின் பெரும்பகுதி குலோத்துங்கன் கைப்பட்டது. இஃது உண்மை
என்பதை அங்குக் கிடைத்த அவனுடைய கல்வெட்டுகள் மெய்ப்பிக்கின்றன.
குலோத்துங்கன் நவிலையில் யானை களைப் பிடித்தான் என்று பரணி பகர்கின்றது.
இவன் மேற்கடலை அடைந்து, வனவாசியையும் வென்றான் என்று விக்கிரம சோழன்
உலா உரைக்கிறது.
இலங்கை பிரிந்தது : இலங்கையின் தென் பகுதியை ஆண்ட விசயபாகு கி.பி.1070-ல்
வடபகுதியைத் தனதாக்க முற்பட்டான். அந்த ஆண்டில் சோழ நாட்டில் குழப்பம்
மிகுந்திருந்தது. அது, குலோத்துங்கன் பட்டம் பெற்றுப் பேரரசில் அமைதி உண்டாக்க
முயன்ற காலம். ஆதலின், அவன் இலங்கை மீது கவனம் செலுத்த முடியவில்லை.
அச்சமயம் விசயபாகு படையெடுத்துச் சென்று பொலநருவாவைத் தாக்கிச் சோழர்
படையை முறியடித்தான்; சோழர் சேனைத் தலைவனைப் பிடித்துக் கொன்றான்.
ஆனால், விரைவில் சோழநாட்டிலிருந்து பெருஞ் சோழர் சேனை ஒன்று ஈழ நாட்டை
அடைந்தது. அநுராதபுரத்தண்டைப் பெரும்போர் நிகழ்ந்தது. விசயபாகு தெற்கு நோக்கி
ஓடினான். அவ்வமயம் சோழர், விசயபாகுவைச் சேர்ந்தாருக்குள் கலகம் உண்டாக்கினர்.
ஆயின் திறம் படைத்த விசயபாகு கலகத்தை அடக்கிவிட்டான்; கலகத் தலைவரைச்
சோழர்பால் விரட்டிவிட்டான்; பிறகு தம்பலகிராமம் சென்று அரண் ஒன்றைக் கட்டினான்;
புதிய படைகளைத் தயாரித்தான்; இரண்டு பெரிய படைகளை இரண்டு பக்கங்களில்
அனுப்பிச் சோழர் படைகளைத் தாக்கச் செய்தான். ஒரு படை அநுராதபுரத்தைத் தாக்கியது;
மற்றொன்று பொல நருவாவைத் தாக்கியது; கடும்போருக்குப் பிறகு பொல நருவா
வீழ்ச்சியுற்றது.அதுராதபுரமும் வீழ்ந்தது. அங்ஙனம், இராசராச சோழனால் ஏற்படுத்தப்பட்ட
சோழ அரசு இலங்கையில் கி.பி. 1076-இல் வீழ்ச்சியுற்றது. விசயபாகு அநுராதபுரத்தில்
முடி சூடிக்கொண்டான்; உடனே தன் முன்னோர் முறையைப் பின்பற்றிப் பெளத்த
சமயத்தைப் போற்றி வளர்க்கலானான்.[7]
பாண்டி மண்டலம் : பாண்டியர் காலமெல்லாம் சோழர்க்குத் துன்பம் கொடுத்துக்கொண்டே
வந்தவர். கி.பி. 1070-ல் பேரரசு நிலைகெட்ட பொழுது பாண்டிய நாட்டில் குழப்பம்
மிகுதிப்பட்டது. முற்பட்ட சோழர் ஏற்படுத்தி இருந்த சட்ட திட்டங்கள் அனைத்தும் அரசியல்
அமைப்பும் பாண்டிய நாட்டில் புறக்கணிக்கப் பட்டன. சேரநாடும் பாண்டிய நாட்டைப்
பின்பற்றியது. இந்நிலையில், குலோத்துங்கன் மேலைச் சாளுக்கிய முதற்போரை
முடித்துக்கொண்டு நாடு திரும்பினான்; தெற்கே இருந்த குழப்ப நிலையை உணர்ந்தான்;
அவன் இலங்கையைப் பற்றிக் கவலை கொள்ளவே இல்லை. என்னை? அது கடலுக்கு
அப்பாற்பட்டதாதலின் என்க. பாண்டிய நாடோ சோழ நாட்டை அடுத்தது. அது தனிப்படுவது
சோழப் பேரரசுக்கே தீமை விளைப்பதாகும். விடுதலை பெற்ற பாண்டியர் பழிக்குப்
பழிவாங்கத் தவறார் என்பதை அவன் அறிந்தவன். ஆதலின், அவன் முதலில் பாண்டிய
நாட்டை அடக்கப் புறப்பட்டான்.
பாண்டிய நாட்டுப் போர் : கடல் அலைபோன்ற குதிரைகளையும் கப்பல்களை ஒத்த
கரிகளையும் தண்ணிரை ஒத்த காலாட் படைகளையும் குலோத்துங்கன் அனுப்பினான்;
அப்படைசென்றது-வடகடல் தென்கடலை உண்ணச் சென்றது போல் இருந்தது; பாண்டியர்
ஐவர் (கலகக்காரர்) சோழர் படைக்கஞ்சிக் காட்டிற்குள் புகுந்துகொண்டனர். சோழர்படை
அக்காட்டை அழித்தது: பாண்டிய மண்டலத்தை வென்றது; நாற்புறமும் வெற்றித்
தூண்களை நட்டது; பாண்டியர் ஐவரைக் கொடிய மலைக்காடுகளிற் புகுந்து ஒளியச்
செய்தது; முத்துக் குளிக்கும் இடங்களையும் முத்தமிழ்ப் பொதியமலையையும் கைப்பற்றியது.
இவ்வளப்பரிய வெற்றிக்கு மகிழ்ந்து குலோத்துங்கன் தன்படை வீரர்க்கும் பாண்டிய
மண்டலத்தில் அங்கங்கு ஊர்களை நல்கிச் சிறப்புச் செய்தான்; கோட்டாற்றில் நிலைப்படை
ஒன்றை நிறுத்தி விட்டான்[8].
குலோத்துங்கன் பாண்டியனை அழித்துச் சேரர் செருக்கை அடக்கி இருமுறை
காந்தளூர்ச்சாலையில் கலமறுத்தான் என்று விக்கிரம சோழன் உலா உரைக்கின்றது.
குலோத்துங்கன் படை பாண்டியரை முறியடித்துச் சோழரை ஒடச் செய்தது; கடற்றுறைப்
பட்டினமான சாலையும் விழிஞமும் கைப்பற்றியது, என்று கலிங்கத்துப் பரணி கூறுகிறது.
எனவே, குலோத்துங்கன் பாண்டி மண்டலத்தையும் சேர மண்டலத்தையும் வென்று
அமைதியை நிறுவினான். அவன் அதனை அமைதியாக ஆளுமாறு சிற்றரசரை எற்படுத்தினான்;
தன் சொந்த நிலைப் படைகளைப் பல இடங்களில் நிறுத்தினான்; எனினும், அதன்
சிற்றரசர் ஆட்சியில் தலையிட்டிலன். அவர்கள் பெரும்பாலும் சுயாட்சி பெற்றே இருந்தனர்
என்னலாம். அவர்கள் தனக்கு அடங்கி இருத்தல் ஒன்றையே கப்பல் கட்டல் என்ற
ஒன்றையே குலோத்துங்கன் எதிர்பார்த்தான். இஃது, இம்மண்டலங்களில் குலோத்துங்கன்
கல்வெட்டுகள் குறைந்திருத்தல் கொண்டும் துணியப்படும்[9].
தென்னாட்டில் குழப்பம் : மேற்சொன்ன நிகழ்ச்சிகளுக்குப் பதினைந்து ஆண்டுகட்கு
அப்பால், தெற்கே மீண்டும் குழப்பம் உண்டானது. அக்குழப்பத்தில் வேள்நாடு (தென்
திருவாங்கூர்) சிறந்து நின்றது. குலோத்துங்கன் அக்குழப்பத்தை அடக்க நரலோக
வீரன் என்னும் தானைத் தலைவனை அனுப்பினான். அவனுக்குக் காலிங்கராயன்
என்னும் வேறு பெயரும் இருந்தது. அவனைப் பற்றிப் பல கல்வெட்டுகளில் குறிப்பும்
காணப்படுகிறது. அப்பெரு வீரன் குழப்பத்தை அடக்கிப் பகைவரை ஒடுக்கித்
தென்னாட்டில் அமைதியை நிறுவினான்[10].
-------
[1]. S.I.I. Vol.6, No. 167
[2]. Ibid. No. 201.
[3]. S.I.I. Vol.3, No. 68, K. Parani, K. 239.
[4]. Ibid. No. 68 and Ep Ind. Vol. 9. pp, 161 and 179.
[5]. Vikrmaditya charita, p.30
[6] Ibid, p.34.
[7]. Mahavamsa, chap. 58
[8]. S.I.I. Vol. 3, p. 147
[9]. A.R.E. 1927, II 18.
[10]. K.A.N. Sastry’s ‘Studies in Chola History p.178-180,
ஈழத்து உறவு : குலோத்துங்கன் சுயாட்சி நடத்திவந்த விசயபாகுவுடன் நட்புப் பெற
விழைந்து தூதுக்குழுவை அனுப்பினான். அதே சமயம் விக்கிரமாதித்தனும் தூதுக் குழு
ஒன்றைத் தக்க பரிசுகளுடன் அனுப்பினான். விசயபாகு இருவரையும் வரவேற்றுச்
சிறப்புச் செய்தான்; முதலில் சாளுக்கிய நாட்டுத் தூதுவரைத் தன் நாட்டுத் தூதருடன்
அனுப்பினான். அவர்கள் சோழ நாட்டிற்குள் நுழைந்ததும், சோழ நாட்டார் ஈழ
நாட்டுத்துாதர் மூக்குகளையும் காதுகளையும் அறுத்து அனுப்பினர். இதனை அறிந்த
விசயபாகு வெகுண்டெழுந்தான் சோழர் தூதுக்குழுவை அழைத்து ‘உம்மரசனை
என்னோடு தனித்துப் போரிட வரச் செய்க, இன்றேல், இரு திறத்துப் படைகளேனும்
போரிட்டுப் பலத்தைக் காணச் செய்க’ என்று கூறி, அவர்கட்குப் பெண்உடை தரித்துச்
சோணாடு செல்ல விடுத்தான்; சேனை வீரரைக் கப்பல்களில் சென்று சோணாட்டைத்
தாக்கும்படி ஏவினான். கப்பல்களில் சேனைத் தலைவர் இருவர் செல்ல இருந்தனர்.
அவ்வேளை, ஈழப்படைகளில் இருந்த வேளைக்காரப் படையினர் (தமிழர்) தாம்
சோணாடு செல்ல முடியாதெனக் கூறிக் கலகம் விளைத்தனர்; சேனைத் தலைவர்
இருவரையும் கொன்றனர்; பொலநருவாவைக் கொள்ளையிட்டனர்; அரசனது
தங்கையையும் அவளுடைய மக்கள் மூவரையும் சிறைப்பிடித்தனர்; அரண்மனையைத்
தீக்கிரை ஆக்கினர்.
விசயபாகு தென்மாகாணம் நோக்கி ஓடினான். தன் செல்வத்தை ஒளித்துவைத்து, தக்க
படையுடன் பொல நருவாவை அடைந்தான், கடும்போர் செய்து பகைவரை ஒடச் செய்தான்;
பிறகு அவர்களில் தலைவராயினாரைப் பிடித்துக் கைகளைக் கட்டி நிற்க வைத்துச்
சுற்றிலும் தீ மூட்டிப் பழிக்குப் பழி வாங்கினான். எனினும், இதனுடன் விசயபாகு
நின்றானில்லை; தனது 45ஆம் ஆட்சி ஆண்டில் தக்க படையுடன் கீழக் கடற்கரையில்
சோழனை எதிர்பார்த்து நின்றிருந்தான். சோழ அரசன் வராததைக் கண்டு சலிப்புற்று
மீண்டான் இந்நிகழ்ச்சி ஏறத்தாழக் கி.பி. 1088-இல் நடந்ததாகும்.[11]
இந்நிகழ்ச்சிகட்குப் பிறகு குலோத்துங்கன் விசயபாகுவுடன் நண்பன் ஆனான், ஈழத்தில்
பாண்டியன் கட்சியைச் சேர்ந்த சிங்கள இளவரசனான வீரப்பெரு மாள் என்பவனுக்குச்
சூரியவல்லியார் என்ற தன் மகளை மணம் செய்து கொடுத்தான்[12].
சீனத்துடன் உறவு : இராசராசன், இராசேந்திரன் இவர்கள் சீனத்துக்குத் தூதுவரை அனுப்பிக்
கடல் வாணிகத்தைப் பெருக்கினாற் போலவே கி.பி. 1077-இல் குலோத்துங்கன் 72 பேர்
கொண்ட தூதுக்குழு ஒன்றைச் சீன நாட்டிற்கு அனுப்பினான். அவர்கள் கண்ணாடிப்
பொருள்கள், கற்பூரம், காண்டாமிருகத்தின் கொம்புகள், தந்தம், வாசனைப் பொருள்கள்,
கிராம்பு, ஏலக்காய் முதலிய பல பண்டங்களைச் சீன அரசர்க்குப் பரிசிற் பொருள்களாகக்
கொண்டு சென்றனர். சீன அரசன் அவர்களை வரவேற்றான்; அப்பொருள்களைப் பெரு
மகிழ்ச்சியோடு பெற்றுக் கொண்டான், அவற்றுக்குப் பதிலாக 81,800 செம்புக் காசுகள்
கொடுத்துப் பெருமைப் படுத்தினான்[13].
கடாரத்துடன் உறவு : குலோத்துங்கன் கடாரத்தை அழித்தான் என்று பரணி பகர்கிறது.
கடல் கடந்த நாடுகளிலிருந்து உயர்ந்த பொருள்கள் பரிசிலாக அனுப்பப்பட்டன என்று
குலோத்துங்கன் கல்வெட்டுகள் கூறுகின்றன. காம்போச நாட்டு அரசன் குலோத்துங்கற்கு
விலை உயர்ந்த கல் ஒன்றைக் காட்சியாகக் காட்டினான் என்று ஒரு கல்வெட்டுக் குறிக்கிறது[14].
கி.பி. 1090-இல் பூரீவிசயன் என்னும் கடாரத்தரசன், நாகப்பட்டினத்தில் கட்டப்பட்டிருந்த
இரண்டு பெளத்த விஹாரங்கட்குப் பள்ளிச் சந்தமாக விட்ட சிற்றுரர்களைக் குறித்துத்
தானக் கட்டளை பிறப்பிக்குமாறு குலோத்துங்கனை வேண்டினான். அப்பள்ளிகள்
இராசராசப் பெரும்பள்ளி, இராசேந்திர சோழப் பெரும்பள்ளி என்ற பெயரைக் கொண்டவை.
இப்பட்டயம் பெறக் கடாரத்திலிருந்து வந்தவர் இராச வித்தியாதர பூரீ சாமந்தன்,
அபிமநோத் துங்க சாமந்தன் என்பவராவர். இப்பட்டயம் பழையாறை (ஆயிரத்தளி)[15]
அரண்மனையில் ‘காலிங்கராயன்’ என்னும் அரியணைtது இருந்து அரசனால் விடுக்கப்பட்டது.
வந்த பரிசுகள் அரண்மனைவாயிலில் நின்ற யானைகள் மீது அழகு செய்தன[16].
சுமத்ராவில் கிடைத்த கல்வெட்டு, ‘திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர்’ என்னும் பெயர்
கொண்ட சோணாட்டு வாணிகக் குழுவினர் இருந்தனர் என்பதை உணர்த்துகிறது.
இக்குழுவின் பெயர் ‘நாற்றிசையும் உள்ள ஆயிரம் ஊர்களிலிருந்து சென்ற நூறு வணிகர்’
என்னும் பொருளைக் கொண்டது[17]. இக்குறிப்புகளால், குலோத்துங்கன் யூனி விசய
நாட்டுடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தான் என்பதும், நன்முறையில் கடல் வாணிகம்
நடந்து வந்தது என்பதும் அறியக் கிடக்கின்றன அல்லவா?
வேங்கி நாடு : குலோத்துங்கன் சோணாட்டைச் சீர்ப்படுத்திக் கொண்டு இருந்தபொழுது
கி.பி. 1072-3-ல் திரிபுரியை ஆண்ட ஹெய்ஹய அரசனான யசகர்ண தேவன் என்பவன்
வேங்கிமீது படையெடுத்து வந்தான். அவன் தன் கல்வெட்டில், ‘வன்மை மிக்க ஆந்திர
அரசனை வென்று திராக்ஷாராமத்தில்[18] உள்ள பீமேச்சுர தேவர்க்குப் பல அணிகலன்களைப்
பரிசாகத் தந்தேன்’ என்று கூறியுள்ளான்[19]; இவன் குறித்த ஆந்திர அரசன் குலோத்துங்கன்
சிற்றப்பனான ஏழாம் விசயாதித்தனே ஆவன். குலோத்துங்கன் ஆகான். யசகர்ணதேவன்
வந்து சென்றனனே தவிர, வேங்கி நாட்டை வென்றதாகவோ, ஆண்டதாகவோ கூறச்
சான்றில்லை.
-------
[11]. Cula Vamsa, (Geiger) Vol.1, pd. 216-218.
[12]. K.A.N. Sastry’s ‘Cholas II.p.25
[13]. K.A.N. Sastry’s “Cholas’, Vol.II. pp. 25,26
[14]. Ep. Ind Vol. 5, p. 105
[15]. ‘ஆகவமல்ல குலகாலபுரம்’ என்ற பெயரும் உண்டு.
[16]. S.I.I. Vol, 3, p. 146
[17] K.A.N. Sastry's cholas', Vol. II, p. 30
[18]. இது ‘தாக்ஷாராமம்’ என்று இருத்தலே பொருத்தமுடையது
[19]. R.D. Banerji's, Haihayas of Tiripuri, p.57.
வேங்கியை ஆண்ட இளவரசர் : வேங்கியை ஆண்ட ஜயசிம்மன் குலோத்துங்கனிடம்
நல்லெண்ணம் கொண்டவனாக இருந்ததில்லை. அவனுக்கும் குலோத்துங்கனுக்கும்
இடையே கீழைக்கங்க அரசனான இராசராசன் நின்று சந்து செய்தான் போலும் அவன்
விசயாதித்தற்காகக் குலோத்துங்கனிடம் போரிட்டான் என்று அவனுடைய கல்வெட்டுகள்
குறிக்கின்றன. விவரம் விளங்கவில்லை. அக்கங்க அரசன் குலோத்துங்கன் மகளான
இராச சுந்தரி என்பவளை மணந்து கொண்டான்.
ஜயசிம்மன் கி.பி. 1076-இல் இறந்தான். உடனே குலோத்துங்கன் தன் மக்களுள்
ஒருவனான இராச ராச மும்முடிச் சோழன் என்பவனை வேங்கி நாட்டை ஆளும்படி
அனுப்பினான். இவன் ஓராண்டு அந்நாட்டை ஆண்டு, விட்டுவிட்டான். கி.பி.1077-ல்
மற்றோர் இளவரசனான வீர சோழன் ஆளத் தொடங்கினான். அவன் ஆறு ஆண்டுகள்
வேங்கியை ஆண்டான். கி.பி.1084 முதல் 1089 வரை மற்றொரு மகனான இராசராச
சோழ கங்கன் என்பவன் வேங்கி நாட்டை ஆண்டான். இவனே குலோத்துங்கனது மூத்த
மைந்தன். கி.பி.1089-இல் மீண்டும் வீர சோழனே வேங்கி நாட்டை ஆண்டுவர
அனுப்பப்பட்டான். அவன் கி.பி. 1092-93 வரை அந்நாட்டை ஆண்டுவந்தான். கி.பி.1093
முதல் 1118 வரை விக்கிரம சோழன் என்ற மற்றோர் இளவரசன் வேங்கி நாட்டை
ஆண்டான். இம்மைந்தனே குலோத்துங்கற்குப் பிறகு சோழப் பேரரசன் ஆனவன்.
முதற் கலிங்கப் போர்: இது குலோத்துங்கனது ஆட்சி ஆண்டு 26-இல் (கி.பி. 1006-இல்)
நடந்தது. இப்போர் வேங்கியை ஆண்ட இளவரசனான விக்கிரம சோழனுக்கும் தென்
கலிங்க நாட்டு அரசனுக்கும் நிகழ்ந்ததாகும். இப்போரில் கொலது (எல்லூர்)வை ஆண்ட
தெலுங்க வீமன் (சிற்றரசன்) என்பவன் கலிங்க அரசற்கு உடந்தையாக இருந்தான்;
ஆதலின், இருவரையும் விக்கிரமசோழன் ஒரே காலத்தில் எதிர்த்துப் போரிட வேண்டியவன்
ஆனான். சோழப் பேரரசற்கு அடங்கிய பராக்கிரம பாண்டியன் வடக்கு நோக்கிச்
சென்று விக்கிரம சோழற்கு உதவி புரிந்தான்[20]. இவ்விருவரும் நிகழ்த்திய போரில்
தென் கலிங்கம் பிடிபட்டது. வீமன் சிறைப்பட்டான். தென் கலிங்கம் என்பது
கோதாவரிக்கும் மகேந்திர மலைக்கும் இடைப்பட்ட நிலப் பகுதியாகும்[21]. இப்பகுதி
வேங்கி நாட்டைச் சேர்ந்திருந்ததேயாகும்[22]. இங்கிருந்த அரசன் சிறைப்பட்டு ஒடுங்கியதால்
தென் கலிங்கம் அமைதியுற்ற நாடானது. கி.பி. 1098-இல் வெளிப்பட்ட குலோத்துங்கனுடைய
கல்வெட்டுகள் இப்பகுதியைச் சேர்ந்த சிம்மாசலத்திலும் திராக்ஷாராமத்திலும் கிடைத்துள்ளன.
இரண்டாம் கலிங்கப் போர் : இஃது ஏறக்குறைய கி.பி. 1111இல் நடந்தது இதைப் பற்றிக்
குலோத்துங்கன் கல்வெட்டுகள் கூறுகின்றன. கலிங்கத்துப் பரணி மிக்க விரிவாக
விளக்கியுள்ளது. முதலில் கல்வெட்டுகள் கூறுவதைக் காண்போம்: சோழர் படை வேங்கி
நாட்டைக் கடந்தது; பகைவன் சோழர் படையைத் தடுக்க யானைப் படையை ஏவினான்.
அந்த யானைகள் அனைத்தும் கொல்லப்பட்டன. சோழர் படை கலிங்க நாட்டில் எரி பரப்பியது,
கலிங்கப் படையில் சிறப்புற்றிருந்த வீரர் அனைவரையும் கொன்றது. அவர் தலைகள்
போர்க் களத்தில் உருண்டன; கழுகுகள் அவற்றைக் கொத்தித்தின்றன. முடிவில் வடகலிங்கம்
பணிந்தது’[23].
கலிங்க அரசன் அனந்தவர்மன் என்பவன். அவன் சோழனை மதியாது திறை கட்டாதிருந்தான்.
அதனால் சோழன் தன் படைத்தலைவனான கருணாகரத் தொண்டைமான் என்பவனைப்
பெரும்படையுடன் அனுப்பினான். அத்தலைவனுடன் சென்ற படை பாலாறு, பொன்முகரி,
பழவாறு. கொல்லியாறு, வட பெண்ணை, வயலாறு, மண்ணாறு, குன்றியாறு, ஆகியவற்றைக்
கடந்து கிருஷ்ணையையும் தாண்டியது; பிறகு கோதாவரி, பம்பையாறு, கோதமை ஆறுகளைக்
கடந்து கலிங்க நாட்டை அடைந்தது; அங்குச் சில நகரங்களில் எரி கொளுவிச் சில ஊர்களைச்
சூறை ஆடியது. படையெடுப்பைக் கேட்ட கலிங்க அரசன் சினந்து, தன் படைகளைத்
திரட்டினான். அப்பொழுது எங்கராயன் என்னும் அமைச்சன், சோழன் படை வலிமையைப்
பல சான்றுகளால் விளக்கிச் சந்து செய்துகொள்ளும்படி அறிவுறுத்தினான். அரசன்
கேட்டானில்லை. இறுதியில் போர் நடந்தது. கலிங்க அரசன் தோற்றோடினான்.
அவனைக் கருணாகரத் தொண்டைமான் தேடிப் பிடிக்க முடியாது, பெரும் பொருளோடு
சோணாடு மீண்டான்.
சயங்கொண்டார் புலவர் முறையில் சில இடங்களில் செய்திகளை மிகுத்துக் கூறி இருப்பினும்,
படையெடுப்பு, வெற்றி என்பவை உண்மைச் செய்திகளே என்பது கல்வெட்டுகளால்
உறுதிப்படுகிறது. கலிங்க அரசனான அனந்தவர்மன் யாவன்? இராசராச கங்கனுக்கும்
குலோத்துங்கன் மகளான இராச சுந்தரிக்கும் பிறந்தவனே ஆவன். எனினும் என்ன?
அரசன் என்னும் ஆணவம் உறவை மதியாதன்றோ? இப்போருக்குப் பரணி கூறும்
காரணம் பொருத்தம் அன்று. வட கலிங்கம் சோழனுக்கு உட்பட்டதன்று. சோழன் வட
கலிங்கத்தைப் பிடித்து ஆண்டதாகவும் சான்றில்லை[24]. ‘வடகலிங்கத்தரசன் நாடு
வேட்கையால் தென் கலிங்கத்தைக் கைப்பற்ற முனைந்திருக்கலாம். இச்செய்தி காஞ்சி
அரண்மனை[25] யிலிருந்து குலோத்துங்கற்கு எட்டியது. அவன் உடனே தொண்டைமானை
வேங்கி இளவரசற்கு உதவியாக அனுப்பினான்’ எனக் கோடலே பொருத்தம் உடையது;
அல்லது, முதற் கலிங்கப் போரும் இந்த இரண்டாம் கலிங்கப் போரும் சாளுக்கிய
விக்கிரமாதித்தன் சூழ்ச்சியால் நடந்தன என்றும் கூறலாம். வேங்கியைச் சோழர்
ஆட்சியிலிருந்து ஒழிப்பதையே நோக்கமாகக் கொண்ட அவன், பலமுறை சிற்றரசர்
பலரை வேங்கியை ஆண்ட இளவரசர்க்கு மாறாகத் தூண்டினனாதல் வேண்டும். இத்
துண்டல் முயற்சி ஏறத்தாழக் கி.பி.1118-ல் பயனளித்த தென்னலாம்.
வேங்கி அரசு: குலோத்துங்கன் தன் இறுதிநெருங்குவதை அறிந்து, கி.பி.1118-இல் விக்கிரம
சோழனை வேங்கியிலிருந்து அழைத்துக்கொண்டான்.உடனேவேங்கிநாட்டிற்குழப்பம்
உண்டானது[26]. இஃது உண்மை என்பதைக் குலோத்துங்கன் 48-ஆம் ஆண்டுக்
கல்வெட்டுகளும் விக்கிரமசோழன் கல்வெட்டுகளுமே உணர்த்துகின்றன. திராக்ஷாராமத்தில்
குலோத்துங்கனுடைய 48-ஆம் ஆண்டுக் கல்வெட்டுகள் வரைதாம் கிடைத்துள்ளன.
வேங்கியில் விக்கிரம சோழன் பட்டம் பெற்ற பிறகு உண்டான கல்வெட்டுகள் இல்லை.
அவை குண்டுரையே வட எல்லையாகக் கொண்டுவிட்டன. இதனால், வேங்கிநாடு
வேறாகிவிட்டதை நன்குணரலாம் அன்றோ? ஆனால், வேங்கியிலும் திராக்ஷாராமம்
முதலிய இடங்களிலும் விக்கிரமாதித்தனுடைய 45 முதல் 48 வரை உள்ள ஆட்சி
ஆண்டுகளில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் பல கிடைத்துள்ளன. இக் கல்வெட்டுகள்
வேங்கி நாட்டில் இருந்த சிற்றரசர் பலருடையன. இவற்றுள் விக்கிரம ஆண்டும்,
விக்கிரமன் பேரரசிற்குத் தாங்கள் பணிந்தவர்கள் என்றும் அச்சிற்றரசர் குறிப்பிட்டுள்ளனர்.
கி.பி.1118-இல் விக்கிரமாதித்தனின் தண்டநாயகனான அனந்தப்பாலையன் என்பவன்
வேங்கியை ஆண்டான் என்று கல்வெட்டொன்று. குறிக்கிறது[27]. கி.பி. 1120-இல்
இவன் மனைவி பீமேசுவரர் கோவிலுக்களித்த தானத்தைக் குறிக்கும் கல்வெட்டில்
விக்கிரம ஆண்டேகுறிக்கப்பட்டுள்ளது[28]. திராக்ஷாராமத்துக் கல்வெட்டுகள் கி.பி.
1132-3 வரை சாளுக்கிய-விக்கிரம ஆண்டுகளைக் குறிக்கின்றன. அனந்தபாலையன்
உறவினன் ஒருவன் கிருஷ்ணைக் கோட்டத்தில் உள்ள ‘கொண்ட பல்லி’யைக் கி.பி.
1727-இல் ஆண்டுவந்தான்[29]. கிருஷ்ணையாற்றுக்குத் தென்பாற்பட்ட நாட்டைக்
‘கொள்ளிப்பாக்கை’யின் அரசன் என்னும் பட்டத்துடன் நம்பிராசன் என்பவன் கி.பி.
1131-இல் ஆண்டுவந்தான்[30]. இதுகாறும் கூறிய சான்றுகளால், குலோத்துங்கன்
பேரரசிற்கு உட்பட்டிருந்த அவனுக்கு உரிமையான வேங்கிநாடு, அவனது ஆட்சி
இறுதியில் கி.பி.1118-இல் விக்கிரமாதித்தனால் கைப்பற்றப்பட்டது விளங்குகிறதன்றோ?
இம்முடிவினால் விக்கிரமாதித்தன் முதலிற் கொண்ட (சோழ நாட்டையும் வேங்கியையும்
வேறு பிரிக்க வேண்டும் என்ற) எண்ணமும் நிறைவேற்றிக் கொண்டான் என்பதும்
தெளிவாகின்றது.
-------------
[20]. Travancore Archealogical Series, Vol. I, p.22
[21]. Cunningham's Ancient Geography'. p.591.
[22]. Ep. Ind. Vol. 6, p.335.
[23]. 44 of 1891.
[24]. K.A.N. Sastry’s Chola’s, Vol. II, pp. 37-38.
[25]. இவ்வரண்மனை பற்றிய குறிப்பு உத்தமசோழன் கல்வெட்டுகளிற் காணலாம்,
S.I.I. Vol.3. p. 269.
[26]. Ep. Ind. Vol. 4, No.33.
[27]. 819 of 1922
[28]. 330 of 1893.
[29]. 258 of 1905
[30]. 266 of 1893.
கங்கபாடி பிரிந்தது : மைசூரில் அஸ்ஸன், கடுர் கோட்டங்களையும் நாகமங்கல
தாலுகாவையும் கொண்ட நிலப் பரப்பை முதலில் ஆண்டவர் ஹொய்சளர் என்னும்
மரபினர். இவர்கள் மேலைச் சாளுக்கிய்ர்களுக்கு அடங்கி ஆண்டு வந்த சிற்றரசர்.
இவருள் ஒருவனான எரியங்கன் என்பவனே குலோத்துங்கற்கும் விக்கிரமாதித்தற்கும்
நடந்த போரிற் பின்னவன் பக்கம் நின்று போரிட்டவன். ஹொய்சளர் இராசராசன் காலம்
முதலே இருந்து வந்தனர்.
அவருள் முதல் அரசன் திருமகாமன் (கி.பி. 1022-1040) என்பவன். அவன் மகன்
விநயாதித்தன். அவன் மகனே எரியங்கன். விநயாதித்தன் கி.பி.1040 முதல் 1100 வரை
ஆண்டான். கி.பி.1100-இல் பிட்டிக விஷ்ணு வர்த்தனன் அரசன் ஆனான். இவன் கி.பி.
1116-இல் சோழரிடமிருந்து தழைக்காட்டை மீட்டான், அதனால் ‘தழைக் காடு[31]
கொண்ட’ என்னும் தொடரைத் தன் பெயர்க்கு முன் பூண்டான். அந்த ஆண்டிலே இவன்
கங்கபாடி முழுவதும் தனதாக்கி ஆண்டான் என்பது இவன் கல்வெட்டால் தெரிகிறது[32].
கங்கபாடி நீண்ட காலமாகச் சோழர் ஆட்சியில் இருந்து வந்த நாடாகும். அது கொங்கு
நாட்டை அடுத்தது; ஆசலால், கொங்கு நாட்டை ஆண்டுவந்த அதியமான் மேற்பார்வையில்
இருந்து வந்தது. அதியமான்கள் சோழர் படைத்தலைவராகவும் சிற்றரசராகவும் இருந்தார்கள்.
விஷ்ணுவர்த்தனன் தானைத் தலைவனான ‘கங்கராசன்’ அதியமானைச் சரண்புக
அழைத்தான். அதியமான் மறுக்கவே, போர் மூண்டது. அதியம்ான், தாமோதரன்,
நரசிம்மவர்மன் முதலிய சோழர் படைத் தலைவர்கள் போரிட்டனர்; இறுதியில் தோற்றனர்.
அதன் விளைவாகக் கங்கபாடி ஹொய்சளர் ஆட்சிக்குச் சென்றுவிட்டது[33].
குலோத்துங்கன் கல்வெட்டுகள் 15 வரையே கங்கபாடியிற் கிடைத்துள்ளன. ஆதலின்,
கி.பி.1115-இல் கங்கபாடி கை மாறியது உண்மையாகும்.
வெளிநாடுகளின் தொடர்பு : குலோத்துங்கன் ஆட்சிக்குட்பட்ட சோழப் பெருநாடு
வெளிநாடுகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தது. கடாரத்துடனும் சீனத்துடனும்
கொண்டிருந்த தொடர்பு முன்னரே விளக்கப்பட்டது. கங்கை கொண்ட சோழபுரத்துக்
கோவிலில் உள்ள கல்வெட்டு ஒன்றில் வடநாடுகளுடன் சோழப் பெருநாடு கொண்டிருந்த
தொடர்பு குறிக்கப்பட்டுள்ளது. கன்னோசி அரசனான மதனபாலன் அல்லது அவன் மகனான
கோவிந்த சந்திரனது மெய்ப்புகழ் அக்கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் முதலில்
குலோத்துங்கனது 41-ஆம் ஆட்சி ஆண்டு குறிக்கப்பட்டுள்ளது; பிறகு கன்னோசி அரசன்
புகழ் பொறிக்கப்பட்டுள்ளது; பின்னர்க் கல்வெட்டின் காரணம் வரையப்பட்டுள்ளது.
கன்னோசிக்கும் சோழ நாட்டிற்கும் என்ன தொடர்பு இருந்தது என்பது தெரியவில்லை.
கன்னோசி நாட்டார் கதிரவன் வணக்கத்திற் கைதேர்ந்தவர். சோழ நாட்டில் குலோத்துங்கன்
ஆட்சியில் அவ்வணக்கம் சிறப்பிடம் பெற்றிருந்தது[34]. சோழ நாட்டு வாகீசுவரரrவிதர்
என்பவர் ஒரிஸ்ஸா நாட்டுச் சாக்கியரசுழிதர் மாணவராவர் என்பதைக் கோவிந்த சந்திரன்
செப்புப்பட்டயம் கூறுகிறது. கோவிந்த சந்திரன் (கன்னோசி அரசன்) விட்ட கல்வெட்டின்
காலம் கி.பி.1129 ஆகும்[35]. காம்போச நாட்டு அரசன் குலோத்துங்கனுக்கு விலை உயர்ந்த
கல் ஒன்றைக் காட்டினான்; பிறகு அதனை அவனுக்குப் பரிசாக அளித்தான். குலோத்துங்கன்
அதனைச் சிதம்பரம் உட்கோவிற்கு எதிரேயுள்ள சுவரிற் பதித்தான் என்று சிதம்பரம் கோவில்
கல்வெட்டு ஒன்று குறிக்கிறது. அதன் காலம் கி.பி.1114[36].
சோழப் பேரரசு : குலோத்துங்கன் ஆட்சியில் 45 ஆண்டுகள் வரை (கி.பி.1115 வரை) சோழப்
பேரரசு முன்னோர் வைத்த அளவிலேயே இருந்தது. தெற்கே ஈழ மண்டலம் ஒன்றே
ஆட்சியிலிருந்து பிரிந்துவிட்டது. கி.பி.1116-இல் கங்கபாடி பிரிந்தது. கி.பி.1118-இல்
வேங்கி நாட்டின் பெரும் பகுதியும் சாளுக்கியர் ஆட்சிக்கு மாறிவிட்டது. குலோத்துங்கன்
இறக்குந் தறுவாயில் கடப்பை, கர்நூல் கோட்டங்கனே வட எல்லையாக இருந்தன
எனலாம். கடப்பைக் கோட்டத்தில் உள்ள நந்தலூர் குலோத்துங்க சோழச் சதுர்வேதி
மங்கலம்’ எனப் பெயர் பெற்றது[37].
தலைநகரங்கள் : (1) குலோத்துங்கனுடைய சிறப் புடைக் கோ நகர் கங்கை கொண்ட
சோழபுரமே ஆகும். (2) அடுத்தது காஞ்சிபுரமாகும். அதில் இருந்த அபிஷேக மண்டபத்தில்
இருந்தே அரசன் சிறப்புடைய பல பட்டயங்களை வெளியிட்டுள்ளான்[38]. (3) கங்கை
கொண்ட சோழன் வளர்த்த சிறப்புடைய அரண்மனை யான ஆயிரத்தளி (பழையாறை)யில்
இருந்த அரண்மனை ஒன்று[39] (4) திருமழபாடி அரசற்கு உகந்த சிறந்த நகரமாக
இருந்தது[40].
----------
[31].. இஃது இராசராசபுரம் என்று சோழர் ஆட்சியில் பெயரிடப்பட்டது.
[32]. Rice’s ‘Mysore and Coorg from Ins.’ p.93
[33]. Ep. Carnataka, Vol. II, No.240.
[34]. A.R.E. 1927, Vol.II, 19-21.
[35]. Ep. Ind VI. II, No.3.
[36]. 29 of 1908; A.R.E. 1908, Vol.II, 58-60.
[37]. 600 of 1907
[38]. S.I.I. Vol.3, No.73; M.E.R. 1917, pp. 42-44
[39]. A.S of S.I. Vol. 4, 224
[40]. 231 of 1916
சிற்றரசர் : குலோத்துங்கன் ஆட்சியில் வெளிப்பட்ட கல்வெட்டுகளில் சிற்றரசர் பலர்
குறிக்கப்பட்டுள்ளனர். (1) தென் ஆர்க்காடு கோட்டத்தின் வடமேற்கு மலைப் பகுதியைச்
சேதிராயர் என்னும் பெயர் கொண்ட சிற்றரசர் ஆண்டு வந்தனர். அவர் தலைநகர் கிளியூர்
என்பது. (2) பெரிய உடையான் இராசராசன், சந்திரன் மலையனான இராசேந்திர சோழன்
என்பவர் திருமுனைப்பாடிநாட்டில் பேரரசர். அவருக்கு அடங்கிய தலைவர் சிலர் இருந்தனர்.
அவர்கள் மலையகுலராசன் முதலியோர். (3) வட ஆர்க்காட்டில் மேற்குப் பகுதியும்
மைசூரின் கிழக்குப் பகுதியும் சேர்ந்த நாடு முள்வாய் நாடு’ எனப்பட்டது. அதனைக் கங்க
நுளம்பன் ஒருவன் ஆண்டு வந்தான்[41]. (4) வேங்கி நாட்டில் வெலனாண்டித் தலைவனான
‘கொங்கன் வடபகுதிச் சிற்றரசருட் சிறந்தவன். அவன் மரபினர் நீண்டகாலம் தம்
நாட்டை அமைதியாக ஆண்டு வந்தனர்[42]. குலோத்துங்கன் இக்கொங்கன் மகனைத்
தன் மைந்தன் போலக் கருதிச் சிறப்புச் செய்தான் என்று கல்வெட்டுக் கூறுகிறது. (5)
கடப்பையை ஆண்ட சிற்றரசன் பொத்தப்பி - காம சோட மகாராசன் என்பவன்.
அவனுடைய சேனைத் தலைவர்கள் இராமண்ணன், பெக்கட பீமய்யன் என்பவர்[43].
(6) மற்றொரு தெலுங்கச் சிற்றரசன் பல்லவ மரபினன் ஆவன். அவன் தன்னை மகா
மண்டலேசுவரன் என்றும் “காஞ்சிபுரேசுவரன் என்றும் கூறியுள்ளான்[44].
அமைச்சரும் தானைத் தலைவரும் : இவர் பலராவர். இவருட்சிறந்தவர் சிலரே. இவருள்
‘ஞானமூர்த்தி பண்டிதன் ஆன மதுராந்தகப் பிரமாதிராசன்’ என்பவன் ஒருவன். இவன்
நாலூரைச் சேர்ந்தவன்; வத்ச கோத்திரத்தான். இவன் சோழன் தானைத் தலைவருள்
ஒருவன்[45]. ‘பாரத்வாசன் மன்ற நாராயணன்’ என்பவன் ஒருவன். இவனுக்கு வீர
சந்தோஷ பிரம சக்கரவர்த்தி என்ற பெயரும் இருந்தது. இவன் திருப்பத்துரை ஆண்ட
சிற்றரசன் போலும் இவன் குலோத்துங்கன் அமைச்சருள் ஒருவன்[46]. கருணாகரத்
தொண்டைமான் புகழ் பெற்ற சேனைத் தலைவனும் அமைச்சனும் ஆவன். இவன்
பல்லவர் குலத் தோன்றல்; ‘வண்டையர் அரசன்-அரசர்கள் நாதன் - மந்திரி - உலகு
புகழ் கருணாகரன்’ என்று சயங்கொண்டாரால் கலிங்கத்துப் பரணியிற் புகழப்
பெற்றவன். இவன் விக்கிரம சோழனது ஆட்சியிலும் இருந்தான் என்பதை விக்கிரம
சோழன் உலாகுறித்துள்ளது. இவனது ஊர் வண்டை என்பது. அது,சோழமண்டலத்தில்
குலோத்துங்க சோழ வளநாட்டைச் சார்ந்த திருநறையூர் நாட்டில் உள்ள வண்டாழஞ்சேரி
என்பதைக் கல்வெட்டு ஒன்று உணர்த்துகிறது[47]. அஃது இப்பொழுது ‘வண்டுவாஞ்சேர’
என்னும் பெயருடன் இருக்கிறது. இத்தொண்டைமான் மனைவி பெயர் ‘அழகிய
மணவாளனி மண்டையாழ்வார்’ என்பது. அவள் சில கோவில்கட்கு நிபந்தங்கள்
விடுத்துள்ளாள். கருணாகரத் தொண்டை மான் தமையன் ‘சேனாபதி-பல்லவராசர்’
என்பவன். அவன் கொடி, பழைய பல்லவர் கொடியாகிய நந்திக் கொடியாகும்[48].
அவனும் கலிங்கப் போரிற் கலந்து கொண்டவன் என்பதைப் பரணி பகர்கிறது.
கருணாகரன் திருவாரூர்ச் சிவபிரானிடம் நீங்காத பேரன்பு உடையவன்; அக்கோவிலில்
பல திருப்பணிகள் செய்தவன்; அக்கோவிற் பெருமான் திருவடிகளிற் கலந்தவன்,
தியாகேசர் பெயர்களுள் கருணாகரத் தொண்டைமான் என்பதும் ஒன்றாகும். அப்பெயர்
இவனாற்றான் உண்டானது என்று திருவாரூர் உலா குறிக்கின்றது. இக்குறிப்பால்
இவன் சிறந்த சிவபக்தன் என்பது விளக்கமாகின்றது.
அரையன் மதுராந்தகன் ஆன குலோத்துங்க சோழ கேரளராசன் என்பவன் ஒருவன். இவன்
சிறந்த சேனைத் தலைவன்; சோழ மண்டலத்து மண்ணி நாட்டில் உள்ள முழையூருக்குத்
தலைவன்: ‘குலோத்துங்க சோழக் கேரள ராசன்’ என்ற பட்டம் பெற்றவன். இவன் சேரநாட்டுப்
போரில் சேனையை நடத்திச் சென்று வெற்றி பெற்றதால் இப்பெயர் பெற்றவன். இவன்,
குலோத்துங்கன் கோட்டாற்றில் நிறுவிய நிலைப்படைக்குத் தலைவனாக இருந்தவன்.
இத்தலைவன் கோட்டாற்றில் இராசேந்திர சோழேச்சரம்” என்ற கோவிலைக் கட்டினான்[49].
அக்கோவிற்குக் குலோத்துங்கன் நிலதானம் செய்துள் ளான். இத் தலைவனும் சிறந்த
சிவபக்தன் என்பது தெரிகிறது.
மணவிற் கூத்தனான காலிங்கராயன் என்பவன் பெருஞ் சிறப்புற்ற சேனைத் தலைவன்
ஆவன். இவன் தொண்டை மண்டலத்து இருபத்து நான்கு கோட்டங்களுள் ஒன்றான
‘மணவில்’ என்ற ஊரின் தலைவன். இவன் குலோத்துங்கன் படைத்தலைவனாக அமர்ந்து,
பாண்டி நாடு, வேணாடு, மலைநாடு முதலிய நாடுகளோடு போர் நடத்திப் புகழ் பெற்றவன்[50].
இவனால் சோழனுக்கு நிலைத்த புகழ் உண்டானது. இவனது திறமையைக் கண்டு
பாராட்டிய குலோத்துங்கன் இவற்குக் ‘காலிங்க ராயன்’ என்னும் பட்டம் அளித்துச்
சிறப்புச் செய்தான். இவன் விக்கிரம சோழன் ஆட்சியிலும் உயர்நிலையில் இருந்தான்[51].
--------------
[41]. 568 of 1906
[42]. A.R.E. 1917, Vol. II, 27
[43]. 262, 263 of 1905
[44]. 405 of 1893
[45]. 119 of 1912
[46]. 519 of 1022; A.R.E. 1923, II. 33,
[47]. S.I.I. Vol.4, No.862
[48]. 46 of 1914.
[49] S.I.I. 3, Vol. No.73
[50] S.I.I. Vol. 4. No.225
[51]. V.Ula-K. 78,79.
இவன் சிறந்த சிவபக்தன். இவன் சிதம்பரம் கூத்தப் பிரானிடம் பேரன்பு பூண்டவன்; அங்குப்
பல திருப்பணிகள் செய்தான், தில்லை அம்பலத்தைப் பொன் வேய்ந்தான்; நூற்றுக்கால்
மண்டபம், பெரிய திருச்சுற்று மாளிகை, தேவாரம் ஓதுவதற்குரிய மண்டபம், சிவகாம
கோட்டம் முதலியன கட்டுவித்தான்; ‘தியாகவல்லி’ முதலிய சிற்றுார்களை இச் சிதம்பரம்
கோவிலுக்குத் தேவதானமாக அளித்தான்; மூவர் தேவாரப் பதிகங் தளைச் செப்பேடுகளில்
எழுதுவித்துத் தில்லையம் பதியிற் சேமித்து வைத்தான்[52]. இவ்வீரன் திருவதிகைக்
கோவிலில் காமகோட்டம் எடுப்பித்துப் பொன் வேய்ந்தான்; அடரங்கு அமைத்தான்;
வேள்விச் சாலை ஒன்றை அமைத்தான்; தேவதானமாக நிலங்களை விட்டான். இங்ஙனம்
இப் பெரியோன் செய்த திருப்பணிகள் பல ஆகும். இவற்றை விளக்கக்கூடிய வெண்பாக்கள்
சிதம்பரம் கோவிலிலும் திருவதிகைக் கோவிலிலும் வரையப்பட்டுள்ளன[53].
அரசன் விருதுப் பெயர்கள் : இராசகேசரி முதல் குலோத்துங்க சோழதேவன், திரிபுவன
சக்கரவர்த்தி, இராசேந்திரன், விஷ்ணுவர்த்தனன், சர்வலோகாச்ரயன், பராந்தகன்,
பெருமான் அடிகள், விக்கிரம சோழன், குலசேகர பாண்டிய குலாந்தகன், அபயன்,
சயதரன் முதலிய பட்டங்களைக் கொண்டிருந்தான். திருநீற்றுச் சோழன் என்ற பெயரும்
இவனுக்குண்டு. இப்பெயரால் ஒரு சிற்றுார் இருந்தது. ’சுங்கம் தவிர்த்த சோழன் என்றும்
குலோத்துங்கன் பெயர் பெற்றான். ‘உலகுய்ய வந்தான், விருதராச பயங்கரன்’ என்பனவும்
குலோத்துங்கன் சிறப்புப் பெயர்களே என்பது பரணியால் தெரிகிறது.
நாட்டுப் பிரிவுகள் : குலோத்துங்கன் ஆட்சியில் இருந்த சோழப் பெருநாடு பல
மண்டலங்களாகப் பிரிக்கப் பட்டிருந்தது. அவை (1) சோழ மண்டலம் (2) சயங் கொண்ட
சோழ மண்டலம் (3) இராசராசப் பாண்டிமண்டலம் (4) மும்முடிச் சோழ மண்டலம்
(5) வேங்கை மண்டலம் (6) மலைமண்டலம் (7) அதிராசராச மண்டலம் என்பன.
இவற்றுள் சோழ மண்டலம் என்பது தஞ்சாவூர் திருச்சிராப்பள்ளிக் கோட்டங்களும்
தென் ஆர்க்காடு கோட்டத்தின் ஒரு பகுதியும் தன்னகத்தே கொண்டதாகும்; சயங்கொண்ட
சோழமண்டலம் - தென் ஆர்க்காடு கோட்டத்தின் பெரும் பகுதியும் செங்கற்பட்டு,
வட ஆர்க்காடு, சித்துர் ஆகிய கோட்டங்களையும் தன்னகத்துக் கொண்டதாகும்.
இராசராசப் பாண்டி மண்டலம் என்பது மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி
ஆகிய கோட்டங்களைப் பெற்ற நிலப்பரப்பாகும். மும்முடிச் சோழமண்டலம் என்பது
ஈழ நாட்டின் வடபகுதிகளாகும். வேங்கை மண்டலம் என்பது கீழைச் சாளுக்கிய
நாடாகும். மலைமண்டலம் என்பது திருவாங்கூர், கொச்சி, சேலம் கோட்டத்தின் ஒரு
பகுதி, மலையாளக் கோட்டம் ஆகியவை அடங்கிய நிலப்பரப்பாகும். அதிராசராச
மண்டலம் என்பது கோயமுத்துார்க் கோட்டத்தையும் சேலம் கோட்டத்தின் பெரு
பகுதியையும் கொண்ட கொங்குநாடு ஆகும்.
இவன் காலத்தும் மண்டலம் பல வளநாடுகளாகவும், வளநாடு பல நாடுகளாகவும்
பிரிக்கப்பட்டன. குலோத் துங்கன் தன் ஆட்சிக் காலத்தில் இவ் வளநாடுகட்குரிய
பெயர்களை நீக்கித் தன் பெயர்களை அவற்றுக்கு இட்டனன்; ‘rத்திரிய சிகாமணி
வளநாடு’ என்பதைக் ‘கு.ோத்துங்க சோழ வளநாடு’ என மாற்றினான்; இராசேந்திர
சிங்கவள நாட்டை இரண்டாகப் பிரித்தான்; மேற்குப் பகுதிக்கு உலகுய்யவந்த
சோழவளநாடு’ என்றும் கிழக்குப் பகுதிக்கு விருதராச பயங்கர வளநாடு என்றும்
பெயரிட டான். இவ் வளநாடுகள் பெரும்பாலும் இரண்டு ஆறுகளையே எல்லையாகக்
கொண்டிருந்தன என்பது கல்வெட்டுகளால் நன்கறியலாம். சயங்கொண்ட சோழ
மண்டலமாகிய தொண்டை நாடு மட்டும் பல்லவர் காலத்தில் இருந்தாற் போலவே
24 கோட்டங்களைப் பெற்றே இருந்து வந்தது [54]. அரசியல் குலோத்துங்கன் சிறந்த
அரசியல் நிபுணன், குடிகள் உள்ளத்தைத் தன்பால் ஈர்த்தலே தன் கடமை
என்பதை நன்குணர்ந்தவன்; ஆதலின் முதலில் ஒவ்வொருவரும்
அரசர்க்கு ஆண்டுதோறும் செலுத்திவந்த சங்கம் நீக்கினான். இச்சுங்கம் ஏற்றுமதிப்
பொருள்கட்கு இடப்படும் தீர்வையாகும். இச் செயலால் மக்கள் இவனைச் ‘சுங்கம்
தவிர்த்த சோழன்’ எனப் பாராட்டினர்; ‘தவிராத சுங்கம் தவிர்த்தோன்’ எனப் பரணி
பாடிய சயங்கொண்டார் இவனை வாயாரப் புகழ்ந்தனர். இச்சுங்கம் தவிர்த்தமை
சோழநாட்டளவே இருந்தது போலும்! கி.பி.194-இல் வெளிப்பட்ட கல்வெட்டு ஒன்று,
‘சோழ நாட்டில் சுங்கம் வசூலிப்பதில்லை’ என்பதைக் சுட்டுகிறது[55]. தஞ்சாவூரைச்
சேர்ந்த கருந்திட்டைக் குடி ‘சுங்கம் தவிர்த்த சோழநல்லூர்’ எனப் பெயர் பெற்றது[56]
குலோத்துங்கன் தன் 17-ஆம் ஆட்சி ஆண்டிலும் 40-ஆம் ஆட்சி ஆண்டிலும் நிலத்தை
அளக்குமாறு கட்டளையிட்டான் அளந்து முடிந்த பிறகு குடிகளிடம் ஆறில் ஒரு கடமை
வாங்கினான். குலோத்துங்கன் ஆட்சியில் வரி விதிக்கப்படாமல் ஒதுக்கப்பட்ட நிலங்களும்
உண்டு. இவையே இவனது ஆட்சியின் சிறந்த செயல்கள். ஏனையவை ‘சோழர் அரசியல்’
என்னும் பிற்பகுதியில் விளக்கம் பெறும் ஆண்டுக் காண்க.
அரசன் : குலோத்துங்கன் சிறந்த கல்விமான். இவன் வேங்கி நாட்டிற் பிறந்தவன்;
நன்னைய பட்டனைக் கொண்டு தெலுங்கில் பாரதம் பாடச் செய்த இராசராச நரேந்திரன்
செல்வமகன் ஆதலின் இவன் தெலுங்கு மொழியில் வல்லவனாக இருந்தான்;
வடமொழி அறிவும் பெற்றிருந்தான் என்பது கூறப்படுகிறது. தமிழில் சிறந்த
அறிவுடையவன் என்று பரணி ஆசிரியர் குறித்துள்ளார். இவன் கலையினொடும்
கவிவாணர் கவியி னொடும் இசையினொடும், பொழுது போக்கியவன்[57]. கவிவாணர்
என்றமையால், இவனது அவைக்களத்தில் இருந்த சயங்கொண்டார் தவிர வேறு
புலவர் பலரும் இவனை அடிக்கடி சென்று கண்டனர் போலும் இவன் புலவர் பலரை
ஆதரித்தான் போலும் இவன் சிறந்த வீரன்! கலக்க முற்றுக் குழம்பிய நிலையில் இருந்த
பெருநாட்டைத் தான் பட்டம் ஏற்றவுடன் அமைதிக்குக் கொணர்ந்த அரசியல் நிபுணன்,
சுங்கம் தவிர்த்துக் குடிகளின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவன், கடாரம், சீனம்,
கன்னோசி முதலிய வெளி நாடுகளு டன் அரசியல் உறவுகொண்டு, வாணிகத்தைப்
பெருக்கிய அறிஞன் இழந்த ஈழநாட்டை மீட்கும் முயற்சியில் உயிர்களைப் பலியிடாத
உத்தமன். சுருங்கக் கூறினால், இராசராசன், இராசேந்திரன் போன்ற பேரரசருள்
இவனும் ஒருவன் ஆவன் என்னல் மிகையாகாது.
சமயநிலை : இப்பேரரசன் சிறந்த சிவபக்தன். சோழர் வழிவழியாகவே சிவபக்தராவர்.
இவன் தில்லைப் பெருமானைப் பேரன்பு பொங்க வழிபட்ட துரயோன்; ஆயின், பிற
சமயங்களையும் மதித்துவந்த பெரியோன். இவன் கல்வெட்டுகள் எல்லாச் சமயத்தார்
கோவில்களிலும் இருக்கின்றன. மன்னார்குடியில் உள்ள பெருமாள் கோவில் இவன்
பெயரால் எடுப்பித்ததே ஆகும். அதன் பழைய பெயர் ‘குலோத்துங்க சோழ விண்ணகரம்’
என்பது. அஃதன்றி இப்பெரியோன் காலத்தில் இருந்த சிற்றரசர் பலர் வைணவக்
கோவில்கள் பல எடுத்துள்ளனர், நிபந்தங்கள் விடுத்துளர். குலோத்துங்கன் கி.பி.
1090-இல் நாகப்பட்டினத்தில் இருந்த இராசராசப் பெரும் பள்ளிக்கு (புத்த விஹாரத்திற்கு)
நிலங்களைத் தானம் செய்துள்ளான். அதனைக் குறிக்கும் செப்பேடுகள் ஹாலந்து
நாட்டு ‘லீடன்’ நகரப் பொருட்காட்சி சாலையில் உள்ளன. அவையே லீடன்
செப்பேடுகள்’ எனப்படும். இவன் காலத்துச் சிற்றரசர் சிலரும் தனிப்பட்டார் சிலரும்
சமணப் பள்ளிகட்கு நிபந்தங்கள் விடுத்துள்ளனர். எனவே குலோத்துங்கன் ஆட்சியில்
எல்லாச் சமயங்களும் தத்தமக்குரிய சிறப்பைப் பெற்று வந்தன என்பது தெரியலாம்.
ஆயினும், அரசன் தன்னளவில் சிறந்த சிவபக்தனாகவே இருந்து வந்தான். தன்னைத்
திருநீற்றுச் சோழன் என்று இவன் அழைத்துக் கொண்டமையே இவனது சிவநெறிப்
பற்றை விளக்கப் போதியதன்றோ?
அரச குடும்பம்
மனைவியர் : குலோத்துங்க செப்புப் பட்டயங்கள், இவன் இராசேந்திரதேவன் மகளான
மதுராந்தகியை மணந்தான் எனக் கூறுகின்றன. இவளுக்கு மக்கள் எழுவர் பிறந்தனர்.
இவர்கள் கி.பி.1017 முதல் வேங்கி இளவரசர் ஆயினர் என்பதைக் காணின்,
குலோத்துங்கன் கி.பி.1070இல் பட்டம் பெற்றதை எண்ணின், குலோத்துங்கன்
ஏறத்தாழக் கி.பி.1060-இல் மதுராந்தகியை மணந்தான் என்னலாம். மதுராந்தகியே
கோப்பெருந்தேவியாக இருந்தாள். அவள் புவன முழுதுடையாள், அவனிமுழுதுடையாள்
எனப்பட்டாள். அவள் தீனசிந்தாமணி என்னும் பெயரையும் உடையவள்.[58] அவள்
குலோத்துங்கனது 30ஆம் ஆட்சி ஆண்டிற்கு முன்பு இறந்தனள். அதனால், தியாகவல்லி
என்பவள் பட்டத்தரசி ஆனாள். மற்றொரு மனைவி ஏழிசை வல்லபி. இவள் ‘ஏழ்
உலகுடையாள்’ பற்றி ‘ஏழிசை வல்லபி’ எனப்பட்டாள் போலும்! பிற அரச மாதேவியருள்
திரைலோக்கிய மாதேவி ஒருத்தியாவாள். இவள் தன் தாயான உமைநங்கையின்
நலம் கருதி ஆர்ப்பாக்கம் கோவிலில் கி.பி.1072-இல் விளக்கு ஒன்று எரிய ஏற்பாடு
செய்தாள்.[59] சோழன்-சோறுடையான் ஆன காடவன் மாதேவி என்பவள் ஒரு
மனைவி. இவள் பல்லவர் குலப்பாவை.[60] திரிபுவன மாதேவி என்ற கம்பமாதேவி
ஒரு மனைவி. இவள் விஷ்ணுபக்தி உடையவள்[61]. ஆதித்தன் ஆண்ட குட்டியார்’
என்ற சோழகுல வல்லியார் ஒரு மனைவி[62]. இதுகாறும் கூறியவற்றால், இவனுக்கு
(1) மதுராந்தகி (2) தியாகவல்லி (3) ஏழிசைவல்லபி (4) திரைலோக்கியமாதேவி
(5) காடவன் மாதேவி (6) கம்ப மாதேவி (7) சோழகுலவல்லி என மனைவியர் எழுவர்
இருந்தமை அறியக் கிடக்கிறது.
---------
[52]. S.I.I. Vol. 4, 225.
[53]. 369 of 1921; M.E.R. 1921; Vide ‘Sentamil’ Vol.23
[54]. S.I.I. Vol. II, No.4
[55]. 288 of 1907
[56]. 374 of 1908
[57]. க பரணி, 263
[58]. S.I.I. Vol.3. No.72
[59]. 138 of 1923
[60]. 39 of 1921
[61]. 45 of 1921
[62]. 39,45 of 1921
உடன் பிறந்தார் : இவனுக்குக் குந்தவ்வை, மதுராந்தகி என்ற உடன் பிறந்த
பெண்மணிகள்
இருவர் இருந்தனர் என்பது சிதம்பரம் கல்வெட்டுகளால் தெரிகிறது.[63]
மக்கள் : குலோத்துங்கற்கும் மதுராந்தகிக்கும் பிறந்த ஆண்மக்கள் எழுவர்,
பெண்மக்கள் இருவர். ஆடவருள் இராசராசன், வீர சோழன், சோழகங்கன், விக்கிரம சோழன் ஆகியவரே
கல்வெட்டுகளில் இடம் பெற்றுள் ளனர். இவருள் மூத்தவன் சோழகங்கன்; அவற்கு
இளையவன் இராசராசன், அவற்கு இளையவன் வீரசோழன்; நான்காம் மகன் விக்கிரம
சோழன்[64]. இவருள் குலோத்துங்கன் உள்ளம் கவர்ந்த மகன் விக்கிரம சோழனே ஆவன்.
இவனே தந்தைக்குப் பின் அரசு கட்டில் ஏறியவன். குலோத்துங்கன் வீரசோழனையும் மிக்க
அன்புடன் நேசித்து வந்தான்; அவனை இருமுறை வேங்கியை ஆளுமாறு அனுப்பினான்[65].
குலோத்துங்கன் பெண்மக்களில் மூவர் பெயர்களே கல்வெட்டுகளில் அறியக் கிடக்கின்றன.
அவை இராசசுந்தரி, சூரியவல்லி, அம்மங்கை என்பன. இப் பெண்மணிகளுள் இராசசுந்தரி
கலிங்க அரசனான இராசராசனை மணந்தவள். சூரியவல்லி இலங்கை இளவரசன் ஒருவனை
மணந்தவள். பிள்ளையார் அம்மங்கை ஆழ்வார் என்பவளைப் பற்றிய குறிப்புத் தெரியவில்லை;
பெயர் மட்டுமே தெரிகிறது[66].
இராசகேசரி முதற் குலோத்துங்கன் கி.பி. 1022 வரை சோழப் பேரரசை (52 ஆண்டுகள்)
அரசாண்டான் என்பது அறிந்து இன்புறத்தக்கது[67]. இவனுக்குப்பின் விக்கிரமசோழன்
சோழப் பேரரசன் ஆனான். இக்குலோத்துங்கன் கல்வெட்டுகள், திருமன்னி வளர’,
‘திருமன்னி விளங்க’, ’பூமேல் அரிவையும்', ‘பூமருவிய திருமடந்தையும், புகழ் மாதுவிளங்க',
‘புகழ் சூழ்ந்த புணரி’, ‘பூமேவி வளர முதலிய தொடக்கங்களை உடையன.
--------------
[63]. 117,119 of 1888
[64]. Ep.Ind.Vol. 6.p.335; S.S.I.I. Vol. 3.p. 179, K.A.N. Sastry's ‘Cholas’, Vol 2, p.52.
[65]. Ep. Ind. 5, No.10
[66]. S.I.I. Vol.4, No.226
[67]. K.A.N Sastry’s ‘Cholas’.
3. 2. விக்கிரம சோழன் (கி.பி. 1122 - 1135)
முன்னுரை: விக்கிரம சோழன் கி.பி. 1118-இல் முடி சூடிக்கொண்டு கி.பி.1122 வரை தன்
தந்தையுடன் இருந்து அரசு செலுத்தினான்.இவன் ஆணித்திங்கள் உத்திராடத்திற் பிறந்தவன்.
இவன் தன் தந்தையின் இறுதிக் காலத்தில் இருந்த சோழப் பெருநாட்டிற்கு உரியவன்
ஆயினான். இவனது ஆட்சியின் பெரும் பகுதி போரின்றி அமைதியே நிலவியிருந்தது
என்னலாம். இழந்த கங்கபாடியிலும் வேங்கியிலும் இவனுடைய கல்வெட்டுகள் இருப்பதை
நோக்க, அவ்விரண்டு நாடுகளிற் பெரும்பகுதி இவன் காலத்திற் சோழப் பெருநாட்டில்
மீண்டும் சேர்க்கப் பட்டது என்பது தெரிகிறது.
கல்வெட்டுகள் : இருவகைத் தொடக்கம் கொண்ட மெய்க்கீர்த்திகள் இவனுக்குண்டு. ஒன்று
“பூமாது” அல்லது “பூமகள் புணர” என்னும் தொடக்கத்தை உடையது; மற்றது ‘பூமாது
மிடைந்து’ என்று தொடங்குவது. இத்தொடக்கம் உடைய கல்வெட்டுகள் விக்கிரம
சோழன் செய்த சிதம்பரம் கோவில் திருப்பணிகளை விளக்குகின்றன. முன்னவை
இவனுடைய இளவரசுப் பருவத்தில் செய்த தென்கலிங்கப் போரைக் குறிக்கின்றன.
இவை இரண்டும் வேறு போர்களையோ பிற நிகழ்ச்சிகளையோ கூறவில்லை.
இலக்கியம் : ‘விக்கிரம சோழன் உலா’ என்பது இவனது அவைப் புலவராகிய
ஒட்டக்கூத்தர் பாடியது. அவரே இவனது தென்கலிங்கப் போரைச் சிறப்பித்துப்
பரணி ஒன்று பாடியதாக இராசராசன் உலாவும் மூன்றாம் குலோத்துங்க சோழன்
உலாவும் தக்கயாகப் பரணியில் உள்ள தாழிசையும்[1] குறிக்கின்றன. இப்பரணி
இப்பொழுது கிடைத்திலது. ஆதலின் கல்வெட்டு களையும் உலாவையும் கொண்டே
இவன் வரலாறு துணியப்படும்.
வேங்கி நாடு : விக்கிரம சோழன் வேங்கி நாட்டை விட்டுத் தந்தையிடம் சென்ற கி.பி.
1178 முதல் அந்நாடு ஆறாம் விக்கிரமாதித்தன் பேரரசில் கலந்துவிட்டது. சோழர்க்கு
அடங்கி வேங்கி நாட்டை ஆண்ட வெலனாண்டு அரசர்கள் விதியின்றிச் சாளுக்கியர்
ஆட்சியை ஒப்புக்கொண்டு சிற்றரசராக இருந்தனர். ஆனால் கி.பி. 1126-இல் பேரரசனான
விக்கிரமாதித்தன் இறந்தான். உடனே வேங்கியின் தென்பகுதி விக்கிரம சோழன்
பேரரசிற் கலந்து விட்டது. முன்னர் விக்கிர மாதித்தன் ஆட்சியை ஒப்புக்கொண்ட
குண்டுர், கெர்ள்ளிப்பாக்கை முதலிய இடங்களில் இருந்த சிற்றரசர் விக்கிரமசோழனைப்
பேரரசனாகத் தங்கள் கல்வெட்டு களிற் குறித்திருத்தலே இதற்குத் தக்க சான்றாகும்[2].
வெலனாண்டுச் சிற்றரசரும் விக்கிரமனைப் பேரரசனாக ஏற்றுக் கொண்டனர்[3].
கங்கபாடி : கங்கபாடியின் கிழக்குப் பகுதி மட்டும் விக்கிரமன் நாட்டுடன் கலப்புண்டது.
அஃது எப்போது கலந்தது, எவ்வாறு கலந்தது என்பன கூறக்கூடவில்லை. இவனது
இரண்டாம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டு ஒன்று மைசூரில் உள்ள சுகட்டுரில் கிடைத்தது.
அதனில், இவனது தானைத் தலைவன் ஒருவன் அங்கு ஒரு கோவில் கட்டியது
குறிக்கப்பட்டுள்ளது[4]. கோலார்க் கோட்டத்தில் இவனது 10-ஆம் ஆண்டுக்
கல்வெட்டு ஒன்று கிடைத்தது. அங்கு ஒரு விமானம் கட்டப்பட்ட செய்தி அதனில்
குறிக்கப்பட்டுள்ளது[5]. இவ்விரண்டு கல்வெட்டு களாலும் கங்கபாடியின் கிழக்குப்
பகுதியேனும் சோழப் பெருநாட்டில் சேர்ந்திருத்தது என்பது அறியக்கிடத்தல் காண்க.
வெள்ளக் கொடுமை : விக்கிரம சோழன் காலத்தில் (ஆறாம் ஆட்சி ஆண்டில்) வட
ஆர்க்காடு, தென் ஆர்க்காடு கோட்டங்களிற் பெரும்பகுதி ஆற்று வெள்ளத்திற்கு
இரையானது. இதனாற் சில இடங்களில் ஊர்ப் பொது நிலங்களை விற்று அரசாங்க
வரி இறுக்கப்பட்டது. . திருவொற்றியூர், திருவதிகை முதலிய ஊர்களில் இருந்த
சபைகள் இவ் விற்பனையில் ஈடுபட்டன[6]. வெள்ளக் கொடுமையால் தஞ்சாவூர்க்
கோட்டத்தைச் சேர்ந்த கோவிலடிதுறக்கப்பட்டது; ‘காலம் பொல்லாதாய், நம்மூர்
அழிந்து, குடி ஒடிப்போய்க் கிடந்தமையால்’ என்பது கல்வெட்டு[7]. இக் குறிப்புகளால்
சோணாட்டில் விக்கிரமனது 6,7-ஆம் ஆட்சி ஆண்டுகளில் வெள்ளக் கொடுமை
நிகழ்ந்தது என்பதை அறியலாம்.
அரசியல் : விக்கிரம சோழன் ஆட்சி சிறப்பாக அமைதியுடையதே ஆகும். அரசன், தன்
முன்னோரைப் போலத் தன் பெருநாட்டைச் சுற்றிப் பார்ப்பதில் ஊக்கமுடையவனாக
இருந்தான். கங்கைகொண்ட சோழபுரமே அரசனது கோ நகரம் ஆயினும், பழையாறை
முதலிய இடங்களில் இருந்த அரண்மனைகளிலும் அரசன் இருந்து கட்டளைகளைப்
பிறப்பித்தல் உண்டு. கி.பி.1122-இல் விக்கிரமன் முடிகொண்ட சோழபுரத்து (பழையாறை)
அரண்மனையில் காணப்பட்டான்[8]; அடுத்த ஆண்டு செங்கற்பட்டுக் கோட்டத்துக்
குனிவளநல்லூரில் இருந்து குளக்கரை மண்டபத்தில் காணப்பட்டான்[9].
இம்மண்டபம், இக்காலப் ‘பிரயாணிகள் விடுதி’ (Travellers Bangalow) போன்றது
போலும் அரசன் கி.பி.1124-இல் தென்னார்க்காடு கோட்டத்து வீர நாராயணர் சதுர்வேதி
மங்கலத்தில் (காட்டு மன்னார் கோவில்) இருந்த அரண்மனையில் காணப்பட்டான்[10].
கி.பி. 1120-இல் தில்லை நகரில் இருந்த அரண்மனையில் தங்கி இருந்தான்[11]. இக்
குறிப்புகளால், இப்பேரரசன்,தன் ஆட்சிமுறையை நன்கு கவனித்துவந்தான் என்பது
புலனாகிறதன்றோ?
சிற்றரசர் : கல்வெட்டுகளில் சிற்றரசர் சிலர் குறிப்பிடப் பட்டுளர். விக்கிரம சோழன்
உலாவிலும் சிலர் குறிக்கப் பட்டுளர். முதல் கல்வெட்டில் குறிக்கப்பட்டாரைக் காண்போம்.
குலோத்துங்கன்பால் பெருஞ்சிறப்புப் பெற்ற நரலோக வீரனின் மகன் ஆன சூரை
நாயகன் ஒருவன்[12]. வட ஆர்க்காடு கோட்டத்தின் பெரும் பகுதியை ஆண்ட
சம்புவராயன் ஒருவன். அவன் செங்கேணி நாலாயிரவன் அம்மையப்பன் ஆன
இராசேந்திர சோழ சாம்புவராயன்’ என்பது. அவன்மனைவி கி.பி. 1123-இல் திருவல்லம்
மடத்திற்குச் சில தானங்கள் செய்துள்ளாள்[13]. வழக்கம் போலக் கோவலூரை ஆண்ட
சேதிராயர் சிற்றரசராகவே இருந்தனர். தொண்டைநாட்டில் ‘ஆனைவாரி’யைத்
தலைநகராகக் கொண்டு ‘சாளுக்கியர்’ என்பவர் ஆண்டு வந்தனர்[14]. தெற்கே இருந்த
சிற்றரசருள் பாண்டிநாடு கொண்டான்’ என்பவன் ஒருவன்[15]. இராமநாதபுரம்
கோட்டத்துச் ‘சிவபுரியை ஆண்ட ‘சுண்டன் கங்கை கொண்டான், ஒருவன். இவனுக்குத்
துவராபதி வேளான் என்ற பெயரும் இருந்தது. இவனிடம் சிறந்த வாள்வீரர் இருந்தனர்[16].
தெலுங்கு நாட்டில் சிற்றரசர் பலராவர். அவருள் குறிப்பிடத்தக்கவர் சிலராவர். கி.பி.121-இல்
பொத்தப்பி நாட்டை ஆண்டவன் மதுராந்தகன் - பொத்தப்பிச் சோழன் என்பவன்.
இவன் மகாமண்ட லேசுவரன் - விமலாதித்த தேவன் என்னும் பெயர் பெற்றவன்.
இவன் தன்னைக்கரிகாலன் வழிவந்தவன் என்று குறித்துள்ளான்[17]. இப்பொத்தப்பிச்
சோழமன்னர்கள் காளத்தியில் உள்ள கோவிற்குப் பல திருப்பணிகள் செய்துள்ளனர்.[18]
வெலனான்டி இரண்டாம் கொங்கன் ஆன கொங்கயன், ஒருவன். இவன் முன்னோர் சோழப்
பேரரசனிடம் உள்ளன்பு கொண்டவர், விக்கிரம சோழனுடன் தென் கலிங்கப் போரில்
ஈடுபட்டவர். கொள்ளிப் பாக்கைக்குத் தலைவனான ‘நம்பையன்’ ஒரு சிற்றரசன். காளத்தி
நாட்டுப் பகுதியை ஆண்டவன் மகா மண்டலேசுவரன் கட்டிதேவமகாராசன் என்பவன்[19].
இவன் முன்னோர் வீரராசேந்திரன் காலத்தும் உண்மை உடையவராகவே இருந்தனர்.
-----------
[1]. V.776 [2]. 153 of 1897
[3] 163 of 1897 [4]. 175 of 1911
[5]. 467 of 1911 [6]. 87 of 1900, 30 of 1903
[7]. 275 of 1901 (S.I.I. Vol.7, No.496) [8]. 168 of 1906
[9]. 229 of 1910 [10]. 63 of 1918
[11]. 163 of 1902 [12]. 128 of 1930
[13]. 322 of 1921 [14]. 378 of 1913
[15]. 521 of 1905 [16] 47 of 1929
[17]. 579 of 1907 [18] 102 of 1922
[19]. 155 of 1922
இனி, விக்கிரம சோழன் உலாவிற் கூறப்பட்டுள்ள சிற்றரசர் யாவர் என்பதைக் காண்போம் :
1. கருணாகரத் தொண்டைமான் முதல்வன். 2. முனைப்பாடி நாட்டை ஆண்டுவந்த
முனையதரையன் ஒருவன். இவன் தானைத் தலைவன், சிற்றரசன் அமைச்சனுமாவன்.
3. கொங்கர், கங்கர், மஹாரதர் என்பவரை வெற்றிகொண்ட ‘சோழர் கோன்’ ஒருவன்.
4. போரில் விற்றொழில் பூண்ட சுத்தமல்லன் வானகோவரையன் ஒருவன். 5. நரலோக
வீரனான காலிங்கராயன் ஒருவன். 6. செஞ்சியை ஆண்ட காடவராயன் ஒருவன்; இவன்
மதங்கொண்ட li_1ÍTöö} @ÖT@ó)[!] அடக்கிச் செலுத்துவதில் வல்லவன். 7. வேள்
நாட்டை ஆண்ட சிற்றரசன் ஒருவன்; அவன் துன்பமின்றி நாட்டை அமைதியாக
ஆண்டனனாம். 8. கங்கை முதல் குமரி வரை பல அறங்களைச் செய்துள்ள அனந்தபாலன்
ஒருவன். இவன் திருவாவடுதுறையில் உள்ள சிவன் கோவிலுக்குப் பல தானங்கள்
செய்துள்ளான்[20]. 9. கருநாடர் கோட்டை அரண்களை அழித்த சேதியராயன் ஒருவன்.
10. தகடுரை ஆண்ட அதிகன் ஒருவன். இவன் கலிங்கப் போரில் பகைவரை முறியடித்தவன்.
11. வடமண்ணையில் யானைகொண்டு அழிவு செய்த ‘வத்தவன்’ ஒருவன். 12.
கோட்டாற்றிலும் கொல்லத்திலும் வெற்றிபெற்ற நுளம்பபல்லவன் ஒருவன். 13.
கொங்கு, குடகு நாடுகளையும் சேரபாண்டியரையும் வென்ற ‘திரிகர்த்தன்’ ஒருவன்.
அரசன் விருதுகள் : விக்கிரம சோழனுக்குப் பிரியமான பெயர் ‘தியாக சமுத்திரன்’ என்பது,
இஃது இவன் உலாவிலும் கல்வெட்டுகளிலும் காண்கிறது[21]. அகளங்கன்’ என்பது
மற்றொரு பெயர்[22]. ‘குற்றம் அற்றவன்’ என்பது இதற்குப் பொருளாகும். இவன்
இவற்றுடன், தன் தந்தையின் விருதுகளில் பலவற்றைக் கொண்டிருந்தான்.
அரச குடும்பம் : பரகேசரி விக்கிரம சோழனுக்கு மனைவியர் எத்துணையர் என்பது
தெரியவில்லை. கல்வெட்டுகளில் நால்வர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.ஒருத்தி முக்கோக்
கிழான் என்பவள் மற்றவள்தியாகபதாகை என்பவள் முன்னவள் கி.பி.127 வரை
கோப்பெருந்தேவியாக இருந்து இறந்தாள்; பிறகு தியாகபதாகை கோப்பெருந்தேவி
ஆயினள். [23]இவள் பெண்கட்கு அணிபோன்றவள், சுருண்ட கூந்தலை உடையவள்,
மடப்பிடி போன்றவள் தூய குணங்களை உடையவள்; திரிபுவனம் முழுதுடையாள்
எனப்பட்டவள்; அரசன் திருவுளத்து அருள் முழுவதும் உடையாள், அரசனுடன்
வீற்றிருந்து சிறப்புற்றவள் என்று திருமழபாடிக் கல்வெட்டுக் கூறுகிறது. தரணி
முழுதுடையாள் என்பவள் ஒரு மனைவி. அவள் பெண்களில் மயில் போன்றவள்
நிலவுலகத்து அருந்ததி, ‘இலக்குமி திருமாலின் மார்பில் இருப்பதுபோல இவள்
அரசன் திருவுள்ளத்தில் தங்கியுள்ளாள் என்று அதே கல்வெட்டுக் குறிக்கின்றது.
மூன்றாம் மனைவி நம்பிராட்டியார் நேரியன் மாதேவியார் என்பவள். இவளுக்கு
அகப்பரிவாரம் இருந்ததென்று கல்வெட்டுக் குறிக்கிறது[24]. ‘அகப்பரிவாரம்’ என்பது
ஒவ்வோர் அரசமாதேவிக்கும் இருந்த பணிப்பெண்கள் படையாகும். விக்கிரம
சோழனுக்குக் குலோத்துங்கன் என்னும் மைந்தன் ஒருவன் இருந்தான். அவனே
இவனுக்குப் பின் சோழப் பேரரசன் ஆனான்.
சமயப் பணி : கங்கைகொண்ட சோழபுரம் சோழர் கோநகரம் ஆனது முதல், அதற்கு
அண்மையில் உள்ள தில்லை நகரம் சிறப்புப் பெறலாயிற்று. விசயாலயன் முதல்
இராசராசன்வரை இருந்த அரசர்கள் திருவாரூரையே மிக்க சிறப்பாகக் கருதினர்.
இவருள் முதற் பராந்தகன் ஒருவனே சிதம்பரத்தைச் சிறப்பித்தவன்.இராசேந்திரன்
காலம் முதல் தில்லை பெருஞ்சிறப்பு எய்தியது. முதற் குலோத்துங்கன் காலத்தில்
சிதம்பரம் மிக்க உயர்நிலை அடைந்தது. தில்லைப் பெருமானே சோழர் குலதெய்வமாக
விளங்கினார். விக்கிரம சோழன் காலத்தில் தில்லைப் பெருமான் கோவில் பெருஞ்
சிறப்புற்று விளங்கியது.இவன் கி.பி. 128-இல் தனக்கு வந்த சிற்றரசர் திறைப் பொருளின்
பெரும் பகுதியைத் தில்லைப் பெருமான் கோவிலைப் புதுப்பிக்கவும் பெரிதாக்கவும்
பிற திருப்பணிகள் செய்யவும் தாராளமாகச் செலவிட்டான். இதைப்பற்றிக் கூறும்
திருமழபாடிக் கல்வெட்டு[25] செய்தியைக் காண்க:-
“பத்தாம் ஆட்சி ஆண்டில் சிற்றரசர் தந்த தூய பொற்குவியல் பேரரசன் முன் வைக்கப்பட்டது.
அப்பொழுது மணிகள் பதித்த பொற்றட்டில் கீழ்வருவன வரையப்பட்டன : ‘மன்னன்
நீண்டநாள் வாழ்ந்து உலகைக் காப்பானாக!’ செம்பொன் அம்பலம் சூழ் திருமாளிகையும்
கோபுரவாசல்களும் கூடசாலைகளும் பெருமாள் கோவிலைச் சூழவுள்ள கட்டடங்களும்
பொன் ஆக்கப்பட்டன.பலிபீடமும் பொன்னாற் செய்யப்பட்டது; முத்துமாலைகளால்
அணி செய்யப்பட்ட தேர்க்கோவில் பொன்னால் இயன்றது. இத்தேரில் கூத்தப்பிரான்
பூரட்டாதியிலும் உத்திரட்டாதியிலும் உலாப் போவானாக அப்பொழுது நடைபெறும்
விழா ‘பெரும் பெயர் விழா’ எனப்படும். நிறை மணி மாளிகை நெடுந்தெரு ஒன்றும்
அமைக்கப்பட்டது. இத்தெரு அரசன் பெயர் பெற்றதாகும். பைம்பொன் குழித்த பரிகலம்
முதலாகச் செம் பொற்கற்பகத்தோடு பரிச்சின்னமும் அரசனால் கோவிற்குத் தரப்பட்டன.
இத்திருப்பணி அரசனது 10-ஆம் ஆண்டில் இத்திரைத் திங்களில் அத்த நக்ஷத்திரம்
கூடிய தாயிறன்று செய்யப்பட்டது.”
இக் கல்வெட்டுச் செய்தியால், விக்கிரம சோழன் சிறந்த சிவபத்தன் என்பதும், தில்லைக்
கூத்தன் கோவிலில் பல திருப்பணிகள் செய்தனன் என்பதும் நன்கு விளங்குகின்றன
அல்லவா? பொன்னம்பலவன் திருக்கோ விலின் முதல் திருச் சுற்று மதில் ‘விக்கிரம
சோழன் திருமாளிகை[26]’ எனவும் கோவிலைச் சுற்றியுள்ள தெருக்களில் ஒன்று
‘விக்கிரம சோழன் திருவீதி[27]’ எனவும் வழங்கின என்பது பிற்காலக் கல்வெட்டுகளால்
அறியக் கிடக்கும் செய்தியாகும்.
விக்கிரம சோழன் சிறந்த சிவபக்தன் ஆயினும், திருவரங்கம் பெரிய கோவிலிலும்
திருப்பணி செய்ததாகத் தெரிகிறது. அக்கோவிலின் ஐந்தாம் திருச்சுற்று மதில் இவனால்
கட்டப்பட்டது; இராமன் கோவில் முதலியன இவனால் அமைப்புண்டவை எனத்
‘திருவரங்கம் கோவில் ஒழுகு’ தெரிவிக்கின்றது. சமயத்துறையில் இவன் முன்னோரைப்
போலவே சமரச நோக்குடன் இருந்தமை பாராட்டற் பாலதே அன்றோ?
------------
[20]. 71 of 1926
[21] Ula, 431, 662 etc., Ins. 272, 273 of 1907; 49 of 1831
[22]. Ep. Ind. Vol. 6, pp.227-230
[23]. S.I.I. Vol.3, p.184 [24]. 136 of 1895
[25]. S.I.I. Vol.3, pp. 183-184 [26]. 282, 284, 287 of 1913
[27]. 312 of 1913
--------
3.3. இரண்டாம் குலோத்துங்கன் (கி.பி. 1133 - 1150)
அரசுரிமை : இரண்டாம் குலோத்துங்கன் விக்கிரம சோழன் மகன். இவன் கி.பி.1133-இல்
பட்டம் பெற்றுத் தந்தையுடன் இரண்டு ஆண்டுகள் அரசாண்டான். விக்கிரம சோழன்
கி.பி 1135-இல் இறக்க, இவனே சோழப் பேரரசன் ஆனான். இவனுடைய கல்வெட்டுகள்
குறிக்கும் மெய்க்கீர்த்தியில் வரலாற்றுக் குறிப்புக் கிடைப்பது அருமை. எனவே, இவன்
காலத்தில் போர்ச் செய்திகள் இல்லை என்பது தெளிவு. இவனது ஆட்சி அமைதியும்
செழுமையும் உடையதாக இருந்தது. விக்கிரம சோழன் ஆட்சியில் இருந்த சோழப் பெருநாடு.
இவனது ஆட்சியிலும் அங்ஙனமே இருந்தது.
கல்வெட்டுத் தொடக்கம் : இரண்டாம் குலோத்துங்க னுடைய கல்வெட்டுகள் பின்வரும்
முதற் குறிப்பை உடையன : 1. பூமன்னு பாவை 2. பூமருவிய புவியேழும் 3.பூமேவிவளர்
4. பூ மன்னு பதுமம் 5. பூ மேவு திருமகள் 6.பூ மன்னு யாணர்.
சிற்றரசர் : இரண்டாம் குலோத்துங்கன் ஆட்சிக் காலத்து இருந்த
சிற்றரசருள் குறிப்பிடத்தக்கார் சிலர் ஆவர் :
1. விக்கிரம சோழன் காலத்தில் இருந்த செங்கேணி அம்மையப்பன் சாம்புவராயன் மகன்
அம்மையப்பன் கண்ணுடைப் பெருமாள் ஆகிய விக்கிரம சோழக் சாம்புவராயன்
ஒருவன்[1]. இம்மரபரசர், ஆளும் அரசன் பெயரை வைத்துக் கொள்ளல் மரபு என்பது
தெரிகிறது.
2. தென் ஆர்க்காடு கோட்டத்தில் திருமாணிக்குழி என்னும் இடத்தில் இருந்த மோகன்
ஆட்கொல்லி என்ற குலோத்துங்க சோழக் காடவராயன் ஒருவன். இவன் படிப்படியாக
உயர்நிலையை அடைந்தான் என்பது இவன் கல்வெட்டுகளால் விளக்கமாகிறது. இவன்
திருநாவலூர், திருவதிகை, திருமுதுகுன்றம் (விருத்தாசலம்) முதலிய இடங்களிலுள்ள
சிவன் கோவில்கட்குத் தானங்கள் செய்துள்ளான். இவன் ‘ஆளப்பிறந்தான் கச்சிராயன்,
பைந்நாக முத்தரையன், அரசநாராயணன், ஏழிசைமோகன், என்ற சிறப்புப் பெயர்களைப்
படிப்படியாகக் கொண்டான்[2]. இவன் திருமுதுகுன்றத்தில் மண்டபம் ஒன்றைக் கட்டித்
தன் பெயரிட்டு ‘ஏழிசை மோகன்’ என்றழைத்தான்; அப்போது ‘காடவர் ஆதித்தன்’ என்று
தன்னை அழைத்துக் கொண்டான். கி.பி.300 முதல் கி.பி.900 வரை தமிழகத்தின் பெரும்
பகுதியை ஆண்ட பல்லவர் வழிவந்த இவன், படிப்படியாகத் தன் அலுவல் முயற்சியால்
உயர்நிலை அடைந்தமை இவனுடைய பட்டங்களால் நன்குணரலாம்[3]. இப்பெரியவன்
வழி வந்தவனே பிற்காலத்தில் சோழப் பேரரசையே ஆட்டங்கொள்ளச் செய்த கோப்
பெருஞ்சிங்கன் ஆவன்[4].
3. நடு நாடு அல்லது மகதை நாடு என்பதைப் பார்வையிட்டு வந்த தலைவன் பாணர்
மரபினன். அவன் பெயர் ‘இராசராச மகதை நாடாள்வான்’ என்பது[5]. 4. திருக்கோவலூரைச்
சேர்ந்த மலை நாட்டை ஆண்டவன் ‘விக்கிரம சோழச் சேதிராயன்’ என்பவன். அவன் மகன்
‘விக்கிரம சோழக் கோவல (கோவலூர்) ராயன்’ என்பவன். மற்றொருவன் கிளியூர்
மலையமான் குலோத்துங்க சோழச் சேதியராயன்’ என்பவன்[6]. 5. தகடூர் அதியமான்
ஒருவன், 6. நுளம்ப பல்லவர் சிலராவர் - 7. கி.பி. 1147-இல் கங்க மரபினனான
சீயகங்கன் காளத்தியில் உள்ள சிவன் கோவிலுக்கு நிபந்தங்கள் விடுத்தனன்[7].
8. காளத்தியைச் சுற்றியுள்ள பகுதியில் ‘யாதவராயர்’ என்ற மரபரசர் சிற்றரசராக
ஆண்டுவந்தனர்[8]. இம்மரபினர் வீர ராசேந்திரன் காலமுதலே சிற்றரசராக இருந்து
வந்தவர் ஆவர். 9. வேங்கி நாட்டுச் சிற்றரசருள் ‘மகா மண்டலேசுவரன் பல்லவ தேவ
சோடன்’ ஒருவன்[9]. 10. வெலனாண்டுச் சோழர் மற்றொரு கிளையினர். இம்மரபைச்
சேர்ந்த அரசரும் அரச மாதேவியாரும் பாபட்லா, திராக்ஷாராமம், காளத்தி இவற்றிலுள்ள
சிவன் கோவில்கட்குத் திருப்பணிகள் பல செய்துள்ளனர்[10]. 11. ‘கொலுறு’வை
ஆண்ட ‘காடம நாயகன்’ ஒருவன். இவன் கி.பி.142-இல் ஒரு சிற்றுரரை வேதியர்க்குப்
பிரமதேயமாக விட்டனன்[11]. இவன், மகாமண்டலிக பீம நாயகன், வேங்கி தேசச்
சாளுக்கிய அங்ககாரன் என்ற பட்டங்களையும் பெற்றவன்[12]. 12. பொத்தப்பி
நாட்டை ஆண்ட மதுராந்த கன் பொத்தப்பிச் சோழ சித்தரசன் என்பவன் ஒருவன்[13].
----------
[1]. 302 of 1897 [2]. 157 of 1905
[3]. 374 of 1902, 391 of 1921; 45,46 of 1903
[4]. 137 of 1900 [5]. 14 of 1903
[6] 284, 285 of 1902 [7]. 63 of 1922
[8]. 83, of 1922 [9]. 210 of 1897
[10]. 210 of 1897, 227 of 1893, 123 of 1922
[11]. Ind, Ant. Vol 14. pp. 56-60 [12]. 172 of 1897
[13]. 572 of 1907
பட்டப் பெயர்கள் : இரண்டாம் குலோத்துங்கன் விருதுப் பெயர்கள் பலவாகும்.
அவற்றுள் ‘திருநீற்றுச் சோழன்’ என்பது ஒன்று. இப்பெயர் முதற் குலோத்துங்கனும்
கொண்டிருந்தான். அதனால் இக்காலத்துச் சேக்கிழாரை முதற் குலோத்துங்கன் காலத்தவர்
என மயங்கக் கொண்டாரும் உளர். எதிரிலிசோழன், கலிகடிந்த சோழன் என்பனவும்
முன்னோர் கொண்ட விருதுப் பெயர்களே ஆகும். இவன் பேரம்பலம் பொன் வேய்ந்த
சோழன் எனப்பட்டான்[14]. இவனுக்கே சிறப்பாக உரிய விருதுப் பெயர் ‘அநபாயன்
என்பதே ஆகும்.[15] இப்பெயர் இவனுடைய கல்வெட்டுகளிலும் உலாவிலும் இருப்பதோடு
இவனது அரசியற் செயலாளன் பெயரிலும் காணப்படல் நோக்கத் தக்கது. அச்செயலாளன்
அநபாய மூவேந்த வேளான் எனப்பட்டான்[16]. பல சிற்றுரர்கள் அநபாய நல்லூர்
என்று பெயரிடப்பட்டன[17].
அரச குடும்பம் : திருமழபாடிக் கல்வெட்டில் அரச மாதேவியர் இருவர் குறிக்கப்பெற்றுளர்.
அவருள் பட்டத்தரசி தியாகவல்லி என்பவள். அவளுக்கே ‘புவனமுழுதுடையாள், என்ற
பெயரும் உண்டு. மற்றவள் ‘முக்கோக்கிழான்’ என்பவள். இவள் மலாடுடை சிற்றரசர்
மகளாவள்[18]. இவனுடைய பிற மனைவியரைப் பற்றியோ பிள்ளைகளைப் பற்றியோ
ஒன்றும் அறியக் கூடவில்லை. இவனுக்கு இராசராசன் என்ற மகன் ஒருவன் இருந்தான்.
அவன் கி.பி.146-இல் முடி சூடிக்கொண்டு தந்தையுடனே நாட்டை ஆண்டு வந்தான்.
இரண்டாம் குலோத்துங்கன் காலத்திலும் சோழர்கோ நகரம் கங்கைகொண்ட சோழபுரமே
ஆகும். எனினும், இவன் காலத்தில் சிதம்பரம் பெருஞ் சிறப்படைந்தது; அரசன்
அடிக்கடி தங்கும் பெருநகரமாக விளங்கியது.
அவைப்புலவர் : இரண்டாம் குலோத்துங்கன் அவையில் ஒட்டக்கூத்தர் பெரும் புலவராக
இருந்தார். அவர் விக்கிரம சோழன் காலத்திலும் இவன் காலத்திலும் இவன் மகன்
இரண்டாம் இராசராசன் காலத்திலும் இருந்தவர் ஆவர்; மூவர்மீதும் உலாப் பாடினவர்.
இரண்டாம் குலோத்துங்கன் இவரிடம் தமிழறிவு பெற்றிருத்தல் கூடும். ஆனால் இவர்
பெயர் ஒரு கல்வெட்டிலும் காணப்படவில்லை. அதனால், இவர் இருந்திலர் எனக்
கூறல் இயலாது. என்னை? இவர் பாடிய உலாப் பிரபந்தங்களும் பிறவும் இருத்தலின்
என்க. இங்ஙனமே, குன்றத்துர்-சேக்கிழார் இப்பேரரசன் காலத்தில் இருந்தவர்;
அரசன் வேண்டத் திருத் தொண்டர் புராணத்தைப் பாடியருளியவர். இவரைப் பற்றி
வேறிடத்து விரிவாகக் கூறப்படும்.ஈடும் எடுப்பும் அற்ற திருத்தொண்டர் புராணமும்,
கூத்தர் செய்த உலாக்களும் பரணியும் இக்காலத்துச் சிறந்த இலக்கிய நூல்கள் ஆகும்.
இவற்றால் இவ்வரசனைப்பற்றியசெய்திகள் ஓரளவு அறியவசதி உண்டு இப்புலவர்களையும்
இவ்விலக்கியங்களையும் பற்றிப் பிற்பகுதியில் விரிவானவரலாறு தரப்படும்;
ஆண்டுக்காண்க
சமயநிலை : இரண்டாம் குலோத்துங்கன் சிதம்பரத்தில் முடிகவித்துக் கொண்டான் என்பது
தெரிகிறது. இவன் காலத்தில் தில்லை நகர் சொல்லொணாச் சிறப்புற்றுப் பொலிந்திருந்தது.
நகரம் சீர்திருத்தப்பட்டது; கோவில் சிறப்புற அமைக்கப்பட்டது. இதனை முதன் முதல்
அறிவிப்பது அரசனது 7ஆம் கல்வெட்டே ஆகும். அது திருப்புறம்பியக் கல்வெட்டு ஆகும்[19].
இவன் தனது மூன்றாம் ஆண்டுக் கல்வெட்டிலேயே பேரம்பலம் பொன் வேய்ந்த சோழன்
எனப்பட்டான். ஆதலின், இவன் பட்டம் பெற்ற இரண்டாம் ஆண்டு முதல் ஆறாம்
ஆண்டுவரை தில்லைத் திருப்பணியிற் பெரிதும் ஈடுபட்டிருந்தான் எனலாம். இப்பணி
இவனது தந்தையான விக்கிரமசோழன் காலத்து முடிவடையாது இவன் காலத்து
முடிவுற்றதோ-அன்றி இவன் தானாகவே இதை மேற்கொண்டு செய்தனனோ
தெரியவில்லை.[20] இவன் செய்த கோவில் திருப்பணிகள் குலோத்துங்கன் உலாவிற்
சிறப்புற விளக்கப் பட்டுள்ளன. குலோத்துங்கன் ஈடும் எடுப்பும் அற்ற தன் அரச
மாதேவியுடன் தில்லை சென்று கூத்தப் பெருமான் திருக்கூத்தைத் தரிசித்து, தில்லை
மண்டபத்தில் இருந்த வைணவக் கடவுளாகிய கோவிந்தராசரை அப்புறப் படுத்தினான்;
பல திருத்தங்களைச் செய்தான்: எழுநிலைக் கோபுரங்களை அமைத்தான்; தான் பிறந்த
கயிலையை நினையாதிருக்க அதனினும் மேம்பட்ட முறையில் அம்மனுக்குத்
திருமாளிகை அமைத்தான் கோவிலின் பல பகுதிகளும் நகரத்தில் குறிப்பிடத்தக்க
சில இடங்களும் பொன் வேய்ந்தான்.[21]’ இச் செய்திகளே சுருக்கமாக இராசராச
சோழன் உலா[22]விலும் தக்கயாகப் பரணி[23]யிலும் குறிக்கப்பட்டுள. இவன்,
சிதம்பரத்துப்பொன்னம்பல நாதர் திருவடிகளாகிய தாமரை மலர்களிலுள்ள வண்டு
போன்றவன்; இவன் திருவாரூரில் உள்ள அப்பர், சுந்தரர், சம்பந்தர் படிமங்கட்குப்
பூசை முதலியன நடக்கத் தானம் செய்துள்ளான்[24] என்று ஒரு கல்வெட்டுக்
கூறலைக் கொண்டு, இவனது சிவபக்தியையும் மூவர் முதலிகளிடம் இவன்
கொண்டிருந்த பெருமதிப்பையும் உணரலாம்.
இக்குலோத்துங்கன் தில்லை - கோவிந்தராசப் பெருமானை அப்புறப்படுத்திய செய்தியை
ஒரு கல்வெட்டுக் குறிக்கிறது[25]. அக்குறிப்புடைய பகுதி வேண்டுமென்றே
அழிக்கப்பட்டுள்ளது. மற்றப் பகுதி செம்மையாகவே இருக்கிறது. ஒரு காலத்தில்
சிவனையும் திருமாலையும் ஒன்றுபடுத்திச் ‘சங்கர நாராயண’ வடிவத்தில் வழிபாடு
ஏற்படுத்திச் சைவத்தையும் வைணவத்தையும் ஒன்றுபடுத்த முயற்சி செய்யப்பட்டது.
பிற்கால நிகழ்ச்சிகள் இம்முன்னேற்பாட்டிற்கு இடம் தரவில்லை. சைவத்திற்கும்
வைணவத்திற்கும் வேறுபாடு அதிகமாக நிகழ்ந்த நிகழ்ச்சிகளுள் இரண்டாம்
குலோத்துங்கன் செய்தது ஒன்றாகும்[26]. இந்நிகழ்ச்சி தவிர, இவனது அரசாட்சி
பல வழிகளிலும் செம்மையான தென்றே கூறி முடிக்கலாம்.
--------
[14]. 350 of 1927 [15]. 269 of 1901
[16]. 531 of 1912 [17]. 271 of 1215, 533 of 1921, 346 of 1911.
[18]. 85 of 1895 [19], 350 of 1927
[20]. A.R.E. 1913, Part II, No. 34; 1927, Part II, No.24
[21]. Ula lines 69- 116 [22]. R. Ula lines 58-66
[23]. T. Parani, KK, 777, 800-810 [24] S.I.I. iv 7
[25]. 36, of 1907 [26]. Cholas Vol II, P.74 (Foot-note)
----------
3.4. இரண்டாம் இராசராசன் (கி.பி. 1146 - 1173)
அரசியல் : இரண்டாம் குலோத்துங்கன் ஆட்சி கி.பி.150இல் முடிவுற்றது. ஆயினும், அவன்
தன் மகனான இரண்டாம் இராசராசனைக் கி.பி.146ஆம் ஆண்டிலேயே அரசனாக்கித்
தன்னுடன் கொண்டு நாட்டை ஆண்டு வந்தான் என்பது முன்பே கூறப்பட்டது. ஆதலின்,
இராச ராசன் ஆட்சி கி.பி. 1146-லிருந்தே கணக்கிடப்பட்டது. இவனுடைய கல்வெட்டுகளில்
போரைப் பற்றிய குறிப்பே. இல்லை. ஆதலின், இவனது ஆட்சி இரண்டாம் குலோத்துங்கன்
ஆட்சியைப் போல அமைதி நிலவிய ஆட்சியாகும் என்பது தெரிகிறது. இவனுடைய
கல்வெட்டுகளில் பெரும் பாலன ‘பூ மருவிய திருமாதும் என்ற தொடக்கத்தைக் கொண்டவை.
அவற்றில் அவனது அரசியல் நேர்மையாக நடந்தது என்பதே குறிக்கப்பட்டுள்ளது.
இவனது பெருநாட்டின் பரப்பென்னை? இவனது 7-ஆம் ஆட்சியாண்டில் குவலால
நாட்டில் (கோலார் கோட்டம்) காடுவெட்டி என்ற சிற்றரசன் மலை மீது ஒரு கோவில்
கட்டினான்[1]. நிகரிலி சோழமண்டலம் எனப்பட்ட கங்கநாட்டில் தகடுர்நாட்டைச்
சேர்ந்த ‘பெரும்பேர்’ என்ற இடத்தில் தானம் செய்த கல்வெட்டு ஒன்று கிடைத்துள்ளது.
அதனைச் செய்தவன் ‘தகடுர் கிழவன்’ என்பவன். அது கி.பி.164-இல் செய்யப்பட்டது[2].
இதனால் கொங்கு நாடும், கங்கபாடியின் ஒரு பகுதியும் இராசராசன் பெருநாட்டின்
பகுதிகள் என்பதே அறியக் கிடக்கிறது. வேங்கி நாட்டில் இராசராசன் காலத்துக்
கல்வெட்டுகள் பல கிண்டத்துள்ளன. அவை திராக்ஷாராமம் வரை பரவிக் கிடக்கின்றன.[3]
இக்குறிப்பால் வேங்கிநாட்டிலும் சோழ அரசு பரவி இருந்தமை நன்குணரலாம். சுருங்கக்
கூறின், விக்கிரம சோழன் காலத்துப் பெருநாடு அப்படியே இரண்டாம் குலோத்துங்கன்
காலத்திலும் இரண்டாம் இராசராசன் காலத்திலும் நிலைத்திருந்தது எனக் கூறலாம்.
அரசு நிலை : முதற் குலோத்துங்கன் ஆட்சிக்குப் பிறகு சோழ நாட்டு நடு அரசியல்
அமைப்பு வலியற்று விட்டது. சிற்றரசர் பலராயினர். அவரவர் பேரரசிற்கு ஒருவாறு
அடங்கினாற்போலக் காட்டிக் கொண்டனரேனும், தமது நாட்டளவில் முற்றும் சுயேச்சையே
கையாண்டனர். அவர்கள் தங்களுக்குள் ஒற்றுமை நிலவவும் போரிடவும் தொடங்கினர்.
நடு அரசியல் இவற்றைத் தடை செய்ய முடியவில்லை. பேரரசன் படைவன்மை மேலைச்
சாளுக்கியர் படையெடுப்பையும் ஹொய்சளர் படை யெடுப்பையும் பாண்டிய சேரநாட்டுக்
குழப்பங்களையும் தடுப்பதிலேயே ஈடுபட வேண்டியதாயிற்று. வெளிநாடுகளின்
படையெடுப்புகட்குச் சிறப்புக் கவனம் செலுத்த நேர்ந்ததால், பெரு நாட்டுச்சிற்றரசர்
நிலையைக் கவனித்து அவ்வப்போது ஒழுங்குபடுத்தப் போதிய சமயம் வாய்த்திலது.
பேரரசனது இத்துன்பநிலையை நன்குணர்ந்த சிற்றரசர் தத்தம் படை வலிமையைப்
பெருக்கிக் கொண்டே வந்தனர். ஆனால் பெருநாட்டில் இருந்த சிற்றுார் அவைகளும்
நகர அவைகளும் தத்தம் கடமைகளைச் செவ்வனே செய்துவந்தன. எனினும், முதல்
இராசராசன் ஏற்படுத்திய வலிமையுற்ற நடு அரசாங்க அமைப்புத் தளர்ச்சியுற்று விட்ட
தென்பதில் ஐயமில்லை.
சிற்றரசர் : இரண்டாம் இராசராசன் காலத்துச்சிற்றரசர் யாவர்?1. மலாடு 2000 என்பதை
ஆண்டவன், திருக்கோவ லூரில் பெருமாள் கோவிலைக் கட்டிய நரசிம்மவர்மன்
என்பானுக்குப் பெயரன் ஆவன்[4]. 2. அதே மலை நாட்டின் ஒரு பகுதியை
‘மலையமான்கள்’ ஆண்டுவந்தனர். அவருள் ‘மலையமான் பெரிய உடையான்’
ஒருவன், அத்திமல்லன் சொக்கப் பெருமான் ஒருவன், இவன் கிளியூரை ஆண்டவன்[5]
3. கூடலூரை ஆண்ட காடவராயர்’ மரபினன் ஒருவன். அவன் ‘கூடலூர் ஆளப்
பிறந்தான் மோகன் என்பவன்.அவனுக்கு இராசராசக் காடவராயன்’ என்ற பெயரும்
உண்டு.[6] 4. சோழ நாட்டில் காரிகைகுளத்துரை ஆண்ட பல்லவராயன் ஒருவன்.
அவன் பல்லவராயன்பேட்டையில் இராசராசேசுவரம் உடையார் கோவில் ஒன்றைக்
கட்டினான். அவனே இராசராசன் இறுதிக் காலத்திலும் இராசராசன் இறந்த பிறகும்
சோணாட்டை நிலைகுலையாமற் காத்த பெருவீரன்[7]. 5.நித்தவிநோத சாம்புவராயன்
என்பவன் செங்கேணித்” தலைவருள் ஒருவன், இவன் மனைவி சீருடையாள் என்பவள்.
முன்னூர், அச்சரப்பாக்கம் கோவில்களில் திருப்பணி செய்த ‘இராச நாராயண
சாம்புவராயன்’ ஒருவன். இவன் ‘அம்மையப்பன் சீயன் பல்லவாண்டான்’ என்றும்
வழங்கப்பட்டான்[8]. இச் செங்கேணித் தலைவர்க்கும் காடவராயர்க்கும் நெருங்கிய
உறவுண்டு. 6. புதுக்கோட்டைச் சீமையில் குலோத்துங்க சோழக் கடம்பராயன்
என்பவன் ஒருவன்[9]. 7. சேந்தன் கூத்தாடுவான்’ என்ற இராசராச வங்கார முத்தரையன்
என்பவன் பாடிகாவல் தலைவன் இவன் தென் ஆர்க்காடு கோட்டத்தில் ‘திட்டகுடி’யில்
இருந்தவன்.[10] 8. தெலுங்கு நாட்டுச் சிற்றரசருள் கரிகாலன் மரபினர் எனக்
கூறிக்கொண்ட ‘திரிபுவன மல்ல தேவன் சோழ மகாராசன் ஒருவன்; ஜிக்கிதேவ
சோழ மகாராசன் மற்றொருவன். இவரன்றிக் கோணராசேந்திர லோகராசன், கொண்ட
பருமட்டி புத்தராசன், குலோத்துங்க இராசேந்திரன் சோடையன், கொட்டாரி எர்ரம
நாயகன் சனகவர்மன்’ முதலியோர் நெல்லூர் முதல் வேங்கிவரை பரவி இருந்த
சிற்றரசர் ஆவர்.
அரசன் விருதுப் பெயர்கள்: இவன், இராசராசன் உலாவில் கண்டன், வீரதயன், விரோதயன்
என்ற பெயர்களை உடையவனாகக் காணப்படுகிறான். உலாவிலும் கல்வெட்டுகளிலும்
இவன் சோழேந்திர சிம்மம்’ என்பதைச் சிறப்பாகப் பெற்றவன். இவன், கல்வெட்டுகளில்
‘இராச கம்பீரன், எதிரிலி சோழன், நெறியுடைச் சோழன் என்ற விருதுகளையும்
பெற்றுள்ளான்.
அரச குடும்பம் : இராசராசனது பட்டத்தரசி அவனிமுழுதுடையாள் என்பவள். மற்ற
மனைவியர் ‘புவன முழுதுடையாள், தரணி முழுதுடையாள் என்பவர்[11]. இரண்டாம்
இராசரர்சனுக்கு மகப்பேறு இல்லை என்பர். இளவரசன் : இராசராசற்கு மகப்பேறு
இன்மையால், தன் பாட்டனான விக்கிரம சோழனது மகன் வயிற்றுப் பெயரனான
(இரண்டாம்) இராசாதிராசன் என்பானை இளவரசனாக ஏற்றுக் கொண்டான்.
இளவரசனது ஆட்சி ஆண்டு கி.பி.1153-இல் தொடக்கமானதைக் கல்வெட்டு
உணர்த்துகிறது[12]. எனவே, இராசாதிராசன் பத்தாண்டு வரை இராசராசனுடன்
இருந்து அரசியல் முறையை நன்கறிந்தான் என்னலாம். கி.பி.1153-க்குப் பிறகு
இராசராசன் இறப்பதற்குள் பாண்டிய நாட்டில் பெருங்குழப்பம் பாண்டிய சிற்றரசர்க்குள்
உண்டானது. ஒரு பாண்டியற்கு ஈழத்தரசன் உதவி செய்தான். மற்றொருவருக்கு
சோழர் உதவி புரிந்தான். இப்போராட்டச் செய்திகளைப் பற்றிய விவரம் இராசாதிராசன்
ஆட்சியில் விளக்கப்படும்.
-------
[1]. 486 of 1911 [2]. 18 of 1900, 267, of 1901
[3]. 216 of 1893 [4]. 119 of 1909
[5]. 163 of 1906, 411 of 1900 [6]. 166 of 1906
[7]. 434,435 of 1924 [8.] 168 of 1918, 52 of 1919, 244 of 1901
[9]. 355 of 1904 [10]. 16 of 1903
[11]. 16 of 1903, 369 of 1911; Vide 219 of 1901, 538 of 1 104;
உலகுடை முக்கோக் கிழான் என்பது பட்டத்தரசியைக் குறிப்ப தென்பர்.
[12]. Ep. Ind. Vol. 9, p.211
--------------
3.5. இராசாதிராசன் (இ.பி. 1163 - 1179)
பட்டம் பெற்ற வரலாறு : இராசாதிராசன் விக்கிரம சோழனது மகன் வயிற்றுப் பெயரன்.
இவனது இயற்பெயர் எதிரிலிப்பெருமான் என்பது. இவனுக்கு இளையவன் ஒருவன்
இருந்தான். இந்த இருவரும் கங்கை கொண்ட சோழ புரத்திலிருந்து ஆயிரத்தளி
அரண்மனைக்குக் கொண்டுவரப் பெற்றனர். அங்கு இரண்டு பிள்ளைகளும் வளர்ந்து
வந்தனர். இராச ராசன் இறக்கும் அன்று எதிரிலிப் பெருமாளுக்கு முடிசூட்டி இறந்தான்.
அப்பொழுது இவன் வயது இரண்டு. அதனால் அரசன் இறந்தவுடன் சோணாட்டில் கலவரம்
மிகுந்தது. உடனே பல்லவராயன் என்னும் முதல் அமைச்சர் இப்பிள்ளைகளையும் இராச
மாதேவி யாரையும் இராசராசபுரத்திற்குக் கொண்டு சென்று தக்கார் பாதுகாவலில்
விட்டுச் சோழப் பெருநாட்டு அரசியலை இரண்டு வருடகாலம் தானே கவனித்து வந்தான்;
எதிரிலிப் பெருமாள் நான்கு வயதினன் ஆனதும், அவனுக்கு இராசாதிராசன் என்ற
பெயருடன் முடி சூட்டிச் சிறப்புச் செய்தான்; இக்குறிப்புகள் அனைத்தும் பல்லவராயன்
பேட்டைச் சாசனத்தில் நன்கறியக் கிடக்கின்றன[1]. ஆனால் இதே பல்லவராயன் பேட்டைச்
சாசனத்தையும் இராசராசன் ஆட்சி ஆண்டுகளையும் சோதித்த பிறர், இராசாதிராசன்
கி.பி. 1153-இல் இளவரசன் ஆனான்; இராசராசன் கி.பி.117 3-இல் இறந்தான். எனவே
8 முதல் 10 ஆண்டுகள் பேரரசனுடன் சிற்றரசன் பயிற்சி பெற்றான்’ எனக் கூறுகின்றனர்[2].
இஃது எங்ஙனமாயினும், இரண்டாம் இராசராசனுக்குப்பிறகு பட்டம்பெற்றவன்
இரண்டாம் இராசாதிராசன் என்பதுமட்டும் அனைவரும் ஒப்புக்கொண்ட உண்மை
ஆகும். இவனுக்கு கரிகாலன் என்ற பெயரும் உண்டு[3].
பாண்டி நாட்டுக் குழப்பம்: இராசாதிராசன் பட்டம் பெற்ற நான்கு ஐந்து ஆண்டுகளில்,
பாண்டிய நாட்டில் அரச மரபினர் இருவர்க்குள் பூசல் உண்டானது. ஒருவன் பராக்கிரம
பாண்டியன் என்பவன்; மற்றவன் குலசேகர பாண்டியன் என்பவன். பராக்கிரம பாண்டியன்
அப்பொழுது இலங்கையை ஆண்டு வந்த பராக்கிரம பாகு (கி.பி.1153-1186) என்பவனைத்
துணை வேண்டினான். உடனே இலங்கைப் படைவீரர் இலங்காபுரி என்பவன் தலைமையிற்
சென்றனர். அவன் பாண்டிய நாட்டை அடைவதற்குள், குலசேகரன் பராக்கிரமனை
ஒரு நகரத்தில் அகப்படுத்தி, அதனைமுற்றுகை இட்டான்; அப்பொழுது நடந்த போரில்
பராக்கிரமன் கொல்லப்பட்டான். அவன் மகனான வீரபாண்டியன் மலை நாட்டுக்கு ஓடி
ஒளிந்தான். குலசேகரன் பாண்டிய மன்னன் ஆனான்.
இலங்காபுரி : இதனை உணர்ந்த இலங்காபுரி குலசேகரனை வென்று பாண்டிய நாட்டை
இறந்தவன் உறவினர்க்கு உரிமையாக்கத் துணிந்து, நாட்டினுள் நுழைந்தான்,
இராமேசுவரத்தைக் கைப்பற்றி அங்கிருந்த கோவிலை அழித்தான்; ‘குந்துகாலம்’ என்ற
இடத்தைக் கைப்பற்றிக் கோட்டை ஒன்று கட்டி, அதற்குப் ‘பராக்கிரமபுரம்’ என்று தன்
அரசன் பெயரிட்டான்; இச்செயல்களை அறிந்த குலசேகரன் இரண்டு படைத்தலைவரைப்
பெரும் படையுடன் ஏவினன். அப்படைகள் தோல்வியுற்றன. அடுத்துப் பல இடங்களில்
போர் நடந்தது. இலங்காபுரியே வெற்றி பெற்றான். இறுதியிற் குலசேகரன் கொங்கு
நாட்டுப் படைகளையும் இறந்த பராக்கிரம பாண்டியனுடைய சிதைந்த படையையும்
தன் படைகளையும் ஒருங்கு திரட்டிக் கொண்டு தானே போரிட முந்தினன்; ஆயினும்,
பாவம்’ அவன் படுதோல்வி அடைந்தான். இலங்காபுரி தென்பாண்டி நாட்டைக் கைப்பற்றிப்
பலப்படுத்தினான்; மலை நாடு புக்க வீரபாண்டியனை வரவழைத்து, இலங்கை அரசன்
தந்த பரிசுகளை அளித்துப் பாண்டிய அரசனாக்கி வைத்தான்.வீரபாண்டியன் இலங்காபுரியின்
உதவி பெற்றே நாட்டை ஆண்டு வந்தான். இலங்காபுரி பிற இடங்களை வென்று
‘கண்ட தேவன் மழவராயன்’ என்பவனையும், ‘மானவ சக்கரவர்த்தி’ என்பவனையும்
ஆளுமாறு விடுத்தான்.
தன் நாடு பாழாவதைக் கண்டு வெகுண்ட குலசேகரன் மீட்டும் தன் படைகளைத் திரட்டிப்
போருக்குப் புறப்பட்டான். இலங்காபுரியால் நாடாள விடப்பட்ட சிற்றரசரும் அவனுடன்
சேர்ந்து கொண்டனர். உடனே வீரபாண்டியன் அரசு கட்டில் விட்டு ஓடிவிட்டான்.
இலங்காபுரி தன் அரசனுக்குச் செய்தி அனுப்பிப் புதிய படைகளை வருவித்தான்.
அப்புதிய படைகளைச் சகத் விசய ன் என்பான் தலைமை தாங்கி நடத்தி வந்தான்.
இரண்டு வீரரும் தம் படைகளை அணிவகுத்துக் குலசேகரனை முற்றிலும் முறியடித்தனர்.
வீரபாண்டியன் மீண்டும் அரசன் ஆக்கப்பட்டான். பின்னர் இலங்காபுரி குறும்பராயன்
என்பவனைத் தோற்கடித்துத் திருப்புத்துரைக் கைப்பற்றினான். பொன் அமராவதி
புகுந்து அங்கிருந்த மூன்று மாளிகை கொண்ட அரண்மனை முதலிய கட்டடங்களை
இடித்து மதுரைக்குத் திரும்பினான்.
குலசேகரன் மீட்டும் இலங்காபுரியைச் சீவில்லிபுத் துரில் தாக்கினான். போர்
கடுமையாகவே நடந்தது.ஆயினும், குலசேகரனே தோல்வியுற்றான்; ‘சாத்தனேரி’ என்னும்
இடத்திற்கு ஓடிவிட்டான். இலங்காபுரி அதனை அறிந்து அங்குச் சென்றான். அவன்
வருவதை அறிந்த குலசேகரன் ஏரிக்கரையை உடைத்து அவன் வரவைத் தடுக்க
முயன்றான்; பயனில்லை. உடனே அவன் பாளையங்கோட்டைக்குப் போய்த் தங்கினான்;
சோழ அரசனுக்கு ‘உதவி வேண்டும்’ என்னும் வேண்டுகோளை விடுத்தான்.
ஈழத்துடன் செய்த முதற்போர் : சோழநாட்டை ஆண்டு வந்தவன் இராசாதிராசன்
ஆவன். அவனுக்குப் பேருதவியாக இருந்தவன் திருச்சிற்றம்பலம் உடையானான
பெருமான் நம்பிப் பல்லவராயன் என்பவன். அப் பெருந்தகை திரண்ட படைகளுடன்
பாண்டியன் நாட்டை அடைந்தான். அவனுக்கு உதவியாகச் சென்ற மற்றொரு தலைவன்
நரசிங்க வர்ம ராயன் என்பவன். பாண்டியன் படை, கொங்குப் படை, சோழர் படையாவும்
ஒன்று கூடின, அதுகாறும் பாண்டிய நாட்டுக் கோவில்களை இடித்துக் கொள்ளை-
கொலைகளால் குடிகளைத் துன்புறுத்திவந்த ஈழப்படைகளைத் தாக்கின. அதனால்
திருக்கானப்பேர், தொண்டி, பாசிபொன் அமராவதி, மணமேற்குடி, மஞ்சக்குடி, என்னும்
இடங்களில் போர் நடந்தது, இறுதியில் ஈழப்படை தோற்று ஒழிந்தது. குலசேகரன்
அரியணை ஏறி அரசாளத் தொடங்கினான்.[4]
இலங்காபுரி செய்த கொடுமைகளை அறிந்த எதிரிலி சோழச் சாம்புவராயன் என்னும்
சிற்றரசன் ஒருவன் உமாபதி தேவர் என்ற ஞானசிவ தேவர் என்னும் பெரியார் ஒருவரிடம்
முறையிட்டான். அவர் ‘ஈழப்படை விரைவில் அழிந்து ஒழியும் கவலற்க’ என்று அருளி
28 நாள் அகோர பூசை செய்தனர். முடிவில் ஈழப்படை தோற்ற செய்தி எட்டியது.
உடனே அத்தலைவன் அச்சுவாமி தேவர்க்குக் காஞ்சியை அடுத்த ஆர்ப்பாக்கம் என்னும்
சிற்றுரைத் திருப்பாத பூசையாக அளித்தான். இச்செய்தி இராசராசனது 5-ஆம் ஆட்சி
ஆண்டில் நடைபெற்றதாகும்.[5] எனவே, இலங்காபுரியின் தோல்வி கி.பி.167 அல்லது
1168-இல் நிகழ்ந்ததாதல் வேண்டும்.
ஈழத்துடன் செய்த இரண்டாம்போர் : இராசராசன் குடும்பத்திற்கு நெருங்கிய நண்பனும்
முதல் அமைச்சனும் சிறந்த வீரனும் ஆகிய பல்லவராயன் மேற்சொன்ன போருக்குப்
பின் நோய்வாய்ப்பட்டுக் காலமானான். உடனே அந்தப் பதவிக்கு வேதவனம்
உடையான் அம்மையப்பன் ஆன அண்ணன் பல்லவராயன் என்பவன் வந்தான். இவன்
ஆற்றலும் போர்ப் பயிற்சியும் மிக்கவன். இவன் அரசனது நன்மதிப்புப் பெற்றவன்.
இவன், முதலில் பல்லவராயனிடம் தோற்றதற்கு வருந்திய ஈழத்தரசன் சோணாட்டைத்
தாக்கப் படைகளைப் பலப்படுத்துவதையும், ஊரத்துறை, புலைச்சேரி, மாதோட்டம்,
வல்லிகாமம்,மட்டிவால் என்னும் இடங்களிற் கப்பல்களைக் கட்டுவதையும் கேள்வியுற்றான்;
உடனே பராக்கிரம பாகுவுடன் பூசலிட்டுத் திரிந்து கொண்டிருந்த அவன்மருமகனான
சீவல்லபன் என்பவனைப் படையுடன் அனுப்பி ஈழத்தைத் தாக்கத் துண்டினான்.
சீவல்லபன் சோழர் படையுடன் சென்று மேற்சொன்ன இடங்களிற் பலவற்றை அழித்தான்
போரில் யானைகளைக் கைப்பற்றினான்; கிழக்கு மேற்கில் இருபது காதவழியும் தெற்கு
வடக்கில் எழுபது காதவழியும் தீ மூட்டி ஊர்களை அழித்தான்; பல தலைவரைக் கொன்றான்;
பலரைச் சிறைப்பிடித்தான்.
இந்நிலையில், பராக்கிரமபாகு ஒரு சூழ்ச்சி செய்தான். அவன் உடனே குலசேகரனுக்குத்
தூது விடுத்தான்; நீண்ட காலமாகப் பாண்டியர்க்கும் ஈழ அரசர்க்கும் சோழர்க்கு எதிராக
இருந்து வந்த ஒற்றுமையை உணர்த்தித் தன்பால் நட்புக் கொள்ளுமாறும் சோழர்பால்
பகைமை கொள்ளுமாறும் செய்தான். சோழர் தயவால் பட்டம் பெற்ற குலசேகரன் நன்றி
கெட்டவனாய்ச் சோழர் மீது பகைமை கொண்டான், ஈழத்தரசன் பேச்சைக் கேட்டுச்
சோணாட்டின்மீது படையெடுத்தான்; சோழர்பால் என்றும் அன்பு கொண்டிருந்த ஏழகத்தார்[6]
(ஏடகத்தார். மதுரை தாலுக்காவில் உள்ள ஊர்) என்பவரையும் சோழருடைய மறவ
சாமந்தரும் குலசேகரன் ஆட்சியில் இருந்தவருமான ‘இராசராச கற்குடி மாராயன்’ இராச
கம்பீர ஐந்து கோட்டை நாடாள்வான்’ என்பாரையும் நாட்டைவிட்டு விலக்கினான்; சோழ
அரசன் ஆணைப்படி மதுரைவாயிலில் அறையப்பட்டிருந்த ஈழத்துத் தானைத் தலைவர்
தலைகளை அப்புறப்படுத்தினான். பராக்கிரம பாகு குலசேகரன் தானைத் தலைவர்கட்கு
அனுப்பிய கடிதங்களும் பரிசுகளும் சோழ சேனைத் தலைவர்களிடம் அகப்பட்டன.
இவை அனைத்தையும் கேள்வியுற்ற இராசாதிராசன் அண்ணன் பல்லவராயனுக்கு
ஆணை விடுத்தான்.அஃதாவது, குலசேகரனை விரட்டிப்பராக்கிரம பாண்டியன் மகனான
வீரபாண்டியனை அரசனாக்க வேண்டும் என்பது. உடனே அண்ணன் பல்லவராயன்
பெரும் படை அனுப்பிக் குலசேகரனை ஒழித்து, வீரபாண்டியனை அரியணை ஏற்றினான்.
இச்செயற்காக இப் பெரு வீரன் பழையனூரில் பத்து வேலி நிலம் இறையிலியாகப்
பெற்றான்.[7]
இங்ஙனம் இராசாதிராசன் ஆட்சியில் சோழர்க்கும் ஈழ அரசர்க்கும் இரண்டு முறை போர்
நடத்தது. இருமுறையும் பாண்டிநாடு சம்பந்தமாகவே நடந்தது. முதற்போரில் வெற்றி
பெற்ற சோழர் படைத்தலைவன் பல்லவராயன், இரண்டாம் போரில் வெற்றிபெற்ற
பெருவீரன் அண்ணன் பல்லவராயன், இந்த இருபோர்களிலும் ஈழத்தரசன் காலாட்
படையையும் கப்பற்படையையும் இழந்தான். இரு போர்கட்கும் பிறகு இராசாதிராசன்,
மதுரையும் ஈழமும் கொண்டருளிய தேவர்[8], ‘என்னும் விருதுப் பெயர் பூண்டான். இங்கு
‘ஈழம் கொண்டது’ என்பது, சீவல்லபனை ஏவி ஈழத்தரசன் வலிதொலைத்தது’ என்னும்
பொருள் கொண்டதே ஆகும். இந்த இரண்டு போர்களும் நடைபெற்ற காலம் கி.பி.1169
முதல் 1177 வரை என்னலாம்.
அரசு நெல்லூர், காளத்தி, நந்தலூர்[9], கங்கபாடி[10] முதலிய இடங்களிற் கிடைத்த
சிற்றரசர் கல்வெட்டுகளில் இராசாதிராசன் பேரரசனாகக் குறிக்கப்படலாம், இராசாதிராசன்
காலத்திற் சோழப்பெரு நாடு இராசராசன் காலத்தில் இருந்த நிலையிலே இருந்ததென்று
கூறலாம்.
சிற்றரசர் : 1. சிற்றரசர் பலருள் முதலிற் குறிப்பிடத் தக்கவன் ‘காரிகைக் குளத்துர்
திருச்சிற்றம்பலம் உடையான் பெருமான் நம்பிபல்லவராயன் ஆவன்.இவன் இராசராசன்
உள்ளங் கவர்ந்தவன்; அவனது பேரன்பிற்குப் பாத்திரன் ஆனவன்; அங்ஙனமே
இராசாதிராசன் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் உரியவனாக இருந்தான். (2) இவனுக்கு
அடுத்து அப்பதவியில் இருந்து அருந்தொண்டாற்றிய சிற்றரசன் ‘வேதவனம் உடையான்
அம்மையப்பன் என்ற அண்ணன் பல்லவராயன்’ என்பவன். ஈழ வெற்றிகட்கு இவ்விருவரே
பொறுப்பாளிகள்.இவர்கள் இன்றேல் சோழப் பேரரசு பல துண்டுகளாகப் பிரிந்து
ஒழிந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அண்ணன் பல்லவராயன் திருவாரூர், திருவாலங்காடு
முதலிய இடங்களில் உள்ள சிவன் கோவில்களில் நிபந்தங்கள் விடுத்துள்ளான்.
இவனது சொந்த ஊர் பழையனூர் (3) தென் ஆர்க்காடு கோட்டத்திலும் வட ஆர்க்காடு
கோட்டத்திலும் சாம்புவராயரும் காடவராயரும் வன்மையுற்று இருந்தனர். செங்கேணி
அம்மையப்பன் சாம்புவராயன் என்பவன் சில இடங்களில் வந்த வருவாயைத் திருப்புலிவனம்
சிவன் கோவில் திருப்பனிகட்குச் செலவிட்டதாகக் கல்வெட்டுக் கூறுகிறது. (4) கண்டர்
சூரியன் என்பவன் ஒருவன். இவன் ‘பாண்டி நாடு கொண்டான்’ எனப்பட்டான். இவன்
திருவக் கரையில் கோவில் கோபுரம் ஒன்றைக் கட்டித் தன் பெயரிட்டான்; சிற்றாமூரில்
நிலங்களைப் பள்ளிச்சந்தமாக விட்டான்[11]. (5) ‘செங்கேணி அம்மையப்பன் சீயன்
பல்லவாண்டான்’ என்பவன் ஒருவன். இவன்திலவரியும் பிறவரியும் முன்னூரில் உள்ள
கோவிலைப் புதுப்பிக்கவோ அல்லது கட்டவோ செலவழித்தவன்[12]. (6) சாம்புவராயர்
பலராதல் போலவே மலையமான் சிற்றரசரும் பலராவர்; இவருள் அருளாளப் பெருமாள்
என்ற இராசராச மலையமான் ஒருவன். இவன் ‘கண்ணப்பன் மலையமான்’ என்பவன்
புதல்வன். இவன் திரிசூலம் கோவிலில் விளக்கிட்டான்[13]. (7) சேதிராயர் என்பவர்
சிலர், கோவல ராயர் சிலராவர். இவர்கள் கீழுர், அத்தி (கேரளாந்தக நல்லூர்) முதலிய
இடங்களில் உள்ள கோவில்கட்கு நிபந்தங்கள் விடுத்தனர். (8) திருவரங்கம் உடையான்
என்ற இராசாதிராசமலையராயன் திருப்பாசூர்க் கோவிலுக்குப் பல தானங்கள்
செய்துள்ளான்[14], (9) கோலன் திருக்கொடுங்குன்றம் உடையான் ஆன பொன்னமராவதி
நிஷதராசன் என்பவன் ஒருவன். (10) குணமாலைப் பாடி உடையான் ஆட்கொண்டான்
கங்கை கொண்டான் என்ற பொத்தப்பிச் சோழன் ஒருவன். (1) நெல்லூரை ஆண்ட
சிற்றரசன் ஒருவன், (12) திட்ட குடியில் உள்ள கோவிலுக்கு ஐந்து வேலி நிலதானம்
செய்த இராசராச வங்கார முத்தரையன் ஒருவன். இவருள் பலர் இராசராசன் ஆட்சிக்
காலத்திலும் இருந்தவராவர்.
இச்சிற்றரசருள் அண்மையில் இருப்பவர் இருவரோ பலரோ தமக்குள் உடன்படிக்கை
செய்து கொண்டு உறவாடல் மரபு. இருவர் ஒருவர்க்கொருவர் உற்றுழி உதவி புரிவதென்று
வாக்களித்துக் கொண்டனர். பலர் ஒன்று கூடி உறவாடுவதாக ஒப்பந்தம் செய்து கொண்டனர்.
இவ்வொப்பந்தங்கள் பேரரசின் சம்மதம் பெறாமலே செய்து கொள்ளப் பட்டவை. அதனால்,
தேவை உண்டாயின், இச் சிற்றரசர் பேரரசரையே ஆட்டிப் படைக்கலாம் அன்றோ?
இளவரசன் : இராசாதிராசன், விக்கிரம சோழ தேவன் பெயரனான ‘நெறியுடைப்பெருமாள்’
மகன். சங்கர சோழன் உலாவிற் குறிக்கப்பட்ட ‘சங்கமராசன்’ என்பவனே நெறியுடைப் பெருமாள்;
உலாவிற் குறிக்கப் பெற்ற ‘நல்லமன் என்பவனே எதிரிலிப் பெருமாள் என்ற
இராசாதிராசன், இரண்டாம் மகனான குமாரமகிதரன் என்பவனே குமார குலோத்துங்கன்
என்ற மூன்றாம் குலோத்துங்கன்; மூன்றாம் மகன் சங்கர ராசன். இவனே சங்கர சோழன்
என்பவன். இம்மூவரும் ஒரே தந்தையின் மக்களாவர்.[15] ஆதலின், மூன்றாம்
குலோத்துங்கனே இளவரசனாக இருந்தான்.
-------
[1]. 433 of 1924, of R. Dikshitar’s Kulothunga chola III, p. 21-23, 152-163
[2]. K.A.N. Sastry’s “Cholas; Vol. II, p. 87,96
[3]. 129 of 1927, 263 of 1913.
[4]. இவ்வரலாறு மகாவம்சம், சோழர் கல்வெட்டுகள், பல்லவராயன் பேட்டைச் சாசனம்
இவற்றைக் கொண்டு வரையப்பட்டது; 20 of1899, 433 of 1924, 465 of 1905.
[5]. S.I.I. Vol 6. No. 456.
[6] S.I.I.I. Vol. 3, p.212.
[7]. 465 of 1905
[8]. 36 of 1906, 731 of 1909, 474 of 1995, etc.
[9]. Nellore Ins. edited by Butterworth and Venugopala Chetty, Nos. 105, 108 of 1922;
571 of 1907
[10] 48 of 1893
[11]. 195 of 1904, 202 of 1902
[12]. 71 of 1919
[13].. 321 of 1901
[14]. 150 of 1930
[15]. Vide V.R. Dikshitar's ‘Kulothunka III. pp. 160-163. லால்குடிக்கு நேர்கிழக்கே
5 கல் தொலைவில் ‘சங்கரராசபுரம்’ என்னும் பெயர்கொண்ட சிற்றுார் இருக்கிறது.
இவ்வூரில் உள்ள கோவில் கல்வெட்டுகள் சோதித்தற்குரியவை; V.R. Dikshitar's K-III.
--------
3.6. மூன்றாம் குலோத்துங்கன் (கி.பி. 1178 - 1218)
இளமைப்பருவம்: இராசாதிராசனுக்கு இவன் தம்பியாவன் என்பது உண்மை ஆயின் அவனுக்கு
ஒராண்டு இளையவனே ஆவன். எனவே இராசாதிராசன் பட்டம் ஏற்றபொழு து இவன்
மூன்று வயதுச் சிறுவனாக இருந்தான்; தமை யனுடனே இருந்து அரசியல் பழக்கம் சிறுவயதிலே
கைவரப் பெற்றான். தமையன் 17 ஆண்டுகள் அரசாண்டு 20-ஆம் வயதில் இறந்தானாதல்
வேண்டும். இவன் கி.பி. 178-இல் தன் 18ஆம் வயதில் பட்டத்தைப் பெற்றான் நல்ல
இளமைப் பருவத்தில் பட்டம் பெற்றமையானும் அதற்குள் தமையனுடன் இருந்து அரசியல்
அமைதியை நன்கு அறிந்திருந்தவன் ஆதலாலும்,சிறுவயதில் அரசமாதேவியார் பக்கலில்
இருந்து வளர்ந்தமையாலும் பெருநாட்டின் நிலையையும் அரசமரபின் வரலாற்றையும்
பிறவற்றையும் நன்கறிந்தவன். இளமைப் பருவத்தில் ஒட்டக்கூத்தர் போன்ற பெரும் புலவர்
பழக்கம் இவனுக்கு இருந்திருத்தல் இயல்பே அன்றோ?
பிறந்த நாள் : இப்பேரரசன் பிறந்த நாள் தைத்திங்கள் அத்த நக்ஷத்திரம் ஆகும். இவன்
தன் பெயரால், திருநறுங்கொண்டைப் பெரும்பள்ளி அருகதேவற்கு “ஆறாவது முதல்
நம்பேராலே இராசாக்கள் நாயன் திருநாள் என்று தைத்திங்களில் அத்தத்திலே தீர்த்தமாகத்
திருநாள் எழுந்தருளுவிப்பதாகச் சொன்னோம்”[1] என்று கட்டளையிட்டுள்ளதனால்
இது தெரிகின்றது. இங்ஙனம் முதல் இராசராசன் தான் வென்ற சேரநாட்டில் தன் பிறந்தநாள்
விழாக் கொண்டாட ஏற்பாடு செய்ததை முன்னர்ப் படித்தோம் அன்றோ?
உடல் அமைப்பு : இவன் கருவீர மேகம், கருமேக வண்ணன், ஒண்பூவை வண்ணன், உருவால்
மதனன்; உறுப்பால் மதனன், கட்டாண்மை வீமன், அழகு, ஆண்மை எல்லாம் கண்டார்
கொண்டாடும் குலோத் துங்கன் சோழன்’ என்று குலோத்துங்கன் கோவை ஆசிரியர்
இவனைப் பற்றிக் கூறியுள்ளனர்.
கல்வெட்டுகள் : இவன் காலத்துக் கல்வெட்டுகள் பலவாகும். அவற்றில் பெரிதும் காணப்படும்
தொடக்கம் ‘புயல் வாய்த்து வளம்பெருக’ என்பது. பிற தொடக்கங்கள் ஆவன-‘மலர்
மன்னும் பொழில் ஏழும்’ பூமேவி மருவிய’, ‘பூமேவிவளர்’, ‘பூமருவிய திசைமுகத்தோன்’
என்பன. இவற்றுள் சில இரண்டாம் இராசராசன், இரண்டாம் குலாத்துங்கன் கல்வெட்டுத்
தொடக்கங்கள் எனினும், போர்ச் செயல்களைக் கொண்டு வேறு பிரித்துக் காட்டலாம்.
நாட்டு நிலைமை : மூன்றாம் குலோத்துங்கன் அரசு கட்டில் ஏறிய ஞான்று சோழப்
பெருநாடு திறமை மிக்க அமைச்சரால் திறம்பட ஆளப்பட்டு வந்தது. ஆயினும், பெருநாட்டு
நடு அரசியல் அமைப்புச் சீர்கெட்டுக் கொண்டே வந்தது. இதற்குச் சிறந்த காரணம்,
சிற்றரசரும் படைத்தலைவரும் உயர் அலுவலாளரும் தம் நாடுகளில் தனிப்பட்ட உரிமைகளை
நாட்டிக்கொண்டு நடு அரசியல் அமைப்பை மதியாது நடந்து வந்ததே ஆகும்.இந்நிலைமை
முதற்குலோத்துங்கற்குப் பின் தோன்றி இராசாதிராசன் காலத்தில் வலுப்பெற்றது.
பெருநாட்டிற்கு வெளியே ஈழத்தரசன் பாண்டி மண்டல அரசியலிற் புகுந்து குழப்பம்
உண்டாக்கி வெற்றியும் தோல்வியும் கலந்து நுகர்ந்து வந்தான். தெலுங்கு நாட்டில் இருந்த
சிற்றரசரும் தம் மனம் போனவாறு நடக்கத் தலைப்பட்டனர். இராசராசன், இராசாதிராசன்
கல்வெட்டுகளே நெல்லூர்க்கு வடக்கே இல்லாததற்குக் காரணம் இதுவே ஆகும். அதற்கு
வடக்கே சாளுக்கியப் பெருநாட்டை விழுங்கிக் காகதீயர் வன்மை பெற்று வந்தனர்.
மேலைச் சாளுக்கியர் ஒடுங்கிவிட்டதால், மைசூர்ப் பகுதியில் ஹொய்சளர் வன்மையுற்று
அரசியல் செல்வாக்குப் பெறலாயினர்.இந்நிலைகளை நன்கு கவனித்த மூன்றாம்
குலோத்துங்கன், முதலில் சோழப் பெருநாட்டில் அமைதியை உண்டாக்கிப் பலப்படுத்தத்
துணிந்தான்.
போர்ச் செயல்கள்
படைகள் : சோழர் படைகள் திறம் வாய்ந்தவை. அவை முதற்பராந்தகன் காலமுதலே நல்ல
பயிற்சிபெற்று வழி வழி வந்தவையாகும். இக்குலோத்துங்கன் காலத்தில் இருந்த யானைப்படை
சிறப்புடையது. கி.பி.178-இல் சீன ஆசிரியர் ஒருவர் சோணாட்டுப் படையைப்பற்றி இங்ஙனம்
வரைந்துள்ளார் :-
“சோழர் அரசாங்கத்தில் 60 ஆயிரம் யானைகள் கொண்டபெரும்படை இருக்கிறது. ஒவ்வொரு
யானையும் 2 அல்லது 3 மீ உயரம் உடையது. போர்க்களத்தில் இந்தக் கரிகள்மீது வீரர்பலர்
செல்கின்றனர்.அவர் கைகளில் ஈட்டி, வில், அம்பு முதலியன கொண்டுள்ளனர்; நெடுந்துரம்
அம்பு எய்வதில் வல்லுநர். போரில் வெற்றி பெறும் யானைகட்குச் சிறப்புப் பெயரிட்டு
அழைக்கின்றனர். அவற்றின் மீது சிறப்பை அறிவிக்க உயர்தரப் போர்வைகள் விரிக்கப்படும்.
நாள்தோறும் அரசன் திருமுன் யானைப் படை நிறுத்தப்படும்.”
பாண்டி நாட்டுப் போர் : இவ்வரசன் கல்வெட்டுகளில் தென்னாட்டுப் போரே சிறந்து
காணப்படுகிறது. இவன் (1) மதுரை கொண்டது, (2) பாண்டியன் முடித்தலை கொண்டது,
(3) ஈழநாடு கொண்டது, (4) கருவூர் கொண்டது, (5) கச்சி கொண்டது, (6) மதுரையில்
வீராபிடேகமும் விசயாபிடேகமும் செய்துகொண்டமை ஆகிய செயல்கள் குறிக்கப்பட்டுள்ளன.
ஆதலின், இவற்றை ஒவ்வொன்றாகக் காணலாம்.
மதுரை கொண்டது : அண்ணன் பல்லவராயனிடம் தோற்றோடிய குலசேகர பாண்டியன்
இறந்தான். அப்பொழுது மதுரையை ஆண்டு வந்தவன் வீரபாண்டி யன். குலசேகரன்
மகனான விக்கிரம பாண்டியன் மூன்றாம் குலோத்துங்கனை அடைக்கலம் புகுந்தான்.[2]
இரண்டாம் இராசாதிராசனால் துரத்தப்பெற்ற குலசேகரன் மகனை அவனுக்குப் பின் வந்த
குலோத்துங்கன் ஏன் சேர்த்துக் கொண்டான்? ஒன்று, வீரபாண்டியன் சோழனுக்கு எதிராக,
இலங்கை அரசனுடன் நட்புக் கொண்டிருத்தல் வேண்டும்; அல்லது சோழனுக்கு
மாறாக வேறு துறையில் நடந்திருத்தல் வேண்டும்; அல்லது வீரபாண்டியன் பாண்டிய
அரசு பெறத் தகாதவனாக இருத்தல் வேண்டும். காரணம் யாதாயினும் ஆகுக.
குலோத்துங்கற்கும் வீரபாண்டியற் கும் உதவியாக வந்த சிங்களவர் மூக்கறுப்புண்டு
இறந்தவர் போக எஞ்சியவர் கடல் வழியே இலங்கை நோக்கி ஓடினர். இங்ஙனம்
முதற்போர் கு லாத்துங்கற்கு வெற்றி அளித்தது. சோழன் மதுரையும் அரசும் கொண்டு
வெற்றித் துரண் நாட்டினன், மதுரையும் அரசும் விக்கிரம பாண்டியற்கு அருளி மீண்டனன்.[3]
முடித்தலை கொண்டது : தோற்று ஒடிய வீரபாண்டியன் சேர நாட்டை அடைந்தான்
சேரன் உதவியைப் பெற்று இழந்த நாட்டை மீட்க முயன்றான்; சிதறிக்கிடந்த தன்
பழைய சேனையையும் திரட்டிச் சேரப் படையுடன் பாண்டி நாட்டிற்குள் நுழைந்தான்;
இதனை அறிந்த குலோத்துங்கன் உருத்தெழுந்து தன் பெரும் படையுடன் சென்று
நெட்டுரிற் பகைவனைச் சந்தித்தான். இருதிறப் படைகட்கும் போர் நடந்தது. முடிவென்ன?
வீரபாண்டியன் தோற்றான்; அவன் படைவீரர் நாலாப் பக்கங்களிலும் ஒடலாயினர்.
அவனது முடி சோழன் கைப்பட்டது. அவன் கோப்பெருந்தேவியும் சிறைப்பட்டாள்.
குலோத்துங்கன் அவனைத் தன் வேளத்திற்கு[4] அனுப்பிவிட்டான். வீரபாண்டியன்
பொறுக்க இயலாத அவமானத்துடன் சேரநாட்டை அடைந்தான். சேரன் தான்
பாண்டியனுக்கு உதவிபுரிந்த தவற்றை உணர்ந்து, வீரபாண்டியனுடன் வந்து
குலோத்துங்கனைச் சரண் அடைந்தான். பெருந்தகையான குலோத்துங்கன் அவ்விருவரையும்
அரசர்க்குரிய முறையில் வரவேற்றுச் சிறப்புச் செய்தான்;[5] வீரபாண்டியற்குப் பாண்டிய
நாட்டில் ஒரு பகுதியை ஆள உரிமை அளித்து முடியும் ஈந்தான். வீரபாண்டியன் தான்
ஈன்ற மைந்தற்குப் பரிதி குலபதி (சோழர்குலத் தலைவன்) என்ற குலோத்துங்கன் விருதுப்
பெயரினை இட்டுச் சோழன் முன் நிறுத்த, குலோத்துங்கன் மகிழ்ந்து அவற்குச் சிறப்புப்
பல செய்தான்.[6] இதுகாறும் கூறிய செய்திகள் இரண்டாம் பாண்டிப்போர் ஆகும்.
பாண்டியனது முடித்தலை கொண்ட களம் ஆதலின் மதுரை, ‘முடித்தலை கொண்ட
சோழபுரம் எனப்பட்டது. இவ்விரு போர்களும் இவன் பட்டம் பெற்ற இரண்டு
ஆண்டுகட்குள் நடந்தனவாகும். இது, இவனது இரண்டாம் ஆண்டுக் கல்வெட்டு
ஒன்றில் (திருவக்கரையில்) இவை குறிக்கப்பட்டிருந்ததால் என்க. இச்செயல்களையே
இவன்மீது பாடப்பெற்ற ‘குலோத்துங்கன் கோவை'யும் புகழ்ந்து பாராட்டியுள்ளது.
வேள் நாட்டுப் போர்: மேற் கூறப்பெற்ற போர்கட்குப் பிறகு வேள் நாட்டை ஆண்ட
வீரகேரளன் என்பவன் குலோத்துங்கனைப் பகைத்துக் கொண்டான். அதனால்
இருவர்க்கும் போர் நிகழ வேண்டியதாயிற்று. அப்போரில் வீரகேரளன் தன் கைவிரல்கள்
தறிக்கப் பட்டுத் தோற்றான்; வேறு வழியின்றிச் சோழனிடமே அடைக்கலம் புகுந்தான்.
அடைந்தார்க்கு எளியனான அண்ணல் குலோத்துங்கன் அவனை வரவேற்றுத் தன்னுடன்
இருந்து உண்ணுமாறு உபசரித்து, அவனது நாட்டை அவனுக்கே அளித்து மகிழ்ந்தான்.[7]
ஈழம் கொண்டது : இராசாதிராசன் காலம் முதலே சோழர் செல்வாக்கை ஒழிக்க முயன்று
முடியாது தவித்த முதலாம் பராக்கிரமபாகு, குலோத்துங்கன் காலத்திலும் ஈழத்தரசனாக
இருந்தான். இவன் முன் போலவே மதுரையிற் பூசல் விளைக்க முனைந்தான். இதனை
உணர்ந்த குலோத்துங்கன் கி.பி. 1888 அல்லது 1889 இல் படை ஒன்றை ஈழத்திற்கு
ஏவினான். அப்படை சென்று சிங்களரைப் புறங்காட்டி ஒடச் செய்து மீண்டது.
இக்குலோத்துங்கன் ‘ஈழவேந்தன் முடிமீது தன் அடியினைச் சூடியவன்’ என்று
திருமாணிக்குழி கல்வெட்டுக்[8] கூறலால், ஈழத்தரசன் இவனைப் பேரரசனாக
ஒப்புக்கொண்டு அடங்கி விட்டான் என்று கோடல் தகும்.
கருவூர் கொண்டது : கருவூர் சேர நாட்டின் தலைநகராக ஒரு காலத்தில் இருந்தது; கொங்கு
மண்டலத்தின் கோநகரமாகவும் இருந்தது. இதனைத் தலைநகராகக் கொண்டுசேரர் மரபினர்
சோழர்க்கு அடங்கி ஆண்டுவந்தனர். அவருள், குலோத்துங்கன் காலத்தில் அரசனாக இருந்தவன்
தன் மனம் போனவாறு சோழனை மதியாது நாட்டை ஆண்டு வந்தான். அதனால்,
குலோத்துங்கன் அவனை அடக்கப் படையெடுத்தான். போர் மிகவும் கடுமையாக நடந்தது;
சேரன் படுதோல்வி அடைந்தான். போரில் தோற்ற சேரன் குலோத்துங்கனைச் சரணடைந்தான்.
இதனால், கருவூர் சோழன் கைப்பட்டது. இவன் அந்நகருள் நுழைந்து சோழ கேரளன்’
என்று மன்னர் தொழ வெற்றிமுடி சூடி விளங்கினான். அன்றுமுதல் குலோத்துங்கன்
‘சோழகேரளன்’ எனப்பட்டான்; கொங்குமண்டலம் ‘சோழ கேரள மண்டலம்’[9] எனப்பட்டது.
ஆயினும், பெருந்தன்மை பெற்ற குலோத்துங்கன், தன்னைச் சரண்புக்க சேரனுக்கே
நாடாளும் உரிமை அளித்து மீண்டான். அதுமுதல் சேரன் பேரரசற்கு அடங்கித் தன்
நாட்டை அமைதியுற ஆண்டுவந்தான். இங்ஙனம் அவனுக்குக் கருவூரில் முடிவழங்கினமையின்,
அந்நகரம் ‘முடிவழங்கு சோழபுரம்’ எனப் பெயர் பெற்றது.[10] இக் கொங்குப் போர்
இவனது 16-ஆம் ஆண்டிலிருந்து புறப்பட்ட கல்வெட்டுகளிற் குறிப்பிடப்படலால், இப்போர்
ஏறத்தாழக் கி.பி.194-இல் நடந்ததாதல் வேண்டும் எனக் கொள்ளலாம்.
கச்சி கொண்டது : கருவூரும் கச்சியும் கொண்டருளிய என்பது இவனது கல்வெட்டுகளிற்
பயின்று வரலால், கருவூர் வெற்றிக்குப் பிறகு அடுத்து நடந்த செயல் கச்சி கொண்டதாகும்
எனக் கோடல் தவறாகாது. இச்செயலைப் பற்றிய விவரம் உணரக்கூடவில்லை. மகாராசப்பாடி
ஏழாயிரம் ஆண்ட தெலுங்கு சோடனான ‘நல்லசித்தன் தேவன்’ என்பவன் கச்சியிலிருந்து
தான் திறைபெற்று வந்ததாகக் கூறிக்கொள்கிறான்.[11] அதனால், அவன், குலோத்துங்கன்
தென்னாட்டுப் போரில் ஈடுபட்டிருந்த போது, கச்சியைத் திடீரெனத் தாக்கிக் கைப்பற்றி
இருக்கலாம். உடனே குலோத்துங்கன் வடக்கு நோக்கிச் சென்று அதனைக் கைப்பற்றி
இருக்கலாம். குலோத்துங்கன் இங்ஙனம் கி.பி.196-இல் கச்சியைக் கைப்பற்றியதோடு
நல்ல சித்தனது தனிப்போக்கையும் அடக்கி ஒடுக்கி இருக்க வேண்டும். என்னை?
சித்தரசன் குலோத்துங்கன் ஆட்சி முழுவதிலும் அவனுக்கு அடங்கிய சிற்றரசனாகவே
இருந்து வந்தனன் ஆதலின் என்க.
---------
[1]. M.E.R. 458 of 1915.
[2]. S.I.I, Vol.3, No.86.
[3] 94 of 1918; S.I.I. Vol.3, p.212
[4]. ‘வேளம்’ என்பது அரண்மனையில் அரசரிடமும் அரசியரிடமும் இருந்த பணியாளர்
படை. அரசியர்க்குப் பணிப்பெண்கள் படை’ உண்டு.
[5]. 254 of 1925, 42 of 1906.
[6]. S.I.I. Vol, 3, No.88
[7]. V.R.R. Dikshitar's ‘Kulothunga Chola III, p.45
[8]. S.I.I. Vol.7, No.797 (170 of 1902)
[9]. M.E.R. 75 of 1925; 126, 127, of 1900.
[10]. S.I.I. Vol.3, No.23. 3. 483 of 1906.
[11]. 483 of 1906.
மூன்றாம் பாண்டிப் போர் : கி.பி. 1202-க்குச் சிறிது முன் குலோத்துங்கன் மதுரையில்
வீராபிடேகமும் விசயாபிடேகமும் செய்து கொண்டதாக இவனுடைய 26ஆம் ஆண்டுக்
கல்வெட்டுக் குறிக்கிறது. இதன் விவரம் குடுமியான் மலைக்கல்வெட்டில் விளக்கப்பட்டுள்ளது:
குலோத்துங்கனால் சிறப்புப்பெற்ற விக்கிரம பாண்டியன் மகனான ஜடாவர்மன்
குலசேகர பாண்டியன் பாண்டி நாட்டைக் கி.பி. 1190 முதல் ஆண்டு வந்தான். இவன்
சில ஆண்டுகளுக்குள் செருக்குற்றுச் சோழற்கு அடங்காமல் (தன் மனம் போனவாறு)
நாட்டை ஆண்டுவந்தான் குலோத்துங்கற்கு மாறான செயல்களையும் செய்து வந்தான்.
அவனுடைய மெய்ப்புகழ்கள் அவன் வெறுப்புற்ற மனப்பான்மையை நன்கு உணர்த்துகின்றன.
குலசேகரன் செய்து வந்த துரோகச் செயல்கள் சோழற்கு எட்டின. அவன் அரும்பாடுபட்டு
அமைதி நிலவச் செய்த பாண்டிநாடு குலசேகரன் ஆட்சியால் பாழாவதை அறிந்து சீற்றங்
கொண்டான் அவனைத் துரத்திவிட்டுப் பாண்டிய நாட்டைச் சோழர் அரசியற் பார்வையில்
வைத்தலே நேர்மையானது எனத் துணிந்தான். உடனே பெரும் படையுடன் பாண்டிய
நாட்டின்மீது படையெடுத்தான். உடனே மட்டியூர், கழிக்கோட்டை என்ற இடங்களிற்
கடும்போர் நடந்தது. அதிகம் அறைவதேன்? குலசேகரன் படை அழிந்தது. அவன்
காடுகளிற் புக்கு ஒளித்தான். உடனே சோழப்படை மதுரையைக் கைப்பற்றியது:
அரண்மனையுள் முடிசூட்டு மண்டபம் முதலியவற்றை இடித்து அழித்தது; அவ்விடங்களைக்
கழுதை ஏர் கொண்டு உழுது வரகு விதைத்துப் பாழ் படுத்திவிட்டது. இங்ஙனம் மதுரை
பாழானது. குலோத்துங்கன் சீற்றமும் தணிந்தது. இப்பெருமகன் மதுரையில் சோழ
பாண்டியன்’ என்ற பட்டமும், வீரமாமுடியும் தரித்து வெற்றித்துரண் நாட்டினான்; இங்ஙனம்
பாண்டியனையும் சேரனையும் வென்றமையால் திரிபுவன வீரன் என்ற சிறப்புப்
பெயரையும் பெற்றான். இப்போருக்குப் பின்னர்ப் பாண்டி மண்டலம் சோழபாண்டி
மண்டலம்’ எனப்பெயர்பெற்றது:சோழரது நேர் ஆட்சியில் அடங்கி விட்டது. மதுரை
‘முடித்தலைகொண்ட சோழபுரம்’ எனப்பட்டது; மதுரை அத்தாணி மண்டபம் சேர
பாண்டியர் தம்பிரான் எனப் பெயர் பெற்றது. இங்ஙனம் பெரு வெற்றி பெற்ற
குலோத்துங்கன் மதுரையில் விசய அபிடேகமும் வீர அபிடேகமும் செய்துகொண்டான்
என்று அவன் புதுக்கோட்டைக் கல்வெட்டுகள் கூறுகின்றன.[12] குலோத்துங்கன்
கொண்ட இப்பெரு வெற்றி கி.பி. 1201ஆம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டில் இவன்
‘திரிபுவன வீரதேவன் எனக் கூறப்பட்டிருத்தலின் என்க.
வட நாட்டுப் போர் : குலோத்துங்கன் ஏழு கலிங்கமும் கொல்லாபுரமும் உரங்கை, (ஓரங்கல்)
பொருதோன்’ என்று இவனது கோவை கூறுகிறது. இவனைப் பற்றிய புதுக் கோட்டைக்
கல்வெட்டுகள் இரண்டும் இச்செய்தியைக் குறிக்கின்றன. ஆயின், அவ்விடங்களில்
இவனது, கல்வெட்டு ஒன்றும் இல்லை. மேலும், காகதீயப் பேரரசனான கணபதி கி.பி.
1799-இல் பட்டம் பெற்று, மேலைச் சாளுக்கியரை அடக்கிப் பெரு நாட்டை ஆண்டு
வந்தான். அக்காலத்தில் சோழன் வடநாடு சென்று வெற்றி கொண்டான் என்பதற்கு
வடநாட்டில் ஒரு கல்வெட்டும் சான்றில்லை. ஆதலின், இது புகழ்ச்சி மொழி எனக்
கோடலே நன்று.[13] கம்பர் பெருமான் இக் குலோத்துங்கன் அவைப் புலவர் என்பது
அறிஞர் ஒப்புக் கொண்டதே ஆகும். அவர் இச் சோழனிடம் மனம் வேறுபட்டவராய்
ஓரங்கல்லைக் கோநகராகக் கொண்டு பெருநாட்டை ஆண்ட காகதீய முதற் பிரதாப
ருத்திரன் (கி.பி. 162-1197) என்பவனிடம் சென்று தங்கியிருந்தார் என்பது உண்மை
ஆயின் கம்பர் சோழற்குப் பகைவனான காகதீய அரசனிடம் சென்றிருந்தார் எனக்
கோடலே பொருத்தமாகும். இது பொருத்தமாயின், சோழனுக்கும் பிரதாபருத்திரற்கும்
பகைமை அல்லது பேரரசர் என்ற முறையில் பொறாமை இருந்திருத்தல் வேண்டுமன்றோ?
பகைமை ஆயின், புதுக்கோட்டைக் கல்வெட்டுகளிற் குறித்த குலோத்துங்கன் செய்த
வடநாட்டுப் போர்கள் உண்மையெனக் கோடவில் தவறில்லை அன்றோ? கோவையும்
கல்வெட்டுகளும் சேர்ந்து கூறும் வடநாட்டுப் போர் ‘நடந்திராது’ என்று ஒதுக்கி
விடுவதற்கில்லை. உண்மை மேலும் ஆராயற்பால தேயாம்.
சோழப் பெருநாடு : மூன்றாம் குலோத்துங்கனுடைய கல்வெட்டுகள் வடக்கே நெல்லூர்,
கடப்பைக் கோட்டங்களிற் காண்கின்றன; தெற்கே திருநெல்வேலி முடியக் கிடைக்கின்றன;
மேற்கே ஹேமாவதி, அவனி, எதுரூர் முதலிய மைசூர்ப் பகுதிகளிலும் கொங்கு
மண்டலத்திலும் இருக்கின்றன. ஆதலின் வடக்கே கடப்பை முதல் தெற்கே கன்னி முனை
வரையும், மேற்கே மைசூர் முதல் கீழ்க்கடல் வரையும் இவனது ஆட்சி பரவி இருந்ததென்பதை
அறியலாம்.[14]
இவனது ஆட்சிக்குட்பட்ட மண்டலங்களுட் சிறந்தது சோழ மண்டலமே ஆகும். அது
9 வள நாடுகளாகவும் 79 நாடுகளாகவும் பிரிக்கப்பட்டிருந்தது. சோழ மண்டலம்
‘பெரியநாடு’ எனப் பெயர் பெற்றிருந்தது[15].
கோ நகரங்கள் : விசயாலயன் வழிவந்த சோழவேந்தர் காலங்களில் ஆயிரத்தளி, தஞ்சை,
கங்கைகொண்ட சோழபுரம்,இராசராசபுரம் என்பன அரசர் வசிப்பதற்கேற்ற கோ நகரங்களாக
இருந்தன. ஆயிரத்தளி-நந்திபுரம், பழையாறை, முடிகொண்ட சோழபுரம் என்னும் பெயர்களைக்
கொண்டது. மூன்றாம் குலோத்துங்கன் இறுதிக் காலத்தில் அல்லது அவனுக்கு அடுத்துவந்த
மூன்றாம் இராசராசன் காலத்தின் தொடக்கத்தில் சோணாட்டை வென்ற சடாவர்மன்
சுந்தர பாண்டியன் இந்த ஆயிரத்தளி நகரை அழித்து வீர அபிஷேகமும் விசய அபிஷேகமும்
(குலோத்துங்கன் மதுரையிற் செய்தாற் போல) செய்து கொண்டான் என்பதிலிருந்து,
மூன்றாம் குலோத்துங்கன் கோநகரமாக இருந்தது ஆயிரத்தளியே ஆகும் என்பது
தெரிகிறது. இப்பிற்காலச் சோழர் காலத்திற் சிறந்த துறைமுகப் பட்டினமாக இருந்தது
நாகப்பட்டினமாகும்.
அரசியல் : மூன்றாம் குலோத்துங்கனது நீண்ட அரசாட்சியில் நேர்மை மிக்கிருந்தது.
அரசியல் அலுவலா ளராகப் பலர் இருந்தனர். அவருள் களப்பாளராயர், தொண்டைமான்,
நுளம்பாதிராசர், விழுப்பரையர், நந்தியராசர், வயிராதிராசர், வாணாதிராசர், காடவராயர்,
கொங்கராயர், சித்தரசர். விழிஞத்தரையர் என்போர் குறிப்பிடத் தக்கவராவர். இவர்கள்
நடு அரசாங்கத்திற்கு வந்த வழக்குளை விசாரித்து வேண்டியன செய்தனர்[16]; சிற்றுார்
அவைகள் செய்து வந்த வேலைகளைக் கண்காணித்து வேண்டியன செய்தனர்[17].
எனவே, நடு அரசாங்கம் இச் சோழன் காலத்தில் செம்மையாகப் பணி ஆற்றிவந்ததை
நன்கறியலாம். இவனது 38-ஆம் ஆட்சி ஆண்டில் தஞ்சாவூரில் நிலம் அளக்கும் வேலை
நடைபெற்றது[18]. அரசனுக்கு அந்தரங்கச் செயலாளராக இருந்து நாட்டுச் செய்திகளை
உடனுக்குடன் அறிவித்தும், அரசன் ஆணைபெற்றுச் செயலாற்றலை மேற்கொண்டும்
இருந்தவருள் இராசநாராயண மூவேந்தவேளான், மீனவன் மூவேந்த வேளான்,
நெறியுடைச் சோழ மூவேந்த வேளான் என்பவர் குறிப்பிடத்தக்கவர் ஆவர். இங்கனம்
திறமை பெற்ற அரசியல் உயர் அலுவலாளர் பலர் இருந்தமையால் பேரரசு நிலை
தளராது நன்னிலையில் இருந்தது.
சிற்றரசர் :
மலையமான்கள் : இக் குலோத்துங்கன் காலத்தில் முன் பிருந்தவாறே சிற்றரசர் அனைவரும்
இருந்துவந்தனர். இவருள் நெடுங்காலமாக வந்த மரபினர் சேதிராயர் என்ற மலையமான்கள்
ஆவர். இவர்கள் சேதிராச மரபினர் என்று தம்மைக் கூறிக்கொண்டதால், ‘சேதிய ராயர்’
எனப்பட்டனர். இவர்கள் நடு மாகாணங்களில் இருந்த (சேதி நாட்டிலிருந்த) ஹெய் ஹெயர்
மரபினர் என்று கூறிக்கொள்ள முயன்று இங்ஙணம் ‘சேதியராயர்’ எனக்கொண்டனர் போலும்!
அந்தக் காலம், ஒவ்வொரு சிற்றரச மரபினரும் புராணத்துள் கூறப்பட்டுள்ள ஒரு மரபைச்
சேர்ந்தவராகக் கூறிக்கொண்ட காலமாகும்[19]. இவர்கள் மலைநாட்டை ஆண்டவராதலின்
‘மலையர், மலையரையர், மலையகுலரயர், மலையமான்கள்’ எனப்பட்டனர்; கோவலூரைத்
தலைநகராகக் கொண்டமையின் ‘கோவ்லராயர்’ எனப்பட்டனர். முதல் இராசராசனது
தாய் இம்மலையர் மரபினளே ஆவள்[20], இம்மரபினர் திருக்கோவலூர், கிளியூர்,
ஆடையூர், ஆகியவற்றைத் தலைநகரங்களாகக் கொண்டு ஆண்டு வந்தனர். இவர்கள்
சோழப் பேரரசன் ஒருவன் காலத்தில் இருவராகவும் மூவராகவும் இருத்தல் காண -
இத்தலை நகரங்களைக் காண-இம்மரபினர் மலைநாட்டை இரண்டு மூன்று பிரிவுகளாகக்
கொண்டு ஆண்டு வந்தனர் எனக் கோடல் பொருந்தும். நமது மூன்றாம் குலோத்துங்கன்
காலத்தில் இருந்த இம்மரபரசருள் ‘மலையமான் பெரிய இராசராசச் சேதியராயன் ஒருவன்;
‘மலையமான் நரசிம்மவர்மன் கரிகால சோழ ஆடையூர் நாடாள்வான்’ மற்றொருவன்.
இவருள்முதல்வற்குச்சேனை மீகாமன் என்ற சிறப்புப் பெயர் இருந்தது[21]. இதனால்
சோழர் படைக்குச் சிறப்புடைத் தலைவனாக இவன் இருந்தான் என்பது தெரிகிறது.
பின்னவன், இரண்டாம் ராசாதிராசன் காலத்தில் பெருமான் நம்பிப் பல்லவ ராயனுடன்
பாண்டிய நாட்டுப் போரில் ஈடுபட்டு ஈழப்படையை வென்றவன் ஆவன். இவ்விருவரன்றி,
‘மலையமான் சூரியன் நீறேற்றான் இராசராச கோவல ராயன்’ என்பவனும் மலை
நாட்டுச் சிற்றரசனாக இருந்தனன் என்பது கல்வெட்டுகளால் தெரிகிறது
-----------
[12]. 163, 166 of Pudukkota Inscriptions.; இங்ஙனமே பிற்காலத்தில் வீரபாண்டியன் என்பவன்
சோணாட்டைக் கைப்பற்றித் தில்லையில் இவ்விரு அபிடேகங்களையும் செய்து கொண்டான்.
சுந்தரபாண்டியன் பிற்காலத்தில் இக் குலோத்துங்கன் செய்தவை அனைத்தும் சோணாட்டில்
செய்தான்.
[13]. K.A.N. Sastry’s ‘Cholas’ Vol.2, p.141-42
[14] K.A.N. Sastry’s ‘Cholas II, p. 155.
[15]. M.E.R. 521 of 1912
[16] 83 of 1926
[17]. 113 of 1928
[18] 188 of 1908
[19]. K.A.N. Sastry's ‘Cholas,’ Vol.2. p.164
[20]. S.I.I.Vol. 7, No.863
[21]. Ibid No.890
சாம்புவராயர் : இவர்கள் பழைய பல்லவர் மரபினர்; வட ஆர்க்கர்டு, தென் ஆர்க்காடு
கோட்டங்களைச் சோழர் அரசாங்கப் பொறுப்பாளராக இருந்து ஆண்டவர்கள் குடியினர்.
இவர்கள் நாளடைவிற் சிற்றரசராகிப் பொறுப்புடன் நாடுகளை ஆளலாயினர் இவருள்
குலோத்துங்கனது முற்பகுதி ஆட்சியில் இருந்தவன் செங்கேணி அம்மையப்பன் - பாண்டி நாடு
கொண்டான் - கண்டன் சூரியன் இராசராசச் சம்பு வராயன் என்பவன் ஆவன். இவன்,
இக்குலோத்துங்கன் அல்லது இராசாதிராசன் நடத்திய பாண்டிய நாட்டுப் போர்கள்
ஒன்றில் படைத்தலைவனாகச் சென்று வெற்றி பெற்றவன் என்பது இவனது சிறப்புப்
பெயரால் தெரிகிறதன்றோ? இவன் தென் ஆர்க்காடு கோட்டத்துப் பிரம்ம தேசத்தில்
உள்ள கோவில் காரியங்களை ஒழுங்கு செய்தவன் எண்ணாயிரம் என்னும் ஊரில்
ஒரு மண்டபம் கட்டியவன்; அச்சிறுபாக்கம் கோவிலுக்கு இரண்டு பட்டயங்களை
வழங்கியவன்[22]. இவன் காலத்திலும் இவற்குப் பின்னரும் குலோத்துங்கன் காலத்தில்
- ‘செங்கேணிமிண்டன் அத்திமல்லன் சாம்புவராயன்’ என்பவனும் செங்கேணி
அம்மையப்பன் கண்ணுடைப் பெருமான் ஆன விக்கிரம சோழன் என்பவனும்,
‘வீரசோழன் அத்திமல்லன்’ என்பவனும் குலோத்துங்க சோழச் சாம்புவராயன்
என்பவனும் ஆளப் பிறந்தான்; எதிரிலி சோழச் சாம்புவராயன் என்பவனும் குறிப்பிடத்
தக்கவர் ஆவர்[23]. இவருள் குலோத்துங்க சோழன் சீய மங்கலம் தூணாண்டார்
கோவிலில் மாளிகை ஒன்று கட்டினான்; அக்கோவிற்கு 12 வேலி நிலம் தேவதானமாக
விட்டான்[24]. அத்தி மல்லன் என்பவன் திருவோத்துார், திருவல்லம், அச்சிறுபாக்கம்
ஆகிய இடங்களில் உள்ள சிவன் கோவில்கட்குப் பல நிபந்தங்கள் செய்துள்ளான்[25].
காடவராயர் : இவர்கள் செங்கோணிக் குடியினரைப் போலவே பல்லவ மரபினர் ஆவர்.
இவர்கள் தங்களைப் பண்டைப் பல்லவர் மரபினர் என்றே கூறிவந்தனர். இவர்கள்
திருமுனைப்பாடிநாட்டுக் கூடலூரிலும் சேந்த மங்கலத்திலும் இருந்துகொண்டு
அந்நாட்டை ஆண்ட சிற்றரசர் ஆவர். இவர்கள் சோழப் பேரரசிற்குப் பெருந்துணை
புரிந்தவர்கள். இவருள், குலோத்துங்கன் காலத்தவர் - ‘ஆளப் பிறந்தான் வீரசேகரன்’
‘வாள்நிலை கண்டான் இராசராசக் காடவராயர்’ என்போராவர். அடுத்த சோழ அரசன்
காலத்தில் சோழப் பேரரசை நிலை கலங்க வைத்த கோப்பெருஞ் சிங்கன் இம்மரபரசனே
ஆவன். இவன் அழகிய பல்லவன் மகனாவன்[26].
வாணகோவரையார் : இவர்கள் மகாபலிமரபினர். இவர்கள் மாவலிராயர்’ என்றும் ‘பாண
அரசர்’ என்றும் கூறப்பட்டனர். இவர்கள் சங்ககாலச் சோழர் காலம் முதல் பிற்காலச்
சோழர் காலம் முடியப் பாணராட்டிரத்தை ஆண்ட சிற்றசரர் ஆவர். இவர்கள் பல்லவர்
காலத்திலும் இருந்தனர். இம்மரபினர் நடுநாடான மகதை மண்டலத்தை ஆண்டனர்.
இவர் தலைநகரம் ‘ஆரை’ எனப்படும் ஆரகழுர் (சேலம் கோட்டத்தில் உள்ளது) ஆகும்.
குலோத்துங்கன் காலத்தில் இம்மரபினர் இருவர் இருந்தனர். அவருள் ஒருவன்
‘ஏகவாசகன் குலோத்துங்க சோழ வாண கோ அரசன்’ என்பவன். இவன் கல்வெட்டுகள்
சேலம், திருச்சிராப்பள்ளி, தஞ்சைக் கோட்டங்களில் அமைந்துள்ளன[27]. மற்றொரு
தலைவன் ‘பொன்பரப்பினான் வாணகோவரையன்’ என்பவன். இவனைப் பற்றிய
பாடல்கள் பல திருவண்ணாமலை முதலிய இடங்களில் உள்ள கோவில் கல்வெட்டுகளில்
இருக்கின்றன[28]. அப்பாடல்கள் சிறந்த தமிழ்ப் புலவர் பாடியனவாகக் காண்கின்றன.
எனவே, இச்சிற்றரசன், நல்ல தமிழ்ப் புலவர்களைப் பாராட்டி ஊக்கி வந்தான் என்பது
தெளிவாகிறதன்றோ? இவன் திருவண்ணாமலைக் கோவிலைப் பொன் வேய்ந்தமையால்
‘பொன் பரப்பினான்’ எனப் பெயர் பெற்றான். இவன் பாண்டிய தாட்டுப் போரில்
ஈடுபட்டுச் சோழன் ஏவற்படி, பாணன் ஒருவனைப் பாண்டிய நாட்டிற்கு அரசனாக்கினன்
என்ற செய்தி ஒரு பழம் பாடலால் தெரிகிறது[29]. இச் செயல் சோழன் செய்ததாக
அவனது கல்வெட்டுக் குறிக்கிறது. எனவே, இச்செய்தி ஒரளவு உண்மை என்பது
தெரிகிறது. இவனைப் பற்றிய கல்வெட்டுகள் இவன் மதுரையை வென்ற செய்தியையே
மிகுதியாகக் குறிக்கின்றன.
அதியமான்கள் : இம்மரபினர் சங்க காலம் முதலே சிறப்புடன் இருந்தவர். இவர்கள் தகடுரைத்
தலைநகராகக் கொண்டு கொங்கு நாட்டின் ஒரு பகுதியை ஆண்டு வந்தவர். ‘இவர்கள்,
அதியேந்திரர், தகடாதிராயர்’ என்ற பட்டங்களை உடையவர். குலோத்துங்கன் காலத்தில்
தகடுரை ஆண்ட அதியமான்கள் ‘அதியமான் இராசராச தேவன்’ ஒருவன். இவன்
தகடூர் நாட்டில் பெண்ணையாற்று வட கரையில் உள்ள மலையனுTர் என்பதைத்
திருவண்ணாமலைக் கோவிலுக்குத் தேவதானமாக விட்டவன்[30]. அவன் மகன்
‘விடுகாது அழகிய பெருமான் ஒருவன் குலோத்துங்க சோழத் தகடாதிராயன் ஒருவன்:
சாமந்தன் அதியமான் ஒருவன். இவருள் விடுகாதழகிய பெருமான் என்பவன் தன்னை
அதியமான் நெடுமான் அஞ்சி என்ற சங்ககால அரசன் மரபினன் என்று கல்வெட்டுகளில்
குறித்துளன். இவன் மலையான் ஆகிய முன்சொன்ன ‘கரிகால சோழ ஆடையூர் நாடாள்வான்’
என்பவனுடனும் செங்கேணிக் குடியினனான அத்திமல்லன் என்பவனுடனும் ஓர் உடன்
படிக்கை[31] செய்து கொண்டான். அதனில், பேரரசனுடன் ஒத்துழைப்பதே வற்புறுத்தப்
பட்டுள்ளது. இதனால், இம்மூவரும் குலோத்துங்கனிடம் உள்ளன்பு உடையவராக
இருந்தனர் என்பது தெரிகிறது. இவன் தன் முன்னோருள் ஒருவனான எழினி, திருமலை
மீது வைத்த யக்ஷன் யகசினி படிமங்களைப் புதுப்பித்தான் என்று திருமலைக் கல்வெட்டு
கூறுகிறது[32].
கங்கர் : இம் மரபினர் கங்கபாடியை ஆண்ட சிற்றரசர் இவர்கள் சங்க கால முதல்
கங்கபாடியை ஆண்டு வந்தவர்; பல்லவர் காலத்தில் அவர் உதவிபெற்றுக்கதம்பருடன்
அடிக்கடி போரிட்டவர்; பிற்காலச் சோழர் ஆட்சியில் சோழர்க்கு அடங்கிய சிற்றரசராக
வாழ்ந்துவந்தனர். இவர் தம் தலைநகரம் கோலார் எனப்படும் ‘குவலாளபுரம்’ என்பது,
இந்நகரத்தைத் தலைநகராகக் கொண்டு சோழர்க்குட்பட்ட கங்கபாடியை ஆண்டவருள்
‘பங்களநாட்டுப்பிருதிவி கங்கன் அழகிய சோழன்’ ஒருவன்; ‘உத்தம சோழ கங்கன்’
ஒருவன்; மற்றொருவன் மராபர ணன் சீயகங்கன் என்பவன்[33]. இவன் 33 ஆண்டுகள்
அரசாண்டவன். இவன் மனைவி பெயர் அரிய பிள்ளை[34] என்பது. இவன் கல்வெட்டுகள்
எல்லாம் தமிழில் உள்ளன. இவன் தமிழ்நாட்டுக் கோவில்கட்கே நிபந்தங்கள் விடுத்துள்ளான்;
தமிழ்ப் புலவர்களையே ஆதரித் துள்ளான். பவணந்தி முனிவரைக் கொண்டு நன்னூல்
செய்வித்தவன் இவனே. கங்க நாட்டு அரசனான இவன் கன்னடம் அல்லது துளுவத்தைப்
போற்றி வளர்க்காமல் தமிழை வளர்த்ததும் தமிழிலே பெயர்கள் கொண்ட மையும்
தமிழ்நாட்டுத் தலங்கட்கே நிபந்தங்கள் விடுத்ததும் பாராட்டற்பாலனவே ஆகும். இத்
தமிழ்ப்பற்று, அருங்கலை விநோதனான மூன்றாம் குலோத்துங்கன் தொடர்பால்
உண்டாயிற்று எனின், மிகையாமோ?
சீயகங்கனைத் தவிர அம்மரபைச் சேர்ந்த பிறருள் பிருதிவிகங்கன் அழகிய சோழன் என்பவன்
ஒருவன்.இவன் பங்களநாடு ஆண்டவன். இவன் திருவண்ணாமலைக் கோவிலுக்குப் பல
நிபந்தங்கள் விடுத்துள்ளான்[35], உத்தம சோழ கங்கன் என்ற செல்வகங்கன் மற்றொருவன்.
இவன் மனைவி வட ஆர்க்காடு கோட்டத்தில் அகத்தியமலையில் திருநாவுக்கரசதேவர்
படிமம் செய்துவைத்தாள்[36].
----------
[22]. 167, 176 of 1918, 345 of 1917, 239 of 1901.
[23]. S.I.I, Vol. 3. Nos. 60. 61.
[24]. 61, 62. of 1900.
[25] 80 of 1900
[26]. 74 of 1918; 463 of 1921; 487 of 1921; 316 of 1902.
[27]. 72 of 1890,476 of 1907, 461 of 1913.
[28]. Sen Tamil Vol. 3, pp. 427-433.
[29]. பெருந்தொகை, செ. 1188
[30]. 626 of 1902.
[31]. S.H.I. Vol. 7, No.119
[32]. S.I.I. Vol. 1, No.75
[33]. M.E.R. 1 16 of 1992
[34]. S.I.I. Vol.3, No.62
[35]. 546, 558 of 1902
[36].. 559 of 1906
தெலுங்குச் சோடர்: இவர்கள் வட ஆர்க்காடு, தென் ஆர்க்காடு ஆகியவற்றின் வட பகுதியையும்
சித்துர், நெல்லூர், கடப்பை முதலிய கோட்டங்களையும் சிறு நாடுகளாகப் பகுத்து ஆண்டவர்.
இவர்கள் தங்களைக் ‘கரிகாலன் மரபினர்’ என்று கூறிக்கொண்டனர்; பொத்தப்பியைத்
தலைநகராகக் கொண்டு ஆண்டவர் ‘பொத்தப்பிச் சோடர்’ எனப் பட்டனர். தெல்லுரைத்
தலைநகராகக் கொண்டு ‘சோடா சித்தரசர்’ என்பார் ஆண்டுவந்தனர். இம் மரபினர்
அனைவரும் காளத்தி முதலிய இடங்களில் உள்ள கோவில்கட்கு நிபந்தங்கள் மிகப்பலவாக
விடுத்துள்ளனர். இவருள் குலோத்துங்கன் காலத்தவர் - மதுராந்தக பொத்தப்பிச் சோழன்,
நல்ல சித்தரசன், சோடன் திருக்காளத்தி தேவன் என்பவராவர்[37].
இதுகாறும் கூறப்பெற்றவர் குறிப்பிடத்தக்க பெரிய சிற்றரசர் ஆவர். இவர்கள் சிற்றரசராகவும்,
அமைச்சர், படைத் தலைவர், நாடு பார்ப்போர், நாடு காப்போர், இறை பெறுவோர்
என்ற பலதிற உயர் அலுவலாளராகவும் இருந்தவர் ஆவர். இவர் ஒவ்வொருவரிடமும்
தனித்தனிப் படைஉண்டு. அப்படை பேரரசன் வேண்டும் போது உறுதுணை செய்ய
விடப்படும். இச்சிற்றரசர் அன்றிப் பல்வேறு சிற்றுார்களையும் பேரூர்களையும்
ஆண்டவர் பலராவர்; அவர்கள் பல அறப்பணிகள் செய்துள்ள மையால் கல்வெட்டுகளில்
இடம் பெற்றுள்ளனர்.
சிற்றரசர் ஒப்பந்தம் : இத்தலைவர்கள் அடிக்கடி தங்கட்குள் கூடிப் பேரரசனுக்கு
உண்மையுள்ளவர்களாக இருப்போம் என்று ஒப்பந்தம் செய்து கொள்ளுதல் உண்டு.
இருவர்மூவராகக் கூடித் தமக்குள் ஒப்பந்தம் செய்தலும் உண்டு. குலோத்துங்கன் 27-ஆம்
ஆட்சி ஆண்டில் (கி.பி. 1025-இல்) சிற்றரசர் பதின்மர்கூடிப் பேரரசர்க்கு மாறாக ஒர்
ஒப்பந்தம் செய்து கொண்டனர். அது பின்வருமாறு[38]:-
‘இவ்வனைவோரும் எங்களில் இசைந்து கல்வெட்டின் படியாவது நாங்கள் ஒரு காலமும்
இராச காரியத்துக்குத் தப்பாமே நின்று, சேதிராயர் அருளிச் செய்தபடியே பணி செய்யக்
கடவோமாகவும். இப்படிச் செய்யுமிடத்து, மகதை நாடாள்வானான வாணகோவரையனும்
குலோத்துங்க சோழர் வானகோவரையனும் இவர்கள் பக்கம் ஆளாதல் ஒலையாதல்
போகக் காட்டுதல் உறவு பண்ணுதல் அறுதி செய்தல் செய்யக் கடவோம் அல்லாதோம்
ஆகவும். இவர்களும் இவர்கள் அனுதாபத்துள்ளார் பக்கல் நின்றும் ஆளாதல்- ஒலையாதல்
வந்துண்டாகில் தேவர் பூர் பாதத்திலே போகக் காட்டக் கடவோம் ஆகவும். எங்களில்
ஒருவன் வேறுபடநின்று இராசகாரியத்துக்கும் சேதிராயர் காரியத்துக்கும் எங்கள்
காரியத்துக்கும் விரோதமாகச் சில காரியம் செய்ததுண்டாகில். தேவரும் நாங்களும்
இவனை. அறச் செய்யக்கடவோமாகவும். எங்களிலே ஒருவரை வாணகோவரையாராதல்
இராசராசக் காடவராயனாதல் வினை செய்தார் உண்டாகில், படையும் குதிரையும்
முதலுக்கு நேராகக் கொண்டு குத்தக் கடவோமாகவும். இப்படிச் செய்திலேமாகில்
வாணகோவரையருக்குக் கடைகாக்கும் பறையருக்குச் செருப்பு எடுக்கிறோம்.”
இவ்வொப்பத்தத்தில் வாணகோவரையனும் காடவ ராயனும் பேரரசற்கு மாறுபட்டவர்
என்பது அறியக் கிடத்தல் காண்க. 1.
இங்ஙனமே தனிப்பட்ட சிற்றரசர் இருவர்-மூவர் கூடிச் செய்துகொண்ட ஒப்பந்தங்களும்
உண்டு. அவற்றுள் ஒன்று குலோத்துங்கனது 15-ஆம் ஆண்டிற் செய்துகொண்டது.
அதன் விவரம் காண்க[39] :
“மலையன்... ஆடையூர் நாடாள்வாருக்கும் விக்கிரம சோழச் சாம்புவராயருக்கும்,
விடுகாதழகிய பெருமானான இராசராச அதிகைமானேன் கல்வெட்டின் படியாவது
இவர்கள் எனக்கு ஒருகாலமும் தப்பாதிருக்க நானும் இவர்கட்குத் தப்பாதிருக்கக்
கடவேனாகவும், எனக்கு இன்னாதார் இவர்கட்கு இன்னாதார்கள் ஆகவும், இவர்கள்
பகை என் பகையாகவும், என்பகை இவர்கள் பகையாகவும், யாதவராயர் பக்கலும்
செய்யகங்கர் பக்கலும் குலோத்துங்கச் சோழச் சாம்புவராயர் பிள்ளைகள் பக்கலும்
ஆளும் ஒலையும் போகக் காட்டுதல் உறவு பண்ணுதல் செய்யாதேனாகவும். இப்படி
சம்மதித்தேன் விடுகாதழகிய பெருமானேன். இப்படிக்குத் தப்பினேன் ஆகில் எனக்கு
இன்னாத சரியாள்வான்செருப்பும் எடுத்துத் தம்பலமும் தின்றேன் ஆவேன்.”
இத்தகைய ஒப்பந்தங்கள் பேரரசன் அறிவின்றியே நடந்தன. அதனால், நாளடைவில்
சிற்றரசர்களுக்குள் பல கட்சிகள் ஏற்பட்டு இருந்தன. இக் கட்சிகள் பிற்காலத்தில்
வலுப்பெற்றுப் பேரரசையே நிலைகுலையச் செய்து விட்டன. இவை முதல் இராசராசன்
காலமுதல் முதற் குலோத்துங்கன் காலம்வரை இல்லாதிருந்தன. அதனால் சிற்றரசர்
பேரரசிற்குக் கட்டுப்பட்டு ஆணைவழி நின்றனர்; நடு அரசாங்கமும் பொறுப்புடன்
வேலை செய்துவந்தது.
கலை வளர்ச்சி : மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டுகள் முதல் 24 ஆண்டுகள்வரை
இவனுடைய போர்ச் செயல்களைக் குறிக்கின்றன. பிற்பட்டவை 1. போரைக் குறித்தில.
ஆதலின் அப்பிற்பட்ட 15 ஆண்டுகள் அமைதி நிலவிய காலம் எனக் கொள்ளலாம்.
அக்காலத்திற்றான் இவனது பேரவையில் புலவர் பலர் தமிழ் வளர்த்தனர் போலும்! இவன்
காலத்து இருந்த புலவர் (1) குலோத்துங்கன் கோவை ஆசிரியர், (2) வீராந்தப் பல்லவராயர்,
(3) சங்கர சோழன் உலா ஆசிரியர், (4) கம்பர், (5) குணவீர பண்டிதர், (6) அரும்பாக்கத்து
அருள்நிலை விசாகன், 97) திருவரங்கத் தமுதனார், (8) பவணந்தி முனிவர் முதலியோர்
ஆவர். இவர்களைப்பற்றி விரிவாக ‘இலக்கிய வளர்ச்சி’ என்னும் தலைப்பில் (பிற்பகுதியில்)
காண்க.
குலோத்துங்கன் கோவை ஆசிரியர் இக்குலோத்துங் கனை, ‘எண்ணெண் கலையே தெரியும்
குலோத்துங்க சோழன்’ என்றும், ‘கலைவாரி’ என்றும், பல நூற் புலவோர்க்குத் தாபரன்
எனவும் புகழ்தலால், இவன் கல்வி கேள்விகளிற் சிறந்தவன் என்பதும் புலவரைப்
போற்றினவன் என்பதும் அறியக்கிடக்கின்றன. அவர் இவனை, ‘தமிழ்வாணர் தெய்வக்
கவியாபரணன்’ எனவும் ‘பாவலர் காவியம் சூடும் குலோத்துங்க சோழன்’ எனவும்.
‘கொழித்துத் தமிழ் கொள்ளும் கிள்ளி’ எனவும். வியன்பார் அனைத்தும் கோதே பிரித்தெறி
கோமான்’ எனவும் பாராட்டி இருத்தலால், இவன் புலமை மிக்கவன் என்பதும், புலவர்
தகுதி அறிந்து பரிசளித்தவன் என்பதும் விளங்குகின்றன அல்லவா? இவன் இங்ஙனம்
பெரும் புலவனாக இருத்தமையாற்றான் - கல்வியிற் சிறந்த கம்பர் தம் அவைக்களத்தில்
இருக்கும் பேற்றைப் பெற்றான்; உலகம் புகழும் பேற்றைப் பெற்றான்! இராமாயணம்
உள்ளளவும் கம்பர் பெயர் உள்ளளவும் குலோத்துங்கன் பெயர் நின்று நிலவும் அன்றோ?
வீராந்தப்பல்லவ ராயர் : இவர் குலோத்துங்கன் அவைப் புலவர். இவர் வேண்டுகோட்படி
அரசன் ‘காலவிநோத நிருத்தப் பேரரையானான பரராசவன் பொன்னன்’ என்பவற்குத்
திருக்கடவூர்ச் சிவன் கோயிலில் ‘நட்டுவ நிலை’ என்ற தொழில் நடத்தும்படி
ஆணையளித்தான்[40]. இதனால் இப்புலவர்பால் அரசன் கொண்டிருந்த மதிப்புத்
தெரிகிறதன்றோ?
இலக்கண மண்டபம்: இது வியாகரனதான வியாக்யான மண்டபம் என வடமொழியிற்
பெயர் பெறும். திருவொற்றியூரில் கோவிலைச் சேர்ந்து இம்மண்டபம் இருந்தது. அங்கு
மாணவர் பலர் வடமொழி இலக்கணப் பயிற்சி பெறுவதற்காக மண்டபம் ஒன்று இருந்தது.
இதனைக் கட்டியவன் நெல்லூரை ஆண்ட சித்தரசர் அதிகாரி ஒருவன். அவன் இக்
கல்விச்சாலை நன்கு நடைபெறக் குலோத்துங்கன் காவனுர் என்ற சிற்றுரை உதவினான்.
அவ்வூரைக் குலோத்துங்கன் இறையிலியாக்கக் கட்டளை பிறப்பித்தான்[41].
இங்ஙனம் இக்குலோத்துங்கன் கல்வி நிலையைத் தன் பெருநாட்டில் பலபடியாகச்
சிறப்பித்துள்ளான்; தமிழ் வாணரைப் போற்றி ஆதரித்து நாட்டில் தமிழ்க்கல்வி பரவும் படி
செய்துள்ளான்; கோவில்களில் திருப்பதிகங் களை ஒதவும் வடமொழிப் பயிற்சியை
மாணவர்க்கு அளிக்கவும் ஏற்பாடுகள் செய்துள்ளான்.
சமய நிலை : மூன்றாம் குலோத்துங்கன் சிறந்த சிவ பக்தன். இவனைக் ‘காமாரிக்கு
அன்பன்;’ ‘வெள்விடை யோன் தன்னேயம் தன்னை மறவாதவன்’, ‘நாகாபரணனை
ஏத்துவோன்’ என்றெல்லாம் குலோத்துங்கன் கோவை புகழ்ந்துள்ளது. திருவாரூர் வீதி
விடங்கப் பெருமானே இவனை ‘நம் தோழன்’ என்று கூறியதாகத் தம் கோவில் தானத்தார்க்கு
அப்பெருமானே கட்டளை இட்டாற் போல இவனது I, 2, 24-ஆம் ஆண்டுக் கல்வெட்டுக்
குறிக்கிறது. [42 ] இக்கல்வெட்டுச் செய்தியால், இவன் சிவபெருமானிடம் கொண்டிருந்த
பற்று நன்கு விளங்குகின்றதன்றோ?
ஞான குரு : இராசராசன் முதலியோர்க்கு ஞானகுரு இருந்தாற் போலவே இவனுக்கும்
ஞானகுரு ஒருவர் இருந்தார். இவர் ஈசுவர சிவன் என்பவர். இவர் ஒரு சைவப் பெரியார்.
இவர் லாட நாட்டவர்; சாண்டில்ய கோத்திரத்தார்; ‘கண்ட சம்பு’ என்பவர் மகனார்.
இவரே திரிபுவனம் என்னும் பதியில் உள்ள சிவன் கோவிலைப் பிரதிட்டை செய்தவர் ஆவர்.
சுவாமி தேவர் : இவர் சைவ மடத்துத் தலைவர். இவர் தம் தவச் சிறப்பால் ஈழப்படைகளைத்
தோல்வியுறுமாறு செய்தவர் என்று சிற்றரசன் கல்வெட்டொன்று கூறுகிறது. இவர்
பிரதிட்டித்த அச்சுதமங்கலம் சிவன் கோவிலுக்குக் குலோத்துங்கன் இறையிலி அளித்துள்ளான்.
இவன் திருக்கடவூரில் இச்சோழன் விதித்திருந்த சில ஒழுக்கங்களை மாற்றி அமைத்தான்.[43]
அம்மாற்றத்தை அரசனும் ஏற்றான் என்பதிலிருந்து அரசன் இவர் மாட்டுக்கொண்டிருந்த
அளப்பரிய மதிப்புத் தெற்றெனத் தெரிகிறதன்றோ?
பிற மடங்கள் : ‘மாவிரதிகள்’ எனப்பட்ட காளாமுகரது ‘கோமடம்’ என்பது திருவானைக்காவில்
இருந்தது. ‘சதுரானன பண்டித மடம்’ என்பது திருவொற்றியூரில் இருந்தது. ‘வாரணாசி
பிக்ஷா மடம்’ என்பது பந்தணைநல்லூரில் இருந்தது. ‘வாரணாசிலக்ஷாத்யாய இராவாளரது
கொல்லா மடம்’ என்பது திருப்பாசூரில் இருந்தது. இவை அனைத்தும் சைவ ஆசாரிய
பீடங்களாகக் குலோத்துங்கன் ஆட்சியில் திகழ்ந்தன.[44]
அரசன் சைவத் திருப்பணிகள் : குலோத்துங்கன் செய்துள்ள கோவில் திருப்பணிகள் பல
ஆகும்; அவற்றுள் குறிப்பிடத்தக்கவை இவை:-(1) இவன் தனது 26ஆம் ஆட்சி ஆண்டில்
உத்தரமேரூர்ப் பிடாரியார்க்கும் ஏழு மாதர் இடங்கட்கும் பத்துவேலி நிலம் தேவதானமாக
விடுத்துள்ளான்.[45] (2) அதே ஆண்டில் திருஒற்றியூர்ச் சிவபெருமானுக்குத் திரு அணிகலன்களும்
திருவாடு தண்டும் இருமுறை அளித்துளன்; (3) மதுரை ஆலவாய்ப் பெருமானுக்குத்
தன் பெயரால் திருவீதியும் திருநாளும் அமைத்தான்; தான் தென்னாட்டாரிடம் திறைகொண்ட
பொன்னால் அக்கோவிலை வேய்ந்தான்; இறையிலி நிலங்கள் பல அளித்து, மகிழ்ந்தான்[46]:
(1) திரிபுவனத்தில் ‘கம்பஹரேசுவரர்’ என்ற ‘திரிபுவனேசுவரர்’ கோவிலைக் கட்டி முடித்தான்.
இஃது இவனது ஆட்சியின் சிறந்த நினைவுக்குறியாக விளங்குகின்றது. இக்கோவிலின்
திருமதில்கள் முழுவதும் அழகிய சிற்ப வேலைகளாலும் ஒவியங்களாலும் நிரப்பப்பட்டுள்ளன.
இங்குள்ள இராமாயண வரலாறு உணர்த்தும் சிற்பங்கள் பார்க்கத் தக்கவை. (4)
குலோத்துங்கன் தில்லை நடராசப் பெருமானது திருமுக மண்டபத்தையும் அம்மன்
கோபுரத்தையும் கோவில் திருச்சுற்றையும் கட்டுவித்தான்;[47] ‘முடித்தலை கொண்ட
பெருமாள் திருவீதி’ என்று மேற்குத்தெரு ஒன்றை எடுப்பித்தான். (5) திருவாரூரில் உள்ள
சபாமண்டபமும் பெரிய கோபுரமும் இவன் முயற்சியால் இயன்றவை. இவன் கச்சி ஏகம்பர்
கோவிலையும் புதுப்பித்தான்.[48]
-------------
[37]. K.A.N. Sastry's Chołas's. Voi, 2, pp. 134-140
[38]. S.I. Vol.8, No. 106
[39]. S.I.I. Vol. 7, No. 119.
[40]. M.E.R. 255 of 1925
[41]. M.E.R. 201 of 1931.
[42]. M.E.R. 554 of 1904.
[43]. M.E.R. 40 of 1906; 393, 395 of 1920
[44]. M.E. R. 357 of 1911, 72 of 1931, III. of 1930.
[45]. S.I. IV. 849.
[46]. 163, 166 of Pudukkottai Ins
[47] .A.R.E. 1908, II. 64, 65.
[48]. 163, 166 of Pudukkottai Ins.
வைணவத் திருப்பணிகள் : குலோத்துங்கன் தன் முன்னோரைப்போலவே சமய நோக்கில்
விரிந்த மனப்பான்மை உடையவன். இவன், வேலூரில் உள்ள திருமால் கோவிலுக்கு மூன்று
சிற்றுார்களை ஒன்றாக்கிக் ‘குலோத்துங்க சோழநல்லூர்’ எனத்தன் பெயரிட்டுத் தேவதானமாக
அளித்தான்; அக்கோவிற்குக் ‘குலோத்துங்க சோழ விண்ணகரம்’ எனப்பெயரிட்டான்.[49] இவன்
இசைவு பெற்றுத் திருக்கோவலூர் மலையமான்கள் செய்த பெருமாள் திருப்பணிகள் பலவாகும்.
இங்ஙனமே பிறரும் செய்துள்ளனர்.
சமணத் திருப்பணி : இவனது ஆட்சியில் மண்டியங் கிழான் குலோத்துங்கசோழக் காடுவெட்டி
என்பவன் ஒர் உயர்அலுவலாளன் ஆவன். இவன் சமணப் பற்றுடையவன் ஆவன். இவன்
வேண்டுகோளின்படி குலோத்துங்கன், சைனக் கோவில் ஒன்றுக்கு 20 வேலி நிலம் பள்ளிச்
சந்தமாக விட்டான், சமண குருவான ‘சந்திரகிரி தேவர்’ என்பார்க்குக் கொட்டையூர் ஆசிரியப்
பட்டம் கொடுத் தருளி, அம்பையிலே 20 வேலி நிலம் தானமாக அளித்தான்.[50]
இப்பெருந்தகையாளன் இவற்றுடன் நிற்கவில்லை; திருநறுங்கொண்டைச் சமணப் பெரும்
பள்ளிக்கு வேண்டிய நிபந்தங்களுக்கும் அமணப் பிடாரர்க்கும் பத்துவேலி நில வருவாயை
இறையிலி செய்துள்ளான்; ‘இந்நிலத்துக்கு அமணப்பிடாரர் சொன்னவாறு செய்வது; இவர்
வசமே இருக்க’ எனத் திருவாணையும் பிறப்பித்தான்; அப்பெரும் பள்ளியிற் கோவில்
கொண்டிருந்த அப்பாண்டார் வைகாசித் திருநாளுடனே தன் பெயராலேயும் (‘இராசாக்கள்
நாயன் திருநாள்’ என்பது) ஒரு திருநாள் நடத்த ஏற்பாடு செய்து, அவ்விழாவிற்காகத் தனியே
நிலம் அளித்துள்ளான்.[51]
சுருங்கக்கூறின், இவனது ஆட்சியில் எல்லாச்சமய நிலையங்களும் சிறப்புப்பெற்றன
எனலாம்; கோவில்கள் செம்மையாக மேற்பார்வை இடப்பட்டன; விழாக்கள் நன்முறையில்
நடைபெற்றன; கோவில் கண்காணிப்பு வேலை செவ்வனே நடந்தன; குற்றவாளிகள்
அவ்வப்போது தண்டிக்கப்பெற்றனர்.[52]
அரசன் சிறப்புப் பெயர்கள் : இவன் பரகேசரி குலோத்துங்க சோழ தேவன் எனப்பட்டான்.
‘திரிபுவன சக்கரவர்த்தி என்ற பெயரும் இருந்தது. இவற்றுடன் இவன் வீ ரராசேந்திரன்,
குமார குலோத்துங்கன், முடிவழங்கு சோழன், திரிபுவன வீரதேவன், முடித்தலை கொண்ட
பெருமான், உலகுடைய நாயனார், உலகுடைய பெருமான், உலகுய்ய வந்த நாயனார்,
இராசாக்கள் தம்பிரான், இராசாக்கள் நாயன்,தனிநாயகன், தியாக விநோதன் முதலியன
பெற்றிருந்தான். இவை அனைத்தும் இவனுடைய எண்ணிறந்த கல்வெட்டுகளில்
பயின்றுள்ளன. இவற்றுடன் இவனுக்குக் கோனேரின்மை கொண்டான்’ என்றதொரு
சிறப்புப் பெயரும் இருந்தது. ‘கோனேரின்மை கொண்டான் வீரராசேந்திரன் திரிபுவன
வீரதேவன்’ என்பது இவனது கல்வெட்டு.[53]
தியாக விநோதன் : இப் பெயர்களுள் இவன் பெரிதும் விரும்பியது தியாக விநோதன்
என்பது. இதனை இவன் காலத்துமக்கள் வழங்கினர். ‘தியாகவிநோதபட்டன்’, ‘தியாக
விநோத மூவேந்த வேளான்’, ‘தியாக விநோதன்’ என்ற பெயர்களைக் கல்வெட்டுகளிற்
காணலாம். ஊர்கட்கும் இப்பெயர் இடப்பட்டிருந்தது.தியாக விநோதன் திருமடம்’ என
மடத்துக்கும் இப்பெயர் இடப்பட்டிருந்தது. ‘தியாக மேகம்’ என்று இராசராசன் வழங்கப்பட்டான்;
‘தியாக சமுத்திரம்’ என்று விக்கிரம சோழன் குறிக்கப்பட்டான். ஆனால் இச் சோழனோ
தியாக விநோதன் எனக் கூறப் பெற்றான். இவ்வரிய முற்சோழர்க்கு இல்லாத இவனுக்கே
சிறப்பாக அமைந்த பெயரைத் தானே கம்பர் பெருமான், “சென்னிநாட் டெரியல் வீரன்
தியாகமா விநோதன்” என்று தமது இராமாயணத்துள் கூறி மகிழ்ந்தனர்! அப்பெரும்
புலவர் இவனை ‘அமலன்’ என்றும் குறித்துள்ளார். ‘அகளங்கன்’ என்றாற் போல ‘அமலன்’
என்பதும் ‘குற்றமற்றவன் என்னும் பொருளையே தரும்.
அரச குடும்பம் : இவனது பட்டத்தரசியின் இயற்பெயர் தெரியவில்லை. இவள் ‘புவன
முழுதுடையாள்’ எனப்பட்டாள். இவள், சோழ முடிமன்னர் மரபுப்படி நாளோலக்கத்தில்
அரசனுடன் அரியனைமீது அமரும் பேறு பெற்றவள். மற்றொரு மனைவி ‘இளைய
நம்பிராட்டியார்’ என்பவள். இஃது இவள் பெயரன்று. அரசன் தன் கல்வெட்டில் ‘நம்
பிராட்டியாரில் இளைய நம்பிராட்டியார்’ என்பதால், இவனுக்கு மனைவியர் இருவரே
இருந்தனர் என்பது தெரிகிறது. பிள்ளைகள் இருந்தனர் என்பது தெரியவில்லை. அரச
குடும்பத்தில் இருந்த முதியவள் அம்மங்கா தேவி என்பவள். இவள் ‘சுங்கம் தவிர்த்த
ஸ்ரீ குலோத்துங்கசோழ தேவரின் திருமகளார் பெரிய நாச்சியாரான அம்மங்கை
ஆழ்வார்[54]’ என்று கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டவள். இவள் பெயர் குலோத்துங்கனது
5-ஆம் ஆட்சியாண்டில் காணப் படுகிறது. அப்பொழுது இவளுக்கு ஏறத்தாழ 80 வயது
இருக்கலாம் என்று கோடல் பொருத்தமாகும். இவள் தன் வாணாளில் முதற்
குலோத்துங்கன், இரண்டாம் குலோத்துங்கன், விக்கிரம சோழன், இரண்டாம்
இராசராசன், இரண்டாம் இராசாதிராசன், மூன்றாம் குலோத்துங்கன் ஆக அறுவர்
அரசாண்ட பெருங்காட்சியை விழியாரக் காணும் பேறு பெற்ற பெருமகள் ஆவள்.
நல்லியல்புகள் : பரகேசரி மூன்றாம் குலோத்துங்கன் செய்த போர்களிலிருந்தும் பெற்ற
வெற்றிகளிலிருந்தும் “இவன் சிறந்த மானவீரன்” என்பது தெரிகிறது. தன்னை அடைக்கலம்
புகுந்த பாண்டியன், சேரன், வேணாட்ட ரசன், கரூர் அரசன் இவர்களைத் தக்க சிறப்புடன்
நடத்தி அவர்கட்கு அவர்தம் நாடுகளை ஆளக்கொடுத்த இவன், ‘அடைந்தார்க்கு எளியன்’
என்பதை உணர்த்துகிறது. தன்னிடம் பகைத்த அரசரை வென்று அவர் நகரங்களை
அழித்தனன் என்பதிலிருந்து இவன், ‘பகைவர்க்குக் காலன்’ என்பது விளங்குகிறது.
கம்பர்போன்ற பெரும் புலவர் நட்பைப்பெற்ற இவன் சிறந்த தமிழ்ப் புலவனாகவும்
புலவரைப் போற்றும் புரவலனாகவும் இருந்தான் என்பதுதெரிகிறது. இவனுடைய
சைவ சமயத் திருப்பணிகளை நோக்க, இவ்வள்ளல் சிறந்த சிவ பக்தன்’ என்பதை
அறியலாம். ஆனால் அதே சமயம் இவன் செய்துள்ள பிற சமயத் திருப்பணிகளைக்கான,
இவனது பரந்த சமய நோக்கம் நன்கு விளங்குகிறது. இவன் மதுரை சென்று வெற்றி
கொண்டபோது ‘அருமறை முழுதுணர்ந்த அந்தணரை அகரம் ஏற்றி ஆதரித்தான்” என
வருதலையும், திருவொற்றியூர் வியாகரனசாலைக்கு இறையிலி அளித்தனன் என
வருவதனையும் நோக்க, இவன் வடமொழிமீதும் வடமொழியாளர்மீதும் கொண்டிருந்த
பற்றும் மதிப்பும் நன்கு விளங்குகின்றன. இவன் கொடைத்திறத்தில் எப்படிப்பட்டவன்?
“தண்டமிழ்க்குப் பொன்னே பொழியும் குலோத்துங்கன்”
“முகில் ஏழுமென்னப் பொன்போத நல்கும் குலோத்துங்க சோழன்”
என்று பலபடியாக இவனைக் கோவை ஆசிரியர் புகழ்தலால், இவனது வள்ளற்றன்மை
தெற்றெனத் தெரிகிறதன்றோ? கம்பரும் இவனது ஈகைத் தன்மையை உவமை முகத்தால்
பாராட்டி இருத்தல் காண்க
“புவிபுகழ் சென்னிபோர் அமலன் தோள்புகழ்
கவிகள்தம் மனையெனக் கனக ராசியும்
சவியுடைத் தூசுமென் சாந்து மாலையும்
அவிரிழைக் குப்பையும் அளவிலாதது.!”
----------
[49]. M.E.R. 114 of 1919.
[50]. S.I.I. Vol. 4, No.366
[51]. S.I.I. Vol. 7, 1011-1014
[52]. 80 of 1925 of 1929.
[53]. இதனுடன் வீரராசேந்திரன் கல்வெட்டுத் தொடக்கத்தைக் குழப்பலாகாது.
அது ‘வீரசோழ கரிகால சோழ வீரராசேந்திர இராசகேசரி பன்மரான கோனேரின்மை
கொண்டான்’ என வரும்.; Vide M.E.R. 51 of 1931.
[54]. S.I.I. Vol 4, No.226.
----------
3.7. மூன்றாம் இராசராசன் (கி.பி. 1216-1246)
கல்வெட்டுகள் : மூன்றாம் இராசராசன் மூன்றாம் குலோத்துங்கனுக்கு என்ன உறவினன் என்பது
தெரியவில்லை. இளவரசன் அல்லது பின்வந்த முடியரசன் தனக்கு முற்பட்ட அரசனைக்
கூறிவந்த முறைப்படியே ‘பெரியதேவர்’ என்று இவனும் குலோத்துங்கனைக் குறித்துள்ளான்.
இதைக் கொண்டு முறை வைப்பை உணரக் கூடவில்லை. இவன் பட்டம் பெற்ற பின்னும்
குலோத்துங்கன் உயிருடன் இருந்தான். அதனால் அவன் பெயரிலும் கல்வெட்டுகள்
வெளியாயின. இந்த மூன்றாம் இராசராசன் கல்வெட்டுகள் ‘சீர்மன்னு இருநான்கு திசை’
என்னும் தொடக்கத்தையும், ‘சீர்மன்னு மலர்மகள்’ என்னும் முதலையும் உடையன.
இவற்றுள் வரலாற்றுக் குறிப்புகள் காண்டல் அருமை, அரசன் உயர் குணங்கள் முதலியன
இயற்கைக்கு மாறாகப் புலமை முறையிற் கூறப்பட்டுள்ளன. எனினும் இவனுடைய
பிற கல்வெட்டுகளும் சிற்றரசர் கல்வெட்டுகளும் ஹொய்சள்ர் - பாண்டிய கல்வெட்டுகளும்
சில நூல் குறிப்புக்களும் கொண்டு இவன் வரலாற்றை ஒருவாறு உணர்தல் கூடும்.
நாட்டு நிலைமை : இவன் கி.பி. 1216-இல் அரசன் ஆனான். அன்று முதலே இவன்
அரசியலில் துன்பம் தொடர்ந்தது. தெற்கே பாண்டியர் பெருவலி படைத்தவராய்த் தம்மாட்சி
நிறுவவும் சோழர்மீது பழிக்குப்பழி வாங்கவும் சமயம் பார்த்துக்கொண்டு இருந்தனர்.
மேற்கே ஹொய்சளர் பேரரசைத் தாபித்துக் கொண்டு இருந்தனர்; இக்காலத்தில் ஹொய்சள
இரண்டாம் வல்லாளன் ஆண்டு வந்தான். வடக்கே தெலுங்குச் சோடர் சோழப் பேரரசின்
வடபகுதியைத் தமதாக்கிக் கொண்டும் சமயம்வரின் சுயேச்சை பெறவும் காத்திருந்தனர்.
அவர்க்கு வடக்கே காகதீய மரபினர் வலுப்பெற்றிருந்தனர். மேலைச் சாளுக்கியர் இருந்த
இடத்தில் ‘சேவுணர்’ என்ற புதிய மரபினர் வன்மை பெற்றவராக இருந்தனர். சோழ
நாட்டிற்குள் நடுநாட்டை ஆண்டுவந்த கூடலூர்க் காடவராயர் மறைமுகமாகத் தம்
படைவலியைப் பெருக்கிக் கொண்டு சோனாட்டையே விழுங்கித் தமது பழைய பல்லவப்
பேரரசை நிலைநாட்டக் காலம் பார்த்து வந்தனர். அவருட் கூடலூர், சேந்தமங்கலங்களை
ஆண்டுவந்த கோப் பெருஞ் சிங்கன் தலைமை பெற்றவன் ஆவன்.
பாண்டியன் முதற் படையெடுப்பு : பாண்டிய நாட்டைக் குலோத்துங்கன் உதவியால்
ஆண்டுவந்த சடையவர்மன் குலசேகர பாண்டியன் கி.பி. 1215-இல் இறந்தான். உடனே
அவன் தம்பியான மாறவர்மன் சுந்தர பாண்டியன் அரசன் ஆனான். இவன் கி.பி. 1216 முதல்
கி.பி.1238 முடிய அரசாண்டான். இவன் பட்டம் பெற்றவுடன் சோழரைப் பழிக்குப் பழி
வாங்கத் துணிந்தான், சோழன் செய்த அனைத்தையும் அவனது பெரு நாட்டிற் செய்து
பழி தீர்த்துக் கொள்ள விழைந்தான்; தன் நாட்டில் கொடுமை பல செய்த குலோத்துங்கன்
உயிரோடு இருக்கும் பொழுதே பழி தீர்க்க விரும்பினான். அதனால் அவ்வீர அரசன்
பாண்டிய நாட்டிற்கே சிறப்பாக அமைந்த ஏழகப் படைகளையும் மறப்படைகளையும்
கொண்டு சோழப் பெருநாட்டின் மீது படையெடுத்தான். அப்பொழுது மூன்றாம்
குலோத்துங்கன் முதுமைப் பருவத்தினால் அரசியலிலிருந்து விலகி மூன்றாம் இராசராசன்
அரசனாக இருந்த தொடக்க காலம் ஆகும். மூன்றாம் இராசராசன் ஆண்மை இல்லாதவன்;
அரசர்க்குரிய உயர் பண்புகள் அறவே அற்றவன்; அரசியல் சூழ்ச்சி அறியாதவன். ‘அரசன்
எவ்வழி, அவ்வழிக் குடிகள்’ ஆதலின், மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் இருந்த
அதே படை வீரர் இருந்தும் இல்லாதவர் போல் மடிந்து இருந்துவந்தனர். அதனால்,
சோணாடு எளிதிற் படையெடுப்புக்கு இலக்காயது.
படையெடுத்த சுந்தர பாண்டியன் சோழ நாட்டை எளிதில் வென்றான்; உறையூரும்
தஞ்சையும் நெருப்புக்கு இரை ஆயின. பல மாடமாளிகைகளும் கூட கோபுரங்களும்
ஆடரங்குகளும் மண்டபங்களும் அழிக்கப்பட்டன. சோழ அரசன் எங்கோ ஒடி ஒளித்தான்.
சோணாட்டுப் பெண்களும் பிள்ளைகளும் தவித்தனர். பாண்டியன் இடித்த இடங்களில்
கழுதை ஏர் பூட்டி உழுது வெண்கடுகு விதைத்தான்: பைம்பொன் முடி பறித்துப் பாணர்க்குக்
கொடுத்தான், ஆடகப்புரிசை ஆயிரத்தளியை அடைந்து சோழவளவன் அபிடேக
மண்டபத்து வீராபிடேகம் செய்து கொண்டான், பின்னர்த் தில்லை நகரை அடைந்து
பொன்னம்பலப் பெருமானைக் கண் களிப்பக் கண்டு மகிழ்ந்தான்; பின்னர்ப் பொன்
அமராவதி சென்று தங்கி இருந்தான்.
அப்பொழுது, ஒடி ஒளிந்த இராசராசன் தன் மனைவி மக்களோடு அங்குச் சென்று தன் நாட்டை
அளிக்குமாறு குறையிரந்து நின்றான். பாண்டியன் அருள் கூர்ந்து அங்ஙனம் சோணாட்டை
அளித்து மகிழ்ந்தனன். இக்காரணம் பற்றியே இவன் ‘சோணாடு வழங்கி அருளிய சுந்தர
பாண்டியன்’ எனக் கல்வெட்டுகளில் குறிக்கப் பெற்றுளன்.
இப்பாண்டியன் படையெடுப்பைப் பற்றி இராச ராசன் கல்வெட்டுகளில் குறிப்பில்லை.
ஆனால் பாண்டியன் மெய்ப்புகழ் இதனைச் சிறந்த தமிழ் நடையில் குறித்துள்ளது. அது
படித்து இன்புறத்தக்க பகுதியாகும் :
“பனிமலர்த் தாமரை திசைமுகன் படைத்த
மனுநெறி தழைப்ப மணிமுடி சூடிப்
பொன்னிசூழ் நாட்டிற் புலியாணை போயகலக்
கன்னிசூழ் நாட்டிற் கயலாணை கைவளர
வெஞ்சின இவுளியும் வேழமும் பரப்பித்
தஞ்சையும் உறந்தையும் செந்தழல் கொளுத்திக்
காவியும் நீலமும் நின்று கவினிழப்ப
வாவியும் ஆறும் அணிநீர் நலனழித்து
மடமும் மாமதிலும் கோபுரமும் ஆடரங்கும்
மாடமும் மாளிகையும் மண்டபமும் பலஇடித்துத்
தொழுதுவந் தடையா நிருபர்தம் தோகையர்
அழுத கண்ணிர் ஆறு பரப்பிக்
கழுதை கொண்டுழுது கவடி வித்திச் செம்பியனைச் சினமிரியப் பொருதுகரம்
புகவோட்டிப்
பைம்பொன் முடிபறித்துப் பாணருக்குக் கொடுத்தருளிப்
பாடரும் சிறப்பிற் பரிதி வான்தோய்
ஆடகப் புரிசை ஆயிரத் தளியிற்
சோழவளவன் அபிஷேக மண்டபத்து
வீராபி ஷேகம் செய்து புகழ்விரித்து
நாளும் பரராசர் நாமத் தலைபிடுங்கி
மீளும் தறுகண் மதயானை மேற்கொண்டு
நீராழி வையம் முழுதும் பொதுவொழித்துக்
கூராழி யும்செய்ய தோளுமே கொண்டுபோய்
ஐயப் படாத அருமறைதேர் அந்தணர்வாழ்
தெய்வப் புலியூர்த் திருஎல்லை யுட்புக்கு,
பொன்னம் பலம்பொலிய ஆடுவார் பூவையுடன்
மன்னும் திருமேனி கண்டு மனங்களித்துக்
கோல மலர்மேல் அயனும் குளிர்துழாய்
மாலும் அறியா மலர்ச்சே வடிவணங்கி
வாங்குசிறை அன்னம் துயிலொழிய வண்டெழுப்பும்
பூங்கமல வாவிசூழ் பொன்னம ராவதியில்
ஒத்துலகம் தாங்கும் உயர்மேரு வைக்கொணர்ந்து
வைத்தனைய சோதி மணிமண்டபத் திருந்து
சோலை மலிபழனச் சோணாடும் தானிழந்த
மாலை முடியும் தரவருக என்றழைப்ப
மான நிலைகுலைய வாழ்நகரிக் கப்புறத்துப்
போன வளவன் உரிமையோ டும்புகுந்து
பெற்ற புதல்வனைநின் பேர்என்று முன்காட்டி
வெற்றி அரியணைக்கீழ் விருந்து தொழுதிரப்பத்
தன்னோடி முன்இகழ்ந்த தன்மையெலாம் கையகலத்
தானோ தகம்பண்ணித் தண்டார் முடியுடனே
விட்ட புகலிடம்தன் மாளிகைக் குத்திரிய
விட்ட படிக்கென்றும் இதுபிடிபா டாகஎனப்
பொங்குதிரை ஞாலத்துப் பூபாலர் தோள்விளங்கும்
செங்கயல்கொண் டூன்றும் திருமுகமும் பண்டிழந்த
சோழபதி என்னும் நாமமும் தொன்னகரும்
மீள வழங்கி விடைகொடுத்து விட்டருணி”
ஹொய்சளர் உதவி : இக் கல்வெட்டுச் செய்தியால், பாண்டியன் பழிக்குப்பழி வாங்கினான்
என்பதும், இராசராசன் நாட்டை மீளப் பெற்று ஆண்டான் என்பதும் நன்கு தெரிகின்றன.
ஆயின், ஹொய்சள மன்னர் கல்வெட்டுகள் வேறு செய்தி ஒன்றைக் கூறுகின்றன.
ஹொய்சள அரசனான இரண்டாம் வல்லாளன் தன்னைச் ‘சோழ ராச்சியப் பிரதிஷ்டாசாரியன்’
என்றும், ‘பாண்டிய யானைக்குச் சிங்கம்’ என்றும் கூறிக்கொள்கிறான். அதனுடன் அவன்
மகனான நரசிம்மன் ‘சோழகுலக் காப்பாளன்’ என்று கூறப்பெறுகிறான். இக்கூற்றுகள்
கி.பி. 1218-க்கு முற்பட்ட கல்வெட்டுகளில் காண்கின்றன. வேறொரு கல்வெட்டு,
“பகைவர் இடையில் மறைந்து கிடந்த சோழனைக் காத்து நரசிம்மன் சோழ ஸ்தாபனன்
என்னும் பெயரையும், ‘பாண்டிய கண்டனன்’ என்னும் பெயரையும் பெற்றான்” என்று
கூறுகிறது. கன்னட நூலாகிய சம்பு ‘வல்லாளனால் இராசராசன் காக்கப்பட்டான்’ என்றே
கூறுகிறது.
முடிவு : இக் கூற்றுகளையும் பாண்டியன் மெய்ப்புகழையும் நோக்க, சுந்தரபாண்டியன்
படையெடுப் பால் சோழநாடு சீரழிந்தது, இராசராசன் ஒடி ஒளிந்தான், சுந்தரபாண்டியன்
பழிக்குப்பழி வாங்கினான் என்பதை உணர்ந்த ஹொய்சள அரசனான வல்லாளன் தன்
மகனான நரசிம்மனைச் சோனாட்டிற்கு அனுப்பியிருத்தல் வேண்டும்; அவன் தன் படையோடு
வந்து பாண்டியனைப் பொருது வென்றிருத்தல் வேண்டும்; அல்லது அவன் வந்தவுடன்
பாண்டியனே சமாதானம் செய்துகொண்டு சோணாட்டை இராசராசற்கு அளித்திருத்தல்
வேண்டும் என்னும் முடிபுக்குத்தான் வருதல் கூடும்.
உள்நாட்டுக் குழப்பம் : பாண்டியன் முதல் படையெடுப்புக்குப் பின்னர்ச் சோழப் பெருநாட்டில்
அங்கங்குக் குழப்பங்கள் இருந்தன என்பது சில கல்வெட்டுகளால் தெரிய வருகிறது. ஒரு
கோவில் பண்டாரம், திருமேனிகள் முதலியன பாதுகாப்புள்ள இடங்கட்கு மாற்றப்பட்டன.
இரண்டு சிற்றுார்கள் சம்பந்தமான பத்திரங்கள் அழிக்கப்பட்டன.[1] இங்ஙனம்
பொதுவுடைமைக்கும் பொதுமக்களுக்குமே துன்பம் விளைத்த செயல் யாதாக இருத்தல்
கூடும்? சிற்றரசருள் ஒருவர்க்கொருவர் பூசல் இட்டுக்கொண்டு இருந்தனர். உரத்தியை
ஆண்ட காடவராயற்கும் வீர நரசிங்க யாதவ ராயற்கும் கி.பி. 1228-இல் போர் நடந்தது.[2]
காடவராயர் ஹொய்சள நரசிம்மனுடனும் சண்டையிட்டனர். பின்னவன் முன்னவரிடமிருந்து
காஞ்சியைக் கைப்பற்றி னான். இந் நிகழ்ச்சி பாண்டியன் முதற் படையெடுப்பின்
பொழுதோ அல்லது அதன் பின்னரோ நடந்திருத்தல் வேண்டும். என்னை? நரசிம்மன்
கி.பி. 1230-இல் காஞ்சியை ஆண்டு கொண்டிருந்தான். அவன் படைகள் காஞ்சியில்
வைக்கப்பட்டிருந்தன ஆதலின் என்க.[3] இந்நிகழ்ச்சிகளால் சோழ அரசனது வலியற்ற
நிலையும் அரசாங்க ஊழலும் ஹொய்சளர் உறவும் ஆதிக்கமும் நன்கு விளங்குகின்றன
அல்லவா?
பாண்டியன் இரண்டாம் படையெடுப்பு
பாண்டியப் படை எடுப்பு : ஏறத்தாழக் கி.பி. 1234.5-இல் இராசராசன் சுந்தர பாண்டியன்
வெறுப்புக்கு ஆளானான். சோழ அரசன் பாண்டியற்குக்கப்பம் கட்டவில்லை; அதைப் பற்றிப்
பாண்டியன் கேட்டபொழுது பெரும்படைகொண்டு பாண்டிய நாட்டின்மீது படையெடுத்தான்.
முதலில் வந்த சோழனது தூசிப்படை படுதோல்வியுற்றது; வீரர் மாண்டனர்; யானைகள்
இறந்தன. பெரும் சேனையும் தோல்வியே அடைந்தது. சோனாட்டில் பல ஊர்கள்
எரிக்கப்பட்டன; கவடி விதைக்கப்பட்டன. சோழமாதேவி உட்படப் பெண்டிர் பலர்
சிறைப்பட்டனர்; சுந்தரபாண்டியன் முடிகொண்ட சோழ புரத்தில் நுழைந்த பொழுது
மங்கலநீரையும் வரவேற்புக்குரிய பொருள் களையும் ஏந்திநின்று அவனை வரவேற்குமாறு
ஏவப்பட்டனர். பாண்டியன் அங்கிருந்த அரண்மனையில் விசய அபிடேகம் செய்து
கொண்டான்.[4] கோப்பெருஞ் சிங்கன் : பாண்டியனிடம் தோற்ற இராசராசன் நாட்டை
விட்டுத் தன் பரிவாரத்துடன் ஹொய்சள நாடு நோக்கி ஒட முயன்றுவந்து கொண்டிருந்தான்.
இராசராசனது சிற்றரசனும் காடவமரபினனும் ஈழ வீரரையும் தன் வீரரையும் காடுகளிற்
பதுங்க வைத்திருந்தவனுமான கோப்பெருஞ் சிங்கன் அரசனை வழிமறித்துப் போரிட்டான்
இறுதியில் தன் பேரரசனைச் சிறைப்படுத்திக் கொண்டு சென்றான், சேந்தமங்கலத்தில்
அவனைச் சிறை வைத்தான்[5]; தன் வீரரை ஏவிச் சோணாட்டு விஷ்ணு கோவில்களை
அழித்தான்.
ஹொய்சள நரசிம்மன் : சோணாட்டுத் துன்ப நிலையைக் கேள்வியுற்ற நரசிம்மன் தன்
தலைநகரமான துவா சமுத்திரத்தை விட்டுப்பெரும்படையுடன் புறப்பட்டான். வழியில்
மகதை நாடான நடுநாட்டரசனைப்போரில் தோற்கடித்துக்காவிரிக் கரையை அடைந்தான்;
அங்குத் தன் படையை இரண்டாகப் பிரித்து, ஒன்றைத்தான் வைத்துக்கொண்டான்;
மற்றொன்றைத் தன் தண்ட நாயகனான அப்பண்ணன், சமுத்திர கொப்பையன் என்பவரிடம்
ஒப்படைத்துச் சோழ அரசனை மீட்டு வருமாறு ஏவினன்.[6]
அரசன் விடுதலை : நரசிம்மனுடைய தண்டநாயகர் கோப்பெருஞ்சிங்கன் நாட்டைச் சேர்ந்த
என்னேரி, கல்லியூர் மூலை முதலிய ஊர்களைக் கொள்ளை அடித்தனர்; அவனது தலைவனான
சோழர்கோன் என்பானது தொழுதகை யூரையும் கொள்ளையடித்தனர்; இராசராசனுக்கு
மாறாக இருந்த முதலிகளைக்கொன்றனர்,கோப்பெருஞ்சிங்கனுடன் சேர்ந்திருந்த ஈழநாட்டு
இளவரசன் ஒருவனைக்கொன்றனர்; பிறகு தில்லை நகரில் கூத்தப்பெருமானை வணங்கினர்;
மேலும் சென்று தொண்டைமான் நல்லூர், திருவதிகை, திருவக்கரை முதலிய ஊர்களை
அழித்துச் சேந்தமங்கலம் சேர்ந்தனர்; அங்குப் பயிர்களுக்குத் தீ இட்டனர்; பெண்களைக்
கைப்பற்றினர்; குடிகளைக் கொள்ளை யடித்தனர். குடிகள் பட்ட கொடுமைகளையும் கண்ட
கோப்பெருஞ்சிங்கன்,சோழ அரசனை விடுதலை செய்வதாக நரசிங்கற்குச் செய்தி சொல்லி
அனுப்பினான். நரசிங்கன் கட்டளைப்படி தண்டநாயகர், விடுதலை அடைந்த
இராசராசனை மகிழ்ச்சியோடு வரவேற்றுச் சோழநாடு கொண்டு சென்றனர்.
பாண்டியன் தோல்வி : தன் தானைத்தலைவர் அரசனை மீட்கச்சென்றவுடன் நரசிம்மன்,
தன்னிடமிருந்த படையுடன் பாண்டியனைத் தாக்கினான்; மகேந்திர மங்கலத்தில் போர்
கடுமையாக நடந்தது. சுந்தர பாண்டியன் போரில் தோல்வியுற்றான். நரசிம்மன் இராமேசுவரம்
வரை சென்றுமீண்டான். பாண்டியன் நரசிம்மனுக்குக் கப்பம் கட்டுவதாக ஒப்புக் கொண்டான்
என்று ஹொய்சளர் கல்வெட்டுக் கூறுகிறது. பாண்டியன் மெய்ப்புகழ், அவன் விசய அபிடேகம்
செய்து கொண்டவரைதான் கூறியுள்ளது. இராசராசன் மீட்சி, அவன் மீட்டும் சோணாட்டு
அரசன் ஆனது, இவைபற்றிய செய்தி பாண்டியன் கல்வெட்டில் இராததாலும், பாண்டி
நாட்டுக்குச் சோணாடு உட்படவில்லை ஆதலாலும், நரசிம்மனிடம் சுந்தர பாண்டியன்
தோல்வியுற்றது உண்மை என்றே தெரிகிறது.[7]
முடிவு : ஹொய்சள நரசிம்மனது இடையீட்டால் இராசராசன் இரண்டாம் முறையும் அரசன்
ஆக்கப்பட்டான். சுந்தரபாண்டியனும் தன் செருக்கு அழிந்து ஒடுங்கினான். ஆயின், ஹொய்சளர்
செல்வாக்குச் சோழ - பாண்டிய நாடுகளில் பரவிவேரூன்றியது.இரு நாடுகளிலும் ஹொய்சள
உயர் அலுவலாளரும் தண்டநாயகரும் ஆங்காங்கு இருந்து வரலாயினர். காஞ்சிபுரத்தில்
நிலையாகவே ஹொய்சளப் படை இருந்து வந்தது.
சீரழிந்த அரசாட்சி :
அரசத் துரோகம் : மேற் கூறப்பெற்ற குழப்பங்களிற் சம்பந்தப்பட்டதாலோ, பிறகு எஞ்சிய
ஆட்சிக்காலத்தில் அரசனுக்கு மாறான வேலைகளில் ஈடுபட்டதாலோ - பல இடங்களில்
பலர் விசாரிக்கப் பெற்றுத் தண்டனை அடைந்தனர்; அவர்தம் நிலங்கள் பறிமுதல்
செய்யப்பட்டன. ஏலம் போடப்பட்டன. இத்தகைய பறிமுதல் வேலைகள் சீகாழி, வலிவலம்,
திருவெண்காடு முதலிய இடங்களில் நடைபெற்றன. கோவில் திருமாளம் என்னும்
இடத்தில் 15 ஆயிரம் காசுகள் பெறத்தக்க 5 வேலி 4 மா நிலம் கைப்பற்றப்பட்டது.[8]
கீழ்ப்படியாமை : அரசாங்க ஆணைக்குக் கீழ்ப்படி யாமையும் நாட்டில் தாண்டவம் ஆடியது.
சான்றாக ஒன்றுகாண்க. தஞ்சைக் கோட்டத்துச் சிவபுரம் கோவில் சிவப்பிராமணர் இருவர்
அம்மனுடைய நகைகளைத் தாங்கள் வைத்திருந்த பரத்தை ஒருத்திக்குக் கொடுத்து விட்டனர்;
தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட கோவிற் பணத்தைக் கையாடினர்; தம் நிலவரியைக் கொடுக்க
மறுத்தனர்; பிறவழிகளிலும் தவறாக நடந்துகொண்டனர்; அரசனது ஆணை மீறியதோடு,
வரிவசூலிக்கவந்த அரசாங்க அலுவலாளரை அடித்துத்துன்புறுத்தினர்; கன்னடியருடன்
(அரசனை மீட்கச் சென்ற பொழுது சோணாட்டுர்களைக் கொள்ளையடித்துச் சென்ற
ஹொய்சளப் படைவீரர்?) சேர்ந்து மக்களைத் துன்புறுத்தி 50 ஆயிரம் காசுகள் வசூலித்தனர்.
இத்துணைக் குற்றங்களைச் செய்த அப்பிராமணர் மகேசுவரராலும்(கோவில் அதிகாரிகள்)
ஊர் அவையினராலும் விசாரிக்கப்பட்டுத்தண்டனை பெற்றனர்.[9]
ஹொய்சளர் செல்வாக்கு : இராசராசனுக்கு அடங்கிய வரும் ஆனால் கொடிய பகைவருமாக
இருந்தவர் காடவராயரே ஆனார். இவருள் ஒருவனே சிறப்புற்ற கோப்பெருஞ்சிங்கன்.
இவர்கள் மாயூரம் முதல் காஞ்சிவரை அங்கங்கே பல சிறு நாடுகளை ஆண்டுவந்தனர்;
காஞ்சியும் இவர்கள் கையில் இருந்தது. மூன்றாம் குலோத்துங்கன் இதனைத் தெலுங்குச்
சோழரிடமிருந்து மீட்டான். அவன் இறந்தவுடன் அது காடவர் கைப்பட்டது. அதனை
நரசிம்ம ஹொய்சளன் கைப்பற்றினான். அதனால் ஹொய்சளர் நிலைப்படை அங்கு இருக்க
வேண்டியதாயிற்று. நரசிம்மவர்மன் செல்வாக்கினால் ஹொய்சளர் பலர் காஞ்சி
முதல் திருநெல்வேலிவரை பரவி இருந்தனர். விருத்தாசலம் கூற்றத்துத் திருவடத்துறைக்
கோவில் திருமேனிகள் சில நரசிம்ம தேவன் கொண்டு சென்றனன் என்று ஒரு கல்வெட்டுக்
கூறுகிறது.[10] பூததேய நாயகன், மகாப்பிரதானி அம்மண்ண தண்ட நாயகன், என்போர்
காஞ்சியில் இருந்த படைத் தலைவர் ஆவர். இவர்கள் காஞ்சியில் உள்ள அத்திகிரி
முதலிய கோவில்கட்குப் பல நிபந்தங்கள் விடுத்துள்ளனர்.[11] நரசிம்மனது மற்றொரு
தண்ட நாயகன் வல்லயன் என்பான் திருமழப்பாடிக் கோவிலுக்குப் பல நிபந்தங்கள்
விடுத்தான்.[12] நரசிம்மன் மனைவியான சோமளதேவியின் பரிவாரப் பெண்களில் ஒருத்தி
திருக்கோகர்ணம் கோவிலுக்கு நிபந்தம் விடுத்தாள்.[13] இங்ஙனமே ஹொய்சள தண்ட
நாயகரும் பிறரும் பாண்டிய நாட்டில் செல்வாக்குப் பெற்றிருந்தனர்; அரசியலிலும்
தொடர்பு கொண்டிருந்தனர்.[14]
சோழப் பெருநாடு : இராசராசன் கல்வெட்டுகள் (130-ம் ஆண்டுவரை) சித்துார், நெல்லூர்,
கடப்பைக் கோட்டங்களிற் கிடைக்கின்றன. ஆதலின், சோழப் பெருநாடு கடப்பைவரை
வடக்கே பரவி இருந்தது என்னலாம்.சேலத்தில் இவனுடைய கல்வெட்டுகள் இருக்கின்றன.
ஆதலின் கொங்கு நாடும் பெருநாட்டிற்கலந்து இருந்தது என்னலாம். இவனது ஆட்சியில்
பாண்டியநாடு தனிப்பட்டுவிட்டது. எனவே மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சியில் இருந்த
பரப்பு இவன் காலத்தில் இல்லை என்பது விளங்குகிறது.
சிற்றரசர் : குலோத்துங்கன் ஆட்சிக் காலத்துச் சிற்றரச மரபினர் வழிவந்தவரே இராசராசன்
காலத்தில் சிற்றரசராக இருந்தனர்.இவருள் குறிப்பிடத்தக்கவர் சிலராவர்.அவருள் முதல்வன்
கோப்பெருஞ்சிங்கன். இவன் முதலில் திரு நீடுரைச் சுற்றியுள்ள நாட்டுக்குத் தலைவனாக
இருந்தான்; பிறகு சேந்தமங்கலம், கூடலூர், விருத்தாசலம், திருவெண்ணெய் நல்லூர்
முதலிய ஊர்களைத் தன் அகத்தே கொண்ட நாட்டை ஆண்டுவரலானான். இவன் பழைய
பல்லவர் மரபினன், வீரம் மிக்கவன்; சிறந்தபோர்வீரன், அரசியல் தந்திரி, பேரரசனையே
சிறைப்பிடித்த செம்மல். இவனைப்பற்றிய கல்வெட்டுகள் பலவாகும். இவன் ஹொய்சளர்,
காகதியர் முதலிய பலருடனும் போர் இட்டவன், சோழப் பேரரசிற்கு அடங்கியதாகக்
கல்வெட்டுகளிற் காட்டிக் கொண்டு தன்னாட்சி நடத்தி வந்தவன். இவன் கி.பி. 1243
முதல் தன் ஆட்சி ஆண்டைக் கணக்கிட்டு வந்தவன்; அதுமுதல் கி.பி. 1279 வரை 36
ஆண்டுகள்) தன்னாட்சி பெற்றுப் பெருநாட்டை ஆண்டவன், தெற்கே சடாவர்மன் சுந்தர
பாண்டியனுடன் போரிட்டவன். இப்பெரு வீரன் வடக்கே திராrாராமம் முதல் தெற்கே
தஞ்சாவூர் வரை கோவில் திருப்பணிகள் பல செய்தவன். இவன் சிறந்த சிவபக்தனாக
இருந்தான்.இவன் தென்னாட்டுப் பெருவீரருள் ஒருவனாக மதிப்பிடத் தக்கவன் ஆவன்
[15].
சித்துனர், நெல்லூர், கடப்பை இவற்றை ஆண்ட தெலுங்கச் சோடர் அடுத்துக் குறிப்பிடத்
தக்கவர் ஆவர். சாளுக்கிய நாராயணன் என்ற மதும சித்தரசன் ஒருவன். மதுராந்தக
பொத்தப்பிச் சோழ எர்ர சித்தரசன் ஒருவன். இவர்கள் காஞ்சி நகரத்துக் கோவில்களில்
பல பணிகள் செய்துள்ளனர். மலமாதேவரசன் என்பவன் சித்துரை ஆண்ட சிற்றரசன்.
தெலுங்கச் சோடருட் சிறந்தவனும் பேரரசனுமான முதல் திக்கன் என்ற கண்ட கோபாலன்
பல கல்வெட்டுகளிற் குறிக்கப்பட்டுளன். வானர், வைதும்பர், கங்கர், யாதவராயர்,
சாம்புவராயர், சேதியராயர் மரபினரும் வழக்கம்போலப் பல கல்வெட்டுகளிற் குறிக்கப்
பட்டுள்ளனர். எனவே, பெருங்காயம் இருந்த பாண்டம் மணம் வீசுதலைப் போல
வலியற்ற இராசராசன் பெரு நாட்டில் சோழரது பழம் பெருமையை நினைத்தும்
ஹொய்சளர்க்கு அஞ்சியும் இச்சிற்றரசர் தம்மைச் சோழருடைய சிற்றரசர் எனக்
கூறிக்கொண்டனர்.
அரச குடும்பம் : இராசராசன் காலத்திற் சிறப்பாகக் குறிக்கப்பெற்ற அரண்மனை ஆயிரத்தளியே
ஆகும். தஞ்சை, உறையூர்களில் இருந்த அரண்மனைகள் சுந்தர பாண்டியனால்
அழிவுண்டன. ஆயிரத்தளியும் ஒரளவு பாதிக்கப்பட்டது. இவனுக்கு இரு மனைவியர்
இருந்தனர். அவருள் ஒருத்தி கோப்பெருந்தேவி வாணகோவரையன் மகள் ஆவள்.
இளையவள் ‘புவனம் முழுதுடையாள்’ எனப்பட்டாள். இராசராசன் 30 ஆண்டுகள்
அரசாண்டான். இதற்குப் பின் கி.பி. 1246-இல் மூன்றாம் இராசேந்திரன் அரசு கட்டில்
ஏறினான். இராசராசன் கல்வெட்டுகள் ‘சீர்மன்னி இருநான்கு திசை, சீர்மன்னு மலர்மகள்’
என்ற தொடக்கங்களை உடையன.
-------
[1]. 41 of 1926, 213 of 1925, 309 of 1927
[2]. 271 of 1904
[3]. K.A.N. Sastry's Cholas', Vol.2. p. 178
[4]. 142 of 1902.
[5]. M.R. Kavi in Thirumalai Sri Venkatesvara’ VI pp, 677-678.
[6]. 142 of 1902
[7]. K.A.N. Sastry's ‘Cholas’, II, p.185
[8]. 244 of 1917
[9]. 279 of 1927; A.E.R. 1927. 11.30.
[10]. 228 of 1929
[11]. 349,369, 404, 408 of 1919
[12]. 89 of 1920
[13]. 183 ofp. Ins. 5.
[14]. K.A.N. Sastry’s Pandyan Kingdom. pp. 158-159
[15]. இவனது வரலாறு விரைவில் வெளியிடப்படும்.
-------
3.8. மூன்றாம் இராசேந்திரன் (கி.பி. 1245-1279)
முன்னுரை : மூன்றாம் இராசேந்திரன் கி.பி.1216-இல் சோழப் பேரரசன் ஆனான். ஆனால்,
இராசராசற்கு இவன் இன்ன முறையில் உறவினன் என்பது புலப்படவில்லை. இராசராசன்
உயிருடன் இருந்த பொழுதே இவனது ஆட்சி தொடக்கம் ஆகிவிட்டது. இவன் இராசராசனுடன்
அவனது இறுதிக் காலத்தில் சேர்ந்திருந்தே நாட்டை ஆண்டு வந்தான் என்றும் கூறலாம்.
இராசராசன் இறுதிக் காலத்தில் அவனுடைய கல்வெட்டுகள் வடஆர்க்காடு, நெல்லூர்க்
கோட்டங்களில் காணப்படுகின்றன. ஆயின், அதே காலத்தில் இராசேந்திரன் கல்வெட்டுகள்
சோழப் பெருநாடு முழுவதும் காணக்கிடைக்கின்றன. இதனால் இராசேந்திரன் பொது
மக்களால் நன்கு வரவேற்கப்பட்டமையும் சிற்றரசரிடம் இவனுக்கு இருந்த செல்வாக்கும்
நன்கறியலாம். இவன் கல்வெட்டுகள் முன்னோர் கல்வெட்டுகளில் உள்ள பலவகைத்
தொடக்கங்களையே உடையன. நிகழ்ச்சி முறைகொண்டு வேறு பிரித்தல் வேண்டும்.
ஹொய்சளர் பகைமை : ஹொய்சள நரசிம்ம தேவன் மகனான வீர சோமேசுவரன் இக்காலத்தில்
ஹொய்சள நாட்டை ஆண்டு வந்தான். இவனது தந்தை இராசராசனை இரண்டு முறை
காத்து அரசனாக்கியவன். ஆயின், இவன் எக்காரணம் பற்றியோ இராசேந்திரனிடம்
பகைமை பாராட்டியதோடு பாண்டியனை நட்புக் கொண்டிருந்தான். தன்னைப் ‘பாண்டிய
குலக் காப்பாளன்’ என்று கூறிக் கொண்டான். ஆனால் இச்சோமேசுவரனை இராசேந்திரனும்
சுந்தர பாண்டியற்குப் பின் பாண்டிய நாட்டை ஆண்ட இரண்டாம் மாற வர்மன்
சுந்தரபாண்டியன் (கி.பி. 1238-1253) என்பவனும் ‘தம் மாமன்’ என்றே கல்வெட்டு களிற்
கூறியுள்ளனர். எந்த வகையில் இவன் இருவர்க்கும் ‘மாமன்’ ஆனான் என்பது
விளங்கவில்லை. இவ்வுறவு எங்ஙனமாயினும், இவன் பாண்டியனை ஆதரித்து,
இராசேந்திரனை வெறுத்து வந்தான் என்பது திண்ணம்.
சோமேசுவரன் தன் தண்ட நாயகரை ஏவிர் சோணாட்டைப் பிடிக்க முயன்றான் என்பது
சில கல்வெட்டுகளால் தெரிகிறது. கி.பி.1241-இல் சிங்கண தண்ட நாயகன் என்பவன்
சோணாட்டிற்குள் படையெடுத்து வந்தான். அப்பொழுது மூடப்பட்ட ஒரு கோவில் 50
ஆயிரம் காசுகள் செலவில் கும்பாபிடேகம் செய்யப்பட்டது என்று திருமறைக்காட்டுக்
கல்வெட்டுக் கூறுகிறது.[1] சோமேசுவரனது மற்றொரு தண்ட நாயகனான இரவிதேவன்
என்பவன் கான நாட்டைக் கைப்பற்றினான் என்று புதுக்கோட்டைக் கல்வெட்டுக்
குறிக்கிறது.[2]
பாண்டியர் - ஹொய்சளர் உறவு : கி.பி. 1238 - இல் பட்டம் பெற்ற இரண்டாம் மாறவர்மன்
சுந்தரபாண்டியன் வலியற்ற அரசன். இவன் கி.பி.149-இல் திருநெல்வேலிக் கோட்டத்தில்
தன் மாமனான வீரசோமேசுவரன் பெயரை அவன் விருப்பப்படி ஒரு சிற்றுார்க்கு இட்டு
வழங்கினான்; அதே ஆண்டில், வரக்கண்ண தண்டநாயகன் என்ற சேனைத் தலைவன்
திருநெல்வேலியில் இருந்து வந்தான்.அக்காலத்தில் புதுக்கோட்டையைச் சேர்ந்த
திருமய்யத்தைச் சுற்றியுள்ள நாடு ‘கான நாடு எனப்பெயர் பெற்றிருந்தது.அது பாண்டிய
நாட்டைச் சேர்ந்திருந்தது. அங்குச் சைவ வைணவச் சண்டை உண்டாகி நாடு
குழப்பப்பட்டதால், சோமேசுவரனது தண்ட நாயகனான அப்பண்ணன் என்பவனால்
அமைதி உண்டாக்கப்பட்டது, பாண்டிய அரசன் மைத்துனன் ஹொய்சள இளவரசன்.
அவன் பெயர் விக்கிரம சோழதேவன் என்பது. அவன் பாண்டிய அரசாங்கத்தில்
செல்வாக்குப் பெற்றவனாக இருந்தான்.[3]
சோழர் - தெலுங்கர் உறவு: வீரசோமேசுவரன் பாண்டியனை ஆதரிக்கத் தொடங்கி
விட்டதால், இராசேந்திரன் ஹொய்சளர்க்குப் பகைவரான தெலுங்குச் சோடரை நட்புக்
கொண்டான். அக்காலத்தில் நெல்லூரை ஆண்ட தெலுங்குச் சோடர் வன்மை மிக்கிருந்தனர்.
அவரது ஆட்சி நெல்லூர் முதல் செங்கற்பட்டு வரை பரவி இருந்தது. அவர்கள் நீண்ட
காலமாகச் சோழப் பேரரசிற்கு உட்பட்ட சிற்றரசராக இருந்தவர்கள். திக்கன் என்ற
கண்டகோபாலன் என்பவன் அப்பொழுது இருந்த சோழ அரசன் ஆவன். இவன்
சாம்புவராயர், சேதியராயர், காடவராயர்களை வென்று தன் பேரரசை ஒப்புக்கொள்ளச்
செய்தவன்; இவ்வெற்றியால் கோப்பெருஞ் சிங்கன் சூழ்ச்சிகளை ஒடுக்கினவன்.
இவன் தொண்டை மண்டலத்தில் பெரும் பகுதியைச் சோழப் பேரரசிற்கு அடங்கியே
ஆண்டு வந்தான்.[4] இங்ஙனம் பாண்டியற்கு ஹொய்சளன் உதவியாக இருந்தாற்போலச்
சோழற்குத் தெலுங்குச் சோடன் உதவியாக இருந்தான்.
சோழ பாண்டியர் போர் : இராசராசன் ஆட்சியில் இருமுறை சுந்தரபாண்டியன்
படையெடுத்துவந்து சோணாட்டை அலைக்கழித்து அவமானப்படுத்தியதற்குப் பழி
வாங்கத் துணிந்த இராசேந்திரன், தெலுங்கர் நட்பைப் பெற்ற பிறகு, பாண்டி நாட்டின்மீது
படையெடுத்தான்; வலியற்ற இரண்டாம் சுந்தரபாண்டியனை வென்றான்: அவனது
முடியைக் கைப்பற்றி இராசராசனிடம் தந்து பாண்டி நாட்டைக் கொள்ளையடித்தான்.
ஆனால் இந்த வெற்றி மூன்று ஆண்டுகளே நிலைத்திருந்தது.[5] அதற்குள் வீரசோமேசுவரன்
சோழனைத் தாக்கிப் போரில் முறியடித்தான்; மற்றொரு பக்கம் கோப்பெருஞ் சிங்கன்
சோழனைத் தாக்கினான். இந்த இருவரையும் சோழன் நண்பனான கண்டகோபாலன்
தாக்கினான். இவர் எல்லாரும் அவரவர் கல்வெட்டுகளில் தாம் தாம் வென்றதாகக்
குறித்துள்ளனர். ‘கண்டகோபாலனுக்குப் பாண்டியன் கப்பம் கட்டினான், என்று கேதனர்
தமது தசகுமார சரித்திரத்திற் கூறியுள்ளார். கோப்பெருஞ் சிங்கன் தன்னைப் ‘பாண்டிய
மண்டல ஸ்தாபன சூத்ரதாரன்’ என்று குறித்துள்ளான். “தான் இராசேந்திரனைப்
போரில் புறங்கண்டதாகவும், இராசேந்திரன் தன்னிடம் அடைக் கலம் புகுந்தவுடன்
ஆதரித்ததாகவும் சோமேசுவரனைப் போரில் புறங்கண்டதாகவும், இராசேந்திரன்
தன்னிடம் அடைக்கலம் புகுந்தவுடன் ஆதரித்ததாகவும் சோமேசு வரனைப் போரில்
வென்று, சோழ அரசனை மீட்டும் அரசனாக்கிச் ‘சோழ ஸ்தாபன ஆசாரியன்’ என்ற
பெயர் பெற்றான்” என்று திக்கநர் தமது இராமாயணத்து முகவுரையிற் கூறியுள்ளார்.
கி.பி. 1240- இல் வெளிப்பட்ட ஹொய்சளர் கல்வெட்டு ஒன்றில், “சோமேசுவரன் கண்ட
கோபாலன்மீது படையெடுத்தான்” என்று கூறுகிறது. இவை யாவற்றையும் ஒருசேர
நோக்க நாம் அறிவதென்ன? இப்போருக்குப் பின்னர்ப் பாண்டிய நாடு தனியே
பாண்டியனால் ஆளப்பட்டே வந்தது என்பதனால், சோமேசுவரன் இடையீடு பயனைத்
தந்ததென்றே கூறவேண்டும். ஆனால் கண்ட கோபாலன் சோழனுக்கு உதவியாகச்
சென்றிராவிடின், சோணாடு பாண்டியர்க்கும் கோப்பெருஞ்சிங்கற்கும் இரையாகி
இருக்கும்.
இலங்கைப் போர்: ‘வீர ராக்கதர் நிறைந்த இலங்கையை இராமன் வென்றாற் போல இந்த
இராசேந்திரன் என்ற இராமன், வீர ராக்கதர் நிறைந்த வட இலங்கையை வென்றான்’ என்ற
பொருள்படும் கல்வெட்டு இருக்கிறதால், இராசேந்திரன் வீர ராக்கதரை வென்றிருத்தல்
வேண்டும் என்பது தெரிகிறது.அவர் யார்?வடஆர்க்காடுகோட்டத்தில் ஒருபகுதியை
ஆண்டுவந்த சாம்புவராயர் தம்மை ‘விர ராக்கதர்’ என்று கூறிக்கொண்டு வந்தனர். அவர்கள்
ஆட்சியில் ‘மா இலங்கை’ ஆகிய மகாபலிபுரம் இருந்திருத்தல் வேண்டும். இராசேந்திரன்
அவர்களைப் போரில் வென்றவனாதல் வேண்டும். இவன் நண்பனான கண்ட கோபாலனும்
சாம்புவராயரை வென்று, பிற பகை மண்டலீகரையும் தோற்கடித்துக் கச்சியைக்
கைப்பற்றினான் என்று திக்கநர் தமது நூலிற் கூறலால், சாம்புவராயர் இராசேந்திரனாலும்
கண்ட கோபாலனாலும் அடக்கப்பட்டனர் என்பது நன்கு தெரிகிறது.
காஞ்சி நகரம் : இந்நகரில் கி.பி.1245 வரை இராசராசன் காலத்துக் கல்வெட்டுகள் உள்ளன.
இராசேந்திரன் காலத்துக் கல்வெட்டுகள் இல்லை. இராசராசன் காலத்தில் இந்நகரம்
நரசிம்ம தேவன் மேற்பார்வையில் இருந்தது. பிறகு என்ன ஆயிற்று? கி.பி. 1249-இல்
காகதீய அரசனான கணபதியின் கல்வெட்டுக் காண்கிறது. சில ஆண்டுகட்குப் பிறகு கண்ட
கோபாலனுடைய கல்வெட்டுகள் கிடைக்கின்றன. எனவே, காஞ்சிமா நகரம் இராசராசன்
காலத்தில் ஹொய்சள நரசிம்மதேவன் பார்வையில் இருந்தது; பிறகு கி.பி. 1245-க்குப் பிறகு
காகதீய அரசன் ஆட்சியில் அல்லது தெலுங்க அரசனது ஆட்சியில் காகதீயன் மேற்பார்வையில்
இருந்தது; இறுதியில் கி.பி. 1251-இல் பட்டம் பெற்ற சடாவர்மன் சுந்தர பாண்டியன்
கைக்கு மாறிவிட்டது என்பதை வரலாறு உணர்த்துகிறது.
ஹொய்சளர் நட்பு: சடாவர்மன் சுந்தர பாண்டியன் கி.பி. 1251-இல் பாண்டியர் அரசன் ஆனான்.
இவன் தன் காலத்தில் பாண்டிப் பேரரசு கண்ட பெருவீரன். இவன் ஹொய்சள வீர
சோமேசுவரனை மதிக்கவில்லை. இவனது பேராற்றல் கண்ட வீர சோமேசுவரன்
இவன்மீது கொண்ட வெறுப்பினால் தான் அதுகாறும் பகைத்து வந்த இராசேந்திரனுடன்
உறவு கொண்டாடலானான்: அந்த உறவினால் சோழனது நட்பையும் தன் பகைவனான
தெலுங்குச் சோழனது நட்பையும் பெறலாம்; பெற்றுக் கூடுமாயின், சடாவர்மனை
அடக்கி விடலாம் என்பது அவனது எண்ணம்.இங்ஙனம் உண்டான புதிய நட்பினால்,
சோணாட்டில் ஹொய்சள அரசியல் அலுவலாளர் பலர் வந்து தங்கினர்; சோழ
அரசியலிற் பங்கு கொண்டனர்; கோவில் சம்பந்தமான வழக்குகளை விசாரித்தனர்.[6]
இந்த இரு நாடுகட்கும் உண்டான நட்பு சோமேசுவரன் இறந்த பிறகும் இருந்து வந்தது
குறிப்பிடத்தக்கது. கி.பி. 1295-இல் ஹொய்சளத் தென்நாட்டை ஆண்ட இராமநாதன்
10,15ஆம் ஆட்சி ஆண்டுகளில் வெளியிட்ட இரண்டு கல்வெட்டுகள் திருச்சோற்றுத்
துறையில் காண்கின்றன.[7]
பாண்டியன் பேரரசு : சடாவர்மன் சுந்தர பாண்டியன்: ஏறத்தாழக் கி.பி. 1256, 57-இல்
பெரும் படையுடன் சோழ நாட்டின் மீது படையெடுத்தான்; சோழநாட்டைக் கைப்பற்றி
இராசேந்திரனைத் தனக்கு அடங்கிய சிற்றரசன் ஆக்கினான்; அவனுக்கு உதவியாக
வந்த வீரசோமேசு வரனை வென்று துரத்தினான். சோமேசுவரன் மீட்டும் கி.பி. 1254-இல்
போருக்கு எழுந்தான்; போர் கண்ணனூர்[8] என்ற இடத்தில் நடந்தது. அப்போரில்
சோமேசுவரன் கொல்லப்பட்டான். பின்னர் இப்பாண்டியன் பல்லவ மரபினனான
கோப்பெருஞ்சிங்கன் அனுப்பிய கப்பத்தை ஏற்றுக்கொள்ளாமல், அவனது கோநகரமாகிய
சேந்த மங்கலத்தை முற்றுகை இட்டான்; அந்நகரையும் பிற பொருள்களையும்
கைப்பற்றினான்; அவற்றை அவர்க்கே தந்து. தன்கீழ் அடங்கிய சிற்றரசனாக
இருக்குமாறு செய்து வடக்கு நோக்கிச் சென்றான்; வாணர்க்குரிய மகதநாட்டையும்
கொங்கு நாட்டையும் கைப்பற்றிக் கண்டகோ பாலனைப்போரிற் கொன்று, நெல்லூரில்
‘வீராபிடேகம்’ செய்துகொண்டான், காஞ்சியைத் தன் பேரரசின் வடபகுதிக்குத் தலைநகரம்
ஆக்கிக் கொண்டான். இங்ஙனம் திடீரென்று எழுந்த பாண்டிய வீர அரசனால், சோழப்
பேரரசின் எஞ்சிய பகுதியும் அழிந்து, இராசேந்திரனே சிற்றரசனாக வேண்டிய நிலைமை
ஏற்பட்டுவிட்டது. இவ்விழிநிலைக்குப் பிறகு சோழ அரசு தலையெடுக்காது மறைந்தது.
நாட்டு விரிவு : இராசேந்திரனுடைய கல்வெட்டுகள் பல சோழ நாட்டிலே காணக்
கிடைக்கின்றன. இவனது 13-ஆம் ஆட்சிக் கல்வெட்டு ஒன்று கடப்பைக் கோட்டத்து
நந்தலூரிலும், 14ஆம் ஆட்சிக் கல்வெட்டொன்று கர்நூல் கோட்டத்துத் திரிபுராந்தகத்தும்
கிடைத்துள்ளன. கி.பி. 1261-க்குப் பிறகு சோழ நாட்டிற்கு வெளியே ஒரு கல்வெட்டும்
இல்லை. இதனால், இராசேந்திரன் அரசியலில் முற்பகுதியில் கடப்பை, கர்நூல் வரை
இவனது பேரரசு பரவி இருந்தது என்பதும், பிற்பகுதியில் சோழநாட்டு அளவே பரவி
இருந்தது என்பதும் அறியத்தக்கன.
இராசேந்திரன் இறுதி : இவனது ஆட்சி கி.பி. 1279 வரை இருந்தது. இவன் 33 ஆண்டுகள்
அரசாண்டான். இவன் கங்கைகொண்ட சோழபுரத்திலிருந்து அரசாண்டான். இவனது
குலதெய்வம் தில்லை நடராசர் ஆவர்.[9] இவனுக்குச் ‘சோழகுல மாதேவியார்’ என்றொரு
மனைவி இருந்தாள் என்பது தெரிகிறது.[10] இவனுக்குச் சேமாப்பிள்ளை என்றொரு
மகன் இருந்தான் என்பது திருக்கண்ணபுரத்துக் கல்வெட்டால் தெரிகிறது.[11] இராசேந்திரன்
ஆட்சி கீழ்நிலைக்கு வந்துவிட்டதால், சிற்றரசர் தொகையே குறைந்துவிட்டது.
‘சோழகங்கன், என்ற ஒருவனும் களப்பாளன், என்ற ஒருவனுமே சிற்றரசராகக்”
குறிக்கப்பெற்றனர்.[12] இராசேந்திரனுக்குப் பிறகு சோணாட்டைச் சோழ அரசன்
ஆண்டதற்குச் சான்றில்லை. எனவே, இராசேந்திரனுடன் சோழர் தனியாட்சியும்
ஆதித்தன் தோற்றுவித்த பேராட்சியும் ஒழிந்து விட்டதென்றே கோடல் தகும்.
சோழப் பேரரசின் மறைவு : பாண்டியப்பேரரசிலும் வடக்கிலும் இங்குமங்குமாகச் சிலர்
தம்மைச் சோழர் மரபினர் என்று கூறிக்கொண்டு சிற்றரசராகவும் அரசியல்
அலுவலாளராகவும் 15-ஆம் நூற்றாண்டுவரை இருந்தனர் என்பது தெரிகிறது. முதற்
பராந்தகன் காலத்தில் பாண்டிய நாடு தன்னாட்சி இழந்து சோழப் பேரரசிற் கலந்துவிட்டது
போலவே, கி.பி. 1280-இல் சடாவர்மன் சுந்தரபாண்டியன் தோற்றுவித்த பாண்டியப்
பேரரசில் சோழநாடு கலந்துவிட்டது. வரலாறு தன்னையே திருப்பிச் சாட்டும்’ (History
repeats itself) என்பதற்கு இதைவிடச் சிறந்த சான்று வேறென்ன வேண்டும்?
---------
[1]. 501 of 1904.
[2]. 387 of 1906.
[3]. K.A.N. Sastry’s ‘Pandyan Kingdom’, Page 158.
[4]. Tikkana’s Int to his Ramayanam.
[5]. 420 of 1911; 513 of 1922.
[6]. 498 of 1902. 387 of 1903, 49 of 1913, 349 of 1919.
[7]. 207, 208 of 1931.
[8]. இது திருச்சிராப்பள்ளிக் கோட்டத்தில் உள்ள கண்ணனூர்க் கொப்பம்’ - ¨
Vide S Pandarathar’s Pandyar vara Iaru p.51.
[9]. 93 of 1897
[10]. 427 of 1921.
[11]. A.R.E. 1923. II. 45
[12]. 194 of 1926, 202 of 1908, 339 of 1925
----------
This file was last updated on 08 Nov. 2017
Feel free to send corrections to the Webmaster.