நாக குமார காவியம்
மூலமும் சின்னசாமி நயினார் உரையும்
nAka kumAra kAviyam
verses with the commentaries of cinnacAmi nayinAr
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Tamil Virtual Academy for providing a soft copy of this work.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2018.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
நாக குமார காவியம்
மூலமும் சின்னசாமி நயினார் உரையும்
Source:
நாக குமார காவியம்
மூலமும் திரு.சின்னசாமி நயினார் அவர்களின் உரையும்
பதிப்பாசிரியர் : மு. சண்முகம் பிள்ளை
சென்னைப் பல்கலைக் கழக தமிழ்த்துறை வெளியீடு 30,
சென்னைப் பல்கலைக் கழகம், சென்னை, 1974
--------------
பொருளடக்கம்
நல்ல தமிழ் விருந்து
பதிப்புரை
முதல் சருக்கம்
இரண்டாம் சருக்கம்
மூன்றாம் சருக்கம்
நான்காம் சருக்கம்
ஐந்தாம் சருக்கம்
பின்னையோர் உரை
--------
நாககுமார காவியம்
நல்ல தமிழ் விருந்து
செந்தமிழ் வல்லார் திருமணம் செல்வக் கேசவராய முதலியாரால் தமிழ்
கற்பார்க்குரிய நூல்களுள் ஒன்றாகத் தேர்ந்தெடுக்கப் பெற்ற பெருமையுடையது
இக் காவியம்.
பேராசிரியர் முன்னீ்ர்ப் பள்ளம் எஸ். பூரணலிங்கம் பிள்ளை தாம் எழுதிய இலக்கிய
வரலாற்று நூல்களுள் இதன் சிறப்பினை எடுத்துக் காட்டியுள்ளார். வேறு சிலரும்
இந் நூல்பற்றி உரைத்துள்ளனர்.
தமிழ்ச் சான்றோர்களின் கருத்தைக் கவர்ந்த இச் சிறு காவியம் இப்பொழுதுதான் முதன்
முறையாக அச்சில் வெளிவருகிறது.
------------
பதிப்புரை
அச்சில் வரும் புதுநூல்-சைன காவியங்கள்-ஐம்பெருங் காவியம்-ஐஞ்சிறு காவியம்-நூற்றொகைப் பெயரின் பயன்- மூலப்படி - மூலப்படியின் நிலை - நூலும் உரையும்-காவிய அமைப்பு-கவிக் கூற்றால் கதை நடத்தல்-காவியப் பெயர்- காவியப் போக்கு-அருக சமயக் கோட்பாடுகள்-அருக தேவர் புகழ்மாலை-பெருங் காவியப் பண்பு - நாககுமார காவியமும் - யசோதர காவியமும் - நாககுமார காவிய காலம் பிறமொழிகளில் நாககுமார சரிதம்-காவிய ஆசிரியர் - நன்றியுரை.
அச்சில் வரும் புதுநூல்
தமிழ்க் காவிய வரிசையில்-சிறப்பாக சைன சமயஞ் சார்ந்த காவி யங்களுள் இதுகாறும்
அச்சிடப்படாது எஞ்சி நின்றவற்றுள் ஒன்றே நாககுமார காவியம். இக் காவியம் இப்பொழுதுதான் முதன் முதலாக அச்சில் வெளி வருகிறது. சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறை வெளியிடும் ‘தமிழாய்வு’ அரையாண்டு இதழிலே வெளிவரும் ‘அச்சில் வாரா அருந்தமிழ்’ வரிசையில் இஃது இரண்டாவதாக இடம் பெறுகின்றது.
சைன காவியங்கள்
இப்பொழுது நமக்குக் கிடைக்கின்ற தமிழ் நூல்களுள் சிலப்பதிகாரம் சைனசமயச் சார்புடைய பழைய காவியம். சைன சமயக் கொள்கைகளை உலகிற்கு அறிவிக்க எழுந்த பிற காவியங்கள் பெருங்கதை, சீவக சிந்தாமணி, சூளாமணி, நீலகேசி, மேருமந்தர புராணம், யசோதர காவியம், உதயண குமார காவியம், நாககுமார காவியம், சாந்தி புராணம் முதலியனவாம். இவற்றுள் பெருங்கதை, சிந்தாமணி, சூளாமணி என்பவை ‘பெருங்காவியம் என்னும் வரிசையில் வைத்துப் போற்றத்தக்க இயல்புடையவை. ஏனையவை அத்துணை நடைச் சிறப்பும், பொருட் பொலிவும் விஞ்ச அமைந்தவை அல்ல. சைன சமயச் சார்பான உண்மைகள் சிலவற்றைச் சொல்லும் நோக்குடன் இவை இயற்றப்பட்டிருப்பதாலேயே எங்கும் பெருக வழங்கிப் பொது மக்களிடையில் நிலைபேறான ஓர் இடத்தைப் பெற இயலவில்லை போலும்.
ஐம்பெருங் காவியம்
‘ஐம்பெருங் காவியம்’ என்னும் வழக்கு, தமிழுலகில் நீண்ட காலமாக வேரூன்றி விட்டது. இவ் வழக்கினை எழுத்துருவில் பதித்தவர் இப்பொழுது தெரிகின்ற வரையில் நன்னூலின் ‘முதல் உரையாசிரியராகிய மயிலைநாதரே யாவர். நன்னூல் 387ஆம் நூற்பாவாகிய ‘இன்னது இன்னுழி இன்னணம் இயலும் என்பதன் உரையில்,
“இவ்வாறே ஆண்பாற் பொருட் பெயரும் பெண்பாற் பொருட்பெயரும் ஏனைப்பாற் பொருட் பெயரும் இடப்பெயரும் காலப் பெயரும் சினைப் பெயரும் பண்புப் பெயரும் தொழிற் பெயரும் மரபுப் பெயரும் ஐம்பெருங்காவியம் எண் பெருந்தொகை பத்துப்பாட்டு பதினெண் கீழ்க்கணக்கு என்னும் இலக்கியங்களுள் ளும் விரிந்த உரிச் சொற் பனுவலுள்ளும் உரைத்த வாறு அறிந்து வழங்குக” என்று உரிச்சொல் வழக்குப் பற்றி உரைக்குமிடத்துக் குறிப்பிட்டுளளார். எனவே,‘ஐம்பெருங் காவியம்’ என்னும் வழக்கு மயிலைநாதரின் காலமாகிய கி.பி. 14ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டே எழுந்ததாகும் என்பது தெளிவு.
ஐஞ்சிறு காவியம்
ஐம்பெருங் காவியம் என்பது போலவே ‘ஐஞ்சிறு காவியம்’ என்னும் ஒரு வழக்கும் ஒரு சில புலவரால் எடுத்துக் காட்டப்படுகிறது. இது மிக முற்பட்ட வழக்கெனக் கூறவியலாவிடினும் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த தமிழறிஞர்களிடையே நிலவியிருந்தது என ஒருவாறு ஊகிக்க முடிகின்றது. தமிழ்நூற் பதிப்பாசிரியர்களுக்கு ஒரு முன்னோடியாய் ஏட்டுச் சுவடிகளிலிருந்து நூல்களை அச்சிடும் கலையில் வல்லவராய், பதிப்பாசிரியர் திலகமாய் விளங்கிய யாழ்ப்பாணம் சி.வை.தாமோதரம் பிள்ளையவர்கள் (கி.பி. 1832-1901) தாம் எழுதிய பதிப்புரைகளில் தமிழ் நூல் வரலாறுகளைத் தொகுத்து எழுதியுள்ளார். அவருடைய சூளாமணிப் பதிப்புரையில் ஐஞ்சிறு காவியங்களின் அறிமுகம் உள்ளது. அவர் தரும் விளக்கவுரை வருமாறு.
“மதுரைத் தமிழ்ச் சங்கத்தார் காலத்தின் பின்னர்த் தமிழிற்குக் கைகொடுத்துப் பரிபாலனஞ் செய்தவர்கள் சமணரென்பதூஉம், இக் காலத்திற் தமிழ் கற்போர் இலக்கண இலக்கியப் பயிற்சிக்காக ஓதிவரும் நூல்களிற் பெரும்பான்மையின சமணர் காலத்திற் சமணாசிரியர்களால் எழுதப்பட்டன வென்பதூஉம் முன் வீரசோழியப் பதிப்புரையில் கூறியிருக்கின்றேன்”.
அவற்றுட் சீவக சிந்தாமணி முதலிய பெருங் காப்பியங்களொத்த சிறப்புடைய தமிழிற் சமணர் எழுதி வைத்த யசோதர காவியம், உதயண காவியம், நாககுமார காவியம், சூளாமணி, நீலகேசி யெனும் பெயரிய சிறு காப்பியங்களும் உள.”
(சூளாமணிப்பதிப்பு1889- பதிப்புரை,பக்.3)
இப் பதிப்புரைப் பகுதியால் ஐஞ்சிறு காவியங்கள் இன்னின்ன என்பது தெரியவரும். ஏட்டுப் பிரதிகளில் சூளாமணிக் காவியத்தை எழுதுமிடத்து ‘இரண்டாவது’ என்னும் எண்குறிப்பு இருப்பது கொண்டு இதனை ஐஞ்சிறு காவியத்துள் இரண்டாவது எனவும் இவர் கருதுகிறார்.
“சூளாமணி இரண்டாவது காவியமென அதன் பிரதி களிலிருக்கும் குறியீ்ட்டினாற் தெரிய வருகின்றது. முதலாவது காவியம் எதுவென்றும் மற்றைய காவியங்களின் வரிசைக்கிரமம் இன்னதென்றும் விளங்க வில்லை. நீலகேசி என் கைக்கு அகப்படவில்லை. ஆயிரத்து நானூற்று சொச்சஞ் செய்யுளுள்ள மேரு மந்தர புராணத்தில் முதற்பாகமும் யசோதர காவியமுங் காஞ்சிபுரத்திலிருந்த ஸ்ரீ பாகுபலி நயினாரால் அச்சிடப்பட்டன. எஞ்சியன அச்சில் வரவில்லை. சுரவிரத காவியம் என்று ஒன்று வடமொழியில் இருப்பினும் தமிழிற் செய்யப்பட்டதாகத் தெரிய வில்லை.”
நீலகேசி தவிர ஏனைய காவியங்களின் பிரதிகள் இவருக்குக் கிடைத்திருந்தன என்பது இப் பகுதியால் வெளியாகிறது. இவர்தம் ஆய்வுரையைக் கொண்டே முற்பட இலக்கிய வரலாறு எழுதிய பூரண லிங்கம் பிள்ளை முதலியோரும் ஐஞ்சிறு காவியம் என்னும் தொகுதி பற்றி விளக் கம் தந்துள்ளனர்.
“பற்றா மிலக்கணநூற் பாவும் நூற் பாவறிந்து
கற்றார் வழங்கு பஞ்ச காப்பியமும்--கொற்றவருக்
கெண்ணிய வன்னனைக ளீரொன் பதுமறியக்
கண்ணிய மிக்கபெருங் காப்பியமும்”
(தமிழ் விடுதூது 52-53)
எனத் தமிழ விடுதூது நூலுள் ‘பஞ்சகாப்பியம்’ குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்குக் குறிப்புரை எழுதிய டாக்டர்.உ. வே. சாமிநாதையர் அவர்கள், ‘பஞ்சகாப்பியம்-சீவகசிந்தாமணி முதலிய ஐந்து நூல்கள்’ என்றும், ‘பெருங்காப்பியம் என்றது சூளாமணி, கம்ப ராமாயணம் முதலியவற்றை’ என்றும் விளக்கம் தந்துள்ளார்கள். எனவே, ஐஞ்சிறு காப்பியத்துள் ஒன்றெனத் தொகுத்துச் சொல்லப்படும் சூளாமணியை டாக்டர் ஐயர் அவர்கள் பெருங்காப்பியம் எனக் கருதியுள்ளமை இக்குறிப்புரைப் பகுதியால் புலப்படும். அரசர்க்குரிய பதினெட்டு வருணனைகள் காணப்படும் நூல்கள், பெருங்காப்பியம் எனும் தகுதிக்குரியவென இவர் கொண்டுள்ளார் என்பது தேற்றம்.
இவ்வாறாகவே, சூளாமணி ஒழிந்தனவே சிறு காவியங்கள் எனப்படுதல் வேண்டும். காவிய நூல்களை ஆராய்ந்த அறிஞர் பலரும் ஐம் பெருங்காவியம், ஐஞ்சிறு காவியம் எனும் பகுப்புள் சொல்லப்படும் நூல்கள் அனைத்தும் அத்தகுதி படைத்தன அல்ல எனச் சுட்டிக்காட்டிச் செல்கின்றனர்.[1]
-----------------
[1]. தமிழ்க் காப்பியங்கள்: கி.வா.ஜகந்நாதன் பக்.117, 126, 131.
காவியகாலம்-பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை, பக்.187-188.
தமிழ் இலக்கிய வரலாறு-பத்தாம் நூற்றாண்டு மு. அருணாசலம்,பக்.37-38.
தமிழ் இலக்கிய வரலாறு-டாக்டர் மு.வரதராசன்,சாகித்திய அக்காதெமி
வெளியீடு, 1972, பக்.150-151.
நூற்றொகைப் பெயரின் பயன்
ஐம்பெருங் காவியம், ஐஞ்சிறு காவியம் எனும் நூற்றொகுப்பு முறை யும் பெயர் வழக்கும் பொருத்தமின்று என்று ஆய்வாளர் கருதிய போதி லும், நூல்களைப் பின்னுள்ளார் அறிந்து போற்றுவதற்கு இவ்வகைத் தொகைப் பெயர்கள் துணை செய்தன என்பது உண்மை. சி.வை.தாமோதரம் பிள்ளையவர்கள் எழுதிய குறிப்புத் தமிழறிஞர்களுக்கு அந்நூல்களை நினைவு படுத்தத் துணை செய்து வந்துள்ளது. ஐஞ்சிறு காவியத்துள் ஒன்றாக அவர் கருதிய ‘நாககுமார காவியம் இன்னும் வெளிவர வில்லையே, அதனைத் தேடவேண்டும்’ என்னும் ஊக்கத்தையும் தமிழன்பர்களுக்குத் தந்து வந்திருக்கிறது. இதன் பயனாகத்தான் இந் நாககுமார காவியமும் இப்பொழுது அன்பர்களால் தெரிந்தெடுத்துப் பாதுகாக்கப்பட்டது.
மூலப்படி
நாககுமார காவியத்தின் கையெழுத்துப் படியைப் பெற்றுச் சென்னை பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் ‘தமிழாய்வு’ இதழில் வெளியிடத் தந்தவர் சமண சமயக் காவலர், ஜீவபந்து என்னும் சிறப்புப் பெயர்களைத் தம் தொண்டின் சிறப்பாலே கொண்டு விளங்கும் பெரியார் டி.எஸ்.ஸ்ரீபால் அவர்களாவர். அவர்களுக்கு இக் காவியப் படியைத் தந்தவர் வடார்க்காடு மாவட்டத்திலுள்ள தச்சாம்பாடிச் சைனப் பேரறிஞர் ஜெ.சின்னசாமி நயினார் அவர்களாவர்.
இவ்விருவரும் இக் காவியம் தமிழகத்தில் உயிர் பெற்று உலவும் வகையில் உதவி புரிந்துள்ளமையினால் நம் பாராட்டுக்கும் நன்றிக்கும் என்றும் உரியவர்களாவர்.
மூலப்படியின் நிலை
திரு. சின்னசாமி நயினார் தமக்குக் கிடைத்த சிதைந்த மூல ஏட்டுப்படி யொன்றிலிருந்து எழுதிப் பல ஆண்டுகளுக்கு முன்பே வைத்திருந்தார். இந்நூலுக்கு ஓர் உரையெழுதவும் முனைந்து ஓரளவு செய்திருந்தார். இது குறித்துத் தச்சாம்பாடி திரு.ஜெ.சின்னசாமி நயினார் அவர்களுடன் கடிதத் தொடர்பு கொண்டு கேட்டதில் பின்வரும் செய்திகள் தெரிய வந்தன.
“அடுத்து வரும் ‘தமிழாய்வு’ இதழில் (பகுதி-2) நாககுமார காவிய வெளியீட்டின் முயற்சியைப் பெரிதும் வரவேற்கிறோம். அந்நூலை 20 ஆண்டுகட்கு முன் கிலமடைந்ததோர் ஏட்டுப் பிரதியிலிருந்து படிவம் எடுத்தேன். அக்கதை தமிழிலும் இல்லை. சமஸ்கிருத நூற்பயிற்சியும் எனக்கில்லை. புண்ணியாஸ்ரவ கதையைக்கொண்டு முதற் சருக்கத்திற்குக் குறிப்புரை எழுதினேன். இடையில் வேறோர் செம்மையான கதை (கையெழுத்துப் பிரதி)யைக் கொண்டு பொழிப்புரை வரைந்தேன். இரண்டும் ஏட்டுப் பிரதியில் இல்லை, என் முயற்சிதான். அம் முதற் சருக்கத்திற்கும் சமஸ்கிருத நாககுமார காவியம் பயின்றவர்களைக் கொண்டு செப்பஞ் செய்து விடலாமென விட்டு விட்டேன். அரும்பதவுரையை நீக்கி அதற்கும் பொழிப்புரை வரைந்து வெளியிடலாம்.”
(21-11-72ஆம் நாள் கடிதம்)
இவர்கள் படியெடுத்த மூல ஏட்டுப் படியாகிலும் கிடைத்தால் விளங்காத பகுதிகளை மேலும் ஊன்றி ஆய்ந்து நோக்கலாம் என்று கருதினேன். அதனைப் படி செய்தவரிடமேகூட அஃது இன்று இல்லை என்பது,
“நாககுமார காவியமும் யானே ஏட்டுப் பிரதியிலிருந்து படியெடுத்தேன். கதைப் போக்கைக் கொண்டு ஊகமாகத் திருத்தியுள்ளேன். வேறு பிரதியொன்றை இயன்றவரை முயன்று தேடியும் கிடைக்கவில்லை. கிடைத்த பிரதியும் மிகப் பழுதடைந்த பிரதியாதலின் கை தவறிப் போயிற்று” என்னும் திரு.சின்னசாமி நயினார் அவர்கள் 22-11-72ல் எழுதிய மற்றொரு கடிதத்தால் தெரியவருகிறது.
நூலும் உரையும்
மூலப்படியும் கிட்டாநிலையில், படியெடுத்தவர் ஊகமாகத் திருத்தி எழுதிய நிலையில் இந்நூலைச் செம்மையுற அமைத்துவிட்டோம் என்று சொல்வதற்கில்லை. ஓரளவு செம்மை செய்து மூலபாடம் தரப்பட் டுள்ளது. வேறு நல்ல சுவடி இனிக் கிடைக்கப்பெறுமேல், இந்நூல் மேலும் திருத்தமுற அமைதல் உறுதி. எனினும் இந்த அளவிலேனும் பழைய காவியம் ஒன்றை அச்சில் பதிப்பிக்க இயன்றதே என்பதை எண்ணும்போது ஓரளவு ஆறுதல் ஏற்படுகிறது.
திரு, சின்னசாமி நயினார் அவர்கள் இரண்டாம் சருக்கம் முதல் நூல் முழுமைக்கும் எழுதிய உரைப் பகுதியை ஒழுங்குபடுத்திச் செப்பஞ் செய்துள்ளேன். முதற் சருக்கத்திற்கு மட்டும் யான் பொழிப்புரை வரைந்து சேர்த்துள்ளேன். இவ்வாறாக இந்நூல் முற்றும் பொழிப்புரையுடன் இப்பொழுது வெளியாகிறது. இவ்வுரைப்பகுதி மூல நூற் கதையையும் ஆராய்ந்து எழுதப்பெற்றுள்ளமையால் பாடலின் நேர் பொழிப்புரையோடு தொடர்புடைய வேறு செய்திகளும் உடன் சேர்ந்திருக்கும். இக்காவியப் பொருள் விளக்கத்திற்கு அப்பகுதிகளும் இன்றியமையாதனவாதலின் அப்படியே தரப்பட்டிருக்கின்றன.
காவிய அமைப்பு
நாககுமார காவியம் ஐந்து சருக்கங்களையும் 170 பாடல்களையும் கொண்டுள்ளது. காப்புச் செய்யுள் நூலிற்குப் புறம்பாய் முதற்கண் அமைந்துள்ளது. இச்சருக்கங்களை ஒவ்வொன்றிலும் அடங்கிய பாக்களின் அளவு குறித்துக்கூறும் இரண்டு பாடல்கள்
நூலிறுதியில் காணப்படுகின்றன.
“முதற்சருக் கந்தன்னிற் கவிமுப்பத் தொன்பதாம்
இதனிரண் டாவதன்னில் ஈண்டுமுப் பத்துநான்காம்
பதமுறு மூன்றுதன்னில் பாட்டிருபத் தெட்டாகும்
விதியினா னான்குதன்னில் நாற்பத்து மூன்றுதன்றே.’
‘இன்புறு மைந்து தன்னி விரட்டித்த பதின்மூன் றாகும்
நன்புறக் கூட்ட வெல்லா நான்கைநாற் பதின்மாற
வன்பினற் றொகையின் மேலே வருவித்தீ ரைந்தாகும்
இன்புறக் கதையைக் கேட்பாரியல்புடன் வாழ்வ ரன்றே.’
இவை இந்நூலைக் கற்ற ஒருவர் பின்னாளில் செய்தனவாயிருத்தல் வேண்டும். இப் பாடல்களில் காணுமாறே நாககுமார காவியத்தின் பாடற்றொகையும் அமைந்துள்ளது.
சருக்கங்கள் முதல், இரண்டு என எண்ணுப் பெயரால் குறிக்கப் படுகின்றனவேயன்றி அவற்றிற்குத் தனிப் பெயர் தரப்படவில்லை. வடமொழியிலுள்ள நாககுமார காவியமும் இவ்வாறேதான் உள்ளது. இது சிந்தாமணி, சூளாமணி, யசோதர காவியம் முதலிய காவியங்களைப் போல விருத்தயாப்பில் அமைந்துள்ளது. தமிழில் விருத்த காவியங்களே மிகுதியாயுள்ளன.
‘திருத்தக்க மாமுனி சிந்தாமணியும் கம்பன் விருத்தக் கவித்திறமும்’ காவியம்
பாடுவார்க்கு வழிகாட்டியிருக்கின்றன என்னலாம்.
கவிக் கூற்றால் கதை நடத்தல்
கதை நடத்திச் செல்லுகின்ற திறத்திலும் பிற காவிய மரபுகளை இதுவும் பெற்றுள்ளது. இடையிடையே கவிக் கூற்றாகக் கதைப் போக்கினைத் தெரிவித்து மேலே விவரித்துச் செல்வது ஒரு மரபு. இம் மரபினை இக்காவியத்துள்ளும் காணலாகும்.
‘செந்தளிர்ப் பிண்டியின்கீழ்’ எனத் தொடங்கும் இக்காவியத்தின் முதற் செய்யுள், தெய்வ வணக்கமும் செயப்படுபொருளும் உரைக்கின்றது. ‘கொந்தலராசன் நாககுமார னற்கதை விரிப்போம்’ என்று இதிலே தோற்றுவாய் செய்கிறார் கவிஞர். இவ்வாறே மூன்றாம்
சருக்க முதலிலும்,
‘அரிவையர் போகந் தன்னி லானநற் குமரன் றானும்
பிரிவின்றி விடாது புல்லிப் பெருமலர்க் காவு சேர்ந்து
பரிவுட னினிதி னாடிப் பாங்கினாற் செல்லு நாளில்
உரிமையாற் றோழர் வந்து சேர்ந்தது கூற லுற்றேன்’
என்று கதையின் பெருந்திருப்பத்தைக் கவிக்கூற்றாகக் காண்கின்றோம்.
காவியப் பெயர்
இக் காவியத்திற்கு ‘நாக பஞ்சமி கதை’ என்றும் ஒரு பெயர் உண்டு. வடமொழிக் காவியத்தின் ஒவ்வொரு சருக்க முடிவிலும் இப் பெயரை அதன் ஆசிரியர் மல்லிசேனர் குறிப்பிடுகின்றார். விபுல மலையிலுள்ள சமவசரணத்திற்குத் தன் சுற்றத்தாரோடு வந்து வணங்கிய சிரேணிக மகாராசன் கௌதம முனிவரை வணங்கித் தருமங் கேட்கிறான். தரும தத்துவங்களைக் கேட்டபின், அம் முனிவரிடம் ‘பஞ்சமி கதை’யினை உரைக்க வேண்டுகிறான். நற்றவர்க்கு இறையான நற் கௌதமர் சிரேணிக மகாராசனுக்குச் சொல்வதாகவே இக் காவியக் கதை அமைந்துள்ளது. இதனை,
‘சிரிநற் பஞ்சமி செல்வக் கதையினை
செறிகழல் மன்னன் செப்புக வென்றலும்
அறிவு காட்சி யமர்ந்தொழுக் கத்தவர்
குறியு ணர்ந்ததற் கூறுத லுற்றதே’
(நாக.25)
என வரும் முதற் சருக்கப் பாடலால் அறியலாம். இங்கே கவிஞர் வடமொழிக் காவியத்தைப் போல ‘பஞ்சமி கதை’ என்று சுட்டுதல் காணலாம்
காவியப் போக்கு
நாககுமாரன் சரிதம் 26ஆம் பாடலுடன் தொடங்குகிறது. இது முதலாக நான்காம் சருக்கம் வரையில் நாககுமாரனின் வீரதீரச் செயல்களும், காதல் களியாட்டங்களும் சிறப்பிக்கப்படுகின்றன.
இறுதிச் சருக்கமான ஐந்தாம் சருக்கம் நாககுமாரனின் முற்பிறப்பு வரலாற்றையும், பஞ்சமி விரத நோன்பையும், அதனால் விளையும் பெரும் பயனையும், துறவு நிலையையும் எடுத்துரைக்கின்றது.
நாககுமாரன் அரசகுல மங்கையரையும் பிறரையும் திருமணம் செய்துகொள்கிறான். காவிய நெடுகிலும் இவன் செய்து கொண்ட திருமணங்கள் பல பேசப்படுகின்றன. அவனும் வீரச் செயல்களைப் போலவே இன்பம் அனுபவிப்பதிலும் நாகலோக வாசிகள் போலக் காணப்படுகிறான். மன்னர் பலரும் மாவீரர்களும் இவனுக்கு உற்ற துணைவர்களாயிருந்து இவனிட்ட ஏவலை ஏற்றுப் பணி புரிகின்றனர்.
இத்தகு சீரோடும் சிறப்போடும் வாழ்ந்த இவன் முனிவர்பால் தருமம் கேட்டு, ஞான நன்னிலை பெறுகிறான். இறுதியில் தன் மகன் தேவ குமாரனுக்கு முடி சூட்டித் துறவு மேற்கொள்கிறான். நாககுமாரன் துறவேயன்றி செயவர்மாவின் துறவு (78), சோமப்பிரபனின் துறவு (107) முதலியனவும் இக்காவியத்துள் இடம் பெறுகின்றன. எனவே, உலக இன்பங்களில் சிக்கிச் சுழன்றாலும் இறுதியில் துறவு பூண்டு இறைநிலை பெறவேண்டும் என்னும் குறிக்கோளையும் இக் காவியம் எடுத்துரைக்கின்றது.
அருக சமயக் கோட்பாடுகள்
அருக சமயக் கோட்பாடுகளம் இக் காவியத்தில் அங்கங்கே சுட்டப்பட்டுள்ளன. சினாலயங்களுக்குச் சென்று வணங்குதலும், முனிவர்களைத் தொழுது தருமங் கேட்டலுமாகிய நிகழ்ச்சிகள் இடையிடையே வருதல் காணலாம். அருக தேவரைத் துதித்து உளமுருகப் பாடும் பாடல்களும் இக்காவியத்திலுள்ளன.
அருக தேவர் புகழ்மாலை
சிரேணிக மகாராசன் வர்த்தமான மகாவீரரைத் துதித்துப் போற்றும் பாடல்கள் ஐந்து (16-20) முதல் சருக்கத்தில் இடம் பெற்றுள்ளன.
'பொறியொடு வல் வினைவென்ற புனிதன் நீயே
பூநான்கு மலர்ப் பிண்டிப் போதன் நீயே!’
என்று ‘முன்னிலைப் பரவலா’க இவை அமைந்துள்ளன.
நான்காம் சருக்கத்தில் நாககுமாரன் சயந்தகிரிச் சினாலயம் பணிந்து முக்குடைக்கீழ் விளங்கும் மூர்த்தியைப் போற்றுகிறான்:
'முத்திலங்கு முக்குடைக்கீழ் மூர்த்தி திருந்தடியை
வெற்றியுடன் பணிந்தவர்கள் விண்ணுலக மாண்டுவந்து
இத்தலமு முழுதாண்டு விருங்களிற் றெருத்தின்மிசை
நித்தில வெண்குடைக்கீழ் நீங்கா திருப்பவரே’ (118)
என்பது தொடக்கமான மூன்று பாடல்களும் அருகன் புகழ் மாலையே. இவை ‘படர்க்கைப் பரவல’ாகப் பாங்குற விளங்குகின்றன.
பெருங்காவியப் பண்பு
இங்ஙனம் சிறுகாவியமாகிய இதில் பெருங்காவியக் கூறுகள் பல விரவிவரக் காணலாம். பெருங்காவிய இலக்கணத்திற்குத் தண்டியலங்காரம் வகுக்கும் இலக்கணமே மேல்வரிச் சட்டமாக விளங்குகிறது: ‘பெருங்காப் பியநிலை பேசுங் காலை’ என்னும் நூற்பாவில் காணும் பொருள்களிற் பெரும்பாலனவும் இக் காவியத்தின்கண் இடம்பெற்றுள்ளன. சூதுபோரை எடுத்துக் கொண்டுள்ள இக்காவியம் ‘மதுக்களியை’ எவ்விடத்தும் சுட்டாமை கருதற்பாலது.
நாககுமார காவியமும் யசோதர காவியமும்
இந் நாககுமார காவியத்திற்கும் பிற காவியங்களுக்கும் தொடர்புண்டா என்பதும் ஆய்தற்குரியது. காவிய அமைப்பில் யசோதர காவியத்துடன் இது ஒருசில வகைகளில் ஒத்துக் காணப்படுகிறது. தெய்வ வணக்கம், அவையடக்கம், நூற்பயன், நாடு நகரச் சிறப்பு என்று வருகின்ற முறைமை முதலிற் காணும் ஒருமை நிலை. இவற்றுள் அவையடக்கச் செய்யுள் இரு நூலிலும் ஒரே வகையில் உரைக்கப்பட்டிருக்கின்றது:
'புகைக்கொடி யுள்ளுண் டென்றே பொற்புநல் லொளிவி ளக்கை
இகழ்ச்சியி னீப்பா ரில்லை யீண்டுநற் பொருளு ணர்ந்தோர்
அகத்தினி மதியிற் கொள்வா ரரியரோ வெனது சொல்லைச்
செகத்தவ ருணர்ந்து கேட்கச் செப்புதற் பால தாமே’
என்பது நாககுமார காவியத்தின் அவையடக்கம்.
'உள்வி ரிந்த புகைக்கொடி யுண்டென்
றெள்ளு கின்றன ரில்லை விளக்கினை
உள்ளு கின்ற பொருட்டிற மோர்பவர்
கொள்வ ரெம்முரை கூறுதற் பாலதே’
என்பது யசோதர காவியம். இரு காவிய ஆசிரியரும் காட்டும் உவமை யொன்றாகவே
அமைந்துள்ளது.
நாககுமார காவிய காலம்
திருமணம் செல்வக்கேசவராய முதலியார் தாம் எழுதிய ‘கம்பநாடர்’ என்னும் நூலிலே
தமிழில் தண்டியலங்காரம் தோன்றுவதற்கு முன்னரே காவியங்கள் ஏற்பட்டுவிட்டன என்று குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூற்று வருமாறு.
“தமிழில் தண்டியலங்காரம் ஏற்படுவதற்கு முன்னரே
ஐம்பெருங் காப்பியங்களில் சிந்தாமணியும் ஐஞ்சிறு
காப்பியங்களும் ஏற்பட்டு விட்டன. இவைகளெல்லாம்
பெரும்பான்மை வடமொழிக் காப்பியங்களின் போக்கைப் பின்பற்றியவை. இவற்றைப் பாடிய கவிகள்
வடமொழிப் புலமை நிரம்பிய ஜைனப் புலவர்கள்.”
இப்பெரியார் கருத்துப்படி தமிழ்த் தண்டியலங்காரம் தோன்றிய காலம் எனக் கருதப்படும் கி.பி. 12ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டவை ஐஞ்சிறு காவியங்கள் என்பது பெறப்படும். எனவே, ஐஞ்சிறு காவியங்களுள் ஒன்றான நாககுமார காவியமும் 12ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டுத் தோன்றிய நூல் என்பது வெளிப்படை.
ஐஞ்சிறு காவியங்களுள் யசோதர காவியமும் நாககுமார காவியமும் பழைய உரைகாரர் எவராலும் மேற்கோளாக எடுத்தாளப்படவில்லை. கி.பி.14ஆம் நூற்றாண்டில் அறம் பொருள் பயக்கும் காவிய நூற் பாடல் களைத் திரட்டித் தந்துள்ள ‘புறத்திரட்‘டில் இவ்விரு காவியச் செய்யுள்கள் எதுவும் இடம் பெறவில்லை. எனவே, இக்காவியங்கள் மேற்குறித்த கால எல்லைக்குப் பிற்பட்டுத் தோன்றியவை என்று கொள்ளலாம் என்று கருதுவாரும் உண்டு. ஒரு நூல் முன்னையோரால் எடுத்தாளப்படாமையினாலேயே பிந்தியது என ஒருதலையாகத் துணிய முடியதாயினும் ஐயுறவு கொள்வதற்கு இடமுண்டு.
இருபத்துநான்கு தீ்ர்த்தங்கரர் சரித்திரம் உரைக்கும் ‘ஸ்ரீபுராணம்’என்னும் மணிப்பிரவாள நடையிலுள்ள தமிழ் நூலுள் நாககுமார காவியத்தின் தோற்றுவாயாகத் தரப்பட்டுள்ள சிரேணிக மகாராசனின் வரலாறு காணப்படுகிறது. இருபத்து நான்காம் தீர்த்தங்கரர் சரித்திரம் உரைக்கும் பகுதியாகிய ஸ்ரீ வர்த்தமான புராணத்தில் சிரேணிக மகாராசன் விபுலகிரி சிகரத்தில் உள்ள சமவசரண மண்டலத்தில் ஸ்ரீ வர்த்தமானரைத் தொழுது போற்றியமையும், அங்குக் கௌதம சுவாமியிடம் தன் முன்னைப் பிறப்புத் தொடர்பினை வினவியறிந்ததும் சொல்லப்பட்டிருக்கிறது (பக்.505-506). சிரேணிக மகாராசனின் தேவியாகிய சேலினியைப் பற்றியும் குறிக்கப்பட்டிருக்கிறது. (பக்.512-513). எனவே, ஸ்ரீபுராணத்திற்குப் பின்னரே இக் காவியம் தோன்றியிருத்தல் கூடும்.
தமிழிலுள்ள ஸ்ரீபுராணத்தின் காலம் பல்வேறு குறிப்புகளைக் கொண்டு ஏறக்குறைய கி.பி.15ஆம் நூற்றாண்டு என்று அந்நூற்பதிப்பிற்குத் தாம் எழுதிய ஆங்கில முகவுரையில் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை குறிப்பிட்டுள்ளார். இந்தத் தமிழ் நூல் வடமொழியில் கி.பி.9ஆம் நூற்றாண்டில் தோன்றிய ‘மகாபுராண‘த்தைப் பெரிதும் தழுவிச் செல்கிறது. பழங் கன்னடத்தில் கி.பி.997-ல் இயற்றப்பட்ட ‘சாமுண்டராய புராண’மும் வடமொழி மகாபுராணத்தைப் பின்பற்றி எழுந்ததேயாகும்.
நாககுமாரன் சரிதம் இந்நூல் மூலத்திலிருந்தே வளர்ந்து பெருகியது எனக் கருத இடமுண்டு.
எனவே, இஃது இம்மூல நூல்களின் காலத்திற்குப் பிற்பட்டுத் தோன்றியதாதல் வேண்டும்.
கி,பி. பத்தாம் நூற்றாண்டில் புட்பதந்தர் என்பவர் அவப்பிரம்ஸ மொழியில் நாககுமார சரிதத்தை விரிவாக யாத்துத் தந்தார் என்பது தெரியவருகிறது. இதை அடியொற்றியே வடமொழி, கன்னடம் முதலிய பிறமொழிகளிலும் ஜைன ஆசிரியர்களால் இச் சரிதம் தனி நூலாகச் செய்யப்பட்டு வந்திருக்கிறது. இவ்வகை வரலாற்றுச் சூழல்களைக் கொண்டு பார்க்கும் போது திருமணம் செல்வக்கேசவராய முதலியார் அவர்கள் கொண்ட கருத்துப் பொருத்தமானது என்றே எண்ண இடமாகிறது. ஆதலால், இத்தமிழ்க் காவியமும் கி.பி. 12ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டுத் தோன்றியது எனக் கொள்ளலாம்.
பிற மொழிகளில் நாககுமார சரிதம்
‘நாககுமார சரிதம்‘ என்பது ‘பஞ்சமி சரிதம்‘, ‘நாககுமார கதை‘ என்னும் பெயர்களாலும் பிற மொழிகளில் செய்யப் பெற்றிருக்கிறது. அவப்பிரம்ஸ மொழியில் புட்பதந்தர் செய்த நூல் பற்றி முன்னர்க் குறிப்பிடப்பட்டது.[1] வடமொழியில் உள்ள நாககுமார சரிதம்[2]. அந்நூலை ‘நாகபஞ்சமி கதை‘ என்றும் குறிப்பிடுகிறது. இதனை இயற்றியர் சைனப்புலவராகிய மல்லிசேனர் என்பவராவர். இவ்வடமொழிக் காவியத்தில் ஐந்து சருக்கங்களும் அவற்றுள் முறையே 119, 74, 113, 105, 87 பாடல்களும் உள்ளன. இக் காவியத்தில் உள்ள 498 பாடல்களுள் ஒவ்வொரு சருக்கத்தின் ஈற்றிலுமுள்ள 5 பாடல்களைத் தவிர ஏனைய 493 கவிகளும் ‘அநுஷ்டுப்‘ என்னும் பாவகையில் அமைந்துள்ளன. கதைப் போக்கில் இவ் வடமொழிக் காவியத்திற்கும் தமிழ்க் காவியத்திற்கும் ஒரு சில இடங்களில் வேறுபாடு காணப்படுகிறது. இந்நூல் தவிர தாரசேனர் என்பவர் இயற்றிய வடமொழிக் கவிதையாலான நாககுமார சரிதம் ஒன்றும் உள்ளது. இராமச்சந்திர முமுட்சு வடமொழியில் எழுதிய ‘புண்ணியாஸ்ரவ கதையிலும்‘ இச்சரிதம் இடம் பெற்றுள்ளது. பாகுபலி கவி என்பவர் கன்னட மொழியில் நாககுமார சரிதம் இயற்றியுள்ளார். இதுதவிர இரத்னாகரகவி எழுதிய நூல் ஒன்றும் கன்னடத்தில் உள்ளது. இவ்வாறாகப் பல மொழிகளிலும் போற்றிக் காவியமாக்கப் பெற்ற சிறப்புடையது இந் நாககுமார சரிதம் என்பது தெரிய வரும்.
-----------
[1.] இந்நூல் 1933ஆம் ஆண்டு கிரிலால் ஜெயின் என்பவரால் முதன்முதல் பழைய சுவடியிலிருந்து அச்சிடப்பெற்றது. இதில் பதிப்பாசிரியர் சிறந்ததோர் ஆராய்ச்சி முகவுரையை ஆங்கிலத்தில் தந்துள்ளார். இம் முகவுரையில் நாக குமார சரிதம் பற்றிப் பல மொழிகளிலும் வந்துள்ள நூல்களைப் பற்றிய குறிப்புகளை விவரித்துள்ளார். மற்றும் இச் சரிதம் முழுமையும் அந்நூலுள் காண்கிறபடி எழுதியிருப்பதோடு அந்நூலால் வெளிப்படும் சிறப்புச் செய்திகளையும் வகைப்படுத்தி விளக்கியுள்ளார். Nayakumaracariu of Puspadanta, Edited by Hiralal Jain, M.A., LL.B., Balatkaragana Jaina Publication Society, Karanja, Berar (India), 1933.
[2]. வடமொழிக் காவியச் செய்திகளை அறிவதற்கு எனக்கு உதவியது பேராசிரியர் கே.ரங்காசாரியாரால் பூனாவில் உள்ள பண்டர்கார் கீழைக்கலை ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட பேராசிரியர் காசிநாத் பாபுஜி பதக் (13-10-1850--2-9-1932) என்பாரின் நினைவு மலரில் (1934) எழுதப்பட்ட ஒரு கட்டுரை யாகும்.
---------
காவிய ஆசிரியர்
தமிழ் நாககுமார காவியத்தை ஆக்கிய ஆரியர் பெயர் அறியக்கூட வில்லை. இக் காவியத்திற்கு வேறு நல்ல ஏட்டுச் சுவடிகள் கிடைக்குமானால், ஒருகால் தெரிவதற்கு ஏதுவுண்டு. இதன் ஆசிரியர் சைன சமயத்தவராவர் என்பதும் சைன சமயக் கோட்பாடுகளில் தேர்ந்தவர் என்பதும் இக்காவியத்தால் புலப்படும். கதைகளைத் தொகுத்தும் வகுத்தும் உரைக்கும் கலையில் இவர் கைதேர்ந்தவர் என்பது இக்காவிய நடையினால் நன்கு விளங்கும்.
நன்றியுரை
‘தமிழாய்வு‘ இதழில் ‘அச்சில் வாரா அருந்தமிழ்‘ வெளியீட்டு வரிசை யில் இந்நூலை வெளியிடுவதற்கு மூலப்படியைத் தேடிப் பெற்றுத் தந்த பெரியார் டி.எஸ்.ஸ்ரீபால் அவர்களுக்கும் பழுதான ஒரு பிரதியைப் படி யெடுத்துக் காப்பாற்றி வைத்து வழங்கிய தச்சாம்பாடி சின்னசாமி நயினார் அவர்களுக்கும் தமிழ் மக்களின் நன்றி என்றும் உரியது. இந் நூலை வெளியிட அவ்வப்போது ஊக்கி ஆவன செய்துவரும் தமிழ்த் துறைத் தலைவர்-பேராசிரியர், டாக்டர், ந.சஞ்சீவி அவர்களுக்கு நன்றி பாராட்டும் கடப்பாடுடையேன். இந்நூலின் அச்சுப் பணியில் எனக்கு அவ்வப்போது உதவிய திருக்குறள் ஆராய்ச்சிப் பகுதியில் பணிபுரியும் ஆராய்ச்சித் துணைவர் கு.மோகனராசு, தமிழ்த் துறை ஆராய்ச்சி மாணவர் அ.நாகலிங்கம் ஆகியோருக்கும் என் நன்றி உரியது.
‘தமிழாய்‘வில் வெளியிடப்படும் இக்காவியத்தைத் தனி நூலாகவும் வெளியிட வாய்ப்பளித்த பல்கலைக் கழகத் துணைவேந்தர் பெருந்தகை தாமரைச் செல்வர் நெ.து.சுந்தரவடிவேலு அவர்களுக்கும் சென்னைப் பல்கலைக் கழக ஆட்சிக் குழுவினருக்கும் என் நன்றியும் வணக்கமும் உரியனவாகுக.
சென்னை, திருக்கார்த்திகைத் திருநாள், 8-12-73
மு. சண்முகம் பிள்ளை
-------------
நாக குமார காவியம்
முதல் சருக்கம்
காப்பு
மணியுநற் கந்தமுத்து மலிந்த முக்குடை யிலங்க
அணிமலர்ப் பிண்டி யின்கீ ழமர்ந்த நேமீசர் பாதம்
பணியவே வாணி பாதம் பண்ணவர் தமக்கு மெந்தம்
இணைகரஞ் சிரசிற் கூப்பி யியல்புறத் தொழுது மன்றே.
நேமீசர் வணக்கம்: ஸ்ரீ நேமி சுவாமி தீர்த்தங்கரர் இருபத்து நால்வருள் 22ஆம் தீர்த்தங்கரர். சீவக சிந்தாமணியில் ‘நிகரில் நேமிதன் நீள்நகர்’ (912) என வந்துள்ளமை காணத்தகும்.
அருகக் கடவுளுக்குரிய பெயர்களுள் ஒன்றாக நேமிநாதன் என்பதனைச் சூடாமணி நிகண்டு கூறுகிறது. தரும சக்கரத்தையுடைய இறைவன் என்பது இதன் பொருள். ‘அறவாழி யந்தணன்’ என (குறள்-8) வள்ளுவர் குறிப்பதும் ஈண்டு ஒப்புநோக்கற்பாலது.
இந் நேமிநாதர் ஸ்ரீ கிருஷ்ணனுக்கு ஒன்றுவிட்ட சகோதரன் என்று அரிவம்ச புராணம் கூறுகிறது.
நல்ல அழகிய இரத்தினங்களும் நறுமணப் பொருள்களும் நிறைந்து முக்குடை ஒளிர்கின்றது. இத்தகு குடையின் நிழலில் அசோக மரத்தின் அடியிலே அமர்ந்திருக்கிறார் நேமீசராகிய அருக தேவர். இவருடைய திருவடிகளை வணங்கும் பொருட்டு வாணி பாதத்தையும், குருவின் பாதத்தையும் எம்முடைய இரு கரங்களையும் தலைமேல் குவித்து முறைப்படி வணங்குவோம்.
தெய்வ வணக்கமும் செயப்படு பொருளும்
1. செந்தளிர்ப் பிண்டி யின்கீழ்ச் செழுமணி மண்ட பத்துள்
இந்திர னினிதி னேத்து மேந்தரி யாச னத்தின்
அந்தமா யமர்ந்த கோவி னருள்புரி தீர்த்த காலங்
கொந்தல ராசன் நாக குமரனற் கதைவி ரிப்பாம்.
சிவந்த தளிர்களுடன் கூடிய அசோக மரத்தின் கீழே, வளப்பம் பொருந்திய அழகிய மண்டபத்தினுள், இந்திரன் துதிபாடி நிற்க, சிங்கங்கள் தாங்கிய அரியாசனத்தின்மேல் அழகுற வீற்றிருக்கும் அருகப் பெருமானின் அருளுடன், அவன் தந்தருளிய ஆகமங்களின் காலத்து வாழ்ந்த கொத்தான பூக்களை அணிந்த அரசனாகிய நாக குமாரனின் புண்ணிய சரிதத்தை வரித்துச்சொல்லுவோம். (1)
2. திங்கள் முந்நான்கு யோகந் தீவினை யரிய நிற்பர்
அங்கபூ வாதி நூலு ளரிப்பறத் தெளிந்த நெஞ்சிற்
தங்கிய கருணை யார்ந்த தவமுனி யவர்கள் சொன்ன
பொங்குநற் கவிக்க டறான் புகுந்துநீர்த் தெழுந்த தன்றே.
பன்னிரண்டு மாதங்கள் யோக நிலையில் விடாது நின்று, தம் தீவினைகளைத் தம்மிடத்தின்றும் போக்கி நிற்பவரும், அங்காகமமாகிய பழைய முதல் நூலுள் குற்றம் நீங்கத் தெளிந்த நெஞ்சமுடைய வரும், நெஞ்சத்தில் கருணை நிறைந்தவருமான தன்மையையுடையவர்கள் தவ முனிவர்கள். இம் முனிவர்கள் சொன்ன கவின் நிறைந்த நல்ல கவிக்கடலிலே படிந்து, அக் கடல் நீரின் குளிர்ச்சியைப் பெற்று என் உள்ளம் ஓங்கியது.
அரிப்பற-குற்றம் நீங்க.
அங்கபூவாதி நூல்-அங்க பூர்வாங்க ஆகமம். (2)
அவையடக்கம்
3. புகைக்கொடி யுள்ளுண் டென்றே பொற்புநல் லொளிவிளக்கை
இகழ்ச்சியி னீப்பா ரில்லை யீண்டுநற் பொருளு ணர்ந்தோர்
அகத்தினி மதியிற் கொள்வா ரரியரோ வெனது சொல்லைச்
செகத்தவ ருணர்ந்து கேட்கச் செப்புதற் பால தாமே.
அழகிய நல்ல விளக்கின் ஒளியினூடே புகையொழுங்கும் உள்ளது என்று அந்த விளக்கை இகழ்ந்து நீக்குவார் யாரும் இல்லை. இவ்வுலகத்தின்கண் நற்பொருளாம் ஞானத்தை உணர்ந்தோர்
என் சொற்களைத் தத்தம் அறிவினால் ஏற்றுக் கொள்வார். அவ்வாறு ஏற்காதவர் மிக அரியராவர். உலகத்தவரும் கூர்ந்து கேட்கும் வண்ணம் சொல்வது என் பொறுப்பாகும். (3)
கேட்போர் பெறு பயன்
4. வெவ்வினை வெகுண்டு வாரா விக்கிநன் கடைக்கும் வாயகள்
செவ்விதிற் புணர்ந்து மிக்க செல்வத்தை யாக்கு முன்னங்
கவ்விய கரும மெல்லாங் கணத்தினி லுதிர்ப்பை யாக்கும்
இவ்வகைத் தெரிவு றுப்பார்க் கினிதுவைத் துரைத்து மன்றே.
கொடிய வினைகள் உருத்தெழுந்து வந்து சேரா. அவற்றின் வாய்கள் விக்கி நன்றாக அடைக்கும். நன்றாகச் சேர்ந்து மிகுந்த பொருளைச் சேர்க்கும். முன்பாகப் பற்றிய வினைகள் எல்லாம் கணப் பொழுதில் விட்டு நீங்கிப் போகும். இவ்வகையில் ஆராய்ந்து பார்ப்பார்க்கு இனிதாக வைத்து இவற்றைப் பேசுகிறோம். (4)
மகத நாட்டுச் சிறப்பு
5. நாவலந் தீப நூற்றை நண் ணுதொண் ணூறு கூறில்
ஆவதன் னொருகூ றாகு மரியநற் பரத கண்டம்
பாவலர் தகைமை மிக்கோர் பரம்பிய தரும பூமி்
மேவுமின் முகில்சூழ் சோலை மிக்கதோர் மகதநாடு.
நாவலந் தீவைச் சேர்ந்த நூற்றுத் தொண்ணூறு பகுதிகளுள் ஒன்றாகும் கிடைத்தற்கரிய நல்ல பரத கண்டம். இது பாவலராம் கவிஞரும் பண்புகளால் நிறைந்தோரும் பரவி வாழ்கின்ற தரும பூமி. இதில் உள்ள மகத நாடு மின்னலோடு கூடிய மேகங்கள் வந்து சூழ்ந்து தங்குகின்ற சோலைவளம் மிக்கது. (5)
இராசமாகிரிய நகரம்
6. திசைகளெங் கெங்குஞ் செய்யாள் செறிந்தினி துறையு நாட்டுள்
இசையுநற் பாரி சாத வினமலர்க் காவுஞ் சூழ்ந்த
அசைவிலா வமர லோகத் ததுநிக ரான மண்ணுள்
இசையுலா நகர மிக்க விராசமா கிரிய மாமே.
எல்லாத் திக்குகளிலும் திருமகள் நிறைந்து மகிழ்ந்து வாழும் தகைமையது அந்த மகத நாடு. பல்வகை இசையும் பாரிசாத மலர்கள் நிறைந்த பூங்காக்களும் உடையதாய் நடுக்கமற்ற தேவருலகத்திற்கு
ஒப்பாக இப் பூமியுள் புகழ்பெற்ற நகரமாக விளங்கியது மகத நாட்டின் தலைநகராகிய இராசமாகிரியம். (6)
7. கிடங்கரு கிஞ்சி யோங்கிக் கிளர்முகில் சூடிச் செம்பொன்
கடங்கள்வைத் திலங்கு மாடங் கதிர்மதி சூட்டி னாற்போல்
படங்கிடந் தல்கு லார்கள் பாடலோ டாட லாலே
இடங்கொண்ட வின்ப மும்ப ரிடத்தையு மெச்சு மன்றே.
அகழியின் அருகில் மதில் மிகவும் உயர்ந்து நின்றதால் பொங்கி யெழும் மேகக் கூட்டங்களை அம் மதில் தாங்கி நிற்கிறது. செம்மையான பொற் கலசங்கள் வைக்கப் பெற்றதனால் விளக்க முற்றிருக்கும் மாடங்கள். அவற்றில் ஒளிமிக்க முழுமதியை அணிந்தாற்போல பாம்பின் படம் போன்ற அல்குலினையுடைய மடவார் பாடலும் ஆடலும் நிகழ்த்தினர். ஆதலால், விரிந்து பரந்த இன்பத்தினாலே தேவருலகத்தையும் குறைபடச் செய்யும் இயல்பினதாயது அந் நகரம் (7)
சிரேணிக ராசனின் செங்கோலாட்சி
8. பாரித்த தன்மை முன்னம் பாலித்தற் கைம்ம டங்காம்
பூரித்த தார்கள் வேய்ந்த பொற்குடை யெழுந்த மேகம்
வாரித்த திசைந்த ளிக்கும் வண்கையம் பொற்றிண் டோளான்
சீரித்த தலங்கல் மார்பன் சிரேணிக ராசனாமே.
இவ்வுலகைத் தாங்கி அரசாண்ட தன்மை முன்புளோர் காலத்திலும் ஐந்து மடங்காகச் சிறந்தது என்று சொல்லுமாறு பொலிவு பெற்ற மாலைகள் கட்டப் பெற்ற அழகிய குடையை உடையனாய், மேகம் மழை பொழிந்தாற்போல் பொருளை வாரி அவரவர் விரும்பியதை அளிக்கும் வளப்பம் பொருந்திய கையையும் அழகிய திண்மையான தோளையும் சிறப்பான மாலையை அணிந்த மார்பையுடையனாய் விளங்கியவன் சிரேணிகராசன் என்னும் பெயருடையான். (8)
9. ஆறிலொன் றிறைகொண் டாளு மரசன்மா தேவி யன்னப்
பேறுடை நடைவேற் கண்ணாள் பெறற்கருங் கற்பி னாள்போ
வீறுடைச் சாலி னீதா மிடைதவழ் கொங்கை கொண்டை
நாறுடைத் தார ணிந்த நகைமதி முகத்தி னாளே.
ஆறிலொரு பங்கு குடிமக்களிடம் வரி பெற்று அரசாளும் இம்மன்னனின் தேவி பெயர் சாலினீ. இவள் அன்னப்பறவை போன்ற நடையினைப் பெற்றவள். வேல் போன்ற கூரிய கண்ணையுடையவள், பெறுதற்கரிய கற்பினையுடையாள். இதனால் மிக்கமதிப்புடையவளாய் இவள் இலங்கினாள். மலர்மாலை கிடந்து அசைகின்ற முலைகளையும்
கொண்டையையும் உடையவள், மணம் பெற்ற மாலையை அணிந்தவள். விளங்குகின்ற முழுமதி போன்ற முகத்தினையுடையாள்.
தாம்-தாமம்; இடைக்குறை.
10. மற்றுமெண் ணாயி ரம்பேர் மன்னனுக் கினிய மாதர்
வெற்றிவேல் விழியி னாரும் வேந்தனு மினிய போகம்
உற்றுடன் புணர்ந்து வின்பத் துவகையு ளழுந்தி யங்குச்
செற்றவர்ச் செகுத்துச் செங்கோற் செலவிய காலத் தன்றே
சாலினியைத் தவிர மேலும் அம் மன்னனுக்கு இனிமை சேர்த்த மாதர் எண்ணாயிரம் பேர் இருந்தனர். வெற்றிவேல் போன்ற நீண்ட நெடுங் கண்ணுடையராகிய அந்த மாந்தர் அரசனுக்கு இனிய இன்பம் சேர்ப்பாராய், அவனுடன் கூடிச் சேர்ந்து அவனை உவகைக் கடலுள் அழுந்தச் செய்தனர். மன்னன் மாதர் இன்பம் துய்த்ததோடு பகைவர்களையும் அழித்துச் செங்கோலைச் செலுத்தி வந்தான். அந்நாளில்- (10)
வரவீரநாதரின் வருகையை வனபாலன் தெரிவித்தல்
11. இஞ்சிசூழ் புரத்து மேற்பா லிலங்கிய விபுல மென்னும்
மஞ்சிசூழ் மலையின் மீது வரவீர நாதர் வந்து
இஞ்சிமூன் றிலங்கும் பூமி யேழிறை யிருக்கை வட்டம்
அஞ்சிலம் பார்க ளாட வமரருஞ் சூழ்ந்த வன்றே.
மதில் சூழ்ந்த இராசமாகிரிய நகரத்தின் மேற்குத் திசையில் விளங்கிய விபுலம் என்னும் மலையின்மேல் வரவீரநாதராகிய வர்த்தமான மகாவீரர் எழுந்தருளியிருந்தார். மும்மதில்கள் விளங்கும் பூமியில் ஏழிறை இருக்கை வட்டமாகிய சமவசரவணத்தில் அவர் அமர்ந்திருந்தார். அங்கே அழகிய சிலம்பு அணிந்த மாதர்கள் மகிழ்ந்தாடி வரத் தேவரும் வந்து சூழ்ந்தனர். (11)
12. வனமிகு வதிச யங்கள் வனபாலன் கண்டுவந்து
நனைமது மலர்க ளேந்தி நன்னகர் புகுந்தி ராசன்
மனையது மதிற்க டந்து மன்னனை வணங்கிச் செப்ப
மனமிக மகிழ்ந்தி றைஞ்சி மாமுர சறைக வென்றான்.
காட்டிலே நிகழ்ந்த இந்த அதிசயத்தை வனத்தைக் காவல் புரியும் வனபாலன் என்பான் கண்டான். அவன் தேன் சொட்டும் மலர்களை ஏந்திக் கொண்டு, அழகிய நகராகிய இராசமாகிரியம் புகுந்து, அரசனுடைய அரண்மனை மதில்களைக் கடந்து சென்று,
அரசனை வணங்கி, நிகழ்ந்தது கூறினான். உடனே அரசன் மனமகிழ்வுடன் முனிவரை எண்ணினான். அவரைக் காணும் பொருட்டுத் தான் புறப்படும் செய்தி குறித்து முரசறையுமாறு கட்டளை பிறப்பித்தான். (12)
மன்னன் தன் சுற்றம் சூழச் சென்று முனிவரை வணங்குதல்
13. இடிமுர சார்ப்பக் கேட்டு மியம்பிய வத்தி னத்தின்
படுமத யானை தேர்மா வாள்நாற் படையுஞ் சூழக்
கடிமலர் சாந்து மேந்திக் காவலன் றேவி யோடுங்
கொடிநிரை பொன்னே யிற்குக் குழுவுடன் சென்ற வன்றே.
இடி போன்று முழங்கிய முரசொலிச் செய்தியை அந்நாள் மக்கள் கேட்டனர். வனபாலன் சொன்ன வனத்தை நோக்கி, யானை, தேர், குதிரை, காலாள் என்னும் நால்வகைச் சேனையும் சூழ்ந்து வர, மணம் மிக்க மலர்களையும் வாசனைக் குழம்புகளையும் ஏந்திக் கொண்டு அரசன் தன் பட்டத்தரசியுடன், வரவீரமுனி வந்து தங்கியிருந்த அழகிய கொடிகள் நிறைந்த சூழலுக்குத் தன் பரிவாரங்களுடன் சென்றான். (13)
14. பொன்னெயிற் குறுகிக் கைம்மாப் புரவல னிழிந்துட் புக்கு
நன்னிலத் ததிச யங்கள் நரபதி தேவி யர்க்குப்
பன்னுரை செய்து காட்டிப் பரமன்றன் கோயி றன்னை
இன்னியல் வலங்கொண் டெய்தி யீசனை யிறைஞ்சி னானே.
அழகிய மதிலைச் சூழ்ந்த முனிவனது இருக்கையை அடைந்ததும் நாடு காக்கும் மன்னன் யானை மீது இருந்து இறங்கி, உள்ளே புகுந்து, தன் தேவிக்கு முனிவரின் புகழெடுத்தோதி, வர்த்தமானர் வீற்றிருந்த சமவசரணக் கோயிலை வலமாக வந்து முனிவராகிய இறைவரை வணங்கினான். (14)
15. நிலமுறப் பணிந்தெ ழுந்து நிகரிலஞ் சினையின் முற்றிக்
கலனணி செம்பொன் மார்பன் கால்பொரு கடலிற் பொங்கி
நலமுறு தோத்தி ரங்கள் நாதன்றன் வதன நோக்கிப்
பலமன மின்றி யொன்றிப் பலதுதி செப்ப லுற்றான்.
நிலத்தில் உடம்பு பொருந்த மன்னன் வணங்கி எழுந்தான். ஒப்பற்ற அழகிய உறுப்புத் தொழில் வாய்ந்த ஆபரணங்கள் அணிந்த அழகிய மார்பையுடைய அவன், காற்றினால் மோதப்பட்டுப் பொங்கியெழும் கடலைப்போல மனவெழுச்சி கொண்டு, இறைவனுடைய திருமுகம் நோக்கிப் பல மனம் இன்றி, அவனை வணங்கும் ஒருமையுள்ளத்தோடு தோத்திரம் பல சொல்லலானான்.(15)
வர்த்தமானரை மன்னன் துதித்துப் போற்றுதல்
வேறு
16. பொறியொடுவல் வினைவென்ற புனித னீயே
பூநான்கு மலர்ப்பிண்டிப் போத னீயே
புறவிதழ்சேர் மரைமலர்மேல் விரனால் விட்டுப்
பொன்னெயிலுண் மன்னியபுங் கவனு நீயே
அறவிபணி பணவரங்கத் தமர்ந்தாய் நீயே
ஐங்கணைவில் மன்மதனை யகன்றாய் நீயே
செறிபுகழ்சேர் சித்திநகர் தன்னை யாளும்
சிரீவர்த்த மானனெனுந் தீர்த்த னீயே.
ஐம்பொறிகளோடு கூடிய கொடிய வினைகளை யெல்லாம் வென்ற புனிதமானவன்நீதான். பொலிவுபெற்ற நான்கு பக்கங்களிலும் மலர்களுடைய அசோகின் நிழலில் அமர்ந்த ஞானி நீதான்.புறவிதழோடு கூடிய தாமரை மலரின்மேல், நால் விரலை மலர்த்தி அழகிய வசரணத்துறையும் இறைவன் நீதான்.அறத்தன்மையுடைய நாகத்தின் பட நிழலில் வீற்றிருக்கின்றவன் நீயேதான்.ஐந்து மலரம்பும் கருப்பு வில்லும் கொண்ட மன்மதனை விலக்கிச் சென்றவன் நீதான்.மிக்க புகழ் வாய்ந்த சித்தி நகரை ஆட்சிபுரியும் சிரீவர்த்தமானன் என்னும் பெயருடைய தூயோன் நீதான். (16)
17. கஞ்சமலர் திருமார்பிற் றரித்தாய் நீயே
காலமொரு மூன்றுணர்ந்த கடவு ணீயே
பஞ்சாத்தி தானுரைத்த பரம னீயே
பரமநிலை யொன்றெனவே பணித்தாய் நீயே
துஞ்சாநல் லுலகுதொழுந் தூய னீயே
தொல்வினையெல் லாமெரித்த துறவ னீயே
செஞ்சொற் பாவையை நாவிற் சேர்த்தாய் நீயே
சிரீவர்த்த மானெனுந் தீர்த்த னீயே.
தாமரை மலரை அழகிய மார்பில் தாங்கியவன் நீதான்.மூன்று காலமும் உணர்ந்த கடவுள் நீதான்.பஞ்சாத்திகாயம் உபதேசித்த பரமன் நீதான்.
மேலான முத்தி நிலையைச் சேர் எனக் கட்டளையிட்டவன் நீதான்.உறங்காது யோகம் செய்து வாழும் நல்ல துறவியருலகம் தொழும் தூயோன் நீதான்.பண்டைய வினைகள் எல்லாம் சேராமல் பொசுக்கிய துறவோன் நீதான்.செஞ்சொற்பாவையாகிய கலைமகளை நாவில் கொண்டவன் நீதான்.சிரீவர்த்தமானன் என்னும் பெயருடைய தூயோன் நீதான். (17)
18. அறவனீ யமலனீ யாதி நீயே
ஆரியனீ சீரீயனீ யனந்த னீயே
திரிலோக லோகமொடு தேய னீயே
தேவாதி தேவனெனுந் தீர்த்த னீயே
எரிமணிநற் பிறப்புடைய யீச னீயே
இருநான்கு குணமுடைய யிறைவ னீயே
திரிபுவனந் தொழுதிறைஞ்சுஞ் செல்வ னீயே
சிரீவர்த்த மானமெனுந் தீர்த்த னீயே.
தரும உருவினன் நீ.குற்றமற்றவன் நீ.மூல முதற்பொருள் நீ.எல்லாவற்றிற்கும் மேலானவன் நீ.செல்வத்துக் கிருப்பிடமானவன் நீ.அனந்தனாக-எல்லாமாக இருப்பவனும் நீ.மூன்று உலகங்களையும் பிற உலகங்களையும் நாடாக உடையவன் நீதான்.தேவர்களுக்கெல்லாம் தேவனாக விளங்கும் புனிதன் நீ.ஒளி வீசும் மணியின் நல்ல பிறப்புக்கிடமானவன் நீ.எட்டுக் குணமுடைய இறைவன் நீயே.மூன்றுலகத்தாரும் வந்து வணங்கும்படியான முத்திச் செல்வமுடையவன் நீ.சிரீவர்த்தமானன் என்னும் பெயருடைய தேவனும் நீயே. (18)
19. முனிவர்தமக் கிறையான மூர்த்தி நீயே
மூவா முதல்வனெனு முத்த னீயே
இனிமையா னந்தசுகத் திருந்தாய் நீயே
இயலாறு பொருளுரைத்த வீச னீயே
முனிவுமுத லில்லாத முனைவ னீயே
முக்குடையின் கீழமர்ந்த முதல்வ னீயே
செனித்திறக்கு மூப்பி றப்புந் தீர்த்தாய் நீயே
சிரீவர்த்த மானனெனுந் தீர்த்த னீயே.
முனிவர்க்கெல்லாம் முதல்வனாய் விளங்குபவன் நீ.என்றும் மூப்பில்லாது ஒருதன்மைத்தாய் விளங்கும் தலைவன் எனப் படும் முத்திக்குரியவன் நீயே.மகிழ்வூட்டும் ஆனந்த சுகத்தில் அழுந்தியிருப்பவன் நீயே.உலகியலுக்கான ஆறு பொருள்களைச் சொன்ன ஈசன் நீ.கோபம் முதலியன இல்லாத முன்னோன் நீதான்.முக்குடையின்கீழ் அமர்ந்து விளங்கும் தலைவனும் நீதான்.பிறந்து இறக்கும்படி நேர்விக்கும் மூப்பையும் இறப்பையும் இல்லா தொழிந்தவன் நீயே.சிரீவர்த்தமானன் என்னும் பெயர் பெற்ற புனிதன் நீயே. (19)
20. நவபதநன் னயமாறு நவின்றாய் நீயே
நன்முனிவர் மனத்திசைந்த னாத னீயே
உவமையிலா வைம்பதமு முரைத்தாய் நீயே
உத்தமர்த மிருதயத்து ளுகந்தாய் நீயே
பவமயமா மிருவினையைப் பகர்ந்தாய் நீயே
பரம நிலையமர்ந்த பரமன் நீயே
சிவமயமாய் நின்றதிகழ் தேச னீயே
சிரீவர்த்த மானனெனுந் தீர்த்த னீயே.
ஒன்பது பதங்களையும் ஆறு நயங்களையும் சொன்னவன் நீ.நல்ல முனிவர்களின் மனத்தில் பொருந்தியுறையும் தலைவனும் நீதான்.ஒப்புமை சொல்ல இயலாத ஐந்து பதவிகளையும் சொன்னவன் நீதான்.உத்தமராம் தூயோரின் இதய கமலத்துள் அமர்ந்து மகிழ்விக்கின்றவன் நீயே.பிறப்பு மயமாக ஆக்கும் நல்வினை தீவினை என்னும் இருவினை நிலையையும் விளக்கிச் சொன்னவனும் நீதான்.மேலான நிலையில் அமர்ந்துள்ள இறைவனும் நீதான்.மங்கலமாம் சிவமயமாய் நின்ற ஒளிதிகழ் தேசத்து இருப்பவனும் நீயே.சிரீவர்த்தமானன் என்னும் புனிதன் நீதான். (20)
வேறு
21. துதிகள் செய்துபின் றூய்மணி நன்னிலத்
ததிகொள் சிந்தையி னம்பிறப் பணிந்துடன்
நெதியி ரண்டென நீடிய தோளினான்
யதிகொள் பண்ணவர் பாவலன் புக்கதே.
செல்வம்போல் நீண்ட இரண்டு தோளினையுடைய சிரேணிக மகாராசன் இவ்வாறாக சிரீவர்த்தமானரைத் துதித்துப் போற்றினான். பின் தூய்மையான அழகிய நல்ல நிலத்தில் விழுந்து நிலைத்த சிந்தையனாய்ப் பணிந்தான். பின் உடனே எழுந்து, முனிவர் எல்லாரும் உளங்கொண்டு போற்றி வணங்கும் தேவர் பாவலனை அடுத்தான். (21)
22. சிறந்து கோட்டத்துச் செல்வக கணதரர்
இறைவ னன்மொழி யிப்பொரு ளுட்கொண்டு
அறைய மர்ந்துயிர்க் கறமழை யைப்பெயுந்
துறவ னற்சரண் டூய்தி னிறைஞ்சினான்.
சிறப்புடைய கோயிலிலே அறிவுச் செல்வமுடைய கணதரர் அருளிய இறைவனுடைய நல்ல மொழியின் பொருளை மனத்துட் கொண்டான். மலையின் மேல் அமர்ந்து உயிர்களுக்கெல்லாம் தரும மழையைப் பொழியும் துறவனாம் வர்த்தமானரின் திருவடிகளைத் தூய்மையனாய் வணங்கினான். (22)
தவராசராம் கௌதமர் பாதம் பணிந்து தருமம் கேட்டல்
23. மற்றம் மாமுனி யேர்மல ராம்பதம்
உற்று டன்பணிந் தோங்கிய மன்னவன்
நற்ற வர்க்கிறை யானநற் கௌதமர்
வெற்றி நற்சரண் வேந்த னிறைஞ்சினான்.
பின் பெருமை படைத்த அம் முனிவரின் பாதங்களைச் சேர்ந்து பணிந்து உயர்வு பெற்ற அரசன், நல்ல தவசியர்களுக்கெல்லாம் தலைவராக விளங்கிய கௌதமரின் வெற்றிதரும் நல்ல பாதங்களை வணங்கினான். (23)
24. இருக ரத்தி னிறைஞ்சிய மன்னனும்
பொருக யற்கணிப் பூங்குழை மாதரும்
தரும தத்துவஞ் சனமுனி வர்க்குரை
இருவ ருமியைந் தின்புறக் கேட்டபின்.
இரு கைகளினாலும் கூப்பி வணங்கிய அரசனும், ஒன்றுடன் ஒன்று மோதும்படியான கயல்மீன் போன்ற கண்ணையுடைய அழகிய குண்டலம் அணிந்த மன்னன் தேவியும் மக்களுக்கும் முனிவர்க்கும் கௌதமர் உரைக்கும் தரும தத்துவங்களை மனம் பொருந்தி மகிழ்வுறக் கேட்டனர். அதன்பின்- (24)
நாக பஞ்சமி கதையுரைக்க மன்னன் வேண்டுதல்
25. சிரிநற் பஞ்சமி செல்வக் கதையினை
செறிகழல் மன்னன் செப்புக வென்றலும்
அறிவு காட்சி யமர்ந்தொழுக் கத்தவர்
குறியு ணர்ந்ததற் கூறுத லுற்றதே.
வீரக் கழல் அணிந்த மன்னன் மங்கலமான நல்ல பஞ்சமியின் பொருள் பொதிந்த கதையினை உரைத்தருளுக என்று வேண்டினான். உடன்தானே ஞானக் காட்சியுடன் விரும்பும் ஒழுக்கத்தையுடையரான பிறர் உள்ளக் குறிப்புகளை உணர்ந்த முனிவர் பஞ்சமி கதையினைக் கூறத் தொடங்கினார். (25)
கௌதமர் உரைத்த பஞ்சமி கதை
மகத நாட்டு மன்னன் சயந்தரனும் அவன் சுற்றத்தாரும்
26. நாவலந் தீவி னற்பர தத்திடை
மாவலர் மன்னர் மன்னு மகதநற்
கூவுங் கோகிலங் கொண்மதுத் தாரணி
காவுஞ் சூழ்ந்த கனக புரம்மதே.
நாவலந்தீவிலுள்ள நல்ல பரத கண்டத்திலே மிகுவல்லமை கொண்ட மன்னவர் பலர் உறையும் மகத நாட்டில், கூவும் குயில்களும் மதுதாரை சிந்தும் மலர்களும் கொண்ட சோலைகள் சூழ்ந்த கனகபுரம் உள்ளது. (26)
27. அந்ந கர்க்கிறை யான சயந்தரன்
நன்ம னைவிவி சாலநன் னேத்திரை
தன்சு தன்மதுத் தாரணி சீதரன
நன்க மைச்ச னயந்தர னென்பவே.
கனகபுர நகர்க்கு அரசன் சயந்தரன் என்பான். இவனுடைய நல்ல மனைவி விசாலநேத்திரை. இவர்களுடைய புதல்வன் பெயர் சீதரன். இவனுக்கு வாய்த்த நல்ல அமைச்சன் நயந்தரன் என்னும்பெயருடையான்.
வாசவன் காட்டிய படத்துரு மாதரைச் சயந்தரன்
யார் என வினாவுதல்
28. மற்றுந் தேவியர் மன்னுமெண் ணாயிரர்
வெற்றி வேந்தன் விழைந்துறு கின்றநாள
பற்ற வாணிகன் பல்பொருள் பொற்கலத்
துற்ற மாதர் படத்துருக் காட்டினான்.
விசாலநேத்திரையோடு மன்னனுக்கு மற்றும் எண்ணாயிரம் தேவியர் உரிமையாயிருந்தனர். வெற்றி பல கொண்ட இவ்வரசன் சயந்தரன் தம் தேவியருடன் இன்புற்று வாழ்கின்ற நாள்களுள் ஒருநாள் அம்மன்னன் அரண்மனைக்கு வணிகன் வாசவன் என்பான் வந்தனன். அவன் பல அரிய பொருள்களோடு மரக்கலத்தில் வந்த ஒரு பெண்ணின் உருவப் படத்தையும் காட்டினான். (28)
29. மன்ன னோக்கி மயங்கி மகிழ்ந்தபின்
கின்னரி யோகி ளர்கார் மாதரோ
இன்ன ரூபமிக் காரிது வென்றலும்
மன்னும் வாசவன் வாக்குரை செய்கின்றான்.
மன்னன் சயந்தரன் படத்தில் கண்ட மாதர் உருவு கண்டு மோகத்தால் மயங்கி மகிழ்வுற்றான். பின், ‘இவ்வளவு அழகு படைத்த இவள் கின்னரர் குலப் பென்ணோ? எழுச்சிமிக்க மேகத்தினின்று பிறந்த பெண்ணோ?‘ என்று வினவினான். கேட்ட வணிகன் வாசவன் மறுமொழி பகரலானான். (29)
வாசவன் மறுமொழி
30. சொல்ல ரியசு ராட்டிர தேசத்துப்
பல்ச னநிறை பரங்கிரி யாநகர்
செல்வன் சிரீவர்மன் றேவியுஞ் சிரீமதி
நல்சு தையவள் நாமம் பிரிதிதேவி.
புகழ்வதற்கரிய சுராட்டிர தேசத்திலே பல்வகை மாந்தரும் நிறைந்து வாழும் பரங்கிரியா நகரில் உள்ளான் செல்வன் சிரீவர்மன். அவனுடைய மனைவி பெயர் சிரீமதி. இவர்களுடைய மகளின் பெயர் பிரிதிதேவிஎன்பதாம். (30)
சயந்தரன் பிரிதிதேவியை மணந்து பட்டத்தரசியாக்குதல்
31. அவ்வ ணிகன வளுடை ரூபத்தைச்
செவ்விதிற் செப்பச் சீருடை மன்னனும்
மௌவ லங்குழன் மாதரைத் தானழைத்துத்
தெய்வ வேள்வியிற் சேர்ந்து புணர்ந்தனன்.
அந்த வணிகன் அவளுடைய அழகினைப் பாங்குற அழகாகச் சொல்ல, சிறப்புப் பொருந்திய அரசனும் முல்லை மலர் சூடிய கூந்தலை யுடைய அந்தப் பிரிதிதேவியை அழைப்பித்து, தெய்வத் தன்மை பொருந்திய திருமண வேள்விச் சடங்குகள் ஆற்றி, அவளை அடைந்து சேர்ந்திருந்தான். (31)
32. மன்ன னின்புற்று மாதேவி யாகவே
நன்மைப் பட்ட நயந்து கொடுத்தபின்
மன்னு மாதர்கள் வந்து பணிந்திட
இன்ன வாற்றி னியைந்துடன் செல்லுநாள்
மன்னன் சயந்தரன் பிரிதிதேவியுடன் கூடி இன்பம் நுகர்ந்து வாழ்ந்து, அவளுக்குப் பெருந்தேவிப் பட்டம் தந்து சிறப்பித்தான். பிற மாதர்களும் வந்து பணிந்து ஏவல் செய்யுமாறு பெருமையுடன் அவள் வாழ்ந்து வந்தாள். இவ்வாறு வாழ்ந்துவரும் நாளில்-- (32)
பிரிதிதேவி-விசாலநேத்திரை சந்திப்பு
33. வயந்த மாடவே மன்னனு மாதரும்
நயந்து போந்தனர் நன்மலர்க் காவினுட்
பெயர்ந்து பல்லக்கி னேறிப் பிரிதிதேவி
கயந்த னீரணி காண்டற்குச் சென்றநாள்.
வசந்த காலத்து விளையாட்டின்பொருட்டு அரசனும் தேவி மாரும் விருப்போடு நல்ல மலர் நிறைந்த பூங்காவினை அடைந்தனர். பிரிதிதேவி பல்லக்கில் ஏறி, பூங்காவிலுள்ள குளத்தில் நீர் விளையாட்டுக் காண்டற்காகச் சென்றாள். அந் நாளில் --
34. வார ணத்தின்முன் மார்க்கத்து நின்றவள்
வாரணி கொங்கை யாரவ ளென்றலும்
ஏர ணிம்முடி வேந்தன்மா தேவியென்று
தார ணிகுழற் றாதி யுரைத்தனள்.
வழியில் தனக்கு முன்பாக யானையின் மீது அமர்ந்து செல்லுகின்ற கச்சணிந்த முலையுடையாளாகிய மங்கை யார் என்று பிரிதிதேவி வினவினாள். ‘அழகிய திருமுடியணிந்த அரசனின் மாதேவியே அவள்'' என்று மலர் மாலை சூடிய கூந்தலுடையாளாகிய தோழி உரைத்தாள்.
பிரிதிதேவி பரமன் ஆலயம் சென்று தொழுதல்
வேறு
35. வேல்விழி மாது கேட்டு விசாலநேத் திரையோ வென்னைக்
கான்மிசை வீழ வெண்ணிக் காண்டற்கு நின்றா ளென்று
பான்மொழி யமிர்த மன்னாள் பரம னாலைய மடைந்து
நூன்மொழி யிறைவன் பாதம் நோக்கிநன் கிறைஞ்சி னாளே.
வேல் போன்ற கண்ணினையுடைய பிரிதிதேவி தோழி சொன்ன செய்தி கேட்டு, ‘அவள் விசாலநேத்திரையோ? என்னைத் தன் காலில் விழுந்து பணிவிக்கும் எண்ணத்துடன் என்னைக் காண்பதற்கு நிற்கின்றாள் போலும்‘ என்று உரைத்தாள். பின், பால் போன்ற மொழியையுடைய அமிர்தம் போன்று இனிய பிரிதிதேவி இறைவனுடைய ஆலயம் அடைந்து நூல்களில் சொன்ன முறைப்படியே இறைவன் பாதத்தை நோக்கி வணங்கினாள்.
ஆலயத்து அமர்ந்திருந்த முனிவனை அவள் பணிதல்
வேறு
36. கொல்லாத நல்விரதக் கோமானினைத் தொழுதார்
பொல்லாக் கதியறுத்துப் பொற்புடைய முத்திதனைச்
செல்லற் கெளிதென்றே சேயிழையாள் தான்பரவி
எல்லா வினைசெறிக்கு மியன்முனியைத் தான்பணித்தாள்.
கொல்லாத நல்ல விரதமுடைய கோமானே. நின்னைத் தொழுபவர் தீய கதிகளை நீக்கி அழகிய முத்தியை சென்று அடைதற்கு எளிதாகும் என்று அவள் துதித்து, ஆண்டிருந்த எல்லா வினைகளையும் அடக்கும் பண்பார்ந்த முனைவனைத் தொழுதாள். (36)
முனிவனின் வாழ்த்துரை கேட்ட பிரிதிதேவி மகிழ்தல்
37. பணிபவட்கு நன்குரையிற் பரமமுனி வாழ்த்த
அணிபெறவே நற்றவமு மாமோ வெனக்கென்றாள்
கணிதமிலாக் குணச்சுதனைக் கீர்த்தியுட னேபெறுவை
மணிவிளக்க மேபோன்ற மாதவனுந் தானுரைத்தான்,
தன்னை வணங்கிய பிரிதிதேவியை மேலான அம் முனிவன் நல்லுரைகளால் வாழ்த்தினான். முனிவனை நோக்கி அவள், ‘அழகுபெற நல்ல தவம் எனக்குக் கைகூடுமோ?‘ என்று வினவினாள். ‘அளவிட முடியாத நற்குணமுடைய புதல்வனைப் புகழுடன் நீ பெறுவாய்‘ என்று இவ்வாறு மணி விளக்குப் போன்று ஒளிவீசும் மாதவனும் சொன்னான்.
38. நின்றசனந் தன்னுடனே நீடுபோய்த் தவம்பட்டுப்
பின்றை யறவுரைகள் பெருமிதமாய்க் கேட்டுவிதி
வென்ற பரமனடி விமலமாய்த் தான்பணிந்து
அன்றுதான் புத்திரனை யவதரித்தாற் போன்மகிழ்ந்தாள்.
நீண்ட நெடுங்காலம் தவம் புரிந்து, பின்பு அறவுரைகள் மிகுதியாய்க் கேட்டு, விதிவென்ற பரமனாகிய முனிவனின் திருவடிகளைப் பிரிதிதேவி தன்னுடன் நிற்கும் தோழியருடன் குற்றம் அறப் பணிந்து, அன்றுதானே புத்திரனைப் பெற்றாற்போலப் பெருமகிழ்வு கொண்டாள்.
தோழியருடன் பிரிதிதேவி அரண்மனை புகுதல்
வேறு
39. நற்றவ னுரைத்த சொல்லை நறுமலர்க் கோதை கேட்டு
பற்றுட னுணர்ந்து நல்ல பாசிழைப் பரவை யல்குல்
உற்றதன் குழலி னாரோ டுறுதவன் பாதந் தன்னில்
வெற்றியி னிறைஞ்சி வந்து வியன்மனை புகுந்தி ருந்தாள்
நல்ல தவமுடைய முனிவனின் சொற்களை மணமலர் மாலை யணிந்த கூந்தலையுடைய பிரிதிதேவி கேட்டுப் பற்றுதலுடனே நினைந்து, நல்ல பசுமையான ஆபரணம் அணிந்த பரந்த அல்குலை யுடைய தனக்குற்ற தோழிமாரோடு மிக்க தவமுடைய முனிவனின் பாதத்தில் வீழ்ந்து வெற்றியோடு வணங்கி, மீண்டுவந்து, தன்னுடைய அகலமான பெரிய அரண்மனையிலே புகுந்து அமர்ந்திருந்தாள். (39)
(முதல் சருக்கம் முற்றும்)
-------------
இரண்டாஞ் சருக்கம்
சயந்தரன்-பிரிதிதேவி உரையாடல்
40. வனவிளை யாட லாடி மன்னன் றன்மனை புகுந்து
மனமகிழ் கோதை தன்னை மருவிய காத லாலே
புனலினீ யாட லின்றிப் போம்பொருட் புகல்க வென்ன
கனவரை மார்பன் கேட்பக் காரிகை யுரைக்கு மன்றே.
பிரிதிதேவி தன்னுடன் வன விளையாட்டிற்கு வரவில்லையே என்னும் கவலையால் சயந்தர மன்னன் வன விளையாடலை இனிதின் ஆடி முடித்துத் தன் அரண்மனைக்குச் சென்று மனத்துக்கிசைந்த பிரிதி தேவியின்மேல் தனக்குள்ள அன்பின் மிகுதியால், அவளை நோக்கி, ‘நங்கையே! நீ இனிய புனலாட்டமாடலின்றித் தனியே வீட்டிற்கு வரக் காரணம் யாது?‘ என, அதற்கு அவள் தான் விசால நேத்திரையை வணங்கலாகாது எனும் காரணத்தைக் கூறாமல் வேறு வகையில் கூறினாள்.
பிரிதிதேவி-பிரத்துவீதேவி. கனவரை-பொன்மலை, மேருமலை.
41. இறைவனா லயத்துட் சென்று விறைவனை வணங்கித் தீய
கறையிலா முனிவன் பாதங் கண்டடி பணிந்து தூய
அறவுரை கேட்டே னென்ன வரசன்கேட் டுளம கிழ்ந்து
பிறைநுதற் பேதை தன்னாற் பெறுசுவைக் கடலு ளாழ்ந்தார்.
நான் இறைவன் ஆலயத்திற் சென்று இறைவனை வணங்கித் துதித்து மனத்திலே தீய களங்கஞ் சிறிதுமில்லாத பிரஹிதாஸ்வரர் எனும் ஓர் முனிவரைக் கண்டு அவர் பாதங்களை வணங்கிப் புனித மான திருவறங் கேட்டேன். அவர் உனக்கு இனி ஓர் சிறந்த புத்திரப்பேறு உண்டாகும் என்று அருளினார் என்றாள். அதைக் கேட்ட மன்னன் அகத்திலே அளவிலா மகிழ்ச்சியடைந்து அவளோடு இனிது இன்பசுகந் துய்த்து வரலாயினான்.
பிரிதிதேவி கண்ட கனவு
42. இருவரும் பிரித லின்றி யின்புறு போகந் துய்த்து
மருவிய துயில்கொள் கின்றார் மனோகர மென்னும் யாமம்
இருண்மனை இமிலே றொன்று மிளங்கதிர் கனவிற் றோன்றப்
பொருவிலாட் கண்டெ ழுந்து புரவலர்க் குணர்த்தி னாளே.
இங்ஙனம் இருவரும் இணைபிரியாராய் இன்பமயமான போகந் துய்த்துவருங் காலத்திலே ஒருநாள் இரவு, நித்திரைசெய்யும் போது, மனோகரம் என்னும் நான்காம் யாமத்திலே ஓர் இமில் ஏறும் இளங்கதிர்ச் செல்வனும் இருளில் தன் மனை புகுந்ததாகப் பிரிதிதேவி கனவு கண்டு, உடனே விழித்தெழுந்து அரசனுக்கு அறிவித்தாள்.
சினாலய முனிவரிடம் மன்னனும் தேவியும் கனாப்பயன் கேட்டல்
43. வேந்தன்கேட் டினிய னாகி விமலனா லயத்துட் சென்று
சேந்தளிர்ப் பிண்டி யின்கீழ்ச் செல்வனை வணங்கி வாழ்த்தி
காந்திய முனிக்கி றைஞ்சிக் கனாப்பய னுவல வென்றான்
ஏந்திள முலையி னாளு மிறைவனு மிகுந்து கேட்டார்.
அரசனும் கேட்டு அகமகிழ்ந்து அறிவன் ஆலயம் போந்து, செந்தளிர்ப்பிண்டியின்கீழ் வீற்றிருக்கும் அருகபரமனை வணங்கித் துதித்து, ஆங்கு உறைந்த ஓர் அறிவொளிகாலும் முனிவரனைப் பணிந்திறைஞ்சித் தாம் கண்ட கனாப்பயன் யாதெனக் கண்டருளுமாறு கேட்டார்கள். அவரும் கூற இருவரும் இனிது ஒன்றியிருந்து கவனித்துக் கேட்கலானார்கள்.
முனைவனை இறைஞ்ச, அதாவது வணங்கிக் கண்ட கனாவினை உரைக்க, வென்றான் அக் கனாப்பயன் நுவல, இருவரும் இருந்து கேட்டார் என்று முடிவு கொள்ளுதல் பொருத்தமாம். வென்றான்-ஐம்புலனையும் அடக்கி வெற்றிகொண்ட சினாலய முனிவர்.
புத்திரன் பிறப்பான் என்றார் முனிவர்
44. அம்முனி யவரை நோக்கி யருந்துநற் கனவு தன்னைச்
செம்மையி னிருவர் கட்குஞ் சிறுவன்வந் துதிக்கு மென்றுங்
கம்பமின் னிலங்க ளெல்லாங் காத்துநற் றவமுந் தாங்கி
வெம்பிய வினைய றுத்து வீடுநன் கடையு மென்றார்.
அம் முனிவரர் அவர்களை நோக்கி, ‘நீவிர் கண்ட கனாவின் பயனைக் கூறுகிறேன். கேட்பீராக‘ எனத் தன் அவதிஞானத்தாலறிந்து,
‘இமிலேற்றைக் கண்டதால் உங்கட்கு இனிய புதல்வன் ஒருவன் பிறப்பான். இளங்கதிரைக்காண்டலால் அவன் இப்பாரெலாம் அடக்கியாண்டு பகரருந் தவந்தாங்கி இருவினையறுத்து வீடுபேறடைவான்’ என்றருளினார். அதைக் கேட்ட அரசன், ‘மூத்தாள் புதல்வன் இருக்க இளையாள் புதல்வனுக்கு அரசுரிமை உண்டாகுமோ?’ என்று ஐயுற்று, மீண்டும் முனிவரை வணங்கிக் கேட்கலானா
கம்பமில் நிலங்கள் எல்லாம் காத்தல்-குடிகள் எல்லாம் அச்சம் முதலியவற்றால் நடுங்குதலின்றி நாட்டை அமைதி நிலவ அரசாள்கை. கம்பம்-நடுக்கம்.
புதல்வன் பிறந்தபின் நிகழ்வன மன்னன் கேட்டல்
45. தனையன்வந் துதித்த பின்னைத் தகுகுறிப் புண்டோ வென்று
புனைமல ரலங்கல் மார்பன் புரவலன் மற்றுங் கேட்ப
நினைமினக் குறிக ளுண்டென் னேர்மையிற் கேட்பி ராயின்
தினையனைப் பற்று மில்லாத் திகம்பர னியம்பு கின்றான்.
‘புத்திரன்வந்து பிறந்தபிறகு அத்துணைச் சிறப்பு அவன் அடைவான் என்பதற்குரிய அறிகுறிகள் யாதேனும் உண்டோ?’ என, தினையனைத்துங்கூட அகப்புறப்பற்றில்லாத அம் முனிவரர், ‘ஆம், உண்டு, கூறுகிறேன், கவனித்துக்கேட்டு அக்குறிகளைக் கண்டபின், யான் கூறியவை உண்மையென நினைவு கூர்மின்’ என்று கூறலுற்றார்.
திகம்பரன்-(திக்-அம்பரா)-திசையே ஆடையாக வேறு ஆடை அணியாது வாழும் சமண
முனிவன்.
திகம்பர முனிவரின் மறுமொழி
வேறு
46. பொன்னெயிலுள் வீற்றிருக்கும் புனிதன் றிருக்கோயில்
நின்சிறுவன் சரணத்தா னீங்குந் திருக்கதவம்
நன்னாக வாவிதனின் னழுவப் பதமுண்டாம்
மன்னாக மாவினொடு மதமடக்கிச் செலுத்திடுவான்.
சமவசரண மண்டலத்தில் வீற்றிருக்கின்ற ஜிநனுடையதும் நின் நந்தவனத்துள்ளதும் தினம் தேவர்களால் வழிபாடு செய்யப்படுவதுமான சித்தகூட சைத்தியாலயத்தின் மக்களால் திறக்கமுடியாத் திருக்கதவம் உங்கள் சிறுவன் பாதம் பட்டபோதே தானே திறந்து கொள்ளும். நீங்கள் வழிபடுவீர்கள். அத்தருணத்தில் அச் சிறுவன் ஆண்டுள்ள நாகவாவியில் வழுக்கி விழுவான். ஆனால், ஆபத்தொன்றுமின்றி அதிசயமான நன்மையே அடைவான். பிறகு நீலகிரி எனும் மதயானையையும் அடங்காத ஒரு முரட்டுக் குதிரையையும் மதமடக்கிப் பெருமிதமாய்ச் செலுத்துவான் என்றார்.
47. அருள்முனி யருளக்கேட்டு வரசன்றன் றேவிதன்னோ
டிருவரு மிறைஞ்சியேத்தி யெழின்மனைக் கெழுந்துவந்து
பருமுகிற் றவழுமாடப் பஞ்சநல் லமளிதன்னிற்
திருநிகர் மாதுமன்னன் சேர்ந்தினி திருக்குமந்நாள்.
இங்ஙனம் கருணைமிக்க பிகிதாசிரவ முனிவர் உரைத்தருளக் கேட்ட சயந்தர மன்னன், பிரிதிவிதேவியோடும் அவரடியைப் பணிந்து எழுந்து விடைபெற்று மீண்டு, தன் அரண்மனைக்கு ஏகி, மேகம் தவழும் மாளிகையிலுள்ள பஞ்சணையில் இருவரும் இனிது இன்பம் நுகர்ந்துவரும் நாளிலே-
திரு-திருமகள். திருநிகர் மாது-திருமகளுக்கு ஒப்பாகச் சொல்லத்தக்க பிரிதிதேவி. (8)
பிரிதிதேவி கருக் கொள்ளுதல்
வேறு
48. புண்டவழ் வேற்கண் கோதை பூரண மயற்கைச் சின்னம்
மண்ணினி துண்ண வெண்ணு மைந்தன்பூ வலய மாளும்
பண்ணுகக் கிளவி வாயிற் பரவிய தீருஞ் சேரும்
கண்ணிய மிச்ச மின்னைக் கழித்திடு முறுப்பி தாமே.
ஊன் தவழும் வேல் போன்ற கண்ணையுடைய பிரிதிதேவி பூமண்டலத்தையாளும் தன் குமாரனுடைய பூரண கருப்பத்தின் மயற்கைக் குறியால் மண்ணையும் இனிதென உண்பாள். அம் மயற்கைத் துன்பம் இசையுந்தோறும் மைந்தனுடைய இன்சொற் கேட்டுப் பரவிக் களிக்கத் தீரும். மின்னொளியைக் கெடுக்கும் அவள் உறுப்பு நலம் சிவப்புற்றது.
புதல்வன் பிரதாபந்தன் பிறத்தல்
49. திங்க ளொன்பான் நிறைந்து செல்வனற் றினத்திற் றோன்றப்
பொங்குநீ்ர்க் கடல்போல் மன்னன் புரிந்துநல் லுவகை யாகித்
தங்குபொன் னறைதி றந்து தரணியுள் ளவர்க்குச் சிந்திச்
சிங்கநேர் சிறுவ னாமம் சீர்பிரதா பந்த னென்றார்.
ஒன்பது மாதமும் நிறைந்து ஓர் நன்னாளில் திருக்குமரன் அவதரித்தான். சந்திரனைக் கண்ட கடல்போல மன்னன் உளம் பூரித்து, உவகையடைந்து, தன் பொன் அறை திறந்து, தரணியிலுள்ள பலருக்கும் தானம் செய்து புத்திர உற்சவம் கொண்டாடினான். சிங்கம் போலுந்திறல் வாய்ந்த அக் குமரனுக்குச் சிறப்பாகிய பிரதாபந்தன் எனப் பெயரிட்டழைத்தனர்.
பிரிதிவிதேவி குழந்தையுடன் பரமன் ஆலயம் அடைதல்
50. பிரிதிவிழ் தேவி யோர்நாள் பெருங்குழுத் தேவி மாரும்
அரியநற் பரமன் கோயி லன்புடன் போக வெண்ணி
விரிநிற மலருஞ் சாந்தும் வேண்டிய பலவு மேந்திப்
பரிவுள தனையற் கொண்டு பாங்கினாற் சென்ற வன்றே.
ஓர் நாள் பிரிதிவிதேவி ஏனைய பெரிய தேவிமார் கூட்டத்தோடு தொழுதற்கரிய பரம ஈசன் கோயிற்குப் பத்தியோடும் வழிபாடியற்றக் கருதி, அழகிய மணமலர்களும் வாசனைச் சாந்தமும் பல பொற்றட்டுகளில் ஏந்தியவளாய், அன்பார்ந்த குமரனையும் அழைத்துக் கொண்டு போய் ஆலயம் அடைந்தாள்.
ஆலயத்தில் நிகழ்ந்த அற்புதங்கள்
51. சிறுவன்றன் சரணந் தீண்டச் சினாலயங் கதவு நீங்கப்
பிறைநுதற் றாதி தானும் பிள்ளைவிட் டுட்பு குந்தாள்
நறைமலர் வாவி தன்னு ணற்சுதன் வீழக் காணாச்
சிறையழி காதற் றாயுஞ் சென்றுடன் வீழ்ந்தா ளன்றே.
அக் கோயிற் கதவிலே அச் சிறுவன் பாதம் பட்ட அளவில் கதவங்கள் திறந்தன. பிள்ளையை வெளியே விட்டுவிட்டு, பிரிதிவிதேவியேயன்றித் தாதியும் உள்ளே சென்று கடவுள் வழிபாடு செய்தனர். அச்சமயம் ஆண்டுள்ள நாகவாவியுள் நாககுமாரன் நழுவி விழுந்து விட்டான். அதைக் கண்ட தாயும் சேயின் வாஞ்சையால் சென்று உடன் வீழ்ந்துவிட்டாள். (12)
52. கறைகெழு வேலி னான்றன் காரிகை நீர்மே னிற்பப்
பிறையெயிற் றரவின் மீது பெற்றிருந் தனையற் கண்டு
பறையிடி முரச மார்ப்பப் பாங்கினா லெடுத்து வந்து
இறைவனை வணங்கி யேத்தி யியன்மனை புகுந்தா னன்றே.
ஊன் கறை படிந்த வெற்றிவேல் ஏந்திய சயந்தரன் மனைவி நல்வினையால் யாதொரு தீங்குமின்றி நீரின்மேலே நின்றாள், நீரிலே மூழ்கினாளில்லை, பின்னையும் பாம்பினால் தீங்குற்றாளில்லை. பிறைச் சந்திரனைப் போலும் நச்சுப் பற்களையுடைய அவ் வரவம் தன் பணா முடிமேல் பாதுகாப்பாகப் புதல்வனைத் தாங்கிக் கொண்டிருந்தது. அவ்வதிசயம் கண்டவர்கள் அரசனுக்கு அறிவிப்ப, அரசனும் வியந்து பறையோசை போலும் இடிபோலும் ஆனந்த பேரிகை முழங்க அவர்களை அழைத்துக் கொண்டுவந்து மீண்டும் இறைவனை வாழ்த்தி வணங்கித் தன் அரண்மனை அடைந்தான்.
நாககுமாரன் எனப் பெயர் பெற்றது
53. நாகத்தின் சிரசின் மீது நன்மையிற் றரித்தென் றெண்ணி
நாகநற் குமர னென்று நரபதி நாமஞ் செய்தான்
நாகநே ரகலத் தானை நாமகட் சேர்த்தி யின்ப
நாகவிந் திரனைப் போல நரபதி யிருக்க மந்நாள்.
நாகமானது அங்கு யாதோர் இடுக்கணும் செய்யாமல் தன் சிரசின்மீது தாங்கிக் காப்பாற்றியதால் நற்குணமிக்க நாககுமாரன் இவன் என அவனுக்கு அரசன் பெயரிட்டு, மலைக்கு நட்பாகிய மார்பனாகிய அக் குமாரனுக்கு முதலில் சகலகலாவல்லியைத் திருமணஞ் செய்வித்து, பவணேந்திரனைப்போல இன்புற வாழுநாளில் பவணேந்திரன்-இந்திரருள் ஒருவன் (மணி.27, 171, அரும் பதவுரை). நாமகட் சேர்த்தலாவது மைந்தனுக்குக் கல்வியையும் கலைகளையும் பயிற்றுவித்தலாகும். சீவகசிந்தாமணியிலே சீவகன் கல்விப் பயிற்சிபெறும் செய்திகளைக் கூறும் பகுதி ‘நாமகள் இலம்பகம்‘ எனப் பெயரிட்டழைக்கப்படுகின்றது. இங்கே திருத்தக்க தேவர் பின்வருமாறு இந்நிகழ்ச்சியை வருணிப்பது ஈண்டு ஒப்பு நோக்கற்பாலது.
மழலையாழ் மருட்டுந் தீஞ்சொன்
மதலையை மயிலஞ் சாயற்
குழைமுக ஞான மென்னுங்
குமரியைப் புணர்க்க லுற்றார். (நாமகள் 339)
அரும் பொனு மணியு முத்துங்
காணமுங் குறுணி யாகப்
பரந்தெலாப் பிரப்பும் வைத்துப்
பைம்பொன்செய் தவிசி னுச்சி
இருந்துபொன் னோலை செம்பொ
னூசியா லெழுதி யேற்பத்
திருந்துபொற் கண்ணி யார்க்குச்
செல்வியைச் சேர்த்தி னாரே. (நாமகள் 340)
கின்னரி-மனோகரியரின் இசைத் திறம் அறிதல்
54. கின்னரி மனோக ரீயென் கெணிகைநற் கன்னி மாரும்
அன்னவர் தாயும் வந்தே யரசனைக் கண்டு ரைப்பார்
என்னுடைச் சுதையர் கீத மிறைவநின் சிறுவன் காண்க
என்றவள் கூற நன்றென் றினிதுடன் கேட்கின்றாரே.
ஓர் நாள் பஞ்சசுகந்தனி என்னுங் கணிகை கின்னரி மனோகரி எனும் சிறந்த தன் கன்னியர் இருவருடன் வந்து அரசன் அடி பணிந்து, ‘அரசே!என் குமாரிகளாகிய இவர்கள் வீணைவித்தையில் தமக்கு நிகரானவர் எவருமிலர் என இறுமாப்பெய்துகின்றனர். இவர்கள் புலமையைக் கூர்ந்து, திறமை மிக்கவள் யாரெனக் கூறும் காளையர் யாருமில்லை. ஆதலால், இவர்களுடைய இசைத் திறமையை நின் குமாரன் கண்டு, ஆராய்ந்து, புலமை மிகுந்தவர்களைத் தேர்ந்து கூறுமாறு செய்தருள வேண்டும். இசைப் புலமை அறிந்து கூறவல்லானுக்கே இவர்கள் மனைவிமார்களாதற்குரியர்‘ என்றாள். அவ்வாறே அரசன் ஏற்பாடுசெய்ய அனைவருமிருந்து இசைக் கலையின் தரத்தைக் கேட்கலுற்றனர்.
55. இசையறி குமரன் கேட்டே யிளையவள் கீத நன்றென்
றசைவிலா மன்னன் றானு மதிசய மனத்த னாகித்
திசைவிளக் கனையாள் மூத்தாள் தெரிந்துநீ யென்கொ லென்ன
வசையின்றி மூத்தா டன்னை மனோகரி நோக்கக் கண்டேன்.
இசைக் கலையில் தலைசிறந்த நாககுமாரன், அவ்விரு கன்னியர்களின் இசைத் தரத்தை மிகக் கூர்ந்து நோக்கி, ‘இளையவள் இசையே இனிது‘ என்றான். மன்னனும் அசைவற்று வியந்தவனாய், யான் கண்டவகையில் இருவரும் ஒத்த புலமை வாய்ந்தவர்களே. எனினும், மூத்தவள் திசை விளக்குப் போல அவள் புலமை அறியாத திசையில்லை. ஆதலின், அவர்களுள் வேற்றுமை நீ எவ்வாறு கண்டுணர்ந்தாய்‘ எனக் கேட்க, அதற்கவன், ‘யாழை மீட்டி வாசிக்கும் போது மூத்தவள் வேறோன்றையும் நோக்காமல் கீழ்நோக்கியே பாடினாள். இளையவளோ தான் திறமையாக வாசித்ததோடமையாது மூத்தாளின் இசையும் பாட்டும் பொருளும் ஒருங்கே கூர்ந்து நோக்கினாள். இக்குறிப்பால் அறிந்தேன்‘ என்றான். அனைவரும் மெச்சினார்கள்.
நாககுமாரன் அம் மங்கையரை மணத்தல்
56. பலகல மணிந்த வல்குற் பஞ்சநற் சுகந்த னீயும்
துலங்குதன் சுதையர் தம்மை தூய்மணிக் குமரற் கீந்தாள்
அலங்கல்வேற் குமரன் றானு மாயிழை மாதர் தாமும்
புலங்களின் மிகுத்த போகம் புணர்ந்தின்பக் கடலு ளாழ்ந்தார்.
உடனே பல கலன் அணிந்த பஞ்சசுகந்தனி என்னும் கணிகை மாது தன் புத்திரிகள் இருவரையும் சிந்தாமணி போன்ற நாககுமாரனுக்கு வேள்வி விதியால் கொடுத்தாள். தம்பதிகள் மூவரும் ஒன்று கூடி ஐம்புலமிக்க போகம் துய்த்து இன்பக் கடலுள் மூழ்கலானார்கள்.
நாககுமாரன் யானையையும் குதிரையையும் அடக்குதல்
57. நாகமிக் கதங்கொண் டோடி நகர்மாட மழித்துச் செல்ல
நாகநற் குமரன் சென்று நாகத்தை யடக்கிக் கொண்டு
வேகத்தின் விட்டு வந்து வேந்தநீ கொள்க வென்ன
வாகுநற் சுதனை நோக்கி யானைநீ கைக்கொள் ளென்றான்.
இங்ஙனமிருக்க-ஓர் நாள் நீலகிரி என்னும் பட்டத்து யானை மதங்கொண்டு கட்டுத்தறியை முறித்துக் கொண்டு, வெளிப்போந்து, மக்களையும் மாளிகைகளையும் அழித்துச் சென்றது. அதைக் கண்டு மாந்தர் அரசனிடம் முறையிட்டனர். அரசன் மூத்த புதல்வன் சிரீதரனை ஏவினான். அதை அடக்க அவனால் முடியவில்லை. பிறகு நாககுமாரனை ஏவ, அவன் அதன் மதத்தை அடக்கி விரைவில் ஊர்ந்து போய் அரசன் எதிரில் நிறுத்தினான். அரசன் வியந்து, ‘இவ்வியானையை அடக்கி வெற்றியடைந்தவன் நீயேயாதலால், நீயே இதனைக் கொள்வாயாக என அவனுக்கே வெகுமதியாக வழங்கினான்.
58. மற்றோர்நாட் குமரன் றுட்ட மாவினை யடக்கி மேற்கொண்
டுற்றவூர் வீதி தோறு மூர்ந்துதீக் கோடி யாட்டி
வெற்றிவேல் வேந்தற் காட்ட விழைந்துநீ கொள்க வென்றான்
பற்றியே கொண்டு போகிப் பவனத்திற் சேர்த்தி னானே.
மற்றோர் நாள் நாககுமாரன் ஓர் பொல்லாக் குதிரை எதிர்ப்பட்டாரையெல்லாம் வாயாற் கடித்தும் காலால் கொன்றும் தன் இச்சைப்படியே திரிந்து வருவதைக் கண்டு, நகர மக்கள் அரசனிடம் முறையிட்டனர். அரசனும் நாககுமாரனை ஏவ, அவனும் அதனை அடக்கி மேலேறி, நகர வீதிகள் தோறும் ஊர்ந்து சென்று, பல திசைகளிலும் சவாரி செய்து காட்டி, முடிவில் அரசனெதிர்கொண்டு போய் நிறுத்தினான். அரசனும் மகிழ்ந்து அக் குதிரையை அவனுக்கே சன்மானமாக அளித்தான். அவனும் தன் குதிரை லாயத்தே கொண்டுபோய்ச் சேர்த்தான்.
நாககுமாரன் பெருமைத் திருமகனாக விளங்குதல்
59. அறவுரை யருளிச் செய்த வம்முனி குறித்த நான்குந்
திறவதி னெய்தி நல்ல சீர்கலைக் கடலை நீந்திப்
படுமதக் களிறுந் தேர்மா புகழ்பெற வூர்ந்து மூன்றாம்
பிறையது போல்வ ளர்ந்து பீடுடைக் குமர னானான்.
இங்ஙனம் பிகிதாசிரவ முனிவர் கூறியருளிய அறவுரையிற் குறிப்பிட்ட கோயிற்கதவம் திறக்கப்படுதல், நச்சுவாவியில் வீழ்தல், யானையடக்கல், குதிரையடக்கல் என்ற நான்கு அறிகுறிகளும் தவறாமல் நடந்தன. நாககுமாரன் சகல கலைக் கடலையும் கரைகண்ட புலமை மிக்கவனாய் யானை, தேர், குதிரைகளை ஏறித் தன்னைப் பலரும் புகழும்படி ஊர்ந்து காட்டி, மூன்றாம் பிறைபோல் இனிது வளர்ந்து பெருமைமிக்க திருமகனாக விளங்கினான். நிற்க--
விசாலநேத்திரை பொறாமையால் மகன் சிரீதரனிடம் சொன்ன சொற்கள்
60. தூசுநீர் விசாலக் கண்ணி சுதனைக்கண் டினிது ரைப்பாள்
தேசநற் புரங்க ளெங்குந் திகழ்பணி குமரன் கீர்த்திப்
பேசொணா வகையிற் கேட்டேன் பெருந்தவ மில்லை நீயும்
ஏசுற விகழொன் றின்றி யினியுனைக் காக்க வென்றாள்.
நாககுமாரன் அடைந்துவரும் சீரையும் சிறப்பையும் கேட்கக் கேட்கக் களிப்பின்றி உளம் கொதித்துப் பொறாமையே குடிகொண்ட விசாலநேத்திரை, தன் குமாரன் சிரீதரனை நோக்கி, இனிது எடுத்து இயம்புகின்றாள். ‘குமாரனே! நீயோ பட்டத்துக்கு உரியவன். எனினும், உன்னைப் புகழ்வார் ஒருவரும் இல்லை. நாககுமாரனைப் பற்றியே நாடு நகரம் எல்லாம் புகழ்கின்றது. அச்சிறப்பை என் வாயால் கூற முடியவில்லை. அதற்குரிய நற்றவம் உனக்கு வாய்க்கவில்லை போலும். உன்னைப் பலரும் வசையாடுகின்றனர். புகழ் இல்லாமல் வாழ்தல் உனக்கு அழகல்ல. இனி உனக்கு இடையூறு இன்றிப் பாதுகாத்துக் கொள்வாயாக‘ என்று கூறினாள். (21)
சிரீதரன் நாககுமாரனைக் கொல்லச் சமயம் பார்த்திருத்தல்
61. சிரிதரன் கேட்டு நெஞ்சிற் செய்பொரு ளென்னென் றேகி
குறிகொண் டாயி ரத்தினோரைக் கொன்றிடு மொருவ னாகச்
செறியுமைஞ் ஞூறு பேருஞ் சீர்மையிற் கரத்தி னாரை
யறிவினிற் கூட்டிக் கொண்டு வமர்ந்தினி திருக்கு மந்நாள்.
தாய் சொற்கேட்ட சிரீதரனும் நாககுமாரன் மேல் மேலும்மேலும் பொறாமை குடிகொள்ள, இனி அவனை யாங்ஙனம் வெல்லலாம் எனச் சதியாலோசனை செய்து வெளிச்சென்று, ஒவ்வொருவரும் தத்தம் தோள்வலியால் எதிர்த்த ஆயிரம் வீரர்களை ஒருங்கே கொல்லும் ஆற்றலுடைய ஐந்நூறு மல்லர்களைத் தனக்குத் துணையாகத் திரட்டிக் கொண்டு இவர்களுடைய பலத்தால் நாககுமாரனைக் கொல்லும் சமயம் எப்போது வாய்க்கும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். (22)
நாககுமாரன் நீர்விளையாடலும் பிரிதிவிதேவி அவண் போதலும்
வேறு
62. குமரனுநன் மாதருங் குச்சமென்னும் வாவியுள்
மமரநீரி லாடவே வன்னமாலை குங்குமஞ்
சுமரவேந்திப் பட்டுடன் றோழிகொண்டு போகையிற்
சமையுமாட மீமிசைச் சயந்தர னிருந்ததே.
ஓர் நாள் நாககுமாரன் தன் மனைவியர் இருவரோடும் நகரின் அருகேயுள்ள ‘குச்சம்‘ என்னும் தடாகத்தில் நீராடிக் கொண்டிருந்தனன். அவ்வமயம் அவன் தாயார் பிரிதிவிதேவி அவர்கட்கு வேண்டிய உண்டியும் உடையும் பூமாலையும் குங்குமமும் பொற்றட்டுகளில் ஏந்தித் தோழியையும் உடன் அழைத்துக்கொண்டு வீதி வழியே சென்று கொண்டிருந்தாள். அப்போது சயந்தரமன்னன் தன் மாளிகையின் மேனிலையில் வீற்றிருந்தான்.
விசாலநேத்திரை சயந்தரனிடம் பொய்யுரை பகர்தல்
63. வேந்தன்பக் கங்கூறுநல் விசாலநேத் திரையவள்
போந்தனள் மனைவியாற் புணருஞ்சோரன் றன்னிடம்
பூந்தடத்தைச் சுற்றிய பொற்புடைக் கரைமிசை
யேந்திழையா ணிற்பக்கண் டினிச்சுதன் பணிந்ததே.
பொறாமையே உளத்திற்கொண்ட விசாலநேத்திரையானவள் உடனே அரசனைக் கண்டு, ‘அரசே! தங்கள் காதலியாகிய பிரிதிவிதேவி ஓர் கள்ள நாயகனைப் புணர்ந்து வருகின்றாள். அவனுக்கு நாடோறும் உண்டியுடை முதலியவெல்லாம் கொண்டுபோய்க் கொடுத்து வருகிறாள். இன்றும் அவற்றை எடுத்துக் கொண்டு தன் தோழியுடன் வீதிவழியே செல்கின்றாள், பார்!‘ எனச் சுட்டிக்காட்டினாள். அரசனும் ஐயுற்று அவள் போக்கைக் கவனித்து உற்று நோக்கிக் கொண்டிருந்தான். பிரிதிவிதேவியோ அங்ஙனமின்றித் தன் குமாரன் நீராடுகின்ற நடைவாவியின் கரையைப் போய்ச் சேர்ந்தாள். அவளைக் கண்ட நாககுமாரன் அன்போடு சென்று கரையேறி அவள் பாதங்களைப் பணிந்தான். அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வமன்றோ?
பொய்பேசிய மூத்த மனைவியை மன்னன் கடிதலும், நாககுமாரன் சுற்றம்சூழ மனை திரும்புதலும்
64. பொய்யுரை புனைந்தவளைப் புரவலனுஞ் சீறினான்
நையுமிடை மாதரு நாகநற் குமரனும்
செய்யமாலை சாந்துபட்டுச் செம்மையுடன் றாங்கியே
வெய்யவேற்கண் டாயுடன் வியன்மனை யடைந்தனன்.
பிறகு அவள் கொண்டு சென்ற மாலை, சாந்தம், ஆடை முதலியவற்றைத் தானும் தன் மனைவியரும் அணிந்து கொண்டனர். தாயும் தனையனும் நுண்ணிடையுடைய மருமகள்மார்களுமாகிய அனைவர்களும் தம் மாளிகையை அடைந்தனர். இக் காட்சிகளை எல்லாம் சயந்தர மன்னன் நேரிற் கவனித்துக் கொண்டிருந்தானாதலால், பிரிதிவிதேவியிடம் சற்றும் பிழை இல்லை, அவள் கற்புக்கரசியே. விசால நேத்திரையோ இவள் மேற் கொண்ட பொறாமை எண்ணத்தால் இப்பெரும் பாதகமான பொய்யுரைகளைத் தானே கற்பனை செய்து கூறியிருக்கின்றாள் என்று உண்மையுணர்ந்து அவள்மீது அடங்காச் சீற்றங்கொண்டான்.
பிரிதிவிதேவிக்கு மன்னன் இட்ட கட்டளை
65. மன்னன்றன் தேவியை மாதேயெங்கு போனதென்
நின்னுடைப் புதல்வனீ ராடற்காணப் போனதென்
நின்னுடன் மனைதனி லீண்டினிதி னாடலென்
நந்நகர்ப் புறத்தனைய னாடனீங்க வென்றனன்.
சயந்தர மன்னன் பிரிதிவிதேவியின் மாளிகை அடைந்து, அவளை நோக்கி, ‘மாதே! நீ எங்கே, என்ன காரணத்திற்காக நகர்ப்புறத்து ஏகினாய்?‘ என, ‘நின் புதல்வன் நீர் விளையாட்டைக் காண வேண்டிச் சென்றேன்‘ என்றாள். ‘இனி, நீங்கள் இருவரும் இம்மாளிகையை விட்டு எங்கும் வெளியே செல்லவேண்டா. நாககுமாரனும் நின்னுடன் மாளிகையினுள்ளே விளையாடுவானாக. வன விளையாட்டு புனல் விளையாட்டு என நகர்ப்புறத்தே போகவேண்டாம்‘ எனக் கட்டளையிட்டுச் சென்றான்.
தேவியின் சோர்வும் நாககுமாரன் உலாப்போதலும்
66. அரசனுரைத் தேகினா னகமகிழ்வு மின்றியே
சிரசிறங்கித் துக்கமாய்ச் சீர்கரத் திருந்தனள்
விரகுநற் குமரனும் வியந்துவந்து கேட்டனன்
அரசனுரை சொல்லக்கேட் டானைமிசை யேறினான்.
அரசன் கட்டளையிட்டு ஏகியதைக் கண்ட பிரிதிவிதேவி மிக்க சோகமும் துயரமும் அடைந்தவளாய்த் தன் வலக்கரத்தின் மேலே தலைசாய்த்த வண்ணமாய்த் துக்கப்பட்டுக் கொண்டிருந்தாள். இந் நிகழ்ச்சிகளை அன்பார்ந்த நாககுமாரன் கேள்வியுற்று வியப்படைந்தவனாய், விரைந்து சென்று தாயை வணங்கி, ‘நீ துயரப்படுவதற்குக் காரணம் என்னவென்று கேட்டான். அதற்கு அவள், ‘அப்பா! இன்று முதல் உலகிலே நின் புகழ் பரவுவதற்கு வழியில்லை. நீ கூண்டில் அடைப்பட்ட கிளியே ஆனாய். நீ இனி நகர்ப்புறத்தே சென்று நீராட்டு முதலியன விளையாடக்கூடாதாம். மாளிகைக்குள்ளேயே அடைபட்டுக் கிடத்தல் வேண்டுமாம். இது அரசன் இட்ட கட்டளை. இதற்காகவே வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறேன்‘ என்றாள். இதைக் கேட்ட நாககுமாரன், அரசன் மேல் அடங்காச் சீற்றங் கொண்டவனாய், ‘நீலகிரி‘ என்னும் யானை மீது ஏறி வெளிப்போந்தான். (27)
67. வாத்திய முழங்கவு மதவாரண மடக்கவும்
ஏத்தரிய வீதிதொறு மீடில்வட்ட சாரியும்
பார்த்தரிய நடனமும் பல்லியங்க ளார்ப்பவே
சீற்றமொ டுலாச்செலச் சீரரசன் கேட்டனன்.
பல வாத்தியங்கள் முழங்கவும் மதமிக்க யானையை அடக்கவும் வீதிதோறும் கண்டோர் வியந்து, புகழ்தற்கரிய நிகரற்ற வட்டசாரியோட்டிக் காட்டியும், பல்லியம் முழங்கப் பகுத்துணர்தற்கரிதாகிய நடனமாடலும் கண்ட சயந்தர மன்னன் இங்ஙனம் சீற்றத்தோடு நகருலாச் செல்லவல்லோன் யாவன் என்று வாயிற்காவலனை விரைந்து கேட்டான். (28)
அரசன் சினந்து நாககுமாரனின் நற்பொருள் கவரச்செய்தல்
68. நன்னடியார் சொல்லினர் நாகநற் குமரனென்
இன்னுரையை மீறின னினியவன் மனைபுகுந்து
பொன்னணிக ணற்பொரு ணாடிமிக் கவர்கொள
என்றரசன் கூறலு மினப்பொருள் கவர்ந்தனர்.
ஏவல் புரியும் வாயிற்காவலன், தங்கள் மகன் நாககுமாரன் தான் உலாவருகிறான் என, உடனே மன்னன் கோபங்கொண்டவனாய், நாம் பிரிதிவிதேவியிடம் இனி நாககுமாரன் நகர்ப்புறம் சென்று விளையாடக் கூடாது எனக் கட்டளையிட்டதால், அவன் புகழ் உலகில் பரவுவதற்கு இல்லை எனக் கருதியே இங்ஙனம் பவனிவரும்படி அவன் தாய் பிரிதிவிதேவி அவனைத் தூண்டிவிட்டிருக்கிறாள் போலும் என மனம் புழுங்கி, ‘என் கட்டளை மீறிய அவன் மனையிலுள்ள ஆடையணிகலன்களையும் பிற பொருள்களையும் விரைவிற் சென்று சூறையாடி வம்மின்‘ எனத் தன் ஏவலரை ஏவினான். அவர்கள் சென்று அவ்வாறே அனைத்தையுங் கொள்ளையடித்துக் கொண்டு வந்து அரசன் பொன்னறையில் சேர்த்தினார்கள். (29)
நாககுமாரன் அரசர்களுடன் சூதாடிப் பொருள் மிகக் கொணர்தல்
69. ஆடுவா ரணமிசை யண்ணல்வந் திழிதர
நீடுமா ளிகையடைய நீர்மைநற்றாய் கூறலும்
ஆடுஞ்சூது மனைபுகுந் தரசர்தம்மை வென்றபின்
கூடுமா பரணமே குமரன் கொண்டி யேகினான்.;
வெற்றியானை ஊர்ந்து உலாப்போந்த நாககுமாரன் பவனியை முடித்துவந்து தாயின் அரண்மனையில் இறங்கி உட்புகுந்து பல பொருள்கள் களவாடப்பட்டிருத்தலையும் தாய் கழுத்தணிகளை இழந்து வருந்துதலையும் கண்டு, ‘அம்மா யாது நிகழ்ந்தது‘ எனக் கேட்க, நடந்தவற்றைக் கூறி வருந்தினாள். நாககுமாரன், ‘அம்மா ஒன்றும் கவலை வேண்டாம், யான் உடனே சென்று, பல பொருள்களை ஈட்டித் தருகிறேன்‘ எனத் தேற்றிவிட்டு வெளிப்போந்து, அந்நகரில் பல்லாயிரக்கணன்ககான அரசர்கள் கூடிச் சூதாடும் ஓர் மனையுட் புகுந்து, அவர்களோடு சூதாடி முறையே வெற்றி கண்டு, அவர்கள் அணிந்திருந்த அணிகலன்களை எல்லாம் கைக்கொண்டு போய்த் தன் தாயிடம் கொடுத்தருளினான். தாய் மனம் மகிழ்ந்தாள். அரசனுடைய மந்திரி, புரோகிதர் முதலியோரும் தத்தம் பொருள் இழந்தனர். (30)
அரசர்கள் சயந்தரனிடம் முறையிடுதல்
70. அரசர்க ளனைவரு மதிகரா சனைத்தொழ
அரவமணி யாரமு மான முத்து மாலையும்
கரமதிற் கடகமுங் காய்பொற்கே யூரமும்
வெரிமணிக ளிலதைவேந் தென்னவிக் கூற்றென.
சூதில் தோற்ற சிற்றரசர்கள் முதலிய பலரும் அரசவையில் கொலுவீற்றிருக்கின்ற அரசர்க்கரசனாகிய சயந்தரனைக் காணச் சென்று வணங்கினர். அரசன் அவர்களை நோக்கி, ‘அரசர்களே! உங்கள் மார்பணி மாலைகள் எங்கே? முத்து மாலைகள் எங்கே? கைக்கடகங்கள், வாகுவலயங்கள் எல்லாம் எங்கே? நீங்கள் இக்கோலத்துடன் வரக் காரணம் யாது?‘--எனக் கேட்க.
நாககுமாரனுடன் ஆடிய சூதில் தந்தை இருமுறை தோற்றல்
71. சூதினாற் செயித்துநின் சுதனணிகள் கொண்டனன்
சூதிலாட வென்னுடன் சுதனழைப்ப வந்தபின்
சூதினிற் றுடங்கிநற் சுதனுந்தந்தை யன்பினிற்
சூதிரண்டி லாட்டினுஞ் சுதன்மிகச் செயித்தனன்.
‘அரசே! நாங்கள் நின்மகன் நாககுமாரனோடு விளையாட்டாகச் சூதாடி முறையே யாங்கள் அனைவரும் தோல்வியுற்றோம். வெற்றியடைந்த குமாரன் அவற்றைக் கொண்டு போய்விட்டான்‘ என, அரசன் ஆச்சரியமடைந்தவனாய்த் தானும் அவனோடு சூதாடி, அவற்றைக் கொள்ளக் கருதிப் பிள்ளையை வரவழைத்து, அன்புகூர இன்னுடையாடிச் சூதாடத் தொடங்கினான். இருமுறை சூதாடினார்கள். இரண்டிலும் நாககுமாரனே வெற்றியடைந்தான். வெற்றியடைந்ததும், இவ்வளவு போதுமானதெனத் திருப்தியோடு மேற்கொண்டு ஆடாமல் நின்றான். தோல்வியுற்ற தந்தையாகிய மன்னன் தான் அணிந்திருந்த அணிகலன்களையும் பாண்டாகாரத்தையும் இழந்தான். ஏனைய எஞ்சலாயின.
தாயின் மனையில் கவர்ந்துசென்ற பொருளைமட்டும் கொண்டு
ஏனைய பொருள்களை உரியவர்க்கே அளித்தல்
72. இனியசூதி லாடலுக் கிசைந்ததேச மன்னரை
இனியதாயப் பொருள்களை யியல்பினாற் கொடுத்துடன்
தனையனும் மனைபுகுந்து தாய்பொருட் கொடுத்தபின்
அணியரச ராரமு மவரவர்க் களித்தனன்.
வெற்றியடைந்த குமாரன் வேந்தன் பொன்னறைக்குச் சென்று அனைத்தையும் கொண்டானில்லை. முன்னம் தன் இனிய தாய் மனையிற் கவர்ந்த பொருள்களையும் அணிகளையும் தன்னுடன் சூதாடித் தோற்ற மன்னர் எண்ணாயிரவர்களின் அணிகளையும் கைக்கொண்டு வந்து, தாய்க்குரிய பொருள்களைத் தாயிடங் கொடுத்தான். சூதில் வென்ற கலன்களையும் அவரவர்க்கு வழங்கினான். அனைவரும் அகமகிழ்ந்து போற்றினார்கள்.
புதிய மாளிகையில் நாககுமாரன் குடிபுகுதல்
73. மன்னவன்றன் னேவலான் மாநகர்ப் புறத்தினின்
நன்னகர் சமைத்தினிதின் நற்சுத னிருக்கவென்
றன்னகரி னாமமு மலங்கரிய புரமெனத்
தன்னகரின் மேவுங்பொற் றாரணிந்த காளையே.
மன்னன் இனி நாககுமாரனுடைய வெளிவிளையாட்டங்களைத் தடுப்பதால் பயன் ஒன்றும் இல்லை எனக் கருதி, உடனே கொல்லர்களை அழைத்து அந் நகர்ப்புறத்தே ஓர் அழகிய அரண்மனை சமைக்குமாறு கட்டளையிட்டான். அங்ஙனம் சமைத்த அவ்வரண்மனையில் நாககுமாரன் நயந்து குடியேறச் செய்தான். அதற்கு ‘அலங்கரிய புரம்‘ எனப் பெயரிட்டு அழைக்கலானான். அன்று முதல் நாககுமாரன் அம் மனையில் வசித்து வரலாயினான்.
(இரண்டாம் சருக்கம் முற்றும்)
மூன்றாம் சருக்கம்
கவிக்கூற்று
74. அரிவையர் போகந் தன்னி லானநற் குமரன் றானும்
பிரிவின்றி விடாது புல்லிப் பெருமலர்க் காவு சேர்ந்து
பரிவுட னினிதி னாடிப் பாங்கினாற் செல்லு நாளில்
உரிமையாற் றோழர்வந்து சேர்ந்தது கூற லுற்றேன்.
அலங்கரியபுரத்தே நாககுமரன் தன் தேவிமாரோடும் தனித்துப் பிரிவின்றி அன்போடு வனவிளையாட்டும் புனல் விளையாட்டும் புரிந்து, இனிதே இன்புற்றுக் களித்து வருநாளில், ஊழால் அவனுக்குத் தோழர்கள் வந்து சேர்ந்த வரலாற்றைக் கூறத் தொடங்குகிறேன். (1)
நாககுமாரனின் தோழர் வரலாறு
75. பாரணி சூர சேனம் பண்ணுதற் கரிய நாட்டுள்
ஊரணி கொடிக ளோங்கு முத்தர மதுரை தன்னில்
வாரணி கொங்கை மார்க்கு மாரனேர் செயவர் மாவின்
சீரணி தேவி நாமஞ் செயவதி யென்ப தாகும்.
பாரிலே மிகச் சிறந்த ஒப்பனை செய்தற்கரிய சூரசேனம் என்னும் அழகிய நாட்டிலே ஒப்பற்ற அழகிய வெற்றிக்கொடி நாட்டிய தலை நகரம் வடமதுரை என்பதாகும். அதை அரசிருக்கையாகக் கொண்டு செயவர்மன் என்னும் அரசன் ஆண்டுவந்தான். அவனுடைய அழகால் மங்கையருக்கு மன்மதனைப் போன்றவன். அவனுடைய கற்புக்கரசியாகிய கோப்பெருந்தேவி செயவதி எனப்படுவாள். (2)
வியாள-மாவியாளரின் தோற்றம்
76. வேய்ந்தவெம் முலையாள் பக்கல் வியாளமா வியாள ரென்னுஞ்
சேர்ந்திரு புதல்வர் தோன்றிச் செவ்வியாற் செல்லு நாளில்
காந்திநற் றவத்தோர் வந்தார் கடவுணேர் தூம சேனர்
வேந்தன்வந் தடிவ ணங்கி விரித்தொன்று வினவி னானே.
இவர்களிருவரும் ஐம்புலவின்பம் ஆரத்துய்த்து வரும் நாளில் செயவதிக்கு முறையே வியாளன் மகாவியாளன் என்னும் இரட்டைப் புதல்வர்கள் பிறந்தனர்,இருவரும் இனிதே நன்கு வளர்ந்துவரும் நாளில் பல்கலைத் தேர்ச்சி பெற்று அரசர்க்குரிய சிறப்போடு விளங்கினர். இவர்கள் ஒவ்வொருவரும் தத்தம் எதிர்மலையும் கோடி வீரர்களையும் ஒருங்கே வீழ்க்கும் உடல் வலியும் உள்ளத்திறலுமுடையவராதலால்,‘கோடி படர்கள்‘ என்னும் சிறப்புப் பெயர் பெற்றுச் சீருடன் இருக்கும் காலத்தில், ஓர்நாள் அந்தரத்தே அறிவொளிமிக்க கடவுளுக்கு நிகராகிய அருந்தவ முனிவர் தூமசேனர் வந்தருளினார். அப்போது வேந்தனாகிய செயவருமன் விரைந்துவந்து அவரடியில் வீழ்ந்து வணங்கி அறவமுதம் ஆரப் பருகியபின், ஊழ்வினையுற அவரைத் தொழுது ஓர் விண்ணப்பஞ் செய்தான். (3)
77. என்னுடையப் புதல்வர் தாமு மினியர சாளு மொன்றோ
அன்னியன் சேவை யொன்றோ வடிகணீ ரருளிச் செய்மின்
துன்னிய புதல்வர் தாமு மொருவனைச் சேவை பண்ணும்
என்றவர் குறியுஞ் சொல்ல யெழின்முடி புதல்வர்க் கீந்தான்.
"முனியரசே! என்னுடைய புதல்வர்கள் இருவரும் இனியொன்று அரசாள்வரோ? அயலாருக்குச் சேவை செய்வார்களோ? இவ்விரண்டிலொன்றைத் தாங்கள் விளக்கியருள வேண்டும்" என, முனிவரும் அவதியாலறிந்து, "அரசே! நின் புதல்வர்கள் இருவரும் அரசாள மாட்டார்கள், ஒருவனிடத்தே சேவை செய்வார்கள். அவற்றை அறிதற்குச் சில அறிகுறிகளும் உண்டு. எவனைக் கண்டவுடன், "எவள் இவனை அழகற்றவன் என்று இகழ்கின்றாளோ, அவள் கணவனுக்கே இவன் சேவை செய்வான். இவற்றைக் கேட்ட வேந்தன் வாழ்க்கையில் வெறுப்புற்றவனாய் வியாளனுக்கு முடிசூட்டி மாவியாளனை இளவரசனாக்கினான். (4)
வியாள-மாவியாளர் தம் நாடுவிட்டுப் பாடலிபுரம் சார்தல்
78. மன்னன்போய் வனம டைந்து மாமுனி யாகி நிற்பப்
பின்னவ ரமைச்சன் றன்மேற் பெருநிலப் பாரம் வைத்துத்
தன்னிறை தேடிப் போந்தார் தரைமகட் டிலதம் போலும்
பன்னக நகர நேராம் பாடலி புரம தாமே.
செயவர்மாவெனும் வேந்தன் அகப்புறப் பற்றறுத்து அடவி ஏகித் துறந்து அருந்தவனாகி நோற்கலானான். அவன் மக்களாகிய வியாளன் மாவியாளன் இருவரும் இனிது அரசாண்டாரில்லை. அமைச்சன்மேல் அரசுரிமையை வைத்தவராய்த் தாம் சேவை செய்தற்குரிய இறைவன் யாவன் எனத் தேடிச் சென்று முடிவில் நாக லோகத்துக்கு நிகராகியதோர் பாடலிபுர நகரை அடைந்தார்கள். (5)
பாடலிபுர மன்னன் மகளிரை அவ்விருவரும் மணத்தல்
79. நன்னகர்க் கிறைவ னல்ல னாமஞ்சிரீ வர்ம னாகுந்
தன்னவன் றேவி பேருந் தக்கசிரீ மதியா மம்பொற்
கிண்ணம்போல் முலையாள் புத்ரி கேணிகாசுந் தரியென் பாளாம்
விண்ணுறை தேவர் போல வியாளமா வியாளர் வந்தார்.
அந் நகருக்கு இறைவனுடைய நாமம் சிரீவர்மன் என்பான். அவனுடைய மாதேவியின் பேர் தகுதிவாய்ந்த சிரீமதி என்பாள். அப் பொற் கிண்ணம் போன்ற கொங்கையுடைய இவளுடைய மகளின் பேர் கணிகை சுந்தரி என்று கூறுவார்கள். அந் நகரின் வீதி வழியே தேவருலகத்துறையும் தேவர்களைப் போலும் சிறப்புடைய வியாளன் மாவியாளன்என்ற அவ்வரச குமாரர்கள் இருவரும் சென்றார்கள். (6)
80. மன்ன னைக்கண் டிருப்ப மாவியாளன் றகமை கண்டு
தன்னுடையப் புதல்வி தன்னைத் தானவற் கொடுத்துத் தாதி
துன்னிய மகளி தன்னைச் சுந்தரி வியாள னுக்கு
மன்னியற் கொடுப்ப மன்ன ரிருவரு மின்புற் றாரே.
சென்ற இருவரும் அரசனாகிய சிரீவர்மனைக் கண்டு வணங்க அரசனும் நல்லாசி கூறி, ஓர் ஆசனத்து அமரச் செய்து, இன்னுரை முகமன் கூறி, அவர்களுடைய அங்க அடையாளங்களால் அரச குமாரர்கள் என்பதை ஊகித்துணர்ந்து, அவர்களுள் இளையோனாகிய மாவியாளனுக்குத் தன் மகள் கணிகை சுந்தரியையும் மூத்தவனாகிய வியாளனுக்குத் தன் தாதியின் மகளாகிய இலளிதாசுந்தரியையும் வேள்வி விதிப்படியே திருமணம் செய்து கொடுக்க இருவரும் இன்புற்று இருந்தனர். (7)
நாககுமாரனை வியாளன் காண, அவன் நெற்றிக்கண் மறைதல்
81. சிறுதினஞ் சென்ற பின்பு சீருடன் வியாளன் போந்து
நறுமலர்க் கோதை வேலான் நாகநற் குமரற் கண்டு
சிறுமலர் நெற்றிக் கண்ணுஞ் சேரவே மறையக் கண்டு
சிறியன்யா னின்னா னென்றான் செல்வனு மகிழ்வுற் றானே.
சிலநாள் சென்றபின் வியாளன்மட்டும் தனியே அந் நகரை விட்டு வெளிப்போந்து, நாககுமாரன் வாழும் கனகபுரத்தை அடைந்தான். அச் சமயம் நாககுமாரன் யானைமீது ஏறி நகருலாப் போய் வந்து, தன் மாளிகை முன்னே யானையினின்றும் இறங்கினான். அவனைக் கண்டபோதே வியாளனுடைய நெற்றிக்கண் முற்றும் மறைந்தது. இதைக் கண்ட வியாளன் இவனே தனக்கு நாயகன் எனத் துணிந்து வணங்கித் தன் வரலாற்றை விளக்கிக்கூறக் குமாரனும் குதூகலமடைந்தான். (8)
சீதரன் ஏவிய சேனையை வியாளன் கம்பத்தால்
அடித்து மாய்த்தல்
82. செல்வனைக் கொல்வ தென்று சிரீதரன் சேனை வந்து
பல்சன மனையைச் சூழப் பண்புடை வியாளன் கண்டு
வல்லைநீர் வந்த தென்ன வள்ளலை வதைக்க வென்றார்
கொல்களி யானைக் கம்பங் கொண்டுடன் சாடி னானே.
நாககுமாரன் நகருலாப்போந்த சிறப்பைக் கண்டு நகரம் வானளவாப் புகழ்ந்தது. அதைக் கேட்கக் கேட்க சிரீதரனுடைய மனம் பொறாமையால் புழுங்கியது. இன்றே இவனைக் கொல்வேன் என வஞ்சினம் கூறித் தன் படர்கள் ஐந்நூற்றுவரை ஏவினான். அவர்களும் விரைந்து நாககுமாரனுடைய மாளிகையைச் சூழ்ந்து முற்றுகையிட்டனர். ஆங்கு நின்ற வியாளன் அவர்களைக் கண்டு விரைவில் திடீரென நீவிர் போர்க்கோலங்கொள்ளக் காரணம் ஏன் என்று கேட்க, வள்ளலாகிய நாககுமாரனை வதைக்க வந்தோம் என ஆர்ப்பரித்தனர் இக் கூற்றைக் கேட்ட வியாளன் வெகுண்டு சீறி, அக்கணமே ஆங்கிருந்த யானை கட்டும் கம்பம் ஒன்றை ஈர்த்து அப்படர்களையெல்லாம் நையப் புடைத்தான். அனைவரும் மாண்டொழிந்தார்கள். (9)
சீதரன் வந்து நாககுமாரனை எதிர்த்தலும்,
அமைச்சர் வேண்டுதலால் போர் விடுத்தலும்
83. சேனைதன் மரணங் கேட்டு சிரீதரன் வெகுண்டு வந்தான்
ஆனைமேற் குமரன் றோன்றி யவனும்வந் தெதிர்த்த போது
மானவேன் மன்னன் கேட்டு மந்திரி தன்னை யேவ
கோனவர் குமரற் கண்டு கொலைத் தொழி லொழித்த தன்றே.
சேனைகள் எல்லாம் மாண்ட செய்தியைக் கேட்ட சிரீதரன் சீற்றங்கொண்டவனாய்ப் போர்க் கோலங்கொண்டு சென்று, நாககுமாரனைத் தன்னோடு போர்புரியுமாறு அறைகூவினன். குமாரனும் யானையேறிச் சென்று போர் தொடங்கினான். இச்செய்தியைத் தந்தையாகிய சயந்திரமன்னன் கேள்வியுற்றுத் தன் மந்திரி நயந்தரனைச் சென்று குமாரர்களைப் போர் புரியாவண்ணம் சமாதானம் செய்யுமாறு ஏவினான். அவனும் சென்று ஏற்பக் கூறிப் போரை நிறுத்தினான். கொலைத் தொழில் ஒழிந்து அமைதி நிலவிற்று. (10)
மன்னனின் ஆணை கேட்ட நாககுமாரனின் மறுமொழி
84. நாகநற் குமரற் கண்டு நயந்தர னினிய கூறும்
வேகநின் மனைக்குச் சூரன் வெகுண்டவன் வந்தா னென்ன
போகநீ தேசத் தென்று புரவலன் சொன்னா னென்ன
ஆகவே யவன்முன் போகி லவ்வண்ணஞ் செய்வ னென்றான்.
நயந்தர அமைச்சன் நாககுமாரனைக் கண்டு இனிய சொற்களால், ‘குமரனே! நீ நின் மனைக்குமட்டுமே சிறந்த சூரனாயிருக்கின்றாய் போலும்! இன்றேல் வேற்றுநாட்டினும் சென்று நின் வீரியத்தைக் காட்டுவாயன்றோ? உடன்பிறந்தானோடன்றோ போர் புரிகிறாய். வியாளன் சிரீதரன் சேனைகளை வதைத்தானாதலால் சிரீ்தரன் வெகுண்டு போருக்கு வந்தான். அவனோடு போர் புரிதல் முறையன்று. நீங்கள் இருவரும் இந் நகரிலே உறைவீராயின் என்றும் உங்கட்கு இகல் ஒழிதல் அரிது. ஆதலின் நீ இன்றே வேற்று நாடு போதல் வேண்டும். இது என் சொந்த உரையன்று. நின் தந்தை உரையாகும்‘ என்றான். இதைக் கேட்ட குமரன் வருத்த முற்றானில்லை. போதற்கொருப்பட்டு, நயந்தரனை நோக்கிச், ‘சிரீதரன் இன்னும் போனபாடில்லை. பொரக் கருதியே நிற்கின்றான் போலும். அவன் முன் தன் மனைக்குச் சென்றால் யானும் போவேன்‘ என்றான். (11)
நயந்தரன் அறிவுரையால் சீதரன் மனை புகுதல்
85. நயந்தரன் சென்று ரைப்பா னல்லறி வின்றி நீயே
செயந்தனி லொருவன் கையிற் சேனைதன் மரணங் கண்டும்
நயந்தறி யாத நீயே நன்மனை புகுக வென்றான்
பயந்துதன் சேனை யோடும் பவனத்திற் சென்ற வன்றே.
உடனே நயந்தரன் சிரீதரன் பால் சென்று, ‘அப்பா நீ அறிவிலியாகவல்லவோ இருக்கின்றாய். நின் சேனை யாவுங்கூடி ஒருவனை வெல்ல முடியவில்லை. அவ்வொருவன் கைவலியாலேயே நின் சேனைகள் யாவும் மாண்டன. அவ்வொருவனே வெற்றிபெற்றான்.
அதை நிதானித்து அறியும் நுண்ணறிவு நினக்கு இல்லை, இன்னும் பொர விழைகின்றாய், பொருதால் வறிதே பொன்றுவாய். ஆதலால் விரைந்து நின் மனைக்கு ஏகிவிடுவாயாக‘ எனக் கடிந்துரைத்தான். சிரீதரனும் பயந்தவனாய்த் தன் சேனையோடும் சென்று மாளிகை அடைந்தான். (12)
நாககுமாரன் தேவிமாரோடு தன் தோழன் வியாளனின் ஊருக்குச் செல்லுதல்
86. தந்தையா லமைச்சன் சொல்லத் தானுந் தன்றாய்க் குரைத்து
தந்திமேன் மாதர் கூடத் தோழனுந் தானு மேறி
நந்திய வியாள னன்னூர் மதுரை யிற்புக் கிருந்து
அந்தமி லுவகை யெய்தி அமர்ந்தினி தொழுகு நாளில்.
தந்தையின் ஏவலால் மந்திரி சொல்லக் கேட்ட நாககுமாரனும் தன் மனைபுக்கு நற்றாயைக் கண்டு, ‘அம்மா! இனி நான் இந் நகரை விட்டு வேற்றுநாடு செல்ல வேண்டுமாம். இக் கட்டளை மந்திரி வாயிலாகத் தந்தையிட்டது. ஆதலால், நான் போதல் வேண்டும்‘ எனத் தாயினிடத்தே விடைபெற்றுக் கொண்டு தானும் தேவிமார்களுமாக வேழமேறிப் புறப்பட்டுப் போந்து, வியாளனூராகிய வட மதுரைக்குச் சென்று, ஆங்கே தேவதத்தை என்னும் ஓர் மாதருடைய மனையில் தங்கி, அளவற்ற மகிழ்ச்சியோடு உறைவாராயினர்.
ஓர்நாள் நாககுமாரன் கடைத்தெரு வளப்பத்தைக் காணப் புறப்பட்டான். அவனை நோக்கி, தேவதத்தை, ஐயனே! கன்னியா குச்சம் எனும் நகர்க்கதிபதியாகிய மன்னன் செயவர்மன், மனைவி குணவதி, இவர்கட்குப் புத்திரி சுசீலை. இப் பெண்ணைச் சிம்மபுர மன்னன் அரிவர்மனுக்குத் திருமணஞ் செய்து கொடுக்க ஒரு மனப்பட்டனர். அதைக் கேள்வியுற்ற இந் நகர்க்கரசன் துட்டவாக்கியன், அப்பெண்ணைத் தான் மணக்க விரும்பிச் சென்று, அவளைக் கவர்ந்து கொடுவந்து சிறையிட்டுள்ளான். அவளோ விருப்பமின்றிக் கூக்குரலிட்டுக் கொண்டிருக்கிறாள். நீ அதைக் கண்டு ஐயுறல் வேண்டா. நின் காரியத்தைக் கடைப்பிடித்துப் போய் வருவாயாக‘ என்றாள்.
அதைக் கேட்ட நாககுமாரன் ஆங்கடைந்து காவல்புரியும் போர்வீரர்களை அச்சமுறுத்தித் துரத்திவிட்டுத் தன் வீரர்களை வைத்து அவளுக்குப் புகலிடம் தந்தான். அதனால் துட்டவாக்கியன் வெகுண்டு நாககுமாரன் மேல் போர் தொடுக்கலானான். அப் போரில் தனக்கு எதிரியாக. வியாளன் வரக் கண்டான். உடனே துட்டவாக்கியன் மந்திரி புத்திரனாகிய எனக்குத் தன் அரசியலையே அளித்த வள்ளல் வியாளனல்லவா என எண்ணி அந் நன்றி மறவாமல் அக்கணமே அவன் பொற்கழல் தொழுதான். வியாளனும் அவனுக்குத் தன் தலைவனாகிய நாககுமாரனை அறிமுகப் படுத்தினான். அவனும் நாககுமாரனை வணங்கி நட்புடையவனானான். சுசீலை என்னும் பெண்மணியை முதலில் விழைந்த அரிவர்மனுக்கே உரிமையாக்கினான்.* (13)
மதுரையில் வீணைத் தலைவன் குழுவுடன் எதிர்ப்படல்
வேறு
87. மன்னவ குமரனு மன்னனுந் தோழனும்
அந்நகர்ப் புறத்தினி லாடன் மேவலின்
இன்னிசை வீணைவேந் திளையரைஞ் நூற்றுவர்
அன்னவர்க் கண்டுமிக் கண்ண லுரைத்தனன்.
நாககுமாரனும் துட்டவாக்கியனும் தோழன் வியாளனுமாகிய மூவரும் அந்நகர்ப் புறத்தே சென்று ஓர் நாள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக யாழிலே வல்லவர்களாகிய ஐந்நூறு இளையவர்கள் வந்து கொண்டிருந்தனர். அவர்களைக் கண்டு நாககுமாரன் கேட்கின்றான். (14)
88. எங்குளிர் யாவர்நீ ரெங்கினிப் போவதென்
றங்கவர் தம்முளே யறிந்தொரு வன்சொலுந்
தங்களூர் நாமமுந் தந்தைதாய் பேருரைத்
திங்கிவ ரென்கையின் வீணைகற் பவர்களே.
‘இளையவர்களே! நீவிர் யாவீர்? எங்கு நின்றும் வருகின்றீர்? எங்குப் போகின்றீாக்ள்?‘ என்று கேட்டான். அவர்கட்கு ஆசானாகிய கீர்த்திவர்மன், அவ்விளையர்கள் ஒவ்வொருவருடைய ஊரும் பேரும் தாய் தந்தையர்களையும் அறிவித்து, இவர்கள் என்னிடம் வீணை கற்பவராவார்கள். (15)
-------------------
* இப்பாடலின் இறுதிப் பகுதியுரையில் புதுச் செய்திகள் உள. ஆனால், அவற்றிற்குரிய மூலம் இல்லை. வட நூல் காவியம் பற்றியோ பிறவரலாறுகள் கொண்டோ உரையாளர் இங்கு எழுதுகின்றார்.
-------------------
வீணைத் தலைவன் சொன்ன காம்பீர நாட்டுச் செய்தி
வேறு
89. நந்துகாம் பீரநாட்டி னகருங் காம்பீர மென்னு
நந்தன ராசன் றேவி நாமந் தாரணியாம் புத்திரி
கந்தமார் திரிபுவ னாரதி கைவீணை யதனிற் றோற்று
என்தம ரோடுங் கூட வெங்களூர்க் கேறச் சென்றோம்.
காம்பீர நாட்டு மன்னன் நந்தன். அவன் தேவி தாரணியாவள். அவர்கள் புத்திரி திரிபுவனாரதி என்பாள். யாங்கள் அனைவரும் அவளுடைய வீணா சுயம்வரத்திற்குச் சென்று தோல்வியுற்றோ மாதலால் எங்கள் ஊருக்குப் போகின்றோம் என்றான். (16)
திரிபுவனாரதியை வீணையினால் வென்று
நாககுமாரன் நன்மணங் கொள்ளல்
90. வெற்றிவேற் குமரன் கேட்டு வியாள னுந் தானுஞ் சென்று
விற்புரு வதனத் தாளை வீணையின் வென்று கொண்டு
கற்புடை யவடன் காமக் கடலிடை நீந்து நாளில்
உற்றதோர் வணிக னைக்கண் டுவந்ததி சயத்தைக் கேட்டான்.
அச்செய்தியைக் கேட்ட நாககுமாரன் துட்டவாக்கியனை அவ்விடத்தே நிறுத்தித் தானும் வியாளனும் விரைந்து ஏகி, வீணைப் போரில் திரிபுவனாரதியை வென்றான். அவளைத் திருமணம் செய்து கொண்டு, அவளோடு இனிது இன்பந்துய்த்து வருநாளில், வேற்று நாட்டு வாணிகன் ஒருவன் அவ்வீதி வழியாய் வந்து கொண்டிருந்தான். நாககுமாரன் மகிழ்ந்து அவனை நோக்கி, ‘வணிகரே நீவிர் போய் வரும் நாடுகளில் யாதேனும் அதிசய நிகழ்ச்சியுண்டோ?‘ எனக் கேட்டான். (17)
வேற்றுநாட்டு வணிகன் சொன்ன அற்புதச் செய்தி
91. தீதில்பூந் திலக மென்னுஞ் சினாலய மதனின் முன்னிற்
சோதிமிக் கிரணந் தோன்றுஞ் சூரிய னுச்சி காலம்
ஓதிய குரல னாகி யொருவனின் றலறு கின்றான்
ஏதுவென் றறியே னென்றா னெரிமணிக் கடகக் கையான்.
அவ் வணிகன், ‘ஐயா! இரம்மியகம் என்னும் காட்டிலே திரிசங்க மென்னும் மலையின் ‘பூமிதிலகம்‘ என்னும் ஓர் ஆலயமிருக்கிறது. நாடோறும் வெங்கதிர் வெதுப்பும் நண்பகல் உச்சிப் பொழுதிலே, அதன்முன் ஒருவன் வந்து கூக்குரலிட்டுக் கொண்டு வருகிறான். யான் இன்னதென்று அறியேன் என்றான். 18)
வணிகன் சொன்ன சினாலயத்தை நாககுமாரன் சேர்ந்திருத்தல்
92. குன்றெனத் திரண்ட தோளான் குமரனுங் கேட்டுவந்து
சென்றந்த வால யத்திற் சினவரற் பணிந்து நின்று
வென்றந்த விமலன் மீது விரவிய துதிகள் சொல்லி
முன்னந்த மண்ட பத்தின் முகமலர்ந் தினிதி ருந்தான்.
குன்றம்போல் திரண்ட தோள்வலிவுடைய நாககுமாரன் அதைக் கேட்டு அகமகிழ்ந்து, அவ்வதிசயத்தைக் காண விரும்பிச் சென்று, அவ்வாலயத்திலுள்ள அருகனை வணங்கித் தொழுது நின்று கொண்டு பல துதிகள் செய்து, முகமலர்ச்சியோடு அவன் வருகையை எதிர்ப்பார்த்துக் கொண்டு ஆங்குள்ள முன் மண்டபத்தில் காத்திருந்தான். (19)
வேடனின் மனைவியை நாககுமாரன் மீட்டுத்தருதல்
93. பூசலிட் டொருவன் கூவப் புரவல குமரன் கேட்டு
ஓசனிக் கின்ற தென்ன வொருதனி நின்ற நீயார்
ஆசையென் மனைவி தன்னை யதிபீம வசுரன் கொண்டு
பேசொணா மலைமு ழஞ்சுட் பிலத்தினில் வைத்தி ருந்தான்.
உச்சிப் போதில் ஒருவன் வந்து ஓவெனப் பூசலிட்டு அலறினான். நாககுமாரன் அவனை நோக்கி, ‘அப்பா! நீ யார்?‘ என்று கேட்க, அதற்கு அவன், ‘ஐயா! என் காதலியைப் பீமன் என்னும் ஓர் அசுரன் கைப்பற்றிக் கொண்டு சென்று பயங்கரமான இருண்டதோர் மலைக்குகையுள் வைத்திருக்கின்றான். (20)
94. இரம்மிய வனத்துள் வாழ்வே னிரம்மிய வேட னன்பேன்
விம்முறு துயர்சொற் கேட்டு வீரனக் குகைகாட் டென்னச்
செம்மையிற் சென்று காட்டச் செல்வனுஞ் சிறந்து போந்து
அம்மலைக் குகைவாய் தன்னி லண்ணலு முவந்து நின்றான்.
‘யான் இரம்மியவேடன் என்பேன், இரம்மிய வனத்துள் வாழ்கின்றேன்‘ என விம்முற்றுத் துயரப்பட்டு அழுதான். அதைக் கேட்ட குமாரன், ‘அப்பா! அழ வேண்டா. யான் நின் துயரைப் போக்குகிறேன். விரைந்து எனக்கு அக் குகையைக் காட்டு‘ என வேடனும் அழைத்துக் கொண்டுபோய் சேணிலிருந்தே அக் குகையைச் சுட்டிக் காட்டினான். நாககுமாரனும் அஞ்சானாய் அக் குகை வாயில் முன் நின்றான். (21)
வியந்தரதேவன் நாககுமாரனுக்கு வாள் முதலியன கொடுத்தல்
95. வியந்தர தேவன் வந்து வந்தனை செய்து நிற்ப
விந்தநற் கிராதன் றேவி தனைவிடு வித்த பின்புச்
சந்திர காந்தி வாளுஞ் சாலமிக் கமளி தானுங்
கந்தநற் காம மென்னுங் கரண்டகங் கொடுத்த தன்றே.
உடனே ஓர் வியந்தரதேவன் வந்து நாககுமாரனுடைய பாதங்களைப் பணிந்து நின்று, ‘ஐயா! நான் ஓர் கேவல ஞானியாரிடம் தருமம் கேட்கையில் என்னிடமுள்ள இச்சிறந்த பொருட்கு உரியவர் யார் எனக் கேட்டேன். அதற்கு அவர், இவ் வேடன் கூக்குரலைக் கேட்டுப் பரிந்துவரும் ஓர் ஆடவனுக்கே அது உரியதாகும் எனக் கூறினார். ஆதலால், இவ்வேடன் மனைவியைக் கொண்டு போய்க் குகையில் வைத்துள்ளேன்‘ என உரைத்த பின் அவளை விடுவித்து, குமாரனைப் பணிந்து, தன் வரலாற்றைக் கூறிச் சந்திரகாந்தம் எனும் வாளும், நாகசயனம் எனும் படுக்கையும் காம கரண்டகமும் கொடுத்துச் சிறப்பித்தான்.
கரண்டகம்-சிறு செப்பு, சிமிழ். இங்கே அரிய ஆபரணம் அடங்கிய சிறு பெட்டியைக் குறிக்கும், அதாவது அருங்கலச் செப்பு. (22)
வேடன் உரைத்த மலைக்குகை நாலாயிரவர் நாககுமாரனுக்கு அடிமையாதல்
96. அங்குநின் றண்ணற் போந்து வதிசயங் கேட்ப வேடன்
இங்குள மலைவா ரத்தி லிரணிய குகையுண் டென்னக்
குங்கும மணிந்த மார்பன் குமரன்கேட் டங்குச் சென்றான்
அங்குள யியக்கி வந்து வடிபணிந் தினிது சொல்வாள்.
பெருமை மிக்க நாககுமாரன் அங்கு நின்றும் போந்து, அவ் வேடனைக் குறுகி, ‘இன்னும் இம் மலையில் யாதேனும் அதிசயம் உளதோ?‘ என, அவ்வேடன், ‘ஐயனே இம் மலையடிவாரத்தில் ஓர் இரணிய குகை உளது‘ என்று அதை அவற்குச் சுட்டிக் காட்டினான். குமரனும் அங்குச் சென்றான். உடனே அங்குள்ள சுதர்சனை எனும் ஓர் இயக்கி தோன்றி, அவன் பாதங்களை வணங்கி, ‘ஐயனே! வெள்ளியம் பெருமலைத் தென் சேடியிலே அளகாபுரி எனும் ஓர் நகர் உளது. அந் நகருக்கு அரசன் ‘ஜிதசத்துரு‘ என்பான். அங்கவன் எங்களைப் பெற வேண்டி பன்னீராண்டுக் கடுந்தவம் புரிந்தான். அதனால் என்னோடு நாலாயிரம் இயக்கிகள் அவனுக்கு உழைய ரானோம்.
அக் கணத்தே அவன் செவியில் முரசொலி ஒன்று கேட்டது. அவன் அதை அறியவேண்டி எங்களில் ஒருத்தியாகிய அவலோகினி எனும் வித்தையை ஓதினான். அதன் சாதனத்தால் அம்முரசொலி முனிசுவிரதரின் கேவலோத்பத்தியில் தேவர்களால் முழக்கப்பட்டது எனத் தேர்ந்து சென்று அறவுரை கேட்டு, வாழ்க்கையில் வைராக்கியங் கொண்டு துறவு வேண்டினான்.
‘யாங்கள் அனைவரும் ஒன்றுகூடி, நீ எங்களை வேண்டித் தவம் புரிந்தாய், எங்கள் ஏவலை ஏற்றுக் கொள்கிறதுமில்லை. துறவு பூண்கிறேரே. இனி யாங்கள் யாருக்கு ஏவல் புரிதல் வேண்டும்‘ எனக் கேட்டோம். அவரும் கேவலிபாற் சென்று அறிந்து மீண்டு, ‘தெய்வங்களே! இனிவரும் நேமிதீர்த்தகரர் காலத்தில் இங்கு நாககுமாரன் எனும் ஓர் அரசிளங்குமரன் வருவான். அவனுக்கு ஏவல் செய்ம்மின்‘ எனப் பணித்தார். (23)
97. இனியுனக காள ரானோ மீரி ரண்டா யிரவர்
எனவவள் சொல்ல நன்றென் றினியொரு காரி யத்தின்
நினைவன்யா னங்கு வாவென் னீங்கிநற் குமரன் வந்து
வனசரன் றன்னைக் கண்டு வதிசயங் கேட்பச் சொல்வான்.
ஆதலால், நாங்கள் நாலாயிரவரும் இனி உனக்கு ஆளர் ஆயினோம். எங்கள் ஏவலை ஏற்றுக் கொள்வீராக என்றனள். அதற்கு அவன், ‘தெய்வங்களே! ஒன்று நீங்கள் இங்கேயே இருமின். யான் வேண்டுங்காலத்தே வாருங்கள்‘ எனப் பணித்து அவைகளிடம் விடைபெற்று, மீண்டும் அவ் வேடனைக் கண்டு, இன்னும் யாதேனும் அதிசயம் உளதோ எனக் கேட்க வனசரன் சொல்கிறான். (24)
வேடன் சொற்படி வேதாளத்தை வதைத்தல்
98. வாள்கரஞ் சுழற்றி நிற்பான் வியந்தர னொருவ னென்னக்
காலினைப் பற்றி யீர்ப்பக் கனநிதி கண்டு காவ
லாளெனத் தெய்வம் வைத்து வருகனா லையத்துட் சென்று
தோளன தோழன் கூடத் தொல்கிரி புரத்தைச் சேர்ந்தான்.
‘ஐயனே! அதோ வேதாளம் ஒன்று தன் கையில் வாளேந்திச் சுழற்றிக் கொண்டிருக்கிறது. அதை அணுகுவோர் ஒருவரும் இல்லை‘ என்றான். உடனே நாககுமாரன் சென்று, அவ் வேதாளத்தின் காலை ஈர்த்துப் பிளந்து தள்ளினான். ஆங்கே நிதிக்குவியலைக் கண்டான். அங்கே, ‘இவ் வேதாளத்தை வீழ்த்திய ஒருவருக்கே இந் நிதித்திரள் உரியதாகுக‘ என்றோர் சாசனம் இருந்தது. அதைக் கண்டவுடன் முற்கூறிய தெய்வங்களை வேண்டி நினைக்க, அந் நாலாயிரம் தெய்வங்களும் வந்து பணிந்து ஏவல் கேட்க, அவற்றை அந் நிதிக்குக் காவல் வைத்து விட்டு அருகன் ஆலயம் போந்து, அருகனை வணங்கி மீண்டு, தானும் தன் மனைவி திரிபுவனாரதியும் தோழனுமாக அங்கேயுள்ள ‘கிரிகூடபுரம்‘ என்னும் நகரத்தை அடைந்து, ஓர் ஆலமரத்தின்கீழ் அமர்த்திருந்தான். (25)
கிரிகூடபுரத்தில் நாககுமாரன் கணைவிழியை மணத்தல்
99. அந்நகர்க் கதிப னான வனராசன் றேவி தானு
மன்னிய முலையி னாள்பேர் வனமாலை மகணன் னாமம்
நன்னுதற் கணைவிழியை நாகநற் குமர னுக்குப்
பன்னரும் வேள்வி தன்னாற் பார்த்திபன் கொடுத்த தன்றே.
அந் நகருக்கு அதிபனான வனராஜனுக்கும் அவன் மனைவி வனமாலைக்கும் பிறந்து வயது வந்துள்ள பிறைபோலும் நெற்றி அழகும் வேல்போன்று வருத்தும் விழியழகுமுடைய இலட்சுமிதேவி* என்னும் கன்னியை நாககுமாரனுக்கு கூறுதற்கரிய வேள்வி விதிப்படி கலியாணம் செய்து வைத்தான்.
புண்ணியாசிரவ கதையில் நாககுமாரன் ஆலமரத்தின்கீழ் அமர்ந்தபோது அம் மரத்துப் பிரஹோரங்கள் (விழுதுகள்) புறப்பட அதனை ஆந்த்ரோளமாகச் (ஊஞ்சல்) செய்தனன். அப்போது அம் மரத்துக்குரியான் வந்து வணங்கித் ‘தேவனே! இக் கிரி கூட நகரத்து வனராசனுக்கும் வனமாலைக்கும் புத்திரி இலக்குமீமதி. இவளுக்குக் கணவன் யாவனொருவன் என்று அரசன் ஓர் அவதிஞானியைக் கேட்க, அவரும், ‘இவ்வாலமரம் யாருடைய சமாகமத்து ப்ராரோஹம் (கைத் திறமையால் ஊசலாட்டம்) உண்டாகுமோ அவனே பர்த்தா வாவான்‘ எனக் கூற, அதைக் கண்டு அறிவித்தற்கே என்னை விட்டனர் என்று கூறி வனராசனுக்கு அறிவித்தாள் என்று உள்ளது. (25)
----------
* கணைவிழி என்றே பாடலுள் காணப்பெறுகிறது.
-----------
புண்டரபுரத்தை வனராசற்கு அளித்தல்
100. தாரணி வனரா சற்குத் தாயத்தா னொருவன் றன்னைச்
சீரணி குமரன் றோழன் சிறந்தணி மாமன் கூடப்
பாரணி வெற்றி கொண்டு புண்டர புரத்தை வாங்கி
யேரணி வனரா சற்கு யெழில்பெறக் கொடுத்த வன்றே.
ஓர் நாள் நகர்புறத்தே தன் உய்யானத்தில் ஜயவிஜயர் என்னும் சாரணர் இருவர் வந்தமைகேட்டு, நாககுமாரன் சென்று வணங்கி, வனராசனுடைய குலம் யாது எனக் கேட்டான். ஐயர் என்னும் மூத்த முனிவர், ‘இப் புண்டரபுரத்தரசன் அபராஜிதன், அவன் தேவிமார் சத்தியவதி, சுந்தரி என்ற இருவர். இவர்கட்குப் புத்திரர் முறையே பீமன், மகா பீமன் என இருவர். அபராஜிதன் பீமனுக்கு அரசைக் கொடுத்துவிட்டுத் துறந்து நற்கதி அடைந்தான். பீமனோ மகாபீமனால் துரத்தப்பட்டு இங்கு வந்து நகர் அமைத்திருக்கின்றான். மகாபீமனுடைய புத்திரன் பீமாங்கன், அவனுடைய புத்திரன் சோமப்பிரபன். மகாபீமனுடைய பேரன் இப்பொழுது அரசாள் மன்னன் வனராஜன், சோம வம்சத்தில் பிறந்தவன்‘ எனக்கேட்டு மகிழ்ந்து வணங்கித் தொழுது மனை அடைந்தான். ஓர் நாள் சோம வமிசத்தைப் பற்றிய சிலாசாசனங்கண்டு புண்டரவர்த்தனபுரத்தை வனராஜனுக்கு உரிமையாகும்படி செய்வாயாக என வியாளனுக்குக் கூற, அவனும் தன் மாமன் ஜாயந்தரி என் பங்காளியோ என, ‘ஆம், அதற்கென்ன சந்தேகம்‘ என்றான். சோமபிரபன் வெகுண்டு, ‘அவ்வாறாயின் வனராசனுடன் யுத்த பூமியில் பெற்றுக் கொள்வானாக, என்று கடிந்துரைத்தான். வியாளனும், சோமப்பிரபனுடைய படைகளைக் கொன்று, சோமப்பிரபனைக் கட்டவிட்டு நாககுமாரனுக்கு அறிவிப்ப, குமாரனும் வந்து சோமப்பிரபனைக் கட்டவிழ்த்து விடுத்து புண்டரபுரத்தை வனராஜனுக்கு முடிசூட்டினான். (27)
நாடிழந்த சோமப்பிரபன் நற்றவம் செய்தல்
101. சொல்லரு நாடி ழந்து சோமநற் பிரபன் போகி
யெல்லையிற் குணத்தின் மிக்க யெமதர ரடிவ ணங்கி
நல்லருட் சுரந்த ளிக்கு நற்றவ முனிவ னாகி
யொல்லையின் வினைகள் தீர யோகத்தைக் காத்து நின்றான்.
புகழரிய நாட்டை இழந்த சோமப்பிரபன், வைராக்கியமுற்று வாழ்க்கையைத் துறந்து, பல அரசர்களுடன், வரம்பற்ற குணஸ்தான மிக்க யமதரர் என்னும் முனிவரரை வணங்கி நல்லருள் சுரந்து பல்லுயிரையும் போற்றும் மாவிரதம் பூண்டு, நற்றவனாய்ப் புகழ்தற் கரிய கடுந்தவம் மேற்கொண்டு நிற்கலானான். (28)
(மூன்றாஞ் சருக்கம் முற்றும்)
நான்காம் சருக்கம்
சுப்பிரதிட்ட மன்னன் செயவர்மன் பரம முனிவரைப் பணிந்து வேண்டுதல்
102. சுப்பிர திட்ட மெனும்புர மாள்பவன்
செப்பு வன்மை செயவர்ம ராசன்றன்
ஒப்பில் பாவையு மோவியம் போற்செம்பொன்
செப்பு நேர்முலை யாணற் செயவதி.
சுப்பிர திட்டம் என்னும் நகரை ஆளும் மன்னன் சொல்லாற்ற லுடைய செயவருமன். அவனுடைய ஒப்பிலா அழகுமிக்க சித்திரப் பாவை போன்ற தேவி ஜெயவதி என்பர். (1)
103. மக்கட் சேத்திய பேத்திய ரென்றிவர்
மிக்க செல்வத்தின் மேன்மையிற் செல்லுநாள்
பக்க நோன்புடை பரம முனிவரர்
தொக்க ராசன் தொழுதிட் டிறைஞ்சினான்.
இவர்களுடைய மக்கள் அசேத்தியர் அபேத்தியர் என இருவர் செல்வமுஞ் செழிப்பும் மிக்கோராய் பெருமையேறி வாழுநாளில், அந் நகர்ப்புற வனத்தே பட்ச உபவாசமுடைய குணத்தால் உயர்ந்த பிகிதாஸ்வர முனிவர் வந்து தங்கி அறம் பகர்ந்தார். செயவருமன் என்னும் மன்னனும் சென்று, அவருடைய திருவடித் துணை வணங்கி இறைஞ்சினான். அசேத்தியர்-சேதிக்க முடியாதவர், அபேத்தியர்-பேதிக்க முடியாதவர். கோடிபடர். (2)
104. இருவ ரென்சுத ரென்னுடை ராச்சிய
மருவி யாளுமோ மற்றொரு சேவையோ
திருவுளம் பற்றித் தேர்ந்தறி விக்கெனத்
திருமுடி மன்ன செப்புவன் கேளென்றார்.
அங்ஙனம் இறைஞ்சி, ‘முனிவர் பெருமானே! என் குமாரர்கள் கோடிபடர்கள். இருவரும் சுதந்திரமாக என் அரசை ஆண்டு வருவார்களா என்பதைத் தாங்கள் திருவுள்ளம் பற்றி நன்கு தேர்ந்து விளக்குவீராக‘ என, அவரும், ‘அரசே! கூறுகிறேன் கேட்பாயாக‘ என்று அருளிச் செய்கின்றார் (3)
முனிவர் மன்னனுக்கு உரைத்தவை
105. புண்டிர மெனும்புரப் புரவ லன்றனைக்
கண்டிறந் துந்திடுங் காவ லன்றனை
யண்டிநற் சேவையா ராவ ராமெனப்
பண்டிறத் தவத்தவர் பண்ணுரை கேட்டபின்.
எவன் ஒருவன் சோமப் பிரபனைப் புண்டவர்த்தன புரத்தினின்றும் துரத்தி அரசை வனராஜனுக்குக் கொடுப்பானோ அவனே இவர்கட்குப் பிரபு ஆவான். இவர்கள் அவனைக் கண்டு யாது சேவை என வேண்டி அவன் ஏவல் செய்வார்கள் எனப் பண்பட்ட அருந்தவ முனிவரின் இன்னுரை கேட்ட பிறகு- (4)
செயவர்மன் புதல்வரின் அரசாட்சி
106. மக்கண் மிசைநில மன்னவன் வைத்துடன்
மிக்கு ணத்துவம் வீறுடன் கொண்டுதன்
நிற்கும் செவ்வினை நீங்க நின்றனர்
தக்க புத்திரர் தாரணி யாளுநாள்.
ஜயவருமன் மக்கள் அசேத்திய-அபேத்தியர்மிசை தன் அரசாட்சியை வைத்து முடிசூட்டினான். உடனே துறந்து பொருண்மைத்துவம், உருவத்துவம், குணத்துவங்களைக் கைக்கொண்டு வீறுபெற நோற்றுப் பழவினை பரியச் சலியாத பிரதிமாயோகத்தே நின்று நற்கதியடைந்தான். தகைமை சான்ற புத்திரர்கள் உலகாளும் நாளிலே-- (5)
சோமப்பிரபர் வழி அக்குமரர் நாககுமாரன் புகழை அறிதல்
107. நல்ல ருந்தவச் சோமப் பிரபரும்
எல்லை யில்குண விருடிக டம்முடன்
தொல்பு கழ்ப்புரஞ் சுப்பிர திட்டத்தின்
நல்ல காவி னயந்திருந் தார்களே.
புண்டரவர்த்தன புரத்தினின்றும் நாககுமாரனால் கட்டவிழ்த்து விடப்பட்டுச் சிறந்த தவமேற்கொண்ட சோமப்பிரப முனிவரும் எல்லையற்ற நற்குணவரிசை முற்னேற்றமுள்ள இருடிகள் பலரோடும் புகழ்மிக்க சுப்பிரதிட்டபுரத்தின் உய்யான வனத்தை விரும்பித் தங்கியிருந்தார்கள். (6)
108. செயவர் மன்சுதர் சீர்நற் றவர்களை
நயம றிந்துசேர் நன்னடி யைப்பணிந்
தியம்பு மிம்முனி யிப்ப துறந்ததென்
செயந்த ரன்சுதன் சீற்றத்தி னானதே.
செயவருமன் குமாரர்களாகிய அசேத்திய அபேத்தியர் இருவரும் புகழ்மிக்க அவ் வருந்தவர்களைக் கண்டு வணங்கு முறை அறிந்து, அடி பணிந்து இறைஞ்சி, சோமப்பிரபரெனும் இம் முனிவர் இப்போது துறத்தற்குக் காரணம் யாது எனக் கேட்க, சயந்தர மன்னன் புதல்வன் நாககுமாரனுடைய சீற்றத்தினால் துறந்து தவமேற்கொண்டே மென்று நாககுமாரன் புகழை விளக்கிக் கூறினார்கள். (7)
செயவர்மன் புதல்வரிருவரும் நாககுமாரனை வந்தடைதல்
வேறு
109. என்றவ ருரையைக் கேட்டு இருவருந் துறந்து போந்து
சென்றுநற் குமரன் றன்னைச் சீர்பெற வணங்கிச் சொன்னார்
இன்றுமக் காள ரானோ மென்றவர் கூற நன்றென்
குன்றுசூழ் வனசா லத்துக் குமரன்சென் றிருந்த வன்றே.
நாககுமாரனுடைய பெருமையைக் கேட்ட குமாரர்கள் இருவரும் அரசை அமைச்சன்பால் வைத்துப் புறப்பட்டுச் சென்று, புண்டரவர்த்தனபுரத்தை அடைந்து, குமாரனைக் கண்டு வணங்கி, இன்று முதல் யாங்கள் நினக்கு ஏவலாளர் ஆயினோம் என்று தங்கள் வரலாற்றைக் கூறினார்கள். குமாரனும் மகிழ்ந்து உடன்கொண்டு சென்று ஓர்நாள் குன்றைச் சூழ்ந்துள்ள ஜாலாந்தகம் எனும் வனத்து ஆலின் நிழலில் அமர்ந்திருந்தான். (8)
110. அடிமரத் திருப்ப வண்ண லந்நிழற் றிரித லின்றித்
கடிகமழ் மார்பன் றன்னைக் காத்துட னிருப்பப் பின்னும்
விடமரப் பழங்க ளெல்லாம் வியந்து நற்றுய்த் திருந்தார்
கொடிமலர்க் காவு தன்னுட் கோமக னிருந்த போழ்தில்.
நல்வினை மிக்க நாககுமாரன் அம்மரத்தடியில் தங்கியிருக்கும் போது அம்மர நிழல் வழக்கம் போல் வெங்கதிரொளியால் மாறுபாடு எய்தல் இன்றி நிலையாக நின்று மணமிக்க வாகைமாலை சூடிய அக் குமாரனை நிழல் தந்து பாதுகாத்திருக்கவும், அம்மரத்து நச்சுக் கனிகள் யாவும் வியக்கத்தக்க அமுதக்கனிகளாக, அவைகளைத் தின்று ஆரோக்கியமாய் இருந்தனர். அங்ஙனம் அம் மலர்க்காவினுள் கோமகன் இருந்த போதில்- (9)
ஆலநிழலிருந்தபோது ஐந்நூற்றுவர் வந்து குமரனைத்
தலைவனாக ஏற்றுக்கொள்ளல்
111. அஞ்சுநூற் றுவர்கள் வந்தே யடிபணிந் தினிய கூறும்
தஞ்சமா யெங்கட் கெல்லாந் தவமுனி குறியு ரைப்ப
புஞ்சிய வனத்தி ருந்தோம் புரவல னின்னி டத்தின்
நெஞ்சிலிற் குறியன் காணா யெமக்குநீ றிறைவ னென்றார்.
ஐந்நூறு படர்கள் வந்து குமாரனுடைய பாதங்களை வணங்கி இனிய சொற்களால், ‘தலைவ, அருந்தவ முனிவர் ஒருவரைக் கேட்ப அவர் அவதி ஞானத்தால் அறிந்து, எங்கட்குப் புகலிடமாகிய தலைவர், ஜாலாந்தக வனத்து நச்சு மரக்கனிகள் யாருக்கு அமுதக் கனிகளாக மாறி இன்பங் கொடுக்குமோ, மாறாத நிழலைத் தருமோ, அவரே என்றனர். நின் ஏவல் கேட்டு நடக்கக் காத்திருக்கிறோம். எங்கட்குத் தலைமகன் நீயே‘ என்றனர். (10)
கிரிநகரில் குணவதியை நாககுமாரன் மணத்தல்
112. அரியநல் லுரையைக் கேட்டு வவ்வணங் களிசிறந்து
உரியநல் லவர்க ளோடு முவந்துட னெழுந்து சென்று
கிரிநகர் தன்னைச்சேரக் கேட்டுநன் நகரைச் சென்றான்
அரிவர னெதிர்க் கொண் டேக யவன்மனை புகுந்தி ருந்தான்.
வாய்த்தற்கரிய இந் நல்லுரையைக் கேட்டு மட்டற்ற மகிழ்ச்சி யடைந்த குமாரன், ‘தோழர்களே! உங்கள் விருப்பம் ஆகுக‘ என்று அவர்களோடும் சென்று அக்கிரிநகர் அரசன் சிம்மரதன் எதிர் கொண்டு அழைப்ப, அவனுடைய அரண்மனையில் தங்கியிருக்கையில், அம் மன்னனால் கீழ்க்கண்ட வரலாற்றைக் கேள்வியுற்று, அந்நகரை நோக்கிச் சென்றான். அதை அறிந்த மன்னன் அரிவரனும் எதிர் கொண்டு அழைக்க ஆங்குத் தங்கலானான். (11)
113. அரிவர ராசன் றேவி யருந்ததி யனைய கற்பின்
மிருகலோ சனையென் பாளா மிக்கநன் மகடன் பேருஞ்
சுரிகுழற் கருங்கண் செவ்வாய்த் துடியிடைக் குணவ தீயைப்
பிரவிச் சோதன னிச்சித்துப் பெருநகர் வளைந்த தன்றே.
அரிவரன் என்னும் அம் மன்னனுடைய தேவி அருந்ததி போலும் கற்புக்கரசி மிருகலோசனை என்பாள். இவர்களுடைய நற் குணமிக்க புதல்வி குணவதி எனும் பேருடையாள். சுருண்ட குழலும் கரிய கண்ணும் சிவந்த வாயும் உடைய அக் கட்டழகியைச் சிந்துதேசாதிபதி சண்டப் பிரத்தியோதனன் மணக்க விரும்பி, அதிப்பிரசண்டன் முதலிய கோட்படர்களாகிய தன் படை பலத்தோடும் வந்து, அந் நகரை வளைய முற்றுகையிட்டான். (12)
114. நாகநற் குமரன் கேட்டு நாற்படை யோடுஞ் சென்று
வேகநற் போர்க்க ளத்தில் வெற்றிகொண் டவனை யோட்டி
நாகநல் லெருத்தின் வந்து நகர்புகுந் திருப்ப மிக்க
போகமிக் குணவ தீயைப் புரவலன் கொடுத்த தன்றே.
அதைக் கேள்வியுற்ற நாககுமாரன் தன்னுடைய யானை, தேர், குதிரை, காலாளாகிய நால்வகைப் படைகளோடும் சென்று, கோபாவேசம் மிக்க போர்க்களத்திலே கடுஞ்சமர் புரிந்து, அவனைப் புறமுது கிட்டோடச் செய்து, உயிர்ப் பயம் பொருட் பயம் அகற்றித் தம் நகர்ப்புக்கு வாழ்வருளி, வெற்றிமாலை சூடி, யானைமீது ஏறி வெற்றி முரசார்ப்ப நகரை அடைந்தான். புரவலனும் அளவற்ற மகிழ்ச்சியோடு போகோபபோகம் மலிந்த தன் மகள் குணவதியை வேள்வி முறைப்படித் திருமணம் செய்து கொடுத்தான். (13)
நாககுமாரன் குணவதியுடன் கூடிப் போகந் துய்த்தல்
115. வேல்விழி யமிர்தன் னாளை வேள்வியா லண்ண லெய்திக்
கால்சிலம் போசை செய்யக் காமனும் ரதியும் போலப்
போனமும் போக மெல்லாம் பருகியின் புற்று நாளும்
நூனெறி வகையிற் றுய்த்தார் நுண்ணிடை துவள வன்றே.
ஆடவரிற் சிறந்த நாககுமாரன் வேல் போன்ற கண்களையும் அமுதம் போன்ற மொழியினையுமுடைய குணவதியோடு காமனும் இரதியும்போல நுண்ணிடை துவளவும் கால் சிலம்பு ஒலிக்கவும் கட்டித் தழுவி நாடோறும் காமநூல் விதிப்படி போக உபபோகங்களை நுகர்ந்து இன்புற்று மகிழலானான். (14)
116. கலையணி யல்குற் பாவை கங்குலும் பகலு மெல்லாஞ்
சிலையுயர்ந் தினிய திண்டோட் செம்மலும் பிரித லின்றி
நிலைபெற நெறியிற் றுய்த்தார் நிகரின்றிச் செல்லு நாளுள்
உலைதலி லுறுவ லீயா னூர்ச்சயந்த கிரிய டைந்தான்.
விற்போர்ப் பயிற்சியிற் சிறந்த தோள்வலிமிக்க குமாரனும் மேகலாபரணம் அணிந்த குணவதியும் இரவும் பகலும் இணைபிரியாராய் அறநூல் விதிப்படி காமவின்பம் நிலைபெறும்படியாக ஊடலுங் கூடலும் விரவ இன்பம் துய்த்துவரும் நாளில் ஓர் நாள் சோர்வில்லாத பேராற்றலுடைய நாககுமாரன் ஊர்ச்சயந்தகிரியைப் போய்ச் சேர்ந்தான். (15)
நாககுமாரன் சயந்தகிரியடைந்து சினாலயம் தொழுதல்
117. வாமனா லையத்து மூன்று வலங்கொண் டுட்புகுந் திறைஞ்சி
தாமமார் மார்பன் மிக்க தக்கநற் பூசை செய்து
சேமமா முக்கு டைக்கீ ழிருந்தரி யாச னத்தின்
வாமனார் துதிகட் சொல்ல வாழ்த்துபு தொடங்கி னானே.
அங்ஙனம் சேர்ந்த வெற்றிமாலை அணிந்த மார்பன் நேமிதீர்த் தங்கரபகவான் ஆலயத்தை மும்முறை வலங்கொண்டுபோய் உள்ளே சென்று இறைஞ்சித் துதிபாடி பூசனை செய்து மூவுலகிற்கும் சிறந்த பாதுகாப்பாகிய முக்குடையின் கீழேயுள்ள சிம்மாசனத்தின் மிசை வீற்றிருக்கும் வாமனார்மீது பல துதிப் பாடல்களைச் சொல்லி வாழ்த்தத் தொடங்கினான். (16)
முக்குடைக்கீழ் விளங்கும் மூர்த்தியை வாழ்த்துதல்
வேறு
118. முத்திலங்கு முக்குடைக்கீழ் மூர்த்தி திருந்தடியை
வெற்றியுடன் பணிந்தவர்கள் விண்ணுலக மாண்டுவந்து
இத்தலமு முழுதாண்டு விருங்களிற் றெருத்தின்மிசை
நித்தில வெண்குடைக்கீழ் நீங்கா திருப்பவரே.
முத்துமாலைகளால் அலங்கரிக்கப்பட்ட முக்குடையீன்கீழ் வீற்றிருக்கும் உலகிற்கு அறவமுத மழை சொரிந்து உயிர்களை உய்விக்கக்கூடிய பரம ஒளதாரிக திவ்விய தேகமுடைய தீர்த்தங்கரருடைய திருத்தமான பாதகமலங்களை, ஜிநன் என்னும் வெற்றி அடைந்த கடவுளை, அவ் வெற்றியைத் தாமும் அடைய வேண்டும் எனும் நோக்கத்தோடு.
வணங்கி வழிபடுவோர்கள் தேவராய்ப் பிறந்து தேவருலகாண்டு ஆயுள் முடிவில் வந்து இப் பூமண்டலத்திற்கு மகா மண்டலேசுவரராய்ப் பிறந்து ஆட்சி புரிந்து பெரிய வெற்றியானைப் பிடரியின் முத்தணிந்த வெண்கொற்றக்குடை நிழலையளிக்கத் தலைவராக வாழ்ந்திருப்பவ ராவார்கள். (17)
119. கமலமலர் மீதுறையுங் காட்சிக் கினிமூர்த்தி
யமலமலர்ப் பொற்சரணை யன்பாய்த் தொழுபவர்கள்
இமையவர்க ளுலகத் திந்திரராய்ப் போயுதுதித்து
இமையவர்கள் வந்துதொழ வின்புற் றிருப்பாரே.
சமவசரணத்தே தேவர்களால் இயற்றப்பட்ட பொற்றாமரை மலர் வீற்றிருக்கின்ற நற்காட்சிக் கண்ணளிக்கவல்ல இனிய பரமௌதிக திவ்விய தேகமுடைய தீர்த்தங்கரரின் களங்கமற்ற பொற்பாதங்களைப் பக்தியோடு தொழுபவர்கள் தேவருலகம் தம்மைத் தொழுது வணங்குமாறு இந்திரர்களாய் போய்ப் பிறந்து, இமையவர் தொழுது ஏவல்புரியுமாறு இன்பமுற்று இருப்பவர்களாவார்கள். (18)
120. அரியா சனத்தின்மிசை யமர்ந்த திருமூர்த்தி
பரிவாக வுன்னடியைப் பணிந்து பரவுவர்கள்
திரிலோக முந்தொழவே தேவாதி தேவருமய்
எரிபொன் னுயிர்விளங்கி யினியமுத்தி சேர்பவரே.
சிம்மாசனத்தின் வீற்றிருக்கின்ற திருமூர்த்தியே! உன் திருவடிகளை அன்போடு பணிந்து இறைஞ்சித் துதிப்பவர்கள் மூவுலகமும் தம்மைத் தொழும்படி தேவர்க்கெல்லாம் தேவர்களாய் ஒளிமிக்க பொன்னுயிராய் விளங்கிப் பேரின்பமாகிய முக்தியையும் அடைபவர்களாவார்கள்.(19)
வில்லாளன் ஒருவனின் தூதுச் செய்தி
121. இணையிலா யிறைவனை யேத்தியிவ் வகையினாற்
துணையினிய தோழன்மார் சூழ்ந்துட னிருந்தபின்
கணைசிலை பிடித்தொருவன் கண்டொரோலை முன்வைத்து
இணைகரமுங் கூப்பிநின் றினிதிறைஞ்சிக் கூறுவான்.
இணையற்ற இறைவன் திருவடிகளை இவ்வாறு ஏத்திப் போற்றித் தனக்கு இனிய உறுதுணைவராகிய தோழர்களோடு இருக்கும்போது, வில்லும் கணையும் கையிற் பிடித்த ஒருவன் வந்து, குமாரனைக்கண்டு வணங்கி ஓர் ஓலையை வைத்து இருகரங்களையும் சிறமேற் குவித்து இறைஞ்சிக் கூறலானான். (20)
122. வற்சையெனு நாட்டினுள் வான்புகழுங் கௌசம்பி
செற்றவரி னும்மிகு சூரன்சுப சந்திரன்
வெற்புநிகர் கற்பினாள் வேந்தன்மகா தேவியும்
நற்சுகா வதியெனு நாமமினி தாயினாள்.
வத்சை என்னும் தேயத்து வானவர் புகழும் கௌசாம்பி நகரத்தே பகைவரினும் மிக்க வீரன் சுபசந்திரன் எனும் வேந்தன். சலியாத கற்புடைய அவன் மாதேவியும் பல நலம் பொதுளிய சுகாவதி எனும் பெயரின ளாயினாள். (21)
123. அன்னவர்தம் புத்திரிக ளானவேழு பேர்களாம்
நன்சுயம் பிரபையும் நாகசுப் பிரபையு
இன்பநற் பிரபையும் இலங்குசொர்ண மாலையும்
நங்கைநற் பதுமையு நாகதத்தை யென்பரே.
அவர்களுடைய புத்திரமார்கள் சுயம்பிரபையும், சுப்பிரபையும், சுநந்தையும், விளங்குகின்ற கனக மாலையும், நங்கையும், பதுமையும், நாகதத்தையும் என ஏழு பெயருடையவர்களாவார்கள். இவர்கள் நன்கு வாழ்ந்து வருநாளில்-- (22)
124. வெள்ளியின் மலையில் மேகவா கனன்றுரந்திடக்
கள்ளவிழ் மாசுகண் டனவன் வந்துடன்
கிள்ளையம் மொழியினாரைக் கேட்டுடன் பெறுகிலன்
வெள்ளையங் கொடிநகர வேந்தனை வதைத்தனன்.
வெள்ளியம் பெருமலையின் தென்சேடியில் இரத்தின சஞ்சய புரவரசன் சுகண்டன், அவன்தன் வைரி மேகவாகனால் துரத்தப்பட்டுக் கௌசாம்பி நகர்ப்புறத்தே துல்லங்கிபுரம் என்னும் நகர் அமைத்துக் கொண்டிருந்தான். அவன் அக் கன்னியர்களைக் கேட்டான். சுபசந்திரன் கொடுக்க மறுத்தமையால், அவனைக் கொன்றுவிட்டுப் பெண்களைக் கவர முயன்றான். பெண்களோ, ‘நீ எங்கள் பிதாவைக் கொன்றவனாதலால் உன்னை மணக்க மாட்டோம். உன்னைக் கொல்லும் ஒருவனையே மணப்போம்‘ என, அவர்களை இருட்டறையில் சிறையிட்டான். அவர்களி்ல் நாகதத்தை தப்பி வந்து குருஜாங்கல தேயத்தில் அத்தினாபுரத்து அரசன் தன் பிதாவின் உடன் பிறந்தவனாதலின் அவனுக்கு இதை அறிவித்தாள் என்றான். (23)
125. வேந்தனுக் கிளையனுன்னை வேண்டியோலை யேதர
சேர்ந்தவ னளித்தவோலை வாசகந் தெளிந்தபின்
நாந்தக மயிற்கணை நலம்பெறத் திரித்துடன்
போந்தவனைக் கொன்றனன் பூவலங்கன் மார்பனே.
சுபசந்திரனுக்கு இளைய சகோதரனாகிய அபிசந்திரன் உன்னைத் துணையாக வேண்டி இவ்வோலையைக் கொடுத்தனுப்பினான். ஆதலால், நினக்கு வந்து அறிவித்தேன் என்றான். இவ் வரலாற்றை அறிந்தவுடனே வியாளனைக் குணவதியின் புறத்தேற விடுத்து, வித்தைகளை அழைத்துக் கொண்டு ஆகாய மார்க்கமாகச் சென்று, கௌசாம்பி அடைந்து சுகண்டனுக்குக் கன்னிகைகளை விடுவிக்குமாறு தூதுவிட்டான். அவனும் வெகுண்டு போருக்கெழுந்து ஆகாயத்து நின்றான். நாககுமாரனும் எதிர்த்துப் பெரும்போர் செய்து முடிவில் சந்திரஹாசம் என்னும் வாளால் அவனைக் கொன்று வெற்றிமாலை சூடினான். சுகண்டன் புதல்வன் வச்சிரகர்ணன் சரணாகதியடைந்தான். அவனால் இரத்தின சஞ்சயபுர மேகவாகனனைக் கொல்வித்து அவனரசை வச்சிரகர்ணனுக்கு முடிசூட்டினான். (24)
நாககுமாரனின் வெற்றியும் நங்கையர் பலரை மணத்தலும்
126. அபிசந் திரன்றன்புர மத்தினாக மேகியே
சுபமுகூர்த்த நற்றினஞ் சுபசந்திரன் சுதைகளும்
அபிசந்திரன் றன்மக ளாஞ்சுகண்டன் சுதையுடன்
செபமந்திர வேள்வியாற் செல்வனெய்தி யின்புற்றான்.
பிறகு அபிசந்திரனுடைய தேயத்து அத்தினாபுரம் அடைந்து ஓர் நன்னாளில் அபிசந்திரன் புத்திரி சந்திரப் பிரபையையும் சுப சந்திரன் புத்திரிகள் எழுவரையும், சுகண்டன் புத்திரிகளாகிய அனுஜை உருக்குமணி இவர்களையும் வேள்விவிதிப்படி அடைந்து இன்புற்றிருந்தான். (25)
127. நங்கைமார்க டன்னுட னாகநற் குமரனும்
இங்கிதக் களிப்பினா லிசைந்தினிப் புணர்ந்துடன்
பொங்குநகர்ப் புறத்தினிற் பூவளவன் மேவியே
திங்கள்சேர் செய்குன் றினுஞ் சேர்ந்தினி தாடுநாள்.
இங்ஙனம் மணம் புரிந்த நங்கைமார்களோடு நாககுமாரனும் இங்கிதசேட்டையாடும் காமக்களியாட்டத்தில் மூழ்கியிருக்கும் நாளில் ஓர்நாள் அந்நகர்ப்புறத்துள்ள பூஞ்சோலையிற் புக்கு வனவிளையாட்டுமாக இன்புறுநாளில்-- (26)
அவந்திநாட்டு மேனகியை நாககுமாரன் அடைதல்
128. அவந்தியென்னு நாட்டினு ளானவுஞ்சை நீணகர்
உவந்தமன்ன னாமமு மோங்குஞ்செய சேனனாம்
அவன் தனன் மனைவிய ரானநற் செயசிரீ்யாஞ்
சிவந்தபொன் னிறமகட் சீருடைய மேனகி.
அவந்தி என்னும் நாட்டில் பெரிய உஞ்சை நகரைத் தலைநகராக விரும்பி ஆளும் அரசன் செயசேனன் என்பான், அவனுடைய பட்டத்தரசி செயஸ்திரீ என்பாள். பொன்போலும் பொன்னிறமுடைய மகள் பல்வகைச் சிறப்புக் குரியவள் மேனகி என்பவளாவள். (27)
129. பாடலீ புரத்திருந்த பண்புமா வியாளனு
நாடிவந் திருந்தன னன்குவுஞ்சை நகர்தனில்
சேடிகண்டு மேனகிக்குச் செப்பவந்து கண்டவள்
நாடியவள் போயின ணன்னிதிப் புரிசையே.
பாடலிபுரத்திலிருந்த பண்புமிக்க மாவியாளனும் அவளை விரும்பி நாடி வந்து அவ்வுஞ்சையில் தங்கியிருந்தான். அதை அறிந்த சேடி மேனகிக்கு அறிவிப்ப, அவளும் அவனை வந்து பார்த்துவிட்டு விரும்பாதவளாய்த் தன் கன்னி மாடத்து ஏறிப் போயினாள். (28)
130. அந்நகர்விட் டேகின னானமா வியாளனும்
சென்றுதன் றமையனைச் சேவடி பணிந்தபின்
நன்றுடன் வணங்கின னாகநற் குமரனை
இன்றிலன்றான் யாரென வென்றம்பியவ னென்னலும்.
மாவியாளனும் அந் நகரைவிட்டுப் புறப்பட்டுச் சென்று, தன் தமையன் வியாளனுடைய பாதங்களை வணங்கிப் பின் நாககுமாரன் முன்னின்று வணங்கினான். குமாரனும் இவன் யாவன் எனக் கேட்க வியாளன் என் தம்பி எனக் கூறலும், உடனே மாவியாளன் குமாரனை வணங்கி, ஐய
131. மின்னினிடை நேரிழை மேனகி யெனவொரு
மன்மதனை யிச்சியாள் மாவியாளன் சொல்லலும்
அந்நகரிற் செல்லலு மரிவையர் தரித்திட
மன்னனம்பு வேள்வியான் மன்னிநற் புணர்ந்தனன்.
‘மின்னற் கொடிபோலும் மெல்லிடையாள் உச்சயினி நகரத்து அரசன் ஜயசேனன் மகள் மேனகி என ஓர் கன்னிகை இருக்கின்றாள். கட்டழகி, அவள் மன்மதனையும் விரும்பாதவள்‘ என மகாவியாளன் கூறலும், நன்றென நாககுமாரன் அந் நகரத்திற்குச் செல்லக் கேள்வியுற்று ஜயசேனனும் மட்டற்ற மகிழ்ச்சியோடும் எதிர் கொண்டு அழைத்து, இனிய முகமன் கூறி, வேள்வி விதிப்படி நன் முகூர்த்தத்திலே அரிவையர் ஏந்திய பொற்கல நீரால் தாரை வார்த்துத் திருமணம் செய்து கொடுத்தான். குமரனும் அவளோடு கூடி இன்புறலானான். (30)
மதுரையில் சிரீமதியை இசைப்போட்டியில் வென்று
நாககுமாரன் பெறுதல்
132. மற்றுமொன் றுரைத்தனன் மதுரைமா நகரியில்
உற்றிருந்த சிரீமதி யோர்ந்துநா டகந்தனில்
வெற்றிமுழ வேழ்வியம்ப வீறுடைய வல்லவன்
பற்றுடன வள்பதியாம் பார்மிசைமே லென்றனன்.
இங்ஙனம் இருப்ப, மகாவியாளன் மற்றும் ஓர் செய்தியையும் உரைப்பவனாய், ஐயனே பாண்டிய நாட்டுத் தென்மதுரை எனும் நகரிலே ஆட்சிபுரியும் மேகவாகனன் மனைவி இலக்குமி மகள் சிரீமதி என்பாள். அவள் தன் நடனத்துத் தன்னை மிருதங்க வாத்தியத்தால் யாவனொருவன் கூர்ந்து வாசித்து வெற்றியடைவானோ அவனே தனக்குரிய நாயகனாவான் என வஞ்சினம் செய்துள்ளாள் என அறிவித்தான். (31)
மதுரை வந்த வணிகனிடம் நாககுமாரன் அவன் கண்ட
அதிசயம் இயம்பக் கேட்டல்
133. அங்குசென்றவ் வண்ணலு மவளைவென்று கொண்டனன்
பொங்குமிக் குழலியர்ப் புணர்ந்துட னிருந்தபின்
வங்கமீது வந்தவோர் வணிகனை வினவுவான்
எங்குள வதிசய மியம்புகநீ யென்றனன்.
அதைக் கேட்டதும் மனம் மகிழ்ந்து அந் நகரை அடைந்து சிரீமதியை மிருதங்க வாத்திய இசைப் போட்டியில் வென்று சுயவரத்தால் மாலை சூட்டப் பெற்று, மணந்து இனிதிருக்கும் நாளிலே, அவ்வரசன் அவையில் கப்பல் வாணிகன் ஒருவன் வந்தான். அவனை நோக்கி, ‘வணிகனே, நீ ஏதாவது அற்புத நிகழ்ச்சிகள் கண்டதுண்டோ? கண்டிருந்தால் கூறுவாய்‘ என்றான். (32)
வணிகன் பூதிலகமாபுரத்து அதிசயம் கூறல்
134. பொங்குமாழி யுள்ளொரு பூதிலக மாபுரம்
புங்கவன்ற னாலையம் பொங்குசொன்ன வண்ணமுன்
நங்கைமா ரைஞ்நூற்றுவர் நாடொறு மொலிசெய்வார்
அங்கதற்குக் காரணம் யானறியே னென்றனன்.
அலை பொங்கும் கடல் நடுவே பூமிதிலகமாபுரம் என்னும் பொன்மயமான வண்ணமிக்க புங்கவனுடைய அருகன் ஆலயத்து முன்னே நாடோறும் நண்பகலிலே ஐந்நூறு விஞ்சையக் கன்னியர்கள் வந்து ஓவென ஒருமிக்க அலறிப் பேரொலி செய்கின்றனர். அதற்குக் காரணம் யாது என யான் ஒன்றும் அறிகிற்றிலேன் என்றான். (33)
நாககுமாரன் அந்நகரம் சென்று சினாலயம் பணிந்து இருந்தமை
135. தனதுவித்தை தன்னையே தானினைக்க வந்தபின்
மனத்திசைந்த தோழரோடு வள்ளற்றீ பஞ்சென்றுநற்
கனகமய வாலையங் கண்டுவலங் கொண்டுடன்
சினனடி பணிந்துமுன் சிறந்துமிக் கிருந்தனர்.
அதைக் கேட்ட குமாரன் தன் வித்தியா சக்தியால் தன் வித்தைகளை நினைந்தான். அவைகளும் வந்தன. மற்றும் தனக்கு இச்சையான தோழர்களோடும் அவ் வள்ளலும் அத் தீவையடைந்து, பொன்மயமான அச் சினாலயத்தைக் கண்டு, தொழுது வலங்கொண்டு பணிந்து துதித்தெழுந்துபோய் ஆலயத்தின்முன் எதிர்பார்த்திருந்தான். (34)
ஆலயத்தின் முன்வந்து ஐந்நூறு மங்கையர் அலற,
அதன் காரணம் குமாரன் வினாவுதல்
136. ஒருநிரையாய் மங்கைய ரோசைசெய்யக் கேட்டபின்
திருவலங்கன் மார்பினான் சேரவழைத் தவர்களை
யருகனாலை யத்துமுன் னலறுநீங்கள் யாரெனத்
தரணிசுந் தரியவ ளவற்கிதென்று கூறுவாள்.
உச்சிப் போதில் அம் மங்கையர்கள் ஐந்நூறு பேரும் ஒரே வரிசையாக நின்று ஓவென்று அலறக்கேட்டு, உடனே அழகிய மலர்மாலை அணிந்த குமாரனும் அவர்களை அழைத்து, அருகனாலயத்து முன்னே இவ்வேளையில் வந்து அலறும் நீங்கள் யாவீர் எனக் கேட்க, அவர்களுள் தரணிசுந்தரி சொல்லலுற்றாள். (35)
ஐந்நூற்றுவருள் தரணி சுந்தரி தங்கள்
நிலையெடுத்துரைத்தல்
137. அரியவெள்ளி மாமலை யாடுங்கொடி யேமிடை
பிரிதிவி திலகமெங்கட் பேருடைய நன்னகர்
வரதிரட் சகனேமர் தந்தையை மருகனுக்குக்
கருதியெம்மைக் கேட்டனன் கண்ணவாயு வேகனே.
ஐயனே! அருமை சான்ற வெள்ளி மலைமிசை ஆடுங்கொடிகள் நெருங்கிய பிரிதிவீதிலகம் என்னும் பேருடையது எங்கள் மாநகரம். எங்கள் தந்தை வலதிரட்சகன் என்பான். வாயுவேகன் என்னும் எங்கள் அம்மான்-அழகற்றவன் அவன்-எங்கள் தந்தையிடம் வந்து மருமகனுக்கு எங்களைக் கொடுக்கும்படி கேட்டான். (36)
138. எந்தையுங் கொடாமையா லெரியென வெகுண்டனன்
எந்தையை வதைசெய்து வெங்களையும் பற்றியே
இந்தநல் வனத்திருந்தா னென்றவளுங் கூறலும்
அந்தவாயு வேகனை யண்ணல்வதை செய்தனன்.
எங்கள் தந்தை அதற்கு இசைந்து கொடாமையினால் கோபா வேசத்தால் வெகுண்டுவந்து போர்செய்து தந்தையைக் கொன்று விட்டு, எங்கள் சகோதரர்களை நிலவறையிலிட்டு, வித்தை ஆற்றலால் எங்களையும் பற்றிக்கொண்டு வந்து மணந்துகொள்ளும்படி கேட்டான். எங்கள் பிதாவைக் கொன்ற உன்னைக் கொல்பவன் யாவன், அம் மகா புருஷனையே மணப்போம் என்றோம். என்னைக் கொல்பவனை ஆறு மாதத்திற்குள் கொணர்க என்றான். ஆதலால் இவ் வனத்து இருட்டறையில் அடைத்து வைத்துள்ளான். இவ்வாலய வழிபாட்டிற்கு வரும் ஆடவர்களுள் விஞ்சையர் யாரேனும் எங்களுக்குப் புகலிடம் அளித்துப் போற்றுவார் என இங்ஙனம் அலறிக்கொண்டு வருகிறோம் என்றாள். குமாரனும் அவனுடைய காவலரைக் கடிந்து தன் காவலரை நிறுவி, போருக்கு எழுந்து ஆகாயத்து நின்று போராடி, முடிவாகச் சந்திரஹாசத்தால் வாயுவேகனைக் கொன்று இரட்ச மகா இரட்சகர்கட்கு அரசைக் கொடுத்துவிட்டு அக் கன்னியர்களை மணஞ்செய்து கொண்டான். (37)
வாயுவேகனைக் கொன்ற நாககுமாரன் நங்கையர்
ஐந்நூற்றுவரை மணந்து இன்புறுதல்
139. அஞ்சுநூற்று மங்கையரை யண்ணல்வேள் வியாலெய்தி
நெஞ்சிலன்பு கூரவே நிரந்தரம் புணர்ந்தபின்
அஞ்சுநூற்று வர்படர்க ளாளராகி வந்தனர்
தஞ்சமா யவர்தொழு தகமகிழ்ந்து செல்லுநாள்.
ஐந்நூறு மங்கையரைப் பெருமை மிக்க குமாரன் வேள்வி முறையால் மணந்து, உள்ளன்போடு உவகைக் கடலில் மூழ்கலானான். பின்னும் ஐந்நூறு படர்கள் தாமே வலிய வந்து, ‘ஐயனே! யாங்கள் ஓர் அவதிஞான முனியைத் தொழுது எங்கட்கு இறைவன் யாவன் எனக் கேட்டோம். அவரும் வாய்வேகனைக் கொல்பவன் எவனோ அவனே உங்கட்கு நாயகனாவான் என்று அருளினார்.
அதனால் இங்கிருந்தோம்‘ எனத் தஞ்சமடைய, நன்றென உளமகிழ்ந்து செல்கின்ற காலத்தே-
பிறகு காஞ்சீபுரம் அடைந்து அந்நகர் அரசன் வல்லப நரேந்திரனால் வரவேற்பளிக்கப்பட்டு, கன்னியர் தானம் முதலிய சிறப்புகளை அடைந்தான் என்கிறது வடமொழிக் காவியம். (38)
கலிங்கநாட்டு அரசகுமாரி மதனமஞ்சிகையை
நாககுமாரன் கூடி மகிழ்தல்
140. கலிங்கமென்னு நாட்டினுட் கனகமய விஞ்சிசூழ்ந்
திலங்கு ரத்னபுர மிந்நகர்க்கு மன்னவன்
துலங்குசந்திர குப்தன் றோகைசந் திரம்மதி
பெலங்கொளிவர் நன்மகட் பேர்மதன மஞ்சிகை.
கலிங்கம் என்னும் நாட்டில் பொன்மயமான மதிலாற் சூழப் பட்டு இலங்கும் இரத்தினபுரம். அந் நகருக்கு அரசன் புகழ்மிக்க சந்திரகுப்தன் என்பான், இளமயிற் சாயலாளாகிய அவன் தேவி சந்திரமதி என்பாள். இவர்களுடைய நற்புதல்வி மதனமஞ்சிகை என்னும் பெயருடையா ளாவாள். (39)
141. நாகநற் குமரன் சென்று நன்மந்திர வேள்வியால்
வாகன மினிதினின்று மதன்மஞ் சிகையொடுந்
தாகமிக் குடையனாய்த் தான்லயப் பருகினான்
நாகநற் புணர்ச்சிபோல் நன்குட னிருந்தரோ.
மதனமஞ்சிகையின் கட்டழகைக் கூறக்கேட்ட குமாரன் இனிது ஏறிச் செல்லும் வாகனம் இன்றி நடந்து சென்று அந்நகரை அடைந்தான். அவன் புகழைக் கேட்ட சந்திரகுப்த அரசனும் உள மகிழ்ந்து, மதனமஞ்கிகையை மந்திரங்களைக் கூறி வேள்வி விதியால் கன்னியாதானமாகக் கொடுப்ப மணந்து, அவளோடும் பவணவாசிகளின் காதற்புணர்ச்சி போலக் காதல் வேட்கை மிக்கவனாய் லயப்பட்டுப் புணர்ந்து மகிழ்ந்திருக்கலானான். (40)
கங்காளநாட்டு அரசகுமாரி இலக்கணையை நாககுமாரன்
பெற்றுப் போகந் துய்த்தல்
142. கங்கைநீ ரணிந்திலங்குங் கங்காளநன் னாட்டினுட்
திங்கடவழ் மாடநற் றிலகபுர மன்னவன்
பொங்குமகு டம்முடி பொற்புவிசை யந்தரன்
இங்கித மனைவிபேர் இயல்விசையை யென்பளே.
அதன்பின், கங்கை நதியால் வளம் பெற்றிலங்கும் கங்காள நாட்டிலே மேகமண்டலந் தவழும் மாடங்கள் மலிந்தது திரிபுவன திலகபுரம், அழகுமிக்க மணிமகுடம் தரித்த மன்னன் விஜயந்தரன். அவன் மாதேவி பெண்தன்மை மிக்க விஜயை என்பார்கள். (41)
143. இலக்கணை யெனுமக ளிலக்கண முடையவள்
மிக்கவண்ண லுஞ்சென்று மெய்ம்மைவேள் விதன்மையால்
அக்கணத் தவனெய்தி யவடன்போகந் துய்த்தபின்
தொக்ககாவு தன்னுளே தொன்முனிவர் வந்தரோ.
அவர்கட்குப் புத்திரி எல்லா இலக்கணமும் நிறைந்தவளாதலால் இலக்கணை என்பாள். பெருமை மிக்க குமாரன் அந் நகர் அடைந்து மெய்ம்மையான வேள்வி முறையால் மணஞ்செய்து கொடுப்ப, அவளுடன் இன்பம் துய்த்து வருநாளில், அந் நகர்ப் புறத்தே யுள்ள உய்யானத்தே பிஹிதாஸ்ரவர் எனும் முனிவர் வந்து தங்கினார். (42)
நாககுமாரன் அங்கு வந்த முனிவரைப் பணிந்து
தன் மனக் கருத்திற்கு விளக்கம் கேட்டல்
144. ஊற்றினைச் செறித்திடு முறுதவனுடைச் சாரணை
நாற்றமிக் குமரனு நன்புறப் பணிந்தபின்
யேற்றவறங் கேட்டுட னிருந்தலக் கணையின்
ஏற்றமோக மென்னென னியன்முனி யுரைப்பரே.
ஆத்மப் பிரதேசத்துச் சுரக்கும் வினையூற்றைத் தடுக்கும் அருந்தவமுனிவரை புகழ்மிக்க நாககுமாரன் சென்று முறைப்படி இறைஞ்சி ஏத்தி நல்லறங்கேட்டு மகிழ்ந்து இருந்தபின், அம் முனிவரனை வணங்கி, ‘சுவாமி! எனக்கு மனைவிமார்கள் பலர் இருக்கின்றனர். எனினும், இலக்கணையின்மீது அதிக அன்பு தோன்றற்குக் காரணம் யாது எனக் கேட்க அம் முனிபுங்கவரும் அவதியால் ஓர்ந்து கூறுகிறார்.-- (43)
(நான்காம் சருக்கம் முற்றும்)
ஐந்தாம் சருக்கம்
நாககுமாரனின் முந்திய பிறப்பு வரலாறு
145. நாவலந் தீவு தன்னுள் நன்கயி ராவ தத்தின்
மேவுமின் முகில்சூழ் மாட வீதசோ கப்பு ரத்துக்
காவிநன் விழிமா தற்குக் காமன்விக் கிரம ராசன்
தாவில் சீர் வணிகன் நாமந் தனதத்த னென்ப தாமே.
இந் நாவலந்தீவில் ஐராவதச் சேத்திரத்து ஆரிய கண்டத்திலே மின் தவழும் மேகக் குழாஞ் சூழ்ந்த மாடங்களையுடைய வீதசோக புரத்து அரசன் விக்கிரமன். நீலோற்பலம்போலும் விழிகளையுடையாள் அக் காமன் தேவி. அந் நகரிலே புகழ்மிக்க வணிகன் தனதத்தன் என்பானாகும். (1)
146. மனைவிதன் றனதத் தைக்கு மகனாக தத்த னாகும்
வனைமலர் மாலை வேலான் மற்றொரு வணிகன் றேவிப்
புனைமலர்க் கோதை நல்லாட் பொற்புடை வசும திக்கு
மனையினன் மகடன் னாம மியன்நாக வசுவென் பாளம்.
அவன் மனைவி தனதத்தை. இவர்கட்கு மகன் நாகதத்தன். அந் நகரத்து மற்றொரு வணிகன் வசுதத்தன். அழகிய வெற்றிமாலை சூடிய வேற்படையாளன். நன்மணமாலை அணிந்த அழகுடைய நல்லாள் வசுமதி அவன் தேவி. இவர்கட்குப் புத்திரி நாகவசு எனப்படுவாள். (2)
147. நண்புறு நாக தத்த னாகநல் வசுவென் பாளை
யன்புறு வேள்வி தன்னா லவளுடன் புணர்ந்து சென்றான்
பண்புறு நற்ற வத்தின் பரமுனி தத்த நாமர்
இன்புறும் புறத்தின் வந்தா ரிறைவனா லையத்தி னுள்ளே.
நண்புமிக்க நாகதத்தன் நற்குணம் மிக்க நாகவசு என்பவளை அன்புமிக்க வேள்வி விதியால் மணஞ்செய்து அவளுடன் இனிது கூடியிருக்கும் நாளில், நற்றவப்பண்பு மிகுந்த பரமமாமுனிவர் முனி குப்த ஆசாரியர் என்பார் அந் நகர்ப்புறத்து உய்யான வனத்துள்ள தோர் ஜிநாலயத்தில் வந்து தங்கினார். (3)
148. நாகதத் தன்சென் றந்த நன்முனி சரண டைந்து
வாகுநற் றருமங் கேட்டு அனசன நோன்பு கொண்டான்
போகபுண் ணியங்க ளாக்கும் பூரண பஞ்ச மீயில்
ஏகனற் றினத்தி னன்று யிடர்பசி யாயிற் றன்றே.
நாகதத்தன் உடனே சென்று, அம் முனிபுங்கவரை வணங்கி, வாழ்க்கையில் வெற்றிதரும் நல்லறங் கேட்டு, பஞ்சமி உண்ணா நோன்பு விரதம் மேற்கொண்டான். போகங்களையும் புண்ணியங்களையும் உண்டாக்க வல்ல பூரணமானதோர் சுக்கிலபட்ச பஞ்சமி திதி விரத நாளன்று நள்ளிரவில் பசிப் பிணித்துன்பம் மேலிட்டது. (4)
149. தருமநற் றியானந் தன்னாற் றன்னுடை மேனி விட்டு
மருவினா னசோத மத்தின் வானவ னாகித் தோன்றி
வருகயல் விழியாள் நாக வசுவும்வந் தமர னுக்கு
மருவிய தேவி யாகி மயலுறு கின்ற வன்றே.
பெற்றோர் வேண்டவும் விரதத்தை விடாமல் வடக்கிருந்து நோற்றுத் தருமத்தியானமுடையவனாய் தன்னுடலை விட்டுச் சௌதருமகல்பத்து, சூரியப்பிரப விமானத்துத் தேவனாகித் தோன்றினான். கயல்மீன் போன்ற கண்ணாளாகிய நாகவசுவும் அவ்வாறே நோற்று அத் தேவனுக்கு மனைவியாய்ச் சேர, மகிழ்ந்து இன்பம் நுகரலானார்கள். (5)
150. அங்கைந் துபல்ல மாயு வமரனாய்ச் சுகித்து விட்டு
இங்குவந் தரச னானா யினியந்தத் தேவி வந்து
தங்குநின் மனைவி யானாள் தவமுனி யுரைப்பப் பின்னும்
எங்களுக் கந்த நோன்பு யினிதுவைத் தருள வென்றான்.
அத்தேவகதி ஆயுள் ஐந்து பல்லமும் தேகசுகம் அனுபவித்து இங்கு வந்து அரசன் ஆனாய் நீ. உன்னுடைய தேவியே வந்து இலக்குமிமதி(இலக்கனை)யானாள். அதனால் அவள் உனக்கு அன்புண்டாயிற்று என்று அருளினார். அவ்வாறாயின் வாழ்க்கை வெற்றி தரும் அப்பஞ்சமி நோன்பை எங்கட்கும் கொடுத்தருள்வீராக என இறைஞ்சிக் கேட்டான். (6)
நாககுமாரன் வேண்ட முனிவர் நாகபஞ்சமி நோன்பினை விளக்குதல்
151. திங்கட் கார்த்திகையி லாதற் சேர்ந்தபங் குனியி லாதற்
பொங்கன லாடி யாதற் பூரண பக்கந் தன்னில்
அங்குறு பஞ்சமியி னனசன நோன்பு கொண்டு
தங்குமாண் டைந்து நோற்றான் றானைந்து திங்க ளன்றே.
கார்த்திகை மாதத்திலாதல், பங்குனி மாதத்திலாதல், வெப்பமிக்க ஆடியிலாதல் சுக்கில பக்கத்திலே நால் நாள் ஒருபோது உண்டு ஐந்தாநாள் உபவாச விரதத்தை மேற்கொண்டு ஐந்தாண்டளவும் மாதாமாதம் வரும் பஞ்சமி திதியில் நோற்றல் வேண்டும். (7)
152. இந்தநற் கிரமந் தன்னி லினிமையி னோன்பு நோற்று
அந்தமி லருகர் பூசை யருண்முனி தானஞ் செய்தால்
இந்திர பதமும் பெற்று இங்குவந் தரச ராகிப்
பந்ததீ வீனையை வென்று பஞ்சம கதியு மாமே.
இப்போது சொல்லிய வரிசைப்படி பஞ்சமி நோன்பை இனிது மேற்கொண்டு நோற்று, எல்லையற்ற குணங்களையுடைய அருகன் பூசனையும் அருளறம் பூண்ட முனிகட்குத் தானங்களும் செய்து, அப்பலனால் இந்திர பதவியும் பெற்று, மீண்டும் இங்கு வந்து பேரசர்களாகப் பிறந்து, அருந்தவம் நோற்று, வினைக்கட்கு அறுத்து வீடு பேறும் அடையலாகும். (8)
முனிவர் உரைப்படி நாககுமாரன் பஞ்சமி நோன்புகொள்ள அவன் தந்தை ஏவலால் அமைச்சன் நயந்தரன் வந்து அழைத்தல்
153. என்றவ ருரைப்பக் கேட்டு யிறைஞ்சிக் கைக்கொண்டு நோன்பை
சென்றுதன் பவனம் புக்கான் சேயிழை யோடு மன்னன்
நன்றுடன் செல்லு நாளு ணயந்தரன் வந்தி றைஞ்சி
உன்னுடைத் தந்தை யுன்னை யுடன் கொண்டு வருக வென்றான்.
என்று முனிகுப்த ஆசாரிய முனிவர் கூறியருளக் கேட்ட நாககுமாரன் வணங்கி நன்றெனப் பஞ்சமி நோன்பு விரதங் கைக்கொண்டு, தன் மனைவியோடும் விடைபெற்றுக் கொண்டு மீண்டு தன் அரண்மனை அடைந்து இனிதிருக்கும் நாளில், நயந்தரன் என்னும் அமைச்சன் வந்து குமாரனை வணங்கி, ‘குமாரனே! உன்னுடைய தந்தை உன்னை உடனழைத்துக் கொண்டு வாவென என்னை அனுப்பினார். ஆதலால், நீ வருக!‘ என்றான். (9)
நாககுமாரன் தன் நகருக்கு மனைவி இலக்கணையோடும்
பிறரோடும் திரும்புதல்
154. அமையுநன் கமைச்சன் சொல்லை யருமணி மார்பன் கேட்டு
சமையுநாற் படையுஞ் சூழச் சாலலக் கணையி னோடும்
இமையம்போற் களிற்றினேறி யினியநற் றோழன் மாரும்
இமையவற் கிறைவன் போல வெழில்பெறப் புக்க வன்றே.
இரத்தினாபரணம் பூண்ட குமாரனும் அமைச்சன் சொல்லைக் கேட்டதும் நாற் படைகளும் புடைசூழ இலக்கணையோடும் இமயமலை போலும் பெரி ய பட்டத்து யானைமிசை ஏறித் தன் தோழன் மார்களோடு இமையவர்க்கு இறைவனைப் போலப் பொலிவோடு சென்று தாதை மாளிகை அடைந்தான். (10)
மகன் நாககுமாரனைத் தந்தை தழுவி வரவேற்றல்
வேறு
155. தாதையெதிர் கொள்ளவவன் றாழ்ந்தடி பணிந்தான்
ஆதரவி னன்மகனை யன்புற வெடுத்தும்
போதமிகப் புல்லியபின் போந்தனர் மனைக்கே
ஏதமில்சீ ரின்புற வினிதுட னிருந்தார்.
உடனே தந்தையாகிய சயந்தர மன்னன் எதிர்கொண்டு அழைக்கக் குமாரனும் பணிவன்போடு அவர் பாதங்களைப் பணிந்து தொழுதான். தாதையும் அன்போடு தன் மகனை மார்புறத் தழுவி யழைத்துக்கொண்டு போய் அரண்மனை அடைந்து இனிதிருந்தனர். (11)
நாககுமாரன் தான் மணந்த மனைவியரை யெல்லாம் அழைப்பித்து
அவருடன் சேர்ந்திருத்தலும், தந்தை அவனுக்கு
முடிசூட்டித் துறவு பூணுதலும்
156. வெற்றியுடன் வேள்விசெய்த வேல்விழியி னாரை
யுற்றுடனே மாதரை யொருங்கழைக்க வந்தார்
சித்திரநற் பாவையரைச் சேர்ந்துட னிருந்தான்
பற்றறச் செயந்தரனும் பார்மகன் வைத்தான்.
சென்றவிடமெல்லாம் சிறப்பாக வேள்வி முறைப்படி திருமணம் செய்து கொண்ட வேல்விழி மங்கையர்களை யெல்லாம் ஒருசேர வருக என அழைப்புவிட, அவர்களும் வந்து சேர்ந்தார்கள். சித்திரப் பாவையரைப் போன்ற அவ்வழகிய மாதர்களோடு இனிது இன்பந்துய்த்துக் குமாரன் இருக்கலானான். அவன் தந்தை சயந்தரனும் வாழ்க்கை நிலையாமையை நன்கு உற்று நோக்கி, வைராக்கியமுற்று அகப்பற்று புறப்பற்றறத் துறந்து நாட்டாட்சியை மகன் வைக்கலானான். (12)
157. நாககும ரன்றனக்கு நன்மகுடஞ் சூட்டிப்
போகவுப போகம்விட்டுப் புரவலனும் போகி
யாகம னடைக்குமுனி யவரடி பணிந்து
யேகமன மாகியவ னிறைவனுருக் கொண்டான்.
நாககுமாரனுக்கு மணிமகுடஞ் சூட்டி, அரச பாரம் ஏற்கச் செய்து போக உபபோகம் துய்த்தலை விட்டுத் துறந்துபோய் யோகப் பயிற்சியால் மனவசன காயச் செயலை அடக்கி நோற்கும் பிஹிதாசிரவ முனிவருடைய பாதங்களை வணங்கித் தொழுது, பல சிற்றரசர்களுடனே துறவு பூண்டு ஒருமனமுடையவனாகி இறைவனுடைய இயற்கையுருவத்தைப் பற்றறத் துறவை மேற்கொண்டான். (13)
பிரிதிதேவியும் துறவுபூண்டு நற்பேறு பெறுதல்
158. இருவினை கெடுத்தவனு மின்பவுல கடைந்தான்
பிரிதிவிநற் றேவியுந்தன் பெருமகனை விட்டு
சிரிமதி யெனுந்துறவி சீரடி பணிந்து
அரியதவந் தரித்தவளு மச்சுத மடைந்தாள்.
சயந்தர மன்னனும் அருந்தவத்தால் காதியகாதிகளாகிய இரு வினைகளையும் கெடுத்து இன்ப உலகமாகிய தேவருலத்தை அடைந்தான். அவன் மனைவி பிரிதிவிதேவியும் தன் பெருமை சான்ற குமாரனை விட்டுப் பிரிந்து போய், சிரீமதி என்னும் ஆரியாங்கனையை வணங்கித் துறவு மேற்கொண்டு அருந்தவம் புரிந்து அச்சுத கற்பத்தை அடைந்தாள். (14)
நாககுமாரன் வியாளன் முதலிய தோழர்களுக்குத் தேயங்கள்
அளித்தலும், தன் மனைவியருள் இலக்கணையைப் பட்டத்தரசி யாக்குதலும்
159. வேந்தனர்த்த ராச்சியம் வியாளனுக் களித்தான்
ஆய்ந்தபல தோழர்களுக் கவனிக ளளித்துக்
சேர்ந்ததன் மனைவியருள் செயலக் கணைதன்னை
வாய்ந்தமகா தேவிபட்டம் வன்மைபெற வைத்தான்.
நாககுமாரனும் பாதி இராச்சியத்தை வியாளனுக்குக் கொடுத்தான். ஏனைய பல தோழர்களுக்கு அவரவர் தகுதிக்கு ஏற்பப் பல தேயங்களை உரிமையாக்கினான். தான் மணந்த மங்கையருள் இலக்கணைக்கு மாதேவிப் பட்டங் கொடுத்துத் தலைமையாக்கினான். (15)
இலக்கணையார் வயிற்றில் புதல்வன் பிறத்தல்
160. இலக்கணையார் தன்வயிற்றி னற்சுதன் பிறந்தான்
மிக்கவன்ற னாமமு மிகுதேவ குமாரன்
தொக்ககலை சிலையியிற் பயின்றுமிகு தொல்தேர்
ஒக்கமிக் களிறுடனே வூர்ந்துதினஞ் சென்றான்.
இலக்கணையார் வயிற்றில் ஓர் நல்ல ஆண்மகன் பிறந்து நலமுற்றிருந்தான். அழகுமிக்க அவனுடைய திருநாமம் தேவகுமாரன் என்பதாகும். அவன் அரசர்க்குரிய கலை, சிலை, வேல் முதலியவற்றைக் கற்றுப் பயின்றும் யானை, குதிரை, தேர் ஏறி ஊர்ந்தும் களிப்புற்றுத் தினமும் செல்லும் நாளில்- (16)
நாககுமாரன் மன்னர் புடைசூழ அரியாசனத்து வீற்றிருத்தல்
161. புரிசையெழ நிலத்தின்மிசை பொற்புற விளங்கும்
அரியவரி யாசனத்தி லண்ணல் மிகஏறி
எரிபொன்முடி மன்னர்களெண் ணாயிரவர் சூழ
இருகவரி வீசவினி யெழில்பெற விருந்தான்.
பெருமை சிறந்த நாககுமாரன் மகாமண்டலேசுவரனாய் எழுமதில் சூழ்ந்த நிலத்திலே அழகாக விளங்கும் செயற்கரிய சிம்மாசனத்தின் ஏறி ஒளிவிட்டுப் பிரகாசிக்கின்ற பொன்முடி மன்னர் எண்ணாயிரம்பேர் தன்னைப் புடைசூழ இருமருங்கும் கவரிவீச, இனிது அழகுபெற 108 ஆண்டுகள் செங்கோலோச்சியிருந்தான். (17)
மகன் தேவகுமாரனுக்கு முடி சூட்டி நாககுமாரன் துறவு
பூணவே அவன் தேவி இலக்கணையும் துறவு மேற்கொள்ளல்
162. அரசனினி தியல்பினி னமர்ந்திருக்கு மளவிற்
பரவுமுகின் மாய்ந்திடப் பார்த்திபன் விரத்தி
விரவிமிகு குமரன்மிசை வீறுமுடி சூட்டி
அரியதவந் தாங்கவவ னன்புட னெழுந்தான்.
அரசர்க்கரசனாகிய நாககுமாரன் மகாமண்டலேசுவரனுக்குரிய இலக்கணம் பொருந்த வீற்றிருக்கின்ற காலத்தே ஆகாயத்தே பரவிய முகிற்கணங்கள் விரைவில் தோன்றி மாய்தலைக் கண்டு, வைராக்கிய பாவனையுற்று, இலக்கணை புத்திரனாகிய தேவ குமாரனுக்கு முடிசூட்டி, வீறு பெற ஆட்சிபுரியச் செய்து, செயற்கரிய தவம் புரிய உடன்பட்டு எழுந்தான். (18)
163. அமலமதி கேவலியின் அடியிணை வணங்கி
விமலனுருக் கொண்டனனல் வேந்தர்பலர் கூட
கமலமல ராணிகர்நற் காட்சியிலக் கணையும்
துமிலமனைப் பதுமையெனுந் துறவரடி பணிந்தாள்.
வியாளன் முதலிய கோடி படருடனும் தன் ஆயிரம் படருடனும் நாககுமாரன் சென்று அமலமதி என்னும் கேவலஞானியை வணங்கித் துறவுபூண்டு இயற்கையுருவாகிய நிருவாண உருக்கொண்டு நோற்கலானான். செந்தாமரையாளை ஒத்த நற்காட்சியுடைய இலக்கணை மாதேவி முதலாயினோரும் பதுமஸ்ரீ என்னும் ஆரியாங்கனையை வணங்கித் துறவு மேற்கொண்டார்கள். (19)
நாககுமாரனும் அவன் தோழர் முதலியோரும் சித்தியும் முத்தியும் பெறுதல்
வேறு
164. நறுங்குழ லிலக்க ணையு நங்கை மார்தங் கூட
உறுதவந் தரித்துக் கொண்டு வுவந்தவர் செல்லு நாளுள்
மறுவில்சீர் முனிவ னாய னாக குமாரன் றானும்
இறுகுவெவ் வினைகள் வென்று யினிச்சித்தி சேர்ந்த தன்றே.
நறுமணமிக்க குழலினாளாகிய இலக்கணையும் ஏனைய மாதர்களுடன் மிக்க கடுந்தவத்தை உவந்து மேற்கொண்டு செல்லுகின்ற நாளில் குற்றமற்ற சிறப்புடைய நாககுமார முனிவனும் தன்னைப் பற்றிய கொடிய காதிவினைகளை வென்று சித்திபதஞ் சேர்ந்தான். (20)
165. வியாளமா வியாளர் தாமும் விழுத்தவத் தனயை யென்னு
நயாவுயிர் தியானந் தன்னா னாலிரு வினைகள் வென்று
செயத்துதி தேவர் கூறிச் சிறந்தபூ சனையுஞ் செய்ய
மயாவிறப் பிறப்பு மின்றி மருவினார் முத்தி யன்றே.
வியாளன் மாவியாளன் இருவரும் சிறந்த தவத்திற்குரிய தன்மை எனப்படும் உயிரியல்பாகிய தருமத்தியான சுக்கிலத் தியானங்களால் எண்வினைகளை வேரற வெற்றி பெற்றுத் தேவர்கள் ஜெய கோஷஞ்செய்து துதிபாடி, சிறப்பாகிய கேவல பூசனைபுரிய மயக்கம் நீங்கிப் பிறப்பு இல்லாத முத்தி நகரைச் சேர்ந்தனர். (21)
166. அருந்தவ யோகந் தன்னா லச்சேத் தியபேத் தியர்தம்
இருவினை தம்மை வென்று வின்புறுஞ் சித்தி சேர்ந்தார்
மருவுநற் றவத்தி னாலே மற்றுமுள் ளோர்க ளெல்லாம்
திருநிறைச் சோத மாதி சேர்ந்தின்பந் துய்த்தா ரன்றே.
அச்சேத்திய அபேத்தியர்கள் அரிய தவயோகத்தால் காதியகாதி யாகிய இருவினைகளை வென்று, பேரின்பமுடைய சித்தியைச் சேர்ந்தார்கள். ஏனையோர்கள் தாம்தாம் மேற்கொண்ட தவத்தாற்றற் கேற்பசெல்வ மிக்க சௌதர்ம கற்பம் முதலாகச் சேர்ந்து தேவசுகம் அனுபவித்தனர். (22)
167. நாகநற் குமரற் காயு நான்காண் டைஞ்நூற் றிரட்டி
ஆகுநற் குமார கால மைந்து முப்பத் திரட்டி
போகபூ மியாண்ட பொருவி லெண்ணூ றுவாண்டு
ஆருநற் றவத்தி லாண்டு வறுபத்து நான்க தாமே.
நாககுமாரனுக்கு ஆயுள் ஆயிரத்து நூற்றறுபத்துநான்கு ஆண்டாகும். அவற்றுள் குமாரகாலம் 300 ஆண்டுகளாகும், போக மிக்க இப் பூமி ஆட்சிக் காலம் 800 ஆண்டுகளாகும், நற்றவம்புரிந்த ஆண்டுகள் 64 ஆகும். (23)
168. மறுவறு மனைய வர்க்கு மாதவர் தமக்கு மீந்த
பெறுமிரு நிலங்க ளெங்கும் பெயர்ந்து நற்கே வலியாய்
அறமழை பொழிந்த கால மறுபத்தா றாண்டு சென்றார்
உறுதவர் தேவர் நான்கு முற்றெழு குழாத்தி னோடே.
நாககுமார முனிவர் கேவலஞானம் பெற்று உடன் தவத்தால் மிக்க முனிபுங்கவர்கள், நான்கு வகைத் தேவர் கூட்டங்கள் முதலிய கணங்களோடு குற்றமற்ற இல்லற ஒழுக்கமுடையோர்க்கும் துறவற ஒழுக்கமுடையோர்க்கும் கொடுத்த நற்றானப் பயனால் அடையக் கூடிய போகபூமிகள் எல்லாம் திருவுலாச் சென்று தருமோபபேசம் செய்த காலம் அறுபத்தோராண்டாகும். அதற்பின் அகாதி வினையையும் கெடுத்து, சித்திநகர் அடைந்து பிறவிப் பேற்றை அடைந்து இன்புற்றார். (24)
நூற் பயன்
169. இதன்கதை யெழுதி யோதி யின் புறக் கேட்ப வர்க்கும்
புதல்வர்நற் பொருளும் பெற்றுப் புரந்தரன் போல வாழ்ந்து
கதமுறு கவலை நீங்கிக் காட்சிநல் லறிவு முன்பாய்ப்
பதமிகு மமர யோகம் பாங்குடன் செல்வ ரன்றே.
இந் நாககுமாரன் கதையைப் படிப்போரும் எழுதுவோரும் எல்லாம் புத்திரப்பேறும் பெருவாழ்வுமுடையோராய்த் தேவேந்திரன்போல வாழ்ந்து செற்றமூட்டும் மனக்கவலை நீங்கி நற்காட்சி, நன்ஞான, நல்லொழுக்கமுடையவராய்ப் பதவி முன்னேற்றமுடைய தேவலோக சுகம் பெற்று இன்புறுவர். (25)
உலகிற்கு அறவுரை
170. அறமின்றிப் பின்னை யொன்று முயிர்க்கர ணில்லையென்றும்
மறமின்றி யுயிர்க் கிடர்செய் மற்றொன்று மில்லை யென்றும்
திறமிது வுணர்ந்து தேறித் தீக்கதிப் பிறவிக் கஞ்சி
மறமிதை விட்ட றத்தில் வாழுமின் னுலகத் தீரே.
உலகத்தோர்களே! நீவிர் புலனடக்கும் உபவாச விரதம் நோற்றலாகிய நல்அறவொழுக்கமின்றி நம்முயிர்க்கு இன்பந்தரும் புகலிடம் பிறிதொன்றில்லை என்றும், நம்முயிர்க்குப் பேரிடர் புரிவது பேராசை, தீயொழுக்கம், மறமின்றிப் பிறிதொன்றில்லை என்றும், இத் திறத்தை உய்ந்துணர்ந்து தெளிந்து, கொடிய நாற்கதிப் பிறவிச் சுழலுக்குப் பயந்து, பேராசையால் விளையும் மறத்தை (தீவினையை) விட்டு இல்லற துறவற நெறியைப் பின்பற்றித் திருப்தியோடு வாழுங்கள். (26)
(ஐந்தாம் சருக்கம் முற்றும்)
பின்னையோர் உரை
முதற்சருக் கந்தன்னிற் கவிமுப்பத் தொன்பதாம்
இதனிரண் டாவதன்னில் ஈண்டுமுப் பத்து நான்காம்
பதமுறு மூன்றுதன்னில் பாட்டிருபத் தெட்டாகும்
விதியினா னான்குதன்னில் நாற்பத்து மூன்ற தன்றே.
இன்புறு மைந்து தன்னி லிரட்டித்த பதின்மூன் றாகும்
நன்புறத் கூட்டவெல்லா நான்கை நாற்பதின் மாற
வன்பினற் றொகையின் மேலே வருவித் தீரைந் தாகும்
இன்புறக் கதையைக் கேட்பா ரியல்புடன் வாழ்வ ரன்றே.
இப் பாடல்கள் இரண்டும் ஆசிரியர் வாக்காகத் தோன்ற வில்லை. பின்வந்தோர் பாடிச் சேர்த்ததாக இருக்கலாம். ஒருகால் காப்புச் செய்யுளை நூலின் முதற்கண் தனிப்பட நிறுத்தினாற்போல, காவிய ஆசிரியரே தம் காவியப் பாடல்களின் எண்ணளவைச் சுட்டிப் பாடிவைத்தார் என்றும் கொள்ள இடமுண்டு.
இவற்றுள் இக் காவியத்தில் உட்பிரிவுகளாகிய ஐந்து சருக்கங்களிலும் தனித்தனி அடங்கிய செய்யுள்களும், நூல் முழுமைக்கும் ஆன செய்யுள் தொகையும் சுட்டப்பட்டுள்ளன.
முதற் சருக்கம் கவி 39, இரண்டாம் சருக்கம் கவி 34
மூன்றாம் சருக்கம் கவி 28; நான்காம் சருக்கம் கவி 43
ஐந்தாம் சருக்கம் கவி 26. ஆகக் கவி 170
இந் நாககுமாரன் கதையை இன்புறக் கேட்போர் நல்லியல்பு களுடன் வாழ்வர் என்று பயனும் கூறி இக் காவியத்தின் பாடல் தொகைப் பாடல் முடிவுறுகிறது.
--------------
This file was last updated on 6 Jan. 2018
Feel free to send the corrections to the webmaster.