சூளாமணி - பாகம் 3
சருக்கம் 10-12, பாடல்கள் 1555-2130
ஆசிரியர் : தோலாமொழித் தேவர்
cULAmaNi - part 3
(carukkam 10-12, verses 1555-2130)
author: tOlAmozittEvar
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Tamil Virtual Academy for providing a soft copy of this work.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2018.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
சூளாமணி - பாகம் 3
சருக்கம் 10-12, பாடல்கள் 1555-2130
ஆசிரியர் - தோலாமொழித் தேவர்
உள்ளடக்கம்
0. பாயிரம் (1- 6)
1. நாட்டுச் சருக்கம் (7- 35)
2. நகரச் சருக்கம் (36- 69)
3. குமாரகாலச் சருக்கம் (70-118)
4. இரதநூபுரச் சருக்கம் (119-238)
5. மந்திரசாலைச் சருக்கம் (239- 430)
6. தூதுவிடு சருக்கம் (431- 572)
7. சீயவதைச் சருக்கம் (573- 826)
8. கல்யாணச் சருக்கம் (827 - 1130)
9. அரசியற் சருக்கம் (1131- 1554)
10. சுயம்வரச் சருக்கம் (1555 - 1839)
11. துறவுச் சருக்கம் (1840- 2068)
12. முத்திச் சருக்கம் (2069 - 2130)
------------
10. சுயம்வரச் சருக்கம் (1555- 1839)
கவிக்கூற்று
தேவரு மனிதர் தாமுஞ்
செறிகழல் விஞ்சை யாரு
மேவருந் தகைய செல்வம்
விருந்துபட் டனக டோற்ற
மாவர சழித்த செங்கண்
மணிவண்ணன் மகிழ்ந்த காலைத்
தாவருஞ் செல்வ மொன்று
தலைவந்த துரைக்க லுற்றேன். 1555
திவிட்டன் மகளிர் வலைப்படுதல்
பானிலா நிறைவெண் டிங்கள்
பனிக்கதிர் பரப்பி யாங்கு
மேனிலா விரியும் வெள்ளி
வெண்குடை விசும்பு காப்பக்
கோனுலா வுலக மோம்ப
நிறீஇயபின் குவளை வண்ணன்
மானுலா மடக்க ணோக்கின்
மகளிர்தம் வலையிற் பட்டான். 1556
திவிட்டன் உயர்ந்து விளங்குதல்
திருமணி நிழற்றுஞ் செம்பொ
னெடுமுடி முகட்டோர் தெய்வக்
குருமணி யுமிழுஞ் சோதி
குலவிய வொளிகொள் வட்டம்
புரிமணி யோத வேலிப்
புதையிரு ளிரியல் செய்யக்
கருமணி வண்ணன் றானே
கதிரவன் றொழிலும் பூண்டான். 1557
தேங்கமழ் தெய்வச் செம்பொற்
றாமரை சுரிவெண் சங்கம்
ஈங்கிவை நெதிக ளாக
வேழர தனங்க ளெய்தி
ஆங்கமர் செல்வந் தன்னா
லற்றைக்கன் றமர்ந்த மாதோ
ஓங்கின னுருவத் தாலும்
வில்லெண்ப துயர்ந்த தோளான். 1558
தெய்வங்கள் செப்பி னீரெண் ணாயிரந் திசைநின் றோம்ப
மையறு மன்னரீரெண் ணாயிரர் வணங்க வான்மேல்
னொய்தியல் விஞ்சை வேந்தர் நூற்றொரு பதின்மர் தாழக்
கையமை திகிரி யானைக் காமனே கலவிக் கின்றான். 1559
மன்னவர் மகளிரீரெண் ணாயிரர் மயிலொ டொப்பார்
அன்னவ ரமிழ்தச் செப்பே ரணிமுலைக் குவடு பாயப்
பின்னிய தாது மல்கப் பில்கிய தேம்பெய் மாரி
துன்னிய சுரும்பொ டேங்கத் துணருடை கின்ற வன்றே. 1560
பாரிசாதத்துக்கு மணஞ்செய்விக்க எண்ணல்
அன்னண மியலு நாளு ளக்கிரத் தேவி தங்கோன்
பொன்னணி யுலகின் வந்த பூவிரி பாரி சாத
மன்னிய லரும்பு வைப்ப மற்றத னோடு சேர்த்திக்
கன்னிய காம வல்லிக் கடிவினை காண லுற்றாள். 1561
திவிட்டனுக்கு அறிவித்தல்
சுரும்பிவர் சோலை வேலித்
துணர்விரி பாரி சாதம்
அரும்பிய பருவச் செல்வ
மடிகளுக் கறிவி யென்று
பெரும்பிணா வொருத்தி தன்னைப்
பெய்வளை விடுத்த லோடும்
விரும்பினள் சென்று வேந்தற்
கிறைஞ்சிவிண் ணப்பஞ் செய்தாள். 1562
அடிகண்முன் னடித்தி யாரா
லங்கைநீர் குளிர வூட்டி
வடிவுகொ டளிர்கண் முற்றி
மகனென வளர்க்கப் பட்ட
கடிகமழ் பாரி சாத
மதனோடொர் காம வல்லிக்
கொடிமணம் புணர்க்க லுற்ற
குறிப்பறி நீசென் றென்றார். 1563
விண்ணப்பத்துக்குத் திவிட்டன் இசைதல்
என்றவண் மொழிந்த போழ்தி
னிலங்கொளி முறுவ றோற்றி
நன்றது பெரிதி யாமு
நங்கைதன் மகனைக் காண்டும்
என்றவ னருளக் கேட்டே
யிளையவள் பெயர்ந்து போக
மின்றவழ் வேலி னாற்கு
விதூடக னுழைய னானான். 1564
விதூடகன் தோற்றம்
காதுபெய் குழையுஞ் செம்பொற்
சுருளையுங் கலந்து மின்னப்
போதலர் குஞ்சி யாங்கோர்
பூந்துணர் வடத்தின் வீக்கி
ஓதிய மருங்கு றன்மே
லொருகைவைத் தொருகை தன்னால்
மீதியல் வடகம் பற்றி
வெண்ணகை நக்கு நின்றான். 1565
அவன் செயல்
மூடிய புகழி னாற்கு முகிழ்நகை பயந்து காட்டுங்
கோடிய நிலையின் முன்னாற் குஞ்சித்த வடிவ னாகிப்
பாடிய சாதிப் பாடல் பாணியோ டிலயங் கொள்ள
ஆடிய லெடுத்துக் கொண்டாங் கந்தணனாடு கின்றான். 1566
விதூடகன் கூத்தாடல்
வேறு
பாடு பாணியி லயம்பல தோற்றி
ஆடி யாடிய சதித்தொழில் செய்ய
நாடி நாடிநனி நன்றென நக்கான்
நீடு நீடுமுடி யானெடி யானே. 1567
காது கொண்டன கனபொற் குழைசோர
மீது கொண்ட வடகம் புடைசூழ
ஊதி யூதிமு ழுகும்வயி றென்னாப்
பூதி மீதுபு ரளாநரல் கின்றான். 1568
மாத வன்வயி றுபற்றி நரன்றாற்
கேத மென்னையென வேந்தல் வினாவ
ஊதி யூதிவயி றுள்ளள வெல்லா
மோத கங்கண்மு ழுகும்பல வென்றான். 1569
மன்னனும் விதூடகனும் உரையாடல்
என்று தின்றனைபன் மோதக மென்ன
என்று தின்றனவு மல்ல வினிப்போய்ச்
சென்று தேவிகடி காவின் விழாவில்
நின்று தின்னலுறு கின்றன வென்றான். 1570
மாதவன் மொழிய மன்னவ னக்காங்
கேத மென்னைபெரி தெய்தினை யென்றே
வேத நாவின்விறல் வேதியர்க் கல்லால்
ஈத லில்லையினி யென்செய்தி யென்றான். 1571
வேதம் வல்லவரை வென்றிடு கிற்கும்
வாதம் வல்லன தனாற்பெறு கிற்பன்
வாதம் வெல்லும் வகையும்மென் மாண்பு
மாதர் பண்டுமறி யும்மற வேலோய். 1572
வாதம் வெல்லும்வகை யாதது வென்னில்
ஓதி வெல்லலுறு வார்களை யென்கை
கோதில் கொண்டவடி விற்றடி யாலே
மோதி வெல்வனுரை முற்றுற வென்றான். 1573
திவிட்டன் பொழிலினுட் புகுதல்
நன்று வாதமிது காண்டு மெனப்போய்ச்
சென்று சோலைமதில் வாயில தெய்தி
ஒன்று காவலுழை யாரொடு கூடிப்
பொன்றி லாதபுக ழான்பொழில் புக்கான். 1574
விதூடகன் கனி காண்டல்
நீடு செம்பொன்முடி யாற் கெதிர் நிந்தா
வேட மேவிய விதூடக னோடி
ஓடி யாடி வருவா னுயர்காவிற்
கூடி வீழ்வன கொழுங்கனி கண்டான். 1575
அவன் உரை
கண்டு கண்டுதன கண்கனி தம்மேன்
மண்டி மண்டிவர வாயெயி றூறக்
கொண்டு கொண்டுகுவி யாவிவை காணாய்
உண்டு முண்டுமென வோடி யுரைத்தான். 1576
மன்னன் விடை
நல்ல வல்லகனி முன்னைய நாமிவ்
வெல்லை செல்லவுறு மென்னலு மாயின்
வல்லை வல்லைவரு வாயென முன்னால்
ஒல்லை யொல்லையொலி பாடி நடந்தான். 1577
பொழில் வருணனை
சந்து மாவொடு தடாயிட மெல்லாங்
கொந்து தேனொடு குலாயிணர் கூடி
வந்து தாழ்ந்து மதுமாரி தயங்கித்
தந்து தாதுபொழி யும்பொழி றானே. 1578
மாவின் மேல்வளர மாதவி வைத்த
தாவி லாததழை தழைவன நோக்கிக்
காவு காமர்கனி கண்டது கையாறிற்
கூவு மோடியவை கொள்குவ மென்றான். 1579
கனி சிந்தியது கண்டு முனிவடைதல்
கூடி வண்டு குடையுங் குளிர்காவில்
ஓடி மண்டிவரு வானொரு பாலாற்
சேடு கொண்ட கனி சிந்தின கண்டு
மூடு கொண்ட மதியன் முனிவுற்றான். 1580
விதூடகன் வினா
ஏவ லின்றியெரி வெங்கதி ரோணும்
போவ லென்று நினையாப் புனைகோயில்
ஓவ லின்றி யுடையாய் சிறிதேனுங்
காவ லின்றுகடி காவிது வென்றான். 1581
பொன்னி னாய புரிசைத் தளமேலும்
மன்னு வாளர் மறவோர் பலர்காப்பர்
என்னை காவலிஃ தில்வகை யென்றான்
மின்னு வார்ந்து மிளிருஞ் சுடர் வேலோன். 1582
திவிட்டன் கூற்று
அருமுகத் தகனி யாயின வெல்லாம்
ஒருமுகத் தனக ளன்றி யுதிர்த்துத்
தருமுகத் தர்வரு வார்தறு கண்ணார்
கருமுகத் தருளர் காவல்களி லென்றான். 1583
விதூடகன் செயல்
யாவர் யாவரவ ரெங்குள ரென்னக்
காவு மேவுமுசு வின்கலை காட்ட
வாவர் கள்வரத னாலெழு நாம்போய்த்
தேவி காவுநனி சேர்குவ மென்றான். 1584
கள்வர் தாம்பல ரெனக்கடல் வண்ணன்
உள்வி ராவுநகை சேருரை கேட்டே
வெள்கி வேந்தனரு கேயிரு பாலும்
பள்கி நோக்குபு பயிர்த்து நடந்தான். 1585
தமாலிய வீதியைக்கண்டு விதூடகன் மருளல்
தாழ்தளிர் பொளிய தமால வீதிய
ஏழகண் டிருளென வெருள யாவஞ்
சூழிரு ளன்றி "சால காணென
வீழிணர்க் கண்ணியான் வெருவு நீக்கினான். 1586
விதூடகன் மேலும் மருண்டு வினாதல்
வாலிதழ் வீழ்தரு மகிழ்தன் றாண்முதல்
சாலிகை புக்கது தயங்கு தாரினாய்
சோலையு மமர்த்தொழி றொடங்கு மோவென
வேலைநீர் வண்ணனை வெருண்டு நோக்கினான். 1587
அஞ்சலிங் கமர்த்தொழி லில்லை யாவதும்
மஞ்சிவர் மகிழந்தன் வயவு நோய்கெடூஉப்
பஞ்சிவ ரல்குலார் பவழ வாயினால்
அஞ்சுவை நறவமீங் குமிழ ஆனதே. 1588
திவிட்டன் தன் நண்பன் மருட்சியை நீக்கல்
ஆங்கத னாவியா லரவத் தேனெழா
ஈங்கிதன் றாண்முத லிருள மொய்த்தன
ஓங்கிய கேள்வியா யுணர்ந்து கொள்கென
வீங்கிய கழலவன் விளங்கச் சொல்லினான். 1589
பின்னும் விதூடகன் கேட்டலும் மன்னன் விடையிறுத்தலும்
முள்ளரை முருக்கினோ டெழுந்த மல்லிகை
வள்ளிதழ் குருதியின் வடிவி லூழ்த்தன
கள்ளவிழ் கண்ணியாய் விரியு நாளெனத்
தெள்ளிதி னவற்றையுந் தெளியச் செப்பினான். 1590
கடிமிசை விரிதருங் காமர் கொம்பரின்
முடிமிசை யெழுதரு முறிகொ ளீர்ந்தளிர்
அடிமிசை யீன்றதிவ் வசோக மென்கொலோ
கொடிமிசை யெழுதிய குவவுத் தோளினாய். 1591
இலைத்தலை யீர்ந்தளி ரல்ல வீங்கிதன்
மலைத்தகு வயவு நோய் தீர வைத்தன
கலைத்தலை மகளிர்தங் காமர் சீறடி
அலத்தகச் சுவடென வறியக் காட்டினான். 1592
விதூடகன் கூற்று
காவிவாய் விலங்கிய கருங்கண் வெம்முலைத்
தேவியார் சீறடி சென்னி சேர்த்தலும்
மேவியாங் கலர்ந்திடு நின்னை வென்றதால்
ஆவியா ரசோகின தமைதி வண்ணமே. 1593
மன்னன் விதூடகனுடன் விளையாடினான்
மாதவன் மொழிதலு மன்ன னாங்கொரு
போதினாற் புடைத்தனன் புடைத்த லோடுமிங்
கேதிலா ளொருத்திக்கா வென்னைச் செய்தவித்
தீதலொந் தேவிக்குத் தெரியச் செப்புவேன். 1594
திவிட்டன் ஒரு சிலாவட்டத்தின் மீது ஏறினான்
என்றலு மெரிமணிக் கடகக் கையினால்
அன்றவன் கைத்தலம் பிடித்தங் கியாவதும்
இன்றிற லினிச் செய்த லில்லெனச் சொலிச்
சென்றொரு மணிச்சிலா வட்ட மேறினான். 1595
விதூடகன் செயல்
சொரிகதிர் மணிச்சிலா வட்டஞ் சேர்ந்தனன்
அருகுநின் றந்தண னமர்ந்து நோக்கியே
வெருவிய மனத்தினன் விதலை மேனியன்
பெருகிய தலையினன் பெயர்ந்து பின்றினான். 1596
விதூடகன் பூதங் காண்டலும் திவிட்டன் அவன் மயக்கம் தீர்த்தலும்
யாதுகண் டனையென விதனுள் வாழ்வதோர்
பூதமுண் டதுபுடைத் துண்ணு மாதலால்
ஏதமுண் டிங்கினி யிருப்பின் வல்லையே
போதவென் றந்தணன் புலம்பிக் கூறினான். 1597
யாதத னுருவென வலர்பொன் னோலையுஞ்
சோதிசூழ் சுடர்மணிக் குழையுந் துன்னிய
காதொடு கண்பிறழ்ந் துளது கைகுறி
தூதிய வயிற்றதென் றுருவ மோதினான். 1598
மின்னிழற் பூணவன் மெல்ல நக்கது
நின்னிழற் காணது நிற்க நின்னுரை
என்னிழ லென்னொடு மியங்கி னல்லது
கன்னிழ லுள்புகிற் காண்ட லாகுமோ. 1599
நின்னிழ லாவது தெளிய நின்றொழில்
இந்நிழற் காணென விறைஞ்சி நோக்குபு
தன்னிழ றான்செய்வ செய்யத் தான்றெளிந்
தின்னிழ லிருந்தன னிலங்கு நூலினான். 1600
திருந்திய மணிநகைத் தேவி யிவ்வழி
வருந்துணைப் பொழுதுமிம் மணிச்சி லாதலம்
பொருந்தின பொழினலங் காண்டு மென்றரோ
இருந்தன ரிருவரு மினிதி னென்பவே. 1601
சயம்பிரபை சோலைக்கு வருதல்
வேறு
மின்னவிர் விளங்குமணி மேகலை மிழற்றப்
பொன்னவிர் சிலம்பொலி போந்துபுடை சாற்றக்
கன்னியர் நிரந்துபலர் காவலொடு சூழ
வன்னமென வந்தரசி யார்பொழி லடைந்தாள். 1602
அவள் தன்னை மறைத்துக் கொண்டு நிற்றல்
மாலையமர் சிந்தையொடு வார்பொழின் மருங்கின்
வேலையமர் கண்ணிவிளை யாடுதல் விரும்பி
மேலையமர் விஞ்சையின் மறைந்துவிரை நாறுஞ்
சோலையமர் தோகையென வேதொழுது நின்றாள். 1603
திவிட்டன் இருக்கை
மாதவன் மருட்டமழை வண்ணன்மணி வட்டம்
சோதிவிடு சூழ்சுடர் வளாவ வதன்மேலாற்
தாதுபடு போதுதவி சாமென வடுத்த
மீதுபடு பொங்கணையின் மெல்லென விருந்தான். 1604
கவிக்கூற்று
பந்தணையு மெல்விரலி பாடக மொடுக்கி
வந்தணையு மெல்லையுண் மயங்கியொரு மாற்றம்
அந்தணன்வி னாவவமிழ் தூரமொழி கின்றான்
கந்தணைவி லாதகளி யானைபல வல்லான். 1605
விதூடகன் வினா
நிலத்தவள்கொ லன்றிநெடு மால்வரையு ளாள்கொல்
அலத்தக வடிச்சுவ டசோகின்மிசை வைத்தாள்
உலத்தகைய தோளணிகொண் மார்பவுரை யென்ன
வலத்தகைய னாயமணி வண்ணன் மொழிகின்றான். 1606
திவிட்டன் விடை
செய்யன செறிந்தன திரண்டவிரல் சால
வையதசை யார்ந்தவடி யின்னழகி னாலே
மெய்யுமறி வன்வினவில் விஞ்சையன் மடந்தை
வையமுடை யாற்குரிய மாதரவ ளென்றான். 1607
சயம்பிரபையின் செயல்
என்றலு மிரண்டுகரு நீலமலர்க் கண்ணுஞ்
சென்றுகடை சேந்துசிறு வாணுதல் வியர்த்தாள்
அன்றரச னாவியுரு கும்படி யனன்று
மின்றவழு மேனியொடு தேவிவெளிப் பட்டாள். 1608
அரசியைக் கண்ட அந்தணன் செயல்
தாதிவர் கருங்குழலி தன்னைமுக நோக்கி
மாதவ னடுங்கிவளர் பூம்பொழின் மறைந்தான்
காதலனு மங்குரிய கட்டுரை மறந்திட்
டேதமினி யென்கொல்விளை கின்றதனெ நின்றான். 1609
மன்னன் வேண்டுகோள்
மன்னன்மக ளேமகர வார்குழன் மடந்தாய்
அன்னமனை யாயமிழ்தின் மேலுமமிழ் தொப்பாய்
என்னையிவ ணுற்றதனெ வென்னுமிலை யென்னா
முன்னுபுரு வக்கொடி முரிந்துமுனி வுற்றாள். 1610
தேவியின் கூற்று
அரசன் அவளடி தாழ்தல்
ஆங்கவெளா டீங்குவிளை யாடுநனி நீயான்
பூங்கமழு மாடமென தேபுகுவ னென்றாள்
தாங்கல னெழுந்துதகை நீலமணி வண்ணன்
ஒங்குமுடி சீறடியின் மேலொளிர வைத்தான். 1611
அரசி குற்றஞ்சாட்டுதலும் அரசன் இரங்கலும்
மற்றநெடு மான்மகர மாமுடி வணங்கக்
கற்றனை யினிப்பெரிது கைதவமு மென்ன
உற்றதொர் பிழைப்புடைய னாய்விடி னுணர்ந்து
முற்றமுறை செய்தருளு மொய்குழலி யென்றான். 1612
விதூடகனை இழுத்துவரச் செய்தல்
மன்னனொர் பிழைப்புமிலன் மாதவனை நாடி
இன்னினி யிவண்கொணர்மி னென்னவுழை யோர்கள்
முன்னவன் மறைந்தமுரு கார்பொழிலி னுள்ளே
துன்னுபு தொடர்ந்துதுகில் பற்றுபு கொணர்ந்தார். 1613
தேவிசினம்தீர்தல்
பேதைமை கலந்துபிறழ் கண்ணினொ டொடுங்கு
மாதவனை நோக்கிமணி வாய்முறுவ றோற்றிக்
கோதைகளில் யாத்திவனை நீர்கொணர்மி னென்றாள்
போதுவிரி தேங்குழலி பூம்பொழி லணைந்தாள். 1614
மன்னவன் மருட்டமணி யாழ்மழலை மாதர்
முன்னிய முகத்துமுறு வற்கதிர் முகிழ்ப்ப
இன்னவருள் பெற்றன னினிப்பெரிது மென்னா
அன்னமனை யாளையணி மார்பினி லணைத்தான். 1615
விதூடகன் விடுதலை பெறுதல்
போதிவ ரலங்கலொடு பூண்முலை ஞெமுங்கக்
காதலன் முயங்குபு கலந்தினி திருந்து
மாதவனு மேதமில னாதலின் மடந்தாய்
தீதுபடு சீற்றமொழி யென்றுதெளி வித்தான். 1616
அவன் செயல்
இட்டதளை தம்மொடிரு தோளுமிடை வீக்கிக்
கட்டிவிடு பூம்பிணையல் கைவிடலு மெய்யுள்
ஒட்டிவிடு காதலொடு வந்துருவு கொண்டு
பட்டபல பாடலினொ டாடல்பல செய்தான். 1617
கனிகளைக் கண்டு அவன் பாடுதல்
வேறு
ஓடு மேமன மோடுமே
கூடு மோதணி கோதையாய்
காடு சேர்கனி காண்டொறு
மோடு மேமன மோடுமே. 1618
ஊறு மேயெயி றூறுமே
வீறு சேர்விரி கோதையாய்
சேறு சேர்கனி காண்டொறு
மூறு மேயெயி றூறுமே. 1619
வேண்டு மேமனம் வேண்டுமே
பூண்ட பொன்னணி மார்பினாய்
நீண்ட மாங்கனி காண்டொறும்
வேண்டு மேமனம் வேண்டுமே. 1620
பாரிசாத காமவல்லி திருமணத் தொடக்கம்
வேறு
இன்னன பாடி யாட வீர்ங்கனி பலவுங் கூவி
முன்னவ னார வூட்டி முறுவலோ டமர்ந்த பின்னை
மன்னிய பாரி சாத மணமக னாக நாட்டிக்
கன்னியங் காம வல்லி கடிவினை தொடங்க லுற்றார். 1621
திருமணி நிழற்றுஞ் செம்பொற் றிலதமா முடியி னானுங்
குருமணிக் கொம்ப ரன்ன கொழுங்கய னெடுங்கணாளும்
பருமணி பதித்த பைம்பொன் வேதிகைப்பாரி சாதம்
அருமணி யரும்பித் தாழ்ந்த வந்தளிர்ப் பொதும்பர் சார்ந்தார். 1622
தேவியர் யாவரும் அருகே வருதல்
வரிவளை வயிரொ டேங்க வாரணி முரச மார்ப்பக்
கருவளர் கனபொற் சோலைக் கறங்கிசை பரந்தபோழ்தில்
திருவள ரலங்கன் மார்பிற் செங்கணான் றேவி மார்கள்
உருவளர் கொம்ப ரன்னா ளருளறிந் துழைய ரானார். 1623
அவர்களினிடையே நின்ற திவிட்டன் நிலை
செங்கய லுருவ வாட்கட்
டேவிதன் குறிப்பிற் சேர்ந்த
மங்கையர் வனப்பு நோக்கி
மணிவண்ணன் மகிழ்ந்து மற்றப்
பொங்கிய விளமென் கொங்கை
மகளிர்தம் புருவ வில்லால்
அங்கய னெடுங்க ணென்னும்
பகழியா லழுத்தப் பட்டான். 1624
குடங்கையி னகன்று நீண்டு குவளையின் பிணையல் செற்று
மடங்களி மதர்வைச் செங்கண் மான்பிணை மருட்டி மையாற்
புடங்கலந் திருள்பட் டுள்ளாற் செவ்வரி பரந்த வாட்கண்
இடங்கழி மகளிர் சூழ விந்திர னிருந்த தொத்தான். 1625
பாரிசதத்திற்குக் கோலம் செய்யக் கட்டளையிடுதல்
ஆங்கவ ரோடு மற்ற வணிபொழிற் கரச னாய
பாங்கமை பாரி சாதம் பருவஞ்செய் பொலிவு நோக்கி
ஈங்கிவற் கிசைந்த கோல மினிதினி னியற்று கென்றான்
ஓங்கிய வுருவத் தார்மே லொளிநிலா வுமிழும் பூணான். 1626
பாரிசாதத்தை அலங்கரித்தல்
எந்திர மிழிந்த தாரை
யருவிநீ ரினிதி னாட்டிக்
கந்தனெத் திரண்ட திண்டோட்
கனகசா லங்கள் காட்டிப்
பைந்தழைப் பொழிலுக் கெல்லா
மரசெனப் பட்டஞ் சேர்த்தி
அந்தளிர்க் கொம்பர் தோறு
மணிபல வணிந்தா ரன்றே. 1627
காமவல்லிக்கு மணக்கோலம் செய்து அதன் மணமகனோடு சேர்த்தல்
கன்னியங் காம வல்லிக்
கனங்குழை மடந்தை தன்னை
மன்னவன் றேவி மார்கண்
மணவினைக் கோலஞ் செய்து
பின்னத னோடு சேர்த்திப்
பெருகிய களிய ரானார்
இன்னகைப் புதல்வர் செல்வம்
யாவரே யினிதென் னாதார். 1628
திவிட்டன் சயம்பிரபை ஆகிய இருவர் மனத்துள் காமம் செறிதல்
மாதரார் மனத்தி னுள்ளும்
மணிவண்ண னினைப்பி னுள்ளுங்
காதலுஞ் செறிந்த தாகக்
காமனு முழைய னாகப்
போதலர் பருவச் சோலைப்
பொழினல நுகரும் போழ்தில்
ஓதநீர் வண்ண னங்கோ
ருபாயத்தா லொளிக்க லுற்றான். 1629
திவிட்டன் தன்னை மறைத்துக் கொள்ளல்
பொன்னவிர் குழையி னாரைப்
பொழில்விளை யாட லேவி
மன்னவன் மதலை மாட
வளநக ரணுகு வான்போற்
றன்னைமெய் மறைத்தோர் விஞ்சை
தாழிரு ளெழினி யாகப்
பின்னைமா தவனுந் தானும்
பிணையவ ருழைய னானான். 1630
தேவியர் பொழில் விளையாடல்
மன்னவன் மறைந்த தெண்ணி்
மாபெருந் தேவி மற்றப்
பொன்னவிர் கொடியன் னாரைப்
பொழில்விளை யாட லேவக்
கன்னியங் கோலஞ் செய்து
கதிர்மணிக் கலங்க டாங்கி
இன்னகை மழலை தோற்றி
யிளையவ ரினைய ரானார். 1631
அவர்கள் செய்து கொண்ட ஒப்பனைகள்
அம்பொன்செய் கலாப வல்கு
லந்தழை புனைந்த வஞ்சிக்
கொம்பஞ்சு மருங்கு னோவக்
குவிமுலை முறிகொண் டப்பிச்
செம்பொன்செய் சுருளை மின்னச்
செவிமிசைத் தளிர்கள் சேர்த்திக்
கம்பஞ்செய் களிற்றி னான்றன்
கண்களைக் களிப்பித் திட்டார். 1632
விரவம்பூந் தளிரும் போது
மிடைந்தன மிலைச்சு வாரும்
அரவம்பூஞ் சிலம்பு செய்ய
வந்தளிர் முறிகொய் வாரும்
மரவம்பூம் கவரி யேந்தி
மணிவண்டு மருங்கு சேர்த்திக்
குரவம்பூங் பாவை கொண்டு
குழவியோ லுறுத்து வாரும். 1633
மாலை சூடுதல்
பாவையும் விலங்கு சாதிப்
படிமமும் பறப்பை தாமுங்
கோவையு முகத்து மாக்கிக்
குலவிய விதழ தாக
ஓவியர் புனைந்த போலு
மொளிமலர்ப் பிணையன் மாலை
தேவியர் மருளச் செய்து
சிகழிகை சேர்த்து வாரும். 1634
தேவியர் சயம்பிரபையைக் கொண்டாடுதல்
சிகரமா யிலங்கு சென்னித் தென்மலைச் சாந்து மூழ்கிப்
பகருமா மணிவண் டோவாப் பணைமுலைப் பாரந் தாங்கித்
தகரவார் குழல்பின் றாழத் தாழ்குழை திருவில் வீச
மகரயா ழெழுவி மன்னன் வண்புகழ் பாடு வாரும். 1635
அரசனைப்பாடுதல்
அருமலர்த் தழையும் போது
மடியுறை யாக வேந்தித்
திருமலர்ப் பாவை யன்ன
தேவியைச் செவ்வி காண்பார்
உருமல ரிழைத்த பாவை
யொளிமண நயந்து மாதோ
குருமலர்க் கொம்பி னொல்கிக்
குரவையின் மயங்கு வாரும். 1636
வட்டிகைத் தொழில்
வட்டிகைப் பலகை தன்மேன்
மணிவண்ணன் வடிவு தீட்டி
ஒட்டிய வடிவிற் றம்மை
யூடலோ டிருப்பக் கீறித்
திட்டமிட் டுருவ நுண்ணூற்
றுகிலிகை தெளிர்ப்ப வாங்கிப்
பட்டமுங் குழையுந் தோடும்
பையவே கனிவிப் பாரும். 1637
செய்யுளின்பம் ஊட்டல்
மாம்பொழின் மருங்கு சூழ்ந்த
மணிச்சிலா தலத்து மேலாற்
காம்பழி பணைமென் றோண்மேற்
கருங்குழ றுவண்டு வீழப்
பூம்பொழில் விளங்கத் தோன்றும்
பொன்னிதழ் மறிந்து நோக்கித்
தேம்பொழி செய்யு ளின்பஞ்
செவிமுதற் சேர்த்து வாரும். 1638
ஊசலாடல்
கோதையுங் குழைவின் பட்டின்
கொய்சகத் தலையுந் தாழ
மாதர்வண் டொருங்கு பேர
மழையிடை நுடங்கு மின்போற்
போதலர் பொதும்பிற் றாழ்ந்த
பொன்னெழி லூச றன்மேல்
ஓதநீர் வண்ணற் பாடி
நூழிலூ ழியங்கு வாரும். 1639
வாழைக்குருத்தில் உகிரால் உருவம் கிள்ளல்
கள்ளுமிழ்ந் துயிர்க்குஞ் சோலைக்
கனமடற் குமரி வாழை
உள்ளெழு சுருளை வாங்கி
யொளியுகிர் நுதியி னூன்றிப்
புள்ளெழு தடமும் போர்மான்
றொழுதியு மிதுன மாய
ஒள்ளெழி லுருவுங் கிள்ளி்
யுழையவர்க் கருளு வாரும். 1640
பிற விளையாடல்கள்
மயிலுடை யாடல் கண்டு
மகிழ்ந்துமெய்ம் மயங்கி நிற்பார்
குயிலொடு மாறு கொள்வார்
குழைமுகஞ் சுடரக் கோட்டிக்
கயிலொடு குழல்பின் றாழக்
கண்டுநீர் கொண்மி னென்றாங்
கயிலுடைப் பகழி வாட்க
ணங்கையின் மறைத்து நிற்பார். 1641
செழுமலர்த் தாது கொய்து
மெல்விரல் சிவந்த வென்பார்
விழுமலர்த் துகள்வந் தூன்ற
மெல்லடி மெலிந்த வென்பார்
கொழுமலர்ப் பிணைய றாங்கிக்
கொடியிடை யொசிந்த வென்பார்
எழுமலர்த் தனைய தோளான்
றேவிய ரினைய ரானார். 1642
மகளிரும் சோலையும்
கொடிமருங் குறாமே கொடியாய் நுடங்க
வடிநெடுங் கண்ணோக்க மணிவண்டா யோட
அடிமலருங் கைத்தலமு மந்தளிராய்த் தோன்றக்
கடிநறும்பூஞ் சோலையைக் காரிகையார் வென்றார். 1643
மணங்கமழும் பூமேனி வாசங் கமழ
வணங்கி வருஞ்சோலை யலர்நாற்ற மெய்திக்
கணங்குழையீர் யாமுமக்குக் கைமாறி லேமென்
றிணங்கிண ரும்போது மெதிரேந்தித் தாழ்ந்த. 1644
அந்தா ரசோக மசோக மவர்க்கீந்த
செந்தார்த் திலகந் திலகமாய்ச் சேர்ந்தன
வந்தார்க்கு மாவாது மென்பனபோன் மாதழைந்த
கொந்தார்பூஞ் சோலைக் குலகறிவோ கூடின்றே. 1645
தேவியர் ஒரு செய்குன்றம் சேர்தல்
வெள்ளித் திரண்மேற் பசும்பொன் மடற்பொதிந்
தள்ளுறு தேங்கனிய தாம்பொற் றிரளசைந்து
புள்ளுறு பொன்வாழைக் கானம் புடையணிந்த
தெள்ளு மணியருவிச் செய்குன்றஞ் சேர்ந்தார். 1646
கஞ்சுகி மாந்தருங் காவல் முதியாரும்
மஞ்சிவர் சாரல் மணியறையும் வார்பொதும்பும்
துஞ்சு மழைதவழுஞ் சோலைகளுஞ் சோதித்துச்
செஞ்சொ லவர்போய்த் திசைகாவல் கொண்டாரே. 1647
தோகை மடமஞ்ஞை சோலைப் பரப்பின்போன்
மாக மழைவண்ணன் காதன் மடந்தையர்கள்
ஆக மணி சூழ்சார றைவிரும் பொழில்வாய்ப்
போகமணி புரளக் கலைபுலம்பப் புக்கார். 1648
செய்குன்றிற் செயல்
அரையிலங்கு மேகலை யார்ப்பி னயல
வரையிலங்கு மேகலை மாறேநின் றார்க்கும்
புரையிலங்கு பொற்சிலம்பு தான்சிலம்பும் போழ்தில்
நிரையிலங்கு பொற்சிலம்பு நேரே சிலம்பும். 1649
கொங்குண் குழலார் குழலோர் மணிமழலை
தங்கினவை கொண்டு தானுமெதிர் மிழற்றும்
அங்கணவர் செய்வசெய் தசதியா டின்றே
செங்க ணெடியான் கடிகாவிற் செய்குன்றே. 1650
நகரும் சிற்றிலும் இழைத்தல்
மருவி மழைதவழு மையோங்கு சாரல்
அருவி கொழித்த வருமணிகள் வாரித்
தெருவுபடத் திருத்திச் சீலம் புனைவார்
உருவ நகரிழைப்பா ரொண்ணுதலா ரானார். 1651
மரகத வீர்ங்கதிரை வார்புற் றளிரென்
றுரைதரு காரிகையா ரூன்றி மிதித்துத்
திரைதவழச் சீறடிக ணோவ நடந்து
விரைதரு பூம்படைமேன் மெல்ல வசைந்தார். 1652
அருவியாடல்
வெம்பரிய தண்சாரல் வேரூரி யக்கொழுந்து
தம்பருவச் சோலை தழைத்த தகைநோக்கி
எம்பெருமான் போலு மெழில விவையென்று
வம்புருவந் தோன்ற மணியருவி யாடுவார். 1653
சந்திரகாந்தக் கல் துளித்தலும் மகளிர் மழையென மருளலும்
செங்களிதோய்ந் துள்சிவந்த சீறடியார் வாண்முகத்தின்
றங்கொளிபாய்ந் துள்ளெறித்த தண்காந்த மாமணி
திங்க ளொளிகருதித் தெண்ணீர்த் துளிசிதற
மங்குன் மழையயிர்த்து வார்பொழிலின் வாய்மறைவார். 1654
மாணிக்கக் கதிரை அசோகந்தளிரென்று அயிர்த்தல்
வம்பத் திரளுருவின் மாணிக்கச் செங்கதிரை
அம்பொற் சிலம்பி னசோகந் தளிரென்று
தம்பொற் சுடராழி மெல்விரலாற் றைவந்து
கொம்பிற் குழைந்து குறுமுறுவல் கொண்டகல்வார். 1655
மாணிக்கத்தைக் காயா என்று மயங்குதல்
விண்டு சுடர்தயங்கு மேதகுமா மாணிக்கம்
கண்டு கவின்விரிந்த காயாந் துணரிவை
கொண்டு குழற்கணிது மென்று கொளலுறுவார்
வண்டு வழிபடர வாட்கண் புதைத்தியல்வார். 1656
ஆயோ என்று கூவிக் கிளிகளை மகிழ்வித்தல்
வேயோங்கு சாரல் விளைபுனங் காவல்கொண்
டாயோ வெனமொழியு மம்மழலை யின்னிசையால்
போயோங்கு பூஞ்சோலை வாழும் புனக்கிளிக
மாயோன் மடந்தைமார் கூவி மகிழ்விப்பார். 1657
சிலர் மாணிக்கப்பாறை மீதேறுதல்
பூந்தளிர் தாழ்ந்த பொழிறயங்கு பொன்வரைவாய்
ஈர்ந்தளிர் மேனியா ரிவ்வா றினிதியலக்
காந்தளங் குன்றின் கனபொன் மணியறைமேல்
ஏந்திளங் கொங்கை மகளிர் சிலரியைந்தார். 1658
வள்ளி பாடுதல்
பைம்பொ னறைமேற் பவழ முரலாக
வம்ப மணிபெய்து வான்கேழ் மருப்போச்சி
அம்பொன் மலைசிலம்ப வம்மனை வள்ளையுடன்
கம்பஞ்செய் யானைக் கரியவனைப் பாடினார். 1659
வேறு
கோடி சிலையெடுத்தான் கோளரிமா வாய்போழ்ந்தான்
ஆடியல் யானை யயக்கிரீவ னையடித்தான்
வீடின் மணியருவி வெண்மலையுங் கைப்பிடித்தான்
வாடலில் பூங்கண்ணி மாமேக வண்ணனே. 1660
வலம்புரி வாய்வைத்தான் வார்சிலை கைக்கொண்டான்
சலம்புரி சண்டை தலைபனிப் புக்கண்டான்
பொலம்புரி தாமரையாள் பொன்னாகந் தோய்ந்தான்
கலம்புரி வண்டடக்கை கார்மேக வண்ணனே. 1661
செம்பொன்செய் யாழியான் சேதாம்ப னீண்முடியான்
அம்பொ னிதியு மருங்கலமுங் கைப்படுத்தான்
நம்பு மணிமேனி நங்கை நலநுகர்ந்தான்
கம்பஞ்செய் யானைக் கருமேக வண்ணனே. 1662
திவிட்டன் தெய்வமொன்றினை வேழமாகி வரச் செய்தல்
வேறு
மடந்தையர் பாட வாங்கு
மாபெருந் தேவி நிற்ப
அடைந்தவ ரோடு மாடு
மார்வநீர் வெள்ளம் வாங்க
உடைந்தழி மனத்தன் வேந்த
னுழையதோர் தெய்வங் கூவிப்
படந்தவா முகத்தோர் வேழ
மாகெனப் பணித்து விட்டான். 1663
மைவரை யொன்று கோல
மணிதயங் கருவி தாழ
ஐவனங் கலந்த சார
லருகுவந் தணைவ தேபோற்
றெய்வமோர் வேழ மாகிச்
செய்கடாந் திரண்டு வீழ
மைவரு நெடுங்க ணல்லார்
நடுங்கவந் தணைந்த தன்றே. 1664
மடந்தையர் நடுக்கம்
கயில்கலந் திருண்டு தாழ்ந்த
கருங்குழன் மருங்கு சோர
வெயில்கலந் திலங்குஞ் செம்பொன்
மிடைமணிக் குழைவில் வீச
அயில்கலந் திலங்கு வேற்க
ணையரி பிறழ வேட்டி
மயில்கலந் திரிந்த போல
மடந்தையர் நடுங்கி னாரே. 1665
திவிட்டன் சுயம் பிரபையின் அச்சம் தீர்த்தல்
நாண்டனா னிறைந்த நங்கை
நடுங்குபு நுடங்கி நோக்கி
யாண்டையா ரடிக ளென்னு
மாயிடை யஞ்சல் பொன்னே
ஈண்டையே னென்னை பட்ட
தென்றுசென் றணுகி னானால்
வேண்டிய விளைத்துக் கொள்ளும்
விழுத்தவம் விளைத்து வந்தான். 1666
திவிட்டன் தேவியைத் தேற்றல்
மலைமுக மதநல் யானை
மற்றது மறித்து நங்கை
முலைமுக நெருங்கப் புல்லி
முருகுவேய் கோதை சூட்டிக்
கலைமுகந் திருத்திக் காதிற்
கனபொன்செய் சுருளை நீவி
இலைமுகங் கலந்த செம்பொற்
கலங்களை யிலங்க வைத்தான். 1667
கதிரவன் உச்சியை அடைதல்
மங்கையர் தம்மை யெல்லா
மணிவண்ணன் மருட்டி மற்றிக்
கொங்கவிழ் குளிர்கொள் சோலைக்
குன்றினின் றிழிந்த போது
வெங்கதிர் விரிந்த வெய்யோன்
விசும்பிடை வெதும்ப வெம்பிச்
செங்கதிர்க் கூடங் குத்திச்
செந்நடு வாக நின்றான். 1668
அவர்கள் வாவி சார்தல்
அணங்கனார் நுதலின் மேலி்
லரும்பிய வாரத் தெண்ணீர்
மணங்கம ழலங்கன் மார்பன்
மனத்தினை வாங்க மற்றக்
கணங்குழை மடந்தை மாரைக்
கடிபுன லாடல் காண்பான்
மணங்கொள்பூந் துணர்கொள் சோலை
மண்டுநீர் வாவி சார்ந்தான். 1669
வாவிகளின் வருணனை
சாந்துநீர் நிறைந்த வாவி
தயங்குசெங் குவளை வாவி
பூந்துக ளவிழ்ந்த பொற்றா
மரைமலர் புதைந்த வாவி
தேந்துண ரகன்ற தெண்ணீர்த்
திருமணி யுருவ வாவி
வாய்ந்தவை போலக்காட்டி காட்டி
யுழையவர் வணங்கி நின்றார். 1670
மன்னவன் தன் தேவியரோடு வாவியுட்புகுதல்
அன்னவா றமைந்த தெண்ணீ
ரலைபுன லாடும் போழ்தில்
இன்னவா றியற்று கென்றாங்
குழையரை மறைய வேவிப்
பொன்னவாஞ் சுணங்கு போர்த்த
புணர்முலை மகளி ரோடு
மன்னவாம் வயிரத் தோளான்
வலஞ்சுழி வாவி புக்கான். 1671
வாவியின் தன்மை
மலங்குபாய் தயங்கு பொய்கை
மணக்கல்வா யடுத்த செம்பொற்
கலங்கினா றிழிந்து கீழே
கலந்துவந் தெழுந்த தெண்ணீர்
அலங்கலான் மடந்தை மார்த
னரும்புணை யாக வீங்கி
வலங்குலாய்ச் சுழித்து வாய்த்த
வாவி வாய் மடுத்த தன்றே. 1672
நீர் விளையாடல்
அலைபுனல் பெருக லோடு
மலைகடல் வண்ணன் றன்னை
மலைபுனை கொடியிற் புல்லி
மடந்தையர் மயங்கு வாரும்
மிலைபுனை கோதை சோர
விடுபுணை தழுவு வாரும்
கலைபுனை துகிலுந் தோடு
மொழியப்போய்க் கரைகொள் வாரும். 1673
ஆர்புனல் சுழித்து வாங்க
வனையரா யணிபொன் வாவி
நீர்புனை தடத்தி னுள்ளா
னிலைகொண்டு நெடுங்கண் சேப்பத்
தார்புனை மார்பன் றன்மேற்
றரங்கநீர் தயங்கத் தூவி
வார்புனை முலையி னல்லார்
மயங்கமர் தொடங்கி னாரே. 1674
திரளிருஞ் சிவிறி வீக்கிச்
செழுமழைத் தாரை பெய்வார்
மருளிரும் பிணையன் மாலைப்
படைபல வழங்கிச் சூழ்வார்
சுருளிருந் தோடு வாங்கித்
தோண்மிசை துளங்கி வீழ்ப்பார்
இருளிருங் குழலி னார்க
ளிறைவன்மே லினைய ரானார். 1675
மன்னன் தோற்று நிற்றல்
சாந்தெழு சிவிறித் தாரை
சதுர்முக மாக வீக்கிப்
பாய்ந்தன பவழச் செங்கே
ழங்கையான் முகந்த தெண்ணீர்
வேய்ந்தன திவலை யாகி
விழுந்தன வேரி மாலை
நாந்தகக் கிழவன் பொய்யே
நங்கைமார்க் குடைந்து நின்றான். 1676
காரையார் வண்ணன் மாலைக்
காற்படை யுடைந்த போழ்தி்ல்
தரையாய்க் குறளுஞ் சிந்து
மிதந்தன சில்ல சிந்தி
வேரியார் குவளை வேய்ந்த
மெல்லிய லவர்க்குத் தோற்ற
ஒரையாய் முதலை யாகிக்
கூன்மடை யொளித்த வன்றே. 1677
வாலி வற்றி விடுதல்
வென்றனம் வீரன் றன்னை
வீக்குமின் சிவிறித் தாரை
சென்றெனச் சிறந்த காதற்
றேவியர் திளைக்கும் போழ்தில்
ஒன்றிய வுழையர் கீழ்நீ
ரோப்பறித் திடுத லோடு
நின்றகஞ் சுழிந்த தெண்ணீர்
நெரேலென விழிந்த தன்றே. 1678
மகளிர் நாணமுறல்
மாலையுந் துகிலும் வார்
வார்புன லொழுகும் போழ்தின்
ஆலையின் கரும்பி னின்சொ
லணங்கனா ரவிழத் தத்தம்
கோலமென் றுகில்க டாங்கிக்
குழைமுகஞ் சுடரக் கோட்டி
வேலைநீர் வண்ணன் முன்னர்
நாணினான் மெலிவு சென்றார். 1679
அருமணிக் கலாப வல்கு
லவிழ்துகி லசைத்து மீட்டும்
திருமணி வண்ண னோடுந்
தேவியர் திளைத்துத் தெண்ணீர்ப்
புரிமணிப் பொன்செய் வாவிப்
புணைபுறந் தழுவிப் புக்கார்
கருமணி வண்டுந் தேனுங்
கையுறக் கலந்த தன்றே. 1680
வேறு விளையாடல்
வேறு
கொங்கைக டுளும்பநீர் குடைந்துங் கொய்தளிர்
அங்கையி னோன்புணை தழுவி யாடியுஞ்
செங்கயற் கண்மலர் சிவப்ப மூழ்கியு
மங்கையர் புனற்றொழின் மயங்கிற் றென்பவே. 1681
புனல் இருள் பட்டது
அடித்தலத் தலத்தகங் கழுமிக் குங்குமப்
பொடிக்கலந் தந்திவான் படைத்த பூம்புனல்
வடிக்கலந் திலங்குவா ணெடுங்கண் மைக்குழம்
பிடிக்கலந் திருளுமங் கியற்றப் பட்டதே. 1682
புனல் அளறுபடல்
கொங்கைவாய்க் குங்குமக் குழம்புங் கோதைவாய்
மங்கைமார் சிதர்ந்தன வாசச் சுண்ணமும்
செங்கண்மா லகலத்து விரையுந் தேர்த்தரோ
அங்கண்மா லிரும்புன லளறு பட்டதே. 1683
திரைகள் இளைத்துத் தோன்றின
அணங்கனா ரகலல்கு லலைத்து மாங்கவர்
சுணங்குசூ ழிளமுலை துளும்பத் தாக்கியும்
வணங்குபூங் கொடியிடை வளைத்தும் வாவிவாய்
இணங்குநீர்த் திரையவை யிணைப்ப வொத்தவே. 1684
தாமரையின் செயல்
வடந்தவ ழிளமுலை விம்ம மங்கையர்
குடைந்திட வெழுந்தநீர் குளித்த தாமரை
மடந்தையர் குளித்தெழும் போழ்தின் வாண்முகம்
அடைந்ததோர் பொலிவினை யறிவித் திட்டவே. 1685
புனல் கரையேறி மீண்டது
வளைத்தகை யொண்பணைத் தோளி மாரொடு
திளைத்தகங் கழுமிய தரங்கத் தெண்புனல்
இளைத்தவர் மணிக்கரை யேறச் சீறடி
திளைத்துமுன் சிறிதிடஞ் சென்று மீண்டதே. 1686
அரசன் முதலியோர் ஒரு மண்டபமடைதல்
பொழுதுசென் னாழிகை யெல்லை பூங்கழல்
தொழுதுவந் திளையவ ருணர்த்தத் தொண்டைவாய்
எழுதிய கொடியனார் சூழ வீர்ம்பொழில்
பழுதுழை யிலாப்பகற் கோயி லெய்தினான். 1687
தேவியின் செயல்
தேவியர் திருமணி மேனி நீர்துடைத்
தாவியம் புனைதுகி லல்குன் மேலுடீஇக்
காவியங் கண்ணினார் காக துண்டத்தின்
ஆவியா லீர்ங்குழ லாவி யூட்டினார். 1688
தண்ணிறத் தண்கழு நீரி னெய்தலின்
கண்ணிறக் கருங்கடை யிதழும் பெய்திடை
தண்ணறுந் தமனகக் கொழுந்துஞ் சார்த்திய
ஒண்ணிறப் பிணையலன் றுவக்கப் பட்டதே. 1689
பொன்மலைக் காவியற் றிமிர்ந்து பூங்கமழ்
தென்மலைச் சந்தன மெழுதித் தாமரை
நன்மலர்த் தாதுமீ தப்பி நங்கைமார்
மென்முலைத் தடங்களும் விருந்து பட்டவே. 1690
கண்ணகங் குளிர்ப்பக் கல்லாரக் கற்றையும்
தண்ணறுங் குவளைதா மெறித்த தாமமும்
ஒண்ணிறத் தாமரை யொலிய லுந்தழீஇ
எண்ணரும் பெருங்கவி னிளைய ரெய்தினார். 1691
காமரு நிறத்தகல் லாரக் கற்றைகள்
சாமரை யெனத்தம ரசைப்பத் தாமரை
தேமரு குடையிலை கவிப்பத் தேவியர்
பூமரு மடந்தையர் போன்று தோன்றினார். 1692
தேவர்க டிசைமுகங் காப்பத் தீஞ்சுவை
ஆவியா ரமிழ்தயின் றிருந்த வாயிடைப்
பாவையர் கருங்கணாற் பருகு வார்கள்போன்
மாவர சழித்தவன் மருங்கு சுற்றினார். 1693
ஆங்கோர் விஞ்சையன் தோன்றல்
வேறு
வஞ்சியங் கொம்ப னாரு மன்னனு மிருந்த போழ்தின்
விஞ்சைய னொருவன் றோன்றி விசும்பினா றிழிந்து வந்து
மஞ்சிவர் சோலை வாயில் வாயிலோன் வாயி லாக
அஞ்சன வண்ணன் செந்தா மரையடி வணங்கி னானே. 1694
வந்தவனை உபசரித்தல்
வந்தவன் வணங்க லோடு
மாமனை நுவலி யென்னை
கந்தணை யானை வேந்தன்
கழலடி செவ்வி யோவென்
றந்தமி லாழி யாள்வான்
வினவலி னருளு மாறென்
றிந்திர னனைய நீராற்
கிறைஞ்சலு மிருக்க வென்றான். 1695
விஞ்சையன் கொண்டுவந்த நிருபம்
உரிமையோ டிருந்த போழ்தி
னுணர்த்துதற் குரித்தென் றெண்ணித்
திருமுகந் தொழுது காட்டத்
தேவிதன் மருங்கு நின்ற
உரிமைகொ ளுழைய ருள்ளா
ளொருத்திவா சித்து ணர்த்த
அருமுடி யொழிய வெல்லா
வணிகளு மவனுக் கீந்தான். 1696
விஞ்சையின் செய்தி கூறல்
கனிவளர் கிளவி யாருங்
கதிர்மணிக் கலங்கள் வாங்கிப்
பனிமதி விசும்பின் வந்தான்
பால்வரப் பணித்த பின்னை
இனியிது பெயர்த்து நீயே
யுரையென வெடுத்துக் கொண்டு
துனிவள ரிலங்கு வேலான்
கழலடி தொழுது சொன்னான். 1697
சுடர்மலைத் திருண்ட சோலைச்
சுரேந்திர காந்த மென்னும்
வடமலை நகர மாளு
மன்னவன் றேவி பெற்ற
தடமலர்ப் பெரிய வாட்கட்
டையன்மற் றவளை யெங்கோன்
விடமலைத் திலங்கு செவ்வேல்
வெய்யவன் பெயரன் வேட்டான். 1698
அதனைக் கேட்டுத் திவிட்டன் மகிழ்தல் ; சூரியாத்தமனம்
என்றவன் பெயர்த்துஞ் சொல்ல
வின்பநீர் வெள்ள மூழ்கி
மின்றவ ழிலங்கும் வேலான்
விஞ்சைய னவனைப் போக்கிச்
சென்றுதன் கோயில் சேர்ந்தான்
செங்கதிர்த் திகிரி யானு
மன்றழல் சுருங்க முந்நீ
ரலைகட லழுவம் பாய்ந்தான். 1699
மாலை
அழலவன் குளித்த பின்னை
யணங்கிவ ரந்தி யென்னும்
மழலையங் கிளவிச் செவ்வாய்
மடந்தையு மடைந்த போழ்தில்
குழலமர் கிளவி யார்தங்
கூந்தலுட் குளித்து விம்மி
எழிலகி லாவி போர்ப்ப
விருவிசும் பிருண்ட தன்றே. 1700
இரவு
விரவின பரவைப் பன்மிமீன்
மிடைமணிக் கலாப மாக
மருவின பரவை யல்குன்
மயங்கிருட் டுகிலை வாங்கிப்
புரிவணன் மதிய மென்பான்
பொழிகதிர்த் தடக்கை நீட்டி
இரவெனு மடந்தை செல்வ
நுகரிய வெழுந்து போந்தான். 1701
திவிட்டன் இன்பம் நுகர்தல்
ஏரணி விசும்பி னங்கே
ழெழுநிலா விரிந்த போழ்தில்
சீரணி மணிவண் டார்க்குஞ்
சிகழிகைப் பவழ வாயார்
காரணி வண்ண னென்னுங்
கருங்களி வேழந் தன்னை
வாரணி யிளமென் கொங்கை
வாரியுள் வளைத்துக் கொண்டார். 1702
பங்கய முகத்து நல்லார்
பவழவாய்க் கவளங் கொண்டு
பொங்கிய களிய தாகி்
மயங்கிய பொருவில் வேழம்
குங்குமப் பொடிநின் றாடிக்
குவட்டிளங் கொங்கை யென்னும்
தங்கொளி மணிமுத் தேந்துந்
தடத்திடை யிறைஞ்சிற் றன்றே. 1703
வேய்மரு ளுருவத் தோளார்
வெம்முலைத் தடங்க ளென்னும்
பூமரு தடத்துட் டாழ்ந்து
பொற்பொடி புதைய வாடிக்
காமரு காம மென்னுங்
கருங்கயம் படிந்து சென்று
தேமரு குழலஞ் சாயற்
றேவிகைப் பட்ட தன்றே. 1704
காதலா லுரிமை பாங்கிற்
கடிகமழ் காம வல்லித்
தாதலொந் ததர்ந்து சிந்தத்
திளைத்தவத் தடக்கை வேழம்
மாதரா ளமிழ்தின் சாயற்
றோட்டியால் வணக்கப் பட்டுப்
போதுலாம் புணர்மென் கொங்கைக்
குவட்டிடைப் பூண்ட தன்றே. 1705
சுயம்பிரபையின் வாயினுள் மதி புகுதல்
செங்கயற் கண்ணி னாளுஞ்
செல்வனுந் திளைத்துத் தீந்தேன்
பொங்கிய வமளி மேலாற்
புணர்முலை நெருங்கப் புல்லித்
தங்கிய பொழுதிற் றாழ்ந்து
தண்கதிர் மதியந் தானே
மங்கைதன் பவழச் செவ்வாய்
மடுத்தக மடைந்த தன்றே. 1706
தேவி அஞ்சியலறல்
அடைந்தது மதிய மாக
வாயிடை யரசன் றிண்டோள்
மிடைந்ததோ ணெகிழ விம்மி
மெல்லியல் வெருவ லோடு்
மடங்கலை யலைக்கு நீரான்
மருட்டினன் வினவ மாதோ
வடந்தவ ழிளமென் கொங்கை
மெல்லவே மிழற்றி னாளே. 1707
மன்னன் அவளைத் தேற்றல்
வணங்கியிவ் வுலக மெல்லா
மகிழ்ந்துகண் பருகு நீர்மை
அணங்கிவர் சிறுவன் வந்துன்
அணிவயிற் றகத்துப் பட்டான்
கணங்குழை யஞ்ச லென்று
கருமணி வண்ணன் றேற்றப்
பணங்குலாம் பரவை யல்குற்
பாவையும் பரிவு தீர்ந்தாள். 1708
சூரியோதயம்
கங்குல்வாய் மடந்தை கண்ட
கனவுமெய் யாகல் வேண்டி
மங்குல்வா னகட்டுச் சென்று
மதியவன் மறைந்த பின்னை
அங்குலா யிருளை நீக்கு
மாயிரங் கதிரி னானும்
கொங்குலாங் குழலி காணுங்
குழவிய துருவங் கொண்டான். 1709
சுயம்பிரபையின் கருப்பப் பொலிவு
குலம்புரி சிறுவனைத் தரித்துக் கோலமா
நிலம்புரி நிழலொளி நிரந்து தோன்றலால்
வலம்புரி மணிக்கரு விருந்த தன்னதோர்
நலம்புரி திருவின ணங்கை யாயினாள். 1710
மின்னிலங் கவிரொளி மேனி மெல்லவே
தொன்னலம் பெயர்ந்துபொன் சுடர்ந்து தோன்றலான்
மன்னிலங் கருமணி வளர வாளுமிழ்
பொன்னிலம் புரைவதோர் பொலிவு மெய்தினாள். 1711
புதல்வற் பேறு
கோணலம் பொலிந்துவிண் குளிரக் குங்குமத்
தோணலம் பொலிந்ததோர் தோன்ற லோடுதன்
கேணலம் பொலிதரக் கிளருஞ் சோதிய
நாணலம் பொலிதர நம்பி தோன்றினான். 1712
நகரமாந்தர் மகிழ்ச்சி
பொலிகெனு மொலிகளும் பொன்செய் மாமணி
ஒலிகல வொலிகளும் விரவி யூழிநீர்
கலிகெழு கனைகடல் கலங்கி யன்னதோர்
பலிகெழு முரசொலி பரந்தொ லித்ததே. 1713
துளைபடு குழலிசை துடியொ டார்ப்பவும்
வளைபடு கறங்கிசை வயிரொ டேங்கவும்
தளைபடு தகைமலர் மாலை தாதுகக்
கிளைபடு வளநகர் கிலுகி லுத்ததே. 1714
தொத்திளங் கடிமலர் துதைந்த கோதையார்
மொய்த்திளங் குமரரோ டாடு முன்கடை
மத்தளப் பாணியு மதன கீதமும்
கைத்தலத் தாளமுங் கலந்தி சைத்தவே. 1715
சிறைநகர் சீத்தன திலத முக்குடை
இறைநகர் விழவணி யியன்ற நீண்டுநீர்த்
துறைநகர் சுண்ணநெய் நாவி தூங்கின
நிறைநக ரவர்தொழி னினைப்பி கந்தவே. 1716
சினகரத்திற் செய்தவை
சுண்ணநெய் யெழுபக லாடித் தொன்னகர்
நண்ணிய நானநீ ராடி நம்பியைப்
புண்ணியா வாசனை செய்து புங்கவன்
திண்ணிய வடிமலர்ச் சேடஞ் சேர்த்தினார். 1717
சுற்றத்தார் வருதல்
வழுவலி னாஞ்சிலான் வண்பொ னாழியான்
தழுமல ரலங்கலான் றாதை தானெனச்
செழுமல ரணிகுழற் றேவி மாரென
எழுபெருங் கிளைகளு மினிதி னீண்டினார். 1718
அவர்கள் குழவியைத் தழுவி மோந்து மகிழ்தல்
எழுதரு பரிதியங் குழவி யேய்ப்பதோர்
தொழுதகை வடிவொடு நம்பி தோன்றலும்
தழுவினர் முயங்கினர் முயங்கித் தம்முளே
ஒழிவிலா வுவகைநீர்க் கடலுண் மூழ்கினார். 1719
அந்தணர் முதலியோர் வாழ்த்துதல்
அறத்தகை யந்தணர் குழுவு மாடல்வேன்
மறத்தகை மன்னவர் குழுவு மாநகர்த்
திறத்தகு முதியரு மீண்டிச் செல்வனைப்
பொறுத்தவர் பொலிவுரை புடைபொ ழிந்ததே. 1720
திவிட்டன் அந்தணர் முதலியோருக்கு அரதன முதலியவை அளித்தல்
குருமணிக் கோவையுங் குளிர்பொற் குன்றமும்
அருமணிக் கலங்களு மரத்த வாடையும்
புரிமணி வளநகர் புகுந்து கொள்கெனக்
கருமணி யொளியவன் கவரக் காட்டினான். 1721
நாமகரணம்
திருவொடு திசைமுகந் தெளிர்ப்பத் தோன்றினான்
திருவொடு வென்றியிற் சேரு மாதலால்
திருவொடு திகழ்தர விசய னென்றரோ
திருவுடை மார்பனை நாமஞ் சேர்த்தினார். 1722
விமானம் வருகை
விஞ்சைய ருலகிற்கும் விடுத்து மோகையென்
றஞ்சன வண்ணனங் கருளு மாயிடை
மஞ்சுடை விசும்பினின் றிழிந்து வந்தது
செஞ்சுட ருமிழ்வதோர் செம்பொன் மானமே. 1723
மணிநகு விமானமொன் றிழிந்து வந்துநம்
அணிநக ரணுகின தடிக ளென்றலும்
பணிவரை கொணர்மினீர் பாங்கி னென்றனன்
துணிநகு சுடரொளி துளும்பும் வேலினான். 1724
மஞ்சுசூழ் மழைநுழை மானந் தன்னுளோர்
விஞ்சையர் மடந்தையர் விளங்கு மேனியர்
கஞ்சுகி யவரொடு மிழிந்து காவலன்
இஞ்சிசூழ் நகரணி யிருக்கை யெய்தினார். 1725
பொலிகெனப் புரவலன் பொன்செய் நீண்முடி
மலிதரு நறுநெயம் மகளிர் பெய்தலுங்
கலிதரு கனைகட லன்ன காதலோ
டொலிதரு நகையொலி யுவந்தெ ழுந்ததே. 1726
நாவிகா றழுவிமன் னறுநெய் யாடிய
பாவைமார் தங்களைப் பாவை கோயிலுக்
கேவியாங் கிருந்தபி னிறைவற் கின்னணம்
தேவிகோன் றமன்றொழு தொருவன் செப்பினான். 1727
தூதன் கூறிய செய்தி
எங்கள்கோ னெறிகதிர்ப் பெயர னீர்மலர்க்
கொங்குசே ரலங்கலான் குளிரத் தங்கினாள்
மங்குறோய் மணிவரை மன்னன் றன்மகள்
தொங்கல்சூழ் சுரிகுழற் சோதி மாலையே. 1728
மங்குல்வான் மழைகெழு மின்னின் மன்னவன்
தொங்கல்வாய் மடந்தைகண் டுயிலு மாயிடைக்
கங்குல்வாய்க் கதிர்மதி கவானின் மேலிருந்
தங்கண்மால் விசும்பக மலர்வித் திட்டதே. 1729
தெண்கதிர்த் திருமணி கனவிற் சேர்ந்தபின்
கண்கதிர்த் திளமுலை கால்ப ணைத்தன
தண்கதிர்த் தமனியப் பாவை போல்வதோர்
ஒண்கதிர்த் திருமக ளுருவ மெய்தினாள். 1730
வயா
வானிவர் மணிநகை விமான மேறவும்
கானிவர் கற்பகச் சோலை காணவும்
மானிவர் நோக்கினாள் வயாவி னாளது
தேனிவ ரலங்கலாய் தீர்க்கப் பட்டதே. 1731
அமிதசேனன் பிறப்பு
மாணிக்க மரும்பிய வண்பொன் மாநிலத்
தாணிப்பொன் னனையவ ளனைய ளாயபின்
கோணிற்கும் விசும்பிடைக் குழகித் திங்களும்
நாணிப்போ முருவொடு நம்பி தோன்றினான். 1732
தேமரு செங்கழு நீரின் செவ்விதழ்
காமரு பவழவாய் கமழுங் கண்மலர்
தாமரை யகவிதழ் புரையுந் தானுமோர்
பூமரு தமனியக் குழவி போலுமே. 1733
வானிடை மணிவிளக் கெரிந்த வண்டொடு
தேனுடை மலர்மழை சிதர்ந்த தவ்வழி
மீனுடை விரிதிரை வெண்சங் கார்த்தன
தானுடை யொளிதிசை தவழ்ந்தெ ழுந்ததே. 1734
பெயரிடுதல்
அளப்பருந் திறலுடை யரசர் தொல்குடை
அளப்பருந் திறலினோ டலரத் தோன்றினான்
அளப்பருந் திறலின னமித தேசனென்
றளப்பருந் திறற்பெய ரமரக் கூறினார். 1735
ஐயன தழகுகண் பருக வவ்வழி் மையணி
மழைமுகில் வண்ணன் மாமனார்
வையக முடையவற் குணர்த்தி வாவென
நெய்யொடு வந்தன னிலைமை யின்னதே. 1736
தூதனை யுபசரித்தல்
என்றவன் மொழிதலு மிலங்கு நேமியான்
நின்றகஞ் சுடர்தரு நிதியி னீத்தமங்
கன்றவற் கருளின னரச செல்வமோ
டொன்றின னுவந்துதன் னுலக மெய்தினான். 1737
வேறு
விண்டா ரில்லா வெந்திற லோன்பொற் சுடராழித்
தண்டார் மார்பன் றன்மக னன்மா மணியேபோல்
கண்டார் கண்களி கூருஞ் செல்வக் கவினெய்தி்
வண்டா ரைம்பான் மங்கையர் காப்ப வளர்கின்றான். 1738
கண்கவர் சோதிக் காமரு தெய்வம் பலகாப்பத்
தண்கமழ் போதிற் றாமரை யாளுந் தகைவாழ்த்த
விண்கவர் சோதித் தண்கதி ரோன்போல் விரிவெய்தி
மண்கவர் சோதித் தண்கதிர் வண்ணன் வளர்கின்றான். 1739
தவழ்தல்
செம்பொற் கோவைக் கிண்கிணி யேங்கத் திலகஞ்சேர்
அம்பொற் கோவைப் பன்மணி மின்னிட் டரைசூழப்
பைம்பொற் கோவைப் பாடக மென்சீ றடிநல்லார்
தம்பொற் கோவைப் பூண்முலை முன்றிற் றவழ்கின்றான். 1740
போதார் பொய்கைப் போதவிழ் பொற்றா மரைகாட்டி
மாதார் சாயன் மங்கையர் கூவ மகிழ்வெய்திக்
காதார் செம்பொற் றாழ்குழை மின்னின் கதிர்வீசத்
தாதார் பூவின் றண்டவி சேறித் தவழ்கின்றான். 1741
கண்ணின் செல்வங் கண்டவர் கண்டே மனம்விம்ம
மண்ணின் செல்வம் வைகலும் வைகன் மகிழ்வெய்தி
விண்ணின் செல்வச் செங்கதி ரோன்போல் விளையாடித்
தண்ணென் செல்கைப் பொன்னுருள் வாங்கித் தளர்கின்றான். 1742
கல்வி கற்பித்தல்
ஐயாண் டெல்லை யையன ணைந்தா னவனோடு
மையா ரின்பக் காதலி நாவின் மகளாகப்
பொய்யாக் கல்விச் செல்வர்க டம்மாற் புணர்வித்தான்
நெய்யார் செவ்வே னீளொளி நேமிப் படையானே. 1743
மகள் பிறப்பு
காமச் செல்வ னென்றுல கெல்லாங் களிதூங்கும்
ஏமச் செல்வ நம்பியொ டின்னு மிளையாகச்
சேமச் செல்வன் றேவி பயந்தா டிசையெல்லாம்
ஓமச் செல்வங் கொண்டினி தேத்து மொளியாளே. 1744
பெயரிடுதல்
பாரார் செல்கைப் பல்கிளை யெல்லா முடனீண்டிப்
பேரா வென்றிக் கொன்றிய வாறு பெயரிட்டுச்
சீரா ரோகை விஞ்சையர் சேணி செலவிட்டுக்
காரார் வண்ணன் காதலொ டின்பக் கடலாழ்ந்தான். 1745
ஐயன் றானு மவ்வகை யாலே வளர் வெய்த
மையுண் கண்ணி மாபெருந்தேவி மகிழ் தூங்கத்
தெய்வம் பேணிப் பெற்றனர் பேணுந் திருவேபோல்
மெய்யின் சோதி சூழொளி மின்னின் பெயராளும். 1746
தேதா வென்றே தேனொடு வண்டு திசைபாடும்
போதார் சாயற் பூங்கொடி போலப் பொலிவெய்தித்
தாதார் கோதைத் தாயரொ டாயம் புடைசூழ
மாதார் சாயன் மாமயி லன்னாள் வளர்கின்றாள். 1747
வேறு
மழலைக் கனிவாய் மணிவண்டு
வருடி மருங்கு பாராட்ட
அழனக் கலர்ந்த வரவிந்த
வமளி சேர்ந்த விளவன்னம்
கழனிச் செந்நெற் கதிரென்னுங்
கவரி வீசக் கண்படுக்கும்
பழனக் குவளை நீர்நாடன்
பாவை வார்த்தை பகருற்றேன். 1748
செம்பொற் சிலம்புங் கிண்கிணியுஞ்
செல்வச் செஞ்சீ றடிபோற்ற
வம்பத் துகிலின் வடஞ்சூழ்ந்த
வல்குன் மணிமே கலை மருட்ட
அம்பொற் சுருளை யிருபாலு
மளக வல்லி யருகிலங்கப்
பைம்பொற் சுடிகை நிழறுளங்கப்
படர்ந்தா டாயம் படிந்தாளே. 1749
பந்தாடல்
நங்கை நல்லார் பாராட்ட
நகையாட் டாயம் புகலோடு
மங்கை மடவார் பந்தாடன்
மயங்கி யாடன் மணிநிலத்துக்
கொங்கை சேர்ந்த குங்குமத்தின்
குழம்புங் கோதை கொய்தாதும்
அங்க ராகத் துகளும்பாய்ந்
தந்தி வான மடைந்ததுவே. 1750
காவி நாணுங் கண்ணார்தங்
கையி னேந்துங் கந்துகங்கள்
ஆவி தாமு முடையனபோ
லடிக்குந் தோறு மடங்காது
பூவி னார்ந்த மணிநிலத்துப்
பொங்கி யெழுந்து பொன்னேந்தி
நாவி நாறு மிளங்கொங்கைத்
தடங்கள் சென்று நணுகியவே. 1751
கரிய குழலும் பொற்றோடுஞ்
செய்ய வாயுங் கதிர்முறுவல்
மரிய திசையு மதிமயங்கு
மம்பொன் முகத்து மடவார்கள்
திரியத் தம்மைப் புடைத்தாலுஞ்
சென்று சேர்ந்து திளைக்குமால்
அரிய செய்யுங் காமுகர்போ
லளிய வந்தோ வடங்காவே. 1752
செம்பொற் சுருளை மெல்விரலாற்
றிருத்திச் செறிந்த தேரல்குல்
வம்பத் துகிலின் வடஞ்சூழ்ந்து
மணிமே கலையுந் தானேற்றி
அம்பொற் குரும்பை மென்முலைமே
லணிந்த பொன்ஞா ணருகொடுக்கிப்
பைம்பொற் றிலத நுதலொதுக்கிப்
பாவை பந்து கைக்கொண்டாள். 1753
வேறு
கந்தாடு மாலியானைக் கார்வண்ணன் பாவை
கருமேகக் குழன்மடவார் கைசோர்ந்து நிற்பக்
கொந்தாடும் பூங்குழலுங் கோதைகளு மாடக்
கொய்பொலந் துகிலசைத்த கொய்சகந் தாழ்ந்தாட
வந்தாடுந் தேனுமுரல் வரிவண்டு மாடமணி
வடமும் பொன்ஞாணும் வார்முலைமே லாடப்
பந்தாடு மாடேதன் படைநெடுங்க ணாடப்
பணைமென்றோ ணின்றாடப் பந்தாடு கின்றாள். 1754
கந்துகங்கள் கைத்தலத்தா லேறுண்டு பொங்கிக்
கருங்கண்ணுந் தாமுமுறக் கலந்தெழுந்த போழ்தின்
வந்தனவுஞ் சென்றனவும் வானத்தின் மேலு
மணிநிலத்து மீதுநெறி மறிகுவன வாகி
அந்துகிலி னிடைத்தோயு மகலல்கு றீண்டு
மணிமருங்கு சூழுமணியார் வடமுந் தாக்கும்
கொந்தவிழும் பூங்குழ்லுங் கோதைகளு மூழ்குங்
குவளை வாட் கண்ணிவருங் குறிப்பறிய மாட்டாள். 1755
நறுமாலை வந்தலைப்ப நன்மேனி நோமா
னங்காயிப் பந்தாட னன்றன்றா மென்பார்
இறுமாலிம் மின்மருங்கு லென்பாவ மென்பார்
இளமுலைமே லேர்வடம்வந் தூன்றுமா லென்பார்
செறுமாலிங் கிவைகாணிற் றேவிதா னென்பார்
செங்கண்மால் காணுமேற் சீறானோ வென்பார்
பெறுமாறு தாயருந் தோழியரு நின்று
பிணையனா டன்மேற் பன்மொழி மிழற்றுகின்றார். 1756
நீராலிக் கட்டி நிரந்தெழுந்து பொங்கி
நிழறயங்கும் பொன்னறைமே னின்றாடுகின்ற
காராலி மஞ்ஞை களிசிறந்தாற் போலக்
கருங்குழலி பந்தாடல் காதலித்த போழ்தில்
சீராலி மால்வண்ணன் றேவியுந் தானும்
செவ்வரத்த நுண்ணெழினி சேர்ந்தொருங்கு நோக்கி்
வாராலி மென்கொங்கை மையரிக்கண் மாதர்
வருந்தினா ணங்கையினி வருகவீங் கென்றார். 1757
வேறு
அருமணி முடியவ னருளி தென்றலும்
பருமணிப் பந்துகை விட்டுப் பாவைதன்
புரிமணிக் குழல்புறந் தாழப் போந்தரோ
கருமணி யொளியவன் கழல்சென் றெய்தினாள். 1758
மங்கையை வலப்புடைக் குறங்கின் மேலிரீஇ
அங்கையா லணிநுத லரும்பு நீர்துடைத்
தெங்குமி லுவகையோ டினிதி ருந்தபின்
நங்கைத னலங்கிளர் மேனி நோக்கினான். 1759
இளமையா லெழுதரு மிணைமென் கொங்கையின்
வளமையாற் பொலிதரும் வனப்பின் மாட்சியால்
குளமையா னறவிரி குவளைக் கண்ணியான்
உளமயா வுயிர்ப்பதோ ருவகை யெய்தினான். 1760
செல்வியைத் திருக்குழ றிருத்தித் தேவிதன்
அல்குன்மே லினிதினங் கிருவி யாயிடை
மல்குபூ மந்திர சாலை மண்டபம்
பில்குபூந் தெரியலான் பெயர்ந்து போயினான். 1761
அருத்தநூ லவரொடு மாய்ந்து மற்றவர்
கருத்தொடு பொருந்திய கருமச் சூழ்ச்சியான்
திருத்தகு சயம்வர முரசந் திண்களிற்
றெருத்தின்மே லறைகென விறைவ னேயினான். 1762
வாலிய சந்தமென் சேறு மட்டித்துப்
பீலியந் தழையொடு பிணையல் வேய்ந்தன
பாலியல் பலிபெறு முரசம் பன்மையில்
ஆலியங் கதிர்கொள வதிர்ந்த றைந்தவே. 1763
வாழ்கநம் மன்னவன் வாழ்க வையகம்
ஆழ்கநம் மரும்பகை யலர்க நல்லறம்
வீழ்கதண் புனல்பயிர் விளைக மாநிலம்
தாழ்கமற் றருந்துயர் சாற்றக் கேண்மினே. 1764
புள்ளணி வார்பொழிற் பொன்செய் மாநகர்
உள்ளணி பரப்புமி னுயர்மின் றோரணம்
வெள்ளணி விரும்புமின் விருந்து போற்றுமின்
கள்ளணி மலரொடு கலங்கள் பெய்ம்மினே. 1765
இன்றைநா ளுள்ளுறுத் தீரைஞ் ஞாள்களும்
மன்றலஞ் சயமரம் வரைந்த தாதலால்
ஒன்றிவா ழரசரோ டுலக மீண்டுக
வென்றுதா னிடிமுர சறைந்த தென்பவே. 1766
கொடிபடு நெடுநகர்க் கோயில் வீதிவாய்
இடிபடு மழைமுகி லென்ன வின்னணம்
கடிபடு முரசுகண் ணதிர்ந்த காரென
மடிபடு மாடவாய் மயில்கண் மான்றவே. 1767
முர்சொடு வரிவளை மூரித் தானையோ
டரசரு மரசரல் லாரு மாயிடைத்
திரைசெறி கனைகடல் சென்று தேர்த்தனெப்
புரைசெறி புரிசையின் புறணி முற்றினார். 1768
வெண்மலைச் சென்னிமேல் விஞ்சை வேந்தரும்
கண்மலைத் திழிதருங் கடலந் தானையர்
விண்மலைத் திழிதரும் விளங்கு சோதியர்
எண்மலைச் சிலம்பிடை யிறைகொண் டீண்டினார். 1769
அவ்வரை யரைசர்கோ னருக்கன் றன்மகன்
செவ்வரை யனையதோட் செல்வன் றன்னொடும்
மைவரை நெடுங்கணம் மடந்தை தன்னொடும்
இவ்வரை யரைசெதிர் கொள்ள வெய்தினான். 1770
பொன்னகர்ப் புறத்ததோர் புரிசை வார்பொழி்ல்
தன்னகத் தியற்றிய தயங்கு பொன்னகர்
மன்னர்கட் கிறைவன்வந் திருப்ப மண்மிசை
இந்நகர்க் கிறைவனு மெதிர்கொண் டெய்தினான். 1771
கண்சுட ரிலங்குவேற் காள வண்ணனும்
வெண்சுட ரொளியவன் றானும் விஞ்சையர்
தண்சுடர்த் தமனிய வண்ணன் றன்னொடும்
மண்சுட ருறுப்பதோர் வகைய ராயினார். 1772
இருபுடைக் கிளைகளும் விரவி யின்னணம்
தெருவுடைத் திசைமுகந் தெளிப்பத் தேர்த்தரோ
மருவுடை மகரநீர் வளாகம் வானவர்
உருவுடை யுலகம்வந் திழிந்த தொத்ததே. 1773
சிகைமணி யழுத்திய செம்பொற் சென்னிய
நகைமணிக் கோபுர வாயி னான்கொடு
வகைமணித் தலத்ததோர் மதலை மாளிகை
தொகைமணித் தொழில்பல தொடரத் தோற்றினார். 1774
பளிங்கியல் பலகையும் பவழத் தூண்களும்
விளங்குபொற் கலங்களும் வெள்ளி வேயுளும்
இளங்கதிர் முத்தமு மியற்றி யின்னணம்
வளங்கவின் றனையதம் மதலை மாடமே. 1775
மீன்முக விசும்பிடை விரிந்த வெண்ணிலாப்
பான்முகந் தொகுப்பன பனிக்கும் வேதிகை
மேன்முகந் திருத்திய வெள்ளி முன்றிலான்
நான்முக மருங்கினு நகுவ தொக்குமே. 1776
அங்கதற் கைந்துகோ லளவி னாடரங்
கிங்குவந் திறுத்தன வென்னு மீட்டன
செங்கதிர்ப் பவழக்கா னிரைத்த செம்பொனான்
மங்கலச் செய்கைய மஞ்சு சூழ்ந்தவே. 1777
விளிம்பிடை மரகத வேதி கட்டிய
வளம்பெறு மணிநகை மஞ்ச மீமிசை
இளம்பெருஞ் சுரியுளை யரிநின் றேந்திய
உளம்பொலி யாசன முயர விட்டவே. 1778
மண்டங்கு மகரவா சனத்து மென்மயில்
கண்டங்கள் புரைவன கனபொற் கொட்டைய
அண்டங்கொ ளன்னமென் றூவி யார்த்தன
எண்டங்கு மணியன வியற்றப் பட்டவே. 1779
வாரித்தண் கதிர்மணி முத்த மாலையும்
பாரித்த பளிங்கெழிற் பழித்த கோவையும்
பூரித்த பொழிகதிர்ப் பொன்செய் தாமமும்
வேரித்தண் பிணையலு மிடையப் பட்டவே. 1780
மஞ்சுடை மாளிகை மிடைம ணித்தலம்
பஞ்சுடைத் தவிசுகள் பரப்பிப் பூவடுத்
தஞ்சுட ரிடுபுகை யடர்ந்தெ ழுந்தரோ
வெஞ்சுடர்க் கடவுளை விருந்து செய்தவே. 1781
சயமர மாளிகை யியற்றிச் சந்தனப்
பயமர நிழலொளி மஞ்சம் பாவின
வியமரத் தொழிலவர் வினைமுடிந் ததென்
றியமரத் தொழுதிக ளெழுந்தி சைத்தவே. 1782
மங்கல நாழிகை வந்த மன்னர்கள்
இங்குவந் தேறுக வென்று சாற்றலும்
சங்கொலி பரந்தன தயங்கு மாமுர(சு)
சங்கொலித் தெழுந்தன வரசர் தோன்றினார். 1783
வேற்றரசர்
வேறு
எரிமணி வயிரப் பூணா
னிக்குவா குலத்துட் டோன்றி
அருமணிப் புரிசை வேலி்
யயோத்தியாள் கின்ற வேந்தன்
திருமணி நிழற்றுஞ் செம்பொன்
னெடுமுடி திருவில் வீசப்
புரிமணி யாரந் தாழப்
பொன்னகர் பொலியப் புக்கான். 1784
குழவியம் பருகி போல்வான்
குருகுலங் குளிரத் தோன்றி்
அழுவநீர்ப் புரிசை வேலி
யத்தின புரம தாள்வான்
முழவங்க ளிரண்டு செம்பொன்
முளைக்கதிர்க் கனக வல்லி
தழுவிய தனைய தோளான்
றன்னொளி தயங்கச் சார்ந்தான். 1785
நண்டுபொன் கிளைக்கு நாட
னாதவன் குலத்துட் டோன்றிக்
குண்டல புரம தாளுங்
குங்குமக் குவவுத் தோளான்
கண்டிகை தவழப் பூண்டு
கதிர்மணி முடியின் மேலால்
வண்டுகள் பரவச் சென்று
வளநகர் மருளப் புக்கான். 1786
ஊழிகாண் பரிய தோன்ற லுக்கிர குலத்து வேந்தன்
வாழைதாழ் சோலை வேலி வாரண வாசி மன்னன்
சூழிமா லியானை யுந்திச் சுடர்குழை திருவில் வீச
ஏழையர் கவரி வீச வெழினக ரிசைப்பச் சென்றான். 1787
சொரிமது கலந்த சோலைச் சூரிய புரம தாளும்
அரிகுலத் தரசர் கோமா னவிர்மணி யாரந் தாங்கிப்
பொருமலைப் பகடு நுந்திப் புயலலைத் திருண்டு வீழ்ந்த
புரிமலர்க் குஞ்சி தாழப் பொன்னகர் புகழப் புக்கான். 1788
சொன்மலர்ந் துலக மேத்துஞ்
சுடரவன் மருகன் றோலா
மன்மலர்ந் திலங்கு செய்கை
வளங்கெழு மதுரை யாள்வான்
தென்மலை வளர்ந்த தெய்வச்
சந்தனந் திளைத்த மார்பன்
மின்மல ராரந் தாங்கி
வியனகர் விரும்பப் புக்கான். 1789
ஐம்பெருங் குலத்த ராய வரசரும் பிறரு மாங்கண்
கம்பெறி களிநல் யானைக் கடற்படை புறத்த தாக
வம்பெறி வளாகஞ் செம்பொன் மஞ்சங்கண் மலிர வேறி
வெம்பரி விளங்குந் தானை வேலவர் விளங்கு கின்றார். 1790
திருந்திய திலதக் கண்ணித்
தேவிளங் குமரன் போலும்
அருந்தகை யரச நம்பி
யடுதிற லமித தேசன்
பரந்தபின் பசலை கூரப்
பனிக்கதிர் வருவ தேபோல்
விரிந்தொளி சுடர வேந்தர்
விளங்கொளி மழுங்கச் சென்றான். 1791
மழைபுரை மதத்த தாய
மழகளி யானை தன்மேல்
வழைவளர் சோலை சேர்ந்த
மணிவண்டு மறிவ வேபோல்
எழுதெழி லழகன் றன்மே
லிளையவர் கருங்கண் வீழ்ந்து
விழவயர் நகரின் வந்த
வேந்தரை விட்ட வன்றே. 1792
வரைசெறிந் தனைய செம்பொன்
மஞ்சங்கண் மலிரத் தோன்றி
அரைசர்க ளிருந்த போழ்தி
னாழியந் தடக்கை வேந்தன்
விரைசெறி குழலங் கூந்தன்
மெல்லியல் வருக வென்றான்
முரைசொலி கலந்த சங்கு
வயிரொடு முரன்ற வன்றே. 1793
இளவரசர் வருகை
வேறு
மன்னவன் மடந்தை மணிமாட நிலையுள்ளால்
பொன்னமளி மேலடுத்த பொங்கணையின் மேலாட் (கு)
கன்னமனை யாரடிக ளாரருளி தென்றார்
இன்னகைய பூந்தவிசி னின்றினி திழிந்தாள். 1794
வஞ்சியனை யார்மணிதொ டர்ந்தசுடர் ஞாணால்
அஞ்சில விருங்குழல சைத்தயில் பிடித்தார்
கஞ்சுக முகத்தமுலை கச்சுமிக வீக்கி
மஞ்சிவரு மாமயில னார்மருங்கு சூழ்ந்தார். 1795
ஆயமொடு தாயரிடை யாளரசர் தங்கள்
ணேயமிகு நெஞ்சினிடை யாளுமட வாளாய்ப்
பாயமதி தாரகையொ டோரைபட வேகித்
தூயமணி நீர் நிலைக டோறிவர்வ தொத்தாள். 1796
வண்டுவழி செல்லவய மன்னர்மதி செல்லக்
கண்டவர்கள் கண்கள்களி கொண்டருகு செல்ல
எண்டிசையு மேத்தொலியொ டின்னொலிகள் செல்ல
விண்டமல ரல்லிமிசை மெல்லநனி சென்றாள். 1797
அம்மெலடி தாமரைச ராவியொடு நோவச்
செம்மெலிதழ் வாயொடவர் சிந்தனை துடிப்ப
வெம்முலைக ளோடவர்கள் காதன்மிக வீங்க
மைம்மலர் நிகர்க்குமணி மாளிகை யடைந்தாள். 1798
பொன்னேநன் மணிக்கொம்பே பூமிமே
லாரணங்கே போற்றி போற்றி
அன்னேயெம் மரசர்குலத் தவிர்விளக்கே
யாரமிர்தே போற்றி யுன்றன்
மின்னேர்நுண் ணிடைநோமான் மென்மலர்மேன்
மென்மெலவே யொதுங்கா யென்று
மன்னேர்சே யயினெடுங்கண் மங்கைமார்
போற்றிசைப்ப மாடம் புக்காள். 1799
அணிதயங்கு சோபான வீதிவா
யணங்கனையா ரடியீ டேத்த
மணிதயங்கு மாளிகைமேல் வாணிலா
வளர்முன்றின் மருங்கு சூழ்ந்து
கணிதயங்கு வினைநவின்ற கண்டத்
திரைமகளிர் கையி னீக்கித்
துணிதயங்கு வேலரசர் மனந்துளங்கச்
சுடர்ந்திலங்கித் தோன்றி னாளே. 1800
வடியரத்த மிடைவழித்துக் கருங்கண்ணுஞ்
செம்பொன்னால் வளைத்த சூரல்
கொடியரத்த மெல்விரலாற் கொண்டரசர்
குலவரவு கொழிக்கு நீராள்
முடியரக்குப் பூங்கண்ணி மூரித்தேர்
வேந்தர்தமை முறையாக் காட்டிப்
படியரக்கும் பாவைக்குப் பைபையவே
யினையமொழி பகரா நின்றான். 1801
இக்குவா குலத்தரசன்
அங்கார வலர்கதிர மணிசுடரு
மரியணைமே லமர்ந்து தோன்றித்
தங்கார மணிநிழற்றுந் தடவரையா
ரகலத்தான் றகர நாறுங்
கொங்கார வார்குழலார் குவிமுலைகண்
முகம்பொருத குவவுத் தோளான்
இங்காரு நிகரில்லா விக்குவா
குலத்திறைவ னிருந்த கோவே. 1802
ஆதியா னருளாழி தாங்கினா
னாயிரச்செங் கதிரோ னாணுஞ்
சோதியான் சுரர்வணங்கு திருவடியான்
சுடுநீறா நினையப் பட்ட
காதியா னருளியபொற் கதிர்கொள்முடி
கவித்தாண்டார் மருகன் கண்டாய்
ஓதியா மொழியினிவ னுறு வலிக்கு
நிகராவா ருளரோ வேந்தர். 1803
ஆழித்தே ரொன்றேறி யலைகடலி
னடுவோட்டி யமரர் தந்த
மாழைத்தேர் மருங்கறா மணிமுடியு
மணிகலமுந் திறையா வவ்வி
ஊழித்தே ரரசிறைஞ்ச வுலகெலா
மொருகுடைக்கீ ழுறங்கக் காத்த
பாழித்தோட் பரதன்பி னிவனிவனா
னிலமடந்தை பரிவு தீர்ந்தாள். 1804
இன்னவன துயர்குலமு மிளமையுமிங்
கிவன்வடிவுஞ் சொல்ல வேண்டா
மன்னவன்றன் மடமகளே மற்றிவனுக்
கிடமருங்கின் மஞ்சஞ் சேர்ந்து
பொன்னவிரு மணியணைமேற் பொழிகதிரீண்
டெழுந்ததுபோற் பொலிந்து தோன்றுங்
கொன்னவின்ற வேற்குமரன் குருகுலத்தார்
கோனிவனே கூறக் கேளாய். 1805
அருளாழி யறவரச னருளினா
லகன்ஞாலம் பரிவு தீர்த்தான்
உருளாழி யுடையரிவ னடைவின்மிக்க
கடைப்பணிகொண் டுழையோர் போல
இருளாழி நிழற்று ளும்பு மெரிபொன்மணி்
நெடுமுடிசாய்த் திறைஞ்சப் பட்டான்
மருளாழுங் கழிவனப்பின் மற்றிவனே
குலமுதற்கண் வயவோன் கண்டாய். 1806
சூழிருங் கடற்றானை யுடன்றுளங்கச்
சுரர்கொணர்ந்து சொரிந்த மாரித்
தாழிரும்பல் புயறாங்கிச் சரகூடஞ்
சந்தித்த தகையோ னன்னோன்
யாழிரங்கு மணிவண்டு மிலங்கிழையார்
கருங்கண்ணு மருங்கு நீங்கா
வீழிரும்பொற் சுடரார வரைமார்ப
னிவன்சீர்யான் விளம்ப வேண்டா. 1807
இங்கிவன திடமருங்கி னெழில்றயங்கு
மணிமஞ்ச மிலங்க வேறிச்
சங்கிவர்வெண் சாமரையுந் தாழ்குழையின்
நீள்சுடருந் தயங்கி வீசக்
குங்குமஞ்சேர் கொழும்பொடியிற் புரண்டுதன்னி
னிறஞ்சிவந்த குளிர்முத் தாரம்
செங்கதிரோ னொளிபருகுஞ் செவ்வரைநே
ரகலத்தான் றிறமுங் கேளாய். 1808
தகரநா றிருஞ்சோலைச் சயம்பூறான்
றுறவரசாய் நின்ற காலை
மகரயாழ் நரம்பியக்கி வரங்கொண்டு
வடமலைமே லுலக மாண்ட
சிகரமா லியானையான் வழிமருகன்
செந்தாமந் தவழ்ந்து தீந்தேன்
பகருமா மணிமுடியா னமரருமே
பாராட்டும் படியன்பாவாய். 1809
சக்கரர்தாம் பிறந்துவரித் தரங்கநீர்
வளாகமெல்லாந் தங்கீழ்க் கொண்ட
உக்கிரமெய்க் குலத்தரச னொளிவேலிவ்
விளையவன துருவே கண்டாய்
அக்கிரநற் பெருந்தேவி மடமகளே
யரசணங்கு மணங்கே யின்னும்
விக்கிரமக் கடற்றானை விறல்வேந்த
ரிவர்சிலரை விளம்பக் கேளாய். 1810
குண்டலபுரத்தார் கோமான்
ஏலஞ்செய் பைங்கொடியி னிணர்ததைந்து
பொன்னறைமேற் கொழுந்தீன் றேறிக்
கோலஞ்சேர் வரைவேலிக் குண்டலத்தார்
கோமானிக் கொலைவேற் காளை
ஞாலங்க ளுடன் பரவு நாதவன்றன்
குலவிளக்கு நகையே னம்பி
போலிங்க ணரசில்லை பொன்னார
வரைமார்பன் பொலிவுங் காணாய். 1811
சூரியத்தார் கோமான்
சொரிமலர்த்தண் மலரணிந்த சோலைசூழ்
சூரியத்தார் கோமான் றோலா
அரிகுலத்தார் போரேறிவ் வரியேறு
போலிருந்த வரச காளை
வரிமலர்த்து மணிவண்டு புடைவருடு
மாலையார் மகளிர் வட்கண்
புரிமலர்த்தண் வரையகலம் புராதார்
புண்ணியங்கள் புணரா தாரே. 1812
பாண்டியன்
வேலைவாய்க் கருங்கடலுள் வெண்சங்கு
மணிமுத்தும் விரவி யெங்கும்
மாலைவாய்க் கரும்பறா வகன்பண்ணை
தழீஇயருகே யருவி தூங்கும்
சோலைவாய் மலரணிந்த சூழ்குழலா
ரியாழிசையாற் றுளைக்கை வேழம்
மாலைவாய் நின்றுறங்கும் மதுரைசூழ்
வளநாடன் வடிவுங் காணாய். 1813
கண்சுடர்கள் விடவனன்று
கார்மேக மெனவதிருங் களிநல்யானை
விண்சுடரு நெடுங்குடைக்கீழ் விறல்வேந்தன்
றிறமிதனை விளம்பக் கேளாய்
தண்சுடரோன் வழிமருகன் றென்மலைமேற்
சந்தனமுஞ் செம்பொன் னாரத்
தொண்சுடரும் விரவியநல் வரைமார்ப
னுலகிற்கோர் திலதங் கண்டாய். 1814
கரபுரத்தரசன்
மழைக்கரும்புங் கொடிமுல்லை மருங்கேற
வரம்பணைந்து தடாவி நீண்ட
கழைக்கரும்பு கண்ணீனுங் கரபுரத்தார்
கோமானிக் கதிர்வேற் காளை
இழைக்கரும்பு மிளமுலையா யெரிகதிரோன்
வழிமருக னிவனீரீர்ந்தண்
தழைக்கரும்பின் முருகுயிர்க்குந் தாரகலஞ்
சார்ந்தவர்க டவஞ்செய் தாரே. 1815
உறந்தைக்கோன்
வண்டறையு மரவிந்த வனத்துழாய்
மதர்த்தெழுந்த மழலை யன்னம்
உண்டுறைமுன் விளையாடி யிளையவர்க
ணடைபயிலு முறந்தைக் கோமான்
கொண்டறையு மிடிமுரசுங் கொடிமதிலுங்
குளிர்புனலும் பொறியும் பூவும்
ஒண்டுறையு மும்மூன்று முடையகோ
வேயிவன தெழிலுங் காணாய். 1816
ஏமாங்கத நாடன்
தழலவாந் தாமரையி னீரிதழுஞ்
செங்குவளைத் தாதும் வாரி
அழலவாஞ் செந்தோகை யலங்குபொலங்
கதிர்ச்செந்நெ லலைத்த வாடை
பழனவாய்ப் பைங்கரும்பின் வெண்போது
பவழக்காற் செம்பொன் மாடத்
தெழினிவாய்க் கொணர்ந் தசைக்கு
மியலேமாங் கதநாட னிவனேகண்டாய். 1817
மகதைகோ
காந்தளங்கட் கமழ்குலையாற் களிவண்டு
களிறகற்றுங் கலிங்க நாடன்
பூந்தளவங் கமழ்சாரற் பொன்னறைசூழ்
தண்சிலம்ப னன்றே பொன்னே
ஏந்திளஞ்சிங் காதனத்தி னினிதிருந்த
விளவரச னிப்பா லானோன்
மாந்தளிர்கண் மருங்கணிந்த மணியருவிக்
குன்றுடைய மகதைக் கோவே. 1818
அங்கநா டுடையவர்கோ னவ்விருந்தா
னிவ்விருந்தா னவந்திக் கோமான்
கொங்குவார் பொழிலணிந்த கோசலத்தார்
கோமானிக் குவளை வண்ணன்
கங்கைதா னிருகரையுங் கதிர்மணியும்
பசும்பொன்னுங் கலந்து சிந்தி
வங்கவாய்த் திரையலைக்கும் வளநாட
னிவன்போலும் வைவேற் காளை. 1819
வஞ்சியின்மெல் லிடையவளை வானிலா
வளர்முன்றில் வலமாய்ச் சூழ்ந்து
பஞ்சியின்மெல் லடிநோவ நடைபயிற்றிப்
படைவேந்தர் பலரைக் காட்டி
மஞ்சிவரு மாளிகையின் வடமருங்கின்
மணிமஞ்ச மலிரத் தோன்றும்
விஞ்சையர்த முலகாளும் விறல்வேந்தர்
குழாங்காட்டி விரித்துச் சொன்னாள். 1820
வித்தியாதர அரசர்
மாடிலங்கு மழைதவழ்ந்து மணியருவி
பொன்னறைமேல் வரன்றி வம் பூந்
தோடிலங்கு கற்பகமுஞ் சுரபுன்னை
வனங்களுமே துதைந்து வெள்ளிக்
கோடிலங்கு நெடுவரைமேற் குடைவேந்த
ரிவர்குணங்கள் கூறக் கேட்பின்
ஏடிலங்கு பூங்கோதா யிமையவரின்
வேறாய திமைப்பே கண்டாய். 1821
அங்கவவர் வளநகருங் குலவரவு
மவையவற்றோடறையும் போழ்தின்
வெங்கதிரோன் பெயரவனுக் கிளவரசிவ்
வேந்தனெனொ முன்னந் தானே
கொங்கிவருங் கருங்குழலி பெருந் தடங்கண்
இருங்குவளை பிணையல் போலச்
செங்கதிரோ னெனவிருந்த திருந்துவே
லிளையவன்மேற் றிளைத்த வன்றே. 1822
வேறு
கடாமிகு களிநல் யானைக்
கவுளிழி கான வீதி
விடாமிகை சுழன்று வீழும்
விரைகவர் மணிவண் டேபோல்
படாமுகக் களிற்றி னான்றன்
பவழக்குன் றனைய மார்பில்
தடாமுகை யலங்க றன்மேற்
றையல்கண் சரிந்த வன்றே. 1823
ஏட்டினார் குழலி னாளுக்
குழையவ ளின்ன னென்று
காட்டினா ளாவ தல்லாற்
காரிகை தன்னின் முன்னம்
ஓட்டினா ணிறையுங் கண்ணு
முள்ளமுங் களித்த தங்கே
பாட்டினா லென்னை போக
பான்மையே பலித்த தன்றே. 1824
விண்டழி நிறைய ளாகி
மெல்லவே நடுங்கி நாணி
வண்டிவர் மாலை நோக்கி
மாதராள் மறைத லோடும்
கொண்டதோர் குமரன் போலக்
குங்குமக் குவவுத் தோண்மேல்
ஒண்டொடி மாலை வீழ்த்தா
ளுலகொலி படைத்த தன்றே. 1825
ஆர்த்ததங் கரவத் தானை
யாலித்த முரசுஞ் சங்கும்
தேர்த்தன மலருஞ் செம்பொற்
சுண்ணமுந் திசைக ளெல்லாம்
போர்த்தன பதாகை பொங்கிப்
பூமியங் கிழவ ருள்ளம்
வேர்த்தன வேர்த்துத் தாமே
வெய்துயிர்த் தொழிந்த வன்றே. 1826
புனைவுதா னிகந்த கோதைப்
பொன்னனாள் பூமி பாலர்
நினைவுதா னிகந்து காளை
வடிவெனு நிகளஞ் சேர
வினைகடாம் விளையு மாறியாம்
வேண்டிய வாறு வாரா
வினையதால் வினையின் றன்மை
யெனநினைந் தாறி னாரே. 1827
நெய்த்தலைப் பாலுக் காங்கு
நெடுவரை யுலகின் வந்த
மைத்துன குமரன் றன்னை
மடமொழி மாலை சூட்ட
இத்தலை யென்ன செய்தா
னெரிகதி ராழி வேந்தன்
கைத்தலை வேலி னாற்குக்
கடிவினை முடிவித் தானே. 1828
விண்ணகம் புகழு நீர்மை
விழுக்கலம் பரப்பி யார
மண்ணக வளாகத் துள்ள
மன்னரான் மண்ணு நீர்தந்
தெண்ணகன் புகழி னாரை
யெழிலொளி துளும்ப வாட்டிப்
புண்ணகங் கமழும் வேலான்
பொன்மழை பொழிவித் தானே. 1829
தருமணன் மணிமுத் தாகத்
தண்டுல மியற்றிக் கான்யாற்
றருமணற் றருப்பை சூழ்ந்தாங்
கதன்மிசை பரிதி பாய்த்திப்
பெருமண மன்னற் கேற்ற
சமிதையாற் பெருக்கப் பட்ட
திருமணி யுருவிற் செந்தீச்
செல்வத்திற் சிறந்த தன்றே. 1830
தங்கழல் வேள்வி முற்றித்
தையலக் காளை யோடும்
பொங்கழல் வலஞ்செய் போழ்திற்
குழைமுகம் பொறித்த தெண்ணீர்
பைங்கழ லமரர் பண்டு
படைத்தநீ ரமிழ்தப் புள்ளி
அங்கெழு மதியந் தன்மே
லரும்பியாங் கணிந்த வன்றே. 1831
மன்னவ குமர னாங்கு
மடந்தையைப் புணர்ந்து மாடத்
தின்னகி லமளி மேலா
லிளமுலைத் தடத்து மூழ்க
அன்னவன் றாதை செங்கோ
லாணைவே லருக்க கீர்த்தி
தன்னமர் மடந்தைக் கேற்ற
சயமர மறைவித் தானே. 1832
சயமர மறைந்த நன்னாட்
டமனிய மஞ்சம் பாவி
இயமரந் துவைப்ப வேறி
யிகன்மன்ன ரிருந்த போழ்தில்
பயமலை மன்னன் பாவைக்
கவரவர் பண்பு கூறிக்
கயமலர் நெடுங்க ணாளோர்
காரிகை காட்டி னாளே. 1833
வரிகழன் மன்ன ரென்னு
மணிநெடுங் குன்ற மெல்லாம்
சுரிகுழன் மடந்தை யென்னுந்
தோகையம் மஞ்ஞை நோக்கி
எரிகதி ராழி வேந்தன்
றிருமக னென்னுஞ் செம்பொன்
விரிகதிர் விலங்கற் றிண்டோட்
குவட்டினை விரும்பிற் றன்றே. 1834
மாதராள் சுதாரை வாட்கண்
மலரொடு மணிவண் டார்க்கும்
போதுலாம் பிணையல் வீரன்
பொன்வரை யகலஞ் சூழ
ஏதிலா மன்னர் வாட
விருபுடைக் கிளைஞ ரெல்லாம்
காதலாற் களித்துச் செல்வக்
கடிவினை முடிவித் தாரே. 1835
கழல்வலம் புரிந்த நோன்றாட்
கடல்வண்ணன் புதல்வன் காமர்
குழல்வலம் புரிந்த கோதை
குழைமுகம் வியர்ப்ப வேட்டான்
அழல்வலம் புரிந்து சூழ்ந்தாங்
கத்தொழின் முடித்த பின்னைத்
தழல்வலம் புரிந்த வேலான்
றடமுலை வாரி சார்ந்தான். 1836
மாதரஞ் சாய லாளு
மணிவண்ணன் சிறுவன் றானும்
ஓதநீ ரின்ப மென்னு
மொலிகடற் றரங்க மூழ்கச்
சோதியம் பெயரி னாளுஞ்
சுடரவன் புதல்வன் றானுங்
காதலிற் களித்துத் தங்கள்
கனவரை யுலகஞ் சார்ந்தார். 1837
வேறு
எரிவிசயங் கோவேந்தி மன்னரென்னும்
அரிவிசயங் கெடநின்ற வாணை வேலான்
திருவிசயன் றிருவன்ன செல்வி யோடும்
மருவிசயங் கெழுகோயின் மலர்ந்து புக்கான். 1838
இனையனவா மிகுசெல்வ மிங்கு மாக்கிப்
புனைமலர்வா னவர்போகம் புணர்க்கும் பெற்றி.
வினையதனின் விளைவின்ன தென்று நாளும்
நினைமின்மோ நெறிநின்று நீர்மை மிக்கீர். 1839
-------------
11.துறவுச் சருக்கம் (1840- 2068)
மன்னிய புகழி னான்றன்
மகன்வழிச் சிறுவர் வாயுள்
இன்னகை மழலை கேட்டாங்
கினிதினி னிருந்த காலைப்
மன்னுமெய்த் துறவிற் புக்கான்
பயாபதி மன்னர் மன்னன்
அன்னதன் பகுதி தன்னை
யறியுமா பகர லுற்றேன். 1840
திவிட்டனும் அவன் மக்களும் பயாபதியை அணுகுதல்
திருமகி ழலங்கன் மார்பிற்
செங்கணான் வணங்கச் செல்வப்
பெருமகிழ் வெய்தி வேந்தன்
பிரசாபதி பெரிய வாட்கண்
உரிமையோ டிருந்த போழ்தி
னொலிகல னொலிப்ப வோடி
அருமைகொ டிகிரி யாள்வான்
சிறுவர்சென்ற ணுகி னாரே. 1841
தவத்தின் பயனைப் பயாபதி உணர்தல்
ஆங்கவ ரணைந்த போழ்தி
னமிழ்துகொப் புளித்த போலும்
தேங்கமழ் பவழச் செவ்வாய்
முறுவனீர் பருகித் தேங்கி
ஈங்கிவை யனைய தோற்றி்
யின்பமே பருக நின்ற
வீங்கிய தவத்திற் கின்னும்
வித்திடற் பால தென்றான். 1842
நல்வினை
அலகுடன் விளங்கு மம்பொற்
குடைநிழ லரசர் சூழ
உலகுடன் வணங்க வோடை
யுயர்களிற் றெருத்த மேலால்
பலகுடை பணியச் செல்லும்
பண்பிது நமக்குத் தந்த
நலனுடைத் தளிய நங்க
ணல்வினைத் தெய்வ மன்றே. 1843
மேலும் அவன் எண்ணுதல்
தன்னையோ ரரச னாக்கித்
தரங்கநீர் வளாக மாள்வித்
தின்னுயி ராகிச் செல்லு
நல்வினை யென்னு மின்ன
முன்னுப காரி தன்னை
முதல்கெட முயலுங் கீழ்மை
நன்னரின் மாந்த ரன்றே
நரகங்கட் கரச ராவார். 1844
சென்றநாள் பெயரு மேனுஞ்
செல்வமுஞ் செருக்கு மாக்கி
நின்றநா ணிலவு மேனு
நெறிநின்று வருந்த வேண்டா
இன்றுபோல் வாழ்து மன்றே
யிப்படித் தன்றி யாங்கள்
பொன்றுநாள் வருவ தாயின்
வாழ்க்கையோர் பொருள தன்றே. 1845
வாழ்வு நிலையற்றது
எரிபுரை யெழில தாய
விளந்தளி ரிரண்டு நாளின்
மரகத வுருவ மெய்தி
மற்றது பசலை கொண்டு
சருகிலை யாகி வீழ்ந்த
கரிந்துமண் ணாதல் கண்டும்
வெருவிலர் வாழ்து மென்பார்
வெளிற்றினை விலக்க லாமோ. 1846
தவம் சிறந்தது எனத் துணிதல்
பிறந்தனர் பிறந்து சாலப்
பெருகினர் பெருகிப் பின்னை
இறந்தன ரென்ப தல்லா
லியாவரு மின்று காறு
மறைந்துயிர் வாழா நின்றா
ரில்லையால் வாழி நெஞ்சே
சிறந்தது தவத்தின் மிக்க
தின்மையே சிந்தி கண்டாய். 1847
உடலின் இழிவு
பிறந்துநாம் புறஞ்செய் கின்ற
பேதையிவ் வுடலந் தானும்
இறந்தநாள் போல்வ தின்றா
யிற்றையின் னாளை வேறாய்ப்
பறைந்துநாம் பற்றப் பற்றப்
பற்றுவிட் டகலு மாகிற்
சிறந்தனர் பிறர்க கள்யாரே
சிந்தைநீ சிந்தி யென்றான். 1848
தொகைமல ரலங்கல் சூடித்
தூநறுஞ் கண்ண மப்பிப்
புகைநனி கமழ வூட்டிப்
புறஞ்செயப் பட்ட மேனி
சிகையினோர் சிறுமுட் டீண்டச்
சிதைந்தழுக் கொழுகு மாயி்
நகைபெரி துடைத்து நாணா
மிதனைநா மகிழ்த னெஞ்சே. 1849
ஒழுகிய முடையு நீரு
முதலகை யிகப்ப வூறும்
அழுகலிவ் வள்ளல் யாக்கை
யகம்புற மாயிற் றாயில்
கழுகொடு கவருங் காக்கை
கைத்தடி கொண்டு காத்தும்
அழகுள சுழலு மன்னோ
வாயிரச் சாதி மாதோ. 1850
வல்வினை விளைத்த மாந்தர்
மற்றதன் வித்து மாட்டிப்
புல்வினை கான மண்டிப்
புலியின்வாய்ப் பட்ட தேபோல்
நல்வினை யினிதி னூட்டு
நல்வினை முதல்கண் மாறி
இல்வினை யின்பம் வெஃகி
யிறுபவே யறிவி லாதார். 1851
பயாபதி தன் அமைச்சருடன் ஆராய்தல்
இன்னன பலவுஞ் சிந்தித்
திருந்தது மிகையென் றெண்ணி
மன்னவ னுழையர் தம்மான்
மந்திரத் தவரைக் கூவிப்
பொன்னவிர் பவழத் திண்காற்
புரிமணிக் கூட மெய்திக்
தன்னம ரமைச்ச ரோடு
தானமர்ந் திருந்து சொன்னான். 1852
நிலைத்த செல்வத்துக்கு வரும் ஊனங்கள் யாவை? என்று அவன் வினாதல்
மலைபயில் களிநல் யானை
மன்னரால் வவ்வ லின்றாய்க்
கலைபயில் மகளிர் கண்போற்
கள்வர்கைப் படாது நாளும்
நிலையின செல்வக் கூனம்
வருவன வுரைமி னென்றான்
இலைபயின் மகரப் பைம்பூ
ணெரிமணிக் கடகக் கையான். 1853
அமைச்சர் இறுத்த விடை
ஆள்வினை மாட்சி யென்னு
மிரண்டினு மரசு காத்துத்
தோள்வினைக் களவு காவ
லுள்வழித் துன்னல் செல்லா
வாள்வினைத் தடக்கை வேந்தே
வருவது மற்று முண்டோ
கோள்வினை பயின்ற கூற்றங்
குறுகல தாயி னென்றார். 1854
கூற்றத்தார் கொள்ளற்பாலன யாவை என்ற வினாவும் அதற்கு விடையும்
கோள்வினை பயின்ற கூற்ற
வரசனாற் கொள்ளற் பால
கேள்வினை பயின்ற நூலிற்
கிளர்ந்துநீ ருரைமி னென்ன
வாள்வினை புரிந்த தோளான்
மனத்ததை யுணர்ந்து மாதோ
நாள்வினை புரிந்து நங்க
ளுயிர்நிறை கொள்ளு மென்றார். 1855
கூற்றுவனை வெல்லும் உபாயம் யாது? என்று வினவல்
சந்தினாற் றவிர்க்க லாமோ சார்பினா லொழிக்க லாமோ
பந்தியா முன்னந் தாமே பகைத்திருந் துய்ய லாமோ
வெந்திறற் காலன் றன்னை மேற்சென்று வெல்ல லாமோ
உய்ந்துயிர் யாங்கள் வாழு முபாயநீ ருரைமி னென்றான். 1856
அமைச்சர் விடை
பீழைமை பலவுஞ் செய்து பிணிப்படை பரப்பி வந்து
வாழுயிர் வாரி வவ்வி வலிந்துயிர் வாங்கி யுண்ணுங்
கூழைமை பயின்ற கூற்ற வரசனைக் குதிக்குஞ் சூழ்ச்சி
பாழியந் தடக்கை வேந்தே பயின்றிலம் யாங்களென்றார். 1857
அரசன் கூறுதல்
ஆயினக் காலன் பாணி யாம்பிற வரச செல்வம்
மேயினங் களித்தி யாங்கள் விழைந்துயிர்வாழும் வாழ்க்கை
பாயிய வெழுந்த வேங்கை பாரிக்கு மளவிற் பைம்புன்
மாயிருஞ் சுருளை மேயு மான்மறி போலு மென்றான். 1858
குரவர் கூற்று
அருங்களி யானை வேந்தே யத்துணைப் பாணியுண்டோ
கருங்களி மதநல்யானை வாய்புகு கவள மேபோல்
பெருங்களி யாளன் காலன் பிறையெயி றணிந்துநின்ற
இருங்களி யாணர் வாழ்விற் கிமைப்பிடை பெரிது கண்டாய். 1859
காலனைக் கடப்பதற்கு மார்க்கம் கூறுகழு என்று அரசன் அமைச்சரை வினாதல்
இன்னுயி ரழியும் போழ்து மிறைவனுக் குறுதியல்லான்
முன்னிய முகமன் மாட்டா முற்றிய வறிவி னாரை
மன்னவன் மகிழ்ந்து நோக்கி வாழுயிர் வவ்வுங் காலன்
தன்னைநா மிகந்து சேருஞ் சரண்பிறி துரைமி னென்றான். 1860
முனிவரைக் கேட்குமாறு அமைச்சர் கூறல்
இனியன போன்று தோன்றி நுகர்ந்தவற் கிறுதி செய்யும்
கனிபுரை கிளவி நீக்கிக் கண்ணனார் கருத்துட் கொண்டு
துனிவன நினையுங் காலன் றுணிவன துணியுஞ் சூட்சி
முனிவரை வணங்கிக் கேட்டு முயறுமோ வடிக ளென்றார். 1861
குருகயா வுயிர்க்குஞ் சோலைக் குளிரணிப் பழன நாட
முருகயா வுயிர்க்கும் பூவார் முறிமிடை படலை மாலைத்
திருவயா வுயிர்க்கு மார்பற் செறிதவர் சரண மூலத்
தருகயா வுயிர்ப்பி னல்லா லரண்பிறி தாவ துண்டோ. 1862
பயாபதி துயர்நீங்கிய மனத்தனாதல்
எரிகின்ற சுடரி னெய்பெய் திடுதிரி தூண்டி யாங்கு
விரிகின்ற புலமை வீரர் மொழிதலும் விசோதி யன்னாற்
பரிகின்ற வுரிமை வல்ல படரொழி மனத்த னானான்
சொரிகின்ற மதுவின் மாரித் துவலையி னனைந்த தாரான். 1863
கரும்பணி மொழியி னார்தங்
கருந்தடங் கண்ணும் வண்டும்
சுரும்பணை முலையி னாருந்
தொடையலுந் துதைந்த மார்பன்
அரும்பணி யசோக நீழ
லடிகள தணிபொற் கோயில்
விரும்பணி விழவு சாற்றி
வியன்முர சறைக வென்றான். 1864
அருகன் விழா
ஒளியவ னுலகம் தன்னுட்
கரந்தவ னுயிர்க ளுய்யும்
அளியவ னருள்செய் யாழி
யுடையவ னடிமை செய்வார்க்
கெளியவ னெந்தை பெம்மாற்
கியற்றிய விழவின் மிக்க
களியவ ரென்ப செம்பொற்
கதிர்முடி சூடு வாரே. 1865
அருள்புரி யழலஞ் சோதி
யாழியா னாதி யில்லான்
மருள்புரி வினைகட் கென்று
மறுதலை யாய வாமன்
இருள்புரி யுலகஞ் சேரா
வியனெறி பயந்த பெம்மான்
பொருள்புரி விழவு காண்பார்
புண்ணிய வுலகங் காண்பார். 1866
கண்ணிய வறிவன் செல்வ
விழவினுட் களித்த மாந்தர்
புண்ணியத் துகள்க ளென்னும்
பொற்சுண்ணம் புதைய வாடிப்
பண்ணியன் மொழியி னார்தங்
கருங்கண்ணாற் பருகு நீர்மை
விண்ணிய லுருவ மெய்தி
விளங்கிவீற் றிருப்ப ரன்றே. 1867
நகரம் விழவணி காண்டல்
எல்லைசான் முரசிற் சாற்றி
யின்னன வறைத லோடும்
மல்லன்மா நகரங் கேட்டே
வானுல கிழிந்த தேபோன்
முல்லைவான் கண்ணி சூடி
முகிழ்நகைக் கலங்க டாங்கிச்
செல்லும்வாய் தோறுஞ் செல்வ
விழவணி தேர்த்த தன்றே. 1868
இன்னிசை முரசங் கேட்டே
மெய்பெரி தினிய கேட்டா
மன்னிய நங்கள் வாணாள்
வாழ்கநம் மிறைவ னென்னாப்
பொன்னியன் மலருஞ் சாந்துஞ்
சுண்ணமும் புகையும் பொங்கத்
துன்னிய நகர மாந்தர்
துறக்கம்பெற் றவர்க ளொத்தார். 1869
திருவிழா நடைபெறல்
வேறு
பூரண மணிக்குட நிரைத்த பொன்னணி
தோரண மெடுத்தன துதைந்த வெண்கொடி
வாரணி முரசொடு வளைக ளார்த்தரோ
காரணி கடலொலி கைத விர்த்ததே. 1870
விரையினான் மெழுகிய வீதி வாயெலாம்
திரையினார் செழுமணி முத்தஞ் சிந்தினார் யினா
லென்னையவ் வொளிகொண் மாநகர்
புரையினாற் பொன்னுல கிழிந்த தொத்ததே. 1871
அகிற்புகை மாளிகைகளைச் சூழ்தல்
கழுமிய காழகி லாவி காமரு
செழுமணி மாளிகைச் சென்னி சூழ்வது
விழுமணி விளங்கிய விலங்கன் மீமிசைத்
தழுவிய விளமழை தவழ்வ தொத்ததே. 1872
அந்தணர்
வெண்டுகி லுடுத்துவெண் சாந்து மெய்வழித்
தொண்டிரண் மல்லிகை யொலியல் சூடினார்
வண்டிரண் மணிமுத்தும் வயிரச் சாதியும்
கொண்டிய லணியொடு கோலந் தாங்கினார். 1873
வெண்மருப்பி ரட்டைய வேழ மீமிசைக்
கண்மருட்டு றுப்பன கமலப் பூப்பலி்
விண்மருட்டு றுப்பன வேந்தி வேதியர்
மண்மருட்டு றுப்பதோர் வகையின் மன்னினார். 1874
வேந்தர்
செம்மலர்க் கண்ணியர் செம்பொற் றாரினர்
கொய்ம்மலர்க் குங்குமங் குழைந்த சாந்தினர்
கைம்மலர் மணிநகைக் கடகம் வில்லிட
மெய்ம்மல ரணியினர் வேந்த ராயினார். 1875
செய்ந்நிறக் குவளைகை செய்த சூட்டினர்
அந்நிறந் தழுவிய வரத்த வாடையர்
மெய்ந்நிறஞ் செய்யன வேழ மீமிசைக்
கைந்நிற மலரொடு கலந்து தோன்றினார். 1876
வணிகர்
பொன்மலர்க் கண்ணியர் பொன்செய் சுண்ணமொய்
மின்மலர் மேனிமேல் விளங்க வப்பினார்
மென்மல ரணிநகை மிளிருங் கோலமோ
டின்மல ரிருநிதிக் கிழவரீண்டினார். 1877
போரொளிப் பீதக வுடையர் பைம்பொனால்
ஆரொளி தழுவிய வலர்செய் பூப்பலி
போரொளி யானைமே னிரைத்துப் போந்தனர்
வாரணி வனமுலை யவரொ டென்பவே. 1878
அரசன் விழாவிற்கெழுதல்
நகரமாங் கெழுந்தபி னரலுஞ் சங்கொடு்
முகுரவாய் மணிமுர சதிரு மூரிநீர்
மகரமால் கருங்கடன் மருளுந் தானையான்
சிகரமால் யானைமேற் செல்வன் றோன்றினான். 1879
குதிரைகள் பல
வேல்புரை கண்ணியர் கவரி வீசவெண்
பால்புரை பவழக்காற் குடையி னீழலான்
மால்புரை கருங்கடல் வளாகங் காவலன்
கால்புரை புரவியங் கடலுட் தோன்றினான். 1880
களிறு ஈட்டம்
புதமெழு புரவிகள் புடைப ரந்திடை
மதமழை பொழிவன வயிரக் கோட்டன
கதமழ லெழவுமிழ் தகைய காணில
விதமெழு களிறுகள் பலமி டைந்தவே. 1881
பிற விழாச் செய்திகள்
ஆர்த்தன பல்லிய மதிர்ந்த குஞ்சரம்
தேர்த்தன தேர்க்குழாந் திசைத்த பல்லுயி்ர்
போர்த்தன கொடிமிடை பொழிந்த பூமழை
வேர்த்தன விளிந்தன வினைக ளென்பவே. 1882
விரிந்துயர் வெள்ளிவெண் குடையின் மாடெலாம்
திருந்திய சாமரை திசைக டேர்த்தன
பரந்தெழு பாற்கடற் பரவை வெண்டிரை
நிரைந்தெழு நுரையொடு நிரைத்த வொத்தவே. 1883
பீலியந் தழைபிணித் திட்ட வட்டமு
மாலியங் கசைப்பன வால வட்டமு
மேலியங் கொளியவன் மறைய வேய்ந்தரோ
காலியங் கிடவிடங் காண்கி லாரரோ. 1884
சந்தனஞ் செறிந்தன செப்புந் தண்புகைக்
கந்தமே நிறைந்தன கரண்ட கங்களும்
கொந்துமொய்ம் மலர்நிறை கோடி கங்களும்
உந்தியொன் றொன்றினை யூன்று கின்றவே. 1885
நிரந்தன பூப்பலி நிரைகொண் மாரியாய்ச்
சொரிந்தன சுரும்பிவர் துணர்கொள் பூமழை
பரந்தன மங்கலப் பதாகை யவ்வழிக்
கரந்தன கருவினைக் குழாங்க ளென்பவே. 1886
பாடுவார் பலாண்டிசை பரவு வார்பரந்
தாடுவா ரறிவனைப் பரவி யார்களும்
கூடுவார் குழுவுமெய் குழுமி யெங்கணும்
ஊடுதான் வியலிட முள்ள தில்லையே. 1887
பயாபதியின் செயல்
நொவ்வகை வினைப்பகை யகற்றி நூனெறி
செவ்வகை மொழிந்தவன் செல்வச் சேவடிக்
கிவ்வகை யெழுவகை விழவு செல்வுழி
நெய்வகை வேலவ னிலைமை கேட்கவே. 1888
சினகரம் சேர்தல்
நீர்ப்பலி விரைப்பலி நிரந்து தேனிமிர்
பூப்பலி யெனவிவை நிரைத்துப் புண்ணியன்
சீர்ப்பொலி சினகரஞ் சென்று சேர்ந்தனன்
ஆர்ப்பொலி தழுவிய வரவத் தானையான். 1889
நகர் வலம்
கோடுயர் கோபுர வாய்தல் சேர்ந்துதன்
நீடுயர் மழகளி றிருவித் தானிழிந்
தேடுய ரினமல ரேந்தி யீர்ம்பொழின்
மாடுயர் வளநகர் வலங்கொண் டெய்தினான். 1890
அருகக் கடவுள் தரிசனம்
மன்னவ னணைதலு மலர்ந்த வாணிலாப்
பொன்னணி வளநக ரகத்துப் பொங்கரி
துன்னிய வணைமிசைத் துளங்குஞ் சோதியோ
டன்னணம சோகமர்ந் தடிக டோன்றினார். 1891
ஆசனம்
குஞ்சரத் தடக்கைய குழைச் சென்னிய
மஞ்சிவர் தோற்றத்து மகர வாயொடு
செஞ்சுடர் மணிநிரை யழுத்திச் செம்பொனால்
அஞ்சுட ருமிழ்வதவ் வணையின் வண்ணமே. 1892
ஏழிய லுலகிலுள்ளி ருளுங் கையகன்
றாழியல் வினைகேளா டவிய வாயிரம்
தாழொளி சுடரவன் றன்னைக் காணவோர்
சூழொளி மண்டிலஞ் சுடரத் தோன்றுமே. 1893
கவரி
கழுமிய பானிலாக் கதிரின் கற்றைகள்
செழுமணித் திரண்மிசைச் செறிந்த போல்வன
எழுவளர்த் தனையதோ ளியக்க ரேந்தின
தொழுதகை யுருவின கவரி தோன்றுமே. 1894
குடை
பருகலாம் பானிலாப் பரந்த மாமணி
அருகெலா மணிந்தக டம்பொ னார்ந்துமேற்
பெருகலாஞ் சுடரொளி பிறங்கி நின்றதம்
முருகுலாம் பிண்டியான் குடையின் மும்மையே. 1895
அழல்வளர்த் தனையன தழையு மவ்வழல்
தழல்வளர்த் தனையன மலருந் தாமரைப்
பொழில்வளர் வளையமும் பொதுளி வண்டினம்
குழைவள ரசோகின்மேற் குளிர்செய் கின்றவே. 1896
மாமழைக் கண்ணியர் மருங்கு போல்வன
தூமழை வளர்கொடி துவன்றிப் பத்திகள்
பாமழை யுருவுகள் பலவுந் தோன்றவே
பூமழை பொன்னிலம் புதைய வீழ்ந்தவே. 1897
வானவர் வாத்தியவொலி
மொய்த்திலங் கலர்மழை முருகு லாவிய
மைத்தலை விசும்பிடை மயங்க வானவர்
கைத்தலம் பரவிய காம ரின்னியம்
எத்திசை மருங்கினு மிரங்கித் தோன்றுமே. 1898
கின்னரர்
மைஞ்ஞலம் பருகிய கருங்கண் மாமணிப்
பைஞ்ஞலம் பருகிய பரும வல்குலார்
மெய்ஞ்ஞலம் விஞ்சையர் விரவ மேலெலாம்
கிஞ்ஞர மிதுனங்கள் கிளர்ந்து தோன்றுமே. 1899
எரிமணி நெடுமுடி யிமைப்பிற் செங்கணப்
புரிமணி வண்ணனும் பொன்செ யாழியத்
திருமணி வண்ணனுந் தேவி மார்களும்
அருமணி வண்ணனுக் கருகு தோன்றினார். 1900
ஒண்டமர் மணிகளு மொளிர்பொற் சாதியும்
கொண்டன ரியற்றிய கோலச் செய்கையால்
கண்டவர் கண்கவர் நகரங் காண்டலும்
விண்டுதிர் வினையினன் வேந்த னாயினான். 1901
பணியொடு நறுவிரை மெழுகிப் பன்மலர்
அணியுடை யனையன பலவுஞ் செய்தபின்
மணிமுடி நிலமுற வணங்கி வாமன்மேற்
றுணிபடு வினையினன் றுதிதொ டங்கினான். 1902
வேறு
மூவடிவி னாலிரண்டு சூழ் சுடரு நாண
முழுதுலக மூடியெழின் முளைவயிர நாற்றித்
தூவடிவி னாலிலங்கு வெண்குடையி னீழற்
சுடரோ யுன்னடிபோற்றிச் சொல்லுவதொன் றுண்டால்
சேவடிக டாமரையின் சேயிதழ்க டீண்டச்
சிவந்தனவோ சேவடியின் செங்கதிர்கள் பாயப்
பூவடிவு கொண்டனவோ பொங்கொளிகள் சூழ்ந்து
புலங்கொளா வாலெமக்கெம் புண்ணியர்தங் கோவே. 1903
கருமாலை வெவ்வினைகள் காறளர நூறிக்
கடையிலா வொண்ஞானக் கதிர்விரித்தா யென்றும்
அருமாலை நன்னெறியை முன்பயந்தா யென்றும்
அடியேமுன் னடிபரவு மாறறிவ தல்லால்
திருமாலே தேனாரு மரவிந்த மேந்துந்
திருவணங்கு சேவடியாய் தேவாதி தேவ
பெருமானே நின்பெருமை நன்குணர மாட்டார்
பிணங்குவார் தம்மைவினைப் பிணக்கொழிக்க லாமே. 1904
ஒளியாகி யுலகாகி நீவிரிந்தா யென்கோ
உலகெலா நின்னொளியி னுள்ளடங்கிற் றென்கோ
அளியார யுலகநீ யாள்கின்றா யென்கோ
அமருலகு தானின்ன தடியடைந்த தென்கோ
விளியாத மெய்ப்பொருளை நீவிரித்தா யென்கோ
நீவிரித்த வாறேமெய்ப் பொருள்விரிந்த தென்கோ
தெளியாம லில்லைநின் றிருவடிகண் மெய்ம்மை
தெளிந்தாலுஞ் செவ்வனே தெரிந்துரைக்க லாமே. 1905
களியானை நாற்கோட்ட தொன்றுடைய செல்வன்
கண்ணொரா யிரமுடையான் கண்விளக்க மெய்தும்
ஒளியானை யூழி முத லானானை யோங்கி
உலகளவு மாகியுயிர் தமக்குறுகண் செய்யா
அளியானை யாரழலஞ் சோதிவாய் சூழ்ந்த
அருளாழி யானையிணை யடிபரவு வார்கட்
கெளியானை யெந்தை பெரு மானையே யல்லால்
இறையாக வீங்கொருவ ரெண்ணுமா றென்னே. 1906
தெருளாமை யால் வினவற் பாலதொன் றுண்டு
திருவடிகள் செம்பொனா ரரவிந்த மேந்த
இருளாழி யேழுலகுஞ் சூழொளியின் மூழ்க
இமையாத செங் கண்ணி னிமையோர்வந் தேத்த
உருளாழி யானு மொளி மணிமுடிமேற் கைவைத்
தொருபாலில் வரவுலக நின்னுழைய தாக
அருளாழி முன்செல்லப் பின்செல்வ தென்னோ
அடிப்படா தாய்நின்ற வான்ஞால முண்டோ. 1907
வானோர்த முலகுடைய மானீல வண்ணன்
மகிழ்ந்திறைஞ்சு மாலையணி மணிமுடிமேல் வைகா
ஊனாரு மறவாழி யோடைமால் யானை
உடையான்ற னொளிமுடியின் மேலுரையோ நிற்கத்
தேனாரு மரவிந்தஞ் சென்றேந்தும் போழ்து
திருவடிகள் செந்தோடு தீண்டாவே யாகில்
ஆனாவிம் மூவுலகு மாளுடைய பெம்மான்
அடியுறுவா ரின்மைதா மறிவுண்ட தன்றே. 1908
தேனருளி மந்தாரச் செந்தாமந் தாழ்ந்து
திரளரைய செம்பவளம் வம்பாக வூறி
வானருளி மாணிக்கச் செங்கதிர்கள் வீசி
மதிமருட்டும் வெண்குடையோர் மூன்றுடைய வாமன்
யானருள வேண்டியடி யிணைபணியும் போழ்து
இமையவர்கோ னாயிரச் செங்கணான் வந்து
தானருளு மாறென்று தாள்பணியும் போழ்துந்
தகையொன்ற தேலிறைமை தக்கதே யன்றே. 1909
விண்டாங்கு வெவ்வினை வெரூஉவுதிர நூறி
விரிகின்ற மெய்ஞ்ஞானச் சுடர் விளக்கு மாட்டிக்
கண்டார்க ணின்னிலைமை கண்டொழுக யானின்
கதிர்மயங்கு சோதியாற் கண்விளக்கப் பட்டுத்
தண்டாஅ மரைமலரின்மே னடந்தா யென்றுந்
தமனீயப் பொன்னணையின் மேலமர்ந்தா யென்றும்
வண்டார சோகி னிழல் வாயமர்ந்தா யென்றும்
வாழ்த்தினால் வாராயோ வானவர்தங்கோவே. 1910
கருவார்ந்த பொருணிகழ்வுங் காலங்கண் மூன்றுங்
கடையிலா நன்ஞானக் கதிரகத்த வாகி
ஒருவாதிங் கவ்வொளியி னின்னுள்ள வாகில்
உலகெல்லா நின்னுளத் தேயொளிக்க வேண்டா
திருவார்ந்த தண்மார்ப தேவாதி தேவ
திரளரைய செந்தளி ரசோகமர்ந்த செல்வ
வருவாரும் வையகமு நீயும்வே றாகி
மணிமேனி மாலே மயக்குவதிங் கென்னோ. 1911
செங்க ணெடுமாலே செறிந்திலங்கு சோதித்
திருமுயங்கு மூர்த்தியாய் செய்யதா மரையின்
அங்கணடி வைத்தருளு மாதியா யாழி
அறவரசே யென்றுநின் னடிபணிவ தல்லால்
எங்க ணிட ரகலுமா றிந்நிலைமை யெய்தி
இருளுலக நீக்குமரு டருகநீ யென்று
வெங்கணிரு வினையையற வென்றாய்முன்னின்று
விண்ணப்பஞ் செய்யும் விழுத்தகைமை யுண்டோ. 1912
வேறு
என்றுநன் கேத்தி யிறைஞ்சி யிறைவனைச்
சென்றுயர் சேவடிச் சேடந் தலைவைத்து
வென்றவன் கோயில் வலங்கொண்டு மீண்டுமொர்
பொன்றவழ் வேதிகை மண்டபம் புக்கான். 1913
சாரணர்
ஆங்கொர் முனிவ னருந்தவப் பல்குணந்
தாங்கிய மாமலை யன்ன தகையவன்
பூங்கமழ் சேவடிப் போதுதன் பொன்முடி
தாங்கிய தாம நுதியாற் றுடைத்தான். 1914
ஆற்றி லமைந்த வருந்தவத் தால்வினை
ஊற்றுச் செறித்த வொருபெயர் மாதவன்
மாற்றரு மந்திர வாய்மொழி யாயிடை
ஏற்றன கொண்டாங் கிறைவ னிருந்தான். 1915
அமைச்சர் வேண்டுகோள்
வணங்கி மணிமுடி மன்ன னிருப்ப
மணங்கமழ் கண்ணியர் மந்திர மாந்தர்
அணங்கு மறவமிழ் தூட்டி யடிகள்
பிணங்கும் பிறவிகள் பேர்த்துய்மி னென்றார். 1916
முனிவன் கூற்று
வன்ன மணிமுடி மன்ன னிருந்திட
இன்னியற் செல்வ மெனைப்பல வெய்திய
மன்ன னறியுந் திருவற மாண்பினை
என்னை வினவிய தென்னைகோ லென்றான். 1917
அமைச்சர் கூற்று
அடிக ளடிசி லமைந்த தயில்வான்
முடிய முயலு முறைமை யறியான்
நெடிதின துவறு நீர்மையு மோரான்
வடிவமர் செல்வன் வகையு மதுவே. 1918
முனிவன் செயல்
மந்திர மாந்தர் மொழிதலும் வானிடை
அந்தரம் வாழு மமரர் வழிபடும்
தந்திர ஞான்ற தவத்திற் கரசனும்
இந்திர னன்னாற் கெடுத்துரைக் கின்றான். 1919
முனிவர் உபதேசம்
கதியுங் கதியினுட் டுப்புமத் துப்பின்
விதிசெய் வினையும் வினைவெல் வகையு
மதியவர் காமுறும் வீட்டது மாண்பும்
அதிபதி கேளென் றருந்தவன் சொன்னான். 1920
ஓடுஞ் சகடத் துருளு மொளிகொள
வீடி லொருவன் விசிறும் வளையமும்
ஆடுந் துகளு மெனச்சுழன் றாருயிர்
நாடுங் கதியவை நான்குள கண்டாய். 1921
நரகர் விலங்கு மனிதர்நற் றேவர்
விரவி னவர்தம் விகற்ப முரைப்பிற்
பெருகு முரையென்று பெய்ம்மலர்த் தாரோன்
உருக வொருவா றுறுவ னுரைத்தான். 1922
நரகர் கதி
கீழா நரகங் கிளத்தும் படலங்கள்
ஏழா யிருபத் திரட்டியோ டொன்பது
போழா மவற்றுள் ளவர்கள் புகலிடம்
பாழா மிலக்கமெண் பஃதுட னான்கே. 1923
நரகங்களின் பெயர்
இருளி னிருளு மிருளும் புகையும்
அருளி லளறு மணலும் பரலும்
மருளின் மணியு மெனவிப் பெயர
பொருளி னரகங்கள் போதரக் கொண்ணீ. 1924
ஆங்க ணரக மடைந்தார் படுதுயர்
ஈங்க ணுரைப்பி னெமக்கும் பனிவரும்
வாங்கி யவற்றின் முதலதன் வார்த்தைகள்
பாங்கின் மொழிவன் பனிமலர்த் தாரோய். 1925
பத்தடம் பத்தொடு மூன்றா மவற்றிடை
ஒத்த வுறையு ளிலக்கமொர் முப்பது
கொத்தெரி வெம்பவர் கும்பிக் குழியவை
இத்துணை யென்பதொ ரெல்லை யிலவே. 1926
பேழைப் பிளவும் பிலத்தின் முகங்களும்
தாழிப் பதலையும் போலுந் தகையன
ஆழப் பரந்த வழுக லளறவை
பீழைப் பதகர் பிறக்கு மிடமே. 1927
வேதனைகள்
குழிபடு கும்பிக் கருவாய் பெருகி
அழுக லுடம்பிவை யங்கு நிறைந்தால்
வழுவி யனல்படு பாறைக் கண் வைகிப்
புழுவி னுருள்வ பொரிவ பொடிவ. 1928
புழுவி னுருண்டு பொடிந்தவர் பொங்கி
எழுவர் புகையைந் தெழுந்தபின் மீட்டும்
வழுவினர் வீழ்வர் மறிந்துமவ் வாறே
ஒழிவிலா வேதனை யுள்ளள வெல்லாம். 1929
அந்தோ வறனே வெனவழைப் பார்களை
வந்தோ மெனச்சொல்லி வாங்குபவ ரில்லை
வெந்தே விளிந்து மொழியார் விழுத்துயர்
முந்தே வினைய முயன்றனர் புக்கார். 1930
அன்னணம் வேதனை யெய்து மவர்களைத்
துன்னி யுளர்சிலர் தூர்த்தத் தொழிலவர்
முன்னதிற் செய்த வினையின் முறைபல
இன்னண மெய்துமி னென்றிடர் செய்வார். 1931
தங்கிருட் போதிற் றலைச்சென் றயன்மனை
அங்கு மகிழ்ந்தா ளவளிவள் காணெனச்
செங்கன லேயென வெம்பிய செம்பினில்
பொங்கனற் பாவைகள் புல்லப் புணர்ப்பார். 1932
கொள்ளு மிவையெனக் கூட்டில் வளர்த்ததம்
வள்ளுகிர்ப் பேழ்வாய் ஞமலி வடிவுகள்
அள்ளிக் கதுவ வலறி யயலது
முள்ளிற் புனைமர மேற முயல்வார். 1933
மேயப் பருவம் விரும்பிய மீனினம்
காயப் பெருந்தடி காண்மி னிவையெனத்
தீயைப் பருகிய செப்புத் திரளவை
வாயைப் பெருகப் பிளந்து மடுப்பார். 1934
மறிப்பல கொன்று மடப்பிணை வீழ்த்துங்
கறிப்பல வெஃகிக் கறித்தவர் தம்மை
உறுப்புறுப் பாக வரிந்தரிந் தூட்டி
ஒறுப்பர் சிலரை யவரு மொருபால். 1935
இடைப்பல சொல்லி யெளியவர் தம்மை
உடைப்பொருள் வெஃகி யொறுத்த பயத்தான்
முடைப்பொலி மேனியை முண்மத் திகையாற்
புடைப்ப நடுங்கிப் புரள்வ ரொருசார். 1936
வெறுப்பன வேசெய்து மேலா யவரைக்
குறிப்பல சொல்லிய நாவைக் கொடிற்றால்
பறிப்பர் பரிய வயிரமுட் கொண்டு
செறிப்ப ருகிர்வழி யேறச் சிலரே. 1937
பொரிப்பர் சிறைசெய்து பொங்கெரி மாட்டிக்
கரிப்பர் கனல்படு காரக லேற்றித்
திரிப்பர் பலரையுஞ் செக்குர லுட்பெய்
துரிப்ப ருடலை யவரு மொருபால். 1938
பழுப்பல பற்றிப் பறிப்பர் பதைப்ப
மழுப்பல கொண்டவர் மார்பம் பிளப்பர்
கழுப்பல வேற்றி யகைப்பர் கடிதே
விழுப்பெரும் பூணோய் வினையின் விளைவே. 1939
பறிப்பர் பலரவர் கைகளைப் பற்றிச்
செறிப்பர் விரல்களைச் சீவுவர் மேனி
நெறிப்ப ரெலும்பு நிரந்துடன் வீழ
மறிப்பர் மலைமிசை மற்று மொருசார். 1940
சாவ நலிந்திடுந் தண்ணீர்ப் பிணிபெரி(து)
ஆவென் றலறு மவரையரு நஞ்சின்
வாவிகள் காட்டலின் மண்டி மடுத்துண்டு
நாவு மழுக நரல்வ ரொருசார். 1941
அழலிவை யாற்றோ மெனவழன் றோடி
நிழலிவை யாமென நீள்பொழிற் புக்கால்
தழல்வளி தாமே தலைவழி சிந்தக்
கழல்வனர் வீழ்ந்து கரிவ ரொருசார். 1942
முல்லை முகைமலர்த் தாரோய் முதற்புரை
அல்ல லெனைப்பல வாயிர கோடிகள்
எல்லையி றுன்ப மிவற்றி னிருமடி
புல்லினர் கீழ்க்கீழ்ப் புரைபுரை தோறும். 1943
விளிவி றுயரொடு மேற்பொங்கி வீழும்
அளவு மவர்கண் முறையும் பிறவும்
அளவில் கீழ்க்கீ ழிரட்டி யறைந்தேன்
உளரொளி ஞானமஃ தொன்று மொழித்தே. 1944
பெய்யா வருநஞ்சும் பேரழற் குட்டமும்
செய்யாக் குழிகளுஞ் சீநீர்த் தடங்களும்
நையா நரக ரிடமிவை நாறினும்
உய்யா பிறவுயி ரோசனைக் கண்ணே. 1945
எழுவின் முழமூன் றறுவிர லென்ப
வழுவின் முதலதன் கீழ்ப்புரை வாழ்வார்
ஒழிவில பொங்குவ ரோசனை யேழ்மேன்
முழுவிலைஞ் ஞூற்றொடு முக்கா வதமே. 1946
ஆண்டுச் சிறுமை பதினா யிரமுள
நீண்டவர் வாழ்நா ணிறைவு கடலெல்லை
ஈண்டிதன் கீழ்க்கீழ்ப் பெருகிவரு மெங்கும்
வேண்டிற் சிறுமைதம் மேலோர் நிறைவே. 1947
மூன்று மொரேழு மொழிபஃதும் பத்தினோடே
ஏன்ற நல்லேழு மிருபத் திரண்டுமென்
றான்ற வலைகடன் முப்பத்து மூன்றுமென்
றூன்றின கீழ்க்கீ ழுயர்ந்தன வாழ்நாள். 1948
முடைகொண் முழுச்செவி மொண்பற் பதகர்
உடையந் தலியிருப் புண்பது நஞ்சே
புடையவர் காணிய போர்நனி மூட்ட
மிடைவர் படுகொண்டு வேதனை மிக்கார். 1949
வேவா ரழலுள் விளியா ரளற்றினுள்
ஓவார் புகையு ளுகையா வுழல்பவர்
ஆவா வளிய நரகர் படுதுயர்
ஏவார் சிலையா யிரங்குந் தகைத்தே. 1950
ஆங்குண் டெனப்படு மாழ்துயர் வீழ்பவர்
தேங்கொண்ட பைந்தார்த் திறன்மன்ன யாரெனில்
தாங்கொண்ட தார மறுத்துப் பிறன்வரைப்
பூங்கொண்டை மாரைப் புணரு மவரும். 1951
உள்ளங் கொடியா ருயிர்க்கொலை காதலர்
வெள்ளங் கொடியன மேவிப் பிறன்பொருள்
கொள்ளுங் கொடுமைக் குணத்தின் மனித்தரும்
நள்ளலர்ச் சாய்த்தோய் நரக மடைவார். 1952
நல்லறங் காய்ந்து நலிந்து பொருள்படைத்
தில்லறஞ் செய்யா திறுகு பவர்களும்
புல்லறம் புல்லாப் புலவரை வைதுரைத்
தல்லறஞ் செய்யு மறிவில் லவரும். 1953
தெண்டிரை வாழுந் திமிலுங் கலங்களுங்
கொண்டிரை யாகவுயிர் கொல்லுஞ் சாதியும்
கண்டிடு காதனை நின்னாற் செயப்படும்
தண்டிக டம்மொடுஞ் சார்த்தினை கொண்ணீ. 1954
ஆறா நரக வழலினு ளாழ்பவர்
தேறார் திருவறந் தேறினு நல்வத
மேறார் சிலர்நனி யேறினு நில்லலர்
வேறா யினிச்சொல்ல வேண்டுவ துண்டோ. 1955
விலங்குகதித்துன்பம்
விலங்குடன் சாதி விரிப்பிற் பெருகும்
உலங்கொண்ட தோண்மன்ன வோரறி வாதி
புலங்கொண்ட வைம்பொறி யீறாப் புணர்ந்த
நலங்கொண்ட ஞாலத்தி னாடி யுணர்நீ. 1956
நின்று வருந்து நிகோதப் பிறவியுள்
ஒன்றறி வெய்தி யுழக்கு முயிர்பல
அன்றிச் சிறிதுண் டவற்றினு மவ்வழிச்
சென்று பெயர்வ சிலவுள கண்டாய். 1957
ஓரறி வாகி யுழக்கு முயிர்களைப்
பேரறி வாரும் பிறரில்லை யின்னவை
யாரறி வாரழி யுந்திறம் யாதெனில்
கூரறி வில்லவர் கொன்றிடு கின்றார். 1958
உயிர்தொகை யாறனு ளொன்றொழித் தேனைப்
பெயர்த்தொகை பெற்ற பிறவிக டம்மைப்
பயிர்த்தலு மின்றி யுலகம் பதைப்பச்
செயிர்த்தவர் போலச் செகுத்திடுங் கண்டாய். 1959
ஏனை யொழிந்த வியங்குநற் சாதிகள்
ஆனை முதலா வளிய விலங்குகள்
மானுடர் பற்றி வலிந்து நலிந்திட
ஊனெய் யுருகு முழக்கு மொருபால். 1960
ஊர்ந்து முழுது முறுபார மேந்தியும்
சாய்ந்த விலங்குக டாளுடைந் தாழ்தர
வீர்ந்து மறுத்து மிறைச்சி யுவப்பவர்
தேர்ந்து செகுப்பவுந் தேயுஞ் சிலவே. 1961
தடிவிலை வாழ்நர் தடிந்திடப் பட்டு
முடிவிலை வாழ்நர் முருக்க முரிந்தும்
கொடுவி லெயினர்கள் கொல்லக் குறைந்தும்
விடலில வேதனை வேந்த விலங்கே. 1962
அந்தோ வளிய விலங்குகள் யார்கண்ணும்
நொந்தோ மெனச்சென்று நோக்கி னுனிப்பொடு
வந்தோ மெனநின்ற மாண்புடை யார்களும்
உய்ந்தோய்ந் தொழிய முயன்றிடு கின்றார். 1963
முனிவரே அறிபவை
கன்னியர் வேட்கை கடவு ளரும்பிணி
துன்னிய துன்ப விலங்கின் சுடுதுயர்
என்னு மிவற்றினை யெம்போல் பவரன்றி்
மன்ன வறிபவர் மற்றில்லை மன்னோ. 1964
வலிய முழங்கினு நாறினும் வட்கி
நலியு மிவை யென நையு மொருபால்
பலிபெறு தெய்வங்கண் மேலிட்டுப் பாற்றும்
கலியவர் கையுட் கழியு மொருபால். 1965
கண்களி னோக்கியுங் காதலி னுள்ளியும்
மண்க ளிடைவிட்டு வைகியும் புல்லியும்
தண்கமழ் தார்மன்ன தாயர் வளர்ப்புழி
எண்களை யின்றிட ரெய்து மொருபால். 1966
இன்னன துன்பமோ டிவ்விலங் காகுநர்
என்னவ ரென்னி னிவைநனி கேளினி
மன்னிய மாதவ மேற்கொண்டு மாயங்கள்
பின்னை முயல்வார் பிறப்பு மதுவே. 1967
பொருளிடை மாயம் புணர்த்தும் பிறரை
மருளிக ளாக மயக்கு மவரும்
இருளுடை யுள்ளமொ டேதங்க ளெண்ணா
அருளி லவரு மவைநனி யாவார். 1968
பற்றொடு பற்றி முனிந்தார் பலபல
செற்ற நவின்றார் செறுப்பொடு சென்றவர்
சுற்ற மழிக்குந் துவர்ப்பகை துன்னினர்
மற்றிவ் விலங்கெய்து மன்னுயிர் மன்னா. 1969
இல்லையுயி ரென்று மில்லைபிறப் பென்று
நல்லன தீயன நாடி லிலவென்றும்
பல்லன சொல்லிப் படுத்துண்ணும் பாவிகள்
நில்லாது செல்வர் நிகோத கதியே. 1970
மக்கட்கதி
மாக மழைவண்கை மன்னவ மக்களும்
மேக கதியின ரநேக விகற்பினர்
சேகர் மிலைச்சர் மனிதர் கடிப்பியர்
போக மனித ரெனப்பொருட் பட்டார். 1971
சேகர்
பத்து வகைய பரதவி ரேவதத்
தத்தகு கால விழிவி னகத்தவர்
சித்தந் தெளிவிலர் சீல மடைவிலர்
செத்த வறிவினர் சேக ரவரே. 1972
மிலேச்சர்
தீவினுள் வாழுங் குமானுடர் தேசத்து
மேவி யுறையு மிலைச்ச ரெனப்பெயர்
ஆவ ரவருண் மிலைச்ச ரவரையும்
வீவருந் தாரோய் விலங்கினுள் வைப்பாம். 1973
வாலு நெடியர் வளைந்த வெயிற்றினர்
காலு மொரோவொன் றுடையர் கலையிலர்
நாலுஞ் செவியர் நவைசெய் மருப்பினர்
சீல மடைவிலர் தீவினுள் வாழ்வார். 1974
மக்கட் பிறப்பெனு மாத்திர மல்லது
மிக்க வெளிற்று விலங்குக ளேயவர்
நக்க வுருவினர் நாணா வொழுக்கினர்
தொக்கனர் மண்ணே துளைத்துண்டு வாழ்வார். 1975
பூவும் பழனு நுகர்ந்து பொழின்மரம்
மேவி யுறையு மிலைச்சர் மிகப்பலர்
ஓவலர் வாழ்வ தொருபளி தோபமென்
றேவல் சிலைமன்ன வெண்ணி யுணர்நீ. 1976
மனிதர்
தேச மிலைச்சரிற் சேர்வுடை யாரவர்
மாசின் மனிதர் வடிவின ராயினும்
கூசின் மனத்தர் கொடுந்தொழில் வாழ்க்கையர்
நீச ரவரையு நீரி னிழிப்பாம். 1977
கூடன் மிலைச்சர் குமானுட ரென்றிவர்
ஏடவிழ் தாரோ யெவரா பவரெனில்
கோடிக் குதர்க்க முரைத்துக் குணங்களை
நாடினர் கொள்ளா நலமி லவரும். 1978
அடங்கா மரபி னவர்கட் கடங்கார்
விடங்கார் மணந்த விடக்கும் பிறவும்
உடங்காய்ந் துணக்கொடுப் பாரு முயர்ந்தோர்
தொடங்கா வினைக டொடங்கு மவரும். 1979
அன்ன பிறவியு ளாங்கவ ராபவர்
இன்னுஞ் சிலவ ரிழிகதிப் பாற்பட்டுத்
துன்னிய போழ்தே சுருங்கி யொழிபவர்
என்னும் பிறர்க ளறிவிற் கிகந்தார். 1980
மக்கள் வதியு மிரண்டரைத் தீவினுள்
தக்க நிலத்துப் பிறந்தவர் தம்முளும்
முக்குலத் தாரொடுங் கூடா முயற்சியர்
ஒக்கலைப் போல்வார் பலரு முளரே. 1981
முக்குலத் தாரொடு மூடத் தொழுதியர்
தக்க தகாவென்ப தோராத் தகையவர்
மக்க ளெனப்படு வாரலர் மற்றவர்
பக்கங் கிடக்கும் பதரெனக் கொண்ணீ. 1982
நல்ல நிலங்க ணலங்கொள் வடிவுகள்
இல்லை யமர்ந்துழித் தோன்ற லெனவிவை
எல்லையில் யோனிக ளெல்லா மிகந்தெய்தல்
அல்லியந் தாரோ யரிது பேரிதே. 1983
அண்ணை யலிகுரு டாதி யவர்களை
மண்ணுயர் ஞாலத்து மானுட ராகவைத்
தெண்ணுநர் யாருள ரெல்லா மமையினும்
பெண்ணின் பிறவியும் பீடுடைத் தன்றே. 1984
எண்பத்து நான்கெனு நூறா யிரமுள
பண்பொத்த சாதிப் பதமென்ப மற்றவை
கண்பற்றுந் தாரோய் களிப்பதொர் நல்வினைத்
திண்பற் றுடையவ ரிவ்வுடல் சேர்வார். 1985
சார்ந்த பொழுதே தலைநாட் கருவினுள்
வார்ந்து வழுவா தமைந்து வளரினும்
மீர்ந்தண் கமழ்நறுந் தாரோ யிடர்பல
கூர்ந்து வருபயாங் கூற வுலவா. 1986
குழவி யருஞ்சுரஞ் சென்று குமர
வழுவ வடவி யரிதி னிகந்தால்
கிழவெனு மெல்லை கெழீஇயினர் சார்ந்து
வழுவினர் செல்வது மற்றோர் கதியே. 1987
மனித வின்பம் தாழ்ந்தது
யானை துரப்ப வரவுறை யாழ்குழி
நானவிர் பற்றுபு நாலு மொருவனோர்
தேனெய் யழிதுளி நக்குந் திறத்தது
மானுய ரின்ப மதித்தனை கொண்ணீ. 1988
அன்பும் பிறவு மமைந்தாங் ககத்திருந்
தின்பங் கருது மிருவர்க் கிடைபல
துன்பங்க டோன்றுந் தொடர்ப்பா டுளவெனில்
முன்பவை யில்லெனின் முற்றுந் தொழிலே. 1989
நன் மாண்பு
இன்ன நிலைமை யிதனுட் பிறந்தவர்
மன்னுமொன் றுண்டு வதத்தாற் பெறுவது
பொன்னியல் சேர்கற்ப போக நிலங்களிற்
துன்னு முயற்சி துணியுந் திறமே. 1990
முயற்சி துணி திறம்
துன்னு முயற்சி துணியுந் திறமவை
பன்னி யுரைப்பிற் பலவாய்ப் பெருகினும்
தன்னிய றானந் தவமொடு பூசனை
என்னுமிந் நான்கென வெண்ணி யுணர்நீ. 1991
தலையு மிடையுங் கடையுமாச் சாற்றும்
நிலைமைய தான நிழன்மணிப் பூணோய்
உலைவி லேற்போ னுடனீ பவனீயும்
மலைவில் பொருளின்ன மாட்சிய மன்னா. 1992
ஐமை யமைந்தார்க் கெழுமை யமைந்தவர்
இம்மை நினையா ரிமைபத மீவழி
மும்மைக்கு மும்மடங் காய முறைமையில்
பொய்ம்மையில் புண்ணியம் போர்க்கும் புகுந்தே. 1993
இரப்போர்
துறவி யடக்கை பிறர்க்குநன் றாற்றல்
உறவினர்க் கோம்புதன் மெய்த்தலைப் பாடென்
றறிவ ரறைந்தாங் கறைந்தனன் றானங்
குறைவில னேற்பவற் கேற்ற குணனே. 1994
வள்ளல்
போதிசை வாற்றல் பொன்றுதறு கட்பம்
ஈதற் கிவறுத லேற்பவர் மாட்டெழு
காதல் கழிபற்றி லாமை தெரிந்தறி
வேதமின் றீவான் குணமிவை யேழே. 1995
தன்னியல்
தானு மடங்கி யடங்கினர்க் கேந்திய
ஊன முயிர்களுக் கெல்லா முணர்வது
ஞான வொழுக்கம் பெருகு நலத்ததை
ஈனமி லின்ப நிலங்கட் குவித்தே. 1996
கடைநின் றவருறு கண்கண் டிரங்கி
உடையதம் மாற்றலி லுண்டி கொடுத்தோர்
படைகெழு தானையர் பல்களி யானைக்
குடைகெழு வேந்தர்க ளாகுவர் கோவே. 1997
பொருள்
ஊறுபல செய்துயிர் கட்கிடர் செய்யும்
வீறில் பொருளை வினையவர்க் கீந்தவன்
ஏறும் பயனிஃ தென்றினி யான்சொல்லி
நாறிணர்த் தாரோய் நகுவ துடைத்தே. 1998
தன்கைப் பொருளு மிழந்து தனக்கொரு
புன்கட் கதிசெல்லும் வாயில் புணர்ப்பவன்
வன்கட் பதகர்க்கு வான்பொருள் கைக்கொடுத்
தென்கைப் பணிகொண்மி னென்பவ னொத்தான். 1999
தானப்பயன்
ஒத்த குணங்க ளமைந்தாங் குறுவர்க்குத்
தத்துவந் தேறி யவன்செய்த தானங்கள்
முத்திறத் துள்ளும் படாது முடிமன்ன
உத்தம தேவரு ளுய்க்கு முணர்நீ. 2000
மிக்க விரதம் விரிபல வாயினும்
தொக்கன வைந்திற் சொலுமூன்றி னான்கினில்
ஒக்க வவற்றி னுறுபயஞ் சொல்லிடில்
தக்கவர்க் கொத்ததிற் றன்னங் குறைவே. 2001
விரதம்
எல்லா விரத மியல்பொக்கு மாயினும்
அல்லா விரத மனையா யவர்கட்குக்
கொல்லா விரதங் குடைமன்ன வாமெனின்
வெல்லா வகையில்லை வீங்கெழிற் றோளாய். 2002
தவத்தின் இயல்பு
தம்மை யுடையவர் தாங்குந் தவத்தியல்
எம்மை வினவி னெமக்கு முரைப்பரி
தும்மையுலகத் தொளிபடு மூக்கமோ
டிம்மை யிகந்தார்க் கிசையு மதுவே. 2003
தவஞ்செய்து வந்தார் தவநிலை நிற்பார்
அவஞ்செய்து வந்தார்க் கரிது பெரிதும்
பவஞ்செய்து மாக்கள் பரியு மதுதான்
எவன் செய்து மென்னை யீர்மலர்த் தாரோய். 2004
தெருண்டவர் மேற்கொளுஞ் செய்தவச் செல்வம்
இரண்டும் பலவு மியலாய்ப் பெருகு
மருண்டினி யென்னவை வந்த பொழுதே
முரண்டரு தோண்மன்ன முற்ற வுணர்நீ. 2005
பூசனைப்பயன்
உலகங்கண் மூன்று முடைய பெருமாற்
கலகையில் பூசனை யாற்ற முயன்றால்
திலக மிவரெனத் தேவர்க ளாவர்
விலகுஞ் சுடரொளி வீங்கெழிற் றோளாய். 2006
புண்ணிய வாயில் ஏழ்
புண்ணிய வாயி லெனநாம் புகழ்ந்துரை
கண்ணிய நான்கா யடங்கு மடங்கினும்
நுண்ணிய நூல்வழி நோக்கி நுனித்தவர்
எண்ணிய வாயில்க ளின்னு முளவே. 2007
அருளுந் தெருளுங் குணத்தின்க ணார்வமும்
பொருளொன்று சேரும் புகழ்ச்சி நிகழ்வும்
மருளி றவமும் வாலிய ஞானமும்
இருளறு தியான நிகழ்வுமென் றேழே. 2008
அருள்
ஆருயிர் யாதொன் றிடருறு மாங்கதற்
கோருயிர் போல வுருகி யுயக்கொள்ள
நேரி னதுமுடி யாதெனி னெஞ்சகத்
தீர முடைமை யருளி னியல்பே. 2009
தெருள்
வையினும் வாழ்த்தினும் வாளா விருப்பினும்
வெய்ய முனிதல் குளிர்தல் வெறுப்பொடு
மையன் மும் மூடப் பகுதி மயக்கின்மை
செய்ய மனத்தோர் தெருளின் றிறமே. 2010
குணத்தின்கண் ஆர்வம்
அறிவ ரடிமுத லார்வம் பெருக்கல்
உறுவ ரொழுக்க முவத்தன் முதலா
இறுதியில் பல்குண நோக்கமென் றின்ன
செறிதலி லார்வங்கள் செல்வந் தருமே. 2011
புகழ்
ஆற்றல் வகையா லருந்தவ மேற்கொண்டு
நோற்று நுனித்த லொழுக்கந் தலைநிற்றல்
போற்றி யுரைத்தல் புகழ்ச்சி நிகழ்விஃ
தேற்று மிருவிசும் பீர்மலர்த் தாரோய். 2012
தவம்
அற்ற துவர்ப்பின ராகு மருநிலை
உற்றவர்க் கிவ்வா றொழுக்கந் தலைநிற்றல்
நற்றவ மென்றிங்கு நாங்கண் மொழிந்தது
மற்றிது வானுல காள்விக்கு மன்னா. 2013
ஞானம்
நூற்பொருள் கேட்டு நுனித்தோ ருணர்வது
மாற்படை கூட்டு மயங்கிரு டீர்ப்பது
மேற்படை மெய்ம்மை விளக்கும் விளக்கது
நாற்படை யோய்நல்ல ஞான நிகழ்வே. 2014
தியானம்
சென்று பெருகுந் தியான நிகழ்ச்சியும்
ஒன்ற வுரைப்பி னொருநால் வகைப்படும்
நன்றியின் மாற்றினை நல்குமிரண் டல்லன
வென்றி விசும்பொடு வீடுந் தருமே. 2015
போற்றிய புண்ணியப் பொற்சுண்ண முன்புகழ்
வாற்றி முயல்வார்க் ககநிகழ் வாமவை
மாற்றிய வற்றை மறுதலை யாக்கொளிற்
பாற்றி யுழப்பிக்கும் பாக நிகழ்வே. 2016
காட்சி யெனும்பெயர்க் கதிர்விளக் கேற்றிய
மாட்சி யுடையார் வதமில ராயினும்
ஆட்சி கரிதன் றமருல கல்லது
மீட்சியில் பேரின்ப வெள்ளத் துழவே. 2017
மெய்ப்பொரு டேறுதல் காட்சி விளக்கது
செப்படு மாயின் வினையெனுந் தீயிருள்
அப்படி மானு நிலையன் றதனைநின்
கைப்பொரு ளாக்கொள் கதிர்மணிப் பூணோய். 2018
தெய்வ மனிதர்
தெய்வ மனித ரவரைத் தெளிவுறின்
ஐய விசயனு மாழி வலவனும்
எய்த விவர்முத லீரொன்ப தின்மரிவ்
வைய மருள வருந ருளரே. 2019
பிரதி வாசுதேவர்
ஆழி யிழந்த வயகண்ட னாதியாப்
பாழி வலவன் பகைவர்மும் மூவரும்
வீழ வுரைத்தேன் வியன்பெரு ஞாலத்துள்
ஊழிதொ றூழி யுலப்பில கண்டாய். 2020
சக்கரவர்த்திகள்
தேய வினைவெல்லுந் தெய்வ மனிதருள்
நீயு மொருவனை நின்குலத் தாதிக்கட்
பாய விழுச்சீர்ப் பரதனை யுள்ளுறுத்
தாய திகிரி யவரு மவரே. 2021
தீர்த்தங்கரர்
தீர்த்தஞ் சிறக்குந் திருமறு மார்பரும்
பேர்த்துப் பிறவாப் பெருமை பெறுநரும்
ஓர்த்திவ் வுலகினு ளுத்தமர் மற்றவர்
தார்த்தங்கு மார்ப தவத்தின் வருவார். 2022
போக மனிதர்
வேறு
தக்கமிகு தானமுத லாயதலை நிற்கும்
மக்களிவ ராவர்மத யானைமற வேலோய்
புக்கவரு ளேபடுவர் போகநிலஞ் சார்ந்தார்
ஒக்கவவர் தன்மையு முரைக்கவுல வாவே. 2023
உத்தமர்க ளேனையிடை யோர்கள்கடை யோராம்
முத்தகைய ராவரவர் மூரிநெடு வேலோய்
பத்துவகை பாதவ மியற்றிய பயத்தால்
அத்தகைய செய்கையு மவர்க்கனைய கண்டாய். 2024
அங்கிருவர் தம்பதிகள் செய்கையை யறைந்தால்
இங்கிருவர் செய்கைதமை யெண்ணியறி வாய்நீ
தங்குரவ ரோடிருவர் மாறிருவர் தாமாய்
இங்கிருவர் தேவர்கள் வளர்ப்பவியல் கின்றார். 2025
நக்ககுழ விப்பருவ நாற்பதினொ டொன்பான்
ஒக்கவரு நாள்கள்கலை யோடுட னிறைந்தால்
மிக்கவொளி சூழ்ந்துமிளிர் மேனியவ ராகித்
தக்கவிள மைப்பருவ மெய்தினர்க டாமே. 2026
கொம்பழகு கொண்டகுழை நுண்ணிடை நுடங்க
வம்பழகு கொண்டமணி மென்முலை வளர்ந்தாங்
கம்பவழ வாயுளணி முள்ளெயி றிலங்கச்
செம்பவழ மேனியவள் கன்னிமை சிறந்தாள். 2027
நீலமணி கண்டனைய குஞ்சிக ணிறைந்தான்
ஞாலமளி கொண்டநளிர் தாமரை முகத்தான்
கோலமணி மால்குவடு குங்கும மடுத்தால்
போலுமணி மேனியொடு காளை பொலிவுற்றான். 2028
தாதுபடு சண்பக மிகந்த நறுமேனிக்
காதுபுனை காமர்குழை பொற்சுருளை மின்ன
மீதுபடு கற்பக விளந்தளிர் மிலைச்சிப்
போதுபுனை கோதையவள் பூம்பொழி லணைந்தாள். 2029
பவழவரை யன்னதிர டோட்பரவை மார்பன்
றவழுமணி யாரமொடு தார்மணி தயங்கக்
கவழமனை மேவுகளி யானையென வந்தாங்
கவிழுமல ரீர்ம்பொழிலு ளையனு மணைந்தான். 2030
கன்னியவள் மேலிளைய காளையிரு கண்ணும்
மன்னுகமழ் தாமரையின் வாயித ழலங்கல்
பின்னியென வீழ்ந்த பிணை யன்னவவள் கண்ணும்
துன்னுமிரு நீலமென வந்தெதிர் துதைந்த. 2031
நையுமென நின்றவிடை யாள்குணமோர் நான்கும்
வையமகிழ் காளையிவன் மாண்டகுண நான்கும்
ஐயென வகன்றன வணைந்தனர் கனிந்தார்
மெய்யுமிடை வுற்றவிது வால்விதியின் வண்ணம். 2032
அன்றுமுதன் மூன்றளவு மல்லமுடி காறும்
சென்றுபெரு கிக்களி சிறந்துநனி காமம்
என்றுமிடை யின்றியிமை யாரினுகர் வார்க்கு
நின்றது பிராயமது வேநிழலும் வேலோய். 2033
போகநிலம்
கங்குலவ ணில்லைகலி யில்லைநலி வில்லை
அங்கவர்க ணாளிடைக ழித்தமிழ் தயின்றால்
எங்குமில வின்பவெழி லெய்தறரு மீதால்
தங்கிய தவத்தரசர்க் கீந்தபயன் றானே. 2034
அன்னமிகு போகமவ ரெய்திவிளை யாடி
முன்னமுடி பல்லமவை மூன்றுடன் முடித்தால்
பின்னுமவர் தம்வழி பிறந்தவரை நோக்கி
மின்னுமினி தேறுவது வானுலக மன்னா. 2035
பல்லமுத லோர்பகுதி மூன்றிரண்டு மொன்றும்
அல்லவிரு வர்க்க மிழ்து மம்முறையி னேறும்
நல்லநிலங் காலமுயர் வென்றிவைக ணாடிச்
சொல்லவுல வா விவர்கள் செய்கைசுடர் வேலோய். 2036
செம்பவழம் வெண்பளிங்கு பைந்தளிர் சிறக்கும்
வம்பழகு கொண்டமணி மேனியவர் பூவார்
கொம்பவிழுஞ் சண்பகங்கண் முல்லையிணர்க் கோங்கம்
அம்பவழ வண்ண முதலானவர்மெய் நாற்றம். 2037
நலங்கண்மிகு நம்முலகி னன்மைமிகு நீரால்
புலங்கண்மிகு போகமொடு போகநிலத் துள்ளால்
விலங்கொடுள வாழ்பறவை யவ்வுடம்பு விட்டால்
கலங்கண்மிகு கற்பநில மேறுவன கண்டாய். 2038
தேவர்கதித் துன்பம்
வேறு
பூவிரியு நறுமேனிப் பொன்னிலங்கு நிமிர்சோதித்
தேவர்கடந் திறமுரைத்த றேவருக்கு மரிதெனினும்
நாவிரவி நாமுரைப்ப நால்வகையாய் விரியுமவை
ஓவரிய பெரும்புகழா யொருவகையா லுரைப்பக்கேள். 2039
ஈரைவர் பவணர்களு மிருநால்வர் வியந்தரரும்
ஒரைவர் சோதிடரு மொருபதின்மே லறுவரெனுங்
காரைய முறுவகையாய் கற்பகரு மீயுலகிற்
சீரைய மில்லாத திருமலர்த்தார்த் தேவரே. 2040
உற்றவர்க்கு மேலவர்க ளொன்பதின்ம ரொன்பதின்மர்
மற்றவர்க்கு மேலவரை வகையரவர் மேலவர்கள்
இற்றவர தெண்வகையா மிவர்க்கென்று மில்லாத
செற்றநோய் செயிர்பகையென் றிவைமுதலசெல வுணர்நீ. 2041
பவணர்
அருமணியி னொளிநிழற்று மாயிரமாம் பணமணிந்த
திருமணிசேர் முடியவருந் தீயொழுகு சிகையருமாப்
பருமணிய படலஞ்சேர் பவணத்துப் பதின்மர்கெளாண்
குருமணிகொ ணெடுமுடியாய் கூறுபா டுடையவரே. 2042
வியந்தரர்
கின்னரர்கண் முதலாய வியந்தரரைக் கிளந்துரைப்பின்
இன்னநர ருலகத்து ளெவ்வழியு முளராகி
மென்னரம்பி னிசைகேட்டும் வெறியயர்வு கண்டுவந்தும்
மன்னவரை வணங்கியுந்தம் மனமகிழ்வ ரொருசாரார். 2043
குலகிரியு மலையரசுங் குளிர்பொழிலு நளிர்கயமும்
பலகிரியுந் தீவகமும் படுகடலும் படிநகரும்
உலகிரிய வெளிப்பட்டு மொளிகரந்து முறைந்தியல்வர்
அலகிரியும் பலகுணத்தோ யமரர்களே னைப்பலரே. 2044
சோதிடர்
சந்திரருஞ் சூரியருந் தாரகையு நாண்மீனும்
வெந்திறல கோட்களுமா மெனவிளங்கி விசும்பாறா
மந்தரத்தை வலஞ்சூழ்ந்து வருபவரு நிற்பவரும்
சுந்தரஞ்சேர் மணிமுடியாய் சுடர்பவருஞ் சோதிடரே. 2045
எண்ணியமுத் தேவர்களு மிவர்மடந்தை யவருமாய்க்
கண்ணியறூ நற்காட்சிக் கதிர்விளக்குத் தூண்டினார்
நண்ணுபவோ வெனினண்ணார் நல்விரதந் தலைநின்று
புண்ணியங்கள் படைத்தாரக் குழுவினிடைப் பொலிவாரே. 2046
காதலரிற் பிழையாராய்க் கள்ளூன்றேன் கடிந்தகற்றி
ஈதலோ டில்லிருக்கு மிளம்பிடியர் முதலாயார்
ஓதினமுத் தேவரா யுயர்ந்தவர்க்கு ளுயர்ந்துளராய்ச்
சோதியும்பே ரெண்குணனுந் துப்புரவுந் துன்னுவரே. 2047
கற்பகர்
மந்தரமா நெடுமலையின் மத்தகத்து மேற்கூற்றின்
அந்தரப்பே ருலகத்து ளமரரைமற் றறையுங்கால்
இந்திரவில் லெனவெளிப்பட் டிமையவர்க டொழுதேத்தச்
சுந்தரநன் மணிப்படிவ மெனச்சுடர்ந்து தோன்றுவரே. 2048
அலர்மாரி மேற்சொரிவா ரமிழ்தநீ ராட்டுவார்
பலர்மாண்ட கலனணிந்து பலாண்டிசைப்பார் பாடுவார்
மலர்மாண்ட மணிக்கவரி மருங்கசைப்பார் மடந்தையரைச்
சிலர்மாணச் சேர்த்துவார் தேவரா யதுபொழுதே. 2049
ஆடாது மொளிதிகழு மாரணங்கு திருமேனி
வாடாத கண்ணியினர் மழுங்காத பூந்துகிலர்
ஏடார்ந்த தொங்கலரா யின்பநீர்ப் பெருவெள்ளம்
நீடாரக் குளித்தாடு நிலைமையரே யவரெல்லாம். 2050
பொன்மாட நெடுநிலத்தார் புகலமளி யணைமேலார்
கன்மாடு பொன்வளருங் கதிர்மணிக்குன் றதன்மேலார்
மின்மாடு மிளிர்ந்திலங்கு விமானத்தா ரெனினல்லால்
சொன்மாடு பிறிதில்லைச் சுவர்க்கஞ்சேர்ந் தவர்கட்கே. 2051
கந்தருவக் கோட்டியுள்ளார் கண்கனிய நாடகங்கண்
டிந்திரனோ டினிதினிருந் திளம்பிடியார் பாராட்டச்
சுந்தரமா மணிமாடச் சூளிகைய ரெனினல்லால்
அந்தரமேற் பிறிதில்லை யமரருல கடைந்தவர்க்கே. 2052
கந்தாரங் களித்தனைய பனிமொழியார் கண்கவர
மந்தார வனத்திடையார் மணிமுழவி னிசைவாங்க
மந்தார மணியரங்கி னெனும்வார்த்தை யவையல்லாற்
செந்தாரோய் தேவர்கள் செய் திறற்றொழின்மற் றுடையரே. 2053
தீர்த்தங்க டிறந்தவர்க்குச் சிறப்போடு திசையெல்லாந்
தேர்த்தங்க ணொளிபரப்பச் செல்பொழுதுந் தம்முலகில்
கார்த்தங்கு மயிலனையார் காமஞ்சேர் கனிகோட்டி
தார்த்தங்கு வரைமார்ப தம்முருவி னகலாரே. 2054
இமையாத செங்கண்ண ரிரவறியார் பகலறியார்
அமையாத பிறப்பறியா ரழலறியார் பனியறியார்
சுமையாகி மணிமாலை சுடர்ந்திலங்கு நெடுமுடியார்
அமையாத நல்லுலகி னகைமணிப்பூ ணமரரே. 2055
தேவர் குணஞ் செய்தல்
அணுவளவாய்ச் சிறுகுதன்மற் றதிநுட்ப மிகப்பெருகல்
நணியவர்போ னினைத்துழியே நண்ணுறுதல் விழைதகைமை
பணியினமைத் திடல்குறிப்பிற் பலவுருவு நனிகோடல்
துணிவமையு நெடுவேலோய் சுரருடைய குணங்களே. 2056
தேவர் அடையும் துன்பம்
அளிதருஞ்செங் கோலுடையோ யமரருக்குமந்தரமுண்
டொளியோடு பேரின்ப முயர்ந்தவர்க்கே யுயர்ந்துளவாம்
தெளிதரு நற் காட்சியது திருந்தியமே னெடுந்தகையோர்க்
கெளிதகவும் பெரும்பாலும் பெறலேனோர்க் கரியவே. 2057
கனைகதிராக் கதிர்கலந்து கண்ணிலங்கு திருமூர்த்தி
புனைகதிரொண் மணிப்படிவம் பொழிந்ததுபோற் பொலிந்ததன்மேல்
வனைகதிரின் மணிமுடியும் மாணிக்கக் கடகமுமென்
றினமுதலாச் சிடர்ந்தினிதி னியல்பாய்நின் றெரியுமே. 2058
செழுந்திரட்பூம் பாவைகளுந் திகழ்மணியின் சுடர்க்கொழுந்தும்
எழுந்திலங்கு மேனியரா யெரியுமணிக் கலந்தாங்கி
மொழிந்துலவாக் காரிகையார் முலைமுற்றா விளமையார்
அழிந்தலராக் காரிகைமா ரமரரசர் தேவியரே. 2059
இன்பமே பெரிதாகி யிடையறவின் றிமைப்பளவும்
துன்பமொன் றில்லாத துறக்கத்திற் பெருஞ்செல்வம்
மன்பெருமா தவத்தினால் வருமொருநா ளீறுடைய
தன்பதன்கண் மிசையேயென் றடிகடரு பொரு டெளிந்தார். 2060
பவணத்தார்க் கொருகடலா மிகையமரும் பல்லமொன்றாம்
இவணொத்த வமரருக்கு மிருவிசும்பிற் சுடரவர்க்கும்
சிவணொத்த வுயர்வாழ்நாள் சென்றபினர்ச் செல்கதியும்
அவணொத்த தத்தமது விதிவகையா மதிபதியே. 2061
இரண்டாகு முதலவர்கட் கேழீரைந் தீரேழாய்த்
திரண்டிரண்டாய் மூவுலகத் தொழிந்தவர்சேர் பிரண் டிரண்டாய்
அரண்டகவந் தேறிப்பின் னாரணவச் சுதருலகின்
மருண்டாய மணிமுந்நீர் பதினொன்றற் கிருமடியே. 2062
ஆங்கவர்மே லமரரசர் மும்மூவர்க் கொரோவொன்றாய்
ஓங்கினர்மே லொன்பதின்மர்க் கொன்றொன்றா யவர்மேலார்
பாங்கினுறப் பெறுகுவன பதினைந்திற் கிருமடிமேல்
வாங்கொலிநீ ரொருமூன்று வாழ்வென்ப மணிமுடியாய். 2063
ஆயிடைய வமரரசர் திறம்வினவி னணங்கனையார்
வேயிடைமென் பணைப்பொற்றோள் விழைவின்றிப் பெரிதாகி
ஏயிடையோ ரறவின்றா வின்பஞ்செய் திருமூர்த்தி
சேயிடையொள் ெளாளிநிழற்றச் செம்மாந்தா ரிருந்தாரே. 2064
ஊனிலா வுறுப்பமையா வொளியமா யுலகெல்லாம்
பானிலாப் பரந்தெறிப்பப் பளிங்கினது படிவம்போன்
மேனிலா மணியனையார் வெண்சங்கே ரிலைச்சையாம்
கோனிலா வவரின்மிக் கவரில்லைக் குடைவேந்தே. 2065
அப்பால தத்திதியா மதனிலமைந் தாலூணின்
றொப்பாரும் பிறிதிவணின் றூழிநாட் பெயர்ந்திழிவின்
றெப்பாலுந் திரிவின்றோ ரியல்பாய வின்பத்தான்
மெய்ப்பால தவ்வரைசர் வீற்றிருக்கும் வியனுலகே. 2066
அறவுரை
கதிநான்குங் கதிசேரும் வாயிலுமிவ் விவையிதனால்
விதிமாண்ட நரகமும்புன் விலங்குகளுஞ் சேராமை
மதிமாண்ட நற்காட்சி வழிநின்று தவந்தாங்கில்
நிதிமாண்ட பெருஞ்செல்வ நீங்காத வியல்பென்றான். 2067
உறுதிகணன் குரைக்குங்கா லுபசார முரைப்பதோ
அறுதியில்பே ரருளீரென் றரசனாங் கடிதொழலும்
இறுதியிலாப் பேரின்ப மெய்துமா றெடுத்துரைத்தான்
மறுதரவில் கதிபடரு மாதவத்து வரம்பாயோன். 2068
----------------
12. முத்திச் சருக்கம் (2069-2130)
வீடுபேற்றுக்குரிய நெறி
இருவகை வினைகளு மில்ல திவ்வழி
வருவகை யிலாதது மறுவின் மாதவர்
பெருவழி யாச்செலும் பெயர்வில் சூளிகைக்
கொருவழி யல்லதிங் குரைப்ப தில்லையே. 2069
பிறப்பின் பெற்றி
பிறந்தவன் பொறிப்புலக் கிவரு மப்புலம்
சிறந்தபின் விழைவொடு செற்றஞ் செய்திடும்
மறைந்தவை வாயிலா வினைக ளீட்டினால்
இறந்தவன் பின்னுமவ் வியற்கை யெய்துமே. 2070
தூயோர் மாட்சி
பிறவிச்சக் கரமிது பெரிது மஞ்சினான்
துறவிக்கட் டுணிகுவன் றுணிந்து தூயனாய்
உறவிக்க ணருளுடை யொழுக்க மோம்பினான்
மறவிக்க ணிலாததோர் மாட்சி யெய்துமே. 2071
வீடடையும் வீரர்
காட்சியு ஞானமுங் கதிர்த்துத் தன்பொறி்
மாட்சியை வெலீஇமனந் தூய னாயபின்
நாட்செய்து நவிற்றிய தியான வீதியான்
மீட்சியில் வீட்டுல கெய்தும் வீரனே. 2072
வீட்டின் இயல்பு
கடையிலெண் குணத்தது காம ராகர்கள்
இடைநனி யிலாத தில் லியற்கை யில்லது
மிடையொடு விழைவுவே ரறுத்த வீரர்கள்
அடைவதோர் நிலைபிறர்க் கறிய லாகுமோ. 2073
மணிமலர்ந் துமிழ்தரு மொளியுஞ் சந்தனத்
துணிமலர்ந் துமிழ்தருந் தண்மைத் தோற்றமும்
நணிமலர் நாற்றமு மென்ன வன்னதால்
அணிவரு சிவகதி யடைய தின்பமே. 2074
பயாபதியின் மனவுறுதி
வடுவறு மாதவ னுரைப்ப மாண்புடை
அடிகள தறவமிழ் துண்ட வாற்றலான்
முடிவுகொ ளுலகெய்த முயல்வ னென்றனன்
விடுகதிர் மணிமுடி வென்றி வேந்தனே. 2075
மிக்கெழு போதிகை விலக்க றக்கதன்
றொக்கநன் றுடன்பட லுலக மேன்றெனத்
தக்கவாய் மொழிந்தவத் தரச னேர்ந்திலன்
தொக்கவான் புகழவற் கமைச்சர் சொல்லினார். 2076
இருட்பிலத் தரும்பட ரெய்திப் பல்புகழ்
வருட்டதை யிலனலிந் துண்ண வாழ்பவன்
பொருட்டகு வாயில்பெற் றுய்ந்து போம்வழி
உருட்டுவா னொருவனை யுவந்து நாடுமோ. 2077
அமைச்சர் கூற்று
அருஞ்சிறைப் பிணியுழந் தலைப்புண் டஞ்சுவான்
பெருஞ்சிறை தனைப்பிழைத் துய்ந்து போயபின்
கருஞ்சிறைக் கயவர்கைப் பட்டு வெந்துயர்
தருஞ்சிறைக் களமது சென்று சாருமோ. 2078
பிணிபடு பிறவிநோய் பெயர்க்கு மாதவம்
துணிபவன் றன்னொடு தொடர்ச்சி நோக்குமோ
அணிமுடி துறமினெம் மடிக ளென்றனர்
மணிமுடி மன்னவற் கமைச்ச ரென்பவே. 2079
புத்திமதி
எனவவர் மொழிதலு மெழுந்து போதியின்
சினைமல ரிலங்குவேற் சிறுவர் தங்களை
வனமலர்க் கண்ணியான் கூவி மற்றவர்க்
கினலிலா னிவ்வுரை யெடுத்துச் செப்பினான். 2080
திருமகள் இயல்பு
பொருளிலார்க் கிவ்வழிப் பொறியின் போகமும்
அருளிலார்க் கறத்தினாம் பயனு நூல்வழி
உருள்விலா மனத்தவர்க் குணர்வும் போன்மனம்
தெருளிலார்க் கிசைவில டிருவின் செல்வியே. 2081
திருமக ணிலைமையுஞ் செல்வர் கேட்டிரேல்
மருவிய மனிதரை யிகந்து மற்றவள்
பொருவறு புகழினிர் புதிய காமுறும்
ஒருவர்கண் ணுறவில ளுணர்ந்து கொண்மினே. 2082
புண்ணிய முலந்தபின் பொருளி லார்களைக்
கண்ணிலர் துறந்திடுங் கணிகை மார்கள்போல்
எண்ணில ளிகழ்ந்திடும் யாவர் தம்மையும்
நண்ணிய நண்பில ணங்கை வண்ணமே. 2083
உற்றுநின் றொருவர்கண் ணிற்கு மாய்விடின்
மற்றவர் குணங்களை மறைத்து மாண்பிலாச்
செற்றமுஞ் சினங்களுஞ் செருக்குஞ் செய்திடும்
கற்றவர் தம்மையுங் கழற நோக்குமே. 2084
அம்பென நெடியகட் கணிகை யார்தமை
நம்பிய விளையவர் பொருளு நையுமால்
வம்பின மணிவண்டு வருடுந் தாமரைக்
கொம்பினை மகிழ்ந்தவர் குணங்க ளென்பவே. 2085
ஆதலா லவடிறத் தன்பு செய்யன்மின்
ஏதிலா ரெனவிகழ்ந் தொழியும் யாரையும்
காதலா ராபவர் கற்ற மாந்தரே
போதுலா மலங்கலீர் புரிந்து கேண்மினே. 2086
பூமகளியல்பு
நிலமக ணிலைமையு நெறியிற் கேட்டிரேல்
குலமிலர் குணமில ரென்னுங் கோளிலள்
வலமிகு சூழ்ச்சியார் வழியண் மற்றவள்
உலமிகு வயிரத்தோ ளுருவத் தாரினீர். 2087
தன்னுயர் மணலினும் பலர்க டன்னலம்
முன்னுகர்ந் திகந்தவர் மூரித் தானையீர்
பின்னும்வந் தவரொடுஞ் சென்று பேர்ந்திலள்
இன்னுமஃ தவடன தியற்கை வண்ணமே. 2088
வெற்றிவேன் மணிமுடி வேந்தர் தம்மொடும்
உற்றதோ ருரிமைக ளில்லள் யாரொடும்
பற்றிலள் பற்றினர் பால ளன்னதால்
முற்றுநீர்த் துகிலிடை முதுபெண் ணீர்மையே. 2089
அடிமிசை யரசர்கள் பணிய வாண்டவன்
பொடிமிசை யப்புறம் புரள விப்புறம்
இடிமுர சதிரவொ ரிளவ றன்னொடு
கடிபுகு மவளது கற்பின் வண்ணமே. 2090
இன்னன விவடன தியற்கை யாதலால்
அன்னவள் பொருளென வார்வஞ் செய்யன்மின்
மன்னுயிர் காவனும் மக்க டாங்கினால்
பின்னைநுங் கருமமே பேணற் பாலிரே. 2091
பயாபதி துறவு
மீனிவர் விரிதிரை வேலி காவன்மேல்
ஊனிவர் வேலினீ ருங்கள் பாலதால்
யானினி யெனக்கர சாக்க லுற்றனன்
தேனிவ ரலங்கலீர் செவ்வி காண்மினே. 2092
உற்றநாள் சிலநுமக் கென்னொ டல்லது
மற்றநாள் பலவவை வருவ வாதலால்
கற்றமாண் சிந்தையீர் கவற்சி நீங்குமின்
இற்றையான் றுணிந்ததென் றிறைவன் செப்பினான். 2093
மக்கள் கூற்று
என்றலு மிளையவ ரிறைஞ்சிக் கைதொழு
தின்றியா மடிகளைப் பிழைத்த தென்னென
ஒன்றுநீ ரிலீரென வுரையொ ழிந்தரோ
அன்றவர்க் கயலவ னாகிச் செப்பினான். 2094
ஆவியா யரும்பெற லமிழ்த மாகிய
தேவிமார் தங்களைக் கூவிச் செவ்வனே
காவியாய் நெடுங்கணீர் கருதிற் றென்னென
மேவினார் தவமவர் வேந்தன் முன்னரே. 2095
அமைச்சர் துறத்தல்
இமைப்பதும் பெருமிகை யினியி ருந்தனெ
நமைப்புறு பிறவிநோய் நடுங்க நோற்கிய
அமைச்சரு மரசர்கோ னருளி னாற்றம
சுமைப்பெரும் பாரத்தின் றொழுதி நீக்கினார். 2096
அணிமுடி யமரர்தந் தாற்றப் பாற்கடல்
மணிமுடி யமிழ்தநீ ராடி மாதவர்
பணியொடு பன்மணிக் கலங்க ணீக்கினான்
துணிவொடு சுரமைநா டுடைய தோன்றலே. 2097
முடியைக் கடலில் எறிதல்
அருமுடி துறந்தன னரச னாயிடைத்
திருமுடி மணித்துணர் தேவர் கொண்டுபோய்ப்
பருமுடி நிரையனப் பரவைப் பாற்கடல்
பெருமுடி யமைகெனப் பெய்யப் பட்டதே. 2098
முரைசதிர் முழங்கொலி மூரித் தானையும்
திரைசெறி வளாகமுஞ் சிறுவர்க் கீந்துபோய்
அரைசரு மாயிர ரரைசர் கோனொடு
விரைசெறி மணிமுடி விலங்க நீக்கினார். 2099
முடிகளுங் கடகமு முத்தி னாரமும்
சுடர்விடு குழைகளுந் துளும்பு பூண்களும்
விடுசுடர்க் கலங்களும் விட்டெ றிந்தவை
படுசுடர் தாமெனப் பரந்தி மைத்தவே. 2100
வரிவளை வண்ணனு மறங்கொ ணேமியத்
திருவளர் மார்பனுஞ் செல்வன் சென்னிமேல்
எரிவளர் மணிமுடி யிழியு மாயிடைப்
புரிவளைக் கடலெனப் புலம்பு கொண்டனர். 2101
விசய திவிட்டர் துயரம்
காதல ராயினுங் காதல் கையிகந்
தேதில ராயின மடிகட் கின்றென
ஊதுலை மெழுகினின் றுருகி னாரவர்
போதலர் கண்களும் புனல்ப டைத்தவே. 2102
முடிகெழு மன்னர்முன் னிறைஞ்ச நம்மைத்தம்
கடிகம ழகலத்துக் கொண்ட காதலெம்
அடிகளு மயலவர் போல வாயினார்
கொடிதிது பெரிதனெக் குழைந்து போயினார். 2103
தாதுக வகலத்துத் தாமம் வாங்கியும்
மீதுவந் தேறியு மேவல் செய்யுநம்
கோதுக மியாவர்கொண் டாடு வாரெனப்
போதுக முடியினர் புலம்பொ டேகினார். 2104
முனிவர் சமாதானங் கூறல்
நின்றிலா நிலைமையி னீங்கி நின்றதோர்
வென்றியா லுலகுடன் வணக்கும் வீரியம்
இன்றுகோன் புரிந்ததற் கிரங்கல் வேண்டுமோ
என்றுதா னிளையரை முனிவர் தேற்றினார். 2105
அணங்குசா லடிகள தருள தாய்விடில்
பிணங்கிநாம் பிதற்றிய பேதை வாய்மொழி
குணங்கடா மல்லகோன் குறிப்பு மன்றென
வணங்கினார் மணிமுடி மான வீரரே. 2106
மன்னர் நகருக்கு ஏகல்
திருவுடை யடிகடஞ் சிந்தைக் கேதமாம்
பரிவொடு பன்னிநாம் பயிற்றி லென்றுதம்
எரிவிடு சுடர்முடி யிலங்கத் தாழ்ந்துபோய்
மருவுடை வளநகர் மன்னர் துன்னினார். 2107
வேற்படைப் பிரிவு
பாற்படு செல்வமும் பரவை ஞாலமும்
காற்பொடி யாகவுங் கருதிற் றின்மையால்
ஏற்புடைத் தன்றுநம் மடிமை யீண்டென
வேற்படை வீரனைத் தொழுது மீண்டதே. 2108
பயாபதி தவம் மேற்கொள்ளல்
வேற்படை விடுத்து வீரத்
தவவர சதனை மேவி
நூற்படை முனிவர் கண்ணா
னோக்கிய நயத்த னாகிப்
பாற்படு விரத நோன்மைப்
படைப்பெருந் தலைவ ரைவர்
மேற்படை செய்யச் செல்லும்
வினைவரை விலக்க வைத்தான். 2109
குணப்படை யிலக்க மெண்பான்
குலவுநான் காகுஞ் சீலக்
கணப்படை பதினெட் டாகு
மாயிரங் கருவி யாகத்
துணைப்படை பிறர்க்குச் செய்யுந்
துருநயத் தளவு நீக்கி
மணப்புடை சிந்தை யென்னு
மடந்தையைச் செறிய வைத்தான். 2110
செறிவெனப் படுவ மூன்று
செழுமதில் செறியச் செய்து
பொறியெனும் வாயி லைந்து
பொற்கத வடைத்து மாற்றி
அறிவமை சிந்தை யின்மாட்
டகம்படி யுழைய ராக்கிக்
கறையிலீ ரறுவர் நிற்ப
விறைவராக் காக்க வைத்தான். 2111
படைகெழு புரிசை வெல்வார்
புறநின்று பதின்மர் காக்க
விடையவர் தம்மு ளாரே
யுழையரீ ரறுவ ராக
உடையதன் னுலக மூன்று
மொருவழிப் படுக்க லுற்று
மிடைகெழு வினைவர் தானை
மெலியமேற் சென்று விட்டான். 2112
பின்னணி யோகு நான்மை
யபரகாத் திரம்பெற் றேனைத்
தன்னவ யவங்கண் முற்றித்
தயங்குநூன் மனங்க ளோவா
துன்னிய திசையி னுய்க்கு
முணர்வெனும் வயிரத் தோட்டி
இன்னியன் ஞான வேழத்
தெழிலெருத் தேறி னானே. 2113
தருக்கெயில் காப்பு வாங்கத்
தடக்கைமால் பகடு நுந்தித்
திருக்கிளர் குணமேற் சேடிச்
செழுமலைக் குவட்டி னோட்டி
முருக்கிய வுருவு வேட்கை
முனைப்புல மகற்றி முற்றிச்
செருக்கிய வினைவர் வாழுந்
திண்குறும் பழிக்க லுற்றான். 2114
நிறையிலார் பொறுத்த லாற்றா
நிலையிது நிறைந்த நோன்மைக்
கறையி லீராறுக் கொத்த
கண்ணியர் கவரி வீச
முறையினாற் பெருகு முள்ளச்
சமாதிநீர் முறுக வுண்ட
குறைவிலாத் தியான மென்னுங்
கொற்றவா ளுருவிக் கொண்டான். 2115
விண்கடாஞ் செய்யும் வெய்ய
வினைவர்கட் கரண மாகிக்
கண்கடா மிறைக்கு மோரேழ்
கடிவினை பொடிசெய் திட்டே
கொண்கடா நவின்ற வீரெண்
கொடிமதிற் கோட்டை குட்டி
எண்கடா முடைய வெண்மர்
குறும்பரை யெறிந்து வீழ்த்தார். 2116
ஈடிலர் வெகுளி யுள்ளிட்
டெண்மரை யெறியத் தீயுட்
பேடுவந் தொன்று பாய்ந்து
முடிந்தது முடிந்த பின்னை
ஓடிவந் தொருத்தி வீழ்ந்தா
ளுழையவ ரறுவர் பட்டார்
ஆடவன் றானும் போழ்து
கழித்துவந் தொருவ னாழ்ந்தான். 2117
பின்னுமோர் நால்வர் தெவ்வர்
முறைமுறை பிணங்கி வீழ்ந்தார்
அன்னவர் தம்மு ளானே
குறைப்பிண மொருவ னாகித்
தன்னைமெய் பதைப்ப நோக்கி
யவனையுந் தபுப்ப நோனார்
துன்னிய துயிலு மேனைத்
துளக்கஞ்செய் திருவர் பட்டார். 2118
ஆங்கவ ரழிந்த பின்னை
யரசரை யிருவரோடும்
தாங்கியீ ரிருவர் தாக்கித்
தலைதுணிப் புண்ட பின்னை
வீங்கிய வனந்த ஞான்மை
விழுநிதி முழுதுங் கைக்கொண்
டோங்கிய வுலகிற் கெல்லா
மொருபெருங் கிழவ னானான். 2119
பயாபதி கேவலமடந்தையை மணத்தல்
நெடிதுட னாய தெவ்வர்
நால்வரை நீறு செய்திட்
டடிகள்பின் முடிவென் பாளை
யகப்படுத் தனைய ராக
இடிமுர சதிருந் தானை
யரசரோ டிங்க ணீண்டிக்
கடிகம ழமரர் வீரன்
கடிவினை முடிவித் தாரே. 2120
கொடிகளுங் குடையுங் கோலக்
கவரியு மமரர் தங்கள்
முடிகளு மடந்தை மாரு
முகிழ் நகைக் கலங்க ளுஞ்செற்
றடியிடு மிடமின் றாகி
மூடியா காய மெல்லாம்
கடிகமழ் மலருஞ் சாந்துஞ்
சுண்ணமுங் கலந்த வன்றே. 2121
பொன்னரி மாலை பூவின்
பொழிமதுப் பிணையன் முத்தின்
மின்னிவர் விளங்குந் தாம
மெனவிவை விரவி வீசித்
துன்னிய வினைவர் கூட்டந்
துணித்துவீற் றிருந்த கோனைப்
பன்னிய துதிய ராகி
யமரர்கள் பரவு கின்றார். 2122
பயாபதியை அமரர் பரவுதல்
வேறு
கருமால் வினையரசு காறளர நூறிப்து
பெருமான் முடிவென்னும் பெண்ணரசி தன்னை
ஒருவாமை வேட்டெய்தி யூழி பெயர்ந்தாலும்
வருமா றிலாத வளநகரம் புக்கானே. 2123
சிந்தை மடவா டொடுத்த தியானவாள்
வெந்து வினைவேந்தர் வீடியபின் விட்டெறிந்து
முந்து முடிவென்னுங் கன்னி முலைமுயங்கி
வந்து பெயரா வளநகரம் புக்கானே. 2124
அலகில் பெருங்குணத்தோ னாவரண நீக்கி
உலக மலோக முடனே விழுங்கிப்
புலவன் முடிவென்னும் ங்கொடியுந் தானும்
நிலவு சிவகதியு ணீங்காது நின்றான். 2125
வேறு
இனையன பலபரவி யிறைஞ்சி யேத்தி யிமையவர்கள்
கனையெரி மிகுவேள்வி கலந்து செய்து களிப்பெய்தி
அனையவ ரறவாழி யமிழ்த நீங்கா தகத்தாடிப்
புனையவிர் சுடரொளியார் புகழ்ந்து தத்த மிடம்புக்கார். 2126
பயாபதி சூளாமணியாய்த் திகழ்தல்
களங்காண் வகையுடைந்து
காலர் காமர் கையகல
விளங்காத் திசையின்றி
விளங்க வீரன் மெய்ப்பொருளை
உளங்காண் கேவலப்பே
ரொளியா லிம்ப ருலகெல்லாம்
துளங்கா துயர்ந்துலகின்
முடிக்கோர் சூளா மணியானான். 2127
அருமால் வினையகல அமரர் நாளு மடிபரவப்
பெருமான் பிரசாபதி பிரம லோக மினிதாளத்
திருமால் பெரு நேமி திகழ்ந்த செந்தா மரைத்தடக்கைக்
கருமால் கடல்வரைத்த கண்ணார் ஞாலங் காக்கின்றான். 2128
தங்கோ னமருலக மினிதி னாளத் தரங்கநீர்ப்
பொங்கோதம் புடையுடுத்த பூமியெல்லாம் பொது நீக்கிச்
செங்கோ லினிதோச்சித் தேவர் காப்பத் திருமாலும்
அங்கோல வேலரச ரடிபா ராட்ட வாள்கின்றான். 2129
விசய திவிட்டரை வாழ்த்துதல்
வலம்புரி வண்ணனு மகர முந்நீர் மணிமேனி்
உலம்புரி தோளினனு முலக மெல்லா முடன்வணங்கச்
சலம்புரி வினைவென்ற தங்கோன் செந்தா மரையடிக்கீழ்
நலம்புரி விழவியற்றி நாளு நாளு மகிழ்கின்றார். 2130
----------------
This file was last updated on 10 Jan. 2018
Feel free to send the corrections to the webmaster.