ஸ்ரீஆண்டாள் பிள்ளைத்தமிழ்
மு. வேணுகோபாலசாமி நாயுடவர்கள் தொகுப்பு
Sri ANTAL piLLaittamiz
edited by mu. vENukOpAlacAmi nAyuTavarkaL
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Connemara Library, Chennai for providing a scanned PDF version
of this work.
The etext has been generated using Google Online OCR tool and subsequent
correction of the output file.
Sincere thanks go to Ms. Karthika Mukundh for her help in
the proof-reading of this work.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2018.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
ஸ்ரீஆண்டாள் பிள்ளைத்தமிழ்
மு. வேணுகோபாலசாமி நாயுடவர்கள் தொகுப்பு
Source:
ஸ்ரீஆண்டாள் பிள்ளைத்தமிழ்
இது கோயமுத்தூரைச் சார்ந்த பூளைமேடு மு. வேணுகோபாலசாமி நாயுடவர்களால்
பரிசோதித்து சென்னை பிரஸிடென்ஸி அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது.
1904
---------
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீஆண்டாள் பிள்ளைத்தமிழ்
உள்ளடக்கம்
1-வது காப்புப்பருவம் | 7-வது அம்புலிப்பருவம் |
2-வது செங்கீரைப்பருவம் | 8-வது சிற்றிற்பருவம். |
3-வது தாலப்பருவம். | 9-வது சிறுசோற்றுப்பருவம் |
4-வது சப்பாணிப்பருவம் | 10-வது பொன்னூசற்பருவம். |
5-வது முத்தப்பருவம். | 11 வது காமநோன்புப்பருவம் |
6-வது வாரானைப்பருவம் |
|
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
சாத்துகவிகள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஹிந்து ஹைஸ்கூல் தமிழ்ப்பண்டிதர்
ஸ்ரீமத் உ. வே. ரெ. அப்புவையங்கார் ஸ்வாமிகள் செய்தருளியது.
அறுசீர்க்கழிநெடிலாசிரியவிருத்தம்.
கருக்கோதை யம்புவியி லுற்றுழலும் படிசெயிருங் கரும வல்லிற்
கருக்கோதை யம்புரையு மந்தணர்கண் மந்திரத்தி லன்பி னோது
மிருக்கோதை யம்புயலின் முழங்குமெழில் வில்லிபுத்தூ ரெம்பி ராட்டி
திருக்கோதை யம்புயத்தாள் புனைபிள்ளைத் தமிழ்ப்பெருமை தெரிந்திந் நூலின்
உச்சிட்ட ரதனடைஇந்து மற்றையபிள் ளைத்தமிழா யுய்ந்த வென்று
மெச்சிட்ட ரதனந்தம்பி ரதிகொடுவ ழுஉக்களைஇ மெய்ம்மை காணுஉ
வச்சிட்ட ரதனத்தைக் குச்சிட்டு விளக்கியதொத் தளித்திட் டான்பொற்
பச்சிட்ட ரதனருமை கண்டுவப்ப வேணுகோ பாலன் றானே.
-----
பெங்களூர் சென்றல் காலேஜ் தமிழ்ப் பிரதம பண்டிதர் ஸ்ரீமான்
தி. கோ. நாராயணசாமிபிள்ளை அவர்கள் செய்தருளியது,
நேரிசை வெண்பா
ஆண்டாள்பிள் ளைத்தமிழை யாய்ந்தச்சி லேற்றுவித்தான்
பூண்டா ரெழிற்கோயம் புத்தூர்சே-ரேண்டாவு
நற்பூளை மேடு நகர்வேணு கோபாலக்
கற்பூர் தமிழ்ப்புலவன் காண்.
காண்பெரிய கற்பகமாங் கன்னித் தமிழ்வேத
மாண்பினரை யாதரிக்கு மாநலத்தான் - சேண்பரன்றாள்
சார்வேணு கோபால சாமிமுத்து மன்னனருள்
சீர்வே ளெனச்சிறந்த சேய்.
--------
ஸ்ரீமாந் சே. முத்துகிஷ்ணநாயுடு இயற்றியவை.
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.
பொறைதனக்கோ ருறையுளெனும் புவிமடந்தை
யமிசமெனப் பொலிந்து நற்சீ
ருறைதுளவி னடித்தோன்றி விண்டுசித்தன்
பரிந்துநித மோம்ப வோங்கி
நிறைதருநற் பரபத்தி தழைத்துவளர்
பரஞான மலர்ந்து நேயத்
திறையணிபூந் தொடைக்குமண மளித்துவளர்
பரமபத்திக் கனியை யீந்து
சாரமெனுந் திருப்பாவை திருமொழிக
டமைநல்கித் தாவி லின்பம்
வாரமுட னாக்கொள்வோர் தமக்குதவி
மால்புயமி வாவிச் சேர்ந்த
ஆரநகைக் கொடிக்குரித்தாந் தண்டமிழ்ப்பிள்
ளைக்கவிதை யாய நூலை
நாரமுடன் றிருத்தியச்சி லேற்றியெவ
ருங்களிக்க நல்கி னானால்
அரிந்தமன்ற னடியகலா வகமுடையோ
னவனடியா ரன்பி னான்றோன்
விரிந்தபுகழ்த் தமிழ்வேதப் பொருளுணர்ந்த
மேதக்கோன் மெய்த்த சீர்த்தி
தெரிந்தமுத்து நாயுடுதன் றவப்பேறாங்
குமரனரு டிகழு நெஞ்சன்
புரிந்தஞான முமொழுக்கு முடைவேணு
கோபாலப் புலமை யோனே.
-----------
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத்தமிழ்.
காப்பு
பூமாது நிலமாதும் பொதுவர்குலக் கொழுந்தும்
பூதலத்து ளொருதிருவாய்ப் பொலிந்தா ரென்றே
நாமாது புகழ்பரப்ப வில்லி புத்தூர்
நயந்தவள்பிள் ளைக்கவிதை நாளுங் காக்க
பாமாற னருட்கிலக்காய்ப் பூதூர் வந்து
பரசமயக் குறும்பரைவெல் பரம ஞானக்
கோமானென் றுலகுபுகழ் மும்மைச் செங்கோற்
கோயிலண்ண னெனத்தழைத்த கொற்ற வேந்தே. (1)
அவையடக்கம்.
வாகடப் பனுவலைக் கற்றவர்க் கியல்புநோய்
வந்தகா ரணமுணர்ந்தே
வன்பிணி தனைக்களைத னவமணி தனக்குற்ற
வழுவறக் கழுவுநெறிதான்
வேகடஞ் செய்பவர்க் கியல்புமெய்ந் நூல்கற்ற
விழுமியோ ரியல்புவாணாள்
வீணாள டைந்தவரை வம்மினென் றிறைநிலையை
மெய்பெற வுணர்த்திவீட்டின்
போகம தருந்தவே யருள்புரித லென்பவாற்
பூரணக் கல்வியுடனே
பொற்புறக் கவிதைசொற் பொருளின்ப வணியொடு
புணர்க்குமுறை யாற்புணர்க்கும்
பாகமொன் றறியாத புலமையேன் சொற்றிருப்
பாவையைப் பாடியருளும்
பாவையைப் புகழ்பாடல் வழுவறப் பாலித்தல்
பண்டிதர்க் கியல்பென்பவே. (2.)
செம்பொற் கலந்தன்னின் முல்லைமென் முகையிற்
சிறந்தமெல் லடிசிலிமையோர்
தெள்ளமு தெனுஞ்சுவை யுடைக்கருனை முக்கனித்
திரள்பெய்த பாலளாவிச்
சம்பத் தடைந்தருந் தியபுனிதர் புளியிலைத்
தளிகையிற் பவளமவைபோற்
றழைநிறத் துப்பிலிப் புற்கைமோர் பெய்துண்ட
தன்மையை நிகர்க்கு மொண்பொற்
கும்பத்தி னிற்புடைத் தெழுமுலைக் கோமளக்
கோதைசூ டிக்கொடுத்தாள்
கோதற்ற குரவர்முத லியபுனிதர் செஞ்சொலுட்
கொண்டதன் செவிகளதனா
லிம்பர்க் கமைந்தவிரு செவியினுஞ் சிறிதுசென்
றேறாத வெளிறுடைத்தா
யேழையே னறிவற் றுரைத்தபுன் சொற்றனையு
மினிதுவந் துட்கொண்டதே. (3)
பழிச்சினர்ப் பரவல்.
அண்டகோ ளத்திளங் கதிர்களோ ராயிரத்
தருமணிச் சூட்டுணாட்டு
மாயிரம் பஃறலைத் துத்திப்ப ணாடவி
யனந்தனெட் டுடலமுழுதும்
மண்டலித் திட்டசிங் காதனத் திலகுமா
மணிமண்ட பத்துமிமையோர்
மந்தரா சலமத்த தாயமு தினைக்கொண்ட
மகரால யத்துநடுவுந்
தொண்டரா கியமுத்தர் நித்தரயன் முதலோர்
துதித்திட நெருங்குமளவிற்
சுற்றிய பிரம்பினா லெற்றுசே னாபதித்
தோன்றலடி யிணைபரவுதூஉம்
புண்டரீ கத்தடஞ் சூழ்மல்லி நாட்டினுட்
பூந்துழாய்க் காட்டிலெழில்கூர்
புத்தார் மடந்தையைப் புகழ்பாட லெழுகடற்
புவனமெங் குந்தழையவே. (4)
திருஞான முத்திரை தரித்தகைத் தாமரைச்
செண்பகச் சடகோபனைத்
திண்டிமக் கவிராஜ பண்டிதப் பாவலர்
திருத்தம்பி ரானையெனையும்
பெருமா நிலத்தடிமை கொண்டானை மதுரகவி
பேரின்ப முறவழுத்தும்
பெருமானை யனவரத மறவாது பரவுதூஉம்
பெருநீ ருவட்டெடுத்தே
யருமா மணிக்குலத் தொடுபசும் பொன்கொழித்
தரவஞ்செய் பொன்னியாற்று
ளமுதத்தை யுட்கொண்டு புனிதனா கியகோயி
லண்ணனென் னுந்தகைமைசால்
குருஞான முதல்வனைப் பரவுமென் னாவின்முன்
குடிகொண்ட வில்லிபுத்தூர்க்
கோதையைப் பரவுபிள் ளைக்கவிதை காதையாற்
கோதின்றி மொழிவதற்கே. (5)
பாடற் சுரும்புதண் ணறவுண்டு கிண்டும்
பசுந்துழா யானைமுந்நீர்ப்
படிசங் கிடத்தானை முளரித் தடத்தானை
பகருந் திடத்தானைமல்
லாடற் பதத்தானை விமலைக் கிதத்தானை
யஞ்சக் கரத்தானைமூன்
றஞ்சக் கரத்தானை நாலைங்கரத்தானை
யையிரு சிரத்தானையெய்
தோடத் துரந்தானை யுலகம் புரந்தானை
யுபநிடத நுட்பத்தினா
லோரா யிரம்பாட லோதாதுணர்ந்தே
யுரைத்தானை மதியகடுதோய்
மாடத் திருக்குருகை யூரானை வஞ்சரிடம்
வாரானை யன்பர்தம்பால்
வந்தானை நற்காரி தந்தானை நெஞ்சமே
மறவாது வாழ்த்தனன்றே. (6)
புழுகூற் றிருக்குமுலை மலர்மங்கை கொழுநனைப்
புகழ்பொய்கை முதன்மூவர்தென்
புதுவைதிரு வஞ்சிமழி சையினதிபர் பாகவதர்
பொன்னடித் தூளிபாண
னெழுகூற் றிருக்கை தாண் டகமடற் றிருமொழி
யிசைத்தபுக ழாலிநாட
னென்னுமொன் பதின்மர்பொன் னடிகளைப் போற்றுதூஉ
மிளநிலா வுழுதிறாலின்
மெழுகூற் றிருக்குமது மடைதிறந் தொழுகுநதி
வேலைபோல் விரவியுகளும்
வெண்டிரைப் பொன்னியு ளரங்கனைப் போற்றாது
வீணாள் கழித்தசிறியோர்
தொழுகூற்று வன்றனது சென்னிமேன் மிதிதொண்டர்
தொண்டனேன் வில்லிபுத்தூர்த்
தோகையைப் பரவுபிள் ளைக்கவிதை முத்தமிழ்க
டொல்புவியின் மேற்றழையவே. (7)
நதிவைத்த சடிலத்தின் மதிவைத்து மாடரா
நடுவைத்து முடுவைத்தபோ
னறைவைத்த தும்பையொரு சிறைவைத்து நோய்வைத்த
நஞ்சத்தை வாய்வைத்ததால்
விதிவைத்த தாகமொடு கறைவைத்த கண்டத்தன்
வேல்வைத்த கண்ணியைத்தன்
மெய்வைத்த வன்றடக் கைவைத்த வன்றலையை
விழவைத்த முதல்வனாமத்
துதிவைத்த தமிழ்மறைப் பட்டோலை நாவீறர்
சொலவெழுதி வைத்துநமனார்
தொகவைத்த நெட்டோலை யைக்கிழிய வைத்தன்பர்
சோதிவீ டெய்தவிண்ணோர்
மதிவைத்த மாநிதி விளங்குகோ ளூர்வந்த
மதுரகவியைப் போற்றுதூஉம்
மல்லிநாட் டினுள்வில்லி புத்தூர் மடந்தையை
வழுத்துமென் கவிதழையவே. (8)
எந்நன்றி கொண்டாலு மந்நன்றி கொண்டவ
ரியற்றுகைம் மாறுமுலகத்
தினிலுண்டு மலர்மங்கை கொழுநனே பரனென்
றிருட்டறுத் திருபசையறச்
செய்ந்நன்றி கொண்டதற் கெதிரில்லை யால்வெண்ணெய்
திருடியுண் டவனென்பதிற்
சிந்தையுட் புக்ககுரு கூர்நம்பி யெனவெனது
திருநாவி னமுதமூறும்
மெய்ந்நின்று புளகித் துரோமஞ் சிலிர்த்துபய
விழிகணீ ரருவிபொழியும்
வெண்ணெய்போ லுள்ளமுங் குழையுமுயி ரானந்த
வெள்ளத்து ளாயழுந்து
மந்நன்றி கைம்மா றெனப்பரவு மதுரகவி
யடியிணைக ளேபரவுதூஉம்
அகிலமா தாவெனுங் கோதையைப் புகழ்பாட
லகிலமெங் குந்தழையவே. (9)
ஒருநான் மறைக்கற் பகத்தினொண் கனியென்னு
முபநிடத மதுரநதிவாழ்
வுற்றிடுந் திருவாய்மொ ழிப்பயோ ததியிடத்
தோராயி ரம்பாடலாம்
பெருவாழ்வு பெற்றதிரை பொங்கவொரு பத்தினிரை
பெற்றுள குடந்தையமுதாற்
பேரின்ப மெய்தலும் வீரநா ராயணன்
பேரருளி னேனையனவுங்
குருகா புரிப்பரம குருகுலோத் தமனைவண்
கோளூர னுரைசெய்நூலுட்
கொண்டுரை தியானத்தி னெண்ணைந்து நாளினக்
குழகனா லெய்தியதனுண்
பொருள்வாய்மை யமுதினைப் புலவர்க் களித்துலகு
புகழவரு நாதமுனிகள்
பொன்னடி வணங்குதூஉம் புத்தூர் மடந்தையைப்
புகழுமென் கவிதழையவே. (10)
பருமா மணிக்கிரீ டச்சோதி யாதிப்
பரப்பிரம வாழ்வுதழைவான்
பாரிலோ ரைவரா மவருணம் பிகண்மூவர்
பாதார விந்தமலரைக்
கருமா முகிற்குலந் தவழ்சோலை மலைநின்ற
கண்ணனை வணங்கிவீழுங்
கங்குலிற் கைவிளக் கேந்தியே முன்சென்று
கருணையைக் காட்டுமுதன்மைத்
திருமாலை யாண்டா னெனும்பரம தேசிகன்
றிருவடிப் போதைவாழ்வார்
திருவரங் கத்தரையர் சரணாம்பு யத்தையென்
சென்னியிற் சூடினேன்றே
மருமாலை சூடிக்கொ டுத்தபெண் ணரசிதனை
வண்டமிழ்ப் புலவர்புகழு
மல்லிநாட் டினுள்வில்லி புத்துர் மடந்தையை
வழுத்துமென் கவிதழையவே. (11)
அண்டர்திரு வாய்ப்பாடி யாயர்தரு மங்கைமா
ரவனிபுகழ் வில்லிபுத்தூ
ரதனுள் வாழ் மங்கைமா ராகநப் பின்னைதா
னாமென்ப துண்மையாகக்
கொண்டதோர் குறியினொடு வடபெருங் கோயிலார்
கோயிலது நந்தகோபன்
குலவியுண் மகிழ்கொடிரு மாளிகைய தாகக்
குறித்ததிற் புண்டரீகக்
கண்டுயிலும் வடபெருங் கோயிலார் தனதருட்
காந்தனா கவுமனத்துட்
கருதியிடை மொழியுமிடை நடையுமிடை யுடையினொடு
கைக்கொண்டு கருணைகூரத்
தெண்டிரைவ ளாகத்து மல்லிநாட் டுள்வரு
திருப்பாவை பாடினார்தஞ்
செம்பொனொண் கிண்கிணிச் சரணார விந்தமென்
சென்னியிற் சூடினேனே. (12)
வேறு.
சிங்கக் குருளை யெனச்சிறுவர்
திருமுன் றிலின்கட் டவழ்போழ்திற்
றிருமுக் குளத்தெண் டிரைக்கரையுட்
சிதறிப் புளினங் கடந்தசினை
சங்கத் திரள்வீ தியைக்கடந்து
சலதா ரையையுங் கடந்துயிர்த்த
தரளத் திரளிற் றவழமுழந்
தாளி லுரைப்ப வருந்திடலும்
மங்கைப் பருவத் தினரெடுத்து
மணிக்காந் தளின்மெல் லடிவருடி
மழைக்கண் கலுழ்நீ ரினைத்துடைத்து
மழலைக் கனிவா யினைமோந்து
கொங்கைத் துணைக்கே யணைத்தமுதங்
கொடுத்தின் புறுசெந் தமிழ்ப்புதுவைக்
கோதைத் திருவிங் கெனதுளத்திற்
குடிகொண்டதற்கென் சொல்வேனே. (13)
வேறு.
நஞ்சாய்ப் பழுத்தபடி வத்திரா வணனைமுத
னாளில்வென் றின்றுபோய்நீ
நாளைவா வென்றுமுன் பிரணியன் றனதா
நயந்தவச் சிரவுடலையே
பஞ்சாய்ப் பழுத்ததோ ருடலமென வுகிரினிற்
பகிர்செய் தவற்றினுடனே
பஞ்சவர் சகாயனா கியவரங் கன்முதற்
பாரிலை வரையெய்துவான்
மஞ்சாய்ப் பழுத்தமென் சுரிகுழற் பிறைநுதல்
வளைந் தவிற் புருவமொளிதோய்
வாளியுண் கட்கமல மதிமுகத் தளவ நகை
மழலைமொழி யைந்துவயதிற்
பிஞ்சாய்ப் பழுத்தபெண் ணமுதநற் கனியினைப்
பிள்ளைக் கவிப்பாடலாற்
பெருநிலத் தேத்தியே சந்ததஞ் சிந்தையுட்
பேரின்ப மெய்தினேனே. (14)
----------
ஸ்ரீ ஆண்டாள் பிள்ளைத்தமிழ் - நூல்
1-வது காப்புப்பருவம்.
சீர்கொண்ட வெண்டிரைப் பாலாழி யுண்ணின்று
சீதரன் பணிவிடையினாற்
றிருமல்லி நாட்டினுட் பூந்துழாய்க் காட்டினுட்
சீவில்லி புத்தூரெனப்
பேர்கொண்ட பேரின்ப வீட்டின்மறை யவர்பிரான்
பெற்றதெள் ளமுதெனவரும்
பெண்ணரசி யைக்காக்க மூதண்ட முண்டகப்
பிரமகற் பாந்தத்துமுந்
நீர்கொண்ட வாறுணர்ந் தாலிளந் தளிரின்மே
னிலைபெறு பசுங்குழவியாய்
நெடுநாள கத்திட்ட பல்லுயிரை வினைவழி
நிறுத்தப் பெயர்த்தும்வனசத்
தார்கொண்ட திருவுந்தி மடுவிலய னைத்தந்த
தாதைவால் வளைமுத்தநீர்த்
தரங்கமொண் டெறிதென் னரங்கத் தராவணைச்
சக்ரா யுதக்கடவுளே. (1)
வேறு.
தகடுபடு தளிரே தளிர்த்தாற்றல்சார்
தருணமல ரவிழ்கா ழகிற்கோட்டொடே
தரணிபுதை யிருடீர் தரச்சீப்பதோர்
தவளமுழு மதிமா னிளைப்பாற்றிவா
ழகடுகுவ டுழுகாலை யிற்றூக்கமா
யருவிநிரை சொரிதாரை யுற்றோட்டமா
மமுதநதி நறையாழி யிற்றேக்கறா
வரவவட மலைவாண னைப்போற்றுவாம்
மகரமொடு திமிபோர் பொரக்கோட்சுறா
மறுகியொழு குபயோத திக்கேற்றமாம்
வரிசையமு துதுழாய் மலர்க்காட்டுளே
மருவியொரு திருமா தெனத்தேற்றமே
புகலுமறை யவர்பூ பதிக்கேற்றதோர்
புதல்வியென வருகா ரணத்தோற்றமேழ்
புவனமுழு வதுமா சறப்போற்றவாழ்
புதுவைநகர் வருகோதை யைக்காக்கவே. (2)
வேறு.
சுழிக்குங் கரட மதக்கலுழிச் சுவட்டுக் கவட்டுப் பிறைக்கோட்டுத்
தூங்கு முடக்கு விழுதுபுரை துளைக்கை வளைக்கார்க் கடற்கனலைக்
கொழிக்குந் தறுகட் குழிசிறுகட் குன்றோ தியமூ துரைக்குதவுங்
குணமே ருவெனுஞ் சோலைமலைக் குழக ரழக ரருள்காக்க
கழிக்குண் டகழ்தெண் டிரைத்திருப்பாற் கடலு மடலுட் டளிநறவங்
களித்துக் குளித்துண் சுரும்பிறைக்குங் கமலா லயமுஞ் சதுவேதயே
மொழிக்கு மடங்காப் பழம்பதியு முதனாட் புத்தூ ராயதென
மும்மைப் புவனம் புகழ்புத்தூர் முத்தூர் நகைப்பெண் ணமுதினை. (3)
வேறு.
சுடர் தூண்டு முத்தலைக் கவடுபடு நெட்டிலைச்
சூலிகா பாலியாகித்
தொல்லைநான் முகனிட்ட சாபத்தி னாணந்
தொடர்ந்தவா பத்தடைந்தே
யிடர்தூண்ட நின்றிரப் பினையொழித் தருள்கென
விரந்திட விரப்பினைத்தீர்த்
தினிதமர்ந் தானென்னும் வடபெருங் கோயிலா
ரென்றும் புரக்கநீலக்
கடல்சூழ்ந்த மண்டிணி நிலத்தினுட் கூடனகர்
காவலன் பரனையுணர்வான்
கட்டுபொற் கிழியறுத் தோங்குமறை யவர்பிரான்
களிகூர வாடகப்பொன்
மடல்சூழ்ந்த கமலமா ளிகையிற் சிறந்ததென
வண்டமிழ் தழைத்தபுத்தூர்
மல்லிநாட் டினுள்வந்த வல்லிநாட் டுஞ்சிறு
மருங்குற் பெருந்திருவையே. (4)
தாதளவி நறவறாப் பரிமளத் தொடுசெவ்வி
சார்ந்து தண்ணிலையவாகிச்
சஞ்சரீ கஞ்சஞ் சரிக்குமுன் பருணோ
தயத்தினிற் றளையவிழுமப்
போதளவி லாதநறு மலர்கொய்து தாதைகை
புனைபுனித மாலைசூடிப்
புரிகுழன் மணத்தொடு மளித்ததிரு மகளையெப்
பொழுதினுங் காக்கவள்ளைக்
காதளவி னுஞ்சென்ற வுண்கணார் தண்புனல்
கலந்தாட வணுகுமளவிற்
கதிர்முலை முகட்டருண மணிவெயிலு நித்திலக்
காழ்குலா நிலவுநிமிரச்
சீதளக் கமலமுகை யவிழுநண் பகலினுஞ்
சேதாம்பன் முகுளமலருந்
திருமுக்கு ளப்புதுவை நகர்வாழ வாழ்வுபயில்
செண்டலங் காரனருளே. (5)
வேறு.
பொறிக்கிங் கழகு புரப்பதொரு
பொறியாம் புவனத் தவர்நாட்டம்
புதைக்கு மிருளின் பிழம்பினையே
புறங்கா ணருணோ தயமெனவே
யெறிக்குங் கிரண மவுலிகவித்
திதஞ்செய் யணையாந் திருநெடுமாற்
கேற்ற மெனலா மணிவிளக்கா
மேந்தல் புரக்க வரியறல்போ
னெறிக்குங் கருமென் குழற்பிறைபோ
னிழல்வா ணுதலிந் திரசாப
நீலப் புருவக் கருங்குவளை
நெடுங்கட் கமலா னனமுகுளங்
குறிக்கும் புளகக் களபமுலைக்
கொடிபோற் சுருங்கும் பிடிமருங்குற்
கோதைத் திருவைத் தமிழ்ப்புதுவைக்
கொழுங்கோ மளப்பொற் கொம்பினையே. (6)
வேறு.
மல்லிமா மயில்பெற்ற வில்லியுங் கண்டனு
மாவேட்டை யாடுகாட்டுள்
வன்றுணைத் தம்பியைப் புலிகொல்ல நோயுற்ற
மறவனற் றுயின்முகத்தாய்க்
குல்லையந் தாமத்த னெய்தியே நின்னிளங்
குமரனுக் குயிரளிப்பன்
கோயிலிங் கருள்கென்று நிதியருள வடபெருங்
கோயின்முத லியவமைத்தே
யல்லியங் கமலைநா யகனுடன் புத்தூரு
ளந்தணர் தமைக்கொணர்ந்தே
யகரமது தாபித்த காரணந் தோற்றுவா
னவரொடுந் தனதுபெயரால்
வில்லிபுத் தூரெனப் புகழ்பெற்ற திருநகருள்
விமலையைக் காக்கவெழுதா
வேதமொரு நான்கையுஞ் சிறைகொண்டு பொறைகொண்ட
வித்தகப் புள்ளரசனே. (7)
ஒருமுலை சுரந்தபா லொருபுடை குழக்கன்று
முண்டுவாய் மாறமுதலே
வொருகுட நிரைத்துமற் றொருகுட மளிக்குமுன்
புறுபெற்ற முலையுக்கபா
லருமணித் திருமாட வீதியிற் பாலாழி
யளவினில் வளைப்பதேய்க்கு
மாயர்பா டிச்செல்வர் புத்தூர் பிறந்தபெண்
ணரசியைக் காக்ககொற்றக்
குருகுலத் தினுண்முந்து நூற்றுவ ரெனக்கொடுங்
கூற்றுரு வெடுத்ததனையார்
குலிசபதி தன்பதி புகப்பே ரறங்கள்குடி
கொண்டசெங் கோனடாத்தித்
தருமன்முத லவர்பழம் பதியாள நண்பகற்
றன்னைநள் ளிரவதாகத்
தரணியை மறைத்துமூ தண்டவெளி முகடுதொடு
சக்ராயுதக் கடவுளே. (8)
வேறு.
முழுமதி யதனு ணிலவுட னமுது
முதிர்சிறு பிணையும் போற்பொலி
முகமெனு மதனுண் முறுவலு மழலை
மொழியுடன் விழியுங் கோட்டிய
வழுவறு வடுவின் மிசையிரு தனுவும்
வளமிகு பிறையுங் கூட்டிய
மழையென விலகு புருவமு நுதலு
மலர்மலி குழலுந் தீட்டிய
பழுதறு படிவ முடனிமை யவர்கள்
பணிதிரு வுருவங் காட்டிய
பழமறை பரவும் புதுவையு ளெமது
பழவினை யொழிநண் பாட்டியை
யெழுதிரை மறுகி யமுதெழு பரவை
யினுள்வரை யழுவந் தோற்றிய
விரவியு மதியு முடனிரு புடைய
மிரவொடு பகலுங் காக்கவே. (9)
வேறு.
காலையிற் சததளக் கிரணவொண் டாமரைக்
கலைமங்கை கட்டுச்சியிற்
கயிலையங் கிரியுளான் வாமபா கத்திலுமை
கதிரவன் குடகடல்புகு
மாலையிற் குலிசபதி யயிராணி யாமத்தில்
வரிசிலை மடந்தையுடனே
வைகறையி லின்னிசை மடந்தையென் றோரைவர்
வைகலுங்காக்க விமையோர்
சோலையிற் காமர்வண் டினமுரலு நறவறாத்
துணர்மல்கு பரிமளப்பைந்
துளவநற் றாய்பெற்ற தேனென்ன வமுதந்
துளித்தெழு தரங்கநன்பால்
வேலையைப் புறமிட்டு மல்லிவள நாடுபயில்
வில்லிபுத் தூருளுறைபும்
விண்டுசித் தன்பெற்ற பொற்றொடி யெனப்புவி
விளம்புமொரு திருமகளேயே. (10)
மன்னுமார் கழியாதி யைந்தினிற் புள்ளாதி
வாய்ந்தவெல் லீறுபத்தின்
மற்றநா யகனம்ப ரத்தினிற் காலத்தை
மாலைமக ளிரையேத்தியே
யின்னனசெ யின்னனசெ யென்கைவாழ் வெய்துமே
லெழிலியின் னனசெய்தடைதான்
யாதுமின் றாமென்கை பெண்களீ ரைவரை
யெழுப்புத லவற்றினோடும்
பின்னையை யெழுப்புந்து முதன்மூன்றின் முந்துறப்
பெலபத்ர னிறைதந்தைதாய்
பெருவாயில் கோயில்கா வலவரேற் றங்கணிற்
பேறுகுண மெழுகென்மாரி
சொன்னதன் றாதியே ழாசிசங் காதிபொறை
தொண்டுரை திருப்பாவையைச்
சொல்லுவர் முத்தியெய் துவரென்ற கோதையைச்
சுருதியென் றுங்காக்கவே. (11)
----------------
2-வது செங்கீரைப்பருவம்
வரியுழு வையினத ளுடையினன் விடையினன் மாதுமை பங்காளன்
மதிநதி யிதழியொ டறுகடை சடைமிசை வாழ்வுறு கங்காள
னெரிவிழி நுதலின னிரவினை யொழியென வீனம டைந்தோது
மிரவினை யொருநொடி யினுளொழி கருணையன் யாவரு மன்பாக்க
கரிசொல வுதவிய தனிமுத லுலகுயிர் காவல னன்பான
கடவுள ரதிபதி யெனமன தினிலுறு காதல டங்காம
லரிசரி யெனுமுரை யினர்மகிழ் தரவினி தாடுக செங்கீரை
யளிசெறி மதுமகி ழணிபவர் திருமக ளாடுக செங்கீரை. (1)
வயலிடை யுழவர்கண் மழவிடை யொடுபடை வாளினு ழுஞ்சாலில்
வரிவளை யிளையரி னரவமொ டுடனுழ வாளைவெ ருண்டோடிப்
புயல்படி பொழிலிடை கயலுட னுகளுபு பூவிரி தண்டேறல்
பொறியளி சினைதொறு மிழைநற வுடனிழி பூசலு டன்கூடி
யியலிசை நடநவி லொலிசது மறையொலி யேழுட னொன்றாகு
மெழின்மலி புதுவையு ளுலகுயிர் தழைதர வேவரு நங்காயிங்
கயன்முத லியலிமை யவர்மகிழ் தரவினி தாடுக செங்கீரை
அளிசெறி மதுமகி ழணிபவர் திருமக ளாடுக செங்கீரை. (2)
வேறு.
சூடிப் புரிகுழல் கோடித் திடுதொடை சொற்றமிழ் மாலிகைநற்
சுடர்விடு பஃறலை யரவணை யிணைவிழி துயில்பயில் புகழாயர்
பாடிச் செல்வர்பு னைந்திட வருண்மலி பட்டர்பி ரான்மகளாய்ப்
பஞ்சுர மிந்தள மலகரி பயிரவி பந்துவ ராளிதினங்
கூடிக் கூடிப் பேடையொ டாயிர கோடிசு ரும்புளருங்
குவளைத் தடமொடு செண்பக மணமலி கொத்தார் புத்தூரு
ளாடிப் பூரத் தினில்வரு திருவே யாடுக செங்கீரை
யழகனு மப்பனு மின்புற நண்புட னாடுக செங்கீரை. (3)
வாழ்வா ரிழிகுல மாயினு மழகுறு வடிவில ராமெனினு
மதியொரு சற்றில ராயினும் வண்மையை மனதிலு றாரெனினும்
பாழ்வாய் கொடுகுல பதியே மதனா பண்டித பண்டிதகற்
பகதரு வேயென வதிமது ரக்கவி பாடியு மவர்பின்போய்த்
தாழ்வா சகமுட னுண்டிக் குழல்பவர் தம்மொடு கூடாதே
தமதிரு தாள்புகழ் செல்வ மெமக்குக் தந்துல கத்தெமையா
ளாழ்வார் திருமக ளாரே யன்புட னாடுக செங்கீரை
யடிகனு மப்பனு மின்புற நண்புட னாடுக செங்கீரை. (4)
வேறு.
கருமுகிற் கணநுழைந் திமிழ்பொழி லரங்கதாக்
கதலியிரு புடையுநிற்பக்
கதிர்விரித் தெழுதுகிற் கொடிபடர்ந் தெதிரெதிர்
கலந்துபின் னியகற்றைதாழ்ந்
திருமுகத் தினும்வெளி யடைப்பதைத் தள்ளியீ
ரெழின்மஞ்ஞை பின்பகவவந்
திந்துவுத யஞ்செய்ய வொருமஞ்ஞை வளைமுரல
வெகினத்தின் முன்னராடல்
பொருமுகத் தெழினிநீத் தாடலா சானுடன்
போந்ததோ ரியமகளொடும்
பொன்விளக் கெழமுழவி ரட்டநா டகவனிதை
பூபதிமு னாடலேய்க்குந்
திருமுகத் துறையரங் கத்தமுதி னமுதமே
செங்கீரை யாடியருளே. (5)
எற்றிய தரங்கப் பயோததிக் குணதிக்கி
லேமமால் வரையினனிகத்
திண்டிய விருட்பிழம் பெறிதர வெயிற்பிழம்
பெறிகதிர் வெதுப்பவேர்நீர்
வற்றலிற் பரியறை பிளந்துலவை முனமரா
மர நிரை தளிர்த்துமென்பூ
மல்கிநற வொழுகவெண் முகில்கமஞ் சூற்கொண்டு
வார்புனல் கவிழ்க்கவிகல்கூர்
கொற்றவன் கோட்புலிக் குருளையான் முலையுணக்
கோக்குழக் கன்றுமுழுவைக்
குவிமுலைப் பாலுணக் கண்ணன்வாய் வைத்தவேய்ங்
குழலிசைக் கிணையிதென்னச்
சிற்றிடைப் பெருமுலைப் பூவைமார் குழைதரச்
செங்கீரை யாடியருளே
செஞ்சொற் றிருப்பாவை பாடித் தரும்பாவை
செங்கீரை யாடியருளே. (6)
கானுலா முல்லையிற் குல்லையைத் துழனிபயில்
கழனியிற் கமலமெனைநீ
காட்டினாட் டினிலொப்ப தன்றுபொற் புடையபொற்
கன்னியைப் பெற்றளித்தேன்
ஞானபூ ரணமாய னவயவங் கட்குவமை
நாட்டமணி வடமாயினே
னானென்று நீயுவமை மணிமாலை யாகியும்
நளினியைப் பெற்றிலாயா
லானதா லெனவவ மதித்ததா யினைவெறுத்
தந்தரம் வீறெய்தவே
யாயர்பா டிச்செல்வர் வில்லிபுத் தூரதனு
ளகிலமன் னுயிர்தழைப்பான்
றேனறாப் பரிமளத் துளபத் துதித்த நீ
செங்கீரை யாடியருளே
செஞ்சொற் றிருப்பாவை பாடித் தரும்பாவை
செங்கீரை யாடியருளே. (7)
நிறைகொண்ட மனதிலுறு பொறைகொண்ட பூதங்க
ணிலைகொண்ட பொறியைந்தின்வாழ்
செறிகொண்ட புலனைந்து குறிகொண் டடக்குவதை
நியமமது கொண்டடக்கு
முறைகொண்ட தொண்டர்தம் பறைகொண்ட கொண்டல்குறு
முயல்கொண்ட மதியினைத்தன்
முடிகொண்ட சோலைமலை குடிகொண் டிடங்கொண்ட
முதல்வன் றிடங்கொண்டநான்
மறைகொண்ட சிறைகொண் டுரங்கொண்ட புள்ளரசன்
மதிகொண்டு துதிகொண்டதால்
வாகனங் கொண்டமான் மோகனங் கொண்டருள்
வளங்கொண்டு குழையுமதியைத்
திறைகொண்ட வாணுதற் பிறைகொண்ட பெண்ணரசி
செங்கீரை யாடியருளே
செஞ்சொற் றிருப்பாவை பாடித் தரும்பாவை
செங்கீரை யாடியருளே. (8)
போராடு சமர்முனையி னேராடு வார்நிறப்
புண்ணீரு ளாடமுனையின்
புறமாடு வாருள்ள மூசலா டவுமுடற்
புள்ளாடல் காணாதவெஞ்
சூராடல் வென்றவப் பேராடல் வேலினைத்
துறையாடு கெண்டையிணையைத்
துணையாடு மஞ்சனச் சேறாடு கண்ணிஞர்
துணைவரொடும் விளையாடுமெய்
வேராட லொழியநன் னீராடி யேகவவர்
மென்னடையு நின்னடையுமே
வேறல்ல வாமென்று சேவலூ டியபெடையின்
மெல்லடியின் வீழ்ந்துணர்த்திச்
சீராடு திருமுக்கு ளப்புதுவை யபிராமை
செங்கீரை யாடியருளே
செஞ்சொற் றிருப்பாவை பாடித் தரும்பாவை
செங்கீரை யாடியருளே. (9)
பாசந் தழைப்பவிரு வினைதழைத் தேசனன
பந்தந் தழைத்தசிறியோர்
பழையபே ரின்பந் தழைத்தவீ டெய்தப்
பராங்குச னெனத்தழைத்தே
வாசந் தழைத்துமக ரந்தந் தழைத்துநறை
வழியமுகை யவிழ்செவ்விபோல்
வாடவா டப்பரிம ளந்தழைத் தொளிதழையு
மகிழ்மாலை புனைமார்பினா
னேசந் தழைத்ததிரு மகளாகி யேகற்பு
நிலைதழைத் தருடழைத்தே
நிறைதழைத் துத்தமப் பொறைதழைத் துப்பரம
ஞானந் தழைத்துமுந்நீர்த்
தேசந் தழைத்திடத் தழைதமிழ்ப் புதுவையாய்
செங்கீரை யாடியருளே
செஞ்சொற் றிருப்பாவை பாடித் தரும்பாவை
செங்கீரை யாடியருளே. (10)
பெருமக ளெனத்தவள மலர்மாளி கைக்குரிமை
பெற்றகலை மகளிமயமாம்
பேர்கொண்ட கோதண்ட வேதண்ட மின்புறப்
பெற்றமலை மகடுடக்கிப்
பொருமக ளெனத்தகுஞ் சிலைமக ளிசைத்திறம்
புகலுநிலை மகணால்வரும்
புகழவரு தலைமக ளெனத்தழைத் தேபுனிதர்
போற்றுதிரு வாழ்மார்பருக்
கொருமக ளெனத்தவம் பெரிதுடைய நங்கைதிரு
வுதரத்தி னுட்குடிபுகுந்
துலகில்வந் துபநிடத மோதாது ணர்ந்துதமி
ழுரைசெய்த குருகைமாறன்
திருமக ளெனத்தமிழ்ப் புதுவைவரு பெண்ணரசி
செங்கீரை யாடியருளே
செஞ்சொற் றிருப்பாவை பாடித் தரும்பாவை
செங்கீரை யாடியருளே. (11)
------------
3-வது தாலப்பருவம்.
பிறங்குந் தவளக் கறைக்கவட்டுப் பிறைக்கோ டுழக்கக் குளிறுதிரைப்
பெருநீ ரினைமொண் டெழுபருவப் பேழ்வாய்க் கருவி முகில்பிளிற்றி
யுறங்கு மகக்கா ழகிற்பொதும்ப ருலவைப் பிறைக்கோட் டையுமுழக்க
வுலப்பில் களிவண் டிழைத்தவிறா லுக்க நறவ முடனமுதுங்
கறங்கு புனலுட் கலந்தபல கவின்சேர் திருமுக் குளத்தினொடுங்
காமர்த் திருமுக் குளமுளதாற் காதற் றுணையில் லறத்தினர்நல்
லறங்கண் டவர்வாழ் புதுவையிற்பெண் ணமுதே தாலோ தாலேலோ
அரங்கத் தமுதம் விரும்பியபெண் ணமுதே தாலோ தாலேலோ. (1)
வற்றாக் கரட மதக்கலுழி வழியக் கடைக்கண் ணினில்வடவை
வழிந்து பொழிந்து புறங்காட்ட மறங்காட் டுநர்மார் பினையுழுத
முற்றாப் பிறைக்கிம் புரிக்கோட்டு முடக்குந் தடக்கை வயக்களிற்றை
முழவத் துணைத்தோள் புடைத்துடக்கி முழக்கி யுழக்கி யுயிர்பருகிப்
புற்றா டரவிற் பிணித்திடித்துப் பொருமல் லரைக்கொன் றுலப்பிலிகல்
புரிமா துலன்பொன் முடியுதைத்த பொற்றாட் கற்றா நிரைமேய்த்த
சிற்றா யனைக்கா தலித்தருள்சிற் றிடைப்பெண் ணமுதே தாலேலோ
சிறைவண் டிமிர்பூந் துளவளித்த தேனே தாலோ தாலேலோ. (2)
வேறு.
செந்தா மரையோ டையுணின் றயலே திடர்கூர் புளி னத்தாய்த்
திடர்பைங் கமுகிற் படரும் பவளச் செக்கர்க் கொடிதானக்
கொந்தார் கமுகும் பரினின் றிம்பர்க் கொழுகொம் பாவீழக்
கொடியிற் பிறைக்கோ டுழநெக் கமுதங் குதிகொண் டெழுசால்பான்
மந்தா கினிவீழ் சடையா னிமவான் மகளோ டுடலொன்றாம்
வகைபெற் றுறையுங் கயிலைக் கிரியாய் மண்ணோர் விண்ணோரெண்
சந்தா டவிசூழ் புதுவைப் பதியாய் தாலோ தாலேலோ
சரதத் திருவே பரதத் துவமே தாலோ தாலேலோ. (3)
உரமே வியவென் பொடுதோல் போரூ னுடலைத் திடமென்றே
யுண்டி படைத்துப் பண்டிக் கிரையிட் டுறுதி யுறாமாயா
புரமா னதனுட் குடிபுக் கவரைப் புறம்விட் டுறுதியுறும்
பூதல மாதவர் தமைவழி பட்டுப் பொருளுரை கற்றவராய்த்
திரமா கியபே ரின்பம தெய்தச் செந்தமிழ் தேர்புதுவைத்
திருமா நகருட் குடிகொண் டுறைநின் றிருவடி களிலென்றுஞ்
சரணா கதியென் றடைவா ரமுதே தாலோ தாலேலோ
சரதத் திருவே பரதத் துவமே தாலோ தாலேலோ. (4)
பங்கே ருகனொடு கொந்தார் குழலுமை பங்கா னெனுமவரைப்
பற்றிச் சுழல்வீர் நுமதிரு பசையிற் பசையிலே யெம்பெருமா
னெங்கே சவனைத் திருவுடை யடிகளை யேத்துமி னிதுவேபே
ரின்பந் தருமென வீரொன் பதுபூ மியினுந் திகழ்மும்மைச்
செங்கோ லதனை நடாத்திய யோகீந் திரனென வளர்பெம்மான்
றிரைதவழ் பொன்னிக் கோயிலி லண்ணன் திருவுள மகிழவருந்
தங்காய் தங்காய் தண்ணந் துளவரு ணங்காய் தாலேலோ
சரதத் திருவே பரதத் துவமே தாலோ தாலேலோ. (5)
விதியைப் பெறுகா ரணனுக் கிணையார் விமலைக் கிணையார்யார்
விழலிற் சுழல்வீர் நதிகட் கிறையாம் விரசைத் துறைமேல்வாழ்
பதியிற் கிணையா யொருபொற் பதிநீர் பகர்தற் குளதாமோ
பதியைப் பசுபா சமொடுற் றிடுவீர் பதியுட் புகுவீரா
மதிகெட் டுழல்வீர் மதியைத் தருநான் மறைகற் றறியீரால்
வழுவத் தைவிடீ ரெனுமுத் தமாமா மதிபெற் றவராய்வாழ்
ததியர்க் குயிரே புதுவைப் பதியாய் தாலோ தாலேலோ
சரதத் திருவே பரதத் துவமே தாலோ தாலேலோ. (6)
அமர்சொற் பொருளை யணிபெற் றுளதா யடைவிற் பலபாவா
யவையிற் பலபா வினமுற் றனவா மகலக் கவிதானோர்
கமரிற் கவிழா துலகத் தெமையாள் கருணைக் கடலாய்வாழ்
கருளக் கொடிவா கனனைத் துறவோர் கனியைப் புகழ்கோமா
னெமர்கட் கிறையாம் வகுளப் பெருமா னியல்பைப் புகழ்நாவா
ரியலைத் தெளிவா ரிசையைத் தெளிவா ரிறையைத் தெளிவாராந்
தமரைப் பெறவாழ் புதுவைப் பதியாய் தாலோ தாலேலோ
சரதத் திருவே பரதத் துவமே தாலோ தாலேலோ. (7)
கண்ணன் கருணா கரனெடு மால்செக் கமலத் தலர்போலுங்
கண்கை கால்செங் கனிவா யினனக் கமலத் திலைபோலும்
வண்ணஞ் செறிமே னியனென வேதிரு வாய்மலர் பாடலினால்
வாழ்த்தலி னக்கம லம்பா டும்பெரு மானென வாழ்குருகூ
ரண்ணலி னொருதிரு மகளே கோயிலி லண்ணற் கொருதங்கா
யடியவர் வாழ்வுற வருநங் காய்கற் றவர்புகழ் தென்புதுவைத்
தண்ணந் துளவெனு நற்றாய் பெற்றாய் தாலோ தாலேலோ
சரதத் திருவே பரதத் துவமே தாலோ தாலேலோ. (8)
வளமை தழைத்தவ னிளமை தனக்கிசை வடிவொரு வர்க்கிலையாய்
வதன மதற்கிணை மறுவறு சித்திர மதியமெ னத்தகைசா
லளக மதற்கிணை புயல தெனத்தவ மவைபெற வைத்ததுபோ
லழகு பெறப்பொலி திலக நுதற்கிணை யவிர்பிறை கச்சணிவார்
களப முலைக்கிணை கமல முகைத்துணை கயல்கள் விழிக்கிணையாங்
கடலி னுதித்தெழு மமுத மொழிக்கிணை கதிர்நகை யொப்பதுவே
தளவ மெனத்தவ மவைபெற வைத்தாய் தாலோ தாலேலோ
சதுமறை யைத்தெரி புதுவையு ளுத்தமி தாலோ தாலேலோ. (9)
அளைசெறி வளைதவழ் கடல்கெழு திடல்வளை யமுதெழு மமுதினுள்வா
ழரவணை விழிதுயி லமுதிரு நதியு ளரங்கத் தமுதெனவே
முளைமதி நதிபதி சடிலியு முளரியுண் முதல்வனு மடிதொழவாழ்
முதலிரு புயவரை யினுமிரு செவியினு முழுகிய தொடையெனலாய்க்
கிளையொடு கிளைகளி யளிநறை தெரியில கிரியேழ் பிலகரிகைக்
கிளையிந் தளநை வளமுழை தேசாக் கிரிகுச் சரிபாடத்
தளையவிழ் நறுமலர் மாளிகை தருவாய் தாலோ தாலேலோ
சங்கத் தமிழ்மா லிகையது பாடித் தருவாய் தாலேலோ. (10)
வேறு.
விழுமி தெனவெழு தரிய மறைமொழி விதியை மதிபுணர் நிறையி னிறைநிலை -
விரத முடனுணர் சரத னெனுமயன் வானாடாள்வான் வானோரால்
விழுது புரையிரு பதுகை மதுகையின் விடையர் புலியத ளுடையர் நதிமதி -
விரவ வரவணி சடிலர் வடிசுடர் வேலோசேலோ வாளோகூர்
விழிக ளெனுமுமை யமையொ டமைதழை வெளிய மலைகளை களிய னிடர்செய -
வெருவி யிடர்களை களைக ணெவரென வாராய்வானோர் சார்வாராய்
விசைய வெழுபரி யிரத நடவிய வெயிலு மிருள்கடி யமுத கிரணனும் –
வெளியில் வலம்வரு சிகர வடவரை மீதேபோயா ராய்வாரா
யிழுகு மிணர்நிண முதிர மொழுகியு மிரவு பகன்மிளிர் பருதி வளைவல –
மிடம துறவரி யமளி யதன்மிசை யேறாவேறோ ராதேதா
னெமையும் வழியடி மைகொளு மொருதிரு விருகை யொருபத மிளகு நிலமக –
ளிருகை யொருபதம் வருட விழிதுயில் மாயாமாயா தாதாவே
யிறைவ நினதடி யிணைகள் சரணென விமிழு மெறிதிரை யமுத வுததியி –
னெளிதின் முறையிட வபய மருளிய தேவாவீரேழ் பாரோர்தா
ழினிய தசரதன் மதலை யெனவிரு மகளு மிறைவனு மிதய மகிழ்தர –
விளையர் வளையகி சுதரி சனமவை தாமேயானார் நீர்சூழ்பா
ருழுத வலமருள் சனகன் மகளுட னுசித மனையற மதனில் வளர்வுழி -
யுரைசெய் வினைமர வுரியொ டகலிய காடேநாடாய் வாழ்வாரா
யுறையு மளவினி லிறைவி பிரிதலு மனும னுறவொடு கவிக ளரசன -
துறவு முதவலி னரலை யணைசெய்து காலாளோடே மேலாளா
யுலக நலமுற நிருதர் குலமற வுயிரி னொருகணை யுதவி வினையற –
வுணர்வொ டுடலுயி ரொருவ ரெனநிகழ் பூமாதோடே தேர்மீதா
யுரிய திருநகர் மருவி நவமணி மவுலி பரதன துவகை யொடுபுனை –
யொருவ ரருகமை யிருவ ரெனுமவ ரோடேயாறா டாவீழ்வார்
புழுகின் முழுகிய களப ம்ருகமத புளக முலைமுகி லளக வனிதையர்
புளின மிசையிடு கலைக ளவுகொடு போனாரானா நோயோகூர்
புயல்க டுளிபர விடியின் முடிவிழு பொழுதி னலம்வரு நிரைக ணிலைதளர் –
பொதுவர் களிதர மலைய திடுகுடை யாவாவேறாய் வாரார்
புதல்வர் வடமலை முதல்வர் நதியிடை பொறிகொள் கணபன வரவி னிடைதுயில் –
புனிதர் குழகம ரழக ரெனவளை சோதாய்தாலோ தாலேலோ
புணரி தனிலெழு மமுத முதவிய புதல்வி மணமலி துளவ மருளிய –
புதுவை நகவரு முதல்வி யெனவளர் தாயேதாலோ தாலேலோ. (11)
-------------
4-வது. சப்பாணிப்பருவம்.
கவளக் கரியுரி யுடலைப் பொதிநதி கட்டு சடைக்காடன்
கமலத் தயனொடு கருதிச் சுருதிகள் கட்டளை யிற்பாடத்
தவளப் பிறையெயி றரவிற் பதிபர தத்துவ நற்சோதி
சரணத் துணைநடி கதிபற் றியசதி தப்பற மெய்ப்பாகப்
பவளக் கொடிமடு வினைவிட் டகல்செறி பச்சடை யுட்சோலைப்
பணைபுக் கொளிருமின் முகிலுட் டுழவிய பத்தியை யொப்பாகுங்
குவளைத் தடமலி புதுவைத் திருமகள் கொட்டுக சப்பாணி
குயிலைப் பழிமொழி யமுதத் திருமகள் கொட்டுக சப்பாணி (1)
முதலைக் கிடருற மதவெற் பிடரற முற்ற விசைத்தோடி
முடுகிச் சுடர்விடு திகிரிப் படைதொடு முத்தன் மதித்தோது
மதலைக் கிடரிழை வயிரத் திரணிய னெற்று மலைத்தூணின்
வருமுத் தமமுழு முதலைத் தமதுளம் வைத்த திறத்தோடுந்
திதலைப் பணைமுலை புளகித் திடநடி சிற்றிடை பெற்றார்மெய்த்
திரமுற் றிடமொழி மறையின் பொருளுரை திக்கி லுறச்சோலைக்
குதலைக் கிளிமொழி புதுவைத் திருமகள் கொட்டுக சப்பாணி
குயிலைப் பழிமொழி யமுதத் திருமகள் கொட்டுக சப்பாணி (2)
வேறு.
வங்கக் கடற்பாணி தனையடக் கியபாணி மலயப் பொருப்பாணிநூன்
மரபிற் றரும்பாணி யைப்பெற்ற முற்பாணி வாழ்வுபயில் கீதநடைசா
ரங்கத் தாயொருவ ரிருபாணி யாலெழுத வரியதா யொருபாணியா
லவிநயம் பெறமொழிந் தருள்சுருதி யுட்கொண்ட வருண்மாறர் பாமாலைபெற்
றெங்கட் கமைந்தவிரு பாணியஞ் சலிசெய்ய விரிகா விரிப்பாணியா
லிணைமாலை பெற்றுளா ரின்புறப் பூமாலை யீய்ந்ததொடு பாமாலையாய்ச்
சங்கத் தமிழ்ப்பாடல் பாடித் தரும்பாவை சப்பாணி கொட்டியருளே
சததளக் குமுதத்தின் மழலைமென் பாணியாய் சப்பாணி கொட்டியருளே (3)
முப்பாணி முற்றிய வளாகத்து மாவலி முனஞ்சென்று வாமனமதாய்
மூவடி நிலந்தரு கெனப் புகர் தடுப்பவு முயற்சியிற் பெய்த வண்மைக்
கைப்பானி யைக்கொண்டு மூதண்ட மளவிடு கழற்பாணி தன்னையீசன்
கட்டழகு டைத்தலைப் பாணியென வைப்பித்த கண்ணன்விண் மிசைவிரசையா
மப்பாணி யைக்கடந் தும்பராய் நிலைபெற்ற வந்தாம முதல்வன்மேனா
ளாடக னுரங்கிழித் திட்டவல் லியநடத் தப்பாணி யெய்தவடியேஞ்
சப்பாணி கொட்டுமப் படிதொடி தழங்கநீ சப்பாணி கொட்டியருளே
சங்கத் தமிழ்ப்பாடல் பாடித் தருங்கோதை சப்பாணி கொட்டியருளே. (4)
அகரமுத னகரவிறு வாயுயிர்மெய் குற்றாய்த மாதியீ றெனவுமுதல்சார்
பக்கர மவைக்கிலக் கணமு மோராறிரண் டாமெனவு மொலியெழுத்தாற்
புகலுநற் சொற்களிரு திணையினைம் பாலொடு புணர்ந்து பெயர்
வினைகளாகிப்
பொற்புறும் வெளிப்படை குறிப்பெனவு மொன்று தொடர் பொதுவெனவு
முற்றெச்சமாப்
பதர்தருந் தொகைதொகா நிலையினடி தொடையொடும் பாப்பா வினம்பெற்றதாப்
பண்புடைப் பொருளிரு வகைத்ததாய் நாலொடு பயின்றுத்தி வண்ணமணிசால்
சகலகலை தெரிநிபுணர் புகழ்தமிழ்ப் புதுவையாய் சப்பாணி கொட்டியருளே
சங்கத் தமிழ்ப்பாடல் பாடித் தருங்கோதை சப்பாணி கொட்டியருளே. (5)
நேயத் துடன்பொன் கொழித்தெறி திரைப்பொன்னி நிலைபெறு
மரங்கத்துவாழ்
நிமலன்முத லைவர்க்கொ ருக்கான் மகிழ்த்தொடையல் ஞானாக
ரர்க்கொருக்கான்
காயத் திரிக்கொருக் கான்முண்ட கத்திலெண் கண்ணன் றனக்கொருக்கால்
கற்றவர் புகழ்ந்தருள் பராசரர் வியாதருட் களிகொள்வ தற்கொருக்கா
லாயத் துடன்பரவு கோபால மங்கையர்க ளனைவருக் கும்மொருக்கா
லன்பினொடு பல்லாண் டுரைத்தநின் றாதையுட னழகுறப்
பெற்றதுளபத்
தாயர்க் கொருக்கா லெமக்கொருக் கானின்று சப்பாணி கொட்டியருளே
சங்கத் தமிழ்ப்பாடல் பாடித் தருங்கோதை சப்பாணி கொட்டியருளே (6)
மண்ணகத் தினிலெய்து மானிடப் பிறவியை மதித்தமறை முதலாயநூல்
வழுவறக் கற்றுமதி நுட்பமெய் தினராகி மாதாபி தாநித்தர்வாழ்
விண்ணகத் தினரென் றறிந்துவாழ் நாளிலோர் வீழ்நா ளுறாதியற்றும்
மெய்த்தொண்டர் தொண்டர்தந் தொண்டனென் றுள்ளாது வீணிலே யுள்ள
நாளைக்
கண்ணழித் துப்புறக் கோலமது காட்டியே கள்ளமுத் திரையிலுணவுங்
காமமும் பொருளுமே பொருளெனத் திரிபவர் கணத்திலொன்
றாகுமெனையுந்
தண்ணளி புரந்தடிமை கொண்டபெண் ணரசியே சப்பாணி கொட்டியருளே
சங்கத் தமிழ்ப்பாடல் பாடித் தருங்கோதை சப்பாணி கொட்டியருளே (7)
கவடுபடு நெட்டிலைச் சூலமும் பாசமுங் கைக்கொண்ட காலன்வாயிற்
கணக்கருண் டவனேவ லிற்பிணக் கருமுண்டு கடிதினவர் கைப்பற்றுநாள்
சிவனுநான் முகனுமுப சாரவுரை செப்பினுஞ் சிறுவரையு முறுவரைவிடார்
திண்ணமென் றுட்கொள்வ தன்றியே நரகெய்து தீமைசெய் பவர்களென்றே
யவமதிப் பவையொன்று மின்றியே தீவினைக் கஞ்சியே யருள்புரிவது
மவனருளி லாயதென் றூதிய மெனுஞ்செம்மை யந்தாம மெய்துதற்காந்
தவமதித் தவர்துதித் தருள்புதுவை யபிராமை சப்பாணி கொட்டியருளே
சங்கத் தமிழ்ப்பாடல் பாடித் தருங்கோதை சப்பாணி கொட்டியருளே. (8)
வேறு.
வாதித் தெழுபர வாதிக ளெலுமத யானைகண் மதமெல்லாம்
வற்றிப் புறமிட விடியே றெனுமுரை வளர்கே சரிளெனா
வாதிப் பிரமந் திருமறு மார்பன தந்தா மத்துளதா
யகில வுயிர்க்குயி ராகிய தரியென வாதியு மந்தமுநூ
லோதித் தருபொரு ளுரையது முற்குண முற்றது கற்றதெலா
முத்தம முத்திய ளிப்பது கருணையி னோங்கிய தெனுமுரையே
சாதித் தவர்தொழு புத்தூர் நங்காய் கொட்டுக சப்பாணி
தளவம தெனவள மிகுமுகிழ் நகையாய் கொட்டுக சப்பாணி. (9)
வேறு.
நாட்டம தெட்டுத் திசையினு முலகுசெய்
நசைபுரி திசைமுகன் முக்க ணுடைத்தேவ
னாட்கம லத்துட் கலைமகண் மலைமக
ளெனுமுமை யவளுடன் முத்தி பெறப்பாரி
லீட்டம துற்றுத் தருநறு மலருட
னிருபொழு தினுமடி பற்றி விருப்போடே
யேத்தி மதிக்கப் பரிபுர நதிபயி
லிடபம தெனுமலை யிற்குடி புக்கானு
வாட்ட மறப்பற் றருதவ முனிவரு
மதிநல முறமிக முற்குண முற்றாரும்
வாழ்க்கை யொழுக்கத் தமரரொ டடிதொழ
வடமலே தனிலுறை யப்பனு மெய்ப்பாகப்
போட்ட திருக்கைத் தலமுடன் வலதுகை
புணர்தர முறைமுறை கொட்டுக சப்பாணி
பூட்டிய சித்திரப் புரிவளை யொலியொடு
புதுவையுண் மலர்மகள் கொட்டுக சப்பாணி (10)
----------
5-வது முத்தப்பருவம்.
அத்த மதக்கரி கத்த வுரைக்குமு னத்தட முற்றிடர்தீ
ரத்தர் பொருப்பழ கர்க்கொரு முத்தம ணுக்கள கத்தகலா
வுத்தம பைப்பணி வெற்பி லுதித்த வொளிக்கொரு முத்தமொடே
யொத்திரு பக்கமி ருப்பவர் மெச்சிட வுற்றிரு முத்தமுநீர்
தத்துதி ரைத்திரண் முத்த மலைத்தெறி தட்ப நதிக்கிடையே
சர்ப்ப நடுச்சர தத்துட னித்திரை தத்துவ நித்திரையாய்
முத்திய ளித்தருண் முத்தர்த மக்கொரு முத்த மளித்தருளே
முத்தமிழ் கற்ற புகழ்ப்புது வைக்கிளி முத்த மளித்தருளே. (1)
மறைமொழி வானவர் பொன்னுல காள்பவர்
வாழ்வு தழைத்திடமால்
வாமன ரூபம தாய்நிமிர் தாளினின்
வரநதி யென்பதுறீஇக்
கறைகெழு பரசு தரித்தார் சடைபுனை
கங்கைக் கொருமுத்தங்
காரித ருங்குரு பரனதி யாகிய
கன்னிக் கொருமுத்தம்
பொறைபயில் சங்கணி துறைவள மல்கிய
பொருநைக் கொருமுத்தம்
பொறியர வணையினர் தாம மெனப்புனை
பொன்னிக் கொருமுத்தம்
முறைமுறை யிலவிதழ் புரைகுறு நகைபயின்
முத்த மளித்தருளே
முத்தமிழ் கற்ற புகழ்ப்புது வைக்கிளி
முத்த மளித்தருளே. (2)
வேறு.
தேவைப் புகழ்ந்தபழ மறைபரா யட்டமா
சித்திபயின் முனிவர் பழகுஞ்
சிகரபூ தரவேர லுகுமுத்தம் விண்டுவிரி
தீமுத்த மென விரும்பேம்
பாவைத்த தண்டமிழ்க் கும்பமுனி நாவைத்த
பரவைபெறு மிப்பி முத்தம்
பரியமண லேறொருப் பரவரொடு மிச்சிலாம்
படிறுடைத் தெனவி ரும்பேம்
பூவைத்து ணர்க்கொத்த மேனிமா தவன்மகன்
பொருகழையின் முத்த மதுவும்
புதைபட்ட முத்தமென் றுட்கொளேம் வெண்ணிலவு
பொழிவதொடு புதைபடாமற்
கோவைப்ப டுந்தவள முத்தநிரை யுட்கொண்ட
கோவைவாய் முத்த மருளே
கோதையே மெய்த்திருப் பாவைபா டித்தருங்
கோவைவாய் முத்த மருளே. (3)
ஆழ்கடற் பல்கோடி யருணோத யப்புருட
ராகந் தழைத்த கோமே
தகவினந் தரமரக தத்துவச் சுடர்பற்ப
ராகந் தயங்கு கோலத்
தாழ்குழற் பொற்கும்ப விம்பவள முலைமலர்த்
தையலக லாத மார்பன்
தாமரைத் தவிசுளா னுச்சிவச் சிராயுதத்
தலைவன்ற னுச்சி கொலைசா
சூழ்வினை தொடர்ந்தவரை யாழ்நரக நீளவை
யூரியம புரம னென்பா
னுச்சிதனின் மிதிதொண்ட ருச்சிவட மலையென்ன
வுறைநீல மணியி னருள்சேர்
கோழரைச் சண்பகச் சோலைசூழ் புதுவையாய்
கோவைவாய் முத்த மருளே
கோதையே மெய்த்திருப் பாவைபா டித்தருங்
கோவைவாய் முத்த மருளே. (4)
ஊடுவா ரூடலை யுணர்த்துவா ரைக்குறித்
துள்ளிய துணர்த்து முதல்வர்க்
குறையுளாய் நித்திலத் தைப்பரப் பிச்சுழித்
தொன்றுதொட் டைந்தெண்ணியே
நாடுகா வற்கெனச் சோதியந் தாமநன்
னகர்நின்று பாலா ழிவாய்
நண்ணியே நாகபோ கத்துயி னயந்தவ
னடித்தவெகு ரூபத் துளாம்
வீடுகா மித்துளார் காமிக்கும் வடமலையுள்
விமலனும் பொன்னி நடுவே
விழிதுயிலு மமலனுஞ் சோலைமலை நிமலனும்
விரைந்தெனது புளக முலைமேற்
கூடுவா ராமெனிற் கூடலே கூடெனுங்
கோவைவாய் முத்த மருளே
கோதையே மெய்த்திருப் பாவைபா டித்தருங்
கோவைவாய் முத்த மருளே, (5)
பொருப்பூ ரெனக்குடி புகுந்தவிடை யூர்திமுப்
புரநெருப் பூரவென்றோன்
புண்டரீ கப்பொகுட் டூரதா மோதிமப்
புள்ளூர்தி பொருநர் மார்பின்
மருப்பூர் தொறுங்குருதி நதியூர வேதவள
வாரணம தூர்திபுத்தேள்
வானவ ரொடும்பரவ வண்டுழாய் பெற்றதிரு
மகளெனத் திகழு மாடித்
திருப்பூர நாள்வில்லி புத்தூர் விளங்கவரு
செல்விவெண் சங்க மேயென்
சிந்தைவிட் டகலாத மாதவன் பவளவாய்
தித்தித் திருப்ப துடனே
கருப்பூர நாறுமோ வென்றுரைத் தருளுநின்
கனிவாயின் முத்தமருளே
களபம்ருக மதபுளக முகிழ்முலைக் கோதையே
கனிவாயின் முத்த மருளே. (6)
வேறு.
ஆலந் தளிருட் கிடந்தகில மகத்திட் டுதரக் கனல்கனற்றா
தாழித் தடக்கை கிழக்குறவைத் தவற்குஞ் செரியா தெனவாடை
மேலிற் றரித்தே யொருசெவிடு வெண்சங் கினிற்பெய் திலவிதழ்மெல்
விரலா லமைத்து வளைநுதியான் மிழற்று மணிநா வினையடக்கிப்
பாலன் றருத்த கவுட்புடைவைப் பதைத்தாய் கவுளிற் றெரித்தூட்டிப்
பனிநீ ராட்டித் தாராட்டிப் பைம்பொற் றிருத்தொட் டிலிலாட்டுங்
கோலக் குழவி யிதழ்ப்பவளங் குறிப்பாய் முத்தந் தருகவே
கோதைத் திருவே புதுவையிற்பொற் கொடியே முத்தந் தருகவே. (7)
வேறு.
அரியெனச் சுருதிகற் றிடுவமுத வுரைநிற்க
வாடகன் றனது பெயரே
அறையென்னு நச்சுரை புகாமலிரு செவிபுதைத்
தரியென்ன வரியென் றபேர்க்
குரியனெங் குளனென்ன வெங்குமுள னென்னுமு
னுருத்தடித் திட்ட தூணத்
துடனுதித் தெற்றிய கரம்பற்றி யுதரத்தை
யுகிரின்வகிர் செய்து குடரே
தெரியலா கப்புனை நராரியி னடங்காச்
சினத்தழ லடக்கு தற்காத்
திசைமுகனு மிந்திரனு மடிபணிந் தேவவே
சென்றெதிர்ந் தருளினோக்கிப்
பரிமளத் தினிமைதோய் மழலைவா யமுதமொழி
பவளவாய் முத்த மருளே
பைந்துழாய் பெற்றபெண் பிள்ளைமா ணிக்கமே
பவளவாய் முத்த மருளே. (8)
மங்கலப் புன்னைநாட் பொங்கரிற் கொங்குதோய்
வாணிலா மலரினடுவண்
வரிவண் டிழைத்ததண் ணறவிறால் விம்பத்தை
மகரமொடு திமில்கறங்கச்
சங்கவெண் டிரைநீரை மொண்டுகொண் டெழுகொண்டல்
சமுகத்தி னுடன்மறைத்த
சஞ்சரீ கங்களேக் கற்றிரைத் தெழநீத்த
தன்மைதா ரகைவளைக்குந்
திங்களைக் கரியவா ளரவுபகு வாய்கொண்டு
செகமது பராவமீளத்
தேசுற வுமிழ்ந்துநீ ளிடையிரிந் தெழுவபோற்
றிகழ்செண்ப கச்சோலைசூழ்
பங்கயத் தடமேவு செந்தமிழ்ப் புதுவையாய்
பவளவாய் முத்தமருளே
பைந்துழாய் பெற்றபெண் பிள்ளைமா ணிக்கமே
பவளவாய் முத்தமருளே. (9)
பூரித்த குடவயிற் றுச்சூ லுளைந்திடப்
புரிவலம் புரியினுடனே
பூசலிட் டீன்றகோ வானித்தி லத்தின்மேற்
புணரிவாய் கொண்டவேனின்
மாரித் தலைப்பெயலுறீஇப்பக டுரப்பிமற
மள்ளருழு படையுழக்கா
மண்டினிந் தெழுதொடிப் புழுதியொரு கஃசா
வளந்தரச் செந்நெல்வெண்ணெல்
கோரித் தெளித்ததங் குரமா யிலைத்துக்
குழைந்துசூற் கொண்டீன்றுபால்
கோதித் திரண்டுதலை குப்புற்ற குலைசாய்ந்து
கோத்தமுழு மணியுமுத்தும்
பாரித்த தாமெனத் திகழ்வயற் புதுவையாய்
பவளவாய் முத்தமருளே
பைந்துழாய் பெற்றபெண் பிள்ளைமா ணிக்கமே
பவளவாய் முத்தமருளே. (10)
--------
6-வது வாரானைப்பருவம்
புழைபடு சுவட்டுக் கவுட்கள்வழி பொழிபுற்
புதக்கடாக் கலுழி நால்வாய்ப்
புயல்கிழித் தெழுபிறைக் கிம்புரிக் கோட்டுவன்
புகர்முக மழைப்ப வுருகிக்
குழைமுகத் திருமக ளணைத்தழுத் தியமென்
கொடுங்கையை நெகிழ்த்த தல்லாற்
குங்கும படீரத்தின் முழுகுமிள முலையுடன்
குழையுமார் பையுநெகிழ்த்தே
தழைதரு திருக்குழற் கற்றைகற் பகநறுந்
தாமமொடு பிடர்முயங்கத்
தமனியத் துகிலவிழ்ந் திடவிரைந் துதவிய
தயாபரன் றொண்டர் மகிழ்வான்
மழைபடிந் திடுசண்ப கச்சோலை வளமல்கு
மல்லிநாட் டவள்வருகவே
வடபெருங் கோயிலுட் கடவுண்மழ களிறணைய
வளரிளம் பிடிவருகவே. (1)
பட்டறா விளமுலைப் பாவைமார் காலையிற்
பரிமளப் புனல்ப டியவெண்
பட்டினை யகற்றவிள முலைகண்டு நாணியே
பங்கேரு கங்கண் முகுளக்
கட்டறா வுக்கதெண் ணறவுதண் புனலுறக்
கயலுண்டு பாய வயலே
கண்டுவா ளைப்பகடு முண்டுகா வினின்மண்டு
காலையிற் காமர் பலவின்
றெட்டவா சக்கனியி னினியசுளை புனலுறச்
சினவரா லுண்டு பாயச்
சினைவரா லென்பதா யந்தவண் சினையிறால்
சிந்தவெண் டிசைக டோறு
மட்டறா தொழுகுசெண் பகமலர்ச் சோலைசூழ்
மல்லிநாட் டவள் வருகவே
வடபெருங் கோயிலுட் கடவுண்மழ களிறனைய
வளரிளம் பிடி வருகவே. (2)
காமர்மர கதமணிச் சுடர்படர் முருந்துடைக்
கலபமா மஞ்ஞை தனதாங்
கழுத்தினும் விழுத்தக வடைந்தநின் சாயலைக்
கண்டுபிணி முகமெய்தலா
னாமமும் பிணிமுக மெனப்பெற்று முருகனை
நயந்துநின் சாயல் பெறுவா
னாளுஞ் சுமக்கின்ற தஞ்சுகமு மழலைக்கு
நாணிநின் மழலை பெறுவா
னேமுறச் சுகமிழந் திரதிபதி யைச்சுமக்
கின்றதுன் னடையி னொவ்வா
தெகினநான் முகனைச் சுமக்கின்ற தந்தநடை
யெமதுகண் கண்டு வப்பான்
வாமமே கலைமருங் குற்களப முகுளமுலை
மல்லிநாட் டவள் வருகவே
வடபெருங் கோயிலுட் கடவுண்மழ களிறணைய
வளரிளம் பிடி வருகவே, (3)
துண்டவெண் பிறைநுதற் கோபால மகளிர்மனை
தோறும்வெண் ணெய்யினுடனே
தொடுவுணக் கண்டுகடை கயிறெடா வாயிலொடு
சுற்றுமுற் றுபுதிருடியே
யுண்டகள் வாவருக வருகவென மாயமொ
டொளித்தன்னை பொற்றொட்டின்மேல்
யோகநித் திரைசெயா வயல்வந் தசோதைக்
குணர்த்தமணி முன்றிலதனிற்
பண்டிதளர் பசியொடு தவழ்ந்துவந் தம்மமுண்
பாலனைப் போலவேபொற்
பரிபுர மலம்பவைம் படைமணி வடத்துடன்
பாடுவாய் மறுகவறுதாள்
வண்டிரைத் தெழுதுழாய் மணமல்கு புதுவைமலர்
மகளம்ம முணவருகவே
வாடவா டப்பரி மளிக்குமகிழ் மாறர்திரு
மகளம்ம முணவருகவே. (4)
முடக்குவச் சிரவைந் நுதித்தோட்டி யுழுகவடு
முதிர்மத்த கத்தோடைமா
மூதண்ட மழைமுகிற் படலத் திடிக்குல
முழக்கென வுழக்கி யெதிர்வந்
துடக்கிய தடக்கையை யிடக்கையி னுடக்கிமற்
றொருகையாற் கிம்புரிக்கோ
டொன்றைப் பிடுங்கியது கதையாக வெதிர்தண்டு
மொருமருப் பையுமொடித்தே
சடக்கென நடித்திடா வதனுயிர் குடித்துவஞ்
சனைநீடு கஞ்சன்முடியைத்
தாளாலு தைத்துவன் றலையுருட்டிப்பந்
தடித்திட்டு வாளராவின்
படத்திடை நடித்தவட மலைவாணர் களிதரப்
பந்தடித் திடவருகவே
பழமறைப் புதுவையந் தணர்பிரா னருள்புதல்வி
பந்தடித் திடவருகவே. (5)
வேறு.
நிலைத்தா ருவின்கீ ழிருந்தரசு நிகழ்த்து மயிரா வதக்கடவுள்
ஞானா கரரா மமரரொடு நெடியோ யடியோ நிழன்மகுடத்
தலைக்கா வலதா வுலகளந்த தாட்டா மரையா யபயமெனச்
சரணா கதியிற் றாசரதி தானென் றளக்கர் தடுத்தமரிற்
சிலைக்கால் வளைத்த துடன்புருவச் சிலைக்கால் வளைத்துச் சரமாரி
சிதறிச் சிரம்பத் தினனுயிரைச் செகுத்துன் சிறைமீட் டயோத்தி புகுந்
தலைக்கா விரியுட் டுயிலரங்கர்க் கமுதே வருக வருகவே
அழகர்க் கமுதே வடமலைவா ழனகர்க் கமுதே வருகவே. (6)
வேறு.
கயலை வடுவொடு கடுவை மதனடு கணையை மருள்புரி பிணையையே
கருது மதர்விழி விபுத ரரிவையர் களியி னடிதொழ வருகவே
அயனு மயன்வழி முனிவ ரனைவரு மமரர் குடிபுகு பதவியாள்
பவனு நிலமிசை பொழியு நறுமல ரணையி னழகுடன் வருகவே
யியலு மியலுட னிசையு மெழுவகை யிசையு மிசைபயி னடமுமா
மினிய தமிழ்பயில் குருகை வருமகி ழிறைவர் திருமகள் வருகவே
புயலின் மிசையெழு மதியினகடுழு புதிய மலர்விரி பொழில்கள்குழ்
புதுவை மறையவ ரதிப னருண்மலி புதிய திருமகள் வருகவே. (7)
கரிய முகில்புரை யளக வனிதையர்
கரையி லிடுகலை யதனையே
களவி னொடுகவர் பொழுதி லெமதணி
கலைக ளருள்கென விருகையா
லரிய வடியிணை யிருவர் பணியவு
மடையை யுடையென வருளுவா
ரமலர் பரிபுர நதியர் குழகம
ரழகர் மழவிடை வரையுளார்
தெரிய னதியென நதியு ளரவணை
திகழ வொருதுயில் பழகுவார்
சிகர வடமலை முதல்வ ரெனுமிவர்
தினமு மகிழ்தர வருகவே
புரிசை வடவரை யெனவு மிருசுடர்
புவன மிசைவலம் வருவதோர்
புதுவை மறையவ ரதிப னருண்மலி
புதிய திருமகள் வருகவே. (8)
வேறு.
பெருமா நிலத்தி லுதயகிரிப்
பேராற் றினுட்சேற் றிடையணுவாய்ப்
பிறந்து சிவப்பெண் ணிரண்டூழி
பெருகப் பெருகுந் தனப்புறமாம்
பருமா மணியை வேகடஞ்செய்
பவர்வே டகஞ்செய் தமைவடிவிற்
பணிக்கே வணத்துட் பொற்றகட்டிற்
பருதி யெனலா முழுத்தகுணத்
தருமா மணியு மிணைதோற்ப
தாகத் தெவிட்டா மருந்தருந்து
மமரர் பதிகா வலன்பணிநா
யகமொன் றிதெனத் தமிழ்ப்புதுவை
வருமா மணியே பட்டர்பிரான்
மகளே வருக வருகவே
வடவேங் கடத்துட் கருமணிக்கண்
மணியே வருக வருகவே. (9)
வேறு.
செஞ்சூட்டு வைந்நுதிக் கொடுமுட் டுணைத்தாட்
சிறைச்சேவ லம்பதாகைச்
செவ்வேளை யுங்கரி முகத்தானை யும்பெற்ற
சிவனைப் பயந்ததுடனே
யஞ்சூட்டு வெள்ளோதி மப்பாக னெனவுல
கனைத்தையும் பெற்றதோற்றத்
தாரணப் பனுவல்பயில் காரணத் திசைமுகத்
தயன்மவுலி மேல்வைத்தசெம்
பஞ்சூட்டு சீறடிப் பிடிநடைத் துடியிடைப்
பவளவாய்க் குவளையுண்கட்
பத்திநித் திலநகைப் பழுதிலா மதிமுகப்
பரிமளத் தவளமுகைதோய்
மஞ்சூட்டு மென்குழற் பொற்கொம்ப ரெனவாச
வண்டுழாய் பெற்றதொன்றா
மல்லிநாட் டனம்வருக புத்தூர் விளங்கவரு
மழலைமென் குயில்வருகவே. (10)
----------
7-வது அம்புலிப்பருவம்
காரணப் பாமாலை பாடியும் பூமாலை
கைபுனைந் தேசூடியுங்
காதலன் றிருவுள முவப்பிக்க வந்தநங்
கைப்பிடித் திடுமளவுநீ
பூரணம் பயிலுமுழு மதியென்ன வமுதினைப்
பொழிகநற் கிரணங்களாற்
பொங்குவெந் தழலினைப் பொழியாய்கொ லென்றுனைப்
போற்றுகா ரியநினைந்தோ
சீரணங் காயநின் றேவிமா ரோடுநீர்
திங்களைப் பிரியுமளவிற்
சிதையா திருந்ததிற முரையுமென வுணரவோ
தேவியரின் வருகவென்றா
ளாரணந் தொழுதமிழ்ப் புதுவையாண் டாளுட
னம்புலீ யாடவாவே
அரனுமிந் திரனுநின் றடிதொழுங் கோதையுட
னம்புலீ யாடவாவே. (1)
சோதிவா னாவரண மேழுந் தொழப்பவனி
சுற்றிவரு சோதியிவணீ
சுடரவன் பதவிமே லாவரண மொன்றுமே
சுற்றிவரு சோதியாகும்
பாதியா கியமதிச் சோதியா மறுவுடன்
பகன்மட்கு சோதியினை நீ
பரனையுணர் மறுவற்ற முழுமதிச் சோதியிவள்
பகலிரவு தழைசுடரினா
ணீதியா லெண்ணிரண் டாயகலை யுடையை நீ
நிகழ்திருப் பாவையுடனே
நீடுதிரு மொழியெனப் பதின்மடங் கதன்மே
னிறைந்தபன் மூன்றுகலையா
ளாதிபூ ரணமதியின் விளையாடு மிவளுட
னம்புலீ யாடவாவே
யரனுமிந் திரனுநின் றடிதொழுங் கோதையுட
னம்புலீ யாடவாவே. (2)
புதியவண் டமிழ்மறைப் பொருளொடும் பழமறைப்
பொருளொடும் பழகுமுரவோர்
புலமையைக் குறுகுமக விருளொடும் புறமிடப்
புறவிரு ளகற்றுமுகமா
மதியமுண் டிவளிடத் துன்னையும் புவனமுழு
மதியெனும் புறவிருளலான்
மனவிரு ளகற்றியிடு மெய்த்தவமு மெய்தலாம்
வைகுந்த வாழ்வுபெறலாங்
கதியுடைத் ததியர்தம் மதியதா மரையையுங்
கைத்துணைக் கமலத்தையுங்
கண்ணெகிழ்த் துங்குவித் துஞ்சுடரு மிந்தமதி
கண்ணெகிழ்ப் பதுமெய்தலா
மதிமதுர வண்டமிழ்ப் புதுவையாண் டாளுட
னம்புலீ யாடவாவே
யரனுமிந் திரனுநின் றடிதொழுங் கோதையுட
னம்புலீ யாடவாவே (3)
கரபங் கயத்தன் றெடுத்துமா தவன்மிக்க
காகோத ரத்தணைத்தே
கடல்கடைந் தமுதெழுவ தற்கும்பர் தம்பமாங்
களைகண்ண தாகுமுனையே
வரபங்க முறநிலத் திட்டரைத் தனனென்னும்
வழுவினை மனத்துள் வைத்தே
மழுவாளி சந்திரசே கரனாக வரவினுடன்
வன்சடையில் வைப்பித்ததா
யிரவின்க ணொளியெனப் பகல்விளங் கவுமறு
விலாதியற் றவுநினைந்தோ
வெண்ணிலா முனிவர்முழு மதியுடன் பழகியும்
மிம்பருனை வருகவென்றா
ளரவிந்த லோசனப் புதுவையாண் டாளுட
னம்புலீ யாடவாவே
யரனுமிந் திரனுநின் றடிதொழுங் கோதையுட
னம்புலீ யாடவாவே. (4)
உரனுடைப் புனிதன்முன் பிட்டசா பத்தினா
லுறுகலை யிழந்துலவுநா
ளொன்றாய வமையெனுங் கலையுடன் வெய்யவ
னுழைப்புக் கொளிப்பதென்னீ
யிரவுபக லொளிதூண்டு மிவள்வதன மதியமெண்
ணெண்கலையி னொருபூர்த்தியா
யிருடுரந் தெழுநிலா முன்றிலுண் டடியரி
னிருக்கலா மிஃதன்றியே
பரவைவெண் டிரையுவட் டெழுதிருப் பாற்கடற்
பரமன்மெல் லணையதாகும்
பருமணிச் சூட்டுடைப் பஃறலைத் துத்திப்
பணாடவி கவித்தசெல்வத்
தரவினுக் கரசனிவ ளடிமைகா ணரவுறா
தம்புலீ யாடவாவே
யாடன்மா மயிலியற் கோதைகா ணரவுறா
தம்புலீ யாடவாவே. (5)
தினசரிதை சிறுபிறை நுதற்றிரும ணெழுதத்
திருந்துகண் ணாடியெனவே
செங்கையிற் கொண்டமதி யொன்றுண்டு முகமதி
சிறந்ததொன் றுண்டுலகுளோர்
மனதுற மதித்தநித் திலநிழற் குடையென்னு
மதிகளுண் டிவையலாதே
மதியிலா தவளல்ல வெண்ணிரா யிரமென்ற
வதனமதி கொண்டுலாவுங்
கனகரத் னத்தொடிக் கைத்துணைக் கோபால
கன்னியர்க ளிரவுபகலாய்க்
கைகலந் தொருகணமு மகலாத வுத்தமக்
கற்புடைய நங்கையென்றா
லனவரத கலியாண புதுவையாண் டாளுட
னம்புலீ யாடவாவே
யரனுமிந் திரனுநின் றடிதொழுங் கோதையுட
னம்புலீ யாடவாவே. (6)
பம்புவெண் டிரைசுழித் தெழுகடற் றானைசூழ
பாரினிற் காடுபதியாம்
பணைமருப் பிரலையொடு மான்வெருண் டோடவே
படிறிழைப் பதுவுமல்லாற்
கிம்புரிக் கோட்டுப் பணைக்கைக் கடாநதி
கிளைத்தெழுங் கரடநால்வாய்க்
கெசேந்திரன் வெருவியே பிடியையிடை யிடமீண்ட
கீற்றுவெண் பிறையெயிறுகூர்
வெம்புலித் திரள்புறங் காட்டுநர சிங்கத்தை
மெய்புக்கு வென்றமானா
மெல்லியன் மடந்தையொரு மானுன்னை வெருவாது
மெய்யுற விளக்குதற்கோ
வம்புலிக் கடவுளெனு நின்னைவரு கென்றுளா
ளம்புலீ யாடவாவே
வபிராம வண்டமிழ்ப் புதுவைப் பிராட்டியுட
னம்புலீ யாடவாவே. (7)
8, 9, 10 – செய்யுட்கள் பிரதியில் வீடுற்றன.
------------
8-வது சிற்றிற்பருவம்.
ஆதார மேருபூ தரநள் ளிடைத்தூண
மருவரைக ளெண்டிசைக்கா
லகமனையி ளாவிரத கண்டமணி மண்டப
மதுநினது கொலுமண்டபஞ்
சூதான முற்றபுற மனைகளே ழலையாழி
சுற்றுமெழு தீவுநாளுஞ்
சுகமேவு மேமபூ தலநிலா முற்றமெயில்
சுடர்தூண்டு நேமிவரையாப்
பூதாதி வழிவந்த வண்டபித் தியுமாப்
பொரும்புறக் கடலகழியாப்
பொன்னுலக முதலைந்து முப்பரிக் கையதாப்
புரந்தபெண் ணரசியேமென்
சீதார விந்தமலர் வளவயற் புதுவையுட்
சிற்றிலை யிழைத்தருள்கவே
தென்னரங் கேசன்முத லைவருங் குடிபுகச்
சிற்றிலை யிழைத்தருள்கவே. (1)
கெழுதகைப் பரமேட்டி முதலாய வப்பிரா
கிருதபூ தங்களைந்தாற்
கிளைவாசு தேவன்முத னால்வர்பின் பன்னிருவர்
கேசவா தியர்களானோன்
முழுதுமின் புற்றும்ப ரெய்துதிரு வோலக்க
முத்தர்நித் தரின்முற்றுவான்
முற்றுமே ழாவரண பேரில்ல நினதாக
முன்பிழைத் ததுவுமல்லா
லுழுவலன் புடைநினைதி லீலைக் குறுப்பதா
யொருசிற்றி லுலகமீரே
ழுடையபல கோடிபகி ரண்டரண் டங்களை
யுருப்பெற விழைத்த முதன்மைச்
செழுமலர்த் தடமருவு புதுவைப் பிராட்டிநீ
சிற்றிலை யிழைத்தருள்கவே
தென்னரங் கேசன்முத லைவருங் குடிபுகச்
சிற்றிலை யிழைத்தருள்கவே. (2)
புற்றிடைப் பிறவாத பஃறலைக் கணபணப்
பொறியரா வைத்தகற்றைப்
புரிசடைச் சிவனயன் பாகசா தனனமரர்
பொன்மேரு வலமதாகச்
சுற்றிடைப் புவலோக மிசையுதித் தெழுசந்த்ர
சூரியர் குழாத்தினோடுந்
தும்பையிற் கொண்டியென் றிவ்வுலகி லாசைத்
தொடக்கறுத் தவ்வுலகையே
பற்றிடைக் குலமகட் கோலையை யளித்தரிய
பரமபத மெளிதளிக்கும்
பரமஞா னக்கோயி லண்ணன்முத லியமுதல்வர்
பரவுதிரு முன்றிலுடனே
சிற்றிடைக் கிடரிழைத் தெழுமுலைப் பெண்ணரசி
சிற்றிலை யிழைத்தருள்கவே
தென்னரங் கேசன்முத லைவருங் குடிபுகச்
சிற்றிலை யிழைத்தருள்கவே. (3)
புற்புத மொத்த நிலைப்பிசி தக்குடில் பொற்பன செய்திடுமிப்
பூதவிகாரப் புறநிலை யுண்ணிலை புதலுகி னீயலகா
ணற்புத வாயி லிழைத்திடு நுண்ணூ லதனிடை நின்றயலே
யதுசென் றுற்ற சிலம்பி வியாத்தியி னணுமய மாயிதயத்
துற்றுணர் வொடுசுடர் மயமா யிரவியொ டுறுசுட ரெனவிறையோ
னுணர்வுட னிறைநிலை யுயிர்நிலை யுடனிலை யுணர்வது நீயெனவே
தெற்றென முற்ற வுணர்த்துணர் வாழ்வே சிற்றி லிழைத்தருளே
செய்ப்புது வைப்பதி யுட்பயி லுத்தமி சிற்றி லிழைத்தருளே. (4)
பற்றுள மற்றவன் மற்றிரு வற்றுள பற்றரை யற்பமுமே
பற்றில னற்றவ ருத்தம ரற்றொரு பற்றுள முற்றவனா
முற்குண முற்றவன் முற்குண நித்தரு முத்தரும் விட்டகலா
முத்தி யளிப்பன முத்திற முக்கணன் முக்கண னைப்பெறுவா
னற்புத னற்றவ ரிற்பெறு தற்கரி தப்பதி நற்குருவா
லற்பி னுறத்தவ மற்றிடு மற்பரு ளற்பனெ னுச்சியின்மேற்
சிற்றடி வைத்தடி மைக்கொளு முத்தமி சிற்றி லிழைத்தருளே
செய்ப்புது வைப்பதி யுட்பயி லுத்தமி சிற்றி லிழைத்தருளே. (5)
மற்றைப் பாடல்கள் பிரதியில் வீடுற்றன.
--------------
9-வது சிறுசோற்றுப்பருவம்
ஊனறாச் சுடர்முத் தலைக்குல பாணிதொட்
டுண்டதீங் கொருவ ருண்ணா
ருகமுண்டு போமென்ப தகமுறக் கண்டுவீ
டுதவுவா னன்று நிற்குந்
தானமுஞ் சுடுகாடு தாமமென் பூனுடைத்
தலையிலிடு பலியை யுண்பான்
றள்ளையைப் பிள்ளையை யறுத்திடு சமைத்திடச்
சலியாய்கொ லென்று துய்ப்பா
னானதா லவனைவிட் டிங்குவந் தன்னைநீ
யமலனுக் கூட்டி யுண்ணு
மச்சேட முண்பதே யுசிதமென் றயனைமுத
லவர்களெதிர் கொண்டு நின்றார்
தேனறாச் சோலைசூழ் புதுவைப் பிராட்டியே
சிறுசோ றிழைத்தருள்கவே
தென்னரங் கேசன்முத லைவரும் விருந்துணச்
சிறுசோ றிழைத்தருள்கவே. (1)
ஒண்டழற் குண்டத்து ளாகுதிக் குரியரா
முத்தமர் தமக்கு மறையோ
ருபநிடத முட்கொண்ட மந்திரந் தந்திர
முலோபாம லுய்ப்பதனையே
மண்டழற் கடவுள்கைக் கொண்ட டைவின் மாதவன்
மலர்க்கரத் துய்ப்பமாயோன்
வாய்வைத்த வாகுதிக ணால்வகைத் தோற்றத்தின்
வாழ்வுறு சராசரமெலா
மண்டரண் டங்களுக் கப்புறத் தப்புறத்
தாமனைத் தையுமூட்டுமா
லவனைநீ யூட்டுமிச் சேடமுண் பான்மகிழ்ந்
தயனைமுத லவர்கணின்றார்
திண்டிமப் புலமைமறை யவர்பிரா னருள்புதல்வி
சிறுசோ றிழைத்தருள்கவே
தென்ன ரங் கேசன்முத லைவரும் விருந்துணச்
சிறுசோ றிழைத்தருள்கவே. (2)
பறவைமா மீனமூர் வனதாப ரங்கண்முப்
பானுடன் பன்னொன்றின்மேற்
பத்திரட் டியமக்க டேவரொன் பானொடும்
பதினான்கெ னத்தக்கதா
முறவுகொண் டெண்பத்து நான்குநூ றாயிரம்
யோனியிற் குடிபுக்கவா
முயிர்கட்கு வேறுவே றுணர்வொடு பெருஞ்சோறு
முற்றிழைத் தருள்புரியுநீ
நறவுதயிர் நெய்கன்னல் பாலாழி கறிசோறு
நரலையுட் டரளமுலைநீர்
நன்புனற் கடனேமி வரைமிடா வுலைமுக
னயந்ததழல் ஞாயிறாகச்
சிறகர்வண் டிமிழ்பொழிற் புதுவைப் பிராட்டியே
சிறுசோ றிழைத்தருள்கவே
தென்னரங் கேசன்முத லைவரும் விருந்துணச்
சிறுசோ றிழைத்தருள்கவே. (3)
மருமலர்த் தண்ணந் துழாய்பெற்ற தாயதாய்
மறையவர் பிரான் றந்தையாய்
மதிலரங் கத்துட் டுயின்றபுரு டோத்தமன்
வாய்ந்தநற் காந்தனாகிக்
குருபரம் பரைமுறையி னுபயவே தாந்தக்
கொழுந்துபடர் கொழுகொம்பதாய்க்
கோலா கலப்புலமை பெருகுசீ பாடியக்
கொண்டலொரு தம்முனாகச்
சுருதிமிரு தியைமுற்ற வுணர்பத்தர் மைந்தராய்ச்
சொற்றவா யமுதமூறச்
சொல்லுந் திருப்பாவை முப்பதீ ரெழுபதாய்ச்
சொன்னதிரு மொழியிரண்டுந்
திருமுலைப் பாலென விழைத்தசொற் புதுவையாய்
சிறுசோ றிழைத்தருள்கவே
தேவரா ரமுதுண்ண வுளமகிழ்ந் தருள்கோதை
சிறுசோ றிழைத்தருள்கவே. (4)
ஆறிழைத் தறல்புக்க கடலிழைப் பதன்முன்ன
மங்கங் கிழைத்தபுவனத்
தாரிழைத் தனரென்று முயிர்களுக் குறையுளா
மவைநின் றியங்குவனவாய்
வேறிழைத் தறிவொன்று முதலா றிழைத்துபய
வினையிழைத் துளமுதன்மையான்
மேதக விழைத்தவுக மெழுகோடி யின்வயது
மிக்கவிரு பஃதிலக்க
நூறிழைத் தவையிறத் தலுமுயிர்க ளுடலின்றி
நோதக விழைத்ததனையே
நோக்கியுத ரத்துள்வைத் தின்பம திழைத்துளா
னோக்கம திழைத்தகளபச்
சேறிழைத் தொழுகுமுகிழ் முலைமலர்க் கோதையே
சிறுசோ றிழைத்தருள்கவே
தேவரா ரமுதுண்ண வுளமகிழ்ந் தருள்கோதை
சிறுசோ றிழைத்தருள்கவே. (5)
கன்னலங் கழனியுட் கருமேதி கவடுபடு
கதிர்மருப் பாலுழக்கக்
கணுவுக்க நித்திலப் பருமணி தெரித்திடக்
காமர்விரி வளைகறங்கும்
பொன்னியுட் புனல்மண்டு திருமுகத் துறையிலோர்
புடையுட் குடம்பையதனுட்
புள்ளுயிர்த் தவசினைக ணெக்கதைக் கண்டேகு
பொன்னிதழ்க் கமலமேவு
மன்னமென் பேடைதன் சினைகளைச் சிறகரா
லருகணைத் திடவிரைவில்வந்
தளியநன் சேவலுந் தனதுநன் சிறகரா
லதனையு மணைத்துவாழுந்
தென்னரங் கத்தமுத மின்பமுறு மமுதமே
சிறுசோ றிழைத்தருள்கவே
தேவரா ரமுதுண்ண வுளமகிழ்ந் தருள்கோதை
சிறுசோ றிழைத்தருள்கவே. (6)
எஞ்சிய பாடல்கள் வீடுற்றன.
------------
10-வது பொன்னூசற்பருவம்.
அன்னந் தடந்தா மரைப்போ தினைக்கொணர்ந்
தளியமென் பேடையோடு
மாடகப் பூஞ்சோலை யுட்குடம் பையையமைத்
தகலாத சோலைமலைவாழ்
மன்னன் றனக்குநீ வாய்நேர்ந் திடப்பொன்னி
வளைகோயி லண்ணனன்பால்
வாழ்விக்கு மாறர்திரு மகளாய வுரிமைக்கும்
வரிசையிது வெனமதித்தே
இன்னன் புறப்புதிய வெண்ணெயொடு தேனிறைக்
திருநூறொ டொருநூறதா
யினியதெள் ளமுதென்ன வக்கார வடிசிலு
மியற்றவே தைத்திங்கள்வாய்
பொன்னின் றடாநிறைத் தருளுமின் னமுதமே
பொன்னூச லாடியருளே
புதுவைமா நகர்மன்னர் வதுவைக் கமைந்துளாய்
பொன்னூச லாடியருளே. (1)
கரந்தனிற் சிரம்வைத் திரந்தவ னிரப்பினைக்
களைகண்ண நின்னையல்லாற்
களைகணிங் காரென்ன வயனொடுந் தேவர்பாற்
கடல்புக்கு முறையிட்டநாள்
சிரங்களொரு பத்தொடு கரங்களிரு பத்துடைத்
தெசமுகன் றிசைமுகனையே
சிந்தித் தடைந்தவர முழுதுமமர் முனையினிற்
சிந்தவரி விற்குனித்தே
நிரந்தர மரந்தையற் றவருலகு தனியாளு
நெடுவாழ்வு தன்னிடத்தாய்
நிலைபெறுத் தினனேய முறுதேவி யென்றுனை
நினைந்துமய னாலமைத்தே
புரந்தரன் வரந்தழைத் திடவருளு நவமணிப்
பொன்னூச லாடியருளே
புதுவைமா நகர்மன்னர் வதுவைக் கமைந்துளாய்
பொன்னூச லாடியருளே. (2)
சேமம் புரிந்துள விலங்கையிற் புன்றொழிற்
றெசமுகன் றன்னைநீங்கிச்
சென்றடைக் கலமெனப் பாகனொடு கூடியே
திருத்தம்பி யென்றெனக்கு
நாமக் தரிப்பித்த கருணேச னின்பமுறு
நன்குலத் தேவியென்றே
நாடிவீ டணனிங்கு வரவிட்ட செம்பொன்செய்
நவமணிப் பொன்னூசல்காண்
பாமங்கை யாழ்மங்கை போர்மங்கை புகழ்மங்கை
பாங்கர்கின் றடிபணிந்தே
பல்லாண்டு பல்லாண்டு பல்லாண் டெனத்தேவர்
பாலித்து நின்றிறைஞ்சப்
பூமங்கை புவிமங்கை யென்னவாழ் வுறுநங்கை
பொன்னூச லாடியருளே
புதுவைமா நகர்மன்னர் வதுவைக் கமைந்துளாய்
பொன்னூச லாடியருளே. (3)
எத்தேவ ரும்பரவு மரவிந்த லோசனத்
தெம்பிரா னுந்தியந்தண்
ணிண்டையா சனமீ துதித்தவொரு நான்முக
னிலாடத் துதித்தசூலக்
கைத்தேவ னிலைபெற்ற பத்தின்மே லொருகோடி
கடவுளர்க ளோராயிரக்
கதிர்விரித் தவர்கள்பன் னிருகோடி யிருகோடி
கடிமருத் துவர்வசுக்கள்
மொய்த்தேவ ழுத்துநா லிருகோடி யெனநின்ற
முப்பத்து முக்கோடியோர்
முறைமுறை வணங்குமயி ராவதக் கடவுள்பொன்
முடிமீது வைத்தபடியே
புத்தேளிர் பொன்முடியில் வைத்தபொன் னடிமுதல்வி
பொன்னூச லாடியருளே
புதுவைமா நகர்மன்னர் வதுவைக் கமைந்துளாய்
பொன்னூச லாடியருளே. (4)
பாலாழியைக் கடைந் தமுதம் புரந்தருள்
பராபரை யெனத்தெளிந்தே
பழையவா னவரிந்த்ர நீலத்தி னருமணிப்
பைம்பொற் றகட்டழுத்திக்
கோலாக லம்பெறக் கற்பகா டவியைக்
கொழும்பொலங் கொடிதுடக்கிக்
குவலயத் தினிலளித் தனரெனும் வாய்மையைக்
கொள்கையா லன்புற்றுநீ
சாலோக சாமீப சாரூப மெய்தியிறை
தன்னொடொன் றென்னு நட்பிற்
சகலகலை தெரிநிபுணர் பரவிய வரங்கரொடு
தலைவரை வருமகிழவே
பூலோக புவலோக தவலோக மின்புறப்
பொன்னூச லாடியருளே
புதுவையந் தணர்பிரா னருளுமழ கியபுதல்வி
பொன்னூச லாடியருளே. (5)
கன்னியும் பொருனையுங் கங்கையும் யமுனையுங்
காவேரி நதியுமெனவாழ்
கடவுண்மா நதிகளின் னமுதமுண் டுறைபெறுங்
கடவுளர் துறக்கத்துளாய்
மன்னிய வவைக் களத் தென்னையார் நிகரென்ன
வரநதி யுரைத்தமாற்ற
மறிபுனற் காவேரி யுற்றிறை வனைத்தனது
மடியில்வைத் திடுவனெனவே
முன்னுரைத் துறுதவ முயன்றதொடு சோழேசன்
முற்றவம் புரியுநினைவான்
முத்தமிழ்ச் சோணாட்டு வாளரா வணைமீது
முளரியங் கண்முகிழ்த்துப்
பொன்னியுட் டுயில்குழக ரழகர்மகிழ் வெய்தநீ
பொன்னூச லாடியருளே
புதுவையந் தணர்பிரா னருளுமழ கியபுதல்வி
பொன்னூச லாடியருளே. (6)
சந்ததஞ் சதுமறைப் பனுவலை யுரைக்குநற்
றாதைதலை கொய்தபழியாற்
றலையினிற் கைவைத் திரந்தவ னிரப்பைத்
தவிர்த்தவன் சாபநீக்குஞ்
சுந்தரத் தோளழக ரமுதநீ யென்பது
துணிந்தந்த மழுவாளியார்
தோழனாம் வடதிசைத் தலைவன்வர விட்டதொரு
சுடர்மணித் திருவூசல் காண்
மந்தரா சலமுழல மதிதழல வரவழல
மகரால யங்கடைந்தே
வந்ததெள் ளமுதமரர் தமதுயிர்க் குறுதியிது
மன்னுயிர்க் குறுதியென்றே
புந்தியிற் கொண்டுதித் தித்ததெள் ளமுதமே
பொன்னூச லாடியருளே
புதுவைமா நகர்மன்னர் வதுவைக் கமைந்துளாய்
பொன்னூச லாடியருளே (7)
அளகையம் பதியாளி யாடகத் திருவூச
லாட்செய் தளித்ததுடனே
யயிராவ தப்பாக ரிந்த்ரநீ லத்தினி
லமைத்துவர விட்டதல்லால்
வளமலிங் தெழுதிரைக் கடலகழி லங்கைக்கு
மன்னன்வீ டணன்மகிழ்ந்தே
வானித்தி லத்தா லமைத்துவர விட்டது
மதித்தபின் னாகராச
லுளமகிழ்ந் தீரேழு புவனம் பரித்தபொறை
யுரகேச னைத்தமரதா
யுற்றவன் றேவியென் றருமணி குயிற்றியே
யுள்ளுவந் தருளூசல்காண்
புளகம்ருக மதகளப முகிழ்முலைக் கோதையே
பொன்னூச லாடியருளே
புதுவைமா நகர்மன்னர் வதுவைக் கமைந்துளாய்
பொன்னூச லாடியருளே (8)
வரிவளைக் குலமிடம் புரிவளை வளைத்திடும்
வலம்புரித் திரள்வளைக்கும்
வாணிலா வெழுசலஞ் சலமுலவு திருமல்லி
வளநாட்டு ளுனை மதித்தே
கரியமென் சுரிகுழற் படலத் தரம்பைமார்
கைபுனை யரும்பவிழவே
கட்டுண்ட மட்டுண் சுரும்பினொடு பெடையளிக்
கணமருங் கூசலாடச்
சொரிகதிர்த் தரளமணி முழுமணி வடத்தொடு
தொடக்கமென் புழுகின்முழுகுஞ்
சுவணபூ தரமுலை சுமந்துமின் கொடியெனத்
துவண்மருங் கூசலாடப்
புரிமணிக் குழையிரு மருங்கூச லாடநீ
பொன்னூச லாடியகுளே
புதுவைமா நகர்மன்னர் வதுவைக் கமைந்துளாய்
பொன்னூச லாடியருளே. (9)
மண்டினி நிலப்பிலம் போழ்ந்துவேர் வீழ்ந்துபுடை
மல்குபரி யரையவாகும்
மாகத்தின் வெளிமூடு பூகப்பொ தும்பரொடு
மழைகிழித் தோங்குபொங்கர்த்
தண்டளிர்க் காழகிற் சோலைவாய் மாலையிற்
றவளவெண் ணிலவைமுகருஞ்
சகோரப் பெரும்புளின் பேழ்வாய் நிறைந்துவழி
தண்ணமுத மொண்டுபருகுந்
தொண்டையங் கனிவாய் மடந்தையரு மைந்தருஞ்
சுரரினரை திசைமூப்புறாச்
சோதியா கம்பெறப் பெருகுதிரு முக்குளத்
துறையினுட னறைகமழுமென்
புண்டரீ கத்தடஞ் செறிதமிழ்ப் புதுவையாய்
பொன்னூச லாடியருளே
பொன்னரங் கத்தர்வட மலைவாண ரின்புறப்
பொன்னூச லாடியருளே (10)
தன்னிலை தனக்குரிய வாயொருவர் முன்னஞ்
சமைத்திடா முதன்மை யதுவாய்ச்
சகலகலை களையும்வழு வறவுணர்த் தியதொரு
சயம்புருவ ஞானமயமாய்
முன்னிய மறைப்பனுவ லைக்கொண்டு பாதாள
முந்நீருள் புக்கொளிக்கு
முதியமது கைடவர் முரண்டொலைத் திடவுலக
மூன்றுமொரு செலுவு ளுறைவான்
மன்னிய புறப்பெரிய மீன்வடிவ மாயமர்
மலைந்தெளிதி னிற்கொண்டநான்
மறைமுழுது மீனவடி வினைமாற்றி நான்முகன்
மனத்துற மறித்துணர்த்தும்
பொன்னியுட் சேவலோ திமமுயிர் தளிர்த்திடப்
பொன்னூச லாடியருளே
புதுவைத் துழாய்வனத் துட்பேடை யன்னமே
பொன்னூச லாடியருளே. (11)
------------
11- வது காமநோன்புப்பருவம்
சொற்றமிழ்ப் பாமாலை நாட்டியும் பூமாலை
சூட்டியுந் தொண்டுபுரிவார்
தொண்டர்தந் தொண்டரென் றவர்கள்பின்
றொடருமொரு சோதியிரு கரையினோடு
மெற்றுதெண் டிரைமண்டு பாலாழி யுண்ணின்று
மிடபகிரி சேடகிரிமீ
திருவரா யுனையெய்த வுச்சிமேன் மாதவ
மியற்றவே பொன்னிநடுவா
யுற்றுளான் மதிமுகந் தெற்குவைந் தந்நகரு
ளொருவரல விருவர்காவ
லும்பரமு துந்திருவு மெய்துதற் கெவர்களே
யுலகத்தி லெதிர்கொண்டிடார்
கற்றவர் புகழ்ந்ததென் புதுவையந் தணர்புதல்வி
காமநோன் பதுதவிர்கவே
காரிதரு மாறர்திரு மகளாய கோதையே
காமநோன் பதுதவிர்கவே. (1)
துடியிடைப் பிடிநடைக் கயல்விழிக் குயின்மொழித்
துவரிதழ்த் தளவநகையாள்
கருதிவா னவர்பிரா னேதுவிற் சாபந்
தொடர்ந்துகற் படிவமாகப்
படியினிற் பாதபங் கேருகத் தூளினாற்
பழையதோர் மேனியாகப்
பழமறை பராவுகோ தமனிடத் தாக்கிய
பராபர னஃதன்றியுங்
கொடிமதிட் குடுமிமதி யகடுழுத மிதிலையுட்
கொற்றவன் சிலையிறுத்துக்
கூடினு னின்னைமுன் பாகலா னின்னுநிற்
கூடுமா றுண்மையென்றாற்
கடிமலர்த் தெரியலைச் சூடிக் கொடுக்குநீ
காமநோன் பதுதவிர்கவே
காரிதரு மாறர்திரு மகளாய கோதையே
காமநோன் பதுதவிர்கவே, (2)
கூற்றமும் விழுந்தெழுந் தோடவட வாமுகக்
கோபவெந் தழல்பெருக்குங்
கெடியரா வணனுனைச் சிறைவைக்க மனதுட்
குறிக்கொள்கற் பெனுநோன்பினாற்
சீற்றம தெழுந்துதெண் டிரைமண்டு கடலினைச்
சேதுபந் தனமுடித்துத்
தென்னிலங் கேசனுயி ரைக்குடித் தரியவன்
சிறைமீட் டுனைத்தழுவிமுன்
பூற்றம துறக்கறங் கறல்புகுந் தேனமா
யுனையொரு மருப்பினிற்கொண்
டுய்த்துளா னீபுலம் புறவிருப் பதுமில்லை
யொருபகலு ளணைவனென்றா
னோற்றநோன் பினர்பரவு மபிராமை யேகாம
நோன்பினைத் தவிர்கநீயே
நுண்ணறி வுடைப்புதுவை யபிராமை யேகாம
நோன்பினைத் தவிர்கநீயே, (3)
பாமநெட் டிலைமுத் தலைக்கவட் டுக்குலிச
பாணிபுத் தேளிருடன்முப்
பத்துமூ வருமடி வணங்கவாழ் வெய்துபொற்
பதியினுட் புக்கநாளிற்
பூமிசை யிருந்தநீ புனையவே கற்பகப்
பூமாலை யுதவாமையாற்
புல்லென்ற நினதுமுக புண்டரீ கப்போது
பொலிவுறப் புள்ளரசனா
லேமமா ளிகைவாயி லிற்பாரி சாதத்தை
யிவ்வுலகு தனில்வைத்துளா
னிங்குநீ தமிவைக வேதரித் துத்தனி
யிருப்பவனு மல்லனென்றாற்
காமர்தென் புதுவையந் தணர்பிரா னருள்புதல்வி
காமநோன் பதுதவிர்கவே
காரிதரு மாறர்திரு மகளாய கோதையே
காமநோன் பதுதவிர்கவே. (4)
குளிறுவெண் டிரைநள் ளிடைப்புனலை வெளிறுபடு
கொண்டன்மொண் டுண்டுகருகிக்
கோதண்ட மதுவளைத் தண்டகோ ளத்திற்
குழீஇக்கமஞ் சூலுழந்தே
தளிநறும் பெயல்பெற்ற சாரல்வெள் ளிடையிற்
றளிர்த்தவெண் காந்தண்முகுளத்
தலைநிழற் கோபமல் குபுபடங் காட்டுமைந்
தலைமவுலி யுரகபதியென்
றொளிறுவெண் பிறையெயிற் றரவுகள் படங்களி
னுடன்கவித் திடவுநோக்கா
துண்மையன் மையினெவ்வ முறவுமலம் வருநோக்கி
னொடுமளை புகுந்தொளிப்பக்
களிமயிற் கணநகுந் துடரிகா வலர்புதல்வி
காமநோன் பதுதவிர்கவே
காரிதரு மாறர்திரு மகளாய கோதையே
காமநோன் பதுதவிர்கவே. (5)
உண்ணத் தெவிட்டாத வுரிசியொடு பரிமள
முவட்டாம லுண்டவாய்மற்
றொன்றினை விரும்பாம லுண்டவர்த முடலகத்
தோங்குநரை திரைமூப்புநோ
யெண்ணத்த காதொளித் தருள்செய்பெறு தற்கரிய
வினியதெள் ளமுதமெளிதா
யிச்சித்த தோசுரரை யிதுநிற்க வாய்வைத்
திடப்புளிக் குந்தயிர்க்கும்
வெண்ணெய்க்கு நெய்க்குமேக் கற்றுமுன் கட்டுண்டு
விகடமுற் றகடுதனிநாண்
வீக்கிய வசோதைமுன் குண்டலக் குழைதொட்டு
வெண்முத் தெனப்பனிற்றுங்
கண்ணைப் பிசைந்தழுங் குழகனை நினைந்தழுங்
காமநோன் பதுதவிர்கவே
காரிதரு மாறர்திரு மகளாய கோதையே
காமநோன் பதுதவிர்கவே. (6)
அண்ணலார் சுந்தரத் தோளழக ரெனுமுலக
மஃதுண்மை யன்றிமறைதா
னாணலன் பெண்ணல்ல னலியல்ல னென்பதுட
னரியகுற ளுருவனென்றும்
வெண்ணெய்தான் முன்புகட் டுண்டபடி றன்றியே
வேறுபல படிறுமுடையான்
மேய்ப்பதா னிரைமரபு கோபாலன் விசயன்றன்
மிக்கதேர்ப் பாகனானான்
மண்ணிலா சையைவைத்த வைவர்தந் தூதாய்
மடக்கோலை யைச்சுமந்தான்
மற்றுமெக் குற்றமென் றெண்ணுவே னவனைநீ
வலியவேட் கின்றதென்னோ
கண்ணகன் புத்தூர் விளங்கவரு கோதையே
காமநோன் பதுதவிர்கவே
காரிதரு மாறர்திரு மகளாய கோதையே
காமநோன் பதுதவிர்கவே. (7)
தினகர னெனக்கதி ரெறித்தெழு கவுத்துவச்
செய்யகுளிர் மணியைமார்பிற்
சிங்காத னம்பெற வமைத்துநாண் மலர்பெய்
சிறப்புனக் குதவுபேரன்
பனகனிங் குனைமறந் தொருகணப் பொழுதினு
மகன்றிருப் பவனென்பதா
ரறிவுற்ற மறைகற்ற நிலைபெற்ற நின்பெருமை
யதனைநீ யறிகின்றிலாய்
மனமறிந் தனராகி யனவரத நினதுமலர்
மாளிகை திறந்தடைக்கும்
வாயில்கா வலர்சந்த்ர சூரியர் நிரந்தரம்
வரந்தருக தருகவென்றே
கனகநாட் டவரோடு முப்பத்து முக்கோடி
கடவுளரு மடிவணங்கக்
காமன்வந் தடிதொழும் புதுவைப் பிராட்டிநீ
காமநோன் பதுதவிர்கவே. (8)
ஒருகரும் புருவவிற் குமரனவ னிருகரும்
புருவவிற் குமரியாநீ
யொன்றுகட் காவியம் பாணத்தை யளியநா
ணுறநின் றுடக்குமவனீ
செருமுகத் துபயகட் காவியம் பாணந்
திருத்தகப் புகுமுகத்தாற்
செஞ்செவே யளியநா ணுறநின் றுடக்கிநிறை
திரைகொள்ளு நோக்கத்திநீ
யிருண்முகக் கங்குற் களிற்றண்ண லவனீ
யிரைத்திரைத் தீரம் வற்றா
திழுக்குமான் மதமுறக் கடபடாத் துடனிமிருகு
மிணைமுலைக் களியானையாய்
கருமுகிற் குழகரழ கரைவெல்ல வுருவிலாக்
காமனேன் வில்லிபுத்தூர்
கன்னியே நினதுதிரு வுருவொன்று மமையுமே
காமநோன் பதுதவிர்கவே. (9)
குவளையொண் கண்கழீஇப் பவளவாய் நித்திலக்
கோவையை விளக்கிமூன்றாய்க்
கொண்டநதி யொன்றுதிரு முக்குளத் தைந்நீர்
குடைந்துதாழ் குழலுலறியே
தவளவெண் பட்டினைச் சுற்றிவெண் பிறையெனத்
தழைதிரும ணுதலெழுதியே
தந்திரத் தொடுமந்தி ரம்பராய் நறுமலர்
தனைச்சொரிந் துருவிலாதா
னுவளகப் பித்தித் தலத்துருவு ளானாக
வுபசரித் தொருபோதுநீ
யுண்பதென் மெய்த்திரு வரங்கேச னின்றுவந்
துன்னையிங் கெய்திநாளைக்
கவளமால் யானைமேற் றிருவுலா வந்திடக்
கண்டவென் கனவுண்மையாற்
காரிதரு மாறர்திரு மகளாய கோதையே
காமநோன் பதுதவிர்கவே. (10)
தண்ணளிக் கடவுளாய் நீகுறித் தவனினித்
தனியிருப் பவனுமல்லன்
றாமநித் திலமணிப் பந்தரிந் திரனயன்
றமரொடு மகட்பேசவே
வெண்மணல் பரப்புமண் டிலநடுப் பருதியின்
விளைத்தமுத் தழல்சான்றதாய்
வெள்ளணிய ணிந்துநற் கற்பணி யணிந்துபொரி
மேதக முகந்தட்டபின்
னொண்மலர்க் கைபிடித் ததனைவலம் வந்தம்மி
யொருதாளி னூன்றிவடமீ
னுபயகண் களினோக்கி மணவரையின் வாழ்ந்துமற்
றொருநாளின் மணிவீதிவாய்க்
கண்ணிணை களிப்பவா னைப்பவனி போதுவாய்
காமநோன் பதுதவிர்கவே
காரிதரு மாறர்திரு மகளாய கோதையே
காமநோன் பதுதவிர்கவே. (11)
நூற்பயன் பலசுருதி.
அடித்தா மரைப்போதி னிற்பெற்ற பாகீ
ரதிப்புனலை யண்டரண்டத்
தப்புறத் தயனைமுத லிப்புறத் தனைவர்க்கு
மமுதென்ன வருளியரனார்
முடித்தாம மாமெனப் புனையவன் றருளுமுழு
முதலரங் கேசன்முதலா
முதலைவ ரும்மகிழ வேதிருப் பாவைதிரு
மொழிமுப்ப தீரெழுபதாய்
வடித்தா ரணப்பொரு ணயம்பெற்ற பாமாலை
வாசமலர் மாலையுருளும்
மல்லிநாட் டினுள்வில்லி புத்தூர் மடந்தையை
வழுத்துபிள் ளைக்கவியையே
படிப்பா ரதன்பொருள் வடிப்பாரிவ் வுலகினிற்
பாலித்த செல்வமெல்லாம்
பாரித்த படியெய்தி யெய்துவார் நித்தரொடு
பழகுமொரு பேரின்பமே.
ஸ்ரீஆண்டாள் பிள்ளைத்தமிழ் முற்றிற்று,
ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்
----------
This file was last updated on 23 Jan. 2018
Feel free to send the corrections to the Webmaster.