"வேத வித்து" (நாவல்)
சாவி (சா. விஸ்வநாதன்)
vEta vittu (novel)
by cAvi (cA. visvanAtan)
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Tamil Virtual Academy for providing a
scanned PDF version of this work.
The etext has been generated using Google Online OCR tool and subsequent
correction of the output file.
Sincere thanks go to Mr. R. Navaneethakrishnan
for his help in the proof-reading of this work.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne,
Switzerland.
© Project Madurai, 1998-2018.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
"வேத வித்து" (நாவல்)
சாவி (சா. விஸ்வநாதன்)
Source:
"வேத வித்து"
சாவி (சா. விஸ்வநாதன்)
முதல் பதிப்பு மே, 1990, விலை ரூ. 50
அசோக் உமா பப்ளிகேஷன்ஸ்,
ஏ.ஐ. பிளாக், 48, இரண்டாவது தெரு,
அண்ணா நகர், சென்னை – 600 040
---------------------------
சமர்ப்பணம்
வாரா வாரம் இந்தக் கதை அச்சாகும் முன்பே படித்து திருத்தங்களும் மாற்றங்களும் யோசனைகளும் சொல்லி விமரிசனம் செய்து உதவிய என் மூத்த மகள் ஜெயந்தி விஸ்வநாதனுக்கும், கடைசி மகள் மாலதி ராமமூர்த்திக்கும்.
-------------
முன்னுரை - கவியரசு வைரமுத்து
நாணலைப் பார்த்து நதி முன்னுரை கேட்குமா? கேட்டிருக்கிறதே?
இதோ என்னிடம் சாவி.
இந்த ”வேத வித்து” என்னும் வசன காவியத்துக்கு முதல் வாசகன் நான் என்பதனால் முன்னுரை எழுதச் சம்மதித்தேன்.
இந்த நாவலை நான் வாசித்தேன் என்பது பொய்.
இந்த நாவலுக்குள் நான் வசித்தேன் என்பதே மெய்.
மூர்த்தியோடு அந்தப் படித்துறையில் நடந்து அவன் கழுத்தில் ஆடும் தங்கச் சங்கிலியாய்க் கிடந்து, பாகீரதியின் விதவைக் கூந்தலில் ஒரு மல்லிகைப் பூவாய்
மணத்து, கனபாடிகளின் மந்திர உச்சாடனத்தில் நானும் ஒரு வார்த்தையாய் ஒலித்து. மஞ்சுவின் கழைக் கூத்தாடிக் கயிற்றில் நானும் நடந்து, கனபாடிகளின் மரணத்தின் போது கொட்டும் மழையில் நானும் ஒரு துளியாகி…..
ஓ....
இந்த நாவலை நான் வாசிக்கவில்லை.
இந்த நாவலுக்குள் நான் வசித்திருக்கிறேன்.
சாவிஅவர்கள் எழுதத் தொடங்கினால் அவர் கையிலிருக்கும் பேனா தூரிகையாவது வழக்கம்.
ஆனால், வழக்கத்துக்கு மாறாய் ‘வேதவித்து’ எழுதப் போன அவர் பேனா உளியாகியிருக்கிறது.
அவரின் மற்ற படைப்புகள் ஒவியங்களென்றால் இது சிற்பம்.
மனசுக்குள் கனமாய் உட்கார்ந்து கொண்டு பேசும் சிற்பம்.
சாவியின் மற்ற படைப்புகள் தீட்டப்பட்டவை என்றால் இது வடிக்கப் பட்டது.
இந்த நாவலுக்குள் அவர் ஆண்டிருக்கும் விஷயம் ஆபத்தானது என்று கருதப்படுவது.
கத்தி எடுத்து யுத்தம் செய்வது எளிது.
ஆனால், கத்தி மேல் நடந்து யுத்தமும் செய்வது கடிது, நின்று விட்டாரே! கத்திமேல் நின்று போர் புரிந்து சாவி வென்று விட்டாரே!
மாறி வரும் மனித மதிப்பீடுகளை எதிர்காலத்தில் ஆராயப் புகும்போது இந்த நாவல் அதற்குச் சேதாரமில்லாத ஆதாரமாக விளங்கும் என்பது என் எண்ணம்.
காலங்காலமாய் இந்தச் சமூகத்தின் கால்களைப் பிணைத்திருக்கும் சாஸ்திரச் சங்கிலிகளை மயிலிறகு வார்த்தைகளால் வருடிக் கொண்டே சம்மட்டியால் அடித்திருக்கிறார் சாவி.
"நம்ப சமூகம், சமுதாயம் எல்லாம் நல்லபடியா வாழணுங்கிறதுக்குத்தானே சம்பிரதாயமல்லாம்? இப்படி வாழ்க்கையே அடியோடு நாசமாப் போயிடறதுக்கு ஒரு சாஸ்திரமா? அது நமக்குத் தேவைதானா? அப்படிப்பட்ட சாஸ்திரத்தை மாத்தி அமைக்க வேண்டியதுதானே!" (பக்கம் 67)
இதுதான் இந்த நாவலுக்கு, சாவி அவர்கள் எடுத்திருக்கிற ஆழமான அஸ்திவாரம்.
தான் போட்டுக் கொண்ட இந்த எல்லைகளைத் தாண்டி சாவி அவர்கள் தன் பேனாவை ஒரு மில்லி மீட்டரும் அசைக்கவில்லை.
இப்படி கனமான விஷயத்தைச் சுமந்து கரையேற்றுவதும், கரையேறுவதும் கஷ்டம்.
சாவி அவர்கள் கரையேறியிருக்கிறார் ; கரையேற்றியுமிருக்கிறார்;
இந்தத் துணிச்சல் அவருக்கு வெறும் வேட்கையால் வந்ததன்று: வாழ்க்கையால் வந்தது.
இந்த நூலின் வாசகங்களெங்கும் வைதீக வாழ்க்கையின் வடிவங்கள் வண்டல் வண்டலாகப் படிந்து கிடக்கின்றன.
எந்த எழுத்தாளனுக்கும் இரண்டு கலைகள் வேண்டும்.
ஒன்று. அவன் உணரத்தெரிந்திருக்க வேண்டும். இரண்டு, உணர்ந்ததை உணர்த்தத் தெரிய வேண்டும்.
அவன் சமுத்திரத்தைப் பற்றி எழுதினால் வாசகனின் வேட்டியின் கரையாவது நனைய வேண்டும்.
இந்த நாவலின் வெற்றிக்கு மூலம் என்னவென்றால், சாவி அவர்கள் உணர்ந்ததை விட உணர்த்தியது அதிகம்.
மூர்த்தி, பாகீரதி சங்கமம் பற்றி ஓர் அத்தியாயமே எழுதியிருக்கலாம்.
ஆனால், இரண்டு வாக்கியங்களின் இடைவெளியிலேயே அவர்கள் சங்கமம் முடிந்து விடுகிறது.
ஆனால், அந்த இடம் வந்தவுடன் என் ரத்தம் கொஞ்சம் சுட்டு அடங்கியது.
உண்மைதான் வார்த்தைகளை விட மெளனத்துக்கு அடர்த்தி அதிகம்.
நடை- நயமான நடை.
பனிப்பாறைகளின் மீது ஓர் ஆப்பிள் பழம் உருண்டு போவது மாதிரி தடையற்ற நடை.
கழைக்கூத்தாடியை வேடிக்கை பார்க்கும் கும்பலில் அந்தப் பிராமணன் மூர்த்தி நிற்கிறான்.
சாவி எழுதுகிறார் :
"கறுப்பான எள் குவியலுக்கு இடையே வெண்மையான பச்சரிசி ஒன்று கலந்தது போல் போல் அந்தப் பாமர மக்கள் கூட்டத்தில் அவன் சற்றும் பொருத்தமில்லாமல் நின்றான்” (பக்கம் 55)
நுட்பமான உவமை ;
உவமை என்பது புலமை.
அங்கங்கே இந்தக் கனமான விஷயத்தை இறக்கி வைத்து இளைப்பாறிக் கொள்ள சுமை தாங்கிக் கற்களாய் நகைச்சுவை வரிகள்.
"தோட்டப்பக்கத் தெருவில் பஜனைக் கும்பல் ஒன்று அபஸ்வரமாய்ப் பாடிக்கொண்டு போயிற்று.”
இப்படி அங்கங்கே தெறித்து விட்டுப் போகும் சின்னச் சின்ன மின்னல்கள்.
தான் எடுத்துக் கொண்ட கரு மட்டுமே அதிகம் கவனிக்கப்பட வேண்டும் என்பதற்காக, வெடித்துக் கொண்டு வரும் அவரது நகைச் சுவையை இதில் அடக்கியே வாசித்திருக்கிறார்.
வேதங்களுக்கும் சாஸ்திரங்களுக்கும் இருக்கும் வேர்களுக்கு வயது எத்தனையோ நூற்றாண்டுகள் என்பதை அவர் அறிவார்.
அவைகள் ஒரேநாளில் அறுத்து விடக்கூடிய - ஒரேநாளில் பெயர்த்து விடக் கூடிய சல்லிவேர்கள் இல்லை.
அதன் குறியீடாகத்தான் பாகீரதி - மூர்த்தி திருமணத்தை ஒரே நாளில் உருவாக்கி விடாமல் கால அவகாசம் கொடுத்து நிதானமாய்க் காட்டியிருக்கிறார்.
எந்தப் பாத்திரத்தின் மீதும் வெறுப்பு வராமல் அத்தனை பாத்திரங்களையும் நேசிக்கிற பாத்திரங்களாய் வார்த்திருப்பது நாவலைச் சுவைத்து விட்டு அசை போடும் போது சுகமாக இருக்கிறது.
கனபாடிகளின் மரணத்தை இதைவிடச் சுருக்கமான வார்த்தைகளால் சொல்ல முடியுமா?
"அந்த அணில் குஞ்சு கனபாடிகள் இறந்து போனது தெரியாமல் அவர் மீது ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்தது."
இந்த வரியை வாசித்துக் கொண்டிருந்த போது அந்த அணில் வால் துடித்தது மாதிரி இருதயம் துடித்தது.
அவர் எழுதிய அந்தக் கடைசிக்கடிதம் வேதங்களையும் நிகழ்காலத்தையும் இணைத்து வைக்கிற எழுத்துப் பாலமாகவே எனக்குப் பட்டது.
நாவல் முடியும் போது "அய்யோ! சாவி எவ்வளவு பெரிய ஆள்" என்று உதடு உச்சரித்துக் கொண்டது.
இதில் ஒரு குறிப்பு வருகிறது.
விராட பர்வம் படித்தால் மழை வருமாம். எனக்கு நம்பிக்கையில்லை.
ஆனால், வேதவித்து ஒரு விராட பர்வம்தான்.
இதைப் படித்தால் மழை வரும் –
கண்ணில்.
(வைரமுத்து, 21.5. 90)
--------------
நன்றி உரை
நதி நாணலைத்தான் முன்னுரை கேட்க முடியும். புயல் வீசினால் நதிக்கரையிலுள்ள அத்தனை மரங்களும் சாய்ந்து விடுகின்றபோது நாணல் மட்டும்தானே வளைந்து கொடுத்து நிமிர்ந்து நிற்கிறது !
கவியரசு வைரமுத்து நாணல் போல் என்றென்றும் நிலைத்து நிற்பார்.
காஞ்சிப் பெரியவர்கள் குங்குமப் பிரசாதம் தருவது ஒரு சாதாரண மரத் தட்டில் வைத்துதான், அந்த மரத் தட்டு "என்னை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள்?” என்று கேட்பதில்லை.
அந்த பிரசாதத் தட்டுக்குள்ள தகுதியும் புனிதமும் பெருமையும் கவியரசு வைரமுத்து அவர்களுக்கும் உண்டு.
அவர் எழுதியுள்ள முன்னுரையைப் படித்ததும் ஒரு நிமிடம் கண்களை தியானம் போல் மூடிக்கொண்டு யோசித்துப் பார்த்தேன்.
‘இந்தக் கதையை இவரல்லவா எழுதியிருக்கவேண்டும்? அதற்குரிய ஆற்றலும் சொல்லாட்சியும் இவரிடமல்லவா இருக்கின்றன?’ என்று எண்ணி வியந்தேன். இந்தக் கதையை அவரே எழுதியிருந்தால் அது கவிதை அழகோடு கூடிய ஒர் அமரகாவியமாக அமைந்திருக்கும். வார்த்தைகள் வேதம் போலவும் கீதம்போலவும் ஒலித்திருக்கும்.
இவர் என்னுடைய எழுத்தை அணு அணுவாய்ச் சுவைத்து அசை போட்டிருக்கிறார்.
புத்தகம் முழுதும் வரி வரியாகப் படித்து- வரிகளுக்கிடையேயும் படித்து, -- ஆபரணத்திலுள்ள நவரத்தினக் கற்களைப் போல் வார்த்தைகளைப் பொருத்தி முன்னுரை எழுதியிருக்கிறார்.
கவியரசின் பாராட்டுரைதான் நான் இந்தக் கதைக்குப் பெற்றுள்ள சன்மானம், பொன்னாடை எல்லாம். அவருக்கு என் இதயபூர்வமான நன்றி.
---சாவி
-------------
வேத வித்து
நாலு நாட்களாய்ப் பெய்த அடைமழையில் மரம் செடி கொடிகளெல்லாம் குளித்து, குளம் குட்டைகளெல்லாம் நிரம்பி பூமியே வெடவெடத்துக் கொண்டிருந்தது.
தவளைகளின் கோஷம் அடங்கி, கீழ்வானத்தில் நிகழ்ந்து கொண்டிருந்த ஒளி
ஜாலங்களைப் பார்த்தபடி மூர்த்தி ஆற்றை நோக்கி நடந்துகொண்டிருந்தான்.
வேதக்களை சொட்டும் முகம், தெய்விகம் கலந்த தேஜஸ்! பிரம்மச்சரியத்தின் கட்டுப்பாட்டில் ஒரு பால சந்நியாசி போல் அமைதியாக, அடக்கமாக, வாய் கமகம் முணுமுணுக்க, நடந்து கொண்டிருந்தான்.
அருகில், ஒரு குட்டையைப் பார்த்தபோது பழைய ஞாபகம் வர, அப்பாவின் குரல் அசரீரிபோல் ஒலித்து மெய்சிலிர்த்தான்.
மூன்று வருடங்களுக்கு முன் நடந்தது.
அப்பா பரசு தீட்சிதர் பேசுகிறார் :
"மூர்த்தி! எனக்கு வயசாச்சுடா! உன் அம்மா போய் வருஷாப்திகமும் முடிந்து ஒரு வாரம் ஓடிப் போச்சு. இனி நீயும் நானும் இந்த கிராமத்திலே உட்கார்ந்துண்டு என்ன செய்யப் போறோம்? கிராமவாசம் சரி; சகவாசம் சரியில்லையே! நாளை காலை புறப்படுவோம். சனி உஷஸ்! நாள் நட்சத்திரம் எதுவும் பார்க்க வேணாம். உன்னைக் கொண்டு போய் சங்கர கனபாடிகளின் பாடசாலையில் சேர்த்து விடுகிறேன். நீ அவரிடம் வேதம் ஓதி வேத வித்தாய்ப் பிரகாசிக்க வேண்டும் என்பது உன் அம்மாவின் ஆசை. அவள் போன பிறகு எனக்கு வாழ்க்கையே சூன்யமாப் போச்சு. உன்னை சங்கர கனபாடிகளிடம் ஒப்படைத்துவிட்டு நான் எங்காவது வடக்கே போய் கங்கைக்கரையில் தங்கி விடுகிறேன், என் அந்திம காலத்துக்கு ஏற்ற இடம் அதுதான்."
ஒரு நீர்த்தேக்கத்தின் அருகே அவர்கள் வந்தபோது பொழுது விடிந்து விட்டதால் இருவரும் அங்கேயே ஸ்நானத்தை முடித்துக் கொண்டார்கள். தீட்சிதர் கையோடு கட்டிக்கொண்டு வந்திருந்த தயிர் சாதத்தை அவனிடம் கொடுத்து சாப்பிடச் சொன்னார்.
அதை அவன் சாப்பிட்டு முடித்ததும் "இதைப் பார்த்தாயா மூர்த்தி! இது உன் அம்மா கழுத்திலிருந்த சங்கிலி, மூணு பவுன், இதை உன் கழுத்திலே போட்டுக் கொள். அவள் ஆசீர்வாதம் உன்னை எப்போதும் தழுவிக் கொண்டிருக்கும்.
பிராம்மண குலத்தில் பிறந்த நீ என்றைக்குமே ஆசார சீலனாக இரு.
பிராம்மணீயத்திலிருந்து ஒரு போதும் வழுவி விடாதே! சங்கர கனபாடிகளை நீ ஆசானாக அடைவதற்குப் பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். அவர் இரண்டு யாகங்கள் செய்தவர். என் பால்ய சிநேகிதர். தக்க பருவத்தில், உனக்கேற்ற பெண்ணை அவரே தேடி உன் திருமணத்தை முடித்து வைப்பார். உனக்கு இனி மாதா, பிதா, குரு, தெய்வம் எல்லாமே அவர்தான்.
மூன்று வருடங்களுக்கு முன் அப்பா சொன்ன அந்த வார்த்தைகளில் தோய்ந்திருந்த பாசமும் பரிவும் இப்போது நினைவுக்கு வர மூர்த்தி உணர்ச்சி வசப்பட்டான். அந்தத் தயிர் சாதமும் ஊறுகாயும் இப்போது நெஞ்சில் ருசித்தது.
பிடரியைத் தடவி அங்கே உறுத்திய தங்கச் சங்கிலியைத் தொட்டுப் பார்த்தபோது அம்மாவின் நினைவு தோன்ற பனிக்கும் கண்களில் அந்தச் சங்கிலியை ஒற்றிக் கொண்டான்.
ஆற்றங்கரைப் படித்துறையில் அமர்ந்து சற்று நேரம் புரண்டோடும் வெள்ளத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது நீந்திக் குளிக்கவேண்டும்போல் ஆசை தோன்றியது.
‘இத்தனை காலம் கிராமத்திலேயே வாழ்ந்திருந்தும் நீச்சல் தெரிந்துகொள்ளாமல் போனேனே!’ என்று வருத்தப்பட்டான்.
அதே படித்துறையில் கீழே கொஞ்சம் தள்ளி, அரை நிர்வாண கோலத்தில் யாரோ ஒரு பெண் குளித்துக் கொண்டிருந்தாள். அவளுடைய மேலாடை கரையிலிருந்த ஒரு புதர்மீது உலர்ந்து கொண்டிருந்தது.
"பொழுதுகூடச் சரியாக விடியாத இந்த நேரத்தில் தனிமையில் இங்கே வந்து குளிக்கும் இந்தப் பெண் யார்?" அந்த இளமையும், இயற்கையான வசீகரமும், உடல் வனப்பும் மூர்த்தியை மயக்கத்தில் ஆழ்த்தின.
"மோகினிப் பிசாசு என்று சொல்வார்களே, அதுவாக இருக்குமோ பிசாசுகள் குளிப்பதுண்டா?"
"சூரிய பகவானே! துஷ்டதேவதைகளிடமிருந்து என்னைக் காப்பாற்று" என்ற மந்திரங்களை உச்சரித்துக் கொண்டே எழுந்து நின்றான்.
அச்சமயம் ஆற்றங்கரை சித்தி விநாயகர் கோயில் மணி ஓசை கேட்கவே, அர்ச்சகர் வந்து விட்டார் என்பதை அறிந்து கொண்டான். சீக்கிரமே குளித்து, விநாயகரை வலம் வந்து, அர்ச்சகருக்கு புஷ்பங்கள் பறித்துக் கொடுத்துவிட்டு, பாடசாலைக்கும் எடுத்துச் செல்ல வேண்டும்.
“இன்னைக்கு துவாதசி. கனபாடிகள் எனக்காகக் காத்திருப்பார்.”
இத்தனை நேரம் ஸ்நானத்தை முடித்துவிட்டு பொன் வேய்ந்த ருத்ராட்ச மாலையும், கட்டுக்கட்டாய் விபூதியும், பீதாம்பரமும் அணிந்து சிவப்பழமாய்க் காட்சி அளிப்பார். அடிநாபியிலிருந்து எழும் கம்பீரமான சங்கீதக் குரலில் அவர் மந்திரங்களை உச்சரித்து அர்ச்சனை செய்யும்போது பாடசாலை முழுதுமே தெய்வீகக் களை வீசும்.
நான் போய் அவருடைய பூஜைக்கு ஒத்தாசையாப் பணிவிடைகள் செய்யணும். இந்தக் கோயில் நந்தவனத்திலிருந்து மலர்களும், காசித் தும்பையும், வில்வமும் எடுத்துண்டு போகணும். நந்தனம் அரைச்சுத் தரணும். தூபதீப ஆராதனைக்கு வேண்டிய அத்தனையும் எடுத்து வைக்கணும். நொண்டி கிட்டா தீபாவளிக்கு ஊருக்குப் போனவன் இன்னும் திரும்பவில்லை. அவன் இருந்தா பாதி வேலைகளை அவனே கவனிச்சுக்குவான்.
துவாதசி ஆனதால் பாகீரதி இதற்குள் ஸ்நானத்தை முடித்து, கூந்தலை ஈரத் துணியோடு சேர்த்துச் சுருட்டி முடித்துக் கொண்டு சமைக்கத் தொடங்கியிருப்பாள். சமையலாகி பாடசாலைப் பிள்ளைகள் பந்தி முடிய எப்படியும் உச்சிப் பொழுதாகிவிடும். அவளுக்கு உதவியாக உக்கிராணத்தில் காய் நறுக்கித் தரணும். தண்ணீர் சேந்தி வைக்கணும். தோட்டத்துலேருந்து வாழை இலை வெட்டி வந்து ஏடு சீவி வைக்கணும். இத்தனையும் நான்தான் செய்தாகணும்.
‘பாவம், பாகீரதி - கனபாடிகளின் மகளாய்ப் பிறந்து வாழ்க்கையில் என்ன சுகத்தைக் கண்டாள்? சின்ன வயசிலேயே தாலி கட்டிக் கொண்டவள், அந்த மாங்கல்யத்தையும் தாலி கட்டிய பத்து நாளைக்குள்ளாகவே இழந்துவிட்டாள். அப்புறம் ஒரு வருஷத்துக்குள் அவள் அம்மாவும்-மாடு முட்டின தோஷம்-போய் விட்டாள். பாடசாலைப் பிள்ளைகளுக்குச் சமைத்துப் போடும் பொறுப்பு அம்மாவுக்குப் பிறகு இப்போது இவள் தலையில்தான்!
கனபாடிகளோ அளவுக்கு மீறிய ஆசாரம். பிராமணப் பிள்ளைகள் யார் வந்தாலும் பாடசாலையில் சேர்த்துக்கொண்டு வேதம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கார். அவாளுக்கெல்லாம் வடித்துக் கொட்டத்தான் பாகீரதி பிறந்தாளா? அது அவ தலைவிதியா?’
*
"நாராயணா, நாராயணா!" என்று இரண்டு முறை உச்சரித்து, இன்னொருபடி கீழே இறங்கி, இடது கையால் மூக்கைப் பிடித்துக்கொண்டு ஓடும் வெள்ளத்தில் தன் உடல் முழுமையும் அமிழ்த்தியபோது வெள்ளத்தின் அசுர வேகம் மூர்த்தியைத் தன்பால் இழுத்துக்கொண்டது. மூச்சுத் திணறித் திக்குமுக்காடி ‘ஐயோ’ என்று அலறினான். இன்னொரு முழுக்கு, அந்த வேகத்தில் தலைதூக்க முயன்று, முடியாமற் போய் ஒரு வாய் தண்ணீரும் குடித்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நிலையில் -சட்டென்று இரண்டு கைகள்,-அவன் குடுமியைப் பிடித்துத் தூக்கி இழுத்துக் கரை சேர்த்தன. வளைக்கரங்கள் ! அவன் ஒன்றும் புரியாமல் மலர மலர விழித்தான். சற்றுமுன் பார்த்த அந்த அரை நிர்வாணப் பெண்தான்! அவள் அவசரமாக அவன் கைகளைப் பிடித்து இழுத்து மல்லாக்கப் படுக்க வைத்து வயிற்றின்மீது தன் காலால் ஒரு மிதிமிதித்தாள். வயிற்றுக்குள் போன தண்ணீர் அவன் வாய் வழியாகப் பீச்சி அடித்தது. அப்புறம்தான் மூர்த்திக்கு மூச்சு சீராக வரத் தொடங்கியது.
மூர்த்தி அவளை நன்றியோடு பார்த்துக்கொண்டே " நீ யார்?" என்று கேட்டான்.
”கழைக் கூத்தாடி மகள். பூர்விகம் மகாராஷ்டிரம்."
"நன்னாத் தமிழ் பேசறயே!"
"இரண்டு தலைமுறையாகத் தமிழ் நாட்டிலேதான் இருக்கேன்”.
”ஊர் ஊராய்ப் போய் தெருவில் டமாரம் தட்டி வித்தை செய்து கம்பிமேல் நடந்து, கஜகர்ணம் போட்டு-வயித்துப் பிழைப்பு."
"இப்ப எந்த ஊர்ல.?"
"இதே ஊர்லதான். தேரடித்தெரு சரபோஜி சத்திரத்து வாசல்ல…"
"சரபோஜி சத்திரமா! அந்தத் தெருவில்தானே எங்க வேத பாடசாலையும்
இருக்கு. எனக்குத் தெரியாமப் போச்சே தினமும் வித்தை செய்வீங்களா?"
"ஆமாம்."
அவளையே ஆச்சரியத்தோடு வைத்த கண் வாங்காமல் பார்த்தான்.
வடித்தெடுத்த சிலையாய், அழகு பிம்பமாய், ஜல தேவதையாய்க் காட்சி அளித்த அந்தப் பெண்ணுக்குத் தன்னுடைய அரை நிர்வாண நிலை அப்போதுதான் நினைவுக்கு வர, கூச்சத்துடன் தன் உடம்பைக் குறுக்கிக்கொண்டு உலர்த்தியிருந்த ஆடையை நோக்கி விரைந்தாள்.
மூர்த்தி எழுந்து நின்று அவளை நன்றியோடு பார்த்தான். "உன்னை நான் எப்பவுமே மறக்க மாட்டேன். பேர் என்ன சொன்னே?”
"மஞ்சு."
" நாளைக்கும் இங்க வருவியா?"
"மாட்டேன்" என்பதுபோல் தலையாட்டினாள்.
"இன்னைக்கு மட்டும் எதுக்கு வந்தே??
"இன்னைக்கு மூணு நாள் தீட்டு. குளிச்சட்டுப் போகலாம்னு வந்தேன்."
தீட்டு என்றால் அவனுக்குத் தெரியும். பாகீரதி மாதத்துக்கொரு முறை கொல்லைப்புறத்தில் போய் மாட்டுக்கொட்டிலில் உட்கார்ந்துகொண்டு "மூர்த்தி எனக்கு லீவுடா, இந்த மூணு நாளும் நீதான் சமையல் வேலையைக் கவனிச்சுக்கணும்" என்பாளே, அந்தத் தீட்டுதானே!
"அதான் பொழுது விடியறதுக்குள்ளயே இங்கே வந்துட்டியா?"
அவள் நாணத்தோடு குனிந்தாள்.
"என்னுடைய நல்ல காலம். இப்ப நீ இங்கே வந்தாய். இல்லைன்னா என்னை வெள்ளம் கொண்டு போயிருக்கும். மத்தியானம் பாடசாலைப் பக்கம் வா. பாயசத்தோடு உனக்குச் சாப்பாடு போடச் சொல்கிறேன். இன்னைக்கு வெள்ளிக்கிழமை, அம்பாளுக்கு பாயசம் நைவேத்தியம் பண்ற வழக்கம்!"
"வேணாம். உழைக்காமல் சாப்பிடறது எங்க வழக்கமில்லை." •
"நீ என்னைக் காப்பாத்தினயே அதுக்கு நன்றிக் கடனாத் தான்."
"ஒரு உயிரைக் காப்பாத்தறது கடமை இல்லையா?"
"அப்படின்னா உன்னை மறுபடியும் பார்க்கவே முடியாதா? ”
" நாளைக்கு பஜார்ல அப்பாவும் நானும் வித்தை செய்வோம். அங்கே வந்தா என்னையும் பார்க்கலாம்; வித்தையும் பார்க்கலாம்! அப்பாவுக்கு வயசாயிட்டுது. நான் போய்த்தான் மூட்டி பொங்கிப் போடணும். வரட்டுமா?" புறப்பட்டு விட்டாள்.
மூர்த்தி பாடசாலைக்குத் திரும்பிப் போய் மீண்டும் குளித்தான்.
"என்ன, மூர்த்தி, ஏன் மறுபடியும் குளிக்கிறே?" என்று கேட்டாள் பாகீரதி, அவளுக்கு ஏதோ பொருத்தமில்லாமல் பதில் கூறிவிட்டு வேட்டி உலர்த்த தோட்டப் பக்கம் போனான். மனசே சரியில்லை அவனுக்கு. "அந்தப் பெண் எந்தக் குலமோ? என்ன ஜாதியோ? என்னைத் தொட்டுத் தூக்கிக் கரையில் சேர்த்தாள். தீட்டு குளித்தவள். நான் பிராமணன். ஆபத்துக்கு தோஷமில்லை என்று சொல்வார்கள்" என்று தனக்குள் சமாதானம் சொல்லிக்கொண்டு விபூதியைக் குழைத்து மார்பிலும் கழுத்திலும் பூசிக்கொண்டான். அப்போது தன்னுடைய கழுத்து வெறிச்சிட்டிருப்பதை உணர்ந்து திடுக்கிட்டான்.
"ஐயோ, என் கழுத்திலிருந்த சங்கிலி எங்கே?"
------------
2.
பாடசாலைப் பிள்ளைகள் ஆசார சீலர்களாய் எதிர் எதிராக அமர்ந்து ’ஆவர்த்தம்’ சொல்லிக் கொண்டிருந்தார்கள்
பூஜை அறையிலிருந்து வந்த சாம்பிராணி வாசனையும் சமையலறையிலிருந்து வந்த ரசம் கொதிக்கும் வாசனையும் சங்கமமாகிப் பாடசாலைப் பிள்ளைகளின் மூக்கைத் துளைத்து பசியைக் கிளப்பிவிட்டது
"அனுஷ்டானம் முடிப்பதற்குள் சமையலாயிடும். சீக்கிரமே இலை போட்டுருவா. துவாதசியாச்சே நொண்டி கிட்டா இருந்தா இத்தனை நேரம் வாழை ஏடுகள் சீவி, கூடம் பெருக்கி வைத்திருப்பான். மூர்த்தியானா இன்னும் தோட்டப்பக்கமே போகலை, அவனுக்கு என்ன ஆச்சோ தெரியலையே! கேட்டாலும் சொல்ல மறுக்கிறான்."
குண்டு பட்டாபி மனதை ஆவர்த்தத்தில் ஈடுபடுத்தாமல் சாப்பாட்டில் செலுத்தி யிருந்தான்.
"மூர்த்தி! மணி எட்டாகப் போறதுடா! தோட்டப்பக்கம் போய் அந்தச் சருகிட்டுச் சுருங்கிப் போன வாழை மரத்தை வெட்டிண்டு வந்துடு. தண்டும், பட்டையும் உதவும்" என்றாள் பாகீரதி.
"ஆவர்த்தம் அனுஷ்டானமெல்லாம் எனக்கில்லையா?" என்றான் மூர்த்தி.
"நொண்டி கிட்டா நாளைக்கு வரதா கடிதாசி போட்டிருக்கான். நாளையிலேர்ந்து அவன் எல்லா வேலையும் கவனிச்சுப்பான். அப்பாவும் காஞ்சீபுரம் போறாளாம். யாகம் பண்ண பிராம்மணோத்தமர்களையெல்லாம் சதஸ் கூட்டி சால்வை போர்த்தி சன்மானம் தரப் போறாளாம் பெரியவா."
”கனபாடிகள் காஞ்சீபுரம் புறப்படுவதற்குள் அவரிடம் காலம்பற சமாசாரத்தைச் சொல்லி விடலாமா?" என்று யோசித்தான் மூர்த்தி,
”வேண்டாம்; சொல்ல வேண்டாம். அதான் அர்க்கியம் விட்டு சூரிய பகவானிடம் வேண்டிக் கொண்டாச்சே மனத்தாலும், வாக்காலும். கைகளாலும், வயிற்றாலும், ஆண் குறியாலும் எந்தப் பாவத்தைச் செய்தேனோ, இன்னும் என்னிடத்தில் வேறு என்ன பாவம் உண்டோ அவ்வளவையும் நீக்கியருள வேண்டும் என்று சூரியவடிவான பரஞ்சோதியில் ஹோமம் செய்தாச்சே" என்று உள் மனம் வாதாடியது.
மூர்த்தி அந்த மூத்த வாழைமரத்தை அடியோடு வெட்டி வந்து துண்டு போடத் தொடங்கினான். அலைபாயும் எண்ணங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் மனதை ஒரு நிலைப்படுத்த இயலாத நிலையில் குழம்பிக்கொண்டிருந்த அவனுக்குள் "அந்தச் சங்கிலி எங்கே போயிருக்கும்? எப்படிப் போயிருக்கும்?" என்ற கேள்வியே மீண்டும் மீண்டும் எழுந்து வாட்டிக் கொண்டிருந்தது.
”வெள்ளத்தில் போயிருக்குமோ? அந்தக் கழைக்கூத்தாடிப் பெண்-மஞ்சு எடுத்துப் போயிருப்பாளோ? ஊஹூம், அவள் எடுத்திருக்க மாட்டாள். அப்படிப்பட்ட பெண் அல்ல அவள் - "உயிரைக் காப்பாற்றுவது ஒரு கடமை இல்லையா?" என்று கேட்டவளாச்சே! சாப்பிடக் கூப்பிட்டபோது வேண்டாம். உழைக்காமல் சாப்பிடுவது எங்க வழக்கமில்லை" என்று மறுத்தவளாச்சே! அவள் எடுத்திருக்க மாட்டாள். வெள்ளம்தான் கொண்டு போயிருக்கணும்." - மஞ்சு ஜல தேவதைபோல் நனைந்த ஆடையில் யெளவனத்தின் பூரிப்பில் ஒருகணம் அவன் கண்முன் மின்னலாய்த் தோன்றி மறைந்தாள்.
”மூர்த்தி! இது உன் அம்மாவின் சங்கிலிடா, மூணு பவுன். இதை எப்போதும் கழுத்தில் அணிந்து கொண்டிரு. அம்மா இந்தச் சங்கிலி ரூபமாக உன்னை ஆசீர்வதித்துக் கொண்டிருப்பாள் அப்பா சொன்ன அந்த வார்த்தைகள் நினைவுக்கு வர மூர்த்தி கண்களில் நீர் தளும்ப "அம்மா" என்று புலம்பி விட்டான்.
இதற்குள் பாகீரதி சமையலறை வேலைகளை முடித்துக் கொண்டு, "ஆச்சாடா மூர்த்தி? இலை போடலாமா? அப்பா காஞ்சீபுரம் புறப்படப் போறதாச் சொன்னார். பிரயாணத்துக்கு உச்சி வேளை ரொம்ப நல்லதாம்!" என்று துரிதப்படுத்தினாள்.
மூர்த்தி வாழைப்பட்டைகளைச் சிவிக் கொண்டிருந்த போது கூர்மையான கத்தி அவன் கை விரல்களைப் பதம் பார்த்துவிட, குப்பென்று ரத்தம் பெருக "பாகீ." என்று அலறிவிட்டான். பாகீரதி ஓடி வந்து ரத்தப் பெருக்கில் நனைந்திருந்த அவன் விரல்களை ஈரத் துணியால் துடைத்து சுண்ணாம்பு வைத்துக் கட்டினாள்.
"உனக்கு என்னமோ ஆயிருக்கு. உன் புத்தியெல்லாம் எங்கேயோ லயிச்சிருக்கு. என்னதான் நடந்தது? மறைக்காமச் சொல்லுடா! எதுக்கு ரெண்டு தரம் ஸ்நானம் பண்ணினே?" என்று கேட்டாள்.
மூர்த்தி மெளனமாயிருந்தான்.
"பதில் சொல்லுடா? ஏன் பேச மாட்டேங்கறே?" அவன் கழுத்தில் துண்டு போர்த்தியிருந்தான்.
"பிரம்மசாரி மேல்துண்டு போடக் கூடாது. இடுப்பு வேட்டியோடுதான் இருக்கணும்னு சாஸ்திரம் சொல்லுவயே, இன்னைக்கு நீயே போட்டுண்டிருக்கயே!" என்று அவன் கழுத்தைச் சுற்றிப் போர்த்தியிருந்த துண்டை இழுத்து அகற்றியவள், "என்னடா உன் கழுத்து வெறிச்சோடிக் கிடக்கு? சங்கிலி எங்கே?" என்று கேட்டுக்கொண்டே அவன் கழுத்தைத் தடவிப் பார்த்தாள். வாழைத் தண்டு போன்ற வாளிப்பான அவன் கழுத்தை தடவியபடியே, "எத்தனை அழகுடா உன் கழுத்து வாழைத் தண்டு மாதிரி" என்று ரசித்தாள்.
அவனுக்குக் கூச்சமாக இருந்தது.
இதுநாள் வரை என்னைத் தொட்டுப் பேசாத இந்த பாகீரதிக்கு இன்று மட்டும் இத்தனை துணிச்சலும் சுவாதீனமும் எப்படி வந்தது?’ என்று யோசித்தான்.
”சொல்லுடா சங்கிலி எங்கே, சொல்லு, குளிக்கும்போது ஆற்றிலே போயிட்டுதா?"
"ஆமாம்; நானே வெள்ளத்தில் முழ்கிப் போனேன். நல்லவேளை கழைக்கூத்தாடிப் பெண் ஒருத்தி என்னைத் தூக்கிக் கரை சேர்த்தாள். அவள் இல்லையென்றால் இன்று நான் செத்துப் போயிருப்பேன். இரண்டு வாய் தண்ணீர் கூடக் குடித்து விட்டேன்."
"கழைக் கூத்தாடிப் பெண்ணா! அந்த நேரத்தில் அவள் எதுக்கு அங்கே வந்தாள்? சங்கிலியை அவள்தான் எடுத்துப் போயிருப்பாள்."
"அப்படியெல்லாம் பழி போடாதே! அவள் ரொம்ப நல்ல பெண். உத்தமமானவள்..."
"தெருத் தெருவா கூத்தாடி பிச்சை எடுக்கிற பெண் மீது உனக்கேன் இத்தனை கரிசனம் அவளுக்கு ஏன் இத்தனை பரிந்து பேசறே? நானும் பார்க்கிறேன்; ஆற்றிலிருந்து வந்தது முதல் நீ சரியாவே இல்லே. ஏதோ பித்துப் பிடிச்ச மாதிரி இருக்கே! அவள் ஏதாவது சொக்குப் பொடி போட்டு விட்டாளா, என்ன?"
"சீ, சீ!" என்றான் மூர்த்தி.
"எத்தனை வயசிருக்கும்டா அவளுக்கு?"
"பதினாறு பதினேழுக்குள்ளதான். உன் வயசுதான் இருக்கும். உன்னைப் போலவே ரொம்ப அழகா இருக்கா!"
“சரிதான்; அவள் உன்னை மயக்கிட்டா போலிருக்கு? அப்பா கிட்டே சொல்லி கல்யாணம் பண்ணி வைக்கட்டுமா?"
"அவர் ஊருக்குப் போற சமயத்திலே எதையாவது சொல்லி அவர் நிம்மதியைக் கெடுத்துடாதே! வேணாம்!"
பூஜை முடித்து, ஆகாரம் முடித்து கனபாடிகள் மடிசஞ்சியுடன் காஞ்சீபுரம் புறப்படத் தயாரானபோது ஆற்றங்கரை பிள்ளையார் கோயில் அர்ச்சகர் "மூர்த்தி இருக்கானா?" என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தார்.
“புறப்படும்போதே எதிரில் ஒத்தை பிராம்மணனா? மூர்த்திக்கு என்ன கொண்டு வந்திருக்கே?" என்று கேட்டுக் கொண்டே பரிகாரமாகச் சற்று திண்ணையில் உட்கார்ந்தார் கனபாடிகள்.
“சங்கிலி…”
"சங்கிலியாl."
"ஆமாம்; இந்தச் சங்கிலி ஆற்றங்கரை படித்துறையில் கிடந்தது. இது மூர்த்தி கழுத்தில் இருந்த சங்கிலிதான் என்று எனக்குத் தெரியும். அவனைக் கூப்பிடுங்கோ!" என்றார் அர்ச்சகர்.
இதற்குள் மூர்த்தியே வாசலுக்கு வந்து, "அது உங்க கையிலே கிடைச்சுட்டுதா! நல்லவேளை" என்று வாங்கிக் கொண்டான்.
கனபாடிகள் எதுவும் சொல்லவில்லை. "உள்ளே போய் சுவாமிக்கு முன்னால் வைத்து நமஸ்காரம் பண்ணுடா. உன் தாயார் போட்டுக் கொண்டிருந்த சங்கிலி எனறு உன் அப்பா சொல்லியிருக்கார், நல்ல சொத்து. நான் வரட்டுமா! பாகீரதியைக் கூப்பிடு" என்றார்.
பாகீரதி வந்து நின்றாள், "பாடசாலையைப் பார்த்துக்கோம்மா. நாலே நாளில் திரும்பி வந்துடறேன். உனக்குத் துணையா முனியம்மாவை ராத்திரிலே வந்து படுத்துக்கச் சொல்லு. அநேகமா இன்னைக்கு நொண்டி கிட்டா வந்தாலும் வந்துடுவான். ஜாக்கிரதை, ஜாக்கிரதை" என்று சொல்லிக் கொண்டு புறப்பட்டார்.
பாயசத்தோடு கூடிய பலமான சாப்பாடு ஆனதால், பாடசாலைப் பிள்ளைகள் உண்ட மயக்கத்தில் மூலைக்கு ஒருவராய் உறங்கிக் கொண்டிருந்தார்கள். வாசலில் கல்சட்டி வியாபாரி கட்டைக் குரலில் கூவிக் கொண்டிருந்தான். தோட்டப் பக்கம் கிணற்றடியில் வேலைக்காரி முனியம்மா துணியை அறைந்து துவைக்கும் ஒசை!
"மூர்த்தி! வறயாடா, பல்லாங்குழி ஒரு ஆட்டம் போடலாம். பின்கட்டுப் பக்கம் வா, அங்கே முற்றத்தில் அரிசி வடாம் உலர்த்தியிருக்கேன். காக்கா வராமல் பார்த்துக்கலாம்" என்று கூப்பிட்டாள் பாகீரதி.
"தூக்கம் வரலையா உனக்கு? பாவம், ஓயாம வேலை செய்யறயே!"
"பரவாயில்லடா; பல்லாங்குழி ஆடி ரொம்ப நாளாச்சு. அப்பாகூட இல்லை. வா, வந்து உட்கார்!" என்றாள் பாகீரதி.
என்றைக்குமில்லாத உற்சாகம் தெரிந்தது அவள் குரலில் கனபாடிகளின் கண்டிப்பான கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை பெற்ற உற்சாகம்!
சோப்பினால் முகம் கழுவி, தலைவாரி கோடாலி முடிச்சுப் போட்டிருந்தாள். வெறிச்சோடியிருந்த அவள் நெற்றியில் மூர்த்தி மானசீகமாய் ஒரு குங்குமப் பொட்டு வைத்து அழகு பார்த்தான்!
வளையல் குலுங்க பாகீரதி தாயங்களை உருட்டினாள்.
"நீ அடாவடி ஆட்டம் ஆடறே! இந்த அலவான் எனக்குத் தான்" என்றான் மூர்த்தி. "இல்லை எனக்குத்தான்" என்று பல்லாங்குழியை பாகிரதி வேகமாகத் தன் பக்கம் இழுத்தாள். காய்கள் கலைந்து சிதறின. "நீ அடாவடி பண்றே?" என்று எழுந்திருக்கப் போன மூர்த்தியின் கைகளைக் கெட்டியாகப் பற்றிக் கொண்ட பாகீரதி, "உட்காருடா; ஏன் ஒடறே?" என்றாள்.
அந்த மென்மையான பிடியில், ஸ்பரிசத்தில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன. "அப்படியும் இருக்குமோ?" என்ற அதிர்ச்சியில், பிரமிப்புடன் அவளையே கண் கொட்டாமல் பார்த்து நின்றான் மூர்த்தி.
--------------
3.
பெரும் பாவ காரியத்தில் சிக்கிக் கொள்வோமோ, குருத் துரோகியாகி விடுவோமோ என்ற அச்சத்தில் மூர்த்தியின் உடம்பெல்லாம் விதிர்த்து வியர்த்துக் கொட்ட, மார்பு படபட வென்று அடித்துக்கொள்ள,
"ஸ்மிதமாதாயாக்னே ஸர்வவ்ரதோ பூயாஸுஸ்வாஹா!"
"அக்கினி பகவானே! தினம் தினம் நான் செய்து வரும் சமிதாதானத்தால் எல்லா விரதங்களையும் நன்கு அனுஷ்டித்தவனாக ஆகும்படி அருள்வாயாக" என்ற மந்திரத்தை மனதுக்குள்ளாகவே சொல்லி வேண்டிக் கொண்டான்.
"ஏண்டா, உன் உடம்பெல்லாம் இப்படி ஜூரம் வந்த மாதிரி நடுங்கறது? கண்ணெல்லாம் சிவந்திருக்கே தலை வலிக்கிறதா? சூடா காப்பி போட்டுக்கொண்டு வரட்டுமா? இப்பத்தான் பசும்பால் கறந்து வந்திருக்குடா! குடிச்சுட்டு நாடாக் கட்டிலை இழுத்துப் போட்டுண்டு ஒரு "ஆவர்த்தம்" தூக்கம் போடு. சரியாப் போயிடும், காலையிலே ரெண்டு தரம் பச்சைத் தண்ணில ஸ்நானம் பண்ணயோல்லியோ, அதான் இப்படி" என்றாள் பாகீரதி.
"இல்லை; நான் காப்பி சாப்பிடற வழக்கமில்லேன்னு உனக்கே தெரியுமே. தெருக் கோடி அரசமரம் வரைக்கும் போயிட்டு வந்துடறேன். சமித்தெல்லாம் தீர்ந்து போச்சு. இப்படி கொஞ்ச தூரம் காத்தாட நடந்துட்டு வந்தாலே எல்லாம் சரியாப் போயிடும்" என்று வெளியே கிளம்ப அவசரப்பட்டான்.
"எதுக்கு இப்படித் துடிக்கிறே? இங்கே இருக்கப் பிடிக்கலையா? என்னோடு பேசப் பிடிக்கலையா? உனக்கு இஷ்டமில்லேன்னா நீ பல்லாங்குழி ஆட வேணாம். தோட்டப் பக்கம் வாயேன். வேப்ப மரத்தடியில் உட்கார்ந்து சந்தோஷமாப் பேசிண்டிருக்கலாம்."
"இல்லை பாகீ ! நீ கொஞ்ச நேரம் தூங்கு, பாவம்! உனக்குத்தான் நாளெல்லாம் வேலை. நான் போயிட்டு இதோ வந்துடுறேன்" என்று புறப்பட்டு விட்டான்.
போகிற வழியில்தான் சரபோஜி சத்திரம் இருந்தது.
‘கழைக்கூத்தாடிப் பெண் மஞ்சு, அங்கதானே தங்கி யிருப்பதாகச் சொன்னாள்? அவளைப் பார்க்க வேண்டும்போல் உள்ளுக்குள் ஒரு ஆசை பொங்கியது. தன்னைக் காப்பாற்றியவளுக்கு நன்றிகூடச் சரியாகச் சொல்லவில்லையே’ என்று எண்ணியபடியே சத்திரத்தை நோக்கி நடந்தான். அங்கே வாசலில் உட்கார்ந்திருந்த சத்திரத்துக் காவலாளியிடம் "அந்த கழைக் கூத்தாடிங்க இங்கதானே தங்கியிருக்காங்க?" என்று கேட்டான்.
"அவங்களா! இப்பத்தானே புறப்பட்டுப் போனாங்க!" என்றான் காவல்காரன்.
"எங்க போனாங்கன்னு தெரியுமா?"
”திருவையாறு போறதாச் சொன்னாங்க."
"அடாடா, கொஞ்சம் முன்னாடி வராமல் போனோமே!" என்ற ஏமாற்றத்தோடு திரும்பினான்.
தெருவிளக்குகள் ஏற்றப்பட்ட பிறகே மூர்த்தி பாட சாலைக்குத் திரும்பினான். வித்தியார்த்திகள் இனிய சங்கீதமாய்ப் புருஷ ஸூக்தம் சொல்லிக் கொண்டிருந்தார்கள். மூர்த்தி நேராக கிணற்றடிக்குப் போய் கைகால், முகம் கழுவி, விபூதி பூசி, சந்தியாவந்தனம் முடித்து புருஷ ஸூக்தத்தில் கலந்துகொண்டான்.
சத்திரத்து மணி ஒன்பது அடித்து ஓய்ந்தது.
"மூர்த்தி! அப்பா கூட ஊரில் இல்லை. பின் கட்டில் நான் மட்டும் தனியாகப் படுத்துத் தூங்க பயமாயிருக்குடா. முனியம்மா வர முடியாதுன்னுட்டா! நீதான் எனக்குத் துணையா பின் கட்டிலே வந்து படுத்துக்கணும். தலைவலி இப்ப எப்படி இருக்கு? சுடச்சுட மிளகு ரசம் வெச்சிருக்கேன். உனக்குப் பிடிக்குமேன்னு தோட்டத்திலிருந்து பிஞ்சு அவரைக்காயாகப் பறிச்சிண்டு வந்து கறி பண்ணியிருக்கேன், இலை போடறேன். சாப்பிடறயா?" என்று கேட்டாள் பாகீரதி.
"இப்ப பசி இல்லை. பசங்களோட பந்தியிலயே சேர்ந்து சாப்பிடறேன்" என்றான்.
பந்தி முடிய மணி பத்தாகிவிட்டது. பாகீரதி அடுப்படியில் பால் காய்ச்சிக் கொண்டிருந்தாள். மூர்த்தி இஷ்டமில்லாமல் பாயைக் கொண்டு போய் பின்கட்டுத் தாழ்வாரத்தில் போட்டுக் கொண்டான். கார்த்திகை மாதத்துக் குளிர் நிலவு முற்றமெங்கும் வெள்ளி முலாம் பூசியிருந்தது. தோட்டத்துக் கொட்டிலில் மாட்டுச் சலங்கைகளின் கிண்கிணி ஓசை காதுக்கு இனிமையாக ஒலித்தது. தூரத்தில், எங்கோ கோயில் உற்சவம் நடப்பதை அறிவிக்கும் அதிர்வேட்டுச் சத்தங்கள்!
மூர்த்தி பத்மாசனமாக உட்கார்ந்து தியானம் செய்து முடித்து ஒருக்களித்துப் படுத்துக்கொண்டபோது பல்லி ஒன்று அவன் இடது புஜத்தின் மீது விழுந்து ஓடியது. "ஐயோ! பல்லி தோள் மீது விழுத்தால் நல்லதா, கெட்டதா, தெரியலயே" என்று கவலைப் பட்டான்.
பாகீரதி பாத்திரங்களை அலம்பி, பாலுக்கு உறை ஊற்றி, கதவுகளைத் தாளிட்டுவிட்டு மூர்த்தி அருகில் வந்து நின்று, தூங்கி விட்டானா என்று பார்த்தாள். போர்வையால் குளிருக்கு அடக்கமாகத் தன்னைப் போர்த்திக்கொண்டு படுத்திருந்தான் அவன். பாகீரதி அமிர்தாஞ்சனக் குப்பியை எடுத்துவந்து சற்றும் கூச்சமின்றி அவன் அருகில் சுவாதீனமாக நெருங்கி உட்கார்ந்து ”தூங்கிட்டயா மூர்த்தி?” என்று கொஞ்சலாகக் கேட்டுக் கொண்டே அவன் நெற்றியில் தேய்த்து விட்டாள்.
பாகீரதி உடம்பில் சூடு தெரிந்தது. மல்லிகைப்பூ வாசனை வீசியது. அவன் நெளிந்து விலகினான்.
"மல்லிப்பூ வாசனை அடிக்கிறதே!"
“ஆமாம்; என் தலையைப் பாரு" என்றாள்.
"நீ பூ வச்சுக்கலாமா, பாகீ!"
"ஏன்? நான் என்ன பாவம் செய்தேன்? எனக்கு மட்டும் ஆசை இருக்காதா?
"நீ. நீ ...வந்து." அவனால் அதற்கு மேல் பேச முடியவில்லை.
"பூ வைத்துக்கொள்ளக் கூடாதுன்னு சொல்றயா? சின்ன வயசிலயே எங்கப்பர எனக்குக் கல்யாணம் பண்ணி வெச்சுட்டார். கல்யாணம் ஆன ஒரு வாரத்துக்குள்ளேயே எனக்குத் தாலி கட்டினவன் வைசூரி கண்டு செத்துப் போயிட்டான். அப்ப எனககு பத்து வயசுகூட ஆகல்லே. என் புருஷனை நான் சரியாக்கூடப் பார்த்ததில்லை. இப்ப நான் வயசுக்கு வந்து விவரம் தெரிந்தவளாகிவிட்டேன். எல்லாம் புரிய ஆரம்பிச்சிருக்கு. மத்த பெண்களைப் போல் பொட்டு வைத்துக் கொள்ளணும், பூ வைத்துக் கொள்ளணும். வாழ்க்கையின் சுகங்களையெல்லாம் அனுபவிக்கணும்னு எனக்கு ஆசை இருக்காதா!"
"தப்பு, பாகீரதி தப்பு! வைதிகக் குடும்பத்திலே பிறந்தவள் நீ. அதுவும் இரண்டு யாகம் பண்ணினவர் உங்கப்பா. வேணாம். இந்த விபரீத ஆசைகளுக்கெல்லாம் உன் மனசிலே இடம் தராதே. பாபம், பாபம்" என்றான்.
"என்னடா பாபத்தைக் கண்டுட்டே? என்னமோ சாஸ்திரம் பேசறயே! இதெல்லாம் நம்மைச் சுற்றி நாமாகப் போட்டுக் கொள்கிற கட்டுப்பாடுதானே? இப்படிப் பார்!" என்று அவன் முகத்தைத் தன் பக்கம் திருப்பி, சற்றும் எதிர்பாராத நிலையில் அவனைக் கட்டி அணைத்துக்கொண்டாள்.
அவன் விலக முயன்றான், "நெருங்கி வாடா! ஏண்டா, பயப்படறே? என்னைப் பாருடா நான் அழகாயில்லையா?" என்று அவனையே வெறிக்கப் பார்த்தாள்.
"வேண்டாம் பாகீ! எனக்கு பயமாயிருக்கு"
மறுநாள் காலை. மூர்த்தி படுக்கையைவிட்டு எழுந்தது தான் தாமதம். ஓடிப்போய் கூடத்து ஆணியில் மாட்டியிருந்த பாம்புப் பஞ்சாங்கத்தை எடுத்துப் புரட்டி பல்லி விழுந்த பலன் என்னவென்று பார்த்தான். இடது புஜம்-ஸ்த்ரீ சம்போகம் என்ற வரிகளைக் கண்டபோது அவனை வெட்கம் பிடுங்கித் தின்றது. உடனே கனபாடிகள் நினைவு வர உடம்பெல்லாம் பதறியது.
"ஏன் மூர்த்தி, ஏன் ஒரு மாதிரி இருக்கே? கழுத்துச் சங்கிலி காணாமப் போயிட்டு-தேன்னா? அதான் கிடைச்சுட்டுதே. அப்புறம் என்ன கவலை?" என்று கேட்டாள் பாகீரதி.
"கெட்டுப்போன கழுத்துச் சங்கிலி திரும்பக் கிடைச் சுட்டுது. உண்மைதான். ஆனா கெட்டுப்போன என் பிரம்மசரியம் இனி திரும்பாதே" என்றான் மூர்த்தி.
--------------
4.
துணி மணிகளை எடுத்து மான் தோல் பைக்குள் அடைத்துக்கொண்ட மூர்த்தி "நான் ஸ்நானத்துக்குப் போயிட்டு வந்துடறேன்" என்று பாகீரதியிடம் சொல்லிக் கொண்டான். குரலில் சுரத்து இல்லை.
”ஏண்டா, என்னை நேராப் பார்த்துபேசக் ---- மூஞ்சியைத் திருப்பிண்டே பேசறயே, என்ன கோபம் உனக்கு?"
"என்னவோ?."
"ஏதாவது சாப்பிட்டுட்டு போ."
"ஹ்ம். இந்தத் தீட்டோடயா?."
"தீட்டா!.. இதுக்கு பேர் தீட்டா? ஒரு தடவை ஸ்நானம் பண்ணினாப் போறது. நான் குளிச்சட்டேன்."
"ஸ்நானம் பண்ணிக் கழுவிவிடுகிற பாபமா இது? மகாபாபம் ஆயுசு பூராவும் குளிச்சாலும் தீராத பாபம்! சித்திர குப்தன் கணக்கிலே ஏறிவிட்ட பாபம்! இதுக்கு பிராயச்சித்தமே கிடையாது. குருத் துரோகம், விரதபங்கம். இன்னும் என்னென்னவோ?. சொல்லவே நாக் கூசறது."
“ஏண்டா மனசைப் போட்டு அலட்டிக்கிறே? நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்!"
"பலியானது நான்தானே! துக்கம் எனக்குத்தானே!"
"நீ ஆண்பிள்ளை. நானே கவலைப்படாதபோது இதில் உனக்கென்ன துக்கம்?"
"பரம வைதிகமான குடும்பத்தில் பிறந்தவள் நீ! தர்க்க சாஸ்திரம் படிச்சவர் உங்கப்பா, இரண்டு யாகம் பண்ணவர். டபிள் சிரோமணி! ஊருக்கு உபதேசம் பண்றவர். அந்த உத்தமருக்குப் பெண்ணாய்ப் பிறந்த நீ இப்படி கடந்துக்கலாமா? இந்த ரகசியம் கனபாடிகளுக்குத் தெரிஞ்சா என்ன ஆகும் தெரியுமா? அவமானம் தாங்காமல் தூக்குப் போட்டுண்டு பிராணனை விட்டுடுவார். அதை நினைக்கவே பயமாயிருக்கு. உடம்பெல்லாம் நடுங்கறது!"
"அசட்டுப்பிசட்டுன்னு பேசாதே! யாரிடமாவது போய் உளறி வச்சுடாதே! இந்த ரகசியம் நம்ம ரெண்டு பேரோடு செத்துப் போகட்டும். சத்தியம் பண்ணிக்கொடு."
"சத்தியமும் வேணாம்; ஒண்ணும் வேணாம்." விரக்தியோடு புறப்பட்டான் மூர்த்தி.
"சீக்கிரம் வந்துடு மூர்த்தி!" எதுக்கு இவ்வளவு பெரிய பையைத் தூக்கிண்டு போறே?"
"எல்லாம் துவைக்க வேண்டிய பாவ மூட்டை"
"ஜாக்கிரதை வழுக்கி விழுந்துடப் போறே!"
"அதான் ஏற்கனவே வழுக்கி விழுந்தாச்சே!"
"மூர்த்தி நீ குத்தலாப் பேசறே! ரெட்டை அர்த்தம் வெச்சுப் பேசறே! என்னை உனக்குப் பிடிக்கலேன்னா சொல்லிடு. நான் இந்த நிமிஷமே தீயிலே விழுந்து செத்துப்போறேன். எனக்கு நீ தான் சகலமும். என் கழுத்திலே யார் தாலி கட்டினா? எப்ப அதை எடுத்தான்னு எனக்கு எதுவுமே தெரியாதுடா! பிராம்மண குலத்தில் பிறந்தது தப்பா? அதுக்கு இப்படி ஒரு தண்டனையா? நீயே என்னை வெறுத்தால் அப்புறம் சாவைத் தவிர எனக்கு வேற வழியில்லே."
“நீ ஏற்கனவே கல்யாணம் ஆன பெண். கணவனை இழந்தவள். என்னைவிட வயதில் பெரியவள். நம் உறவு பொருந்தாத உறவு. வயசாலும் பொருந்தாது. சாஸ்திரத்துக்கும் பொருந்தாது. என்னை மறந்துடு பாகீ! இந்தத் தகாத உறவு வேணவே வேணாம்!"
"அப்பாவிடம் சொல்லிடமாட்டயே. எனக்கு பயமா யிருக்குடா! சொல்லமாட்டேன்னு நீ சத்தியம் பண்ணிக் கொடுத்தாத்தான் நான் நிம்மதியாயிருப்பேன்." துக்கம் தொண்டைக் குழியில் சிக்கி, வார்த்தைகள் தடுமாறி வெளிவந்தன. அழுகையை அடக்க முடியாமல் தவித்தாள்.
"அழாதே பாகீ! பசங்கள் யாராவது பார்க்கப் போறா! உள்ளே போய் சமையல் வேலையை கவனி. நேரமாச்சு." படி இறங்கினான்.
"சீக்கிரம் வந்துடறயா?"
"…ம்"
அழுது அழுது பாகீரதியின் முகம் விகாரமாய் வீங்கிப் போயிருந்தது. கண்கள் சிவந்து இரப்பைகள் உப்பலாகியிருந்தன. மணி பத்துக்கு மேல் ஆகியும் சமையல் வேலையில் நாட்டமின்றி ‘மூர்த்தி வந்து விட்டானா?’ என்று அடிக்கொருமுறை வாசலை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
காகங்கள் விடாமல் கத்திக் கொண்டிருந்தன. ’காக்கா கத்தினா யாராவது விருந்தாளி வருவான்னு சொல்வாளே! யார் வரப் போறா?’ பாகீரதி யோசித்தாள்.
எதிர்பாராத விதமாய் வாசலில் குதிரை வண்டி ஒன்று வந்து நிற்க, அதிலிருந்து கைக்குழந்தை அம்புலுவோடு அக்கா கமலா இறங்குவதைக் கண்டதும் ’இவள் எதற்கு இப்போது இங்கே வந்து நிற்கிறாள்?’ என்று ஆச்சரியப்பட்டாள்.
பலாப்பழம், புளிமுட்டை, பரங்கிக்காய், வாழைத்தார் எல்லாவற்றையும் வண்டிக்காரன் இறக்க, பாடசாலைப் பிள்ளைகள் அவற்றை ஏந்திக்கொண்டு போய் உக்கிராண அறையில் வைத்தார்கள்.
"வா, கமலா என்ன இப்படி திடீர்னு? காஞ்சீபுரத்திலிருந்தா வறே? அப்பா வரலையா?" என்று கேட்டாள் பாகீரதி.
"அப்பா வரத்துக்கு இன்னும் நாலு நாள் ஆகும். பெரியவா இருக்கச் சொல்லிட்டாளாம். அப்பாதான் சொல்லி அனுப்பினார். ’பாகீரதியைத் தனியா விட்டுட்டு வந்துட்டேன். நீ போய் நான் வர வரைக்கும் அவளுக்குத் துணையா இருந்து கவனிச்சுக்கோ. முனியம்மாவை வந்து துணைக்குப் படுத்துக்கச் சொன்னேன். வராளோ, இல்லையோ – கவலையாயிருக்கு’ என்று."
"உன் ஆத்துக்காரர் வரலையா?"
“கோர்ட்ல கேஸ் இருக்காம். நீ மட்டும் போயிட்டு வான்னுட்டார். என்ன வக்கீல் வேலை வேண்டியிருக்கு?"
"உன் மாமியார் காஞ்சீபுரத்தில்தானே இருக்கா?"
“ஆமாம்; வேலூரிலேருந்து என் நாத்தனார் வேற வந்திருக்கா. எனக்கும் உன்னைப் பார்க்கணும்போல இருந்தது. ஓடி வந்துட்டேன்."
"அப்பா வர இன்னும் நாலு நாள் ஆகுமா?" என்று பாகீரதி கவலைப்படுவதுபோல் பாசாங்காய்க் கேட்டபோதிலும் உள் மனம் நிம்மதியாக ’அம்மாடி!’ என்றது.
குழந்தை அம்புலு சிணுங்கிக் கொண்டிருந்தது.
"அம்புலுவைக் கொடு இப்படி, பசி போல இருக்கு, பாவம், குழந்தைக்கு, (அம்புலுக்கண்ணு! ஒடியா!) பசும்பால் காய்ச்சி வச்சிருக்கேன். கிண்டிகூட இங்கதான் இருக்கு. போனதடவை நீ இங்க வந்திருந்தப்போ மறந்துட்டுப் போயிட்டாயே!”
"என்னடி உன் கண்ணெல்லாம் இப்படி சிவந்திருக்கு?"
”உரலில் மிளகாய்ப்பொடி இடிச்சேன். கண்ணிலே பட்டுட்டுது. எரிச்சல் தாங்கலை."
"அவன் எங்கடி?" கமலாவின் கண்கள் வீட்டைத் துருவின.
"எவன்? யாரைக் கேட்கிறே?"
"மூர்த்தியைத்தான்."
"கார்த்தாலே போனவன்தான். இதோ குளிச்சுட்டு வந்துடறேன்னு போனான். மணி பத்தாகப் போறது. இன்னும் காணல்லே. அப்பா இல்லையோன்னோ? பூஜையும் இல்லே. இஷ்டம்போல வருவான்."
"ஆத்தங்கரைக்கு யாரையாவது அனுப்பி தேடிப் பாக்கறது தானே?"
"அனுப்பாம இருப்பனா? குண்டு பட்டாபி போய்ப் பார்த்தானாம். அங்கே வரவேயில்லைன்னு அர்ச்சகர் சொல்லிட்டாராம். எனக்கு ரொம்ப பயமாயிருக்கு, கமலா!... "
"வந்துருவான். கவலைப்படாதே. பசங்க சாப்டாச்சா?"
"சமையலே இனிமேத்தான் ஆரம்பிக்கணும். காலம்பற பழையது சாப்பிட்டா."
கமலா வீடு முழுதும் ஒரு முறை சுற்றி வந்து கண்ணோட்ட மிட்டாள். தோட்டப்பக்கம் போய் பசுமாடுகளைத் தடவிக் கொடுத்துவிட்டு வந்தாள். முற்றத்தில் மஞ்சள் மஞ்சளாய் வேப்பம் பழங்கள் உதிர்ந்து கிடந்தன.
"ஏண்டி இதெல்லாம் பெருக்கி சுத்தப்படுத்தக் கூடாதோ? முனியம்மா வரலையா?" என்று கேட்டுக்கொண்டே தாழ்வாரத்தில் - ராத்திரி மூர்த்தி படுத்திருந்த இடத்துக்கு வந்தாள். சுவர் ஓரமாக அவன் படுத்திருந்த பாயும் தலையணையும் சுருட்டி வைக்கப்பட்டிருந்தன.
படுக்கைக்கு அருகில் வாடி வதங்கிய மல்லிகைப்பூக்கள் பழுப்பு நிறத்தில் சிதறிக் கிடந்தன.
"பூவெல்லாம் இங்கே ஏன் விழுந்து கிடக்கிறது?" என்று கேட்டாள் கமலா,
"கூடத்துலே லட்சுமி படத்துக்கு வச்சிருக்தேன். இந்தக் குருவிகள் அடிக்கிற லூட்டி சகிக்கலே, அதுகள் கொண்டு வந்து போட்டதோ என்னவோ?" விடு பூரா குப்பை பண்ணிண்டு…." என்று சமாளித்தாள் பாகீரதி.
"இன்னும் நீ குளிக்கலையா?"
"காலம்பறவே குளிச்சுட்டேன்.
”பின்னே ஏன் இப்படி அழுது வடிஞ்சுண்டு இருக்கே? தலையை விரிச்சுப் போட்டுண்டு முதல்லே இப்படி வந்து உட்கார். தலைவாரிப் பின்னிடறேன். சீப்பைக் கொண்டா" என்றாள் கமலா,
பாகீரதி வந்து உட்கார்ந்ததும், நீளமான அவளுடைய கூந்தலை இரண்டாகப் பகுத்து வாரிய கமலா, ’எத்தனை நீளம்’ என்று மனதுக்குள் வியந்தவள். அடுத்தகணம் ’பாவம், இந்தப் பெண்ணின் வாழ்க்கை இப்படி ஆகணுமா!’ என்று விசாரப்பட்டாள்.
என்னடி மல்லிப்பூ வாசனை வீசறது உன் தலையில்?.."
"என் தலையிலா! அதுக்கெல்லாம் நான் கொடுத்து வைக்கலையே அக்கா! சோப்பு போட்டு குளிச்சேன். ஒரு வேளை அந்த வாசனையாயிருக்கும்" என்றாள் பாகீரதி.
"அதென்ன சோப்பு? இத்தனை வாசனையாயிருக்கே?"
"வினோலியா ஒய்ட் ரோஸ்"
"ரோஸ்னா ரோஜாவாச்சே, இது மல்லி வாசனை அடிக்கிறதே!"
கமலாவுக்கு ஏதோ சந்தேகமாயிருந்தது. பாகீரதி சொன்ன பதில்களில் உண்மை இல்லை போல் தோன்றியது. அதை வெளியே காட்டிக்கொள்ளாமல் தீட்சண்யமான பார்வையை அங்கும் இங்கும் செலுத்தியபடி, "மூர்த்தி இப்ப வந்துடுவானோல்லயோ?" என்று கேட்டாள்
"தெரியலையே, மணி பன்னிரண்டாகப் போறதே! இன்னும் வரக் காணோமே?" பாகீரதி கலங்கினாள். அவள் கண்களில் தவிப்பு தெரிந்தது. குரலில் சோகம் ஒலித்தது.
மூர்த்தி வரவே இல்லை.
----------
5.
கமலாவும் பாகீரதியும் கண்விழித்துப் பரமபதம் விளையாடி, சிறுபிராய நினைவுகளை அசைபோட்டு, தங்களோடு கண்ணாமூச்சி விளையாடிய சமகாலப் பெண்களின் வாழ்க்கையை அலசி, சமையல்கார அம்மாள் திடுதிப்பென்று கல்கத்தா பேரனிடம் போய் விட்டதை எண்ணிப் பார்த்து, அம்மாவின் அன்பையும் பாசத்தையும் நினைத்து நெகிழ்ந்து, (அடி சனியன்களா, தலை பின்னிக்க வாங்கடி!) எல்லாம் பேசித் தீர்த்தபோது தோட்டத்தில் காகங்கள் கரையவும் பொழுதுவிடிய இன்னும் சிறிது நேரமே உள்ளது என்பதை உணர்ந்தார்கள்!
"வேடிக்கைதான்! பொழுது விடிந்தது கூடத் தெரியாம இத்தனை நேரமா பேசியிருக்கோம்?" என்று இருவருமே சிரித்துக் கொண்டார்கள்.
தோட்டப்பக்கத் தெருவில் பஜனை கும்பல் ஒன்று அபஸ்வரமாய்ப் பாடிக்கொண்டு போயிற்று.
வாசலில், முனியம்மா தண்ணீர் தெளித்துக் கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். லேசாக பேச்சுக்குரல் கேட்க, பாகீரதி எட்டிப் பார்த்தாள். விடியற்கால இருட்டில் யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
அவளுடைய எண்ணமெல்லாம் மூர்த்தியைப் பற்றியதாகவே இருந்ததால்,-éஒரு வேளை முர்த்திதான் வந்திருப்பானோ?’ என்ற ஆவலில் இருட்டில் உற்றுத் தேடினாள்.
நொண்டி கிட்டா தெரிந்தான்.
"இந்த நேரத்தில் இவன் எப்படி வந்து முளைத்தான்?" என்று வியந்தபடியே வாசலை கோக்கி விரைந்த பாகீரதி, "வாடா, தீபாவளிக்குப் போனவன் இப்பத்தான் வறயா? எங்கிருந்து வறே?"
"தஞ்சாவூர்லேந்து. நடுவழியில் பஸ் மக்கர். அதான்."
"பின் கட்டுக்கு வா, நிறையப் பேசணும்."
“கனபாடிகள் வந்தாச்சா?" ஒரு மரியாதையோடு ரகசியக் குரலில் கேட்டான் கிட்டா.
"உனக்கெப்படித் தெரியும் அவர் ஊரில் இல்லேன்னு."
"எப்படியோ.." என்றான்.
அவனிடமிருந்த கைப்பையை வெடுக்கென்று வாங்கிக் கொண்ட பாகீரதி,
"என்னடா கொண்டு வந்திருக்கே?" என்று கேட்டாள்.
"பாருங்க."
பச்சை திராட்சையும் சமித்துகளும் இருந்தன.
"ஏன் ஒரு மாதிரி இருக்கே, அக்கா?"
"உற்சாகமாத்தானே இருக்கேன். ஏன், உனக்கு அப்படித் தோண்றதோ?
"இல்லே: மூஞ்சி சொல்றதே!"
கொஞ்சம் தயங்கியவள் குரலைத் தாழ்த்தி, "மூர்த்தியைக் காணோம்டா, ரெண்டு நாளாச்சு, எனக்கு பயமாயிருக்குடா!" என்று சோகமாய்த் தழுதழுத்தாள்.
"தஞ்சாவூர்ல பார்த்தனே அவனை.
"பார்த்தியா என்னடா சொன்னான்?"
"இந்தப் பாடசாலைக்கு இனி வரப் போறதில்லையாம். வேதமும் படிக்கப் போறதில்லையாம்"
”ஏனாம்?”
"கேட்டனே? அதெல்லாம் சொல்ல முடியாதுன்னுட்டான். "இந்தா, இந்த திராட்சையையும் சமித்தையும் கனபாடிகளிடம் கொண்டுபோய்க் கொடுத்துடு. பச்சை திராட்சைன்னா அவருக்கு உயிர். வர வழிலே ஒரு பலாச மரத்தைப் பார்த்தேன், அதிலே நிறைய சமித்து கிடைச்சுது. என் வைதிக புத்தி கேட்கலே! அவ்வளவையும் பறிச்சுண்டு வந்துட்டேன். தஞ்சாவூர் கடைத் தெருவில் திராட்சையைப் பார்த்ததும் கனபாடிகளுக்குப் பிடிக்குமேன்னு வாங்கிட்டேன். வாங்கினப்புறம்தான் இதை எதுக்கு வாங்கினோம்னு நினைச்சேன். இப்ப பாரு, தெய்வமே உன்னை இங்கே கொண்டு விட்டது பார்த்தயா! நீ கொண்டு போய்க் கொடுத்துடு. இதைத்தான் மனசுங்கறது."
”நீ ஏண்டா வந்துட்டே? அப்படி என்ன நடந்துட்டுது” என்று திரும்பத் திரும்பக் கேட்டேன்."
"அதுக்கு என்ன பதில் சொன்னான்?" என்று கேட்டாள் பாகீரதி.
“ஸுகார்த்தீ சேச் த்யஜேத்வித்யாம்"னு ஒரு சம்ஸ்கிருத சுலோகம் சொல்லி,
"வித்தியார்த்தி என்பவன் சகம் நாடுபவனாயிருக்கக் கூடாது. சுகம் நாடுகிறவன் வித்தியார்த்தியா யிருக்கக் கூடாதுன்னு அதுக்கு அர்த்தமும் சொன்னான்.
"நான் இப்ப சுகம் நாடும் வித்யார்த்தியாயிட்டேன். அதனால எனக்கு இனிமே படிப்பு ஓடாது. இதை குருவிடம் சொல்லுகிற அளவுக்கு தைரியம் வரலை. அதனாலதான் சொல்லாம வந்துட்டேன். என்னை மன்னிச்சுடச் சொல்லு என்றான். உனக்கெப்படிடா இந்த சுலோகமெல்லாம் தெரிஞ்சுதுன்னு கேட்டேன். கனபாடிகளே சொல்லிக் கொடுத்ததுதான் என்றான்."
"என்னைப் பத்தி ஏதாவது சொன்னானா?" ஒரு ஏக்கத்தோடு, குற்ற உணர்வோடு, ஆவல் நிறைந்த பார்வையோடு கேட்டாள் பாகீரதி.
"ஊஹூம்; ஒண்ணுமே சொல்லலை."
கமலா இதையெல்லாம் சற்று தூரத்தில் மறைவாக நின்று ஒட்டுக் கேட்டாள்.
"என்னைப் பத்தி ஏதாவது சொன்னானா? அதுக்கு என்ன அர்த்தம்? அவனிடம் இவளுக்கென்ன அத்தனை அக்கறை? இந்த மாதிரி எதுக்கு ஒரு கேள்வி? கமலா அந்த ’அவலை’ மென்று பார்த்தாள். ஒன்றும் கிடைக்கவில்லை.
”அவன் எங்கடா போயிருப்பான்?"
”சொல்ல மாட்டேன்னுட்டானே! என்னமோ ஒரு விரக்தியோடு பேசறானே. உலகமே அஸ்தமிச்சுட்டாப்ல ஒரு மூஞ்சி"
"ஏதாவது சாப்பிட்டானா? கையிலே காசு வெச்சிருக்கானா? கழுத்திலே சங்கிலி இருந்ததா?" (’வழவழ’ன்னு எத்தனை அழகான கழுத்து, தந்தத்தால் செய்தாப்பல! அவன் பொன்மேனிக்கும் அந்த செயினுக்கும் எத்தனை பொருத்தம் நான் கூட கொஞ்சம் நிறம் மட்டுதான்!)
"அவனும் நானும்தான் ஆனந்தா லாட்ஜ்ல சாப்பிட்டோம். ரொம்ப வைதிகமான ஓட்டல். பின் கட்டிலே ஆசாரமா மணை போட்டு, வாழை இலை போட்டு பரிமாறினா"
”என்ன சாப்டீங்க?"
"காசி அல்வா, ரவாதோசை, தோசைக்கு கொத்சு, டிகிரி காப்பி."
"வித்தியார்த்திகள் சுகம் நாடக் கூடாதுன்னு சொல்லிட்டு காசி அல்வா மட்டும் சாப்பிடலாமா? அது சுகம் இல்லையோ?"
"அதென்னவோ, நீ அவனையே கேளு, வந்தால்."
"வருவான்னு நினைக்கிறயா கிட்டா நீ?"
"தெரியலையே; ஒடிப் போனவனைப் பத்தி உனக்கென்ன இத்தனை கரிசனம் ! போனாப் போறான்!"
"மனசு கேக்கலைடா! அப்பா வந்தா என்ன பதில் சொல்வேன்? மூர்த்தி ஏன் போனான், எதுக்குப் போனான்? இங்கே என்ன நடந்ததுன்னு ஆயிரம் கேள்வி கேட்டு துளைச்சு எடுத்துடுவாரே! குதிகுதின்னு குதிப்பாரே!" என்று பயந்து நடுங்கினாள் பாகீரதி.
இவ்வளவையும் காதைத் தீட்டிக் கேட்டுக் கொண்டிருந்த கமலா ’இதில் என்னமோ மர்மம் இருக்கு’ என்று தனக்குத்தானே தலையசைத்து ஆமோதித்துக் கொண்டாள்.
மறு நாள் காலை. கனபாடிகள் வரும்போது கூடத்து அழுக்கு கடிகாரத்தில் மணி ஒன்பதுக்கு மேல் ஆகியிருந்தது. புதுசாக சிவப்பு காஷ்மீர் சால்வை போர்த்தியிருந்தார். காதில் கடுக்கனும், கழுத்தில் ருத்திராட்சமும், பட்டை பட்டையாக விபூதியும் அணிந்து ஆசாரசீலராய்க் காட்சியளித்தார்.
வாசல் திண்ணையில் அவர் வரவை எதிர்நோக்கி யார் யாரோ காத்திருந்தார்கள்.
கனபாடிகள் வந்து விட்டார் என்று தெரிந்ததும் பாடசாலை ஒரு முறை சிலிர்த்துக் கொண்டது! .
"அதோ அப்பா வந்துட்டாரே!" என்று கமலா சொன்னதும் பாகீரதியின் வயிற்றில் தீக்குழம்பு கலங்கியது.
மற்றவர்கள் மரியாதையாக எழுந்து நிற்க, கனபாடிகள் திண்ணையில் காலைத் தொங்கப் போட்டு அமர்ந்தார்.
"நீங்கள்ளாம் எங்கிருந்து வரேள்?" என்று காத்திருந்தவர்களைப் பார்த்து விசாரித்துக் கொண்டிருந்தபோது "தேள் கொட்டிட்டுது சாமி!" என்று அலறிக்கொண்டு ஓடி வந்தான் ஒருவன்.
"அதோ அந்தக் குட்டிச் சுவரிலிருந்து கொஞ்சம் மண்ணாங்கட்டி எடுத்துண்டு வா, போ" என்று கனபாடிகள் அவனையே ஏவ, அவன் ஓடிப் போய் சில மண்கட்டிகளைப் பிய்த்து வந்தான்.
”தேள் கொட்டின இடத்தைக் காட்டு!" என்றார். அவன் வலது கையை நீட்டினான்.
மண்ணாங்கட்டியைச் சன்னமாகத் தூளாக்கி, கல்நீக்கி, மந்திரம் முணுமுணுத்து மூன்று முறை கொட்டின வாயில் வீசி ஊதினார். மூன்றாவது முறை விஷம் முழுவதுமாக இறங்கி கொட்டின வாய்க்கு வந்து எட்டிப் பார்த்தது.
"உன் பேர் என்னப்பா?" என்று கேட்டார் கனபாடிகள்,
”மண்ணாங்கட்டி"
"உன் பேரும் மண்ணாங்கட்டியா" சிரித்தார், மற்றவர்களோடு அவனும் சிரித்தான் . "வலி போயிட்டுதா?"
"பறந்துட்டுது சாமி!" என்று சந்தோஷமாக அவர் காலில் விழுந்தான்.
சுற்றி நின்றவர்கள் கனபாடிகளின் மந்திர சக்தி கண்டு பிரமித்துப் போனார்கள்.
”ஆகாசத்திலிருந்து வரும் வேத ஒலிகளை மகரிஷிகள் கிரகித்து மனப்பாடம் செய்து, கடுமையான விரதங்களைக் கட்டுப்பாடாக அனுஷ்டித்து, வழி வழியாக சீடர்களுக்கும் போதித்ததுதான் இந்தப் புனிதமான வேத மந்திரங்கள். விரத பங்கமின்றி இதை யார் கற்றுத் தேர்ந்தாலும் அவர்கள் வாக்கு பலிக்கும். ஆகவேதான் ரிஷிகளின் சாபத்துக்கு ஆளாகிக் கூடாது என்று சொல்வார்கள். மந்திரசித்தி பெற்றவர்களை வேதம் காப்பாற்றும். வேதவித்துக்களால் உலகமும் காப்பாற்றப்படும்” என்றார் கனபாடிகள்.
”கமலா மாமி! உக்கிராண அறையிலே பாகீரதி மயக்கமா விழுந்துட்டா, ஒடியாங்க!" என்றான் கொண்டி கிட்டா. அடுத்த கணம் பாடசாலைப் பிள்ளைகள் அத்தனை பேரும் ஓடிச்சென்று பாகீரதியைச் சூழ்ந்துகொண்டார்கள்.
----------
6.
அத்தனை பேரும் ஒன்றும் புரியாதவர்களாய் செயலிழந்து நிற்க, நொண்டி கிட்டா மட்டும் வேகமாக இயங்கினான். துளசி தீர்த்தத்தை எடுத்து வந்து ‘வழி விடுங்க, தள்ளி நில்லுங்க!’ என்று உக்கிராண அறையில் சூழ்ந்து நின்றவர்களை அதட்டிக் கொண்டே பாகீரதியின் முகத்தில் தெளித்ததும், பாகீரதி கண் திறந்து பார்த்தாள்.
"காலையிலிருந்து ஒண்ணும் சாப்பிடலையோன்னோ அதான்! மணி பத்தாகப் போறதே! கழுத்துப்படி விட்டுப் போக அவரைக்காய் பறிச்சிண்டு நின்னா, காலை வெய்யில் பித்தம் தலைக்கேறாம என்ன பண்ணும்? இந்தா, இந்த மோரைக்குடி, முதல்ல" என்று தம்ளரை நீட்டினாள் கமலா.
அது வெய்யில் தலைசுத்தலா, அல்லது அப்பா வந்து விட்டாரே, அந்த ரகசியம் அம்பலமாகி விடுமோ என்ற அச்சத்தின் விளைவா என்பது பாகீரதி மட்டுமே அறிந்த ரகசியம்.
வாசலில் உட்கார்ந்திருந்த கனபாடிகளுக்கு இந்தச் செய்தி எட்டி, அவர் உள்ளே வருவதற்குள் பாகீரதியே எழுந்து போய் "அப்பா, வாங்க!" என்று கனிவோடு வரவேற்றாள்.
"என்னம்மா, உனக்கு?"
"ஒண்ணுமில்லப்பா, பசி மயக்கம்" என்றாள்.
போர்த்தியிருந்த காஷ்மீர் சால்வையை கனபாடிகள் தம் உடம்பிலிருந்து அகற்றும்போதே கிட்டா ஓடிவந்து அதை வாங்கிக் கொண்டான்,
"அவன் எங்கடா, மூர்த்தி?" என்று கேட்டு சுற்றுமுற்றும் பார்த்தார் கனபாடிகள்.
"ஸ்நானத்துக்குப் போறதாச் சொல்லிட்டுப் போனான்."
"அடடே வாசல்ல பையை வச்சுட்டு வந்துட்டேன். போ, போ! எடுத்துண்டு வா, ஒடு" என்றார். அதில் மூர்த்திக்காக நாலு முழம் பட்டுவேட்டி ஒன்று வாங்கி வைத்திருந்தார்.
பாடசாலைப் பையன்கள் ஒவ்வொருவராக வந்து கனபாடிகளுக்கு பக்தியோடு நமஸ்காரம் செய்தனர்.
நாலைந்து பையன்கள் மட்டும் ஒரு முலையில் உட்கார்ந்து ஸுஸ்வரமாக சாமவேதம் இசைத்துக் கொண்டிருந்தார்கள். கனபாடிகளுக்கு நமஸ்காரம் செய்ய, அவர்கள் எழுந்து வர முயன்றபோது,
“வேணாம்; பாதி ஆவிருத்தியில் விட்டுட்டு நமஸ்காரம் பண்ண வர வேண்டாம்" என்று சொல்லிக்கொண்டே தோட்டப் பக்கம் போனார் கனபாடிகள்.
"மூர்த்தி ஸ்நானத்துக்குப் போயிருக்கான்னு அப்பாகிட்ட பொய் சொல்லிட்டயே உண்மை தெரிஞ்சா." என்று கேட்டாள் கமலா.
"நான் பொய் சொல்லலையே! அவன் ஆத்துக்குப் போறேன்னுதானே சொல்லிட்டுப் போனான். அது உண்மை தானே..?"
"அப்பாவுக்குத் தெரிஞ்சதுன்னா என்ன ஆகுமோ!" என்றாள் பாகீரதி.
"நீ எதுக்கு அனாவசியமா பயப்படறே? நீயா அவனைப் போகச் சொன்னே?"
”உண்மையை மறைச்சுப் பேசறதுகூடப் பொய்தானேடா!”
"ஆபத்துக்குப் பொய் சொல்லலாம்னு சாஸ்திரமே சொல்றது. பசுமாட்டுக்குக் கொஞ்சம் புல் கொடுத்துட்டா பொய் சொன்ன பாவம் தீர்ந்துடுமாம். நம்மாத்துல பசுமாடும் இருக்கு. நிறையப் புல்லும் இருக்கு" என்றான் கிட்டா.
"பொய் சொல்ல நீயும் இருக்கே!" என்றாள் கமலா,
இதற்குள் கனபாடிகள் ஸ்நானத்தை முடித்துக்கொண்டு மடியாகப் பூஜை மணையில் வந்து அமர்ந்தார்.
குத்து விளக்கும், வெண்கல மணியும் பஞ்சபாத்திரங்களும் தீக்கொழுந்துபோல் பளபளக்க, அர்ச்சனைக்குரிய புஷ்பங்கள் மூங்கில் தட்டில் குவிந்திருக்க, அந்த இடத்தில் ஒரு தெய்வீக மணம் சூழ்ந்திருந்தது.
திராட்சைப் பழங்களை நைவேத்தியமாகக் கொண்டு வைத்தாள் கமலா.
*ஏது திராட்சை!” என்று கனபாடிகள் கேட்க ’ஊர்லேர்ந்து கிட்டா கொண்டு வந்தான்’.
பூஜை முடித்து, ’ஆயதனவான்பவதி’ சொல்லி, தோட்டத்தில் காக்கைகளுக்கு அன்னமிட்டபின் சாவகாசமாக ஊஞ்சலில் வந்து உட்கார்ந்தார் கனபாடிகள்.
“மூர்த்தி எங்கடா போனான்? ஸ்நானத்துக்குப் போனவனா இன்னும் வரலை?"
"அவன் வரமாட்டான்" என்றாள் கமலா.
“ஏன்?”
"இனிமே வேதம் படிக்கப் போறதில்லையாம். திரும்பி வரப் போறதும் இல்லையாம்! யாரிட்டயும் சொல்லிக்காமலே போயிருக்கான்."
"திடீர்னு வேதத்தின் பேர்ல அப்படி என்ன கோபம்? இதெல்லாம் யாரிடம் சொன்னான்?"
"கிட்டா, மூர்த்தியை தஞ்சாவூர்ல பார்த்தானாம்."
"கிட்டாவை இங்க கூப்பிடு."
"அப்பா, கொஞ்சம் இப்படி கொட்டில் பக்கம் வரேளா? உங்ககிட்ட தனியாப் பேசணும்" என்று கனபாடிகளை ரகசியக் குரலில் அழைத்தாள் கமலா.
"ஏதோ விபரீதமான செய்தியைச் சொல்லப் போகிறாள்" என்பதை ஊகித்துவிட்ட கனபாடிகள் தளர்ந்து, தள்ளாடியபடி கமலாவைப் பின் தொடர்ந்தார்.
பாகீரதிக்கு வயிற்றைக் கலக்கியது.
இரண்டு நாட்களாகவே கமலாவின் பார்வையிலும் பேச்சிலும் சந்தேகம் இழையோடிக் கொண்டிருப்பதை அவள் உணராமல் இல்லை.
’அப்பாவிடம் எதையாவது கண்டதையும் காணாததையும் சொல்லி அவர் மனசில் விஷ விதையைத் தூவி விடுவாளோ?’ என்று அஞ்சினாள்.
அப்பாவைத் தனியாக அழைத்துப் போய் கமலா என்னதான் சொன்னாளோ தெரியவில்லை. கனபாடிகள் அத்துடன் ’கப்சிப்’ பென்று அடங்கிப் பேசா மடந்தையாகி விட்டார்.
அன்று பகல் முழுதும் பாடசாலை உற்சாகமின்றி, உயிரோட்டமின்றி கலகலப்பு இன்றி ஒரு மெளனமான சோகத்தில் ஆழ்ந்திருந்தது.
பகல் போஜனத்துக்குப் பிறகு கனபாடிகள் தினமும் சாதாரணமாகச் சற்று நேரம் ஒரு குட்டித் தூக்கம் போடுவது வழக்கம். இன்று தூக்கம் வராததால் இப்படியும் அப்படியும் கூண்டுப் புலிபோல் நடந்து கொண்டிருந்தார். அகத்தின் சஞ்சலம் முகத்தில் தெரிந்தது. சற்றுநேரம் அப்படி நடந்துவிட்டு வால்மீகி ராமாயண புத்தகத்தை எடுத்துப் புரட்டினார். ராமனைப் பிரிந்த தசரதர் புத்திர சோகத்தில் மூர்ச்சையாகிவிட்டார் எள்ற வரிகளைப் படித்தபோது அவர் கண்களில் நீர் ததும்பி நின்றது.
"மூர்த்தியின் அப்பாவுக்கு நான் என்ன பதில் சொல்வேன்? ’அவனுக்கு தாய் தந்தை குரு தெய்வம் எல்லாம் இனி நீங்கள்தான்’ என்று என்னிடம் ஒப்படைத்துவிட்டுப் போயிருக்கிறாரே, அவர் திரும்பி வந்து ’என் மூர்த்தி எங்கே?’ என்று கேட்டால் எப்படி பதில் சொல்வேன்?" என்று தவித்தார்.
ராத்திரி, கூடத்து கடிகாரம் ஒன்பது அடித்து, ராப்பிச்சைக்காரர்கள் வந்துவிட்டுப் போன பிறகும்கூட கனபாடிகள் சாப்பிடாமல் மூர்த்தியை நினைத்து உருகிக் கொண்டிருந்தார். கமலா மெதுவாக அவர் அருகில் போய் நின்று "மனசைப் போட்டு அலட்டிக்காதீங்க, சாப்பிட வாங்கப்பா!" என்று அழைத்தாள்.
"வேண்டாம்மா; எனக்குப் பசியே இல்லை!"
"வெறும் வயிற்றோடு படுக்கக் கூடாது. மூர்த்தி உங்களுக்குப் பிடிக்கும்னு திராட்சைப் பழம் வாங்கி அனுப்பியிருக்கான், இந்தாங்க, இதையாவது சாப்பிடுங்க" என்றாள் பாகீரதி.
"மூர்த்தியா எனக்கா? அனுப்பியிருக்கானா!" கனபாடிகள் ஆவலோடு அதை வாங்கி வாயில் போட்டுக் கொண்டார். திராட்சை தேனாக இனித்தது. (அடாடா, இந்த மூர்த்திக்கு என் மீது எத்தனை அன்பு !)
"கமலா! நான் படுக்கப் போறேன், காலெல்லாம் வலிக்கிறது. இன்றைக்கு ரொம்ப தூரம் நடந்தே வந்தேன். கிட்டாவைக் கூப்பிட்டு என் காலைக் கொஞ்சம் மிதிக்கச் சொல்லு. நான் இப்படியே இந்த மான்தோல் மீது படுத்துக் கொள்கிறேன்" என்றார்.
கிட்டா வந்து அவர் கால்களை மிதிக்காமல் கைகளால் பிடித்துவிட்டான்.
“காலால் மிதிடா, அப்பத்தான் வலி போகும். இல்லைன்னா என் கால் வலியெல்லாம் உன் கைக்கு ஏறிடும்!" என்றார்.
"பரவாயில்லே; நான் பிடிச்சே விடறேன்" என்றான் கிட்டா.
"ஒகோ, உனக்கு ஒரு கால் ஊனமோ?..."
"அதுக்கில்லே. குருவைக் காலால் மிதிக்கலாமா? பாவமில்லையா!””
"குரு சொல்லைத் தட்றதுகூடப் பாவம்தாண்டா, பரவாயில்லை; மிதி" என்றார்.
அவன் ஒற்றைக் காலால் மிதிக்கும்போது கனபாடிகளின் கண்கள் மாலை மாலையாய்க் கண்ணீர் பெருக்கின.
"ஏன் இப்படி அழறீங்க? மூர்த்தியை நினைச்சுண்டா?"
"ஆமாம்; அவனை ஒரு நாள் ராத்திரி இப்படித்தான் காலை அமுக்கச் சொல்லிட்டுத் தூங்கிப் போயிட்டேன். விடியற்காலம் கண் விழித்துப் பார்க்கிறேன். அப்பவும் காலை அமுக்கிண்டே உட்கார்ந்திருந்தான். அப்படி ஒரு பக்தி அவனுக்கு. அவன் பிரிவை என்னால தாங்கிக்க முடியலை கிட்டா! எனக்கு புத்திர பாக்கியம் இல்லை. ஆனாலும் புத்திர சோகம் என்பது எவ்வளவு கொடுமைன்னு புரியறது" என்றார்.
"மனசைப் போட்டு அலட்டிக்காதீங்க. தன்னால வந்துடுவான், பாருங்க" என்றான் கிட்டா.
"ஊஹூம்; எனக்குத் தோணல்லே! கார்த்தாலே முதல் வேலையா நாம ரெண்டு பேரும் தஞ்சாவூர் புறப்பட்டுப் போகலாம். அங்கே போய் அவனைத் தேடிப் பிடிச்சு அழைச்சுண்டு வந்துடலாம். கிடைச்சுடுவானா?" என்று சின்னக் குழந்தை போலக் கண்ணீர் சிந்தியபடியே கேட்டார் கனபாடிகள்.
மறுநாள் காலை.
தபால்காரர் கொண்டு வந்து கொடுத்த கடிதத்தை ஆவலோடு பிரித்துப் பார்த்தார் கனபாடிகள். மூர்த்தி எழுதி யிருந்தான்.
---------
7.
தஞ்சாவூர் ரயில்வே ஸ்டேஷனை ஒட்டி மூலையாக ஒரு இடம். கழைக்கூத்தாடி ஒருவன் கண்களை இடுக்கி, டமாரம் தட்டி, விசில் அடித்து "ஹா. ஹா, ஹா" என்று கூவிக் கூட்டம் சேர்த்துக் கொண்டிருந்தான்.
அந்த ஓசைக்கு பயந்த மரத்தடி நாய் ஒன்று அலறி அடித்து ஓடியது.
அடுத்த சில நிமிடங்களில் அங்கே வந்து சூழ்ந்த பெரும் கூட்டம் வட்டமடித்து நிற்க, ரயிலடி அழுக்குப் பையன்கள் மரத்தின்மீது அவசரமாக ஏறி ஆளுக்கொரு இடம் பிடித்துக் கொண்டனர்.
சுற்றி நின்ற கூட்டத்தில் மூர்த்தியும் ஒருவன்.
கறுப்பான எள் குவியலுக்கு இடையே வெண்மையான பச்சரிசி ஒன்று கலந்ததுபோல் அந்தப் பாமர மக்கள் கூட்டத்தில் அவன் சற்றும் பொருந்தாமல் நின்றான்.
கழுத்துச் சங்கிலியை அப்பா வாங்கிக் கொடுத்த நீலச் சட்டை போட்டு மறைத்திருந்தான். கையில் மான் தோல் பை. இப்படியும் அப்படியும் ஒதுங்கிக் கூட்டத்தின் இடுக்கு வழியாகப் பார்த்தபோது அந்தக் கழைக்கூத்தாடிப் பெண் மஞ்சு கவர்ச்சியாய்த் தெரிந்தாள்.
அவன் யாரைத் தேடி ஊரை விட்டு, பாடசாலையைவிட்டு வந்தானோ, யாருடைய அழகில் மயங்கினானோ, யாருடன் நிறையப் பேசி நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தானோ அந்த மஞ்சுவை அங்கே கண்டபோது உள்ளத்தில் ஒரு பரவசமான உணர்ச்சி பொங்கியது!
மஞ்சு, மூங்கில் கழிகளை எடுத்து அவற்றின் நுனிப் பகுதியைப் பெருக்கல் குறிபோல் இறுகக்கட்டி தரையில் குத்திட்டுப் புதைத்தாள். பிறகு ஒரு நீளமான கம்பியால் அந்தப் பெருக்கல் குறிகளை இணைத்து அந்தக் கம்பிமீது ஏறி டமார லயத்துக்கு ஏற்ப ‘பாலன்ஸ்’ செய்தபடி நடந்தாள்.
உயரத்திலிருந்து பார்த்த மஞ்சுவின் கண்களில் கூட்டத்தோடு நின்று கொண்டிருந்த மூர்த்தி ‘பளிச்’சென்று தென்பட அடடே, இவன் எப்படி இங்கே வந்தான்!” என்று தனக்குள் வியந்தாள்.
அதேசமயம், மூர்த்தியின் சட்டைப் பையிலிருந்த மணிபர்ஸை யாரோ ஒருவன் ஜேப்படி செய்து கொண்டிருப்பதைக் கவனித்துவிட்ட மஞ்சு சட்டென்று கீழே குதித்து, கூட்டத்துக்குள் பாய்ந்து அந்த ‘ஜேப்படி’யின் தலைமயிரைப் பிடித்துத் தரதர வென்று இழுத்து வந்து ஓங்கி ஒர் அறை கொடுத்தாள்.
"திருட்டுப் பயலே ! எடுடா அந்த மணிபர்ஸை !" என்றாள். அவன் திமிறிக்கொண்டு ஒடப் பார்த்தான்.
"தப்பி ஓடப் பாக்கறயா? இது உடும்புப் பிடி. இதிலிருந்து நீ அவ்வளவு லேசாத் தப்பிட முடியாது" என்று அவனை ஓர் உலுக்கு உலுக்கினாள்.
அருகில் நின்ற போலீஸ்காரரை விறைப்பாகப் பார்த்து, "என்னய்யா தாணாக்காரரே! திருடனைக்கூடப் பிடிக்காம அங்கே யாரைப் பார்த்து இளிச்சிட்டு நிக்கறிங்க? இவனை ஸ்டேஷனுக்கு இழுத்துட்டுப் போய் நாலு போடு போடுங்க. அப்பத்தான் புத்தி வரும் இவனுக்கு" என்றாள்.
இதற்குள் "ஐயோ, அது என் மணிபர்ஸ் !" என்று அலறிக்கொண்டு ஓடிவந்தான் மூர்த்தி.
மஞ்சு அவனை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, "வெள்ளத்தில் முழுகின ஆளில்ல நீ! இங்க எங்க வந்தே?" என்று கேட்டாள்.
"உன்னைப் பார்க்கத்தான்."
"முதல்ல இந்த பர்ஸை வாங்கிக்க; வித்தை முடிஞ்சதும் பேசலாம்! ”
திடீரென்று வானம் இருண்டு எந்த நிமிடத்திலும் மழை வரும்போல் ஒரு சூழ்நிலை உருவாகி, புழுதிக்காற்று வீசவும் கூட்டம் மளமளவென்று கலையத் தொடங்கிற்று. ‘வசூல் போச்சே!’ என்ற ஏமாற்றத்தில் கிழவன் முகம் கறுக்க அவசரமாக "தருமவான்களே, தாய்மார்களே!" என்று டால்டா டப்பாவைக் குலுக்கிக்கொண்டு ஓடினான்.
இதற்குள் இடியும் மின்னலுமாய்ப் பேய் மழை கொட்டத் தொடங்கவே அத்தனை கூட்டமும் ஸ்டேஷனுக்குள் புகுந்து விட்டது. மழையில் தெப்பலாய் நனைந்து நின்ற மஞ்சுவைத் தொடர்ந்து முர்த்தியும் போய் நின்றான்.
"வேற சட்டை வச்சிருக்கியா?" என்று கேட்டாள் மஞ்சு,
"இல்ல."
"ராத்திரி எங்க தங்கப்போறே?"
"உன்னைத் தேடிக்கொண்டுதான் வந்தேன். ‘தேடப் போன மருந்து காலிலே சிக்கின மாதிரி’ நீ இங்கயே கிடைச்சுட்டே !"
"முதல்ல தலையைத் துவட்டிக்கோ, இந்தா டவல் ! மழை நின்னதும் ராஜா சத்திரம் போலாம். அங்கதான் நானும், அப்பாவும் தங்கியிருக்கோம்."
இது யார்? உங்கப்பாவா?"
"ஆமாம்; வயசாயிட்டுது. வரவர கண்ணும் தெரியலே; காதும் கேட்கலே. நய்னா நான் சொன்னனே… ஆத்துல ஒருத்தர் முழுகிட்டார்னு இவர்தான் அது !"
"பிராமணப் பிள்ளையா?”
"ஆமாம்; வேதம் படிக்கிறார்."
"உங்க மகதான் என்னைக் காப்பாத்தினார். அன்னைக்கு என் உயிரைக் காப்பாத்தினா. இன்னைக்கு என் மணிபர்ஸைக் காப்பாத்தினா!" என்றான் மூர்த்தி.
"மழை நின்னுட்டுது. வாங்க சத்திரத்துக்குப் போவோம்" என்றான் கிழவன்.
"இடியும் மின்னலும் நின்னபாடில்லை. மறுபடியும் மழை வரும் போலிருக்கு" என்றான் மூர்த்தி.
சத்திரத்துத் தாழ்வாரத்தின் ஒரு மூலையில் ஏற்கனவே இடம் பிடித்து வைத்திருந்தாள் மஞ்சு. அங்கேதான் சமையல் சாப்பாடு படுக்கை எல்லாம்.
மஞ்சு அடுப்பு பற்ற வைத்து சப்பாத்தி தயாரித்தாள்.
”சப்பாத்தி பிடிக்குமா உனக்கு?" மூர்த்தியைக் கேட்டாள்.
"இல்லே, நான் ஆனந்தா லாட்ஜுக்குப் போறேன்."
"ஏன் நான் செய்யற சப்பாத்தி பிடிக்காதா?"
"உன்னைப் பிடிச்சிருக்கு!"
சிரித்தாள். அவள் அவனிடம் இந்த வார்த்தையை எதிர் பார்க்கவில்லை.
"போயிட்டு சீக்கிரம் வந்துடுவே இல்ல?"
"உடனே… இனிமே உன்கூடத்தான்."
"ஏன் ! வேதம் படிக்கப் போறதில்லையா?"
"நீ என்னைத் தொட்டு காப்பாத்தினதிலேர்ந்து என் மனசே சரியில்லே. பாடசாலையிலும் அமைதி இல்லாமப் போயிடுத்து. புத்தி வேதத்தில் லயிக்கலே. சரியோ தப்போ, துணிஞ்சு வந்துட்டேன்."
“உனக்கும் உன் அப்பாவுக்கும் ஆட்சேபணை இல்லேன்னா நானும்
உங்களோடு சேர்ந்து கழைக்கூத்து ஆடத் தயார். எனக்கு வித்தையெல்லாம் கத்துக் கொடுப்பியா?"
"நிசமாத்தான் சொல்றயா?"
”நிஜம்மா!”
மின்னல் ஒன்று வெள்ளிக் கொடியாய்ப் பளிச்சிட்டது.
மஞ்சு யோசித்தாள். அப்பாவுக்குப் பிறகு தனக்குப் பாதுகாப்பாக ஒரு ஆண் துணை தேவை என்பதையும் தனக்கு ஏற்றவனாக யார் கிடைக்கப் போகிறான் என்பது பற்றியும் அவள் கொஞ்ச நாட்களாகவே யோசித்துக் கொண்டுதானிருந்தாள். மூர்த்தி அதற்குப் பொருத்தமானவனாயிருப்பான் என்று ஒரு எண்ணம் மின்னலிட்டது அவளுக்கு.
"வேதத்தைப் பாதியில விட்டு வந்த மாதிரி இங்கிருந்தும் போயிடமாட்டயே!"
வானத்தில் ஒரு பலத்த இடி முழங்கியது.
"ஊஹூம், மாட்டேன்."
"உன்னை யாரும் தேடி வரமாட்டாங்களா?"
"வந்தாலும் போகமாட்டேன். எனக்கு அம்மா இல்லை. அப்பா ரிஷிகேசம் போயிட்டார். வேதம் சொல்லித் தரும் சங்கர கனபாடிகள்தான் என் தாய் தந்தை குரு, தெய்வம் எல்லாம்…. என்னை மறந்துடுங்க; தேட வேண்டாம்னு அவருக்கு நான் கடிதம் எழுதிப் போட்டுட்டேன். அவர் என்னைத் தேட மாட்டார்." இதைச் சொல்லும்போது அவனுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.
கூடல்வாயில் மழைத் தண்ணீர் அருவியாய் கொட்டியது.
"அப்ப… அவரிடம் சொல்லிக்காம வந்துட்டியா?"
"ஆமாம்."
”ஏன்?”
"அதை மட்டும் கேட்காதே! என்னால் பதில் சொல்ல முடியாத கேள்வி அது. சொல்லவே கூடாத பரம ரகசியம் அது" என்றான்.
"கழைக் கூத்தெல்லாம் கத்துக்கணும்னா, முதல்ல உடம்பை வில்லா வளைக்கத் தெரியணும். அதுக்கு தினம் தினம் ‘கவாத்து‘ செய்யணும். நாளைக்கே நீ இந்தக் குடுமியை எடுத்துட்டு தியாகராஜபாகவதர் மாதிரி ஜில்பாக் குடுமி வச்சக்கணும். அப்புறம் உன் கழுத்துல கறுப்புக் கயிறு முடிஞ்சு கையிலே தாயத்து கட்டி விட்டுருவேன். அதுதான் உனக்கு ரட்சை சம்மதமா?" என்று கேட்டாள்.
மூர்த்தி சற்று யோசித்தான். ஒரு கணம் தன்னைக் கழைக்கூத்தாடி கோலத்தில் கற்பனை செய்து பார்த்துக் கொண்டான். கண்களில் கனபாடிகள் தெரிந்தார். ஒரு தீர்மானத்துக்கு வந்தான்.
சம்மதம் என்ற பாவனையில் தலையசைத்தான்.
அப்புறம் அவன் ஆனந்தா லாட்ஜ் போய் சாப்பிட்டு வருவதற்குள் அவனுக்காக ஒரு புதிய தாழம்பாய் வாங்கி வைத்திருந்தாள் மஞ்சு.
அவன் திரும்பி வந்ததும் "இந்தா, இந்தப் பாயில படுத்துத் தூங்கு. அந்த மான் தோல் பையைத் தலைக்கு வச்சுக்க . மணிபர்ஸ் ஜாக்கிரதை !" என்றாள்.
தூரத்து டீக்கடையில் கிட்டப்பா ‘கோடையிலே’ பாடிக் கொண்டிருந்தார்.
பழக்கமில்லாத சூழ்நிலையில் தூக்கம் வரவில்லை அவனுக்கு. அடங்கியிருந்த மழை நடுநிசிக்கு மேல் மீண்டும் கொட்டத் தொடங்கியது. மழைச்சாரல் தாழ்வாரத்தை நனைத்ததுடன் மூர்த்தி கால்களையும் ஈரமாக்கியது. அவன் நகர்ந்து போய்ச் சுவரோரம் முடங்கிக் கொண்டான்.
மஞ்சு சப்தப்படுத்தாமல் எழுந்து நின்று ‘மூர்த்தி எப்படி இருக்கிறான்?’ என்று பார்த்தாள். குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தான். ‘பாவம், குளிருதா மூர்த்தி?’ என்று கேட்டுக் கொண்டே கனமான போர்வை ஒன்றை எடுத்து அவன் மீது போர்த்தி விட்டாள்.
இங்கே பாடசாலையில், அதே நேரம் கனபாடிகள் மூர்த்தியைப் பற்றிய விசாரத்தில் மூழ்கியவராய் தூக்கம் வராமல், “மூர்த்தி ! முர்த்தி!" என்று பித்துப் பிடித்தவர் போல் முனகிக் கொண்டிருந்தார்.
தூங்கிக் கொண்டிருந்த கொண்டி கிட்டாவை எழுப்பி, "ஏண்டா கிட்டா ! இந்த மழை தஞ்சாவூர் பக்கமெல்லாம்கூடப் பெய்யுமோ?" என்று கேட்டார்.
தூக்கக் கலக்கத்தில் அவனுக்கு ஒன்றும் புரியாமல், "இப்ப இங்கே மழை பெய்யறதா?” என்று கேட்டான்.
"மூர்த்தி இந்த மழையில எங்கே கிடந்து கஷ்டப் படுகிறானோ? போர்வைகூட இல்லாமப் போயிருக்கானே! அவனுக்கு யார் போர்த்திவிடப் போறா?" என்று கனபாடிகள் தனக்குத்தானே புலம்பிக்கொண்டிருந்தார்.
கூடத்தில் அம்புலு சிணுங்கிக் கொண்டிருந்தது.
பாகீரதிக்கும் தூக்கம் பிடிக்கவில்லை. அந்த ‘முதல் இரவு’ நினைவுகள் அவளை வாட்டி எடுக்க, பொங்கி வந்த கண்ணீரால் நினைவுகளைக் கழுவிக்கொண்டு, முன்கட்டுப் பக்கம் போனாள். கனபாடிகள் படுக்கையில் எழுந்து உட்கார்ந்திருந்தார்.
"என்னப்பா, தூங்கலையா நீங்க?"
”நீ ஏன் தூங்கலை? உனக்கு ஏன் தூக்கம் வரலை?" என்று பதிலுக்குக் கேட்டார் கனபாடிகள்.
--------
8.
நெய்யில் முந்திரிப்பருப்பு வறுபட்டுக் கொண்டிருந்த மணம் பாடசாலை முழுதும் ‘கமகம’த்தது. வெள்ளிக்கிழமையானதால் சுவாமி நைவேத்தியத்துக்கு அவல் பாயசம் !
கனபாடிகளும் கிட்டாவும் பசு மாட்டுக்கு மஞ்சள் பூசி குங்குமம் இட்டுக் கொண்டிருந்தார்கள்.
பத்து நாட்களுக்குமுன் கொட்டிலுக்குப் ‘புது வரவு’ ஒன்று சேர்ந்திருந்தது. காவேரிப்பாக்கம் பசு ஈன்றெடுத்த அந்த ஆண் கன்றுக்கு இன்று நாமகரணம்!
உடல் முழுக்க, பட்டை பட்டையாக, திட்டுத்திட்டாக, வெள்ளையும் பழுப்பும் கலந்த வெல்வெட் வழவழப்பில் அந்த சேங்கன்று துள்ளிக் கொண்டிருந்தது.
"அடே கிட்டா ! இதுக்கு என்ன பேர் வைக்கலாம் சொல்லு ! கமலாவையும் பாகீரதியையும் கூப்பிடு. அவாளையும் கேட்போம்" என்றார் கனபாடிகள்.
அவர்கள் வந்தார்கள்.
"ராஜான்னு வைக்கலாம்ப்பா" என்றாள் கமலா.
"ஸ்வாமி பேர் எதுவும் தோணலையா? நீ என்ன சொல்றே பாகீ?"
ஏதும் சொல்லத் தெரியாதவள் போல் மெளனமாய் நின்றாள் அவள்.
"நம்ப மூர்த்தி ஞாபகமாக அவன் பேரையே வெச்சடலாமே!" என்றான் கிட்டா.
கனபாடிகள் முகத்தில் ஒரு பிரகாசம் பளிச்சிட்டது. "சரி; அந்தப் பேரையே வச்சுடுவோம். எனக்கு ரொம்ப திருப்தி. பாகீ உனக்கு?"
"அவளுக்கும் பரம திருப்திதான். எனக்குத் தெரியும்" என்றான் கிட்டா.
"உனக்கெப்படிடா தெரியும்?"
“கன்னுக்குட்டிக்கு மூர்த்தி பேரை வைக்கலாம்னு நேத்தே அவள் எங்கிட்ட சொல்லிட்டாளே!"
"ஒகோ, ஏற்கனவே தீர்மானம் ஆயிட்டுதோ!" என்றார் கனபாடிகள்.
கிட்டா எங்கேயோ ஒடிப்போய் கன்றுக் குட்டிக்குத் தர ‘பசும்புல்’ கொண்டு வந்தான்.
"இதை உன் கையாலேயே கொடுடா! உனக்கு ரொம்பப் புண்ணியம்" என்றார் கனபாடிகள்.
சேங்கன்று அதை ஆவலாய்ச் சாப்பிட்டது.
"நம்ப மூர்த்தி இப்போ எங்கே இருக்கானோ? யார் அவனுக்கு சாதம் போடறாளோ?" என்று கனபாடிகள் துக்கப் பட்டார்.
இச்சமயம், பாடசாலைப் பையன் ஒருவன் ஓடி வந்து, "உங்களைப் பார்க்க வாசல்லே யாரோ கும்பலா வந்திருக்கா. பக்கத்து அக்கிரகாரமாம்!" என்றான்.
"திண்ணையில உட்காரச் சொல்லு, இதோ வந்துட்டேன். முதல்ல எல்லோருக்கும் மோர் கொண்டு போய்க் கொடு" என்றார்.
கனபாடிகள் வாசலுக்கு வந்தபோது அவர்கள் எல்லோரும் பவ்யமாக எழுந்து நின்றார்கள்.
"பக்கத்தூர்லேந்து வறோம்" என்றார் ஒருவர்.
அப்படிச் சொன்னவரைப் பார்த்து, "நீ வெங்கடேச தீட்சிதர் பிள்ளை இல்லையோ? உன்னைப் பார்த்திருக்கேன். இத்தனை பேரும் எங்க இந்த வெய்யில் வேளையில?...."
ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள்.
வெங்கடேச தீட்சிதர் மகன்தான் பேசினார் :
"ஒரு முக்கியமான விஷயம். சாஸ்திரப் பிரச்னை, நீங்கதான் முடிவு சொல்லணும். அந்தத் தகுதி உங்களுக்குத் தான் உண்டு."
"பூர்வ பீடிகையெல்லாம் பலமா இருக்கே. விஷயத்தைச் சொல்லுங்கோ" என்றார் கனபாடிகள்.
"அத்திப்பட்டு ராமகிருஷ்ண சாஸ்திரிகள்னு கேள்விப் பட்டிருப்பேள்!"
" நன்னாத் தெரியுமே; அவர் காலமாயிட்டார் இல்லையோ?"
"ஆமாம். அவருக்கு ஒரு பெண். பார்வதின்னு பேர். கல்யாணமாகி இருபது வருஷம் ஆறது. அவளுடைய புருஷன் கல்யாணமான ரெண்டு வருஷத்துக்கெல்லாம் கடல் கடந்து பினாங்கு போனவன் இப்பத்தான் திரும்பி வந்திருக்கான். பார்வதி இத்தனை நாளும் பட்டணத்திலே யாரோ ஒரு பணக்காரர் வீட்டிலே சமைச்சுப் போட்டுண்டு காலத்தைக் கழிச்சுண்டிருந்தா. இந்த வருஷம்தான் ஊரோட வந்து சேர்ந்துட்டா, குழந்தை குட்டி கிடையாது."
"சரி, விஷயத்துக்கு வாங்க."
”திடீர்னு இப்ப அவள் புருஷன் எங்கிருந்தோ வந்து முளைச்சிருக்கான்.”
"அப்புறம்?..."
"கெட்டழிஞ்சு வந்திருக்கான். யாரோ மலாய்க் காரியைக் கல்யாணம் பண்ணிண்டானாம். அவளும் போயிட்டாளாம். நிறையப் பணம் காசோட வந்திருக்கான். மறுபடியும் பார்வதியோட சேர்ந்து வாழப் போறேங்கறான்…"
"பார்வதி என்ன சொல்றா?"
‘ஊர் ஒத்துக்குமா’ன்னு கேட்கிறா."
"நீங்கள்ளாம் என்ன நினைக்கிறேள்?"
"அக்கிரகாரத்துல முக்கியமானவாளெல்லாம் கூடிப் பேசினோம். சில பேர் சேர்த்துக்கலாம்னு அபிப்ராயப்படறா. சில பேர் கூடாதுங்கறா. கடல் கடந்து போனவனை அதுவும் இருபது வருஷம் கழிச்சு வந்திருக்கவனை எப்படி சேர்த்துக்க முடியும்? மாமிசம்கூடச் சாப்பிட்டிருப்பான். ஐாதிப் பிரதிஷ்டம் பண்றதைத் தவிர வேறவழி இல்லேங்கறா. இப்ப அக்கிரகாரம் ரெண்டு கட்சியாப் பிரிஞ்சு நிக்கறது. அதான் உங்களைக் கேட்டு முடிவு பண்ணலாம்னு ரெண்டு கட்சிக்காராளும் சேர்ந்து வந்திருக்கோம்"
"நான் சொல்ற தீர்ப்பை ஏத்துக்க வந்திருக்கேளா, இல்லே, சாஸ்திரம் என்ன சொல்றதுன்னு தெரிஞ்சுண்டு போக வந்திருக்கேளா? “
ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
"கனபாடிகள் சொல்ற முடிவை ஏத்துக்கலாம்னுதான் வந்திருக்கோம்."
"கடல் கடந்து போனவனுக்கு, அதுவும் இத்தனை வருஷம் கழிச்சு வந்திருக்கான். ஜாதிவிட்டு ஜாதி கல்யாணம் வேற பண்ணிண்டிருக்கான். இதுக்கு பிராயச்சித்தமே கிடையாது. சில பாவங்களுக்குத்தான் பிராயச்சித்தம் உண்டு. இப்படிப் பட்டவாளுக்கு சமூகத்துல அங்கீகாரம் கிடையாதுன்னுதான் சாஸ்திரம் சொல்றது. அதுதான் என் தீர்ப்பும்" என்றார் கனபாடிகள்.
"அப்ப அந்த அம்மா பார்வதியின் வாழ்க்கை சூன்யமாப் போயிட வேண்டியதுதானா?" என்று கேட்டது ஒரு குரல்.
"சாஸ்திரம் என்ன சொல்றது என்று கேட்டேன். சொன்னேன். என் தீர்ப்பையும் சொன்னேன். அப்புறம் உங்க இஷ்டம்" என்றார் கனபாடிகள்.
"நம்ப சமூகம், சமுதாயம் எல்லாம் நல்லபடியா வாழனுங்கறதுக்குத்தானே சாஸ்திரம் சம்பிரதாயமெல்லாம்? இப்படி வாழ்க்கையே அடியோடு நாசமாப் போயிடறதுக்கு ஒரு சாஸ்திரமா? அது நமக்குத் தேவைதானா? அப்படிப்பட்ட சாஸ்திரத்தை மாத்தி அமைக்க வேண்டியதுதானே!"
கனபாடிகளுக்குக் கோபம் பொத்துக் கொண்டது.
"என்ன சொல்றிங்க நீங்க? சாஸ்திரத்தையே மாத்தணுங்கறேளா? பேஷ் ! சாஸ்திரங்கறது உங்க வீட்டு ஈயப் பாத்திரம்னு நினைப்பா? உங்க இஷ்டம்போல அழிச்சு மாத்தறதுக்கு. அது ஒரு பிரமாணம், யுகம் யுகமாய் மாறாமல், மாற்றாமல் இருந்து கொண்டிருக்கிற வேதப் பிரமாணம். சூரியனையும் சந்திரனையும் மாத்தணும்னு சொல்றது எவ்வளவு அபத்தமோ, அவ்வளவு அபத்தம் சாஸ்திரங்களை மாத்தணுங்கறதும். எப்பவோ ஏற்பட்ட சாஸ்திரம் இப்ப நமக்குப் பொருத்தமா யில்லேன்னா, நம்ம இஷ்டத்துக்கு அது வளைஞ்சு கொடுக்கலேன்னா, அதுக்காக மூலத்தையே மாத்திடறதா!"
"ஏன், முடியாதா? கூடாதா?" என்று கேட்டது ஒரு குரல்.
"ஒரு தேசத்துல கடுமையான வெய்யில் தகிக்கிறது. இன்னொரு தேசத்துல தாங்கமுடியாத குளிர் நடுக்கறது. இந்த இரண்டு இடத்துக்குமே சூரியன் பொதுவானவன். அந்தந்த இடத்துக்குக் தகுந்தாப்பலதான் சூரிய வெப்பம் இருக்கணும், அதுக்கு ஏற்ற மாதிரி ஒரு சூரியனைச் சிருஷ்டி பண்ணணும்னு சொன்னா அது எப்படி சாத்தியமில்லையோ, அது மாதிரிதான் சாஸ்திரத்தை மாத்தணுங்கறதும். பூர்வ ஜன்ம பலனை இந்த ஜன்மத்துல அனுபவிக்கிறோம். அது அவரவர்களுடைய பாவ புண்ணியத்துக்கு ஏத்த மாதிரி அமையறது. அதை அனுபவிச்சு தான் தீரணும். சாஸ்திரம் எல்லா யுகங்களுக்கும் பொதுவானது. கால தேச வர்த்தமானத்துக்கு ஏத்த மாதிரி அதை மாத்திண்டிருக்க முடியாது. இது சத்தியம், வேதவாக்கு" என்றார் கனபாடிகள்.
"அப்ப பார்வதிக்கு மறுவாழ்வு கிடையாதுங்கறேள்! அதுதானே உங்க தீர்ப்பு?" என்று ஆவேசமாகக் கேட்டுக் கொண்டு முன்னால் வந்து நின்றார் ஒருவர்.
"என் மீது கோபப்பட்டு என்ன பிரயோஜனம்? நீங்க தானே சாஸ்திரம் என்ன சொல்றதுன்னு என்னைக் கேட்க வந்தேள்? நான் சத்தியத்தைச் சொன்னேன்."
ஆமாம்; உங்க சொந்த விஷயத்துல மட்டும் அக்க சாஸ்திரம் கிடையாதாக்கும்?" என்று கடுக்கன் ஆசாமி ஒருவர் வெடுக்கென்று கேட்டார்.
செருப்பை மிதித்த மாதிரி "ஸ்ஸ்ஸ்ஸ்" என்று கூட்டத்தில் சப்தம் எழுந்தது.
"என்ன சொன்னீங்க?" கனபாடிகள் குரலில் ஒரு ஆக்ரோஷம் தொனித்தது.
"உங்க சொந்த விஷயத்துலே மட்டும் அந்த சாஸ்திரம் கிடையாதான்னு கேட்கிறோம். உங்க பெண் பாகீரதி மாங்கல்யம் இழந்தவதானே?" அவள் மட்டும் தலைமயிரை எடுக்காமல் இருக்கலாமோ? அது சாஸ்திர விரோதமில்லையோ? உங்க சாஸ்திரம் அதுக்கு மட்டும் ஒத்துக்கறதாக்கும். வாங்கய்யா போகலாம். இவரிடம் என்ன பேச்சு?" என்று ஆவேசமாய்ப் பேசிவிட்டுப் புறப்பட்டார் அந்தக் கடுக்கன்.
மற்றவர்களும் புறப்படத் தயாரானார்கள்.
"நாராயண நாராயண" என்று காதைப் பொத்திக் கொண்டார் கனபாடிகள்.
அந்த அக்னிக் கணைகளை தாங்கிக் கொள்ளும் சக்தி அற்றவராய் நெருப்பில் விழுந்த புழு மாதிரி துடித்துப் போனார்.
துடித்துத் துவண்டு, தவித்துத் தடுமாறி இரண்டு கைகளாலும் தலையில் அடித்துக் கொண்டார்.
கிட்டா அவரை ஆதரவாக அணைத்து அழைத்துக் கொண்டு போய் ஊஞ்சலில் உட்கார வைத்தான்.
"மனசை வாட்டிக்காதீங்க" என்றான்.
"சாஸ்திரம் அறிந்தவன், யாகம் செய்தவன், பிராம்மணோத்தமன் என்றெல்லாம் பெயரெடுத்து என்ன பிரயோஜனம்? என்னைப் பார்த்து இப்படிக் கேட்டு விட்டார்களே!" என்று உருகிப் போன கனபாடிகள் தம்மைச் சுதாரித்துக் கொண்டவராய் "உம், சரி பரவாயில்லே; அவா சொல்றதுலேயும் தப்பு இல்லே. அவாளையெல்லாம் உள்ளே அழைச்சுண்டு வா. சாப்பிட்டுவிட்டுப் போகலாம்னு சொல்லு. வீடு தேடி வந்தவர்களைப் பட்டினியோடு அனுப்பக் கூடாது," என்றார்.
அன்றிரவு கனபாடிகள் அவமானத்தால் குன்றிப் போய், மனம் நொந்து தலை குனிந்து பெருமூச்சு விட்டபடி ஊஞ்சலில் உட்கார்ந்திருந்தார். அப்போது பாகீரதி அவர் அருகில் வந்து நின்றாள்.
"என்னாலதானே அப்பா உங்களுக்கு இந்த அவமான மெல்லாம்?"
அவர் வேதனையோடு அவளைப் பார்த்தார்,
அவள் ஒரு தீர்மானத்துக்கு வந்தவள் போல் ஒரு விரக்தியோடு, ஒரு துணிச்சலோடு நிமிர்ந்து நின்றாள்.
"சாஸ்திர விரோதமான, சமூகம் ஏற்றுக்கொள்ளாத இந்தக் கூந்தல் எனக்கு வேணாம். இன்னைக்கு வெள்ளிக் கிழமை. நாளைக்கே இதை…."
மேலே பேசமுடியாமல் அவள் நெஞ்சுக் குழியில் துக்கம் அணை போட்டது.
-------------
9.
வேப்ப மரத்துக் காக்கை கரைய "யார் வரப் போறாளோ, தெரியலே" என்று கமலா சொல்லி வாய் மூடுமுன் வாசலில் ஜட்கா வண்டியிலிருந்து சிதம்பரம் கெளரி அத்தை கழுத்தில் காசுமாலை பளபளக்க இறங்கிக் கொண்டிருந்தாள்.
"திடீர்னு அத்தை வந்திருக்காளே, என்ன விஷயமோ!" என்று எண்ணிக் கொண்ட கமலா "பாகீ! வாசல்ல யார் வந்திருக்கா பாரு" என்றாள்.
அடுப்பில் பொங்கிக் கொண்டிருந்த பாலை அடக்கிவிட்டு ஓடிவந்த பாகீரதி அத்தையைக் கண்டதும் அகமும் முகமும் மலர "வாங்க அத்தை ! நேத்தெல்லாம் உங்க நினைப்புத்தான் எனக்கு" என்றாள்.
அத்தையை ஆர்வத்தோடு அணைத்துக் கட்டிக்கொண்டவள் மகிழ்ச்சி பொங்க "நீங்க வருவீங்கன்னு மனசிலே தோணிண்டே இருந்தது, அத்தை !" என்றாள்.
"இட்சிணி ஏதாவது சொல்லித்தா?"
அத்தையின் கையிலிருந்த பரண்டையையும் தாழம்பூவையும் வாங்கிக்கொண்ட கமலா “காக்கா கத்திண்டே இருந்தது!" என்றாள்.
"நீ எப்ப வந்தடி இங்க? அம்புலு எங்கே?" என்று கேட்டாள் அத்தை.
"தூங்கறது. நாலு நாளாச்சு வந்து ஊருக்குப் போகணும்னு சொல்லிண்டேதான் இருக்கேன். இதுக்குள்ள என்னென்னவோ குழப்பம் !"
"என்ன குழப்பம்?"
“என்னவோ! ஒண்ணும் சொல்லிக்கிற மாதிரி இல்லே!"
அதைத் தெரிந்துகொள்வதில் அத்தை அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. அப்புறம் நிதானமாக விசாரித்துக் கொள்ளலாம் என எண்ணி "அண்ணா எங்கே?" என்று கேட்டுக்கொண்டே பின்கட்டுப் பக்கம் நடந்தாள்.
அங்கே கனபாடிகள் சிவப்பழமாய் உட்கார்ந்து கண்களை முடி ஜபம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்ததும் திரும்பி வந்தாள்.
"என்ன அத்தை அத்தி பூத்தாப்பல?" என்றாள் கமலா.
"பரண்டை கொண்டு வந்திருக்கனே, பார்க்கலையா? இன்னும் ரெண்டு நாள்ல உங்க பாட்டிக்கு திவசம் வரப் போறதுடி ! ஒரு திவசத்துக்காவது வராம இருந்திருக்கனோ?"
"உங்க அம்மாவுக்குன்னு சொல்லு. இது மாசி மாசம்கறது மறந்தே போச்சு. பாட்டியோட திதி இப்பத்தான் வர வழக்கம். அப்பாவுக்கு ஞாபகம் இல்லையோ, என்னவோ!"
"பாவம், அவனுக்கு எத்தனையோ கவலை ! மறந்திருப்பான் !"
கனபாடிகள் ஜபத்தை முடித்துக்கொண்டு ஆசமனம் செய்துவிட்டு வந்தபோது "கெளரி அத்தை வந்திருக்கா! பார்த்தேளா, அப்பா" என்றாள் கமலா.
"கணீர்னு குரல் கேட்டுது, வெண்கலக் குரலாச்சே! எங்கே அவள்?" என்று கேட்டார் கனபாடிகள்.
"புதுக் கன்னுக்குட்டியைப் பார்க்கப் போயிருக்கா!" என்றாள் கமலா .
கனபாடிகள் தொழுவத்துக்குப் போய் "வா, கெளரி ! அவர் செளக்கியமா? நல்ல வேளை! நீ வந்தே; இல்லேன்னா அம்மாவை மறந்தே போயிருப்பேன். என்னைக்கு சிராத்தம்? புதன்கிழமையா இப்பவே கிட்டாவை அனுப்பி வாத்தியாரிடம் சொல்லிட்டு வரச்சொல்றேன்" என்றார்.
"ஏன், ஒரு மாதிரி இருக்கீங்க எல்லாரும், கலகலப்பே இல்லாம?" என்று கேட்டாள் அத்தை.
“கமலா சொல்லியிருப்பளே" என்றார் கனபாடிகள்.
"ஏதோ குழப்பம்னு மாத்திரம் மொட்டையாச் சொல்லி நிறுத்திட்டா. அப்புறம் எதுவும் சொல்லலை. நானும் கேட்கலை. நீயே சொல்லு" என்றாள் கெளரி.
"பக்கத்து அக்கிரகாரத்துலேந்து நேத்து ஏழெட்டு பேர் என்னைத் தேடிண்டு வந்தா ! யாரோ ஒருத்தன் தாலி கட்டின பெண்டாட்டியைத் தவிக்க விட்டுட்டு சமுத்திரம் தாண்டிப் போயிட்டானாம். வெளி தேசம் போய் வேறொருத்தியைக் கல்யாணம் பண்ணிண்டு இருபது வருஷம் அவளோடு வாழ்ந்தப் புறம், அவள் காலமானதும், இப்ப ஊர் திரும்பி வந்து இந்தப் பெண்டாட்டியோட வாழப்போறேங்கறானாம். ‘சாஸ்திரம் இதுக்கு ஒத்துக்குமா? நீங்க என்ன சொல்றேள்’னு ஊரார் என்னைக் கேட்க வந்தா. சாஸ்திரம் கண்டிப்பா ஒத்துக்காது. ஜாதிப் பிரஷ்டம் செய்ய வேண்டியதுதான்னு நான் தீர்ப்பு சொன்னேன்.
“உங்க பெண் பாகீரதி கூந்தலை எடுக்காம இருக்காளே! அதுக்கு என்ன சொல்றீங்க? அதை மட்டும் உங்க சாஸ்திரம் ஒப்புக்கறதாக்கும் !" என்று என்னையே மடக்கி அவமானப் படுத்திட்டு போயிட்டா!
இதையெல்லாம் கேட்டுண்டிருந்த உன் செல்லம் பாகீரதி ராத்திரி என் கிட்டே அழுதுண்டே வந்து என்ன சொல்லித்து தெரியுமா? அதை என் வாயாலே திருப்பிச் சொல்றதுக்கே நாக்கூசறது!"
பாகீரதி என்ன சொன்னாள் என்று அத்தை கேட்க வில்லை. அவளே அதை ஒரு மாதிரி ஊகித்துக் கொண்டாள்.
“சரி, அண்ணா! இதுக்கெல்லாம் மனசைப் போட்டு குழப்பிக்காதே! நம்ம குழந்தையோட சந்தோஷம்தான் நமக்கு முக்கியம் !" என்றாள்.
இச்சமயம் பாடசாலைப் பையன்களில் ஒருவன் கனபாடிகள் எதிரில் வந்து நின்றான்.
"என்னடா?"
"நேத்து நீங்க சொல்லிக் கொடுத்த வேத பாடத்தை ஸ்லேட்டில் எழுதிக்கொண்டு வந்திருக்கேன்," என்றான்.
"வேதத்தை எழுத்தால் எழுதக் கூடாதுடா ! ‘எழுதா மொழி’ன்னு சொல்லுவா அதை. சப்த ரூபமான வேதத்தைக் காது வழியாக் கேட்டுதான் மனப்பாடம் செய்யணும். அப்படிக் தான் அது வழிவழியா வந்திருக்கு. ஒரு அட்சரத்தின் சப்தம் கூடப் பிசகக்கூடாது. பிசகினால் அர்த்தம் அனர்த்தமாயிடும், வேதத்துக்கு ஸ்வரம் உண்டு. அதில் அபஸ்வரம் பேசக்கூடாது. உச்சரிப்பு, ஸ்வரம், ஆரோகணம் அவரோகணம் இதெல்லாம் எழுத்தாலே சாத்தியப்படுமா? நீ சின்னப் பையன். இதெல்லாம் உனக்கு விளங்காது. போய் வேதத்தை ஓது! எழுதாதே! தினமும் ஒரு ஆவிருத்தியாவது வேதத்தை வாய்விட்டுச் சொல்லு. வேதம் ஓதறபோது பாதில விட்டுட்டு அங்கே இங்கே எழுந்து ஓடக் கூடாது. போ, போ" என்றார் கனபாடிகள்.
“மூர்த்தி பாதில விட்டுட்டு ஓடிப் போயிட்டானே!" என்றான் அந்த அசட்டுப் பையன்,
அந்தப் பையனின் வெகுளித்தனமான கேள்விக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை.
"நீ போடா!" என்றார்.
”பாகீ! ஏன் தலையை வாராமல் சிக்காக்கி வச்சிண்டிருக்கே? இப்படி வந்து உட்காரு. தாழம்பூ என்றால் உனக்கு ரொம்பப் பிடிக்குமே! உனக்காகவே நல்ல வாசனைத் தாழம்பூவா வாங்கிண்டு வந்திருக்கேன். அழகாப் பின்னி விட்டுடறேன், வறயா?" என்றாள்.
"ஐயோ, வேணாம் அத்தை ! அதுக்கெல்லாம் நான் கொடுத்து வைக்காத பாவியாயிட்டேன். இந்த உலகத்துல சிறுமைப்படவே இந்தப் பெண் ஜன்மம் எடுத்திருக்கேன், நேத்தே முடிவு பண்ணிட்டேன். இனி அப்பாவுக்கு என்னால எந்த அவமானமும் வரக்கூடாது. அதுக்கு நான் காரணமாயிருக்க மாட்டேன்."
"சீ, அசட்டுப் பிசட்டுன்னு பேசாதே! நீ சின்னக் குழந்தை. அறியாப்பருவத்தில் உனக்குத் தெரியாமலே எல்லாம் நடந்து போச்சு. அதுக்கு நீ என்ன செய்வே? உன்
அம்மா கடைசியா என் கிட்ட என்ன சொல்லிட்டுப் போயிருக்கா தெரியுமா? "அக்கா! நீங்கதான் பாகீரதியைப் பார்த்துக்கணும், அவள் கண் கலங்காம சந்தோஷமா இருக்கணும். தலைவிதி அவளை இந்த கதிக்கு ஆளாக்கிடுத்து. மத்த பெண்களைப் போல அவளுக்கும் ஆசைகள் இருக்காதா? சந்தோஷம் வேணாமா? உங்க அண்ணாவுக்கு ஒண்ணுமே தெரியாது. சதா வேதம், சாஸ்திரம்னு சொல்லிண்டு வைதிகத்துல மூழ்கிக் கிடப்பார். நீங்கதான் அவளை கவனிச்சுக்கணும். அவளை உங்ககிட்ட ஒப்படைச்சுட்டுப் போறேன். நீங்க அவள் பேரில் வெச்சிருக்கும் அன்பும் பாசமும் எனக்குத் தெரியும், அவளுக்கும் உங்க மேல அளவு கடந்த பிரியம். வாழ்ந்தால் அத்தையாட்டம் பணக்காரியா, தோரணையா, வாழணும்னு அடிக்கடி சொல்லிண்-டிருப்பான்னு உங்கம்மா சொல்லிட்டுப் போயிருக்கா" என்றாள் அத்தை.
அழகாகப் பின்னிவிட்ட தாழம்பூக் கூந்தலில் பாகீரதி புது மணப்பெண்போல் ஜொலித்தாள்.
அவளைப் பார்க்கப் பார்க்க அத்தைக்கு மகிழ்ச்சி தாங்க வில்லை. அவளை மேலும் அழகு படுத்திப் பார்க்க விரும்பினாள். பாகீரதியின் நெற்றியில் குங்குமம் இட்டு, தான் அணிந்திருந்த காசு மாலையைக் கழற்றி அவள் கழுத்தில் போட்டு கண் குளிர அழகு பார்த்தபடி "எத்தனை அழகுடி ,நீ மகாலட்சுமியாட்டமா!" என்று தன் புறங்கைகளால் அவள் கன்னத்தில் அழுத்தி திருஷ்டி சொடுக்கிப் போட்டாள்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த கமலா "எனக்கு பயமா இருக்கு, அத்தை ! அப்பா பார்த்துட்டா அப்புறம் நரசிம்மாவதாரம்தான்!" என்றாள்.
"பார்க்கட்டுமே, என்ன நடந்து போச்சு இப்பl என் ஆசைக்கு அலங்காரம் பண்ணிப் பார்த்தேன். இது பெரிய தப்பா? அவன் வரட்டும். நான் பேசிக்கிறேன்..." என்றாள் அத்தை.
அவர்கள் எதிர்பார்த்தபடியே கனபாடிகள் அங்கு வந்து விட்டார். பாகீரதியின் தகாத அலங்காரத்தைக் கண்டு, சூள் கொட்டி, திகைத்து நின்றார். பிறகு "கெளரி ! என்ன இதெல்லாம்!" என்று கோபித்தார்.
"நான்தான் தாழம்பூ வெச்சு தலை பின்னி விட்டேன். எப்படி இருக்கா பாரு! அவள் சின்னக் குழந்தைடா! அவளுக்கு ஆசை இருக்காதா அலங்காரம் பண்ணிக்க !"
"சாஸ்திர விரோதம்னு தெரியாதா உனக்கு ! தப்பு கெளரி, ரொம்பத் தப்பு!"
"அவள் கூந்தலை எடுக்காமல் வைத்திருப்பது உனக்குத் தப்பாத் தெரியலே ! தலைபின்னிப் பூ வைக்கறது மட்டும் தப்பாக்கும். நீ செய்தது நியாயம்னா நான் இப்ப செஞ்சதிலேயும் தப்பில்லே… அப்படி என்ன செய்துட்டேன். நீ செஞ்சதுக்கு மேல ஒரு படி போயிருக்கேன். அவ்வளவுதானே!"
பதில் சொல்ல முடியாமல் திணறிப்போன கனபாடிகள் "ராம, ராமா!" என்று முணுமுணுத்தபடி அப்பால் போய் விட்டார்.
திவச விஷயமாக வாத்தியாரைத் தேடிப் போன கிட்டா திரும்பி வந்தான். "புதன்கிழமை அவருக்கு வேலை இருக்காம். வர முடியாதாம்" என்றான்.
"பதிலுக்கு வேறு வாத்தியாரை ஏற்பாடு பண்ணிட்டுப் போக வேண்டியதுதானே, நீ கேட்டயா?"
"கேட்டேன். அங்கே பக்கத்தூர்க்காராளெல்லாம் கும்பலா இருந்தா. ஏதோ "கசமுசா"ன்னு பேசிக்கறா" என்றான் கிட்டா.
"என்னடா பேசிக்கிறா?"
"உங்களை "பாய்காட்" பண்ணப் போறாளாம்."
"ஒகோ !" என்றார் கனபாடிகள்.
--------
10.
நூல் நூற்றுக் கொண்டிருந்த கனபாடிகளின் மனம் தக்ளியில் லயிக்காமல் சஞ்சலப்பட்டுக் கொண்டிருந்ததால் நூலிழை ‘பட்’ ‘பட்’டென்று அறுபட்டுக் கொண்டிருந்தது.
" ’பாய்காட்’னா என்ன பண்ணப் போறாளாம்?" என்று கேட்டாள் கெளரி அம்மாள்.
"எல்லாருமாச் சேர்ந்து நம் வீட்டு விசேஷங்களுக்கு வராமல் நம்மை ஒதுக்கி வச்சுடுவா, அதுக்குப் பேர்தான் பாய்காட். ஊராருக்கு இங்கிலீஷ்ல தெரிஞ்சவார்த்தை அது ஒண்ணுதான்போல இருக்கு ஹ்ம்…" வருத்தத்தோடு சிரித்தார் கனபாடிகள்.
"அப்படி என்ன மகாபாவம் பண்ணிட்டயாம் நீ?"
“பாகீரதி கூந்தலை எடுக்காம இருக்காளே, அதுக்குத் தான்.. “
"அவாவா வீட்ல இப்படி ஒண்ணு நடந்திருந்தா அப்பத்தான் தெரியும் அந்தக் கஷ்டம். அது சரி; இத்தனை பேரும் பேசாம இருந்துட்டு இப்ப என்ன திடீர்னு பாய்காட்?" என்று கேட்டாள் கெளரி,
"கோபத்துக்குக் காரணம் வேற. நான் சொன்ன தீர்ப்பு, சிலபேருக்குப் பிடிக்கலை. இதுக்கு என் பேரில் குரோதம் பாராட்டிப் பழி வாங்க நினைக்கிறது சரியா…”
"அந்தக் கடுக்கன் ஆசாமிதான் ரொம்பத் துள்றான்." என்றான் கிட்டு.
"யாருடா அந்த கடுக்கன்? அவனுக்கென்ன அவ்வளவு ஆத்ரம்?"
"நேத்து உங்களையே எதிர்த்து கேள்வி கேட்டானே ஒருத்தன், அந்த அயோக்கியன் தான். அவன் நாசமாப் போயிடுவான்."
“கிட்டா யாரையும் சபிக்காதே! நீ வேதம் ஒதுகிறவன். சாபம் கொடுத்தா நிஜமாவே பலிச்சிடும்."
"நன்னாப் பலிக்கட்டும்; உங்களை எதிர்த்துப் பேசலாமா அவன்!"
"கெளரி ! எதுக்கும் நாம் முன்னேற்பாடா இருந்துடறது நல்லது. கடைசி நேரத்துலே நம்மாத்து திவசத்துக்கு யாரும் வராம இருந்தாலும் இருந்துடுவா. அப்புறம் காரியம் கெட்டுப் போயிடும். பித்ருகர்மாக்களை விட்டுட முடியுமா? அதுவும் தாயார் சிராத்தமாச்சே!"
"கவலைப்படாதே, அண்ணா நாளைக்கே ரெண்டு பேரும் சிதம்பரம் போயிட்டாப் போச்சு!" என்றாள் கெளரி.
"திருவிசகல்லூர் ஸ்ரீதர ஐயர்வாள் கதை தெரியுமோ, உனக்கு?" என்று கேட்டார் கனபாடிகள்.
"அதென்ன கதை? சொல்லு!"
"அந்தக் காலத்துல ஸ்ரீதர ஐயர்வாள்னு ஒருத்தர். அவர் கதையும் இப்படித்தான். அந்த ஊர் பிராமணாளெல்லாம் சேர்ந்துண்டு அவரை ‘பாய்காட்’ பண்ண ஆரம்பிச்சா. ‘நீங்க திவசம் பண்றதை ஒரு கை பார்த்துடறோம்’னு ஆவேசமா தடியும் கையுமா அவர் வீட்டைச் சுத்தி நின்னுண்டு திவசத்தன்னைக்கு ஒருத்தரையும் உள்ளே போக விடாமல் தடுத்துட்டா."
"அப்படி என்ன குத்தம் பண்ணிட்டார் அவர்?"
"யாரோ ஒரு ஹரிஜன், ஐயர்வாள் ஆற்று வெள்ளத்தைக் கடந்து போறதுக்கு ஒத்தாசை பண்ணியிருக்கான். அதுக்கு நன்றிக்கடனா அவர் அவனுக்குத் தன் வீட்டுத் தோட்டத்துல வைத்து சாப்பாடு போட்டிருக்கார், அது பெரிய பாவமாம்! அதுக்காக திவசத்தை நடத்த முடியாமத் தடுத்துட்டா. மணி பத்தாச்சு, பன்னிரண்டாச்சு, ஒண்ணாச்சு- சொல்லி வெச்சிருந்த பிராமணாள் யாருமே வரலை. ஐயர்வாள் கலங்கிக் கண்ணீர் வடிச்சு, மனம் உருகி தெய்வத்தைப் பிரார்த்தனை பண்ணிண்டார். அதனால ஆண்டவனே பிராமணர்கள் ரூபமா அவர் வீட்டுக்குள் பிரத்யட்சமாகி திவசத்தை நடத்தி வச்சட்டுப் போயிட்டார். வீட்டைச் சுத்தி காவல் காத்துண்டிருந்தவாளுக்கு ஒரே ஆச்சரியம்! அவர்கள் மட்டும் எப்படி உள்ளே போனாள்னு ஒருத்தரை ஒருத்தர் பார்த்து விழிச்சுண்டு நின்னா! பகவானை யாரால தடுக்க முடியும்? இவர்கள் கண்ணுக்கு அவன் தெரிவானா?
உண்மையா நடந்தது இது.
இன்னைக்கும் ஒவ்வொரு கார்த்தி மாசமும் திருவிசை நல்லூார்ல கார்த்திகை அமாவாசை தொடங்கி பத்து நாள் தடபுடலா உற்சவம் நடக்கிறது. பாம்பு பஞ்சாங்கத்தை வேனுமானா எடுத்துப் பார். அதில் கார்த்திகை அமாவாசை திருவிசைகல்லூர் ஸ்ரீதர ஐயர்வாள் உற்சவம்னு போட்டிருக்கும்" என்றார்.
"இந்தக் கலியுகத்துலகூட இப்படியெல்லாம் நடக்கிறதா என்ன? நம்ப முடியலையே!" என்றாள் கெளரி.
" நடந்திருக்கே சமீபத்துலதான். இருநூறு வருஷம்கூட ஆகல்லே."
"அந்த மாதிரியெல்லாம் இப்ப நடக்காது. கலி முத்திப் போச்சு. பேசாம நாளைக்கே இரண்டு பேரும் சிதம்பரத்துக்குக் கிளம்பிப் போய் காதும் காதும் வெச்சாப்பல திவசத்தை முடிச்சுடலாம், வா" என்றாள் கெளரி.
"ஒருவேளை இவா சிதம்பரத்துக்கும் வந்து கலகம் பண்ணுவாளோ, என்னவோ..?"
"இவா ஜம்பமெல்லாம் அங்கே சாயாது. எங்க பேச்சை யாரும் தட்டமாட்டா" என்றாள் கெளரி.
"எப்படிச் சொல்றே?."
"ஆயிரம் ஐந்நூறுன்னு ஒவ்வொருத்தருக்கும் கடன் கொடுத்து வைச்சிருக்காரே, இவர். இந்தக் காலத்துல யார் கடன் கொடுப்பா? எல்லாருமே எங்களுக்கு தாட்சண்யப்பட்டவா தான். எங்க பேச்சை யாரும் மீற மாட்டா."
"இவாளும் அந்த அளவுக்குப் போவான்னு தோணல்லே. ஏதோ இப்ப ஒரு வேகம்."
கமலா குறுக்கிட்டு "எனக்கு ஒண்ணு தோண்றது அத்தை எல்லாரும் காஞ்சிபுரத்துக்கே போயிட்டா என்ன?" என்றாள்.
"அதெல்லாம் சரியா வராது கமலா, உனக்கு அந்த வீட்ல உரிமை இருக்கலாம். எனக்கு அது சம்பந்தி வீடுதானே? அவர்கள் வீட்டிலே போய் திவசம் பண்றேன்னு சொல்றது நியாயமில்லே. சுப காரியமாயிருந்தால் பரவாயில்லை. இது அப்படி இல்லையே !" என்றார் கனபாடிகள்.
"அது சரி அண்ணா ! இத்தனை நாளா நானும் கேட்ட தில்லை. நீயும் சொன்னதில்லை. எவ்வளவோ சாஸ்திரம் படிச்சிருக்கே, யாகம் பண்ணிருக்கே, சிரோமணிப் பட்டம் வாங்கிருக்கே. வேதவித்தாயிருக்கே. இவ்வளவும் இருந்தும் நீயே பாகீரதியை தலைமயிரோட இருக்க எப்படி சம்மதிச்சேங்கறதுதான் ஆச்சரியமாயிருக்கு" என்றாள் கெளரி.
"தசரதர் கைகேசிக்கு வரம் கொடுத்த மாதிரி நானும் பாகீரதியின் அம்மாவுக்கு ஒரு சந்தர்ப்பத்தில் சத்தியம் பண்ணிக் கொடுத்துட்டேன். அந்த சத்தியம்தான் என்னை இப்படி சிரமப்படுத்தறது.
"பாகீரதியைப் பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்தவளாச்சே அவள்.
“நான் கண் மூடறதுக்கு முன்னால பாகீரதிக்கு ஒரு நல்ல இடமாப் பார்த்து கலியாணத்தைப் பண்ணி முடிச்சுடுங்க. அப்பத்தான் நிம்மதியாப் போவேன்"னு என்னிடம் சொல்லிக் கண்ணீர் விட்டாள்.
"இப்ப திடீர்னு அவ்வளவு பணத்துக்கு நான் எங்கே போவேன்?"னு அவளிடம் கேட்டேன்.
"என் சீதன சொத்தையெல்லாம் வித்துடுங்க. பாகீரதி கலியாணம்தான் முக்கியம்" என்றாள். அவசரம் அவசரமா ஒரு பையனைத் தேடிப் பிடிச்சு பாகீரதி கல்யாணத்தை முடிச்சேன். பாவம், பாகீரதி கொடுத்து வைக்கலே. ஒரு வாரத்துக்கெல்லாம் அவள் மாங்கல்யத்தை இழந்துட்டா. அடுத்த வருஷமே பாகீரதியின் அம்மா மாடு முட்டிக் கீழே விழுந்தவள் தான். அப்புறம் அவளும் எழுந்திருக்கலே, அந்த சமயத்துலதான் ஒரு நாள் "பாகீரதி சின்ன வயசுப் பெண். அவளை அலங்கோலப் படுத்திடாதீங்க!" என்று என்னைப் பார்த்து கெஞ்சி, சத்தியம் பண்ணிக் கொடுக்கச் சொன்னாள். செய்து கொடுத்துட்டேன் !"
இந்தச் சமயம் அங்கே வந்த கமலா "அத்தை உங்களை பாகீரதி உள்ளே வரச் சொல்றா?" என்றாள்.
"எதுக்கு?..."
"உங்களுக்குப் பிடிக்கும்னு ரொம்ப ஆசையா தவலை அடை பண்ணி யிருக்கா, உங்க ஆசை மருமாள்!" என்றாள் கமலா.
"நெய் வாசனை மூக்கைத் துளைக்கிறதே!" என்று சொல்லிக்கொண்டே அத்தை சமையலறையை நோக்கிப் போனாள்.
அத்தை அந்தப் பக்கம் போனதும் "அப்பா ! மூர்த்தி கடுதாசி எழுதியிருக்கான்னு சொன்னயே, அதைக் கொஞ்சம் கொடுங்க பார்க்கலாம்" என்றாள் கமலா.
"நீ இன்னும் பார்க்கலையா அதை? இங்கதான் ராமாயண புஸ்தகத்துல வச்சிருந்தேன், கொஞ்சம் இரு" என்று கூறி அந்தப் புத்தகத்தை எடுத்துத் தேடினார். கடிதத்தைக் காணவில்லை, இதில்தானே வச்சிருந்தேன்!" என்றார்.
"இந்தா, இதோ இருக்கு" என்று தன் கையிலிருந்த கடிதத்தைக் கனபாடிகளிடம் நீட்டினாள் கமலா.
"இது எப்படி உன் கைக்கு வந்தது !" என்று ஆச்சரியப் பட்டார் கனபாடிகள்.
"கூடத்துல படத்துக்குப் பின்னால் இருந்தது?"
"நான் அங்கே வைக்கலையே?"
"சரி; நீங்களும் வைக்கலே, நானும் வைக்கலே. அப்புறம்..?"
"பாகீரதி வைத்திருப்பாங்கறயா?"
"ஒரு வேளை மூர்த்தி கடுதாசிதானே, படிச்சுப் பார்க்கலாம்னு எடுத்திருக்கலாம்" என்றாள் கமலா.
"மூர்த்தி கடுதாசில இவளுக்கு என்ன அத்தனை அக்கறை என்னைக் கேட்காமே, எனக்குத் தெரியாம எதுக்கு எடுக்கணும்? அப்புறம் படத்தின் பின்னால எதுக்குக் கொண்டுபோய் மறைக்கணும்?" என்று எண்ணி மனதுக்குள்ளேயே குழம்பினார் கனபாடிகள்.
"எதுக்கு முர்த்தி உங்ககிட்ட சொல்லிக்காமப் போறான்? போனவன் யாரும் என்னைத் தேடிண்டு வர வேணாம்னு லெட்டர் எழுதறான்?" என்றாள் கமலா.
"என்னைக் குழப்பாதே கமலா நேத்துலேந்து எல்லாமாச் சேர்ந்து நானே ரொம்பக் குழம்பிப் போயிருக்கேன். எனக்கு மண்டையே வெடிச்சுடும்போல இருக்கு. பூர்வ ஜன்மத்துலே என்ன பாவம் பண்ணினேனோ, இப்படியெல்லாம் அனுபவிக்கிறேன். முதல்ல நான் நாளைக்கே கெளரியோடு சிதம்பரத்துக்குப் போய் திவசத்தை முடிச்சுண்டு வந்துடறேன். அதுவரைக்கும் நீதான் பாகீரதியைப் பார்த்துக்கணும்" என்றார் கனபாடிகள்.
திடீரென்று வாசலில் பிராமணர்கள் ஏழெட்டு பேர் கூட்டமாக வந்து நிற்பது தெரிந்தது.
"கிட்டா ! வாசல்ல யாரோ வந்திருக்கா, போய்ப் பாரு" என்றார் கனபாடிகள்.
“அவாதான் ! அந்த ‘பாய்காட்’ கூட்டம்தான் வந்திருக்கு" என்று சொல்லிக்கொண்டே வாசலுக்கு விரைந்தான் அவன். பின்னோடு கனபாடிகளும் போனார். அந்தக் கடுக்கன் ஆசாமியை இரண்டு பேர் திண்ணையில் கொண்டு வந்து கிடத்தினார்கள். அவனுக்கு மூச்சு மட்டும் வந்து கொண்டிருந்தது.
”கனபாடிகளே, இவனைப் பாம்பு கடிச்சுட்டுது. நீங்கதான் மந்திரம் போட்டுக் காப்பாத்தணும்" என்று கூக்குரலிட்டது அந்தக் கும்பல்.
"பார்த்தயா ! சாபம் கொடுத்தயே, பலிச்சுட்டுது பார்" என்பதுபோல் கிட்டாவைப் பார்த்தார்.
"கடிச்சது என்ன பாம்புன்னு தெரியுமா?" என்று அவர்களிடம் கேட்டார்.
“நல்ல பாம்புதான். அதை அப்பவே அடிச்சுப் போட்டாச்சு!" என்றார் கூட்டத்தில் ஒருவர்.
"த்சு, த்சு பாம்பைக் கொல்லவே கூடாது. மகாபாவம்!" என்று சொல்லிக்கொண்டே தம் அங்கவஸ்திரத்தைச் சட்டென்று எடுத்து அதில் ஒரு பகுதியை நீளமாய்க் கிழித்து மந்திரம் ஜெபித்து ஒன்பது முடிச்சுகள் போட்டார், என்ன ஆச்சரியம் அடுத்தகணமே கடுக்கன் கண் விழித்துப் பார்த்தார் !
"விஷம் இறங்கிடுத்து; இனிமே பயமில்லை; இவரை அழைச்சுண்டு போகலாம்" என்றார் கனபாடிகள்.
கண்களில் கண்ணீர் பெருக அந்தக் கடுக்கன் ஆசாமி கனபாடிகளைக் கையெடுத்துக் கும்பிட்டபடியே "என்னை மன்னிச்சுடுங்க" என்றார்.
--------
11.
கௌரி அத்தையும் கனபாடிகளும் காலை பஸ்ஸுக்கே சிதம்பரம் புறப்பட்டுப் போய்விட்டார்கள்,
“அத்தை ஒரே ஒருநாள்தான் தங்கி இருந்தா. எவ்வளவு கலகலப்பா இருந்தா. அவள் போனதும் வீடே வெறிச்சோடிப் போச்சு!" என்றாள் கமலா.
அத்தைக்குத்தான் எத்தனை ஆசை!
தலை பின்னி, பொட்டிட்டு, பூவைத்து காசுமாலை போட்டு அகமகிழ்ந்த அத்தை ‘எத்தனை அழகுடி நீ ! மகாலட்சுமியாட்டம் இருக்கே !’ என்று பிரியமாகச் சொன்ன வார்த்தைகள், உள்ளத்தில் உறைந்துவிட்ட வார்த்தைகள்,--பாகீரதியின் கண்களில் கண்ணீராய் வெளிப்பட்டன.
வாசலில் கிலுகிலுப்பைக்காரன் ரோதனையாக ஒலி எழுப்பி, கூச்சலிட்டுக் கொண்டிருந்தான். அந்த ஓசையைக் கேட்ட அம்புலு தெருப்பக்கம் கையைக் காட்டிக் காட்டி அம்மாவைப் பார்த்து அடம்பிடித்து அழுதது.
"இந்த கிலுகிலுப்பைக்காரனுக்கு இந்த வீட்ல குழந்தை இருக்குன்னு எப்படித்தான் தெரிஞ்சுதோ? முக்கிலே வேர்க்கும் போலிருக்கு !" என்று முணுமுணுத்துக் கொண்டே பாத்திரத்தில் கொஞ்சம் அரிசி அள்ளிப் போட்டுக்கொண்டு பண்டமாற்று முறையில் கிலுகிலுப்பை வாங்கப் போனாள்.
கிட்டா வழக்கமில்லாத வழக்கமாய் காலையிலிருந்தே ரொம்ப உற்சாகமாய்க் காணப்பட்டான். கனபாடிகளிடம் பழகியிருந்த பர்த்ருஹரி சுலோகங்களை தன்யாசி ராகத்தில் சேதப்படுத்திக் கொண்டிருந்தான்!
பாகீரதி சமையல் வேலையை மறந்து, உக்கிராண அறையில்போய் உட்கார்ந்து, மூர்த்தியின் தகரப் பெட்டியைத் திறந்து வைத்து ஆராய்ந்து கொண்டிருந்தாள்.
பழைய பட்டு வேட்டி, திருக்குறள் புத்தகம், பகவத்பாதாள் சரிதம், காசி மடம் விபூதிப்பை, தக்ளி, முள் ஒடிந்த பேனா, செல்லாத அரையணாக் காசு-இவ்வளவும் அதில் கிடந்தன. திருக்குறள் புத்தகத்தின் முதல் பக்கத்தில் ‘அப்பா வாங்கிக் கொடுத்த தமிழ் வேதம்’ என்று எழுதி அதன் கீழ் மூர்த்தி என்று கையெழுத்திடப்பட்டிருந்தது.
பட்டு வேட்டியையும், திருக்குறளையும் மட்டும் எடுத்து வைத்துக் கொண்ட பாகீரதி பெட்டியைப் பழையபடி மூடி அது இருந்த இடத்திலேயே கொண்டு வைத்துவிட்டாள்.
அந்தப் பட்டு வேட்டியில் அவளுக்கு மூர்த்தி வாசனை தெரிந்தது.
திருக்குறள் புத்தகத்தில் ‘எழுமை யெழுபிறப்பு’ என்று தொடங்கும் வரிகளைக் கோடிட்டு வைத்திருந்தான். மூர்த்தியைப் பாடசாலையில் சேர்க்க வந்தபோது அவன் அப்பா "நீ வேதம் ஒதப் போகிறாய். சம்ஸ்கிருதம் படிக்கப் போகிறாய். ஆனாலும் தமிழை மறந்து விடாதே. தமிழ் மறந்து போகாமலிருக்க தினமும் ஒரு குறளாவது படித்துக் கொண்டிரு. இந்தா, இது தமிழ் வேதம்” என்று சொல்லிக் கொடுத்துவிட்டுப்போன புத்தகம் அது.
பாகீரதி பழுப்புத்தாள் ஒன்று எடுத்து வந்து அதற்கு அட்டை போட்டு, உள் பக்கமாக மூலை மடித்து ஒட்டி முடித்தாள்.
கிட்டா இன்னமும் குஷியாகப் பாடிக்கொண்டிருந்தான்.
"என்னடா, என்றைக்குமில்லாத குஷி !" என்று கேட்டாள் பாகீரதி.
"இன்னைக்கு தஞ்சாவூர் போறேன். அங்கே ஒரு கலியாணம். நாலு நாளாகும் திரும்பி வர. மெதுவ்வா கனபாடிகளிடம் லீவு வாங்கிட்டேன். முதல்ல கொஞ்சம் தயங்கினார். அப்புறம் ‘சரி, பரவாயில்லை, போயிட்டுவா’ன்னுட்டார்."
"யாருக்குடா கலியாணம்?"
"எங்க மாமா பிள்ளைக்கு."
"அப்படின்னா நானும் கமலாவும் தனியாத்தான் இருக்கணுமா? யாரும் ஆம்பிள்ளைத் துணை கிடையாதா?"
“பாடசாலைப் பிள்ளைகளெல்லாம் ஆண் பிள்ளைகளாத் தோணல்லியோ உனக்கு?" என்றான் கிட்டா.
”எல்லாம் ஜாண்ஜாண் உண்டு…." என்றாள் பாகீரதி.
"ஜாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளைதானே?" என்றான் கிட்டா.
"கொஞ்சம் இப்படி கொட்டில் பக்கம் வறயா?" என்றாள் பாகீரதி.
”என்ன சமாசாரம்?...”
"கனபாடிகள் உன்னைக் கட்டவிழ்த்து விட்டுட்டார். தும்பிலே கட்டிப் போட்டிருக்கும் சேங்கன்னை மட்டும் கட்டிப் போடலாமா, அதையும் அவிழ்த்துவிட்டுரு. பாவம் காலாறச் சுத்திட்டு வரட்டும்" என்றாள்.
கிட்டா அதைத் தறியிலிருந்து அவிழ்த்து விட்டதும் அது நாலுகால் பாய்ச்சலில் ஒரே ஓட்டமாய் ஓடிவிட்டது
"கிட்டா, எனக்கு ஒரு ஒத்தாசை பண்ணுவியா?" என்று பூர்வ பீடிகையோடு ஆரம்பித்தாள் பாகீரதி.
"என்ன சொல்லு!"
"தஞ்சாவூர் போனா அங்க மூர்த்தியைப் பார்ப்பியோல்லியோ? "
”தெரியலையே. அவன் எங்க இருக்கானோ, என்னவோ, யார் கண்டா?"
"நன்னாத் தேடிப் பாருடா. நிச்சயம் தஞ்சாவூர்லதான் இருப்பான்."
”கிடைச்சா என்ன சொல்லணும்?"
அவனை எப்படியாவது கையோடு அழைச்சுண்டு வந்துடு இங்கே."
"அவன் வரவே மாட்டான். ஏதோ ஒரு வைராக்கியமா இருக்கான். என்னன்னும் சொல்லமாட்டேங்கறான்?"
"சாப்பாட்டுக்கு என்ன செய்றானோ, என்ன கஷ்டப் படறானோ? கையில இருந்த காசெல்லாம்கூடத் தீர்ந்து போயிருக்குமே, பாவம் !" என்றாள்.
"கூப்பிட்டுப் பாக்கறேன். வந்தா அழைச்சுண்டு வரேன். உனக்கென்ன அத்தனை அக்கறை அவங்கிட்ட? சொல்லிக்காமப் போனவனை வெத்திலை பாக்கு வெச்சு கூப்பிடணமாக்கும்! கனபாடிகள் மனசைக் கஷ்டப்படுத்திட்டுப் போனவனாச்சே அவன்?"
"அவன் கிட்ட எத்தனை பாசம் வெச்சிருக்கார் அவர் ! எப்படிப் புலம்பினார்? ‘மூர்த்தி! நீ எங்கடா போயிட்டே?’ன்னு ஒருநா ராத்திரி, நான் கால் மிதிச்சிண்டிருக்கப்போ, வாய் விட்டுக் கதறினாரே, அது எனக்கில்லையா தெரியும்?"
"மூர்த்தி இல்லாம இந்தப் பாடசாலையே அழுது வடியறது கிட்டா! களையாவே இல்லை. நீ தேடிப்பாரு ; எப்படியும் கிடைச்சுடுவான். அவனைப் பார்த்து இந்தத் திருக்குறள் புத்தகத்தையும் பட்டு வேட்டியையும் கொடுத்துடு” என்றாள்.
"இந்த ரெண்டும் ஏது?”
"அவன் பெட்டியில இருந்தது."
"எனக்குக்கூட திருக்குறள் படிக்கனும்போல ஆசையாயிருக்கு" என்றான் கிட்டா.
"இந்தப் புஸ்தகத்தை நீ எடுத்துண்டுராதே. இது அவன் புஸ்தகம். ஜாக்கிரதையாக் கொண்டு போய்ச் சேர்த்துடு, யாருக்கும் தெரிய வேணாம்…"
"திருக்குறள் எல்லாருக்கும் பொதுதானே! அதை ஏன் யாருக்கும் தெரிய வேணாங்கதே? என்றான் கிட்டா.
பாகீரதி ‘ஐயோ’ என்று தலையில் அடித்துக்கொண்டாள்.
இதற்குள் அந்தப் பக்கம் வந்த கமலா, மறைவில் சுவர் ஒரமாகச் சாய்ந்து என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பதை ஒட்டுக் கேட்டாள். பிறகு அவர்கள் எதிரில் போய் நின்று என்ன, எனக்குத் தெரியாம இங்க என்ன பேச்சு?" என்றாள்.
"ஒண்ணும் பேசலையே ! கிட்டா தஞ்சாவூர் போறானாம். அப்பா உத்தரவு கொடுத்துட்டாராம். குதிக்கிறான் !"
"அதுக்கு நீ என்ன சொன்னே?"
"திரும்பி வறப்போ குடமிளகாயும் வறுத்த முந்திரியும் வாங்கிண்டுவான்னேன்…"
"பொய் ! வேற ஏதோ சொல்லிண்டிருந்தயே!"
”வேற ஒண்ணும் சொல்லலையே!"
”மூர்த்தி பேர் அடிபட்டுதே! எப்படியும் தேடிக் கண்டு பிடின்னு சொல்லிண்டிருந்தது காதில் விழுந்ததே!"
"இந்தப் புதுக் கன்னுக்குட்டி மூர்த்தி எங்கேயோ ஒடிட்டுது, அதைத்தான் தேடிக் கண்டு பிடிடான்னு சொல்லிண்டிருந்தேன்!" என்று சமாளித்தாள் பாகீரதி.
“கையில என்னடா அது?" என்று கிட்டாவைப் பார்த்துக் கேட்டாள் கமலா.
"பட்டு வேட்டி. திருக்குறள் புத்தகம்."
"ஏது?"
“மூர்த்தி வெச்சுட்டுப் போயிட்டான். தஞ்சாவூர்ல மூர்த்தியைப் பார்த்தா அவன் கிட்ட கொடுத்தடுன்னு பாகீரதி தான் எடுத்துக் கொடுத்தாள்" என்றான் கிட்டா.
ஒரு அர்த்த புஷ்டியோடு "அப்படியா!" எனும் பாவனையில் தலையை மேலும் கீழும் அசைத்தாள் கமலா.
----------
12.
பாடசாலையை மறந்து, வேதத்தைத் துறந்து, தஞ்சைக்குப் புறப்பட்டு வந்த மூர்த்தி இங்கே வந்தபின் எந்த முடிவுக்கும் வர முடியாமல் சஞ்சலப்பட்டான்.
மஞ்சு அழகாக இருந்தாள். இவனிடம் அளவு கடந்த பற்றும் பாசமும் காட்டினாள். ஆயினும் மூர்த்தி மட்டும் அவளிடம் ஒட்டுறவு ஏதுமின்றி, தாமரை இலைத் தண்ணீர் போல் பழகிக் கொண்டிருந்தான்.
"மஞ்சு, நீ என்னை வெள்ளத்திலேருக்து மீட்கலேன்னா நான் அன்னைக்கே செத்துப் போயிருப்பேன். அதுக்காக உனக்கு நன்றி சொல்லிட்டுப் போகலாம்னுதான் வந்தேன். நீ என்மீது வெச்சிருக்கும் உண்மையான அன்பைப் பார்த்தப்புறம் உன்னோடயே தங்கிடலாம்னு தோணித்து. தங்கிட்டேன். ஆனாலும் என்னோட ஆசாரம், அனுஷ்டானம், வேதம் இவ்ளவும் உனக்கும் எனக்கும் நடுவே குறுக்குச் சுவர் போட்டிருக்கு. உன்னைத் தொடவோ, நீ சமைத்துப் போடுவதைச் சாப்பிடவோ, மனசு ஒப்பலை. நீயோ என்னைப் பெரிசா நம்பிண்டிருக்கே. நான்தான் ஒண்ணும் புரியாம குழம்பிண்டிருக்கேன்" என்றான் மூர்த்தி.
"உன்னை நம்பிப் பெரிய மனக்கோட்டையெல்லாம் கட்டிட்டேன். நீ குடுமியை எடுக்காம நாளைக்கடத்தறதிலிருந்தே சந்தேகப் பட்டேன்.“
வேதத்தைப் பாதில விட்டுட்டு வந்த மாதிரி என்னையும் விட்டுட்டுப் போயிடுவியான்னு?" நான் அன்னைக்கே கேட்டேன். நான் சந்தேகப்பட்ட மாதிரிதான் நடக்குது."
"சரி, இப்ப எனக்கு ரொம்பப் பசியாயிருக்கு, முதல்ல ஆனந்தா லாட்ஜ் வரைக்கும் போயிட்டு வந்துடறேன். அப்புறம் விவரமாப் பேசிக்கலாம்" என்றான் மூர்த்தி.
"நான் இன்னும் கொஞ்ச நேரத்துல வெளியே கிளம்பிடுவேன். அப்பாவை அழைச்சுட்டு வித்தை செய்யப் போறேன்."
”எங்க?"
"சிவகங்கா கார்டன் பக்கத்துல இன்னைக்குப் புது மாதிரி வித்தை செய்யப் போறேன். இதுவரைக்கும் நீ பார்க்காத ஐட்டம்!"
"நான் அங்கயே வந்து பார்த்துடறேன்!" என்று சொல்லிப் புறப்பட்டான் மூர்த்தி.
“காசு வெச்சிருக்கயா?"
"என் அப்பா கொடுத்துட்டுப்போன காசெல்லாம் தீர்ந்து போச்சு. ஒரே ஒரு அரையணாத்தான் மிச்சம்!"
“அஞ்சு ரூபா தறேன், எடுத்துட்டுப்போ..!"
"வேணாம்; உனக்கு ஏற்கனவே நிறையக் கடன்பட்டிருக்கேன். நன்றிக்கடன் ! எப்படித்தான் தீர்க்கப் போறனோ?"
"அரையணால வயிறு ரொம்பிடுமா? ரெண்டே ரெண்டு இட்லிதானே கிடைக்கும். அது எப்படிப் பத்தும்? இந்தா காசு!"
“வேணாம். கழுத்திலே எங்கம்மாவின் சங்கிலி இருக்கு. அதை வித்துடப் போறேன்…"
"அந்தப் பணமும் தீர்த்து போச்சுன்னா அப்புறம் என்ன செய்வே?"
“அது ஆண்டவன் கவலை!"
மூர்த்தி கழுத்துச் சங்கிலியைத் தொட்டுப் பார்த்தான். அம்மாவின் நினைவு தோன்ற, கண் கலங்கியபடி ஐயன்கடைத் தெரு நோக்கிப் புறப்பட்டான். மெயின் ரோடைப் பிடிக்க குறுக்குச் சந்தில் புகுந்து நடந்தபோது எதிரில் காசி யாத்திரை போகும் கலியாணக் கும்பல் ஒன்று வந்து கொண்டிருந்தது. மாப்பிள்ளையைச் சூழ்ந்து ஒரு பெரிய கூட்டம். நாதசுரக்காரர் வாத்தியத்தை தாராளமாய் வீசி வாசிக்க முடியாத அளவுக்குக் குறுகலான சந்து.
பரதேசிக்கோல மாப்பிள்ளைக்கு குடை பிடித்துக் கொண்டு நின்ற கிட்டா மீது மூர்த்தியின் பார்வை விழுந்தது.
"அடl இவன் எப்படி வந்தான் இங்கே?" என்ற ஆச்சரியத்துடன் அவனை அணுகி "கிட்டா !" என்று கூப்பிட்டான் மூர்த்தி.
மூர்த்தியைக் கண்டதும் கிட்டாவுக்குச் சந்தோஷம் தாங்க வில்லை. ‘அடடே’ என்று ஓடி வந்து மூர்த்தியைக் கட்டிக் கொண்டான்!
"மூர்த்தி! நீ இன்னும் இந்த ஊர்லதான் இருக்கயா? மத்தியானத்துக்கு மேல உன்னைத் தேடிப் பார்க்கணும்னு நினைச்சுண்டிருந்தேன். தெய்வமாப் பார்த்து உன்னை இங்கே கொண்டு வந்து விட்டிருக்கு!" என்றான் கிட்டா.
"மாப்பிள்ளை யாருடா? உனக்கு என்ன உறவு?"
"எனக்கு மாமா பிள்ளை. டாக்டருக்குப் படிக்கிறான். அதோ உயரமா வராறே, அவர்தான் எங்க மாமா. வெள்ளிக் கடை கிட்டப்பான்னா தஞ்சாவூர்ல தெரியாதவா இருக்கமாட்டா. ரொம்பத் தமாஷாப் பேசுவார். வேதம் படிக்கிறவாளைக் கண்டா ரொம்பப் பிடிக்கும். மத்தியானமா உனக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறேன். நீ இப்ப என் கூட வா. கலியாண வீட்லயே சாப்பிடலாம். மற்றதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம்" என்றான் கிட்டா.
"உனக்குத்தான் மாமா உறவு. எனக்கும் இந்தக் கலியாணத்துக்கும் என்ன சம்பந்தம்? எனக்கு சங்கோஜமா இருக்குடா. நான் வரலே, என்னை விட்டுரு" என்றான் மூர்த்தி.
"அசடாட்டம் பேசாதே, உன்னை நான் விடப் போறதில்லே. நாலு நாளைக்கும் நீ என்னோடதான் இருக்கப்போறே, ஆமாம்.“
"கனபாடிகள் செளக்கியமாயிருக்காரா? என் பேர்ல கோபமா இருக்காரா?”
"தினமும் உன்னை நினைச்சு நினைச்சு புலம்பிண்டிருக்கார். சதா உன் ஞாபகம்தான். காவேரிப்பாக்கம் பசு கன்னு போட்டிருக்கு தெரியுமோ? சேங்கன்னு! அதுக்கு உன் பேரைத்தான் வெச்சிருக்கோம்."
"என் பேரா? எதுக்கு என் பேரை வெச்சீங்க?"
"பாகீரதிதான் உன் பேரைவைக்கணும்னு ஆசைப்பட்டா. உன் பெட்டியைக் குடைஞ்சு திருக்குறள் புஸ்தகமும் பட்டு வேட்டியும் கொடுத்தனுப்பியிருக்கா. அத்தோட உனக்கு ஒரு தபால் கொண்டு வந்திருக்கேன். கவர்!"
“கவரா? யார் எழுதியிருக்கா?"
"தெரியலே. ரிஷிகேசத்துலேந்து வந்திருக்கு உங்கப்பாவா இருக்குமோ?"
அவசரம் அவசரமாய் இருவரும் கலியாண வீட்டுக்குப் போனார்கள். போனதும் கிட்டா எடுத்துக் கொடுத்த கடிதத்தை வாங்கிப் பிரித்தான் மூர்த்தி. அப்பாதான் எழுதியிருந்தார்:
சிரஞ்சீவி மூர்த்திக்கு ஆசீர்வாதம்.
க்ஷேமம்.க்ஷேமத்துக்கு எழுதவும். கனபாடிகளை நான் விசாரிச்சதாச் சொல்லவும். கனபாடிகள் எனக்கு ஆப்த நண்பர். உன் எதிர்காலத்தை அவரிடம் ஒப்படைத்துவிட்டு வந்திருக்கேன். அவரே உனக்கு ஏற்ற பெண்ணாகத் தேர்ந்தெடுத்துக் கலியாணம் செய்து வைப்பார். அவர் சொல்படி நடந்துகொள்.
அம்மா சங்கிலியை ஒருபோதும் கழுத்தைவிட்டு எடுக்காதே. அந்தச் சங்கிலி ரூபமாய் உன் தாயார் உன்னை ஆசீர்வதிச்சிண்டிருப்பாள்,
பிராம்மணனாகப் பிறந்தவன் வேதாத்தியயனம் செய்வது முக்கியம், வேதம் தெய்வத்தின் சுவாசம். அதை ஒரு நாளும் மறக்காதே! நேற்று இங்கே ஆசிரமத்தில் வேதத்தின் பெருமைகள் பற்றி சுவாமிஜி ஒருவர் ரொம்ப அழகாகப் பேசினார்.
‘வேதம் ஒதுகிறவன் தினமும் அதை அப்யாசிக்க வேண்டும். எப்படி ஒரு மருந்தை உபயோகிக்காமல் கொஞ்ச நாள் வைத்திருந்தாலும் அதன் வீரிய சக்தி குறைந்து விடுகிறதோ, அப்படியே வேதத்தை அப்யாசம் பண்ணாமலிருந்தாலும் அந்த மந்திரங்களின் சக்தி குறைந்துவிடும்’ என்று சொன்னார்.
இப்படிக்கு,
பரசுதீட்சிதர்.
கண்களில் கண்ணீர் தளும்ப கடிதத்தை மடித்துப் பைக்குள் வைத்துக்கொண்டான். அடுத்தபடியாக திருக்குறள் புத்தகத்தை எடுத்துப் புரட்டினான்.
பாகீரதி அதற்கு அழகாக அட்டை போட்டு வைத்திருந்ததைப் பார்த்தபோது ‘எதுக்கு இந்த அட்டை? அவசிய மில்லையே!’
ஒட்டப்பட்டிருந்த அட்டையை மெதுவாகப் பிரித்தான் அதிலிருந்து பத்து ரூபாய் நோட்டுகள் மூன்று கீழே உதிர்ந்தன. நல்லவேளை கிட்டா பார்க்கவில்லை.
"மூர்த்தி கொஞ்சம் இங்கயே இருக்கயா? இதோ உள்ளே போய் கொஞ்சம் சர்பத் கொண்டு வந்துடறேன்" என்று சொல்லிவிட்டுப் போனவன் இன்னும் வரவில்லை.
அட்டையை முழுதாகப் பிரித்தபோது உள் பக்கத்தில் வாடிப்போன மல்லிகைப் பூ ஒன்று ஒட்டிக் கொண்டிருந்தது.
“மூர்த்தி உனக்காக நான் இந்தப் பூவைப்போல் வாடிக் கொண்டிருக்கிறேன்.” என்று எழுதி கையெழுத்திட்டிருந்தாள் பாகீரதி.
----------
13.
உள்ளே போன கிட்டா சர்பத் கொண்டு வந்தான்.
"இந்தா, ஐஸ் போட்டிருக்கேன், குடி! இந்த வெய்யிலுக்கு ‘ஜில்’லுனு இருக்கும்" என்றான்.
பரதேசிக்கோலம் நெருங்கி வந்து கொண்டிருப்பதை நாயன ஓசை அறிவித்தது.
"காசி யாத்திரை கிட்டத்துல வந்துடுத்து. மாப்பிள்ளை வாசலுக்கு வரப் போறார். ஆர்த்தி, ஆர்த்தி !" என்று உரத்த குரலில் அவசரப்பட்டார் சாஸ்திரிகள்.
"மூர்த்தி ! ஆபீஸ் போறவாளுக்காக இப்பவே ஒரு பந்தி போடப்போறா. நாம அந்தப் பந்திலேயே உட்கார்ந்துடுவோம்," என்றான் கிட்டா.
"முகூர்த்தம் முடிஞ்சப்புறம் சாப்பிடலாமே!" என்றான் மூர்த்தி.
"மணி பதினொண்ணாயிடும். அது வரைக்கும் பசி தாங்காது. அத்தோட முதல் பந்தி சாப்பாடுதான் ஜோரா யிருக்கும். எப்பவும் பந்திக்கு முந்திக்கணும்; தெரிஞ்சுக்கோ" என்றான் கிட்டா.
இருவரும் பந்தியில் போய் ஒரு மூலையாக உட்கார்ந்து கொண்டார்கள்.
"உங்க மாமாவிடம் என்னை அறிமுகம் பண்ணி வைக்கிறதாச் சொன்னயே!" என்றான் மூர்த்தி.
"ஆகட்டும், முகூர்த்தம் முடிஞ்சதும் கொஞ்சம் ஓய்வா இருப்பார். சமயம் பார்த்துப் பண்ணி வைக்கறேன்" என்று பச்சடியை விரலால் ருசி பார்த்தான் கிட்டா.
"பரிசேஷணம் பண்ணாம சாப்டறது தப்பு இல்லையா?”
"இது ஆபீஸ்கரராள் பந்தி ! இங்க வைதிகம் பார்க்க வேணாம்" என்றான் கிட்டா,
"எனக்கு மறுபடியும் வேத அத்தியயனம் பண்ணணும்னு கொள்ளை ஆசையா இருக்கு !"
"நீதான் வரமாட்டங்கறயே ! என்னைத் தேட வேணாம்னு கனபாடிகளுக்குக் கடுதாசி வேற எழுதிப் போட்டுட்டே ! உன் லெட்டரைப் படிச்சுட்டு அவர் எப்படி தேம்பித் தேம்பி அழுதார் தெரியுமா?"
"வேற எங்கயாவது பாடசாலை இருந்தா சேர்ந்து படிக்கலாம்."
"இந்த ஊர்லயே ஒரு பாடசாலை இருக்கு ! எங்க மாமாதான் அதுக்கு போஷகர். என்கிட்ட ரொம்ப அபிமானம் அவருக்கு. கவலைப்படாதே! நான் சொன்னா நாளைக்கே சேர்த்துடுவார். நீ தான் ஒரு தீர்மானத்துக்கும் வரமாட்டேங்கறயே ! சஞ்சலப்படறயே ! க்ஷண சித்தம் க்ஷணபித்தமா இருக்கயே! இன்னைக்கு வேதங்கறேஒ நாளைக்கு வேணாங்கறே ! முதல்ல மணசை திடப்படுத்திக்கோ…. இன்னொரு ஜாங்கிரி சாப்பிடறயா? எப்படி இருக்கு பார் ரோஜாப்பூ மாதிரி"
"எங்கப்பா கடுதாசி எழுதியிருக்கார்…"
"என்ன எழுதியிருக்கார்?"
" ‘அம்மா சங்கிலியைக் கழுத்தைவிட்டு எடுக்காதே. வேதத்தைப் பாதில நிறுத்தாதே ! கனபாடிகள் பேச்சைத் தட்டாதே’ன்னு முக்கியமா மூணு விஷயம் எழுதியிருக்கார்."
"வேதத்தை விட்டுட்டே! கனபாடிகள் பேச்சைத் தட்டிட்டே! ரெண்டு விஷயம் போச்சு. இன்னும் ஒண்ணுதான் பாக்கி. கழுத்துச் சங்கிலியை விட்டு வெச்சிருக்கே!"
"இப்ப அதையும் வித்துடலாம்னுதான் கடைத் தெருவுக்குப் போயிண்டிருந்தேன். நடு வழியில உன்னைப் பார்த்தேன்…"
"சந்தியாவந்தனம் ஒழுங்காப் பண்றயா? தினம் ஒரு ஆவ்ருத்தியாவது வேதம் சொல்றயா?"
"சத்திரத்துக்குப் பக்கத்துலயே புது ஆறு ஒடறது ! காவேரித் தண்ணிதான். ஸ்நானத்துக்கு அங்க போயிடுவேன். ஜபதபம் எல்லாம் ஆனந்தா லாட்ஜ்ல. வைதிகாளுக்கு ஏத்த மாதிரி வசதியான இடம். மனஸ்லதான் நிம்மதி இல்லே."
"எங்க தங்கியிருக்கே?"
"சத்திரத்துல. என்னை வெள்ளத்துலேந்து காப்பாத்தினாளே, அந்தப் பெண்ணோட!"
"அந்தக் கழைக்கூத்தாடிப் பெண்ணோடயா?" பாயசத்திலிருந்த முந்திரியை விரலால் நெருடினான் கிட்டா.
“ஆமாம்; அவளைப் பார்த்து நன்றி சொல்லிட்டுப் பேசலாம்னுதான் இங்க வந்தேன். குறள் படிச்சுட்டா மட்டும் போதுமா? நன்றி உணர்வை மனஸ்லயே வச்சிண்டிருக்கக் கூடாது. வெளிப்படையா வாய்விட்டுச் சொல்லனும், சமயம் வரப்போ காரியத்துலயும் காட்டணும். இங்க வந்தப்புறம், அவளோட பழகினப்புறம் அவளை ரொம்பப் பிடிச்சுப் போச்சு, அவளும் ரொம்பப் பிரியமா இருக்கா !"
"ம்… ஆசாரம் கெடாம இருந்தா சரி, இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கப்போற?"
"அதான் தெரியலே. ஒரே குழப்பமா இருக்கு, குடுமியை எடுத்துடச் சொல்றா. எனக்குதான் இஷ்டமில்லே. தட்டிக் கழிச்சுண்டே இருக்கேன். வேதத்தைப் பாதியில விட்டுடவும் மனசு வரலே. அதைத் தொடர்ந்து படிக்கணும்னு ஒரு வேகமே வந்திருக்கு. இன்னைக்கு அப்பா கடுதாசியைப் படிச்சப்புறம் அந்த வேகம் ஒரு வெறியாவே மாறியிருக்கு."
"அவ பேர் என்ன சொன்னே?"
"மஞ்சு… ரொம்ப நல்ல பெண். என்மீது உசிரையே வச்சிருக்கா. எனக்குத்தான் இந்தக் கூத்தாடி வாழ்க்கை பிடிக்கலே. எந்த நேரமும் மனசு ‘வேதம் வேதம்’னு அடிச்சுக்கிறது. தாயைப் பிரிஞ்ச கன்னுக்குட்டி மாதிரி தவிச்சுண்டிருக்கேன். தினமும் ராத்திரி வேளைல சுவாமி வீதிவலம் போறப்போ பிராமணாள் கூட்டமா கணீர்ணு வேதம் சொல்லிண்டு போறதைப் பாக்கறப்போ மனசு கிடந்து அடிச்சுக்கிறது. ஐயோ! இந்த உத்தமமான வேதத்தை விட்டுட்டு அர்த்தமில்லாத அசட்டு வாழ்க்கை நடத்தறமேன்னு எனக்கு நானே ஏங்கிப் போறேன். ‘சீக்கிரமே உன்னைப் பிரிஞ்சு வேதம் படிக்கப் போறேன்’னு ஒருநாள் மஞ்சுவிடமே சொன்னேன். பாவம், அவ அழுதுட்டா. அன்னிலேந்து உலகமே அஸ்தமிச்ச மாதிரி, பிரமை பிடிச்ச மாதிரி மனசு ஒடிஞ்சு போயிருக்கா! அவளைப் பார்த்தா ரொம்பப் பரிதாபமா இருக்கு. கிட்டா ! அவளுக்கு எப்படி சமாதானம் சொல்றதுன்னே தெரியலே."
கையலம்பிக் கொண்டு இருவரும் வாசல் பந்தலுக்கு வந்தார்கள். சூரிய ஒளி பந்தல் துவாரங்களில் புகுந்து தரையில் வட்டம் வட்டமாய் டாலர்கள் வீசியிருந்தன ! பெஞ்சுமீது வெள்ளித் தட்டு நிறைய வெற்றிலையும் அசோகா பாக்கும், சந்தனமும் வைத்திருந்தார்கள்.
தற்செயலாய் மாமா அங்கே வந்தார்.
"யாருடா கிட்டா இந்தப் பையன்? விபூதியும் குடுமியுமா தேஜஸாயிருக்கானே!" என்று கேட்டார்.
"என்னோட வேதம் படிச்சிண்டிருந்தான் மாமா! மூர்த்தின்னு பேரு… இவனைப் பத்தி அப்புறம் விவரமாப் பேசணும். உங்களால ஒரு காரியம் ஆகணும்" என்றான்.
"அப்டியா? சாப்டாச்சா ! ரெண்டு பேரும் வெத்தலை போட்டுக்குங்க, கும்போணம் கொடிக்கா வெத்தலை!" என்றார் மாமா.
"பிரம்மசாரிகள் வெத்தலை போடலாமா, மாமா?"
"பிரம்மசாரிகள் கல்யாணமே பண்ணிக்கிறா ! ‘வெத்தலை’ போடறது தப்பா?" என்று ஒரு ஜோக் அடித்தார் மாமா!
"நான் சொல்லலே, மாமா ரொம்பத் தமாஷாப் பேசுவார்னு!" என்றான் கிட்டா.
தவில் ஓசை காதைப் பிளந்ததால் அவர்கள் சம்பாஷணை தடைப்பட்டது.
முர்த்தி வெளியே புறப்பட ஆயத்தமானான்.
"எங்க அதுக்குள்ள கிளம்பிட்டே?"
"சிவகங்கா கார்டன் பக்கத்துல வித்தை நடக்கறது. இன்னைக்கு மஞ்சு புது ‘ஐட்டம்’ பண்ணப்போறா; நான் போய்ப் பார்த்துட்டு வந்துடறேன்" என்றான் மூர்த்தி.
"நாலு மணிக்குள்ள வந்துடு, டிபன் காசி அல்வா, மெதுபக்கடா!..." என்றான் கிட்டா.
"ஞாபகம் வெச்சுக்கோ. மாமாவிடம் என்னைப்பத்தி சொல்றதுக்கு மறந்துடப் போறே" என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான் மூர்த்தி.
வெய்யில் கொளுத்தி எடுத்தது. தெருப் புழுதியில் கால் பொரிந்தது, மூர்த்தி தெரு ஓரமாக தாண்டிதாண்டி நிழலுக்குத் தாவினான்.
"நாலு நாளைக்குச் சாப்பாட்டுக்குக் கவலையில்லை அம்மா சங்கிலி தப்பியது" என்று மனதுக்குள் மகிழ்ந்து கொண்டான்.
கண் முன் பாகீரதியின் நிலவு முகம் தெரிந்தது. அந்த மூன்று நோட்டுகளும் சட்டைப்பையில் இருக்கின்றனவா என்று தொட்டுப் பார்த்துக் கொண்டான். பாகீரதியின் முன் யோசனையையும் சாமர்த்தியத்தையும் வியந்தான்.
அந்தப் பூவுக்குக் கீழ் அவள் எழுதியிருந்த வாசகம் அவன் காதுகளில் ஏதேதோ ரகசியங்கள் பேசியது. "இவளுக்கு என் மீது எத்தனை அக்கறை? பாவம் ! தான் கெட்டதோடு என் பிரம்மசரியத்தையும் கெடுத்து விட்டாளே, அசட்டுப்பெண் !" என்று பச்சாத்தாபப்பட்டான். அந்தக்கசப்பும் இனிப்பும் கலந்த உணர்வில் முகம் சுளித்தான்.
சிவகங்கா தோட்டம் முச்சக்தியை அடைக்தபோது அங்கு யாரையுமே காணவில்லை. ஒரு நாய் மட்டும் நாக்கை நீட்டியபடி படுத்திருந்தது. போலீஸ்காரர் ஒருவர் நடைபாதைக் கடையில் இளநீர் குடித்துக் கொண்டிருக்தார். மூர்த்தி அவரை நெருங்கி, "இங்கே கழைக்கூத்தாடிங்க யாராவது வந்தாங்களா?" என்று கேட்டான் .
"வந்தாங்களே! வித்தை கூட பண்ணாங்க. பாதில அந்தப் பொண்ணு வயித்துல கத்தி பாஞ்சுட்டுது. ரத்தமாவது ரத்தம், வெள்ளமாக் கொட்டிடுச்சு! பாவம், மயக்கமாயிட்டா. இப்பத்தான் ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப் போறாங்க."
"ஐயோ, மஞ்சு" என்று அலறிவிட்டான் மூர்த்தி.
"அத பாருங்க ரத்தம் புழுதில உறைஞ்சு கிடக்கு!"
”எந்த ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டுப் போனாங்க, தெரியுமா?"
"பெரிய ஆஸ்பத்திரி"
அடுத்த கணம் மூர்த்தி பெரிய ஆஸ்பத்திரியை நோக்கி ஓடினான்.
---------
14.
வெயிலின் உக்கிரம் உடம்பெல்லாம் வியர்க்க, தெருப் புழுதி கால்களை நெருப்பாய்ச் சுட ‘மஞ்சுவுக்கு என்ன ஆயிற்றோ?’ என்ற கவலையில் ஒரு ஆவேசத்தோடு ஓடினான் மூர்த்தி. கால்கள் கொப்பளித்து நடக்க முடியாமல் தத்தளித்த போது வைதிக சாஸ்திரி ஒருவர் சைக்கிளில் வந்து நின்றார். சாதுவாய்,ஒல்லியாய், ருத்திராட்சமாலை அணிந்திருந்தார்.
"தம்பி! எங்க போயிண்டிருக்கே, இந்த கொளுத்தற வெய்யில்ல? கல்யாண வீட்ல பார்த்தனே உன்னை !" என்றார்.
"பெரிய ஆஸ்பத்திரிக்குப் போறேன். அங்க ஒருத்தரைப் பார்க்கணும்" என்றான் மூர்த்தி.
“ஏறிக்கோ பின்னால. நான் கொண்டு விட்டுடறேன்" என்றார்.
மூர்த்தி தயங்கியபடி "வேணாம், பெரியவாளுக்கு சிரமம் !" என்றான்.
"பரவாயில்ல, ஏறிக்கோ."
ஆஸ்பத்திரியில் கொண்டு விட்டார்.
"உங்க உதவியை மறக்க மாட்டேன்" என்று கூறி நன்றியோடு நமஸ்கரித்தான்.
ஆஸ்பத்திரி வராந்தா பெஞ்ச்சில் மஞ்சுவின் தகப்பன் கவலையே உருவாக உட்கார்ந்திருந்தான். மூர்த்தியைக் கண்டதும் துக்கம் பீறிட அழ ஆரம்பித்து விட்டான்.
"அழாதீங்க. மஞ்சு எப்படி இருக்கா?"
"என்னை இங்கயே உட்காரச் சொல்லிட்டு உள்ளே தூக்கிட்டு போனாங்க. ரொம்ப நேரமாச்சு. ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கறாங்க."
"இங்கயே இருங்க. நான் போய்ப் பார்த்துட்டு வரேன்" என்று ஓடினான்.
எமர்ஜன்ஸி வார்டுக்குப் போய் கட்டில் கட்டிலாக மஞ்சுவைத் தேடினான்.
குறுக்கே வந்த நர்ஸ் ஒருத்தி "யாரைத் தேடுது தம்பி? “ என்று கேட்டாள்.
"வயத்துலே கத்தி பாஞ்சுட்டுதே…"
“ஓ, அந்தக் கேஸா? ஆபரேஷன் தியேட்டர்ல இருக்குது. தையல் போட்டுக்-கிட்டிருக்காங்க, கத்தி ஆழமாப் பாஞ்சிருக்கு. கொஞ்ச நேரத்துல ஸ்ட்ரெச்சர்ல கொண்டு வருவாங்க… வெய்ட் பண்ணு."
"உயிருக்கு ஆபத்து இல்லையே? பிழைச்சுடுவளா?"
"பெரிய டாக்டர் வருவார். கேளு….
காத்திருந்த சில நிமிடங்கள் சில யுகங்களாய் நீண்டன.
கடைசியில், மஞ்சுவை ஸ்ட்ரெச்சரில் தூக்கி வந்து ஏழாம் நம்பர் கட்டிலில் கிடத்தினார்கள்.
அவள் கண்களை மூடி மயக்க நிலையில் இருந்தாள்.
டாக்டர்கள் மூன்று பேர் பின் தொடர்ந்து வந்தார்கள்.
"பயமில்லையே டாக்டர் !" என்று பெரிய டாக்டரை அணுகிக் கேட்டான் மூர்த்தி.
"நிறைய ரத்தம் சேதாரமாயிருக்கு. ஸீரியஸ் கேஸ்தான். நீ யார்?" என்று கேட்டுவிட்டு, ‘உனக்கும் இவளுக்கும் என்ன சம்பந்தம்?’ என்பது போல் பார்த்தார்.
"அவளுக்குத் தெரிஞ்சவன், நான் ரத்தம் தரலாமா?!" என்று கேட்டான்.
மூர்த்தியின் ரத்தத்தைப் பரிசோதித்தார்கள். பொருந்துகிறது என்று தெரிந்ததும் ஏராளமான ரத்தத்தை அவனிடம் உறிஞ்சிக்கொண்டார்கள்.
ஆறுமணி வரை காத்திருந்து மஞ்சு கண் விழித்துப் பார்த்த பிறகே மூர்த்தி கலியாண வீட்டுக்குத் திரும்பினான்,
இருட்டாகிவிடவே கலியாண வீட்டுப் பந்தலில் காஸ்லைட் எரிந்து கொண்டிருந்தது. உடலும் உள்ளமும் சோர்ந்து, கண்கள் சிவந்து வாடிய முகத்துடன் காணப்பட்டான்.
அவனைப் பார்த்ததும் --
"ஏதோ நடந்திருக்கிறது" என்பதை ஊகித்துக்கொண்ட கிட்டா, "என்ன ஆச்சு மூர்த்தி ! ஏன் இவ்ளோ லேட்? மூணு மணிக்கே வந்துடுவேன்னு பார்த்தேன். உன் விஷயமா மாமாட்ட கூடப் பேசி வெச்சிருக்கேன். அவரும் "சரி வரட்டும், முகூர்த்த நாளாயிருக்கு. இன்னைக்கே சேர்த்துடலாம்னு சொல்லி பாடசாலை கனபாடிகளைக் கூட இங்க வரச் சொல்லியிருந்தார். கனபாடிகள் இத்தனை நேரம் உனக்காகக் காத்துண்டிருந்தார்" என்றான் கிட்டா.
"மாமா எங்க போயிருக்கார்?"
"மாடில சீட்டாடிண்டிருக்கார்."
"மஞ்சுக்கு வயத்துல கத்தி பாஞ்சு ஆஸ்பத்திரில படுத்திண்டிருக்கா. இத்தனை நேரமும் அங்கதான் இருந்துட்டு வரேன். ‘ரத்தம் கொடுத்தா மஞ்சுவைப் பிழைக்க வெக்கலாம்’னு பெரிய டாக்டர் சொன்னார். என் ரத்தம் பொருத்தமாயிருந்தது. கொடுத்துட்டு ஆறு மணி வரைக்கும் அங்கயே உட்கார்ந்திருந்தேன். அப்புறம்தான் கண் முழிச்சுப் பார்த்தா, என்னைக் கண்டதும் விக்கி விக்கி அழ ஆரம்பிச்சுட்டா. ‘கவலைப்படாதே, நான் கவனிச்சுக்கறேன்’னு ஆறுதல் சொல்லிட்டு அவ அப்பாவையும் அங்கயே இருக்கச் சொல்லிட்டு வந்திருக்கேன். பாவம், ரொம்பப் பரிதாபமாயிருக்குடா அவ நிலமை. நினைச்சுப் பார்க்கவே கஷ்டமாயிருக்கு!"
"உயிருக்கு ஒண்ணும் பயமில்லையே? பிழைச்சுடுவாளோன்னோ!"
"பயமில்லேன்னுதான் டாக்டர் சொல்றார். இன்னும் நிறைய ரத்தம் செலுத்தணுமாம். நாலு நாளைக்கு ஆஸ்பத்திரிலயே தான் இருக்கணுமாம்."
"நீ என்ன பண்ணப் போறே?"
"அப்பப்ப போய்ப் பார்க்கணும். என் உயிரைக் காப்பாத்தினவளாச்சே! நன்றிக்கடன் பட்டிருக்கனே! அந்தக் கடனைத் தீக்கறதுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைச்சுது. என் ரத்தத்தைக் கொடுத்து அவளைப் பிழைக்க வெச்சுட்டேன். அந்த வகையில ரொம்ப சந்தோஷமா திருப்தியாயிருக்கு…"
"ஏன் ஒரு மாதிரி விந்தி நடக்கறே?"
"மத்தியானம் கொதிக்கிற வெயில்லே நடந்தப்போ கால் கொப்புளிச்சுப் போச்சு…"
"மாமா ஏதாவது ‘ஆயிண்ட்மெண்ட்‘ வெச்சிருப்பார், வா, கேட்டுப் பார்க்கலாம்."
மாமாவிடம் போனார்கள். அவர் சீட்டாட்டத்தில் மும்மரமாக இருந்தார்.
மரியாதையாக மூர்த்தி கொஞ்சம் தள்ளியே நின்றான்.
"மூர்த்தி வந்துட்டான். வெயில்ல செருப்பில்லாம நடந்திருக்கான், கால் கொப்புளிச்சட்டுதாம்" என்றான் கிட்டா.
“செருப்பு போட்டுண்டு நடக்கறதுக்கு என்ன?" என்று மூர்த்தியைப் பார்த்தார் மாமா.
"வசதி இல்லையே !" என்றான் கிட்டா.
"அதுக்கென்னடா வசதி ! கலியாணத்துக்கு வந்தவா கழட்டிப் போட்ட செருப்பிலே எதையாவது மாட்டிண்டு போக வேண்டியதுதானே!" என்றார்.
"ரொம்ப எரிச்சலாயிருக்காம். ஏதாவது ஆயிண்ட் மெண்ட் இருக்கா, மாமா?"
"அதெல்லாம் ஒண்ணும் வேணாண்டா, துரங்கப் போறதுக்கு முன்னால தேங்கா எண்ணெயைத் தடவிண்டு தூங்கச் சொல்லு, கார்த்தால சரியாப்போயிடும். இத்தனை நேரமா எங்க போயிருந்தான்?"
"ஆஸ்பத்திரியில யாரோ தெரிஞ்சவாளைப் பாக்கப் போயிருக்கான். போன இடத்துல லேட்டாயிடுத்தாம்!"
"யார் அது? சரி, அப்புறம் பேசிக்குவோம். முதல்ல அவனை கீழே அழைச்சுண்டுபோ, ஏதாவது சாப்பிடச் சொல்லு, களைச்சாப்ல தெரியறான், பாவம்"
"என்ன சாப்பிட்றே மூர்த்தி?" என்று கேட்டான் கிட்டா.
"ஸ்நானம் பண்ணி சந்தியா வந்தனத்தை முடிக்காம பச்சைத் தண்ணிகூடக் குடிக்கமாட்டேன். இதோ வந்துடறேன் என்று ஆற்றங்கரைக்குப் புறப்பட்டான். அங்கே போய், படிக்கட்டில் உட்கார்ந்து தண்ணீரில் கால்களை நீட்டித் துழாவினான். எரிச்சலுக்கு இதமாக இருந்தது. மீன்கள் குத்தவே கால்களை எடுத்துக் கொண்டான்.
பிறகு, ஸ்நானம் செய்து, ஜபம் முடித்து மஞ்சுவுக்காக மனமுருகிப் பிரார்த்தனை செய்தபின் கலியாண வீட்டுக்குத் திரும்பினான்.
இரண்டு நாளைக்கெல்லாம் மஞ்சுவும் ஆஸ்பத்திரியிலிருந்து வந்து விட்டாள். ’ஒரு மாத காலம் படுக்கையிலேயே இருக்க வேண்டும்’ என்று ஆஸ்பத்திரியில் நிபந்தனை போட்டிருந்தார்கள்.
மூர்த்திதான் குதிரை வண்டி ஏற்பாடு செய்து, புல் மெத்தைபோட்டு, மஞ்சுவைப் பழையபடி சத்திரத்தில் கொண்டு சேர்த்தான்.
"தினம் என்னை வந்து பார்ப்பியா? மறந்துடமாட்டயே?" என்று துக்கம் பொங்கக் கேட்டாள் மஞ்சு.
"எனக்கு உயிர் தந்தவளாச்சே நீ! உன்னை மறப்பனா?" என்றான் மூர்த்தி.
மாமா சிபாரிசின் பேரில் மூர்த்தியைத் ‘தஞ்சாவூர் ஸப்தரிஷி வேத பாடசாலை’யில் சேர்த்துவிட்டு கலியாணம் முடிந்த மறுநாளே கிட்டா ஊருக்குப் புறப்பட்டு விட்டான்.
"மாமா, முர்த்தியை கவனிச்சுக்குங்க. ரொம்ப நல்லவன்" என்றான் கிட்டா.
"அவனைப் பத்தி எனக்கு நிறையவே தெரியும்டா. நீ கவலைப்படாம போயிட்டு வா" என்றார் மாமா.
கிட்டாவுக்கு ஆச்சரியமாயிருந்தது. ‘மாமாவுக்கு நிறையவே தெரியுமாமே! எப்படி?’ என்று யோசித்தான்.
------------
15.
மூர்த்தியைப் பிரிந்த சோகத்தில் சங்கர கனபாடிகள் அமைதி இழந்து தூக்கமிழந்து அடிக்கடி படுக்கையில் உட்கார்ந்து ‘மூர்த்தி, மூர்த்தி’ என்று துயரம் தோய்ந்த குரலில் முனகிக் கொண்டிருந்தார்.
துயரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் தவித்த தவிப்பில், தள்ளாமை மேலிட்டு, தளர்ந்து, உலர்ந்த திராட்சை போன்ற சுருக்கங்களுடன் இளைத்துப் போனார்.
அன்று அவர் ராமாயண பாராயணம் செய்து கொண்டிருந்தபோது, ராமனின் பிரிவாற்றாமையால் வாடிக்கொண்டிருந்த தசரதனின் புத்திர சோகத்தை வால்மீகி வர்ணித்திருந்த வார்த்தைகள் கண்ணீர் உகுக்கச் செய்தன, மேலும் படிக்க முடியாமல் கண்ணீர் திரையிட்டபோது விம்மி வந்த துக்கத்தை அடக்கிக் கொண்டார்.
இச்சமயம் "அதோ, கிட்டா வந்துட்டானே!" என்ற கமலாவின் உற்சாகக் குரல் கேட்டதும், கனபாடிகள் கிட்டா வரும் திசையை நோக்கி "வா கிட்டா, எல்லாரும் க்ஷேமம்தானே? மூர்த்தியைப் பார்த்தயா?" என்று ஆவல் பொங்கக் கேட்டார்.
"போன முதல் நாளே பார்த்துட்டேன். மாப்பிள்ளை காசி யாத்திரை போறப்ப அவனே குறுக்கே வந்து சேர்ந்தான் ! அப்புறம் நாலு நாளும் என்னோடதான் இருந்தான்.
‘வேதத்தைப் பாதில விட்டுட்டு நடுத்தெருவில நிக்கறேண்டா, கிட்டு ! திடீர்னு விளக்கணைஞ்சு இருட்டில தவிக்கற மாதிரி இருக்கு. நீதான் உதவி பண்ணணும்’னு கேட்டான். எங்க மாமா கிட்டப்பாவிடம் அழைச்சுண்டு போய் அவனைப்பத்தி சொன்னப்போ ‘அதுக்கென்னடா! நம்ம பாட சாலைலயே சேர்த்துட்டாப் போச்சு. அச்சுத கனபாடிகள் கவனிச்சுக்குவார். கவலைப்படாதே’ன்னு ரொம்ப சுலபமா பிரச்னையைத் தீர்த்துட்டார். மூர்த்தியைப் பத்தி நிறையவே தெரியும்னு வேற சொன்னார்.”
"அப்படியா ! அச்சுத கனபாடிகள் பாடசாலைல சேர்ந்திருக்கானா? ரொம்ப சந்தோஷம் அவர் சாஸ்திர சிரோமணி. பிரகஸ்பதின்னு சொல்லுவா."
மகிழ்ச்சியில் திளைத்த கனபாடிகள் கமலாவை அழைத்து "கேட்டயா கமலா ! மூர்த்தி தஞ்சாவூர் வேத பாடசாலைல சேர்ந்திருக்கானாம். என் வயிற்றில் பால் வார்த்த மாதிரி இருக்கு ! பாகீரதிக்குத் தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவா ! அவளைக் கூப்பிடு! இங்கே இன்னைக்கு ஸ்வாமி நைவேத்தியத்துக்கு பால் பாயசம் பண்ணச் சொல்லணும் ! “ என்று மகிழ்ச்சிப் பெருக்கில் திக்குமுக்காடினார்.
"மூர்த்தியானா உங்ககிட்ட சொல்லிக்காமப் போயிட்டான் ! நீங்களோ அவன் மேல உயிரையே வெச்சிருக்கேள்!" என்றான் கிட்டா
” ’இவனுக்கு நீங்கதான் மாதா பிதா குரு தெய்வம் எல்லாம்’ என்று சொல்லி மூர்த்தியை அவன் தகப்பனார் என்னிடம் ஒப்படைச்சுட்டுப் போனார். மூர்த்தி காணாமப் போனதும் அவருக்கு என்ன பதில் சொல்றதுன்னு தெரியாம தவிச்சுப் போனேன். தினம் தினம் பகவானைப் பிரார்த்தனை பண்ணிண்டிருக்தேன். என் பிரார்த்தனை வீண்போகலே, ஸ்வாமி செவி சாய்ச்சுட்டார்!"
பாகீரதி, முகத்தில் எவ்வித உணர்ச்சியும் இன்றி சாதுவாக வந்து நின்றாள்.
"ஏண்டா, மூர்த்தியை இங்க அழைச்சுண்டு வரதுதானே? இங்க எல்லாரும் அவனைப் பாக்கறதுக்கு ஏங்கிப் போயிருக்கான்னு சொல்றதுதானே!" என்று பாகீரதியை ஒரக் கண்ணால் பார்த்துக்கொண்டே கிட்டாவைக் கேட்டாள் கமலா.
"சொல்லாம இருப்பனா ! புதுக் கன்னுக்குட்டிக்கு உன் பேரைத்தாண்டா வெச்சிருக்கோம். பாகீரதிதான் வைக்கச் சொன்னான்னுகூடச் சொல்லிப் பார்த்தேன். ஆனா அவன் எதுவுமே பேசலே, இடிச்ச புளியாட்டம் இருந்துட்டான்" என்றான் கிட்டா.
"அவன் எங்க இருந்தாலும் எப்படி இருந்தாலும் க்ஷேமமா இருந்தா சரி. நம்மையெல்லாம் மறந்தாலும் வேதத்தை மறக்காம இருக்கானே, அது போதும் எனக்கு !" என்று பரம திருப்தியோடு பேசினார் கனபாடிகள்.
"சும்மா சொல்லக் கூடாது. வேதத்துல அசைக்க முடியாத நம்பிக்கை வெச்சிருக்கான். பக்தின்னா கொஞ்ச நஞ்சமில்லே. உலகத்துலயே வேதம்தான் பெரிசுங்கற அளவுக்குப் பெரிய ஞானி மாதிரி பேசறான்" என்றான் கிட்டா.
"எனக்குத் தெரியும். மகா உத்தமமான பையன்டா அவன் ! ம்… ! ஏதோ ஒரு கெட்ட வேளை அவனை ஆட்டிப் படைக்கிறது. கிட்டா, நீ போய் சீக்கிரம் ஸ்நானத்தை முடிச்சுண்டு வா. நேரமாறது" என்று சொல்லி அனுப்பினார்.
தோட்டப்பக்கம் போன கிட்டாவை பாகீரதி வழியில் மடக்கி "மூர்த்தி என்னைப் பத்தி ஏதாவது சொன்னானா?" என்று குரலைத் தாழ்த்திக் கேட்டாள்.
"ஒண்ணும் சொல்லலை. பட்டுவேட்டியையும் புஸ்தகத்தையும் கொடுத்தேன். வாங்கிண்டான். அவ்வளவுதான்"
"யார் கொடுத்தான்னுகூடக் கேட்கலையா?"
” நானே சொல்லிட்டேன்"
"அதுக்கு என்ன சொன்னான்?"
"அதுக்கும் ஒண்ணும் சொல்லலை. முகத்தில ஒரு திருப்தி மட்டும் தெரிஞ்சுது!"
"என்னைப் பத்தி ஒரு வார்த்தைகூடப் பேசலையா!"
"பேசலையே!"
"அப்புறம்?."
"உள்ளே போயிட்டு கொஞ்ச நேரத்துக்கெல்லாம் திரும்பி வந்து பாக்கறேன். அந்த புஸ்தகத்துக்கு நீ போட்டிருந்த அட்டையைக் கிழிச்சுப் போட்டிருந்தான். ஏண்டா அட்டை போட்டா உனக்குப் பிடிக்காதோன்னு கேட்டேன். பதில் மழுப்பலா ஒரு சிரிப்பு அதோடு சரி!"
பாகீரதி முகம் பிரகாசமாயிற்று. "அம்மாடி அட்டையைப் பிரிச்சுப் பார்த்திருக்கான்" என்பதில் ஏற்பட்ட மகிழ்ச்சி அது.
"அவனுக்கு அட்டை போடறதும் பிடிக்காது; சட்டை போடறதும் பிடிக்காது" என்று கேலியாகச் சொல்லிச் சிரித்துக் கொண்டே போய் விட்டாள்.
மேல வீதி பங்காரு காமாட்சி அம்மன் கோயிலுக்குப் போய் கோபுரம் தரிசித்து பிரதட்சிணமாக நடந்து போனபோது ஆலயமணியின் ரீங்காரம் மூர்த்தியை பக்திப் பரவசத்தில் ஆழ்த்தியது.
வெள்ளிக்கிழமை சந்தியாகால பூஜை நேரம். தேங்காய், புஷ்பம், கற்பூரத் தட்டுடன் சந்நிதியில் போய் நின்றான்.
"அர்ச்சனையா, தீபாராதனையா?" அர்ச்சகர் கேட்டார்.
"அர்ச்சனை!"
"பேர், நட்சத்திரம், கோத்ரம்?"
"அம்மன் பேருக்கே பண்ணிடுங்க."
அஷ்டோத்திரம் சொல்லி அர்ச்சனை முடித்து கற்பூர ஹாரத்தி காட்டி தட்டுடன் மூர்த்தியிடம் வந்து நின்றார் குருக்கள்.
மஞ்சுவின் உடல்நிலை தேறி பழையபடி கழைக்கூத்து செய்யத் தொடங்கினால் சுவாமிக்கு அர்ச்சனை செய்வதாக மூர்த்தியின் பிரார்த்தனை,
கோயிலிலிருந்து சத்திரத்துக்குப் போகும் வழியில் ஒரு முழம் தஞ்சாவூர்க் கதம்பம் வாங்கிக் கொண்டான். ‘கதம்பம் என்றால் அவளுக்கு ரொம்பப் பிடிக்கும்’ என்று அவனுக்குத் தெரியும்.
சத்திரத்து வாசலில் குதிரை வண்டி ஒன்று நின்று கொண்டிருந்தது. வண்டிக்குள் பாண்டு வாத்தியக்காரர்கள் உட்கார்ந்திருந்தார்கள்.
வண்டி மீது ஒட்டப்பட்டிருந்த போஸ்ட்டர் ‘தஞ்சைக்கு கேரள சர்க்கஸ் விஜயம்’ என்று சொல்லிற்று,
சத்திரத்துக்குள் போனபோது அங்கே மஞ்சு யாரோ ஒரு கேரளாக்காரனுடன் பேசிக் கொண்டிருந்தாள். பார்வைக்கு சர்க்கஸ்காரன் போலிருந்தான்.
அழகாக, அரும்பு மீசையுடன் ஒரு நிர்வாகிக்குரிய மிடுக்குடன் காணப்பட்டான்.
மஞ்சுவின் திறமை பற்றி கேள்விப்பட்டு அவளைத் தன்னுடைய கம்பெனியில் சேர்த்துக் கொள்வதென்ற நோக்கத்தோடு வந்திருந்தான். தன் கம்பெனியிலுள்ள வசதிகள் பற்றியும் கட்டுப்பாடுகள் பற்றியும் மஞ்சு மயங்கிப் போகும் அளவுக்குப் பேசிக்கொண்டிருந்தான்.
"வெய்யில் மழையில் தெருத் தெருவாக மூட்டையைத் தூக்கிக்கொண்டு அலையறது ஒரு பொழைப்பா! சர்க்கஸ்ல சேர்ந்தா கெளரவமா வாழலாம். உங்கப்பாவுக்கு வயசாச்சு. உனக்கு ஒரு பாதுகாப்பான இடம் வேணாமா? உன்னாட்டம் நிறையப் பெண்கள் என் கம்பெனில வேலை செய்றாங்க. உனக்கு அங்க நல்ல எதிர்காலம் இருக்கு. யோசிச்சு முடிவு சொல்லு" என்று அவன் கூறிக் கொண்டிருந்தபோதுதான் மூர்த்தி கோயில் பிரசாதத்துடன் அங்கு போய்ச் சேர்ந்தான்.
"வா, மூர்த்தி நல்ல நேரத்துக்கு வந்தே ! தட்ல என்ன?" என்று கேட்டாள் மஞ்சு.
"காமாட்சியம்மன் கோயிலுக்குப் போய் அர்ச்சனை பண்ணி பிரசாதம் கொண்டு வந்திருக்கேன்."
பிரசாதத்தை அவளிடம் கொடுத்தான்.
"நல்ல சகுனம் ! சாமிப் பிரசாதம்கூட வந்திருக்கு !" என்றான் சர்க்கஸ்காரன்.
"இவர் சர்க்கஸ் கம்பெனிலிருந்து வந்திருக்கார். என்னை சர்க்கஸ்ல சேரச் சொல்றார்!" என்று மூர்த்தியின் முகத்தைப் பார்த்தாள் மஞ்சு,
“நீ என்ன சொன்னே?"
"நா ஒண்ணும் சொல்லலே. உன் அபிப்ராயத்தைச் சொல்" என்றாள்.
"உங்க அப்பாவும் நீயும் முடிவு செய்ய வேண்டிய விஷயம் இது, இதல நான் சொல்றதுக்கு என்ன இருக்கு?"
மஞ்சு இந்த பதிலை எதிர்பார்க்கவில்லை. மூர்த்தி அக்கறை காட்டாமல் பேசியது அவளுக்கு வருத்தமாயிருந்தது.
"எதுக்கும் நீங்க நாளைக்கு வாங்கய்யா, பேசிக்குவம்" என்று சர்க்கஸ் ஆசாமியிடம் சொல்லி அனுப்பிவிட்டாள்.
மூர்த்திக்கு அவனை அறியாமல் அந்த சர்க்கஸ்காரன்மீது ஒரு வெறுப்பு தோன்றியது. பொறாமையாகவும் இருந்தது.
"நேரமாச்சு, மஞ்சு ! போயிட்டு நாளைக்கு வந்து பாக்கறேன். பாடசாலைல காத்திண்டிருப்பா" என்று சொல்லிப் புறப்பட்டான் மூர்த்தி.
மஞ்சுவிடம் தனக்குள்ள உரிமை என்ன, உறவு என்ன என்பதை மூர்த்தியால் திட்டவட்டமாகப் புரிந்துகொள்ள முடிய வில்லை. ஆயினும் மஞ்சு தன்னை விட்டு விலகிச் செல்வதுபோல் உணர்ந்தான்.
"மூர்த்தி ! நீதானே வேதம், வேதம்னு சொல்லிண்டு அவளை விட்டு விலகிப் போயிருக்கே? நன்னா யோசிச்சுப் பார்! அவளாகவா விலகிச் செல்கிறாள்! அவள் இதுவரை உன்னைத்தானே நம்பிக் கொண்டிருந்தாள். நீ வேத பாடசாலையில சேர்ந்தப்புறம் தானே அவள் நம்பிக்கை குறைய ஆரம்பிச்சிருக்கு? சர்க்கஸ்காரன் அவளுக்கு நல்ல எதிர்காலம் இருப்பதாகச் சொல்கிறான். பாதுகாப்பு இருக்கிறது என்று அழைக்கிறான். நீதான் அவள் கேள்விக்குச் சரியான பதில் சொல்லாமல் அந்த சர்க்கஸ்காரனைக் கண்டு பொறாமைப்படுகிறாய்? இப்ப சொல். விலகிப் போறது நீயா, அவளா?" என்று மூர்த்தியின் உள் மனம் கேட்டது.
‘உண்மைதான்; மஞ்சுவிடமிருந்து நான்தான் விலகி வந்திருக்கேன், வேதத்தின் மீதுள்ள பற்றுதல் காரணமா அவள் எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாம வந்திருக்கேன். இப்போது அவள் சர்க்கஸ் கம்பெனியில சேருவதற்கு சரியாக பதில் சொல்லாமல் அலட்சியமா வந்தது என் தப்புதான்’ என்றது இன்னொரு மனம்,
இந்த எண்ணங்கள் அவனைக் குழப்பத்தில் ஆழ்த்த, ஒரு முடிவுக்கும் வர முடியாமல் மேலும் சிந்தித்தவாறு சப்தரிஷி பாடசாலையை அடைந்தான்.
மூர்த்திக்காகக் காத்திருந்த அச்சுத கனபாடிகள் இவனைக் கண்டதும் "மூர்த்தி சாயந்தரம் வெள்ளிக்கடை கிட்டப்பா உன்னைத் தேடிண்டு வந்திருந்தார். நீ கோயிலுக்குப் போயிருப்பதாச் சொன்னேன். அவசரமா உன்னைப் பார்க்கணுமாம் !" என்றார்.
“அப்படி என்ன அவசரமாம்? யாராவது என்னைத் தேடிண்டு வந்திருப்பளோ? யார் வந்திருப்பா?" என்று யோசித்தான் மூர்த்தி.
-------
16.
அப்பா, கமலா காஞ்சீபுரம் போறாளாம்!" என்று சொல்லிக் கொண்டே வந்தாள் பாகீரதி.
"ஏன்? என்ன அவசரமாம் அவளுக்கு?" என்று கேட்டார் கனபாடிகள்.
"வந்து ஒரு மாசத்துக்கு மேல ஆறதே! இத்தனை நாள் தங்கியிருந்ததே அதிசயம்!"
"வாஸ்தவம்தான் அவள் எங்க இப்போ?"
"அம்புலுவைக் குளிப்பாட்டப் போயிருக்கா. மத்தியானம் பஸ்ஸுக்கே போகப் போறாளாம்."
"கிட்டாவையும் காணலையே?"
"தோட்டத்துலேந்து கொஞ்சம் கத்தரிக்கா பறிச்சிண்டு வரச் சொன்னேன். கமலா போறப்போ கொடுத்தனுப்பலாம்னு. மழை இல்லாம தோட்டமே வறண்டு கிடக்கு."
“அத பார், அக்கூ பட்சி கத்தறது. அது கத்தினா மழை வரும்னு சொல்லுவா."
"அது தினம்தான் கத்தறது. ஆனா அந்த மழைக்குத்தான் காது கேட்கலை! இப்படியே காஞ்சுதானா பயிர் பச்சையெல்லாம் வாடவேண்டியதுதான். தாது வருஷத்துப் பஞ்சம்னு சொல்வாளே, அந்த மாதிரி ஆயிடுமோ, என்னவோ?" என்றாள் பாகீரதி.
"உலகத்துல அக்கிரமம் அதிகமாயிடுத்து. அதான்" என்றார் கனபாடிகள்,
கமலா வந்தாள்,
"காஞ்சீபுரம் போறயாமே? போயிட்டு வா. ஒன்பது பத்தரை ராகுகாலம், அதுக்கப்புறமா புறப்படு. துணைக்கு யாரு?" என்று கேட்டார் கனபாடிகள்.
"நொண்டி கிட்டா தான்…" என்றாள் கமலா.
“அங்கஹீனமானவாளை நொண்டி, கூனன், குருடன்னு சொல்லக் கூடாது. அவா மனசு கஷ்டப்படும். அது பாவமில்லையா? கிட்டாவுக்குச் சின்ன வயசுல இளம்பிள்ளை வாதம் வந்து கால் ஊனமாயிடுத்து, ஆனாலும், அவன் மாதிரி யாரால வேகமா நடக்க முடியும்?"
மூட்டை முடிச்சுகளைக் கொண்டு போய்த் திண்ணையில் வைத்துவிட்டு, சவாரி வண்டி அழைத்து வரப்போனான். கிட்டா.
பாகீரதி உள்ளே போயிருந்த சமயம் பார்த்து கமலா அப்பாவின் காதில் கிசுகிசுத்தாள்:
"அப்பா, நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கட்டும். ஏதோ நடந்திருக்கு, ஆனா எதையும் தீர்மானிக்க முடியலை. அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்துடாதீங்க!"
பாகீரதி கொண்டு வந்த குங்குமத்தை நெற்றியில் இட்டுக் கொண்ட கமலா, "வரேன் பாகீரதி ! ஒரு மாசமா சேர்ந்து இருந்துட்டு இப்ப பிரியறதுக்கு கஷ்டமாயிருக்கு" என்று சொல்லும்போதே கமலாவுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது.
"பஸ்ஸுக்கு நேரமாச்சு, புறப்படு" என்று துரிதப்படுத்திய கிட்டா மூட்டைகளை வண்டியில் ஏற்றினான். பாடசாலைப் பிள்ளைகள் கும்பலாக வாசலுக்கு வந்து வழி அனுப்பி வைத்தார்கள். எல்லாருக்கும் கமலா காசு கொடுத்தாள்.
அவள் புறப்பட்டுப் போனதும் பாடசாலையே வெறிச்சோடி விட்டது.
கனபாடிகள் ஒரு சூன்யமான நிலையில் உள்ளே போகப் பிடிக்காமல் திண்ணையிலேயே சாய்ந்துகொண்டார்,
புழுக்கம் அதிகமாகியிருந்தது. எழுந்துபோய் ஆகாசத்தைப் பார்த்தார். வடமேற்கில் இருண்டிருந்த ‘கருமேகம்’ இப்போது முழுமையாய்க் கரைந்து போயிருந்தது, மரங்களில் சருகுகள் இங்கொன்று அங்கொன்றாய் உதிர்ந்து கொண்டிருந்தன. அக்கூ பட்சி மட்டும் பிடிவாதமாக இன்னமும் கத்திக் கொண்டிருந்தது.
இச்சமயம் ஏழெட்டு பிராம்மணர்கள் கூட்டமாக வந்து கனபாடிகளைப் பார்த்து கைகூப்பி வணங்கினார்கள்.
"இந்த பதைபதைக்கிற வெயில்ல எல்லாருமா எங்க இவ்வளவு தூரம் ?" என்று இழுத்தாற்போல் கேட்டார் கனபாடிகள்.
மழையே இல்லாம ஏரி குளமெல்லாம் வறண்டு போச்சு, பயிர் பச்சையெல்லாம் பாழாப் போயிடும் போல இருக்கு, ஆடு மாடெல்லாம் ஒவ்வொண்ணா செத்துண்டிருக்கு. நீங்கதான் காப்பாத்தணும்" என்றார்கள்.
”நான் என்ன பண்ண முடியும்?" என்று கேட்டார் கனபாடிகள்.
"உங்க வாயால விராடபர்வம் வாசிச்சா போதும் ! மழை கொட்டு கொட்டுன்னு கொட்டிடுமே!" என்றார்கள்.
"விராட பர்வம் யார் வாசிச்சாலும் மழை வரும் ! அந்தக் கதையின் மகிமை அப்படி" என்றார் கனபாடிகள்.
"இருக்கலாம். ஆனா உங்க மாதிரி யாகம் பண்ணவா, சாஸ்திரம் படிச்சவா, வேதம் ஒதினவா வாயால சொன்னா அதனுடைய மகிமையே தனி" என்றார்கள்,
"நீங்கள்ளாம் கொஞ்ச நாளைக்கு முன்னால எங்கிட்ட சாஸ்திர விளக்கம் கேட்க வந்தப்போ நான் சொன்ன தீர்ப்பு உங்களுக்குப் பிடிக்கல. அதுக்காக என் மேல கோபப்பட்டு என்னையே பாய்காட் பண்ணப் போறதாப் பேசிண்டேளாம். நான் சாஸ்திரம் படிச்சவன் வேதம் ஒதினவன் என்பதெல்லாம் உங்களுக்கு அப்பத் தெரியாமப் போச்சு. இப்ப மழை வேணுங்கறப்ப மட்டும் தெரியறது இல்லையா? தயவுபண்ணி என்னை மன்னிச்சடுங்க. என்னை பாய்காட் பண்றேன்னு சொன்ன உங்களை இப்ப நான் பாய்காட் பண்றேன். விராட பர்வம் வாசிக்கறதுக்கு வேற ஆளைப்பாருங்க. என்னால முடியாது" என்று கோபமாகச் சொல்லிவிட்டு எழுந்தார்.
"அப்படியா சொல்றேள்? முடிவான வார்த்தைதானா?" என்று கொஞ்சம் கோபமாகவே குரல் கொடுத்தார் ஒருவர்.
"அதான் சொல்லிட்டனே! நான் வாசிக்கப் போறதில்லை, முடிவாத்தான் சொல்றேன்."
"சரி, வாங்கய்யா போகலாம். அவர்தான் சொல்லிட்டாரே! அப்புறம் என்ன? அடுத்தாப்பல நாம செய்ய வேண்டியதைச் செஞ்சுக்குவம்" என்றார் இன்னொருவர்.
"வெய்யில் வேளையில வந்திருக்கீங்க. தாகத்துக்கு ஏதாவது சாப்பிட்டுவிட்டுப் போங்க" என்றார் கனபாடிகள்.
"உங்க வீட்ல இனி பச்சைத் தண்ணிகூடக் குடிக்க மாட்டோம்; ஆமாம், நாங்க வரோம்" என்று அத்தனை பேரும் விறைப்பாகப் புறப்பட்டார்கள்.
"விராட பர்வம் வாசிக்கறதுக்கு மட்டும் நான் வேணுமோ? ஊரார்னா இந்த பிராம்மணாள் மட்டும்தான் ஊராரா? குடியானவாளெல்லாம் வரலையே ! அவாதானே பயிர் பண்றவா? அவாளும் சேர்ந்து வந்து கேட்டிருந்தா, நான் ஒத்துண்டிருப்பேன். எதுக்காக இந்த பிராம்மணாள் மட்டும் தனியா ஒதுங்கி வந்து கேட்கணும். இதல ஏதோ உள்நோக்கம் இருக்கு !" என்று சந்தேகப்பட்டார் கனபாடிகள்
அன்புள்ள அத்தைக்கு….
பின்கட்டுத் தாழ்வாரத்தில் அமர்ந்து பேனாவை உதறி கௌரி அத்தைக்குக் கடிதம் எழுதிக் கொண்டிருந்தாள் பாகீரதி.
திடீரென்று பாடசாலைப் பிள்ளைகள் "அதோ மூர்த்தி வந்துட்டான்" என்று உற்சாகம் பொங்கக் கூவினார்கள்
"யாருடா? நம்ப மூர்த்தியா" என்று ஆவலோடு கேட்டுக் கொண்டே வாசல் பக்கம் பார்த்தார் கனபாடிகள்.
மூர்த்தியும், அவனோடு கூனல் விழுந்த ஆசாமி ஒருவரும் உள்ளே வராமல் வாசலிலேயே தயங்கித் தயங்கி நின்றனர்.
"உள்ளே வாடா! வழி தெரிஞ்சுதா உனக்கு ! தஞ்சாவூர்லேந்தா வறே? இவர் யாரு?" என்று எதிர்பாராத மகிழ்ச்சியில் திக்குமுக்காடினார் கனபாடிகள்.
வெட்கமும், அச்சமும், குற்ற உணர்வும் மூர்த்தியைத் தலைகுணிய வைத்தன.
சாஷ்டாங்கமாய் அவர் காலில் விழுந்து நமஸ்கரித்து, "என்னை மன்னிச்சுடுங்கோ! உங்ககிட்ட சொல்லிக்காமப் போனது மகர பெரிய தப்பு. உங்க வாயாலே மன்னிச்சேன்னு சொன்னாத்தான் என் மனசு ஆறும்" என்றான் மூர்த்தி.
"எனக்குத் தெரியும், நீ எந்தத் தப்பும் பண்ண மாட்டேன்னு. ஏன் சொல்லிக்காமப் போனே? எதுக்கு இங்க மறுபடியும் வரமாட்டேங்கறே? “ என்றெல்லாம் உன்னை நான் கேட்கப் போறதில்லே. உன் பேரில் எனக்கு வருத்தமோ கோபமோ கிடையாது. உன் இஷ்டப்படியே நீ தஞ்சாவூர்லயே படி, எங்க இருந்தாலும் வேதத்தை மறக்காதே. அவ்வளவுதான் நான் வேண்டுவது" என்றார்.
“வெள்ளிக்கடை கிட்டப்பா இந்த லெட்டரை உங்கட்ட கொடுக்கச் சொன்னார்" என்று கவர் ஒன்றைக் கொடுத்தான்.
"இவர் யார்னு சொல்லலையே!"
"சப்தரிஷி பாடசாலைல சமையல் வேலை செஞ்சிண்டிருந்தார். இங்க சமையலுக்கு ஆள் வேணும்னு நீங்க கேட்டிருக்தேளாம். கிட்டப்பாதான் இவரை என்னோடு கூட்டி அனுப்பிச்சார். இவரைக் கொண்டுவிட்டுட்டு கனபாடிகளிடம் பேசிட்டுவான்னு சொல்லி அனுப்பிச்சார், ஆனந்த ராவ்னு பேர்."
"ராவ்ஜியா! என்ன வயசு?"என்று கேட்டார் கனபாடிகள்
"அறுபது வயசு முடியப் போறது" என்றார் ராவ்ஜி
”நன்னா சமைப்பேளா?"
"கிட்டப்பாவையே கேட்டுப் பாருங்க; நான் ரசம் பண்ணா டம்ளர்ல வாங்கிக் குடிச்சுட்டு உம்ம பேர் ஆனந்த ராவ் இல்லே, பிரம்மானந்த ராவ்னு சொல்லுவார்!" என்றார் ராவ்ஜி.
"கிட்டப்பா, எப்பவுமே தமாஷாத்தான் பேசுவார். மூர்த்தி! இவரை உள்ளே அழைச்சிண்டு போ, பாகீரதியைப் போய்ப் பார் முதல்ல" என்றார். அவர்களிருவரும் உள்ளே போனதும் கவரைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினார்.
கனபாடிகள் ”பாகீரதியைப் போய்ப் பார்" என்று சொன்னதும் மூர்த்தி உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டான். ‘அவள் முகத்தில் எப்படி விழிப்பது? என்ன பேசுவது? எப்படி ஆரம்பிப்பது?’ என்று யோசித்தபடியே பின் பக்கம் போனபோது, அங்கே சொர்ண விக்கிரகம் போல் நின்று கொண்டிருந்த பாகீரதி மூர்த்தியைக் கண்டதும் மகிழ்ச்சிக் குரலில் "வா, மூர்த்தி !செளக்கியமா? கிட்டா உன்னைப் பத்தி எல்லாம் சொன்னான்" என்றாள்.
-----------
17.
மூர்த்தியைக் கண்டதும் பாகீரதிக்கு ஏதேதோ பேச வேண்டும்போலிருந்தது. பழைய நினைவுகளில் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் மேலிட்டுப் பேச முடியாமல் தடுமாறினாள்.
"இவர் தஞ்சாவூர் வேதபாடசாலைல சமைச்சிண்டிருந்தார். ஆனந்தராவ்னு பேர். ராவ்ஜினு கூப்பிடுவா. ராயர்னும் கூப்பிடுவா. சமையலுக்கு ஆள் வேணும்னு அப்பா எப்பவோ கேட்டிருந்தாராம். கிட்டப்பா இவருக்குத் துணையாக என்னை அனுப்பி லெட்டரும் எழுதிக் கொடுத்திருக்கார்."
"ஓகோ, அப்படிச் சொல்லு, அதனாலதான் வந்திருக்கேன்னு சொல்லு !" என்று கேலியாகச் சிரித்துக்கொண்டே சொன்னாள் பாகீரதி.
"அப்படித்தான் இருக்கட்டுமே!" என்றான் மூர்த்தி.
“சரி, இப்பவே இவரை சமைக்கச் சொல்லட்டுமா? உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு. அதையே சமைக்கச் சொல்றேன்" என்றாள்.
மூர்த்தி இங்கே இரவு தங்கப் போகிறானா இல்லையா என்பதைத் தெரிந்துகொள்ளவே பாகீரதி தந்திரமாக இப்படி ஒரு கேள்வியைப் போட்டாள்.
"கனபாடிகளைப் பார்த்துப் பேசினப்புறம்தான் தெரியும்" என்றான் மூர்த்தி.
"புதுக் கன்னுக்குட்டியைப் பார்க்கலையே நீ? வா, பார்க்கலாம்" என்று அவனைத் தொழுவத்துக்கு அழைத்துச் சென்றாள்.
கன்றுக்குட்டியின் கழுத்தைக் கட்டிக்கொண்டு ”எப்படி இருக்கு?" என்று கேட்டாள்.
"ரொம்ப அழகா இருக்கு" என்றான்.
“உன்னாட்டம்" என்றாள்.
"கிட்டா இல்லையா? எங்கே போனான்?"
"காஞ்சீபுரம் போயிருக்கான். ரெண்டு நாளாகும் வர. பங்குனி உத்திரம் பார்த்துட்டு வந்துருவான். நீ இன்னைக்கே போகணுமா?"
"தெரியலை, கனபாடிகளைத்தான் கேட்கணும்" என்று பிடிகொடுக்காமல் பேசினான்.
திருக்குறள் புஸ்தகத்துக்கு அட்டை போட்டு அனுப்பி யிருந்தனே, பார்த்தயா?"
"பார்த்தேன். உன் உதவியை என்னைக்கும் மறக்க மாட்டேன். அந்தக் கடனை எப்ப எப்படி திருப்பித் தரப் போறேனோ, தெரியலை."
"அதுக்கென்ன? சந்தர்ப்பம் வராமலா போயிடும்? அப்ப வட்டியும் முதலுமாச் சேர்த்துக் கொடுத்துடு. அது சரி; அட்டைக்குள்ளே வேற ஒண்ணும் பார்க்கலையா?"
"பார்த்தனே!..."
"அதைப் பத்தி ஒண்ணுமே பேசமாட்டேங்கறயே!"
"எனக்கு பயம்மா இருக்கு…" என்றான்.
"என்ன பயம்? ஏன் பயப்படறே? எதுக்கு பயம்?"
"உன்னை நினைச்சுத்தான்…"
"என்னைப் பிடிக்கலையா உனக்கு?"
"பிடிக்கிறது…"
"அப்புறம் என்ன?"
"உன் அளவு தைரியம் எனக்கில்லே. உன்னாலதான் என் பிரம்மசரியமே போச்சு. நீ கெட்டதுமில்லாம என்னையும் கெடுத்துட்டயே!"
"நான் கெடுத்தனா! நீயும் சம்மதப்பட்டுதானே கெட்டுப் போனே?"
"அந்த மாதிரி ஒரு நிலைல, உன் நிர்ப்பந்தத்துல நான் புத்தி மயங்கிப் போயிட்டேன்."
"இது ரெண்டு பேருமே சேர்ந்த செய்த குற்றம்தான். இதுக்கு நான் மட்டும்தான் காரணம்னு சொல்லாதே! நீயும்தான்! இதை நீ அப்பவே யோசிச்சிருக்கணும்!"
”எப்ப?”
"உன் எச்சிலை நாள் விழுங்கறப்பவும், என் எச்சிலை நீ விழுங்கறப்பவும்…"
”சே!”
உதடுகளை உள்ளங்கையால் துடைத்துக் கொண்டான்.
இச்சமயம் கனபாடிகள் முன்கட்டிலிருந்து "மூர்த்தி !" என்று குரல் கொடுக்கவே "இதோ வந்துட்டேன் !" என்று சொல்லிக் கொண்டே ஓடினான்.
"மூர்த்தி ! உன்கிட்ட நிறையப் பேசணும். முக்கியமான விஷயம். ராத்திரி நீ இங்கயே என் கூடவே படுத்துக்க" என்றார் கனபாடிகள்.
"அம்மாடி, பாகீரதியிடமிருந்து தப்பினேன்" என்று எண்ணிக் கொண்டான்.
அணில் குட்டி ஒன்று கனபாடிகளைச் சற்றிச் சுற்றி ஓடிக் கொண்டிருக்தது.
"ராமா, இங்க வாடா!" என்று அதைச் செல்லமாக அழைத்தார். அது ஓடி வந்து உரிமையோடு அவர் தோள் மீது ஏறி விளையாடியது.
"நீ போனப்புறம் இதுதான் எனக்கு செல்லப்பிள்ளை, இதை ஆசையோட வளர்க்கிறேன். பால் கொடுக்கிறேன். "ராமா, ராமா"ன்னு தினம் நூறு தடவை கூப்பிட்றேன். அதனால அந்த ராமன் பேரைச் சொல்ற புண்ணியம் கிடைக்கிறதே, அந்த ஒரு பலன்தான்! ஆனா இந்த அணிப் பிள்ளை கொள்ளி போடறதுக்கு உதவுமா? எனக்குச் சொந்தமா ஒரு பிள்ளை வேணாமா?" என்று வருத்தத்துடன் பெருமூச்செறிந்தார்.
கனபாடிகளின் பேச்சு மூர்த்தியைக் கண்கலங்கச் செய்தது.
"எனக்கு வயசாயிட்டுது, மூர்த்தி ! நான் இன்னும் ரொம்ப நாளைக்கு உயிரோட இருப்பேன்னு தோணலை. மனசுல எத்தனையோ விசாரங்கள். வெளியில சொல்லிக்க முடியாத துக்கங்கள். இன்னைக்குக் காலைலகூட அக்கிரகாரத்து பிராம்மணாளெல்லாம் கும்பலா வந்து ‘மழை இல்லாம ஊரே கஷ்டப்படறது. நீங்க வந்து விராடபர்வம் வாசிக்கணும்னு கேட்டுண்டா. நான் முடியாதுன்னுட்டேன். அவா என்னை பாய்காட் பண்ணப்போறதா பேசிண்ட சமாசாரமெல்லாம் உனக்குத் தெரிஞ்சிருக்கும். கிட்டா சொல்லியிருப்பானே! அவா வந்து போனதுலேந்து மனசே சரியாயில்லே. லேசா ஜூரம் வேற வீசறது. ராத்திரி எனக்கு எதுவுமே வேணாம். ரவாக் கஞ்சி மட்டும் பண்ணாப் போதும்னு சொல்லிடு. போ, பாகீரதியிடம் சொல்லிட்டு வந்துடு!" என்றார்.
மூர்த்தி சமையல் அறைக்குப் போய் "கனபாடிகளுக்கு உடம்பு சரியில்லை. "ராத்திரி ஆகாரம் எதுவும் வேண்டாம். ரவாக் கஞ்சி மட்டும் போதும்"னு சொல்லிட்டு வரச் சொன்னார்" என்றான்.
" நல்லவேளை ரவையும் சர்க்கரையும் தனித்தனியா டப்பாவில வச்சிருந்தேன். பூனை உருட்டி, அத்தனையும் கீழே கொட்டி, ரெண்டும் ஒண்ணாக் கலந்து போச்சு. அதைப் பிரிச்செடுக்க முடியாதே. அத்தனையும் வீணாப் போயிடுமே, என்ன பண்ணலாம்னு யோசனை பண்ணிண்டிருந்தேன். வழி கண்டு பிடிச்சாச்சு ரவாக் கஞ்சியாப் பண்ணிடலாமே! ஆக, இந்த உலகத்துல எது கெட்டுப் போனாலும் அதையே நல்லதா மாத்திடறதுக்கும் ஒரு வழி இல்லாமப் போகலேன்னு தெரியறது" என்றாள்.
பாகீரதி என்ன சொல்கிறாள், எதைக் குறிப்பிட்டுச் சொல்கிறாள் என்று மூர்த்திக்கு விளங்கி விட்டது!
"சரி, அப்பாவுக்கு ரவாக் கஞ்சி. உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு, ராவ்ஜியை பண்ணச் சொல்றேன்" என்றாள் பாகீரதி.
"எனக்குத் தனியா ஒண்ணும் வேணாம். பாடசாலைப் பசங்களோடு சேர்ந்து சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு, அவா என்ன சாப்பிட்றாளோ அதுவே போதும் " என்றான்.
"கிட்டப்பா லெட்டர் கொடுத்தனுப்பியிருக்கார்னு சொன்னயே? என்ன எழுதியிருக்கார் தெரியுமா?"
"எனக்கெப்படி தெரியும்?"
மூர்த்தி எதற்குமே பிடிகொடுக்காமல் பேசியது பாகீரதிக்குச் சற்று எரிச்சலாயிருந்தது.
"நீ ரொம்ப மாறிட்டே மூர்த்தி !நான் உன்னையே நினைச்சு நினைச்சு உருகிண்டிருக்கேன். நீயானால் என்கிட்ட அக்கறை இல்லாம அலட்சியமாப் பேசிண்டிருக்கே, என் மனசை நீ புரிஞ்சுக்கலை. உன் மாதிரி என்னால உறவை வெட்டிக்க முடியலை. உனக்கு யாரோ சொக்குப் பொடி போட்டு நன்னா மயக்கி வெச்சிருக்கா. அந்தக் கழைக்கூத்தாடிப் பெண்தானே?" என்று அழ ஆரம்பித்து விட்டாள் பாகீரதி.
”கனபாடிகள் எனக்காகக் காத்துண்டிருப்பார். நான் போறேன்" என்று சொல்லிவிட்டு நழுவினான் மூர்த்தி.
அன்றிரவு அழுக்கு கடிகாரத்தில் மணி பதினொன்று அடிக்கும் வரை கனபாடிகள் பேசிக்கொண்டேயிருந்தார்.
"மூர்த்தி! நீ என்னை மறந்தாலும், யாரை மறந்தாலும் வேதத்தை மறக்காம இருக்கயே, அதை நினைச்சு ரொம்ப பெருமைப்படறேன். வேதம்தான் நமக்கெல்லாம் வழிகாட்டி. அந்த ஒளி விளக்கை நாம அணையவிடக் கூடாது. ரிஷிகள் தங்கள் தபோ பலத்தின் சக்தியால் வான வெளியில் சப்தரூபமாக உலவும் வேத மந்திரங்களை கிரகித்து இந்த பிரபஞ்சத்துக்கு வழங்கியிருக்கா. ஆனா இந்த மந்திரங்களை உண்டாக்கியவா ரிஷிகள் அல்ல. அவர்கள் கிரகித்துத் தந்தவர்கள்தான். வேதம் அனாதியானது, அதற்கு மூல புருஷன் யாரும் கிடையாது. ‘அபெளருஷேய’ என்றுதான் சொல்வார்கள்”.
காலம் காலமாக ஒலி வடிவமாகவே காப்பாற்றப்பட்டு வரும் வேதத்தைப் போற்றி வளர்ப்பவர்களைத்தான் ‘வேதவித்து’ என்கிறார்கள். வித்துக்கள் இல்லையென்றால் பயிர்கள் இல்லை. பயிர்கள் தழைக்க வித்துக்கள் அவசியம். அதைப்போல வேத வித்துக்கள் நசித்துப் போனால் வேதமே தழைக்காமல் போய் விடும். நீ இந்தப் புனிதமான பணியைப் பாதில விட்டுவிடாதே" என்றார்.
மூர்த்தி உணர்ச்சி வசப்பட்டான்.
“மனதிலே பூட்டி வைத்துள்ள ரகசியங்களையெல்லாம் அக்கணமே அவர் எதிரில் கொட்டிவிடலாமா?" என்று யோசித்தான். ஆனாலும் சொல்லாமல் கட்டுப்படுத்திக் கொண்டான்.
"மூர்த்தி, என் அந்திம காலத்துக்கு உதவியாக உன்னை என் புத்திரனாக ஸ்வீகாரம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று எண்ணியிருந்தேன். உன் அப்பா உன்னை என்னிடம் அழைத்து வந்து ஒப்படைத்தபோதே இதற்கு அவருடைய சம்மதத்தையும் பெற்றிருந்தேன். ‘இனி அவனுக்கு மாதா, பிதா, குரு, தெய்வம் எல்லாம் நீங்கதான்’ என்று சொல்லிட்டுப் போனார். இதை உன்னிடம் சமயம் வாய்க்கும்போது சொல்லி உன்னை என் புத்திரனாக்கிக்கொள்ளும் காலத்தை எதிர்நோக்கியிருந்தேன். ஆனா இப்ப கிட்டப்பா எழுதியுள்ள கடிதத்தைப் படிச்சப்புறம் அந்த எண்ணத்தை அடியோட மாத்திக்கொண்டு விட்டேன்" என்று கூறியவர் "இந்தா, கிட்டப்பா என்ன எழுதியிருக்கார்னு நீயே படிச்சுப்பார்" என்று அந்தக் கடிதத்தை மூர்த்தியிடம் தந்தார் கனபாடிகள்.
----
18.
கனபாடிகள் தந்த கடிதத்தை மூர்த்தி மெளனமாகவே படிக்கவும், "உரக்கவே வாசிக்கலாம், பரவாயில்லை" என்றார்.
“உரக்கவா? எதுக்கு?" என்று யோசித்துவிட்டு உரக்க வாசிக்கத் தொடங்கினான்.
சங்கர கனபாடிகளுக்கு கிட்டப்பா சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணி எழுதிக்கொண்டது –
கலியாணத்துக்குத் தாங்கள் வருவீர்கள் என்று ஆவலோடு எதிர்பார்த்தேன். ஏதோ இக்கட்டான நிலை காரணமாகத் தங்களால் வர முடியவில்லை என்று கிட்டா மூலம் அறிந்து கொண்டேன்.
மூர்த்தி இங்கேயே சப்தரிஷி பாடசாலையில் சேர்ந்து விட்டான். அவனைப் பற்றிய கவலை வேண்டாம். மிக உத்தமமான பையன். சமையல் வேலைக்கு ஆள் தேவை என்று கடிதம் எழுதியிருந்தீர்கள்.
ஆனந்தராவ் என்பவரை அனுப்பியிருக்கிறேன். ரொம்ப சாதுவான மனிதர். நளபாகமாய்ச் சமைப்பார். அவருக்குத் துணையாக மூர்த்தி வருகிறான்.
நிற்க, சிதம்பரத்திலுள்ள தங்கள் சகோதரி கெளரி அம்மாளும் அவள் புருஷனும் இங்கே வந்திருந்தார்கள். ஒரு நல்ல பிள்ளையாகப் பார்த்து சுவீகாரம் எடுத்துக்கொள்ளப் போகிறார்களாம். "உங்க சப்தரிஷி வேதபாடசாலையில் யாராவது பொருத்தமான பையன் இருக்கானா?" என்று கேட்டார்கள்.
"வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவானேன்? நம்ப மூர்த்தி இருக்கானே, அவனையே தத்து எடுத்துகொள்ளலாமே!" என்று யோசனை சொன்னேன். அவர்களுக்குப் பரம சந்தோஷம். ஒருவேளை நீங்களே இப்படி ஒரு எண்ணம் வைத்திருக்கலாம், மூர்த்தியை சுவீகார புத்திரனாக்கிக் கொள்ளும் அபிப்ராயம் உங்களுக்கே இருக்கலாம் என்று நினைக்கிறார்கள். எதற்கும் உங்களை ஒரு வார்த்தை கேட்டு விட்டுப் பிறகுதான் முடிவு செய்ய வேண்டும் என்று சொல்லி விட்டுப் போயிருக்கிறார்கள். இதுபற்றி அவர்களிருவரும் தங்களிடம் பேசுவதற்கு அச்சப்படுவதால் அவர்கள் சார்பில் நானே இக்கடிதம் எழுதுகிறேன். உங்கள் அபிப்ராயம் தெரிந்த பிறகு தான் மேற்கொண்டு ஆக வேண்டியதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.
அடியேன் ஏதேனும் அதிகப் பிரசங்கித்தனமாக எழுதி யிருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன்.
இப்படிக்கு,
சாஷ்டாங்க நமஸ்காரங்களுடன்,
கிட்டப்பா.
கனபாடிகள் சற்றுநேரம் கண்களை முடி யோசித்தபின் ஒரு முடிவுக்கு வந்தவராய் ‘ம். அப்புறம்?’ என்று தனக்குத்தானே கேட்டுக்கொண்டு ஈரத் துணியால் உடம்பைத் துடைத்துக் கொண்டார். "ஒரே புழுக்கமாயிருக்குடா ! விசிறி எடுத்துண்டு வந்து கொஞ்சம் வீசறயா?" என்று கேட்டார். மூர்த்தி ஓடிப்போய் விசிறி எடுத்து வந்து வீசத் தொடங்கினான்.
"நீ என்ன நினைக்கிறே மூர்த்தி?" என்று அவனை சம அந்தஸ்தில் உயர்த்தி வைத்துக் கேட்டார் கனபாடிகள்.
"இதல நான் நினைக்கறதுக்கு ஒண்ணுமில்லை. நீங்க எது சொன்னாலும் அதுவே எனக்கு வேத வாக்கு. உங்க இஷ்டப்படி நடந்துக்குவேன்" என்றான்.
"சரி, கெளரி ஆசைப்படறாளாம். அவளுக்கும் புத்திர பாக்கியம் இல்லே. உனக்கு சம்மதம்னா கிட்டப்பாவுக்கு லெட்டர் எழுதித் தரேன். நீ நாளைக்கே புறப்பட்டுப் போகலாம்"
கனபாடிகளுக்குத் தூக்கம் வரும்வரை வீசிக்கொண்டிருந்துவிட்டு அப்புறம்தான் படுத்தான்.
பொழுது விடிந்ததும் ஆற்றங்கரைப் பிள்ளையார் கோவில் ஞாபகம் வந்துவிட்டது அவனுக்கு. ஆற்றையும் கோவிலையும் ஒரு முறை பார்த்துவிட்டு வரவேண்டும் போல் ஆசையாக இருந்தது.
"ஆற்றுக்குப் போய் ஸ்நானம் பண்ணிட்டு அப்படியே பூஜைக்கு ஜலம் கொண்டு வரட்டுமா? கிட்டாகூட ஊரில் இல்லையே!"என்று பாகீரதியிடம் கேட்டான்.
அவள் குடத்தைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு "அப்படியே தஞ்சாவூர் போயிடயாட்டயே!" என்று கேலியாகக் கேட்டுச் சிரித்தாள்.
அவன் ஆற்றங்கரை படித்துறையில் போய் நின்று பார்த்த போது அந்த இடம் பாலைவனமாய்க் காட்சி அளித்தது. பசுமையெல்லாம் போய் காய்ந்து கிடந்த கரையோரப் புதர்களை ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன.
ஆற்றுக்கு நடுவே பெரிதாகப் பள்ளம் வெட்டி ஊற்றெடுத் திருக்தார்கள். அந்தத் தேக்கத்திலிருந்து ஓடிய வாய்க்கால் ஒரு பட்டத்தின் வால்போல் தெரிந்தது.
இதே படித்துறையில் அன்று வெள்ளத்தில் சிக்கித் திணறியபோது தன்னைக் காப்பாற்றிய மஞ்சவின் நினைவு தோன்ற ‘பாவம் மஞ்சுவிடம் சரியாகக்கூடப் பேசாமல் வந்து விட்டேன்’. ‘சர்க்கஸ் கம்பெனியில் சேரலாமா?’ என்று அவள் கேட்டபோது அலட்சியமாக ‘அது உன் இஷ்டம்’ என்று பதில் சொல்லிவிட்டு வந்து விட்டேன். ரத்தம் கொடுத்துவிட்டதால் நன்றிக்கடன் தீர்ந்து விட்டதாக நான் நினைத்தது எத்தனை அகம்பாவம். கழைக்கூத்தாடிப் பெண் தான் என்றாலும் அவளுக்குள்ள பண்பும் பெருந்தன்மையும் எனக்கு இல்லையே! என்று எண்ணித் தன்னைத்தானே நொந்து கொண்டான்.
சாவகாசமாகத் தண்ணீரில் உட்கார்ந்துகொண்டு கைகளால் அளையத் தொடங்கினான். பிறகு மல்லாந்து படுத்து அந்த வெதவெதப்பான குளுமையில் நீண்ட நேரம் அமிழ்ந்திருந்த பின் எழுந்தான். அப்புறம் துணிகளை உலர்த்தி, திருநீறு அணிந்து, குடத்தில் நீர் நிரப்பிக் கொண்டதும் கரையேறி கோயிலுக்குப் போனான். பிள்ளையாரை வணங்கிவிட்டு நந்தவனம் சுற்றி பூக்களைத் தேடினான். ஒரே ஒரு நந்தியாவட்டைப்பூ அபூர்வமாய்ப் பூத்திருந்தது ! அதைப் பறித்துக் குடத்து நீரில் போட்டுக் கொண்டு பாடசாலை நோக்கி நடந்தான்.
"கனபாடிகள் என்னை எதுவுமே கேட்காமல் சகஜமாய்ப் பேசுகிறாரே ! கோபமோ வருத்தமோ எதுவுமே முகத்தில் காட்டிக் கொள்ளவில்லையே ! ஒருவேளை எல்லா சமாசாரங்களையும் தெரிஞ்சிண்டுதான் இப்படித் தெரியாததுபோல் இருக்காரோ?" என்று வியந்தான்.
கடிதத்தை அவர் உரக்கப் படிக்கச் சொன்னதற்குக்கூட ஏதாவது உள் அர்த்தம் இருக்க வேண்டும். அவர் மன ஆழத்தை யாராலும் கண்டுபிடிக்க முடியாது என்று எண்ணிக் கொண்டான்.
பூஜை முடிந்து, சாப்பிட்டானதும் கனபாடிகளை நமஸ்கரித்து "ஊருக்கு போயிட்டு வரேன்" என்று சொன்ன போது அவர் உள்ளே போய்ப் பெட்டியைத் திறந்து புத்தம் புது பட்டு வேட்டி ஒன்றை எடுத்து வந்தார்.
இந்தா, பிரம்மசாரிக்கு நாலு முழம் வேட்டி போதும். என்னிடம் இந்த எட்டு முழம் வேட்டிதான் இருக்கிறது. இப்போதைக்கு இதை இரண்டாக மடித்துக் கட்டிக்கொள். என் ஆசீர்வாதம் !" என்றார்.
"இப்போதைக்கு என்றால் அதற்கு என்ன அர்த்தம்?" என்று யோசித்தபடியே பின்கட்டுக்குப் போனான். அங்கே பாகீரதி கொடியில் துணி உலர்த்திக் கொண்டிருந்தாள்.
"போயிட்டு வரேன் பாகீரதி" என்று அவளிடம் சொல்லிக் கொண்டபோது அவள் கண்கள் பனித்திருப்பதைக் கண்டு "வருத்தமா?" என்று கேட்டான்.
"எனக்கு நீ அத்தை பிள்ளை ஆகப்போறயே, அந்த சந்தோஷம் !" என்றாள் பாகீரதி!
"உனக்கெப்படி தெரியும்?"
"ராத்திரி லெட்டரை உரக்கப் படிக்கச் சொன்னாரே, அப்பா! எல்லாத்தையும் கேட்டுண்டுதான் இருந்தேன்" என்றாள்.
"ஒகோ! நீ கேட்கணுங்கறதுக்குத்தான் உரக்கப் படிக்கச் சொன்னார் போலிருக்கு. இப்பத்தான் புரியறது!" என்றான்.
"வந்ததும் வராததுமாக் கிளம்பிட்டயே ! அப்படி என்ன அவசரம்? அந்தக் கூத்தாடிப் பெண் முகம் மறந்து போச்சோ?" என்று குத்தலாய்க் கேட்டாள் பாகீரதி.
"அவள் ரொம்ப நல்ல பெண். நீ நினைக்கிற மாதிரி யெல்லாம் இல்லே" என்று சொல்லிவிட்டு அவசரமாய்க் கிளம்பிவிட்டான்.
தஞ்சாவூர் போய்ச் சேர்ந்ததுமே கனபாடிகள் எழுதித் தந்த கடிதத்தைக் கிட்டப்பாவிடம் கொடுத்தான்.
அதை அவர் பிரித்துப் படித்தார்.
"கிட்டப்பாவுக்கு ஆசீர்வாதம். உன் கடிதம் படித்தேன். எனக்குப் பூரண சம்மதமே. கெளரி விருப்பப்படியே நடக்கட்டும். ததாஸ்து" என்று சுருக்கமாக எழுதியிருந்தார்.
"மூர்த்தி உனக்கு சமாசாரமெல்லாம் தெரியுமோ? கனபாடிகள் சொன்னாரா?" என்று கிட்டப்பா கேட்டார்.
"தெரியும்; உங்க லெட்டரை என்னிடமே கொடுத்துப் படிக்கச் சொன்னார்."
”படிச்சயா?"
"படிச்சேன்."
"கெளரிக்குப் பிள்ளையாகப் போறதுல உனக்குச் சம்மதம் தானே? கனபாடிகளுக்கு என்ன பதில் சொன்னே?"
"கிணத்துல விழச் சொன்னாலும் விழத்தயார்னு சொன்னேன்!"
"எல்லாக் கிணத்துலயும் இப்ப தண்ணியே இல்லாம வறண்டு கிடக்கே, அந்த தைரியமா!" என்று கேட்டுச் சிரித்தார் கிட்டப்பா.
அவனும் சிரித்தான்.
"சரி; கெளரி அத்தைக்கு இன்னைக்கே எழுதிப் போட்டுடறேன். சுபஸ்ய சீக்கிரம் !" என்றார் கிட்டப்பா,
"நான் பாடசாலைக்குப் போகட்டுமா?" என்று கேட்டான் மூர்த்தி.
"கொஞ்சம் இரு. முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டனே ! நேத்து அந்தக் கழைக்கூத்தாடிப் பெண் உன்னைப் பார்க்க வந்திருந்தாள். "என்ன சமாசாரம்?"ணு கேட்டேன். யாரோ சர்க்கஸ்காரனாமே, அவன் அடிக்கடி வந்து அவளை சர்க்கஸ்ல சேரச் சொல்லி தொந்தரவு பண்றானாம். ‘மூர்த்தி சம்மதிச்சாத்தான் சேருவேன்’னு பதில் சொல்லிட்டானாம்.
"அப்படி என்ன உறவு உனக்கும் அந்தக் குடுமிக்காரப் பையனுக்கும்?"னு கேட்டுச் சண்டை போட்றானாம் அவன். அடிக்கடி வந்து ‘அந்தக் குடுமிக்காரப் பையனை ஒழிச்சுக் கட்டிடறேன் பார்’னு கலாட்டா பண்றானாம். குடிகாரனாயிருப்பான் போலிருக்கு மூர்த்தி வந்தால் ஜாக்கிரதையா இருக்கச் சொல்லுங்க, அவருக்கு ஏதாச்சும் ஆயிட்டுதுன்னா அதை என்னால தாங்கிக்க முடியாதுன்னு என்கிட்டே வந்து அழுதாள். யாருப்பா அந்த சர்க்கஸ்காரன்?" என்று கேட்டார் கிட்டப்பா.
----------
19.
ஊர் ஓரத்து தென்னக் தோப்பில் மஞ்சு ‘கவாத்து’ பழகிக்கொண்டிருந்தபோது மூர்த்தி அங்கே போய் நின்றான்.
"உனக்கெப்படி தெரிந்த து இந்த இடம். யார் சொன்னாங்க?" என்று கேட்டாள் மஞ்சு.
"உங்க அப்பாதான் சொன்னார்?" என்றான் மூர்த்தி.
"அந்த சர்க்கஸ் ஆள் உன்னை ‘குத்தப் போறேன், வெட்டப் போறேன்’னு சொல்லிட்டிருக்கானே!"
"யார் அந்த கேரளாக்காரனா? அவனுக்கு என் மேல என்ன கோபம்?"
"பொறாமைதான்; நீ என்னோட அன்பாப் பேசறது, பழகறது, என் குடும்பத்துல ஒருத்தன் மாதிரி நடந்துக்கறதெல்லாம் அவனுக்குப் பிடிக்கலே!"
”ஏன்?”
"என்னைக் கட்டிக்கற உரிமை அவனுக்குத்தான் இருக்காம். அவனும் எங்களைப் போல குஜராத்லேந்து வந்தவனாம்!"
"அட நீ குஜராத்திப் பெண்ணா! சொல்லவே இல்லையே!"
"நாங்க மொத்தம் அஞ்சு குடும்பம், ரெண்டு தலைமுறைக்கு முன்னால தஞ்சாவூர்லதான் குடியேறினோம். கழைக்கூத்துதான் எங்க தொழில், உறவுவிட்டுப் போகாம எங்களுக்குள்ளயே கல்யாணம் செஞ்சுக்குவம்.“
"அந்தக் குடுமிக்காரப் பையனோட உனக்கென்ன சிநேகம்? உனக்கும் அவனுக்கும் என்ன உறவு?"ன்னு சண்டை போடறான். என்னை சர்க்கஸ்ல சேரச் சொல்லி ஒத்தக் கால்ல நிக்கறான் !"
”சரி; நீ என்ன செய்யப் போறே?"
"எனக்கு அவனைப் பிடிக்கலே."
"அழகாத்தானே இருக்கான்?"
"அழகு இருந்துட்டாப் போதுமா? மனசுல அழுக்கா இருக்கானே!"
"அவனை நீ கல்யாணம் செஞ்சிண்டா அப்புறம் நல்லவனாயிடுவான் !"
மூர்த்தியிடமிருந்து இம்மாதிரி ஒரு பதிலை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. துக்கம் தொண்டையை அடைக்க, "இதுக்குத்தான் இத்தனை நாளும் உள்னோட அன்பாப் பழகினேனா? உன் மேல நான் உயிரையே வெச்சிருந்ததுக்கு இதுதான் முடிவா?" என்று கேட்டாள்.
"நம்ம நட்புக்கு முடிவு கல்யாணமாத்தான் இருக்கணும்னு நான் நினைக்கலே , நீ குஜராத்திப் பெண். நான் பிராம்மணன். எனக்கு வேதம்தான் முக்கியம். ஏதோ வெளியே சொல்லிக்க முடியாத நிர்ப்பந்தத்துல நான் இருந்த ஊரைவிட்டு வரவேண்டியதாப் போச்சு. வந்த இடத்துல எதேச்சையா சந்திச்சோம். அன்பாப் பழகினோம். இப்ப என் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டிருக்கு, கிட்டப்பா புண்ணியத்தாலே மறுபடியும் எனக்கு வேதம் ஓதற வாய்ப்பு கிடைச்சிருக்கு."
"நீ வேதத்தை தொடர்ந்து ஓதணுங்கறதுதான் என்னுடைய ஆசையும். அதுக்கு நான் இடைஞ்சலாயிருக்க விரும்பலே, எங்க அப்பவுக்கப்புறம் எனக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லயே; உன்னைக் கலியாணம் செஞ்சுட்டா என் வாழ்க்கை நிம்மதியாயிடும்னு நினைச்சேன், பரவாயில்லை; என் சுய கலத்துக்காக உன் எதிர்காலத்தைப் பாழடிக்கறது நியாயமாப் படலே. நீ வேதம் படிச்சுப் பெரியவனா ஆகணுங்கறதுதான் என் ஆசையும்."
"நீ அப்படியும் பேசற; இப்படியும் பேசறே! ஏன், எதனாலன்னு புரியலை. ஆச்சரியமாயிருக்கு."
"இப்ப என் உடம்பிலே உன் ரத்தமும் சேர்ந்து ஒடுதே! ஒரு வேளை அதனால இருக்குமோ, என்னவோ?"
"அப்படின்னா நீ?..."
"எனக்கு ஒண்ணும் புரியலே. என்ன செய்யறதுன்னும் தெரியலே."
"பயப்படாதே அந்த சர்க்கஸ்காரனை நல்லவனா மாத்திடலாம். நீயும் சர்க்கஸ்ல சேர்ந்துடு, இது வரைக்கும் அவனுக்கு லைஸன்ஸே கொடுக்கலையாம். கிட்டப்பாதான் லைஸன்ஸ் கொடுக்கணுமாம். அவரே சொன்னார். அவர்தான் இந்த ஊர் முனிசபல் சேர்மனாம். மழை இல்லாம பயிர் பச்சை யெல்லாம் வாடி ஜனங்க ரொம்ப கஷ்டப்படறாங்களே, இந்த சமயத்துல சர்க்கஸுக்கு அனுமதி கொடுத்தா ஜனங்ககிட்ட இருக்கிற கொஞ்சநஞ்சம் காசும் போயிடுமேன்னு யோசிக்கிறாராம்”
"அப்படியா? லைஸன்ஸ் கொடுக்கலேன்னா அந்த ஆள் தாக்குப்பிடிக்க முடியாம ஊரைவிட்டே ஓடிடுவான் !"
"சே, பாவம் ! சர்க்கஸ் மிருகங்களெல்லாம் பட்டினி கிடந்து செத்துப் போயிடுமே! அத்தனைக்கும் தீனி போட பணத்துக்கு எங்க போவான்?" என்று பரிதாபப்பட்டான் மூர்த்தி.
"உன்னை என்னால புரிஞ்சுக்கவே முடியலே, மூர்த்தி! அந்த ஆள் உனக்குக் கெடுதல் நினைக்கிறான். நீயானா அவனுக்கு நல்லது நினைக்கிறே!"
"நமக்கு இன்னொருத்தர் தீங்கு நினைச்சாலும் நாம அவங்களுக்கு நல்லதுதான் செய்யணும். அப்படி செய்யலேன்னா குறள் படிச்சு என்ன பிரயோஜனம்? சேர்மனிடம் பேசி எப்படியும் லைஸன்ஸ் வாங்கிக் கொடுக்கப் போறேன். அந்த சர்க்கஸ் ஆளை கிட்டப்பா வீட்டுக்கு இப்பவே வரச் சொல்லு. நான் அங்கயே அவனுக்காக காத்துண்டிருப்பேன்" என்றான்.
இந்தச் சமயம் அருகிலிருந்த வைக்கோல் போரிலிருந்து வந்த பாம்பைக் கண்டு பதறிப் போன மஞ்சு "ஐயோ" என்று அலறினாள். பெரிய கல் ஒன்றை எடுத்து அதன் மீது எறியப் போனாள்.
“வேணாம். பாம்பை அடிக்காதே, அது பாவம்" என்று தடுத்தான் மூர்த்தி.
"சும்மாவிட்டா, அப்புறம் அது நம்மையே கடிக்கும்."
"கடிச்சா நான் மந்திரம் போட்டு விஷத்தை இறக்கிடறேன். கனபாடிகள் எனக்கு கத்துக் கொடுத்திருக்கார்."
"இந்த முர்த்தி ஏன் இவ்வளவு நல்லவனாயிருக்கார்! கடிக்க வர பாம்பை அடிக்கக் கூடாது என்கிறார். கொல்ல வர ஆளுக்கு நல்லது செய்யப் போறேங்கறார். என்னால இவரைப் புரிஞ்சுக்கவே முடியலே !" என்று மனதுக்குள் வியந்தாள். மஞ்சுவின் உள்ளத்தில் மூர்த்தி விசுவரூபமாய் உயர்ந்து நின்றான்.
மூர்த்தி எதிரில் வந்து நின்றதைக்கூட கவனிக்காமல் கிட்டப்பா சுதேசமித்திரனில் மூழ்கியிருந்தார். ஒருமுறை கனைத்து, தான் வந்திருப்பதை சூசகமாகக் காட்டிக்கொண்டான் மூர்த்தி.
"அட, நீயா! வா" என்றவர் "பேப்பர்ல பாத்தயா? பஞ்சம் வந்தாலும் வரும்னு போட்டிருக்கான். இப்படி மழையே இல்லாமப்போனா அப்புறம் ஜனங்க ரொம்பக் கஷ்டப்படுவா. கனபாடிகளை அழைச்சுண்டு வந்து விராடபர்வம் வாசிக்கச் சொல்லலாமான்னு யோசிக்கிறேன்" என்றார் கிட்டப்பா.
"அவருக்கு உடம்பே சரியில்லையே. உள்ளூர்லயே விராட பர்வம் வாசிக்கணும்னு ஊரார் வந்து கேட்டுண்டாளாம்; முடியாதுன்னு சொல்லிட்டாராம். பாகீரதி சொன்னாள்" என்றான் மூர்த்தி.
"பாவம், இந்த வயசான காலத்துல பாகீரதி விசாரமே பாதி அவருக்கு" என்றார் கிட்டப்பா.
"உங்க கிட்ட, ஒரு சின்ன உதவி…"
"முதல் முதல் உதவி கேக்கறே, பெரிய உதவியாத்தான் கேளேன்!" என்றார் கிட்டப்பா.
"இதுவே பெரிய உதவிதான். சர்க்கஸுக்கு லைஸன்ஸ் இல்லேன்னு சொல்லிட்டேளாம். பாவம், யானை சிங்கமெல்லாம் பட்டினியாக் கிடக்கறதாம். தீனி வாங்கிப் போட பணமில்லாம திண்டாடறானாம் அந்த சர்க்கஸ் ஆள். நீங்கதான் காப்பாத்தணும் அவனை" என்றான் மூர்த்தி.
"என்ன சொல்ற நீ1 அந்த துஷ்டனுக்கா உதவி பண்ணச் சொல்றே?"
"இப்ப நீங்க உதவி பண்ணலேன்னா அத்தனை பேரும் பட்டினி கிடந்து சாகவேண்டியதுதான். சர்க்கஸ் கூடாரமே காத்துல பறந்திண்டிருக்கு" என்றான்.
அதோ, அவனே வரான் போலிருக்கே!"என்றார் கிட்டப்பா.
வந்தவன், "ஐயா என்னைக் காப்பாத்துங்க" என்று உணர்ச்சிவசமாகச் சொல்லிவிட்டு கிட்டப்பாவின் காலில் விழுந்தான்.
"முதல்ல இவர் காலில் விழு. அப்புறம்தான் மற்றதெல்லாம்…" என்றார் கிட்டப்பா.
"தவறா நினைச்சு கோவத்துல ஏதேதோ பேசிட்டேன். எவ்வளவு நல்லவர்னு இப்பத்தான் தெரியுது. என்னை மன்னிச்சுடுங்க மூர்த்தி!" என்று மூர்த்தியின் காலில் விழப் போனான்.
"வேணாம். வேணாம், பெரியவருக்குப் பண்ணாப் போதும்" என்று ஒதுங்கி நின்றான் மூர்த்தி.
"உன் பேர் என்னப்பா சொன்னே?" என்று கேட்டார் கிட்டப்பா.
"துக்காராம்…" என்றான்.
"அவர் ரொம்ப சாதுவாச்சே! அவர் பேரை வெச்சுண்டு நீ நேர்மாறா நடந்துக்கறயே" என்றார் கிட்டப்பா,
அவன் தலைகுனிந்து வெட்கப்பட்டான்.
"இனிமே குடிக்கமாட்டயே?"
"சத்தியமா குடிக்கமாட்டேங்க" என்றான்.
"சத்தியத்தை மீறிக் குடிச்சயானா தொலைச்சுப்புடுவேன், ஜாக்கிரதை ஒரு நல்ல நாளாப் பார்த்து சர்க்கஸை ஆரம்பிச்சடு. டிக்கட் ரேட்டைக் குறைச்சு வை, லைஸன்ஸ் தரச் சொல்றேன்" என்று சொல்லி அனுப்பினார் கிட்டா.
அந்த மகிழ்ச்சியில் அவன் எதுவும் பேசத் தோன்றாமல் வாயடைத்து நின்றான்.
”இன்னும் ஏன் நிக்கறே? புறப்படு" என்றார் கிட்டப்பா.
"உங்க உதவிக்கு நான் எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலே. என் நன்றிக்கு அடையாளமா ஏதாவது…"
"என்ன செய்யப்போறே?"
"ஒரு யானையே வேணுமானாலும் கொடுத்துடறேங்க."
"ஏன்? அதைக் கட்டித் தினிபோட முடியலையோ? என் தலைல கட்டிடலாம்னு பாக்கறயா! வேணாம்; நன்றி மனசுல இருந்தாப் போதும். முக்கியமா மூர்த்திக்குத்தான் நீ நன்றி செலுத்தணும். மூர்த்திகிட்ட மரியாதைய நடந்துக்க. அது போதும்" என்றார்.
"அடுத்த ஞாயிற்றுக்கிழமையே ஆரம்பிச்சடறேன். நீங்க ரெண்டு பேரும்தான் வந்து தொடங்கி வைக்கணும்!" குரலில் மகிழ்ச்சி பொங்கக் கூறிக்கொண்டே கையெடுத்துக் கும்பிட்டான் துக்காராம்.
20.
காலையிலிருந்து பாகீரதிக்கு அத்தையின் ஞாபகமாகவே இருந்தது.
"அத்தைக்குத்தான் என் பேர்ல எத்தனை அன்பு! ஊருலேந்து அக்கறையா தாழம்பூ கொண்டு வந்து தலைபின்னி அழகு பார்த்தாளே! அந்தத் துணிச்சலும், அப்பாவை எதிர்த்துப் பேசிச் சமாளிக்கிற தைரியமும் வேறு யாருக்கு வரும்?
"அத்தை இன்னொரு முறை அந்த மாதிரி எனக்குத் தலைபின்னி விட மாட்டாளா? மூர்த்தி எதேச்சையா வந்து என் அலங்காரத்தைப் பார்த்து ரசிக்கமாட்டானா?" என்று உள்ளுக்குள் கொழுந்துவிட்டிருந்த ஆசைக்குக் கற்பனை வடிவம் கொடுத்துப் பார்த்தாள்.
சமையல் கட்டிலிருந்து, நெய் வாசனையும் தாளிப்பு நெடியும் வீடு முழுதும் கமகமத்தது. ராவ்ஜி சமையல்!
கனபாடிகள் "ராமா!" என்று அணில் பிள்ளையைப் பால் குடிக்க அழைத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த கிட்டா "காஞ்சீபுரம் சம்பந்தியாத்துக்காரா உங்களுக்கு அரும்பாக்கம் லேகியம் கொடுத்தனுப்பிருக்கா. தலை சுத்தல், தள்ளாமை எல்லாம் போயிடுமாம்!" என்றான்.
"அரும்பாக்கம் வைத்தியருக்கே இப்ப என் வயசு ஆயிருக்குமே!" என்று சொல்லிக் கொண்டே டப்பாவைத் திறந்து கொஞ்சம் லேகியம் உருட்டிச் சாப்பிட்டார்.
"நான் இல்லாதப்ப மூர்த்தி வந்திருந்தானாமே?" கிட்டா கேட்டான்.
"ஆமாம்; சமையல் ராவ்ஜியை அழைச்சுண்டு வந்தான். உங்க மாமா, கிட்டப்பா லெட்டர் கொடுத்தனுப்பிருந்தார். கெளரி மூர்த்தியை தத்தெடுத்துக்க ஆசைப்படறளாம். என் அபிப்ராயம் என்னன்னு கேட்டிருந்தார், எனக்குப் பூர்ண சம்மதம்னு பதில் எழுதி மூர்த்தியிடமே கொடுத்தனுப்பிட்டேன்."
"மூர்த்தி தஞ்சாவூர்லயேதான் வேதம் படிக்கப் போறானா? இங்கே வரமாட்டானா?" என்று கேட்டான் கிட்டா,
"என்ன சொன்னே? வேதம் படிக்க…" என்று இழுத்தார் கனபாடிகள்.
"படிக்கப் போறானான்னு கேட்டேன்."
"வேதம் படிக்கிறதுன்னு சொல்லக் கூடாது. ஓதறதுன்னு சொல்லணும்; எழுதப்பட்டதைத்தான் படிக்கலாம். ஒலியை ஓதணும். மிருதங்கம் அடிக்கிறான்னு சொல்லக் கூடாது. வாசிக்கிறான்னு சொல்லணும்,"
வாசலில் வந்து நின்ற ஜட்காவிலிருந்து அத்தையும் அவள் கணவர் அருணாசலமும் இறங்கி வந்தார்கள்.
பட்டுப் புடவையும் காசு மாலையும் பளபளக்க முக மலர்ச்சியோடு வந்து நின்ற பணக்கார அத்தையை பாகீரதி அப்படியே தழுவிக்கொண்டு "வாங்க அத்தை ! கார்த்தால் லேந்து உங்க நினைவுதான். உங்களுக்கு ஆயுசு நூறு !" குதூகலம் பொங்க வரவேற்றாள் பாகீரதி.
"கையில என்ன அது செம்பு!" என்று கேட்டான் கிட்டா.
"கங்கைச் செம்பு, தெரிஞ்சவா காசியாத்திரை போயிருந்தா, அவா கொண்டு வந்து கொடுத்தா. புண்ணிய தீர்த்தம். அண்ணாவுக்குக் கொடுக்கலாம்னு கொண்டு வந்தேன்" என்றாள் கெளரி அத்தை.
"இதுக்குப் பதிலா ஒரு குடம் தண்ணி கொண்டு வந்திருந்தா ரொம்ப உபயோகமாயிருக்கும்" என்றான் கிட்டா.
"தண்ணிக்கு அவ்வளவு பஞ்சம் வந்துட்டுதா, இங்கே? சிதம்பரத்துல பரவாயில்லே" என்றாள் கெளரி.
"பஸ் லேட்டோ?" என்று கேட்டார் கனபாடிகள்.
"ஆமாம்; நடு வழில பஞ்ச்சர்" என்றார் கெளரியின் கணவர்.
கல்கண்டு, திராட்சை, மாம்பழம், மாதுளம்பழம், வாழைப்பழம், வெற்றிலை பாக்கு எல்லாவற்றையும் ஒரு மூங்கில் தட்டில் வைத்து கனபாடிகள் காலில் விழுந்து "நமஸ்காரம் செய்து "ஆசீர்வாதம் பண்ணுங்க!" என்றனர் கெளரி தம்பதியர்.
"முகூர்த்தம் எப்ப வெச்சுக்கப் போறேள்?" என்று கேட்டு, அந்த ஒரு கேள்வியிலேயே சுவீகார சமாசாரம் பூராவும் மறுபடி ஒருமுறை பேச வேண்டிய அவசியமில்லாமல் செய்து விட்டார் கனபாடிகள்.
"உங்களுக்கு எப்ப வர செளகரியப்படுமோ, அப்ப வெச்சுக்கலாம்" என்றார் கெளரியின் கணவர்,
"சீக்கிரமே ஒரு நல்ல நாள் பார்த்து நடத்திடவேண்டியதுதான்!" என்றார் கனபாடிகள்.
"நீங்க வரணும்; அதுதான் முக்கியம்."
"என்னால முடியும்னு நினைக்கிறயா, கெளரி ! வரவர உடம்பு ரொம்ப பலகீனம் ஆயிண்டிருக்கே?"
"முகூர்த்தம் நடக்கறப்போ நீங்க இருக்கணும். காலைல வந்து மூர்த்தியை ஆசிர்வாதம் பண்ணிட்டு சாயந்திரமே திரும்பிடலாம். நாங்க ஒரு "ப்ளெஷர்" ஏற்பாடு பண்ணி அனுப்பறோம்" என்றார் கெளரியின் கணவர்.
"கிட்டா, அந்த பஞ்சாங்கத்தை எடு" என்றார் கனபாடிகள்.
கிட்டா பஞ்சாங்கம் கொண்டு வந்தான்.
அதைப் புரட்டி, "அசுவனி, பரணி என்று நட்சத்திரங்களை விரல் விட்டு எண்ணி, "மூர்த்திக்கு மூல நட்சத்திரம். ஆண் மூலம் அரசாளும்னு சொல்லுவா. அரசாளப் போறானோ இல்லையோ, அரசமரத்தை ஆண்டுண்டிருக்கான்" என்று சொல்லிச் சிரித்தார். அவர் இந்த மாதிரி சிரித்து ரொம்ப நாளாயிற்று.
"மூர்த்தியின் முழுப்பெயர் என்னன்னு தெரியலே." என்று இழுத்தார் கெளரியின் கணவர்.
"சாம்பமூர்த்தி. மூல நட்சத்திரத்துக்கு இந்த மாசம் பதிமூணாம் தேதி பொருத்தமாயிருக்கு" என்றார் கனபாடிகள்.
"பதிமூணுன்னா இன்னும் ஆறே நாள் தானே? அதுக்குள்ளே எல்லா ஏற்பாடும் பண்ணிட முடியுமா அண்ணா!" என்று கவலைப்பட்டாள் கெளரி.
"நீ என்ன கலியாணமா பண்ணப்போறே? சுவீகாரம் தானே? ரெண்டு மணி நேரத்துல முடிச்சுடலாம். ஏழெட்டு வைதிகாளைக் கூப்பிட்டா போதும். நான் வறேன். வெள்ளிக் கடை கிட்டப்பா வருவான். ஜாம்ஜாம்னு நடத்திடலாம். கார்த்தால ஒன்பது பத்தரை மிதுன லக்னம் முகூர்த்த நேரம்" என்றார் கனபாடிகள்.
"முகூர்த்தப் பத்திரிகையை உங்க கையாலயே எழுதி மஞ்சள் தடவி ஆசீர்வாதம் பண்ணிக் கொடுத்துட்டா, நாங்க சாயந்திரமே புறப்பட்டுடலாம்" என்றாள் கெளரி.
"நாலு மணிக்கு மேல புறப்படுங்க. ராகுகாலம், வெயில் ரெண்டுமே போயிடும்!"
"பாகீரதியை என்கூடவே அழைச்சுண்டு போறேன் அண்ணா! இடையிலே இன்னும் அஞ்சே நாள்தானே இருக்கு" என்றாள் கெளரி.
"அப்படிச் சொல்லு. அதுக்குத்தான் வந்தேன்னு சொல்லு ! செல்ல மருமாளாச்சே!" என்று மறுபடியும் சிரித்தார் கனபாடிகள்.
"அவளும் இந்த வீட்டில எத்தனை நாளைக்கு கூண்டுக் கிளி மாதிரி அடைஞ்சு கிடப்பா? இப்பத்தானே சந்தர்ப்பம். சமையல்காரரும் வந்தாச்சு, துணைக்கு கிட்டா வேற இருக்கான்."
"எல்லாத்தையும் யோசனை பண்ணின்டு ஒரு பிளானோடு தான் வந்திருக்கே!" என்றார் கனபாடிகள்.
"அண்ணா, உன்னோட ரொம்ப நாளாப் பேசனும்னு இருந்தேன். இப்பத்தான் அதுக்கு சந்தர்ப்பம் வாய்ச்சிருக்கு. பாகீரதி விஷயமாத்தான், உனக்கப்புறம் அவ கதி என்னன்னு யோசிச்சுப் பார்த்தயா? உன் காலத்துலயே, அந்தச் சின்னக் குழந்தைக்கு ஏதாவது ஒரு வழி செஞ்சுட வேணாமா?"
"அவள் தலையெழுத்து இப்படி ஆயிடுத்தே? அதை நம்மால மாத்தி எழுத முடியாதே"
"ஏன் முடியாது? மனசுவச்சா எழுதலாம்" என்றாள் கௌரி.
"நீ என்ன சொல்றே, கெளரி!"
"உனக்கப்புறம் அவளை யார் காப்பாத்தப் போறா? அதுக்கு யார் உத்தரவாதம்?
அதைப்பத்தி யோசிச்சயா? சின்ன வயசிலே கனபாடிகள் பொண்ணு நடுத்தெருவில நிக்கறாங்கற அபவாதத்துக்கு ஆளாகப் போறயா?"
“நீதான் இருக்கயேம்மா, அப்படி அனாதையாவா விட்டுடுவே?"
"நான் இருந்தாப் போதுமா? எனக்கும் வயசாறதே! நான் கவலைப்படறது எதைப் பத்தின்னு என்னால உடைச்சுப் பேச முடியலே, நான் சொல்றது உனக்குப் புரியும்னு நினைக்கறேன்."
"புரியறது. அவளுக்கு மறுபடியும் ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைக்கணுங்கறே, அதானே? அது என்னால முடியாது. சாஸ்திரத்துக்கு விரோதமா நான் எதுவும் செய்யமாட்டேன்."
"செஞ்சா என்ன ஆயிடும்?"
"கெளரி உனக்கு இவ்வளவு தைரியம் எப்படி வந்தது? என்னிட்டயா இப்படிப் பேசறே? ஊர் உலகம் ஒப்புக்குமா! ‘சாஸ்திரம் படிச்சவராம் ! யாகம் பண்ணவராம்! எல்லாருக்கும் சொல்லுமாம் பல்லி. தான் போய் கழுநீர்ப் பானையில் விழுமாம்கற கதையா கனபாடிகள் பண்ணிட்டார்’னு என்னை ஊர் ஏசாதா? காறித் துப்பாதா?"
"சரி; உனக்கப்புறம் அவாள்ளாம் வந்து உன் பொண்ணைக் காப்பாத்துவாளாமா? அதைக் கேளு; என்ன பதில் சொல்றா பாப்போம்."
"நீ அன்னைக்கு அவளுக்கு தாழம்பூ வெச்சு தலைபின்னி அழகு பார்த்தப்பவே நினைச்சேன். உன் மனசில ரொம்ப நாளா இப்படி ஒரு விபரீத ஆசை இருக்குன்னு எனக்கு அன்னைக்கே தெரிஞ்சு போச்சு!" என்றார்.
"இப்ப நான் சொல்றது உனக்கு அக்ரமமாத்தான் தோணும். நீயே நிதானமா யோசிச்சுப் பார்த்தா நியாயம் புலப்படும்!"
"இப்படி ஒரு அதர்மத்துக்கு நான் சம்மதிச்சா தெய்வம் என்னை சும்மா விடாது."
"என்ன பண்ணும்?"
"நரகத்துக்கு அனுப்பும்!"
"அனுப்பட்டுமே தெய்வம் கொடுக்கிற தண்டனை அதுதான்னா, பாகீரதியோட எதிர்கால வாழ்க்கைக்காக நீ அதை தாராளமா ஏத்துக்கலாம், பரவால்லே" என்றாள் கெளரி.
"நீ இந்த அளவுக்குப் பேசுவேன்னு நான் நினைக்கலே,”
கெளரிக்கும் அப்பாவுக்கும் நடந்த வாக்குவாதத்தை தூண் மறைவில் நின்று கேட்டுக் கொண்டிருந்த பாகீரதி "இந்த அத்தை ஒரு அதிசயப் பிறவிதான்! அப்பாவிடம் எத்தனை சாமர்த்தியமா வாதாடறாள். ஆனாலும் இந்த அத்தைக்கு ரொம்ப தைரியம் ஜாஸ்தி!" என்று மனசுக்குள் வியந்து கொண்டாள்.
அடுத்தகணம் "பாகீரதி நீ இன்னைக்கு சிதம்பரம் போகப் போறே ! நாளைக்கே அங்கு மூர்த்தி வருவான் ! அத்தை உனக்குத் தாழம்பூ வெச்சுத் தலைபின்னி விடுவா! காசு மாலையைக் கழற்றி உன் கழுத்துல் போடுவா! அந்த அலங்காரத்தை மூர்த்தி பார்ப்பான்" என்று அவள் உள் மனம் உற்சாகத்தில் விசிலடித்தது.
-------
21.
தெய்வம் கொடுக்கற தண்டனை அதுதான்னா, பாகீரதியோட எதிர்கால வாழ்க்கைக்காக நீ அதை தாராளமா ஏத்துக்கலாம், பரவாயில்லே."
கெளரியின் இந்த வார்த்தை கனபாடிகளின் மன அடிவாரத்தில் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தது.
"இப்ப நான் சொல்றது உனக்கு அக்ரமமாத்தான் தோணும். நீயே நிதானமா யோசிச்சுப் பார்த்தா நியாயம் புலப்படும்."
"உண்மைதான்; நியாயந்தான். பாகீரதியின் எதிர்காலம் பற்றி நான் தீர்க்கமா யோசிக்க வேண்டியதுதான்."
யோசித்தார்; இரவெல்லாம் யோசித்தார்.
தூக்கம் இல்லாமல் திண்ணையில் போய் உட்கார்ந்து தெருவில் போய் நின்று, முன்னும் பின்னும் நடந்து, ஆகாசத்தைப் பார்த்து...
நிலா வானம் நிர்மலமாய்த் தெரிந்தது. ஊரே உறக்கத்தில் ஆழ்ந்திருந்தது. தாகம் நெஞ்சை வறட்டியதால் வீட்டுக்குள் வந்து தண்ணீர் அருந்தினார். ஊஞ்சலில் உட்கார்ந்தார். கிட்டா அயர்ந்து குறட்டைவிட்டுக் கொண்டிருந்தான்.
"பாவம், ரொம்ப அலைச்சல் அவனுக்கு!"
செம்பில் ஐலம் எடுத்துக்கொண்டு கொல்லைப் பக்கம் போய், சாக்கடை ஓரமாக உட்கார்ந்து, சிறுநீர் உபாதையை முடித்துக்கொண்டு திரும்பினார். இருள் சூழ்ந்திருந்த மாட்டுக் கொட்டிலில் பசு மாட்டின் கண்கள் மட்டும் பளபளத்தன அதைப் பார்த்துக் கொண்டே வந்தவரின் கால்களைக் கீழே இருந்த வாளி ஒன்று பலமாகத் தாக்கவே, கனபாடிகள் வலி பொறுக்காமல் ‘அப்பா, ராமா!’ என்று அலறிக்கொண்டு கீழே விழுந்து விட்டார்.
‘ராமா’ என்ற கனபாடிகளின் குரல் கேட்டு அவர் வளர்ப்புச் செல்லம் அணில் குட்டி பயந்து போய், படபடத்து மூலைக்கு மூலை ஓடியது.
வாளிச் சத்தமும் கனபாடிகளின் அலறலும் கேட்டுப் பதறி எழுந்த ராவ்ஜியும் கிட்டாவும் ஓடிச் சென்று "கீழே விழுந்துட்டேளா? ஐயோ, என்ன ஆச்சு?" என்று கேட்டுக் கொண்டே கனபாடிகளைத் தூக்கி நிறுத்தினார்கள்.
"வாளி தடுக்கிட்டுதுடா,நல்ல அடி! ரொம்ப வலிக்கிறதுடா, கிட்டா! கால் வீங்கியிருக்கா பாரு!" என்று முனகினார் கனபாடிகள்.
இருவரும் அவரை கைத்தாங்கலாய் அணைத்துக்கொண்டு உள்ளே அழைத்துச் சென்றார்கள்.
எல்லா துக்கங்களும் சேர்ந்துகொள்ளவே கனபாடிகள் சின்னக் குழந்தைப்போல் அழத் தொடங்கி விட்டார்.
"சிதம்பரம் போய் வரமுடியுமான்னு சந்தேகமாயிருக்கு, கிட்டா ! இன்னும் நாலஞ்சு நாள்தான் இருக்கு. உடம்பில சக்தி குறைஞ்சு போச்சு. ஒரு சின்ன வலிகூடத் தாங்கிக்க முடியலே!" என்று வருத்தப்பட்டார்.
"இப்படி பட்டினிக் கிடந்தா உடம்பு என்னத்துக்கு ஆகும்?" என்றான் கிட்டா.
"இந்தாங்க இந்தப் பாலைக் குடியுங்க. சுடச்சுட காய்ச்சிண்டு வந்திருக்கேன்" என்று சொல்லி கனபாடிகளிடம் பாலைக் கொடுத்தார் ராவ்ஜி. அதை வாங்கிக் குடித்த பிறகுதான் கனபாடிகளுக்குக் கொஞ்சம் தெம்பு வந்தது. சற்று நேரத்துக் கெல்லாம் தூங்கிப் போனார்.
காலையில் எழுந்து கடிகாரத்தைப் பார்த்தவர் இவ்வளவு நேரமாவா தூங்கிட்டேன்! மணி ஒன்பது !" என்று தமக்குத் தாமே சொல்லிக் கொண்டு ஆச்சரியப்பட்டார். அடுத்தகணம் அடிப்பட்ட காலைப் பார்த்து, "ஸ்ஸ்! நன்னா வீங்கிப் போயிருக்கு !" என்றார்.
"நாளைக்குள் சரியாப் போயிடும். இன்னைக்கு நீங்க குளிக்க வேணாம். பேசாமல் படுத்துண்டே இருங்கோ" என்றான் கிட்டா.
"என்னால ஸ்நானம் பண்ணாமலும் இருக்க முடியாது; பூஜை பண்ணாமலும் இருக்க முடியாது. நான் போய் இதோ குளிச்சுட்டு வந்துடறேன்" என்று எழுந்தார். அந்த நேரம் பார்த்து கனபாடிகளைப் பார்க்க வாசலில் ஒரு பெரிய கூட்டம் வந்து நின்றது.
"விராடபர்வம் வாசிக்கணும்னு உங்களைக் கேட்டுக்கப் போறதா நேத்து அரசமரத்தடில கூட்டம் போட்டுப் பேசிண்டிருந்தா, அவாதான் வந்திருக்கா போலிருக்கு" என்றான் கிட்டா,
"ஓகோ, அப்படியா! பிரம்மணாள் மட்டுமா? குடியானவாளும் வந்திருக்காளா?" என்று கேட்டுவிட்டு அங்க வஸ்திரத்தை எடுத்துப் போர்த்திக்கொண்டவர் "அதோ அந்த கைக்கம்பைக் கொண்டு வா இப்படி" என்றார். கிட்டா கொண்டு வந்த கம்பை வாங்கிப் பார்த்துவிட்டு "ம்! இத்தனை நாள் இதை நான் தொட்டதே இல்லை. எங்கப்பா உபயோகிச்சது!" என்று பெருமையோடு கூறியபடி அதை ஊன்றிக் கொண்டே வாசலுக்கு விந்திவிந்தி நடந்து போனார்.
அவரைப் பார்த்ததும் ஊரார் கையெடுத்துக் கும்பிட்டனர்.
"இந்த வெயில்ல எல்லாருமா எங்க இப்படி..?"
"உங்களைப் பார்க்கத்தான். மழையே இல்லாம பயிர் பச்சையெல்லாம் போயிட்டுது. ஆடுமாடெல்லாம் ஒண்ணு ஒண்ணா செத்துட்டிருக்கு, தாது வருஷத்துப் பஞ்சம் மாதிரி மறுபடியும் வந்துருமோன்னு தோணுது. விதை நெல்லைச் சாப்பிட வேண்டிய கதிக்கு வந்துட்டோம்."
"என்ன சொன்னீங்க ! விதை நெல்லைச் சாப்பிடப் போறீங்களா? ஊஹூம் ! அந்த நிலைக்கு உங்களை நான் ஒரு நாளும் விட மாட்டேன் ! வேதத்துக்கும் விவசாயத்துக்கும் வித்து தானே முக்கியம் ! வித்து அற்றுப்போனா வேதமும் போச்சு, விவசாயமும் போச்சு, பயப்படாதீங்க. ஒரே வாரம் பொறுத்துக்குங்க. நான் வந்து விராடபர்வம் வாசிக்கிறேன்; நிச்சயம் மழை வந்துடும். நம்பிக்கையோடு இருங்க" என்றார்.
"ஒரு வாரமா! நாளைக்கே ஆரம்பிச்சுட முடியாதா?" என்று கேட்டான் ஒரு விவசாயி.
"முடியாதப்பா ! இத பார்த்தயா? என் கால்ல செம்மையா அடிபட்டிருக்கு. சப்பணம் போட்டு உட்கார முடியாது. விராடபர்வம் வாசிக்கணும்னா ரெண்டு மணி நேரமாவது உட்கார்ந்திருக்கணுமே. அடுத்த வாரம் நிச்சயம் ஆரம்பிச்சுடலாம். பதிமூணாம் தேதி சிதம்பரத்துலே ஒரு விசேஷம். அதுக்கு நான் கண்டிப்பா போயாகணும். போயிட்டு பதினாலு வந்துடுவேன். பதினஞ்சு வச்சுக்குங்க" என்றார்.
"ரொம்ப சந்தோசம்; உங்களுக்குக் கோடி புண்ணியம் உண்டு. மவராசனாயிருப்பீங்க!" என்று வாழ்த்திவிட்டுப் புறப்பட்டார்கள் குடியானவ மக்கள்.
பிராம்மணர்கள் புறப்பட ஆயத்தமானபோது, "நீங்கள்ளாம் கொஞ்சம் இருந்துட்டுப் போக முடியுமா? உங்களோடு முக்கியமா ஒரு விஷயம் பேசணும், என் சொந்த விஷயம்தான்" என்று விநயமாய்க் கேட்டுக் கொண்டார் கனபாடிகள்.
"எங்களோடயா?" என்றார் ஒருவர்.
"ஆமாம்; என் மகள் பாகீரதி விஷயமா இது வரைக்கும் நான் எதுவுமே யோசிக்காம இருந்துட்டேன். என் மூச்சு இருக்கப்பவே அவளுக்கு ஒரு வழி செய்துடனும்னு நினைக்கிறேன்."
"அதுக்கு நாங்க என்ன செய்ய முடியும்?"
"நீங்க ஒண்ணும் செய்ய வேணாம், கனபாடிகள் பெண் சீர்கெட்டு அலையறாங்கற அவப்பெயர் அவளுக்கு வரக்கூடாது. அவள் எதிர்காலம் என்னங்கறதை நான் முடிவு பண்ணியாகணும். இந்த விஷயத்துல உங்க அபிப்ராயம் என்னன்னு தெரிஞ்சுக்க விரும்பறேன்."
"மனசுல நீங்க என்ன நினைச்சுண்டு பேசறிங்கன்னு புரிஞ்சு போச்சு, கொஞ்ச நாளைக்கு முன்னால பார்வதியின் புருஷன் பினாங்கிலிருந்து திரும்பி வந்தப்போ அவனைச் சேர்த்துக்கலாமான்னு உங்களிடம் யோசனை கேட்க வந்தோம். அப்ப நீங்க பிடிவாதமா சாஸ்திரம் ஒப்புக்காதுன்னு சொல்லி அனுப்பிட்டேளே, ஞாபகம் இருக்கா? இப்ப மட்டும் அந்த சாஸ்திரம் ஒப்புக்கறதோ? ஊருக்கு ஒரு சாஸ்திரம். உங்களுக்கு ஒரு சாஸ்திரமோ?" என்று தைரியமாகக் கேட்டார் ஒருவர்.
"இப்ப நான் உங்களைக் கேட்கிறது சாஸ்திரம் அல்ல. உங்க அபிப்ராயம்தான். "எங்ககிட்ட ஒரு வார்த்தை கேட்டேளா?"ன்னு நாளைக்கு நீங்க பழி சொல்லக் கூடாது பாருங்க, அதுக்காகத்தான். என் பெண்ணை இப்படி இந்த நிலையிலே, விட்டுட்டுப் போனா அவளை யார் காப்பாத்துவா? யாராவது அவளை நல்லபடியா காப்பாத்துவேளா? அவளுக்கு நான் ஒரு வாழ்க்கையை அமைச்சுக் கொடுக்க வேணாமா? உங்களில் யாருக்காவது இஷ்டம் இருந்தா, யாராவது காப்பாத்த முன் வந்தா, இப்பவே சொல்லுங்க. இந்த நிமிஷமே என் சொத்தையெல்லாம் எழுதி வைக்கத் தயாராயிருக்கேன்"என்றார்.
யாருமே பதில் பேசவில்லை. வாய்மூடி மெளனிகளாக முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டார்கள்.
"தெரியும். உங்க பதில் இதுவாத்தான் இருக்கும்னு தெரியும். என் பெண்ணைக் காப்பாத்துங்கோன்னு உங்களை நான் கட்டாயப்படுத்தப் போறதில்லே. கெஞ்சப் போறதில்லே. அது உங்க இஷ்டம். ஆனா, நான் ஒரு முடிவுக்கு வரதுக்கு முன்னால உங்கனை ஒரு வார்த்தை கேட்க வேண்டியது என் கடமை இல்லையா? அதுக்காகத்தான் கேட்டேன். இப்ப நீங்க போகலாம்" என்று அவர்களை அனுப்பிவிட்டு மெதுவாக நடந்து போய் ஊஞ்சலில் உட்கார்ந்தார்.
உட்கார்ந்தவர் "கிட்டா நெஞ்சை வலிக்கிறதுடா!" என்று மார்பைக் கையால் தாங்கியபடி ஊஞ்சலில் சாய்ந்து படுத்துக்கொண்டார்.
-----------
22.
சுவீகாரம் என்பது ஒரு சாதாரண நிகழ்ச்சிதான் என்றாலும் கெளரி அத்தை அதை ஒரு கல்யாண வைபோகமாகவே நடத்திவிட ஆசைப்பட்டாள்.
"வாசலில் பெரிய பந்தலாப் போட்டு, வாழை மரம், மாவிலைத் தோரணமெல்லாம் கட்ட ஏற்பாடு பண்ணுங்க" என்று கணவரிடம் ஒரு ‘உத்தரவு’போல் சொல்லிக் கொண்டிருந்தாள்.
"இது வெறும் வைதிகச் சடங்குதானே? இதை இவ்வளவு ஆடம்பரப்படுத்த வேணுமா?" என்று கேட்டார் அவர்.
வைதிகம், லெளகிகம் ரெண்டும் கலந்தாத்தான் எந்த விசேஷமும் சோபிக்கும். வீடு கட்டி முடிச்சப்போ கிரகப் பிரவேசத்தை ’ஜாம் ஜாம்’னு நடத்தினோம். அப்புறம் எந்த சுப காரியத்துக்கும் வாய்ப்பு இல்லாமப் போயிட்டுதே !" என்றாள்.
ஆமாம், நீ சொல்றதும் சரிதான்" என்று தலையாட்டினார் அவர்.
வெள்ளிப் பாத்திரம், ஜவுளி, சந்தனம், கதம்பம், பழதினுசு எல்லாத்தையும் வாங்கிண்டு மூர்த்தியோடு முதல் நாளே வந்துடணும்னு கிட்டப்பாவுக்குச் சொல்லி அனுப்புங்க. கூடவே சமையல்காராளையும் அழைச்சுண்டு வந்துரட்டும்; கிட்டப்பா வந்தாத்தான் முகூர்த்தமே களைகட்டும் !"
"தஞ்சாவூர்ல நல்ல தாழம்பூ கிடைக்குமா, அத்தை?" என்று நாகுக்காய் ஞாபகப்படுத்தி வைத்தாள் பாகீரதி.
"ஓகோ ! அதை மறந்துட்டனோ ! வாங்கிண்டு வரச் சொல்றேன். மூர்த்தி வரான் இல்லையா! உனக்கு முதல் நாளே தாழம்பூ வெச்சு தலை பின்னிடறேண்டா, கண்ணு" என்று செல்லமாக பாகீரதியின் கன்னத்தைத் தட்டிச் சிரித்தாள் கெளரி.
"நான் தாழம்பூ வச்சுக்கறதுக்கும் மூர்த்தி வரதுக்கும் என்ன சம்பந்தம்? அத்தை என்னத்தை மனசுல வச்சுண்டு இப்படிப் பேசறா?" என்று சந்தேகப்பட்டாள் பாகீரதி.
முகூர்த்தத்துக்கு முதல் நாள் சாயந்திரம் கிட்டப்பாவும் மூர்த்தியும் ஏகப்பட்ட சாமான்களோடு காரில் வந்து இறங்கினார்கள். மூர்த்தியை வாசலிலேயே நிற்கச் சொல்லி ஆரத்தி சுற்றிக் கொட்டி மேளவாத்தியத்துடன் உள்ளே அழைத்துச் சென்றாள் அத்தை,
"சமையல்காரா வரலையா?" என்று கேட்டாள் கெளரி.
"பஸ்ல வந்துண்டிருக்கா" என்றான் மூர்த்தி.
"தாழம்பூ கொண்டு வந்திருக்கேன்" என்று கிட்டப்பா சொன்னதுமே மற்ற வேலைகளை யெல்லாம் மறந்துவிட்டு பாகீரதிக்குத் தலைபின்னத் தொடங்கி விட்டாள் அத்தை.
கூடத்தில் "ஹிஸ்மாஸ்டர்ஸ் வாய்ஸ்" தகரக்குழாய் கிராம போனில் எஸ்.ஜி. கிட்டப்பா ‘கோடையிலே இளைப்பாறி’ பாடிக் கொண்டிருந்தார்.
எல்லோரும் கூடத்தில் வந்து உட்கார்ந்து பாட்டு கேட்க ஆரம்பித்தார்கள். கிராமபோன் பிளேட்டில் ஏற்பட்டிருந்த கீறல் காரணமாக பாட்டு தடைப்பட்டு "கோடையிலே கோடையிலே. கோடையிலே…." என்று ஒரே இடத்தில் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. அதைக் கேட்டு எல்லோரும் சிரித்தார்கள்! கிராமபோனை நிறுத்தச் சொல்லிவிட்டு"நீங்கள்ளாம் ஆளுக்கொரு பாட்டுப் பாடுங்களேன், கேட்போம்" என்றார் கிட்டப்பா,
“நீதான் ஒரு பாட்டுப் பாடேன் கேட்கலாம்" என்றாள் கெளரி அத்தை கிட்டப்பாவிடம்.
”நான் என்ன எஸ்.ஜி. கிட்டப்பான்னு நினைப்பா உனக்கு? நான் பாடினா எல்லாரும் ஓடுவா!" என்றார் அவர்.
பாகீரதியை அழகாக அலங்கரித்து முடிந்ததும் கூடத்துக்கு அழைத்துவந்து கிட்டப்பாவுக்கு நமஸ்காரம் பண்ணச் சொன்னாள் அத்தை.
“சீக்கிரமேவ விவாகப் பிராப்திரஸ்து!" என்று வாழ்த்தினார் கிட்டப்பா.
கிட்டப்பா இப்படி வாழ்த்துவார் என்று யாருமே எதிர் பார்க்கவில்லை. "
*உன் ஆசீர்வாதம் பலிக்கட்டும். அதுதான் எனக்கு வேண்டியது. பாகீரதி எத்தனை அழகா இருக்கா பார்த்தயா தங்கப்பதுமை மாதிரி" என்றாள் அத்தை.
"பார்க்க வேண்டியவன் பார்த்து சந்தோஷப்பட்டால் சரி" என்று கண் சிமிட்டி மூர்த்தியை ஒாக் கண்ணால் பார்த்தார்.
வெட்கத்தில் தலைகுனிந்தபடி உள்ளே ஓடிவிட்டாள் பாகீரதி.
"கிட்டப்பா ஏன் இப்படி ஜாடைமாடையாப் பேசறார்? இவாளுக்குள்ள ஏதோ பேச்சு நடந்திருக்குமோ !“ என்று சந்தேகித்தான் மூர்த்தி.
"பாகீரதியை இனிமே ‘பாகீ’ன்னு கூப்பிடாதீங்க" என்றார் கிட்டப்பா.
“வேற எப்படிக் கூப்பிடறதாம்?" "முதல் ரெண்டு எழுத்தை விட்டுட்டுப் பின் ரெண்டெழுத்தைச் சொல்லிக் கூப்பிடுங்க. அதான் பொருத்தமாயிருக்கும்" என்று ஒரு புதிர் போட்டு மகிழ்ந்தார் கிட்டப்பா.
"கிட்டப்பாவுக்குத்தான் இப்படியெல்லாம் சாதுர்யமா வேடிக்கையாப் பேசத் தெரியும். தஞ்சாவூரோன்னோ?" என்றார் கெளரியின் கணவர்.
கனபாடிகள், கமலா, கமலாவின் ஆத்துக்காரர். கிட்டா நாலு பேரும் ராத்திரியே வந்துவிட்டார்கள்.
கனபாடிகளைக் கண்டதும் “கால்ல என்ன, அண்ணா ? » என்று கவலையோடு விசாரித்தாள் கெளரி.
« வாளி தடுக்கி விழுந்துட்டேன்” என்றார் கனபாடிகள்,
« கமலா! நீ எப்படி அப்பாவோடு சேர்ந்து வந்தே ?
“காஞ்சீபுரத்திலேந்து நேரா அப்பாவைப் பார்க்கப் போயிருந்தேன். அங்கிருந்து எல்லாருமா வந்தோம்” என்றாள் கமலா.
“நல்லவேளை ! இப்பத்தான் தாழம்பூவைத் தலையிலிருந்து பிரிச்செடுத்து தோட்டத்துல் போட்டுட்டு வந்தேன். இந்த கமலா கண்ணில் படாம தப்பிச்சனே!" என்று எண்ணி மகிழ்ந்தாள் பாகீரதி.
ஆனாலும் கமலாவுக்கு மூக்கில் வேர்த்திருக்கவேண்டும். "என்னடி தாழம்பூ வாசனை அடிக்கிறது. வீடு முழுக்க? என்று கேட்டாள்.
"இந்த கமலாவுக்குத்தான் என்ன மூக்கோ ! போன ஜன்மத்துல மோப்ப நாயாப் பிறந்திருக்கணும்" என்று எண்ணிக் கொண்ட பாகீரதி, "அதுவா? கிட்டப்பா தஞ்சாவூர்லேங்து கதம்பம், தாழம்பூல்லாம் வாங்கிண்டு வந்திருக்கார்" என்று சமாளித்தாள் பாகீரதி,
"அந்தக் கழைக்கூத்தாடிப்பெண் மஞ்சு என்ன ஆனா மாமா?" என்று சந்தடிசாக்கில் கிட்டப்பாவின் காதைக் கடித்தான் கிட்டா.
"அவளை அந்த சர்க்கஸ்காரன் விடறதா இல்லே! கல்யாணம் பண்ணிக்கப் போறானாம்" என்றார் கிட்டப்பா,
"பாவம், அந்தப் பெண் மூர்த்தி பேர்ல உசிரையே வெச்சிருந்தது" என்றான் கிட்டா.
"நீ போய் வேலையைப் பாருடா. உனக்கெதுக்கு இந்த வம்பெல்லாம்" என்றார் கிட்டாவின் மாமா.
மறுநாள் விடியற்காலையிலேயே வைதிகச் சடங்குகளை ஆரம்பித்துவிடச் சொன்னார் கனபாடிகள். வீடு முழுதும் ஹோமப் புகை சூழ்ந்து கொள்ளவே வைதிகர்கள் ஆளுக்கொரு விசிறியைக் கையில் வைத்து வீசிக்கொண்டிருந்தனர். எல்லாம் முடிந்து ஆரத்தி எடுக்கிறபோது மணி பன்னிரண்டு!
மூர்த்திக்கு கிட்டப்பா ஆசீர்வாதம். முக்கால் பவுனில் ஒரு மோதிரம்.
கெளரி அத்தை அஞ்சு பவுனில் ஒரு சங்கிலி.
வெள்ளி பஞ்சபாத்திர உத்தரணி - கனபாடிகளின் ஆசீர்வாதம்.
கனபாடிகளை முதலில் நமஸ்காரம் செய்து, அபிவாதையே சொல்லி, அட்சதை ஆசீர்வாதம் பெற்றுக்கொண்ட மூர்த்தி அடுத்தாற்போல் அத்தைக்கும் அத்திம்பேருக்கும் நமஸ்காரம் செய்தான். அத்துடன் சுவீகார முகூர்த்தம் மங்களவாத்திய இசையுடன் சுபமாக முடிந்தது.
மறுநாள் கனபாடிகள் சீக்கிரமே எழுந்து ஸ்நான பானங்களை முடித்து "பிரயாணத்துக்கு உஷத் காலம் உத்கிருஷ்டம்" என்று சொல்லிப் புறப்பட்டுவிட்டார்.
"என்ன அண்ணா அதுக்குள்ள அவசரம் நாளைக்கு நாங்களும்தான் வரப் போறமே எல்லாரும் சேர்ந்து போலாமே!" என்றாள் கெளரி.
"கிட்டாவை அழைச்சுண்டு நான் முன்னாடி போறேன். விராடபர்வம் கதையை ஒரு தடவை முழுக்க படிச்சடணும். ஏகப்பட்ட சுலோகங்கள் ! ஏகப்பட்ட கதாபாத்திரங்கள் ! அந்தப் பேர்களையெல்லாம் கதைல ஞாபகமா மறக்காமல் சொல்லணும்" என்றார்.
"அப்படின்னா நீங்க கிட்டாவை அழைச்சுண்டு இப்பவே போங்க. பின் சீட்ல செளகரியமா காலை நீட்டி உட்கார்ந்துண்டு போகலாம்" என்றாள் கெளரி.
“கனபாடிகள் விராடபர்வம் வாசிச்சு இது வரை மழை வராமப் போனதில்லை. இத பார்த்தேளா! முன் ஜாக்கிரதையா குடைகூடக் கொண்டு வந்திருக்கேன்!" என்றார் கிட்டப்பா.
”நீ ரொம்ப நம்பிக்கையோடதான் இருக்கே பார்க்கலாம்" என்று சிரித்துக்கொண்டே புறப்பட்டார் கனபாடிகள்,
சனிக்கிழமை ராத்திரி எட்டு மணிக்கு விராடபர்வம் நடக்கப் போவதாக ஊர் மக்களுக்கு தண்டோரா போட்டு அறிவித்தார்கள்.
பஜனை மடம் வாசலைப் பெருக்கி, தண்ணீர் தெளித்து, கோலம்போட்டு, சுவாமி படங்களுக்கு மாலை அலங்காரம் செய்து, குத்துவிளக்கு ஏற்றிவைத்து எல்லா ஏற்பாடுகளையும் கிட்டா தான் ஓடி ஆடிச் செய்து கொண்டிருந்தான்,
ரொம்ப நாளைக்கப்புறம் கனபாடிகள் கதை சொல்கிறார் என்பதால் ஊர் மக்களோடு, அடுத்த கிராமத்து ஜனங்களும் திருவிழாக் கூட்டம் போல் பஜனை மடத்தில் கூடியிருந்தார்கள். கனபாடிகள் அன்று காலையிலிருந்தே உபவாசம் இருந்து, பக்தி சிரத்தையோடு வந்து மணையில் உட்கார்ந்தார். பெட்ரோமாக்ஸ் விளக்கு ‘புஸ்புஸ்’ என்று அணைந்து அணைந்து எரிய, விட்டில் பூச்சிகள் விளக்கைச் சுற்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தன.
பஞ்சாயத்துத் தலைவர் கனபாடிகளுக்கு மாலை போட்டு விழாவைத் துவக்கி வைத்ததும், கனபாடிகள் கழுத்தில் போட்ட மாலையோடு பேச்சைத் தொடங்கினார்.
”வியாச பகவான் அருளிய மகாபாரதம் மொத்தம் பதினெட்டு பர்வங்கள் அடங்கியது. நாலாவதுதான் விராடபர்வம்.
பாண்டவர்கள் வனவாசம் முடிந்து ஓராண்டு காலம் அஞ்ஞாத வாசம் செய்வதற்கு ஏற்ற இடமாக விராடனுடைய மச்ச நாட்டைத் தேர்ந்தெடுத்தார்கள். விராட மகாராஜாவுக்கே தெரியாமல் திரெளபதியும் பாண்டவர்களும் மாறு வேடத்தில் அங்கே வாழ்ந்து வருகிறபோது திரெளபதியின் அழகில் மயங்கிய கீசகனை பீமன் வதம் செய்வதும் விராடனின் மச்ச நாட்டுப் பசுக்களை கெளரவர்கள் மடக்கிச் செல்வதும், அர்ஜூனன் அலியாக மாறி ராணியின் அந்தப்புரத்தில் பணிபுரிவதும், விராடராஜனுடைய மகன் உத்தரனுக்கு உதவியாகத் தேரோட்டிச் சென்று பசுக்களை மீட்பதும் இந்த பர்வத்தில்தான் நடக்கிறது.
பல சோதனைகளுக்கிடையே ஒரு வருஷகாலம் அஞ்ஞாதவாசம் இருந்து அதை வெற்றிகரமாக முடிக்கும் பாண்டவர்கள் தங்க ள் உண்மை சொரூபத்தை வெளிப்படுத்துவதும் இந்த பர்வத்தில்தான்.
அதுவரை பஞ்சம் தலைவிரித்து ஆடிய விராட ராஜன் தேசத்தில் பரம துஷ்டனான கீசகனை பீமன் வதம் செய்து ஒழித்த பின் அந்த காட்டில் சுபிட்சம் தாண்டவமாடத் தொடங்குகிறது. பாண்டவர்களுக்குப் புகலிடம் தந்து அவர்களை வெற்றி காணச் செய்த தேசம், விராடனுடைய மச்சதேசம்.
ஆகவே, இந்த உன்னதமான கதையை எப்போது, யார், எங்கே சொன்னாலும் அங்கே மழை பெய்யும் என்றும் சுபிட்சம் உண்டாகும் என்றும் ஓர் அசைக்க முடியாத நம்பிக்கை இந்த பாரத தேசத்தில் பரவியிருக்கிறது.
நான் இதுவரை ஏழு இடங்களில் விராடபர்வம் கதை சொல்லியிருக்கிறேன். ஏழு தடவையும் மழை பெய்யத் தவறியதில்லை. இந்தப் பெருமை என்னைச் சேராது. பாரதக் கதையின் மகிமை அப்படி. இன்றைக்கும் மழை பெய்யும் என்கிற திட நம்பிக்கையோடு கதையைத் தொடங்குகின்றேன்" என்று பூர்வ பீடிகையாகக் கூறிவிட்டு கணீரென்ற சங்கீதக் குரலில் சுலோகங்களைச் சொல்லத் தொடங்கியதும் அங்கே தெய்வீகமான ஒருகுழ்நிலை உருவாயிற்று.
கதை முடிகிறபோது மணி பன்னிரண்டு. கனபாடிகள் வீட்டுக்குத் திரும்பி வரும்போதே களைப்பாக இருந்தார். கிட்டாவின் தோளை ஆதாரமாகப் பற்றிக் கொண்டே ஊஞ்சலில் போய் உட்கார்ந்தார்.
"இறுக்கம் தாங்கலைடா, கிட்டா கொஞ்சம் விசிறி விடறயா?" என்று கேட்டவர் "வடக்குப்பக்கம் பளீர் பளீர்ணு மின்னல் அடிக்கிறது, மழை வருமோ, என்னவோ தெரியலை!" என்றார்.
”கொட்டு கொட்டுணு கொட்டப் போறது. பார்த்துண்டே இருங்க" என்றார் கிட்டப்பா. அவர்கள் இப்படிப் பேசிக் கொண்டிருக்கும்போதே பயங்கரமாய்க் காதே செவிடாகிவிடும் போல் இடித்த பேரிடி ஒன்று ஊரையே கிடுகிடுக்கச் செய்தது.
"அப்பா, இந்தப் பாலைக் குடிச்சுட்டு போய்ப் படுத்துக்குங்க. இன்னைக்குப் பூரா பட்டினி நீங்க. ஏற்கனவே உடம்பு சரியில்லை உங்களுக்கு" என்று பரிவோடு அந்தப் பாலை அப்பாவிடம் தந்தாள் பாகீரதி.
கனபாடிகள் அவளையே சற்றுநேரம் பார்த்துக் கொண்டிருந்தவர், சட்டென்று கண்களில் பனித்த நீரைத் துடைத்துக் கொண்டு "கிட்டாவுக்கும் கொடும்மா, பாவம் ! அவனுக்குத் தான் சிரமம். மத்தியானத்திலேந்து அலையறான்" என்றார்.
“அர்ஜூனன் அலியா வரானே அப்பா, அந்த அலிக்கு என்ன பேரு சொன்னே?" என்று கேட்டாள் கமலா.
”பிருஹன்னளை !" என்றார்.
அந்த அலியை அவன்னு சொல்றதா, அவள்னு சொல்றதா?" என்று கேட்டாள் கமலா.
“மகாபாரதத்துல எத்தனையோ சந்தேகங்களெல்லாம் இருக்கு. போயும் போயும் உனக்கு இப்படி ஒரு சந்தேகமா?" என்று கேட்டு மெலிதாகச் சிரித்தார் கனபாடிகள்.
கெளரி அத்தை கட்டிக் கற்பூரம் கொளுத்தி வந்து எல்லாரையும் கனபாடிகள் பக்கத்தில் நிற்கச் சொல்லி திருஷ்டி கழித்துப் போட்டாள்.
"உங்க எல்லாரையும் இன்னைக்கு சேர்ந்தாப்ல பாக்கறப்போ எனக்கு மனசு நிறைஞ்சு இருக்கு, நீங்க அத்தனை பேரும் அக்கறையா வந்து கதை கேட்டதில் பரம திருப்தி எனக்கு. எல்லாரும் க்ஷேமமா இருங்கோ" என்று ஆசீர்வதித்தார்.
"சரி, எல்லாரும் போய்ப் படுத்துத் தூங்குங்க. மழை பலமா வரும்போல இருக்கு. மணி ஒண்ணாகப் போறது" என்றாள் கெளரி.
கனபாடிகள் மெதுவாக எழுந்து போய்த் தம் அறையில் படுத்துக் கொண்டார். தூக்கம் வராததால் எழுந்து உட்கார்ந்து சற்று நேரம் எதையோ படித்துக் கொண்டிருந்தார். வானம் தொடர்ந்து உறுமிக் கொண்டிருந்தது. கனபாடிகள் ஒரு வெள்ளைத் தாளை எடுத்து ஏதோ எழுதத் தொடங்கினார். எழுதி முடித்துவிட்டு மறுபடியும் படுத்தார்.
பொழுது விடிந்தது. ராத்திரி பெய்யத் தொடங்கிய மழை ஓயவில்லை. பிரளயமே வந்ததுபோல் பெய்த மழையில் மண்குடிசைகளும் மரம், செடி கொடிகளும் அடியோடு தலைவிரி கோலயாய்ச் சாய்ந்து வீழ்ந்து கிடந்தன. விடிந்த பிறகும் கனபாடிகள் தூங்கிக் கொண்டிருந்தார்.
"என்னை ஆறு மணிக்கெல்லாம் , எழுப்பிடுடான்னு சொல்லிட்டு படுத்தவர் இன்னும் இப்படித் துரங்கறாரே!" என்று வியந்து கொண்டே கனபாடிகள் அறைக்குச் சென்று பார்த்த கிட்டா "அத்தை" என்று வீடே அதிரும்படி கூக்குரலிட்டான்.
"என்னடா?" என்று அலறி அடித்துக் கொண்டு எல்லோரும் கனபாடிகள் படுத்திருந்த அறைக்கு ஒடிச் சென்று பார்த்தார்கள்.
கனபாடிகள், சாந்தமாக, நிம்மதியாக ஆண்டவன் திருவடிகளில் உறங்கிக் கொண்டிருந்தார். அந்த அணில் குஞ்சு கனபாடிகள் இறந்துபோனது தெரியாமல் அவர் மீது ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்தது.
கனபாடிகள் எழுதி வைத்த வெள்ளைத்தாள் அவர் பக்கத்தில் கிடந்தது. கிட்டப்பா அதை எடுத்துப் படித்தார்.
அன்புள்ள கெளரிக்கு,
வாளி தடுக்கிக் கீழே விழுந்ததிலிருந்தே, இரண்டு மூன்று நாட்களாகவே என் உடல்நிலை சரியில்லை. வயதானவர்கள் கீழே விழக்கூடாது என்று சொல்வார்கள். சுவீகார முகூர்த்தம் சுபமாக முடிந்ததில் சந்தோஷம். விராடபர்வம் வாசிப்பதாகக் கொடுத்த வாக்கையும் நிறைவேற்றிவிட்டேன், கொஞ்ச நாளாகவே எனக்கு அவ்வப்போது லேசாக மார்வலி வருவதுண்டு. நீங்களெல்லாம் கவலைப்படுவீர்கள் என்பதால் யாரிடமும் சொல்லாமலிருந்தேன். இப்போதுகூட வலித்துக் கொண்டு
தானிருக்கிறது, என் உயிர் பிரியப் போகும் தருணம் நெருங்கிவிட்டதாகவே தோன்றுகிறது. வெளியில் பேய் மழை பெய்து கொண்டிருக்கிறது. எல்லாம் வீராடபர்வத்தின் மகிமைதான்.
பாகீரதியின் கவலைதான் என்னை வாட்டிக் கொண்டிருக்கிறது. பாசம் ஒரு புறமும் தர்மம் ஒரு புறமுமாக நின்று என்னுள் ஒரு போராட்டம் நடந்து கொண்டிருந்தது. என் காலத்திலேயே பாகீரதிக்கு ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துவிட எண்ணி ஊராரை அழைத்துப் பேசினேன். அவர்களில் யாருமே பொறுப்பை ஏற்றுக்கொள்ளத் தயாராயில்லை.
இப்போது நான் எடுத்துள்ள முடிவு உனக்கும் உலகத்துக்கும் ஆச்சரியம் தரலாம்.
வேதத்தையும் தர்மங்களையும் ஊருக்கு போதித்தேன், வேத பாடசாலை நடத்தினேன். இரண்டு முறை யாகங்கள் செய்தேன். சாஸ்திரங்களைப் போற்றினேன். ‘சாஸ்திரத்தை இஷ்டம்போல் நமது வசதிக்கேற்றபடி யெல்லாம் மாற்றக் கூடாது’ என்று வாதாடினேன். இப்போது சோதனையாக, நானே அதை மீறவேண்டிய நிலைக்கு வந்து விட்டேன்.
பாகீரதிக்கு மறுமணம் என்பது சாஸ்திர விரோதம்தான், அதர்மமான காரியம்தான். ஆனாலும் சாஸ்திரத்தை மீறி நான் எடுத்திருக்கும் முடிவு மிகப் பெரிய பாவம் என்பது எனக்குத் தெரியும். இந்த பாவத்துக்குரிய தண்டனையை நான் ஏற்றுக்கொள்ளத் தயாராயிருக்கிறேன்.
வேதமும் சாஸ்திரமும் புனிதமானது. நிரந்தரமானது; மாற்ற முடியாதது. மாற்றக் கூடாதது. அதை மீறுகிற நான்தான் மகாபாபி.
வேதமும் சாஸ்திரமும் என்னை மன்னிக்கட்டும்.
கெளரி ! எனக்குப் பிறகு பாகீரதியைக் காப்பாற்றும் பொறுப்பை உன்னிடத்தில் விட்டுச் செல்கிறேன். அவளுக்கும் மூர்த்திக்கும் நீ மணம் செய்து வைக்க முடிவு செய்திருக்கிறாய் என்பதை நான் ஒருவாறு ஊகித்து விட்டேன். உன் இஷ்டப்படியே செய். இதில் எனக்குப் பூரண சம்மதமே.
இதனால் கிடைக்கக்கூடிய நல்ல பலன் எதுவானாலும் அது உன்னைச் சேரட்டும். பாவத்தின் பலனை நானே ஏற்றுக்கொள்கிறேன்.
நீ எனக்காகக் கொண்டு வந்து கொடுத்த கங்கையை இப்போது என்மீது கொட்டு. அந்தப் புனிதநீர் என் பாவத்தைக் கழுவட்டும்.
உங்கள் எல்லோருக்கும் என் ஆசீர்வாதங்கள்.
இப்படிக்கு
சங்கர கனபாடிகள்.
"அண்ணா, நான் உனக்கு கங்கை சொம்பு கொண்டு வந்தது இதுக்குத்தானா?" என்று கேட்டு இதயமே வெடித்து விடுவது போல் கதறினாள் கெளரி அத்தை.
ராத்திரி பெய்த மழையின் மிச்சமாக வீட்டுக் கூரைகளிலிருந்தும் மரம், செடி கொடிகளிலிருந்தும் சொட்டிக் கொண்டிருந்த துளிகள் கனபாடிகளுக்காக உலகமே அழுவது போல் இருந்தது.
This file was last updated on 23 Jan. 2018
Feel free to send the corrections to the webmaster.