tamiz viruntu
by rA. pi. cEtu piLLai
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Tamil Virtual Academy for providing a
scanned PDF version of this work.
The etext has been generated using Google Online OCR tool and subsequent
correction of the output file.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne,
Switzerland.
Source:
தமிழ் விருந்து
ரா.பி. சேதுப்பிள்ளை, பி.ஏ., பி.எல்.
பழனியப்பா பிரதர்ஸ்
சென்னை - 600 014 திருச்சி - 620 002 சேலம் - 636 001
கோயமுத்தூர் - 641 001 மதுரை - 625 001
ஈரோடு - 638 001
முதற்பதிப்பு: 1945; பதினான்காம் பதிப்பு : 1998; பதினைந்தாம் பதிப்பு : 2007
விலை : ரூ. 40-00 ISBN :978-81-8379-404-6
ஏஷியன் பிரிண்டர்ஸ், சென்னை 600 014.
---------------
முகவுரை
இலக்கியப் பசி இப்பொழுது தமிழ் நாட்டிற் பரவி வருகின்றது. பசி மிகுந்தவர் எளிய உணவையும் இனிய விருந்தாகக் கொள்வர். அந்த வகையில் வந்தது இத் 'தமிழ் விருந்து'.
தமிழ்க் கலைகளின் தன்மை, தமிழ் இலக்கியத்தின் சீர்மை, தமிழ் மொழியின் செம்மை, தமிழரது வாழ்க்கையின் மேன்மை - இவை நான்கு கூறுகளாக இந் நூலிற் காணப்படும்.
சென்னையிலும், திருச்சிராப்பள்ளியிலும் உள்ள வானொலி நிலையத்தில் நான் பேசிய பதினெட்டுப் பேச்சுகள் இந் நூலிற் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றைச் சேர்த்துக் கொள்ள அனுமதி தந்த இரு நிலையத்தார்க் கும், இந் நூலை வெளியிடுவதற்கு அனுமதி யளித்த சென்னைப் பல்கலைக் கழகத்தார்க் கும் எனது நன்றி உரியதாகும்.
சென்னை, 19-9-'45.
- ரா.பி.சேதுப்பிள்ளை
ஏஷியன் அச்சகம், சென்னை - 600 014.
-------------------
உள்ளுறை
I.
1. கலையும் கற்பனையும்
2. புராதனப் போர் - படையெடுப்பு
3. போர்க்களங்கள்
4. ஆகாய விமானம்
5. வாழ்க்கையும் வைராக்கியமும்
11. தமிழ் நாட்டாரும் அயல் நாட்டாரும்
12. தமிழ் மொழியும் பிற மொழியும் -தெலுங்கு |
13. தமிழ் மொழியும் பிற மொழியும் - மலையாளம்
14. தமிழ் மொழியும் பிற மொழியும் கன்னடம்
15. இலக்கணம் மொழியைப் பாதுகாக்கும் முறை
IV
16. தமிழ் இலக்கியத்திற் கண்ட அரசு
17. தமிழ் இலக்கியத்திற் கண்ட அமைச்சு ....
18. தமிழ் இலக்கியத்திற் கண்ட தூது
19. தமிழ் இலக்கியத்திற் கண்ட பக்தி
20. தமிழ் இலக்கியத்திற் கண்ட கடவுள்
'மணிமேகலையும் மதுவிலக்கும்' என்பது சென்னை மதுவிலக்குச் சங்கத்தின்
(The Hindu God Templars League) ஆண்டுவிழாவிற் செய்த சொற்பொழிவின்
சுருக்கம்.
--------------
தமிழ் விருந்து
1. கலையும் கற்பனையும்
கலைச் செல்வமே ஒரு நாட்டின் செல்வத்துள் எல்லாம் தலைசிறந்த செல்வம். அச் செல்வம் எண், எழுத்து என்னும் இருவகையில் அடங்கும். "எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப " என்பது திருவள்ளுவர் வாக்கு. இவற்றுள் காவியம், ஓவியம் முதலிய கலைகள் கற்பனை நயத்தால் இன்பம் பயக்கும். கற்பனை, நாட்டின் தன்மைக்குத் தக்கவாறு அமையும். வெப்பம் மிகுந்த நாட்டில் வசிப்பவர்கள் குளிர்மையை விரும்புவர். தமிழ்நாடு பெரும்பாலும் வெப்பமுள்ள நாடு. நீர் நிறைந்த ஆறுகளையும், நிழல் அமைந்த சோலை களையும் காவிய உலகத்திற் காணும் பொழுது நம் உள்ளம் குளிர்கின்றது. குளிர்மையில் உள்ள ஆசையால் அன்றோ நீரைத் தண்ணீர் என்கிறோம்; அன்பை ஈரம் என்கின்றோம்; ஆண்டவன் சேவடியைத் திருவடி நிழல் என்கின்றோம்? திருவடி நிழலின் இனிமையை உணர்த்துகின்றார் திருநாவுக்கரசர்.
''மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறைப் பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே !''
என்பது தேவாரத் திருப்பாட்டு.
வெப்பத்தால் வாடி வருந்துவோர் குளிர்மையைக் கண்டு இன்புறுதல் போன்று, பிறவித் துன்பத்தால் வருந்துவோர் ஆண்டவன் திருவடியை அடைந்து மகிழும் பெற்றியைப் பெரியோர்கள் அழகாகப் பாடியுள்ளார்கள். ஆண்டவன் அளிக்கும் பேரின்பம், கோடையிலே இளைப்பாற்றும் குளிர் பூஞ்சோலை யாகவும், ஓடையிலே ஊறுகின்ற தெள்ளிய நீராகவும், மேடையிலே வீசுகின்ற மெல்லிய தென்றலாகவும் ஒரு தமிழ்க் கவிஞரது கற்பனையிலே காட்சி தருகின்றது :
“கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த
குளிர்தருவே, தருநிழலே, நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
உகந்ததண்ணீ ரிடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங் காற்றே
மென்காற்றில் விளைசுகமே, சுகத்திலுறும் பயனே
ஆடையிலே எனைமணந்த மணவாளா, பொதுவில்
ஆடுகின்ற அரசே, என் அலங்கல்அணிந் தருளே'
என்று பாடினார் இராமலிங்க அடிகளார்.
நீர்வளமும் நிலவளமும் உடைய தமிழ் நாட்டில் பண்டைக்கால முதல் பயிர்த்தொழிலே சிறந்த தொழிலாகக் கருதப்பட்டு வருகின்றது. முற்காலத் தமிழர், தொழுதுண்டு வாழ விரும்பினார் அல்லர்; உழுதுண்டு வாழவே விரும்பினார்கள்; 'சீரைத் தேடின்
கலையும் கற்பனையும் ஏரைத் தேடு' என்றார் ஒரு புலவர். ஏர்த்தொழில் இனிது நடைபெறுவதற்கு மழை இன்றியமையாதது. தாய் முகங் காணாப் பிள்ளையும், மழை முகங்காணாப் பயிரும் செழிப்படைவதில்லை. ஆகவே, தமிழ்நாட்டார் வானத்திலே தவழும் மேகத்தையே நோக்கி வாழ்ந் தார்கள். ஓங்கி உயர்ந்த மலைகளில் மழை மேகம் தவழக் கண்டால் தமிழர் உள்ளம் தழைக்கும் ; கார்மேகத்தின் இடையே மின்னல் வீசக் கண்டால் அவர் உள்ளம் துள்ளி மகிழும். மழைக் குறிகளைக் கண்டு உழவர் அடையும் ஆனந்தக் களிப்பைத் தமிழ்ப் பாட்டிலே காணலாம்.
என்ற பாட்டு உழவர் உள்ளத்தைத் தெள்ளிதின் உணர்த்துகின்றது. வானத்திலே திரண்டு எழுந்து செல்லும் மழை மேகத்தை கார்மேகத்தைக் - கருணை யின் வடிவமாகக் கண்டு தமிழ்நாட்டார் போற்றி னார்கள்; கார்மேகமே உலகத்தைக் காக்கும் என்று கருதிக் கைதொழுதார்கள்; மன்னுயிரை யெல்லாம் காத்தருளும் தெய்வமாகிய திருமாலுக்கும் அவ் வண்ணத்தையே அமைத்தார்கள்; 'கருமுகில் வண்ணன், என் கண்ணன்' என்றார்கள். திருவேங்கடம் என்னும் திருப்பதி மலையில் அப் பெருமான் நின்றருளும் கோலத்தைக் கருமேகத்தின் வடிவாகவே காட்டுகின்றது சிலப்பதிகாரம்:
"வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை
மின்னுக்கோடி யுடுத்து விளங்குவில் பூண்டு
நன்னிற மேகம் நின்றது போலப்
பகையணங் காழியும் பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரைக் கையில் ஏந்திச்
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்”
என்பது சிலப்பதிகாரச் சித்திரம். கருமேகத்தின் வண்ணம் அருமையான வண்ணமாக, அழகான வண்ணமாகத் தமிழ்நாட்டார்க்குத் தோன்றிற்று. அதனாலேயே அழகுடைய மேகத்தை அவர்கள் 'எழிலி' என்னும் சொல்லாற் குறித்தார்கள். எழில் என்பது அழகு. எழில் வாய்ந்த பொருள் எழிலியாகும். திருவள்ளுவர் எழிலி என்ற சொல்லை இனிது எடுத்து
ஆள்கிறார்.
என்பது திருக்குறள். இக் குறளின் கருத்தும் கற்பனையும் நன்கு அறியத்தக்கதாகும். நெடுங்கடலில் நீர் அதிகமாக உண்டு. ஆயினும் அந் நீரில் ஒரு துளியேனும் தாகந் தீர்த்தற்கு உதவாது. அக் கடலில் உள்ள நீரைக் கருணை வாய்ந்த மேகம் கவர்கின்றது; மழையாக மாநிலத் தார்க்குத் தருகின்றது. இத் தகைய அருளுடைய கார் மேகத்தை எழிலி என்றார் திருவள்ளுவர். இக்குறளின் கருத்தைப் பிற்காலத்துப் புலவர் ஒருவரே விரித்துரைத்து விளக்கியுள்ளார் :
“பிறர்க்குதவி செய்யார் பெருஞ்செல்வம் வேறு
பிறர்க்குதவி ஆக்குபவர் பேறாம் - பிறர்க்குதவி
செய்யாக் கருங்கடல் நீர் சென்று புயல்முகந்து
பொய்யாக் கொடுக்கும் பிறர்க்கு "
என்றார் நன்னெறி ஆசிரியர்.
மலையிலே மழை பொழிந்து வெள்ளம் பொங்கி எழுகின்றது; அருவியாய் விழுகின்றது; ஆறாகப் பாய்கின்றது. ஆற்று நீர், கால்களிலும் ஏரிகளிலும் நிறைந்து பயிர் பச்சைகளையும் செடிகொடிகளையும் வளர்க்கின்றது. இளங் குழந்தையைப் பாலூட்டி வளர்க்கும் தாய்போல் பசும் பயிர்களை நீரூட்டி வளர்ப்பது நீதியாகும். ஆதலால், நதியைத் தாயாகவும், நிலத்தைக் குழந்தையாகவும் புலவர்கள் புனைந் துரைப்பாராயினர். சோழ நாட்டை ஊட்டி வளர்ப்பது காவேரியாறு. அந் நதியின் பெருமையாலேயே "சோழவள நாடு சோறுடைத்து" என்று கவிகள் புகழ் வாராயினர். செழுஞ் சோலைகளின் இடையே அழகுற நடந்து செல்லும் காவிரியாற்றைச் சிலப்பதிகாரம் இசைப்பாட்டால் வாழ்த்துகின்றது :
என்பது சிலப்பதிகாரத்தின் வாழ்த்து. இன்னும் பாண்டி நாட்டின் சிறந்த நதியாகிய வையையைப் "புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி " என்றும், "பொய்யாக் குலக்கொடி" என்றும் இளங்கோவடிகள் புகழ்ந்துரைத்தார். ஆற்றுப் பெருக்கற்ற காலத்தும் ஊற்றுப் பெருக் கால் உலகூட்டும் வையையின் கருணை வாழ்த்துதற் குரியதன்றோ?
ஆற்று நீராலும் மழைநீராலும் உணவுப் பொருள் களை விளைவிக்கின்ற உழவரைத் தமிழ்நாடு பாராட்டி மகிழ்ந்தது. 'உழவர் ஏரடிக்கும் சிறுகோலே அரசரது செங்கோலை நடத்துங்கோல்' என்று பாடினார் கம்பர். இக் கருத்தை மனத்திற் கொண்டு, "உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்" என்றார் பாரதியார்.
அக் காலத்தில் உழவருக்கு இருந்த பெருமை, திருவள்ளுவர் முதலாய தலைமைப் புலவர்கள் வழங்கியுள்ள கற்பனைகளாலும் விளங்கும். வில்லெடுத்துப் போர் செய்யும் வீரனை 'வில்லேர் உழவன்' என்றும் சொல்லாற்றல் வாய்ந்த கவிஞனைச் 'சொல்லேர் உழவன்' என்றும் குறித்தார் திருவள்ளுவர்.
என்பது திருக்குறள். வேற்படை தாங்கிய வீரனை 'அயில் உழவன்' என்றார் சிந்தாமணி ஆசிரியர்; வாளேந்திய வீரனை 'வாள் உழவன்' என்றார்கள். எனவே, வீரரையும் புலவரையும் உழவராகக் கண்ட பெருமை பண்டைத் தமிழ் நாட்டுக்குரியது.
இயற்கையோடு கலந்து வாழ்ந்த தமிழரின் பெருமை சில கற்பனைகளால் சிறந்து விளங்குகின்றது. நல்ல நிறமும் நறுமணமும் உடைய மலர்கள் எக் காலத்தும் மாந்தர்க்கு இன்பம் தருவனவாகும். தமிழ் நாட்டார்க்குச் சிறப்பாக மலர்களில் மிகுந்த விருப்பம் இருந்ததாகத் தெரிகின்றது. பூக்களில் தலைமை வாய்ந்தது, தாமரை. இப் பூவைப் பாடாத கவிஞர் இல்லை. தண்ணீர் நிறைந்த குளம் முதலிய இடங்களில் தாமரை காணப்படும். தாமரையால் அழகு பெற்ற குளங்களின் கோலத்தைக் காவியங்களிற் காணலாம். காலைப் பொழுதில் தாமரை மலரும்; மாலைப் பொழுதிற் குவியும். இவ் வியற்கைக் காட்சியால் விளைந்த கற்பனைகள் பலவாகும். காலையில் கதிரவன் தோன்றும் பொழுது தாமரை இதழ் விரிந்து இன்புறுகின்றது. மாலையில் கதிரவன் மறையும் பொழுது இதழ் குவிந்து ஒடுங்குகின்றது. ஆதலால், கதிரவன் காதலன்; தாமரை காதலி' என்று கவிஞர் கற்பனை செய்வாராயினர். இக் கற்பனையின் பயனாகத் தாமரை நாயகன் என்னும் பெயர் சூரியனுக்கு அமைந்தது.
இன்னும், பூவின் பல பருவங்களைத் தமிழ் நூல்களிற் காணலாம். அரும்பு, முதற் பருவம் ; முகை, அடுத்த பருவம்; போது, அதற்கடுத்த பருவம்; போது விரிந்த நிலையில் மலராகும். இந்நான்கு பருவங்களில் மூன்றைத் திருவள்ளுவர் ஒரு பாட்டிலே குறித்துள்ளார்.
"காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும் இந் நோய்"
என்ற குறளில் அரும்பு, போது, மலர் என்னும் மூன்று பருவங்கள் முறையாகக் குறிக்கப்பட்டுள்ளன.
மென்மையும் அழகும் வாய்ந்த பூவிற்கு நிகராகப் பெண்களைக் கருதினர் தமிழ்நாட்டுக் கவிஞர். இதனாலேயே 'பூவை' என்னும் பெயர் பெண்ணுக்கு அமைவதாயிற்று. பூவிற்குப் பல பருவங்களை வகுத்தவாறு பெண்ணுக்கும் பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை முதலிய பருவங்களைப் புலவர்கள் வகுத்தார்கள். இல் வாழ்க்கையே பெண்களுக்கு நல்வாழ்க்கை. அவ்வாழ்க்கையில் தலைப்படும்பொழுது பெண்மை மணக்கின்றது; சிறந்த இன்பம் பயக்கின்றது. ஆதலால், கல்யாணம் என்னும் மங்கலத்தை 'மணம்' என்று அறிந்தோர் கூறுவாராயினர். எனவே, பூவின் தன்மைக்கும் பெண்ணின் நீர்மைக்கும் உள்ள ஒற்றுமையாலேயே மணம் என்ற சொல் கல்யாணத்தைக் குறிப்பதாயிற்று.
இயற்கையான நிகழ்ச்சிகளில் சிறந்த உணர்ச்சி களைக் கற்பிக்கும் முறை கவிகளிடம் உண்டு. அயோத்தி மாநகரில் ஒரு தீமை நிகழ்ந்துவிட்டது. எல்லோர்க்கும் இனியவனாகிய இராமன் நாட்டை விட்டுக் காட்டுக்குச் செல்லும் நிலை ஏற்பட்டது. தலைமகன் காட்டுக்குச் செல்ல வேண்டும் என்று கைகேயி வற்புறுத்தினாள். மன்னவனாகிய தசரதன் கைகேயியின் கொடுமையைப் பொறுக்க மாட்டாது மண்மேல் மயங்கி விழுந்தான். இஃது இராப்பொழுதில் மாளிகையில் நிகழ்ந்தது. இந்தக் கொடுமையை அயோத்தியில் உள்ள கோழிகள் அறிந்தன; மனங் கலங்கின; 'ஊரார் எல்லாம் இதை அறியாமல் உறங்குகின்றார்களே' என்று ஏங்கின; துன்பம் பொறுக்கமாட்டாமல் இரு சிறகாலும் வயிற்றில் அறைந்து கொண்டன; 'குய்யோ முறையோ' என்று கூவி ஊராரையெல்லாம் அழைத்தன என்று கவிஞர் கூறுகின்றார் :
"எண்த ருங்கடை சென்ற யாமம்
இயம்பு கின்ற ஏழையால்
வண்டு தங்கிய தொங்கல் மார்பன்
மயங்கி விம்மிய வாறெல்லாம்
கண்டு நெஞ்சு கலங்கி அஞ்சிறை
யான காமர் துணைக்கரம்
கொண்டு தம்வயி றெற்றி எற்றி
விளிப்ப போன்றன கோழியே"
காலையிற் கூவும் கோழியின் குரல், கேட்போர் மனோபாவத்திற் கேற்றவாறு அமைகின்றது. முருக பக்தர் ஒருவர் கோழியின் குரலைக் கேட்கின்றார். கோழி முருகனுக்கு உகந்த பொருள்களுள் ஒன்று. அது முருகன் கொடியிலே நின்று கூவும் பெருமை வாய்ந்தது. ஆதலால், கோழியின் குரல் வெறுங் கூக்குரல் அன்று; தெய்வம் மணக்கும் குரல் என்று அவ் வடியார்க்குத் தோன்றுகிறது. 'கொக்கறுகோ, கொக்கறுகோ' என்று கூவும் கோழியின் கருத்தை அவர் விளக்குகின்றார். கொக்கு என்பது மாமரம். மாறுபட்ட சூரன் மாமரமாகி நின்றான். அவனை அறுத்தார் முருகப் பெருமான். ஆதலால், கொக்கறுத்த கோமானாகிய முருகனையே கோழி புகழ்ந்து போற்றுகின்றது என்று அப் பெரியார் கூறுகின்றார். ஆகவே, கலைகளில் உள்ள கற்பனை, நாட்டின் இயல்பிற்கும், கலைவாணரது மனோபாவத்திற்கும் ஏற்றவாறு அமையும் என்னும் உண்மை நன்கு விளங்குவதாகும்.
------------
2. புராதனப் போர் - படையெடுப்பு
இக் காலத்தில் நடந்துவரும் பெரும் போரால் விளையும் எல்லையற்ற தொல்லையை அறியாதார் யாருமில்லை. உலகம் முழுவதையும் அலைத்துக் குலைத்து வருத்துகின்ற இப் போரின் கொடுமையைக் காண்பவர்கள் முற்காலத்தில் நிகழ்ந்த போர்களைக் குறித்து அறிந்து கொள்ள விரும்புதல் இயற்கையே யாகும்.
தமிழ்நாட்டில் முற்காலத்தில் நிகழ்ந்த பெரும் போர்கள் காவியங்களில் நன்றாக விரித்துரைக்கப்பட்டு இருக்கின்றன. பெரும்பாலும் ஆசையே போருக்கு அடிப்படையாகும். மன்னர் மனத்தில் எழுகின்ற ஆசைக்கோர் அளவில்லை என்று தாயுமான அடிகள் கூறிப்போந்தார்.
"ஆசைக்கோர் அளவில்லை அகிலமெல்லாம்
கட்டி ஆளினும் கடல்மீதிலே
ஆணை செலவே நினைவர்'
என்று அப்பெரியார் அருளிய திருவாக்கின் உண்மை இக் காலத்தில் நடைபெறும் போரால் நன்கு விளங்குகின்ற தன்றோ?
ஆயினும், முற்காலப் போருக்கும் தற்காலப் போருக்கும் நிரம்ப வேற்றுமை உண்டு. ஓர் அரசன் படை மற்றோர் அரசன் படையைத் தாக்கி வீரம் விளைவிக்குமே யன்றி, குடிகள் எல்லோரையும் அழித்து நாட்டைச் சுடுகாடாக்குகின்ற கொடுமை நிகழ்ந்ததில்லை. பகைவர் நாட்டின்மீது படை யெடுக்கும் மன்னர், போருக்கு ஆற்றாதவர்களைப் புறத்தே போக்குவார்கள்; போர்க்களத்தில் பச்சிளம் பாலகரைக் கொல்ல மாட்டார்கள்; முதியவர் மீதும் படைக்கலங்களைத் தொடுக்கமாட்டார்கள்; பயன் தருகின்ற பசுக்களை வதைக்க மாட்டார்கள்; இஃது அறப்போர் முறை என்று புலவர்களால் போற்றப் படுகின்றது. பழந்தமிழ் நூல்களில் இவ் வுண்மையைக் காணலாம். மதுரை மாநகரில் கணவனைப் பறி கொடுத்த கண்ணகி அந் நகரத்தைச் சுட்டெரிக்க முற்பட்டாள். அப் பொழுது அவ் வீர பத்தினியின் முன்னே அக்கினி தேவன் தோன்றி, 'யார் யாரை அழிக்க வேண்டும்?'' என்று கேட்டான். அதற்குக் கண்ணகி, 'பார்ப்பார், அறவோர், பசு, பத்தினிப் பெண்டிர், மூத்தோர், குழவி எனும் இவரைக் கைவிட்டுத் தீத்திறத்தார் பக்கமே சேர்க' என்று ஏவினாள்.
போர்க்களத்தில் அஞ்சாது நின்று அமர் விளைக்கும் வீரரை மறவர் என்று தமிழ்நாடு அழைத்தது. மறம் என்ற சொல்லுக்கு வீரம் என்பது பொருள். எனவே, மறவர் என்பர் வீரராவர். அவர்கள், மனத்திண்மையும் உடல் திண்மையும் உடையவராய், வில்லும், வாளும், வேலும் தாங்கி வெம்போர் புரிவார்கள்; போர்க் களத்தில் முகத்திலும் மார்பிலும் படுகின்ற வடுக்களைப் பொன்னினும் மணியினும் அருமையாகப் போற்று வார்கள்; போரற்ற நாளெல்லாம் பயனற்ற நாளென்று கருதுவார்கள். இத் தகைய வீரர்கள் கொற்றவை என்னும் தெய்வத்தை வணங்கினார்கள். வெற்றி தரும் தெய்வமே கொற்றவையாகும். அத் தெய்வத்தின் அருள் பெற்று மறவர் போர்புரிந்தார்கள்.
தமிழ்நாட்டு மன்னர் போர் செய்யப் புறப்படும் போது நல்ல நாளும் பொழுதும் பார்ப்பது வழக்கம். அதனை ஆராய்ந்து சொல்வதற்குரிய அறிஞர்கள் எப்பொழுதும் அரசனைப் பிரியாமலிருப்பார்கள். அவர்கள் குறிப்பிடும் நற்பொழுதில் அரசன் தன் வாளையும் குடையையும் படையெடுக்கும் திசையில் பெயர்த்து வைப்பான். சோழ நாட்டையாண்ட கரிகால்வளவன் வடநாட்டின்மீது படையெடுக்கு முன்னமே நல்ல நாளும் பொழுதும் பார்த்து, வாளும் குடையும் வடதிசையில் பெயர்த்து வைத்தான் என்று சிலப்பதிகாரம் உணர்த்துகின்றது.
தமிழ் வேந்தர், பகைவரது நாட்டின்மீது படை யெடுக்கும் பொழுது, சிறந்த பூமாலைகள் அணிந் திருப்பார்கள். நறுமணம் கமழ்கின்ற பூக்களை அணிந்து கொள்வதில் தமிழ் நாட்டாருக்கு என்றும் ஆசை அதிக மென்றே தோன்றுகின்றது. தமிழ் நாட்டு மூவேந்தர்களாகிய சேர சோழ பாண்டியர்கள் வெவ்வேறு மாலைகளை அடையாள மாலையாக அணிந்திருந்தார்கள். சேர மன்னனுக்குப் பனந்தோட்டு மாலையும், பாண்டியனுக்கு வேப்பம்பூ மாலையும், சோழ மன்னனுக்கு ஆத்தி மாலையும் அடையாள மாலைகள் என்று அறிகின்றோம். போருக்குப் புறப்படும் பொழுது, மன்னர், அவ்வடையாள மாலை களைச் சிறப்பாக அணிந்திருப்பார்கள். இவ்வாறு அணிவதனால், படையெடுத்துவரும் மன்னர் இன்னா ரென்பதை மாற்றார் நன்கு அறிந்துகொள்வர். இந்த அடையாள மாலையோடு வேறு விதமான பூமாலை களும் படையெடுக்கும் அரசர்கள் அணிவதுண்டு.
பகையரசன் நாட்டைக் கவர்ந்து கொள்ளும் கருத்தோடு படையெடுக்கும் அரசன் குறிஞ்சிப்பூ மாலை சூடியிருப்பான். மாற்றரசன் கோட்டையை வளைத்து முற்றுகை செய்யக் கருதிப் படையெடுக்கும் மன்னவன் உழிஞை மாலை அணிந்திருப்பான். வீரப்புகழை விரும்பிப் பிற மன்னர்மீது படையெடுக்கும் அரசன் தும்பைப்பூ மாலை தரித்திருப்பான். ஆகவே, மன்னர்கள் அணிந்திருக்கும் மாலைகளைக் கண்டு, அவர் மனத்திலமைந்த கருத்தை மாற்றரசர் நன்றாகத் தெரிந்துகொள்வார்கள். போர்க்களத்தில் வெற்றி பெறுகின்ற வேந்தர்கள் வாகை மாலை சூடுதல் வழக்கம்.
பகைவர் நாட்டின்மீது போர் தொடுக்கக் கருதும் அரசன் அதற்கு அறிகுறியாக அந்நாட்டிலுள்ள பசுக்களைக் கவர்ந்து தன் நாட்டிற்குக் கொண்டு வருவான். அதற்கு, ஆநிரை கவர்தல்' என்று பெயர். பசுக்களைக் கவரச் செல்லும் மறவர் செக்கச் சிவந்த வெட்சிமாலை சூடியிருப்பார்கள்; இருட்டிலே சகுனம் பார்த்துச் சென்று பசுக்களைக் கவர்ந்து வருவார்கள். அப் பசுக்களுக்குரிய அரசன் அவற்றை மீட்பதற்குப் படையெடுத்து வரும்போது, இருதிறத்தார்க்கும் போர் நிகழும். இவ்வாறு பசுக்களைக் கவர்வதன் கருத்து யாது என்பதைச் சிறிது ஆராய்வோம். பசுக்களுக்குத் தீங்கு செய்யும் நோக்கம் மன்னர் மனத்திலிருந்ததாகத் தெரியவில்லை; கவர்ந்து வந்த பசுக்களை அவர் நன்கு பாதுகாத்ததாகவும் தெரிகின்றது. தொன்று தொட்டுத் தமிழ்நாட்டார் பசுக்களை மிக அன்புடன் போற்றி வந்துள்ளார்கள். மணிமேகலை என்னும் தமிழ்க் காவியத்தில் பசுக்கள் மீது சிறிதும் பகை கொள்ளலாகாது என்னும் கொள்கை நன்கு விளக்கப்பட்டிருக்கிறது. பசும் புல்லை மேய்ந்து, இனிய பாலைத் தந்து மக்கள் உடம்பை வளர்க்கின்ற பசுக்களை எப்பொழுதும் பாதுகாக்க வேண்டுமேயன்றி அவற்றைத் துன்புறுத்தல் ஆகாது என்பது அக் காவியத்தில் உணர்த்தப்படுகின்றது.
அருமை வாய்ந்தது பசு; ஆதலால் அதனை ஆதரித்தல் வேண்டும் என்பது இந் நாட்டார் கருத்து. பகைவர் நாட்டுப் பசுக்களைக் கவர்ந்து வரும் செய்கையும் இக் கொள்கையையே அடிப்படையாகக் கொண்டதாகும். பகைவர் நாட்டில் போர் நிகழும் பொழுது அவ் விடத்தினின்றும் தப்பியோடக்கூடியவர்கள் ஓடி விடுவார்கள். பாதுகாப்பிடங்களை அடையக் கூடியவர்கள் அடைந்து விடுவார்கள். இவ்வாறு ஒவ்வொருவரும் உயிருக்காக உலைந்து ஓடும் பொழுது, பசுக்களை யார் பாதுகாப்பார்கள்? பசுக்கள் போர்க் களத்தில் அகப்பட்டு இறந்துவிடுமே என்று கருதி, அவற்றை முன்னமேயே வளைத்துக் கொண்டு வந்து மாற்றரசர் தம் நாட்டில் வைப்பார்களென்று அறிந்தோர் கூறுகின்றனர்.
இனிப் பண்டைக்காலத்தில் எவ்வாறு படை திரட்டப்பட்டது என்பதையும் சிறிது பார்ப்போம் : அரசன் போர் செய்யக் கருதியவுடன் அவனது போர்ப்பறை முழங்கும். அப் பறையின் ஓசை நாற்றிசையும் சென்று அதிரும். அவ் வோசையைக் கேட்ட போர் வீரர்கள் போர்க்கோலம் புனைந்து மிக்க ஆர்வத்தோடு புறப்படுவார்கள். வீரத்தாய்மார்கள் தம் பிள்ளைகளை ஆசி கூறி அனுப்புவார்கள். வீர மனைவியர் விருப்புடன் தம் காதலர்க்கு விடை கொடுப்பார்கள். நால்வகைச் சேனை பழந் தமிழ் நாட்டிலிருந்ததாகத் தெரிகின்றது. தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட் படை ஆகிய நான்கும் திரண்டெழுந்தவுடன் அரசன், படைத் தலைவரோடு சென்று அவற்றைப் பார்த்து மகிழ்வான்; வீரரது ஆரவாரத்தைக் கேட்டு அகம் களிப்பான்; தானும் அவர்களுடனிருந்து உணவருந்தி அவர்களுக்கு ஊக்கமளிப்பான். சேனை புறப்பட்டுச் செல்லும் வழியில் அரசனும் படைத் தலைவர்களும் தங்குதற்குரிய பாடிவீடுகள் அமைக்கப் பட்டிருக்கும். அங்கு அரசனும் வீரரும் அமர்ந்து இளைப்பாறும் பொழுது ஆடலும் பாடலும் நடைபெறும்.
இவ்வாறு பண்டையரசர்கள் படையெடுத்த மாட்சியைச் சிலப்பதிகாரம் என்னும் செந்தமிழ்க் காவியத்தில் சிறப்பாகக் காண்கிறோம். சேர நாட்டை யாண்ட செங்குட்டுவன் என்னும் மன்னவன் வடநாட்டின் மீது படையெடுத்த வரலாறு அக் காவியத்தில் விரிவாகக் கூறப்பட்டிருக்கின்றது.
"வடநாட்டரசர் இருவர், தமிழ் நாட்டாரைப் பழித்துப் பேசினார்களென்று சேர மன்னவன் கேள்விப்பட்டான்; அளவிறந்த சீற்றம் கொண்டான். 'அருந்தமிழ் அரசரின் ஆற்றலை யறியாது இகழ்ந்து பேசிய அரசரை அடக்கி வருவேன்' என்று சபையில் சபதம் கூறினான். அந் நிலையில் மன்னன் கருத்தை அங்கிருந்த அமைச்சரும் பிறரும் நன்றாக அறிந்து கொண்டார்கள். நாளும் பொழுதும் நன்கு பார்த்துச் சொல்லும் வானநூல் அறிஞன் எழுந்தான்; 'அரசே ! வடநாட்டின்மீது படையெடுப்பதற்குப் பொருத்தமான நல்ல நேரம் இதுவே. இப்பொழுது புறப்பட்டால் மாற்றரசர் எல்லோரும் தோல்வியுற்று உன் பாதம் பணிவார்கள்' என்று அறிவித்தான். அது கேட்ட மன்னவன், அப்பொழுதே தன் வெண்கொற்றக் குடையையும், நெடிய வாளையும் வடதிசையில் பெயர்த்து வைக்கப் பணித்தான்; படை திரட்டுமாறு படைத்தலைவர்க்கு ஆணையிட்டான்.
'சேரன் தலைநகரமாகிய வஞ்சி மாநகரத்தில் போர்ப்பறை முழங்கிற்று. வீரர்கள் மகிழ்ந்து எழுந்து திரண்டார்கள். அரசன் வஞ்சிமாலை சூடிப் பட்டத்து யானைமீதேறிப் போருக்குப் புறப்பட்டான். செல்லும் வழியில் அவன் வழிபடும் சிவன் கோயில் இருந்தது. அரசன் அக் கோயிலை வலம் வந்து வணங்கினான்; சிவன் அருளின் சின்னமாகப் பெற்ற பூமாலையைச் சிரத்தில் அணிந்து கொண்டான்; அப்பால் ஆடகமாடம் என்னும் திருக்கோயிலிற் பள்ளிகொண்ட பெருமானை வணங்கினான்; அங்கே பெற்ற பூமாலையைத் தோளுக்கு அணியாகக் கொண்ட சேரன் நால்வகைச் சேனையோடும் வஞ்சி மாநகரைவிட்டு வடதிசை நோக்கிச் சென்றான்; இடையிடையே சிறப்பாக அமைக்கப்பட்டிருந்த பாடி வீடுகளில் தங்கினான்; மலையும் நதியும் கடந்து பகைவர்கள் நாட்டை நண்ணினான்; பொங்கி யெழுந்த பகையரசர் சேனையைச் சிதற அடித்தான்; வாகை மாலை சூடினான்; தமிழரசரைப் பழித்துப் பேசிய சிற்றரசர் இருவரையும் சிறை செய்து சினம் தீர்ந்தான்" என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது.
இவ் வரலாற்றாலும் கரிகால் சோழனுடைய சரித்திரத்தாலும் தமிழ்நாட்டரசர்கள் போர்க்களத்தில் வீரப் புகழ்வாய்ந்து விளங்கினார்களென்ற செய்தி நன்றாகத் தெரிகின்றது. சோழ நாட்டுப் புலிக் கொடியைக் கரிகாற்சோழன் இமயமலையில் ஏற்றினான்; சேரநாட்டுச் செங்குட்டுவன் கற்பின் செல்வியாகிய கண்ணகிக்கு இமயமலையிற் சென்று சிலையெடுத்து வெற்றி வீரனாக மீண்டுவந்தான். இவ் வரசர்கள் தமிழ்நாட்டின் வீரப் புகழை விளக்கினார்கள். இவருக்குப் பின்னே வந்த கங்கை கொண்ட சோழன், குலோத்துங்கன் முதலாய மன்னர் நிகழ்த்திய அரும் பெரும் போர்களைத் தமிழ்ப் புலவர்கள் பாட்டாலும் உரையாலும் பாராட்டினார்கள். கலிங்க நாட்டின்மீது குலோத்துங்கன் சேனாதிபதியாகிய கருணாகரன் படையெடுத்து, அந் நாட்டு அரசனை வென்று, வாகை மாலை சூடிய வரலாறு கலிங்கத்துப் பரணியில் இலங்குகின்றது. இவ்வாறு முற்காலத் தமிழ் மன்னரும், இடைக்காலத் தமிழ் மன்னரும் போர் முகத்தில் காட்டிய வீரம் இக் காலத்தினருக்கு ஊக்கத்தையும்
ஆர்வத்தையும் ஊட்டுவதாகும்.
"விண்ணை இடிக்கும் தலை இம யம் எனும்
வெற்பை யிடிக்கும் திறலுடையார் - சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத் ததமிழ்ப்
பார்த்திபர் நின்ற தமிழ்நாடு”
என்று தமிழரது வீரத்தைப் பாடினார் பாரதியார். தமிழர்கள் என்றும் படைக்கு முந்துவர். இன்று நிகழ்ந்து வரும் பெரும் போரிலும் தமிழ்நாட்டு வீரர் பல்லாயிரவர் படையிற் சேர்ந்து, பாலைவனங்களிலும் காடுகளிலும் வீரப் போர் புரிந்து, தமிழ்நாட்டின் பழம் பெருமையை விளக்கி வருகின்றார்கள். பாரத நாட்டின் படைக்கரம் என்று கருதப்படுகின்ற பாஞ்சால நாட்டு வீரரினும் தமிழ் நாட்டு வீரர்கள் எவ்வாற்றானும் குறைந்தவர் அல்லர் என்பது காலம் செல்லச்செல்ல எல்லோர்க்கும் இனிது விளங்கும்.
----------------
3. போர்க்களங்கள்
இவ் வுலகத்தில் போர் இல்லாத இடமே இல்லை. காட்டிலே விலங்கொடு விலங்கு போராடுகின்றது. எளிய விலங்கை வலிய விலங்கு கொல்லுகின்றது. நீரிலே மீனோடு மீன் போராடுகின்றது. சிறிய மீன் பெரிய மீனுக்கு இரையாகின்றது. நாட்டிலே அரசும் அரசும் போராடுகின்றன; எளியவர் நாட்டை வலியவர் கவர்ந்து ஆளுகின்றனர். படை வலிமையுடைய நாடே சிறந்த நாடாக இன்று மதிக்கப்படுகின்றது.
முற்காலத்தில் தமிழ்நாட்டில் மலிந்திருந்தார்கள். அன்னார்,
"உச்சி மீது வான் இடிந்து
வீழு கின்ற போதினும்
அச்ச மில்லை அச்ச மில்லை
அக்ச மென்ப தில்லையே"
என்று பாடிக்கொண்டு போர்க்களம் செல்லும் பான்மையாளர். ஆண்களும் பெண்களும் வீரம் வாய்ந்து விளங்கினார்கள். இத் தகைய மறக்குடியில் தோன்றினாள், ஒரு மங்கை; தன் மனப்பான்மைக்கேற்ற வீரன் ஒருவனை மணந்து ஒரு வீரக்குழந்தையைப் பெற்றாள். அவள் தமையனும் ஒரு தீரன். இவர்கள் ஒரு குடும்பமாக இன்புற்று வாழ்ந்து வருகையில் நாட்டிலே பெரும் போர் மூண்டது. போர் முழக்கம் கேட்டபோது அம் மங்கையின் தமையன் போர்க்கோலம் பூண்டு அமர்க்களம் போந்தான்; கண்டோர் வியக்கக் கடும்போர் புரிந்தான்; மாலைப் பொழுதில் மார்பிலே அடிபட்டு இறந்தான். மறுநாட்காலையில் போர்ப்பறை மீண்டும் வீரரைப் போருக்கு அழைத்தது. உடனே, அம் மங்கையின் கணவன் போருக்குக் கிளம்பினான்; அமர்க்களம் புகுந்து அரும்போர் புரிந்தான்; செருக் களத்தில் உயிர் கொடுத்துப் புகழ்கொண்டான். பொழுது விடிந்தது. மறுபடியும் போர்ப்பறை முழங்கிற்று. மங்கை எழுந்தாள்; தன் குழந்தையை அழைத்தாள்; அவன் தலையில் எண்ணெய் தடவிச் சீவினாள்; வெளுத்து வைத்திருந்த ஆடையை விரித்து உடுத்தினாள்; வேலாயுதத்தைக் கையிலே கொடுத்து இளம் பாலனைப் போர்க்களத்திற்கு அனுப்பினாள். முதல் நாள் தமையன் இறந்தான் என்றும் தளராது , மறுநாள் கணவன் இறந்தான் என்றும் கலங்காது, தன் குடும்பத்திற்கு ஒரு மைந்தனே உள்ளான் என்றும் உணராது, இளம்பாலனைப் போருக்கு அனுப்பிய பெண்மணியின் வீரத்தை மாசாத்தியார் என்னும் பெண் புலவர் பாராட்டிப் பாடியுள்ளார்.
மற்றொரு வீரத்தாய் போர்க்களத்தில் தன் மகன் பகைவர்க்குப் புறங்காட்டி ஓடினான் என்று கேள்வியுற்றாள்; பொங்கி எழுந்தாள்; கொடிய வாளைக் கையிலே எடுத்தாள்; "என் மகன் போர்க் களத்தில் புறங்காட்டி ஓடினான் என்பது உண்மை யானால், அப் பேடிக்குப் பாலூட்டிய மார்பை இவ் வாளால் அறுப்பேன்" என்று வஞ்சினம் கூறிப் போர்க் களம் புகுந்தாள்; அங்கே பிணங்களிடையே நடந்து . சென்று தன் மகனது உடலைக் கண்டாள்; முகத்திலும் மார்பிலும் அடியுண்டு சிதைந்து கிடந்த அவ்வுடலைக் கண்ட நிலையில் அவனைப் பெற்றபோது அடைந்த இன்பத்தினும் பெரியதோர் இன்பம் உற்றாள்.
இனி, மற்றொரு போர்க்களத்தைக் காண்போம். கலிங்கம் என்னும் நாட்டின் மீது கருணாகரத் தொண்டைமான் படையெடுத்தான். ஆண்மை நிறைந்த வீரர்கள் அணியணியாகத் திரண்டு எழுந்தார்கள். போர்ப்பறை கேட்டுப் பொங்கி எழுந்த வீரன் ஒருவன், போர்க்கோலம் புனைந்து, தன் காதல் மனையாளிடம் விடை பெறச் சென்றான். வீரக்கோலத்தில் தன் கணவனைக் கண்ட மங்கை அவ் வழகைக் கண்ணால் பருகிக் களிப்புற்றாள்; தலைவனது பரந்த மார்பினைப் பார்த்தாள், நிமிர்ந்த தோள்களை நோக்கினாள்; அத் தோளில் அமைந்த வாளின் ஒளியைக் கண்டாள்; அளவிறந்த இன்பமும் பெருமையும் அடைந்து வீரக் கணவனுக்கு விடை கொடுத்து அனுப்பினாள்.
போர்க்களம் போந்த காதலன் மாற்றாரை வென்று விரைவில் வருவான் என்று அவன் சென்ற வழிமேல் விழிவைத்துக் காதலி காத்திருந்தாள். வீரன் மீண்டு வருவதாகக் குறித்திருந்த நாளில் வரவில்லை. மேல் ஒரு நாள் சென்றது. சில நாள் சென்றன. மனத்துயரம் பொறுக்கமாட்டாத மங்கை போர்க்களத்தை நோக்கிப் புறப்பட்டாள். அங்கே கால்மாடு தலைமாடாக வீரர்கள் சாய்ந்து கிடந்தார்கள். அவர் உடம்பினின்று பாய்ந்த குருதி ஆறாக ஓடிற்று. முகத்திலும் தோளிலும் பசும்புண் பட்டுக் கிடந்தார் சிலர். மடிந்த வாயினராய் மாண்டு கிடந்தார் சிலர். இவ்வாறு விழுந்து கிடந்த வீரருள்ளே அம் மங்கை தன் கணவனைக் காணாது மயங்கினாள். அவன் என்னாயினன் என்று கேட்டறி வதற்கு அமர்க்களத்தில் யாருமில்லை. அந் நிலையில் வீரர் வணங்கும் தெய்வமாகிய பைரவியை வினவலுற்றாள்.
"பொருதடக்கை வாள்எங்கே? மணிமார் பெங்கே?
போர் முகத்தில் எவர்வரினும் புறங்கொ டாத
பருவயிரத் தோள் எங்கே? எங்கே? என்று
பைரவியைக் கேட்பாளைக் காண்மின் காண்மின்!'
"ஐயோ! தெய்வமே! என் கணவனுடைய வலிமை சான்ற கை எங்கே ? அக் கையிலமைந்த வாள் எங்கே? மாற்றார்க்கும் புறங்கொடாத மணி மார்பு எங்கே? எங்கே?” என்று மங்கை பைரவியைக் கேட்கின்றாள்.
இனிக் கடைசியாக நூற்றாண்டுகளுக்கு முன்னே தமிழ்நாட்டில் நிகழ்ந்த ஒரு வீரத் தியாகத்தைக் காண்போம்: பாஞ்சாலங்குறிச்சிப் பாளையக்காரன் சேனைக்கும் மற்றொரு சேனைக்கும் பெரும்போர் நடந்தது. பாளையக்காரன் தம்பியாகிய ஊமைத்துரை என்பவன் அச் சேனையை எதிர்த்துப் போர் செய்தான். பகல் முழுவதும் போர் நிகழ்ந்தது. அந்திமாலை வந்தடைந்தபோது மாற்றார் சேனை வெற்றிபெற்று மீண்டது. பாளையக்காரன் சேனையில் பலர் விழுந்து கிடந்தார்கள். பாஞ்சாலங்குறிச்சியிலிருந்து போர்புரியச் சென்றிருந்த வீரன் ஒருவன் திரும்பிவரக் காணாத அவன் தாய் இருட்டிலே மகனைத் தேடப் புறப்பட்டாள்; போர்க்களத்தில் கிடந்த பிணங்களை ஒவ்வொன்றாகப் புரட்டிப் பார்த்தாள்; நெடுநேரம் தேடித் திரிந்து தன் மகனைக் கண்டாள். அவன் கொடுங் காயமடைந்து குற்றுயிராய்க் கிடந்தான். உயிரோடு தன் மகனைக் காணும் பேறு பெற்ற வீரத்தாய் மனங் குளிர்ந்து அவனை வீட்டுக்கு எடுத்துச் செல்ல விரும்பினாள். அப்போது அவ்வீரன், "தாயே! என்னை எடுத்துச் செல்வதனால் யாது பயன்? நம் படைத் தலைவராகிய ஊமைத்துரை, அதோ குற்றுயிராய்க் கிடக்கின்றார். அவரை எடுத்துக்கொண்டு போ. அவர் பிழைத்தால் நம் எல்லோருக்கும் நலமாகும்" என்று உருக்கமாக வேண்டினான். அவ் வுரை கேட்ட தாய் மனம் உருகினாள்; தன் மகனது அரும் பெரும் தியாகத்தை மெச்சினாள்; அவன் விரும்பியவாறே ஊமைத்துரையைக் கண்டு எடுத்துச் சென்று காப்பாற்றினாள்.
தனக்கென வந்த தண்ணீரைத் தன்னிலும் தாக முடைய ஒரு போர் வீரனுக்கு அளித்து அழியாப் புகழ் பெற்றான் ஓர் ஆங்கிலவீரன். அவ்வண்ணமே, தன்னுயிர் காக்க வந்த தாயைத் தலைவனிடம் அனுப்பி, அவனுயிரைக் காத்து, தன்னுயிர் துறந்த தமிழ் வீரன் தியாகமும் வியக்கத் தக்கதன்றோ? இத் தகைய வீரரைப் போற்றாதார் யாரே?
------------------
4. ஆகாய விமானம்
பழங்காலத்தில் தரையிலே போர் நிகழ்ந்தது. இடைக் காலத்தில் தரையிலும் தண்ணீரிலும் போர் நடந்தது. இக் காலத்தில் ஆகாயமும் அமர்க்கள மாயிற்று; கருங்கடலில் நீந்திச் செல்லும் மீன்கள் போல நீலவானத்தில் விமானங்கள் பறந்து செல்கின்றன. அந் நாள் கதைகளிற் கேட்ட செய்திகள் எல்லாம் இந் நாளில் நம் கண்ணெதிரே நிகழ்கின்றன.
பறக்கும் கோட்டைகளைக் குறித்து ஒரு பழந்தமிழ்க் கவிஞர் பாடியுள்ளார். ஆகாயத்தில் இயங்கிய அக் கோட்டை தூங்கெயில் என்று பெயர் பெற்றிருந்தது; பறக்கும் கோட்டையில் உள்ளேயிருந்து பகைவன் நாடு நகரங்களைப் பாழாக்கினான். அப் பொல்லாப் பகைவனை ஒரு சோழ மன்னன் வென்றான்; அவன் ஊர்ந்து சென்ற ஆகாயக் கோட்டையை ஒரு படைக் கலத்தால் அடித்து ஒழித்தான். அவ் வீரனைத் தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் என்று தமிழ் நாடு போற்றிப் புகழ்ந்தது. அம் மன்னன் கையாண்ட படைக்கலம் இன்னதென்பது இப்பொழுது தெரியவில்லை.
மற்றோர் அரசன் ஒரு பெரிய நாட்டை ஆண்டு வந்தான். தரையில் போர் செய்வதற்கு நால்வகைச் சேனையும் அவனிடம் நன்கு அமைந்திருந்தன. ஆயினும், விண்ணிலே பறந்து செல்வதற்கு விமானம் ஒன்று செய்ய அவன் பணித்தான். அவன் விரும்பியவாறு ஆகாய விமானம் ஒன்று ஏழுநாளில் ஆக்கப்பட்டது. நல்லரக்கும், மெழுகும், பல்கிழியும், பயினும் கொண்டு பாங்குறச் செய்யப்பட்ட ஆகாய விமானம் மயில் வடிவத்தி லமைந்திருந்தது. அவ் விமானத்தின் அழகு மன்னவன் மனத்தைக் கவர்ந்தது. விமானத்தை இயக்கும் பொறி வியக்கத் தக்கதாய் இருந்தது. அப் பொறியை வலப்பக்கத்தில் கை விரலால் மெல்ல அசைத்தால் விமானம் எழுந்து மேலே பறக்கும்; மேக மண்டலத்திற்கு மேலாகச் செல்லும். அப் பொறியை இடப்பக்கத்தில் அசைத்தால் விமானம் கீழே இறங்கிக் கால் குவித்துத் தரையிலே தங்கும்.
இத் தகைய மயில் விமானத்தை அம் மன்னன் முதலில் தன் மாளிகைப் பூந்தோட்டத்திலே இயக்கிப் பழகினான்; எளிதாக அவ் வானவூர்தி இயங்கும் தன்மையை அறிந்து, தன் காதல் மனைவிக்கும் அதை இயக்கும் முறையைக் கற்பித்தான். விமானத்தை முறுக்கி மேலே பறக்கவும், எளிதாக இறக்கவும் கற்றுக்கொண்ட அரசமாதேவி மாளிகையைச் சூழ்ந்த இடங்களிலும் பூங்கா வனத்திலும் அதன் மீது ஏறிச் சுற்றி இன்புற்றிருந்தாள்.
மாறுபட்ட அரசை யெல்லாம் முரித்து அழித்த மன்னவன், போர் ஒடுங்கியதென்று கவலை தீர்ந்தான்; அரசாங்க வேலைகளைத் தன் அமைச்சனிடம் ஒப்புவித்தான்; அவ்வமைச்சனை,
என்று புகழ்ந்தான். அமைச்சனிடம் அரசாங்க பாரத்தை இறக்கிய பின்பு அளவிலா மகிழ்ச்சியடைந்து அரசன் இன்ப நுகர்ச்சியில் ஈடுபட்டான்.
அரசியலை ஏற்றுக்கொண்ட அமைச்சன் ஒரு நயவஞ்சகன்; உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவன்; தேனினும் இனிய சொற்களால் மன்னனது மாசற்ற மனத்தைக் கவர்ந்து வசப்படுத்தியவன்; அரசாங்க வேலைகளில் அரசன் சிறிதும் தலையிடுவ தில்லை என்பதை அறிந்துகொண்டு மெல்ல சூழ்ச்சி செய்யத் தொடங்கினான்; நால்வகைப் படைகளுக்கும் வேண்டுவன கொடுத்து அவற்றை வளைத்துக் கொண்டான்; அரசனிடம் அன்பு கொண்ட குடிகளிற் பலரை நால்வகை உபாயங்களால் வசப்படுத்தினான்; அரசனையும் சிறை பிடிப்பதற்குக் காலம் பார்த் திருந்தான்.
ஒருநாள் காலையில் அரண்மனையைச் சுற்றிப் பெரிய ஆரவாரம் உண்டாயிற்று. படைகளின் முழக்கம் கடலொலிபோல் எழுந்தது. மாளிகையைச் சேனை சூழ்ந்து கொண்டது என்று மன்னன் அறிந்தான்; அமைச்சன் மோசம் செய்தான் என்று உணர்ந்தான். ஆயினும், சிறிதும் கலக்கம் கொள்ளாது கருவுற்றிருந்த தன் மனையாளிடம் போந்து, "மாசறு பொன்னே ! நான் மதி மோசம் போனேன். அமைச்சனாகிய வஞ்சகன் என் படைகளை வசப்படுத்திக் கொண்டான்; என்னையே தாக்கத் துணிந்து சேனைகளுடன் மாளிகையை வளைத்துள்ளான். ஆயினும், என்? காகமானது கோடி கூடினும் ஒரு கல்லின் முன்னெதிர் நிற்குமோ? நெஞ்சார வஞ்சகம் செய்த பாவியின் படைகளைப் பஞ்சாக நான் பறக்கடிப்பேன். எனினும், கடும் போர்க்களத்தைக் கண்டால் நீ கலங்குவாய். ஆதலால், மயில் விமானத்தின் மீதேறி நீ வெளியே பறந்து செல். நன்றி கெட்ட இந் நாய்களை நான் கொன்று குவித்த பின்னர் உன் இருப்பிடம் நாடி அழைத்துக் கொள்வேன்'' என்று கூறினான்.
நாயகன் சொல்லிய சொல் நங்கையின் செவிகளைச் சுட்டது; அவள் மனத்தை அறுத்தது. ''ஐயோ ! தெய்வமே! நான் என் செய்வேன்! என் மேல் வைத்த காதலாலன்றோ என் கணவன் இந்நிலை அடைந்தார்? பாவியேன் பொல்லாத கனவொன்று கண்டேனே ! அக் கனவும் நனவாயிற்றே ! அரசரே! யாரும் துணையற்ற உம்மை நான் எவ்வாறு விட்டுப் பிரிவேன். நானும் உம்முடன் இருந்து ஒல்லும் வகையால் உதவி செய்வேன். உயிரைப் பிரிந்து உடல் பறந்து செல்லுமோ?" என்று அவள் உருக்கமாகக் கேட்டாள்.
போர்க்களம் செல்வதற்குப் பரபரப்புற்ற இளஞ் சிங்கம் போன்ற மன்னவன் , மயங்கி நின்ற மங்கையை நோக்கி, "எல்லாம் அறிந்த நீ இவ்வாறு கலங்கலாமோ? மெல்லியல் வாய்ந்த மாதரைப் போர்க்களத்திற்கு வெளியே அனுப்பிய பின்னன்றோ அறப்போர் வீரர் படைக்கலம் எடுத்து மாற்றாரை நோக்கிச் செல்வர்? கருவுற்ற உன்னை அருகே வைத்துக்கொண்டு கடும் போர் புரிய என்னால் இயலுமோ? இதோ, மயில் விமானம் வந்துவிட்டது ! ஏறிக்கொள் !'' என்று சொல்லி மங்கையை விமானத்தில் ஏற்றினான்.
இருதலைக் கொள்ளியின் இடைப்பட்ட எறும்பு போல் இடருற்ற மங்கை, விமானத்தில் ஏறியிருந்து வெதும்பிய மனத்தோடும் நடுங்கிய கரத்தோடும் அதனை இயக்கத் தொடங்கினாள். விமானம் பறந்து எழுந்து சென்றது. நொடிப்பொழுது அம்மயிலை அரசன் நோக்கி நின்றான்; கண்ணில் விழுந்த கண்ணீரைத் துடைத்து விட்டுப் போர்க் கோலம் புனைந்து பொங்கி எழுந்தான்; கொடிய வாளை வீசிக் கொண்டு மாளிகையின் புறத்தே நின்ற சேனையின் மீது பாய்ந்தான். அவன் சென்ற இடமெல்லாம் சேனை சின்னபின்னமாயிற்று. பரந்த படையின் நடுவே ஒரு பெரிய வேழத்தின்மீது வஞ்சகனாகிய அமைச்சன் அமர்ந்திருக்க அவன் கண்டான்; உடனே வாய் மடித்து வாளோச்சி அவ்விடம் நோக்கிப் பாய்ந்தான். குருதியாறுகளைக் கடந்து விரைந்தான். பகைவர் விடுத்த அம்புகள் அவன் மேனியிற் பாய்ந்தன. அவர் எறிந்த படைக்கலங்கள் அவன் உடலை அறுத்தன. நெடும் பொழுது அங்குமிங்கும் பாய்ந்து அவன் கடும்போர் விளைவித்தான்; இறுதியில் கை சோர்ந்து மெய்சோர்ந்து விழுந்தான்; உயிர் துறந்தான்.
அமர்க்களத்தில் விழுப்புண் பட்டு இறந்த அரசனைக் கண்டு சான்றோர் மயங்கினர். மறவரும் இரங்கினர். கோளரியைக் குறுநரி வென்றாற்போல அரசனை வென்று நாடாளும் உரிமை பெற்றான் அமைச்சன்; தானே இனி அரசன் என்று நகரமெங்கும் பறையறிவித்தான்.
மயிலேறிப் போந்த மங்கையின் கைவிரல்கள் இயங்கும் பொறியில் இருந்தனவாயினும் அவள் மனம் போர்க்களத்தையே நாடியது. ஆதலால், விமானம் மெல்ல ஊர்ந்தது. ஒரு காட்டின் மீது சென்று கொண்டிருக்கையில் வெற்றி முரசத்தின் ஒலி மங்கையின் செவியில் விழுந்தது; வஞ்சகனாகிய அமைச்சன் வெற்றி பெற்றானே என்று அவள் திடுக்கிட்டாள். அந் நிலையில் அவள் மனம் துளங்கிற்று; கண் இருண்டது. பொறியினை இயக்கிய கால் இடப் பக்கமாகச் சோர்ந்தது. விமானம் கீழ் , நோக்கிச் சென்று ஒரு சுடுகாட்டில் விழுந்தது. பிணப்புகை மலிந்த மயானத்தில் அகப்பட்ட மங்கை அன்றிலம்பேடை போல அரற்றினாள்; அழுது சோர்ந்தாள்.
விமானம் விழுந்த அதிர்ச்சியால் அம் மயானத்தில் அரசமாதேவி ஒரு குழந்தையை ஈன்றாள். இள ஞாயிறுபோல விளங்கிய அம் மகவைக் கண்ட போது . அவள் மனத்திலிருந்து வருத்தம் சிறிது மறைந்தது. ஆயினும், மகனைக் கூர்ந்து நோக்க நோக்க அவள் கண்களில் கண்ணீர் சுரந்தது; "எங்கோ பிறத்தற்குரிய மைந்தன் இங்கே பிறந்தான்!'' என்று எண்ணி எண்ணி ஏங்கினாள்.
"மகனே ! அரண்மனையில் இன்னிசை வாத்தியம் முழங்க, அழகிய மாதர் அருநடம் புரிய, பாவலர் பல்லாண்டிசைக்க, அணி விளக்குகள் ஒளிபரப்ப, மெல்லிய பட்டு மெத்தையிலே நீ பிறத்தற்குரியவன் அல்லனோ?
"வெவ்வாய் ஓரி முழவாக விளிந்தார் ஈமம் விளக்காக
ஒவ்வாச் சுடுகாட் டுயர் அரங்கில் நிழல் போல் நுடங்கிப் பேயாட
எவ்வாய் மருங்கும் இருந்திரங்கிக் கூகை குழறிப் பாராட்ட
இவ்வா றாகிப் பிறப்பதோ இதுவோ மன்னற் கியல்வேந்தே”
"என் கண்மணி ! இம் முதுகாட்டிலே நரி ஊளை யிடுகின்றது; பிணத்தைச் சுடும் நெருப்பு கொழுந்து விட்டெரிகின்றது. கோரமான பேய் கொக்கரித் தாடு கின்றது. சுடுகாட்டைச் சூழ்ந்து கூகை குழறுகின்றது. மன்னன் மைந்தனாகிய நீ பிறந்தவாறு இதுவோ?" என்று அவள் அழுது சோர்ந்தாள். இங்ஙனம் சுடுகாட்டிற் பிறந்த மைந்தன் சீவகன் என்னும் பெயர் பெற்றுச் சிந்தாமணியின் தலைவனாயினான்.
----------------
5. வாழ்க்கையும் வைராக்கியமும்
வைராக்கியம் என்ற சொல்லைக் கேட்டவுடனே தமிழ்நாட்டில் வழங்கும் இரண்டொரு வாசகம் நம் நினைவிற்கு வருகின்றது; ஒன்று, புராண வைராக்கியம்; மற்றொன்று, மயான வைராக்கியம். இவ்விரண்டையும் சிறிது பார்ப்போம். ஓரிடத்தில் கம்பராமாயணக் கதை நடக்கிறது. இராமனைக் காட்டுக்குப் போகும்படி கட்டளையிடுகிறாள் கைகேயி. 'கோசல நாட்டுச் செல்வம் எல்லாம் இனிப் பரதனுக்கே உரியது. இது மன்னவன் ஆணை' என்று பேசுகின்றாள். அது கேட்ட இராமன் அகமலர்ந்து கைகுவித்து,
"மன்னவன் பணியன் றாகில் நும்பணி மறுப்ப னோஎன்
பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்ற தன்றோ
என்னினி உறுதி அப்பால் இப்பணி தலைமேற் கொண்டேன்
மின்னொளிர் கானம் இன்றே போகின்றேன் விடையும் கொண்டேன்"
என்று காட்டை நோக்கிப் புறப்படுகிறான். இந்தப் பாட்டைக் கேட்கின்றான் ஒருவன். அவனுக்கும் அவன் தம்பிக்கும் ஒரு சொத்தைக் குறித்து நீதி மன்றத்தில் நெடுவழக்கு நடக்கின்றது. பாட்டைக் கேட்ட நிலையில், அவன் எண்ணுகின்றான்: "இராமனே உத்தமன் ; தான் வேறு, தம்பி வேறு என்ற எண்ணம் அற்றவன்; எவ்வளவு பெருந் தன்மையோடு பரதன் பெற்ற செல்வம் நான் பெற்ற செல்வமன்றோ என்று பேசுகின்றான். நான் மட்டும் என் தம்பியின் மீது ஏன் வழக்கை நடத்த வேண்டும்? அந்தச் சொத்தை என் தம்பி ஆண்டால் என்ன, நான் ஆண்டால் என்ன?'' என்று எண்ணிக் கொண்டு வீட்டிற்கு வருகின்றான்; பசி தீர உண்கின்றான்; உறங்குகின்றான்; உறக்கத்திலே வைராக்கியம் உலைந்து விடுகிறது. மறுநாட் காலையில் அவன் வக்கீல் வீட்டுக்குப் போகிறான். வழக்கு முறையாக நடக்கிறது. இதுதான் புராண வைராக்கியம்.
மற்றொரு வைராக்கியத்தைப் பார்ப்போம். ஒருவன் திடீர் என்று இறந்துவிடுகின்றான். உற்றார் உறவினர் எல்லோரும் வருகின்றார்கள்; கண்ணீர் சொரிகின் றார்கள். இறந்த உடலை மயானத்துக்கு எடுத்துச் செல்கின்றார்கள். ஈமத்தில் ஏற்றுகின்றார்கள். நெருப்பை மூட்டுகின்றார்கள். அப்பொழுது ஒருவன் நினைக்கிறான். 'என்ன உலக வாழ்க்கை ! நேற்று இருந்தான், இன்று போய்விட்டான். எனக்கும் இப்படித் தானே ஆகும்! ஆதலால், காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும்,
என்று அவன் பாடுகின்றான். மயானத்திலிருந்து திரும்பி வருகின்றான். மனத்தில் எழுந்த வைராக்கியம் மாயமாய்ப் பறந்து போகின்றது. இதுதான் மயான வைராக்கியம்.
மனத்திண்மையே வைராக்கியமாகும்; மனத்திண்மை யற்றவர்கள் ஒரு கொள்கையில் நிலைத்து நிற்க மாட்டார்கள். மன உறுதியுடையவர்கள் மலைபோல் உலையாது நிற்பார்கள். அவர், மெய் வருத்தம் பாரார்; பசி நோக்கார்; அருமையும் பாரார்; அவமதிப்பும் கொள்ளார். மனவுறுதி கொண்டு அறநெறியில் நிற்கும் மாந்தரை இவ்வுலகம் போற்றும். "அரிச்சந்திரன், வாய்மை என்னும் சத்திய நெறியில் வழுவாது நின்றான்; பலவகையான சோதனைக்கு உட்பட்டான்; பதியிழந்தான்; பாலனை இழந்தான்; படைத்த நிதி இழந்தான்; இவ்வாறு ஒன்றன்பின் ஒன்றாக எல்லா வற்றையும் இழந்து, ஈனத்தொழில் புரியும் காலத்தும் சத்தியத்தை விடாது பற்றி நின்றான்; தன்னைச் சோதித்த முனிவரை நோக்கி,
"பதியி ழந்தனம், பாலனை யிழந்தனம், படைத்த
நிதியி ழந்தனம், இனிநமக் குளதென நினைக்கும்
கதியி ழக்கினும் கட்டுரை இழக்கிலேன்"
என்றான். அது கேட்ட முனிவன், "மதியிழந்து, வாயிழந்து, மானமும் இழந்து சென்றான்" என்று அரிச்சந்திரன் சரித்திரம் கூறுகிறது.
இனி மனிதர்க்குரிய குணங்களிற் சிறந்தது பொறுமை என்பர். 'உள்ளம் கவர்ந்து எழுந்து ஓங்கும் சினத்தைக் காத்துக்கொள்ளும் குணமே குணம்' என்றார் ஒரு கவிஞர். வெம்மை விளைப்பது கோபம்; செம்மை விளைவிப்பது பொறுமை. இத் தகைய பொறுமை மன உறுதியாலே வரும். பொறுமையின் தன்மையைத் தம் வாழ்க்கையிலே பொருந்தக் காட்டினார் ஏசுநாதர். தீயவர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு சீறினார்கள்; கழியால் அடித்தார்கள்; காறியுமிழ்ந்தார்கள்; முள்முடியைத் தலையிலே வைத்து அழுத்தினார்கள்; கையிலே நெடுஞ்சிலுவையைக் கொடுத்து வீதியின் வழியாக நடத்திச் சென்றார்கள். ஏசுநாதர் திருமுகம் சோர்ந்தது ; நாவுலர்ந்தது ; கண் குழிந்தது. இத்தகைய இளைத்த மேனியில் கயவர்கள் இருப்பாணியை அறைந்தார்கள். அப் பெருந் துயரத்தைப் பொறுத்தார் ஏசுநாதர்; சிலுவையில் அறைந்து துன்புறுத்தியவர் மீது இரக்கமும் கொண்டார்; இறைவனை நோக்கி, 'எந்தையே! இவர் அறியாமல் செய்கின்றார்கள். இவர் பிழையை மன்னிக்க வேண்டும்' என்று பிரார்த்தித்தார். இத்தகைய இரும் பொறையையும், பெருங் கருணையையும் அழகாகப் பாடினார், கிறிஸ்தவக் கம்பர் என்று புகழப்படுகின்ற கிருஷ்ணபிள்ளை.
"தன்னரிய திருமேனி சதைப்புண்டு தவிப்பெய்திப்
பன்னரிய பலபாடு படும்போதும் பரிந்துஎந்தாய்
இன்னதென அறிகில்லார் தாம் செய்வ திவர்பிழையை
மன்னியும் என்று எழிற்கனிவாய் மலர்ந்தார்நம் அருள்வள்ளல்"
என்ற பாட்டில் தின்மை செய்தார்க்கும் நன்மை செய்த ஏசுநாதரை அருள் வள்ளல்' என்று கவிஞர் போற்றி யிருப்பது பொருத்த முடையதன்றோ?
அரிச்சந்திரனும் ஏசுநாதரும் அறநெறியிலே வைராக்கியம் பூண்டவர்கள். இதற்கு மாறாகத் தவறான வழியிலே தலைப்பட்டு, விடாக்கண்டராக நின்றாரும் உண்டு , கற்பின் செல்வியாகிய சீதையைக் கவர்ந்து சென்று சிறையில் வைத்தான் இராவணன். சீதையை மீட்பதற்காக இராமன் இலங்கையின் மீது படை யெடுத்தான்; பெரும் போர் மூண்டது. இராவணன் மைந்தனாகிய இந்திரசித்தன் இலங்கையில் நிகரற்ற வீரன். அவன் வென்று வருவான் என்று எண்ணி இறுமாந்திருந்தான் இராவணன் - போர்க்களத்தில் பகைவரது திறத்தை நன்றாகத் தெரிந்த இந்திரசித்தன் இராவணன் மாளிகையை அடைந்து, மன்னனைத் தொழுது, 'ஐயனே, இன்று நடந்த போரில் நான் அரிய பெரிய படைக்கலங்களையெல்லாம் விடுத்தேன். அவை பகைவர் மீது செல்லவில்லை. ஆதலால், போருக்கு அஞ்சி இங்கு வந்துவிட்டேன் என்று கருதிவிடலாகாது. உன்பால் வைத்த ஆசையால் ஒன்று சொல்லக் கருதி வந்தேன். சிறைப்படுத்திய சீதையை விட்டுவிட்டால், நாம் சீரும் சிறப்பும் சிதையாமல் வாழலாம். பகைவர் சீற்றம் தீர்வர். நம் நாட்டைவிட்டு நீங்குவர். பகையும் போரும் இன்றி நீ பண்புற்று வாழ்வாய். உன்பால் வைத்த அன்பினால் இதைச் சொன்னேன்' என்றான்.
அம் மொழி கேட்ட இராவணன், சிந்தை கலங்கிச் சீற்றம் தலைக்கொண்டான். எதிரே நின்ற இந்திரசித்தை நோக்கி, 'பேதையே! நீ அறியாமற் பேசினாய். உன்னை நம்பி இருக்கின்றேன் என்று எண்ணினாயா? என் தோள்வலியை நம்பியே சீதையை எடுத்து வந்தேன். எடுத்து வந்த மங்கையைக் கொடுத்துவிடுதல் ஈனமன்றோ? மானமே உயிரினும் பெரிது; வீரப் புகழே வாழ்வினும் விரும்பத் தக்கது.
"வென்றிலன் என்ற போதும் வேதமுள் ளளவும் யானும்
நின்றுள னன்றோ மற்றவ் விராமன்பேர் நிற்கு மாயின்
பொன்றுதல் ஒருகா லத்தும் தவிருமோ, பொதுமைத் தன்றோ
இன்றுளார் நாளை மாள்வார் புகழுக்கும் இறுதியுண்டோ”
என்று சினந்து பேசினான். அதுகேட்ட இந்திரசித்தன் குன்று முட்டிய குருவிபோல் மீண்டும் போர்க்களம் போந்தான்; அரும்போர் புரிந்து ஆவி துறந்தான். இறுதியில் இராவணனும் போர் புரிந்து மாண்டான்.
தமிழ்நாட்டில் வழங்கும் மற்றொரு சரித்திரமும் தவறான வைராக்கியத்தால் வரும் கேட்டைக் காட்டு கின்றது. சூரன் என்பவன் ஒரு பேரரசன் ! வீர மகேந்திரம் என்னும் நகரில் அரசு வீற்றிருந்தான்; வானவர் நாட்டின்மீது படையெடுத்து, இந்திரன் மகனாகிய சயந்தனையும் தேவரையும் பிடித்துச் சிறை வைத்தான். அவர்களை விடுவிப்பதற்காக முருகன் படை எழுந்தது. சூரன் மகனாகிய பானுகோபன் அச் சேனையை எதிர்த்தான்; வீரவேல் கொண்டு போர் புரியும் முருகனை ஒரு நாளும் வெல்ல முடியாது என்று நன்றாக உணர்ந்தான்; சூரனிடம் சென்று, 'அரசே ! இன்று மாற்றார்மீது மாயப் படையை ஏவினேன். அதனினும் சிறந்த படைக்கலம் என்னிடம் இல்லை. அம்மாயப் படையும் பயனற்றுப் போயிற்று. நீ நெடுங்காலம் வாழவேண்டும்; அரசாள வேண்டும் என்பது ஆசை. அவ்வாசையால் ஒன்று கூறுகின்றேன்; வானவரை நீ சிறையினின்றும் விட்டுவிட்டால் படையெடுத்து வந்த முருகன் நம் நாட்டைவிட்டு அகல்வான்; சீற்றம் தீர்வான். உன் அரசு நீடூழி வாழும் ' என்றான்.
அவ் வுரை கேட்ட சூரன் பொங்கி எழுந்தான், 'மைந்தா! என் முன்னின்று என்ன பேசினாய்? வானவரை விட்டே னென்றால் என்னை யார் மதிப்பார்? இவ் வுலக வாழ்க்கை நிலையற்றதென்பதை நீ அறியாயோ? இளமையும் செல்வமும் வீரமும் இனைய பிறவும் அழிந்தே தீரும். அழியாமல் நிற்பது புகழ் ஒன்றே. ஆதலால், என் ஆவி கொடுத்து அரும்புகழ் பெறுவேனே யன்றி, வானவரை விடுவித்து வசையினுக்கு ஆளாகி வாழமாட்டேன்.
"இறந்திட வரினும் அல்லால் இடுக்கண்ஒன் றுறினும் தம்பால்
பிறந்திடும் மானம் தன்னை விடுவரோ பெரியர் ஆனோர்
சிறந்திடும் இரண்டு நாளைச் செல்வத்தை விரும்பி யானும்
துறந்திடேன் பிடித்த கொள்கை, சூரன்என் றொருபேர் பெற்றேன்”
என்று எரிந்து பேசினான். அது கேட்ட பானுகோபன் அமர்க்களம் போந்து, வீரப்போர் புரிந்து ஆவி துறந்தான். பின்னர்ச் சூரனும் போர் செய்து மாண்டான். அரக்கர் தலைவனாகிய இராவணனும், அசுரர் தலைவனாகிய சூரனும் தவறான வழியில் சென்றார்கள். 'மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா' என்றபடி விடாக்கண்டராய் நின்றார்கள்; வீழ்ந்து ஒழிந்தார்கள்.
இனி, மத வைராக்கியம் என்பது ஒன்றுண்டு. இவ் வுலகப் பொருள்களில் ஆசையற்று, கடவுளையே நினைந்து கசிந்து நிற்கும் நிலையே அது. திருவாசகத்தில் மாணிக்கவாசகர் இவ் வைராக்கியத்தின் தன்மையை விளக்கியருளினார்.
"கொள்ளேன் புரந்தரன் மால் அயன் வாழ்வு குடிகெடினும்
நள்ளேன் நினதடி யாரொடல் லால் நர கம்புகினும்
எள்ளேன் திருவரு ளாலே இ ருக்கப்பெறின் இறைவா
உள்ளேன் பிற தெய்வம் உன்னையல் லால்எங்கள் உத்தமனே"
என்பது ஓர் அருமைத் திருவாசகம். இத் தகைய வைராக்கியத்தைத் தம் வாழ்க்கையிலே காட்டிய பக்தர் பலராவர். "ஸ்ரீவில்லிபுத்தூரில் கோதை என்னும் ஆண்டாள் தோன்றினாள். இளமையிலேயே அவள் பெருமாளிடம் பேரன்பு செலுத்தினாள்; அவர் திருமேனியைக் கண்டு காதலித்தாள்; அவர் திருநாமங் களைக் கேட்டுச் செவிகுளிர்ந்தாள்; அவர் திருப் புகழைப் பாடிப் பாடிப் பரவசமுற்றாள். அவள் மங்கைப் பருவமுற்ற போது பெற்றோர் மணம் பேசத் தொடங்கினார்கள். அதை யறிந்த மங்கை, 'மனிதன் எவனையும் நான் மணக்க மாட்டேன்; மணிவண்ண னாகிய பெருமாளையே மணப்பேன்' என்றாள். இந்த மனத் திண்மையைக் கண்டு யாவரும் வியப்பும் திகைப்பும் உற்றார்கள். ஆயினும் அவளன்பின் திறத்தினை அறிந்த திருவரங்கப் பெருமாள் அவளை ஏற்றுப் பேரருள் இன்பமளித்தார்'' என்று குருபரம்பரை என்னும் வரலாறு கூறுகிறது.
இனி, சிவத் தொண்டர்களில் ஒருவராகிய திருநாவுக்கரசர் கொண்ட வைராக்கியத்தைச் சிறிது பார்ப்போம். தமிழ் நாட்டிலுள்ள சிவப்பதிகளை யெல்லாம் கண்டு வணங்கிய திருநாவுக்கரசர், கைலாச மலையில் சிவபெருமான் வீற்றிருக்கும் கோலத்தைக் காண ஆசைப்பட்டார். எழுபது வயதிற்கு மேற்பட்ட முதுமைப் பருவத்தில் வடதிசையை நோக்கி நடந்தார்; காசியை அடைந்து கங்கையையும் விசுவநாதரையும் கைதொழுதார்; வெள்ளி மாமலையை நோக்கி உள்ளம் மகிழ்ந்து நடந்தார்; இரவு பகலாக ஊண் உறக்கமின்றி நடந்து நடந்து, கால் இரண்டும் தேய்ந்தார்; கைகளால் நடக்கத் தொடங்கினார். கையும் தேய்ந்தார்; உடம்பினால் உருண்டு உருண்டு சென்றார்; உடம்பும் தேய்ந்தார்; நகர்வதற்கு முடியாமல் வழியிலே தங்கினார். அப்போது அவ் வழியாக முனிவர் ஒருவர் வந்தார்; திருநாவுக்கரசரைக் கண்டு இரக்கங் கொண்டு, 'நீர் இங்கே எதற்காக வந்தீர்?' என்றார். 'முனிவரே ! கைலாசநாதனைக் கண்டு கும்பிடும் காதலால் வந்தேன்' என்று திருநாவுக்கரசர் மறுமொழி தந்தார். அது கேட்ட முனிவர், 'கைலாச மலையாவது, நீர் காண்பதாவது; வானவரும் காணமுடியாத அம்மலையை மானுடராகிய நீரோ காணவல்லீர்? வந்த வழியே சென்று சொந்த ஊரைச் சேரும்' என்றார். முனிவர் சொன்ன சொற்களால் நாவுக்கரசர் சிறிதும் மனம் தளரவில்லை; தம் மனவுறுதியைத் திறமாக எடுத்துரைத்தார்.
"ஆளும் நாயகன் கயிலையில் இருக்கைகண்ட ல்லால்
மாளும் இவ்வுடல் கொண்டு ளேன்என மறுத்தார்”
முனிவராக வந்த சிவபெருமான் திருநாவுக்கரசரது வைராக்கியத்தைக் கண்டு மகிழ்ந்து, 'கைலாசக் கோலத்தைக் காட்டியருளினார்' என்று பெரிய புராணம் கூறுகின்றது.
சமய வைராக்கியம் போலவே சமுதாய வைராக்கியமும் உண்டு. தாழ்ந்தோரை உயர்த்துவோம் என்றும், தாய்மொழிக்குத் தொண்டு செய்வோம் என்றும், நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைப்போம் என்றும் உறுதி கொண்டவர்கள் உயர்ந்தவர் களல்லரோ? இத் தகைய வைராக்கியம் பூண்டவர்கள் பிறர் தூற்றினால் வருந்த மாட்டார்கள்; போற்றினால் மகிழவும் மாட்டார்கள். நயத்தினாலேனும் பயத்தினா லேனும் அவர் மன உறுதியை மாற்ற முடியாது. அவர்களே நினைத்ததை முடிக்கும் நீர்மையாளர் என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். "எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியராகப் பெறின்" என்பது திருக்குறள்.
-----------------
6. புறநானூறு
செந்தமிழ் நாட்டின் பழம் பெருமையை எடுத்துக் காட்டும் நூல்களுள் புறநானூறு ஒன்று. பல புலவர்கள், பலரைப்பற்றி, பல காலத்தில் பாடிய பாட்டுக்கள் அந்நூலிற் காணப்படும். அறம், பொருள், இன்பம் என்னும் உறுதிப் பொருள்களில், அறத்தையும், பொருளையும் பற்றிய நானூறு பாட்டுக்கள் தொகுக்கப்பட்டிருத்தலால், அந் நூல் புறநானூறு என்னும் பெயர் பெற்றது.
புறநானூற்றிலே படைத்திறம் உடைய பெரு வேந்தரைக் காணலாம். கொடைத் திறம் வாய்ந்த கொற்றவரைக் காணலாம்; கற்றறிந்தடங்கிய சான்றோரைக் காணலாம். சுருங்கச் சொல்லின், கலைமகளும் திருமகளும் களிநடம் புரிந்த பண்டைத் தமிழ்நாட்டைப் புறநானூற்றிலே காணலாம்.
அக் காலத்து மன்னர் பலர் பொன்மலர் நறுமணம் கமழ்ந்தாற் போன்று, புவிச் செல்வத்தோடு கவிச் செல்வமும் பொருந்தப்பெற்று விளங்கினார்கள். முடியுடை மன்னராய் முத்தமிழ் நாட்டையாண்ட சேர சோழ பாண்டியரிற் சிலர் பாடிய கவிகள் புறநானூற்றிலே உண்டு. கற் பின் செல்வியாகிய கண்ணகியின் சீற்றத்தால் உயிரிழந்து அழியாப் புகழ் பெற்ற நெடுஞ்செழியன் என்ற பாண்டியன், புலமை வாய்ந்த முடிவேந்தருள் ஒருவன். கலையின் சுவையறிந்த அக் காவலன், எல்லோரும் கல்வி கற்று மேம்பட வேண்டும் என்று ஆசையுற்றான். 'கற்றவர் மேலோர்; கல்லாதவர் கீழோர்' என்பது அவன் கொள்கை.
"வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கட் படுமே"
என்று அவன் பாடிய பாட்டால், பிறப்பினால் வரும் சிறப்பினும், கல்வியறிவினால் எய்தும் பெருமையே உயர்ந்த தென்பது இனிது விளங்குகின்றதன்றோ?
இனி, சோழ நாட்டு மன்னனாகிய கோப்பெருஞ் சோழனைப் பார்ப்போம் : அவனும் கவி பாடும் திறம் பெற்றவன்; தமிழறிந்த புலவர்களைத் தலைக்கொண்டு போற்றியவன். அச் சோழன், செல்வத்தில் தனக்கு நிகராகிய ஒருவனைத் தோழனாகக் கொண்டான் அல்லன்; பிசிராந்தையார் என்னும் புலவரை உயிர் நண்பராகக் கொண்டான். சோழநாட்டின் தலை நகராகிய உறையூரில் கோப்பெருஞ் சோழன் அரசு வீற்றிருந்தான். பாண்டி நாட்டிலுள்ள பிசிர் என்னும் சிற்றூரில் புலவர் குடியிருந்தார். சோழன், செல்வச் செழுமை வாய்ந்தவன். பிசிராந்தையார் புலவர்க்குரிய வறுமை பூண்டவர்; எனினும், சோழனுக்கு ஆந்தையே உயிர்த்தோழர் ஆயினார். இத் தகைய அரசன் உலக வாழ்க்கையில் வெறுப்புற்று, நாடு துறந்து, உண்ணா விரதம் பூண்டான். அந் நிலையில் அவன் மனம் பிசிராந்தை யொருவரையே நாடிற்று. 'நண்பர் வருவார் வருவார்' என்று அவன் வழிமேல் விழிவைத்திருந்தான்;
"செல்வக் காலை நிற்பினும்
அல்லற் காலை நில்லலன்"
என் ”தோழன்" என்று அருகே யிருந்த அன்பரிடம் அகங் குழைந்து கூறினான். இங்ஙனம் ஏங்கி நின்ற உயிர் நீங்கிப்போயிற்று. சோழன் சொல்லிய வண்ணமே ஆந்தை வந்து சேர்ந்தார்; நிகழ்ந்ததை அறிந்தார்; தாமும் உண்ணாவிரதம் இருந்து, தம்முயிர்கொண்டு, சோழன் நல்லுயிரைத் தேடச் செல்பவர் போல, ஆவி துறந்தார். இவ்விருவரும் ஒன்றுபட்டு உணர்ச்சியின் பயனாகிய உயரிய நட்பிற்குச் சான்றாயினர்.
கலையறிந்த புலவர்களை அக் காலத்து மன்னரும் செல்வரும் மதித்தார்கள்; கற்றோரைப் போற்றாத நாடு ஒரு நாளும் கடைத்தேற மாட்டாது என்னும் உண்மையை நன்றாக அறிந்திருந்தார்கள். சேரநாட்டை யாண்ட பெருஞ்சேரலை நாடிச் சென்றார், ஒரு தமிழ்ப் புலவர். அப்பொழுது மன்னன் மாளிகையில் இல்லை. நெடுந்தூரம் நடந்து, வெயிலால் உலர்ந்து, பசியால் வருந்திய புலவர் அங்கிருந்த மெல்லிய மஞ்சத்தில் படுத்துறங்கிவிட்டார். சேரமான் வந்தான்; மஞ்சத்தில் உறங்கிய அறிஞரைக் கண்டு நெஞ்சம் குளிர்ந்தான். அவர் நன்றாக உறங்குமாறு வெண்சாமரம் எடுத்து வீசுவானாயினன். சேரன் உள்ளத்தில் அமைந்த தமிழார்வம் இதனால் தெள்ளிதின் விளங்குகின்ற தன்றோ? வாள் எடுத்து, மாற்றார் தலைகளை வீசிய கைகளால் சேரமான் புலவர்க்குச் சாமரம் வீசினான். தகடூர்க் கோட்டையைத் தகர்த்த சேரன், தமிழ்ப் புலமைக்குத் தாழ்ந்து பணி செய்வானாயினான்.
கொங்கு நாட்டிலே குமணன் என்னும் குறுநில மன்னன் ஒருவன் இருந்தான். அவன் புலவரது வறுமைக்குப் பெரும் பகைவன். தம்பியின் கொடு மையால் நாடிழந்து, தன்னந்தனியனாய்க் காட்டிலே மறைந்து வாழ்ந்த அம் மன்னனைத் தேடிக் கண்டுகொண்டார் ஒரு தமிழ்க் கவிஞர்; அவன் நிலைமையைச் சிறிதும் கருதாது தம் பாட்டைச் சொல்லத் தொடங்கினார். 'ஐயனே ! பலநாள் உணவின்றி, மனையாள் வற்றி ஒடுங்கிவிட்டாள். பாலற்ற கைக்குழந்தை பசியால் அழுது தாய் முகம் பார்க்கின்றது. தாய், கண்ணீர் நிறைந்த கண்களோடு என் முகம் பார்க்கின்றாள். ஏழையேன் என் செய்வேன்? உன் முகம் நோக்கி வந்தடைந்தேன்' என்று உருக்கமாகப் பாடினார். கவிஞர் பாடிய பாட்டைக் கேட்ட குமணன் பெருந் துயரம் உற்றான். நாடிழந்த பொழுது அடைந்த துன்பத்தினும், வாடிய புலவரது வறுமையை அறிந்த நிலையில் அவன் பெருந்துயரம் அடைந்தான். "அந்த நாள் வந்திலை அருங்கவிப் புலவோய், இந்த நாள் வந்து நீ நொந்தெனை அடைந்தாய்" என்று சொல்லிக் கொண்டே தன் உடைவாளை எடுத்துப் புலவர் கையிற் கொடுத்து, இவ்வாளால் என் தலையை அரிந்து, நாடாளும் என் தம்பியிடம் கொடு. இத் தலைக்கு அங்கே விலையுண்டு. அவன் தரும் பொருளைப் பெற்று, வறுமையைப் போக்கிக் கொள்' என்று முகமலர்ந்து கூறினான். இவ்வாறு அறிஞர் ஒருவரைப் பற்றிய வறுமை கண்டு தரியாது தன் தலையையே கொடுக்க இசைந்த குமணனை ஈன்ற தமிழ் நாடு பெருமை வாய்ந்ததன்றோ?
இத் தகைய பெரியோரைத் 'தமக்கென வாழாப் பிறர்க்குரி யாளர்' என்று தமிழகம் போற்றுகின்றது. இவர்கள் இருத்தலாலேயே இவ் வுலகம் நிலைத் திருக்கின்ற தென்ற தியாகத்தின் பெருமையைப் பாராட்டிப் பாடினான் இளம்பெருவழுதி என்னும் பாண்டியன்.
அதிகமான் என்னும் சிற்றரசன் அமுதம் நிறைந்த கருநெல்லிக் கனியைத் தான் உண்டு நெடுங்காலம் வாழக் கருதாது, நல்ல தமிழ்ப் பாட்டியற்றிய ஒளவையார்க்கு மனமகிழ்ந்து கொடுத்தான் அன்றோ? அதிகமானின் தமிழார்வத்தையும் தியாகத்தையும் ஒளவையார் வாயார வியந்து வாழ்த்தினார்.
ஆண் பெண் ஆகிய இருபாலாரும் பாடியுள்ள கவிகளைப் புறநானூற்றிலே காணலாம். கல்வியிற் கடைப்பட்டோர் என்று இக்காலத்திற் கருதப்படுகின்ற குலங்களிற் பிறந்த பெண்மணிகள், முற்காலத்தில் கவி பாடியுள்ளார்கள். மலைநாட்டை யாண்ட ஏறைக் கோன் என்பவனை ஒரு குறமகள் பாடினாள். கரிகாற் சோழனை வெண்ணி என்னும் ஊரிற் பிறந்த குயத்தி பாடினாள். எயினக் குலத்திற் பிறந்த ஒரு மங்கை வஞ்சி மாநகரின் வளம் பாடினாள்.
இங்ஙனம் கல்வி சிறந்த தமிழ் நாட்டில் முடி வேந்தருக்கு அடுத்த வரிசையில் அமைந்த சிற்றரசர்களிற் சிலர் சிறந்த வள்ளல்களாக விளங்கினார்கள். பாண்டி நாட்டிலுள்ள பறம்பு மலையையும், அம்மலையை யடுத்த முந்நூறு ஊர்களையும் ஆண்டு வந்தான் பாரி என்னும் சிற்றரசன். அவன் மனத்தில் எழுந்த கருணைக்குக் கங்கு கரையில்லை. அவன் நாவில், 'இல்லை' என்ற சொல்லே இல்லை. காட்டிலே குழைந்து கிடந்த முல்லைக்கொடி யொன்றைக் கண்டு மனமிரங்கி, அது படர்ந்து தழைத்தற்காகத் தன் அழகிய தேரை அதன் அருகே விட்டுச் சென்ற பாரியின் மனப்பான்மையைத் தமிழுலகம் வியந்து மகிழ்ந்தது. பயன் கருதாது கொடுத்த பாரியின் பெருமையைப் பொய்யறியாக் கபிலர் புகழ்ந்து போற்றினார்.
"பாரி பாரி என்றுபல ஏத்தி
ஒருவர் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டுஈண்டு உலகுபுரப் பதுவே”
என்று பாடினார் கபிலர். 'செந்தமிழ்ப் புலவ ரெல்லாம் பாரி ஒருவனையே மாறி மாறிப் புகழ்கின்றனரே ! இவ்வுலகத்தைக் காப்பவன் பாரி ஒருவன் தானா? மழையும் உலகத்தைக் காக்கின்றதன்றோ' என்று கபிலர் பழிப்பார் போலப் பாரியின் பெருமையைப் பாராட்டினார். இம் மண்ணுலகில் பாரிக்கு ஒப்பாகச் சொல்லத் தக்கார் யாருமில்லை; விண்ணினின்று கைம்மாறு கருதாது பொழியும் மாரியே அவனுக்கு இணையாகும் என்பது கபிலர் கருத்து. இங்ஙனம் கொடைத் திறத்தால் புகழ் பெற்ற பாரியைத் தேவாரமும் பாராட்டுவதாயிற்று. "கொடுக்கிலா தானைப் பாரியே என்று கூறினும் கொடுப்பாரில்லை" என்று முறையிடுகின்றார் சுந்தரமூர்த்தி.
பொதியமலைத் தலைவனாய் விளங்கிய ஆய் என்பவன் மற்றொரு வள்ளல். வறுமையால் வாடி வந்தடைந்தோரைத் தாயினும் சாலப் பரிந்து ஆதரித்த ஆயின் பெருமையைப் புறநானூற்றால் அறியலாம்.
"இம்மைச் செய்தது மறுமைக்காம் எனும் அறவிலை வாணிகன் ஆய் அலன்" என்று அவன் மனப் பான்மையை ஒரு பாட்டு விளக்குகின்றது. பயன் கருதாது கொடுத்தான் அவ்வள்ளல். கைப் பொருளைக் கொடுத்து அறத்தை விலைக்கு வாங்கும் வணிகன் அவன் அல்லன். கொடுப்பது கடமை, முறைமை என்ற கருத்து ஒன்றே அவன் உள்ளத்தில் நின்றது என்று புலவர் வியந்து கூறுகின்றார். இத் தகைய செம்மனம் படைத்தவர் கோடியில் ஒருவர் என்று கூறவும் வேண்டுமோ?
-------------------
7. சிலப்பதிகாரம்
சேர நாட்டில் அரசு வீற்றிருந்த செங்குட்டுவன் ஒரு நாள் பெரியாற்றங்கரையின் மணற்பரப்பிலே உல்லாசமாகப் பொழுது போக்கிக் கொண்டிருந்தான். அம் மன்னன் தம்பியாகிய இளங்கோவும், மதுரைத் தமிழ்ப் புலவராகிய சாத்தனாரும் உடன் இருந்தார்கள். அப்பொழுது மலைநாட்டுக் குறவர்கள் திரண்டு போந்து, சேரனை மனமார வாழ்த்தி, 'மன்னர் மன்னா! நினது மலைநாட்டில் என்றும் கண்டறியாத ஒரு காட்சியை இன்று கண்டோம். வாடிய முகத்தோடு, ஒரு மாது மலைமேல் ஏறி வேங்கை மரத்தின் கீழ் வந்து நின்றாள். ஒரு விமானம் விண்ணினின்றும் இறங்கிற்று. அவள் அவ் விமானத்திலேறி எம் கண் காண விண்ணுலகம் சென்றாள். அவள் எந்நாட்டாளோ? யார் மகளோ? அறியோம்' என்று கூறித் தொழுது நின்றார்கள். அது கேட்ட மன்னனும் இளங்கோவும் வியப்பும் திகைப்பும் உற்றார்கள். அந் நிலையில் மதுரைச் சாத்தனார், 'அரசே! அந் நல்லாள் வரலாற்றை நான் அறிவேன். அவள் சோழநாட்டுப் புகார் நகரத்திலே பிறந்தவள்; கண்ணகி என்னும் பெயருடையாள்; செல்வப் பெருங் குடியிற் பிறந்தும், முன்வினைப் பயனால் அவ்வூரை விட்டுத் தன் கணவனோடு மதுரையை அடைந்தாள். அங்கு அரண்மனைச் சிலம்பைக் களவாடிய கள்வன் என்று அரசன் ஆணையால் காவலாளர் அவள் கணவனைக் கொன்றார்கள். கணவனை யிழந்த மாது கொதித் தெழுந்து, பாண்டியன் முன்னே சென்று தன் கணவன் குற்றவாளியல்லன் என்று நிரூபித்தாள். அவள் சீற்றத்தால் மன்னனும் மடிந்தான், மதுரையும் எரிந்தது' என்று சொல்லி முடித்தார்.
அக் கதையைக் கேட்ட இருவர் உள்ளமும் உருகின. கவியரசராகிய இளங்கோ அக் கதையின் மூலமாகச் சில சிறந்த உண்மைகளை உலகத்தார்க்கு உணர்த்தலாமே என்று எண்ணினார். நீதி தவறிய அரசரை அறமே . ஒறுக்கும் என்பது ஓர் உண்மை. கற்புடைய மாதரை விண்ணுலகும் மண்ணுலகும் போற்றும் என்பது மற்றோர் உண்மை. வினையின் பயன் விளைந்தே தீரும் என்பது பிறிதோர் உண்மை. இம் மூன்று உண்மைகளும் கண்ணகியின் கதையில் அமைந்திருத்தலால், இளங்கோ அக் கதையைக்கொண்டு ஒரு காவியம் இயற்றக் கருதினார்.
என்று சிலப்பதிகாரப் பதிகம் கூறுமாற்றால் இளங்கோவின் மனத்தில் அமைந்த கொள்கை இனிது விளங்குகின்றது. கண்ணகியின் சிலம்பு காரணமாகவே கதை விளைந்ததாதலின் சிலப்பதிகாரம் என்று இளங்கோவடிகள் அக் காவியத்திற்குப் பெயரிட்டார்.
இளங்கோ அடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் தமிழ்த்தாயின் கழுத்தில் இலங்கும் மணியாரமாகும் என்று கற்றறிந்தோர் கூறுவர். அக் காவியம் கற்போர் மனத்தை அள்ளும் திறம் வாய்ந்ததென்று கட்டுரைத்தார் பாரதியார். "நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம் படைத்த தமிழ் நாடு" என்பது புனைந்துரையன்று; பொருளுரையே.
இத் தகைய காவியத்திலமைந்த நயங்களிற் சிலவற்றைக் காண்போம் : கண்ணகியை மணந்து இன்புற்ற கோவலன், நலமெல்லாம் ஒருங்கே வாய்ந்த அந் நங்கையை நோக்கி,
என்று கூறும் கட்டுரையி லமைந்த காதற்சுவை நம் உள்ளத்தைக் கவர்கின்றதன்றோ?
தமிழ் வளர்த்த பாண்டியனுக்குரிய வைகை ஆற்றை, "புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி வையை என்ற பொய்யாக் குலக்கொடி" என்று இளங்கோவடிகள் போற்றும் பொழுது நம் செவியில் இன்பத் தேன் வந்து பாய்கின்றதன்றோ? இன்னும் சோழநாட்டை வளநாடாக்கிய காவேரியாற்றை,
"பூவார் சோலை மயிலால் புரிந்து குயில்கள் இசைபாடக்
காமர் மாலை அருகசைய நடந்தாய் வாழி காவேரி"
என்று அவர் வாழ்த்தும்பொழுது நம்முள்ளம் குளிர்கின்றதன்றோ?
என்று வஞ்சினம் கூறும்பொழுது நம் நெஞ்சத்தில் வீரம் பொங்குகின்றதன்றோ? சுருங்கச் சொல்லின், காவியத்தில் அமைதற்குரிய சுவைகள் எல்லாம் சிலப்பதிகாரத்தில் செவ்வையாக அமைந்திருக்கின்றன. ஆதலால், சிலம்பின் செல்வம் தமிழ் நாட்டுச் செல்வங்களுள் சிறந்த செல்வமாகும். கண்ணகி, மூன்று தமிழ் நாட்டுக்கும் உரிய பொருளாக விளங்குகின்றாள்.' சோழ நாட்டிலே பிறந்து பாண்டி நாட்டிலே கற்பின் பெருமையை நிறுவி, சேர நாட்டிலே தெய்விகமுற்ற கண்ணகியின் பெருமை தென்னாட்டிலுள்ள முந்நாடு களுக்கும் உரியதன்றோ? இதனாலேயே மதுரைச் சாத்தனார் இளங்கோவடிகளை நோக்கி,
"முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரியது
அடிகள் நீரே அருளுக”
என்று வேண்டிக்கொண்டார். எனவே, மூன்று தமிழ் நாட்டின் தன்மையும், மூன்று முடிமன்னர் செம்மையும் ஒருங்கே சிலப்பதிகாரத்திற் காணலாம். மேலும் இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழின் சிறப்பையும் சிலப்பதிகாரத்தால் அறியலாம். செஞ்சொற் களஞ்சியமாகிய அக் காவியத்தில் சிந்தைக்கினிய செவ்விய தமிழ் நடையுண்டு; செவிக்கினிய இசைப் பாட்டு உண்டு; கண்ணுக்கினிய கூத்துண்டு. ஆகவே, முத்தமிழ் இன்பம் நுகர விரும்பும் வித்தகர்க்குச் சிலப்பதிகாரமே சிறந்த விருந்தாகும்.
இன்னும் எக் காலத்திற்கும் எந் நாட்டிற்கும் பொதுவாகிய மாதர் கற்பும், மன்னர் நீதியும் சிலப்பதிகாரத்தில் நன்கு விளக்கப்படுகின்றன.
என்று திருவள்ளுவர் அருளிய உண்மைக்குச் சிலப்பதிகாரமே சிறந்த சான்று. கற்பெனும் திண்மையே கண்ணகியின் வடிவம். அவ் வீரவடிவமே சேரன் செங்குட்டுவன் உள்ளத்தைக் கவர்ந்தது. கண்ணகிக்கு வீரக்கல் நாட்டி வழிபட விரும்பினான் சேரன் ; விண்ணளாவிய இமயமலையிற் போந்து சிலை எடுத்தான்; கங்கையாற்றில் நீராட்டினான்; தலை நகராகிய வஞ்சி மாநகரத்தில் கொண்டுவந்து அச் சிலையை நிறுவித் திருவிழாக் கொண்டாடினான். அத் திருவிழாவைக் காண வந்திருந்த பிற நாட்டுப் பெருவேந்தர், தம் நாடுகளிலும் பத்தினித் தெய்வத்தை வழிபடத் தொடங்கினார்கள். இவ்வாறு, பத்தினி வழிபாடு பாரத நாட்டிற் பரவியது. "கற்புக்கடம் பூண்ட இத் தெய்வமல்லது பொற்புடைத்தெய்வம் யாம் கண்டிலம்" என்ற வாக்கு மெய்யாயிற்று.
வீரக்கற்பு வாய்ந்த கண்ணகியின் கதையால் ஓர் அரசியல் உண்மையும் விளங்குகின்றது. நெறி தவறிய அரசனை அறமே ஒறுக்கும் என்னும் உண்மையைப் பாண்டியன் வரலாறு காட்டுகின்றது. அரண்மனைச் சிலம்பைக் களவாடிய கள்வன் அகப்பட்டான் என்று பொற்கொல்லன் சொல்லிய சொல்லை ஆராய்ந்து . பாராது, உண்மையை விசாரித்து அறியாது, 'அக் கள்வனைக் கொன்று சிலம்பைக் கொண்டுவருக' என்று பணித்தான் பாண்டியன். அரசன் ஆணையால் தன் கணவன் இறந்தான் என்றறிந்த கண்ணகி சீறி எழுந்தாள்; 'தீ வேந்தன் தனைக்கண்டு இத் திறம் . கேட்பேன்' என்று புறப்பட்டாள்; கருங்கூந்தல் விரிந்து . கிடக்க, கண்கள் கண்ணீர் வடிக்க, கையில் ஒற்றைச் சிலம்பேந்திக் காவலன் முன்னே தோன்றினாள்; கோவலனிடமிருந்த சிலம்பு அரண்மனைச் சிலம்பன்று, தன் சிலம்பே எனப் பாண்டியன் திடுக்கிடப் பேசினாள்; அச் சிலம்பை உடைத்துத் தன் வழக்கை மெய்ப்பித்தாள். அந் நிலையில் மன்னவன் கை சோர்ந்து, மெய் சோர்ந்தான்;
"தாழ்ந்த குடையன், தளர்ந்தசெங் கோலன்
பொன்செய் கொல்லன் தன்சொற் கேட்ட
யானோ அரசன்? யானே கள்வன் !
மன்பதை காக்கும் தென்புலங் காவல்
என்முதற் பிழைத்தது; கெடுக என் ஆயுள்”
என மயங்கி விழுந்து மாண்டான். இங்ஙனம் கண்ணகிக்குச் செய்த தவறு காரணமாக உயிர் துறந்த மன்னவனை,
"தொல்லை வினையால் துயருழந்தாள் கண்ணினீர்
கொல்ல உயிர்கொடுத்த கோவேந்தன் வாழியரோ'
என்று நல்லார் வாழ்த்தினார்கள். ஆகவே, மாநிலம் காக்கும் மன்னவனை நீதி வழுவாத நெறி முறையே காக்கும் என்னும் அரசியற் கொள்கை சிலப்பதிகாரத் தால் உணர்த்தப்படுகின்றது. இத்தகைய செஞ்சொற் காவியத்தைத் தமிழுலகிற்குத் தந்த வஞ்சிக் கோவை நெஞ்சார வாழ்த்துவோமாக!
-------------
8. மணிமேகலையும் மதுவிலக்கும்
இயற்கை வளம் நிறைந்த தமிழ் நாட்டில் பனையும் தென்னையும் பல்லாயிரம் உண்டு. பாண்டிநாடு தொன்று தொட்டுப் பனைவளம் படைத்ததாகும் சோழ நாட்டிலும் சேர நாட்டிலும் தென்னைச் செல்வம் சிறந்து விளங்குகின்றது. தென்னையிலும் பனையிலும் ஊறுகின்ற மது ஆறாகப் பாய்வதற்குப் போதியதாகும். ஆயினும், தென்னாட்டில் பிறந்த சமயங்களும், புகுந்த சமயங்களும் மதுவிலக்குப் பிரசாரம் செய்தன. சைவமும் வைணவமும், பௌத்தமும் சமணமும், மகம்மதியமும் கிருஸ்தவமும் மதுபானத்தைக் கடிந்தன. மற்றைய கொள்கைகளில் பிணக்க முற்ற இப் பெருஞ் சமயங்கள் மதுவிலக்குக் கொள்கையில் இணக்க முற்றுப் பணிசெய்த பான்மையிலேயே தமிழ்நாட்டில் மதுபானம் மட்டுப்படுவதாயிற்று.
தமிழ் மொழியில் இறவாத பெருநூல்கள் இயற்றிய பேரறிவாளரும் தம் கவிகளின் வாயிலாக மதுவிலக்குப் பிரசாரம் செய்துள்ளார்கள். தமிழ்மறையென்று தமிழ் நாட்டார் போற்றும் திருக்குறள், மனித சமுதாயத் துக்குக் கேடு விளைவிக்கும் மூன்று தீமைகளை மிக அழுத்தமாகக் கண்டிக்கிறது. விபசாரம், மதுபானம், சூதாட்டம் இம் மூன்றும் செல்வத்தைச் சிதைத்துச் சீர்மையை அழிக்கும் என்று அந் நூல் கூறுகின்றது.
"இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திரு நீக்கப் பட்டார் தொடர்பு”
என்பது வள்ளுவர் வாய்மொழி.
சமண முனிவராகிய பவணந்தியார், நன்னூல் என்னும் இலக்கண நூலின் வாயிலாக மதுவிலக்குப் பிரசாரம் செய்கின்றார். கள்ளுண்பவர் கல்வியறிவைப் பெறுதற்கு உரியரல்லர் என்பது அவர் கொள்கை. 'களிமடி மானி காமி கள்வன்' முதலியவர்கள் கல்வி பெறுதற் குரியராகார் என்று ஆசிரியர் கட்டுரைக் கின்றார். கள்ளுண்பவன் 'களி' எனப்படுவான். மாணவராதற்குத் தகுதியற்றவர்களில் முதல் வரிசையில் முதலாகக் கள்ளுண்பவனை வைத்தமையால் மதுவிலக்குப் பிரசாரத்தில் நன்னூலார்க்கு எவ்வளவு ஆர்வம் இருந்தது என்பது நன்று விளங்குகின்ற தன்றோ?
பௌத்த சமயத்தைச் சார்ந்த நூல் மணிமேகலை. அந் நூல் ஐந்து சிறந்த கொள்கைகளைப் பஞ்ச சீலம் எனப் பாராட்டுகின்றது. பஞ்சசீலம் வாய்ந்தோரே சிறந்தோர் ஆவர். கள்ளுண்ணாமை, பொய்யுரையாமை, கொலை செய்யாமை, களவு செய்யாமை, விபசாரம் செய்யாமை ஆகிய ஐந்தும் பஞ்ச சீலம் எனப்படும்.
இனி, மணிமேகலையில் அமைந்த மதுவிலக்குப் பிரசாரத்தைப் பார்ப்போம்: சோழ நாட்டின் தலைநகராகிய காவிரிப்பூம் பட்டினத்தில் ஆடல், பாடல், அழகு என்னும் மூன்று நலங்களும் ஒருங்கே வாய்ந்து கோவலனைக் காதலனாகப் பெற்ற மாதவியின் மகளாய் மணிமேகலை தோன்றினாள். கோவலன் தன் குல தெய்வத்தின் பெயரைத் தன் காதல் மகளுக்கு இட்டு மகிழ்ந்தான். மதுரையில் கோவலன் கொலையுண்டு இறந்த கொடுமையை அறிந்த மாதவி துறவறத்தை மேற்கொண்டாள். அவளோடு பருவ மங்கையாகிய மணிமேகலையும் தன் கருங்குழல் களைந்து துறவற நெறியிற் சேர்ந்தாள். இருவரும் அறவண அடிகள் என்னும் பெரியவரிடம் ஞானோபதேசம் பெற்றார்கள். மணிமேகலை தனக்கென வாழாது சமுதாயத்தின் நலத்திற்காகத் தன்னலத்தைத் தியாகம் செய்த தவநங்கை; சமுதாயத்தை அலைத்துக் குலைத்து அழிக்கும் நோய் பசிநோயே யாதலால் அந் நோயை நீக்கும் முயற்சியை மேற்கொண்டாள். அவள் கையில் அமுதசுரபி என்னும் திருவோடு வந்து சேர்ந்தது. அத் திருவோட்டில் முதன் முதல் கற்புடைய மங்கை ஒருத்தி தன் கையால் அன்னமிட்டால், அவ் வன்னம் அள்ள அள்ளக் குறையாமல் வளரும் என்று மணிமேகலை அறிந்தாள்.
காவிரிப்பூம் பட்டினத்தில் வாழ்ந்த ஆதிரை என்னும் நல்லாளே கற்பின் செல்வி என்று எல்லோரும் எடுத்துரைத்தார்கள். அவள், கணவனே தெய்வம் என்று கருதி வாழ்ந்த கற்புடையாள்; திருவாதிரை நாளில் பிறந்தமையால் அப் பெயர் பெற்றாள் போலும்! அம் மங்கையின் மனை முற்றத்திற் போந்து, மணிமேகலை திருவோடேந்திப் புனையா ஓவியம் போல நின்றாள். ஆதிரை அன்போடு அன்னமெடுத்து வந்து மணி மேகலையை வலம் வந்து தொழுது 'பாரெங்கும் பசிப் பிணி ஒழிக' எனத் திருவோட்டை வாழ்த்தி அதன் சுரை நிறைய அன்னமிட்டாள். இங்ஙனம் பசியைச் சபித்த பாவையின் திறத்தினை,
பசிப்பிணி யென்னும் பாவியை இப் பாரினின்றும் ஒழிக்க முயன்றாள் ஆதிரை; அவள் கணவனாய சாதுவன், மது என்னும் அரக்கனை இம்மாநிலத்தி னின்றும் அகற்ற முயன்றான். ஒரு நாள், கப்பலேறி வங்க நாட்டுக்குப் புறப்பட்டான். நடுக்கடலிற் கப்பல் செல்லும் பொழுது ஒரு சுழல் காற்று எழுந்தது. மரக்கலம் சின்னபின்னமாகச் சிதைந்து தாழ்ந்தது. கருங்கடலில் மிதந்த சாதுவன் கையில் ஒரு பாய்மரம் அகப்பட்டது. சிலநாள், இரவு பகலாக அலைகளால் மொத்துண்டு அலைந்த அம் மரம், ஒரு தீவிலே அவனைக் கொண்டு சேர்த்தது. அங்கே, நாகர் என்னும் வகுப்பார் வாழ்ந்து வந்தார்கள்; விலங்குகளுக்கும் அவர்களுக்கும் வேற்றுமை இல்லை. தம்முள் ஒருவனைத் தலைவனாகவும் குருவாகவும் அவர்கள் கொண்டிருந்தார்கள். அவன் ஆண் கரடி போன்றவன். அவன் மனையாள் பெண்கரடி போன்றவள். கரையிலே ஒதுக்கப்பட்ட சாதுவனை நாகர் சிலர் கண்டார்கள்; நரமாமிசம் கிடைத்ததென்று, நாக்கு ஊறினார்கள்; தம் குருநாதனிடம் அவனைக் கொண்டு சென்றார்கள். பசியால் மெலிந்து, குளிரால் நலிந்த சாதுவனைக் குருநாதன் கூர்ந்து நோக்கினான்; "நீ யார்? இங்கு வந்த காரணம் என்னை?" என்று நாக நாட்டு மொழியிலே வினவினான்.
அம் மொழியை அறிந்திருந்த சாதுவன் கருங்கடலில் நேர்ந்த துன்பத்தை உருக்கமாக எடுத்துரைத்தான். அந் நிலையில் குருநாதன் உள்ளத்தில் இரக்கம் பிறந்தது. அருந்துயருற்ற நம்பிக்கு நாட்பட்ட கள்ளும் நல்ல ஊனும் கொடுக்கும்படி அவன் அருகே நின்ற நாகரைப் பணித்தான்! அவ்வுரை கேட்ட சாதுவன் திடுக் கிட்டான்; இருகையாலும் செவியைப் பொத்திக் கொண்டு, 'ஐயனே ! கள்ளும் ஊனும் வேண்டேன்' என்று உறுதியாக உரைத்தான். அவ் வுரை கேட்ட குருநாதன் வியப்படைந்தான்; 'கள் என்ற சொல்லைக் கேட்ட பொழுது துள்ளி மகிழாத உள்ளமும் உண்டோ? நாவுக்கினிய ஊனையும், கவலையை ஒழிக்கும் கள்ளையும் விலக்கலாமோ?' என்று வெகுண்டு வினவினான். இது கேட்ட சாதுவன் மதுபானத்தின் தீமையைக் குருநாதன் மனங்கொள்ள உணர்த்தலுற்றான்: "ஐயனே! மானிடப் பிறவியில் நாம் அடைந்துள்ள செல்வங்களுள் எல்லாம் சிறந்தது அறிவுச் செல்வமே ஆகும். அவ் வறிவாலேயே நன்மை தீமைகள், குற்ற நற்றங்கள் இவற்றைப் பகுத்து உணர் கின்றோம். இத் தகைய அறிவை வளர்க்கின்றவர்களே மேலோர்; அதனைக் கெடுக்கின்றவர் கீழோராவர். மதுபானம் நம் அறிவை மயக்குகின்றது; நாளடைவில் அதனைக் கெடுத்துவிடுகின்றது. செய்யத் தக்கது இது, செய்யத் தகாதது இது' என்று பகுத்தறியும் திறமையை இழந்துவிட்டால் மாலுமியில்லாத மரக்கலம் போல நமது வாழ்க்கை நெறி கெட்டொழியும். இதனாலேயே,
என்று சாதுவன் எடுத்துரைத்தான்.
உயிர்க்குறுதி பயக்கும் உண்மைகளைச் சாதுவன் வாயிலாகக் கேட்ட நாகர் தலைவன் அவனடிகளில் வீழ்ந்து வணங்கினான்; அதுவரை, கடலிற் கவிழ்ந்த மரக்கலங்களிலிருந்து கைப்பற்றிய அரும்பெரும் பொருள்களை அவனுக்குக் கையுறையாகக் கொடுத்தான். வங்க நாட்டினின்றும் அங்கு வந்தடைந்த வாணிகக் கப்பலில் அவனை ஏற்றி அனுப்பினான்.
ஆகவே, மதுவிலக்குப் பிரசாரம் தமிழ்நாட்டில் புதிதாகத் தோன்றிய தொன் றன்று என்பது இக்கதையால் விளங்கும் செல்லுமிடந்தோறும் தமிழ் மக்கள் மதுவிலக்குப் பிரசாரம் செய்யும் கடமையை மேற்கொண்டிருந்தார்கள் நாட்டில் இருந்தாலும் நடுக்கடலிற் போந்தாலும் அப் பணியை ஒல்லும் வகையால் செல்லும் வாயெல்லாம் செய்து வந்தார்கள். நரமாமிசம் புசிக்கும் நாகர் நாட்டிலே ஒதுக்கப்பட்ட ஒரு தமிழ் வணிகன், அறவுரையால் அந் நாட்டு அரசனைத் திருத்தியருளினான் என்னும் தெள்ளிய வரலாறு நாம் போற்றுதற்குரியதன்றோ?
--------------
9. நளவெண்பா
நளன் கதை நாடறிந்த பழங்கதை . வடமொழியில் உள்ள பாரதத்திலும், தமிழ் மொழியில் உள்ள சிலப்பதிகாரத்திலும் நளன் கதை குறிப்பிடப்படு கின்றதென்றால் அதன் தொன்மைக்கு வேறு சான்றும் வேண்டுமோ? "பஞ்ச பாண்டவருள் தலை சிறந்த தருமர் சூதாடி, நாடிழந்து, வனவாசம் செய்தபோது அவரைக் காணப்போந்தார் வியாச முனிவர். மெய்யன்புடைய முனிவரைக் கண்ட தருமர் மனம் வருந்தி, 'ஐயனே ! மதியிழந்து மாயச் சூதாடினேன்; நாடும் பீடும் இழந்தேன்; காடு போந்தேன்; கடுந்துயர் உழந்தேன்; என்னைப்போல் துன்புற்றோர் இவ் வுலகில் உண்டோ!' என்று கண்ணீர் வடித்தார். அது கேட்ட முனிவர், தருமர் மனத்தைத் தேற்றக் கருதி, நளன் கதையை எடுத்துரைத்தார். கலியின் கொடுமையால் மதியிழந்து சூதாடி, நாடும் செல்வமும் இழந்து, கானகம் சென்று காதல் மனையாளைப் பிரிந்து கடுந்துயர் அடைந்த நளன் கதையைக் கேட்ட தருமர் ஒருவாறு மனந்தேறினார்" என்று மகாபாரதம் கூறுகின்றது.
செந்தமிழ்ப் பழங்காவியமாகிய சிலப்பதிகாரமும் நளன் கதையைக் குறிக்கின்றது. சோழநாட்டுக் காவிரிப்பூம் பட்டினத்தில், வளமார்ந்த வணிகர் குடியிலே பிறந்த கோவலன், பொது மாதின் வசப்பட்டுப் பொருளெல்லாம் இழந்தான்; பெருமை சான்ற வீட்டையும் நாட்டையும் விட்டு, கற்பிற் சிறந்த மனையாளோடு மதுரை மாநகரை நோக்கிப் புறப்பட்டான். வழிநடந்து சென்ற இருவருக்கும் துணையாகக் கவுந்தியடிகள் என்ற முனிவர் வந்து சேர்ந்தார். காடும் நாடும் கடந்து மதுரையின் அருகே வந்தபோது, கோவலன் மனம் கரைந்து முனிவரை நோக்கி, 'மாதவப் பெரியீர் ! பாவியேன் சிறுநெறியிற் சேர்ந்து சிறுமையுற்றேன்; காதல் மனையாளாகிய கண்ணகிக்கும் கடுந்துயர் விளைவித்தேன்' என்று தன் ஆற்றாமையை வெளியிட்டான். அப்பொழுது முனிவர், இராமன் கதையையும் நளன் கதையையும் எடுத்துரைத்து, 'அப்பா! வினையின் பயனை எவ்வாற்றானும் விலக்க வொண்ணாது; அது வந்தே தீரும்' என்று அவன் உள்ளத்தைத் தேற்றினார்.
இத் தகைய பழமை வாய்ந்த நளன் கதையைத் தமிழிலே பாடிப் புகழ் பெற்றார் புகழேந்திப் புலவர். அவர் இயற்றிய 'நளவெண்பா' என்னும் நூல் சிந்தைக்கினிது; செவிக்கினிது. அவ் வெண்பாக்களிற் சிலவற்றைப் பார்ப்போம் : விதர்ப்ப நாட்டரசனாகிய வீமன் மகள் தமயந்தி என்பாள், கட்டழகு வாய்ந்த கன்னியாய்த் திகழ்ந்தாள். அவள் நலங்களை ஓர் அன்னத்தின் வாயிலாக அறிந்தான் நளன் என்னும் மன்னன். பள்ளத்திற் பாயும் வெள்ளம் போல் அவனுள்ளத்தில் காதல் விரைந்து நிறைந்தது. கங்கு கரையின்றிப் பொங்கிய காதலால் ஆண்மைக் குணங்களாய மானமும் நாணமும் இழந்த நளன் அன்னத்தை நயந்து நோக்கி, 'உன் நாவிலே உள்ளது என் நல்வாழ்வு' என்றுரைத்தான். இக் கருத்தைக் கவி அழகாகப் பாடுகின்றார்.
என்று அன்னம் சொல்லிய பொழுது கன்னி உள்ளம் கனிந்தாள்; நளனிடம் காதல் கொண்டாள்; அவனையே மணப்பதாக வாக்களித்தாள். உருவிலும் திருவிலும் ஒப்பற்ற காதலர் இருவரும் மணம் புரிந்து இன்புற்று வாழ்ந்தார்கள். இவ்வாறிருக்கையில், ஒரு நாள் நளன் சூதாடினான்; தனக்குரிய செல்வத்தை யெல்லாம் பணயமாக வைத்துத் தோற்றான்; கண்போன்ற மக்கள் இருவரையும் விதர்ப்ப மன்னனிடம் அனுப்பிவிட்டு, மனையாளோடு கானகம் போந்தான்; அங்கு நள்ளிரவில் கண்ணுறங்கிய காதலியைக் கைவிட்டு அகன்றான்.
"தீக்கா னகத்துறையும் தெய்வங்காள் வீமன்தன்
கோக்கா தலியைக் குறிக்கொள்மின் - நீக்காத
காதலன்பு மிக்காளைக் காரிருளிற் கைவிட்டு இன்று
ஏதிலன் போல் போகிறேன் யான்'
என்று காதலியைப் பிரியும் தறுவாயில் நளன் கானகத் தெய்வங்களை வணங்கிக் கூறும் மொழிகள் நம் உள்ளத்தை உருக்குவனவாகும்.
விடியற்காலத்தில் விழித்தெழுந்தாள் தமயந்தி. காதலனைக் காணாது கலங்கினாள்; மயங்கினாள்; கண்ணீர் பெருக்கினாள். அவ் வழியாக வந்த வணிகன் ஒருவன் கருணை கூர்ந்து, 'மாதே, நீ யார்? இக்கடுங் கானகத்தில் தன்னந் தனியாய் எவ்வாறு வந்தாய்?' என்று வினவினான். அதற்குத் தமயந்தி கூறும் மறு மொழி கற்பிற் சிறந்த குலமாதர் ஒழுக்கத்தை விளக்குகின்றது.
“முன்னை வினையின் வலியால் முடிமன்னன்
என்னைப் பிரிய இருங்கானில் -அன்னவனைக்
காணாது அழுகின்றேன் என்றாள் கதிர் இமைக்கும் பூ
ணாரம் பூண்டாள் புலர்ந்து"
கானகத்தில் கதறவிட்டுச் சென்ற கணவன்மீது தமயந்தி குற்றம் குறை யொன்றும் சொல்லவில்லை. முன்னை வினையின் கொடுமையை நினைந்து வருந்துவாள் ஆயினாள். 'கண்டார் வெறுப்பனவே காதலன்தான் செய்திடினும்' கொண்டானைக் குறை கூறாது தம் தீவினையை நொந்து கொள்வது பண்டைக் குலமாதர் கற்புமுறை என்பது தமயந்தியின் வாய்மொழியால் இனிது விளங்குகின்றது.
அவ் வுரை கேட்ட வணிகன் மனங் குழைந்து மங்கையை அழைத்துச் சென்று, அண்மையில் இருந்த ஒரு நாட்டிலே சேர்த்தான்; அந் நாட்டரசன் அவளைத் தமயந்தி என்று அறிந்தவுடன் விதர்ப்ப மன்னனிடம் சேர்ப்பித்தான்.
தமயந்தியின் நிலை இவ்வாறாக, கானகத்தில் தனியனாய்ப் பொறி கலங்கி, நெறி மயங்கி, நடந்து சென்ற நளனை ஒரு கரும்பாம்பு கடித்தது. நஞ்சு, உடல் முழுவதும் பரவி, அவன் உருவத்தை மாற்றியது. கண்டோர் கண்ணையும் கருத்தையும் கவரும் திருமேனி கருகிக் குறுகிற்று. காட்டைக் கடந்து காலைப் பொழுதில் நளன் கடற்கரை வழியாகச் சென்றான்; அங்கு மலர்ந்திருந்த நீலப் பூக்களையும், பரந்துலாவிய மெல்லிய தென்றலையும், இரை தேடித் திரிந்த பறவைகளையும் பார்த்துப் பலவாறு புலம்பலுற்றான்.
என்று காதலிக்குச் செய்த தீங்கை நினைந்து கரைந்தழுதான்.
இவ்வாறு கடற்கரையில் நடந்து செல்லும் பொழுது நளனைக் கண்டு நண்டுகள் ஓடி, வளைகளின் உள்ளே ஒளிந்தன; அவற்றைக் கண்ட மன்னன் மனத்தில் துன்பம் பொங்கி எழுந்தது. காதல் மனையாளைக் காட்டிலே கைவிட்ட பாதகனைப் பார்க்கவும் கூடாதென்று நண்டுகள் ஓடி மறைந்தன என்று எண்ணி நளன் மனம் நைந்தான்.
என்று மனம் உடைந்து வினவினான். இன்னும் அடுக் கடுக்காக அலைகள் வருவதையும், கரையில் விழுந்து புரண்டு போவதையும் கண்டு மனம் புழுங்கினான் நளன். கருங்கடலின் நிலையும் தன் மனநிலையை ஒத்திருப்பதாகக் கருதி வருந்தினான்.
என்று அலைகடலை நோக்கி அழுதான். "என்னைப் போல் கருங்கடலே! நீயும் உன் காதலியை நள்ளிரவிற் பிரிந்தாயோ!'' என நளன் புலம்பும் மொழிகளில் சோகம் பொங்குகின்றது.
இவ்வாறு கடற்கரை வழியாகச் சென்ற நளன் அயோத்தி நகரை அடைந்தான்; ஊரும் பேரும் சொல்லாது அங்கு அரசு புரிந்த மன்னனிடம் தேர்ப்பாகனாக அமர்ந்தான். சில காலம் சென்றது; நளன் இருப்பிடத்தை ஒற்றர் மூலமாக அறிந்தான் தமயந்தியின் தந்தை; அவனைத் தன் மாளிகைக்கு அழைப்பதற்கு ஒரு சூழ்ச்சி செய்தான்; தமயந்தியின் இரண்டாம் சுயம்வரம் என்று அயோத்தி மன்னனுக்கு அறிவித்தான்; உடனே புறப்பட்டான் அவ் வரசன்; தேர்ப் பாகன் கொண்டுவந்த தேர்மீது ஏறினான்; விதர்ப்ப நாட்டு மாளிகைக்குச் சென்றான். தேர்ப் பாகனாக வந்தவன் நளன்தானா என்று நன்றாகத் தெரிந்து கொள்ளுமாறு தன் மக்களை அவனிருந்த இடத்திற்கு அனுப்பினாள் தமயந்தி.குழந்தைகளைக் கண்டான் நளன். காதலால் இவனுள்ளம் கரைந்தது. கண்களில் கண்ணீர் பொங்கிற்று. இரு மக்களையும் கட்டி அணைத்துக்கொண்டு, 'என் மக்கள் போல்கின்றீர், யார் மக்கள் நீர்?' என்று நாத்தழும்ப அவன் வினவினான். அதற்கு மழலை மொழிகளால் அவர்கள் மறுமொழி தந்தார்கள்.
"மன்னன் நிடதத்தார் வாள்வேந்தன் மக்கள்யாம்
அன்னைதனைக் கான்விட்டு அவன் ஏக - இந்நகர்க்கே
வாழ்கின்றோம் எங்கள் வளநாடு மற்றொருவன்
ஆள்கின்றான் என்றார் அழுது”
அவ் வாசகத்தைக் கேட்ட நளன் கண்ணீர் சொரிந்து பெருமூச்செறிந்தான். குழந்தைகளைத் தமயந்தி மாளிகைக்கு அழைத்து நிகழ்ந்ததைக் கேட்டாள்; ஐயம் தீர்ந்தாள். தேர்ப்பாகனாக வந்த நளனை விதர்ப்ப மன்னன் தன் மாளிகையினுள்ளே அழைத்து வந்தான். அந் நிலையில் முன்னைய வடிவத்தைப் பெற்ற நளன் கானகத்திற் கைவிட்ட காதலியைக் கண்டான்; ஆனந்த வாரியில் மூழ்கினான். பிரிந்தவர் கூடினாற் பேசல் வேண்டுமோ? சூதினால் இழந்த நாட்டை நளன் மீண்டும் பெற்று மனைவி மக்களோடு வாழ்வானாயினான்.
இக் கதையைக் கொண்ட 'நளவெண்பா' நானூற்று இருபத்து நான்கு வெண்பாக்களை உடையது. வெண்பாப் பாடுவதில் புகழேந்தி இணையற்றவர் என்பது கவிச்சுவை தேரும் அறிஞர் கருத்து. "வெண் பாவிற் புகழேந்தி, விருத்தம் என்னும் ஒண்பாவில் உயர்கம்பன்' என்ற மதிப்புரையை மறுப்பார் எவருமிலர். கம்பர் கருத்தும் புகழேந்திப் புலவர் கருத்தும் சில விடங்களில் ஒத்திருக்கக் காணலாம். ஒரு கருத்தைப் பார்ப்போம்.
இவ்வுலகில் செம்மனம் வாய்ந்தவர் சுகத்தையும் துக்கத்தையும், செல்வத்தையும் வறுமையையும் சமமாகவே கருதுவர். மட்டற்ற செல்வம் வந்தடைந் தால் மகிழ்ந்திடவும் மாட்டார்; அடுத்தடுத்துத் துன்பம் வந்தால் அழுங்கிடவும் மாட்டார். இத் தகைய மனப்பான்மை இராமனிடத்தில் அமைந்திருந்ததாகக் கம்பர் காட்டுகின்றார். நாட்டின் தலைவனாக வீற்றிருந்து அரசாளும் பதவியைத் தந்தை அளித்த போதும், காட்டில் அலைந்து திரியும் கடமையைத் தாய் விதித்த போதும் இராமன் திருமுகம் சித்திரத்தில் எழுதிய செந்தாமரையை ஒத்திருந்தது என்னும் உண்மையை,
என்று வியாச முனிவர் வாயிலாகப் புகழேந்திப் புலவர் தருமரைப் பாராட்டுகின்றார். இரு கவிகளின் சொல்லும் பொருளும் ஒன்று பட்டிருக்கக் காண்கிறோம்.
----------
10. நகைச்சுவை
இவ் வுலகம் ஒரு நாடகசாலை: இந்நாடக சாலையில் அரசராய் வருவார் சிலர்; வீரராய் விளங்குவார் சிலர், காதலராய்த் தோன்றுவார் சிலர்; விகடராய் வருவார் சிலர். கூத்துக்கேற்ற கோமாளியைக் கண்டால் எல்லோருக்கும் ஆனந்தம் ! அவர் பேச்சைக் கேட்டால் பிள்ளைகள் விழுந்து விழுந்து சிரிப்பார்கள்; பெரியோர்கள் அக்கம் பக்கம் பார்த்து அடக்கமாகச் சிரிப்பார்கள்; மாதர்கள் மறைவாகச் சிரிப்பார்கள். இப்படி எல்லோரும் ஏன் சிரிக்கிறார்கள்? விகடர் சொல்லும் சொல்லில் அமைந்த சுவை , எல்லோரையும் சிரிக்கச் செய்கின்றது. இச் சுவையைத்தான் நகைச்சுவை என்பர். நகைச்சுவை ஏச்சிலும் தோன்றும், பேச்சிலும் தோன்றும். கற்றவர் கவியிலும் பிறக்கும்; மற்றவர் உரையிலும் பிறக்கும். முதலில் ஏச்சிலே பிறக்கும் சுவையைச் சிறிது பார்ப்போம் :
முக்கூடல் என்ற ஊரிலே ஒரு பள்ளன். அவனுக்குத் தாரம் இரண்டு ; மூத்தாள் முக்கூடற் பள்ளி; இளையவள் மருதூர்ப்பள்ளி. மூத்தாள் பெருமாளைச் சேவிப்பவள்; இளையாள் சிவனடியாள். இவ் விருவரிடையே ஏச்சும் பேச்சும் இல்லாத நாள் இல்லை. ஏசுவதற்கு வேறொன்றும் தோன்றாவிட்டால், இவர்கள் கும்பிடும் சாமிகளைக் கூசாமல் ஏசுவார்கள். சிவனும் பெருமாளும் இப் பள்ளிகள் வாயில் அகப்பட்டுப் படும்பாட்டைப் பார்ப்போம் : ''பிச்சைக்காரச் சாமியைக் கும்பிடும் மருதூராளுக்குப் பேச்சென்ன பேச்சு'' என்று தொடங்கினாள் மூத்தாள். "பிச்சை எடுத்தான் உங்கள் சாமி; பின்னும் பசி தீர வழியின்றி நஞ்சைத் தின்றான். சாமியைப் பார் சாமியை !"
"நாட்டுக்குள் இரந்தும் பசிக்காற்ற மாட்டாமல் - வாரி
நஞ்சை யெல்லாம் உண்டான் உங்கள் நாதன் அல்லோடி”
என்று பழித்தாள் மூத்தாள். இளையாள் அவளுக்கு இளைத்தவளா? பெருமாள் குட்டை உடைத்து விட்டாள்.
"மாட்டுப்பிற கேதிரிந்தும் சோற்றுக்கில்லாமல் - வெறும்
மண்ணையுண்டான் உங்கள் முகில்வண்ண னல்லோடி”
இப்படி உண்டிக்குத் திண்டாடிய சாமிகளுக்கு ஒரு வண்டியாவது உண்டா? அதேது!
"ஏறஒரு வாகனம் தானும் இல்லாமல் - மாட்டில்
ஏறித் திரிந்தான் உங்கள் ஈசன் அல்லோடி''
என்று இடித்துரைத்தாள் மூத்த பள்ளி. 'அப்படியா செய்தி ! அந்த மாடுகூடக் கிடையாமல் பருந்தின் மேலேறிப் பறக்கிறானே உங்கள் பெருமாள்' என்றாள் இளைய பள்ளி.
"வீறு சொன்னதென்ன மாடுதானும் இல்லாமல் - பட்சி
மீதில் ஏறிக்கொண்டான் உங்கள் கீதனல்லோடி"
என்று பழித்தாள்.
இவ் விரு பள்ளியருக்கும் வாய்த்த கணவன் அழகக் குடும்பன். அவன் பெருமாள் அடியான். அதைப் பிடித்துக் கொண்டாள் மூத்த பள்ளி.
"பெருமாளடியானுக்குப் பெண்டிருந்துமே - எங்கள்
பெருமாளை நீ பழித்துப் பேசலாமோடி"
என்றாள். ஒருவாறு அன்று சண்டை ஓய்ந்தது.
இனி, ஒரு குறவனுக்கும் ஒரு குறத்திக்கும் இடையே நடந்த பேச்சைப் பார்ப்போம் : குற்றால மலையிலே வேட்டையாடப் போனான் சிங்கன் என்ற குறவன். அவனுக்கு மனைவியாக வாய்த்த சிங்கி என்ற குறத்தி குறி சொல்லப் புறப்பட்டுச் சென்றாள். வேட்டையாடி வளமான பறவைகளைப் பிடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்தான் சிங்கன்; சிங்கியைக் காணவில்லை; மயங்கினான்; தயங்கினான்.
என்று அங்கும் இங்கும் பார்த்தான்; மனந் துடித்தான்; பல்லைக் கடித்தான்; 'வரட்டும் சொல்கிறேன்' என்று வழி பார்த்திருந்தான். குறி சொல்லப்போன சிங்கி பட்டு உடுத்திப் பணிபூண்டு சிங்காரமாக வந்து சேர்ந்தாள்.
அவள் கோலத்தைக் கண்டான் சிங்கன், கோபமெல்லாம் எங்கேயோ பறந்து போய்விட்டது.
"இத்தனை நாளாக என்னுடன் சொல்லாமல்
எங்கே நடந்தாய் நீ சிங்கி?''
என்று மெத்தக் கனிவாக அவன் வினவினான்.
"கொத்தார் குழலார்க்கு வித்தார மாகக்
குறிசொல்லப் போனேனடா சிங்கா"
என்றாள் சிங்கி.
அவள் மூக்கில் அணிந்திருந்த மூக்குத்தி அவனுக்கு மிக்க புதுமையாயிருந்தது. அது புன்னைப் பூவின் அரும்பு போல் தோன்றிற்று.
"வன்னக் குமிழிலே புன்னை யரும்பேது சிங்கி?''
என்று கேட்டான் சிங்கன். முத்துப் பதித்த மூக்குத் தியைக் கண்டறியாத சிங்கனை முகமலர்ந்து நோக்கி,
"முந்நீர்ச் சலாபத்து முத்துமூக் குத்திகாண் சிங்கா?”
என்றாள் சிங்கி. மெல்லிய பட்டைச் சுற்றிச் சுற்றிக் கட்டியிருந்தாள் அக் குறவஞ்சி. அதைக் கண்ட சிங்கன்,
"இல்லாத சுற்றெல்லாம் எங்கே படித்தாய்நீ சிங்கி?”
என்று வியந்தான். அது கேட்ட காதலி,
"நாட்டில் நல்லாரைக் காண்பவர்க்கு எல்லாம்
வருமடா சிங்கா'
என்று நல்ல பாடம் கற்பித்தாள்.
இப்படியே குழந்தைகள் போடும் விளையாட்டுச் .. சண்டைகளும் விநோதமாய் இருக்கும். பெரிய இடத்துப் பிள்ளைகளாகிய விநாயகனும் முருகனும் ஒரு நாள் சண்டை போட்டுக் கொண்டார்கள். கண்ணைக் கசக்கி அழுது சிணுங்கிக்கொண்டு விநாயகன் அப்பாவிடம் சென்றான் : 'பார் அப்பா ! தம்பி என் காதைப் பிடித்துக் கிள்ளிவிட்டான்' என்று தன் பெரிய காதைத் தொட்டுக் காட்டினான். ''முருகா, நீ ஏன் அப்படி அண்ணன் காதைக் கிள்ளினாய்?' என்று கேட்டார் தந்தை. 'அண்ணன் மட்டும் என் கண்ணை ஆறு, ஏழு என்று எண்ணலாமோ?' என்று பன்னிரண்டு கண்ணுடைய பிள்ளை எதிர்க்கேள்வி போட்டான். 'விநாயகா ! நீ ஏனடா அப்படி விகடம் செய்தாய்?' என்று வினவினார் தந்தை. 'அவன் என் தும்பிக் கையைப் பிடித்து முழம் போட்டு அளந்தானப்பா' என்றான் மூத்த பிள்ளை. குறும்பு செய்த முருகன் சிரித்துக்கொண்டு நின்றான். அங்கும் இங்கும் பார்த்தார் பரமசிவன். ஒரு பிள்ளையையும் குறை சொல்லத் தோன்றவில்லை. பெற்றவளை நோக்கி, 'உன் அருமைப் பிள்ளைகளைப் பார்' என்று ஏளனம் பேசினார்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த சிவனடியார் ஒருவர் இப் பிள்ளைச் சண்டையைப் பெரிய பாட்டாகப் பாடி விட்டார் :
"அரனவன் இடத்திலே ஐங்கரன் வந்துதான்
ஐயஎன் செவியை மிகவும்
அறுமுகன் கிள்ளினான் என்றே சிணுங்கிடவும்
அத்தன்வே லவனை நோக்கி
விரைவுடன் வினவவே அண்ணன்என்
விளங்குகண் எண்ணினன்என
வெம்பிடும் பிள்ளையைப் பார்த்து, நீ அப்படி
விகடமேன் செய்தாய் என
மருவும் என் கைந்நீள முழமளந் தானென்ன
மயிலவன் நகைத்து நிற்க
மலையரையன் உதவவரும் உமையவளை நோக்கிநின்
மைந்தரைப் பாராய்எனக்
கருதரிய கடலாடை உலகு பல அண்டம்
கருப்பமாய்ப் பெற்ற கன்னி
கணபதியை யருகழைத்து அகமகிழ்வு கொண்டனள்
களிப்புடன் உமைகாக்கவே"
என்பது அவர் பாடிய பாட்டு.
இனி, காதல் மணம் புரிந்து கொண்ட ஒரு கற்புடையாள் பேச்சைப் பார்ப்போம் : மதுரையில் திருமலை நாயக்கர் அழகான மாளிகை கட்டி, அதன் சுவர்களில் பேர்போன வித்தகரைக் கொண்டு சித்திரம் எழுதுவித்தார். அதைக் காண ஆசைப்பட்ட கணவன் ஒருவன், 'சித்திர மாளிகைக்கு வருகிறாயா?' என்று தன் காதலியை அழைத்தான். 'அங்கே என்ன விசித்திரமான சித்திரம் எழுதுகிறான்?' என்று வினவினாள் மனைவி. அழகு வாய்ந்த ஆண் பெண் இவர்களின் வடிவங்களை எழுதுகிறானாம். கண்ணையும் மனத்தையும் கவர்கின்றனவாம் அவ் வுருவங்கள்' என்றான் கணவன். 'அப்படியானால் நான் வரமாட்டேன்; நீங்களும் போகலாகாது' என்று மங்கை அழுத்தமாகப் பேசினாள். 'ஏன் அப்படிச் சொல்கிறாய்?' என்று வியப்புடன் வினவினான் காதலன். 'அங்கு வரைந்துள்ள சித்திரம் ஆண் உருவமாய் இருந்தால் நான் பார்க்க மாட்டேன்; பெண் உருவமாய் இருந்தால் நீங்கள் பார்க்க நான் சகிக்கமாட்டேன்' என்ற பதில் வந்தது. இக்கருத்தமைத்து வேதநாயகம் பாடியுள்ளார் :
"ஓவியர்நீள் சுவர் எழுதும் ஓவியத்தைக் கண்ணுறுவான்
தேவியையான் அழைத்திடஆண் சித்திரமேல் நான்பாரேன்
பாவையர்தம் உருவெனில் பார்க்க மனம் பொறேன் என்றாள்
காவிவிழி மங்கை இவள் கற்புவெற்பின் வற்புளதால்"
என்றார் கவிஞர்.
இனிப் புலவர்கள் பேசும் முறையில் அமைந்த சுவையைப் பார்ப்போம். இரண்டு புலவர்கள் ஒருவரை விட்டு ஒருவர் பிரியாமல் இருந்தார்கள். ஒருவர் முடவர்; மற்றவர் குருடர். குருடர் தோளில் முடவர் ஏறிக்கொண்டு ஊர் ஊராகச் சென்று இருவரும் கவி பாடிப் பிழைத்தார்கள். ஒரு நாள் இவர்கள் சொக்கலிங்கர் கோயில் பொற்றாமரைக் குளத்தில் நீராடப் போனார்கள். குருடர் குளத்தில் இறங்கிப் படியிலே ஆடையைத் துவைத்துக் கொண்டிருந்தார். முடவர் கரையிலிருந்தார். ஓர் ஆடையைத் துவைத்து ஒரு பக்கமாக ஒதுக்கி வைத்து, மறு ஆடையைத் தப்பிக் கொண்டிருந்தார் குருடர்; ஒதுக்கி வைத்த ஆடை தண்ணீரில் நழுவி விழுந்தது; மெல்ல மிதந்து போய்க் கொண்டிருந்தது. கரையிலிருந்த முடவர் பார்த்தார்; சிரித்தார். ஆடை தப்பிப் போவது சரிதான் என்று அவருக்குத் தோன்றிற்று. 'இதுவரை நாம் அதைத் தப்பினோம். இப்போது அது நம்மைத் தப்புகிறது.' ''அப்பிலே தோய்த்திட்டு அடுத்தடுத்து நாம் அதனைத் தப்பினால் நம்மை அது தப்பாதோ" என்றார் முடவர். அதுகேட்ட குருடர், ஆடை தண்ணீரில் விழுந்துவிட்ட தென்று அறிந்தார். ஆனால், எப்படிக் கண்டு எடுப்பார்? 'போனால் போகட்டும்; பழைய ஆடை போனால் புதிய ஆடை தருவார் பரமசிவம். இக் கலிங்கம் போனால் சொக்கலிங்கம் தருவார்' என்று நம்பிப் பதில் உரைத்தார் குருடர்.
இனி, கட்டுக்கடங்காத காதல் வயப்பட்டோரும் பிறர் நகைக்கப் பேசுவர்; இராவணன் தங்கையாகிய சூர்ப்பநகை பஞ்சவடிச் சாலையில் இராம லட்சுமணர் களைக் கண்டு காதல் கொண்டாள்; அவர்களை அடைவதற்குச் சீதை இடையூறாக இருந்தாள் என்று எண்ணிச் சமயம் பார்த்து அவளை அப்புறப்படுத்த முயன்றாள்; அப்போது மறைவில் இருந்த இலட்சுமணன் வெளிப்பட்டு, அரக்கியின் மூக்கை வாளால் அறுத்தான். மானம் அழிந்தாலும் சூர்ப்பநகையின் மையல் ஒழிந்தபாடில்லை. அறுத்த புண் ஆறுவதற்கு முன்னே மலர்ந்த முகத்தோடு வீரரிடம் வந்தாள். அவர்கள் முன்னே நாணிக் கோணி நின்று கொண்டு பேசத் தொடங்கினாள் : "வீரரே ! நீங்கள் என் மூக்கை ஒட்ட அறுத்தீர்கள். அதன் கருத்து எனக்கு நன்றாய் விளங்கிவிட்டது. இவள் மூக்கை யறுத்து விட்டால் வெளியே எங்கும் போகமாட்டாள்; வேறுள்ள ஆடவர் எவரும் இவளை விரும்பிப் பார்க்க மாட்டார்; நம்மருகே எப்போதும் இருப்பாள் என்ற ஆசையால் அறுத்தீர்கள். உங்கள் கருத்தை யறிந்தேன்; முன்னிலும் அதிகமாக உங்களிடம் காதல் கொண்டேன்" என்றாள்.
"பொன்னுருவப் பொருகழலீர் ! புழைகாண
மூக்கரிவான் பொருள் வேறுண்டோ
இன்னுருவம் இதுகொண்டு இங்கு இருந்தொழியும்
நம்மருங்கே ஏகாள் அப்பால்
பின்னிவளை அயலொருவர் பாரார் என்றே
அரிந்தீர் பிழைசெய்தீரோ
அன்னதனை அறிந்தன்றோ அன்பிரட்டி
பூண்டது நான் அறிகிலேனோ"
என்ற கம்பர் பாட்டில் மானத்தையும் கடந்த மையலைக் கண்டு நாம் நகைக்கின்றோம்.
----- III
11. தமிழ் நாட்டாரும் அயல் நாட்டாரும்
பாரத நாட்டின் தென்பாலுள்ளது தமிழ்நாடு. இந் நாட்டிற்கு வடக்கே ஆந்திர தேசம் என்னும் தெலுங்கு நாடு அமைந்திருக்கின்றது. மேற்கே கேரள தேசம் என்னும் மலையாள நாடு காணப்படுகின்றது. தெற்கே சிறு கடலாற் பிரிக்கப்பட்ட சிங்கள தேசம் என்னும் இலங்கை இருக்கின்றது. இத் தேசங்களில் வாழ்வோர் நமக்கு அயலார் ஆவர். இவற்றுள் ஆந்திர தேசத்தி லுள்ள தெலுங்கரை நம் முன்னோர் வடுகர் என்றார்கள். 'வடுகன் தமிழறியான். வைக்கோலைக் கசு என்பான்' என்ற வாசகம் தமிழ்நாட்டில் உண்டு. வடுகன் என்ற சொல்லுக்கு வடக்கேயுள்ளவன் என்பது பொருள். முற்காலத்தில் வடுகராகிய தெலுங்கர், எந்த எல்லைக்கு வடக்கே இருந்தார்கள் என்பதைப் பார்ப்போம் : திருப்பதி என்னும் திருவேங்கட மலைக்கு வடக்கே தெலுங்கர் வாழ்ந்தார்கள் என்று தமிழ் இலக்கியம் கூறுகின்றது. அக்காலத்தில் தமிழ் நாட்டின் வடக்கு எல்லை திருவேங்கடமலை. அம் மலையே ஆந்திர நாட்டுக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையே எல்லை காட்டும் கல்லாய் நின்றது. இதனாலேயே தமிழ் நாட்டார் திருவேங்கட மலையை வடமலை என்று வழங்கலாயினர். அம் மலையின் நீர்மையைக் கம்பர் நன்றாகக் கூறுகின்றார் :
"வடசொற்கும் தென்சொற்கும் வரம்பாகி
நான்மறையும் மற்றை நூலும்
இடைசொற்ற பொருட்கெல்லாம் எல்லையதாய்
நல்லறத்துக் கீறாய் வேறு
புடைசுற்றும் துணையின்றிப் புகழ்பொதிந்த
மெய்யேபோல் பூத்து நின்ற
உடை சுற்றும் தண்சாரல் ஓங்கியவேங்
கடத்திற்சென்று உறுதிர் மாதோ"
என்பது கம்பர் கவி.
திருப்பதி மலைக்குத் தெற்கே வாழ்ந்த தமிழரைத் தெலுங்கர், அருவர் என்று அழைத்தார்கள். நாளடை வில் அருவர் என்பது சிதைந்து அரவர் என்றாயிற்று. அரவம் என்பது தமிழுக்குப் பெயராய் அமைந்தது. அருவர் என்ற பெயர் எவ்வாறு தமிழரைக் குறிப்ப தாயிற்று என்பதைச் சிறிது ஆராய்வோம். இப்பொழுது ஆர்க்காடு என்று வழங்கப்படும் நாடு முற்காலத்தில் அருவா நாடு என்ற பெயரைப் பெற்றிருந்தது. அருவா நாட்டில் வாழ்ந்தவர்கள் அருவர் எனப்பட்டார்கள். அவர்கள் பேசிய மொழி தமிழ். அருவர் வாழ்ந்த நாடு ஆந்திர தேசத்தை அடுத்திருந்தமையால் அருவரை ஆந்திரர் நன்கறிந்திருந்தார்கள். அருவர் தமிழர் ஆதலால், தமிழர் எல்லோரையும் ஆந்திர நாட்டார் அருவர் என்று அழைக்கலாயினர். இவ் வுண்மை கலிங்கத்துப் பரணி என்னும் தமிழ் இலக்கியத்தால் அறியப்படும். தெலுங்கு தேசத்திலுள்ள கலிங்க நாட்டில் தமிழ்ச் சேனைக்கும் கலிங்கப்படைக்கும் நடந்த பெரும் போர் கலிங்கத்துப்பரணியில் புனைந்து உரைக்கப்படுகின்றது. தமிழ்ச் சேனையைக் கண்ட போது கலிங்க நாட்டார் மனங்கலங்கினர்; 'ஐயோ! அருவர் படை எடுத்து வந்து விட்டாரே !' என்று அரற்றினர்.
என்பது அப் பாட்டு. சோழ நாட்டுப் போர் வீரரைக் கண்டபோது, 'அருவர் அருவர்' என்று அலறி அடித்துக்கொண்டு, ஒருவர் மேல் ஒருவர் விழுந்து கலிங்க நாட்டார் ஓடினர் என்பது இப்பாட்டினால் அறியப்படுகிறது.
இக் கலிங்கத்தைக் குறித்து இன்னும் அறியத்தக்க செய்திகள் இரண்டொன்று உண்டு. கடற்கரை யோரமாக அமைந்தது கலிங்க நாடு. இந் நாட்டினின்றும் கலிங்கர் பலர் கடல் கடந்து பிற நாடுகளிற் குடியேறி வாழ்ந்தார்கள். மலாய், சிங்கப்பூர் முதலிய நாடுகளிற் குடியேறிய கலிங்கரை அந் நாட்டார் 'கிளிங்கர்' என்றழைத்தார்கள். நாளடைவில் கிளிங்கர் என்பது அங்குக் குடியேறிய இந்தியருக் கெல்லாம் பொதுப் பெயராயிற்று. இன்று சிங்கப்பூரில் வாழும் தமிழர்க்கும் கிளிங்கர் என்பதே பெயர்.
மற்றொரு வகையிலும் கலிங்கம் தமிழ் நாட்டில் வழங்குகின்றது. தமிழிலக்கியத்தில் 'கலிங்கம்' என்ற சொல் ஆடையைக் குறிப்பதாகும். ஆடைக்கும் கலிங்கம் என்று பெயர் எப்படி வந்தது? கலிங்க நாட்டின் பெயரே ஆடையின் பெயராயிற்றோ என்பது ஆராய்தற்குரியதாகும். ஊர்ப் பெயர் ஆடையின் பெயராக அமைதலுண்டு. காலிக்கட்டு (Calicut) என்ற ஊரில் நெய்யப்பட்ட துணி ஆங்கிலத்தில் 'காலிக்கோ' என்று வழங்குதல் போலவும், இரணியல் என்ற ஊரில் நெய்யப்படுகின்ற ஆடை 'இரணியல்' என்று மலையாள தேசத்தில் பெயர் பெற்றிருத்தல் போலவும், கலிங்கத்தில் நெய்யப்பட்ட ஆடையைக் கலிங்கம் எனத் தமிழ் நாட்டார் வழங்கியிருத்தல் கூடும்.
இனி, தமிழ்ப் பெருங் கவிஞராகிய கம்பரை ஆந்திர தேசத்து மன்னன் ஆதரித்த கதையொன்று தமிழ் நாட்டில் வழங்குகின்றது. எக் காரணத்தாலோ கம்பருக்கும் சோழ மன்னனுக்கும் மனவேற்றுமை உண்டாயிற்று. அந்நிலையில் மன்னனை நோக்கி,
என்று கடுமையாகப் பேசிவிட்டுக் கம்பர் சோழ நாட்டை விட்டகன்று ஆந்திர தேசத்திலுள்ள ஓரங்கல் நாட்டை அடைந்தார். அப்போது பிரதாபருத்திரன் என்பவன் அங்கு அரசு வீற்றிருந்தான். அவ் வேந்தனைத் தமிழ்ப் புலமையால் வசப்படுத்தினார் கம்பர். புவிச் செல்வனாகிய பிரதாபனும் கவிச் செல்வராகிய கம்பரும் சிறந்த நண்பராயினர். கம்பர் விரும்பியவாறு பிரதாபன் மாறு கோலம் புனைந்து, அடைப்பை தாங்கிப் பின்னே வர, கம்பர் தம்மை அவமதித்த சோழ மன்னன் சபையினுள்ளே தலைநிமிர்ந்து சென்றார் என்று கர்ண பரம்பரைக் கதை கூறும்.
வடக்கேயுள்ள நாட்டை 'வடுகு' என்றழைத்த தமிழ் நாட்டார் மேற்கே யமைந்த நாட்டைக் 'குடகு' என்னும் பெயராற் குறித்தார்கள். குடக்கு என்பது தமிழில் மேற்கு என்று பொருள்படும். எனவே, குடகு என்பது மேற்கேயுள்ள நாடு. நன்னூல் என்னுந் தமிழிலக்கணம் குடகைத் தமிழ் நாட்டின் மேற்கு எல்லையாகக் கூறுகின்றது.
என்பது நன்னூல், ஆங்கிலத்தில் குடகு என்பது 'கூர்க்' (Coorg) என்று சிதைந்து வழங்குகின்றது.
தமிழ் நாட்டின் மேல் திசையில் அமைந்த மற்றொரு நாடு மலையாள தேசமாகும். மலையாளத்துக்கும் தமிழுக்கும் இடையே நெடிய தொடர் மலை நின்று எல்லை குறிக்கின்றது. ஆனால், முற்காலத்தில் மலையாள தேசம் சேரநாடு என்னும் பெயரோடு தமிழ்நாட்டின் ஓர் அங்கமாக விளங்கிற்று. பண்டைத் தமிழ் நாட்டை ஆண்ட முடி வேந்தர் மூவர் என்று தமிழ் இலக்கியங்கள் கூறும். மூவேந்தர் என்பார் சேர சோழ பாண்டியர் ஆவர். சேரநாட்டு மன்னர் குடியிலே பிறந்த அறிஞர் பலர் தமிழிலே சிறந்த நூல்கள் செய்துள்ளார்கள். பஞ்ச காவியங்களில் ஒன்றாகப் பாராட்டப்படுகின்ற சிலப்பதிகாரம் சேரநாட்டு இளவரசரொருவரால் இயற்றப்பட்டது. சைவ சமய அடியார்களுள் ஒருவராகிய சேரமான் பெருமாள் தமிழ்ப்பாமாலை புனைந்து சிவபெருமானை வணங்கினார். வைணவ சமய ஆழ்வார்களுள் ஒருவராகிய குலசேகரர் தமிழிலே திருப்பாசுரம் பாடித் திருமாலைப் போற்றினார். இவ் விருவரும் சேரநாட்டுப் பெருமன்னர். ஆயினும், சேரநாட்டிற்கும் ஏனைய தமிழ் நாடுகளுக்கும் இடையே பெரிய மலை தடையாக நின்றமையால் போக்குவரவுச் சாதனம் குறைந்தது . காலம் செல்லச் செல்ல மலையாளமும் தமிழும் வேறு வேறு ஆயின.
தமிழோடு தொடர்புடையதாகக் கருதப்படுகின்ற கன்னடம் பேசுகின்ற மக்களைக் 'கருநாடர்' என்று சிலப்பதிகாரம் முதலிய செந்தமிழ் நூல்கள் குறிக்கின்றன. 'கருநாடகம்' என்பது கருநாடர் வாழ்ந்த தேசத்தின் பெயர். அந் நாடு கருநிறம் வாய்ந்த நிலப்பரப்பாய்க் காணப்பட்டமையால், தமிழ் நாட்டார் அதற்குக் 'கருநாடகம்' என்று பெயரிட்டனர் போலும். 'கருநாடகம்' என்பதே பிற்காலத்தில் கன்னடம் எனச் சிதைந்தது. 'கருநாடகம்' என்னும் சொல், 'பழமை' என்ற பொருளில் இன்றும் தமிழ் நாட்டில் வழங்கி வருகின்றது. நவநாகரிகத்துக்கு ஏற்ற நடையுடையில்லாதவர்களும், பழைய வழக்கங்களைக் கைவிடாதவர்களும் "கர்நாடகப் பேர்வழிகள் ' என்று எட்டியும் சுட்டியும் பேசப்படுகின்றார்கள். கருநாடக தேசத்தார் கைவண்ணம் திருநெல்வேலி ஜில்லாவிலே காணப்படுகின்றது. தாம்பிரவர்ணி யாற்றில் அமைந்துள்ள பழைய அணையொன்று 'கன்னடியன் அணை ' என்று பெயர் பெற்றுள்ளது. கன்னடியன்
ஒருவன் பொதிய மலையிலுள்ள அகத்தியர் ஆணைப்படி அவ்வணையைக் கட்டி முடித்தான் என்பது கர்ண பரம்பரைக் கதை. அணைக்கட்டிலிருந்து ஆற்று நீரைக் கவர்ந்து பாசனத்திற்குப் பயன்படுத்தும் கால்வாயும் 'கன்னடியன் கால்' என்று பெயர் பெற்றுள்ளது.
இனி, தமிழ் நாட்டினின்று சிறு கடலால் பிரிக்கப்பட்டுள்ள இலங்கை என்னும் சிங்கள தேசத்தைப் பார்ப்போம் : இலங்கையை 'ஈழநாடு' என்பர் தமிழர். சங்க இலக்கியங்களிலும், தேவாரத் திருப்பாசுரங்களிலும் இலங்கை ஈழநாடென்றே குறிக்கப்படுகின்றது. தமிழ் நாட்டிற்கும் இலங்கைக்கும் பண்டைக் கால முதல் போக்குவரவு உண்டு ; ஏற்றுமதியும் இறக்குமதியும் உண்டு, தமிழ் நாட்டார் பெருந்தொகையினராக இலங்கையிற் சென்று குடியேறினர்; வளம் பெருக்கினர். இன்றும் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணம் தமிழ் மாகாணமாகவே திகழ்கின்றது. அங்கு வாழ்பவர் பெரும்பாலும் தமிழரே.
'யாழ்ப்பாணம்' என்பது நல்ல தமிழ்ப் பெயர். அப் பெயரின் வரலாறு அறியத் தக்கதாகும். தமிழ் நாட்டுப் பழங்குடிகளில் 'பாணர்' என்பார் ஒரு வகுப்பார். பண்ணோடு பாட வல்லவர் பாணர் என்று பெயர் பெற்றார் என்பர். வைணவ சமய ஆழ்வார்களுள் ஒருவராகிய திருப்பாணாழ்வார் பாணர் குலத்தைச் சேர்ந்தவர். பாணர் குலத்தில் 'யாழ்ப்பாணர்' ஒரு பிரிவினர். இன்னிசைக் கருவியாகிய யாழைக் கையிலேந்திப் பாடிய பாணர் யாழ்ப்பாணர் எனப்பட்டனர். பெரிய புராணத்திற் போற்றப்படுகின்ற சிவனடியார்களுள் ஒருவராகிய திருநீலகண்ட யாழ்ப் பாணர் இவ் வகையைச் சேர்ந்தவர். யாழ்ப்பாணர்கள் குடியேறித் திருத்திய நகரமே 'யாழ்ப்பாணம்' என்று பெயர் பெற்றது. இவ் வழகிய ஊர்ப்பெயர் ஆங்கிலத்தில் 'ஜாப்னா' என்று சிதைந்து வழங்கு கின்றது. யாழ்ப்பாண நகருக்கு அருகே திருநெல்வேலி என்ற ஊர் உண்டு. பாண்டி நாட்டிலுள்ள திருநெல்வேலியினின்றும் ஈழநாட்டிற் குடியேறிய மக்கள் தம் ஊர்ப் பெயரிலுள்ள ஆசையால் அதனை ஆண்டு அமைத்து வழங்கினார்கள் என்று தோன்றுகிறது. இவ்வாறு இலங்கையில் குடியேறிய தமிழர், தம்மை இலங்கையராகவே கருதி வாழ்ந்து வருகின்றனர்.
முன்னாளில் இலங்கையை விட்டுத் தமிழ் நாட்டிற் குடியேறியவரும் உண்டு. இன்று தமிழ் நாட்டிலும் மலையாளத்திலும் காணப்படுகின்ற 'ஈழவர்' என்னும் சாதியார் ஈழநாட்டிலிருந்து வந்தவராதலால் அப்பெயர் பெற்றார்கள். இன்னும் திருநெல்வேலியிலுள்ள இல்லத்துப் பிள்ளைமார்' என்பார், ஈழத்துப் பிள்ளைமாரே யாவர். 'ஈழத்துப் பிள்ளை' என்பது இல்லத்துப் பிள்ளையெனச் சிதைந்து வழங்கு-கின்றது.
முற்காலத் தமிழரசர் சிலர் இலங்கைக்குச் சென்றார்கள். இலங்கை அரசர் சிலர் தமிழ் நாட்டுக்கு வந்தார்கள். சேர நாட்டரசனாகிய செங்குட்டுவன் கண்ணகி தெய்வத்திற்கு வஞ்சி மாநகரத்தில் கோயில் கட்டித் திருவிழாக் கொண்டாடிய பொழுது இலங்கை அரசனாகிய கயவாகு மன்னன் வந்திருந்து அக் காட்சியைக் கண்டு களிகூர்ந்தான் என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது. அம் மன்னன் அரசு புரிந்த காலம் இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியென்பர். கண்ணகியின் காட்சியைக் கண்களிப்பக் கண்ட கயவாகு மன்னன், ஈழ நாட்டில் கண்ணகிக்குக் கோயில் அமைத்து, ஆடி மாதந்தோறும் அணிவிழா எடுத்தான். அவன் காலம் தொட்டு, பத்தினிக் கடவுள் வழிபாடு இலங்கையிற் பரவலாயிற்று. இலங்கையிலிருந்த பத்தினிக் கடவுளின் படிவம் ஒன்று கடல் கடந்து, லண்டன் மாநகரில் உள்ள கண்காட்சிச் சாலையிற் காணப்படுகின்றது.
இன்னும், இலங்கையிலுள்ள கண்டி மாநகரத்தில் பரராஜசிங்கன் என்பவன் அரசுபுரிந்த காலத்தில் கடும் பஞ்சம் வந்துற்றது. ஈழ நாட்டார் பசியால் நலிந்து மெலிந்து வருந்தினர். அவர் பட்ட துயரம் கண்டு ஆற்றாத கண்டியரசன், தமிழ் நாட்டிற் பெருஞ் செல்வராய் விளங்கிய சடையப்ப வள்ளலாரிடம் தன் குறையைத் தெரிவித்தான். உடனே, வள்ளலார் வயலில் விளைந்த நெல், கப்பல் ஏறி ஈழ நாட்டிற் சென்று சேர்ந்தது ; பசி தீர்ந்தது. பஞ்சத்தின் கொடுமை தீர்த்த சடையப்ப வள்ளலைப் பரராஜசிங்கன் தரும் தேவதை என்று புகழ்ந்தான்; நெஞ்சார வாழ்த்தினான். அவ் வாழ்த்து ஒரு செஞ்சொற் கவியாயிற்று :
"இரவு நண்பக லாகி லென்பகல் இருள றாஇர வாகிலென்
இரவி எண்டிசை மாறி லென்கட லேழும் ஏறி லென் வற்றிலென்
மரபு தங்கிய முறைமை பேணிய மன்னர் போகிலென் ஆகிலென்
வளமை இன்புறு சோழ மண்டல வாழ்க்கை காரண மாகவே
கருது செம்பொனின் அம்ப லத்திலோர் கடவுள் நின்று நடிக்குமே
காவி ரித்திரு நதியி லே ஒரு கருணை மாமுகில் துயிலுமே
தருவு யர்ந்திடு புதுவை யம்பதி தங்கு மானிய சேகரன்
சங்க ரன்தரு சடையன் என்றொரு தரும தேவதை வாழவே"
என்ற பாட்டு, கண்டியரசன் மனத்திலெழுந்த நன்றியை நன்றாக எடுத்துக் காட்டுகின்றது.
இதுகாறும் கூறியவற்றால் தமிழ் நாட்டார் அன்று முதல் இன்றுவரை அயல் நாட்டார்களோடு பழகிவரும் பான்மை ஒருவாறு விளங்குவதாகும்.
---------------
12. தமிழ் மொழியும் பிற மொழியும் - தெலுங்கு
பாரத நாட்டிலே பற்பல தேசங்கள் உண்டு. தேசந்தோறும் பாஷை வேறு. ஆயினும் அவற்றை இருகூறாக வகுக்கலாம். வட இந்தியாவில் வழங்கும் மொழிகள் ஒரு வகை. தென் இந்தியாவில் வழங்கும் மொழிகள் மற்றொரு வகை. வட நாட்டு மொழிகளை ஆரிய மொழிகள் என்றும், தென்னாட்டு மொழிகளைத் திராவிட மொழிகள் என்றும் கூறுவர். திராவிட வகையைச் சேர்ந்த தெலுங்கும், கன்னடமும், மலையாளமும், துளுவும், தமிழ்த்தாயின் பிள்ளைகள் என்று வாதிப்பார் சிலர். இக் கருத்தைத் திருத்தமாக வெளியிட்டார் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை.
"பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினும் ஓர்
எல்லையறு பரம்பொருள்முன் னிருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன் உதரத் துதித்தெழுந்தே ஒன்று பல வாயிடினும்"
என்று அவ்வாசிரியர் தமிழ்த்தாய்க்கு வணக்கம் கூறிப் போந்தார். எனினும், இக் கொள்கையை எல்லோரும் ஏற்றுக்கொள்வதில்லை. தென்னிந்திய மொழிகள் எல்லாம் ஓர் இனம், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் என்று கூறி அமைபவரே பலர் ஆவர்.
திராவிட மொழிகளுள் சாலப் பழமை வாய்ந்தது தமிழ் என்பதில் யார்க்கும் தடையில்லை. இலக்கியப் பண்பும், இலக்கண வரம்பும், சொல்லின் செல்வமும் தமிழிலே தலை சிறந்து காணப்படும். இவற்றுள் சொல்லின் செல்வத்தைச் சிறிது பார்ப்போம் : முதலில் நாம் குடியிருக்கும் வீட்டை எடுத்துக்கொள்வோம். வீடு என்றாலும், இல் என்றாலும், மனை என்றாலும் அகம் என்றாலும் பொருள் ஒன்றே. இல் என்பது இல்லம் என்று வழங்கும். இல்லத்துக்கு உரியவள் இல்லாள் எனப்படுவாள். "இல்லாள் அகத்திருக்க இல்லாத தொன்றில்லை" என்றார் ஒரு தமிழ்க் கவிஞர். இல்லத்தில் இருந்து செய்யும் அறம் இல்லறம் எனப்படும். இல் என்பது இல்லு என்றும், இல்லாள் என்பது இல்லாலு என்றும் தெலுங்கில் வழங்குகின்றன. மலையாளத்தில் இல் என்பது இல்லம் என வழங்கும். வீட்டைக் குறிக்கும் மற்றொரு சொல் மனை. மனைக்குரியவளை மனைவி என்றும், மனையாள் என்றும் கூறுவர் தமிழர். மனையில் இருந்து செய்யும் அறம் மனையறம் எனப்படும். மனை என்பது கன்னடத்தில் உண்டு; தெலுங்கில் இல்லை. மனை வாழ்க்கை என்பது கன்னடத்தில் 'மனெ வார்த்தெ' என வரும். அகம் என்ற சொல்லும் தமிழில் வீட்டைக் குறிக்கும். சிலர் அகம் என்பதை ஆம் என்று சிதைத்து வழங்குவர்; அகமுடையானை ஆம்படையான் எனவும், அகமுடையாளை ஆம்படையாள் எனவும் கூறுவர். இத் தகைய அகம் என்பது தெலுங்கிலும் இல்லை; கன்னடத்திலும் இல்லை.
இனி வானத்திலுள்ள மேகத்தைச் சிறிது பார்ப்போம் : முகில் என்பது மேகத்திற்கு ஒரு பெயர். மேக நிறம் பொருந்திய இராமனை,
"மையோ, மரகதமோ, மறிகடலோ, மழைமுகிலோ
ஐயோ இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான்”
என்று பரிந்து பாடினார் கம்பர். முகில் என்பது தெலுங்கில் மொகிலு என்றும், கன்னடத்தில் முகில் என்றும், துளுவத்தில் முகல் என்றும் காணப்படுகிறது. வானத்திலே தவழும் வெண்மேகத்திற்கு மஞ்சு என்று பெயர். தெலுங்கிலும் கன்னடத்திலும் மலையாளத்தி லும் மஞ்சு உண்டு. இன்னும், நீர் கொண்ட கருமேகத்தைக் கார் என்றும், கொண்டல் என்றும் கூறுவர் தமிழர். திருமாலைக் கார்வண்ணன் என்றும், கொண்டல் வண்ணன் என்றும் ஆழ்வார்கள் பாடியுள்ளார்கள். கார் உலாவும் காலத்தையும், அக் காலத்தில் விளையும் பயிரையும் கார் என்றே கூறுவர். தெலுங்கில் கார் என்பது மழைக் காலத்தைக் குறிக்குமே யன்றிக் கருமேகத்தைக் குறிப்பதில்லை. கன்னடத்திலும் அவ்வாறே புயல் என்பது மழை மேகத்தைக் குறிக்கும் மற்றொரு சொல். பொதிய மலையிற் படிந்து மழை பொழியும் புயலின் பெருமையை ஒரு குறவஞ்சி பாடுகிறாள் :
"திங்கள்முடி சூடுமலை; தென்றல்விளை யாடுமலை
தங்கு புயல் சூழுமலை; தமிழ்முனிவன் வாழுமலை"
என்பது குறத்தி பாட்டு கொண்டலும் புயலும் மற்றைய திராவிட மொழிகளில் இல்லை.
இனி, மழையைக் குறிக்கும் சொற்களைப் பார்ப்போம் : மாரி என்பது மழைக்குரிய பெயர்களில் ஒன்று.
என்று மாரியின் பெருமையைப் பாராட்டினார் திருவள்ளுவர். மாரியும் மழையும் தெலுங்கில் இல்லை. வான் என்பது தெலுங்கில் மழையைக் குறிக்கும். தமிழிலும் வான் என்பதற்கு மழை என்ற பொருள் உண்டு. மழையின் சிறப்பை வான் சிறப்பு என்றார் வள்ளுவர். இடைவிடாது பெய்யும் அடைமழையைச் சோனை என்பர் தமிழர். சோனை தெலுங்கிலும் உண்டு. சிறு மழைக்குத் தமிழில் தூவானம் என்பது பெயர். மழை விட்டும் தூவானம் விடவில்லை என்ற பேச்சைத் தமிழ் நாட்டிலே கேட்கலாம் தூவானம் என்பது துவர என்றும், தூர என்றும் தெலுங்கில் வழங்கப்படுகின்றது.
மழையாலும் ஆற்று வெள்ளத்தாலும் நிறைகின்ற நீர் நிலைகளின் பெயரைச் சிறிது கருதுவோம் : ஏர்த் தொழிலாகிய பயிர்த் தொழிலே முன்னாளில் ஏற்றமான தொழிலாகக் கருதப்பட்டது. ஏர்த் தொழிலுக்காக ஏற்பட்ட நீர்நிலை ஏரி என்று பெயர் பெற்றது. குளிப்பதற்காக அமைந்தது குளம். வானத்தி னின்றும் பெய்யும் மழையால் பெருகும் குளத்தை வான மாரிக்குளம் என்பர். ஒவ்வோர் ஊரிலும் கோவிலுக் கருகே அமைந்திருக்கும் குளம் தெப்பக்குளம் எனப்படும். பாசனத்திற்கு ஏரியும், குளிப்பதற்குக் குளமும் அமைந்தவாறே குடிப்பதற்குரிய நீர் நிலையும் உண்டு. அஃது ஊருணி என்று பெயர் பெறும். ஊரார் எல்லாம் நீர் உண்பதற்குரிய ஊருணியில், எவரும் அழுக்குற்ற ஆடைகளைத் துவைக்க மாட்டார்கள்; இறங்கிக் குளிக்க மாட்டார்கள்: ஊருணியின் தன்மையைத் திருவள்ளுவர் குறித்துள்ளார்.
"ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு"
என்பது திருக்குறள். அறிவாளனிடம் அமைந்த செல்வம் ஊருணியில் நிறைந்த நீர் போன்றது என்பது இக் குறளின் கருத்து. சிறு குளம் கேணி என்று பெயர் பெறும். அழகிய அல்லி மலர் நிறைந்த கேணியைச் சுற்றி எழுந்த ஊர் திருவல்லிக்கேணி என வழங்கு கின்றது. ஆழமான நீர் நிலை மடு என்றும், கயம் என்றும் கூறப்படும். "ஆறிடும் மேடும் மடுவும் போலாம் செல்வம்'' என்ற பாட்டால் மடுவின் தன்மையை அறியலாம். கயம் என்பது கசம் என்று இக் காலத்தில் வழங்குகின்றது. ஆகவே ஏரி, குளம், ஊருணி, கேணி, மடு, கயம் இவை பலவகைப்பட்ட நீர் நிலையைக் குறிக்கும் பான்மையை உணர்கின்றோம். இவற்றுள் குளம் என்பது கொலனு என்றும், மடு என்பது மடுகு என்றும் தெலுங்கில் வழங்கும்.
முற்காலத்தில் தமிழ் நாட்டில் வழங்கி வந்த சொற்கள் சில இக்காலத்தில் வழக்காற்றில் இல்லை. அத் தகைய சொற்களில் ஒன்று அங்காடி அங்காடி என்பது இன்று வழக்கற்ற சொல்லாய்விட்டது. அங்காடி என்றாலும், பசார் என்றாலும் பொருள் ஒன்று. ஆனால், அங்காடி என்பது தமிழ்ச் சொல்; பசார் என்பது பாரசீகச் சொல். இருவகையான அங்காடிகள் பண்டைத் தமிழ் நாட்டில் இருந்தன; பகற்பொழுதில் நடைபெறும் அங்காடி நாளங்காடி என்றும், அந்தி மாலையில் நடைபெறும் அங்காடி அல்லங்காடி என்றும் பெயர் பெற்றிருந்தன. முற்காலத்தில் சிறந்த துறைமுகமாக விளங்கிய காவிரிப்பூம்பட்டினத்தில் அமைந்திருந்த நாளங்காடியைச் சிலப்பதிகாரம் குறிக்கிறது. "கொடுப்போர் ஓதையும் கொள்வோர் ஓதையும், நடுக்கின்றி நிலைஇய நாளங்காடி" என்பது சிலப்பதிகார வாசகம். அந்திப் பொழுதில் திறந்து நடைபெறும் அல்லங்காடியை இக்காலத்தில் குசிலிக்கடை (Evening Bazaar) என்கிறோம். குசிலிக் கடை என்னும் சொல்லில் உள்ள குசிலி என்பது குசிரி என்ற அரேபியச் சொல்லின் சிதைவு. ஆகவே, நாளங்காடி என்ற தமிழ்ச் சொல்லை இழந்து பசார் என்னும் பாரசீகச் சொல்லை வழங்குகின்றோம். அல்லங்காடி என்ற நல்ல ஓசையுடைய சொல்லை இழந்து, குசிலி என்னும் அரேபியச் சொல்லை வழங்குகின்றோம். ஆயினும் அங்காடி மற்ற திராவிட மொழிகளில் இன்னும் வழங்கி வருகின்றது. அங்காடி என்பது தெலுங்கிலும் கன்னடத்திலும் பசாரைக் குறிக்கும். மலையாளத்திலும் அங்காடி என்பது அதுவே.
தமிழ் நாட்டில் ஏட்டுத் தமிழுக்கும் வீட்டுத் தமிழுக்கும் வேற்றுமையுண்டு. ஒரு குலத்தார் பேசும் தமிழுக்கும் மற்றொரு குலத்தார் பேசும் தமிழுக்கும் வேற்றுமை காணலாம். ஒரு சாரார், எனக்கு என்பதை னேக்கு என்றும், உனக்கு என்பதை னோக்கு என்றும் வழங்கக் காண்கின்றோம். இத் தகைய மாற்றமடைந்த சொற்களைத் தெலுங்கிலே காணலாம். அவனுக்கு என்பது வானிக்கி என்றும், அதனுக்கு என்பது தானிக்கி என்றும் தெலுங்கில் வழங்கும். இன்னும் இரண்டொரு பெயர்ச் சொற்களைப் பார்ப்போம் : அதர் என்பது ஒரு பழைய தமிழ்ச் சொல். வழி என்பது அச் சொல்லின் பொருள். காற்று வருவதற்காக வீட்டில் அமைக்கும் ஜன்னலுக்குக் காலதர் என்று பண்டைத் தமிழர்கள் பெயரிட்டார்கள். ஜன்னல் என்பது தமிழ்ச் சொல்லன்று; போர்ச்சுகீசியப் பதம். போர்ச்சுகீசியர் தமிழ் நாட்டுக்கு வருவதற்கு முன், நம் வீட்டுச் சன்னலுக்கு ஒரு பெயர் இருந்திருக்க வேண்டுமன்றோ? அப் பெயர்தான் காலதர். கால் என்றால் காற்று; அதர் என்றால், வழி. காலதர் என்றால் காற்று வரும் வழி. இக் காலத்தில் பேச்சு வழக்கில் இல்லாத அதர் என்ற சொல்லைத் திருக்குறள் முதலிய பல பழைய நூல்களிற் காணலாம்.
"ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையான் உழை"
என்றார் திருவள்ளுவர். ஊக்கத்தைக் கைவிடாமல் உழைப்பவனிடம் ஆக்கம் வழிகேட்டுச் சென்றடையும் என்பது இக்குறளின் கருத்து. இவ்வாறே நூல்களிலே எடுத்தாளப்பட்டிருக்கின்ற அதர் என்னும் சொல், தெலுங்கில் தாரி என்று வழங்குகின்றது. இவ் வண்ணமே உரல் என்பது ரோலு என்றும், இலது என்பது லேது என்றும், இறப்பு என்பது ரேப்பு என்றும் வழங்கக் காணலாம்.
காலத்தைக் குறிக்கும் சொற்களில் தமிழுக்கும் தெலுங்கிற்கும் உள்ள ஒற்றுமையைப் பார்ப்போம் : கதிரவன் உதிக்கும் காலம் முதல், மறையும் காலம் வரையுள்ள பொழுதைத் தமிழிலே பகல் என்பர்; தெலுங்கிலே பகலு என்பார்கள். நடுப்பகலைப் பட்டப் பகல் என்பர் தமிழர் ; பட்டப் பகலு என்பர் தெலுங்கர். நேற்று என்பதற்கு இலக்கியத் தமிழ் நெருநல். 'நேற்றிருந்தவனை இன்று காணோம்; இதுதான் இவ்வுலகின் பெருமை" என்ற கருத்தை அமைத்து,
"நெருநல் உளன் ஒருவன் இன்றில்லை என்னும்
பெருமை யுடைத்திவ் வுலகு"
என்றார் திருவள்ளுவர். இக் குறளில் நெருநல் என்னும் சொல் நேற்று என்ற பொருளைத் தருகின்றது. நெருநல் என்பது நென்னல் என்றும் வழங்கும்.
"அன்னம் துணையோ டாடக் கண்டு
நென்னல் நோக்கி நின்றார் ஒருவர்
நென்னல் நோக்கி நின்றார் அவர்நம்
பொன்னேர் சுணங்கிற் போவா ரல்லர்”
என்ற சிலப்பதிகார இசைப்பாட்டில் நென்னல் என்னும் சொல் ஆளப்பட்டிருக்கின்றது. தெலுங்கில் நென்னல் என்பது நின்ன என்று வழங்குகின்றது. ரேப்பு என்ற சொல் தெலுங்கில் நாளை என்ற பொருளைத் தரும். இறப்பு என்னும் தமிழ்ச் சொல்லே தெலுங்கில் ரேப்பு என்றாயிற்று. இறப்பு என்பது கடந்த நிலையைக் குறிக்கும். கடந்த சென்ற காலத்தைத் தமிழில் இறப்பு என்றார்கள்; கடந்து வருங்காலத்தைத் தெலுங்கிலே ரேப்பு என்று கொண்டார்கள்.
இனி, பேசும் முறையைக் குறிக்கும் சொற்களைப் பார்ப்போம்; பேசும் முறை பல வகைப்படும். அம் முறைகளுக்கு ஏற்ற சொற்கள் தமிழில் அமைந்திருக் கின்றன. ஒருவன் விளக்கமாக விரித்துப் பேசினால், உரைத்தான் என்போம்; எல்லோரும் அறியப் பரக்கப் பேசினால், அறைந்தான் என்போம்; பல கூறுகளாகப் பிரித்து வகைப்படுத்திப் பேசினால், கூறினான் என்போம்; தெளிவாகவும் உறுதியாகவும் பேசினால் செப்பினான் என்போம். இவற்றுள் செப்பு என்பது தெலுங்கில் பெரிதும் வழங்குகின்றது. தமிழ் இலக்கியங்களில் செப்பு என்ற பதம் உண்டு.
என்று வேண்டுகின்றார் தாயுமானவர். மதுரை மாநகரில் கணவனை இழந்த கண்ணகி, பாண்டியன் முன்னே நின்று 'தேரா மன்னர் செப்புவ துடையேன், என்று வழக்குரைக்கத் தொடங்கினாள். சொல்லாடல் என்றாலும் பேசுதல் என்றாலும் பொருள் ஒன்றே. 'கல்லாடம் படித்தவனோடு சொல்லாடாதே' என்ற
பழமொழியைக் கேட்டிருக்கின்றோம்.
"கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்"
என்று திருவள்ளுவரும் கூறினார், சொல்லாட் என்பதற்கு நேரான தெலுங்கு மாட்டாட என்பது. மாற்றம் என்னும் தமிழ்ச் சொல் தெலுங்கில் மாட்ட என்றாகும். மாற்றம் என்றால் சொல் வாக்கும் மனமும் கடந்துள்ள கடவுளை, "மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன்" என்றார் மாணிக்கவாசகர். மாற்றம் என்பது தமிழிலே ஏட்டு வழக்கில் உண்டு; நாட்டு வழக்கில் இல்லை. தெலுங்கிலே மாட்ட என்பது . பெருவழக்காக உள்ளது.
பேச்சுத் தமிழுக்கும் தெலுங்குக்கும் உள்ள ஒற்றுமையைச் சிறிது பார்ப்போம் : உருண்டைக் கட்டியைப் பேச்சுத் தமிழில் உண்டைக்கட்டி என்பர். மழலைப் பேச்சில் பருப்பு என்பது பப்பு என்றாகும். இவ் வகையான சொற்கள் தெலுங்கில் பலவாகும். பருப்பு என்பது பப்பு என்றும், செருப்பு என்பது செப்பு என்றும் நெருப்பு என்பது நெப்பு என்றும், பருத்தி என்பது பத்தி என்றும், மருந்து என்பது மந்து என்றும் தெலுங்கில் வழங்கும்.
இன்னும் குழைந்த ஓசையுடைய ழகரமும் வல்லோசையுடைய றகரமும் திராவிட மொழிகளின் சிறப்பெழுத்துக்கள் என்பார். இவற்றுள் ழகரத்தைத் தெலுங்கு பழங்காலத்திலேயே இழந்துவிட்டதாகத் தெரிகின்றது. இதனாலே அழுத்து என்பது அத்து என்றும், உழுந்து என்பது உத்தலு என்றும், கொழுப்பு என்பது கொவ்வு என்றும் தெலுங்கிலே வழங்கக் காண்கிறோம். இவ்வாறு ழகரத்தை நழுவ விடுதல் பேச்சுத் தமிழில் உண்டு. குழந்தையைக் கோந்தை என்பர். தாழ்ப்பாளைத் தாப்பாள் என்பர். தொழும்பனைத் தொம்பன் என்பர். எழுந்திரு என்பதை ஏந்திரு என்பர்.
சிறப்பெழுத்தாகிய ழகரம், பல தெலுங்குச் சொற்களில் டகரமாக மாறியிருக்கின்றது. ஏழு என்பது ஏடு; கோழி என்பது கோடி; மேழி என்பது மேடி; பவழம் என்பது பவடம். இவ்வாறே இன்னும் பல.
வல்லின றகரம் இரட்டித்து வரும் சொற்களிலும் பேச்சுத் தமிழுக்கும் தெலுங்குக்கும் ஒற்றுமை உண்டு. குற்றம் சாற்றினான் என்பதைக் குற்றம் சாட்டினான் என்கிறோம். ஒற்றுக் கேட்டான் என்பதை ஒட்டுக் கேட்டான் என்கிறோம். கழற்று என்பது கழட்டு என்றும், சுழற்று என்பது சுழட்டு என்றும் வழங்கக் காண்கிறோம். இவ்வாறே தெலுங்கிலும் றகரம் டகரமாகின்றது. கொற்று என்பது கொட்டு என்றும், சுற்றம் என்பது சுட்டமு என்றும், புற்று என்பது புட்ட என்றும், ஊற்று என்பது ஊட்ட என்றும், மாற்றம் என்பது மாட்ட என்றும் வழங்குகின்றன. ஆகவே, தமிழும் தெலுங்கும் வேறு மொழிகளாகக் காணப்படினும் அவற்றுள் அடிப்படையான ஒற்றுமையுண்டு என்பது இதுகாறும் கூறியவற்றால் ஒருவாறு விளங்கும்.
-----------------
13. தமிழ் மொழியும் பிற மொழியும் – மலையாளம்
மலையாள தேசம் முற்காலத்தில் சேரநாடு என்று பெயர் பெற்றிருந்தது. சேரநாடு தமிழ் நாட்டின் ஓர் அங்கமாக விளங்கிற்று. சேர சோழ பாண்டியர் மூவரும் தமிழ் மன்னராகவே திகழ்ந்தார்கள். சேர நாட்டு மன்னருட் சிலர் செந்தமிழ் நூல்கள் செய்து அழியாப் புகழ் பெற்றனர். ஆகவே; ஆதியில் சேரநாடு தமிழ் மணக்கும் திருநாடாக விளங்கிற் றென்பதில் யாதும் ஐயமில்லை.
இக் காலத்தில் தமிழும் மலையாளமும் தனித்தனி மொழிகளாகக் கருதப்படுகின்றன. எனினும் இவ்விரு மொழிகளுக்கும் நெருங்கிய ஒற்றுமையுண்டு. பேச்சுத் தமிழுக்கும் மலையாளத்திற்கும் உள்ள ஒற்றுமையைக் காட்டுகின்ற சில சொற்களைப் பார்ப்போம் : ஒன்று என்பதைப் பேச்சுத் தமிழில் ஒன்னு என்பர். மூன்று என்பதை மூனு என்பர். மலையாளமும் இவ்வாறே ஒந்று, மூறு என்று வழங்குகின்றது. இன்னும் பன்றியைப் பன்னி என்றும் கன்றைக் கன்னு என்றும் தமிழில் வழங்குவது போலவே மலையாளமும் வழங்குகின்றது. குன்று என்பது பேச்சுத் தமிழில் குன்னு என்றாகும். தொண்டை நாட்டிலுள்ள குன்றத்தூரைக் குன்னத்தூர் என்றும், நீலகிரி மலையிலுள்ள குன்றூரைக் குன்னூர் என்றும் கூறுகின்றோமல்லவா? மலையாளத்தில் குன்றைக் குன்னு என்றே வழங்குகின்றார்கள். இன்னும், ஒன்பதை மலையாளத்தில் ஒம்பது என்றும், ஐம்பதை அம்பது என்றும் கூறக் காண்கிறோம்.
பல தமிழ்ச் சொற்களின் பழைய வடிவம் மலையாளத்திலே விளங்குகின்றது. தமிழ் நாட்டில் தொன்று தொட்டு அரிசி உண்டு. பண்டைத் தமிழ் நாட்டினின்றும் அரிசியை ஏற்றுமதி செய்த கிரீக்கர்கள் அதனை அருஸா என்கிறார்கள். அதுவே ஆங்கிலத்தில் ரயிஸ் (rice) என்று ஆயிற்று. அரிசி என்னும் சொல் இவ்வளவு பழமை வாய்ந்ததாயினும், பிங்கலந்தை என்ற பழைய தமிழ் நிகண்டில் அரி என்ற வடிவம் காணப்படுகின்றது. திராவிட மொழிகளுள் ஒன்றாகிய துளுவத்திலும் அரி என்ற சொல் வழங்குகின்றது. மலையாளத்தில் இன்றும் அரிசியை அரி என்றே குறிக்கின்றார்கள், ஆதலால் அரி என்பது அரிசியின் ஆதி வடிவம் போலும்.
மற்றொரு சொல்லைப் பார்ப்போம் : எலும்பு என்பது எல்லோரும் அறிந்த சொல். இலக்கியங்களில் இச் சொல் என்பு என வழங்குகின்றது.
என்னும் திருக்குறளில் என்பு அமைந்துள்ளது. கன்னடத்தில் எலும்பை எலு என்கிறார்கள். எலும்பின் ஆதி நிலையினை நாடும் பொழுது மலையாளம் வந்து உதவுகின்றது. எல் என்பது மலையாளத்தில் எலும்பைக் குறிக்கும். அதுவே கன்னடத்தில் எலு என்றாயிற்று; தமிழில் விகுதி பெற்று என்பு என்றும், எலும்பு என்றும் அமைந்தது.
இனி, பெற்றோரையும் உற்றோரையும் குறிக்கும் சில தமிழ்ப் பதங்களைப் பார்ப்போம் : பிதாவை நாம் தந்தை யென்றும், தகப்பன் என்றும் கூறுவோம் ; அண்ணனைத் தமையன் என்போம்; இளையவனைத் தம்பி என்போம் : மூத்த சகோதரியைத் தமக்கை என்றும், இளைய சகோதரியைத் தங்கை என்றும் வழங்குவோம். தந்தை, தகப்பன், தமையன், தமக்கை, தம்பி, தங்கை - இச் சொற்களின் பிறப்பு முறையில் ஓர் ஒற்றுமை இருக்கக் காண்கிறோம் அல்லவா? தம் என்ற சொல்லின் அடிப்படையாக இப் பதங்கள் பிறந்தன வாகத் தோன்றுகின்றன. ஆனால், தகப்பன் என்னும் பதத்தில் மட்டும் ககரம் எப்படி வந்தது என்று சிறிது திகைக்கின்றோம். மலையாளம் அம் மயக்கத்தைத் தீர்க்கும் மருந்தாக அமைகின்றது. மலையாளத்தில் தகப்பனைத் தமப்பன் என்கின்றார்கள். ஆகவே, தம் அப்பன் என்பது தமப்பன் என்றாகித் தமிழில் தகப்பன் ஆயிற்றென்று அறிந்து கொள்கின்றோம்.
இன்னும், வண்ணான் என்ற சொல்லைப் பார்ப்போம் : அழுக்குத் துணிகளைச் சலவை செய்யும் தொழிலே வண்ணான் தொழில். மலையாளத்தில் வண்ணானை மண்ணான் என்பார்கள். மண்ணு என்ற சொல் கழுவு என்ற பொருளில் தமிழில் வழங்குகின்றது.
என்ற பாட்டில் மண்ணீர் என்னும் பதம் கழுவும் தண்ணீர் என்ற பொருளில் வந்துள்ளது. மண்ணுதற்கு உதவும் நீரை மண்ணீர் என்றார் கவிஞர். ஆகவே, ஆடைகளின் அழுக்கைக் கழுவிப் போக்குகிறவனை மண்ணான் என்று குறிப்பது பொருத்தமுடையதாகத் தோன்றுகின்றது. மண்ணான் என்பது தமிழில் வண்ணானாகத் திரிந்தது போலும்.
இனி, ஒரு மலையின் பெயர் மலையாளத்தில் அடைந்த மாற்றத்தைப் பார்ப்போம் : மலையாள தேசத்தில் கடற்கரையின் அருகேயுள்ள ஒரு மலை எலிமலை என்னும் பெயர் பெற்றுள்ளது; ஆங்கிலத்தில் அதனை (Rat Mountain) என்று மொழி பெயர்த்து வழங்குகின்றார்கள். அம் மலையின் சரித்திரம் சென்னையிலுள்ள அம்பட்டன் வாராவதியின் கதையை ஒத்திருக்கின்றது. எழில் என்பது அம் மலையின் பெயர். பாண்டி நாட்டில் பொதியில் என்னும் மலை அமைந்திருத்தல் போல, மலையாள நாட்டில் எழில் என்னும் மலை விளங்கிற்று. அம் மலையை ஒரு சிற்றரசன் ஆண்டுவந்தான். அவனைக் கண்டு பரிசு பெறக் கருதிய ஒளவையார் காடும் நாடும் கடந்து சென்றார். மாளிகையை அடைவதற்கு முன்னே அந்திமாலை வந்துவிட்டது. ஆயினும், எங்கும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது. இரவு, பகலாகவே காணப்பட்டது. அரண்மனையின் அத்தாணி மண்டபத்தில் அரசன் அமர்ந்திருந்தான். அங்கே சென்றார் ஒளவையார். அரசன் ஒன்றும் பேசவில்லை; பாராமுகமாய் இருந்தான். அவன் முன்னே நின்று கொண்டு ஒரு தமிழ்ப் பாட்டு இசைத்தார் ஒளவையார். அப்பொழுதும் அவன் வாய் திறக்கவில்லை. பாட்டிக்குக் கோபம் வந்துவிட்டது. கண்ணிருந்தும் குருடனாய், காதிருந்தும் செவிடனாய், சபை நடுவே இருந்த அரசனது தன்மையை ஒரு பாட்டில் அமைத்துப் பாடினார்.
"இருள்தீர் மணிவிளக்கத்(து) ஏழிலார் கோவே
குருடேயூ மன்றுநின் குற்றம் - மருள்தீர்ந்த
பாட்டும் உரையும் பயிலா தன இரண்டு
ஓட்டைச் செவியும் உள"
என்று அவர் பாடிய பாட்டில் ஏழில் என்னும் மலை குறிக்கப்படுகின்றது. ஏழில் என்னும் பதத்திலுள்ள ழகரம் நாளடைவில் நழுவிற்று. ஏழில்மலை எலிமலை யாயிற்று. அம் மலையில் அரசு புரிந்த மன்னர் குலம் மூசிக வம்சம் ஆயிற்று. மூசிக வம்சத்தைக் குறித்து வட மொழியில் ஒரு காவியமும் எழுதப்பட்டது. இவ்வாறாக எலிமலை என்ற பெயர் அம் மலைக்கு நிலைத்துவிட்டது.
இனி, மலையாளத் தாக்கோலைச் சிறிது பார்ப்போம் : பூட்டைத் திறக்கும் கோல் தாக்கோல் எனப்படும். நிலைப் பூட்டுக்குத் தாழ் என்று பெயர். இக்க காலத்தில் அது தாழ்ப்பாள் என வழங்குகின்றது; 'ஒட்டக்கூத்தன் பாட்டுக்குத் இரட்டைத் தாழ்ப்பாள்' என்னும் வாசகம் தமிழ் நாட்டில் உண்டு. ஆயினும் தாழ் என்றாலே போதும். திருவள்ளுவர் அன்பின் தன்மையைக் கூறுமிடத்து,
என்று பாடினார். தாழைத் திறக்குங்கோல் மலையாளத் தில் தர்ழ்க்கோல் என்றும், தமிழில் திறவுகோல் என்றும் குறிக்கப்படுகிறது. இந் நாளில் நாகரிகத் தமிழ்நாடு திறவுகோலைக் கைவிட்டுச் சாவியைப் பற்றிக்கொண்டது. சாவி என்பது போர்ச்சுகீசியப் பதம்; அதற்கு மேல் 'கீ' யென்னும் ஆங்கிலப் பதமும் இப்போது 'அடிபடு’கின்றது.
பழந்தமிழ் நாட்டுப் பழக்க வழக்கங்களிற் சிலவற்றை இன்றும் மலையாள தேசத்திற் காணலாம். கல்யாணத்தில் மணமகன் வீட்டார் கொடுக்கும் புடைவையைப் பெண்ணுக்கு உடுத்தும் வழக்கம் தமிழ் நாட்டில் உண்டு. அப் புடைவையைக் கூறைப்புடைவை என்பார்கள். கூறை என்றாலும், புடைவை என்றாலும் பொருள் ஒன்றே. முற்காலத்தில் புடைவை நெய்யப்பட்ட ஓரிடத்திற்குக் கூறை நாடு என்றே தமிழர் பெயரிட்டார்கள். இக் காலத்தில் அது கொரநாடு என்ற பெயரோடு மாயவரத்திற்கு அருகே இருக்கின்றது. அங்கு நெய்யப்படும் புடைவை கொரநாட்டுப் புடைவை என வழங்குகின்றது. மலையாள மன்னர் குடும்பத்தில் நடைபெறும் திருமணத்திற்குப் 'புட்கொட' என்று பெயர். புட்டகொட என்பது புடைவைக் கொடை என்பதன் திரிபேயாகும். பெண்ணுக்குப் புடைவை கொடுத்தலே திருமணத்தின் சிறந்த அம்சமாகக் கொள்ளப்பட்டதென்பது இதனால் நன்கு விளங்கும். காதல் மண முறையை விவரித்துக் கூறும் தமிழ் நூல்களில் காதலன் தன் காதலிக்கு மலராலும் தளிராலும் செய்யப்பட்ட தழை என்னும் ஆடையைக் கொடுத்து மகிழும் பழக்கம் குறிப்பிடப் படுகின்றது. அவ் வழக்கம் நாளடைவில் திருந்திக் காலத்திற்கேற்றவாறு புடைவைக் கொடையாயிற்று என்று கொள்ளுதல் பொருந்தும்.
நாடாளும் அரசனைக் குறிப்பதற்குத் தமிழிலும் மலையாளத்திலும் பல சொற்கள் உண்டு. கோ, கோன், கோமான் இம் மூன்று சொற்களும் தமிழிலும் மலையாளத்திலும் அரசனைக் குறிக்கும். இளவரசனை இளங்கோ என்பர். கோயில் என்னும் சொல் தமிழிலும் மலையாளத்திலும் அரசனுக்குரிய அரண்மனையையும் கடவுளுக்குரிய ஆலயத்தையும் உணர்த்துவதாகும். ஆனால், இப்பொழுது தமிழ்நாட்டில் கோயில் என்பது பெரும்பாலும் ஆலயத்திற்கே பெயராய் அமைந்து விட்டது. சைவர்களுக்குக் கோயில் என்பது சிதம்பரம். வைணவர்களுக்குக் கோயில் ஸ்ரீரங்கம் என்னும் திருவரங்கம்.
மலையாள தேசத்தில் அரசர் குலத்தைச் சேர்ந்தாரிற் சிலர் கோயில் தம்புரான் என்று அழைக்கப்படுவர். திருவாங்கூர் தேசத்தில் பத்துக் கோயில் தம்புரான்கள் இன்றும் சிறப்புற்று வாழ்கின்றார்கள். சென்ற சில நூற்றாண்டுகளாகத் திருவாங்கூர் மன்னராகத் திகழ்ந்தவர்கள் எல்லாம் கிளிமானூர்க் கோயில் தம்புரான் குலத்தைச் சேர்ந்தவர்களே. தமிழில் தம்பிரான் என்பது கடவுளையே குறிக்கும் . சிவபெருமானுக்குத் தம்பிரான் என்பது ஒரு பெயர். இதனாலேயே சிவபிரான் தோழராக விளங்கிய சுந்தரமூர்த்திக்குத் தம்பிரான் தோழர் என்னும் சிறப்புப் பெயர் வழங்கலாயிற்று. இக் காலத்தில் சைவ சமயத்தைச் சேர்ந்த சந்நியாசிகளே தம்பிரான் என்று குறிக்கப்படுகின்றார்கள். அரசன் தெய்வத் தன்மை வாய்ந்தவன் என்பது இந் நாட்டுக் கொள்கையாதலால் மலையாளத்தில் தம்பிரான் என்று அரசர் குலத்தார் அழைக்கப் பெறுகிறார்கள்.
தெய்வத்தை நம் முன்னோர்கள் குளிர்ந்த சோலைகளில் வழிபட்டார்கள். அதற்குரிய சின்னங்கள் மலையாள தேசத்திலும், தமிழ் நாட்டிலும் இன்றும் காணப்படுகின்றன. செங்கோட்டைக்கு அருகே மலையாள தேசத்தில் ஆரியங் காவு என்ற ஊர் இருக்கிறது. காவு என்பது சோலை. எனவே, ஆரியன் காவு என்றால் ஆரியன் சோலை. எனவே ஐயப்பன் வழிபாடு சிறப்பாக நடைபெறுகின்றது. தமிழ்நாட்டார் ஐயப்பனை ஐயனார் என்றும், சாத்தன் என்றும் வணங்குவார்கள்; காலத்தில் மழை பெய்யாவிட்டால் ஐயனாருக்குப் பொங்கலிட்டுப் பூசை செய்வார்கள்; அறுவடை முடிந்தபின் ஐயனாருக்குச் சிறப்பாக வழிபாடு செய்வார்கள். தமிழ்நாட்டு ஐயனாரே மலையாளத்தில் ஐயப்பனாக விளங்குகிறார், ஆரியன் என்பது ஐயப்பனுக்கு ஒரு பெயர். ஆகவே, ஆரியன் காவு என்று ஐயப்பன் சோலை அழைக்கப்படுகின்றது. இன்றும், மலையாள தேசத்தில் நாகம் வாழ்கின்ற காவுகள் ஆயிரக் கணக்காக உண்டு. பாம்புக் காவு என்பது அவற்றின் பெயர். ஒவ்வொரு நாயர் இல்லத்திலும் பாம்புக் காவு உண்டு. அக் காவில் முளைக்கின்ற மரஞ் செடிகளை வெட்டுவதில்லை. அங்கு வாழ்கின்ற பாம்புகளுக்குப் பால் வார்ப்பார்கள். இவ்வாறு காவில் தெய்வத்தை வழிபாடு செய்யும் வழக்கம் தமிழ் நாட்டிலும் இருந்தது. சீர்காழிக்கு அருகே ஒரு சிவஸ்தலம் உள்ளது. அதன் பெயர் கோலக்கா .
என்பது தேவாரம் கா என்பது சோலை; அதுவே மலையாளத்தில் காவு என்றாயிற்று. தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலங்களுள் பல காவுகள் உண்டு. திருச்சிராப் பள்ளிக்கு அண்மையில் உள்ள திரு ஆனைக்கா இப்பொழுது திருவானைக் காவல் என வழங்குகின்றது. நெல்லி மரச் சோலையாகிய திரு நெல்லிக்கா இக் காலத்தில் திருநெல்லிக்காவல் என்று பெயர் பெற்றுள்ளது. ஆகவே, சோலையைக் கோயிலாகக் கொண்டு வழிபாடு செய்த பண்டை வழக்கத்தைத் தமிழும் மலையாளமும் நன்கு காட்டுகின்றன. இதுகாறும் கூறியவற்றால் பழக்க வழக்கங்களிலும், சொல்லாக்கத்திலும் தமிழகத்தார்க்கும் மலையாளத் தார்க்கும் உள்ள ஒருமைப்பாடு நன்கு விளங்கும்.
-------------
14. தமிழ் மொழியும் பிற மொழியும் – கன்னடம்
பாரத நாட்டில் உள்ள கருநாடக தேசத்தில் வழங்கும் மொழி கன்னடம் எனப்படும். கருநாடகம் என்னும் சொல்லே கன்னடம் என்றாயிற்று. இக் காலத்தில் வழங்கும் கன்னடத்திற்கும் முற்காலத்தில் வழங்கிய கன்னடத்திற்கும் சில வேற்றுமையுண்டு. முற்காலக் கன்னடத்தைப் பழங் கன்னடம் என்பார்கள். ஏறக்குறைய எண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னிருந்த கன்னடத்தைப் பழங் கன்னடம் என்று சொல்லலாம்; பழங் கன்னடத்திற்கும் தமிழுக்கும் பல வகையான ஒற்றுமையுண்டு. சில சொற்களைப் பார்ப்போம் :
தமிழில் உள்ள பூ, புல், புலி, பல்லி, பத்து - இவை போன்ற சொற்கள் அப்படியே பழங் கன்னடத்தில் காணப்படுகின்றன. ஆனால், தற்காலக் கன்னடத்தில் பூ - ஹவு என்றும், புல் - ஹுல்லு என்றும், புலி - ஹூலி என்றும், பல்லி - ஹல்லி என்றும், பத்து - ஹத்து என்றும் வழங்கப்படுகின்றன.
ஆயினும், இன்று தமிழில் கற்றோர்க்கு மட்டுமே விளங்கும் இலக்கியப் பதங்கள் பல, கன்னடத்தில் யாவரும் எளிதில் உணரும் தேசியச் சொற்களாக இருக்கின்றன. திங்கள் என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். தமிழில் திங்கள் என்பது சந்திரனைக் குறிக்கும், சந்திரனுக்குரிய நாளைத் திங்கட்கிழமை என்கிறோம். இன்னும், திங்கள் என்பது மாசத்தையும் குறிக்கும். பத்து மாசம் சுமந்து பெற்ற தாயின் பெருமையைக் கூறுகின்றது ஒரு தமிழ்ப் பாட்டு :
“ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச் செய்ய இரு
கைப்புறத்தி லேந்திக் கனகமுத்தம் தந்தாளை
எப்பிறப்பிற் காண்பேன் இனி "
என்ற பாட்டில் திங்கள் என்பது மாதம் என்ற பொருளைத் தருகின்றது. இவ்வாறு இலக்கியத்தில் பயில்கின்ற சொல் கன்னடத்தில் கற்றோரும் மற்றோரும் வழங்குகின்ற பதமாக இருக்கின்றது. நிலவின் ஒளியைத் 'திங்கள் விளக்கு' என்பர் கன்னடியர் மாதத்தைத் திங்கள் என்றே கூறுவர்.
மற்றொரு பழைய தமிழ்ச் சொல்லைப் பார்ப்போம் : பழந்தமிழில் கரைதல் என்றால் அழைத்தல். காக்கை தன் இனத்தை அழைத்துக் கலந்துண்ணும் தன்மையைத் திருவள்ளுவர் கூறுகின்றார் :
என்பது திருக்குறள். காக்கை ஒளித்து உண்ணாமல் இனத்தை அழைத்து உண்ணும்; அத் தன்மை வாய்ந்தவர்க்கே இவ்வுலகில் ஆக்கம் உண்டு என்பது இக் குறளின் கருத்து. கரை என்ற சொல் மற்றொரு பொருளிலும் ஆளப்பட்டுள்ளது. கடலிற் செல்லும் கப்பல்களுக்குக் கரையிருக்கும் இடத்தைக் காட்டு வதற்காகக் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள விளக்கைத் தீப ஸ்தம்பம் என்பர் வடமொழியாளர்; ஆங்கில வர் Light House என்பர்; கலங்கரை விளக்கம் என்பர் தமிழர். சிலப்பதிகாரத்தில் கலங்கரை விளக்கம் குறிக்கப்பட்டுள்ளது.
"இடையிடை மீன்விலை பகர்வோர் விளக்கமும்
இலங்கு நீர் வரைப்பிற் கலங்கரை விளக்கமும்"
என்பது சிலப்பதிகாரம்.
கலங்கரை விளக்கம் என்பதன் பொருள் என்ன? கலம் என்பது கப்பல் ; விளக்கம் என்பது வெளிச்சம். கப்பலைத் துறைமுகத்திற்கு அழைக்கும் வெளிச்சம் என்பதே கலங்கரை விளக்கம் என்பதன் பொருள். சிலப்பதிகார உரையாசிரியராகிய அடியார்க்கு நல்லார் இவ்வாறு பொருள் கூறுகின்றார். ஆகவே, கரை என்னும் சொல்லுக்கு அழை என்ற பொருள் பழந்தமிழில் உண்டு என்பது நன்கு விளங்கும். இத் தகைய கரை என்ற சொல் கன்னடத்தில் யாவராலும் வழங்கப்படுகின்ற தேசியச் சொல். பால் கறக்கும் வேளை வந்துவிட்டால் 'கரு கரையுத்தே' என்பர் கன்னடத்தார். 'கன்று (தாயை) அழைக்கின்றதே என்பது அதன் பொருள்.
இனி, சில ஆண்பாற் பெயர்களையும் அவற்றிற்கு நேரான பெண்பாற் பெயர்களையும் பார்ப்போம் : ஒருவன் என்பதும் ஒருத்தன் என்பதும் ஆண்பாற் பெயர்கள். ஒருத்தன் என்பது பேச்சுத் தமிழிலே பெரும்பாலும் வரும். ஆயினும் அச்சொல்லின் பழமையும் செம்மையும் திருவாசகத்தால் விளங்குவதாகும்.
என்று மணிவாசகர் திருவாசகத்திலே பாடியுள்ளார். ஒருத்தன் என்பது ஆண்பால்; ஒருத்தி என்பது பெண்பால். இனி, ஒருவன் என்ற சொல்லைக் கருதுவோம். ஒருவன் என்பதற்கு நேரான பெண்பாற் பெயர் ஒருவள் என்பதாகும். ஆனால், ஒருவள் என்னும் பதம் தமிழ் இலக்கிய மரபில் இல்லை. இக் குறைபாட்டைத் தீர்க்க முன் வந்தனர் சிலர்; ஒருவள் என்று கூறுதல் வழுவன்று என்று சில மாநாடுகளில் தீர்மானமும் செய்தனர். ஆயினும், புலவர் உலகம் ஒருவளை' இன்றுகாறும் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்புதுமைப் பதத்தை ஏற்றுக் கொள்வதற்குக் கன்னடத்தை ஆதாரமாகக் காட்டலாம் என்று தோன்றுகின்றது. ஒருவன் என்பது கன்னடத்தில் ஒப்பனு என்றாகும். அதற்கு நேரான பெண்பாற் பெயர் ஒப்பளு. ஒப்பளு என்பது கன்னடத்தில் வழங்குதலால் ஒருவள் என்னும் பதம் தமிழின் நீர்மைக்கு மாறுபட்ட தன்று என்று கொள்வதில் குற்றமொன்றும் இல்லை.
சில பழந் தமிழ்ப் பதங்களின் தாதுப் பொருள் கன்னடத்தால் நன்கு விளங்கத் தக்கதாக இருக்கின்றது. எருது என்ற தமிழ்ப்பதம் பழங்கன்னடத்தில் ஏர்து என்று வழங்குகின்றது. அது ஏர் என்ற தாதுவின் அடியாகப் பிறந்த சொல். ஏர்த் தொழிலாகிய உழவுக்குப் பயன்படும் காளைமாடுகளை ஏர்து என்று கன்னடத்திலும், எருது என்று தமிழிலும் வழங்கலா யினர் என்பது நன்கு விளங்குகின்றது, மற்றொரு சொல்லினைப் பார்ப்போம்: வெங்காயத்தைத் தமிழில் உள்ளி என்பர். உள்ளி என்னும் பதம் கன்னடத்திலும் உண்டு. ஈருள்ளி, வெள்ளுள்ளி என உள்ளி இருவகைப்படும். ஈருள்ளியை ஈர வெங்காயம் என்றும், வெள்ளுள்ளியை வெள்ளை வெங்காயம் என்றும் பொது மக்கள் வழங்குவர். கன்னடத்தில் ஈருள்ளியை நீருள்ளி என்கின்றார்கள். சாறு நிறைந்த வெங்காயத்தை நீருள்ளி என்று குறித்தல் பொருத்தமாகத் தோன்று கின்றது. நீருள்ளி நாளடைவில் ஈருள்ளியாயிருத்தல் கூடும்.
இனி, வண்டி என்ற தமிழ்ச் சொல்லை எடுத்துக் கொள்வோம். மாடு பூட்டிய வண்டியை மாட்டு வண்டி என்பர். குதிரை இழுக்கும் வண்டியைக் குதிரை வண்டி என்பர். இருப்புப் பாதையிற் செல்லும் வண்டியை ரயில் வண்டி என்பர். கன்னடத்திலும், தெலுங்கிலும் வண்டியைப் பண்டி என்கின்றார்கள். பழைய தமிழ் நூல்களில் பண்டி என்ற சொல்லே காணப்படுகின்றது. சிந்தாமணியாசிரியர்,
என்று பாடியுள்ளார். பண்டி என்ற சொல் பழைய நூல்களிற் காணப்படுதலாலும், கன்னடமும் தெலுங்கும் பண்டி என்ற பதத்தையே வழங்குதலாலும் வண்டி என்பது பண்டியின் திரிபே என்று தெரிந்துகொள்ளு கின்றோம்.
தமிழில் யான், நான் என்னும் இரண்டும் தன்மை ஒருமைப் பெயர்கள். இவற்றுள் யான் என்பது மிகப் பழமை வாய்ந்தது. தொல்காப்பியம் என்னும் பழைய தமிழ் இலக்கணம் நான் என்பதைக் கூறவில்லை; யான் ஒன்றையே கூறுகின்றது. பிற்காலத்தில் நான் என்பதும் வழக்காற்றில் வந்துவிட்டது. கன்னடத்தில் யான் என்னும் முற்காலச் சொல்லும், நானு என்னும் பிற்காலச் சொல்லும் காணப்படுகின்றன.
தமிழில் முன்னிலை ஒருமைப் பெயர் நீ என்பது. அது கன்னடத்தில் நீன் என்று வழங்குகின்றது. தமிழ் நாட்டில் சில பாகங்களில் பேச்சுத் தமிழில் நானு, நீனு . என்று வழங்குகின்றார்கள். ஆயினும் 'நீனு' என்பது. கொச்சை மொழி என்றே கற்றோரால் கருதப் படுகின்றது. கன்னடத்தில் நீன் என்பது நல்ல சொல்லாகும்.
திராவிட மொழிகளுக்குரிய சிறப்பெழுத்தாகிய ழகரம் கன்னடத்தில் பொது ளகரமாக மாறிவிட்டது. பல கன்னடப் பதங்களில் ழகரம் நழுவி ஒழிந்தது. உணவுப் பொருளாகிய உழுந்து கன்னடத்தில் உத்து என்றும், கொழுப்பு கொப்பு என்றும், கழுத்து கத்து என்றும் வழங்கக் காண்கின்றோம். குஷ்டநோயைத் தமிழில் பெருநோய் என்று பொது மக்கள் கூறுவர். அந் நோய் இலக்கியங்களில் தொழுநோய் எனப்படும். தேவாரத் திருப்பாசுரத்தில்,
என்று பாடினார் திருநாவுக்கரசர். தொழுநோய் கன்னடத்தில் தொன்னு என வழங்குகின்றது.
புலி என்னும் சொல் பழங் கன்னடத்தில் உண்டு. அது புதுக் கன்னடத்தில் ஹுலி ஆயிற்று. வேங்கைப் புலியைத் தமிழில் பெரும் புலி என்பர். அதற்கு நேரான கன்னடப் பதம் பொப்புலி என்பது. ஆந்திர தேசத்திலுள்ள பொப்புலி என்ற ஊர்ப்பெயரின் பொருள் பெரும் புலி என்பதேயாம். தெலுங்கிலும் கன்னடத்திலும் பல சொற்கள் இவ்வாறு தேய்ந்து வழங்கக் காண்கின்றோம். கன்னடத்திலும் பருப்பு பப்பு என்றும், மருந்து மத்து என்றும், எருமை எம்மே என்றும், பருத்தி பத்தி என்றும் வழங்கப்படுகின்றன.
இன்னும் சில கன்னடப்பதங்களில் முதலில் உள்ள சகரம் ககரமாகத் திரிந்துள்ளது. தமிழில் செவி என்பது கன்னடத்தில் கிவி. அவ்வாறே செவிடு என்பது கிவிடு; செந்தளிர் என்பது கெந்தளிர்; செம்பருத்தி என்பது கெம்பத்தி.
இனி, தமிழ்ச் சொற்களின் முதலில் உள்ள வகரம் பகரமாக மாறியிருத்தலைப் பல கன்னடப் பதங்களிற் காணலாம். வடுகர் என்பது படகர் என்றாயிற்று. வீடு என்பது பீடு. வீதி என்பது பீதி. வில் என்பது பில்லு.. வேர் என்பது பேரு. இத் தகைய மாற்றங்களை உணர்ந்து கொண்டால் தமிழுக்கும் கன்னடத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பு நன்கு விளங்கும்.
கன்னடத்தோடு நெருங்கிய தொடர்புடைய மொழி துளுவம். ஆயினும் கன்னடத்தில் காணப்படாத சில சொற்கள் தமிழிலும் துளுவத்திலும் வழங்குகின்றன. அத் தகைய சொற்களில் ஒன்று கொக்கு. தமிழில் கொக்கு என்றும், துளுவத்தில் குக்கு என்றும் வழங்கும் சொல் மாமரத்தைக் குறிக்கும். இச் சொல்லைச் சிலேடையாக வைத்துக் குற்றாலக் குறவஞ்சியாசிரியர் முருகன் பெருமையைக் கூறுகின்றார். முருகப் பெருமான் முதல் வேட்டைக்குப் புறப்பட்டாராம். ஒரு கொக்கை அடித்தாராம்.
" மீறும் இலஞ்சுக் குறத்தியைக் கொண்ட செவ்
வேட்குறவன் முதல் வேட்டைக்குப் போனநாள்
ஆறுநாட் கூடிஒரு கொக்குப் பட்டது ”
என்று பாடுகின்றான் மலைக் குறவன். முருகன் அசுரர் தலைவனாகிய சூரனோடு போர் தொடுத்தார்; ஆறு நாள் அரும்போர் செய்தார். மாயையில் வல்ல சூரன் மறைந்து ஒரு மாமரமாக நின்றான். அம் மாமரத்தை வேலால் எறிந்து வீழ்த்தினார் முருகன். இச் செயலைக் கொக்கு வேட்டையாடினார் குமரன் என்று குறவன் நயம்பட உரைத்தான். இவ்வாறு தமிழ் மொழிக்கும் பிற மொழிகளுக்கும் உள்ள ஒற்றுமையை ஆராயும் பொழுது தென்னிந்திய மொழிகளெல்லாம் ஓர் இனம் என்பது தெளிவாகும். அவற்றுள்ளே தமிழ் மொழி காலப் பழமையும் செம்மையும் வாய்ந்த தென்பதும் செவ்விதின் விளங்கும்.
------------------
15. இலக்கணம் மொழியைப் பாதுகாக்கும் முறை
ஒரு செழுமையான சோலையில் பலவகைப்பட்ட மரங்கள் விளங்குகின்றன. சில மரங்களின் கிளைகளி லிருந்து விழுதுகள் தரையை நோக்கித் தாழ்ந்து கொண்டிருக்கின்றன. இன்னும் சில விழுதுகள் தரையில் ஊன்றித் தனித்தனி மரங்களாகத் தழைத்துள்ளன. இத்தகைய சோலையைப் பார்க்கின்றான் ஓர் இயற்கை நூற்புலவன்; ஒவ்வொரு மரத்தின் போக்கையும் தாக்கையும் உற்று நோக்குகின்றான்; அவற்றின் தன்மையை ஆராய்ந்து எழுதுகின்றான்.
இச் சோலையைப் போன்றதே இலக்கிய உலகம். இலக்கிய உலகத்தில் பலவகைப்பட்ட மொழிகள் உண்டு. ஒவ்வொரு மொழியிலும் உள்ளத்தை அள்ளும் தெள்ளிய பாட்டும் உரையும் உண்டு. சிறந்த தாய் மொழிகளினின்று பிறந்த சேய்மொழிகள் தனி மொழிகளாகத் தழைத்தலும் உண்டு. இவற்றை யெல்லாம் ஆராய்ந்து ஒவ்வொரு மொழியின் தன்மையையும் எழுதிக் காட்டும் நூலே இலக்கணம் எனப்படும். அதனை வியாகரணம் என்பர் வடமொழியாளர்.
இலக்கணம் அமையப்பெறாத மொழிகள் வரம்பில்லாத வயல்களை ஒக்கும். பழமையும் பண்பும் வாய்ந்த பசுந்தமிழை இலக்கண வரம்புடைய மொழியென்று பாராட்டினார் பரஞ்சோதி முனிவர்.
"கண்ணுதற் பெருங்கடவுளும் கழகமோ டமர்ந்து
பண்ணுறத் தெரிந்தாய்ந்த இப் பசுந் தமிழ்ஏனை
மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணிடப் படக்கிடந்ததா எண்ணவும் படுமோ"
என்று முனிவர் இறுமாந்துரைத்தார்.
'ஒரு மொழியின் பண்புகளை அதன் இலக்கணம் நன்கு பாதுகாக்கும்' என்னும் உண்மைக்குத் தமிழிலக்கணமே தக்க சான்று. தொன்றுதொட்டுப் பல இனத்தார் தமிழ் நாட்டிற் போந்து தமிழரோடு கலந்துள்ளார்கள். அவ் வினத்தாருடன் வந்த பல மொழிகளும் தமிழ் மொழியோடு கலந்திருக்கின்றன. ஆதியில் ஆரியர் வந்தனர். அவர் மொழியாகிய ஆரியத்தோடு தமிழ் அளவளாவிற்று. அப்பால் மகமதியர் வந்தனர்; அவருடன் வந்த அரேபியத்தோடு தமிழ் உறவாடிற்று; சென்ற முந்நூறு ஆண்டுகளாக ஆங்கிலத்தோடு தமிழ் பழகிக்கொண் டிருக்கின்றது. ஆயினும், ஆதியில் வந்த ஆரியமாவது, இடைக் காலத்தில் வந்த அரேபியமாவது, பிற்காலத்தில் வந்த ஆங்கிலமாவது தமிழின் நீர்மையைக் கெடுத்துவிட்ட வில்லை. தமிழின் உருவத்தைக் குலைத்துவிடவில்லை. இதற்குக் காரணம் தமிழ் இலக்கணமே.
பிறமொழிச் சொற்கள் தமிழில் வந்து வழங்கலாகாது என்று தமிழ் இலக்கணம் தடை செய்யவில்லை; ஆனால், அச் சொற்கள் தமிழ்க்கோலம் பூண்டு தமிழிலே கலந்து கொள்ளுதல் வேண்டும் என்று விதித்தது. பிற நாட்டான் ஒருவன் தமிழனாகக் கருதப்பட வேண்டுமானால் அவன் நடை உடை பாவனைகள் எல்லாம் தமிழ் நாட்டாரைப் போல் இருக்க வேண்டுமல்லவா? அவ்வாறே பிறமொழிச் சொற்கள் தமிழோடு கலந்து கொள்ள வேண்டுமானால் அவை தமிழ் ஓசையும் உருவமும் உடையனவாய் வரல் வேண்டும் என்று தமிழிலக்கணம் வரையறை செய்தது. தமிழின் நலங்கருதிச் செய்யப்பட்ட இக் கட்டுப் பாட்டைத் தமிழிலக்கிய உலகம் ஏற்றுக்கொண்டது.
அதனாலே விளைந்த நன்மையைப் பார்ப்போம்; ராஜா என்ற வட சொல் அரசன் என்ற வடிவத்திலே தமிழில் வழங்கலாயிற்று. லோகம் என்பது உலகம் எனவும், ரூப் என்பது உருவம் எனவும் வழங்கலாயின. இங்ஙனம் பல வடசொற்கள் தமிழோசையும் வடிவமும் பூண்டு தமிழ் இலக்கியத்தில் இடம் பெற்றன. வடமொழிக் காவியங்களைத் தழுவித் தமிழ் நூல் செய்த கவிகளும் இவ்விதியை மீறக் கருதவில்லை. கவியரசராக விளங்கும் கம்பர் வடமொழிக் காவியத்திற் கண்ட இராம கதையைத் தமிழிலே தந்தார். அவர் காட்டும் நெறியைச் சிறிது கருதுவோம் : கதாநாயகனை ராமன் என்னாது இராமன் என்றே குறிக்கின்றார்; இராம தூதனை 'ஹநுமன் என்னாது அநுமன் என்றே அழைக்கின்றார்; இராவணன் ஆண்ட நாட்டை லங்கா என்னாது இலங்கை என்றே கூறுகின்றார்.
இன்னும் வட சொற்களைத் தமிழின் நீர்மைக் கேற்பக் குழைத்து வழங்குவர் கம்பர். ஹிர்தய என்ற வட சொல்லை இதயம் என்று இனிமையாகக் குழைத்தார்.
" மயிலுடைச் சாய லாளை வஞ்சியா முன்னம் நீண்ட
எயிலுடை இலங்கை நாதன் இதயமாம் சிறையில் வைத்தான்"
என்ற கவியில் இதயம் அழகும் இலங்குகின்றது. சிலப்பதிகார ஆசிரியர் டாகினி என்னும் வடசொல்லை இடாகினி என்றாக்கித் தமிழோடு இசைவித்தார். டாகினி என்பது வடமொழியில் ஒரு பேயின் பெயர். இப் பேயின் தன்மையை 'இடுபிணம் தின்னும் இடாகினிப் பேய்' என்று இளங்கோவடிகள் இனிதுணர்த்தினார்.
இத் தகைய பண்பு திராவிட மொழிகளுள் தமிழுக்கே சிறப்பாக உரியதெனத் தோன்றுகின்றது. பாரத நாட்டின் வடபாகத்தில் வழங்கும் பாஷைகள் ஆரிய வகுப்பைச் சேர்ந்தவை என்றும், தென் பாகத்தில் வழங்கும் மொழிகள் திராவிட வகுப்பைச் சேர்ந்தவை என்றும் மொழி நூற் புலவர்கள் கருதுகின்றார்கள். திராவிட வகுப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கும் சிறந்த மொழிகள். இந்நான்கு மொழிகளுள் இன்று தமிழ் ஒன்றே ஆரியத்தின் உதவியின்றித் தனித்தியங்க வல்லதாய் இருக்கின்றது. மற்றைய மூன்று மொழிகளுக்கும் ஆரியத்தின் சார்பு அவசியமாய்விட்டது. இவ்வாறு நேர்ந்ததற்குக் காரணம் இலக்கணமே. தமிழொடு ஆரியம் கலக்கத் தொடங்கிய பழங்காலத்திலேயே தமிழுக்கு வரம்பு கட்டிவிட்டார்கள் இலக்கண ஆசிரியர்கள். ஆரிய வெள்ளம் இலக்கண நூலோர் வகுத்த வாய் மடைகளின் வழியாகத் தமிழ் வயலில் பாய்ந்தது. மற்றைய திராவிட மொழிகளின் இலக்கணங்கள் ஆரியம் நன்கு விரவிய பின்னர் எழுதப்பட்டன. தெலுங்கு மொழியின் இலக்கணமாகிய 'ஆந்திர பாஷாபூஷணம்' எழுநூறு ஆண்டுகளுக்கு முன்னே எழுதப்பட்டது; கன்னட இலக்கணமாகிய 'சப்தமணி தர்ப்பணம்' எண்ணூறு ஆண்டுகளுக்குமுன் எழுந்தது. 'லீலா திலகம்' என்னும் மலையாள இலக்கணம் வடமொழியிலே எழுதப்-பட்டிருக்கின்றது. ஆனால், தமிழிலக்கணமாகிய தொல்காப்பியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே எழுந்தது. ஆராய்ச்சியாளர் சிலர் அது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தியது என்பர். தொல்காப்பியத்திற்கும் முற்பட்ட இலக்கணம் ஒன்று அகத்திய முனிவரால் இயற்றப்பட்ட தென்று கர்ணபரம்பரை கூறுகின்றது. எனவே, தமிழ் இலக்கணம் மற்றைய திராவிட மொழிகளின் இலக்கணங்களைப் போல் இடைக்காலத்திலே எழுதப்படாமல் முற்காலத்தில் எழுதப்பட்டமையால் தமிழின் நீர்மையும் திறமையும் பாதுகாக்கப்பட்டன என்பது நன்கு விளங்குகின்றது.
இலக்கணம், மொழியைப் பாதுகாக்கும் என்றால் அஃது ஓர் இரும்புச் சட்டை போல் இறுக்கி நெருக்கும் என்று எண்ணலாகாது. உயிருள்ள மொழிகள் வளர்ந்து கொண்டே யிருக்கும். பழைய சொற்கள் இறக்கும்; புதிய சொற்கள் பிறக்கும். பழைய இலக்கிய மரபுகள் வீழும். புதிய மரபுகள் தோன்றும். இவ்வாறு காலவகையினால் நேரும் திருத்தங்களை இலக்கணம் ஆதரிக்கும்.
”பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே"
என்றார் தமிழிலக்கண ஆசிரியராகிய பவணந்தி முனிவர். இதனை இரண்டோர் உதாரணங்களால் உணரலாம். நீ என்பது முன்னிலை ஒருமைப் பெயர். நீர், நீங்கள் என்பன பன்மை. அவன் என்பது படர்க்கை ஒருமை. அவர், அவர்கள் ஆகிய இரண்டும் பன்மை. எத்துணை அருமை வாய்ந்தவனையும் நீ என்றும், அவன் என்றும் குறிக்கும் வழக்கம் முற்காலத்தில் இருந்தது. இவ்வுலகுக்கெல்லாம் தலைவனாகிய கடவுளையே நீ என்றும், அவன் என்றும் அருள் பெற்ற பெரியோர் குறித்திருக்கிறார்கள். 'அப்பன் நீ, அம்மை நீ, அன்புடைய மாமனும் மாமியும் நீ ' என்பது தேவாரம். ஆனால், நாளடைவில் மரியாதைக் குரியவரை ஒருமையில் நீர் என்றும், அவர் என்றும் சொல்லும் வழக்கம் ஏற்பட்டது. அசோகவனத்தில் தன்னந் தனியளாயிருந்த சீதையைத் தன்னுயிரினும் மேலாக மதித்த இராவணன்,
என்று பேசுகின்றான். இக் காலத்தில் மரியாதை இன்னும் ஒருபடி உயர்ந்துவிட்டது. ஒருவனை நீர் என்றும், அவர் என்றும் குறிப்பது போதாதென்று நீங்கள், அவர்கள் என்று பேசும் முறை வந்துவிட்டது. ஒருவனைப் பார்த்து, 'நீங்கள் எப்பொழுது வந்தீர்கள்' என்று கேட்பதில்லையா? ஆகவே, நீ, நீர், நீங்கள் ஆகிய மூன்றும் முன்னிலை ஒருமையிலும், அவன், அவர், அவர்கள் ஆகிய மூன்றும் படர்க்கை ஒருமையிலும் வழங்கக் காண்கிறோம். தமிழ் நாட்டில் மரியாதை முறை தெற்கே செல்லச் செல்ல சிறந்து தோன்றுகிறது. இவ்விதம் உண்டாகும் மாற்றங்களை இலக்கணம் நாளடைவில் ஏற்றுக்கொள்ளும்.
இப்பொழுது சில தொன்மொழிகளின் ஒப்பிலக் , கணம் (Comparative Grarmmar) எழுதப்பட்டு வருகின்றது. தொன்றுதொட்டு ஆரியத்தையும் தமிழையும் ஒப்பிட்டுப் பார்க்கும் முறை இந்நாட்டில் உண்டு. எந் நாட்டவர்க்கும் இறைவனாகிய கடவுளையே 'ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய்' என்றார் ஒரு பெரியார். வடமொழிக்கு வியாகரணம் வகுத்த பாணினியும், தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்த அகத்தியரும் ஒருவருக் கொருவர் நிகர் என்று கூறினார் ஒரு கவிஞர். இரு மொழிகளிலும் காணப்படும் எழுத்துக்களைப் பொது எழுத்துக்கள் என்றும், தமிழிலே மட்டும் காணப்படும் எழுத்துக்களைச் சிறப்பெழுத்துக்கள் என்றும் தமிழிலக்கணம் கூறுவதாயிற்று. இக் கொள்கை பரவியிருந்த தமிழ் நாட்டில் ஐம்பதாண்டுகளுக்கு முன்பு சிறந்த அறிஞர் ஒருவர் தோன்றினார். கால்டுவெல் என்பது அவர் பெயர். இன்று அவர் பெருமை இலக்கண உலகத்தில் குன்றிலிட்ட விளக்குப் போல் நின்று நிலவுகின்றது. அவர் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் ஓர் உயரிய நூல் இயற்றினார்; பாரத நாட்டின் தென்பாகத்தில் வழங்கும் மொழிகள் எல்லாம் ஒரு பெருங்குடும்பத்தைச் சேர்ந்தவை என்று தக்க சான்றுகளால் நிறுவினார்; அவற்றின் சொற்களும் இலக்கணக் கூறுகளும் அடிப்படையில் ஒற்றுமை யுடையன என்று அறிஞர் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் முறையில் எடுத்துக் காட்டினார். இப் பேராசிரியரைத் 'திராவிட மொழி நூலின் தந்தை' என்று இலக்கண உலகம் போற்றுகின்றது.
ஏனைய மொழிகளில் இல்லாத இலக்கணம் ஒன்று தமிழிலே உண்டு. அது பொருள் இலக்கணம் எனப்படும் . இலக்கியங்களில் எடுத்தாளப்படும் பொருளை அகப்பொருள் என்றும், புறப்பொருள் என்றும் தமிழிலக்கண நூலோர் பாகுபாடு செய்தார்கள். பொதுவாக இன்பம் அகத்திலும், வீரம் புறத்திலும் அடங்கும். காதலர் இருவர் கருத் தொருமித்து நிகழ்த்தும் இல் வாழ்க்கையே இவ்வுலகி லுள்ள இன்பங்களுள் தலை சிறந்ததாதலால் அகப் பொருள் இலக்கணம் காதலையும் கற்பையும் விரித்துச் சொல்லும். ஆண்மையும் வீரமும் பெரும்பாலும் போர்க்களத்திலே வெளிப்படுதலால் போரின் தன்மையைப் புறப்பொருள் இலக்கணம் விரித்துக் கூறும். இவ்விருவகை இலக்கணமும் தொல்காப்பியத் திலேயே காணப்படுகின்றது. இங்ஙனம் இலக்கியங்களிற் . பயிலும் சொல்லையும் பொருளையும் தமிழிலக்கணம் வரையறை செய்வதாயிற்று.
இனி, செந்தமிழ், கொடுந்தமிழ் என்னும் பாகு பாட்டைச் சிறிது பார்ப்போம் : இதற்கு அடிப் படையாக உள்ளது இலக்கணமே இக் காலத்தில் சிலர் செந்தமிழ் என்றால் கடுமையான தமிழ்: பல்லை யுடைக்கும் சொல்லையுடைய தமிழ் என்று தவறாகக் கருதி இடர்ப்படுகிறார்கள். பிழையற்ற தமிழே செந்தமிழ் இலக்கண வரம்பு கடந்து, கொண்டதே கோலமாக நடமாடும் தமிழ் கொடுந்தமிழ். செம்மையான தமிழ் செந்தமிழ். கோணலான தமிழ் கொடுந் தமிழ் . செந்தமிழே சிந்தைக்கும் செவிக்கும் இன்பம் பயக்கும். இதனாலன்றோ
என்று பாடினார் பாரதியார்.
-------------------------
IV
16. தமிழ் இலக்கியத்திற் கண்ட அரசு
தமிழ்நாடு பலவகை நலங்களும் படைத்த நாடு. இந் நாட்டில் போதிய நீர்வளமும் நிலவளமும் உண்டு. நல்ல மலைவளமும் கடல் வளமும் உண்டு. இவ் வளங்கள் எல்லாம் அமைந்திருப்பினும் நாட்டிலுள்ளார் நலமுற்று வாழ்வதற்கு நல்லரசு வேண்டும் என்பது தமிழ் நாட்டார் கொள்கை. நாட்டில் வாழும் குடிகளுக்கு அரசனே உயிர் என்னும் கருத்தைப் பழைய தமிழ் நூல்களில் காணலாம்.
" நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்
அதனால் யான்உயிர் என்ப தறிகை
வேல்மிகு தானை வேந்தற்குக் கடனே"
என்ற புறப்பாட்டு, மன்னன் நிலைமையையும் கடமையையும் நன்கு விளக்குகின்றது.
தமிழ் நாட்டில் அரசாங்கம் நினைப்பிற்கு எட்டாத நெடுங்காலமாக நடைபெற்று வருகின்றது. ஆதியில் சேர சோழ பாண்டியர்கள் அரசு புரிந்தார்கள். அவர்கள் படைப்புக் காலமுதல் அரசாள்கிறார்கள் என்று தமிழ்ப் புலவர் கூறுவாராயினர். இவ்வாறு தமிழ் நாட்டிற் சிறப்பு வாய்ந்து விளங்கிய மூவேந்தரும் பெரும்பாலும் பொறுப்பு உணர்ந்தவர்களாகவே அரசு புரிந்தனர்.
நாட்டில் பசியும் பிணியும் பகையும் நீக்கிக் குடிகளைப் பாதுகாக்கும் பொறுப்புடை-யவன் அரசனே. பசிநோய் ஒழியவேண்டுமாயின் உணவுப் பொருள்கள் போதிய அளவு நாட்டிலே விளைதல் வேண்டும். உணவுப் பொருள்கள் விளைவதற்கு மழை உரிய காலத்தில் பெய்ய வேண்டும். பருவத்தில் மழை பெய்யா தொழிந்தால் உயிர்கள் எல்லாம் பசியால் நலிந்து வருந்தும்.
என்றார் திருவள்ளுவர். அரசன் அறநெறி தவறாமல் ஆண்டுவந்தால் மழை தப்பாமல் பெய்யும் என்பது தமிழ் நாட்டார் கொள்கை. எனவே, மழை பெய்து நாடு செழித்தால் குடிகள் மன்னனைப் போற்றுவர்; மழை பெய்யா தொழிந்தால் மன்னனைத் தூற்றுவர். இவ்வுண்மை,
" மாரி பொய்ப்பினும் வாரி குன்றினும்
காவலர்ப் பழிக்கும் இக் கண்ணகன் ஞாலம்"
என்னும் புறநானூற்று அடிகளால் அறியப்படும். இங்ஙனம் பசிநோயை நீக்கும் பொறுப்புடைய அரசன், பகைவரால் குடிகள் வருந்தாமலும் பாதுகாக்கும் கடமை யுடையவன் குடிகளைத் துன்புறுத்தும் பகைவர் நாட்டின் உள்ளேயும் இருப்பர்; வெளியேயும் இருப்பர். நாட்டின் உள்ளே இருந்து கொண்டு கொலையும் கொள்ளையும் கொடுமையும் புரிவோரை அடியோடு அழித்தல் அரசன் கடமை.
என்று திருக்குறள் கூறுகின்றது. பசும் பயிர் செழித்து வளர்வதற்காக அதனிடையே முளைக்கும் களையைப் பறித்தெறிதல் போன்று, நாட்டிலே குடிகள் நலமுற்று வாழ்வதற்காக அரசன் கொடியவர்களைக் கொன்று ஒழித்தல் வேண்டும் என்பது இக் குறளின் கருத்து . குடிகளைத் துன்புறுத்தும் கொடியவர்கள் இல்லாத நாடே நாடாகும்.
முற்காலத் தமிழரசர்கள் கள்வர்க்குக் கடுந்தண்டம். விதித்தார்கள். களவு செய்தவனுக்குக் கொலைத் தண்டனை விதித்தல் முறையாகக் கருதப்பட்டது. சிலப்பதிகாரம் இதற்குச் சான்று தருகின்றது. அரண்மனைச் சிலம்பைக் களவு செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட கோவலனுக்குப் பாண்டியன் கொலைத் தண்டனை விதித்தான். கொலையுண்டிறந்த கோவலன் மனைவி, மாளிகையிற் போந்து மனந் துடித்துக் கண்ணீர் வடித்தாள். அதைக் கண்ட மன்னவன், "மாதே, நின் கணவன் களவு செய்தான்; அக் குற்றத்திற்காகக் கொல்லப் பட்டான். இதில் கொடுமை யொன்றும் இல்லையே.''
" கள்வனைக் கோறல் கடுங்கோல் அன்று
வெள்வேற் கொற்றம் காண்"
என்று நீதி முறையை எடுத்துரைத்தான். இவ்வாறு கள்வர்க்குக் கடுந் தண்டனை விதித்தமையாலேயே முற்காலத்தில் களவு குறைந்திருந்தது போலும். ஏறக்குறைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ஸ்ட்ராபோ (Strabo) என்னும் யவன ஆசிரியர், 'பாரத நாட்டில் களவாடுவோர் இல்லை' என்று எழுதியுள்ளார். இதனைப் பார்க்கும் பொழுது,
" கள்வார் இலாமைப் பொருள்காவலும் இல்லை யாதும்
கொள்வார் இலாமைக் கொடுப்பார்களும் இல்லை மாதோ"
என்று கம்பர் புனைந்துரையாகக் கூறினாரல்லர்; உண்மையே உரைத்தார் எனக் கொள்ளலாகும்.
இன்னும் நாட்டின் தலைவனாகிய அரசன் மாற்றரசர்களால் குடிகளுக்குத் துன்பம் நேராத வண்ணம் காக்கும் கடமையும் உடையவன். மண்ணாசை கொண்டு மாற்றரசர் படை எடுப்பாரா யின் அவர் படையை வென்றழித்தல் மன்னவன் கடமை. முற்காலத்தில் மாற்றரசர் படை எடுப்புப் பெரும்பாலும் தரை வழியாகவே நிகழ்ந்தது. சில வேளைகளில் கடல் வழியாகவும் ஆகாய வழியாகவும் பகைவர் தாக்கியதாகத் தெரிகின்றது.
இவ்விதம் பசி நோயாலும் பகைவர் கொடுமை யாலும் குடிகள் வருந்தாமல் பாதுகாப்பவன் அரசனே யாதலால் காவலன் என்னும் சொல்லின் பொருளைத் திருத்தொண்டர் புராணம் இயற்றிய சேக்கிழார் தெளிவுற விளக்கிப் போந்தார்.
என்பது சேக்கிழார் பாட்டு. காவலன் ஆகிய அரசன் அறத்தைக் காக்கின்றான் என்பது இப்பாட்டால் விளங்குகின்றது. மறப் பகையைப் போக்கி அறப் பயனை நாட்டில் விளைப்பவனே காவலன் என்னும் பெயருக்கு உரியவன். இதனாலன்றோ 'அறநெறி முதற்றே அரசின் கொற்றம்' என்ற வாசகம் எழுந்தது? அரசன் அன்று கேட்பான், தெய்வம் நின்று கேட்கும்' என்பது இந் நாட்டில் நெடுமொழியாக வழங்குகின்றது. நாட்டில் குற்றம் நிகழ்ந்தால் அரசன் உடனே அதனை விசாரணை செய்வான். குற்றம் சாட்டப்பட்டவன் இன்னான் இனியான் என்று பார்ப்பதில்லை; அவனது குலத்தையும் குடியையும் கருதுவதில்லை. உற்றார் உறவினர் ஆயினும் மற்றோராயினும் நீதி செலுத்தும் முறையில் வேற்றுமையில்லை. சோழ நாட்டை ஆண்ட அரசன் ஒரு பசுவின் கன்றைக் கொன்ற அரசிளங் குமரனை ஒறுத்து, நீதியின் செம்மையை நிலை நிறுத்தினான். தவறு செய்தவன் தன் மைந்தன் என்று சிறிதும் திகைத்தானல்லன்; தன் பெருங் குலத்திற்கு ஒரு மைந்தனே உள்ளான் என்றும் எண்ணினாலல்லன்; நீதிநெறி வழுவாமல் குற்றம் செய்தவனை ஒறுத்தலே கடன் எனத் துணிந்தான். இங்ஙனம் நேர்மை குன்றாது மகனை முறை செய்து அறத்தினைக் காத்த மன்னன் பெருமையைத் தமிழ் இலக்கியம் வியந்து போற்று கின்றது.
"ஒருமைந்தன் தன் குலத்துக் குள்ளான் என்பது உணரான்
தருமந்தன் வழிச் செல்கை கடனென்று தன்மைந்தன்
மருமந்தன் தேராழி உறஊர்ந்தான் மறுவேந்தன்
அருமந்த அரசாட்சி அரிதோமற் றெளிதோதான்"
என்று சேக்கிழார் இம் மன்னன் செம்மையை வியந்து பாடினார்.
இச் சோழனைப் போலவே பாண்டியன் நெடுஞ் செழியனும் நீதி பரிபாலனம் செய்து வந்தான். நீதி முறைக்கு மாறாக இப் பாண்டியன் கண்ணகியின் கணவனாகிய கோவலனுக்குக் கொலைத் தண்டனை விதித்து விட்டான். தண்டனையும் நிறைவேறிவிட்டது. பின்பு கண்ணகி வழக்காடிய பொழுது நீதி தவறியது என்று நெடுஞ்செழியன் அறிந்தான்; அந் நிலையிலேயே தள்ளரிய துயரத்தால் உள்ளம் உடைந்து உயிர் துறந்தான்; தான் செய்த பிழையைத் தீர்ப்பதற்குத் தன்னுயிரையே கொடுத்தான். இதனையறிந்த அயல் நாட்டு வேந்தரும் பாண்டியரைப் பாராட்டினர். சேர மன்னனாகிய செங்குட்டுவன் மனம் வருந்தி,
"செம்மையின் இகந்த சொல் செவிப்புலம் படாமுன்
வல்வினை வளைத்த கோலை மன்னவன்
செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோ லாக்கியது"
என்று பாண்டியரைப் புகழ்ந்தான். எனவே, தவறு செய்தவர் யாவரேயாயினும், தமிழ் வேந்தர் நீதி செலுத்தத் தயங்கவில்லை என்பது நன்கு விளங்குகின்றது.
நாட்டில் நிகழ்ந்த குற்றங்களை விசாரணை செய்து நீதி செய்தது போலவே, அரசர் குடிகளுக்குள் நேர்ந்த வழக்குகளையும் தீர்த்து முடிவு செய்தார்கள். அரசன் நீதி மன்றத்தில் அமர்ந்து இரு திறத்தார் கூறும் வழக்கையும் நன்றாக மனத்தில் ஏற்று, நீதி வழங்கினான். நீதி மன்றத்தில் சென்று வழக்காடுதலை 'மன்றாடுதல்' என்பர். இப்பொழுதும் 'மன்றாடி வேண்டிக் கொள்கிறேன்' என்ற வாசகம் வழங்கக் காணலாம். கரிகால் சோழன் காலத்தில் நிகழ்ந்த ஒரு வழக்கைக் குறித்துத் தமிழ்நாட்டில் நெடுங்காலமாக ஒரு கதை வழங்கி வருகின்றது. கரிகால் சோழன் இளமையிலேயே அரசனாய்விட்டான். அவனிடம் ஒரு வழக்கைக் கொண்டு வந்தார்கள் இரண்டு கிழவர்கள். வழக்கோ மிகச் சிக்கலானது. மன்றாட வந்த முதியோர் இருவரும் மனம் தளர்ந்து ஊரம்பலத்திலே இரவில் தங்கியிருந்தார்கள்; வழக்கைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார்கள். 'இளைஞனாகிய நம் அரசன் இவ் வழக்கை மனத்தில் வாங்கிக் கொள்ள வேண்டுமே ! முறை தவறாமல் தீர்ப்புச் சொல்ல வேண்டுமே ! எப்படியாகுமோ!' என்று உரையாடிக்கொண்டிருந் தார்கள். அப் பேச்சு, மாறுகோலம் புனைந்து அவ் வழியாக வந்த மன்னன் செவியில் விழுந்தது. கவலையோடு அரண்மனையை அடைந்தான் அரசன்; மறுநாள் நீதிமன்றத்திற்குச் செல்லும்போது பெரிய அங்கியொன்றை அணிந்தான்; தலையில் அமைந்த கருமுடியை நரை முடியால் மறைத்தான்; இவ்வாறு முதுமைக் கோலம் புனைந்து கொண்டு நீதி மன்றத்திற் சென்று ஆசனத்தில் அமர்ந்தான். வழக்காளர் இருவரும் மன்றத்தில் புகுந்தார்கள்: அரசன் திருமுகத்தை நோக்கினார்கள்; முகத்தில் இளமையிருப்பினும் அரசன் தலை முதிர்ந்திருக்கக் கண்டு ஆனந்தமடைந்தார்கள்; 'ஆண்டில் இளையவனாயினும் அறிவில் முதியவன் நம் அரசன்' என்று மனந்தேறித் தம் வழக்கை எடுத்துரைத்தார்கள். இருதிறத்தார் வாய் மொழியையும் அமைதியாகக் கேட்டுத் தீர்ப்புரைத்தான் அரசன். அதுவே முறையான தீர்ப்பென்று வழக்காளர் இருவரும் மனமகிழ்ந்து சென்றார்கள். இக் கதை 'பழமொழி' என்ற தமிழ் நூலிற் குறிக்கப்படுகிறது.
"உரைமுடிவு காணான் இளமையோன் என்ற
நரைமுது மக்கள் உவப்ப -நரைமுடித்துச்
சொல்லால் முறை செய்தான் சோழன் குலவிச்சை
கல்லாமற் பாகம் படும்"
என்பது பழமொழிப் பாட்டு”
இவ் வண்ணம் முறை செய்து குடிகளைக் காப்பாற்றும் மன்னரைக் கடவுளுக்கு ஒப்பாகக் கருதினர் தமிழ் நாட்டார். இறைவன் என்ற சொல் கடவுளையும் குறிக்கும், அரசனையும் குறிக்கும். "முறை செய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப்படும்" என்பது திருவள்ளுவர் வாக்கு தமிழ் நாட்டார் பொன்போற் போற்றும் நீதி நெறிகளை யெல்லாம் தொகுத்து 'நீதிநெறி விளக்கம்' என்ற நூல் இயற்றிய குமரகுருபர அடிகள், அரசனே எல்லார்க்கும் தெய்வம் என்ற கருத்தை,
என்னும் வெண்பாவால் எடுத்துரைத்தார். 'கற்புடைய மங்கைக்குக் கணவனே தெய்வம்; பாலர்க்கு அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்; அறவோர்க்குக் குருவே தெய்வம்; அனைவோர்க்கும் அரசனே தெய்வம்' என்பது இப்பாட்டின் கருத்து. நாடாளும் அரசனிடம் தெய்வ ஒளி விளங்கும் என்று திருவள்ளுவர் அருளினார். உலகத்தைக் காப்பது அவ் வொளியே என்பது தமிழ் நாட்டார் கொள்கை.
என்று திருவாய் மலர்ந்தருளினார்? ஆகவே, அரசனே அச்சந் தீர்ப்பவன்; அறங்காப்பவன்; முறை செய்பவன்; குறை தீர்ப்பவன். அவனே இறைவனாகும் என்பது தமிழ் இலக்கியத்திற் கண்ட கருத்து.
----------------
17. தமிழ் இலக்கியத்திற் கண்ட அமைச்சு
அரசாங்கம் இல்லாத நாடு இக் காலத்தில் இல்லை. அரசனுக்குரிய ஆறு அங்கங்களில் ஒன்று அமைச்சு என்று திருக்குறள் கூறுகின்றது. அமைச்சர் என்றாலும் மந்திரி என்றாலும் பொருள் ஒன்றே. 'மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்' என்ற வாசகம் நம் நாட்டில் வழங்கி வருகின்றது. முற்காலத்தில் மந்திரிகள் எவ்வாறு தெரிந்தெடுக்கப்பட்டார்கள் என்பதை முதலிற் சிறிது பார்ப்போம்.
முற்காலத்தில் தமிழரசு, முடியரசு. ஆதலால் குடிகள் அமைச்சர்களைத் தெரிந்தெடுக்கும் முறைமை இல்லை. மன்னரே தமக்கேற்ற மந்திரிகளைத் தெரிந்தெடுத்துக் கொண்டார்கள்; நாட்டில் வாழும் குடிகளில் நல்லறிவும் நல்லொழுக்கமும் வாய்ந்தவர்களே பெரும்பாலும் மந்திரிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் களென்று தெரிகின்றது. இதைக் குறித்துப் பழைய தமிழ் நாட்டரசன் ஒருவன் பாடியுள்ள பாட்டைப் பார்ப்போம் :
என்பது பாண்டியன் நெடுஞ்செழியனது பாட்டு. கல்வியறிவின் பெருமையைக் கூறுகின்றான் கற்றறிந்த பாண்டியன். எல்லோரும் கல்வி கற்றல் வேண்டும்; பாடுபட்டும், பணம் கொடுத்தும் படித்தல் வேண்டும். கல்வியறிவு எல்லாச் சிறப்பையும் தரும். அறிவுடைய ஒருவனை அரசனும் வருக என்றழைத்து அமைச்ச னாக்குவான்; அவன் சொல் வழியே அரசு புரிவான் என்று பாண்டி மன்னன் கூறுகின்றான். முற்காலத்து மன்னர் மந்திரிகளைத் தெரிந்தெடுத்த முறை இப் பாட்டால் விளங்குகின்றது. எக் குடியிற் பிறப்பினும் யாவனே யாயினும் மன்னவன் கற்றறிந்தவனையே ஆதரித்தழைத்து மந்திரியாக்குதல் வழக்கம். வயது குறைந்தவனாயினும், உருவிற் சிறியவனாயினும், அறிவு - நிறைந்தவனாயிருந்தால் அவனையே அரசன் அமைச்சனாக்கிக் கொள்வான்.
மன்னருக்கு நன்னெறி காட்டும் பொறுப்புடைய வர்கள் மந்திரிகளேயாவர். ஆதலால், எப்பொருள் எத் தன்மையதாயினும் அப் பொருளை அமைச்சர்கள் நன்கு ஆராய்ந்து தெளிவார்கள்; அவ்விதம் ஆராய்ந்து கண்ட கொள்கையை நேர்மையாகவும் இனிமையாகவும் மன்னனிடம் எடுத்துரைப்பார்கள்; தாம் கொண்ட கொள்கையை அரசன் கொள்வானோ, அன்றித் தள்ளுவானோ என்று கருதி நெஞ்சம் குலைய மாட்டார்கள். நாட்டின் நலத்தையும், அரசன் நலத்தை யும் கண்ணும் கருத்துமாகக் காக்கும் நல்லமைச்சர் நடந்து கொள்ளும் முறையைக் கலிங்கத்துப்பரணி என்னும் சிறந்த நூலிற் காணலாம். கலிங்க தேசத்தைச் சிற்றரசன் ஒருவன் ஆண்டுவந்தான். அவன் சோழ மன்னனுக்குச் செலுத்த வேண்டிய கப்பத்தை உரிய காலத்தில் செலுத்தத் தவறிவிட்டான். அதையறிந்த சோழன், சீற்றம் கொண்டு கலிங்கத்தரசனை வெல்லுமாறு தன் பெருஞ் சேனையை அனுப்பினான். கருங்கடலில் எழுந்து வரும் அலைபோல் சோழ மன்னன் படை அணியணியாகக் கலிங்க நாட்டின் எல்லையை வந்தடைந்தது.
என்று அமைச்சனை நோக்கி இறுமாந்து பேசினான். அப்பொழுது , அரசன் ஆராய்ந்து அறியாமல் சினம் தலைக்கொண்டு அறிவு கலங்கினான் என்பதை அமைச்சன் நன்கு உணர்ந்தான்; தன் கருத்தை எடுத்துரைத்தலே கடமை என்று கருதினான்; மன்னன் பேச்சுக்கு மறுபேச்சுப் பேசுகிறோமே என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல், எழுந்து நின்று பதறாமல் சிதறாமல் பேசத் தொடங்கினான் :
என்று தொடங்கி, சோழர் படையை வெல்ல முடியாதென்று தக்க காரணம் காட்டி நிறுவினான் :
" இன்று சீறினும் நாளை அச் சேனைமுன்
நின்ற போதினில் என்னை நினைத்தியால் ''
என்றும் அழுத்தமாக உரைத்தான். இம்மொழிகளைக் கேட்ட அரசன் அளவிறந்த சீற்றமுற்றான்; அமைச்சனை இகழ்ந்தான் :
"என்னுடைய தோள்வலியும் என்னுடைய வாள்வலியும்
யாதுமறி யாது பிறர்போல்
நின்னுடைய பேதைமையி னால்உரைசெய் தாய் இது
நினைப்பளவில் வெல்ல அரிதோ "
என்று மந்திரியின் சொல்லை உதறியெறிந்து போர் தொடுத்தான். கலிங்கத்துப் படை காற்றிலகப்பட்ட பஞ்சுபோல் சிதறிப் பறந்தது. சிற்றரசன் சீரும் சிறப்பும் இழந்தான் என்று கலிங்கத்துப்பரணி கூறுகின்றது.
இத் தகைய நல்லமைச்சர் அயோத்தி அரசனது சபையில் இருந்து அணிசெய்தார்கள் என்று கம்ப ராமாயணமும் கூறுகின்றது.
"தம்முயிர்க்கு உறுதி எண்ணார் தலைமகன் வெகுண்ட போதும்
வெம்மையைத் தாங்கி நீதி விடாதுநின் றுரைக்கும் வீரர்
செம்மையில் திறம்பல் செல்லாத் தேற்றத்தார் தெரியும் காலம்
மும்மையும் உணர வல்லார் ஒருமையே மொழியும் நீரார்"
என்று அயோத்தி அமைச்சர்களைக் குறிக்கின்றார் கம்பர். அந் நாட்டு அமைச்சர்கள் தம் சுய நலத்தைக் கருதியவரல்லர்; மன்னன் கருத்திற்கு மாறாகப் பேசினால் தம் சீரும் சிறப்பும் சிதையுமே என்று சிந்தித்தவரல்லர்; அமர்க்களத்தில் அஞ்சாது நின்று போர்புரியும் வீரரைப்போல் அரசனது அவைக் களத்தில் நீதி முறையை அஞ்சாது எடுத்துரைத்தார்கள். இத் தன்மை வாய்ந்த அமைச்சரைத் துணைவராகப் பெற்றமையாலேயே தசரத மன்னன் நெடுங்காலம் செங்கோல் செலுத்துவா-னாயினான்.
இதற்கு நேர்மாறான முறை இலங்கை யரசாங்கத்தில் அமைந்திருந்தது. இலங்கையிலிருந்த அரசு ஒரு வல்லரசு. அந் நாட்டுக் குடிகள் அனைவரும் வீரர்கள். வேந்தனோ வீரருள் வீரன். அவன் சபையிலும் அமைச்சர்கள் இருந்தார்கள். ஆனால், அவர்கள் அரசன் கருத்தறிந்து அதற்கிசைந்து பேசுபவர்; இச்சகம் பேசும் கொச்சை அமைச்சர். இத் தன்மையைச் சீதையின் வாய்மொழியால் காட்டுகின்றார்
"கடிக்கும்வல் லரவும் கேட்கும் மந்திரம் களிக்கின் றோயை
அடுக்கும்ஈது அடாதென்று ஆன்ற ஏதுவோடு அறிவு காட்டி
இடிக்குநர் இல்லை, உள்ளார் எண்ணிய தெண்ணி உன்னை
முடிக்குநர் என்ற போது முடிவன்றி முடிவ துண்டோ"
என்று இராவணனைப் பார்த்துச் சீதை பேசுகின்றாள். 'இலங்கை அரசனாகிய நீ வெறிகொண்டு திரிகின்றாய். தீ நெறியிலே திளைக்கின்றாய். தவறு செய்யும் உன்னைத் தடுத்துரைப்பார் எவரும் இந் நாட்டில் இல்லையே ! தக்கது இது, தகாதது இஃது என்று வகுத்துரைக்க வல்லார் இங்கில்லையே ! அமைச்சர் என்று பேர் படைத்தவர்கள், நீ எண்ணியதையே எண்ணுகின்றார் கள்; உன் செவிக்கினிய சொற்களையே சொல்லு கின்றார்கள். அன்னார் உனக்கு உறுதி கூறுகின்றா ரல்லர்; இறுதியே சூழ்கின்றார்கள். இத் தகைய போலி அமைச்சரைத் துணைக்கொண்ட உனக்கு நாசம் வருமேயல்லாமல் நலம் உண்டாகுமோ' என்பது சீதையின் வாய்மொழி.
ஒரு நாட்டின் மன்னன் நெடுங்காலம் அரசு வீற்றிருந்து ஆள்வதற்கும் மந்திரியே காரணம்; அவன் நிலை குலைந்து அழிவதற்கும் மந்திரியே காரணம் என்று திருவள்ளுவர் அருளிப் போந்தார். தவறான நெறியிலே அரசனைச் செல்லாமல் தடுக்க வல்லவன் அமைச்சனே. ஆதலால், இச்சகம் பேசும் போலி அமைச்சனைத் துணைக்கொள்ளாது இடித்துச் சொல்லித் திருத்தும் மந்திரியைத் துணைக்கொண்ட மன்னவன் கேடுறமாட்டான் என்பது திருவள்ளுவர் கொள்கை.'
என்னும் திருக்குறளால் இவ் வுண்மை விளங்கும். இக் கருத்தைப் பின்னும் வற்புறுத்துகின்றார் திருவள்ளுவர். தவறான வழியில் தலைப்படும் அரசனை இடித் துரைத்துத் திருத்தும் அமைச்சர் இல்லாவிட்டால் பாகனில்லாத யானைபோல் நெறியல்லா நெறிச் சென்று அரசு தானே கெடும்.
" இடிப்பாரை யில்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானும் கெடும்''
என்பது திருவள்ளுவர் வாக்கு. பொது நலமும் நீதியும் பேணும் அமைச்சரே நல்லமைச்சர்; சுயநலமும் சூழ்ச்சியும் உடைய அமைச்சர் போலி அமைச்சர். அறத்தை அடிப்படையாகக் கொண்ட அரசு நல்லமைச்சரை நாடும்; மறத்தை அடிப்படையாகக் கொண்ட அரசு போலி அமைச்சரையே பொறுக்கிக் கொள்ளும். நல்லமைச்சரை ஆளும் அரசே வாழும்; போலி அமைச்சரை ஆளும் அரசு வீழும். இதுவே சிறந்த தமிழ் நூல்களின் கருத்து.
------------------
18. தமிழ் இலக்கியத்திற் கண்ட தூது
நாட்டில் தொன்றுதொட்டுத் தூது என்பது உண்டு. அரசர்கள் தூதனுப்பியுள்ளார்கள்; அன்பர்கள் தூது விடுத்துள்ளார்கள்; புலவர்கள் தூது போக்கியுள்ளார்கள். ஞானிகளும் தூது முறையைக் கையாண்டிருக்கிறார்கள் என்றால் தூதின் தன்மை அறியத்தக்கதன்றோ?
அரசர்க்குரிய சிறந்த அங்கங்களில் தூதும் ஒன்றாகும் என்று திருவள்ளுவர் கருதுகின்றார். இரு மன்னர்க் கிடையே மாறுபாடு நிகழ்ந்தால் அப் பிணக்கத்தைத் தீர்த்து இணக்கத்தை உண்டாக்கும் பொறுப்பு. தூதர்க்கே உரியதாகக் கூறப்படுகின்றது. இதனாலேயே அன்பும், அறிவும், ஆராய்ந்த சொல்வன்மையும் தூதருக்கு இன்றியமையாத நலங்கள் என்று திருக்குறள் கூறுவதாயிற்று. இத் தகைய தூதர் பெருமையைக் காவியங்களிலும் காணலாம்.
பாண்டவர்க்கும் கெளரவர்க்கும் பிணக்கம் நேர்ந்த பொழுது பாண்டவர்க்காகத் துரியோதனனிடம் தூது சென்றான் கண்ணன். அப் பெருமான் தூது நடந்த செம்மையை,
என்று சிலப்பதிகாரம் பாராட்டுகின்றது. பாண்டவர் தூதனாகிய கண்ணனைப் போன்று இராம தூதனாயினான் அனுமன். நிறைந்த பேரன்பும், சிறந்த கலைஞானமும் நிகரற்ற சொல்வன்மையும் வாய்ந்த அநுமன் இராமனுக்காகத் தூது சென்று, அரும் பெருஞ் செயல்களைச் செய்தான்.
"அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறாக ஆரியற் காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்"
என்ற இராமதூதன் இன்றுகாறும் போற்றப்படு கின்றான்.
இனி, அன்பர்கள் அனுப்பும் தூதைச் சிறிது அறிவோம் : நலமெல்லாம் நிறைந்த ஒரு நங்கையிடம் நளன் அன்னத்தைத் தூது விட்டான் என்பது பழங்கதை. சிவனடியார்களாகிய நாயன்மார்களும், திருமா லடியார்களாகிய ஆழ்வார்களும் இறைவன்பால் வைத்த இன்ப அன்பைத் தூதின் வாயிலாக வெளியிட் டுள்ளார்கள். மென்னடை யமைந்த அன்னங்களையும், மழலை மொழி பேசும் இளங்கிளிகளையும், தோகையை விரித்தாடும் மயில்களையும், இனிய பாட்டிசைக்கும் குயில்களையும், இன்னும் இவை போன்ற பல பறவைகளையும் பரிந்தழைத்துப் பரமனிடம் தூது விடும் முறையிலமைந்த பாசுரங்கள் பலவாகும்.
திருச்செங்காட்டங் குடியிலே கோவில் கொண் 'டருளும் தலைவனிடம் செங்கால் நாரையைத் தூதனுப்புகின்றார் திருஞானசம்பந்தர்.
"கான் அருகும் வயலருகும் கழியருகும் கடலருகும்
மீன் இரிய வருபுனலில் இரைதேர்வெண் மடநாராய்
தேன்அமர்தார்ச் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடி மேய
வான் அமரும் சடையார்க்கு என் வருத்தம் சென்றுரையாயே"
என்பது அவர் பாடிய தேவாரத் திருப்பாசுரம். 'வளமார்ந்த சோலைகளிலும், வயல்களிலும், கடற்கரைகளிலும் வயிறார இரை கொள்ளும் இள நாராய் ! சிறுத்தொண்டன் பணி செய்த திருச் செங்காட்டங்குடியில் என்னையாளுடைய தலைவன் அமர்ந்திருக்கின்றான். அவனைக் காணாது நான் வாம் வருந்துகின்றேன். சடை முடி சூடிய அப் பெருமானிடம் போந்து என் வருத்தத்தை எடுத்துரையாயோ' என்று தலைவி முறையில் வேண்டுகின்றார் திருஞானசம்பந்தர்.
இவ் வண்ணமே திருமாலிடம் நாரையைத் தூது விடுகின்றார் நம்மாழ்வார் :
"காதல்மென் பெடையோடு உடன்மேயும் கருநாராய்
வேத வேள்வி ஒலிமுழங்கும் தண்திரு வண்வண்டூர்
நாதன் ஞாலமெல்லாம் உண்டநம் பெருமானைக் கண்டு
பாதம் கைதொழுது பணியீர் அடியேன் திறமே''
என்று ஆழ்வார் பேசுகின்றார். 'காதலின் சுவையறிந்த கரு நாராய் ! வளமார்ந்த வண்வண்டூர் என்னும் மலை நாட்டுத் திருப்பதியிலே எம்பெருமான் வாழ்கின்றான். அப் பதியை எளிதில் நீ அறிந்து கொள்ளலாம். வேத கீதம் அங்கு முழங்கிய வண்ணமாயிருக்கும் அவ்விடம் சென்று நம் பெருமான் அடிதொழுது நான் படும் பாட்டை எடுத்துரைக்க வேண்டும்' என்று விண்ணப்பம் செய்கிறார்.
இனி, புலவர் விடும் தூதின் தன்மையைப் பார்ப்போம். ஓர் ஏழைப் புலவர் சோழ நாட்டிலுள்ள சத்தி முற்றத்தை விட்டு, பாண்டி நாட்டின் தலை நகராகிய மதுரைக்குச் சென்றார்; பாண்டி மன்னனைக் கண்டால் கலிதீரும் என்று கருதி மாளிகையின் வாயிலை அடைந்தார். ஆனால், உள்ளே செல்ல முடியவில்லை. காலமோ கார் காலம். போர்த்துக்கொள்ள ஆடையின்றி வாடையால் நடுங்கினார் புலவர்; பொதுவிடமாகிய அம்பலத்திற் போந்து மாலைப்பொழுதில் மனம் வருந்தியிருந்தார். வறுமை நோயால் வாடிப் பாடுபடும் தன் மனைவியின் துயரம் அவர் மனத்திலே பொங்கி எழுந்தது. அப்பொழுது அவர் ஆகாய வழியாக ஒரு நாரை தன் பெடையோடு வடக்கு நோக்கிப் பறந்து செல்லக் கண்டார். அந் நாரையை நயந்து நோக்கித் தம் மனைவியிடம் தூதுவிடத் துணிந்தார் சத்திமுற்றப் புலவர்.
'' நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந் தன்ன
பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய்
நீயுநின் பெடையும் தென்திசைக் குமரியாடி
வடதிசைக் கேகுவீ ராயின்
எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர்க் கூரை கனைகுரற் பல்லி
பாடு பார்த் திருக்குமெம் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதி கூடலில்
ஆடை யின்றி வாடையின் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்திக்
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையு ளிருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழை யாளனைக் கண்டனம் எனுமே ''
என்று பாடிய பாட்டு உருக்கம் வாய்ந்ததாகும்.
இனி, கணவனைப் பிரிந்த காதல் மனையாள் கடுந்துயருற்று வருந்தும் நிலையில் தூது விடும் தன்மையைக் காண்போம் : பஞ்சவடியிலமைந்த பர்ண சாலையிலே தன்னந் தனியாயிருந்த சீதையை இராவணன் சாலையோடு கவர்ந்தான்; விமானத்தி லேற்றி இலங்கையை நோக்கி விரைந்தான். நாடும் காடும் நதியும் கடந்து விமானம் பறக்கின்றது. சீதை கலங்குகின்றாள்; தனக்கு நேர்ந்த துன்பத்தை இராம லட்சுமணர்களிடம் அறிவிப்பார் எவரும் இல்லையே என்று ஏங்குகின்றாள்; மலைகளும் மரங்களும் ஒடுவன் போல் தோன்றுகின்றன. மயில்களும் குயில்களும் யானைகளும் மான்களும் தோன்றி மறைகின்றன. அவற்றை நோக்கிச் சீதை பேசுகின்றாள் :
என்று வேண்டுகின்றாள். 'மலைகளே , மரங்களே, மயில்களே , குயில்களே, மான்களே, மற்றுமுள்ள உயிர்களே ! நீங்களே என் நாயகரிடம் சென்று என் நிலைமையை எடுத்துரைக்க வேண்டும்' என்று கூறுகின்றாள். அந் நிலையில் விரிந்து பரந்த கோதாவரி யாற்றின் மீது விமானம் விரைந்து செல்கின்றது. அவ்வாற்றைப் பார்த்துச் சீதை பேசுகின்றாள் :
இங்ஙனம் அறியும் பொருள்களையும் அறியாப் பொருள்களையும், அசையும் பொருள்களையும், அசையாப் பொருள்களையும், பேசும் உயிர்களையும், பேசாப் பிராணிகளையும் நோக்கித் துன்ப முற்றவர்கள் உரையாடுதலால் அன்னார் மனத்திலுள்ள ஆற்றாமை ஒருவாறு தீரும்; உள்ளத்தைக் கவர்ந்து எழுகின்ற உணர்ச்சிக்கு ஒரு போக்கு விட்டவாறாகும்.
இந் நலங்கள் அமைந்திருத்தலால் தூது என்பது நாளடைவில் தமிழ் மொழியில் ஒருவகைப் பிரபந்த மாயிற்று. தூதுக்குத் தெரிந்தெடுத்த பொருளைப் பரிந்தழைத்து முகமன் கூறி, தலைவனுடைய நலங்களை அதனிடம் எடுத்துரைக்கும் முறையில் அமைந்தது தூது நூல்' எனப்படும். இத் தகைய நூல்கள் தமிழிலே பலவுண்டு. மலர்களைத் தூது விட்டார் சிலர்; மேகத்தையும் தென்றலையும் தூதுவிட்டார் சிலர்; பாடுபட்டுத் தேடும் பணத்தைத் தூது அனுப்பினார் ஒரு தமிழ்ப் புலவர். பண்புடைய பசுந் தமிழையே தூதுவிட்டார் மற்றொரு தமிழ்ப் புலவர். 'பண விடு தூது' என்னும் நூலில் பணத்தின் சிறப்பும், பாட்டுடைத் தலைவனாகிய மாதை வேங்கடேசனது மாண்பும் விரிவாக எடுத்துரைக்கப்படுகின்றன. தூதுப் பொருளாகிய பணத்தை நோக்கி
இனி, மதுரைச் சோமசுந்தரக் கடவுளிடம் காதல் கொண்ட ஒரு தலைவி தமிழ் மொழியை அவரிடம் தூதனுப்பும் பான்மையில் அமைந்தது 'தமிழ்விடு தூது என்னும் பிரபந்தம். இந் நூலில் கூறப்படும் தமிழின் சிறப்பைச் சிறிது காண்போம் :
"இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்'
என்று தமிழில் தலைசிறந்த நூலாகிய திருக்குறளைப் போற்றிப் புகழும் முறை புதியதோர் இன்பம் தருவதாகும்.
---------------
19. தமிழ் இலக்கியத்திற் கண்ட பக்தி
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே தமிழ் நாடு இவ் வுலகத்திலே பெருமையுற்று விளங்கிற்று. தமிழ் நாட்டுச் செல்வம் பிற நாட்டாரால் நன்கு மதிக்கப் பெற்றது. திரை கடலோடியும் திரவியம் தேடினர் தமிழர்; கடல் சூழ்ந்த நாடுகளிற் குடியேறினர்; பாழாய்க் கிடந்த இடங்களைப் பண்படுத்தினர்; மெய் வருந்தி உழைத்து அந் நாடுகளையும் செழிக்கச் செய்தனர். சுருங்கச் சொல்லின் தமிழர் சென்ற இடம் எல்லாம் சீருற்றது; அமர்ந்த இடம் எல்லாம் அழகுற்றது. இக் காலத்தில் இது கனவாகத் தோன்றலாம். ஆயினும் எத் திசையும் புகழ் மணக்க இந் நாடு முன்னொரு காலத்தில் இருந்தது என்பது எவரும் மறக்க முடியாத உண்மையாகும்.
முற்காலப் பெருமையைப் பேசுவதால் பயன் என்ன? பழமை, பழமை என்று பன்னுவது எற்றுக்கு என்று சிலர் எண்ணலாம். பழமையை அறிவதில் பயன் உண்டு. பழம் பெருமையை அறியுந்தோறும் நம் உள்ளத்தில் புதியதோர் ஊக்கம் பிறக்கின்றது. தற்காலத்தில் தேம்பியிருக்கும் தமிழ் நாட்டை முற்காலப் பெருமைக்குத் தக்கவாறு மேம்படுத்த வேண்டும் என்ற உணர்ச்சி பிறக்கின்றது. இதனாலேயே பாரதியார்
செந்தமிழ் நாட்டைப் போற்றும் பொழுது,
"சிங்களம் புட்பகம் சாவகம் ஆதிய
தீவுகள் பலவினும் சென்றேறி - அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு”
என்று பாடி மகிழ்ந்தார். கடல் சூழ்ந்த நாடுகளில் சோழநாட்டுப் புலிக்கொடியும், பாண்டி நாட்டு மீன் கொடியும் பறந்த செய்தியை அறியும் பொழுது சிறந்த இன்பமும் ஊக்கமும் நம் முள்ளத்திலே பிறக்கின்றன வல்லவோ?
தமிழ்நாடு இவ் வண்ணம் ஏற்ற முற்றிருந்த காலமே தமிழ் மொழியும் தழைத்தோங்கிய காலமாகும். படைத்திரம் படைத்த பண்டைத் தமிழரசர்கள் பெருங் கொடைத் திறமும் வாய்ந்தவராக விளங்கினார்கள்; அறிஞரையும் புலவரையும் ஆதரித்துப் போற்றினார்கள். கரிகால் வளவன் என்னும் பெருந் தமிழ் வேந்தன், ஒரு தமிழ்ப் பாட்டின் சுவையறிந்து, மனமகிழ்ந்து அதைப் பாடிய பாவலர்க்குப் பதினாறு இலட்சம் பொன் பரிசளித்தான் என்று சொல்லப்படுகின்றது. இத் தகைய பரிசு பெற்ற பாட்டு, பட்டினப்பாலை' எனப்படும்.
இவ்வாறு பெருநில மன்னரும் குறுநிலத் தலைவரும் தமிழறிந்தோரை ஆதரித்தமையால் இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழும் இனிது வளர்ந்தன. மதுரை மாநகரில் தமிழ்ச் சங்கம் அமைத்துப் பாண்டி மன்னர் தமிழை வளர்த்தார்கள். கலைபயில் தெளிவும் , கட்டுரை வன்மையும் வாய்ந்த புலவர்கள் அச் சங்கத்தின் அங்கத்தினராய் இருந்தார்கள். இத் தகைய சங்கத்தார் நன்றென ஏற்றுக்கொண்ட நூல்களை நாட்டு மக்கள் போற்றிப் படித்து இன்பமும் பயனும் அடைந்தார்கள். இவ்விதம் மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் ஆன்ற மதிப்பைப் பெற்ற நூல்களுள் தலை சிறந்தது திருக்குறள் என்று கூறலாம். சில காலம் கழிந்த பின்னர்ச் சிலப்பதிகாரம், மணிமேகலை முதலிய காவியங்கள் எழுந்தன. பண்டைத் தமிழ்நாட்டின் அறமும் பிறவும் இக் காவியங்களால் நன்கு விளங்கும். சாதி சமயம் முதலிய வேற்றுமைகளால் தடையுறாது, நல்லறிஞர் தமிழ்ப்பணி செய்வாராயினர். சைவரும், வைணவரும், சமணரும், சாக்கியரும் ஒருமனப்பட்டுத் தமிழை வளர்த்தார்கள்.
இவ் விதம் சமயப் பொறுமையும் தமிழ் ஆர்வமும் சிறந்து விளங்கிய தமிழ் நாட்டில் இடைக்காலத்தில் பிணக்கம் தலைகாட்டத் தொடங்கிற்று. சமண மதத்திற்கும் இந்து மதத்திற்கும் பகைமை முதிர்ந்தது. தமிழ் நாட்டு அரசர்களிற் சிலர் சமண சமயத்தை மேற் கொண்டார்கள். சிலர் இந்து சமயத்திலே நின்றார்கள். ஆகவே, எங்கும் குழப்பமும் பிணக்கமும் நிறைந் திருந்தன. இந்த நிலையில் இந்து சமயத்தை ஆதரிப்பதற்கு ஆழ்வார்களும் நாயன்மார்களும் தோன்றினார்கள். பக்திரசம் நிறைந்த பாடல்களைப் பாடினார்கள்; ஊர் ஊராகச் சென்று உருக்கமான பாட்டிசைத்தார்கள்; கோவில் கண்ட இடமெல்லாம் குழைந்து குழைந்து பாடித் தொழுதார்கள். பக்திச் சுவை சொட்டும் பாடல்களால் உள்ளக் கிளர்ச்சி உண்டாயிற்று. எங்கும் சமய உணர்ச்சியே பொங்கித் ததும்பிப் பூரணமாய் நின்றது. அந் நிலையில் சமண சமயத்தார்க்கும் இந்து சமயத்தார்க்கும் பெரும்போர் மூண்டது இரு திறத்தார்க்கும் வாக்குவாதம் மிகத் தாக்காக நடைபெற்றது. அதன் பயனாகச் சமண சமயம் ஆதிக்கம் இழந்தது. சைவமும் வைணவமும் வீறு பெற்றன. சைவ சமயத் தலைவர்களாகிய நாயன்மார் களும், வைணவ சமயத் தலைவர்களாகிய ஆழ்வார் களும் மக்கள் உள்ளத்தைப் பக்தி மார்க்கத்தில் செலுத்த முயன்றார்கள்; எல்லாம் வல்ல இறைவனையே பாடவேண்டும் என்று பணித்தார்கள். இறைவனது மெய்யான புகழே தமிழ்ப் பாட்டில் அமையத்தக்க பொருள் என்று அறிவுறுத்தினார்கள். பொய்ப் பொருள் உடைய மன்னரையும் செல்வரையும் பாடாது, மெய்ப் பொருளாகிய கடவுளையே பாடும் வண்ணம் நம்மாழ்வார் புலவர்களை வேண்டுகின்றார்.
என்பது திருவாய் மொழி. அருமை வாய்ந்த புலவர்களை நம்மாழ்வார் நயந்து நோக்கி, 'வாக்கு வளம் பெற்ற கவிகளே, இங்கே வாருங்கள் ! மெய் வருந்த உழைக்துப் பிழையுங்கள். பொருளுடையவனைப் பாடி வாய் விளைந்து உண்ண விரும்பாதீர்கள். இனிய கவி பாடி உங்கள் இஷ்ட தெய்வத்தை வழிபடுங்கள். அவ் வழிபாடு முழுமுதற் கடவுளையே சேரும்' என்று வழி காட்டியருளினார்.
மண்ணரசாளும் உரிமை பெற்ற மன்னரும் இந்த மனப்பான்மை யுடையராய் இருந்தார் என்று தெரிகின்றது. சேரநாட்டு மன்னராய் விளங்கினார் குலசேகரப்பெருமாள். மாநிலமாளும் மன்னனாய்ப் பிறப்பதிலும்,
பேறு பெற அவர் விரும்புகின்றார். அரியாசனத்தில் அமர்ந்து அரசாளுவதிலும் திருமால் நின்றருளும் திருவேங்கட மலையில் ஒரு படியாய்க் கிடந்து அவர் பவளவாயைக் காண ஆசைப்படுகின்றார். இன்னும் அவர் மனத்தில் அமைந்த ஆர்வம்,
இவ்வாறு நரனைப் பாடாது நாராயணனையே பாடிய ஆழ்வார்களும், சீவர்களைப் பாடாது சிவனையே பாடிய நாயன்மார்களும், நாள்தோறும் தமிழை வளர்த்தார்கள். தேவாரம் பாடிய மூவருள் ஒருவராகிய திருஞான சம்பந்தரை, 'நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞான சம்பந்தர்' என்று ஆன்றோர் போற்றினார்கள். தமிழ்நாட்டு மலையும் நதியும், மற்றைய இயற்கைப் பொருள்களும் அவர் தேவாரப்பாட்டிலே படமெடுத்துக் காட்டப்படுகின்றன. மந்தமாருதம் வந்துலாவும் திருக்குற்றால மலையில் வாழும் மந்திகளை அவர் பாட்டிலே காணலாம். 'பூவார் சோலை மயிலால, புரிந்து குயில்கள் இசைபாட, காமர் மாலை அருகசைய நடந்து செல்லும் காவேரி' யாற்றின் அழகினை அவர் பாட்டிலே காணலாம்; இன்னும் கண்ணுக்கினிய நிறமும், காதுக்கினிய மொழியும் வாய்ந்த கிளியைக் காணலாம். சோலையிலே பறந்து திரியும் ஒரு பசுங் கிளியை நோக்கி, அவர் பேசும் முறையினைக் காண்போம் :
என்ற தேவாரப் பாட்டில் தமிழ் மணமும் தெய்வ மணமும் கமழக் காணலாம். பறந்து வரும் பசுங்கிளியைப் பார்த்து, 'இளங் கிளியே, இங்கே வா; பாலும் தேனும் கலந்து உனக்குப் பருகத் தருவேன். நீ உனது இனிய மொழியால் எனது ஈசன் திருநாமத்தை ஒரு முறை பேசாயா,' என்று திருஞானசம்பந்தர் வேண்டுகின்றார்.
இவ்வாறு சைவ வைணவப் பெரியார்கள் அருளிச் செய்த பாடல்களால் இயற்றமிழும் இசைத் தமிழும் ஏற்றமுற்றன. பண்ணின் திறம் உணர்ந்த பாணர்கள், அப் பாடல்களை இன்னிசைக் கருவிகளில் அமைத்துப் பாடினார்கள். பண்ணொன்ற இசைபாடும் அடியார்கள் நாடெங்கும் மதிக்கப்பட்டார்கள். இவ் வண்ணம் தெய்வத் தமிழ் மணம் எங்கும் பரந்து கமழ்ந்த காலம் கி.பி. ஐந்நூறு முதல் எண்ணூறு வரை என்று பொதுவாகக் கூறலாம்.சங்க காலத்தில் கற்றறிந் தோர்க்கு மட்டும் இன்பம் பயந்த தமிழ் மொழி இத் காலத்தில் கற்றார்க்கும் கல்லார்க்கும் களிப்பருளுங் களிப்பாய் நிலவிற்று. பொதிய மலையில் வாழும் அகத்தியரால் ஆதரிக்கப்பட்டு, சங்கப் புலவர்களால் வளர்க்கப்பட்ட தமிழ் மாது, இப் பொழுது எல்லார்க்கும் இனியளாய்த் தமிழ் நாட்டில் இனிது உலாவினாள். பெருஞ் செல்வத்தால் வரும் இன்பத்திலும் தமிழ்ப் பாட்டால் வரும் இன்பமே பெரிதாக மதிக்கப்பட்டது.
இவ்வாறு பெரியோர் பொருட் செல்வத்தால் வரும் சிறப்பை விரும்பாது அருட் செல்வத்தை நாடி நின்றமையால் தமிழ் நாடெங்கும் பக்திமயமாயிருந்தது. இறைவனைப் பாடாத நாளெல்லாம் பயனற்ற நாள் என்று பாவலர் கருதுவாராயினர். தேவாரப் பாடல் பெற்ற ஸ்தலங்களும், ஆழ்வார்களின் மங்களா சாசனம் பெற்ற திருப்பதிகளும் பெருஞ் சிறப்படைந்தன. புதிய கோயில்கள் பல எழுந்தன. கோயில் இல்லா ஊரில் குடியிருத்தல் ஆகாது என்னும் கொள்கை நிலை பெறுவதாயிற்று. மன்னரும் செல்வரும் கோயில் கட்டும் பணியை மேற்கொண்டார்கள். தஞ்சாவூர் இராஜராஜ சோழன் பெரியதொரு கோவிலைக் கட்டி முடித்தான். அவன் மைந்தனாகிய கங்கை கொண்ட சோழன் தன் பெயரால் அமைந்த கங்கை கொண்ட சோழபுரத்தில் சிறந்ததோர் ஆலயம் எடுத்தான்.
கோயில், எங்கும் தோன்றியபொழுது சிற்பக்கலை சிறந்து வளர்ந்தது. ஓவியக்கலை உயர்வடைந்தது. இசையும் நடனமும் ஏற்றமுற்றன. தமிழ்நாடு தெய்வ மணமும் கலைமணமும் ஒருங்கே கமழும் திருநாடாகத் திகழ்ந்தது.
------------------
20. தமிழ் இலக்கியத்திற் கண்ட கடவுள்
தெய்வம் உண்டு என்று வாதிப்பாரும், இல்லை என்று சாதிப்பாரும் இவ்வுலகில் எந்த நாளும் உண்டு. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை தெய்வம் இல்லை என்பார் மிகச் சிலரே. தெய்வத்தை முன்னிட்டே எந்த வேலையையும் தமிழ் நாட்டார் தொடங்குவார்கள். வேலை இல்லாமல் வெறுமையாய் இருக்கும் பொழுதும் சிவனே என்றிருப்பார்கள்; அல்லது தெய்வமே என்றிருப்பார்கள்; தெய்வத்திற்குரிய கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க விரும்ப மாட்டார்கள். கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்பது இந் நாட்டுப் பழமொழி.
கடவுள் என்ற சொல்லாலேயே கற்றோரும் மற்றோரும் தமிழ் நாட்டில் தெய்வத்தைக் குறிக்கின்றார்கள். தெய்வத்தின் தன்மையை அச்சொல் தெளிவாகக் காட்டுகின்றது. கடந்து உள்ள பொருள் எதுவோ அது கடவுளாகும். எதைக் கடந்து உள்ள பொருள் என்று ஆராய்வோமானால் கடவுள் என்ற சொல்லின் தன்மை சிறந்து தோன்றும். பிறப்பு, இறப்பு என்னும் இரண்டையும் கடந்த பொருள்; நல்வினை, தீவினை என்னும் இரண்டையும் கடந்த பொருள்; காலமும் கணக்கும் கடந்த பொருள்; இவ்வாறெல்லாம் கடவுள் என்ற சொல்லின் பொருளை விரித்துரைப்பார் கற்றறிந்தோர். கவியரசராகிய கம்பரும் இக் கருத்தை விளக்கியுள்ளார்.
இவ்வாறு எல்லாவற்றையும் கடவுள் கடந்தவரே யாயினும் அவர் இல்லாத இடம் இல்லை, அவரன்றி ஓர் அணுவும் அசையாது என்பது இந்நாட்டார் கொள்கை. இவ்வுண்மையை அறியாது செருக்குற்றுச் சீரழிந்தவர் பலர் ஆவர். அவர்களில் ஒருவன் இரணியன். அவன் மகனாகிய பிரகலாதன் கடவுளே கதியென்று நம்பியிருந்தான். ஒரு நாள் இரணியன் தன் மகனைப் பார்த்து, 'உன் கடவுள் எங்கிருக்கிறான்? இத் தூணில் இருக்கின்றானோ?' என்று எதிரே நின்ற கம்பத்தைக் காட்டிக் கடுகடுத்து வினவினான்; அதற்கு மறுமொழி கூறலுற்றான் பிரகலாதன் :
”சாணினும் உளன்,ஓர் தன்மை அணுவினைச் சதகூ றிட்ட
கோணினும் உளன்மா மேருக் குன்றினும் உளன், இந் நின்ற
தூணினும் உளன், முன் சொன்ன சொல்லினும் உளன்''
என்று கூறினான். அங்கு இங்கு என்னாதபடி எங்கும் நிறைந்த கடவுள், நாம் எண்ணும் ஒவ்வோர் எண்ணத்தினும் உள்ளான், சொல்லும் ஒவ்வொரு சொல்லினும் உள்ளான்; செய்யும் ஒவ்வொரு செயலினும் உள்ளான் என்று அறிந்து நடப்பவரே சிறந்தோராவர். பஞ்ச பூதங்களாகிய மண்ணிலும், விண்ணிலும், நீரிலும், நெருப்பிலும், காற்றிலும் கலந்து நிற்பவர் கடவுள். இத் தகைய கடவுளை ,
இங்ஙனம் காணுமிடமெல்லாம், கருதுமிட மெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கின்ற கடவுளுக்கு ஒரு நாமம் இல்லை; ஓர் உருவம் இல்லை. எல்லாம் அவர் திருநாமமே; எல்லாம் அவர் திரு உருவமே.
"ஒருநாமம் ஓர் உருவம் ஒன்றுமில் லார்க்கு ஆயிரம்
திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ”
என்றார் மாணிக்க வாசகர். ஆகையால், நாம பேதங்களையும் உருவ பேதங்களையும் பெரிதாகக் கொண்டு ஒரு மதத்தார் மற்றொரு மதத்தாரைப் பகைக்க வேண்டுவதில்லை; பழிக்க வேண்டுவதில்லை என்பது மெய்யறிவுடையோர் கருத்து. கவிஞராகிய பாரதியார், இக் கருத்தைத் தெளிவாகப் பாடிப் போந்தார் :
"தெய்வம் பலபல சொல்லிப் - பகைத்
தீயை வளர்ப்பவர் மூடர்
உய்வ தனைத்திலும் ஒன்றாய் – ஓங்கும்
ஓர்பொரு ளானது தெய்வம்
தீயினைக் கும்பிடும் பார்ப்பார் - நித்தம்
திக்கை வணங்கும் துருக்கர்
கோயிற் சிலுவையின் முன்னே - நின்று
கும்பிடும் ஏசு மதத்தார்
யாரும் பணிந்திடும் தெய்வம் - பொருள்
யாவினும் நின்றிடும் தெய்வம்
பாருக்குள் ளேதெய்வம் ஒன்று - இதில்
பற்பல சண்டைகள் வேண்டாம்”
என்பது பாரதியாரின் அறிவுரை.
அன்பே கடவுளின் வடிவம் என்று எல்லாச் சமயங்களும் இசைந்து கூறுகின்றன. எனவே, அன்பு வடிவாகிய கடவுளை அறிவதற்கும், அவர் அருளைப் பெறுவதற்கும் அன்பையே சாதனமாகக் கொள்ள வேண்டும் என்பது சொல்லாமலே அமையும். 'எவ்வுயிர்க்கும் அன்பாய் இரு' என்று இவ் வுண்மையைச் சுருங்கச் சொல்லி விளங்கவைத்தார் ஒரு பெரியார். அன்பு, தெய்வத்தன்மையுடையதாதலால் அதற்கு எல்லையில்லை; உற்றார் மற்றார் என்ற வேற்றுமை இல்லை; சாதி குலம் முதலிய பேதங்கள் இல்லை. எல்லாரும் ஓர் குலம்; எல்லோரும் ஓரினம் என்பதே அன்புடையார் கொள்கை. கடவுளிடத்து நாம் செலுத்தும் அன்பு, பக்தி யென்று சிறப்பித்துச் சொல்லப்படும். பக்தி முதிர்ந்த நிலையில் தெய்வப் பித்து வந்து எய்தும். இவ் வுலகில் எல்லாரும் பித்தரே என்றார் ஒரு பெரியார். சிலர் பொருளாசை பிடித்த பணப்பித்தர். சிலர் பெண்ணாசை பிடித்த பெரும் பித்தர். சிலர் புகழாசை பிடித்த புகழ்ப் பித்தர். ஒரு சிலர் கடவுள் வெறி பிடித்த தெய்வப் பித்தர். தெய்வப் பித்தராகவே வாழ விரும்புவர் பக்தர். கடவுளைப் பெரும் பித்தன் என்று பாடினாரும் உண்டு.
"தென்பால் உகந்தாடும் தில்லைச்சிற் றம்பலவன்
பெண்பால் உகந்தான் பெரும் பித்தன் காணேடீ''
என்பது திருவாசகம். சிவனடியார்களுள் ஒருவராகிய சுந்தரமூர்த்தி தம்மை ஆட்கொண்டருளிய பெருமானே,
"பித்தா பிறைசூடி, பெருமானே அருளாளா"
என்றெடுத்து
"அத்தா உனக்காளாய் இனியல்லேன்”
என்று திருப்பாசுரம் பாடினார்.
கடவுளை வணங்குவதற்கு ஏற்ற இடங்கள் கோவில் என்ற பெயரால் குறிக்கப்படும். தமிழ் நாட்டில் அழகிய சோலைகளே ஆதியில் கோவில்களாக அமைந்தன. கண்ணுக்கினிய பசுமை நிறமும், செவிக்கினிய இயற்கையொலியும், நாசிக்கினிய நறுமணமும், நாவிற்கினிய நற்கனியும், உடம்பிற்கினிய குளிர் நிழலும் பொருந்திய சோலைகளில் நம் முன்னோர் கடவுளை வணங்கினார்கள்; பூஞ்சோலையிலுள்ள அழகிய மலர்களைக் கடவுளுக்கு அணிந்தார்கள்; கொம்பிலே பழுத்த பழங்களைக் கையுறையாக அளித்தார்கள்; இளந்தளிர்களையும் தழைகளையும் கொண்டு அருச்சனை செய்தார்கள். இத் தகைய சோலைகள் பிற்காலத்தில் கற்கோயில்கள் ஆயின. ஆயினும், பழைய சோலையின் அடையாளம் பலவிடங்களில் உண்டு. திருச்சிராப்பள்ளிக்கு அருகே திருவானைக்கா என்னும் சிவஸ்தலம் உள்ளது. அங்கு ஆதியில் ஒரு செழுமையான நாவல் மரத்தில் மக்கள் கடவுளை வணங்கினார்கள். அதனால் ஜம்புகேஸ்வரம் என்னும் பெயர் அதற்கு அமைந்தது. ஜம்பு என்பது வடமொழியில் நாவல் மரத்தின் பெயர். தென்னாட்டி லுள்ள திருக்குற்றாலத்தில் ஒரு குறும்பலா மரத்தில் ஈசன் கோவில் கொண்டார். அப்பலா மரத்தைத் திருஞானசம்பந்தர் தேவாரம் பாடிப் போற்றினார். மதுரைக்கு அருகேயுள்ள அழகர் மலையின் பழம் பெயர் திருமால் இருஞ்சோலை என்பது. இப்போது. கற்கோவில்களாக விளங்கும் ஆலயங்களிற் காணப் படுகின்ற ஸ்தல விருக்ஷமே முற்காலத்திலிருந்த சோலையைக் காட்டும் அடையாளம் என்பர்.
ஆண்டவன் என்பது கடவுளைக் குறிக்கும் பெயர்களில் ஒன்று. தமிழ் நாட்டு மகமதியரும் ஆண்டவன் என்ற பெயரைப் பெரிதும் வழங்குகின்றார் கள். பழனியிலுள்ள முருகனைச் சைவர்கள் பழனி ஆண்டவன் என்பர். ஆண்டவன் என்னும் சொல் தலைவன் என்ற பொருளைத் தரும். ஆண்டவன் கடமை அடியார்களைத் தாங்குதல். அடியவர் கடமை ஆண்டவனுக்குத் தொண்டு செய்தல். இக் கருத்து, தேவாரம், திருவாய்மொழி முதலிய தெய்வப் பாடல் களில் தெளிவாக விளங்குகின்றது. தேவாரம் பாடிய திருநாவுக்கரசர்,
''நம்கடம்பனைப் பெற்றவள் பங்கினன்
தென்கடம்பைத் திருக்கரக் கோயிலான்
தன்கடன் அடியேனையும் தாங்குதல்
என்கடன் பணி செய்து கிடப்பதே"
என்று அருளிப் போந்தார். ஆண்டவன் திருவடியே கதியென்று அடைக்கலம் புகுந்தோரை அவர் அருள் கைக்கொண்டு காக்கும். சரணாகதி என்பது இதுவே; மனக்கவலையை மாற்றுவதற்கு இதுவே சிறந்த வழியெனக் காட்டினார் திருவள்ளுவர்.
" தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்ற லரிது"
என்பது அவர் அருளிய திருக்குறள். தனக்குவமை இல்லாத தலைவனே ஆண்டவன். அவன் திருவடியைச் சரணடைந்தாலன்றிப் பிறப்பால் வரும் துன்பத்தைப் போக்க இயலாது என்பது திருவள்ளுவர் கருத்து. சரணாகதியின் பெருமையைத் தமிழ் இலக்கியங்களிற் பரக்கக் காணலாம்.
குலசேகர ஆழ்வார் என்னும் பெரியார் திருமால் திருவடியே சரணம் என்று திருத்தமாகப் பாடியுள்ளார்.
"தருதுயரம் தடாயேல் உன் சரணல்லால் சரண் இல்லை
விரைகுழுவும் மலர்பொழில்சூழ் வித்துவக்கோட்டம்மானே
அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன்
அருள்நினைந்தே அழுங்குழவி அதுவேபோன் றிருந்தேனே"
என்பது அவர் திருப்பாசுரம். உடல் பொருள் ஆவியென்னும் மூன்றையும் கடவுளிடம் ஒப்புவித்தலே சரணாகதியாகும். அவ்வாறு ஒப்புவித்த பெரியாருள் ஒருவர் மாணிக்கவாசகர். அவர் சரணாகதியின் தன்மையைத் திருவாசகத்தில் உணர்த்துகின்றார் :
”அன்றே என்தன் ஆவியும் உடலும் உடைமை எல்லாமும்
குன்றே யனையாய் என்னையாட் கொண்ட போதே கொண்டிலையோ
இன்னோர் இடையூறு எனக்குண்டோ எண்தோள் முக்கண் எம்மானே
நன்றே செய்வாய் பிழைசெய்வாய் நானோ இதற்கு நாயகமே ”
என்று பாடினார்.
கடவுளிடம் அடைக்கலம் புகும் சரணாகதி முறை கிறிஸ்தவ சமயத்திலும் உண்டு. இருநூறு ஆண்டு களுக்கு முன்னே ஏசுநாதர் சேவையில் ஈடுபட்ட பெஸ்கி என்னும் வீரமா முனிவர் கொள்ளிட நதியின் வட கரையில் ஒரு கோயில் கட்டினார். தேவமாதாவாகிய மேரியம்மையின் திருவுருவத்தை அங்கு நிறுவினார்; அம்மாதாவை அடைக்கல மாதா என்று அழைத்தார்; அவர் காவலில் அமைந்த ஊருக்குத் திருக்காவலூர் என்று பெயரிட்டார்; திருக்காவலூரில் வாழ்ந்த கிறிஸ்தவருக்கு அடைக்கலம் அளித்த மாதாவின்மீது ஒரு கலம்பகம் பாடினார். அப் பாமாலை இருக்காவலூர்க் கலம்பகம் என்று வழங்கப்படுகின்றது.
இன்னும் தமிழ்க் காவியங்களில் சிறப்புற்று விளங்கும் கம்பராமாயணம் சரணாகதியின் செம்மையை விரித்துரைப்பதாகும். இராமன் கானகம் புகுந்த பொழுது அரக்கரது கொடுமையால் வருந்திய முனிவர்கள் வந்து சரணம் அடைந்தார்கள். அப்பால் தன் தமையனாகிய வாலியின் கொடுமையால் வாடி வருந்திய சுக்ரீவன் என்ற வானரத் தலைவன் வந்து சரணம் புகுந்தான். பின்னர் இராவணன் தம்பியாகிய விபீஷணன் வந்து சரணாகதியடைந்தான். இங்ஙனம் அடைக்கலமாக வந்தடைந்தோரையெல்லாம் இராமன் ஆதரித்து ஏற்றுக் கொண்டான்; அவர் மனக்கவலையை மாற்றி யருளினான். ஆகவே, அடைக்கலத்தின் பெருமையை விளக்கும் காவியம் இராமாயணம் என்பது மிகையாகாது. அக் காவியத்தின் உட்கருத்தைக் கம்பர் முதற் கவியிலேயே குறிப்பாகக் கூறியுள்ளார் :
என்பது கம்பர் அருளிய கடவுள் வாழ்த்து. 'உலகங்களை யெல்லாம் படைத்தும், காத்தும், துடைத்தும் விளையாடும் பெருமானே ஆண்டவன். அவனே எல்லார்க்கும் அடைக்கலம் அளிப்பவன்' என்று இராமாவதாரத்தின் உட்பொருளை உணர்த்தினார் கம்பர்.
ஆண்டவனாகிய கடவுளின் திருவருளைப் பெறுவதற்குப் பல வழிகளைப் பெரியோர் வகுத்துள்ளார்கள். அவ் வழிகளை மார்க்கம் என்றும் சொல்வதுண்டு. இம் மார்க்கங்களே மதங்கள் என்றும், சமயங்கள் என்றும் போற்றப்படுகின்றன. தமிழ் நாட்டில் ஆறு வகைப்பட்ட சமயங்கள் உண்டு என்று அறிந்தோர் கூறுவர். அவற்றுள் சைவமும் வைணவமும் சாலப் பழமை வாய்ந்த சமயங்கள், சமணமும் சாக்கியமும் சில காலம் சிறந்திருந்து நிலை குலைந்தன. தற்காலத்தில் இஸ்லாமும் கிருஸ்தவமும் வளர்ந்தோங்கி வருகின்றன. இங்ஙனம் சமயங்கள் வெவ்வேறாக இருந்தாலும், ஆண்டவன் காரணமாகச் சமயவாதிகள் சண்டையிட்டுக் கொள்ளலாகாது என்பதே சான்றோர் கொள்கை.
பண்டைத் தமிழ் நாட்டில் சமயப் பொறுமை தலை சிறந்து விளங்கிற்று. ஒரு குடும்பத்தில் தமையன் சைவனாகவும், தம்பி சமணனாகவும் இசைந்து வாழக் கண்ட நாடு தமிழ் நாடு, சேர நாட்டையாண்ட செங்குட்டுவன் என்பவன் சிறந்த சைவன். அவன் தம்பியாகிய இளங்கோவடிகள் சிறந்த சமண முனிவர். அம் முனிவரே சிலப்பதிகார ஆசிரியர். அவர்கள் இருவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தார்கள். இத் தகைய நல்லோர் வாழ்ந்த காலம் சங்க காலம் என்று சொல்லப்படுகின்றது. சமயச் சண்டையும் சச்சரவும் இல்லாதிருந்த சங்க காலமே தமிழ் நாடு எல்லா வகையினும் ஏற்றமுற்றிருந்த காலம். இக்காலத்திற்குப் பின் சமயச் சண்டைகள் மூண்டன. ஆண்டவன் பெயரால் சண்டையிட்டு மாண்டார் பலர். சமயச் சண்டை இக் காலத்தில் அவ்வளவாக இல்லை. சமரச சன்மார்க்கமே இந்நாளில் அறிவுடையோர் போற்றும் சமயம், தர்க்கமும் குதர்க்கமும் ஒழிந்து சமரசம் பரவும் காலத்தை ஆர்வத்தோடு எதிர் நோக்கினார் தாயுமானார்.
“தர்க்கமிட்டுப் பாழாம் சமயக் குதர்க்கம் விட்டு
நிற்கும் அவர் கண்டவழி நேர்பெறுவ தெந்நாளோ"
என்று பாடினார் அப் பெரியார். அந் நாளே தமிழ் நாட்டுக்கு நன்னாள் ஆகும்.
" வாழிய செந்தமிழ் வாழ்கநற் றமிழர்"
܀ ܀ ܀
--------
ஆசிரியரின் பிற நூல்கள்
தமிழின்பம்
தமிழகம் ஊரும் பேரும்
தமிழர் வீரம்
ஆற்றங்கரையிலே கடற்கரையிலே
வழிவழி வள்ளுவர்
கால்டுவெல் ஐயர் சரிதம்
வேலின் வெற்றி
வேலும் வில்லும்
அலையும் கலையும்
செஞ்சொற்கவிக் கோவை
பாரதியார் இன்கவித் திரட்டு
This file was last updated on 10 March 2018.
Feel free to send the corrections to the webmaster.