வேலின் வெற்றி
டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை
vElin veRRi
by rA.pi. cEtu piLLai
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Tamil Virtual Academy for providing a scanned
image (PDF) version of this work for the etext preparation. The etext has been
prepared using Google OCR Online Tool and subsequent proof-reading.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2018.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
வேலின் வெற்றி
(கந்தபுராணத்தைத் தழுவி எழுதிய நூல்)
டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை
Source:
வேலின் வெற்றி
டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை
பழனியப்பா பிரதர்ஸ் "கோனார் மாளிகை"
25, பீட்டர்ஸ் சாலை, சென்னை - 600 014
இரண்டாம் பதிப்பு – 1959, ஆறாம் பதிப்பு - 2002
ஏசியன் பிரிண்டர்ஸ், சென்னை - 600 014.
--------
முகவுரை
தமிழ்நாடு என்றும் முருகனை வழிபடும் தகைமை சான்றது. கோலமாமயில்மீது குலவும் குழகன் என்றும், வேற்படையுடைய விமலன் என்றும், அரந்தை கெடுத்து வரந்தரும் இறைவன் என்றும் அப்பெருமானைப் போற்றுவர், தமிழ் மக்கள். அல்லல் விளைத்த அசுரர் குலத்தை வேரறுத்த, அறத்தினை நிலை நிறுத்திய முருகன் 'என்று முள தென் தமிழின்' தலைமைப் புலவனாகத் திகழ்கின்றான்; முத்தமிழால் வைதாரையும் வாழ்விக்கும் வித்தகனாய் விளங்குகின்றான்; திருமுருகாற்றுப்படை என்னும் சங்கத் தமிழ் மாலையும் பெற்று மிளிர்கின்றான். கந்தபுராணம் என்னும் காவியம் முருகன் திறத்தினை அழகுற எடுத்துரைக்கின்றது. கச்சியப்பரால் இயற்றப்பெற்ற அக் காவியம் பத்தாயிரத்திற்கு மேற்பட்ட பாடல்களை உடையது. சென்னைக் கந்த கோட்டத்தில் கந்தபுராண வகுப்பு நடத்தும் பேறு பத்தாண்டுகளுக்கு முன் எனக்குக் கிடைத்தது. அவ் வகுப்பிற்காகக் கந்த புராணத்தில் ஏறக்குறைய ஆயிரத்தைந்நூறு பாடல்களைத் திரட்டிப் பொழிப்புரையுடன் மூன்று பகுதிகளாக வெளியிட்டேன். 'வேலின் வெற்றி' என்னும் இவ்வுரை நடைநூல் கந்தபுராணத் திரட்டைத் தழுவி எழுந்ததாகும், முருகன் அருள் பெற்ற கச்சியப்பரின் சொல்லும் பொருளும் விரவி வருதலால் 'வேலின் வெற்றி'யும் மெய்யன்பர் கருத்திற்கு உகந்ததாகும் என்று எண்ணு கின்றேன். 'வேலுண்டு வினையில்லை" என்று நம்பி வாழும் நல்லார்க்கு இந்நூல் தமியேன் கையுறையாகும்.
சென்னை, 2-2-1954. ரா. பி. சேதுப்பிள்ளை
-----------
வேலின் வெற்றி
திருக்கயிலாய மலை
திருக்கயிலாய மலை, ஏற்றமும் தோற்றமும் வாய்ந்தது; எல்லாம் வல்ல ஈசனார் வீற்றிருக்கும் திருக்கயிலாய பெருமை சான்றது; இந்திரன் முதலிய மலை தேவர்களும், எண்ணிறந்த முனிவர்களும், பூத கணங்களும் அன்புடன் போற்றும் பேறு பெற்றது.
உமையம்மை இறைவனை வேண்டுதல்
இத்தகைய மலையில், சிவபெருமானோடு அமர்ந்திருந்த உமையம்மை, அந் நாயகனை நோக்கி "கற்பனையும், காரணமும், காரியமும் கடந்த இறைவனை கண்ணுதற் பெருமானே! தன் நிகரில்லாத் வேண்டுதல் தலைவனே! நின்னை இகழ்ந்த தக்கன் என்பவன் மனையில் நெடுங்காலம் வளர்ந்தேன்; அவன் பெற்ற புதல்வி யென்றும் பேசப்பட்டேன். அங்ஙனம் பெற்ற பெயரையும் அவன் உணவை உண்டு வளர்ந்த இவ்வுடலையும் இன்றளவும் தாங்கி நின்றேன்; இனி அத் தீயவன் வழியாக வந்த நாமமும் உருவமும் தரித்தற்கு அஞ்சுகின்றேன்; அவற்றை விட்டு ஒழிப்பேன். ஆனை தரல் வேண்டும்" என்று வேண்டினாள்.
"நங்கையே! நீ சொன்னது நன்று; நின் கருத்து முற்றுப்பெற வேண்டுமாயின், ஒன்று கூறுகின்றோம், கேள், மேருமலையோடு உறவு பூண்ட இமயமலையின் அரசன் உன்னைத் தன் மகளாக முறைமையோடு எடுத்து வளர்த்து, பின்பு காதலோடு எமக்குக் கடிமணம் செய்துகொடுத்தற்காகக் கடுந்தவம் புரிகின்றான். ஆதலால், நீ குழந்தை வடிவம் எய்தி அம்மன்னனை அடைவாயாக. அவன் மலையில் நீ வளர்ந்து தவஞ் செய்யும் காலத்தில், உலகில் உள்ள சிவ கணங்களும், எண்ணிறந்த பெருந் தேவரும் சூழ்ந்துவர, நாம் அங்குப் போந்து, நின்னை மணம் செய்து, இக் கயிலை மலைக்கு அழைத்து வருவோம்” என்றார் சிவபெருமான்.
உமையம்மை இமயம் சேர்தல்
தலைவனைப் பிரிய நேர்ந்ததே என்ற துன்பமும், தக்கன் வழியாக வந்த சிறுமை தீர்ந்தது என்ற அன்பும், மன்னுயிர்பால் வைத்த பெருங்கருணையும் முன்னே செல்ல, உமையம்மை கயிலை மாமலையை விட்டு விரைவில் இமயமலைக்கு எழுந்தருளி எழுந்தருளினாள்.
நீலமேகம் மின்னலோடு விளங்கும் நெடிய முடியை உடைய இமயமலை, மாயவன் திருமகளோடு பொருந்தி உறங்கும் பாற்கடலின் அனந்த சயனத்தை ஒத்தது. அத்தகைய மலையில் உள்ள அழகிய தடாகத்தில், மலையரசன் உமையம்மையை மகளாக அடையவும், அம் மங்கையை இணையற்ற ஈசனுக்கு மணம் செய்து கொடுக்கவும் கருதி, முன்னமே அருந்தவம் புரிந்துகொண்டிருந்தான். மெய்த்தவம் இயற்றிய மலையரசன் கண்ணெதிரே, தடாகத்தில் மலர்ந்த தாமரை மலரின் மேல், உலகெலாம் என்ற உமையாள், ஒரு பசுங்குழந்தை வடிவத்திலே தோன்றினாள். அவ் வடிவத்தைக் கண்ட அரசன், "அடியேன் பொருட்டு என் அம்மை ஆண்டவனை விட்டு நீங்கினாளோ!" என்று ஏங்கினான்; "இத் தவத்தை ஏன் செய்தேன்?" என்று இரங்கினான்; எனினும், "இவையெல்லாம் ஈசன், திருவருள்” எனத் தெளிந்து, ஆனந்தக் கடலுள் மூழ்கினான்; தாமரைத் தவிசில் அமர்ந்த குழந்தையைத் தன் தடக்கையால் எடுத்தான்; தலையின்மீது தாங்கினான்; விரைந்து சென்றான்; மாளிகையை அடைந்தான்; மேனை என்னும் மனைவியின் கையிற் கொடுத்தான்.
மன்னுயிரையும், மாநிலத்தையும், மற்றும் உள்ள பொருள் அனைத்தையும் ஈன்று வளர்க்கும் அன்னையாகிய உமையாளையும் வளர்ப்பார் உண்டோ? மலையரசனும் அவன் மனையாளும் அவளை வளர்த்தனர் என்பது பொருளற்ற பேச்சே! அவர் மனையிலே வளர்ந்து, அம்மை தன் அருளின் தன்மையைப் புலப்படுத்தினாள் போலும்!
உமையம்மை தவம் புரிதல்
இவ்வாறு அவர்களிடம் வளர்ந்த உமையாள் ஐந்து வயது கழிந்தவுடன், பிரமன் முதலாய தேவர்களுக்கும் பிதாவாகிய சிவபெருமானது திருவருளைச் சிந்தித்துத் தவம் செய்யக் கருதினாள். தன் உள்ளக் கருத்தை மலையரசனிடம் உணர்த்தினாள். அன்னையின் கருத்தறிந்த அரசன், "அம்மா! கேள். எம்மை விட்டு நீங்கி நீ அருந்தவம் புரிதற்கு இஃது ஏற்ற பருவமன்று. வயது ஐந்துதான் ஆயிற்று. தவத்தின் கடுமையை நின் திருமேனி தாங்காது. ஆதலால், இப்போது இக் கருத்தை விட்டுவிடு" என்று வேண்டினான். அது கேட்ட உமையவள் புன்னகை புரிந்து, "எல்லோரையும் காப்பவன் ஈசன் ஒருவனே. அவனன்றி யாரும் தம்மைக் காத்துக் கொள்ளல் இயலாது. இஃது உண்மை. இப்பொழுது நான் சொல்லிய செய்கையும் அப் பெருமானுடைய பேரருளேயாகும். ஆதலால், தடை சொல்ல வேண்டா” என்று கூறினாள்.
அரசனும் அன்புடன் இசைந்தான்; இமயமலையின் ஒருசார் அரியதொரு தவச்சாலை அமைத்தான்; தன் உறவினர் தவம் செய்து அரிதிற் பெற்ற கன்னியர் பலரை அழைத்து, உமையாளுக்குத் துணையாக அனுப்பினான். நீலமணியின் நிறம் பொருந்திய் உமையவள், மன்னன் தேவியிடம் விடைபெற்றுப் பணிப்பெண்கள் பலர் சூழ்ந்து வர, பரம்பொருளாகிய ஈசனை மனத்தில் அமைத்து, அச்சாலையிற் போந்து அருந்தவம் புரியலுற்றாள்.
ஈசன் ஞான குருவாய் இருத்தல்
திருக்கயிலாய மலையில் சிவபெருமான் திருவடியிலே, அருந்தவச் செல்வராகிய சனகாதி முனிவர் நால்வரும் அன்புடன் பன்முறை பணிந்து எழுந்து நின்று, பண்ணோடு வேத கீதம் பாடித் துதித்து, "அருட் பெருங்கடலே! அகன்ற கருங்கடலின் நடுவே, நள்ளிரவில், சுழற் காற்றில் அகப்பட்டாற் போன்று, அடியேம் பொருட் பெருங் கடலாகிய வேதத்தின் சாகைகளால் மலைப்புற்று, அஞ்ஞான இருளில் அகப்பட்டு அறிவு தளர்ந்தோம். மயக்கமாய பெருங்கடலி னின்றும் கரையேறும் முறையைத் திருவருள் புரிதல் வேண்டும்” என்றார்கள். குற்றமற்ற , நற்றவம் புரிந்து, செம்மையான அருளைப் பெற்ற நால்வரும் இவ்வாறு சொல்ல, அன்பர்க்கு எளியனாகிய அருள் வள்ளல் அம்முனிவர் முகம் நோக்கி, "உங்கள் அறிவு ஒருமைப்பட்டு அடங்கும் வண்ணம் அழிவற்ற பெருமை வாய்ந்த ஞானநூலை உணர்த்துகின்றோம்; அமர்க” என்று திருவாய் மலர்ந்தருளினார்.
நந்தி தேவர் தலைவாயிலைக் காவல் செய்திருந்தார். மெய்ஞ்ஞான முதல்வராகிய ஈசன் முன்னே, சனகன் முதலிய முனிவர்கள் தொழுது அமைந்தார்கள். அவர்களுக்கு, முடிவற்ற சிவாகமத்தின் பாதங்களாகிய சரியை கிரியை யோகம் என்னும் மூன்றையும் சிவபெருமான் எடுத்தோதினார். அவற்றை உணர்ந்த முனிவர்கள், "மனோலயத்திற்குரிய ஞானபோதத்தையும் போதித்தல் வேண்டும்” என்று விண்ணப்பம் செய்தனர். அம்மொழி கேட்ட ஈசன் புன்னகை புரிந்தார்; மறுமொழி யொன்றும் உரைத்தாரல்லர்; ஞானநெறி, சொல்லிக் காட்டும் தன்மைத்தன்று என்று அம் முனிவர்க்கு உணர்த்துமாறு தமது திருமார்பில் ஒரு கரத்தை வைத்து, ஞான முத்திரை காட்டி, ஒரு கணப்பொழுது யாதொரு செயலும் இன்றி, யோகியரைப் போல் காட்சியளித்தார்.
ஞானத்தின் தன்மையை இவ்வாறு உணர்த்தக் கண்ட முனிவர்கள், "மெய்யறிவு என்பது நூல்களின் அளவிற்றன்று” என்னும் உண்மையை உணர்ந்தார்கள், ஈசன் அருளால் மன ஒடுக்கம் பெற்றார்கள். இங்ஙனம் பிரமாவின் புதல்வர்கள் ஆகிய முனிவர்க்கு மெய்ஞ்ஞானி போதம் கணப்பொழுது காட்டுங்கால் உலகமெல்லாம் ஒருமைப்பாடு உற்றது; காம உணர்ச்சி. அற்றது. எனவே, யார்க்கும் மூல காரணமாய் உள்ள முழுமுதற் பொருள் சிவபெருமானே என்று சொல்லவும் வேண்டுமோ? ஞானக் கண்ணால் ஈசனைக் கண்டு உணரும் மெய்ஞ்ஞானியர் போன்று, மண்ணகத்தில் உள்ள உயிர்களும், விண்ணகத்தில் உள்ள உயிர்களும், இன்னும் பாதலம் முதலிய ஏனைய உலகத்துள்ள உயிர்களும் சிற்றின்ப உணர்ச்சி அற்றிருந்தன.
இந்திரன் கவலை கூர்தல்
மாசற்ற காட்சியையுடைய மாதவ முனிவர்க்கு மெய்யறிவுறுத்திய நிலையில், ஈசன் அழகிய கயிலை மலையில் அமர்ந்தான். உமையவள் இமய மலையில் இருந்தாள். 'இந் நிலையில் மாசற்ற மைந்தனை அன்னார் எங்கனம் அடைதல் கூடும்?' என்று சிந்தித்து, இந்திரன் தன் மனத்திற் சஞ்சலம் உற்றான்; ஒன்றும் தோன்றாமையால் பிரமதேவனைத் துணைக்கொண்டு திருமாலிடம் போந்து தன் குறையை முறையிட்டான்.
திருமால் கூற்று
அப்பொழுது திருமால் அவரை நோக்கி, "எல்லா உயிர்களும் தாமேயாகியும், அருவமாகியும், உருவமாகியும் இவ்வாறு மூவகை இயல்பினையுடைய மூலகாரணமாயுள்ள தேவதேவன் யோகத்தின் முறைமையைக் காட்டுவாராகில், முன்போல் காம இச்சையை யாவரே கொள்வார்? பிரமனே! முழுமுதற் பொருளாகிய ஈசன், முனிவருக்கு ஞான போதம் உணர்த்தும் மெளன நிலையை விட்டு, பருவத மன்னன் புதல்வியாகிய பார்வதியைத் திருமணம் புரிந்தால், நின் படைப்புத் தொழில் நிறைவேறும்; அன்னார்க்கு ஒரு குமரன் தோன்றினால், சூரன் குலம் அடியோடு அழியும்; துன்பமுற்ற உலகம் எல்லாம் முன்புபோல் வாழ்ந்திருக்கும்; அது நிறைவேறுதற்கு ஓர் உபாயம் கூறுகிறேன், கேள்; இம் மாநிலத்தில் உள்ள யாவரும் மயங்கும்படி மலர்க்கணை தொடுக்கும் மன்மதனைக் கயிலையங்கிரிக்கு அனுப்பினால், ஈசன் மெளனம் நீங்கி, சத்தியாகிய உமையை மணந்து ஒரு மைந்தனைத் தந்தருள்வார்" என்றார்.
மன்மதனைப் பிரமன் வேண்டல்
அப்படியே பிரமதேவன் மன்மதனை அழைத்து, "ஐயனே! கங்கையைச் சடையில் அணிந்த சிவபெருமான் மெளன நிலையை நீக்கி, மலைமகளாகிய பார்வதியைத் திருமணம் செய்யுமாறு நின் பூங்கணைகளைத் தூவு வாயாக, எங்கள் பொருட்டு இப்பொழுதே செல்க” என்று வேண்டினான்.
அது கேட்ட மன்மதன் சிவ நாமத்தைச் சொல்லி, செவிகளைப் பொத்திக்கொண்டு, "பிரமனே! திருமாலுடைய மார்பில் சிறப்பு வாய்ந்த திருமகளை நான் நிலையாக வைத்தேன்; நின்னுடைய அழகிய நாவில் கலைமகளை அமைத்தேன். இன்னும் மறைகளை யறிந்த வசிட்டன், மரீசி, குறுமுனியாகிய அகத்தியன், அத்திரி, கௌதமன், காசிபன் ஆகிய முனிவரது தவத்தின் வலிமையை நான் தொலைத்தேன். ஆயினும், கையிலே கனலும், நெற்றிக் கண்ணிலே நெருப்பும் உடைய ஈசன்மீது அம்பெய்யச் சென்றால், அடியேன் உய்யு மாறுண்டோ?” என்றான்.
இங்ஙனம் மறுத்துரைத்த மன்மதனை நோக்கி, "மாரனே! நீ சொல்லிய வெல்லாம் உண்மையே! ஆயினும், தம்மை அடைந்தவரது துன்பத்தைத் துடைக்கும் ஈசன் அருளால், இக் காரியம் உன்னால் முடியும். இது மற்றையோரால் ஆகாது. இதற்கு முதற் காரணம் நீயே! எல்லார் செயலும் ஈசன் செயலே. அவனன்றி ஓர் அணுவும் அசையாது. அவன் அருளின்றி எப்பொருளும் நில்லாது. உன் செயலும் அவன் செயலே. ஆதலால், இன்றே செல்க. அன்றியும், தாங்க முடியாத துன்பமுற்றோர், தமக்கு உதவி செய்யுமாறு இரந்து வேண்டினால், அதனைச் செய்யாது மறுத்து உயிர் வாழ்ந்திருத்தல் உயர்ந்தோர்க்குரிய தன்மை யாகுமோ? யாதேனும் ஓர் உதவியை யார்க்கேனும் தம்மால் இயன்றவரை அவர் கேளாமல் தாமே செய்தல் தலையாயவர் தன்மை; அவர் கேட்டபின் செய்தல் இடையாயவர் தன்மை; கேட்டும் முன்னே மறுத்துப் பின்னே செய்தல் கடையாயவர் தன்மையாகும். நாம் அனைவரும் வலிமை சான்ற சூரபதுமனது கொடுமையால் துன்புற்று வருந்துகின்றோம். அத் துன்பம் நீங்கும் வண்ணம் ஈசனிடம் ஒரு புதல்வனைப் பெற விரும்பி, உன் அரிய உதவியை வேண்டினோம்” என்று பிரமதேவன் உரைத்தான். அவ் வுரையை மறுக்க முடியாமல், மன்மதன் கரும்பு வில்லேந்தி மனையாளாகிய ரதியோடு கயிலை மலைக்குச் சென்றான்.
மன்மதன் மலர்க்கணை தொடுத்தல்
அங்கு எண்குணனாகிய ஈசனார் இருந்த வண்ணத்தைக் கண்டான், மன்மதன். ”ஐயோ! இவரைக் கண்டபோதே உள்ளம் கலங்குகின்றது. ஆவி அகத்ததோ புறத்ததோ அறியேன். என் மெல்லிய கணைகள் இப்பெருமானை வெல்லுமோ? அமரரும் பிரமனும் இவர் நிலையினை அறியார் பேர்லும் ஊழிக் காலத்தில் உலகமெல்லாம் சங்காரம் செய்யும் சிவபெருமான்மீது பூங்கணை தொடுத்து நான் போர் செய்வேனாம்! இது சிரிக்கத்தக்க செயல் அன்றோ?. ஆயினும், விதியின் செய்கை இது. யாவுரே விதியைக் கடக்கவல்லார்? படைக்கின்ற பிரமதேவனும் அதன் வலிமையைத் தடுக்கவல்லனோ?” என்று எண்ணினான்; செங்கையில் மழுவேந்திய சிவபெருமான்-மீது குறி வைப்பான்போல் நின்றான், கொடுந்தொழில் புரியும் மன்மதன், "அழியத் துணிந்தவர்க்கு அச்சம் உண்டோ? நினைத்தது முடிப்பேன்" என்று கூறி, ஐந்து மலரம்புகளை ஐயன்மீது எய்தான்.
மன்மதன் விட்ட மலர்க்கணை ஈசன் மேனியிற் பட்டது. அப்போது சிறிது கண் விழித்துப் பார்த்தார், ஈசன். அவர் நெற்றிக் கண்ணினின்று எழுந்த நெருப்பு காம வேளைச் சுட்டது. கயிலை மலை எங்கும் நெடும் புகை சூழ்ந்து நிறைந்தது. கண் அழலால் எரிந்த காமன், அங்கமெல்லாம் நீறாகி மண்ணில் விழுந்தான்; இறந்தொழிந்தான். ஈசனார், முன்போல் அமைதியுற்றார்.
ரதி புலம்பல்
காமன் எரிந்து விழக் கண்ட ரதிதேவி கலங்கிப் புலம்பலுற்றாள்; "திருமகள் மகனே! ஏழையேன் இன்னுயிரே! திருமால் மைந்தா! சம்பரனைப் பகைத்து வென்ற சதுரா! கரும்பு வில்லேந்திய பெருந்தோள் வீரா செம்பவளக் குன்றனைய சிவன் விழியால் வெந்து உடலம் அழிவுற்றாயே! இன்று விண்ணவர் கண் அடைத்ததா? பிரமதேவன் மனம் மகிழ்ந்ததா? சிரித்து முப்புரங்களையும் எரித்த சிவன்மீது போர் செய்யப் போதல் முறையோ என்று முன்னமே சொன்னேனே! அதைச் செவியில் ஏற்றாய் அல்லையே! வானவர் பணியை மேற்கொண்டாயே! நின் உடலம் பொடியாகிப் போயிற்றே! இக் கொடுமையைப் பார்த்தும் பிழைப்பார் உண்டோ? என்னுயிராகிய நீ இறந்த பின்னர், யான் தனியே இருத்தல் தகுமோ? நான் என்ன பாவம் செய்தேனோ? என் போன்ற பெண்களுக்கு என்ன துன்பம் செய்தேனோ? ஊழ்வினைப் பயனை யான் அறிவேனோ? அந்தோ! விதியே! இவ்வாறு வந்து முடிந்ததே கரும்பு வில்லுடைய காவலனே? யாரும் துணையற்ற என்னைக் காத்திட வாராயோ? நெற்றிக் கண்ணுடைய பெருமானை நோவதற்கு நீதியுண்டோ? ஐயோ! பொன் மாலை அணிந்த முடி எங்கே? அழகு ஒழுகும் திருமுகத்தின் பொலிவு எங்கே? அணி திகழும் தோள் எங்கே? அகன்ற மார்பெங்கே? ஐங்கணை எங்கே? நின் வில்லெங்கே? விளையாட்டெங்கே? என் செய்வேன்? என் கணவா! என்னை விட்டு எங்கே சென்றாய்? அந் நாளில் வானவரும், அயனும் மாலும் காண, அங்கித் தேவன் சாட்சியாக என்னை மணந்தாய்! இனி எந்நாளும் உன்னைப் பிரியேன்” என்று வாக்களித்தாய். வசந்த மன்னனே! என் மனத்திற்கு இசைந்த மன்னனே! எனைத் தனியே விட்டுச் செல்லுதல் முறையோ! முறையோ! 'சிவனிடம் போ என்று அனுப்பிய தேவர் எல்லாம் பொடியாகிய உன்னை வா' என்று விரைந்து எழுப்பு மாட்டாரோ? நின் தந்தையாகிய திருமால், பெரும் பேர் படைத்தவராயிற்றே! ’ஐயோ’ என்று நான் இங்குப் புலம்பி அழவும் அவர் வரக் காணேனே! உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டாரோ? அந்தோ! 'நெருப்பினால் நீறாவாய்' என்று நின் தலையில் விதித்திருந்தால், அவரையெல்லாம் வெறுக்கலாமோ? பனிநீரைச் சிவிறியால் வீசி விளையாடி, பூங்கானம் போந்து, மலர் கொய்து, மன மகிழ்ந்து, இனிய மஞ்சத்தில் இளந்தென்றல் வீசக் கண்ணுறங்கும் நம் வாழ்வெல்லாம் பொய்யாகிக் கனவு கண்ட கதை யாயிற்றே பெருமையுணராது மருமகன்தானே என்று அவமதித்த தக்கன் செய்த வேள்வியைத் தகர்த்த வள்ளலாகிய ஈசுன்மீது வானவர் உன்னைப் போர் செய்ய ஏவினரே! அவராலே பொடி புட்டாயே! என் உயிர்க்குயிரே! ஆறாத பெருந்துயரால் அடியேனும் எரிகின்றேன்; உன்னை நோக்கி வருகின்றேன்; வருகின்றேன்" என்று புலம்பி வருந்தினாள்.
அயன் முதலாய வானவர் துயரம்
இதைக் கண்ட பிரமன் முதலாய தேவர்கள், "நீலகண்டனாய ஈசனிடம் காமதேவனை அனுப்பினோம். அவனையும் அவர் சுட்டெரித்தார்; மெய்யாகிய மெளன நிலையைத் தவிர்ந்தாரில்லை; முன்போலவே அமர்ந்துள்ளார். அந்தோ! இனி என் செய்வோம்?" என்று அயர்ந்தார்கள். பின்பு, திருக்கயிலாய நகரின் கோபுர வாயிலில் எல்லோரும் கூடித் துதிக்கலுற்றார். "எம்பெருமானே! அடியவர்களாகிய எங்களுக்கு அபயம் அளித்து ஆலகாலம் என்னும் நஞ்சை அள்ளி உண்டீர்! விண்ணுக் கடங்காமல் வந்த கங்கையைச் சடைமுடியிலே தாங்கினீர்! எரித்து நீறாக்கவல்ல நெருப்பினை நெற்றிக் கண்ணிலே வைத்தீர்! கொடிய பகைவரைக் கொன்று ஒழித்தீர்! இவ்வாறு காத்தருளிய நீர் இன்று கைவிட்டால் யாரைத் தஞ்சம் அடைவோம்? மைந்தர்க்குத் தந்தையரைத் தவிர வேறு தஞ்சம் உண்டோ? மாசற்ற மெய்யடியார்கள் குற்றம் செய்யினும் குணமெனக் கொண்டு ஆளும் பெருமானே! தும் சேவடியே சரணம் என்றடைந்தோம். நாள்தோறும் சூரன் கொடுமையால் நலிவுற்று நாங்கள் இறப்பதோ? எமது துயரத்தைச் சிறிதேனும் திருவுளத்திற் கொள்ளீரோ? கங்காதரனே! நீர் உமாதேவியை மணந்து எங்களைக் காத்தருளும்வண்ணம் மதியீனர்களாகிய நாங்கள் மதிக்குடையுடைய மன்மதனை அனுப்பினோம். அவன் மேனியை எரித்து நீறாக்கினீர். முன்போல் ஞானமோனத்தில் அமர்ந்தீர்! நும் அடியாராகிய நாங்கள் இங்ஙனம் தளர்தல் தகுமோ? இனியேனும் சிறிது இரங்கியருளிரோ?" என்று அவர்கள் ஓலமிட்டார்கள்.
சிவன் அபயம் அளித்தல்
அப்பொழுது சிவபெருமான் கருணைகூர்ந்து, "வானவர்களே! வருந்தாதீர்கள்; உமக்காக இமய மலையில் உள்ள மங்கையை மணந்து உமது துன்பத்தை ஒழிக்கின்றோம். இனி நீங்கள் செல்லலாம்” என்று சொல்லி அனுப்பினார்.
ரதி முறையீடு
அவர்கள் விடைபெற்றுப் போனபின்னர், ரதி தேவி, தருணம் பார்த்துப் பெருமான் முன்னே போந்து, வணங்கித் துதித்து, "ஆண்டவனே! இறைவனே! இது முறையோ! முறையோ! பிரழன் முதலிய தேவர்கள் செய்த சூழ்ச்சியால் என் கணவன் இங்கே வந்து அழிவுற்றான். அவன் செய்த குற்றத்தைப் பொறுத்து அருள் புரிதல் வேண்டும்” என்று விண்ணப்பம் செய்தாள்.
இங்ஙனம் வேண்டிய ரதியை நோக்கி, ஈசன் அருள் கூர்ந்து, "மாதே! வருந்தாதே! பார்வதி தேவியை நாம் சென்று திருமணம் செய்யும்பொழுது உன் கணவனைத் தருவோம்; செல்க!" என்று விடை கொடுத்தனுப்பினார்; அப்பால், எதிரே இருந்த சனகாதி முனிவரை நோக்கி, "நற்றவர் மைந்தர்களே! ஞான போதம், சொற்களில் அடங்குவதன்று; துயரம் நீங்கி, இவ்வண்ணம் மெளன நிலையில் இருந்து நம்மைச் சிந்தித்திலே ஆகும்" என்று உள்ளங்கொள்ள உணர்த்தினார். "அப்போது அருந்தவ முனிவர் நால்வரும் சிவபெருமான் சேவடிகளைச் சிந்தையாரத் தொழுது, "மயக்கம் தெளிந்திரோம்; கடைத்தேறினோம்” என்று போற்றிச் சென்றார்கள்
ஈசன் உமையைக் காணுதல்
பின்பு, பார்வதியம்மையாருடைய அன்பையும் காதலையும் ஈசன் உமையைக் எல்லோரும் அறியக்காட்டத் திருவுளங் கொண்டார் ஈசன், செக்கச் சிவந்த காவியுடை உடுத்தார்; சிகையை முடித்தார்; வெண்ணீறு அணிந்தார்; கமண்டலத்தைக் கையில் எடுத்தார்; ஒலைக்குடையைப் பிடித்தார்; நெடுங்கழியை ஊன்றினார்; விருத்தர் போன்ற வடிவம் கொண்டு சென்றார். மலையரசன் மகள் தவம் புரியும் சாலையை அவர் அடைந்த பொழுது, அங்கு வாயில் காத்து நின்ற மாதர்கள் அவரைப் பார்த்து, "தளர்ந்த நடையுடைய பெரியவரே! இம் மலையிடை வருதல் எளிதன்றே! இங்கே நீர் வந்த காரணம் யாது?” என்று வினவினர். அது கேட்ட விருத்த வேதியர், "இம் மலையரசன் புதல்வி செய்யும் தவத்தை அறிய விரும்பி இங்கு மனமகிழ்ந்து வந்தோம்” என்றார். அந் நிலையில், அவரைப் பணிப்பெண்கள் தவச்சாலையினுள்ளே போகவிட்டார்கள். அங்கு நின்ற நங்கையை விருப்புடன் பார்த்தார், வேதியர்; "சொல்லுதற்கரிய பேரழகு அழியவும், அங்கமெல்லாம் வற்றி ஒடுங்கவும் நீ அருந்தவம் செய்கின்றாயே! எப்பொருளை விரும்பி இத்தவம் செய்கின்றாய்?" என்று வினவினார்.
"ஐயனே? மன்னுயிர்க்கு உயிராகிய ஈசனை மணாளனாகப் பெற்று, அவர் பாதத்தில் இருக்கக் கருதியே இக் கன்னி மெய்த்தவம் இயற்றுகின்றாள்" என்று மங்கையின் தோழி மறுமொழி கூறினாள். அது கேட்ட முதியவர் நகைத்து, "உலகத்தை யெல்லாம் படைக்கும் பிரமனும், காக்கும் மாயவனும் தேடுதற்கரிய தேவதேவன், இவள் செய்யும் தவத்திற்காக வருவானோ? வந்தாலும் இவளை விரும்பி மணம் புரிவானோ? அறியாமல் உமையவள் தவம் புரிகின்றாள். சங்கரன் எளிதில் அருள்வானோ?” என்றார்.
அம் மொழி கேட்ட உமையவள் சீற்றங்கொண்டு "என்றும் உள்ள எம்பெருமான் என் விருப்பத்தை நிறைவேற்றாவிடினும், நான் தவத்தினை விடுவேனோ? இத் தவம் போதாதாயின் இன்னும் கொடிய நோன்புகளை மேற் கொள்வேன்; உயிரையும் விடுவேன். நீ சால முதுமையுற்றாய்; ஆதலால் மயக்கம் கொண்டாய். அன்றிப் பித்துக் கொண்டு பேசுகின்றாயோ?” என்றாள்.
உமையவள் சீற்றத்தை உணராதவர்போல் முதியவர் மேலும் பேசலுற்றார். "மாதே! அச் சிவபிரான் தன்மையை நீ அறிந்திலை போலும்! அவன் உடுப்பது தோலாடை ஏறுவது வெள்ளேறு: அணிகலன் அரவும், பிறவும்: கையில் எடுப்பது கபாலம்; உண்பது நஞ்சு; நடமாடும் இடம் சுடுகாடு; அவனுக்குத் தாயில்லை; தந்தையில்லை; சுற்றத்தார் யாரும் இல்லை; வடிவம் இல்லை; குணமும் இல்லை; முன்னே சொல்லிய தோலாடை போன்ற பொருள்களே அவனிடம் பலவுண்டு. அவற்றைப் பெற விரும்பித்தான் தவம் செய்து மெலிகின்றாயோ? பழமையும் பெருமையும் வாய்ந்த மலையரசன் திருமகளாய்த் தோன்றிய உனக்கு இது தகுமோ?" என்று பேசினார்.
அந் நிலையில் ‘சிவ சிவ' என்று செவிகளைப் பொத்திக்கொண்டு, "கிழவா! கேள். அந்தமில்லாத எம்பிரானிடத்து உனக்கு அன்பு இறையளவும் இல்லை. காட்டிலுள்ள புதரிலே மறைந்து நின்று பறவை பிடிக்கும் வேட்டுவனைப் போல் நீ சிவ வேடம் கொண்டாய். உன்னைப் போல் நேசமின்றி ஈசனை இகழ்ந்து பேசிய தக்கன் பட்ட பாட்டை நீ அறியாயோ? என் முன்னே நின்று அப்பெருமானை ஏளனம் செய்தாய். இத்தனை வயது சென்றும், இன்னும் மாசற்ற மறைகளில் ஒன்றும் நீ அறிந்திலை போலும்! இங்கே நீ நிற்றல் ஆகாது” என்று சீற்றமுற்றாள், உமையம்மை.
அறப்பெருஞ் செல்வி இங்ஙனம் பேசியபோது, "அணங்கே! உன்னிடம் ஆசையுற்று இங்கு வந்தடைந்தேன். நான் வந்த காரியத்தைக் கேளாமல் ’வெளியே போ’ என்று உரைக்கலாமோ? அது பொருந்துமோ? இங்கே நான் வந்தது உன்னை வேதமுறையில் மணம் செய்வதற்கே ஆகும்" என்றார், முதியவர்.
வஞ்சகத்தில் முதன்மை பெற்ற கிழவர் பேசிய ஓவாசகத்தைக் கேட்டபொழுது, உமையவுள் இருசெவிகளையும் இறுகப் பொத்தினாள். பொறுக்க முடியாத வருத்தமுற்றாள்; அங்கமெல்லாம் நடுங்கி விம்மினாள்; 'போ என்றாலும் இக் கிழவன் போக மாட்டான் போலும்! நானே இவ்விடத்தை விட்டு அகல்வேன்' என்று பஞ்சு போன்ற திருவடிகள் சிவக்க நடந்து சென்றாள்.
மலைமகளின் தவக் கோலத்தை நோக்கினார், சிவ பெருமான்; அளவிறந்த கருணை கொண்டார்; முதுமைக் கோலத்தை விட்டார்; சிவகணங்கள் சூழ்ந்து போற்றச் சிறந்த மழவிடையின் மேல் எழுந்தருளிக் காட்சியளித்தார். மெய்ப் பொருளாகிய நாயகனைக் கண்டாள், மலைமகள்; நாணத்தால் மேனி நடுங்கினாள்; கீழே விழுந்து வணங்கினாள்; கையெடுத்துப் போற்றினாள்; "அறிவினால் அறிய வொண்ணா ஆதி பகவனே! நின் மாயா விலாசம் அறியாது மதியிலேன் பேசிய சிறு மொழிகளைப் பொறுத்தருளல் வேண்டும்” என்றாள்.
"நற்றவம் புரிந்த மாதே! கேள்! நம்பால் வைத்த அன்பினால், நீ முன் பேசிய மொழிகளை யெல்லாம், இப்பொழுது உரைத்த துதிமொழி போலவே ஏற்றுக் கொண்டோம். குற்றமிருந்தால் அன்றோ பொறுத்தல் வேண்டும்? கொடிய தவத்தைச் செய்து இன்னும் வருந்தாதே. நாளையே நின்னை மணம் புரிய வருவோம்" என்று அருளினார், ஈசன்.
மணம் பேசுதல்
இங்ஙனம் இமயமலையிற் பூங்கொடி போன்ற உமையவள் தவத்தினைக் கண்டு திருவருள் புரிந்த ஈசன், கயிலையங்கிரியை அடைந்து, சப்த ரிஷிகள் எனப்படும் எழுவகை முனிவரையும் மனத்திலே நினைத்தார். அம் முனிவர்கள் விரைந்து கயிலை மலையை அடைந்து, "எம் தந்தையாகிய ஆண்டவனே! நும் கருணையால் எம்மை நினைக்க, இங்கு வரப்பெற்றோம். ஆதலால், அடியேங்கள் பிழைத்தோம்; கொடிய தீவினையும் தீர்ந்தோம்; இனி, எமக்கு ஒரு தீங்கும் உண்டோ?” என்று தொழுது நின்றார்கள். ஈசன் அவரை நோக்கி, "இமயமலை யரசனிடம் நீங்கள் சென்று, இன்றே உமையவளை எமக்குத் தாரை வார்த்துத் தரும்படி கேட்டு, விரைவில் இங்கு வரல் வேண்டும்” என்றார். அப் பணி தலைமேற்கொண்ட சப்த முனிவரும் மலையரசன் மாளிகைக்குச் சென்றார்கள். அவர்களைக் கண்ட அரசன் மனமகிழ்ந்து, "ஐயரே! உம்முடைய திருவடிகள் தோயப்பெற்ற இமயமலை, மாமேரு மலையினும் புனிதமாய் முதன்மை யுற்றது. பல நாள் நான் செய்த பாவமும் இன்றே நீங்கிற்று. நீங்கள் அடியேன்பால் வந்த காரியம் யாது? சொல்ல வேண்டும்” என்றான். அது கேட்ட அருந்தவ முனிவர், "உலக மாதாவாகிய உமாதேவியைத் திருமணம் புரியக் கருதி, மன்னுயிர்க்கெல்லாம் உயிராக விளங்கும் சிவபெருமான், எம்மை உன்னிடம் அனுப்பினார். இதுவே யாங்கள் வந்த காரியம்” என்று உரைத்தார்கள், மன்னனும் மனமிசைந்து, "எல்லா உயிர்களையும், உலகங்களையும் ஈன்ற உமையாளை ஈசனார்க்கு மணம் செய்து கொடுத்து, என்னையும் அடிமையாகத் தருவேன்” என்றான்.
அப்பொழுது அருகே நின்ற அவன் மனையாள், சிறிது வாடிய முகத்தோடு, "ஐயன்மீர்! பிரமதேவனுடைய புதல்வனாகிய தக்கன், தன் ஒப்பற்ற திருமகளை ஈசனுக்கு மணம் செய்து கொடுத்தான் என்றும், அங்ஙனம், கொடுத்த தக்கன் தலையை, அப் பெருமான் தகர்த்தெறிந்தார் என்றும் சொல்கின்றார்களே! அந் நிகழ்ச்சியை நினைத்தால் என் நெஞ்சம் அஞ்சுகின்றதே! எமது குலமகளை அவர்க்குக் கொடுப்பது எப்படி?” என்று கூறினாள். இவ்வாறு அஞ்சி வினவிய மலையரசியின் மனத்தைத் தெளிவிக்கக் கருதிய முனிவர்கள், "மாதே, நீ சிறிதும் வருந்தவேண்டா. தன்னிகரில்லாத் தலைவன் செய்கையை நீ நன்றாக உணரவில்லை. தக்கன் தவறு செய்தான். அவன் ஆக்கிய வேள்வியில் ஆதி முதல்வனாகிய ஈசனுக்கு அவிர்ப்பாகம் கொடுக்க மறுத்தான்; அப் பெருமானை இகழ்ந்தும் பேசினான். அதனால், ஈசன் அவன் தலையை அறுத்திட்டார்” என்று கூறிய பொழுது, அரசியும் கவலை தீர்ந்து திருமணம் செய்து கொடுக்க இசைந்தாள்.
மலையரசன் திருமணத்திற்கு இசைந்த செய்தியை முனிவர்கள் ஈசனிடம் போந்து விண்ணப்பம் செய்தார்கள். பெருமான், எழுவர்க்கும் திருவருள் புரிந்து விடை கொடுத்தார். ஈசனாரது சேவடி தொழுது அன்னார் தம் இருப்பிடம் சேர்ந்தார்கள்.
மலையரசன் உடனே தேவ தச்சனை அழைத்து, "என்னை யாளுடைய சிவபெருமானுக்கு, யான் பெற்ற உலக மாதாவாகிய உமையவளைத் திருமணம் செய்து கொடுக்கப் போகின்றேன். ஆதலால், இம் மாநகர் முழுவதும் பொன்னுலகம் போன்று அழகுற இலங்கும் வண்ணம் அலங்கரிப்பாயாக’ எனப் பணித்தான்; பின்னர் திருமால் பிரமன் முதலிய தேவர்களும், மாதவ முனிவர்களும், அவர்தம் பன்னியரும் அன்புடன் உமையவள் திருமணத்திற்கு எழுந்தருளும் வண்ணம் எங்கும் தூதரை அனுப்பினான்.
செந்தாமரையில் வாழும் திருமகள் முதலிய மாதர்கள், நெடுங்காலம் நோன்பியற்றி அங்கமெல்லாம் நொந்த உமையம்மையைத் தொழுது, மங்கலமாகிய மணக்கோலம் செய்தார்கள்; இறைவனை வழிபடும் அன்பர் போல ஆர்வத்தோடு உமையம்மையின் தவக் கோலத்தைக் களைந்தார்கள்; அழகெலாம் ஒருங்கே வாய்ந்த மங்கையின் மேனியைக் குறையற்ற முறையில் கோலம் செய்தார்கள்.
ஈசன் திருமணத்திற்கு எழுந்தருளல்
இவ் வண்ணம் நிகழ்ந்துகொண்டிருக்கையில் மலையரசன், நெருங்கிய சுற்றத்தோடும், நிறைந்த அன்போடும் திருக்கயிலாய மலையை அடைந்தான்: நந்தி தேவரது ஆணை பெற்று, உயிருக்குயிராகிய சிவபெருமான் சேவடியை வணங்கி நின்று, "எம்பெருமானே! ஆதியில் அகில உலகமும் ஈன்றருளிய அன்னையைக் காதலோடு மணம்புரியத் திருவுளம் கொண்டீர்! சோதிட நூலோர் குறித்த நன் முழுத்தம் பங்குனி உத்தரமாகும். அந் நாளே இந் நாள் ஆதலால், இமயமலைக்கு எழுந்தருளல் வேண்டும்” என்று விண்ணப்பம் செய்தான். ஈசன் அதற்கு இசைந்தருளினார். மலையரசன் விடை பெற்றுச் சென்றான்.
உடனே ஈசன், நந்தி தேவரைக் கருணையோடு அழைத்தார்; "நம் திருமணத்தைக் காண்பதற்குச் சிறந்த உருத்திர கணங்கள், திருமால் முதலாயினோர், இந்திராதியர்கள் எல்லோரையும் வரவழைப்பாயாக” எனப் பணித்தார். ஆணைப்படியே எல்லோரையும் நந்திதேவர் வரவழைத்து, உருத்திரர்கள், சிவகணங்கள், தேவர்கள் - இவர்களைத் தனித் தனியாக வகுத்துத் தம் கை விரலாற் சுட்டி, ஈசனிடம் காட்டிப் பிரம்பேந்தி நின்றார். அப்பொழுது பிரமதேவன், பலவகை நகைகளைப் பொற்பீடத்தின்மீது வைத்து எடுத்துக்கொண்டு வந்து, ஈசன் முன்னே வைத்து, வணங்கி, ‘ஐயனே! உமக்கு விருப்பும் இல்லை; வெறுப்பும் இல்லை. அடியேம் உய்யும் வண்ணம் மணம் புரியத் திருவுளம் கொண்டீர். ஆதலால், திருமேனியில் அணிந்துள்ள அரவப் பணியெல்லாம் களைந்து, இச் செவ்விய அணிகளை அணிந்துகொள்ள வேண்டும்” என்றான். அப்பொழுது பெருமான் புன்னகை கொண்டு, "அன்புடன் நீ தந்த இந் நகைகளை நாம் அணிந்துகொண்டாற் போலவே மகிழ்வுற்றோம்!” என்று தம் திருக்கரத்தால் அவற்றைத் தொட்டு அருளினார். பின்பு, தம் திருமேனியில் அமைந்த அரவங்களே
ஆபரணமாக விளங்கும்படி ஈசன் தம் திருவுள்ளத்திலே கருதினார். அவை அவ் வண்ணமே ஆயின. உலகெலாம் படைத்துக் காத்து அழிக்கும் பரம்பொருளாகிய ஈசனுக்கு இச் செயல் அரிதாகுமோ? அதனைக் கண்டு யாவரும் கை கூப்பித் தொழுது நின்றார்.
முன்னொருகால் திருமாலும் அயனும் தேடிக் காணாத தேவதேவன், உமாதேவியாரிடம் செல்லத் திருவுளம் பற்றினார்: அக் கருத்தை அங்கேயிருந்த தலைவர்க்குக் குறிப்பினால் உணர்த்தினார்; இமயமாமலைக்கு எழுந்தருளினார்.
ஈசனார் மணக்கோலங்கொண்டு இமய மாமலையிலே எழுந்தருளியபோது, மங்கையர், அப்பெருமானது அற்புதத் திருவுருவைக் கண்டு வணங்கிக் கங்கு கரையற்ற காதல் வெள்ளத்திலே மூழ்கினர்; "எம்பெருமான் அணிந்துள்ள நகைகளும், தரித்துள்ள பொன்னாடையும், பூசியுள்ள கலவைச் சந்தனமும், புனைந்துள்ள புதுமலர் மாலைகளும் அவருடைய இயற்கையான பேரழகை மறைத்தனவே,” என்று மனந் தளர்ந்தர், சிலர். முறுக்கமைந்த நெடுஞ்சடை முடியுடைய செம்மேனி எம்மானை நோக்கி நின்று மனம் உருகினார், சிலர்; காதலுற்று வெதும்பிக் கருகினார், சிலர்; தோழியரோடு பெருகும் காதலைப் பேசினார், சிலர். "பல பல பேசுதலால் வரும் பயன் என்னை? பெற்றம் ஊர்ந்த பெருமானை மணந்திட மலைமகள் பெருந்தவம் புரிந்தாள். நாம் அவ்வாறு செய்தோமில்லை” என்று பெருமூச்சு எறிந்தார், சிலர்.
இங்ஙனம் இறைவன் பவனி வரும் பொழுது, திருமண விழாவினைக் காணும்பொருட்டு எல்லாப் புவனத்தில் உள்ளவர்களும் வந்து சேர்ந்தமையால் இமயமலை வருந்தி நடுக்கமுற்றது. பூவுலகத்தின் வடதலை தாழ்ந்தது; தென்தலை உயர்ந்தது. வானவரெல்லாம் ஏக்கமுற்றார். ‘தீங்கு நேர்ந்ததோ' என்று நிலவுலகத்தார் மயக்கம் உற்றார். பெருமானருகே இருந்த பெரிய முனிவரும் வருத்தமுற்றார். எல்லோரும் 'சிவனே! சிவனே! என்று ஒலமிட்டுச் சிந்தை தளர்ந்தார்.
அது கண்ட ஈசன் புன்னகை புரிந்து, அடியார் துயரம் தீர்க்குமாறு, நந்திதேவரை நோக்கி, "கடலைக் கையகத் தடக்கிய அகத்திய முனிவரை இங்கு அழைத்து வருக” என்றார், முனிவரும் வந்து இறைவன் திருவடியிற் பணிந்தார். அந் நிலையில், ஈசன் "குறுமுனியே! இவ்விமய மலைக்கு யாவரும் வந்தமையால் வடதிசை தாழ்ந்தது; தென் திசை உயர்ந்தது; ஆயினும், முனிவா! ஒப்பற்ற நீ இம் மலையினின்றும் நீங்கி வளமார்ந்த தென்னாட்டிற் போந்து, பொதியமலையில் அமர்வாயாயின், உலகமெல்லாம் முன்போலவே சமநிலை யடைந்து விளங்கும்” என்றார்.
பிறை யணிந்த பெருமான் இங்ஙனம் பணித்தபோது இனிய மொழியுடைய தமிழ் முனிவன் அச்சம் எய்தி, "ஐயனே! அடியேன் செய்த குற்றம் ஏதேனும் உண்டோ? திருமணம் காண ஆசையுற்று வந்த தீவினையேனாகிய என்னை இங்கே இருக்கப் பணியாமல் நெடுந்தூரம் செல்லப் பணித்தீரே!” என்று வருந்தினான்.
அப்பொழுது எம்பெருமான் முனிவரை அமர்ந்து நோக்கி, "உன்னைப் போன்ற முனிவர்கள் உலகத்தில் உண்டோ? அன்னவாகனம் உடைய பிரமனும் உனக்கு நிகரல்லன், ஆதலால், நீ கருதிய எல்லாம் தவறாமல் முடிப்பாய். வேறுள்ள முனிவராலும் தேவராலும் இக் காரியம் ஆகுமோ? யாவரினும் சிறந்த பேறு பெற்ற உன்னாலேயே முடியும். ஆதலால், இப்பொழுதே புறப்படு” என்று அருளிச்செய்தார்.
அவ்வுரை கேட்ட முனிவர், "எம்பெருமானே! இப் பணியை எனக்கு அருள்கூர்ந்து அளித்தீர்! ஆயினும் இங்கு நிகழவிருக்கும் தெய்வத் திருமணக் காட்சியைக் கண்டு வணங்காமல் போவதற்கு இயலவில்லையே! நெஞ்சம் வருந்துகின்றதே!” என்று விண்ணப்பம் செய்தார். அம் மொழி கேட்ட கயிலைநாதன், "முனிவா! மனம் வருந்தாதே பொதிய மலைக்குச் செல். அங்கே வந்து நாம் திருமணக்காட்சி தருவோம். மனமகிழ்ந்து காண்பாயாக. எம்மை நினைத்து அம் மலையிற் சில காலம் இருந்து, பின்னர் முன்போலவே எம்மிடம் வருவாயாக" என்று திருவாய் மலர்ந்தருளினார்.
தமிழ் முனிவன் மனமகிழ்ந்து, சிவபெருமான் சேவடியைப் பன்முறை வணங்கிக் கை கூப்பித் தொழுது, பெருமூச் செறிந்து, பிரியா விடை பெற்றுத் தென்திசை நோக்கிச் சென்றான். பொதியம் என்னும் பேர் பெற்ற மலையில் முனிவன் போய் அமர்ந்தபோது வடதலையும் தென்தலையும் துலாக்கோல் போல் சமனாகி நின்றன. உயிர்கள் எல்லாம் துயரம் ஒழிந்து, ஈசனைத் துதித்து மகிழ்ச்சியுற்றிருந்தன.
திருமணக் காட்சி
திருமணத்திற்குக் குறித்த வேளையில், மலையரசன் விரும்பியவாறு, கொற்றவை காவல் செய்ய, இந்திரை அடைப்பை ஏந்த, கங்கை முதலிய நங்கையர் கவரி வீச, காளிகள் குடை பிடிக்க, கலைமகள் பாட்டிசைக்க, திருமகள் கையைப் பற்றிக் கொண்டு உமாதேவி எழுந்தருளித் திருமணச் சாலையை அடைந்தாள்; ஆதியும் அந்தமும் இல்லாத அரும் பெருந்தலைவன் அடிகளில் விழுந்து வணங்கினாள். அரியாசனத்தில் தன் பக்கத்தில் அமருமாறு உமையைப் பணித்தார், ஈசன், இந்திரை முதலிய யாவரும் துதிக்க, உமையவள் இறைவன் மருங்கே அமர்ந்தாள்.
மலையரசன் ஈசனுக்குரிய பூசனை செய்து, புவனம் ஈன்ற உமையவள் கையைப் பாசம் அகன்ற பரமன் கையில் வைத்து, "என் புதல்வியாகிய உமையை உமக்கு அன்புடன் தந்தேன்” என்று மறைமொழி ஒதி, ஈசனை மருமான் எனக் கருதி வாச நன்னீரால் தாரை வார்த்தான்.
அப் பொழுது அரம்பையர் நடனம் செய்தனர்; சித்தரும் கந்தருவரும் கானம் பாடினர், தும்புருவும் நாரதரும் வீணையில் ஏழிசைக் கீதம் இசைத்தனர்; தேவரும் முனிவரும் திருமறை ஒதினர்.
திருமணச் சடங்குகள் முடிந்த பின்னர், தந்தையும் தாயுமாகி உலகமெல்லாம் ஈன்றருளிய ஈசனையும் உமையாளையும் முதலில் பிரமதேவன் வணங்கினான்; பின்னர் மாயவனும், இந்திரனும், முனிவரும், தேவரும் முறையாக வழிபட்டார்கள். அந் நிலையில், மன்மதனை இழந்து கைம்மை நிலையடைந்து துன்புற்ற ரதியாள் ஈசனுடைய பொன்னடிகளில் விழுந்து வணங்கி, "தீவினையேன் துன்பத்தைத் தீர்த்தருளல் வேண்டும்” என்றாள்.
அப்போது, உயிர்க்குயிராக நின்று வினைப்பயனை உணர்ந்து ஊட்டும் கருணை வள்ளலாகிய பெருமான், "மாதே! வருந்தாதே!” என்றுரைத்து, மன்மதன் வந்து தோன்றும்படி மனத்திலே நினைத்தார். உடனே, முன்னைய வடிவத்தொடு தோன்றிய மன்மதன், உமாதேவியாரோடு வீற்றிருந்த சிவபெருமானது பொன்னார் திருவடியை வணங்கித் துதித்து, "ஐயனே, அடியேன் செய்த பெரும் பிழையைப் பொறுத்தல் வேண்டும்” என்றான். அது கேட்ட பெருமான், "மைந்தா! உன்னிடம் சீற்றம் உற்றாலன்றோ இப்பொழுது சீற்றம் தணிவது; மனம் கலங்காதே. நமது கண் அழலால் எரிந்த நின் உடலம் பொடியாகி அப்பொழுதே போயிற்று. ஆயினும், ரதிதேவி வேண்டுகின்றாளாதலின் அவளுக்கு மட்டும் உருவத்துடன் தீ விளங்குவாயாக! ஏனை வானவர் முதலிய யாவர்க்கும் அநங்கனாய் இருந்து உன் அரசியலை நடத்துக” எனப் பணித்தார்.
பின்பு, மன்னுயிர்க்கு உயிராகிய ஈசன், இடப வாகனத்தில் எழுந்தருளி, உமாதேவியாரைப் பக்கத்திற்கொண்டு முன்போலவே வானவரும் பூத கணங்களும் புடைசூழப் பொன்மயமான இமயத்தை விட்டுக் கயிலாய மலையை அடைந்தார்.
தேவர்கள் துயரம்
இவ்வாறு இருக்கையில், "உலகத்தையெல்லாம் அசுரரிடம் ஒப்புவித்து, நமக்குத் துன்பத்தை விளைத்து, யோகிபோல் இருந்தார், ஈசன், நாம் சென்று வேண்டிக்கொண்ட பொழுது இரக்க முற்றுப் பார்வதிதேவியை மணந்தார்; ஆயினும், ஒரு மைந்தனைத் தந்து நம்மைக் காத்தருளாமல் சும்மா இருப்பது ஏனோ? கயிலாய மலையில் நாமனைவரும் இப்பொழுதே சென்று, நெடுங்காலமாக நாம் அடைந்து வரும் துன்பங்களை முறையிடுதலே நன்று" என்று தேவர் பலரும் எண்ணினர்.
அப்படியே அவர்கள் கயிலையங்கிரியை அடைந்து உமையொருபாகத் திறைவன் முன்னே போந்து, செம்மை வாய்ந்த திருவடிகளைத் தலையால் வணங்கி எழுந்து, மெய்யன்போடு துதித்தனர்; "உலகங்களையெல்லாம் படைத்தருளிய ஆண்டவனே! அருமையான வேதங்களும் நின் செய்கையை அறியும் தன்மை யுடையனவோ? உருவம், தொழில், பெயர் ஒன்றும் இன்றியே எங்கும் நிறைந்துள்ள நீ, அம் மூன்றையும் தாங்கி நிற்பது மன்னுயிர்க்கெல்லாம் முத்தி பளித்திடும் கருணையினால் அன்றோ? பழமைக் கெல்லாம் பழமையான பொருள் நீயே என்றால், புதுமைக்கும் புதுமையான பொருளாக உள்ளாய் பழமையும் புதுமையும் நீயே என்றால் மற்றவைகள் அல்லையோ? உன்னை யாதென்று துதிப்போம்? எங்களை முன்னமே படைத்தாய்; ஆட்சி செய்யும்படி எங்களுக்கு அருள் செய்தாய்; எங்களுள் ஒருவனாகவும் உள்ளாய். உன் செயல் எங்களால் அறிய ஒண்ணாது” என்று போற்றினர்.
அப்போது, நீலகண்டனாகிய ஈசன் அவர் முகம் நோக்கி, "நீர் வருந்தி மனம் தளர்ந்தீர் ! உமக்கு என்ன வரம் வேண்டும் என்றாலும் இப்பொழுதே தருவோம்! வேண்டுவதைச் சொல்லுங்கள்” என்றார். அது கேட்ட வானவர் அகமகிழ்ந்து, "ஆதியும் நடுவும் அந்தமும் இல்லாத ஐயனே! அருவமும் உருவமும் இல்லாத ஆண்டவனே! தனக்குவமையில்லாத் தலைவனே! காரணங்களெல்லாம் கடந்து நின்ற கர்த்தனே! போக்கும் வரவும் இல்லாத புண்ணியனே! இன்பமும் துன்பமும் இல்லானே வேதமும் கடந்து நின்ற விமலனே! உமக்கு நிகரான ஒரு குமரனைத் தந்தருளல் வேண்டும்” என்று பிரார்த்தித்தனர்.
அறுமுகவேள் உற்பத்தி
இங்ஙனம் பிரம்மன் முதலிய வானவர் செய்த விண்ணப்பத்தைச் செவியில் ஏற்ற செம்மேனி எம்மான், "நீர் விரும்பியவாறே ஒரு புதல்வனைத் தருவோம்” என்று திருவாய் மலர்ந்து, ஐந்து முகத்தோடு அதோ முகம் கொண்டு, மெய்யிறிஞர் தியானிக்கும் ஆறுமுகங்களோடு தோன்றினார். வானவர் அனைவரும் நெஞ்சம் திடுக்கிட்டு வியப்புற்று, திருவருள் முறைமையை எண்ணித் துதித்து நிற்கையில், அம்முகங்களில் அமைந்த நெற்றிக்கண் ஒவ் வொன்றிலும் ஒவ்வொரு நெருப்புப் பொறியைத் தோற்றுவித்தார், ஈசன், அப் பொறிகள், உயிர்களுக்கு அருள் புரிந்திடத் தோன்றின ஆதலால், ஒருயிரையும் அழிக்கவில்லை; ஆயினும், எல்லாரையும் எல்லாவற்றையும் நடுங்கச்செய்தன. அவற்றின் வெம்மையால் உமையம்மை வியர்த்து, மனக் கலக்க முற்று எழுந்து, பொன்னடிச் சிலம்புகள் புலம்ப, தன் இருக்கையை நோக்கி ஓடினாள்.
தீப்பொறிகள் எங்கும் பரந்து செறிந்தபோது செம்பொற் கோவிலில் அங்குமிங்கும் சிதறிய வானவர்கள் பெருமூச்செறிந்து மீண்டும் எம்பெருமான் பக்கத்தில், வருந்திய மனத்தினராய் வந்தடைந்தார்கள்; "எம் ஐயனே கொடிய அசுரரைக் கொன்று ஒழித்தற்கு ஒரு மைந்தனை நின்பால் வேண்டினோம்; அதற்கு அளவற்ற நெருப்பை நீ அளித்தாய். யாங்கள் இனி எவ்வாறு உய்வோம்? ஆண்டவனே! வெங்கனல் எங்கும் மேலிடுகின்றது; அதன் வெப்பத்திற்கு ஆற்றாது அஞ்சி ஓடிய நாங்கள் உன் திருவடியே சரணம் என்று அடைந்தோம். எம்மைத் தஞ்சம் அளித்துத் தாங்க வல்லார் வேறு யாருளார்?" என்று பணிந்தார்கள்.
அப்போது ஈசன், புதியவாகத் தோன்றிய ஐந்து திருமுகங்களையும் மறைத்து, முன்போல ஒரு முகத்தோடு விளங்கினார்; திருவருள் நெற்றியில் ஆறு முகங்களினின்றும் பிறந்த தீப்பொறிகள் - மண்ணிலும் விண்ணிலும் சென்றன-வெல்லாம் . தம் முன்னே வரும்படி சிந்தித்தார். அப்பொழுதே எங்கும் நிறைந்த நெருப்பு, முன்போல் ஆறு பொறிகளில் அடங்கி, அவர் முன்னே சென்று அடைந்தது. அப்பொறிகளை ஈசன் அமர்ந்து நோக்கினார்.
சரவணப் பொய்கை
அந் நிலையில் வாயு தேவனையும் அங்கித் தேவனையும் நோக்கி, "நீங்கள் இருவரும் இச் சுடர்களை முறையாகச் சுமந்து சென்று கங்கையாற்றில் சேர்த்துவிடுங்கள். கங்கை அவற்றைச் சரவணப் பொய்கையிற்கொண்டு சேர்ப்பாள். இதுவே நும் பணி” என்றார் ஈசன். அவ்வுரை கேட்ட தேவர் இருவரும் திடுக்கிட்டு, மும்முறை இறைவன் திருவுடியில் விழுந்து எழுந்து, "பெருமானே ! ஒரு நொடிப்பொழுதில் உலகமெல்லாம் பரவிய இந் நெருப்பு, நின் திருவருளாற் குறுகி நின்றது. இதனை அடியேம் தாங்கவல்லமோ? இத் தீப்பொறிகளை நெருங்க நினைத்தாலும் எமது மனம் வெதும்புகின்றது; மேனி முழுதும் வியர்க்கின்றது. இவற்றை எவ்வாறு சுமந்து செல்வோம்?" என்று கூறினார்கள். அது கேட்ட ஈசன், "இப் பொறிகளைத் தாங்கிக் கங்கையளவும் சென்றிட, உங்கள் இருவருக்கும் வேண்டிய வலிமை தருகின்றோம்" என்றருளினார். இருவரும் அப் பணியாற்ற இசைந்தனர். பின்னர், அங்கு நின்ற தேவர்களை நோக்கி, "இப் பொறிகள் சரவணப் பொய்கையை அடைந்து, ஒரு குழந்தையாய் வளர்ந்து, சூரன் குலத்தை அழித்து ஒழிக்கும். இனி நீங்கள் யாவரும் போகலாம்” என ஈசன் விடை கொடுத்தனுப்பினார்.
சிவபிரானுடைய திருவருள் முறைமையைக் கங்கை அறிந்து, தன்பால் வந்து சேர்ந்த பொறிகளைத் தலைமீது தாங்கிச் சென்று, ஒரு நாழிகையில் சரவணம் என்னும் பொய்கையிற் சேர்த்தாள். அங்கு அவை செந்தாமரை போல் விளங்கின. அருவமாகவும் உருவமாகவும், ஆதியாகவும் அநாதியாகவும், ஒன்றாகவும் பலவாகவும் நின்ற அரும் பெருஞ்சோதியே அனற்பிழம்பாகிய மேனியும் ஆறு முகமும் பன்னிரு கரமும் கொண்டு உலகம் உய்யுமாறு முருகனாகத் தோன்றிற்று. வேறு எவரிடமும் இன்றிச் சிவபெருமானிடம் அமைந்த ஆறு குணங்களும் உருவெடுத்தாற் போன்று, சரவணப் பூம்பொய்கையில் எழுந்தருளிய முருகன் மன்னுயிரைக் காத்தற்பொருட்டு ஆறு முகங்களைக் கொண் டருளினார். மறையாலும், வாக்காலும், மனத்தாலும் அளவிட இயலாது எங்கும் நிறைந்து விளங்கும் ஈசன், கருணை கூர்ந்து அறுமுக உருவாய்த் தோன்றிச் சரவணப் பொய்கையில் நறுமணங்கமழும் தாமரை மலரில் வீற்றிருந் தருளினார். வளமார்ந்த சரவணப் பொய்கையில், இதழ் நெருங்கிப் பூத்த தாமரை மலரில், சராசரங்களையெல்லாம் காத்தருளும் கருணையால், ஒப்பற்ற குமாரக் கடவுள் இளஞ் சிறு குழந்தைபோல இனிது ஆமர்ந்திருந்தார்.
அப்பொழுது, திருமால் முதலிய தேவர்கள், கார்த்திகைப் பெண்களை அழைத்து, "சொல்லுதற்கரிய பெருமை வாய்ந்த சரவணப் பொய்கையில் சண்முகப்பெருமான் ஒரு குழந்தை போலத் தோன்றுகின்றார். நீங்கள் அறுவரும் பாலமுதம் ஊட்டி அவரை வளர்ப்பீராக” என்றனர். அதற்கு இசைந்து அவர்களும் சரவணப் பொய்கையிற் சென்று சேர்ந்தார்கள்; குமாரக் கடவுளைத் துதித்து நின்றார்கள். தம்மை அடைந்தவர்க்கு வேண்டிய எல்லாம் தருபவர் ஆதலாலே, அப் பெருமான், முன்பிருந்த வடிவத்தை விட்டு வெவ்வேறாக ஆறு குழந்தை வடிவம் கொண்டருளினார்.
ஓர் உருவம் மெல்லத் தவழ, ஒர் உருவம் தளர்ந்து நடக்க, ஓர் உருவம் எழுந்து நிற்கமாட்டாமல் விழ, ஓர் உருவம் இருப்பிலே இருக்க, ஒர் உருவம் பொய்கையைக் கலக்கிச் சுற்ற, ஓர் உருவம் தாயிடத்திருக்க. இத்தனை திருவிளையாடலையும் குமரன் ஒருவனே செய்யலுற்றார்.
நவசக்திகள்
ஈசன் கண்ணினின்றும் எழுந்த பொறிகளின் வெப்பத்தைப் பொறுக்கலாற்றாது உமையம்மை விரைந்தோடிய போது, அவள் பாதச் சிலம்பினின்றும் நவமணிகள் சிதறின. அவ்வாறு சிந்திய மணிகளில், ஈசன், உமையவள் திருவுருவைக் கண்டு ’வருக’ என்று திருவாய் மலர்ந்தவுடனே, நவமணி உருக்களும் நவசக்திகளாயினர். அந் நவ மாதரும் கருவுற்று, உமையம்மையின் அருளைப் பெற்று, விடை கொண்டு, வீர மைந்தரை ஈன்றனர். மாணிக்கவல்லி வீரவாகுவையும், மற்றைய வல்லிகள் முறையே எட்டு வீரரையும் பெற்றெடுத்தார்கள். இங்ஙனம் தோன்றிய அருந்திறல் வீரர்கள் மாதொரு பாகனது மலரடி பணிந்து எழுந்தார்கள். அப்போது ஈசன் பார்வதியைப் பரிவுடன் நோக்கி, "இவர் மதியுடையார்; வலியுடையார், மானமுடையார்; இன்னோர் நம் மைந்தர்; புதியரல்லர், நந்தி கணத்தைச் சேர்ந்தவர்” என்று நவின்றார்.
முருகனைக் கயிலாயத்திற்கு எடுத்து வருதல்
இது நிற்க. துன்பமுற்ற பிரமன் முதலிய தேவர்கள் இன்பமுறும் வண்ணம், "நம் கண்ணிலே தோன்றிக் கங்கைப் பொய்கையிலே வளரும் நின் புதல்வனை இம் மலைக்கு அழைத்து வருவோம், ’வருக’ என உமையிடம் உரைத்தார் ஈசன், அம்மையும் அதற்கிசைய, இருவரும் திருக்கோயிலினின்றும் புறப்பட்டு, கயிலையை விட்டு, மேரு மலையினும் நெடிய இமயமலைப் பக்கம் போந்து, அன்னங்கள் விளையாடும் சரவணப் பொய்கையை வந்தடைந்தார்கள். அங்கு அறுவகை உருவு கொண்டு அமர்ந்த குமரன் தன்மை கண்டு, கருணைகூர்ந்து, பொய்கையின் கரையிலே நின்றார்கள். தாமரை பூத்த தடாகத்தில் ஆறு வேறுருவம் கொண்டு வீற்றிருந்த அரும்பெருங் குமரனும், அண்டர் நாயகனோடு அகில மீன்ற அன்னையைக் கண்டு முக மலர்ந்து மனமகிழ்ந்தார்.
அந் நிலையில் உமையம்மை சரவணப் பொய்கையில் இறங்கித் தன் மைந்தனுடைய ஆறு உருவங்களையும், அன்புடன் அணைத்தெடுத்து, ஆறு முகங்களும் பன்னிரு தோள்களும் உடைய ஒரு திருவுருவமாகச் செய்தருளினாள். உயிர்கள் எல்லாம் ஒடுங்கும் ஊழிக் காலத்தில் எம்பெருமானுடைய சக்திகள் அனைத்தும் ஒன்றாகச் சேரும் தன்மைபோல், அந்தமற்ற ஆறு உருவமும் ஒன்றாகவே, கந்தன் என்று பேர் பெற்றார், குமரன். அப் பொய்கையில் தொழுது நின்ற கார்த்திகைப் பெண்களை நோக்கி, ஈசன், "நீங்கள் கந்தனை எடுத்து வளர்த்த முறைமையால் இவன் உங்கள் மைந்தன் என்னும் பெயர் பெற்றுக் கார்த்திகேயன் ஆகுக. உங்களுக்கு உரிய நாளாகிய கார்த்திகையில் கந்தனது திரு வடியை வழிபடுவோரது குறை தீர்த்து அவர்க்குப் பரகதியும் தருவோம்” எனப் பகர்ந்தார்.
முருகன் திருவிளையாடல்
பொது விடங்களிலும், தாமரைக் குளங்களிலும், மெல்லிய தென்றல் தவழும் சோலைகளிலும், வற்றாத நீருடைய ஆறுகளிலும் குன்றுகளிலும் குமாரவேள் உலவுவார்; ஆறு முகங்களோடு குழந்தையாக வருவார்; ஒரு முகத்தோடு காட்சி தருவார்; வாலிபனாய் வருவர்; வேதியர் போலவும் முனிவர் போலவும் தோன்றுவார்; அம்பு தொடுக்கும் வீரரைப் போல எங்கும் திரிவார்.
முருகனின் பெருமையைக் கூறுதல்
கந்தன் செய்த திருவிளையாடலைக் கண்டு சிந்தை மகிழ்ந்த உமையம்மையிடம் ஈசன் அவர் சிறப்பினை உணர்த்தலுற்றார். "மாதே! நமது கண்ணில் தோன்றிய குமரனைக் கங்கை தாங்கிச் சென்று சரவணத்திற் சேர்த்தமையால், அவன் காங்கேயன் என்ற பெயரைப் பெற்றான்; அழகிய சரவணப் பொய்கையில் குழந்தையாக வளர்ந்தமையால் சரவணபவன் ஆயினான்; கார்த்திகைப் பெண்கள் தாயாராக வந்து பாலூட்டிய பான்மையால் கார்த்திகேயன் என்று ஒரு பேர் பெற்றான்; அவனுடைய ஆறு உருவங்களையும் நீ ஒன்றாகத் திரட்டிச் சேர்த்தமையால் கந்தன் என்னும் பெயர் பெற்றான். நம் ஆறுமுகங்களும் கந்தனுடைய முகங்களாய் அமைந்தன. பிரணவத்தோடு கூடிய ஐந்தெழுத்துமே இவன் பெயரின் ஆறெழுத்தாகப் பொருந்தின. ஆதலால், ஆறுமுகன் நமது சத்தியேயாம். அவனுக்கும் எமக்கும் வேறு பாடில்லை. நம்மைப்போல் அவனும் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்துள்ளான்; குழந்தை போல் இருப்பினும் யாவையும் உணர்ந்தவன்; தன்னை வழிபடும் அடியார்க்குச் செல்வமும் ஞானமும் சிறப்பும் அருள வல்லவன். இனிமேல் குமரவேள் வேதத்திற் கெல்லாம் மூலமாக உள்ள பிரணவத்தின் பொருள் யாது?’ எனப் பிரமதேவனை வினவுவான்; அவன் அறியாமல் விழிப்பான்; அப்போது குமரன் அவன் தலையிற் குட்டிச் சிறைக் கோட்டத்தில் அடைத்துவிட்டுத் தானே பல காலம் படைப்புத் தொழில் புரிவான். அப்பால் தாரகாசுரனையும் சிங்கமுகாசுரனையும் சூரபன்மாவையும், ஏனைய அசுரரையும் அழித்துத் தொலைத்து, தேவர்கள் துயரம் தீர்த்து, அன்னார்க்குப் பேரருள் புரிவான்" என்று பேசினார், பெருமான்.
முருகன் விளையாட்டைக் கண்டு வானவர் வருந்துதல்
மைந்தனது சிறப்பெல்லாம் கேட்டு உமையவள் மன மகிழ்ந்திருந்தாள். குமரவேள் அரிய திருவிளையாடல் புரியலுற்றார்; எட்டுப் பெருமலைகளையும் ஓரிடத்தில் ஒன்றாகக் கூட்டுவார்; பின்பு அவற்றைத் தலைகீழாக நிறுத்துவர்; நெடுங் கடல்களை ஒன்றாகச் சேர்ப்பார்; பூவுலகத்தைச் சூழ்ந்த சக்கரவாள மலையைப் பாதலத்திற் செல்ல அழுத்துவார்; அகன்ற கங்கை யாற்றை அடைப்பார்; இவ்வாறு மண்ணுலகில் வாழும் உயிர்களும், விண்ணுலகிலுள்ள தேவரும் அச்சம் கொண்டு நடுங்குதலேயன்றி, அழிவுறாத வகையில் அளவற்ற திருவிளையாடல்கள் புரிந்தார், குமரவேள். இங்ஙனம் எல்லாவற்றையும் நிலைகுலையச் செய்த பாலனை இந்திரன் முதலிய வானவரும் திக்குப் பாலகரும் கண்டு, "அந்தோ! மண்ணையும் விண்ணையும் மாறுபடுத்தியவன் இவனே. இவனைச் சிறு பாலன் எனக் கருதலாகாது. இவன் வலிமை கண்டால் கொடிய அசுர குலங்களிலும் இவன் கொடியவன்; மாயவித்தையில் யாரினும் வல்லவன். இவனை வெம்போரில் வெற்றி கொள்வோம்” என்று எண்ணித் துணிந்தார்கள்.
வானவர் தலைவனாகிய இந்திரன், வலிய தந்தங்கள் பெற்ற வெள்ளை யானையின்மீது ஏறி, வச்சிரம், வாள், குந்தம், சிலை இவற்றைக் கையிலே கொண்டு, போர்க்கோலம் பூண்டு, தேவ சேனையோடு சென்று கந்தப் பெருமானை வளைந்துகொண்டான். அப் பெரும் படையைத் தாக்கினார், முருகவேள். போர்க்களத்தில் விழுந்தார். சில தேவர்; ஆற்றாது தோற்று ஓடினார், சில தேவர்; அப்போது ஊழிக் காலத்தில் எல்லோரையும் அழித்து நின்ற ஈசனை ஒத்தார், முருகன்.
சூரியனும், சந்திரனும், இந்திரனும் எட்டுத் திக்குப் பாலகரும், வெள்ளையானையும் மடிந்து கிடந்த போர்க் களத்திற்குச் சென்றான், விண்ணவர் குருவாகிய வியாழன் என்னும் பிருகஸ்பதி. எல்லா முணர்ந்த வியாழன் ஒவியத்தில் எழுத முடியாத பேரழகு வாய்ந்த பிள்ளைப் பெருமானைத் தொழுது துதித்து நின்று, "கருணையங் கடலே உலகத்தை வருத்தும் அசுரரையன்றோ நீ ஒறுத்திடல் வேண்டும்? இவ் வேழை வானவர் நின் திருவடியை மறவாத அன்பர்கள். இவர் செய்த பிழையைப் பொறுத்தருளல் வேண்டும்” என்று விண்ணப்பம் செய்தான். அப்பொழுது குமரவேள் புன்னகை கொண்டு, இந்திரன் முதலிய தேவர்களும் யானையும் உயிர் பெற்று எழும்படி திருவருள் புரிந்தார்.
வானவர் முருகனை வழிபடல்
எழுந்த வானவர், முருகவேள் முன்னின்று, "கந்தா போற்றி! முக்கட் பெருமான் அளித்த முருகேசா போற்றி! பன்னிரு புயத்தாய் போற்றி! கடம்ப மலர் அணிந்த கடவுளே போற்றி! ஆறுமுக ஆதியே போற்றி! சோதியே போற்றி! தற்பரனாய் நின்ற் தந்தையே போற்றி! என்றும் இளையாய் போற்றி! பெரும் பெயர்க் குமரா போற்றி!” என்று தொழுதார்கள். அந் நிலையில் எட்டுத் திசை களும் பதினான்கு உலகமும் எட்டு மலையும், சக்கரவாளகிரியும், ஏழு கடலும், பெரும்புறக் கடலும், அண்ட வரிசையும், அனைத் துயிரும், பொருள்களும் ஆகி, அயன் அரி அரன் என்னும் திரிமூர்த்திகளும் தன்னுள்ளே அமைய ஒரு பேருருவம் (விசுவ ரூபம்) கொண்டார் குமார மூர்த்தி. இந்திரன் முதலிய வானவர்கள் அறுமுகப்பெருமான் திருவுருவத்தை அவர் அருளால் அடிமுதல் முடிவரை நெடிது நோக்கி, அளவிறந்த அண்டங்களும், அழிவற்ற ஆன்ம கோடிகளும், திரிமூர்த்திகளும் தேவர்களும் அங்கிருப்புக் கண்டு வணங்கித் துதித்தார்கள்; ‘ஐயனே! எல்லா வுலகமும் நீயே யாகி நின்ற தன்மையை இந் நாள்வரை அறிந்திலோம். இன்று நீ வந்து உணர்த்தலால் உணர்ந்தோம். எம்பெருமானே! உன் திரு வருவேயன்றி வேறு ஒரு பொருளும் காணோம். சிறியவராகிய நாங்கள் உனது தோற்றத்தை அறிய வல்லமோ? திருமாலும் பிரமனும் நெடுங்காலம் அடிமுடி தேடியும் அறியப்படாமல் அனல் உருவாக நின்ற சிவபெருமான் வடிவே போல் நின் திருவுருவும் அமைந்தது. எம்பெருமானது திருவருளை அவர்கள் எம்மைப்போற் பெற்றிருந்தால் அLயும் முடியும் கண்டிருப்பார் அன்றோ? ஆதலால் எம் ஐயனே நீ அருவுருவாகி நின்ற ஆதி நாயகனே ஆகும். அடியேம் செய்த அருந்தவத்தால் எம் துன்பத்தைத் ‘துடைத்து, சூரனாதிய அசுரகரைக் கொன்று வானுலகத்தில் எம்மை வாழ வைத்தற்காகப் பாலன் வடிவத்தில் வந்தாய்" என்று வணங்கினார்கள்.
அப்போது எம்பெருமான் கருணை கூர்ந்து, வான் அளாவி நின்ற பேருருவத்தை நீத்து, ஆறு முகங்களோடு முன்னைய வடிவத்திலே தோன்றினார். வானவர் கோமான் வணங்கித் துதித்து, "ஐயனே! செருக்கும் தருக்கும் உற்ற சூரன் முதலிய பகைவரை யெல்லாம் அழித்து, வானவரும் யானும் பக்கத்தில் நின்று பணி செய்ய, வானத்தில் உயர்ந்த சுவர்க்க லோகத்தை அடைந்து நீயே என் அரசியலை நடத்தி அருள வேண்டும். இதுவே என் வேண்டுகோள்" என்றான். அன்பினால் வழிபடும் அடியார்க்கு இம்மைச் செல்வமும், மறுமைச் செல்வமும், வீட்டின்பமும் கருணை கூர்ந்து அளிக்கும் அறுமுகப் பெருமானுக்கு இந்திரன் தன் செல்வத்தைக் கொடுப்பதாகக் கூறிய வாசகம், அங்கித் தேவனுக்கு ஒரு தீப்பொறி கொடுப்பேன் என்று ஒருவன் சொல்லும் சொல்லை ஒக்குமன்றோ? அந் நிலையில் இந்திரனை நோக்கிக் குமாரவேள் இளநகை கொண்டு, "நீ நமக்குத் தந்த செல்வத்தை நாம் உனக்குத் தந்தோம். நீங்கள் அனைவரும் சேனைகளாக வருக. நாமே சேனாபதியாகி, அசுரர் குலத்தை யெல்லாம் நாசம் செய்வோம். வருந்த வேண்டா” என்று அருளினார். அப்போது இந்திரனும் வானவரும் தம் மனத்துயர் நீங்கும் வண்ணம் ஐயனை அருச்சனை செய்து அன்புடன் வணங்கித் தொழுதனர். கருணை வள்ளலாகிய குமாரவேள் மறைந்து கயிலாய மலைக்குச் சென்றார்.
வேள்வியில் எழுந்த ஆட்டுக் கடாவை முருகன் அடக்குவித்தல்
நாரத முனிவர் சிவபெருமானை நோக்கி ஒரு வேள்வி செய்யத் தொடங்கினார். சிறந்த முனிவர்களும், தேவர்களும், தவத்தால் உயர்நத வேதியர்களும் சூழ்ந்திருந்து செய்த அவ்வேள்வித் தீயில் செவ்வானம் போன்ற ஆட்டுக்கடா ஒன்று தோன்றிற்று, "எங்கும் யாகம் செய்பவர்கள் எங்கள் இனமாகிய ஆடுகள் பலவற்றைக் கொல்கின்றார்கள்; ஆதலால், யான் இங்கு வேள்வி செய்பவர்களைக் கொல்வேன்” எனத் துணிந்து அங்கித்தேவனது வாகனமாகிய ஆட்டுக்கடா எழுந்து வந்தாற்போல வந்தது, அத்தகர் கழுத்தில் அணிந்த மணிகள் கலீர், கலீர் என்று ஒலிக்க கிண்கிணியும் சிலம்பும் கால்களிற் புலம்ப, விரைந்து வந்த தகரைக் கண்டு யாகசாலையில் இருந்தவர்கள் அச்சமுற்றுச் சிதறி ஓடினர். இங்ஙனம் அத் தகர் எங்கும் திரிந்து சீற்றத்தோடு உயிர்களைச் சிதைத்து வருகையில், முனிவர்களும் நாரதரும் வானவரும் ஓடிக் கயிலாய மலையை அடைந்தார்கள்; அங்கு முருகவேளைக் கண்டு அடிபணிந்தார்கள். அன்னார் கொண்ட துயர் கண்ட பெருமான், "நீங்கள் மிக வருந்துகின்றீர்கள்; என்ன நேர்ந்தது?” என்று வினவினார்.
”ஐயனே! சீற்றமுற்று எழுந்து ஒரு தகர் அழிவுசெய்து திரிகின்றது. அதன் ஆற்றலை அடக்கி, எமது அச்சம் தீர்த்து, யாகக் குறைவையும் நிறைவேற்றி எங்களைப் பாதுகாத்தல் வேண்டும்" என அவர்கள் பிரார்த்தித்தார்கள். அவர்களைக் குமாரவேள் அருளோடு நோக்கி, 'அஞ்ச வேண்டா' என்று அபயம் அளித்தார்; தம்மையே தஞ்சமாகக்கொண்டு வணங்கும் பரிசனங்களுள் வீரவாகுவை நோக்கி, "நெருப்பிலே பிறந்து இம் முனிவர் செய்யும் வேள்வியை அழித்து விண்ணிலும் மண்ணிலும் உள்ள உயிர்களைக் கொன்று திரிகின்றதாம் ஒரு தகர். அதனை விரைவிற் சென்று கொண்டுவா” என்று பணித்தார். அப் பணி தலை மேற்கொண்ட வீரவாகு, எல்லோரும் நடுங்கக் கொல்லும் தொழிலைக் கொண்ட அத் தகர் அஞ்சும் வண்ணம் ஆரவாரித்து விரைந்து போந்து, அதன் கொம்புகளைப் பற்றி இழுத்துக்கொண்டு, கயிலாய மலையை அடைந்து முருகவேள் முன்னே விடுத்தார். குற்றமற்ற முனிவரும் தேவரும் மனமகிழ்ந்தார்கள். நாரத முனி வரும் மீண்டும் பூவுலகிற் போந்து வேள்வியை நிறைவேற்றினார். அவர் ஆற்றிய தவத்தால் அன்றுமுதல் முருகவேள் அம் மேடத்தை வாகனமாகக் கொண்டார்.
செருக்குற்ற பிரமனை முருகன் சிறை செய்தல்
இங்ஙனம் மேட மூர்த்தியாகிய முருகவேள் திருக்கயிலாய மலையில் விளையாடிக் கொண்டிருக்கையில் ஒரு நாள் பிரமன் முதலாயினோர் சிவ பெருமான் திருவடிகளைத் தரிசிக்க ஆங்குப் போந்தார்கள். சிவபெருமான் சேவடி பணிந்து மீண்ட வானவர் முதல்வனாகிய பிரமதேவனை முருகவேள் நோக்கி, "இங்கு எம் முன்னே வருக” என்றழைத்தார். பிரமனும் முன்னே சென்று, முருகன் திருவடிகளில் விழுந்து வணங்காமல் அஞ்சலி செய்து நின்றான். அப்போது கந்தவேள் அவன் உள்ளத்தில் அமைந்த கர்வத்தை உணர்ந்து, "போதனே? அமர்க!” என்று கூறி இருக்கச் செய்து, "நாள்தோறும் நீ என்ன தொழில் புரிகின்றாய்? என்று வினவினார். "ஈசன் ஆணையால் எல்லாவற்றையும் படைத்தல் என் தொழில்" என்று மறுமொழி கூறினான், பிரமன், அது கேட்ட முருகவேள், குறுநகை செய்து, "மண்ணிலும் விண்ணிலும் ஆள்ள உயிர்களை எல்லாம் படைத்தல் உன் தொழிலாயின், வேதம் முழுவதும் உனக்கு வருமோ? சொல்லுக” என்றார். அப்போது பிரமன், பிரணவத்தை முன்னே சொல்லி வேதத்தின் அடியெடுத்து ஓதத் தலைப்பட்டான். அது கண்ட முருகவேள், "நில்லு நில்லு நீ முதலிற் சொல்லிய 'ஓம்' என்னும் சொல்லின் பொருள் கூறுக” எனப் பணித்தார். பிரணவத்தைத் தம் திருமுகங்களுள் ஒன்றாக உடைய முருகன் இவ்வாறு கூற, அதன் பொருள் அறியாத பிரம்மன் எட்டுக் கண்ணையும் வெறித்து விழித்தான்; வெட்கமுற் றான்; விக்கினான்; திகைத்தான்; இருந்தான். பிரம்மன் ஞான வடிவாகிய பிரணவத்தை ஓதினவனே யன்றிப் பொருள் உண்ர்ந்தவன் அல்லன், ஈசன் அருள் பெற்று அதனை முன்னமே அறிந்தானில்லை. என் செய்வான்? மயங்கினான். அதன் பொருளை யாவ்ரே சொல்ல வல்லார்? மாசற்ற மறைகளுக்கெல்லாம் முதலிலும் முடிவிலும் ஒதப்படுவதாகிய ஓம் என்னும் ஓர் எழுத்தின் உண்மை யுணராது, மும்மூர்த்திகளுள் ஒருவனாகிய பிரமதேவன் மயங்கினான் என்றால், நாம் சிலவற்றை அறிந்துள்ளோம் என்பது * நகையாடற்குரிய தன்றோ? கலை ஞானத்தால் அறிய முடியாத பிரணவத்தின் பொருளைக் கூறமாட்டாது மயங்கிய பிரமனை நோக்கி, "இதன் பொருள் உணர்ந்திலையே! இப்படித்தான் நீ படைப்புத் தொழில் செய்வதோ?” என்று நான்கு தலைகளும் குலுங்க அவனைக் குட்டினார், குமாரவேள்; மேலும், அவன் மெய்யில் விலங்கு பூட்டிச் சிறைக்கோட்டத்தில் அடைப்பித்தார். கந்தமாதன கிரியை அடைந்து தாமே எல்லா உயிர்களையும் படைக்கத் திருவுளம் கொண்டார். மன்னுயிர்க்கு உயிராய், பரஞ்சுடர் ஒளியாய், வேதத்தின் எல்லையாய், படைத்தல் முதலிய ஐந்தொழிலுக்கும் மூலமாய் அமைந்த அறுமுகச் செவ்வேள் பிரமதேவனாக அமர்ந்து படைத்ததும் ஓர் அற்புதமோ?
திருமால் முதலியோர் ஈசனிடம் முறையிடல்
இவ்வாறு நெடுங்காலம் கழிந்தது. பிரமதேவனைச் சிறையி னின்றும் விடுவிக்கக் கருதிய திருமால், தேவர்களோடும் முனிவர்களோடும் திருக்கயிலாய மலையை அடைந்து, நந்தி தேவரால் முறைப்படி உள்ளே அனுப்பப்பெற்று, தன் நிகரில்லாத் தலைவன முறை திருவடிகளிலே விழுந்து எழுந்து, "ஆண்டவனே! நின் மகன் இங்கு வந்த பிரமதேவனைப் பிரணவத்தின் பொருள் கேட்டான்; அதனை அறியாத அவனைச் சிறையில் இட்டான்; படைப்புத் தொழிலும் தானே செய்கின்றான். ஐயனே கந்தவேள் போலவே பிரமனும் உமக்குப் பிள்ளையே! அவன் தீவினையால் அளவிறந்த காலம் அருஞ்சிறையில் அகப்பட்டு மனம் நொந்து வாடி வருந்துகின்றான்” என்று விண்ணப்பம் செய்தான்.
ஈசன் பிரமனை விடுவித்தல்
அது கேட்ட சிவபெருமான் மனமிரங்கி, இடபத்தின் மேல் எழுந்தருளி, அறுமுகப் பெருமான் வீற்றிருந்த கோயில் முன்னே வாகனத்தினின்றும் இறங்கி, வானவர் போற்ற உள்ளே சென்றார். கருணையோடு வந்த பெருமானைக் கண்ட முருகவேள், ‘என் தந்தை வந்தார்‘ என்று மனமகிழ்ந்து எழுந்து எதிர்கொண்டு அவர் திருவடிகளை வணங்கி, அவரை அழைத்துச் சென்று அழகிய அரியாசனத்தில் எழுந்தருளச்செய்து, "உயிர்க்குயிராகிய கர்த்தனே! இங்குப் போந்த காரியம் யாது?" என்று வினவினார். அப்போது சிவபெருமான், "ஐய! மெல்லிய மலர்க் கோயிலில் வசிக்கும் பிரமனைச் சிறையில் நீ அடைத்து வைத்தாய் அச் சிறையை நீக்கக் கருதித் திருமால் முதலிய தேவருடன் இங்கு வந்தோம். அவனை விட்டுவிடு” என்று கூறினார்.
இங்ஙனம் ஈசன் அன்புடன் பேசிய இனிய மொழிகளைக் கேட்ட முருகவேள், தலையில் அமைந்த அழகிய திருமுடியை அசைத்து, "ஐயனே, எவ்வுயிர்க்கும் உறுதி பயப்பதாகிய பிரணவத்தின் பொருள் அறியாத பிரமன், சதா காலமும் உயிர்களைப் படைக்கின்றான். என்பது பேதைமையே! அவன் வேதங்களை உணர்ந்தான் என்பதும் அத்தன்மையதே, எல்லா உலகங்களையும் படைக்கின்ற பெருந் தொழிலைக் கைக்கொண்டிருத்தலால், பிரமன் யாரையும் எப்பொருளையும் மதிக்கின்றா னல்லன்; நித்தலும் உம்மை வழிபட்டும், தான் என்னும் அகங்காரம் தவிர்ந்தானில்லை. ஆதலால், அவனைச் சிறையினின்று நீக்கமாட்டேன்” என்று கூறினார். அப்போது கருணை வள்ளலாகிய சிவபெருமான், "மைந்தனே! என்ன செயல் செய்கின்றாய்! பிரமனை விடும்படி நந்தியிடம் சொல்லியனுப்பினோம். அவன் சொன்ன சொல்லையும் செவியிற் கொள்ளவில்லை. இங்கு நாமே வந்து சொல்லியும் கேட்கவில்லை; தடுத்துப் பேசுகின்றாய்” என்று கோபிப்பார் போலக் கூறினார். எம்பெருமானது திருவுள்ளக் குறிப்பை உணர்ந்த அறுமுகன், "ஐயனே! உமது சித்தம் இதுவாயின், பிரம தேவனைச் சிறையினின்று விடுவித்து விரைவில் தருவேன்" என்று அன்புடன் பணிந்தார். அவ்வண்ணமே செய்க" என்று பெருமான் அருள்புரிந்தார்.
அந் நிலையில் பூதர்களுள் சிலர் சென்று, ஒரு குகையில் ஒடுங்கியிருந்த பிரமதேவனது விலங்கைத் தறித்து, அவனைக் கொண்டுசென்று குன்றுதோ றாடும் குமரவேள் முன்னே விட்டார்கள். அவர் பிரமதேவன் கையைப் பற்றி அழைத்துச் சென்று எம்பெருமான் முன்னே விட்டார். ஈசனது பாதம் பணிந்து எழுந்து, வெட்கத்தால் குறுகி நின்றான் பிரமன், ஈசன் அவனை நோக்கி, "இருஞ்சிறையில் பல நாள் இருந்து இளைத்தாய் போலும்" என்று கூறியருளினார். இவ்வாறு நாதன் நல்லருள் புரிந்த போது பிரமதேவன், "ஐயனே! குமாரவேள் கொடுத்த தண்டனை குற்றமன்று. அது நல்லறிவு தந்தது; என் அகங் காரத்தை ஒழித்தது; துன்பம் பயக்கும் தீவினைகளை அழித்தது: என்னைப் புனிதன் ஆக்கியது" என்று பேசினான். -
அது கேட்ட மகிழ்வுற்ற ஈசன், அழகிய குமாரனை எடுத்து அணைத்து, உச்சி மோந்து, "பிரமனும் அறியாத 'ஓம்' என்னும் சொல்லின் பொருள் உனக்குத் தெரியுமோ? தெரிந்தால் அதனை இப்போதே சொல்” என்று வினவினார்.
"முற்றறிவுடைய முதல்வா! உலகமெல்லாம் ஈன்ற உமாதேவியார்க்கு மற்றையோர் அறியாதவாறு நீர் சொல்லி யருளிய மூலப் பொருளை எல்லோரும் கேட்க இங்குக் கூறலாமோ? என்ற குமாரவேள் சொல்லிய பொழுது, ஈசனார் மனம் குளிர்ந்தார். மீண்டும் மைந்தனை நோக்கி, "எமக்கு மட்டும் அப் பொருளை மறைவாகக் கூறுவாயோ?" என்று தம் திருச்செவியைச் சாய்த்தார், ஈசன், அப்போது முருகன் பிரணவம் என்னும் ஓங்காரத்தின் உட்பொருளை எடுத்துரைத்தார். அவ்வுரை கேட்டு, ஞான நாயகனாகிய ஈசன் அகமகிழ்வடைந்தார்; மைந்தனுக்கு நல்லருள் புரிந்தார்; அங்கேயே தலைமையோடு இருக்கும் வண்ணம் திருவருள் செய்து, முன்போலவே இடப வாகனத்தில் ஏறிச் சென்று எம்பெருமான் கயிலாய மலையை அடைந்தார்.
இந்திரன் ஈசனிடம் முறையிடல்
இவ்வாறு சில நாள் இருந்த குமரவேள், திருவருட் இந்திரன் செயலால், கயிலாய மலையில் வீற்றிருந்தருளும் அம்மையப்பருடைய திருவடிகளை வணங்கத் திருவுளம் கொண்டார். அங்ஙனமே சென்று, அவரைத் தொழுது, கயிலாயத்தில் கந்தவேள் தங்கியிருக்கையில், இந்திரன், தன் நெடிய மனக்கவலையைப் பிரமதேவனிடமும் திருமாலிடமும் முறையிட்டு அவரை முன்னிட்டுக் கயிலாய மலையை வந்தடைந்தான். "அன்பினால் உலகம் காக்கும் அம்மையோடு அமர்ந்து அருளும் ஆண்டவனே அளவற்ற காலமாக அருந்திறல் வாய்ந்த சூரன் முதலிய அசுரர்களால் வன்மையற்று வருந்தினோம்; ஒடுங்கினோம். என் மைந்தனாகிய சயந்தனும், எண்ணிறந்த வானவரும், எல்லையற்ற அழகுடைய அரம்டையரும், கொடுந்தொழில் புரியும் அரக்கர்கோன் ஆளும் நகரத்தில் சிறையிருக்கிறார்கள். எம்பெருமானே! முன்பு யான் தவம் முயன்றபொழுது, நீர் எழுந்தருளி, நம்மிடம் ஒரு குமரன் தோன்றுவான்; அவனைக்கொண்டு அசுரரை அழித்து உமது துயரத்தை ஒழிக்கின்றோம் என்று அருளிச்செய்தீர்! அவ்வாறே திருக்குமாரனும் தோன்றியுள்ளார்; ஆயினும் இன்றளவும் எம் துன்பம் தீர்ந்ததில்லை. மும்மை யுலகும் வணங்கும் எம்மானே! எம்மைப் பற்றி நிற்கும் கொடிய தீவினையின் பயன் இன்னும் தீர்ந்ததில்லையே! சூரனது வலிமையை அழிக்கத் தக்கவர் வேறு யாருமிலர். கங்காதரனே! இங்கே முறை யிடுவதல்லால், வேறு யாரிடம் சொல்லுவோம்? துன்பத்தை ஒழிக்கவும், செல்வத்தை அளிக்கவும், தந்தையரேய்ன்றி மைந்தர்க்கு வேறு யாருள்ளார்? ஆதலின், இனி அடியேங்களைக் காத்தருளல் வேண்டும்” என்று இந்திரன் வணங்கி நின்றான்.
அசுரனை அழிக்க ஈசன் முருகனை அனுப்புதல்
இம்மை மறுமைப் பயன்களை அளித்தருளும் இறைவன் அச் சொற்களைக் கேட்டுக் கருணை கூர்ந்து, "இனி மன வருந்தாதீர்!" என்று அருளிச்செய்து அருகே யிருந்த முருகன் திருமுகத்தை நோக்கி, "உலகத்தை நிலை குலைத்துப் பல உயிர்க்கும் துயர் இழைத்து, வானவர் நகரத்தை அழித்து, தீமையே புரிந்து திறம்பட வாழும் சூரனையும் அசுரர் குலத்தையும். நீ சென்று கொன்று, சுவர்க்கலோகத்தின் ஆட்சியை மீண்டும். இந்திரனுக்குக் கொடுத்து இங்கு வந்து சேர்வாயாக" என்று திருவாய் மலர்ந்தார். பின்னர், பஞ்ச பூதங்களையும் அழிக்க வல்லதும், உயிர்கள் அனைத்தையும் ஒருங்கே நாசம் செய்ய வல்லதும், மாற்றாரது வலிமையையும் வரங்களையும் சிதைத்து உயிருண்ண வல்லதும், கொல்லும் படைக்கலங்களுக் கெல்லாம் தலைமையுற்று விளங்குவதும் ஆகிய ஒப்பற்ற வேலாயுதத்தை ஈசன் குமாரவேள் கையில் கொடுத்தார். அந் நிலையில் உமையம்மை, அருமைத் திருக்குமாரனை அருகில் வைத்து, அருளோடு அணைத்து, உச்சி மோந்து, "அப்பா! நூறாயிரத்து ஒன்பது வீரர்களும் உன்னை நெருங்கிவர, பெருந்திறல் பெற்ற அசுரர் குலத்த்ை வேரறுத்து வானவர் குறையைத் தீர்த்து இங்கே வருக” என்று ஆசி கூறினாள். இவற்றைக் கண்ட திருமாலும், பிரமனும், இந்திரனும், "ஆண்டவனே! எம்மைப் பாதுகாத்தருளினி எங்கள் மனத்தில் இனி ஒரு குறையும் இல்லை; இன்றே பிழைத்தோம், பிழைத்தோம்” என்று அம்மையப்பருடைய திருவடிகளைத் தொழுதார்கள். அப்போது எம்பெருமான், "நீங்களும் நன்மை புரியும் கந்தனோடு செல்வீர்களாக” என விடை கொடுத்தருளினார்.
படை திரண்டு எழுதல்
முருகவேள் பெரியதொரு தேரின்மீது எழுந்தருளினார். அவர் அருளைப் பெற்ற வீரர்கள் அருகே வந்து சேர்ந்தார்கள். முனிவரும் தேவரும் முறையாகச் சூழ்ந்து நின்றார்கள். திருநீறும் கண்டிகையும் அணிந்தவர்கள்; சிவபெருமானையன்றி மற்றெவரையும் தெய்வமாக மனத்திலும் கருதாதவர்கள்; மாற்றார் உயிரைப் பலியாக உண்டவர்கள்; கூற்றுவனது வீரப்படையையும் வெற்றி கொள்ளும் திறலுடையவர்கள்; இத்தகைய பூதப்படை வீரர்கள் தத்தம் தலைவரோடு திரண்டெழுந்து சண்முகப் பெருமானை அடைந்து, கையெடுத்துத் தொழுது துதித்துப் பெருங்கடல் உடைந்தாற் போன்று ஆரவாரித்தார்கள். அப்போது முருகவேள் நெடுங்கடலின் நடுவே இலங்கும் சூரியன் போலப் பரந்த சேனை சூழ்ந்துவரக் கயிலாய மலையை விட்டு நிலவுலகத்தில் வந்தருளினார்.
கிரவுஞ்ச மலையின் தன்மையை முருகவேள் அறிதல்
வழியில், கிரவுஞ்சம் என்னும் மலை நிமிர்ந்து ஓங்கி நின்றது. அதைக் கண்டு வானவர், மனம் பதைத்தார். இந்திரன் கலக்கங் கொண்டு நின்றான். அப்போது நாரதர் முருகப்
பெருமானது மலரடி தொழுது, "ஐயனே! இதுதான் மலையின் கிரவுஞ்சம் என்னும் மலை. இதன் பக்கத்திலுள்ள மாய மாநகரில் சூரன் தம்பியாகிய தாரகன் முருகவேள் வாழ்கின்றான். இக் கொடியவன் திருமாலின் நேமிப்படையைப் பொன்னாரமெனப் பூண்டவன். இவனைக் கொன்றுவிட்டால், மூத்தவனாகிய சூரனை வென்றிடல் எளிதாகும்” என்று மொழிந்தார். அது கேட்ட குமரவேள், "இவனை இங்கேயே அழிப்போம்” என்றார்.
வீரவாகுவைப் போர் செய்ய அனுப்புதல்
வானவர் பெருமகிழ்வடைய, அருகே நின்ற மெய்யருள் வீரவணகுவைப் பெற்ற வீரவாகு தேவரை நோக்கி, "அதோ நிற்கும் மலையே கிரவுஞ்ச மலையாம். அதன் பக்கத்தில் உள்ள கோட்டையுள், நிறைந்த அசுரப்படைகளுடன் தாரகன் என்னும் அசுரன் அமர்ந்திருக்கின்றான். பூதப்படைகளோடு நீ போந்து அவன் கோட்டையை வளைத்திடு; தடுத்துப் போர் புரியும் அசுர சேனையைப் படுத்திடு; பாவியாகிய தாரகன் வந்தால் போர் தொடுத்திடு; அவனைக் கொல்லுதல் அரிதாயின் நாம் வந்து முடித்திடுவோம். முன்னே செல்க" என முருகப் பெருமான் பணித்தார். வீரவாகு தேவரும் வீரரும் முருகவேளை மும்முறை வலம் வந்து தொழுது, விடை பெற்று, ஆயிரம் வெள்ளமாகக் கூடி மகிழ்ந்து சென்றார்கள். இவ் வண்ணம் படைவீரரோடும் பூதர்களோடும் எழுந்து சென்ற வீரவாகு தேவர், யானை முகத்தைக் கொண்ட தாரகாசுரன் கொடுங்கோல் ஆட்சி புரிந்த மாய மாநகரை அடைந்தார்.
தாரகாசுரன் எதிர்த்தல்
உடனே, பூதப்படைகள் நகரத்தின் உள்ளே புகுந்து, எதிர்த்த தரகாசுரன் அசுரரோடு நின்று போர் புரிந்தன. அதை யறிந்த தூதாகள் அரண்மனைககு ஒடிச சென்று, தாரகனை " வணங்கி, "ஐயனே! உம் தமையன் சிறை வைத்துள்ள வானவரை விடுவிக்கச் சிவபெருமான் மைந்தனாகிய கந்தன் என்பவன் வந்துள்ளான். அவன் அசுரரை வெல்வான் என்று ஆகாய வழியே சென்ற தேவர்கள் சொல்லக் கேட்டோம். அன்னார் சொல்லிய வண்ணமே கந்தன் வந்துள்ளான். அவன் படை நமது நகரத்தை அழித்தது" என்றார்கள். அப்பொழுது ஊழித்தீயில் நெய்க்கடல் விழுந்தால் எழும் தீக்கொழுந்து போல உயர்ந்த அரியாசனத்தினின்றும் மலை போன்ற மகுடம் அண்ட கோளத்தை முட்டும்படி எழுந்தான், தாரகன். வெற்றி முரசம் முதலிய வாத்தியங்கள் முழங்கின. மன்னர் மன்னனாகிய தாரகன், சேனையோடு வரக் கண்ட பூதப் பெரும்படைகள், சீற்றம் கொண்டு ஆரவாரித்து, கட்லில் சென்று பாயும் ஆறுகள் போலப் பல மரங்களையும் ஆயுதங்களையும் மலைகளையும் கையில் ஏந்தி எதிரே சென்றன. திருமால் விடுத்த நேமிப்படையை ஆரமாகக் கழுத்தில் அணிந்த தாரகன் பூதப் பெரும் படையைக் கொன்று குவித்தான். அவனை எதிர்த்துப் போர் செய்வதற்கு ஏற்ற வலிமை தம்மிடம் இல்லை என்று அறிந்த பூத கணத் தலைவர்கள் மனம் உடைந்து சிதறியோடினர்.
தாரகனும் வீரவாகுவும் போர் செய்தல்
அது கண்டு, உயர்ந்தோர் புகழும் திறம் வாய்ந்த வீரவாகு தேவர் பெரிய மரம் போன்ற வில்லை வளைத்துத் தாரணிந்து எதிரே நின்ற தாரகனைப் பார்த்து, "அழியாத் திறமை கொண்டு அமர் புரிந்த பூததையும் வில்லாளரையும் வென்று விட்டோம் என்று எண்ணினாயோ? இதோ! நின் உயிரை உண்பேன்" என்று வீரமொழி பேசினார். அது கேட்ட தாரகன், "அரியை நரி வெல்லுமாயின் நீயும் என்னை வெல்வாய் திருமாலைப் போர்க்களத்தில் வென்றேன். அவன் நேமிப் படையைக் கழுத்தில் அணிந்தேன். என் வலிமையைச் சிறிதும் எண்ணிப் பாராமல் 'கொல்வேன்’ என்று வீரம் பேசினை” என்று இகழ்ந்துரைத்தான். அந் நிலையில் மாயைக்குரிய மந்திரத்தைத் தாரகன் மனத்திலே நினைத்தான்; அதன் பயனாக எண்ணிறந்த வடிவங்களைக் கொண்டான்; எங்கும் இருள் பரவினாற் போல எல்லையற்ற படைக்கலங்களை ஏவி, ஒருவனாக நின்று போர் புரிந்தான். அப்பொழுது, வீரவாகு தேவர் ஒரு வீரப் பெரும்படையை விடுத்து மாயையை விலக்கினார். தாரகன் புறங்காட்டி ஓடினான். வீரவாகு முருகப் பெருமானைச் சிந்தித்து அவனைப் பின் தொடர்ந்தார். மாயையின் இருப்பிடமாகிய கிரவுஞ்ச மலையின் ஒரு குகையிலே சென்று ஒளித்தான், தாரகாசுரன், கோபமுற்ற வீரவாகு தேவர், இது மாய மலை" என்றெண்ணிக்கொண்டு திகைத்து நின்றபோது, அம் மலை, மயக்கம் தரும் உறக்கத்தை உண்டாக்கி, அவர் அறிவை மயக்கிற்று.
இங்ஙனம் வெற்றி வீரனாகிய வீரவாகு தேவரும் மற்றைய வீரர்களும் மயக்கமுற்ற நிலை கண்டு தாரகன் வெளிப்பட்டான் ; மாற்றாரை உற்று நோக்கினான்: 'நம் மாயையால் இவர் எல்லோரும் ஒழிந்தார் என்று, மன் மகிழ்ந்தான்; அம் மலையின்மீது தோன்றினான்; ஒரு பெருந் தேரின்மேல் அமர்ந்து அசுரர்கள் சூழ்ந்து ஆரவாரிக்க, பொன்மயமான தன் வில்லை வளைத்துப் போர்க்களம் போந்தான்.
முருகவேள் போரிட வருதல்
நாரதர் வாயிலாக நிகழ்ந்தனவெல்லாம் அறிந்த முருகப் பெருமான், அஞ்சி நின்ற வானவரை நோக்கி, "எல்லோரும் கேண்மின், இப்பொழுதே நாம் அமர்க்களம் செல்வோம்: தாரகனை வேற்படையால் தடிந்து ஒழிப்போம்; அசுரர் கோட்டையாகிய கிரவுஞ்ச கிரியையும் தகர்ப்போம்; கணப் பொழுதில் நம்முடைய வீரரையும் மீட்போம்” என்று அருளிச்செய்தார்.
முழுமதி போன்ற ஆறு முகங்களும், கருணை பொழியும் பன்னிரு கண்களும், வேலும், வேறுள்ள படைகளும் தாங்கிய அழகிய பன்னிரு கரங்களும், அணிமணித் தண்டை ஒலிக்கும் திருவடியுங்கொண்டு போர்க்களத்தில் நின்ற முருகவேளைக் கண்டான் தாரகன் என்றால், அவன் செய்த தவம் சொல்லும் தரத்ததோ? ஆணவம் பொருந்திய மனத்தையுடைய அசுரன், இங்ஙனம் ஞான முதல்வராகிய பெருமான் கொண்ட திருக்கோலத்தைக் கண்டு வியப்படைந்து, 'நம்மீது போர் செய்ய வந்த இவன் கற்பனை கடந்த முழுமுதற் கடவுள்தானோ? என்று சிந்தித்தான்; இவ்வாறு நினைத்துப் பின்பு தனது நிலைமையை எண்ணினான். எவர்க்கும் மேலாகிய ஈசனிடம் தான் பெற்ற வரமும், திறமும், மற்றுமுள்ள ஏற்றமும் நினைந்து, அகங்காரம் கொண்டு, கந்தப்பெருமானை நோக்கி, "நாராயணனாகிய திருமாலுக்கும் நான்முகனாகிய பிரமனுக்கும் வெள்ளை யானையுடைய இந்திரனுக்கும் எமக்கும் போர் நிகழக் காரணம் உண்டு. சந்திரசேகரனாகிய சிவபெருமானுக்கும் எமக்கும் அமர் நிகழ காரணம் ஒன்றும் இல்லையே! அவ்வாறிருக்க, குமரா நீ இங்கு எதற்காகப் போர்க்கோலம் கொண்டு வந்தாய்?" என்று வினவினான்.
அதற்கு மாற்றம் உரைக்கக் கருதிய முருகவேள், "நீங்கள் வானவரைச் சிறையில் அடைத்து வைத்தீர்கள்! நீதி செலுத்தும் முறையில் அருள்புரிதல், தண்டித்தல் ஆகிய இரண்டும் செய்கின்ற ஈசன், உங்கள் கொடுமையை ஒழிக்கத் திருவுளம் கொண்டு எம்மை அனுப்பினார்” என்றார்.
தாரகன் கூற்று
அம் மொழி கேட்ட தாரகன், "திருமால், கருடன் மேல் எழுந்து போர் புரிந்து என்மீது ஆழிப்படையை விட்டதும், அதனை யான் கழுத்தில் அணியாகக் கொண்டதும் நீ அறிந்திலையோ? இன்றுவரை எம்முடன் பகைத்துப் போர் செய்ய வந்தவர் யாவரும் சிறிது நேரத்தில் வீட்டினர்; அன்றி ஓடினர்; வென்றவர் யாரும் இலர்; இதை நீ கேட்டிலையோ? முன்னமே நீ போர்க்களத்திற்கு அனுப்பிய படைத்தலைவரை வென்று மலையிடை மாய்த்தேன். மேலும் பல கணங்களை ஒழித்தேன்; இவற்றை நீ உணர்ந் திலையோ? டச்சிளம் பாலனே எம்முடன் போர் செய்து துன்பும் அடையாதே சிவபெருமானிடம் செல்” என்று கூறினான். அப் போது முருகன், "வஞ்சகனே! மாயைக்கெல்லாம் இருப்பிடமாகிய இம் மலையையும் உன்னையும் கூரிய வேலாற் கொன்று விரைவில் எம் சேனையை மீட்போம்” என்று கூறிப் போர் தொடுத்தார்.
தாரகனை முருகவேள் தகர்த்தல்
முருகவேள் விட்ட பாணங்களால் அடிபட்டு விழுந்த தாரகன், "அந்தோ சிவபெருமான் பெற்ற சிறுவன் ஒருவனோடு போர் செய்து கரம் இழந்தேன்; தந்தம் இழந்தேன்; மயக்கமுறறு விழுந்தேன். வலிய சேனையும் அழிந்தது. நான் ஒருவனே எஞ்சி நின்றேன். என் வீரம் அழகிதன்றோ?" என்றான்; அந் நிலையில் அகங்காரத்தை விட்டான்; நொடிப் பொழுது மனம் நடுங்கினான்; வியப்படைந்தான்; இவனை வெல்லுதல் அரிது போலும்!” என்று அகத்துள் எண்ணினான்; மீண்டும் வீரம் மேலிட்டு, இனிப் பரமசிவன் அளித்த பாசுபதாஸ்திரத்தை விடுவோம் என்று எண்ணி, அதனை எடுத்து, மனத்தினால் அருச்சனை புரிந்து, சீற்றத்தோடு விடுத்தான்.
அது கண்ட கந்தவேள், தந்தையை மனத்தில் நினைத்துச் செங்கரத்தினை நீட்டி அக் கொடிய அஸ்திரத்தைக் கொடுத்தவன் வாங்கிய தன்மைபோல் கருணையோடு பற்றிக்கொண்டார். பற்றிய படைக்கலத்தைத் தம்முடைய ஆயுதங்களோடு சேர்த்த முருகன் செயல் கண்டு, ‘இனி நமது ஆக்கம் எல்லாம் அழிந்தது என்று ஏக்கம் கொண்ட தாரகன், ‘பரமசிவனது பாசுபதப் படையை ட்டேன். அதனையும் எதிர்த்துப் பற்றினான். இவ் வறுமுக முதல்வனது ஆற்றலை, ஒருவர் நாவினால் உரைக்க ஒண்ணுமோ? ஆயினும், சிவனார் திருமகன் அறப்போர் புரிவானே யன்றி மாயப்போர் புரிய நினையான். ஆதலால், மறைந்து நின்று நான் மாயம் புரிவேன்" என்று மனத்தால் எண்ணினான்.
வேற்படையின் வெற்றி
அப்படியே கிரவுஞ்ச மலையுடன் கலந்து, அளவிறந்த மாயா வடிவங்களைக் கொண்டான் தாரகன். எங்கும் நிறைந்து நின்றான். முருகப்பெருமான் இதனைக் கண்டு, அவனுயிரை அழிக்கத் திருவுளம் கொண்டு, தம் திருக்கையில் அமைந்த வேலாயுதத்தை நோக்கி, "தாரகன் என்னும் பெயருடைய அசுரனையும், சஞ்சலம் விளைக்கும் கிரவுஞ்ச மலையையும், ஒரு நொடிப் பொழுதி னுள்ளே பிளந்து, உயிருண்டு, புறத்தே போந்து, பூதர்களையும் நூறாயிரத்தொன்பது வீரரையும் மீட்டு இங்கு வருக” என்று கூறி விட்டார்.
அவ் வேல், ஊழிக்காலத்தில் எல்லாவற்றையும் சுட்டெரிக்கும் கனல் போல் எழுந்து, மலையோடு சேர்ந்து தாரகன் இயற்றிய மாயைகளையெல்லாம் அழித்து ஒழித்தது; மேலும், தாரகன் மார்பென்னும் பெரிய மலையைப் பிளந்து, கிரவுஞ்ச கிரியைத் தாக்கி ஊடுருவிச் சென்று வீரமும் புகழும் கொண்டாற்போலக் குருதியும் துகளும் கொண்டு மீண்டது. அங்ஙனம் மீண்ட வேல், மாய மலையில் மயங்கிக் கிடந்த வீரரை எழுப்பிவிட்டு, ஆகாய கங்கையிற் படிந்து, தூய வடிவத்துடன் முருகவேள் திருக்கரத்தில் முன்போல் அமர்ந்தது. அப்பொழுது மயக்கம் தீர்ந்த வீரர் அனைவரும் விரைந்து சென்று, முருகவேள் திருவடியை வணங்கித் துதித்து நின்றார்கள்.
வானவர் முருகனைப் போற்றுதல்
‘ஐயனே! கொடுமையே உடைய தாரகாசுரன் இன்றளவும் எம்மை வருத்தினான்; அதனால் துன்பம் உற்றோம். அன்னவனை மாயமலையோடு மாய்த்தருளினீர் எமது துயரம் தீர்த்த உமக்கு வழிபாடு செய்ய போற்றுதல் விரும்புகின்றோம். இம் மலையிடத்தே எழுந்தருளி யிருத்தல் வேண்டும்" என்று வேண்டி நின்றனர், திருமால் முதலிய தேவர்கள்.
தாரகன் மனைவி சவுரி புலம்பல்
முருகவேள் அதற்கு இசைந்தருள, பிரமன் ஆதிய தேவரும் முனிவரும் அருகே நெருங்கி ஆறெழுத்தமைந்த அரிய மந்திரத்தை ஓதித் திருமஞ்சனம் ஆட்டினர். பின்பு, பெருமானை அரியாசனத்தில் எழுந்தருளச் செய்து, நாமாவளி சொல்லி, நல்ல மலர்களால் அருச்சித்து, கற்பக மாலையும் சூட்டினர். இவ்வாறு வணங்கி ஏத்தும் பொழுது, தாரகன் மனைவியாகிய சவுரி, தாரை தாரை யாகக் கண்ணீர் வடித்துப் புலம்பினாள்; "ஐயோ! நாதா எங்கே சென்றாய்? ஆழிப்படையை உனக்கு அணியாகத் தந்த திருமாலும், இந்திரனும் வானவரும், கூற்றுவனும், பிறரும் இன்று கவலை தீர்ந்தாரோ? நறுஞ்சாந்தம் பூசிய பெருந்தோள் அசுரர் புடைசூழ, நறுமணம் கமழும் அரியாசனத்தில் வீற்றிருந்த ஐயனே! சிந்தை வருந்திச் செருக்களத்தில் இறந்தாயே! இதுவும் ஒரு காலமோ? மழுவேந்திய பெருமான் அளித்த வரத்தின் திறத்தையே நினைத்தாய்! மாற்றார் செய்த சூழ்ச்சியைச் சிறிதும் மனத்திற் கொள்ளாது மடிந்தனையே! ஏழையேன் உன்னை இனி என்று காண்பேன்" என்று வருந்தினாள்,
மைந்தன் துயரம்
பின்பு, தாரகன் மைந்தனாகிய அசுரேந்திரன், இறந்து கிடந்த தந்தையைக் கண்டான்; பெருமூச்செறிந்தான்; கலங்கி அழுதான்; கரங்களை உதறினான்; அளவிறந்த சோகத்தில் அழுங்கினான்; நெருப்பை உண்டவன் போலத் துயர் உற்று நிலத்தில் விழுந்தான். மயங்கினான்; தெளிந் தான்; தந்தை இறந்த் செய்தியைச் சூரபதுமனிடம் சொல்லுமாறு மகேந்திர நகர்க்கு விரைந்து சென்றான். மனம் தளர்ந்து, இயற்கையான ஒளி இழந்து, உடல் நலிந்து, வறியவன்போல் விரைந்து போந்த மைந்தனை அங்குள்ள அசுரர் கண்டனர். "இவன் வஞ்சமும் கொலையும் செய்யமாட்டான்; அதனால், தந்தையாகிய தாரகன் வெஞ்சினம் கொண்டு இவனை வெளியேற்றினான் போலும்!” என்பார், சிலர். "தஞ்சமாகவுள்ள தாரகன் கொடுமையைக் கண்டு அஞ்சித் தானாகவே அவனை நீத்து இங்கு வந்தடைந்தானோ” என்பார், சிலர். ”முன்பு நம் அரசன் தங்கையின் கையை ஒருவன் வாளால் அறுத்தலால், வானவரையும் சயந்தனையும் அவன் சிறையில் அடைத்தான். இன்று இவனும் துன்புற்று வந்தடைந்தான்; தேவர்க்கு மேலும் துயர் விளைப்பான் போலும்" என்பார், சிலர்.
சூரன் சீற்றம் உறுதல்
அப்பொழுது அசுரேந்திரன், மன்னர் மன்னனாகிய சூரபன்மனை அடைந்து, அவன் அடிகளில் விழுந்து கைகளால் பாதங்களைப் பற்றி, ‘ஐயகோ‘ என்று அழுது கதறினான். அது கண்ட சூரன், "குழந்தாய்! வருந்தாதே! என்ன நிகழ்ந்தது சொல்” என்றான். "என் ஐயனே! இந்திரன் செய்த தந்திரத்தால் சிவகுமாரனாகிய கந்தவேள் வலிய பூதப் படைகளுடன் வந்து, உன் தம்பியையும் கிரவுஞ்ச மலையையும் வேற் படையால் அழித்து மேலும் வந்து கொண்டிருக்கின்றான்” என்று புலம்பினான், அசுரேந்திரன் நிலையில் சூரன் சீற்றமுற்றான். நெரிந்த புருவங்கள் நெற்றிக்கு மேலே சென்றன; பற்கள் உதட்டை மடித்துக் கடித்தன; உதடும் வாயும் நெருங்கித் துடித்தன. அண்ட கூடத்தை இடிக்க நினைத்தது அவன் உள்ளம்.
அமைச்சன் அறிவுரை கூறுதல்
"என் தம்பியின் உயிரைக் கவர்ந்த கந்தன் வலிமையை அடக்கி வெற்றி பெற்று வரல் வேண்டும்; நொடிப் பொழுதில் வருக தேர்; தருக படைக்கலம்” எனப் பணித்தான், சூரன். அச் செயல் கண்ட அமோகன் என்னும் அமைச்சன், அரசன் அடி பணிந்து "அடியேன் ஒன்று கூறுகிறேன்; அதனைக் கேட்டருளல் வேண்டும்; கொடுஞ் சினம் கொள்ளலாகாது” என வேண்டிக் கொண்டு, சொல்லத் தொடங்கினான்.:
"பகைவர்மேற் படையெடுத்துச் செல்லும் அரசர், மாற்றார் வலிமையை முற்றும் அறிதல் வேண்டும். அவர் வரத்தில் வலியரோ? மாயத் திறத்தில் வலியரோ? கை வரிச்ையில் வலியரோ? படைக்கலத்தில் வலியரோ? கல்வியிலும் மனத் திட்பத்திலும் வலியரோ? அறிவொடு சேர்ந்த ஊக்கத்தில் வலியரோ? இவற்றையெல்லாம். ஆராய்தல் வேண்டுமன்றோ? நீ பகைவர் வன்மையை உணர்ந்தா யில்லை; அவர் சேனையின் ஆற்றலை அறிந்தா யில்லை; நின் அரும்பெருந் தலைமை நிலையையும் நினைந்தா யில்லை; நின் நலம் பேணும் அமைச்சரோடும் ஆக வேண்டியவற்றை ஆரர்ய்ந்தா யில்லை. வெறுமையாய்ச் சீற்றம் கொண்டு செல்லுதல் வீரத்தின்பாற் படுமோ? கலகல என்று ஒலிக்கும் தண்டையணிந்த சிறுவன், வேழத்தலையுடைய தாரகவீரனைக் கொன்றது. வியப்பன்று. வலியவரும் ஒரு காலத்தில் வன்மையை இழப்பர்; மிக்க மெலியவரும் ஒரு காலத்தில் வீரராக விளங்குவர். ஒப்பற்ற அரசே! அச் சிறுவன்மீது நீ போர் புரியக் கருதிச் செல்லுதல் புகழன்று. அவனுடைய சிறப்பையும் திறத்தையும் பிறவற்றையும் உணர்ந்து, பின்னர் அவனினும் சிறந்த வீரரைப் படையோடு போக்கி வெற்றி பெறுவாயாக" என்று கூறினான், அமைச்சன்.
முருகன் திறன் அறியச் சூரன் ஒற்றரை ஏவுதல்
அப்போது சூரன் விரும்பியவாறு ஒற்றர்கள் வந்து அடிபணிந்தர்கள். அவர்களை நோக்கி, "நீர் விரைந்து சென்று நிலவுலகத்தில் வந்துள்ள ஒற்றரை ஏவுதல் கந்தன தனமையும, பூதப்படையின் பெருக்கமும், பிறவும் அறிந்து வருக” என்று ஏவினான், சூரன்.
முருகவேள் சிவபதிகளை வணங்குதல்
மேகங்கள் உலாவும் வானத்தில் தோன்றிய சூரியன், தன் கதிர்களாகிய கரங்குவித்து வணங்குவான் போலச் செல்ல, முருகவேள் போர்க்களத்தை விட்டுப் புறப்பட்டுப் பெருஞ்சேனையும் தேவரும் சூழப் போயினார்; பாம்பணையிற் பள்ளிகொண்டு கண்வளரும் திருமாலுக்கும், மங்கை பங்கனாகிய சிவபெருமானே பரம்பொருள் என்னும் உண்மையை மானிடர் அறியும் வண்ணம் வியாச மாமுனிவர் தம் எடுத்த கையினால் உணர்த்தியருளிய காசிப்பதியைக் கண்டார்; உலகத்தைப் பெருங்கடல் மூடும் பிரளய காலத்திலும் அழிவின்றித் திருமால் பிரமன் முதலிய தேவருக்கு இருப்பிடமாய், திருக்கயிலாய மலையை ஒத்ததாய், எம்பெருமான் மாமர்த்தடியில் வீற்றிருந்தருளும் பெருமையுடையதாய் உள்ள பம்பை நதி சூழ்ந்த காஞ்சி மாநகரைக் கண்டார்: "எனக்கு நிகராவார் எவரும் இலர் என்று தனித்தனி திருமாலும் பிரமனும் எண்ணிப் பிணக்குற்றபோது அவ் விருவருக்கும் நடுவே, அடியும் முடியும் காணலாகாத அனற் பிழம்பாய்த் தோன்றி, நினைப்பவர்க்கெல்லாம் விரைவில் முத்தியளிக்கும் தன்மையில் நிகர் அற்றதாய் விளங்கும் திரு அண்ணாமலையைத் தரிசித்தார்; நடுநாட்டு மன்னனாகிய நரசிங்க முனையரையன் நடத்திய திருமணத்தைத் தடுத்து, மணமகனாய சுந்தரமூர்த்தியை ஆட்கொள்ளும் வண்ணம் ஒரு முதிய வேதியனாக வந்து, அடிமைச் சீட்டைக் காட்டி, வழக்கில் வென்று அருளிய சிவபெருமான் அமர்ந்த பெண்ணையாறு சூழ்ந்த திருவெண்ணெய் நல்லூரையும் கண்டார்; இனிய செழுஞ்சோலை சூழ்ந்த தில்லையம்பதியிலே யுள்ள பொன்னம்பலத்தில் சிவகாமி யம்மையார் வணங்க, விராட்புருடனது இதய கமலத்தில், அண்டரும் மதித்தற்கரிய முறையில் ஈசன் ஆடும் அற்புதத் தனிக் கூத்தைக் கண்டு உள்ளம் நெகிழ்ந்து களிப்புற்று வணங்கிச் சென்றார்; அகத்திய முனிவரது கமண்டலத்தினின்று நீங்கிப் பூமியிலே பாய்ந்து, பல கிளைகளாய்ப் பிரிந்து, பற்பல பெயர்களைத் தாங்கி, சோழ நாட்டிற் கன்னலும் செந்நெல்லும் விளைக்கும் காவிரியாற்றின் வடகரையில் உள்ள மண்ணி நதியின் மருங்கே வந்தார், முருகப்பெருமான்.
இந்திரன் அடைந்த இன்பமும் துன்பமும்
கார்மேகங்கள் திரண்டு செல்ல, ஆங்கமைந்த மதில் சூழ்ந்த மாநகரின் வளத்தினை நோக்கிய முருகவேள் 'இது அதை நாம் இருத்தற்கேற்ற நல்ல இடம்‘ என்றார். அம்மொழி கேட்ட வானவர், அழகெலாம் ஒருங்கே வாய்ந்த, அந் நகர்க்குச் சேய்ஞலூர் என்று பெயர் இட்டார்கள். கொடிய திறம் படைத்த தாரகன் மாய மாமலையொடு மாய்ந்து ஒழிந்தமையால் இந்திரன் துன்பம் நீங்கி இன்பம் நிறைந்த மனத்தினனாய் இருந்தான்.
மேனி வருந்தாமல் அமிர்தத்தைப் பெற்று அருந்தியவ்ன் போல், இந்திரன் அங்கமெல்லாம் குளிர்ந்திருந்தபோது, சீகாழியிலுள்ள வன்த்தைக் காக்கும் தெய்வம் அவனிடம் போந்து வணங்கிற்று. சூரன் கொடுமைக்கு அஞ்சி விண்ணுலகம் விட்டு வந்த நாளில் சீகாழி வனத்தில் தன்னிடம் ஒப்புவித்த இந்திரன் நகைகளையும் இந்திராணியின் நகைகளையும் முடிப்பாகக் கொண்டுவந்து முன்னே வைத்து, "ஐயனே! சிவபெருமான் வீற்றிருந்தருளும் சீகாழிப் பதியில் இந்திராணியுடன் போந்து நீர் தவம்செய்த நாளில், என்னிடம் கொடுத்துவைத்த நகைகள் இவை; பெற்றுக்கொள்ள வேண்டும்" என்று அத் தெய்வம் கூறிற்று.
இந்திராணியின் நகைகளைக் கண்டபோது, நெய்யிட்ட நெருப்புப் போல இந்திரன் மனத்தில் காதல் நோய் மேலிட்டது. அந் நகையினைப் பார்த்து அவன் இரங்கினான்; ஏங்கினான்; விம்மினான்; வெதும்பினான்; பெருமூச்சு விட்டான்; மயக்க முற்றான். "காமமே தீமையெல்லாம் தரும்; சிறப்பையும் செல்வத்தையும், க்ெடுக்கும்; நல்லறிவைத் தொலைக்கும்; நன்னெறியை விலக்கி நரகத்திற் சேர்க்கும்; ஆதலால், அதனினும் பெரும்பகை வேறுண்டோ?” என்று எண்ணி அவ்வுணர்ச்சியைத் தவிர்த்தற்காக முருகவேள் முன்னே சென்றான், இந்திரன்.
முருகவேள் சிவபூசை செய்தல்
அங்ஙனம் சென்ற வானவர் தலைவனைப் பெருமான் ‘வருக‘ என்று அழைத்து, "இங்கு நாம் சிவபெருமான் திருவடிகளை அருச்சனை செய்து வணங்க விரும்பு கின்றோம். அதற்கு வேண்டும் உபகரணங்களைச் சேகரித்துத் தருக" என்றுரைத்தார். அவ்வாறே இந்திரன் சேகரித்துத் தந்த பொருள்களால் இருவரும் அறியாத் திருவடிகளை முருகவேள் பூசனை செய்ய, ஈசன் உமையம்மை யோடு இடபவாகனத்தின் மேல் எழுந்தருளினார். அக் காட்சியைக் கண்டு உச்சி மேற் கரங் குவித்துத் தொழுது போற்றினார், முருகப் பெருமான், மைந்தனது வழிபாட்டின் தன்மையை அறிந்து மகிழ்ந்த ஈசன் நொடிப் பொழுதில் உலகமெல்லாம் அழிக்க வல்ல பாசுபதம் என்னும் அஸ்திரத்தை அளித்தருளி, " இது நம்மிடம் தோன்றிய சிறந்த படை மாயனும் பிரமனும் இதனைப் பெற்றவரல்லர். இப் பெரும்படையை யாரால் தாக்க இயலும்? உயிர்களை எல்லாம் இது நாசம் செய்யும். கொடிய சூரனது வலிய படைகளைத் தொலைத்தற்காக இதனைத் தருகின்றோம்; பெற்றுக்கொள், குமரா" என்று கூறி மறைந்தருளினார்.
நாடும் காடும் கடந்த திருச்செந்தூர் சேர்தல்
பின்பு, மண்ணியாற்றின் தென்கரையில் அமைந்த திருச்சேய்ஞலுரை விட்டு, காவிரியாற்றைக் கடந்து திருவிடைமருதுர் என்னும் திருப்பதியையும் திருமயிலாடு-துறையையும், திருப்பறியலூரையும் மற்றும் சிவபெருமான் அமர்ந்தருளும் பழம்பதிகளையும் கண்டு சென்றார், குமர வேள்; வளம் பெருகும் அழகிய இலஞ்சியங் கானம் என்னும் பழம் பதியில் கோயில் கொண்ட ஈசன் திருவடிகளை வணங்கிப் பின்னர்த் திரும்கள் பெருந்தவம் புரிந்து, முற்றிய செல்வமும் முடிவற்ற மங்க்லப் பேறும் பெற்ற திருவாரூரைக் கண்டார்.
இவ்வாறு, தெற்கு நோக்கிச் செல்லும்பொழுது பாலைவனம் ஒன்று குறுக்கிட்டது. அங்கே, கள்ளி மரங்கள் கரிந்தன. பாலை மரங்கள் பட்டன. முள்ளிச்செடிகள் எரிந்தன. குரவமரமும், காரகிலும் கொள்ளிக்கட்டையாயின. இங்ஙனம் எங்கும் தீப்பட்டாற் போன்றிருந்தது, அப் பாலை, அங்கு முருகவேள் சேனையோடு எழுந் தருளியபோது அக் கொடிய காடு பெருமழையாற் குளிர்ந்த அழகிய குறிஞ்சி நிலம் போலாயிற்று. இத்தகைய பாலைவனத்தைக் கடந்து வேற்படை தாங்கிய குமரவேள், செங்குன்றுார் என்னும் சிவ பதியை வணங்கி, மணிகளையும் வயிரங்களையும் முத்து களையும் மற்றப் பொருள்களையும் அலைகளால் அள்ளி எறியும் திருச்சீர் அலைவாய் என்னும் செந்திமாநகரைச் சேர்ந்தார்.
முருகன் அசுர்ர் திறம் கேட்டல்
அங்கே அமர்ந்து, இந்திரனை நோக்கி, "கொடுங்கோல் செலுத்தும் சூரன் முதலிய அசுரர்கள் பிறந்தவாறும், அவர் தவம் புரிந்தவாறும், வரம் பெற்றவாறும், அரசு செய்தவாறும், இன்னும் அவர் இயற்றிய மாயமும், அடைந்த வெற்றியும், அவர்தம் வலிமையும் மேன்மையும், உனக்கு அவர் இழைத்த துன்பமும் ஒன்றுவிடாமற் சொல்லுக" எனப் பணித்தார், முருகவேள்.
வியாழன் மறுமொழி கூறல்
அந் நிலையில் இந்திரன் வேண்டுகோளுக்கு இணங்கி, வாக்கில் வல்லவராகிய வியாழன் எழுந்து, ”எவர்க்கும் முதல்வராகிய எம்பெருமானே! நீர் எல்லாப் பொருளும் அறிவீர்! எல்லா உயிர்களிலும் நிறைந் திருக்கின்றீர்! எங்கள் துன்பத்தைத் துடைக்கத் திருவுளங்கொண்டு குழந்தை வடிவம் கொண்டீர் உமது செய்கையை யாவரே உணர வல்லார்? ஐயனே! நீர் அசுரரது தன்மையை வினவியது அதனை அறிந்துகொள்ளும் பொருட் டன்று. அடிமைகளாகிய எமது துன்பத்தைக் களைந்து சிறந்த இன்பம் தரும் திருவருளாலே யாகும். ஆதலால், அசுரர் தன்மை களையெல்லாம் அடியேன் அறிந்தவரையில் சொல்கின்றேன்" என்று குமாரவேளை நோக்கிக் கூறலுற்றார் :
மாயையின் வரலாறு
மேன்மை யுற்ற காசிபனுடைய புதல்வர்களாகத் தோன்றினர், அறுபத்தாறு கோடி அசுரர்கள். அன்னவர்க்கு அரசனாய் அமைந்தான், அசுரேந்திரன். அவன் மனமொத்த மங்கலகேசி யென்னும் அரக்கியை மணந்து, சுரசையென்ற புதல்வியைப் பெற்றான். அம் மகள் தூயவளாய் வளர்ந்து வந்தாள்; அப்போது அசுரர் குலகுருவாகிய சுக்கிரன் அம் மங்கைக்குக் கொடிய மாயா வித்தைகள் அத்தனையும் கற்பித்தார்; அவற்றில் அவள் அடைந்த திறமையைக் கண்டு மாயை என்று பெயரிட்டார்; அம் மாயையால் எதிர் காலத்தில் அசுரர்கள் எய்தநின்ற பெருமையூெல்லாம் எண்ணிப் பார்த்தார். ஒப்பற்றவள் ஆகிய மாயை, திருமகளும், ரதியும், திலோத்தமையும், மோகினியும் ஒரு வடிவம் கொண்டாற் போன்ற அழகிய உருவம் பூண்டு சென்றாள்.
மாயை காசிப முனிவரை மயக்குதல்
சென்றவள், காசிப முனிவருடைய தவச்சாலையின் அருகே நறுமணங்கமழும் அழகிய செந்தாமரைப் பொய்கையும் குளமும், சோலையும், மாணிக்க மலையும் மஞ்சமும், மண்டபமும் விரைவில் உண்டாக்கினாள். ஆண்டவன் திருவடியை நினைந்து ஐம்பொறிகளையும் அறிவினால் அடக்கித் தன்னந் தனியராய்த் தவம் புரிந்திருந்த காசிட முனிவர் அவற்றைக் கண்டு அதிசயம் அடைந்தார்; உடனே, தம் உள்ளத்தை ஒருமைப்படுத்தி முன் போலவே நற்றவம் புரியத் தலைப்பட்டார்.
அவ் வேளையில் அம் மாயை என்னும் மங்கை மாணிக்க மலையின்மீது தனியளாய் இலங்கித் தோன்றினாள். அம் மங்கையைக் கண்ணுற்றார், காசிபர்; விண்ணுலகத்தில் விளங்கும் கற்பகவல்லி தவம் செய்து பெற்ற பூங்கொடிதான் ஈங்கு வந்ததோ என்று வியந்து நின்றார்; தனியளாக நின்ற தையலை நோக்கி, "மாதே! உனக்கு என்ன் வேண்டும் என்றாலும் இன்னே தருவேன்; மைந்தரை விரும்பினும் மகிழ்ந்து அளிப்பேன்; அன்ன வரை ஒப்பற்ற நிலையில் வைப்பேன்’ என்றார். முனிவன் உரைத்த மொழி கேட்டு மாயை புன்னகை புரிந்தாள்; "நான் தனியள் என்று கருதியோ இவ்வாறு உரைத்தீர்! இது போன்ற பேச்சு இனி வேண்டா. இது தவமுடையோர்க்குத் தகுமோ? நான் முன்னமே எண்ணி வந்த இடத்திற்குச் செல்கின்றேன். நீர் இங்குத் தவம் செய்துகொண்டு இரும்” என்று சொல்லி, கங்கை யாற்றின் திசையை நோக்கிக் கடிது செல்வாள்போல நடந்தாள். முனிவரும் அவளைப் பின்தொடர்ந்தார். மங்கை அருவம் எய்தி மாயையால் மறைந்து நின்றாள்.
முனிவர் அங்குமிங்கும் நோக்கி மங்கையைக் காணாது கவலையுற்றுக் கரைந்தார். "அந்தோ! முன்னே ஆசை கொடுத்திக் மன்மதனை ஏவி மையல் விளைத்தீர்! என் மெய்யறிவை யெல்லாம் சிதைத்தீர்! இன்னும் செய்ய வேண்டுவது ஒன்றுண்டோ சொல்வீர்” என்று பன்னிப் பன்னி இடர்க்கடலில் மூழ்கிச் சோர்ந்தார், முனிவர். அந் நிலையில் எவ் வினைக்கும் முன்னவளாகிய மாயை அவர் கண்ணெதிரே தோன்றினாள் கருத்தழிந்து கம்பம்போல் நின்ற காசிய முனிவர் மாயையைக் கண் களிப்பக் கண்டார்; மகிழ்ச்சி கொண்டார்; 'உய்ந்தேன்! உய்ந்தேன்! என்றார்; மின்னொளியைக் கண்டு மலரும் தாழ்ை மலர் போல் புன்னகை பூத்தார்; மாயையோடு கொஞ்சிக் குலாவினார். அப்போது மாயையினிடம் சூரபன்மன் என்னும் வீரன் தோன்றினான். அவனுக்குப்பின் ஆயிரம் தலையுடைய சிங்கமுகனும், யானை முகமுடைய தாரகனும், ஆட்டுத் தலையுடைய அசமுகியும் பிறந்தார்கள்.
சூரன் முதலிய மைந்தருக்குக் காசிபன் அறிவுரை பகர்தல்
காசிய முனிவர் அவரை நோக்கி, "என் வீர மைந்தர்காள்! உமக்கு உறுதி பயக்கும் செய்தி யொன்று சொல்கின்றேன். நீவிர் மூவரும தவநெறியிலே நிற்றல் வேண்டும். அதற்குரிய முறையை மெய்யாக உணர்த்துவேன்; கேட்பீராக" என்று கூறலுற்றார்: "அறம் என்னும் பொருள் ஒன்றுண்டு. அஃது அழிவற்ற இம்மை மறுமை இன்பங்களை எளிதாக அளிக்கும். அருமையாகப் பெறுதற்குரியது அவ் வறம் ஒருமைப்பட்ட மனம் உடையவரா லன்றிப் பிறரால் அஃது அறிய வொண்ணாது. அறத்தைப் போற்றினால் அன்பு உண்டாகும்; அருள் என்னும் பேறும் வந்தடையும். அவ் விரண்டும் வந்தவுடன் தவம் என்னும் சிறப்புக் கைகூடும். அதன் பின்பு ஞானம் உண்டாகும். ஞானம் பெற்ற உயிர் சிவனோடு இரண்டறக் கலந்துவிடும். ஆதலால், மைந்தர்கள் அறம் செய்யுங்கள்; பாவத்தை அகற்றுங்கள்; சிவபெருமானைக் கருதிச் சிறந்த தவம் புரியுங்கள். அதுவன்றி, இங்குச் செய்யத் தக்க செயல் வேறொன் றில்லை. உடம்பை ஒறுத்துத் தவும் செய்பவர் உலகமெல்லாம் வியக்க வாழ்வர்; தம்மை அடைந்தவரை ஆதரிப்பர்; பகைவரை அழிப்பர்; விரும்பிய பொருளெல்லாம் பெறுவர்; என்றும் அழிவின்றி இருப்பர். இவ் வுண்மை உங்கள் மனத்தில் நன்கு பதியும் வண்ணம் ஒரு சரித்திரம் சொல்கின்றேன், கேளுங்கள் :
முனிவர் மார்க்கண்டன் சரித்திரம் உரைத்தல்
"மெய்யான வேதங்களை உணர்ந்தவர் மிருகண்டு முனிவர். அவர் காசியை அடைந்து திருக்கோயிலின் அருகே சிவாகம முறைப்படி நீலகண்டனாகிய சிவபெருமானை முனிவர் வழிபட்டு வந்தார். இந் நிலவுலகத்தில் உள்ள துன்பம் நீங்கவும், நல்லறங்கள் செழித்து ஓங்கவும், மாதவ முனிவர்கள் சிறந்து மல்கவும், வைதிக சைவம் வாழவும், கண்ணற்ற காலன் மாளவும், ஆதிமுதல்வனாகிய சிவபெருமான் திருவருளால், அம் முனிவரின் மனையாள் கருப்பம் உற்றாள். நஞ்சுடைய நாகத்தின் வாய்ப் பட்டு நலிவுற்ற சந்திரன், விடுபட்டு அமிர்தத்தைத் தருவதுபோல் அழகும் பொறுமையும் வாய்ந்த அம் மாது கருப்ப வேதனையால் வருந்தி, வேத மணம் கமழும் செவ்விய வாயினையுடைய குழந்தையைப் பெற்றாள்.
"மைந்தன் பிறந்தான் என்று கேட்ட முனிவர் கங்கையிலே நீராடினார்; அந்தணர் முதலிய அறவோர்க்குப் பொன்னும் பொருளும் வழங்கினார்; செய்ய்த்தக்க சடங்குகளையெல்லாம் செய்தார். அப்போது பிரமதேவன் அங்கு எழுந்தருளி மைந்தனுக்கு மார்க்கண்டன் என்று பெயர் இட்டான். அம் மைந்தனுக்கு ஐந்தாம் ஆண்டில் முனிவர் உபநயனம் செய்தார்; ஓதுதற்குரிய கலைகளை யெல்லாம் அவன் உள்ளங்கொள்ள உணர்த்தினார்; வேத நூல் முதலாய் கலைகளெல்லாம் கூறும் மெய்ப்பொருளை உணர்ந்து, சிவபெருமானே ஆதி முதல்வன் என்றறிந்து, அவர் சேவடியைத் தஞ்சமாகக் கொண்டான், மார்க்கண்டன்.
"இவ்வாறிருக்கையில், மார்க்கண்டனுக்குப் பதினாறு வயது வந்தது. பாலனையும், பதினாறாம் ஆண்டினையும் மாறிமாறி எண்ணிப் பெற்றோர் இருவரும் தனித்தனியே பேதுற்றார்; துன்பக் கடலில் மூழ்கினார்; விம்மினார்; அழுதார், நலிவுற்றார். அதனை அறிந்த மார்க்கண்டன் பெற்றோரை வணங்கி, அருகே சென்று நீங்கள் ஏன் இவ்வாறு துன்புறுகின்றீர்கள்? வருந்தத்தக்க காரியம் ஒன்றும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லையே! துக்கப்படாதீர்கள் என்ன நிகழ்ந்ததென்று சொல்லுங்கள்’ என்று வினவினான்.
"இம் மொழி கேட்ட தந்தை, 'அப்பனே, நீ இருக்க எமக்குத் துன்பமும் உண்டோ? உனக்கு வயது பதினாறு என்று சிவபெருமான் முன்னமே அருளிச்செய்தார். அவ் வயது வந்துவிட்டதே என்றுதான் வருந்துகிறோம்" என்று உரைத்தனர். அப்போது, தந்தையின் துன்புற்ற முகத்தை நோக்கி, ‘ஐயனே! நீங்கள் வருந்தாதீர்கள். எல்லா உயிர்க்கும் உயிராகி, என்றும் நின்று நிலவும் பெருமானை வழிபட்டு, கால அவதி என்னும் விதியைக் கடந்து, உங்களிடம் வந்து சேர்வேன். அதுவரையும் இங்கே இருங்கள் என்று பலவாறாகச் சொல்லிப் பெற்றோர் மனத்தைத் தேற்றி, அவர் பாதம் பணிந்து நின்றான். மார்க்கண்டன். அருமந்த மகனை இருவரும் எடுத்தணைத்து, உச்சி மோந்து, துன்பம். விட்டு இன்பம் அடைந்தனர்.
"இறைவனின் அருளும் அன்புமே உறுதுணையாகக் கொண்டு, உள்ளத்தில் ஒப்பற்ற மகிழ்ச்சி பொங்க, விடை பெற்று விரைந்து போந்து, காசியிலுள்ள மணிகன்றிகை யென்னும் செம் பொன் மயமான சிவாலயத்தை அடைந்தான், மார்க்கண்டன்; அன்பினால் என்பு உருக, கண்ணீர் பொங்கி வழிய, திருக் கோவிலை வலம் வந்தான்; ஈசனை வணங்கினான்; அவர் திரு வடியைத் தன் முடியிலே தரித்தான்; ஆலயத்தின் தென்பால் ஓரிடத்தில் ஈசன் திருவுருவை நிறுவினான்; பல நாள் அன்புடன் தொழுது போற்றி அருந்தவம் புரியலுற்றான்; ‘ஐயனே! அமலனே! எப்பொருளும் ஆகி நின்ற மெய்ப்பொருளே! பரம்பொருளே! விமலனே! தீயேந்திய திருக்கரத்தானே! அடியேன், காலன் கைப் படாது கடைத்தேறும் வண்ணம் நேர் நின்று காத்தருளல் வேண்டும் என்று பிரார்த்தித்தான். அப்பொழுது சிவபெருமான் 'அஞ்சேல், அஞ்சேல் என்று அபயம் அளித்துத் தம் சேவடி இரண் டையும் அவன் சென்னியிலே சேர்த்தார். 'உய்ந்தேன் அடியேன்” என்று மார்க்கண்டன் போற்றி நின்றான். ஈசன் மறைந்தருளினார்.
'அவ் வேளையில் கூற்றுவன் தன் அமைச்சனாகிய கொடிய காலனை அழைத்தான்; 'அந்தணன் மகன் ஒருவன் காசியில் உள்ளான்; அவன் உயிரைக் கவர்ந்து வா’ என்று கட்டளை யிட்டான். அப் பணி யேற்ற காலன் நிலவுலகத்தை யடைந்தான்; மார்க்கண்டன் கண்ணெதிரே தோன்றினான்; தொழுது நின்றான்; நீ யார் என்று அவன் வினவலும், "சகல உலகங்களிலும் உள்ள உயிர்களைச் சங்காரம் செய்யும் அதிகாரமுடைய எமதேவனது அடியினைப் பணியும் காலன் யான் என்றான். அது கேட்ட மார்க்கண்டன், "யாவர்க்கும் தலைவனாகிய ஈசனாரின் அடியார்க்கு அடியவன் யான்; ஆதலால், உமது எமலோகத்திற்கு வரமாட்டேன். பிரமன், திருமால் ஆகிய இருவர் பதவியையும் விரும்பேன்; நீ விரைந்து செல்' என்று கூறினான். காலனும், நன்று, நன்று என்று சொல்லிச் சென்றான்.
"எமலோகம் போந்த காலன், தலைவனை அடி வணங்கி, நிகழ்ந்தவற்றையெல்லாம் எடுத்துரைத்தான். அப்போது, எமதருமன் மனம் பதைத்தான்; மேனி வியர்த்தான்; கண்களால் கனல் பொழிந்தான்; நெடும் புருவங்களை நிமிர்த்தான்; சீற்றம் உற்றான்; "என் எருமை வாகனத்தைத் தருக" என்றான்; வந்து எதிரே நின்ற எருமைக்கடாவின் முதுகில் யானைபோல ஏறி அமர்ந்தான். குடையும் கொடியும் எழுந்து முன்னே செல்ல, வீரர் பலர் தொழுத கையினராய்ச் சூழ்ந்து வர வந்தான், எமதருமன்; காசியில் மார்க்கண்டன் இருந்த இடத்தை யடைந்தான்; செக்கச் சிவந்த தலையும், காரெனக் கறுத்த மேனியும், எரிவினால் எரியும் கண்ணும், பாசமும் தண்டும் சூலமும் ஏந்திய கைகளும் உடையவனாய் மார்க்கண்டன் கண்ணெதிரே தோன்றினான்.
"தேவர் தடுப்பினும், முத்தொழில் புரியும் மூவர் தடுப்பினும், மற்றும் வலிமை சான்றவர் எவர் தடுப்பினும், இன்று உன் உயிரைக் கொண்டே செல்வேன்' என்று இடிபோல் முழக்கினான், எமன்: 'வா என்று முறையாக அழைத்தால் இவன் வரமாட்டான் என்றெண்ணி, முன்னே போந்து, பாசத்தை வீசிப் பற்றி இழுத்தான். அதை அறிந்த மார்க்கண்டன் ஈசனைத் துதித்து, அவர் இணையடி பிரியா திருந்தான். அக் காட்சியைக் கண்ட தேவரும், மீைந்தன் இறந்தான் அன்றோ என்று மறுகி நின்றார். மதங்கொண்ட எமன், மைந்தனது உயிர்வாங்க முனைந்தான் என்று திருவுளங்கொண்டு திரிபுரம் எரித்த தேவதேவன் சீற்ற முற்றார்; சிறிது, சேவடியால் உந்தி உதைத்தார். கூற்றுவன் கருமேகம் போல் தரையிடைக் கடிது வீழ்ந்தான்.
"அந் நிலையில் ஈசன், ‘மைந்தா! நீ நம்மைப் போற்றி மாசற்ற பூசனை புரிந்தாய். ஆதலால், அந்தமற்ற ஆயுளை உனக்குத் தந்தோம் என்று அருளினார். அப் பெருமை வாய்ந்த திருமகன் ஆற்றிய தவத்தால் விலக்கலாகாத விதியையும் கடந்தான்; கூற்றுவனது ஆற்றலையும் அழித்தான்; என்றும் இறவாத பெரும்பேறு பெற்றான். இது மெய்யான சரித்திரம். இதனை அறிந்துகொள்ளுங்கள்; இன்னமும் சொல்கின்றேன்; தவம் புரியுங்கள்” என்று காசிபன் கூறினான். அப்போது நளினம் வாய்ந்த மாயை நகைத்தாள்.
மாயையின் உபதேசம்
"மாயை யறிந்த முனிவரே! நீர் உண்மையாகிய உறுதியைத் தான் கூறினீர். அது மேலான வீட்டின்பத்தை நாடும் முனிவர்களுக்குத் தகுமேயன்றி, நாம் பெற்ற மைந்தருக்கு அந் நெறியைச் சொல்லலாமோ? நம் காதல் மைந்தர்கள், சிறந்த பெருஞ்செல்வமும், குற்றமற்ற வெற்றியும் பெறுதல் வேண்டும்; வாழ்க்கையில் ஐம்பொறிகளால் அனுபவிக்கத் தக்க இன்பமெல்லாம் அடைதல் வேண்டும்; அழிவற்ற ஆயுளும், நிலைபெற்ற புகழும், மாசிலா வாழ்வும் பெறுதல் வேண்டும். இவ் வுலகிற் பிறந்த உயிர்க்கெல்லாம் பெருமை யளிக்கும் சிறந்த பொருள்கள் இரண்டு; ஒன்று கல்வி; மற்றொன்று செல்வம், இவற்றின் திறத்தை ஆராய்வோமாயின், அருமையான கல்வியினும் செல்வமே சிறந்ததென்று சொல்லத் தகும். செல்வமே அளவிறந்த கலைஞானத்தையும் மேன்மையை யும் அளிக்கும்; அறத்தையும் ஆன்ற புகழையும் ஈட்டும்; கொற்றமும் பிறவும் கூட்டும். ஆதலால், செல்வத்திற் சிறந்தது வேறொன்றில்லை” என்று முன்ரிவரை நோக்கி மாயை கூறினாள்.
பின்பு அவள், மைந்தர்களை நோக்கி, "எனவே, அருமை மைந்தர்காள் திருமாலும் பிரமனும் மற்றுமுள்ள தேவர்களும் இறைவன் என வணங்கும் ஈசனைப் போற்றி, வெம்மை சான்ற வேள்வியை நெடுங்காலம் செய்வீராக!” என்றான்.
அது கேட்ட அசுரர் தலைவனாகிய சூரன், ஈன்ற தாயையும் தந்தையையும் தொழுது போற்றினான்; அவரிடம் விடை பெற்றுத் தம்பியர் இருவரோடும் வேள்வி செய்யப் புறப்பட்டான். அன்னவர் சென்ற பின்னர், மோகமுற்றுத் தன் அருகே நின்ற முனிவரை நேர்க்கி, "ஐயனே! நான் மைந்தரைப் பாதுகாப்பதற்குச் செல்கிறேன்; நீர் மனக் கவலை ஒழிக" என்று கூறி மாயை பிரிந்து போயினாள்.
சூரன் செய்த வேள்வி
அசுரர் குலத்திற்கு ஆக்கம் தரும் வேள்வி செய்யுமாறு சூரன் . வடதிசையிற் போந்தான்; ஆலமரங்கள் நிறைந்த ஒரு வனத்தின் அருகே வெய்யதோர் வேள்வி செய்யக் கருதினான்; பதினாயிரம் யோசனை அளவு கொண்ட நிலத்தை உயர்ந்த மதிலால் வளைத்தான்; மூவகைப்பட்ட ஒமகுண்டங்களும் அமைத்த பின்பு, வேள்வி இயற்றுதற்கு வேண்டும் பொருள்களெல்லாம் தரும்படி தாயாகிய மாயையை மனத்திலே நினைத்தான். அவளும் அன்பு கொண்டு சிவனருளால் அப் பொருள்களைச் சேர்ப்பித்தாள்.
சூரன் ஒமகுண்டத்தை அடைந்து, முறையாக அர்ச்சன்னயெல்லாம் குறைவின்றிச் செய்து, மங்கை பங்கனாகிய ஈசனை மனத்தில் எண்ணி, மாசற்ற மகம் புரிவானாயினான் நெடுங்காலமாக வேள்வி செய்தும் ஈசன் அருள் புரிந்தாரல்லர் அதனை அறிந்த சூரன், "இதற்கெல்லாம் சிவபெருமான் இசைந்து அருள் செய்வாரோ?” என்று கூறி, வேள்வித் தொழிலைத் தம்பி பரிடம் விட்டு வானவர் அச்சம் கொள்ள, விண்ணிலே எழுந்தான் அங்கே நின்று, சூரன் தன் உடம்பிலுள்ள தசையையெல்லாம் வாளால் அறுத்து வேள்வித்தீயிலே அவிர்ப்பாகமாகச் சொரிந்தான் மழைபோல் குருதியை நெய்யாகப் பொழிந்தான். இவ் வண்ணம் ஆயிரம் ஆண்டுகளாக ஆகாயத்தில் நின்று ஆகுதி செய்தும் தேவதேவன் தோன்றினார் அல்லர். அது கண்டு சூரன் மனம் வருந்தி, ’இனி மாண்டுபோவதே என் கடன்’ எனத் துணிந்தான் அவ்வாறே நெருப்புச் சூழ்ந்த் ஆதிகுண்டத்தில், தாய்ாகிய மாயையின் தவ வலிமையால் எரியாது நின்ற கூரிய நுனியுடைய வச்சிர கம்பத்தின்மேற் குதித்தான்.
தம்பியர் புலம்பல்
தம்பியராகிய சிங்கமுகனும் தாரகனும், முன்னவன் முடிந்தது கண்டு, ஏங்கி அழுதார்கள். இருவர் துயரத்தையும் அறிந்த அசுரர் யாவரும் பொங்கும் கடல்போல் பொருமிப் புலம்பினர். அப்பொழுது அசுரர்களோடு அழுது சோர்ந்த சிங்கமுகன், "அந்தோ! என் உயிராகிய தமையன் இறந்தான்; இனி நான் இங்கு இருத்தல் தகுமோ? என்று எண்ணி நெருப்பிலே குதிக்க எழுந்தான்.
இறைவன் தோன்றி வரந்தருதல்
அது கண்ட சிவபெருமான், திருமால் முதலிய தேவர்கள் வியக்கத் திருவெண்ணெய்-நல்லூரில் சுந்தரமூர்த்தியைத் தடுத்தாட்கொள்ள வந்தாற்போன்று விருத்த வேதிய வடிவங்கொண்டு, தண்டூன்றி நடந்து வந்தார். அங்கு அமைந்த ஓம குண்டத்தின் அருகே சென்று, சிங்கமுகனை நோக்கி, "இங்கு எல்லோரும் வருந்துகின்றீர்களே! என்ன நேர்ந்தது? என்று வினவினார். நிகழ்ந்த வற்றையெல்லாம் சிங்கமுகன் சொல்லக் கேட்ட பெருமான், "சூரனைப் போல் நீங்கள் இறந்துபோக வேண்டா. உங்கள் தமையனை இப்பொழுதே வேள்வித் தீயினின்றும் எழுப்பித் தருவோம் துயர் ஒழிக" என்று கூறிக் கங்கையை மனத்திலே கருதினார். கங்கை யாறு புறப்பட்டது; விண்ணுலகை யெல்லாம் விரைவிற் கடந்தது; நிலவுலகிற் போந்து ஈசன் திருவடியை வணங்கிற்று; அவர் பணித்தவாறே ஓங்கி எரிந்த ஓம குண்டத்தின் இடையே பாய்ந்தது.
அந் நிலையில் பாற்கடலினின்று எழுந்த ஆலகாலம் போல் அசுரர் தலைவனாகிய சூரன் ஆரவாரித்து எழுந்தான்; முன் போலவே தோன்றினான், சூரன் அவனைக் கண்ட சிங்கமுகனும் தாரகனும் பெருஞ்செல்வம் பெற்ற வறியவர் போல் மகிழ்வுற்றார். அளவிறந்த ஊற்றம் பெற்றார்; விரைந்து ஓடி அவன் பாதம் பணிந்தார். துன்பம் ஒழிந்த தம்பியர் இருவரும் அருகே நிற்க, விரிந்த பெருஞ்சேனை வாழ்த்துரை வழங்க, சூரன் சிறந்து விளங்கினான்.
அவ் வேளையில், வேதியன்போல் நின்ற விமலன் மறைந்து, அன்னார் கருதிய சிவ வடிவத்திற் காட்சியளித்தார். ஈசனைப் போற்றிப் புகழ்ந்து நின்றான், சூரன். அப்போது அவன் முகம் பார்த்து, "நீ நம்மைக் குறித்து நெடுங்காலம் பெருவேள்வி செய்து இளைத்தாய்; உனக்கு என்ன வரம் வேண்டும்?” என வினவினார், சிவபெருமான்.
பிரமன் முதலிய வானவர் யாவரும் தம் பெருமை ஒழிந்த தென்று வருந்தி நிற்க, சூரன் கூறலுற்றான்: "திண்ணிய பிருதிவி பூதத்திலுள்ள புவனங்கள் பலவும் கொண்ட அண்டங்கள் அனைத்திற்கும் யான் அரசனாதல் வேண்டும்; அவற்றைக் காக்கும் ஆக்ஞா சக்கரமும் அருளல் வேண்டும்; அண்டந்தோறும் செல்வதற்கு மனோ வேகமுடைய வாகனங்கள் வேண்டும்; என்றும் அழியாத உடலும் அளித்தல் வேண்டும்; பாற்கடலிற் கண்வளரும் பரந்தாமன் முதலியோர் போர் செய்தாலும் அன்னாரை வெல்லுதற்குரிய வெல்படைகள் வேண்டும்; அழிவின்றி என்றும் நான் வாழ வேண்டும்” எ6ளச் சூரன் விண்ணப்பம் செய்தான்.
ஈசன் கருணை கூர்ந்து, "பிருதிவி தத்துவத்தில் ஆயிரங் கோடி அண்டங்கள் உண்டு; அவற்றுள் ஆயிரத்தெட்டு அண்டங் களை நூற்றெட்டு யுகம் நீ அரசாள்வாயாக’ என்று வரம் தந்து அவ் வண்டங்களைப் பார்த்து வருவதற்கு இந்திரஞாலம் என்னும் தேரும் வழங்கினார். மேலும், அண்டங்கள் ஆயிரத்தெட்டையும் காக்கும் வண்ணம் திருமாலின் நேமிப்படையினும் வலியதேர் ஆழிப்படை அளித்தார்; சிங்கவ்ாகனமும் தந்தார்; வானவர்க்கும் தலைவனா யிருக்கும் தகுதியை வழங்கினார்; விண்ணுலகில் வாழும் வானவரையும், தானவர் முதலிய யாவரையும் வெல்லுதற் குரிய வீரமும் பாசுபதம் முதலிய சிறந்த தெய்வப்படைகளும், என்றும் அழியாமல் ஏற்றமுறும் வச்சிர மேனியும் அளித்தார்.
பின்னர், சூரன் முதலிய மூவரையும் நோக்கி, ‘தேவர் எல்லாம் வந்து வணங்கும் மூவர் ஆகிய உம்மை ஈறிலாத நம் சக்தி யொன்றே யன்றி, யாவரே வெல்ல வல்லார்” என்று திருவாய் மலர்ந்து, அழிவற்ற தேரும், தம் பெயர் தாங்கிய தெய்வப்படையும் கொடுத்து, மூவருக்கும் தனித்தனி அருள் புரிந்து, ஈசனார் மறைந் தருளினார். வரம் பெற்ற சூரன், தம்பியரோடு வேள்விச் சாலையினின்று புறப்பட்டான். அசுரப்படை மண்ணும் விண்ணும் எண்திசையும் நெருங்கிச் சென்றது.
சூரனுக்குச் சுக்கிரன் உபதேசித்தல்
சூரன் வரம் பெற்று வருதலை அறிந்தார், சுக்கிரன்; வாட்டம் நீங்கினார்; இன்பம் என்னும் மதுவை உண்டார்; ஆசையோடு விரைந்தெழுந்தார்; மாணவ கணங்களோடு சூரனை எதிர் கொண்டார். அடி பணிந்து எழுந்த சூரனை அன்புடன் நோக்கி, "வரம் பெற்றுயர்ந்த வீரனே! உனது மேன்மையை உணர்ந்து நீயே பிரமம் என்று தெளிக; பிரமன் முதலிய தேவர்களே மேலோர் என்று பணிதலை ஒழிக. வானவர் உம்முடைய குலப்பகைவர். அன்னார் செல்வத்தை அழித்து, அவரைச் சிறையில் இடுக. இந்திரன் என்பவன் வானவர்க்கு அரசன்; எண்ணிறந்த அசுரரின் உயிர் கவர்ந்தவன் அவனே. அவனைப் பிடித்து, விலங்கினாற் பிணித்து விரைவிலே சிறையிடுக. சிறைக் கோட்டத்தில் அவனை அடைத்துக் கொடுமைகள் பலவும் செய்திடுக. வேதம் ஒதும் முனிவரையும் தேவரையும் திக்குப் பாலகரையும் தினந்தோறும், ஏவல் கொண்டிடுக. அவர் பதவிகளையெல்லாம் பறித்து அசுரர்க்கு அளித்திடுக. கொலை, കണ്ടഖ്, காமம் என்னும் மூன்றும் குறிக்கொண்டு செய்க, வஞ்சனை யெல்லாம் இயற்றிடுக. அதனால் வரும் கேடொன்றும் இல்லை. அவ்விதம் செய்யாவிடில், அரசே, நீ கருதியனவெல்லாம் கைகூட மாட்டா. அன்றியும் எவரும் உனக்கு அஞ்சமாட்டார்கள். வளமான துளசி மாலையை முடியிலே அணிந்த திருமாலை இடப வாகனமாகவுடைய சிவபெருமான் தந்த அண்டங்கள் ஆயிரத் தெட்டையும் இன்றே சேனையோடு சென்று கண்டு, அங்கு உன் அரசுரிமையைச் செலுத்தி, மீண்டு வந்து, இவ் வண்டத்திலே திக்கெலாம் புகழ வீற்றிருப்பாயாக’ என்று கூறினார். குருவின் வாசகத்தைக் கேட்டு மகிழ்வுற்ற சூரன் அவரிடம் விண்ட பெற்றுச் சென்றான்.
மாயையின் உபதேசம்
சிவபெருமான் அருளால் மைந்தர் மூவரும் பெற்ற பெருவரங்களையும் வலிமையையும் மனத்தினுள்ளே நினைத்து மிகுந்த அன்புடன் மாயை வானத்தில் வந்து தோன்றினாள். தாயைக் கண்ட சூரன், தம்பியரோடும், தங்கையாகிய அசமுகியோடும் சென்று அன்புடன் வணங்கினான். அப்போது மாயை அவரைப் பெற்ற ஞான்றினும் பெருமகிழ்ச்சியுற்று, ஆசி கூறினாள்; "மைந்தர்காள்! நீர் வேள்வியாற்றிய விதமும், ஈசன் நுமக்கு அளித்த வரமும் கேள்வியுற்றேன்; உம்மைக் காண விருப்புற்று வந்தேன். இந்திரன் முதலிய தேவரையெல்லாம் உமது வலிமையால் வெல்வீராக! வெற்றி பெற்ற பின்னர் எல்லா வுலகங்களையும் ஆண்டுகொண்டு நிலவுலகில் நீடூழி வாழ்வீராக. மாயம் புரியவேண்டுமாயின் என்னை மனத்தில் அன்போடு நினைத்தால், உடனே யான் வந்து நீர் விரும்பியவற்றைச் செய்து முடிப்பேன். நெடுங்காலம் உம்மை நான் பிரிந்திருக்கலாற்றேன். அன்புடன் யானே வந்து பன்முறை காண்பேன். நீவிர் மூவரும் வேற்றுமையின்றிக் கலந்து வாழ்வீராக!” என்று கூறி மாயை சென்றாள். மைந்தர் வேளை வணங்கி நின்றார். பின்பு, சூரன் அசுரரை அழைத்து, "கோடி தேருடன் நமது சேனை குபேரன் நகரத்திற்குச் செல்லுதல் வேண்டும்; விரைவில் முரசறைக” எனப் பணித்தான்.
சூரன் திக்கு விசயம் செய்தல்
பெரும்படை திரண்டு எழுந்தது. அப்போது, பூமி நடுங்கிற்று. பூமியைத் தங்கும் ஆதிசேடன் குலம் நடுங்கிற்று வானம் நடுங்கிற்று; எட்டுத்திசையும் நடுங்கிற்று; மலையெல்லாம் நடுங்கிற்று: கடல் நடுங்கிற்று; கனலும் நடுங்கிற்று. இவ்வாறாகச் சென்ற சேனையோடு சூரன் குபேரனது நகரமாகிய அளகாபுரியை வளைந்தான்; அதையறிந்த தூதுவர் விரைந்து பொன்னகரின் மன்னனிடம் போந்தனர்.
தூதுவர் சொல்லிய் செய்தி கேட்ட குபேரன் துன்பமுற்றான்; துணுக்கம் உற்றான்; "அசுரரை நாம் வெல்லுதல் அரிது. அன்னார் ஈசனிடம் வரம் பெற்றுள்ளார். ஆதலால், அவரைப் புகழ்ந்து ஆசி கூறிப் போற்றுதலே முறை” என்று எழுந்து சென்றான், புஷ்பக விமானத்தின் மேல் ஏறிப் போந்து, சூரன் முன் நின்று வணங்கித் துதித்தான்; அளவற்ற ஆசி கூறி, "யான் உமக்கு அடியன்" என்றான். அது கேட்ட சூரன், "இங்கு நீ இனிது வாழ்க" என்று கூறியனுப்பினான்.
அப்போது அசுரர்கள் அளகாபுரியின் உள்ளே புகுந்தார்கள்; பொன்னும் மணியும், விமானங்களும் வேறுள்ள படைக்கலங்களும், தேரும், குதிரையும், யானையும் கவர்ந்து சென்றார்கள். அளகாபுரியை விட்டுக் கீழ்த்திசையின் கோடியிலுள்ள ஈசான நகரத்தை அடைந்தான், சூரன், இது நீலகண்டனாகிய சிவபெரு மானது சாரூபத்தைப் பெற்ற ஈசானமூர்த்தி வாழும் வளநகர் என்று அறிந்தான்; அந்த நகரத்தை விட்டு, அசுர சேனையோடு சூரன் சீற்றமுற்றுக் கீழ்த்திசையில் உள்ள இந்திரன் நகரத்தை அடைந் தான். அதனை யறிந்த இந்திரன் விண்ணுலகத்திற்குப் போய் விட்டான். அப்போது சூரன் அந் நகரத்தைச் சுட்டெரித்து அசுரர் சேனையோடு அங்கித்தேவன் வாழும் நகரத்திற்குச் செல்லலுற் றான். "அசுரர் சேனைப் பெருங்கடலை வற்ற வைத்து அழிப்பேன்’ என்று அங்கித்தேவன் அவ் வெள்ளத்தை நெருங்கி வளைத்து எரிக்கத் தொடங்கினான்.
அதைக் கண்டு சீறினான், தாரகன்; தேர்மீது ஏறினான்; காற்றினும் கடிது சென்றான்; எரித்திடும் அங்கியை எதிர்த்தான்; கையில் வில்ல்ை எடுத்து வளைத்தான். அதனைக் கண்டான், அங்கித்தேவன்; "இவன் வில்லில் அம்பு தொடுப்பானாயின் இன்றே உலகமெல்லாம் ஒழிந்திடும்; என்னுயிரும் முடிந்திடும்: பிரமன் முதலிய வானவர் குலமெல்லாம் மடிந்திடும்” என்று வருந்தினான்; சினம் அடங்கி ஒடுங்கினான்; துயரமுற்று நடுங்கினான்; கரம் குவித்து வணங்கித் தாரகன் முன்னே விரைந்து டேர்ந்தான்; "பிழை பொறுக்க வேண்டும்” என்றும் போற்றி நின்றான்.
ஈசனுடைய பாசுபதப் படையை ஏந்தி நின்ற தாரகன் பொறுத்தான்; சீற்றம் விடுத்தான்; மகிழ்ச்சியுற்றான். அசுரர் சேனையை விலக்கி, அங்கித்தேவனை நோக்கி, "நீ எமக்கு ஏவல் செய்திடுக; உன்னுயிரை உனக்குத் தந்தேன்; இன்னே நின் நகரத்திற்குச் செல்க” என்றான், தாரகன்.
அசுர சேனை ஆரவாரித்து எழுந்து சென்றது. வெற்றி முரசம் வீறிட்டு ஒலித்தது; எங்கும் கரிப்படையும் தேர்ப்படையும், பரிப் படையும் நெருங்கி நடந்தன; அவை எழுப்பிய தூசி கடலைத் துர்த்தது; அசுரக் கொடிகள் ஆகாயத்தை அடைந்தன; கொடி யேந்திய முன்னணிப் படை முந்திச் சென்று எமனுடைய நகரத்தை அடைந்தது.
அது கண்ட எமன், தெளிந்த மனத்தோடு எழுந்தான். எருமைக் கடாவின்மேல் ஏறினான்; சுருங்கிய சேனை சுற்றிச் செல்ல இமைப் பொழுதில் சூரனிடம் போந்தான்; போற்றினான்; தொழுதான்; ஆசி கூறினான். சிறப்பு வாய்ந்த எமனது செய்கையை நோக்கினான், சூரன்; அன்பு கூர்ந்து இன்பமுற்றான்; "நமது ஆணையை மேற்கொண்டு நின் பரிவாரங்களுடன் ஈண்டு வாழ்க என்று பணிந்து மேலே சென்றான்.
கூற்றுவன் வலியிழந்து குறுகிய தனமையையும், அவன் பணிந்து சென்ற பான்மையையும் மனத்தில் எண்ணி மகிழ்ந்த சூரன், தென்மேற்றிசையில் உள்ள நிருதியின் நகரை நோக்கினான் மாற்றான் வலிமையையும் தன் வலிமையையும் மனத்தி எண்ணி மகிழ்ந்த சூரன் அந் நகரை நாடி விரைந்தெழுந்தான்.
சூரன் வலிமையும், தன் வலிமையும் மனத்தில் சீர் தூக்கி ஆராய்ந்த நிருதி, தன் சேனையோடு சென்று துதித்தான்; அவனடி பணிந்தான்; "நான் உன் உறவினன்” என்றான்; அதற்கு அடையாளமாகத் தாரகன் அருகே சென்று நின்றான். இவ்வாறு நெருங்கிய உறவு பூண்ட நிருதியின் நகரைவிட்டு நீங்கினான். அசுரர் கோமான்.
சூரன் வருவதையறிந்த வருணதேவன் கருங்கடலிற் புகுந்தான் வாயுதேவன். இருளுலகில் ஒளிந்தான். இருவர் நகரையும் சூரன் சூறையாடினான்; கொடுமையெல்லாம் விளைத்தான்; அப்பால் ஏழு வகைப்பட்ட பாதாளலோகம் புகுந்தான்; அங்குள்ள அசுரர் முதலியர். அனைவரும் வணங்கினர். அவர்க்கு அருள் செய்து மேலும் சென்றான் சூரன், ஆதிசேடனது உலகத்தை அணுகினான். அவன் சீற்றங்கொண்டு எழுந்தான்; போர் புரிந்தான். அவன் சேனையை அசுரர் படை வென்றது. அந் நிலையில் ஆதிசேடன், சூரனை வியந்து போற்றினான். அவன் நகரத்தில் ஒரு நாள் தங்கினான், சூரன், தேவர்கள் ஆதிசேடனிடம் அடைக்கலமாக ஒப்புவித்திருந்த அமிர்தத்தை அப்போது சூரன் வற்புறுத்தி வங்கினான்; மெய்யன்பு வாய்ந்த தம்பியரோடு அதனை இன்புற்றுப் பருகினான்; அந் நகரை விட்டுச் சென்றான்.
பூவுலகத்திற் போந்து, உவர்க்கடலையும் தீவகத்தையும் கடந்து, சேனைப் பெருங்கடல் சூழ்ந்து வரச் சூரன் சென்றான். திருமகளும் நிலமகளும் துதிக்கப் பாம்பணையிற் பள்ளி கொண்டு திருமால் கண் வளரும் திருப்பாற்கடலை அடைக்கான், அசுரர் செய்த ஆரவாரத்தைக் கேட்டு மங்கையர் இருவரும் வேர்த்து விதிர்விதித்தனர்; அச்சமுற்று அஞ்சன வண்ணனைப் பற்றிக் கொண்டனர்.
அந் நிலையில் உறக்கம் தெளிந்தார், திருமால்; 'அஞ்சேல்' என்று இருவருக்கும். அபயம் அளித்தார்; தம் வாகனமாகிய கருடனை நினைத்தார். அவர் நினைப்பதற்கு முன்னே வலிமை சான்ற கருடன் அங்கு வந்தடைந்தான். அவன் தோள்மீது அரிமான்போல் ஏறினார், திருமால்; சங்கு, சக்கரம், கதை, வாள், வில் என்னும் ஐம்படையும் கொண்டு அசுர சேனையின் எதிரே சென்றார். கார்மேக வண்ணனாகிய திருமால், கருடவாகனராய், மண்ணுலகத்தைச் சூழ்ந்த கடல் போன்ற அசுரப்படையை வளைந்து சுற்றி, எண்ணிறந்த மாயா வடிவம் காட்டி, பகைவர் ஏவரும் தப்பிப் போகாத வண்ணம் அம்பு மாரி பொழிந்து போர் புரிந்தார்.
அது கண்ட தேவர் ஆரவாரித்தனர். இவ்வாறு கொலைப் போர் புரியும்போது தாரகன் சீற்றமுற்றுப் போர்க்களத்தை நோக்கினான்; சிதறியோடும் சேனையை அஞ்சேல் என்று தேற்றினான்; மேரு மலை போன்ற வலிய வில்லைக் கையில் எடுத்தான், இடியென முழங்கும் குதிரை பூண்ட தேர்மீது ஏறி நொடிப்பொழுதில் வந்தான். வந்த தாரகன்மீது திருமால் அம்பு மாரி பொழிந்தார். அவற்றை ஒரு தண்டால் விலக்கித் தள்ளினான், தாரகன்; சீற்றம் கொண்டு முன்னேறினான்.
அது கண்ட திருமால், நேமிப் படையை எடுத்து விடுத்தார். இமை கொட்டும் நேரத்தில் உலகெலாம் அழிக்கும் தன்மை வாய்ந்த அப் படை சென்று தாரகன் கண்டத்தை அணுகிற்று. ஆயினும், சிவபெருமான் அளித்த வரத்தின் செம்மையால் அஃது அவன் கழுத்தில் ஒரு பொன்னாரமாக விழுந்தது. ஆஹா தவத்தினும் வலிய தொன்றுண்டோ? "வலிமை வாய்ந்த தெய்வப் படை யாகிய நேமியே மணியாரமாயிற் றென்றால் வெற்றி உனதேயாகும்; இனிச் செய்யும் போரும் உண்டோ? இளையோனாகிய உன் திறம் இதுவாயின், உனக்கு மூத்தவராய் அங்கே நிற்கும் வீரது பெருமையை யாவரே விரித்துரைக்க வல்லார்? ஈசனார் மகிழும் வண்ணம் நெடுங்காலம் கனல் வேள்வி செய்து வரம் பெற்றுள்ளி உங்களினும் வலிமை பெற்ற அசுரர் இவ் வுலகில் எவரும் இலர். ஆதலால், உம்மை வெல்ல வல்லவரும் உண்டோ? இனி எனக்கு நீர் உறவினர்” என்று மங்கல முறையில் அளவற்ற ஆசி கூறிச் சென்றார், திருமால்.
திருமால் சென்ற பின்னர், வெற்றி மாலை சூடிய தாரகன் வேறொரு தேர்மீது ஏறினான்; சூரன் முன்னே சென்றான். அவனும் நிகழ்ந்தனவெல்லாம் அறிந்து, மன மகிழ்ந்து, தம்பியைத் தழுவிக்கொண்டான். அப்பால் அசுர சேனை புறப்பட்டது.
இவ்வாறு எழுந்த சேனை சுவர்க்க லோகத்தை அடைந்தது. ஒற்றர் சிலர் ஓடிச்சென்று, "சூரன் வந்தான்’ என்று இந்திரனிடம் அறிவித்தார்கள். அந் நிலையில் இந்திரன் அஞ்சினான்; பெருமூச்செறிந்தான்; பொருமித் தேம்பினான்; அறிவழிந்து சாம்பினான்; மனத் திண்மை இழந்து மேல்விளைவினை எண்ண லுற்றான்; "இங்கு வந்திடும் சூரனெதிரே சென்று முறையாக யான் போர் புரிந்தால், இவ் வுயிரை இழப்பேன்; அல்லது இறவா திருந்தால், இடர்க்கடலில் வீழ்ந்து மாயாப் பழியில் மூழ்குவேன்" என்று இந்திரன் நினைந்து விரைந்து எழுந்தான்; இந்திராணியோடு குயில் வடிவங் கொண்டு வானத்திற் பறந்து போயினான்.
பகைவர்கள் அவ் விருவரையும் எங்கும் தேடினார்; காணாராயினார். அகப்பட்ட தேவர்களை அசுரர்கள் பிடித்தார்கள்; கலங்க அடித்தார்கள்; கைகளாற் குத்தினார்கள்; அன்னார் பெருந் தோள் நெரிய மேலாடைகளால் நெருக்கி இறுக்கினார்கள். இரக்க மற்ற அசுரர், வானவரை இங்ஙனம் வருத்திச் சூரன் முன்னே கொண்டு நிறுத்தினர். அந் நிலையில் அன்னார் அவனை வணங்கி, "ஐயனே! இன்றுமுதல் என்றும் எமக்கு அமைந்த தெய்வம் நீயே! எம்மைக் காக்கும் மன்னனும் நீயே பற்றுடைய சுற்றமும் நீயே இனி, நாங்கள் அனைவரும் நின் ஆணையின் படியே ஏவல் செய்வோம்," என்று சொல்லித் தொழுது நின்றார்கள். சூரனும், அவர் செய்கையை மெச்சி அகமகிழ்ந்தான்; கட்டவிழ்த்து விடுவித்தான்; "இனி நாம் ஏவிய பணியைச் செய்து வாழ்க!” என்று கூறி விடை கொடுத்தான்.
பின்பு, கல்வி கேள்விகளிற் சிறந்த மார்க்கண்டன் முதலிய மாதவத்தோர் வாழும் மகலோகம், சனலோகம், தவலோகம் என்னும் மூன்று உலகமும் போற்றச் சூரன் பிரமலோகம் போந்தான். அதையறிந்த பிரமதேவன் நடுக்கமுற்றான். பெருங்கடல் போன்ற சேனைகளின் நடுவே வந்த சூரனிடம் போந்து, "அரசே வாழ்க! வாழ்க!” என்று ஆசி கூறினான். "மன்னவா? இங்கு நீ வருவதற்கு நான் என்ன மாதவம் செய்தேனோ அத் தவத்தின் தன்மையை ஆதிசிவன் ஒருவனேயன்றி யாவரே அறிய வல்லார்" என்று பேசிய பிரமனிடம் அன்பு கூர்ந்தான், சூரன்; பிரமலோகத்தில் அவனை இருக்கும்படி பணித்து, துளவமாலை யணிந்த திருமால் வீற்றிருக்கும் வைகுந்தம் போந்தான்.
சூரனைக் கண்ட மாயேரின் எழுந்து வந்து, "நெடிது வாழ்க" என்று எல்லையற்ற ஆசி கூறினான். பின்பு, திருமால், பிரமன் முதலாகவுள்ள தேவர்க்குரிய ஆணை யெல்லாம் அளித்தருளி, தேவ தேவனது சிவலோகத்தை அணுகினான், சூரன்; தன் பரிசனங்களை யெல்லாம் ஓர் எல்லையில் நிறுத்தித் தம்பியர் இருவரோடும் திருக்கோயிலை நோக்கி நடந்தான். ஈசனது கோயிலின் கடைவாயிலில் நின்ற சூரனை ஆணைப்படி நந்தி தேவர் உள்ளே செல்லவிட்டார். காந்தள் மலர் போன்ற கைகளை யுடைய கவுரிதேவியோடு வீற்றிருந்தருளும் கண்ணுதற் கடவுளை அணுகி, அன்புடன் அடி பணிந்து போற்றி நின்றான், அசுர மன்னன்.
நீலகண்டனாகிய பெருமான், அருள் கூர்ந்து சூரனை நோக்கி, "நீ மற்றைய அண்டங்களையும் கண்டு, நம் ஆணையால் எத் திசையும் புகழ இனிது அரசாள்க’ எனத் திருவாய் மலர்ந்தார். அது கேட்ட அசுரர் கோமான், ஐயன் மலரடி பணிந்து விடை பெற்றுப் புறப்பட்டான். ஈசன் பணித்தவாறே ஏனைய அண்டங்களையும் சிவகணங்களின் உதவியால் சென்று கண்டு, அங்குள்ள வானவரையெல்லாம் வென்று, அவர் செல்வங்களைக் கவர்ந்து, தன்னுடன் இருந்த பலரை அங்கு அரசாள வைத்தான், சூரன்.
அசுரேந்திரன் சூரனைக் கண்டு மகிழ்தல்
சூரனது சிறப்பெல்லாம் அறிந்த அசுரேந்திரன், உயிரைப் பிரிந்த உடல் மீண்டும் வந்து, பொருந்தினாற் போன்று தன் சுற்றத்தாருடன் எதிர்கொண்டு சூரனைக் கை கூப்பித் தொழுதான். அது நகிழ்தல் கண்ட சூரன், "ஐயனே! நீ சுகமாக இருக்கின்றாயா?” என்று வினவினான். "அசுரர் குலம் விளங்கத் தோன்றிய அரசே! நீ யிருக்க எமக்குத் தின்மை யுண்டோ? தாழ்வுண்டோ?" என்று இனிய மொழி பேசி அசுரேந்திரன் அவன் அருகே சென்றான். வெற்றி மாலை சூடிய சூரன், அசுரர் சேனையோடு நிலவுலகத்திற்கு விரைந்து திரும்பினான். அங்குத் திருமால் முதலிய தேவரும் முனிவரும் சூரனை எதிர்கொண்டு அழைத்து ஆசி கூறி அன்போடு போற்றினர். அவர்களோடு கலந்து நின்ற பதினொரு கோடி ருத்திர கணங்களை நோக்கினான், சூரன். "உலகத்தைப் படைத்த பிரமதேவனிடம் பதினொரு உருத்திரர் தோன்றினர். அன்னார் மேற்புவனத்தில் இருந்தார். அவர் படைத்த பவுர் முதலிய பதினொருகோடி ருத்திரர்களே இவர்கள்; ஈசன் அருளால் வானவர் இனத்தில் சேர்ந்து வந்துள்ளார்” என்று திருமால் சொல்லக் கேட்ட சூரன், "இதுவோ இவர் வரலாறு" என்று கூறினான்.
வீரமகேந்திர நகரம்
பின்பு, அங்கு நின்ற தேவதச்சனை நோக்கி, "அறிஞனே, நாம் வசித்தற்கு ஏற்ற நகரத்தை விரைவிலே ஆக்குக” எனச் சூரன் பணித்தான். சிற்ப நூல்களிற் சொல்லிய முறைகளை ஆராய்ந்து மாமேரு மலை போன்ற நான்கு கோபுர வாயில்கள் அமைத்து, நூறு யோசனை நீளத்தில் பல மாடவீதிகள் வகுத்து, இன்னும் மன்னரது இயல்புக் கேற்ற மற்றவற்றையும் உண்டாக்கி, நகரின் நடுவே சூரனும் அவன் தேவியும் வசிப்பதற்கு ஒரு மாளிகையும் நிருமித்தான், தேவதச்சன்; நீலமலரும் குமுதமும் கமலமும் நெருங்கிப் பூத்த பொய்கைகளும், வானளாவிய பூஞ்சோலைகளும், அழகிய செய் குன்றுகளும் முறையாக அமைத்தான். அலைகடலே அகழியாகக் கொண்ட நகரத்தில் நின்ற அரண்மனை, அழகிய பொன்னொளி விரித்தமையால் விண்ணுலகில் உள்ள பொன்னகரம் வெள்ளிநகரம் போலாயிற்று. ஒப்பற்ற அசுர மன்னனது வெற்றிப் புகழும் பெருமையும் பெற நின்ற அந் நகருக்குத் தச்சன் வீரமகேந்திரம் என்னும் சிறந்த பெயரை இட்டான், வீரமகேந்திரத்தைச் செய்த பின்னர், வடகடலின் நடுவே சிங்கமுகன் என்னும் அசுர மன்னனுக்கு ஒரு பெரு நகரம் அமைத்து, அதற்கு ஆசுரம் என்று பெயரிட்டான்.
நெடிய மேருமலையின் தென்பால் அமைந்த நாவலந் தீவில் உள்ள ஏமகூட மலையின் அருகே, தேவதச்சனுடைய தந்தையாகிய விசுவகர்மன் சென்றான். அங்குத் தாரக மன்னனுக்கு மாயாபுரம் என்னும் மணிநகரை அவன் உண்டாக்கினான்.
வீரமகேந்திர மாளிகையில் வாழ்ந்த சூரன், அழகிய பீடத்தில் அமர்ந்து, திருமக்ளுக்கு உறைவிடமாகிய தெள்ளிய திருப்பாற் கடலின் நீரால் தேவர்களால் அபிஷேகம் செய்யப்பெற்றான்; பின்பு ஆடை அணிகளால் அலங்கரித்துக்கொண்டு, அரியாசனத்தில் வந்தமர்ந்தான். அப்போது, திருமால் புனைதற்கேற்ற அழகிய திருமுடியைப் பிரமதேவன் எடுத்துச் சூரன் தலையிலே சூட்டினான். அமரரும் முனிவரும் பொன்மலர் எடுத்து, மன்னர்மன்னரது சென்னியில் விளங்கிய திருமுடியில் முறையாகச் சொரிந்தார்கள். அரம்பை, மேனகை, ஊர்வசி முதலிய வான மங்கையர் பலர், இன்னிசைக் கருவிகளில் எழுந்த பாடலுக்கு ஏற்பத் தேசிகம், வடுகு, சிங்களம் என்னும் மூவகை ஆடல்களை முறையாகப் புரியலுற்றார்.
இவ்வாறு சிறப்பாக அரசு வீற்றிருந்த சூரன், தெய்வத் தச்சன் பெற்ற பதுமகோமளை என்னும் மதிமுகம் வாய்ந்த மங்கையை, பிரமன் முதலிய வானவரும் தானவரும் பிறரும் போற்ற விதிமுறைப்படி திருமணம் செய்து அன்பு கொண்டு வாழ்ந்தான்; சிங்கமுக அசுரனுக்கு எமதருமன் திருமகளாகிய விபுதை என்னும் மங்கையை வதுவை செய்வித்தான்; நிருதியின் புதல்வியான சவுரி என்னும் நங்கையைத் தாரக அரசனுக்குத் திருமணம் புரிவித்தான் பின்பு சூரன், தம்பியர் இருவரையும் நோக்கி, "நீங்கள் உங்களுக்குரிய வளநகரம் போந்து இருகோடி வெள்ளமாகிய சேனைகளோடு இனிது வாழ்வீராக” என்று விடை கொடுத்து அனுப்பினான்.
தம்பியர் இருவரும் தத்தம் நகரத்திற்குச் சென்ற பின்னர், தருமகோபன், துர்க்குணன், துன்முகன், சங்கபாலன், வக்கிரபாலன், மகிடன் முதலியோரை மந்திரிகளாகக் கொண்டு, வானவர் போற்ற வீரமகேந்திரத்தில் வீற்றிருந்து சூரன் அரசு செய்தான்.
வானவர் ஈனப்பணி புரிதல்
இங்ஙனம் மலைபோல் உயர்ந்த மாடங்களையுடைய வானவர் மகேந்திரபுரத்தில் சூரன் அரசு செய்யும்பொழுது இந்திரனும் வானவரும் முனிவரும் அங்குப் போந்து, அவன் ஏவுவதற்கு முன்னமே குறிப்பறிந்து நடப்பாராயினர். இவ்வாறு, வானவர் ஊன்முற்றவர் போல் உலைவுற்றுப் பணி செய்து வரும்பொழுது, ஒரு நாள் இந்திரனையும் வானவரையும் சூரன் வரவழைத்து, "நீங்கள் அசுரர்க்குத் தம்பியர் அல்லரோ? அந்த முறையால் அவர் பணி உமது பணியன்றோ? தினந்தோறும் நீங்கள். அலைகடலிற் போந்து அங்குள்ள மீன்களையெல்லாம் அள்ளிவரக் கடவீர்” என்றான். அம் மொழி கேட்ட வானவர், மனம் நடுங்கினார்; மயங்கினார்; மானத்தால் குறுகினார்; கடல் மீனைக் கவர்ந்துவரக் கட்டளை யிட்டானே, காவலன் இனி என்ன செய்வோம்! இப்படியும். பிரம தேவன் நம் தலையில் விதித்தானே! என்று ஏங்கினார்; அரசன் ஆணையை மறுத்தற்கு அஞ்சிப் பணிசெய்யப் புறப்பட்டார்.
கடலை நோக்கி வழி நடந்து செல்லும்போது, வானவரும் இந்திரனும் வருந்தி ஏங்கினார்: "இப் பணி புரிதல் நமக்குத் தீராப் பழியன்றோ? இவ்வசை வந்தடையும் முன்னே உயிர் விடுதல் சாலவும். நன்று; அந்தோ! சாவும் நம்மைச் சாராதே ! என் செய்வோம்!” என்று மனம் வெதும்பினார்; புலம்பினார்; கடற்கரையை வந்தடைந்தனர்.
அந்த வேளையில், இந்திரன் வருண தேவனை அழைத்து, "ஜயனே கருங்கடலின் பெருந்தெய்வம் நீயே அன்றோ? உனனிலும் வலியார் இவ்வுலகத்தில் உண்டோ? உன் கைத்திறத்தால் திமிங்கிலம் முதலிய கணக்கற்ற மீன்களை இக் கடற்கரையில் ஏற்றுவாயாயின் எம்மை இடர்க் கடலினின்றும் கரையேற்றியவன் ஆவாய்” என்றுரைத்தான். வருணன் அதற்கு இசைந்து, பெருங் கடற்கரையிலே மீன்களை அடுக்கடுக்காகக் கொண்டு குவித்தான். அப்போது தேவர்களை நோக்கி, "இவற்றை இனி எடுத்துச் செல்லுதல் உமது பணியாகும்” என்று ஏவினான், இந்திரன். வானவர், உடல் நடுங்கினர்; உளம் பதைத்தனர்; கண் கலங்கினர்; நாணத்தால் நலிந்தனர்; "தேனார்ந்த கற்பகத்தின் திருநிழலில் இன்புற்று வாழ்பவர் என்று ஏற்றமாக எண்ணப்படும் நாம், மீனைச் சுமந்து ஈனர்களாய், எல்லோரும் சிரிக்க அசுரர் முன்னே செல்வதைவிட ஆவி துறத்தல் நன்று,” என்று பலவாறு பன்னிப் புலம்பி, மீனைச் சுமந்துகொண்டு திக்குப் பாலகர்களோடு சூரன் திருநகரை நோக்கி நடந்தார்கள்.
அப்போது, அவரைக் கண்ட அசுரர் பலவாறு பேசுவாரா யினார்: "நெடுங் கடலைக் கலக்கி, இதோ! சில மீன்களைத் தருகின்றார் இவர்” என்பார். "சாரமெல்லாம் கதிரவன் உண்ட பின்னர், வெறும் சக்கையை நமக்குத் தருகின்றார் இவர்” என்பார். "வேத நெறிமுறையை விட்டொழிந்த இவர், ஏவல் புரியும் பேதை நெறியை ஏற்றார்” என்பார். "குற்றமற்ற நிம் குலத்தை இகழ்ந்தவர் இப் பாடும் படுவார்; இன்னமும் படுவார்’ என்பார். "மண்ணவரும் இகழும் வன்பழியைப் பெற்றும் விண்ணவர் தலைவன் இன்னும் உயிர் விட்டிலனே" என்பார். "கண்ணாயிரம் படைத்த விண்ணவர் தலைவனுக்குக் கருத்து மிகக் குறைவே" என்பார். "அவன் பெண்ணோ அலியோ பேடோ” எனப் பழிப்பார். இவ்வாறு நிகழ்ந்த ஏளனப் பேச்சுக்கிடையே, ஈனமுற்ற வானவர்கள் எடுத்து வந்த மீன்களைத் தாரணிந்த சூரன் கண்ணுற்றான்; களிப்புற்றான்; "நாள்தோறும் இப்படியே கொண்டு வருக” என்று பணித்தான். "நல்லது” என்றார், வானவர்.
இவ் வண்ணம் நிகழும் நாளில் சூரன் ஆற்றிய தவத்தின் செம்மையால், பதுமை என்னும் பாவை புதுமதி போன்றதொரு பிள்ளையைப் பெற்றாள்; அப் பிள்ளை காலனுக்கும் காலன்போல் விளங்கினான். பானுகோபன் என்று பெயர் பெற்ற அப் பாலன் மன்மதனே என மங்கையர் மயங்கத்தக்க பேர்ழகு வாய்ந்து வளர்ந்தான்; திருமகளின் தலைவனாகிய திருமாலொடு பொருது வெற்றி பெற்றான்.
பானுகோபனுக்குப் பின் அங்கிமுகன், இரணியன், வச்சிர வாகு என்னும் மைந்தரைப் பெற்றாள், பதுமை, சூரன் அவர்களைக் கண்டு அக மகிழ்ந்தான்.
அசர வீரரின் மைந்தர்கள்
சிங்கமுக அசுரன் மைந்தராய் அதிசூரனும் நூற்றுவரும் தோன்றினர்; அன்னவரது வல்லமையே யாவரே சொல்ல வல்லார்? சிங்கமுகன் தம்பியாகிய தாரகன் முன்னர்ச் செய்த தவத்தின் வலிமையால் பால சூரியனைப் போன்ற மைந்தன் ஒருவனைப் பெற்றான். சூரன் முதலிய மூவருடன் பிறந்த அசமுகி என்பவள் ஒருவருக்கும் வாழ்க்கைப்படாதவளாய், முறையற்ற செயல்களால் நிலையழிந்து, அறம் துறந்து, வானவர்க்குரிய மாதரை உடன்பிறந்த மூவர்க்கும் உதவிவந்தாள். அவள் துர்வாச முனிவரை வலிதிற் சேர்ந்து பெற்ற மைந்தர் இருவர்; தாய் வடிவத்தவ்ன் ஒருவன்; தந்தை வடிவத்தவன் மற்றொருவன்; வில்லவன், வாதாவி என்பது அவர் பெயர். அவ் விருவரும் அன்னையின் சொற்படி அப்பனாகிய முனிவனைத் தொழுதார்கள்.
இப்படிப் பெருக்கமுற்ற அசுர மைந்தரும் பிறரும், முனிவரையும் தேவரையும் மனிதரையும் வருத்துவாராயினர். சூரன் சிறப்பாக அரசு புரிந்திருந்தான். அந் நிலையில் இந்திரனைச் சிறைசெய்து, அவன் தேவியைக் கைப்பற்றக் கருதினான், அசுர மன்னன். படைத்தலைவருள் ஒருவனை அழைத்து, "நீ போய் இப்பொழுதே இந்திரனைப் பிடித்து வந்து இங்கே விடுக” என்று ஏவினான். பின்னும் ஒன்பது கோடி அசுர மாதரை அழைத்து, "தேவேந்திரனோடு இன்புற்றிருக்கும் தேவியை இங்கே எடுத்துவந்து கொடுத்திடுக" என்று வலிய படைத்துணையோடு விடுத்தான்.
இந்திரன் ஓடி ஒளித்தல்
”அளவற்ற படைகளோடு அசுரர் வந்தனர்; அசுரமாதரும் இந்திரன் அமர்செய்பவர் போல் அணுகினர்; அன்னார் கருத்து யாதோ அறிகிலோம்" என ஒற்றர் வந்து இந்திரனிடம் ஒளித்தல் உரைத்து நின்றார்கள். தீயினும் கொடிய அசுரர் சூழ்ச்சியை அறிந்து, தேவியோடு மாயையால் மறைந்து, பூவுலகத்தை அடைந்தான், இந்திரன். விண்ணவர் தலைவனைப் பிடிக்கச் சென்ற வீரர் யாவரும் அவனைத் தேடினர்; அசுர மாதர்கள் சசியைத் தேடினர்; இருவரையும் காணாது மனம் சோர்ந்து பெருங்கவலை கொண்டனர்; இருவரும் தப்பிப் போயினர் என்று அசுரர் கோமானிடம் சென்று அறிவித்தார்கள். அந் நிலையில் அவன் நெருப்பெனச் சீற்றமுற்றான்; அரு மணியிழந்த நாகம்போல் அலக்கண் உற்றான்.
இந்திரன் மைந்தனாகிய சயந்தனை நாரதன் தேற்றுதல்
அப்போது, வைகுந்தத்தில் இருந்த இந்திரன் மைந்தனாகிய சயந்தன், பெற்றோர் இருவரும் ஒளித்துப் போந்தவாறும், அசுரர் படை அவர்களைத் தேடிக் காணாது மீண்டவாறும, வானவர் துன்புற்றவாறும் அங்கிருந்தபடியே அறிந்தான்; வானவர் நாடு வேந்தன் இன்றி வறிதே இருத்தல் ஆகாது. என்று கருதி அங்குப் போந்தான்; வருந்திப் புலம்பிய வானவரைக் கண்டான்; தாய் தந்தையரைக் காணாது துன்பக்கடலில் மூழ்கினான்; ஏக்கமும் இரக்கமும் எய்தினான்; இன்னது செய்வது என்றறியாது பித்தன்போல் சித்தம் கலங்கி நின்றான்.
அவ் வேளையில், அப் பாலன் உள்ளத்தைத் தேற்றக் கருதி, நாரத முனிவன் அங்கு வந்துற்றான். நடுங்கிய மேனியனாய் எழுந்து வணங்கினான், சயந்தன்; ஓர் ஆசனத்தில் அவனை அமர்த்தி அருகே நின்றான். அப்போது முனிவன் அவனை நோக்கி, "ஐயனே! முற்றும் உணர்ந்தவர்கள் இன்பம் வந்தடைந்த போது மகிழ்ந்திட மாட்டார்; துன்பம் வந்துற்றபோது துளங்கிடவும் மாட்டார்; பிறந்தோர்க்கெல்லாம் இன்பமும் துன்பமும் உடலோடு பொருந்தின அன்றோ? இரண்டும் முன்னை வினைப்பயன் என்றெண்ணி அமைவார். ஒரு காலத்தில் வறியராயிருப்போர், மற்றொரு காலத்தில் செல்வராவர்; செல்வமுற்றோர் பின்னொரு காலத்தில் வறியராவர். சிறியோர், பெரியர் ஆவர்; பெரியோர், சிறியவர் ஆவர். இவ்வாறு மாறி வருதல் அவரவர் செய்த பழவினையின் பயனே யாகும். சந்திர சூரியர் சஞ்சரிக்கும் உலகத் தியற்கை இதுவே. ஆதலின், இப்போதுள்ள அமரர் தாழ்வும், அசுரர் வாழ்வும் இப்படியே நிற்கமாட்டா. இவ்வுண்மையை மனத்திற் கொள்க. உன்னைப் பெற்ற தாயும் தந்தையும் இந் நகரை விட்டு அகன்று, தன் இயற்கை வடிவத்தை மறைத்து, நிலவுலகத்தை அடைந்துள்ளார்கள். இனிக் கொடிய சூரன் இறந்துபடுவான். உமது துயரம் விரைவில் ஒழியும். இதனை உள்ளத்தில் தெளிவாகக் கொள்க” என்று நாரத முனிவன் தேற்றிச் சென்றான். ஒருவாறு சஞ்சலம் தீர்ந்த சயந்தன் தெளிவுற்று இருந்தான்.
இந்திரன் சீகாழியில் பூஞ்சோலை வளர்த்தல்
வேண்டியார்க்கு வேண்டிய பொருளைத் தப்பாது அளிக்கும் இந்திரன் கற்பகச் சோலையின் நிழலில் வீற்றிருக்கும் அற்புத சீகாழியில் வாழ்க்கையை நீத்து, சித்திர மனைவியாகிய பூஞ்சோலை சசியோடு இந்திரன் தெக்கண தேசத்திற் போந்து வளர்த்தல் பன்னிரு பெயர் பெற்ற பழம்பதியாகிய சீகாழியை அடைந்து, அதுவே தக்க இடமெனத் தெளிந்து அங்குத் தங்கினான். அந்த நற்பதியில் இந்திராணியோடு தளர்வுற்றுத் தங்கியிருந்த இந்திரன், நாள்தோறும் அகமகிழ்ந்து ஈசனைப் போற்றிப் பூசனை புரியக் கருதி, அழகிய நந்தவனம் ஒன்று அமைக்கத் தலைப்பட்டான். அப்பொழுது அசுரர்களுக் கெல்லாம் தலைவனாகிய சூரன் அனுப்பிய ஒற்றர்கள் அவனை உலகம் எங்கும் தேடித் திரிந்தார்கள். அதை அறிந்த இந்திரன், தன் தேவியோடு மூங்கில் உருவம் கொண்டு மறைந்திருந்து தவம் புரிவானாயினான்.
இங்ஙனம் சீகாழியில் வேணுவாய் நின்று தாணுவைப் போற்றிய விண்ணவர் தலைவனை ஒற்றர்கள் காணாது போயினர்; ஆயினும், அசுரரது கொடுங்கோல் ஆட்சியால் வானம் மழை பெய்யாது ஒழிந்தது. இந்திரன் வளர்த்த நந்தவனம் வாடி நலிந்தது. நெடிய பூஞ்சோலை, நெருப்புற்றாற்போல் பொரிந்து கரிந்து போயிற்று. அதைக் கண்டு கவலை கொண்டான், இந்திரன்; திசைமுகனும் திருமாலும் தேடுதற்கரிய ஈசனை நினைந்து கரைந்துருகினான்; தொழுது ஏத்தினான். இவ்வாறு திரிபுரம் எரித்த தேவதேவனை மனமுருகித் தொழுது வருங்கால் விண்ணிலே ஒரு குரல் எழுந்தது: "வாசவனே! வருந்தாதே நின் வாடிய சோலை வறண்டு ஒழியாது; இப் பதியில் ஒரு நதி வந்து எய்தும்” என்று ஆகாயவாணி கூறிற்று.
காவிரியைக் கொண்டு தமிழ் முனிவர் புறப்படல்
இஃது இவ்வாறாக, முத்தமிழ் முனிவராகிய அகத்தியர், ஈசனைத் தொழுது, "ஐயனே! அகந்தை கொண்ட விந்தமாம்லை மேருவைப் பகைத்து அந்தர வழியை அடைத்தது. அதன் செருக்கை அழிக்கத் திருவருள் புரிதல் வேண்டும்” என்றார். அப்போது சிவபெருமான், "முனிவா! அதற்கு வேண்டும் வன்மையை உனக்கு அளித்தோம் விந்த மாமலையை வேரோடழித்து, தென் திசைப் போந்து, பொதிய மலையில் நீ வாழ்வாயாக" எனப் பணித்தார். அப் பணி தலைமேற்கொண்டார், அகத்தியர். அந் நிலையில் கயிலையங் கிரியிலுள்ள நதிகள் ஏழினும் நலம் மிக வாய்ந்ததும் நன்னீரை உடையதும் ஆகிய பொன்னி என்னும் காவிரியாற்றைக் கருதினார், சிவபெருமான். வந்த காவிரியை முனிவர்க்குக் காட்டி, "இந்த ஆற்றை உனது பெரிய கமண்டலத்திற் கொள்க’ என்று அருளினார், சிவபெருமான். முனிவரும் அவ் வண்ணமே செய்தார். அகன்ற காவிரி அகத்தியர் கண்டலத்திற் புகுந்தாள்.
முனிவர் கிரவுஞ்சன் என்னும் அசுரனை ஒறுத்தல்
பொன்மலையினின்றும் புறப்பட்டார், முனிவர்; தென் திசையை நோக்கி நடந்தார்; வழியில், வலிமை சான்ற அசுர மன்னனுக்குத் தம்பியாகிய தாரகன் வாழ்ந்த மாயாபுரத்தை வந்தடைந்தார். அங்கிருந்த எனனும கிரவுஞ்சன் என்னும் பேர் பெற்ற அசுரன் அவர் அசுரனை வருகையை நோக்கினான். அவன் ஓர் அணுவை ඉංග්රිත්රීඞ மகாமேரு மலை யாக்குவான்; மகா மேருவை அணுவினும் நுண்ணிய தாக்குவான்; நிலவுலகத்தை நெடுங்கு லாக்குவான்; நெடுங்கடலை நிலவுல காக்குவான்; கொழுந்து விட்டு எரியும் பெருந்தீயைக் குளிர்ந்த நீராக்குவான். இத்தகை அசுரன் மெய்த்தமிழ் முனிவர் செல்லும் வழியில் விந்தமலை போன்று கொத்தும் குவடும் நிறைந்ததொரு நெடுமலையாகி நின்றான்.
அம்மலையின் ஊடே ஒரு பாதை சென்றது. அதனைக் கண்டார். அகத்தியர். அவர் அவ் வழியாகச் செல்லும் பொழுது கடுங்கனல் எழுந்து சூழ்ந்தது; சூறாவளி சுழன்று அடித்தது, சோனைமாரி சொரிந்தது; இடி இடித்தது; இருட்படலம் சூழ்ந்தது. இங்ஙனம் எண்ணிறந்த மாயை இயற்றினான் அசுரன். அது கண்ட அகத்திய முனிவர், நன்று நன்று அசுரன் இவ்வண்ணம் செய்ய வல்லனோ? அவன் வலிமையை இன்றே அழிக்கின்றேன்! என்று தமது கையிலமைந்த திரிதண்டத்தால் அம் மலையினைக் குத்திக் குடைந்து ஒரு வஞ்சினம் கூறலுற்றார்: "இத் தண்டத்தால் உண்டாகிய பிலங்கள் எல்லாம் நானா வித மாயைக்கு இருப்பிடம் ஆகுக, எம்பெருமான் பெற்ற செம்பொருளாகிய முருகன் வேற்படையால் இக் குன்றம் விரைவில் அழிந்து ஒழிக" என்று சாபமிட்டார்.
முனிவர் விந்த மலையின் அகந்தையை அழித்தல்
அப்பால், கங்கையாற்றின் கரையில் அமைந்த காசிப் பதியிற் முனிவர் விந்த கோயில் கொண்ட ஈசனது கமல பாதம் பணிந்து மலையின் அவ்விடத்தினின்றும் புறப்பட்டு, ஓங்கி உயர்ந்த அகந்தையை விந்த மலையின் ஒரு புறம் சென்று, அதன் அழித்தல் நிலையை அறியுமாறு பேச்சுக் கொடுத்தார்; "ஓங்கி எழுந்து விண்ணளாவி நிற்கும் விந்த மாமலையே! நாம் பொதிய மலையிற் போந்து இருந்திடக் கருதி வந்தோம். நாம் செல்லுதற்குச் சிறிது வழி விடுக” என்றார். அம் மலை வழி தர மறுத்தவுடன், மிகச் சிறியவராகிய முனிவர் விந்த மலையின் முடியினைத் தம் அங்கையால் அழுத்தினார். அப்போது, வானவர் வியப்புற, அந்த மலை தரையளவாகத் தாழ்ந்து, பின் பாதாளவுலகிற் போந்து, ஆதிசேடனது எல்லையை அடைந்தது. அப்பொழுது சூரியன் முதலாகிய வானவர் அகத்திய முனிவரிடம் விரைந்து போந்து, வணங்கித் துதித்து, "எந்தாய்! நீர் செய்த உதவி வேறு யாவரே செய்வார்? இவ் வுதவியால் நாங்கள் ஆகாய வழியாகச் செல்லும் பேறு பெற்றோம். இனிப் பொதிய மலையிற் போந்து எம்பொருட்டு இருந்தருள்வீராக” என்று நல்லுரை பகர்ந்தனர்.
முனிவர் வில்லவனையும் வாதவியையும் முடித்தல்
முனிவரும் நன்றென இசைந்து, வானவரிடம் விடை பெற்றுத் தெற்கு நோக்கிச் சென்றார். குன்றுகள் செறிந்த நாட்டின வழியே செல்லும்பொழுது வில்வலன், வாதாவி என்ற இருவரும் அவர் வருகையைக் கண்டார்கள். உடனே வில்வலன் தவக்கோலம் புனைந்தான்; தலையிலே சடையும், நெற்றியிலே திருநீறும், மார்பிலே தாழ்வடமும், மேனியில் வெண்ணீறும், கையிலே தண்டமும், இடையிலே மரவுரியும் புனைந்து அகத்திய முனிவர் முன்னே விரைந்து சென்றான்; "என் தந்தையே தவக்குலத் தலைவனே! யானும் என் குலமும் ஈடேறும் வண்ணம் இங்கு எழுந்தருளினாய் போலும் இன்று என் குடிசையில் தங்கி, நான் சமைத்துத் தரும் புல்லுணவைப் புசித்து, மிச்சிலை எனக்குத் தந்து, அருள் புரிதல் வேண்டும்" என்று விண்ணப்பம் செய்தான்; அட்டிற் சாலையின் அருகே அகத்தியரை அழைத்துச் சென்றான்; அங்கு இட்டிருந்த ஆசனத்தில் அவரை அமர்த்தினான்; ஆசைமொழி பேசினான்; வாசங் கலந்த நன்னீரும், விரையுறு மலரும், நறும்புகையும் தீபமும் கொண்டு வஞ்சக முறையிற் பூசனை செய்து, அவர் திருவடிகளில் விழுந்து வணங்கினான்.
சமைத்த உணவையும் கறிவகைகளையும் அன்பிலனாகிய வில்வலன் படைத்தான். அவற்றைப் பசி தீரும் அளவாக இனிது அருந்தினார் முனிவர்; பின்பு அசுரன் தமது கரத்திற் கொடுத்த வாசநீரைப் பருகி எழுந்து பொடியினாற் கைகளைத் தேய்த்துத் தண்ணிராற் கழுவி அமர்ந்தார்.
அப்போது வில்வலன், பிரமதேவன் அளித்த வரத்தை மனத்தில் நினைத்து, விருந்தினராகிய அருந்தவ முனிவரைக் கொல்லும் வண்ணம், "வாதாவி மைந்தார் இளையோய்! விரைந்து வா வா!” என்று அழைத்தான்.
அந் நிலையில் முனிவரது வயிற்றிலே கறியாகக் கிடந்த வாதாவி, ஆடாக உருப்பெற்று எழுந்து பேசத் தொடங்கினான்; "அண்ணா, வில்வலா! அன்று கடலைப் பருகிய கொடியோன் இன்று எண்ணிப் பாராது என் உடலையும் உண்டான், இவன் வயிற்றைக் கிழித்து வருகிறேன்” என்று ஆட்டுத்தம்பி அரிமான் போல் முழங்கினான். மாநிலம் புகழும் முனிவர், தீயோர் செய்த மாயம் தெரிந்து கடுஞ் சீற்றமுற்றார். "ஊன் கொண்ட கறியாகி, உட்சென்ற வாதாவி அப்படியே உயிர் நீத்து ஒழிக" என்று தம் வயிற்றை ஒருமுறை தடவினார், முனிவர். காட்டுத்தீயில் அகப் பட்ட சிறு செடிபோல், அவர் சாபத் தீயால் வாதாவி இறந்தொழிந்தான்.
கருமேகம்போல் எதிரே நின்ற வில்வலன், தம்பி இறந்ததை யறிந்து புகைந்து எழுந்தான்; புனைந்திருந்த சிவக்கோலத்தை விட்டு பழைய அசுர வடிவம் கொண்டான், கழியொன்றைக் கையில் எடுத்து முனிவரை அடித்துக் கொல்லக் கருதி வந்தான். அப்பொழுது அவர் அங்கிருந்த புல் ஒன்றை எடுத்தார்; அதனைச் சிவப்படையாகக் கருதி விடுத்தார்; அப்படையின், வேகத்திற்கு ஆற்றாது, வில்வலன் விழுந்து மடிந்தான். அப்பொழுதே கொடிய வஞ்சகரது இடத்தை விட்டு அகன்றார், அகத்தியர்; அன்னாரைக் கொன்ற பாவம் தீர்ந்தொழியும் வண்ணம் பரமசிவன் திருவடியில் ஆர்வத்தோடு அர்ச்சனை புரிந்தார்.
விநாயகர் காகமாய்ச் சென்று காவிரியைக் கவிழ்த்தல்
அருந்தமிழ் முனிவர் ஆற்றிய செயல்களை முற்றும் அறிந்த நாரதர், வானவர் வேந்தனாகிய இந்திரனிடம் போந்தார். அவனை நோக்கி, அகத்தியர் வரலாற்றைக் கூறலுற்றார்; தனக்கு உவமையில்லாத் தலைவனாகிய ஈசன் அகத்திய கவிழ்த்தல் முனிவரைப் பொதிய மலையிற் போய் இருக்கும்படி அனுப்பியவாறும், அம் முனிவர் விந்த மாமலையைப் பாதலத்தில் அழுத்தியவாறும், மற நெறியை மேற்கொண்ட சூரனுடைய மருகர் இருவரையும் முடித்தவாறும், அவரைக் கொன்ற பாவம் தீருமாறு கொங்கு நாட்டை அடைந்து சங்கரனை மெய்யன்போடு போற்றி வழிபட்டு அங்கே இருந்தவாறும் முறையாகக் கூறி முடித்து மேலும் பேசலுற்றார். "அமரர் கோமானே! அவ் வருந்தவ முனிவர் இன்னும் கொங்கு நாட்டில் ஈசனார்க்குப் பூசனை புரிந்து கொண்டிருக்கின்றார்; அதனை நான் கண்டு வந்தேன். அவர் பக்கத்திலுள்ள கமண்டலத்தில் காவிரி யாறு அடங்கியுள்ளது. அந் நதி இங்கு வருவதற்குரிய வழியை நாடினால் உன் மனக்கவலை ஒழியும்" என்றார், நாரதர்.
இவ்வாறு நாரதர் கூறுதலும், "எம்பெருமானே! குறு முனிவர் கொண்டுவந்துள்ள திருநதியை இச் சோலைக்கு வருவித்தல் எங்ஙனம்? சொல்லியருள வேண்டும்” என்று வேண்டினான், இந்திரன், "வேழமுகம் உடைய விநாயகப் பெருமானைப் பேரமுது படைத்துப் போற்றினால், அவர் அக் கமண்டலத்தைக் கவிழ்த்திடுவார்” என்று கூறினார், நாரதர்.
அது கேட்ட இந்திரன், சிவகுமாரனாகிய பிள்ளையாரை அன்போடு தொழுது போற்றினான். அப் பெருமான் அவன் முன்னே தோன்றிக் கருணையால் நோக்கி, "அன்பனே! நீ ஆற்றிய பெரும் பூசையை ஏற்றுக்கொண்டோம்; உனக்கு வேண்டும் வரம் யாது?" என வினவினார். அப்பொழுது இந்திரன், "ஐயனே திருமலர் எடுத்துத் தேவதேவனை வழிபடக் கருதி நந்தவனம் ஒன்று வைத்தேன். அது நீரின்றிக் கரிந்து, பகலவன் கதிர்களால் மடிந்து, ஈசனார் கண்ணழலால் எரிந்த திரிபுரம்போல் ஆயிற்று. உலகத்தில் உயர்ந்து விளங்கும் மகாமேரு மலையின் அடிவாரத்திலிருந்து அகத்திய முனிவர் புறப்பட்டு, துன்பம் செய்யும் அசமுகியின் மைந்தர் இருவரையும் கொன்று, கொங்கு நாட்டிற் போந்து ஈசனுக் குகந்த பூசனை புரிகின்றாராம். அம் முனிவரது அழகிய கமண்டலத்தில் காவிரியென்னும் பெருநதி அடங்கி யுள்ளதாம். என் ஐயனே! அந் நதியை நிலத்திற் கவிழ்த்துவிட்டால் என் நந்தவனம் பிழைக்கும்; என் மனக்குறையும் தீரும்” என்றான்.
இந்திரன் இவ்வாறு கூறுதலும், பிள்ளையாராகிய வள்ளல் மனமகிழ்ந்து, "அவ்வாறே செய்வோம்” என்று அருளி, அவனை அவ்விடத்தில் விட்டு, காக வடிவாக விரைந்து போந்து, அகத்திய முனிவரது கமண்டலத்தில் அமர்ந்தார். காகத்தை ஒட்டக் கையை ஒச்சினார், முனிவர். அப்போது பிள்ளையார் கமண்டலத்தைக் கவிழ்த்துத் தள்ளிக் காவிரியை ஓட விட்டார். காவிரி ஓடிய பின்பு காகத்தின் வடிவை விட்டு, வேதம் பயிலும் வேதியச் சிறுவன்போல் நடந்து சென்றார், பிள்ளையார்; அது கண்ட அகத்திய முனிவர் சர்வ சங்கார காலத்தில் தோன்றும் ஆதி மூர்த்தி போல் சீற்றங்கொண்டு நின்றார்; "இவன் தேவனோ? அசுரனோ? அரக்கனோ? ஆற்றல் வாய்ந்த இவன் யாவனோ? அறியேன்! ஆற்றைக் கவிழ்த்துவிட்டு அமைதியாகப் போகின்றான்! கருத்தின்றிக் காரியம் செய்யும் செருக்கன் போலும் யாவனாயினும் இவன் தன்மையை விரைவில் அறிவேன்” என்று எழுந்து, இரு மணிக்கரங்களையும் மடித்தார்; அவன் தலையில் குட்டுதற்காகச் சென்றார். அவ் வேதியச் சிறுவர், முனிவரின் அருகே வருவார்; கிளர்ந்து மேலே எழுவார்; எட்டுத் திசைகளையும் எட்டுவார்; நெருங்கி வருவார்; நெடுந்தூரம் செல்வார். இவ்வாறு விளையாடிய விநாயகப் பெருமான், தொடர்ந்து வந்த முனிவர்க்குத் தம் உண்மைத் திருவுருவைக் காட்டினார். கண்டார் முனிவர்; கலங்கினார்; "அந்தோ! விநாயக மூர்த்தியோ இங்கு எழுந்தருளியவர் அவரையா யான் வன்மையோடு துரத்தினேன்!” என்று ஏக்கமுற்று வருந்தினார்; அவரைக் குட்டும்படி மடக்கிய கரங்களைக்கொண்டு மலையின் மேல் இடி விழுந்தாற்போல் தமது நெற்றியிலே குட்டிக்கொண்டார். "ஐயனே! ஒன்றும் உணராத அடியேன், உம்மை அந்தணச் சிறுவன் என்று எண்ணினேன்; உமது தலையில் குட்டத் துணிந்தேன்; அப் பெருங்குற்றத்திற்குக் கழுவாயாக என்னை நானே சூட்டிக் கொள்கிறேன்" என்றார், முனிவர்.
அம் மொழி கேட்ட பெருமான் புன்னகை புரிந்தார்: "மனம் வருந்தாதே" என்றார்: "இங்கு நீ செய்தவற்றையெல்லாம் சிறந்த தொரு விளையாட்டாகக் கண்டோமே யன்றிக் கோபம் கொண்டோ மில்லை. நெடுஞ் சடையுடைய எம் தந்தையார்க்கு நீ அன்பன்: ஆதலால், எமக்கும் அப்படியே. நீ வேண்டிய வரம் தருகின்றோம்; விரைந்து கேள்” என்றார். அப்பொழுது முனிவர், "ஐயனே! என்னைப்போல் உம் முன்னே நின்று. இரு கைகளாலும் முறையாக நெற்றியில் குட்டிக்கொள்வோருடைய குறைகளைக் கருணைகூர்ந்து தீர்த்தருளல் வேண்டும்” என்று விண்ணப்பம் செய்தார். அவ்வாறே ஆகுக' என்று விநாயகப்பெருமான் வரம் அளித்து, தமக்குரிய கணங்களோடு யாவரும் வியப்புற மறைந்தருளினார்.
காவிரிப் பெருக்கு
மலையிடைப் பிறந்த ஆரமும் அகிலும், சங்கும் முத்தும், சாமரையும் தந்தமும், பொன்னும் மணியும் அலைகளால் எடுத்து வந்தது காவிரியாறு. வானரசாளும் பெருககு இந்திரனிடம் வருணன் இவற்றையெல்லாம் திறையாகச் செலுத்தச் செல்வது போன்றிருந்தது, அக் காட்சி. பெருமை சான்ற காவிரியின் வெள்ளம், இந்திரனுடைய தந்தவனத்திற் பாய்ந்தது. அம் மன்னன் மனம் போல், உணங்கி வாடி நின்ற பூஞ்சோலை, விரைந்து செழித்து ஓங்கி, அரும்பசியால் நலிந்தோர் அமிர்தம் உண்டாற் போன்று தண்மையுற்றுத் தழைத்தது; நன்றாக மலர்ந்தது. இந்திரன் மனத்தை மகிழ்வித்தது. அதன் நறுமலர் கொண்டு முன்போலவே ஈசனுக்குப் பூசனை புரிய விரும்பினான், இந்திரன், அன்று முதல் ஆதி முதல்வனாகிய பெருமானை முறைப்படி நாள்தோறும் அருச்சனை செய்து சீகாழிச் சண்பகச் சோலையில் இந்திரன் தவம் புரிந்திருந்தான்.
அப்போது சூரனுக்கு ஊழியம் செய்து உலைவுற்ற தேவர் சிலர், "இச் சிறுமை எம்மை விட்டு என்று நீங்குமோ?" என்று ஏங்கி, விண்ணுலகை விட்டு மண்ணுலகம் போந்தனர்; தெள்ளிய தமிழ் மொழியின் இருப்பிடமாகிய தென்னாட்டை அடைந்து புகழமைந்த சீகாழிப் பூங்காவனத்தை நண்ணி, இந்திரனைக் கண்டனர்; அன்று மலர்ந்த செந்தாமரை போன்ற அவன் அடிகளில் விழுந்து எழுந்து போற்றிப் பின் பேசலுற்றார்; "ஐயனே! நீலகண்டனிடம் வரம் பெற்ற சூரனுக்குச் செய்யத் தகாத வேலை யெல்லாம் செய்தோம்; நெறி இழந்தோம். நிலை யிழந்தோம்; மானமும் இழந்தோம்; அல்லற்பட்டு அலுத்தோம்; தொல்லை யுற்றுத் துயருழந்தோம்” என்று பலவாறாக முறையிட்டு வருந்தினார்கள்.
வானவர் இந்திரனிடம் முறையிடுதல்
அது கேட்ட இந்திரன் அன்னார் மனத்திலமைந்த அருந்துயரைக் கண்டான்; நெடுஞ்சிந்தனையில் ஆழ்ந்தான்; அயர்ந்தான். பெருமூச்செறிந்து, "அல்லல் விளைக்கும் அசுரர் பணியால் நாம் எல்லோரும் முறையிடுதல் பெருமை இழந்து சிறுமையுற்றோம். இனி வெள்ளி மாமலையை அடைந்து, இறைவனிடம் முறை யிட்டு நம் துயரத்தைத் தொலைப்போம்" என்று கூறி, இந்திரன் எழுந்து, வானவரை நோக்கி, "சிறிது நேரம் இங்கே இருங்கள்" எனப் பணித்துச் சித்திரப் பாவை போன்ற இந்திராணி இருந்த இடம் போந்தான். "மாதே! வானவரெல்லாம் மனம் நொந்து துன்பத்தால் துடிக்கின்றார்கள்; அன்னவரை அழைத்துக்கொண்டு நம் குறைகளை முறையிடுவதற்காக, மதுரமொழி பேசும் மங்கை பங்களாகிய இறைவன் வீற்றிருக்கும் இமயமலைக்குப் போகின்றேன். இச்செய்தியைச் சொல்ல வந்தேன்” என்றான்.
அம் மொழி கேட்ட அயிராணி மயங்கி விழுந்தாள். "அந்தோர் இன்னுயிர்த் தலைவா! பொன்னாட்டை விட்டும், இப் புனித வனத்திருந்தும். உன் அருளே தஞ்சமாக இன்றளவும் வாழ்ந்திருந்தேன். என்னை நீ பிரிந்தால் பின்னை யாரே துணையாவர்? பேதையேன் பிழைக்குமாறுண்டோ? உன் அன்புடைய மகனும் இங்கில்லை. வானவரும் இல்லை. வெள்ளை யானையும் இல்லை. மாதர் யாரும் இல்லை. தன்னந் தனியாளாக இங்கிருக்க அஞ்சு கின்றேன். மன்னனே! நின்னைப் பிரிந்து என்னுயிர் நில்லாது. ஆதலால், ஒன்று கூறுகின்றேன். முன்னவன் இருந்தருளும் வெள்ளி மாமலைக்கு உன் பின்னே நானும் வருகின்றேன்; எழுக” என்றாள்.
அப்போது இந்திரன் தன் தேவியை நோக்கி, "மாதே! நீ மனம் வருந்தாதே! வானவரோடு நான் கயிலைக்குச் சென்று வருமளவும் உன்னைக் காப்பவர் இல்லை யென்றால் அன்றோ நீ என் பின்னே வர வேண்டும்? ஆற்றல் மிகப்பெற்ற ஐயனார் என்னும் அரிகர புத்திரனே நின்னைக் காத்தருள்வார்; ஆதலால், கவலையற்றிரு” என்று தலைவன் கூறுதலும், "அவ்வையனார் யாவர்?” என்று அயிராணி வினவினாள்.
இந்திரன் ஈசனிடம் செல்லுதல்
அப்போது, அவர் பிறப்பையும் சிறப்பையும் இந்திரன் எடுத்துரைத்தான். ஐயனார் காவலில் இருக்க இசைந்தாள், அயராணி. அது கண்ட இந்திரன், அரிகா புத்திரனை நினைத்துத் துதித்தான். அவர் செல்லுதல் அதை யறிந்து எழுந்தருளிக் காட்சியளித்தார். ‘ஐயனே யான், இறைவன் அமர்ந்தருளும் கயிலையங்கிரிக்குச் செல்கின்றேன்; மீண்டு வருமளவும் இவ்விந்திராணியைக் காத்தருள்வீராக” என்று வேண்டினான், இந்திரன்.
அப்போது, கையில் செண்டேந்திய ஐயனார். "வாசவனே! இம் மங்கை இங்குத் தனியே இருக்கிறாள் என்று மனக் கவலை கொள்ள வேண்டா. யாதும் தீது வந்தடையாமல் யான் காப்பேன்" என்றார். உடனே வாட்போரில் வல்ல வீரனாகிய மாகாளனை அழைத்து, அருளொடு நோக்கி, "காளா கேள்; பொன்னகரின் மன்னனாகிய இந்திரன், மூவர்க்கும் முதல்வனாகிய இறைவனைக் காணக் கயிலை மலைக்குச் செல்கின்றான்; இவன் வருமளவும் இதோ இருக்கின்ற இந்திராணிக்கு எவ்வகைத் தீங்கும் நேராமல் காத்திடுக” என்று கட்டளையிட்டான். அந் நிலையில் இந்திரன் மாகாளன் காவலில் மங்கையை வைத்து, வானவரிடம் போந்து, அவரை அழைத்துக் கொண்டு வெள்ளி மாமலையை நோக்கி விரைந்து சென்றான்.
திருக்கயிலாயத்தின் தலைவாயிலில் நின்ற இந்திரனைக் கண்டார், நந்தி தேவர்; "நீ வந்த காரியம் யாது?’ என்று வினவினார். விளைந்த தீமையெல்லாம் எடுத்துரைத்தான், வானவர் கோமான், அடிமுதல் நிகழ்ந்ததை அறிந்து, "இன்னும் நின் துயரம் தீர்ந்திலதோ? இப்போது ஈசனார் சனகாதி முனிவர் நால்வர்க்கும் ஞானயோகத்தின் தன்மையை உணர்த்தி யருள்கின்றார். ஆதலால், எவரும் அவரிடம் செல்வதற்கு இது ஏற்ற காலமன்று” என்று எடுத்துரைத்தார், நந்தி.
அயிராணியும் அசமுகியும்
பிரமதேவனும் திருமாலும் அறியவொண்ணாப் பிரணவப் பொருளாகிய இறைவன் அமர்ந்தருளும் திருக்கயிலாய மலையை நோக்கி இந்திரன் சென்ற பின்னர், சீகாழிப் பூங்காவனத்தில் தேவமாதர் போற்ற இந்திராணி தவம் புரிந்திருந்தாள். அப்பொழுது வெற்றி வெறி யுற்று மயங்கி வாழ்ந்த சூரன் குலத்தை வேரோடு அழிக்கவந்த ஊழ்வினை போன்ற அவன் தங்கையாகிய அசமுகி யென்பாள், துன்முகி யென்னும் தோழியோடு, சூலம் ஏந்திய கையும், ஆலகாலம் , போன்ற மேனியும் உடையவளாய் அங்கு வந்தாள்; தனித்திருந்த தேவியைக் கண்டு வியப்புற்று, "அழகிய நறுமலர் சூடிய அயிராணியைக் கண்டேன் நான்; இவளிடம் கொண்ட ஆசையால் உழலும் அசுர வேந்தன் கவலையொழிந்து களிப் புறுமாறு இவளை அவன் முன்னே எடுத்துச் செல்வேன்" என்று துணிந்தாள்.
இந்திராணியின் முன்னே போந்து, "மாதவம் புரியும் மாதே! உன்னை யொப்பவர் இவ் வுலகில் உண்டோ? மாயவன் மார்பில் உறையும் திருமகளும் உனக்கு நிகராகாள். வல்லாளனாகிய சூரன் நின்னையடையத் தவம் புரிகின்றான். நீ எதற்காக இங்கே கரந்திருந்து கடுந்தவம் செய்கின்றாய்? அவன் அழிவற்றவன்; உன் கணவனாகிய இந்திரன் அழிவுள்ளவன். அவன் நிகரற்ற இன்ப வாழ்வு வாழ்பவன்; இவன் துன்பத்தில் உழல்பவன். அவன் பிறரை வணங்காப் பெற்றி வாய்ந்தவன்; இவன் பலரையும் தொழுது நிற்பவன். திருமகளினும் சிறந்த அழகுடைய பதும கோமளையையும் இனிச் சூரன் வெறுத்திடுவான்; மற்றைய மாதரையும் அப்படியே. எல்லையற்ற காதலோடும் உன்னுடன் இருந்து வாழ்வான். இஃது உண்மை. ஆதலால், என்னோடு புறப்படு” என்றாள், அறத்தினைக் கொன்ற அசமுகி.
அயிராணியின் துயரம்
அன்னாள் கூறிய கடுஞ்சொற்களைக் கேட்ட அயிராணி, பழுக்கக் காய்ச்சிய வேற்படையைக் காதிற் பாய்ச்சினாற் போலத் துயருற்றுத் துடிததாள். "அந்தோ! நீ பழியும் பார்த்திலை; பாவமும் பார்த்திலை, வையகம் கூறும் வசையும் பார்த்திலை; முறையும் பார்த்திலை; நெறியும் பார்த்திலை; இவ் விழிந்த கொடுஞ் சொல்லை நீ இயம்ப லாகுமோ? என்றாள்.
அசமுகியின் சீற்றம்
அப்போது அசமுகி, தீப்பொறி பறக்கப் பற்களைக் கடித்தாள்; கறுத்த உதடுகளை மடித்தாள்; பெருமூச்செறிந்தாள் இடி இடித்தாற்போலக் கைகளைக் கொட்டினாள்; சீற்றம் நன்று, நன்று என்று நகைத்தாள்; சீறினாள்; "முற்றிய ஆற்றல் வாய்ந்த மூவர் தடுப்பினும், மற்று யாவர் தடுப்பினும், போர் தொடுப்பினும், உன்னை யான் விடுவதில்லை. விரைந்து எடுத்துச் சென்றே தீர்வேன். அதனை இன்னே பார்” என்று அயிராணியைப் பிடித்தாள்.
அந் நிலையில் இவள் அரற்றினாள்; ஆவி யிழந்தாற்போல் அவசமுற்றாள்; உணர்வு தீர்ந்தாள்; நீல மலர் போன்ற கண்களால் நெடுங்கண்ணி வடித்தாள். இப்படி வாடி வருந்திய தேவியை இரக்கமற்ற அசமுகி பற்றி யிழுத்துச் சென்றாள்; மனங்கலங்கிய மாது மெய் சோர்ந்து சுற்றும் முற்றும் பார்த்தாள்; காப்பவர் யாரையும் காணாளாய் வாய்விட்டுக் கதறினாள்.
அப்போது ஐயனாரின் படைத்தலைவனாகிய மாகாளன் வெளிப்பட்டான்; நில், நில் என்று சொல்லி உடைவாளை உருவினான்; ஒரு கரத்தால் அசமுகியின் தலையைப் பற்றி இழுத்து, அயிராணியைத் தொட்ட கையை அறுத்திட்டான். வானவர் துள்ளி மகிழ்ந்தனர். அசமுகியின் கை விழுந்தவுடன் அருகே வந்து நின்ற துன்முகியை நோக்கி, "நீயும் தேவியின் மேனியைத் தீண்டினா யன்றோ” என்று கூறி, அவள் கரத்திலும் ஒன்றை மாகாளன் துணித்திட்டான். குருதி பொங்கிப் பெருகிற்று
அசமுகியின் வஞ்சினம்
அப்போது, கையற்ற அசமுகி, உள்ளம் கறுத்து, "இதோ! பார் உலகமெல்லாம் சூரனே ஆள்கின்றான். அவன் ஆழியும் ஆணையும் செல்லாத இடமில்லை. ஆதலால், இங்கே இருப்பினும், மற்று எங்கே சென்று ஒளிப்பினும் இனி நீர் பிழைத்தல் அரிது. உம்மைச் சிறைப்படுத்தாவிடில் நான் சூரன் தங்கையல்லேன்; பேடி என்று என்னை இகழ்க" என்று கூறிச் சென்றாள்.
சிறிது விலகி நின்ற வீர மாகாளன் அயிராணியை நோக்கி, "அன்னையே! அசுரரைக் குறித்து நீர் சிறிதும் அஞ்ச வேண்டா, உம் கணவன் வருமளவும் நானே காப்பேன். இச் சோலையிலே இருப்பீராக” என்று சொல்லிச் சென்றான்.
நாரதர் வாயிலாகப் பூஞ்சோலையில் நிகழ்ந்தனவெல்லாம் அறிந்த இந்திரன் தன் தேவியிருந்த இடம் போந்தான். அங்கிருந் தால் ஆபத்து வரும் என்று அவளையும் அழைத்துக்கொண்டு வானவரோடும் மரமேரு மலையிற் சென்று மறைந்திருந்தான்.
சூரன் திறம்
பரந்த உலகங்களிலுள்ள சூரியர்களையெல்லாம் ஒருங்கே திரட்டி, ஊழித் தீயில் இட்டு உருக்கி ஒன்றாக்கி ஆசனமாகச் செயுது, அதில் நன்மணிகளாகப் பதித்து, முற்றிய கலைகளோடு விளங்கும் சந்திரரைச் சிங்கங்களாக அமைத்தாற் போன்று வீர மகேந்திர நகரின் விழுமிய அரண்மனையில் அசுரர் கோமானது அரியாசனம் விளங்கிற்று. அத்தகைய அரியாசனத்தில் அழியாத் தன்மை வாய்ந்த சூரன் கூற்றுவரெல்லாம் ஓர் உருக்கொண்டு, விண்ணுற நிமிர்ந்து விளங்கினாற் போன்று, அசுரர்கள் போற்ற அரசு வீற்றிருந்தான். அழகிய கூந்தலையுடைய அரம்பை, ஊர்வசி, திலோத் தமை, மேனகை முதலாய தேவ மாதரும், இயக்க மாதரும், வலிமை வாய்ந்த அரக்க மாதரும், அசுர மாதரும், விஞ்சையர், சாரணர், சித்தர் என்னும் முக்குல மாதரும், மற்றைய மாதரும் வெவ்வேறாக முறைப்படி நடனம் செய்தனர். சூர மன்னன் செயற்கரிய வேள்வி செய்து வரம் பெற்ற திறத்தையும், எட்டுத் திக்கும் சென்று குபேரன் முதலாகிய யாவரையும் வென்ற வலிமையையும், அண்டங்களையெல்லாம் கண்டு சிறப்புற அரசு புரிந்த ஆண்மையையும், அருகே நின்ற அரசுர் பலர் முறை முறையாகப் புகழ்ந்து ஏத்தினர்.
கையற்ற காட்சி
அப்போது அவன் தங்கையாகிய அசமுகி துன்முகியோடு மகேந்திர நகரின் மருங்கே வந்தாள். நகர வீதியிலே அவள் வரும்பொழுது இந்திரன் செய்த வேலையோ இது என்பர் சிலர்"ஒளித்துத் திரிகின்ற அவன் இது செய்ய வல்லனோ என்று மறுத்துரைப்பார், சிலர். "மற்றைத் தேவர்கள் செய்திருப்பார்களோ என்று ஐயற்றார், சிலர்; நம் ஆணைக்கு அடங்கி ஏவல் புரியும் அவர் இத்தகைய செய்கையை நினைக்கவும் துணிவரோ என மாற்றம் உரைப்பவர், சிலர். வீரமகேந்திரத்து மகளிரும் ஆடவரும் இவ்வாறு நெருங்கிச் சூழ்ந்து வருந்தித் தளர்ந்து நிற்க, அவரைக் கடந்து அசமுகி துன்முகியுடனே அக நகரம் போந்து, மன்ன்ர் மன்னனாகிய சூரன் வீற்றிருந்த மாளிகையை நோக்கி நடந்தாள்.
அசமுகி முறையிடல்
மாயையில் வல்ல தன் தாயையும், மற்றுமுள்ள சுற்றத் தாரையும், மருகரையும், உடன்பிறந்தாரையும் மனத்தில் நினைத்துக் கதறிக்கொண்டு அவள் முறையிடல் மணிமாட மாளிகையின் அருகே சென்றாள். தொழுகுரல் நிறைந்த மாளிகையில் அப்போது அழுகுரல் எழுந்தது. உற்றாரை யெல்லாம் தனித்தனியே அழைத்து அசமுகி ஓலமிட்டாள்; "ஐயோ அசுரகுல வீரரே! வானுலகின் வளங்குறைத்தோம்; வலி குறைத்தோம்; வரம் குறைத்தோம்; புகழ் குறைத்தோம்; வானவரை ஏவல் கொண்டோம் என்று மனப்பால் குடித்தீரே! அவர்களுள் ஒருவன் வந்து என் கரத்தை அறுத்து, உமது மூக்கறுத்துவிட்டானே! அதை அறியீர் போலும் குழந்தைப் பருவத்திலே செங்கதிரோனைச் சினந்து பற்றிச் சிறைசெய்த மருகனே! பானு கோபனே! என் கையை ஒருவன் குறை செய்து சென்றானே! நீ ஏன் என்று கேளாது இருந்தனையே! இஃது என்ன கொடுமை! அந் நாளில் ஒரடியால் உலகளந்த திருமாலின் நேமிப்படையைப் பொன்னாரமெனப் பூண்ட தாரகனே! இந் நாளில் ஒப்பற்ற பழி பூண்டயே மாற்றார் வந்து என் கரத்தை அறுத்தார் தமையனாகிய நீ அரசு வீற்றிருந்தாய் முன் நிறைந்து பின் குறையும் நீர்மை வாய்ந்ததோ நின் ஆற்றல்! சிங்கமுக வீரனே! வெள்ளை யானையோடு இந்திரனை ஒரு கையால் வானத்தில் நீ வீசி யெறிந்தாய் என்றும், அவன் கீழே வந்து விழுந்தபோது உன் காலால் உதைத்தாய் என்றும் சொன்னார்களே! அதை மெய்யென்று நம்பி வியந்திருந்தேனே! அது புனைந் துரைதானோ? இந்திரன் துரதன் இன்று என் கரத்தைத் துணித்தானே! அரிமுகவீரா! நீ அதனை அறியாயோ? வானவர் சூழ்ச்சியால் ஒரு முனிவன் என் இரு மைந்தரது உயிரைக் கவர்ந்தான்; அம் மட்டோ? இன்றும் ஒருவன் வந்து என் கரத்தை அறுத்திட்டான். இங்ஙனம் தங்கை தயங்க நீ தனியரசு புரிதல் தவறன்றோ?
"மன்னர் மன்னா! நான் அடைத்த மானத்தை நீ மனங் கொள்ளாயோ? அரசாளும் அண்ணா! அண்ணா! கரமிழந்தேன்! ஆதலால் உறவிழந்தேன்! ஊனமுற்றோர் உயிர் வைத்திருத்தல் ஈனமன்றோ? அந்தோ! இவ் வுயிரை விடு முன்னே மானம் அடுகின்றதே! பாவி நான் பெண்ணாகப் பிறந்து பெற்ற பயன் இதுதானே! விதிக்கு என்மீது பகையுண்டோ?” என்று பலவாறாக அரற்றிக்கொண்டு, துன்முகியோடு சென்ற அசமுகி அரச மன்றத்தில் அமர்ந்திருந்த சூரன் அடிகளில் விழுந்து புரண்டாள்.
சூரன் சீற்றமுறுதல்
அது கண்ட சூரன் "தங்கையே! அசமுகி! ஏன் இங்ஙனம் வருந்துகின்றாய்? உன்னை உணராமலும் என்னைக் கருதாமலும், உன் கரத்தையும், தோழியின் கரத்தையும் துணித்தவர் யார்? அவர் இன்னும் உயிருடன் இருக்கிறார்களா?" என்று இடிபோல் வினவினான்.
"ஐயனே! இந்திரன் மனைவியாகிய அயிராணி நிலவுலகின் ஒருபுறத்தில் இருந்து நோன்பு செய்கின்றாள். அவளை உன்னிடம் சேர்க்கக் கருதி அங்குச் சென்றோம்; அவளை எடுத்தோம். அவ் வேளையில் வானவன் ஒருவன் விரைந்து வந்து எங்கள் கைகளை அறுத்திட்டான், அயிராணியையும் அழைத்துச் சென்றுவிட்டான்" என்று கையற்றவள் சொல்லி முடிக்கு முன்னமே சூரன் கண் களிலிருந்து தீப்பொறி பறந்தது; வாயினின்று தீப்புகை பிறந்தது; மூக்கினின்று சுடுமூச்சு எழுந்தது; அது கண்டு மண்ணுலகம் நடுங் கிற்று; விண்ணுலகும் நடுங்கிற்று. பெருங்கடல் நடுங்கிற்று : பிரமபதம் நடுங்கிற்று மாயவன் நகரம் நடுங்கிற்று; அசுரரும் நடுங்கினர் என்றால் இவ் வுலகத்தில் நடுங்காதார் யாவர்? சூரனது கோபம் சாலப் பெரிதன்றோ?
அந் நிலையில் சுற்றி நின்றவரை நோக்கிச் சூரன் பேசலுற்றான்; "அசுர வீரர்களாகிய நீர் இருந்தும், மைந்தர் இருந்தும், நிகரற்ற தேர் இருந்தும், நேமி இருந்தும், என் பேர் இருந்தும், என் உயிர் இருந்தும், வேறு யார் இருந்தும், எது இருந்தும் என்ன பயன்? அந்தோ! எல்லாம் இருந்தும், அசமுகி படும் பாடு இதுவோ? என் அரசியல் நன்று நன்று" என்று நகைத்தான்.
பானுகோபன் பழிக்குப்பழி வாங்க முற்படுதல்
அப்பொழுது சூரன் மைந்தருள் வலியவனாகிய பானுகோபன் சீற்றமுற்று எழுந்து, வீரக்கழல் முழங்க நடந்து சென்று, வேந்தன் அடிபணிந்து, "ஐயனே! நமக்குக் குற்றேவல் செய்து உடைந்த மனத்தின னாய் ஒளித்திருக்கின்றான், இந்திரன், ஏனைய வானவர் வலிமை யற்றவர்; இப்படிச் செய்ய அவர் மனத்திலும் நினையார் நிலைமை இவ்வாறிருக்க உன் தங்கை கை இழந்தது என்ன மாயமோ அறியேன், அதனை அறிய மாட்டாது வருந்துகின்றேன். ஆயினும், இன்றே சென்று இவர் கைகளை யறுத்த ஆடவனையும் நின் மனத்தில் ஆசையை விளைத்த அயிராணியையும், மறைந்து திரியும் இந்திரனையும், தம் உயிரில் ஆசையற்ற தேவரையும் பற்றி வருவேன். அடியேனுக்கு விடை தருக" என்று வேண்டி நின்றான். அப்போது சீற்றம் தணிந்த சூரன், "நின் சேனையொடு செல்” எனப் பணித்தான். அப் பணியை மகிழ்ந்து ஏற்றான், பானுகோபன்.
பானுகோபன் படையெடுத்துச் செல்லுதல்
வீரமகேந்திர நகரத்தை விட்டுப் புறப்பட்டுக் கடலாகிய அகழியைக் கடந்து, நில வுலகத்தின் எல்லையிற் சென்றவுடன் அருகே வந்த துன்முகியை நோக்கி, ”உமது கை அறுபட்ட இடம் எது? கூறுக” என்றான், பானுகோபன். "இளங்கோவே! எமது கரம் துணித்த வீரன் ஒரு பூஞ்சோலையில் உள்ளான். அயிராணியும் அங்கே இருக்கின்றாள். அச் சோலை இதுதான்” என்று சுட்டிக் காட்டினாள், அசமுகி.
அந் நிலையில் பன்னிரு பெயர் பெற்ற சீகாழிப் பதியில் அமைந்த பழமரச் சோலையிற் பானுகோபன் புகுந்தான். அவனது சேனையின் முன்னணிப் படை விரைந்து சென்று, சோலையை அழித்து, வெட்ட வெளியாக்கிற்று; அவ் விடம் முற்றும் தேடிப் பார்த்தான், பானுகோபன், அயிராணியையும் காணவில்லை; கையறுத்த வீரனையும் காணவில்லை. அன்னார் இருவரையும் உலக முழுமையும் தேடிக் காணாமையால் அவன் வானுலகத் திற்குச் சென்றான். செம்மலர் மாலையணிந்த பானுகோபன் படையெடுத்து வந்தான் என்று பதறிய வானவர் விதிர்விதிர்த்துப் பொறி கலங்கி, இந்திரன் மைந்தனாகிய சயந்தனிடம் ஓடிச் சென்று இச் செய்தியை உரைத்தார்கள்.
சயந்தன் பானுகோபனை எதிர்த்தல்
அது கேட்ட சயந்தன், "எம் குருவாகிய வியாழனும் இங்கில்லை; வானவர் இனத்திற் பலரில்லை; சயத்தன் தந்தையும் தாயும் இல்லை; நான் உம்மோடு பானுகோபனை தனித்திருக்கின்றேன். அந்த அசுரன் அல்லல் எதிர்த்தல் புரியவே வந்தான் போலும்; பண்டை வினையின் பயன் என்னாகுமோ அறியேன்; ஆயினும், யான் இனி அவர்க்கு அஞ்சப் போவதில்லை; உயிரைப் பொருளாகக் கருதாதவர் நஞ்சு போன்ற தீங்குற்றாலும் நடுக்கமடையார், துயரத்தில் மூழ்க மாட்டார்; கடமையில் வழுவமாட்டார். அவ்வாறே யானும் பானுகோபனது கொடிய சேனையைச் சென்று எதிர்ப்பேன்; வெல்வேன்; பலரைக் கொல்வேன்” என்று கூறினான், சயந்தன், அப்பொழுது வானவர் வருத்த மெய்தி, "ஐயனே? உன் கருத்து இதுவாயின் நாங்கள் சொல்வதொன்று உண்டோ? வெற்றி பெற்ற அசுரருக்குக் குற்றேவல் செய்து அழியாத் துன்பத்தில் உழல்வதினும் இறந்தொழிதல் இனிதே ஆகும். ஆதலால், விரைவில் போருக்கு எழுக” என்றார்.
சயந்தனும் வானவரும் சிறைப்படுதல்
அமரர் சேனையும் அசுரர் சேனையும் பெரும்படை கொண்டு கடும்போர் புரிந்தன. அமரர் வலிமையற்றுப் போர் முனையை விட்டு ஓடினர். கொடிய அசுரர் அவரைப் பின்
தொடர்ந்து பற்றி அடித்தார்கள். அப்போது பானுகோபன் ஒரு தேரின் மேல் விரைந்து ஏறிச் சயந்தனைச் சூழ்ந்திருந்த அசுரரை நோக்கி, "யான் விட்ட அம்புகள் பட்டதனால் இவன் மயங்கி உடல் தளர்ந்தான்; பேசவும் இயலாதவன் ஆயினான்; பகைவன் என்று இவனை வருத்தாதீர்! வானவர் குழாத்தொடு இவனைச் சிறை செய்திடுக” எனப் பணித்தான்.
அப் பணி தலைமேற்கொண்ட அசுரர் அழகிய வானுலகம் எங்கும் சுற்றி நாடினர்; ஒருவரையும் விடாமல் வானவரையும் அவர்தம் மனைவியரையும் ஒருங்கே கட்டிக் கொணர்ந்து பானுகோபன் முன்னே இட்டனர்; பின்பு, திருமகளின் இருப்பிடம் போல அழகுற்று இலங்கிய பொன்னகர மெங்கும் தீவைத்துக் கொளுத்தினர். அப்போது ஈசனது புன்னகையால் எரிந்து அழிந்த திரிபுரம் போன்று பொன்னகரம் கரிந்து பொடியாயிற்று. ஊழிக் காலத்திலே யன்றி மற்று எக்காலத்திலும் அழியாத வானுலகம் அழிந்தது; வானவர் கோமான் வறியனாய்ப் போயினான்; சிறந்த தேவர் சிறைப்பட்டார்; எனவே, செல்வத்தை நிலையான பொருளாக மதித்தல் ஆகுமோ?
பானுகோபன் வீர மகேந்திரத்தை அடைந்தான்; அரண்மனையின் முன்னே தன் தேரை நிறுத்திக் கீழே இறங்கினான்; சேனைகளை அவ்விடத்தில் நிறுத்திச் சிறைப்பட்ட வானவரை இட்டுக்கொண்டு சூரன் முன்னே சென்று, முறையாக வணக்கம் செய்தான்; பின்பு எழுந்து நின்று, "ஐயனே? அயிராணியைக் காணவில்லை; இந்திரனையும் காணவில்லை; வானுலகத்தில் உள்ள தேவரையும் சயந்தனையும் பிறரையும் கொண்டுவந்தேன்! அந் நாட்டைத் தீயிட்டுக் கொளுத்திவிட்டேன்” என்று கூறினான்.
அப்போது அங்கு நின்ற வானவரைக் கண்டான், சூரன் சீற்றங் கொண்டான்; "இருள் சூழ்ந்த நரகம் போன்ற பெருஞ் சிறையில் இவரை அடைத்திடுமின்” என்று அசுரரை நோக்கிக் கூறினான். அவர்கள் தேவரையும் சயந்தனையும் பிடர் பிடித்துத் தள்ளிச் சிறைக்கோட்டத்திற் சேர்த்தார்கள், சயந்தனும் வானவரும் சூரன் நகரிலே சிறையிருந்தார்கள்.
முருகவேள் வீரவாகுவைத் தூதனுப்புதல்
திருமால் முதலிய தேவராலும் வெல்லுதற்கரிய வீரனாகி, வானவரை வெஞ் சிறையில் இட்ட அரசர் கோமானாகிய சூரனது உயிரை வாங்கும் வண்ணம் பரஞ்சுடர் உருவாகி வந்த வடிவேல் முருகன், தன் அருகே இருந்த இந்திரன் ஆகிய தேவர்களை நோக்கி, "நாம் அசுரர் குலத்தை அழித்திட நாளையே போவோம்; அதற்கு முன்னர் ஒரு தூதனை விடுத்துக் கொடிய சூரனது கருத்தினை அறிதல் வேண்டும்” என்று அருளினார். சிவகுமாரன் இவ்வாறு செப்பியபோது, "ஐயனே? சூரனுடன் வீரப்போர் தொடங்கு முன்னே ஆற்றல் சான்ற தூதன் ஒருவனை அனுப்புதலே அறநெறியாகும்” என்று மலரவனும் மாய்வனும் கூறினர்.
அது கேட்ட முருகன் கருணை கூர்ந்து, அருகே நின்ற வீரவாகுவை நோக்கி, "வீரனே! நீ மகேந்திர நகர்க்கு விரைந்து சென்று இந்திரஞாலத் தேருடைய சூரனைக் கண்டு, இந்திரன் மைந்தனையும் வானவரையும் அவன் இன்றே சிறையினின்று விடுவித்தல் வேண்டும் என்றும், அறநெறி தவறாமல் அரசாளுதல் வேண்டும் என்றும் அறிவித்திடுக. அசுரர்கோன் அதற்கு இசையானாயின் அவன் இனத்தைக் எடுத்து நாளையே நாம் அமர்க்களம் புகுவோம்; இஃது உண்மை என்று கூறி வருக” எனப் பணித்தார்.
அப்போது வீரவாகு, "ஐயனே அசுரர் நிறைந்த வீர மகேந்திரத்தில் அரும்பெருஞ் செல்வத்தினிடையே அமர்ந்துள்ள சூரன் முன்னே சென்று, தேவரீர் அருளிய செய்தியெல்லாம் சொல்லி, அவனுள்ளக் கருத்தை உணர்ந்து வருகின்றேன்” என்று வணங்கித் தொழுது சென்றார். அப்போது, குலிசப் படையை புடைய இந்திரன் முருக தூதனாகிய வீரவாகுவின் பின்னே சென்று, "வீரனே! நீ வலிமை சான்ற சூரனது நகரத்தையடைந்து, அங்குச் சிறைப்பட்டுள்ள சயந்தனையும் தேவரையும் கண்டு தேற்றிப் பின்பு எடுத்த பணியை முடித்திடுக” என்று வேண்டினான்.
முருக தூதன் புறப்படுதல்
இந்திரன் முதலிய வானவரிடம் விடைபெற்றுச் சென்று வீரவாகு கடற்கரையினருகே யமைந்த கந்த மாதன மலையின் மீது, கலி கலீர் எனக் கால்களில் அணிந்திருந்த வீரக் கழல்களில் ஒலிக்க விரைந்து ஏறினார்; அம் மலையின் உச்சியில் நின்று முருகப் பெருமானின் திருவுருவத்தைத் தியானித்துக் கை கூப்பித் தொழுது, திருமாலும் பிரமனும் வியந்து நோக்கப் பெரியதோர் உருவங்கொண்டார். சூரனது நகரத்தின்மேற் பாயத் துணிந்து காலையூன்றினார்; அப்போது, "ஆறிரு தடந்தோள் வாழ்க, அறுமுகம் வாழ்க, அயில்வேல் வாழ்க, அறப்படை யணைத்தும் வாழ்க, அரனார் திருமகன் வாழ்க" என்று வாழ்த்தினார். மலைச்சிகரத்தினின்று உள்ளக் கிளர்ச்சியுற்று எழுந்தார்; அந் நிலையில் தலையி லணிந்த மணிமகுடம் அண்ட கோளத்தின் முகட்டிற்குச் சென்று முட்ட வீரபத்திரன் சரப வடிவம் கொண்டு சென்றாற்போல மலைபோன்ற மாடமாளிகை நிறைந்த வீரமகேந்திரத்தை நோக்கிப் பறந்தார் வீரக் கழல் அணிந்த வீரவாகுதேவர். இவ்வாறு கடலைக் கடந்து, சூரனது நகரத்தின் வட திசையில் யாளிமுக அசுரனால் காக்கப்பட்ட இலங்கா புரத்தை நண்ணினார்.
இலங்காபுரத்தில் எதிர்ப்பு
யாளிமுகனுடைய படைத்தலைவனாகிய வீரசிங்கன் . வீரவாகுவைக் கண்டு பெருஞ்சேனையோடு எதிரே சென்று, "இன்றளவும் எம் கடிநகருள் வந்தார் யாரும் இலர்; தன்னந் தனியனாய் வந்த நீ யார்? உயிர்மீது உனக்கு ஆசையில்லை போலும். நின்னைக் கொல்லு முன்னே நீ வந்த காரியத்தைச் சொல்” என்று வினவினான். அது கேட்ட முருக தூதர் அவ் வசுரனுடைய கரங்களையும் தலையையும் வாளால் அறுத்துக் கடலில் எறிந்தார்; பின்பு நெடிய வாளை உறையில் இட்டு வெற்றியோடு சென்றார்; இலங்கையின் மீது பாய்ந்தார்; யாளிமுகனுடைய மைந்தனாகிய அதிவீரனும் மற்றைய அசுரரும் கலங்கி ஏங்கி, இடியோசை கேட்ட நாகம் போல் உடல் நடுங்கி விழுந்தார்கள். விழுந்த அதிவீரன் உடனே எழுந்தான்; தன் சேனையாகிய பெருங்கடலின் நடுவே ஊழிக்கனல் கொழுந்துவிட்டு எரிந்தாற்போல நின்ற வீரவாகுவின் நிலையை நோக்கினான்; உடனே தனது வாளை எடுத்து, "இந்த வாள் அயனால் எனக்கு அளிக்கப்பட்டது. இதனை விலக்குதல் எவராலும் இயலாது; இன்று நீ மடிதல் திண்ணம். என் எதிரே வருவாயாக" என்று வீரமொழி பேசிக்கொண்டு நெருங்கினான். வீரவாகு அவனைப் பார்த்து, "நன்று நன்று நின் வலிமையும் வீரமும், நின்று வீரம் பேசுவதேன்? வந்து பார் வெற்றி வீரர் தம்மைத் தாமே மெச்சுவாரோ?" என்று கூறுதலும், அதிவீரன் சீற்றமுற்றான். இருவரும் எதிர்த்தனர்; பெரு மேகங்களில் மின்னல் எழுந்து வீசுதல் போல வீரர் இருவரும் வாள் வீசிப் போர் புரிந்தார்கள். அப்போது வீரவாகு தேவர் சமயம் பார்த்து மாற்றானது அடியையும் முடியையும், மார்பையும் தோளையும் துணித்துத் தள்ளினார். காலன் அவன் உயிரைக் கவர்ந்து சென்றான்.
வீரமகேந்திரத்தில் வீரவாகு
அதிவீரன் இறந்த பின்னர், வீரவாகு இலங்கையை விட்டு வீரமகேந்திரத்தில் எழுந்தார்; பின்னும் ஆயிரம் யோசனை தூரம் பறந்து வானவர் பகைவனாகிய சூரன் வாழ்ந்த மகேந்திரபுரியின் முன்னே போந்தார். அந்நகரின் வடக்கு வாயிற் கோபுரத்தின் அருகே கோரன் அதிகோரன் என்னும் கொடிய வீரர்கள் படையோடு காவல் செய்திருந்தனர். "இவ் வழியாகச் சென்றால் இங்குள்ள சேனை எதிர்த்துப் போர் செய்யும். இதனைப் பொருது அழிப்பதற்குள் பொழுது போய்விடும் போர் முடிந்திடாது; பின்பு வீரமாநகரில் உள்ள நால்வகைச் சேனை வெள்ளமும் எழுந்து வரும். எவராலும் வெல்ல முடியாத சூரனும் பின்னர் வந்து எதிர்ப்பான்; அவனோடு பல நாள் போர் புரிந்தாலும் இறைவன் அளித்துள்ள வரத்தினால் அவன் இறக்கப் போவதில்லை. அடியேனுடைய ஆதி நாயகன், ஆறுமுக நாயகன், ஆசற்ற சோதிநாயகன் - அவனன்றிச் சூரனை யாவரே அழிக்க வல்லர்; ஆதலால், போர் புரிதல் ஏற்றதன்று; அன்றியும் எம்பெரு மான் இட்ட பணியும் அதுவன்று: தூதர்க்கு அது முறையும் அன்று. ஆதலால், போர் இன்றி நகரின் உள்ளே புகுதலே முறை" என்று கருதினார், வீரவாகு. வடக்கு வாயிலின் வழியே செல்லாமல் தென்புறம் சென்று நாடக் கருதிப் புறப்பட்டார்.
கயமுகாசூரனைக் கொல்லுதல்
அவ் வழியில் கப்பலைக் காக்கும் மீகாமனைப் போல் வானில் நின்று வீரமாநகரைக் காத்த வீரனாகிய கயமுகன் என்பவன், ஆகாய வழியே சென்ற வீரவாகுவைக் கண்டு பேசலுற்றான்: "அடே! நீ வலிய காவலைக் கடந்து வந்தாய்; மாயம் புரிந்து புகுந்தாயே? காற்றும் எமது ஆணை கடந்து வரும் ஆற்றல் உடையது அன்றே உன்னை அனுப்பியவர் யார்? ஆலகாலத்தை அருந்திய அரனோ? மாலோ? அயனோ? வெள்ளை யானையுடைய கள்வனோ? இந் நகரத்தைச் சுற்றினாய் நீ ஒற்றனாக வந்தாய் போலும்! நீ வந்த காரியம் யாதோ? பேதாய் உன் உயிரை விற்றாய்! நீ இனிப் பிழைக்கு-மாறுண்டோ? " இவ்வாறு முழங்கிக்கொண்டு கயமுகன் ஒரு குன்றத்தைப் பறித்தெடுத்து, "இஃது உன் உடலையும் உயிரையும் ஒழித்துவிடும்” என்று ஆரவாரித்து வீசினான். அவ் வசுரன் வீசி எறிந்த குன்றம் விசையற்று நிலைகுலைந்து விழுந்தது. அறநெறி தவறிச் சேர்த்த அரும்பொருளை அயலார் கொள்ளப் பறிகொடுத்து ஆக்கங்கெட்ட மாந்தரைப் போல் கயமுகன் திகைத்து நின்றான். தீப்பொறி பறக்கும் கண்களோடு பின்னும் அவ் வசுரன் வீரவாகுவின்மீது விட்டெறிவதற்கு வேறு மலைகளைப் பெயர்த்தெடுத்தான்; அப்போது முருகதுரதர் தம் வாளை எடுத்து, அவனருகே பேர்ந்து, ஆயிரம் துதிக்கைகளையும் அறுத்தெறிந்தார். கரம் இழந்தும் உரம் இழவாது நின்ற கயமுகன் பின்னும் போர் புரிய முனைந்தான், அந் நிலையில் அவனை உதைத்துத் தள்ளினார், வீரவாகு. அலறி விழுந்தான், அசுரன் ஆவி துறந்தான். அவன் மார்பினின்று பொங்கிப் பாய்ந்த குருதி அலைகடலை நோக்கிச் சென்றது. "அருமறைகளாலும் அறிய வொண்ணாத முருகப்பெருமான் இட்ட பணியை மறந்து, பெருமையற்ற இவ் அசுரருடன் போர் புரிந்து நிற்றல் பேதைமையாகும். ஆதலால், சூரன் நகரினுள்ளே இனி விரைந்து செல்வேன்” என்றார், வீரவாகு. சிறிய அணுவிலே சாலச் சிறிதாகியும், பெரிய பொருளிலே மிகப் பெரிதாகியும் எங்கும் நிறைந்து நிற்கும் அறுமுகச் செவ்வேள் திருவடியை அன்பொடு போற்றி, அப் பெருமான் அருளால் ஓர் அணுவின் உருவம் கொண்டார், முருகதுரதர். சிவபெருமான் எல்லா உலகங்களையும், எழுவகையான உயிர்த்தொகைகளையும் மற்றுமுள்ள பிண்டப் பொருள்களையும் படைத்து ஓரிடத்தில் நிறைத்து வைத்த தன்மைபோல் விளங்கிய மகேந்திர மாநகரின் வளங்களைக் கண்டு வீரவாகு வியப்புற்றார்.
நகரத்தின் சிறப்பு
இந் நகரில் எழுகின்ற குழலின் ஒலியும், யாழின் ஒலியும், பாட்டின் ஒலியும், விழாவின் ஒலியும் கடலொலியினும் மிகுந்துள்ளது. வில் எடுத்துப் பயில்பவர் ஒருபால்; மற்றைய படைக்கலம் பயிலும் மறவர் ஒருபால்; மற்போர் பயிலும் மதுகையர் ஒருபால்; மாயப்போர் பயில்பவர் ஒருபால்; மந்திரம் முயல்பவர் ஒருபால்; ஆகப் பார்க்குமிட மெங்கும் வீரர்களே பரந்து தோன்றுகிறார்கள். நரம்பெழுந்த மேனியரும், ஊன் ஒடுங்கி உலர்ந்தவரும், நரைத்து வற்றிய தலையினரும், தண்டூன்றித் தள்ளாடித் திரிபவரும், கூற்றுவனால் குமைக்கப்படுவோரும், நோய்களால் நலிவோரும், வறுமையால் வாடுவோரும் இந் நகரில் எங்குமிலர்; இது தவத்தின் வலிமையேயாகும். சிறந்த இந் நகரத்தின் செல்வத்திற்கு ஓர் அளவில்லை; இவ் வளத்தையெல்லாம் காண்பதற்கு எண்ணிறந்த கண்கள் வேண்டும்; அவற்றைப் பெற்றாலும் இக் காட்சியை ஒரு நாவால் உரைசெய்ய ஒண்ணாது. ஆயிரங்கோடி நாவினைப் பெற்றால் எடுத்துரைத்தல் கூடும். இவ்வாறு எண்ணி முருகதுர்தர் இமயமலை போன்ற கீழ்த்திசைக் கோபுரத்தின் மேல் நின்று, அந் நகரின் சில வளங்களைக் கண்டு, சூரன் இருந்த திருநகரினுள்ளே செல்லத் துணிந்தார். பின்னும் முருகப்பெருமானது திருவருளைத் துணைக்கொண்டு ஆகாய வழியாகச் சென்று, சூரனுடைய முதற் புதல்வனாகிய பானுகோபனது மாளிகையைப் பார்த்தார். பின்பு, அவன் மந்திரிகளுள் தலைமை பெற்று விளங்கிய தருமகோபனது மாளிகையின்மீது தங்கினார். அங்கிருந்து வானவரும் சயந்தனும் அசுரர் காவலிற் சிறையிருந்த சூழலைக் கண்ணுற்றார்.
சிறையிருந்த சயந்தன்
தெய்வத் தன்மை வாய்ந்த தெள்ளிய மரகத மணியாற் செய்த . அழகிய வடிவம் மாசடைந்தாற் போலவும், குளிர்ந்த பொய்கையில் மலர்ந்த நீல மலர்களால் தொடுத்த மெல்லிய மாலை வாடியுலர்ந்தாற் போலவும் தோன்றினான், சயந்தன். ஐவகைப்பட்ட தேவதருவின் இனிய நிழலில் வாழ்ந்த வாழ்க்கையை நினைப்பான், அவன்; மெல்லிய நறுமலர் விரித்த பூம்பள்ளியை நினைப்பான்; வான நங்கையர் நலத்தினை நினைப்பான்; விண்ணாட்டுச் செல்வத்தை யெல்லாம் எண்ணி மயங்குவான். பொன்னகரம் பொரிந்து கரிந்ததையும், என்னை அசுரர் கொண்டுவந்து அருஞ் சிறையில் அடைத்ததையும் கேட்கும் பொழுது என்னைப் பெற்ற தாய் என்னென்ன நினைத்து ஏங்குவாளோ என்றெண்ணி வருந்துவான். 'அறம் என்னைத் துறந்ததோ? மறத்தின் கொடுமை நிறைந்ததோ? மாதவத்தின் பயன் தேய்ந்ததோ? நன்மை குறுகிற்றோ? தின்மை பெருகிற்றோ? மறையும் இறந்ததோ? இறைவனும் இல்லையோ? என்று மறுகுவான். "எம்பெருமானே! விலங்காகிய யானைக்கு விரைந்து அருள் செய்தாய் கரிக்குருவிக்கும் நாரைக்கும் கருணை புரிந்தாய்! ஊர்ந்து செல்லும் பாம்புக்கும் சிலந்திக்கும் பரிவு கூர்ந்தாய்! நின் திருவடி மறவாத தேவரையும் என்னையும் கத்தருளாயோ?
"கங்கை சூடிய எங்கள் நாயகனே! நஞ்சுண்டு கண்டம் கறுத்த நாதனே ! நெற்றிக் கண்ணுடைய நிமலனே! பிறைமதி யணிந்த பெருமானே! செம்மையேயாய சிவனே! சிவனே! என்று நின் அடியார் எல்லோரும் ஓலமிடுகின்றோமே உயிர்க்குயிராகிய தலைவா! அவ் வுரையும் கேட்டிலையோ? திருமாலும் பிரமனும் தேடிக் காணாத தேவ தேவா மன்னுயிர்க்கெல்லாம் நீயன்றி யாரே உற்ற துணையாவார்? இந்த ஏழையைக் காக்க எழுந்தருளி வாராயோ!" இவ் வண்ணம் பல வகையாகப் புலம்பி, நஞ்சு தலைக்கேறினாற் போன்று நடுங்கும் துயரால் உணர்விழந்து ஒன்றும் அறியாதவனாய் மயங்கினான்; இறந்தாரைப் போல் சாய்ந்தான், இந்திரன் மைந்தன்.
கந்தவேள் சயந்தனுக்குக் காட்சியளித்தல்
செவ்விய பாலனாய்ச் செந்தூரில் வந்து, வானவரது வினைப் பயனாகிய துன்பத்தை விலக்கி நின்ற விமலன், சிறைக் கோட்டத்தில் மயங்கிக்கிடந்த சயந்தனுக்குத் திருவருள் புரிய விரும்பி, அவன் கட்சியளித்தல் கனவிலே தோன்றினர். வலப்புறமுள்ள ஆறு கரங்களில் வீரக் கொடியும் வச்சிரப் படையும், அங்குசமும் அம்பும், அயில் வேலும் அபயமும் கொண்டு, இடப்புறமுள்ள திருக்கரங்களில் வரதமும் கமலமும், மணியும் மழுவும், கதையும் வில்லும் தாங்கி ஆறுமுகச்செவ்வேள் விளங்கினார். தந்தையற்ற பெருமானைத் தந்தையாகவுடைய கந்தவேள் அளித்த காட்சியைச் சயந்தன் நுண்ணுடலில் அமைந்த மனக்கண்ணாற்கண்டு வணங்கிக் கூறலுற்றான்: "ஐயனே! அடியேன் படும் அல்லலை அறிந்தாய். அதனை அகற்றத் திருவுளங்கொண்டு அருள் கூர்ந்து எழுந்து வந்தாய். நின் திருவுருவைப் பார்த்தால் நீ திருமாலும் அல்லை; பிரமதேவனும் அல்லை; அவர்க்கு மேலாய சிவபெருமானும் அல்லை. என்னை ஆட்கொள்ள வந்த நீ யார் என்று அறிவித்தருளல் வேண்டும்? " என்று விண்ணப்பம் செய்தான். அப்போது ஆறுமுகப்பெருமான், "யாம் சிவகுமாரன்; உனது துயரத்தையும் உருக்கத்தையும் மயக்கத்தையும் உணர்ந்து இங்கு வந்தோம். உன் தந்தையாகிய இந்திரன் தனது குறையையும் தேவர் குறையையும் எம்மிடம் வந்து முறையிட்டான். அந் நிலையில் யாம் அளவிறந்த சேனையோடு இந் நிலவுலகிற் போந்து கிரவுஞ்சம் என்னும் மலையையும், தாரகாசூரனையும் அழித்தோம்; அதற்கும் பின்பு திருச்செந்தூரில் வந்து அமர்ந்தோம். பிரமதேவனும், திருமாலும், உன் தந்தையும் நம்மிடத்தில் உள்ளார். உன் தங்கை மகாமேரு மலையிலே உள்ளாள். நீ வருந்தாதே, இன்றைப் பொழுது கழிந்ததும் நாளையே செந்திலம் பதியை விட்டுப் புறப்பட்டு இங்கு வருவோம். இந் நகரின் அருகே தங்கி நின்று பத்து நாள்களில் அசுரரது பரந்த சேனையையும், அல்லல் விளைத்த சூரனையும் அழித்திடுவோம். பின்னர், உன்னையும் தேவரையும் கொடிய சிறையினின்றும் விடுவித்து உமது செல்வங்களையெல்லாம் தருவோம். ஆதலால் துயரம் தீர்க” என்று அருளி மறைந்தார் முருகவேள். அப் பெருமான் அருளிய மொழிகளைக் கேட்டான் சயந்தன், வாட்டம் தீர்ந்தான்; மகிழ்ச்சி யடைந்தான்; மெய்ம்மயிர் சிலிர்த்தான்; கண்ணி வடித்தான்; நஞ்சு தலைக்கேறிச் சாய்ந்தவர் மந்திரத் திறனால் மயக்கம் தீர்ந்தாற் போன்று எழுந்தான். ஆதி நாயகனாகிய ஆறுமுகப் பெருமான் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் நீர்மையையும், அருள்புரியும் தன்மையையும் நினைந்து, அவர் திருவடிகளை மறைகளாற் போற்றித் தொழுதுகொண்டு இருந்தான்.
முருக தூதர் சயந்தனைக் காணுதல்
இவ் வண்ணம் வானவரோடு சயந்தன் சிறையிருத் தலையும், அசுரர்கள் செறிந்து சிறைக்கோட்டத்தைக் காவல் செய்திருத்தலையும் வித்தகராகிய வீரவாகு கண்டார். கருணையின்றிக் கடுஞ்சிறையைக் காத்து காணுதல் நின்ற அசுரர் காணாது மயக்கமுற்றுக் கிடக்கவும், வானவர் காணவும் ஒரு வகை செய்யக் கருதினர். மூல மந்திரத்தின் பொருளாய், உயிர்க்குயிராய் நின்று நிலவும் குமரேசனை நினைத்தார்; அவர்க்குரிய மந்திரமாகிய ஆறெழுத்தை அன்புடன் ஒதினார்; தீமையே உருவாகி நின்ற அசுரரது சிறைச் சாலையினுள்ளே புகுந்தார். அப் பொழுது புகை நிறம் பொருந்திய அசுரர் வலிமையற்று மந்திர வலையிற்பட்டு மயக்கமுற்றார். அந்த வேளையில் வீரவாகு சிறைக்களத்தினுள்ளே சென்று வேலேந்திய முருகப்பெருமானது திருநாமத்தைச் சொல்லித் துதித்தார். பொன்னுலகத்தை யாளும் பீடிழந்த சயந்தன் முன்னே போந்து அமர்ந்தார்.
முருகன் பெருமையை எடுத்துரைத்தல்
வியப்புற்று நின்ற சயந்தனை நோக்கி, "ஐயனே கேள்: முதல்வன் பெற்ற முருகவேளின் பின்னவன் யான். அவன்தன் தூதனாய வந்தடைந்தேன். வீரவாகு என்னும் பெயருடையேன், உங்களைச் சிறையினின்று விடுவிக்கும்படி சூரனிடம் சொல்ல வந்தேன். சிவபெருமான் வேண்டிக்கொண்டமையால் பிரம தேவனைச் சிறையினின்றும் விடுவிக்க அறுமுக வள்ளல் உங்களிடம் நிறைந்த கருணை பாலித்தார். அவரருள் முன்னிற்கும் பொழுது உம்முடைய பாவமும் பழியும், தீமையும் துன்பமும், பிற குறைகளும் அழிந்தொழிதல் அரிதாகுமோ? பிறவியாகிய பெருங் கடலையும் கடந்தீரன்றோ? ஒப்புயர்வற்றதாய், அரிய பேரொளியாய், அப்பாலுக் கப்பாலாய் நின்ற பரம்பொருளே ஆறு முகமும் பன்னிரு தோளும் கொண்டு, பாலகன் போலத் தோன்றி, கந்தன் என்றொரு பேரும் பெற்று எல்லோரும் காணக் காட்சி தருகின்றார். ஏழு கடலும், எண்ணிறந்த மலையும் ஏனைய பொருளும் கொண்ட நிலவுலகத்தையும், மேலும் கீழுமாய் நின்ற பதினான்கு உலகங்களையும், மற்றுமுள்ள அண்ட்ங்கள் அனைத்தையும் நொடிப் பொழுதில் உண்டு ஒழிக்க வல்லது முருகன் கைவேல்; சூரனையும் அசுர குலத்தையும் வீட்டுவது அதற்கு ஒரு விளையாட்டே-யாகும்” என்று இன்னோரன்ன செய்திகளை இந்திரன் மைந்தனும் இமையவரும் உணரத்தக்க வ்கையில் வீரவாகு எடுத்துரைத்தார். அந் நிலையில் அன்னார் மனமகிழ்ந்து, "வேலனுக்கு இளைய வீரா! நீ வெற்றி பெற்றிடுக" என்று தனித்தனியாக ஆசி கூறினர்.
தூதர் சூரனது மாளிகைக்குச் செல்லுதல்
சிறைக்களம் விட்டு நீங்கினார், முருக தூதர்; வானின் வழியே விரைந்து சென்றார். சூரன் நகரத்தைச் சூழ்ந்திருந்த அகழிகளைக் கடந்து போயினார். கோட்டை நகரில் அமைந்த செய்குன்றின்மேல் நின்று சூரனது மாளிகையின் வளத்தை யெல்லாம் கண்ணும் மனமும் பொருந்த நோக்கினார்.
முருக தூதருக்கு அரியாசனம் வருதல்
பின்னர் அவ்விடம் விட்டு நீங்கிப் பறந்து சென்று, வெற்றி வீரனாகிய சூரன் அரியாசனத்தில் வீற்றிருந்த அத்தாணி மண்டபத்தை அடைந்தார்; "மேரு மலையை வில்லாகக் கொண்ட மேலவன் மைந்தனாகிய தூதன் யான்; அசுரர்கோன் அரியாசனத்தில் இருக்க, எளியனாய் அவனுக்குத் தாழ்ந்த நிலையில் சென்று நிற்றல் எம்பெருமான் பெருமைக்கு இழி வாகுமே" என்று எண்ணினார்; அறுமுகப் பெருமானது திருவடியை நினைந்தார். அந் நிலையில் அவர் அருளால் ஆயிரம் கோடி சூரியர் ஒருங்கு சேர்ந்து எழுந்தாற் போன்று ஒளி வீசிய பீடம் ஒன்று விரைவில் அங்கு வந்துற்றது. அசுரர்கோன் எதிரே நின்ற அரியாசனத்தைக் கண்ட முருக தூதர் "எம்பெருமான் இதை அனுப்பினார் போலும்" என்றெண்ணி அகமகிழ்ந்து, அவர் திருவடி களை மனமாரப் போற்றி, அத் தவிசின்மீது ஏறி வீற்றிருந்தார்.
சூரன் எரிந்து பேசுதல்
அதைக் கண்டான், சூரன்; கடுங்கோபங் கொண்டான்; பற்களைக் கடித்தான்; சிரித்தான்; உறுமினான்; உடம்பெல்லாம் வியர்க்க, கண்களில் தீப்பொறி பறக்க வாய் புகைந்திடப் பேசலுற்றான்: "அடா! அற்பனே! சுற்றம் துறந்து வற்றிய காட்டில் சுற்றித் திரிந்து, இலைகளைத் தின்று உடம்பினை வருத்தும் சிற்றறிவுடையோர் செய்யும் சித்தின் தன்மை இது! நீ கற்ற வித்தையை நம் முன்னே காட்டினாயோ? சித்தர்களும், திருமால் முதலிய தேவர்களும் தத்தம் இடங்களில் இத்தகைய வித்தைகள் புரிவார்களே யன்றி என் முன்னே காட்டிடக் கலங்குவர். நம்மிடம் இது காட்டக் கருதிய நீ பித்தன் போலும்! அடே! பேதாய்! இது மிக அரிய வித்தை என்று எண்ணினாயோ? இந்நகரத்தில் பெண்டிரும் இது செய்வர், கருவிலுள்ள குழவியும் செய்யும்; அறிவற்ற மலைகளும் செய்யும்; விலங்குகளும் செய்யும்; ஆதலால், இதை வியப்பவர் இங்கு யாரும் இலர், அது நிற்க. இங்குத் துணிந்து வந்த நீ யாவன்? இந்திரன் ஓடி ஒளித்தான். ஏனையோர் இவ்வாறு செய்யார். திருமால் இதனை மனத்திலும் நினையான். பிரமன் ஆசி கூறித் திரிகின்றான். எல்லார்க்கும் மேலாய இறைவன் என்னிடம் எளிதாக வரமாட்டான் ஆதலால், நீ யாவன்?” என்று வினவினான், சூரன்.
வீரவாகு தன்னை அறிவித்தல்
அது கேட்ட வீரவாகு, "அசுரனே, இந்திரன் துயரத்தை நீக்கி, பிரமன் முதலிய வானவர் சிறுமையைப் போக்கி, தேவரைச் சிறையினின்றும் விடுவித்து, அவர்க்குப் பண்டைச் சிறப்பை யெல்லாம் அளிக்குமாறு ஆதி முதல்வனாகிய ஐயன் திருச்செந்தூரில் எழுந்தருளி யுள்ளார். அந்த ஆண்டவனுக்கு அடிமை செய்பவன் நான். தாரகன் என்னும் பெயர் கொண்ட நின் தம்பியையும், கிரவுஞ்சம் என்னும், பெரிய மலையையும் நொடிப்பொழுதிலே கொன்றொழித்த கொற்ற வேல் தாங்கிய குமரவேள், உன்னிடம் பெருங்கருணை கொண்டு என்னைத் துரதனுப்பினார்.
வீரவாகு தூதுரைத்தல்
"வானவர்க்குத் தந்தை முறையில் உள்ளவர், காசிப முனிவர். அவர் மைந்தனாகிய நீ வானவரைச் சிறை செய்தல் முறையோ? நீ வேத நூல் முறையினின்றும் தவறினாய்! அற்பப் பொருள்களில் ஆசை வைத்தாய்! நீதி முறையில் உலகத்தைக் காப்பதன்றோ அரசற்குரிய நெறி? அளவிறந்த காலம் நீ அருந்தவம் முயன்றாய்? வேள்வித் தீயில் மூழ்கிய உனக்கு எம்பெருமான் அளித்த அழியாத ஆயுளையும், செல்வத்தையும் வீணாகத் தவறான நெறியிலே சென்று கெடுத்துக் கொள்ளுதல் தகுமோ? அளவிறந்த செல்வத்துடன் நீயும் நின் சுற்றத்தாரும் வாழவேண்டுமானால் வானவரைச் சிறையினின்றும் விட்டுவிடு அற நெறியிலே அரசு புரிந்திடு! அவ்வாறு செய்யா தொழிந்தால் குமரவேள் இங்கு எழுந்தருளி உன்னையும் உன்னைச் சார்ந்தோரையும் கொன்றழித்தல் திண்ணம்” என்று உறுதியாகக் கூறினார், முருகதூதர்.
சூரன் வீரம் பேசி மறுத்தல்
இவ் வாசகத்தைக் கேட்ட போது சூரன் மனத்தில் முன்னிலும் அதிகமாகக் கோபம் மூண்டெழுந்தது, தீப்பொறி பறக்கும் கண்ணும், புகை வீசும் மூச்சும் உடையவனாய், கையொடு கையறைந்து, கடுமையாகப் பேசுவானாயினான். "அண்டங்கள் ஆயிரத்தெட்டும் வென்று இணையற்ற தனியரசு புரிந்திடும் எனக்குப் பல் முளையாத பாலனா - மழலை மொழி பேசும் குழவியா - புத்தி சொல்லத் தலைப்பட்டான். அசுரர் குலத்தை வானவர் வருத்தினர்; அவர்களை வறியவராக்கினர். ஆதலால், நான் தேவரது செல்வத்தை ஒழித்தேன். அவரைக் குற்றேவல் கொண்டேன்; அவர்தம் பழக்கவழக்கங்களைக் கெடுத்தேன்; சிறைக் கோட்டத்தில் அவரை அடைத்தேன்! எம் குலமுறைப்படி இவற்றையெல்லாம் செய்தேன். தப்பித் தலைமறைந்து திரியும் இந்திரன் முதலி யோரையும் பற்றிக் கொணர்ந்து இங்கே சிறைவைக்கக் கருதியுள் ளேன். அப்படியிருக்க, என் கையில் அகப்பட்ட வானவரை விடுவேனோ? விடவே மாட்டேன்! ஒப்பற்ற வீர சூரன் என்னும் பெயருடையோன் நான் அழியாத வச்சிரதேகமும், மற்றைய வரங்களும் முன்னமே எனக்கு முருகன் தந்தையார் முறையாக அளித்துள்ளார். அவற்றை யாவரே மாற்ற வல்லார்? போர் புரிந்து என்னை யாவரே வெல்ல வல்லார்? பலபல சொல்வானேன்; நான் வானவரை விடமாட்டேன்; நீ பேதையாதலால் அறியாப் பிள்ளையின் சொல்லைக் கேட்டு இங்குத் தூதனாக வந்தர்ய்! உனக்கு உயிர்ப்பிச்சை தந்தேன்; பிழைத்துப்போ” என்றான், சூரன்.
வீரவாகு மீண்டும் கட்டுரை கூறுதல்
அவன் சொல்லிய மொழிகளைக் கேட்ட போது முருக தூதனது உள்ளத்தில் சீற்றம் முறுகி எழுந்தது; மெய்ம்மயிர் சிலிர்த்தது; சிரிப்புப் பிறந்தது; கண் சிவந்தது; அந்நிலையில் பேசலுற்றார். "நெடுமாலும், நான்முகனும் கட்டுரை நெடுங்காலம் தேடியும் காண ஒண்ணாத இறைவனது கூறுதல் நெற்றிக் கண்களில் பரஞ்சுடர் உருவாய், கருணை நிறைந்த எம்பெருமான் தோன்றினார். முன்னவர்க்கும் முதல்வருக்கும் முற்பட்ட ஆதி முதல்வராய், தன்னேரில்லாத் தலைவராய், ஈசன் என்னும் இணையற்ற பெயருடையவராய், மன்னுயிர்க்கு உயிராய், அருவமாய் உருவமாய், யாவர்க்கும் அம்மையப்பராய் அமர்ந்த பரம்பொருளே அறுமுகப் பெருமான் எங்கும் நிறைந்து அருள் செய்யும் எம்பெருமானுக்கு எங்கும் திருமுகங்கள்; எங்கும் திருவிழிகள்; எங்கும் திருச்செவிகள்: எங்கும் திருக்கரங்கள்; எங்கும் வீரக்கழல் அணிந்த திருவடிகள் எங்கும் அவர் திருவுருவமே அளவிறந்த அருங்குணம் உடைய எம் ஆதிமுதல்வன் வானவர் வருந்திக் கிடக்கும் வன்சிறையை அழிக்கவும், பிரமதேவன் முதலியோர் படும் துயரத்தை ஒழிக்கவும், அசுரக் களையை வேரறுத்து அறப்பயிரைக் காக்கவும் இங்கே எழுந்தருளியுள்ளார். இத்தகைய ஐயனை நீ இழிந்த சொற்களால் இகழ்ந்தாய். நொடிப் பொழுதில் உன் தீய நாக்கை அறுத்திருப்பேன்; உன்னுயிரையும் பறித்திருப்பேன்; ஆண்டவன் என்னை அதற்காக அனுப்பவில்லையாதலால் உன்னை உயிரோடு விடுகின்றேன். வேற்படைக்கு இரையாக இருப்பவனே! இன்னும் ஒரு பகல் வாழ்ந்திரு. மீண்டும் ஒருமுறை உனக்கு உறுதி கூறுகின்றேன். நீயும் நின் சுற்றமும் அழியாமல் வாழ வேண்டுமானால் வானவரைச் சிறையினின்றும் விட்டுவிடு; மாறுபட்ட மனப் பான்மையை ஒழித்து முருகவேள் திருவடியே சரணம் என்றும் கருதி இரு” என்று கட்டுரை கூறினார்.
சூரன் தூதரைச் சிறையிடப் பணித்தல்
இவ்வாறு குன்றம் எறிந்த குமரவேளின் பெருமையை வீரவாகு எடுத்துரைத்தபோது, சிறுதொழில் புரியும் அசுரன் சீற்றமுற்றான்; பெருமூச்செறிந்து பேசத் தலைப்படடான். மழலைமொழி பேசும் அச்சிறுவன் யாவர்க்கும் முதல்வனாயினும் ஆகுக. அண்டங்கள் தோறும் சென்று அமர் புரிந்து வெற்றி பெற்ற யான் அஞ்சுவது யாதொன்றும் இல்லை" என்று கூறி, அருகே நின்ற அசுரர்களுள் ஆயிரம் வீரரை நோக்கி, "தூதுவனாக வந்த இவனைக் கொல்லுதல் பழியாகும்; விரைவில் இவனைப் பிடித்துச் சிறையில் இடுக” எனப் பணித்தான்.
பிடிக்க வந்தவரைத் தூதன் மடித்தல்
உடனே வல்லவர் ஆயிரவர் வீரவாகுவை வளைத்தனர். அந் நிலையில் அவர் ஆசனத்தை விட்டு எழுந்தார்; அசுர்ர் தலைகளின் சிகையை ஒரு கரத்தாற் பிடித்துத் தரையில் அடித்தார்; நொடிப் பொழுதில் அவர் உயிரைக் குடித்தார். பின்பு சூரனை நோக்கி, "என் ஆண்டவனது நெடுவேலால் நீ மாண்டு ஒழிவாய்! அதுவரையும் ஐம்புலன்களாலும் அனுபவிக்கத்தக்க இன்பங்களை யெல்லாம் ஆரத் துய்த்துக் கொண்டு இரு. நான் போய் வருகின்றேன்” என்று புறப்பட்டார்; சிங்கம் போன்ற வீரன் இவ்வாறு சொல்லிச் சென்றபோது, அவர் தங்கியிருந்த அரியாசனமும், மேலே எழுந்து வானத்திற்சென்று மாயைபோல் மறைந்தது. சூரன் விடுத்த ஆயிரம் அசுரர்களையும் அடர்த்து அவைக்களத்தை விட்டு அகன்றார், வீரவாகு. நெருப்பை உமிழ்கின்ற கண்களால் அதைக் கண்டான், சூரன். அருகே நின்ற நூறு முகம் படைத்த சதமுகன் என்னும் அசுரனை நோக்கிப் பேசலுற்றான். "தூதுவனாய் வந்த இவன் நமது அணுக்கப் படையை அடித்துச் சென்றான்; செய்யத் தகாத காரியத்தைச் செய்தானாயினும் இவன் இங்கு வந்த தூதன்; ஆதலால், கொடும்போர் புரிந்து இவனைக் கொல்லுதல் பழியாகும். இவன் வீரத்தைய்டக்கி விரைவிற் பிடித்துக் கொண்டு வருக” என்றான். அப்பணி தலைமேற்கொண்ட சதமுகன் நூறாயிரம் வீரரோடும். எண்ணிறந்த படைக்கலங்களோடும் வேகமாகப் புறப்பட்டு முருகதுதனை யடைந்து வீரமொழி பேசினான்; நெருங்கிச் சென்று பற்றினான். பிடித்த அசுரனை ஒரு தோளால் இடித்துத் தள்ளினார், வீரவாகு, மண்ணில் விழுந்தவன் உன்னி எழுந்தான். மீண்டும் முருகதுதர் அவனைக் காலால் உதைத்தார், இடியோசை கேட்ட நாகம்போல் துடித்து விழுந்த அசுரன் வாய் வழியே குருதி பொங்க மிதித்தார்; நூறு தலைகளையும் நொடிப் பொழுதில் துவைத்து அவன் உயிரை முடித்தார். பின்னர், அளவிறந்த சீற்றம் கொண்டு, ஆறுமுகப் பெருமான் கருணையாற் சொல்லி யனுப்பிய கட்டுரையை மதியாது இகழ்ந்த சூரனது அத்தாணி மண்டபத்தை நொறுக்கிப் பின்பு இந் நகரத்தையும் எரிப்பேன்’ என்றெண்ணினார்; வேற்படை தாங்கிய குமரேசனது திருவடியை நினைத் தார்; அப் பெருமான் அருளால் உலகளந்த திருமால்போல் நெடிய தோர் உருவம் கொண்டு நின்றார்.
சூரனது அத்தாணி மண்டபத்தை அழித்தல்
எம்பெருமான் தூதுவராகிய வீரவாகுவின் பெருந் திருவடி வினை நோக்கிக் கலக்க முற்ற அசுரர் அனைவரும் கடுகி ஓடினார். அழிவற்ற மதில்களையுடைய
அரண்மனையினுள்ளே காத்து நின்றார். ஐம்பது வெள்ளம் அசுரர்கள்; இருள்போன்ற மேனியர் ; கனல் சொரியும் கண்ணினர்; அன்னார் முருக துதரொடு போர் புரியப் புகைந்தெழுந்தனர். அவர்களோடு போர் புரிய முற்பட்ட முருகதூதர் பெருத்தார்; சிறுத்தார்; பல வடிவம் தரித்தார்; ஒவ்வொருவரையும் தொடர்ந்து நடந்தார்; காற்றுப்போல் சுழன்றார்; வளைந்தார்; எழுந்தார், ஐம்பது வெள்ளத்தையும் கலக்கி அழித்தார் பின்னர், ஐந்நூறு யோசனை அகலமும், ஆயிரம் யோசனை உயரமும் உள்ளதாய், பொன்னொளி வீசும் மேரு மலைபோல் பன்னெடும் சிகரங்களை-யுடையதாய் நின்ற வேரம் ஒன்று அங்கு விளங்கக் கண்டார். அரண்மனையின் எதிரே அழகிய பொன்னொளி வீசி நின்ற அவ் வேரத்தைப் பறித்து ஒரு கரத்தில் எடுத்தார்; அறம் திறம்பிய அசுர மன்னன் வீற்றிருந்த அத்தாணி மண்டபத்தின்மீது அதனை வீசி எறிந்தார். அம் மண்டபம் இடிந்து விழுந்தது; அங்கெழுந்த தூசி விண்ணும் மண்ணும் பரந்தது; எட்டுத் திக்கிலும் செறிந்தது; அசுரக் கூட்டம் உடைந்து கலைந்தது; இவற்றைக் கண்ணுற்றான், அறிவிழந்த சூரன்.
தூதுவனைப் பிடித்துவரப் பணித்தல்
ஆயிரம் பெயருடைய இறைவனுக்கு நிகரான ஆற்றல் தூதுவனைப் படைத்த முருக தூதனைக் கண்டு ஊழித் தீப்போல் உள்ளம் கொதித்தான், சூரன். பலபல தோள்களும் முகமும் படைத்த ஆயிரம் அசுரரை நோக்கி இடி போல் வெடுவெடென முழங்கினான். "தூதனைக் கொல்லுதல் கொற்றமன்று. அவனை எதிர்த்துப் போர் புரிந்தேனும் பற்றுக. தப்பிப் போகாமல் இங்குக் கொண்டுவந்திடுக. அவன் மேனியை வடுப்படுத்தி வானவரோடு வன்சிறையில் வைப்பேன்" என்றான். அலைகடலில் எழுந்த ஆலகாலம் போன்ற மேனியும் ஊழித் தீயின் கொழுந்து போன்ற சிகையும் உடைய அசுரர்கள்
பெரிய வீரவாகுவின்மீது அம்பு தொடுத்தார்கள்; கூரிய வேல்களை விடுத்தார்கள்; இரும்புத் தடிகளை எறிந்தார்கள்; நச்சுப் படைகளை வீசினார்கள்; சூலப் படையையும் வச்சிரப் படையையும் நேமி படையையும் விட்டார்கள். இவ் வண்ணம் கடும்போர் திகழும்பொழுது இணையற்ற முருக தூதர் சிறிது நேரத்தில், ஆயிரம் தோளுடைய வீரர் (சகத்திர வகுகள்) அனைவரையும் ஒரு மராமரத்தால் சிதைத்து நொறுக்கித் தனியராய் அமர்க்கணத்தில் நின்றார். அதையறிந்த சூரன், "சரி, சரி, உமையவள் பெற்ற பாலன் விடுத்த தூதன் ஒருவன், எம் முன் வந்து ஏளனம் செய்தான்; புறத்தே போந்து போரில் எதிர்த்தவரையெல்லாம் அழித்தான்; இன்னும் போகாமல் நிற்கிறான்; நமது வீரம் அழகுதான்” என்று நகைத்தான். மூன்றுலகும் புகழ் பெற்ற சூரன் சீற்றத்தைக் கண்டு தரியாத வச்சிரவாகு என்னும் மைந்தன் கிளர்ந்து எழுந்தான்; பத்துத் தலையும் வச்சிரமேனியும் வாய்ந்த அம்மைந்தன் மன்னன் அடிபணிந்து, "ஐயனே! அற்பத் தூதுவன் பொருட்டு இப்படி வருந்தலாமோ? நொடிப்பொழுதில் நான் சென்று அன்னான் வலிமையை அழித்து அவனைப் பிடித்து வந்து உம் முன்னே விடுவேன்” என்றான். அப்போது சூரன் மைந்தனை நோக்கி மகிழ்ந்தான், "அப்படியே செய்க” எனப் பணித்தான். மாலையணிந்த வச்சிரவாகு தன் சேனையோடு போர்க்களம் புகுந்தான்; அவனைப் பார்த்தபோது முருக தூதர், இவன் இந்திர ஞாலத் தேருடைய சூரன் அல்லன், அவன் மைந்தருள் ஒருவன்போலும். இவனைச் சேனையோடு சிதைத்து அழித்து, அந்திமாலை வந்தெய்து முன்னமே, எம்பெருமான் திருவடியை வணங்கச் செல்வேன்' என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார். அவ் வேளையில் வச்சிரவாகுவின் உடன்வந்த பெருங்குல மைந்தரும், பரந்த நாற்படையும் முருக தூதனை வளைந்து படைக்கலம் தொடுத்துப் போர் விளைத்தார்கள், வல்லவனாகிய வச்சிரவாகு தன் வில்லை வளைத்து, நானொலி எழுப்பி, ஆயிரம் அம்புகளைப் பூட்டி முருக தூதன்மேல் விடுத்தான். அவன் எடுத்த வில்லைப் பிடித்து முரித்தார், வீரவாகு. அது கண்ட சூரன் மைந்தன், வாளெடுத்துப் போர் செய்யத் தொடங்கினான். அப்போது வீரவாகுவும் தமது வாளெடுத்து எதிரே சென்றார். அவர் வீசிய வாள் அசுரனது பத்துத் தலையையும் அறுத்துத் தள்ளிற்று. அந் நிலையில் அவன் இறந்து பட்டான். பின்பு போர் செய்ய வருவார் எவருமிலர். பகலவன் மேற்றிசையில் மூழ்கினான். அந்தி மாலையும் வந்து சேர்ந்தது. மகேந்திர நகரை விட்டு நீங்கினார் முருக தூதர்; ஆகாய வழியே விரைந்து எழுந்து, முருகன் கருணையைப் போற்றி வடதிசையிலுள்ள இலங்கையின் அருகே வந்தடைந்தார்.
இலங்கையில் யாளிமுகனை வதைத்தல்
அவள் வருவதைக் கண்டான், யாளிமுகன். அவன் வாட்பேர் வீரன் முன்னே முருக தூதர் கையால் இறந்த அதிவீரனைப் பெற்ற தந்தை அவன் வீரவாகுவை நோக்கிக் கொதிப்புற்றான். "இவன் முன்னொரு முறை என் காவலில் அமைந்த இந் நகரத்தைக் கடந்தான். என் மகனுயிரைக் கவர்ந்தான்; மகேந்திரம் சென்று மீண்டு வருகின்றான். இக் கள்வனைக் கொன்று ஒழிப்பேன்" என்றான். இவ்வாறு உள்ளத்திலே கறுவிக் கொண்டு யாளிமுகன் முருகதூதரின் அருகே சென்றான்; தன் ஆயிரம் கைகளாலும் அவரை அறைந்தான். அடித்த கைகளை அவர் ஒரு கையாற் பிடித்தனர்; அவற்றை வாளால் அறுத்தெறிந்தார். அப்போது அசுரன் பெருங்கூச்சல் இட்டான். வீரவாகுவைப் பிடிப்பதற்குத் தன் துதிக்கைகளை யெல்லாம் விரைவாக நீட்டினான். அவன் பெற்ற ஆயிரத் தலைகளும் அற்று வீழுமாறு முருகதூதர் தம் ஒப்பற்ற வாளை வீசினார்; உயிரைப் போக்கினார்.
முருகப் பெருமானிடம் போந்து நிகழ்ந்தது உரைத்தல்
பெருஞ் செல்வத்தையுடைய இலங்கையை விட்டு நீங்கி, கருங்கடல் கடந்து, கந்தமாதன மலையைச் சேர்ந்த திருச்செந்தூரை வந்து அடைந்தார், வீரவாகு அன்பினால் என்பும் மனமும் உருக, கண்களில் திகழ்த்தது ஆனந்த வெள்ளம் பெருக, மெய்தானரும்பி விதிர்விதிர்க்க, முருக வள்ளலின் சேவடியை வணங்கி, "ஐயனே! தேவரீர் பணித்தருளிய மொழியைச் சூரன் முன்னே சென்று சொன்னேன். வானவரைச் சிறையினின்று விடுவித்தல் முறை என்று அவன் கருதினானில்லை; வானவர் குலத்தை விடமாட்டேன் என வெகுண்டு கூறினான். அடியேன் அவ்விடம் விட்டு நீங்கி இங்கு விரைந்து வந்தடைந்தேன். இதுவே நடந்த செயல்” என்றார். அப்போது எங்கும் நிறைந்து, எல்லாம் அறியும் தன்மை வாய்ந்த முருகன், "அன்பனே! நீ செய்ததொன்றும் சொல்லவில்லையே! அதைச் சொல்” என்று பணித்தருளினார். "எம்பெருமானே! சூரன் நகரத்திற்குத் தூது செல்லும் போதும், திரும்பி வரும் போதும் என்னைத் தடுத்தோரை யெல்லாம் உமது திருவடித் திறத்தால் முடித்துவிட்டேன். நடந்தது. இதுவே" என்று கூறினார், வீரவாகு. "சாதலே அவன் விதி. ஆதலால், "தேவரைச் சிறைவிடேன், என்றான், சூரன். அவன் செருக்கையழிக்க நாளையே செல்வோம்” என்று அறுமுகப் பெருமான் கூறக் கேட்ட பொழுது அங்கிருந்தோர் எல்லாம் நம் துயர் ஒழிந்தது என்று மகிழ்வுற்றார்.
புதுக்கி அமைத்த நகரில் சூரன் அமர்தல்
முருக தூதனால் அழிந்த நகரத்தைச் செப்பனிடும் பொருட்டுச் சூரன் சேவகர்கள் மற்றோர் அண்டத்தில் இருந்த பிரமதேவனைக் கொணர்ந்து மன்னன் முன்னே நிறுத்தினார்கள். சூரன் அவனைப் பார்த்து, "சீர் அழிந்த இத் திருநகரை முன்போல ஆக்கித் தரல் வேண்டும்” எனப் பணித்தான். பொன்மதிலும், மாட வீதிகளும், கூட கோபுரங்களும், வேரமும், பூஞ்சோலைகளும், மண்டபங்களும், தடாகங்களும், வானளாவிய மேடைகளும், மன்றங்களும், பிறவும் முன்னிருந்த வண்ணமே படைத்தான் பிரமன், புதிதாக அமைந்த நகரத்தையும் மாளிகையையும் நோக்கினான் சூரன். படைத்தவன் கைவண்ணம் கண்டு மகிழ்ந்து பாராட்டினான்; முன் போலவே அசுரர் போற்ற அரியாசனத்தில் அமர்ந்தான். முந்நீர்க் கடல் கடந்து செந்திற் பதியிற் பாசறை கொண்ட கந்தன் படைத்திறமும் பிரவும் உணர்ந்து வந்த ஒற்றர்கள் அந்த வேளையில் அவன் முன்னே போந்து வினாங்கி, "அரசே! தாரக வீரனைக் கொன்று, மாய கிரியாகிய கிரவுஞ்ச மலையை வேற்படையால் இரு கூறாகப் பிளந்து ஒழித்து, கடற்கரையில் உள்ள செந்தியம்பதியில் முருகன் வந்துள்ளான். இஃது உண்மை. வேலேந்திய அப் பாலன் பொங்கி யெழுகின்ற பூதகணங்களோடும், வெம்படை தாங்கிய வீரர் களோடும் கடல் கடந்து இங்கு வந்து போர் புரியக் கருதியுள்ளான். இதில் ஐயம் கொள்ள வேண்டா. ஆவன அறிந்து செய்க" என்று கூறினார். அம் மொழி கேட்ட மன்னன், ஒப்பற்ற தம்பியாகிய சிங்கமுகனையும், அறிவறிந்த அமைச்சரையும், பானுகோபன் முதலிய மைந்தரையும், உற்ற துணையாய சுற்றத்தாரையும், சேனைப் பெருத்தலைவரையும், ஒரு கணப் பொழுதில் வரவழைத்தான்.
சூரன் சபையில் வீரப் பேச்சு
அவர்கள் வந்து மன்னன் அடிபணிந்தனர்; சூரன் உள்ளத்தில் நெருப்புப் போன்ற சீற்றம் நிறைந்து எழுந்தது; பெருமூச்செறிந்து பேசுவானோயினான்; "இத்திரு நகர் அழிந்தது; அளவிறந்த சேனை இறந்தது; எங்கும் எலும்பு குவிந்தது; மாநிலம் கிழிந்தது; குருதியாறு பெருகிற்று; என் ஆணை ஒழிந்தது; சீமையும் சிதைந்தது. தூதனாக வத்த ஒருவனைப் பிடித்துச் சிறையில் அடைத்து வைத்தேன் அல்லேன்; முடித்தேன் அல்லேன்; வடுப்படுத்தினேன் அல்லேன், எல்லையற்ற வசைக்கு ஆளாயினேன். மேலும், நீலகண்டன் தந்த பாலகன் கடல் கடந்து இங்கு வந்து நம்மோடு போர் நிகழ்த்தக் கருதினானாம். அதனை இவ் வொற்றர் வாயிலாக அறிந்தேன். ஆதலால், நாம் செய்யத் தக்கதென்ன என்று உங்களைக் கேட்கின்றேன். உரைப்பீராக” என்று மன்னன் கூறினான்.
அது கேட்டு அமைச்சருள் ஒருவனான மேதியன், அரசனை வணங்கி, "ஐயனே! மாயம் புரிய வல்ல மலையையும், திருமாலை வென்ற உம், வீரத்தம்பியையும் நொடிப் பொழுதில் அழித்த வீரனைப் பாலன் என்று பேசுதல் அறிவாகுமோ? ஒப்பற்ற தம்பியும் மலையும் அழிந்தபோதே, சிவகுமாரன்மீது செல்லாதிருந்தீர்! சேனையையேனும் அனுப்பி அவனை வெல்லாதிருந்தீர்! இத் துணைக் காலமும் வீணாகக் கழித்தீர் கழிந்ததைக் குறித்துக் கவலையுறுதலாற் பயன் இல்லை. இன்றே அசுரப் படையோடு முருகனை வளைத்துப் போர் செய்ய விரைந்து எழுக, நேற்றுப் போல் இன்றும் காலம் தாழ்க்கலாகாது” என்று மேதியன் சொல்லி முடித்தான்.
மந்திரிகள் பேசுதல்
அது கேட்ட துர்க்குணன் என்னும் அமைச்சன் ’நன்று நன்று’ என்று கைகளை உதறிக் கிறி முறுவல் செய்து, "அரசே! நீ தவஞ் செய்து எல்லையற்ற ஆயுளும், இலங்கும் ஆழியும், மாசற்ற செல்வமும் மனத் திட்டமும், வீரமும் வேறுள்ள திறமையும் பெற்றாய் இவையெல்லாம் பாலனோடு போர் செய்யத்தானே? நின் பெரும்புடைத் தலைவரைப் போர் செய்ய விடு. அவர் சிறிது நேரத்தில் பகைவனையும் பூத கணங்களையும் வென்று வருவர். இதுவே உபாயம்” என்றான்.
‘போதும் போதும் என்று அவனைக் கையால் அமர்த்தித் தருமகோபன் என்னும் அமைச்சன் எழுந்தான். "ஐயனே! நகத்தால் கிள்ளி எறியத்தக்க தொன்றை வாளால் வெட்டுவாருண்டோ? சின்னஞ்சிறிய பகைவரை நோக்கிப் பென்னம் பெரிய வில்லெடுத்து நீயே செல்வாயோ? பலவாறாகச் சொல்வதிற் பயன் என்ன? ஒப்பற்ற அசுர வீரர்களுள் ஒருவனை வேற்புடையுடைய மாற்றான்மீது அனுப்புவாயாயின் அவனே விரைவில் வென்று ஒருவான். அவ்வாறே செய்க" என்றான்.
அவன் முடித்தவுடன் கல்லை யொத்த தோள்களையுடைய காலசித்தன் எழுந்தான்; சிரித்த முகத்தினனாய், "அண்ணலே! அசுரர் திறங்கண்டு அமரர் ஒடுங்கினர்; அரக்கர் அஞ்சினர்; எண்திசை பாலரும் ஏவல் புரிகின்றார்; இன்று அசுரரைவிடப் பூதர் வலியவராம்! என்ன இது! கலி காலத்தின் கோலமா? ஐயனே! என்னைப் போகவிடு; கந்தனையும் அவனுடன் வந்த வீரரையுல் கால பாசத்தாற் கட்டி இங்குக் கொண்டு வருவேன்" என்று கூறினான்.
அந் நிலையில் சுருக்கென்று சண்டன் எழுந்து, "அரசே! என்னை அனுப்பினால் மும்மூர்த்திகள் தடுத்தாலும் முனைந்து தாக்கி முருகனையும், அவன் படையையும் வென்று வருவேன்" என்றான்.
பானுகோபன் பேசுதல்
இந்த விதமாக மற்றைய அமைச்சரும், தந்திரத் தலைவரும், தானைத்தலைவரும் பேசக் கண்ட பானுகோபன், எழுத்து, "என் ஐயனே! முனிவரும் மயங்குமாறு மாயை செய்த மலையையும், தாரக வீரனையும் முருகன் கொன்றபோது என்னை அனுப்பினாயல்லை; இன்று இதைக் குறித்து வினவுவது என்னோ? ஆயிரத்தெட்டு அண்டங்களுக்கும் அரசனாயுள்ள நீ, சிவன் பெற்ற சிறுவன்மீது சீறி பெழுதல் சரியன்று; என்னை அனுப்பி வெற்றி பெற்று வாழ்க’ என்துரைத்தான்.
மற்றைய மைந்தர் பேசுதல்
அப்போது இரணியன் என்னும் மைந்தன் தளராத வலிமையுடைய சூரனை நோக்கி, "இன்று இரவே என்னை அனுப்புக; நான் சென்று பெரும்போர் புரிந்து பகைவரைக் கொன்று வானவரையெல்லாம் ஒறுத்து வருகின்றேன்” என்றான்.
அவனுக்குப் பின் அவன் தம்பியாகிய அங்கிமுகன் எழுந்து, "வெம்போர் புரிந்த என் தம்பியை வாளால் முடித்த தூதனையும், மற்றைய பகைவரையும் கொன்றாலன்றி இம் மாநகர்க்கு நான் வருவதில்லை” என்று வஞ்சினம் கூறினான்.
சிங்கமுகன் பேசுதல்
அங்கிமுகன் இவ்வாறு சொல்ல, அவனை விலக்கி , ஆயிரந்தலை பெற்ற சிங்கமுகன், மன்னர் மன்னனாகிய சூரனை நோக்கி, "அரசே! இதுகாறும் பேசிய மந்திரத் தலைவரும், படைத்தலைவரும், மைந்தரும் அவரவரிடம் "அமைந்த வீரம் பேசினரேயன்றி, பெருமை சான்ற உனக்கு ஏற்ற அறிவுரை கூறினாரல்லர். நான் கூறுகின்றேன், கேள்: வானவரைக் கடலிற்சென்று மீன் பிடித்துவரக் கட்டளை யிட்டாய்! அது நன்றாகுமா? இத்தகைய செய்கையைத் தம்முயிரில் ஆசையற்றவர் செய்வரேயன்றி மற்றையோர் செய்வரோ? வானுலக மன்னனாய இந்திரனை வருந்த வைத்தாய்! அவன் அரசுரிமையைப் பறித்தாய்; அவன் இருந்த நகரின் செல்வமெல்லாம் கவர்ந்தாய் வானவரைச் சிறையில் வைத்தாய், அந் நாளிற் சிறை புகுந்த வானவரை இந் நாளளவும் விட்டாயில்லை; இரக்கம் துறந்தாய்! அதனாலன்றோ அறுமுகன் உன்னுடன் போர் செய்து வந்தான்? ஈசனார் நமக்குத் தந்த வரத்தின் தன்மையை எண்ணிப்பார். "எத் திறத்தவரும் உம்மை வெல்லமாட்டார். நமது சத்தி யொன்றே வென்றிடும் என்றார், ஈசன், அவ் வரத்தின் திறத்தினாலன்றோ தாரகன் உயிரை முருகன் விடுத்த வடிவேல் கவர்ந்தது? எம் ஐயனே தேவரைச் சிறையி னின்றும் விடுவாயாயின் முருகவேள் இங்குப் போர் செய்யக் கருதார்; நாம் செய்த குற்றமும் மனத்திற் கொள்ளார்; நாளையே கயிலை மலைக்குக் கடிது செல்வார்” என்று பேசினான்.
சூரன் சிங்கமுகன் பேச்சை மறுத்தல்
மற்றையோர் பேசியதற்கு மாறாகச் சிங்கமுகன் சொல்லிய மொழிகளைக் கேட்ட போது சூரன் கையொடு கையறைந்தான்; பற்களால் இதழைக் கடித்தான்; மேனி வெதும்பினான்; முடித்தலை அசைத்தான். "எல்லையற்ற காலமாக யான் வானவரைச் சிறை செய்யக் கண்டும், திருமால் பிரமன் முதலியோர் எனக்கு அஞ்சியே செயலற்றிருந்தனர். அன்னவர் நிற்க ஒரு பாலனா அழிவற்ற என்னுயிரைக் கவர வல்லவன்? விண்ணில் உள்ள கதிரவனை ஒரு கனியென்று கண்ணிலாதவன் காட்ட அதைக் கையிலாதவன் போய்ப் பிடிக்கும் தன்மை போன்றது, கருத்திலாச் சிறுவ்ன் ஒருவன் என்னை வெல்வான் எனச் சொல்வது” என்றான்.
மீண்டும் சிங்கமுகன் தன் கருத்துரைத்தல்
இவ்வாறாகச் சூரன் சொல்லிய மொழிகளைக் கேட்ட சிங்கமுகன் மீண்டும், "ஐயனே! இன்னும் ஒன்றுரைப்பேன்; கோபம் கொள்ளாமல் கேட்க வேண்டும். யாவர்க்கும் முன்னவனாகிய இறைவனுடைய கருத்துரைத்தல நெற்றிக் கண்களில் எழுந்த ஆறு சுடர்களே செந்நிறத் திருமேனியும், ஆறு முகங்களும், பன்னிரு தோள்களும் கொண்டு வந்துள்ளன. ஞானவடிவான நாயகன் தன்மையை நானும் நீயும் சொல்லுதல் எளிதோ? மோன நிலை நீங்க முனிவரும் அதனைத் தெளிந்தாரிலர், தம் பெருந் தலைமை அவரே இன்னும் முற்றும் கண்டரிலர். அரசே அழிய வரம் பெற்றிருப்பதாகக் கூறினாய். அதற்கு அறிந்தோர் சொல்லும் பொருளை அறிவிக்கின்றேன், கேள். மூவகைப்பட்ட உலகங்களில் வாழும் உயிர்களைப் போல் சில நாள்களில் இறந்திடாமல் பல நாள் இருந்திடும் பான்மையே அவ்வரத்தின் பயனானும். அழியாச் செல்வத்தோடு நீயும் நின் சுற்றமும் கேடின்றி வாழ் வேண்டி இவற்றைச் சொன்னேன். ஆதலால், வானவரைச் சிறையினின்து விட்டுவிடு” என்றான், அறிவாளருள் சிறந்த அரிமுகன்.
சூரன் ஏளனம் பேசுதல்
இங்ஙனம் தம்பி பேசிய வாசகத்தைக் கேட்டான சூரன்; மணி முடி அசைத்தான்; செவியிலே கனலைச் செருகினாற் போல் எரிவுற்றான். சிங்கமுகனை நோக்கி "நீ புகழ்ந்து பேசிய பாலன் காற்றிலே பறந்தவன்; நெருப்பிலே காய்ந்தவன்; கங்கை ஆற்றிலே மிதந்தவன்; சரவணப் பொய்கையிலே கிடந்தவன்; பல மாதரிடம் பாலுண்டு விளை பாடியவன். நேற்றுப் பிறந்த அப் பாலனையா பரம்பொருள் ஒன்றாய்? இனிச் செல்வது என்ன? என்னுடனே ஒரு தாய் வயிற்றில் பிறந்தாய், உடன் உண்டு வளர்ந்தாய்! நம் குலப்பகைவரை ஒறுக்கக் கருதாது அவர் வசப்பட்டாய். நீ இருக்க எனக்கு வேறொரு பகைவனும் வேண்டுமோ? நீ வீரம் இழந்தாய்; மானம் துறந்தாய், சிறப்புடைய அசுரரது மேன்மையை அழிக்கப் பிறந்தாய், இப் பிறப்பில் எப் பயனும் பெற்றாயில்லை; இருந்தவருள்ளே நீ இறந்தவன் ஆனாய்! நானே பூதரையும் தலைவரையும் பாலனையும் பிற பகைவரையும் வென்று வருகின்றேன். நீ வருந்தாமல் உன் ஊர் போய்ச் சேர்க” என்றான், சூரன்.
அது கேட்ட சிங்கமுகன், "ஆகும் விதியிருந்தால் எல்லாம் ஆகும்; போகும் விதியிருந்தால் எல்லாம் போகும், ஈசன், ஒருவனாலன்றி வானவராலும் ஊழ்வினையை ஒழிக்க முடியுமோ? முருக வள்ளலின் வேலால் மன்னர் மன்னன் இறந்துபடுவான். அதைக் கண்டு பின்னும் உயிர் தாங்கியிருத்தல் பிழையாகும், தமையனுக்கு முன் இறத்தலே தக்கது" என்று எண்ணினான்; சூரனடிகளில் விழுந்து வணங்கினான் : "அரசே! சீற்றம் தீர்க! சிறியேன் செய்த பிழையைப் பொறுத்தல் வேண்டும். பகைவர்மீது போர் செய்ய, இதோ போகின்றேன். விடை தருக" என்று வேண்டினான்.
அப்போது சூரன் அகமகிழ்ந்தான்; தம்பியை வருக என்று அழைத்து மார்போடு அணைத்தான்; "இன்று ஊருக்குச் சென்று அங்குள்ள படைகளையெல்லாம் திரட்டி ஆயத்தமாய் இரு! கந்தன் இங்கே வந்தால் உன்னை அழைப்பேன், அப்போது வருக ! " என்று விடைகொடுத்தனுப்பினான். பின்பு, அங்கிருந்த : தலைவரையும் மைந்தரையும் பிறரையும் அனுப்பிவிட்டு மகேந்திர மாநகர மாளிகையில் இருந்தன், சூரன்.
முருகன் படையெடுத்தல்
கதிரவன் உதயகிரியிலே தோன்றினான். அப்போது அரியாசனத்தில் எழுந்தருளி-யிருந்தார் அறுமுகப் பெருமான்; அருகே நின்ற அயலும் அணியும், இந்திரனும் வானவரும், முனிவர்களும் மற்றுமுள்ளோரும் கேட்க, வீரவாகுவை நோக்கி, "பாவமே புரியும் சூரனும் அசுரர் அனைவரும் இறந்துபடவும், வானவரது துயரம் நீங்கவும், வீரமகேந்திரத்திற்கு தேரைக் கொண்டுவருக" என்றார். வள்ளலாகிய முருகப் பெருமாள் பேசிய வாசகத்தைக் கேட்ட போது கடலில் மூழ்கினர்; எமது துன்பமெல்லாம் தீர்ந்த்து என்று துள்ளினர்; ஆடினர்; பாடினர். ஐயன் சேவடியைத் தலைமேற் சூடினர். அழிவில்லாத இலக்க வீர்ர்களும், எட்டுப் பெருவீரரும் மந்தர மலைபோன்ற திண்மை வாய்ந்த வீரவாகுவும், தனித்தனியே தேர்களில் ஏறித் தேவ தேவனாகிய முருகப் பெருமானைச் சூழ்ந்தார்கள். பூதப் பெரும்படை எங்கும் நிறைந்த்து; வானவர் பூமாரி பொழிந்தார்கள். பூதர் சேய்த அட்டகாசம் எட்டுத் திசைகளிலும் சென்று நிறைந்தது. கடல் கலங்கியது; கார் மேகம் கலைந்தது; அண்ட கோளமும் உலைந்தது. இவ்வாறு வேற்படை தாங்கிய முருகவேள், ஈராயிரம் பூத வெள்ளம் ஆரவாரத்தோடு தொடர்ந்துவர, ஆகாய வழியே கடல்மீது எழுந்து சென்று, தூது சென்ற வீரவாகுவால் துயரமுற்ற இலங்கையைக் கடந்து, கருமலை போன்ற சூரன் வீற்றிருந்த மகேந்திரபுரத்தின் முன்புறம் போந்தார். அங்கு, முருகப்பெருமகன் ஆணைப்படி தேவதச்சன் மாட கூடங்களும், மண்டபங்களும், மணிப் பூஞ்சோலைகளும், தடாகங்களும், அழகிய தெருக்களும், கோடிகளிற் பெரிய கோபுரங்களும் அமைத்து, அச் சிறந்த பாடி வீட்டுக்கு ஏமகூடம் என்று பெயரிட்டான். ஏம கூடத்தின் நடுவேயுள்ள நகரத்தில் பூதவீரர் புடை சூழ வீற்திருந்தார், முருகன்.
வீரவாகுவும் பானுகோபனும் போர் புரிதல்
அதனை அறிந்த போது நெருப்பெனக் கொதித்தான் சூரன். அண்டமும் புவனமும் சுழன்றன. "வேலனாய குமரவேளின் ஆற்றலையும், பூதப்படையின் வலிமையையும், மற்றையோர் திறமையையும் இன்னே தொலைப்பேன். பானுகோபனை அழைத்து வருக” எனப் பணித்தான் சூரன். அதையறிந்த பானு கோபன் தன் மாளிகையினின்றும் போந்து, தேரை விட்டிறங்கி, சூரன் இருந்த இடம் சென்றான்; அடி வணங்கினான்; "வீரர் பெருமானே! என்னை எதற்காக அழைத்தாய்?” என் வினவினான்.
அப்போது வீரக்கழலணிந்த மன்னவன் கூறலுற்றான்; "மைந்தனே! தாரகனைக் கொன்று, அவன் குன்றையும் அழித்த கந்தவேள், திருச்செந்துரினின்றும் புறப்பட்டு, கடல் கடந்து, நந்தி கணங்களும் பூதப்படைகளும் புடை சூழ, இந் நகரின் வடபால் வந்தடைந்தான். இந்திரன் வேண்டுகோளுக் கிசைந்து ஈசன் தன் மைந்தனாகிய கந்தனைப் பூதத் தலைவர்களுடன் இங்குப் போர் புரிய விடுத்துள்ளான். ஆதலால், மகனே! நானும் என் மைந்தனாய உன்னைக் கொண்டு வெற்றி பெறுதலே முறையாகும். இன்றே அசுரப் படைகளோடு அமர்க்களம் செல்க, ஈசன் மைந்தனையும், அவன் படைகளையும் போரில் வெல்க; வெற்றி மாலை புனைந்து கடிதின் வருக” என்றான்.
பகைவரது ஆற்றலை ஆராய்ந்தறியாத பானுகோபன் தந்தை பணித்தவாறே பெரு வில்லைக் கையில் எடுத்தான்; எவரையும் மயக்கும் மோகப்படையும் கைக்கொண்டான். காலாட்படையும் தேர்ப்படையும் கரிப்படையும் பரிப்படையும் எழுந்தன; ஆரவாரமும் எழுந்தது; கொடியும் பொடியும் மேல் எழுந்தன.
மெய்யறிவால் மேம்பட்ட வீரவாகுதேவர், முருகன் திருவருளைத் துணைக்கொண்டு மேருமலை போன்ற வில்லைக் கையில் எடுத்தார். வீரர் எண்மரும், இலக்கரும் எண்ணிறந்த பூதகணங்களும் போர்க்கோலம் கொண்டு, வானத்தை முட்டிய தேர்களில் வன்மையுடன் போந்தனர்.
இரு திறத்தவரும் நெருங்கிப் பேர் நிகழ்த்தினர்; இறந்த அசுரர் எண்ணிறந்தவர், முரிந்த காலும் தலையுமாய் உயிர் துறந்த பூதரும் அளவிறந்தவர். அசுரர் சேனை அழியக் கண்ட பானுகோபன் எழுந்தான். "கழிந்த செயலைக் குறித்துக் கவலை கொள்வதிற் பயனில்லை; யானே போர் முனையிற் சென்று, ஒரு நாழிகையில் பகைவரைப் பேரும் இல்லாமல் அழித்திடுவேன். அவ்வாறு செய்யாவிட்டால் நான் சூரன் மகன் அல்லேன்" என்று சூள் உரைத்தான்.
அந் நிலையில் வெற்றி வீரனாகிய வீரவாகு, குமரவேள் திருவடியை மனத்திற் கொண்டு, மகிழ்ச்சியுடன் துதித்து, திண்ணிய உள்ளமுடைய பானுகோபனை எதிர்த்தார். பெருந்திற வாய்ந்த வீரவாகுவும் பானுகோபனும் நிகழ்த்திய போரின் வன்மையை யாரே எடுத்துரைக்க வல்லார்? இருவர் கையிலுடி அமைந்த விற்படைகள் சக்கரம்போற் சுழன்று சரமாரி பொழிந்தன. வீரவாகுவின் வில்லினின்றும் எழுந்த அம்புகள் பள்ளத்திற் பாயும் வெள்ளம்போல் விரைந்து, நிலவுலகம்போற் பரந்து, தீயின் திறமையுற்று, ஆகாயம்போல் அழிவற்று, காற்றுப் போல் கடுகி, ஆயிரங்கோடி தலைகளை அறுத்தாலும் வெறுப்படையாமல் வேலை செய்தன.
தன் எதிரே தனி வில்லோடு நின்ற வீரனை நோக்கினான் பானுகோபன். "இன்று போர் புரிய வந்த அசுரப் பெரும் படையைக் கொன்றவன் இவனே அன்றோ? இன்னும் ஒரு நாழிகையில் இவன் உடலைச் சின்ன பின்னாமாக்குவேன்; அவ் விதம் செய்யேனாயின் உயிர் வாழ ஒருப்படேன்; நான் இவ்வுலகித் பிறந்தவனும் அல்லேன். வில்லோடு தீயில் விழுந்திடுவேன்" என்றான்; மாயம் விளைக்கும் மோகப் படையைக் கையில் எடுத்தான்; மனத்தில் அதற்குப் பூசனை புரிந்தான்; மாற்றான் சேனையையும் வீரவாகுவையும் பற்றி, "அவர் அறிவைக் கெடுத்து ஆக” என்று சொல்லி விடுத்தான். அத் திண்ணிய வெம்படை திறலுடன் சென்றது. அப்போது வீரவாகு எப் படையால் இதை ஆழிப்பது" என்று திகைத்துச் செயலற்று நின்றார். முன்னால் எழுத்த ஆலகாலம்போல் மோகப்படை எங்கும் மண்டிற்று எல்லோர் அறிவையும் அழித்தது.
உயிருக்குயிராய் நின்ற அருள் புரியும் அறுமுகப் பெருமான் அதனை அறிந்தார்; ஓர் அமோகப் படையை விரைந்து ஆக்கினார்: அதனை தேக்கி, "எம் வீரரைத் தெளிவித்து எழுப்புக: :மாற்றான் விடுத்த படையின் வன்மையைக் கெடுத்து வருக” என்று ஏவினார். வலிமை சான்ற அமோகப் பெரும்படை சென்று தாக்கிற்று. அந் நிலையில் கொடிய பானுகோபனது மோகப்படை விரைந்து ஓடிற்று. வீரரது மயக்கம் தீர்ந்தது. நிகரற்ற மோகப்படை நீர்மை யிழந்த போது, வீரவாகுவும் ஏனைய வீரரும் உடலைப் பிணித்த மயக்கம் தெளிந்து முருகவேளின் வெற்றிப்படையைக் கண்டு மகிழ்ந்தார்கள்.
இவற்றை செல்லாம் பார்த்தான், பானுகோபன்; வியப்புற்றான்; செருக்கு அழித்தான் துயரம் உற்றான். "இங்கு மாற்றாது அறிவை யெல்லாம் கவர்ந்தேன். மாநிலத்தில் வீழ்த்தினேன்; அன்னார் பிழைத்து அறிவு பெற்று எழுந்துவிட்டார்கள். இனி என்ன் செய்வேன்; ஐயோ! இஃது இறைவன் செயலே? அதோ வீரவாகு சிவப்படையை எடுக்கின்றான். அதை விடுவானாவின் என்னுயிர் போய்விடும். அதைத் தடுப்பதற்கு நான் சிவப்படையை எடுத்து வந்தேனில்லை. ஆதலால், வீரவாகுவை வென்றிடல் அரிது; இன்று நகரினுள்ளே சென்று, பல தெய்வப் படைகளை எடுத்து வந்து இவனை வெல்வேன். இனி இங்கு நிற்றல் தவறு." என்று எண்ணினான்; தன் நகரை நோக்கித் திரும்பினான்.
சூரன் போருக்கு எழுதல்
"மாயையில் மறைந்து பானுகோபன் மாநகர் சேர்ந்தான். இனி நாளைக் காலையே வருவான். அவனை அப்போது விரைவில் அழித்திடுக" என்று கூறி வானவர் வீரவாகுவின்மீது விரைமலர் துவினர். அன்று நிகழ்ந்த போரில் தோற்று ஓடிய பானுகோபன், துன்பமும் பழியும் மானமும் அடைந்தான்; பெருமிதம் இழந்தான். தன் மைந்தன் அடைந்த வகையை பெருஞ்சினம் உற்றான் சூரன், "இனிப் போர் புரிவதற்கு யாரையும் அனுப்புவதில்லை. யானே படையுடன் சென்று பகைவர் வலிமையை அழிப்பேன்; வாகைமாலை சூடுவேன்” ஒன்று எண்ணினான்; வில்லையும் ஏனைய படைக்கலங்களையும் எடுத் தான்; முன்னாள் வானவர் கொடுத்த தெய்வப் படைக் கலங்களையும் கைக்கொண்டான்; கரத்திலே தோலுறை மாட்டினின் புறத்தில் அம்பறாத்தூணி தூக்கினான்; விரல்களில் பொன்னாலாகிய புட்டில் பூட்டினான். அப்பொழுது, சிங்கமுகாசுரன் மைந்தனாகிய அதிசூரனும், தாரகன் புதல்வனாகிய அசுரேந்திரனும் போர்க்கோலம் பூண்டு சூரனை அடைந்தார்கள். அவரை நோக்கி, "கடல் போன்ற பெருங்குளம் சிறு கரையில்லாவிடின் உடைத் திடும். அவ்வாறே அரும்போர் புரியும் பெரும்படைகள் இருப்பினும், காக்கும் தலைவர் இல்லையாயின் அவை கட்டழிந்து விடும். ஆதலால், நீங்கள் இருவரும் இன்று போர் புரியும் பெருஞ் சேனைக்குத் தலைவராய் முன்னே செல்க” எனப் பணித்ததன், சூரன். அவரும் வணங்கி, அப் பணியை ஏற்று விரைந்து சென்றார்கள். மதகளிகளும் தேர்களும் பரிகளும் கலந்து நெருங்கப் படையின் நடுவே, பெருமணிகள் பதித்த வயிரத் தேர்மேல் ஏறிச் சென்றான், சூரன். கருங்கடலில் ஊழித்தீவின் நடுவே ஆலகாலம் எழுந்தாற்போலச் சென்ற அசுரனைக் கண்டு வானவர் மயங்கினர்.
முருகவேள் போர்க்களம் புகுதல்
இவ்வாறு அசுர சேனையோடு ஆகாய வழியே சூரன் தேர்ந்து வருவதை அறிந்தான் இந்திரன், உடனே எழுந்து ஓடினான். அறுமுகப பெருமான் அடிகளை வணங்கி,
"ஐயனே! முன்னாள் முதல்வன் அளித்த பெரும் படைகளோடு சூரன் இன்று போர் புரிய விரைந்து வருகின்றான். அவனை எதிர்த்து வென்று எமக்குச் சீர் அருள் வேண்டும்" என்று விண்ணப்பித்தான். உடனே செந்நிறப் பெருத்தேர் மீது ஏறி அமர்ந்தார், முருகவேள். செந்தலைப் பூதர்கள் கடலிலும் பெரிய ஆரவாரத்தோடு எழுந்தனர். அவர் பணித்தவாறே அழிவற்ற வீரவாகுவும், அவர் தம்பியரான எட்டு வீரர்களும், நூறாயிரவரும், பூதகணங்களின் தலைவரும் தேர்மீது ஏறித் திண்ணிய சேனையின் நடுவே சென்றார்கள். வீரம் நிறைந்த படைத்தலைவரை முன்னிட்டுச் சேனைகள் இவ் வண்ண்ம் செல்ல, ஈசன் அருளிய குமரவேள் அசுரப்படை நெருங்கி நின்ற போர்க்களத்தை அடைந்தார்.
சூரன் வீரவாகுவைத் தாக்குதல்
அசுரர் சேனை குமரன் சேனையை வளைத்தது. பூதர்கள் கிளர்ந்தெழுந்தனர்; ஆரவாரம், செய்தனர்; அசுரரை உதைத்தனர். அவரும் இவர்களை எதிர்த்துத் கீரவாகுவைத்
தாக்கினார். பெரும்போர் மூண்டது. அண்டகேரளம் விண்டது. சூரனுடைய தம்பியரின் புதல்வரான படைத்தலைவர் இருவரும் இறந்தனர். அது கண்ட அசுர சேனை சிதறி ஓடிற்று. அண்டங்களை வென்ற சூரன் இவற்றைக் கண்டான்; ஊழித் தீயென உருத்து எழுந்தான். அன்னான் சீற்றத்தைக் கண்டு அயன் அஞ்சினன்; திருமால் துளங்கினன்; இந்திரன் அயர்ந்தனன்; கூற்றுவனும் கலங்கினன்; நல்லறம் நடுங் கிற்று: ஐம்பெரும் பூதங்களும் அச்சம் கொண்டன. மன்னுயி ரெல்லாம் ஏங்கித் துடித்தன.
அவ் வேளையில் பல்லாயிரங் கோடி அம்புகளைச் சூரன் அடுக்கடுக்காக விடுத்தான்; மாற்றார் வீசிய மலைகளையும் மரங்களையும் தடுத்தான்; பூதப்படையின் தலைவருடலைத் துளைத்தான். சூரன் விளைத்த போரின் கொடுமையைக் கண்டு
நீலனும் மாலியும் நெஞ்சழிந்தாக்கள்: கும்பன், நிகுல்டன் என்னும் இருவீரர் கண்ணும் பஞ்சடைந்தது. சண்டியும் தண்டியும் அஞ்சி ஏங்கினர்; வாமனும் சோமனும் வீழ்ந்து மடிந்தார்கள்.
பகைவரை நடுங்கச்செய்யும் வீரவாகு தேரூர்ந்து வந்து சூரன் எதிரே தோன்றினார்; அவரது அழகிய உருவத்தைக் கண்டபொழுது கடுங்கோபங் கொண்டான் அசுரர் கோமான், போர் புரிய நின்ற வீரவாகுவை நோக்கி, "நீ எமது வீரகேந்திரத்தை சாடினாய்; அளவிறந்த என் சுற்றத்தாரை அழித்தாய்; கணக்கற்ற சேனையைச் சிதைத்தாய்; என் மைந்தரையும் கொன்றாய்; இன்றே உன் உயிரை எடுப்பேன்; போரை முடிப்டேன். உனது வில்லின் வன்மையை அறிவேன் நான்; தெய்வப் படைக்கலத் தீறனும் தெரிவேன்; உன் உடல் வன்மையும் உணர்வேன்; தப்பாத ஒரு படைக்கலத்தால் உன்னை முடிப்பதற்குக் காலம் கருதி இருந்தேன்” என்று சொல்லிச் சூரன் விற்போர் தொடுத்தான். வீரவாகுவும் தமது வில்லை வளைத்து அம்புமணி பொழிந்தார். அப்பொழுது சூரன் பதினைந்து முத்தலை யம்புகளை விடுத்து, அவர் கையிலிருந்த வில்லை முரித்தான். வில் ஒடித்தபோது வீரவாகு சீறினார். வேற்படையொன்றை எடுத்து வீசினார்; அஃது அழியா வரம் பெற்ற சூரன் மார்பிற்பட்டு ஒடிந்தது. அது கண்ட சூரன், திருமால் முதலிய தேவர் திறமெல்லாம் ஒருங்கே கவர வல்ல தண்டாயுதத்தை எடுத்து வீரவாகுவின்மேல் வீசினான். அது விரைந்து சென்று அவர் மார்பில் தாக்கிற்று: மார்பு இருகூறலகப் பிளந்தது. குருதி வெள்ளம் ஆறாகப் பாய்ந்தது. பெருகி: குருதியும், பிளந்த மார்பும், புகைந்த மனமும், குறைந்த வலிமையும் உடையராய் வீரவாகு உடல் சேர்ந்து விழுந்தார், தேவர்கள் அஞ்சி ஓடினர்.
சூரனும் முருகனும் போர் புரிதல்
அப்பொழுது கோடிக்கணக்கான சூரியர்கள் ஒருங்கே திரண்டு, உருவாகி, விண்ணினின்றும் இழிந்து போர்க்களத்தில் வந்தாற்போன்று குமரவேள் தோன்றினார். அவரைக் கண்டான், சூரன்; அன்று அலர்ந்த செந்தாமரை போன்ற ஆறுமுகமும், அழகிய கண்ணும், கrதில் அசைந்த குண்டலமும், தலையில் அணிந்த திருமுடியும், மணிமார்பும், பன்னிரு கைகளும், படைக்கலங்களின் ஒளியும், தண்டையும் சிலம்பும் ஒலிக்கும் திருவடியும் தெரியக் கண்டான். அண்டங்கள் ஆயிரத்தெட்டும் ஆளும் சூரனைத் தீவினையாளன் என்றே பலரும் சொல்லுவர். ஆயினும் அறுமுக வள்ளலை நேராகக் காணும் பேறு பெற்றானே அவன்! தவத்திற்கு மட்டுமா அனை தலைவன்; அறத்திற்கும் அவன் முதல்வன் அன்றோ? இன்றளவும் முனிவரும் தேவரும் எண்ணி எண்ணிக் காணாத இறைவனாய முருகனைச் சூரன் தன்னிரு கண்ணால் கண்டான் என்றல், அவன் இயற்றிய தவத்தின் பயனை யார் அறிந்து சொல்ல வல்லார்? தன் முன்னே நின்ற பெருமான் சங்கர காரணனாகிய சிவனார் திருமகனே என்று உணர்ந்தான், சூரன். உள்ளத்திற் கோபமுற்றுக் கந்தவேளை நோக்கி, "பாலனே! என்னை நீ இன்னான் என்று அறிந்திலை போலும். அன்று நீ வென்று அழித்த கிரவுஞ்ச கிரி என்னும் வலியற்ற மலையெனக் கருதினாய? நான் அளித்த செல்வத்தில் மயங்கிக் கிடந்த தரகாசுரன் என்று எண்ணினாயா? இன்று நிகழவிருக்கும் போரில் பிரம தேவனும், மாயவனும், விண்ணவர் வேந்தனும், எண்திசைப் பாலரும், இமயவல்லியும் இரக்கமுற்று வருந்த இமைப்பொழுதில் என் வில்லால் உன் வன்மையை அழிப்பேன்" என்றான்.
இவ்வாறு, சூரன் என்று பேர் பெற்ற் கொடியவன் வீரமும், வலிமையும், செருக்கும், சினமும் கொண்டு பேசியபோது, கருணை வடிவாய் நின்ற குமரவேள் புன்முறுவல் பூத்த முகத்தோடு அவனை நோக்கி, "வெற்றியுடையோம்; வீரமுடை யோம்; பெருமையுடையோம்; படைக்கலமுடையோம்; அழியா வரம் உடையோம்; அரும்பெருஞ் சேனையுடையோம் என்று அகந்தை கொள்ளாதே. அவற்றையெல்லாம் விரைவில் மாற்று வோம்” என்று சொல்லி முடிக்கு முன்னே மண்ணளந்த மாயவனைப்போல் பெரிய வில்லை எடுத்து வளைத்தான், சூரன்.
அதனைக் கண்டார், அறுமுகப் பெருமான். எங்கும் நெருங்கிச் சூழ்ந்து நின்ற அசுரப் பெரும் படையின்மீது தெய்வப் படைக்கலமாகிய சக்கராயுதத்தை விட்டார். அப் படை கொடுந் தொழில் புரியும் அசுரரைக் கொன்றது; அவர் மாயையாகிய இருளை மாற்றியது; குருதியின் நிறம் கொண்டு செங்கதிரவன் போல் விளங்கிற்று.
கருங்கடல் போல் நின்ற பெருஞ்சேனை விழுந்து ஒழிந்ததை அறிந்தான், சூரன்; மனம் மருண்டான்; தனியனாய் நின்றான்; தேர் இழந்தான்; வில் இழந்தான்; வீரன் என்னும் பேர் இழந்தான்; படை இழந்தான்; அணி இழந்தான், மணிமுடி இழந்தான்; குடையும் இழந்தான்; நாடிழந்த மன்னர்போல் நிலத்திடை நின்றான். அவன் நெஞ்சில் வெஞ்சினம் மூண்டது; உடம்பில் வேர்வை எழுந்தது; முடியணிதற்குரிய தலையை அசைத்தான்; 'பாலகன் வலிமை நன்று நன்று' என்று நகைத்தான்; வெற்றி தரும் பிரமாஸ்திரத்தை எடுத்து முருகன் மேல் விடுத்தான். அப் படை நெருங்கிய பொழுது பரஞ்சுடராகிய குமரவேள் தம் கரத்திலிருந்த வேற்படையை எதிராக விட்டார். அது சென்று அவன் படையை விழுங்கிற்று.
அச் செயல் கண்டு வியப்புற்ற சூரன் திரிபுரமெரித்த சிவபெருமானது மெய்ப்படையைக் கையிலெடுத்து முறைப்படி அருச்சனை செய்து வேகமாக விட்டான். அப்போது மண்ணுலகம் நடுங்கிற்று; விசும்பிலுள்ள மேகம் இடியுமிழ்ந்து சிதறிற்று. சூரியன் துடித்தான்; சந்திரன் சுழன்றான்; மேருமலை வெடித்தது; அண்டம் பிளந்தது. இங்ஙனம் வெளிப்பட்ட சிவப்படையைக் கண்டார், முருகவேள்; அகத்திலே அன்பு கொண்டார்; "இஃது என் தந்தையின் படை” என்று. தமது செங்கையை நீட்டி வரவேற்றார்; கொடுத்தவர் வாங்கும் தன்மைபோல் அப் படையைப் பற்றினார். அந் நிலையில் சூரன், ‘இன்று வேற்படையின் வன்மை கண்டேன்; வில்லின் ஆற்றலும் கண்டேன்; மற்றைய படைக் கலங்களின் திறமையும் கண்டேன். இன்னும் பால் மணம் மாறாத பாலன் செய்வதைப் பஈர்ப்பேன்’ என்று யாதும். பேசாமல் நின்றான்.
முருகன் கருணை காட்டுதல்
அப்போது அறுமுகப் பெருமான் அசுரனை நோக்கி, "இங்கு உன்பால் நிறைந்து நின்ற பெருஞ்சேனை அழிந்தது. உன் வில்லாற்றலும் ஒழிந்தது; தெய்வப் படைகளும் கருணை தொலைந்தன. எல்லாம் இழந்து எளியனாய் நின்றாய். தாரகனைக் கொன்ற நெடுவேல் ஆயத்தமாய் உள்ளது. உன்னைக் கொல்வது பெரிதன்று: அரிதும் அன்று. படையிழந்த நிலையில் உன்னைக் கொல்லுதல் பழியாகும். அறப்போர் முறைப்படி உன்னை முடிக்கக் கருதிப் பொறுத்திருக்கின்றோம். பல பல பேசுதலாற் பயனென்ன? வானவரைச் சிறையினின்றும் விடுவாயாகில், உன்னுயிரைக் கவராமல் விடுவோம். அதற்கு இணங்காவிடின் உன்னை விரைவில் அழிப்போம். உன் கருத்தென்னை? கூறுக” என வினவினார்.
அம் மொழி கேட்ட சூரன், நான் படையிழந்து விட்டேன் என்று எண்ணியன்றோ இப் பாலன் வானவரைச் சிறையினின்று விட்டுவிடு என்று சொல்லத் துணிந்துவிட்டான்! சிறுபிள்ளைத் தனத்தால் இவ்வாறு செப்பினான். சாகா வரம் பெற்ற என் வெற்றியும் வீரமும் இவன் உணர்ந்தானில்லை. மலர் மாலை யணிந்த இம் முருகன் படைக்கலமற்ற என்னெதிரே நின்று எண்ணிறந்த காலம் பெரும்போர் புரியினும் என்னைக் கொல்ல வல்லனோ? இவனுடைய தந்தை கொடுத்த அழியாத வர முடையவன் அல்லனோ யான்? என்னை அவன் கொல்லுதல் அரிது; யானும் அவனை வெல்லுதல் அரிது. ஆதலால், என் நகரினுள்ளே சென்று போருக்கேற்ற சீரும் சேனையும் கொண்டு பின்னர் வந்து போர் செய்வேன்' என்று பல வகையான சூழ்ச்சிகளை மனத்திற் கொண்டு, மாயா மந்திரத்தை உன்னினான்; திடீர் என்று மறைந்தான்; பொன் மயமான மகேந்திர மாளிகையிற் புகுந்தான். மறைந்து சென்ற சூரன் செய்கையை உயிர்க்குயிராய் உறையும் முருகன் உணர்ந்தார். ஆயினும், வேற்படையை விடுத்து அவனுயிரை வாங்கக் கருதினாரல்லர், "இன்னும் தீயவன் மனந்திரும்பினால் நன்று” என்று பொறுத்திருந்தார்.
சூரனும் பானுகோபனும்
போர்க்களத்தினின்றும் போந்து பாடி வீட்டை அடைந்தார், சூரனும் முருகவேள். பூதப்படை தெருக்களிற் சென்று அமர்ந்தது. இந்திரன் முதலாய தேவர்கள் போற்ற அரியாசனத்தில் அறுமுகப்பெருமான் ஈசனைப் போல் வீற்றிருந்தார். எவரும் அறியாவண்ணம் உரு மறைந்து சென்ற சூரன், திருமகள் போன்ற பதுமையின் மாளிகை அடைந்தான்; அங்கு மெல்லிய மஞ்சத்தில் உறங்கினான் அல்லன், யாரோடும் பேசினான் அல்ல்ன், வெம்போருக்குரிய விடயங் களையே நினைத்துக் கொண்டிருந்தான்.
அசுரர் கோமான் போர்க்களம் சென்றதும், போர் புரிந்ததும், வெறுங்கையனாய் மீண்டு வந்ததும் ஒற்றர் சென்று பானுகோபனுக்கு அறிவித்தார்கள். அப்போது அவன் தந்தையிடம் போந்து, "அரசே! இன்று நீ அமர்க்களம் சென்று அமரருக்கு ஊக்கமும், அசுரருக்கு ஏக்கமும் உண்டாக்கிவிட்டாய்; இந்திரனுக்கு மனமகிழ்ச்சியளித்தாய்! ஒரு பாலனோடும் பூத கணங்களோடும் நீ போர் புரியச் செல்லுதல் தகுமா? போனது போகட்டும். நான் சிறியனாயினும் என் சொல்லைச் சிந்தையிற் கொள்ளுதல் வேண்டும். இந்த இரவு அகன்றதும், யான் சென்று பகைவர் அனைவரையும் வென்று வருவேன்; என்னை அனுப்புக” என்று சொல்லிய பொழுது சூரன் மனமகிழ்ந்தான்; எதிரே நின்ற புதல்வனை நோக்கி, "அப்பா! பன்னிருகை படைத்த குமரனைப் பாலன் என்றெண்ணாதே. அவன் வலிமையில் ஒப்பற்றவன். அவனை எதிர்த்துப் போர் செய்ய வல்லவர் என்னைத் தவிர வேறு யாரும் இலர். வேற்படை தாங்கிய வீரனை யானே வென்றிடு கின்றேன். உனக்கு ஒன்று சொல்வேன். நீ நாளையே சேனை யோடு சென்று, முருக தூதனாக வந்து, நம் நகரத்தின் பதங் குலைத்த படைத்தலைவனைப் போருக்கு அழைத்து அவனைக் கொன்று வருக” என்றான்.
பானுகோபன் மாயப்படை தொடுத்தல்
பகலவன் உதித்தவுடன் எழுந்தான் பானுகோபன், முறைப்படி நித்திய கருமங்களை முடித்தான்; ஒப்பற்ற மாயையை மனத்திலே தியானித்தான். அப்பொழுது மாயை அவன் முன்னே தோன்றினாள். அவள் அருளைப் பெறக் கருதிக் கை தொழுது, "என் தந்தையை ஈன்ற தாயே! முருக துரதனோடு நான் போர் செய்தேன்; மானம் இழந்தேன்; வன்மையும் கெட்டேன். நேற்றுப் போர்புரிந்து என்னை வென்ற அப் பகைவனை இன்று நான் வென்றிடல் வேண்டும் அதற்கு ஏற்ற படைக்கலம் தருவாயாக" என்று வேண்டினான், பானுகோபன். அசுரன் சொன்ன சொற்களைக் கேட்டாள், மாயை, ஒப்பற்ற மாயப்படை யொன்றை உண்டாக்கி, அவன் கையிற் கொடுத்து, "மைந்த! இப் படையை மறைந்து நின்று மாற்றார்மீது ஏவுக, இது முருக தூதனையும் மற்றையோரையும் வளைத்து அவர் அறிவை மயக்கிவிடும்; காற்றின் தொழிலையும் செய்யும். இதனால் இன்று வெற்றி உனதே, செல்க” எனப் பணித்தாள்.
மாயை மறைந்த பின்னர்ப் பானுகோபன், கனற்படை, காற்றுப்படை, கூற்றுப்படை மதிப்படை, மாற்படை, கதிர்ப்படை, அரன் படை, அயன் படை முதலியவற்றை எடுத்தான்; அப் படைக்கலங்களோடு அசுரசேனை சூழ்ந்து வர, மகேந்திர மாநகரை விட்டு, அழகிய மதிலைக் கடந்து சென்றான். இதை யறிந்த முருகவேள் வீரவாகுவை நோக்கி, "நேற்றுத் தோற்று ஓடிய சூரன் மகன் இன்று உன்னைக் கருதித் திண்மையோடு வந்துள்ளான். நீ படைத்தலைவர்களோடு நேற்றுப் போலவே சென்று மாற்றானை எதிர்த்துப் போர் புரிந்திடு; அவன் ஏவும் படைகளுக்கு எதிராக வுள்ள படைக்கலங்களை விடுத்திடு; அவ் வஞ்சகன் மாயம் புரிவானாயின் நமது வேல் விரைந்து வந்து அவன் மாயையை அழிக்கும். இப்பொழுதே சென்றிடு” என்றார். அப்பணி தலைமேற் கொண்ட வீரவாகு, அவர் பாதம் பணிந்து விடை பெற்றுப் புறப்பட்டார்.
கோடி கோடியான இடிகள் ஒன்றாகி மின்னலின் இடையே மறைந்து ஒலித்தாற் போன்று, வான் அளாவிய தோள்களையுடைய வீரவாகு, பகைவர் நடுங்கும்படி வில்லினின்றும் நானொலி எழுப்பினார். அது கண்ட பானுகோபன், "நான் அன்று போர்க்களத் தினின்று மறைந்து ஓடினேன் என்னும் வசை எங்கும் பரவிற்று. இன்றும் தப்பியோடுவேனாயின் எல்லோரும் என்னை இகழ்வர் என்று மனத்தில் எண்ணி, மாயை தந்த கொடும் படையை எடுத்தான்; அதற்குரிய பூசனை புரிந்தான்; அப் படையை நோக்கி, "யாவரும் அறியா வண்ணம் நீ பகைவரிடம் போந்து, அவர் அறிவை மயக்கி, உயிரைக் கவர்ந்து நன்னீக் கடலில் எறிந்து விடு” என்று கூறி விடுத்தான்.
அவ்வாறே அப் படைக்கலம் சென்று, பூத கணங்களையும், நூறாயிரம் வீரரையும், வாள் அணிந்த வயலீரர் எண்மரையும், பெருந்திறல் வாய்ந்த வீரவுாகுவையும் ஒருங்கே வளைத்து, அவர் அறிவை மயக்கியது; நொடிப்பொழுதில் அவரை எடுத்து ஆகயை வழியே சென்றது. மனோ வேகத்தில் பெருங் கடல்கள் ஆறும் கடந்து, அப்பால் நின்ற நன்னிக் கடலின் நடுவே எடுத்துச் சென்று, பெருஞ் சேனையை எறிந்துவிட்டு அங்கேயே காவல் செய்து நின்றது.
இத் தன்மை கண்ட பானுகோபன் மனமகிழ்ந்து, "ஒழித்தான் வீரவாகு, பூதரும் பிறரும் தொலைந்தார்; கடலிலே ஆழ்ந்தார். நமது சூழ்ச்சி வென்றது” என்று எயிறு தோன்ற நகைத்தான் பெரு மகிழ்ச்சியுற்றுப் போர்க்களத்தினின்று புறப்பட்டான். ஆகாய வழியே விரைந்து சென்றான்; திக்கெலாம் புகழ அரசு வீற்றிருந்த தந்தையைக் கண்டு, வணங்கி நின்று, "ஐயனே! இன்று யான் போர்க்களம் சென்றேன்; பெரும்போர் புரிந்தேன்; வெம்போர் நிகழ்த்திய வீரவாகுவையும் அவனைச் சார்ந்தோரையும், ஆயிரம் வெள்ளமான பூதப் படையையும் வென்றேன்; எல்லோரையும் கொன்றேன்; நன்னிக் கடலிற் கொண்டு தள்ளிவிட்டேன். இனிச் சிறிதும் உனக்குக் கவலை வேண்டா. நாளையே சேனையோடு நான் சென்று, கடலை அலைக்கும் கடுங் காற்றைப்போல் கந்தன் பாசறையைச் சுற்றி வளைத்து அதனைத் தகர்ப்பேன்; அவனையும் வெல்வேன்; மாயவனையும் பிரமனையும் இந்திரனையும் பிடித்து இங்கே கொண்டு வருவேன்” என்று கூறினான்.
அப்பொழுது சூரன் மனத்தில் இன்பம் பொங்கி எழுந்தது; தோள் நிமிர்ந்து உயர்ந்தது; புயத்திற் பூட்டிய வாகுவலயம் மூட்டறுந்தது; கையிலனிந்திருந்த கடகம் தெறித்தது: மெய்ம்மயிர் சிலிர்த்தது; புன்சிரிப்புத் தோன்றிற்று. வீரப் புதல்வனைக் கட்டி அணைத்து, "என் ஐய! அந் நாளில் நெடுந்தவம் செய்தேன்; அதற்கு ஈசன் பேரரசும் பெருந்திருவும் தந்தான். அச் செய்தி எல்லா உலகங்களிலும் பரவிற்று, அஃது ஒருபுறம் இருக்க, நான் ஆளும் அரசும் செல்வமும் இன்று நீயே தந்தாய்; நான் பெற்றேன்" என்று மெச்சினான்; "முன்னம் நீ சொல்லியவாறே அறுமுகப் பகைவனையும் நீயே வென்று, பூதப்படைகளைக் கொன்று; எஞ்சியுள்ள தேவரையும் சிறையிலே செறித்து, என் பகையை மூடித்திடு நாளைக் காலையே செல்க" எனப் பணித்தான்.
மாயப்படையை வேற்படை வெல்லுதல்
இஃதிவ்வாறாக, "பானுகோபன் மறைந்து நின்று மாயப்படை தொடுத்து, வீரவாகு முதலிய எல்லோரையும் மயக்கி மாய்த்து, அப் படைக்கலத்தால் நன்னிக் கடலில் தள்ளினான்" என்று நாத முனிவர் முருகப் பெருமானிடம் கூறினார். பின்பு வானவர் அணி அணியாகச் சென்று, அவர் திருவடிகளை வணங்கிப் படைவீரர் அழிந்த பான்மையை அறிவித்தனர்.
அப்போது பெருமான் தம் கையில் அமைந்த வெற்றி வேலை நோக்கி, "கங்கை போன்ற தூய நன்னீர்க் கடலிற். போந்து, அங்குள்ள மாயப்படையை அறுத்து, நம் வீரரது மயக்கம் தீர்த்து, அவர்களை விரைவில் இங்கே கொண்டுவருக” எனப் பணித்தார். அப்பணி பூண்ட வெற்றிவேல் வேகமாகப் புறப்பட்ட போது ஆயிரம் கோடி கதிர்கள் எழுந்து மண்ணுலகின் இருளை மாய்த்தன; முப்புரத்தை எரிப்பதற்கு இறைவன் விடுத்த நெருப்புப் போல் விரைந்து ஓடி, அறுவகைப்பட்ட கடல்களும் கடந்து, விண்ணவர் போற்ற நன்னிக் கடலில் புகுந்தது.
வேற்படை வந்தவுடன் மாயப் படைக்கலம் நடுங்கிற்று: மயங்கிக் கிடந்த வீரரை விட்டு ஒழிந்தது; வன்மையும் இழந்தது. அந் நிலையில் மயக்கம் தெளிந்து எழுந்த வீரர்கள் அறுமுகப் பெருமானது செவ்வேல் ஆகாய வழியே வ்ரக் கண்டார்கள். அவருள்ளத்தில் இன்பம் பொங்கிற்று. பன்முறை வேற்படையைப் பணிந்து போற்றினார்கள்! உச்சிமேற் கூப்பிய கையராய் எதிர் சென்று வரவேற்றார்கள்.
பானுகோபன் இழைத்த மாயையால் நிலையழிந்து, உணா விழந்து, நெடுங்கடலுள் விழுந்ததும், ஐயன் வேலால் மீண்டு எழுந்ததும், பிறவும் உணர்ந்தார், அறிஞருள் அறிஞரான வீரவணகு, காலத்தில் வந்து காத்தருளிய வேற்படையை நோக்கி, "அந்நாள் கொடிய அசுரனாகிய தாரகன் எங்களை வஞ்சனையால் மலையில் அடைத்து மயக்கம் விளைத்தான்; அன்றும் நீ எழுந்தருளி வந்த அறிவு தந்தாய்! அவ்வாறே இன்றும் இங்கு வந்து எம்மை ஆட் கொண்டாய்; ஆதலால் நாங்கள் பிழைத்தோம். உனக்குச் செய்யத் தக்க கைம்மாறும் இவ் வுலகில் உண்டோ? என்றார்.
வீரவாகு சொல்லிய நல்லுரையைக் கேட்ட பொழுது வேற் படை தன் வரலாற்றைக் கூறுவதாயிற்று. "நீங்கள் அறிவிழந்து மயங்கிய தன்மையை எம்பெருமான் உணர்ந்தார்; என்னை இங்கே விடுத்தார்; நான் இங்கு வரும் தன்மையை அறிந்து மாயப்படை மாய்ந்தது. ஆதலால், இனி என்னோடு வருக” என்றது, அப் படை.
"நன்று, நன்று" என்று கை தொழுதார், வீரவாகுè முக மலர்ந்தார்; தம்பியரோடும் பூதப் படை வீரர்களோடும் வேலின் பின்னே சென்றார். அப் படை விரைந்து சென்று அறுமுகன் கரத்தில் அமர்ந்தது.
வீரவாகுவின் சீற்றம்
வடிவேலின் பின்னே சென்ற வீரவாகு அறுமுகப் பெருமானது திருவடியையே தியானித்துக்கொண்டு உவர்க் கடலின் இடையே வீர மகேந்திரம் விளங்கக் கண்டார். "அறப் போர் புரியும் ஆண்மையின்றி அஞ்சிச் சென்று, ஆகாயத்தில் மறைந்து நின்று, வஞ்சனை செய்து மாயப் படையால் நம்மை வென்று பிழைத்திருக்கும் பானு கோபனைக் கொன்றாலன்றி எம்பெருமான் சேவடியைக் கானச் செல்வதில்லை. இந் நகரை இன்னே அழிப்பேன்; சூரன் மைந்தன் வந்து எதிர்த்தால் அவனையும் ஒழிப்பேன். அவ்விதம் செய்யாவிடில் இவ் வுயிர்வாழ்க்கை வேண்டேன்; நான் பிறந்தவனும் அல்லேன் வில்லொடு நானும் தீயில் விழுவேன்” என்று சபதம் செய்தார்.
அவ் வாசகத்தைக் கேட்ட பூதப் படைவீரர் வியந்தனர்; கிளர்ந்து எழுந்தனர். நொடிப் பொழுதில் மகேந்திர நகரின் மேற்றிசை வாயிலை அடைந்தார், வீரவாகு. பெருங்கடல் உடைந்தாற் போலப் பூதகணம் ஆர்த்தது. நெருங்கி நின்ற மாட மாளிகைகளை யெல்லாம் நெடிய பூதர்கள் தம் காலால் இடித்துத் தகர்த்தார்கள்; ஆன்றோர் சாபத்தால் அழிந்தாற் போன்று அவை வீழ்த்தப்பட்டன. அப்போது வீரவாகு தீப்படையையும் காற்றுப் படையையும் எடுத்து வில்லிற்பூட்டி அந் நகரின்மீது விடுத்தார். அப் படைக்கலம் இரண்டும் ஒன்றாய்க் கலந்து ஊழிக்காலம் போல் நகரமெங்கும் விரிந்து வளைந்தன. நெருப்புக் கண்ணராகிய அசுரரும் அஞ்சியோடினர்.
இரணியன் கூறிய கட்டுரை
அது கண்ட சூரன், "இப்பொழுது நானே போர் செய்து பூத கணங்களைக் கொல்வேன்; வீரர் அனைவரையும் அழிப்பேன்; சிவகுமாரனையும் வெல்வேன்; வருக; தேர் தருக" என்றான். அறிவிழந்த மன்னன் இவ்வாறு தன் தூதரை நோக்கிக் கூறிய மொழிகளைக் கேட்டான், அவன் பெற்ற மைந்தருள் ஒருவனாகிய இரணியன், அவன் ஆயிரம் வேதங்களை உணர்ந்தவன்; செவிச் செல்வம் வாய்ந்தவன்; அறத்தையும் முறையையும் அறிந்தவன்; எனினும் மாயமும் வஞ்சமும் குலவித்தையாகக் கற்றவன்; கொடிய அசுரரது திறமையும் பெற்றவன்; பாதலத்தில் வசிக்கும் அரக்கர்மீது பாய்ந்து வென்று மீண்டவன்; வலிய தலைகள் மூன்றுடையவன். அவன் தந்தையாகிய சூரன் அடிகளில் விழுந்து வணங்கி, "ஐயனே! நாம் செய்யத் தக்கதொரு செயல் உண்டு; அதனைச் சொல்வேன்” என அன்புடன் கூறுவானாயினான்.
"அறுமுகப் பெருமானாகிய பரமனைச் சிறுவன் என்று இகழல் ஆகாது; உருவிலே சிறியவன். ஆயினும் செயற்கரிய செய்யும் பெரியவன் முருகன். ஊழிக்காலத்தில் ஈசனது புன்னகையிலே தோன்றும் சிறு பொறியன்றோ உலகையெல்லாம் அழிப்பது? . வாசவன் துயரமும், பிரமன் துயரமும், கேசவன் துயரமும் நீக்கி அழிவற்ற செல்வத்தை அன்னார்க்கு அருளும் வண்ணம் ஈசனே பாலன் வடிவம் கொண்டு அறுமுகனாய்த் தோன்றியுள்ளார். குமரவேளின் கையிலமைந்த வேற்படை தாரகாசுரனைக் கொன்றது; அவன் மாய மலையைத் தகர்த்தது; நன்னீர்க் கடலுள் நாம் தள்ளிய சேனையை மீட்டது; இத்தகைய ஒப்பற்ற வடிவேலைத் தொழுது, வேலுடைய பாலனைப் பணிவதை விட்டு, அமர் புரியத் துணிதல் அறிவுடையேர் செயலாகுமோ? இன்று வந்து போர் புரிந்தான், வீரனாகிய வீரவாகு, என் தமையன் பானுகோபன் அவன் முன்னே நிற்கமாட்டாமல் தப்பி மறைந்தான்; மாயப்படையை விட்டு, மாற்றார் அறிவை மயக்கிக் கடலிலே தள்ளினான். அன்னார் அனைவரும் அறுமுகன் அருளால் மீண்டும் வந்தார்கள். தலைவனான வீரவணகு வீரமகேந்திரத்தை அழிக்கத் தலைப்பட்டான் என்றால் அவனை யார் தடுக்க வல்லார்? கருணை கொண்ட வள்ளல், முருகவேள், அவர் அளவிறந்த சீற்றம் கொள்வதன் முன்னே வானவரைச் சிறையினின்றும் விடுவித்துச் சுற்றத்தோடு நாமும் விரைந்து சென்று, "குற்றங்களைப் பொறுத்தருள்க" என்ற பணித்து வேண்டினால், அவர் நாம் செய்த தீமையெல்லாம் பொறுப்பார்; அருள் புரிவார்; அழிவற்ற வரங்களை அளிப்பார்; பூதப்படையோடு திரும்பிச் செல்வார்; அதனால் நாமும் பிழைப்போம்; உன் முன்னே இதனைத் துணிந்து கூறினேன்; இது முடிவாக நாம் கொள்ளத் தக்கது" என்று கூறினான், இரணியன்.
இரணியன் பொருது மறைதல்
இவ்வாறு இரணியன் பரிவுடன் சொல்லியவற்றைக் கேட்டான், சூரன். அவன் வாயினின்றும் புகைப் படலம் எழுந்து பரந்தது. சீற்றக் கனல் பொங்கிற்று; உடலம் வியர்த்தது: பெரு மூச்சுப் பிறந்தது. வாயிதழ் துடித்தது; கண் சிவந்தது. மனம் எரிந்து பதைத்து, இடிபோல் இரு கரங்களையும் கொட்டி இரணியனை நோக்கி, "பேதை மைந்த! மாயவனும், இந்திரனும், ஏனைய வானவரும், அண்டத்தில் உள்ளார் அனைவரும், எல்லார்க்கும் முதல்வனாகிய ஈசன் தானும் என்னை எதிர்த்தால் தோல்வியடைவரேயன்றி வெற்றி பெறுவதுண்டா? யான் பெற்ற வரங்களை அறியாயோ? நீ ஆண்மை இழந்தாய்; நம் குலமுறை பிழைத்தாய், அரசின் பெருமை துறந்தாய்; மாற்றாரைக் கண்டு அஞ்சினாய்; ஆதலால், இவ்வாறு பேசினாய்; இன்னொரு மொழி பேசினால் உன்னை இன்றே எமபுரத்தில் ஏற்றுவேன்” எனக் கொதித்துக் கூறினான், சூரன்.
அது கேட்ட மைந்தன், இக் கொடியவன் என்னுரையைக் கொண்டானல்லன்; இவன் மாண்டுபோதல் திண்ணம்; இவ்வுலகில் விதியின் திறத்தினை யாவரே வெல்ல வல்லார்? வெஞ்சினம் கொண்டு போர் புரிந்து விரைவில் விழுந்துபடுவான் இவன்; யான் அதற்கு முன் இறத்தலே நன்று" எனத் துணிந்து, அவன் அடிகளில் விழுந்து வணங்கி, "ஐயனே! நீ இறுதியாகச் சொல்லிய சபதத்தை நானே முடிப்பேன்" என்றான்.
அப்போது சூரன், மைந்தனைத் தழுவினான்; நன்று நன்று என்று மெச்சினான்; "பெருஞ் சேனையோடு போர்க்களம் செல்க” எனப் பணித்தான். இரணியனும் விடை பெற்று எழுந்து தன் மாளிகை அடைந்தான். அறநெறியில் நின்ற அவ் வீரனது நால்வகைப் படையும் எழுந்தது; உள்ளத்தில் துயரமும் , உயர்ந்தெழுந்தது; ஆண்மை நிறைந்த பூதங்கள் ஆரவாரம் செய்து நின்ற அமர்க்களம் புகுந்தான். அவனைக் கண்டு வானவர் நடுங்கினர். இரணியனோடு எழுந்து வந்த சேனைப் பெருங்கடலைக் கண்டார் வீரவாகு; சீற்றம் உற்றார்; வெஞ்சிலையை வளைத்தார்; நல்லறம் ஆனந்த நடனம் புரிந்தது. அவர் விடுத்த அம்புகள், இரணியன் எடுத்த அம்பையும் வில்லையும் ஒடித்தன; அம்பறாத் தூணியை அழித்தன; தேரையும் பாகனையும் தீர்த்தன; அசுரன் மார்பைப் பலவிடங்களில் துளைத்தன. அந் நிலையில் இரணியன், "எனக்கு அந்தம் நேரும் வேளை வந்தது; ஆயினும் என்னோடு நிற்குமோ? என் தந்தையும் இறந்து தீர்வான். அவன் இறக்கும் பொழுது இறுதிக்கடன் செய்வதற்கு யாரும் எஞ்சி நிற்க மாட்டார். சுற்றத்தார் இற்று ஒழிந்தார். மற்றுமுள்ள உறவினரும் இனி இறப்பார். இஃது உண்மை. பிள்ளையைப் பெறுவதும், அன்புடன் போற்றி வளர்ப்பதும், தந்தைக்கு முறைப்படி அந்திக் கடன் செய்வதற்கே யன்றோ? ஆதலால், என்னுயிரைக் காத்தலே கடன்" எனக் கருதி, விரைவில் விண்ணிலே மறைந்தான்; ஒரு மந்திரத்தை மனத்திலே நினைத்தான். அப்போது அவன் உருவம் அருவ மாயிற்று. யாரும் அறியாமல் மீன் வடிவம் கொண்டு கடலினுள்ளே மறைந்தான். அந் நிலையில் வெற்றிச் சங்கம் முழக்கினார், வீரவாகு.
எரிமுகன் போர் புரிந்து இறத்தல்
எரிமுகன் என்பவன் சூரனுடைய மக்களுள் ஒருவன்; அவனைக் கருவிற் கொண்ட தாயின் உடல் எரிவுற்றது. அப்போது மாயவள் அவ்விடம் போந்து, "இக் கருவில் இருப்பவன் எரிமுகன்” என்றாள். அவன் பிறந்தவுடன் எரிமுகன் என்னும் பெயர் பெற்றான். அவன் தெய்வப்படை தாங்கிய கையன், ஐவர்க்குரிங் இறத்தல் ஆற்றல் உடையவன்; கரிய வஞ்சமும் மாயையும் வல்லவன்; எப் படையையும் அழிக்கும் வீரன், அவன் சூரனிட்ம் சென்று, "ஐயனே! வலிமை சான்ற வீரவாகுவையும், தலைவரையும், பூதகணங்களையும் நானே வென்று வருவேன்; விடை தருக" என்று வேண்டினான். "நன்று கூறினாய், வென்று வருக" என்றான் சூரன். குன்று போன்ற தோள்வலி படைத்த எரிமூகன் தந்தையைத் தொழுதான்; சேனையோடு செருக்குற்று எழுந்தான்; "மாற்றாரை ஒரு நாழிகையில் அழிப்பேன்’ என்று போர்க்களம் சென்றான். அவன் விளைத்த வீரத்தைக் கண்டு பூதர்கள் வெருவி ஓடினர். 'அஞ்சாதீர்' என்று கையமர்த்திக்கொண்டு நொடிப்பொழுதில் தேர்மீது ஏறி வந்தார், வீரவாகு. ஆயிரம் அம்புகளை யாவரும் வியக்கும் வகையில் எரிமுகன்மீது ஒருங்கே விடுத்தார்; அவன் தேரையும் குதிரையையும் வில்லையும் சிதைத்தார்.
இளமையிலேயே காளிதேவியை போற்றி வழிபட்டு ஒரு வரம் பெற்றிருந்தான், எரிமுகன். "போர்க்களத்தில் மாற்றாருடன் பொருது இளைத்த வேளையில் நீ படைத் துணையாக வர வேண்டும்” என்று கேட்டதற்கு இசைந்து வரம் தந்த மகேந்திர நகர்க் காளியை இப்போது தியானித்தான், அவ் வீரன். கருழேகம் போன்ற நிறமும், சூலப்படை தாங்கிய தோளும், குலிங்க வேனியும், கொலைக் கண்ணும் உடைய காளி அமர்க்களத்திலே தோன்றினாள்; எரிமுகன் நிலைமையை நோக்கினாள். "மாற்றார் உயிரை வாங்குவேன்; மயங்காதே" என்று அபயம் அளித்தாள் பத்திரகாளியின் அருள் பெற்ற அக் காளி பூதகணங்களையும் மற்றைழோரையும் அழித்திடும் வண்ணம் ஒரு சூலப்படையை வீசினாள். அதன் வன்மையைக் கண்ட வீரவாகு, "இப் படை பூதகணங்களின் உயிரைப் போக்கிவிடும்; ஆதலால் தடுத்து முரித்திடல் வேண்டும்" என்று கருதிப் பதினான்கு வலிய பாணங்களைக் கணப்பொழுதில் ஏவினார். அதைக் கண்டாள் காளி. விட்ட சூலத்தை இவன் அறுத்தான்; என் ஆற்றல் அறியாது இன்னும் எதிரே நிற்கின்றான். இவன் உயிரை உண்பேன்" என்று எழுந்தாள். அப்பொழுது இடிபோல் அதட்டினார், வீரவாகு காளியின் எட்டுக் கைகளையும் ஒரு கையால் வளைத்துப் பிடித்தர், மற்றொரு கையால் அவள் நெஞ்சில் ஓங்கி அறைந்தார். அவள் கீழே விழுந்து மயக்கமுற்றாள்.
மயக்கம் தெளிந்தவுடன் "அந்தோ! என்ன அறிவற்ற செயல் செய்தேன்! அறுமுகப் பெருமான் ஆணையால் போர் செய்ய வந்த வீரவாகுவை வெல்ல்லாகுமோ? இங்கு வந்தது பேதைமை" என்று கூறி, வீரவாகுவிடம் விடை பெற்றுச் சிங்கத்தின்மீதேறிக் கொடிய படைகளோடு வந்த வழியே போயினாள். காளி சென்றதைக் கண்டான், எரிமுகன் சீற்றம் கொண்டான்; வீறுற்று எழுந்தான்; மேகத்தினிடையே அதிரும் இடிபோல் முழங்கினான். "முன்னே இந் நகரில் வந்து, என் தம்பியின் உயிர் கவர்ந்து சென்ற தூதனாகிய வீரவாகுவின் வலிமையைச் சிதைத்து, அவனுயிரைக் காலனுக்கு விருந்தளிப்பேன். அப்படிச் செய்யாமல் மன்னன் முன்னே செல்வதில்லை" என்று வஞ்சினம் கூறினான். கையில் வில்லெடுத்துப் போர் தொடுத்தான். அவ்வில் ஒடிந்தது. வேறொரு வில்லை வளைத்து, பற்களைக் கடித்து, வீரமொழி பேசி, பிரமாஸ்திரத்தை விடுத்தான். மாற்றான் ஏவிய படைக்கலத்தைக் கண்டார்; வீரவாகு. இப் பிரமாஸ்திரத்திற்கு எதிராக நானும் ஒரு பிரமாஸ்திரத்தை விட்டாற் பயனில்லை என்று எண்ணி, வீரபத்திரப் படையை எடுத்து, மனத் தாற் பூசனை செய்து வேகமாக விடுத்தார். அது பிரமாஸ்திரத்தை அறுத்தெறிந்து, தடையின்றிச் சென்று, எரிமுகாசுரன் தலைகளைப் பறித்து, அவன் உயிரைக் கவர்ந்து மின்னலைப்போல் வீரவாகு விடம் மீண்டது.
மூவாயிரவர் பொருது வீழ்தல்
போர்க்களத்தின் ஒருசார் நின்று இவற்றையெல்லாம் கண்ட ஒற்றர்கள் சூரனிடம் சென்று எரிமுகன் போர் செய்து இறந்த செய்தியை அறிவித்தார்கள். அப்பொழுது சூரனது மைந்தர் மூவாயிரவரும் நிகழ்ந்ததை அறிந்து, மன்னன் மாளிகையை அடைந்தனர். சூரனைத் தொழுது நின்று, "எம் ஐயனே! எரிமுகன் ஒருவனுக்காக இரங்கலாகுமோ? நாங்கள் மூவாயிரவர் இருக்கின்றோம். இரணியனும் உயிரோடு இருக்கின்றான்; பகலவனைச் சிறைப்படுத்திய பானுகோபன் இருக்கின்றான்; உனக்கு என்ன குறை? பல பல சொல்வதிற் பயன் எனன்? எம்மைப் போர் செய்ய ஏவினால், பூதரையும் வீரரையும் கந்தனையும் பிறரையும் ஒரு கணப் பொழுதில் வென்று வருவோம்” என்று கூறினர். அம் மொழி கேட்ட சூரன் துன்பம் துறந்தான்; "நன்று! மைந்தர்காள், போர் புரியச் செல்க” என்றான். மூவாயிரவரும் தந்தையை வணங்கி விடை பெற்றுச் சென்றனர். போர்க்களம் புகுந்து, தாமரைக் குளத்தைக் கலக்கி, மலர்களைச் சிதைக்கும் மதயானைபோல், மாற்றாரைக் கலக்கினர், மூவாயிரவரும்.
அவர் வில்லாண்மைக்கு ஆற்றாது அவதியுற்ற பூதரைக் கண்டு, அவர்க்குதவியாக நூறாயிரம் வீரருள் ஓராயிரவர் நெருப் பெனச் சீற்றமுற்று எழுந்தனர்; போர் முனையிற் புகுந்தனர். கொடுந்தொழில் புரியும் அசுரரோடு அன்னார் செய்த போரில் விசையன் ஒருவனே எஞ்சி நின்றான்; ஏனையோர் ஆண்மை யிழந்து அழிந்தனர்.
தன்னைச் சேர்ந்த வீரர் அனைவரும் அழிந்தபோது விசையன் சீறினான்; "சூரன் மைந்தர்களாகிய மூவாயிரம் பேரையும் காலன் நகருக்கு அனுப்புவேன்” என்று கடுஞ் சூள் உரைத்தான். வில்லைக் கையில் எடுத்து வளைத்தான்; சரமாரி பொழிந்தான் அவன் விடுத்த கணைகள் அசுர வீரரின் கையையும் தலையையும் தாளையும் தோளையும் அறுத்தன. ஆயினும், அறுந்த உறுப்புகள் உடனே பொருந்திக்கொண்டன. முன்போலவே மூவாயிரவரும் நின்றனர். "இஃது அன்னார் தவத்தினால் பெற்ற பேறு" என்று அறிந்தான், விசையன்; அந்நிலையில் அறுமுகப்பெருமானை யன்றி, வேறு யாரும் துணையில்லை என்றுணர்ந்தான்; அவர் திருவடியைத் தியானித்தான்; அன்பினால் உள்ளம் உருகிக் கண்ண்ணீர் சொரிந்தான்.
அன்பர் எண்ணிய வெல்லாம் எண்ணியபடியே விரைந்து வந்து அளிக்கும் புண்ணிய மூர்த்தியாகிய முருகவேள் விண்ணிலே தோன்றினார்; விசையன் கண்ணெதிரே நின்று, "வீரனே, மாற்றார் பெற்றுள்ள வரத்தை நீ அறிந்தா யில்லை; நெடும்போரில் வெற்றி பெறாது நின்றாய்! ஆயினும் மனந்தளராதே!" என்று சொல்லி வைரவ அம்பை எடுத்து விசையனிடம் அளித்தார்; "மாற்றாரை அழிப்பதற்கு இதனை இப்போதே விடுக” எனப் பணித்து மறைந்தார்.
அவ் வம்பினை விட்டான், விசையன். ஒரு நொடிப் பொழுதிற்கு முன்னே அடலேறு போன்ற அசுரர் மூவாயிரவரும் செருக் களத்தில் இறந்து விழுந்தார்கள். அது கண்ட விசையன் முருகப் பெருமானைப் போற்றி நின்றான். முழுமதியைக் கண்ட கடல் போல் பூதகணம் பொங்கி எழுந்து ஆர்த்தது.
தருமகோபனும் தந்திப் போரும்
மைந்தர் மூவாயிரவரும் முடிந்தார் என்று அறிந்தபோது துன்புற்றான் சூரன். அப்போது அவன் முன்னே தருமகோபன் என்னும் அமைச்சன் சென்று, அடிபணிந்து, "அரசர்க்கரசே! நீ இவ்வாறு துன்புற்று வருந்தினால் மாற்றார் மகிழ்ச்சியடைவர்; அமரர் சிரிப்பர்; அசுரர் நாணுவர்; உனக்கு அளவிறந்த செல்வம் உண்டு; அழிவற்ற ஆயுள் உண்டு; கணக்கிறந்த வீரம் உண்டு; எங்கும் செல்லும் ஆணை யுண்டு; இந்திர ஞாலத் தேருண்டு; இவையெல்லாம் இருக்க, என் ஐயனே! அறிவற்ற தேவரைப் போல் அரற்றல் ஆகுமோ?” என்று தேற்றினான்.
தருமகோபன் சொல்லிய மொழிகளால் சிறிது துன்பம் நீங்கினான், சூரன்: "யானே சென்று மாற்றாரையெல்லாம் வீட்டுவேன்” என்று வீறுற்று எழுந்து நடந்தான். புறப்பட்ட மன்னன் முன்னே குறுக்கிட்டு விழுந்தான், தருமகோபன். "இன்று யானும் சேனையும் சென்று பகைவரை வளைத்துச் சிதைத்து வெற்றி பெற்றிடுவோம். விடை தருக” என வேண்டினான். அந் நிலையில் திரும்பி அரியாசனத்தில் ஏறி அமர்ந்தான், சூரன்; தருமகோபனுக்கு விடை கொடுத்தான்.
அவன் உடனே புறப்பட்டுப் போர்க்கோலம் கொண்டான். பேர் பெற்ற ஒரு வேழத்தின்மீது ஏறினான்; எல்லையற்ற படைக் கலங்களை ஏந்தினான்; அமைச்சர் பலரும் சூழ்ந்து வர இந்திரன் போலச் சென்றான்; போர்க்களத்தில் நின்ற பூதப்படையின் பெருக்கத்தைக் கண்ணுற்றான்; கருத்திலே கவலை மூண்டது. ஆயினும், "இனி எண்ணி மயங்குதல் வீரர்க்கு அழகன்று நடந்தது நடக்கட்டும்" என்று துணிந்து சென்றான். தரும கோபனுடைய படைக்கலங்களால் நூறாயிர வீரர்களும் நலிந்து நொந்தார். அசுரப் படை வீரர் முன்னேறினர். அது கண்டு வீரவாகு சீற்றங்கொண்டு எதிர்த்தார். அப்போது தருமகோபனது யானை பூதப் படைகளைத் துதிக்கையால் வாரியெடுத்து அறைந்தது; உடலும் உயிரும் சிதற அடித்தது; முனைந்து வந்து, வீரவாகுவின் தேரைத் தன் கொம்புகளால் இடித்தது; போர்க்களத்தில் கிடந்த தடி யொன்றை எடுத்துத் தேர்ப்பாகனை அடித்துக் கொன்றது.
அது கண்ட வீரவாகு நெருப்பெனக் கொதித்தார். தரையில் நின்றுகொண்டு யானையைப் பிடித்து மேலே வீசி எறிந்தார். தரையில் விழுந்த யானை நடுங்கித் துடித்து மயங்கிற்று; அதனருகே சென்ற தருமகோபன் கோபம் கொண்டு தண்டாயுதத்தை எடுத்து, வீரவாகுவின்மீது எறிந்தான். அவ்வீரன் அதனைத் தன் கையிலிருந்த வாளால் வெட்டி முரித்தான். பின்னும் ஒரு வச்சிரப் படையை விட்டான், தருமகோபன்; அப் படையை வீரவாகு கையாற் பிடித்துக் கலைமானை அறையும் புலிபோல் அசுரன் மார்பில் அடித்தார். அறைபட்ட தருமகோபன் அடியற்ற மரம்பேழ் படியில் விழுந்தான்; அவனை ஒரு காலால் உதைத்தார் வீரவகு அந் நிலையில் உயிர் துறந்தான் தருமகோபன். அசுரப்படை சிதறி ஓடிற்று.
மயங்கிக் கிடந்த யானை மெல்லத் தெளிந்து எழுந்தது தருமகோபன் இறந்ததை அறிந்தது; துன்பக் கடலைக் கடந்து கரையேறினாற் போன்று இன்பமுற்றது. மாற்றாரும் போற்றுதற் குரிய வீரவாகுவை நோக்கி, "என் அப்பனே! சிறியேன்மீது சீற்றம் கொள்ளாதே; என் கதையைக் கருணை கூர்ந்து கேட்க வேண்டும். யான் திக்கஜங்களுள் ஒருவன், கயவனாகிய இத் தருமகோபனது கடுஞ் சிறையில் அகப்பட்டு நெடுங்காலம் வருந்தினேன். அறநெறியை வெறுக்கும் தருமகோபனை இன்று நீ அழித்தாய், இனி வானவர் கவலை தீர்ந்தார்; யானும் பிழைத்தேன்; சிறுமை ஒழிந்து சிறப்புற்றேன். இதனினும் சிறந்த ஊதியம் எனக்கு வேறுண்டோ? பழவினைப் பாசத்தினின்று நீங்கி முத்தி பெற்றவரை ஒத்தேன்” என்று கூறி வணங்கிற்று. அதன் வரலாற்றைக் கேட்டு வீரவாகு மகிழ்ச்சியுற்றார்; "இப்பொழுது நின் இருப்பிடம் செல்க” என்று விடை கொடுத்தார். ஆகாய வழியே எழுந்தது, யானை, அசுரரைக் கண்டு அஞ்சாது முன்னிருந்த திசையை அடைந்து இன்பமுற்று வாழ்ந்தது.
கட்டுரை கூறிய பானுகோபனைச் சூரன் கடிதல்
அன்று போர்க்களத்தில் நிகழ்ந்ததை யெல்லாம் தூதுவர் வாயிலாக அறிந்த பானுகோபன், மன்னனது மாளிகையை அடைந்து, துன்பத்திலே ஆழ்ந்திருந்த தந்தையின் அடிகளைத் தன் முடியிற் சூடி, மெய்யன்போடு அவன் முன்னே நின்று ”ஐயனே! மாயை தந்த படைக்கலத்தால் பகைவரை மயக்கினேன்; நன்னிக் கடலில் அவரைத் தள்ளினேன். அதனைத் தேவர் வாயிலாகத் தெரிந்தான், முருகன்; உடனே தன் வேற்படையை விடுத்து அவர் அனைவரையும் மீட்டுக்கொண்டான். இத் தகைய குமரனை வெல்லுதல் நம்மால் இயலுமோ? அவன் ஆற்றலை நேரில் தெரிந்த உனக்கு மேலும் சொல்லுதல் வேண்டுமோ? முந்தை நாள் நீயே வேலேந்திய கந்தனோடு போர் செய்து வருந்தினாய்! படைத் திறன் இழந்தாய் எளியனாய் நின்றாய்! இங்கு ஓடி வந்தாய்; ஆதலால் உய்ந்தாய். தந்தையே! வெம்போர் செய்ய வல்ல வீரர் கிடைத்தால் நான் மகிழ்வேன். இன்று மாற்றா ரோடு போர் புரிய அஞ்சினேன் என்று மனத்திற் கொள்ளதே. மன்னவா! இன்னும் பல்லாண்டு நீ வாழ்ந்திருத்தல் வேண்டும் என்னும் ஆசையாற் பேசினேன்; அச்சத்தால் உரைத்தேன் அல்லேன்; உனக்கு உறுதி பயக்கும் மொழி யொன்று கூறுவேன். சிறையினின்றும் வானவரை விட்டுவிடு. விட்டால் முருகவேள் சீற்றம் தீர்வான்; வந்த வழியே சென்றிடுவான்; அப்பால் எல்லையற்ற காலம் நின் பெருஞ் செல்வமெல்லாம் நிலைத்து நிற்கும்” என்றான்.
அது கேட்ட சூரன் கோபம் தலைக்கொண்டான். "மைந்தா! என்ன பேச்சுப் பேசினாய்? நீ சொன்னவாறு யான் எளியனாய் இன்று வாணவரைச் சிறையினின்றும் விடுவிப்பேனாயின் மன்னர் மன்னன் என்று என்னை யார் மதிப்பார்? மதிப்பு ஒழிவது மட்டுமா? மாயாப் பழியுமன்றோ வந்தடையும்? பிரமன், மால் முதலிய தலைவரும் தேவரும் மதிக்க நான் அரசு வீற்றிருந்து ஆள்கிறேன்; மூவருக்கும் மேலாகிய முழுமுதற் பெருமானிடம் வரம் பெற்றுள்ளேன். இத்தகைய யான் ஆற்றல் அற்றவர் போல் மாற்றாரைச் சிறையினின்று விடுவேனோ? பேரழகும், இளமையும், பெருந்திருவும், வீரமும், சுற்றமும், யாக்கையும், மற்று யாவையும் நிலையற்ற இவ்வுலகத்தில் புகழ் என்னும் ஒன்றுதானே அழியாது நிற்பது? ஆதலால், அமர்க்களத்தில் ஆவியை விட்டாலும் விடுவேன்; அமரரைச் சிறையினின்றும் விடமாட்டேன். சாவு வந்தாலும், சஞ்சலம் வந்தாலும் மானம் துறப்பரோ மாண்புடையோர்? சூரன் என்று பெயர் பெற்ற யான், இரு நாள் சிறந்து இலங்கும் இச் செல்வத்தைப் பெரிதாக மதித்து பிடித்த கொள்கையை விடுத்திடுவேனோ? இன்னும் ஓர் ஊழிக்காலம் யான் வாழ்ந்திருப்பினும் ஒரு நாள் இறந்துதானே ஆக வேண்டும். இவ் வுலகிற் பிறந்தவர் எல்லாம் இறந்தே தீர்வர் என்பது திண்ணம். மின்னல்போல் தோன்றி மறையும் இவ் வாழ்க்கையை ஒரு பொருளாக மதித்து, மாயவனையும் வென்ற யான் விண்ணவர்க்கு எளியனாய் இம் மண்ணுலகில் வாழமாட்டேன். பிள்ளாய்! நீ போருக்கு அஞ்சினைபோலும்! உன் மாளிகையிற் போய் உறங்கு! யான் பெற்ற வரத்திற்கு அழிவில்லை. என் பொருட்டு வருந்தாதே; பகைவர்மீது யானே போர் புரியப் போவேன்” என்று கொதித்துப் பேசினான்.
தந்தை சொல்லிய கடுமொழிகளைக் கேட்டான், பானுகோபன், சிந்தை நொந்தான். 'என் ஐயனுக்கு உய்யும் வகை இல்லை போலும்! நான் சொல்லிய மொழிகளின் உண்மைழை உணர்ந்தானல்லன். மெய்யாகிய விதியை வென்றவர் உண்டோ? என்று எண்ணிச் சூரனை நோக்கி, "தந்தாய்! அடியேன் சிறிதும் அறிவில்லாதவன்; பேதைமையாற் பேசிய புன்மொழிகளை மனத்திற் கொள்ளாது பொறுத்தருளல் வேண்டும். சிறியவர் அறியாமல் தீய மொழி பேசினால் பெரியவர் சிரிப்பரேயன்றிச் சீற்றம் கொள்வரோ? என் அத்தனே! நீ சினம் கொள்ளாதே. நமது நகரத்தை அலைக்கும் பூதகணங்களையும், வித்தக வீரனாய் வீர வாகுவையும் கொன்று, உன் சித்தத்தை மகிழ்விப்பேன். எனக்கு விடை தருக” என்று கை குவித்து அடி வணங்கினான்.
அப்போது சூரன் சீற்றம் தீர்ந்தான்; இன்பம் உற்றான்; "மைந்தார் நின் மனம் மீண்டும் போரிலே படிந்தது போலும் நல்லது பகைவரை வெல்லுதற்குப் படையெடுத்துச் செல்க" என்றான்.
பானுகோபன் போர் புரிந்து மடிதல்
தேர்மேல் ஏறினான் பானுகோபன். சேனை வெள்ளம் கடல் போல் பரந்து நின்றது. தந்தையிடம் கொண்ட தலையாய அன்பும், அவன் முடிந்திடுவானே என்ற துயரமும் உள்ளத்தை அலைக்கப் போர்க்களம் நோக்கிச் சென்றான். ஈசன் அருளால் தோன்றில் நூறாயிரம் வீரருக்கும், ஏனைய மைந்தர் எண்மருக்கும் தலைமை பெற்ற வீரவாகு, பெருந்தேர்மீது ஏறிப் போர் புரிய வந்தார்; சிவகுமாரனாகிய முருகப் பெருமானது சேவடியைச் சிந்தித்து வனங்கினார்; பின்னர், விரைந்து சென்று, பானுகோபனது சேனைப் பெருங்கடல் நடுங்கத் தன் வில்லை வளைத்தார்.
பஞ்சபூதங்களுள் நீரும் நெருப்பும் ஒன்றோடொன்று மாறுபட்டுச் சீற்றமுற்றுப் போர் புரிந்தாற்போல வீரவாகுவும் பானுகோபனும் வெம்போர் நிகழ்த்தினர். ஒரு கணப்பொழுதில் இருவரும் ஏறியிருந்த தேர்கள் பல சாரிகை சுற்றின் வீரவாகு விட்ட பாணங்களைப் பானுகோபன் அழித்தான். பானுகோபன் விடுத்த அம்புகளை வீரவாகு சரமாரியால் ஒழித்தார். அந் நிலையில் சங்கர மூர்த்திபோல் சீற்றமுற்ற வீரவாகு, தம் வாட்படையை எடுத்துக் கறங்குபோற் சுழன்று பானுகோபனை எதிர்த்தார். பானுகோடனும் காற்றுப்போல் விரைந்து வந்து வாட்போர் தொடுத்தான். காலனும் கனலியும் கடும் போர் புரிந்தாற்போல இருவரும் வாட்பேர் செய்தனர். அப்போது பானுகோபன் தான் கற்ற வித்தையின் திறத்தால் வீரவாகுவின் வாட்படையை விலக்கி, அவர் தோளில் வெட்டினான். வெட்டுண்ட தோளினின்றும் குருதி பொங்கி வடிந்தது. அது கண்டு மகிழ்ந்தான், பானுகோபன்.
வீரவாகு தோற்றுவிடுவரோ என்று வானவர் அஞ்சித் தளர்ந்தார்கள். அவ் வேளையில் அறுமுகன் திருவடியைக் கருத்திற் கொண்டார், வீரவாகு, வாட்படையை வீசினார்; பானுகோபனது வலத்தோளை அறுத்தார். அப்போது அசுரன், வலக்கையில் இருந்த வாளை இடக்கையால் எடுத்தான்; பின்னும் பெருஞ்சினமுற்று வாட்போர் புரிந்தான். மாற்றான் முயற்சியைக் கண்ட வீரவாகு, அவன் இடக்கையையும் துணித்தார். அந் நிலையில் மாயப்படை தொடுக்க நினைத்தான், பானு கோபன், அதை உணர்ந்து அவன் தலையை அறுத்துத் தள்ளினார், வீரவாகு. அவ் வீரன் தலையும், மலை போன்ற தோளும் உடலும் மண்மேல் விழுந்தன; அவனுயிர் கவர்ந்த கூற்றுவன், வீரவாகுவின் திறமையைப் புகழ்ந்து தென்புலம் சேர்ந்தான். முனிவரும் தேவரும் பிறரும் ஆடினர்; பாடினர்; ஆர்த்தனர்; "வீரருள் வீரன் நீயே" என்று வீரவாகுவைப் புகழ்ந்தனர்; அவர்மீது மழை போல் மலர்களைச் சொரிந்தனர். பூதர்களோடும் தம்பியரோடும் பாடி வீட்டை அடைந் தார், வீரவாகு; காதலாகிக் கசிந்து கண்ணி மல்கிக் கந்தவேளின் கமல பாதம் பன்முறை பணிந்தார்.
சூரனது கோபமும் தாபமும்
பானுகோபன் இறந்தான் என்று அறிந்த சூரன் அழுது புலம்பினான்; "மைந்தா!
மத களிறே! தீவினையேன் உள்ளமே! உள்ளத்தில் அமைந்த தெள்ளமுதே
என் அப்பனே! உன்னைத் தந்தைக்குத் தந்தையிலான் கொன்றானோ? என் ஐயனே! உன்னை இதற்கே வளர்த்தேன்? அசுரகுல நாயகமே அடைந்தவரை ஆதரிக்கும் அருமனியே! என் செல்வமே தெள்ளமுதே! நீ தனியே போய் எங்கிருந்தாய்? அங்கே நான் வந்தாலும் உன் அமுத மொழி கேட்பேனோ?” என்று சூரன் புலம்பி அழுதான். அப்போது பானுகோபனது உடலை அசுரர்கள் அங்கே எடுத்து வந்தார்கள்.
துண்டமுற்ற மைந்தனது உடலைக் கண்டு துடித்தான், சூரன். அவன் தலையைக் கையிலெடுப்பான், அதன் அழகைப் பார்ப்பான்; அத் தலையைக் கண்களில் ஒற்றுவான்; முத்தம் தருவான்; பெருமூச்செறிவான்; பூமியில் விழுந்து புரள்வான். அறுபட்ட தலையையும் தோளையும் உடம்பிலே பொருத்திப் பார்ப்பான்; நிலத்தில் விழுந்து அரற்றுவான்; "என் துன்பத்தைக் கண்டும், உயிரே, நீ இன்னும் இருக்கின்றாயே!” என்று ஏங்குவான்.
சொல்லரிய சோகமுற்ற சூரன் எளிய நிலை கண்டு எல்லோரும் ஏங்கி அழுதார்கள். பானுகோபன் தாயாகிய பதுமை, சேடியரோடு சென்று, வெட்டுண்டு கிடந்த மைந்தன்மீது விழுந்தாள்; மயங்கினாள்; "என் மகனே! இது நான் செய்த பாவமோ? வானவர் விடுத்த சாபமோ? மூவர் கோபமோ? மற்று ஏதோ அறியேன்! அந்தோ! வானவர் இந் நகரிலே கந்தனை வருவித்தார்; கடும் போர் மூட்டினார்; என் மைந்தரை யெல்லாம் கொல்வித்தார்; இன்று உன்னையும் வீட்டினாரே, இக் கேடு சூழ்ந்த வானவரின் மாதர் எல்லாம் என்னைப்போல் ஆகுக. ஐயனே! வானவர்க்கு மேன்மேலும் துன்பம் செய்தல் நன்றன்று என்று உன் தந்தையிடம் அன்றே சொன்னேன்; அவர் உணர்ந்தாரில்லை. ஐயோ! இன்று உன்னை இழந்தேனே! இனி மன்னன்தான் உயிர் வைத்திருப்பானோ?” என்று அழுது சோர்ந்தாள்.
அப்பொழுது மன்னன் சோகம் கோபமாக மாறிற்று. பதுமை முதலிய மாதரை மாளிகையின் உள்ளே அனுப்பினான்; அருகே நின்ற அசுரரை நோக்கி, "இன்றே மாற்றார் சேனையை அறுப்பேன்; அவர் குருதியைக் கொண்டு கனல் வேள்வி செய்வேன்; இறந்துபட்ட மகனை எழுப்புவேன். பானுகோபன் உடலைத் தனியிடத்தில் வைத்துப் பாதுகாத்திடுக” எனப் பணித்தான்.
சிங்கமுகன் போர் புரிந்து சாதல்
அப்போது சூரன் தம்பியாகிய சிங்கமுகாசுரன் மகேந்திர மாளிகையை அடைந்தான். தமையனது பாதம் போர் பணிந்து வணங்கி, ‘ஐயனே! உன் முகம் வாடியிருக் கின்றதே! என்ன நிகழ்ந்தது? என்று வினவினான். அது கேட்ட சூரன் கூறலுற்றான்: "தம்பி! அன்று நீ சென்றபின், குன்றம் எறிந்த குமரவேள் படையோடு இந் நகரில் வந்து பாசறை கொண்டான். அவன் நிகழ்த்திய போரில் என் பிள்ளைகள் அனைவரும் இறந்தனர்; அமைச்சரும் அழிந்தனர்; படைகளும் பாழ்பட்டன. அரிமுக வீர நிகழ்ந்தது இதுவே. இன்று நீ படையெடுத்துச் சென்று அந்தக் குமரனை வென்று வரல் வேண்டும். அதற்காகவே உன்னை அழைத்தேன்."
சூரன் சொல்லிய செய்தியைக் கேட்ட சிங்கன் மீண்டும் அவனடி பணிந்து, எழுந்து நின்று, "ஐயனே! ஆதியும் அந்தமும் இல்லாத இறைவனைப் பாலன் என்று எண்ணினாய்; பழித்துப் பேசினாய். முன்னமே நான் சொல்லிய நன்மொழியும் நஞ்சாயிற்றே! ஊழ்வினையை யாரால் வெல்ல இயலும்? இன்று உன் ஆணைப்படி போர்க்களம் செல்வேன். கந்தனை வெல்லப் பெறுவேனாகில், மீண்டும் வந்து காண்பேன். நான் வெல்லாதொழியின் இங்குள்ளார் எல்லாரும் இறந்துபடுவர். உன் மனத்தில் தோன்றியவாறு செய்க" என்று கை கூப்பி வணங்கினான். பின் நொடிப் பொழுதும் அங்கு நில்லாது விடைகொண்டு வெளியே சென்றான்; சேனைத் தலைவர்களோடு தன் மாளிகையை அடைந்தான்.
பெருஞ்சேனையோடு புறப்பட்டுப் போர்க்களம் புகுந்த சிங்கமுகனைக் கண்ட பூதங்கள் கிளர்ந்து எழுந்தார்கள்; இவனை நாமே வெல்வோம்' என்று மரங்களையும் மலைகளையும் வீசி யெறிந்து போர் புரிந்தார்கள். அகப்பட்ட பூதரை அடுக்கடுக்காக எடுத்து அங்குமிங்கும் எறிந்தான் சிங்கமுகன். மண்ணும் விண்ணும் மற்றைய திசைகளும் பூதமயமாயின. ஐம்பூதங்கள் என்று இது பற்றித்தான் அறிந்தோர் பெயரிட்டனரோ என்று அனைவரும் எண்ணினர்.
நரசிங்க மூர்த்திபோன்ற வீரவாகு அதனைக் கண்டார். 'பூதப் படையில் சிங்கமுகன் பாதியைக் கொன்றுவிட்டானே! வில்லா எரும் போரில் அழிந்துவிட்டார்களே! நமது பெரிய சேனை. முற்றும் இன்று சிதைந்துவிடுமே' என்று எண்ணினார்; வில்லை வளைத்துக் கோடி கோடியாக வடிக்கனை தொடுத்தார். எதிரே நின்ற அசுரர்கள் தலையுடைந்து, தோள் அறுந்து தரையில் விழுந்தார்கள்.
இவ் வண்ணம் அசுரப் பெருஞ்சேனை அடிபட்டு அழிந்ததைக் கண்டனர். சிங்கமுகன் மைந்தராகிய நூற்றுவர். அன்னார் வீரவாகுவை வளைந்தனர்; அவர் தோளையும், மார்பையும், கரத்தையும், கழுத்தையும் இலக்காகக் கொண்டு வாளால் எறிந்தனர். ஆயினும் அவர் உடம்பிற் சிறிதும் வடுப்படவில்லை. அது கண்ட நூற்றுவரும் அவரை வளைத்துப் பிடித்தனர். பற்றிய பகைவரைச் சீறினார், வீரவாகு வாட்படையை வீசினார்; உருத் தெரியாதபடி அவரை அறுத்தெறிந்தார். வாட்போர் முடிந்த பின்பு தமது தேர்மேல் ஏறினார்.
மைந்தர் நூற்றுவரும் ஒருங்கே மடிந்ததறிந்து சிங்கமுகாசுரன் மானமுற்று வருந்தினான். "இறந்தவரை எண்ணி ஏங்கி நின்று வருந்துவதால் பயனுண்டோ? மாற்றார் கூட்டத்தை நொடிப் பொழுதிற் கொன்று, அவரை வாரி வாரித் தின்றாலன்றித் தீருமோ எனது சீற்றம்? மாற்றார் படையை அழித்த பின்னர் அவர் தலைவனாகிய வேலவனையும் வெல்வேன்; வானவர் என்று பேர் பெற்றோரையும் வதைப்பேன்; விரைவில் மூன்றுலகத்தையும் யானே முடிப்பேன்" என்று வஞ்சினம் கூறினான்; தாயாகிய மாயை தந்த கொடும் பாசத்தை எடுத்தான்; அதனை நோக்கி, "மாற்றார் அனைவரையும், ஒரு வழியாகக் கட்டிப் பிடித்து, உதயகிரியில் உய்த்து, அவரை விட்டுப் பிரியாமல் அங்கே காத்துக்கொண்டிரு” என்று சொல்லி வீசினான்.
பல்லாயிரக் கணக்கான பூத வீரரும், வில்வீரர் எண்மரும், மற்றைய தலைவரும், வல்லாளனாகிய வீரவாகுவும் அப்பாசத்தில் அகப்பட்டார்கள். இயற்கையறிவை இழந்து, ஆண்மை பழிந்து, சோர்ந்து கிடந்த வீரர் அனைவரையும் ஆகாய வழியே கொண்டு சென்று, மின்னலைப் போல் பல கடல் கடந்து மேருமலை போல் அமைந்த உதயகிரியிற் புகுந்தது, அப் படைக்கலம்.
அதை யறிந்த முருகப்பெருமான் போர்க்கோலம் கொண்டு புறப்பட்டார். "மூவர்க்கும் தலைவனாய முதல்வன் வந்தான். முக்கட் பெருமான் மைந்தனாய முருகன் வந்தான். மாற்றாரைக் கொல்லும் மடங்கல் வந்தான். வேற் படையுடைய வீரன் வந்தான். ஏவரும் அறிய வொண்ணா இறைவன் வந்தான். தேவ தேவனாய செவ்வேள் வந்தான்” என்று ஒலித்தன, சின்னம் எல்லாம்.
அப்போது தீப்பொறி சிந்தும் கண்களோடு நின்ற சிங்கமுகன், "மாற்றானை இன்றே கொன்று சீற்றம் தீர்வேன்” என்று உள்ளத்தில் உறுதி கொண்டு அண்டமும் அகில திக்கும் தானேயாக ஒரு மாயா வடிவம் பூண்டு நின்றான்; முன்னே நின்ற முருகப் பெருமானை நோக்கி, "கடம்பனே! இறைவனிடம் நீ பெற்றுள்ள திடம்படு வேலின் திறமையெல்லாம் அறிவேன். தாரகனைப் போல் போரில் நான் பேதையனல்லேன்; விரைந்து போர் புரிந்து பார் வீரராகிய பூதர் எல்லாம் உயிர் இழந்தார். மற்றையோர் உன் கண்ணெதிரே என் வயிற்றிற் புகுந்து மறைந்தார், தனியனாய் நீ ஒருவன் நின்றாய். இந் நிலையில் போர் கருதி வந்த உன் ஊக்கம் போற்றுதற்குரியதே" என்று சொல்லி முடிக்கும் முன்னே, அறு முகப் பெருமான் குறுநகை செய்து, ஓர் அம்பை வில்லிற் பூட்டி விடுத்தார். அது சிங்கமுகன் மார்பிற்பட்டு ஊடுருவிச் சென்றது.
அந் நிலையில் அறுமுகப் பெருமான் வீரவாகு முதலிய தம்பியரையும், பூத கணங்களையும் வருவிக்கத் திருவுளங்கொண்டு ஓர் அம்பினை ஏவினார். அது, பல கடல்களையும் கடந்து உதய கிரியை அடைந்தது; வீரரைப் பிணித்திருந்த மாயாபாசத்தைத் துணித்தது. கந்தன் திருவருளால் எல்லோரும் மயக்கம் தீர்ந்து எழுந்தார்கள். அப்போது அப் படைக்கலம் பிரமனுக்குரிய புட்பக விமானம்போல் அனைவரையும் தாங்கிக்கொண்டு, ஆகாய வழியே எழுந்து சென்றது: உதயகிரியை விட்டகன்று, எழுகடலும் கடந்து போர்க்களத்தில் நின்ற முருகப்பெருமானது திருவடியில் வீரரை விடுத்து, அவர் தூணியில் முன்போற் சென்று சேர்ந்தது. அப்போது வீரவாகுவும், நூறாயிரவரும், எட்டு வீரரும், அழிவற்ற பூதப்படை களும், கந்தவேள் திருவடியில் விழுந்து வணங்கினார்கள்.
கந்தவேளின் அம்பினால் அடியுண்டு விழுந்த சிங்கமுகன் மயக்கம் தெளிந்து எழுந்தான். தன் படைகளுள் ஒன்றையும் அவன் கண்டானில்லை; கந்தனே அவற்றைக் கொன்று ஒழித்தான் என்று உணர்ந்தான்; உள்ளம் கொதித்தான்; ஆயிரம் வில்லெடுத்துப் போர் புரிய நின்றான்; அட்டகாசம் செய்தான். அப்போது முருகவேள் ஈராயிரம் அம்புகளை விட்டு அவன் எறிந்த மலைகளைத் தகர்த்தார்; அகன்ற தோள்களை அறுத்தார். ஆயினும், அவை விழுவதற்கு முன்னே முளைத்து எழுந்தன. தவத்தினும் சிறந்ததொன்று இவ் வுலகில் உண்டோ?
அந் நிலையில் நான்கு முகங்களையுடைய பிரமனும், தேவரும், பிறரும் அஞ்சி நடுங்க அறுமுகப் பெருமான் சற்றே உங்காரம் செய்தார். சிங்கமுகனிடம் தோன்றிய தலைகளும் தோள்களும் நடுங்கி ஒளித்தன. முருகன் அம்பால் அறுபட்ட தலையும் கையும் முன்போல் முளையாத தன்மையைக் கண்டான் சிங்கமுகன். பல நாள் ஒதியுணர்ந்த நூல்களையெல்லாம் பேசும் மன்றத்திலே மறந்தவனைப்போல், மானமுற்று நின்றான்; அப்போது முருகப் பெருமானை நோக்கி, "பாலனே! வேல் எறியவும், வில் வளைக்கவுந்தான் பயின்றாயோ?” என்று ஏளனம் பேசி ஒரு தண்டாயுதத்தை வீசியெறிந்தான்.
சிங்கன் பேசிய பேச்சையும் விடுத்த படையையும் சற்றே கருதினார், முருகன். அவ் வஞ்சகன் உயிரைக் கவர்ந்து வருமாறு தம் வச்சிரப்படையை விடுத்தார். அப் படை விரைந்து எழுந்தது; எதிரே வந்த தண்டப்படையை ஒடித்துப் பொடித்தது; மலையின் மேற் பாயும் இடிபோல், சிங்கன் மார்பைத் தாக்கிப் பிளந்தது; அவனுயிரையும் போக்கிற்று; கங்கையாற்றிலே சென்று கறை போகப் படிந்து நீராடிற்று: கற்பகச் சோலையிற் பொருந்திய மணத்திலே தோய்ந்தது; தமிழ்ச் சங்கத்தின் தலைமைப் புலவனாகிய கந்தப் பெருமான் கையில் வந்து சிறப்புடன் அமர்ந்தது.
சூரன் சோகம்
சிங்கமுகன் இறந்த செய்தியை அறிந்த சூரன் கரிய மேகம்போல் தரையிடை வீழ்ந்தான், புரண்டான்; கை யொடு கை யடித்தான்; மயங்கினான். பண்டை வண்மையும் வீரமும் மேன்மையும் இழந்து, பொங்கிய துயர்க்கடலில் மூழ்கிப் புலம்பினான். "ஐயோ! தம்பி! உலகத்தில் போர் மூண்டதென்றால் உள்ளம் களிப்பாயே! உன்னுயிரையும் கொண்டானோ கூற்றுவன்? நீ இறந்தாய் என்று அறிந்தால் மாயவனும் பிரமனும் இந்திரனும் முன்னைப் பெருமையை அடைவரோ அந்தோ! பொன்னைப் பெறலாம்; பூமியைப் பெறலாம்; மாதரைப் பெறலாம். அருமைத் தம்பி! இப் பிறப்பில் இனி உன்னைப் பெறுவேனோ? அப்பா! "என் உயிர் நீயே; உணர்ச்சியும் நீயே; சுற்றமும் நீயே; பெற்ற தந்தையும் நீயே, தம்பியும் நீயே, தவமும் நீயே" என்று நினைத்திருந்தேனே! நீ சற்றும் கருதாமல் என்னைக் கைவிட்டாயே! தனித்திருக்கக் கற்றாயே!” என்று. சூரன் அழுது அரற்றிய பேரோசை அவன் ஆண்ட அண்டமெங்கும் செவிடுபட அதிர்ந்தது; அவ்வோசை கேட்டு மாலும், பிரமனும், இந்திரனும் மனமகிழ்ந்து ஆரவாரித்தனர்.
திருமால் முருகன் திறமுரைத்தல்
அப்போது சூரன் கோடி கோடியாக வேற்படை தாங்கி நின்ற ஒற்றரை நோக்கி, "என் ஆட்சியில் உள்ள அண்டங்களிற் சென்று, அங்குச் சுற்றிக் கொண்டிருக்கும் சேனைகளை யெல்லாம் அழைத்து வருக” என்றான். திறமுரைத்தல், அசுரர் வரத்திற் பெரியர், மாயத் திறத்திற் பெரியர்; உரத்திற் பெரியர்; ஊக்கத்திற் பெரியர், சிரத்திற் பெரிய சீற்றத்திற் பெரியர்; கரத்திற் பெரியர், காலனிற் கொடியர். இது தகைய சேனைகளைக் கண்டதும் இந்திரனும் வானவரும் அஞ்சி நடுங்கிக் கவலை கொண்டார்கள். இந்திரன் துளபமாலை யணிந்த திருமாலை நோக்கி, "முதல்வனே! வன்மையும் கொடுமையும் வாய்ந்த அசுரராகிய இருள் நீங்கி ஒளி வருவதில்லையோ? வானவர் கடுஞ்சிறையினின்றும் விடுபடுமாறில்லையோ? பெருஞ் செல்வத்தை இழந்த நமது துன்பம் தொலையுமா றில்லையே? திருவாய் மலர்ந்தருள்க" என்று வேண்டினன்.
அப்போது திருமால், வானவர். வேந்தனாகிய இந்திரனது வருத்தத்தை அறிந்து பேசலுற்றான். "வானவர் வேந்தே! கேள்; காலமாகவும் காலம் கடந்தவனாகவும் கருமமாகவும் கருமம் அற்றவனாகவும், உருவமாகவும் உருவமற்றவனாகவும், குணங்களாகவும் குணங்கள் அற்றவனாகவும், உலகமாகவும் உலக மல்லாதவனாகவும் உள்ள ஆதியற்ற மூலப் பொருளாய வள்ளலே ஆறுமுகங்கொண்டு அருள் புரிய வந்தார். அவரே பிரமனாக நின்று உலகத்தைப் படைப்பார்; என் வடிவத்தில் அமைந்து காப்பார்; சங்கரன் வடிவத்தில் தோன்றி அழிப்பார்; மின்னுருப்போல் வெளிப்படுவார். அவர்தம் திருவுருவத்தை விரித்துரைத்தல் மறைகளுக்கும் அரிது; சூரன் முதலிய அசுரரை அழிக்க நினைத்தால் ஒரு சிரிப்பால் ஒழிப்பார்; சீற்றத்தால் ஒழிப்பார்; திருக்கண் நோக்கால் ஒழிப்பார் என்றால் தமக்குவமை யில்லாத் தலைவராய முருகவேளின் தன்மையை யாவரே மொழிய வல்லார்? பச்சிளம் பாலன் போலத் தோன்றும் முருகவேள் அசுரரையெல்லாம் வேலால் விரைவில் அறுத்து ஒழிப்பார். அப் படையால் சூரனையும் வெல்வார்; இதில் ஐயம் இறையளவுமில்லை” என்று அருளினன், திருமால்.
சூரனும் முருகனும் போர் செய்தல்
பெருஞ்சேனையோடு சூரன் போர்க்களம் புகுந்ததை அறிந்து முருகவேள் முறுவல் செய்தார்; போர்க்கோலம் கொண்டு எழுந்தார். விண்ணும் மண்ணும் நெருங்கி நின்ற அசுர சேனை ஆரவாரம் செய்து போர் தொடங்கிற்று. அன்னார் செய்த கடும் போருக்கு ஆற்றாது முன்னணியில் நின்ற பூதப் படை பின்னிட்டது; அசுரப் படையின் செயல் கண்டு நெற்றிக் கண்ணுடைய தந்தையைப்போல் சற்றே சிரித்தார், முருகன்; திருக்கரத்திலே வில்லெடுத்து வளைத்தார். தேவரும் அவ்வோசை கேட்டு நடுங்கினர். மன்னுயிர் எல்லாம் மனம் பதைத்தது.
ஆறுமுகமும், பன்னிரு கையும், அரும் படைக்கலமும் நிகரற்ற வீரமும், ஆண்மையும் போர்க்களத்தில் நிலவக் கண்ட சூரன், முன்னாளில் இருந்த தக்கனைப்போல் ஆணவம் கொண்டு பேசலுற்றான். "பாலனே! என் பெரும் சேனையைச் சிதைத்தாய்; இனிச் சிறுவன் என்று உன்னை விடப்போவதில்லை; போரில் புறங்காட்டிப் போனாலும் உன்னை அழிப்பேன்; வானவர்குழுவை யும் கணங்களையும் ஒழிப்பேன்" என்று சொல்லி, மாயையில் வல்ல இந்திர ஞாலம் என்னும் இணையில்லாத் தேர்மேல் நின்று, எண்ணிறந்த உருவம் கொண்டு, சரமாரி பொழிந்தான்.
முருகவேள் அதனைக் கண்டு "நன்று நன்று" என்று நகைத்தார்; ஞானாஸ்திரத்தை எடுத்து விடுத்தார். அப் படை சென்று சூரன் மாயத்தை முற்றும் அறுத்தது. மாய வடிவம் மறைந்த நிலையில் வலிமை யிழந்து, மனம் தளர்ந்த சூரன் தனியனாய்த் தேர்மேல் நின்றான். அந் நிலை கண்ட தேவர் ஆரவாரித்து அறுமுகப் பெருமானைப் போற்றி நறுமலர் தூவினர். அப்போது சூரன் தேரோடு மறைந்தான்; அண்ட கூடத்தின் வாயிலை அடைந்து அறை கூவினான்; அப்பால் அமைந்த அண்டத்திற் புகுந்தான். அது கண்ட முருகவேள் அங்கும் அவனைத் தொடர்ந்து சென்றார். சூரன் அண்டங்கள் தோறும் மின்னல் போற் பாய்ந்தான்; கடும் போர் புரிந்தான்; இளைத்த வேளையிற் கரந்து சென்றான். ஆயினும் அவனை விடாது தொடர்ந்தார், அறுமுகப் பெருமான். அண்டம் எங்கும் சுற்றிய அசுரர் கோமான் மீண்டும் மகேந்திர நகரம் போந்தான். நிழல் போல் அவனை விடாது தொடர்ந்த கந்தவேளும் விரைந்து அவ்விடம் சென்றார். சூரனையும் அவனைத் தொடர்ந்து வந்த வேலனையும் கண்ட அசுரசேனை பொங்கி எழுந்து அறுமுகனைச் சுற்றி ஆரவாரித்தது அதைக் கண்டு சற்றே சிரித்தார், முருகப் பெருமான். முன்னால் ஈசனது சிறு நகையால் எரிந்த திரிபுரம் போல், அசுர சேனை நீறுபட்டு அழிந்தது. தந்தையைப் பின்பற்றுதல் மைந்தர்க்குத் தக்கதன்றோ?
மாயையின் சேவை
அது கண்ட சூரன், "என் தம்பியரும், மைந்தரும், அமைச்சரும் ஏனைய படைத்-தலைவர்களும் முன்னமே அழிந்தார்கள். அளவிறந்த சேனையையும் இன்று குமரன் கொன்றான். யான் தன்னந் தனியனாய் நின்றேன். இனி, செயற்பாலது யாது?” என்று கருதிப் பெருமூச் செறிந்தான். அன்னையாகிய மாயையை மனத்தில் நினைத்தான். உடனே அவள் வந்து தோன்றினாள். "வீர மைந்தா! இங்குத் தனியனாய் நிற்கின்றாய்! தளர்ந்து தோன்றுகின்றாய்! என்னை நினைத்தாயே! உன் கருத்து என்ன? சொல்லுக” என்றாள்.
அப்போது சூரன் மாயையை நோக்கி, "தாயே! இதுவரை நிகழ்ந்த போரில் என் வீரத் தம்பியர் விழுந்தார். மைந்தர் மாண்டார், அமைச்சரும் அழிந்தார். யான் ஒருவனே எஞ்சி நிற்கின்றேன். இறந்தவர் எல்லாம் மீண்டும் உயிர் பெற்று எழுதல் வேண்டும் அதற்கு ஓர் உபாயம் கூறுக" என்று வேண்டினான்.
மாயை அது கேட்டு நகைத்து, "அப்பா சூரனே! பன்னிரு கரங்களோடு விளங்கும் பரமனைப் பாலன் என்று நினையாதே! அவன் வேற்படையால் நீ விரைவில் விழுந்திடுவாய். மாதா வுரையை நீ மனத்திற் கொள்வாயா? தலை விதியைத் தவிர்க்க யாரால் இயலும்? அது நிற்க, உன் மனம் மகிழும் வண்ணம் இறந்தவர் உயிர் பெற்று எழ வேண்டுமாயின், புறக் கடலின் மருங்கே மங்கல மலையொன்று உண்டு. அமுத சீத மந்தர கூடம் என்பது அதன் பெயர், அக் குன்றத்தை இங்கே வரவழைத்து நினைத்த செய்கையை நிறைவேற்றிக்கொள்க’ என்று சொல்லிச் சென்றாள்.
அம் மொழி கேட்ட சூரன், "தாய் சொல்லிய சூழ்ச்சியே தக்கது. இறந்தோரை எழுப்பும் வழி இதுவே" என்று மனமகிழ்ந்து, இந்திரஞாலம் என்னும் தேரை நோக்கி, "நீ மனோ வேகமாகச் சென்று, புறக்கடலின் அருகேயுள்ள 'அமுத மந்தர மலையைப் பெயர்த்துக் கொண்டு வா” என்றான். உடனே இந்திர ஞாலம் எழுந்தது; ஏழு கடலையும் கடந்தது; புறக்கடலிற் போந்தது; அமுத மந்தர மலையை எடுத்தது; சென்ற வழியே மகேந்திர நகரத்திற்கு விரைந்து வந்தது. அம் மலைக்காற்று அமர்க்களத்தில் வீசிற்று. அன்றுவரை போர் புரிந்து இறந்த வீரர் எல்லோரும் ஒருங்கே உயிர் பெற்று எழுந்தார்கள். சிங்கமுகன் எழுந்தான்; பானுகோடன் எழுந்தான்; இளைய வச்சிரவாகு எழுந்தான்; எரிமுகன் எழுந்தான்; தருமகோபனும் இருபுதல்வரும் எழுந்தனர். மக்கள் மூவாயிர்வளும் எழுந்தனர்.
முருகவேள் சங்காரப் படை விடுதல்
இவற்றைக் கண்டார், முருகவேள். "சூரன் செய்த சூழ்ச்சியும், மாயை சொல்லிக் கொடுத்த வழியும் மந்தர மலையின் மகிமையும், பகைவர் பிழைத்து எழுந்த வகையும் நன்று நன்று" என்று நகைத்தார். விடுதல் அப்போது அசுரப் பெரும்படை வேகமாக வந்து அறுமுகப் பெருமானை வளைத்தது. அவற்றைத் தொலைக்கக் கருதிய பெருமான் மன்னுயிரையெல்லாம் அழிக்கவல்ல சர்வ சங்காரப் படையை எடுத்தார்; மனத்தினாற் பூசனை புரிந்து அப்படைக் கலத்தை நோக்கி, "போர் முனையில் நிற்கும் அரிமுகன் முதலிய அசுரத் தலைவரையும், அளவிறந்த சேனையையும் அழித்திடுக" என்று கூறி விடுத்தார்.
சங்காரப்படை புறப்பட்டது; சூரன் சேனையை முற்றும சூறையாடிற்று; இந்திரஞாலத் தேரின் மீதிருந்த மந்தர மலையை நொறுக்கி எறிந்தது; கந்தவேள் கையில் மீண்டும் வந்தடைந்தது. அரிமுகனும், பானுகோடனும், எரிமுகனும், வச்சிரவாகுவும் நூற்றிருவரும், மூவாயிரவரும், தருமகோபனும், பெருஞ் சேனையும் பிறரும் மந்தர மலையோடு மடிந்து விழுந்தார்கள் சிவப் படையின் செய்கையைக் கண்டான், சூரன், மனம் தளர்ந்தான்; வன்மை இழந்தான்; வாட்டம் உற்றான்; பெருமூச் செறிந்தான்; முன்னைப்போல் தன்னந் தனியனாய் நின்றான்.
சூரன் தேரும் முருகன் கணையும்
அந் நிலையில் அவன் உள்ளத்திற் கடுஞ்சினம் மூண்டது. ‘என் சேனையெல்லாம் சிதைத்த சிறுவனை என்னைப்போல் தனிமை செய்து பின் வெல்வேன் ‘ எனத் துணிந்து இந்திரஞாலத்தை நோக்கி, "நம்ழைப் பகைத்து நிற்கும் பூத கணங்களையும் விற்படை
தாங்கிய வீரரையும் கவர்ந்து சென்று அண்டி முகட்டிற் கொண்டு சேர்த்துக் காவல் செய்திடுக” எனச் சூரன் பணித்தான். அவ் வண்ணமே அத் தேர் கடலபோற் பரந்து நின்ற சேனையின் அறிவை மயக்கிக் கவர்ந்து சென்று, அசுரர்கோன் பணித்தவாறே அண்டத்தின் முகட்டிற் கொண்டு சேர்த்துக் காவல் செய்து நின்றது.
சேனையை இழந்து தனியராக நின்றார், முருகப் பெருமான், அது கண்டு மகிழ்ந்தான், அசுரர் கோமான், தன் தேரின் திறங் கண்டு முக மலர்ந்தான். வானவர் மீண்டும் துன்புற்று மயங்கினர். மாற்றான் நிலையும், தம் நிலையும் கண்டார், முருகவேள்; சீற்றம் கொண்டார்; வில்லை வளைத்தார்; திண்மை வாய்ந்த அம்பினை நோக்கி, "நமது சேனையைக் கவர்ந்து அண்டமுகட்டிற் கொண்டு சேர்த்த வலிய தேரை விரைவிற் கொண்டுவருக" என்று கூறி விடுத்தார். ஒப்பற்ற அம்பு, வேல் போல் ஒளி வீசிச் சென்றது. ஏழுலகங்களையும் கடந்தது; ஏனைய பதங்களையும் நொடிப் பொழுதில் விட்டகன்று அண்ட முகட்டை நாடிச் சென்றது. அங்குப் பெருஞ்சேனையைத் தன்னகத்தே கொண்டு நின்ற தனிப் பெருந் தேரைக் கண்டது; அதன் வலிமையை முரித்தது; சேனையோடு தேரையும் பற்றிக் கொணர்ந்து வெற்றி வேலன் முன்னே விட்டது.
வானவர் போற்றி ஆரவாரம் செய்தனர். வீரவாகுவும் பிறரும் தேரினின்று ஊக்கத்தோடு இறங்கினர். அப்போது முருகவேள் இந்திரஞாலத்தை நோக்கி, "அழகிய நெடுந் தேரே! இனி நீ அச் சூரனிடம் செல்லாதே; அவன் இறத்தல் திண்ணம்; இங்கேயே நில்" என ஆணையிட்டார். அண்டத்தை யடைந்த தேர் அறுமுகன் ஏவிய கணையால் மீண்டு வந்ததைக் கண்டான், சூரன்; பூதப் படைகள் எல்லாம் மீண்டும் போர்க்களம் போந்ததும் அறிந்தான். தனது தேர் தன்னிடம் வராததையும் தெரிந்தான். கடுங்கோபம் கொண்டான்.
சூரப் பறவையும் முருகன் மயிலும்
மாயையின் திறத்தால் சூரன் கொடியதொரு பறவையின் உருவம் கொண்டான், பெருங்கடல் போல் முழங்கினான்; சிறகு பெற்ற மலைபோல் எழுந்து யூதர்களை அறைந்தான்; கூரிய மூக்காற் குத்தி விழுங்கினான்; அறுமுகப் பெருமான் ஏறியிருந்த தேரையும் சுற்றிச் சுற்றி வந்து அடித்தான்; பரந்த கடல்களின் எல்லையளவும் பறந்து சென்றான்; மீண்டு வந்தான்; நிலவுலகம் முழுவதும் சென்று மீண்டான், நாகலோகமும் சென்று வந்து பூதங்களைப் புடைத் தான்; எங்கும் சுழன்று திரிந்தான்.
இவ்வாறு பறவை வடிவம் பூண்டு போர் புரிந்த சூரனைக் கண்டார், முருகவேள், பறவையைத் தேர்மீது இருந்து போர் செய்து கொல்லுதல் பழியாகும் என நினைத்தார்; இந்திரனை நோக்கினார். கந்தப் பெருமான் கருத்தினையும், தன்பால் அவர் கொண்ட கருணையையும் அறிந்த இந்திரன் அழகிய தோகையையுடைய மயிலாக மாறி வந்தான்; மரகதக் குன்றுபோல் வேலனைப் போற்றி நின்றான்; "ஐயனே! வானவர் எல்லாம் வணங்கி நிற்க எளியனாகிய என்மீது கருணை வைத்தாய்; ஆதலால் புன்மை தீர்ந்தேன்; நன்மையுற்றேன்; பிறப்பெனும் பேதைமையும் போக்கினேன்” என்று இந்திரன் கூறியபொழுது முருகப் பெருமான் தேரினின்றும் இறங்கித் தோகை மயில்மேல் ஏறினார்; சூரனைத் தொடர்ந்து சென்றார். .
தொடர்ந்து வந்து தொல்லை விளைவித்த முருகன் செயல் கண்டு சூரன் மனந்தளர்ந்தான்; துயரடைந்தான்; சீற்றம் கொண்டான்; அவர் கையில் இருந்த வில்லைக் கடித்து முரிக்கக் கருதி வந்தான். அது கண்ட முருகவேள் மற்றொரு கையில் அமைந்த வாட்படையை வீசிப் பறவையின் உடலை இரு கூறாக வெட்டினார். அரி, அயன் முதலிய தேவர்கள் ஆனந்தமுற்று ஆடினர்.
சூரன் மாயையும் முருகன் அம்பும்
அப்பொழுதும் சூரன் அழிந்தானல்லன். மாய வடிவங்கள் பல எடுத்தான். பேய்போல் வருவான், புகையும் தீப் போல் தோன்றுவான்; சுழல் காற்றெனத் திரிவான், கடலெனப் பரந்து நிற்பான். அம் மாயா வடிவங்களை நோக்கி, முருகவேள், ஆயிரங் கோடி அம்புகளை எடுத்து அவற்றை நோக்கி, "அம்பாகிய அமரரே! நீர் சென்று சூரன் எடுத்துள்ள மாய வடிவங்களை அடியோடு கெடுத்து வருக" என்று விடுத்தார். அவ் வம்புகள் விரைந்து சென்றன; வேகமும் கோபமும் கொண்டன; சூரன் எடுத்த ஓர் உருவத்திற்கு ஏழுருவம் எடுத்தன; எட்டுத் திசையிலும், விண்ணிலும் மண்ணிலும் செறிந்தன; அவன் மாயங்களை யெல்லாம் அழித்தன. மாறுபட்ட சூரன், ஒருவனாய் அப் போர்க் களத்தில் நின்றான். அவன் மாயத்தை ஒழித்த அம்புகள் மீண்டும் சென்று முருகவேள் தூணியிற் புகுந்தன.
கந்தவேள் காட்சி தருதல்
அந் நிலையில், பெருமான் சூரனை நோக்கி, "கருமேகத்தின் இடையே தோன்றி மறையும் மின்னலைப் போல எம் கண்ணெதிரே எண்ணரிய உருவம் கொண்டாய் அவற்றையெல்லாம் அறிந்தோம். இனி நமது வடிவத்தை நீ காண்பாயாக" என்று திருவாய் மலர்ந்து கடலும் கடல் சூழ்ந்த உலகமும், புவனமும், அண்டமும், வானமும் பிறவும் தமது திருமேனியில் அமைந்தனவேயன்றி வேறில்லை என்னும்படி சிறந்ததோர் உருவம் கொண்டார். அனந்தகோடி சூரியர்கள் ஒருங்கே உதித்தாற் போன்று அவிர் ஒளி வீசிநின்ற அழகிய திருவுருவை நோக்கிய தேவரும் திடுக்கிட்டார். அவர்க்கு அபயம் அளித்தார், ஆறுமுக வள்ளல்.
ஆதியும் அந்தமும் இல்லாத அரும் பெருஞ்சோதி வடிவத்தைக் கருமேகம் போன்ற சூரனும் கண்டு வியப்புற்று நின்றான். அப்போது மெய்ஞ்ஞானியரும் அறிய வொண்ணாத முருகப் பெருமான் அவனுக்குச் சற்றே மெய்யுணர் வளித்தார். அந்நிலையில், "என்னே! இஃதென்னே! கோலமா மயிலிற் குலவிய வேலனைப் பாலன் என்றே இதுகாறும் எண்ணியிருந்தேன். இவன் பெருமையை அறிந்திலேனே! மாயவன் மலரவன் முதலிய தலைவர்க்கும், வானவர்க்கும் பிற உயிர்களுக்கும் மூலகாரணமாய் நின்ற மூர்த்தி இம் மூர்த்தியன்றோ? விருப்பு வெறுப்பற்ற பரம் பொருளாகிய இறைவனே முருகன் என்று என்னிடம் தூது வந்த வீரவாகு கூறினான். அன்று அச் சொல்லின் உண்மையை உணர்ந்தேனில்லை; இவனே இறைவன் என்று இன்று அறிந்தேன். ஆயிரங் கோடி காமதேவருடைய அழகெல்லாம் திரண்டு ஒன் றாகி வந்தாலும் அறுமுகப் பெருமானது திருவடிவிற்கு இணை யாகாது என்றால், இவரது எல்லையற்ற அழகிற்கு உவமை கூற வல்லார் யார்? என் அகந்தை அகன்றது; மெய்யறிவு மனத்திற் புகுந்தது; வலத் தோளும் கண்ணும் துடித்தன; புவனங் களெல்லாம் புலனாகின்றன; தேவதேவனது திருவுருவம் காணப் பெற்றேன். இஃது என் தவப்பயன் அன்றோ? என் கால்கள் இவரைச் சுற்றி வலம் வரவேண்டும், கைகள் குவிந்து தொழவேண்டும்; தலை தாழ்ந்து வணங்கவேண்டும்; வாய் வழுத்த வேண்டும்; தீமை யெல்லாம் ஒழிந்து நான் அடிமையாக வாழ வேண்டும். இவ்வாறு செய்ய மனம் முந்துகின்றது; ஆனால் மானம் என்னும் ஒன்றுதான் தடுக்கின்றது. "தேவரை நான் சிறை செய்தது தவறு என்று சொன்னார் பலர்; எனினும், அச் செய்கையாலன்றோ மறைகளும் பிரமனும் மற்றுமுள்ள வானவரும் காணுதற்கரிய இறைவன் இங்கு வரப்பெற்றேன்? நான் செய்த செயல் நன்றாயிற்று" என்று பலவாறாகப் போற்றிப் புகழ்ந்து நின்றான், சூரன். அந் நிலையில் முருகவேள் தமது பெருவடிவத்தை நீத்தார்; முன்போல் மயில்மீது ஏறிவந்தார்; சூரனுக்கு அளித்த மெய்யறிவையும் மாற்றினார்; அவனை முன்னிருந்த வண்ணம் ஆக்கினார்.
சூரன் இருளுருவம் கொள்ளுதல்
மெய்யுணர்வு நீங்கியபொழுது சூரன் மனத்தில் சீற்றமும் பகைமையும் நிறைந்தன. "குன்றம் எறிந்த குமரனைப் பிறகு பார்த்துக்கொள்வேன். முன்னே இக் கடும் போரை மூட்டிய வானவரைச் சாடி முடித்துச் சற்றே சீற்றம் தீர்வேன்” என்றான், சூரன் அக்கருத்தை நிறைவேற்றுமாறு மீண்டும் ஒரு மாய மந்திரத்தை ஓதினான். மண்ணும் விண்ணும் காரிருள் செறிந்தது. அதனுள்ளே மறைந்து நின்றான் சூரியன். கதிரவனும் அவ் விருளைக் கண்டு பயத்து பதுங்கினான். அமர் செய்யக் கருதி அந்தரத்தில் எழுந்தான் அசுரர் கோமான். அதனைத் தம் அறிவாலும், குறிப்பாலும் தெரிந்த வானவூர் சிதறி ஓடினர்; காலனைக் கண்ட உயிர்போல் கலங்கினர். "அடியவர்க்கு இனிய ஆண்டவனே, ஒலம் மெய்ஞ்ஞானமாகி மிளிக்கின்ற முதல்வனே, ஒலம் முனிவர்தம் தலைவனே, ஒலம் கருதுதற்கரிய பெரியோய், ஒலம்! எல்லாம் படைத்த இறைவா, ஒலம்! கண்ணுதற்பெருமான் அருளிய கடவுளே, ஒலம்! தேவ தேவா, ஒலம்! பகைவரைத் தகர்க்கும் பரமனே, ஒலம்! வேற்படை எடுத்த விமலா, ஓலம்! பாவலர்க்கு எளியாய், ஒலம் பன்னிரு கரத்தாய், ஓலம்! மூவரும் ஆகி நின்ற முழு முதற் பொருளே, ஒலம்! ஒலம்! அடியேம் படும் பாட்டை நீ சிறிதும் அறிகிலை போலும் இன்னும் சற்றே காலம் தாழ்ப்பின், மாய இருளில் மறைந்து நின்று சூரன் உலகமெல்லாம் அழித்திடுவான். ஆதலால், இன்னே அவனுயிரைக் கவர்ந்து எம்மைக் காத்தருள்க" என்று வேண்டினான், மயில் வாகனமாக நின்ற இந்திரன்.
வேற்படையின் வெற்றி
வானவர்கோன் சொல்லிய மொழிகளையும், அசுரர் கோன் செய்த கொடுமைகளையும் அறிந்த முருகன், தம் கையில் அமைந்த நெடுவேலை நோக்கி, "அச் சூரனது மார்பைப் பிளந்து கணப் பொழுதில் வருக" எனப் பணித்து விடுத்தார். இருதலை படைத்த வேற்படை உடனே புறப்பட்டது; ஆயிரம் கோடி ஞாயிறுபோல் ஒளி வீசிற்று; தீச் சுடர்களை உமிழ்ந்து கென்றது. அவ் வொளியைக் கண்ட மாய இருள் முற்றும் மாய்ந்தது.
தன்னை நோக்கி வந்த வேற்படையைக் கண்ட சூரன் இனம் கலங்கினானல்லன், "சாகா வரம் பெற்றுள்ள என்னை இப் ஓட என்ன செய்யும்?” என இறுமாந்து சீற்றம் கொண்டான்; நெடுங் கடலின் நடுவே பேiந்து, நெருப்புப் போன்ற தளிர்களும் புகை போன்ற தழைகளும், பொன் போன்ற பூந்துணர்களும் மரகதம் போன்ற காய்களும், செம்மணி போன்ற கனிகளும் தாங்கி, கார்மேகம் போன்ற ஒரு பேரிய மாமரமாய் நின்றான்.
மாறுபடு சூரன் மாயத்தால் மாமரமாகி மரக்கடலின் நடுவே நின்ற நிலையும், அவன் உள்ளக் கருத்தும், உடலின் வலியும் கண்டு, வேற்படை கடுஞ்சீற்றம் கொண்டது. ஈசனது நெற்றிக் கண்ணில் எழுந்த நெருப்பிலே உருவாக்கி, அப் பெருமான் திருக்கரத்திலே தாங்கிய தீப்பிழம்பிலே தோய்க்கப்பெற்றது போன்ற வேற்படை, கண்டவர் அஞ்சக் கடிது சென்று மாமரத்தை அடியோடு வெட்டி முரித்தது.
அடிபட்ட சூரன் அலறி விழுந்தான்; ஆயினும் அழிந்தா னல்லன். தவத்தினும் வலியது வேறுண்டோ? வஞ்சனை வடிவம் அழிந்தவுடன், வெஞ்சினம் கொண்ட சூரன் தன் முன்னைய உருவம் எய்தினான்; உடைவாளை எடுத்துப் போர் புரியக் கருதி ஆரவாரித்தான்.
இங்ஙனம் வாளேந்தி உருத்து நின்ற வல்லாளனைத் தாக்கிற்று, வேற்படை அவன் மார்பை இரு கூறாகப் பிளந்து, அலைகடலில் எறிந்து, ஆகாய் வழியே சென்றது; அனல் உருவத்தை விட்டு, அருள் உருவம் கொண்டது; வானவர் சொரிந்த பூமாரியின் இடையே விரைந்து சென்றது; ஆகாய கங்கையிற் படிந்தது; மீண்டும் முருகப் பெருமானது செங்கையில் வந்து அமர்ந்தது.
வேலாற் கூறுபட்ட பின்னரும் ஈசனது வரத்தின் தன்மையால் சூரன் இறவாதிருந்தான். இரு கூறும் சேவலும் மயிலும் ஆயின. இரண்டும் சினங்கொண்டு முருகவேளை நோக்கிப் போர்புரிய வந்தன. சேவலும் மயிலுமாக வந்த சூரனைக் கண்ணுற்றார் செவ்வேள், கருணை வாய்ந்த திருக்கண் நோக்கம் பெற்றபோது சூரன் பகைமை நீங்கிப் பண்புற்றான். தீமை செய்தவரும், முருகப் பெருமான் முன்னே சென்று சேர்ந்தால் தூயவராவர்; மேலான் சிவகதி அடைவர் என்பதற்கு வேறு சான்றும் வேண்டுமோ? கேடிழைத்து, கொடும்போர் செய்த சூரனும் அருள் பெற்று உய்ந்த கதையொன்று போதாதோ?
அறுமுகப் பெருமான், மெய்யறிவு பெற்ற சேவலை நோக்கி, "நீ நமது தேரிலே கொடியாக நின்று கூவுக” எனப் பணித்தார். உடனே சிறகடித்து எழுந்து 'கொக்கறுகோ' என்று கூவிற்று அக் கோழி, அந் நிலையில் இந்திரனாகிய மயிலினின்றும் இறங்கினார் முருகன்; மெய்யுணர்வு பெற்று நின்ற சூர மயில்மீது ஏறி, "நீ எம்மைச் சுமப்பாயாக" என்று கூறி, அதனை விண்ணிலும் மன்னிலும் நடத்தினார்.
வேற்படை தாங்கிய முருகன சூாடர்பகை முடிதது, அழகிய மயில்மீது வரக்கண்ட பூதரும், வீரரும், வீரவாகுவும் ஆர்வமுறச் சென்று அடிபணிந்து சூழ்ந்தார்கள்; "எம் ஐயனே! நெடுங்கடலின் நீரைக் குடிக்க வடிவேல் ‘விடுத்தாய்; அப் படையால் சூர் அறுத்தாய்; நின் அடியாரைப் பற்றி நின்ற வல் வினையின் வேர் அறுத்தாய்; இனி எமக்குக் குறையொன்றுண்டோ?” என்று எல்லோரும் பரவிப் புகழ்ந்தார்கள். அது கேட்ட குமரவேள், திருமால், பிரமன் முதலிய தேவர்க்கு அருள் புரிந்தார். மன்னன் இறந்தான் என்ற சொல் செவியிற் பட்டதும், இடியினால் அடி பட்ட நாகம் போல் உயிர் துறந்தாள் அவன் தேவியாகிய பதுமை, தலையாய் அன்பின் தன்மை அது வன்றோ? மற்றைய மனைவிகள் நெருப்பில் இறங்கி இறந்தனர்.
இரணியன் புலம்பல்
இது நிற்க. சூரன் இரு கூறாகி வீழ்ந்ததும், சேவலும் மயிலும் ஆகிச் செவ்வேளிடம் சென்றதும் கண்டு கலங்கினான், அவன் மைந்தனாகிய இரனியன். வான வீதியில் நின்று அவன் புலம்பலுற்றான். "என் அரசே! அன்றே நான் சொன்னேனே! என் மொழியை நன்றென உணர்ந்தாயில்லை; உறுதியெனக் கொண்டாயில்லை; இறப்பதற்கோ இப்போர் புரிந்தாய் அந்தோ! இனி என்றுதான் உன்னை அரசனாகக் கான்பேனே? திருமாலும், பிரமனும், இந்திரனும் ஏனைய வானவரும் ‘வாழ்க வாழ்க’ என வாழ்த்தி நிற்க அரசு வீற்றிருந்த ஐயனே! நீ சிவகுமாரனாகிய சிறுவன் தேரில் கோழியாய் நின்று, விலாவொடியக் கூவுகின்றாயோ! அண்டத்திலுள்ள உயிர்கள் எல்லாம் அடி வணங்க அரியாசனத்தில் அரசு வீற்றிருந்த நீ வாகை பெற்ற வேலவனைத் தோகை மயிலாய் நின்று சுமக்கின்றாயோ!" என்று இரணியன் இரங்கி யழுதான்; தளர்ந்து பெருமூச்செறிந்தான், 'அசுரனாகிய ஒன்னைக் கண்டரல் பூதர்கள் கொன்று பெருஞ்சினம் தீர்வர்; ஆதலால், இங்கு நிற்றல் ஆகாது’ என்று எண்ணி முன்போல் கடலில் புகுந்து மறைந்தான்; துன்புற்ற மனத்தோடு குல குருவாகிய சுக்கிரனிடம் சென்றான்; இறந்துபட்ட தந்தையர்க்கும், தாயர்க்கும், உடன் பிறந்தார்க்கும், மற்றைய சுற்றத்தார்க்கும் முறைப்படி எள்ளும் நீரும் இறைத்து இறுதிக் கடன் கழித்தான்.
முருகன் திருச்செந்தூருக்குத் திரும்புதல்
அறுமுகப் பெருமான் ஆணைப்படி அமரரைச் சிறை மீட்கச் சென்றவர், அவரை நோக்கி, "வானவரே! வருக, வருக! உம்மைச் சிறை செய்த சூரனை எம்மையாளுடைய ஐயன் அழித்துவிட்டார். தேரும் சீரும் பெற்றிருந்த சூரனை வேற் படையால் முருகவேள் ஒழித்துவிட்டார்” என்று சொல்லிய மொழிகளை, கேட்டனர், வானவர்; கூட்டோடு வீட்டின்பம் பெற்றாற்போல் மகிழ்ந்தனர்; கால்களிற் பூட்டிய விலங்குகளை ஒடித்தெறிந்தனர்; கொடிய சிறையினின்றும் விடுதலை பெற்றுச் சென்றனர்.
குமரேசன் அன்னாரைப் பெருங் கருணையோடு நோக்கினார்; "நலம் அறியாத சூரனது சிறையில் அகப்பட்டு நெடுநாள் நலி வுற்றீர். இனித் துயரம் இன்றி விண்ணுலகத்தில் வளமெலாம் பெற்று வாழ்வீராக” என்று திருவாய் மலர்ந்தார்; பின்பு, கருங் கடலை ஆளும் வருணனை நோக்கி, "சூரன் வீற்றிருந்த வீரமகேந்திர நகரை விரைவில் அழித்திடுக” எனப் பணித்தார். அவ்வாறே செய்து முடித்தான், வருணன்.
திருமால், பிரமன் முதலிய தேவர்களும், வானவர் கோனும் போற்ற, மற்றைய வீரர்கள் மருங்கே வர, பூதகணங்கள் புடை சூழ போர்க்களத்தை விட்டுப் புறப்பட்டார், முருகவேள். கருங்கடலால் விழுங்கப்பட்ட மகேந்திர நகரின் எல்லை கடந்து, இலங்கை மாநகரையும் கடந்து, செம்மை வாய்ந்த செந்தி மாநகரை யடைந்து முருகப்பெருமான் மயில் வாகனத்தைவிட்டு இறங்கினார். அப்போது அறுமுகக் கடவுளைப் பிரமன் முதலிய தேவர்கள் தலையால் வணங்கி, "அடியவர்களாகிய நாங்கள் நின் பொன்னடி போற்றி அர்ச்சனை புரிய ஆசைப்படுகின்றோம்" என்று வேண்டினர். அறுமுகப் பெருமான் அதற்கு இசைந்தருளினார். வானவர் சிறப்பாக வழிபாடு செய்தனர், முருகன் திருவடியைத் தம் முடியிற் சூடினர்; வணங்கி வாழ்த்தினர். அன்னார் அன்புடன் செய்த வழி பாட்டை ஏற்று மகிழ்ந்த குமரேசன் பெருங்கருணை பாலித்தார்.
இந்திரன் விருப்பம்
அரந்தை கெடுத்து அருள்புரிந்த முருகனுக்குக் கையுறை இத்திரன் அளிக்க விரும்பினான், அமரர் கோமான். கொடுமை செய்த பகைவரை வென்று, விண்ணுலக ஆட்சியை மீட்டுக் கொடுத்த வெற்றிவேல் வீரனுக்கு, அழகிய கூந்தலையுடைய தன் மகள் தெய்வயானையை மணஞ் செய்து கொடுக்க எண்ணினான் அக் கோமான்; அக்கருத்தை மனத்திற் கொண்டு ஒரு தூதுவனை அழைத்தான்; அவனை நோக்கி, "நீ இப்பொழுதே மேரு மலைக்குச் செல்க, அங்குள்ள என் தேவியையும், புதல்வியையும் இன்றே அழைத்து வருக” என்றான்.
உடனே தூதுவன் எழுந்தான்; மேருமலைக்குச் சென்றான்; இந்திராணியின் முன்னின்று வணங்கினான். "உன் விருப்பம்போல் எல்லாம் நடந்தது; கொடிய சூரன் மாண்டான்; உன் மைந்தனும் தேவரும் சிறையினின்றும் மீண்டார். சேவற் கொடியோனாகிய செவ்வேள், வாகை சூடிய சேனையோடு இப்போது திருப்பரங் குன்றத்தில் அமர்ந்துள்ளார். வானவர்கோன் அக் குன்றத்திற்குத் தன் அருமைத் திருமகளையும் உன்னையும் அழைத்து வரும்படி என்னை அனுப்பினான். ஆதலால் இப்பொழுதே புறப்படுக" என்றான்.
அது கேட்ட இந்திராணி விம்மிதமுற்றாள், விசாரம் விட்டாள்; என்றுமில்லாததோர் இன்பம் எய்தினாள்; கன்னியை அழைத்துக் கொண்டு புறப்பட்டாள்; திருப்பரங்குன்றத்தை அடைந்தாள்; தன் மகனைக் கண்டாள்; அன்புடன் தழுவிக்கொண்டாள்; வறுமை யுற்றவர் பெருநிதி பெற்றாற்போன்று கவலை தீர்ந்து களிப்புற்றாள்.
தெய்வயானை திருமணம்
அப்போது இந்திரன் முருகவேளிடம் போந்து, "ஐயனே! வலிமை சான்ற அசுரர் தீமையைக் களைந்தாய்! வானவரைச் சிறையினின்றும் விடுவித்தாய்! எனக்கு முன்னைய ஏற்றமும் தோற்றமும் தந்தாய்! இவற்றிற்கெல்லாம் சிறியேன் கைம்மாறாகச் செய்யத்தக்கது ஏதேனும் உண்டோ? அடியேன் பெற்ற மங்கை இப்போது இங்கே வந்திருக்கின்றாள். அவளைத் தேவரீர் மணந்துகொண்டால் நாங்கள் பிறவிப் பயனைப் பெற்றவர் ஆவோம்” என்று பேசினான்.
அப்போது முருகப் பெருமான் இந்திரனை நோக்கி, "அரசே, அந் நங்கையும் எம்மைக் குறித்துத் தவம் புரிந்தாள். ஆதலால், உன் கருத்துப்படி அவளை நாளையே மணம் புரிந்துகொள்வோம்” என்றார். அம் மொழி கேட்ட இந்திரன், தன்னையும் கடத்த ஆனந்தமுற்றுத் தருக்கி நின்றான்.
திருமணச்சாலை அழகுற இலங்கிற்று. மணிகளாலும் மாலைகளாலும் அலங்கரிக்கப்-பட்ட அச் சாலையிற் போந்தார், முருகவேள். அவ் வேளையில் ஞான நாயகனாகிய சிவபெருமான் பூதகணம் புடை சூழ உமா தேவியோடு ஒரு விமானத்தில் எழுந் தருளினார். அன்னையும் அத்தனும் வரக்கண்டு களிப்புற்றார், முருகவேள் உள்ளத்திலே அன்பு பெருகிற்று; ஆசனத்தை விட்டு எழுந்து நின்றார். அப்போது ஈசன் உமையோடு விமானத்தை விட்டிறங்கினார்; பூத கணங்களுடன் புனிதமான பொன்மணிக் சாலையிற் புகுந்தார்.
மங்கையைக் கொண்டு மனச்சாலையிற் சேர்த்தான் இந்திரன், அவள் திருவுருவைக் கண்ட தேவரும் முனிவரும் "அன்னையே! வாழ்க" என்று அடி தொழுதார்கள். மணமகனையும் மனமகளையும் உயர்ந்த பொன்னாசனத்தில் ஏற்றிவைத்தார் உலகம் ஈன்ற உமாதேவியார்.
இருவர் மணக்கோலத்தையும் கண்ணாரக் கண்டான், இந்திரன்; மனமாரப் புகழ்ந்தான்; உச்சிமேற் கரங்குவித்தான்; உள்ளம் குளிர்த்தான்; மதுவுண்ட வண்டுபோல் மகிழ்வுற்றான். முருகன் திருவடியைப் புனித நீராட்டினான்; சந்தனக் குழம்பை ஊட்டினான்; கந்தமலரைச் சூட்டினான்; அகிற் புகை காட்டினான்; தீபத்தால் ஆராதனை செய்தான். அறுமுகன் கையில் தன் அருமைத் திருமகளை ஒப்புவித்து, "அடியேன் இவளைத் தந்தேன்” என்று தாரை வார்த்தான். அடியார்க்கு இருமையுந் தரும் பெருமானாகிய முருகன், இந்திரன் வார்த்த நீரைத் திருக்கரத்தால் ஏற்றருளினார். அந் நிலையில் பிரமதேவன் தன் கருத்தினால் ஆக்கி, கரத்தினால் அளித்த திருமங்கல நாணை வணங்கினார், முருகவேள்; அழகிய தெய்வயானையின் கழுத்தில் அதனை அணிந்தார்; அவள் திருமுடியில் நறுமலர் மாலையும் சூட்டினார்.
திருமணச் சடங்குகள் நிறைவேறியவுடன், முருகவேள் தெய்வயானையோடு அன்னையையும் அத்தனையும் அன்போடு வலம் வந்தார்; மூன்று முறை செம்மையாக அவர்தம் சேவடியில் விழுந்து வணங்கினார். அடிபணிந்த மகனையும் மருகியையும் ஈசனும் தேவியும் இனிதெடுத்தணைத்தனர்; அருள் செய்தனர்; அருகில் இருத்தினர்; உச்சி மோந்தனர்; "உமக்கு எமது முதன்மைப் பதம் தத்தோம்” என்று மனமகிழ்ந்து மொழிந்தனர். முருகப் பெருமானையும் அவர் தேவியையும் சபையில் இருந்தவர் எல்லாரும் முறையாக வழிபாடு செய்தனர். அன்னவர் எல்லார்க்கும் இன்னருள் புரிந்து, ஈசனும் உமாதேவியும் பரிசனங்களோடு மறைந்தனர்.
இந்திரன் முடி சூடுதல்
அப்போது சிங்காசனத்தினின்றும் இறங்கினார், கந்தப் பெருமான்; மங்கல வாத்தியம் முழங்க, மெய்யடியார் அனைவரும் தொழுது வணங்க, தெய்வ யானையோடு தமது திருகோயிலிற் புகுந்தார். விண்ணுலகத்திலுள்ள பொன்னகரம், சூரன் மகனாகிய பானுகோபனால் அழிந்து பொடிபட்டதையும் இந்திரன் மனத்தில் எழுந்த விருப்பத்தையும் அறிந்தார், முருகவேள், உருவழிந்த பொன்னாட்டை முன்போல் ஆக்கத் திருவுளங் கொண்டார்; வித்தகனாகிய தெய்வத்தச்சனை நோக்கி, "துயர் ஒழிந்த இந்திரன் அளவற்ற செழுமையுடன் அமர்ந் திருக்குமாறு பொன்னாட்டை முன்னிருந்த வண்ணம் ஆக்குவாய்” எனப் பணித்தார். "அப்படியே செய்வேன்" என்று அவன் வணங்கிச் சென்றான். திருமகளுக்குப் புகலிடமாகுமாறு அவன் பொன்னகரை மீளவும் ஆக்கினான் என்றால், அதன் செழுமையை உரைக்க ஒண்ணுமோ?
அப்பொழுது முருகப்பெருமான், பிரமன் முதலிய தேவர்களைக் கருணையோடு நோக்கி, "இந் நகரில் இருந்து அரசு புரிதற்குரிய இந்திரனுக்கு இன்றே திருமுடி சூட்டுக” என்றார். உடனே அன்னார் அதற்கு உரிய அனைத்தும் சேகரித்தனர்; கங்கையாற்றின் நீரால் இந்திரனுக்கு அபிஷேகம் செய்தனர்; அவனை ஆடையணிகளால் அலங்கரித்தனர், சாந்தமும் மாலையும் அணிந்தனர்; அரியாசனத்தில் அமர்த்தி அழகிய மகுடம் சூட்டினர். விண்ணவர் வேந்தனாகிய இந்திரன் முருகவேளின் முன்னே சென்றான்; வந்தனை புரிந்து வணங்கினான்; ”வானவர் நாட்டின் அரசும் செல்வமும் வழங்கிய எந்தாய் வாழ்ந்தேன் யான்; என்னினும் பெருவாழ்வு இன்னொருவருக்கு உண்டோ?” என்று ஆர்வமொழி பேசினான். அது கேட்ட முருகவேள் அருள் புரிந்தார்; "இந் நகரில் நன்றாக அரசு புரிந்துகொண்டிரு” என்று திருவாய் மலர்ந்தார்; தேவர்களை அவரவர் இடங்களுக்கு விடை கொடுத்து அனுப்பினார்; தெய்வயானையோடு தாமும் தமது திருக்கோயிலை அடைந்தார்.
வள்ளி திருமணம்
கடம்பமாலை யணிந்த குமரவேள் காதலுற்று விளையாடிய மலையொன்று தமிழ் நாட்டிலே உண்டு. அதற்கு வள்ளிமலை யென்பது பெயர். அதன் பெருமை சொல்லும் தரத்த தன்று. பல வகையான வளங்களை உடையது. அம் மலை. அங்கு வேடர் வாழ்ந்த குறிச்சி ஒன்று விளங்கிற்று. அன்னவர் தலைவனாய் அரசு செய்தவன் நம்பிராசன் என்ற வேடன், அவனுக்கு ஆண் மக்கள் இருந்தனர். பெண் குழந்தை வேண்டும் என்று அவன் ஆண்டவனைத் தொழுதான்.
அப்பொழுது முருகப் பிரான் அருளால் நம்பியும்m அவன் மனைவியும் பணியாள்களோடு பசுந் தினைப்பயிர் நிறைந்திருந்த புனத்திற் புகுந்தனர். அங்கு ஒரு மெல்லிய குரல் அவர் காதில் விழுந்தது; உடனே அவ் வொலி எழுந்த இடம் நோக்கி நடந்தனர். வள்ளிக்கிழங்கெடுத்த குழியில் சுடரொளி போன்ற ஒரு குழந்தையைக் கண்டான் நம்பி வேடன்; அதனை எடுத்தான்; அக மகிழ்ந்தான்; வள்ளி என்று பெயரிட்டான் மனைவியின் கையிற் கொடுத்தான்; அம் மிகவுடன் மனையாளையும் அழைத்துக் கொண்டு திணைப்புனங் கடந்து குறிச்சியை அடைந்தான்.
நம்பிராசன் மனையில் வளர்ந்த அப் பெண் மங்கைப் பருவ மடைந்தாள். வேடர் குல முறைப்படி அக் கன்னியைத் தினைப் புனங் காவல் செய்ய அனுப்பினார்கள். மலை நிலத்திற்குரிய கிளிகளும், மயில்களும், பிற நிலங்களுக்குரிய பறவைகளும், விலங்கு களும் அப்புனத்தில் வந்து பொருந்தின. 'பூவைகாள், ஆலோலம்! புறாக்களே, ஆலோலம்! மயில்களே, ஆலோலம்! கிளிகளே, ஆலோலம்! குயில்களே, ஆலோலம்! சேவல்களே, ஆலோலம்! என்று பறவைகளை ஓட்டிக்கொண்டிருந்தாள், அப் பாவை.
இப்படி அவள் தினைப்புனங் காத்து வருகையில், கயிலையங்கிரியைச் சார்ந்த கந்த மாமலையை விட்டு முருகப் பெருமான் தமியராய்த் தணிகை மலையை வந்தடைந்தார். காலிலே கழல்; இடையிலே கச்சு, மாலையணிந்த தோளிலே வில், அதற்குரிய அம்பு; கரிய தலை; நெடிய மேனி - இந்த வேட்டுவக் கோலத்திலே தோன்றினார், முருகவேள், வளமார்ந்த வள்ளி மலைக்குச் சென்றார்; திணைப்புனங் காத்துக்கொண்டிருந்த வள்ளியைக் கண்டார்; புதையல் கண்டவர்போல் பெருமகிழ் வுற்றார்; மேகத்திற் பொருந்திய மின்னல்போல் கருமலைச் சாரலிற் காட்சியளித்த கன்னியைக் கண்ட நிலையிற் காதல் கொண்டார், முருகப் பெருமான். அப் பாவை இருந்த பரணுக்கு அருகே சென்றார்; உள்ளங் கவர்ந்த வள்ளியை நோக்கி, "மாதே! உன்னைக் கண்டு மதி தளர்ந்தேன்! உன் பெயர் யாதோ? பேரைச் சொல்லா விட்டால் ஊரையேனும் சொல். ஊரும் சொல்ல முடியாதென்றால், அவ் வூருக்குச் செல்லும் வழியையேனும் சொல்” என்றார்; ஓவியம்போல் வாய் திறவாதிருந்த மங்கையை நோக்கி, "மாதே, நீ ஒரு மொழி பேசாய், குறுநகை புரியாய், கண்னெடுத்துப் பாராய், காதலால் உழலும் எனக்கு ஒரு வழி காட்டாய் இறையளவும் உள்ளம் உருகாய் என்றால் பழிவந்து உன்னைச் சூழும். ஆதலால், பராமுகமாய் இராதே" எனப் பகர்ந்தார்.
இவ்வாறு கன்னியின் முன்னே நின்றே குமரவேள் காதல் மொழி பேசும்பொழுது, முள்ளம் பன்றிகளும் கரடிகளும் யானைகளும் கடுகியோடும் வண்ணம் கொம்புகளை ஊதிக்கொண்டு வள்ளியின் தந்தையாகிய நம்பிராசன் வேடர்களோடு, அங்கு வந்தான். அப்போது முருகப் பெருமான் வேடக் கோலத்தை மாற்றி ஒரு வேங்கை மரத்தின் உருவங்கொண்டு நின்றனர். வேடங்கள் அவ் வேங்கையைக் கண்டனர்; வியப் பெய்தினர். முன்னில்லாத மரம் எவ்வாறு இங்கு வந்தது என்று வினவினார். இவ் வேங்கையால் தீங்கு வருதல் திண்ணம் என்று எண்ணினர்; கோபம் அவருள்ளத்தில் மூண்டது. பலவாறாகப் பேசி நின்ற வேடரை விலக்கினான், நம்பி; வள்ளியின் முகத்தை நோக்கினான். "நறுமலர் தாங்கிய இவ் வேங்கை நமது தினைப்புனத்தில் வந்தவா றென்னை?” என்று வினவினான்.
அது கேட்ட நங்கை அஞ்சினாள்; "ஐயனே! இது வந்தவாறறியேன், நேற்றில்லாத மரம் இன்று முளைத்து நின்றது; இது மாயம்போல் தோன்றுகிறது; இதனைக் கண்டதும் தடுக்கம் கொண்டேன்" என்றாள். நங்கை சொல்லியவற்றைக் கேட்டபின், நம்பி; "வள்ளி! இதைக் கண்டு அஞ்சாதே; இங்கே சுகமாயிரு. புது மலர் தரும் வேங்கை உனக்கு இனிய துணையாக வந்துற்றது” என்று சொல்லி வேடர்களோடு அவ்விடத்தை விட்டகன்றான்.
அப்போது முருகப் பெருமான், வேங்கையுருவத்தை விட்டர் அழகிய மானிட வடிவம் கொண்டு மங்கையின் கண்ணெதிரே தோன்றினார். "மானின் விழி மாதே! பாவியேன் உன்னை விட்டுப் பிரிய வல்லேனோ? உயிரை விட்டு உடல் இயங்குமோ? மெல் லியல் மாதே! இத் தினைப்புனம் காத்தல் உனக்கு இழிவாகும், என்னுடன் வருவாயாயின் உன்னை வானுலகத்தில் வைப்பேன்; அங்குள்ள தேவ மாதர் எல்லாம் உன்னைத் தொழுது நிற்பர்; செல்வங்கள் யாவும் பெற்றுச் சிறப்பாக வாழ்வாய்” என்று பேசி நின்றார், பெருமான். அவர் மனக் கருத்தை யறிந்தாள், மங்கை; நாணமுற்றாள்; ஒரு மொழி பேசலுற்றாள்.
"ஐயரே! நான் இழிந்த குலத்தைச் சேர்ந்தவள்è உலக மெல்லாம் காத்தருள்கின்ற அரசர் நீர்; என்மீது காதல் கொண்டு தாழ்மையான மொழிகளைப் பேசுதல் உமக்குத் தகுமா? இது பழி யாகுமே யன்றி முறையாகுமா?" என்று பேசி நின்றாள்.
அப்பொழுது அவள் நெஞ்சம் திடுக்கிடத் தொண்டகமும் துடியும் முழங்கின; வேடர் கூட்டத்தோடு நம்பிராசன் தூரத்தில் வரக் கண்டாள். "ஐயோ! பொல்லாதவர் இவ் வேடர்; இங்கு நில்லாது ஓடிவிடும்" என்று கூறினாள். அம் மொழி கேட்ட முருகவேள் பெரு மகிழ்ச்சியடைந்தார், சைவ நெறிக்குப் பொருத்தமான தவக்கோலம் கொண்டு விருத்தராய் வேடரை நோக்கிச் சென்றார். நம்பிராசன் எதிரே போய் நின்றார்; அன்போடு திருநீறு அளித்தார்; "உன் வீரம் ஓங்குக, வெற்றி உயர்க, வளம் பெருகுக" என்று வாழ்த்தினார்.
திருநீறளித்து ஆசி கூறிய பெரியவரைப் பணிந்து வணங்கினான், நம்பி. ‘ஐயரே விருத்தராகிய நீர் இம் மலையை வந்தடைந் தீர் உமக்கு வேண்டியதைச் சொல்லும்” என்று வினவினான். அது கேட்ட முருகவேள், "அரசே! என் கிழத்தன்மை ஒழிய வேண்டும்; மனத்திலுள்ள மயக்கம் தெளியவேண்டும்; ஆதலால், இங்குள்ள குமரியாட விரும்பி வந்தடைந்தேன்” என்றார்.
அப்போது அரசன், "ஐயரே! நீர் சொல்லிய நல்ல தீர்த்தத்தால் நாள்தோறும் நீராடி, தனியளாய்த் தினைப்புணங் காத்திருக்கும் என் பெண்ணுக்குத் துணையாகி இங்கேயே இரும்” என்றான். "நல்லது” என்றார், பெரியவர். நம்பிராசன் வள்ளியிடம் சென்று, தினையும் கிழங்கும் மாவும் கனியும் மற்றைய பண்டங்களும் கொடுத்து, கிழவரை அவளுக்குத் துணையாக வைத்து அவ்விடத்தை விட்டு அகன்றான்.
அப்போது கிழவர் மங்கையை நோக்கி "ஐயோ! நான் என்ன செய்வேன்! பசி நோய் என்னைப் பிடித்து வருத்துகின்றதே? என்றார். அவர் பசி தீரத் தேனும் கனியும் தினைமாவும் தன் செங்கையாற் கொடுத்தாள், மங்கை, அவற்றை யுண்ட கிழவர், "வெயில் அதிகமாயிற்று; தாகம் உண்டாகின்றது” என்றார். தாகத்தைத் தீர்ப்பதற்காக அவரை அழைத்துச் சென்றாள், வள்ளி; பல குன்றுகளைக் கடந்து இனிய சுனையொன்றைக் காட்டினாள். அந் நீரைப் பருகினார் கிழவர்; பேசத் தொடங்கினார். "மாதே! என் அரும் பசியைத் தீர்த்தாய்! கடுந் தாகத்தைத் தணித்தாய்! இன்னும் என் தளர்ச்சி நீங்கவில்லையே! நான் கொண்ட மோகத்தைத் தனிப்பாயாயின் என் குறை முற்றும் தீர்ந்துவிடும்” என்றார்.
"ஐயோ! நரைத்த தலையுடையீர்! உமக்கு நல்லறிவு சற்றும் இல்லையே? இத்தனை நாள் வாழ்ந்து மூத்ததனால் என்ன பயன்? இழி குலத்தவளாகிய என்னைக் காதலித்துப் பித்துக்கொண்டவர் போல் பிதற்றுகின்றீர்! இவ் வேடர் குலத்திற்கெல்லாம் பெரும் பழியைத் தந்தீர்! பேசத் தெரிந்த பெரியவரே! நான் போகின்றேன். பறவைகளும் விலங்குகளும் தினைக் கதிர்களைத் தின்றுவிடும். நீர் பின்னே நடந்துவாரும்” என்று சொல்லிப் புறப்பட்டாள், வள்ளி.
பொன் போன்ற மங்கை போகக் கண்டார், முருகன்; இனி என்ன செய்வது என்று ஏங்கினார். தன்னிகரில்லாத தந்திமுகத் தமையனை மனத்திலே நினைத்தார். தம்பிக் கிரங்கி விநாயகர் வெளிப்பட்டார்; திரும்பிச் செல்லும் வள்ளியின் முன்னே மலை போன்ற யானை வடிவங் கொண்டு, அலைகடல்போல் முழங்கிக்கொண்டு வந்தார். யானையைக் கண்டபோது அஞ்சி நடுங்கினாள், மங்கை, கிழவரை நோக்கி ஓடினாள்; "ஐயனே! நீர் சொன்னபடி செய்வேன்; இந்த யானையினின்றும் என்னைக் காத்தருள வேண்டும்" என்று பதறி, அவர் பக்கத்திற் சென்று கட்டித் தழுவிக்கொண்டாள்.
காரியம் முடிந்ததென்று கந்தவேள் களிப்புற்றார்; காலத்தில் வந்து உதவிய யானைக்கு வந்தனம் அளித்தார்; "எம்பெருமானே! உம்மால் மயக்கம் தீர்ந்தேன்; மங்கையையும் மருவப்பெற்றேன். இனி நீர் உம்மிடத்திற்கு எழுந்தருள்க” என்று விடை கொடுத்து அனுப்பினார். தமையனார் சென்ற பின்பு முருகவேள் கன்னியை அழைத்துக்கொண்டு ஒரு பூஞ்சோலையிற் புகுந்தார்; மனங்கலந்தார், அருள்புரிந்தார். தமது இயற்கைத் திருவுருவைக் காட்டினார்.
ஆறுமுகமும், பன்னிரு தோளும், வடிவேல் முதலிய படையும், அழகிய தோகைமயிலும் உடையராய் முருகப் பெருமான் காட்சியளித்தார். அத் திருவுருவைக் கண்டாள், கன்னி, கை கூப்பித் தொழுதாள்; வாயார வழுத்தினாள்; வியப்புற்று நடுங்கினாள்; மேனி வியர்த்தாள்; ஆராத அன்புடன் பேசலுற்றாள்; "வேலவரே! இவ் வுருவத்தை முன்பு காட்டாமல் இத்துணைக் காலமும் கொன்னே கழித்தீரே! கொடியவளாகிய உம் அடியாள் செய்த குற்றமெல்லாம் பொறுத்து ஆட்கொள்ள வேண்டும்" என்றாள்.
அப்போது முருகவேள் மங்கையை நோக்கி, "மாதே! நீ தினைப் புனத்திற்குச் செல்க. நாமும் அங்கு வருவோம்” என்று உரைத்தார். அவ்வாறே ஆண்டவன் அடி பணிந்து, விடைபெற்றுப் போயினாள், வள்ளி; தினைப் புனத்தில் தலைவனைக் காணப் பெறாது தளர்ந்திருந்தாள்.
இளந்தினைகள் முதிர்ந்து முற்றிவிட்டன. விளைந்த கதிரை அறுப்பதற்கு வேடர் விரைந்து நிறைந்தார்கள். அவர்கள் வள்ளியை நோக்கி, "நாயகி, திணைகள் விளைந்தன. அவற்றைக் கண்டு, வேங்கை மரங்களும் மலர்ந்தன. இதுவரையும் தினைப்புனங் காத்து நீ வருந்தினாய், இனி ஊருக்குச் சென்றிடு, அம்மா" என்றுரைத்தனர். அப்போது மங்கை, மானையும் மயிலையும் கிளியையும் புறாவையும் மற்றைய பறவைகளையும் பார்த்து, "நான் போகின்றேன், இச் செய்தியை இங்கு வரும் முருகப் பெருமானிடம் சொல்லுங்கள்” என்று கூறி, மன வருத்தத்தோடு அவ்விடத்தை விட்டு அகன்றாள். வீட்டிலே இருந்தாள், வள்ளி, தினையை அறுத்து மனையிற் சேர்த்தனர், வேடர்.
காதலராகிய முருகவேள் திணைப்புனத்திற்குச் சென்றார். அங்கு மங்கையைக் காணாது மையலாற் புலம்பலுற்றார்; "இங்கிருந்த மங்கை எங்கே சென்றாள்” என்று மேகத்தைக் கேட் பார்; மயிலினங்களைக் கேட்பார்; திணைப்புனத்தைக் கேட்பர்; பூவையைக் கேட்டார், கிளியைக் கேட்பார்; யானையைக் கேட்டார்; மானைக் கேட்பார்; சோலையைக் கேட்பார்; மலையைக் கேட்பார்.
பகற் பொழுதெல்லாம் மங்கையை நாடுவார்போல் மயங்கி நின்று திணைப்புனத்தைச் சுற்றி திரிந்த முருகவேள், நள்ளிரவில் வேடர் வாழும் குறிச்சியிற் புகுந்து, நம்பி ராசனது குடிசையின் புறத்தே சென்று நின்றார். அங்கே மங்கை வந்து பெருமானை வணங்கினாள்; "ஐயோ! பாவியேன் பொருட்டால் இந்த நள்ளிரவில், சிறு தொழில் புரியும் வேடர் சேரியில் திருவடி வருத்த நடந்து வரலாமா? " என்று பரிவுடன் பேசிப் பணிந்து நின்றாள்.
அந் நிலையில் முருகவேளை வள்ளியின் தோழி கண்டு, "எம் ஐயனே! இவ் வேடர்கள் கொடியவர்கள், உம்மைக் கண்டால் தின்மை விளையும். ஆதலால், இம் மங்கையை இப்பொழுதே உமது ஊருக்கு அழைத்துச் சென்று காத்தருளல் வேண்டும்” என்று கூறி, நாயகியைத் தலைமகனிடம் அடைக்கலமாக அளித்தாள்.
காலத்தில் உதவி செய்த தோழியைக் கருணையோடு நோக்கினார், முருகவேள்; "மாதே, எம்மிடத்தில் நீ வைத்த கருணையை எந்நாளும் மறவோம்” என்று திருவாய் மலர்ந்தார். தோழி விடை பெற்றுச் சென்றாள். முருகவேள் வள்ளியை அழைத்துக்கொண்டு நள்ளிருளிலே நடந்தார்; வேடர் குறிச்சியின் கட்டும் காவலும் கடந்தார்; காதல் விளைக்கும் ஒரு பெருஞ் சோலையிற் சென்று சேர்ந்தார்.
நம்பிராசன் மனைவி காலையில் எழுந்தாள்; நங்கையைக் காணாது திகைத்தாள்; எங்கும் சுற்றித் தேடினாள். தோழியை வந்து கேட்டாள். "நேற்றிரவு வள்ளியும் நானும் கண்ணுறங்கச் சென்றோம். அதற்குப் பின் அவள் செய்ததொன்றும் நான் அறிந்திலேன், அம்மா” என்றாள், தோழி.
வேடர் யாவரும் வந்து கூடினர்; விரைந்து சென்று தம் வேந்தனைக் கண்டனர்; கொம்பு ஊதினர்; பல வழிகளிலும் ஓடினர்; சோலைகளையெல்லாம் நாடினர்; திணைப்-புனங்களிற் புகுத்து தேடினர்; காலடித் தடங்களை நோக்கித் தொடர்ந்தனர். கோலும் வில்லும், குந்தமும் வாளும், மழுவும் பிண்டி பாலமும் கொண்டு பலவிடங்களிலும் தேடிய வேடர்கள், முருகவேள் வள்ளியோடிருந்த சோலையை நோக்கி வந்தார்கள்.
அப்போது மங்கை திடுக்கிட்டாள்; மனங் கலங்கினாள்; "இனிமேல் என்ன செய்வது?" என்று வினவினாள். அது கேட்ட முருகவேள், "மாதே! மனம் வருந்தாதே, மாய மலையைத் தகர்த்த வேல், சூரன் மார்பைத் துளைத்த வேல் என்னிடம் இருக்கின்றது. உன்னைச் சேர்ந்த வேடர்கள் போர் புரிய வந்தால் அவரை அழிப்போம். நம் பின்னே நின்று நீ அச் செய்கையைப் பார்” என்று அருளினார்.
நம்பிராசனும் வேடரும் அலைகடல்போல ஆரவாரித்தனர்; வில்லை வளைத்தனர்; சரமாரி பொழிந்தனர்; செங்கதிரோனைக் கருமேகம் மறைத்தாற் போன்று முருகப்பெருமானை வளைந்தனர். அவர்கள் வெம்மையோடு விட்ட அம்புகள் எல்லாம், கட்டழகு வாய்ந்த கருணையாளன்மீது மெல்லிய பூப்போல் விழுந்தன.
அவ் வம்புகளைக் கண்ட வள்ளி மனம் நடுங்கி, "ஐயனே! இவ் வேடர்களை வேலால் அழித்திடல் வேண்டும். அரிமான் சும்மா இருந்தால் அதனை மரையும் மானும், பன்றியும் யானையும் நெருங்கிவிடுமே!” என்று சொல்லிய பொழுது, எம்பிரான் அருளால் அருகே நின்ற சேவல் ஒன்று, நிமிர்ந்து எழுந்து, கொக்கரித்தது. அவ் வொலி செவியில் விழுந்ததும், நம்பிராசனும், அவன் மைந்தரும், சுற்றத்தாரும் மடிந்து மாண்டு மண்மேல் விழுந்தனர்.
விழுமிய சோலையில் விழுந்துபட்ட வேடர்மீது கருணை கொண்டார், முருகவேள், வள்ளி நாயகியை நோக்கி, "நம்மைப் பகைத்துப் போர் புரிந்து இறந்த உன் சுற்றத்தையெல்லாம் எழுப்புக” என்று அருளிச்செய்தார். அதற்கு இசைந்து, நங்கை, நாயகனை வணங்கி, "உயிரிழந்த நம் கிளைஞர் எல்லாம் எழுக" என்று அருளினாள். அந்நிலையில் உறங்கி எழுந்தவர் போல் நம்பியும் பிறரும் எழுந்தார்கள்.
அன்னவர் கண்ணெதிரே, முருகப் பெருமான், கருணை பொழியும் ஆறுமுகங்களோடும், பன்னிரு கரங்களோடும், வேல் முதலிய பன்னிரு படைகளோடும் தோன்றினார். அக் காட்சியைக் கண்டார், வேடர், ஆச்சரியமடைந்தார்; அடியில் விழுந்தார்; எழுந்தார்; போற்றினார்; "ஐயனே! வலிமை சான்ற வேடர் சேரியைக் காத்தருளும் மெய்யனே! எங்கள் குலக் கொடியைக் களவு முறையிலே கவர்ந்தீர்! குலத்தின் வரம்பினை அழித்தீர்! தீராத வசையைத் தந்தீர்! தாயே பிள்ளைக்கு நஞ்சை ஊட்டினால் தடுப்பவர் யார்? அத்தனே? போனது போகட்டும். ஆசையால் எங்கள் பெண்ணை இங்கே கொண்டுவந்தீர். இனி எங்கள் சிற்றூருக்கு எழுந்தருளி, அங்கி சாட்சியாக இவளை மணந்து உமது ஊருக்குச் செல்ல வேண்டும்” என்றார்.
மாமனாகிய நம்பிராசன் சொல்லியவாறே மணம் செய்து கொள்ள இசைந்தார், முருகவேள்; உடனே வள்ளி நாயகியை அழைத்துக்கொண்டு நாரத முனிவரோடு நடந்து, வேடர் சேரியை அடைந்தார். மாமனார் மனையில் அமர்ந்தவுடன், அருகேயிருந்த மங்கையை முருகன் அருள் கூர்ந்து நோக்கினார். அப்போது குறக் கோலம் நீங்கிற்று; தெய்வக் கோலம் வந்துற்றது. நல்ல முகூர்த்தத்தில் நம்பிராசன் கந்தவேள் திருக்கரத்தில் கன்னியின் கரத்தை வைத்து, "எங்கள் மாதவத்தால் வந்த இம் மங்கையை அன்புடன் தந்தேன்; கொள்க’ என்று தண்ணீரால் தாரை வர்த்தான்.
திருமணம் நிகழும் வேளையில் திருமாலும், பிரமனும், இந்திரன் முதலிய வானவரும் சூழ்ந்து நிற்க, தேவதேவனாகிய சிவபெருமான் உமா தேவியாரோடு வானிலே நின்று திருக்கண் சாத்தினார்; அருள் புரிந்தார். திருமால் முதலிய தேவர்கள் பேரானந்தமுற்று, நறுமலர் தூவி, முருகப்பெருமானை வணங்கித் துதித்து ஆரவளித்தனர். அப்போது ஆறுமுகக் கடவுள் எழுந்தார்; நம்பிராசனை நோக்கி, "வள்ளியோடு நாம் செருத்தணி மலையில் இருக்க விரும்புகின்றோம்” என்றார். 'நல்லது' என்று நம்பியும் இசைந்தான்.
செருத்தணி மலையை வந்து சேர்ந்தபோது, வள்ளியம்மை கந்தவேள் அடி பணிந்து, "ஐயனே! இந்த மலையின் தன்மையைச் செல்ல வேண்டும்" என்று விண்ணப்பம் செய்தாள். அவள் வேண்டுகோளுக்கு அன்புடன் இசைந்து, "மாதே! திருத்தணிகை என்னும் பெயருடைய இக்குன்றம், நம்மால் செருத்தணி என்ற மங்கலப் பெயர் பெற்றது. செருக்களத்தில் சூரன் செய்த போரும், வள்ளி மலையில் வேடர் செய்த போரும் விளைத்த சீற்றம் தணிந்து இங்கு நாம் வந்திருத்தலால் இது செருத்தணி யாயிற்று. மந்தரம் என்னும் மலையும் மேரு மாமலையும் இருப்பினும், கயிலாய மலையைச் சிவபெருமான் விரும்பியவாறே, இவ்வுலகில் அழகிய மலைகள் பல இருப்பினும் எமக்கு இந்த மலையிலே தனி விருப்பம் உண்டு. இதனைத் தொழுபவர் பாவம் தீர்வர்; பண்புறுவர். மனத்திலே அன்பு கொண்டு இம் மலையை வந்து அடைந்து, முகப்பிலுள்ள சுனையிலே முறைப்படி நீராடி, நம்மை வழிபடும் அடியார் என்றும் நம் பதத்தில் வாழ்வார்” என்றார், முருகவேள்.
ஒரு நாள், திருத்தணிகை மலையினின்றும் புறப்பட்டு, முருகவேளும் வள்ளி நாயகியும் விமானத்திலேறி, வெள்ளியங் கிரியின் அருகே யமைந்த கந்த மாமலையில் சென்று சேர்ந்தார்கள். விமானத்தை விட்டிறங்கி, இருவரும் அழகிய பொற்கோயிலின் உள்ளே புகுந்து, இந்திரன் புதல்வியாகிய தேவயானை இனிதுறையும் ஆலயத்தையும் அடைந்தார்கள். அப்போது வள்ளி நாயகி தேவயானை யம்மையின் திருவடிகளை வணங்கினான். உடனே அவள் எழுந்து, வள்ளியை எடுத்து அணைத்து, "இங்குத் தனியளாக இருந்த எனக்கு, நீ ஒரு தோழியாக வந்து சேர்ந்தது நன்று” என அன்போடு கூறினாள். பாற்கடற் பள்ளியில் திருமகளும் நிலமகளும் இருபுறமிருக்க, மாயவன் இனிதிலங்கும் பான்மைபோல், தேவயானையும் வள்ளியும் இருபுற மிருக்க, அரியாசனத்தில் முருகப் பெருமான் எழுந்தருளினார். வானவர் கோன் பெற்ற மாதும், வேடர்கோன் வளர்த்த மாதும் சிறிதும் வேற்றுமை யின்றி, அன்புடன் அளவளாவி, உள்ளமும் உயிரும், சிறப்பும் செய்கையும் ஒன்றாகி, மலரும் மணமும்போற் கலந்து
வாழ்ந்தார்கள்.
"வீரவேல் தாரைவேல் விண்னேர் சிறைமீட்ட
தீரவேல் செவ்வேள் திருக்கைவேல் - வாரி
குளித்தவேல் கொற்றவேல் சூர்மார்பும் குன்றும்
துளைத்தவேல் உண்டே துணை!”
-------------
This file was last updated on 17 August 2018.
Feel free to send the corrections to the webmaster.