திரிசரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள்
சரித்திரம் - பாகம் 1.1
உ.வே.சாமிநாதைய ஐயர் எழுதியது
mInATci cuntaram piLLai carittiram, part 1.1
by u.vE cAminAta aiyar
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Tamil Virtual Academy for providing a scanned
image (PDF) version of this work for the etext preparation. The etext has been
prepared using Google OCR Online Tool and subsequent proof-reading.
We thank Ms. Karthika Mukunth for her help in proof-reading this etext.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2018.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
திருவாவடுதுறை யாதீனத்து மகாவித்துவான்
திரிசரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்- பாகம் 1.1
உ.வே.சாமிநாதைய ஐயர் எழுதியது
Source:
திருவாவடுதுறை யாதீனத்து மகாவித்துவான்
திரிசரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்.
முதற்பாகம்
இது மேற்படி பிள்ளையவர்கள் மாணாக்கர் மகாமகோபாத்தியாய
தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ.வே.சாமிநாதையரால் எழுதப்பெற்று,
சென்னபட்டணம்: கேஸரி அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பெற்றது.
ஸ்ரீமுகளும் கார்த்திகை மீ, 1933
© Copyright Registered. (விலை ரூபா 2-0-0.)
--------------
கணபதி துணை
உள்ளடக்கம்
முகவுரை
1. முன்னோரும் தந்தையாரும்
2. இளமைப் பருவமும் கல்வியும்
3. திரிசிரபுர வாழ்க்கை
4. பிரபந்தங்கள் செய்யத் தொடக்கம்
5. திருவாவடுதுறை வந்தது
6. திருப்பைஞ்ஞீலித் திரிபந்தாதி முதலியவற்றை இயற்றியது
7. சென்னைக்கு சென்று வருதல்
8. கல்வியாற்றலும் செல்வர் போற்றலும்
9. அம்பலவாண முனிவரிடம் பாடங்கேட்டல்
10. பெரியபுராணப் பிரசங்கமும் பாடஞ் சொல்லுதலும்
11. சில பிரபந்தங்களும் தியாகராச லீலையும் இயற்றல்
12. சிவதருமோத்திரச் சுவடி பெற்ற வரலாறு
13. பங்களூர் யாத்திரை
14. உறையூர்ப்புராண அரங்கேற்றமும் பல பிரபந்தங்களை இயற்றலும்
15. இலக்கண விளக்கம் பாடங்கேட்டது
16. சில மாணவர்கள் வரலாறு
17. இரண்டாவதுமுறை சென்னைக்குச் சென்றது
18. சீகாழிக்கோவை இயற்றி அரங்கேற்றல்
19. மாயூர வாசம்
20. திருவாவடுதுறையாதீன வித்துவான் ஆகியது
21. பல நூல்கள் இயற்றல்
22. ரங்கசாமி பிள்ளையைத் திருவாவடுதுறை மடத்திற்கு வரச்செய்தது
23. கும்பகோண நிகழ்ச்சிகள்
24. புராணங்களும் பிரபந்தங்களும் இயற்றல்
முகவுரை.
திருத்தாண்டகம்.
திருச்சிற்றம்பலம்.
''ஒருமணியை யுலகுக்கோ ருறுதி தன்னை
உதயத்தி னுச்சியை யுருமா னானைப்
பருமணியைப் பாலோடஞ் சாடி னானைப்
பவித்திரனைப் பசுபதியைப் பவளக் குன்றைத்
திருமணியைத் தித்திப்பைத் தேன தாகித்
தீங்கரும்பி னின்சுவையைத் திகழுஞ் சோதி
அருமணியை யாவடுதண் டுறையுண் மேய
அரனடியே யடிநாயே னடைந்துய்ந் தேனே.''
திருச்சிற்றம்பலம்.
தமிழ் நூல்களை நன்றாகப் பயின்றும் வேறு பாஷைகளில் உள்ள நூற்கருத்துக்களை
அறிந்தும் அவற்றின்பாலுள்ள பலவகைச் சுவைகளையும் நுகர்ந்து பிறரும் நுகரவேண்டுமென்னும் அவாவினால் பலவகை நூல்களையும் உரை முதலியவற்றையும் இயற்றியும் பாடஞ்சொல்லியும் பேருதவி புரிந்த தமிழ்ப்புலவர்கள் பலர் பல்லாயிர வருஷங்களாக இத்தமிழ்நாட்டில் விளங்கி வந்து தங்கள் தங்கள் புகழை நிலைநாட்டி இருக்கின்றனர். தோலா நாவின் மேலோராகிய அவர்களுடைய கைம்மாறில்லாத பேருதவியினால் தமிழ்மொழி அடைந்த பெருமையும் தமிழரசர்களும் தமிழ்நாட்டினரும் பெற்ற பயனும் அளவில் அடங்குவனவல்ல.
பலர் ஒருங்கு கூடியும் தனித்தனியே இருந்தும் அரசர்களாலும் பிரபுக்களாலும் ஆதரிக்கப்பட்டும் செல்வத்திற் சிறந்தும் வறுமையில் வாடியும் இன்பத்தில் இருந்தும் துன்பத்தில் துளைந்தும் தமிழை மறவாமல், "இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர், விருந்தமிழ்த மென்றாலும் வேண்டேன்” என்ற வீரத்துடன் விளங்கிய புலவர்களின் பெயர்கள் பல தெரிய வருகின்றன. இக்காலத்தில் பல துறைகளிலும் உழைத்து ஆராய்ச்சி செய்து பயனடைவோர்களுக்கெல்லாம் அந்தப்புலவர்கள் இயற்றி வைத்துள்ள நூல்களே முக்கிய சாதனங்களாக உள்ளன.
ஆயினும், அவர்களுள்ளே பல புலவர்களின் உண்மை வரலாறுகளை நன்றாகத் தெரிந்துகொள்ள முடியவில்லை. சிலருடைய வரலாற்றிற் சிலசில பகுதிகள் மட்டும் ஒருவாறு தெரிகின்றன. அவர்களை மிகச் சிறந்தவர்களாக எண்ணிப் பாராட்டி வருகின் றோம். அவர்களுக்கு முன்பு இருந்து விளங்கி அவர்களுடைய அறிவைப் பண்படுத்திய நூல்களை இயற்றிய புலவர்களின் நிலைகள் இன்னும் பல மடங்கு உயர்ந்தனவாக இருக்க வேண்டுமென்பதை நினைக்கும்பொழுது அவற்றையெல்லாம் அறிய முடியவில்லையே என்ற வருத்தம் அடிக்கடி உண்டாகிறது.
தமிழ்ப்புலவர்களின் வரலாறுகள் தமிழகத்தில் ஒரு வரையறையின்றி வழங்குகின்றன. கர்ணபரம்பரைச் செய்திகள் முழுவதையும் நம்ப முடியவில்லை. எந்தப்புலவர்பாலும் தெய்வீக அம்சத்தை ஏற்றிப்புகழும் நம் நாட்டினரில் ஒரு சாரார் புலவர்களைப்பற்றிக் கூறும் செய்திகளிற் சில நடந்தனவாகத் தோற்றவில்லை. அங்ஙனம் கூறுபவர்கள் அப்புலவர்களுக்கு மிக்க பெருமையை உண்டாக்க வேண்டுமென்பதொன்றனை மட்டும் கருதுகிறார்களேயல்லாமல் நடந்த விஷயங்களை நடந்தபடியே சொல்லுவதை விரும்புவதில்லை. கம்பர் முதலிய சில புலவர்களை வரகவிகளென்றும் கல்லாமலே பாடிவிட்டனரென்றும் ஸரஸ்வதிதேவியின் திருவருளால் அங்ஙனமாயினரென்றும் கூறுவதுதான் பெருமையெனவும், அவர்கள் பழம்பிறப்பிற் செய்த புண்ணியத்தாலும் திருவருளாலும் கிடைத்த நல்லறிவைத் துணைக்கொண்டு பல நூல்களைப் பயின்று செயற்கையறிவும் வாய்க்கப்பெற்று நூல் முதலியன இயற்றினார்களென்பது சிறுமையெனவும் சிலர் எண்ணுகின்றார்கள். மிகவும் புகழ்பெற்ற ஒரு புலவர் செய்தனவாகத் தெரிவித்தால் அவற்றிற்கு மதிப்புண்டாகுமென்று தாமாகவே கருதி அவருடைய தலையில் பிழைமலிந்த நூல்களையும் உரைகளையும் தனிப்பாடல்களையும் ஏற்றி விடுகின்றனர்; சரித்திரங்களையும், அவற்றிற்கு ஏற்ப அமைத்துவிடுகின்றனர். ஒருவருடைய வரலாறும் அவர் செய்த நூல் முதலியனவும் வேறொருவருடைய வரலாறாகவும் வேறொருவர் செய்தனவாகவும் வழங்குகின்றன. தங்கள் தங்கள் அபிமானம் காரணமாக புலவர்களின் சாதி, மதம், தொழில், ஊர் முதலியவற்றை மாறுபாடாகக் கூறி அவற்றிற்கு உரியவற்றைக் கற்பித்தவர்களும் உண்டு. ஆண்பாலாரைப் பெண்பாலாராகவும் பெண்பாலாரை ஆண்பாலாராகவும் மயங்கிக் கூறுவதும் ஒருகாலத்தில் இருந்தவரை வேறொரு காலத்தவராகக் கூறுவதும் பிறவுமாகிய தடுமாற்றங்கள் புலவர் வரலாறுகளில் மலிந்திருக்கின்றன. மிகவும் சமீபகாலத்தில் இருந்த புலவர்களுடைய வரலாறுகளிற்கூட இத்தகைய செய்திகள் இருக்கின்றன.
பண்டைக்காலத்தில் முறையாகப் பாடஞ்சொல்லிவந்த வித்துவான்கள் நூலாசிரியர்களுடைய வரலாற்றை மாணாக்கர்களுக்கு முதலிற் சொல்லிவிட்டு அப்பால் நூலை அறிவுறுத்தி வந்தனர்; அதனால்தான் புலவர்களுடைய சரித்திரத்தை எழுதிவைக்கும் வழக்கம் இலதாயிற்றென்று தோற்றுகின்றது. இங்ஙனம் அவ்வரலாறுகள் வழிவழியே வழங்கிவந்தன. முறையாகப் பாடஞ் சொல்லுதலும் கேட்டலும் தவறிய பிற்காலத்தில் ஆசிரியர் வரலாறுகள் பலபடியாக வழங்கத் தலைப்பட்டன. ஒரு புலவர்பால் பாடங்கேட்டவரேனும் பழகினவரேனும் அவருடைய பரம்பரையினரேனும் அவரது சரித்திரத்தை எழுதிவைப்பது தமிழ்நாட்டில் இல்லாமற்போயிற்று. இஃது ஒரு பெருங்குறையே.
தமிழ்ப்புலவர் சரித்திரங்கள் இங்ஙனம் இருத்தலை எண்ணிய பொழுது சங்ககாலம் முதல் சமீபகாலம் வரையில் இருந்து விளங்கிய வித்துவான்களைப்பற்றி ஆராய்ந்து தெரிந்தவற்றைத் தொகுத்து எழுதவேண்டுமென்னும் அவா எனக்கு உண்டாயிற்று. ஆதலின் நூல்களை ஆராயும் பொழுதெல்லாம் ஆசிரியர்கள் வரலாற்றைப் பற்றித் தெரியவந்தனவற்றையெல்லாம் குறித்துக்கொள்ளும் வழக்கத்தை மேற்கொண்டேன். வெளியூர்களுக்கு யாத்திரையாகச் சென்றபோது கிடைத்த சிலருடைய வரலாறுகளையும் குறித்துவைத்துக் கொண்டேன். தக்க உதவியும் திருவருளும் இருக்குமாயின் அவற்றை முறையே வெளியிடும் விருப்பம் உண்டு. நிற்க.
எனக்குத் தமிழை அறிவுறுத்தி அதன்பாலுள்ள பலவகை நயங்களையும் எடுத்துக்காட்டி மகோபகாரம் செய்த ஆசிரியராகிய திருவாவடுதுறை யாதீனத்து மகாவித்துவான் திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களைப் பற்றி நான் கண்டும் கேட்டும் அறிந்தவைகளிற் சிலவற்றை நண்பர்களிடம் பேசும்பொழுதும் வேறு சில காலங்களிலும் சொல்லி வந்ததன்றி, நான் ஆராய்ச்சி செய்து பதிப்பித்த சில நூல்களின் முகவுரைகளிலும் தொடர்புடைய சில சரித்திரப்பகுதிகளை எழுதியிருப்பதுண்டு. அவற்றையெல்லாம் அறிந்த தமிழன்பர்கள் பலர் பிள்ளையவர்களுடைய சரித்திரம் முழுவதையும் எழுதி வெளியிட வேண்டுமென்று விரும்பினர்; நேரிற் பழகிப் பாடங்கேட்டும் பிறர்பால் அறிந்தும் நூல்களை ஆராய்ந்தும் பிள்ளையவர்களைப்பற்றி நான் அறிந்தவற்றை எழுதினால் இக்கவிஞர் பெருமானுடைய ஆற்றலை யாவரும் ஒருவாறு அறிந்து கொள்வார்களென்றும் வற்புறுத்தினர். அதனாலும் பிள்ளையவர்கள் திறத்தில் நான் செய்யத்தக்க பணி இதனினும் சிறந்ததொன்றில்லை யென்னும் எண்ணத்தினாலும் சற்றேறக்குறைய 45 வருஷங்களுக்கு முன்பு இந்த முயற்சியைச் செய்யத் தொடங்கினேன்.
'செய்வன திருந்தச்செய்' என்பது அமுத வாக்காதலின் தொடங்கிய முயற்சியை இயன்றவரையில் ஒழுங்காக நிறைவேற்ற வேண்டுமென்னும் அவாவினால், நான் அறிந்தனபோக வேறு செய்திகள் கிடைக்கலாமென எண்ணி, பிள்ளையவர்களோடு பழகிய பலர்பாற் சென்று சென்று விசாரித்தேன்; இவருடைய கடிதங்கள், தனிப்பாடல்கள், நூல்கள் முதலியன கிடைக்குமென்று அறிந்த இடங்களுக்கெல்லாம் சென்று சென்று தேடினேன்; நான் பார்த்துவந்த வேலைக்கும் நூலாராய்ச்சிகளுக்கும் இடையூறு வாராமல், ஒழிந்த காலங்களிலெல்லாம் பலவகையாக முயன்று செய்திகளைத் தொகுத்து வந்தேன். பிள்ளையவர்கள் பால் நான் பாடங்கேட்ட காலத்திலேனும் அதன் பின்பு திருவாவடுதுறை மடத்தில் நான் இருந்த காலத்திலேனும் இவருடைய இளம்பிராய முதற்கொண்டு பழகிய தியாகராச செட்டியார், சோடசாவ தானம் சுப்பராயசெட்டியார் முதலிய பெரியோர்கள் இருந்த காலத்திலேனும் இந்த முயற்சியை மேற்கொண்டிருப்பேனாயின் இன்னும் எவ்வளவோ அரிய செய்திகளும் செய்யுட்கள் முதலியனவும் கிடைத்திருக்கும்.
இக்கவிஞர் சிகாமணியோடு நெருங்கிப்பழகி இவருடைய பல வகை ஆற்றல்களையும் நேரிற்கண்டு இன்புற்றவர்களுள் ஒருவரேனும் இவருடைய சரித்திரத்தை எழுத முயன்றதில்லை. சீவக சிந்தாமணிப் பதிப்பில் திருத்தக்கதேவர் வரலாற்றை நான் எழுதிச் சேர்த்ததைக்கண்ட சோடசாவதானம் சுப்பராய செட்டியார், "ஐயா அவர்களுடைய சரித்திரத்தை எழுதினால் நலமாயிருக்கும்'' என்று சொன்னார்.
இப்புலவர்பெருமான்பாற் பாடங்கேட்டபொழுது இவர் மூலமாகவும் வேறு வகையாகவும் நான் அறிந்த செய்திகளையும் விசாரித்துத் தெரிந்து கொண்டவற்றையும் துணைக்கொண்டு, தொடங்கிய இம்முயற்சியை ஒருவாறு நிறைவேற்றலாமென்னும் எண்ணத்தால் அவ்வப்பொழுது குறிப்புக்களை எழுதித் தொகுத்து வந்தேன். 1900- ஆம் வருஷம் அக்டோபர் மாதம் 8-ஆம் தேதி வெளிவந்த சுதேசமித்திரனில், இச்சரித்திரத்தை நான் எழுதத் தொடங்கியிருப்பதையும் தமிழ்நாட்டினர் தங்கள் தங்களுக்குத் தெரிந்தவற்றை அறிவிக்க வேண்டுமென்பதையும் குறித்து ஒரு விரிவான வேண்டுகோளை வெளியிட்டேன். அதனைப் பார்த்தபின் அன்பர்கள் பலர் பலசெய்திகளை அனுப்பக்கூடுமென நான் எதிர்பார்த்திருந்தும் சிலரே சில செய்திகளைத் தெரிவித்தனர். பிள்ளையவர்களுடைய மாணவரும் புதுச்சேரியில் இருந்தவருமாகிய செ. சவராயலு நாயகரென்பவர் தம் விஷயமாகப் பலர் பாடிய சிறப்புக்கவிகள் முதலியவற்றைத் தொகுத்து அச்சிட்ட புத்தகமொன்றை அனுப்பி ஒரு கடிதமும் எழுதினர். அது வருமாறு:-
புதுவை,
22-10-1900.
''ம-ள-ள-ஸ்ரீ வே. சாமிநாத ஐயர் அவர்கள் சமுகத்துக்கு.
''தாங்கள் திரிசிரபுரம் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை யவர்கள் சரித்திரத்தை எழுத எத்தனித்திருக்கிறதாக இம்மாதம் 8-ஆம் தேதி திங்கட்கிழமை வெளிப்பட்ட 146- நெம்பர் சுதேசமித்திரன் பத்திரிகையால் அறிந்து நான் மெத்தவுஞ் சந்துஷ்டி யடைந்தேன்.
''தியாகராச செட்டியார் என்பேரில் பாடியிருக்கும் இரட்டை மணி மாலையில் குரு வணக்கமாகக் கூறியிருக்கும் வெண்பாவை அப்பத்திரிகையில் தாங்கள் எடுத்தெழுதியிருப்பதையும் பார்த்து மகிழ்ந்தேன். ஏறக்குறைய நாற்பத்தைந்து வருஷத்திற்கு முன் நானும் மேற்படி தியாகராச செட்டியாரும் வேறு சிலரும் அந்த மகானிடத்தில் வாசித்தோம். அவருக்கு என் மட்டிலிருந்த பக்ஷத்தையும் மதிப்பையும் தாங்கள் அறியும்படிக்கும் பல சமயத்தில் அவரும் மேற்படி தியாகராச செட்டியார் வல்லூர்த் தேவராச பிள்ளை முதலியவர்களும் என் பேரில் பாடியிருக்கும் பாடல்களைத் தாங்கள் காணும்படிக்கும் நான் 1869 - இல் அச்சிட்டிருக்கும் பாடற்றிரட்டு என்னும் ஓர் புத்தகத்தை இன்று தங்களுக்கு இனாமாகத் தபால் மார்க்கமாக அனுப்பியிருக்கிறேன்.
“இப் புத்தகத்திற் பற்பல இடத்தில் பிள்ளையவர்கள் பெயர் இருப்பதால் ஆங்காங்குக் குறிப்பிட்டிருக்கிறேன். ஆகையால் முதல் ஏடு தொடங்கிக் கடைசி ஏடு வரையில் பார்வையிடும்படி தங்களைக் கோருகிறேன். இதனால் அவருடைய மாணாக்கர்களில் அநேகரைத் தாங்கள் தெரிந்து கொள்ளவும் கூடும்.
''தாங்கள் எழுதும் அவர் சரித்திரத்தில் நான் அவர் பேரில் பாடியிருக்கும் பாடல்களையும் பல சமயத்தில் அவருக்கு நான் செய்த தோத்திரங்களையும் அவர் என் பேரில் கூறியிருக்கும் தமிழ்மாலை முதலிய பற்பல பாடல்களையும் நன்றாக எடுத்துக் காண்பிக்கும்படி தங்களை நிரம்பவும் பிரார்த்திக்கின்றேன்.
''வேதநாயக விற்பன்னர் சரித்திரம் என்று அச்சிடப்பட்டிருக்கும் ஓர் சிறு புத்தகத்தில் பிள்ளையவர்களுடைய நல்ல பாடல்களும் அவர் பேரில் அநேகம் பாடல்களும் இருக்கின்றன.
''மிகவுஞ் சிறந்த இந்த ஆசிரியரின் சரித்திரத்தைத் தாங்கள் எழுதி அச்சிட்டால் தங்களைப் பற்பல வித்துவான்களும் மேலோர்களும் நெடுங்காலம் வாழ்த்துவார்கள் என்பதற்குச் சந்தேகமில்லை.
''நான் முன்னதாகவே பிரியத்தோடே என் வாழ்த்துதல்களைத் தங்களுக்குக் கூறுகின்றேன்.
''தாங்கள் ஆரம்பித்த இச் சிறந்த வேலை இடையூறின்றி நிறைவேறும்படி கடவுளை மெத்தவும் பிரார்த்திக்கின்றேன்.
இங்ஙனம் :
தங்கள் அன்பை விரும்புகின்ற
- செ. சவராயலு.”
பின்பு 1902- ஆம் வருஷத்தில் பல அன்பர்கள் விரும்பியபடி கும்பகோணம் போர்ட்டர் டவுன் ஹாலில் இரண்டு நாளும் கும்பகோணம் காலேஜில் ஒருநாளுமாக மூன்று நாள் தொடர்ந்து பிள்ளையவர்களுடைய சரித்திரத்தைப் பிரசங்கம் செய்தேன். அப்பொழுது காலேஜ் பிரின்ஸிபாலாக இருந்த அன்பர் ஸ்ரீமான் ஜே. எம். ஹென்ஸ்மன் முதலியவர்கள் கேட்டு மகிழ்ந்து விரைவில் இவர் சரித்திரத்தை எழுதி அச்சிட்டு வெளியிட வேண்டுமென்று வற்புறுத்தினார்கள்.
முன்பே பிள்ளையவர்களுடைய நூல்கள் சிலவற்றைத் தியாகராச செட்டியார், சுப்பராய செட்டியார் முதலியவர்களிடமிருந்தும் வேறு சிலரிடத்திலிருந்தும் சேகரித்து வைத்திருந்ததுண்டு ; பின்பும் அவற்றை முயன்று தேடித் தொகுத்தேன். அவற்றை வெளியிட வேண்டுமென்னும் விருப்பமும் எனக்கு இருந்தது. ஆயினும், நூல்களெல்லாவற்றையும் வெளியிடுவதாயின் மிக்க பொருட் செலவும் உழைப்பும் வேண்டுமாதலின் பிள்ளையவர்களுடைய பிரபந்தங்களையேனும் தொகுத்து வெளியிடலாமென்றெண்ணினேன். எவ்வளவோ முயன்று பார்த்தும் இவருடைய [1]பிரபந்தங்களுள்ளும் சில கிடைக்கவில்லை. கிடைத்தவற்றைத் திருவருளின் துணையால் 1910- ஆம் வருஷம் மே மாதம் [2]முதன்முறை வெளியிட்டேன். அப்புத்தகத்தின் முகவுரையில், “இவர்கள் ஒவ்வொரு காலத்திற் சமயோசிதமாகப் பாடிய தனிச் செய்யுட்களை இவர்கள் சரித்திரம் எழுதும்போது சந்தர்ப்பத்தைப் புலப்படுத்தி வெளியிடக்கருதி இதிற் சேர்க்காமல் வைத்திருக்கிறேன் '' என்று இவருடைய சரித்திரத்தை வெளியிடும் எண்ணம் இருந்ததைப் புலப்படுத்தியதுண்டு.
தாம் இளமையில் இயற்றிய செய்யுட்களையும் நூல்களையும் சிறப்புடையனவாகக் கருதவில்லையாதலின் அவற்றைப் பிள்ளையவர்கள் பாதுகாத்து வைக்கவில்லை. அந்தப் பாடல்களையும் நூல்களையும் பல இடங்களில் மிகவும் முயன்று தேடியபொழுது கிடைத்தவை சிலவே.
இவரைப் பற்றி நான் கேட்டறிந்த வரலாறுகளிற் பொய்யானவையும் பல இருந்தன. அவற்றை உண்மையல்லவெனப் பலவகையால் தெரிந்துகொண்டேன்:
ஒரு சமயம் சென்னையில் என்னைச் சந்தித்த கனவானொருவர், ''நீங்கள் அச்சிட்டு வெளிப்படுத்தியுள்ள மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டில் அவர்கள் இயற்றியுள்ள திட்டகுடி அசனாம்பிகை பதிகத்தைச் சேர்க்காமல் விட்டுவிட்டீர்களே'' என்று சொன்னார். அப்போது நான், "எனக்குப் பிரதி கிடைத்திருந்தால் சேர்த்திருப்பேன்; தாங்கள் கொடுத்தால் அதனை அடுத்த பதிப்பில் உபயோகிப்பேன்'' என்று சொல்லி மறுநாட் காலையில் அவர் வீடு சென்று அதனைக் கேட்டேன்; அவர் அதனைக் கொடுத்தனர். அதைப் படித்துப் பார்த்ததில் அது வேறொருவரால் இயற்றப்பெற்றதாகத் தெரியவந்தது. அன்றியும் பிள்ளையவர்களுடைய செய்யுள் நடைக்கும் அந்நூற் செய்யுள் நடைக்கும் வேறுபாடுகள் இருந்தன. ஆனால் திட்டகுடி ஸ்வாமி விஷயமாகப் பிள்ளையவர்களால் ஒரு பதிகம் இயற்றப் பெற்றதுண்டு. அதுவே இம்மாறுபாடான செய்திக்குக் காரணமாக இருக்கலாம்.
இக்கவிஞர் பிரானிடம் நான் படிக்க வருவதற்கு முன்பும் இவரைப்பற்றிப் பல வரலாறுகளைக் கேள்வியுற்றதுண்டு. நான் குன்னம் (குன்றம்) என்னும் ஊரில் இருக்கையில் அங்கே வந்த [3]அரும்பாவூர் நாட்டாரென்னும் ஒரு கனவான், ''பிள்ளையவர்கள் நாகபட்டின புராணம் அரங்கேற்றியபோது நான் போயிருந்தேன். அப்பொழுது ஒருநாள் 'குறிப்பறிந் தீதலே கொடை' என்பதற்கு ஐம்பது வகையாகப் பொருள் கூறி ‘இன் னும் சொல்லலாம்' என்று முடித்தார்கள்'' என்று சொன்னார். நான் படிக்கவந்தபின்பு இக் கவிநாயகரிடமே அச்செய்தியைக் கூறினேன். கேட்ட இவர் சிரித்துவிட்டு, “அதுபொய்; ஒரு பாட்டுக்குப் பல பொருள் சொல்லுதல் பெருமையென்ற கருத்து சொன்னவருக்கு இருக்கலாம்'' என்று சொன்னார்.
இங்ஙனம் நான் கேட்ட பொய் வரலாறுகள் பல.
பிள்ளையவர்களுடைய வாழ்க்கை வரலாற்றுக்குரிய செய்திகளைத் தொகுத்த பிறகு, கடிதங்கள், நூற் சிறப்புப்பாயிரங்கள் முதலியவற்றோடு பொருத்திக் காலமுறை பிறழாதபடி அமைப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது. பல சாதனங்களை வைத்துக் கொண்டு ஒன்றுக்கொன்று முரண்படாதவாறு தெரிந்தவரையில் கால அடைவை வகுத்துக்கொண்டேன். எழுத எழுத அவ்வப்பொழுது நினைவுக்கு வந்தவற்றையும் சேர்க்கவேண்டியிருந்தது. ஒருவகையாகச் சரித்திரத்தை எழுதிப் பூர்த்திசெய்த பின்பும், தனிப்பாடல்கள், கடிதங்கள் முதலியன கிடைக்கலாமென்னும் எண்ணத்தால் வெளியிடாமல் வைத்திருந்தேன். சில நண்பர்கள் இச்சரித்திரத்தை விரைவில் வெளியிட வேண்டுமென்று அடிக்கடி வற்புறுத்தினார்கள். அதனால், தமிழ் நாட்டினருக்கு மீண்டும் வேண்டுகோளொன்றை 30-12-31-இல் சுதேசமித்திரன் பத்திரிகையில் வெளியிட்டேன். அவ்வேண்டுகோளுக்கு விசேஷமான விடை ஒன்றும் கிடைக்கவில்லை. இனித் தாமதிப்பதிற் பயனில்லை யென்று எண்ணி, தமிழ்த் தெய்வத்தின் திருவருளையும் என்னுடைய ஆசிரியரது பேரன்பையும் துணையாகக்கொண்டு இப்பொழுது வெளியிடலானேன்.
இதனை எழுதி வருகையிலும் பதிப்பித்து வருகையிலும் எனக்கு உண்டான மகிழ்ச்சிக்கும் ஊக்கத்துக்கும் அளவில்லை; இத்தகைய கவிஞர்பிரானைப்பற்றி எழுதும் பேறு கிடைத்ததை எண்ணி எண்ணி இன்புறுகின்றேன்.
இவர் 1815 முதல் 1876 வரையில் 61-வருஷங்கள் வாழ்ந்திருந்தனர். அக்கால முழுவதும் நிகழ்ந்தவற்றையெல்லாம் ஒரே புத்தகமாக வெளியிடலாமென எண்ணிப் பதிப்பிக்கத் தொடங்கினேன். அங்ஙனம் செய்வதால் புத்தகம் மிகப் பெரிதாகுமென்று அறிந்து பிள்ளையவர்களிடம் நான் பாடங்கேட்கத் தொடங்கியதற்கு முன்புள்ளவற்றை முதற் பாகமாகவும், பின்புள்ள நிகழ்ச்சிகளை இரண்டாம் பாகமாகவும் அமைத்துக் கொண்டேன். அவற்றுள் இது முதற்பாகமாகும்; இரண்டாம் பாகம் இன்னும் சில வாரங்களில் வெளிவரும்.
இச்சரித்திரத்தில் சிலருடைய பெயர்கள் முதலியவை அவை வழங்கியபடியே உபயோகிக்கப் பட்டுள்ளன. சமீப காலத்து நிகழ்ச்சிகளாதலின் சில வரலாறுகளிற் சிலருடைய பெயர்களைச் சில காரணம் பற்றி எழுதவில்லை. பிள்ளையவர்களைக் குறிப்பிடும்பொழுது பலவிடங்களில் ‘இவர்’ என்றே எழுதி வந்திருக்கிறேன். இவருடைய நூல்களில் ஏதேனும் ஒன்றை எடுத்து ஆராய்ந்து எழுதுவதானால் அவ்வாராய்ச்சியே மிக விரியுமாதலின், நூல்களைப்பற்றிய செய்திகள் வரும் இடங்களில் சிலவற்றிற்குச் சிறிய ஆராய்ச்சி எழுதிச் சேர்த்தும் பெரும்பாலனவற்றிலிருந்து சில செய்யுட்களை மட்டும் எடுத்துக்காட்டியும், இன்றியமையாதவற்றிற்குச் சுருக்கமாகக் குறிப்புரை எழுதியும் இருக்கிறேன். இச் சரித்திரத்திற் கூறப்பட்ட சிலரைப்பற்றி எனக்குத் தெரிந்தவற்றுள் உரிய இடங்களிற் குறிப்பிட்டவை போக எஞ்சியவற்றைச் சுருக்கமாக எழுதிப் பின்னே ‘சிறப்புப் பெயர் முதலியவற்றின் அகராதி' என்னும் பகுதியில் சேர்த்திருக்கிறேன்.
உரிய இடங்களி எழுதாமல் விடுபட்ட செய்திகள், கடிதங்கள், தனிப் பாடல்கள் முதலியன இரண்டாம் பாகத்தின் இறுதியில் அனுபந்தமாகச் சேர்க்கப்பட்டிருக்கின்றன.
இச்சரித்திரத் தலைவர் பலவகையான சிறப்பை உடையவர்; ஆசுகவி முதலிய நால்வகைக் கவிஞராகவும், நூலாசிரியர், உரையாசிரியர், போதகாசிரியர் என்னும் மூவகை ஆசிரியராகவும், வித்தியா வீரராகவும் இருந்தனர். இந்தச் சரித்திரத்தால் இவர் பாடஞ்சொல்லுதலையே விரதமாக உடையவரென்பதும், மாணாக்கர்கள்பால் தாயினும் அன்புடையவரென்பதும், வடமொழி வித்துவான்களிடத்தில் மிக்க மதிப்புடையவரென்பதும், யாவரிடத்தும் எளியராகப் பழகும் இயல்புடையவரென்பதும், பொருளை மதியாமல் கல்வி அறிவையே மதிக்கும் கொள்கையுடையவரென்பதும், பரோபகாரகுணம் மிகுதியாக வாய்ந்தவரென்பதும், செய்ந்நன்றி மறவாதவரென்பதும், திருவாவடுதுறை, தருமபுரம், மதுரை, குன்றக்குடி, திருப்பனந்தாள் முதலிய இடங்களிலுள்ள மடங்களில் சிறந்த மதிப்புப் பெற்றவரென்பதும், அக்காலத்தில் ஜனங்கள் படித்தவர்களையும் வித்துவான்களையும் அவமதியாமல் அவர்கள் பால் விசேஷ அன்பையும் ஆதரவையும் செலுத்தி வந்தார்களென்பதும், பிறவும் வெளிப்படும். இவர் காலத்திற்குப் பின்பு இவரைப் போன்றவர்களைக் காணுதல் மிக அரிதாக இருக்கின்றது.
இவர் காலத்தில் படம் எடுக்கும் கருவிகள் இருந்தும் இவரோடு பழகியவர்களுள் ஒருவரேனும் இவருடைய படத்தை எடுத்து வைக்க முயலாதது வருத்தத்தை விளைவிக்கிறது. என்னுடைய மனத்தில் இவருடைய வடிவம் இருந்து அவ்வப்பொழுது ஊக்கம் அளித்து வருகிறது; ஆயினும் பிறருக்கு அதனைக் காட்டும் ஆற்றல் இல்லாமைக்கு என் செய்வேன்! இக்கவிச் சக்கரவர்த்தியினுடைய பூதஉடம்பின் படம் இல்லையே என்னும் வருத்தம் இருந்தாலும் இவருடைய புகழுடம்பின் படமாக நூல்களும் செய்யுட்கள் முதலியனவும் இருக்கின்றனவென்றெண்ணி ஒரு வகையாக ஆறுதல் அடைகின்றேன்.
திரிசிரபுரம் மலைக்கோட்டையின் தெற்கு வீதியில் இவருக்குச் சொந்தமாக இருந்த வீடு இவர் குடும்பத்தில் உண்டான பொருள் முட்டுப்பாட்டினால் இவருக்குப் பிற்காலத்தில் இவருடைய குமாரராகிய சிதம்பரம் பிள்ளையினால் விற்கப்பட்டுப் போயிற்று. இக்கவிஞர் கோமானுடைய பெருமையை அறிந்துள்ள திரிசிரபுரவாசிகள் பலர் அந்த இடத்தை மீட்டும் பெற்று இவர் பெயராலே ஒரு ஸ்தாபனம் அமைக்கவேண்டுமென எண்ணியிருக்கிறார்கள். உண்மைத் தமிழபிமானிகளாகிய அவர்களுடைய எண்ணம் ஸ்ரீ தாயுமானவர் திருவருளால் நிறைவேறுமென்று நம்புகிறேன்.
இந்த வருஷத்தில் இச்சரித்திரத்தை நான் எழுதிவரும் காலத்தில் திரிசிரபுரத்திலும் தஞ்சையிலும் உள்ள சில அன்பர்கள் இப்புலவர் சிகாமணியினுடைய பிறந்த நாட்கொண்டாட்டமாகிய பெருமங்கல விழாவைச் சிறப்பாக நடத்த வேண்டுமென்று சில மாதங்களுக்கு முன்பு எனக்குத் தெரிவித்தார்கள். அவர்கள் தெரிவித்தபடி கொண்டாட வேண்டிய பிறந்தநாள் வருகிற பங்குனி மாதத்தில் வருவதால் அதற்கு முன்னதாக இச்சரித்திரம் வெளியிடும்படி அமைந்ததைக் குறித்து மிகவும் மகிழ்ச்சியுறுகின்றேன்.
''நல்லார் குணங்க ளுரைப்பதுவும் நன்றே'' என்பதை எண்ணி இந்த மகாவித்துவானுடைய வாழ்க்கை வரலாற்றை எழுதியுள்ளேன். இதன்கண் காணப்படுவனவற்றில் மாறுபாடு தோன்றினாலும், இதிற் காணப்படாத செய்திகள், செய்யுட்கள் முதலியன தெரிந்தாலும் அவற்றை அன்பர்கள் தெரிவிப்பார்களாயின் அடுத்த பதிப்பில் அமைத்துக் கொள்வதற்கு அநுகூலமாக இருக்கும். இதன்பாலுள்ள குறைகளை நீக்கி மற்றவற்றைக் கொள்ளும் வண்ணம் அறிஞர்களை வேண்டுகின்றேன்.
இச்சரித்திரத்தை எழுதிவருங்காலத்திலும், பதிப்பித்து வருங்காலத்திலும் வேண்டிய உதவிகள் புரிந்து வந்த சென்னைக் கிறிஸ்டியன் காலேஜ் தமிழ்ப்பண்டிதர் சிரஞ்சீவி வித்துவான் வி.மு.சுப்பிரமணிய ஐயருக்கும், சென்னை, 'கலைமகள்' உதவிப் பத்திரிகாசிரியர் சிரஞ்சீவி வித்துவான் கி.வா.ஜகந்நாத ஐயருக்கும் அவர்களுடைய நல்லுழைப்பிற்கு ஏற்றபடி தமிழ்த்தெய்வம் தக்க பயனை அளிக்குமென்று கருதுகின்றேன்.
என்னுடைய வேணவாவுள் ஒன்றாகிய இந்தப் பணியை ஒருவாறு நிறைவேற்றிய ஸ்ரீ மீனாட்சிசுந்தரேசப் பெருமான் திருவருளைச் சிந்தித்து வந்திக்கின்றேன்.
(வெண்பா)
''மன்னும் அறிவுடையோர் வைகுமவைக் கண்ணெனையும்
துன்னுவித்த மீனாட்சி சுந்தரமான் - தன்னை
நினையேனென் னாது நினைப்பேனென் பேனேல்
எனையா ரிகழாதா ரீண்டு.''
(தியாகராச செட்டியார் வாக்கு)
‘தியாகராஜ விலாஸம்’
திருவேட்டீசுவரன்பேட்டை,
12-12-1933.
இங்ஙனம்
வே. சாமிநாதையர்.
---------------
[1] கிடைத்த பிரபந்தங்கள் இன்னார் இன்னாரிடமிருந்து கிடைத்தன வென்பதைப் பிள்ளையவர்கள் பிரபந்தத்திரட்டு முதற் பதிப்பின் முகவுரையில் தெரிவித்திருக்கிறேன்.
[2] இதன் இரண்டாம் பதிப்பு 1926- ஆம் வருஷம் வெளியிடப் பெற்றது. முதற் பதிப்பில் இல்லாத பிரபந்தங்கள் சில அதன்பாற் சேர்க்கப்பட்டுள்ளன.
[3] இவ்வூர் பெரும்புலியூர்த் தாலுகாவிலுள்ள து.
௳
கணபதி துணை.
திரிசிரபுரம் மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம்
பிள்ளையவர்கள் சரித்திரம் : முதற் பாகம்.
1. முன்னோரும் தந்தையாரும்.
மதுரையின் பெருமை.
“பாண்டி நாடே பழம்பதி”' என்று திருவாதவூரடிகளாற் சிறப்பிக்கப்பெற்ற பாண்டி நாட்டுள், பூலோக சிவலோகம் சிவராசதானி முதலிய திருநாமங்களைப் பெற்று விளங்குவதும், சொல்வடிவாகிய ஸ்ரீ மீனாட்சியம்மை தடாதகைப் பிராட்டியாராகியும் பொருள் வடிவாகிய ஸ்ரீ சோமசுந்தரக் கடவுள் சுந்தர பாண்டியராகியும் முருகக்கடவுள் உக்கிர பாண்டியராகியும் அரசாட்சி செய்த பெருமை மேவியதும், ஸ்ரீ சோமசுந்தரக் கடவுள் அறுபத்துநான்கு திருவிளையாடல்களை இயற்றியருளிய ஏற்றமுடையதும், தமிழைப் பலவாற்றாலும் வளர்த்து விளங்கிய பாண்டிய மன்னர்களாற் செங்கோல் செலுத்தப் பெற்றதும், "உலகமொரு துலையாத் தானோர் துலையாப், புலவர் புலக்கோலாற் மாக்க - உலகமெலாந், தான்வாட வாடாத் தகைமைத்தே தென் னவன்றன், நான்மாடக் கூட னகர் '', ''அனலும் புனலு மியலறியும்'', "யாரறிவார் தமிழருமை யென்கின் றேனென் னறிவீன மன்றோவுன் மதுரை மூதூர், நீரறியும் நெருப்பறியும்'' என்று ஆன்றோர்களால் புகழப்பட்டதும், ஸ்ரீ சோமசுந்தரக்கடவுளைத் தம்முள் ஒரு புலவராகப்பெற்ற சங்கப் புலவர்கள் பலர் புதிய பாக்களையும் புதிய உரையையும் இயற்றித் தமிழாராய்ந்த சிறப்பு வாய்ந்ததும், உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் முதலிய உரையாசிரியர்கள் விளங்கியதற்கு இடமாக உள்ளதுமாகித் திகழ்வது மதுரையம்பதியாகும்.
முன்னோர் நிலை.
அந்நகரின்கண், இப்போது ஆதிநாராயண பிள்ளை தெரு வென்று வழங்கப்படும் இடத்திற் சைவ வேளாளரும் நெய்தல் வாயிலுடையான் கோத்திரத்தினருமாகிய ஒரு குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர். அவர்கள் ஸ்ரீ சோமசுந்தரக் கடவுளின் திருக் கோயிலுக்குரிய [1]முத்திரைக் கணக்கர்களுள் மீனமுத்திரைப் பணிக்குரியவர்களாக இருந்து விளங்கினார்கள். அவர்கள் தமிழ்க் கல்வி கேள்விகளிற் சிறந்தவர்களாகவும் இருந்தார்கள் . [2] கோயிலார் வருஷந்தோறும் ஒரு தினத்தில் அப்பணிக்குரிய சிறப் பொன்றை அவர்களுக்குச் செய்விப்பது வழக்கம்.
தந்தையார்.
அக்குடும்பத்திற் பிறந்த சிதம்பரம்பிள்ளை யென்னும் ஒருவர் தம் மனைவியாராகிய அன்னத்தாச்சி என்பவருடன் இல்லறம் நடத்தி வந்தார். தம்முன்னோர்களைப் போலவே அவர் தேவார திருவாசகங்களில் அன்பும் அறிவும் பெற்றவர்; பெரியபுராணம் கம்பராமாயணம் கந்தபுராணம் திருவிளையாடற்புராணம் முதலிய பெருங் காப்பியங்களிலும் பலவகையான பிரபந்தங்களிலும் இலக்கணங்களிலும் உரை நூல்களிலும் முறையான பயிற்சியும், கற்பவர்களுக்கு அன்புடன் பாடஞ் சொல்லுந் திறமையும், விரைவாகச் செய்யுள் செய்யும் ஆற்றலும் வாய்ந்து விளங்கினர்; பரம்பரைக் கேள்வியும் உடையவர்; நற்குண நற்செய்கை அமைந்தவர்; யாவரிடத்தும் அன்புடையவர்; சிவபக்திச் செல்வம் வாய்ந்தவர்; சிவனடியாரைச் சிவனெனப் பாவித்து வழிபடுபவர்.
தம் முன்னோர்கள் மேற்கொண்டு வந்த திருக்கோயில் முத்திரைப் பணியை அவர் ஒப்புக்கொண்டு ஒழுங்காகப் பார்த்து வந்தனர்.
அப்படி இருந்து வருகையில் என்ன காரணத்தாலோ அக்காலத்திலிருந்த கோயிலதிகாரிகளுக்கும் அவருக்கும் மனவேறுபாடு உண்டாயிற்று. அதனால் அவர் அவ்வேலையை வேண்டாமென்று விட்டு விட்டுத் தம் மனைவியாரோடு மதுரையை நீங்கி வட திசையை நோக்கிச் செல்பவராய்ப் பல ஊர்களையுங்கடந்து [3] எண்ணெய்க் கிராமம் என்னும் ஊரை அடைந்தார்.
அவ்வூரார் அவருடைய நிலைமையையும், கல்வித்திறமையையும் அறிந்து அவர் இருப்பதற்குரிய இடமொன்றைக் கொடுத்து உதவியதன்றி உணவிற்குரிய பண்டங்கள் பலவற்றையும் பிறவற்றையும் அளித்து ஆதரித்து வந்தனர்.
கல்விமான்களேனும் எந்த வகையிலாவது சிறந்தவர்களேனும் ஏழை ஜனங்களேனும் தாம் இருக்கும் ஊருக்கு வந்தால் வலிந்து சென்று பார்த்தும் விசாரித்தும் அவர்களுக்கு வேண்டிய உதவிகளைக் கைம்மாறு கருதாமற் செய்தும் செய்வித்தும் வருதல் அக்காலத்தார் இயல்பு.
சிதம்பரம் பிள்ளை அவ்வூரிலேயே சில நாள் இருந்து தம்பால் வந்து கேட்பவர்களுக்குப் பிரபந்தங்களையும் காப்பியங்களையும் பாடஞ் சொல்லித் தமிழ்ச்சுவையில் அவர்கள் ஈடுபடும்படி செய்து வந்தனர். அவருடைய புலமையையும் பாடும் திறமையையும் அவர்கள் அறிந்து வியந்து அவர்பால் மேன்மேலும் அன்பு வைப்பாராயினர். யாரேனும் கொடுக்கும் [4]சமுத்தியை விரைவிற் பூர்த்தி செய்தல், தெய்வங்களைத் துதித்தல், தமக்கு உதவி செய்த ஒருவருடைய குணங்களைச் சிறப்பித்துச் சந்தர்ப்பத்திற்கேற்றபடி பாடுதல், இன்ன பொருள் அனுப்பவேண்டுமென்று யாரேனும் ஒருவருக்குச் [5]சீட்டுக்கவி விடுத்தல் என்னும் ஆற்றல்கள் அவர்பால் அமைந்திருந்தன.
அவ் வூரார் அவருடைய தெய்வ பக்தியிலும் கவித்துவ சக்தியிலும் மதிப்பும் அவர்பாற் பயபக்தியும் உடையவர்களாக இருந்தனர். அக் காலத்தில் அங்கே மழை சிறிதும் பெய்யவில்லை. அவ்வூரார், ''மழை பெய்யும்படி தேவரீர் ஒரு பாடல் பாடியருள வேண்டும்'' என்று அவரை வேண்டிக் கொண்டனர். அப்பொழுது அவர் சிவபெருமானைத் தியானித்து,
''சோகங்க ளுற்றவுயிர்த் [6]துன்பகல வேணியிடை
மேகங்க ளைத்தாங்கும் வித்தகனே - போகங்கள்
பாலித் தருளும் பரமனே கார்மழையை
ஆலித்துப் பெய்ய அருள்”
என்ற வெண்பாவைப் பாடினார். அவருக்கிருந்த நல்லூழினால் காக்கையேறப் பனம்பழம் வீழ்ந்ததென்பது போலச் சில நாட்களுள் நல்ல மழை பெய்தது. இப்படியே அவ்வூரிலும் அயலூர்களிலும் அவரால் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் சில உண்டென்பர். அவற்றால் அவ் வூரார்க்கு அவர்பால் இருந்த மதிப்பு முன்னையினும் மிகுவதாயிற்று. அவரைத் தம்மூரிலேயே நிலைத்திருக்கும்படி செய்து விடவேண்டுமென்று எண்ணி அவ்வூரார் பலர் கூடி, ''உங்களுடைய வருஷச் செலவுக்கு எவ்வளவு நெல் வேண்டும்?'' என்று அன்புடன் கேட்டனர்; அவர், "முப்பத்தாறு கலம் இருந்தாற் போதும்'' என்றார். கேட்ட அவர்கள் அதனைத் தமக்குள்ளே தொகுத்து அவர்பாற் சேர்ப்பித்தார்கள். அவர் அதனைப் பெற்று உபயோகித்துக்கொண்டு உவகையுடன் விரும்பியவர்களுக்குப் பாடஞ் சொல்லி வந்தார்.
இப்படியிருக்கையில் அவருடைய புகழ் பக்கத்து ஊர்களிலும் பரவுவதாயிற்று. அப்பொழுது அதவத்தூரென்னும் ஊரிலுள்ளார் அவரிடம் வந்து தம்முடைய ஊரில் வந்து சில காலம் இருந்து தமக்கும் தமிழ் விருந்தளிக்கவேண்டுமென்று அன்போடு அழைத்தனர். அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கிச் சிதம்பரம் பிள்ளை எண்ணெய்க் கிராமத்தாருடைய உடம்பாடு பெற்று அதவத்தூரை யடைந்து அங்குள்ளாருக்குத் தமிழ் நூல்களைப் பாடஞ் சொல்லி வந்தார். வருகையில் தமிழ் அறிவின் முதிர்ச்சியை அறிந்த எல்லோராலும் பாராட்டப்பெற்றும் வேண்டிய உதவிகள் செய்யப் பெற்றும் வந்தாராதலின் அவருடைய மனம் மிக்க ஊக்கம் பெற்றது; நிலையான பொருள் வருவாய் இல்லாவிடினும் கவலையின்றி இல்வாழ்க்கையை நடத்தலாமென்ற உறுதி அப்பொழுது அவருக்கு உண்டாயிற்று.
"யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு''
என்பது பொய்யா மொழியன்றோ?
சிதம்பரம்பிள்ளை [7]கணக்காயரானது.
அவர் பாடஞ் சொல்லும் அருமையையும் அவரால் தாம் பெற்ற ஊதியத்தையும் நினைந்து அவ்வூரார், 'இவரைக்கொண்டு நம்முடைய பிள்ளைகளையும் படிப்பித்தால் அவர்கள் தமிழ்ப் பயிற்சியையும் நல்லொழுக்கத்தையும் அடைந்து பிற்காலத்தில் நல்ல நிலைமையைப் பெற்று விளங்குவார்கள்' என்று எண்ணினர். எண்ணியவர்களுட் சிலர் கூடி அவர்பால் வந்து, ''எங்களுக்குத் தமிழ்ச் சுவையைப் புலப்படுத்தியது போலக் கணக்காயனாராக இருந்து எங்களுடைய பிள்ளைகளுக்கும் உரிய தமிழ்ப் பாடங்களைக் கற்பிக்கவேண்டும்'' என்று வேண்டிக்கொண்டார்கள். அவ்வாறே அங்கே ஒரு பள்ளிக்கூடம் வைத்து அவர் நடத்தலானார். அதனால் அவர் பெயர் சிதம்பரவாத்தியாரென்றும் வழங்கி வந்தது.
பழையகாலப் பள்ளிக்கூடங்கள்.
பண்டைக் காலத்தில் தமிழ் நாட்டில் ஊர்கள்தோறும் பள்ளிக்கூடங்கள் இருந்தன. திண்ணைப்பள்ளிக்கூடங்களென்னும் பெயரால் அவை வழங்கப் பெறும். அங்கே தமிழ் நூல்களைப் படித்து இன்புறுதற்குரிய அறிவு பெறுவதற்குக் கருவிகளாகிய நிகண்டு, நீதி நூல்கள், பிரபந்தங்கள் முதலியன கற்பிக்கப்பட்டன. கணிதத்துக்கு அடிப்படையான எண்சுவடி முதலியவற்றையும் கற்பித்தனர். அவற்றின் உதவியால் மிகச் சிறிய பின்னங்களையும் அமைத்துக் கணக்கிடும் ஆற்றல் மாணாக்கர்களுக்கு உண்டாகும். குடும்பத்துக்கு வேண்டிய வைத்திய முறைகளும், நாள் பார்த்தல், சாதகம் பார்த்தல் முதலிய சோதிட நூல் வழிகளும், ஆலய வழிபாட்டு முறை, குலாசாரங்கள் முதலியனவும், ஞாபக சக்தியை வளர்ப்பதற்குரிய பயிற்சிகளும் கற்பிக்கப்பட்டன. உபாத்தியாயர்கள் மாணவர்களுள் ஒவ்வொருவரையும் தனித்தனியே கவனித்துத் தக்க உணர்ச்சியையடையும்படி செய்தார்கள்.
வாழ்க்கைக்கு இன்றியமையாத பல விஷயங்கள் அத் திண்ணைப் பள்ளிக்கூடங்களில் கற்பிக்கப்பட்டன; ஆதலின் அவற்றிற்கு ஒரு தனிச்சிறப்பு இருந்து வந்தது. கற்பிக்கும் உபாத்தியாயர்கள் மற்ற எல்லோராலும் நன்கு மதிக்கப் பெற்றனர்; "மங்கல மாகி யின்றியமையாது, யாவரும் மகிழ்ந்து மேற்கொள மெல்கிப், பொழுதின் முகமலர் வுடையது பூவே'' என்பதைப்போல அவர்கள் இன்றியமையாதவர்களாகவும் யாவரும் மகிழ்ந்து மேற்கொள்ளும் இயல்பினர்களாகவும் இருந்து வந்தார்கள். கணக்காயர்கள் சிறந்த தமிழ்ப் புலமையும் நற்குண நல்லொழுக்கமும் வாய்ந்தவர்களாக இருந்தமையே அத்தகைய நன்மதிப்பை அவர்கள் பெறுவதற்குக் காரணமாக இருந்தது. பண்டைக் காலத்தில் மிகச் சிறந்த தமிழ்ப்புலவர்களே கணக்காயர்களாக இருந்தனரென்று தெரிகின்றது. நக்கீரர் தந்தையாராகிய மதுரைக் கணக்காயனா ரென்பவரும் கணக்காயன் தத்தன் என்னும் சங்கப்புலவரும் அத்தகையவர்களே. பிற்காலத்திலும் பல புலவர்கள் கணக்காயர்களாக இருந்தனர். எல்லப்ப நாவலரென்று வழங்கப்படும் புலவர் பெருமானுடைய பெயர் ஏட்டுச் சுவடியில் எல்லப்ப வாத்தியாரென்று காணப்படுவதால் அவரும் ஒரு கணக்காயராக இருந்திருத்தல் வேண்டுமென்று ஊகிக்கப்படுகின்றது.
சிதம்பரம் பிள்ளைக்கு உயர்ந்த மதிப்பு இருந்து வந்ததற்கு முதற் காரணம் அவர் கணக்காயராக இருந்து பாடஞ் சொல்லி வந்தமையே யாகும். தாம் அறிந்த பலவற்றையும் மாணாக்கர்களுக்குச் சொல்லிப் பயன்படச்செய்யும் காலம் வாய்த்தது ஸ்ரீ மீனாட்சி சுந்தரேசர் பெருங்கருணையேயென்றெண்ணி அவர் மகிழ்ந்தனர்.
அப்படியிருக்கையில் ஒவ்வோர் ஆண்டிலும் தவறாமல் மதுரைக்குச் சென்று ஸ்ரீ மீனாட்சியம்மையையும் ஸ்ரீ சோமசுந்தரக் கடவுளையும் தரிசித்துக்கொண்டு வருதல் சிதம்பரம்பிள்ளைக்கு நியமமாக இருந்தது. அவர் திருவிளையாடற் புராணத்தை அன்புடன் படித்து மனம் உருகுவார்; விரும்புவோர்க்குப் பொருளும் சொல்லுவார். இவை அவருக்குப் பெரும்பான்மையான வழக்கங்களாக இருந்தன.
---------------
[1] இம் முத்திரைகள் ஐந்து வகையென் றும் மூன்று வகையென்றும் கூறப்படும்.
[2] இச் செய்தியைச் சொன்னவர்கள் இச்சரித்திரத் தலைவர்களே.
[3] இவ்வூர் திரிசிரபுரத்திற்கு மேற்கே காவிரியின் தென்பாலுள்ளது; எண்ணெய் மாகாணமென்றும் வழங்கும்.
[4] சமஸ்யை. சமஸ்யையை முடித்துப் பாடுவதிற் பேர் பெற்றவர்கள் காளமேகப் புலவர் முதலியோர்.
[5] இது பழைய நூல்களில் ஓலைத் தூக்கு, ஓலைப் பாசுரம், திருமுகப் பாசுரம் எனவும் வழங்கப்பெறும். இவ் வகையான கவிகளை இயற்றுதலிற் பிற்காலத்திற் புகழ் பெற்றவர் அந்தகக் கவி வீரராகவ முதலியார் முதலியோர்.
[6] துன்பகலும்படி கார் பெய்ய அருளென இயைக்க.
[7] கணக்காயர் - உபாத்தியாயர்.
2. இளமைப் பருவமும் கல்வியும்.
பிள்ளையவர்கள் ஜனனம்.
சிதம்பரம்பிள்ளை இங்ஙனம் இருந்து வருகையில், தமிழ்நாடு செய்த பெருந்தவத்தால் பவ வருஷம் பங்குனி 26-ஆம் தேதி (6-4-1815) அபரபட்சம் துவாதசியும் பூரட்டாதி நட்சத்திரமும் குருவாரமும் கூடிய சுபதினத்தில் இரவு இருப்பதே முக்கால் நாழிகையளவில் மகரலக்கினத்தில் அவருக்கு ஒரு புண்ணிய குமாரர் அவதரித்தார். இக்குழந்தை பிறந்த வேளையிலிருந்த கிரக நிலைகளை அறிந்து 'இந்தக் குமாரன் சிறந்த கல்விமானாக விளங்குவான்' என்றும், ' இவனால் தமிழ்நாட்டிற்குப் பெரும்பயன் விளையும்' என்றும் சோதிட நூல் வல்லவர்கள் உணர்த்த, மகிழ்ந்து சிதம்பரம்பிள்ளை ‘நம் குலதெய்வமாகிய ஸ்ரீமீனாட்சி சுந்தரேசருடைய திருவருளினாலேயே இந்தச் செல்வப்புதல்வனைப் பெற்றேம்' என்றெண்ணி அக்கடவுளின் திருநாமத்தையே இவருக்கு இட்டனர்.
இவருடைய [1]ஜாதகம் வருமாறு:-
பவ வருஷம், பங்குனி மாதம் 26-ஆம் தேதி, குருவாரம், அபரபட்சம் துவாதசி, நாழிகை முப்பத்தெட்டரையே யரைக்கால், சதயம் நாற்பத்திரண்டரையே யரைக்காலுக்குமேல் பூரட்டாதி நக்ஷத்திரம், சுபநாம யோகம் ஐந்தரையேயரைக்கால், கவுலவகரணம் ஆறரையே அரைக்கால், சேஷத்யாச்சியம் அரையே அரைக்கால், அகஸ்முப்பதேகால்: இந்தச் சுபதினத்தில் இராத்திரி இருபதே முக்கால் நாழிகையளவில் மகரலக்கினத்தில் ஜனனம். குருமகா தசை ஜனன காலத்தில் நின்றது 13 வருஷம், 11 மாதம், 7 நாள்.
சிதம்பரம் பிள்ளை சோமரசம்பேட்டையில் இருந்தது.
இப் புதல்வர் பிறந்த சில மாதங்களுக்குப்பின் அதவத்தூருக்கு அருகேயுள்ள சோமரசம்பேட்டை யென்னும் ஊரிலுள்ளவர்கள் சிதம்பரம் பிள்ளையால் அதவத்தூராரும் அவ்வூர்ப் பிள்ளைகளும் அடைந்துவந்த பெரிய நன்மையை அறிந்து எவ்வாறேனும் அவரைத் தங்களூருக்கு அழைத்துக்கொண்டு வரவேண்டுமென் றெண்ணினார்கள். அவருட் சிலர் அதவத்தூருக்கு வந்து அவரை மிகவும் வேண்டிக்கொண்டு அவ்வூரிலுள்ளார்க்கும் தக்க சமாதானம் கூறித் தங்களூருக்கு அழைத்துச் சென்று அவருக்கு வேண்டிய பொருள்களை உதவி வருவாராயினர். சிதம்பரம் பிள்ளை வழக்கம்போலவே விரும்புவோருக்குத் தமிழ்ப் பாடம் சொல்லியதுடன் அங்கே ஒரு பாடசாலையை அமைத்துப் பல பிள்ளைகளுக்குக் கல்வி கற்பித்துவந்தார். அப்பொழுது அவருக்கு வேறு ஓர் ஆண் குழந்தையும் அப்பால் ஒரு பெண் குழந்தையும் பிறந்தன. ஆண் குழந்தைக்குச் [2]சொக்கலிங்கமென்றும் பெண் குழந்தைக்கு மீனாட்சி யென்றும் பெயர் இட்டார். இதனாலும் சிதம்பரம் பிள்ளைக்கு மதுரைச் சோமசுந்தரக் கடவுள்பாலும் மீனாட்சியம்மையின்பாலும் இருந்த அன்பு விளங்கும்.
கல்வி பயிலத் தொடங்கல்.
[3]மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு ஐந்து பிராயமானவுடன் சிதம்பரம் பிள்ளை வித்தியாரம்பஞ் செய்வித்துத் தம் பள்ளிக்கூடத்திலேயே கல்வி பயிற்றத் தொடங்கினார். அங்கே மற்றப் பிள்ளைகளுடன் அக்கால வழக்கப்படி முறையே நெடுங்கணக்கு, ஆத்தி சூடி முதலிய நீதி நூல்கள், எளிய நடையிலுள்ள அருணகிரி யந்தாதி முதலிய அந்தாதிகள், கலம்பகங்கள், மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
முதலிய பிள்ளைத் தமிழ்கள், நிகண்டு, கணிதம் முதலியவற்றைக் கற்றார். பழம்பிறப்பிற் செய்த புண்ணிய விசேடத்தாலும், பரம்பரையின் சிறப்பாலும் தந்தையாரின் பழக்கத்தாலும் இவருக்குக் கல்வியறிவு மேன்மேலும் எளிதிற் பெருகுதலுற்றது; "குலவித்தை கல்லாமற் பாகம்படும்'' என்பது பெரியார் வாக்கன்றோ? பாடசாலையிலுள்ள ஏனைப் பிள்ளைகளைக் காட்டிலும் எல்லாவற்றிலும் இவரே சிறப்புற்று விளங்கினார். சில வருடங்கட்குப்பின்பு அந்தப் பள்ளிக்கூடத்தில் இவர் சட்டாம்பிள்ளையாக அமர்த்தி வைக்கப்பட்டார்.
கல்வி கற்ற முறை.
யாவரும் பாராட்டும்படி ஞாபகசக்தி இவர்பால் நன்கு அமைந்திருந்தது. இவர் அப்பொழுதே செய்யுட்களின் கருத்துக்களைக் கூர்ந்து ஆராயும் அறிவைப் பெற்றிருந்தார். தம் தந்தையாரை அடிக்கடி வந்து வந்து பார்த்துப் பார்த்துச் செல்லும் கல்விமான்களும் அவரும் தமிழ் சம்பந்தமாகப் பேசிக் கொள்ளுவனவற்றை வலிந்து சென்று ஊன்றிக் கேட்கும் தன்மையும், படித்த செய்யுட்களின் கருத்துக்களை அமைத்து இனிமையாகப் பேசும் திறமையும் இவர்பாற் காணப்பட்டன. இவருடைய அறிவின் வளர்ச்சியை அறிந்த தந்தையார் மகிழ்ச்சியடைந்து மற்றப் பிள்ளைகளோடு படிக்கும் பாடங்களையன்றிப் பிரபந்தங்களையும் எளிய நடையாகவுள்ள சதகங்கள், மாலைகள் முதலியவற்றையும் வீட்டில் மனப்பாடம் பண்ணுவித்துப் பொருளுங் கூறிவந்தார். அன்றியும் நன்னூல் முதலிய இலக்கண நூல்களின் மூலபாடங்களையும் மனப்பாடம் பண்ணும்படி செய்வித்து வந்தார்.
ஓய்வு நேரங்களில் இலக்கணக் கருத்துக்களைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் அறிவுறுத்தினர். இவர் அவ்வாறு கற்ற பின்பு படித்த பிரபந்தங்கள் முதலியவற்றிற்கும் நைடதம் முதலிய சிறு காப்பியங்களுக்கும் ஏனைய நூல்களுக்கும் மற்றவர்களோடு சேர்ந்து பொருள் கேட்பாராயினர்.
அக்காலத்தில் நூல்கள் பெரும்பாலும் அச்சிற் பதிப்பிக்கப்படாமையாற் படிப்பவர்கள் அவற்றைப் பிரதிசெய்து படித்தல் இன்றியமையாத வழக்கமாக இருந்தது; ஆதலால் இவர் தந்தையார் நன்றாக ஏட்டில் எழுதவும் இவரைப் பழக்குவித்தார். அதனால் இவர், தாம் படிக்கப் புகுந்த நூல்களை, எழுதி எழுதித் தனியே வைத்துக்கொள்வார். அன்றியும் தம் தந்தையார் கட்டளையின்படி தாம் படிக்கும் நூல்களிலுள்ள இனிய செய்யுட்களைச் சமயோசிதமாகப் பிறர்க்குச் சொல்லிக் காட்டுவதற்குத் தொகுத்துத் தனியே எழுதி வைத்துக்கொண்டு மனனம் செய்வதும், தமக்கு மனனமான பாடல்களின் அடிவரையறையைத் தனியே குறித்து வைத்துக்கொள்வதும் உண்டு. [4]இங்ஙனம் செய்வது அக்கால வழக்கம். தம் தந்தையார் கற்பித்தவற்றையெல்லாம் பேரவாவுடன் இவர் கற்று விரைவில் அந்நூல்களிற் சிறந்த பயிற்சியை அடைந்தார்.
செய்யுள் இயற்றப் பயிலுதல்.
தந்தையாருடைய பழக்கத்தால் வருத்தமின்றிச் செய்யுள் செய்யும் திறமை இவர்பால் வளர்ச்சியுற்றது. இவர் தந்தையாரிடம் மேன்மேலும் இலக்கணங்களையும் பல காப்பியங்களையும் கற்று வந்தார். அன்றியும் இவருக்குள்ள செய்யுள் செய்யும் திறமையை அறிந்து சிதம்பரம் பிள்ளை அடிக்கடி சமுத்தி கொடுத்துச் செய்யுள் இயற்றச் சொல்லியும், திரிபு யமகம் சிலேடைகளை அமைத்துப் பாடல் செய்யும்படி சொல்லியும் வந்தார். அவற்றை இவர் விரைவில் முடித்து விடுவதையும் அச்செய்யுட்கள் எளிய நடையிற் செம்பாகமாக அமைந்திருத்தலையும் தேர்ந்து தந்தையார் மகிழ்ச்சியுற்றார்; கேட்ட ஏனையோரும் மகிழ்ந்து பாராட்டினர்.
பாடும் வழக்கம் தமக்கு இயல்பாகவே இருந்தமையின் தினந்தோறுமுள்ள ஓய்வு நேரங்களில் இவர் ஏதாவது பொருளையமைத்துப் புதியனவாகப் பாடல்கள் செய்துகொண்டேயிருப்பார். எந்த நூலையேனும் தனிப்பாடலையேனும் படிக்குங் காலத்தில் அவற்றைப்போலப் பாடவேண்டுமென்றும் அவற்றிலுள்ள சொற்றொடர்களையும் கருத்துக்களையும் அப்பாடல்களில் அமைக்க வேண்டுமென்றும் இவருக்கு விருப்பம் இருந்து வந்தமையால் அவ்வாறே பாடியும் வந்தார். இளமையில் விரைவாகப் பாடுந்திறமை இவருக்கு உண்டாயிருத்தலையறிந்து வியப்புறுவோர் பலரென்றும், அங்ஙனம் பாடிய பாடல்கள் மிகப் பலவென்றும் கேள்வி. அக்காலத்திற் புதியனவாகப் பாடல் செய்வோர் திரிசிரபுரத்திலும் உறையூரிலும் பிறவிடங்களிலும் சிலர் இருந்தார்கள். அவர்களோடு அடிக்கடி பழகிவந்ததும் அவர்கள் அளித்த ஊக்கமும் செய்யுளியற்றும் ஆற்றலை இவர்பால் மிகச்செய்தன.
கல்வி வளர்ச்சிக்குக் காரணம்.
சிதம்பரம் பிள்ளையிடம் படித்த பிள்ளைகள் பிற ஊர்களிலிருந்து படிக்கும் பிள்ளைகளிலும் தமிழிற் சிறந்த அறிவுள்ளவர்களாகவும் அவர்களுள்ளே இவர் சிறந்தவராகவும் இருத்தலை அயலூரார் கேட்டு மகிழ்வாராயினர். இவருடைய தந்தையாரைத் திரிசிரபுரம் முதலிய ஊர்களிலுள்ள பிரபுக்கள் தங்களூருக்கு அழைத்துச்சென்று உபசரித்து அனுப்புவதுண்டு. அவரும் அவர்களுடைய வேண்டுகோளின்படி ஓய்வுநாட்களிற் சென்றிருந்து மகிழ்வித்துவருவார். சில சமயங்களில் சிதம்பரம்பிள்ளை இவரையும் உடனழைத்துக்கொண்டு சென்று தமக்குத்தெரிந்த செல்வர்களிடத்தில் இவரைப் பழைய பாடல்களைச் சொல்லுவித்தும் அவற்றிற்குப் பொருள் சொல்லச் செய்தும் வந்தார். அதனால் இவருடைய இயல்பை அவர்கள் அறிந்து வியந்தார்கள். இத்தகைய செயல்களும் இவரது கல்வி வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தன. இவ்வாறு இவருடைய கல்வி வளர்ச்சியைப்பற்றிய செய்தி இவர் தந்தையாருடைய புகழுடனே எங்கும் பரவியது.
ரங்கபிள்ளை யென்பவரின் முயற்சி.
வீட்டுக்கு வேண்டிய பொருள்களை விலைக்கு வாங்குதற்கு [5]வாவு நாட்களில் தந்தையாரால் அனுப்பப்பட்டு உடன்படிக்கும் பிள்ளைகளுடன் திரிசிரபுரம் கடைத்தெருவிற்கு இவர் போய் வாங்கி வருவதுண்டு. அப்படிச் செல்லுங்கால் அவர்கள் தாங்கள் மனப்பாடம் பண்ணிய பாடல்களைச் சொல்லிக்கொண்டும், ஒருவர் சொல்லிய பாடலின் இறுதிச்சொல்லை முதலாகவுடைய வேறு ஏதேனுமொரு பாடலை மற்றொருவர் சொல்ல இவ்வாறே தொடர்ந்து சொல்லிக்கொண்டும் செல்வார்கள். இங்ஙனம் சொல்லிப் பழகுவது பழையகாலத்தில் வடமொழி தென்மொழியாளர் களின் வழக்கம். இவர்கள் போகும் வழியில் இருந்த சுங்கச் சாவடியில் [6]சவுக்கீதாராக ரங்கபிள்ளை யென்பவர் ஒருவர் இருந்தார். அவர் தமிழ் நூற் பயிற்சியும் படித்தவர்களை ஆதரிக்கும் தன்மையும் சிதம்பரம் பிள்ளையின்பால் மிக்க அன்பும் உடையவர். இவர் பல பிள்ளைகளுடன் அவ்வழியே செல்லும்பொழுது அவர்கள் சிதம்பரம் பிள்ளையிடம் படிக்கிறவர்களென்பதை யறிந்து அன்போடு அழைத்து “இப்பொழுது என்ன பாடம் நடக்கிறது?" என்று விசாரிப்பதும், அவர்கள் மனப்பாடம் பண்ணிய செய்யுட்களைச் சொல்லச்சொல்லிக் கேட்பதும், அவற்றிற்குப் பொருள் கேட்பதும் உண்டு. அவ்வாறு கேட்கையில் அவர்களுள் இவர் நயமாகவும் பொருள் விளங்கவும் பாடல் சொல்வதைக் கேட்டு மகிழ்வார்.
ஒருநாள் பிள்ளைகளை நோக்கி, "உங்கள் ஆசிரியர் உங்களுக்குச் செய்யுள் செய்யும் பழக்கம் உண்டாக்கி யிருப்பாரே. பிள்ளையார்மேல் ஒரு வெண்பாவைச் செய்யுங்கள்” என்று சொன்ன பொழுது மாணாக்கர்களெல்லாரும் பாடுதற்கு முயன்று கொண்டிருக்கையில் இவர்,
"பாரதத்தை மேருப் பருப்பதத்தி லேயெழுதி
மாரதத்தைத் தந்தையிவர் வண்ணஞ்செய் - சீருடையோய்
நற்றமிழை யாங்க ணயந்துகற்றுத் தேறமனத்
துற்றருளை யெங்கட் குதவு''
என்னும் வெண்பாவை விரைவிற் பாடிமுடித்தார். அதைக்கேட்ட ரங்கபிள்ளை மிக வியந்தனர். இவ்வாறே இவர் வருஞ் சமயங்கள்தோறும் சமுத்தி (ஸமஸ்யை) கொடுத்துப் பாடச் செய்து கேட்டு மகிழ்ந்து இவரை வியந்து பாடலொன்றுக்கு ஒருபணம் (2 - அணா) விழுக்காடு கணக்குப்பண்ணிக் கொடுப்பது வழக்கம். கொடுத்ததை மகிழ்ந்து பெற்றுப் போய் வேண்டுவனவற்றைக் குறித்த அளவிற்கு மேற்பட மளிகைக்கடையில் வாங்கிக்கொண்டு சென்று கொடுத்துத் தந்தையாரை மகிழ்விப்பார். இவர் தமிழ் நூல்களைக் கவனித்துப் படிப்பதற்கும் பொருளைக் கேட்டுச் சிந்திப்பதற்கும் மேன்மேற் பாடிப் பழகுவதற்கும் ரங்கபிள்ளையின் இந்த முயற்சிகளும் காரணமாக இருந்தன. இவர் இளமையில் இங்ஙனம் பாடிய பாடல்கள் பலவென்பர்.
நெல்லைப்பற்றிப் பாடிய சிலேடை.
இவரிடத்தில் அன்புடைய திரிசிரபுரம் மலையாண்டியாபிள்ளை யென்பவர் இவருடைய கவித்துவத்தை யறிந்து இவர் ஆற்றலை எல்லோரும் அறியச் செய்து ஏதாவது உதவி செய்விக்க நினைத்தார். ஒரு நாள் [7]முருங்கைப்பேட்டையென்னும் ஊரிலுள்ள ஒரு மிராசுதாரரிடம் அழைத்துச் சென்று இவருடைய திறமையை அவருக்குச் சொன்னார். பக்கத்திலிருந்த ஒருவர் இவரை நோக்கி ஒரு பாட்டைக் கூறி, "அப்பா, இப்பாட்டுக்கு அர்த்தஞ் சொல்'' என்றார். அவ்வாறே அதற்கு இவர் பொருள் சொல்லியபின் அக் கனவான், ''இப்பாட்டுக் கருத்தஞ் சொல்' என்பதையே ஈற்றடியாக வைத்து ஒரு வெண்பாப் பாடு'' என்று கூறவே இவர், சொல் என்பதற்கு நெல் என்னும் பொருளை யமைக்க எண்ணி, வெண்பாவின் ஈற்றடியாக வைத்தற்கு அத்தொடர் பொருந்தாமையின் ‘தூய' என்பதை முன்னே சேர்த்து, "தூயவிப்பாட்டுக் கருத்தஞ் சொல்'' என்ற ஈற்றடியை அமைத்து நெல்லுக்கும், திரிமூர்த்திகளுக்கும் சிலேடையாக,
[8] ''ஒண்கமலம் வாழ்ந்தன்ன மாகி யுரலணைந்து
தண்கயநீர்த் தூங்கித் தகுமேறூர்ந் - தெண்கதிரின்
மேயவிதத் தான்மூவ ராகும் விளம்பியதென்
தூயவிப்பாட்டுக்கருத்தஞ் சொல்''
என்னும் வெண்பாவைப் பாடி முடித்தார்.
அதனைக் கேட்ட அந்தக் கனவான் மிக மகிழ்ந்து ஒரு வண்டி நெல் கொடுத்தனுப்பினார். [9]இவ்வாறே பலரால் அழைக்கப்பட்டுச் சென்று விரைவிற் பாடிப்பாடி இவர் பெற்ற பரிசுகள் பல. இவைகளெல்லாம் தந்தையார்க்கு மகிழ்ச்சியை விளைவித்து இவரைப் படிப்பிக்கும் விஷயத்தில் ஊக்கமளித்து வந்தன.
தந்தையார் பிரிவு.
இங்ஙனம் கல்வி கேள்விகளிலும் செய்யுள் செய்தலிலும், மேன்மேலும் வளர்ச்சியுற்றுப் பலராலும் மதிக்கப்பெற்று வருங் காலத்தில் இவருடைய 15 - ஆவது பிராயமாகிய விரோதி வருடத்திற் சோமரசம்பேட்டையில் இவர் தந்தையார் சிவபதமடைந்தார். அருமைத் தந்தையாருடைய பிரிவால் இவருக்கு மிகுந்த வருத்தமுண்டாயிற்று. அப்பொழுது வருந்தி இவர் செய்த பாடல்களுள்,
''முந்தை யறிஞர் மொழிநூல் பலநவிற்றும்
தந்தை யெனைப்பிரியத் தான்செய்த - நிந்தைமிகும்
ஆண்டே விரோதியெனு மப்பெயர்நிற் கேதகுமால்
ஈண்டேது செய்யா யினி''
என்னும் செய்யுள் மட்டும் கிடைத்தது. தந்தையார்க்கு அபரக் கிரியைகளைச் செய்து முடித்தபின்பு இவர் அங்குள்ளாருடைய ஆதரவால் அவ்வூரிலேயே இருந்து காலங்கழித்துவந்தார். அவ்வூரார் இவருக்கு வீட்டுக்கவலையில்லாதபடி வேண்டியவற்றைக் கொடுத்து உதவி வந்தார்கள்.
விவாகம்.
இயல்பாகவே இவருக்கு வேண்டியவற்றையளித்து உதவி செய்துவந்த பல நண்பர்களும் வேறு பல கனவான்களும் பிறகு அதிக உதவிகளைச் செய்து இவருக்கு, காவேரியாச்சி யென்னும் பெண்ணை மிகவும் சிறப்பாக விவாகம் செய்வித்தனர்.
இவர் ஓய்வு நேரங்களில் அயலூர்களுக்குச் சென்று அங்கங்கேயுள்ள கல்விமான்களை அடைந்து விசாரித்துக் கிடைக்கும் நூல்களைப் பெற்றுக் கொணர்ந்து பிரதிசெய்து படித்துப் பொருள் தெரிந்து ஆராய்ந்து வருவார். இப்படிச் சிலவருடங்கள் சென்றன.
------
[1] இந்த ஜாதகம் பிள்ளையவர்கள் தந்தையாராலேயே குறித்துவைக்கப்பட்டிருந்தது. அந்தப் பிரதி பிள்ளையவர்கள் குமாரராகிய சிதம்பரம் பிள்ளையிடமிருந்து கிடைத்தது.
[2] பிள்ளையவர்கள் சகோதரரை மட்டும் திருவாவடுதுறையில் ஒரு முறை பார்த்திருக்கிறேன் ; மற்றவரைப்பார்க்கவில்லை. இவர்களைப் பற்றிய வேறு வரலாறொன்றும் தெரிந்திலது.
[3] பிள்ளையவர்களை இவ்வாறு பெயர் குறித்தெழுதுவதற்கு அஞ்சுகின்றேன்.
[4] ஞாபகமுள்ள சிறந்த பாடல்களைக் குறித்து வைக்கும் சுவடிகளில் முதலிற் கையேடென்றேனும் அவசரப் பாடலென்றேனும் இன்ன நூலின் தெரிவென்றேனும் எழுதப்பட்டிருக்கும். இத்தகைய சுவடிகளைப் பல புலவர்கள் வீடுகளிற் கண்டிருக்கிறேன். அவற்றின் முதற் குறிப்பைத் தனியே எழுதி வைத்துக்கொண்டு அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள்வதும் நூற்செய்யுள் முதற் குறிப்பைத் தொடர்பு பெறச் செய்யுளாக அமைத்து வைத்துக்கொள்வதும் பண்டைய வழக்கம். பின்னவை முதனினைப்புச் செய்யுளென்னும் பெயர் முதலியவற்றால் வழங்கும். பெரிய நூலாக இருப்பின் அகவலாகவும் சிறிய நூலாக இருப்பின் வேறு வகைச் செய்யுளாகவும், அம்முதற் குறிப்புச் செய்யுட்கள் பெரும்பாலும் இருக்கும். அதனை அடிவரவு, அடிவரையறை என்றும் கூறுவர். இத்தகைய செய்யுட்கள் யாப்பருங்கலக் காரிகை முதலியவற்றில் நூலின் பகுதியாகவே இருப்பதைக் காணலாம்.
[5] வாவு: உவா வென்பதன் சிதைவு; விடுமுறை நாட்களின் பெயராக வழங்கும்.
[6] சுங்கம் வாங்கும் உத்தியோகஸ்தர்.
[7] இவ்வூர் திரிசிரபுரத்துக்கு மேற்கே உள்ளது.
[8] 'ஒண்கமலம்....... ஆகி': இது பிரமனுக்கும் நெல்லுக்கும் சிலேடை. கமலம் - தாமரையில், நீரில்; அன்னம் - அன்னப்பறவை, சோறு. ' உரல் ......... தூங்கி ': திருமாலுக்கும் நெல்லுக்கும் சிலேடை. உரல் அணைந்து - உரலில் யசோதையாற் கட்டப்பட்டு, குற்றப்படுவதற்கு உரலை அடைந்து; கயம் நீர்த் தூங்கி - ஆழமாகிய கடலில் நித்திரை செய்து, ஆழமாகிய நீரில் தங்கி. ‘தகும் ........ விதத்தால்': சிவபிரானுக்கும் நெல்லுக்கும் சிலேடை. ஏறு ஊர்ந்து - இடபவாகனத்தில் ஏறியருளி, மூட்டையாகக் கொண்டு போகப்படும் பொழுது எருத்தில் ஏறி. (கடாவிடும் பொழுது ஏற்றால் ஊரப்பெற்று என்பதும் பொருந்தும்); கதிரில் - சூரியனிடத்தே, தானியக் கொத்தில். மூவர் - பிரமன் முதலிய மூவர். சொல் - சொல்லென்னுமேவல், நெல்.
[9] இச்செய்தியையும் செய்யுளையும் சொன்னவர் இவர் மாணாக்க ராகிய ஸ்ரீ சி. தியாகராச செட்டியாரவர்கள்.
------------
3. திரிசிரபுர வாழ்க்கை.
சோமரசம்பேட்டையை நீங்கியது.
தமிழ்ப்பயிற்சியை மேன்மேலும் அபிவிருத்தி பண்ணிக் கொள்ள வேண்டுமென்ற விருப்பம் அதிகமாக உண்டானமையாலும், மேலே படிக்கத்தக்க நூல்கள் சோமரசம்பேட்டையில் அகப்படாமையாலும், கிடைத்த நூல்களைப் பாடங்கேட்பதற்கும் உண்டாகும் ஐயங்களை உடனுடன் போக்கிக்கொள்ளுதற்கும் சிறந்த பெரியோர்கள் அங்கே இல்லாமையாலும் திரிசிரபுரத்திலேயே சென்றிருக்க நினைந்த இவர், அங்கே சென்று அந்நகரிலுள்ள அன்பர்களிடம் தமது கருத்தைத் தெரிவித்தார். அவர்கள், ''நீர் இங்கே வந்திருத்தல் எங்களுக்கு உவப்பைத் தருவதாகும்; எங்களால் இயன்ற அளவு உதவிசெய்து வருவோம்'' என்றார்கள். அதனைக் கேட்டுத் திரிசிரபுரத்திற்குப்போய் இருக்கலாமென்று நிச்சயித்துச் சோமரசம்பேட்டையில் தம்மை ஆதரித்தவர்களிடத்தில் தம்முடைய கருத்தைத் தெரிவித்து அரிதின் விடை பெற்றுத் திரிசிரபுரம் வந்து சேர்ந்தனர். அங்கே மலைக்கோட்டைக் கீழைவீதியின் தென் பக்கத்துள்ள ஒரு பாறைமேற் கட்டப்பட்டிருந்த சிறியதான ஓட்டுவீடு ஒன்றில் மாதம் ஒன்றுக்குக் கால் ரூபாய் வாடகை கொடுத்து இருப்பாராயினர்.
புலவர்கள் பழக்கம்.
அக்காலத்தில் திரிசிரபுரத்திலும் அதனைச் சூழ்ந்துள்ள ஊர்களிலும் தாங்களறிந்தவற்றை மாணாக்கர்களுக்குப் பாடஞ்சொல் லும் தமிழ்ப்புலவர்கள் சிலர் இருந்து வந்தனர். ஒவ்வொருவரும் சில நூல்களையே பாடஞ்சொல்லுவார். பல நூல்களை ஒருங்கே ஒருவரிடத்திற் பார்ப்பதும் பாடங்கேட்பதும் அருமையாக இருந் தன. இவர் அவ்வூரிலும் பக்கத்தூர்களிலும் இருந்த தமிழ்க்கல்விமான்களிடத்திற் சென்று சென்று அவர்களுக்கு இயைய நடந்து அவர்களுக்குத் தெரிந்த நூல்களைப் பாடங்கேட்டும் அவர்களிடம் உள்ள நூல்களைப் பெற்றுவந்து பிரதிசெய்துகொண்டு திருப்பிக் கொடுத்தும் வந்தனர். இவருடன் பழகுவதிலும் இவருடைய ஆற்றலை அறிந்து கொள்வதிலும் வேண்டிய நூல்களை இவருக்குக் கொடுத்து உதவுவதிலும் இவர் விரும்பிய நூல்களைப் பாடஞ் சொல்வதிலும் மகிழ்ச்சியும், இவரைப்போன்ற அறிவாளிகளைப் பார்த்தல் அருமையினும் அருமையென்னும் எண்ணமும் அவர்களுக்கு உண்டாயின. பழகப் பழக அவர்களிடம் படித்து வந்த ஏனை மாணாக்கர்களுக்கும் இவர்பால் அன்பு உண்டாயிற்று. [1]'மருவுக்கு வாசனை போல்’ வாய்த்த இவரது இயற்கை யறிவையும் கல்விப் பயிற்சியாலுண்டாகிய
செயற்கையறிவையும் விரைவிற் கவிபாடுந் திறமையையும் அறிந்து அவர்கள் எல்லோரும் இவரிடம் அன்புடன் பழகி வந்தார்கள். அப்போது ஒழிந்த காலங்களில் தமக்குத் தெரிந்த நூல்களைப் பாடங் கேட்க விரும்புகிறவர்களுக்குப் பொருள் சொல்லி வந்தார்.
வித்துவான்கள்.
அக்காலத்தில் திரிசிரபுரத்திலும் அதனைச் சூழ்ந்த ஊர்களிலும் பின்னே காட்டிய வித்துவான்கள் இருந்து வந்தார்கள்:
1. உறையூர் முத்துவீர வாத்தியார்:
இவர் திரிசிரபுரம் வண்டிக்காரத் தெருவில் இருந்தவர்; சாதியிற் கொல்லர்; கம்மாள வாத்தியாரென்றும் கூறப்படுவார்; முத்துவீரியமென்னும் இலக்கண நூல் முதலியன இவராற் செய்யப்பெற்று வழங்குகின்றன. இவரை நான் பார்த்திருப்பதுண்டு,
2. திரிசிரபுரம் சோமசுந்தர முதலியார்:
இவர் தொண்டைமண்டல வேளாளர்; திரிசிரபுரம் மாணிக்க முதலியாருடைய வீட்டு வித்துவானாக இருந்து விளங்கியவர்; சைவ நூல்களில் நல்ல பயிற்சியை உடையவர்.
3. வீமநாயக்கன் பாளையம் இருளாண்டி வாத்தியார் :
இவருடைய கால்கள் பயனற்றனவாக இருந்தமையால் எருத்தின் மேலேறி ஒரு மாணாக்கனை உடன் அழைத்துக்கொண்டு செல்வவான்களிடம் சென்று தமது பாண்டித்தியத்தை வெளிப்படுத்திப் பரிசு பெற்றுவரும் இயல்புடையவர்.
4. பாலக்கரை வீரராகவ செட்டியார்:
இவர் சோடசாவதானம் தி.சுப்பராய செட்டியாருடைய தந்தையார்.
5. கொட்டடி ஆறுமுகம் பிள்ளை:
இவர் இருந்த இடம் திரிசிரபுரம் கள்ளத்தெரு; தமிழ் இலக்கண இலக்கிய நூல்களிலன்றி வைத்திய நூல்களிலும் பயிற்சி மிக்கவர். பலவகையான மருந்துகளைத் தொகுத்து ஒரு கொட்டகையில் வைத்துக்கொண்டு நோயாளிகளுக்குக் கொடுத்து வந்தமையால் இவர் பெயர்க்கு முன்னம் 'கொட்டடி' என்னும் அடைமொழி கொடுக்கப்பட்டதென்று சொல்வர். சென்னை இராசதானிக் கலாசாலையில் இருந்தவரும் குணாகரமென்னும் நூல் முதலியவற்றை இயற்றியவருமாகிய சேஷையங்காரென்பவர் இவரிடம் பாடங்கேட்டவர். இவரும் சேஷையங்காரும் ஒருவருக்கொருவர் தெரிவித்துக் கொள்ளவேண்டிய செய்திகளைச் செய்யுட்களாகவே அஞ்சற் கடிதங்கள் மூலம் தெரிவித்துக்கொள்வது வழக்கம்; அச்செய்யுட்களிற் சிலவற்றை நான் கேட்டிருக்கிறேன்.
6. கற்குடி மருதமுத்துப் பிள்ளை:
இவர் சோதிடத்திலும் வல்லவர்.
7. [2]திருநயம் அப்பாவையர்:
இவர் திருவிளையாடற் கீர்த்தனம் முதலியவற்றை இயற்றியவர்; பரம்பரையாகத் தமிழ்ப்புலமை வாய்ந்த குடும்பத்தினர்; அடிக்கடி திரிசிரபுரம் வந்து செல்வார்.
8. மருதநாயகம் பிள்ளை:
இவர் இலக்கிய இலக்கணங்களிலும் மெய்கண்ட சாத்திரத்திலும் நல்ல பயிற்சியுடையவர்; முதன் முதலாக மெய்கண்ட சாத்திரங்களைப் பதிப்பித்தவர் இவரே.
பிரபுக்கள்.
அப்பொழுது பிள்ளையவர்களை ஆதரித்து வந்த பிரபுக்கள் (1) பழனியாண்டியா பிள்ளை, (2)லட்சுமண பிள்ளை, (3) ஆண்டார் தெரு சிதம்பரம்பிள்ளை, (4) சிரஸ்தேதார் செல்லப்ப முதலியார், (5) வரகனேரி நாராயண பிள்ளை, (6) சொக்கலிங்க முதலியார், (7) உறையூர் அருணாசல முதலியார், (8) உறையூர்த் தியாகராச முதலியார், (9) உறையூர்ச் சம்புலிங்க முதலியார் என்பவர்கள்.
வேலாயுத முனிவர் முதலியோரிடம் பாடங்கேட்டது.
இவர் இங்ஙனம் திரிசிரபுரத்தில் இருந்து வருகையில் வேலாயுத முனிவரென்பவர் அந்நகருக்கு வந்தார். அவர் திருவாவடுதுறையாதீன மடத்தில் முறையாகப் பல நூல்களைப் பெரியோர்கள்பாற் கற்றுத் தேர்ந்தவர். ஆதீனத் தலைமை ஸ்தானம் ஒரு வேளை தமக்குக் கிடைக்கலாமென்பதை எதிர்பார்த்துப் பல நாள் காத்திருந்தார். என்ன காரணத்தாலோ அவர் அவ்வாறு நியமிக்கப்படவில்லை; அதனாற் பிணக்குற்று உசாத்துணைவர்களும் தூண்டுபவர்களுமாகிய சில நண்பர்களுடன் தாம் படித்த சுவடிகளை யெல்லாம் எடுத்துக்கொண்டு, மதுரைத் திருஞானசம்பந்தமூர்த்தி ஆதீனத்திற்காவது குன்றக்குடியிலுள்ள திருவண்ணாமலை ஆதீனத்திற்காவது சென்று காத்திருந்து தலைமை ஸ்தானத்தைப் பெறலாமென்றெண்ணி புறப்பட்டுத் திரிசிரபுரம் வந்து ஆண்டுள்ளார் வேண்டுகோளின்படி மலைக்கோட்டையிலுள்ள மெளன ஸ்வாமிகள் மடத்திற் சில மாதங்கள் அவர் தங்கியிருந்தார்.
அங்ஙனம் இருக்கையில் திரிசிரபுரத்திலிருந்தும் அயலூர்களிலிருந்தும் வந்து அவரிடம் படித்தோர் பலர். பிள்ளையவர்கள் அவருடைய கல்வியறிவின் மேம்பாட்டை யறிந்து அவரிடம் காலை மாலைகளில் தவறாது சென்று முயன்று வழிபட்டு நூல்களை முறையே பெற்றுப் பிரதிசெய்துகொண்டு படித்தும் பல நாட்களாகத் தாம் படித்த நூல்களில் உள்ள ஐயங்களை வினாவித் தெளிந்தும் வந்தனர். அம்முனிவரால் இவருக்குப் பல தமிழ் நூற் பெயர்களும் தெரிய வந்தன. அக்காலத்தில் இவருடன் திரிசிரபுரம் வித்துவான் ஸ்ரீ கோவிந்தபிள்ளை யென்பவரும் அவரிடம் பாடங்கேட்டுவந்தனர். அவரிடம் தாம் படித்தமைக்கு அறிகுறியாகத் தாம் எழுதும் கடிதங்களின் தலைப்பிலே, கோவிந்தபிள்ளை 'வேலாயுத முனிவர் பாதாரவிந்தமே கதி' என்று எழுதி வந்தனர். அம்முனிவரிடம் படித்த நூல்கள் இன்ன இன்னவென்று கோவிந்த பிள்ளையே பிற்காலத்தில் என்னிடம் சொல்லியதுண்டு.
பின்பு, இவர் கம்பராமாயணம் முதலிய நூல்களை எழுதிப் பலமுறை படித்துத் தமக்கு உண்டாகும் சந்தேகங்களை அங்கங்கே சென்று தெரிந்தவர்களிடம் கேட்டு நீக்கிக்கொண்டு வந்தனர்.
எழுத்து, சொல், பொருள், யாப்பு என்னும் நான்கு இலக்கணங்களையும் இவ்வண்ணமே இவர் இளமை தொடங்கித் தக்கவர்களிடம் பாடங்கேட்டும் ஆராய்ந்தும் வாசித்து முடித்தார். பின்பு தண்டியலங்காரம் படிக்க வேண்டுமென்று விரும்பினார்; அதைப் பாடஞ்சொல்லுபவர்கள் கிடைக்கவில்லை. யாரிடமிருந்தேனும் அந்நூல் கிடைத்தால் பிரதி செய்து கொண்டு படிக்கலாமென்று எண்ணிப் பலவாறு முயன்றார். அவ்வூரில் ஒவ்வொருநாளும் வீடுதோறும் சென்று அன்னப்பிட்சை யெடுத்து உண்டு காலங்கழித்து வந்த பரதேசி ஒருவர் தமிழ் நூல்களிற் பழக்கமும் அவற்றுள் தண்டியலங்காரத்தில் அதிகப் பயிற்சியும் உடையவராயிருந்தார். ஆனாலும் அவர் பிறரை மதிப்பதில்லை; முறையாக ஒருவருக்கும் பாடம் சொன்னதுமில்லை. அவர் தாம் இருக்கும் மடத்திற் சில ஏட்டுப் புத்தகங்களைச் சேமித்து வைத்திருந்தார். அவர் தாமாக விரும்புவாராயின் ஏதேனும் சில தமிழ் நூல்களிலுள்ள கருத்துக்களை வந்தோருக்குச் சொல்லுவார். ' தானே தரக்கொளி னல்லது தன்பால், மேவிக் கொளக்கொடா விடத்தது மடற்பனை'' என்னும் உவமைக்கு அவரை இலக்கியமாகச் சொல்லலாமென்பர்.
அவர் நன்றாகப் படித்தவரென்பதையும் அவரிடம் தண்டியலங்காரப் பிரதியிருப்பதையும் கேள்வியுற்ற இவர், எவ்வாறேனும் அவரிடம் தண்டியலங்காரத்தைப் பெற்றுப் பாடங்கேட்க வேண்டுமென்று நிச்சயித்துக்கொண்டு அவர் பிட்சையெடுக்க வரும் காலமறிந்து தெருத்தோறும் கூடவே தொடர்ந்து பேசிக் கொண்டு சென்றும், அவருக்குப் பிரியமான கஞ்சாவை வாங்கி வைத்திருந்து உரிய காலத்திற் சேர்ப்பித்தும் அவர் உவகையோடு இருந்த சமயத்தில் தம் கருத்தை மெல்லப் புலப்படுத்தி அவரிடமிருந்த புத்தகத்தைப் பெற்று எழுதிக்கொண்டு பாடமும் கேட்டார். இவ்வாறு பணிவுடன் தம்மோடு தொடர்ந்து வந்து கேட்டது அவருக்குத் திருப்தியே. அதனால் இவருக்கு அவரிடம் இருந்த வேறு சில நூல்களும் கிடைத்தனவாம்.
இவ்வாறு ஐந்திலக்கணங்களையும் முறையே தெரிந்தவர்களிடம் சென்று சென்று இவர் கற்றுக்கொண்டார். திருச்சிராப்பள்ளிக்கு அருகிலுள்ள கற்குடியில் இருந்த ஒரு பெரியவரிடத்தில் பொருத்த இலக்கணத்தையும் அஷ்டநாகபந்தம் முதலிய சித்திர கவிகளின் இலக்கணத்தையும் அறிந்துகொண்டார்.
இவர் இப்படி [3]அங்கங்கே கலைகளைத் தேடியறியும் முயற்சியில் ஈடுபட்டிருந்த காலத்தில் இவருடன் ஒத்த பிராயத்தினர் சிலர் தமிழ்க்கல்வி கற்று வந்தனர். அவர்களும் இவரும் ஒருவரையொருவர் விஞ்சவேண்டுமென்று நினைந்து கொண்டு மிக முயன்று படித்தார்கள்.
------
[1] வெங்கைக் கோவை.
[2] இக்காலத்தில் இவ்வூர்ப்பெயர் திந்நியமென வழங்கும். திருக்காட்டுப்பள்ளிக்கு அருகிலுள்ளது.
[3] ''அங்கங்கே கலைக டேரு மறிவன்போ லியங்குமன்றே" திருவிளை. தருமிக்கு.
----------
4. பிரபந்தங்கள் செய்யத் தொடங்கல்.
பிள்ளையவர்கள், தம் தந்தையாருடைய கட்டளையின்படி தினந்தோறும் தேவார திருவாசகங்களைப் பாராயணஞ் செய்தலும் பொருள் தெரிந்து ஈடுபட்டு மனமுருகுதலும் வழக்கம். கிடைக்குமிடத்திற்குச் சென்று விசாரித்துப் பலவகைத் தமிழ்ப் பிரபந்தங்களை வாங்கி ஆவலோடு படித்து வருவார்; பிள்ளைப் பெருமாளையங்காருடைய அஷ்டப்பிரபந்தம், சிவப்பிரகாச ஸ்வாமிகள் பிரபந்தங்கள், குமரகுருபர ஸ்வாமிகள் பிரபந்தங்கள் முதலியவற்றை முறையே படித்து அவற்றின் சுவைகளை அறிந்து இன்புறுவார்; தமிழ் நூலாக எது கிடைத்தாலும் அதை வாசித்து நயம் கண்டு மகிழ்வார். அன்றியும், புறச்சமய நூல்களாக இருந்தாலும் தமிழாயின் அவற்றைப் படித்துப் பொருளறிவதில் இவருக்கு விருப்பமுண்டு.
திட்டகுடிப் பதிகம்.
அவ்வாறிருக்கையில் இவர் சில அன்பர்களுடன் [1]திட்டகுடி, ஊற்றத்தூர், பூவாளூர், திருத்தவத்துறை (லால்குடி) முதலிய ஸ்தலங்களுக்குச் சென்று சிவதரிசனம் செய்துவிட்டு வந்தார். திட்டகுடிக்குச் சென்றிருந்தபொழுது அந்தத் தலத்திற் கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வஸிஷ்டேசுவரர் விஷயமாக அக்கோயில் தர்மகர்த்தர் கேட்டுக்கொள்ள ஒரு பதிகம் பாடினாரென்றும் அது கோயிற்குச் சென்று தரிசித்த பின்பு அக் கோயிலிலேயே இருந்து சில நாழிகையிற் செய்யப்பட்டதென்றும் சொல்லுவார்கள். அந் நூல் இப்பொழுது கிடைக்கவில்லை. முதன்முதலாகப் பிரபந்தங்கள் பாடத்தொடங்கினவர் பதிகம், இரட்டை மணிமாலை முதலிய எளியன பலவற்றைப் பாடியிருத்தல் கூடும்.
திருவூறைப் பதிற்றுப்பத்தந்தாதி.
ஒரு தலத்திற்கு நண்பர்களுடன் சென்றால் அத்தலத்திலுள்ளார் இவரது கவித்துவத்தை அறிந்து அத்தல விஷயமாகத் தனிப்பாடல்களையோ பிரபந்தங்களையோ இயற்றும் வண்ணம் கேட்டுக்கொள்வார்கள். செய்யுள் இயற்றுவதற்குரிய சமயம் வாய்க்கும்போதெல்லாம் அந்த ஆற்றலை வளர்ச்சியுறச் செய்து கொள்ள வேண்டுமென்னும் அவாவுடையவராக இருந்தமையால், இவர் அவர்களுடைய விருப்பத்தின்படியே பாடல்கள் முதலியன இயற்றுவதுண்டென்பர். ஒருமுறை [2]ஊற்றத்தூருக்குச் சென்றிருந்தபொழுது பல அன்பர்கள் விரும்பியவண்ணம் திருவூறைப் பதிற்றுப்பத்தந்தாதி யென்ற ஒரு பிரபந்தம் இவராற் செய்யப்பட்டது.
இவர் பிற்காலத்திற் பாடிய பிரபந்தங்களுக்கும் இளமையிற் பாடியவற்றிற்கும் வேறுபாடுகள் பல உண்டு. பிற்காலத்து நூல்களிற் கற்பனை நயங்களும் அணிகளும் சிறந்த கருத்துக்களும் அங்கங்கே அமைந்திருக்கும்; சைவ சித்தாந்த நூற்கருத்துக்களும் பழைய இலக்கியங்களிலுள்ள சொற்களும் பொருள்களும் காணப்படும். இளமையிற் பாடியவை எளிய நடையில் அமைந்தவை. சிவபெருமான்பால் இயல்பின் எழுந்த அன்பினால் பக்திச்சுவைமட்டும் மலிந்த செய்யுட்கள் அவற்றிற் காணப்படும். தேவார திருவாசகங்களிலுள்ள கருத்துக்கள் அமைந்த சில பாடல்களும் திரு ஊறைப்பதிற்றுப் பத்தந்தாதி முதலியவற்றில் உள்ளன. இவ் வந்தாதி,
"செய்ய முகிலின் மெய்யனயன் றெரிய வரிய பெரியானென்
ஐயன் வளர்தென் றிருவூறை யந்தா தியையன் பாலுரைக்க
நையன் பரைவிட் டகலாத நால்வாய் முக்க [3]ணிரண்டிணையோர்
கையன் மதத்த னழகியநங் கயமா முகத்த னடிதொழுவாம்"
என்னுங் காப்புடனும்,
"பூமா திருக்கு மணிமார்பன் புயநா லிணையன் புருகூதன்
நாமா றுறவே வழுத்தூறை நகர்வாழ் நம்பா நாறிதழித்
தாமா நினது தாட்குமலர் சாத்திப் பிறவிக் கடனீந்த
ஆமா றிதுவென் றறியேனை யாண்டாய் காண்டற் கரியானே"
என்னும் முதற் செய்யுளுடனும் தொடங்கப்பட்டுள்ளது. இச் செய்யுளில், "பிறவிப் பெருங்கட னீந்துவர் நீந்தார், இறைவ னடிசேரா தார்" என்ற குறளின் கருத்தை அமைத்திருக்கின்றனர்.
[4]"பணிகின் றேனிலை நாத்தழும் புறநினைப் பலகவி யாற்பாடத்
துணிகின் றேனிலை தீவினை தொலைக்கநின் றொண்டரிற் றொண்டாகத்
தணிகின் றேனிலை யுள்ளநெக் குருகியுன் றாள்களி னறும்பூக்கொண்
டணிகின் றேனிலை யெங்ஙன முய்குவே னரதன புரத்தானே" (11)
[5]"இல்லையுன்க ழற்கணன்றி யெற்குவேறி ருப்புடற்
கல்லையன் றெடுத்துவில்லெ னக்குனித்த காவலா
வல்லையம்பு யப்பொகுட்டை மத்தகத்தை யெற்றியே
வெல்லைகொண்ட கொங்கைபங்க வேதவூறை நாதனே" (33)
[6] "சம்பு சங்கர வூறைச் சதாசிவ
அம்பு பம்பு நெடுஞ்சடை யாயெனா
வெம்பு கின்றிலன் வீரிட் டலறிலன்
நம்பு கின்றிலன் னானுய்யு மாறென்னே?" (66)
"சூட வேண்டுநின் னடிகள் போற்றியான்
சுற்ற வேண்டுநின் னூறை போற்றிவாய்
பாட வேண்டுநின் சீர்கள் போற்றிகண்
பார்க்க வேண்டுநின் வடிவம் போற்றியான்
கூட வேண்டுநின் னடிகள் போற்றியுட்
கொள்ள வேண்டுநின் னன்பு போற்றிமால்
தேட வேண்டருண் மேகம் போற்றிநுண்
சிற்றிடைக் குயில் பாகம் போற்றியே" (97)
என்னும் செய்யுட்களில் திருவாசகக் கருத்துக்களும் சொற்றொடரமைப்பும் இலங்குவதைக் காணலாம். நீர்வளங்களையும் நிலவளங்களையும் புனைந்து மிக அரிய கற்பனைகளை மேகம்போலப் பிற்காலத்துப் பொழிந்த இப்புலவர் பெருமான் இந் நூலிற் பெயரளவில் நிலவளமென்னும்படியுள்ள சிலவற்றைக் கூறியிருத்தல் அறிதற்குரியது. அவற்றுட் சில வருமாறு:-
[8]"அளிக்கும் புறுபங் கயப்பொகுட்டி லளிந்த தேமாங் கனியுடைந்து
துளிக்கும் பிரசம் பெருகிவய றோறும் பாய்ந்து விளைசெந்நெல்
களிக்குங் கமுக மீப்பாய்ந்து காட்டு மூறை" (10)
“......... …….. …….. ……… தேமா
துளத்தின் மந்திபாய்ந் தக்கனி பறித்துவிண்
டொகுகழங் கென வோச்சு
வளத்தின் விஞ்சிய வூறை" (19)
"குருகுலத்தியர் கண்ணிழன் மீனெனக்
கொத்துதண் பணைச்செந்நெல்
அருகு சென்றன மடையுறு மூறை" (17)
"ஆலையிற் கழைக ளுடைந்தசா றோடி
யலர்தலை யரம்பையைச் சாய்த்துச்
சோலையிற் புகுந்து கமுகினை மாய்த்துத்
துன்னுசெந் நெல்வயற் பாய்ந்து
வேலையிற் பெருகு மூறை" (41)
"கொண்டறவழ் பெருஞ்சோலைப் பலவீன்ற கனியுடைந்த கொழுஞ்சா றோடி
ஞெண்டமையு மிடமுதலாப் பணைகடொறும் புகுமூறை." (75)
பிற்காலத்தில் திரிபு யமகப்பாடல்கள் பலவற்றை எளிதிற் பாடிய இப்பெருங்கவிஞர் இந்த நூலில் அந்த ஆற்றலைச் சிறிது காட்டியிருக்கின்றார்:
[9]"புரம டங்கமுன் வென்றவ னூறைவாழ்
புண்ணியப் பெருஞ்செல்வன்
சிரம டங்கலுஞ் செஞ்சடைக் காட்டினன்
றிரண்டதூண் டனிற்றோன்றும்
நரம டங்கலை யுடல்வகிர்ந் தாண்டவ
னாயினுங் கடையேனை
உரம டங்களைத் தாண்டுகொண் டானிதை
யொக்குமூ தியமென்னே?” (12)
[10]“அகத்திரா தெடுங்கோ ணென்னலிற் கழிந்த
தாகுமீ தெனப்பலர் கூடிச்
சகத்திரா வருமுன் றொலைக்குது மெனவே
சாற்றுதன் முன்னமெட் டிரண்டு
முகத்திரா வணன்வெற் படிவிழுந் தலற
முன்னநின் றடர்த்திடு மலர்த்தாள்
நகத்திரா டரவப் பணியிரூ றையினும்
நல்லடி காணநின் றேனே" (44)
[11] "செய்க்குவளை நயனமர விந்தமுகங் கோங்கரும்பு திரண்ட கொங்கை
கைக்குவளை பொருந்தலின்மின் சுற்றியயாழ் கடிதடங்காக் கணம்பூ வென்னா
மெய்க்குவளை வுறுமளவு மடவார்பாற் றிரிந்துழலும் வீண னானேன்
ஐக்குவளைச் செவிபாகற் கூறையற்கெஞ் ஞான்றுநல்ல னாவ னெஞ்சே" (79)
என்பனவற்றில் திரிபின் முளை தோன்றியிருத்தல் காண்க. இடையிலே 41 - ஆம் செய்யுள் முதல் 48 - ஆம் செய்யுள் வரையில் மரணகாலத்துண்டாகும் துன்பினின்றும் போக்கியருளவேண்டுமென்னும் கருத்து அமைந்துள்ளது. இங்ஙனம் ஒரே கருத்தைப் பலவிதமாக அமைத்துச் சில செய்யுட்களைத் தொடர்ந்து இவர் பாடியிருத்தலை இளமைக்காலத்திற் செய்த பிரபந்தங்களிற் காணலாம்.
தலசம்பந்தமான செய்திகளை இவ்வந்தாதியின்பால் உரிய இடங்களில் அமைத்துள்ளார்; "அன்ன வூர்தியன் மான்முத லோர்க்கரு மரதன புரத்தம்மான் ", "அணையரி வையைமேற் சூடியரதன புரத்து ளானே", "வெம்புகின்றன னரதன புரத்துறை விமலா" (13, 29, 82) என்னுமிடங்களில் தலத்தின் வேறு பெயராகிய அரதனபுரமென்பதனையும், "ஊறை நகருறை தேவவெற்பு, மானவா", "வேயநேகமுற்ற தேவவெற்ப னூறை யற்புதன் " (23, 36) என்று அத்தலத்திலுள்ள தேவகிரியையும், “இருக்கு மோதுதற்கரிய நந்தாநதிக் கிறைவா" (84) என அத்தலத்து நதியையும், காப்பில் தலத்து விநாயகரையும், "ஊறையும் பதிவாழையனே துய்யமாமணியே", "துய்யமாமணியே பரஞ்சோதியே" (50, 64) என அத்தலத்து மூர்த்தியின் திருநாமமாகிய சுத்தரத்தினேசுவரரென்பதன் பரியாயத்தையும் அமைத்துள்ளார்; “மருள் கடந்தவர் சூழ்தரு மூறைவாழ் மாசிலா மணியே", "ஊறைக் கோதிலா மணியைத் தானே” (18, 22) என்று அந்நாமம் குறிப்பாற் புலப்படும்படி சேர்த்தும், "சீரவாணி பாகனேக னாகர் தேவர் தேவனே " (31) என அத்தலத்து அம்பிகையின் பெயரைக் காட்டியும் பாராட்டியிருத்தல் காண்க. ஈற்றிலுள்ள பத்துப்பாடல்களுள் ஒவ்வொன்றும் போற்றி போற்றியென்று முடிகின்றது.
"காதும் பிறவிக் கடல்வீழ்த் திருவினையின்
தீதுங் குறைத்துமுத்தி சேர்க்குமே - போதம்
அடையூறை யந்தாதி யைக்கருது வாருக்
கிடையூறை நீக்குவதன் றி "
என்னும் பயனுடன் இந்நூல் நிறைவுறுகின்றது.
இந்நூலுக்குப் பலர் சிறப்புப்பாயிரம் கொடுத்திருத்தல் கூடும். செய்தவர் பெயர் தெரியாத ஒரு செய்யுள் மட்டும் இப்பொழுது கிடைக்கின்றது. அது வருமாறு:
"உய்ய மணிமார் பரியயன்விண் ணோரும் புகழ்ந்த திருவூறைத்
துய்ய மணியீ சருக்கன்பு துலங்கந் தாதி சொற்றுயர்ந்தான்
செய்ய மணிச்சீர்ச் சிதம்பரமன் சேயா வுதித்தெம் மானருளைப்
பெய்ய மணிமாக் கவிசொலுநாப் பெறுமீ னாட்சி சுந்தரனே."
மயில்ராவணன் சரித்திரம்.
ஒருசமயம் இவர் பூவாளூருக்குச் சென்றிருந்தார். அப்பொழுது அங்கே உத்தமதானபுரம் [12] லிங்கப்பையர் குமாரர்களாகிய சேஷுவையர், சாமிநாதையரென்ற இருவர் சீர்காழி அருணாசல கவிராயர் இயற்றிய இராமாயணக் கீர்த்தனத்தையும் [13] பம்பரஞ்சுற்றிச் சுப்பையரென்பவர் இயற்றிய மயில்ராவணன் சரித்திரக் கீர்த்தனத்தையும் படித்துப் பொருள் சொல்லிக் காலக்ஷேபம் செய்துகொண்டிருந்தனர். அவர்களுடைய வேண்டுகோளின்படி இவர் மயில்ராவணன் சரித்திரத்தை நூறு பாடலாகச் சில நாட்களிற் செய்துமுடித்து அவர்களுக்குக் கொடுத்தார். அவ்விருவரும் அதனைப் பெற்றுத் தாம் செல்லும் பல இடங்களிலும் அருணாசலகவி ராமாயணத்தைச் சொல்லும்பொழுது இடையிடையே கம்ப ராமாயணப் பாட்டுக்களைச் சொல்வது போல் மயில் ராவணன் சரித்திரக் கீர்த்தனங்களைச் சொல்லும்பொழுது இவர் செய்த செய்யுட்களைச் சொல்லிப் பொருட் பயனடைந்து வந்தனர். இச் செய்தியை அவ்விருவருள் ஒருவராகிய சாமிநாதையரே கூறக் கேட்டிருப்பதுடன் அந்நூற் செய்யுட்களிற் சிலவற்றையும், நான் இளமையிற் கேட்டதுண்டு. அவற்றின் நடை எளிதாக இருந்தது.
----------------------
[1] வதிட்டகுடியென்பது திட்டகுடி யென்று ஆயிற்றென்பர். இது வட வெள்ளாற்றின் கரையிலுள்ளது; ஒரு வைப்புஸ்தலம்.
[2] இஃது ஊட்டத்தூரென வழங்கும். இது வைப்புஸ்தலங்களுள் ஒன்று. இதனைத் தலைநகராகக் கொண்ட நாடு ஊறை நாடென்றும் அந்நாட்டில் இருந்த ஒரு பகுதியினராகிய வேளாளர் ஊற்றை நாட்டாரென்றும் வழங்கப்படுவர்.
[3] இரண்டு இணை - மோத்தலுணர்ச்சியும் பரிச உணர்ச்சியும் ஆகிய இரண்டும் பொருந்திய.
[4] ஒப்பு: திருச்சதகம், 31.
[5] ஒ: திருச்சதகம், 94. வெல்லை - வெல்லுதலை
[6] ஒ: திருச்சதகம், 14.
[7] ஒ: திருச்சதகம், 100.
[8] அளிக் கும்பு - வண்டின் கூட்டம்.
[9]புரம் மடங்க. சிரம் அடங்கலும். நரமடங்கலை - நரசிங்கத்தை. உரத்தையுடைய மடத்தைக் களைந்து; மடம் - அறியாமை.
[10]சகத்து இரா வரும் முன். தாள் நகத்திர் - திருவடியின் நகத்தை யுடையவரே.
[11]ஐக்கு வள்ளைச்செவி பாகற்கு; ஐக்கு - தலைவனுக்கு.
[12]இவர் சாமிமலைக் குறவஞ்சி முதலிய பிரபந்தங்களைச் செய்து அரங்கேற்றியவர்.
[13] பம்பரஞ்சுற்றி யென்பது ஒரூர்.
-------------
5. திருவாவடுதுறைக்கு வந்தது.
சிவதீட்சையும் க்ஷணிகலிங்க பூஜையும் பெற்றது.
இவர் தல தரிசனங்கள் முதலியவற்றில் மிக்க விருப்புடையவராக இருந்தனர். அன்றியும் சிவபெருமானை விதிப்படியே தினந்தோறும் பூசித்து வர வேண்டுமென்னும் அவா இவருக்கு உண்டாகி வளர்ந்து வந்தது. அதனால் இவர் சிவ தீட்சை செய்துகொள்ள விரும்பினார். அப்பொழுது திரிசிரபுரம் கீழைச் சிந்தாமணியில் இருந்த செட்டி பண்டாரத்தையா என்னும் அபிஷிக்தர் ஒருவர் இவருக்குத் தீட்சை செய்வித்து க்ஷணிகலிங்க பூஜையும் எழுந்தருளச் செய்வித்தார். அதுமுதல் இவர் பூஜையை அன்போடு நாடோறும் செய்து வருவாராயினர்.
கச்சியப்ப முனிவர் நூல்களைப் படித்தது.
இவர் புத்தகங்களைத் தேடுகையில் திருவானைக்காக்கோயில் தர்மகர்த்தாவின் வீட்டில், திருவாவடுதுறை யாதீனத்து வித்துவானாகிய ஸ்ரீ கச்சியப்ப முனிவராற் செய்யப்பெற்ற நூல்களுள் ஒன்றாகிய திருவானைக்காப்புராணம் கிடைத்தது. அதை முறையே படித்து வருகையில் கடவுள் வாழ்த்தின் அழகும், நாட்டுச்சிறப்பு முதலிய காப்பிய உறுப்புக்களின் அமைதியும், அவற்றிற் பழைய நூற் பிரயோகங்களும், இலக்கண அமைதிகளும், தம்மால் அது வரையில் அறியப்படாத சைவ சாஸ்திரக் கருத்துக்களும், சைவ பரிபாஷைகளும், புதிய புதிய கற்பனைகளும் நிறைந்து சுவை ததும்பிக் கொண்டிருத்தலையறிந்து இன்புற்றுப் பன்முறை படித்து ஆராய்ச்சி செய்வாராயினார். அதைப் படிக்கப் படிக்க அதுவரையிற் படித்த பல நூல்களினும் வேறு தலபுராணங்களினும் அது மிக்க சுவையுடையதென்று அறிந்துகொண்டார். பின்னர், கச்சியப்ப முனிவர் செய்த வேறு நூல்கள் எவையென்று ஆராய்ந்து தேடிய பொழுது விநாயக புராணத்தில் சில பகுதிகளும், பூவாளூர்ப் புராணமும், காஞ்சிப்புராணமும் கிடைத்தன. அந்த நூல்களையும் வாசித்து இன்புறுவாராயினர். இடையிடையே ஐயங்கள் சில நிகழ்ந்தன. அவற்றைத் தீர்ப்பவர்கள் அந்தப்பக்கத்தில் இல்லை. ஆதலின் தமக்கு உள்ள ஐயங்களைத் திருவாவடுதுறை யாதீனத்திற்குச் சென்று தீர்த்துக்கொள்ள வேண்டுமென்ற எண்ணமும், அவ் வாதீனத்தின் தொடர்பை எந்த வழியாகவேனும் பெற வேண்டுமென்னும் விருப்பமும் இவருக்கு உண்டாயின. அப்பொழுது இவருடைய பிராயம் இருபத்தொன்று.
பட்டீச்சுரம் வந்தது.
அப்பால் திருவாவடுதுறை செல்ல நினைந்து அன்புள்ள மாணாக்கரொருவரை உடன் அழைத்துக்கொண்டு வழியிலுள்ள தலங்களைத் தரிசனம் செய்பவராய் அங்கங்கேயுள்ள தமிழபிமானிகளையும் தமிழ் வித்துவான்களையும் கண்டு அளவளாவிப் பட்டீச்சுரம் என்னும் தலத்திற்கு வந்தார். அங்கே, திருச்சத்திமுற்றப் புலவர் பரம்பரையினராகிய அப்பாப்பிள்ளை யென்பவருடைய வீட்டுக்குச் சென்றார். அவர் பட்டீச்சுரயமகவந்தாதி யென்னும் நூல் முதலியவற்றை இயற்றியவர். இவரும் அவரும் தாம் தாம் இயற்றிய செய்யுட்களை ஒருவர்க்கொருவர் கூறித் தம்முள் மகிழ்ந்தனர். இளமையில் இவருக்கிருந்த கல்விப்பெருமையை அறிந்து அவர் பாராட்டுவாராயினர். அவர் இவரை அவ்வூரிலிருந்த பெரிய செல்வவானும் உபகாரியுமாகிய நமச்சிவாயபிள்ளை யென்பவரிடம் அழைத்துச் சென்றார்.
அந்த நமச்சிவாய பிள்ளை அபிஷிக்த மரபினர். வருவோரைத் தக்கவண்ணம் உபசரித்துப் பொருளுதவி செய்து அனுப்பும் இயல்பினர். வந்தவர்களுக்கெல்லாம் அன்புடன் உணவு அளிப்பவர். தமிழறிஞர்பால் மிக்க அன்புடையவர். இவர்கள் இருவரும் ஒருவரை யொருவர் பாராதவர்களாக இருந்தாலும் கேள்வியினால் ஒருவரை யொருவர் பார்த்துப் பழகவேண்டுமென்ற விருப்பம் உடையவர்களாகவிருந்தார்கள். ஆதலால், நமச்சிவாயபிள்ளை தம் வீட்டுக்கு வந்த இவரை உபசரித்து அளவளாவிக் கொண்டிருந்தார்.
பசுபதிபண்டாரம் பரீட்சித்தது.
அப்போது அங்கே [1]ஆவூர்ப் [2] பசுபதிபண்டார மென்பவர் வந்திருந்தனர். அவ்விடத்தில் இருந்தவர்களுட் சிலர் அவரைக் கொண்டு இவருடைய படிப்பை அளந்தறிய எண்ணி நமச்சிவாயா பிள்ளையிடம் தங்கள் கருத்தைக் குறிப்பித்தார்கள். அதனையறிந்த நமச்சிவாய பிள்ளையும் பிறரும் பசுபதி பண்டாரத்தைப் பார்த்து, "ஐயா! இவர்களைப் பரீட்சிக்க வேண்டுமானால் ஏதாவது கேட்டிடுக" என்றனர். இவருடைய அளவையறியாத அவர்,
[3]"நன்கொடிச் சிக்கை யருந்தரி சேய்க்குற்ற நாகவல்லி
மென்கொடிச் சிக்கை விடுக்கு மயிலை விமலர்வெற்பில்
என்கொடிச் சிக்கை புரிந்தாய் தினையுண் டிலையுடுக்கும்
புன்கொடிச் சிக்கைய நின்போல் பவர்க்கிது பொற்பல்லவே"
(மயிலை யந்தாதி, 56)
என்னும் செய்யுளைச் சொல்லி, "இப்பாட்டுக்குப் பொருள் சொல்லும்" என்றார். தம்மைப் பரீட்சிக்கச் செய்தவர்களிடத்தாவது கேள்வி கேட்டவரிடத்தாவது சிறிதேனும் மனவருத்தம் அடையாமல் இவர், அச் செய்யுளை இரண்டாமுறை மெல்லச் சொல்லும்படி செய்து அச்செய்யுள் அகத்திணைத்துறைகளுள் பாங்கி குலமுறை கிளத்தலென்பதற்கு இலக்கியமாக உள்ளதென்பதை முதலிற் கூறினார்; அப்பாற் பதங்களைப் பிரித்துக்காட்டிப் பொருளும் சொன்னதன்றி அச்செய்யுளைப்போன்ற வேறு செய்யுட்கள் சிலவற்றையும் மேற்கோளாக எடுத்துக்கூறி விளங்கச்செய்தனர்.
அப்போது உடனிருந்து கேட்டுக்கொண்டிருந்த வித்துவான் [4]தேவிபட்டணம் முத்துசாமிபிள்ளை, வெள்ளைவாரணம் பிள்ளை, அப்பாப்பிள்ளை முதலியோர் இவருடைய ஆராய்ச்சியையும் பல நூற்பயிற்சியையும் இன்றியமையாதவற்றை விளங்கும்படி சொல்லுதலையும் பெருமிதமின்மையையும் அடக்கத்தையும் பார்த்து, "இவருடைய காட்சி எம்போலியர்களுக்குக் கிடைத்தற்கரியது!" என்று வியந்து புகழ்ந்தனர். வினவிய பசுபதி பண்டாரம் விம்மிதமுற்றுச் சிறிதேனும் பெருமிதமின்றி இவரிடம் மரியாதையோடு ஒழுகுவாராயினர்.
இங்ஙனம் சில நாட்கள் அங்கே சென்றன. அவ்வூரில் அப்பொழுது இருந்தவர்களும் இச்செய்தியைக் கேட்ட பிறரும் அடிக்கடி வந்து அளவளாவி மகிழ்ந்து செல்வாராயினர்.
பழசைப் பதிற்றுப்பத்தந்தாதி.
அப்போது அவ்வூரார் வேண்டுகோளின்படி பட்டீச்சுரம் ஸ்ரீ தேனுபுரேசர்மீது ஒரு பதிற்றுப்பத்தந்தாதி இவரால் இயற்றி அரங்கேற்றப்பெற்றது. அது [5]பழசைப் பதிற்றுப்பத்தந்தாதியென வழங்கும்.
இவர் அவ்வந்தாதியில் இடையிடையே தாம் படித்த திருவாசகம் முதலிய பிரபந்தங்கள், திருவிளையாடல் முதலிய காப்பியங்களென்பவற்றிலுள்ள சொல்லையும் பொருளையும் விரவ வைத்திருப்பதைக் காணலாம். கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி, அருணைக் கலம்பகம், கந்தரனுபூதி, சிவப்பிரகாச ஸ்வாமிகள் பிரபந்தங்கள் முதலியவற்றிலும், நளவெண்பா, பிரபுலிங்க லீலை, திருவிளையாடற் புராணம் முதலியவற்றிலுமுள்ள கருத்துக்கள் சில அந்நூலிற் காணப்படுகின்றன:
"பூவாய் நெடுங்கோட் டுறுபசுந்தேன் கைகான் முடங்கு பொறியிலிதன்
நாவா யொழுகிற்றென "
என்ற பிரபுலிங்கலீலையின் அடிகளை,
“........ கைகான் முடங்கு மறிவிலிவாய்த்
தண்டே னெடுங்கோட் டிருந்தொழுகுந்
தன்மை யெனக்கண் டுளங்களிப்புக் கொண்டேன்" (9)
என வேற்றுருவில் அமைத்திருப்பதும்,
"குடங்கை நீரும் பச்சிலையு மிடுவார்க் கிமையாக் குஞ்சரமும்
படங்கொள் பாயும் பூவணையுந் தருவாய் மதுரைப் பரமேட்டீ”
என்ற பரஞ்சோதி முனிவர் வாக்கை,
"நலம்புனை குடங்கை நீரு நறியபச் சிலையு மிட்டோர்க்
கலம்புபாற் கடலு மென்பூ வணையுநாற் கோட்டு மாவும்
இலங்கிட வளிப்பாய்" (42)
எனச் சொற்பொரு ளொப்புமை யிலங்க அமைத்திருப்பதும்,
"திணியான மனோசிலை மீதுனதாள்
அணியாரர விந்த மரும்புமதோ "
என்னுங் கந்தரனுபூதிச் செய்யுட் கருத்தை,
"தாவின் மெல்லடித் தாமரை வாழுமே,
தீவி னைச்சிறி யேனுட் சிலையினே" (65)
எனப் பெயர்த்து வைத்திருப்பதும்,
“காமனை முனிந்து நெடுஞ்சடை தரித்துக் கவின்றகல் லாடைமேற் புனைந்து
யாமெலாம் வழுத்துந் துறவியா யிருந்து மொருத்தித னிளமுலைச் சுவடு
தோமுறக் கொண்டார்"
என்ற காஞ்சிப்புராணச் செய்யுட் கருத்தின் பெரும்பாகத்தை,
“செய்யிருக்குங் கழைகுழைக்கு மைங்கணைக்கா ளையைவிழியாற் சினந்து சுட்டீர்
ஐயிருக்குஞ் சடைதரித்தீர் விற்கருஞ்செங் கற்றோய்த்த வாடை கொண்டீர்
மையிருக்கு மணிமிடற்றீர் துறவியர்சூழ் பழசைநகர் வாழ்வீர் நீவிர்
பொய்யிருக்கு மருங்குலாண் முலைச்சுவடு கொண்டதென்னை புகலு வீரே" (87)
என வைத்தும் இருத்தல் காண்க.
இராமனாற் சிவபெருமான் அத்தலத்திற் பூசிக்கப் பெற்றதும், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் முத்துப் பந்தர் பெற்றதும், அவருடைய கோலத்தைச் சிவபெருமான் காணுதற்பொருட்டு அவர் கட்டளையின்படி நந்திதேவர் விலகியதுமாகிய அத் தலவரலாறுகளை இடைப்பெய்து பாடியுள்ள செய்யுட்கள் சில அவ்வந்தாதியில் உண்டு.
[6]"என்னிது விடையு நீவீற் றிருந்தருள் பொருப்பும் வெள்ளி
மன்னிய கலையும் வில்லு மாதங்க மதிண்மூன் றெய்யப்
பொன்னிற வாளி கொண்ட புராதனா பழசை வாணா
சென்னியி லிரந்துண் பாய்நன் செய்கைநின் செய்கை தானே” (45)
என்று சிவபெருமானை வினாவுதல் போன்ற செய்யுட்கள் சில அந்நூலின்கண் நயம்பெற விளங்குகின்றன.
"........................ கடையே னாகித் திரிவேனைத்
தெள்ளு தமிழ்நற் றொடைப் பாடல்
செய்து பணியப் பணித்தாண்டான்" (5)
எனவும்,
"............ அலைவேனைக்
கருப்பை நீக்கித்தன் றாள்களிற் செந்தமிழ்க்
கண்ணிசூட் டிடச் செய்தான் " (13)
எனவும்,
"..............யான்றன்
மணங்கமழ் மலர்த்தாள் பாடி வழிபட வருளி னானே"
எனவும் காணப்படும் பகுதிகள் இவர் சிவபெருமானை பாமாலைகள் புனைந்து வழிபடும் பேரார்வம் பூண்டிருந்தனரென்பதும், அதற்கேற்ற செவ்விவாய்த்துச் செய்யுளியற்றியதால் இவருள்ளத்தே இன்பம் ஊறிப்பெருகியதென்பதும் புலனாகின்றன.
"மூவாதானை மூத்தானை" (8)
"ஆனமருங் கொடிவலத்தா னழகமருங் கொடியிடத்தான்" (34)
என்னும் முரண்களும்,
"............ கூறானை நீறானைக் கொன்றை வேய்ந்த
பொன்றிகழ்செஞ் சடையானை விடையானை" (90)
என்னும் வழியெதுகையும் அந்நூலிற் காணப்படும் சில நயங்களாம்.
திருவாவடுதுறையை அடைந்தது.
பழசைப் பதிற்றுப்பத்தந்தாதியை அரங்கேற்றிய பின்னர் இப் புலவர் கோமான் தாம் திருவாவடுதுறைக்குச் செல்லவேண்டுமென்று வந்ததை அவ்வூராரிடம் கூறி விடை பெற்றுக்கொண்டார். அவர்கள், "நீங்கள் அடிக்கடி இவ்வூருக்கு வந்து எங்களை உவப்பிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்கள்; நமச்சிவாய பிள்ளை, "இந்த வீட்டினை உங்கள் சொந்த இடமாகவே எண்ணி அடிக்கடி வந்து எங்களை மகிழ்விக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டனர். அப்படியே செய்வதாக அவர்களுக்கு வாக்களித்து விட்டுப் புறப்பட்டுத் திருவலஞ்சுழி , ஸ்வாமிமலை, கும்பகோணம், திருவிடைமருதூர் முதலிய தலங்களையடைந்து ஸ்வாமி தரிசனம் செய்து கொண்டு அங்கங்கேயுள்ளவர்களாற் பாராட்டப்பெற்றுத் திருவாவடுதுறையை அடைந்தார்; தக்கவர்களுடைய உதவியைப் பெற்று அங்குள்ள மடத்துக்குச் சென்றார்.
அந்த மடம் ஸ்ரீ நமச்சிவாயமூர்த்தி காலத்தில் ஸ்தாபிக்கப் பெற்றது. அங்கே சென்றவுடன் அங்குள்ள காட்சிகளைக் கண்டு இவர் மிக்க வியப்பையும் மனமகிழ்ச்சியையும் அடைந்தார். சிவ வேடமும் தவவேடமும் உடைய பல துறவிகள் காஷாய உடை அணிந்தவர்களாகித் தூய்மையே உருவெடுத்தாற் போன்ற தோற்றப் பொலிவுடன் அங்கே நிறைந்திருப்பதையும், அடிக்கடி பல ஊர்களிலிருந்து அடியார்களும் பிரபுக்களும் வித்துவான்களும் வந்து வந்து சென்று கொண்டிருப்பதையும் கண்டார். வித்துவான்கள் தங்கள் தங்கள் ஆற்றலையும் தாங்கள் பெற்ற பரிசுகளையும் கூறி அங்கங்கேயிருந்து மகிழ்ந்து கொண்டிருத்தலையும் கவனித்தார். மலர்மாலைகளும் சிவார்ச்சனைக்குரிய பத்திர புஷ்பங்களும் பழங்களும் உரிய இடங்களில் நிறைந்திருத்தலை நோக்கினார். அங்கங்கே பல தொண்டுகளைச் செய்பவர்கள் தங்கள் கடமைகளைத் திருத்தமாகச் செய்துகொண்ருடித்தலைப் பார்த்தார். இவற்றையெல்லாம் பார்த்த இவர், "இத்தகைய காட்சியை இதுவரையில் நாம் கண்டிலோமே. எங்கே பார்த்தாலும் சிவமணமும் தமிழ் மணமும் உள்ள இந்த இடத்தைப்போன்ற வேறு ஓர் இடம் உலகத்தில் இருக்குமோ! ஸ்ரீ சிவஞான முனிவர், ஸ்ரீ கச்சியப்ப முனிவர் முதலியவர்கள் இத்தகைய இடத்தில் இருக்கப்பெற்றதனால்தானே சுவை மிகுந்த நூல்களை இயற்றினார்கள்" என்று எண்ணி விம்மிதமுற்று நின்றார். பின்னும் அங்குள்ள பல காட்சிகளையும் தனித்தனியே கண்டு மகிழ்ந்தார்.
வேளூர் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் இயல்பு.
அப்பொழுது, நமச்சிவாய மூர்த்திக்குப்பின் 14-ஆம் பட்டத்தில் வேளூர் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரென்பவர் ஆதீனகர்த்தராக வீற்றிருந்தார். அவர் வடமொழி தென்மொழி நூல்களிலும் சிவாகமங்களிலும் மெய்கண்ட சாஸ்திரம், பண்டார சாஸ்திரம், சித்த நூல்கள் முதலியவற்றிலும் பயிற்சி மிக்கவர்; பரம்பரையே பாடங்கேட்டவர்; பாடஞ் சொல்லுதலில் மிக்க ஆற்றலுடையவர்; பிரசங்க சக்தி வாய்ந்தவர்; வடமொழி வித்துவான்கள் தென்மொழி வாணர் பலருடைய இடையே இருந்து தினந்தோறும் அவர்களுடன் சல்லாபம் செய்து கொண்டு மகிழ்ச்சியோடு காலங் கழிப்பவர். அவர் அப்பொழுதப்பொழுது சமயோசிதமாகப் பேசிவந்த வார்த்தைகளும், சிலேடையான மொழிகளும், வாக்கியங்களும் இன்றும் அங்கங்கே பலரால் மிகவும் பாராட்டி வழங்கப்படுகின்றன. அம்மடத்தில் இப்பொழுது பலவகையாக எழுதப்படும் திருமுக ஸம்பிரதாயங்களும், கடித வக்கணைகளும், உள்ள சட்ட திட்டங்களும் அவர் புதுப்பித்தனவேயென்பர். தமக்குப் பட்டமாவதற்கு முந்திய வருஷத்தில் ஸ்ரீ கச்சியப்ப முனிவரால் நன்கு படித்து வரும்படி செவியறிவுறுத்தப் பெற்றவரென்று கேள்வி.
ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரைத் தரிசித்தது.
அவரைத் தரிசிக்கவேண்டுமென்னும் பேரவா பிள்ளையவர்களுக்கு உண்டாயிற்று. தாம் தரிசித்தற்கு வேணவாவுற்றிருத்தலை மெல்ல அங்கேயிருந்த தக்காரொருவரிடம் தெரிவித்துக் கொண்டார். அவர் தலைவருடைய சமயமறிந்து சொல்லி அனுமதி பெற்று வந்து அழைப்ப, இவர் கையுறைகளுடன் சென்று அவரை ஸாஷ்டாங்கமாக வணங்கித் திருநீறு பெற்றுத் தாம் அவர் விஷயமாக இயற்றிக்கொண்டு வந்த சில செய்யுட்களைக் கண்களில் நீர்வார நாக்குழற விண்ணப்பித்துக் கொண்டார். அச்செய்யுட்களை இவர் சொல்லுகையில் அவற்றினது இனிய கருத்தையறிந்தும் இவருடைய பயபக்தியைக் கண்டும் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் இவர் சிறந்த கல்விமானென்பதை உடனே தெரிந்து கொண்டார்; மிக்க அன்போடு இவருடைய வரலாற்றை விசாரித்தார். இவர் சுருக்கமான மொழிகளால் பணிவுடன் மெல்ல அதனைக் கூறினார். பின் தாம் படித்த நூல்களையும் ஸ்ரீ கச்சியப்ப முனிவருடைய நூல்களில் தமக்கு உள்ள ஈடுபாட்டையும் தெரிவித்துக்கொண்டனர். தேசிகர் இவரோடு அன்புடன் பேசி ஆதரிக்க இவர் சிலதினம் அங்கேயிருந்து வருவாராயினர்.
அப்பொழுது அங்கே ஆதீன வித்துவான்களாகக் [7] கந்தசாமிக் கவிராயரென்பவரும் [8]சரவண ஓதுவாரென்பவரும் வேறு சிலரும் இருந்தார்கள். தமிழிற் சைவ வைணவ சமயச்சார்பான கருவி நூல் படிப்பவர்களும் கந்தபுராணம், பெரியபுராணம், கம்பராமாயணம் முதலிய நூல்கள், திருமுறை முதலியவைகள், ஸ்தல புராணங்கள், சைவ சாஸ்திரங்கள் முதலியவற்றைப் படிப்பவர்களும் அங்கே உண்டு. மடத்தில் உணவிற்குரிய பண்டங்களைப் பெற்றுத் திருவாலங்காடு, திருக்கோடிகா, பாஸ்கரராசபுரம், குற்றாலம் முதலிய ஊர்களிலுள்ள வடமொழி வித்துவான்களிடம் சென்று படித்துவந்த அந்தண மாணவர்களும் பலர் இருந்தனர். உக்கிராணம், களஞ்சியம், பந்திக்கட்டு, பண்ணை முதலிய எல்லா இடங்களின் விசாரணை வேலைகளில் தம்பிரான்களே அதிகாரிகளாக இருந்து பக்தி சிரத்தையோடும் நம்பிக்கையோடும் தங்களுக்குக் கிடைத்த பணியையே செய்து கொண்டிருந்தார்கள்; அவர்களுட் பலர் படித்தவர்கள். அதனால் தலைவர் தம்முடைய நேரத்திற் பெரும்பான்மையான பாகத்தைப் படிப்பு சம்பந்தமாகவே செலுத்தி இன்புற்று வந்தார்.
இவர் ஆதீன கர்த்தரைத் தரிசித்தற்குக் காலை மாலைகளில் போகுங்கால் அருமை பாராட்டி இவருடைய கல்வியின் அளவை ஆராய்வாராய்ச் சிலசில பாடல்களைச் சொல்லி, "இவற்றிற்குப் பொருள் சொல்லும்" என்று அவர் கேட்பதுண்டு. இவர் அச் செய்யுட்களை மனத்திற்கொண்டு ஒருமுறை இருமுறை மும்முறை ஆலோசித்து அவசரப்படாமல் விடை சொல்லுவர். வினாவுங் காலத்துப் பொருள் புலப்படாதபடி தேசிகர் செய்யுளைக் கூறுவர்; இப் புலவர்பிரான் மயக்கமடையாமல் அச்செய்யுளை நன்றாக ஆராய்ந்து செவ்வனே பொருள் கூறுவர். அவற்றுள் இரண்டு செய்யுட்கள் வருமாறு:-
[9]1. "இந்தவசம் அந்தவசந் தன்மலைதற் கேதுசெயும்
நொந்தவச முற்றாட்கே நோக்குங்காற் - பைந்தொடியாய்
ஆண்டகுருத் தென்றுறைசை யம்பலவா ணன்புயத்திற்
பூண்டநிறச் செங்கழுநீர்ப் பூ."
2. "இத்தை யனையவுரு வில்லான் விடுமலரே
வைத்தகரை யோதடுக்க மாட்டாதே - நித்தநித்தம்
அங்கமுகங் காத்துறைசை யம்பலவா ணன்புயத்திற்
செங்கழுநீர்த் தாரனையே தேடு."
தெரிந்தவற்றை மட்டும் விளங்கச் சொல்லிவிட்டுத் தெரியாதவற்றிற்குப் பொருள் கேட்டுத் தெரிந்துகொள்வர். இவருக்கு இருந்த சந்தேகங்களிற் பல அக்காலத்தில் அவரால் தீர்ந்தன. விநாயகபுராணத்தின் பாயிரத்தில் உள்ள,
"மரந்துளைத்த கணையானுஞ் சோவெறிந்த திறலானு மதிக்குந் தோறும்
சிரந்துளக்க வலைகடலுஞ் சேணிகந்த பெருவரையுந் திறத்திற் குன்றக்
கரந்துளக்குங் குறுமுனிக்குங் கருத்தின்மயல் பூட்டியகை தவஞ்சால் வெற்பின்
உரந்துளைத்த சேயிலைவேல் வலனுயர்த்த விளையவனை யுளத்துள் வைப்பாம்”
என்னும் செய்யுளிலுள்ள, 'கரந்துளக்குங் குறுமுனிக்கு' என்னும் பகுதிக்கு இவருக்கு நெடுநாளாகப் பொருள் விளங்காமலிருந்தது. பலரிடத்தும் இதைப்பற்றி வினவியதுண்டு. அவர்கள் சொல்லிய பொருள்களில் ஒன்றேனும் இவருடைய புத்திக்குப் பொருந்தவேயில்லை. அச்செய்யுளை ஒருபொழுது தேசிகர்பால் இவர் விண்ணப்பம் செய்தனர். உடனே அவர் உள்ளங்கையையேந்தி மறித்துக் காட்டிக் கடலை உண்டது கையை ஏந்தினமையாலென்றும் விந்தத்தை அழுத்தியது கையைக் கவித்தமையாலென்றும் பொருள் கூறவே, உயர்ந்தோர்களிடத்துச் சில பொழுதேனும் பழகுதலாலுண்டாகும் பெரும்பயனை இவர் அறிந்து அவரிடம் ஈடுபட்டு, "இந்தப் பெரியவர்களை இதுகாறுந் தரிசியாமல் பலரிடத்தும் அலைந்தலைந்து வீணே காலங்கழித்து விட்டோமே" என்று மனம் வருந்தினர். 'கரந்துளக்கும்' என்பதற்கு அவர் பொருள் கூறிய அருமைப்பாட்டையும் பிற நிகழ்ச்சிகளையும் இவர் அடிக்கடி சொல்வதுண்டு. இவ்வாறு காலை மாலைகளிற் சமயம் பார்த்துச் சென்று அவர்பாற் கேட்டுக் கேட்டு இவர் தீர்த்துக்கொண்ட ஐயங்கள் பல. தமக்கு நெடுநாளாகப் பொருள் விளங்காதிருந்த ஒலியல், கழுவாய், சைலாதி, வரூதினி, வாதராயணரென்னும் சொற்களுக்கு முறையே ஈயோட்டி என்னும் விருது, பிராயச்சித்தம், திருநந்திதேவர், சேனை, வியாசர் என்று பொருள் தெரிந்து கொண்டது அவரிடத்தே தான் என்பர். முல்லையந்தாதியிலுள்ள,
[10]"கட்டோம் புதலெனக் காமாதி யாறுங் கரிசறுத்தோம்
உட்டோம் புதவு திறந்தின்ப வீடுபுக் குச்சரித்தோம்
சிட்டோம் புதல்விமண் ணோருந்தி கஞ்சந் தெளிவின்முன்பின்
விட்டோம் புதலுறு நள்ளெழுத் தான்முல்லை மேவப்பெற்றே"
என்னும் செய்யுளிலுள்ள நடுவெழுத்தலங்காரப் பொருளையும்,
[11]"பொருதவி சாகரஞ் சத்தியுங் கும்பனும் பொற்பழிக்க
விருதவி சாகரந் தானும் வருத்து மெய் யன்பருள்ளம்
ஒருதவி சாகரந் தென்முல்லை யாவுடை யாரருளார்
இருதவி சாகர நெஞ்சேயல் லாற்செய லியாதுனக்கே",
[12]“வரையேற விட்டமுதஞ் சேந்தனிட வருந்தினைவல் லினமென் றாலும்
உரையேற விட்டமுத லாகுமோ வெனைச்சித்தென் றுரைத்தா லென்னாம்
நரையேற விட்டமுத னாளவனாக் கொண்டுவட புலிசை மேவும்
கரையேற விட்டமுதல் வாவுனையன் றியுமெனக்கோர் கதியுண் டாமோ"
என்பன போன்ற செய்யுட்களின் பொருளைத் தெரிந்துகொண்டதும் அவரிடத்தேதான். அவருடைய தரிசனத்தின் பின்புதான் தமிழின் பரப்பும் பெருமையும் இவருக்கு விளங்கின; தமிழில் பல நூல்களும் அவற்றில் ஆழ்ந்த கருத்துக்கள் அமைந்த பகுதிகளுமுள்ளன வென்றறிந்தனர். 'இந்த மடத்தின் சம்பந்தத்தைப் பெற்றது பெரும் பாக்கியம்' என்றும், 'இத்தொடர்பை எப்பொழுதும் பெற்றுய்யவேண்டும்' என்றும் இவர் எண்ணினார்.
திரிசிரபுரம் மீண்டது.
அப்பால் அடிக்கடி வந்து தரிசிப்பதாக விண்ணப்பித்துப் பிரியா விடை பெற்றுத் திரிசிரபுரம் வந்து சேர்ந்தார். பின்னர், இடையிடையே திருவாவடுதுறை சென்று ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரைத் தரிசித்து வேண்டியவற்றைத் தெரிந்துகொண்டு வருவதுண்டு.
---------------------------
[1] ஆவூர்: பட்டீச்சுரத்தின் தென்பாலுள்ளதும் தேவாரம் பெற்றதுமான ஒரு சிவஸ்தலம்.
[2] அவர் தேவாரம் முதலியவற்றிற் பயிற்சியுற்று அவற்றைப் பண்ணோடு ஓதுபவர்; பெரியபுராணம், திருவிளையாடல் முதலிய சைவ நூல்களிலும் பிரபந்தங்களிலும் முறையான பயிற்சியும் பிரசங்கம் செய்யும் வன்மையும் பெற்றவர்; சுற்றுப் பக்கங்களில் உள்ளவர்களால் தமிழ் வித்துவானென்று மதிக்கப்பெற்றவர்.
[3] நன்கு ஒடிச்சு இக்கை அருந்து அரி; இக்கு - கரும்பு ; அரி - குரங்கு. நாகவல்லி மென்கொடி - வெற்றிலைக்கொடி. மென்கொடியினது பிணக்கை. என் கொடு இச்சிக்கை புரிந்தாய்; இச்சிக்கை - விரும்புதல். என்கொடு - என்ன விசேடத்தை யறிந்து. புன்கொடிச்சிக்கு இச்சிக்கை புரிந்தாய்; கொடிச்சிக்கு - கொடிச்சி யின்பால்.
[4] அவர் பட்டீச்சுரம் நமச்சிவாய பிள்ளையால் ஆதரிக்கப்பட்ட வித்துவான்களுள் ஒருவர்; சிறந்த தமிழ்க்கவிஞரென்று புகழ்பெற்றவர்; சிவஸ்தலங்கடோறும் சென்று சென்று ஸ்வாமி தரிசனம் செய்து ஒவ்வொரு நேரிசை வெண்பா இயற்றிக் காலங்கழித்தவர். அவ்வெண்பாக்கள் தலத்தின் பெயரையாவது ஸ்வாமியின் பெயரையாவது திரிபிலேனும் யமகத்திலேனும் எதுகையிற் பெற்றுப் பொருட் சிறப்புடையனவாய் விளங்கும். அவர் அங்ஙனம் செய்த வெண்பாக்கள் நூற்றுக் கணக்கானவையென்பர். அவற்றுட் சில பாடல்களே கிடைக்கின்றன.
[5] பட்டீச்சுரம் முதலிய பல தலங்களைத் தனக்குள் அடக்கிக்கொண்டிருக்கிற பழையாறு என்னும் பழைய நகரத்தின் மரூஉவாகிய பழசை யென்னும் பெயர் பட்டீச்சுரத்திற்குத் தலைமை பற்றி வழங்கும்.
[6] வெள்ளி - வெள்ளை நிறமுடையது, வெள்ளியென்னும் உலோகம். மாதங்கம் – யானைத்தோல், பெரிய தங்கம் (மேரு.) பொன்நிறவாளி - திருமகளை மார்பிலே உடைய திருமாலாகிய அம்பு, நிறத்தையுடைய பொன்னாலாகிய அம்பு.
[7] இவர் உடையார்பாளையத்தில் ஜமீந்தாராக இருந்த கச்சிக் கல்யாணரங்கதுரையென்பவர் மீது ஒரு கோவை பாடிப் பரிசும் சர்வ மானியமாகப் பத்துக்காணி நிலமும் பெற்றவர்.
[8] இவர் பிற்காலத்தில் கோயம்புத்தூரையடைந்து அங்கே உள்ள பிரபுக்களாலும் வித்துவான்களாலும் ஆதரிக்கப்பெற்றுப் பலருக்குப் பாடஞ் சொல்லிப் புகழ் பெற்றவர்.
[9] குறிப்பு: (1) இந்த அசம் - இந்த ஆடு. வசந்தன் - மன்மதன். பைந்தொடி: விளி. செங்கழுநீர்ப் பூவை ஆய்வாயாக; ஆய்தல், ஈண்டுத்தேடிக் கொணர்தல்.
(2) இத் தையல் நைய - இப்பெண் மெலியும்படி. மலர் ஏவை - மலர்ப் பாணத்தை, தகர் - ஆடு. அம்பலவாணன்: இவர் இந்த ஆதீனத்தில் 13 - ஆம் பட்டத்தில் தலைவராக வீற்றிருந்தவர். அன்னையே செங்கழு நீர்த் தாரைத் தேடு.
இச்செய்யுட்கள் இரண்டும் வெறி விலக்கு. இவை தொட்டிக் கலைச் சுப்பிரமணிய முனிவர் வாக்கு.
[10] குறிப்பு: காமாதி ஆறும் கட்டோம்; கட்டோம் - களைந்தோம். உள் தோம் கரிசு அறுத்தோம் - அகக் குற்றமாகிய ஆணவ மலத்தை அறுத்தோம். புதவு - கதவு. சிட் ஓம் உச்சரித்தோம் - ஞானமயமாயுள்ள பிரணவத்தை உச்சரித்தோம். புதல்வி, மண், ஓர் உந்தி (ஆறு), கஞ்சம், தெளிவு என்பவற்றின் முதலெழுத்தையும் ஈற்றெழுத்தையும் விட்டுப் பாதுகாக்கப்பெற்ற நடுவெழுத்துக்களால்; இது நடுவெழுத்தலங்காரம். இதனாற் குறிப்பிக்கப்பட்ட தொடர் மாசிலாமணி என்பது; குமாரி (புதல்வி), காசினி (மண்), பாலாறு (ஓர் உந்தி), தாமரை (கஞ்சம்), துணிவு (தெளிவு) என்னும் ஐந்து சொற்களின் நடுவெழுத்துக்கள் ஐந்தும் சேர்ந்தால் மாசிலாமணியென்றாதல் காண்க. மாசிலாமணியென்பது வடதிருமுல்லைவாயிற் சிவபெருமான் திருநாமம். முல்லை - திரு முல்லைவாயில். முல்லை மேவப்பெற்று மாசிலாமணியால் கட்டோம், அறுத்தோம், உச்சரித்தோம் என இயைக்க. இது திருமுல்லைவாயி லந்தாதியிலுள்ள 50 - ஆம் பாட்டு.
[11] பொருத விசாகர் அம் சத்தியும் கும்பனும் பொற்பு அழிக்க; விசாகர் - முருகக்கடவுளுடைய; சத்தி - வேல்; கும்பன் - அகத்திய முனிவர். விருது அவி சாகரம்தானும்; விருது - வெற்றி. சாகரம் வருத்தும் - அன்பர் உள்ளத்தை ஒரு தவிசாகவும் தென்முல்லையை ஆகரமாகவும் உடையவர்; ஆகரம் - இருப்பிடம். இரு, தவி, சா, கர - இருந்தால்தான் இரு, தவித்தால்தான் தவி, செத்தால்தான் சா, ஒளித்தால்தான் ஒளி; இங்ஙனம் செய்வதன்றி வேறு செயல் உனக்கு என்ன இருக்கின்றது! அவர் அருளாமையின் நீ என்ன நிலை அடைந்தால்தானென்னவென்ற படி. இஃது அவ்வந்தாதியிலுள்ள 33 - ஆம் பாட்டு. இது தலைவியின் கூற்று.
[12] வரையேல் - என்னை நீக்காதே. சேந்தன் தவிட்டமுதம் இட அருந்தினை; தவிட்டமுதம் - தவிட்டாலாக்கிய களியை. உரையே - சொல்வாயாக. 'ற' இ 'ட' வல்லினம் என்றாலும் முதலாகுமோ - றகரமும் இந்த டகரமும் வல்லினமாக இருந்தாலும் மொழிக்கு முதலாகுமோ; ஆகா. உன்னைப்போல எனக்குச் சித்தென்னும் பெயர் வழங்கினும் நான் முதன்மை உறுவேனா; அடிமைத் தன்மையையே உடையேன் என்றபடி. அவிட்டம் முதல் நாளவனை நரையேறாகக்கொண்டு; அவிட்ட நட்சத்திரத்திற்கு முதல் நாளாகிய திருவோணத்திற்குரிய திருமாலை இடப வாகனமாகக் கொண்டு. வடபுலிசை - திருப்பாதிரிப்புலியூர். கரையேறவிட்டவரென்பது அந்தத் தலத்திலெழுந்தருளியுள்ள இறைவன் திருநாமம்.
-----------
6. திருப்பைஞ்ஞீலித் திரிபந்தாதி முதலியவற்றை இயற்றியது.
லட்சுமணபிள்ளை யென்பவரின் இயல்பு.
திரிசிரபுரத்தில் இவரை ஆதரித்தவர்களுள் ஒருவராகிய லட்சுமண பிள்ளை யென்பவர் தமிழ் நூல்களில் அபிமானம் உடையவர்; செய்யுள் நயங்களை அறிபவர்; படித்தவர்களைத் தேடிப் போய் வலிந்து உபசரிப்பவர். அவர் இக் கவிஞர்பெருமானுடைய சிறப்பையும், இவர் பல இடங்களிலுள்ளவர்களாலும் போற்றப்பட்டு வருதலையும் அறிந்து ஏனையோர்களைக் காட்டிலும் மிக்க அன்புடன் இவரை ஆதரித்துவந்தார். நாளடைவில் இவருடைய கல்வித்திறமையில் ஈடுபட்டு இவருக்கு வேண்டிய பலவகை அநுகூலங்களையும் செய்து வந்தார்.
திருப்பைஞ்ஞீலித் திரிபந்தாதி.
இவ்வாறு இருந்து வருகையில் பிள்ளையவர்கள் திருப்பைஞ்ஞீலிக்குச் சில அன்பர்களுடன் ஒருமுறை சென்றிருந்தார்; அப்பொழுது உடன்சென்றவர்களும் அங்கேயுள்ளவர்களும் அந்தத் தலசம்பந்தமாக ஒரு பிரபந்தம் செய்யவேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். பல திரிபு யமக அந்தாதிகளை வாசித்த பழக்கத்தாலும் வேளூர்ச் சுப்பிரமணிய தேசிகரிடம் பல திரிபுயமகப் பாடல்களின் உரையையும் அவற்றின் போக்கையும் அறிந்து கொண்ட வன்மையாலும் திரிபுயமகங்களைத் தாமும் பாடவேண்டுமென்னும் அவாவுடையவராக இருந்துவந்தனராதலின் அவர்கள் விருப்பத்திற்கிணங்கி அத் தலத்திற்கு ஒரு திரிபந்தாதி சில தினத்தில் இவராற் செய்யப்பெற்றது.
அது மிக எளிய நடையில் அமைந்துள்ளது. இடையிடையே அகப்பொருட்டுறைகளுள்ள பாடல்கள் காணப்படும். அவற்றுள், பாங்கிவிடு தூது, அன்னவிடு தூது, கிள்ளைவிடு தூது, வண்டுவிடு தூது, நாரைவிடு தூது, மேகவிடுதூது முதலியவை உள்ளன. தலத்தின் பெயராகிய கதலிவனமென்பதை, 21-ஆம் பாடலில் திரிபிலமைத்துப் பாடியிருத்தல் கருதற்குரியது. சிவபெருமான் திருநாமங்களாகிய, 'சங்கரனே' (29), 'சிவசம்பு' (42) என்பனவற்றைத் திரிபிலமைத்துப் பாடியுள்ளார்.
"வினை வாட்டுதலின், உருத்தா மரைபடுவேனை” (1),
"அருமந்த கல்வி" (36),
"மதனப் பயல்” (62)
என்றவிடங்களில் உலகவழக்குச் சொற்கள் அமைந்து மிக்க இன்பத்தைச் செய்கின்றன. உவமான சங்கிரகம் முதலிய இலக்கண நூல்களில் எடுத்தோதப் பெற்றனவாகிய, கூந்தல் முதலியவற்றிற்குக் கொன்றைக்கனி முதலிய உவமைகளை அங்கங்கே காணலாம்.
[1]"அத்தத்தி லங்குச பாசமுள் ளாற்கத் தனைவினையேன்
சித்தத் திலங்கும் பரனைப்பைஞ் ஞீலியிற் சென்றுதொழார்
கத்தத் திலங்குழைப் பார்போல் யமன்கசக் கத்திரிபட்
டுத்தத் திலங்கு மிழிந்திங்குந் தோன்றி யுலைபவரே" (52)
என்ற செய்யுளில் யமனுக்கு எள்ளாட்டுவாரை உவமை கூறியிருத்தல் பாராட்டற்குரியது. முன்னோர் மொழி பொருளை இடத்திற்கேற்ப அங்கங்கே எடுத்தாண்டதன்றி இக்கவிஞர்பிரான், "இலங் கயிலாதரன்" (திருவரங்கத்தந்தாதி) என்பதிலுள்ள அயிலாதரனென்ற சொல்லை, "எல்லையிலாதரன்றந்தாய்” (55) என்றவிடத்தும், "அந்தகா வந்துபார் சற்றென் கைக்கெட்டவே" (கந்தரலங்காரம்) என்ற தொடரை "அந்தகா வந்து பாரொரு கையினியே" (71) என்றவிடத்தும், “அவனிவனென் றெண்ணி யலையா திருத்தி" (அழகர் கலம்பகம், 2) என்பதை, "அவனிவனென் றலையாம னெஞ்சே" (86) என்றவிடத்தும் அமைத்து அவர்கள் சொல்லையும் பொன்னே போற் போற்றினமை அறிந்து இன்புறற்குரியது. இந் நூலிலுள்ள சில சுவையுள்ள பாடல்கள் வருமாறு:-
[2] 1."அத்தனை வாம்பரி யேற்றனை நீலி வனத்தமர்ந்த
நித்தனை வாவென்றென் குற்றே வலுங்கொ ணிருமலனைக்
கத்தனை வாய்மன மெய்யாற் றொழார்முற் கருமங்கணூல்
எத்தனை வாசித் திருக்கினு நீங்குவ தேதவர்க்கே." (19)
[3] 2. "வருந்தா ரெனமகிழ்ந் தேனிற்றை ஞான்று வரையுஞ் சும்மா
இருந்தா ரனுப்புத லின்றிவண் டீரின்று போய்ச்சொலுங்கோள்
பெருந்தா ரணிபுகழ்ந் தேத்தும்பைஞ் ஞீலிப்பெம் மானுக்குத்தேன்
திருந்தார் முடியுடை யாருக்குத் தேவர்தந் தேவருக்கே." (60)
[4] 3. "எண்ணா தவனன் பொடுநின் பதத்தையென் றாலுமெனை
உண்ணாத வன்னஞ்ச முண்டது போல வுவந்தருள்வாய்
விண்ணாத வன்கதிர் தோற்றா வரம்பை வியன்வன முக்
கண்ணா தவனன் குடையார் மனத்துறை காரணனே." (69)
இந்நூலுக்குரிய சிறப்புப்பாயிரப் பாடல்
[5] மறைநூ றுகளை யறவோர்ந்து ளாரு மகிழ்ந்துபவக்
கறைநூறு மாறுணர்ந் துய்ந்திடு மாறு கயிலையொப்ப
உறைநூறு மாடங்கொள் பைஞ்ஞீலி நாதற் குவந்துகலித்
துறைநூறு சொற்றனன் மீனாட்சி சுந்தரத் தூயவனே”
என்பது. இதனை இயற்றினவர் இன்னாரென்று தெரியவில்லை.
திருவானைக்காத் திரிபந்தாதி
பிரபந்தம் இயற்றும் ஆற்றல் இவர்பால் இவ்வாறு நாடோறும் பெருகி வந்தது. ஒன்றன்பின் ஒன்றாக இயற்றப்பெற்று வந்த பிரபந்தங்கள் பல வரவரச் சுவைகளில் வளர்ச்சியுற்று வந்திருத்தலைக் காணலாம். இக் கவிஞருடைய இருபத்தாறாம் பிராயத்திலே இவை நிகழ்ந்தன. திரிபந்தாதியொன்று திருவானைக்காவிற்கும் இவரால் அப்பொழுது இயற்றப்பெற்றதென்பர். அந் நூல் இப்பொழுது கிடைக்கவில்லை.
திருச்சிராமலை யமக அந்தாதி
திரிபந்தாதிகள் சிலவற்றை இயற்றிய பின்னர் யமக அந்தாதி இயற்றத் தொடங்கினார். முதலிலே தாம் வாழ்ந்துவரும் திரிசிரபுர விஷயமாகவே ஒன்று இயற்றினார். அது திரிசிராமலை யமக அந்தாதியென வழங்கும். இவர் அந்த அந்தாதியை நன்கு ஆய்ந்து சுவை பெறச் செய்யவேண்டுமென்னும் நோக்கமுடையவராக இருந்தார். இளமைப்பருவத்துப் பாடியதாதலின் அந் நூலுக்கு முன் ஆர்வமிகுதியால், விநாயகக் கடவுள், ஸ்ரீ தாயுமானவர், ஸ்ரீ மட்டுவார்குழலம்மை, ஸ்ரீ செவ்வந்தி விநாயகர், முருகக்கடவுள், கலைமகள், திருநந்திதேவர், சைவசமயாசாரியர் நால்வர், சண்டேசுர நாயனார், மற்றைத் திருத்தொண்டர்கள், சேக்கிழார் முதலியோர்களை வாழ்த்திப் பதினொரு செய்யுட்களையும் அவையடக்கமாக ஒன்றையும் நூதன முறையாகப் பாடியுள்ளார். பிற அந்தாதிகளில் இம்முறை இல்லை.
"கங்காதர" (8), "அப்பாசிராமலையாய்" (21), "கந்தரத்தா” (25), "கையிலாய னம்பன்" (44), "பகவகங்காள" (99) என வரும் சிவபெருமான் திருநாமங்களையும், "குந்தனஞ் சந்தனம்” (35) என வரும் வழியெதுகையையும், "தரங்கந் தரங்கம்" (38) என்ற மடக்கையும் யமகத்திற் பொருத்திப் பாடியிருப்பது அறிந்து மகிழ்தற்குரியது. இடையிடையே திருவிளையாடற் புராணச் செய்திகளையும் நாயன்மார்கள் வரலாறுகளையும் காணலாம்.
அந் நூலிலுள்ள சில செய்யுட்கள் வருமாறு:-
[6] 1."கலக்கந் தரமட வார்மயல் வாரி கலந்தவென்முன்
கலக்கந் தரவெஞ் சமன்வருங் காலங் கடுக்கைதப்ப
கலக்கந் தரநதி சூடுஞ் சிராமலை யாய்கன்னிபா
கலக்கந்தரநினை வேண்டிக்கொண்டே னெனைக் கண்டுகொள்ளே.”
[7] 2. "ஆயாவப் பாலரி யம்பா சிராமலை யையநின்னை
யாயாவப் பானிற்கும் வெவ்வினைப் பட்டலைந் தேமனம்புண்
ணாயாவப் பார்சடை யாயுழல் வேற்குவை யச்சிலரை
யாயாவப் பாவென் றினிப்பிறந் தோத லதைத்தவிரே. " (60)
[8] 3. "ஆவணங் காட்ட மதிக்கச் சுமக்கவப் போதுதெரி
யாவணங் காட்ட நரியையெல் லாம்பரி யாக்கமுதி
ராவணங் காட்டநம் மையன் சிராமலை யானைவைத்த
தாவணங் காட்டன்மை யாரன்பன் றேயி தறிமனமே." (89)
அந்த நூல் யாவராலும் நன்கு மதிக்கப்பெற்றது. அதற்கு முன்பு இவர் செய்த நூல்களெல்லாவற்றினும் சிறந்ததென்னும் பெருமை அதற்கு உண்டாயிற்று. அக்காலத்தில் இவருடைய அறிவின் ஆற்றல் எல்லோராலும் அறிந்து வியக்கப்பெற்றது. இச்செய்திகள்,
"பூவார் பொழிற்சிர பூதரம் வாழ்முக்கட் புண்ணியனாம்
தேவாதி தேவனுக் கந்தாதி மாலையைச் செய்தணிந்தான்
பாவார் தமிழின் றவப்பய னாவரு பண்புடையான்
நாவார் பெரும்புகழ் மீனாட்சி சுந்தர நாவலனே"
"தேன்பிறந்த கடுக்கையணி சடைப்பெருமான் றாயான செல்வ மாய்ச்சேர்
வான்பிறந்த தலப்பனுவல் பிறதலநூல் களினுமென்னே வயங்கு மென்னிற்
கான்பிறந்த குவளையந்தார் மீனாட்சி சுந்தரமா கவிஞர் கோமான்
தான்பிறந்த தலநூன்மற் றையதலநூ லினுஞ்சிறத்தல் சகசந் தானே?"
என்ற அந்நூற் சிறப்புப்பாயிரங்களால் உய்த்துணரப்படும். இவற்றை இயற்றியவர்களின் பெயர்கள் இப்பொழுது தெரியவில்லை.
ஸ்ரீ அகிலாண்டநாயகி மாலை.
இவர் சில அன்பர்களுடன் ஒரு தினம் திருவானைக்காவிற்குச் சென்று சுவாமி தரிசனம் செய்வதற்காகப் புறப்பட்டுக் காவிரியின் தென்பாலுள்ள [9]ஓடத்தில் ஏறியபொழுது உடனிருந்த சிதம்பரம்பிள்ளை யென்னுங் கனவான் இவரை நோக்கி ஸ்ரீ அகிலாண்டேசுவரியின் மீது ஒரு மாலை இயற்றவேண்டுமென்று கேட்டுக்கொண்டனர்; அப்பொழுது உடன் சென்றவருள் ஒருவர், "முன்னமே திருவண்ணாமலையை வலம் வரத் தொடங்கிய துறைமங்கலம் சிவப்பிரகாச ஸ்வாமிகள் ஒருமுறை வருவதற்குள் சோணசைலமாலையைப் பாடிமுடித்தது போல் நீங்கள் சம்புநாதரைத் தரிசனஞ் செய்து திரும்புவதற்குள் அம் மாலையைச் செய்வதற்கு இயலுமா?" என்று கேட்டார். இவர் நேருமானாற் செய்யலாமென்று சொல்லிப் பாடத்தொடங்கி, எழுதியும் எழுதுவித்துக்கொண்டும் சென்று கோயிலுக்குப்போய்த் தரிசனம் செய்த பின்பு, சில நாழிகை அங்கே ஓரிடத்தில் தங்கிப் பாடல்களைச் செய்துகொண்டே இருந்துவிட்டுத் திரும்பி வீடுவந்து சேர்வதற்குள் அந்நூலை முடித்தனரென்று சொல்வார்கள்.
அம்மாலையிற் பலவிதமான கற்பனை நயங்கள் அமைந்துள்ளன. சிவபெருமானுக்கு இடப்பாகத்தில் அம்பிகை வீற்றிருக்கும் ஒரு செய்தியிலிருந்து கிளைத்த பலவகைக் கற்பனைகளும், நாயன்மார்களைப்பற்றியும் மதுரை ஸ்ரீ சோமசுந்தரக் கடவுளின் திருவிளையாடல்களைப்பற்றியும் உள்ள செய்திகளும் அதில் அங்கங்கே அமைவுற்றுச் சுவை நிரம்பி விளங்குகின்றன. தல சம்பந்தமான செய்திகளும் தற்குறிப்பேற்றவணியும் அம்மாலையை அழகு செய்கின்றன.
"பெருவள னமைந்த நீருரு வாய பெருந்தகை" (17)
"புண்ணிய வெள்ளை நாவலோ னாரம்
பூண்டவ னெனும் பெயர் புனைந்தான்" (64)
"ஒளிமிகு சம்பு லிங்கநா யகர்" (71)
என அத்தலத்துச் சிவபெருமானைப்பற்றிய செய்திகளையும்,
"இடையறா வன்பு பெருக்கிநீ பூசை யியற்றிட வினிதுள முவந்து
சடையறா முடியோ னுறைதரப் பெற்ற தண்ணிழ னாவலந் தருவோ" (30)
"சிலம்பி யியற்றுநூற் பந்தரு முவந்து புணரருள் புரிந்தான்" (60)
எனத் தலவரலாறுகளையும், -
" நினது பிறங்குபே ராலயஞ் சூழ்ந்த
பொருவினீ றிட்டான் மதில்" (76)
எனத் திருநீறிட்டான் மதிலையும் பற்றி அங்கங்கே கூறியது இவர் திருவானைக்காப் புராணத்தைப் படித்துப் பல விஷயங்களையறிந்தமையைப் புலப்படுத்துகின்றது.
அந்நூலிலிருந்து வேறு சில பாடல்கள் வருமாறு:-
"அளவறு பிழைகள் பொறுத்தரு ணின்னை யணியுருப் பாதியில் வைத்தான்
[10]தளர்பிழை மூன்றே பொறுப்பவ டன்னைச் சடைமுடி வைத்தன னதனாற்
பிளவியன் மதியஞ் சூடிய பெருமான் பித்தனென் றொருபெயர் பெற்றான்
களமர்மொய் கழனி சூழ்திரு வானைக் காவகி லாண்ட நாயகியே." (7)
"உலகிடை யழுத பிள்ளைபால் குடிக்கு முண்மையென் றுரைப்பதற் கேற்ப
இலகுசீ காழி மழவழ வளித்தா யின்முலைப் பாலழா விடினும்
அலகற விரங்கி யளிப்பவ ரிலையோ வத்தகு மழவுயா னருள்வாய்." (28)
[11]"அம்பலத் தாட வெடுத்ததா டுணையென் றறைவனோர் கான்மலை யரையன்
வம்பலர் முன்றிற் றிருமணத் தம்மி வைத்ததா டுணையென்ப னோர்காற்
செம்பொரு டுணியா னென்றெனை யிகழேல் தேர்ந்தொரு வழிநின்றே னன்னே
கம்பலர்த் தடஞ்சூழ் தருதிரு வானைக் காவகி லாண்டநா யகியே." (73)
அந்த நூலின் ஒவ்வொரு செய்யுளிலும் நயம் அமைந்திருப்பதைக் கண்ட யாவரும் இவ்வளவு விரைவில் இத்துணைச் சுவை மிக்க செய்யுட்களைப் பாடிய இவர் இறைவன் திருவருள் பெற்றவரேயென எண்ணி வியந்தனர். சிதம்பரம் பிள்ளை இவருக்குத் தக்க ஸம்மானம் செய்தார்.
அகிலாண்டநாயகி பிள்ளைத்தமிழ்.
பின்பு இவர் லட்சுமணபிள்ளை கேட்டுக்கொள்ள அகிலாண்டநாயகி பிள்ளைத்தமிழை இயற்றினார். இவர் இயற்றியவற்றுள் முதற் பிள்ளைத்தமிழ் அதுவே. பல சுவைகளும் மிகுந்து அது விளங்குகின்றது. "தாங்கற்ற நூலளவே யாகுமாம் நுண்ணறிவு" என்பதற்கிணங்க இவர் அதுகாறும் கற்ற நூல்களிலுள்ள பல கருத்துக்களும் கற்பனைகளும் அதிலமைந்துள்ளன. புதிய புதிய கற்பனைகளும் அதில் மலிந்து விளங்கும்.
முதன் முதலாகப் பிள்ளைத்தமிழை இயற்றத் தொடங்கிய இக்கவிஞர்பெருமான் தம் முயற்சிக்கு இடையூறு நேராமற் காக்கும் பொருட்டு விநாயகர், பரமசிவம், பராசத்தி, விநாயகர், சுப்பிரமணியக் கடவுள், நந்திதேவர், திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசக ஸ்வாமிகள், தண்டீச நாயனார், திருத்தொண்டர்கள் என்பவர்களுக்கு வணக்கங் கூறி நூலுக்குக் காப்பமைத்துக் கொண்டார். இக்காப்புச் செய்யுட்கள் பன்னிரண்டும் அவையடக்கச் செய்யுள் ஒன்றும் சேர்த்துப் பாயிர உறுப்பை நூதனமாக அமைத்துக்கொண்டு நூலைத் தொடங்குகின்றார். வேறு பிள்ளைத்தமிழ்களிலும் இவரே பிற்காலத்திற் செய்த பிள்ளைத்தமிழ்களிலும் இத்துணை விரிவான துதிகள் இல்லை.
இங்ஙனம் அமைத்துக்கொண்ட துதிகளுள் முதலில் உள்ள விநாயக வணக்கத்தின்கண், 'சம்புவனமமர் தேவியைச் சகல வண்டமுமளிக்கும் பிராட்டியை யுரைசெய் தண்டமிழ் வளம் பெருக', 'ஒருகோட் டிருபதத் திரிகடாக் குஞ்சரத்தை நினைவாம்' என்று வணங்குகின்றார். விநாயகருடைய சிறுவிளையாட்டு ஒன்று இச்செய்யுளிற் கூறப்படுகின்றது: “வானத்தில் சந்திரன் விளங்குகின்றது; வெண்சோற்றுக் கவளமென்றெண்ணி அதனைக் கவர்வதற்கு விநாயகர் தமது துதிக்கையை நீட்டுகின்றார்; அதுகண்டு இந்தச் சந்திரன் இன்றோடே தொலைந்துவிடும், இனி இதனால் வரும் துன்பங்கள் இனி இல்லையாமென்று விரகதாபமுடைய மகளிர் களிக்கின்றனர். அதேசமயத்தில், நம்முடைய நாயகனுக்குத் துன்பம் வந்ததேயென்று நட்சத்திரக் கூட்டங்களும், நமது குடையாகிய சந்திரனுக்குத் தீங்கு வந்துவிட்டதேயென்று மன்மதனும் திகைக்கின்றனர். இங்ஙனம், ஒருசாரார்க்குக் களிப்பும் மற்றொரு சாரார்க்குத் துயரும் உண்டாக விநாயகர் தம் பனையெழில் காட்டும் கையை நீட்டுகின்றார்.” இச்செய்திகள் சுருங்கிய உருவில்,
"சீருலவு வனசமகள் புரையுமட வாரிகல் தீர்ந்தோ மெனக் களிப்பச்
செறியுடுக் கணமுருவில் புத்தே டிகைப்பவிது தீங்கவள மென்றுததிதோய்
காருலவு மாகநடு வட்பொலியு மாம்பலங் காதன்மதி மீப்பனையெழில்
காட்டுங்கை நீட்டுமொரு கோட்டிரு பதத்திரி கடாக்குஞ் சரத்தை நினைவாம் ”
என்று காணப்படுகின்றன. விநாயகர் ஒருவரே விக்கினத்தை நீக்குவதும் ஆக்குவதுமாகிய செயல்களையுடையவரென்னுங் குறிப்பும் இதனாற் பெறப்படுகின்றது. இங்ஙனம் முதலில் விநாயகக் கடவுளை வணங்கிப் பின்னர் பரமசிவ வணக்கம், பராசத்தி வணக்கம் செய்து, அவர்களுடைய திருக்குமாரர் என்னும் முறை பற்றி மீண்டும் ஒருமுறை விநாயகருக்கு வணக்கம் கூறுகின்றார்:
“கோமேவு மதிலொருமூன் றெரிக்கு ஞான்றெங்
குனிமதிசெஞ் சடைச்செருகும் பெருமா னன்பர்
நாமேவு தமிழ்க்கொருபூங் கொடிபாற் றூது
நடந்தநா யகன்விநா யகவென் றேத்தி
மாமேவு கதிர்க்காற்றேர் நடத்து மாறு
வருமடிக டிருவடிகள் வணக்கஞ் செய்வாம்
பூமேவு திருக்காவை மேவு ஞானப்
பூங்கோதை பாடல்வளம் பொலிய வென்றே." (பாயிரம், 4)
இவர் திருவானைக்காப் புராணத்தைப் படித்து இன்புற்று அதன்கண் ஈடுபட்டவராதலின், அந்நூற் காப்புச்செய்யுளில் விநாயகர், சிவபெருமான் தம்மை வழிபட்டு வேண்ட அவரது தேரை ஓடும்படியருளிய விளையாடலை அதன் ஆசிரியர் எடுத்தாண்டிருத்தலைப் போல இவரும் இச்செய்யுளில் அதனை அமைத்திருக்கின்றார்.
அடுத்துவரும் சுப்பிரமணியக் கடவுள் வணக்கத்தில், அவர் சூரபன்மனை அடக்கித் தேவர்களுக்குப் பெருவாழ்வளித்தவர் என்பதை,
“இரசத விலங்கன்மிசை யொழுகருவி புரையவீ ரிருமருப் பாம்பன்மாறா
திழிமுக் கடாம்பொழிய மென்சினைப் பைந்தரு விளங்காடு நறவுபொழியச்
சுரபிபல் வளன்பொழிய வேமவுல காளுமொரு தோன்றன்மனை யாட்டிகண்டஞ்
சூழுமங் கலநா ணாதுறை கழித்துவே றொட்டவனை யஞ்சலிப்பாம்" (5)
என மிக அழகாகக் குறிப்பிடுகின்றார். அச்செய்யுளிற் சிவபெருமான் திருமேனியில் ஒரு பாகத்தை அகலாமல் உமாதேவியார் வீற்றிருப்பதற்கு ஒரு காரணத்தைக் கற்பிக்கிறார்: ‘நாகம், சிங்கம், துடி, மான் முதலியன தம்முடைய அவயவங்களில் ஒவ்வொன்றைக் கண்டு அஞ்சிச் சிவபெருமான் திருக்கரத்தை அடையும்படி அவருடைய பாகத்தை அகலாதிருக்கும் உமாதேவியார்' என்னும் கருத்தமைய,
"உரகம்வல விலங்குதுடி நவ்விமுத லமலர்மே லுரறிவரு காலையிற்றன்
ஒளிரவ யவங்களிலொவ் வொன்றுகண் டொவ்வொன் றொதுங்கியவர் கையடையவப்
பரமரிட மகலா திருந்ததுணை " (பாயிரம், 5)
என்கின்றார். காப்புப்பருவத்துள், இந்திரனைப்பற்றிச் சொல்லும் பொழுது, அவன் தன் மனைவியினது குழல் முதலிய அவயவங்களுக்குப் பகையானவையென்று மேகம் முதலியவற்றை அடக்கியாள்கின்றானெனக் கற்பிக்கின்றார்:
"மோகத்தை யாங்கொண்ட போதெலா மிக்கின்ப முனியா தளித்திடுச்சி
மொய்குழ னுசுப்புமுலை சொற்பகைக ளிவையென முராரிமகிழ் வெய்தவேறி
மேகத்தை யோட்டித் திசாதிசை திரிந்தலைய மின்னைத் துரத்தியோங்கும்
வெற்பைத் துணித்தமுதை வாய்ப்பெய்து தருநீழல் மேவுமொரு கடவுள்காக்க."
(காப்புப், 6)
திருமகளைப்பற்றிய காப்புப்பருவச் செய்யுள் மிக்க சுவையுடைய கற்பனையோடு திகழ்கின்றது: ‘இடைச்சியர்கள் வீட்டில் உள்ள பால் முழுவதையும், அவர்கள் தங்கள் வீட்டுக்கதவைத் தாழிட்டு மூடியிருப்ப அதனைத் திறந்து உட்புகுந்து உண்டு பின் அவர்களுடைய மத்தடியைப் பெற்று வருந்தும் தன் கணவராகிய திருமாலை, உம்முடைய விருப்பத்தின்படி பாலை உண்டுகொண்டு சுகமாகத் தூங்குகவென்று, தன் பிறந்தகமாகிய பாற்கடலில் குடியிருக்கச் செய்தவள்' என்னும் கருத்தமைய,
“முத்தநகை விதுமுகப் பொதுவியர் கடப்பான் முழுக்கவன் றாழ்வலித்து
மூடுங் கவாடந் தடிந்துமனை புக்குண முனிந்தவர் பிணித்தடிக்கும்
மத்தடி பொறுத்துவரு துணைமுகிலை யுண்டுகண் வளர்ந்துறைதி யென்றுதன்னை
வயிறுளைந் தீன்றவொரு பாற்கடற் குடியாக்கு மடமானை யஞ்சலிப்பாம்" (காப்புப், 7)
என்று கற்பிக்கின்றார். சப்பாணிப் பருவத்தில், சூரியனை,
“கலைமணக் குங்கொடிக் கொருபீட மானநாக் கடவுளொரு வாதமர்ந்த
கமலபீ டமுமகில மகளிடை பொதிந்தபூங் கலைவயி றுளைந்துயிர்த்த
சிலைமணக் குஞ்சிறு நுதல்சின கரப்பூஞ் செழுங்கபா டமுந்திறக்குந் திறவுகோல்” (சப்பாணிப், 3)
என்கின்றார். அப்பருவத்திலேயே அம்பிகையின் திருக்கரத்தை,
"...........வழுதிப் பொன்மனையிற்
றையலார் மைக்கண் புதைக்குங் கை" (சப். 1)
"............. வரைக்கரைய னெனுமுன்
தந்தை தர வெந்தையார் தொட்டகை” (சப். 2)
“அருமறைக் கிழவன்முத லைவருக் குந்தொழில்க
ளைந்தெண்ண லளவை செய்ய ஐவிரல் படைத்தகை "
"....... சுட்டினோ டவர்க் கத்தொழில் காட்டுகை"
"பருமுலை மருப்புற வளைக்குறி படத்துகிர்
பட்டகோ டீரமுடியெம் பரமனைத் தழுவுகை"
"வளரறங்கள்முப் பத்திரண்டும் புரிகை"
"குருமணி குயிற்றிய விருங்கங் கணக்கை"
'கொடியேனையஞ்ச லென்ற கோலக்கை"
"........ மடப் பொய்தற் பிணாக்களொடு
குளிர்பனி வரைச் சோலைதண்
தருநறவு கொட்டுமலர் கொய்யுங்கை" (சப். 4)
"............. இணைக்கணெழு கருணை வெள்ளம்
எங்கும் பரந்தப் பரற்குமீ திட்டடிய
ரிருவினையை வாரியோடக்
கோகனக மதின்முளைத் தாலெனப் பொலிகை” (சப். 5)
" ............ எம்மா னளவில் வேடிரண் டெனவரச் செய்து ,
............ கவின்முடி தரித்தரி யணைக்கண்வைத் திருகயல்
களிக்கநோக் காவொருகயல்
கொள்ளென விரும்பிக் கொடுத்தகை" (சப். 6)
எனப் பலபடப் புனைவர். முத்தப்பருவத்தில்,
“சிரபுரச்சந் ததிதழைக்க முலைகொடுத்த தலைவிமுத்தந் தருகவே
திருமகட்குங் கலைமகட்கு மெழில்சிறக்கு மிறைவிமுத்தந் தருகவே
தரணிமுற்றுந் தனிதழைக்க நனிபுரக்கு மமலைமுத்தந் தருகவே
சடைமுடித்தும் பியைவிருப்ப முடனுயிர்த்த விமலைமுத்தந் தருகவே
மரகதப்பொன் சிமயவெற்பு நிகர்தழைக்கும் வடிவிமுத்தந் தருகவே
மழைமுகிற்கண் டெழுபசுத்த மடமயிற்கு நிகரண்முத்தந் தருகவே
உரகபொற்கங் கணரிடத்து மருவுசத்தி கவுரிமுத்தந் தருகவே
உரலடிக்குஞ் சரவனத்து மெனதுளத்து முறைவண்முத்தந் தருகவே"
(முத்தப். 10)
என்னும் செய்யுள் சந்தத்தில் அமைந்ததேனும் எளிதிற் பொருள் விளங்க இருத்தல் அறிந்து இன்புறற்குரியது. அம்பிகையின் திருச்செவியில் குழைத்தோடிலங்குவதைத் தற்குறிப்பேற்ற அமைதியோடு,
"கம்பக் களிற்றுரியர் கட்சுடரி லங்கியைக் கைத்தலையி ருத்திமதியைக்
கங்கைமுடி வைத்தல்போல் வையாமை கண்டுசெங் கதிர்நினது செவிபுகுந்தோர்
கும்பத்த னஞ்சடை யிடைக்கரந் தார்நினது கொழுநரென மொழிதலேய்ப்பக் குழைத்தோ டிலங்க” (வாரானைப். 1)
என வருணிக்கின்றார். அம்புலிப்பருவத்தில் முறையே சாம பேத தான தண்டம் பொருந்தச் செய்யுட்களை அமைக்கின்றார். பேதத்தைச் சொல்லும்பொழுது சந்திரனை இழித்து,
[12] "மாலெச்சி லைச்சுற்று முனியெச்சி றோன்றியொரு
மாசுணத் தெச்சிலானாய்” (அம்புலிப். 4)
எனச் சதுர்படக் கூறுகின்றார்.
ஸ்தல சம்பந்தமான விஷயங்களை இப்புலவர்கோமான் இந் நூலிற் பலவகையாக எடுத்தாள்கின்றார். காவை, மதகரிவனம், அத்தியாரணியம், தானப்பொருப்புவனம், உரலடிவனம், மதமாதங்கவனம் என்ற தலப்பெயர்களையும், சம்புநாதர், சம்புலிங்கப்பெருமான், சம்புநாயகர், அமுதப்பெருமான் என்ற சிவபெருமான் திருநாமங்களையும் எடுத்துப் பாராட்டுகிறார்.
"வெண்ணாவலெம் புண்ணியன் ", "பூமேவு வெண்ணாவ னீழலமர் முக்கட் புராதனர் ", "வெள்ளைநாவ லடிமுளைத்த தன் னேரிலி" என்பவை முதலிய இடங்களில் தலவிருட்சத்தைக் குறிப்பிக்கின்றார்; “ சிலந்தி பணிந்த நகர் " என்பதிற் சிலந்தி இத் தலத்திற் பூசித்ததும், "முறைபுகும் வழக்கா றிழுக்காது கோலோச்சு முருகாத்தி யபயன் மகிழ முடியில்வெள் ளென்பையே கொத்தார மிட்டவரை முத்தார மிட்டவதனால்" என்பதிற் சிவபெருமான் ஆரங்கொண்டதும், "திரையெற்று கமலந்திரட்டாய்", "சலிலந் திரட்டியது விரியாது", "விரிபுனன் மலிந்துள வெனச் செங் கரங்கொடு வியப்பிற் றிரட்டிடாமே" என்பவற்றில் அம்பிகை தீர்த்தத்தைத் திரட்டிச் சிவலிங்கத் திருவுருவமைத்ததும், பிரமன், இந்திரன், திருமால் என்பவர்களுடைய பாவத்தைத் தீர்த்ததுமாகிய தலவரலாறுகளை இடையிடையே அமைத்துள்ளார்.
"எனையுமாளிருங் கருணையார்" என அப்பரையும், "எனையாள் வாதவூரடிகள்" என மாணிக்கவாசகரையும் கூறுவதால் இவருக்குச் சைவ சமயாசாரியர்கள்பால் உள்ள ஈடுபாடு புலப்படுகின்றது.
"ஒருத்தி பொற்றா ளருத்திகொண்டு ளிருத்திநிற்பாம்"
"பையரா நண்ணுலகு மண்ணுலகும் விண்ணுலகும்”
"கொம்புவரை பம்புவன வம்பிகை விரும்பிநின் கொவ்வைவாய் முத்தமருளே"
“முத்தி யளித்திடு மத்திவ னத்தவள் முத்த மளித்தருளே"
"அத்திவன வுத்தம ரிடத்தமர் பசுத்தகொடி”
"நாவிரி பாவிரி பூவிரி காவிரி நன்னீ ராடுகவே"
என்பன முதலியவைகளில் உள்ள எதுகை நயமும்,
“அருட்டுறையுள்வந் தருட்டுறை யளவளாய்”
"பயத்தன் பயத்தனாக"
என்பன போன்ற மடக்குக்களும்,
“நிம்பர் குலத்துறு செந்தேனே”
“வேம்பர் குடிக்கோர் செங்கரும்பே”
“மதமா தங்க வனத்துமட மானே”
“போதக வனங்குடி புகுந்தமென் காமர்பிடி”
என்பன போன்ற முரண்வகைகளும் பிறவும் இந்நூலில் மலிந்து சுவை தருகின்றன.
“இள மென்சிறு புதுத்தென்றல் வந்தரும்ப
எங்குமொளிர் செந்தழ லரும்புதேமா”
“துதிக்குமடியா குளக்கோயிற் றூண்டா விளக்கே”
“கபாய்”
என்பவை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழிலிருந்து அமைத்துக் கொண்டவை.
“மந்த மந்தச் சென்று”
என்பது கம்பராமாயணத்திலிருந்து எடுத்துத் தொடுத்த தொடர்.
“மருங்கணை யாடைகை வெந்நிட் டுதையா”
என்பது திருவிளையாடற் புராணம் படித்ததைக் காட்டும் அடையாளம்.
“பங்கய மலர்த்திவரு செங்கதிர் நிறத்தவுடல் பனிமதி நிறங்கொளாது
படரரி மதர்த்தகண் குழியாது நாடிகள் பசந்துநா றாதுநுனைவாய்
கொங்கைகள் கறாதுமட் சுவைநாப் பெறாதகடு குழையா துறாதினம்பல்
குறிபடா தருமையொ டுயிர்த்திமய மாதேவி குளிர்புனல்பொன் வளைகுளிறிடும்
அங்கையி லெடுத்தாட்டி நீறிட்டு மட்காப் பணிந்தொழுகு திருமுலைப்பால்
ஆர்வமொ டருத்தவுண் டயறவழ்ந் தேறிமலை யரையன் புயத்தவன் பொற்
செங்கைவிரல் சிரமீது பற்றிநின் றாடுமயில் செங்கீரை யாடியருளே
தென்காவை யம்பதி செழிக்கவரு மென்னம்மை செங்கீரை யாடியருளே"
(செங்கீரைப், 1)
என்பதில் கல்லாடம், திருவிளையாடற்புராணம், பிரபுலிங்கலீலை என்பவற்றிலுள்ள கருத்து அமைந்துள்ளது.
இக்கவிஞர்பிரான் இதன்கண் உலகவழக்கில் வழங்கும் கும்பு (கூட்டம்), ஒட்டியாணம் என்பன போன்ற சொற்களை அமைத்துள்ளார்.
இங்ஙனம், பிள்ளையவர்கள் தம்முடைய பலவகையாற்றல்களையும் வெளிப்படுத்தி இந்நூலை இயற்றியிருத்தல் ஆராய்ந்து அறிந்து இன்புறற்குரியது.
அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழினால் இவருக்கு உண்டாகிய புகழ் அதுவரையில் இயற்றிய வேறு எந்நூலாலும் உண்டாகவில்லையென்பது மிகையன்று. இவருடைய கவியாற்றல் நாளடைவில் வளர்ச்சியுற்றது. அதனுடன் இவருடைய புகழும் வளர்ந்தது. திரிபந்தாதிகளில் தளிர்த்துத் திரிசிரபுர யமக அந்தாதியில் அரும்பி அகிலாண்டநாயகி மாலையிற் போதாகிய இப்புலவர்சிகாமணியினது கவித்திறனும் புகழும் அகிலாண்ட நாயகி பிள்ளைத்தமிழில் மலர்ந்து நின்றன. இவரினும் சிறந்த கவிஞரொருவர் இலரென்ற பெருமதிப்பும் மரியாதையும் அப்பக்கத்தில் எங்கும் பரவலாயின. இத்தகைய சுவைப்பிழம்பாகிய நூலை அச்சிட்டு வெளிப்படுத்தினால் யாவரும் எளிதிற் பெற்றுப் படித்து இன்புறுவாரென்று அன்பர்கள் பலர் பதிப்பிக்கும்படி வேண்டிக் கொண்டனர்; இவரும் அதற்கிணங்கிப் பதிப்பிக்க எண்ணியும் தக்க சாதனங்கள் இன்மையின் அம்முயற்சி அப்பொழுது நிறைவேறவில்லை.
------------
[1] அத்தத்தில் – கையில்; உள்ளாற்கு - உள்ள விநாயகக் கடவுளுக்கு. அத்தனை – தந்தையை, சித்தத்து இலங்கும். கத்த – கதறும்படி; திலங்குழைப்பார்போல் - எள்ளாட்டுவார் போல். திரிபட்டுத் தத்தில்; தத்து - ஆபத்து.
[2] பரியேற்றனை - இடபத்தையே குதிரையாக உடையவனை. நீலிவனம் - திருப்பைஞ்ஞீலி; நீலிச்செடி இத்தலத்துக்குரியது. தொழாதவர்களுடைய பழைய கருமமலங்கள். ஏது: இல்லையென்றபடி.
[3] இது வண்டுவிடு தூது. தார் (மாலை) வரும் என மகிழ்ந்தேன் . அனுப்புதலின்றிச் சும்மாயிருந்தார். தேன் திருந்து ஆர்; ஆர் - ஆத்தி மாலை.
[4] யான் எண்ணாதவனென ஒரு சொல் வருவிக்க. வல் நஞ்சம். எனை உவந்து அருள்வாய். ஆதவன்கதிர் - சூரியகிரணங்கள். அரம்பை வனம் - வாழைவனம்; வாழை, இத்தலத்திற்குரிய விருட்சம். தவம் நன்கு உடையார்.
[5] மறைநூல் துகளை அற ஓர்ந்து.
[6] கலம் கந்தரம் – ஆபரணத்தைப் பூண்ட கழுத்தை உடைய. கலக்கந்தர - மனக்குழப்பத்தைத் தருவதற்கு. தப்பு அகல் அக்கு அந்தர நதி - குற்றமற்ற உருத்திராட்சத்தையும் கங்கையாற்றையும். கன்னிபாக லக்கந் தரம் நினைவேண்டிக் கொண்டேன்; லக்கந்தரம் - லட்சந்தரம்,
[7] ஆய் ஆவப்பால் அரி அம்பா - ஆராயப்படுகின்ற அம்பறாத் தூணியிடத்தில் திருமாலாகிய அம்பை உடையாய். நின்னை ஆயாமல். மனம் புண்ணாய் ஆ அப்பு ஆர் சடையாய்: ஆ - ஐயோ! வையச்சிலரை- பூமியிலுள்ள சிலபேரை. ஆயா - தாயே. அடியேனுக்குப் பிறப்பை நீக்க வேண்டுமென்பது கருத்து.
[8] ஆவணம் காட்டம் மதிக்க சுமக்க - கடைவீதியில் விறகை விலை மதிக்கும்படி சுமக்கவும். காட்ட நரியை தெரியாவணம் - காட்டிலே உள்ள நரிகளை பிறர் அறியாவாறு. முதிர் ஆவணம் - பழைய ஓலையை. வைத்தது ஆ வணங்கு ஆள் தன்மையார் அன்பு; ஆ: வியப்பின்கட் குறிப்பு. சுமக்கவும் ஆக்கவும் காட்டவும் வைத்தது அன்பன்றே என இயைக்க.
[9] அக்காலத்திற் காவிரிக்குப் பாலங்கட்டப்படவில்லை.
[10] தண்ணீர் மூன்று பிழை பொறுக்குமென்பது ஒரு பழமொழி.
[11] இரண்டு செயலும் இடத்தாளின் செயலாதலின் இங்ஙனம் கூறினார்.
[12] மாலெச்சி லென்றது பூமியை; அதனைச் சுற்றும் முனி எச்சி லென்றது கடலினை ; அகத்திய முனிவரால் உண்ணப்பட்டதாதலின் இங்ஙனம் கூறினார்.
----------
7. சென்னைக்குப் பிரயாணம்.
சென்னைக்குச் செல்ல விரும்பியது.
இவருடைய அறிவு வரவர வளர்ச்சியுறுதலைப்போலக் கற்றவர்களோடு பழகவேண்டுமென்னும் ஆர்வமும் இவர்பால் மிக்கு வந்தது. “நவிறொறு நூனயம்போலும் பயிறொறும், பண்புடை யாளர் தொடர்பு" என்னும் ஆன்றோரமுதமொழியை அறிந்த இவர் நூனயத்தை அறிந்ததோடன்றிப் பண்புடையாளர் தொடர்பையும் விரும்புதல் இயல்பன்றோ? பின் எந்த எந்த ஊரில் தமிழ் வித்துவான்கள் இருக்கிறார்களென்றும் அவர்கள் எவ்வெந் நூலிற் பயிற்சியுடையவர்களென்றும் அறிந்து கொள்வாராயினர். அவ்வாறு விசாரித்து வருகையில் சென்னையில் தமிழ்ப் புலவர்கள் பலர் இருப்பதாக அறிந்தனர்.
அக்காலத்திற் சென்னையில் துரைத்தனத்தார், [1]கல்விச்சங்க மொன்றையமைத்துப் பல ஊர்களிலிருந்த சிறந்த தமிழ் வித்துவான்களை வரவழைத்துக் கூட்டி அவர்கள் வாயிலாக மாணாக்கர்களுக்குப் பாடஞ்சொல்லுதல், பிரசங்கம்புரிவித்தல், பழைய தமிழ்நூல்களை ஆராய்ச்சி செய்து பதிப்பித்தல், செய்யுள் வடிவமான நூல்களை வசனமாக எழுதுவித்தல், பாடசாலைகளுக்கு உபயோகமாகும்படி வசனநடையில் இலக்கணங்களையும் பாடங்களையும் இயற்றுவித்தல், வடமொழி முதலிய வேறு மொழிகளிலுள்ள நூல்களைத் தமிழில் மொழிபெயர்ப்பித்தல் முதலியவற்றை நடத்தி வருகிறார்களென்பதையறிந்து, அங்கே சென்று அவர்களுடைய பழக்கத்தால் நல்ல பயிற்சியை அடையலாமென்றும் பல நூல்களில் தமக்கிருந்த ஐயங்களை நீக்கிக்கொள்ளலாமென்றும் இவரெண்ணினார். ஆயினும் அங்கு சென்று இருத்தற்காகும் செலவிற்குரிய பொருள் இல்லாமையால் அங்ஙனம் செய்ய முடியவில்லையே யென்ற வருத்தம் இவருக்கு இருந்துவந்தது.
சென்னை சேர்ந்தது.
இவ்வாறிருக்கையில் இவரை ஆதரித்து வந்த லட்சுமண பிள்ளை யென்பவர் தமக்குச் சென்னை ஹைகோர்ட்டிலிருந்த வழக்கொன்றை அங்கே சென்று நடத்துவதற்குத் தக்கவர் யாரென்று ஆலோசித்தனர். அப்பொழுது எல்லா நற்குணங்களும் ஒருங்கே அமைந்த இவருடைய நினைவு வந்தது. இவரைச் சென்னைக்கு அனுப்பினால் காரியத்தை ஒழுங்காக முடித்துக்கொண்டு வருவதோடு தமக்கும் மிக்க கெளரவத்தை உண்டுபண்ணுவாரென் றெண்ணி இவரைப் பார்த்து, “என்னுடைய குடும்பவழக்கொன்றன் சம்பந்தமாகச் சென்னைக்குப் போய் வருவதற்கு உங்களுக்குச் சௌகரியப்படுமா? அங்ஙனம் போய் வருவதாகவிருந்தால் எனக்கு அநுகூலமாக இருக்கும்” என்று கேட்டுக்கொண்டார்.
அப்பொழுது, 'சென்னைக்கு நாம் எப்பொழுது செல்வோம்? அங்குள்ள பெரிய பண்டி தர்களுடன் அளவளாவிப் பல ஐயங்களை எப்பொழுது தீர்த்துக்கொள்வோம்; இதுவரையில் நாம் பெறாதனவும் கேள்விநிலையிலுள்ளனவுமாகிய நூல்களை எப்பொழுது பெறுவோம்; படிப்போம்? அப்படிப்பட்ட நல்ல காலம் நமக்கு வருமோ! அதற்குரிய பொருள் இல்லையே!' என்று ஒவ்வொரு நாளும் எண்ணிக்கொண்டேயிருந்த இவருக்கு, லட்சுமண பிள்ளையின் வார்த்தை மிக்க பசியுள்ளவர்களுக்குக் கிடைத்த அமுதத்தைப்போல ஆனந்தத்தை விளைவித்தது. அந்த மகிழ்ச்சிக் குறிப்பைத் தமது முகம் புலப்படுத்த அவரைப் பார்த்து, "என்னைச் சென்னைக்கு அனுப்பினால் உங்களுடைய காரியத்தை ஜாக்கிரதையாகப் பார்த்துவிட்டு வருவதுடன் பலநாளாக உள்ள என்னுடைய மனக்குறையையும் எளிதில் தீர்த்துக்கொண்டு வருவேன்" என்றார். அவர், "உங்களுடைய மனக்குறையென்ன?" என்று கேட்ப, "சென்னையிலுள்ள தமிழ் வித்துவான்களை யெல்லாம் பார்த்துப் பழகி அறிந்துகொள்ள வேண்டுவனவற்றை அறிந்துகொள்ளுதலும் இதுகாறும் எனக்குள்ள பல ஐயங்களைத் தீர்த்துக்கொள்ளுதலுமே" என்றார். அவர் தமது அருகிலிருந்தவர்களை நோக்கி, "இந்நகரத்திற் புகழ்பெற்று விளங்கும் இக்கவிஞர்பெருமானுக்கும் கல்வி விஷயத்தில் மனக்குறை இருக்கின்றதே! அக்குறையைத் தீர்த்துக்கொள்ள வேண்டுமென்று இவர்களுக்குள்ள ஆவலைப் பாருங்கள். பிறரிடத்துத் தெரிந்துகொள்ள வேண்டுவன பல உள்ளன வென்று இங்ஙனம் வெளிப்படையாக யாரேனும் இக்காலத்திற் சொல்லுவார்களா? அற்பக் கல்வியை யுடையவர்களும் தம்மை எல்லாமறிந்தவர்களாகக் காட்டிப் பிறரை வஞ்சித்துத் தாமும் கெட்டுத் தம்மைச் சார்ந்தவர்களையுங் கெடுத்துவிடுவார்களே!" என்று இவருடைய குணங்களைப் பலவாறாக வியந்து புகழ்ந்தனர். பிறகு உடனிருந்து இவருக்கு உதவி செய்வதற்கு வேலைக்காரனொருவனை நியமித்து இருவருடைய பிரயாணத்துக்கும், சில மாதம் சென்னையில் இருத்தற்கும் வேண்டிய பொருளை உதவி முகமன் கூறியனுப்பினார்.
இவர் திரிசிரபுரத்திலும் அதனைச் சார்ந்த ஊர்களிலுமுள்ள தம்முடைய மாணாக்கர்களையும் உண்மையன்பர்களையும் பார்த்துத் தம்முடைய பிரயாணச்செய்தியை அவர்களுக்குத் தெரிவித்து ஒரு நல்ல தினத்திற் புறப்பட்டனர். அப்பொழுது நல்ல நிமித்தங்கள் பல உண்டாயின. வழியனுப்புவதற்கு வந்த முதியவர்கள் அந்நிமித்தங்களை அறிந்து, "ஐயா! நீங்கள் நல்ல பலனை யடைந்து பெருஞ்சிறப்போடு திரும்பிவருவீர்கள்" என்று உளங்கனிந்து அனுப்பினார்கள். உடன் பழகியவர்கள் இவருடைய பிரிவை ஆற்றாதவர்களாகி, "இவருடன் நாமும் சென்னைக்குச் செல்லக் கூடவில்லையே!" என வருந்தினார்கள். பின்பு எல்லோரிடமும் விடைபெற்றுப் பட்டீச்சுரம், மாயூரம், சிதம்பரம் முதலிய க்ஷேத்திரங்களைத் தரிசனம் செய்தும், ஆங்காங்குள்ள தமிழ்வித்துவான்களோடு பழகி அளவளாவியிருந்தும் குறிப்பிட்ட காலத்திற் சென்னை வந்து சேர்ந்தனர்.
தாம் வந்த காரியத்தை ஆண்டுள்ள வக்கீல் ஒருவரிடம் சொல்லி, அவரால், சில மாதம் தாம் அந்நகரில் இருக்கவேண்டியிருக்குமென்பதை யறிந்து கொண்டார்; அதனை லட்சுமணபிள்ளைக்குக் கடிதமூலமாகத் தெரிவித்தனர். பின்பு அந்நகரிலுள்ள தமிழ் வித்துவான்களிடம் சென்று சென்று அறிய வேண்டுவனவற்றை அறிய நிச்சயித்தனர்.
சென்னை வித்துவான்களின் பழக்கம்.
அப்பொழுது சென்னையில் இருந்த வித்துவான்கள்: திருவாவடுதுறை ஆதீன வித்துவான் [2]ஸ்ரீ தாண்டவராயத் தம்பிரான், காஞ்சீபுரம் மகாவித்துவான் சபாபதி முதலியார், எழும்பூர்த் திருவேங்கடாசல முதலியார், திருத்தணிகை விசாகப் பெருமாளையர், திருவம்பலத்தின்னமுதம்பிள்ளை, [3]போரூர் வாத்தியார், அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார், புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியார் முதலியவர்கள்.
இவர், கந்தபுராணம், பெரியபுராணம், திருவிளையாடற் புராணம், காஞ்சிப்புராணம் முதலிய சைவ நூல்களிலும் சைவப் பிரபந்தங்கள் பலவற்றிலும் திருவாரூர்த் தலபுராணம் முதலியவற்றிலும் உள்ள ஐயங்களைக் காஞ்சீபுரம் சபாபதி முதலியாரிடத்தும், கல்லாடம், திருவாசகம், திருச்சிற்றம்பலக் கோவையார், திருக்குறள் - பரிமேலழகருரை முதலியவற்றிலுள்ள ஐயங்களைத் திருவம்பலத்தின்னமுதம் பிள்ளையிடத்தும் கேட்டுத் தெளிந்தனர்.
எழும்பூர்த் திருவேங்கடாசல முதலியார் கம்பராமாயணம் முதலிய பெரிய காப்பியங்களிலும் செவ்வைச் சூடுவார் பாகவதத்திலும் திவ்யப்பிரபந்த வியாக்கியானங்களிலும் முறையே பாடங் கேட்டு நல்ல பயிற்சி உடையவரென்பதைத் தெரிந்து அவற்றிலுள்ள ஐயங்களை அவரிடத்து வினாவித் தெளிந்தனர். இம்மூவர்களிடமும் இருந்த அரிய நூல்களைப் பெற்றுப் பிரதிசெய்து கொண்டு பாடங்கேட்டும், பின்னும் சென்னையில் ஆங்காங்குள்ள கற்றுத்தேர்ந்த பெரியோரிடத்து ஒழிந்த காலங்களிற் சென்று அவர்களுக்கு என்ன என்ன நூல்களிற் பயிற்சி உண்டோ அவற்றை முன்னதாக அறிந்து கொண்டு அந் நூல்களைக் கேட்டுத் தெளிந்தும் மனமகிழ்ச்சியோடு காலங்கழிப்பாராயினர். ஒவ்வொரு தினத்தும் பகலின் முற்பாகத்திற் காஞ்சீபுரம் சபாபதி முதலியாரிடத்தும் பிற்பகலில் எழும்பூர்த் திருவேங்கடாசல முதலியாரிடத்தும் அஸ்தமனத்திற்குப் பின்பு மயிலாப்பூரில் உள்ள திருவண்ணாமலை மடத்தில் இருந்த திருவம்பலத்தின்னமுதம் பிள்ளையினிடத்தும் சென்று அவரவர்களுக்கு ஆக வேண்டிய எழுதுதல் ஒப்புநோக்குதல் முதலிய காரியங்களை முன்னரே அறிந்து ஒழுங்காகச் செய்து அவர்கள் அன்போடு பாடம் சொல்லுதலைக் கேட்டுவருதல் இவருக்கியல்பாக இருந்தது. அம் மூவர்களுள் யாருக்கேனும் பாடஞ்சொல்லுதற்கு சமயமில்லையாயின் அதனை முன்பே தெரிந்து கொண்டு அக்காலத்தில் மற்றப் பெரியோர்களிடத்துச் சென்று வேண்டியவற்றைத் தெரிந்து கொள்வார். காலத்தின் அருமையை அறிந்தவராதலின் அரிதின் வாய்த்த இச்சந்தர்ப்பத்தைக் கணமேனும் வீண் போக்கக் கூடாதென்னும் எண்ணம் மிக உடையாராயினார்.
பிற்காலத்தில், தாம் இவ்வாறு படித்துவந்த செய்தியை இவர் எங்களுக்குச் சொல்லுகையில், "திருவம்பலத்தின்னமுதம் பிள்ளை வீட்டிற்குச் செல்லும்பொழுது ஸ்ரீகபாலீசுவரர் கோயிலின் வாயிலின் வழியேதான் செல்வேன். அப்பொழுது உள்ளே சென்று ஸ்வாமியைத் தரிசித்துக்கொண்டு போகவேண்டுமென்னும் விருப்பம் இருப்பினும் நேரமாய்விடுமேயென்னும் கவலையால் சந்நிதியில் நின்றே அஞ்சலி செய்துவிட்டுச் செல்வேன்" என்று சொன்னதுண்டு.
இடையிடையே ஓய்வுகாலம் நேருமானால் தம்மிடம் பாடங் கேட்க விரும்பினவர்களுக்கு அவர்கள் விரும்பிய நூல்களைப் பாடஞ்சொல்லி வருவார். அப்பொழுது படித்தவர்கள் [4]புரச பாக்கம் பொன்னம்பலமுதலியார், கரிவரதப்பிள்ளை முதலியவர்கள். காஞ்சீபுரம் சபாபதி முதலியாரிடம் படிக்கும் காலத்தில் உடன் படித்தவர்கள் மேற்குறித்த தாண்டவராயத் தம்பிரானும் அஷ்டாவதானம் சபாபதி முதலியாரும். தாண்டவராயத் தம்பிரானும் இவரும் பலமுறை சந்தித்துத் தம்முள் அளவளாவுவதுண்டு. அதனால் அவருக்கு இவர்பால் அன்பு மிகுதியுற்றது. இவருடைய அறிவின் வன்மையும் நற்குணமும் அவரை வயப்படுத்திக் கொண்டன.
காஞ்சீபுரம் சபாபதி முதலியாரிடத்து இவர் படிக்கும் பொழுது இவரெழுதிக்கொண்ட கச்சி ஆனந்த ருத்திரேசர் வண்டுவிடுதூதின் பழைய கடிதப்பிரதி பென்ஸிலால் அங்கங்கே குறித்த சில அரும்பதக் குறிப்புடன் இருந்ததை நான் பார்த்திருக்கிறேன்.
சபாபதி முதலியார், திருவேங்கடாசல முதலியார், திருவம்பலத்தின்னமுதம் பிள்ளை யென்னும் மூவரும் ஒருவருடைய வீட்டிற்கு ஒருவர் போய் நூலாராய்ச்சியின் விஷயமாக ஒருவரோடொருவர் அளவளாவி இன்புறுவது வழக்கம். அக்காலங்களிலெல்லாம் அவர்கள் பிள்ளையவர்களுக்குத் தமிழ் நூல்களிலுள்ள வேட்கைப் பெருக்கத்தையும் இயற்கையறிவினையும் முன்னரே இவருக்கு அமைந்திருக்கும் அகன்ற நூலாராய்ச்சிப் பெருமையையும் ஞாபக சக்தியையும் அடக்கத்தையும் தருக்கின்மையையும் நட்புடைமை முதலியவற்றையும் குறித்து வியந்தார்கள். இவர் சந்தேகமென்று வினவுகின்ற வினாக்களில் பெரும்பாலன அவர்களுக்குப் புதிய விஷயங்களை அந்தச் சமயங்களில் தோன்றச்செய்யும்; விடைதரவேண்டி மேன்மேலும் பல நூல்களை ஆராயும்படி அவர்களை அவை தூண்டும். இவருடைய பாடல்களையும் அவற்றிலுள்ள நயங்களையும் அவர்களறிந்து இவருடைய ஆற்றலைப் பாராட்டினார்கள். இளமையிலே இவ்வளவு நல்லாற்றல் வாய்ந்தமை யாருக்குத்தான் வியப்பைக்கொடாது?
மழவை மகாலிங்கையரைச் சந்தித்தது.
அவர்கள் மூவரும் இவரை மகாலிங்கையருக்குக் காட்டி அவரை மகிழ்விக்க வேண்டுமென்று தீர்மானம் செய்தார்கள். அந்த விருப்பம் இவருக்கும் நெடுநாளாக இருந்துவந்தது. ஓர் ஆதிவாரத்தில் மேற்கூறிய மூவர்களும் வேறு சிலரும் இவரை அழைத்துக்கொண்டு மழவை மகாலிங்கையருடைய வீட்டிற்குப் போனார்கள்.
மழவை மகாலிங்கையரை அறியாதவர் யாவர்? மதுரைக்குக் கிழக்கேயுள்ள மழவராயனேந்தலென்பது அவர் ஊர். அதன் பெயரின் மரூஉவே மழவையென்பது. மகாலிங்கையர், திருத்தணிகை விசாகப்பெருமாளையரிடத்தும் அவர் சகோதரர் சரவணப்பெருமாளையரிடத்தும் தமிழ் நூல்களை முறையே பாடங்கேட்டவர்; கேட்டவற்றை ஆராய்ந்து தெளிந்தவர்; கம்பராமாயணம், திருத்தணிகைப்புராணம் முதலிய பெருங் காப்பியங்களில் நல்ல பயிற்சி உள்ளவர். இலக்கண அறிவை விசேஷமாகப் பெற்றவர்; அஞ்சா நெஞ்சினர்; விரைந்து செய்யுள் செய்யும் ஆற்றலுடையவர்; ஸங்கீத லோலர்; சிநேக வாத்ஸல்ய சீலர்; ஆதிசைவ குல திலகர்; தாண்டவராயத் தம்பிரானுக்கு உயிர்த்தோழர். பிற்காலத்தில் [5] ஆறுமுகநாவலர் சென்னைக்கு வந்திருந்தபொழுது பலருடைய வேண்டுகோட்கிணங்கி அவரெழுதிய பைபிள் தமிழ் வசன புத்தகத்தைப் பரிசோதித்தற்குத் தேர்ந்தெடுக்கப்பெற்றவர்.
விசாகப்பெருமாளையர், சரவணப்பெருமாளையரென்னு மிருவருடைய ஆசிரியராகிய இராமாநுச கவிராயர் அவ்விருவரையும் பிற வித்துவான்களையும் இழிவுபடுத்திப் பேசுவதும் தம்மையே புகழ்ந்து கொள்வதும் கண்டு வருந்திய அறிஞர் பலர் அவருடைய இந்தச் செயலை நீக்க வேண்டுமென்று மகாலிங்கையரிடம் வற்புறுத்திக் கூறினார்கள். அவர் அதற்கு இணங்கி இராமாநுச கவிராயரை எந்தவிடத்தில் எவ்வளவு கூட்டத்துக்கு இடையிற் கண்டாலும் தமிழ் நூல்களிலுள்ள விடுத்தற்கரிய பல கேள்விகளைக் கேட்டு அவரை விடையளிக்கவொண்ணாதபடி செய்துவந்தார். இதனால் மகாலிங்கையருக்குப் பெருமதிப்பும், குற்றத்தைப் பட்சபாதமின்றிக் கண்டிக்கும் இயல்புடையவரென்னும் பெயரும் உண்டாயின.
சபாபதி முதலியார் முதலியவர்கள் பிள்ளையவர்களை அழைத்துக்கொண்டு அவர் வீட்டிற்குச் சென்றபொழுது அவர் அவர்களை மகிழ்வுடன் வரவேற்றுத் தக்க இடங்களில் இருக்கச்செய்து தாமும் இருந்தார். பிள்ளையவர்கள் வணக்கத்தோடு ஒருபக்கத்தில் இருந்தனர். மகாலிங்கையர் இவரைச் சுட்டி, "இவர் யார் ?" என்றார். சபாபதி முதலியார், "இவர் இருப்பது திரிசிரபுரம்; மீனாட்சிசுந்தரம் பிள்ளை யென்பது இவருடைய பெயர். இந்த ஊருக்குச் சில காரியமாக வந்திருக்கிறார். உங்களைப் பார்க்க வேண்டுமென்று விரும்பினார்; தமிழ் பயின்றவர்; செய்யுட்களை இயற்றும் பயிற்சியுமுடையவர்" என விடை கூறினார். தமிழ் பயின்றவர் என்றதைக் கேட்ட மகாலிங்கையர் இவரை நோக்கி, ”நீர் எந்த எந்த நூல்கள் வாசித்திருக்கிறீர்?" என்றார். இவர் தாம் படித்த நூல்களின் பெயர்கள் சிலவற்றைச் சொன்னார். பின்னர் அவர், "ஏதாவது ஒரு பாடல் சொல்லும்" என்றார். உடனே இவர்,
”இரசத வரையமர் பவள விலங்க லிடம்படர் பைங்கொடியே
இமையவர் மகிழ்வொடு புகழுஞ் சிமயத் திமயம் வரும்படியே
சரணினை பவருட் டிமிரஞ் சிதறச் சாரு மிளங்கதிரே
சதுமறை யாலு மளப்பரி தான தயங்கு பொலாமணியே
மரகத வரையிள கியவெழி லெனவெழில் வாய்த்த செழுஞ்சுடரே
மதுரித நவரச மொழுகக் கனியும் வளத்த நறுங்கனியே
தரணி மிசைப்பொலி தருமக் குயிலே தாலோ தாலேலோ
தழையுந் தந்தி வனத்தமர் மயிலே தாலோ தாலேலோ” (தாலப். 6)
என்னும் பாடலைப் பொருள் விளங்கும்படி மெல்லச் சொன்னார். இவர் செய்யுளை அவ்வாறு சொல்லும் முறையினாலே அவர் இவர் நல்ல அறிவுடையராகவிருக்க வேண்டுமென்றெண்ணினார். ‘இப் பாடல் ஒரு பிள்ளைத்தமிழிலுள்ளது போலிருக்கிறது. சொற்களும் பொருளும் நயம்பெற இதில் அமைந்துள்ளன. அப்பிள்ளைத் தமிழ் எந்தக் கவிசிகாமணியின் வாக்கோ! இந்த நூல் அந்தத் திரிசிரபுர முதலிய இடங்களில் மட்டும் வழங்குகின்றது போலும்! இதன் பெயரையாவது இவ்வூரில் ஒருவரும் நம்மிடத்துச் சொன்னாரில்லையே!’ என்று பலவாறாக நினைந்து இவரை நோக்கி, "இச்செய்யுள் எந்த நூலிலுள்ளது?" என்று கேட்டார். இவர் வணக்கத்தோடு, "அடியேன் இயற்றிய அகிலாண்டநாயகி பிள்ளைத்தமிழில் உள்ளது" என்றார். உடனே அவர் மிகவும் வியப்புற்று, 'இவ்வளவு அருமையான நூலைச் செய்த இவர் அடங்கியிருப்பது என்ன ஆச்சரியத்தை உண்டுபண்ணுகிறது! இவர் எவ்வளவோ நூல்களைப் படித்திருக்கவேண்டுமே! எவ்வளவோ செய்யுட்கள் செய்து பழகியிருக்கவேண்டுமே! அளவற்ற பாடல்களைச் செய்திருந்தால்தானே இங்ஙனம் செய்யுள் செய்ய வரும்! இவருடைய அடக்கமே அடக்கம்! இவரைப் போன்றவர்களை இதுகாறும் யாம் கண்டிலேமே! இங்ஙனம் இருப்பதன்றோ கல்விக்கழகு!' என்று தம்முட் பலவாறாக நினைத்து இவரை நோக்கி, "தயை செய்து இச்செய்யுளை இன்னும் ஒருமுறை சொல்லுங்கள்" என்று சொல்லி இரண்டு மூன்று முறை சொல்வித்துக் கேட்டார். பின்னும் அந்நூலிலிருந்து சில செய்யுட்களைச் சொல்லும்படி செய்து கேட்டு அவற்றின் பொருட்சுவைகளை நுகர்ந்து இன்புற்றார். பின்பு சிறிது நேரம் யோசித்து, "நானும் ஒரு பாடல் சொல்லுவேன்; கேட்கவேண்டும்" என்று கூறி,
"தருமைவளர் குமரகுரு முனிவன் கல்வி
சார் [6]பகழிக் கூத்தனெனத் தரணி யோர்சொல்
இருவருமே நன்குபிள்ளைத் தமிழைச் செய்தற்
கேற்றவரென் றிடுமுரைவெந் நிட்டதம்மா
அருமைபெறு [7]காவையகி லாண்ட வல்லி
யம்மைமேன் மேற்படிநற் றமிழை யாய்ந்து
சுருதிநெறி தவறாத குணன்மீ னாட்சி
சுந்தரமா லன்பினொடு சொல்லும் போதே"
என்னும் செய்யுளைச் சொல்லிக் காட்டினர். அப்பால், சபாபதி முதலியார் முதலியவர்களை நோக்கி, "இவ்வளவு படித்துப் பாடத் தெரிந்தும் இவர்கள் எவ்வளவு அடக்கமாயிருக்கிறார்கள்! என்ன ஆச்சரியம்!" என்று வியந்து பாராட்டினர். கேட்ட சபாபதி முதலியார், "அதைத்தான் நாங்கள் அறிவிக்க வந்தோம்" என்றார். மகாலிங்கையர் இவருடைய வரலாற்றை விசாரித்து வியந்து புகழ்ந்துவிட்டு, பின்பு இவரைப்பார்த்து, "இந்நூல் அச்சிற் பதிப்பிக்கப்பெற்றதோ? இல்லையாயின் விரைந்து பதிப்பித்துவிட வேண்டும். படித்தவர்களுக்கு இது நல்ல இனிய விருந்தாக விளங்கும்" என்று அன்புடன் சொன்னதோடு, "நீங்கள் இந்நகரில் எவ்வளவு நாள் இருத்தற்கு எண்ணியிருக்கிறீர்கள்? வேறு எவ்வளவு காரியங்கள் இருப்பினும் என்னோடு கூடவிருந்தே பெரும்பாலும் பொழுதுபோக்கவேண்டும். உங்களுக்கு ஆகவேண்டிய காரியம் என்னவிருந்தாலும் அதனைச் செவ்வனே செய்துமுடித்தற்குச் சித்தனாகவிருக்கிறேன்; யோசிக்க வேண்டாம்" என்று மிகவும் வற்புறுத்தினார்.
அங்ஙனம் செய்விக்கவேண்டுமென்று சபாபதி முதலியார் முதலியோரையும் கேட்டுக்கொண்டனர். இவர் அவர்களுடைய குறிப்பையறிந்து அங்ஙனம் செய்வதாகவே உடன்பட்டனர். அப்பால் எல்லோரும் மகாலிங்கையரிடம் விடை பெற்றுக்கொண்டு தத்தம் உறைவிடம் சென்றார்கள்.
பிள்ளையவர்கள் அக்காலந்தொடங்கி மகாலிங்கையரோடு பழகுதலை மிகுதியாக வைத்துக்கொண்டு அவரிடம் நன்னூல் விருத்தியுரை, காரிகையுரை, தண்டியலங்காரவுரை, நாற்கவிராச நம்பியகப்பொருளுரை முதலியவற்றிலும் பிறவற்றிலும் தமக்கிருந்த ஐயங்களைக் கேட்டுத் தெளிந்து அதுவரை தமக்கு அகப்படாமல் இருந்ததாகிய இலக்கணக்கொத்துரையையும் அவர்பாற் பாடங்கேட்டனர். இலக்கணக் கொத்துரையை மகாலிங்கையர் இவரிடம் கொடுத்தபொழுது, "இந்த நூலைப் பெறவேண்டுமென் னும் ஆர்வத்தினால் பல இடங்களில் தேடினேன்; திருவாவடுதுறை மடத்திலும் சென்று மிக முயன்றேன்; கிடைக்கவில்லை. பின்பு நண்பர் தாண்டவராயத் தம்பிரானவர்களிடத்தே பெற்றேன். இதனை மிகவும் சாக்கிரதையாக வைத்துக்கொள்ளவேண்டும்" என்றார். இவர் அதனைப் பெற்றுப் பிரதிசெய்துகொண்டார். அவர் எவ்வெவ்விடங்களுக்குப் போவதாக இருந்தாலும் இப் புலவர் பெருமானைத் தம்முடைய வண்டியிலேயே வைத்துக்கொண்டு சென்று மீளுவதும், அக்காலங்களில் இலக்கணசம்பந்தமான ஸல்லாபமே இவருடைய விருப்பத்தின்படி இவரிடம் மிகுதியாகச் செய்வதும், தமக்குத் தோற்றாதவற்றை இவர்பால் தெரிந்து கொள்வதும் அவருக்கு வழக்கமாக இருந்தன.
ஒருநாள் பல இடங்களுக்குப்போதற்கு இருவரும் வண்டியொன்றில் ஏறிப் புறப்பட்டபொழுது பிள்ளையவர்கள் மகாலிங்கையரைப் பார்த்து, "நீங்கள் காலேஜில் இலக்கணக்கேள்விகளை எவ்வாறு கேட்பது வழக்கம்?" என்று கேட்டார். அவர் ஒரு பாடலைச் சொல்லச் சொல்லி அந்தப்பாடலில் அமைந்துள்ள சொன்முடிபு பொருண்முடிபுகளையும் புணர்ச்சி விதிகளையும் பிற இலக்கணங்களையும் கேட்டுக்கொண்டே வந்தனர். அவ்வாறு கேட்டு வருகையில் நன்னூலிலுள்ள பெரும்பான்மையான இலக்கண விதிகளும் பிற இலக்கண நூல் விதிகளும் அவ்வொரு பாடலில் அமைந்தவற்றைக்கொண்டே கேட்டு விட்டனர். பார்க்க வேண்டிய இடங்களுக்கெல்லாம் போய்ப்பார்த்து வீடு திரும்பும் வரையில் அவ்வொரு பாட்டிலுள்ள இலக்கண அமைதிகளையே பல வகையாகக் கேட்பதிலும் விடையளிப்பதிலும் பொழுது சென்றது. அதனாற் பல விஷயங்கள் இவருக்குப் புதியனவாகத் தெரியவந்தன. [8] இவ்வாறு இருவரும் அளவளாவிப் பல விஷயங்களை அறிந்தும் அறிவித்தும் வந்தனர். "கற்றாரைக் கற்றாரே காமுறுவர்" அன்றோ?
அகிலாண்ட நாயகி பிள்ளைத்தமிழ் அச்சிடப்பட்டது.
மகாலிங்கையர் முன்னரே வற்புறுத்தியபடி அகிலாண்ட நாயகி பிள்ளைத் தமிழ் திரிசிரபுரம் லட்சுமண பிள்ளையின் பொருளுதவியால் புரசப்பாக்கம் பொன்னம்பல முதலியாரால் மகாலிங்கையர் முதலிய பலர் வழங்கிய சிறப்புப்பாயிரங்களோடு அச்சிற் பதிப்பிக்கப்பெற்று நிறைவேறியது. அது வெளிவந்த வருஷம் 1842 (பிலவ வருஷம், பங்குனி மாதம்); அதற்குச் சிறப்புப்பாயிரம் கொடுத்தவர்கள்: (1) மழவை மகாலிங்கையர், (2) தாண்டவராய்த் தம்பிரான், (3) காஞ்சீபுரம் சபாபதி முதலியார், (4) திருவம்பலத்தின்னமுதம் பிள்ளை, (5) அஷ்டாவதானம் சபாபதி முதலியார், (6) இராமநாதபுரம் அஷ்டாவதானம் வேலாயுதக் கவிராயர், (7) பொன்னம்பல ஸ்வாமிகள், (8) காரைக்கால் முத்துச்சாமிக் கவிராயர், (9) காயாறு சின்னையா உபாத்தியாயர், (10) திரிசிரபுரம் சோமசுந்தரமுதலியார், (11) உறையூர் முத்துவீர உபாத்தியாயர் (12) திரிசிரபுரம் வீரராகவ செட்டியார், (13) புரசப்பாக்கம் பொன்னம்பல முதலியார், (14) பென்னெலூர் நாராயணசாமி நாயகர், (15) திரிசிரபுரம் நாராயண பிள்ளை.
அந்நூல் லட்சுமண பிள்ளையின் விருப்பத்தாற் செய்யப்பட்ட தென்பது,
"… … … …. …. சிராப்பள்ளிவாழ்
மருவளர் பூங்குவ ளைத்தாம லட்சு மணன்விரும்பத்
தருவளர் சம்பு வனவல்லி பிள்ளைத் தமிழியற்றி
உருவளர் மீனாட்சி சுந்தரன் றந்தா னுணர்பவர்க்கே"
என்னும் பொன்னம்பல முதலியார் செய்யுளாலும் வெளியாகின்றது.
“சிற்பரன்சேர் சிரகிரியெம் மீனாட்சி சுந்தரமாஞ் சீரார் கொண்மூ
கற்பனைவண் கடலைமுகந் து .... ...
பற்பலரும் புகழ்பிள்ளைக் கவிமழையைப் பொழிந்ததென்பர் பாவ லோரே"
என்று தாண்டவராயத் தம்பிரானும்,
"கலைமுழு துணர்ந்த கவிஞர் குழாத்துள்
தலைமை நடாத்துஞ் சைவ சிகாமணி
நாச்சுவை யமுதினு மூங்குநனி சிறக்கும்
பாச்சுவை யமுதைப் பற்பக றோறும்
பெருவா னாட்டுப் புலவரும் பெட்புறத்
தருமீ னாட்சிசுந் தரநா வலனே "
என்று திருவம்பலத்தின்னமுதம் பிள்ளையும் தத்தம் சிறப்புப் பாயிரங்களில் இப்புலவர்கோமானைப் பாராட்டியிருத்தலால் அக்காலத்தே இவருக்கு இருந்த பெருமை விளங்கும். இராமநாதபுரம் அஷ்டாவதானம் வேலாயுதக் கவிராயர் பாடிய,
"கந்தவே ளோவலது கலைமகளோ விவ்வுருக்கொண் டாய்காணுன்னை
அந்தநாட் டவமிருந்து புலவோருக் கரசுசெய வன்பாற் பெற்ற
தந்தையே தந்தையுனைத் தான்படிக்க வைத்தவனே தமிழுக் காசான்
சுந்தரமா மதிவதனா மீனாட்சி சுந்தரனே துலங்கு மாலே”
என்ற செய்யுளும், உறையூர் முத்துவீர உபாத்தியாயர் பாடிய,
"தண்ணறுமுண் டகப்போதி லிருந்துலக மாக்கியவே தாவே யிந்தக்
கண்ணகன்ற புவியினிற்றன் னுருமாற்றி மக்களுருக் கவினத் தாங்கி
வண்ணமுறு மீனாட்சி சுந்தரமென் றொருநாமம் வயங்க வின்பம்
விண்ணவரும் பெறத்தந்தி வனப்பிள்ளைத் தமிழினிதா விளம்பி னானே"
என்ற செய்யுளும் இவர்பால் அவர்களுக்கிருந்த நன்மதிப்பைப் புலப்படுத்துகின்றன.
திரிசிராமலை யமகவந்தாதி முதலிய நூல்களையும் இவர் பதிப்பிக்க எண்ணியிருந்தும் பொருண்முட்டுப்பாட்டால் அவ்வாறு செய்ய இவருக்கு இயலவில்லை.
இடையிடையே வக்கீலிடம் சென்று ஹைக்கோர்ட்டிலுள்ள வழக்கின் நிலைமையைத் தெரிந்து லட்சுமண பிள்ளைக்கு அச் செய்தியை எழுதி அனுப்பியதோடு தமக்குச் சென்னையில் மேன்மேலுங் கிடைத்துவருகிற கல்விப் பயனையும் நூல்களையும் அவருக்கு நன்றியறிவோடு தெரிவித்துக் கொண்டு வந்தார். சபாபதி முதலியார் முதலிய பெரியோர்கள் இவரை ஒரு மாணாக்கராக நினையாமல் தம்மை ஒத்தவராகவே பாவித்து மரியாதையோடு நடத்திவந்தார்கள். புதிய நூல் இயற்றுபவர்கள் சபாபதி முதலியார் முதலியவர்களிடத்திற் சிறப்புப் பாயிரம் வாங்கும் பொழுது அவர்கள் மூலமாகப் பழக்கஞ் செய்துகொண்டு இவருடைய சிறப்புப் பாயிரங்களையும் பெற்று மகிழ்ந்து பதிப்பித்து வந்தார்கள் ,
”நீங்கள்” என்பதற்குப் பிரயோகம் காட்டியது.
ஒருநாள் எழுமூர் திருவேங்கடாசல முதலியார் வீட்டிற்கு இவர் போன பொழுது அவராற் பதிப்பிக்கப்பெற்று வைத்திருந்த கம்பராமாயணம் அயோத்தியா காண்டத்தை எடுத்துப் பார்க்கையில் குகப்படலத்தில், "நைவீரலீர்" என்ற 67 - ஆம் செய்யுளில் ‘நீங்களைவீரும்' என்ற தொடர் [9]'நீர்களைவீரும்' என்று பதிப்பிக்கப்பட்டிருந்ததை நோக்கி முதலியாரவர்களைப் பார்த்து, "ஐயா, நீங்களென்பதே பாடமன்றோ? இதில் நீர்களென்று இருக்கிறதே" என்று வினாவினார்.
அவர், "நீங்களென்பதற்குப் பிரயோகம் இல்லையே. கள்விகுதியேற்ற நிலைமொழி இன்னதென்று தெரியவில்லையே" என்றார். உடனே இவர், "இந்தப் பிரயோகம் பழைய நூல்களிற் காணப்படுகின்றதே.
'ஆங்கது தெரிந்து வேதா
வாவிகள் வினைக்கீ டன்றி
நீங்களிவ் வாறு செய்கை
நெறியதன் றென்ன லோடும்' (கந்த. உருத்திரர். 40)
என்பதில் எதுகையிலேயே நீங்களென்பது வந்திருக்கின்றதே" என்றார். அதனைக் கேட்ட முதலியாரவர்கள், "தம்பி! உங்களுக்கு ஞாபகமுள்ளது எனக்கு ஞாபகத்திற்கு வரவில்லையே. ஒரு சொல்லின் உருவத்தைப் புலப்படுத்துவதற்குரிய மேற்கோள்களை நீங்கள் ஞாபகத்தில் வைத்திருப்பது வியக்கத்தக்கதே!" என்று பாராட்டினார்.
திரிசிரபுரம் மீண்டது.
இவ்வாறு சற்றேறக்குறைய ஒருவருடகாலம் இவர் சென்னையில் இருந்தார். பின்பு லட்சுமணபிள்ளையினுடைய வழக்கு முடிவடைந்தமையினாலும் தாம் வந்து பல நாட்களானமையினாலும் இவர் திரிசிரபுரத்திற்குப் புறப்பட்டுச் செல்ல எண்ணினார். சென்னையிலுள்ள பல பண்டிதர்களைப் பிரிவது இவருக்குத் தாங்கொணா வருத்தத்தை உண்டாக்கியது. சபாபதி முதலியார் முதலியவர்களுக்கும் இவரிடம் பாடங்கேட்ட மாணவர்களுக்கும் இவர் பிரிவு அவ்வாறே இருந்தது.
"உவப்பத் தலைக்கூடி யுள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில்”
என்பது உண்மையன்றோ? அப்பால் எல்லோரிடமும் விடைபெற்றுக்கொண்டு அரிதிற் சென்னையை விட்டுப் புறப்பட்டார். சபாபதி முதலியார் இவரைப் பார்த்து, "உங்களுடைய பிரிவை நினைந்தால் மனம் கலங்குகின்றது. உங்களுடைய அருமை பழகப் பழக அதிகமாக விளங்கியது. உங்களால் தமிழுலகம் பெரும் பேறடையப் போகின்றதென்பதை நினைந்து என் நெஞ்சம் அளவற்ற மகிழ்ச்சியை அடைகின்றது. இறைவன் உங்களுக்குத் தீர்க்காயுளையும் அரோக திடகாத்திரத்தையும் அளித்தருள வேண்டும். அடிக்கடி கடிதம் எழுதவேண்டும்" என்று சொல்லி விடை கொடுத்தனுப்பினார்.
---------
[1] சென்னைக் கல்விச் சங்கத்தின் தலைவர் போர்டு துரையென்பவர். அச்சங்கத்திற் பலர் தமிழ்ப்புலமை நடாத்தினதாக அக்காலத்து அச்சிட்ட நூல்களால் தெரியவருகின்றது. அப்பொழுது இருந்த புலவர்களிற் சிலருடைய வரலாறும் பதிப்பித்த நூல்களும் வருமாறு:
தாண்டவராய முதலியார்: இவர் கல்விச் சங்கத்துத் தலைமைப் புலமையை 1839 - ஆம் வருடம் வரையில் நடத்தியவர். பின்பு வேறு உத்தியோகத்தில் நியமிக்கப்பட்டு விசாகப்பட்டணம் சென்றார். இலக்கண வினாவிடையென்னும் நூலொன்று இவரால் இயற்றப்பட்டு, 1826 – ஆம் வருடம் பதிப்பிக்கப்பெற்றது. இவர் நாலடியாரையும் திவாகரம் முதல் எட்டுத் தொகுதிகளையும் ஆராய்ந்து பதிப்பித்தற்குச் சித்தம் செய்தார். இச்செய்தி கீழ்வரும் அவர் கடிதத்தால் விளங்கும்:
ம-ள-ள- ஸ்ரீ கொற்றமங்கலம் இராமசாமிப்பிள்ளையவர்களுக்கு விஜ்ஞாபனம்:
நாம் அச்சிற் பதிப்பிக்கத்தொடங்கிய சேந்தன்றிவாகரத்தி லொன்பான்றொகுதி தொடங்குவதற்கு எனக்கு வாய்த்த வேறு தேயத்திருக்கையாலும், பிறிது கருமத்தைக் கருத்தினாலுந் தீண்டவொண்ணாக் கருமந் தலைப்படலாலும், நான் கருதியவாறு முற்றுவித்தற்கியலாத மற்றைத் தொகுதிகளையு மொருவாறு புதுக்குவித்துச் சேர்த்துப் புத்தகத்தை, நிறைத்து வெளிப்படுத்துவீராகவென்ற, என் வேண்டுகோளை மேற்கொண்டு அவற்றிலிரண்டாயினுஞ் சேர்த்தமைக்கு அகமகிழ்வுறாநின்றேன். மறவியால் விடுபட்ட சில பொருள்களுஞ் சொற்களும் பின்னர்ச் சேர்ப்பித்தற்பொருட்டு நான் முன் குறித்திருந்த குறிப்பே டெனக்குக் காணப்பட்டாற் காலந் தாழ்க்காமற் பயன்படுத்துவேன்.
விசாகப்பட்டணம் இங்ஙனம்,
ஆகஸ்டு மாதம் 7ஆம் தேதி தாண்டவராய முதலியார்.
1839ஆம் வருடம்
இவரிடம் 22 மாணாக்கர்கள் பாடங் கேட்டு வந்தார்களென்றும் அவர்களில் தாமும் ஒருவரென்றும் புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியார் என்னிடம் சொல்லியதுண்டு.
மதுரைக் கந்தசாமிப்புலவர்: கல்விச் சங்கத்திலிருந்தவர்; ஸ்மிருதி சந்திரிகை முதலியவற்றைத் தமிழில் இயற்றியவர். அந்நூல் 1825 - ஆம் வருஷம் பதிப்பிக்கப்பெற்றது.
பு. நயனப்ப முதலியார்: இவர் அந்தச் சங்கத்து வித்துவானாக இருந்தவர்; தாண்டவராய முதலியாருடைய அநுமதிப்படி திவாகரம் 9, 10 - ஆம் தொகுதிகளைப் பரிசோதித்தளித்தவர்.
இராமசாமிப் பிள்ளை: கல்விச் சங்கத்துப் புத்தக பரிபாலகர் (Librarian) ஆக இருந்தவர்; தாண்டவராய முதலியாராற் பரிசோதிக்கப்பட்ட திவாகரத்தை 1839 - ஆம் வருஷத்திற் பதிப்பித்தவர். இவர் ஊர் கொற்றமங்கலம்.
இயற்றமிழாசிரியர் இராமாநுச கவிராயர்: இவர் வின்ஸ்லோ அகராதி பதிப்பிக்கும்பொழுது உடனிருந்து சகாயஞ்செய்தவர்களுள் ஒருவர். இவர் பரிசோதித்தும் உரையெழுதியும் பதிப்பித்த நூல்களிற் சில:
திருக்குறள் பரிமேலழகருரை - பதிப்பித்த வருடம் 1840
நன்னூல் விருத்தியுரை - பதிப்பித்த வருடம் 1845
கொன்றை வேந்தன் - பதிப்பித்த வருடம் 1847
இலக்கணச் சுருக்கம் - பதிப்பித்த வருடம் 1848
ஆத்திசூடி, வெற்றிவேற்கை
இயற்றமிழாசிரியர் விசாகப் பெருமாளையர்: கல்விச் சங்கத்துத் தமிழாசிரியர்; இலக்கணம் விசாகப் பெருமாள் கவிராயரெனவும் வழங்கப்படுவர்.
மழவை மகாலிங்கையர்: தொல்காப்பியம் எழுத்ததிகாரம், நச்சினார்க்கினியருரையைப் பதிப்பித்தவர் - வருஷம் 1847.
[2] இவர் சென்னையில் கோவிந்தப்பன் நாயக்கன் தெருவிலுள்ள திருவாவடுதுறை மடத்தில் இருந்து விளங்கியவர்.
[3] இவர் கச்சியப்ப முனிவர் சென்னையிலிருந்து விநாயக புராணத்தை அரங்கேற்றிய பொழுது சிறப்புப்பாயிரம் அளித்த பெரியார்களுள் ஒருவர்.
[4] இவர் கும்பகோணம் காலேஜில் தமிழாசிரியராக இருந்து பின்பு சென்னை இராசதானிக் கலாசாலையிலும் அவ்வேலையில் இருந்தவர்.
[5] "சென்னபட்டணம் போய்ச்சேர்ந்தவுடன் பைபில் அச்சிடுவதற்காகப் பார்சிவல் வந்தாரென்று கேள்விப்பட்டு அங்குள்ள மிசியோனாரிமார் (Missionaries) அவரிடத்திலே வந்து, யாழ்ப்பாணத்திலே தமிழ்க்கல்வி குறைவாதலானும், செந்தமிழ் பேசுவோர் அரியராதலானும் யாழ்ப்பாணத்துத் தமிழ்ப் பண்டிதரால் திருத்தப்பட்ட பைபில் இங்குள்ள பண்டிதர் முன்னிலையில் வாசிக்கப்பட்டு அவர்கள் பிழை இல்லை என்றும் வசன நடை நன்றாயிருக்கின்றதென்றும் சொல்வார்களாயின் அச்சிற் பதிப்பிக்கலாமென்றும், அப்படிச் செய்யாது அச்சிற் பதிப்பிக்கின் நாங்கள் அதனை அங்கீகரிக்க மாட்டோம் என்றும் சொல்லிப் போயினர்.
“இவைகளைக் கேட்ட மாத்திரத்தே பார்சிவல் மனம் தைரியவீனப்பட்டுத் தமது பண்டிதரை (ஆறுமுகநாவலர்) நோக்கி 'நாங்கள் அச்சிற் பதிப்பித்துக் கொண்டு சீக்கிரம் போய்விடலாமென்று வர இங்கே தடையுண்டுபட்டிருக்கின்றதே. நாங்கள் அவர்கள் சொல்லுக்குச் சம்மதித்து இங்குள்ள பண்டிதர் முன்னிலையில் வாசித்தால் அவர்கள் பிழையென்று சொல்லுகிறார்களோ சரியென்று சொல்லுகிறார்களோ தெரியவில்லையே, பிழையென்றாவது வசன நடை நன்றாயில்லையென்றாவது சொல்வார்களாயின், நமக்கெல்லாம் அவமானம் நேரிடுமே' என்று சொல்லினர். பண்டிதர் அதற்கு உத்தரமாக, 'நாங்கள் திருத்திய பைபிலில் ஒரு பிழையுமில்லை; வசன நடையும் நன்றாயிருக்கின்றது. அப்படியிருக்க அவர்கள் குற்றமேற்றுவார்களாயின் அதிலே ஒரு குற்றமுமில்லையென்று பல பிரமாணங்கொண்டு தாபித்து எங்களாலே திருத்தப்பட்டபடியே அச்சிடுவிப்போம். ஆதலால் அவர்கள் கருத்துக்கிசைந்து யாழ்ப்பாணத்திலும் செந்தமிழ் உண்டெனத் தாபித்தலே தகுதி' என்று சொன்னார். அவர்கள் கேள்விக்கு இவர்கள் உடன்பட்டபோது அவர்கள் அதனைப் பார்வையிடும்படி அக்காலத்திலே சென்னபட்டணத்தில் சிறந்த வித்துவானாயிருந்த மகாலிங்கையரை ஏற்படுத்தினார்கள். மகாலிங்கையர் பைபில் முற்றும் வாசித்து அதிலே பிழையில்லையென்றும், வசன நடை நன்றாயிருக்கிறதென்றும், இந்தப் பிரகாரம் அச்சிடுதலே தகுதியென்றும், அவர்களுக்குச் சொல்லி யாழ்ப்பாணத்துத் தமிழையும் நன்கு பாராட்டி, வியந்தனர்" - கனகரத்தின உபாத்தியாயர் எழுதிய ஆறுமுக நாவலர் சரித்திரம், 1882; ப. 14-6.
[6] இவர் இயற்றிய நூல் திருச்செந்தூர்ப் பிள்ளைத்தமிழ்.
[7] காவை – திருவானைக்கா.
[8] இச்செய்தி, நான் கும்பகோணம் காலேஜில் வேலையை ஏற்றுக் கொண்ட தினத்தில் ஸ்ரீ தியாகராச செட்டியாரவர்கள் தமக்குப் பிள்ளை யவர்களே சொல்லியதாகக் கூறியது.
[9] அவர் பதிப்பிலும் அதனைப் பின்பற்றி அச்சிடப்பெற்ற பிற்பதிப்புக்கள் சிலவற்றிலும் ‘நீர்கள்' என்றேயிருத்தலை இன்றும் காணலாம்.
---------
8. கல்வியாற்றாலும் செல்வர் போற்றலும்.
அப்பால் திரிசிரபுரத்தில் இருந்து வழக்கம்போலவே இக்கவிஞர்பிரான் தாம் செய்யவேண்டியவற்றை ஒழுங்காகச் செய்தும் பிறரைக்கொண்டு செய்வித்தும் வருவாராயினர். சென்னையில் இருந்தபோது பழகிய அறிஞர்களுள் ஒவ்வொருவரிடத்தும் இன்னஇன்னவிதமான திறமைகள் உள்ளனவென்று கவனித்து அவற்றைத் தாமும் பயிலவேண்டுமென்று பயின்றுவந்தார். அதனால், செய்யுட்களுக்குப் பொருள் கூறுதல், இலக்கண விஷயங்களை எடுத்தாளல், பதச்சரம் சொல்லுதல், நூல்களை ஆராய்தல் முதலிய பலவகையான பயிற்சிகள் இவர்பால் முன்னையிலும் சிறந்து விளங்கின. பலவகை மாணாக்கர்கள் வந்து வந்து தாம் கேட்டற்குரிய பாடங்களைக் கேட்டு வந்தனர். அக்காலத்துப் படித்துவந்த மாணாக்கர்களுள் முக்கியமானவர் தி.சுப்பராய செட்டியார்.
பெரும்பாலும் இவர் ஆண்டார் தெருவிலிருந்த [1]சிதம்பரம் பிள்ளை யென்பவரது வீட்டு மெத்தையிலும் கீழைச் சிந்தாமணியிலுள்ள சொர்க்கபுரம் மடத்திலும் இருந்து காலங்கழித்து வந்தனர்; ஆகாரத்துக்காக மட்டும் தம் வீட்டுக்குப் போய் வருவார். ஏதாவது விஷயங்களைக் கொடுத்து மாணவர்களைப் பாடும்படி பழக்குவிப்பார்; அவர்கள் செய்யமுடியாமல் வருந்துகையில் தாம் அவற்றை முடித்துக் காட்டுவார். அக்காலத்தில் இவருக்கு யாதொரு கவலையுமில்லாதபடி உடனிருந்து பணிசெய்து பாதுகாத்து வந்தவர் [2]அகிலாண்டம்பிள்ளையென்பவர்.
படிப்பவர்கள் தம் இடஞ் சென்றபின், தினந்தோறும் இரவில் ஓய்வு நேரங்களில் புதியனவாகக் கிடைத்த நூல்களை இவர் பனையேட்டிற் பிரதிசெய்தலும் தனியேயிருந்து வெகுநேரம் படித்துக்கொண்டிருத்தலும் வழக்கம். இரவில் இவர் தூங்குங்காலம் மிகக் குறைவேயாகும். இவருடைய பலவகையான ஆற்றலையும் அறிந்து உடனிருந்து ஊக்கமளித்து வந்தவர்கள் வித்துவான் சோமசுந்தர முதலியார், வீரராகவ செட்டியார் முதலிய முதியோர்கள்.
இவருடைய புகழ் தமிழ்நாடெங்கும் பரவி எல்லோருடைய உள்ளத்திலும் குடிகொண்டு விளங்கிற்று. அக்காலத்தில் தாம் இயற்றிய நூல்களை இவருக்குக் காட்டித் திருத்திக்கொள்வதற்கும், அவற்றிற்குச் சிறப்புப்பாயிரம் பெறுவதற்கும், அவற்றை அரங்கேற்றும் காலத்தில் உடன் இருப்பதற்காக் அழைப்பதற்கும், தம்மைச் சார்ந்தவர்களைப் படிப்பித்தற்குக் கொண்டுவந்துவிடுதற்கும், படித்த நூல்களில் தமக்குள்ள ஐயங்களைத் தீர்த்துக் கொள்வதற்கும் பற்பலர் வந்து போவாராயினர்.
புதல்வர் ஜனனம்.
இங்ஙனம் இருந்துவருகையில் இவரது இருபத்தொன்பதாவது பிராயமாகிய சோபகிருது வருஷம் ஆடி மாதம் 14-ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவில் இவருக்கு ஒரு புதல்வர் பிறந்தனர். அக்குமாரருக்கு இவர் தம்முடைய தந்தையாரின் பெயராகிய சிதம்பரம் என்ற நாமத்தையே வைத்து அழைப்பாராயினர்.
பட்டீச்சுரம்போய் மீண்டது.
சில மாதங்கள் சென்றபின் பட்டீச்சுரம் நமச்சிவாய பிள்ளை முதலியோர்கள் விருப்பத்தின்படி இவர் சில அன்பர்களுடன் சென்று பட்டீச்சுரத்தில் அவர்களால் ஆதரிக்கப்பெற்றுச் சிலநாள் தங்கியிருந்தார். இவர் அங்கிருப்பதைத் தெரிந்து பட்டீச்சுரத்தைச் சார்ந்த [3]முழையூரில் தனவந்தராகவிருந்த வையாபுரி பிள்ளை யென்பவர் இவரை உபசாரத்துடன் அழைத்துச்சென்று ஆறை வடதளி அல்லது வள்ளலார் கோயிலென்னும் தலத்திலுள்ளதான துறையூர் வீரசைவ ஆதீனத்தின் மூலபுருஷர் ஸ்ரீசிவப்பிரகாச தேசிகருடைய மடத்தில் இவரை இருக்கும்படி செய்வித்து அன்புடன் ஆதரித்து வந்ததன்றித் தாமும் தம்முடைய அன்பர்களும் கேட்கவேண்டிய நூல்களைப் பாடங்கேட்டுவந்தனர். இங்ஙனம் சில மாதங்கள் சென்றன. அப்பொழுது அந்த மடத்திலிருந்த பல ஏட்டுச்சுவடிகளை இவர் பார்த்தனர்; சிலவற்றை வாங்கிக் கொண்டனர். இங்ஙனமே அயலூர்களிலிருந்த வேளாளப் பிரபுக்களும் வேறு சிலரும் தத்தம் இடங்களுக்கு இவரை அழைத்துச் சென்று உபசரித்துச் சில நாட்கள் வைத்திருந்து அனுப்பியதுண்டு. அப்பால் திரிசிரபுரம் வந்து மேற்கூறிய சிதம்பரம்பிள்ளையின் வீட்டு மெத்தையிலேயே இருந்து காலங் கழிப்பாராயினர்.
புத்தகத்தை வாசித்தால் அழுகை வருமோ?
இவரைப் பார்த்தற்காக ஒருநாள் அயலூரிலிருந்து முக்கிய நண்பராகிய ஒரு வேளாளப் பிரபு வந்தார். அவர் இவரைக் கண்டு பாராட்டிவிட்டு உண்ட பின்பு சிதம்பரம் பிள்ளை வீட்டின் மேல்மாடத்தில் ஒருபக்கத்திற் சயனித்துக் கொண்டார்; சொல்ல வேண்டிய பாடங்கள் முடிந்தவுடன் மாணாக்கர்களை அனுப்பிவிட்டு வேறு ஒருபுறத்திலே இவர் துயின்றார். துயின்றவர் வழக்கம்போலவே பதினைந்துநாழிகைக்குமேல் விழித்துக்கொண்டு காஞ்சிப்புராணத்தின் இரண்டாங் காண்டத்துள்ள ஒரு பகுதியைப் படித்து அதன்பாலுள்ள சொற்சுவை பொருட்சுவைகளை நுகர்ந்து இன்புற்றுக் கவிஞர் பெருமானாகிய கச்சியப்ப முனிவரது அருமை பெருமைகளை நினைந்து மனமுருகிக் கண்ணீர் வீழ்த்தியும் ஆடையால் கண்களைத் துடைத்தும் படித்துக் கொண்டே இருந்தனர். இப்படி யிருக்கையில் அங்கே அயலிடத்தே துயின்ற புதிய பிரபு விழித்தெழுந்து ஜன்னல் வழியாக வெளிச்சந் தெரிந்தமையால் இவரைப் பார்த்தனர். இவர் அடிக்கடி கண்களைத் துடைத்துக் கொள்ளுதலையும் படிப்பதையும் கவனித்தார். சிறந்த நூல்களிற் சுவையுள்ள பாகங்களைப் படிக்கும்பொழுது கல்விமான்களுக்கு அடிக்கடி மனம் உருகுமென்பதும் கண்ணீர் பெருகுமென்பதும் அவர் அறியாதவர்; ஆதலால், ‘ஏதோ இவர் அழுகிறார்’ என்று எண்ணிக்கொண்டார். திடீரென்று எழுந்து பரபரப்புடன் வந்து இவர் கையிலிருந்த புத்தகத்தை வெடுக்கென்று பிடுங்கிக் கீழே எறிந்துவிட்டு இவரை நோக்கி, “ஐயா நீங்கள் வாசித்தது போதும்; நிறுத்துங்கள். இந்த அகாலத்தில் நீங்கள் தூங்காமல் வருந்து அழுவதற்குக் காரணம் என்ன? ஏதேனும் குடும்பக்கவலை உண்டோ? உங்களுக்கு வேண்டியவற்றையெல்லாம் குறிப்பறிந்து செய்வதற்குச் சிதம்பரம் பிள்ளை முதலியவர்கள் இருக்கும்பொழுது எதற்காக இப்படி வருத்தமடையவேண்டும்? மனத்திலிருக்கும் வருத்தத்தை வெளியிடாமற் புத்தகம் வாசிப்பதாகப் பாவனை செய்துகொண்டு ஏன் இப்படி அழுதுகொண்டிருக்கிறீர்கள்? உங்கள் மனத்தில் உள்ளதைச் சொல்லுங்கள். ஏதாயிருந்தாலும் நான் முடித்துவிடுவேன். நீங்கள் வருத்தப்படுவது என்னுடைய மனத்தை வருத்துகின்றது” என்றார். இவர் அவருடைய பேச்சைக்கேட்டு நகைத்தனர். அவர், “இந்தமாதிரி சிரித்துவிட்டால் நான் ஏமாந்துபோவேனென்று நினைக்கவேண்டாம். என்னதான் சிரித்தாலும் உங்கள் வருத்தம் எங்கே போகும்? உண்மையாகக் கேட்கிறேன்; உங்கள் மனவருத்தம் இன்னதென்று சொல்லவேண்டும்” என்றார்.
பிள்ளையவர்கள்: “ஒன்றும் இல்லை; ஐயா! இந்நூலை நான் படித்து வரும்போது ஒரு பாகம் என் மனத்தை உருக்கிவிட்டது. அதனால் என்னையறியாமல் கண்ணீர் வந்தது.”
அவர்: “புத்தகத்தை வாசித்தால் அழுகை வருமோ? அழுகை நீங்கிவிடுமே! எனக்காகச் சொல்லவேண்டாம். உள்ளதைச் சொல்லுங்கள்” என்று மிகவும் வற்புறுத்திப் பின்னும் வேண்டினார். அவரைச் சமாதானப்படுத்தித் தமக்கு வருத்தமில்லையென்பதைத் தெரிவித்தற்கு இவர் பெரும் பிரயத்தனம் செய்தார். ஆனாலும் அவருக்கு இவருடைய வார்த்தைகளில் முழு நம்பிக்கை உண்டாகவில்லை. மறுநாட்காலையில் அவரே சிதம்பரம் பிள்ளையிடத்தும் அங்குவந்த ஏனையோரிடத்தும் முதல் நாள் இரவில் நடந்தவற்றைச் சொல்லி, “பிள்ளையவர்களை நன்றாகக் கவனித்துக்கொள்ளவேண்டும்” என்று கூறிவிட்டுச் சென்றனர். எல்லோரும் அதனைக் கேட்டு, “இப்படியும் ஒரு மனிதருண்டா!” என்று விம்மிதமுற்றுத் தம்முள் அடிக்கடி சொல்லிக்கொண்டு மகிழ்வாராயினர். பிள்ளையவர்களைக் கண்டு அவர்கள் கேட்டபொழுது அவருக்குத் தம்பாலுள்ள அன்பே அச்செயலுக்குக் காரணமென்று விடை பகர்ந்தார்.
சுப்பராய செட்டியாரைச் சோடசாவதானியாக்கியது.
சேது யாத்திரை சென்று திரிசிரபுரத்திற்கு வந்த புரசை அஷ்டாவதானம் சபாபதி முதலியார் தம்முடைய நண்பராகிய பிள்ளையவர்களைக் கண்டார். இவர் சிலதினம் இருந்து செல்ல வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்; அதற்கு அவரிசைந்து அவ்வாறே இருப்பாராயினர். அப்பொழுது அவருடைய கல்விப் பெருமையையும் அவதான விசேடத்தையும் இவரால் தெரிந்து கொண்ட பல பிரபுக்களும் வித்துவான்களும் அவர் அஷ்டாவதானம் செய்வதைத் தாம் பார்க்க வேண்டுமென்று பிள்ளையவர்களைக் கேட்டுக் கொண்டார்கள். அதற்கிசைந்து இவர் ஒரு பெரிய சபை கூட்டிச் சபாபதி முதலியாரைக் கொண்டு அஷ்டாவதானஞ் செய்வித்தபொழுது யாவருங் கண்டு களித்து உபசரித்தனர். அப்பொழுது அங்கு வந்திருந்த செல்லப்பா முதலியாரென்ற பிரபு இவரை நோக்கி, “இவர்கள் அஷ்டாவதானம் செய்தது மிகவும் ஆச்சரியகரமாக இருக்கிறது. இங்ஙனம் செய்யும்படி உங்களுடைய மாணாக்கர்களுள் யாரையேனும் பழக்க முடியுமா?” என்று கேட்டனர். இவர் அப்பொழுது ஒன்றும் விடைபகராமல் இருந்துவிட்டுச் சபாபதி முதலியார் ஊர்சென்ற பின்னர், தம்முடைய மாணாக்கருள் ஒருவரும் மிக்க ஞாபகசக்தி யுள்ளவருமாகிய சுப்பராய செட்டியாரைப் பதினாறு அவதானம் செய்யும்படி சில மாதங்களிற் பயிற்றுவித்து ஒரு மகாசபைகூட்டி, அதற்கு மேற்கூறிய செல்லப்பா முதலியார் முதலியவர்களை அழைப்பித்து அவர்கள் முன்னிலையில் பதினாறு அவதானமும் செய்யச்செய்து அவருக்குச் சோடசாவதானி யென்ற சிறப்புப் பெயரை அளித்துத் தக்க சம்மானங்களையும் வழங்குவித்தார். அதுமுதல் அவர் பெயர் சோடசாவதானம் சுப்பராயசெட்டியா ரென்று கௌரவப் பட்டத்துடன் வழங்குவதாயிற்று.
பிரபுக்கள் பாடங் கேட்டல்.
அப்பால் இவருடைய பெருமையை அறிந்து வரகனேரியிலுள்ள நாராயணசாமி பிள்ளை யென்னும் செல்வர் ஒருவர் சில நூல்களை இவர்பாற் பாடங்கேட்க நினைந்து தாமே வலிந்துவந்து இவரை அழைத்துச் சென்று மலைக்கோட்டை வாயிலுக்கு எதிரே யுள்ளதும் தமக்குச் சொந்தமானதுமாகிய பெரியதொரு வீட்டில் இருக்கச்ச் செய்து இவருக்கும் உடனிருப்பவர்களுக்கும் ஆகாராதி களுக்குரிய சௌகரியங்களை அமைப்பித்து ஓய்வுகாலங்களில் வந்து தாம் அறிந்துகொள்ள வேண்டிய நூல்களைப் பாடங் கேட்டார்; விரும்பிய பலரையும் கேட்கும்படி செய்து ஆதரித்தும் வந்தார்.
பின்பு, உறையூரிலுள்ள அருணாசல முதலியாரென்பவர் ஒரு சமயம் இவரை மாணாக்கர் முதலியவர்களோடு அழைத்துச் சென்று தம்முடைய வீட்டிலேயே உபசாரத்துடன் பலமாதங்கள் வைத்திருந்தார். அப்பொழுது அவர் தாம் முன்பு படித்திருந்த நூல்களிலுள்ள ஐயங்களைப் போக்கிக் கொண்டதன்றித் திருக்கோவையார் முதலியவற்றிற்கும் பொருள்கேட்டுத் தெளிந்தனர். அவர் செல்வமும் ஈகையும் வரிசையறிதலும் உடையவராதலின் எவ்வகையிலும் இவர் பிறரை எதிர்பாராதபடி தக்க உதவி செய்து வருவாராயினர். அக்காலத்திலே பிள்ளையவர்களுக்குப் பிராயம் 30.
இவர்பாற் பாடங்கேட்டவர்களுள் ஒருவராகிய சுப்பராய முதலியாரென்பவர் இவருடன் இடைவிடாமல் இருந்து செய்ய வேண்டியவற்றைக் குறிப்பறிந்து செய்து செல்லுமிடங்களுக்கும் ஊர்களுக்கும் உடன் சென்று கற்றுத்தேறினர்.
----------
[1]. இவர் உப்பு வியாபாரத்தால் மிக்க செல்வம் பெற்றுத் தரும சிந்தையுள்ளவராய்ப் பரோபகாரஞ்செய்து காலங்கழித்து வந்தவர்.
[2]. இவரால் இச்சரித்திரச் செய்திகளிற் சில தெரிந்தன.
[3]. இது தேவார வைப்புத்தலங்களுள் ஒன்று.
---------
9. அம்பலவாண முனிவரிடம் பாடங்கேட்டல்.
திருவாவடுதுறை சென்றது.
இப்படி இவர் திருச்சிராப்பள்ளியில் இருந்து வருகையில், திருவாவடுதுறை யாதீனத் தலைவராகிய வேளூர்ச் சுப்பிரமணிய தேசிகரைத் தரிசித்துக்கொண்டு வரவேண்டுமென்னும் விருப்பம் இவருக்கு உண்டாயிற்று; ஒருநாள் அங்ஙனமே புறப்பட்டுத் திருவாவடுதுறைக்கு வந்துசேர்ந்தார். வந்தகாலத்தில் அவர் சில தினத்துக்குமுன்பு [1]பரிபூரண தசையையடைந்து விட்டதாகத் தெரிந்தமையால், “இனி அறியவேண்டிய அரிய விஷயங்களை எவ்வண்ணம் தெரிந்துகொள்வோம்? யார் சொல்வார்கள்? எல்லாமுடனே கொண்டேகினையே” என்று அவரைப்பற்றி வருந்தித் தம்முடைய வருத்தத்தைச் சில செய்யுட்களாலே புலப்படுத்தினர். அப்பால் அங்கே பதினைந்தாம் பட்டத்தில் ஆதீனத் தலைவராக விளங்கிய ஸ்ரீ அம்பலவாண தேசிகரைச் சில பெரியோர்கள் முகமாகத் தரிசித்துப் பழக்கஞ்செய்துகொண்டார். அவர் திருமந்திரம் முதலிய நூல்கள், சைவசித்தாந்த சாஸ்திரங்கள், சித்த நூல்கள் முதலியவற்றைத் தக்கவர்களை வைத்துக் கொண்டு ஆராய்ச்சி செய்து வந்தமையின் அவரிடம் வேண்டியவற்றை எளிதில் தெரிந்துகொள்ள முடியவில்லை. அந்த ஆதீனத்திற் பரம்பரைக் கேள்வியையுடைய பெரியோர்களிடம் நூதனமாக அரியநூல்களைப் பாடங்கேட்க எண்ணி அதற்கு ஏற்ற பெரியார் யாரென்று இவர் விசாரித்த பொழுது அங்கேயுள்ளவர்கள் அம்பலவாண முனிவரென்ற பெரியாரே அதற்குத் தக்கவரென்று சொன்னார்கள்.
அம்பலவாண முனிவர் இயல்பு.
அவர் வடமொழி தென்மொழியிரண்டிலும் முறையான பயிற்சியுடையவர். பல சிவபுராணங்களிலும் பல பிரபந்தங்களிலும் சைவ சாஸ்திரங்களிலும் அவருக்கு நல்ல ஆராய்ச்சி உண்டு. சிறந்த ஒழுக்கமுடையவர். இடைவிடாமற் படித்தலிலேயே காலத்தைப் போக்குபவர். மடத்திற் பல தமிழ்நூல்கள் கிடைக்குமாயினும் ஒவ்வொன்றையும் ஒரே அளவுள்ள சுவடிகளில் எழுதி வைத்துக் கொள்வதில் அவருக்குத் திருப்தியதிகம். அவ்வாறு அவர் எழுதிய சுவடிகள் மிகப் பல. அவர் கல்வி கேள்விகளிற் சிறந்தவராக விருந்தாலும் உலகப்பயிற்சியே இல்லாதவர். யாருக்கேனும் பாடஞ்சொல்லுதலில் அவர் பழகவில்லை. அவர் 96 பிராயத்திற்கு மேற்பட்டு வாழ்ந்திருந்தவர். ஸ்ரீ சூரியனார் கோயிலிலுள்ள ஸ்ரீ சிவாக்கிரயோகிகள் மடத்துத்தலைவராக அம்பலவாண தேசிகராற் பின்பு நியமிக்கப்பெற்றவர்.
அம்பலவாண முனிவரிடம் பாடங்கேட்டது.
பிள்ளையவர்கள் ஏனையோர்களால் தூண்டப்பெற்று அவரிடம் சமயம்பார்த்துச் சென்று வந்தனஞ்செய்து தம்முடைய மனக்குறையைத் தெரிவித்துக்கொண்டார். அவர், “மற்றொரு சமயம் வாரும்; யோசித்துச் சொல்லுவோம்” என்றார். அப்படியே மறுநாட்காலையில் இவர்போய் வந்தனஞ் செய்துவிட்டு அவருடைய கட்டளையை எதிர்பார்த்துக்கொண்டு நின்றார். “நல்லது; இரும்” என்று அவர் சொல்ல இவர் இருந்தார். “நீர் என்ன என்ன படித்திருக்கிறீர்?” என்று அவர் கேட்டார். இவர் தாம் படித்தவற்றுள் சில நூல்களின் பெயர்களைச் சொன்னார். “அவற்றைச் சிறந்த கல்விமான்களிடம் முறையாகப் பாடங்கேட்டிருக்கிறீரா?” என்று அவர் வினவினார். இவர், “இவ்விடமிருந்து திருச்சிராப்பள்ளிக்கு எழுந்தருளிச் சில மாதங்களிருந்த ஸ்ரீவேலாயுத சாமியிடத்தும் வேறு சிலரிடத்தும் ஏதோ ஒருவாறு சிலசில நூல்களைக் கேட்டதுண்டு. எனக்குள்ள சந்தேகங்கள் பல. அவற்றையெல்லாம் சாமிகளே தீர்த்தருளவேண்டும்” என்று விநயத்தோடு தெரிவித்தார். வேறு பலரிடம் இவர் பாடங்கேட்டிருந்தனராயினும், அந்த மடத்தின் தொடர்புடையாரைச் சொன்னால் முனிவருக்குப் பிரீதி உண்டாகுமென்று எண்ணியே இங்ஙனம் கூறினார். அவர், “இந்த ஆதீனத்துச் சிஷ்யர்களுக்கே நாம் பாடஞ் சொல்லுவோமேயல்லாமல் மற்றவர்களுக்குச் சொல்லுவதில்லை; அது முறையுமன்று” என்று கண்டிப்பாகச் சொன்னார். இவர், “அடியேன் சாமிகளுடைய சிஷ்யபரம்பரையைச் சார்ந்தவன்தானே? இப்பொழுது அடியேன் கேட்கப்போவதும் சாதாரணமான நூல்களிலுள்ள சிலவற்றின் கருத்துக்களேயல்லாமல் சைவசாஸ்திரங்களல்ல” என்று பலமுறை மன்றாடவும், அவர் சிறிதும் இணங்கவில்லை. “ஒவ்வொரு நூலையும் எவ்வளவோ சிரமப்பட்டு நாங்களெல்லோரும் கற்றுக்கொண்டு வந்தோம். அவற்றை மிகவும் எளிதிற் கற்றுக்கொண்டு போகலாமென்று வந்திருக்கிறீரோ?” என்று சொன்னார். சொல்லியும் இவர் விடாமற் சென்று சென்று பாடங்கேட்டதற்கு முயன்றுகொண்டே வந்தார்; சில தினங்கள் இங்ஙனஞ் சென்றன. விடாமல் அலைந்தலைந்து இவர் கேட்டுக்கொள்வதைத் தெரிந்து ஒருநாள் மனமிரங்கி அவர், “இங்கே நீர் முதலிற் படிக்கவேண்டிய நூல் என்ன?” என்று கேட்டனர். “இப்பொழுது கம்பரந்தாதியே” என்றார் இவர். முனிவர், “நல்லது, ஒரு நல்ல நாள் பார்த்துக்கொண்டுவாரும்” என்றார்.
அப்படியே நல்லநாள் பார்த்துக்கொண்டு இவர் சென்றார். அப்போது அவர் புத்தகங் கொணர்ந்தீராவென்று கேட்டார். இவர் இல்லையென்றார். அவர் சென்று தம்முடைய புத்தகத்தையெடுத்து வந்து கொடுத்தார். இவர் இருந்தபடியே அதை வாங்கிக்கொள்ள ஆரம்பித்தபொழுது அவர், “என்னகாணும், உமக்குச் சம்பிரதாயம் தெரியவில்லை! நீர் முறையாகப் பாடங் கேட்டவரல்லரென்பது மிகவும் நன்றாகத் தெரிகின்றது. இதற்காகத்தான் நாம் பாடஞ் சொல்லமாட்டோமென்று முன்னமே சொன்னோம். நமக்குக் குற்றமில்லை. இப்படிப்பட்டவர்களுக்குப் பாடஞ்சொன்னால் இடத்தின் கௌரவம் போய்விடுமே” என்று சினக்குறிப்புடன் சில வார்த்தைகள் சொன்னார். இவர், ‘வெண்ணெய் திரண்டு வருகையில் தாழியுடைந்ததுபோல நாம் நல்ல பயனையடையக்கூடிய இச்சமயத்தில் கோபம் வந்துவிட்டதே! என்ன விபரீதம்? இதற்குக் காரணம் தெரியவில்லையே!’ என்று மனம் வருந்தி, “சாமீ, அடியேன் புத்திபூர்வமாக யாதொரு தவறும் செய்யவில்லையே; அப்படி ஏதேனும் அடியேன் செய்திருந்தால், அதனை இன்னதென்று கட்டளையிட்டால் நீக்கிக் கொள்ளுவேன். அடியேன் நடக்கவேண்டிய நல்வழிகளையும் கற்பித்தருளல் வேண்டும்” என்று பலமுறை பிரார்த்தித்தார். அவர், “நாம் கொடுத்த புத்தகத்தை நீர் இப்படியா வாங்குகிறது?” என்றார். இவர், “எப்படி வாங்குகிறது? கட்டளையிட்டருள வேண்டும்” என, அவர், “இங்கே தம்பிரான்களிடத்திற் படித்துக்கொண்டிருக்கும் குட்டித் தம்பிரான்கள் செய்வதைப் பார்த்துக் கற்றுக்கொண்டு வரும், போம்” என்றார். இவர், “அங்குத்தியே அந்த ஸம்பிரதாயத்தை விளங்கச் சொல்லவேண்டும்” என்று பலமுறை வற்புறுத்திக்கேட்டுக்கொண்டார். அவர், “நூதனமாகப் படிக்கத் தொடங்கும்பொழுது ஆசிரியர்களைப் பத்திர புஷ்பங்களால் முதலில் அர்ச்சித்து வந்தனங்கள் செய்து புஸ்தகத்தைப் பெறவேண்டும்; அப்பால் சொல்லெனச் சொல்லல் வேண்டும்” என்று சொன்னார். உடனே இவர் பத்திரபுஷ்பங்களைக் கொணர்ந்து அர்ச்சித்து வந்தனங்கள் செய்து நின்றார். அவர் புஸ்தகத்தைக் கொடுத்தனர். அதைப் பெற்றுக்கொண்டு மறுமுறை வந்தனஞ்செய்து புஸ்தகக்கயிற்றை அவிழ்த்துப் படிக்கத் தொடங்கியபொழுது அவர், “நில்லும்; பூசைக்கு நேரமாகிவிட்டது; நாளைக்காலையில் வாரும்” என்றார். இவர், “நல்ல வேளையில் தொடங்கிவிட வேண்டாமோ?” என்றார். “நாம் நல்ல வேளையிற் புத்தகத்தைக் கொடுத்துவிட்டோம். அதுவே போதியது” என்று சொல்லி உடனே அவர் எழுந்து போய்விட்டனர்.
அதன்பின் இவர் அங்கே படித்துக் கொண்டிருக்கும் மாணாக்க ரொவ்வொருவரும் இங்ஙனமே வழிபாட்டோடு தத்தம் பெரியோரிடத்திற் கற்றுக்கொண்டு வருதலையறிந்து தாமும் இங்ஙனமே செய்யவேண்டுவதுதான் முறையென்று நிச்சயித்துக்கொண்டார். பின்பு தம்முடைய உறைவிடஞ்சென்று ஆகாராதிகளை முடித்துக்கொண்டு கம்பரந்தாதியின் முதலைம்பது பாடல்களை ஒரு சுவடியிற் பெயர்த்தெழுதிக்கொண்டார். மறுநாட்காலையில் அவரிடம் சென்று முன்கூறியவண்ணம் அர்ச்சித்து வந்தனங்கள் செய்து அப்பால் அவருக்கு விசிறிப்பணிவிடை செய்துகொண்டு நின்றார். அதனால் மிக்க மகிழ்ச்சியுற்ற அவர், “நல்லது; இருந்து படியும்” என்ன, இவர் இருந்து முதற்செய்யுளைப் படித்தார். இவர் பாடங்கேட்கத் தொடங்கினாலும் தெரிந்துகொள்ளவேண்டிய பாகம் மிகச் சிலவாகவே யிருக்குமென்பதை அவர் தெரிந்துகொள்ளாமல் அச்செய்யுளைப் பதம்பதமாகப் பிரித்து விரிவாக அர்த்தஞ்சொல்லி நெடுநேரம் போக்கினர். இந்த முறையில் அந்நூல் சில தினங்களில் முற்றுப் பெற்றது. அதனைக் கேட்டுவருகையில் சைவசாத்திரக் கருத்துக்களை நுணுகி இவர் வினாவுவாராயின் முனிவர், “இப்பொழுது இதனைச் சொல்லக்கூடாது; பின்பு பார்த்துக்கொள்ளலாம்” என்பர். பலநாளிருந்தும் அந்த ஒரு நூலுக்குமேல் அப்பொழுது ஒன்றும் கேட்க இயலவில்லை.
அப்பால் இவர் அந்த நூல் முற்றுப்பெற்றதையும் அதிலுள்ள அரியவிஷயங்களைத் தெரிந்துகொண்டதையுமே பேரூதியமாக நினைந்து மகிழ்ந்தனர்; ‘இந்த ஆதீன சம்பந்தமுள்ள இவ்வம்பலவாண முனிவர் நமக்கு வித்தியாகுருவாகக் கிடைத்ததே பெரும்பயன்’ என்று ஆறுதலுற்றனர். பின்பு அவர்பால் விடைபெற்றுக்கொண்டு திரிசிரபுரம் வந்து சேர்ந்தார்.
அவரிடம் பாடங்கேட்டதை மறவாமல், பின்பு இவர் செய்த தியாகராச லீலையில் அம்முனிவரைத் துதித்துள்ளார். அச்செய்யுள்,
“மின்னுமான் மழுவும் வெவ்வழல் விழியும் மிளிர்கறைக் கண்டமு மறைத்துப்
பன்னுமா னிடமாய் வந்தெனை மறைத்த பழமல வலிமுழு தொழித்து
மன்னுமா னந்தம் புணர்த்தியாள் கருணை வள்ளலா வடுதுறைப் பெருமான்
முன்னுமா தவர்சொ லம்பல வாண முனிவர னிணையடி போற்றி”
என்பது. அக்காலத்தில் ஆதீனத்திலிருந்த ஞானாசிரியரைத் துதிப்பதாகவிருந்தால் அம்பலவாண தேசிகர் என்று அமைத்திருப்பார்; முனிவரென்றல் ஆதீன ஸம்பிரதாயமன்று.
திரிசிரபுரம் வந்தபின்பு இவர் திருவாவடுதுறைக்கு அடிக்கடி சென்று அங்கே கல்வி கேள்விகளிற் சிறந்திருந்த தம்பிரான்களோடு பழகித் தமக்குள்ள ஐயங்களை வினாவித் தெளிந்துகொள்வார். அவரிடத்தும் அங்கே உள்ள தம்பிரான்களிட்த்தும் சைவ சாஸ்திரங்களை உரைகளுடன் முறையே பாடங்கேட்டுத் தெளிந்தனர். அங்ஙனம் தெளிந்ததை இவர் பின்பு இயற்றிய பிரபந்தங்களிலும் காப்பியங்களிலும் அமைந்துள்ள சைவ சாத்திரக் கருத்துக்கள் புலப்படுத்தும்.
---------
[1]. பரிபூர்ண தசையை அடைந்தது குரோதி வருஷம் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரம்.
--------------
10. பெரியபுராணப் பிரசங்கமும் பாடஞ்சொல்லுதலும்.
மாணாக்கர்களிடத்து அன்பும் பாடஞ்சொல்லுதலில் விருப்பமும்.
பலரிடத்தும் சென்று சென்று அவர்களுக்கு வேண்டியவற்றைச் செய்து பலமுறை அலைந்து ஒவ்வொரு நூலையும் சிறிது சிறிதாகக் கற்றுக்கொண்டு வந்தவராதலின், யாதொரு வருத்தமுமின்றி மாணாக்கர்களைப் பாதுகாத்து அவர்களை அலைக்கழியாமல் அவர்களுக்கு வேண்டியவற்றை உடனுடன் கற்பித்துவர வேண்டுமென்ற எண்ணம் இவருக்கு இருந்துவந்தது. அதனால், பாடங்கேட்க வரும் செல்வர்களுக்கும் ஏனையோருக்கும் விரும்பிய நூல்களைத் தடையின்றிப் பாடஞ்சொல்லி ஆதரிக்கும் இயல்பு அக்காலந்தொடங்கி இவருக்கு முன்னையினும் அதிகமாக ஏற்பட்டது. சில ஏழைப் பிள்ளைகளுக்கு ஆகாராதிகளுக்கும் உதவிசெய்து வருவாராயினர். தம் நலத்தைச் சிறிதும் கருதாமல் மாணாக்கர்களுடைய நன்மையையே பெரிதாகக் கருதும் இயல்பு இப்புலவர்பெருமானிடத்து நாளடைவில் வளர்ச்சியுற்று வந்தது.
மாணாக்கர்களிடத்து இவர் காட்டிவந்த அன்பிற்கு எல்லையே இல்லை. தமக்கு ஏதேனும் தீங்கு செய்தாலும் பொறுத்துக்கொள்வார்; மாணாக்கர்களுக்கு யாரேனும் தீங்கு செய்துவிட்டால் இவருடைய மனம் அதைச் சிறிதும் பொறாது. அத் தீங்கு செய்தவர்களை இவர் பகைவரைப்போலவே நினைந்து கடிந்தொழுகுவார்.
பாடஞ் சொல்வதில் இயல்பாகவே இவருக்கு விருப்பம் அதிகம். இவருடைய கல்வி வளர்ச்சிக்கும் கவித்துவத்திற்கும் காரணம் இங்ஙனம் பாடஞ்சொல்லி வந்ததேயென்று சில பெரியோர்கள் சொல்லியிருக்கிறார்கள். திருவாவடுதுறை யாதீனத்தில் மேலகரம் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் காலத்திற் சின்னப்பட்டத்தில் இருந்தவரும் இவருடைய மாணாக்கரும் இடைவிடாமற் பாடஞ் சொல்லுதலையே தம்முடைய கடப்பாடாகக்கொண்டு ஒழுகியவருமாகிய ஸ்ரீ நமச்சிவாய தேசிகர், “ஒருமுறை பாடஞ்சொல்வது ஆயிரந்தரம் படிப்பதற்குச் சமானம்” என்று சொல்லுவதுண்டு. ஒருகாலத்தில் ஸ்ரீ சி. தியாகராச செட்டியார் இவரோடு பேசிக்கொண்டிருக்கையில் இவரை நோக்கி, “நீங்கள் இடைவிடாமற் பாடஞ்சொல்லுவதாகப் பேர்வைத்துக்கொண்டு நன்றாகப் படித்துவருகிறீர்கள்” என்று சொன்னதை நான் உடனிருந்து கேட்டிருக்கிறேன்.
“ஆசா னுரைத்த தமைவரக் கொளினும்
காற்கூ றல்லது பற்றல னாகும்”
“அவ்வினை யாளரொடு பயில்வகை யொருகாற்
செவ்விதி னுரைப்ப வவ்விரு காலும்
மையறு புலமை மாண்புடைத் தாகும்”
என்பன இக்கருத்தை விளக்கும்.
பெரியபுராணப் பிரசங்கம்.
இங்ஙனம் இருந்து வருகையில் சிலர் இவரிடம் பெரிய புராணத்திற்குப் பொருள் கேட்பாராயினர். பாடங்கேட்பவர்களேயன்றி வேறு சிலரும் வந்து உடனிருந்து கேட்டுச் செல்லுவது வழக்கம். அங்ஙனம் செல்பவர்கள் பலரும் கேட்கும்படி பெரியதோர் இடத்தில் இவரைக்கொண்டு பெரிய புராணப் பிரசங்கம் செய்வித்தால் தமிழ்ச்சுவையையும் பக்திரசத்தையும் பலரறிந்து உய்தல் கூடுமேயென்றெண்ணினார்கள். அக்காலத்தில் இத்தகைய காரியங்களைச் செய்வித்தலில் ஊக்கமுடையவராய் அங்கேயிருந்த ஒரு செல்வரிடம் அவர்கள் சென்று தங்கள் கருத்தைத் தெரிவித்தார்கள். அவர்கள் சொல்லியதற்கு அவர் இணங்கித் தம்முடைய வீட்டில் நூற்றுக்கணக்கானவர் இருக்கக்கூடிய இடமொன்றில் நாள்தோறும் பிரசங்கம் செய்யும்படி இவரைக் கேட்டுக்கொண்டனர். அவ்வாறே பிரசங்கம் நடைபெற்றது. மேற்கூறிய அன்பர்களும் வேறு பலரும் நாடோறும் வந்து கேட்டு மகிழ்வாராயினர். இவர் உரிய இடங்களில் சொல்லும் பதசாரங்களும் அப்பொழுதப்பொழுது எடுத்துக்காட்டும் தேவாரம் முதலிய மேற்கோள்களும் சைவ சாஸ்திரக் கருத்துக்களும் எல்லாருடைய உள்ளத்தையும் கனிவித்தன. அயலூர்களிலிருந்தும் பலர் நாடோறும் கேட்பதற்காக வரத்தொடங்கினர். இவருடைய புகழ் முன்னையினும் பலமடங்கு எங்கும் பரவியது. இது தெரிந்த அக் கனவான் இவருக்கு மாதந்தோறும் தக்க பொருளுதவி செய்து வருவாராயினர்.
இந்த நிலைமையைக்கண்டு பொறாமையுற்ற வேறு மதத்தினர் ஒருவர் எப்படியாவது இந்தப் பிரசங்கத்தை நடைபெறாமற் செய்து விட வேண்டுமென்று நிச்சயித்துக்கொண்டு மேற்கூறிய கனவானிடம் வந்தார். இந்தப் பிரசங்கத்தைச் செய்வித்தலால் தமக்கு மிகுந்த கெளரவம் உண்டாயிற்றென்று எண்ணிக்கொண்டிருந்த அந்தப் பிரபு வந்தவரை நோக்கி, ''இங்கே நடக்கும் பெரிய புராணப் பிரசங்கம் எவ்வளவு சிறப்பாக நடக்கிறது பார்த்தீர்களா?'' என்று தம்முடைய நல்ல எண்ணத்தை வெளியிட்டார். கேட்ட அவர், "அதைப்பற்றிச் சில வார்த்தைகள் பேசவேண்டுமென்பது என் கருத்து. அதற்காகத்தான் இங்கே வந்தேன்; கேட்டாற் சொல்லுவேன்'' என்றார். தனவான் சொல்லவேண்டுமென்று கூற, வந்தவர் எந்த வழியாகச் சொன்னால் அந்தப் பிரபுவிற்கு வெறுப்பு தோன்றுமோ அதைத் தேர்ந்து அவரை நோக்கி மிகவும் தைரியமாக, ''அப்புராணம் மிக்க சுவையுள்ள தென்பதில் யாதொரு சந்தேகமும் இல்லை. ஆனாலும் ஒவ்வொரு புராணத்திலும் ஒவ்வொருவர் இறந்தாரென்ற முடிவே அமைந்திருக்கின்றது. அது மங்களகரமாகவில்லை. அதை ஒரு வீட்டில் வைத்து நடத்துவது சுபகரமானதன்றென்று சிலர் சொல்லுகிறார்கள். கோயில் முதலிய இடங்களுள் ஒன்றில் வைத்து நடத்தச் செய்தால் உத்தமமாக இருக்கும். தாங்கள் பெரிய குடும்பியாதலாலும் எனக்கு அன்பராதலாலும் இந்த உண்மையைத் தங்களிடம் சொல்லாமலிருக்க என் மனம் துணியவில்லை, தங்கள் க்ஷேமத்தை உத்தேசித்து இதனை இன்று வெளியிட்டேன். இது தங்கள் மனத்திலேயே இருக்கவேண்டும். நான் சொல்லவேண்டியதைச் சொல்லிவிட்டேன். அப்பால் தங்கள் சித்தம் போலப் பார்த்துக்கொள்ளுங்கள்'' என்று சொல்லி விடைபெற்றுத் தம்மிடம் சென்றார்.
அவருடைய பேச்சைக் கேட்ட அக்கனவானுக்கு மனம் பேதித்துவிட்டது. அவர் தமிழ்ப்பயிற்சியும் நாயன்மார்களிடத்திற் பக்தியும் இல்லாதவர்; ஆயினும் எல்லோரும் விரும்பும் காரியத்தைச் செய்வித்தால் தமக்கு மதிப்புண்டாகுமென் றெண்ணியவர்; பிறர் கூறுவதை அவ்வாறே நம்பிவிடும் தன்மையுடையவர்; ஆதலால் பெரியபுராணப் பிரசங்கத்தைப்பற்றிய ஐயம் அவர் மனத்திற் குடிகொண்டு விட்டது. அந்தரங்கமாகச் சிலரை அழைத்து அதைப்பற்றி விசாரிக்கலானார். கேட்ட அவர்கள், “ஈது என்ன விபரீத உணர்ச்சியாக இருக்கிறது. யாரோ ஒருவன் விஷமம் பண்ணிவிட்டான் போலிருக்கின்றது. இந்தப் பைத்தியக்கார மனுஷ்யரும் இதை உண்மையென்று நம்பிவிட்டாரே! இதை மாற்றுவது மிகவும் அசாத்தியமாயிற்றே!'' என்று நினைத்து அதனைப் பிள்ளையவர்களிடம் தெரிவித்தனர்.
இவர் அதனைக் கேட்டுப் புன்னகை கொண்டு அவர்களை அனுப்பிவிட்டு அந்தப் பிரபுவிடம் வந்து, ''உங்களுக்குக் கவலையுண்டாயிருப்பது எனக்குத் தெரிந்தது. புராணத்தை இன்றோடே நிறுத்திக்கொள்வேன். அதனாற் குற்றமில்லை'' என்று சொல்லி
அன்று அங்கே வந்து சொல்லவேண்டிய பகுதியைச் சொல்லி முடிவில், "நாளை முதல் இங்கே பிரசங்கம் நடைபெறாது; இங்கே நீங்கள் வந்து அலைய வேண்டாம்'' என்று கேட்பவர்களுக்குச் சொல்லிவிட்டு உரியவரிடம் விடைபெற்றுக்கொண்டு தம்மிடம் சென்றனர்.
பெரியபுராணப் பிரசங்கம் நின்று விட்டதையறிந்த அவ்வூரிலுள்ள வேறொரு கனவான் தாமே அதனை மேற்கொண்டு நடத்த எண்ணினார். எண்ணியவர் தினந்தோறும் பிரசங்கத்தை மிகச் சிறப்பாக நடத்துவிப்பதாகவும், நிறைவேறியவுடன் பிள்ளையவர்களுக்குத் தக்க சம்மானம் செய்விப்பதாகவும் சிலர்முகமாக இவருக்குச் சொல்லியனுப்பினார். அந்தக் கனவானும் முன்னவரைப் போன்றவரே.
அந்தப் புதிய கனவானது வேண்டுகோளைச் சிலர் இவரிடம் வந்து சொன்னார்கள். கேட்ட இந்தக் கல்விச் செல்வர், ''தமிழ்ப் பாஷா ஞானமும் அதில் உள்ளன்புமின்றி வெறுங் கௌரவத்தை மட்டும் உத்தேசித்துத் தொடங்கும் செல்வர்களை நம்பக் கூடாது. தம்முடைய செல்வ இறுமாப்பினால் எல்லோரும் தமக்குக் கீழ்ப் படிந்து தம் இஷ்டம்போல் நடக்கவேண்டுமென்று கருதுவார்கள். அவர்களுடைய தொடர்பே வேண்டாம். ஏழைகளாயினும் பாஷையில் அன்புடையவர்கள்பாற் பெறும் ஆதரவுதான் சிறந்தது'' என்று சொல்லி அங்ஙனம் செய்ய உடன்படவில்லை.
பின்பு பல அன்பர்கள் பிள்ளையவர்களிடம் வந்து பெரியபுராணத்தில் எஞ்சிய பாகத்தையும் பிரசங்கம் செய்து பூர்த்திசெய்ய வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர். அப்படியே வேறு ஓர் இடத்தில் ஆரம்பிக்கப்பட்டு அது பூர்த்தியாயிற்று. அந்த நகரத்தார் ஒருங்குகூடித் தக்க சம்மானம்செய்து பிள்ளையவர்களை ஆதரித்தார்கள். அதன் பின்பு அவ்வூரினர் எல்லாரும் பெரிய புராணத்தில் ஈடுபட்டு அதைப் படித்தும் படிப்பித்தும் பொருள் கேட்டுப் பொழுது போக்குவராயினர்.
இவர் தமிழ் நூல்களை நன்கு பாடஞ்சொல்லி வருதலை அறிந்து சில மாணவர்கள் பிற ஊர்களிலிருந்தும் இவரிடம் வந்து உதவி பெற்றுக் கவலையின்றிப் பாடங்கேட்பாராயினர்.
தியாகராச செட்டியார்.
தியாகராச செட்டியாரென்பவர் பூவாளூரிலிருந்து வந்து இவரிடம் பாடங்கேட்டவர். அவர் கேட்கவந்த காலம் குரோதி வருஷமென்று தெரிகின்றது. பூவாளூரில் வியாபாரத்திலும் பயிர்த் தொழிலிலும் புகழ்பெற்று விளங்கிய ஒரு குடும்பத்தில் அவர் பிறந்தவர். அவருடைய தந்தையாரின் பெயர் சிதம்பரஞ்செட்டியாரென்பது. பூஸ்திதியும் இருந்தமையால் தியாகராச செட்டியார் வேளாண்மையையும் வியாபாரத்தையும் கவனித்துவந்தார். இளமை தொடங்கிப் பூவாளூரிலும் அயலூர்களிலும் உள்ள அறிஞர்கள் பால் தமிழ்க்கருவி நூல்களைப் பாடங்கேட்டு வந்தனர். இயற்கையாகவே நல்லறிவுவாய்ந்தவராதலின் கற்றவற்றைச் சிந்தித்துத் தெளிந்து பயன்படுத்திக் கொள்வதிற் சிறந்தவரானார். ''மதிநுட்பம் நூலோ டுடையார்க் கதிநுட்பம், யாவுள முன்னிற் பவை.''
அவர் வந்து பிள்ளையவர்களிடம் முதலிற் பாடங்கேட்டது திருச்சிற்றம்பலக்-கோவையாரென்றும் மற்ற நூல்கள் யாவும் அப்பாற் கேட்கப்பட்டன-வென்றும் அவரே சொல்லியிருக்கிறார். கேட்கும் நூற்கருத்துக்களை அவர் ஊன்றிக் கேட்டுப் பயில்வதும் சிந்திப்பதும் தெளிவதும் இவருக்கு அவர்பால் அதிக அன்பை உண்டாக்கின. புதியனவாகச் செய்யுள் செய்யும் வன்மையும் அக்காலத்தில் அவருக்கு இயல்பாக அமைந்திருந்தது. அதனாலும் இக்கவிஞர் தலைவருக்கு அவர்பாலுள்ள அன்பு வளர்ச்சியுற்றது. இவர்பாற் படிக்கவந்த காலந்தொடங்கி நூதனமாகப் பாடங்கேட்க வருபவர்களுக்குப் பாடஞ்சொல்லுதலும் இவர் நூதனமாகச் செய்யும் நூல்களையோ தனிச் செய்யுட்களையோ பனையேட்டில் அப்பொழுது அப்பொழுது எழுதுதலுமாகிய இப்பணிகளை அவர் பிறருக்குக் கொடுத்துவிடாமல் தாமே வகித்துக் கொண்டனர்; ஒரு நிமிஷமேனும் இவரை விட்டுப் பிரிந்திரார்; புதிய செய்யுட்களை இவர் சொல்லத் தாம் எழுதும்பொழுது அவற்றின் சொல்லின்பம் பொருளின்பங்களையறிந்து மனமுருகிக் கண்ணீர் வீழ்த்துவார்; அவற்றின் நயங்களைப் பிறருக்கு எடுத்துச் சொல்லுவார். இவைகளே அவருக்கு உண்டாகிய கல்வி முதிர்ச்சிக்கும் மற்ற மாணாக்கர்களைக் காட்டிலும் மேற்பட்டு விளங்கியதற்கும் காரணமாக இருந்தன. பிள்ளையவர்கள் செட்டியாரிடம் வைத்திருந்த அன்பு ஒப்பற்றது;
“நெஞ்சுற வருங்கலைகள் கற்குமவர் தம்மளவில்
நேயநிக ழாதவர்கள் யார்?''
வி. பா. குருகுலச் செட்டியார் பாடல் சொல்லுதலும் பொருள் சொல்லுதலும் செய்யுள் செய்தலும் அவரது குரலும் பிள்ளையவர்கள் பாடல் சொல்லுதல் முதலியவற்றிற்குப் படியெடுத்தாற் போலவேயிருக்கும். பிள்ளையவர்களுக்கு எவ்வளவு புகழுண்டோ அந்தப் புகழுக்கு அடுத்தபடியான புகழைத் தமிழ்நாட்டிற் பெற்று விளங்கினவர் அவரே.
அவர் திருச்சிற்றம்பலக் கோவையாருக்குப் பின்பு தமிழ்ப் பிரபந்தங்கள் பலவற்றைப் பாடங் கேட்டு வந்தார். அக்காலத்தில் நாடோறும் ஒவ்வொரு செய்யுளாகப் பிள்ளையவர்கள் மீது அவர் செய்துவந்த ஓரந்தாதி அபூர்த்தியாக இருக்கின்றது.
அந்நூற் பாடல்களுட் சில வருமாறு:-
“உன்னையொப் பாரிங் கெவரு மிலையொப் புரைத்திடினீ
நின்னையொப் பாயருண் மீனாட்சி சுந்தர நின்மலவெற்
கன்னையொப் பாய்பின்னு மத்தனொப் பாய்நின் னருளைப்பெற்ற
என்னையொப் பாருமுண் டோகடல் சூழு மிரும்புவிக்கே”. (2)
“பெற்றாரு ணின்னைப்பெற் றார்போற்பெற் றார்களும் பேண்பிறப்பை
உற்றாரு ணின்றனைப் போலவுற் றார்களு முன்னருளை
நற்றார ணியுளெனைப் போற்பெற் றார்களு நாடுறினு
மற்றார்முற் றோர்தரு மீனாட்சி சுந்தர மாமணியே.” (10)
“தக்கார் தகவில ரென்ப தவரவர் தம்மெச்சத்தால்
மிக்கா ரறியப் படுமென னின்னை விரும்பிப்பெற்றோர்
தக்கா ரெனநின்றன் னாலுணர்ந் தன்றுகொ றண்டமிழ்தேர்
மிக்கார் புகழ்தரு மீனாட்சி சுந்தர மெய்ம்மையனே.” (17)
“உள்ளும் பவமொரு கோடி யுறினு முறுகவந்த
விள்ளும் பவந்தொறு மீனாட்சி சுந்தர மெய்ம்மையநீ
எள்ளுஞ் செயலிற் புகுத்தாதென் பானின்குற் றேவலையே
கொள்ளும் படிதொண்ட னாக்கொள்வை யேலிக் குவலயத்தே.” (47)
[1] அரன்வாயில் வேங்கடசுப்புப் பிள்ளை.
அப்பால் இவரிடம் அரன்வாயில் வேங்கடசுப்புப்பிள்ளை என்ற ஒருவர் படிக்க வந்தார். அவர் இவர்பால் வந்து ஆதரிக்கப்பெற்று முறையாகப் பாடங்கேட்டு நல்ல தமிழ்ப் பயிற்சியையும் செய்யுள் செய்யும் ஆற்றலையும் அடைந்து சென்று புகழ்பெற்று விளங்கினார். அவர் பிள்ளையவர்களிடம் பாடங்கேட்ட செய்தி வேதநாயகம் பிள்ளைக்கு ஒருமுறை அவர் எழுதிய கீழ்க்கண்ட பாடலால் விளங்கும்:
“மீனாட்சி சுந்தரனா மேலோன் சிரகிரியில்
தானாட்சி யாவாழ் தருணத்தே – தேனாட்சிச்
செந்தமிழ் வன்பாற் சிறிதுணர்ந்தேன் மன்னவித்தாற்
பந்தமெனக் குண்டேயுன் பால்.”
திருவீழிமிழலைச் சாமிநாத கவிராயர்.
திருவீழிமிழலைச் சாமிநாத கவிராயரென்பவர் அத்தலத்திலுள்ள கல்விமான்கள் சிலர் சிலரிடம் கருவி நூல்களையும் திருவிளையாடற் புராணம் முதலிய காப்பியங்களையும் முறையே பாடங் கேட்டுத் தெளிந்தனர். பின்பு கம்பராமாயணம், பெரிய புராணம் முதலியவற்றை வாசிக்கவேண்டுமென்னும் விருப்பமுடையவராய்க் குரோதி வருஷத்தில் திரிசிரபுரம் வந்து இவர்பால் முதலில் கம்பராமாயணத்தைப் பாடங்கேட்டார். அவருடைய நுண்ணறிவையும் இனிய சாரீரத்தையும் அறிந்த பிள்ளையவர்கள் பிரியத்துடன் பாடஞ் சொன்னார். [2] தாமே எழுதிவைத்த கம்பராமாயண ஏட்டுச்சுவடியொன்றை அவருக்குக் கொடுத்தார். அவர் இவருடைய பேரன்பினால் அந்நூலில் நல்ல பயிற்சியையடைந்தார்; அதிலிருக்கும் கருத்தைப் பிறருக்குச் சுவைபடச்சொல்லி மகிழ்விக்கும் ஆற்றலையும் பெற்றார்; அடிக்கடி பிறருடைய முயற்சியினால் இவருக்குத் தெரியாமல் தனியே வேறிடஞ் சென்று கம்பராமாயணப் பிரசங்கம் செய்து வந்தார். அதற்குக் காரணம் இவர்பாலுள்ள அச்சமும் நாணமுமே.
அவ்வாறு அவர் இருத்தலை யறிந்து ஒரு நாள் இவர் அவர் பிரசங்கம் செய்யுமிடஞ் சென்று மறைவாக இருந்து கேட்டு வியப்புற்று அவரைப் பின்னும் பிரகாசப்படுத்த வேண்டும் என்று நினைந்தார். சில காலத்துக்குப் பின்பு ஒரு சபை கூட்டிக் கம்ப ராமாயணத்திலுள்ள சில சுவையான பாகங்களை எடுத்துப் பிரசங்கிக்கச் செய்து ‘கம்பராமாயணப் பிரசங்கவித்துவான்’ என்ற பட்டத்தை அளித்ததன்றிச் சால்வை யொன்றையும் தமது கையாலேயே வழங்கினர். அதுமுதல் அவருக்குத் தமிழ்நாட்டிற் கம்பராமாயணப் பிரசங்க விஷயத்தில் மிக்க கெளரவம் உண்டாயிற்று. வாழ்நாள் முழுவதும் கம்பராமாயணம் முதலியவற்றைப் பிரசங்கம் செய்து காலங்கழித்துவந்தார். தம்மை நன்னிலைக்குக் கொண்டுவந்த பிள்ளையவர்களை மறவாமல் எந்த இடத்திற் பிரசங்கம் செய்தாலும் இவ்வாசிரியருடைய துதியாக ஒரு பாடலைச் சொல்லிவிட்டுத்தான் பின்பு பிரசங்கிக்கத் தொடங்குவார். இங்ஙனம் அவர் துதியாகச் செய்த பாடல்கள் பல.
-------------
[1] அரன்வாயிலென்பது தொண்டை நாட்டிலுள்ளதோரூர்.
[2] கம்பராமாயணத்தை இவர் ஒன்றன்பின் ஒன்றாக மூன்று பிரதிகள் எழுதி வைத்திருந்தனர்; அவற்றுள் ஒன்றைச் சாமிநாத கவிராயருக்கும், வேறொன்றைப் பட்டீச்சுரம் ஆறுமுகத்தா பிள்ளைக்கும் கொடுத்தனர்; மற்றொன்றைத் தாமே வைத்துக்கொண்டிருந்தனர்.
-----------------
11. சில பிரபந்தங்களும் தியாகராச லீலையும் இயற்றல்.
பூவாளூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி.
ஒரு சமயத்தில் தியாகராச செட்டியார் முதலியோர்கள் கேட்டுக்கொள்ள இவர் பூவாளூர் சென்றிருந்தார். அப்பொழுது சிலர் விரும்பியபடி பூவாளூர்ப் பதிற்றுப்பத்தந்தாதியென்ற பிரபந்தம் இவரால் இயற்றி அரங்கேற்றப்பெற்றது. சைவ சாஸ்திரங்களைக் கற்றபின்னர்ப் பாடப்பட்டதாதலின் அப்பிரபந்தத்தில் அவற்றின் கருத்துக்கள் அமைந்திருத்தலைக் காணலாம்:
“பாவிய கரும மின்றியே பசுவும்
பதியும்பா சமுமென வுரைக்கும்
நாவினான் மதமே கொண்டுழ லாம
னாயினேற் கென்றருள் புரிவாய்”
“அவனவ ளதுவென் றுரைத்திடும் புவன
மாகியு மதற்குவே றானாய்
நவவடி வுடையாய் [1]காமர்பூம் பதியாய்
நாயினுங் கடைப்படு வேற்குத்
தவலறு மூல மலச்செருக் கொழிந்து
சத்திநி பாதமென் றுறுமே.”
“பொருந்துசன் மார்க்க நெடுஞ்சக மார்க்கம்
புத்திர மார்க்கமு மில்லேன்
திருந்திய தாத மார்க்கமு மில்லேன்
தீவினை மார்க்கமே யுடையேன்.”
“காலைக் கதிராய்ச் சில்லுயிர்க்குக்
கவினு மதியாய்ச் சில்லுயிர்க்கு
மாலை யிருளாய்ச் சில்லுயிர்க்கு
வைகும் பொருணீ யென்றறியேன்.”
இவற்றையன்றித் திருவாசக முதலியவற்றிலுள்ள கருத்துக்களைத் தம்முட்கொண்ட சில செய்யுட்களும் இதில் உண்டு :-
''ஆலும்விட மமுதாக்குங் காமர்பதித் திருமூலர் வமல னார்க்குச்
சாலுமணிக் குழையொருபாற் றோடொருபான் முத்தொருபாற் சர்ப்ப மோர்பால்
ஏலுநற்குங் குமமொருபா னீறொருபாற் பட்டொருபா லியைதோ லோர்பால்
ஓலிடுபொற் சிலம் பொருபாற் கழலொருபாற் பன்னாளு மொளிரு மன்றே”
எனவரும் அர்த்த நாரீசுவரமூர்த்தியின் செய்தி [2]திருவாசகத்தைத் தழுவியமைத்தது.
“புலையரும் விரும்பாப் புன்புலாற் சுமை” என்பது அரிச்சந்திர புராணத்தைத் தழுவியது.
“ஏலக் குழலியோர் பாகம் போற்றி
எனக்கு வெளிப்படும் பாதம் போற்றி
மாலைப் பிறைமுடி வேணி போற்றி
மான்மழு வைத்த கரங்கள் போற்றி
காலைக் கதிர்த்திரு மேனி போற்றி
காமனைக் காய்ந்தகண் போற்றி யென்றே
ஓலிட் டருமறை தேடும் பூவா "
ளூரரை யான்சொல்லி யுய்வ தென்றே”
எனவரும் செய்யுட்களின் சந்தம் [3]தேவாரச் சந்தத்தைப் பின்பற்றியது.
அந்நூல் முற்றும் இப்பொழுது கிடைக்கவில்லை; [4]காப்பும் 24 பாடல்களுமே கிடைக்கின்றன.
பெருந்திருப் பிராட்டியார் பிள்ளைத்தமிழ்.
இவர் ஒரு முறை திருத்தவத்துறை (லாலுகுடி) சென்றிருந்தபொழுது அங்கே இருந்த அன்பர்களின் விருப்பப்படி அவ்வூரில் எழுந்தருளியுள்ள பெருந்திருப்பிராட்டியார் (ஸ்ரீமதி) மீது ஒரு பிள்ளைத்தமிழ் இயற்றினார்.
அந்தப் பிள்ளைத் தமிழிலும் இக்கவிஞர் முதலில் விநாயகர் முதலியவர்களுக்கு வணக்கம் கூறுகின்றனர். ஆயினும் அகிலாண்ட நாயகி பிள்ளைத்தமிழிலுள்ளது போல் அவையடக்கம் இதில் இல்லை. அகிலாண்ட நாயகி பிள்ளைத்தமிழைக் காட்டிலும் இந்நூல் எளிதிற் பொருள் விளங்கும் சொற்களையும் சிறந்த கருத்துக்களையும் உடையதாக இருக்கின்றது. இவருடைய கற்பனைத் திறனும் பிறவும் இதன்கண் உயர்வு பெற்று விளங்குகின்றன.
மருதத்திணையுள் தாமரை மலர் நிறைந்திருப்பதை நினைந்து, ‘பிரமதேவர் தம்முடைய தந்தையாகிய திருமாலுக்குக் குடையாக உதவிய மலையின் சிறகுகளை இந்திரன் அரிந்த பகைமையை எண்ணி அவனுக்குரிய மருதத்திணையில் அவன் தங்குவதற்கு இடமில்லாதபடி தமக்கும், தம் தாயாகிய திருமகளுக்கும், தம் மனைவியாகிய கலைமகளுக்கும் இருப்பிடங்களாகவும், தம் தம்பியாகிய மன்மதனுக்கு ஆயுதசாலையாகவும், தம்முடைய வாகனமாகிய அன்னத்துக்கு இருப்பிடமாகவும் பல தாமரைகளை எங்கும் உண்டாக்கி மகிழ்கின்றார்’ என்னும் கருத்தமைய,
[5] “தண்ணந் துழாய்ப்படலை துயல்வரு தடம்புயத்
தாதைக்கு நீழல்செய்யத்
தந்தவரை யின்பறை யரிந்தபகை கண்டரி
தங்குதற் கிடமிலாமல்
எண்ணுந் தனக்குமனை யாய்க்குமனை யிற்குமனை
யிளவலுக் கேதியுறையுள்
எகினுறையு ளாகமரு தத்திணையி லாக்கிமகி
ழெண்கைப் பிரான்புரக்க '' (காப்புப். 5)
என்று ஒரு கற்பனையை அமைக்கின்றார்.
‘தன் கணவர் செய்வதைப்போன்றே தானும் செய்யவேண்டுமென்றெண்ணிய கலைமகள், அவர் தம் நிறமமைந்த பொற்றாமரையில் வீற்றிருப்பதைப்போலத் தானும் தனது நிறம் பொருந்திய வெண்டாமரையில் வீற்றிருக்கின்றாள்’ என்ற கருத்தையமைத்து,
“தேனா றுவட்டெழப் பாய்தரு மடுக்கிதழ்
செறிந்தசெம் பொற்றாமரைச்
செழுமலரின் மேற்றனது பொன்மேனி யொப்புமை
தெரிந்துறையு மகிழ்நனேய்ப்பக்
கானாறு வெண்டா மரைப்போதின் மேற்றனது
கவின்மேனி யொப்புமைதெரீஇக்
காதலி னமர்ந்தருள் கொழிக்குமறை முதலளவில்
கலைஞான வல்லிகாக்க” (காப்புப். 8)
என்கின்றார். உமாதேவியார், சிவபெருமான் திருமேனியிற் பாதி கொண்டதற்குக் காரணத்தை, ‘சிவபெருமான் திரிபுரசங்காரம் செய்கையில், வில்லை மட்டும் வளைத்தாரேயன்றி அம்பைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை. அதனையறிந்து, அந்த அம்பாக வந்திருந்த திருமால் இனி இவருக்குப் பயன்படவேண்டுமென்று கருதி இடபவாகனமானார். அவர் தம்முடைய தமையனாராதலின், அவர் மீது தாம் தனியே ஒரு வடிவத்தோடு இருத்தற்கு உமாதேவியார் நாணினார்; ஆதலின் சிவபிரான் திருமேனியோடு கலந்து ஒரு வடிவாயினார்’ என்னும் கருத்துத் தோன்ற,
“ஒன்னார்த மும்மதி லொருங்கவிய வாங்குபொன்
னோங்கல்விற் பழமையறிவார்
உற்றதனை யன்றியேத் தொழிலையெஞ் ஞான்று
முஞற்றவல் லாமைகண்டு
கொன்னார் வளைக்கையுல குண்டமுன் னோனிமிற்
கொல்லேற தாயதான்மேற்
கொள்பொழுது வேறுறைய நாணியோ ருடல்செய்த
கொள்கைபோ லம்மகிழ்நனார்
பொன்னாரு மேனியிற் பாதிகொண் டாளும்
பொருப்பரைய னீன்றபிடியே” (செங்கீரைப். 3)
எனக் குறிப்பிக்கின்றார். இத்தகைய கற்பனைகள் பலவற்றை இந்நூலின்கண்ணே காணலாம்.
கச்சியப்ப முனிவர் நூல்களில் அதிகமாக ஈடுபட்ட இவர் திருவானைக்காப் புராணக் கருத்துக்களை,
“அளவில்பல வலியுடைய வாணவ மகன்றவா
லறிவன்றி யுருவ மில்லா ஐயன்” (பாயிரம், 3)
“........................................................ பரமனார்
சிலவுயிர்க் கினனாகியும்
பகற்சில வுயிர்க்குமுன் மதியாகி யுஞ்சில
படிற்றுமூழ் கியவுயிர்க்குப்
பாயுமிரு ளாகியும் பொலிவது தெரிப்ப” (பொன்னூசற். 5)
என்பன போன்ற இடங்களிலும், விநாயகபுராணக் கருத்தை,
“மூத்தமைந் தன்பா லளித்தவற் கார்வமெனு
மூதுரை வழக்குடைமையான்” (பாயிரம், 4)
என்ற இடத்திலும், தணிகைப் புராணச் சொற்றொடராட்சியை,
“சுஃறொலிச் சூரற் படைக்கைப் பிரான்” (பாயிரம், 6)
“நந்தாத கஃறொலிக் கானிற் சரித்த” (வாரானைப். 5 )
என்ற இடங்களிலும் எடுத்தாண்டிருக்கின்றார்.
“குருவார் துகிர்ச்சடை திசைதட வரக்கங்கை
குழமதியி னோடுதுள்ளக்
குழையசை தரத்திருப் புருவமுரி தரவெழுங்
குறுமூர னிலவெறிப்ப
மருவார் கடுக்கைவெண் டலையரவு திண்டோள்
வயிற்றுயல் வரக்கதிர்த்து
மணிநூ புரங்குமு றிடப்படைப் பேற்றதுடி
வாய்த்ததிதி யபயமாய்த்தல்
உருவார் கொழுந்தழ றிரோதமூன் றியதா
ளுவப்பரு ளெடுத்ததாளில்
ஓங்கத் தெரித்துமன் றிடையென்று நின்றாட
வொருவர்தமை யாட்டுமயிலே
திருவார் தவத்துறைக் கருணைப் பிராட்டிநீ
செங்கீரை யாடியருளே
தேமலர்க் கண்ணிபுனை கோமளப் பெண்ணமுது .
செங்கீரை யாடியருளே” (செங்கீரைப். 2)
“ஒருமூ வகையா யெண்ணிலவா யுணர்த்த
வுணர்சிற் றறிவினவாய்
உண்மை யினவாய்ச் சதசத்தா
யுறுகண் ணியல்பா யுழல்பசுக்கள்
அருமா தவசன் மார்க்கநெறி யடைந்த னாதி யாயளவில்
ஆற்ற லுடைத்தாய்ச் செம்புறுமா
சான மூல மலநீங்கி
உருவோ டருவங் குணங்குறியற் றொளியாய்
நிறைந்த பதியையுணர்
வுணர்வா னுணரும் பொருளொழியா
தொழிந்து கதிர்மீன் போற்கலந்து
திருவாரின்ப முறவருள்வாய்'' (முத்தப். 1)
என்பன போன்ற இடங்களிற் சைவசித்தாந்த கருத்துக்களை அமைத்திருக்கின்றனர்.
“நற்றவத்துறை வளர் பெருந்திருப்பெண்”
“அளகைப் பெருந்திருவம்மை”
“அளகாபுரிக் கன்னி”
“தடநிரம்பும்வயி ரயிவனங்குடிகொ டகு
பெகுந்திருநன் மங்கையைக் காக்கவே”
“எமையா டரும்பஞ்ச புண்ணியத் தலமென
வியம்பு நான்மறை”
என்பவற்றில் இத்தலப் பெயர்களாகிய திருத்தவத்துறை, அளகை, அளகாபுரி, வயிரவி வனம், [6]பஞ்ச புண்ணியத்தலம் என்பவற்றை எடுத்து ஆள்கின்றார்.
“மின்னிய பெரும்புகழ்க் கொள்ளிடத் திருநதியின்
வெள்ளநீ ராடியருளே”
“மறையா யிரமுந் தொடர்வரும் பெண்
[7]வடகா விரிநீ ராடுகவே”
என்பவற்றிற் கொள்ளிட நதியும்,
“மக்கட் புரோகிதன் மனைக்கற் பழித்துமழ
வன்பெற்ற வெண்குட்டநோய்
மாற்றவுல கெங்குந் திரிந்தித் தலத்துவர
மாற்றிச் சிறப்புமுதவிச்
செக்கர்ச் சடாமகுடர் தாண்மலர்க் கன்புந்
திருந்தக் கொடுத்ததீர்த்தம்” (அம்புலிப். 9)
என்பதில் அத்தலத்திலுள்ள சிவகங்கைத் தீர்த்தமும் இதிற் கூறப்படுகின்றன. காப்புப் பருவத்தில் இத்தலத்து விநாயகராகிய திருவாளப் பிள்ளையாருக்குரிய செய்யுளொன்றுள்ளது. இத் தலத்துச் சிவபெருமான் திருநாமம் அழைத்து வாழ்வித்த பெருமானென்பது. அத்திருநாமத்தைச் சந்தத்தில் அமைத்துக் காப்புப் பருவத்தில் ஒரு செய்யுள் கூறப்பட்டிருக்கிறது. “அழைத்து வாழ்வித்தவர் திருப்புகழு மெஞ்ஞான்றும் வாழ” எனப் பொன்னூசற் பருவத்திறுதிச் செய்யுளிலும் அத் திருநாமம் கூறப்படுகிறது.
“முனிவரர் குழுவிய வளகையில் வளர்பவள் முத்தமளித் தருளே” (முத்தப். 9)
“செய்தவத் தருமுனிவர் மொய்தவத் துறையில்வளர்
தெய்வதக் கொடிவருகவே” (வாரானைப். 1)
என்பவற்றில் இத்தலத்தில், எழுமுனிவர் பூசித்தமை குறிப்பாகப் புலப்படுத்தப்பட்டிருக்கின்றது. அம்புலிப் பருவத்தில் வரும்
“இமையாத பவளச் சரோருகக் கண்ணனும்
இருநிதிக் குரியகோவும்
இருடியர்க ளெழுவரும் வயிரவியு நன்புக
ழிலக்குமியு மின்னுமளவில்
கமையார் தவத்தினரு மாகமப் படிபூசை
கடவுளை யியற்றியுள்ளம்
கருதரும் பேறெண்ணி யாங்குறப் பெற்றவிக்
கரிசருந் தெய்வத்தலம்”
என்னும் செய்யுளில் திருமால், குபேரன், எழுமுனிவர், வயிரவி, இலக்குமி என்பவர்கள் பூசித்த வரலாறு கூறப்பட்டிருக்கின்றது. இப்பிள்ளைத் தமிழின் ஈற்றுச் செய்யுளில் இக் கவிநாயகர், வாழ்த்தை உடம்படுபுணர்த்தி,
“மறைமுதற் பலகலைகள் வாழவந் தணர் வாழ மாமகத் தழலும்வாழ
மன்னுமா னிரைவாழ் மழைபொழியு முகில்வாழ மற்றுமெவ் வுயிரும் வாழ
நிறைதரு பெரும்புகழ் விளங்குசை வமும்வாழ நீடுவை திகமும்வாழ
நெக்குருகி நின்னன்பர் துதிசெய்த சொற்பொரு ணிலாவுபா மாலைவாழ
இறையவ ரழைத்துவாழ் வித்தவர் திருப்புகழு மெஞ்ஞான்று நன்குவாழ
யார்க்குமினி தாம்பெருந் திருவென்று நின்பெய ரிலங்கிநனி வாழவுலகிற்
பொறையரு டவந்தானம் வாழவெம் பெருமாட்டி பொன்னூச லாடியருளே
பொன்னகர நிகரான தென்னளகை நகர்மாது பொன்னூச லாடியருளே”
என அமைக்கின்றார். இம்முறை அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ் முதலிய நூல்களைப் பின்பற்றியது. அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழில் இத்தகைய அமைப்பு இல்லை. இதிலுள்ள சுவைமிக்க சில பாடல்கள் வருமாறு:
''பவத்துயர் பாற வெனக்கரு ளைச்செ யருட்பாவாய்
பனிக்குல மால்வரை பெற்று வளர்த்த சுவைப்பாகே
சிவத்திரு வாள னிடத்தி லிருக்கு மியற்றோகாய்
திருப்பெணி லாவு கலைப்பெ ணிவர்க்கிர சத்தேனே
நவத்தளிர் வேர்மலர் மொய்த்தவிர் மைத்த குழற்றாயே
நயப்ப வெணாலற முற்றும் வளர்த்த கரத்தாலே
தவத்துயர் வார்க ளுளத்தவள் கொட்டுக சப்பாணி
தவத்துறை வாழு மடப்பிடி கொட்டுக சப்பாணி” (சப்பாணிப். 9)
பேதம்.
“ஏற்றநின் வாயினில வமுதஞ் சகோரமெனு மிருகாற்பு ளுண்டுமகிழும்
இவள்வாயி னிலவமுத நரமடங் கலைவென்ற வெண்காற்பு ளுண்டுமகிழும்
போற்றநீ மாலவ னெனச்சொல்லு மொருமுகப் புலவனைப் பெற்றெடுத்தாய்
புலவர்க்கு மேலவ னெனச்சொல்லு மறுமுகப் புலவனைப் பெற்றாளிவள்
தேற்றமீன் மாதரிரு பானெழுவ ருளைநீ சிறக்குமிவ ளோங்குகல்வி
செல்வமீன் மாதர்முத லளவிலா மாதர்பணி செய்யவுள் ளாளாதலால்
ஆற்றவு நினக்கதிக மென்றெவரு மறிவர்கா ணம்புலீ யாடவாவே
அமரா வதிக்குநிக ரளகா புரிப்பெணுட னம்புலீ யாடவாவே.'' (அம்புலிப். 3)
[8] தியாராசலீலை இயற்றத் தொடங்கியது.
தியாகராச செட்டியாருடைய குடும்பத்திற்கு வழிபடு தெய்வமாகிய திருவாரூர்த் தியாகராசப்பெருமானைத் தரிசிப்பதற்காக அவருடைய சிறிய தந்தையார் முதலியவர்கள் அடிக்கடி திருவாரூர் செல்வதுண்டு. செல்லும்பொழுது இவரையும் உடன் அழைத்துப் போவார்கள்; தாமே தனித்தும் இவர் சில முறை சென்று வருவார். அப்படிச் செல்லுங்காலங்களில் அத்தலத்திற் சில நாட்கள் தங்கி அவ்வூரிலிருந்த வித்துவான்களுடன் ஸல்லாபம் செய்து மகிழ்ந்தும் மகிழ்வித்தும் வருவார். தக்கவர்கள் இவருடைய கல்வி மேம்பாட்டையும் இவருடைய செய்யுளின் சுவையையும் அறிந்து இவர்பால் நன்மதிப்பு வைத்துப் பாராட்டி வருவாராயினார்.
இவர் தம்முடைய 30-ஆம் பிராயமாகிய குரோதிவருஷம் பங்குனி மாதத் திருவிழாவிற்குத் திருவாரூர் சென்றிருந்தார். ஒருநாள் ஆயிரக்கால் மண்டபத்தில் இருந்து ஆண்டுள்ள அன்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் இவருடைய அரிய சம்பாஷணையையும் இவரியற்றிய செய்யுட்களையும் கேட்டு மகிழ்ந்த சில பெரியோர்களாகிய திருக்கூட்டத்தார் பலர் இவரைக்கொண்டு தியாகராசலீலையைச் செய்யுள் நடையிற் செய்விக்க வேண்டுமென்று நெடுநாளாகத் தமக்கிருந்த விருப்பத்தை வெளிப்படச் சொல்லி, செய்யத் தொடங்கும்படி வற்புறுத்தினார்கள். இவர் அவர்களுடைய விருப்பத்திற்கு இணங்கி அவ்வாறே தியாகராச லீலையைப் பாடத் தொடங்கினார். இவ்வரலாறு அந்நூலில் வரும்,
“காரெலாந் தவழுஞ் சென்னிக் கதிர்மணி மாடந் தோறும்
நீரெலா மமைந்தார் மேவும் நிறைசெல்வத் திருவா ரூரிற்
பாரெலாம் புகழ்ந்து போற்றும் பங்குனித் திருவி ழாவிற்
சீரெலாந் திருந்து தேவா சிரயனாங் காவ ணத்தில்”
“தண்ணிய குணத்தர் சுத்த சைவசித் தாந்த ராய
புண்ணியர் பலருங் கூடிப் புகழ்மிகு தியாக ராசர்
பண்ணிய வாடன் முற்றும் பாடுக தமிழா லென்று
மண்ணிய மணியே நேரும் வாய்மலர்ந் தருளி னாரால்”
“பொற்றுண ரிதழி வேய்ந்த புற்றிடங் கொண்ட பெம்மான்
நற்றுணர் மலர்மென் றாளே நாடுமன் புடைய ராய
முற்றுணர் பெருமை சான்றோர் மொழிந்தசொற் றலைமேற் கொண்டு
சிற்றுணர் வுடைய யானுஞ் செப்பிட லுற்றேன் மாதோ”
என்னும் செய்யுட்களால் விளங்கும்.
இதன் வட நூலைப் பெறுவதற்கு இவர் முயன்ற காலத்தில் முதலிற் பதின்மூன்று பகுதிகளும் பதினான்காவது பகுதியிற் பாதியுமே கிடைத்தமையால் அவற்றைத் தமிழ் வசன நடையாகப் பெயர்த்து எழுதுவித்து அவற்றை ஆதாரமாகக் கொண்டு அக் காப்பியத்தை இயற்றத் தொடங்கினார். அப்பால் எத்தனையோ வகையாகப் பலரைக் கொண்டு முயன்றும் அந்நூலின் மற்றைப் பாகம் கிடைக்கவேயில்லை. ஆதலால் மேற்பட்ட பகுதி செய்யப்படவில்லை.
இதன் திருவிருத்தத்தொகை 699. லீலைகள் முந்நூற்றறுபதென்று கேள்வியுற்றமையால் அவற்றிற்குத் தக்கபடி காப்பிய உறுப்புக்கள் விரிவாக இருக்கவேண்டுமென்று நினைந்து கடவுள் வாழ்த்து முதலியன மிக விரிவாகவும் அலங்காரமாகவும் அன்பர்கள் விரும்பியபடி செய்யப்பெற்றன. ‘மேற்பட்டுள்ள பாகம் கிடைக்கவில்லையே; இந் நூலைப் பூர்த்தி செய்யும் பாக்கியம் நமக்கில்லையே’ என்ற வருத்தம் இக்கவிஞர்கோமானுக்கு ஆயுள் பரியந்தம் இருந்துவந்ததுண்டு. இந்நூலைப் பூர்த்திசெய்ய வேண்டுமென்று யாரேனும் சொன்னால் அப்பொழுது, “ஸ்ரீ தியாகராசப் பெருமான் திருவருள் இது விஷயத்தில் எனக்கு இவ்வளவுதான்!” என்று சொல்லுவார்.
இப்புலவர் சிகாமணி இயற்றிய பெருங்காப்பியங்கள் பலவற்றுள் தியாகராசலீலையே முதலிற் செய்யத் தொடங்கியதாதலால் இவரே பாடல்களை நெடுநேரம் யோசித்துத் தனித்தனியான ஏடுகளிலெழுதிச் சிலமுறை பார்த்துத் திருத்திவந்தார். அவ் வொற்றை யேட்டிலிருந்த பாடல்களை வேறு பிரதியிற் செவ்வனே எழுதிவந்ததன்றி இவர் அவ்வப்பொழுது சொல்லிவந்த அந் நூற் பாடல்களைப் பின்பு எழுதிவந்தவர் சி.தியாகராச செட்டியாரே. அங்ஙனம் இவர் எழுதித் திருத்திய ஒற்றையேடுகள் திரிசிரபுரத்தைச் சார்ந்த வரகனேரியிலிருந்தவரும், இவருடைய மாணாக்கர்களுள் ஒருவரும், செல்வரும், இவரை அன்புடன் ஆதரித்தவருமாகிய சவரிமுத்தா பிள்ளை யென்பவரிடமிருந்து பல வருடங்களுக்கு முன் எனக்குக் கிடைத்தன.
சில செய்யுட்கள் இயற்றப்பட்ட வரலாறுகள்.
தியாகராச செட்டியாரும் நானும் சற்றேறக்குறைய 50 வருஷத்திற்கு முன் பூவாளூருக்குப் போயிருந்தபொழுது அங்கே ஊரின் பக்கத்தில் ஓடும் பங்குனியாற்றின் தென்பாலுள்ள படித் துறையொன்றில் பெரிதாயிருந்த கருங்கற் பாறையொன்றைக் காட்டிச் செட்டியார், “இவ்வாற்றில் ஸ்நானம் செய்துவிட்டு இப் பாறையிற் பார்த்திவ பூசை செய்வதற்கு ஐயா அவர்கள் இருந்தபொழுது பத்திரபுஷ்பம் கொணர்ந்து சேர்ப்பித்துவிட்டு நான் வேறோரிடத்தில் இருந்தேன். அவர்கள் நெடுநேரம் தியானித்த வண்ணமாகப் பூசையில் இருந்தார்கள். அவர்கள் அவ்வாறு இருத்தல் வழக்கமன்றாதலால் நான் அருகிற்சென்று, ‘ஐயா! நேரமாயிற்றே’ என்றேன். உடனே அவர்கள், கண்ணைத் திறந்து என்னைப் பார்த்து, ‘தியாகராசு, ஏட்டைக் கொண்டுவா’ என்றார்கள். அப்படியே நான் கொண்டுவந்து நின்றேன். உடனே அவர்கள்,
“இந்துதவ ழித்தளிமே வெங்கடியா கப்பொருளை
வந்துவழி படலன்றி வானவர்காள் கவரமனம்
முந்துவிரே லுடன்முறிய முட்டுவமென் றுறைவனபோல்
நந்துமுயர் மணிமதின்மே னன்குறையும் விடைகள்பல’ (திருநகரப் படலம், 159)
என்று திருமதில் மேலுள்ள நந்திகளைப் பற்றிய கற்பனைப் பாடலைச் சொன்னார்கள்; நான் எழுதினேன்” என்று சொல்லி இவருடைய கவித்துவமுதலிய உயர்குணங்களை எடுத்துப் பாராட்டினார். அப்பொழுது அவருடைய கண்களிலிருந்து நீர் பெருகிக்கொண்டேயிருந்தது. அந்நிலை இந்த நிமிஷத்தில் நினைத்தாலும் மனத்தை உருக்குகின்றது. தம்பால் வந்தவர்களிடத்தும் பாடங்கேட்பவர்களிடத்தும் ஸமயோசிதமாக இந் நூலி லுள்ள பாடல்களைச் சொல்லி ஊக்கத்துடன் பிரசங்கிப்பதே செட்டியாருக்குப் பெருவழக்கமாக இருந்தது. இந்நூல் முழுவதும் அவருக்கு மனப்பாடம்.
பிள்ளையவர்களுடைய சரித்திர சம்பந்தமான செய்திகள் பலவற்றைச் சொன்னவரும் இவருடைய மாணாக்கர்களுள் ஒருவருமாகிய உறையூரைச் சார்ந்த திருத்தாந்தோன்றியிலிருந்த மதுரைநாயக முதலியாரென்பவரைப் பல வருடங்களுக்கு முன்பு நான் கண்டு கேட்டபொழுது இந்த லீலையின் சம்பந்தமாக அவர்
அன்புடன் சொல்லிய செய்தி வருமாறு:-
''தியாகராசலீலை செய்து கொண்டிருக்கும் நாட்களுள் ஒரு நாள் சூரியோதயத்தில் திரிசிரபுரத்திலிருந்து உறையூருக்குச் சிலருடன் சென்ற பிள்ளையவர்கள் இடையேயுள்ள ஒரு வாய்க்காலின் கரையிலிருந்து பற்கொம்பினால் தந்தசுத்தி செய்யத் தொடங்கினார்கள். அப்பொழுது அவர்களுடைய தலையிற் கட்டி யிருந்த வஸ்திரத்திற் பல ஒற்றையேடுகளும் எழுத்தாணியும் செருகப்பட்டிருந்தன. அந்த இடம் பலர் சென்றுவரக் கூடிய சாலையின் பக்கத்திலுள்ளதாதலால் அநேகர் அவர்களைப் பார்த்துக் கொண்டே போனார்கள். பகல் பத்து நாழிகைக்கு மேற்பட்டும் தம்முடைய சரீரத்தில் வெயில் மிகுதியாகத் தாக்கியும் அவர்கள் அவ்விடம் விட்டு எழவேயில்லை; வேறு பக்கம் திரும்பவுமில்லை; தந்த சுத்தி செய்தலும் நிற்கவில்லை. காலையில் அவர்களை அங்கே பார்த்துவிட்டு உறையூர் சென்று வந்தவர்களிற் சிலர் மீட்டும் அவர்களை அதே நிலையிற்கண்டு, ‘இன்று காலை தொடங்கி இந்நேரம் வரையில் இவர்கள் தந்த சுத்தி செய்துகொண்டேயிருப்பதற்குக் காரணமென்ன?’ என்று நினைந்து கவலையுற்றுத் தங்களுள் மெல்லப் பேசிக்கொண்டே அருகில் வந்து, ‘உதயகால முதல் இவ்விடத்திலேயேயிருந்து பல் விளக்கிக் கொண்டிருப்பதற்குக் காரணம் என்ன?’ என்று கேட்டபொழுது பிள்ளையவர்கள் திடீரென்றெழுந்து கையையும் வாயையும் சுத்திசெய்து கொண்டு தலை வஸ்திரத்திலிருந்த ஏடு எழுத்தாணிகளை யெடுத்து அந்நேரம் வரையில் யோசித்து முடித்து வைத்திருந்த சில செய்யுட்களை முடிந்த வண்ணமே எழுதிக்கொண்டு அவர்களோடு திரிசிரபுரம் வந்துவிட்டார்கள். அச் செய்யுட்கள் நைமிசப்படலத்தில் உள்ளவை.”
இச்செய்தியைப் பலராற் கேள்வியுற்றே இந்த லீலையின் ஒற்றையேடுகளைத் தாம் வாங்கிவைத்திருந்ததாக வரகனேரிச் சவரிமுத்தா பிள்ளையும் சொன்னார்.
இவற்றால் இந்நூலை இயற்றுங்காலத்துப் பிள்ளையவர்களுக்கு மனவொருமையிருந்து வந்ததென்பதும், மிக ஆராய்ந்தே ஒவ்வொரு பாடலையும் செய்தாரென்பதும் வெளியாகின்றன,
இவர் நாட்டுப் படலத்தைப் பாடிக்கொண்டு வருகையிற் சில செய்யுட்கள் பாடி முடித்த பின்பு சில அன்பர்களும் புலவர்களும் இருக்கும்பொழுது அவற்றைப் படித்துக்காட்டினார். சோழ வள நாட்டைப் பலவிதமாகச் சிறப்பித்து இவர் பாடியிருத்தலைக் கேட்ட அக்கூட்டத்திலிருந்த பாண்டிநாட்டாரொருவர், “நீங்கள் சோழவள நாட்டை எவ்வாறு சிறப்பித்தாலும் பாண்டிவள நாட்டின் பெருமை சோழநாட்டிற்கு வாராது” என்று சொல்லிப் பல நியாயங்களைக் கூறிச் சேது புராணத்தில் திருநாட்டுச் சிறப்பிலுள்ள,
“பன்னுசீர்க் கிள்ளி நாடும் பைந்தமிழ் நாட தேனும்
இன்னிசைத் தமிழி னாசா னிருப்பது மலய வெற்பிற்
பொன்னிபோற் பொருநை தானும் பூம்பணை வளங்க ளீனும்
கன்னிநாட் டிதுபோன் முத்தங் காவிரி கான்றி டாதே” (107)
என்ற செய்யுளை எடுத்துச் சொன்னார்.
அவற்றைக் கேட்ட இப்புலவர்பிரான் அவர் கூறியவற்றைத் தக்க ஆதாரங்களைக்கொண்டு மறுத்துக் கூறினார். அந்த நிகழ்ச்சியின் நினைவோடு மேலே நாட்டுப் படலத்தைத் தொடர்ந்து பாடுகையில்,
“பழுதி லபயன் றிருநாடு பரவு பொன்னி யுடையதென
வழுதி நாடும் பொருநையுடைத் தெனினவ் வழுதி வளநாடு
செழுநீர் நாடன் றிதுபோலச் சென்று சென்று பலநதியாய்
ஒழுகா வளங்கள் பலவாக்கும் உயர்வு முளதோ வதற்குணர்வீர்”
(திருநாட்டுப். 84)
என்னும் செய்யுளொன்றை அமைத்தார்.
பிற்காலத்தில் இவர் சேது புராணத்தை எங்களுக்குப் பாடஞ் சொல்லி வருகையில் மேற்காட்டிய செய்யுளுக்குப் பொருள் சொல்லும்பொழுது இவ்வரலாற்றையும் கூறினார்.
தியாகராசலீலையின் அமைப்பு.
ஸ்தல புராணங்கள் வடமொழியில் சரித்திரத்தை மட்டும் புலப்படுத்திக் கொண்டிருக்குமேயன்றி அவற்றிற் கற்பனைகள் அமைந்திரா. அவற்றை வடமொழியில் உள்ளவாறே பண்டைக் காலத்திற் பலர் தமிழில் மொழிபெயர்த்து வந்தார்கள். பின்பு சிலர் சில வேறுபாடுகளை அமைத்தார்கள். சிலர் சொல்லணி பொருளணி முதலியவற்றை மட்டும் அமைத்துப் பாடிவந்தார்கள். பின்பு சில தமிழ்க்கவிஞர் [9]ஸ்தல புராணங்களை, “பெருங்காப்பிய நிலை” என்னும் தண்டியலங்காரச் சூத்திரத்தின்படி காவிய இலக்கணங்களை அமைத்துப் பாடினார்கள். பெரியபுராணம், கந்த புராணம் முதலியவற்றைப் பின்பற்றி நாடுநகரச் சிறப்புக்களுடன் விரிவாகப் பழைய நூற் கருத்துக்களையும் சாஸ்திரக் கருத்துக்களையும் அமைத்துப் பலர் செய்ய ஆரம்பித்தனர். அவ்வாறு செய்தவர்கள் அந்தகக்கவி வீரராகவ முதலியார், எல்லப்ப நாவலர், மேலகரம் திரிகூடராசப்பக் கவிராயர், பரஞ்சோதி முனிவர், துறைமங்கலம் சிவப்பிரகாச ஸ்வாமிகள், திருவாவடுதுறையாதீன வித்துவான் சிவஞான ஸ்வாமிகள், கச்சியப்ப ஸ்வாமிகள், திருக்குருகைப் பெருமாள் கவிராயர் முதலியோர். அப்புலவர் பெருமக்கள் இயற்றிய நூல்களைப் பின்பற்றிப் பெருங்காப்பிய இலக்கண அமைதிகளோடு தியாகராசலீலையைச் செய்யத் தொடங்கின பிள்ளையவர்களுக்குக் காப்பியத் தலைவராகத் ‘தேவிற்சிறந்த கிண்கிணித் தாட் சிங்காதன சிந்தாமணி’ ஆகிய தியாகராசப் பெருமானும், நாட்டுவளம் கூறுதற்குச் சோழவளநாடும், நகரவளம் கூறுதற்கு நிறைசெல்வத் திருவாரூரும் கிடைத்தமையின் இவர் தமது நாவீறு முழுவதையும் இம்முதற் காப்பியத்திலே காட்டியுள்ளார்.
இந் நூலில் இக்கவியரசர் தாம் அங்கங்கே கண்டும் கேட்டும் கற்றும் தொகுத்த பலவகைச் செய்திகளைப் பலவகை யமைப்புக்களில் இணைத்து அழகுபடுத்தியிருக்கின்றார். -
“முகத்தினுக் குரிய வங்க முழுமையு மிலாத வொன்றைத்
தகத்திரு முகமென் றாள்வார் தழைகவிக் குரிய வங்க
மகத்துவ ஞான வாய்மை மருவிலாச் சிறியேன் பாடல்
அகத்திலை யெனினு நல்ல பாடலென் றெடுத்தாள் வாரால்”
என்பது போன்றுள்ள அவையடக்கச் செய்யுட்களிலேயே இவர் தமது கற்பனையைக் காட்டத் தொடங்குகின்றார். [10] ‘உலகிற் கெட்டதைப் பெருகிற்றென்று கூறுவதைப்போல என்னுடைய கவிகள் நயமில்லாதனவாயினும் நயமுள்ளன வாகுமென்பர் பெரியார்’ என [11]அவைக்கு அடங்கிக் கூறிய இவர்,
“ஞானமார் தருதென் னாரூர் நாயக னாடல் வாரி
மானமா ரதனை நாடும் வளத்தவென் பாடன் மாரி
தானமா ருணர்ச்சி மிக்க தன்மையார் மயில்க ணாளும்
ஈனமார் பொறாமை மிக்க யாவருங் குயில்கண் மாதோ”
என அவையை அடக்கியும் பாடுகிறார். ‘ஈன மார் பொறாமை மிக்க’ பலர் செயல்களால் வந்த துன்பத்தை அநுபவித்த இவர் அச்செயல்களை நினைந்தே இச்செய்யுளை இயற்றினார் போலும்!
[12]இந்நூலுள் ஒரு சொல்லே பலமுறை பின்வரப் பாடிய பாடல்களும், ஒரு பொருட் பெயருக்கு இயல்பாக உள்ள காரணத்தோடு வேறு பல காரணங்களையும் கூறும் கவிகளும், ஒரு நிகழ்ச்சிக்கு உரிய காரணத்தைக் கூறாமல் வேறொரு காரணத்தைக் கற்பித்தமைத்த பாடல்களும், தற்குறிப்பேற்ற அணிகள் அமைந்த கவிகளும், முன்வைத்துள்ள கருத்தொன்றை வேறு ஒரு கருத்தைப் பின்வைத்து முடிக்கும் வேற்றுப் பொருள்வைப்பமைதியுள்ள செய்யுட்களும் பல; அவற்றிற் சிலேடைப்பொருளை யமைத்த பாடல்கள் பல:
“தலைவ ரைத்தணந் திரங்குறு தாழ்குழன் மடவார்
அலைது யர்க்கெதி ராற்றுறா தரற்றுதன் மான
நலமு டைக்கடல் பெருமுழக் கஞ்செயு [13]நாவாய்
பலப டைத்திடிற் பெருமுழக் கஞ்செயப் படாதோ.” (திருநாட்டுப், 143)
அகப்பொருட் செய்திகளைக் குறிக்கும் கவிகளும் இலக்கண விஷ யங்களைப் பலவகையில் எடுத்தமைத்த செய்யுட்களும் பலவகை உவமைகளும் இதிற் காணப்படும். நாயன்மார்களுடைய அருமைச் செயல்களை உவமை கூறும் செய்யுட்கள் பல :
“இழிதக விறைச்சி யெச்சி லெம்பிரா னுண்ண நல்கி
அழிவில்பே ரின்பந் துய்த்த வன்பர்கண் ணப்ப ரேபோல்
இழிதக வுவர்நீ ரெச்சி லெழிலிக ளுண்ண நல்கி
அழிவிலின் சுவைய நன்னீ ரருந்திய தாழி மாதோ.” (திருநாட்டுப், 28)
இயற்கைப் பொருள்களை உவமை கூறுவதும் உண்டு:
“சுரும்புசெறி கோகனக மலர்நடுவ ணறனின்றுந் துள்ளி வீழ்ந்த
பருங்கயல்பைந் தருக்கிளையிற் குருகெடுத்துத் தாதகலப் படர்நீர் தோய்த்தல்
இருந்தைசெறி யழனடுவ ணியைத்தவிர சதக்கட்டி யினைப்பொற் கொல்லன்
திருந்தியகைக் குறட்டெடுத்து வெப்பமற நீர்தோய்க்குந் திறமே மானும்.” (திருநாட்டுப். 75)
சைவ சித்தாந்த சாஸ்திரக் கருத்துக்களை உவமையாக எடுத்தாண்ட பாடல்கள் பல :
பலா, மா.
“சிறந்த தீஞ்சுளை யகம்புறஞ் சிறவாச்
செறிமுள் கொண்டபா கற்கனி நாளும்
சிறந்த சத்துவ மகம்புறஞ் சிறவாத்
திறத்த தாமத முடையதே நிகரும்
சிறந்த தீஞ்சுவை புறமகஞ் சுவைகொள்
சிறப்பு றாதவித் துடையமாங் கனிகள்
சிறந்த சத்துவம் புறமகஞ் சிறவாத்
திறத்த தாமத முடையமா னிகரும்.” (நைமிசப். 4)
மடக்குவகைகளும், திரிபும், எதுகை நயங்களும், உலக வழக்குக்களும், பழமொழிகளும் அமைந்துள்ள செய்யுட்கள் பல இடங்களிற் காணப்படும்.
அங்கங்கேயுள்ள சிவஸ்துதிகள், சிறந்த கருத்துக்கள் தம் பால் அமையப்பெற்று விளங்கும்:
“வானாடு வெறுத்துநெடு மண்ணாடு குடிபுகுந்த வள்ளால் போற்றி
தேனாடு செங்கழுநீர்த் தேமாலை செறிந்தபுயத் தேவா போற்றி
ஆனாடு கொடியுயர்த்த வம்மானே கம்பிக்கா தழகா போற்றி
பானாடு பூங்கோயி லிடமேய கிண்கிணிப்பொற் பாதா போற்றி.” (முதலாவது, 36)
திருநாட்டுப் படலத்தில் ஐந்திணைகளை வருணிக்கும் பகுதியும், திணை மயக்கம் கூறும் பகுதியும், திருநகரப் படலத்திற் பொது வர்ணனையும், புறநகர் இடைநகர் அகநகர் எனப் பிரித்துப் புனைந்து கூறுவதும், ஒவ்வொரு சாதியார்க்குமுரிய வீதிகளைக் கூறுகையில் அவரவர் இயல்புக்கேற்றபடி புனைவதும், பிறவும் சுவை நிரம்பி விளங்கும்.
“பழுதின் மாணவர்க் கிலக்கண முணர்த்துநர் பலரால்”
“படாத காப்பியப் பாடஞ்சொல் வார்களும் பலரால்”
“பாய சாத்திர பாடமோ துநர்களும் பலரால்”
“ஆகமஞ் சாற்றுநர் பலரால்” (திருநகரப். 141-4)
“சடையர் நீற்றொளி மேனியர் கண்மணி ததைந்த
தொடைய ரைந்தெழுத் தழுத்திடு மனத்தினர் தூய
நடையர் வாய்மையர் நற்றவர் நகுநறுங் காவி
உடையர் வாழ்திரு மடங்களும் பற்பல வுளவால்” (திருநகரப்.146)
என்பன முதலிய செய்யுட்கள் பிள்ளையவர்கள் திருவாவடுதுறை யாதீனத்திற் கண்டு இன்புற்ற காட்சிகளை நினைந்து பாடப்பெற்றனவாகத் தோற்றுகின்றன. திருக்கோயிலை வருணிக்கும் பகுதி பலவகைக் கற்பனைகளோடு விளங்குகின்றது. பலவகை மரங்களைப்பற்றிய உவமை முதலியனவும், முனிவரர்களது இயல்பும், சூதமுனிவர் பெருமையும், அவர்பால் முனிவர்கள் பணிந்து கேட்கும் பண்பும் நைமிசப் படலத்திற் காணப்படும்.
பின்பு லீலைகள் தொடங்கப்படுகின்றன. அவற்றில் நரசிங்கச் சோழனென்பவன் வேட்டைமேற் சேறலும், சங்கரசேவகச் சோழன் சிவபெருமானைப் பணிந்து வரம் பெறுதலும், தியாகராசப் பெருமான் அரசத் திருக்கோலங் கொள்ளுதலும், அவரோடு வந்த சேனைகளின் சிறப்பும், அவர் மந்திரிகளுக்கு இடும் கட்டளை வகைகளும், பல நதிக்கரையிலுள்ள மறையோர்களின் பெருமையும், பல நாட்டு மன்னர்கள் சீரும், அவர்கள் நாட்டு வளங்களும், பிறவும் இனிய சொற்பொருளமைதியுடன் கூறப்படுகின்றன.
அவ்வக்காலத்திற் பிள்ளையவர்கள் தம் உள்ளத்தில் ஆராய்ந்து தொகுத்து வைத்திருந்த அரிய கருத்துக்களும் இனிய கற்பனைகளும் நிறைந்து விளங்கும் இத்தியாகராசலீலை தேனீக்கள் பல மலர்களில் உள்ள தேனைப் பலநாள் தொகுத்து அமைத்த தேனிறாலைப்போல உள்ள து. இவராற் செய்யப்பெற்ற முதற் காப்பியமாதலின் இதில் ஒரு தனியான அழகு அமைந்திருக்கின்றது. அக்காலத்திலே இவரோடு பழகிய பலர் இத் தியாகராசலீலைப் பாடல்களை அடிக்கடி அங்கங்கே எடுத்தெடுத்துப் பாராட்டி மகிழ்வதுண்டு.
பிற்காலத்திற் பிள்ளையவர்கள் திருவாவடுதுறையாதீனத்து வித்துவானாக விளங்கிய பொழுது மேலகரம் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரவர்கள் பல வித்துவான்களும் செல்வர்களும் நிறைந்த சபையில் இந்நூற் செய்யுட்களைச் சொல்லச் செய்து கேட்டும் கேட்பித்தும் இன்புற்று வருவதுண்டு. ஒருமுறை அங்ஙனம் பலர் கூடியுள்ள சபையில் ஸம்ஸ்கிருத வித்துவான்கள் பலர் பல காவியங்களிலுள்ள நயமான பகுதிகளை எடுத்துக்கூறிப் பிரசங்கஞ் செய்தார்கள். அப்பொழுது தமிழிலும் அத்தகைய சுவையுள்ள கவிகள் உண்டென்பதை அறிவிக்கக் கருதிய தேசிகரவர்கள் அங்கிருந்த பிள்ளையவர்களைப் பார்த்து, “தியாகராசலீலையில் நைமிசப்படலத்தில் விளாமரம் முதலியவற்றைப்பற்றித் தாங்கள் சொல்லியிருப்பதைச் சொல்லவேண்டும்” என்று கட்டளையிட, இவர் பின்வரும் மூன்று பாடல்களைச் சொல்லிக் காட்டினார்:
விளாமரம்.
“தடிசி னத்தமென் சாதுநீர் மையர்க்குத்
தன்ன மாயினும் பயன்படார் சினந்து
கொடிறு டைத்திடு கூன்கையர் கொள்ளை
கொள்ள வுள்ளன வெலாங்கொடுப் பார்போற்
படியின் மென்பற வைக்கணுத் தனையும்
பயன்ப டாதுமும் மதக்கொடுங் களிறு
கடித லைத்திடக் குலைகுலைந் துள்ள
கனியெ லாமுகுத் திடும்விளப் பலவால்.”
அசோக மரம்.
“அருக னார்க்குநன் னிழல்புரி தருவென்
றறைதல் போக்கவோ வணியிழை மடவார்
பெருக வந்துதைத் திடறவிர்ந் திடவோ
பெற்ற தம்பெயர்ப் பொருட்குமா றாக
ஒருக யற்பதா கையன்கரங் கொண்டே
உலகி னுக்கஞ ருறுத்தறீர்த் திடவோ
முருக சோகமற் றவருறாச் சைவ
முனிவர் வாழிடங் குடிபுகுந் தலரும்.”
தராமரம், ஏழிலைப்பாலை.
“வீர மாதவிர் நீவிர்வா ழிடம்யாம்
மேவி நீள்வரி விழிமட மாதர்
ஆர வந்துவந் தணைப்பது தவிர்ந்தேம்
அரிய நும்மையொத் தனமென நிற்கும்
ஈர மார்குர வங்களு மவர்நட்
பிரித்த தன்மையா னும்மைமற் றியாமும்
சார வொத்தன மாலென நிற்குந்
தழைத்த வேழிலைப் பாலையும் பலவால்.”
இவற்றைக் கேட்டு அங்குள்ள வித்துவான்களும் பிறரும் மிக மகிழ்ந்தனர். அவர்களுள் ஸ்ரீ காளஹஸ்தி ஸமஸ்தானத்திலிருந்து வந்திருந்தவரும் சதாவதானம் செய்யும் ஆற்றலுடையவரும் ஸ்ரீ வைஷ்ணவருமாகிய வடமொழி வித்துவானொருவர் பிள்ளையவர்களது கவித்திறமையில் ஈடுபட்டு மனமுருகி உடனே இவரைப் புகழ்ந்து பொருட்பொலிவையுடைய ஐந்து சுலோகங்களை இயற்றிச் சொன்னார்.
--------------
[1]காமர்பூம்பதி - பூவாளூர்.
[2] “தோலுந் துகிலுங் குழையுஞ் சுருடோடும், பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியுஞ், சூலமுந் தொக்க வளையு முடைத்தொன்மைக், கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பி” திருவா.
[3] “மைம்மரு பூங்குழல் '' என்னும் திருப்பதிகம் முதலியவற்றைப் பார்க்க.
[4] ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத்திரட்டு, 2645-69.
[5] வரை - கோவர்த்தனகிரி. பறை - சிறகு. அரி - இந்திரன். யாய்க்கு - திருமகளுக்கு. இற்கு - மனைவிக்கு; கலைமகளுக்கு. இளவல் - மன்மதன். ஏதி - ஆயுதம். எகின் - அன்னம்.
[6] பஞ்ச புண்ணியத் தலமாவது நதி, வனம், புரம், புஷ்கரிணி, க்ஷேத்திரமென்னும் ஐந்தும் அமைந்தது; திருத்தவத் துறைப் புராணம், பஞ்ச புண்ணியத்.
[7] வடகாவிரி - கொள்ளிடம்.
[8] இந்நூல் குறிப்புரையுடன் என்னாற் பதிப்பிக்கப்பெற்றுள்ளது.
[9] ஸ்தல புராணங்களும் காப்பியமாக அமைக்கப்பட்டனவென்பது “தன்னிக ருயர்ச்சி யில்லான் காப்பியத் தலைவ னாக, முன்னவர் மொழிந்த தேனோர் தமக்கெலா முகம னன்றோ, அன்னது தனதே யாகு மண்ணலே பாண்டி வேந்தாய், இந்நகர்க் கரச னாவா னிக்கவிக் கிறைவ னாவான்” (திருவிளை. நகரப். 108) என்பதனாற் புலப்படும்.
[10] தியாகராசலீலை, அவையடக்கம், 4.
[11] அவையடக்கம் அவைக்கு அடங்குதலென்றும், அவையை அடக்குதலென்றும் இருவகைப்படும்.
[12] பின் எடுத்துக் காட்டப்பெறும் நயங்களுள் விரிவஞ்சிச் சிலவற்றிற்கே உதாரணங்கள் காட்டப்பெற்றுள்ளன.
[13] நாவாய் - கப்பல், நாவும் வாயும்; சிலேடை.
-------------------
12. சிவதருமோத்திரச்சுவடி பெற்ற வரலாறு.
சுந்தரம்பிள்ளையின் இயல்பு.
பிள்ளையவர்களிடம் அக்காலத்துப் படித்த மாணவர்களுள் சுந்தரம் பிள்ளையென்ற ஒருவர் இவரிடத்தில் மிக்க பக்தி உள்ளவராக இருந்தனர். இவருக்கு ஏதேனும் குறையிருக்கின்றதென்பதை அறிவாராயின் எவ்வாறேனும் முயன்று அதனைப் போக்க முற்படுவார். இவரை யாரேனும் சற்றுக் குறைவாகப் பேசுவதைக் கேட்டால் அவரோடு எதிர்த்துப்பேசி அடக்கி அவரைத் தாம் செய்ததற்கு இரங்குமாறு செய்துவிடுவார். உலக அனுபவம் மிக உடையவர். சாதுர்யமாகப் பேசவல்லவர். இன்ன காரியத்தை இன்னவாறு செய்ய வேண்டுமென்று யோசித்து நடத்தும் யூகி. அவருக்குப் பல நண்பர்கள் உண்டு. அவருடைய நல்ல குணங்கள் அந்நண்பர்களை அவர் சொற்படி எந்தக் காரியத்தையும் இயற்றுமாறு செய்விக்கும்.
சிவதருமோத்திரச்சுவடி பெற முயன்றது.
பிள்ளையவர்கள் ஒருசமயம் சென்னையிலுள்ள காஞ்சீபுரம் சபாபதி முதலியாரிடமிருந்து திருத்தணிகைப் புராணத்தை வருவித்துத் தாமே பிரதி செய்து கொண்டு பொருளாராய்ந்து படித்து வருவாராயினர். அப்புராணத்தில் அகத்தியன் அருள்பெறு படலத்திற் சில பாகத்திற்குச் செவ்வனே பொருள் புலப்படவில்லை. அதைப்பற்றி இயன்றவரையிற் பலரிடத்துச் சென்று சென்று வினாவினார்; விளங்கவில்லை. பின்பு, சிவதருமோத்தரமென்னும் நூலின் உதவியால் அப்பகுதியின் பொருள் விளங்குமென்று ஒருவரால் அறிந்தார். உடனே அந் நூல் எங்கே கிடைக்குமென்று விசாரிக்கத் தொடங்கினார்; இன்னவிடத்திலுள்ளதென்பதுகூடத் துலங்கவில்லை.
பின் பலவகையாக முயன்று வருகையில் அது திரிசிரபுரத்திலுள்ள ஓர் அபிஷேகஸ்தரிடம் இருப்பதாகத் தெரியவந்தது. அவரிடம் சென்று தம்மிடம் அதனைக் கொடுத்தாற் பார்த்துக் கொண்டு சில தினங்களில் திருப்பிக் கொடுத்துவிடுவதாக இவர் பலமுறை வேண்டியும் அவர் கொடுக்கவில்லை. வேறு தக்கவர்களைக் கொண்டும் கேட்கச் செய்தார். அம்முயற்சியும் பயன்படவில்லை; கேட்குந்தோறும் ஏதேனும் காரணங்களைக் கூறிக் கொண்டே வந்தார்: அது பூசையிலிருக்கிறதென்றும், அதனை அப்பொழுது எடுக்கக்கூடாதென்றும், அதனுடைய பெருமை மற்றவர்களுக்குத் தெரியாதென்றும், அதிலேயுள்ள இரகசியக் கருத்துக்கள் எளிதிற் புலப்படாவென்றும் பலபடியாகச் சொல்லிவிட்டார். பலமுறை கேட்கக் கேட்க அவருடைய பிடிவாதம் பலப்பட்டுவந்தது. பொருள் தருவதாகச் சொன்னாற் கொடுக்கக் கூடுமென்று நினைந்த இவர் தக்க தொகை தருவதாகவும் புத்தகத்தைச் சில தினத்தில் திருப்பிக் கொடுப்பதற்காகத் தக்க பிணை கொடுப்பதாகவும் சொல்லிப்பார்த்தார். எந்தவகையிலும் அவர் இணங்கவில்லை. இவர் தம் முயற்சி சிறிதும் பயன்படாமை கண்டு மிகவும் வருத்தமுற்றார். ‘புத்தகம் எங்கேயாவது இருக்குமோ வென்று தேடியலைந்து வருத்தம் அடைந்தோம். இந்த ஊரிலேயே இருப்பதாகத் தெரிந்தும் கைக்கெட்டியது வாய்க்கெட்டாமலிருக்கிறதே! அந்தப் பிடிவாதக்காரருடைய நெஞ்சம் இளகாதா?’ என எண்ணி எண்ணி நைந்தார்.
ஒருநாள் அவ்வெண்ணத்தினால் முகவாட்டமுற்றவராகி இருந்த இவரைப்பார்த்த மேற்கூறிய சுந்தரம்பிள்ளை இவரருகிற் சென்று வணக்கத்தோடு நின்று, “இவ்வளவு கவலைக்குக் காரணம் என்ன?” என்றனர். இவர், தாம் திருத்தணிகைப் புராணம் படித்துக்கொண்டு வருவதும் அதிலுள்ள அகத்தியன் அருள்பெறு படலத்திற்குப் பொருள் புலப்படாமலிருப்பதும் சிவதருமோத்திரம் இருந்தால் அந்தப் பாகத்தின் பொருளை எளிதில் அறிந்து கொள்ளலாமென்று கேள்வியுற்றதும் அந்நகரில் உள்ள அபிஷேகஸ்தர் ஒருவரிடம் அந்நூல் இருப்பதாக அறிந்ததும் பல வகையாக முயன்றும் அதனை அவர் கொடுக்க மறுத்துவிட்டதும் சொன்னார். சுந்தரம்பிள்ளை, “அப்பிரதி அவரிடத்தில் இருப்பது உண்மையாக இருந்தால் எப்படியும் கூடிய விரைவில் அதனைப் பெற்றுக்கொள்ளலாம். ஐயா அவர்களுக்குச் சிறிதும் கவலை வேண்டாம்” என்று சொல்லிப் போயினர். தாம் பலவாறு முயன்றும் கிடையாத அப்புத்தகம் சுந்தரம் பிள்ளைக்கு மட்டும் எவ்வாறு கிடைக்குமென்னு மெண்ணத்துடன் இவர் இருப்பாராயினர்.
சுந்தரம்பிள்ளை செய்த தந்திரம்.
இவர் இப்படியிருக்கையில் ஒருநாள், மேற்கூறிய தேசிகருடைய வீட்டிற்கு எதிரே தக்க பிரபு ஒருவர் இரட்டைக் குதிரைகள் பூட்டிய வண்டியொன்றில் வந்து இறங்கினார். முன்னர் ஒருசேவகன் ஓடிவந்து தேசிகருடைய வீட்டின் இடைகழியில் நின்று, இந்த வீடு இன்னாருடைய வீடுதானோவென்று மெல்ல விசாரித்தான். உள்ளே இருந்த ஒருவர், “ஆம்; நீர் யார்? ஏன் அவரைத் தேடுகிறீர்? வந்த காரியம் யாது?” என்றார். அவன், இன்ன பெயருள்ள ஐயா அவர்கள் உள்ளே இருக்கிறார்களா, அவர்களோடு தான் வந்த காரியத்தைச் சொல்ல வேண்டுமென்றான். அவர் விரைவாக அவனை அணுகி, “அப்பெயருள்ளவன் நானே. சொல்லவேண்டியதைச் சொல்லலாம்” என்றார்.
இவர்களிருவரும் இங்ஙனம் பேசிக்கொண்டிருக்கையில், வேறொரு சேவகன் உயர்ந்த விரிப்பொன்றைக் கொணர்ந்து அவ் வீட்டுத் திண்ணையின்மேல் விரித்தான். மற்றொருவன் திண்டைக் கொணர்ந்து சுவரிற் சார்த்தினான். முன் கூறிய பிரபு திண்ணையின்மேல் விரிக்கப்பட்ட விரிப்பில் அமர்ந்து திண்டிற் சாய்ந்த வண்ணமாகப் பெருமிதமான தோற்றத்துடன் இருந்தார். திண்ணையின் கீழே உயர்ந்த ஆடையையும் உடுப்புக்களையும் தரித்து அவற்றிற்கேற்பத் தலைச்சாத்தணிந்த வேலைக்காரர்கள் சிலர் வரிசையாகக் கைகட்டி வாய்பொத்தி அந்தப்பிரபுவின் முகத்தை நோக்கிக்கொண்டே வணக்கத்துடன் நின்றார்கள். அவர்களைக் கண்டவுடன் உள்ளே நின்று பேசிக்கொண்டிருந்த சேவகன் சரேலென்று வெளியே வந்துவிட்டான்.
இந் நிகழ்ச்சியை வந்து இடைகழியில் நின்று கண்ட தேசிகர் வாயிற்படியின் உட்புறத்தினின்று தெருப்பக்கத்தைப் பார்த்தனர். பார்த்து, ‘யாரோ தக்கவரொருவர் பரிவாரங்களுடன் வந்தது நம்மைப் பார்ப்பதற்கோ? வேறு யாரைப் பார்த்தற்கோ? தெரியவில்லை; எல்லாம் சீக்கிரம் தெரிய வரும். இப்போது இந்தப் பிரபுவினிடம் திடீரென்று நாம் போவது நமக்குக் கெளரவமன்று; அழைத்தாற் போவோம்’ என்றெண்ணி உள்ளே சென்று ஓரிடத்திற் பலகையொன்றில் அமர்ந்து ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்துப் படித்துக்கொண்டேயிருந்தனர்.
அவர் அப்படியிருக்கையில் முன்பு அவரோடு பேசிக்கொண்டிருந்த சேவகன் மீட்டும் மெல்ல உள்ளே சென்றான். தேசிகர் உள்ளே போயிருப்பதையறிந்து அழைக்கலாமோ, ஆகாதோவென்னும் அச்சக் குறிப்பைப் புலப்படுத்திச் சற்று நேரம் அடி ஓசைப்படாமல் நின்றான்; பிறகு கனைத்தான். அப்பொழுது அவர், “ஏன் நிற்கிறீர்?” என்று வினவ, அவன், “எசமானவர்கள் உங்களுடைய சமயத்தைப் பார்த்துவரச் சொன்னார்கள்” என்றான். அவர் மிக்க பரபரப்புடன் எழுந்து நின்று, “உள்ளே அழைத்து வரலாமே” என்றார். அவன், “அவர்கள் இப்போது ஆசௌசமுள்ளவர்களாக இருத்தலால் உள்ளே வரக் கூடவில்லை; திண்ணையிலேயே இருக்கிறார்கள்” என்று மெல்லச் சொன்னான்.
உடனே அவர், “நானே வந்து பார்க்கிறேன்; வருவதனாற் குற்றமில்லை” என்று சொல்லிவிட்டுக் கண்டி முதலியவற்றை அணிந்துகொண்டு வெளியே வந்து பிரபுவைப் பார்த்தனர். அவர் அஞ்சலி செய்து இருக்கும்படி குறிப்பித்தனர். தேசிகர் அப்படியே இருந்து பிரபுவின் முகத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தனர். அப்பொழுது பிரபுவுடன் வந்த ஒருவர் பக்கத்தில் வந்து நின்றார். அவரைப் பார்த்து இரகசியமாகத் தேசிகர், “இவர்கள் யார்? எங்கே வந்தார்கள்?” என்று மெல்லக் கேட்டார். அவர், “எஜமானவர்கள் தென்னாட்டில் ஒரு ஜமீன் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். தாயார் முதலியவர்களோடு சிதம்பர தரிசனத்திற்காக வந்து இவ்வூரில் இறங்கி ஜம்புநாதரையும் தாயுமானவரையும் ரங்கநாதரையும் தரிசனம் பண்ணிக்கொண்டு மூன்று நாளைக்குக் குறையாமல் இங்கே தங்க வேண்டுமென்று கண்டோன்மெண்டிலுள்ள பங்களா ஒன்றில் இருந்தார்கள். அப்படியிருக்கும்போது தாயாரவர்களுக்குச் சுரங்கண்டது. எவ்வளவோ செலவிட்டு வைத்தியர்களைக்கொண்டு தக்க வைத்தியம் செய்தார்கள்; ஒன்றாலுங் குணப்படவில்லை. நேற்று அவர்கள் சிவபதம் அடைந்துவிட்டார்கள். உடனே தகனம் முதலியவற்றை நடத்தினார்கள். தம்முடைய ஊரில் அவர்கள் இறந்திருந்தால் இன்னும் எவ்வளவோ மேலாகக் காரியங்களை நடத்தியிருப்பார்கள். என்ன செய்கிறது! எல்லாம் தெய்வச் செயலல்லவோ? நம்முடைய செயலில் என்ன இருக்கிறது! இன்று காலையிற் சஞ்சயனமும் நடந்தது. சில விவரங்களை விசாரிப்பதற்கு நினைந்து தக்கவர்கள் யாரென்று கேட்டபொழுது சிலர் உங்களைப் பற்றிச் சொன்னார்கள். அதனாலே தான் நேரே இங்கு விஜயம் செய்தார்கள். வேண்டிய பதார்த்தம் விலை கொடுத்தாலும் அவ்விடத்தைப் போல இங்கே அகப்படமாட்டாது. பண்ணிவைக்கக்கூடிய தக்கவர்களும் அவ்விடத்தைப் போலக் கிடைக்க மாட்டார்களென்றும் தோற்றுகிறது. எல்லாம் நேற்றுப் பார்த்துவிட்டோம். அதனாலே இன்று இராத்திரி புறப்பட்டு ஊருக்குப் போய் மேற்காரியங்களையெல்லாம் நடத்த இவர்கள் கருதுகிறார்கள்” என்றார்.
கேட்ட தேசிகர், “இந்த ஊரில் எல்லாப் பொருள்களும் கிடைக்கும்; பணம் மட்டும் இருந்தால் எதுதான் அகப்படாது? இவ்வூரிலுள்ள தச்சர், தட்டார், பாத்திரக் கடைக்காரர் முதலிய எவ்வகையாரையும் நான் அறிவேன்; அபரக்கிரியை செய்தற்கும் தக்க இடம் இருக்கிறது. என் கையிற் பணமட்டும் இல்லையேயன்றிச் சொன்னால் எதுவும் இந்த ஊரில் எனக்கு நடக்கும். ஒரு விதமான யோசனையும் பண்ணவேண்டாம். இவ்விடத்திலேயே செய்து விடுவதாக நிச்சயித்துவிடச் சொல்லுங்கள்” என்று மிகவும் வற்புறுத்திக் கூறினர். கேட்ட அவர், “செலவைப் பற்றி எஜமான் சிறிதும் யோசனை பண்ணவில்லை. பதார்த்தங்களை வாங்கி வருவதற்கும் வேண்டிய பேர்கள் இருக்கிறார்கள். ஸமுகத்திற்கு ஓர் எண்ணமிருக்கிறது. சிவதருமோத்திரமென்று ஒரு புஸ்தகம் இருக்கிறதாம்; இந்த ஸமயம் அதைப் படித்துக் கொண்டே பொழுதுபோக்க வேண்டுமென்பதுதான் அவர்கள் கருத்து. முன்பு பிதா எஜமான் அவர்கள் சிவபதமடைந்த பொழுது கூடச் சில பெரியோர்கள் சொல்லத் தெரிந்து எங்கிருந்தோ வருவித்து அந்த நூலைத்தான் பாராயணம் பண்ணிக் கொண்டிருந்தார்களாம். அது கிரந்தமாக இருந்தால் உதவாதாம்; தமிழாகவே இருக்கவேண்டுமாம்; இதற்காகவே அங்கே போகவேண்டுமாம்” என்று சொல்லிக்கொண்டே வந்தவர் பின்பு மெல்ல, “இங்கேயே இருந்து முடித்துக்கொண்டு போகலாமே யென்று சிலர் எவ்வளவோ சொல்லியும் காதிலேறவில்லை. இந்தப் புஸ்தகத்தைப் படிக்காமற்போனால் என்ன?” என்று இரகசியமாகச் சொன்னார்.
அப்போது தேசிகர் அந்தப் பிரபுவை நோக்கி, “சிவதருமோத்திரம் என்னிடம் தமிழிலேயே உள்ளது. வேண்டுமானால் உபயோகித்துக்கொள்ளலாம். உங்களைப் போன்ற பிரபுக்களுக்கல்லாமல் பின்னே வேறு யாருக்குத்தான் கொடுக்கப் போகிறேன்?” என்றனர்.
நின்றவர் உடனே பிரபுவின் நோக்கத்தை அறிந்து வந்து அபரக்கிரியைக்குரிய எல்லாவற்றிற்கும் ஒரு குறிப்பு எழுதித் தரும்படி அவரைக் கேட்டனர். தேசிகர் உள்ளே இருந்து ஏடு எழுத்தாணிகளைக் கொணர்ந்து விரிவாக ஒரு குறிப்பு எழுதிக் கொடுத்தனர். “ஊரிற் செய்தால் இன்னும் அதிகச் செலவாகும்” என்று பிரபுவைச் சேர்ந்தவர் சொல்ல, “இவ்வளவு செலவு செய்பவர்களே இந்தப்பக்கத்தில் யாரிருக்கிறார்கள்?” என்று தேசிகர் சொன்னார். கேட்ட பிரபு, “நீங்களே இருந்து எல்லாவற்றையும் நடத்துவிப்பதன்றி வாங்கவேண்டியவற்றையும் உடனிருந்து வாங்கித் தர வேண்டும்” என்று சொல்லி அஞ்சலி செய்து உடனே எழுந்து சென்று வண்டியில் ஏறினர். பக்கத்தில் நின்றவர், “நான் எப்பொழுது வரவேண்டும்?” என்று கேட்கவே, தேசிகர், "கருமாதியின் ஒரு வாரத்திற்குமுன் வந்தாற் போதும்; பரிஷ்காரமாக எல்லாவற்றையும் வாங்கிவிடலாம்” என்று சொல்லி வேகமாகச் சென்று பிரபுவை நோக்கி, “க்ஷணம் தாமஸிக்கவேண்டும்” என்று சொல்லிக்கொண்டே உள்ளே போய்ச் சிவதருமோத்திர ஏட்டுப் பிரதியை எடுத்து வந்து அவர் கையிற் கொடுத்து, “இந்தப் புஸ்தகத்தை முன்னமே கொடாததற்காக க்ஷமிக்கவேண்டும்; தங்களைப் போன்றவர்களுடைய பழக்கம் எனக்குப் பெரிதேயல்லாமல் இந்தப் புஸ்தகம் பெரிதன்று. குறிப்பறிந்து உபகரிக்கும் மகாப்ரபுவாகிய தங்களுக்கு என்போலியர்கள் தெரிவிக்கவேண்டியது என்ன இருக்கிறது?” என்று வண்டியைப் பிடித்துக்கொண்டே நின்று சொல்ல அந்தப் பிரபு, ''எல்லாந் தெரிந்துகொண்டோம்; அதிகமாக ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை” என்று சொல்லி ஐந்து ரூபாயை அவரிடம் சேர்ப்பித்தார். வண்டி அதிக வேகமாகச் சென்றது. நின்றவர்கள் வண்டியின் முன்னும் பின்னுமாக ஓடினார்கள். இக் காட்சிகளை யெல்லாம் பார்த்த தேசிகர் மிக்க மகிழ்ச்சியுடையவராகி வீட்டுக்குள்ளே சென்றனர்.
ஒருநாள் சுந்தரம்பிள்ளை பிள்ளையவர்களிடம் வந்து, “இது சிவதருமோத்திரம்” என்று சொல்லிப் புத்தகத்தைக் கொடுத்தனர். இவர், “இப்புத்தகம் எங்கே கிடைத்ததப்பா?” என்று மிக்க வேகமாக அதனைப் பிரித்துப் பார்த்துவிட்டு அவரை நோக்கி, “உன்னுடைய வீட்டில் என்ன விசேஷம்? வீசையை ஏன் எடுத்துவிட்டாய்? உனக்கு நேர்ந்த துக்கம் எனக்குத் தெரியாது போயிற்றே ! ஏன் எனக்குச் சொல்லியனுப்பவில்லை?” என்று வினவினர். சுந்தரம்பிள்ளை, “அந்த விஷயத்தைப் பின்பு சொல்லுவேன். இந்தப் புஸ்தக முழுவதையும் ஒரு வாரத்திற்குள் பிரதிசெய்துகொண்டு என்னிடம் கொடுத்து விடக்கூடுமானால் மிகவும் நலமாயிருக்கும்; பிரதி செய்வது ஒருவருக்கும் தெரியவேண்டாம்” என்றார். இவர் அப்படியே செய்வதாக ஒப்புக்கொண்டு தம்மிடம் அப்பொழுது படித்துவந்த மாணாக்கர்களிடத்தும் நண்பர்களிடத்தும் பத்துப்பத்து ஏடாகக் கொடுத்து ஒரு வாரத்துள் எழுதித்தர வேண்டுமென்று சொல்லி, எஞ்சிய ஏடுகளைத் தாம் கைக்கொண்டு எழுதுவாராயினர். ஏழு தினத்துள் புஸ்தகம் எழுதி முடிந்தது. எட்டாவது தினத்தில் ஒப்பிட்டுக்கொண்டு சுவடியைச் சுந்தரம் பிள்ளைக்கு அனுப்பி விட்டார். அப்பாற் சிவதருமோத்திரத்தைப் படித்துத் தணிகைப் புராணப் பகுதியிலுள்ள அரிய விஷயங்களை இவர் அறிந்து தெளிந்தனர்.
முன்பு சேவகவேடம் பூண்டவராகிய ஒரு நண்பரிடம் சுந்தரம்பிள்ளை சிவதருமோத்திரப் பிரதியையும் ஒரு பவுனையும் கொடுத்து அவற்றை அத்தேசிகரிடம் சேர்ப்பித்துவரும்படி சொல்லியனுப்பினர். அவர் சென்று தேசிகரைக் காணவே அவர் மகிழ்வுற்று, “வரவேண்டும், வரவேண்டும்!” என்று கூறி வரவேற்றனர். சேவக வேடம் பூண்டவர் பவுனையும் சுவடியையும், அவர் கையிற் கொடுத்துவிட்டு, “ஊரிலேயே போய்த்தான் கருமாதி செய்ய வேண்டுமென்று உடனிருந்த பந்துக்கள் வற்புறுத்தினர். அதனால் எல்லாரோடும் புறப்பட்டு எசமானவர்கள் ஊருக்குப் போய்விட்டார்கள். உங்களிடம் சொல்லிவிட்டுப் போகக் கூடவில்லையேயென்று அவர்கள் வருத்தமுற்றார்கள். சீக்கிரத்தில் உங்களை அவ்விடத்துக்கு வருவிப்பார்களென்று எனக்குத் தோற்றுகிறது” என்று சொல்லி அஞ்சலி செய்து போய்விட்டார். தேசிகர் அதனைக் கேட்டு முதலில் வருத்தமுற்றாராயினும் பவுன் கிடைத்ததை நினைந்து சிறிது சமாதானமடைந்தார்.
பிள்ளையவர்கள் அப்பால் வேறொருவரால் நிகழ்ந்தவற்றை யெல்லாம் அறிந்து வியப்புற்றுச் சுந்தரம்பிள்ளையின் அன்புடைமையை எண்ணி மகிழ்ந்தார்.
தாம் செய்த இந்தத் தந்திரத்தைக்குறித்துப் பிள்ளையவர்கள் என்ன சொல்வார்களோவென்று அஞ்சிச் சுந்தரம்பிள்ளை சில தினங்கள் வாராமலே இருந்து விட்டார். அது தெரிந்த இவர் வர வேண்டுமென்று வற்புறுத்திச் சொல்லியனுப்பினார். அப்பால் சுந்தரம்பிள்ளை வந்தார். இவர் அவரை நோக்கி, “என்ன அப்பா! இப்படிச் செய்யலாமா?” என்று கேட்டபொழுது அவர், “ ‘பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த நன்மை பயக்கு மெனின் ' என்னும் திருக்குறளை அனுசரித்து அடியேன் நடந்தேன். இதனால் யாருக்கும் ஒருவிதமான துன்பமும் இல்லையே. ஏதோ செய்தேன். அச்செயல் ஐயாவுக்குக் குற்றமாகத் தோற்றினாற் பொறுத்துக்கொள்ள வேண்டும்” என்று கூறினர்.
சுந்தரம்பிள்ளையின்பால் இவருக்கிருந்த அன்பு.
இதனால் மாணாக்கர்களுக்கு இவர்பால் உள்ள உண்மையான அன்பு புலப்படும். பிள்ளையவர்கள் தம்முடைய 58-ஆவது பிராயமாகிய ஆங்கிரஸ வருஷத்திற் கும்பகோணத்தில் ஒரு சபையில் நாகபட்டின புராணத்திலுள்ள சில பாடல்களுக்குப் பொருள் கூறி வருகையில் அவற்றிலுள்ள சில விஷயங்களைப்பற்றித் தியாகராச செட்டியார் ஆட்சேபித்தார்; சற்றே கடுமையாகவும் பேசினார். பேசிவிட்டு அவர் போனபொழுது அருகில் இருந்தவர்களிடம் பிள்ளையவர்கள், “சுந்தரம்பிள்ளை உயிரோடிருந்தால் தியாகராசு இவ்வளவு கடுமையாக என்னை நோக்கிப் பேசுவானா? அவன் சும்மா விட்டுவிடுவானா?” என்று சொன்னார். இவருடைய மாணாக்கர்களுள் ஒப்புயர்வற்ற அன்பினரென்று எல்லோராலும் கருதப்பெற்றிருக்கும் தியாகராச செட்டியாரையே தாழ்த்திச் சுந்தரம்பிள்ளையை உயர்த்திச் சொன்னாரென்றால் அந்தச் சுந்தரம் பிள்ளையினுடைய குருபக்தி யாராற் சொல்லுந் தரத்தது? அவருடைய ஞாபகம் இவருக்கு அடிக்கடி உண்டாகும். அவரைப் பற்றிப் பிற்காலத்திற் பலமுறை சொல்லியிருக்கின்றனர். அவருக்கு இந்த விசேடம் அமைந்திருந்தும் ஆயுளின் குறை நேர்ந்ததைப்பற்றியும் எல்லோரும் பார்க்கக்கூடாமற் போனதைப் பற்றியும் பிற்காலத்து மாணாக்கர்களுக்கெல்லாம் உண்டான வருத்தம் அதிகமே.
------------------
13. பங்களூர் யாத்திரை.
அருணாசல முதலியார் வீடு வாங்கியளித்தது.
இவருக்குச் சொந்த வீடு இல்லாமையையும் குடிக்கூலி கொடுத்துச் சிறியதொரு வீட்டில் இருத்தலையும் அறிந்த அருணாசலமுதலியாரென்பவர் இவருடைய 33-ஆம் பிராயமாகிய பிலவங்க வருஷத்தில் மலைக்கோட்டைத் தெற்கு வீதியிற் சைவத்தெருவில் தென்சிறகிலிருந்த மெத்தை வீடொன்றைத் தமது சொந்தப் பொருள் கொடுத்து இவர் பெயருக்கு வாங்கி இவரை அதில் இருக்கச் செய்து இல்வாழ்க்கை நடைபெறுதற்குரிய பண்ட வகைகளும் பொருளும் பிறவும் வேறுவேறாக அப்பொழுதப்பொழுது உதவி செய்து ஆதரித்துவந்தார். திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்களென்று உலகமெல்லாம் கொண்டாடும் வண்ணம் செய்தது இந்த அருணாசல முதலியாருடைய பேருதவியே.
அந்த வீட்டில் இவர் இருந்து வழக்கம்போற் பாடஞ் சொல்லுதல் முதலியவற்றைச் செய்து வருவாராயினர். தமக்கு இத்தகைய செளகரியங்கள் அமைந்தது திருவருட் செயலேயென நினைந்து மகிழ்ந்தார். மாணவர்களைப் பிறருடைய விருப்பத்தை எதிர்பாராமல் தங்கியிருக்கச் செய்வதற்கு அவ்விடம் தக்கதாயிருந்தது பற்றி இவருக்குண்டான களிப்பிற்கு அளவில்லை.
ஆயினும் ஸ்ரீரங்கம் முதலிய அயலூர்களிலிருந்து அடிக்கடி நடந்து வந்தும் காலத்தில் உணவில்லாமலும் நல்ல உடையில்லாமலும் விவாகமில்லாமலும் வீடில்லாமலும் பல மாணவர்கள் வருந்தியிருந்தமையால், அவர்களுக்கு நல்ல சௌகரியங்கள் அமைய வேண்டுமென்ற எண்ணம் இவருக்கு உண்டாயிற்று. அது குறித்துத் தெய்வப்பிரார்த்தனை செய்வதும் உண்டு.
அக்காலத்தில் இவரிடம் பாடங்கேட்ட மாணவர்களிற் பலர் இவர் செய்யுள் செய்யுங் காலத்தில் அவற்றை ஏட்டில் எழுதுவார்கள். அவர்களுள் முக்கியமானவர்கள் வயலூர் வாத்தியாராகிய சுந்தரம் பிள்ளையும் சோமரசம் பேட்டை முத்துசாமி முதலியாருமாவர்.
களத்தூர் வேதகிரி முதலியார்.
களத்தூர் வேதகிரி முதலியார் என்ற வித்துவான் ஒருவர் சென்னையிலிருந்து ஒரு சமயம் திரிசிரபுரத்திற்கு வந்தார். அவர் இயற்றமிழாசிரியர் இராமாநுசகவிராயருடைய மாணாக்கர்; அக்காலத்திற் பல தமிழ் நூல்களை அச்சிட்டவர். அவர் வந்தபொழுது திரிசிரபுரத்தார் அவரை மிகவும் பாராட்டினார்கள். பிள்ளையவர்களிடத்தில் அழுக்காறுற்ற சிலர், “இவரைக் கண்டால் பிள்ளையவர்கள் அடங்கிவிடுவார்கள்” என்று நினைத்து அவரை இவரிடம் அழைத்து வந்தார்கள். அவரோடு சென்னையிலிருந்து வந்தவர்கள் சிலர் இவருடைய ஆற்றலை அறிந்து கொள்ளாமல் அயலிலிருந்து அவரை மிகச் சிறப்பிப்பாராய், “முதலியார் இலக்கண இலக்கியத்தில் அதிகப்பயிற்சியுள்ளவர். இலக்கணச் சூத்திரங்களில் ஐம்பதினாயிரம் இவருக்கு மனப்பாடமாக இருக்கின்றன” என்றார்கள். முதலியார் அவ்வளவுக்கும் உடன்பட்டவர்போன்று நகைத்துக்கொண்டிருந்தார். உடனே இவர், “அப்படியா!” என்று வியந்து தம் பக்கத்திலிருந்த தியாகராச செட்டியாரை நோக்கி, “முதலியாரவர்கள் படித்த நூல்களிலுள்ள சூத்திரங்களின் எண்களை நூல்களின் விவரணத்துடன் கேட்டு எழுதிக் கூட்டிச் சொல்லவேண்டும்” என்றார். அவரும் அப்படியே கேட்டுவர முதலியார் மிக முயன்று சொல்லியும் சில ஆயிரங்களுக்கு மேற் சூத்திரங்களின் தொகை செல்லவேயில்லை. முதலியாரைப் புகழ்ந்தவர்கள் ஒன்றும் மேலே சொல்ல இயலாதவர்களாகி விழித்தார்கள். அப்போது ஊரார் உண்மையை நன்றாக அறிந்து கொண்டவர்களாய்ப் படாடோபத்தினா லும் பிறர் கூறும் புகழ்ச்சியினாலும் ஒருவருடைய கல்வியை அளவிடுவது பிழையென்பதை உணர்ந்து கொண்டார்கள். இவரோ ஒன்றும் சொல்லாமல் மெளனமாக இருந்துவிட்டார். அப்புறம் இவரிடத்துச் சிலநேரம் பேசியிருந்துவிட்டு முதலியார் தம்மிடம் சென்றனர்.
உறையூர்ப் புராணம் இயற்றத் தொடங்கியது.
இவர் இவ்வாறு திரிசிரபுரத்தில் இருந்து வருகையில் உறையூரிலுள்ள நண்பர்களும் பிரபுக்களுமாகிய சிலர் இவரிடம், “தாங்கள் உறையூர்ப் புராணத்தைத் தமிழிற் செய்யுள் நடையிற் செய்து தரவேண்டும்” என்று விரும்பினார்கள். “தியாகராசலீலையைப் போல நாடு நகரச் சிறப்புக்களுடன் கற்பனைகள் பலவற்றை அமைத்துப் பாடவேண்டும். அந்தத் தியாகராசலீலை முற்றுப்பெறவில்லை. இப்புராணம் முழுமையும் வடமொழியில் இருப்பதால் தாங்கள் இதனைப் பாடி முடிக்கவேண்டும்” என்றார் சிலர். அவ்வாறு செய்வதற்குச் சமயம் எப்பொழுது நேரப்போகிறதென்று காத்திருந்த இவருக்கு அவர்கள் வேண்டுகோள் ஊக்கத்தை அளித்தது. வடமொழியிலுள்ள புராணத்தை வடமொழிப் பயிற்சியுள்ள தக்க வித்துவான்கள் சிலருடைய உதவியால் தமிழ் வசன நடையாக மொழிபெயர்த்து வைத்துக்கொண்டு நல்ல நாள் பார்த்துப் பாடத் தொடங்கினார்.
பங்களூர்த் தேவராசபிள்ளை பாடங்கேட்க விரும்பியது.
அக்காலத்தில் இவருடைய கீர்த்தி நெடுந்தூரம் பரவலாயிற்று. பங்களூரிலிருந்த தேவராசபிள்ளையென்னும் கனவான் சில நண்பர்களால் இவருடைய கல்வி மிகுதியையும் பாடஞ் சொல்லுந் திறமையையும் கேள்வியுற்றார். அவர் இருந்தவிடம் பங்களூர்த் தண்டு. அவர் மிகுந்த செல்வமுடையவர். அவருடைய தந்தையார் கம்பெனியாருக்கும் மைஸூர் ராஜாங்கத்தாருக்கும் பொதுவான ஒரு துபாஷ் வேலையில் இருந்தவர். தேவராச பிள்ளைக்குப் பங்களூரிற் சில பெரிய வீடுகளும் தோட்டங்களும் இருந்தன . அவர் மிக்க பொருள் வருவாயோடு கெளரவமும் வாய்ந்தவர்.
அவர் தமிழிற் சில நூல்களை ஆங்குள்ள கல்விமான்களிடத்து முறையே கற்றவர்; மேலும் பல நூல்களைக் கற்றறிய விரும்பினார். பிள்ளையவர்களிடம் படித்தால் விரைவில் விசேஷ ஞானத்தை அடையலாமென்பது அவருக்குத் தெரியவந்தது. இவர்பால் தாமும் பாடங்கேட்கவேண்டுமென்ற ஆசையால் தமக்குப் பழக்கமுள்ள தக்கவர்களை இவரிடம் அனுப்பித் தமது கருத்தைத் தெரிவித்தனர். வந்தவர்கள் இவரைக் கண்டு தேவராச பிள்ளையினுடைய செல்வ மிகுதியையும் குண விசேடங்களையும் படித்தவர்களை ஆதரிக்கும் இயல்பையும் ஓய்வு நேரங்களில் தக்கவர்பால் தமிழ் நூல்களை அன்புடன் பாடங்கேட்டு வருதலையும் தெரிவித்ததுடன், “உங்களிடம், தாம் முன்னமே கற்ற நூல்களை ஒருமுறை மீட்டுங் கேட்டுத் தெளிந்து கொண்டு பின்பு கேளாதவற்றை முறையே பாடங் கேட்டுத் தம்மாலியன்ற செளகரியங்களை உங்களுக்குச் செய்விக்க வேண்டுமென்ற எண்ணம் அவருக்கு மிகுதியாக உண்டு. அவருக்குப் பங்களூரிலுள்ள லௌகிக வேலைகளின் மிகுதியால் இங்கே வந்து படித்தற்கு இயலவில்லை. நீங்கள் பங்களூருக்கு வந்தால், தாம் ஜாக்கிரதையாக நடந்து கொள்வதற்குத் தடையிராதென்று சொல்லி உங்களுடைய கருத்தை அறிந்து வரவேண்டுமென்று எங்களை அனுப்பினர்” என்றனர். இவர், “இங்கே படித்துக்கொண்டு உடனிருப்பவர்களை அழைத்து வரலாமோ?” என்று கேட்க, வந்தவர்கள், “எவ்வளவு பேர்களை வேண்டுமானாலும் அழைத்து வரலாம்” என்றார்கள். விருப்பத்தோடு பாடங் கேட்பவர்களுக்குப் பாடஞ் சொல்லுதலையே விரதமாகக் கொண்டவராதலால், இவர் சிறிது யோசித்து, “அங்கு வந்தே சொல்லுவதற்கு யாதொரு தடையுமில்லை” என்று விடையளித்தனர். வந்தவர்கள் இதைக்கேட்டு மனமகிழ்ந்து பங்களூர் சென்று தேவராச பிள்ளையிடம் தெரிவிக்கவே அவர் மிகவும் ஆனந்தத்தை அடைந்தார்.
பங்களூர் சென்றது.
உடனே தேவராசபிள்ளை, “இங்கே எழுந்தருளிப் படிப்பித்து என்னை உய்விக்க வேண்டும்” என்று பிள்ளையவர்களுக்கு ஒரு கடிதம் மூலமாக விண்ணப்பம் செய்துகொண்டனர்; பின்பு பிரயாணத்திற்கு வேண்டிய செளகரியங்களைச் செய்து கொடுத்து ஜாக்கிரதையாக இவரைப் பங்களூருக்கு அனுப்ப வேண்டுமென்று திரிசிரபுரத்திலுள்ள தம்முடைய நண்பர்களுக்கும் எழுதினர். அவர்கள் அவ்வண்ணமே செய்தமையால் இவர் செளகரியமாகக் குடும்பத்துடனும், உடன் வருவதாகக் கூறிய சுப்பராய செட்டியார் முதலிய மாணாக்கர்களுடனும் பங்களூருக்குச் சென்றனர். செல்லுகையில் அந்நகருக்கு அருகில் உள்ள ஸ்ரீ மடவாளீசுவரமென்னும் சிவஸ்தலத்தில் இவர் தங்கினார். சீதோஷ்ண நிலையின் வேறுபாட்டால் இவருக்கு அங்கே சுரநோய் கண்டது. இவர் வந்திருத்தலையும் சுரத்தால் வருந்துதலையும் தேவராசபிள்ளை அறிந்து அங்கே சென்று எல்லோரையும் பங்களூருக்கு அழைத்து வந்து தக்க வைத்தியர்களைக் கொண்டு மருந்து கொடுப்பித்தனர். சிலநாளில் இவருக்கிருந்த சுரநோய் நீங்கியது.
தேவராசபிள்ளை இவருக்குத் தனியே ஒரு வீட்டை அமைத்துச் சொன்னவற்றைக் கவனித்துச் செய்தற்குரிய வேலைக்காரர்களை நியமித்து உடன் வந்தவர்களுக்கும் இவருக்கும் வேண்டிய எல்லாவித சௌகரியங்களையும் செய்வித்தனர். அவருடைய அன்புடைமையையும் வள்ளன்மையையும் கண்ட பிள்ளையவர்களுக்கு உண்டான மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. பங்களூருக்கு இவர் வந்த காலம் இவருடைய 35-ஆம் பிராயமாகிய ஸெளமியவருஷம்.
தேவராசபிள்ளை பாடங்கேட்டது.
தேவராசபிள்ளை நல்லதினம் பார்த்துப் பாடங்கேட்க ஆரம்பித்தார். முன்பே தாம் படித்திருந்த நூல்களிலுள்ள ஐயங்களை வினாவி முதலில் தெளிந்து கொண்டார். பின்பு திருவிளையாடல் முதலிய காப்பியங்களையும் நன்னூல் முதலிய இலக்கணங்களையும் முறையே கற்றுச் சிந்தித்து வருவாராயினர். இம்முறையில் ஐந்திலக்கணங்களையும் பல காப்பியங்களையும் கற்றனர். ஐந்திலக்கணங்களையும் அவர் கற்றமையை அவர் இயற்றிய,
“சிவபரஞ் சுடரி னிணையடி மலரைத் திரிகர ணத்தினும் வழாது
பவமறத் தினமும் வழிபடு குணாளன் பகர்திரி சிரபுரத் தலைவன்
சிவமுறு தென்சொ லைந்திலக் கணத்திற் றெளிவுறச் சிறியனேற் கருளும்
நவமுறு புகழ்மீ னாட்சிசுந் தரவே ணாண்மல ரடிமுடி புனைவாம்”
என்னும் துதிச்செய்யுளாலும் உணரலாம்.
சிவஞான முனிவருடைய தவசிப் பிள்ளையைக் கண்டது.
பிள்ளையவர்கள் வந்து இருத்தலையறிந்து அப்பக்கத்தில் தமிழ்பயில்வோர்கள் சிலர், ‘நாம் முறையே கற்றுக்கொள்வதற்கு இதுதான் சமயம்’ என்றெண்ணித் தாம் கற்றுக்கொள்ள வேண்டிய நூல்களை இவருக்குள்ள ஓய்வுநேரங்களில் வந்து பாடங் கேட்பாராயினர். தமிழ்ப்பண்டிதர்களும் அப்படியே அடிக்கடி வந்து சல்லாபஞ்செய்து தங்கள் சந்தேகங்களைக் கேட்டுத் தெளிந்து கொண்டு சென்றனர். அவர்களோடு பேசிக்கொண்டிருக்கையில் இவர், “இவ்வூரில் தமிழ் படித்தவர்கள் யார் யார் இருந்தார்கள்?” என்று விசாரித்த பொழுது அவர்கள் சிலரைக் குறிப்பிட்டதன்றி, “திருவாவடுதுறை யாதீன வித்துவான் சிவஞான முனிவரிடம் தவசிப் பிள்ளையாக இருந்தவர் இப்போது முதியவராக இங்கே இருக்கிறார்” என்று தெரிவித்தார்கள்.
உடனே இவர் கையுறைகளுடன் சென்று அவரைப்பார்த்து, சிவஞான முனிவருடைய உருவ அமைப்பு, அவருடைய இயற்கைகள், அவருக்கு உவப்பான உணவுகள், அவருடைய பொழுதுபோக்கு, உடனிருந்தவர்களின் வரலாறு, கச்சியப்பமுனிவர் வரலாறு, பிற சரித்திரங்கள் முதலியவற்றைப்பற்றிய செய்திகளைத் தெரிந்து கொண்டார். தாம் அவ்வூரில் இருந்தவரையில் அவருக்கு வேண்டிய பொருள்களை அனுப்பிவந்தார். இவர் பிற்காலத்தில், அவரைச் சந்தித்ததைப்பற்றிச் சொல்லியபொழுது தாம் அறிந்துகொண்டனவாக அறிவித்த செய்திகள் வருமாறு:
“சிவஞான முனிவர் காஞ்சீபுரத்தின் ஒருபாலுள்ள திருவாவடுதுறை மடத்தில் இருந்துவந்தார். அந்த மடத்தில் மெய்கண்ட சிவாசாரியருடைய கோயில் இருந்தது. அவ்வூரிலிருந்த செங்குந்தர்கள் தினத்திற்கு ஒரு வீடாக முறைவைத்துக்கொண்டு உணவுப் பண்டங்கள் கொடுத்து அவரை ஆதரித்து வந்தார்கள். அங்கே இருக்கையில் காஞ்சிப் புராணம், சிவஞானபோத பாஷியம் முதலியவற்றை இயற்றினார். தம்மை ஆதரித்து வந்த செங்குந்தர்களுக்குப் பஞ்சாட்சர உபதேசமும் தீட்சையும் செய்வித்துப் பூசையும் எழுந்தருளுவித்தார். ஒருமுறை சென்னைக்குச் சென்றிருந்த பொழுது அங்கே உள்ள கனவான்களிற் பலர் அவரை ஆதரித்து உபசரித்தனர். சில காரணம் பற்றி அவர் வேறு ஒன்றும் உண்ணாமல், இப்பொழுது ஒரு மண்டலம் விரதம் அநுஷ்டிக்க வேண்டியவனாக இருக்கிறேன்' என்று சொல்லிப் பாலும் பழமுமே உண்டு வந்தார்.”
இந்தச் செய்திகளைத் தமக்குச் சொன்ன தவசிப்பிள்ளைக்கு அப்போது பிராயம் 90 இருக்குமென்று பிள்ளையவர்கள் கூறியதுண்டு.
உறையூர்ப் புராணம் பாடிவந்தது.
இவர் பங்களூருக்கு வருகையில் உறையூர்ப் புராணத் தமிழ் வசனத்தைக் கையில் எடுத்து வந்திருந்தனர். ஓய்வு நேரங்களில் மெல்ல மெல்ல யோசித்து அதனைச் செய்யுளாகப் பாடிவந்தனர். யாதொரு கவலையும் இல்லாத காலத்தில் அப்புராணம் பாடப் பெற்றமையால் அதற்கும் பிற்காலத்திலே பாடியவற்றிற்கும் வேறுபாடுகள் காணப்படும்.
பிற்காலத்தில் ஒரு சமயம் இவர் இயற்றிய அம்பர்ப் புரா ணத்திற் சில பகுதிகளைக் கேட்டு வந்த தியாகராச செட்டியார், “பாலியத்திற் செய்த உறையூர்ப் புராணத்தைப் போல இப்புராணம் யோசித்துச் செய்யப்படவில்லை. அம்மாதிரி செய்தால் மிக நன்றாகவிருக்கும்” என்றபொழுது இவர், “அவ்வாறு அந்நூல் அமைந்ததற்குக் காரணம் வல்லூர்த் தேவராச பிள்ளையின் பேருபகாரந்தான். அவ்வாறு யாரேனும் என்னைக் கவலையில்லாமல் ஆதரித்து வைத்திருந்தால் இன்னும் எவ்வளவோ செய்வேனே!” என்று விடையளித்தார்.
குசேலோபாக்கியானம் இயற்றியது.
இவரிடம் பாடம் கேட்டுவந்த தேவராசபிள்ளை இவர் உறையூர்ப் புராணச் செய்யுட்களைப் பாடிவரும் சில சமயங்களில் உடனிருப்பதுண்டு. யாப்பிலக்கணத்தைப் படித்ததனாலும் இவர் பாடிவருவதைக் கண்டதனாலும் அவருக்குத் தாமும் பாடவேண்டுமென்னும் அவர் உண்டாயிற்று. சில தனிப்பாடல்களைப் பாடி இவரிடம் காட்டித் திருத்திக்கொண்டார். பின்பு தெலுங்கு பாஷையில் வழங்கிவந்த குசேலோபாக்கியானத்தை மொழிபெயர்த்துச் செய்யுள் நடையில் இயற்றவேண்டுமென்று நினைத்தார். அதனைத் தெலுங்கிலிருந்து தமிழ் வசன நடையிற் பெயர்த்து வைத்துக்கொண்டு ஆரம்பித்தார். நூலொன்றைத் தொடர்ந்து பாடிக்கொண்டு போகும் ஆற்றல் அவருக்கு அப்போது இல்லாமையால் சில பாடல்களைப் பாடுவதற்குள் அவருடைய ஊக்கம் தளர்ந்துவிட்டது; தேகமும் மெலிந்து விட்டது.
அவர் அவ்வாறு குசேலோபாக்கியானத்தைப் பாடி வருவதையும் அதனைச் செய்வதனால் வருந்துவதையும் சிலராலறிந்த பிள்ளையவர்கள் அவரைக் கண்டபொழுது, “உங்களுக்குக் குசேலோபாக்கியானத்தைச் செய்யுளுருவத்திற் பார்க்க எண்ணமிருந்தால் ஓய்வு நேரங்களிற் பாடி முடித்து விடுகிறேன். நன்றாகப் பாடுதற்குப் பழகிக்கொண்டு பின்பு ஏதேனும் நூல் இயற்றலாம். இப்போது இதனை இம்மட்டோடே நிறுத்திவிட்டுக் கவலையின்றி இருங்கள்” என்று சொன்னார். ஆசிரியருடைய வார்த்தையை மறுத்தற்கஞ்சி அவர் அம் முயற்சியை நிறுத்தி விட்டார்.
ஆனாலும் அந்த நூல் செய்யப்படவில்லையேயென்ற குறை அவருக்கிருந்ததைக் குறிப்பாலறிந்த இக் கவிஞர் கோமான் அவர் பாடியிருந்த செய்யுட்களைத் திருத்தி அவருக்குக் காட்டிவிட்டு மேலே உள்ள பாகத்தை அவர் முன்பாகவே நாளொன்றுக்கு ஐம்பது செய்யுட்களுக்குக் குறையாமற் பாடிக் கொண்டே வந்து சில தினங்களில் முடித்தனர். இவர் பாடுங் காலத்தில் யாதொரு வருத்தமுமின்றிப் பாடுவதையும் வந்தவர்களோடு இடையிடையே பேசிக்கொண்டிருப்பதையும் அதனாற் பாடுதலுக்குச் சிறிதும் இடையூறில்லாமையையும் நேரே அறிந்த தேவராச பிள்ளை மிகவும் வியப்புடையவராகி, “ஐயா! நீங்கள் தெய்வப் பிறப்போ ! சாதாரண மனிதராக உங்களை நினைக்கவில்லை. சில பாடல்கள் செய்வதற்குள்ளே நான் பட்டபாடு தெய்வத்திற்கும் எனக்குமே தெரியும். இனிமேல் நான் உங்களிடத்தில் விசேஷ மரியாதையோடு நடப்பேன். இப்பொழுது தான் உங்களுடைய பெருமை எனக்குத் தெரியவந்தது. ஒரு பாட்டையாவது நீங்கள் திரும்பத் திருத்தச் சொல்லவில்லையே. நீங்கள் இவ்வளவையும் மனத்திலே யோசித்து முடித்துக்கொள்கிறீர்களே! ஒரு பாட்டெழுதுவதற்குள் நான் கிழித்த காகிதங்கள் எவ்வளவோ இருக்கும்!” என்று சொல்லிச் சொல்லி ஆனந்தமுறுவாராயினர்.
குசேலோபாக்கியானம் எளிய நடையில் அமைக்கப்பட்டுள்ளது. மற்ற நூல்களில் உள்ளவற்றைப் போல நாட்டுச் சிறப்பு நகரச்சிறப்பு முதலியன இதன்கண் விரிவாக இல்லை. சம்பாஷணைகளாக உள்ள பகுதிகள் மிக்க விரிவாகவும் வாசிப்பவர்களுக்கு மேன்மேலும் படிக்கவேண்டுமென்னும் உணர்ச்சியை உண்டுபண்ணுவனவாகவும் இருக்கின்றன. குசேலரது இல்வாழ்க்கைத் தன்மையும், அவருடைய வறுமை நிலையும், அவருடைய மக்கள் படும் பசித்துன்பமும், பொருளுடையார் இயல்பும், முயற்சியின் பெருமையும், குசேலர் மிக வருந்தித் துவாரகை சென்று சேர்வதும், அங்கே கண்ணபிரானது அரண்மனையின் வாயில் காவலர் அவரைக் கண்டு இகழ்ந்து கூறுவதும், துவாரபாலகருள் ஒருவர் உண்மை ஞானியரது தன்மையைக் கூறுதலும், குசேலர் உள்ளே சென்றவுடன் கண்ணபிரான் அவரை உபசரித்தலும், அவர் கொணர்ந்திருந்த அவலை உண்டலும், அவலை ஒரு பிடிக்குமேல் உண்ணாமல் உருக்குமிணிப்பிராட்டி தடுத்ததும், குசேலர் வெறுங்கையோடு அனுப்பப்பட்டபோது பல மகளிர் பலவிதமாகக் கூறுதலும், கண்ணன் பொருளொன்றுங்கொடாமல் வறிதே தம்மை அனுப்பியது நன்மையே என்று குசேலர் எண்ணித் திருப்தியுறலும், அவர் தம் ஊர்வந்து சேர்ந்து கண்ணன் திருவருளால் உண்டாகிய செல்வமிகுதியைக் காண்டலும், பிறவும் இனிய நடையில் அமைக்கப்பட்டுள்ளன. உலகியல்புகள் பல அங்கங்கே விளக்கப்பட்டிருக்கின்றன. நகைச்சுவையையுடைய செய்யுட்கள் பல இதன்கண் உண்டு. இறுதியிற் குசேலர் திருமாலைத் தோத்திரம் செய்வதாக உள்ள பகுதியில் பத்து அவதாரமூர்த்திகளுடைய பெருமைகளும் கூறப்பட்டுள்ளன. அவற்றுள் இராமாவதாரம், கிருஷ்ணாவதார மென்பவற்றைப்பற்றிய சரித்திரங்கள் சில செய்யுட்களிற் சுருக்கமாகச் சொல்லப்படுகின்றன. இந் நூலிலுள்ள சில செய்யுட்கள் வருமாறு :
இரத்தலின் இழிவு.
“பல்லெலாந் தெரியக் காட்டிப் பருவரன் முகத்திற் கூட்டிச்
சொல்லெலாஞ் சொல்லி நாட்டித் துணைக்கரம் விரித்து நீட்டி
மல்லெலா மகல வோட்டி மானமென் பதனை வீட்டி
இல்லெலா மிரத்த லந்தோ விழிவிழி வெந்த ஞான்றும்.”
குசேலருடைய மக்கள் உணவு முதலியவற்றை விரும்பிப் படும்பாடும் தாயின் துயரமும்.
“ஒருமகவுக் களித்திடும்போ தொருமகவு கை நீட்டு முந்தி மேல்வீழ்ந்
திருமகவுங் கைநீட்டு மும்மகவுங் கைநீட்டு மென்செய் வாளாற்
பொருமியொரு மகவழுங்கண் பிசைந்தழுமற் றொரு மகவு புரண்டு வீழாப்
பெருநிலத்திற் கிடந்தழுமற் றொருமகவெங் ஙனஞ்சகிப்பாள் பெரிதும் பாவம்.”
“அந்தோவென் வயிற்றெழுந்த பசியடங்கிற் றில்லையென அழுமா லோர்சேய்
சிந்தாத கஞ்சிவாக் கிலையெனக்கன் னாயெனப்பொய் செப்பு மோர்சேய்
முந்தார்வத் தொருசேய்மி சையப்புகும்போ தினிலொருசேய் முடுகி யீர்ப்ப
நந்தாமற் றச்சேயு மெதிரீர்ப்பச் சிந்துதற்கு நயக்கு மோர்சேய்.”
“அடுத்தமனைச் சிறானொருவ னின்றுநும தகங்கறியென் னட்டா ரென்று
தொடுத்துவினா யினனாலச் சொற்பொருள்யா ததுதானெச் சுவைத்தன் னாய்நீ
எடுத்துரையென் றிடுமழவுக் குரைப்பினது செய்யெனிலென் செய்வா மென்று
மடுத்தவஃ தறிந்திலே னெனமற்றொன் றுரைத்ததனை மறக்கச் செய்வாள்.”
“குண்டலமோ திரங்கடகஞ் சுட்டியயன் மனையார்தங் குழவிக் கிட்டார்
புண்டரிகக் கண்ணன்னே யெனக்குநீ யிடாதிருக்கும் பொறாமை யென்னே
கண்டெடுத்திப் போதிடெனக் கரைமதலைக் கில்லாதான் கடன்றந் தானுக்
கெண்டபச்சொல் வார்த்தையென நாளைக்கு நாளைக்கென் றியம்பிச் சோர்வாள்.”
செல்வத்தின் இழிவு.
“கோடிபொன் னளிப்ப னின்றே கோடிரோர் மாத்தி ரைக்குள்
ஊடிய கிளைக்கோர் வார்த்தை யுரைத்தடை குவனென் றாலும்
தேடிய கால தூதர் சிமிழ்த்தல்விட் டொழிவ ரேகொல்
வாடிய மருங்கு னங்காய் மாண்பொருட் பயன்கண் டாயோ.”
வாயில் காவலர் குசேலரை அவமதித்துக் கூறல்.
“வகுத்தபல் லுலகும் போற்ற மாற்றலர் கூற்றூர் மேவச்
செகுத்தர சாளுங் கண்ணச் செம்மலெங் கேநீ யெங்கே
இகுத்தபல் துவாரக் கந்தை யேழைப்பார்ப் பானே சற்றும்
பகுத்தறிந் திடலற் றாய்கொல் பயனின்மூப் படைந்தாய் போலும்.”
“சிவிகைமுன் னூர்தி வேண்டுஞ் செழும்பொருட் செலவு வேண்டும்
குவிகையே வலரும் வேண்டுங் கோலமார்ந் திருக்க வேண்டும்
கவிகைதாங் குநரும் வேண்டுங் கையுறை சிறப்ப வேண்டும்
அவிகையில் விளக்கம் வேண்டு மரசவை குறுகு வார்க்கே.”
அப்போது குசேலர் எண்ணுதல்.
“மின்செய்த மதாணி யாமுத் தாரமாம் விளங்கு பட்டாம்
பொன்செய்த வூர்தி யாமிப் போதியாம் பெறுவ தெங்கே
நன்செய னம்மூ தாதை நாளினுங் கேட்ட தின்றால்
என்செய்வா மெண்ணா தொன்றை யியற்றுத லென்றுந் தீதே.”
கண்ணபிரான் அவலை உண்டல்.
“முன்னுமிவ் வவலொன் றேனு முனைமுறிந் ததுவு மின்று
பன்னுமுட் டையுமின் றாகும் பட்டவங் கையும ணக்கும்
கொன்னும்வாய் செறிப்பி னம்ம குளமும் வேண் டுவதின் றென்னா
உன்னுபல் லுலகு முண்டோ னொருபிடி யவறின் றானே.”
மகளிர் கூற்று.
“எளியோன் பாவ மித்தனை தூர மேன்வந்தான்
அளியார் தேனே பாலே யெனவினி தாப்பேசிக்
களியா நின்றோர் காசும் மீயான் கழிகென்றான்
தெளியார் நல்லோ ரிவனுரை யென்றார் சிலமாதர்.”
சூத சங்கிதை இயற்றியது.
தேவராசபிள்ளையினுடைய ஆவலையறிந்த பிள்ளையவர்கள் அவ்வப்பொழுது செய்யுள் செய்யும் முறைகளையும் கருத்தை அமைக்கும் வழிகளையும் அவருக்குக் கற்பித்து வந்தனர். அவ்வாறு இவர் கற்பித்தமையால் தேவராச பிள்ளைக்கு ஊக்கமுண்டாயிற்று. நண்பர்கள் சிலருடைய தூண்டுதலினால் சூதசங்கிதையைத் தமிழில் வசன நடையாக மொழிபெயர்த்து வைத்துக்கொண்டு செய்யுள் நடையாக இயற்றத் தொடங்கினர். அதுவும் குசேலோபாக்கியானத்தின் செய்தியாகவே முடிந்தது. அதனால், பெரிய நூலாகிய அதனை நிறைவேற்றுவது அசாத்தியமென்று நினைத்து அதுவரையில் தாம் இயற்றியிருந்த பாடல்களைக் கிழித்தெறிந்துவிட்டார். ஆனாலும் செய்யக் கூடவில்லையே என்ற குறை அவருடன் போராடிக் கொண்டிருந்தது. அதனைக் கேள்வியுற்ற பிள்ளையவர்கள் அவரிடம் வலிந்து சென்று, “நீங்கள் இது விஷயத்திற் சிரமம் வைத்துக் கொள்ள வேண்டாம். இந்த அருமையான வேலையை என்னிடம் ஒப்பித்துவிடுங்கள். உங்கள் முன்னிலையிலேயே செய்து முடித்துப் பின்பு திரிசிரபுரம் செல்லுவேன்” என்று சொல்லி அவரிடம் இருந்த மொழிபெயர்ப்புவசனத்தைத் தாம் வாங்கி வைத்துக்கொண்டு பாட ஆரம்பித்துச் சில மாதங்களிற் செய்து முடித்தார்.
சூதசங்கிதையென்பது ஸ்காந்த புராணத்திலுள்ள ஆறு சங்கிதைகளில் ஒன்று. சிவமான்மிய காண்டம், ஞானயோக காண்டம், முக்தி காண்டம், எக்கியவைபவ காண்டமென்னும் நான்கு பிரிவுகளை உடையது; சிவபெருமானுடைய பலவகைப் பெருமைகளையும், பல தலவரலாறுகளையும், தீர்த்த வரலாறுகளையும், பல உபநிஷத்துக்களின் கருத்தையும் விளக்கிக் கூறுவது. சிவபிரான் புகழைப் பாடிப்பாடிச் சுவைகண்ட பிள்ளையவர்களுடைய அன்புப் பெருக்கு, சூதசங்கிதையில் நன்கு வெளிப்படும். தலவரலாறுகளைக் கூறுவதிலும், அவற்றைப் பலவகையாகச் செய்யுட்களிற் பொருத்தி அணி செய்வதிலும் இவருக்கு விருப்பம் அதிகம். ஆதலின் இந்நூலில் தலவரலாறுகள் கூறப்படும் இடங்களில் அத்தலப் பெயர்களைத் திரிபிலமைத்தல், அத்தலவிசேடங்களைச் சுருக்கி ஒரு செய்யுளிற் கூறல், அத் தலப்பெயர்க்கு ஏற்ற சந்தத்தை எடுத்தாளல் முதலியன காணப்படும். வஞ்சித் துறை போன்ற சிறிய பாட்டுக்களில் வரலாறுகளை விரைவாகக் கூறிக்கொண்டு போகும் இடங்கள் சில இதில் உண்டு. இந்நூலிலிருந்து சில பாடல்கள் வருமாறு:
மாங்கனியைக் குரங்கு உதிர்த்தல்.
“ஒற்றைமாங் கனிமெய் யடியவர்க் குதவி யும்பர்க்கு மரியநன் கதியை
உற்றசீ ரம்மை யார்தொழி னன்றென் றுவந்தெனப் பன்முசுக் கலைகள்
சொற்றவவ் வனத்திற் செற்றதே மாவிற் தூங்கிய தேங்கனி பலவும்
நற்றவச் சைவர் பெரியவர் கொள்ள நாடொறு நாடொறு முதிர்க்கும்.”
(புராண வரலாறு, 7.)
நாகங்கள்.
“பொறிய டக்கமும் போகுகா லின்மையும் பொருந்தி
நெறியின் 1வந்ததே யுண்டுகந் தரந்தொறு நிலவும்
குறிகொள் யோகியர் தந்நிகர்த் தாரெனக் குறித்துச்
செறியு மாமணிப் புறவிளக் கிடுஞ்செழும் பணிகள்.”
(ஞானயோகத்தை யுணர்ந்தவா றுரைத்த து, 20.)
வாரணவாசி (காசி)
"சீரணவா சிரியனருள் வழிநின்று செறிசென்ம
காரணவா சிரியவிரித் தருண்மேவுங் கருத்தினனாய்த்
தோரணவா சிகைமலியுஞ் சுடர்வீதி நெடுமாட
வாரணவா சியையடைந்து மாண்கங்கைத் துறைமூழ்கி.”
மடக்கு.
“மூவருக்கு மிளையான்றீ முயற்சியினு மிளையான்வெம்
பாவவினைத் திறமொழியான் படிறுகுடி கொளுமொழியான்
ஓவின்மறை யொழுக்கொருவி யுறுபொருள்கண் மிக்கீட்டி
யேவிகக்கு நெடுங்கண்விலை யேழையரில் லகத்திறுப்பான்.”
(அடியார் பூசாவிதியு மவரைப் போற்றினோர் பேறு முரைத்தது, 19, 27.)
துதி.
“மூவா முதலே முடியா முடிவே முக்கண்ணா
தேவா தேவர்க் கிறையே கறையேய் சீகண்டா
கோவா மணியே முத்தே யமுத குணக்குன்றே
ஆவா வடியே னாற்றே னுடையா யருளாயோ.”
(ஞானி பணிவிடைப் பேறு சொற்றது, 33.)
பங்களூரில் இருந்தபொழுது இவர், தம்முடன் வந்திருந்த தம் மாணவராகிய சோடசாவதானம் சுப்பராய செட்டியாரைக் கொண்டு தமிழருமையறிந்த சில பிரபுக்களின் முன்னிலையில் சில முறை அவதானம் செய்வித்துத் தக்க பொருளுதவி பெறச் செய்வித்தனர்.
திரிசிரபுரம் மீண்டது.
அப்பால் பிள்ளையவர்கள் திரிசிரபுரத்திற்கு வரவேண்டிய இன்றியமையாத காரியம் இருந்தமையால் ஊர் செல்ல வேண்டுமென்று தேவராச பிள்ளைக்குக் குறிப்பித்தனர். அது விஷயத்திற் சிறிதும் உடன்பாடில்லாத அவர் பிறகு ஒருவாறு உடன்பட்டு ரூபாய் ஐயாயிரமும் உயர்ந்த பீதாம்பரம் முதலியவைகளும் இவர் முன்னே வைத்துச் சாஷ்டாங்கமாக வந்தனம் செய்து, “இவற்றை அங்கீகரித்துக் கொள்ள வேண்டும். எப்பொழுதும் ஐயா அவர்கள் விஷயத்தில் கடப்பாடுடையேன்; நான் அவ்விடத்திற்கு அடிமை” என்று தம்முடைய பணிவைப் புலப்படுத்தி மிகவும் வேண்டினர். அதுவரையில் அத்தகைய தொகையைக் காணாதவராதலால் அதனை மிகுதியென்று இவர் எண்ணி அடைந்த வியப்பிற்கு அளவில்லை. தேவராச பிள்ளையினுடைய அன்புடைமையை நோக்கிய பொழுது கைம்மாறு கருதாமற் பாடஞ்சொல் லும் இயல்பினராகிய பிள்ளையவர்களுக்கு, ‘இவருக்கு நாம் யாது செய்வோம்?’ என்ற எண்ணம் உண்டானமையால் அவரை நோக்கி, “உங்களுடைய அன்பிற்கு நான் வேறு என்ன செய்யப் போகிறேன்? இங்கே நான் வந்தபின்பு உங்கள் உபகாரத்தால் முற்றுப்பெற்ற குசேலோபாக்கியானம், சூதசங்கிதை யென்னும் இரண்டையும் உங்களிடம் கொடுத்துவிடுகிறேன். உங்கள் பெயராலேயே இவற்றை அச்சிற் பதிப்பித்து வெளியிட்டுக் கொள்ளுங்கள். அங்ஙனம் செய்தால் தான் எனக்குத் திருப்தியாகவிருக்கும். தமிழ், ஸம்ஸ்கிருதம், தெலுங்கு முதலிய பாஷைகளிற் கவிகள் தாம் செய்த நூல்களை இவ்வாறு தங்களை ஆதரித்த பிரபுக்களின் பெயராலே வெளியிடுவது பழைய வழக்கந்தான். இதைப்பற்றித் தாங்கள் சிறிதும் யோசிக்கவேண்டாம். இல்லையாயின் நான் மிக்க குறையுடையவனாவேன். என்னுடைய இஷ்டத்தைப் பூர்த்திசெய்யவேண்டும்” என்று இரண்டு புத்தகங்களையும் அவர் கையிற் கொடுத்தார். அவர் ஒன்றும் விடை சொல்லத் தெரியாமல் பிரமித்து நின்றார். அவருக்கு அவற்றைத் தாம் பெற்றுக்கொள்வதில் விருப்பம் இல்லை; அஞ்சினார். பக்கத்தில் இருந்தவர்கள் இவருடைய குறிப்பையறிந்து அதை வாங்கிக் கொள்ளும்படி வற்புறுத்திப் பின்பு அவர் பொருட்டுத் தாங்களே வாங்கி வைத்துக் கொண்டனர்.
புறப்படுகையில் வேறு சில பிரபுக்களும் இவருக்குப் பொருளுதவி செய்தனர். அப்பால் பிரயாணத்திற்கு வேண்டிய செளகரியங்களெல்லாம் தேவராச பிள்ளையாற் செய்விக்கப் பெற்றன. இவர் மாணாக்கர்களுடன் ஸெளக்கியமாகத் திரிசிரபுரம் வந்து சேர்ந்தனர்.
பின்பு [2]அந்நூல்கள் தேவராச பிள்ளையைச் சார்ந்தவர்களால் அச்சிடப் பெற்றன. அச்சிடுவதற்கு முன் அச்செய்தி சிலரால் இவருக்குத் தெரிய வந்தது. இவர் தாமே சிறப்புப் பாயிரம் பாடிக் கொடுத்ததன்றித் தம் மாணவர்களையும் நண்பர்களையும் பாடிக் கொடுக்கச் செய்தனர். அந்நூல்களிரண்டும் அச்சிடப்பெற்றுத் தேவராச பிள்ளையின் பெயராலேயே உலாவி வரலாயின.
தேவராச பிள்ளை அடிக்கடி பிள்ளையவர்களுக்குக் கடிதம் எழுதி வருவார். ஒவ்வொரு கடிதத்தின் தலைப்பிலும் குருஸ்துதியாக ஒரு செய்யுள் எழுதுவதுண்டு. அவ்வாறு எழுதியவற்றுள் இரண்டு குருவணக்கமாகச் சூதசங்கிதையிற் சேர்க்கப்பட்டன. அவர் பின்பு செய்யுள் செய்யும் பயிற்சியை விருத்தி செய்து கொண்டு பல பிரபந்தங்களை இயற்றினார். அவற்றை அப்பொழுதப்பொழுது இவருக்கு அனுப்புவார். இவர் அவற்றைச்செப்பஞ் செய்து சிறப்புப்பாயிரம் பாடி அனுப்புவார். அவை அச்சுப் பிரதிகளிற் காணப்படும்.
-----------
[1] வந்ததே - காற்றையே, கிடைத்ததையே; சிலேடை.
[2] குசேலோபாக்யானம் பதிப்பிக்கப்பட்ட காலம் சாதாரண வருஷம் சித்திரை மாதம்; சூதசங்கிதை பதிப்பிக்கப்பட்ட காலம் இராக்ஷஸ வருஷம் கார்த்திகை மாதம்.
-------------
14. உறையூர்ப் புராண அரங்கேற்றமும் பல பிரபந்தங்களை இயற்றலும்.
பங்களூரில் மிகுந்த கெளரவமடைந்து வந்த செய்தியைக் கேட்டுத் திரிசிரபுரவாசிகளிற் சிலர் இவரிடம் வந்து, “உங்களுடைய கல்விப் பெருமையையும் மற்றைப் பெருமைகளையும் நாங்கள் அறிந்து கொள்ளாமற் போய்விட்டோம். அடிக்கடி பங்களூரிலிருந் து வருபவர்களால் உங்களுக்கு அங்கே நடந்த சிறப்புக்களையெல்லாம் அறிந்து மிகவும் சந்தோஷமடைந்தோம். உங்களால் எங்களுக்கும் இந்த நகரத்திற்கும் உண்டான கெளரவம் அதிகமே. ஆனால் முன்னமே நாங்கள் உங்களுடைய பெருமையை உள்ளபடி அறிந்து கொண்டு நாங்கள் செய்யவேண்டிய கடமைகளை நன்றாகச் செய்யாமலிருந்து விட்டோம். இனிமேல் நாங்கள் தவறமாட்டோம்” என்றார்கள். “எல்லாவற்றிற்கும் தாயான செல்வத்தின் திருவருளும் உங்களுடைய அன்புடைமையுமே காரணம்; வேறே எனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?” என்று பணிவுடன் இவர் விடை கூறினார். இங்ஙனமே சந்தோஷம் விசாரிப்பவர்களுக்கெல்லாம் விடை கூறிவந்தார்.
அப்பால் திரிசிராமலை திருவானைக்கா முதலிய ஸ்தலங்களிலுள்ள மூர்த்திகளுக்கு அபிஷேக அர்ச்சனைகள் செய்வித்தும் முன்னமே தாம் வாங்கியிருந்த கடன்களைத் தீர்த்தும் மாணாக்கர்களில் ஏழைகளாக உள்ளவர்க்கு நன்கொடையளித்தும் விவாகம் ஆகாதவர்களுக்கு விவாகம் செய்வித்தும் தம்மிடம் இல்லாத ஏட்டுச் சுவடிகளை விலைக்கு வாங்கியும் பங்களூரிலிருந்து தாம் கொணர்ந்த திரவியத்தை மெல்ல மெல்ல நாளடைவிற் செலவு செய்து விட்டனர்.
உறையூர்ப் புராண அரங்கேற்றம்.
பங்களூரிற் பாடி முடித்த உறையூர்ப்புராணத்தை அரங்கேற்றவேண்டும் என்று யாவரும் கேட்டுக்கொண்டார்கள். அவ்வாறே அதற்குரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கோயிலைச் சார்ந்த இடமொன்று மிக்க அலங்காரங்களமைந்த பந்தருடனும் மேற்கட்டிகளுடனும் அமைக்கப்பெற்றது. பல வித்துவான்களும் தமிழருமையறிந்த கனவான்களும் சைவச் செல்வர்களும் கூடியிருந்த கூட்டத்தின் நடுவே இருந்து பிள்ளையவர்கள் புராணத்தை அரங்கேற்ற ஆரம்பித்தனர். அதில் உள்ள நாட்டுச் சிறப்பைக் கேட்டு மகிழ்ந்தோர் சிலர்; நகரச் சிறப்பைக் கேட்டு மகிழ்ந்தோர் சிலர்; நகரப்படலத்திலுள்ள சாதி வருணனையைக் கேட்டுச் சந்தோஷத்தோர் சிலர். அதில் ஓரிடத்திற் கூறப்பட்டுள்ள நரக வருணனையைக் கேட்டுக்கொண்டே வந்த அக்கோயில் தருமகர்த்தர் கண்ணீர் விட்டுக்கொண்டே கேட்டனரென்பர்.
அப்பால் அப்புராணம் செவ்வனே அரங்கேற்றப் பெற்று நிறைவேறியது. எல்லோருங்கூடிச் சிறந்த பூஷணங்களும் பொன்னாடைகளும் பொருளும் பிள்ளையவர்களுக்கு ஸம்மானம் செய்தார்கள்.
[1] உறையூர்ப் புராண அமைப்பு.
காப்பிய உறுப்புக்களெல்லாம் அமையப் பாடவேண்டுமென்றெண்ணித் தொடங்கிய தியாகராச லீலையானது முற்றுப்பெறாமற் போகவே இக் கவிஞர் கோமான் மனக்குறையுள்ளவராகவே இருந்தார். அக்குறை உறையூர்ப் புராணம் பாடியதால் தீர்ந்து விட்டது. மலை, நாடு, நகர், ஆறு முதலியன நன்கு புனைந்து கூறப்பட்டுள்ளதன்றி இப்புராணத்தில் சூரியோதயம், சூரியாஸ்தமனம், சந்திரோதயம், மணம் முதலிய பலவகையான காப்பிய உறுப்புக்கள் அமைந்துள்ளன. சிவபெருமான் தோத்திரங்கள் பல வகையில் இடையிடையே அமைந்து அன்பைப் பெருகச் செய்கின்றன.
அவையடக்கம் மிக அழகாக அமைந்துள்ளது. நூற்பாயிர உறுப்பில், நூலினுள் வரும் செய்திகளைப் பலவகையில் எடுத்தாளுதல் சிறந்த கவிஞர்களின் மரபு; அதனைப் பின்பற்றி இக் கவிஞரும் அவையடக்கச் செய்யுட்களுள் ஒன்றில்,
[2] “உயர்குண நிறத்தி னோடு மற்றைய குணங்கட் குள்ள
பெயர்வறு நிறங்க ளுந்தன் மேனியிற் கொண்ட பெம்மான்
உயர்வுறு பெரியோர் சொற்ற வொண்சுவைப் பாட லோடு
பெயர்வறு சிறியேன் சொற்ற பாடலும் பெரிது கொள்வான்”
என இத்தலத்திற் சிவபெருமான் பஞ்சவர்ணம் கொண்ட வரலாற்றை எடுத்துக் கூறுகின்றார்.
சோழ நாட்டைச் சிறப்பிக்கையில் அது தேவலோகத்தினும் சிறந்ததென்னும் கருத்துப் புலப்பட,
“அறவினைப் போக மூட்டி யமைத்தநா ளொழிந்த ஞான்றே
திறமிறக் கீழே தள்ளுந் தெய்வநாட் டினைப்போ லாது
பெறலறுந் தரும் மூட்டிப் பிறங்குதற் சார்ந்து ளோரை
நிறமரு வுறமே லேற்று நிலையது சோழ நாடு”
என்று கூறுவதில் இவருடைய தேசாபிமானம் புலப்படுகின்றது.
ஐந்திணை வளங்களையும் ஒப்புயர்வின்றிச் சிறப்பித்துச் சொல்லும் இப் பெருங்கவிஞர் நெய்தல் வளம் சொல்லும்பொழுது, அந்நிலத்து வாழ்வார் தம் தெய்வமாகிய வருணனை வழிபடும் முறையொன்றை அறிவித்துள்ளார்:
“நீடு தம்வலை வளம்பொலி தரநிகழ் சுறவக்
கோடு நாட்டுபு பரதவர் தொழுந்தொறுங் குறைதீர்த்
தாடு சீர்ப்புன லிறையவ னாட்சிகொண் டமரும்
பாடு பெற்றது கானல்சூழ் பரப்புடை நெய்தல்.”
இதிற் கூறப்பட்ட செய்தி பண்டை நூல்களிற் காணப்படுவது.
திருநகரப் படலத்தில்,
"செந்தமி ழருமை நன்கு தெரிபவர் தெரிதற் கேற்ப
முந்திநற் பொன்பூ ணாடை முகமனோ டுதவ வல்லார்
அந்தமில் புகழ்வே ளாள ரணிமறு கியல்பென் சொற்றாம்” (85)
என்ற செய்யுள் இவருடைய தமிழருமையை நன்கறிந்து பாராட்டி ஆதரித்த உறையூர்ச் செல்வர்களை நினைந்து பாடப் பெற்றிருத்தல் வேண்டும். தங்களை ஆதரித்துப் போற்றியவர் பெயர்களைப் புலவர்கள் தாம் செய்த நூல்களில் நல்ல இடத்தில் வைத்துப் பாராட்டும் மரபு பண்டைக் காலம் முதலே இருந்து வருவதன்றோ ?
புராணத்திற் கூறப்படும் வரலாறுகள் அந்த அந்த இடங்களுக்கேற்ற மன உணர்ச்சியை எழுப்பத் தக்க சொற்பொருளமைதியுடன் விளங்குகின்றன. திருப்பராய்த்துறை யென்னுந் தலத்தில் சிவபெருமான் திருக்கோயிலில் தரிசனம் செய்யவந்த சிலருடன் ஒரு வணிகனும் வந்து நின்றான். அக்கோயிலிலுள்ள ஆதிசைவர் வழக்கம்போல் யாவருக்கும் திருநீறு வழங்கினார். அதனைப் பிறர் பக்தியுடன் பெற்று அணிந்து கொண்டனர். வணிகன் கீழே சிந்திவிட்டான். அதனைக் கண்ட ஆதிசைவர் அஞ்சிச் சினந்து கூறுவதாக உள்ள ஒரு பகுதி சிவத்துரோகத்தின் பயனை நன்கு அறிவிக்கின்றது.
"நீற்றைச் சிந்தினை யல்லையிந் நிகழ்பவத் தடையும்
பேற்றைச் சிந்தினை யறவினை யுளனெனப் பேசும்
கூற்றைச் சிந்தினை யிவணடைந் துறுசுகங் குலவும்
ஆற்றைச் சிந்தினை சிந்தினை நின்றிரு வனைத்தும்” (வில்வாரணியப். 12)
என்று ஆதிசைவர் சொல்லுவதாக அமைந்த செய்யுள் அவர் உள்ளத்தெழுந்த சினத்தையும் இரக்கத்தையும் ஒருங்கே தெரிவிக்கின்றது.
உதங்கமுனிவரென்பவர் உறையூரை நோக்கி வரும்பொழுது பல தலங்களைத் தரிசித்து வந்ததாகச் சொல்லப்படும் பகுதி அத்தலங்களின் வரலாற்றைச் சுருக்கமாகவும் அழகாகவும் புலப்படுத்துகின்றது:
“அனைபோலு நல்லானை யடையாரிற் புல்லானை
வினையாவு மில்லானை விளங்குமறைச் சொல்லானைப்
புனைமேரு வில்லானைப் புரிசடையிற் செல்லானை
எனையாள வல்லானை யெழிற்காஞ்சி யிடைப்பணிந்தான்”
“அடுபுலித்தோ லுடையானை யனைத்துலகு முடையானை
வடுவில்களங் கரியானை மாலயனுக் கரியானை
படுபுனன்மா சடையானைப் பவமெனுமா சடையானை
நெடுமணிப்புற் றுறைவானை நிறைவானைப் பூசித்தான்.”
(உதங்கமுனி பொலிவடைந்த படலம், 82, 102.)
பஞ்சவர்ணப் படலத்தில் உறையூர்ச் சிவபெருமான் உதங்க முனிவருக்கு ஐந்து வர்ணமுடைய திருக்கோலத்தை ஐந்து சாமங்களிற் காட்டியருளிய செய்தி சொல்லப்படுகிறது. இப்பகுதியில் சிவபெருமான் தமக்குக் காட்டியருளிய ஒவ்வொரு திருக்கோலத்தையும் தரிசித்து இன்புற்ற உதங்க முனிவர் அவ்வக்கோலத்தைச் சிவபெருமான் கொண்டதற்குப் பலவகைக் காரணங்களைக் கூறுவதாக இந்த வித்தாரகவி அமைத்துள்ளனர்.
படிக உருவத்தைக் கண்டு உதங்க முனிவர் கூறுதல்.
“வெள்ளிய மால்வரை வெள்ளிய மால்விடை வெண்டும்பை
வெள்ளிய வான்மதி வெள்ளிய வான்புனல் வெண்ணீறு
வெள்ளிய வார்குழை கொண்டு விளங்குறு தற்கேற்ப
வெள்ளிய மாபடி கத்துரு வாயினை மேலோயே.” (பஞ்சவர்ணப் படலம், 65.)
சூரவாதித்தன் என்னுமரசன் உறையூரைத் தலைநகராக ஆக்கியதும், வேட்டை மேற் சென்று காந்திமதி யென்னும் நாக கன்னிகையைக் கண்டு காதல் கூர்ந்து மணஞ்செய்ததும், பிறவும் சூரவாதித்தப் படலத்திற் சொல்லப்படுகின்றன. காந்திமதியின் கேசாதிபாத வருணனை சிறந்த உவமை முதலிய அணிகளுடன் காணப்படும். சந்திரோதயம், சந்திரோபாலம்பனம் முதலியன இப் படலத்தில் வந்துள்ளன.
சந்திரோதயம்.
“வாத வூரர் தில்லைநகர் மருவிப் பிடகர் வாய்மூடக்
காத லொருபெண் வாய்திறப்பக் கடவு ளருளாற் செய்ததெனச்
சீத மதியம் வான்மருவிச் செழுந்தா மரைகள் வாய்மூடத்
தாத வாம்பல் வாய்திறப்பத் தண்ணங் கதிராற் செய்ததே.”
சந்திரோபாலம்பனம்.
“ஒருபா தலத்து வந்தவெழிற் காந்தி மதியென் னுள்புகுந்து
பொருபான் மையரின் வருத்துமது போதா தென்று மீதலத்து
வருபா னிறத்த செழுங்காந்தி மதியே வெளிநீ வருத்துவையால்
இருபா லஞரா லுள்ளுறவும் வெளியே கவுமென் னுயிரஞ்சும்.” (சூரவாதித்த. 153, 161.)
பகைவரும் போற்றல்.
பிள்ளையவர்கள் பங்களூர் சென்றுவந்ததை அநேகர் பாராட்டி வந்தாலும் இவருக்கு அங்கே கிடைத்த ஸம்மானம் அதிகமென்றும், 'ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூச் சர்க்கரை' என்பது போலக் கன்னட தேசத்திற் சென்று இவர் பாராட்டப் பெற்றது ஒரு கெளரவமாகாதென்றும் சில பொறாமைக்காரர்கள் அங்கங்கே சொல்லித் திரிந்தனர். அவர்கள் இவர் இவ்வுறையூர்ப் புராணத்தை அரங்கேற்றிய பொழுது பதசாரங்கள் சொல்வதையும் விஷயங்களைத் தக்க மேற்கோள்களைக் காட்டி விளக்குவதையும் இவருக்குள்ள நூலாராய்ச்சியின் விரிவையும் அப்புராணத்தில் இவர் அமைத்துள்ள நயங்களையும் கேட்டு ஆனந்தமடைந்து தங்கள் எண்ணங்களையெல்லாம் மாற்றி, “பங்களூரிற் பெற்ற பரிசிற்கு இவர் பாத்திரரே. இன்னும் எவ்வளவு வேண்டுமாயினும் கொடுக்கலாம். இவருடைய புலமை அகன்றும் அறிவரிதாயும் விளங்குகின்றது” என்று வியந்து தங்கள் பொறாமைக் குணத்தைப் போக்கிக்கொண்டனர்.
வித்துவானென்னும் பட்டம் பெற்றது.
இவருடைய சிறந்த கல்வியாற்றலையறிந்த பல வித்துவான்களும் பிரபுக்களும் இவருக்கு ஏதேனும் ஒரு பட்டம் அளிக்க வேண்டுமென்று தம்முள்ளே நிச்சயித்தார்கள். ஒவ்வொருவரும் தத்தமக்கு அந்த அபிப்பிராயம் நெடுநாளாக இருந்ததாகவும் யாரேனும் ஒருவர் தொடங்கினால் தாமும் அக்கருத்தை ஆதரிக்க வேண்டுமென்று எண்ணியதாகவும் கூறித் தம்முடைய உடன்பாட்டைத் தெரிவித்தனர். பின்பு நல்ல நாளொன்றில் ஒரு மகாசபை கூட்டி இவருடைய கல்வித் திறமையைப் பற்றிப் பேசி இவருக்கு வித்துவானென்ற பட்டத்தை அளித்து அதற்கு அறிகுறியாகச் சால்வை முதலிய மரியாதைகளையும் செய்தார்கள். அதுமுதல் இவரை வித்துவான் பிள்ளையவர்களென்றே குறிப்பித்து வரலானார்கள். அதன் பின்பு பதிப்பிக்கப்பெற்ற குசேலோபாக்கியானத்தில் இவர் பெயருக்கு முன்பு 'வித்துவான்' என்பது காணப்படும்.
[3] காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்.
திருவானைக்கா அகிலாண்ட நாயகி பிள்ளைத்தமிழ் எல்லோராலும் நன்கு மதிக்கப்பெற்று உலாவிவருவதையும் இவர் திருத்தவத்துறைப் பெருந் திருப்பிராட்டி பிள்ளைத்தமிழ் இயற்றியிருப்பதையும் அறிந்த அன்பர்கள் உறையூர் ஸ்ரீ காந்திமதியம்மை மீது ஒரு பிள்ளைத்தமிழ் இயற்றவேண்டுமென்று கேட்டுக்கொள்ள, அவ்வாறே வழக்கப்படி செய்து முடித்து ஸ்ரீ காந்திமதியம்மையின் சந்நிதியில் அரங்கேற்றினர். அங்கே வந்திருந்த வித்துவான்கள் அந்நூலை மிகவும் பாராட்டிச் சிறப்புப் பாயிரங்களால் தங்கள் நன்மதிப்பைப் புலப்படுத்தினார்கள். அந்தச் செய்யுட்களுள்,
“தூமேவு திருமூக்கீச் சரப்பஞ்ச வன்னேசச் சோதி பால்வாழ்
ஏமேவு திருக்காந்தி மதிபிள்ளைத் தமிழமிழ்த மெமக்கீந் தானால்
நாமேவு தமிழ்ப்புலமைக் கோரெல்லை யாயுறைந்த நல்லோன் வல்லோன்
மாமேவு சிரகிரிவாழ் மீனாட்சி சுந்தரநா வலவ ரேறே”
என்னும் செய்யுள் மட்டும் கிடைத்தது. அந்நூலை அரங்கேற்றி வருகையிற் பொறாமையால் துராட்சேபஞ் செய்து குழப்பி விடுகிறதென்று நினைந்து சிலர் வரப்போவதாகக் கேள்வியுற்ற சிரஸ்தெதார் செல்லப்பா முதலியாரென்பவர் தக்கவர்களைக் கொண்டு முதலில் அங்ஙனம் நடைபெறாமற் செய்ததன்றிப் பின்னும் அன்னோர் ஒருவரும் வாராமல் தக்க பாதுகாப்பையும் செய்வித்தனர்.
அதனை அரங்கேற்றிய பின்பு பல கன தனவான்களால் இவருக்குத் தக்க ஸம்மானங்கள் அளிக்கப்பட்டன. ஒருவர் விலையுயர்ந்த கடுக்கனும் மோதிரமும் வழங்கினார்.
அந்நூல் விரோதிகிருது வருடம் (1852) வைகாசி மாதம் அச்சிற் பதிப்பிக்கப்பெற்றது.
கற்குடிமாலை.
சிலருடைய வேண்டுகோளுக்கிணங்கி எறும்பீச்சரம் வெண்பா வந்தாதி, திரிசிரபுரத்துள்ள கீழைச் சிந்தாமணி தண்டபாணி பதிற்றுப்பத்தந்தாதி, திருக்கற்குடிமாலை முதலியன செய்யப்பட்டு அங்கங்கே உரியவர்கள் முன்னிலையில் அரங்கேற்றப்பட்டன. அவற்றுள் எறும்பீச்சரம் வெண்பாவந்தாதியில் ஒரு செய்யுளின் பகுதியாகிய, “கூடல்வளை, விற்றானை மேருமலை வில்லானை” என்பது மட்டும் ஞாபகத்தில் இருக்கின்றது.
[4]கற்குடிமாலை எளிய நடையில் அமைந்தது. இந்நூலுள், திருக்குறட் பாக்களின் கருத்து 9, 65, 91-ஆம் செய்யுட்களிலும், திருவுந்தியார் திருக்களிற்றுப் படியாரென்பவற்றின் கருத்துக்கள் 10,11-ஆம் செய்யுட்களிலும், திருவாசகத்தின் கருத்துக்கள் 87, 98-ஆம் பாடல்களிலும், பெரிய புராணத்தின் கருத்து 89-ஆம் செய்யுளிலும், பழமொழிகள் 4, 19-ஆம் செய்யுட்களிலும், திருவிளையாடற் புராணத்தின் கருத்து 16-ஆம் செய்யுளிலும், நாயன்மார்களுடைய அருஞ்செயல்கள் 17, 27, 34-5, 47, 72-3, 84ஆஞ் செய்யுட்களிலும், யாப்பருங்கலக் காரிகையின் கருத்து 77ஆம் பாடலிலும், சிலேடை 12, 44-ஆம் செய்யுட்களிலும், அகப் பொருளிலக்கணச் செய்தி 43-ஆம் பாடலிலும், ஒருவகைக் கற்பனை நயங்கள் 21-2- ஆம் பாடல்களிலும், உலோபிகளுடைய செயல் 94-ஆம் பாடலிலும், பிரார்த்தனைகள் 23, 80-ஆம் பாடல்களிலும் மிக அழகாக அமைந்துள்ளன. இதிலுள்ள சில பாடல்கள் வருமாறு:-
"புண்ணிய வடிவாம் வேடர்தம் பிரானார் பொன்னடித் தாமரைச் செருப்பு
மண்ணிடைத் தோய வேட்டஞ்செய் நாளவ் வழிப்புலாய்க் கிடப்பினு முய்வேன்
எண்ணுவ தினியா திமையவ ருலக மிறுதிநா ளழிவது நோக்கிக்
கண்ணகன் குடுமி மதியினா னகைக்குங் கற்குடி மாமலைப் பரனே.”
“மறையவர் திருவை வைதிகர் துணையை வருபர சமயகோ ளரியைக்
குறைவிலா வமுதைக் காழியுண் ஞானக் கொழுந்தினைத் துதிக்குமா றருள்வாய்
நறைகம ழலங்கற் கதுப்பரம் பையர்க ணன்குமைத் திலகந்தீட் டுதற்குக்
கறைதபு சுனைக ளாடியிற் பொலியுங் கற்குடி மாமலைப் பரனே.” (6, 48.)
[5] வாட்போக்கிக் கலம்பகம்.
இவர் ஒருமுறை இரத்தினகிரியென வழங்கும் வாட்போக்கி யென்னுந் தலத்திற்குச் சென்று ஸ்வாமி தரிசனம் செய்தார். அப்பொழுது அந்தத் தலத்தின் அடியவர்களாகவுள்ள பன்னிரண்டாஞ் செட்டிமார்களிற் பலர் விரும்ப, அந்தத் தலவிஷயமாக ஒரு கலம்பகம் இவராற் பாடப்பெற்றது. அது ‘வாட்போக்கிக் கலம்பகம்’ என வழங்கும். அத் தலத்தின் பெயர்களாகிய வாட்போக்கி, அரதனாசலம், சிவாயமென்பவைகளும், ஸ்வாமியின் திருநாமங்களாகிய வாட்போக்கி, முடித்தழும்பர், இராசலிங்கர், மலைக்கொழுந்தென்பவைகளும், அம்பிகையின் திருநாமமாகிய சுரும்பார்குழலி யென்பதும், சத்த கன்னியர் வழிபட்டு இறைவன் கட்டளையால் இங்கே தங்கியிருப்பதும், வயிரப்பெருமாளென்னும் தெய்வம் இத்தலத்தைப் பாதுகாத்துக்கொண்டிருத்தலும், இடி பூசை செய்ததும், ஆரியவரசன் வெட்டினமையாலுண்டான வாளின் தழும்பு இறைவன் திருமுடியிலிருத்தலும், ஓரிடையன் அபிஷேகத்திற்காகக் கொண்டுவந்த பாற்குடத்தைக் கவிழ்த்த காகம் எரிக்கப் பெற்றதும், ஆரியர் திருமஞ்சனம் கொண்டுவருதலும், காக்கையின் செய்தியைப் புலப்படுத்த அதன் வடிவம் அக் குடங்களில் அமைக்கப் பெற்றிருத்தலும், சிவநேசச் செல்வர்களும் தம்முடைய பொருள் வருவாயுட் பன்னிரண்டு பங்கில் ஒருபங்கை இறைவனுக்கு அளித்துவருபவர்களுமாகிய பன்னிரண்டாஞ் செட்டிமார்களின் அருமைச் செயலும் உரிய இடங்களிற் செவ்வனே இந்நூலுள் அமைக்கப் பெற்றுள்ளன.
கலம்பகத்திற்குரிய உறுப்புக்கள் எவ்வளவு செவ்வையாக அமையவேண்டுமோ அங்ஙனமே இதில் அமைந்து விளங்குகின்றன. இதிலுள்ள கூத்தராற்றுப் படையகவலில், இத்தலத்தையடைந்து வழிபட்டுப் பெருஞ்செல்வமடைந்து தன்னிடம் செல்லும் ஒரு கூத்தன், வறுமையால் துன்புற்றுத் தன்னை யாசித்த மற்றொரு கூத்தனை நோக்கி, இத்தலத்தை யடையும் முன்னம் தான் அடைந்திருந்த வறுமைத் துன்பத்தைக் கூறும் பகுதி படிப்பவர்களுடைய மனத்தையுருகச் செய்யும். இந்நூலிலுள்ள,
“தழுவுமையான் முன்னுந் தமிழிறையாற் பின்னும்
தொழுமிறையான் மேலுஞ் சுவடு - கெழுமுவகீழ்
இன்றா லெனுங்குறைபோ மென்மனஞ்சேர் வாட்போக்கி
அன்றா லமர்ந்தா யடி” (7)
என்ற செய்யுளில், தொழும் இறையால் மேலும் சுவடு கெழுமியதாகச் சொல்லியது இத்தலவரலாறாகும். 'உமையினால் முன்னும், பாண்டிய அரசனாற் பின்னும், ஆரிய அரசனால் மேலும் சுவடுகள் உண்டாயின; கீழே மட்டும் சுவடு இல்லை; என்னுடைய கல்லைப் போன்ற நெஞ்சில் தேவரீருடைய திருவடிகளைச் சேர்ப்பின் அக் குறை நீங்கும்' என்பது இச் செய்யுளின் பொருள்.
இந் நூலிலுள்ள வேறு சில நயமுள்ள பாடல்கள்:
“குறையின்மா ணிக்கமலை வெள்ளிமலை நாளுங்
குலவுசோற் றுத்துறைபாற் றுறைநெய்த்தா னமுநீர்
உறையில்கரச் சிலையம்பொன் வரைநெடுமான் முதலோர்க்
குறுபோகங் கொடுப்பதுநுந் திருவருள்பா லுறைவாள்
கறையிலறம் பலவளர்ப்பா ளொருதோழ னிதிக்கோன்
கரையில்பொருட் பங்களிப்பார் கனவணிக ருளர்நீர்
முறையிலெலும் பாதியணிந் தையமேற் றுழல்வீர்
முடித்தழும்பீ ரிதுதகுமோ மொழிமினடி யேற்கே.” (15)
வண்டு விடு தூது.
“இன்று பைங்கிளியை யேவி னம்மைகை இருக்கு மோர்கிளியொ டுரைசெயும்
எகின நேடியறி யாத தேமுடிமுன் எங்ங னின்றுசெவி யருகுறும்
ஒன்று மங்குலரு குறின்வ ளைத்திவையொ டுறுதி யென்றுசடை சிறைசெயும்
உறுக ருங்குயிலொர் செவிலி பட்டதை உணர்ந்த தேசெலவு ளஞ்சிடும்
துன்று தென்றலெதிர் சென்றி டிற்கடிது தோள்கொள் பூணிரையெ னக்கொளும்
துச்சி லல்லவென வண்டு வாழ்செவி துனைந்து சேரும்வலி யார்க்குள
தன்று தொட்டெனது கொண்டை வாழும்வரி வண்டிர் காண்மய லடங்கவும்
அரத னாசல ரிடத்து ரைத்தவர் அணிந்த மாலைகொணர் மின்களே.” (26)
பிள்ளையவர்கள் இயற்றிய கலம்பகங்களில் இது முதலாவதாகும். இவர்கள் சொல்ல இந் நூலை அப்பொழுதப்பொழுது எழுதிவந்தவர் சி. தியாகராச செட்டியார்.
-------------
[1] இந்நூல் தியாகராச செட்டியாரால் விஷு வருஷம் ஆனி மாதம் பதிப்பிக்கப்பட்டது.
[2] உயர்குணமென்றது சத்துவத்தை; அதன் நிறம் வெண்மை.
[3] ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத்திரட்டு, 276-387.
[4] ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத்திரட்டு, 2810 - 2914. மற்ற இரண்டு நூல்களும் கிடைக்கவில்லை.
[5] ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டு, 947-1048.
------------
15. இலக்கண விளக்கம் பாடங்கேட்டது.
இலக்கண விளக்கம் கேட்க விரும்பியது.
பிள்ளையவர்கள் பல மாணாக்கர்களுக்குப் பாடஞ் சொல்லியும் பல நூல்களை இயற்றியும் வந்த காலத்திலுங்கூடத் தாம் அறியாத விஷயங்களை யாரேனும் சொல்வார்களாயின் அன்புடன் கேட்பது வழக்கம். இலக்கண இலக்கிய நூல்கள் பலவற்றை இடைவிடாமற் பயின்று வந்தாலும் ஒவ்வொரு நூலையும் உரையையும் பரம்பரைக் கேள்வியினாலறிந்துகொண்டவர்களிடத்து அவர்கள் விருப்பப்படி ஒழுகியேனும் பொருளுதவி செய்தேனும் கேட்கவேண்டியவற்றைக் கேட்டுத் தெளிந்து கொள்வார். ஐந்திலக்கணங்களும் ஒருங்கேயமைந்ததும் குட்டித் தொல்காப்பியமென வழங்கப்படுவதும் சைவ வித்துவானால் இயற்றப்பெற்றதுமாகிய இலக்கண விளக்கத்தை உரையுடன் பெற்று அதனை ஆராய்ந்து பலமுறை படித்தார். படித்தும் அதிற் சிலசில இடத்துள்ள கருத்து விளங்கவில்லை. பல மேற்கோட் செய்யுட்களுக்குப் பொருள் தெரிய வில்லை. ஆதலால் அதனை முறையே பாடங்கேட்டுத் தெளியவேண்டுமென்னும் எண்ணம் இவருக்கு உண்டாயிற்று.
கீழ்வேளூர்ச் சுப்பிரமணிய தேசிகரிடம் பாடம் கேட்டல்.
உண்டாகவே அதனைப் பாடஞ் சொல்லும் திறமையுடையவர், அந் நூலாசிரியராகிய திருவாரூர் வைத்தியநாத தேசிகரிடம் கற்றுத்தேர்ந்த மாணாக்கர் பரம்பரையைச் சேர்ந்தவரான கீழ் வேளூர்ச் [1]சுப்பிரமணிய தேசிகரென்று விசாரித்தறிந்தார். பின்பு, மிகமுயன்று அவரைக் கையுறைகளுடன் போய்த் தரிசித்துத் தம்முடைய குறிப்பைத் தெரிவித்தார். அப்பால் அவருடன் இருக்கும் ஒருவரைத் தனியே அழைத்து, “பாடங் கேட்பேனாயின் இவர்களுக்கு நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டார். அவர், “ஐயா அவர்களை ஆறு மாதத்திற்குக் குறையாமல் வைத்திருந்து மாதம் ஒன்றுக்கு இருபது ரூபாயாவது அவர்கள் செலவுக்குக் கொடுக்கவேண்டும். பாடம் கேட்டாலும் கேளாவிட்டாலும் சொன்னபடி கொடுத்து விடவேண்டும். ஆறு மாதத்திற்குப் பின் ஏதாவது தக்க ஸம்மானம் செய்யவேண்டும். அவர்களுடைய கைக்குறிப்புப் புத்தகத்துள்ள மாணாக்கர்களின் பெயர் வரிசையில் உங்களுடைய பெயரை மாணாக்கரென்பது புலப்பட உங்கள் கையினாலேயே எழுதிவிடவேண்டும். மூன்று மாதத்தின் தொகையை முன்னதாகக் கொடுத்து விடவேண்டும். பாடங் கேட்கும்போது ஆஸனப் பலகையில் அவர்களை இருக்கச்செய்து மரியாதையாகக் கேட்கவேண்டும்” என்று சொன்னார். இவர் அங்ஙனமே செய்வதாக அவரிடஞ் சொல்லிப் பிரயாணச் செலவிற்குப் பணம் கொடுத்து விட்டு, “திரிசிரபுரம் எழுந்தருளவேண் டும்” என்று தேசிகரிடம் சொல்லித் தாம் முன்னர் வந்துவிட்டார். பிறகு குடும்பத்துடன் தேசிகர் இருத்தற்கு ஒரு தனி விடுதியை அமைத்து, வரவேண்டுமென்று அவருக்கு விண்ணப்பப் பத்திரிகையொன்றை யனுப்பிவிட்டு அவர் வரவை இவர் எதிர்பார்த்திருந்தனர். குறிப்பிட்ட காலத்தில் சுப்பிரமணிய தேசிகர் வந்துசேர்ந்து அவ் விடுதியில் தங்கினார்.
அப்பொழுது முன் வாக்குத்தத்தம் செய்தபடி அவருக்கு மாதவேதனம் கொடுப்பதற்குக் கையிற் பொருளில்லாமையால், காந்திமதியம்மை பிள்ளைத்தமிழை அரங்கேற்றிய காலத்தில் தமக்குக் கிடைத்த கடுக்கன் ஜோடியைக் கழற்றி விற்று ஆறு மாதத் தொகையையும் முன்னதாகக் கொடுத்தனர். அவரை உயர்ந்த ஆஸனத்தில் இருக்கச் செய்து தாம் கீழேயிருந்து அவர் கொடுத்த கைப்புத்தகத்திலுள்ள மாணாக்கர் பெயர் வரிசையில் தம்முடைய பெயரையும் வரைந்து கொடுத்துவிட்டுப் பாடங்கேட்கத் தொடங்கினார். அதிற்கேட்கவேண்டிய பாகங்களையெல்லாம் சில மாதங்களிற் கேட்டு முடித்துவிட்டு அப்பால் திருக்குறள் பரிமேலழகருரை, யாப்பருங்கலக்காரிகை உரை, நன்னூல் விருத்தியுரை இவைகளிலுள்ள உதாரணச்செய்யுட்களுக்குப் பொருளும் பிறவும் கேட்டுத் தெளிந்தார்; ‘இவ்வளவு தெளிந்த பயிற்சியுள்ள பெரியவரிடத்தே பாடங்கேட்கும்படி நேர்ந்தது நம்முடைய பாக்கியம்’ என எண்ணி மகிழ்ந்தார். இலக்கண விளக்கமூலமானது பழைய இலக்கண நூல்களாகிய தொல்காப்பியம், நன்னூல், நம்பியகப் பொருள், புறப்பொருள் வெண்பாமாலை, யாப்பருங்கல விருத்தி, தண்டியலங்காரம், வச்சணந்திமாலை முதலிய பாட்டியல்கள் ஆகிய இவற்றின் மூல அமைப்பையும், அதன் உரையானது அவற்றின் உரைகளையும் தழுவி, ‘பின்னோன் வேண்டும் விகற்பங்கூறி’ என்னும் வழி நூல் விதிக்கேற்பச் சிறிது சிறிது வேறுபடுத்தி இயற்றப்பட்டவை. உரையிலுள்ள உதாரணங்களுட் பெரும்பாலன பழைய உரைகளில் உள்ளனவே. ஆதலின் அந்த நூலை நன்றாகப் பாடங்கேட்டமையால் முன்னமே படித்திருந்த மேற்கூறிய நூல்களிலும், அவற்றின் உரைகளிலும், அவற்றிற் காட்டப்பட்டிருக்கும் உதாரணங்களிலுமுள்ள ஐயங்கள் இவருக்கு அடியோடே நீங்கிவிட்டன. அதனால் இவருக்குண்டான தெளிவும் திருப்தியும் அதிகம்; ‘பலரிடத்திலும் சென்று சென்று பலவருடத்தில் அறியவேண்டிய பல அரிய விஷயங்களைச் சில மாதங்களில் இவர்களாற் பெற்றோம்' என எண்ணி இவர் இன்புற்றார்.
திரிசிரபுரத்தில், தாம் படித்ததே போதுமென்று நினைந்து தமக்குள்ளே திருப்தியடைந்திருந்த சிலர், இவர் கீழ்வேளூர்ச் சுப்பிரமணிய தேசிகரிடம் பாடங்கேட்டலையறிந் து, “சிறந்த வித்துவானான இவரும் பாடங்கேட்கின்றாரே! இவர் பாடங்கேட்க வேண்டுவதும் உண்டோ? என்ன கேட்கின்றார்?” என்று நினைந்து இவர் பாடங்கேட்கத் தொடங்கியபின் வந்துவந்து அருகில் இருந்து கேட்பாராயினர். இவர் மற்றவர்களைப்போல நூல் முற்றும் கேளாமல், வாசித்துக் கொண்டே போய் இடையிடையே ஐயங்களை மட்டும் கேட்பதையும் அவற்றை அவர் விளக்கிச் செல்வதையும் கேட்ட அவர்களுக்குப் பொருட்டொடர்பும் இன்ன விஷயம் கேட்கப்படுகின்றதென்பதும் புலப்படாமல் இருந்தமையால் மீண்டும் வருவதை நிறுத்திக்கொண்டார்கள். நூல்களை முறையே படித்திருந்தாலல்லவோ சந்தேகங்கள் உண்டாகும்? சந்தேகங்களை நீக்குதற்குரிய விடைகளும் விளங்கும்?
இவ்வாறு பல ஐயங்களைத் தீர்த்துக்கொண்டும் அரிய விஷயங்களைத் தெரிந்து கொண்டும் வருகையில் ஆறு மாதங்கள் ஆயின. பின் இவர் தேசிகருக்குத் தக்க மரியாதைகள் செய்தும் பிறரைக் கொண்டு செய்வித்தும் மனமகிழுமாறு செய்து அவரை ஊருக்கு அனுப்பினர். இவருக்குப் பாடஞ்சொல்லி வருகையில் இவருடைய இலக்கிய இலக்கணப்பயிற்சி, நுண்ணறிவு, பணிவு முதலிய குணங்களையறிந்து அவர் இவரை நன்கு மதிப்பாராயினர். இவருக்குப் பாடஞ்சொல்ல வாய்த்தது தமக்கு ஒரு பெருமையென்பதையும் அவர் உணர்ந்தார். அவர் ஊர் சென்ற பின்னர் இவர் அடிக்கடி சென்று அவரைப்பார்த்துச் சல்லாபம் செய்துவருவார். அவருடைய கேள்விவன்மையையும் ஞாபக சக்தியையும் பாடங் கேட்டிருந்த முறையையும் பற்றி இவர் பிற்காலத்திற் பலமுறை வியந்து பேசியதுண்டு.
கல்விப் பெருமை மிக்குடைய இவர் கீழ்வேளூர்ச் சுப்பிரமணிய தேசிகரிடம் பணிவுடன் பாடங்கேட்டதை நினைக்கும்பொழுது, துறைமங்கலம் சிவப்பிரகாச ஸ்வாமிகள், சிறந்த கல்விமானென்று பெயர் பெற்ற பின்பு, திருநெல்வேலியிற் சிந்துபூந்துறையிலிருந்த தருமை வெள்ளியம்பலத் தம்பிரானவர்கள்பால் தொல்காப்பியம் பாடங்கேட்ட செய்தி ஞாபகத்திற்கு வருகின்றது.
சிங்கவனம் சுப்புபாரதியார் முதலியோர்.
பிள்ளையவர்களுக்குப் பாடஞ் சொன்னமையால், கீழ்வேளூர்ச் சுப்பிரமணிய தேசிகரிடத்தில் பலருக்கு மதிப்புண்டாயிற்று. பிள்ளையவர்களே சென்று பாடங்கேட்கும் தகுதி இருத்தலாற் பல நூல்களை அவர்பால் அறிந்துகொள்ளலாமென்று சிலர் அவரிடம் சென்று படித்து வரலாயினர். அவர்களுட் சிங்கவனம் சுப்பு பாரதியார் என்பவரும், கிருஷ்ணாபுரம் சுப்பிரமணிய பாரதியார் என்பவரும் முக்கியமானவர்கள். சிங்கவனம் சுப்பு பாரதி அவரிடம் இலக்கண விளக்கம் முதலியவற்றைக் கேட்டார்; பின்பு அவருடைய ஏவலின்மேல் திரிசிரபுரம் வந்து பிள்ளையவர்களிடம் சில நூல்களைப் பாடங்கேட்டு வரலாயினர்.
செவ்வந்திப்புராணம் பதிப்பித்தது.
இவர் இயற்றிய உறையூர்ப்புராணத்தின் நயத்தையும், அதனை யாவரும் வாசித்து இன்புறுவதையும் அறிந்த திரிசிரபுரத்திலிருந்த தமிழபிமானிகளும், செல்வர்களும் திரிசிரபுரத்திற்கு வடமொழியில் 64 - அத்தியாயங்களுடன் இருந்த புராணத்தைத் தமிழிற் செய்யுளாக மொழிபெயர்க்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். இவர், “முன்னமே இத்தலத்திற்கு எல்லப்பா நாவலராற் செய்யப் பெற்ற புராணம் ஒன்று உண்டு; அது நல்ல நடையுள்ளது” என்று சொல்லி அதிலுள்ள சில பகுதிகளைப் படித்துக் காட்டினர். கேட்ட திரிசிரபுரவாசிகள், "அதையேனும் அச்சிட்டு வெளிப்படுத்தவேண்டும்” என்று இவரை வேண்டிக்கொள்ள, அவ்வாறே இவர் அதனை எழுதுவோரால் நேர்ந்த பிழைகளறப் பரிசோதித்து விரோதிகிருது வருஷத்தில் (1851) அச்சிட்டு வெளியிட்டார். அப்பதிப்பில் இவர் பெயருக்கு முன் வித்துவானென்னும் அடைமொழி இருத்தலைக் காணலாம்.
தருமபுர ஆதீனப்பழக்கம்.
இடையிடையே இவர் திருவாவடுதுறை மடத்திற்குச் சென்று, படித்த தம்பிரான்மார்களோடு சல்லாபம் செய்துவிட்டு வருவார். அப்பால் அழைக்கப்பெற்று ஒருமுறை தருமபுர ஆதீனத்திற்குச் சென்று அப்பொழுது ஆதீனத் தலைவராக இருந்த ஸ்ரீ சச்சிதானந்த தேசிகரைத் தரிசித்து அவருடைய பேரருளுக்குப் பாத்திரராயினார்; அவரால் வழங்கப்பெற்ற பல மரியாதைகளையும் ஏற்றுக்கொண்டார். இவருடைய கல்வித் திறத்தையறிந்த தேசிகர் அடிக்கடி வந்து போகவேண்டுமென்று கட்டளையிட அவ்வாறே இவர் செய்துவந்தார்.
------------------
[1] இவர் சுப்பையா பண்டாரமெனவும் வழங்கப்பெறுவர்.
--------------
16. சில மாணவர்கள் வரலாறு.
மாணவர் வகை.
இவர் தம்பால் யார் வந்து கேட்பினும் அவர்களுக்குப் பாடஞ் சொல்வார். இவரிடம் படித்தவர்களிற் பல சாதியினரும் பல சமயத்தினரும் உண்டு: பிராமணர்களில் ஸ்மார்த்தர்கள், வைஷ்ணவர்கள், மாத்வர்கள் என்னும் வகுப்பினரும், வேளாளரிற் பல வகுப்பினரும், பிறசாதியினரும், கிறிஸ்தவர்களும், மகம்மதியர்களும் இவர்பாற் பாடங்கேட்டதுண்டு.
நாகூரிற் புகழ்பெற்று விளங்கிய குலாம்காதர் நாவலரென்னும் மகம்மதியர் ஒருவர் இவர்பால் வந்து சீறாப்புராணம் முதலியவற்றைப் பாடங்கேட்டனர்.
சவராயலு நாயகர்.
புதுச்சேரியில் இயன்றவரையில் தமிழ்ப்பாடங்களைக் கற்றுப் பாடப் படிக்கப் பிரசங்கிக்க ஒருவாறு பயிற்சியுற்றிருந்த செ. சவராயலு நாயகரென்னும் கிறிஸ்தவர் இவர் படிப்பிக்கும் நலத்தைக் கேள்வியுற்றுத் திரிசிரபுரம் வந்து தியாகராச செட்டியார் முதலியோர் முகமாகக் கையுறைகளுடன் இவரைக் கண்டு, வீரமாமுனிவ ரென்னும் புனை பெயர் கொண்ட டாக்டர் பெஸ்கியாற் செய்யப் பெற்ற தேம்பாவணி, திருக்காவலூர்க் கலம்பகம் முதலியனவாய தங்கள் சமய நூல்களைப் பாடஞ் சொல்லவேண்டுமென்று வேண்டிக் கொண்டனர். அதற்கிசைந்த இவர் அவரைப் பரீட்சித்து அவருடைய தமிழ்க் கல்வியின் நிலையை அறிந்து சில கருவி நூல்களை முதலிற் பாடஞ் சொல்லிவிட்டுப் பின்பு அவர் விரும்பிய வண்ணம் தேம்பாவணி முதலியவற்றிற்குப் பொருள் கூறித் தமிழில் நல்ல பயிற்சியை உண்டாக்கி அனுப்பினர். அதன் பின்பு சவராயலு நாயகருக்குக் கிறிஸ்தவர் குழாங்களில் உண்டான மதிப்பும் பெருமையும் அதிகம். பிள்ளையவர்கள் தேகவியோகம் அடையும் வரையும் இவரிடத்தும் இவர் மாணாக்கர்களிடத்தும் அவர் காட்டி வந்த அன்பும் செய்த உதவிகளும் மிக உண்டு. இவரிடத்தில் தாம் பாடங் கேட்டதை மறவாமல் தம்முடைய கல்வி உயர்ச்சிக்குக் காரணம் இவரேயென்னும் எண்ணம் அவர்பால் என்றும் இருந்து வந்தது. இவர் விஷயமாக அவர் பல செய்யுட்கள் இயற்றியிருக்கின்றார்; அவற்றிற் சில வருமாறு :
“ஓதுதற் கருநூ லியாவையு முணர்ந்த வுணர்வினன் றிரிசிர கிரியாம்
மேதகு பதியி லொளிர்தரு ஞான விளக்கமா யடியவ ருளத்திற்
றீதுறு மவிச்சை யாமிருள் சீத்துத் திகழுமெந் தேசிக னாய
கோதின்மீ னாட்சி சுந்தர னருளாற் கூறுது மிஃதுளந் துணிந்தே.”
இச் செய்யுள் அவர் பிரசங்கம் செய்யத் தொடங்குவதற்குமுன் சொல்லப்படுவது.
“விளங்குறுவெண் புகழ்வனைந்த மீனாட்சி சுந்தரப்பேர்க்
களங்கமில்தே சிகனென்பாற் கருணைநனி புரிந்ததனாற்
றுளங்குறுதேம் பாவணிக்குச் சொலத்துணிந்தே னுரைவிரித்து
வளங்கெழுமவ் வருளிலையேல் வகுத்தலரி தரிதரிதே.”
இச்செய்யுளால் அவர் தேம்பாவணிக்கு உரைசொல்லிப் பிரசங்கம் புரியும்
வன்மையைப் பெற்றது பிள்ளையவர்களாலேயென்பது வெளியாகின்றது.
“முத்திக்கு வித்தா முரிமனத்துக் காறுதலாம்
எத்திக் கினும்பொருளை யீவதுவாம் - சுத்தகலை
ஓது கருணைமிகு முத்தமவென் சற்குருநிற்
கேதுசெய்கு வன்கைம்மா றின்று.”
“கற்றற் கெளியனவாக் காட்டியரும் பாடலெல்லாம்
பற்றச்செய் நற்குணவென் பண்ணவனாம் - உத்தமநீ
ஞானப் பொருள்வழங்கி நற்றருமஞ் செய்வதுபோற்
றானமுண்டோ விவ்வுலகிற் றான்.”
என வரும் செய்யுட்களால் அவருடைய குருபக்தி விளங்குகின்றது.
தண்டு, அ.சந்திரப் பிள்ளை யென்பவர் மீது அவர் பாடிய செய்யுட்களுள்,
“வண்டுதொட ரலரணியுங் குழலன்ன மெனுமனைவி வாழ்த்த வோங்கும்
தண்டுசந்தி ரப்பிள்ளை யாங்குலோத் துங்கனையிச் சபையி லேவெண்
பெண்டுறையும் நாவினனம் மீனாட்சி சுந்தரநற் பெருமா னுக்கே
தொண்டுபுரி மாணாக்க ரிற்சிறியேன் கவிகளினாற் றுதிக்கின் றேனே”
என்னும் செய்யுளால் இவரிடம் அவர் பாடங்கேட்டமை வெளியாகின்றது.
பிற்காலத்தில் பிள்ளையவர்கள் பாடிய திருமயிலைச் சித்திரச் சத்திரப் புகழ்ச்சி மாலைக்கு அவர் கொடுத்த சிறப்புப்பாயிரங்களுள்ளும் இவரைத் தம் ஆசானென்று குறிப்பிட்டுள்ளார் :
“பார்புகழும் விநாயகவே டிருமயிலைச் சத்திரமாம் பாத்தி ரத்தில்
ஏர்குடிகொண் டோங்கிவளர் மீனாட்சி சுந்தரப்பே ரெங்க ளாசான்
நார்நனிகொண் டமைத்துவைத்த நற்பாவாஞ் செவியுணவை நயந்தே விண்ணோர்
சீர்தருதெய் வதவுணவை யவியவியென் றேவெறுத்துச் செப்பு வாரால்.”
“இலக்கண விலக்கிய மினிதுற வெவர்க்கும்
கலக்க மறப்புகல் கரிசில் குணாளன்
தன்னிடைக் கற்பவர் மன்னவைக் களத்துள்
என்னையு மொருவனாத் துன்னுவித் தருளி
மெய்யருள் சுரந்த மீனாட்சி சுந்தர
நல்லா சிரியன்.”
சவராயலு நாயகரைப் பாடிய பலர் அவர் பிள்ளையவர்களுடைய மாணாக்கரென்பதைத் தம் செய்யுட்களிற் புலப்படுத்தியிருக்கின்றனர்:
வேதநாயகம் பிள்ளை.
“சாதிநா யகனான சவராய லுத்தமனே சவரி யாரென்
சோதிநா யகனாம நீதரித்தாய் மீனாட்சி சுந்த ரப்பேர்
நீதிநா யகனன்றோ நினக்காசா னுலகமெலா நியமித் தாளும்
ஆதிநா யகனனைமே னீபாடி னுன்கவியை யார்மெச் சாரே.”
சித்திலிங்கமடம், தி. அ. சிவாநந்த ஸ்வாமிகள்.
“தேமேவு செவ்வந்தி யலர்சிர கிரிக்கண்வரு
சிவனடிய ரிற் சிறந்து
திகழுமீ னாட்சிசுந் தரதேசி கன்வயிற்
செந்தமிழெ லாமுணர்ந்து”
பொம்மையபாளையம் பால சித்தானந்தர்.
“மீனாட்சி சுந்தரப்பேர் மேவு தமிழ்க்கடலிற்
றானாட்சி யாமமிர்தந் தானுண்டு - வானாள்
புரந்தரனை மீறுசவ ராயலுபொற் பார்மால்
புரந்தருளு மென்னுரையும் பூண்டு.”
சவராயலு நாயகர் பிள்ளையவர்களிடம் தாம் சென்று படித்தற்குரிய உதவியைச் செய்யவேண்டுமென்று தம்மை ஆதரித்த தாசில்தார் அ.சஞ்சீவி நாயகருக்கெழுதிய செய்யுளில் ஒருபகுதி வருமாறு :
[1] “ஆர்கொள்புகழ் சேர்சிராப் பள்ளியின் மகத்துவ
அகத்திய னெனத்தோன்றிவந்
தவதரித் திட்டமீ னாட்சிசுந் தரகுருவை
அண்டிநற் றமிழையோர்தற்
காயவழி காட்டவுனை யன்றிவே றிலையென்
றடுத்துள மிரங்குமென்றன்
அனுபவ மறிந்தெனக் காதரணை செய்யநின
தகங்களித் திடல்வேண்டுமே.”
சவராயலு நாயகருக்கு இவர் தாம் முன்பு படித்து வைத்திருந்த பழக்கத்தால் தேம்பாவணி முதலிய நூல்களைத் தெளிவாகச் சொல்லிவந்தனர். இவர்பால் அழுக்காறுற்ற சில சைவர்கள், “இவர் சைவராக இருந்தும் புறச்சமய நூல்களைப் படித்தலும் பாடஞ்சொல்லுதலும் புறச்சமயத்தாருடன் அளவளாவி மாணாக்கராகக் கொள்ளுதலும் தகுதியல்ல” என்று குறை கூறத் தலைப்பட்டனர். அதனை அறிந்த இவர், அங்ஙனம் குறை கூறி வந்த சிலரும் தம் நண்பர்கள் சிலரும் ஒருங்கிருக்கும்பொழுது, தம் நண்பர்களைப் பார்த்துக் கூறுவாராய், “நான் தேம்பாவணியைப் பாடஞ் சொல்லுதலும் கிறிஸ்தவர் முதலிய பிறமத மாணாக்கர்கள் என்பாற் பாடங்கேட்டலும் கூடாத செயல்களென்று சிலர் சொல்லி வருவதாகத் தெரிகிறது. மாணாக்கராக யார் வந்தாலும் அன்போடு பாடஞ் சொல்லுதலையே எனது முதற்கடமையாக எண்ணியிருக்கிறேன். எல்லாத் தானத்திலும் வித்தியா தானமே சிறந்தது. அன்னமிடுதற்குப் பசியுள்ளவரே பாத்திரர்; அதுபோலப் பாடஞ்சொல்லுதற்கு, படிப்பில் ஆர்வமுடைய யாவரும் பாத்திரர்களே. அன்றியும் தமிழ் நூல் யாதாயிருப்பினும் அதிலுள்ள சொற்பொருள் நயங்களை உணர்தல் பிழையாகாதே! கிறிஸ்தவ மதத்தைப் பிரசாரஞ்செய்ய வேண்டுமென்பது என்னுடைய கருத்தன்று. தமிழ் நூல் என்னும் முறையில் யாதும் விலக்கப்படுவது அன்று” என்று தம் கருத்தைப் புலப்படுத்தினார். குறை கூறியவர்கள் இவருடைய உண்மைக்கருத்தை அறிந்து அடங்கிவிட்டனர்.
வேதநாயகம்பிள்ளை பாடங்கேட்டது.
முன்ஸீப் வேதநாயகம் பிள்ளையின் பெருமையைத் தமிழ்நாட்டார் யாவரும் அறிவார். அவர் இங்கிலீஷ்ப் பாஷையிலும் தமிழ்ப்பாஷையிலும் நல்ல தேர்ச்சிபெற்றுத் திருச்சிராப்பள்ளி ஜில்லாக் கோர்ட்டில் டிரான்ஸ்லேடர் வேலை பார்த்துவந்தார். ஓய்வு நேரங்களில் தமிழ் நூல்களைப் படித்து இன்புறுவதும் படித்தோர்களைக் கண்டால் நல்ல செய்யுட்களைக் கூறி அவற்றிலுள்ள நயங்களை எடுத்துக் காட்டுவதும் அவர்கள் கூறுவனவற்றைத் தாம் கேட்டு மகிழ்வதும் அவருக்கு இயல்பாக இருந்தன.
தம்முடைய இளமைப் பிராயத்தொடங்கிப் பிள்ளையவர்களையும் இவருடைய தமிழ்க் கல்வியின் வளர்ச்சியையும் செய்யுள் செய்யும் வன்மையையும் அறிந்தும் பிறர் மூலமாகக் கேட்டும் இவருடைய பழக்கத்தைச் செய்துகொள்ளுதல் தமக்கு இன்றியமையாத-தென்றெண்ணி வலிந்துவந்து மிகப் பழகுவாராயினர்; பல நாளாகத் தாம் படித்த நூல்களிலிருந்த ஐயங்களை நீக்கிக் கொண்டு புதியனவாகச் சில நூல்களைப் பாடங்கேட்டனர். கேட்கும் பொழுது இவரிடத்தில் மிக்க அன்பு அவருக்கு உண்டாயிற்று. எத்தனை விதமாகத் தம்முடைய அன்பை இவர்பாற் புலப்படுத்த வேண்டுமோ அத்தனை வகையாலும் புலப்படுத்தி நடப்பாராயினர். இப்புலவர் பிரானுக்கும் அவர்பால் மிக்க பிரியமும் மதிப்பும் உண்டாயின. அவருக்குச் செய்யுள் செய்யும் பழக்கமும் நன்றாக அமைந்திருந்தது. ஆதலால் அவர் தாம் செய்யும் செய்யுட்களை இவரிடம் நேரிற் சொல்லியும் பிறரைக்கொண்டு சொல்வித்தும் வருவதுண்டு. கேட்ட இவர் அவற்றின் விஷயமாகத் தமக்குத் தோன்றிய கருத்துக்களைத் தெரிவித்து வருவார். ஒருநாள் அவர், தாம் இயற்றிய கீர்த்தனங்களைச் சொல்லிக்காட்டும்படி ஒருவரை அனுப்பியபொழுது அக்கீர்த்தனங்களைக் கேட்டு இவர் மகிழ்ந்து,
“கலைபுகலும் பதமில்லாக் கடவுள்கொளத் தமையடைந்தோர் களிப்ப நாளும்
தொலைவில்சுவைப் பதமுதவு வேதநா யகவள்ளல் சூட்டுந் தூய
விலையில்பல பதத்துளொரு பதத்துளொரு பதமுணர்ந்த மெய்ம்மை யோரத்
தலைமையவ னிருபதமே பெறுவரவ ரெப்பதமுந் தரவல் லாரே”
என்னும் பாடலைச் சொன்னார்.
வேதநாயகம்பிள்ளை செய்த உதவி.
அப்பொழுது கால விசேஷத்தால் மலைக்கோட்டைத் தாயுமானவர் கோயில் விசாரணைக்காகத் தருமபுர ஆதீனகர்த்தரால் நியமிக்கப்பட்டிருந்த கட்டளைத் தம்பிரானொருவர் வியவகாரத்திலும் வருவாயிலும் விருப்பமுடைய சிலருடைய தூண்டுதலினால் அக் கோயில் நிருவாகங்களில் தருமபுர ஆதீனத் தலைவருக்கு அடங்காமல் விரோதமாக நடக்க ஆரம்பித்தார். அதனையறிந்த ஆதீனத்தலைவர் அவர்மேல் வழக்குத் தொடுத்தார். அவ்வழக்கிற் கட்டளைத் தம்பிரானுக்கு மேற்கூறிய சிலர் உதவிபுரிய முன்வந்தார்கள். இந்நிலையில் ஆதீனத் தலைவர் தம்முடைய உரிமையை இங்கிலீஷில் எடுத்து விளக்கி ஒரு விண்ணப்பத்தை விரைவில் கோர்ட்டாரிடம் கொடுக்கவேண்டியிருந்தமையால் அவ்விஷயத்தைக் கவனித்து முடிக்கும்படி அவர் பிள்ளையவர்களுக்குத் தக்கவர்களையனுப்பித் தெரிவித்தார். இவர் அதனை நன்கு எழுதித் தருபவர் வேதநாயகம் பிள்ளையேயன்றி வேறு யாரும் இல்லையென நினைந்து அவரிடமே இதனைத் தெரிவிக்க எண்ணினார்.
இவ்வாறிருக்க, எதிர்க்கட்சியாரும் தமக்குரிய ஆதாரங்களைக் காட்டி ஒரு விண்ணப்பம் வேதநாயகம் பிள்ளையைக் கொண்டு எழுதுவிக்க நினைந்து அவருக்கு மிகுந்த பொருளும் கொடுப்பதென்று நிச்சயித்துக் கொண்டு சென்றார்கள். அச் சமயத்திலே பிள்ளையவர்களும் சென்றனர். சென்று எதிர்க்கட்சியார்கள் கூடியிருப்பதையறிந்து வேறிடத்தில் வந்து இருந்து,
“மையேறுங் கண்ணி யொருபாகன் காரிய மற்றிதுதான்
பொய்யே யலமுகிற் கேதுகைம் மாறு பொறையினொடு
மெய்யே யுருக்கொள் புகழ்வேத நாயக வித்தகன்றன்
கையே யுனைப்புகழ் வேன்புகல் வேறிலை கண்டுகொள்ளே”
என்னும் செய்யுளை எழுதியனுப்பிக் குறிப்பாகத் தம்முடைய கருத்தை ஓரன்பர் மூலமாகத் தெரிவித்தனர். அவர் அந்தச் செய்யுளைப் பார்த்து மனமுருகி உடனே எதிர்க்கட்சிக்காரருடைய வேண்டுகோளை மறுத்து அவர்களை அனுப்பிவிட்டு இவரைப்பார்த்து, "தாங்கள் இவ்வளவு தூரம் சிரமப்படலாமா? செய்யுள் எழுதித் தெரிவிக்கவேண்டுமா? ஒரு வார்த்தை சொல்லியனுப்பினால் நான் கவனிக்க மாட்டேனா?” என்று சொல்லித் தம்முடைய ஓய்வு நேரங்களில் முழுக்கருத்தையும் அதிலேயே செலுத்தி மிகத்தெளிவாக விண்ணப்பத்தை இங்கிலீஷில் எழுதிக் கொடுத்தனர். அது கோர்ட்டில் கொடுக்கப்பட்டது. அதனைப் பார்த்த கோர்ட்டார் உண்மையை அறிந்து வழக்கை நியாயப்படி ஆதீனத் தலைவர் சார்பாக முடிவுசெய்தார்கள்.
பல தக்க கனவான்கள் கூடி மிக்க பொருள் கொடுப்பதாக முன்வந்தும் அவர்களுக்கிணங்காமல் இவருடைய விருப்பத்தின்படி செய்தது இவர்பால் அவருக்கிருந்த இணையிலா அன்பைப் புலப்படுத்துகின்றதன்றோ? இச்செயலால் வேதநாயகம் பிள்ளையிடத்து அதிக நன்மதிப்பும் நன்றியறிவும் இவருக்கு உண்டாயின.
[2] குளத்தூர்க் கோவை.
அப்பால் வேதநாயகம் பிள்ளையினுடைய அருமை பெருமைகளையும் அவர் செய்யுட்சுவையை நன்றாக அனுபவித்தலையும் பாராட்டி அவர்மீது ஐந்திணைக்கோவை யொன்றை இவர் இயற்றினர். அக்கோவை இயற்றப்பட்ட காலம் பரிதாபி வருடம் (1853.) இலக்கண விளக்கம் பாடங்கேட்டதற்குச் சமீபகாலமானதால் அது சிறந்த சுவையுடையதாயமைந்திருக்கின்றது. அதன் செய்யுட்டொகை, 438.
அக்கோவைச் செய்யுட்களிற் சில வருமாறு:-
தெய்வத்திறம் பேசல்.
“எறியுங் கலிதன் றலைசாய்த் திடத்தமி ழின்னருமை
அறியும் புருட மணிவேத நாயக வண்ணல்வெற்பிற்
செறியும் படிநம் மிருபே ரையுமின்று சேர்த்ததெய்வம்
முறியும் படியிடை யேசெய்யு மோசற்று முன்னலையே.” (24)
கற்றறிபாங்கன் கழறல்.
“சொற்றது நாட்டுந் துரைவேத நாயக துங்கன்வெற்பில்
உற்றது சொற்றதென் காதூ டழல்புக் குலாவலொத்த
திற்றது வென்னிடைக் கிவ்வாறு வாடுவை யேற்கலைகள்
கற்றதுங் கேட்டது நன்றுநன் றாலெங்கள் காவலனே.” (44)
தெய்வநாயகம் பிள்ளை.
பிள்ளையவர்கள் திரிசிரபுரத்தில் இருக்கையில் வந்து படித்தவர்களுள் தெய்வநாயகம் பிள்ளை யென்பவரும் ஒருவர். அவர் பிள்ளையவர்களிடம் படித்து மிக்க புகழ்பெற்றவர். அவர்பால் தியாகராச செட்டியாருக்கு அடுத்தபடியான மதிப்பு யாவருக்கும் இருந்துவந்தது. ஆறுமுக நாவலர் பதிப்பித்த திருக்குறள் முதலியவற்றிற்குச் சிறப்புப்பாயிரம் கொடுத்தவர்களுள் அவரும் ஒருவர். அவர் தாம் பிள்ளையவர்களிடம் கல்விகற்றமையைக் குறித்து ஓரிடத்திற் பின் வருமாறு கூறியுள்ளார் :
[3] “துரிசிரா திலங்குந் திரிசிராப் பள்ளியிற்
கடன்மருங் குடுத்த தடநெடும் புடவியில்
உற்றநூல் யாவுங் கற்றவ னென்றும்
தோலா நாவின் மேலோர் வகுத்துத்
தந்தருள் பலபிர பந்த மென்பன
எல்லாஞ் சொல்ல வல்லோ னென்றும்
உமிழ்சுவை யாரியத் துற்றபல் புராணமும்
தமிழின் மொழி பெயர்க்கத் தக்கோ னென்றும்
தனையடைந் தவரை நினைதரு தனைப்போல்
வல்லவ ராக்க நல்லதன் னியற்கையாம்
மெலியா வன்பிற் சலியா னென்றும்
மற்றவர் பிறரைச் சொற்றன போலா
துற்ற குணங்கண் முற்ற வுணர்ந்து
செப்பமுள் ளோர்பலர்க் கொப்பயா னுள்ளன
நினைந்துரை செய்வது புனைந்துரை யன்றெனக்
காட்சியின் விளக்கி மாட்சியி னமர்வோன்
கற்றவர் குழுமி யுற்றபே ரவையிற்
கனக்குநுண் ணறிவிலா வெனக்குமோ ரொதுக்கிடம்
தந்தமீ னாட்சி சுந்தரப் பெரியோன்.”
ஆரியங்காவற்பிள்ளை.
பின்னொரு காலத்தில் திருநெல்வேலிப் பக்கத்திலிருந்து ஆரியங்காவற் பிள்ளை யென்ற சைவ மாணவரொருவர் இவரிடத்துப் பாடங்கேட்க வந்தனர். வந்தவர்களைப் பரீட்சித்து அவர்களுடைய தகுதிக்கேற்பக் கற்பிப்பது இவருக்கு வழக்கமாதலின் அவரை அவ்வாறு பரீட்சிக்கத்தொடங்கி ஒரு பாடல் சொல்லும்படி வினாவினார். அவர்,
“நீர்நாடு நீங்கியுமே நீங்காது தனைத்தொடரும்”
என்ற தொடக்கத்தையுடைய திருக்குற்றாலப் புராணத்துள்ள மந்த மாருதச் சருக்கச் செய்யுளொன்றைக் கூறினர். அதனைக் கேட்கும். பொழுதே இவருடைய செவியும் உள்ளமும் குளிர்ந்தன. அதனை மறுமுறை சொல்லும்படி செய்து கேட்டபின்பு, “இச் செய்யுள் எந்த நூலிலுள்ளது?” என்று கேட்டார். அவர், “திருக்குற்றாலப் புராணத்திலுள்ளது” என்றார். பின்பு அச்செய்யுளின் சந்தர்ப்பத்தையும் வரலாற்றையும் அவராலறிந்து கொண்டு அச் செய்யுளைத் திரும்பத் திரும்பச் சொல்லச் செய்தார். அந் நூலிலிருந்து வேறு சில செய்யுட்களையும் சொல்லச் சொல்லிக் கேட்டு அவற்றின் சொல்லினிமை பொருளினிமைகளில் ஈடுபட்டு இன்புற்றார். பின்பு, “அந்நூலாசிரியர் யார்?” என்றபொழுது அவர், “மேலகரம் திரிகூடராசப்பக் கவிராயர்” என்றனர். அது தொடங்கி அப்புராணத்தைப் பெற்றுப் படித்துப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் இவருக்கு உண்டாயிற்று.
ஆரியங்காவற்பிள்ளை தினந்தோறும் இவரிடம் பாடங்கேட்டு வந்தார். ஒவ்வொன்றையும் அழுந்திக் கேட்பதும் செய்யுள் செய்யும் பயிற்சியும் அவர்பால் இருத்தலையறிந்து இவர் அவரிடத்து மிக்க அன்பு பாராட்டி வருவாராயினார். மற்ற மாணாக்கர்களும் அவர்பாற் பிரியமுடையவர்களாகவே இருந்தார்கள். அயலூரிலிருந்து வந்தவராதலின் அவர் இவருடன் இடைவிடாமல் இருந்து வந்தார்.
ஒருநாள் இரவில் அவருக்குப் பாடஞ்சொன்ன பின்பு வழக்கம் போலவே தெருத் திண்ணையில் அவரைப் படுக்கச் சொல்லிவிட்டு இடைகழி(ரேழி)யில் இவர் சயனித்துக்கொண்டார். அப்பொழுது நிலவு நன்றாக எறித்தது. சிலநேரமான பின் வழக்கம் போலவே இவர் விழித்துக்கொண்டார். அப்பொழுது அம் மாணாக்கர் படுத்துக்கொள்ளாமல் தூணிலே சாய்ந்துகொண்டு இருத்தலைச் சன்னல் வழியாகக் கண்டனர். பிறகு சில நேரம் தூங்கிவிட்டுத் திரும்ப விழித்துக்கொண்ட காலத்தும் அவர் நித்திரை பண்ணாமல் அவ்வாறே இருந்தமையையறிந்து, "ஏன் இவர் இப்படி இருக்கிறார்?” என்று நினைந்து அவர் நோக்கத்தை அறிவதற்குப் படுத்தபடியே விழித்தவராய்க் கவனித்துக் கொண்டே இருந்தார். அப்பொழுது அந்த மாணாக்கர் வாக்கிலிருந்து,
[4] “விடவாளை வென்ற விழியாளைப் பூமியின் மேலதிர
நடவாளைப் பெண்கள்தம் நாயக மாமொரு 5நாயகத்தை
மடவாளை யென்னுள் வதிவாளை யின்ப வடிவையென்சொற்
கடவாளை யான்றெய்வ மேயென்று போயினிக் காண்பதுவே”
என்னும் செய்யுள் எழுந்தது. அவர் அதனை மீட்டும் மெல்லச் சொல்லி மனம் உருகிக்கொண்டிருந்தார். அதனைக்கேட்ட இவர் அவருக்கு உள்ள கவலை இன்னதென்பதை யறிந்து தாம் அன்று தெரிந்து கொண்டவற்றை வெளியிடாமலே இருந்துவிட்டுச் சில நாளைக்குப் பின்பு அவரிடத்து இயல்பாகப் பேசுங்காலங்களில் அவருடைய ஊரை ஒருதினத்தும், தாய் தந்தையர் வரலாற்றை ஒருதினத்தும், விவாகம் நடைபெற்றதா இல்லையாவென்பதை ஒருதினத்தும் மெல்ல மெல்ல விசாரித்து அறிந்து கொண்டனர். அவ்வாறு விசாரித்ததனால் அவருடைய தந்தையார் இருப்பிடமும், அவருக்கு விவாகமாகிச் சில மாதங்களேயாயின வென்பதும் தெரியவந்தன. பின்பு அவருடைய தந்தையாருக்கு, “உங்களுடைய குமாரர் இங்கே சௌக்கியமாகப் படித்துக்கொண்டு வருகிறார். சிறந்த புத்திமானாகவும் காணப்படுகிறார். அவருடைய நற்குண நற்செய்கைகள் மிகவும் திருப்தியை உண்டுபண்ணுகின்றன. ஆனாலும் ஆகாரம் செய்து கொள்வதற்கு வசதியான இடம் இல்லாமையினால் அவருடைய தேகம் வரவர மெலிந்து வருகிறது. ஆதலால் அவருடைய தாயாரையும் மனைவியையும் அழைத்துக்கொண்டு நீங்கள் இங்கு வந்து சில மாதங்கள் இருந்து அவருக்கு ஆகாராதி சௌகரியங்களைச் செய்வித்துவந்தால் அவர் செளக்கியமாகவிருப்பதன்றி நன்றாகப் படித்துத் தேர்ச்சி பெறுவார். இங்கே வந்து காலங்கழிக்க வேண்டியதைப்பற்றி நீங்கள் சிறிதும் கவலையுறவேண்டாம். இங்கே எல்லா வசதிகளும் அமைக்கப்படும். உங்களுடைய வரவை எதிர்பார்க்கிறேன். நீங்கள் வருவதைப்பற்றி முன்னதாக எனக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்'' என்று அம்மாணாக்கரறியாமலே ஒரு கடிதம் எழுதியனுப்பிவிட்டு இவர் வழக்கம்போல் அவருக்குப் பாடஞ் சொல்லி வந்தார்.
சில தினங்களுக்குப் பின்பு ஒருநாள் பகலில் 15 - நாழிகைக்கு மேல் அவருக்கும் வேறு சிலருக்கும் பாடஞ் சொல்லிக்கொண்டு தம்முடைய வீட்டுத் திண்ணையில் இவர் இருக்கையில் மேலே குறிப்பிட்ட அவருடைய தந்தையார் தாயார் மனைவியாகிய மூவரும் இவருடைய வீட்டை விசாரித்துக்கொண்டு வந்தனர். அவர்கள் இரண்டு மூன்று வீட்டிற்கு அப்பால் வரும்போதே ஆரியங்காவற்பிள்ளை கண்டு திடீரென்று கீழே குதித்துச் சென்று அவர்களைக் கண்டு, "எப்பொழுது இங்கே வந்தீர்கள்? எதற்காக வந்தீர்கள்? நான் எழுதாமலிருக்கையில் நீங்கள் எப்படி வரலாம்?” என்று கோபமுற்றுக் கேட்டுக்கொண்டிருந்தபொழுது, இவர் அவர்கள் இன்னாராக இருக்கலாமென்று ஊகித்தறிந்து கொண்டு எழுந்து சென்று அம் மாணவரைக் கையமர்த்தி, "தம்பி! ஏன் கோபித்துக்கொள்ள வேண்டும்? உம்முடைய போஷணைக்காகத்தான் நான் எழுதி இவர்களை வரச் செய்தேன். சும்மா இரும்” என்று சொன்னார். அவர்கள் வரக்கூடுமென்று எதிர்பார்த்து முன்னரே அமைத்திருந்த ஒரு விடுதிக்கு அவர்களை அனுப்பி ஆகாரம் முதலியன செய்விக்குமாறு சொல்லியனுப்பினார். அப்பால் தாம் சென்று அவர்களுக்கு வேண்டியவற்றைக் குறைவின்றி அமைத்துக் கொடுத்துத் தந்தையாரைத் தனியேயழைத்து, “உங்களுடைய குமாரர் உங்களைக் கோபித்துக்கொண்டாலும் நீங்கள் அதனைப் பொருட்படுத்தாமற் பக்குவமாகச் சமாதானம் சொல்லி விடுங்கள். அவர் மிக்க புத்திசாலி; விருத்திக்கு வரக்கூடியவர். அவர் இந் நகரத்தில் தனியாக இருத்தலை விடக் குடும்பத்தோடு இருந்தால் நன்மை உண்டாகுமென்று எனக்குத் தெரிந்ததனால் தான் உங்களை வருவித்தேன்” என்று மட்டும் சொன்னார். அவரும் இவருடைய பேரன்பைப் பாராட்டினர். தம் குமாரர் படிக்கும்வரையில் தாய் தந்தையர் முதலியோர் உடனிருந்து வந்தார்கள். அவசியமான த காலத்தில் அம்மாணவருடைய தந்தையார் மட்டும் தம்மூருக்குச் சென்று வருவார். இவ்வாறு சில மாதங்கள் அங்கிருந்து கேட்க வேண்டிய பாடங்களைக் கேட்டுக்கொண்டு தமிழில் தக்க பயிற்சி பெற்று ஆரியங்காவற்பிள்ளை தம் குடும்பத்துடன் ஊர் போய்ச் சேர்ந்தனர். பின்பு அடிக்கடி வந்து இவரிடம் வேண்டியவற்றைத் தெரிந்துகொண்டு செல்வார்.
இவ்வாறு, தம்முடைய மாணவர்களுக்கு எந்த எந்த வகையிற் குறைகள் உள்ளனவோ அவற்றையெல்லாம் தாமே அறிந்து ஆராய்ந்து தீர்க்கும் அரிய தன்மை இக்கவிஞர் கோமான்பால் இருந்து வந்தது.
அழகிரி ராஜு.
இவரிடம் சில வருடங்கள் இருந்து பாடங் கேட்டுச்சென்றவர்களுள் இராமநாதபுரம் அழகிரி ராஜு என்பவரும் ஒருவர். அவர் தமிழ் வித்துவான்கள் நிரம்பியுள்ள இராமநாதபுரத்தவராதலால், இயன்ற வரையில் நல்ல தமிழ்ப்பயிற்சியுள்ளவராக இருந்தார். ஒருநாள் அவர், பயிர்களுக்கு ஜலம் பாய்ச்சுவதற்கு ஒரு கிணற்றிலிருந்து ஏற்றம் இறைத்துக்கொண்டிருக்கையில் சரியாக அவர் அவ்வேலையைச் செய்யாதது கண்டு உடன் இருந்த அவருடைய உறவினர் ஒருவர் மிகவும் கோபங்கொண்டு, “நீ என்ன சுத்த முட்டாளாக இருக்கிறாயே!” என்றார். அதனைக் கேட்டு அவர், “இவ்வாறு உங்களோடு இருந்ததனாலேயே நான் முட்டாளாக ஆனேன். தமிழ்க் கல்வியை இனி நன்கு பயின்று தேர்ச்சியுற்று இங்கு வருவேனேயன்றி அதற்கு முன்பு வருவதில்லை” என்று சத்தியஞ் செய்துவிட்டு அவ்வூரிலிருந்த வேலாயுதக் கவிராயர் வாயிலாகப் பிள்ளையவர்கள் பெருமைகளையும் மாணவர்களுக்கு அன்புடன் தடையின்றி இவர் பாடஞ்சொல்லிவருதலையும் அதற்கு முன்பே அறிந்தவராதலால் உடனே புறப்பட்டுத் திரிசிரபுரம் வந்து இவரிடம் பாடங்கேட்டுவந்தனர். படிக்கவேண்டுமென்ற ஊக்கமுள்ளவராக இருந்ததனாற் பல நூல்களைக் கற்று விரைவில் நல்ல பயிற்சியையும் பாடஞ்சொல்லும் திறமையையும் அடைந்தார். சில காலத்திற்குப் பின் தம்மூருக்குச் சென்று, “இனிமேற் கல்வியினாலேயே பிழைக்கவேண்டும்” என்ற விரதம் பூண்டு சிலருக்குப் பாடஞ் சொல்லி வருவாராயினர். அங்ஙனம் சொல்லி வருகையில் அவருடைய திறமையால் பாலவனத்தம் ஜமீந்தாராகிய ஸ்ரீமான் பாண்டித்துரைஸாமித் தேவரவர்களுக்கு இளைமையில் தமிழ் ஆசிரியராக அமர்த்தப்பெற்றார். இப்போதுள்ள மதுரைத் தமிழ்ச்சங்கத்து ஸ்தாபகரும், அருங்கலை விநோதருமாகிய ஸ்ரீமான் பாண்டித்துரைத் தேவரவர்கள், “இப்பொழுது தமிழ்நாட்டில் உள்ள தமிழ்ப் பண்டிதர்களிற் பெரும்பாலோர் பிள்ளையவர்களுடைய மாணாக்கர்களும் மாணாக்கர் பரம்பரையைச் சார்ந்தவர்களுமே. எனக்குத் தமிழாசிரியர்களாக இருந்த நால்வர்களில், பிள்ளையவர்களுடைய மாணாக்கர்கள் மூவர்; அம்மூவர் அழகிரி ராஜுவும் மதுரை இராமசாமிப் பிள்ளை (திருஞான சம்பந்த பிள்ளை)யும் திருவாவடுதுறையாதீன வித்துவானாகிய பழனிக்குமாரத் தம்பிரானவர்களும் ஆவர். அவர்களுள் அழகிரி ராஜு என்பவர் பாடங் கற்பிக்கும் அழகும் தமிழ்நயத்தைச் சுவைபடப் புலப்படுத்தும் விதமும் அன்புடைமையும் சொல்லியடங்குவன அல்ல; எனக்குத் தமிழிற் பிரீதியுண்டான து அவராலேயே. பிள்ளையவர்களுடைய குண விசேடங்களையும் பாடல் நயங்களையும் அடிக்கடி சொல்லிக்கொண்டே யிருப்பார்” என்று என்னிடத்திலும் வேறு பலரிடத்திலும் பிற்காலத்திற் பாராட்டிக் கூறியிருக்கிறார்கள்.
இங்ஙனம் அவ்வப்போது வந்துவந்து சிலநாள் இருந்து பாடங்கேட்டுப் பயன்பெற்றுச் சென்றவர் பலர்.
------------
[1] இச் செய்யுட் பகுதியும் இதற்குமுன் காட்டிய செய்யுட்களும் செய்யுட் பகுதிகளும் ‘புதுவை மகாவித்துவான் செ. சவாராயலு நாயகருக்குச் சம்பந்தமான பாடற்றிரட்டு’ (1905ஆம் வருடம்) என்னும் புத்தகத்திலிருந்து அறியப்பட்டன.
[2] ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டு, 4611 - 5048.
[3] மீ. பிரபந்தத்திரட்டு, 2809.
[4] இதனைப் போன்ற வேறு 2-பாடல்கள் உண்டு; அவை இப்பொழுது கிடைக்கவில்லை.
[5] நாயகமென்பது அவர் மனைவியின் பெயர்.
----------------
17. இரண்டாவது முறை சென்னைக்குச் சென்றது.
சென்னைக்குச் சென்றது.
சென்னையிலிருந்த கா. சபாபதி முதலியார் முதலியவர்கள் இவருடைய கல்வி வளர்ச்சியைக் கேள்வியுற்று இவரைப் பார்க்கவேண்டுமென்னும் விருப்பமுடையவர்களாய் இவருக்கு எழுதும் கடிதங்களில் தங்கள் கருத்தைக் குறிப்பித்துவந்தார்கள். இவருக்கும் அவ்வாறே அவர்களைக்கண்டு மீண்டும் அளவளாவ வேண்டும் என்னும் ஆவல் இருந்தது. அதனால் சென்னைக்குப் புறப்பட்டு இடையிலேயுள்ள பட்டீசுவரம், திருவாவடுதுறை, தருமபுரம், சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர் முதலிய ஸ்தலங்களைத் தரிசித்துக்கொண்டு சில வாரங்களில் சென்னை வந்து சேர்ந்தார். அங்கே சபாபதி முதலியார் முதலியோர்களால் வரவேற்கப் பெற்றனர். தாண்டவராயத் தம்பிரானவர்களைக் கண்டு ஸல்லாபம் செய்து கொண்டும் மற்ற வித்துவான்களோடு பழகி இன்புற்றும் வந்தனர். திரிசிரபுரம் சென்ற பின்பு இவர் இயற்றிய காப்பியங்களிலும் பிரபந்தங்களிலும் உள்ள செய்யுட்களை அவர்கள் கேட்டுக் கேட்டு மகிழ்ந்தனர்.
[1] சித்திரச் சத்திரப் புகழ்ச்சிமாலை.
அப்பொழுது திருமயிலைத் திருக்குளத்தின் தென்கரையிலுள்ளதும் இப்பொழுது சித்திரச் சத்திரமென்று வழங்கப் பெறுவதுமாகிய சத்திரத்தைக் கட்டுவித்து அதற்குப் பலவகையான வருவாய்களையும் ஏற்படுத்திப் புகழ்பெற்று விளங்கிய வியாஸர்பாடி விநாயகமுதலியார் மீது கா. சபாபதி முதலியார் முதலியவர்கள் பல செய்யுட்கள் இயற்றிப் பாராட்டினர். இவரையும் பாடும்படி கேட்டுக்கொண்டனர். அவர்கள் விருப்பத்தின்படி இவர் அச் சத்திரத்தின் பெருமையைச் சிறப்பித்து 100-விருத்தங்களடங்கிய மாலையொன்று இயற்றிப் பல புலவர்களுக்கு இடையேயிருந்து அரங்கேற்றினர். அம்மாலை சித்திரச்சத்திரப் புகழ்ச்சி மாலை யென்று பெயர் பெறும். அந் நூலைப் பாராட்டி, சபாபதி முதலியார் முதலியவர்கள் கொடுத்த சாத்துக்கவிகள் பல அந் நூலின் பெருமையைப் புலப்படுத்தும். அதிலுள்ள செய்யுட்களுட்சில வருமாறு:
“தெருள்பெற்றான் வியாசநகர் விநாயகமா லதற்கேற்பச் செயிர்தீர் மிக்க
பொருள்பெற்றா னதற்கேற்ப மயிலையிற்சத் திரங்கட்டிப் புகழ்சால் பெம்மான்
அருள்பெற்றா னிவனன்றிப் பொருள்பெற்றும் அறஞ்செய்யா அவனி யுள்ளார்
மருள்பெற்றார் சிறுமைபெற்றா ரின்னுமென்பெற் றாரென்னின் வசைபெற் றாரே.”
“கருதரிய புகழ்மயிலைக் காபாலி தீர்த்தநெடுங் கரையோர் நான்குட்
பொருவருகீழ் கரைகபா லீச்சரத்தா லேக்கழுத்தம் பூண்டு மேவும்
அருமைகொள்தென் கரைவிநா யகமுகில்சத் திரத்தாலஃ தடையு மற்றை
இருகரையு மென்செய்வா மென்செய்வா மென்றேங்கி யிருக்கு மாலோ.”
“நனையமலர்ப் பொழின்மயிலை விநாயகமால் சத்திரத்தில் நலஞ்சா லோவர்
வினையமுற வாய்ந்தமைத்த வவனுருவப் படமொருபான் மேவி வைகும்
அனையவன்பாற் பேசவரு மறையவரப் படத்தினைக்கண் டாசி கூறித்
தினையளவும் விடார்மொழிய வவனருகே யிருந்துநகை செய்வன் மாதோ.”
விநாயக முதலியார் அந்தப் பிரபந்தத்திற்குப் பரிசிலாக நூறுவராகன் இவருக்கு ஸம்மானஞ் செய்தனர். அத்தொகை இவர் சென்னையிலிருந்து காலங் கழிப்பதற்கு அனுகூலமாக இருந்தது. அந்தப் பிரபந்தம் பின்பு நள வருடம் சித்திரை மாதம் (1856) பதிப்பிக்கப்பெற்றது. பின் விநாயக முதலியார் மீது இவர் சில தனிச் செய்யுட்களும் இயற்றினர்.
[2] வியாசைக் கோவை.
இப்படியிருந்து வருகையில் இவர் செய்த பல செய்யுட்களைக் கேட்டுவந்த கா. சபாபதி முதலியாரும் பிறரும் ஒருசமயம் வேதநாயகம் பிள்ளையின் மீது இவர் இயற்றிய குளத்தூர்க் கோவையிற் சில செய்யுட்களைக் கேட்டு இன்புற்று விநாயக முதலியார் மீதும் ஐந்திணைக் கோவை யொன்று செய்ய வேண்டுமென்று வற்புறுத்தினார்கள். அவர்களுடைய விருப்பத்திற்கிணங்கி அவ்வண்ணமே செய்யத்தொடங்கி நூறு செய்யுட்கள் செய்து முடித்தனர். அவற்றைக்கேட்ட விநாயக முதலியார் பெரிதும் மகிழ்ந்து விரைவில் நிறைவேற்றித் தரும்படி கூறி ரூபாய் நானூறு பரிசிலளித்தனர். பின்பு அக்கோவையைத் திரிசிரபுரம் போய் முடித்தனுப்புவதாகக் கூறினார். இவருடைய கட்டளையின்படி அக்கோவையின் எஞ்சிய பகுதி சி. தியாகராச செட்டியாரால் இயற்றப்பெற்றது. அக்கோவை சம்பந்தமான ஒரு செய்தியை இங்கே குறிப்பிடுகிறேன்:
தியாகராச செட்டியார் உபகாரச்சம்பளம் பெற்றுக்கொண்டு உறையூரில் இருந்தபொழுது அவரைப் பார்ப்பதற்கு நான் சென்றிருந்தேன். அப்போது ஒருநாள், “ஐயா அவர்களும் நீங்களும் இயற்றிய வியாசைக்கோவையை நான் பார்த்ததில்லை. இதுவரையில் அது கிடைக்கவில்லை. தங்களிடம் உண்டோ?” என்றேன். “ஓர் அச்சுப்பிரதியே என்னிடம் இருக்கிறது. அதனைக் கொடுப்பதற்கு என் மனம் துணியவில்லை” என்றார் செட்டியார். நான், “படித்துவிட்டுத் தந்துவிடுவேன்” என்றேன். அவர் அப்பால் அதனைக் கொண்டுவந்து கொடுத்தார். அவர் முன்னிலையில் ஒருநாட் காலை தொடங்கி அதனைப் படித்துப் பொருள் கேட்டுவந்தேன். அவர் கடினமான இடங்களுக்குப் பொருள் சொல்லிக் கொண்டுவந்தார். நூறு பாடல்கள் ஆனவுடன் திடீரென்று அவர், “இனிமேல் வாசிக்கவேண்டாம்; நிறுத்தி விடவேண்டும்” என்றார். அவர் அவ்வாறு கூறியதற்குக் காரணம் விளங்கவில்லை; “'ஏன் நிறுத்தச் சொல்லுகிறீர்கள்? நேரமாகவில்லையே. இன்னும் சில பாடல்கள் படிக்கலாமே. நல்ல இடமாக இருக்கிறதே” என்றேன். “இல்லை. உங்களுக்கு என்னிடத்தும் என் பாட்டினிடத்தும் மிக்க மதிப்புண்டு. இனி, மேலே வாசித்தால் அந்த மதிப்புக் குறைந்து விடும்” என்றார். “என்ன காரணம்?” என வினவினேன். “இதுகாறும் உள்ள பாடல்கள் ஐயா அவர்கள் பாடியவை; இதற்கு மேலுள்ளவை அவர்களுடைய கட்டளையின்படி நான் செய்தவை. அவர்களுடைய இனிய செய்யுட்களை வாசித்த பின் தொடர்ந்து என் பாட்டுக்களையும் வாசித்தால் என் யோக்கியதை வெட்டவெளியாய்விடும். அமிர்தத்தையுண்டவன் பிண்ணாக்கை உண்டது போலிருக்கும்” என்று சொல்லிவருந்தினார்; அப்பொழுது அவர் கண்களிலிருந்து நீர் பெருகிற்று. பிள்ளையவர்களது கவிச்சுவையை நன்கு அறிந்து அதில் ஈடுபட்டவர்களுள் செட்டியார் முதல்வரென்பதும் அந் நூலின் சிறப்பும் இதனாலும் வெளியாயின.
அக்கோவைப் பாடல்களிற் சில வருமாறு:
தலைவன் தலைவியைப் புகழ்தல்.
“புரவோன் கவிஞர்வைப் பானோன் விநாயக பூபனெனும்
உரவோன் வரையிவர் தம்வாண் முகத்தொழி லுட்சிறிதா
தரவோ னிரந்து கொளத்திரி தன்மையிற் றானலவோ
இரவோ னெனும்பெயர் பெற்றா னுடுபதி யென்பவனே.”
தலைமகன் மறுத்தல்.
“நீர்வேட் டடைந்திரந் தோரைப் பிரமற்கு நேடரிய
ஆர்வேட்ட வேணிப் புனல்கொண்டுண் பாயென் றறைதலொக்கும்
பார்வேட்ட சீர்த்தி விநாயக மால்வரைப் பான்மொழியாய்
தார்வேட்ட மங்கையை நீவரைந் தெய்தென்று சாற்றியதே.”
திருமயிலைப்புராணம் செய்யத் தொடங்கியது.
விநாயக முதலியார் இவர் செய்த தியாகராசலீலை, உறையூர்ப் புராணம் முதலியவற்றைக் கேட்டு வியந்து, “திருமயிலைக்கு நீங்கள் ஒரு புராணம் செய்யவேண்டும்” என்று வற்புறுத்திக் கூறி அத்தலத்தின் வடமொழிப் புராணத்தையும் கொடுத்தனர். அக்காலத்தில் திருமயிலைக் கைக்கோளத் தெருவில் இருந்த சாமி முதலியாரென்னும் அன்பர் ஒருவர், “இப்புராணத்தைச் செய்து முடித்தால் விநாயக முதலியார் தக்க ஸம்மானம் செய்வார்; அன்றியும் நாங்களும் எங்களாலியன்றதைச் செய்வோம்” என்று நூறு ரூபாய் செலவுக்குக் கொடுத்தார். அவர்களுடைய வேண்டுகோளின்படி பாயிரமும் நாட்டுப்படலம் நகரப்படலங்கள் மட்டும் செய்யப்பட்டன. அப்பகுதி இப்பொழுது கிடைக்கவில்லை. அதிலுள்ள சில அருமையான பாடல்களை நான் கேட்டிருக்கிறேன்.
இச்செய்தி நடைபெற்றது இவரது 39-ஆம் பிராயத்திலாகும்.
குளத்தூர் முதலிய இடங்களுக்குச் சென்றது.
இவர் இங்ஙனம் சென்னையில் இருந்துவருகையில், சிவஞான முனிவர், கச்சியப்ப முனிவர், தொட்டிக்கலைச் சுப்பிரமணிய முனிவர் ஆகியவர்கள் பெரும்பாலும் தங்கித் தமிழை அபிவிருத்தி செய்தும் பலருக்குப் பாடஞ்சொல்லியும் தமிழ் நூல்களை இயற்றியும் விளங்கிய இடங்களைப் பார்க்கவேண்டுமென்னும் விருப்பம் இவருக்கு உண்டாயிற்று. உண்டாகவே விநாயகபுராணம் அரங்கேற்றப்பட்ட இடமாகிய சென்னை ஐயாப்பிள்ளை தெருவிற் கோயில் கொண்டெழுந்தருளிய ஸ்ரீ பிரஸந்ந விநாயகரைத் தரிசித்தார்; விநாயக புராணம் செய்வித்த சிதம்பர முதலியாரென்பவரின் பரம்பரையினராகிய ஒருவரால் அழைக்கப்பெற்றுக் குளத்தூர் சென்றார். அங்கே கோயில்கொண்டெழுந்தருளிய ஸ்ரீ சோமேசரையும் ஸ்ரீ அமுதாம்பிகையையும் தரிசனம் செய்தார். அவர்கள் இருந்துவந்த மடத்திற்றங்கினார். அவர்களுடைய பெருமையை ஆண்டுள்ளார்க்கெல்லாம் எடுத்துரைத்தார். “சிவஞான முனிவர், சோமேசர் முதுமொழி வெண்பாவும் அமுதாம்பிகை பிள்ளைத் தமிழும் குளந்தைப் பதிற்றுப்பத்தந்தாதியும் இயற்றுவதற்கும் ஸ்ரீ கச்சியப்ப முனிவர் விநாயக புராணம் செய்வதற்கும் அவர் பெரும்பாலும் வாசம் செய்வதற்கும் இடமாகவிருந்த இவ்வூர் என்ன புண்ணியம் செய்ததோ? இந்தப் பெருமையைப் பெரிய நகரமும் பெற்றிலதே!” என்று மனமுருகினர்; சில நாள் அங்கிருந்தனர்.
அப்பால் தொட்டிக்கலைக் கேசவ முதலியார் பரம்பரையினராகிய கிருஷ்ணசாமி முதலியாரால் அழைக்கப்பெற்றுத் தொட்டிக்கலை சென்றார். அங்கே முற்கூறிய சிவஞான முனிவர் முதலிய மூவரும் இருந்த மடத்தையும் அவ்வூரிற் கோயில்கொண்டெழுந்தருளியிருக்கும் ஸ்ரீ செங்கழுநீர் விநாயகரையும், ஸ்ரீ சிதம்பரேசுவரரையும், ஸ்ரீ சிவகாமி அம்மையையும், ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாளையும் தரிசனம் செய்தார். [3] சிவாலயத்தின் முன் மண்டபத்திற் சிலாரூபமாக எழுந்தருளியிருக்கும் சிவஞான முனிவரையும் தரிசித்தார். சிலதினம் அங்கே அவர்களால் உபசரிக்கப்பட்டுத் தங்கியிருந்தார்.
[4]சிதம்பரேசர் மாலை.
அங்கே இருக்கும்பொழுது சிவஞான முனிவராலே இயற்றப்பட்ட செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ், கலைசைப் பதிற்றுப் பத்தந்தாதி, சுப்பிரமணிய முனிவர் இயற்றிய கலைசைச் சிலேடை வெண்பா, கலைசைக்கோவை முதலியவற்றின் நயங்களை அன்பர்களுக்குச் சொல்லிக்கொண்டிருந்தார். அப்பொழுது கிருஷ்ணசாமி முதலியார், “இந்த ஸ்தலத்துச் சிதம்பரேசுவரர் மீது ஒரு சந்நிதிமுறை சுப்பிரமணிய முனிவராற் செய்யத் தொடங்கப்பட்டு முற்றுப்பெறாமல் நின்றுவிட்டமையால் தாங்கள் அதைப் பூர்த்தி செய்யவேண்டும்” என்று வேண்டினார். அவ்வண்ணமே இவர் செய்யத் தொடங்கிச் சிதம்பரேசர் மாலையொன்றைமட்டும் அங்கே செய்து முடித்தனர். பின்பு திரிசிரபுரம் போய் எஞ்சியவற்றைச் செய்தனுப்புவதாகச் சொல்லி விடைபெற்றுத் திரும்பினார். பின்பு அச்சந்நிதிமுறை முற்றுப்பெறவில்லை. சிதம்பரேசர் மாலையிலுள்ள சில செய்யுட்களின் பகுதிகள் வருமாறு:
“வட்டநாண் மலர்மேற் கடவுளென் றலைமேல்
வருந்துறக் கடவையென் றெழுதி
இட்ட தீ யெழுத்து நீரெழுத் தாதற்
கெத்தவஞ் செய்துளே னடியேன்" (33)
“என்றுமை யாற்றை மேவுமென் மனநின்
இணையிலை யாற்றைமே வாது
சென்றுயர் தில்லை தரிசித்த தில்லை” (72)
“மறைவனங் கொடிய பாவியேன் விழிக்கு
மறைவன மாயின தாரூர்
அறையருள் பெறுவான் புகுதயா னாரூ
ராறெனி னஞ்சுவன் மூழ்க” (73)
“குதித்தநீர்க் கோலக் காவுறேன் வீணே
கோலக்காத் தோறுமுற் றுழல்வேன்” (75)
“அரும்பிய மலர்நீர் வாஞ்சிய மொருநா
ளாயினும் வாஞ்சியம்” (76)
“உடற்பரங் குன்ற நின்பரங் குன்ற
முற்றொரு காற்றொழேன் கருவூர்
விடற்கரு மாசை கொண்டெழேன் கருவூர்
விடற்கரு மாசைமிக் குடையேன்” (77)
“நெற்படு பழனம் பற்பல வேண்டி
நின்றன னீயினி திருக்கும்
மற்படு பழனம் வாஞ்சியேன் கொடிய
வஞ்சக னல்லனோ கடையேன்” (85)
திரிசிரபுரம் மீண்டது.
இப்படியே அம்முனிவர்கள் இருந்த இடங்களையெல்லாம் இடையிடையே பார்த்துக்கொண்டு சென்னை வந்து சேர்ந்து சிலநாள் தங்கி அங்கிருந்த வித்துவான்களோடு பழகிக் கிடைத்த நூல்களைச் சேகரித்துக்கொண்டு பின்பு எல்லாரிடமும் பிரியா விடை பெற்றுச் சென்னையை விட்டுப் புறப்பட்டார். இடையிலே உள்ள பல ஸ்தலங்களையும் தரிசித்துக்கொண்டு வருகையில் திருப்பாதிரிப்புலியூரில் சில நாள் தங்கினார். அப்பொழுது இவருக்குத்தக்க உபசாரங்களைச் செய்து ஆதரித்தவர் இவர் மாணாக்கராகிய சிவசிதம்பர முதலியாரென்பவர். பின்பு அவ்விடத்தினின்றும் நீங்கித் திரிசிரபுரம் வந்து சேர்ந்தார். வந்து வழக்கம் போலவே பாடஞ் சொல்லுதல் முதலியவற்றைச் செய்து வருவாராயினர்.
தாண்டவராயத் தம்பிரானவர்கள்பால் பேரூர்ப் புராணம் பெற்றது.
ஆனந்த வருஷத்தில், சென்னையிலிருந்த தாண்டவராயத் தம்பிரானவர்கள் கல்லிடைக்குறிச்சி செல்வதற்குப் பயணமாகித் திரிசிரபுரம் வந்து மெளனஸ்வாமிகள் மடத்தில் சிலநாள் தங்கினர். அவர் வரவையறிந்த இவர், மாணாக்கர்களுடன் சென்று தரிசித்துச் சம்பாஷித்துக் கொண்டிருந்தார். அப்போது இவர், ஸ்ரீ கச்சியப்ப முனிவர் இயற்றிய பேரூர்ப் புராணம் தம்பாலில்லை யென்றும் அதனைப் படித்து இன்புற வேண்டுமென்னும் விருப்பம் தமக்கு உள்ளதென்றும் அதனை வருவித்துத் தர வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். அவர், “இப்பொழுது என் கையில் அது வந்துள்ளது. ஆனால் கல்லிடைக்குறிச்சிக்கு அதனைக் கொண்டு போகவேண்டியவனாகவிருக்கிறேன்” என்றார்.
மீ: அதைப் படித்துப் பார்க்கவேண்டுமென்ற விருப்பம் அடியேனுக்கு மிகுதியாக இருத்தலால் [5]அங்குத்தி கொடுத்தருளுமாயின் விரைவில் பிரதி செய்துகொண்டு கொடுத்துவிடுவேன்.
தாண்டவ: நான் இன்னும் சில தினங்களே இங்கு இருப்பேன். அதற்குள் நீங்கள் எப்படிப் பிரதி செய்து கொள்ள முடியும்? ஒரு மாதமாவது அதற்கு வேண்டாமா?
மீ: வேண்டாம். அங்குத்தி குறிப்பிடும் காலத்திற்குள்ளாகவே பிரதி செய்து கொடுத்துவிடுவேன். அதைப்பற்றி அங்குத்திக்குச் சிறிதேனும் கவலை வேண்டாம்.
தாண்டவராயத் தம்பிரானவர்கள், “நான் பாடஞ் சொல்வதற்கு வைத்திருக்கும் பிரதியாதலால் அவசியம் கொண்டு போக வேண்டும்” என்று சொல்லி அதனைக் கொடுத்தனர். உடனே அதனை இவர் வாங்கிச் சென்று தம்முடைய மாணாக்கர்களுள் பனையோலையில் எழுதக்கூடியவர்கள் சிலரைத் தேர்ந்து அழைத்து, அப்புத்தகத்திலுள்ள ஏடுகளைப் பிரித்து அவர்களிடம் கொடுத்து ஒரு பாகத்தைத் தாம் வைத்துக்கொண்டு எழுதுவித்தும் எழுதியும் சில தினங்களுள் முடித்து உடனுடன் ஒப்பு நோக்கிவிட்டுத் தம்பிரானவர்கள் புறப்படுவதற்குள் பிரதியைச் சேர்ப்பித்து விட்டார்.
இடையிடையே மாணாக்கர்களுடன் போய்த் தாண்டவராயத் தம்பிரானவர்களைத் தரிசித்து வருவதுண்டு. அக்காலத்தில் மாணாக்கர்களுள் ஒவ்வொருவரையும் அவர் பரீட்சித்து அவர்கள் பாடங்கேட்ட முறையைத் தெரிந்து சில காலத்துப் பல நூல்களை மாணாக்கர்கள் ஒழுங்காகப் பாடங்கேட்டிருத்தலையும் இவர் வருத்தமின்றி இடைவிடாமற் பாடஞ்சொல்லிய அருமையையும் பற்றி மிகவும் வியப்புறுவாராயினர். அவர் ஒவ்வொன்றையும் சிரமப்பட்டு ஆசிரியரிடம் கற்றவராகையால் அவருக்கு இவருடைய அருமை நன்கு புலப்பட்டது. ‘இவர் திருவாவடுதுறை ஆதீனத்தில் இருந்து பாடஞ் சொல்வாராயின் இவருடைய கல்வி பலர்க்குப் பயன்படக்கூடும்; ஆதரவும் ஊக்கமும் இவருக்கும் வளர்ச்சியடையும்' என்று அவர் எண்ணினார்.
மேலகரம் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் இவரைப்பற்றி அறிதல்.
சில தினங்களுக்குப் பின்பு தம்பிரானவர்கள் கல்லிடைக்குறிச்சிக்குச் சென்றார். திருவாவடுதுறை யாதீனத்தில் அப்போது சின்னப்பட்டத்தில் எழுந்தருளியிருந்த மேலகரம் சுப்பிரமணிய தேசிகர் அங்கே இருந்தார். அவர் தாண்டவராயத் தம்பிரானவர்களிடம் பல தமிழ் நூல்களைப் பாடங்கேட்டவர். அவரைக்கொண்டே மாணாக்கர்களுக்கும் பாடம் சொல்லச் செய்யலாமென்று தேசிகர் எண்ணி அக்கருத்தை அவரிடம் வெளியிட்டனர். தாண்டவராயத் தம்பிரானவர்கள், “என்னுடைய தேகநிலை அவ்வாறு செய்ய இடந்தராது; வழக்கமும் இல்லை. திரிசிரபுரத்தில் மீனாட்சி சுந்தரம்பிள்ளை யென்று ஒரு வித்துவான் இருக்கிறார். அவர் இரண்டுமுறை சென்னைக்கு வந்திருந்தார். அக் காலத்தில் அவருடன் நெருங்கிப்பழகும் சந்தர்ப்பம் வாய்த்தது. பின்பு திரிசிரபுரத்திலும் பழகினேன். அப்பொழுது அவருடைய அருமை நன்கு விளங்கிற்று. பாடஞ் சொல்வதிலும் செய்யுள் செய்வதிலும் அவருக்கு இணையாக இக்காலத்தில் யாரும் இல்லையென்றே சொல்லலாம்; இடைவிடாமற் பாடஞ் சொல்வதிற் சிறிதேனும் சலிப்பில்லாதவர்; நிறைந்த கல்விமான். இந்த ஆதீன வித்துவானாக அவர் நியமிக்கப்படுவாராயின் ஆதீனத்தின் புகழ் எங்கும் பரவும். அவரைக் கொண்டு பல மாணாக்கர்களைப் படிப்பிக்கலாம்” என்று விண்ணப்பித்துக் கொண்டனர். அக்காலமுதல் சுப்பிரமணிய தேசிகர் இவரை ஆதீனத்தில் இருக்கச்செய்ய வேண்டுமென்னும் எண்ணம் உடையவராகித் தக்க காலத்தை எதிர்பார்த்திருந்தார். நிற்க.
தாண்டவராயத் தம்பிரானவர்கள் பிரதியைப் பார்த்தெழுதிய பேரூர்ப் புராணம் பின்பு படிப்பவர்களாற் பல பிரதிகள் செய்யப்பட்டது. அப்பால் இச்செய்தியை அறிந்த பிள்ளையவர்களுடைய மாணாக்க பரம்பரையினர் ஒவ்வொருவரும் அப்பிரதியைப் பார்த்துக்கொண்டே கைவழிப் போக்கியதில் இவருடைய மாணாக்கருள் ஒருவரும் அருங்கலை விநோதரும் வரகனேரிப் பட்டாதாருமாகிய சவரிமுத்தாபிள்ளையிடம் வந்து தங்கிற்று. அவர் அதனைப் பொன்னேபோற் போற்றிச் சேமத்தில் வைத்துப் பாதுகாத்து வந்தனர். அது தெரிந்த நான் பிற்காலத்து அவரிடம் சென்று கேட்டு அதனை அரிதிற் பெற்று வந்து என் பால் வைத்து, பிள்ளையவர்களைப் பார்ப்பதுபோல் பார்த்து வருகிறேன்.
தாண்டவராயத் தம்பிரானவர்களின் கடிதம்.
தாண்டவராயத் தம்பிரானவர்கள் கல்லிடைக்குறிச்சியிலிருந்து மீண்டும் சென்னைக்குப் புறப்பட்டுச் செல்கையில் முகத்தில் ஒரு பரு உண்டாகி வருத்தினமையால் திருச்சிராப்பள்ளியில் ஐந்து தினங்கள் தங்கினார். பிள்ளையவர்கள் சென்று ஸம்பாஷித்து வந்ததும் அப்பொழுது அங்கே இருந்ததும் அக்காலத்தில் இவரோடு பழகி இன்புற்றதும் மேலகரம் சுப்பிரமணிய தேசிகருக்கு அவர் எழுதிய விண்ணப்பத்திலுள்ள அடியிற்கண்ட வாக்கியத்தால் விளங்கும்.
“அடியேன் திரிசிரபுரத்தில் மெளனஸ்வாமிகள் மடத்தில் தங்கிப் [6] பருவரலாற் பருவரலுற்று வித்துவான் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களுடைய சம்பாஷணையினால் [7] அஞ்சு தினங்களையும் அஞ்சுதினங்களாகக் கழித்தேன்.”
------------
[1] ஸ்ரீ மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் பிரபந்தத்திரட்டு, 3954 - 4083.
[2] மீ. பிரபந்தத்திரட்டு, 4160-4609.
[3] “ஓதரிய வாய்மைச் சிவாகமங் கட்கெலா முற்றபே ராகரமதாய்
ஓங்குதிரு வாவடு துறைப்பதியி லற்புதத் தொருவடிவு கொண்டருளியே
பேதமுறு சமயவாதி களுள மயக்கைப் பெயர்க்கும்ரச குளிகையாகிப்
பிரியமுட னேவந் தடுத்தவர்க் கின்பப் பெருங்கருணை மேருவாகி
ஆதரித் தடியேங்க ளுண்ணத் தெவிட்டாத வமிர்தசா கரமாகியே
அழகுபொலி கலைசைச் சிதம்பரே சுரரடிக் கதிமதுர கவிதைமாரி
மாதவர் வழுத்தப் பொழிந்தருளி யென்றுமவர் மணிவளர் சந்நிதியிலோர்
மணிவிளக் கென்னவளர் சிவஞான மாதவன் மலர்ப்பாதம் வணங்குவாமே.”
[4] ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத்திரட்டு, 2915 - 3015.
[5] தாங்கள் என்னும் பொருளுடைய இச் சொல்லைத் தம்பிரான்மார்களோடு பேசும்பொழுது கூறுதல் சம்பிரதாயம்.
[6] பருவரல் - பரு (ஒருவகைச் சிரங்கு) வருதல்; துன்பம்.
[7] அஞ்சு தினம் - ஐந்து தினங்கள்; அம் சு தினம் - அழகிய நல்ல தினம்.
--------------
This file was last updated on 18 August 2018.
Feel free to send the corrections to the webmaster.