திரிசரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள்
சரித்திரம் - பாகம் 1.2
உ.வே.சாமிநாதைய ஐயர் எழுதியது
mInATci cuntaram piLLai carittiram, part 1.2
by u.vE cAminAta aiyar
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Tamil Virtual Academy for providing a scanned
image (PDF) version of this work for the etext preparation. The etext has been
prepared using Google OCR Online Tool and subsequent proof-reading.
We thank Ms. Karthika Mukunth for her help in proof-reading this etext.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2018.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
திருவாவடுதுறை யாதீனத்து மகாவித்துவான்
திரிசரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்- பாகம் 1.2
உ.வே.சாமிநாதைய ஐயர் எழுதியது
Source:
திருவாவடுதுறை யாதீனத்து மகாவித்துவான்
திரிசரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்.
முதற்பாகம்
இது மேற்படி பிள்ளையவர்கள் மாணாக்கர் மகாமகோபாத்தியாய
தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ.வே.சாமிநாதையரால் எழுதப்பெற்று,
சென்னபட்டணம்: கேஸரி அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பெற்றது.
ஸ்ரீமுகளும் கார்த்திகை மீ
© 1933 Copyright Registered. (விலை ரூபா 2-0-0.)
--------------
உள்ளடக்கம்
முகவுரை
1. முன்னோரும் தந்தையாரும்
2. இளமைப் பருவமும் கல்வியும்
3. திரிசிரபுர வாழ்க்கை
4. பிரபந்தங்கள் செய்யத் தொடக்கம்
5. திருவாவடுதுறை வந்தது
6. திருப்பைஞ்ஞீலித் திரிபந்தாதி முதலியவற்றை இயற்றியது
7. சென்னைக்கு சென்று வருதல்
8. கல்வியாற்றலும் செல்வர் போற்றலும்
9. அம்பலவாண முனிவரிடம் பாடங்கேட்டல்
10. பெரியபுராணப் பிரசங்கமும் பாடஞ் சொல்லுதலும்
11. சில பிரபந்தங்களும் தியாகராச லீலையும் இயற்றல்
12. சிவதருமோத்திரச் சுவடி பெற்ற வரலாறு
13. பங்களூர் யாத்திரை
14. உறையூர்ப்புராண அரங்கேற்றமும் பல பிரபந்தங்களை இயற்றலும்
15. இலக்கண விளக்கம் பாடங்கேட்டது
16. சில மாணவர்கள் வரலாறு
17. இரண்டாவதுமுறை சென்னைக்குச் சென்றது
18. சீகாழிக்கோவை இயற்றி அரங்கேற்றல்
19. மாயூர வாசம்
20. திருவாவடுதுறையாதீன வித்துவான் ஆகியது
21. பல நூல்கள் இயற்றல்
22. ரங்கசாமி பிள்ளையைத் திருவாவடுதுறை மடத்திற்கு வரச்செய்தது
23. கும்பகோண நிகழ்ச்சிகள்
24. புராணங்களும் பிரபந்தங்களும் இயற்றல்
திருவாவடுதுறை யாதீனத்து மகாவித்துவான்
திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்.
முதற்பாகம் 1.2
18. சீகாழிக் கோவை இயற்றி அரங்கேற்றல்.
சீகாழிக்கு வந்தது.
பிள்ளையவர்கள் திரிசிரபுரத்தில் இங்ஙனம் இருந்து வருகையில் சென்னையிலிருந்த விநாயக முதலியார் முதலிய பிரபுக்களும் வித்துவான்களும் அடுத்தடுத்துக் கடிதம் எழுதி மயிலைப்புராணம் பூர்த்தியாயிற்றா வென்பதை விசாரித்து வந்தார்கள். அக்காலத்துப் பலவகையான செலவுகளால் இவருக்கு ஆயிரக்கணக்கான கடன் உண்டாயிற்று. அதனைத் தீர்த்தற்கு நினைந்து நகரப் படலம் இறுதியாகப் பாடிவைத்திருந்த திருமயிலைப் புராணத்தை எடுத்துக் கொண்டு சென்னை சென்று பூர்த்திசெய்து அரங்கேற்றினால் கடனைத் தீர்ப்பதற்கு வேண்டிய தொகையும் பிற செளகரியங்களும் பெறலாமென்று எண்ணிச் சில மாணாக்கருடன் சென்னைக்குப் பிரயாணமாகிச் சீகாழிக்கு வந்தனர். அப்பொழுது இவருடைய பிராயம் நாற்பத்தைந்து.
அக்காலத்திற் [1]சீகாழியில் வேதநாயகம் பிள்ளை முன்ஸீபாக இருந்தார். அவர் இவரைச் சீகாழிக்கு வந்து சிலநாள் தம்முடன் இருக்கவேண்டுமென்று விரும்பிப் பலமுறை இவருக்கு முன்னமே கடிதம் எழுதியிருந்ததுண்டு. அதனால் இவர் சென்று அவ்வூரில் அவர் வீட்டில் தங்கினார். அக்காலத்தில் அவர் [2]நீதிநூலைச் செய்து முடித்து வைத்திருந்தமையின் இவர் வரவை நல்வரவாக நினைந்து சில காலம் இருக்கும்படி செய்து, தாம் இயற்றிய அந்நூலை முற்றும் படித்துக்காட்டி வேண்டிய திருத்தங்களைச் செய்து கொண்டார். அப்பொழுது அவருடைய தம்பியும் தமிழபிமானியுமாகிய ஞானப்பிரகாசம் பிள்ளை யென்பவர், “நீதி நூலுக்கு நீங்கள் சிறப்புப்பாயிரம் அளிக்கவேண்டும்; பிறரிடத்திலிருந்தும் வாங்கிக்கொடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார். அவர் விருப்பத்தின்படியே சிறப்புப்பாயிரச் செய்யுட்கள் இவராற் செய்யப்பெற்றன.
சீகாழிக்கோவை இயற்றியது.
அச் செய்யுட்களைப் பலர் முன்னிலையிற் படித்துக் காட்டிக் கொண்டிருக்கையில்,
“நூலியற்றி யீதலொன்றே யுன்னதெனக் கோடலைபன் னூலு மோர்நம்
மாலியற்றிக் கொடுத்திடுமைந் திணைக்கோவை யேற்றனையா லளவி லாத
சேலியற்று புனற்குளத்தூர் வேதநா யகமகிபா சிறப்பச் செய்யுட்
பாலியற்ற லேற்றலிவை யிரண்டினு நீ யெப்போதும் பயிலு வாயே”
என்ற செய்யுளால் வேதநாயகம்பிள்ளை மேல் இவர் ஒரு கோவை செய்திருத்தல் அவ்வூராருக்கு வெளியாயிற்று. ஆகவே அக் கோவையிலிருந்து சில பாடல்கள் சொல்லிக் காட்டவேண்டுமென்று அவர்கள் கேட்டுக்கொண்டார்கள். அவ்வாறே அதிலுள்ள சில அருமையான செய்யுட்களை இவர் சொல்லிக் காட்டினர். கேட்ட சைவச்செல்வர்கள் அவற்றின் நயத்தையும் பொருளமைதியையும் அறிந்து இன்புற்று, “ஐயா! இத்தலத்துக் கோயில் கொண்டெழுந்தருளிய ஸ்ரீபிரமபுரேசர் மீது தாங்கள் ஒரு கோவை இயற்றித் தந்தால் எங்களுக்குப் பரமதிருப்தியாக இருக்கும்” என்று தெரிவித்தனர். இவர், “சென்னை சென்று திருமயிலைப் புராணத்தை அரங்கேற்றி வருவதாகப் புறப்பட்டுவிட்டேன். பொருள் முட்டுப்பாட்டினால் விரைவில் அவ்வாறு செய்யவேண்டியது மிகவும் அவசியமாயிருக்கிறது. நான் சென்று திரும்பும் பொழுது இங்கே வந்து உங்கள் விருப்பத்தை நிறைவேற்றுவேன்'' என்றார். அதனைக் கேட்டவர்கள் பின்னும் வற்புறுத்தி வேதநாயகம் பிள்ளையிடமும் தெரிவித்துக்கொண்டார்கள். கேட்ட அவர் பிள்ளையவர்களைப்பார்த்து, “நீங்கள் இவர்கள் சொல்லியபடி செய்தால் எனக்கு எவ்வளவோ பயனுண்டாகும். உங்களோடு உடன் இருந்து வருவதைவிட வேறு சந்தோஷம் ஒன்றுமில்லையென்பது உங்களுக்குத் தெரியாததன்று. நானும் அவர் களைப்போலவே, தாங்கள் இங்கிருந்து அக்கோவையை இயற்றி அரங்கேற்ற வேண்டுமென்று கேட்டுக்கொள்ளுகிறேன்'' என்றார். கேட்ட இவர் அவ்விடத்திலேயே இருப்பாராயினர். உடனே வேண்டிய விடுதியும் பிற செளகரியங்களும் அவ்வூரிலும் அயலூரிலும் இருந்த [3]கனவான்களால் அமைக்கப்பட்டன.
அப்பால் நூல் இயற்றத் தொடங்கி ஒவ்வொரு தினத்தும் பத்து அல்லது பதினைந்து செய்யுட்களாக ஆராய்ந்து ஆராய்ந்து செய்து உடன் இருப்பவர்களுக்கு அப்போதப்போது படிப்பித்துக்காட்டி நூல்நயங்களைப் புலப்படுத்திக் கொண்டுவந்தார். சில மாதங்களில் அக்கோவை பூர்த்தியாயிற்று.
உடன் இருந்த இருவர் செயல்.
சீகாழிக் கோவை இயற்றி வருகையில் இடையிடையே ஞாயிற்றுக்கிழமை தோறும் வேதநாயகம் பிள்ளையின் வேண்டுகோளின்படி அவர் வீடு சென்று தாம் இயற்றிக்கொண்டு வரும் அந்நூலில் ஆனவற்றை இவர் படிப்பித்துப் பொருள் கூறி மகிழ்விப்பது வழக்கம்; தம்மோடுகூட இருப்பவர்களிற் சிலரை உடனழைத்துச் செல்வார். ஒருநாள் கோவைச் செய்யுட்களிற் சிலவற்றைப் படிப்பித்துக் கேட்டு வேதநாயகம் பிள்ளை மிக்க மகிழ்ச்சியோடு இருக்கையில் இவர் ஏதோ ஒரு காரியார்த்தமாக வீட்டின் புறம்பே சென்றனர். அப்பொழுது வேதநாயகம் பிள்ளை இவருடன் வந்து அங்கே இருந்த இருவரை நோக்கி, “இந்தக் கோவைச் செய்யுட்கள் எவ்வளவு நயமாக இருக்கின்றன பார்த்தீர்களா?” என்று கேட்டனர். உடனே அவ்விருவருள் ஒருவர், “இத்தலத்திற்கு வேறொரு பெரியவர் முன்பு ஒரு பிரபந்தம் செய்திருக்கிறார். அதிலுள்ள செய்யுட்கள் நிரம்பச் சுவையுள்ளனவாக இருக்கும். அவற்றை நீங்கள் கேட்டதில்லை போலும்” என்றார். அதனைக் கேட்ட வேதநாயகம் பிள்ளை அவரை ஏற இறங்கப் பார்த்து, “இவர் அழுக்காறுடையவராகத் தோற்றுகிறார்” என்றெண்ணி அக்கருத்தை வெளிப்படுத்தாமல் மனத்தில் அடக்கிக்கொண்டு அவரை நோக்கி, “அந்நூலிலிருந்து ஒரு செய்யுளைச் சொல்லும்” என்றார். அவர் ஒரு செய்யுளைச் சொன்னார்; அதில், “சமையவிசேடமாச்சுது” என்றுள்ள பகுதியைக் கேட்ட உடனே வேதநாயகம் பிள்ளை சட்டென நிறுத்தும்படி குறிப்பித்து, “பன்மை எழுவாய்க்கு ஒருமைப் பயனிலை வந்திருத்தலும் ஆயிற்றென்றது ஆச்சுதென்று வந்திருத்தலும் பிழையல்லவோ? மற்றைச் செய்யுட்களும் இப்படித் தானே இருக்கும்? இந்தப்பிழை மலிந்த செய்யுட்களையா சிறந்த செய்யுட்களென்றெண்ணுகிறீர்கள்?” என்று சினக்குறிப்போடு சொல்லிவிட்டு மேலும் கடிந்து, “பிள்ளையவர்களுடைய செய்யுளைப்பற்றி நான் பாராட்டிச் சொல்லுகையில் அதைச் சிறியதேனும் காதில் வாங்கிக்கொள்ளாமல் திடீரென்று வேறு ஏதோ ஒன்றைச் சொல்ல ஆரம்பித்துவிட்டீரே. உம்மை உபசரித்துத் தம்முடன் ஆகாரம் அளித்துக்கொண்டிருக்கிற அவர்களுக்கு அவமதிப்பை உண்டாக்க முயலுகின்றீரே. அவர்களிடம் வேண்டியவற்றையெல்லாம் பெற்றுக்கொண்டு அவர்களுக்கே கேடு நினைக்கின்ற நீர் மற்றவர்கள் விஷயத்தில் என்ன தான் செய்யத் துணிய மாட்டீர்? அவர்களிடத்திற் பிரீதியுள்ளவனும் அதிகாரியுமாகிய என்னிடத்திலேயே இப்படிச் சொல்லுவீராயின் வெளியில் எவ்வளவுதான் சொல்ல மாட்டீர்?” என்று சொன்னார்.
புறம்பே சென்றிருந்த இவர் வந்தனர். அங்கிருந்த இருவரும் வேதநாயகம் பிள்ளையினுடைய வார்த்தைகளைக் கேட்டு ஒன்றும் தோன்றாமல் விழித்துக்கொண்டிருப்பதையும் அவர் மேலும் கண்டிப்பதையும் கண்டு இவர் சமாதானமாகச் சில வார்த்தைகள் சொல்லத் தொடங்கினார். அப்பொழுது வேதநாயகம் பிள்ளை, “நல்ல ஸ்வபாவமுடையவர்களைக் கூட வைத்துக்கொள்ள வேண்டுமேயன்றி இத்தகையவர்களைச் சேர்த்துக்கொள்ளலாகாது. உங்களுக்குச் சாதகர்களாக இருக்கிறார்களென்று எண்ணியே நான் இவர்களை உள்ளே அழைத்துக் கேட்கச் சொன்னேன். இவர்களுடைய தீயகுணம் எனக்கு இதற்கு முன்பு தெரியவில்லை. உங்களுடைய அருமையான பாடல்களில் எனக்கு அவமதிப்பு வரவேண்டுமென்று சங்கற்பித்துக்கொண்டு ஏதோ சில வார்த்தைகளை நீங்கள் இல்லாத சமயம் பார்த்துச் சொல்லத் தொடங்கினார்களே” என்றார். இவர், “தக்கவர்கள் எங்கே கிடைக்கிறார்கள்? கிடைத்தவர்களைக் கொண்டுதான் நாம் ஸந்தோஷத்தையடைய வேண்டியிருக்கிறது. இவர்கள் மிகவும் நல்லவர்களே. தம்மை அறியாமல் ஏதோ தவறு செய்துவிட்டார் போலும்! இனி ஒருபொழுதும் அவ்வண்ணம் செய்யமாட்டார். பொறுத்துக்கொள்ள வேண்டும்” என்று சொல்லி அவருடைய கோபத்தை ஆற்றுவித்தார். பின்பு அவ்விருவரையும் அழைத்துக்கொண்டு இவர் தம்முடைய விடுதிவந்து சேர்ந்தனர்.
சீகாழிக் கோவையை அரங்கேற்றியது.
பின்பு சீகாழிக் கோவையை அரங்கேற்றுவித்தற்கு நிச்சயித்து ஒரு நல்ல தினம் குறிப்பிட்டு, சீகாழியிலிருந்த பிரபுக்களும் வித்துவான்களும் அயலூரிலுள்ள பிரபுக்களுக்கும் வித்துவான்களுக்கும் சொல்லியனுப்பினார்கள். கேட்க விருப்பமுற்ற ஒவ்வொருவரும் வந்து சீகாழியில் இருப்பாராயினர். ஸ்ரீ பிரமபுரேசர் திருக்கோயிலின் தெற்குப் பிராகாரத்திலுள்ள வலம்புரி மண்டபம் அரங்கேற்றுதற்குரிய இடமாகப் பலராலும் நிச்சயம் செய்யப்பெற்றது. அம்மண்டபத்தில் இருந்து இவர் அரங்கேற்றத் தொடங்கினார். அப்பொழுது மூலத்தைப் படித்தவர் சாமிநாத கவிராயர். மூன்று காப்புச் செய்யுட்களும் முடிந்தன. நூலில் இரண்டு செய்யுட்கள் நிறைவேறின. இவர், செய்யுளின் நயத்தையும் பல நூல்களிலிருந்து அருமையான செய்யுட்களை மேற்கோளாகக்கூறி யாவருக்கும் விளங்கும்படி பொருள் உரைக்கும் அழகையுங் கேட்டுக்கேட்டு யாவரும் ஆனந்தக்கடலில் ஆழ்ந்தனர்; ‘இந்த வித்துவானைக் காண்டற்கும் இவர் கூறும் இனிய அரிய மொழிகளைக் கேட்பதற்கும் நாம் என்ன புண்ணியம் செய்தோம்!’ என்று ஒவ்வொருவரும் தம்மிற் கூறி வியந்தனர்.
கேட்பதற்கு வந்திருந்த வித்துவான்களுள் குருசாமி பிள்ளை யென்பவர் ஒருவர். அவர், திருவாசகத்திற்கு உரையெழுதிய இராசாத்துரைப் பிள்ளையின் குமாரர். பிற்காலத்திற் பிள்ளையவர்களுடைய சம்பந்தியாகவும் ஆயினர்.
“நாமகண் மாமகள் சேர்காழி நாதர் நகுமிமயக்
கோமகள் பாகர் விடைப்பாகர் தென்கழுக் குன்றத்தொப்பி
லாமகள் கோதைநம் போல்வா டலினிமை யாடலிற்றாள்
பூமகள் சூடலி னையமின் றாலிவள் பூமகளே!” [3]
என்னும் செய்யுள் படிக்கப்பட்டது. அதற்குரிய அவதாரிகையைச் சொல்லிவிட்டு இவர் அதற்குப் பொருள் கூறி முடித்தனர். அப்பொழுது ஒருவர் அழுக்காறுடைய சிலரால் மந்தணமாக ஏவப் பெற்று, “வித்துவானாகிய நாம் மற்றவர்களைப்போலே இந்தச் சமயத்திற் பாராட்டிக்கொண்டேயிருந்தால் நம்முடைய கல்விப் பெருமைக்குப் பயனென்ன? நாளை யாரேனும் நம்மை மதிப்பார்களா? இந் நூல் முடிந்துவிட்டால் இவர் ஊர்போய் விடுவார். நாமல்லவோ இங்கிருந்து ஊராருடைய மதிப்பை எதிர்பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்? எப்போதும்போலே இனிச் சும்மா இருக்கலாகாது. சமயம் வந்தபொழுதல்லவோ நம்முடைய யோக்கியதையையும் கௌரவத்தையும் பிரகாசப்படுத்த வேண்டும்?” என்று நூலை அரங்கேற்றத் தொடங்கும் முன்னரே யோசித்துச் சமயம் பார்த்துக்கொண்டு இருந்தவராதலின், “இந்தப் பாட்டில் ஓராட்சேபம் இருக்கிறது” என்று சிலரோடு பேசிக்கொண்டு கேள்வி கேட்கத் துணிவுற்றார். பிள்ளையவர்கள் அவர் இரகசியமாகப் பிறருடன் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து, “என்ன விசேடம்?” என்றனர். அவர், “சீகாழிக்குக் கோவை பாடவந்த நீங்கள் இச்செய்யுளில் திருக்கழுக்குன்றத்தைக் கூறியதற்கு நியாயமென்ன? சொல்லவேண்டும்” என்று கூசாமல் நிர்ப்பயமாகக் கேட்டனர். இவர் அவருடைய மாறுபாடான எண்ணத்தை அறிந்து கொள்ளவில்லை. ‘இக்கருத்தைப் பலரும் அறிந்து கொள்ளும் பொருட்டே அன்புடன் வினாவுகின்றனர். இவருக்கு விடை கூறுவது போலவே கூறிப் பலருக்கும் விஷயத்தைப் புலப்படுத்தவேண்டும்’ என்றெண்ணிச் சொல்வாராயினர்.
“பெயக்கண்டு நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்”
என்பது பொய்யா மொழியன்றோ?
“சிவபெருமான் எங்கும் வியாபகர், எல்லாமுடையவர்; ஆதலின், மற்றத் தலங்களும் அவருடையனவே யென்பதை அறிவித்தற்கு இங்ஙனம் கூறுவது மரபு. திருச்சிற்றம்பலக் கோவையார் முதலிய கோவைகளில் இதைப்போன்ற பிரயோகங்கள் வந்துள்ளன. [4]‘விண்ணிறந்தார்’ என்னும் செய்யுளில், ‘தில்லையம் பலத்தார் கழுக்குன்றினின்று, தண்ணறுந் தாதிவர் சந்தனச் சோலைப்பந் தாடுகின்றார்' எனவும், [5] 'உருகுதலைச் சென்ற’ என்னும் செய்யுளில், ‘பெருந்துறைப் பிள்ளை கள்ளார், முருகு தலைச் சென்ற கூழைமுடியா’ எனவும், [6] ‘வேலன் புகுந்து’ என்னும் செய்யுளில், ‘எழிற்றில்லைநின்ற, மேலன் புகுந்தென்க ணின்றா னிருந்தவெண் காடனைய, பாலன்’ எனவும் வேறு தலங்கள் கூறப்பட்டிருத்தல் காண்க” என்று சொல்லிவிட்டு வேறு கோவைகளிலிருந்தும் உதாரணங்களைச் சொல்லத் தொடங்கினார்.
கேள்வி கேட்டவர் இவர் கூறிய ஒன்றையும் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒன்றும் பேச இயலாமல் மேலே என்ன கேட்கலாமென அறியாராய் மயங்கியிருக்கையில், இவர் திருச்சிற்றம்பலக் கோவையாரென்றதனால் அவருக்கு ஒரு நினைவு வந்தது. தாம் கேட்பதற்கும் அந்தச் சந்தர்ப்பத்திற்கும் பொருத்தமில்லையென்பதையும் விபரீதமாகுமென்பதையும் அறியாதவராகி, “ஐயா, திருச்சிற்றம்பலக்கோவையார் தான் கோவை; மற்றக் கோவைகளெல்லாம் கள்ளிமேற்படர்ந்த கோவைகளென்கிறார்களே; அதற்கு என்ன விடை சொல்லுவீர்கள்?” என்று தைரியமாகக் கேட்டார். சபையிலிருந்தவர்கள் யாவரும் அவருடைய வரம்பு கடந்த செயலையறிந்து வருத்தமடைவாராயினர். இவர், ‘அவர் ஆட்சேபம் செய்யக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்; என்ன சமாதானம் கூறினாலும் அவர் அங்கீகரிக்க மாட்டார்’ என நினைந்து மௌனமாக இருந்தார். சபைத் தலைவராக வீற்றிருந்த வேதநாயகம் பிள்ளைக்கு அப்போது வந்த கோபத்திற்கு அளவில்லை; “இந்த மனுஷ்யரை அங்கீகரிக்க வேண்டாம்; உடன் வைத்துக்கொள்ள வேண்டாம்; உங்களிடத்துச் சிறிதும் அன்பில்லாதவரென்று முன்பு இவரைப்பற்றியும் இவரைப் போன்ற சிலரைப்பற்றியும் நான் சொன்னதுண்டு. நீங்கள் அதைக் கவனிக்கவில்லை. இனி நான் சும்மா இருத்தல் அழகன்று” என்று சொல்லிவிட்டு அங்கே நின்ற சேவகர்களை நோக்கி, “இவரை உபசாரமாக வெளியே அழைத்துப்போய் விட்டுவிட்டு வாருங்கள்” என்று சொல்லவே சேவகர்கள் அவ்வாறே செய்யவந்தனர்.
அப்பொழுது அவர் தமக்கு நேர்ந்திருக்கும் அவமானத்தைப்போக்கிக் கொள்ளுதற்கு வேறு வழியின்மையையும் தமக்கு அனுகூலம் செய்பவர் ஒருவரும் அங்கில்லாமையையும் அறிந்து பிள்ளையவர்களைப் பார்த்து, ‘எனக்கு நேர்ந்துள்ள இந்த அவமானத்தை எப்படியாவது இச்சமயத்திற் பரிகரிக்கவேண்டும்’ என்பதைத் தம்முடைய விநயமான பார்வையாற் புலப்படுத்தினர். அப்பார்வையின் குறிப்பையறிந்த இவர், [7]மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந், தகுதியால் வென்று விடும் உயரிய குணத்தினராதலின் சேவகர்களை நோக்கிக் கையமர்த்திவிட்டு, வேதநாயகம் பிள்ளை முதலியவர்களைப் பார்த்து, “ஆட்சேபிப்பதும் சமாதானம் கூறுவதும் எங்களுக்கு வழக்கம்; ஆதலின் நாங்கள் பேசிக்கொள்வதைக் குற்றமாக எண்ண வேண்டாம்” என்று சொல்லி அவர் கோபத்தைத் தணிப்பித்து, ஆட்சேபித்தவரை அங்கே வந்து இருக்கச்செய்துவிட்டு நூலின் மேற்பாகத்தைப் படிப்பிக்கச்செய்து பிரசங்கம் செய்வாராயினர்.
அரங்கேற்றுதல் பெருஞ்சிறப்புடன் நடைபெற்றது. வந்து கேட்போர்களும் நாளுக்கு நாள் மிகுதியுற்றார்கள். மரியாதை யறியாத யாரேனும் வந்து வெறுப்புண்டாகும்படி நடந்து இக்கவிஞர்பிரானுடைய அருமையை யறியாமல் இடையூறு செய்வார்களோவென்று நினைந்து வேதநாயகம் பிள்ளை, அக்கோயில் விசாரணைக்காரரிடம், “தினந்தோறும் நான் வந்த பின்பே தொடங்க வேண்டும்” என்று சொல்லிவிட்டு ஒவ்வொரு நாளும் பிற்பகலில் வந்திருந்து கேட்டின்புற்றார். அப்பொழுது ஒவ்வொருநாளும் அரங்கேற்றுதல் முடிந்தவுடன் அந்நூலையும் இவரையும் சிறப்பித்து ஒவ்வொரு செய்யுள் பாடினார். அவற்றுள் [8] இருபது செய்யுட்களே இப்பொழுது கிடைக்கின்றன. அவற்றுட் சில வருமாறு:
“குற்றமில்சீர் மீனாட்சி சுந்தரவா ரியநின்னாக் கோயிலின் மேவ
நற்றவமென் செய்தனணா மகடமிழ்செய் தவமெவனீ நவிலு மேன்மை
உற்றதிருக் கோவைபெறப் புகலிசெய்பாக் கியமெவனவ் வுயர்நூல் கேட்கப்
பெற்றவென்போ லியர்புரிந்த மாதவமென் னோதுறுவாய் பெருமை மிக்கோய்”
“இன்பாவிற் கோவைசொன்ன மீனாட்சி சுந்தரப்பே ரிறைவ யானும்
உன்பாவிற் கவிசொல்வே னென்கவிபார்ப் போரிதைமீண் டோரா தான்றோர்
முன்பாச்சொ னூல்களையே துதிப்பருன்பா வுணர்வோர்கண் முன்னோர் நூலைப்
பின்பாகச் சொலிவெறுப்பர் நல்லவனீ யோயானோ பேசு வாயே”
“விதியெதிரி லரிமுதலோர் புகல்புகலி யீசரே விண்ணோர் மண்ணோர்
துதிபொதிபல் பாமாலை பெற்றிருப்பீர் மீனாட்சி சுந்த ரப்பேர்
மதிமுதியன் கோவையைப்போற் பெற்றீர்கொ லிக்காழி வைப்பி னீதி
அதிபதிநா மெனவறிவீர் நம்முன்னஞ் சத்தியமா வறைகு வீரே.”
“நல்லார்க்கு நல்லவனா மீனாட்சி சுந்தரவே ணவின்ற கோவை
இல்லார்க்கு நிதிதுறவா வில்லார்க்கு விதிபுவிவாழ் வெல்லா நீத்த
வல்லார்க்குத் திதிஞானங் கல்லார்க்கு மதிவேலை வைய கத்திற்
பல்லார்க்குக் கதிபுகலிப் பதியார்க்குத் து தியதன்சீர் பகர்வோர் யாரே.”
இவ்வாறே கேட்கும் வித்துவான்கள் பலரும் சிறப்புக் கவிகளை இயற்றித் தங்கள் தங்கள் நன்மதிப்பை வெளியிட்டார்கள். அவர்கள் கூறிய கவிகள் இப்பொழுது கிடைக்கவில்லை.
வேதநாயகம் பிள்ளை சொல்லிய சிறப்புக் கவிகளை யெல்லாம் கேட்ட இவர் அவருடைய அன்புடைமையைப் பாராட்டி,
“நாட்டுக்கு நல்லகுளத் தூர்வேத நாயகநன் னாம மாலே
வீட்டுக்கு வாயிலெனுங் காழிக்கோர் கோவையெனை விளம்பச் செய்தே
ஏட்டுக்கு மடங்காத துதிகவிகள் சொற்றனைநின் னியற்பாட் டுள்ளோர்
பாட்டுக்கு நான்செய்த தொன்றோபல் செய்தாலும் பற்றா வன்றே”
என்ற ஒரு செய்யுளைச் சொன்னார்.
அக்கோவை அரங்கேற்றப்பட்ட பின்னர் மேலே சொல்லிய கனவான்களும் பிறரும் தலைக்கு ரூ. 50 முதல் 300 வரை ஸம்மானம் செய்தார்கள். சிலர் பொன்னாடை முதலியன தந்தார்கள்; சிலர் பூஷணம் தந்தனர்; தருமபுர ஆதீனத் தலைவர் ஸ்ரீ சச்சிதானந்த தேசிகர் தக்க பரிசுகளை அனுப்பிக் கெளரவித்தார். இவ்வாறு பலர் இவருக்கு ஸம்மானம் செய்து ஆதரித்ததனால் மகிழ்வுற்ற வேதநாயகம் பிள்ளை,
“தேமாரி பொழிபொதும்பர்த் திருக்காழி யிறைமுன்
திகழாண்டு சித்தார்த்தி திங்கள்பாத் திரத்தில்
பூமாரி சுரர்பொழியச் செல்வர் பலர் கூடிப்
பொன்மாரி மிகப் பொழியப் புலவர் குழாந் துதித்துப்
பாமாரி நனிபொழியப் பல்லியங்கண் முழங்கப்
பலம்புரிய நலம் புரியும் வலம்புரிமண்டபத்துத்
தூமாரி யெனப்புகலிக் கோவையைமீனாட்சி
சுந்தரப்பேர் மதிவல்லோ னரங்கேற்றி னானே”
என்ற செய்யுளைக் கூறினார். இதனால் சித்தார்த்தி வருடம் (1861) புரட்டாசி மாதம் அந்நூல் அரங்கேற்றப் பெற்றதென்பது தெரியவருகின்றது.
சீகாழிக்கோவை 534 - செய்யுட்களை உடையது. இத்தல சரித்திரங்களும், ஏனைய சிவதல சரித்திரங்களும், நாயன்மார்களுடைய அருஞ் செயல்களும், சைவ சாஸ்திரக் கருத்துக்களும் இந் நூலுள் அங்கங்கே சந்தர்ப்பத்திற்கேற்றவண்ணம் செவ்வனே அமைக்கப்பெற்றுள்ளன. மற்றக் கோவைகளிற் காணப்படாத பல துறைகள் இதிற் காணப்படும். அவை இலக்கண விளக்கத்தின் விதியைத் தழுவி அமைக்கப்பட்டவை. இதில் உவமைகளாகக் காட்டப்படுவனவற்றுட் பெரும்பாலன சைவ சம்பந்தமாகவே உள்ளமையால் இந்நூல் சிவநேசச் செல்வர்களாற் படித்து இன்புறற்பாலது.
இந் நூலிலுள்ள சில செய்யுட்கள் வருமாறு:
ஐயம்.
“வெள்ளாம்ப லான்கொல்செந் தாமரை யான்கொலொண் மேனிகருங்
கள்ளாங் குவளையன் னான்கொனங் காழிக் கடவுள்வெற்பில்
உள்ளா மிவரடி தோய்தவ முன்ன ருஞற்றுலக
நள்ளாங் குடிகொண் டரசா டவஞ்செய் நலத்தினனே” (2)
இடையூறு கிளத்தல்.
“ஞாலம் பொலியப் பொலிகாழி நாதர் நறுமலர்க்கைச்
சூலம் பொலியக்கொள் வார்பவர் வேணிச் சுடர்மதிபோற்
பாலம் பொலியநிற் பீர்மிசை யேயன்றிப் பாணியுள்ளால்
நீலம் பொலியவைத் தீர்தகு மோவென் னிலைகண்டுமே” (15)
பிரியேனென்றல்.
“வரியேன் மதர்விழிச் சங்கிலி காண மகிழடியிற்
பிரியேனென் றோதிப் பிரிந்துவன் றொண்டர்முன் பெற்றதையான்
தெரியே னலேன்வண் புகலியன் னீர்நுமைத் தீர்ந்துமுயிர்
தரியேன் பிரியே னெனச்சட்டை நாதர்முன் சாற்றுவனே” (30)
பாங்கனை உண்மகிழ்ந் துரைத்தல்.
“ஒருகா னடந்தென் வருத்தந் தணித்த வொருவன்முனம்
இருகா னடந்துதன் றோழன் வருத்த மிரித்தபெருங்
குருகான் மலர்ப்பொய்கைக் கொச்சைப் பிரானிற் குலவுநல்லோன்
அருகா லவனட் பெழுமையு மோங்க வளியனுக்கே” (78)
இறைவன்றனக்குக் குறைநேர் பாங்கி இறைவிக்கு அவன் குறை உணர்த்தல்.
“அருவ ருருவ ரருவுரு வாள ரவிர் புகலித்
திருவ ரிருவ ருணரார் வரைநஞ் செழும்புனத்தே
வருவ ரொருவ ரரியர் பிரியர் வயமுருகே
பொருவர் தருவர் தழையவர்க் கென்ன புரிதுமின்னே” (156)
தலைவி தலைமகனூர்க்குச் செல்ல ஒருப்படுதல்.
“தாரூர் தடம்புயத் தோணிப் பிரானரு டாங்கியன்பர்
சேரூ ரடையத் தடையெவ னோமுன் சிறந்தவரைப்
பாரூர் புகழ்மிகு நும்மூ ரெதுவெனப் பன்னிரண்டு
பேரூரென் றாரெங்கு நாந்தேடிச் செல்வது பெண்ணணங்கே.” (258)
சென்னைப் பிரயாணத்தை நிறுத்திக்கொண்டது.
சீகாழிக்கோவை அரங்கேற்றி முடிந்தபின்பு, இவர் வேதநாயகம்பிள்ளை விருப்பத்தின்படியே பின்னும் சில மாதங்கள் சீகாழியில் இருந்துவந்தார். அக்காலத்துத் தம்மை நாடிவந்த 9மாணாக்கர்களுக்கு வேண்டிய பாடங்களைச் சொல்லிவந்தார். சென்னைக்குச் செல்லவேண்டுமென்னும் கருத்து, பொருள் முட்டுப்பாட்டால் உண்டாயிற்றாதலின் சீகாழியிற் போதிய பொருள் கிடைத்தமையாலும் சென்னை போய் வருவதில் சிரமம் மிக உண்டாகுமென்று தோற்றினமையாலும் அப்பிரயாணத்தை நிறுத்திக்கொண்டார். சென்னையிலுள்ள நண்பர்களுக்குச் சில அசெளகரியங்களால் வரக்கூடவில்லையென்றும் இறைவன் திருவருளிருப்பின், புராணத்தை முடித்துக்கொண்டே வருவதாகவும் கடிதங்கள் எழுதிவிட்டார். திருமயிலைப்புராணத்தின் எஞ்சிய பகுதி பின்பு பாடப்பெறவேயில்லை; பாடியிருந்த பகுதியும் கைதவறிப் போயிற்று.
திருத்தில்லையமக அந்தாதி.
சீகாழியிலிருந்த காலத்தில் இவர் ஸ்ரீ நடராச தரிசனத்தைக் கருதி அடிக்கடி சிதம்பரம் சென்று வருவதுண்டு. அப்படிச் சென்றிருந்த ஒரு சமயம் வாமதேவ முருகபட்டாரகர் முதலிய தமிழ் வித்துவான்களுடைய விருப்பப்படி திருத்தில்லை யமக அந்தாதியை இயற்ற ஆரம்பித்துச் சில தினங்களிற் பூர்த்திசெய்தார். இவ்வந்தாதி அருமையான அமைப்பையுடையது. இதனைப் போன்று நயமும் உயர்ந்த யமகவிசித்திரமுமுடைய நூல் இக் காலத்தில் வேறொன்றும் இல்லை. அம்பலவா வம்பலவா, கருமங் கருமங் கணம்பரமா, கனியக் கனிய மனம், அருத்த மருத்த மென்றே, வருந்த வருந்த, சிவசிவசங்கர என்பவைகளும், இன்னம் பரம்பரனே, நந்தாதரத் தகரவித்தை, கடுகத்தனை யன்பு, தேவாரமா திருவாசகமா, மதியாதவனங்கி, சிற்றம்பலங்கண்டு, தமனியமன்ற, பேரம்பலம்பல, பொன்னம்பலவன், பதஞ்சலியாதவனே, பரமானந்தத்தை, பாடகந்தண்டை, மாதங்க மடங்கல், மூவாயிரவரும், மாணிக்கவாசக ரென்பவைகளும் இவ்வந்தாதியில் யமகத்தில் அமைந்தவை.
அயலூர்களிலிருந்த பிரபுக்கள் இவரைச் சீகாழியிலிருந்து தங்கள் தங்கள் ஊருக்கு அழைத்துச் சென்று இவருக்கு வேண்டிய உபசாரங்களைச் செய்து சில நாட்கள் வைத்திருந்து அனுப்பி வருவதுண்டு.
மகாலிங்கம்பிள்ளை உபசரித்தது.
அவர்களுள் இவருடைய நண்பரும் திருவாவடுதுறை யாதீனத்தைச் சார்ந்த அடியவரும் ஆகிய தில்லைவிடங்கன் மகாலிங்கம்பிள்ளை யென்பவர் ஒருநாள் பல நண்பர்களோடும் இவரைச் சீகாழியிலிருந்து அழைத்துச் சென்று தம்முடைய வீட்டில் உபசாரத்தோடு ஒரு நல் விருந்தளித்தனர். அது யாரும் வியக்கத்தக்கதாக இருந்ததன்றி அவருடைய பேரன்பையும் புலப்படுத்தியது. விருந்துண்டபின் இவர் திண்ணையில் வந்து அமர்ந்து சந்தனம் பூசிக்கொண்டு தாம்பூலம் தரித்துக்கொள்ளுகையில் மனங் கனிந்து ஒரு பாட்டைச் சொல்லி ஒரு மாணவரைக் கொண்டு அதை எழுதுவித்து எல்லோரும் கேட்குமாறு படித்துக் காட்டச் செய்தனர். அப்பாட்டு வருமாறு:
“மாமேவு நந்திருவா வடுதுறைவாழ் குருநமச்சி வாய சாமி
பூமேவு மலரடிக்கன் புடையமகா லிங்ககுண புருட மேரு
தேமேவு சுவையமுத நவையறப்பன் முகமனொடு சிறப்ப வூட்டித்
தாமேவு தாயிலா னடியவருக் கென்றுமொரு தாயா னானே.”
இதனைக் கேட்டவர்கள் இவருடைய அன்புடைமையையும் புலமையையும் அறிந்து வியந்து இவரைநோக்கி, “தமக்கு உணவு அளித்தவர்களிடத்து நன்றி பாராட்டி ஒளவையாரும் கம்பரும் பாடினார்களென்று சில செய்யுட்களைக் கூறுவார்கள். இதுகாறும் அதனை நம்பாமல் இருந்தோம். இப்போது தங்களுடைய செயலால் அச்செய்திகளை உண்மையென்று நம்புகிறோம்” என்று சொன்னார்கள். உடனே மகாலிங்கம்பிள்ளை விம்மிதமுற்றுத் திருவாவடுதுறைக் குருபூசையில் தமக்குக் கிடைத்த அழகிய வஸ்திர ஜோடியைக் கற்கண்டு பழம் புஷ்பம் தாம்பூலங்களுடன் வைத்து வணங்கி, “சிறியேனாகிய என்னுடைய வேண்டுகோளுக்கு இணங்கி, இவ்வளவு தூரம் எழுந்தருளியதற்கு அடியேன் என்ன கைம்மாறு செய்யவல்லேன்! தங்களால் புகழப்படுவதற்கு நான் எவ்வளவினேன்! என்னபாக்கியஞ் செய்தேனோ! இனிமேல் எனக்கு யாதொரு குறையுமில்லை. தங்களுக்கு எளியேனுடைய அன்பின் அறிகுறியாகச் சமர்ப்பிக்கப்படும் இந்தச் சிறுகாணிக்கையை அங்கீகரித்துக் கொண்டருளவேண்டும். இது ஸ்ரீநமசிவாய மூர்த்தியின் பிரசாதமே” என்று விநயத்தோடு வேண்டினர். இவர் புன்னகையோடும் அவருடைய அன்பிற்கு மகிழ்ந்து அதனை ஏற்றுக்கொண்டார். வரிசைப்பற்றென்னும் ஊரிலிருந்த கனவானாகிய லிங்கப்பநாயகரென்பவர் ஒருமுறை இவரை வருவித்துத் தாம் அவ்வூரில் அமைத்திருந்த சத்திரத்தில் தங்கச் செய்து உபசரித்துச் சில நாள் இருக்கச்செய்து அனுப்பினார். அப்பொழுது இவர் அச்சத்திரத்தைச் சிறப்பித்து,
“குலவுபுகழ்ச் சுந்தரர்க்குக் கட்டமுது கொடுத்ததிருக் குருகா வூரர்
நிலவும் திக்காலஞ் செய்திலரா லசத்தரலர் நிகழ்த்தக் கேண்மோ
வலவுசித நயசுகுண லிங்கப்ப மகிபால வள்ளல் தானும்
உலவுமறு சுவையமுது பலர்க்குமகிழ்ந் தூட்டுவதாக லுவந்து மாதோ”
என்னும் செய்யுளைப்பாடி அங்குள்ளாரை மகிழ்வித்தனர். இவ் வண்ணமே அங்கங்கே சென்ற காலங்களில் சந்தர்ப்பத்திற்கு ஏற்ப மனமகிழ்ந்து பாடிய பாடல்கள் பலவென்பர்.
திருவெண்ணீற்றுமை பிள்ளைத்தமிழ்.
ஆச்சாபுரம் என்று வழங்குகிற பெருமண நல்லூரிலிருந்த சிவலோகத் தியாக முதலியாரென்னும் சைவச் செல்வர் ஒருவர் இந்நிகழ்ச்சிகளையெல்லாம் அறிந்து இவரைத் தம் ஊருக்கு அழைத்துச் சென்று உபசரித்தார். பின்பு அத்தலத்து எழுந்தருளியுள்ள திருவெண்ணீற்றுமையம்மையின் மீது பிள்ளைத்தமிழ் ஒன்று இயற்றும்படி அவர் கேட்டுக்கொண்டார். அங்ஙனமே இவரால் ஒரு பிள்ளைத்தமிழ் இயற்றி அரங்கேற்றப் பெற்றது. அந்நூல் மணவைப் பிள்ளைத்தமிழென வழங்கும். அது பிற்காலத்தில் (விக்கிரம வருடம் தை மாதம்) சி. தியாகராச செட்டியாரால் அச்சிடப்பெற்றது.
இத் தலத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானது திருநாமம் சிவலோகத் தியாகரென்பது. அது காப்புப்பருவத்தில்,
“நாடுதிரி யக்கரரு ளாளர்மண வைக்கிறைவர்
நாதர்சிவ லோகத்தி யாகரைப் போற்றுவம்”
எனச் சந்தச் செய்யுள் ஒன்றில் அமைக்கப்பெற்றுள்ளது. அங்கே திருஞானசம்பந்தமூர்த்தி நாயனாருடைய திருமணம் நடைபெற்ற காலத்தில் அம்பிகை அங்கே உள்ள ஸ்ரீ பஞ்சாக்கர தீர்த்தத்தின் கரையில் நின்று அடியார்களுக்கு வெண்ணீறளித்தருளினமையின் திருவெண்ணீற்றுமையென்னும் திருநாமங்கொண்டனள். இவ்வரலாறு இந்நூலில் அம்புலிப்பருவத்தில்,
“வையமுழு துய்யவொரு வாவியங் கரைநின்று வாய்மலர்ந் தழுதபிள்ளை
மதுரமிகு செவ்வாய்க் கருங்குழற் காதலியை மாமணஞ் செய்தஞான்று செய்யமலர் மீதனந் துஞ்சுபஞ் சாக்கரத் தீர்த்தக் கரைக்கணின்று
சேர்ந்தார் களங்கமுற் றொழியவெண் ணீறுதன் செங்கரத் தாலளித்தாள் உய்யவிவள் வாவென் றுரைத்தபடி யேவிரைந் தொருவனீ வந்துசேரின்
உன்களங் கந்தவிர வெண்ணீறு நல்காள்கொ லோவிதனை யுணராததென்
ஐயமன மோவித் திருப்பெரு மணத்துமையொ டம்புலீ யாடவாவே” (8)
என்னும் செய்யுளிற் கூறப்படுகிறது.
மேற்கூறியுள்ள பஞ்சாக்கரத் தீர்த்தத்துடன் அத்தலத்துள்ள கங்கை என்னும் தீர்த்தமும்,
“உலகுபுகழ் பஞ்சாக் கரப்பெருந் தீர்த்தமென் றொன்றுண்டு மூழ்கி னோருக்
கொழியாத பிணிமுழு தொழிப்பததன் மான்மிய முரைக்கரிது முகம னன்றால்
இலகுமிஃ தன்றியுங் கூபவடி வாய்க்கங்கை யென்பதொன் றுண்ட தன்சீர்
எம்மனோர் பேசுதற் கரியதரி யதுபெரிய தித்தலப் பெருமை கண்டாய்” (அம்புலிப். 6)
எனப் பாராட்டப் பெறுகின்றது.
அத்தலப் பெயர் பெருமணம், நல்லூர், பெருமணநல்லூர், நல்லூர்ப் பெருமணம் என நான்கு வகையாக வழங்கும். அதனை நினைந்து, வாயென்றும் காலென்றும் கால்வாயென்றும் வாய்க்காலென்றும் வழங்கப்படும் வாய்க்கால்கள் பல அத்தலத்திற்கும் தமக்குமுள்ள ஒப்புமைகருதி, அறிஞர் வலஞ்செய்தல் போல இத்தலத்தைச் சூழ்ந்திருக்கின்றன வென்பது பின்னுள்ள செய்யுளிற் கூறப்பட்டிருக்கிறது:
“வண்கா லென்ன வாயென்ன வாய்க்கா லெனக்கால் வாயெனப்பேர்
மருவி மாறா வனங்கொணமை மான நல்லூர் பெருமணம்வான்
எண்கா நல்லூர்ப் பெருமணமே ரேய்பெ ருமண நல்லூரென்
றிலகு பெயர்பூண் டுறுவனமேய்ந் தென்றும் விளங்கு மிந்நகரைத்
தண்கா லறிஞர் பலர்குழுமித் தவாது சூழ்ந்து மருவுதலாற்
றாவா நாமு மெஞ்ஞான்றும் தவாது சூழ்த றகுதியென
ஒண்கால் பலசூழ் சிவலோகத் துறைவாய் தாலோ தாலேலோ
உலக முவக்குந் திருவெண்ணீற் றுமையே தாலோ தாலேலோ.” (தாலப். 2)
பெண்மகவைப் பெறுதல் சிறப்பன்றெனக் கருதுவோர்களும், ஆண்மகவைப் பெறுகவென்று ஆசி கூறுவோர்களும், பிறவாறு உரைப்போர்களும் நாணும்படி, அம்பிகை இமவானுக்குப் புதல்வியாகிப் பெண் பிறப்பைச் சிறப்புறச் செய்தாளென்னும் கருத்தமைய இப்புலவர்பிரான் செங்கீரைப்பருவத்தில்,
[10]“பேசுபுகழ் சால்பெரும் புவனத்தி லாண்மகப் பெறல்சிறப் பென்று மற்றைப்
பெண்மகப் பெறலத் துணைச்சிறப் பன்றுதுயர் பெற்றதொப் பாகுமென்றும்
மாசுபடு துன்பமே பெண்ணுருவ மாயெந்த வைப்பினும் வருமதென்றும்
மதிக்கினொரு மகவுமக வாவென்று மிங்ஙனம் வகுத்துரைப் பார்க்களோடு
கூசுத லிலாதக மலர்ந்தாண் மகப்பெறுதி குறைவுதப வென்றாசிமுற்
கூறுநரு முள்ளநாண் கொள்ளவெள் ளப்படாக் குவடுவா னணவவோங்கும்
தேசுமலி பனிமலைக் கொருபுதல்வி யாயவுமை செங்கீரை யாடியருளே
திருப்பெரு மணத்தம ரருட்பெரு மணச்செல்வி செங்கீரை யாடியருளே” (2)
என்று பாடியுள்ளார். முத்தப்பருவத்தில் உமையம்மையின் திருவாய் முத்தத்தைப்போல ஏனைய முத்தங்கள் சிறவாவென்றும் அவை இன்ன இன்ன காரணத்தாற் குறைபாடுடையனவென்றும் எடுத்துக் காட்டுவர் :
“மதிமுத்தம் வீரன்வயி ரக்கழற் காறேய்க்க மண்ணிடைத் தேய்ந்ததுயர்வேய்
வருமுத்த மதிலெழுந் தழலால் வெதுப்புண்டு மாமைகரு கியதுசெஞ்சொற்
பொதிமுத்தம் வன்பகடு காலுழக் கப்பிளவு பூண்டதால் இப்பிவளைமீன்
பொலிமுத்தம் வெய்யபுல வொழியாது நாறும்..............
........................................ இக்குச்
சுடர்முத்தம் ஆலையி னெரிந்ததிவை வேண்டேந் தொடுத்தபற் பலவுயிர்க்கும்
பதிமுத்த மேற்றுமகிழ் நிதிமுத்த மன்னசெம் பவளமுத் தந்தருகவே
பல்லூர் விரும்புமெயி னல்லூ ரரும்புமயில் பவளமுத் தந்தருகவே.” (6)
நீராடற் பருவத்தில் உள்ள,
“நள்ளாறு பழையாறு கஞ்சாறு கோட்டாறு நல்லாறு தருமையாறு
நாவலா றொழுகுவட மேருமுற் பலதேம் நயந்தவர் சடைக்குமஞ்சா
வெள்ளா றெனப்பரவு கொள்ளிடத் திருநதியின் வெள்ளநீ ராடியருளே” (2)
என்பதில் சிவபெருமான் திருக்கோயில் கொண்டுள்ள தலங்களில் ஆறென்னும் முடிவுடைய தலங்களை இடத்துக்கேற்ப அமைத்துள்ளனர்.
சூரனுடைய பெரிய வீடு, பெரும்பறைமுழக்கம், பெருந் தேரோட்டமென்பவை கெட முறையே சிற்றிலழித்தும் சிறுபறை முழக்கியும் சிறுதேருருட்டியும் விளையாடிய முருகக்கடவுளைப் பெற்றாயென்று அம்பிகையைப் பாராட்டுவர் :
“வலியவர னாலமரர் வானகங் கூட்டுண்டு மகிழ்முரட் சூரனிளவல்
மக்களொடு வாழ்கின்ற பேரிலழி யச்சிற்றில் மறுகூடு லாயழித்தும்
கலியவவன் வாய்தற் பெரும்பறை முழக்கறக் காமர்சிறு பறைமுழக்கம்
கண்டுமவ னூருமிந் திரஞால மென்றுரை கதிர்ப்பொலந் தேருருளுறா
தொலியசிறு தேரினி துருட்டியும் விளையாடும் ஒண்சதங் கைச்சிறியதாள்
ஒருகுழவி யைத்தனி யுவந்தெடுத் துப்புல்லி ஒண்மணித் தொட்டிலேற்றிப்
பொலியவினி தாட்டுந் திருப்பெரு மணத்தம்மை பொன்னூசலாடியருளே
பொருவின்மந் திரசொரூ பத்தனி விமானத்தில் பொன்னூச லாடியருளே.”(ஊசற்.8.)
திருக்குருகாவூர் சென்றது.
திருக்குருகாவூரென்னும் ஸ்தலத்தில் இருந்த ஓரன்பர் தம் வீட்டில் திதியொன்று நடக்கப்போவதால் அத்தினத்தில் மாணவர்களுடன் வந்திருந்து சிறப்பிக்க வேண்டுமென்று இவரிடம் கேட்டுக் கொண்டனர். அவ்வாறே இவர் பல மாணவர்களுடன் சீகாழியிலிருந்து சென்றிருந்தார். இவருடைய வரவை நினைந்து அவர் விரிவான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தார். அதனால் சமையலாதற்கு மிக்க நேரம் ஆகிவிட்டது.
இவருக்கும் மாணாக்கர்களுக்கும் பசி அதிகமாயிற்று. மாணாக்கர்கள் பசிக்கொடுமையைத் தம்முள் மந்தணமாகப் பேசிக் கொண்டு வருந்துவாராயினர். அப்பொழுது இப்புலவர் தலைவர் அதனையறிந்து அவர்களுடைய ஞாபகத்தை வேறொரு விதத்தில் திருப்ப நினைந்து அவர்களுள் திட்டைச் சிதம்பரம் பிள்ளை யென்னும் ஒருவரை அழைத்து, “இங்கே பசியோடிருத்தலை அமைத்து ஒரு செய்யுள் சொல்லும்” என்று சொன்னார். அவர் சிறிது நேரம் யோசித்து ஒரு செய்யுளைப் பூர்த்தி செய்து சொன்னார். எல்லோரும் அதுவரையில் அவர் என்ன சொல்லப்போகிறாரென்று எதிர்பார்த்த வண்ணமாக இருந்தமையின் அவர்களுக்குப் பசி தோன்றவில்லை. அப்போது அவர் பாடிய செய்யுள் வருமாறு :
“தருகா முறுபொழில் சூழ்நாவ லூரந் தணர்முதலோர்க்
குருகார்வத் தோடு பசிநீங்க வுண்டி யுதவியநீ
குருகா புரத்துறை வெள்விடை யீச குறைந்தடைந்து
பருகார்வத் தேமுக் கஃதின் றுதவாப் பரிசென்னையே.”
அதன் பின்பு அங்கே எல்லாம் ஆயத்தமாய்விட்டபடியால் அழைக்கப்பெற்று யாவரும் உண்டு உவந்தனர்.
பல பிரபுக்கள் இவரைத் தங்கள் தங்கள் ஊருக்கு அழைத்து உபசரிப்பதையும் அதனால் அவர்கள் புகழப் பெறுவதையும் அறிந்து, ஒரு கிராமத்திலிருந்த பிரபு ஒருவர், கெளரவம் பெறுவதொன்றையே நோக்கமாகக் கொண்டு ஒருநாள் இவரை அழைத்தார். இவர் மாணவர்களோடு சென்று அவரால் செய்விக்கப்பெற்ற விருந்தை உண்டனர். பின்பு, ஓரிடத்தில் வந்து இருந்தபொழுது உடனிருந்த நண்பர்களிற் சிலர் சீகாழிக் கோவையின் சிறப்பைப் பற்றிப் பாராட்டிப் பேசிக்கொண்டிருந்தனர். உபசரித்த பிரபு தாமும் அந்தச் சம்பாஷணையிற் கலந்து கொள்ள வேண்டுமென்று எண்ணிப் பிள்ளையவர்களைப் பார்த்து, “அந்தக் கோவை ஸ்வாமியின்மேற் செய்யப்பட்டதா? அம்மன் மேற் செய்யப்பட்டதா?” என்று கேட்டார். அவருடைய அறியாமையை அறிந்து, யாவரும் இரங்கினர். இவர் அவ்விரக்கத்தைப் புலப்படுத்திக்கொள்ளாமல், “சுவாமி மேலேதான்” என்று விடை கூறிச் சும்மா இருந்து விட்டார்.
ஒரு சமயம் திருநகரியென்னும் ஊரிலிருந்து தமிழ்ப் பயிற்சியுடையவராகிய வேங்கடராமையர் என்னும் அந்தணர் ஒருவர் இவரிடம் வந்து, தாம் வீடு கட்ட வேண்டியிருத்தலின் அதற்கு வேண்டிய மரம், செங்கல் முதலியன கொடுத்து உதவும்படி ஒரு செல்வரிடம் சொல்லவேண்டும் என்று வேண்டினர். உடனே இவர் அவரிடம்,
“வளமருவு திருநகரி வாழும்வேங் கடராம மறையோய் கேண்மோ
களமருவும் வரிசைப்பற் றினில்விளங்கும் லிங்கப்பக் கனவான் பாற்செல்
உளமருவு நின்மனைக்குச் செங்கல்புக லூரரன்போ லுதவு மொண்பூந்
தளமருவுந் தருவேண்டிற் கண்ணன்போ லைந்தருவுந் தருவன் மெய்யே”
என்னும் பாடலை எழுதிக் கொடுத்து [11]வரிசைப்பற்று லிங்கப்ப நாயகர்பால் அனுப்பினார். அவர் அதனைக் கண்டு மகிழ்ந்து அவ் வந்தணர் வீடு கட்டுதற்கு எவ்வெப்பொருள்கள் வேண்டுமோ அவற்றையெல்லாம் உடனே கொடுத்துதவினார்.
இவர் தமக்குச் சீகாழியிலும் பிற இடங்களிலும் கிடைத்த பணத்தில் ஒரு பகுதியைக்கொண்டு தம்முடைய மாணவர்களுக்கு வேண்டிய சௌகரியங்களைச் செய்து வைத்தும் அவருள் முத்துக்குமார பிள்ளை என்பவருக்கு மணம் செய்வித்தும் வீடு கட்டிக் கொடுத்தும் செலவு செய்துவிட்டு எஞ்சிய தொகையைத் திரிசிரபுரத்திற் செலுத்தவேண்டிய கடனுக்காக அனுப்பி விட்டார்.
----------
[1] வேதநாயகம் பிள்ளை சீகாழிக்கு வந்த காலம் 1858-ஆம் என்று வேதநாயக விற்பன்னர் சரித்திரத்தால் தெரியவருகிறது.
[2] இந்நூல் காளயுக்தி வருடம் தை மாதம் (1859) அச்சிற் பதிப்பிக்கப் பெற்றது.
[3] அப்பொழுது இவரை ஆதரித்த கனவான்கள்: சீகாழிச் சிந்நய முதலியார், கருப்பையா முதலியார், குப்பையம் திருவேங்கடம் பிள்ளை, வரிசைப்பற்று லிங்கப்ப நாயக்கர், நெய்ப்பற்றூர்ச் சாமி ஐயர், கடைவாசல் ராமதுரை ஐயர், ஆச்சாபுரம் சிவலோகத்தியாக முதலியார் முதலியவர்கள்.
[4] சிற். 107.
[5] ௸ 104.
[6] ௸ 286.
[7] திருக்குறள், 158.
[8] இவற்றைப் பிள்ளையவர்கள் பிரபந்தத்திரட்டிற் காணலாம்.
[9] அக்காலத்தில் வந்து பாடங்கேட்டவர்கள்: முத்தைய வாத்தியார் குமாரர் சிதம்பர வாத்தியார், சீயாலம் சிவசிதம்பரம் பிள்ளை, திருப்பாதிரிப்புலியூர்ச் சிவசிதம்பர முதலியார், சிதம்பரம் வாமதேவ முருகபட்டாரகர், வல்லம் கந்தசாமி பிள்ளை, மாயூரம் நடராச பிள்ளை, தில்லை விடங்கன் முத்துக்குமாரபிள்ளை, திட்டைச் சோமசுந்தரம்பிள்ளை.
[10] பெரியநாயகி யம்மை கட்டளைக்கலித்துறையிலுள்ள,
“கற்றா ரறிகுவர் மக்கடம் பேறெனக் கட்டுரைத்த
சொற்றா னொருபெண் ணொழித்ததென் பாரொடு தொல்லுலகில்
நற்றாண் மகப்பேறு கென்றாசி சொல்பவர் நாணவுனைப்
பெற்றான் மலையரை யன்குன்றை வாழும் பெரியம்மையே” (12)
என்னும் செய்யுளின் கருத்தை இச் செய்யுள் ஒருபுடை தழுவியது.
[11] வரிசைப் பற்று - சீகாழித் தாலுகாவில் உள்ள ஒரூர்.
----------------
19. மாயூர வாஸம்.
மாயூர நகரத்தை இருப்பிடமாகக் கொண்டது.
பின்பு, கலியாணசோழபுரம் சிதம்பரம் பிள்ளை என்னும் செல்வரும் அவர் சகோதரர்களும் இவரை அழைத்துச் சென்று தம் ஊரில் சில நாள் இருக்கச்செய்து உபசரித்து அளவளாவி மகிழ்ந்து வந்தார்கள். அதன் பிறகு மாயூரத்திலிருந்த சில பிரபுக்களின் வேண்டுகோளால் அங்கே சென்று இருந்தார். அப்பொழுது அங்கே இருந்தவர்களும் அயலூர்களில் இருந்த பிரபுக்களும் இத்தகைய அரிய வித்துவானைத் தங்கள் ஊருக்கு அருகிலேயே இருக்கச் செய்ய வேண்டுமென்று எண்ணி இருப்பதற்குரிய விடுதி முதலியவைகளை அமைத்து இவரை மாயூரத்திலேயே இருக்கும்படி கேட்டுக்கொண்டார்கள். ‘அடிக்கடி திருவாவடுதுறை சென்று வரலாம்’ என்னும் எண்ணம் இருந்தமையால் இவருக்கும் அது சம்மதமாயிற்று. பிரபுக்களில் தக்கவர்களாகிய [1] 12-பேர்கள் மாதம் மாதம் ஒவ்வொருவராகப் பப்பத்து ரூபாய் இவருடைய செலவுக்குக் கொடுத்து வருவதென்று தீர்மானித்தார்கள்.
[2]இவர் மாயூரத்தில் இருக்கத் தொடங்கியது ரௌத்திரி வருஷம் (1860) ஆகும்.
ஒருசமயம் பல்லவராயப்பட்டில் இருந்த சடையப்பபிள்ளை யென்னும் பிரபு இவருக்கு நெல் அனுப்பினார். அதனை உபயோகித்து வருகையில் அசெளக்கியம் உண்டாயிற்று. அது நெல்லால் வந்ததென்பதனைத் தெரிந்து இவர், “தில்லை நாயகன் பித்தனென்று சொல்வதைக் கேட்டிருக்கிறேன். அந்தச் செய்தி உண்மை யென்பதை இப்பொழுது அறிந்து கொண்டேன்” என்ற கருத்தமைந்த செய்யுளொன்றை அவருக்கு எழுதியனுப்பினார். அதனைக்கண்ட அவர், ‘நாம் அனுப்பிய தில்லைநாயகனென்னும் நெல் பித்தத்தை உண்டுபண்ணுகின்றதாயிற்றே; நாம் யோசியாமல் அனுப்பிவிட்டோமே!' என்று நினைந்து வேறு பழைய ஈர்க்குச் சம்பா நெல்லை அனுப்பிப் புதியதாகிய அதனை வருவித்துக் கொண்டார்.
வேதநாயகம்பிள்ளை மாயூரம் வந்தது.
சீகாழியில் முன்பாக இருந்த வேதநாயகம்பிள்ளை 1858-ஆம் வருஷத்தில் மாயூரத்திற்கு மாற்றப்பட்டு வந்து சேர்ந்தார். அவர் மாயூரம் வந்ததனாலும் பிள்ளையவர்களுக்குச் சந்தோஷம் உண்டாயிற்று. வேதநாயகம்பிள்ளையும் இவர் மாயூரத்தை இருப்பிடமாகக் கொண்டதையறிந்து அடிக்கடி பழகி வரலாமென்ற எண்ணத்தினால் அளவில்லாத மகிழ்ச்சியுற்றார். அப்பொழுது பஞ்சமுண்டாயிற்று. பரதேசி ஜனங்களும் ஏழை ஜனங்களும் பசியினால் துன்புறுவதையறிந்து வேதநாயகம் பிள்ளை ஒரு கொட்டகை போடுவித்து அதில் அவர்களுக்கு உணவளித்து வருமாறு செய்துவந்தார். இந்த அறச் செயலால் அவருக்கு மிக்க புகழ் உண்டாயிற்று. ஒருமுறை பிள்ளையவர்கள் அவ்விடத்திற்குச் சென்றார். அப்பொழுது உடனிருந்தவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க வேதநாயகம் பிள்ளையைச் சிறப்பித்து,
“வாயுதவு மினியபத நுகர்ந்தறிவு பெருத்திடலான் வானந் தாங்கா
தாயுதவு கருணையினுங் கையுதவு மினியபத மவாவி யார்ந்து
வேயுதவு முடல்பெருத்த லான்மண்ணுந் தாங்காது மெலியா நிற்கும்
மீயுதவு புகழ்வேத நாயகமா லிளைப்பாற்றும் விதமெற் றாமே”
என்னும் செய்யுளை இவர் பாடினார்.
மாணவர்கள்.
இவரிடம் அப்பொழுது பாடங் கேட்டவர்களுள் முக்கியமானவர்கள் :
1. வல்லம் கந்தசாமி பிள்ளை: இவர் சொந்த ஊர் வல்லம்; இவர் திருவழுந்தூரிலிருந்து கொண்டு அடிக்கடி பாடங் கேட்டுச் செல்லுவார்.
2. மாயூரம் தெற்குவீதி முத்துசாமி பிள்ளை: இவர் யாதவ வகுப்பைச் சார்ந்தவர்; இவர் படித்துக்கொண்டு வந்ததன்றிப் பிள்ளையவர்கள் சொல்வனவற்றை எழுதிவருதலையும் பிரபந்தம் முதலியவற்றைப் பிரசங்கம் செய்யும்போது ஏடுவாசிப்பதையும் மேற்கொண்டிருந்தார்.
3. சித்தக்காடு நமச்சிவாயபிள்ளை.
4. சிவலிங்க வாத்தியார்.
5. சிங்கவனம் சுப்பு பாரதிகள்.
6. திருப்பாம்புரம் சாமிநாத பிள்ளை.
7. கர்ணம் வைத்தியலிங்கம் பிள்ளை: இவர் மாயூரம் கீழை வீதியில் இருந்தவர்; ராமாபுரமென்னும் கிராமத்துக் கணக்கு வேலை பார்த்து வந்தவர்; எப்பொழுதும் உடனிருந்து பிள்ளையவர்களுடைய குடும்ப காரியங்களைக் கவனித்துக் கொண்டு வந்தவர் ; படிப்பவர்களை ஊக்கிவருவார்.
8. கூறைநாட்டு முத்துக்குமார பிள்ளை.
9. முத்தாம்பாள்புரம் கோபாலபிள்ளை.
10. சுந்தரப்பெருமாள்கோயில் அண்ணாசாமி ஐயர்: இவர் எழுதியும் வந்தார்.
11. திருமங்கலக்குடி சேஷையங்கார்: இவர் பிள்ளையவர்கள் இயற்றிய நூல்கள் சிலவற்றைப் பனையேட்டில் எழுதியவர்.
12. திருவாவடுதுறை வெங்குவையர்.
இவர்களில் இசையோடு படித்துக்காட்டும் வன்மையை உடையவர்கள் கந்தசாமி பிள்ளை, முத்துசாமி பிள்ளை, சிவலிங்க வாத்தியார், அண்ணாசாமி ஐயர், சேஷையங்கார், வெங்குவைய ரென்பவர்கள்; எழுதுபவர்கள் கந்தசாமி பிள்ளை, முத்துசாமி பிள்ளை, கோபால பிள்ளை, சேஷையங்கார், அண்ணாசாமி ஐயர், வெங்குவையரென்பவர்கள்.
ஒரு மாதத்தில் ஐந்து ரூபாய்க்குள் தமக்கு வேண்டிய செளகரியங்களை அக்காலத்திற் செய்து கொள்ளக் கூடுமாதலால் முற்கூறியவர்களில் பெரும்பாலோர் மாயூரத்தில் இருந்து தம்முடைய பொருளைக் கொண்டேனும் பிறரிடம் பெற்றேனும் செலவழித்து உண்டு படித்து வந்தார்கள். அதற்கும் சௌகரியம் இல்லாதவர்களும் உடன் உண்ணக் கூடியவர்களும் பிள்ளையவர்கள் வீட்டிலேயே ஆகாரம் செய்துகொண்டு வந்தார்கள்.
மாயூரத்திலிருந்த வித்துவான்கள்.
அக்காலத்தில் தமிழ் வித்துவான்களென்று பெயர் பெற்றுப் பிரசங்கம் முதலியன செய்து மாயூரத்திலிருந்து கொண்டு இவர் நூதனமாகச் செய்யுள் செய்வதைக்கேட்டும் பாடஞ் சொல்லுகையில் உடன் இருந்து கேட்டும் மகிழ்ந்து செல்வோர்:
1. தர்மதானபுரம் கண்ணுவையர்: இவர் பாரதப் பிரசங்கம் செய்து புதுச்சேரி முதலிய இடங்களில் மிகுந்த புகழ்பெற்றவர்; நல்ல வாக்கி.
2. மாயூரம் பட்டமங்கலம் சபாபதி ஐயர்: இவர் எழும்பூர்த் திருவேங்கடாசல முதலியாரிடத்திற் பாடங்கேட்டவர்; தம்முடைய இளமை தொடங்கிக் கூறைநாட்டில் சாலியச் செல்வர்களிடத்தில் இராமாயணப் பிரசங்கம் செய்து ஜீவித்தவர்.
3. கூறைநாட்டுச் சாமிநாத வாத்தியார்: இவர் சிலருக்குத் தமிழ் நூல்கள் பாடஞ்சொல்லிக் கொண்டு பாடசாலை வைத்து ஜீவித்தவர்; வீரசைவர்.
கூறைநாட்டில் இருந்த நாட்டுக்கோட்டை நகரத்தார்களில் துறவு பூண்டவர்களும் வேதாந்த சாஸ்திரங்களில் நிபுணர்களுமாகிய இருவர் இவரிடம் அடிக்கடி வந்து ஸல்லாபம் செய்து போவார்கள்.
வடமொழி வித்துவான்கள் பலர் இருந்தார்கள். அக்காலத்தில் அங்கே இருந்த ஸங்கீத வித்துவான்கள்:
(1) திருநாளைப்போவார் சரித்திரக் கீர்த்தனை இயற்றிய முடிகொண்டான் கோபாலகிருஷ்ண பாரதிகள், (2) சாத்தனூர்ப் பஞ்சுவையர், (3) திருத்தருப்பூண்டி பாகவதர், (4) பெரிய ராமசாமி ஐயர், (5) சின்ன ராமசாமி ஐயர்: இவர் கோபாலகிருஷ்ண பாரதியாரின் முதன் மாணாக்கர்; தம்முடைய வீட்டிலேயே பாரதியாரை இருக்கச் செய்து அவர் சிவபதம் அடையும் வரையில் உபசரித்தவர்.
முன்ஸீப் கோர்ட்டில் பெரும்பான்மையான உத்தியோகஸ்தர்களுக்குச் சங்கீதப் பயிற்சி இருந்துவந்தது.
மேற்கூறியவர்கள் யாவரும் பிள்ளையவர்களுக்குப் பழக்கம் உடையவர்களே. இவர் வீட்டிற்கு அவர்கள் வருவதும் செல்லக் கூடியவர்கள் வீட்டிற்கு இவர் போவதும் உண்டு.
[3]சச்சிதானந்த தேசிகர்மாலை இயற்றியது.
மாயூரத்தில் இருந்தபொழுது திருஞானசம்பந்த தேசிகரது குருபூசைக்கு அழைக்கப்பெற்று இவர் தருமபுர மடத்திற்கு ஒரு முறை போயிருக்கையில் அங்கிருந்த அடியார்கள் ஆதீனத் தலைவராக இருந்த ஸ்ரீ சச்சிதானந்த தேசிகர் மீது ஒரு பிரபந்தம்
இயற்ற வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள். அவர்கள் வேண்டுகோட்கிணங்கி அந்த மடத்துச் சம்பிரதாயங்கள் புலப்படும்படி சச்சிதானந்த தேசிகர்மாலை என்ற நூல் ஒன்றைச் செய்து அவருடைய முன்னிலையில் இவர் அரங்கேற்றினார். கேட்டு மகிழ்ந்த தலைவரால் தக்க ஸம்மானங்கள் செய்யப்பெற்றன.
அந் நூலிலுள்ள சில செய்யுட்கள் வருமாறு :
“மருந்து பிடகர் சுமப்பதெல் லாம்பிறர் மாட்டடைந்த
அருந்து பிணிமுற் றொழிப்பதற் கேபிற வாருயிர்கள்
பொருந்து வினையொழிப் பான்றனுத் தாங்குபு போந்தனைமெய்
திருந்து புகழ்த்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.” (5)
“பாடிவந் தார்க்கென் பரிசளிப் பாயுட் படுமறையிற்
கூடிவந் தார்வ முறப்பேசி மூன்றையுங் கொள்ளைகொள்வாய்
நாடிவந் தாருண் மகிழ்வள்ள லேபன் னகரினரும்
தேடிவந் தார்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.” (11)
“நின்பார்வை யாலிரு ணீங்கிடு மாலிந் நெடுநிலத்திற்
கென்பார் கதிர்மதி யாலிரு ணீங்குத லென்வியப்பு
வன்பா ரகவிரு ளென்றே யுளத்து மதித்தனன்காண்
தென்பா ரணித்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.” (18)
“வளிதாழ் விசும்பைப்பைத் தோலிற் சுருட்டிட வல்லவனும்
அளிதாழ்நின் பேரரு டீர்ந்தின்ப மார்தற் கமைபவனும்
ஒளிதாழ் புவனத்தி லொப்பரன் றோவுண ராதவர்க்குந்
தெளிதாழ் புகழ்த்தரு மைச்சச்சி தானந்த தேசிகனே.” (27)
“எல்லா மறைத்துஞ் சடையொன்று மேபுனைந் திங்கமர்ந்தாய்
வல்லா வெமரு முணர்வர்கொ லோவல் லவருணர்வார்
வில்லார்நற் றாலிபு லாகத்தின் மற்றும் விளங்குமென்று
செல்லார் மதிற்றரு மைச்சச்சி தானந்த தேசிகனே.” (28)
நந்தன் சரித்திரக் கீர்த்தனத்திற்குச் சிறப்புப்பாயிரம் அளித்தது.
அக்காலத்தில் திருநாளைப்போவார் சரித்திரத்தைக் கீர்த்தனங்களாகச் செய்த மேற்கூறிய கோபாலகிருஷ்ண பாரதியார் அடிக்கடி இவரை வந்து பார்த்துச் செல்வது வழக்கம். அவர் நந்தன் சரித்திரம் செய்து முடித்தபோது அந்தச் சரித்திர அமைப்பையும் ஹிந்துஸ்தானி சம்பந்தமான சங்கீதப்பகுதிகள் பல அதில் நன்றாக அமைந்திருத்தலையும் அதிற் காணப்படும் பக்திச் சுவையையும் அறிந்து பலரும் பாராட்டுவாராயினர். இசைப் பயிற்சியுள்ள ஏழை ஜனங்கள் அதிலுள்ள கீர்த்தனங்களைப் பாடம் பண்ணிப் பிறரிடம் பாடிக் காட்டிப் பொருள் வருவாயடைந்து கவலையின்றி வாழ்ந்து வந்தார்கள். பலர் ஒழுங்காகப் பாடிக் கதை பண்ணிக்கொண்டும் வரலாயினர். கிராமாந்தரங்களில் அதனைக் கேட்டவர்களிற் சிலர் பக்தி மேலீட்டால் திருப்புன்கூர் சென்று நந்தி விலகியதைப் பார்த்துவிட்டுச் சிதம்பரம் சென்று நந்தனார் தீயில் மூழ்கிய குண்டமென்று சொல்லப்படுகிற ஓமக் குளத்தில் நீராடி ஸ்ரீ நடராசப்பெருமானைத் தரிசனம் செய்துகொண்டு வர ஆரம்பித்தனர். அந்தச் சரித்திரத்தைப்பற்றிய பேச்சு தமிழ்நாடு முற்றும் அக்காலத்திற் பரவி இருந்தது.
ஆயினும், அச்சரித்திரம் பெரிய புராணத்திலுள்ள திருநாளைப்போவார் புராணப்படி அமையாமலும் தமிழ் இலக்கண வழுக்கள் பொருந்தியும் இருந்தது பற்றித் தமிழ் வித்துவான்களிற் சிலர் அதைக் குறை கூறுவாராயினர். பிள்ளையவர்களுடைய கருத்தும் அவ்விதமே இருந்தது. இவருடைய நோக்கத்தை யறியாத கோபாலகிருஷ்ண பாரதியார் இவரிடம் அந்த நூலுக்கு எப்படியேனும் ஒரு சிறப்புப்பாயிரம் பெறவேண்டுமென்று பல முறை அலைந்தார். அப்படி அலையுந்தோறும், யார் வந்தாலும் தடையின்றிச் சிறப்புப்பாயிரம் கொடுத்தனுப்பும் இவர், “மற்றொரு சமயம் பார்த்துக் கொள்ளலாம்” என்றே சொல்லிவந்தார். அப்படிச் சொன்னதன் நோக்கம் பின்பு கொடுப்பதற்கன்று;
அலைவதை அஞ்சி, வருவதை அவர் நிறுத்திவிட வேண்டுமென்பதே. ஆயினும் பாரதியார் அடுத்தடுத்து முயல்வதைச் சிறிதும் நிறுத்தவேயில்லை.
ஒருநாள் அவர் வந்தபோது இவர் பகற்போசனத்திற்குப் பின் வழக்கம்போல் நித்திரை செய்து கொண்டிருந்தார். அதனையறிந்த பாரதியார் திண்ணையில் அமர்ந்து “கனவோ நினைவோ”, “வாராமலிருப்பாரோ”, “சிந்தனை செய்து கொண்டிருந்தால்”, “தீயினில் மூழ்கினார்” என்னும் கீர்த்தனங்களை மெல்லப் பாடித் தாமே [4] இன்புற்றுக் கொண்டிருந்தார். இவர் விழித்துக்கொண்டார். அப்போது,
“கனகபாபதி தரிசன மொருநாள் கண்டால் கலி தீரும்”
என்ற கீர்த்தனத்தைப் பாடத் தொடங்குகையில் இவர் அங்கிருந்தபடியே எழுந்து பாயலிலிருந்து அந்தக் கீர்த்தனத்தைக் கேட்கலாயினார். கேட்கக் கேட்க அவ்விசைப்பாட்டு இவரது மனத்தை உருக்கி அதில் இவரை ஈடுபடச்செய்தது. பாரதியார் பின்னும் சில கீர்த்தனங்களைப் பாடினார். இவருடைய மனம் கனிந்துவிட்டது; இவரையறியாமலே பக்தி மிகுதியினாற் கண்ணீர் வெளிப்பட்டது. உடனே எழுந்து புறம் போந்து பாரதியாரைக் கண்டு நல்வரவு கூறினார். பின்பு,
“கோமேவு திருத்தில்லை நடராசப் பெருமான்றாள் கூடி யுய்ந்த
பூமேவு பேரன்பர் திருநாளைப் போவார்தம் புனிதச் சீரைப்
பாமேவு பலவகைய விசைப்பாட்டா லினிமையுறப் பாடி யீந்தான்
ஏமேவு கோபால கிருட்டினபா ரதியென்னு மிசைவல் லோனே”
என்னும் பாடலை இயற்றி அவர்பாற் கொடுத்து, “இதை உபயோகப் படுத்திக்கொள்ள வேண்டும். சாம்பவர்களாகிய உங்களை இதுவரையில் அலைக்கழித்ததைப் பொறுத்துக்கொள்ள வேண்டும்” என்று முகமன் கூறினர். அவர் மிக்க களிப்படைந்து, அதனைப் பெற்றுக்கொண்டு சென்றார்.
தனுக்கோடி முதலியார்.
காரைக்காலில் தபேரியோமென்னும் வேலையில் இருந்த தனுக்கோடி முதலியார் என்னும் கிறிஸ்தவ கனவான் ஒருவர் அடிக்கடி மாயூரம் வந்து வேதநாயகம் பிள்ளையுடன் சிலநாள் இருந்து செல்வார். அவர் தமிழில் விருப்பமும் தமிழ் வித்துவான்களையும் ஸங்கீத வித்துவான்களையும் ஆதரிக்கும் இயல்பும் உடையவராகையால் அவருக்கும் பிள்ளையவர்களுக்கும் வேதநாயகம் பிள்ளை மூலம் மிக்க பழக்கம் உண்டாயிற்று. அதனாற் சில சமயங்களில் நாகபட்டினம் முதலிய இடங்களுக்கு இவர் போகும்பொழுது காரைக்காலுக்கும் சென்று வருவது வழக்கம். அப்பொழுது தனுக்கோடி முதலியார் இவரைத் தமது பங்களாவில் இருக்கச்செய்து இராசோபசாரம் செய்வார். இவர் திருவாவடுதுறை முதலிய இடங்களில் இருக்கும்பொழுது பூசைக்காகச் சந்தனக்கட்டை, பச்சைக்கற்பூரம், குங்குமப்பூ முதலியன அனுப்புவதன்றி இவருக்குப் பிரியமான நல்ல மாம்பழங்களையும் அனுப்பி வருவார். மாம்பழத்திற் காரைக்கால் பெயர் பெற்றதன்றோ ? அவர் மூலமாகக் காரைக்காலிலுள்ள சிவநேசச் செல்வர்களிற் பலர் இவர்பாற் பிரீதி வைப்பாராயினர்.
வேதநாயகம் பிள்ளையின் பதத்தைச் சிறப்பித்துப் பாடியது.
வேதநாயகம் பிள்ளை அக்காலத்திற் பல சங்கீத வித்துவான்களோடு மாயூரத்திற் பழகி வந்தனர். அவர்கள் சொல்லும் தியாகராசையர் கீர்த்தனம் முதலிய பலவகையான கீர்த்தனங்களைக் கேட்டு மகிழ்வடைவார். அக்கீர்த்தனங்களுள் தமக்குப் பிரீதியான மெட்டில் தாமும் தமிழ்மொழியிற் பல கீர்த்தனங்களைச் செய்தார். அவற்றை இசையில் வல்லவர்களைக் கொண்டு பாடுவித்துக் கேட்டும் கேட்பித்தும் பொழுது போக்குவது அவருக்கு வழக்கமாக இருந்தது. அவருக்குக் கீழ் இருந்த உத்தியோகஸ்தர்களிலும் வக்கீல்களிலும் பாடக்கூடியவர்கள் அவருடைய பாடல்களைப் பாடியும் தம் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுத்துப் பாடச்செய்தும் வந்தனர். பிள்ளையவர்களுக்கும் அப்பொழுதப்பொழுது தாம் செய்த கீர்த்தனங்களை வேதநாயகம் பிள்ளை பாடிக்காட்டச் செய்வதுண்டு.
ஒருநாள் அவர் தாம் இயற்றிய சில கீர்த்தனங்களை இராமசாமி ஐயங்காரென்னும் வக்கீல் ஒருவரைக் கொண்டு இவரிடம் பாடிக்காட்டச் செய்தார். அவர் சில கீர்த்தனங்களைப் பாடிவிட்டுக் கடைசியில் பின்னுள்ள கீர்த்தனத்தைப் பாடினர்:
இராகம் - காம்போதி; ஆதி தாளம்.
பல்லவி.
எவ்வகை யிலும் நானே - நல்வழிபற்றி
உய்வகை அருள்கோனே.
அனுபல்லவி.
செவ்வழி நிற்போர்மனத் தேன்கள் வளரும்பூவே
பெளவமாகப் பேரின்பம் பழுக்குங்கற் பகக்காவே (எவ்வகை)
சரணங்கள்.
1. வறியர்க் கிடவென்றாலென் குறியகை களிற்சூலை
வாங்க நீட்டின் உலகும் வானமும் எந்த மூலை
பிறர்நோய்செய் யிலெனக்குப் பெருங்கோபாக் கினிச்சுவாலை
பேதையென் பிழையெழுதின் வேண்டுங் கோடியோலை (எவ்வகை)
2. நல்வழி நடக்கவென் றாலிருகாற் குந்தளை
நாளுந்துர் வழிநடப் பதில்எனக் குண்டோகளை
புல்வினை யேன்செவி பொய்கள் நுழையும்வளை
புண்ணியோப தேசமென்றாற் புகஅதி லேத துளை (எவ்வகை)
3. உன்னைத் துதிக்கவென்றா லுலகிலென் வாய்க்குநோயே
ஊர்வம்பு பேசஎனக் குடம்புமுழு வதும்வாயே
மின்னை நிகர்பிரபஞ்ச வேதனை நீக்குவாயே
வேதநா யகனுக்குச் சாதக மானதாயே. (எவ்வகை)
இதைக்கேட்டு இவர் குற்றமொன்றுமில்லாத வேதநாயகம் பிள்ளை தம்மைத் தாமே இகழ்ந்துகொண்டு பாடியதை நினைந்து பாராட்டி ஒரு விருத்தமும் ஒரு கீர்த்தனமும் பாடி அவரிடம் கொடுத்தார். அவைவருமாறு :
விருத்தம்.
“மன்னரரு ளதிகார மானம்வழு வாமலற வழிந டாத்திப்
பின்னரெனா தறமியற்றும் வேதநா யகசுகுணப் பெரியோய் நாளும்
நன்னரறங் கொள்ளைகொண்டும் இலனெனப்பொய் அனுதினமும் நவிலு வாய்நின்
முன்னரஃ துரைப்பவரை முனிவாயோ முனியாயோ மொழிவாய் நீயே.”
கீர்த்தனம்.
ராகம் - தோடி; தாளம் - சாபு.
பல்லவி.
பொழிந்தானே பதமாரி வேதநாயக
பூபதி யருள்வாரி .
அநுபல்லவி.
வழிந்துபல் லுயிருள வளவயல் புகுந்து
மருவலி னறிவெனு மாண்பயிர் மிகுந்து
மொழிந்த பரசுக விளைவு நீட
முனிந்த கொடுமையால் குடிய தோட (பொழிந்)
சரணங்கள்.
1. என்னகற் றானாதி சேடனே - இவற்கு
எதிருரு வானெனின் மூடனே
பன்னு மிவனிடைக் காடனே – மிகு
பல்கலை யோர்ந்தவி சேடனே (பொழிந்)
2. மன்னுங் கழனி வளக்குளத் தூரன்
வையம் புகழுங்கோ னாட்டுக்கு பேரன்
மின்னுங் கருணைமுன் ஸீபதி காரன்
மெய்ப்பொரு டேர்ந்து விளங்குமு தாரன் (பொழிந்)
3. இன்னும் புகலென யாவருந் துதிக்க
எண்டி சாமுகத் தாரு மதிக்க
முன்னும்யா வர்க்கு ஞான முதிக்க
மூடும்பா சமப்பாற் போய்க் குதிக்க (பொழிந்)
------------
----------
[1] அவர்களாவார்: 1. திருப்பனந்தாள் இராமலிங்கத் தம்பிரானவர்கள், 2. கலியாண சோழபுரம் சிதம்பரம் பிள்ளை, 3. பல்லவராயப் பட்டு சடையப்ப பிள்ளை, 4. மாயூரம் ஆற்றங்கரை முதலியார், 5. அம்பர் வேலுப் பிள்ளை, 6. வள்ளலார் கோயில் அகோர சாஸ்திரிகள், 7. பூங்காவூர்ச் சாமி ஐயர், 8. குற்றாலம் சிங்காரவேலு முதலியார், 9. கூறை நாட்டுச் சாலியச் செல்வர்களுள் ஒருவர், 10. நெய்ப்பற்றூர்ச் சாமி ஐயர், 11. திருவெண்காட்டு நடராச பிள்ளை, 12. வல்லம் பரமசிவம் பிள்ளை.
[2] முதலில் தெற்குரத வீதியின் தென்பாலுள்ள செட்டிகுளத்தின் கீழ்கரையிலிருந்த ராமபிள்ளை யென்பவர் வீட்டில் ஆறு வருஷம் இருந்தார். அந்த வீடு இப்பொழுது இடிந்து போய்விட்டது. அப்பால் தெற்கு வீதியில் வடசிறகில் குப்பபிள்ளை யென்பவர் வீட்டில் நான்கு வருஷம் இருந்தார். அதன்பிறகு அவ்வீதியிலே தென்சிறகில் நாராயண பிள்ளை யென்பவருடைய வீட்டை விலைக்கு வாங்கிக்கொண்டு இருந்தார்.
[3] ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத்திரட்டு, 3221-3321.
[4] இவ்வாறு தாங்களே பாடி இன்புறுதல் சங்கீத வித்துவான்கள் இயல்பு.
------------
20. திருவாவடுதுறையாதீன வித்துவான் ஆகியது.
மேலகரம் சுப்பிரமணிய தேசிகர் முயற்சி.
இவர் திருவாவடுதுறைக்குச் சென்று வரும்பொழுது அங்கே சின்னப்பட்டத்தில் இருந்த சுப்பிரமணிய தேசிகர் இவர்பால் அன்புடன் பேசியிருந்து மகிழ்வது வழக்கம். அவர் தமிழ்ப் பெருங்கவிஞராகிய மேலகரம் திரிகூட ராசப்பக் கவிராயர் பரம்பரையில் அவதரித்தவர். இயல்பிலேயே தமிழார்வம் மிக்கவர். தாண்டவராயத் தம்பிரானிடத்துப் பல தமிழ் நூல்களைப் பாடங் கேட்டவர். நுணுகிய அறிவு வாய்ந்தவர். வித்துவான்களுடைய திறமையை நன்றாக அறிந்துகொள்ளும் ஆற்றலுடையவர். [1]பிள்ளையவர்களைப்பற்றித் தாண்டவராயத் தம்பிரானவர்கள் மூலமாக முன்னரே அறிந்தவர். நேரிற் பார்த்துப் பழகிய பின்னர் இவரிடத்து அவருக்கு அதிகமான அன்பு ஏற்பட்டது. இவரைத் தம்முடைய மடத்திலேயே இருக்கச்செய்து தம்பிரான்களுக்கும் பிறருக்கும் தமிழ் நூற்பாடஞ் சொல்லிக்கொண்டிருக்கச் செய்ய வேண்டுமென்னும் எண்ணம் அவருக்கு உண்டாகி வளர்ச்சியுற்றது. அவ்வாறு செய்வதற்கு அப்பொழுது ஆதீன கர்த்தராக இருந்தவரும் தம்முடைய ஞானாசிரியருமான அம்பலவாண தேசிகருடைய கட்டளையைப் பெற விரும்பி ஒருநாள் அவர் அம்பலவாண தேசிகரிடம் இவருடைய பெருமைகளைப்பற்றி விரிவாகச்சொல்லி, “தமிழில் மிக்க பயிற்சியுள்ள மீனாட்சிசுந்தரம் பிள்ளையை இவ்விடத்திலே இருக்கச்செய்து தம்பிரான்களுக்கும் மற்றவர்களுக்கும் தமிழ்ப் பாடங்களை முறையாகச் சொல்லி வருமாறு சந்நிதானத்திற் கட்டளையிட்டால் நலமாயிருக்கும். படிப்பதற்குப் பலர் காத்திருக்கிறார்கள்” என்று விண்ணப்பித்தார். அப்போது இருவருக்கும் பின்வரும் சம்பாஷணை நடந்தது :
அம்பல : இங்கே கந்தசாமிக் கவிராயரும் சில தம்பிரான்களும் இருக்கிறார்களே; அவர்களைக் கொண்டே சொல்விக்கலாமே.
சுப் : சிற்சில நூல்களைப் பாடஞ் சொல்லுவாரேயன்றி இக் காலத்தில் வழங்கும் தமிழ்ப் பிரபந்த வகைகளையும் பெரிய காப்பியங்களையும் இலக்கண நூல்களையும் திருக்குறள் - பரிமேலழகருரை முதலியவற்றையும் வருத்தமின்றித் தெளிவாகச் சொல்வதற்குக் கவிராயரால் இயலாது. இதுவரையிற் பாடஞ் சொல்லி வந்ததில் அவரிடம் படித்து நல்ல தேர்ச்சி பெற்றவர் ஒருவரையும் காணவில்லை. வெகு காலத்துப் பழக்கத்தினால் கந்த புராணம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் என்பவற்றைப் படித்து அவர் கதை சொல்லிக்கொண்டு வருகிறார். அதனை ஒரு பெரிய செயலாக மதிக்கலாகாது. படித்தவர்களுடைய இயல்பு பாடஞ்சொல்வதனாலே தான் விளங்கும்.
அம்பல : இவர் மட்டும் அதிகமாகப் படித்தவரென்பது உமக்கு எப்படித்தெரியும்?
சுப் : இந்த ஆதீன வித்துவான் தாண்டவராயத் தம்பிரான் இவரைப்பற்றிப் பலமுறை அடியேனிடம் சொல்லியிருப்பதுண்டு. இப்பொழுது வழங்கும் தமிழ் இலக்கண இலக்கிய நூல்களை யெல்லாம் யாதொரு சிரமமும் இல்லாமல் மிகவும் சுலபமாக இடைவிடாமற் பாடஞ் சொல்லும் ஆற்றலையுடையவரென்றும் அங்ஙனம் சொல்வதொன்றே இவருக்குத் திருப்திதரப் போதுமானதென்றும் பல நூல்களை இயற்றியுள்ளாரென்றும் சொல்லியிருக்கிறார். இவருக்கு அவ்வாறு பாடஞ் சொல்லுவதே பொழுது போக்காக இருக்கிறதாம். இதனை அவர் சென்னை, திருச்சிராப்பள்ளி முதலிய இடங்களில் பன்முறை அறிந்திருந்தனராம். இவரைப்போற் சிரமமில்லாமற் பாடஞ் சொல்வதற்குச் சிறிதேனும் தம்மால் இயலாதென்றும் இவர் இருந்தால் மடத்திற்கு இன்னும் விசேஷமான கெளரவங்கள் உண்டாகுமென்றும் வித்துவான்கள் பலரிடத்தும் சென்று பாடங்கேட்டதனால் இந்த ஆதீனத்திலிருந்த சிவஞான முனிவர், கச்சியப்ப முனிவர் முதலியவர்களுடைய நூல்களை இவரையன்றிச் சொல்லுபவரில்லையென்றும் அடிக்கடி இவரைப்பற்றி அடியேனிடம் பாராட்டிப் பேசி மகிழ்வார். அன்றியும் இவர் பல வருஷங்களுக்கு முன் வேளூர் மகா ஸந்நிதானத்தின் காலத்தில் அவர்களைத் தரிசித்து அவர்களால் பாராட்டப் பெற்றவராம்.
அம்பல : ஓ! இவரைப் பார்த்தால் நமக்கு அப்படித் தோற்றவில்லையே. நீர் மிகச் சிறந்தவராகக் கூறுகின்றீரே!
சுப் : ஆம். இவரையொப்பாரும் மிக்காரும் இத் தமிழ்நாட்டில் வேறொருவரும் இல்லை.
அம்பல : பார்ப்பதற்கு மிக்க சாதுவாக இருக்கிறாரே!
சுப் : நன்றாகப் படித்தவர்கள் அவ்வாறே இருப்பார்கள். பிறர் தாமே அறிந்து தங்களை உபசரித்தால்தான் தம்முடைய ஆற்றலை அவர்கள் புலப்படுத்துவார்கள்.
அம்பல : இவரை யாராவது உபசரித்ததுண்டா?
சுப் : இவர் சென்னையிற் பல பிரபுக்களாலும் வித்துவான்களாலும் நன்கு மதிக்கப்பட்டவர். தாண்டவராயத் தம்பிரான் சென்னையில் இருந்தபொழுது அவர்கள் இவரை உபசரித்ததை நேரிற் கண்டாராம். அன்றியும் பங்களூரில் இவர் மிக்க சிறப்பை அடைந்திருக்கின்றாராம். இந்தப் பக்கத்துப் பிரபுக்கள் யாவரும் இவருடைய நண்பர்கள்.
அம்பல : அது சரிதான். இவருடன் பலர் இருக்கிறார்களே; அவர்கள் இவரைவிட்டு நீங்கமாட்டார்கள் போல் இருக்கிறதே. இவரோடு எல்லோரும் இங்கே இருப்பாராயின் அதிகச் செலவாகும் அல்லவா? அதைப்பற்றியும் கொஞ்சம் யோசிக்கிறோம்.
சுப் : அவ்வளவுபேரும் இவருடைய மாணாக்கர்கள். இவர் எங்கே இருந்தாலும் உடனிருப்பார்கள். அவர்களுள் முன்னமே படித்தவர்கள் சிலர்; இப்பொழுது படிப்பவர்கள் சிலர்; இனிப் படிப்பதற்கு முயற்சி செய்பவர்கள் சிலர்; அவர்களிற் பந்தியிலே உண்ணத்தக்கவர்களுக்குப் பந்தியிலும் ஏனையவர்களுக்கு அவரவர்க்கேற்றபடியும் ஆகாரம் செய்விக்கலாம். இங்கே சாப்பாட்டுச் செலவில் ஒன்றும் குறைவில்லையே. படித்த வித்துவான்கள் இருத்தலும் அவர்களைக்கொண்டு பலரைப் படிப்பித்தலும் மடத்துக்கு ஏற்றவையாகும். அது ஸந்நிதானத்திற்குத் தெரிந்ததே. ஸம்ஸ்கிருத வித்துவான்களாக மடத்திற் பல காலமாக இருந்தவர்களில் திருக்கோடிகாவல் கோதண்டராம சாஸ்திரிகள், ராமகுட்டி சாஸ்திரிகள், திருவாலங்காட்டு விசுவபதி தீட்சிதர், அப்பா தீட்சிதர், அப்பைய தீட்சிதர், தியாகராஜ சாஸ்திரிகள் முதலியோர்கள் இருந்து வடமொழியைப் பிரகாசப்படுத்துகிறார்களே? இங்கே ஸம்ஸ்கிருதம் படிக்க வருபவர்களுக்கு ஸெளகரியம் செய்து கொடுத்துப் படிப்பிப்பதுபோலத் தமிழ் கற்பவர்களுக்கும் அனுகூலம் செய்யவேண்டுவது அவசியமே. ஸம்ஸ்கிருதத்தில் அவர்களெல்லோரும் எவ்வாறு சிறப்புற்று விளங்குகிறார்களோ அவ்வாறே இவரும் தமிழிற் பெரியவராக விளங்குகிறார். சிவஞானமுனிவர் முதலிய பல பெரிய வித்துவான்கள் தமிழைப் பரிபாலனம் செய்தமையால் வித்தியா தானத்தில் மிகக் கீர்த்திபெற்ற இந்த இடத்தில் இவர் அவசியம் இருத்தல் வேண்டும். அதனால் மடத்தின் கௌரவம் பெருகும்; துரைத்தனத்தாரும் நம்மை மதிக்கும் நிலை உண்டாகும். இவருக்குப் பல உத்தியோகஸ்தர்களும் பிரபுக்களும் பழக்கம் உண்டு; ஆதலால் அவர்களெல்லாரும் நம்மை இன்னும் அதிகமாகக் கௌரவிக்கக் கூடும்.
அம்பல : அவர்கள் நம்மை மதித்தாலென்ன? மதியா விட்டாலென்ன?
சுப் : அவ்வாறு கட்டளையிடலாமா! அவசியம் துரைத்தனத்தாருடைய பிரியமும் உத்தியோகஸ்தருடைய மதிப்பும் இந்தக் காலத்திற்கு வேண்டியனவே. அரசாங்கத்தார் கல்வி விஷயத்தில் மிக்க அபிமானத்தைக் காட்டி வருகிறார்கள் என்பது தெரியுமே? ஆதலின் இந்தத் துறையில் நாம் நன்மை செய்து வருதலை அவர்களறிந்து கொள்வார்களாயின் நம்மிடத்தில் அவர்களுக்குள்ள நல்ல அபிப்பிராயம் அதிகமாகும்.
அம்பல : ஆமாம்! இவரை இங்கே அமர்த்தினால் தக்க சம்பளம் கொடுக்க வேண்டுமே. என்ன கொடுக்கலாம்? இங்கே உயர்ந்த சம்பளம் ஐந்து கலம் தானே? அதற்குமேற் கொடுக்க முடியாதே! கொடுத்தால் மற்றவர்கள் தங்களுக்கும் அவ்வளவு கொடுக்கவேண்டுமென்று கேட்கக்கூடும். ஆதலால் இதைப்பற்றி நமக்கு ஒரு முடிவும் தோன்றவில்லை.
சுப் : அதைப்பற்றிய கவலை சிறிதும் வேண்டாம். இவருடைய மாணாக்கர்களைப் போஷித்துப் பாதுகாத்தலே போதும். அதனாலேயே இவர் மிகவும் திருப்தியடைவார். அதற்கு மேல் ஒன்றும் வேண்டாம்.
அம்பல : அப்படியா! என்ன இது மிக ஆச்சரியமாக இருக்கிறது? அவ்வாறு இருந்தால் நமக்கு ஒன்றும் சிரமமே இல்லை. அவ்வாறே செய்து விடலாம். இந்த விஷயத்தைப்பற்றி நீர் சொன்னது மிகவும் சந்தோஷத்தை விளைவிக்கின்றது.
திருவாவடுதுறையாதீன வித்துவானாகியது.
இங்ஙனம் ஒப்புக்கொண்டு மடத்திலுள்ள முக்கியமான அதிகாரிகளுக்குப் பிள்ளையவர்களை ஆதீன வித்துவானாக நியமித்திருப்பதாகவும் வேண்டிய ஸெளகரியங்களையெல்லாம் அமைத்துக் கொடுக்கவேண்டுமென்றும் கட்டளையிட்டார். அவ்வாறே யாவும் செய்யப்பட்டன. இவருக்கு இரண்டு தவசிப்பிள்ளைகளைத் திட்டம் செய்தனர்; மடத்திலிருந்தே அவர்களுக்கு மாதச்சம்பளம் அளிக்கப்பட்டது.
பாடஞ் சொல்லுதல்.
அப்போது பிள்ளையவர்களுக்குண்டான மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. முன்பு ஒருகாலத்தில் அம்பலவாண முனிவரிடம் வருந்தி வருந்திப் பாடங்கேட்டு இவ்வளவேனும் இவ்வாதீன சம்பந்தம் உண்டாயிற்றேயென உவகை கொண்டிருந்த தம்மை ஆதீனத்து வித்துவானாக ஆக்குவித்தது திருவருளேயென நினைந்து உருகினார். பின்பு நல்லதினம் ஒன்றிற் பாடஞ் சொல்ல ஆரம்பித்தார். படிக்க விரும்பிய பல தம்பிரான்களும் படிக்கவேண்டுமென்று முன்னமே வந்திருந்து மடத்தில் உண்டுகொண்டிருந்த சிலரும் பாடங்கேட்க ஆரம்பித்தார்கள். இவருடன் முன்பு இருந்த மாணாக்கர்களும் உடனிருந்து பாடங்கேட்டு வருவாராயினர். பரீட்சித்து அவரவர்களுடைய தகுதிக்கேற்ற வண்ணம் இரண்டு மூன்று பிரிவாகப் பாடஞ் சொல்லி வந்தனர். படிக்கவேண்டிய புத்தகங்கள் அச்சிடப்பட்டவைகளாயின் மடத்துச் செலவில் விலைக்கு வருவித்து மாணாக்கர்களுக்குக் கொடுப்பித்தும் அச்சிடப்படாதவைகளாயின் வேறே பிரதி செய்து கொள்ளும்படி செய்தும் இவர் பாடங்களை நடத்தி வந்தார்.
அப்பொழுது படித்தவர்கள் (திருநெல்வேலிப் பேட்டையிலிருந்து வந்து அங்கே காஷாயம் பெற்றுப் படித்துவந்த) நமச்சிவாயத் தம்பிரான், மதுரை இராமசாமி பிள்ளை, தேவகோட்டை நாராயண செட்டியார் முதலியவர்கள். அவர்கள் அப்பொழுதே சிறந்த வித்துவான்களாக மதிக்கக்கூடிய நிலையில் இருந்தவர்கள்.
அவர்களுள் நமச்சிவாயத் தம்பிரான், பாடங்கேட்கும் நூலை முன்னதாகவே படித்து வைப்பதும் படித்த பின்பு சிந்தனை பண்ணுவதும் வழக்கம். இதனால் மற்றவர்களைக் காட்டிலும் அவருடைய படிப்பு ஓங்கி நின்றது.
இக்கவிஞர்பிரான் இருப்பதற்காக மடத்திற்கு எதிரில் இருந்த ஒரு பசுத்தொழுவம் செப்பனிடப்பட்டு விடுதியாக அமைக்கப்பட்டது. அது விசாலமான முற்றத்தையுடையது. அதனை மிகவும் பரிசுத்தமான இடமென்று நினைந்து இவர் அங்கேயே இருந்து வருவாராயினர். பாடஞ்சொன்ன காலங்களையன்றி மற்றக் காலங்களில் தாம் பாடவேண்டிய நூல்களைப் பாடி மாணவர்களைக் கொண்டு எழுதுவித்தும் வந்தார். தம்முடைய மாணவர்கள் கவலை யின்றி உண்டு பாடங்கேட்பதற்குரிய செளகரியங்கள் அமைந்தமையால், அவர்களுக்கு வேண்டிய சௌகரியங்களைச் செய்து கொடுப்பதற்கில்லையே யென்று முன் கவலையுற்றிருந்த இவருக்கு அளவற்ற சந்தோஷமும், இதுவும் [2]ஸ்ரீசுவர்ணத்தியாகர் திருவருளும் நமச்சிவாய மூர்த்தியின் திருவருளுமே என்னும் எண்ணமும் உண்டாயின. அந்த உவகையினால் இவர் மிக்க ஊக்கமும் பெற்றனர்.
அம்பலவாண தேசிகர்மீது கலம்பகம் இயற்றியது.
திருவாவடுதுறை மடத்திலுள்ள சம்பிரதாயங்களையும் மற்றவற்றையும் பார்த்த இவருக்கு அப்பொழுது தலைவராகவிருந்த ஸ்ரீ அம்பலவாண தேசிகர் விஷயமாக ஒரு பிரபந்தம் இயற்ற வேண்டுமென்ற எண்ணம் தோன்றிற்று. தோன்றவே, மடத்தின் சம்பிரதாயங்களை யெல்லாம் நன்கு விசாரித்து அறிந்து கொண்டு சில தினங்களில் அம்பலவாண தேசிகர் மீது கலம்பகமொன்றை இயற்றி முடித்தார்.
மகாவித்துவானென்னும் பட்டம் பெற்றது.
அப்பால் ஒரு விசேடகாலத்தில் திருவாவடுதுறையில் அம்பலவாண தேசிகர் முன்னிலையில் பல வித்துவான்களும் பிரபுக்களும் சூழ்ந்த மகாசபையில் அந்நூல் அரங்கேற்றப்பட்டது. அதைக் கேட்ட எல்லோரும் அதிசயித்தார்கள். திருவாவடுதுறை சம்பந்தமாகப் பல பிரபந்தங்கள் இருந்தாலும் அக் கலம்பகம் எல்லாவற்றிலும் சிறந்ததாகவும் பொருள் நயம் செறிந்ததாகவும் சைவ சம்பிரதாயங்களையும் ஆதீன சம்பிரதாயங்களையும் விளக்கிக்கொண்டிருப்பதாகவும் உள்ளதென்று கொண்டாடினார்கள். அப்பொழுது பெரிய காறுபாறாகவும், ஆதீன வித்துவானாகவுமிருந்து விளங்கிய கனகசபைத்தம்பிரான் முதலியோர்கள் இவருடைய புலமைத் திறத்தைக்கண்டு மகிழ்ந்து, “இவர்களுக்குச் சந்நிதானம் தக்க மரியாதை செய்தருள வேண்டும்” என்று தலைவரிடம் விண்ணப்பித்துக் கொண்டார்கள். அதனைக் கேட்ட அம்பலவாண தேசிகர் மேலகரம் சுப்பிரமணிய தேசிகரோடும் ஆலோசித்து ‘மகாவித்துவான்’ என்னும் பட்டத்தை இவருக்கு வழங்கினார். எல்லோரும், “அத்தகைய பட்டத்திற்கு இவர் ஏற்றவரே” என்று கூறிச் சந்தோஷித்தார்கள். பட்டம் அளித்ததன்றி அம்பலவாண தேசிகர் சால்வை முதலிய பரிசில்களும் இவருக்கு வழங்கி மடத்தில் இல்லறத்தார் உண்ணும் வரிசையில் முதல் ஸ்தானத்தையும் கட்டளையிட்டார்.
அந்தக் கலம்பகத்திலுள்ள சில அரிய விஷயங்களும் பாடல்களும் வருமாறு :
திருவாவடுதுறை மடத்தில் வழிபடப் பெற்றுவரும் மூர்த்தி ஸ்ரீ நடராஜப் பெருமான்; இது,
“கடிமலர் கைக்கொண் டன்பு கனியவம் பலவா ணன்பொன்
அடியருச் சனைகோ முத்தி யம்பல வாணா செய்வாய்
தடிதலில் விதியான் முன்னந் [3]தன்னைத்தா னருச்சித் தேத்தும்
படிநினைந் தனைகொல் யார்க்கும் பழக்கவா தனைவி டாதே”
என்பதிற் புலப்படுத்தப் பட்டிருக்கின்றது.
அடியேனுடைய உடல் பொருள் ஆவி மூன்றையுங்கொண்டு முத்தியாகிய ஒன்றை மட்டும் ஈவதற்கு வருத்தம் என்ன என்னும் கருத்து,
“அருவி யறாவரை போன்முத்த மாலை யவிரிலஞ்சூழ்
பொருவிய லோவு திருவா வடுதுறைப் புண்ணியமா
சொருவிய வம்பல வாணா வடிய னுடன்முதலாக
மருவிய மூன்றுங்கொண் டொன்றீ வதற்கு வருத்தமென்னே”
என்னும் செய்யுளில் அமைந்துள்ளது.
‘நீர் அணிந்துள்ள பிறை, எலும்பு முதலிய பொருள்களும், உமக்கு இருப்பிடமாகிய கைலைமலை, ஊர்தியாகிய இடபம் முதலியவைகளும் வெண்ணிறமுடையன; இங்ஙனம் வெண்ணிறமுடைய பொருள்களையே நீருடைமையால் அடியேனுடைய வெள்ளறிவையும் கொள்ளுதல் முறையாகும்’ என்னும் கருத்தை அமைத்து,
“துணிபிறை வெண்மை யெலும்பணி வெண்மை
சூடுகங் காளமும் வெண்மை
துரோணமும் வெண்மை கபாலமும் வெண்மை
துவலைசால் கங்கையும் வெண்மை
பணிதரு கொக்கின் றூவலும் வெண்மை
பயில் குழை யருக்கமும் வெண்மை
பரவுறு கயிலை வாகனந் துவசம்
பரிக்குமக் கிவைகளும் வெண்மை
மணியொளி நீறு வாளி துஞ் சாவம் :
வயங்குதேர்ப் பாகிலா ளில்லம்
மதம் பொழி யயிரா வணமிவை வெண்மை
மற்றியன் மேனியும் வெண்மை
அணிகிளர் முன்னா ணினக்கெனி னிந்நாள்
அவிர் புகழ் நீற்றொடு துறைசை
அம்பல வாண வாரிய வடியேன்
அறிவு வெண் மையுங்கொளல் வழக்கே”
என்று பாடிய செய்யுள் மிக்க சுவையுடையதாக விளங்குகின்றது.
அந்நூலிலுள்ள வேறு சில பாடல்கள் வருமாறு:-
“தரைகமழ்வண் பொழிற்றிருவா வடுதுறைக்கட் குரவர்பிரான் தானாய்த் தெய்வ
விரைகமழம் பலவாண மேலோனுண் மையையுணர்ந்தேன் விளம்பக் கேளீர்
உரைகமழ்தண் கயிலாயத் தொருவன்கா ணாலவனத் துறைந்தான் முன்னம்
புரைகமழிவ் வரசவனத் துறைவாரிப் போதவன்சீர் புகல்வார் யாரே”
(அரசவனம் - திருவாவடுதுறை)
“அருந்தவருக் கரசுகலை யறுபத்து நான்கினுக்கு மரசு ஞானம்
பொருந்தவருக் கரசுகுர வருக்கெல்லா மரசுநெடும் பொன்மா மேருப்
பெருந்தவருக் கரசுதுறை சைப்பதியம் பலவாண பிரானீ யென்றே
வருந்தவருக் கரசுபெறா நினைநிழற்றுந் திருவரசு மகிழ்ந்து தானே”
(வருந்து அவருக்கு - வீண்செயலால் வருந்துகிறவர்களுக்கு; அவம் - வீண்.)
சித்து
“விள்ளரும் புகழ்சா லாவடு துறையுண்
மேவிய வம்பல வாண
வித்தகன் றிருமு னொருதினஞ் சென்று
மெய்யுறப் பணிந்தன மனையான்
தள்ளருங் கருணை கூர்ந்துவேண் டுவதென்
சாற்றுக வென்றுநீ றளித்தான்
தளர்விலாப் புடைவீங் கிடவுணல் வேண்டுந்
தயைபுரி யென்றஃ தேற்றோம்
எள்ளருஞ் சுவைய வடிசின்முன் னளித்தா
னிலைதவிர்த் தியாவையு முண்டோம்
இவன்செய்பே ருதவிக் கினிச்செய லியாதென்
றெண்ணினோஞ் சாமியாய் விளங்க
உள்ளரு மனையான் றிருமட முழுது
முஞற்றினோ நமதுசித் தருமை
உணர்பவ ரியாரே யாவயிற் சென்றா
லுணரலா மோதுவார் பலரே.
(சாமி - பொன், துறவி. ஓதுவார்-சொல்பவர், தேவாரம் ஒதுபவர்கள்.)
மகாவைத்தியநாதையருடைய பழக்கம்.
அப்பொழுது நிகழ்ந்த மகரத்தலைநாட் குரு பூஜையில் (தை மாத அசுவதி நட்சத்திர குருபூஜையில்) ஸ்ரீ அம்பலவாண தேசிகருக்கு நடந்த பட்டணப் பிரவேசத்தில் பாதசாரியாக உடன்வந்த ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் கோமுத்தி தீர்த்தத்தின் தென்கரையில் வாண வேடிக்கை நடக்கும்பொழுது அங்கே நிற்பதிற் சிறிது தளர்ச்சியுற்று அயலிலிருந்த சத்திரத்தின் திண்ணையில் அமர்ந்தார். அப்பொழுது மாணாக்கர்களோடு பிள்ளையவர்களும் உடன்சென்றிருந்தார்கள். அவர்கள் வரவையறிந்து, அங்கே தங்கியிருந்த மகா வைத்தியநாதையர் தம் தமையனாராகிய இராமஸாமி ஐயருடன் வந்து கண்டு சுப்பிரமணிய தேசிகருடைய விருப்பத்தின்படி பக்கத்தில் இருந்தார். மற்ற வித்துவான்களும் சூழவிருந்தார்கள். அந்த இருவர்களும் சங்கீதத்தில் உயர்ந்த பயிற்சியுடையவர்களாக இருந்ததன்றித் தமிழிலும் நல்ல அறிவுவாய்ந்தவர்கள். எதனையாவது ஒருமுறை கேட்டார்களானால் அதனை மறக்கமாட்டார்கள்; அதனால் ஏகஸந்தக்கிராகிகளென்று புகழ்பெற்று விளங்கினார்கள். பிரசங்க சக்தி அவர்களிடத்தில் நன்றாக அமைந்திருந்தது. அவ்வளவுக்கும் காரணம் சுப்பிரமணிய தேசிகருடைய பழக்கமும் ஆதரவுமே. அவர்களைப் பிள்ளையவர்களுக்குப் பழக்கம் செய்து வைக்க வேண்டுமென்னும் கருத்து சுப்பிரமணிய தேசிகருக்குப் பலநாளாக இருந்துவந்தது. ஆனாலும் சமயம் நேரவில்லை. அப்பொழுது அவ்விருவருடைய பெருமையையும் பற்றிப் பிள்ளையவர்களிடமும் பிள்ளையவர்களைப்பற்றி அவர்களிடமும் பிரஸ்தாபித்து விட்டு அவ்விருவரையும் நோக்கி, “உங்கள் வாக்கினால் ஏதேனும் ஒரு பாடல் சொல்லவேண்டும்” என்றனர். அவர்கள், இக்கவிஞர் பெருமானைப்பற்றி இளமையிலிருந்து அறிந்திருந்ததன்றி இவருடைய நூல்களைப் படித்து ஞாபகத்திலும் வைத்திருந்தார்கள். இவரைப்பார்க்கவேண்டுமென்னும் ஆவல் நெடுநாளாக உடையவர்களாகையினால் அளவிலா மகிழ்ச்சியுற்று இவரைப்பற்றிச் சிறிது நேரம் பாராட்டினர். பின்பு
[4]“பூங்காவனக் குயிலேதழை பொலியத்திரி மயிலே
நீங்காமலெவ் வுயிர்க்கும்முயி ராய்நின்றரு ணிமலன்
பாங்காருமை யாளோடு பசுங்கொன்றை மணப்ப
ஈங்கார்வழிச் சென்றான்கொ லிசைப்பீரெமக் குறவே”
“மாவேநறும் பலவேமனன் மண்டுந்தட மலர்ந்த
பூவேசெழுங் காவேநலம் புணர்ஞான முணர்ந்தோர்
நாவேபுகழ் பெரியோனெனை நன்றாட்கொள வுரியோன்
தேவேசனிவ் வதிமாதொடு சென்றான்கொ லுரைப்பீர்”
“குருந்தேநறுங் கொன்றாய்கொடி முல்லாய்செழுங் குரவே
திருந்தேனென நிற்கும்மொரு சிறியேனையும் பொருளா
வருந்தேலென வாண்டானுமை மாதோடுமிவ் வழியே
மருந்தேயெனச் சுரரேத்திட வந்தான்கொ லுரைப்பீர்”
என்னும் பாடல்களை இசையோடு சொல்லிக் காட்டினார்கள். அவற்றைக் கேட்ட இவர், “இவை எந்த நூலிலுள்ளவை?” என்றார்.
அவர்கள் : தாங்கள் இயற்றிய சூதசங்கிதையில் பிரமன் முதலியோர் தில்லையில் நோற்று ஞானம் பெற்ற அத்தியாயத்தில் உள்ளவை.
மீ : அப்படியா! இன்னும் அந்த நூலில் வேறு செய்யுட்கள் உங்களுக்குப் பாடம் உண்டோ?
அவர்கள் : நிறைய உண்டு. கோடகநல்லூர்ச் சுந்தரஸ்வாமிகள் எங்களை அடிக்கடி சொல்லச் சொல்லிக் கேட்டு மகிழ்வார்கள். அவர்கள் வடமொழிச் சூதசங்கிதையில் அதிகப் பழக்கமுள்ளவர்களாதலால் இந்தப் பாடல்களைக் கேட்டு மிக ஆச்சரியப்படுவதன்றித் தங்களைப் பாராட்டிக்கொண்டேயிருப்பார்கள்.
மீ : இந்நூலை நான் செய்ததாகச் சொன்னீர்களே. அதனை அறிந்ததெப்படி?
அவர்கள் : திருநெல்வேலியில் வேதாந்த சாஸ்திரப் பரிசயமுள்ளவராக இருக்கும் ஐயாசாமி பிள்ளையவர்களும் எங்களுக்குத் தெரிந்த மற்ற வித்துவான்களும் சொன்னார்கள்.
சுப்பிரமணிய தேசிகர், பிள்ளையவர்களை நோக்கி, “அந்த உண்மையை நீங்கள் எவ்வளவு மறைத்தாலும் மறைவுபடுமா? உங்கள் கவித்துவத்தையும் புகழையும் யாரால் மறைக்க முடியும்? சூரியனை மறைப்பதற்கு யாரால் இயலும்” என்று சொல்லி மகிழ்ந்தார்.
அந்த இருவர்களுடைய தோற்றப் பொலிவும் விபூதிருத்திராட்சதாரணமும் சிவபக்திச் செல்வமும் இசையோடு பொருள் விளங்கப் பாடல்களைச் சொல்லும் அழகும் அங்கசேஷ்டையின்றிப் பாடுவதும் ஆலாபனம் செய்கையில் ‘சங்கரா’ என்று சொல்லுவதும் இம்மகாவித்துவானுடைய மனத்தைக் கவர்ந்தன. பின்பு, “ஐயா! அந்தப் பாடல்கள் உங்கள் வாக்கிலிருந்து வரும்பொழுது தனிச்சுவையையுடையனவாக இருக்கின்றனவே. உங்களைப் போலத் தமிழ்ப்பாடல்களை இவ்வளவு அழகாகச் சொல்பவர்களை இதுகாறுங் கண்டிலேன். உங்களுடைய க்ஷேமத்தைக் குறித்துப் பரமசிவனைப் பிரார்த்திக்கிறேன். உங்களுடன் அடிக்கடி பழக வேண்டுமென்பது என்னுடைய விருப்பம்” என்றார். அவர்கள், ''எங்களுடைய முழு வாழ்விற்கும் காரணம் ஸந்நிதானமே. அந்த அன்பே உங்களையும் பார்க்கும்படி கூட்டி வைத்தது. உங்களைப் பார்த்துப் பழகிப் பாடங்கேட்கவேண்டுமென்று நீண்ட நாளாகக் காலத்தை எதிர்பார்த்திருந்தோம். இன்று எங்கள் பாக்கியத்தால் அது நிறைவேறியது. எல்லாவற்றிற்கும் காரணம் சிவகிருபையே” என்றார்கள்.
மறுநாள் பிற்பகலில் மடத்தில் பல பிரபுக்களும் பலவகையான வித்துவான்களும் இருந்த சபையில் வழக்கம் போலவே அவ்விருவருடைய இசைப்பாட்டு நடைபெற்றது. அப்பொழுது மகா வைத்தியநாதையர் வடமொழி தென் மொழிகளிற் சிவசம்பந்தமான கீர்த்தனங்களைப் பாடுவதைக் கேட்டு இவர் அவற்றில் ஈடுபட்டுப் பின்வரும் பாடல்களைச் சொன்னார்.
''பொருவில்மகா வைத்தியநா தன்பாடு மிசைப்பெருஞ்சீர் பொருவா னெண்ணில்
ஒருவிலருட் டுறைசையெங்கள் குருமணியம் பலவாண னொளிர்கூ டற்கண்
வெருவில்சிறப் புறமுனம்பா டிசைப்பெருஞ்சீ ரேபொருவும் விருத்த ரூபம்
மருவிலனிந் தனச்சுமையு மெடுத்திலன்வேற் றுமையிவையே மதிக்குங் காலே.”
“அனைநிகர்சுப் பிரமணிய மணியொடுமா வடுதுறையி லமரர் நின்ற
தனைநிகரம் பலவாண பரசிவன்மற் றெங்கள்குரு சாமி மேன்மேற்
புனையும்வயித் தியநாத னிசைவிரும்பி னானிதுவும் புகழோ வென்னின்
இனையன்[5]வயித் தியநாத னிசைவிரும்பல் பரம்பரையின் இயைந்த வாறே.”
இவர் புராணம் அரங்கேற்றும் இடங்களுக்கு அவ்விருவரும் போகும்படி நேர்ந்தால் இரண்டு மூன்றுநாள் அங்கே இருந்து கேட்டு வருவது அக்காலமுதல் அவர்களுடைய வழக்கமாக இருந்தது. அப்பொழுது இவர் சொல்லும் அருமையான பாடல்களிற் சிலவற்றை மனப்பாடம் செய்து கொண்டு கதை பண்ணுகையில் உபயோகித்து வந்தார்கள்.
பட்டீச்சுரம் ஆறுமுகத்தா பிள்ளை.
இடையிடையே வழக்கம்போலப் பட்டீச்சுரத்திற்குப் பிள்ளையவர்கள் சென்றுவருவதுண்டு; அங்கே நமச்சிவாயபிள்ளை காலஞ்சென்ற பின்னர் அவருடைய குமாரராகிய ஆறுமுகத்தா பிள்ளை யென்பவரும் இவரிடத்தில் மிக்க மரியாதையுடையவராகி இவரைத் தம் தந்தையாராகவும் குருவாகவும் பாவித்திருந்தார். திருவாவடுதுறைக்கு வந்து இவரை அழைத்துச்சென்று சில மாதம் வைத்திருந்து உபசரித்து அனுப்புவார்.
இயல்பாகவே இவருக்கு வடமொழி வித்துவான்களிடத்தும், சங்கீத வித்துவான்களிடத்தும் அன்பு உண்டு. தியாகராசலீலை முதலியவற்றை இயற்றுகின்ற காலமுதற்கொண்டே வடமொழி வித்துவான்களுடைய பழக்கமும் அவர்களுடைய உதவியும் அமைந்திருந்தன. திருவாவடுதுறை மடத்திற்கு வந்தபிறகு அத்தகைய பழக்கம் அதிகமாயிற்று. அந்த மடம் பலவகை வித்துவான்கள் ஒருவர் பின் ஒருவராக நாடோறும் வந்து பரிசு பெறும் இடமாதலின் அவர்கள்பாற் பல அரிய செய்திகளை அறிந்துகொள்வதும், பல சுலோகங்களையும் அவற்றின் பொருளையும் கேட்டுத் தமிழில் மொழி பெயர்ப்பதும், அக்கருத்துக்களை ஞாபகத்தில் வைத்திருந்து தாம் இயற்றும் நூல்களில் இடத்திற்கேற்ப அமைத்துக்கொள்வதும் இவருக்கு வழக்கம். அந்த வித்துவான்களும் இவருடைய அறிவின் திறத்தை அறிந்து வியந்து இவரோடு பழகுதலையும் இவருடைய செய்யுட்களைக் கேட்டலையும் பெரிய லாபமாகக் கருதியிருந்தனர். “சான்றோர் சான்றோர் பாலராப” என்பது மெய்யன்றோ?
---------
[1] 168 - ஆம் பக்கம் பார்க்க.
[2] இது திருவாவடுதுறையிற் கோயில் கொண்டருளிய சிவபிரானது திருநாமம்.
[3] சிவபிரான் தம்மைத்தாமே அருச்சித்தது திருவிடைமருதூரிலும் திருவையாற்றிலும்; குருவைச் சிவமாகப் பாவிக்க வேண்டுமென்பது இச்செய்யுளில் அறியற்பாலது.
[4] இவை திருமால் கூற்று.
[5] வைத்தியநாதரென்பது திருவாவடுதுறை மடத்துப் பெரிய பூசையிலுள்ள உடையவர் திருநாமம்.
-----------
21. பல நூல்கள் இயற்றல்.
திருவிடைக்கழி முருகர் பிள்ளைத் தமிழ்.
ரௌத்திரி வருஷம் திருவிடைக்கழி முருகர் பிள்ளைத் தமிழை இவர் இயற்றினார். அதனை ஆக்குவித்தோர் அந்த ஸ்தலத்திலிருந்த கார்காத்த வேளாளப் பிரபுவாகிய சுப்பராய பிள்ளை யென்பவர். அந்தப் பிள்ளைத் தமிழை அரங்கேற்றத் தொடங்கியபொழுது ஒருவர் அப்பிரபுவினிடம் எதனையோ காதோடு முணுமுணுத்துவிட்டு வந்து இவர்க்கு முன்னம் அமர்ந்து செய்யுள் நிரம்ப நன்றாயிருக்கிறதென்று தலையசைத்துச் சந்தோஷித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது சபையில் இருந்தவர்களில் ஒருவராகிய சிங்கவனம் சுப்புபாரதியார், “அவர் சொல்லியது என்ன?” என்று கேட்டார். சுப்பராயபிள்ளை, “இச்செய்யுளின் முதற்சீர் பொருத்தம் இல்லாதது; ஏதேனும் கடுமையான தீங்கு உங்களுக்கு விளைந்தாலும் விளையலாமென்று அவர் சொன்னார்” என்று மெல்லச் சொன்னார். அதனைக் கேட்ட பாரதியார் குற்றம் கூறியவரை விசாரிக்க வேண்டுமென்று நினைந்து பார்க்கையில் அயலிலிருந்த அவர் காணப்படவில்லை; எங்கேயோ போய்விட்டார். உடனே பிள்ளையவர்களுக்கு இச்செய்தியைத் தெரிவித்தனர். இவர், “குற்றம் கூறியவரை அழைத்து வரும்படி செய்தால் உள்ள குற்றத்தை விசாரித்தறிந்து சமாதானம் சொல்லுகிறேன்” என்றார். சுப்பராயபிள்ளையினுடைய ஏவலினால் சிலர் சென்று பலவிடத்தில் தேடிக் கண்டுபிடித்து அவரை அழைத்துவந்து சபையில் நிறுத்தினார்கள். அவர் உடம்பு நடுங்கியது; ‘ஏன் தெரியாமல் இந்தச் சங்கடத்தில் அகப்பட்டுக் கொண்டோம்?’ என்று அவர் நினைத்தார். அப்பொழுது சுப்புபாரதியார், “ஐயா, இச்செய்யுளின் முதற் சீரிலிருக்கும் பொருத்தக் குறைவு யாது?” என்று அவரைக் கேட்டனர். அவர் ஒன்றும் சொல்லாமல் இருந்தார். பாரதியார், “பொருத்த இலக்கணத்தைச் சொல்லும் நூல்களுள் எதையேனும் படித்திருக்கிறீரா?” என்றார். “எனக்கு ஒன்றும் தெரியாது” என்று அவர் விடையளித்தார். சுப்புபாரதியார், “அவ்வாறிருக்க நீர் ஏன் இப்படி இரகசியமாகக் குற்றம் கூறவேண்டும்?” என்றார். அவர் சரியான விடை கூறுதற்கு இயலாதவராகி விழித்தார். இவற்றைக்கண்ட இக்கவிஞர் பெருமான் அவருடைய அறியாமைக்கு இரங்கி அவ் விசாரணையை நிறுத்தச் செய்தார். அப்பால் அரங்கேற்றுதல் முறையாக நடந்து நிறைவேறியது.
இத்தலத்தின் பெயர் விடைக்கழி யெனவும் இடைக்கழி யெனவும் வழங்கும். இத்தலத்தில் முருகக்கடவுள் குரா மரத்தின் கீழ் எழுந்தருளியுள்ளார்; இவை,
“குலவிடைக் கழியின் [1]மகிழ்வனத்திலொரு
குரவடிக்கணமர் நீபமாலைப்புய வேளைப்புரக்கவே.” (காப்பு. 2)
“தேமலர் மேய குராநிழல் வாழ்பவ செங்கோ செங்கீரை”(செங்கீரைப். 10)
என்பவற்றால் விளங்கும்.
இத்தலத்தில் எழுந்தருளிய சிவபெருமான் திருநாமம் பாவநாசப்பெருமானென்பது; இது,
“வழுவில் பத்திமைய ரிருதயத்தளியின் மணிவிளக்கினமர்
பாவநாசப்பெரு மானைப்பழிச்சுதும்”
எனச் சந்தத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இத்தலத்திற் பூசித்துப் பேறுபெற்றோர் இன்னாரின்னா ரென்பது,
“பொருள்சால் பொகுட்டிதழ் மணத்தவிசி னான்முகப் புத்தேண் முதற்புலவரும்
பொறிபுல னடக்கியொரு நெறியுறு வசிட்டன்முற் புண்ணியத் திருமுனிவரும்
வெருள்சான் முனைத்தலைய வேற்கைமுசு குந்தனொடு வேந்தன்முற் பலவரசரும்
மேவிப் பணிந்துளத் தெண்ணிய தடைந்தவிம் மேதகு தலம்” (அம்புலிப். 9)
என்னும் பகுதியால் அறியப்படும்.
இந்நூலுள் தன்மை நவிற்சி, தற்குறிப்பேற்றம் முதலிய அணிகள் அமைந்த பாடல்கள் பல உள்ளன.
இந்திரனும் திருமாலும் இந்திரன் உபேந்திரனெனப்பொருந்திய முறைமைக்கேற்ப அவ்விருவருடைய மகளிராகிய தெய்வயானையம்மையையும் வள்ளி நாயகியையும் முறையே முருகக்கடவுள் மணஞ் செய்துகொண்டனரென்ற கருத்தை,
“தார்கொண்ட விந்திர னுபேந்திர னெனப்புரந் தரன்வளைக் கரன்மரீஇய
தன்மைக் கிணங்கமுன் றெய்வயா னைக்குவண் டார்புனைந் திறவுளர்குலத்
தேர்கொண்ட கோதைக்கொர் கோதைபின் சூட்டியுல கின்புற்று மகிழமேவும்
இறைநிறை பொழிற்றிரு விடைக்கழிக் குமரேச னின்றமிழ்க் கவிதழையவே”
(விநாயக வணக்கம்)
என்னும் செய்யுளில் அமைத்துள்ளார்.
முருகக்கடவுள் ஆறு சமயங்களுக்கும் ஆறாதாரங்களுக்கும் ஆறு அத்துவாக்களுக்கும் தாமே முதல்வரென்பதைத் தெரிவிக்க ஆறு திருமுகங்களோடு விளங்குகின்றாரென்னும் கருத்து,
“ஆட்டுஞ் சமய மாறினுக்கு மாதா ரங்க ளாறினுக்கும்
அத்து வாவோ ராறினுக்கு மமையுந் தானே முதலென்று
தீட்டும் படியா வருந்தெளியத் தெளித்தாங் காறு முகந்திகழச்
செல்வ மலியு மிடைக்கழிவாழ் சேயைப் பரிந்து காக்கவே”
என்னும் காப்புப்பருவச் செய்யுளொன்றி லமைந்துள்ளது.
சிற்றிற் பருவத்தில், மகளிர் முருகக்கடவுளை நோக்கி, “தேவரீரை நினைந்து உருகும் அடியார்களுடைய வினை முதலியவற்றைச் சிதைத்தருள்க; எம்முடைய சிற்றிலைச் சிதையாதீர்” என்றும், “தேவரீர் சரவணப் பொய்கையில் ஆறு குழந்தைகளாக விளையாடிக் கொண்டிருந்த காலத்து உமாதேவியார் அங்கு வந்து ஒரே திருவுருவமாகச் செய்தபொழுது ஆறு திருமுகங்களமைத்ததற்கேற்பப் பன்னிருகைகள் செய்தது போலப் பன்னிரண்டு கால்களும் அமையாமல் விட்டது நாங்கள் முற்பிறப்பிற் செய்த நல்வினையே” என்றும் கூறுவதாக உள்ள செய்யுட்கள் படித்தின்புறற்பாலன :
“கண்ணீர் பெருக வுருகியுளங் கசிநின் னடியார் மலமாயா
கன்ம முழுதுஞ் சிதையவர்முற் கடிய வினையைச் சிதையவர்தம்
எண்ணீர் பிறவிக் கணக்கெழுது மேட்டைச் சிதைநீ யேபரமென்
றெண்ணா திழுதை யுறுமுனக ரெண்ணஞ் சிதைமற் றிவைதவிர்ந்து
புண்ணீர் கவரும் வடிவேற்கைப் புலவா புலவர் போரேறே
பொறியி லேஞ்சிற் றிலஞ்சிதைத்தல் புகழோ வலது புண்ணியமோ
தெண்ணீர் வளங்கூர் விடைக்கழிவாழ் செல்வா சிற்றில் சிதையேலே
சிந்திப் பவருள் ளூறமுதத் தெளிவே சிற்றில் சிதையேலே.” (6)
“நையா நின்ற சிறுமருங்கு னங்கை யுமையாள் பரமனொடும்
நறுநீர்ப் பொய்கைத் தடங்கரைவாய் நண்ணி முகமா றினுக்கேற்பக்
கையா றிரண்டு புரிந்ததுபோற் காலா றிரண்டு செய்யாது
கருதி யிரண்டே செய்தனண்முற் கடையேஞ் செய்த நல்வினையால்
மெய்யா விரண்டா யிருந்துமவை விளைக்குங் குறும்பு பொறுக்கரிதா
விளைந்த தினியாஞ் செயலென்னே வீடு தோறும் விடாதமர்ந்து
செய்யாண் மகிழும் விடைக்கழிவாழ் செல்வா சிற்றில் சிதையேலே
சிந்திப் பவருள் ளூறமுதத் தெளிவே சிற்றில் சிதையேலே.” (9)
சிவபெருமான் திருக்கரத்திலுள்ள தமருகத்தைப் பறையென்று நினைந்து அதனை அடிப்பதற்குக் குணில் தேடிய முருகக் கடவுள், தம்பக்கத்தில் விளையாடிக்கொண்டிருந்த விநாயகக் கடவுளுடைய கையிலுள்ள கொம்பைப் பிடித்து இழுக்க, விநாயகரும் எதிரே இழுக்க, அதனால் உண்டான கலகத்தை யறிந்த உமாதேவியார் அவ்விருவர்க்கும் இடையே புகுந்து அக்கலகத்தைத் தவிர்த்துச் சிவபெருமான் சடையிலுள்ள பிறையைக் கொடுப்ப அதற்கு முருகக்கடவுள் மனமகிழ்ந்தன ரென்னும் கற்பனையொன்று சிறுதேர்ப் பருவத்தில்,
“ஆக்கும் பெருந்தொழில மைந்தவொரு தமருக மவாவுபறை யென்றுளங்கொண்
டன்னதை யடித்திடக் கைக்கொளுங் குணிறேடி யருகுவிளை யாடிநின்ற
தாக்குந் திறற்களிற் றொருகர தலக்கோடு தனையுறப் பற்றியீர்க்கத்
தவாவலிகொ ளக்களிறு மெதிர்பற்றி யீர்க்கத் தழைந்திடு கலாமுணர்ந்து
வாக்குஞ் சுவைத்தேன் மாலைக்குழற்றாய் வயங்குற நடுப்புகுந்து
மறையோதி மந்தேடு வேணிப் பிறைக்குணில் வயங்கக் கொடுக்கவுவகை
தேக்குந் திறற்குக விடைக்கழி யுடைக்குழக சிறுதே ருருட்டியருளே
திருமால் வயிற்றடை பெருந்தே ருருட்டிசேய் சிறுதே ருருட்டியருளே.” (4)
என்னும் செய்யுளில் அமைந்துள்ளது.
திருவிடைக்கழிக் குறவஞ்சி.
திருவிடைக்கழியில் அந்தப் பிள்ளைத் தமிழை அரங்கேற்றிக் கொண்டிருந்தபொழுது உடனிருந்த சிங்கவனம் சுப்புபாரதியார் இவரிடம் குற்றாலக் குறவஞ்சியிலிருந்து சில பாடல்களைச் சொல்லிக் காட்டினார். இவரும் உடனிருந்தவர்களும் கேட்டு ஆனந்தித்தனர். அப்பொழுது முற்கூறிய சுப்பராயபிள்ளை, “இந்த ஸ்தலத்திற்கும் ஒரு குறவஞ்சி இயற்ற வேண்டும்” என்று வேண்டிக்கொண்டார். அவ்வாறே ஒரு நூல் இவராற் செய்து அரங்கேற்றப் பெற்றது. அரங்கேற்றுகையில் அதனைப் படித்தவர் இசைப்பயிற்சியுள்ளவராகிய வல்லம் கந்தசாமிபிள்ளை யென்பவர். அந்த நூல் திருவிடைக்கழிக் குறவஞ்சியென வழங்கும். இப்பொழுது அது கிடைக்கவில்லை.
ஆற்றூர்ப் புராணம் முதலியன.
ரெளத்திரி வருஷத்திலேயே ஆற்றூர்ப் புராணமும் விளத்தொட்டிப் புராணமும் திருவாளொளிபுற்றூர்ப் புராணமும் இவரால் இயற்றப்பெற்றன. ஆற்றூர்ப் புராணத்தைச் செய்வித்தவர் கலியாணசோழபுரம் கணபதி பிள்ளையின் குமாரர் சிதம்பரம் பிள்ளை யென்பவர். விளத்தொட்டிப் புராணம் செய்வித்தவர்கள் அவ்வூரிலிருந்த சைவ வேளாளர்கள். திருவாளொளி புற்றூர்ப் புராணம் செய்வித்தவர்கள் அத்தலத்துச் சைவ வேளாளர்களே.
இவற்றை முறையே அவ்வப் புராணங்களிலுள்ள,
“தழைதருநல் லாற்றூர்மான் மியமுழுது மொழிபெயர்த்துத் தமிழிற் பாடி
விழைதருமா தருகவெனக் கலியாண சோழபுரம் விரும்பி வாழ்வோன்
உழைதருகைப் பெருமானா ருவந்துறையத் தலப்பணிமுற் றொருங்கு செய்தே
இழைதருபொன் னாலியன்ற கும்பாபி டேகமுஞ்செய் தின்பந் துய்ப்போன்”
“தில்லைநட ராசருக்குச் சொன்னவிமா னமுங்கலனுஞ் செய்து நல்கி
வல்லையவர் குஞ்சிதத்தா மரைக்கொருதா மரைசூட்டி மகிழு மேலோன்
எல்லையிலாப் புகழ்படைத்த சிதம்பரமால் கேட்கவுவந் தேற்று மாறாத்
தொல்லைவினை முழுதொழிப்பான் ஞானமிலா யான்பாடத் துணிந்தேன் மன்னோ”
(ஆற்றூர்ப்புராணம், பாயிரம், 22 - 3.)
“தண்ணியவா னவர்புகழும் பெருமானார் விளத்தொட்டித் தலப்பு ராணம்
நண்ணியவான் புகழ்மிகுமந் நகர்ச்சைவ வேளாளர் நயந்து கேட்பக்
கண்ணியவான் றமிழாற்செய் தான்றிரிசி ராமலையிற் களித்து வாழும்
புண்ணியவான் மீனாட்சி சுந்தரநா வலவனியற் புலவ ரேறே”
(விளத்தொட்டிப் புராணம், சிறப்புப்பாயிரம்)
“ஈகைமேற் கொண்ட நல்லா ரீசனுக் கன்பு சான்றார்
ஓகைசால் புகழின் மிக்கா ரொலிகெழு வேளாண் மாந்தர்
பாகைநேர் தமிழாற் பாடித் தருகெனப் பரிந்து கேட்க
[2]வாகையா ரணிய நாதன் மான்மியம் பாட லுற்றேன்”
(திருவாளொளிபுற்றூர்ப் புராணம், பாயிரம், 21)
என வரும் செய்யுட்களால் அறியலாகும்.
ஆற்றூர்ப் புராணம்.
[3]ஆற்றூரென்னும் ஸ்தலத்தில் எழுந்தருளிய விநாயகர், சிவபெருமான், அம்பிகை யென்னும் மூவருடைய திருநாமங்கள் முறையே மந்தாரவன விநாயகர், சொன்னயான நிரோதன நாதர், அஞ்சனாட்சியம்மை என்பனவாகும். இத்தலத்திற்குச் சொன்னயான நிரோதனபுரம், நதிபுரம், நடனபுரமென வேறு பெயர்களும் வழங்கும்.
சோழநாட்டை ஆண்டுவந்த சோழேந்திரனென்னும் ஓரரசன் தன் நாட்டெல்லையைப் பார்ப்பதற்காக யானைமேலிவர்ந்து நாடுகளையெல்லாம் கண்டு பின்பு காட்டின் வளங்களைக் கண்டு களிக்கச் சென்றனன். யானைக்குக் காட்டினுட் செல்ல முடியவில்லை. அதனையறிந்த அரசன் மயனை அழைத்துப் பொன் விமானம் ஒன்றை இயற்றுவித்து அதில் தன் மந்திரிமார் முதலியவரோடு ஏறிச் சென்றனன். அதுவும் அங்கே ஒரு மந்தார மரத்தின் நேரே தடைப்பட்டு நின்றது. அதன் காரணத்தை அறிய விரும்பிய அரசன் விமானத்தினின்றும் இறங்கி அம்மரத்தினடியிற் சென்று பார்த்தபொழுது ஒரு புற்றையும், அதனை அகழ்ந்த பின்பு சுயம்புருவாக எழுந்தருளிய சிவலிங்கப் பெருமானையும் கண்டனன். இந்தக் காரணத்தால் இவ்வூருக்குச் சொன்னயான நிரோதனபுரமென்றும், சிவபெருமானுக்குச் சொன்னயான நிரோதனரென்றும் திருநாமங்கள் உண்டாயின. அச்சோழன் இவ்வூரின் தென்கிழக்கில் மாளிகையொன்றமைத்து விரும்பியவர்க்குக் கலியாணம் செய்வித்து அளித்தான். அக்காரணத்தால் கலியாண சோழபுரமென்னும் பெயரும் இதற்கு அமைந்தது. இவை,
“சொன்ன யானந் தடுத்தாண்ட தோலா வருளா லிறையவர்க்குச்
சொன்ன யான [4]நிரோதரெனத் துதிக்கு மொருநா மஞ்சூட்டிச்
சொன்ன யான நிரோதபுர மென்று நகர்க்கும் பெயர்சூட்டிச்
சொன்ன யான முன்னூர்ந்த சோழேந் திரனுண் மகிழுவான்”
“மன்னு மனைய நகர்த்தென்கீழ் வளமா ளிகையொன் றமைத்தமர்ந்து
மின்னு மளவாக் கலியாணம் வேட்டோர்க் களித்தான் கலியாணந்
துன்னுந் திறத்தாற் கலியாண சோழ புரமா கியதவ்வூர்
இன்னு மறிஞர் காரணப்பே ரென்னப் பொலியு மந்நகரே”
(சொன்னயான நிரோதனபுரப் படலம், 48, 50)
எனவரும் பாடல்களால் அறியலாகும்.
தன் விமானம் தடைப்பட்டபொழுது சோழன் தன் மந்திரிமாரை நோக்கிக் கூறுவதாக உள்ள,
“பொன்செய்த விவ்வி மானம் புட்பக விமான மன்று
மின்செய்த மலரித் தாரு வெள்ளியங் கைலை யன்று
கொன்செய்த மதியீர் யானுங் கொடியவா ளரக்க னல்லன்
தென்செய்த மான நின்ற காரணம் தெரியே னென்பான்” (மேற்படி. 15)
என்னும் செய்யுள் சோழனுடைய அன்பைப் புலப்படுத்துகின்றது.
தவஞ்செய்வோர்க்குத் தோன்றாத பெருமான், சன்மார்க்கமென்பதைச் சிறிதும் அறியாத அடியேனுக்கு வெளிப்பட்டுப் பித்தனென்னுந் திருநாமத்தைப் புதுப்பித்தானென்னும் கருத்தமைந்த,
“அகன்றிடு கடும்பி னோரா யடவிபுக் கருந்த வஞ்செய்
துகன்றிடு மவர்க்குச் சற்றுந் தோன்றிலான் றொழுஞ்சன் மார்க்கத்
திகன்றிடு மெனக்குத் தோற்ற மெய்தினான் பித்த னென்று
புகன்றிடு மொருநா மத்தைப் புதுக்கினான் கொல்லோ வென்பான்” (மேற்படி. 25)
(செய்து கன்றிடுமென்க.)
என்பது போன்ற பல அருமைச் செய்யுட்களை இந்நூலின் கண்ணே காணலாம்.
கயற்கண்ணி என்னுமோ ரந்தணப்பெண் தன்னை மணஞ்செய்து கொண்டருள்கவென்று சிவபெருமானை நோக்கிக் கூறுவனவாகவுள்ள பாடல்கள் தேவாரச் சந்தத்தையொத்த சந்தத்திலமைந்து அழகுபெற விளங்குகின்றன :
“ஓங்குமந் தார வனத்து மேவு முத்தம னேயிஃ தொன்று கேணீ
வாங்கு மதிலுயர்ந் தோங்கு கூடன் மன்னன் மகளை மணம்புரிந்தாய்
ஈங்கொரு பூசுரன் பெற்ற பெண்யான் என்பது நீயறி யாத தன்றே
பாங்கு மலியவென் றோளின் மாலை சூட்டியென் பையு ளகற்று வாயே.”
“திருந்துமந் தாரவ னத்து மேவுஞ் சிவபெரு மானிஃ தொன்று கேணீ
பொருந்து 5கலவர் குலத்துதித்த பூவை யையுமண மாலை யிட்டாய்
அருந்தவர் சங்கர னென்ப ருன்னை அன்ன பெயர்ப்பொருண் மாறு றாமே
வருந்துமென் றோளணி மாலை சூட்டி மருவிய பையு ளகற்று வாயே.”
“நாடுமந் தாரவ னத்து மேவு நாயக னேயிஃ தொன்று கேணீ
மாடு மிசையு முகிலு லாவும் மலைக்கு மகளை மணம்பு ரிந்தாய்
ஆடுநின் றாளென்றும் போற்றி செய்வேன் அன்புக் கிரங்கி யெழுந்தருளிச்
சூடுநின் மாலையென் றோளிற் சூட்டித் தொக்கவென் பையு ளகற்று வாயே.”
(கயற்கண்ணி திருமணப். 51 - 3)
தலவிசேடந் தேவிக்குணர்த்திய படலத்தில், சிவபெருமான் தாம் எழுந்தருளிய தலங்களுள், ஊர், குடி, வாயில், பள்ளி, ஈச்சரம், காடு, துறை, குன்றம், புரமென்னும் சொற்களை ஈற்றிலுடையவற்றை முறையே சொல்லிச் செல்லுவதாக அமைத்துள்ள பகுதி இவ்வாசிரியருக்குத் தலங்களைப் பற்றியுள்ள ஞாபக விசேடத்தைப் புலப்படுத்துகின்றது.
இந்நூலிலுள்ள படலங்கள், 17; செய்யுட்டொகை, 525.
விளத்தொட்டிப் புராணம்.
[6] விளத்தொட்டியில் எழுந்தருளிய ஈசன் திருநாமம், பிரமபுரீசரென்பது; அம்பிகையின் திருநாமம் கரும்பிரதநாயகி. இத் தலத்தின் பெயர் வில்வாரணியமெனவும் வழங்கும். இத்தலத்தில் வழிபட்டுப் பேறு பெற்றோர், வயிரவர், வேணுகோபாலர், பிரமதேவர், திக்குப்பாலகரெண்மர் முதலியோர் ஆவர்.
இத்தலத்து விருட்சம் கூவிளம் (வில்வம்) ஆதலாலும் இத் தலத்திற் கரும்பிரத நாயகியம்மை முருகக்கடவுளைத் தொட்டிலிட்டு வளர்த்தமையாலும் இத்தலம் இப்பெயர் பெறும். இப்பொழுதும் இவ்வூரிலுள்ளார் தம்குழந்தைகளைத் தொட்டிலில் வளர்த்துவதில்லை யென்பர். இவை இப் புராணத்துள்ள,
“அன்றுமுத [7]றொட்டிகடை யடுத்தேகூ விளமுதறீர்ந்
தென்றும்விளத் தொட்டியென வெய்தியதந் நகர்நாமம்
நன்றுமணித் தொட்டியின்மே னாடோறு மினிதமர்ந்து
தொன்றுமுரு கன்பால சுப்பிரம ணியனானான்”
“தொட்டியமர்ந் தொருபால சுப்பிரம ணியச்செம்பொற்
கட்டியினி தென்றுமுறுங் காரணத்தா லனையவிளத்
தொட்டிநகர் வாழ்வார்தஞ் சூழ்மனையின் மழத்தொட்டி
கட்டியறி யார்வேறு கட்டிவளர்த் தோங்குவார்”
(விளத்தொட்டிப் படலம், 20, 22)
என்னும் செய்யுட்களால் உணரப்படும்.
இந்நூலிலுள்ள படலங்கள், 17; செய்யுட்கள், 352.
வாளொளிபுற்றூர்ப் புராணம்.
வாளொளி புற்றூரென்னுந்தலம் அரதனபுரமெனவும் வழங்கும்; தேவாரம் பெற்றது. இத்தலத்து ஸ்வாமியின் திருநாமம் மாணிக்கலிங்கரென்பது; அம்பிகையின் திருநாமம் வண்டுவார்குழல் நாயகி யென்பது. இத்தல விருட்சம் வாகை. குசகேதுவென்னும் ஒரு சோழவரசன் பொருட்டு அரதனப்பாறையிலிருந்து சிவபெருமான் சிவலிங்க வடிவாகத் தோற்றினமையால் இத்தலம் அரதனபுரமெனப் பெயர்பெற்றது. வாசுகி யென்னும் மகாநாகம் இத்தலத்தையடைந்து சிவபெருமானை வழிபட்டு ஆபரணமாகும் பேறுபெற்றது. அப்பாம்பு ஒரு புற்றிலுறைந்தமையால் புற்றூரென்று முதலில் ஒரு பெயருண்டாயிற்று.
தீர்த்தயாத்திரை செய்துவந்த அருச்சுனன் இத்தலத்தையடைந்தபொழுது மிக்க நீர்வேட்கையால் வருந்தினான். அப்பொழுது சிவபெருமான் ஒரு வயோதிகப் பிராமணராக அவன் முன் தோன்றி ஒரு தண்டைக் கொடுத்து, “இதனை ஊன்றுமிடத்துத் தண்ணீர் தோன்றும்; அதனைப் பருகிச் சோகம் தீர்வாய்” என்று அருளிச்செய்தனர். அருச்சுனன் தன்னுடைய வாளை அவர் முன்னேவைத்து, “யான் நீர் பருகித் திரும்புமளவும் வேறொருவர் இதனைக் கவர்ந்து கொள்ளாதபடி பார்த்துக்கொண்டிரும்” என்று சொல்லித் தடாகத்திற்குச் சென்றனன். இறைவர் அவ்வாளை முன் கூறிய புற்றில் ஒளித்துத் திருவுருக்கரந்தனர். இதனால் வாளொளிபுற்றூரென இத்தலத்திற்கு ஒரு பெயருண்டாயிற்று. கோடையை வருணிக்கும் பகுதியில்,
[8]தாலமெலாம் வறண்டதெனத் தவாமலிரட் டுறமொழிய
ஞாலமெலா மெவ்வுயிர்க்கு நாவிடத்தும் புனலில்லை
சீலமெலாந் திரியாது சேரவவை நனைப்பதனுக்
கோலமெலாம் பொலிகடன்மண் ணுலகிடத்தும் புனலில்லை”
“புவியகத்து வாழ்வார்கள் புளிந்தயிரும் புளிஞ்சோறும்
குவியகத்த புளிங்கறியு மல்லாது கூட்டுண்ணார்
சவியகத்த பெருங்குடிஞைத் தலனடைந்து வசிப்பவரும்
செவியகத்துப் புகுமாறு வினவுவதீம் புனல்வளமே”
(வாளொளி புற்றூர்ப் படலம், 15, 17.)
எனவரும் செய்யுட்களும், தன்னுடைய வாள் ஒளிக்கப்பெற்றமையால் அருச்சுனன் அதனைத் தேடிக் காணாமற் சிவபிரானிடம் வந்து,
“மறங்கொண்ட விராவணற்கு வாள்கொடுத்தாய் முன்னடியேன்
நிறங்கொண்ட வாள்கவர்த னிலவுகரு ணைக்கழகோ
அறங்கொண்ட மலர்வாகை யரதநமா நகர்மேவும்
நிறங்கொண்ட மாணிக்க நின்மலநா யகவென்றான்” (மேற்படி. 47)
என்று முறையிடுவதாகவுள்ள செய்யுளும் பிறவும் படித்தறிந்து மகிழ்தற்குரியன.
இந்நூற் படலத்தொகை, 20; செய்யுட்டொகை, 527.
இம் மூன்று புராணங்களையும் அப்பொழுதப்பொழுது எழுதி உபகரித்தவர் மதுரை இராமசாமி பிள்ளையென்பவர்.
[9]அம்பலவாண தேசிகர் பிள்ளைத்தமிழ்.
இம்மூன்று புராணங்களும் இயற்றிய பின்பு திருவாவடுதுறை அம்பலவாண தேசிகர் மீது பிள்ளைத்தமிழொன்று இவராற் செய்யப்பட்டது. அம்பலவாண தேசிகர் பிள்ளைத்தமிழென்று அது வழங்கும். கற்பனை நயமும் சைவ சாஸ்திரக் கருத்துக்களும் திருவாவடுதுறை யாதீன சம்பிரதாயப் பகுதிகளும் அதில் அங்கங்கே அமைந்துள்ளன. பிள்ளையவர்கள் அதனை அரங்கேற்ற வேண்டுமென்று விண்ணப்பித்துக்கொண்டபொழுது, அம்பலவாண தேசிகர் ஆதீனத்துத் தம்பிரான்கள் பலரையும் வித்துவான்கள் பிரபுக்கள் பலரையும் ஒருங்கு சேர்த்து ஒரு சபை கூட்டிச் சுப்பிரமணிய தேசிகருடன் தாம் வீற்றிருந்து அப்பிள்ளைத் தமிழ்ச் செய்யுட்களைக் கேட்டு அவற்றிலுள்ள நயங்களை அப்பொழுதப்பொழுது தெரிந்து மகிழ்ந்தும் எடுத்துப் பாராட்டி மகிழ்வித்தும் வருவாராயினர். அக்காலத்தில் முத்தப் பருவத்திலுள்ள,
“ஒளிவார் திருப்பனந் தாளின்முன் னாளிலுள் ளுருகிநி னடிப்பூசையாற்
றொருமாது சூட்டுபூ மாலையை விரும்பிநின் னுருவமிக வுங்குனிந்தாய்
அளிவார் மனத்தினெம் பாமாலை வேண்டுமே லவ்வளவு குனியல்வேண்டா
ஐயசற் றேகுனிந் தெண்ணியதை யன்புட னளித்தருள வேண்டுமின்னும்
வளிவார் பெரும்புவி தெரிக்கவவ் வணநிற்கின் மாண்புடைக் கலயனாரை
மற்றெங்கு யாஞ்சென்று தேடுவே மாதலால் வளமிக்க கழகந்தொறும்
தெளிவார் குழாங்குழுமி யோங்குமா வடுதுறைச் செல்வன்முத் தந்தருகவே
சின்மய னருட்பெருங் குரவனம் பலவாண தேவன்முத் தந்தருகவே”
என்னும் பாடலை இவர் வாசித்துப் பிரசங்கம் புரிகையில் அம்பலவாண தேசிகர் மகிழ்வுற்றவராய்த் தாம் சேமத்தில் வைத்திருந்த கல்லிழைத்த ஏறுமுகருத்திராட்ச கண்டியொன்றை வருவித்து இவரை அருகில் அழைத்து, “நாம் குனிகின்றோம்; நீங்களும் இப்பொழுது சற்றே குனியவேண்டும்” என்று சொல்லி அதனை இவர் கழுத்திற் புனைந்தாரென்பர்.
அம்பலவாண தேசிகர் சுப்பிரமணிய தேசிகரை அருகிலிருத்தி அவருடைய குணவிசேடங்களைப் பாராட்டி அடிக்கடி அவர் முதுகு தைவருதலை இவர் நேரில் பார்த்தவராதலின் அதனையும் பின்னும் அவர்பால் வைத்துள்ள கருணைமிகுதியையும் பின்வருஞ் செய்யுட்களில் எடுத்துப் பாராட்டி இருக்கின்றனர் :
“பொருவாய் தரினு மிலாதவ னேனும் போற்றி வளர்த்த முனைப்
பொய்யில் பழக்கம் விடுத்தில னிங்குப் போந்து மெனப்புகல
உருவாய் மையுநல் லொழுக்க விழுப்பமு மொள்ளறி வுங்குணனும்
உண்மையு மோருபு நந்தி குலத்திற் கொருகதிர் நீயென்று
திருவாய் மலருபு குறுநகை கொண்டொளி திகழ்சுப் பிரமணிய
தேவனை முதுகுதை வருமலர் புரையுஞ் செங்கையி னான்மணிசால்
குருவாய் மாடக் [10]கோகழி யூரன் கொட்டுக சப்பாணி
குரவர் சிகாமணி யம்பல வாண கொட்டுக சப்பாணி” (சப்பாணிப். 9)
வேறு.
“போற்றுநாம் வருகென் றழைத்தபொழு தெய்திலான் புகலிவ னெனத்திருக்கண்
போதச் சிவந்துழிக் குரவற் பிழைத்ததன் புகரெண்ணி யிருவினைகளும்
காற்றுதிரு முன்னர்வர வஞ்சினா னென்றருகு கவினமே வுற்றவனையான்
கண்மணியை யனையசுப் பிரமணிய தேவனக் கண்சிவப் பாற்றுவித்தான்.” (அம்புலிப். 7) “வானாடு மேவும் புறத்தொண்டர் சொற்றபடி வையமு நடாத்தினாயிம்
மண்ணாடு மேவிய வகத்தொண்ட ரேம்யாம் வகுத்தபடி கேளாமையென்
கானாடு மதுசொற்ற படிநடத் தோமெனிற் கைகுவித் தெய்திநினது
கண்மணியை யனையசுப் பிரமணிய தேவன்முன் கரைவோங் கரைந்தபொழுதே
பானாடு மனையனின் பால்வந் துரைக்கினெப் படிமறுத் திடுவையனைய
பக்கநீ தவிர்வதே யிலையாத லால்யாம் பகர்ந்தபடி கேட்டல்வேண்டும்
தேனாடு பூம்பொழிற் சோணா டளிப்பவன் சிறுதே ருருட்டியருளே
செல்வமலி துறைசையம் பலவாண தேசிகன் சிறுதே ருருட்டியருளே.”
இப்பிள்ளைத் தமிழின் காப்புப் பருவத்தில் வேறு பிள்ளைத் தமிழ்களைப்போலத் திருமால் முதலியவர்களைக் காப்பாகக் கூறுதலைத் தவிர்த்துத் திருவாவடுதுறையாதீனத்துக் குரு பரம்பரையினர்களைக் கூறுகின்றார். அவ்வகையில், திருநந்தி தேவர், சனற்குமாரமுனிவர், சத்திய ஞானதரிசனிகள், பரஞ்சோதி முனிவர், மெய்கண்ட சிவாசாரியர், அருணந்தி சிவாசாரியர், மறைஞான சம்பந்த சிவாசாரியர், உமாபதி சிவாசாரியர், அருணமச்சிவாயர், சித்தர் சிவப்பிரகாசர், நமச்சிவாய மூர்த்திகள் முதலியவர்களைக் காப்பாகக் கூறும் பதினொரு செய்யுட்கள் காப்புப் பருவத்தில் அமைக்கப்பட்டிருக்கின்றன. இங்ஙனம் ஒரு புதிய அமைப்பை மேற்கொண்டதற்குக் காரணம்,
“வழிபடுதே வுளுங்கொலைதீர் தெய்வதங்காப் புரைக்கவென வகுத்த வான்றோர்
மொழியுணர்ந்து மவ்வழிச்சென் றிலர்முன்னோ ரிரும்புகழ்க்கோ முத்தி யெங்கள்
பொழிகருணைச் சின்மயனம் பலவாண தேசிகன்மேற் புகலப் புக்க
கழிமகிழ்யா மவ்வழிச்சென் றனஞ்சிறக்கு மிப்பிள்ளைக் கவியுந் தானே”
என்று இவர் இயற்றிய செய்யுளாற் புலப்படும்.
மடத்தைப்பற்றிய செய்திகளாகிய காவித்துவசமமைத்தல், பரிகலசேடத்தை அடியாருக்கு அளித்தல், அவர்களுக்கு நெற்றியில் திருநீறணிதல் முதலியன இந்நூலுள் உரிய இடங்களிற் பாராட்டிக் கூறப்படுகின்றன :-
“ஓங்கு நினது திருமுன்ன ருயர்த்த காவிக் கொடிமதனன்
உயர்த்த மீனந் தனக்கினமா யுள்ள வனைத்துங் கீழ்ப்படுத்தி
வீங்கு மமரர் நாட்டினுக்கும் விடுத்த நினது திருமுகம்போல்
வேந்தன் சுதன்மை கிழித்தெழுந்து மேவ”
“கூருங் கருணை நின் காவிக்கொடி” (தாலப். 3 - 4)
வேறு.
“நீடிய வன்பு நிகழ்த்திடு தொண்டர் நெருங்கி வணங்குதொறு
நிறைதரு திருவருள் பொங்குற நோக்குபு நிலவுவெ ணகைசெய்து
நாடிய வன்னர் பசிப்பிணி யும்படர் நல்கு முடற்பிணியும்
நாளும் விலங்க லிலாது பவம்புக நாட்டு மலப்பிணியும்
ஓடிய விந்தி டவுண்கல சேடம துதவு திருக்[11]கையினால்
உறுவிடை யின்மையி னாமுறு வாமென வுன்னுபு வானிடபம்
கூடிய மதில்சூழ் கோகழி யூரன் கொட்டுக சப்பாணி
குரவர் சிகாமணி யம்பல வாணன் கொட்டுக சப்பாணி.” (சப்பாணிப். 8)
“செய்யநங் குருநாத னினையாட வாவென்று திருவாய் மலர்ந்தபொழுதே
திருந்தக் குடந்தமுற் றடியனேன் வந்தனென் திருவுள மெவன்கொ லென்று
நையவுளம் விரையவந் தான்றதிரு வடிபணியி னகுகருணை பூத்துநீறு
நளினத் திருக்கரத் தள்ளியுன் னுதலிடுவ னாடுமப் பெரிய பேற்றால்
வெய்யநின் கயரோக மும்பழியு மாறியுயர் மேன்மையும் பெறுவை.” (அம்புலிப், 6)
சிவஞான முனிவரிடத்தும், கச்சியப்ப முனிவரிடத்தும் தமக்குள்ள பேரன்பை,
[12] "நின்னையொப் பில்லாத சின்மய னெனக்கலை நிரம்புபா டியமுனிவனாம்
நெடியசிவ ஞானமுனி யாலுணர்ந் தேந்துதி நிகழ்த்தலிவ் வாறதென்றே
அன்னையொப் பாங்கச்சி யப்பமுனி யானன் றறிந்தன மினித்துதித்தற்
கஞ்சுறோ மெங்கள்செய லிற்றாக வெங்களி னகப்படா தகல்வையலைநீ” (சப்பாணிப்.3)
என்னும் செய்யுட் பகுதியில் வெளியிட்டுள்ளார்.
இந் நூலிலுள்ள வேறு நயமுள்ள பாடல்கள் சில:-
“ஒள்ளிய கந்தர மேவிய கருமை யொழிந்தனை யப்பொழுதே
உற்ற மலத்தின் கருமையும் யாங்க ளொழிந்தனம் வெங்கொலைசால்
வெள்ளிய கோட்டுக் கரியுரி போர்த்தல் விலங்கினை யப்பொழுதே
மேவிய மாயை போர்த்தலும் யாங்கள் விலங்கின மேவுபணப்
புள்ளிய வாளர வத்தொகை பூணுதல் போக்கினை யப்பொழுதே
பொங்கு வினைத்தொகை பூணுதல் யாமும் போக்கின மலர்நடுவில்
அள்ளிய வாவிய கோகழி நாயக னாடுக செங்கீரை
அறிவுரு வாகிய வம்பல வாண னாடுக செங்கீரை.” (செங்கீரைப். 8)
“பரசம யத்தவர் வாயு ணுழைந்து பயின்றிடு பிருதுவியே
பற்றிய தொண்டின் வழிப்படு சைவப் பைங்கூழ் பாய்புனலே
விரச வழுத்துநர் வெவ்வினை யடவி வெதுப்பி யெழுங்கனலே
மெய்யுற நோக்கினர் பாவ மெனுந்துய் விலக்க வுலாம்வளியே
வரசர ணத்தின் மனத்தை நிறுத்தி வயக்கி முயக்குறுவான்
மாதவ மாற்றுந ருள்ளந் தோறும் வளைந்து விராம்வெளியே
அரச வனத்தம ருங்குரு நாத னாடுக செங்கீரை
அறிவுரு வாகிய வம்பல வாண னாடுக செங்கீரை.” (மேற்படி. 6)
(இதில் ஆசிரியரை ஐந்து பூதங்களாக உருவகித்து முறையே கூறி இருத்தல் காண்க.)
வேறு
“அழிக்கு நினது பழம்பகையு ளாய்ந்து வடிவம் பலதாங்கி
அடுத்த கருவி யொடுமதவே ளமைந்து நிற்கு நிலையென்னக்
கொழிக்குங் கரிய காஞ்சிகளுங் கொடியால் வளைந்த பலகரும்பும்
கூவா நின்ற மாங்குயிலுங் குலவு மருதக் கிள்ளைகளும்
விழிக்குங் கமல முதன்மலரும் விரிந்த கமுகம் பாளைகளும்
மீன மெழுந்து பாய்தலுமாய் விளங்கா நின்ற கருங்கழனி
செழிக்குந் திருவா வடுதுறைவாழ் செல்வா தாலோ தாலேலோ
சித்திற் பொலியம் பலவாண தேவா தாலோ தாலேலோ.” (தாலப். 5)
வேறு.
“உரைசெயெப் புவனத்தி னுங்கைப் பரச்சுமை யொழித்தவர்க டக்கவேலை
ஒன்றினி தியற்றுதற் கெண் ணுவ ரதன்றியு முரைக்குமுன் செயவும் வல்லார்
கரைசெய்து நிற்கமழு மானெடுஞ் சூலங் கபாலம்வெந் தழற மருகம்
காணுமிவை முற்சுமை கழித்தலி னுடம்படுதல் கடன்மையே கன்று மென்னின்
விரைசெய்மலர் செற்றுபொழில் சுற்றுமது ரையில்விறகு வெட்டிமண் வெட்டி யங்கம்
வெட்டிப் பயின்றவங் கைத்தலங் கொடுநவில வேண்டுமென் போமென்செய்வாய்
தரைசெய்பய னெனவந்த மெய்ஞ்ஞான பாற்கரன் சப்பாணி கொட்டி யருளே
தண்டமிழ்த் துறைசையம் பலவாண தேசிகன் சப்பாணி கொட்டி யருளே.” (சப்பாணிப்.1.)
இந் நூல் ருதிரோத்காரி வருடம் (1863) சி. தியாகராச செட்டியாராற் பதிப்பிக்கப்பெற்றது. ஆறுமுக நாவலர் நூற்பதிப்புக்களுக்குச் சிறப்புப்பாயிரம் அளித்தது.
மதுரை இராமசாமிபிள்ளை இவரிடத்தில் படிக்கும்பொழுதே அடிக்கடி சிதம்பரம் சென்று ஸ்ரீ ஆறுமுக நாவலரவர்களைப் பார்த்துச் சம்பாஷணை செய்து வருவார். அதனால் இராமசாமி பிள்ளைக்கும் நாவலருக்கும் நல்ல பழக்கம் உண்டாயிற்று. இராமசாமி பிள்ளை இராமநாதபுரத்தினர்; பொன்னுசாமித் தேவருக்கு உசாத்துணைவராக இருந்தவர். நாவலருடைய சில பதிப்புக்களைக் கண்ட அவர், பொன்னுசாமித் தேவருக்குப் பழைய தமிழ் நூல்களை வெளியிடும் விருப்பம் இருப்பதையும் நாவலர் தக்க பொருளுதவி இல்லாமல் இருப்பதையும் அறிந்து தேவரிடம் சொல்லி நாவலரால் திருக்கோவையாருரை திருக்குறட் பரிமேலழகருரை முதலியவற்றைப் பதிப்பிக்கச் செய்யவேண்டு மென்றெண்ணினார். அவ்வாறே முயலுகையில், தம்மையும் பதிப்பிப்போரையும் புகழ்ந்துள்ள சிறப்புப் பாயிரங்களைப் பெற்றால்தான், பாட்டுக்களிற் பிரியமுடைய தேவர் மகிழ்ந்து உதவி செய்தலை மேற்கொள்வாரென்றறிந்தார்.
ஆதலின், சென்னையிலிருந்த வித்துவான்களிடமிருந்து சிறப்புப்பாயிரங்கள் வாங்கி அனுப்பும்படி நாவலருக்கு எழுதினார். சென்னையில் இருந்தவர்களோடு அளவளாவி நாவலர் அக்காலத்துப் பழகவில்லை. அதனால் அவர்களிடம் சிறப்புப்பாயிரம் பெறுதற்கு இயலவில்லை; “இங்கே உள்ள சபாபதி முதலியார் முதலியவர்கள்பால் எனக்கு நல்ல பழக்கமில்லை. ஆதலின் அங்கே திருவாவடுதுறையாதீன மகா வித்துவானாக விளங்கும் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடமிருந்தும் அவர்களுடைய மாணாக்கர்களிடமிருந்தும் சிறப்புப் பாயிரங்கள் வாங்கி உதவி செய்யவேண்டும் என்று அவர் இராமசாமி பிள்ளைக்கெழுதினார். அதனால், இராமசாமி பிள்ளை திருவாவடுதுறைக்கு வந்து இரண்டு தலைவர்களிடமும், பொன்னுசாமித் தேவர் உதவியால் நாவலரவர்கள் திருக்கோவையார் திருக்குறள் முதலியவற்றைப் பதிப்பிக்க எண்ணியிருக்கின்றார்கள். அதற்குச் சிறப்புப் பாயிரங்கள் பிள்ளையவர்களைக்கொண்டும் அவர்களுடைய மாணாக்கர்களைக் கொண்டும் பெற நாவலரவர்கள் விரும்புகிறார்கள். பிரபு அவர்களும் அவற்றைக் கண்டால் திருப்தியுற்று உதவி செய்வதற்கு முன்வருவார்கள்” என்று சொன்னதன்றிப் பிள்ளையவர்களிடத்தும் இதனைத் தெரிவித்தார். மடத்திற்குப் பொன்னுசாமித் தேவர் வேண்டியவராகையினால் தலைவர்கள் பிள்ளையவர்களை அவ்வாறே செய்யும்படி சொன்னார்கள். இவரும் பாடிக் கொடுத்தார். இவர் கட்டளையின்படி தியாகராச செட்டியார் முதலியவர்களும் சிறப்புப்பாயிரம் கொடுத்தார்கள். அவற்றைக் கண்ட பொன்னுசாமித் தேவர் மிகவும் மகிழ்ந்ததன்றிப் பிள்ளையவர்களுடைய பாடலின் நயத்தில் ஈடுபட்டார்.
அயலூரிலிருந்து வேறு யாராவது வந்து தம்மீது பாடல் சொல்லத் தொடங்கினால், “அது கிடக்கட்டும்; அதென்ன மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பாடலா? அவர்கள் பாடலல்லவா பாடல்! அந்தப் பாட்டைக் கேட்ட காதில் இந்தப் பாடல் ஏறவில்லை. பின்பு வாருங்கள்” என்று தேவர் சொல்வது வழக்கமென்றும், "தங்களை அழைத்து உபசரிக்க வேண்டுமென்னும் எண்ணம் உடையவர்களாகிப் பிரபு அவர்கள் சமயத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” என்றும் “பதினெண் புராணங்களுள் இதுகாறும் தமிழிற் செய்யப்படாதவற்றைத் தங்களைக்கொண்டு இயற்றுவிக்க எண்ணியிருக்கிறார்கள்” என்றும் இராமசாமி பிள்ளை இவருக்கு எழுதி வந்ததன்றித் தியாகராச செட்டியார் முதலியோருக்கும் ஏற்றவண்ணம் எழுதி ஊக்கம் உண்டாக்கிவந்தார். பொன்னுசாமித் தேவர் தமிழ்ப்பயிற்சி உடையவரென்றும் தமிழ் வித்துவான்களை ஆதரிப்பவரென்றும் செய்யுள் நயங்களையறிந்து வியப்பவரென்றும் அறிந்த இவர், இராமசாமி பிள்ளையின் வேண்டுகோளின்மேல் நாவலர் பதிப்பிக்கத்தொடங்கிய தருக்கசங்கிரகம் முதலிய நூல்களுக்கும் சிறப்புப்பாயிரம் கொடுத்து வந்தார். ஒன்றை விட ஒன்று சிறந்ததாகவே இருந்தது. உண்மையில் பொன்னுசாமித் தேவர் செய்யுட்களின் சுவையை அறிபவராயினும், இராமசாமி பிள்ளை இவருக்கும் தியாகராச செட்டியார் முதலியவர்களுக்கும் எழுதுவன மிகையே; சிறப்பான பாடல்களைப் பெறவேண்டுமென்னும் நோக்கத்தினாலே அங்ஙனம் எழுதிவந்தார்.
இச்செயலைப்பற்றிப் பின்பு ஒருகால் இராமசாமி பிள்ளை திருவாவடுதுறைக்கு வந்திருந்தபொழுது தியாகராச செட்டியார் என்னிடம், “இந்த மனுஷர் பொய்யும் புளுகும் எழுதி எங்களை ஏமாற்றிவிட்டார். எங்களையெல்லாம் வரவழைத்து, உபசாரம் செய்யக் கருதியிருப்பதாக ஒரு சமயமும், எந்தவிதமான மரியாதை செய்யலாமென்று யோசித்துக்கொண்டிருக்கிறார்களென்று ஒரு சமயமும் எழுதினார். எல்லாம் முழுப்பொய். காரியத்தை மட்டும் சாதித்துக்கொண்டு விட்டார்” என்று சொன்னார். உடனே இராமசாமி பிள்ளை நகைத்துக்கொண்டே, “ஆம் ஐயா, நான் இவ்வாறெல்லாம் எழுதாவிட்டால் நீங்கள் நன்றாகச் சிறப்புப்பாயிரம் பாடித் தருவீர்களா?” என்று செட்டியாரிடம் சொல்லிவிட்டு என்னை நோக்கி, “நான் அப்படி எழுதுவேன். இவர்கள் அதிக உழைப்பெடுத்துக்கொண்டு பாடுவார்கள்” என்றார்.
இவ்வாறு நாவலருக்குக் கொடுத்த சிறப்புப்பாயிரங்கள் பல. அவற்றுட் சில பதிப்பிக்கப்பட்டன. இறையனாரகப்பொருள் முதலிய சில நூற்பதிப்புக்களே நிறைவேறாமையின் சிறப்புப்பாயிரங்கள் வெளிவர வழியில்லை. அவை தியாகராச செட்டியாரிடத்தும் சதாசிவ பிள்ளையிடத்தும் இருந்தன. பிற்காலத்தில் அவற்றைப் பெறுவதற்கு எவ்வளவு முயன்றும் கிடைக்கவில்லை.
திருக்குறுக்கைப் புராணம் இயற்றியது.
துன்மதி வருடம் தருமபுர ஆதீனத்தலைவர் ஸ்ரீ சச்சிதானந்த தேசிகர் விரும்பியதற்கு இணங்கி, இவரால் திருக்குறுக்கைப் புராணம் இயற்றப்பட்டது. அந் நூலை அரங்கேற்றும்பொழுது பல பிரபுக்கள் வந்து கேட்டு ஆதரித்தார்கள். கார்குடியிலிருந்த பிரபுவாகிய சரவணப்பிள்ளை யென்பவர் உடனிருந்து சிறப்பாக நடத்தி வைத்தார். அரங்கேற்றுவதற்குமுன் தருமபுரம் ஸ்ரீ சச்சிதானந்த தேசிகர் அவருக்கு அனுப்பிய திருமுகம் வருமாறு:
உ
“குருபாதம் துணை.
சகலகுண சம்பன்னரான பிள்ளையவர்கள் சரவணப் பிள்ளையவர்களுக்குப் பண்டாரத் திருவுளத்தினாலே சிவஞானமும் தீர்க்காயுளும் அரோகதிடகாத்திரமும் சிந்தித மனோரத சித்தியும் சகல பாக்கியமும் மேன்மேலும் உண்டாகும். இந்தத் துன்மதி வருடம் தை மாதம் 22 வரைக்கு நாமும் தம்பிரான்களும் பண்டாரத் திருவுளத்தினாலே பரிணாமத்தில் இருக்கிறோம். இப்போது குறுக்கை ஸ்ரீ வீரட்டேசுர சுவாமிக்குத் தமிழில் தலபுராணம் செய்யும்படி வித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களுக்கு நாம் சொல்ல அது முற்றுப்பெற்றிருப்பதால் ஸ்திரவார தினம் அரங்கேற்றுதல் செய்யும்படி அவ்விடத்துக்கு அனுப்பியிருக்கிறோம். தாங்கள் கூட இருந்து அரங்கேற்றுதல் செய்யும்படி செய்விக்க வேண்டியது. மகாக்ஷேத்திரமானபடியால் அந்த ஸ்தலத்தைப் பிரகாசம் செய்விப்பது புராணமேயன்றி வேறில்லை. தேவாரங்களிருந்தபோதிலும் புராணமில்லாவிடின் ஸ்தலத்தினுடைய வரலாறு விளங்க மாட்டாது. அன்றியும் ஒரு புராணப் பிரதிட்டை ஒரு ஸ்தலப்பிரதிட்டை செய்வது போலாகும். அதற்குரிய அபிமானிகளாகிய தாங்கள் கூட இருந்து சிறப்பாக நடப்பிக்கவேண்டும். மற்றப்படி தாங்களும் மற்றுமுண்டாகியபேர்களும் சுகமே இருக்கிற செய்தியை யெழுதியனுப்ப வேண்டியது. சதாகாலமும் பண்டாரத் திருவருளே கண்ணாக இருந்து வரும்படி சிந்திக்க.
ஞானஸம்பந்தன்.”
குறுக்கைப்புராணம் துன்மதி வருடம் மார்கழி மாதம் 13-ஆம் தேதி வியாழக்கிழமை பகல் 27 நாழிகைக்குப் பாடி நிறைவேறியது என்று புராண ஏட்டுப் பிரதியின் இறுதியில் எழுதப்பட்டிருந்தது.
குறுக்கை யென்பது அட்டவீரட்டானங்களுள் மன்மதனை எரித்த தலம்; தேவாரம் பெற்றது. தீர்க்கவாகு வென்னும் ஒரு முனிவர் சிவபெருமான் எழுந்தருளியுள்ள ஸ்தலங்கடோறும் சென்று அவ்வத் தலத்திலுள்ள இறைவனுக்கு ஆகாய கங்கை நீரைக்கொண்டே திருமஞ்சனம் செய்யுமியல்புடையவர். அவர் இத் தலத்தை அடைந்து அங்ஙனமே அபிஷேகம் செய்ய விரும்பித் தம் நீண்ட கைகளை உயரத் தூக்க அவை குறுகின. அக்காரணத்தால் இத்தலத்தின் பெயர் குறுக்கையென்றே வழங்கலாயிற்று. இத்தலத்திற்கு [13]அரிதகிவனம், யோகீசபுரம், ஞானாம்பிகாபுரம், காமதகனபுரம், கம்பகரபுரமென வேறு திருநாமங்களும் வழங்கும்.
இத்தலத்துச் சிவபெருமான் திருநாமம் யோகீசரென்பது. அம்பிகையின் திருநாமம் ஞானாம்பிகை. தலவிருட்சம் கடு.
இந் நூலிலுள்ள மாணிக்கவாசகர் துதி மிகச் சுவையுள்ளது:
“மன்னுமருட் குரவனாய்க் குருந்துறையும் பெருந்துறையில் வதிந்த கோமான் கொன்னுமொலி மலிகுதிரைச் சேவகனாய் மண்சுமக்குங் கூலி யாளாய்
இன்னுமொரு தரஞ்சொலெனக் கேளாமற் சொற்றபடி எழுது வோனாய்த்
துன்னும்வகை நெக்குருகு வாதவூ ரண்ணலடி தொழுது வாழ்வாம்.”
அவையடக்கங் கூறுகையில், மொழிமுதலாகாத ஙகரம் அகரவுயிரொடு கூடிச் சுட்டு முதலிய எழுத்துக்களின் பின்னே வருதல் போலத் தம் பாடலும் யோகீசருடைய கதையைச் சார்ந்தலால் சிறப்புப்பெறுமென்பதை அமைத்து,
“மொழிமுதலா காதஙக ரமுமகரஞ் சார்ந்துமுத லாய்ச்சுட் டாதி
வழிவரல்போன் மொழிமுதலா காதவென்பா டலுங்குறுக்கை வளர்மா தேவன்
பழிதபுகா தையைச்சார்ந்து முதலாய்ச்சுட் டாதிவழி படரு மாலி
தழிவிலிய லுணர்ச்சியரோர் குவரதனால் யானவர்க்கொன் றறைவ தில்லை”
என்னும் பாடலைப் பாடியுள்ளார்.
மேகம் மாதமும்மாரி பெய்ய அந்த நீர் காவிரியைச்சார்ந்து ஓடிக் கடலில் விழுந்து அதை நிரப்புதலால் கடல் முந்நீரென்று பெயர் பெற்றது போலும் என்னும் கருத்து அமைய,
“மழைவரை முகட்டி லேறி மாதமும் மாரி பெய்யத்
தழைதரு புனல்கா வேரி சார்ந்தோருங் கோடி வீரை
விழைதிர நிறைத லாலவ் வீரைக்கு முந்நீ ரென்று
பழையநூ லுணர்ந்தோர் கூறும் பரிசிஃ துணர்ந்து போலும்” (நாட்டுப். 17)
என்று பாடியிருக்கின்றனர்.
பேரளவென்னும் பொருளுள்ள பனை பொருந்தியுங் கடைப்பட்ட நெய்தல்போலாகாமல் சிறிய அளவென்று கூறப்படும் தினை விளைவிக்கப்பட்டும் குறிஞ்சி முதன்மையாயிற்றென்னும் கருத்து,
“கரைசெய் பேரள வாம்பனை பொருந்தியுங் கடையாந்
திரைசெய் நெய்தல்போ லாதறி வாளர்சிற் றளவென்
றுரைசெய் நுண்டினை பொருந்தியு முதன்மையுற் றோங்கும்
வரைசெய் வான்றிணை போல்வது மற்றெது மண்மேல்” (மேற்படி. 24)
என்னும் செய்யுளில் அமைந் துள்ளது.
உழவர்கள் காவிரியில் புது வெள்ளத்தைக் கண்டு மகிழ்ந்ததற்கு அப்பூதி நாயனார் திருநாவுக்கரசு நாயனாரைக்கண்டு மகிழ்ந்ததையும் ஸ்ரீ மாணிக்கவாசகர் குருந்தமரத்திலெழுந்தருளிய சிவபெருமானைக்கண்டு மகிழ்வுற்றதையும் பின்வரும் பாடலில் உவமையாகக் கூறியுள்ளார் :
“ஆன்றவப் பூதி நாயனார் நாவுக் கரையரைக் கண்டது போலும்
கான்றசோ றென்றே யிருமையுங் கண்டு கழிக்குநா லாவது சாத்தி
ஊன்றநேர் வாத வூரர்கோன் குருந்தி னொருவனைக் கண்டது போலும்
ஈன்றதா யனைய காவிரி நறுநீ ரெதிருறக் கண்டனர் களமர்.” (மேற்படி. 46)
சிவாலயங்களின் திருமதில் முதலியவற்றில் ஆல் அரசு முதலியன தோன்றி அவற்றை அழிவடையும்படி செய்வது இவருடைய மனத்தைத் துன்புறுத்தியதென்பது,
“நட்டபன் முதலுந் தாம்புதி தடுத்த நானில மகட்குற வணங்கி
உட்டழைந் தெழல்போற் சாய்ந்துபி னிமிர்ந்தாங் குமாதர னடியர்கைக் கொடுக்கப்
பட்டதன் பலமொன் றனந்தமா வதுபோற் பல்பல கிளைத்தெழும் பொழுதே
அட்டமெய் யுடையா னாலயத் திடையால் அரசென முளைத்தபல் களையே”
“அறப்பரி பால ரெம்பிரான் கோயில் அகத்தெழு மாலர சாதி
உறப்பறித் தெழல்போ னெற்பயிர் வளர்ச்சிக் கூறுசெய் களையெலா மொருங்கு
மறப்படை நெடுங்க ணுழத்தியர் வயலுள் வயங்குமோ திமமெனப் புகுந்து
நறப்படு களைகள் யாவையுங் களைந்து நகுவரப் பேற்றின ரெழுவார்” (நாட்டுப்.55-6)
என வரும் செய்யுட்களால் விளங்கும்.
“ ‘எம் வினையை அரி; தகி' என்று எண்ணி அரிதகி வனமாகிய இத்தலத்தை அடைபவர் பெரியர்; போகத்தை விரும்பி அடைபவர் சிறியர். தன் சரீரத்தைச் சிவபெருமானுடைய நெற்றிக் கண்ணுக்கு விருந்தாக்க எண்ணி இத்தலத்தை அடைந்த மன்மதனைப் பெரியனென்பேனோ? சிறியனென்பேனோ?” என்னும் கருத்தை அமைத்துப் பாடிய,
“ [14] அரிதகி வனத்தி லையவெம் வினையை அரிதகி யென்றுவந் தடைவார்
பெரியவர் சிறியர் போகமே வேட்டுப் பெரிதுவந் தடைவர்தன் மேனி
எரியழல் விருந்து செய்திட வுள்ளத் தெண்ணிவந் தடைந்தன னென்றால்
தெரிவரு மதனைப் பெரியவ னென்கோ சிறியனென் கோவெது புகல்வேன்”
(காமதகனப் படலம், 9)
என்னும் செய்யுளும், சிவபெருமானால் எரிக்கப்பட்டுத் தோற்ற பின்பும் மன்மதன் தோற்றிலனென்பதைச் சமத்காரமாக அமைத்து,
“தனியெழின் மாரன் விடுத்தது 15முளரி தம்பிரான் விடுத்தது முளரி
பனிமதிக் குடையோ னெண்ணமு 16மருளே பரம்பர 17னெண்ணமு மருளே
கனிவரு மதவே ணீறுடை மெய்யன் கடவுளு நீறுடை மெய்யன்
வனிதையோர் பாகத் தெம்பிரான் றனக்கு மனோபவன் தோற்றிலன் போலும்”'
(மேற்படி. 25)
என்று இயற்றியுள்ள செய்யுளும் படித்து இன்புறற்பாலன.
குறிஞ்சி முதலிய திணைகளை வருணிக்கும்பொழுது அவ்வத் திணையிலுள்ள தலங்களை யெடுத்துப் பாராட்டுவர். அவ்வகையில் ஈங்கோய்மலை, வாட்போக்கி, திரிசிராமலை, கற்குடிமாமலை, எறும்பியூர் என்னும் குறிஞ்சி நிலத்தலங்களும், நெடுங்களம், நியமம், மேலைத்திருக்காட்டுப்பள்ளி, கங்கைகொண்டசோளேச்சுரம் முதலிய முல்லை நிலத்திலுள்ள தலங்களும் எடுத்துப் பாராட்டப் படுகின்றன. தீர்க்கவாகுவென்னும் முனிவர் தலயாத்திரை செய்ததை வருணிக்கும் பகுதியிற் சிவதலங்கள் பலவற்றைக் குறிப்பால் தெரிவித்திருக்கும் அருமை வியக்கத்தக்கது.
இந்நூலிலுள்ள படலங்கள் - 21; செய்யுட்டொகை - 736. இப்புராணம் அச்சிடப்பட்டுள்ளது.
[18]திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பதிற்றுப்பத்தந்தாதியும் ஆனந்தக்களிப்பும்.
துந்துபி (1862) வருஷத்திற் பல சிவஸ்தலங்களைத் தரிசனம் செய்ய இப்புலவர்பிரான் புறப்பட்டார். அப்பொழுது இராமசாமி பிள்ளையின் வேண்டுகோளின்படி மதுரைக்குச் சென்றனர். அங்கே திருஞானசம்பந்தமூர்த்தியாதீன மடத்தே தங்கி ஸ்ரீசோமசுந்தரக் கடவுளைத் தரிசனம் செய்து கொண்டு சிலதினம் இருந்தனர். அப்போது அங்கே பாடசாலைப் பரிசோதகராக இருந்த பம்மல் விஜயரங்க முதலியாருடைய விருப்பத்தின்படியே, திருஞான சம்பந்தமூர்த்தி பதிற்றுப்பத்தந்தாதியும் திருஞானசம்பந்தர் ஆனந்தக்களிப்பும் இவரால் இயற்றி மடத்தில் அரங்கேற்றி அவராலே அச்சிற் பதிப்பிக்கப் பெற்றன.
மதுரையாதீனத்தில் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரையே பூர்வாசாரியராகக் கொண்டு வழிபடுதல் முறையாதலால் இவ்வந்தாதியிலும் ஆனந்தக் களிப்பிலும் அவருடைய அருமைச் செயல்களே எடுத்தாளப்படும்.
அப் பதிற்றுப்பத்தந்தாதியிலிருந்து சில செய்யுட்கள் வருமாறு:-
விருத்தம்.
“அழகிய மயிலை யத்தியைப் பூவை அரசுசெய் தனையுத வாமை
பழகிய பெண்ணை பலவுமின் குரும்பை பலகொளப் பாடினை பற்பல்
கழகமுற் றோங்கு மாலவா யமுதே கவுணியர் பெருங்குல விளக்கே
மழவிளங் களிறே யென்மனந் திருத்தின் மற்றுமப் புகழொடொப் பாமே.” (16)
“ஒன்றுவெங் காமம் வெகுளியுண் மயக்கம் ஓங்குமும் மதமெனக் கொண்டு
கன்றுமென் மனமாங் களிறகல் பவஞ்சக் காடெலா முழிதரு மதனை
வென்றியா னடக்க வலியிலா மையினான் மேதகு கூடலென் றுரைக்கும்
குன்றில்வாழ் தெய்வக் குருபர சமய கோளரி சரணடைந்தேனே.” (17)
வேறு.
அடைய வினிமை யருளுநின்பொன் அடிக ளடைந்தே னதற்கேற்ப
இடைய றாத வன்பில்லேன் எனினுங் கூடற் சம்பந்தா
தடையி லடியா னினக்கென்றே சாற்றா நிற்ப ரெனையுலகர்
மிடைசில் லுறுப்பி லார்தமையும் மக்க ளென்றே விளம்புதல்போல்.(24)
வேறு.
“வானமும் புகழ்திரு மதுரை பாற்கடல் ஞானசம் பந்தனார் நயக்கு நல்லமு
தூனமில் சைவர்க ளுவந்த வானவர் தீனவெவ் வமணரே திதிதன் மைந்தர்கள்.'' (87)
மதுரையை விட்டு நீங்கி வேறு சில தலங்களைத் தரிசனஞ் செய்துகொண்டு திருவாவடுதுறை வந்து சேர்ந்தார்.
[19]குரு பரம்பரை அகவல்.
திருவாவடுதுறையிலிருக்கையில் சில அன்பர்களுடைய வேண்டுகோளின்படி அந்த ஆதீனத்து முன்னோர்களாகிய ஸ்ரீ மெய்கண்டதேவர் முதல் வேளூர்ச்சுப்பிரமணிய தேசிகரிறுதியாக இருந்த ஞானாசிரியர்கள் சிவபதமடைந்த மாதம், நட்சத்திரம், சமாதித்தலமென்பவற்றை முறையே யமைத்து, ‘திருவளர் கைலைச் சிலம்பு’ என்னும் தலைப்பையுடைய அகவலொன்றை இயற்றி அளித்தனர். அது குரு பரம்பரை அகவலென வழங்கும்; அவ்வகவல் அச்சிற் பதிப்பிக்கப்பெற்றுள்ளது.
மண்ணிப்படிக்கரைப் புராணம்.
திருவாவடுதுறை ஆதீனத்துப் பெரிய காறுபாறும் வித்துவானுமாகிய கனகசபைத் தம்பிரானவர்களுடைய விருப்பத்தின் படி மண்ணிப்படிக்கரைப் புராணம் இவரால் இயற்றப்பெற்றது.
“வானளவு புகழ்த்திருவா வடுதுறையிற் குருநமச்சி வாய மூர்த்தி
ஆனபர சிவனருளான் ஞானகலை முதற்பிறவு மமையக் கற்று
மோனமிகு சாத்தியனாய் மிளிர்கனக சபாபதிமா முனிவர் கோமான்
கூனன்மதி முடித்தபிரான் மதூகவனப் புராணநீ கூறு கென்ன” (பாயிரம்)
என்னும் செய்யுளாலும் இது விளங்கும்.
இரக்தாட்சி வருடம் (1864) சித்திரை மாதத்தில் அப்புராணம் அந்தத் தலத்தில் ஸ்வாமி சந்நிதியில் பலர் முன்னிலையில் அரங்கேற்றப்பெற்றது. அதனை இயற்றும்படி அடிக்கடி தூண்டிவந்தவரும் அரங்கேற்றதற்குப் பலரிடத்துஞ் சென்று பொருளீட்டிக் கொடுத்துதவியவரும் அந்தக் கோயிற் காரியஸ்தர் கோதண்டராமைய ரென்பவராவர்.
மண்ணிப்படிக்கரையென்பது மாயூரத்துக்கு வடபாலுள்ள தேவாரம் பெற்ற தலம்; மண்ணியாற்றின் படிக்கரையில் முற்காலத்து இருந்தமையின் இப்பெயர் பெற்றது. இக்காலத்தில் இலுப்பைப்பட்டென வழங்கும். இத்தல விருட்சம் இருப்பை.
இத்தலத்திற்குரிய விநாயகமூர்த்திகள் வலம்புரி விநாயகர், நடன விநாயகரென இருவர். சிவபெருமான் படிக்கரைநாயகர், நீலகண்டேசர், முத்தீசர், பரமேசர், மகதீசரென ஐந்து மூர்த்திகளாக எழுந்தருளியுள்ளார். மங்கல நாயகி, அமுதகரவல்லி யென அம்பிகைகள் இருவருளர். இவர்களுக்குத் தனித்தனியே துதிகள் கூறப்பட்டுள்ளன.
அப்புராணச் செய்யுட்களும் சில வருமாறு:-
மகதீசர் துதி.
“ஒப்பாரும் மிக்காரு மில்லானென் றாரணங்கள் உரைத்தற் கேற்ப
இப்பாரும் விண்ணுலகு மெடுத்தேத்து மகதீசன் எனும்பேர் பூண்டு
தப்பாரு மறிவினருஞ் சங்கையறத் தழலங்கைத் தலத்தி னேந்திக்
கப்பாரு மதூகவனங் குடிகொண்ட பெருமானைக் கருதி வாழ்வாம்.” (கடவுள் வாழ்த்து)
தலவிருட்சமாகிய இருப்பையின் சிறப்பு.
“இனிய நீழலெங் குஞ்செய் தருக்குலம்
நனிய வாந்தளி ராதிக ளேநல்கும்
கனிய மைந்தவிக் காம ரிருப்பைதான்
மினிய நாளும் விளக்கமும் நல்குமே.” (திருநகரப் படலம், 31)
“காம தகன நினைத்தொழுதேன் கால கால நினைத்தொழுதேன்
சோம சூட நினைத்தொழுதேன் துணைவி விடாது வீற்றிருக்கும்
வாம பாக நினைத்தொழுதேன் மதூக வனத்தாய் நினைத்தொழுதேன்
ஏம வுருவ நினைத்தொழுதேன் என்று நடனம் புரிகின்றான்.”
(நடனவிநாயகப் படலம், 13)
“வானமுழு வதுங்காத்த மணிகண்டர் பேரருளால்
ஆனநய வுணர்வுற்ற வக்காகம் பிரமதடத்
தூனமில்வண் புனன்மூழ்கி யோங்குசின கரஞ்சூழ்ந்து
கானமுறா தடியேனைக் காகாவென் றுறக்கரையும்.”
(காகம் முத்தியடைந்த படலம், 28)
கருமசேனன் முத்தியடைந்த படலமென்பது முழுவதும் வஞ்சித்துறையாலே இயற்றப்பெற்றுள்ளது; அதிலுள்ள செய்யுட்களும் சில வருமாறு :
“அன்ன வன்னிவன்
தன்னை நோக்கியே
பொன்னை நேடினேன்
என்ன செய்குவேன்.”
“உங்கள் பேரினாற்
கங்கை யாடிநான்
திங்க ளாறினில்
இங்கு மேவுவேன்.” (கருமசேனன் முத்தியடைந்த படலம், 7, 10)
இப்புராணத்திலுள்ள படலங்கள் - 20; செய்யுட்கள் - 501; இஃது அச்சிடப் பெற்றுளது.
சேற்றூர்க் [20]கந்தசாமிக் கவிராயர்.
சேற்றூர் சமஸ்தான வித்துவான்களின் பரம்பரையினரும், சுப்பிரமணிய தேசிகரிடம் பாடங்கேட்டவரும், விரைவாகச் செய்யுள் செய்பவருமாகிய கந்தசாமிக் கவிராயரென்பவர், சுப்பிரமணிய தேசிகரைத் தரிசிக்கும் பொருட்டு வழக்கம்போலவே திருவாவடுதுறைக்கு வந்தார். பிள்ளையவர்களுடைய புகழைக் கேள்வியுற்றவராதலின் இவரைக் கண்டு அளவளாவ வேண்டு மென்னும் விருப்பம் அவருக்கு மிகுதியாக இருந்துவந்தது. சுப்பிரமணிய தேசிகரைத் தரிசித்துவிட்டு இவரைப்பார்க்க வந்தார். அப்பொழுது இவர் ஏதோ ஒரு நூலின் பகுதிக்குரிய செய்யுட்களை இயற்றி எழுதுவித்துக் கொண்டிருந்தார். ஒரு செய்யுள் செய்வதற்கே பல நாழிகை யோசித்து உபகரணங்களைத் தேடிவைத்துக் கொண்டு பாடுபவர்களை அக் கந்தசாமிக் கவிராயர் பார்த்தவராதலின், இவர் அநாயாஸமாகப் பாடுதலையும் இடையிடையே நண்பர்களோடு பேசுவதையும் அப்பேச்சினால் செய்யுள் இயற்றுதலில் யாதொரு தடையும் நேராமையையும் கண்டு அளவற்ற ஆச்சரியம் அடைந்தார். உடனே வியப்பு மிகுதியால்,
(கட்டளைக்கலிப்பா)
“ஓலை தேடி யெழுத்தாணி தேடியான் ஓய்ந்தி ருக்கு மிடந்தேடி யேயொரு
மூலை தேடி யிருந்துதன் மூக்குக்கண் ணாடி தேடி முகத்திற் பொருத்தியே
மாலை தேடி வருமட்டு மோர்கவி வந்த தென்று வரைந்து வழுத்துவன்
சாலை நீடிய பாப்பாங் குளத்துக்குத் தக்க சொக்கலிங் கக்கவி ராயனே”
என்னும் பழைய தனிப்பாடலை அங்கே உள்ளவர்களுக்கு எடுத்துச் சொல்லி இவரை மிகவும் பாராட்டினார். சில நாள் இருந்து இவருடன் சல்லாபம் செய்துவிட்டுச் சென்றார். இப்படியே வரும் பொழுதெல்லாம் இவரோடிருந்து இவருடன் பழகி இவரது கவித் திறத்தைப் பாராட்டிச் செல்லுவார்.
திருவாவடுதுறைக் கந்தசாமிக் கவிராயர் இவர் பாடும் நூல்களிற் பங்கு கேட்டது.
இவர் புராணங்களைப் பாடி வரும்பொழுது இயல்பாகவே முன்பு திருவாவடுதுறை ஆதீன வித்துவானாக இருந்த கந்தசாமிக் கவிராயரென்பவர், “நீங்கள் பாடும் புராணத்திற் சில பாகத்தை என்னிடம் கொடுத்தால் நான் பாடி முடிப்பேன். இந்த இடத்திலேயே காத்துக்கொண்டிருக்கும் என் பெயரும் பிரகாசப்படுவதற்கு வழியாகும்” என்று வற்புறுத்திப் பலமுறை கேட்டுக் கொண்டே வந்தார். இவர் நேரில் மறுப்பதற்குத் துணியாமல், “ஆயிரக் கணக்கான பாடல்கள் அமையக்கூடிய புராணமாக இருந்தால் உங்களுக்கும் சில பாகங்களைப் பகிர்ந்து கொடுப்பேன். இவை நூற்றுக்கணக்கான பாடல்களாற் செய்யப்படுவனவே. ஆகையால் என்னுடைய நாவின் தினவைத் தீர்ப்பதற்கே போதியனவாக இல்லை. உங்களுக்குப் புராணம் செய்யும் விருப்பம் இருந்தால் வேறே ஒரு ஸ்தலத்திற்குத் தனியாகச் செய்யலாமே” என்பார். அவர் பின்னும் வற்புறுத்துவார். இவர் இவ்வாறே விடையளிப்பார். அவர், “நான் வருந்திக்கேட்டும் கொடுக்கவில்லை” என்று அயலிடங்களிற் சென்று குறை கூறுவர். இவ்வாறு அவர் கேட்பதும் இவர் விடை கூறுவதும் அடிக்கடி நிகழும்.
இங்ஙனம் நிகழ்ந்துவருங் காலத்தில் ஒருநாள் பகற் போசனத்தின் பின் இவர் மடத்தின் முகப்பிலிருந்து பலருடன் பேசிக் கொண்டிருக்கையில் கந்தசாமிக் கவிராயர், தமக்குத் தெரிந்தவர் பலர் அங்கே இருப்பதைக் கண்டார். இது தான் கேட்பதற்கு நல்ல சமயமென்றெண்ணி வந்து வழக்கம்போற் பாடுவதிற் பங்கு கேட்டார். கேட்டபொழுது அங்கே இவரைப் பார்த்தற்கு வந்திருந்த சேற்றூர்க் கந்தசாமிக் கவிராயர், ‘இந்தப் போராட்டத்தை இப்பொழுதே எவ்வாறேனும் நாம் ஒழித்துவிட வேண்டும்’ என்றெண்ணி அவரை நோக்கி, “நீங்கள் என்ன என்ன நூல்கள் படித்திருக்கிறீர்கள்?” என்று விசாரித்துக் கடினமான சில கேள்விகளைக் கேட்கத் தொடங்கினார். அவர் தெளிவாக விடைகூறமாட்டாமல் விழித்துக்கொண்டேயிருந்தார். சேற்றூர்க் கவிராயர் பின்னும் அவரைப் பார்த்து, “பிள்ளையவர்களுக்கும் உங்களுக்கும் படிப்பிற் பலவகை வேறுபாடுகள் உண்டு. அவ்விஷயத்தை நீங்கள் அறிந்துகொள்ளாமல் இவர்களைக் காணும் பொழுதெல்லாம் இந்த வண்ணம் துன்புறுத்துவது சிறிதும் நன்றாயில்லை. உங்களுடைய நிலைமையை நீங்களறியாமல் இவர்களை ஏன் நோவச் செய்கிறீர்கள்? உங்களுக்கு இயற்கையில் திறமை இருந்தால் எத்தனையோ விதத்தில் அதனை வெளிப்படுத்தலாமே. இனி இவ்வாறு இவர்களிடம் வாக்குவாதம் செய்தால் ஸந்நிதானத்தினிடம் விண்ணப்பம் செய்துவிடுவேன்” என்றார். ஸந்நிதானத்தினிடம் தெரியப்படுத்துவதாகச் சொன்ன வார்த்தைதான் அவர் மனத்தைக் கலக்கிவிட்டது. பழைய காலத்து மனிதராகிய அவர் இயற்கையிலேயே பயந்தவர். கடிந்து பேசுவாரின்மையாற் பிள்ளையவர்களிடம் அவ்வளவு காலம் போராடினார். இந்தச் சேற்றூர்க் கவிராயர் எங்கிருந்தோ முளைத்து, 'ஸந்நிதானம்' என்று பயமுறுத்தினால் அவர் அஞ்சமாட்டாரா? “இனி இந்த வழிக்கே வருவதில்லை; என்னை விட்டுவிடுங்கள்” என்று சொல்லிப் போய்விட்டார். அதுமுதல் இந்த விஷயத்தைப்பற்றிக் கேட்பதற்குப் பிள்ளையவர்களிடம் வருவதை அவர் நிறுத்திக்கொண்டார்.
இரக்தாட்சி வருஷம் (1864) வைகாசி மாதம் இரண்டாந் தேதி திருவாவடுதுறையாதீனம் காறுபாறு கண்ணப்பத் தம்பிரானவர்களுக்கும் இவருக்கும் அம்பலவாண தேசிகரவர்களால் நிர்வாண தீக்ஷை (தீக்ஷைக்குறை) நடந்தேறியது.
பந்தர்ப் பாட்டு.
அப்பொழுது மடத்திற் சிலநாள் காறுபாறாயிருந்த ஒருவர் பிள்ளையவர்களிடத்தில் அழுக்காறும் விரோதமும் உள்ளவராக இருந்தார். அதற்குக் காரணம் மடத்தில் இவருக்கு அதிக உபசாரம் நடந்துவருதலும், வருபவர்கள் தம்மைப் பாராட்டாமல் இவரைப் பாராட்டி வந்தமையுமே. அது பற்றி இவருக்கு ஆக வேண்டிய காரியங்கள் சுப்பிரமணிய தேசிகருடைய கட்டளையின் படியே நடைபெறும். இவர் இருந்த விடுதியின் முற்றம் விசாலமாக இருந்தமையால் கோடைக்காலத்து வெப்பம் தாங்கமுடியாமல் இருந்தது. அது பற்றி ஒரு பந்தர் போட்டுக் கொடுக்கும்படி கட்டளையிட வேண்டுமென்று இவர் விண்ணப்பித்துக் கொண்டார். அப்படியே சுப்பிரமணிய தேசிகருடைய உத்தரவினால் கீற்று, பந்தர்க்கழி முதலியன மெய்க்காட்டுக் கணக்குப் பிள்ளையால் கொணர்ந்து சேர்க்கப்பட்டன. அதை எப்படியோ தெரிந்து கொண்டு மேற்கூறிய அதிகாரி தம்முடைய அனுமதியில்லாமல் இச்செயல் நிகழ்ந்துவிட்டதேயென நினைந்து ஏதோ ஒரு காரணத்தைக் காட்டிக் கீற்று முதலியவற்றை எடுத்துப் போகும்படி செய்துவிட்டார். அது தெரிந்த பிள்ளையவர்கள் மனவருத்தமுற்றுப் பின்வரும் பாடலை இயற்றிச் சுப்பிரமணிய தேசிகருக்கு விண்ணப்பம் செய்யும்படி ஒரு மாணாக்கரை அனுப்பினார் : -
“மந்தரச் சிகரி [21]நீலிமா வனத்து வாகீசர் வரவுதேர்ந் திடைநீ
பந்தரொன் றமைத்துப் பொதியுண வளித்த பான்மைதேர்ந் தீண்டிருப் பேனுக்
கிந்தவெங் கோடை தனிற்பந்தர்க் காக எய்திய பொருள்கணீங் கியவென்
சுந்தரத் துறைசைச் சுப்பிர மணிய தூயதே சிக்குணக் குன்றே.”
இதைப் பார்த்த உடனே சுப்பிரமணிய தேசிகர் இன்னாரால் ஏற்பட்டிருக்குமென்று நினைத்து, மெய்க்காட்டுக் கணக்குப் பிள்ளையை அழைத்து வரச் செய்து, “இந்த நிமிஷமே பிள்ளையவர்களுடைய விடுதியின் முற்றத்தில் பந்தரைப் போட்டுவிட வேண்டும்; இல்லையெனில் உமக்குக் கட்டளையிட்டவருடைய வேலை நிலைபெறாதென்று அவருக்கு அறிவியும்” என்று கட்டளையிட்டார். பின்னர் வெகுசீக்கிரத்திற் பந்தர் போடப்பட்டது.
ஒருமுறை திருவாவடுதுறைக்கு ஆறுமுக நாவலர் வந்திருந்தபொழுது மடத் திற் படித்துக்கொண்டிருந்த நமச்சிவாயத் தம்பிரானைக்கண்டு, “அங்குத்தி பிள்ளையவர்களிடம் பல நூல்களைப் பாடங்கேட்டுக் கொள்ளவேண்டும். அவர்கள் இங்கே இருப்பது பெரும்பாக்கியம். அவர்களைப்போல இப்பொழுது பாடஞ் சொல்பவர்கள் இல்லை” என்று சொல்லிப் போனார்.
கோயிலூர்ப்புராணம்.
இவருக்கு அடிக்கடி நேரும் பொருள் முட்டுப்பாட்டினால் இவர் வருந்துவதை இவரிடம் பாடங்கேட்டுவந்த தேவிகோட்டை நாராயண செட்டியார் அறிந்து இவருக்கு எவ்வகையிலேனும் பொருள் வருவாய் கிடைக்கும் வண்ணம் செய்விக்க வேண்டுமென எண்ணினார். பாண்டிநாட்டில் நகரவட்டகையிலுள்ள சிவ ஸ்தலங்கள் சிலவற்றிற்கு இவரைக் கொண்டு புராணம் இயற்றுவிக்கலாமென்றும் அங்கங்கேயுள்ள பிரபுக்களைக் கொண்டு அவை காரணமாக இவருக்குத் தக்க பரிசில்கள் கொடுக்கச் செய்யலாமென்றும் நிச்சயித்து அதற்கு வேண்டிய முயற்சிகளைச் செய்து வருவாராயினர். நகர வைசியப் பிரபுக்கள் இக்கவிஞர் கோமானது பெரும் புகழை அறிந்திருந்தவர்களாதலின் நாராயண செட்டியாருடைய முயற்சிகள் பயனுற்றன. அப்பொழுது கோயிலூர் வேதாந்தமடத்துத் தலைவராக இருந்த ஸ்ரீ சிதம்பர ஐயாவின் விருப்பப்படி கோயிலூர்ப்புராணம் இவராற் பாடப்பெற் றது. இவரைக் கோயிலூருக்கு வருவித்துத் தக்கவர்கள் கூடிய சபையில் அந்நூலை அரங்கேற்றுவித்து ஸ்ரீ சிதம்பர ஐயா இவருக்கு உயர்ந்த சம்மானம் செய்த தன்றிப் பலவகையான உதவிகளும் செய்வித்தார்.
கோயிலூரிலிருந்து திருவாவடுதுறைக்கு வந்தவுடன் மடத்திலிருந்த சில தம்பிரான்கள் அப்புராணத்தைப்படிக்கச் சொல்லிக் கேட்டபொழுது அதனை ஆக்குவித்தோராகிய சிதம்பர ஐயாவைச் சிதம்பர தேசிகரென்று கூறியிருத்தலை அறிந்தார்கள்; "சைவரும் இந்த மடத்து வித்துவானுமாகிய இவர் அவரைத் தேசிகரென்று சொல்லுதல் முறையா? பணங்கொடுத்தால் வித்துவான்கள், யாரையும் எப்படியும் புகழ்வார்கள்” என்று தம்முள் சொல்லிக்கொண்டிருந்தனர். அதனைச் சிலராலறிந்த இப்புலவர் கோமான் அவர்களுள் முக்கியமானவரைச் சந்தித்த பொழுது, “இந்தமாதிரி அங்குத்தி சொல்லிக்கொண்டிருந்ததுண்டோ?” என்று கேட்டார். "ஆம்” என்றார் அவர். இவர், "பதினோராவது நிகண்டு ஞாபகத்தில் இருக்கின்றதா? தேசிகனென்பதற்கு அதிற் பொருளென்ன கூறியிருக்கிறது?” என்று கேட்டார். அவர், "தேசிகன் வணிக னாசான்” என ஒப்பித்தார். “அந்த நிகண்டின் பொருளைத்தான் நானும் பின்பற்றிச் சொல்லியிருக்கிறேன். அடியேன் சொன்னதில் ஒன்றும் தவறில்லையே'' என்றார் இவர். அவர் இக் கவிஞர்பிரானது சமத்காரமான விடையைக் கேட்டு ஒன்றும் கூற இயலாமல் வறிதே சென்றார். அன்று முதல் யாரும் இவ் விஷயத்தைப் பற்றிக் குறைகூறுவதில்லை.
கோயிலூரென்பது சமிவனம், கழனியம்பதி, வன்னிவனம், சாலிவாடி, ஸ்ரீவல்லபமெனவும் வழங்கும். இத்தலத்தில் எழுந்தருளிய சிவபெருமான் திருநாமங்கள் திரிபுவனேசர், கொற்றவாளீசர், கழனிநாதரென்பன. அம்பிகையின் திருநாமங்கள் திரிபுவனேசை, நெல்லைநாயகி யென்பன. இத்தலத்து விருட்சம் வன்னி.
இந்நூலைச் செய்வித்தவர் சிதம்பர ஐயாவென்பது,
“தூயமுத்தி ராமலிங்க தேசிகன்பே ரருள்பெற்றோன் சுகுண ஞானம்
மேயவரு ணாசலதே சிகனவன்பா லருள்பெற்று விளக்கஞ் சான்ற
பாயபுகழ்ச் சிதம்பரதே சிகன்கேட்க வுயர்கழனிப் பதிப்பு ராணம்
வாயமையப் புனைந்துரைத்தான் மீனாட்சி சுந்தரநா வலன்மிக் கோனே”
வேறு.
“திகழ்தருசின் மயரூப சிதம்பரதே சிகன்மொழிய
இகழ்தருத லிலாதவன்சொ லேற்றபெரும் புண்ணியத்தாற்
புகழ்தருமிப் புராணத்தைப் பாடினேன் புன்மையெலாம்
அகழ்தருபே ரறமுதல யாவுமடைந்த தனன்யானும்”
என வரும் செய்யுட்களால் அறியப்படும்.
சிதம்பர ஐயாவின் விருப்பத்தின்படி வடமொழியிலுள்ளவாறே இந்நூலுள் வேதாந்த விஷயங்கள் அங்கங்கே பலவகையில் அமைக்கப்பெற்றன.
அப் புராணத்துப் பாடல்களுட் சில வருமாறு:- -
ஸ்ரீ நமச்சிவாயமூர்த்தி துதி.
“கண்ணிய பிறப்பை யாருங் கரிசென வெறுப்பர் மேலோர்
அண்ணிய சிறப்பான் மிக்க வாவடு துறைக்கண் மேய
புண்ணிய நமச்சி வாய குருபரன் பொற்றாள் போற்ற
நண்ணிய பிறப்பை நாயேன் வெறுப்பது நன்றாங் கொல்லோ.”
மழை பெய்தலும் பயிர் செழித்தலும்.
வேறு.
''மழையெ னப்படுந் தேசிகன் றிங்கண்மும் மழையாம்
விழையு முப்பதப் பொருளினை விருப்பொடு பொழியக்
குழைத ரப்படு கோடையா மவித்தைபோய்க் குலைந்து
தழையு யிர்ப்பயிர் தம்மியல் படைந்தன மாதோ.”
உழவர்கள் வயலின் வரம்பை அரிந்து உயர்த்தல்.
வேறு.
“எத்துணைநூல் கொளுத்திடினு மேற்கும்வலி யுண்டாதற்
கொத்தபெருங் [22]கட்டளைமுன் னேற்றிவலி யுறுத்துதல்போல்
எத்துணைநீர் பாய்த்திடினு மேற்கும்வலி யுண்டாதற்
கொத்தகுலைக் கங்கரிந்தாங் கேற்றிவலி யுறுப்பரால்.”
களைபறித்தல்.
“மிடிகெடுக்கும் பயிர்க்கூறாய் மேவியமுண் டகமாம்பல்
கடிகெடுக்குந் தன்மையிலாக் கருநீல முதல்யாவும்
வடிகெடுக்குங் கருங்கண்ணார் வயலினிடைக் களைந்தெறிந்தார்
குடிகெடுக்கு மிராகாதிக் குற்றங்கள் களைவார்போல்.”
நகர வணிகரின் இயல்பு.
வேறு.
“பொருளினை யீட்டும் போது புத்திரர் முதலோர்க் கென்று
மருளுற வீட்டா நிற்கு மடமையோர் நாணுக் கொள்ளத்
தெருண்மிகு மன்ன தானஞ் சிவாலய தரும மேற்றோர்
வெருண்மிடி யகற்றற் கென்றே யீட்டுவர் விரும்பி நாளும்.”
மடத்தின் சிறப்பு.
“தெளிதரு புகழ்வே தாந்த சிரவணந் திருந்தச் செய்தே
ஒளிதரு மனன மாதி யிரண்டினு முரவோ ராகிக்
களிதரு பவஞ்ச முற்றுங் கான்றிடு சோற்றிற் கண்டு
வெளிதரு பிரம மேயாய் மேவுவார் மடமொன் றுண்டால்.”
இலக்கண வமைதி
வேறு.
“கிழக்கிருந்து மேற்கேகிக் கெழுமநடத் தியநாஞ்சில்
வழக்கமிகு தெற்கிருந்து வடக்கேக நடத்திடுவார்
பழக்கமிகு சுழிகுளமென் றெடுத்திசைக்கு மொருபாவை
முழக்கமிகு பெரும்புலவர் மொழிந்துநடத் துதல்பொருவ.”
இப்புராணத்துள்ள படலம் - 14; திருவிருத்தம், 849; இஃது அச்சிடப் பெற்றுள்ளது.
------------
[1] மகிழ்வனம் - மகிழமரக்காடு; திருவிடைக்கழியில் இறைவன் எழுந்தருளியிருக்கும் இடம்; “இலஞ்சியங்கான நோக்கி” என்றார் கந்தபுராணமுடையாரும்.
[2] வாகையாரணியம் - திருவாளொளிபுற்றூர்.
[3] இத்தலத்தின் திருநாமம் மந்தார வனமென்றும் வழங்குமாதலின், “வக்கரை மந்தாரம் வாரணாசி” என்ற க்ஷேத்திரக்கோவைத் திருத்தாண்டகப் பகுதியில் வந்துள்ள மந்தாரமென்ற வைப்புஸ்தலமாக இது கருதப்படுகின்றது.
[4] நிரோதம் – தடை.
[5] கலவர் - கப்பலையுடையவர்; இங்கே வலைஞர்.
[6] இது தேவாரவைப்புஸ்தலங்களுள் ஒன்று; “வெண்ணி விளத் தொட்டி வேள்விக்குடி” திருநா. தே.
[7] தொட்டில் தொட்டியென வழங்கலாயிற்று.
[8] தாலம் - உலகம், நா.
[9] ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத்திரட்டு, 835 - 937.
[10] திருவாவடுதுறை.
[11] கையினாற் கொட்டுக வென்க.
[12] சிவஞான முனிவரியற்றிய சிவஞான போதச் சிற்றுரை முதலியவற்றையும் கச்சியப்ப முனிவரியற்றிய பஞ்சாக்கரதேசிகரந்தாதியையும் நினைந்து இச்செய்யுளியற்றப்பெற்றதென்று தெரிகின்றது.
[13] அரிதகி - கடுமரம்.
[14] அரிதகிவனம் - கடுமரவனம்.
[15] முளரி - தாமரைமலர், நெருப்பு.
[16] மருள் - மயக்கம்.
[17] எண்ணமும் அருள்.
[18] ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத்திரட்டு, 2670-2808.
[19] ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத்திரட்டு, 1049.
[20] இவருடைய தம்பியின் குமாரருக்கும் கந்தசாமிக் கவிராயரென்று பெயருண்டு.
[21] நீலிமாவனம் - திருப்பைஞ்ஞீலி.
[22] கட்டளை - நானாஜீவவாதக் கட்டளை முதலியன; இச்செய்யுள் அந்த மடத்தின் சம்பிரதாயத்தைத் தழுவி இயற்றப்பெற்றது.
--------
22. ரங்கசாமி பிள்ளையைத் திருவாவடுதுறை
மடத்திற்கு வரச் செய்தது.
ரங்கசாமி பிள்ளையின் இயல்பு.
அக்காலத்தில், மதுரையிலிருந்து தஞ்சாவூருக்குப் பிரின்ஸிபல் ஸதர்மீனாக மாற்றப்பட்டு ரங்கசாமி பிள்ளை யென்பவர் வந்திருந்தார். அவர் மிக்க பரிசுத்தர். யாரையும் சென்று அவர் பார்ப்பதில்லை. அவர் வீட்டிற்கும் யாரும் போவதில்லை. அவரிடம் பழகுவதில் எல்லோருக்கும் பயம் இருந்தது. அவ்வாறு இருந்து வேலை பார்ப்பது தான் ஒழுங்கென்பது அவருடைய கருத்து. ஆனாலும், தெய்வ பக்தியும் தமிழ்ப் பாஷையிற் பயிற்சியும் உள்ளவர்.
அம்பலவாண தேசிகர் ரங்கசாமி பிள்ளையை வருவிக்க விரும்பியது.
அவர் தஞ்சாவூரில் இருக்கையில் தை மாதக் குருபூஜைக்குத் திருமுகம் அவருக்கு அனுப்பலாமா வென்று திருவாவடுதுறை அம்பலவாண தேசிகர் யோசித்து விசாரிக்கையில், அங்கே வந்திருந்த சில சைவப் பிரபுக்கள், “அவர் முன்பிருந்தவர்களைப் போன்றவரல்லர். சற்றுக் கடுமையுள்ளவர். அவர் எந்த இடத்திற்கும் போவதில்லை. அவருக்கு அனுப்புவதிற் பயனே இல்லை. அவர் எங்கேயாவது வந்திருக்கிறதாக ஸந்நிதானம் கேட்டதுண்டா? அவரைப் பார்க்கவெண்ணிச் சென்றவர்கள் பாராமலே வந்து விட்டார்கள்” என்று சொன்னார்கள். அம்பலவாண தேசிகர் அதனைக் கேட்டு, “எவ்வாறேனும் அவரை வரவழைக்கவேண்டும்" என்று நினைத்தார். ‘முன்பிருந்தவர்களெல்லோரும் வருவதுண்டே; இவர் மட்டும் வாராமல் இருக்கலாமா?' என்று எண்ணினார். பிறர் அவரைப்பற்றிப் பல செய்திகளைச் சொல்லச் சொல்லத் தேசிகருடைய எண்ணம் அதில் வலியுற்றதேயன்றிக் குறையவில்லை. 'அவரை அழைத்துவரத் தக்கவர்களையனுப்ப முயல வேண்டும். அந்தக் காரியத்தை முடிக்கும் ஆற்றலுடையவர்கள் யார்?' என்று அடுத்தபடி அவருடைய மனம் யோசனையில் ஆழ்ந்தது. 'வந்துள்ள பிரபுக்களோ அவர் வரவேமாட்டாரென்று அபசகுனம்போற் சொல்லுகிறார்கள். அவரிடத்தில் எல்லோருக்கும் அச்சம் இருக்கிறது. யாரை அனுப்பலாம்?' என்று தினமும் எண்ணி எண்ணிக் கவலையுற்றார். அப்பொழுது சுப்பிரமணிய தேசிகர் தம் ஆசிரியருடைய திருவுள்ளம் ஏதோ ஒரு விஷயத்தைக் குறித்துக் கவலையுறுவதாக அறிந்து சென்று, "ஸந்நிதானம் எதைப்பற்றி யோசிக்கிறது ?'' என்று கேட்டார். அவர் கவலையின் காரணத்தைக் கூறினார்.
சுப் : இது தானா பெரிய விஷயம்! யாராயிருந்தாலென்ன? நமச்சிவாய மூர்த்தியின் திவ்யப் பிரசாதத்தை விரும்பாதவர்களும் இருக்கிறார்களா? இந்தப் பிரபுக்களெல்லாம் அவரைப் பார்க்கவும் பேசவும் முடியா விட்டால் ஒருவராலும் அது முடியாதென்று நினைத்து விடுவது சரியா!
அம்பல : அப்படி இல்லை. அவர் வேறு எந்த இடத்திற்கும் போவதில்லையாமே.
சுப் : இருக்கட்டும். அதற்கேற்றவர்கள் நம்மிடத்தில் இருக்கிறார்கள். அவர்களைக் கொண்டு காரியத்தை முடித்துக் கொள்ளலாம்.
அம்பல : அப்படிப்பட்ட ஒருவரும் நம்மிடத்தில் இருப்பதாகத் தெரியவில்லையே. பெரிய பிரபுக்களே போவதற்கு நடுங்கும்பொழுது யார் அவரைப்போய்க் காண்பார்கள்?
சுப் : இந்தப் பிரபுக்களால் ஆகாத காரியங்களை அடியேன் குறிப்பிட்டவர்கள் செய்து விடுவார்கள்.
அம்பல : யார் அவர்?
சுப் : நம் ஆதீன மகா வித்துவான் பிள்ளையவர்களை அனுப்பினால் ரங்கசாமி பிள்ளை அவசியம் தரிசனத்திற்கு வருவார். இவர்களை அறியாதவர்களும் மதியாதவர்களும் இல்லை.
அம்பல் : இவர் பரம ஸாதுவாய் இருக்கிறாரே! இவரைக் கண்டால் அந்த அதிகாரி மதிப்பாரா? மதிப்பாரென்று எனக்குத் தோற்றவில்லை.
சுப் : அப்படி நினைக்கக்கூடாது. இவர்களை மதியாதவர் இந்தத் தமிழ் நாட்டில் எங்கும் இல்லை. அந்த ரங்கசாமி பிள்ளையல்ல; அவருக்குமேல் எவ்வளவு பெரியவராயிருந்தாலும் இவர்களை அசட்டை செய்யார். ஸந்நிதானம் அதைப்பற்றி எள்ளளவும் கவலைப்பட வேண்டாம்.
அம்பலவாண தேசிகருக்கு அந்தப் பிரபுக்கள் சொன்னவை நெஞ்சில் ஊன்றிப் போயிருந்தமையின் சுப்பிரமணிய தேசிகருடைய வார்த்தைகள் அவருக்கு முழு நம்பிக்கை கொடுக்கவில்லை. 'ஆனாலும் பார்ப்போம்' என்று எண்ணி, "அவ்வாறே செய்க'' எனக் கட்டளையிட்டார்.
தஞ்சாவூர் சென்றது.
உடனே சுப்பிரமணிய தேசிகர் பிள்ளையவர்களை அழைத்துத் தஞ்சாவூருக்குச் சென்று எப்படியாவது ரங்கசாமி பிள்ளையைக் குருபூஜா தரிசனத்திற்கு அழைத்துவர வேண்டுமென்றும் அவ்வாறு செய்தால் மஹாஸந்நிதானத்தின் திருவுளத்திற்கு உவப்பாயிருக்குமென்றும் சொல்லிப் பிரயாணத்திற்கு வேண்டிய சௌகரியங்களைச் செய்வித்து அனுப்பினார்.
இவர் அவ்வாறே தஞ்சைக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கே இவருக்குப் பழக்கமானவராகிய இலக்கணம் [1]இராமசாமி பிள்ளை யென்பவரொருவர் இருந்தார். அவர் இவருடைய மாணவர்களுள் ஒருவர்; திருவாவடுதுறைக்கு அடிக்கடி வந்து தமக்கு நூல்களிலுள்ள ஐயங்களைத் தீர்த்துக்கொண்டு செல்வார். அவர் தஞ்சாவூரிலுள்ளவர்களால் நன்கு மதிக்கப்பெற்றவர். அவரைக் கண்டு அவர் மூலமாக எவரையேனும் பார்த்துத் தம்முடைய காரியத்தை முடித்துக்கொள்ளலாமென்று இவர் நினைந்தார். ஆதலினால், வேறு பலர் அவ்வூரிற் பழக்கமுள்ளவர்களாயிருந்தும் அவர்கள் வீட்டிற்குச் செல்லாமல் இராமசாமி பிள்ளை வீட்டிற்குச் சென்று தங்கினார் அப்பொழுது அவர் வீட்டில் இல்லை. சிறிது நேரங் கழித்தபின் அவர் வந்தார். தம் வீட்டில் இவரைக் கண்டவுடன் வியப்புற்று, “என்ன மாதவஞ் செய்ததிச் சிறுகுடில்” என்று கூறி க்ஷேம சமாசாரங்களை விசாரித்துவிட்டு உபசாரங்கள் செய்து வேண்டிய பொருள்களை உதவி உடன் வந்த தவசிப் பிள்ளைகளைக் கொண்டு விருந்தமைக்கச் செய்தனர். இவர் ஆகாரம் செய்து விட்டு நெடுநேரம் பேசிக்கொண்டேயிருந்து சயனித்துக் கொண்டார்.
விடியற்காலையில் எழுந்து தனியே இருவரும் வெளியில் உலாவச் சென்றார்கள். அப்பொழுது இவர் இராமசாமி பிள்ளையை நோக்கி, "இந்த ஊருக்குப் புதியவராக வந்திருக்கும் பிரின்ஸிபல் ஸதர்மீனவர்களைத் திருவாவடுதுறைக் குருபூஜா தரிசனத்திற்காக அழைத்துச் செல்லவந்திருக்கிறேன். யார் மூலமாக முயன்றால் இது கைகூடும்? எப்படியாவது இக்காரியத்தை நிறைவேற்றித் தரவேண்டும்” என்றனர். அவர், “ரங்கசாமி பிள்ளையவர்கள் யாரையுமே பார்க்கிறதில்லை. எவ்விடத்திற்குமே செல்லுகிறதில்லை. ஆனாலும் நான் மட்டும் அவர்களுடைய ஓய்வு நேரத்திற் சென்று திருவிளையாடல், பெரிய புராணம் முதலியவற்றைப் படித்துக்காட்டி வருவதுண்டு. தமிழிலும் தமிழ்வித்துவான்களிடத்திலும் பிரீதியுடையவரே. தாங்களே வந்திருக்கும்போது இக்காரியம் நிறைவேறுவதற்கு என்ன தடை இருக்கின்றது? அடியேன் முந்திச் சென்று அவரிடத்தில் தங்களுடைய நல்வரவைத் தெரிவித்துவிட்டு வருவேன். அடியேன் வரமுடியா விட்டாற் சொல்லியனுப்புவேன். அந்தப்படி வரவேண்டும்” என்று சொல்லிவிட்டுத் தாம் மட்டும் அங்கே சென்றார். இவர், தேடிப்போன மருந்துக் கொடி காலில் அகப்பட்டது போலக் காரியம் முடிவதற்கு ஏற்றவரிடமே வந்து சேர்ந்தோமே. வேறொருவரிடத்தும் செல்லாதிருந்தது நன்மையாய்விட்டது' என்று காலவிசேடத்தை எண்ணி மகிழ்ந்தார்.
இராமசாமி பிள்ளை சென்று ரங்கசாமி பிள்ளையைக் கண்டார். அவர் வழக்கம்போலவே கையிற் புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு பாடங்கேட்கத் தொடங்கினார்.
இராம: ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லப்போகிறேன். அதற்கு அவகாசம் கொடுக்கவேண்டும்.
ரங்க : சொல்லலாமே.
இராம : இக்காலத்துக் கம்பரென்று எல்லோராலும் கொண்டாடப்படும் திரிசிரபுரம் மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களைப்பற்றித் தாங்கள் கேட்டிருக்கலாமே. கம்பர் செய்த செய்யுள் பதினாயிரமே. பிள்ளையவர்கள் இதற்குள் செய்திருப்பன எத்தனையோ பதினாயிரம்; இனி எவ்வளவு செய்வார்களோ? அளவிடமுடியாது; நிமிஷகவி; சிவபெருமான் திருவருளைப் பெற்றவர்கள்; ஸரஸ்வதீதேவி அவர்களுடைய நாவிற் குடிகொண்டிருக்கிறாள். எத்தனையோ பேர்களுக்குக் கைம்மாறு கருதாமற் பாடஞ்சொல்லி அவர்களுக்கு வேண்டிய செளகரியங்களைச் செய்வித்து முன்னுக்குக் கொணர்ந்திருக்கிறார்கள், அவர்களைப் போன்றவர்களை நான் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை. நூல்களில் நெடுநாளாக எனக்கு இருந்த பல சந்தேகங்கள் அவர்களாலேதான் தீர்ந்தன. இப்போது அவர்கள் திருவாவடுதுறை மடத்தில் ஆதீன மகாவித்துவானாக இருந்து பலருக்குப் பாடஞ் சொல்லிக்கொண்டு விளங்குகிறார்கள்.
ரங்க : நானும் அவர்களைப்பற்றித் தக்கவர்களாற் கேட்டிருக்கிறேன். பார்க்கவேண்டுமென்ற விருப்பம் எனக்கு மிகுதியாக உண்டு. இந்த உத்தியோக நிர்ப்பந்தத்தால் யாரையும் பார்க்கக் கூடவில்லை; எங்கும் போகக்கூடவில்லை. நான் என்ன செய்வேன்!
இராம : அவர்கள் நேற்று பிற்பகலில் இவ்வூருக்கு வந்து என்னுடைய வீட்டில் தங்கியிருக்கிறார்கள். அவர்களுக்குப் பழக்கமுள்ளவர்கள் எத்தனையோ பேர்கள் இந்த ஊரில் இருந்தும் எனது வீட்டிற்கு வந்தது என்னுடைய பாக்கியமே. அவர்களுடன் நான் தனியே பேசிக்கொண்டிருந்தபொழுது, தங்களைப் பற்றி விசாரித்ததோடு தங்களைப் பார்க்கவேண்டுமென்றும் குறிப்பித்தார்கள். அவர்களிடத்தில் படித்த அநேகர் பெரிய உத்தியோகங்களில் இருக்கின்றனர். மாயூரம் முன்ஸீப் வேதநாயகம் பிள்ளையைத் தங்களுக்குத் தெரிந்திருக்கலாமே. அவரும் அவர்களுடைய மாணாக்கரே. இன்னும் அவர்களிடத்தில் ஒரு விசேஷம் இருக்கிறது. சிலகாலம் அவர்களிடத்தில் படித்தாலே பல வருஷங்கள் படித்து அறியவேண்டியவற்றை அறிந்து கொள்ளலாம். அதனை நான் என் சொந்த அனுபவத்தில் அறிந்திருக்கிறேன். அப்படிப்பட்ட பெரியவர்கள் தங்களைப் பார்க்க விரும்புவது தங்களுடைய புண்ணியமே.
ரங்க : அவர்கள் தங்களுடைய வீட்டில் தானே வந்திருக்கிறார்கள்! நான் அங்கே வந்து பார்க்கலாமா? எப்பொழுது பார்க்கலாம்?
இராம : அவ்வாறு செய்தால் அவர்களுக்கு மிக்க வருத்தமாகவிருக்கும். அவர்கள் தங்கள் கௌரவத்தை நன்கு அறிந்தவர்களாதலால் என்னைக் கோபித்துக்கொள்வார்கள். தாங்கள் பார்க்கலாமென்று சொன்னால் நான் போய் அழைத்து வருகிறேன்; அல்லது தங்கள் மனிதர்களையாவது அனுப்பலாம்.
ரங்க : அப்படிச் செய்வது மரியாதையாகத் தோற்றவில்லை. நானே தான் போய்த் தரிசிக்க வேண்டும்.
இராமசாமி பிள்ளை, "அது தாங்கள் இதுவரையில் வைத்துக் கொள்ளாத வழக்கமாதலால் அவ்விதம் செய்ய வேண்டாம். நானே போய் வருகிறேன்'' என்று சொல்லிப் புறப்பட்டார். ரங்கசாமி பிள்ளை தம்முடைய வண்டியிலாவது அவர்களை அழைத்து வரலாமேயென்று தமது வண்டியை அனுப்பினார். அதில் ஏறிக் கொண்டு இராமசாமி பிள்ளை தம் வீட்டிற்குச் சென்றார்.
ரங்கசாமி பிள்ளையைக் கண்டது.
இராமசாமி பிள்ளை போன காரியத்தை அனுகூலமாக முடித்துக்கொண்டு வரவேண்டுமென்று பிள்ளையவர்கள் தம்முடைய இஷ்ட தெய்வத்தைப் பிரார்த்தித்து அவர் வரவை எதிர்பார்த் துக்கொண்டிருந்தனர். இராமசாமி பிள்ளையைக் கண்டவுடன், ''காயோ? பழமோ?'' என்றார். இராமசாமி பிள்ளை, ''பழந்தான்'' என்று சொல்லி, “அவர் தங்களை இயல்பாகவேயறிந்ருக்கிறார்; தாமே இங்கு வருவதாகச் சொன்னார். அடியேன் தான் அதைத் தடுத்துத் தங்களை அழைத்து வருவதாகச் சொல்லி வந்தேன். இதோ அவர் வண்டி வந்திருக்கிறது. புறப்படலாம்'' என்றார். இவர் மகிழ்ந்து அவ்வாறே புறப்பட்டுச் சென்றார். போகும்போது இராமசாமி பிள்ளை இவரைப் பார்த்து, "அவர் தங்களிடத்தில் மிகப்பிரீதியாகவே இருக்கிறார். அவருடைய அன்பை அதிகப்படுத்துவதற்குத் தங்களுடைய கவித்வம் வெளிப்படவேண்டும். எந்தச் சமயத்தில் நான் எதைச் சொல்வேனோ அதற்குத் தாங்கள் சித்தமாக இருக்கவேண்டும்'' என்று குறிப்பித்து வைத்தார்.
இவருடைய வரவை எதிர்பார்த்துக்கொண்டு வீட்டின் முன்புறத்தில் நின்ற ரங்கசாமி பிள்ளை இவரைக் கண்டவுடன் அஞ்சலி செய்து உள்ளே அழைத்துச் சென்று தக்க ஆதனத்தில் இருத்திப் புஷ்பமாலை சூட்டிச் சிறந்த பழவர்க்கங்களை முன்வைத்து வந்தனம் செய்தார். செய்து, ''ஐயா, பெரிய அரசர்களெல்லாம் மதித்துப் பாராட்டுதற்குரிய பெரும்புலமை வாய்ந்த கவிஞர் பெருமானாகிய தாங்கள் எளியேனை ஒரு பொருட்படுத்தி இந்த வீட்டிற்கு எழுந்தருளியதற்கு அடியேன் பழம்பிறப்பில் என்ன புண்ணியஞ் செய்தேனோ தெரியவில்லை. தங்களுடைய வரவையறிந்து தாங்கள் இருக்கும் இடத்திற்கு வந்து தரிசிக்க எண்ணிய அடியேனை இவர்கள் தடுத்துவிட்டார்கள். அந்தக் குற்றத்தைப் பொறுத்தருள வேண்டும்'' என்றார்.
அப்பொழுது இராமசாமி பிள்ளை இக்கவிநாயகருடைய பெருமையையும் அன்புடைமையையும் பின்னும் சொல்லத் தொடங்கிப் பலவகைச் செயல்களை எடுத்துரைத்தார். பின்பு, ''இவர்களால் பாடப்பெற்ற பாக்கியசாலிகள் பலர்; அந்த விசேடத்தால் அவர்களிற் சிலர் உயர்வடைந்திருக்கிறார்கள். இவர்கள் எந்தச் சமயத்தில் எப்படிக் கேட்டுக் கொண்டாலும் பாடுவார்கள். இப்பொழுது தங்கள் விஷயமாக ஒரு செய்யுள் சொல்லும்படி விண்ணப்பித்துக்கொண்டாலும் உடனே சொல்லிவிடுவார்கள்” என்றார்.
ரங்க : அவர்களுடைய திருவாக்கினால் அடியேனையா பாட வேண்டும்? வேறு எந்த விஷயத்தைக் குறித்தாவது பாடலாமே. பாண்டிநாட்டைச் சிறப்பித்து ஒரு செய்யுள் சொன்னால் போதும்.
இராமசாமி பிள்ளை, '' தங்களையும் பாண்டி நாட்டையும் இணைத்துப் பாடினால் நம் இருவருடைய விருப்பமும் பூர்த்தியாகும்'' என்று சொல்லிவிட்டு, ''எளியேங்கள் விண்ணப்பத்திற்கு இணங்கிப் பாண்டி நாட்டின் சிறப்பும் இவர்கள் சிறப்பும் அமையும்படி ஒரு செய்யுள் இப்பொழுது பாடியருள வேண்டும்'' என்று மிக்க பயபக்தியோடு இவரை நோக்கிக் கேட்டுக்கொண்டார்.
அப்பொழுது தான் இக்கவிஞர் பிரானுக்கு இராமசாமி பிள்ளை எந்தச் சமயத்தில் எது சொன்னாலும் அதனைச் செய்தற்குச் சித்தமாக இருக்கவேண்டுமென்று சொன்னதன் கருத்து விளங்கியது. இராமசாமி பிள்ளை கேட்டுக்கொண்டவுடனே தாமதியாமல் இவர் பின்வரும் செய்யுளைச் சொன்னார் :
விருத்தம்.
“பாமினா ளோடு பூமினாள் விளங்கும் பாக்கியம் படைத்தது நெஞ்சில்
தோமிலா வடியார்க் கருள்புரி யுமையாள் சுந்தர நாயகன் கந்தன்
தாமினா தகற்றி யரசுசெய் பெருமை தாங்கிய திணையிலா வரங்க
சாமியாம் நீதி பதிமுறை நிறுத்தத் தழைத்தது பாண்டிநன் னாடு.''
அதனைக் கேட்ட இராமசாமி பிள்ளைக்கே வியப்பு மிக்கது. அதனை இரண்டாமுறையும் சொல்லும்படி விண்ணப்பித்துக் கொண்டார். இவர் அவ்வாறே சொன்னார். ரங்கசாமிபிள்ளை ஸ்தம்பித்து ஓவியம் போல் நின்றுவிட்டார்; மன உருக்கத்தால் அவர் கண்களிலிருந்து ஆனந்தபாஷ்பம் உண்டாயிற்று; சற்றுநேரம் வியப்பில் மூழ்கியவராய்ப் பேச இயலாமல் நின்றார். பின்பு, "ஒன்றுக்கும் பற்றாத சிறியேனைப் பொருட்படுத்திப் பழக்கமில்லாதவனாக இருந்தும் இவ்வளவு பாராட்டிய தங்கள் பெருங்கருணைக்கு அடியேன் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்? எப்பொழுதும் தங்களை நினைந்து கொண்டேயிருப்பதுதான் என்னுடைய கடமையாகும்'' என்று சொல்லிக்கொண்டே இருக்கும்பொழுது, "ஸ்நானத்திற்கும் பூசைக்கும் நேரமாய்விட்டது'' என்று இராமசாமி பிள்ளை சொன்னார். ரங்கசாமி பிள்ளை உடனே வண்டியில் இவர்களை ஏறச் செய்துவிட்டு இராமசாமி பிள்ளையைத் தனியே அழைத்து, ''அவர்களுக்கு ஆகாராதிகள் சரியாக நடக்கின்றனவா? வேண்டிய செளகரியங்கள் செய்வித்திருக்கக் கூடுமே! அவற்றை நன்றாகக் கவனிக்கவேண்டும். பரமசிவமே இங்கே எழுந்தருளியதாக நான் நம்புகிறேன். நான் அவர்களுக்கு ஏதேனும் தக்க மரியாதை செய்யவேண்டுமென்று எண்ணுகிறேன். என்னுடைய சில மாதச் சம்பளங்களை அவர்களுக்கு அர்ப்பணம் செய்யலாமென்பது என் கருத்து. வேறு என்ன செய்யச் சொன்னாலும் செய்யக் காத்திருக்கிறேன். உங்களையன்றி எனக்கு உற்ற துணை வேறு யாருள்ளார்? அவர்களையும் என்னையும் அறிந்தவர்கள் நீங்களே'' என்று கூறினார்.
இராமசாமி பிள்ளை, ''திரவியத்தில் அவர்களுக்குச் சிறிதேனும் விருப்பமில்லை. கொடுத்தாலும் பெற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனாலும் அவர்களுடைய குறிப்பையறிந்து நான் சாயங்காலம் வந்து தெரிவிக்கிறேன். அதைப்பற்றிச் சிறிதும் நீங்கள் கவலைப்பட வேண்டாம்'' என்று சொல்லிவிட்டுப் பிள்ளையவர்களோடு வீட்டிற்கு வந்தனர்.
பூசையும் போசனமும் ஆன பின்பு இராமசாமிபிள்ளை தக்க பொருளளிக்க வேண்டுமென்று ரங்கசாமி பிள்ளை எண்ணியிருப்பதாக இவரிடம் கூறினார். இவர், ''அவர் திருவாவடுதுறைக்கு வருதலொன்றே எனக்கு எல்லாம் தருதற்குச் சமானம்" என்று சொன்னார். பின்பு ரங்கசாமி பிள்ளை வீட்டிற்கு இராமசாமி பிள்ளை சென்றார். அவர் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரங்கசாமி பிள்ளை, "ஏதாவது தெரிந்ததா?'' என்று கேட்டனர்.
இராம : அவர்களுக்குப் பொருளில் விருப்பமில்லை. அது விஷயத்தில் யாதொரு குறைவுமில்லை. அவர்களுக்குள்ள விருப்பம் ஒன்று தான். அதாவது அவர்களுடைய ஞானாசிரியர்கள் எழுந்தருளியிருக்கும் திருவாவடுதுறை மடத்தில் தை மாதத்தில் நிகழும் குருபூஜா விசேஷத்திற்குத் தாங்கள் வந்து சிறப்பிக்கவேண்டுமென்பதுதான். அங்ஙனம் செய்வதைக்காட்டிலும் திருப்தியளிக்கும் காரியம் அவர்களுக்கு வேறே இல்லை.
ரங்கசாமி பிள்ளை, " அவர்களுக்கும் குருஸ்தானம் இருக்கிறதா? திருவாவடுதுறைக்கு நான் வரவேண்டுமென்று அவர்களுக்கு விருப்பமிருந்தால் அவ்வாறு செய்வதற்கு என்ன தடை இருக்கிறது? அவர்கள் இருக்கிற இடத்திற்கு நான் செல்வதில் யாதோர் அச்சமும் இல்லை. ஆனாலும் குருபூஜா காலத்தில் ஜனக் கூட்டம் அதிகமாக இருக்கக்கூடுமே! அப்போது போய் வருவதைக்காட்டிலும் சாதாரணமான காலத்திற்போய் அவர்களையும் அவர்கள் முகமாக அவர்களுடைய ஆசிரியர்களையும் தரிசித்து வரச் சித்தனாக இருக்கிறேன். தாங்களும் உடன் வரவேண்டும். இந்தச் சமாசாரத்தை அவர்களிடம் தெரிவிக்கலாம். ஆனாலும் இதனால் அவர்களுக்கு என்ன பயன்? என் விஷயத்தில் அவர்கள் செலுத்திய கருணைக்கு நான் கடனாளியாக வல்லவோ இருக்கிறேன்! அதுதான் எனக்கு வருத்தம். நான் வேண்டுமாயின் இப்பொழுதே பிள்ளையவர்களைப் பார்ப்பதற்கு உங்கள் பின்னே வருகிறேன்'' என்றார். இராமசாமி பிள்ளை, "தாங்கள் வரவேண்டாம். அவர்களையே அழைத்து வருகிறேன்'' என்று சொல்லிச் சென்று வண்டியில் பிள்ளையவர்களை அழைத்து வந்தார். ரங்கசாமி பிள்ளை மிக்க மரியாதையோடு இவரை வரவேற்று இருக்கச் செய்து பல உபசார வார்த்தைகளைச் சொல்லிப் பின்பு, "என்னுடைய கடமையை நான் செலுத்தக் கூடாதபடி இராமசாமி பிள்ளையவர்கள் தடுத்துவிட்டார்கள். ஆனாலும் தங்களுடைய கருத்தைப் பூர்த்திசெய்யக் காத்திருக்கிறேன். தங்கள் விஷயத்தில் ஏதேனும் அபசாரம் செய்திருந்தால் பொறுத்தருள வேண்டும். கிருபையிருக்க வேண்டும். மற்றப்படி நான் சொல்லியவற்றை இவர்கள் தெரிவித்திருப்பார்கள்'' என்று சொன்னார்.
அப்போது பிள்ளையவர்கள், "குருபூஜா காலத்தில் தாங்கள் வரவேண்டுமென்பதில்லை. தங்களுடைய இஷ்டப்படியே சாதாரணமான காலத்தில் திருவாவடுதுறைக்கு விஜயம் செய்தாலே போதும்'' என்று சொல்லி விடைபெற்றுக்கொண்டு ஜாகைக்கு வந்து திருவாவடுதுறைக்குப் புறப்பட்டார்; புறப்பட்டவர் இராமசாமி பிள்ளையைப் பார்த்து, ''தம்பிக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன் ? எப்படியாவது இவர்களை அழைத்துக்கொண்டு வரவேண்டும். வரும் சமயத்தை முன்னதாகவே தெரிவிக்கவேண்டும்'' என்று சொல்ல, அவர் அவ்வாறே செய்வதாக ஒப்புக் கொண்டார்.
பின்பு திருவாவடுதுறைக்கு இவர் வந்து நிகழ்ந்த செய்திகளையும் ரங்கசாமி பிள்ளை விரைவில் வரக்கூடுமென்பதையும் சுப்பிரமணிய தேசிகரிடம் தெரிவித்தார். கேட்ட அவர் அம்பலவாண தேசிகருக்கு இதனை விண்ணப்பஞ் செய்தார். அவர், ''ரங்கசாமி பிள்ளை எப்போது வேண்டுமானாலும் வரட்டும்; குருபூஜைக்கு வரவேண்டுமென்பது இல்லை. அவர் மடத்துக்கு வந்து போவதே நமக்குக் கெளரவம். ஆனால் அவர் வந்தபிறகுதான் இது நிச்சயம்; நான் முற்றும் நம்பவில்லை'' என்று கூறினர்.
ரங்கசாமி பிள்ளை மடத்திற்கு வந்து சென்றது.
சிலநாள் சென்ற பின்பு விடுமுறைக்காலம் வந்தமையின், ''அந்தப் பிரபுவை அழைத்துக்கொண்டு இன்ன காலத்தில் தரிசனத்துக்கு வருகின்றேன்'' என்று இராமசாமி பிள்ளையிடமிருந்து இவருக்கு ஒரு கடிதம் வந்தது. இவர் சுப்பிரமணிய தேசிகரிடம். அதைத் தெரிவிக்கவே திருவாவடுதுறையில் அவர் வரவை முன்னிட்டுத் தக்க வசதிகள் அமைக்கப்பட்டன. குறிப்பிட்ட காலத்தில் ரங்கசாமி பிள்ளை வந்தார்; பிள்ளையவர்களை முன்னிட்டுக் கொண்டு பாதகாணிக்கைகளோடும் கையுறைகளோடும் சென்று அம்பலவாண தேசிகரையும் சுப்பிரமணிய தேசிகரையும் முறையே தரிசித்தார்; அவ்விருவருடைய தோற்றத்தையும், அங்கே பலர் படித்துக்கொண்டிருப்பதையும், அன்னதானம் குறைவின்றி நடந்து வருதலையும், பிற சிறப்புக்களையும் கண்டு மகிழ்ந்தார். ''இவ்வளவு காலம் இங்கு வராமல் இருந்துவிட்டோமே!'' என்ற வருத்தம் அப்பொழுது அவருக்கு உண்டாயிற்று; ஆயினும், ''இங்கே வந்ததனால் பல விஷயங்களைத் தெரிந்து கொண்டோம்'' என்ற திருப்தியை அடைந்தார். தலைவர் கொடுக்கும் எதிர்மரியாதையொன்றும் பெறாமல் திருநீற்றுப் பிரசாதத்தை மட்டும் பெற்றுப் பிள்ளையவர்களிடமும் விடைபெற்றுக்கொண்டு இராமசாமி பிள்ளையுடன் தஞ்சை வந்து சேர்ந்தார்.
அப்பால் அம்பலவாண தேசிகருக்குப் பிள்ளையவர்களிடத்து மிக்க மதிப்பும் கருணையும் உண்டாயின. ''இவர் இருப்பது மடத்திற்குக் கெளரவமென்று சின்னப்பண்டாரம் சொன்னது சரியே. இவருக்கு என்னதான் செய்விக்கக்கூடாது!'' என்று எண்ணிக் காறுபாறு முதலிய மடத்து உத்தியோகஸ்தர்கள் பலரையும் அழைத்து, ''இவருக்கு எந்தச்சமயத்தில் எது வேண்டுமாயினும் குறிப்பறிந்து கொடுக்கவேண்டும்; யாதொரு குறையுமின்றி இவரைப் பாதுகாத்து வரவேண்டும்'' என்று கட்டளையிட்டார்.[2]
சுப்பிரமணிய தேசிகர் இவருடைய கெளரவத்தை நன்றாக அறிந்தவராதலின் அதனை அம்பலவாண தேசிகருக்கும் மடத்திலுள்ள பிறருக்கும் எப்படியாவது அறிவிக்க வேண்டுமென்னும் விருப்பமுடையவராக இருந்தார். யாரேனும் தக்க பிரபுக்கள் தரிசனத்தின் பொருட்டு மடத்திற்கு வந்தால் அவர்கள் பிள்ளையவர்களையும் பார்த்துச் செல்வது வழக்கம். அவ்வாறு பிரபுக்களெல்லாம் இவர்பால் மதிப்பு வைத்திருப்பதை அவ்வப்போது சுப்பிரமணிய தேசிகர் அம்பலவாண தேசிகருக்கு அறிவித்து வருவார். அன்றியும் வந்த பிரபுக்களும், " இத்தகைய மகாவித்துவானை ஆதரித்து வருதலும் இவர்களைக் கொண்டு மாணவர்களுக்குப் பாடம் சொல்வித்து வருதலும் மடத்திற்கு ஏற்ற தருமங்களேயாகும். இந்த வித்துவானால் மடத்தின் புகழ் மிகுதிப்படும்'' என்று தலைவரிடம் சொல்லிப் போவார்கள். இவற்றாலும் அம்பலவாண தேசிகருக்குப் பிள்ளையவர்கள்பால் மதிப்பு அதிகரித்து வந்தது.
[3]பாலைவனப் பதிற்றுப்பத்தந்தாதி.
அப்பால் ஒரு சமயம், வழுவூருக்கு அருகில் தென்கிழக்கிலுள்ள பாலையூரென்னும் ஸ்தலத்தில் எழுந்தருளியிருக்கிற சிவபெருமான் விஷயமாக அவ்வூர் வைத்தியலிங்க உடையாரென்னும் ஓரன்பர் கேட்டுக்கொள்ள இவரால் ஒரு பதிற்றுப்பத்தந்தாதி இயற்றப்பெற்றது. அது, 'பாலைவனப் பதிற்றுப்பத்தந்தாதி' என வழங்கும்.
அந்நூற் செய்யுட்களிற் சில வருமாறு:-
கலிநிலைத்துறை.
“சொல்லத் தக்கது நின்புகழ் அடிமையிற் றுனைந்து
புல்லத் தக்கது நின்கழல் புண்ணிய மிகையால்
வெல்லத் தக்கது மலந்திருப் பாலையூர் விமலா
கொல்லத் தக்கது கூற்றினை நலங்குறிப் பவரே.'' (58)
விருத்தம்.
“அடையானை யுரிபோர்த்த பெருமானை யொருமானை அங்கை யேந்தும்
சடையானை வெஞ்சூலப் படையானை யுலகமெனத் தக்க யாவும்
உடையானை நெடும்பாலை வனத்தானை யெழுவிடையும் ஒருங்கு சாய்த்த
விடையானைப் பூசிக்கப் பெற்றவரே நற்றவர்மேன் மேலுந் தானே.'' (93)
-------
[1]. இவர் பின்பு கொழும்பு ஸர். பி. இராமநாத முதலியாருக்கு ஞானாசிரியராக விளங்கினவர்; இஃது அம்முதலியாருடைய சரித்திரத்தால் விளங்கும்.
[2]. இச்செய்திகள் தஞ்சை இராமசாமி பிள்ளையாலும் பிள்ளையவர்களாலும் தெரிந்தன.
[3]. ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டு, 2339-2440.
--------------
23. கும்பகோண நிகழ்ச்சிகள்.
சாமிநாததேசிகர்.
இவருடைய மாணாக்கர்களாகிய புரசவாக்கம் பொன்னம்பல முதலியாரும், கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர் குமாரராகிய சாமிநாத தேசிகரும் கும்பகோணம் காலேஜில் ஒருவர் காலத்திற்குப்பின்பு ஒருவர் தமிழ்ப்பண்டிதராக நியமிக்கப்பெற்று வேலை பார்த்துவந்தார்கள். அவர்களுடைய விருப்பத்தின்படி அந்தப்பக்கம் செல்லுங் காலங்களிற் கும்பகோணத்திற் சிலநாள் இவர் இருந்து வருவதுண்டு. அதனால் அங்கே காலேஜில் இங்கிலீஷ் உபாத்தியாயராக இருந்து நாடெங்கும் புகழ்பெற்று விளங்கிய ராவ்பகதூர் தண்டாலம் கோபாலராயரவர்களுடைய பழக்கம் இவருக்கு மிகுதியாக உண்டாயிற்று. நான் அந்தக் காலேஜில் வேலையாக இருந்தபொழுது ராயரவர்கள் இவருடைய கல்வி மிகுதியையும் கம்பீரமான தோற்றத்தையும் ஆற்றலையும் பற்றிச் சொல்லிப் பாராட்டிவிட்டு, “அவர்களுடைய நெற்றி விசாலத்தைக் கண்டபொழுதே சிறந்த அறிவாளியென்பதைக் கண்டுகொள்ளலாம்” என்றும் சொன்னார்கள்.
ஒருசமயம் திருவநந்தபுரம் திவான் மாதவராயரவர்களிடமிருந்து அந்நகரிலுள்ள மகாராஜா காலேஜிற்கு ஒரு தமிழ்ப் பண்டிதர் வேண்டுமென்றும் அவருக்குத் தக்க செளகரியங்கள் பண்ணிவைக்கக் கூடுமென்றும் கோபாலராயருக்குக் கடிதம் வந்தது. காலேஜில் அப்பொழுது பண்டிதராக இருந்த சாமிநாத தேசிகரை அவர் அழைத்து, "அவ்வேலைக்குத் தக்க பண்டிதர்கள் கிடைப்பார்களா?'' என்று கேட்கவே, தேசிகர், "என்னுடைய ஆசிரியராகிய பிள்ளையவர்கள் வந்திருக்கிறார்கள்; அவர்களைக் கேட்டுச் சொல்லுகிறேன்'' என்றார். ''அப்படியா? அவர்கள் இங்கே வந்திருக்கிறார்களா?'' என்று சொல்லிப் பின்பு ராயரவர்கள் பிள்ளையவர்களைச் சந்தித்து, “மாதவராயரவர்களைப் பற்றித் தங்களுக்குத் தெரியுமே. அவர்கள் இப்பொழுது திருவநந்தபுரத்தில் திவானாக இருக்கிறார்கள். தாங்கள் திருவநந்தபுரம் மகாராஜா காலேஜ் தமிழ்ப்பண்டிதர் வேலையை ஒப்புக்கொண்டால் முதலில் மாதவேதனம் ரூ.100 கொடுப்பார்கள். பின்பு வேண்டிய செளகரியங்களைச் செய்து வைப்பார்கள். எங்களுக்கும் கெளரவமாக இருக்கும். ராஜாங்க வித்துவானாகவும் இருக்கலாம். சமஸ்தானத்திற்கும் கெளரவம் ஏற்படும்'' என்று வற்புறுத்திச் சொன்னார்கள். அப்பொழுது இப் புலவர் பிரான் , "பராதீனனாக இருந்தால் என்னுடைய நோக்கத்திற்கு மிகவும் அஸெளகரியமாக இருக்கும். ஏழைகளாக இருக்கும் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக்கொண்டும், அவர்களுடன் ஸல்லாபஞ் செய்து கொண்டும், காவேரிஸ்நானமும் சிவதரிசனமும் செய்துகொண்டுமிருப்பதே எனக்குப் பிரியமான காரியமாக இருக்கின்றது. சாதாரண ஜனங்களோடு பழகுதல் தான் இன்பத்தை விளைவிக்கும். திருவாவடுதுறை மடத்தில் எல்லாவிதமான சௌகரியங்களும் இப்பொழுது கிடைக்கின்றன'' என்று தமக்கு உடன்பாடின்மையைத் தெரிவித்தனர். இவருக்கு வேண்டிய சௌகரியங்களைப் பண்ணிவைக்கலாமென்றெண்ணியிருந்த கோபாலராயர் தம் எண்ணத்தை நிறைவேற்றக் கூடவில்லையேயென்று வருத்தமுற்றார்; பின்பு, "தங்களிடம் படித்த மாணாக்கர்களுள் சிறந்த கல்விமானாகிய ஒருவரைக் குறிப்பிட்டால் நான் அவரைப் பற்றி எழுதி அனுப்புகிறேன்'' என்றார். இவர், "இப்பொழுது தங்கள் காலேஜில் உள்ள சாமிநாத தேசிகரையே அனுப்பலாம். அவர் தஞ்சாவூர் அரண்மனையிலும் சென்னைக் கல்விச்சங்கத்திலும் முன்பு தமிழ்ப்பண்டிதராக இருந்த சிவக்கொழுந்து தேசிகருடைய குமாரர்; என்னிடத்திலும் வாசித்தவர். அவருக்கு அவ் வேலையைச் செய்வித்தால் நன்றாகப் பாடஞ் சொல்லுவார்; எனக்கும் மிகவும் திருப்தியாக இருக்கும்'' என்றார்.
அங்ஙனமே ராயரவர்கள் சாமிநாததேசிகரைப் பற்றித் திருவநந்தபுரத்திற்கு எழுதி அந்தக் காலேஜ் தமிழ்ப்பண்டித வேலையை அவருக்குக் கிடைக்கும்படி செய்தார். அதன் பின்பு சி.தியாகராச செட்டியார் கும்பகோணம் காலேஜில் தமிழ்ப்பண்டிதர் வேலை பார்க்க அமர்த்தப் பெற்றார். அவர் அவ்வேலை பார்க்க ஆரம்பித்தகாலம் : 3-7-1865.
செட்டியார் தமிழ்ப்பண்டிதராக வந்தபின்பு அவர் விருப்பத்தின்படி பிள்ளையவர்கள் அடிக்கடி கும்பகோணம் சென்று சில நாள் இருந்துவிட்டு வருவார்கள். அக்காலங்களில் அந்நகரிலுள்ள பலவகையாரும் வந்து வந்து பிள்ளையவர்களுடைய பழக்கத்தால் தமிழ்ச்சுவையில் ஈடுபட்டு இன்புற்றுச் செல்வார்கள்.
கும்பகோண புராணம் இயற்றத் தொடங்கியது.
அக்காலத்திற் கும்பகோணத்தில் தாசில்தாராக இருந்த சிவகுருநாதபிள்ளை யென்பவரும், பல சைவப் பிரபுக்களும் கும்பகோண புராணத்தை இக்கவிஞர் தலைவரைக் கொண்டு தமிழ்ச் செய்யுளாக இயற்றுவிக்க வேண்டுமென்று எண்ணினார்கள். அவர்களுடைய வேண்டுகோளின்படி குரோதன வருடம் (1865) இவர் திருவாவடுதுறையிலிருந்து கும்பகோணம் சென்று பேட்டைத் தெருவிலுள்ள திருவாவடுதுறை மடத்தைத் தம்முடைய இருப்பிடமாகக் கொண்டு பரிவாரங்களுடன் இருந்தார். கும்பகோணம் புராணத்தை வடமொழியிலிருந்து முதலில் தமிழ்வசனமாக மொழி பெயர்த்து வைத்துக் கொண்டார். அவ்வாறு மொழி பெயர்த்தற்கு உதவியாயிருந்தவர்கள் ஸ்ரீ சங்கராசாரியர் மடத்து வித்துவானாகிய மண்டபம் நாராயண சாஸ்திரிகள் முதலியவர்கள். பின்பு புராணத்தை இவர் செய்யுள் நடையாக இயற்ற ஆரம்பித்தார். அப்புராணச் செய்யுட்களை இவர் சொல்ல அப்பொழுதப்பொழுது எழுதிக்கொண்டே வந்தவர் இவர் மாணாக்கருள் ஒருவராகிய திருமங்கலக்குடி சேஷையங்காரென்பவர்.
அந்தப் புராணத்தில் சிறுசிறு பகுதிகள் ஒவ்வொருநாளும் இயற்றப்பட்டு அன்றன்று பிற்பகலில் ஸ்ரீ ஆதி கும்பேசுவரருடைய ஆலயத்தின் முன் மண்டபத்தில் அரங்கேற்றப்படும். அரங்கேற்றுகையிற் பலர் வந்து கேட்டு இன்புற்றுச் செல்வார்கள்; அங்கே தியாகராச செட்டியாரும் நாடோறும் தவறாமல் வந்து கேட்டு மகிழ்வார். அந்நகரில் நிகழும் விசேஷங்கட்கு வரும் மகா வைத்தியநாதையரும் அவர் தமையனாரும் இடையிடையே வந்து கேட்டு இன்புறுவார்கள். சிவகுருநாதபிள்ளையே சபாநாயகராக இருந்து அரங்கேற்றத்தை நடப்பித்து வந்தார்.
அப்பொழுது சிவகுருநாத பிள்ளையுடன் பல உத்தியோகஸ்தர்களும் தினந்தோறும் வந்து கேட்டுச் சிறப்பிப்பாராய்ச் செய்யுட்களின் சுவையை அறிந்து சந்தோஷம் அடைந்து வந்தனர். இங்ஙனம் முயன்ற சிவகுருநாத பிள்ளையின் கௌரவம் நாளுக்குநாள் அதிகரிக்கத் தொடங்கியது.
சிவகுருநாத பிள்ளையின் மனம் வேறுபட்டது.
இப்படி இருக்கையில், பிள்ளையவர்கள்பால் அழுக்காறுள்ள வேறு மதத்தினராகிய ஒருவர், 'சிவகுருநாத பிள்ளையாலேயே இவருக்குக் கெளரவம் உண்டாகிவருகின்றது. அவருடைய ஆதரவை நீக்கிவிட்டால் எல்லாம் ஓய்ந்துவிடும்' என்று தம்முள் நிச்சயஞ்செய்து கொண்டு தனித்த சமயத்திற் சென்று சிவகுருநாத பிள்ளையைப் பார்த்தனர்.
சிவ : இப்பொழுது பிள்ளையவர்கள் அரங்கேற்றும் புராணப் பிரசங்கத்திற்கு நீங்கள் வரவில்லையே. பலபேர்கள் வந்து கேட்டுச் சந்தோஷித்துச் செல்லுகின்றார்கள். நீங்கள் மட்டும் ஏன் வரவில்லை?
வந்தவர் : வேலை மிகுதியால் வர இயலவில்லை. இது சம்பந்தமாகச் சில விஷயங்கள் எனக்குத் தெரிந்தமையால் அவற்றைச் சொல்லிப் போவதற்குத்தான் இப்போது வந்தேன். அவை கவனிக்க வேண்டியவையே.
சிவ : என்ன விஷயம்? சொல்லவேண்டும்.
வந்தவர் : பிள்ளையவர்கள் சிறந்த வித்துவானென்பதற்கும் அவர்களால் இயற்றப்படும் நூல் மிகச்சிறந்ததென்பதற்கும் அதனால் ஊரிலுள்ளவர்கள் சந்தோஷிக்கின்றார்களென்பதற்கும் யாதொரு ஸந்தேகமும் இல்லை. ஆனாலும் இப்பொழுது நான் கேள்விப்பட்ட சிலவற்றைத் தங்களிடத்தில் உண்மையான அன்புடையனாதலால் சொல்ல வந்தேன். சொல்லலாமென்றாற் சொல்லுகிறேன்.
சிவ: அவசியம் சொல்லவேண்டும்.
வந்தவர் : ஊரிலுள்ள வர்த்தகர்களும் பிறரும் இந்தப் புராணம் அரங்கேற்றி முடிந்தவுடன் தாங்கள் மிகுதியாகச் சம்மானம் செய்ய உத்தேசித்திருப்பதாகவும் அதற்காகத் தாங்கள் தங்களைப் பொருள் கேட்கக் கூடுமென்றும் பேசிக்கொள்கிறார்கள். நாடோறும் போய் உடனிருந்து பிள்ளையவர்களிடம் தாங்கள் அளவிறந்த பிரீதி பாராட்டுவதும் அந்த அபிப்பிராயத்தைப் பெருக்கி விட்டது. எல்லோரும் தாங்கள் என்ன கேட்பீர்களோ என்று எண்ணி அங்கங்கே கூடிக் கூடிப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பிரஸ்தாபம் நேற்றுக் கலெக்டராபீஸ் சிரஸ்தேதார் வீட்டிலும் நான் போயிருந்தபொழுது நடந்தது. கோள் விண்ணப்பம் எழுதுவதில் வல்லவர்கள் சிலர் இந்த ஊரில் இருப்பது தங்களுக்குத் தெரிந்தது தானே. எனக்கு அதைப்பற்றி யோசனையாகத் தான் இருக்கிறது. முக்கியமானவர்கள் யாரிடத்திலாவது இதை மேற்போட்டுக் கொள்ளும்படி ஒப்பித்துவிட்டுத் தாங்கள் மெல்ல விலகிவிட்டால் நல்லதென்பது என்னுடைய அபிப்பிராயம். தாங்களும் இதைப்பற்றி நன்றாக யோசிக்கவேண்டும். சில வார்த்தைகளை நான் சொல்லிவிட்டேனேயென்று குற்றமாக நினைக்கக் கூடாது. தங்கள் நன்மைக்காகத்தான் சொன்னேன்.
சிவ குருநாத பிள்ளை, “யோசித்துப் பார்த்தால் நீங்கள் சொல்வது மிகச் சரியென்றே எனக்குப் படுகிறது. நான் யோசியாமல்தான் இத்துறையில் இறங்கி விட்டேன். எதையும் யோசித்துத்தான் செய்யவேண்டுமென்று பெரியவர்கள் சொல்வார்கள். ஏதோ நல்ல விஷயமாயிற்றே என்று என் மனந் துணிந்தது. நீங்கள் இந்த விஷயத்தை எடுத்துச் சொன்னதைக் குறித்து நான் தங்கள்பால் நன்றியறிவுடையவனாக இருக்கிறேன். இனிமேல் ஜாக்கிரதையாகத்தானிருப்பேன். இது சம்பந்தமாக ஏதேனும் காதில் விழுந்தால் உடனே வந்து எனக்குத் தெரிவிக்கவேண்டும்'' என்று அவரை அனுப்பிவிட்டார். நிஷ்கபடியாதலால் மனம் வேறுபட்டுச் சிவகுருநாதபிள்ளை, 'யோசியாமற் செய்த இந்தச் செயல் என்ன விபரீதத்தை விளைவித்துவிடுமோ' என்று திகிலடைந்தவராகி மனக்குழப்பமுற்று எப்படியாவது இந்தச் சம்பந்தத்தை இன்றோடே விட்டுவிடவேண்டுமென்று நினைத்துக்கொண்டேயிருந்து ஸ்நானம் செய்து ஆகாரம் செய்யச் சென்றார். மனக்கவலையினால் அவருக்கு ஆகாரம் செல்லவில்லை. ஒருவாறு முடித்துக்கொண்டு கச்சேரிக்குப் போனார். அவருக்கு ஒரு வேலையிலும் புத்தி செல்லவில்லை. கச்சேரிவேலையானவுடன் வழக்கம்போல் அரங்கேற்றம் நடைபெறுகின்ற இடத்திற்குப் போகாமல் வீட்டிற்கே வந்துவிட்டார்; வந்து சாய்வு நாற்காலியிற் சாய்ந்து யோசித்துக்கொண்டே இருந்தனர். பிரசங்கம் கேட்பதற்கு வழக்கப்படி போகக்கூடுமேயென்று மாட்டை யவிழ்த்து விடாமல் வண்டிக்காரன் காத்துக்கொண்டிருந்தான்; அதை வேலைக்காரன் வந்துசொல்ல அவர், "இப்பொழுது போகவில்லை” என்று சொல்லிவிட்டார்.
கோயிலிற் புராணப் பிரசங்கம் ஆரம்பிக்க எண்ணிய பிள்ளையவர்கள் சிவகுருநாத பிள்ளையின் வரவை நெடுநேரம் எதிர்பார்த்தும் வாராமையால் அன்று நடத்த வேண்டிய ஒரு பகுதியை நடத்தி முடித்தார். விசாரித்ததில் ஏதோ அஸெளக்கியமாக இருத்தலால் சிவகுருநாத பிள்ளை வரவில்லை என்று ஒரு செய்தி இவர் காதுக்கு எட்டியது.
அப்பால் மறுநாட் காலையில் இவர் அவரைப் பார்ப்பதற்கு அவருடைய வீட்டிற்குச் சென்றார்; சென்றவர் தாமே ஒரு நாற்காலியிலமர்ந்தார். கண்ட அவர் எப்பொழுதும் போல முகமலர்ச்சியோடு இவரை நோக்குதலின்றித் தலைப்பொட்டைக் கையாற் பிடித்துக்கொண்டு யோசித்த வண்ணமாக இருந்தார். மிகுதியான வேலையுள்ளவர்போலப் பின்பு கையை எடுத்துவிட்டு அங்கேயிருந்த ஏதோ ஒரு புத்தகத்தை அடிக்கடி புரட்டிப் பார்த்துக் கொண்டும் கடிதங்களை எழுதி எழுதிக் கிழித்துக் கிழித்து அயலில் வைத்திருந்த பெட்டியில் எறிந்து கொண்டும் இருந்தார்; முகங் கொடுக்கவுமில்லை; முதல்நாள் வாராமைக்குக் காரணம் சொல்லவுமில்லை.
அந்த நிலையைக்கண்ட இவர், 'இனி நாம் பேசாமல் இருப்பது முறையன்று' என்றெண்ணி, ''உங்களுக்கு என்ன அசௌகரியம்? நேற்று மாலையில் அரங்கேற்றுமிடத்திற்கு நீங்கள் வாராதிருந்தது ஒரு குறைவாகவே இருந்தது. நெடுநேரம் பார்த்தும் நீங்கள் வாராமையால் ஆரம்பித்து முடித்துவிட்டேன். தேகஸ்திதி உங்களுக்கு ஸெளக்கியமாக இல்லையென்று கேள்வியுற்றேன். இப்பொழுது என்ன நிலையிலிருக்கிறதென்று பார்ப்பதற்கு வந்தேன்'' என்றார்.
சிவகுருநாத பிள்ளை, ''நான் உங்களிடம் சில வார்த்தைகள் சொல்ல எண்ணிக் கொண்டிருக்கையில் நீங்களே வந்துவிட்டீர்கள். நான் சொல்வதைப் பொறுமையாகக் கேட்கவேண்டும். நான் மற்றவர்களைப்போலக் கைநீளம் உடையவனல்லன். எலுமிச்சம் பழங்கூட யாராவது கொண்டுவந்து கொடுத்தால் வாங்கமாட்டேன். ஏதோ நல்ல காரியமென்று சில பேருடைய போதனையின்மேல் இத் துறையில் இறங்கினேன். நீங்கள் ஏதோ என்னுடைய முயற்சியினால் தான் புராணம் நடைபெறுகிறதென்று பல இடங்களிற் பிரஸ்தாபிப்பதாகவும் சிலர் என்னுடைய நிர்ப்பந்தத்திற்காகப் புராணத்திற்கு நன்கொடையளிக்கப் போவதாகவும் நான் கேள்வியுற்றேன். எனக்கு அது வருத்தத்தைத் தந்தது. அவர்கள் பிரஸ்தாபித்தாலும் நான் இந்த விஷயத்தில் அதிக முயற்சியுடையவனாயிருக்கிறேனென்று நீங்கள் சொல்லலாமா? நான் சில பேரை நிர்ப்பந்திப்பதாக மேலதிகாரிகள் அறிவார்களாயின் என் உத்தியோக நிலைக்கு அது பரம விரோதமல்லவா? நான் ஒழுங்காக இருந்து காலங்கழித்துப் பென்ஷன் வாங்கவேண்டியவனல்லவா? என் சம்பந்தத்தை இன்று முதல் நிறுத்திக்கொள்ளுகிறேன். வேறு யாரைக் கொண்டேனும் தாங்கள் தக்க செளகரியங்கள் செய்வித்துக்கொள்ளுங்கள். இனி என்னைப்பற்றிய பிரஸ்தாபத்தையே செய்யவேண்டாம்'' என்று அதிகப் படபடப்பாகச் சொன்னார். பிள்ளையவர்கள் ஏதாவது சமாதானம் சொல்லக் கூடுமென்பதை அவர் எதிர்பாராமலே பேசினார். கேட்ட பிள்ளையவர்கள் பரம சாந்தமூர்த்தியாக இருந்தாலும் மிகுந்த குற்றம் செய்யினும் குணமெனக்கொண்டு வாழ்பவர்களாகவிருந்தாலும் திங்களுள் தீத் தோன்றியது போல் மிக்க கோபமுற்றவர்களாகி, ‘இவருடைய சம்பந்தத்தை ஏன் யோசியாமல் நாம் பெற்றோம்! இந்த வார்த்தைகளைக் கேட்கும்படி நேரிட்டது முற்பிறப்பிற் செய்த தீவினையின் பயனே!' என்று நினைந்து , ''ஐயா! நான் உங்களையே நம்பிக்கொண்டு இவ்வூருக்கு வரவில்லை. அந்த வழக்கமும் எனக்கு இதுவரையில் கிடையாது. அன்புள்ளவர்கள் எவ்வளவு ஏழைகளாக இருந்தாலும் அவர்களை மதிப்பேனேயன்றி, அன்பில்லாதவர்கள் குபேர சம்பத்தை உடையவர்களாக இருந்தாலும் மதியேன். உங்களாலே நான் கெளரவத்தையடைய வேண்டுமென்பதில்லை. இயல்பாகவே இருக்கிற கெளரவம் எனக்குப் போதுமானது. உங்களைக்காட்டிலும் எவ்வளவோ மேலான அதிகாரத்தில் இருப்பவர்கள் கூட என்னிடத்தில் அன்பு பாராட்டி வருகிறார்கள். என்னை இத் தமிழ்நாடு முற்றும் அறியுமன்றோ? உங்கள் பெயரைச் சொல்லித்தானா நான் ஜீவிக்கவேண்டும்? உங்களுடைய தயைதானா எனக்கு வேண்டும்? என்னை நீங்கள் சிறிதும் அறியவில்லையே. நீங்கள் இனி இதில் சம்பந்தப்படுவதாயிருந்தாலும் நான் விரும்பேன். உங்களுடைய சம்பந்தத்தை இன்றே இப்பொழுதே அடியோடே விட்டுவிட்டேன்” என்று சொல்லிவிட்டு உடனே எழுந்து கூடவந்தவர்களோடும் புறப்பட்டுத் தம்முடைய விடுதிக்கு வந்து விட்டார். அன்றைத் தினம் இவருக்கு வந்த கோபத்தையும், நடந்த விஷயத்தையும் உடனிருந்த சில பெரியோர்கள் சொல்லிப் பிற்காலத்தில் ஆச்சரியப்பட்டதை நான் கண்டிருக்கிறேன்.
அப்பால் சிவகுருநாத பிள்ளை இவர் சொல்லிய வார்த்தைகளைக்கேட்டு அச்சங்கொண்டு இவருடைய கோபம் தமக்கு என்ன தீங்கை விளைவிக்குமோ என்றெண்ணித் தமக்கு நம்பிக்கையுள்ள ஒருவரை அழைத்து, "நீர் திருவாவடுதுறைக்கு இப்பொழுதே சென்று சுப்பிரமணிய தேசிகரவர்களிடம் அவர்களாதீன வித்துவானாகிய மீனாட்சிசுந்தரம் பிள்ளை, என்னிடத்தில் மிகுந்த கோபம் உடையவராயிருக்கிறாரென்றும் மரியாதையாக நடந்து கொள்ளவில்லை யென்றும் என்னைப் பார்த்துத் தாறுமாறாக
அவர் பேசிவிட்டாரென்றும் என்னிடம் மரியாதையாக நடக்கும்படிக்கும் கோபமில்லாமலிருக்கும்படிக்கும் அவருக்குக் கட்டளையிட வேண்டுமென்றும் சொல்லி வரவேண்டும்'' என்று சொல்லி அனுப்பினார். அவர் அவ்வண்ணமே சென்று தெரிவித்தார். உடனே ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர், ''எதிர்பாராத விபரீதச் செயல் ஏதோ நடந்திருக்கிறதே. பிள்ளையவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக நடந்து கொள்ளுவார்களே; எப்படியேனும் சமாதானம் செய்விக்க வேண்டும்'' என்று எண்ணி, ஆதீன வித்துவான் தாண்டவராயத் தம்பிரானிடத்திற் படித்தவரும் சொல்வன்மையுடையவரும் ஆகிய விசுவலிங்கத் தம்பிரானென்பவரை அழைத்து, “சிவகுருநாத பிள்ளைக்கும் பிள்ளையவர்களுக்கும் ஏதோ மன வருத்தம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அதை நீக்கிவிட்டு வரவேண்டும்'' என்று சொல்லி அனுப்பினார். அவர் சிவகுருநாத பிள்ளை வீட்டிற்கு வந்து அவரைக் கண்டார்.
கண்டவுடன் சிவகுருநாத பிள்ளை , ''உங்கள் மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்னிடத்தில் மரியாதையின்றி நடந்து கொண்டார்; அளவுக்கு மேற் பேசினார். என்னுடைய கௌரவத்தை அவர் அறிந்து கொள்ளவில்லை. அவரைக் கண்டிக்கவேண்டும். இவ்வூரில் இருக்கும்வரையில் என்னிடத்தில் மரியாதையுடன் நடந்துகொள்ளும்படி சொல்லிவிட்டுப் போகவேண்டும். அவர் உங்களுடைய ஆதீன வித்துவானல்லவா?'' என்றார்.
விசுவலிங்கத் தம்பிரான், ''நிகழ்ந்தவற்றையெல்லாம் சந்நிதானம் கட்டளையிடத் தெரிந்து கொண்டேன். மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களை நீங்கள் இன்னும் நன்றாகத் தெரிந்துகொள்ளவில்லையென்று எனக்குத் தோற்றுகின்றது. அவர்கள் சாமானியமானவர்களா? பழைய காலத்தில் இருந்த கம்பர், ஒட்டக்கூத்தர் முதலியவர்களைப் போன்றவர்கள். அவர்கள் இருப்பதால் மடத்திற்குக் கெளரவமேயன்றி மடத்திலிருப்பதால் தனியாக அவர்களுக்கு ஒரு கெளரவமும் ஏற்படவில்லை. மடத்து வேலைக்காரர்களாகவாவது மடத்துக்கு அடங்கியவர்களாகவாவது அவர்களை நினைக்கக்கூடாது. அவர்கள் அவதார புருஷர்கள்; ஏதோ பக்தி விசேஷத்தால் மடத்திற்கு வந்து பாடஞ் சொல்லிக் கொடுக்கிறார்களேயன்றி மடத்தின் அதிகாரத்திற்குள் அடங்கி அவர்கள் இருக்கவில்லை. மடத்திலிருந்து அவர்களுக்குச் சம்பளம் யாதும் கொடுக்கப்படவில்லை. அவர்களுக்கு வேண்டிய சௌகரியங்கள் மட்டும் கவனிக்கப்பெற்று வருகின்றன. நாங்கள் அவர்களைக் கண்டிக்க இயலாது. ஒருபொழுதும் நடவாத விஷயம் இது. அவர்கள் மரியாதை ஒன்றுக்கே கட்டுப்பட்டவர்கள். பெரிய அதிகாரிகளெல்லாம் அவர்களிடம் மரியாதையாக இருப்பார்கள். தமிழ்நாடு முழுவதிலும் அவர்களுக்குச் செல்வாக்குண்டு. எல்லோரும் தமிழ்த் தெய்வமாக அவர்களை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்; எல்லோரிடத்திலும் மிகவும் மரியாதையாக அவர்கள் நடப்பார்கள். அவர்களுக்கு மன வருத்தமுண்டாகும்படி தாங்களே நடந்திருக்கலாமென்று தோற்றுகிறது'' என்று பின்னும் பிள்ளையவர்களுடைய பெருமையைச் சொல்லி வருகையில், சிவகுரு நாத பிள்ளை, 'பிள்ளையவர்களால் நமக்கு என்ன என்ன விபரீதங்கள் உண்டாகுமோ' என்று அச்சத்தையும் முன்னையினும் அதிகக் கவலையையும் அடைந்து, “ஒன்றையும் கவனியாமல் அவர்களிடத்தில் தாறுமாறாகப் பேசிவிட்டேனே! என்னுடைய கால வித்தியாசத்தால் இந்தச் சிக்கலில் அகப்பட்டுக்கொண்டேனே'' என்று கையை மேஜையில் ஓங்கி அடித்தார்; கைகளைப் பிசைந்தார். பின்பு விசுவலிங்கத் தம்பிரானைப் பார்த்து, "ஸ்வாமி, பிள்ளையவர்களிடம் ஒன்றும் சொல்லவேண்டாம்; என்னிடம் வித்தியாசமான எண்ணங் கொள்ளாமல் அன்போடு இருக்கும்படி மட்டும் எப்படியாவது செய்யவேண்டும். நானும் ஜாக்கிரதையாகவும் மரியாதையாகவும் இனி நடந்துகொள்வேன்'' என்றார்.
விசுவலிங்கத் தம்பிரான், ''வேண்டுமாயின் அது செய்ய முடியும். அவர்களும் சம்மதிப்பார்கள். அதைப்பற்றி நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். அவர்கள் யாருடைய குற்றத்தையும் உடனே மறந்து விடுவார்கள்; நீங்கள் மாத்திரம் அவர்களிடம். மரியாதையாக நடந்து கொள்ள வேண்டும். நான் சொல்லவேண்டுவது அதுதான்; நீங்கள் கவலைப்பட வேண்டாம்'' என்று சொல்லி விட்டுப் பிள்ளையவர்களிடம் வந்தார். பிள்ளையவர்கள் எழுந்து அவரை இருக்கச் சொல்லி வந்தனம் செய்து, ''இவ்வூருக்கு எழுந்தருளியது என்ன விசேஷம்? புராணம் நடந்து வருகின்றது. கூட இருந்து நடத்த வேண்டும்'' என்றபொழுது விசுவலிங்கத் தம்பிரான் நிகழ்ந்தவற்றைச் சொல்லித் தாசில்தாரிடம் வருத்தமில்லாமல் இருக்கவேண்டுமென்று தெரிவித்தனர். இவர், "அவரிடத்துப் பிரீதியுள்ளவனாகத் தான் இருந்தேன்; இருக்கிறேன்; இருப்பேன். அவராகவே தம்மை [1]இன்னாரென்று மிக எளிதில் தெரிவித்துவிட்டார். நமச்சிவாய மூர்த்தியின் திருவருளாலும் சந்நிதானங்களின் திருவருளாலும் அங்குத்தியின் ஆதரவாலும் எனக்கு என்ன குறைவுண்டாகும்? எல்லாம் நன்கு நிறைவேறி வருகின்றனவென்று சந்நிதானத்திற்கு விண்ணப்பம் செய்யவேண்டும்” என்று சொல்லியனுப்பினார். விசுவலிங்கத் தம்பிரான் திருவாவடுதுறை சென்று சுப்பிரமணிய தேசிகரிடம் நிகழ்ந்தவற்றைச் சொல்ல அவர் ஸந்தோஷம் அடைந்தனர்.
மேலே புராண அரங்கேற்றம் நடைபெறுவதற்கு வேண்டிய முயற்சிகள் சில நண்பர்களாற் செய்விக்கப்பெற்றன. அவர்கள், சில பிரபுக்கள் உதவி செய்ய நிச்சயித்திருக்கிறார்களென்றும் அவர்களை ஒருமுறை சென்று பார்த்துவந்தால் நலமாக இருக்குமென்றும் இவரைக் கேட்டுக்கொண்டார்கள். அதற்கு இசைந்து சிலரிடம் இவர் சென்றபொழுது அவர்களுட் சிலர் தமிழருமையறியாதவர்களாதலின் வாக்களித்தபடி செய்யவில்லை; இவர் தங்களைப் பார்க்க வந்தாரென்று பலரிடம் கூறிவந்தார்களேயன்றி வேறொன்றும் உதவி செய்ய அவர்கள் முன் வாராமையால், 'அத்தகையவர்கள் பால் இனிச் செல்லலாகாது என்று இவர் உறுதி பூண்டனர். அதனால் இவருக்கு மனவருத்தமுமுண்டாயிற்று; உண்டாகவே யாதொரு முயற்சியும் செய்யாமல் திருவருளையே சிந்தித்துக்கொண்டு சும்மா இருந்தனர். அப்படியிருக்கையில், இதனைக் கேள்வியுற்ற வேறு தக்க கனவான்கள் [2]சிலர் இவரிடம் வலிய வந்து, ''நீங்கள் இந்த விஷயத்திற் சிறிதேனும் கவலையடைய வேண்டாம். வழக்கம் போலவே அரங்கேற்றம் நடைபெற வேண்டும்'' என்று கூறித் தம்முடைய நண்பர்களிடத்தும் சொல்லி இவருக்கு வேண்டிய செளகரியங்களை அமைக்கச்செய்து புராணம் அரங்கேற்றி முடியும் வரையில் ஆதரித்து வந்தார்கள். புராணப் பிரசங்கம் செவ்வனே நடை பெற்று வந்தது.
அந்தப் புராணம் முதலில் சிவகுருநாத பிள்ளையின் வேண்டுகோளின்படி தொடங்கப்பெற்றதாதலின் புராணம் செய்வித்தோரைக் குறிக்கும் செய்யுளில் அவர் பெயரை இப்புலவர்பிரான் அடியில் வருமாறு அமைத்திருந்தார் :
விருத்தம்.
"சீர்பூத்த நடுநாட்டிற் றிகழுமஞ்சை நகர்வாழ்
சிவஞானச் செல்வனமச் சிவாயமுகின் மைந்தன்
பார்பூத்த மன்னரிரு கண்மணியிற் பொலிவோன்
பலகலை தேர்ந் தவனாட்டிற் கியனீதி யுடையோன்
ஏர்பூத்த மயற்பரமங் கையரிரக்க மில்லான்
எனவுள்ளான் றருமம் வளர்த் தெழுமேழிக் கொடியான்
கார்பூத்த கொடைத்தடக்கைப் பேரதிகா ரஞ்செய்
கனதனவான் கருதுசிவ குருநாத வள்ளல்” (ஏட்டுச்சுவடியிலிருந்த பழைய பாட்டு)
வேறு.
''சதுமுகன் முதலோர் போற்றுந் தம்பிரான் கும்ப கோண
முதுவட மொழிப்பு ராண முழுமையு மொழிபெ யர்த்துக்
கதுமெனத் தமிழாற் பாடித் தருகெனக் கனிந்து கேட்ப
அதுகடைப் பிடித்தவ் வாறே யறைதர லுற்றேன் மன்னோ.''
(குடந்தைப்புராணம், பாயிரம், 29.)
அவர் பின்பு மனவேறுபாட்டால் தம்முடைய தொடர்பு எவ்வகையிலும் இருத்தலே கூடாதென்று வேண்டிக்கொண்டமையின், அவ்விரண்டனுள் முதற் செய்யுளை மாற்றி வேறு செய்யுளொன்று இயற்றிச் சேர்க்கப்பட்டது. அதுவே அச்சுப் பிரதியிற் காணப்படும். ''சீர்பூத்த'' என்னும் பழைய செய்யுள் ஏட்டுச் சுவடியில் எழுதி அடிக்கப்பட்டிருந்தது; பின்பு அமைக்கப்பட்ட செய்யுள் வருமாறு :-
"அத்தி சூழ்வைப் பவாவுங் குடந்தையார்
பத்தி யேயுரு வாகிய பண்பினார்
தித்தி யாநின்ற செஞ்சொற் பெருமையார்
முத்தி வேட்கு முதற்பெருஞ் சைவர்கள்.”
(குடந்தைப்புராணம், பாயிரம், 28.)
முதலில் இயற்றப்பட்ட சிறப்புப்பாயிரச் செய்யுளிலும் சிவகுருநாத பிள்ளையின் பெயர் அமைக்கப்பட்டிருந்தது.
''நீதியுரு வமைந்தசிவ குருநாத மகிபனரு ணிரம்பு மேனிப்
பாதியிறை கும்பகோ ணப்புரா ணந்தமிழாற் பாடு கென்ன
ஓதியுணர் பவர்விரும்பப் பாடினான் சிராமலைவாழ் வுடையா னன்ன
மாதியல்பா தியனருள்சான் மீனாட்சி சுந்தரநா வலவ ரேறே''
என்ற அச்செய்யுளின் முதலடி மட்டும் முற்கூறிய காரணத்தால், ''நீதியுருவமைந்த சிவ சமயத்தார் பலருமரு ணிரம்பு மேனி" என மாற்றி அமைக்கப்பட்டது.
கா. சபாபதி முதலியார் வந்தது.
அப்போது ஸ்ரீ ஸேதுஸ்நானத்திற்குக் குடும்பத்துடன் சென்றிருந்த காஞ்சீபுரம் வித்துவான் சபாபதி முதலியார் மீண்டு வருகையில் கும்பகோணத்தில் இவர் புராணம் அரங்கேற்றி வருதலைத் தெரிந்து அங்கே வந்தார். இவர் அவருக்குத் தக்க விடுதியமைத்துச் சிலதினம் இருந்து செல்லும்படி கேட்டுக் கொண்டு வேண்டிய சௌகரியங்களைச் செய்துவைத்தார். அவர் சிலநாள் அங்கே இருந்து இவர் புராணம் அரங்கேற்றுகையில் இவருடைய பிரசங்கத்தைக் கேட்டு இன்புற்றார். அவர் காஞ்சிப் புராணம், தணிகைப்புராணம் முதலிய நூல்களை வாசித்தறிந்தவராதலின் அந் நூல்களை இயற்றியவர்களுடைய ஆசாரிய பீடமாகிய திருவாவடுதுறை ஆதீன மடத்துக்குச் சென்று குருமூர்த்திகளைத் தரிசனம் செய்ய விரும்பினார். அது தெரிந்த இவர் அவரையும் உடன்வந்தவர்களையும் திருவாவடுதுறை மடத்துக்கு அழைத்துச் சென்றார்; இரண்டு குருமூர்த்திகளையும் தரிசனம் செய்வித்தார்; சபாபதி முதலியாருடைய பெருமைகளைத் தலைவர்களுடைய முன்னிலையில் எடுத்துப் பாராட்டி மிக்க மரியாதையோடு நடந்துவந்தார். தாண்டவராயத் தம்பிரானவர்களாலும் சபாபதி முதலியாரைப்பற்றிச் சுப்பிரமணிய தேசிகர் முன்னரே அறிந்திருந்தாராதலின் அவரை அன்போடு விசாரித்துத் தக்க ஸம்மானங்களைச் செய்வித்தனுப்பினார்.
பிள்ளையவர்கள் அவரிடம் மரியாதையோடு நடந்துகொண்டதைப் பற்றிப் பிற்காலத்திற் சுப்பிரமணிய தேசிகர், "பிள்ளையவர்களுக்கு மேற்பட்ட தமிழ்வித்துவான்கள் இல்லையென்றும் இவர்களுக்கே எல்லோரும் மரியாதை செய்ய வேண்டுமென்றும் எண்ணியிருந்தோம். காஞ்சீபுரம் சபாபதி முதலியார் இங்கே வந்திருந்தபொழுது அவரைத் தம் வித்தியா குருவென்று சொல்லி இவர்கள் மிகப் பாராட்டினார்கள். அன்றியும் அவருக்கே முதல் இடத்தைக் கொடுத்துத் தாம் அப்பால் இருந்தார்கள். இவர்களுடைய செயலைப் பார்க்கையில் நமக்கு வியப்பும் இன்பமும் உண்டாயின. அவரிடத்துச் சில நூல்களே இவர்கள் கேட்டிருத்தல் கூடும். அதற்காக இவர்கள் பாராட்டிய நன்றியறிவின் திறம் இவர்களுடைய உயர்ந்த குணத்தைப் புலப்படுத்தியது. இவ்வாறு இக்காலத்தில் யார் இருக்கின்றார்கள்?'' என்று ஒருமுறை எங்களிடம் சொன்னதுண்டு.
கோமளவல்லித் தாயார் பிள்ளைப்பருவத்தைப் பாராட்டிப் பாடியது.
இவர் கும்பகோண புராணம் அரங்கேற்றி வருகையில், சார்ங்கபாணிப் பெருமாள் கோயில் தர்மகர்த்தாவாகவிருந்த ஸ்ரீநிவாஸ் பாட்ராச்சாரியாரென்பவருடைய விருப்பத்தின்படி அப்புராணத்தில் ஆராவமுதப் படலத்தில் ஸ்ரீ கோமளவல்லித் தாயாருடைய அவதாரத்தைச் சொல்லுகையிற் பத்துப் பருவங்களையும் பத்துப்பாடல்களில் அமைத்து இனிமை பயப்பப் பாடியுள்ளார். அவை அப்படலத்தில் 26 - ஆவது முதல் 35 - ஆவது வரையுள்ள செய்யுட்களாக அமைந்துள்ளன. அவை வருமாறு :
"பலகதிர் விரிக்கும் பகன்முன மலரும் பங்கயத் தவிசென நெடியோன்
நலநிற மமர்ந்து கணக்கில்பல் லுயிர்க்கும் நாடுகாப் பியற்றிடு பவட்கு
நிலமளந் தறியாப் பெருந்தவ முனிவன் நிறைபெருங் கருணையிற் சீர்த்த
வலனுயர் தெய்வம் பலவுணர் தரக்கூய் வயங்குகாப் பியற்றினன் மாதோ.''
(நிறம் - மார்பு; முனிவன் - ஏமருஷி.)
''பதியெனக் கானோன் வயினுற்று வந்தும் பயந்தவ னென்றுளங் கொளாது
மதிவிருப் பமைந்து புவிமக ளேயம் மாயனை மணாளனாக் கொண்டாய்
திதியுனை நோக்கே னெனத்தலை யசைக்கும் செய்கையிற் கோமள வல்லி
துதிமுக நிமிர்த்துச் சென்னிமற் றசைத்துத் தூயசெங் கீரையா டினளே."
"பெற்றதாய் செம்பொற் றாமரை யாகப் பிறங்குற வளர்க்குந்தா யெல்லாம்
கற்றமா முனிகைத் தாமரை யாகக் கலந்தருள் கோமள வல்லி
குற்றமோ விதய தாமரை மலர்ந்து குவலயத் துயிரெலாந் தழையப்
பொற்றதா லோதா லென்றிட வுவந்து பொற்றிருத் தொட்டின்மே வினளே.''
(பொற்ற - பொலிவுபெற்ற.)
“அறிதுயி லராமே லமருமெம் பெருமான் அடிமலர் வருடல்செய் யாது
பொறியறப் பிரிந்த செங்கைகா ளும்மைப் புடைத்தன்றி விடேனென முயன்று
முறிவறப் புடைக்குஞ் செயலென வகங்கை முகிழ்த்தொன்ற னோடொன்று தாக்கச்
செறிகருங் கூந்தற் கோமள வல்லி திகழ்ந்துசப் பாணிகொட் டினளே.''
“முடங்கலின் முத்த மதன்றழல் குளிக்கும் முகின்முத்த மிடித்தழன் முழுகும்
மடங்கலில் யானைக் கோட்டுறு முத்தம் மற்றதன் கட்டழ லழுந்தும்
உடங்கிவை யன்னாய் வெப்பமுண் மையினால் வேண்டிலோ முனதுசெம் பவளத்
தடங்கரு முத்தந் தாவென முத்தம் அளித்தனள் கோமள வல்லி.''
(முடங்கல் - மூங்கில்.)
''வருகதெள் ளமுதே வருகசெங் கரும்பே வருகசெந் தாமரை மகளே
வருகபொற் கொம்பே சிறுசிலம் பாதி மலரடி யிடைக்கல கலென
வருகவற் புதமே யெங்குலக் கொழுந்தே வருகபே ரானந்த வாழ்வே
வருகசித் திரமே யென்று சரிப்ப வருவள்பூங் கோமள வல்லி.''
[3]"முன்னநீ யுதித்த விடத்திவ ளுதித்தாள் முயற்கறை சிறிதுமில் லாதாள்
நன்னர்நீ யிந்தத் தலத்தினை யடைந்தால் நைதலற் றுயர்வது சாதம்
உன்னரும் விடவா யாயிர மமைந்த உரகமற் றிவண்மொழி கேட்கும்
மன்னவம் புலியே வருகென வழைப்ப மகிழ்ந்தனள் கோமள வல்லி.''
''மலர்செழுங் கரந்தா மரையெனக் கருதி வந்துவீழ் பலகருஞ் சுரும்பர்
புலர்தலி லஃதன் றெனத்தெளிந் தெழுந்து போதல்போ லொன்றன்பி னொன்று
பலர்புகழ் நீல மணியிழைத் தனவே பற்பல தொடர்ந்தெழ வினமென்
றலர்விழிச் சுரும்புந் தொடரவம் மனைதொட் டாடினள் கோமள வல்லி”
“கயல்விழிக் கயலைச் சைவல நறிய கருங்குழ லாயசை வலத்தை
அயல்வரால் கணைக்கா லாகிய வராலை அங்கொடி மருங்குனுண் கொடியை
இயல்பல கமல முகமுத லாக இயைபல கமலத்தை நட்க
உயலுற வந்த கோமள வல்லி உவந்துநீ ராடினள் பொன்னி.''
“செய்யதா மரைமே னெடியவ னிறமேற் செறிந்தமர் தருதிறம் விளங்க
ஐயசெம் மணியா னீலவொண் மணியால் ஆய்வெவ்வே றாய்ப்பொலி பலகை
எய்யநன் கேறி இகுளையர் பல்லோர் இருபுறம் வடங்கடொட் டாட்டத்
தையலங் கொழுந்து கோமள வல்லி தவாவொளி யூசலா டினளே.''
(எய்ய - பலரும் அறிய.)
ஒரு சமயோசிதச் செய்யுள்.
அக்காலத்தில் சைவ வைணவ சமயத்தவர்களாகிய இரு வகையாரும் மிகுந்த அன்பு பாராட்டி இவரை ஆதரித்து வந்தார்கள். இரு திறத்தாருடைய மனத்திலும் வேறுபாடு தோற்றாதபடி அவ்வக்காலத்திற்குத் தக்கவண்ணம் இவர் நடந்துவந்தார். ஒருநாள் அப்புராணச் செய்யுட்கள் செய்யுங்காலத்தில் மேற்கூறிய இருதிறத்தார்களும் இருந்து ஒவ்வொரு செய்யுளும் முடிந்தவுடன், கேட்டு ஆனந்தித்துக்கொண்டு வந்தார்கள். அச்சமயம் கும்பேசுவரரையும் சார்ங்கபாணிப் பெருமாளையும் பற்றிச் சொல்லவேண்டிய தருணத்தில் இவர் சிறிதும் கவலையின்றி, ‘கும்பேசுவரரையும் ஆராவமுதப் பெருமாளையும் அடியார்கள் தந்தை தாயென்று போற்றுவார்களாயின் பலவகைப் போகங்களையும் நுகர்ந்து சிவலோக வாழ்வைப் பெறுவார்கள்' என்னும் பொருளமைய,
விருத்தம்.
“எண்ணிய கும்ப லிங்கநா யகரை இலங்குமா ராவமு தரைச்சீர்
நண்ணிய சைவர் யாவருங் கண்டு நாடொறுந் தந்தைதா யென்றே
கண்ணிய சிறப்பிற் போற்றிடு வாரேற் கருதுபல் போகமுந் துய்த்துப்
புண்ணிய மிகுந்த பெருஞ்சிவ லோகம் புக்குவாழ்ந் தமர்வது சரதம்”
(ஆராவமுதப். 70.)
என்ற செய்யுளைச் சொல்லி முடிக்கவே இருதிறத்தாருங் கேட்டு ஒருவரை ஒருவர் மெல்ல நோக்கிச் சந்தோஷம் அடைந்தனர். நுண்ணிய அறிவுள்ள சைவரிற் சிலர் இவருடைய புத்தி சாதுரியத்தை மெச்சினர்.
செய்யுட்களை விரைவிற் பாடியது.
புராணம் அரங்கேற்றுங் காலத்துட் சில நாட்களில் மாலையில் அரங்கேற்றவேண்டிய செய்யுட்களைக் காலையிற் பாடி எழுதுவிப்பது வழக்கம். ஒருநாட் காலையில் அன்பர்கள் சிலர் வந்து நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தமையால் செய்யுட்கள் செய்யப்படவில்லை. அப்பாற் பகற் போசனத்தின் பின்பு அயர்ச்சி மிகுதியால் இவர் நித்திரை செய்தார். மாணாக்கர் முதலியோர், 'இன்று மாலையில் அரங்கேற்றுவதற்குச் செய்யுட்கள் செய்யப்படவில்லையே; எழுந்தால் ஏன் ஞாபகப்படுத்தவில்லை யென்று சேஷையங்காரைக் கோபித்துக்கொள்வார்களே என்றெண்ணி அச்சத்தோடு இருந்தார்கள். அப்போது இவர் எழுந்திருந்து தாகசாந்தி செய்து கொண்டார்; பிறகு அங்கே வந்த சிலரோடு யாதொரு கவலையுமின்றிப் பேசிக்கொண்டே இருந்தார். சேஷையங்கார் வந்து நின்றார். இவர், ''என்ன விசேடம்?'' என்று கேட்க, அவர், ''இன்று மாலையில் அரங்கேற்றுவதற்குப் பாடல்கள் இயற்றப்படவில்லை; முன்னமே தெரிவிக்கக் கூடவில்லை; இன்று காலையிலும் தெரிவித்தற்குச் சமயம் வாய்க்கவில்லை'' என்று கவலைக் குறிப்போடு தெரிவித்தார். இவர் சிறிதேனும் கவலையுறாமல், ''ஏட்டைக் கொண்டு வரலாமே'' என்றார். சேஷையங்கார் புராணச்சுவடியைக் கொண்டுவரவே, நடந்தவற்றுள் இறுதிச் செய்யுளைப் படிப்பித்துக் கேட்டுவிட்டுக் கதைத் தொடர்ச்சியை அறிந்துகொண்டு சிலநேரம் யோசனை செய்து பின் அவர் கையோயாமலெழுதும்படி சில நாழிகைக்குள் ஐம்பது செய்யுட்களைப் பாடி முடித்தார். அச் செயலில் இவர் ஒரு வியப்பையும் புலப்படுத்தவில்லை. உடனிருந்தவர்களெல்லோரும் அதனைக் கண்டு ஆச்சரியம் அடைந்தார்கள். அவ்வூரிலும் அதனைச் சுற்றிய ஊர்களிலுமுள்ளவர்கள் இந்த ஆச்சரியச் செய்தியைச் சொல்லிக்கொண்டு வருவாராயினர்.
அரங்கேற்றி வருகையிற் சில வைஷ்ணவர்களாலும் பிறராலும் இடையிடையே சில இடையூறுகள் நேர்ந்தன. ஒருநாள் அயலூரிலிருந்து வந்த ஸ்ரீ வைஷ்ணவ வித்துவானொருவர் வலிந்து வந்து அடிக்கடி விதண்டாவாதம் செய்ய ஆரம்பித்தார். பின்பு தியாகராச செட்டியாருடைய சமாதானங்களால் தம் முயற்சியை நிறுத்திக்கொண்டு அவர் சென்றுவிட்டார். இங்ஙனம் அவர் வந்து வாதித்தது பிள்ளையவர்களுக்கு மனவருத்தத்தை உண்டாக்கியது; நெடுநாள் வரையில் அவ்வருத்தந் தணியவில்லை. அது பின்பு இவர் இயற்றிய திருக்குடந்தைத் திரிபந்தாதியிலுள்ள,
கட்டளைக் கலித்துறை.
“பேசவந் தானல மார்க்கமுள் ளாரினொர் பேதையுள்ளார்
ஏசவந் தானல மோநிற் கெனவேகி னான்விடம்பூ
வாசவந் தானல மார்குட மூக்கர் வயக்கிடினை
யோசவந் தானல வோவவன் றாழ்புரு டோத்தமனே'' (58)
என்னும் பாடலால் விளங்கும்.
அரங்கேற்றத்தின் நிறைவு.
கும்பகோண புராணம் அரங்கேற்றி முடிந்த பின்பு அவ்வூரிலுள்ள பிரபுக்கள் இவருக்குச் சால்வை, பட்டு, வஸ்திரம் முதலிய சம்மானங்களும் பொதுவில் தொகுத்த ரூபாய் இரண்டாயிரமும் வழங்கினர். புராணமெழுதிய சுவடியை வெகுவிமரிசையுடன் யானை மேலுள்ள தவிசில் வைத்து ஊர்வலம் செய்வித்தார்கள். அப்பொழுது பெரிய [4]மேனாப்பல்லக்கு ஒன்றை விலைக்கு வாங்கிக் கொடுத்து அதில் பிள்ளையவர்களை இருக்கச்செய்து தக்கபிரபுக்களிற் சிலர் தாமே சில தூரம் சுமந்து சென்று தமிழ்மொழியில் தங்களுக்குள்ள அன்பைப் புலப்படுத்திப் பண்டைக்கால வழக்கத்தைத் தெரிவித்தார்கள். அப் புராணம் அரங்கேற்றிப் பூர்த்தியான காலம் குரோதன வருடம் தை மாதம் (1866.) அந் நூல் அச்சிடப்பெற்றுள்ளது.
அது திருக்குடந்தைப் புராணமென வழங்கும். அதிலுள்ள படலங்கள் 68; செய்யுட்கள் 2384. அதில் அவையடக்கமாக நான்கு செய்யுட்கள் இருக்கின்றன. அவற்றுள் ஒன்று வருமாறு :
விருத்தம்.
''விதிவழி யாயுஞ் சில்லோர் விதிவிலக் காகத் தத்தம்
மதிவழி யாயுஞ் சில்லோர் மாதேவன் றனைப்பூ சித்தார்
கதிவழி காணா ரில்லை கடையனேன் பாட்டிற் குற்றப்
பொதிவழி தருவ தேனும் வெறுத்திலா னனைய புத்தேள்.''
இத்தலத்தில் மார்க்கண்டேய முனிவர் பூமிதேவியை மகளாகப் பெற எண்ணி உப்பில்லாத உணவைப் புசித்துப் பல வருடங்கள் நோற்றனர். அவர் தவத்திற்கு மகிழ்ந்து அத்தேவி மகளாக அவதரித்து வளர்ந்து வந்தாள். அப்பொழுது அவளை மணந்து செல்ல எண்ணித் திருமால் மூப்புவேடம் பூண்டுவந்தனர். அவரை மார்க்கண்டேயர் வினவுதலும் அவர் விடை கூறுதலுமாக உள்ள செய்யுட்களில் ஒன்று வருமாறு :
விருத்தம்.
“வந்தது பசித்தீ மாற்ற வென்றனன் மாயக் கள்வன்
அந்தநன் மொழிகேட் டைய வலவண வுணவுண் டிங்கே
நந்தவுண் டிடுவாய் கொல்லோ வென்றன னற்ற வத்தோன்
எந்தமண் ணேனு முண்பே னென்றனன் விருத்த மாயன்.''
(திருநாகேச்சுரப். 22.)
இதன்கண் 'எந்தமண் ணேனு முண்பேன்' என்பது அவசரத்தில் உலகினர் கூறும் வாக்கியமாக இருந்தாலும் மண்மகளைத் திருமால் விரும்பிய குறிப்பும் அதிற் புலப்படுகின்றது.
சிவபெருமான் அமுதகும்பத்தில் தோற்றியதைப்பற்றிக் கூ றும் செய்யுட்களில் ஒன்று வருமாறு.
“மேடமூர் மதலை கடகமென் மலர்க்கை விளங்கருஞ் சிங்கமென் மருங்குல்
ஆடக மகரக் குழைச்செவி மீனம் அடுவிழி படைத்துலாங் கன்னி
மாடமர் தரவ விருச்சிக மிதுனம் மரூஉந்தனு வதுவென வடியார்க்
கூடவோ ரிடபந் தோன்றிடும் பொருளோர் கும்பத்துத் தோன்றிய தன்றே.''
(கும்பேசுரப்படலம், 31.)
(மாடு அமர்தர அவிர் உச்சி கம் மிதுனம் மரூஉம் தனுவதுவென; கம் மிதுனம் மரூஉம் தனுவதுவென - மேகத்தையும் மிதுன ராசியையும் பொருந்தும் உயர்ச்சியையுடைய வில்லாகிய மேருமலையைப்போல. இச் செய்யுளின்கண் பன்னிரண்டு இராசிகளின் பெயர்களும் தொனித்தல் காண்க.)
[5]மங்களாம்பிகை பிள்ளைத்தமிழ்.
பின்பு அந்நகரிலுள்ள ஜவுளிக்கடைக் கனகசபைப்பிள்ளை யென்னும் ஓரன்பருடைய வேண்டுகோளின்படி ஸ்ரீ மங்களாம்பிகை பிள்ளைத்தமிழும், அம்பலவாண செட்டியாரென்பவர் வேண்டுகோளின்படி திருக்குடந்தைத் திரிபந்தாதியும் இவராற் செய்யப்பட்டன. பிள்ளைத்தமிழில் அம்புலிப் பருவத்திலுள்ள [6]கணித சம்பந்தமான சிலேடைகள், அப்பொழுது கும்பகோணத்திற்கு வந்திருந்த மன்னார்குடி ஸ்ரீமத் மகாமகோபாத்தியாய ராஜு தீக்ஷிதரவர்களிடம் அறிந்து செய்யப்பட்டன.
அப்பிள்ளைத் தமிழ்ச் செய்யுட்களுட் சில வருமாறு:-
''ஈன்றவற் கில்லவளு முணவுமா கப்புவியும் இயல்கடி மணஞ்செய்தேமும்
இனியவுவ ளகமுமா கக்கடலு மாலையும் இருப்பிடமு மாகவனமும்
தோன்றவழி யுங்குடையு மாகவரை யுஞ்செய்து சுதன்மகன் றிறவுகோலாத்
தூயதாய் மனைவிதற் குறையுளுஞ் செய்துமகிழ் தோன்றனான் முகனளிக்க
நான்றசடை யார்கும்ப நாயக ரெனும் பெயர் நயத்தல்கண் டங்கண்மீன
நாயகி யிடைச்சிங்க நாயகி யருட்கன்னி நாயகி யறம்பலவும்வாழ்
ஆன்றகைக் கடகநா யகிகாது மகரநா யகிநுதற் றனுநாயகி
அடியமித யத்துலா நாயகி யெனப்பல அமைந்தமங் களவுமையையே.''
(காப்புப். 5)
''தானே தனக்குச் சரியாய தாயே வருக வுரைக்கவினை
தடிவாய் வருக நினைக்கமுத்தி தருவாய் வருக மலர்பொதிந்த
கானே புரையுங் கருங்கூந்தற் கவுரி வருக மெய்ஞ்ஞானக்
கரும்பே வருக வருள்பழுத்த கனியே வருக தெவிட்டாத
தேனே வருக வானந்தத் திருவே வருக பெருவேதச்
செல்வீ வருக வெங்கள்குல தெய்வம் வருக வுருகுநருள்
மானே வருக விமயவரை வனிதாய் வருக வருகவே
மறைவாழ்த் தொலிசா றிருக்குடந்தை மடந்தாய் வருக வருகவே."
(வருகைப். 10)
“பொருள்செயிவள் வாவென்று திருவாய் மலர்ந்தவப் பொழுதுநீ வந்தாயிலை
பொலியுநின் முகத்தெதிர்ப் படவஞ்சி னானெனப் போதவுரை செய்துகாத்தேம்
தெருள்செயிவ ளின்னும்வந் திலனெனச் சிறிதுகண் சேந்திடிற் புவனத்துளோர்
திக்கிலை நினக்கஞ்ச லென்பாரு மிலையிவள் சினந்தவிர்ப் பாருமில்லை
வெருள்செய்பணி பலவுளொன் றிவள்கொழுந னேவிடின் விழுங்கியே விடுமரைத்த
வீரனு முளானிவை யுணர்ந்துய்ய வேண்டிடின் விரைந்துவந் தடியர்யார்க்கும்
அருள்செய்குட மூக்கெங்கண் மங்களாம் பிகையுடன் அம்புலீ யாடவாவே
அலகில்பல புவனமு முயிர்த்ததாய் காணிவளொ டம்புலீ யாடவாவே.”
(அம்புலிப். 10)
இந்தப் பிள்ளைத்தமிழ் அக்ஷய வருடம் சித்திரை மாதத்தில் (1866) இயற்றி அடுத்த ஆனி மாதத்தில் அரங்கேற்றப்பட்டது. பின்பு விபவ வருடம் ஆனி மாதம் (1867) அச்சிற் பதிப்பிக்கப்பட்டது.
[7]குடந்தைத் திரிபந்தாதி.
குடந்தைத் திரிபந்தாதி மிகவும் சுவைமலிந்தது. அதில் இவர் அனுபவச் செய்திகள் சில அங்கங்கே காணப்படும். சிவகுருநாத பிள்ளையின் பிற்கால நடையும் பின்பு சிலர்பால் தாம் அலைந்தமையும் இவருடைய நெஞ்சில் இருந்து வருத்தி வந்தன. அவ் வருத்தம்,
[8]“திறம்பாவ மென்று குறிப்பார் மனைதொறுஞ் சென்றுழன்ற
மறம்பாவ மென்று மறிதரும்” (18)
''என்னையப் பாவலர் தூற்றுநர் தூற்ற'' (31)
என்ற பாடற்பகுதிகளால் விளங்கும்.
இவ்வந்தாதியின் கண் அமைந்துள்ள திரிபு மிகவும் விசித்திரகரமானது. இந்த அந்தாதி அரங்கேற்றப்பட்ட பொழுது இதனைச் செய்வித்தவராகிய அம்பலவாண செட்டியாரென்பவர் ரூ. 300 ஸம்மானம் செய்தனர்.
விஷ்ணுபுராணம் இயற்ற உடன்படாமை.
பின்பு பலரால் ஆதரிக்கப்பெற்று இவர் சில தினம் கும்பகோணத்திலேயே இருந்து வருகையில் ஒருநாள், அவ்வூரில் வராகக் குளத்தின் கரையிலுள்ள ரங்கசாமி ஐயங்காரென்னும் ஸ்ரீமானொருவர் இவருடைய கவித்துவத்தையறிந்து, "விஷ்ணு புராணத்தை வடமொழியிலிருந்து தமிழில் செய்யுள் நடையாக மொழிபெயர்த்து நீங்கள் செய்து தரவேண்டும். செய்து தந்தால் ஐயாயிரம் ரூபாய்க்குக் குறையாமல் நாங்கள் தொகுத்துத் தருவோம். எங்களைச் சேர்ந்தவர்கள் இவ்விஷயத்தில் மிக்கவிருப்பத்தோடிருக்கின்றனர்” என்றார். இவர், “நான் சைவனாதலின் அவ்வாறு செய்தல் கொண்ட கோலத்திற்கு மாறாகும். ஆதலால் அது செய்ய என்னால் இயலாது. சென்னையைச் சார்ந்த எழும்பூரில் திருவேங்கடாசல முதலியாரென்னும் வைணவ வித்துவானொருவர் இருக்கின்றார்; அவர் வைணவ நூல்களில் நல்ல பயிற்சியுள்ளவர்; நூல் இயற்றுதலிலும் வன்மையுடையவர். அவரைக் கொண்டு உங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளலாம்'' என்று சொல்லி விட்டார். வேறொருவரைக் கொண்டு செய்விக்க ரங்கசாமி ஐயங்காருக்கும் பிறருக்கும் விருப்பமில்லாமையால் அம்
முயற்சி அன்றோடு நின்று விட்டது.
கும்பகோணத்தைவிட்டு இவர் புறப்படுங்காலத்து ஸம்மானமாகக் கிடைத்த பொருள்கள் யாவும் அரிசிக்கடை மளிகைக்கடை முதலியவற்றில் இருந்த கடன்களுக்குப் பகிர்ந்து கொடுக்கப்பட்டன. ஆடைவகைகளை மாணாக்கர்கள், சிநேகிதர்கள் முதலியவர்களுக்கு இவர் கொடுத்துவிட்டார். புறப்படும்பொழுது வண்டிச் செலவுக்கு இவர் கடன் வாங்கிக்கொண்டே புறப்பட்டாரென்று சொல்லுவார்கள்.
கும்பகோணம் காலேஜிற்குச் சென்று பிள்ளைகளைப் பரீட்சித்தது.
தியாகராச செட்டியாருடைய வேண்டுகோளால் ஒருமுறை கும்பகோணம் காலேஜுக்கு இவர் போயிருந்தபொழுது இவரை நாற்காலியில் அமரச் செய்துவிட்டுச் செட்டியார் நின்று கொண்டிருந்தார். இவர், "பாடத்தை நடத்தலாமே'' என்றபோது அவர், "ஐயா அவர்கள் மாணாக்கர்களைப் பரீட்சை செய்ய வேண்டும்'' என்றார். இவர் சில பிள்ளைகளைப் பரீட்சித்து விட்டு ஒரு மாணாக்கனைப்பார்த்து, "ஏதாவது ஒரு பாடலைச் சொல்” என்று சொன்னார். அவன்,
"கார்பெற்ற தோகையோ கண்பெற்ற வாண்முகமோ
நீர்பெற் றுயர்ந்த நிறைபுலமோ - பார்பெற்று
மாதோடு மன்னன் வரக்கண்ட மாநகருக்
கேதோ வுரைப்ப னெதிர்"
என்ற நளவெண்பாப் பாடலைச் சொல்லி இவருடைய கட்டளையால் சுருக்கமாகப் பொருளுங் கூறிவிட்டு, ''இன்றைக்கு எங்களுக்கு உண்டான மகிழ்ச்சியும் அத்தகையதே'' என்றான். இவர் சந்தோஷமடைந்து, "இவ்வாறு சமயத்திற்குத் தக்க பாடலைச் சொல்லும்படி நீ கற்பித்துவைத்திருப்பது மிகப் பாராட்டற்குரியது'' என்று செட்டியாரைப் பார்த்துச் சொல்லி மகிழ்ந்தார்.
எப்பொழுதாவது இவர் தியாகராச செட்டியார் வீட்டிற்குப் போனால், இவரை உபசரிப்பதற்காகச் செட்டியார் காலேஜுக்குப் போகாமல் இருக்க உத்தரவு வாங்கிக் கொள்வது உண்டு. அதற்காக விண்ணப்பம் செய்து கொள்ளுகையில், "என்னுடைய ஆசிரியர் இங்கே எழுந்தருளியிருக்கின்றார்; உடனிருந்து உபசரிக்க வேண்டியவனாக இருக்கிறேன்'' என்று எழுதுவது வழக்கம். இவருடைய அருமையை அறிந்தவர்களாதலின் காலேஜ் தலைவர்கள் உடனே அவருக்கு உத்தரவு கொடுத்துவிடுவார்கள். ஒருமுறை இங்ஙனம் எழுதி அனுப்பியபொழுது காலேஜில் அக்காலத்தில் ஆசிரியராக இருந்த ராவ்பகதூர் பூண்டி அரங்கநாத முதலியார் எம்.ஏ., பிள்ளையவர்கள் செட்டியார் வீட்டிற்கு வந்திருப்பதை அக்கடிதத்தாலறிந்து உடனே சில அன்பர்களுடன் சென்று பார்த்துப் பேசிக் கொண்டிருந்துவிட்டு வந்தார். இவரைக்கண்டு பேசியதைப் பெரிய லாபமாக நினைத்து மகிழ்ந்ததன்றிப் பிறரிடத்தும் இவருடைய பெருமையைப் பாராட்டினார்.
-------
[1]. இன்னாரென்பதற்குப் பகைவரென்னும் பொருளும் இங்கே கொள்ள வேண்டும்.
[2]. இவர்கள் பேட்டைத் தெருவிலிருந்த கோபு நடலஞ் செட்டியார், கோபு சுப்பராய செட்டியார், பஞ்சநத செட்டியார், முடுக்குத்தெருக் கந்தப்ப செட்டியார் முதலியோர்.
[3]. இச்செய்யுளில் 'முன்னநீ ......... உதித்தாள்' என்றதனால் சாமமும், 'முயற்கறை சிறிதுமில்லாதாள்' என்றதனாற் பேதமும், 'நன்னர் நீ........ சரதம்' என்றதனால் தானமும், ‘உன்னரும் ....... கேட்கும்' என்றதனால் தண்டமும் ஒருங்கே குறிப்பிக்கப்பட்டுள்ளன. பிள்ளைத்தமிழ்களில் அம்புலிப் பருவத்துக்குரிய செய்யுட்கள் பத்தில் அமைக்கப்பெறும் இவ்வரிய செய்திகளை இச்செய்யுளொன்றிலேயே அமைத்த திறன் மிகப் பாராட்டற்பாலது.
[4]. இந்தப் பல்லக்கு இவருடைய தேகவியோக காலம் வரையில் வேண்டிய சமயங்களில் இவரைத் தாங்கிச் செல்லும் பேறு பெற்றிருந்தது.
[5]. ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத்திரட்டு, 389-490.
[6]. இச் செய்தியைப் பிள்ளையவர்களே சொல்லியிருக்கிறார்கள்.
[7]. ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளை யவர்கள் பிரபந்தத் திரட்டு, 2129-2230.
[8]. திறம்பா வம்மென்று - மாறுபாடாக வாருமென்று.
-------------
24. புராணங்களும் பிரபந்தங்களும் இயற்றல்.
அட்சய வருஷம் வைகாசி மாதத்திற்குமேல் (1866) பாண்டிநாட்டின்கண் உள்ளனவாகிய சூரைக்குடி (சூரைமாநகர்) கண்டதேவி என்னும் இரண்டு ஸ்தலங்களின் புராணங்கள் வடமொழியிலிருந்து மொழிபெயர்த்துத் தமிழிற் செய்யுள் நடையாக இவராற் செய்யப்பட்டன. அவ்விரண்டு ஸ்தலங்களிலுமுள்ள செல்வர்களுக்கு இவருடைய பெருமையை எடுத்துக் கூறி இவரைக் கொண்டு புராணங்கள் செய்விக்கும்படி தூண்டியவர் கோயிலூர்ச் சிதம்பர ஐயாவும் இவருடைய மாணாக்கராகிய நாராயண செட்டியாரும் ஆவர். இத்தலங்களுக்கும் முன் புராணஞ் செய்த கோயிலூர் என்னும் ஸ்தலத்திற்கும், பிற்காலத்துப் புராணஞ் செய்த வீரவனத்திற்கும், புறப்பட்டுப் போகும் காலத்தில் பிரயாணச் செலவுகள் திருவாவடுதுறை ஆதீனத்தாராலும், அந்த ஸ்தலங்களில் இருக்குங் காலத்திலும் மீண்டு வரும் காலத்திலும் ஏற்படும் செலவிற்குரிய பொருள்கள் அப்புராணங்களை ஆக்குவிக்கும் தனவைசியப் பிரபுக்களாலும் கொடுக்கப்பட்டன. மேற்கூறிய நான்கு புராணங்களுள் ஒவ்வொன்றற்கும் இவர் பெற்ற பரிசில் அவ்வப் புராணங்களிலுள்ள செய்யுட்களின் தொகையளவே. இந்தப் புராணங்கள் நான்கும் இயற்றி அரங்கேற்றிய காலத்தேதான் பரிசிற்றொகைகளைச் செலவிடாமல் இவர் கண்ணிற் கண்டனரென்பார்கள். நூல் செய்யத் தொடங்கிய கால முதல் அரங்கேற்றிப் பரிசில் பெற்று நகர வட்டகையிலிருந்து மீளும் வரையில் உடனிருந்து ஆதரித்து வந்தவர் மேற்கூறிய நாராயண செட்டியாரே.
சூரைமாநகர்ப் புராணம் இயற்றி அரங்கேற்றுவதற்கு அவ்வூருக்குச் சென்று ஒரு மைதானத்தின் பக்கத்திலுள்ள ஒரு விடுதியில் இவர் மாணவர்கள் முதலியவர்களுடன் தங்கியிருந்தார். அவ்வூரிலுள்ள நகரவைசிய கனவான்கள் அடிக்கடி வந்து விசாரித்து இவரைத் தக்க வண்ணம் கவனித்து ஆதரித்து வந்தார்கள். ஒவ்வொரு நாளும் பிற்பகலில் ஸ்ரீ சங்கரநாதர் சந்நிதியிற் பலர் கூடிய அவைக்களத்திற் புராணம் அரங்கேற்றப்பெற்று வந்தது. யாவரும் கேட்டு மகிழ்வாராயினர். ஒவ்வொருநாளும் அரங்கேற்றுவதற்கு வேண்டிய செய்யுட்கள் காலையில் இவரால் இயற்றப்பெற்று வந்தன.
‘நாலடிக்குக் குறையாமற் பாடவேண்டும்'
அப்பொழுது அத்தலத்திற்பக்தியுள்ள சனங்களுள் அயலூராரில் ஒரு சாரார் கற்கண்டு பழம் முதலிய பொருள்கள் நிறைந்த பல தட்டங்களை ஏந்திக் கொண்டு கூட்டமாக வந்து முன்னே வைத்து இவரைக் கண்டு சில உபசார வார்த்தைகளைச் சொல்லி ஒடுக்க வணக்கத்தோடு நின்றனர். அவர்கள் நின்ற நிலை ஏதோ ஒன்றைச் சொல்லும் நோக்கத்தோடிருப்பதாக இவருக்குப் புலப்படுத்தியது. இவர் அக்குறிப்பையறிந்து, ''ஏதேனும் சொல்ல எண்ணியிருந்தால் நீங்கள் சொல்லலாமே'' என்றனர். அவர்கள் தங்கள் எண்ணத்தை உடனே வெளியிடுதற்குத் துணியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து, ''இவ்வளவு பெரியவர்களிடம் நாம் ஒன்றைச் சொன்னால் ஏதாவது தீமை விளைந்துவிட்டால் என்ன செய்கிறது!'' என்று அஞ்சினார்கள்; பின்பு எவ்வாறேனும் தங்கள் எண்ணத்தைத் தங்களுக்குள் பிராயத்தில் முதிர்ந்த ஒரு பெரியவரைக் கொண்டு சொல்லிவிட வேண்டுமென்று துணிந்து அங்கேயுள்ள ஒரு பெரியாரைச் சொல்லச் சொன்னார்கள்.
அப்பெரியவர் உடல் நடுங்க மருண்ட பார்வையோடு, "ஐயா, நாங்கள் பூர்வசன்மத்திற் செய்த பெரும் புண்ணியமே உங்களை இவ்விடம் வருவித்தது. இல்லாவிட்டால் வருவீர்களா? உங்களுக்குள்ள பாட்டுப் பாடும் திறமையையும் வாக்கின் பெருமையையும் நாங்கள் அதிகமாகக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனாலும் எங்களுக்கெல்லாம் பெரிய கவலையொன்று ஏற்பட்டிருக்கின்றது. அதைச் சொல்லுவதற்கும் அச்சமாயிருக்கிறது; சொல்லாமலிருக்கவும் முடியவில்லை. இந்த ஊரார் கொடுக்கும் பொருள் அழிந்து போகக்கூடியது. நீங்கள் செய்யும் நூலோ எந்த நாளிலும் அழியாதது; எந்தக் காலத்தும் உங்களுடைய பெருமையையும் தலத்தின் பெருமையையும் தெரிவித்துக்கொண்டே அது விளங்கும். ஆதலால் நாங்கள் அறிவில்லாதவர்களென்பதை உத்தேசித்துப் பாடல்களைக் குறைத்துவிடக்கூடாது. நாங்கள் ஏதாவது குற்றஞ் செய்தல் கூடும்; அதை நீங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். எங்கள்மேற் கோபங்கொண்டு அறம் வைத்துப் பாடவுங் கூடாது. ஒவ்வொரு பாடலும் நாலடிக்குக் குறையவும் கூடாது. அப்படிக் குறைந்தாற் கோயிலைச் சேர்ந்தவர்களுக்கும் அடுத்த ஊரிலுள்ள எங்களுக்கும் கெடுதி நேருமல்லவா? எங்களை வாழ்விக்க வந்த தெய்வம் போல நீங்கள் விளங்குவதனால் துணிந்து எங்கள் பிரார்த்தனையைத் தெரிவித்துக்கொண்டோம்'' என்று தழுதழுத்த நாவாற் சொல்லிமுடித்தார்.
அப்போது மற்ற எல்லோரும், ''எங்களைக் காப்பாற்றவேண்டும்'' என்று ஒருமிக்கச் சொல்லி அஞ்சலி செய்தார்கள். இவர் எல்லோரையும் இருக்கும்படி செய்து, "நீங்கள் சிறிதும் கவலைப்பட வேண்டாம். பாடல்களையும் பாடல்களின் அடிகளையும் குறைக்க மாட்டேன்; அறம் வைத்தும் பாடமாட்டேன். ஒவ்வொரு பாட்டும் நான்கு அடிகளுக்குக் குறையாமலே இருக்கும். உங்களுடைய அன்பை மிகவும் பாராட்டுகிறேன்'' என்றார். உலகியலறிவு மிக்க இக் கவிஞர் பெருமான் கூறிய சொற்கள் அந்தக் கூட்டத்தினருக்கு இருந்த அச்சத்தை அடியோடே நீக்கிவிட்டன. அவர்கள் தங்கள் வேண்டுகோள் பயனுற்றதென்ற மகிழ்ச்சியோடும் எழுந்து விடைபெற்றுச் சென்றார்கள்.
அக்கூட்டத்தினருடைய சாத்துவிக இயல்பைத் தெரிந்த இவர், ''இத்தகையவர்கள் இருக்கும் இடத்தில் நாம் வருதற்கு முடியுமா? நாம் இங்கே வந்து பாடுதற்குக் காரணம் நாராயண செட்டியாரல்லவா?'' என்று நினைந்து,
வெண்பா.
"பாடுவதெங் கேயிந்தப் பாண்டிநாட் டெல்லைவந்து
கூடுவதெங் கேயொருபாற் கோதையான் - நீடுபுகழ்ப்
பாரா யணனென்றிப் பார்முழுதுங் கொண்டாடும்
நாரா யணனிலையேல் நாம்"
என்ற செய்யுளைப் பாடினார்.
சூரைமாநகர்ப் புராணம்.
சூரைமாநகர்ப் புராணத்துள்ள படலங்கள் - 10; செய்யுட்கள் - 539. இந் நூலை ஆக்குவித்த பிரபு காரைக்குடி முரு. லெ. இலக்குமணச் செட்டியாருடைய புத்திரரும் பெருங்கொடையாளியென்று புகழ்பெற்று விளங்கியவருமான கிருஷ்ண செட்டியாராவர். அவருடைய பெருமையும் அவர் இந்நூல் செய்வித்தமையும் பின்புள்ள செய்யுட்களால் புலப்படும் :
விருத்தம்.
"முகைமுறுக் குடைந்து நறவு கொப்புளிக்கும்
முண்டகத் தடம்புடை யுடுத்துத்
தகைகெழு வளஞ்சால் சூரையம் பதியிற்
றவலரும் வதரிநன் னீழல்
நகையமர் சிறப்பி னாளும்வீற் றிருக்கும்
நலங்கெழு சுந்தரப் பெருமான்
பகைதவிர் தெய்வ மான்மிய மென்னப்
பகர்தரு பெருவட மொழியை''
“மொழிபெயர்த் தெடுத்துத் தமிழினாற் பாடி
முடித்திட வேண்டுமா லென்று
கழிமகிழ் சிறப்புக் காரையம் பதிவாழ்
கனமிகு வணிகர்தங் குலத்தோன்
பொழிபெருஞ் சீர்த்தி புனையிலக் குமணப்
புண்ணியன் புரிதவத் துதித்தோன்
வழிவழி யறமே பயின்றிடு நலத்தான்
மழையெனப் பொழிகர தலத்தான்”
“வளரொளி யனைய தளிப்பணி சிறப்பின்
மல்குறப் புதுக்கிய வள்ளல்
கிளர்மணித் தடந்தோட் கிருட்டின மகிபன்
கெழுதரு சிரத்தையிற் கேட்பத்
தளர்வகன் றரிய தவம்பல வியற்றிச்
சார்தருஞ் சிவபத மெளிதே
விளர்தபப் புகுவா மென்பதுட் கருதி
விருப்பமிக் குரைத்திட லுற்றேன்.''
(சூரைமாநகர்ப் புராணப் பாயிரம்.)
இந்த ஸ்தல விநாயகர்கள்: காட்சி விநாயகர், சங்கர விநாயகரென இருவர்; இறைவன் திருநாமங்கள் : சங்கரநாதர், சுந்தரநாத ரென்பன; அம்பிகையின் திருநாமங்கள்: பார்வதி, மீனாட்சி என்பன.
இந்நூற் செய்யுட்களுட் சில வருமாறு :
குதிரைகளின் வருணனை.
''வாதவூ ரடிகளுக் காக வையமுற்
றாதரஞ் செயப்பிரா னமைத்த வாம்பரி
போதர ஏற்றது போற்றுஞ் சூரைவாழ்
மேதகு பரிக்குமு னிற்றல் வெள்கியே.''
ஸ்தல விருட்சமாகிய இலந்தை.
''புரிந்து நீழன்மாத் திரஞ்செயுங் கடம்புபோ லாது
பரிந்து நீழலும் படர்சுவைக் கனிகளு முதவித்
தெரிந்து தீங்கனி தெவ்வுவா னடைதரு தெவ்வும்
இரிந்து போகுகண் டகமுங்கொண் டிலகுமோர் வதரி.''
(கடம்பென்றது மதுரையில் ஸ்தலவிருட்சமாக உள்ள கடப்பமரத்தை.)
கண்ணைப் பெறுதற்குச் சூரியன் செய்த துதி.
"முழுதுல கிறைஞ்சா நிற்கு முதல்வரின் முகத்துக் கண்ணா
இழுதையே னமர்த லாலே யெவ்வுயிர்க் குங்கண் ணானேன்
பழுதிலத் தகையே னோக்கும் பார்வையின் றிருத்த னன்றோ
எழுவிடம் பருகி வானத் தெவரையும் புரந்து ளாயே.''
சங்கப்புலவர்கள் சிவஸ்தல தரிசனம் செய்யப் புறப்பட்டுப் பல தலங்களைத் தரிசித்து இங்கே வந்து பூசித்தனரென்ற வரலாறு சங்கப்புலவர் பூசித்த படலத்திற் சொல்லப்படுகின்றது. அவர்கள் திருப்பரங்குன்றம் முதலிய தலங்களைத் தரிசித்து வந்தார்களென்றுள்ள பகுதியில் ஒவ்வொரு தலத்துக்கும் ஒவ்வொரு பாடல் அமைந்துள்ளது. ஒவ்வொரு செய்யுளும் சிவபிரான் புகழை எதுகை நயத்தோடு புலப்படுத்துகின்றது.
“ஒருபுற நீலி யானை யொண்பிட்டுக் கூலி யானை
மருவருள் கோலி யானை மடர்க்கருள் பாலி யானை
இருளறு வாலி யானை யிருஞ்சடா மோலி யானைக்
கருதுநெல் வேலி யானைக் கைகுவித் திறைஞ்சிப் போற்றி.''
அப்புலவர்கள் சூரைமாநகரில் நெடுநாள் தங்கியிருந்து ஒரு நாள் மதுரை ஸ்ரீ சோமசுந்தரக் கடவுளை நினைந்து ஆராமை மீதூர, “திருவாலவாயுடையான் சேவடிகள் மறந்தனமால்'' என வருந்தினார்கள். அச்செய்தியைக் கூறும் செய்யுட்களில் அறுபத்து நான்கு திருவிளையாடல்களும் முறையே அழகுபடச் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளன.
ஓர் ஏழை மனிதரால் உபசரிக்கப்பெற்றது.
இப்புலவர் கோமான் கண்டதேவிப்புராணம் செய்வதற்குத் தேவிகோட்டை நகரவைசிய கனவான்களால் அழைக்கப்பெற்றுச் சுப்பு ஓதுவாரென்பவரோடும் மாணாக்கர்களோடும் வேலைக்காரர்களோடும் திருவாவடுதுறையிலிருந்து புறப்பட்டுச் சென்றார்; பட்டுக்கோட்டையைக் கடந்து போகும்பொழுது சூரியாஸ்தமனமாயிற்று. தங்குவதற்கு ஓர் இடமும் காணப்படவில்லை. செல்லச் செல்ல ஊரொன்றும் காணப்படவில்லை. அப்பால் 9-மணிக்கு மேல் ஒரு சிற்றூர் போய்ச் சேர்ந்தனர். அங்கே சந்தித்தவர்களைச் சமையல் செய்வதற்கு இடம் அகப்படுமாவென்று விசாரித்தபொழுது அவர்கள் அக்கிரகாரத்திற்குப் போகலாமென்று சொன்னார்கள். விசாரித்துக்கொண்டு அந்த இடத்திற்குப்போய்ச் சேர்ந்தார். அங்கே ஒரு வீடே இருந்தது. அதுவும் மிகச்சிறிய பனையோலைக் குடிசை. அங்கே போய் உடன் வந்த வேலைக்காரர்களைக்கொண்டு சமையல் செய்வதற்கு இடம் அகப்படுமோவென்று கேட்கச் சொன்னார்; ஒருவர் சென்று விசாரித்தார். அந்த வீட்டில் ஆண்பாலார் ஒருவரும் அப்பொழுது இல்லை. சில குழந்தைகளோடு கணவனுடைய வரவைப் பார்த்துக்கொண்டே திண்ணையிலிருந்த ஓர் இளம் பார்ப்பனி பல ஆண்பாலார்களின் கூட்டத்தைப் பார்த்துப் பயந்து, ''இங்கே அதற்குச் செளகரியப்பட மாட்டாது'' என்று சொல்லித் திடீரென்றெழுந்து கதவைச் சார்த்திக்கொண்டு உள்ளே போய்விட்டாள். இவர் உடன் வந்த வண்டிகளை அவ் வீட்டின் முன்புறத்திலுள்ள களத்தில் அவிழ்த்துப் போடச் சொல்லிவிட்டுச் சிலரோடு சென்று சிறிது தூரத்திலிருந்த ஊருணியொன்றைக் கண்டுபிடித்து அதில் அனுஷ்டானத்தை முடித்துக்கொண்டார். சந்திரன் நன்றாகப் பிரகாசித்துக்கொண்டிருந்தது. இவர் மீண்டும் மேற்கூறிய களத்திற்கு வந்து சமையல் செய்துகொள்வதற்கு வேறு ஒருவித வழியும் இல்லாமையை அறிந்து படுக்கையை விரிக்கச் சொல்லிப் பொறுக்க முடியாத பசியோடும் உடன் வந்தோருடைய பசியைத் தீர்க்கக் கூடவில்லையே யென்ற வருத்தத்தோடும் படுத்துக்கொண்டனர். மற்றவர்கள் பக்கத்திலிருந்து தம்முள்ளே பேசிக்கொண்டிருந்தார்கள்.
இப்படியிருக்கையில் அங்கேயுள்ள வீட்டுக்காரராகிய பிராமணர் உணவுப் பொருள்கள் முடிந்த ஒரு மூட்டையைத் தலையில் வைத்துக்கொண்டு வெகு வேகமாக வந்து தம்முடைய வீட்டுக் கதவைத் தட்டினர். அது தெரிந்த இவருடைய மாணாக்கர்கள் அவரை வற்புறுத்தியழைத்தார்கள். அவர், 'இவர்கள் யாரோ? அன்னம் போடவேண்டுமென்று ஒருவேளை கேட்டால் நாம் இவ்வளவு பேர்களையும் எப்படி உண்பிப்போம்' என்று அஞ்சி விரைவாக உள்ளே சென்று தம் மனைவியைக் கூடையொன்றைக் கொண்டு வரச்செய்து தாம் கொணர்ந்த தானியத்தை அக் கூடையிற் கொட்டி, "இரண்டு நாளைக்கு நமக்கு ஆகாரத்துக்குக் கவலையில்லை'' என்று சொல்லி மனைவியை மகிழ்வித்தார். பின்பு தம்முடைய நியமத்தை முடித்துக்கொண்டு மத்தியான்னமே நீரிற் சேர்த்திருந்த அன்னத்தையுண்டார். அப்பாற் கவலையற்றுப் பனையகணிக் கட்டிலொன்றை ஆரற்சுவர் சூழ்ந்த அந்த வீட்டு உள் முற்றத்திலே போட்டு அதில் படுத்துக்கொண்டனர். படுத்தவர் தமக்கு இரண்டு நாளைக்கு ஆகாரத்துக்குக் கவலையில்லையென்ற மகிழ்வினால்,
விருத்தம்.
''உனதுசரற் காலமதி யனைய மெய்யும்
உடல் குழைந்த பிறைச்சடையுங் கரங்க ணான்கும்
அனவரத முறும்பய வரத ஞான
அருட்பளிங்கு வடமொடுபுத் தகமு மாக
நினைகிலர்முன் வழுத்திலர்பின் வணங்கா ரெங்கன்
நிறைத்தபசுந் தேனுமடு பாலுந் தூய
கனியுமென மதுரம்விளைந் தொழுகு பாடற்
கவிதைபொழி வதுகயிலைக் கடவுள் வாழ்வே” (ஸெளந்தரியலஹரி.)
என்னும் செய்யுளை இசையோடு பாடினர். பின்னும் சில பாடல்களைச் சொல்லி இன்புறுவாராயினர். அப்பாட்டுக்கள் இவருடைய பக்கத்திலிருந்த மாணாக்கர்களுடைய காதில் விழவே அவர்கள், ''இவ்வீட்டு ஐயர் தமிழ் படித்தவர் போலே காணப்படுகிறார். இப்பொழுது, 'உனது சரற்காலம்' என்னும் பாடல் முதலியவற்றைச் சொல்லுகிறார்'' என்றார்கள். கேட்ட இவர், "அவரை எப்படியாவது இங்கே அழைத்து வந்து அந்தப் பாடல்களை என் முன்னே சொல்லச் செய்யுங்கள்" என்று சொன்னார். அவர்கள் அவ்வாறே சென்று அவ்வீட்டுக் கதவைப் பலமாகத் தட்டி உள்ளே இருந்தவரை அழைத்தார்கள். அவர் முன்னமே இக்கூட்டத்தைக் கண்டு பயந்தவராதலின் உடனே வெளியே வரவில்லை. ‘இவர்கள் சமையல் செய்து போடும்படி சொல்வார்கள் போலிருக்கிறது; நாம் என்ன செய்வோம்!' என்றெண்ணி, ''காலை முதல் அயலூருக்குச் சென்று அலைந்து இப்பொழுது தான் வந்து கிடைத்த ஸ்வல்ப ஆகாரத்தையுண்டு களைத்துப் படுத்திருக்கிறேன். என்னால் இப்பொழுது ஒன்றுஞ் செய்யமுடியாது'' என்று உள்ளே இருந்தபடியே கூறினார். அவர்கள், ''ஐயா, நீங்கள் சிறிதும் கவலைப்பட வேண்டாம். எங்கள் எசமானவர்கள் உங்களுடைய பாடல்களைக் கேட்கவேண்டுமென்று விரும்புகிறார்கள். இங்கேயிருந்து சொல்லுகிற பாடல்களை அங்கே வந்து சொன்னால் திருப்தியடைவார்கள்'' என்று சொன்னார்கள். "நான் பாடும் பாட்டைக் கேட்டு இந்த நடுக்காட்டில் மகிழக் கூடியவர்கள் யார் இருக்கிறார்கள்? அப்படியானால் வருவதற்கு என்ன ஆட்சேபமிருக்கிறது?'' என்று சொல்லிக்கொண்டே விரைந்துவந்து கதவைத்திறந்தார்; திறந்தவர் தமது பனையகணிக்கட்டிலையும் கையிலெடுத்துக்கொண்டு இவரிருக்கும் இடத்திற்கு வந்து அந்தக்கட்டிலைப் பக்கத்திற் போட்டுக்கொண்டு அதன் மேல் இருந்தார். பக்கத்திலுள்ளவர்கள் பாடல்களைச் சொல்லச் சொன்னார்கள். பின்பு தாம் முற்கூறிய செய்யுளை மற்றொருமுறை சொன்னார். அடுத்த செய்யுட்களையுஞ் சொன்னார். அவற்றைக் கேட்ட இவர், ''நீங்கள் என்ன என்ன படித்திருக்கிறீர்கள்?'' என்று கேட்கவே, அவர், ''நான் யாசகம்பண்ணப் படித்திருக்கிறேன். தமிழ் வித்துவானாக இருந்த என்னுடைய தகப்பனார் எனது இளமையில் சொல்லிக்கொடுத்த சில நூல்களிலுள்ள பாடல்கள் எனக்கு ஞாபகமுண்டு. அவற்றை எப்பொழுதும் சொல்லிக்கொண்டிருப்பது வழக்கம். படிக்கவேண்டுமென்றாற் புத்தகங்கள் இல்லை. என் வீட்டிலிருந்த புத்தகங்களை யெல்லாம் யாரோ வாங்கிக்கொண்டு போய்விட்டனர். அவர்கள் அவற்றைத் திரும்பக் கொடுக்கவில்லை. யாரிடத்திலாவது போய்ப் பாடம் கேட்பதற்கும் நேரம் இல்லை. சூரியோதய முதல் அஸ்தமனம் வரையில் வயிற்றுப் பிழைப்புக்கே அலைய வேண்டியிருக்கிறது. அப்படி யாரிடத்திலாவது சென்று புத்தகம் வாங்கிப் படிக்கலாமென்றால், என்னை நம்பி யார் கொடுப்பார்கள்? என்னைப் பார்த்தால் அவர்களுக்குப் படிப்பவன் போலத் தோற்றாதே. எங்கள் முன்னோர்கள் காலத்திலிருந்து எங்களுக்கு இந்தப் பக்கங்களில் மகமை உண்டு. அறுப்புக்காலங்களில் களங்களுக்குச் சென்று காத்திருந்து கிடைக்கும் தானியங்களை வாங்கிவருவேன். என்னுடைய நாட்களெல்லாம் இப்படியே போகின்றன. இந்தநிலையில் தெரிந்தவற்றையாவது ஓய்ந்தவேளையிற் சொல்லிக்கொண்டிருப்பது வழக்கம். இந்த மட்டிலாவது தேவி அனுக்கிரகம் இருப்பதைக் குறித்துப் பாடிக்கொண்டிருந்தேன். தமிழ்ப் பாஷையில் எனக்கு விசேஷமான பிரீதியுண்டு. யாரிடத்திலாவது போய்ப் பாடங்கேட்கலாமென்று நினைத்தாலோ, இந்தப்பக்கத்திற் பாடஞ் சொல்லத் தக்கவர் யாருமில்லை; சொல்லக் கூடியவர்கள் இருந்தாலும் சுலபமாக அவர்கள் சொல்லிக்கொடுப்பதில்லை. அவர்களுக்கு நாள் முழுதும் பணிவிடை செய்தாலும் ஏதோ கடனுக்காகச் சொல்லிக்கொடுப்பார்கள். என்னுடைய நிலைமை ஜீவனத்திற்கே தாளம் போடும்பொழுது அவர்களை அண்டி நான் எப்படி கற்கவேண்டிய நூல்களைக் கற்க முடியும்?
மாயூரத்தில் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் என்று ஒரு சிறந்த தமிழ் வித்துவான் இருக்கிறாராம்; ஏழைகளாயுள்ளவர்களுக்கு அன்னமும் வஸ்திரமும் அளித்துச் சிலவருஷம் வைத்திருந்து அவர்களை நன்றாகப் படிப்பித்து அனுப்புவது அந்த மகானுக்கு வழக்கமாம். அவரிடத்திற் சிலமாதம் படித்தாலும் படிப்பவர்கள் கல்விப்பெருக்கத்தை யடைவார்களென்று சொல்லுகிறார்கள். இப்படிப்பட்ட மகோபகாரியைப் போல இக் கலிகாலத்தில் யார் இருக்கிறார்? அந்தப் புண்ணியவானிடத்திலே போய்ப் படிக்க அவா இருக்கிறது. அதற்கும் முடியவில்லை. எனக்குக் [1]கால் விலங்கு ஒன்று ஏற்பட்டிருக்கிறது. இந்த லக்ஷணத்திற் சில குழந்தைகளும் உண்டாகியிருக்கின்றன. நான் இவர்களைப் பாதுகாப்பேனா? அவரிடத்தில் போய்ப் படிப்பேனா? சாணேற முழஞ் சறுக்குகிறதே. நான் என்ன செய்வேன்! அந்த மகானை ஒரு முறை இந்தக் கண்களாற் பார்த்துவிட்டாவது வரலாமென்று முயன்றாலோ அதற்கும் முடியவில்லையே! என்னுடைய நிலைமை ஒன்றுஞ் சொல்லக் கூடியதன்று'' என்று சொல்லிவிட்டுப் பின்னும் தம்முடைய கஷ்டங்களைச் சொல்லினர்; பக்கத்திலிருந்த மாணாக்கர்களில் ஒருவர் ‘இது தான் நல்ல சமயம்’ என்றெண்ணி அவருடைய சமீபத்தில் வந்து முதுகைத்தட்டி அவர் செவியிற் படும்படி ரகஸ்யமாக, ''இங்கே படுத்திருக்கும் இவர்களே நீர் சொல்லிய பிள்ளையவர்கள். இப்பொழுது கண்டதேவிப் புராணம் அரங்கேற்றுவதற்குப் போகிறார்கள்'' என்று சொன்னார். உடனே ஹாஹா வென்று அவர் துள்ளி எழுந்தார். அவருடைய வியப்பு அவரைச் சில நிமிஷ நேரம் மௌனமாக இருக்கச் செய்துவிட்டது; ''நான் என்ன புண்ணியஞ் செய்தேனோ? இந்த இடம் என்ன மாதவம் செய்ததோ?'' என்று ஆடிப்பாடித் திகைத்து ஒன்றுந் தோன்றாதவராய் நின்றார். நின்றவர், ''இதோ வந்துவிட்டேன்'' என்று சொல்லிவிட்டு ஓடினார்; அவர் ஓடியதற்குக் காரணம், விரைவிற் சமையல் செய்வித்து எல்லோருக்கும் ஆகாரம் பண்ணுவிக்க நினைந்து அரிசி முதலியவை எங்கேனும் வாங்கி வருதற்காகவே. அப்பொழுது உடன் இருந்தவர்கள் அவருடைய நிலைமையையும் அன்பின் மிகுதியையும் கண்டு வியந்தனர்; " இவருக்கு நாம் சிரமம் கொடுக்கக் கூடாது. இந்த அகாலத்தில் வறியவராகிய இவர் எங்கே போவார்? என்ன பொருளை இந்நேரத்தில் இவ்வூரில் இவரால் தேடிக் கொண்டு வருதற்கு முடியும்?'' என்று எண்ணி அவரைப் பின்தொடர்ந்து ஓடிச் சென்று தடுத்தார்கள். அவரிடம், ''உங்களுக்கு வேண்டிய பொருள்களை நாங்கள் தருகின்றோம். நீங்கள் கவலைப்பட வேண்டாம்'' என்று கூறி அவரை வற்புறுத்தி அழைத்துக்கொண்டு வந்து வேண்டிய பாத்திரங்களையும் அரிசி முதலியவற்றையும் கொடுத்தார்கள். அவர் அவற்றைப் பெற்றுத் தம் மனைவியையும் துணையாகக் கொண்டு விரைவிற் சமையல் செய்து பிள்ளையவர்களையும் மற்றவர்களையும் உண்பித்தார்.
அப்பால், மகிழ்ச்சி மேலீட்டால் இராமுழுதும் நித்திரை செய்யாமலே இருந்து தமக்குப் பல நாளாகச் சில நூல்களிலிருந்த ஐயங்களைக் கேட்டுக் கேட்டு நீக்கிக் கொண்டார். காலையில் இவர் புறப்பட வேண்டுமென்று சொல்லவே அவர் ஒரு வேளை யாவது தம் வீட்டில் ஆகாரம் செய்து போகவேண்டுமென்று சொல்லி அதற்கு வேண்டிய ஏற்பாடும் செய்தார். இவரும் அதற்கு உடன்பட்டு அன்று பகற் போசனத்தை அவரில்லத்திற் செய்துகொண்டு புறப்பட்டார். புறப்படுகையிற் பிரிவாற்றாது கண்ணீர் விட்டு அவர் வருந்துவாராயினர். அதைக் கண்ட இவர் தம்முடன் கூட வருவதில் அவருக்கு விருப்பம் இருத்தலையறிந்து அவருடைய குடும்பப் பாதுகாப்பிற்குப் போதிய உணவுக்குரிய பொருள்களை வாங்கிக் கொடுக்கும்படி பொருளுதவி செய்துவிட்டு அவரையும் உடனழைத்துச் சென்றார். சில மாதம் அவரை உடன் வைத்திருந்து படிப்பித்து அப்பால் ஊருக்கு அனுப்பினார்.
பிற்காலத்தில் அவர் வருடந்தோறும் திருவாவடுதுறை வந்து சில மாதம் இருந்து வேண்டிய நூல்களைப் பாடங்கேட்டு அறிந்து கொண்டும் மடாதிபதிகளிடம் பரிசு பெற்றுக் கொண்டும் செல்வார்.
கண்டதேவிப் புராணம்.
கண்டதேவிப் புராணம் கண்டதேவியின்கண் உள்ள திருக்கோயிலில் ஸ்ரீ சிறையிலிநாதர் ஸந்நிதியில் மிகச் சிறப்பாக அரங்கேற்றப்பட்டு நிறைவெய்தியது. அதிலுள்ள படலங்கள் - 19; செய்யுட்டொகை – 884.
அப்புராணத்தை ஆக்குவித்தோர் தேவிகோட்டைத் தன வைசியப் பிரபுக்கள்; இது,
விருத்தம்.
“தரைபுகழ் வேத சாரமாம் விபூதி
சாதன மேபொரு ளாக்கொண்
டுரைபுகழ் சிறந்த 2தேவிசா லப்பேர்
உத்தம வணிகர்கள் யாரும்
வரைபுக ழமைந்த கண்டதே வியிற்3பொன்
மாரிபெய் தருளிய பெருமான்
குரைபுகழ் விளங்கு தெய்வமான் மியமாய்க்
குலவிய பெருவட மொழியை''
"மொழிபெயர்த் தெடுத்து மதுரமிக் கொழுகி
முழங்கிமுப் புவனமும் போற்றப்
பழிதபுத் துயர்ந்து பரவுசெந் தமிழாற்
பாடுக வென்றலு மனையார்
கழிசிறப் புவகை மீக்கொளப் புகன்ற
கட்டுரை மறுப்பதற் கஞ்சி
உழிதரற் றகைய மனமுடை யானும்
உரைசெயத் துணிந்தனன் மன்னோ''
என்னும் செய்யுட்களால் விளங்கும்.
அப்புராணத்திலுள்ள செய்யுட்களிற் சில வருமாறு :-
(அகத்திய முனிவர் துதி)
''பன்னிரு தடங்கைச் செம்மல் பாற்சிவ ஞானம் பெற்றுப்
பன்னிரு கதிரு மொன்றாம் பான்மையின் விளங்கி நாளும்
பன்னிரு தவமா ணாக்கர் பழிச்சிட மலய மேவப்
பன்னிரு சரண நாளுந் தலைக்கொடு பரவு வோமே."
(மலையம் மேவு அப்பன்)
(திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் துதி)
''அறைவட மொழிந வின்ற பாணினி யகத்து நாண
இறையமர் மயிலை மூதூ ரிருந்தவோர் தாதுக் கொண்டே
நிறைதர வொராறு மேலு நிரப்புதென் மொழிந வின்ற
மறையவன் காழி வேந்தன் மலரடிக் கன்பு செய்வாம்''
(ஒரு தாதுவிலிருந்து வேறு தாதுக்களுண்டாகா வென்பது பாணினீயமுடையார் கொள்கை. ஓர் தாது - எலும்பு.)
செருந்திமரம்
''நன்மலர் செறிதரு நந்த னந்தொறும்
மின்மலர் செருந்திகள் வீயு குப்பன
அன்மலர் களத்தினா னருளின் முன்னைநாட்
பொன்மழை பொழிந்ததைப் புதுக்கி னாலென.'' (நகரப் படலம்)
சுப்பிரமணிய தேசிகர் முன்னிலையில் நடைபெற்ற பாடங்கள்.
அப்பால், இவர் திருவாவடுதுறைக்கு வந்து வழக்கம் போலவே பாடம் சொல்லிக்கொண்டு இருந்தனர். அப்பொழுது படித்தவர்கள் முற்கூறிய நமச்சிவாயத் தம்பிரான், தருமபுரம் பரமசிவத் தம்பிரான், நாராயண செட்டியார், இராமசாமி பிள்ளை முதலியவர்கள். அக்காலத்திற் பெரும்பாலும் சுப்பிரமணிய தேசிகரது முன்பே பாடம் நடைபெறும். அவர் ஸம்ஸ்கிருத வித்துவான்களோடு சாஸ்திர ஆராய்ச்சி செய்யும்பொழுது மட்டும் இவர் வேறோரிடத்திற் பாடம் நடத்துவார். கம்பராமாயணம் பாடஞ் சொல்ல ஆரம்பித்த பின் சுப்பிரமணிய தேசிகர் இவரைப்பார்த்து, ''மற்றப் பாடங்கள் எப்படி நடந்தாலும், கம்பராமாயணப் பாடம் மட்டும் நம்முடைய முன்பே நடத்த வேண்டும்'' என்று கட்டளையிட அவ்வாறே அது நடைபெற்று வந் தது. அந்நூலை இவர் பாடஞ்சொல்லி வருகையில் இயல்பாகவே அதிற் பழக்கமும் பிரியமும் உள்ள சுப்பிரமணிய தேசிகர் இவர் சொல்வனவற்றைக் கேட்டு மிக்க சந்தோஷத்தை அடைந்து வந்தனர்.
பின்பு கோவைகள் பாடஞ்சொல்லும்பொழுது சுப்பிரமணிய தேசிகர் கட்டளையின்படி அப்பொழுது மடத்திலிருந்து கிடைத்த பல கோவைப்பிரதிகளையும் உடன் வைத்துக்கொண்டு பாடங்கேட்பவர் ஒவ்வொருவரிடத்திலும் ஒவ்வொரு கோவையைக் கொடுத்து ஒவ்வொரு துறைக்கும் உரியனவாக அக்கோவைகள் எல்லாவற்றிலுமுள்ள பாடல்களை முறையே இவர் அவர் முன்னே படிக்கச் செய்துவந்தார். பல ஆசிரியர்களுடைய கருத்தையும் ஆற்றலையும் ஆராய்ந்து அறிந்து தேசிகரவர்கள் மகிழ்ந்தார்கள். இதைப்பற்றிச் சுப்பிரமணிய தேசிகர் பின்னொரு சமயம், "கோவைகளுள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொருநயம் இருந்து வந்தது. ஒரே துறையாக இருந்தாலும் பல வித்துவான்கள் தங்களுடைய புத்திசாதுர்யத்தைக் காட்டியிருத்தல் நன்றாகப் புலப்பட்டது'' என்று எங்களிடம் சொன்னதுண்டு,
வன்றொண்டர்.
இவரிடம் பாடங்கேட்ட மேற்கூறிய நாராயண செட்டியாரென்பவர் தேவிகோட்டையில் தருமஞ் செய்தலிற் புகழ்பெற்ற குடும்பத்திற் பிறந்தவர்; நேத்திரம் இல்லாதவர். ஆனாலும் நுண்ணிய அறிவுடையவர். வேறொருவர் படிக்க அவர் பாடங்கேட்பார். மடத்திற் கேட்பதன்றி இவர் வீட்டிற்குச் சென்றும் கேட்பதுண்டு. படித்துக் காட்டுவதற்காக ஒருவரும் இல்லாவிடின், பிள்ளையவர்களே படித்துச் சொல்வார்கள். அங்ஙனம் இவர் படிக்க அவர் பாடங்கேட்ட நூல் விநாயகபுராணம். அவருக்கு ஞாபக சக்தி அதிகம் உண்டு. பாடம் நடக்கையில் இவ்வளவு பாடல்களாயின; நிறுத்தலாமென்பார். ஒரு பாடலை மறுமுறை கேட்கவேண்டின் 'மறுத்து' என்று சொல்வது அவரது இயல்பு. தம்முடைய ஊருக்குச் சென்று பாடங்களைச் சிந்தித்து ஐயங்களை ஞாபகத்தில் வைத்துக்கொண்டிருந்து மீண்டும் பிள்ளையவர்களிடம் வந்து சிலநாளிருந்து நீக்கிக்கொண்டு செல்வது வழக்கம். கேட்கும்பொழுது இன்னபடலத்தில் இன்ன செய்யுளில் இன்ன அடியென்று ஞாபகம் வைத்திருந்தே கேட்பார். அது யாவருக்கும் ஆச்சரியத்தைத் தரும். அவருடைய நித்திய நியமங்கள் பின்வருமாறு: ஒவ்வொரு நாளும் காலையில் ஸ்நானம் செய்து பின்பு விநாயகருக்கு ஆயிரத்தெட்டுக் குட்டுக்கள் குட்டிக்கொண்டு முடித்து விட்டுப் பஞ்சாட்சரம் ஆயிரத்தெட்டு உரு ஜபிப்பார். அகத்தியத் திரட்டைப் பதம்பதமாக நிறுத்தி உச்சரித்து முழுவதும் பாராயணஞ் செய்து தேவாரத்தில் வேறு சில பதிகங்களையும் திருவாசகத்திற் சில பதிகங்களையும் பாராயணம் செய்துவிட்டுப் பின்பு திருமுருகாற்றுப்படையை ஆறுமுறை பாராயணஞ் செய்வார். அவ்வாறு குறைவின்றிச் செய்து முடித்துவிட்ட பின்புதான் ஆகாரம் செய்துகொள்வார். நியமம் பகலில் முடியாவிடின் மாலையில் தொடர்ந்து செய்து விட்டுத்தான் சாப்பிடுவார். ஒருநாள் செய்யாவிடின் மறுநாள் நிறைவேற்றி விட்டே உண்பார். அவருடைய கல்வியறிவின் முதிர்ச்சிக்குக் காரணம் அவருடைய சிவபக்தியும், நித்திய நியமங்களுமே என்று உடனிருந்த எல்லோரும் சொல்வார்கள். அவர் திருவாவடுதுறைக்கு வந்திருந்த ஒருசமயம் பல சிவநேசச் செல்வர்கள் கூடி அவருடைய ஒழுக்க விசேஷத்தையும் சைவப்பற்றையும் திடபத்தியையும் அறிந்து அவருக்கு வன்றொண்டரென்றே பெயரிட்டு வழங்கவேண்டுமென்று சொன்னார்கள். பிள்ளையவர்கள் கேட்டு, 'நீங்கள் சொன்னது தக்கதே' என்று அங்கீகரித்து,
நேரிசை வெண்பா.
"சத்திவாழ் வாமத்துச் சங்கரன்பொற் றாட்கமலப்
பத்தியாற் றேவார பாராய - ணத்தினால்
வான்றோய் புகழ்மிகுத்த வன்றொண்ட னென்னும்பேர்
சான்றோய் நினக்குத் தகும்''
என்னும் பாடலைக்கூறி அன்றுமுதல் வன்றொண்டரென்றே அழைத்து வருவாராயினர்.
இந்தச் சமயத்திற் செய்த வேறு ஒரு விருத்தமுமுண்டு. அஃது இப்பொழுது கிடைக்கவில்லை.
ஒருசமயம் பெரியபுராணம் நடைபெறும் பொழுது ஒருவர் மிக வேகமாகப் படித்துக்கொண்டுபோனார். அந்நூலில் மேல் வரும் ஒரு பாட்டின் பொருளை நன்றாகத் தாம் கேட்டுக்கொள்ள வேண்டுமென்று மிக்க கவலையோடு வன்றொண்டச் செட்டியார் கவனித்து எதிர்பார்த்துக்கொண்டேயிருந்தார். படித்தவர் வழக்கம்போல் அந்தப் பாட்டையும் வேகமாகப் படித்துச் சென்றார். அவரைப்பார்த்து, வன்றொண்டர், "ஐயா, இந்தப்பாட்டிற்கு அர்த்தம் செய்து கொண்டீர்களா?" என்று வினவ அவர் பொருள் தெரியாமல் விழித்தார். "ஊரிலிருந்து வரும்பொழுது சந்தேகமாக இருந்த பாடல்களில் முக்கியமான பாடல் இது. எப்பொழுது இது வருமென்று காத்துக்கொண்டே இருந்தேன். வேகமாகப் படித்துச் சென்றதனால் உங்களுக்குத் தெரிந்திருக்குமென்று நினைத்தேன். யாவும் முறையே தெரிந்த ஐயா அவர்கள் இங்கே இருக்கும் பொழுது ஐயங்களை நன்றாக நீக்கிக் கொள்ளாமற் போகலாமா? வேறு யாரிடத்தில் கேட்கப்போகிறோம்? நான் சொல்வதைப்பற்றிக் கோபித்துக்கொள்ளக் கூடாது'' என்றார். பிள்ளையவர்கள் அந்தப் பாட்டிற்கு நன்கு பொருள் கூறினார். அந்தப் பாடல் இன்னதென் று இப்பொழுது தெரியவில்லை.
திருத்துருத்திப்புராணம்.
குற்றாலமென்று வழங்குகின்ற திருத்துருத்தி ஸ்தலபுராணத்தை அத்தலத்திலுள்ள ஆதி சைவர்களும் மற்றத்தொண்டர்களும் கேட்டுக்கொள்ள இவர் வடமொழியிலிருந்து மொழிபெயர்த்துக் காப்பியமாகச் செய்தனர். வடமொழிப் புராணத்தைத் தமிழில் மொழிபெயர்த்துச் சொன்னவர் திருக்கோடிகாவல் ராமகுட்டி சாஸ்திரிகளென்பவர்; அதைத் தமிழில் எழுதியவர் திருவாவடுதுறை நமச்சிவாயத் தம்பிரானவர்கள். அப்புராணம் இயற்றி முடிந்தவுடன் அவ்வூரின்கண் உள்ள திருக்கோயில் மகா மண்டபத்திற் சிறப்பாக அரங்கேற்றப்பட்டது. அப்பொழுது அவ்வூர்ச் செங்குந்தச் செல்வர்களாகிய சிங்காரவேல் முதலியாரென்பவரும் அவருடைய சகோதரராகிய தியாகராச முதலியாரென்பவரும் இப்புலவர் பெருமானுக்கு உயர்ந்த சம்மானங்கள் செய்தார்கள். தங்களுடைய இனத்தாரையும் மற்றச் செல்வர்களையும் செய்யும்படி செய்வித்தார்கள். பிற்காலத்தும் பலவகையாக இவரை ஆதரித்து வந்தார்கள்.
திருத்துருத்திப்புராணம் 39 - படலங்களும் 1617 - செய்யுட்களும் அடங்கியது.
இந்தத் தலம் காவிரி ஆற்றினிடையில் இருந்தமையின் திருத்4துருத்தியெனவும், குத்தாலமென்னும் ஒருவகை மரத்தைத் தல விருட்சமாக உடைமையின் 5குத்தாலமெனவும் வழங்கப்படும். குத்தாலமென்பதன் சிதைவே குற்றாலமென்பது. அப்பெயர் உத்தாலகமெனவும் வழங்கும். பாண்டி நாட்டிலுள்ள திருக்குற்றாலம் தெனாது உத்தாலகவனமெனவும் இத்தலம் வடாது உத்தாலகவனமெனவும் வழங்கப்பெறும். இங்கே திருக்கோயில் கொண்டெழுந்தருளிய சிவபெருமான் திருநாமம் சொன்னவாறறிவாரென்பது; அது,
''சொன்னவா றறிவார் துருத்தியார்''
எனச் சுந்தரமூர்த்தி நாயனாரால் தேவாரத்திலும் அருளிச்செய்யப்பட்டிருக்கிறது. இத்திருநாமம் வடமொழியில் உக்தவேதீசுவரரென்று வழங்கும்.
இப்புராணத்தில் உள்ள சுந்தரதீர்த்தப் படலத்தில் ஸ்ரீசுந்தரமூர்த்தி நாயனார் சரித்திரம் விரிவாக அமைக்கப்பட்டுள்ளது.
அம்பிகை பசுவடிவங்கொண்டருளித் திருவாவடுதுறைக்கு வந்து ஸ்ரீ மாசிலாமணியீசரைப் பாலால் அபிடேகம் செய்ததைக் கூறும் பகுதியிலுள்ள சில செய்யுட்கள் வருமாறு:-
விருத்தம்.
''உண்மை யாண்மனத் துத்தமர் பரசிவன்
ஒருமகன் பரைக்கென்று
வண்மை யாகம மோதுவர் மற்றது
வாய்மையென் றுறத்தேர்ந்தாம்
அண்மை யேயன்றிச் சேய்மையே சிவலிங்கத்
தண்ணலைக் கண்டாலும்
கண்மை நீத்தபைங் கோமுலை சுரந்துபால்
கனிந்துகுத் திடலானே”
வேறு.
"இறைவன்பா லுவந்தா ளிறைவியென் றெவரும்
எடுத்தியம் பிடுவது மிருக்க
இறைவிபா லுவந்தா னிறைவனென் றெவரும்
எடுத்தியம் பிடுவது மெழுந்த
திறைவனன் றாடப் பால்பொழி வதிலோர்
இணையிலா தமைகுறித் தன்றோ
இறைவியை யின்னு மொப்பிலா முலையாள்
என்றிசைத் துய்யுமா லுலகம்.'' (கோமுத்திப் படலம், 6, 7.)
(திருவாவடுதுறையிலுள்ள அம்பிகையின் திருநாமம் ஒப்பிலா முலையாளென்பது.)
சிவபெருமான் சுந்தரமூர்த்தி நாயனாரைத் தடுத்தாட் கொள்ளுதற்காக விருத்தவடிவம் கொண்டருளியதைக் கூறும் பகுதியிலுள்ள இரண்டு செய்யுட்கள் வருமாறு:-
விருத்தம்.
''கிழவடி வன்றி வேறு கிளரொரு வடிவங் கொள்ளிற்
பழவழக் கென்று ஞாலங் கொளாதெனும் படியை யுன்னி
விழவுமை திருமு கத்தோர் வெள்ளிய முறுவ றோன்ற
அழகிய விருத்த ரானா ரறையுமூ வடிவு மில்லார்''
“வளமலி திருநெல்வேலி வைப்பிடைக் கொண்ட தேயோ
கொளமலி பிறிதோர் தேத்துக் கொண்டதோ வுணர்த றேற்றேம்
தளமலி மலர்க்கை வேணுத் தண்டமொன் றூன்றக் கொண்டு''
(சுந்தர தீர்த்தப். 37, 41.)
(திருநெல்வேலியிலும் பாசூரிலும் ஸ்தல விருட்சம் மூங்கில்.)
பதிகங்கள்.
மேற்கூறிய சிங்காரவேலு முதலியார் முதலிய செங்குந்தச் செல்வர்கள் தங்களுடைய தெருவிற் கோயில் கொண்டெழுந்தருளியிருக்கும் 6கச்சிவிநாயகர் மீது ஒரு பதிகமும் [7]சுப்பிரமணியக்கடவுள் மீது ஒரு பதிகமும் இயற்றவேண்டுமென்று விரும்பியபடி இரண்டும் அக்காலத்தில் இவராற் செய்யப்பெற்றன.
''கலைவழி நினைப்பரவு செங்குந்தர் மரபும்
கதித்துநீ டூழி வாழ்க''
எனக் கச்சி விநாயகர் பதிகத்திலும்,
''விருப்பொடு நினைப்போற்றும் செங்குந்தர் தம்மரபு
மேன்மேலு மோங்கிவாழ்க''
எனச் சுப்பிரமணிய ஸ்வாமி பதிகத்திலும் இவர் செங்குந்தர்களைப் பற்றிக் கூறியிருக்கின்றனர்.
[8]திருவாவடுதுறை யமக அந்தாதி.
“சிவஞான சுவாமிகள் காஞ்சீபுரத்திற்கு யமகவந்தாதி செய்திருக்கிறார்கள். இத்தலத்திற்கு என்ன காரணத்தாலோ செய்யவில்லை. தங்கள் வாக்கினாலாவது ஒரு யமகவந்தாதி செய்ய வேண்டும்'' என்று திருவாவடுதுறையிலிருந்த சில தம்பிரான்களும் பிறரும் கேட்டுக்கொள்ள அவ்வாறே ஒரு யமக அந்தாதியை இவர் இயற்றினார். அவ்வந்தாதியில் யமகவ்கை அழகாக அமைந் திருக்கின்றது; 'நவகோடி சித்த', 'கனகத்தியாகந்த', 'மாளிகைத் தேவனை', 'பஞ்சாக்கரவை', 'அரசவனத்தை ', ' காமாசிலாமணி' என்று அத்தலத்தின் தொடர்புடைய சொற்றொடர்களையும், 'அண்ணாமலையத்தனை', 'தக்க சிதம்பரவா' , 'வரசங்கமங்கை', 'தலையாலங்காடவர்' என்று பிற தலப்பெயர்களையும், 'மானக்கஞ்சாற', 'கண்ணப்பரை வரை’ என்று நாயன்மார் பெயர்களையும் யமகத்திலமைத்து அவற்றிற்கேற்பப் பொருளை முடித்திருத்தல் இவருடைய கவியாற்றலைப்புலப்படுத்துகின்றது.
புதுச்சேரி சென்றது.
பிரபவ வருஷ ஆரம்பத்தில் (1867) திருவாவடுதுறை யாதீனத்து ஸ்ரீ அம்பலவாண தேசிகரும் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரும் திருவண்ணாமலைக்கு யாத்திரையாகப் புறப்பட்டார்கள். உடன் வரும்படி விரும்பினமையால் மாணாக்கர்களோடு இவரும் சென்றனர். அங்கங்கேயுள்ள ஸ்தலங்களைத் தரிசித்தும் நிகழ்ந்த சிறப்புக்களைக் கண்டு ஆனந்தித்தும் இவர் திருவண்ணாமலையை அடைந்தார். அத்தலத்திலேயே ஸ்வாமி தரிசனஞ் செய்துகொண்டு சில தினம் இவர் இருந்தார். அப்போது அங்கே புதுச்சேரியிலிருந்து வந்து அழைத்த சவராயலு நாயகர் முதலிய அன்பர்கள் விருப்பத்தின்படி, ஆதீன கர்த்தரவர்களிடத்தில் விடை பெற்றுக்கொண்டு இவர் புதுச்சேரிக்குப் புறப்பட்டுச் சென்றார். போகும்போது அந்த நகரத்துக்கு அருகிலுள்ள சிவஸ்தலமாகிய [9]வில்வராய நல்லூர் சென்று அதிலுள்ள ஒரு சத்திரத்தில் தங்கியிருந்தார். அந்தச் சத்திரம் புதுச்சேரியிலே செல்வவானாகவிருந்தவரும் பெருங்கொடையாளியும் வக்கீலுமாகிய தானப்பாசாரியாரென்பவராற் கட்டப்பட்டது. அதில் இருந்த காரியஸ்தர்கள் இவரைத் தக்கவாறு உபசரித்து இவருக்கு விருந்து செய்வித்தனர். அங்கே இப்புலவர் சிகாமணி வந்து தங்கியிருத்தலையறிந்த புதுச்சேரிவாசிகளிற் சிலர் அங்கே வந்து இவரை வரவேற்று வேண்டிய உபசாரங்களைச் செய்தார்கள். தானப்பாசாரியாரைச் சார்ந்தவர்களும் வந்து புதுச்சேரிக்கு வரவேண்டுமென்று அழைத்தார்கள். அப்பொழுது தானப்பாசாரியாருடைய செல்வப் பெருக்கத்தையும் கெளரவத்தையும் தமிழுணர்ச்சியையும் அவர் வித்துவான்களை ஆதரிக்கும் வண்மையையும் பிற இயல்புகளையும் அவர்கள் வாயிலாகக் கேட்டு இவர் மகிழ்ந்தனர். முன்பும் அவரைப்பற்றிப் பலர் சொல்லக் கேட்டிருந்தவராதலின் மிகுந்த மகிழ்ச்சியையடைந்து,
விருத்தம்.
[10[“தானப்பா வடிக்களிறும் பாய்மாவுங் கலையுணர்ச்சித் தன்மை சால்வி
தானப்பா வலர்க்குதவிப் புகழ்ப்படாங் கொடுபுதுவை தன்னில் வாழும்
தானப்பா வில்வையினின் சத்திரச்சீ ரென்னுரைக்கேன் சசிகோன் மன்றம்
தானப்பா வரம்பையொடு கற்பகமா தியதருக்கள் சான்றா மன்றோ''
என்னும் செய்யுளை எழுதி அவருக்கு அனுப்பினார். அதைப் பார்த்த அவர் ஆனந்தமுற்று உடனே புறப்பட்டு வில்வராயநல்லூருக்கு வந்து மிக்க விமரிசையோடு இவரை அழைத்துச்சென்று புதுச்சேரியில் வேண்டிய செளகரியங்களை அமைத்துக் கொடுத்து அவ்வூரிலேயே சிலதினம் இருந்து செல்ல வேண்டுமென்று வேண்டிக்கொண்டார். அவ்வண்ணமே இவரும் இருந்தனர். அதுவரையில் இவர் செய்துள்ள நூல்களிற் சில சில பகுதிகளைச் சொல்லச் சொல்லிக் கேட்டு இன்புற்று அவர், "இதுவரையில் இத்தகைய ஆனந்தத்தை நான் அடைந்ததில்லை'' என்று மகிழ்ந்தார். பழகப் பழக இவருடைய பெருமையை அறிந்து அவர் செய்த உபசாரங்கள் அதிகரித்தன. அவருடைய பேரன்பை நினைந்து அவர் மீது 'தசவிடுதூது' என்னும் ஒரு நூல் இவரால் இயற்றப்பெற்றதென்பர். இப்பொழுது அது கிடைக்கவில்லை.
தானப்பாசாரியாருக்கு நெருங்கிய உறவினரொருவர் பழனி மாம்பழக் கவிச்சிங்க நாவலருடைய பாடல்களையும் பிரபந்தங்களையும் கீர்த்தனங்களையும் படித்துக்கொண்டே காலங் கழித்து வந் தார். அந்த நாவலர் இயற்றிய குமரனந்தாதிக்குப் பொருள் சொல்லவேண்டுமென்று அவர் இவரைக் கேட்டுக் கொண்டார். அதுவரையில் இவர் அதனைப் படித்திராவிட்டாலும் அவருக்கு அன்புடன் பாடஞ் சொன்னார். அதன் நடையைக் குறித்துப் பாராட்டி, ''மாம்பழக் கவிராயர் நல்ல தமிழ்க் கவிஞர்; அக் கவிராயருடைய செய்யுளை முதன்முறை கேட்டது இங்கேதான்'' என்று இவர் கூறினார்.
அப்பால் இவர் இயற்றிய [11]துறைசையந்தாதியிற் சில பாடல்களைக் கேட்டவர்கள் அந்நூல் முழுவதற்கும் பொருள் கேட்க விரும்பினார்கள்; அச்சுப் புத்தகம் இல்லாமையால், "இதனை அச்சிற் பதிப்பித்தால் எல்லோரும் எளிதில் பெற்றுப்படிக்கவும் பாடங்கேட்கவும் அனுகூலமாக இருக்கும்'' என்று இவரிடம் தங்களுடைய கருத்தை வெளியிட்டார்கள். அவர்களுடைய விருப்பத்தின்படி அவ்வந்தாதி பிரபவ வருடம் ஆனி மாதம் (1867) புதுச்சேரியில் அச்சிடப்பெற்றது. அதனைப் பெற்றுப் பலர் இவரிடம் பாடங்கேட்டு இன்புற்றனர்.
அப்பால் தானப்பாசாரியார், சவராயலு நாயகர் முதலியவர்களால் வலிந்து செய்யப்பெற்ற சிறந்த ஸம்மானங்களை யெல்லாம் பெற்றுக்கொண்டு புதுச்சேரியை விட்டுப் புறப்பட்டு இவர் இடையேயுள்ள தலங்களைத் தரிசித்து அங்கங்கேயுள்ள அன்பர்களாற் பாராட்டப் பெற்றுத் திருவாவடுதுறை வந்து சேர்ந்தார்.
தனியூர்ப் புராணம்.
மாயூரத்திற்கு மேல்பாலுள்ள கூறைநாட்டைச் சார்ந்ததாகத் தனியூர் என்னும் சிவஸ்தலமொன்றுண்டு. அது புழுகீச்சரம் என்றும் வழங்கும். புழுகுபூனை இறைவனை வழிபட்டுப் பேறு பெற்றமையால் அத்தலம் அப் பெயர்பெற்றது. அவ்வூர் சாலியச் செல்வர்களுக்கு இருப்பிடமாக உள்ளது. அங்கே பள்ளிக்கூடம் வைத்துக்கொண்டிருந்த தமிழ் வித்துவானாகிய சாமிநாதைய ரென்னும் வீர சைவரொருவரது முயற்சியால் முத்துச் செட்டியாரென்னும் சாலியப்பிரபு வேண்டிக்கொள்ள அத்தலத்திற்கு ஒரு புராணம் இவராற் செய்யப்பட்டது. மற்ற நூல்களிற் போலப் புராணத்தின் உறுப்பாகிய கடவுள் வாழ்த்து, அவையடக்கம், நாட்டுச் சிறப்பு, நகரச் சிறப்பு, நைமிசாரணிய வருணனை, மூர்த்தி தல தீர்த்த மான்மியங்களென்பவை சுருக்கமாக அதில் அமைந்துள்ளன. இவர் அப்புராணத்தில் நாட்டுச் சிறப்புச் செய்து வருகையில் ஸம்மானம் செய்வதற்காகச் சாலியச் செல்வர்களிடம் முற்கூறிய சாமிநாதையர் பணம் சேகரித்து வந்தார். அவர்களுட் சிலர், "எங்கள் சாதியாரைப்பற்றி ஏதாவது அதிற் சொல்லியிருக்கிறார்களா? இந்த ஸ்தலத்திற்குப் புராணம் செய்யும்பொழுது எங்களைப்பற்றியும் சொன்னாலல்லவோ எங்களுக்குக் கெளரவமாக இருக்கும்?'' என்று சொன்னார்கள். அவர் அச்செய்தியை இவரிடம் அறிவிக்கவே இவர், ''அதில் என்ன ஆட்சேபம்? அவர்களைப்பற்றிப் பாடவேண்டுவது இன்றியமையாததே'' என்று சொல்லிவிட்டு அச் சாதியாருடைய தொழிற்சிறப்பு முதலியவற்றைப் பாராட்டிச் சிலேடை முதலிய அணிகளமைய நகரச் சிறப்பிற் பாடினர். அப்பகுதியிலுள்ள சில செய்யுட்கள் வருமாறு :-
விருத்தம்.
''சீர்தளை செய்த வெள்ளை முதலிய செழும்பாக் கொண்டு
பார்பர வணியு மிக்க பொருளுமீப் படரச் செய்யும்
ஆர்தரு கலைக ளாலே புலவரு மானார் நாளும்
தேர்தரு கோசி கத்தாற் செழுமறை யவரு மானார்.''
(கலைகள் - ஆடைகள், நூல்கள். கோசிகம் - சாமவேதம், பட்டாடை.)
''கோடியுள் ளவரை யிந்தக் குவலயங் குபேர னென்றும்
நாடிய மகவா னென்றும் நவின்றிடு மனையார் மாடத்
தூடிய லொருசா ரெண்ணில் பற்பல கோடி யோங்கும்
நீடிய வளத்த தென்னி னிகரெடுத் துரைப்ப தெங்கே.''
(கோடி - கோடி யளவான பொருள், புதிய ஆடை.)
''கண்ணகன் ஞால மெல்லாங் கலைவளம் பரவு மாறே
எண்ணகன் றொழில்கள் செய்து குரவரு மென்ன நின்றார்
பண்ணமை யுலக மெங்குந் தானைகள் பரவச் செய்து
வண்ணவில் லரசர் போன்ற ரவர்திறம் வகுக்க லாமோ.''
(குரவர் - ஆசிரியர். தானைகள் - சேனைகள், ஆடைகள்.)
"திருவமிக் கோங்கு மந்தச் செழுநக ரகத்து வாழும்
தருநிகர் புருடர் யாருஞ் சாலிய ரதான்று வெய்ய
பொருவருங் கூற்றின் மேலும் போர்த்தொழில் தொடங்கும் வேற்கண்
உருவமிக் குடைநல் லாருஞ் சாலிய ருண்மை மாதோ.''
(சாலியர் - சாலியச் சாதியிலுள்ளார், அருந்ததியைப் போன்றவர்கள்.)
புழுகீசப்படலத்தில், யானை முதலிய பல அஃறிணைப் பொருள்கள் சிவபிரானைப் பூசித்துப் பேறு பெற்றனவென அத்தலத்திற் பூசித்துப் பேறு பெற்ற புழுகு பூனை ஒன்று எண்ணியதாக உள்ள பகுதி சிவநேசச் செல்வர்களுக்கு இன்பத்தை உண்டாக்கும்.
அப்புராணம் அரங்கேற்றப்படுகையில் முத்துச் செட்டியார் முதலிய செல்வர்களும் வித்துவான்கள் பலரும் வந்திருந்து கேட்டு மகிழ்ந்தனர். அப்பொழுது வாசித்தவர் கம்பராமாயணப் பிரசங்கியும் இவருடைய மாணாக்கருமாகிய சாமிநாதக் கவிராயர். பின்பு சாலியச் செல்வர்கள் தக்க ஸம்மானம் செய்தார்கள். அந்தப் புராணத்தைப்பற்றிச் சுப்பிரமணிய தேசிகர், "இது செய்யுளளவிற் சிறிய புராணமாக இருந்தாலும் பல விஷயங்களும் கற்பனைகளும் பெரிய நூலிற் போலவே நிறைந்து எளிதில் இன்பத்தைத் தருவதாக இருக்கின்றது'' என்று சொல்லுவதுண்டு. அதில் உள்ள படலங்கள் எட்டு; செய்யுட்டொகை 202.
அந்தப் புராணம் விபவ வருடம் மார்கழி மாதம் (1868) அச்சிடப் பட்டது.
பெரியபுராணக் கீர்த்தனத்திற்குச் சிறப்புப்பாயிரம் அளித்தது.
சில சிவநேசச்செல்வர்கள் கேட்டுக்கொண்டபடி ஸ்ரீ மகா வைத்தியநாதையர் தமையனாராகிய ஸ்ரீ இராமசாமி ஐயர் பெரிய புராணத்தைக் கீர்த்தன ரூபத்தில் மிகச் செவ்வையாகச் செய்து முடித்துப் பின்பு திருவாவடுதுறையில் ஆதீன கர்த்தர்கள் முன்பு அதனை அரங்கேற்றினார். அப்பொழுது இவர் அந்த நூல் பெரிய புராணக் கருத்திற்கு மாறுபாடின்றி நன்றாக அமைந்திருத்தலை அறிந்து மகிழ்ந்து பின்வரும் சிறப்புப்பாயிரச் செய்யுட்களை அளித்தனர் :-
விருத்தம்.
''நாடுவா னவர் முனிவர் தொழுதேத்த வானந்த நடன மன்றுள்
ஆடுவா னடியெடுத்துக் கொடுப்பவுயர் சேக்கிழார் அருளிச் செய்த
பாடுவான் புராணத்தை யெழுதுவார் வாயாரப் படிப்பா ரின்பம்
நீடுவான் சிந்திப்பா ரானார்க ளானாலும் நிலத்து வாழ்வார்''
“அடியெடுத்துக் கொடுத்தவன்போற் றண்ணுமையா திகடழுவி அளவா வின்பம்
படியெடுத்துக் கொளப்புரியா விதமுணர்ந்தாங் கதினுளநாற் பதமுங் கொண்டோர்
கொடியெடுத்த நிறத்தவன்வாழ் பதமுதற்பல் பதங்கடத்து குணரும் வேட்கக்
கடியெடுத்து வீசுபல பதஞ்செய்தா னனையவன்யார் கரைவா யென்னின்''
“பொன்னிவளந் தருநாடு புரிதவத்தால் 12வையையெனும் புரிதோன் றிற்று
மின்னியது செய்தவத்தாற் பஞ்சநத மாமறையோன் விருப்பின் வந்தான்
மன்னியவன் புரிதவத்தான் மறைநாலு மெனவுதித்த மைந்தர் தம்முட்
பன்னியது தன்னதெனத் தன்னியல்பி னுணருமொரு பான்மை மேயோன்''
“சாம்பமூர்த் திக்கிளையா னென்பதலா விளையானெத் தமிழ்வல் லோர்க்கும்
மேம்படுமா வயித்தியநா தனுக்குமூத் தானென்று விளம்பல் போல
ஆம்பலவா மிசையினுமூத் தானொழுக்கம் பலதிரண்டால் அன்ன மெய்யான்
ஓம்பல்புரி யிராமசா மிச்சுகுண மாமறைதேர் உயர்ச்சி யோனே”
''ஓங்குபுக ழிராமசா மிச்சுகுண மறையவன்பாட் டுவந்தான் வாமம்
தாங்குகற்றோ கையுமருட்சுப் பிரமணிய குருவெனுஞ்சேய் தானு மேவ
வீங்குதுறை சையினாளு மெய்கண்டான் சந்தானம் விளங்க மேயோன்
பாங்குபுனை பேரருளம் பலவாண தேசிகனெம் பரமன் றானே."
(வாமம் தாங்கு கல் தோகை - இடப்பக்கத்தில் நாலவிட்ட காவியுடையின் தலைப்பு, இடப்பாகத்தில் கொண்ட உமாதேவியார்; ' வாமம் .........மேவ ' என்பது சிவபெருமானுக்கும் அம்பலவாண தேசிகருக்கும் சிலேடை.)
மாயூரப் புராணம்.
“மற்ற ஸ்தலங்களுக்கெல்லாம் புராணம் செய்கின்றீர்களே; இந்த ஸ்தலத்திற்கு நாடுநகரச் சிறப்புக்களுடன் ஒரு புராணம் செய்ய வேண்டாமா? நீங்கள் இவ்வூரில் வாசம் செய்தற்கு அடையாளமாக ஒரு புராணம் செய்தால் நன்றாயிருக்கும்'' என்று ஸ்ரீ மாயூரநாதர் கோயிற் கட்டளைத் தம்பிரானாக இருந்த முத்துக்குமாரத் தம்பிரானவர்களும் சில சைவப்பிரபுக்களும் மற்றத் தமிழபிமானிகளும் இவரைக் கேட்டுக்கொண்டார்கள். அவ்வண்ணம் அது வடமொழிப் புராணத்திலிருந்து மொழிபெயர்க்கப்பட்டுத் தமிழிற் செய்யுள் நடையாக இவரால் இயற்றப்பட்டது. மாயூரம் ஸந்நிதித் தெருவிலிருந்த ஓரபிஷேகஸ்தர் வேண்டுகோளின்படி சைவர்களுக்குரிய நித்தியகர்ம விதிகள் செய்யுள் நடையாகச் செய்யப்பெற்று அப்புராணத்தின் இறுதியிற் சேர்க்கப்பட்டன. அப்புராணத்தை எழுதியவரும் அரங்கேற்றும்பொழுது படித்தவரும் அவ்வூரில் இருந்த முத்துச்சாமிபிள்ளை யென்பவர்.
அப்புராணத்திலுள்ள படலங்கள் 61; செய்யுட்டொகை 1894.
அந்நூலில், தருமன் பூசித்த படலம் முழுவதும் கட்டளைக் கலித்துறையால் அமைந்திருக்கின்றது. அகத்தியர் பூசித்தபடலத்தில் சுவை பொதிந்த மயங்கிசைக் கொச்சகக் கலிப்பா ஒன்று உண்டு. அம்பிகை கொண்டருளிய மயில்வடிவத்தின் சிறப்பைக் கூறும்,
கலிநிலைத்துறை.
''வரையு தித்திடு மயிலென்று மயிலிய லென்றும்
புரையில் கேள்விய ருருவகஞ் செய்தலும் போற்றி
உரைசி றப்பவன் மொழித்தொகை செய்தலு மொருவக்
கரைசெய் சாதிப்பே ரெனமயி லாயினள் கவுரி” (மாயூரப்படலம், 4)
என்னும் செய்யுளும், அம்பிகை மயில் வடிவங்கொண்டவுடன் ஸ்ரீ மாயூரநாதரும் மயில் வடிவங்கொண்டதைக் கூறும்,
கலிநிலைத் துறை.
''சத்த னெவ்வுருக் கொள்ளுமவ் வுருவிற்குத் தகவே
சத்தி யும்முருக் கொளுமெனச் சாற்றலு மிருக்கச்
சத்தி யெவ்வுருக் கொள்ளுமவ் வுருவிற்குத் தகவே
சத்த னும்முருக் கொளுமென றரையெழுந் தன்றே'' (மேற்படி, 29)
என்னும் செய்யுளும், அகத்தியர் முருகக்கடவுளைத் துதிசெய்ததாகவுள்ள,
தரவு கொச்சகக் கலிப்பா.
''கடியேறு மலரோனைக் கடுஞ்சிறையில் வைத்துப்
படியாதி யெவ்வுலகும் படைத்தருளும் பிரானை
முடியாத முதலோனை மூவர்பெரு மானை
வடிவேலன் றனைப்பேசா வாயென்ன வாயே
வள்ளிமணா ளனைப்பேசா வாயென்ன வாயே” (அகத்தியர் பூசைப்படலம், 22)
என்னும் செய்யுளும் சுவை யமைந்து விளங்குகின்றன.
அந்தப் புராணம் அரங்கேற்றி முடிந்தவுடன் அதனை அச்சிட வேண்டுமென்று சிலர் விரும்பியபடி விபவ வருடம் புரட்டாசி மாதம் (1868) சென்னையிலுள்ள தி. சுப்பராய செட்டியாருக்கு அப்புத்தகத்தை அனுப்பினார். அவருடைய மேற்பார்வையில் அந் நூல் அந்த வருடம் தை மாதத்துக்குள் அச்சிடப்பட்டு நிறைவேறியது. தை மாதத்தில் சுப்பராய செட்டியார் மனைவியார் தேகவியோகம் அடைந்தனர். சுபஸ்வீகரண காலத்தில் வந்த வித்துவான் காஞ்சீபுரம் சபாபதி முதலியாரிடம் சுப்பராய செட்டியார் அப்புராணத்திலுள்ள சில பகுதியைப் படித்துக்காட்டினர். முதலியார் அதைக்கேட்டு அதன் அருமையை வியந்தனர்.
"அந்தியேஷ்டியின்போது காஞ்சீபுரம் மகாகனம் ஸ்ரீ சபாபதி முதலியாரவர்கள் வந்திருந்தார்கள். மாயூர புராணத்தில் சில சில பகுதிகளை வாசித்துக் காட்டினேன். மிகவும் ஆராமைப்பட்டார்கள்'' என்று பிள்ளையவர்களுக்குச் சுப்பராய செட்டியார் (மாசி மாதம் 62) எழுதிய கடிதத்தின் பகுதி இதனைத் தெரிவிக்கின்றது.
ஸ்ரீ காசிரகசியம்.
காசியாத்திரை பலமுறை செய்தவரும் அக்காலத்தில் திருவிடைமருதூர்க்கட்டளை அதிகாரம் பெற்றுப் பார்த்துவந்தவருமான ஸ்ரீசுப்பிரமணியத் தம்பிரானவர்களுடைய விருப்பத்தின்படி ஸ்ரீ காசியின் தலவரலாறுகளைக் கூறும் நூல்களுள் ஒன்றாகிய ஸ்ரீ காசிரகசியமென்னும் நூல் இவரால் தமிழிற் செய்யுள் வடிவாக இயற்றப்பட்டது. அந்நூலை அவர் காசியிலிருக்கும்பொழுதே ஒரு வடமொழி வித்துவானைக் கொண்டு மொழிபெயர்க்கச் செய்து தமிழ் வசன நடையில் தாமே எழுதிவைத்திருந்தனர். அதைத் துணையாகக் கொண்டே இவர் ஸ்ரீ காசிரசிகயத்தை இயற்றினார். இச்செய்தியை,
விருத்தம்.
“ஆனதிரு வாவடுதண் டுறைநமச்சி வாயனடிக் கடிமை பூண்டு
ஞானநெறி யடைந்தவனற் காசியாத் திரைபலகால் நயந்து செய்தோன்
ஈனமினற் குணமனைத்து மோருருக்கொண் டெனப்பொலிவோன் எண்ணி லாத
மோனமுனி வரர்புகழப் பொலிந்தவச்சுப் பிரமணிய முனிவ னென்போன்”
“உரவுமலி கருங்கடல்சூ ழுலோகோப காரமிதென் றுள்ளத் தோர்ந்து
விரவுவட மொழியைமொழி பெயர்த்தெடுத்துச் செந்தமிழால் விளங்கு மாறு
கரவுதவிர் சிறப்புடைத்தா யறமுதனாற் பயனளிக்கும் காட்சித் தாய
பரவுபுகழ்த் திருக்காசி மான்மியமா மந்தணத்தைப் பாடு கென்ன”
(மந்தணம் - இரகசியம்.)
வேறு.
"அனையவன் மொழிந்த வார்த்தை யாருயிர்க் குறுதி யாகும்
வினையம துணர்ந்து பாடும் விதஞ்சிறி துணரே னேனும்
தனையில்பே ராசை தூண்ட நாணெனுந் தளையி னீங்கிப்
புனைதரு தமிழி னாலே பாடிடப் புகுந்தேன் மன்னோ'' (காசிரகசியம்,பாயிரம்,24 - 6)
என்னும் செய்யுட்களால் உணரலாம்.
அந் நூல் திருவிடைமருதூர் மகாலிங்கஸ்வாமி திருக்கோயிலிலுள்ள நூற்றுக்கால் மண்டபத்தில் அரங்கேற்றப்பெற்றது.
அதனை வடநாட்டிலிருந்து சுப்பிரமணியத் தம்பிரானவர்கள் கொணர்ந்த அருமையை,
விருத்தம்.
''வானுறைதி யாகரா சரையிங்குக் கொடுவந்த வள்ளல் போலும்
தேனுறைகாக் கயிலையமர் போதமிங்குக் கொடுவந்த செல்வன் போலும்
மானுறைகா சியினின்றம் மந்தணஞ்செந் தமிழ்த்தேயம் வரக்கொ ணர்ந்த
மீனுறைநீர்த் துறைசையிற்சுப் பிரமணிய முனிவர்பிரான் மெய்ச்சீர் வாழ்க”
(போதம் - சிவஞானபோதம். கொடுவந்த செல்வன் - ஸ்ரீ பரஞ்சோதி முனிவர்.)
என்னும் இந்நூலின் இறுதிச் செய்யுளிலும் இவர் பாராட்டியுள்ளார்.
அந் நூலை இவர் செய்து வருகையில் எழுதியவரும், அரங்கேற்றுகையிற் படித்தவரும் இவரிடத்தில் அப்பொழுது பாடங் கேட்டுக்கொண்டிருந்தவரான சுந்தரப்பெருமாள் கோயில் அண்ணாசாமி ஐயரென்பவர்.
அந்நூல் 26 அத்தியாயங்களையும் 1012 செய்யுட்களையும் கொண்டது; அந் நூலிலுள்ள சில செய்யுட்கள் வருமாறு:-
விருத்தம்.
(சுந்தரமூர்த்தி சுவாமிகள் துதி.)
“போகமென் பனவ ருந்தல்
பொருந்தன்மற் றவைக ளுள்ள
ஆகவோர் பகலி னள்ளும்
ஆன்றதோ ரிரவி னள்ளும்
பாகமார் பதஞ்சென் றேற்றும்
பரிந்துசென் றூடல் தீர்த்தும்
ஏகநா யகனே நிற்றற்
கியைந்தவர் துணைத்தாள் போற்றி.''
வேறு.
''கந்த மூல பலமருந்திக்
காற்றா லுதிர்ந்த சருகருந்தி
முந்த வெழுநீர்த் துளியருந்தி
முகிழ்க்கும் பசும்பொற் கொழுந்தருந்தி
வந்த தருந்தி யதுவுநீத்
தமர்வார் காசி மாதேவன்
எந்த வுணவுண் டமர்ந்தாலும்
எளிதி னருளும் வகையுணரார்.''
(திருமால் திருமகளுக்குபதேசித்த. 23)
(வந்தது - காற்றை; வந்து - காற்று.)
வீரவனப் புராணம்.
பின்பு புதுவயல் முருகப்ப செட்டியார் முதலிய சில தன வைசியப் பிரபுக்கள் வேண்டுகோளின்படி 13வீரவனப் புராணம் இவரால் இயற்றப்பெற்றது. அதிலுள்ள படலங்கள் 14; செய்யுட்கள், 704.
வீரவனக் கோயிலில் இறைவன் ஸந்நிதானத்தில் அப் புராணத்தை இவர் அரங்கேற்றினர்; கேட்ட தன வைசியப் பிரபுக்கள் தக்க ஸம்மானஞ் செய்து அனுப்பினார்கள்.
அத்தலத்திற் புதைந்திருந்த சிவலிங்கப் பெருமானைக் கிழங்கென்றெண்ணித் தன்னுடைய கருவியினால் குத்தித் தழும்புபடச் செய்து பின் அறிவு வரப்பெற்று உண்மையை உணர்ந்த வீரனென்னும் வேட்டுவன் இரங்கியதாக உள்ள,
விருத்தம்.
"என்னையாள் தரவிக் கானகத் திருந்தார்
இருந்ததை யறிந்தில னந்தோ
பொன்னைநேர் சடிலத் திறைவனா ரிங்குப்
பொருந்திய தறிந்தில னந்தோ
அன்னையே பொருவும் அறவனா ரிங்ஙன்
அமர்ந்ததை யறிந்தில னந்தோ
முன்னையூழ் கொல்லோ பலருமுள் ளிரங்க
முடித்தனன் முடிந்திலே னென்பான்''
(வீரசேகரர் திருமுடித்தழும்பேற்ற படலம், 28)
என்னும் செய்யுளும், அப்பொழுது அவனுக்கிரங்கிய சிவபெருமான் ஓரந்தண உருவத்தோடு தோன்றிக் கூறிய விடையாக உள்ள,
விருத்தம்.
''பரம்பரன் முடியிற் றழும்புறச் செய்தேம்
பாவியே மென்றுநீ கவலல்
பிரம்படித் தழும்பும் வில்லடித் தழும்பும்
பெயர்த்தெறி கல்லடித் தழும்பும்
வரம்பறு சிறப்பிற் செருப்படித் தழும்பும்
வயங்கிய [14]வாள்வெட்டுத் தழும்பும்
நிரம்பிய வியலிற் பரிக்குரத் தழும்பும்
நிகழுறு பூசைவாய்த் தழும்பும்''
"குடம்புரை செருத்தற் றேனுவோ டடுத்த
குழக்கன்றின் குளப்படிச் சுவடும்
தடம்புயத் தொருவன் கதையடிச் சுவடுந்
தாங்கிய நமக்கிதோர் பொருளோ
இடம்பட வுணரி னின்னமும் பலவால்
இசைப்பது நமக்குமுற் றாது
திடம்படு மிவைபோற் பலவுநந் தமக்குத்
திருவிளை யாட்டெனத் தேர்தி'' (மேற்படி. 33-34)
என்னும் செய்யுட்களும் படித்து இன்புறற்பாலன.
கன்னபுரம் பாகம்பிரியாள் பிள்ளைத்தமிழ்.
இவர் நாட்டுக்கோட்டை நகர்களுக்குச் சென்று தம் கவியாற்றலைப் புராணங்கள் செய்வதனால் வெளிப்படுத்தி வருகையில் கன்னபுரம் என்னும் ஊரிலிருந்த சிவபக்தர்கள் சிலர் இவர் பல பிள்ளைத்தமிழ்களைப் பாடியிருக்கின்றனரென்பதை அறிந்து இவர்பால் வந்து தங்கள் ஊரில் திருக்கோயில் கொண்டு எழுந்தருளியுள்ள பாகம்பிரியாளென்னும் அம்பிகையின் மீது ஒரு பிள்ளைத் தமிழ் பாடித் தரவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள். அவ்வாறே ஒரு பிள்ளைத்தமிழ் இவரால் இயற்றி அரங்கேற்றப் பட்டது. கேட்டுக்கொண்ட கனவான்கள் தக்க ஸம்மானம் செய்தார்கள். அந்நூற் செய்யுட்கள் சிலவற்றை நான் கேட்டிருக்கிறேன். எவ்வளவோ முயன்றும் அந்நூல் கிடைக்கவில்லை.
பிரிந்த மாணவர்கள்.
மாயூரத்திலிருக்கும்பொழுது இவரிடம் பாடங்கேட்பவர்களிடம் உள்ளூரார் சிலரும் வெளியூர்களிலிருந்து வருவோர் சிலரும், ''ஐயாவிடம் இருந்தால் எப்பொழுதும் உடனிருக்கவேண்டும்; ஊருக்கு அனுப்பமாட்டார்கள்; ஆதலால் சில நூல்களைப் பாடங்கேட்டுக்கொண்டு மெல்ல நழுவி விடுங்கள். நீங்கள் இவரைவிட்டுப் பிரிந்துவந்து பிரசங்கம் முதலியன செய்தால் நல்ல பொருள் வருவாயும் புகழும் உங்களுக்கு உண்டாகுமே. இப்படியே இருப்பதனால் என்ன பிரயோசனம்?'' என்று கூறிக் கலைத்தார்கள். அதனால் சில மாணாக்கர்கள் இவரை விட்டுப் பிரிந்து செல்லவே இவருக்கு மனவருத்தம் மிகுதியாக இருந்து வந்தது.
அங்ஙனம் பிரிந்து சென்றவர்களுள் ஒருவர் பிள்ளையவர்களைப் போலவே தாமும் இருக்கவேண்டுமென்னும் நினைவினராய் இவரைப் போலவே நடையுடை பாவனையை மேற்கொண்டு ருத்திராட்சகண்டி, வெள்ளிப்பூணுள்ள பிரம்பு, விபூதி வைத்தற்குரிய வெள்ளி ஸம்புடம் முதலியவற்றோடு, மாணவர்களாகச் சிலரை உடனழைத்துக் கொண்டு இவரை அறியாத பிரபுக்களிடத்திற் சென்று, "இன்ன கனவான் இன்னாரைக்கொண்டு இன்ன புராணத்தை இயற்றுவித்தார்; தாங்களும் ஒரு புராணம் என்னைக் கொண்டு செய்வித்தால் தங்களுடைய புகழ் மிகவும் பரவும்'' என்று கூறியும் பிறரைக்கொண்டு கூறுவித்தும் சில ஸ்தலபுராணங்களும், சில பிரபந்தங்களும் பாடிவந்தனர். முதலிற் பாடல்கள் சாதாரணமாக இருந்தாலும் பிள்ளையவர்களிடம் சிலகாலம் இருந்து வந்த பழக்கத்தால் பின்பு செப்பமுற்று விளங்குவனவாயின. அவர்களுட் சிலர், வெளியிடங்களில் இவரிடம் பாடம் கேட்டதாக மட்டும் கூறி இவரைத்தோத்திரஞ் செய்து பயனடைந்தார்களேயன்றிப் பின்பு இவருடைய இறுதிக்காலம்வரை இவரைப் பார்க்க வரவேயில்லை. அதற்குக் காரணம் தம்மைக் கண்டால் ஏன் வரவில்லையென்று இவர் கேட்பாரென்ற அச்சமே.
சிவஞான சித்தியார் பதவுரைச் சிறப்புப்பாயிரம்.
ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் திருவாவடுதுறையில் சைவசித்தாந்த சாஸ்திர பாடம் சொல்லி வருவதுண்டு. அப்பொழுது படிப்பவர்கள் இடர்ப்படுவதை யறிந்து சிவஞான சித்தியார் சுபக்கத்திற்கு ஒரு பதவுரையை அத்தேசிகர் வரைந்தளித்தனர்; அவ்வுரை மிகப் பயன்படுவதாயிற்று. அதனை இக் கவிஞர் பார்த்தபொழுது இன்புற்றுச் சில அன்பர்கள் விருப்பத்தின்படி அவ்வுரைச் சிறப்புப்பாயிரமாக ஐந்து செய்யுட்கள் இயற்றினார். அவை வருமாறு:-
விருத்தம்.
''ஒருபரைநேர் தரவுலகத் துயிர்பலவும் விருத்தியுற ஓம்பி மீட்டும்
கருமலவே ரறுத்தருளித் தானோக்கும் பெருங்கருணைக் கடவுள் ஞானப்
பெருவலிய னெமக்கெளியன் பேணாதார் தமக்கரியன் பெருகா னந்தம்
தருதிருவா வடுதுறைச்சுப் பிரமணிய தேசிகன்பொற் சரணஞ் சார்வாம்.''
“முற்றுணர்ந்த வருணந்தி சிவனருள்செய் சித்தியெனும் முடிபா நன்னூற்
குற்றுணர்ந்த சிவஞான மாமுனிவ னுரைத்தபொழிப் புரையிம் மண்மேற்
கற்றுணர்ந்த சிலர்க்கன்றிப் பலர்க்குமுப காரமுறாக் கருத்தா ழத்தைச்
சற்றுணர்ந்த வெம்மனோர் களுமிடர்தீர்ந் தெளிதுணரும் தன்மை யோர்ந்து''
“வளர்திருவா வடுதுறையம் பலவாண தேசிகன்கண் மணியாய் நாளும்
தளர்வறவந் தருள்பொழிசுப் பிரமணிய வெங்கள்குரு சாமி யென்பான்
விளர்தபுமப் பொழிப்புரையின் விரோதமுறாப் பதவுரையாம் விளக்கம் தந்தான்
கிளர்தருமற் றவற்கியாது புரிதுமென்றும் பணிதலன்றிக் கிளக்குங் காலே.''
''நல்லானந் துறைசையிற்சுப் பிரமணிய குருசாமி நவிறல் போன்முன்
இல்லாமை யானன்றோ சமவாதப் படுகுழிவீழ்ந் திழிந்தார் சில்லோர்
ஒல்லாத மாயாவா தக்கரிய சேறழுந்தி உழன்றார் சில்லோர்
பொல்லாத வினுமுளபல் புகர்மதக்கோட் பாட்டழுந்திப் போனார் சில்லோர்.''
'' இனியாது மெண்ணாராய்த் திகழ்திருவா வடுதுறையை எய்தி யாரும்
தனியானா மவனடியார்க் கடியாராய்ச் சித்தாந்த சைவ ராகி
நனியாருஞ் சிவானந்தப் பெரும்பரவை யிடைத்தோய்ந்து நாளும் வாழ்வார்
பனியாம லிவரினைய ரேலவற்காட் படுமெஞ்சீர் பகரொ ணாதே.''
ஸ்ரீ பிரம்மவித்தியாநாயகி பிள்ளைத்தமிழ்.
திருவெண்காட்டுக்கு ஒருமுறை இவர் ஸ்வாமி தரிசனம் செய்யப் போனார். அப்பொழுது அங்கே இருந்த சிவநேசச் செல்வரும் வேளாளப் பிரபுவுமாகிய நடராசபிள்ளையென்பவருடைய வேண்டுகோளின்படி அந்தத் தலத்திற் கோயில்கொண்டெழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பிரம்மவித்தியாநாயகி மீது இவர் ஒரு பிள்ளைத்தமிழ் இயற்றினார். அது மிக்க சுவையுள்ளது; அந்நூல் அரங்கேற்றப்படவில்லை; பின்பு சில வருடம் வரையில் இவர்பால் இருந்துவந்தது; சிலர் படித்தும் இன்புற்றார்கள்; அப்பால் இரவலாக வாங்கிச் சென்ற ஒருவர் திரும்பக் கொடுக்கவில்லை. பின்பு எவ்வளவோ முயன்று பார்த்தும் அது கிடைக்கவில்லை.
சாய்வு நாற்காலிப் பாட்டு.
இவர் திருவாவடுதுறையிலிருந்து அடிக்கடி மாயூரஞ்சென்று சிலதினம் இருந்துவிட்டு வருவார். ஒருமுறை மாயூரம் சென்றிருந்தபொழுது இவருக்குச் சுரநோய் கண்டது. அதனால் உடம்பு தளர்ச்சியுற்றது; இருப்பதற்கும் படுப்பதற்கும் இயலவில்லை. வைத்தியர்கள் சாய்வு நாற்காலியை உபயோகித்துக்கொண்டால் செளகரியமாக இருக்குமென்று சொன்னார்கள். அப்பொழுது தரங்கம்பாடிக் கோர்ட்டில் உத்தியோகத்திலிருந்தவரும் வேதநாயகம் பிள்ளையின் தம்பியுமாகிய ஞானப்பிரகாசம் பிள்ளைக்கு சாய்வு நாற்காலி யொன்று வேண்டுமென்று குறிப்பித்து,
குறள் வெண்பா.
1. "பேராளா ஞானப் பிரகாச வள்ளலெனும்
சீராளா விக்கடிதந் தேர்''
விருத்தம்.
2. "உறுவலியி னிடங்கொண்டு வனப்பமைந்த நாற்காலி ஒன்று வேண்டும் மறுவறுநாற் காலியெனல் யானையன்று குதிரையன்று வல்லே றன்று கறுவகல்பாற் பசுவான்றா லிவையெல்லா மியங்குதல்செய் கடன்மேற் கொள்ளும் பெறுபவர்பா லியங்காது வைத்தவிடத் தேயிருக்கப் பெற்ற தாமே''
3. ''அத்தகைய தொன்றனுப்பி னதிலமர்ந்து மிக்கசுகம் அடைவேன் யானும் உத்தமநற் குணத்திலுயர் நீயுமிகு சீர்த்தியையா ஒளிரா நிற்பை
வித்தகமற் றஃதெவ்வா றிருப்பதற்கு மிடங்கொடுத்தல் வேண்டு மேய
சுத்தமிகு மதனைவரு பவன்பாலே யனுப்பிடுதல் தூய தாமே''
என்னும் மூன்று செய்யுட்களைப் பாடி ஒரு வேலைக்காரன் வசம் அனுப்பினார். அவற்றைக் கண்டவுடனே அவர் நல்ல சாய்வு நாற்காலி ஒன்று வாங்கி அவனிடம் கொடுத்தனுப்பினார். அதனை இவர் உபயோகித்துவந்தார்; அது பின்பு இவருடைய வாழ்நாள் முழுதும் இவர்பாலே இருந்து உதவியது.
[15] திருநாகைக் காரோணப் புராணம் இயற்றத்தொடங்கியது.
விபவ வருஷ ஆரம்பத்தில் (1868 ஏப்ரலில்) நாகபட்டினத்தில் ஓவர்ஸியராக இருந்த அப்பாத்துரை முதலியார் முதலிய உத்தியோகஸ்தர்களும் தேவாரத் திருக்கூட்டத்தலைவராகிய வீரப்ப செட்டியார் முதலியவர்களும் இவரைத் திருநாகைக் காரோணப் புராணத்தைப் பாடவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள். அவ்வாறே செய்தற்கு இவர் இணங்கினார். ஒரு தலபுராணம் பாடுவதற்கு முன் அத்தலத்திற்குச் சென்று அதனையும் அதனைச் சார்ந்த இடங்களையும் பார்த்து அவற்றைப்பற்றிய செய்திகளை முதியோர் முகமாக அறிந்துகொண்டு தொடங்குதல் எப்பொழுதும் இவருக்கு வழக்கமாதலால் இவர் மாயூரத்திலிருந்து நாகபட்டினம் சென்று சில காலம் இருந்து பார்க்கவேண்டிய இடங்களைப் பார்த்து விசாரிக்க வேண்டியவற்றையெல்லாம் விசாரித்து அறிந்து கொண்டனர்; அத்தலத்திற்குரிய வடமொழிப் புராணத்தை அப்பொழுது அங்கே இருந்த திருச்சிராப்பள்ளி ஸ்ரீ மகாதேவ சாஸ்திரிகளென்பவரைக் கொண்டு தமிழில் வசனநடையாக மொழிபெயர்ப்பித்து எடுத்துக்கொண்டு மாயூரம் வந்தார்.
மாயூரத்துக்குப் புறப்படும்பொழுது அன்பர்களிற் சிலர், ''நீங்கள் செய்யும் இப் புராணம் காஞ்சிப் புராணத்தைப்போல் இருக்கவேண்டும். அதில் சுரகரீசப் படலத்தில் மந்தரகிரியின் வளத்தைக் கூறப்புகுந்த சிவஞான முனிவர் பல சித்திர கவிகளை அமைத்ததுபோல நீங்களும் இப்புராணத்தின்கண் ஏற்ற இடத்தில் அவற்றை அமைக்கவேண்டும்'' என்று கேட்டுக் கொண்டனர். அவர்கள் வேண்டுகோளின்படியே நாகைக் காரோணப் புராணத்தில் நந்திநாதப் படலத்திற் சித்தாச்சிரம வருணனையிற் பல வகைச் சித்திர கவிகளை இவர் செய்தமைத்திருக்கின்றார்.
கோபால பிள்ளையின் தருக்கு அடங்கினமை.
புராணம் தொடங்கிச் செய்யப்பெற்று வருகையில் அதனை எழுதி வந்தவர் முத்தாம்பாள்புரம் (ஒரத்த நாடு) கோபால பிள்ளை யென்பவர். மாணாக்கராக இவரிடம் வருவதற்கு முன்பு அவர் முத்தாம்பாள்புரம் தமிழ்க்கலாசாலையில் உபாத்தியாயராக இருந்து சிறந்த கவிஞராக விளங்கிய நாராயணசாமி வாத்தியாரென்பவரிடம் பாடம் கேட்டவர்; நல்ல இயற்கை அறிவுடையவர். பனையேட்டில் எழுதுவதில் அவருக்கு மிக்க ஆற்றல் உண்டு. இயல்பாகவே, 'எழுதும் வன்மை நமக்கு அதிகம்' என்று அவர் எண்ணிக்கொண்டிருந்தார்.
அப்படியிருக்கையில் ஒருநாள் இவருடைய வீட்டு விசாரணையைப் பெரும்பாலும் வகித்து வந்தவரும் இவரிடத்தில் மிக்க அன்புடையவருமாகிய வைத்தியலிங்கம் பிள்ளை யென்பவர் இவர் சயனித்திருக்கையில் மாணாக்கர் கூட்டத்திலிருந்து பேசிக்கொண்டிருந்தார். அவர் கோபாலபிள்ளையை விரைவாக எழுதுவதிற் சமர்த்தரென்று பாராட்டினார். அதனைக் கேட்ட கோபாலபிள்ளை, “எல்லாம் சரிதான்; ஐயா அவர்கள் என்னுடைய கை வலிக்கும்படி பாடல் சொல்லுகிறார்களில்லையே'' என்று விடை பகர்ந்தார். அந்தச் சமயம் அவர் எவ்வளவோ மெல்லப் பேசியும் சயனித்திருந்த இவருடைய காதில் அவருடைய சொல் விழுந்தது. உடனே எழுந்து வந்தால், தாம் சொல்லியதைக் குறித்துக் கோபால பிள்ளை நாணமும் அச்சமும் அடைவாரென்று நினைந்து சிறிது நேரம் படுக்கையிலேயே இவர் படுத்திருந்துவிட்டு அப்பால் எழுந்து வந்தார்; பாடஞ்சொல்லுதல், நூல் எழுதுவித்தல் முதலியன அப்பால் வழக்கம்போல் நடைபெற்றன.
பின்பு ஒருநாட்காலையில் வழக்கப்படியே அனுஷ்டானத்தை முடித்துக்கொண்டு சாய்வு நாற்காலியில் வந்து அமர்ந்தார். எழுதவேண்டிய ஏடும் கையுமாகக் கோபால பிள்ளை வந் தனர்; அவருடன் வேறு சில மாணாக்கர்களும் செய்யுள் செய்வதைக் கவனிக்கும் அன்பர்களும் வந்து வேறு வேறிடத்தில் இருந்து வழக்கப்படியே கவனித்துக்கொண்டிருந்தார்கள். இக் கவிஞர்பிரான் அப் புராணத்தில் மேலே நடக்கவேண்டிய பகுதியின் வசனத்தைப் படிக்கச் சொல்லிக் கேட்டுவிட்டு உடனே செய்யுள் செய்யத் தொடங்காமல் ஒரு நாழிகைவரையில் யோசனை செய்து மூக்குத் தூளைப் போட்டுக்கொண்டு கையை உதறிவிட்டுப் பாடல் சொல்ல ஆரம்பித்தார்.
இவர் மூக்குத்தூளை அபூர்வமாக உபயோகிப்பது வழக்கம். அதைப் போட்டுக்கொண்டு தொடங்கிவிட்டால் யாதொரு தடையுமின்றிப் பாடல்களைச் சொல்லிக்கொண்டே செல்வார். அப்போது பக்கத்திலுள்ளவர்களெல்லாம் அன்றைக்கு மிக்க வேகமாகச் செய்யுட்கள் இயற்றப்படுமென்று அறிந்துகொள்வார்கள்.
ஆரம்பித்த இவர் ஓய்வின்றிச் சொல்லிக்கொண்டே சென்றார். அன்று நடந்த பகுதி சுந்தரவிடங்கப்படலாம். அது கற்பனை நிரம்பிய பாகம். எழுதினவரும் கையோயாமல் எழுதிக் கொண்டே சென்றார். தொடங்கிய காலம் காலை 7 மணி; 10 - மணி வரையில் சொல்லிக்கொண்டு வருவதும், 10 - மணிக்கு மேலே பூஜை செய்வதற்கு எழுந்து ஸ்நானத்திற்குப் போய்விடுவதும் இவருக்கு வழக்கம். மிக விரைவாக இவர் செய்யுட்களைச் சொல்லிக்கொண்டே சென்றமையால் எழுதுபவராகிய கோபால பிள்ளைக்குக் கையில் நோவுண்டாயிற்று. 'எப்பொழுது பத்து மணியா கும்' என்று எதிர்பார்த்திருந்தார். 10 - மணியாகியும் ஸ்நானத்திற்கு எழாமல் இவர் பாடல்களைச் சொல்லிக்கொண்டே போனார்.
அப்பொழுது தவசிப்பிள்ளை வந்து ஸ்நானத்திற்கு எழவேண்டுமென்று குறிப்பித்தான். சரியென்று சொல்லிவிட்டு எழாமல் மேலும் செய்யுட்களைச் சொல்லிக்கொண்டே வந்தார். மணி பதினொன்றும் ஆய்விட்டது. கோபால பிள்ளைக்கு வலக்கைச் சுண்டு விரலின் பின்புறத்திலும் இடக்கைக் கட்டை விரலின் நுனியிலும் ரத்தம் குழம்பிவிட்டது. வலி அதிகமாயிற்று; அவராற் பொறுக்க முடியவில்லை. தம்முடைய கஷ்டத்தை ஒருவாறு புலப்படுத்தினால் நிறுத்துவாரென்று நினைந்து ஏட்டைக் கீழேவைத்துவிட்டு இடக் கையை வலக்கையாலும் வலக்கையை இடக்கையாலும் தடவிக் கொண்டும் பிடித்துக்கொண்டும் குறிப்பாகத் தம்முடைய கஷ்டத்தைப் புலப்படுத்தினார். இவர் அதனைக் கவனியாராகிப் பாடல்களைச் சொல்லிக்கொண்டே சென்றார். மணி பதினொன்றரை ஆகி விட்டது. கோபாலபிள்ளை வாய்விட்டுக் கூறுவதற்கு நாணிப் பல்லைக் கடித்துக்கொண்டு எழுதிவந்தார். பக்கத்தில் இருந்தவர்களிற் பெரும்பாலோர் பதினொரு மணிக்கே எழுந்து சென்று விட்டார்கள். இவர் நிறுத்தவேயில்லை. மணி பன்னிரண்டும் ஆயிற்று. அப்பாற் சிறிதளவேனும் தம்மால் எழுத முடியாதென்றுணர்ந்த கோபால பிள்ளை இவர் சிறிது யோசித்துக்கொண்டிருந்த சமயத்தில் திடீரென எழுந்து கையிலே உள்ள ஏடுகளைச் சேர்த்துக் கயிற்றாற்கட்டி எழுத்தாணியை உறையிற் செருகிவிட்டு எல்லாவற்றையும் இவருக்கு முன்னே வைத்து ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் பண்ணி எழாமலே கிடந்தார். இவர் அவரைப் பார்த்து விட்டு, "தம்பி! ஏன் இப்படி? என்ன விசேடம்? எழுந்திரு'' என்றார்.
கோபால : ''இனி என்னால் எழுதவே முடியாது. என்னைப் போல எழுதுகிறவர்கள் யாருமில்லை யென்றிருந்த எண்ணம் எனக்கு அடியோடே இன்று நீங்கிவிட்டது. இது கிடக்க; ஐயா அவர்களுடைய பெருமையை இன்றுதான் உண்மையில் அறிந்து கொண்டேன். தேவரீர் எந்தத் தெய்வத்தின் அவதாரமோ, எந்தப் பெரியோர்களுடைய அம்சமோ யான் அறியேன்! இப்படிச் செய்யுள் செய்யும் ஆற்றலை யாரிடத்தும் நான் கண்டிலேன்; கேட்டுமிலேன். இன்றைக்கு நடந்த பாகம் சாதாரணமானதன்று. இதனை மற்றக் கவிஞர்கள் செய்வதாக இருந்தால் எத்தனையோ நாள் பிடிக்குமே. அது யாதொரு வருத்தமுமின்றி விரைவாகப் பாடப்பட்டதே! இந்தப் பணிக்கு உரியவனாக ஆவதற்கு அடியேனுக்குப் பலநாள்செல்லுமென்று தோற்றுகிறது. இடையிலே நிறுத்திவிட்டேனென்று கோபித்துக்கொள்ளக் கூடாது. க்ஷமிக்கவேண்டும்.''
மீ : "என்னப்பா! உனக்குச் சிரமமாயிருக்கிறதென்பதை முன்னமே தெரிவித்திருந்தால் நான் நிறுத்தியிருப்பேனே. இது மிகவும் சிறந்த பகுதியாக இருந்ததனால் மத்தியில் நிறுத்த மனம் வரவில்லை. முன்பே மனத்திற் செய்துகொண்ட ஒழுங்கு பின்பு தவறிவிடுமேயென்று நினைந்து சொல்லிவந்தேன். நீ ஸ்நானம் செய்து கொண்டு வரலாம்'' என்று அவரை அனுப்பிவிட்டுத் தாமும் ஸ்நானம் செய்யப் போய்விட்டார். பக்கத்திலிருந்த சிலரால் இச்செய்தி மாயூரத்திலும், அயலூர்களிலும் பரவலாயிற்று. கேட்ட யாவரும் மிகவும் விம்மிதமுற்று வந்து வந்து பிள்ளையவர்களைப் பார்த்துப் பாராட்டிச் செல்வாராயினர்.
மிகவும் முகம் வாடிச் சோர்வோடு கோபால பிள்ளை அங்கேயிருத்தலைப் பிற்பகலில் வந்த மேற்கூறிய வைத்தியலிங்கம் பிள்ளை கண்டு, ''ஏன் இப்படி இருக்கிறீர்?'' என்று கேட்டு நிகழ்ந்தவற்றை அயலாரால் தெரிந்து கொண்டு அவரைப் பார்த்து, ''என்ன! உம்முடைய கொட்டம் இன்றைக்கு அடங்கிற்றாமே. கையில் வலியுண்டாகும்படி ஐயா அவர்கள் பாடல் சொல்லுகிறார்களில்லையேயென்று அன்றைக்குச் சொன்னீரே ! அன்றைத் தினம் நீர் சொன்னது எனக்கு மிக்க வருத்தந்தான். துள்ளின மாடு பொதி சுமக்கும்'' என்று சொன்னார். அந்தச் சமயத்தில் அங்கே வந்த இப்புலவர்பிரான், ''தம்பி, அவனை ஒன்றும் சொல்லவேண்டாம். அவன் நல்ல பிள்ளை. மிகவும் வருந்துவான்'' என்று சொல்லி அவரை அடக்கினார். அப்பால் கோபால பிள்ளையின் கைவலி தீரப் பலநாள் சென்றன. அவர் மறுபடியும், வந்து எழுதுவதை ஒப்புக்கொள்ளும் வரையில் எழுதிவந்தவர் மாயூரம் முத்துசாமி பிள்ளையாவர்.
இயல்பாகவே பிள்ளையவர்களிடத்தில் பக்தியுள்ளவராக இருந்த கோபால பிள்ளைக்கு இந்த நிகழ்ச்சிக்குப்பின் இவர்பால் அளவிறந்த மதிப்புண்டாயிற்று. உண்மையில் இவரை ஓர் அவதார புருஷரென்றே நினைத்து அச்சங்கொண்டு இவரிடம் ஒழுகிவருவாராயினர். இச் செய்தி பின்பு அவர் இயற்றிய,
விருத்தம்.
[16] "சீர்பூத்த மயிலாடு துறைத்தளிமே வருட்பெருமான் சீர்த்தி யாய
பேர்பூத்த மான்மியமாம் வடமொழியைத் தென்மொழியாற் பிறங்கச் செய்தான்
பார்பூத்த ஞானகலை முதற்பலவு முணர்ந்துபுகழ் பரந்து மேய
வார்பூத்த சிரகிரிவாழ் மீனாட்சி சுந்தரநா வலவ ரேறே''
"மாலாதில் லறத்தமர்ந்து துறவறத்தார் புகழவருள் மாண்பு பூண்டு
பாலோடு தேன்கலந்த தெனத்தளிக டொறுஞ்சென்று பதிகஞ் சொற்ற
ஆலால சுந்தரமே மீனாட்சி சுந்தரப்பேர் அமைய வாய்ந்து
தோலாத மாயூரப் புராணமொழி பெயர்த்தனனேற் சொல்வ தென்னே''
என்னும் செய்யுட்களால் விளங்கும்.
சவேரிநாத பிள்ளை.
வேதநாயகம் பிள்ளையால் அனுப்பப்பட்டுச் சவேரிநாத பிள்ளையென்ற ஒருவர் இவரிடம் அக்காலத்திற் படிக்க வந்தார். அவருடைய ஊர் காரைக்கால். அவர் நல்ல அறிவாளி. பிள்ளையவர்களிடத்தில் மிக்க பக்தி உள்ளவர். பிரசங்கசக்தி மிக்கவர். மற்றவர்களைக் காட்டிலும் பிள்ளையவர்களுக்கு வேண்டிய தொண்டுகளை அதிகமாகச் செய்துவந்தவர். கிறிஸ்தவ மதத்தினர்; சைவர்களைப் போலவே சீலமுடையவராகவும் மிகுந்த மரியாதையாகவும் நடந்துவந்தார். ஒருநாளேனும் இப்புலவர் சிகாமணியைப் பிரிந்திருக்க மாட்டார். இனிய சாரீரமுடையவர். இக் கவிஞர்பிரானுடைய இறுதிக்காலம் வரையில் நம்பிக்கையாக இருந்தவர்களில் அவரைப் போன்றவர் வேறு எவரும் இல்லை.
திருநாகைக் காரோணப் புராண அரங்கேற்றம்.
நாகைப் புராணத்திற் சுந்தரவிடங்கப் படலத்திற்கு மேலே சில பாகம் ஆனவுடன் விபவ வருடம் (1869) தை மாதக் கடைசியில் அத்தலத்திலுள்ளாரால் அரங்கேற்றுவதற்கு அழைக்கப்பெற்று இவர் நாகபட்டினம் சென்றார். மாணவர்கள் முதலியோரும் உடன் சென்றார்கள். பங்குனி மாதம் அரங்கேற்றம் ஆரம்பமாயிற்று. அப் புராணம் இயற்றுவிக்க முயற்சி செய்தவர்களுள் ஒருவரான முற்கூறிய வீரப்ப செட்டியார் முதலிய அன்பர்களுடைய வேண்டுகோளின்படி முத்தி மண்டபத்தில் அப்புராணத்தை இவர்
அரங்கேற்றத் தொடங்கினார்.
அந்நகரில் அப்போதிருந்த கிருஷ்ணஸாமி உபாத்தியாயர் முதலிய தமிழ் வித்துவான்களும், அங்கே ஒரு கலாசாலையில் தமிழ்ப் பண்டிதராக இருந்தவரும் இவருடைய மாணாக்கருமாகிய புருஷோத்தம நாயுடு என்பவரும் உடனிருந்து அவ்வப்பொழுது வேண்டிய அனுகூலங்களைச் செய்து வந்தார்கள்.
ஒருவருஷகாலம் அந்தப் புராணப்பிரசங்கம் நடைபெற்றது. இடையிடையே சில மாதங்கள் நின்றதுண்டு. பொறாமையுள்ளவர்களாகிய சிலர் இடையிலே ஆட்சேபித்தபொழுது இவருக்குச் சிரமம் கொடாமல் வேதாகமப் பிரமாணங்களோடு தக்க சமாதானங் கூறி உபகரித்தவர் முன்பு தெரிவித்த மகாதேவ சாஸ்திரிகள் முதலியோர்.
ஸ்ரீ சுந்தரஸ்வாமிகள்.
அரங்கேற்றம் நடைபெற்றுவருகையில், பரமசிவனுடைய ஏற்றத்தை யாவரும் எளிதில் உணரும்படி எங்கும் பிரசங்கித்து வந்தவரும் ஸ்ரீசூதசங்கிதையை ஏழுநாளில் உபந்யஸித்து அதன் பொருளைச் சிவபக்தர்கள் அறியும்படி செய்துவந்தவரும் தமக்குப் பழக்கமுள்ள சிவபக்தர் யாவரையும் ஏகருத்திராட்சதாரணம் செய்து கொள்ளும்படி செய்வித்தவரும் மகாவைத்தியநாத சிவன் முதலியவர்களுடைய மந்திரோபதேச குருவுமாகிய கோடகநல்லூர் ஸ்ரீ சுந்தரஸ்வாமிகள் அந்நகர்க்கு வந்திருந்தார்; இவர் புராணம் அரங்கேற்றுவதைக் கேள்வியுற்று உடனே அரங்கேற்றுமிடத்திற்கு வந்தனர்; அவரைக் கண்ட எல்லாரும் உபசரிக்க, அவர் இருந்தார். பிள்ளையவர்கள் அவருடைய வரவை அறிந்து எழுந்து பாராட்டிச் சில வார்த்தைகளைச் சொல்லத் தொடங்கியபொழுது அவர் இவரை நோக்கி, “சிவபக்த சிரோமணீ! வித்வத் சிகாமணீ ! உங்களைப்போலத் தமிழிற் சிவபுராணங்களையும் சிவஸ்துதிகளையும் நன்றாகச் செய்பவர்கள் இப்பொழுது யார் இருக்கிறார்கள்? நீங்கள் செய்த சூத சங்கிதைப் பாடல்களை அப்பொழுதப்பொழுது மகாவைத்தியநாத சிவனும் திருநெல்வேலி ஐயாஸாமிபிள்ளையும் சொல்லக் கேட்டிருக்கிறேன்; மொழிபெயர்ப்பு மிக நன்றாக இருக்கிறது. சில சமயங்களில், நான் பிரசங்கம் செய்யுங்காலத்தில் அப்பொழுதப்பொழுது அதிலுள்ள சில பாடல்களை அவர்களையாவது வேறு யாரையாவது கொண்டு சொல்லச் செய்வேன். உங்களைப் பார்க்கவேண்டுமென்ற எண்ணம் எனக்கு நெடுநாளாக இருந்தது. இன்று அது ஸ்ரீ காயாரோகணேசுவரர் கிருபையால் நிறைவேறியது. உங்களைப் போன்றவர்களே உலகத்திற்கு உபகாரிகள். நீங்கள் க்ஷேமமாக இருக்க வேண்டும்'' என்று பாராட்டி அன்று பிரசங்கம் பூர்த்தியாகும் வரையில் இருந்து கேட்டு மகிழ்ந்துவிட்டுத் தம் இருப்பிடம் சென்றார்.
ஸ்ரீ சங்கராச்சாரிய ஸ்வாமிகள்.
கும்பகோணம் மடத்தில் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகளாக அக்காலத்தில் எழுந்தருளியிருந்த ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள் அப்போது நாகபட்டினத்துக்கு விஜயம் செய்திருந்தார்கள். அந்த மடத்து ஸம்ஸ்கிருத வித்துவான்களால் இவர் அங்கே ஸ்தலபுராணப் பிரசங்கம் செய்வதை ஸ்வாமிகள் அறிந்து இவரைப் பார்க்க வேண்டுமென்று திருவுள்ளங்கொண்டார்கள். அப்பொழுது, இவர் மகாதேவ சாஸ்திரிகளுடன் ஒருநாள் பிற்பகலிற் சென்று தரிசனம் செய்தார். ஸ்வாமிகள் மிகுந்த கருணையுடன் இவருடைய பெருமைகளை அங்கிருந்த கனவான்களுக்கு எடுத்துக் கூறினார்கள். பிரசங்கம் செய்யப்படும் புராணத்திலிருந்து சில பகுதிகளையும் கேட்டுச் சந்தோஷித்தார்கள். அப்பாற் கம்பராமாயணத்திலிருந்து ஏதேனும் சொல்லவேண்டுமென்று ஸ்வாமிகள் கட்டளையிட்டார்கள்; அந் நூலிற் சுவையுள்ள ஒரு பாகத்தை இவர் எடுத்துப் பிரசங்கித்தார். கேட்ட ஸ்வாமிகள் ஆனந்தித்துத் தக்க ஸம்மானம் செய்து இவரை ஆசீர்வதித்து அனுப்பினார்கள்.
கீழ்வேளூர்ச் சுப்பிரமணிய தேசிகர்.
இவருக்கு இலக்கண விளக்கம் பாடஞ் சொல்லிய கீழ்வேளூர்ச் சுப்பிரமணிய தேசிகர் இவருடைய வேண்டுகோளுக்கு இணங்கிச் சிலநாள் வந்திருந்து புராணப் பிரசங்கத்தைக் கேட்டு மகிழ்ந்து சென்றார். அவர் வந்திருந்தபொழுது இக்கவிஞர்கோமான் தாம் அவரிடம் பாடங்கேட்ட நன்றியை மறவாமல் மிகவும் மரியாதையாக உபசரித்து யாவருக்கும் அவருடைய பெருமையை எடுத்துக் கூறினார்.
நாகபட்டினத்தில் இருக்கும் பொழுது இக் கவிஞர்பிரானுக்கு வேண்டிய சௌகரியங்கள் முற்கூறிய அப்பாத்துரை முதலியார் முதலியவர்களால் ஒழுங்காகச் செய்யப்பெற்று வந்தன.
திருவாவடுதுறை போய் வந்தது.
புராணம் அரங்கேற்றிக்கொண்டு வருகையில் சுக்கில வருடம் (1869) ஆடி மாதம் திருவாவடுதுறையில் அம்பலவாண தேசிகர் பரிபூரணம் ஆயினாரென்றும், ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரவர்களுக்குப் பெரிய பட்டம் ஆயிற்றென்றும் அறிந்த இவர் இடையில் திருவாவடுதுறை சென்று ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரவர்களைத் தரிசித்துக்கொண்டு விடைபெற்று மீண்டும் நாகபட்டினம் வந்தனர்; வந்து அரங்கேற்றிப் புராணத்தைப் பூர்த்தி செய்தார்.
புராணங்கள் அச்சிடப்பெற்றமை.
இவர் நாகபட்டினத்தில் இருக்கும்பொழுது, மாயூரத்திலிருந்த அரங்கக்குடி முருகப்பிள்ளையவர்கள் குமாரர் வைத்தியலிங்கம் பிள்ளையின் உதவியால் மாயூரப் புராணமும், முற்கூறிய அப்பாத்துரை முதலியார் உதவியால் நாகைக் காரோணப் புராணமும் சோடசாவதானம் சுப்பராய செட்டியாருடைய மேற்பார்வையில் சென்னையில் அச்சிடப்பெற்று நிறைவேறின. அரங்கேற்றி முடிவதற்குள்ளாகவே திருநாகைக் காரோணப் புராணம் பதிப்பிக்கப்பட்டது.
நாகைப் புராணம் சிறப்பிக்கப்பெற்றது.
புராண அரங்கேற்றம் பூர்த்தியான தினத்தில் புராணச் சுவடி பல்லக்கில் வைக்கப்பெற்று மிக்க சிறப்புடன் ஊர்வலம் செய்யப்பட்டது. அப்பாத்துரை முதலியாரும் அந்நகரத்தாரும் எவ்வளவு உயர்ந்த ஸம்மானங்கள் செய்யலாமோ அவ்வளவும் செய்து உபசரித்துப் பாராட்டினார்கள்.
பொன்னூசற் பாட்டு முதலியன.
இவர் நாகபட்டினத்தில் இருக்கையில் இவரைப் பலவகையாக உபசரித்து ஆதரித்து வந்த அப்பாத்துரை முதலியாருடைய குமாரராகிய தம்பித்துரை முதலியாருக்குக் கல்யாணம் நடைபெற்றது. பிள்ளையவர்கள் கல்யாண காலத்தில் கூட இருப்பதை அவர் ஒரு பெரிய பாக்கியமாக எண்ணி மகிழ்ந்தார். அவருடைய பந்துக்களிற் சிலரும் அவரும் இக்கவிஞர் கோமானை, அந்தக் கல் யாணத்திற் பாடுவதற்கேற்றபடி மணமகன் மணமகளாகிய இருவருடைய நல்வாழ்வையுங் கருதிச் சில பாடல்கள் இயற்றித் தர வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர். அப்பாத்துரை முதலியாருடைய தூய அன்பில் இவர் ஈடுபட்டவராதலின் அவருடைய விருப்பத்திற்கிணங்கிப் [17]பொன்னூசல், லாலி, கப்பற்பாட்டு, மங்களம், வாழ்த்து என்பவற்றைப் பாடியளித்தனர். அவற்றை அப்பாத்துரை முதலியாரும் பிறரும் பாடுவதற்குரியாரைக் கொண்டு பாடச் செய்து கேட்டு மகிழ்ந்தார்கள். ''இப்புலவர் பிரானாற் பாடப்பெறும் பாக்கியம் இந்தத் தம்பதிகளுக்குக் கிடைத்தது இவர்கள் முற்பிறப்பிற் செய்த புண்ணியப் பயனே'' என்று சொல்லி யாவரும் பாராட்டினர்.
மாயூரத்துக்குத் திரும்பியது.
இவர் நாகபட்டினத்தில் ஒருவருஷ காலத்திற்கு மேல் இருந்து வந்தார். அப்பால், பிரமோதூத வருடம் (1870) ஆரம்பத்தில் மாயூரத்திற்கு வந்து வாசஞ் செய்யலானார்.
திருநாகைக் காரோணப் புராண அமைப்பு.
இப்புலவர் கோமான் இயற்றிய புராணக் காப்பியங்களுள் மிகச் சிறந்ததாகக் கருதப்படுவது திருநாகைக்காரோணப் புராணம். இவர் மாணவர்களிற் பலர் இப்புராணத்தை இவர்பாற் பாடங் கேட்டனர். மிகவும் உழைத்து எல்லா அழகுகளும் செறியும் வண்ணம் இயற்றப்பெற்றதாதலின் இந்நூலினிடத்து இக் கவிஞருக்கே ஒரு தனி அன்பு இருந்து வந்தது. சிவஞான முனிவர் கச்சியப்ப முனிவர் என்பவர்களுடைய நூல்களில் இவருக்குள்ள அனுபவ முதிர்ச்சியும், கவி இயற்றுவதில் இவருக்குள்ள பேராற்றலும், வியக்கத்தகும் கற்பனா சக்தியும் இந்நூலின்கண் நன்றாக வெளிப்படும். இவர் செய்த நூல்களுள் ஒவ்வொன்றிற் சில சில அமைப்புக்கள் சிறப்பெய்தி விளங்கும். இந்நூலிலோ ஒவ்வொரு பகுதியும் ஒவ்வொரு வகையிற் சிறப்புற்று விளங்கும்.
''உழைகுலாம் நயனத் தார்மாட்
டொன்றொன்றே கருதற் கொத்த
தழகெலாம் ஒருங்கே கண்டால்
ஆரதை யாற்ற வல்லார்”
என்ற கம்பராமாயணச் செய்யுள் இங்கே ஞாபகத்திற்கு வருகின்றது. தமிழ்க் காப்பியங்களிற் பரந்து கிடக்கும் பலவகை அணி நயங்களும் இதன் கண்ணே ஒவ்வோரிடத்தில் அமைந்து இலங்கும். சொல்லணி, பொருளணி, தொடை நயம், பொருட் சிறப்பு, சுவைநயம், நீதி, சிவபக்திச் சிறப்பு, சிவஸ்தலச் சிறப்பு, நாயன்மார் பெருமை முதலிய பலவும் இதன்கண் நிரம்பியுள்ளன. தமிழ்க் காப்பியத்தின் இலக்கணம் முழுவதும் உள்ளதாய்ப் பலவகையிலும் நயம் சிறந்து, சுவைப் பிழம்பாக விளங்கும் இக் காப்பியத்தைப் பெறுதற்குத் தமிழ்நாடு தவம் செய்திருத்தல் வேண்டும். பல பழைய புலவர்கள் வாக்கினை ஒருங்கே பார்த்து மகிழ வேண்டுபவர் இந்நூலைப் படித்தாற் போதும். அந்த அந்தப் புலவர்களின் நடைநயமும் பொருளின்பமும் இடையிடையே இப்புராணத்தில் விளங்கித்தோன்றும். இந்நூலைப்பற்றி எவ்வளவு பக்கம் எழுதினாலும் இதன் பெருமையை ஆராய்ந்து கூறிவிட்டதாக ஆகாது. யார் யாருக்கு எந்த எந்த நயங்களில் விருப்பமோ அந்த அந்த நயங்களை இதன்பாற் கண்டு இன்புறலாம். ஸ்தாலீ புலாக நியாயம் பற்றிச் சில செய்யுட்கள் பின்னே காட்டப்படுகின்றன :
தட்சிணாமூர்த்தி துதி
விருத்தம்.
''பதிபசு பாச மென்னப் படுமொரு மூன்றுஞ் சுத்தம்
பதிநிலை யொன்றற் கொன்று பயில்வியாப் பியமா மின்னும்
பதியொடு பசுக்க லக்கும் பண்புமிற் றென்றோர் செங்கைப்
பதிவிர லளவிற் சேர்ப்பிற் பகர்பவற் கடிமை செய்வாம்.”
(இதன்கண் சின்முத்திரையின் பொருள் கூறப்பட்டிருக்கின்றது. சுத்தம்பதி நிலை - சுத்தாவஸ்தை. வியாப்பியம் - அடங்கியிருத்தல். இச்செய்யுளுக்கு நிரனிறையாகப் பொருள் கொள்க.)
மாணிக்கவாசகர் துதி.
“எழுதிடும் வேலை பூமே லிருப்பவ னியற்றப் போக்கி
எழுதுத லில்லா நூல்சொற் றினிதமர் தருமா தேவை
எழுதெழு தெனப்பல் பாச்சொற் றியைதரப் பெயரு மீற்றில்
எழுதிடச் செய்த கோமா னிணையடி முடிமேல் வைப்பாம்.''
(பூமேலிருப்பவன் - பிரமன். எழுதுதலில்லா நூல் - வேதம்.)
அவையடக்கம்.
“காற்றுபல் குறையு மேற்றார் விகாரமுங் கலப்பக் கொண்டார்
வேற்றுமை விலக்கல் செய்யா ரல்வழி விரவி நிற்பார்
சாற்றுமன் மொழியுஞ் சொல்வா ரிலக்கணத் தலைமை வாய்ந்தார்
போற்றுமற் றவர்முன் யானெவ் வேதுவாற் புறத்த னாவேன்.''
(குறை முதலியன சிலேடை. குறை - ஆறாம் வேற்றுமையும் எச்சமும், குறைவு. விகாரம் - புணர்ச்சி விகாரங்களும் செய்யுள் விகாரங்களும், திரிபுணர்ச்சி. வேற்றுமை - எட்டுவேற்றுமைகள், வேறாந்தன்மை. அல்வழி - அல்வழிச்சந்தி, அறமல்லாத வழி. அன்மொழி - அன்மொழித் தொகை, இடத்துக்குரியதல்லாத மொழி.)
அகத்திய முனிவர் நீலாயதாட்சி அம்மையைச் செய்த துதி.
ஆசிரியத்தாழிசை.
''ஆய கருந்தடங்க ணம்மை திருப்பாதம்
பாய பிறவிப் பரவை கடப்பதற்கு
நேய மலியு நெடுங்கலமே போலும்.''
"ஆன்ற கருந்தடங்க ணம்மை திருப்பாதம்
ஏன்ற பிறவி யிருங்காடு மாய்ப்பதற்குக்
கான்ற சுடர்வைக் கணிச்சியே போலும்.''
''அன்பார் கருந்தடங்க ணம்மை திருப்பாதம்
வன்பார் பிறவித் துணங்கறன் மாய்த்திடுதற்
கின்பா ருதய விரவியே போலும்.''
(கருந்தடங்கணம்மை - நீலாயதாட்சியம்பிகை. கலம் - கப்பல். கணிச்சி - மழுப்படை. துணங்கறல் - இருள்.)
(அகத்தீசப்படலம், 34.)
விளா, தென்னை, நாரத்தை யென்பவற்றின் கனிகள்.
கலிநிலைத் துறை.
''ஒரும லத்தடை யுயிரினை விளங்கனி யொக்கும்
இரும லத்தடை யுயிரினை யிலாங்கலி யேய்க்கும்
பொரும லத்தடை மூன்றுடை யுயிரினைப் புரையும்
குரும லர்ப்பசுந் தழைவிரி குலப்பெரு நரந்தம்.''
(ஒரு மலத்தடையுயிர் - விஞ்ஞானகலர். இருமலத்தடையுயிர் - பிரளயாகலர். இலாங்கலி - தேங்காய், தடை மூன்றுடையுயிர் - சகலர். நரந்தம் - நாரத்தங்கனி.)
"பலாசு பற்பல செறியுமீ றொழிந்தவும் பலவே
நிலாவு மாண்பல நெருங்குமீ றொழிந்தவு நெருங்கும்
குலாவு தண்புளி மாவுமீ றொழிந்தவுங் கூடும்
அலாத காஞ்சிரைக் குழுவுமீ றொழிந்தவு மமலும்.''
(பலாசு - புரசு; அதன் ஈறொழிந்தது பலா. ஆண் - ஒரு மரம்; அதன் ஈறொழிந்தது ஆ; ஆ - ஆச்சாமரம். புளிமா - ஒரு மரம்; அதன் ஈறொழிந்தது புளி. காஞ்சிரை - எட்டி; அதன் ஈறொழிந்தது காஞ்சி.)
(நைமிசப்படலம், 21 - 2.)
பரவச்சாதி மகளிர் வருணனை.
கலிநிலைத் துறை
"அம்ப ரத்தியர் கொங்கையம் பரத்தியர் மருங்குல்
அம்ப ரத்தியர் மற்றது சூழ்பல வன்ன
அம்ப ரத்திய ராள்வழக் கறுத்திடு நெடுங்கண்
அம்ப ரத்திய ரன்னராற் பொலியுமச் சேரி.''
(அம் பரத்தியர் - அழகிய பரவச்சாதிப் பெண்கள். கொங்கை அம் பரத்தியர்; பரம் - பாரம். மருங்குல் அம்பரத்தியர் - இடையாகிய ஆகாசத்தை உடையவர்; அம்பரம் - ஆகாசம். பல வன்ன அம்பரத்தியர் - பல நிறங்களையுடைய ஆடையையுடையவர்; அம்பரம் - ஆடை. கண் அம்பு அரத்தியர் - கண்களாகிய அம்பையும் அரத்தையும் உடையவர்.)
(அதிபத்தப்படலம், 10.)
[18]சுப்பிரமணிய தேசிகர் மாலையும் [19]நெஞ்சுவிடு தூதும்.
சுப்பிரமணிய தேசிகர் பெரிய பட்டத்திற்கு வந்தவுடன் இவர், தம்முடைய அன்பிற்கு அறிகுறியாக அவர் மீது மாலை ஒன்றும் நெஞ்சு விடுதூது ஒன்றும் முறையே இயற்றி அரங்கேற்றினார். அவ்விரண்டு நூல்களாலும் மடத்திலுள்ள சம்பிரதாயங்களும் சுப்பிரமணிய தேசிகருடைய அருஞ்செயல்களும் கல்வி வளர்ச்சியும் பிறவும் விளங்கும். சுப்பிரமணிய தேசிகர் மாலையிலுள்ள செய்யுட்களுட் சில வருமாறு :
விருத்தம்.
''ஆன்றநின் கருணை யென்னென வுரைக்கேன்
ஐயநின் பணிக்கமை நாற்கால்
சான்றபல் பசுவு நின்பொது நாமம்
தம்முடற் பொறித்திடப் படுவ
ஏன்றவில் விருகாற் பசுவெனு மெங்கட்
கியைந்தில வவைசெய்புண் ணியமென்
தோன்றவெவ் விடத்துக் கழகமார் துறைசைச்
சுப்பிர மணியதே சிகனே.''
(திருவாவடுதுறையில் மடத்துப் பசுக்களுக்குப் பஞ்சாட்சர முத்திரை பொறிப்பது வழக்கம். ஆதீனகர்த்தர்களாக இருப்பவர்கள் யாவருக்கும் பொதுநாமம் 'நமச்சிவாய' என்பது.)
''வஞ்சனேன் மலநின் றாட்கெதிர் நமனோ
வாய்ந்தகைக் கெதிர்விதி தலையோ
மஞ்சவாங் களத்திற் கெதிர்கொடு விடமோ
மறைந்தகட் கெதிர்சிலை மதனோ
எஞ்சுறா நெடிய சடைக்கெதிர் புனலோ
இனியவாய் நகைக்கெதிர் புரமோ
துஞ்சன்மே வுதற்கு நவில்பெருந் துறைசைச்
சுப்பிர மணியதே சிகனே.''
சுப்பிரமணிய தேசிகர் நெஞ்சுவிடு தூதிலுள்ள சில கண்ணிகள் வருமாறு:-
கலி வெண்பா.
“ஒருமா னெமக்கொளிக்க வோர்கை அமரும்
ஒருமா னொளித்த வொருவன் - பெருமான்
மதிமறைத்த மாசெமக்கு மாற்றி யருள
மதிமறைத்த மாசடையா வள்ளல் - நிதியம்
இருள்கண்ட யாமவ் விருள்காணா வண்ணம்
இருள்கண்டங் காட்டா திருப்போன் - பொருள்கண்ட
மானிடனே யென்ன மருவி யிருந்தாலும்
மானிடனே யென்ன வயங்குவான்.'' (8 - 11.)
(மான் - மகத்தத்துவம், திருக்கரத்தி லேந்திய மான். மதி - புத்தி, பிறை. இருள் - அஞ்ஞானம், விடத்தின் கருமை. மானிடன் - மனிதன், மானை இடக்கரத்திலே உடைய சிவபெருமான். ஆசிரியரைச் சிவபெருமானாகவே எண்ணுதல் மரபு.)
“நெடியகுணக்
குன்றேமெய்ஞ் ஞானக் கொழுந்தே யருட்கடலே
நன்றே யுயிர்க்கருளு நாயகமே - அன்றே
அடுத்தமல பந்த மகற்றவுருக் கொண்டு
மடுத்த பெருங்கருணை வாழ்வே - படுத்தமைந்த
மைம்மாறு சிந்தை வயங்கு மடியார்பாற்
கைம்மாறு வேண்டாத கற்பகமே - பொய்ம்மாறெம்
பேறேயா னந்தப் பெருக்கேஞா னக்கருப்பஞ்
சாறேமெய் யன்பர் தவப்பயனே - நாறுமருட்
சிந்தா மணியே செழுங்காம தேனுவே
சந்தாபந் தீர்க்குந் தனிச்சுடரே - நந்தா
வரமணியே கோமுத்தி வாழ்வே யருட்சுப்
பிரமணிய தேசிகப்பெம் மானே.'' (303 - 9)
வேதநாயகம்பிள்ளை சுப்பிரமணிய தேசிகரைத் தரிசிக்க வந்தது.
ஒருமுறை வேதநாயகம்பிள்ளை சுப்பிரமணிய தேசிகரைத் தரிசிப்பதற்கு வந்தார். தரிசித்துவிட்டுத் தாம் அவர் விஷயமாக இயற்றிவந்த சில செய்யுட்களைச் சொல்லிக் காட்டினர். கேட்ட யாவரும் மகிழ்ந்தனர். அப்பொழுது உடனிருந்த பிள்ளையவர்கள் அவ்விருவரையும் பாராட்டி,
விருத்தம்.
''கூடுபுகழ் மலிதிருவா வடுதுறைச்சுப் பிரமணிய குரவ ரேறே
பீடுமலி வளக்குளந்தை வேதநா யகமேகம் பெய்யும் பாமுன்
பாடுதிற லாளர்பா வுயிர்முனங்குற் றியலுகரம் படும்பா டெய்தும்
நீடுதிற னின்புகழ்முன் னேனையோர் புகழ்போலாம் நிகழ்த்த லென்னே"
என்னும் செய்யுளைக் கூறினார்.
வேதநாயகம் பிள்ளை சுப்பிரமணிய தேசிகருடைய இயல்புகளை மேன்மேலும் அறிந்து ஈடுபட்டனர். ஊர் சென்றவுடன் பிள்ளையவர்களுக்கு அவர்,
விருத்தம்.
“கற்றவர்சி ரோமணியா மீனாட்சி சுந்தரமா கலைவல் லோய்மா
சற்றுயர்சுப் பிரமணிய தேசிகனைத் தினங்காண அவன்சொல் கேட்க
மற்றவனோ டுரைகூறப் பெற்றநின்கண் காதுநா மண்ணிற் செய்த
நற்றவம்யா தறிதரவென் கண்காது நாவறிய நவிலு வாயே”
என்னும் செய்யுளை எழுதியனுப்பினார்.
அம்பர்ப்புராணம் இயற்றத் தொடங்கியது.
சோழநாட்டில் உள்ளதும் தேவாரம் பெற்றதுமாகிய திருவம்பரென்னும் தலத்தில் இருந்த வேளாளப்பிரபுவாகிய வேலுப் பிள்ளை முதலியவர்கள் அத்தலத்திற்குரிய வடமொழிப் புராணத்தை மொழிபெயர்த்துத் தமிழிற் பாட வேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள். இவர் வடமொழிப் புராணப்பிரதியைப் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அப்பொழுது திருமங்கலக்குடிச் சேஷையங்காரைத் தஞ்சைக்கனுப்பிச் சரசுவதி மகாலில், தேடிப்பார்க்கச் செய்தார். சேஷையங்கார் இந்த முயற்சியை விபவ வருஷத்திலிருந்தே மேற்கொண்டு பார்க்கவேண்டிய உத்தியோகஸ்தர்களைப் பார்த்து மிகவும் சிரமப்பட்டு அந்தப் புராணம் அங்கே இருப்பதை அறிந்து பிரதிசெய்வித்துப் பெற்றுச் சுக்கில வருடம் (1869) மார்கழி மாதத்தில் அதை இவருக்கு அனுப்பினார். இவர் தக்க வடமொழி வித்துவான்களுடைய உதவியால் அதைத் தமிழ் வசனநடையில் மொழிபெயர்ப்பித்து வைத்துக் கொண்டு பாட ஆரம்பித்தார்; அப்பொழுது எழுதிவந்தவர் சிவப்பிரகாசையரென்னும் மாணாக்கர்.
மாயூரத்தில் வீடு வாங்கியது.
பிள்ளையவர்கள் தம்முடைய மாணாக்கர்களுக்கு இருக்கவும் படுக்கவும் நல்ல வசதியான இடம் இல்லாமையையறிந்து மாயூரம் தெற்கு வீதியில் திருவாவடுதுறை மடத்திற்கு மேல் புறத் துள்ள இரண்டு கட்டுவீடு ஒன்றைச் சுக்கில வருஷத்தில் 900 ரூபாய்க்கு வாங்கினார். அந்த வீட்டின் தோட்டம் பின்புறத்திலுள்ள குளம் வரையிற் பரவியிருந்தது. அந்தக்குளத்தின் கரையிற் படித் துறையுடன் ஒரு கட்டிடம் கட்டுவித்து அதிலிருந்து பாடஞ் சொல்லவேண்டுமென்றும் சேமம் முதலியவற்றை அமைத்து அங்கேயிருந்து சிவபூசை செய்ய வேண்டுமென்றும் இவர் எண்ணினார். அதனைக் குறிப்பால் அறிந்த பட்டீச்சுரம் ஆறுமுகத்தா பிள்ளை வேண்டிய மரங்களை அனுப்பியதன்றிக் கட்டிடங் கட்டுதற்கு வேண்டிய செலவிற்குரிய பொருளையும் அனுப்பினார். அவர் செயலைக் கண்டு மனமுவந்த இவர் தம்முடைய நன்றியறிவைப் புலப்படுத்தி ஒரு கடிதம் எழுதியனுப்பினார். வழக்கப்படியே அக்கடிதத்தின் தலைப்பில் எழுதப்பெற்ற பாடல் வருமாறு :-
(விருத்தம்)
“அருளினாற் பெருங்கடலை யீகையாற் பசுமுகிலை யளவாக் கல்வித்
தெருளினாற் பணியரசைப் புரத்தலாற் றிருமாலைச் சிறுப ழிக்கும்
வெருளினா லறக்கடவு டனைவென்று நன்றுபுரி மேம்பா டுற்றுப்
பொருளினாற் பொலிந்துவள ராறுமுக மகிபன்மகிழ் பூத்துக் காண்க.''
அம் மரங்கள் முதலியவற்றைக் கொண்டு அன்பர்கள் அக் கட்டடத்தை இவர் விருப்பத்தின்படியே பூர்த்திசெய்வித்தனர். அதன் பின்பு அவ்விடத்திலேயே இவர் பாடஞ் சொல்லுதலும் சிவ பூசை செய்தலும் நடைபெற்று வந்தன.
அதுகாறும் திரிசிரபுரத்தில் வசித்துவந்த தம் மனைவியாரையும் புதல்வர் சிதம்பரம் பிள்ளையையும் இப்புலவர்பிரான் வருவித்தனர்; சுக்கில வருஷத்தில் மகர சங்கராந்தியில் அவர்களுடன் புதிய வீட்டிற்குக் குடிவந்து மனமுவந்து அதில் ஸ்திரமாக இருப்பாராயினர்.
[20] திருவிடைமருதூருலா.
திருவனந்தபுரம் மகாராஜா காலேஜ் தமிழ்ப் பண்டிதராக இருந்த சாமிநாத தேசிகர் முன்பு இவர்பாற் பாடங்கேட்ட காலத்தில் அவர் தந்தையாராகிய சிவக்கொழுந்து தேசிகர் செய்த திருவிடைமருதூர்ப் புராணம் முதலியவற்றை இவர் அவருக்குப் பாடஞ் சொன்னதுண்டு. அப்பொழுது ஸ்ரீ மகாலிங்க மூர்த்தியுடைய திருவருட் செயலிலும் அந்த ஸ்தல சரித்திரத்திலும் இக் கவியரசருடைய மனம் ஈடுபட்டது. ஆதலின் ஏதேனும் ஒரு பிரபந்தம் திருவிடைமருதார் விஷயமாகச் செய்யவேண்டுமென்ற விருப்பம் இவருக்கு உண்டாயிற்று. அது தெரிந்த பலர், “தங்கள் வாக்கினால் இத்தலத்திற்கு ஓருலாச் செய்யவேண்டும்'' என்று கேட்டுக் கொண்டனர். இவர் மேற்கூறிய புராணத்திலும், முன்பு ஞானக்கூத்தரால் அத்தலத்திற்குச் செய்யப்பட்டிருந்த பழைய புராணத்திலும், தேவாரத் திருமுறைகளிலும், திருவாசகத்திலும், பட்டினத்துப் பிள்ளையார் இயற்றிய மும்மணிக் கோவையிலும் உள்ள தலவரலாறுகளையெல்லாம் அறிந்து உலாவைப் பாட ஆரம்பித்து அரிவைப் பருவம் வரையிற் செய்து வைத்தனர்.
பின்பு தஞ்சாவூருக்கு இவர் ஒரு முறை போயிருந்தபொழுது உடன் சென்றிருந்த முத்துசாமி பிள்ளை என்பவரால் ஞாபகப்படுத்தப்பட்டுக் கரந்தையிலுள்ள திருவாவடுதுறை மடத்தில் இருந்து அவ்வுலாவை நிறைவேற்றி முடித்தார். அந்நூல் பிரமோதூத வருடம் (1870) திருவிடைமருதூர்க் கோயிற் சந்நிதியில் அக் கோயிற் கட்டளை விசாரணை செய்துவந்த ஸ்ரீ சிவதாணுத் தம்பிரானவர்களுடைய முன்னிலையில் அரங்கேற்றப்பெற்றது. அப்போது அங்கே வந்து கேட்டு ஆனந்தித்தவர்கள் ஸ்ரீ ராஜா கனபாடிகள் முதலிய வடமொழி வித்துவான்களும் அவ்வூரிலிருந்த அபிஷிக்த வகையினரைச் சார்ந்த பல பெரியோர்களும் சில மிராசுதார்களும் ஆவர். ஒவ்வொருநாளும் உலா அரங்கேற்றுகையில் தியாகராச செட்டியார் கும்பகோணத்திலிருந்து வந்து வந்து கேட்டுவிட்டுச் செல்வார்.
அந்த உலாவிலுள்ள கண்ணிகள் : 721. அவற்றுட் சில வருமாறு:-
சிவபெருமான்.
(கலிவெண்பா)
''சொல்லமுதைப் பாகுவந்து தோயவைத்தோன் கைப்பகழி
வில்லமர்பூ நாரிதனை மேவவைத்தோன் - அல்லற்
சிறுவிதியா கத்திற் றினகரற்கு முன்னம்
குறுகியிருள் கூடவைத்த கோமான்.'' (11 - 2.)
(சொல்லமுது - ஸரஸ்வதி. பாகு – பாகன் என்றது பிரமதேவனை; சொல்லப்படுகிற அமிர்தத்தைத் தேம்பாகு வந்து தோயவென்பது மற்றொரு பொருள். கைப்பகழி - திருமால், வில் அமர் பூ நாரி - ஒளி அமர்ந்த பூவிலுள்ள பெண்ணாகிய திருமகள்; வில்லிற் பூட்டிய நாணியை அம்பு மேவவென்பது மற்றொரு பொருள். சிறுவிதி - தக்கன். கண்ணைப் பறித்தமையால் சூரியனுக்கு முன்னே இருள் கூடியது.)
உடன் வருவோர்கள்.
"நயங்குல வின்ப நறும்பலம்பெற் றுய்ய
வயங்கு மொருகோட்டு மாவும் - சயங்கொள்சத
கோடி யரசின் குலந்தழைய வெம்பகையைத்
தேடியவோர் வேல்கொள் செழுங்குருந்தும்
***
ஆய்மனைசெந் தாமரையே யாக வுறைவாளைத்
தாய்மனை யென்றழைக்கத் தக்கோனும் - தூயவையை
நீரு நெருப்பு நிரம்பு தமிழ்ப்பெருமை
ஓரும் படியருள்கொ ளொண்மழவும் - தீராத்துன்
பாய கடலமண ராழ வரையொடலை
மேய கடன்மிதந்த வித்தகனும்
***
கைச்சிலம்பின் றோலுடைத்தன் காற்சிலம்பி னோசைசெவி
வைச்சிலம்பி னுண்டுய்ந்த வானவனும் - பச்சுமைகை
ஆய்நீர் கரந்த வரியமுடி மேல்வழிய
வாய்நீர் பொழியன்பு மாமுகிலும்'' (198 - 209)
(பலம் - பயன்; பழமென்பது மற்றொரு பொருள். ஒரு கோட்டுமா - ஒரு கொம்பையுடைய விநாயகர்; ஒரு கிளையையுடைய மாமரம். சதகோடி - வச்சிராயுதம். அரசு - இந்திரன். குருந்து - முருகவேள். இப்பகுதியில் மரங்களின் பெயர்கள் தொனிக்கின்றன. தக்கோன் - ஐயனார். மழவு - சம்பந்தமூர்த்தி நாயனார். கைச்சிலம்பின் - யானையின். வைச்சு - இல்லத்தில். வானவன் - சேரமான் பெருமாணாயனார். உமைகை நீர் - கங்கை. முகில் - கண்ணப்ப நாயனார்.)
தோழிமார் கூற்று.
''நீயருகு மேவுவையே னீடுலகி னாகமெலாம்
போயவர்பூ ணாகிப் பொலியுமே - தூயமன
மானக்கஞ் சாறர் மகள்கோதை யன்றிமற்றோர்
தேனக்க கோதைகளுஞ் சென்றேறி - மேனக்க
பஞ்சவடி யாமே பரவொருத்தர் கல்லன்றி
விஞ்சவெவர் கற்களுமெய் மேவுமே - துஞ்சும்
இருவ ரெலும்பன்றி யெல்லா ரெலும்பும்
பொருவரிய மேனி புகுமே - மருவுசிலை
வேடனெச்சி லல்லாது வெங்கா னுழலுமற்றை
வேடரெச்சி லும்முணவாய் மேவுமே - நாடுமறை
நாறும் பரிகலம்போன் ஞாலத்தார் மண்டையெலாம்
நாறும் பரிகலமா நண்ணுமே - தேறுமொரு
மான்மோ கினியாய் மணந்ததுபோன் மற்றையரும்
மான்மோ கினியாய் மணப்பரே - நான்மறைசொல்
வல்லா னவனையன்றி மாலா தியபசுக்கள்
எல்லாம் பிரமமெனப்படுமே - வல்லார்
திருவருட்பா வோடுலகிற் சேர்பசுக்கள் பாவும்
திருவருட்பா வென்னச் செலுமே - பொருவா
வரமணிமா டத்தா வடுதுறைவா ழுஞ்சுப்
பிரமணிய தேசிகன்போற் பேண - உரனமையா
எல்லாரு மெய்க்குரவ ரென்று வருவாரே
நல்லாயென் சொன்னாய் நகையன்றோ.'' (410-420)
(ஏகநாயகரைத் தரிசித்து, '' உமாதேவியாரைப் போல என்னையும் இவரருகே இருக்கச் செய்யுங்கள்” என்ற பெதும்பையை நோக்கித் தோழியர் கூறும் கூற்று இது.)
உலாவை அரங்கேற்றி வருகையில் அதன் அருமையை அறிந்து பலர் பாராட்டினார்கள். அங்கிருந்தவர்களிற் சிலர் பொறாமையால் புறம்பே இவரைப்பற்றித் தூஷித்து வந்தனர். அதையறிந்த தியாகராச செட்டியார் ஒவ்வொரு நாளும் உலா அரங்கேற்றப்பட்ட பின்னர் அங்கே வந்திருந்தவர்களை நோக்கி, ''இதில் எவருக்கேனும் ஏதாவது ஆட்சேபமுண்டா? இருந்தால் நான் சமாதானம் கூறுவேன்'' என்று சொல்லுவது வழக்கம். ஒருவரும் ஆட்சேபிக்கவில்லை. அப்பால் அந்நூல் அரங்கேற்றி நிறைவெய்தியது. யாவரும் அந்நூலை மிகப் பாராட்டி, ''இதனைப் போல் வேறோருலாவைக் கண்டதுமில்லை, கேட்டதுமில்லை'' என்று சொல்லி இவருக்கு நல்ல ஸம்மானஞ் செய்தார்கள்.
[21] ஸ்ரீ ஆதிகுமரகுருபர ஸ்வாமிகள் சரித்திரம்.
திருப்பனந்தாளிலுள்ள ஸ்ரீகாசிமடத்துத் தலைவராகவிருந்த ஸ்ரீ காசிவாசி இராமலிங்கத் தம்பிரானவர்களுக்கும் இவருக்கும் மிக்க பழக்கம் உண்டு. இவரைக்கொண்டு ஸ்ரீ ஆதிகுமர குருபர ஸ்வாமிகள் சரித்திரத்தைக் காப்பியச் சுவைபடச் செய்விக்க வேண்டுமென்னும் எண்ணம் அவருக்கு இருந்தது, ஒரு தினம் இவருடன் சம்பாஷணை செய்து கொண்டிருந்தபொழுது அந்தச் சரித்திரத்தைச் செய்யவேண்டுமென்றும் அதில் இன்ன இன்ன பாகங்களை இன்ன இன்ன விதமாகப் பாடவேண்டுமென்றும் அவர் வற்புறுத்திச் சொன்னார். அவர் சொல்லியவற்றிற் சில இவருக்கு உடன்பாடாக இராவிட்டாலும் மறுத்தற்கஞ்சி அவர் விரும்பியவாறே அந் நூலைச் செய்து நிறைவேற்றினார். அதில் ஸ்ரீ குமர குருபர ஸ்வாமிகளுடைய இளமைப் பருவ வருணனையும், ஸ்தல யாத்திரையும், திருச்செந்தூராண்டவன் அருளிச் செயலும், பிறவும் மிக நன்றாக அமைக்கப்பெற்றுள்ளன.
அந்நூலிலுள்ள பாடல்கள்: 338. அவற்றுட் சில வரு மாறு:-
பாண்டிநாட்டு வளம்.
(தரவு கொச்சகக்கலிப்பா)
“சாலெலாம் வெண்டாளந் தளையெலாஞ் செஞ்சாலி
காலெலாங் கருங்குவளை காவெலாங் கனிச்சாறு
பாலெலாங் கழைக்கரும்பு பாங்கெலா மிகத்திருந்தி
நூலெலா நனிவிதந்து நுவல்வளத்த தந்நாடு.'' (9)
ஸ்ரீ வைகுண்ட நகரம்.
“ஆய்ந்தபுகழ்ப் போர்வையுடை யத்திருநாட் டினுக்கழகு
தோய்ந்ததிரு முகமென்னத் துலங்குநக ரொன்றதுதான்
ஏய்ந்தபெருஞ் சைவர்குழாந் திருக்கயிலை யென்றிசைப்ப
வாய்ந்தவயி ணவர்கடிரு வைகுண்ட மெனுநகரம்.'' (12 )
செந்திலாண்டவன் இலை விபூதியின் சிறப்பு.
(விருத்தம்)
“இலையமில் குமர வேண்முன் வணங்குவார்க் கென்றுந் துன்பம்
இலையடு பகைசற் றேனு மிலைபடு பிணிநி ரப்பும்
இலையௗ ற் றுழன்று வீழ்த லிலைபல பவத்துச் சார்பும்
இலையென விலைவி பூதி யெடுத்தெடுத் துதவல் கண்டார்.'' (44)
(இலையம் = லயம் - அழிவு. நிரப்பு - வறுமை. அளறு - நரகம்.)
சுந்தர நாயுடு.
தரங்கம்பாடியில் நீதிபதியாக இருந்த சுந்தரநாயுடு என்பவர் தம் ஊருக்குப் போகும்பொழுது ஒவ்வொரு வருஷத்திலும் திருவாவடுதுறைக்கு வந்து தங்கி ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரைத் தரிசித்துச் சில தினமிருந்து சம்பாஷித்து விட்டுச் செல்வார். வைஷ்ணவத்திற் பற்றுடையவர். தெலுங்கு மொழியிற் செய்யுள் இயற்றும் வன்மை அவருக்கு உண்டு. ஒருமுறை வழக்கப்படி அவர் திருவாவடுதுறை மடத்திற்கு வந்திருந்தபொழுது தாம் இயற்றிய தெலுங்குப் பத்தியங்களைச் சொல்லிப் பிரசங்கித்துக் கொண்டிருந்தார். உடனிருந்த பிள்ளையவர்கள் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருடைய குறிப்பையறிந்து உடனே அவர் விஷயமாக,
(விருத்தம்)
"தூமேவு பாகவத சிரோமணியாஞ் சுந் தரப்பேர்த் தோன்றால் நீபின்
பூமேவு மால்பதத்துச் சூரிகளோ டிருத்தறனைப் புலப்ப டுத்தற்
கேமேவு தரங்கையிடைச் சூரிகளோ டவையினில்வீற் றிருக்கப் பெற்றாய்
மாமேவு நினதன்புஞ் சீர்த்தியுமீண் டெடுத்துரைக்க வல்லார் யாரே''
(சூரிகள் - நித்திய சூரிகள், ஜூரி யங்கத்தினர்கள்.)
என்னும் செய்யுளைக் கூறிப்பாராட்டினார். அந்தச் செய்யுளை இவர் விரைவில் இயற்றியதையும் அதில் தம்முடைய உத்தியோகச் செய்தியும் நித்திய சூரிகளைப்பற்றிய செய்தியும் சிலேடையாக அமைந்திருப்பதையும் அறிந்த சுந்தரநாயுடு இவருடைய கவித்துவத்தை வியந்து புகழ்ந்து சென்றனர்.
கல்லிடைக்குறிச்சி போய்வந்தது.
ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் பெரிய பட்டத்திற்கு வந்த பின்பு முன்னமே நிச்சயித்திருந்தபடி இவரிடம் படித்துவந்த முற்கூறிய ஸ்ரீ நமச்சிவாயத் தம்பிரானவர்களுக்கு அபிஷேகம் செய்வித்து நமச்சிவாய தேசிகரென்ற பெயருடன் சின்னப்பட்டம் அளித்தனர்; பின்பு வழக்கப்படி கல்லிடைக்குறிச்சி மடத்திற்கு அவரை அனுப்பினார். ஸ்ரீநமச்சிவாய தேசிகர் விரும்பியபடி அவருடன் கல்லிடைக்குறிச்சிக்கு இப்புலவர் பெருமானும் சென்றனர். அங்கே சில நாள் இருந்து அவரை மகிழ்வித்து அவரால் உபசரிக்கப்பெற்று மீண்டும் திருவாவடுதுறை வந்து சேர்ந்தார். அப்பால் அங்கே ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருடைய அவையை அலங்கரித்து வந்தனர்.
மாயூரவாசம்.
தாம் புதிதாக மாயூரத்தில் வாங்கிச் செப்பஞ் செய்திருந்த வீட்டில் வசிக்கவேண்டுமென்ற விருப்பம் இவருக்கு அப்போது உண்டாயிற்று. ஆதலின் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருடைய அனுமதி பெற்றுக்கொண்டு மாயூரஞ்சென்று அவ்வாறே இருந்து வருவாராயினர்.
மாயூரம் சிறந்த சிவஸ்தலமாதலாலும் கல்விமான்களாகிய பல பிரபுக்களும் தமிழபிமானிகளும் வித்துவான்களும் நிறைந்திருந்த நகரமாதலாலும் இவருக்கு அவ்வூர் வாழ்க்கை ஏற்றதாகவும் உவப்புள்ளதாகவும் இருந்தது. அங்கே இருந்துகொண்டு அடிக்கடி திருவாவடுதுறை சென்று ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரைத் தரிசித்துச் சிலநாள் அங்கே இருந்துவிட்டு வருவார்.
இவருடைய வீடு ஒரு கலைமகள் நிலயமாகத் திகழ்ந்தது. பல மாணாக்கர்களுக்குப் பாடஞ் சொல்வதும், தம்மைப் பார்க்க வந்த பிரபுக்களிடம் தமிழ் நூல்களிலுள்ள அருமையான செய்திகளைக் கூறி மகிழ்வித்தலும், புதிய செய்யுட்களை இயற்றுதலும் ஆகிய தமிழ்த் தெய்வ வழிபாடுகளே காலை முதல் இரவு நெடுநேரம் வரையில் இவருடைய வேலையாக இருந்தன. எதை மறந்தாலும் தமிழை மறவாத பெருங்கவிஞராகிய இவர் இங்ஙனம் தமிழறிவை வரையாமல் வழங்கிவரும் வண்மையைப் புகழாதவர் அக்காலத்து ஒருவரும் இல்லை. தமிழை நினைக்கும் பொழுதெல்லாம் இக்கவிஞர் கோமானையும் உடனினைத்துப் புகழ்தலைத் தமிழ்நாட்டினர் மேற்கொண்டனர். அவர்களுள்ளும் சோழநாட்டார் தங்கள் 'சோறுடைய சோணாடு' தமிழளிக்கும் சோணாடாகவும் இப்புலவர் பிரானால் ஆனமையை எண்ணி எண்ணி மகிழ்ந்து வந்தனர். அச் சோழநாட்டுள்ளும் மாயூரத்தைச் சார்ந்த பிரதேசத்திலுள்ளவர்கள் தமிழ்த்தெய்வமே ஓர் அவதாரம் ஆகித் தங்களை உய்விக்க வந்திருப்பதாக எண்ணிப் போற்றிவரலாயினர். தமிழ்ப் பயிற்சி இல்லாதவர்கள் கூட இப்புலவர் சிகாமணியைப் பார்த்தல் ஒன்றே பெரும்பயனென்று எண்ணி வந்து வந்து இவரைக் கண்டுகளித்துச் செல்வார்கள். இங்ஙனம் இப்பெரியாருடைய புகழ் தமிழ்மணக்கும் இடங்களிலெல்லாம் பரவி விளங்கியது.
----------
[1]. கல்யாணம் ஆகியிருக்கிறதென்று பொருள்.
[2]. தேவிசாலம் - தேவிகோட்டை
[3]. காங்கேயனென்னும் அரசனுக்காகச் சிவபெருமான் இத்தலத் திற் பொன்மாரி பெய்வித்தனரென்பர். அதனால் இத்தலத்திற்குப் பொன்மாரியென்று ஒரு பெயருண்டு.
[4]. துருத்தி - ஆற்றிடைக்குறை.
[5]. குத்தாலம் - ஒருவகை ஆத்திமரமென்பர்.
[6]. ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத்திரட்டு, 1-10;
[7]. மேற்படி. 11-20.
[8]. மேற்படி. 1925-2026.
[9]. இது வில்லையெனவும் வில்வேச்சுரமெனவும் வழங்கும்; இதற்குத் தமிழ்ப் புராணமும் இத்தலத்துள்ள அம்பிகை மீது ஒரு பிள்ளைத்தமிழும் உண்டு.
[10]. தானம் பா அடி களிறு ; தானம் - மதம். விதானப்பாவலர் - கூட்டமாகிய கவிஞர். சசிகோன் - இந்திரன். மன்றம் - சுதன்மை . அரம்பை - வாழை, தெய்வப்பெண். கற்பகம் - தென்னை, கற்பக மரம்.
[11]. துறைசை - திருவாவடுதுறை.
[12]. இது வையைச் சேரியெனவும் வழங்கும்.
[13]. இவ்வூர் சாக்கோட்டை யெனவும், சாக்கையெனவும் வழங்கும்.
[14]. வாள் வெட்டுத் தழும்புற்றதலம் வாட்போக்கி; குதிரைக் குளம்புத் தழும்புற்ற தலம் தென்திருமுல்லைவாயில்; பூனை வாய்த் தழும்புற்ற தலம் மாயூரத்துக்கருகிலுள்ள குன்றமருதூர்; பசுக்கன்றின் குளம்படிச்சுவடு பெற்ற தலம் திருப்பேரூர்.
[15]. திருநாகைக்காரோணம் - நாகபட்டினம்.
[16]. இவை மாயூரப் புராணம் அச்சிடும் போது பாடப்பட்டு அதிற் பதிப்பிக்கப்பெற்றன.
[17]. ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டு, 5179-5201.
[18]. ஸ்ரீ மீனாட்சிசுந்தரம்பிள்ளை யவர்கள் பிரபந்தத்திரட்டு, 3119 - 3219.
[19]. மேற்படி. 3322 - 3.
[20]. ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டு, 1705 - 6.
[21]. ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் பிரபந்தத்திரட்டு, 3409 - 3750
முதற்பாகம் முற்றிற்று.
This file was last updated on 21 August 2018.
Feel free to send the corrections to the webmaster.