நித்திலவல்லி, பாகம் 2
தீபம் நா. பார்த்தசாரதி எழுதியது
nittilavalli, part 2 (chapters 1 - 26)
by tIpam nA. pArtacArati
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Tamil Virtual Academy for providing a scanned
image (PDF) version of this work for the etext preparation. The etext has been
prepared using Google OCR Online Tool and subsequent proof-reading.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2018.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
நித்திலவல்லி
தீபம் நா. பார்த்தசாரதி எழுதியது 'part 2
Source:
நித்திலவல்லி (சரித்திர நாவல்)
நா. பார்த்தசாரதி
தமிழ்ப் புத்தாகாலயம்,
G3/8 மாசிலாமணி தெரு, பாண்டிபஜார், தி. நகர், சென்னை -600 017
முதல் பதிப்பு 1971; ஐந்தாம் பதிப்பு 2002
விலை ரூ 175.00
---
Nithilavalli (Tamil Historical Novel)
by Naa. Parthasarathy,
© Sundaravalli Parthasarathy
Fifth edition, Nov. 2002, 504 pages,
Price Rs 175.00
Printed at Jai Ganesh Offset Printers, Chennai-4
--------
நித்திலவல்லி இரண்டாம் பாகம் - சிறைக்கோட்டம்
உள்ளடக்கம்
1. களப்பிரர் சூழ்ச்சிக் கூடம்
2. மாவலி முத்தரையர்
3. மூல விருட்சம்
4. காம மஞ்சரி
5. ஒரு சாகஸம்
6. புலவர்களும் பொய்யும்
7. விரக்தியில் விளைந்த நன்மை
8. குறளியும் மாற்றுக் குறளியும்
9. இரத்தினமாலையின் ஊடல்
10. திருமால் குன்றம்
11. இரும்பும் இங்கிதமும்
12. அடையாளக் குழப்பம்
13. பெருஞ்சித்திரன்
14. நவ நித்திலங்கள்
15. சிறை மாற்றம்
16. யார் இந்த ஐவர்?
17. பொன் கூண்டிலிருந்து?
18. உட்புறம் ஒரு படிக்கட்டு
19. மரபு என்னும் மூலிகை
20. பெருஞ்சித்திரன் பேசினான்
21. ஒரு போதையின் உணர்வுமே
22. களப்பிரர் கபடம்
23. இருளில் ஒரு பெண் குரல்
24. வழியும் வகையும்
25. இருளும் வடிவும்
26. எதிர்பாராத அபாயம்
நித்திலவல்லி -- இரண்டாம் பாகம் - சிறைக்கோட்டம்
1. களப்பிரர் சூழ்ச்சிக் கூடம்
மதுரை மாநகரக் கோட்டைக்குள் அரண்மனையைச் சுற்றி இயல்பை மீறிய பரபரப்பும், பாதுகாப்பும் தென்பட்டன. அரண்மனை யில் உட்கோட்டையைச் சுற்றியிருந்த இரண்டாவது சுற்று அகழியைச் சூழப் பூதபயங்கரப் படை வீரர்கள் உருவிய வாளுடன் காவலாக நின்று கொண்டிருந்தனர். முதற்கோட்டை வாயிலுக்கும் இரண்டாம் கோட்டை வாயிலுக்கும் நடுவே உள்ள பகுதியில் இருந்த சிறைக் கோட்டத்தின் வாயிலில் யவனக் காவல் வீரர்கள் செதுக்கி மெருகிட்ட செப்புச் சிலைகள்போல் வேல்களோடு காவலாக நின்றிருந்தனர். பாண்டியர்களின் பரம்பரைக் கோட்டைக் காவலர்களாக இருந்த சில யவனர்களும்கூடக் களப்பிரர்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பின் அவர்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் வந்திருந்தனர்.
அன்று கோட்டையிலும், கோட்டையைச் சுற்றியிருந்த பகுதிகளிலும் இயல்பை மீறிய பரபரப்பு இருந்ததற்குக் காரணம் களப்பிர மன்னனான கலியன் ஓர் அந்தரங்கமான மந்திராலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது தான். அவிட்ட நாள் விழாவன்று பிடிபட்ட ஒற்றர்களைப் பற்றியும் ஆட்சியைச் சூழ்ந்திருக்கும் பிற அபாயங்களைப் பற்றியும் அந்த மந்திராலோசனைக் கூட்டத்தில் பேசுவதற்கு இருந்தார்கள். அங்கு பேசப்படுகிற எதுவும் வெளியேறிப் பரவிவிடக் கூடாது என்பதற்காக மந்திராலோசனை மண்டபத்திலும், அதனைச் சார்ந்துள்ள இடங்களிலும் ஏவலாளர், காவல் இளைஞர், ஓவியச் சுற்றம், உட்படு கருமத்தார் ஆகியோரில் தமிழர் யாரும் இருந்துவிடாதபடி தவிர்த்திருந்தனர் களப்பிரர். உட்படு கருமத்தார் தெரிந்து கூறிய செய்திகளிலிருந்து மன்னனும் அமைச்சரும் பதறிக் கலங்கிப் போயிருந்தனர். பல்லாண்டுகளாக அடிமைப்படுத்தி ஆண்டுவரும் பாண்டிய நாடு தங்களிடமிருந்து கை நழுவிப் போய்விடுமோ என்ற பயமும் தாங்கள் துரத்தப்பட்டு விடுவோமே என்ற பயமும் என்றும் இல்லாதபடி இன்று அவர்களுக்கு வந்திருந்தன.
இழந்ததை மீண்டும் பெறலாம் என்ற நம்பிக்கையோடு காத்திருப்பவன் வீரன். பெற்றதை மீண்டும் இழந்து விடுவோமோ என்று பயந்துகொண்டே இருப்பவன் கோழை. அவன் பெற்றதையும் இழப்பான்; வீரத்தையும் இழப்பான். பயம் அதிகமாக அதிகமாகக் களப்பிரர்களிடம் வீரம் குன்றி முரட்டுத்தனமும், பாண்டியர்களுக்கு ஆதரவான குடிமக்களை அழித்துவிட வேண்டும் என்ற வெறியுமே மிகுந்தன.
அன்று நடைபெற்ற மந்திராலோசனைக் கூட்டத்துக்கு வரும்போது கலியமன்னனின் முகம் இருண்டிருந்தது. கண்களில் ஒளி இல்லை. உயரமும் பருமனும் உருவத்தை எடுத்துக் காட்டும் வளங்கெழு மீசையும் வசீகரமான மணிமுடியும் அவனது ஒளியிழந்த முகத்தோடு ஒட்டாதவை போலத் தோன்றின. மந்திராலோசனைக் கூட்டம் பாலிமொழியில் நடைபெற்றது. அமைச்சர்களும், உட்படு கருமத் தலை வர்களும், யானைப் படை, தேர்ப்படை, காலாட் படைத் தலைவர்களும், பூத பயங்கரப்படையின் தலைவனும், கலிய மன்னனின் அரச குருவும், ஆலோசனைக் கூட்டத்துக்கு வந்திருந்தனர்.
கலியமன்னன் பொறுமையிழந்து போயிருந்தான். நிதானம் அறவே பறிபோயிருந்தது. அவன் குரல் குரூரமாக ஒலிக்கத் தொடங்கியது.
“இவ்வளவு காலத்துக்குப் பின் இந்நாட்டு அடிமைகளின் கூட்டத்திலிருந்து வீரர்கள் தோன்றிக் கொண்டிருப்பதாகச் சொல்லுகிறீர்கள். பல காத தூரம் கடந்து வந்து கைப்பற்றிய பேரரசை யாரும் அசைக்க முடியாதபடி பிடித்து விட்டதாக நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். நீங்களோ அசைத்துக் கொண்டிருப்பவர்களில் நால்வரையோ, ஐவரையோ சிறைப் பிடித்துக் கொண்டு வந்து விட்டோம் என்கிறீர்கள்! எதிரிகளை உயிரோடு பார்ப்பது எனக்குப் பிடிக்காது என்பது உங்களுக்குத் தெரியும். எனக்குப் பிணங்களாகக் காட்ட வேண்டியவர்களை நீங்கள் இன்னும் உயிருள்ளவர்களாகச் சிறைவைத்திருக்கிறீர்கள்! இல் லையா?” என்று கூறிக் கொண்டே தன் வலது கையை மடக்கி இடது உள்ளங்கையில் ஓங்கிக் குத்தினான் கலியன்.
அப்போது பூத பயங்கரப் படையின் தலைவன் எழுந்து மறுமொழி கூறலானான்:
“வேந்தே! உயிர் அவர்கள் உடலிலிருந்து போய்விட்டால் சித்திரவதையை அவர்கள் உணரவும் அனுபவிக்கவும் முடியாமல் போய்விடும். சித்திரவதைகளை உணரவும் அனுபவிக்கவும் வேண்டும் என்பதற்காகத்தான் அவர்களைப் பிணங்களாக்கி விடாமல் இன்னும் நடைப் பிணங்களாகவே வைத்திருக்கிறோம்.”
“உன் வீரப் பிரதாபங்களால் நீ அவர்களை நடைப் பிணங்களாக வைத்திருப்பது பற்றித் தெரிவதைவிட அவர்களிடமிருந்து நீ அறிந்த வேறு செய்திகள் என்ன என்ன என்பதைக் கூறினால் நன்றாயிருக்கும்!” என்று குறுக்கிட்டார் அதுவரை அமைதியாக இருந்த அரச குரு.
“பொறுத்தருள வேண்டும் அரச குருவே! அவர்களிடமிருந்து எதையும் அறிய முடியவில்லை. சித்திரவதை செய் தும் பயன் இல்லை! அவர்களின் மன உறுதி வியக்கத்தக்கதாக இருக்கிறது.”
“எய்தவன் இருக்க அம்பை நொந்து பயனில்லை! பாண்டியர்களைக் கலகத்துக்குத் தூண்டும் மூல சக்திகள் எங்கு இருக்கின்றன என்று கண்டுபிடித்து அழிக்கவேண்டும். அதைச் செய்யாதவரை நம்முடைய பூத பயங்கரப் படையின் திறமையை நான் போற்றமுடியாது” என்றான் கலியமன்னன். இந்த வார்த்தைகளைச் சொல்லும்போது அரசனின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிப்பதையும் கண்கள் இரண்டும் நெருப்புக் கோளங்களாகக் கனல்வதையும் கண்டு பூத பயங்கரப் படைத்தலைவனின் முகம் இருண்டது. குறை முழுமையும் தங்களைச் சேர்ந்தது என அரசன் ஒரேயடியாகத் தங்கள் மேல் குற்றம் சுமத்தியதை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஆயினும் அரசனுடைய கோபத்துக்கு அஞ்சி அவன் அந்தக் குற்றத்தை ஏற்றுக் கொள்வது போல் வாளாவிருந்தான்.
அப்போது அந்த மந்திராலோசனைக் கூட்டத்தில் கலிய மன்னனின் இருக்கைக்கு இருபுறமும் பணிப் பெண்கள் இருவர் வெண்சாமரம் வீசிக்கொண்டிருந்தனர். அவர்கள் தமிழ்ப் பெண்கள் என்பதைக் கண்டுகொண்ட அரசனின் சினம் திடீரென்று அவர்கள் மேல் திரும்பியது. கலியமன்னனின் ஆத்திரத்தைக் கண்டு வெருண்டோடினர் அந்தப் பெண்கள். மீண்டும் பூத பயங்கரப் படையினரின் தலைவன் பக்கமாகத் திரும்பி இரைந்தான் அரசன்;
“இந்த மந்திராலோசனைக் கூட்டத்தில் களப்பிரர் அல்லாதார் யாரும் இருக்கலாகாது என்று முன்னெச்சரிக்கையாக உனக்குக் கட்டளை இட்டிருந்தும் நீ தவறு செய்திருக்கிறாய்! நாம் பாலியிலேயே தான் உரையாடுகிறோம் என்று நீ சமாதானம் சொல்ல முடியாது. கோநகரிலும், அரண்மனையிலும் உள்ள பெரும்பாலான தமிழர்கள் நன்றாகப் பாலி மொழியைப் புரிந்து கொள்கிறார்கள் என்பதும் உனக்குத் தெரிந்திருக்க வேண்டும்.”
“தெரியும். ஆனால் இந்தப் பெண்கள் இருவரும் அரண்மனை அந்தப்புரத்து உரிமை மகளிர். இவர்கள் அரண்மனையிலிருந்து எங்கும் வெளியேற முடியாது. யாரையும் சந்திக்கவும் முடியாது.”
“நீ அப்படி நினைக்கிறாய்! நான் அப்படி நினைக்கவில்லை. பல செய்திகள் வெளியேறுகின்றன இல்லையா? அவிட்ட நாள் விழாவன்று யாத்திரீகர்கள் என்ற போர்வையில் ஆயிரக்கணக்கான கலகக்காரர்கள் அகநகருக்குள் வந்திருக்க முடியாது அல்லவா?”
இவ்வாறு பேசிய மன்னனை எதிர்த்து மறுமொழி கூறும் துணிவு பூத பயங்கரப்படைத் தலைவனுக்கு இல்லை. அவன் பயந்து அடங்கி விட்டான். அந்தக் குழுவில் ஏனைய படைப் பிரிவுகளின் தலைவர்களும் பூத பயங்கரப் படையின் தலைவனுக்குப் பரிந்து கொண்டு வரவில்லை. எல்லாருமே அரசன் என்ன சொல்கிறான் என்பதையே பயபக்தியோடு கவனித்துக் கொண்டிருந்தார்கள். உட்படு கருமத் தலைவர்களோ, அமைச்சர் பிரதானிகளோகூட அதிகம் பேசவில்லை. அவர்களுடைய பேச்சு அதிகம் மதிக்கப்படாது என்பதை அவர்கள் உணர்ந்திருந்தனர். யாருடைய குரலாவது அரசனுடைய குரலைவிட மேலெழுந்து வலிமையாக ஒலிக்க முடியுமென்றால் அது அங்கே அரசனுக்கு மிக அருகே அமர்ந்திருக்கும் அரச குரு மாவலி முத்தரையருடையதாகத் தான் இருக்கும் என்பதை அவர்கள் அனைவருமே நன்கு உணர்ந்திருந்தனர். யார் எதைக் கூறினாலும் கலியரசன் இறுதியாக மாவலி முத்தரையர் சொல்படிதான் கேட்பான் என்பது எல்லாருக்கும் தெரியும். அதனால் மற்றவர்கள் நடுவே மாவலி முத்தரையருக்குக் கலிய மன்னனின் சகுனி என்பது போல் ஒரு சிறப்புப் பெயரும் இரகசியமாக வழங்கி வந்தது. கலிய மன்னனின் சகுனியாகிய மாவலி முத்தரையர் அந்தச் சூழ்ச்சிக் கூட்டத்தில் என்ன கூறப்போகிறார் என்பதைக் கேட்பதிலேயே அனைவரும் ஆவலாக இருந்தார்கள். கலிய மன்னனும் “நீங்கள்தான்வழி சொல்லவேண்டும், அடிகளே!” என்பதுபோல், இறுதியாக அவரைப் பார்த்தான்.
------------
நித்திலவல்லி -- இரண்டாம் பாகம் - சிறைக்கோட்டம்
2. மாவலி முத்தரையர்
நன்றாக மழித்து முண்டனம்* (* மொட்டைத் தலை) செய்து மின்னும் தலையும் நீண்டு தொங்கும் காதுகளும், கண்களின் கீழேயும் நடு நெற்றியிலும் கோர மாகத் தழும்பேறிய கருமையுமாக மாவலி முத்தரையர் எழுந்து நின்றார். ஒரு குருவுக்குரிய சாந்தமோ அமைதியோ அவர் கண்களில் இல்லை. நெற்றியிலும் கண்களின் அடியிலேயும் இருந்த கருப்புத் தழும்புகள் வேறு மேலும் அந்த முகத்தைக் கொடுரமாகக் காண்பித்தன. பார்த்த மாத்திரத்திலேயே ஒரு கபட சந்நியாசிக்கு முன் நிற்கிறோம் என்று உணர வைத்துவிடும் அளவுக்கு அவர் தோற்றமும் அவர் மேற் கொண்டிருந்த புனிதமான கோலமும் முரண்பட்டன. அவர் பேசலானார்:
“கலியா இந்த மந்திராலோசனைக் கூட்டத்தில் ஏற்கெனவே உன்னுடைய பூத பயங்கரப் படையினர் மூலம் நீ தெரிந்து கொண்டிருப்பதைவிட அதிகமான செய்திகளை நான் கூறமுடியும் என்று நினைக்கிறேன். தென் பாண்டி நாட்டு நெற்கழனிகளில் நெல்லும், கொற்கைத்துறைச் சிலாபங்களில்* (* முத்துக் குளிக்கும் இடம்) முத்துக்களும், பொதிய மலையில் சந்தனமும், தேக்கும், அகிலும் விளைகின்ற மகிழ்ச்சியில் என்றோ கைப் பற்றிய இந்தப் பாண்டிய நாட்டைக் கவலையில்லாமல் ஆண்டு கொண்டிருக்கலாம் என்று நீயும் நானும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். நம்மைச் சுற்றி உள்நாட்டிலேயே உருவாகிக் கொண்டிருக்கும் அபாயங்களையும், பகை களையும் நீ எந்த அளவு உணர்ந்திருக்கிறாய் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நான் இதை மிக நன்றாக உணர்ந் திருக்கிறேன்.”
“அடிகள் உணர்ந்தால் நானே உணர்ந்தது போல் தான்! பாண்டியர்கள் கலகம் செய்து ஆகப்போவது என்ன? நாம்தான் அந்தப் பழம்பெரும் அரச மரபை மறுபடியும் தலையெடுக்க முடியாதபடி பூண்டோடும் அழித்து விட்டோமே? வமிசமே இல்லாமற் போய் விட்ட ஒரு குலம் மறுபடி வாகை சூட முடியுமா?”
“கலியா! பலமுறை நீ என்னிடம் இப்படியே கூறி வருகிறாய்! உன் நினைப்புத் தவறானது. மேலாகத் தெரியும் அடிமரத்தின் வாட்டத்தைக் கொண்டு கீழே வேர்கள் எல்லாமே வாடி விட்டன என்பதாக நீ அநுமானம் செய்வதை நான் ஒருபோதும் ஏற்க மாட்டேன். பாண்டிய அரச மரபுக்கு இன்னும் வேர்கள் இருக்கின்றன என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.”
“எதைக் கொண்டு தாங்கள் அப்படி நம்புகிறீர்கள்?”
“மிகப்பெரிய ஆல மரங்கள் எளிதாக அழிவதில்லை!”
“அழித்துப் பல ஆண்டுகள் கடந்து விட்டனவே?”
“விழுதுகளில் சிலவற்றை அழித்துவிட்டு மூலவிருட்சமே பட்டுப் போய்விட்டதாக நீ நினைக்கிறாய்?”
“மூல விருட்சம் எங்கே இருக்கிறது?”
“எங்கே இருக்கிறது என்பதுதான் எனக்கும் தெரியவில்லை. ஆனால் இருக்கிறது என்பதை மட்டும் நம்புகிறேன். அந்த மூல விருட்சத்துக்குப் பெயர் என்ன தெரியுமா?”
“தெரியாது! அதையும் தாங்கள்தான் கூறியருள வேண்டும் அடிகளே!”
“வைகை வட நாட்டு வடவூர் நன்மை தருவார்குலத்துத் தென்பாண்டி மதுராபதி வித்தகன்! அவன் உயிரோடு இருக்கும் வரை பாண்டிய குலம் அழிந்திருக்கும் என்பதை நான் நம்ப மாட்டேன்! பாண்டிய குலம் அழிந்திருந்தால் அந்தக் கிழச் சிங்கம் இதற்குள் வெளிப்பட்டு வந்து காவியுடை தரித்துத் துறவியாகி இருக்கும். அந்தக் கிழச்சிங்கம் இன்னும் மறைந்திருப்பதே பாண்டிய மரபின் வேர் இன்னும் இருக்கிறது என்பதற்கு அடையாளம். ஊக்கமுடையவன் ஒடுங்கியிருப்பதும், மறைந்திருப்பதும் பயத்தினால் அல்ல. இயலாதவர்கள் ஒடுங்குவது கையாலாகாமை. இயன்றவர்கள் ஒடுங்குவது தங்களை மேலும் வலிமைப்படுத்திக் கொள்வதற்காகவே.”
“இருக்கட்டும்! ஆனால் ஒரு துறவி தனியாகத் தான் மட்டுமே முயன்று அழிந்து போன பேரரசு ஒன்றை மீண்டும் எப்படி உருவாக்க முடியும்?”
“துறவியா? யார் துறவி? நான் உயிரோடு இருக்கிறவரை அந்த மதுராபதி துறவியாக இருக்க முடியாது. அவன் உயிரோடு இருக்கிறவரை நானும் முழுத் துறவியாக இருக்கமுடியாது. துறவிகள் விருப்பு வெறுப்பற்றவர்களாக இருக்க வேண்டும். ஆனால், அவன் உயிரோடு இருக்கிறவரை எனக்கும் நான் உயிரோடு இருக்கிறவரை அவனுக்கும் வெறுப்பதற்கும் பகைப்பதற்கும் நிறைய விஷயங்கள் உண்டு...”
“நீங்கள் கூறுவது எனக்குப் புரியவில்லை அடிகளே!”
“புரிவது சற்றே சிரமமானதுதான். களப்பிரர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையிலுள்ள இந்தப் பழம்பகையில், இரண்டு அறிவு வீரர்களின் தனிப் பகையும், குரோதமும் பொறாமையும் சம்பந்தப்பட்டிருக்கின்றன. காலம் வரும்போது அது உனக்குத் தெரியும். இந்த இரண்டு அறிவாளிகள் ஒருவரை மற்றொருவர் எப்படிப் பழி தீர்த்துக் கொள்ளப் போகிறார்கள் என்பதைப் பொறுத்தே அந்த மற்றொரு பகையின் முடிவும் இருக்கும்.”
இதைக் கூறும்போது மாவலி முத்தரையரின் அந்தக் கண்கள் கோவைப்பழம் போலச் சிவந்துவிட்டன. அவருடைய சரீரமே தீப்பற்றி எரிவது போல் கனன்று புழுங்கியது. நெருப்பாய்க் கொதிக்கிற பகைமையும் குரோதமுமே வந்து எதிரே வடிவு கொண்டு நிற்பதுபோல் அப்போது களப்பிரக் கலிய மன்னனின் முன்னிலையில் தோன்றினார் மாவலி முத்தரையர்.
அவருடைய முன்னிலையில் அப்போது நடுவூர் நன்மை தருவார் குலத்து மதுராபதி வித்தகர் எதிர்ப்பட்டால் தாவிப் பாய்ந்து கழுத்தை நெறித்துக் கொன்றுவிடுவார் போன்று மாவலியார் அவ்வளவு கோபமாயிருந்தார். அந்த அரசவையில் அப்போது மாவலி முத்தரையரை எதிர்த்துப் பேசவோ வாதம் செய்யவோ துணிந்தவர்கள் யாருமில்லை.
அவர் போர்த்திக் கொண்டிருந்த துறவுக் கோல உடை கூட அந்த வேளையில் உடையாகத் தோன்றாமல் அவரது சரீரமே கோபத்தால் கனல் பற்றி கொழுந்து விட்டு எரிவது போல் தோற்றமளித்தது. மதுராபதி வித்தகர் மேல் உள்ள ஆறாச் சினத்தைத் துறவு நிலைக்குப் பின்னும் விடமுடியாத அளவிற்கு அது ஆழமானது என்பதை மாவலி முத்தரையரின் முகத்திலிருந்து அறிய முடிந்தது. அறிவுப் பகை துறவியானாலும் நீங்காது போலிருக்கிறது. அதே சமயத்தில் மதுராபதிவித்தகர் பற்றி மாவலி முத்தரையர் கூறிய சினம்மிக்க வார்த்தைகளின் ஊடே கூட, ‘உன்னளவு நான் உயரமுடியாதபடி நீ இணையற்ற உயரத்துக்கு அறிவிலும் சாதுரியத்திலும் வளர்ந்து நிற்கிறாயே’ - என்று மதுராபதி வித்தகரை நோக்கிப் பெறாமைப்படும் தொனியே புலப்பட்டது. மதுராபதி வித்தகரின்மேல் முதலில் மதிப்பு ஏற்பட்டு அந்த மதிப்பே நாளடைவில் ஆற்றாமை யாகவும், கோபமாகவும், பொறாமையாகவும், மாறி உருவெடுத்திருக்க வேண்டும் என்று தெரிந்தது. மாவலி முத்தரையர் முதலில் ஏலாமையாலும், அதன் பின்பு சினத்தினாலுமே கனன்றார் என்பதையும் அநுமானிக்க முடிந்தது. தன் பகையை அரசியற் பெரும் பகையாக மாற்றவும் அவரால் இயன்றது.
------------
நித்திலவல்லி -- இரண்டாம் பாகம் - சிறைக்கோட்டம்
3. மூல விருட்சம்
மாவலி முத்தரையரின் முகத்தில் அவர் பூண்டிருந்த துறவுக் கோலத்திற்கு ஒரு சிறிதும் பொருத்தமற்ற கொலை வெறியைக் கண்டு கலிய மன்னன் உட்பட அந்த மந்திராலோசனைக் குழுவில் இருந்த அனைவருமே திகைத்துப் போனார்கள். ‘வையை வளநாட்டு நடுவூர் நன்மை தருவார் குலத்துத் தென் பாண்டிய மதுராபதி வித்தகனுக்கும் இந்த மாவலி முத்தரையருக்கும் அப்படி என்ன ஜன்மப் பகை இருக்க முடியும்’ என்பது அவர்களுக்குப் புரியவில்லை. உடலே கனன்று எரியும்படி அந்தப் பகை வெளிப்படையாகத் தெரிவதைக் கண்டுதான் அவர்களுக்கு வியப்பாக இருந்தது. உட்படு கருமத் தலைவர்களில் ஒருவர் மற்றவர் காதருகே மெல்லக் கேட்டார்:
“இந்தக் கூட்டத்தில் பாலி மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட களப்பிரர்கள் மட்டும்தான் இருக்கலாம் என்று கடிந்து கொண்டு ஒரு பாவமும் அறியாத பணிப் பெண்களைக் கூட அரசர் இங்கிருந்து துரத்தினாரே, அதே அடிப்படையில் பார்த்தால் மாவலி முத்தரையர் அல்லவா இங்கிருந்து முதலில் துரத்தப்படவேண்டும்?”
“அது எப்படி முடியும்? மாவலி முத்தரையர் பாலியில் தான் பேசுகிறார். அரசரின் வலதுகரம்போல் அவருக்கு நெருக்கமாக உதவுகிறார். இந்த ஆட்சியில் அவர் தமிழரா, களப்பிரரா என்று நாம் சந்தேகப்படுவது கூடக் குற்றமாகி விடும்.”
“இருக்கலாம்! ஆனால், உண்மையைப் பொய்யாக்குவதற்குச் செல்வாக்கு மட்டுமே போதாது.”
“நீங்கள் எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள் ளுங்கள், அதைப் பற்றி நான் கவலைப்படப் போவதில்லை. ஆனால், செல்வாக்கும் அதிகாரமும் உண்மைகளைப் பொய்யாக்கியிருப்பதை இந்த மாவலி முத்தரையரைப் பொறுத்தமட்டும் கண்கூடாகக் காண்கிறோம்.”
இவ்வளவில் இந்த இரு உட்படு கருமத் தலைவர்களும் தங்களுக்குள் காதும்காதும் வைத்தாற்போல் தனியே இரகசியமாகப் பேசிக் கொள்வதை அரசனே பார்த்து விடவே, “என்ன அங்கே நீங்கள் மட்டும் தனியாகப் பேசிக் கொள்கிறீர்கள்? நாம் அனைவரும் கலந்து பேசவே இந்த மந்திராலோசனைக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக நான் நினைக்கிறேன். தனித்தனியாக அவரவருக்குத் தோன்றுவதைப் பேசிக் கொள்வதானால் இங்கே எல்லோரும் சேர்ந்து சந்திக்க வேண்டிய அவசியமே இல்லையே?” என்று இரைந்தான். உட்படு கருமத் தலைவர்களின் பேச்சு உடனே அடங்கி விட்டது. கலிய மன்னன் அரச குரு மாவலி முத்தரையரைப் பார்த்து வினவினான்:
“யார் இந்தத் தென்பாண்டி மதுராபதி வித்தகர்? அவனால் எப்படி மீண்டும் பாண்டிய குலத்தைத் தழைக்கச் செய்து விடமுடியும்? அவன் உயிரோடு மறைந்திருக்கிற வரை பாண்டிய குலம் அழியாது என்பது ஏன்?”
“கலியா? உன்னுடைய வினாவுக்கு ஓரளவு குறிப்பாகவே நான் மறுமொழி கூறமுடியும். இந்த மந்திராலோசனைக் கூட்டத்தில் பலவற்றை நான் தெளிவாகவும், வெளிப்படையாகவும் கூற முடியாமலிருப்பதற்காக நீ என்னைப் பொறுத்துக் கொள்ளவேண்டும். நான் எப்போதும் என் எதிரியைக் குறைத்து மதிப்பிடுவதில்லை. அந்த மதுராபதி வித்தகனை வாளினால் வெல்ல முடியாது! ஒர் இணையற்ற அறிவாளியைக் கொல்லுவதற்கு இணையற்ற பலசாலியால் முடியாது என்பதை நம்புகிறவன் நான். அவனைவிடப் பெரிய புத்தி சாதுரியமுள்ளவனையோ, அவனைவிடப் பெரிய அரச தந்திரியையோ எதிரே கண்டாலே அவன் அழிந்து விடுவான். ஆனால் அந்த நன்மை தருவார் குலத்து மதுராபதி வித்தகனை விடச் சிறந்த புத்திசாதுரியமோ, அரசதந்திரமோ உள்ளவர்கள் இன்று இங்கு யாரும் இல்லை.”
“நீங்களே அவனைப் பழிவாங்கவும் துடிக்கிறீர்கள்! வியந்து போற்றவும் செய்கிறீர்கள்! மதுராபதி வித்தகனைப் புரிந்துகொள்வது அப்புறம் இருக்கட்டும். இப்போது உங்களையே என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை அடிகளே!”
“நான் அவனைப் பழிவாங்கத் துடிப்பதற்குக் காரணமே அவனுடைய அறிவுதான். அதை நான் குறைவாக மதிப்பிட்டிருந்தால் இந்தப் பழிவாங்கும் எண்ணமும் குரோதமும் எனக்கு ஏற்பட்டிருக்காது. அறிவின் எல்லையைத் தொட்டு விட்டவனைப் பார்த்து அதில் பின் தங்கிவிட்டவனுக்கு ஏற்படுகின்ற கோபம்தான் இது.”
“நீங்கள் சொல்வது ஒன்றும் எனக்குப் புரியவில்லை அடிகளே!”
“அறிவால் போரிட்டுக் கொண்டிருப்பவர்களின் பகையை ஆயுதங்களால் போரிடுகிறவர்கள் புரிந்து கொள்வது கடினம்தான்.”
“நிதானமாகவும் காரணம் காரியங்களோடும் நடை பெறுகிற எந்தப் போரையும் அரசர்கள் விரும்ப முடியாது. ஒரு போரில் எதிர்ப்பவர், எதிர்க்கப்படுகிறவர் இருவரில் யாராவது ஒருவர் அழிந்தாக வேண்டும். இருவருமே நீடிக்கிற போர் எங்களைப் போன்றவர்களுக்குப் பிடிப்பதில்லை.”
“அப்படியானால் நீயும் உன்னைப் போன்றவர்களும் என்னையொத்த அறிவாளியின் குரோதத்தையோ, பகையையோ புரிந்துகொள்வது மிகவும் சிரமமானது.”
“எதிரியின் உடலை அழிப்பதால் நாம் வென்று விடுவதுதான் வெற்றி. அதுவே போரின் இலட்சியத்தை முடிவு செய்துவிடுகிறது என்பது என்னுடைய கருத்தாகும்.”
“அறிவாளிகளின் போரில் உடல் அழிக்கப்படுவதோ அங்கங்கள் சிதைக்கப்பட்டு அவமானப்படுத்தப்படுவதோ வெற்றியை நிர்ணயிப்பதில்லை கலியா! வாதம் பலவீனப் படும்போதுதான் வாதிப்பவனுக்குக் கோபம் வரும். விவாதம் புரியும் இருவரில் யாருக்கு முதலில் கோபம் வருகிறதோ, அவன் தோல்வியடையத் தொடங்குகிறான் என்பதுதான் பொருள்.”
“உங்களுக்கே மதுராபதி வித்தகன் மேல் கோபம் வருகிறதே?”
“அதனால்தான் நான் அவனை இன்னும் வெல்ல முடியவில்லை. என்கோபம் பல முறை தோற்றவனுக்கு வரும் கோபம். என் எதிரே, இந்தக் கோபம் என்று அந்த மதுராபதி வித்தகனுக்கு வந்து அவன் முதலில் ஆத்திரத்தால் நிலைதடுமாறுகிறானோ அன்று நான் வென்றவனாக இருப்பேன்.”
“ஆகவே, நாம் முதலில் அந்த மூல விருட்சத்தை அழிக்க வேண்டும் என்கிறீர்கள்...”
“ஆம் ஆனால் எப்படி அழிப்பது என்பதில் தான் நாம் இருவரும் வேறுபடுகிறோம்.”
“நம்மால் எப்படியும் அழிக்க முடியும்!”
“நீங்கள் எப்படி அழிப்பீர்கள் என்பது வாதமில்லை. அவன் எப்படி அழிவான் என்பதே நம் வாதமாக இருக்க வேண்டும்.”
“ஒவ்வொருவரும் முடிவதற்கு ஏதாவது ஒரு தலைவிதி இருக்கும் அடிகளே!”
“மதுராபதி வித்தகன் யாரோ ஏற்படுத்திய விதிகளுக்குத் தான் கட்டுப்படுவதில்லை. விதிகளையே ஏற்படுத்தவும் கட்டுப்படுத்தவும் வல்ல அறிவு அவனுக்கு இருந்து தொலைக்கிறது.”
“அவன் இப்போது எங்கிருக்கிறான் என்று சொல்ல முடிந்தால் போதும்! மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன்.”
“எந்த இடத்தில் அவன் இருப்பதாக நமக்குத் தெரிந்தாலும் நாம் தெரிந்து கொண்டு செயல்படுவதற்குள் அவன் வேறு இடம் மாறிவிடுவான். அவ்வளவு சுலபமாக அகப்பட்டு விடுகிறவனில்லை அவன்.”
இந்தச் சமயத்தில் பூதபயங்கரப் படைத்தலைவன் மெல்ல எழுந்திருந்தான். அரசகுரு மாவலி முத்தரையர் ஏளனமாக அவனைப் பார்த்தார். கலியமன்னனோ பூத பயங்கரப் படைத்தலைவன் ஏதோ சொல்லப் போகிறான் என்று அவன் பக்கம் ஆவலோடு திரும்பினான்.
“மாமன்னர் கட்டளையை மேற்கொண்டு பூதபயங்கரப் படையினர் திருமோகூரை முற்றுகையிட்டுச் சோதனை செய்தோம். அங்கும் அந்தப் பாண்டியர் குலத் தலைவன் கிடைக்கவில்லை. அரண்மனைக் களஞ்சியங்களுக்கு நெல்லுதவி செய்யும் பெரிய காராளர் மாளிகைக்கு கட்டுக்காவல் வைத்துக் கண்காணிக்கத் தொடங்கியிருக்கிறோம்.”
“காராளர் பெரிய உபகாரி! அவர் இந்தக் களப்பிரர் ஆட்சிக்கு மிகவும் உதவி வருகிறவர். அவரைப் போன்றவர்களை நீங்கள் மிகவும் கொடுமைப்படுத்தி விடக்கூடாது.”
“இதுபற்றிய தங்களுடைய திருவுள்ளக்குறிப்பை ஏற்கெனவே நன்கு அறிவேன் அரசே!” என்றான் பூதபயங்கரப் படைத் தலைவன்.
“அவிட்ட நாள் விழாவின்போது இங்கும் திருமோகூரிலும் சிறைப்பட்டவர்களை இங்கே கொண்டு வந்து நிறுத்தினால் அவர்களிடமிருந்து ஏதேனும் தெரிந்து கொள்ள முடியுமா என்று பார்க்கலாம்” என்றார் அரசகுரு.
“அதுதான், அவர்களைச் சித்திரவதை செய்து பார்த்தும் கூட எதையும் தெரிந்துகொள்ள முடியவில்லையாமே? நீங்கள் மட்டும் எப்படி அந்த உண்மையை வரவழைக்க முடியும்?” என்று அரச குருவைப் பார்த்துக் கேட்டான் கலியமன்னன்.
“என்னால் ஒருவேளை அது முடியுமானால் உனக்கும் நல்லதுதானே கலியா? சாம தான பேத தண்ட முறைகளில் கடைசி முறையாகிய தண்ட முறையில் தொடங்கியதால் தான் அவர்கள் பிடிவாதமாக இருந்தார்களோ என்னவோ? மற்ற உபாயங்களைக் கடைப்பிடித்து நான் முயன்று பார்க்கிறேன். என்னால் இப்போது அவர்களிடமிருந்து ஏதேனும் தெரிந்து கொள்ளமுடிந்தால் களப்பிரர்களுக்கு எதிரான பகை வேரோடியிருக்கும் மூலவிருட்சம் எது என்றும் எங்கே என்றும் நானே காண்பேன்” என்று சூளுரைத்தார் மாவலி முத்தரையர். சிறைப்பட்டவர்களை உடன் அங்கே கொண்டு வருமாறு பூதபயங்கரப்படைத் தலைவனுக்குக் கட்டளையிட்டான் கலியமன்னன். உடனே பூதபயங்கரப் படைத் தலைவன் சிறைக் கோட்டத்துக்கு விரைந்தான். அவன் புறப்பட்டுச் சென்றதும் படை நிலைமைகள் பற்றி அங்கே அமர்ந்திருந்த நால்வகைத் தானைத் தலைவர்களையும் கேட்டறிய முற்பட்டான் களப்பிரக் கலிய மன்னன்.
-----------
நித்திலவல்லி -- இரண்டாம் பாகம் - சிறைக்கோட்டம்
4. காம மஞ்சரி
சிறிது நேரத்திலேயே சிறைப் பட்டிருந்த நால்வரையும் ஒவ்வொருவராக அந்த மந்திராலோசனைக் குழுவினரின் முன் கொண்டுவந்து நிறுத்தினான் பூதபயங்கரப் படைத் தலைவன்.
முதலில் ஒரு வேங்கைப் புலியை இரும்புச் சங்கிலியிட்டுப் பிணைத்து இழுத்து வருவது போல் தென்னவன் மாறனை இழுத்து வந்தார்கள். அடுத்துக் காண்பவர்களைப் பயமுறுத்தும் பூதாகரமான தோற்றத்தோடு திருமோகூர் அறக்கோட்டத்து மல்லன் இழுத்து வரப் பட்டான். அவனைத் தொடர்ந்து அகநகரில் அவிட்டநாள் விழாவன்று சிறைப்பட்டவர்கள் வந்தனர்.
அரசகுரு மாவலி முத்தரையர் தம் இருக்கையிலிருந்து எழுந்து சிறையிலிருந்து கொண்டு வந்து நிறுத்தியவர்களை நெருங்கிக் கூர்ந்து கவனிக்கலானார். ஒவ்வொருவராகச் சுற்றிச் சுற்றிப் பார்ப்பது அங்கம் அங்கமாக அளந்தெடுப்பது போல் பார்த்துவிட்டு மீண்டும் திரும்பி வந்து, தென்னவன் மாறன் அருகிலேயே நிலைத்து நின்று அவனை வைத்தகண் வாங்காமல் உற்றுப் பார்க்கலானார் அவர்.
“இந்தப் பிள்ளையாண்டானை எங்கே சிறைப் பிடித்தாய்?” என்று மாவலி முத்தரையர் பூதபயங்கரப் படைத் தலைவனைக் கேட்டவுடனே அவன் ஒரு சிறிதும் தயங்காமல், “இவனையும் அதோ அந்த முரட்டு மல்லனையும் திருமோகூர்ப் பெரியகாராளர் வீட்டு முன்றிலில் சிறைப்பிடித்தோம்” என்று மறுமொழி கூறினான்.
மேலும் சில விநாடிகள் தென்னவன் மாறனின் முகத்தையே ஏதோ வசியம் செய்வதற்குப் பார்க்கிறவர்போல் இமையாமல் பார்த்துக் கொண்டு நின்றார் மாவலி முத்தரையர்.
பின்பு நிதானமாகத் தம்முடைய பாதக் குறடுகள் ஒவ்வொரு முறை அடி பெயர்ந்து வைக்கும் போதும் நடைக்குத் தாளமிடுவது போல் ஒலிக்க நடந்து கலிய மன்னனின் அருகே சென்று கூறலானார்:
“இந்த நால்வரில் இதோ புலித்தோல் அங்கி அணிந்திருக்கிறானே; இவனிடம் தான் சாமுத்திரிகை இலக்கணத்துக்குப் பொருந்திய சாயல்கள் உள்ளன. இவர்களில் இவன் அரச மரபைச் சேர்ந்தவனாக இருப்பானோ என்பது என் ஐயப்பாடு ஆகும்...”
“ஆம் என் சந்தேகமும் அதுதான்! இந்த அரண்மனையின் பழமையான ஓவிய மாடத்தில் உள்ள பல பாண்டிய இளவரசர்களின் ஓவியங்கள் எப்படி இருக்கின்றனவோ அப்படியே இவன் தோற்றமும் இருக்கிறது. இவனைச் சிறிதும் தாமதியாமல் சிரச்சேதம் செய்தால் என்ன மாவலி முத்தரையுரே?”
“கூடவே கூடாது! ஆத்திரப்பட்டுக் காரியத்தைக் கெடுத்துவிடாதே கலியா! ‘கைக்காடையை விட்டுக் காட்டுக் காடைகளைப் பிடிக்க வேண்டும்’ என்று ஒரு பழமொழி உண்டு. இவனை வைத்து இவனோடு சேர்ந்தவர்களையும் இவனைப் போன்று இயங்குகிறவர்களையும் ஒவ்வொருவராகப் பிடிக்க வேண்டும்.”
“ஆம், அந்த தென்பாண்டி மதுராபதி வித்தகன் உட்பட அனைவரையும் பிடிக்க வேண்டும்.”
“அவசரப்படாதே கலியா! காடைகளைத்தான் வலையில் பிடிக்கலாம், சிங்கங்களை வலையில் பிடிக்க முடியாது.”
“நன்மை தருவார் குலத்துக் கிழச் சிங்கம் அவ்வளவு சுலபமாக உனக்குக் கிடைத்து விடாது.” - இதைச் சொல்லும் போது மாவலி முத்தரையரின் குரல் சலனமில்லாத உறுதியுடன் இருந்தது. அவர்கள் பாலியில் பேசிக் கொண்டிருந்தார்கள். பதினாறடி வேங்கை வரிப்புலியை இரும்புச் சங்கிலியால் பிணைத்து நிறுத்தியது போல் தென்னவன் மாறன் சீற்றம் கனலும் விழிகளோடு நின்று கொண்டிருந்தான்.
திடீரென்று பூதபயங்கரப் படைத் தலைவனை நோக்கி “அந்தப் புலித்தோல் அங்கியைக் கிழித்தெறி! சிறைப் பட்டிருப்பவனுக்கு அங்கி என்ன கேடு” என்பதாக இடி முழங்கும் குரலில் இரைந்தான் கலியமன்னன்.
அந்தக் காட்டு வேங்கையை நெருங்கவே பயமாயிருந்தாலும் அதன் கைகளும், கால்களும் சங்கிலியால் பிணிக்கப்பட்டிருப்பதை உறுதி செய்து கொண்டதால் நீங்கிய பயத்தோடு அங்கே நெருங்கித் தன் வாளால் அங்கியை அகற்றினான் பூதபயங்கரப் படைத்தலைவன். அங்கி கீழே விழுந்தபோது அந்த வீரனின் பரந்த மார்பில் வாள் சற்றே அளவுக்கு மீறிப் பதிந்து விட்டதால் குறுக்கே ஒரு செங்கோடு இழுத்தது போல் இரத்தக் கீறல் தெரிந்தது.
இரண்டு தினங்களாக உண்ணாததால் தளர்ந்திருந்த தென்னவன் மாறனுக்குக் கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன. நடுமார்பில் இரத்தக் கீறலும், கால்களிலும், கைகளிலும் இரும்புச் சங்கிலிகளின் கனமுமாக அவனை நெடுநேரம் நிற்கவிடாமல் செய்ததோடு தலையைச் சுற்றிக்கொண்டு வந்தது.
அந்த நிலையில் அரசனருகே நின்றிருந்த மாவலி முத்தரையர் கீழே நின்றிருந்த தென்னவன் மாறனிடம் ஏதோ காணாததைக் கண்டுவிட்டதைப் போன்று விரைந்து வந்தார். அவர் அவனருகே வந்து அவனுடைய வலது தோளின் மேற்பகுதியின் பொன்நிறச் சருமத்தில் முத்திரையிட்டது போல் அழகாகத் தெரிந்த அந்தச் சங்கு இலச்சினையைத் தொட முயன்ற போது கடுங்கோபத்துடன் அவரை மோதி கீழே தள்ளி விடுகிறவன் போல் அவர் மேல் பாய்ந்தான் தென்னவன்மாறன். ஆத்திரமடைந்த மாவலி முத்தரையர் வலது முஷ்டியை மடக்கி அவன் நடுமார்பில் ஒரு குத்துக் குத்தினார். ஒரு துறவியின் கரம் இப்படி இரும்பிற் செய்ததுபோல் இருக்கும் என்று அவன் கனவிலும் எதிர் பார்க்கவில்லை. ஏற்கெனவே தளர்ந்திருந்த தென்னவன் மாறன், மாவலி முத்தரையரின் இரும்புக் கரத் தாக்குதலையும் பொறுக்க முடியாமல் நினைவிழந்து கீழே விழுவதுபோல் தள்ளாடினான். பிரக்ஞை தவறியது. அவ்வளவில் அவன் கீழே விழுந்து விடாமல் யாரோ அவனைத் தாங்குவதை அவனே உணர்ந்தான். அதற்கு மேல் எதையும் உணர அவனுக்கு நினைவில்லை.
*****
தென்னவன் மாறனுக்கு மறுபடி விழிப்பு வந்தபோது தன்தலை சுகமான பட்டு மெத்தையில் சில்லென்ற உணர்வும், வாசனைகளும் தெரியச் சயனித்திருப்பதை அறிய முடிந்தது. யாருடைய வெப்பமான மூச்சுக்காற்றோ அவன் முகத்தருகே சுட்டது. மல்லிகைப் பூக்களின் கிறங்க வைக்கும் வாசனையையும், அதே மல்லிகைப் புதரருகே மூச்சு விட்டுச் சீறும் ஒரு நாகசர்ப்பத்தின் சூடான உயிர்ப்பையும் ஒருங்கே சேர்த்து உணர்வது போன்ற நிலையில் அப்போது அவன் இருந்தான்.
கண் விழித்துப் பார்த்தவுடன் கூச்சத்தால் துணுக்குற்று எழ முயன்ற அவனை அந்தப் பூங்கரம் எழுவதற்கு விடவில்லை. ‘அந்தப் பேரழகி யார்? தான் எப்படி அவள் மடியில் தலை வைத்துப் படுத்திருக்க நேர்ந்தது? தன் உடலைப் பிணித்திருந்த சங்கிலிகள் எங்கே?’ என்பதெல்லாம் அலையலையாய் அவன் மனத்தில் வினாக்களாக எழுந்தன. அந்தப் பெண்ணின் செழுமையான உடற்கட்டு, அடர்ந்த புருவம், துறுதுறுவென்ற கண்கள், மறைக்காமல் அழகை உதறிக் காண்பிப்பன போன்ற அங்கங்கள், பெரிதாக முடிந்த அளகபாரம் யாவும் சேர்ந்து அவளைக் களப்பிரயினத்தினள் என்று அவன் புரிந்து கொள்ளத் துணை செய்தன. அவளுடைய செழுமையான வளை ஒலிக்கும் கைகளை விலக்கித் தள்ளிவிட்டு அவன் துள்ளி எழுந்திருந்தான். எழுந்த வேகத்தில் விலகி நின்றுகொண்டு அவன் அவளை நோக்கிக் கேள்விக் கணைகளைத் தொடுத்தான்:
“பெண்ணே, நீ யார்? சிறைக்கோட்டத்திலிருந்து நான் இங்கே எப்படி வந்தேன்? யாருடைய கட்டளையின் பேரில் நீ இந்தப் பணிவிடைகளை எல்லாம் இங்கு எனக்குச் செய் கிறாய்?”
இந்தக் கேள்விகளையெல்லாம் கேட்ட பின் முதலில் ஒருகணம் வாயால் மறுமொழி எதுவும் கூறாமல் அவனை விழுங்கி விடுவதுபோல் பார்த்து நகைத்தாள் அவள். அந்தக் கண்களும், அந்தப் புன்னகையும், குருதி பூத்தது போன்ற அந்தச் செவ்விதழும், உறை நெகிழ்ந்த பொன்வீணை போன்ற அந்த உடலும் எதிர்ப்படுவோரை மயக்கி ஆட் படுத்துவதற்கென்றே படைக்கப்பட்டவை போலிருந்தன. அவனுடைய கேள்விகளுக்கு மறுமொழி கூறாததோடு தன்னுடைய வசீகரம் என்னும் மதுவினால் அவனுள் வெறியேற்ற முயன்று, அவன் மனத்தையே ஒரு கேள்வியாக வளைக்க முயன்றாள். அவள் விழிகளால் அவனுடைய உறுதியான உணர்வுகளைச் சுருட்ட முயன்று கொண்டே அழைப்பது போன்ற சிரிப்பும், சிரிப்பது போன்ற அழைப்புமாக நோக்கும் அவளை மீண்டும் அவனுடைய இடிமுழக்கக் குரல் நினைவுலகிற்கு கொணர்ந்தது.
“பெண்ணே, நீ யார்? வெட்கமும் கூச்சமுமில்லாமல் வெறும் இச்சை மட்டுமே உடைய முதற் பெண்ணை நான் இப்போதுதான் பார்க்கிறேன்.”
“வெட்கமும் கூச்சமும் எல்லாம் வெறும் போர்வைகள்! என் போன்ற அழகின் அரசிகளுக்கு அவை தேவை இல்லை!”
அவள் குரல் இனிமையாக இருந்தாலும் களப்பிரர் பேசும் தமிழின் முதிராத மழலைத்தன்மை அதில் இருப்பதைத் தென்னவன் மாறன் கண்டான். அவனுக்குக் கோபம் மூண்டாலும் அதை அடக்கிக்கொண்டு -
“அம்மா, அழகின் அரசியே! உன் பெயர் என்ன என்று நான் அறியலாமா?”
“காம மஞ்சரி.”
“உன்னைப் பொறுத்தவரை முற்றிலும் பொருத்தமான பெயர்தான். உன்னிடம் காமம் மட்டும்தான் ஒன்று சேர்ந்து இணைந்திருக்கிறது. பெண்ணை நான் தாயாகப் பார்த்திருக்கிறேன். இன்றுதான் முதன் முதலாக வெறும் காமமாகப் பார்க்கிறேன்.”
“ஒரு தமிழன்தான் இப்படிப் பஞ்சணையிலும் வேதாந்தம் பேச முடியும்!”
“ஒரு களப்பிரப் பெண்தான் இப்படி முன்பின் தெரியாதவனிடமே பார்த்த மறுகணம் பஞ்சணையைப் பற்றிப் பேச முடியும்...”
இதற்கு மறுமொழி கூறாமல் எழுந்து அவனருகே ஒவியம் நடப்பதுபோல் நடந்து வந்து தழுவிக்கொள்வது போல் நெருங்கிய அவளை அருகே நெருங்கவிடாமல் தடுத்தான் அவன்:
“பெண்ணே! என்னை நீ மிக எளிமையாக ஏமாற்றிவிட முடியாது. நான் கோநகரங்களின் மிருதுவான சுபாவங்களை உடைய மென்மையான மனத்தினன் இல்லை. காட்டு மனிதன். அழகு, வசீகரம், மயக்கம் போன்ற மெல்லிய உணர்ச்சிகளால் என்னை வசப்படுத்தி ஒற்றறிய உங்கள் அரசரோ, மற்றவர்களோ உன்னிடம் என்னை விட்டிருந்தார்களானால் அவர்களுக்காக நான் பரிதாபப்படவே செய்வேன்.”
“வலிமையும் அழகும் உள்ள ஆண் மகன் பெண்ணிடம் அன்பு செய்யவேண்டுமே தவிர, பரிதாபப்பட்டுக் கொண்டி ருக்கக்கூடாது.”
“அன்பு என்பது தானாக நெகிழ்வது! அது வலிந்து யாரிடமும் செய்யப்படுவது அல்ல.”
மீண்டும் அந்தக் கொல்கின்ற காம விழிகள் அவனைச் சுருட்ட முயன்றன. அவன் அவளைப் பயமுறுத்தினான்:
“பெண்ணே! நான் மிகவும் பொல்லாதவன். முதலில் இதிலுள்ள சதி என்ன என்று என்னிடம் சொல் இல்லா விட்டால் நீ என்னிடம் இருந்து உயிர் தப்ப முடியாது.”
-----------
நித்திலவல்லி -- இரண்டாம் பாகம் - சிறைக்கோட்டம்
5. ஒரு சாகஸம்
தென்னவன் மாறன் கூறியதைக் கேட்டு அந்த வேல் விழியாள் எந்த விதத்திலும் அஞ்சியதாகத் தெரியவில்லை. நிதானமாக அவள் அவனுக்கு மறுமொழி கூறினாள்:
“யார் யாரிடமிருந்து உயிர் தப்பமுடியாது என்பது போகப் போகத் தெரியும்...”
“ஆண்புலியைப் பார்த்துப் பெட்டைப் பூனை சீறுகிறது!”
“சிறைப்பட்டவர்கள் சிறைப்படுத்தியவர்களைப் பார்த்து உயிர் தப்ப முடியாது என்று பயமுறுத்தினால் சீறாமல் பின் சிரிக்கவா செய்வார்கள்?”
“வீரர்களைக் காமக்கிழத்தியர் தங்கள் தோள்களிலே சிறைப்படுத்தி விடலாம் என்று களப்பிரர்கள் நினைத்தால் அது பேதமை.”
தனக்கு இணையற்ற அழகுச் செருக்கும், உடல் வளமும் உள்ள ஒரு யுவதி, கம்பீரமான ஆடவன் ஒருவனால் அலட்சியப்படுத்தப்பட்ட ஆற்றாமைக் கோபத்தில் எப்படிச் சீறுவாளோ அப்படிச் சீறினாள் அவள். அப்போது அவன் தன்னைக் கையைப் பிடித்து இழுத்து அறைந்திருந்தால்கூட அவளுக்குக் கோபம் வந்திருக்காது; கோபமே அந்த விநாடிவரை அவன் அப்படித் தன்னைக் கையைப் பிடித்து இழுத்தும்கூட அறைய முற்படவில்லையே என்பதனால் தான்! ‘ஏ முரட்டு ஆண் மகனே! தயவு செய்து என்னைப் பெண்ணாக ஏற்றுக் கொள்ளமாட்டாயா? என்னை ஏன் இப்படி அலட்சியம் செய்கிறாய்? நீ அடக்கி ஆளக் கூட நான் தகுதியற்றவளா?’ என்று இறைஞ்சி இரப்பது போல் ஒரு கணமும், உடனே மாறிய மன நிலையில் அடியுண்ட நாகம் சீறுவதுபோல் ஒரு கணமும், மாறி மாறிப் பார்க்கும் பார்வைகளை உடையவளாகத் தவித்தாள் அவள்.
‘நீர் என்னை ஒரு பேதைப் பெண்ணாக ஒப்புக் கொண்டு உம்முடைய கைகளால் வதை செய்தால்கூட நான் உம் அடிமையாகி விடுவேன்’ என்பது அவள் தாபமாக அவன் எதிரே நின்றது. அந்தத் தாபத்தை அவன் அங்கீகரிக்கவில்லை என்பதே அவள் சீற்றமாக இருந்தது. அவன் அலட்சியமாக அவளை நோக்கிக் கூறலானான்:
“எனக்குத் தெரியும் பெண்ணே! பேயின் முகத்தைப் போல் கொடிய முகத்தை உடைய உங்கள் அரச குரு மாவலி முத்தரையரின் ஏற்பாடாகத்தான் இருக்கும் இது. ஆணைப் பெண்ணால் மயக்கி வசப்படுத்த வேண்டும். பெண்ணை ஆணால் மயக்கி வசப்படுத்த வேண்டும் என்ற வெளிப்படையான அளவுகளை வைத்து யாவற்றையும் திட்டமிடுகிறார் அவர்.”
“அவ்வளவுக்கு அவர் சிறுபிள்ளைத்தனமான அரச தந்திரி இல்லை ஐயா வாலிப வீரரே! பெண்களால் வசப்படுத்தி மயக்க முடியாத ஆண்களும், ஆண்களால் வசப்படுத்தி மயக்க முடியாத பெண்களும் அபூர்வமாக இந்த உலகில் இருப்பார் கள் என்பது மாவலி முத்தரையருக்கும் தெரிந்திருக்கும்!”
“தெரிந்தால் இப்படி நடந்திருக்காது.”
“எப்படி நடத்தப்பட வேண்டும் என்பதைச் சிறைப்பட்டிருப்பவர்கள் முடிவு செய்ய வாய்ப்பில்லை; பாவம்.”
“பாவம் என்று நீ என்னிடம் பரிதாபம் காட்ட வேண்டியதில்லை பெண்ணே! பாண்டிய நாட்டு வீரர்கள் பெண்களின் பரிவில் உயிர் வாழ விரும்புவதில்லை! அவர்கள் மன உறுதி படைத்தவர்கள்.”
“உண்மைதான் கல் மனம் படைத்தவர்களுக்கு யாருடைய பரிவும் தேவைப்படாது.”
இதைச் சொல்லும்போதும் அவள் குரலில் அளவற்ற தாபமும், தாகமும், தவிப்புமே ஒலித்தன.
அடுத்த கணம் அவன் முற்றிலும் எதிர்பாராதவிதமாகத் திடீரென்று இருந்தாற் போலிருந்து அவள் விசும்பி விசும்பி அழத் தொடங்கினாள். தென்னவன் மாறன் எதிர்பார்க்க வில்லை. பெண்ணிடம் இரண்டு விதமான படைக்கலங்கள் இருக்கின்றன. ஒன்று புன்னகை, மற்றொன்று கண்ணிர். ஓர் அழகிய பெண் இந்த இரண்டு படைக்கலங்களாலும் வெற்றி அடைய முடியும். ஒன்றினால் தவறிவிட்டால் மற்றொன்றினால் உறுதியாக வெற்றி கிடைக்கும். தென்னவன் மாறன் அவளுடைய புன்னகை என்ற படைக்கலனால் தாக்கப்பட்ட போது உறுதியாக இருந்து எதிர்த்து அவளைத் தோற்கச் செய்திருந்தான். முதல் தோல்வியைப் புரிந்துகொண்டு இப்போது இந்த இரண்டாவது வகைப் போரைத் தொடங்கியிருந்தாள் அவள். ‘சில சமயம் புன்னகைகளால் வெல்ல முடியாத கல்மனம் படைத்தவர்களைப் பெண்கள் கண்ணிரினால் வென்றுவிடுவார்கள்’ என்று பலமுறை கேள்விப்பட்டிருந்ததை நினைத்துத் தன் விஷயத்திலும் இப்போது அப்படி நடந்துவிடாமல் இருக்க வேண்டுமே என்று எண்ணி மனத்தைத் திடப்படுத்திக் கொண்டான் அவன்.
அரச தந்திரக் காரியங்களைச் சாம, தான, பேத, தண்ட முறைகளால் சாதித்துக் கொள்வது எல்லா அரசமரபிலும் வழக்கம்தான். சேர, சோழ, பாண்டிய மரபிலோ, தென் தமிழ்நாட்டுக் குறுநில மன்னர்களிடையிலேயோ பெண்களின் அழகைப் பயன்படுத்திச் சாதிக்கப்படும் அரச தந்திர சாதனைகள் மிகவும் கெளரவமாக மதிக்கப்படுவது கிடை யாது. ஆனால், களப்பிரர்கள் இதிலும் தரக்குறைவாக இறங்கி யிருப்பதாகப் பெரியவர் மதுராபதி வித்தகர் போன்றவர்கள் அடிக்கடி சொல்லி வந்ததை இப்போது தென்னவன் மாறன் தன் சொந்த அநுபவத்திலேயே கண்டான்.
“கூர்மையான வாள்களின் காரியத்தை மென்மையான பூக்களால் சாதிக்கமுடியாது! பூக்களைக் கொண்டு வாள்களின் காரியத்தைச் சாதிப்பது வாள்களை அவமானப் படுத்துவதற்குச் சமம்” - என்று பெரியவர் மதுராபதி வித்தகர் அடிக்கடி சொல்வது உண்டு. அதை இப்போது மீண்டும் நினைவு கூர்ந்தான் தென்னவன் மாறன். நீண்ட நாட்களாகக் களப்பிரர்களின் வாள்கள் முனை மழுங்கிப் போய் விட்டதாலோ என்னவோ வாள்களைப் பயன்படுத்த வேண்டிய காரியங்களுக்கு மலர்களைப் பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள் அவர்கள். தென்னவன் மாறன் காம மஞ்சரி என்ற வெறியூட்டும் அழகுக் கருவூலத்துக்கு முன் மிகவும் விழிப்பாக இருந்தான். பெண்களின் அரச தந்திரம் என்பது மலர்களால் எழுப்பும் கோட்டைச் சுவரைப் போன்றது. அந்தச் சுவர் எங்கே சரிந்து விழும், எப்போது சரிந்து விழும், எதற்கு முன்பு சரிந்து விழும் என்பதை ஒன்றும் முன் கூட்டியே சொல்ல முடியாது என்று அவன் நினைத்துக் கொண்டிருந்தபோதே, அந்த நினைவை நிரூபிப்பது போன்ற ஒரு காரியத்தைக் காம மஞ்சரி செய்தாள். தன்னால் எந்த வகையிலும் வெல்ல முடியாத அவன் ஆண்மைக்கு முன்னால் அவளுடைய மலர்க்கோட்டையின் மெல்லிய தந்திரச் சுவர்கள் பொலபொலவென்று சரிந்தன! “ஐயா! சுந்தர வாலிபரே! தயைகூர்ந்து நீங்கள் இங்கிருந்து உடனே எப்படியாவது வெளியேறிவிடுவது நல்லது. இல்லா விட்டால் நாளைக்குச் சூரியோதயத்திற்குள் உங்களைச் சிரச் சேதம் செய்து விடுவதாக ஏற்பாடு ஆகியிருக்கிறது. அப்படி நீங்கள் என்னென்ன இரகசியங்களை ஒற்றறிய முடியுமோ அவற்றை எல்லாம் அறிவதற்கான சாகஸங்களைப் புரிவதற்கே நான் வந்தேன். நீங்கள் என்மேல் கருணை காட்ட வில்லை என்றாலும், நான் என் கடமை தவறியாவது உங்கள் மேல் கருணை காட்டுகிறேன். உங்கள் மேல் - என்ன காரணமோ சொல்லத் தெரியவில்லை; என்மனம் பித்துப் பிடித்தது போல் அடிமைப்படத் தொடங்கி விட்டது” என்று கண்ணீரும் கம்பலையுமாக மன்றாடிய அவள் விழிகளில் - முகபாவத்தில் எந்த அளவு கபடம் இருக்கிறது என்பதைக் கூர்ந்து கவனிக்கலானான் தென்னவன் மாறன். இப்படி அவள் ஒரேயடியாகச் சரணாகதி அடைவது போல் தன்னிடம் மன்றாடுவதும் கூட ஒரு சாகஸமோ என்று பயந்தான் அவன். ‘பஞ்சணையில் வேதாந்தம் பேசும் தமிழன்’ என்று தாபம் பொறுக்க முடியாமல் அழகுத் திமிரோடும் உணர்ச்சி வெறியோடு தன்னை எடுத்தெறிந்து பேசியவளா திடீரென்று இப்படித் தன்னுடைய அரண்களை எல்லாம் தானே சிதைத்துக் கொண்டு எதிர்ப்பட்டுச் சரணாகதியாகிறாள் என்று நினைத்த போது நம்புவதற்கு அருமையாகவும் இருந்தது. நம்பாமலும் இருக்க முடியவில்லை.
இந்த இரண்டும்கெட்ட மனநிலையில் நாகரிகங்களை அதிகம் பழகாத அவனுடைய நாட்டுப்புறத்து மனப்பான்மை அவனைக் காப்பாற்றியது. அந்த நாட்டுப்புறத்துப் பிடிவாதம் அவனை அவளுக்கு முன் அந்த நிலையிலும் இளகி விடாமல் தடுத்தது. தன் மார்பில் பூதபயங்கரப் படைத் தலைவனின் வாள் இலேசாகக் கீறியிருந்த காயத்துக்கு அவள் கைகள்தான் மருந்திட்டிருக்க வேண்டும் என்று புரிந்ததும் மனத்துக்குள் அதற்காக நன்றியுணர்வு சுரந்தாலும் கூட அவளிடம் அதிகம் பேசவில்லை அவன்.
“உன்னுடைய கருணைக்கு நன்றி பெண்ணே! ஆனாலும் உன்னை நியமித்தவர்களுக்கு நீ துரோகம் செய்வது எனக்குப் பிடிக்கவில்லை. காமமஞ்சரி! பெண்களின் உதவியோடு தப்பி ஓட நான் விரும்ப மாட்டேன் என்பது உனக்குப் புரிந்திருந்தால் நீ இப்படி என்னிடம் பேசியிருக்க மாட்டாய்”
“இருக்கலாம். ஆனால், இந்த இடத்தில் இப்போது என்னைத் தவிர உங்களுக்கு வேறெவரும் உதவ மாட்டார்கள். நேரே பூதபயங்கரப் படை வீரர்களோடு நாளைப் பொழுது புலர்வதற்கு முன் கொலைக்களத்துக்குப் போவதுதான் இனி உங்கள் விதி.”
“என் தலைவிதியை மாற்றுவதற்காக மட்டும்தான் ஆண்டவன் உன்னைப் படைத்திருப்பதாக நீ நினைக்கிறாய் போலும்.”
அவள் மறுமொழி கூறவில்லை. நடைப் பிணம் போல் அவனைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே தளர்நடை நடந்து பயத்தோடு அந்தக் கூடத்திலிருந்து அவள் வெளியேறிச் செல்வதை அவன் பார்த்துக் கொண்டிருந்த போதே இன்னோரு வாயில் வழியாகப் பூத பயங்கரப்படை வீரர்களின் கூட்டம் ஒன்று திமுதிமுவென்று உள்ளே நுழைந்து மீண்டும் அவனுடைய கைகளையும் கால்களையும் சங்கிலியால் பிணைக்கத் தொடங்கியது.
-----------
நித்திலவல்லி -- இரண்டாம் பாகம் - சிறைக்கோட்டம்
6. புலவர்களும் பொய்யும்
மந்திராலோசனைக் குழுவினர் பேசிமுடித்த பின் வடக்கே களப்பிர தேசத்திலிருந்து வந்திருந்த நாலைந்து பாலிமொழிக் கவிகள் அரசனைக் கண்டு பரிசில் பெறக் காத்திருந்தார்கள். களப்பிரர் ஆட்சியில் அடிமைப்பட்ட பின் அரசவையில் பாலி மொழிக் கவிஞர்களுக்கும், புலவர்களுக்கும் இருந்த செல்வாக்கு, தமிழ்க் கவிஞர்களுக்கும், தமிழ்ப் புலவர்களுக்கும் இல்லாமற் போயிருந்தது. புலவர்கள் பரம்பரையாகச் சந்திக்கவும் நூல்களை அரங்கேற்றவும் இருந்த தமிழ்ச் சங்கத்தின் புகழ்பெற்ற கட்டிடங்களை யானைகள் கட்டுமிடமாகவும், குதிரைகள் கட்டுமிடமாகவும் பயன்படுத்தத் தொடங்கி யிருந்தார்கள் களப்பிரர்கள்.
மந்திராலோசனைக் கூட்ட முடிவில் தென்னவன் மாறன் தன் நினைவிழந்து மயங்கி விழுந்தவுடனே அவனை ஒற்றறியக் காமமஞ்சரியிடம் விட்டபின் மற்ற மூவரும் மீண்டும் சிறைக் கோட்டத்துக்கே அனுப்பப்பட்டு விட்டார்கள். எல்லைகளில் படை பலத்தைப் பெருக்கி வைத்திருக்கு மாறு மீண்டும் நால்வகைத் தானைத் தலைவர்களையும் கலியமன்னன் கேட்டுக் கொண்டான். அவ்வளவில் மந்திராலோசனைக் குழுவினர் கலைந்தனர். சிறைப் பட்டிருந்த நால்வரில் தென்னவன் மாறனைப் பற்றி மட்டுமே கலிய மன்னனுக்கும், மாவலி முத்தரையருக்கும் அதிகமான பயம் ஏற்பட்டிருந்தது.
“நாளைப் பொழுது விடிந்தால் அவனைச் சிரச்சேதம் செய்யப் போகிறோம். அதற்குள்ளே அவனை மயக்கிவசப்படுத்தி அவனிடம் இருந்து அறிய வேண்டியவற்றை அறிய வேண்டும்” என்பதாகக் காமமஞ்சரியிடம் கட்டளையிடுமாறு பூதபயங்கரப் படைத் தலைவனிடம் கலிய மன்னர் கூறியபோது அரசகுரு மாவலி முத்தரையர் குறுக்கிட்டார்:
“அப்படிச் சொல்லாதே கலியா! இவனை உடனே கொன்று அழித்துவிடுவதால் நமக்குப் பயன் இல்லை. நான் முன்பே உன்னிடம் சொல்லியதுபோல் கிடைத்த பறவையை வைத்துத் தப்பிவிட்ட பறவைகளைப் பிடிக்க வேண்டும்.”
“பிடிக்கலாம்! ஆனால் காமமஞ்சரியைப்பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்! நீங்கள் காலக்கெடு வைத்துத் துரிதப் படுத்தினால் அன்றி அவளுடைய சாகஸம் விரைந்து பயன் படாது. ஆகவே, அவளிடம் நாளை வைகறையிலேயே நம்மிடம் சிறைப்பட்டிருக்கும் இந்தப் பாண்டிய குல இளைஞன் சிரச்சேதம் செய்யப்படுவான் என்று கூறினால் தான் நல்லது” என்றான் கலியன்.
“கூறவேண்டியவற்றை எல்லாம் காமமஞ்சரியிடம் மிகவும் தந்திரமாகக் கூறியிருக்கிறேன். பாண்டிய மரபின் உறுதுணையானவர்களில் இவன் ஏதோ ஒரு விதத்தில் மிக மிக இன்றியமையாதவனாக இருக்க வேண்டும். இதே சங்கு முத்திரை உள்ள ஒருவனைப்பற்றி மிகவும் சந்தேகப்பட்டு முன்பொரு சமயம் சில ஆண்டுகளுக்கு முன் கழுவேற்றியிருக்கிறோம். எனக்கு அது இன்னும் மறந்து போய்விட வில்லை. இப்போது இவனையும் அப்படிக் கொன்று விடுவதன் மூலம் மிகப் பலவற்றை அறியவும், காணவும் நேரும் வாய்ப்புக்களை நாம் இழந்து விடுவோம்.”
“முயல்களுக்கு விரித்த வலையில் தெரிந்தோ தெரியாமலோ ஒரு வேங்கை சிக்கியிருக்கிறது என்கிறீர்! இல்லையா?”
“பொருத்தமான உவமையைச் சொல்கிறாய் அரசே! இவன் ஒரு வேங்கையே தான். உன்னுடைய சாகஸக் காரிகை காமமஞ்சரி இவனை மயக்கி இவனிடமிருந்து எதையும் தெரிந்து கொள்வதற்குப் பதில் அவளை இவன் மயக்கி அவளிடமிருந்து இவன் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு விடாமல் இருக்கவேண்டுமே என்பதுதான் என் கவலை கலியா!”
“உங்கள் சந்தேகம் வீணானது! வில்லாலும், வாளாலும் வெல்ல முடியாதவர்களைப் பலமுறை அவள் விழிப் பார்வையே வென்று தந்திருக்கிறது அரச குருவே!”
பேசிக்கொண்டே அவர்கள் பாலிமொழிப் புலவர்கள் கலிய மன்னனை எதிர்பார்த்துக் காத்திருந்த கொலு மண்டபத்திற்கு வந்து சேர்ந்திருந்தனர். புலவர்கள் எழுந்து நின்று அரசனை வாழ்த்தி வரவேற்றனர். அரசன் களைத்து வந்திருப்பதை அறிந்து அவன் மனக் குறிப்பு உணர்ந்த புலவர்கள் அவனை மகிழ்விக்கக் கருதினர். அரசகுரு புலவர்களை எல்லாம் மிகமிக ஏளனமாகவும் அலட்சியமாகவும் ஏறிட்டுப் பார்த்தார். அரச குருவின் செல்வாக்கை அறிந்த புலவர்கள் அவரையும் வாய்நிறைய வாழ்த்தினர். அரசகுரு மாவலி முத்திரையர் உள்ளுற நகைத்துக் கொண்டார். இந்தப் புலவர்களில் பலர் உண்மையைப் பற்றிக் கவலைப்படாமல் அரசன் மனம் மகிழ வேண்டும் என்பதற்காக இல்லாததையும், பொல்லாததையும் புனைந்து கூறி அரசனிடம் பரிசில் பெற்றுக்கொண்டு போவது ஒன்றையே நோக்கமாகக் கொண்டு அலைவதால் மாவலி முத்தரையருக்கு இவர்கள் மேல் என்றைக்கும் மதிப்பு எதுவும் இல்லை. இன்றும் அப்படியே நடந்தது. முதல் புலவரே சிங்காரச் சுவை நிறைந்த கற்பனை ஒன்றைப் புனைந்து பாடினார்.
“கலிய மன்னனே! அழகிய பெண்கள் ஆகிய நாங்கள் உன்னை நினைத்து உருகிக் கருத்தைப் பறிகொடுத்துக் கைவளைகள் சோர்ந்ததால் நான்மாடக் கூடல் நகரத் தெருக்களின் இரு சிறகிலும் குவியல் குவியலாகப் பொன் வளைகள் கேட்பாரற்றுக் குவிந்து விட்டன. வளையிழந்து கைசோர்ந்த பெண்கள் உன்னைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறோம்” என்று அர்த்தம் வருமாறு பாடினார் அவர்:
“தெருமருங்கின் இருசிறகும் பொன்னினொளிர்
தொடிநிறைந்து குவிந்திருந்த நான்மாடத்
தருமருந்திற் கூடல்நகர் ஆரணங்கார்
அய்யா கலியழகா அறிவாழித்
திருவுருவே திண்தோளாய் வலிமிக்காய்!
தீண்டிநினைக் கூடுமின்பம் வலிமிக்காய்
வருநாளாய் நீதருநாளாய்த் திருநாளாய்
வளையிழந்து தெருவெல்லாம் அலைகின்றோம்”
மேற்கண்ட பொருளமைந்த பாலி மொழிக் கவிதையை முதற் புலவர் பாடி முடித்ததும், மாவலி முத்தரையர் அடக்க முடியாமல் வாய் விட்டுச் சிரித்து விட்டார். அவருடைய ஏளனம் இயல்பை மீறி இருப்பதை அரசன் கவனித்தான்.
“ஐயோ, பாவம் அவ்வளவு பெண்களையும் இங்கே அழைத்து வந்து நம் கலிய மன்னனைக் காண்பித்து விட்டுத் தெருக்களில் தேர்களும், யானைகளும், குதிரைகளும் போவதற்கு இடமில்லாதபடி வளைகள் குவிந்து விடாதவாறு தடுத்திருக்கலாமே!” என்று முத்தரையர் ஏளனம் செய்ததற்கு ஒரு புலவர் மறுமொழி கூறலானார்:
“மெய்யாகவே வளைகள் அப்படிக் கழன்று குவியாது! இதெல்லாம் ஒருவகைக் கற்பனை அதிசயோக்தி. உயர்வு நவிற்சி என்பார்கள் உங்கள் தமிழில்.”
“நீங்கள் எல்லாம் இப்படியே கற்பனையைப் புனைந்து தள்ளிக் கொண்டிருந்தீர்களானால் இந்தக் களப்பிரப் பேரரசின் வீரம்கூட ஒருநாள் கற்பனையாகப் போய் விடும்.”
எந்த ஒரு மகிழ்ச்சியை எதிர்பார்த்து அரச குரு தம்முடைய குரூரமான இயல்பை விடுத்துச் சிரிக்கத் தொடங்கியிருக்கிறார் என்பதைக் கலியன் சிந்தித்தான். அரச குருவுக்குப் பயந்தபடியே இரண்டாவது புலவர், கலிய மன்னன் நான்மாடக் கூடல் வீதியில் உலாப் போகும்போது, பேதை, பெதும்பை, அரிவை, தெரிவை, மங்கை, மடந்தை, பேரிளம் பெண் ஆகிய ஏழு பருவ மகளிரும் மயக்கமுற்று மையலானதைப் பற்றிய உலாக் கவிதையைப் பாடலானார்:
“இந்த ஏழு பருவ மகளிரும் பல நூறு ஆண்டுகளாக அரசர்கள் தெருவில் வரும்போது மட்டும்தான் மையல் கொள்ளுகின்றார்கள்! இந்த மதுரை மாநகரம் பாண்டியப் பேரரசின் தலைநகராக இருந்தபோது பாண்டிய மன்னனைப் புகழ்ந்து பாடிய புலவர்களும் இப்படித்தான் ஒரு பாவமும் அறியாத ஏழு பருவ மகளிரை வம்புக்கு இழுத்துப் பாடியிருப்பார்கள். இன்று நம் கலியமன்னன் உலாப் போகும் போதும் இந்த ஏழு பருவ மகளிர்தான் மையல் கொள்கிறார்கள். நாளைக் கலியமன்னனின் மகன் உலாச் சென்றாலும் இவர்கள் தான் மயங்க வேண்டும். இவர்களுக்கும் உங்களுக்கும் வேறு வேலையே இல்லையா?” என்று இரண்டாவது புலவரையும் ஏளனம் செய்தார் அரசகுரு. ஒரு நிலைமைக்கு மேல் அவர் தன்னையே ஏளனம் செய்கிறாரோ என்று கூட அரசன் உள்ளுற உணரத் தலைப்பட்டான்.
அங்கு அப்போது யாருமே எதிர்பாராதவிதமாகக் காம மஞ்சரி, மான் நடந்து வருவதுபோல் நன்னடை பயின்று, கொலு மண்டபத்திற்குள் வந்தாள். உடனே அரசனும் மாவலி முத்தரையரும் பரபரப்படைந்தனர். அவளைப் பின் தொடர்ந்து பூதபயங்கரப் படைத் தலைவனும் அங்கு வந்தான். புலவர்களையும் வைத்துக்கொண்டு காம மஞ்சரியிடம் தான் விசாரித்தறிய வேண்டியதை எப்படி விசாரிப்பது என்று கலியன் தயங்கினான். அரச குரு அப்படித் தயங்காமல் கேட்டுவிட்டார்:
“உன்னிடம் ஒப்படைத்த காரியம் என்ன ஆயிற்று? வெற்றிதானே?”
“இல்லை. அந்த முரட்டு ஆடவனை எந்த நளினமான உணர்வுகளாலும் வசப்படுத்த முடியவில்லை. இறுதியில் நான் அவனிடமிருந்து உயிர் தப்புவதே அரும்பாடு ஆகிவிடுமோ என்ற பயத்தில் ஒரு கண்ணிர் நாடகம் ஆட வேண்டியிருந்தது. அந்த இறுதி நாடகத்தில் மட்டுமே நான் அவனை வென்று தப்பினேன். மாமன்னருக்குத் துரோகம் செய்து அவன் மேலுள்ள பிரியத்தால் அவனைத் தப்பிச் செல்ல விடுவதற்கு உதவுவது போல் நடித்துத்தான் நானே அவனால் எனக்கு அபாயம் விளையாமல் பிழைத்தேன்!”
கலியன் ஏதோ சந்தேகத்துடன் அவளைக் கூர்ந்து நோக்கினான்.
-----------
நித்திலவல்லி -- இரண்டாம் பாகம் - சிறைக்கோட்டம்
7. விரக்தியில் விளைந்த நன்மை
கலிய மன்னனின் பார்வையில் கருணையும் நிதானமும் வறண்டிருப்பதைக் காமமஞ்சரியும் குறிப் பால் புரிந்து கொண்டாள். அவன் தன்னை நம்பவில்லை என்பது அவளுக்குத் தெரிந்தது.
“சொந்த வனப்புக்களைச் சாகஸமாக்கி ஒப்படைத்த காரியத்தை வெற்றிபெறச் செய்யாத முதல் களப்பிரப் பெண்ணை இப்போது தான் நான் சந்திக்கிறேன்” - என்றான் அரசன்.
அவனோடு அரச குரு மாவலி முத்தரையரும் சேர்ந்து கொண்டார்:
“பெண் சபலங்களின் வடிவம் என்பதை நீயும் நிரூபித்து விட்டாய் காமமஞ்சரி! தன்னுடைய சபலங்களையே அடக்கி வெற்றி கொள்ள முடியாதவளால் பிறரை வெற்றி கொள்ள முடியாதுதான்.”
“இதில் சபலங்களைப் பற்றிய பேச்சுக்கே இடமில்லை ஐயா! நீங்கள் வீணாக என் மேல் பழி சுமத்துகிறீர்கள். நானும் என்னால் முடிந்தவரை முயன்றுதான் பார்த்தேன். எதிராளி உணர்ச்சிகளால் வெல்ல முடியாதவனாக இருக்கும்போது நான் எத்தகைய சாகஸம் புரிந்தாலும் பயனில்லை” - என்று காமமஞ்சரி கூறிய வார்த்தைகளையும் மாவலி முத்தரையர் ஏற்கவில்லை. அவர் கூறினார்:
“மயக்க வேண்டியவளாகிய நீயே மயங்கியிருப்பாய். அதனால்தான் உன்னால் காரியத்தைச் சாதிக்க முடிய வில்லை! பெண்களிடமுள்ள தவிர்க்க முடியாத நோய் இது. அழகிய ஆண்பிள்ளைகளிடம் ஒற்றறிய இவர்களை நம்பி அனுப்பினால் அந்த ஆண் பிள்ளைகளிடம் இவர்களே வயமிழந்து மயங்கிப் போகிறார்கள்.”
காமமஞ்சரி இதற்கு மறுமொழி கூறவில்லை. அவளருகே நின்றுகொண்டிருந்த பூத பயங்கரப் படைத் தலைவன், அரசரின் கோபமோ, மாவலி முத்தரையரின் கோபமோ தன் மேலேயே திரும்பிவிடக் கூடாதே என்ற கவலையுடனும் முன்னெச்சரிக்கையுடனும் அரசருக்கு நல்ல பிள்ளையாக வேண்டுமென்ற எண்ணத்தில் இருந்தான்.
“ஐயா! அந்தப் புலித்தோல் அங்கி அணிந்த இளைஞனை மறுபடியும் சிறையில் அடைத்து விட்டேன்” - என்று மாவலி முத்தரையரை நோக்கிச் சொன்னான் அவன். மாவலி முத்தரையரோ, கலிய மன்னனோ அப்போதிருந்த மன நிலையில் இந்தச் சொற்களைக் காதில் வாங்கியதாகவே காண்பித்துக் கொள்ளவில்லை. காம மஞ்சரியால் ஒற்றறிய முடியாமற் போய்விட்டது என்பதே அவர்களுடைய வருத்தமாக இருந்தது.
“நீ போகலாம்! இனிமேல் இப்படிக் காரியங்களில் உன்னையும் நம்பமுடியாது” - என்று கலிய மன்னன் கூறிய போது காமமஞ்சரி அந்தக் குரலில் வேற்றுமை கண்டாள். வழக்கமாக இப்படிக் காரியங்களின் முடிவில் பொன் ஆரமும், முத்தும், மணியும், இரத்தினமும் வைத்துப் பரிசு கொடுக்கும் அரசன், இன்று தன்னை வெறும் கையளாக அனுப்புவதோடு மட்டுமின்றிச் சந்தேகத்துக்கு உரியவளாகவும் கருதுவதைப் புரிந்து கொண்டாள். அவளுள்ளே பெண்மை சீறியது. பதினாறடி வேங்கை போன்ற அந்தப் பாண்டியகுல வாலிபனை வெற்றி கொள்ள முடியாத ஏமாற்றத்தால் ஏற்கெனவே துடித்துக் கொண்டிருந்த அவள் மனத்தை அரசனும், மாவலி முத்தரையரும் இப்போது இன்னும் அதிகமாகச் சோதனை செய்திருந்தனர்.
‘அவனிடமிருந்து நான் தப்புவதற்காக அவனைத் தப்ப விடுவதுபோல் பேசினேன்’ என்று தான் கூறியதை அரசன் இரசிக்கவில்லை என்று அவளுக்கே புரிந்தது. அந்த வார்த்தைகளைக் கூறியபோதுதான் கலிய மன்னனுக்குத் தன் மேல் கடுமையான சந்தேகம் மூண்டது என்பதையும் அவள் உணர்ந் திருந்தாள். அரசனும், மாவலி முத்தரையரும் நடந்து கொண் டதிலிருந்து அவள்மனம் விரக்தியின் எல்லைக்குப் போயிருந்தது. முறைகளையும், சம்பிரதாயங்களையும் துறந்து அரசனிடமோ, மாவலி முத்தரையரிடமோ சொல்லி விடைபெற்றுக் கொள்ளாமலே அங்கிருந்து வெளியேறினாள் அவள்.
அங்கிருந்து அவள் வெளியேறும்போது அரசகுருவோ கலிய மன்னனோ அவளைப் பொருட்படுத்தவில்லை. கலிய மன்னன் கொலு மண்டபத்துப் புலவர்களின் புகழ்ச்சியிலே மீண்டும் குளிர்காயப் போய்விட்டான். மாவலி முத்தரையரோ மதுராபதி வித்தகரின் இருப்பிடத்தைக் கண்டுபிடிப்பதற்கு அடுத்த உபாயமாக எதை மேற்கொள்ளலாம் என்ற சிந்தனையில் ஆழ்ந்து போனார்.
அடிபட்ட பெண் புலியின் சீற்றத்தோடு திரும்பிக் கொண்டிருந்த காமமஞ்சரி போகிற போக்கில் களப்பிரர்களுக்கு மனம் அறிந்தே ஒரு பெரும் கெடுதலைச் செய்து விட்டுச் சென்றாள். இந்தக் கெடுதலை அவள் செய்ததற்குக் காரணம், அவள் மனத்திலிருந்த ஒரு பெரும் சந்தேகம்தான்.
“ஐயா! சுந்தர வாலிபரே! தயை கூர்ந்து நீங்கள் இங்கிருந்து உடனே எப்படியாவது வெளியேறி விடுவது நல்லது. இல்லாவிட்டால் நாளைக்குச் சூரியோதயத்திற்குள் உங்களைச் சிரச்சேதம் செய்துவிடுவதாக ஏற்பாடு ஆகியிருக்கிறது. அப்படி நீங்கள் சிரச்சேதம் செய்யப்படுவதற்குள் உங்களிடமிருந்து என்னென்ன இரகசியங்களை ஒற்றறிய முடியுமோ அவற்றை எல்லாம் அறிவதற்கே நான் வந்தேன்” என்று தனியறையில் உணர்ச்சி வசப்பட்டு எதிரியிடம் தான் கூறியவற்றை எல்லாம் தனக்கே தெரியாமல் வெளியில் மறைந்திருந்து காத்துக் கொண்டிருந்த பூதப்பயங்கரப் படைத் தலைவன் கேட்டிருந்து அப்படியே அவற்றை எல்லாம் அரச குருவிடமோ அரசனிடமோ போய்ச் சொன்னால் தன் நிலைமை என்ன ஆகும் என்றெண்ணியே இப்போது காமமஞ்சரி அஞ்சினாள். இந்த அச்சமும், சந்தேகமுமே அவளை விரக்தியுடையவளாக்கியிருந்தன. அவள் தனியறையிலிருந்து வெளியேறும் முன்பே, முற்றிலும் எதிர்பாராத விதமாகப் பூதபயங்கரப் படைத்தலைவன் உள்ளே நுழைந்ததனால்தான் அவளுக்கே இந்தப் பயம் வந்திருந்தது. தன்னை அவர்கள் முழுவதும் நம்பியிருக்கவில்லை என்ற எண்ணமும் அவளை அச்சுறுத்தியது. புலித்தோல் அங்கி இளைஞனை ஒற்றறிய தன்னை அனுப்பிவிட்டுத் தன்னை ஒற்றறியப் பூதபயங்கரப் படைத் தலைவனை அனுப்பியிருந்தார்களோ என்ற சந்தேகமும் அவளுள் கிளர்ந்தது. ‘தான் அபாயத்துக்கு ஆளாகி விட்டோம்’ என்ற பதற்றத்தில் அவள் முழுவிரக்தி அடைந்தாள். அந்தப்புர உரிமை மகளிர் பகுதிக்கு நடைப்பிணமாக அவள் திரும்பிக் கொண்டிருந்தபோதுதான் அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது.
அவள் வழியில், எதிரே அந்தப்புரத்திற்கும் சிறைக் கோட்டங்கள் இருந்த பகுதிக்கும் வழிகள் பிரியும் முனையிலே பூதபயங்கரப் படை வீரர்கள் அறுவர் நின்று கொண்டிருந்தனர். எதற்கோ தயங்கி நின்ற அவர்கள் அறுவரும் தன்னைக் கண்டதும் ஏன் அவ்வளவு மருள்கிறார்கள் என்பது அவளுக்குப் புரியாவிட்டாலும், அவர்கள் முன் தன்னையறியாமலே அவள் தயங்கி நின்றாள். அவர்களை உற்றுப் பாாததாள்.
அவர்கள் அறுவரில் ஒருவன் முன்வந்து சற்றே திருந்தாத மழலைப் பாலியில், “சித்திரமாடத்து உப்பரிகைக்கு எந்த வழியாகச் செல்லவேண்டும்? அங்கே அடைக்கப்பட் டிருக்கும் பாண்டிய நாட்டு வீரன் ஒருவனை மீண்டும் சிறையில் கொண்டு போய் அடைக்குமாறு எங்களுக்குக் கட்டளை இடப்பட்டிருக்கிறது” என்று அவளிடம் கேட்டான்.
இதற்கு முதலில் பதில் எதுவும் சொல்லாமல் அவர்களைப் பார்த்துச் சிரித்தாள் அவள். அவளுடைய சிரிப்பைக் கண்டு அவர்கள் அறுவரும் ஓரளவு பதறினாலும் அவர்களில் முதலில் பேசியவனே மீண்டும் அவளைக் கேட்டான்.
“ஏன் சிரிக்கிறாய் பெண்ணே?”
“சிரிக்காமல் வேறென்ன செய்வது? உங்களுக்குப் பாலியில் பேசவும் தெரியவில்லை; அரண்மனையில் உள்ள இடங்களுக்கு வழியும் தெரியவில்லை. மொழியும் வழியும் தெரியாதவர்கள் எப்படி இந்த அரசின் ஆணையின் கீழ்ச் சேவை செய்யும் பூத பயங்கரப் படை வீரர்களாக இருக்க முடியும் என்று நினைத்தேன். உடனே சிரிப்பு வந்தது.”
“நாங்கள் பெரும்பாலும் புறநகரப் பகுதிகளிலும், பாண்டிய நாட்டின் எல்லைப்புறப் பகுதிகளிலும் இருந்த பூத பயங்கரப்படை வீரர்கள். அதிகமாகத் தமிழ் வழங்கும் பகுதிகளில் பழகியவர்கள். புதிதாக இங்கே வந்திருக்கிறோம். மொழியும் வழியும் புரியாததற்கு அதுவே காரணம்.”
“மொழியும், வழியும் புரியாதவர்கள் என்று மட்டும் உங்களை நான் நினைக்கவில்லை; இன்னும் எதை எதையோ எல்லாம் புரிந்து கொள்ளத்தான் நீங்கள் இங்கே வந்திருக்கிறீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். நீங்கள் தேடி வந்திருக்கும் புலித்தோல் அங்கி இளைஞர் இப்போது சித்திர மாடத்தில் இல்லை. இங்கே என் எதிரே நின்று மழலைப் பாலி பேசும் உபவனத்து அழகன்பெருமாள் மாறனாருக்கு என் பாராட்டுக்கள்!”
இந்த வாக்கியத்தை அவள் கூறி முடிக்கும் முன்னே உருவியவாளின் நுனி ஒன்று அவளுடைய அழகிய கழுத்தில் உராயத் தொடங்கியிருந்தது.
“என்னை எப்படித் தெரியும் உனக்கு?”
“அரண்மனை அந்தப்புரத்து உரிமை மகளிருக்கு எத்தனை முறை பூக்களும், மாலைகளும், சந்தனமும் கொடுக்க வந்திருப்பீர்கள்? நீங்கள் என்னதான் மாறு வேடத்தில் இருந்தாலும் எனக்கு உங்களைப் புரிகிறது!”
“இந்த நிலையில் நீ எங்களைக் காண்பித்துக் கொடுத்தால் உயிர் தப்ப மாட்டாய் காமமஞ்சரி!”
“இனி என் உயிரைப் பற்றிப் பெரிதாகப் பேசி ஒரு பயனும் இல்லை ஐயா! நீங்கள் விட்டுவிட்டாலும் எங்கள் அரச குருவோ, பூத பயங்கரப் படைத் தலைவனோ கூட விரைவில் என்னைக் கொன்று விடலாம். நான் துரோகி என்று அவர்களும் நினைக்கிறார்கள். மெய்யாகவே துரோகியானால்கூட நல்லது என்று எண்ணும் அளவுக்கு அவர்கள் என்னை விரக்தி அடையச் செய்து விட்டார்கள்” என்று தொடங்கி நடந்தவை எல்லாவற்றையும் இவர்களிடம் கூறி விட்டாள் காமமஞ்சரி. அவர்களுடைய விரக்தியைப் பயன்படுத்திக் கொண்டு பூதபயங்கரப் படை வீரர்கள் போல் அரண்மனையில் ஊடுருவியிருந்த அழகன் பெருமாளும் ஏனைய உபவனத்து நண்பர்களான காரி, கழற்சிங்கன், சாத்தன், குறளன், தேனூர் மாந்திரீகன், செங்கணான் ஆகிய ஐந்து பேரும் அவளிடமிருந்து அறிய முடிந்த இரசியங்களை எல்லாம் அப்போது உடனேயே அறிந்தனர். தென்னவன் சிறுமலை மாறனைச் சித்திரமாடத்து உப்பரிகையில் வைத்து தான் மயக்க முயன்றதையும் அவன் மயங்காததையும், அவன் மேல் இனம்புரியாத மையலால் தான் ஆட்பட்டதையும் எல்லாம் காமமஞ்சரி அவர்களுக்குக்கூறி, அவனும் மற்றப் பாண்டிய வேளாளர்களும் அடைக்கப்பட்டிருக்கும் சிறைக் கோட்டத்துக்கு வழியும் கூறி விட்டுச் சென்றாள். அவ ளுடைய விரக்தி அவர்களுக்கு இந்த நன்மையைச் செய்தது.
-------------
நித்திலவல்லி -- இரண்டாம் பாகம் - சிறைக்கோட்டம்
8. குறளியும் மாற்றுக் குறளியும்
அரண்மனையிலும், கோட்டை யின் மற்ற உட்பகுதிகளிலும் நள்ளிரவின் அமைதி சூழ்ந்தது. காவலிருக்கும் வீரர்கள் தாங்கள் விழித்திருக்கிறோம் என்பதை அறிவிக்க ஒருவருக்கொருவர் கேட்கும்படி உரத்துக் கூவும் எச்சரிக்கைக் குரல்கள் தான் இடையிடையே அமைதியைக் கிழித்துக் கொண்டு ஒலித்தன. அந்தக் குரல்கள் ஒலிக்காத வேளையில் எங்கும் இருளின் மிகுதியை எடுத்துக்காட்டுவதுபோல் நிசப்தமே சூழ்ந்திருந்தது. எப்போதாவது அகழி நீரில் ஒரு பெரிய முதலை வாலைச் சுழற்றி அடிக்கும் ஓசை கோட்டை மதில்களின் சுவர்களில் எதிரொலித்தது. மதில்மேல் காவலுக்கு நிற்போரின் உருவம் நிழல்போல் இருண்டு தெரிந்தது. அன்று அந்த நள்ளிரவு வேளையில் பெரியவர் மதுராபதி வித்தகரின் கட்டளைப்படி, களப்பிரர்களிடம் சிறைப்பட்டுவிட்ட தென்னவன் மாறனையும், பிறரையும் சிறை மீட்கும் முயற்சியில் அழகன் பெருமாளும் நண்பர்களும் ஈடுபட்டிருந்தனர். நள்ளிரவுக்குச் சிறிது நேரம் கழித்து அவர்கள் அறுவரும் சிறைக்கோட்டப் பகுதியை அடைந்து விட்டனர்.
சிறைக் கோட்டத்தின் பிரதான வாயிலில் நாலைந்து முரட்டுக் களப்பிரர்கள் காவல் இருந்தனர். அவர்களோடு போரிட்டுக் கொன்று விட்டு உள்ளே நுழையலாமா, அல்லது தந்திரமாக ஏதாவது செய்து அவர்களை ஏமாற்றி விட்டு உள்ளே நுழையலாமா என்று அவர்கள் தயங்கிக் கொண்டிருந்தபோது, தேனூர் மாந்திரீகன் அந்தத் தயக்கத்தைத் தீர்த்து வைத்தான். அவன் கூறினான்: -
“இவர்களோடு நாம் போரிட்டுக் கொண்டிருக்கும் போதே வேறு களப்பிரர்களும் இங்கே வந்து சேர்ந்து கொண் டால் நம்மால் அவர்களை வெல்ல முடியாமல் போகும். ஆகவே, தந்திரமோ மந்திரமோதான் இந்த நிலையில் நம்மைக் காப்பற்றும். ஆகவே, நான் என்னுடைய மாந்திரீக முறைப்படி இவர்கள் கண்களைக் கட்டி ஏமாற்றிக் குறளி வேலை செய்து காட்டுகிறேன்.”
“என்ன செய்யப் போகிறாய் செங்கணான்?”
“சிறிது நேரம் பொறுமையாயிருந்து பாருங்கள். புரியும்.”
மற்ற ஐவர் கண்களும் செங்கணானையே நோக்கின. தேனுர் மாந்திரீகன் செங்கணான் கண்களை மூடி ஏதோ மந்திரங்களை உச்சரித்தான். எதிரே தரையையும், மதிற் சுவரையும் கையால் சுட்டிக் காட்டினான். ஏதோ மெல்லச் சொன்னான்.
என்ன விந்தை! அடுத்த கணம் தரை நெடுக எங் கிருந்தோ கொண்டு வந்து குவித்தது போல் நாக சர்ப்பங்கள் படமெடுத்துச் சீறின. எதிர்ப்புறம் மதிற்சுவர் தீப்பற்றிக் கொழுந்துவிட்டு எரிந்தது. சிறைக்கோட்ட வாயிலில் நின்ற களப்பிர வீரர்கள் நிலைகுலைந்து பதறி ஓடினர். சிலர் பாம்புகளை அடிக்க முற்பட்டனர். சிலர் தீப்பற்றிய சுவரை மருண்டு நோக்கினர். உடனே செங்கணான் தன்னைச் சேர்ந்த வர்களை நோக்கி, “இதைக் கண்டு நம்மவர்கள் பயமோ பதற்றமோ அடையக் கூடாது! இது அவர்கள் கவனத்தைத் திசை திருப்ப நான் செய்த குறளி வேலை. அவர்கள் இதைக் கண்டு பாம்பை அடிக்கவும் தீயை அணைக்கவும் முயன்று கொண்டிருக்கும்போதே நாம் உள்ளே புகுந்து நம்மவர்களை விடுவித்து மீட்டுக் கொண்டு வெளியேறிவிடமுடியும். வாருங்கள்” என்று துரிதப்படுத்தினான். செங்கணானைப் பின்பற்றி மற்ற ஐவரும் சிறைக்கோட்டத்திற்குள் நுழைந்தனர். வெளியே பாம்பை அடிக்கவும், தீயை அணைக்கவும் கூவி மற்றவர்களைக் கூப்பிடும் பாலிமொழிக் கூக்குரல்கள் கதறின. அழகன் பெருமாளும் நண்பர்களும் விரைந்து சிறைக்கோட்டத்தில் புகுந்து தென்னவன் சிறுமலை மாறனும், பிறரும் அடைக்கப்பட்டிருந்த பகுதியில் பிரவேசித்தபோது, இவர்கள் பூதபயங்கரப் படையினரின் தோற்றத்தில் இருந்த காரணத்தால் அவர்கள் இவர்களை வெகுண்டு நோக்கினர். தென்னவன் சிறுமலை மாறனும் மற்ற மூவரும் தங்களை இனம் கண்டுகொள்வதற்காக இவர்கள் கயல் என்று தொடங்கி நல்லடையாளச் சொற்களை மெல்லக் கூறிய பின்பே அவர்களும் பதிலுக்கு நல்லடையாளச் சொல்லைக் கூறி இவர்களை நோக்கி முகம் மலர்ந்தனர்.
உடனே இவர்கள் அறுவரும், அவர்கள் நால்வரையும் பிணித்திருந்த சங்கிலிகளையும், விலங்குகளையும் நீக்கி அவர்களைத் தங்களோடு தப்பி வெளியேறுவதற்கு ஏற்றபடி ஆயத்தமாக்கினார்கள். “உங்களையும் சிறைப்பட்டிருக்கும் நம்மவர்களையும் விடுவிக்கச் சொல்லிப் பெரியவர் மதுராபதி வித்தகரிடம் இருந்து எங்களுக்குக் கட்டளை ஓலை வந்தது. அந்தக் கட்டளையைச் சிரமேற்கொண்டு கோட்டைக்குள் நாங்கள் ஊடுருவி வந்தோம். உடனே புறப்படுங்கள். நாம் உடனே தப்ப வேண்டும்” என்று அழகன் பெருமாள் துரிதப்படுத்தினான். தென்னவன் சிறுமலை மாறனையும், மற்ற மூவரையும் உடன் அழைத்துக்கொண்டு அவர்கள் பத்துப் பேரும் வெளியேறி ஓடினர். சிறைக்கோட்டத்தின் அந்தப் பகுதிக்கும் அவர்கள் குறளி ஏவலால் உள்ளே நுழைந்த பிரதான வாயிற் பகுதிக்கும் நெடுந் தொலைவு இருந்தது.
பாதித் தொலைவு கடந்ததுமே திடீரென்று செங்கணான் அழகன் பெருமாளிடம் ஒர் எச்சரிகை விடுத்தான்:
“அழகன்பெருமாள் எனக்கு ஒரு சந்தேகம் இப்போது மனத்தில் தோன்றுகிறது. களப்பிரர்களில் பலர் சூன்யம், குறளி, ஏவல், போன்ற மாந்திரீக வகைகளில் வல்லுநர்கள் என்பதை நாம் மறந்துவிடலாகாது. இந்த மதுரை மாநகர் அரண்மனை அகநகர எல்லையில் யாராவதொரு மாற்று ஏவல் வைத்துக் குறளி விடுகிறவன் விழித்துக் கொள்வதற்குள் இங்கிருந்து நாம் தப்பிவிடவேண்டும். என் மனம் எதனாலோ சில கணங்களாகப் பதறுகிறது. நிச்சயமாக இங்கே ஒரு மாற்று ஏவலாளன் இருப்பான் என்றே நான் ஐயுறுகிறேன்.”
இப்படிப் பேசிக்கொண்டே அவர்கள் சிறைக் கோட்டத்தின் பிரதான வாயிலருகே வந்திருந்தனர். பிரதான வாயில் அடைத்திருந்ததைக் கண்டு அழகன் பெருமாள் திகைத்தான். மதிற்சுவர் எரிவது போல் தெரியவில்லை. தரையில் சர்ப்பங்கள் தென்படவில்லை. வெளிப்புறம் அடைக்கப்பட்ட கதவுகளின் அருகே முன்பு எத்தனை களப்பிர வீரர்கள் காத்துக் கொண்டிருந்தார்களோ அத்தனை பேர் இப்போதும் அமைதியாகக் காத்திருந்தனர். தப்பி ஓடுவதற்கு இருந்த அழகன்பெருமாள் முதலிய பத்துப் பேரும் அடைக்கப்பட்ட கதவுகளின் உள்ளே இருந்து திகைத்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. உள்ளே வரும்போது கூட அடைக்கப்பட்டிராத கதவுகள் இப்போது ஏன் அடைக்கப் பட்டிருக்கின்றன என்பது புரியாமல் அவர்கள் மருண்டனர்.
அழகன்பெருமாள் வினாவுகின்ற பாவனையில் தேனூர் மாந்திரீகனின் முகத்தைப் பார்த்தான். மாந்திரீகனின் முகம் கலவரமுற்றிருந்தது. அவன் பதறிய குரலில் பதில் சொன்னான்:
“நான் பயந்தபடியே நடந்திருக்கிறது.”
“அப்படி என்ன நடந்திருக்கிறது செங்கணான்?”
“யாரோ மாற்று ஏவல் செய்திருக்கிறார்கள் இதோ நான் மீண்டும் சர்ப்பங்களையும், நெருப்பையும் ஏவுகிறேன். பலிக்கிறதா, இல்லையா என்று பார்க்கலாமே?” என்று கூறி விட்டுக் கண்களை மூடித் தியானித்து ஏதோ முணுமுணுத்தான் தேனுர் மாந்திரீகன் செங்கணான்.
ஆனால் ஒன்றுமே நிகழவில்லை. தரையில் பாம்புகள் தோன்றவில்லை. சுவரில் தீப்பிடிக்கவில்லை. சில கணங் களுக்குப் பின் தேனூர் மாந்திரீகன் செங்கணான் வாளாவிருக்கும் போதே அவர்கள் எதிரில் திடீரென நரிகளும், ஒநாய்களும் தோன்றிக் கோரமாக வாய்களைப் பிளந்து கொண்டு ஊளையிடலாயின. தேனுாரான் தளர்ந்த குரலில் கூறலானான்:
“என் ஏவல் செயல்பட மறுக்கிறது அழகன் பெருமாள்! வேறு யாரோ வலுவான முறையில் மாற்று ஏவல் விடுகிறார்கள். இந்த நரிகளும், ஓநாய்களும் அந்தப் பிறர் ஏவலின் விளைவுதான்.”
இப்படி அவன் கூறி முடிப்பதற்குள் மூடிய கதவுகளின் வெளியேயிருந்து-
“பாம்புக்கும், நெருப்புக்கும் குறளி விடுகின்றவர்கள் இந்த நரிகளுக்கும், ஓநாய்களுக்கும் பயப்பட மாட்டீர்கள் அல்லவா?” - என்று வினாவி விட்டுப் பேய்ச் சிரிப்புச் சிரித்தது ஒரு குரல்.
அந்தக் குரலுக்குரிய மனிதனைப் பார்க்க அவர்கள் பத்துப் பேருடைய இருபது விழிகளும் ஏக காலத்தில் திரும்பி நிமிர்ந்தன.
எதிரே கதவுகளின் வெளியே அரசகுரு மாவலி முத்தரையர் கம்பீரமாக நின்று கொண்டிருந்தார்.
மாற்று ஏவலின் கைகள் யாவை என்பது தேனூர் மாந்திரீகனுக்கு இப்போது ஒருவாறு விளங்கியது. மாந்திரீக முறையிலேயே அந்த எதிரியின் கைகளை எப்படிக் கட்டிப் போடலாம் என்று விரைந்து சிந்திக்கத் தொடங்கியது செங்கணான் மனம்.
----------
நித்திலவல்லி -- இரண்டாம் பாகம் - சிறைக்கோட்டம்
9. இரத்தினமாலையின் ஊடல்
அழகன்பெருமாளும் அவனைச் சேர்ந்த உபவனத்து நண்பர்கள் ஐவரும் தனக்குத் தெரியாமலும், தன்னிடம் சொல்லி விடை பெற்றுக் கொள்ளாமலே கணிகை மாளிகையிலிருந்து வெளியேறிச் சென்று விட்டார்கள் என்ற செய்தியை இரத்தினமாலை தன்னிடம் தெரிவித்த போது, இளையநம்பியின் கோபம் முழுமையும் அவள் மேல்தான் திரும்பியது. அந்தக் கோபத்திற்கு உரிய இலக்கு அவள் இல்லை என்றாலும் எதிரே நின்ற காரணத்தினால் அவளே அதற்கு ஆளானாள்.
“சொல்லாமல் கொள்ளாமல் போய்விடுவதும், சொல்லாமல் கொள்ளாமல் போய்விடுகிறவர்களுக்கு உதவுவதும் தான் கோநகரத்து நாகரிகம் என்று நான் இதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டும் போலிருக்கிறது!”
“உங்கள் கோபம் வீணானது? நாகரிகமே இல்லாத ஒரு கூட்டம் பாண்டி நாட்டை ஆண்டும் அடிமைப்படுத்தியும் வருகின்றது. அநாகரிகமானவர்களை நாகரிகங்களைக் கொண்டு மட்டுமே வென்று துரத்திவிட முடியாது. வன்மையானவர்களை மென்மையான முறைகளால் அணுகி மட்டுமே வென்று விட வழியில்லை.”
“நான் களப்பிரர்களைப் பற்றி உன்னிடம் கேட்கவில்லை இரத்தினமாலை. அழகன் பெருமாள் ஏன் என்னிடம் சொல்லாமல் கொள்ளாமல் இங்கிருந்து போகவேண்டும்? அதைத் தான் கேட்கிறேன்?”
“அவர்கள் எதை நிறைவேற்றும் குறிக்கோளுடன் போகிறார்களோ அதில் உங்களைத் தவிர்க்க வேண்டும் என்று பெரியவர் அவர்களுக்குக் கட்டளை இட்டிருக்கிறார்.”
“சிறைப்பட்டு விட்ட தென்னவன் மாறனை மீட்கும் காரியத்தில் நான் ஈடுபடக்கூடாது என்றுதான் பெரியவர் கட்டளை இட்டிருக்கிறாரே தவிர அதற்காகப் புறப்பட்டுப் போகிறவர்கள் என்னிடம் சொல்லிக் கொள்ளாமலே போக வேண்டும் என்று கட்டளை இட்டிருப்பதாக எனக்கு நினைவில்லையே?”
“நீங்கள் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தீர்கள். யாமக் கோழி கூவுவதற்கு முன்பே அவர்கள் புறப்பட்டு விட்டார்கள். உங்கள் உறக்கத்தை அவர்கள் கலைக்க விரும்பவில்லை. தவிரவும் உங்களை எழுப்பிச் சொல்லிக் கொண்டு புறப்பட நேர்ந்து நீங்களும் உடன் வருவேனென்று வற்புறுத்துவீர் களோ எனவும் அவர்கள் தயங்கியிருக்கலாம்.”
“அவர்கள் ஏன் என்னிடம் சொல்லாமல் புறப் பட்டார்கள் என்பது எனக்குத் தெரியவேண்டுமேயொழிய, அதைப் பற்றி நீ என்ன அநுமானம் செய்கிறாய் என்பது எனக்குத் தெரியவேண்டியதில்லை.”
“இது அர்த்தமற்ற கோபம்.”
“இந்த மாளிகைக்கு வந்ததிலிருந்து நான் அர்த்தம் உள்ளதாக எதைத்தான் செய்ய முடிகிறது.”
அவனுடைய இந்த வார்த்தைகளுக்கு அவள் மறு மொழி எதுவும் கூறவில்லை. இமையாத விழிகளால் ஓரிரு கணங்கள் அவன் முகத்தையே ஏறிட்டுப் பார்த்தாள். அவன் கண்களில் அமைதியில்லை. எதையோ நினைத்து அடைந்த கோபத்தையும், பதற்றத்தையும் செலுத்துவதற்கு இலக்கு இல்லாமல் அவன் தன் மேல் செலுத்துவதை அவளாலும் புரிந்து கொள்ள முடிந்தது. ‘இங்கே வந்த பின்பு அர்த்தம் உள்ளதாக எதைத்தான் செய்ய முடிகிறது?’ - என்று மனத்தைப் புண்படுத்துவது போன்ற சொற்களை அவன் கூறியிருந்தும் சுடச்சுட அதற்குப் பதில் சொல்லும் முனைப்பை அவள் வலிந்து அடக்கிக் கொண்டாள். ஒரு விருந்தினர் பேசும் கடுமையான வார்த்தைகளை அதே கடுமையான வார்த்தைகளால் எதிர்த்து உரையாட நினைப்பதும் பாவம் என்பதை அவள் மறந்து விடவில்லை. இளையநம்பியோ அந்த மாளிகையில் விருந்தினன் மட்டுமில்லை. அதைவிடச் சிறப்பும் உரிமையும் உள்ளவன். அவளால் நேசிக்கப்படுகிறவன். அவளையும் நேசிக்கிறவன். நேசிக்கிற ஆணுக்கும், பெண்ணுக்கும் நடுவே நேர்பவை கோபங்கள் அல்ல. வெறும் ஊடல்களுக்குக் கோபங்கள் என்று கடுமையான பெயரை சூட்ட அவள் விரும்பவில்லை.
அப்போது அந்த நிலையில் அவனைத் தனியே சிந்திக்க விடுகிறவள்போல் அவள் ஒன்றும் பேசாமல் மாளிகையின் உட்பக்கமாகச் சென்று விட்டாள்.
கோபத்தை எதிர்கொண்டு அவிப்பதில் பெண்கள்தான் உலகத்திலேயே மிகச் சிறந்த அரசதந்திரிகள் என்பதை அவள் அப்போது நிரூபிக்க முற்பட்டாள். தனியே விடப்பட்ட இளையநம்பியின் சிந்தனை உள்முகமாகத் திரும்பியது. திணவெடுத்த தன் தோள்களுக்கு வேலையில்லாமல் போகும் படி யாழும், முழவும், குழலும், இசையும், பெண்களும் மட்டும் நிறைந்திருக்கும் ஒரு கணிகை மாளிகையின் எல்லைக்குள் தான் தங்கிவிடக் காரணமான கட்டளையைப் பெரியவர் மதுராபதி வித்தகர் இட்டு விட்டாரே என்று அவனுடைய ஏலாமைக்கோபம் அவர் மேல் ஒரு கணம் திரும்பியது. அடுத்த கணமே அந்தக் கோபம் அழகன் பெருமாள் மேலே திரும்பியது. ஆனால் அது அழகன் பெருமாள் மேலேயும் நிலைத்து நிற்கவில்லை. கட்டளைக்குக் கீழ்ப்படிகிறானே என்பதற்காகக் கோபப்பட்டுப் பயனில்லை என்று தோன்றவே இளையநம்பியின் கோபம் அங்கேயும் நிலைக்க முடியாமல் நழுவியது. முனைமழுங்கிய ஊசி போல் எங்கும் தைக்காத அந்தக் கோபம் இறுதியில் சுய சிந்தனையாக மாறியது.
திருக்கானப்பேரிலிருந்து புறப்பட்டு வரும்போது எண்ணிய எண்ணங்களுக்கும் இப்போதிருக்கும் நடைமுறைகளுக்கும் இடையே இருக்கும் வேறுபாட்டைத் தனக்குத் தானே நினைத்துப் பார்த்துக் கொண்டான் அவன். நினைத்துக் கொண்டு வந்த இளமை வேகத்திற்கும் துடிப்பிற்கும் ஏற்ப இங்கு எதுவும் நடைபெறவில்லை. மந்திரம் போட்டுப் பேய் துரத்துவதுபோல் களப்பிரர்களை அவ்வளவு வேகமாகத் துரத்திவிட முடியும் என்று தோன்றவில்லை. அவிட்ட நாள் பெருவிழாவன்று கோநகரில் பெரியவர் திட்டமிட்டிருந்தபடி எல்லாம் முடியாமற் போனபின் இன்னும் சிறிது காலம் வெற்றிக்காகக் காத்திருக்கத்தான் நேரிடும் போலிருக்கிறது.
வைகறையின் மங்கலமானவையும் இனியவையுமான பணிகளில் கவனமாயிருந்த இரத்தினமாலை அவன் பக்கம் திரும்பவே இல்லை. நீராடி உடை மாற்றிக் கொண்டு புதுமையான உணர்வுகளுடன் அமர்ந்தபோது அவனுக்கே தன் தவறு புரிந்தது. விடிந்ததும் விடியாததுமாக அரசர்களைத் துயிலெழுப்புவதுபோல் தன்னை மங்கலம் பாடித் துயிலெழுப்பிய அவள் மேல் தான் சினம் கொண்டது தவறு என்பதை அவனே மெல்ல மெல்ல உணர்ந்தான்.
அவனை உண்பதற்கு அழைத்தபோதும் பணிப் பெண்களே வந்து அழைத்தனர். அவள் அவன் முன் தென்படுவதே குறைவாக இருந்தது. நண்பர்கள் அனைவரும் வெளியேறி விட்டபின் அந்த மாளிகையின் எல்லையிலேயே அவன் மனம்விட்டுப் பேசவும், பழகவும் அவள் ஒருத்திதான் இருந்தாள். அவளும் அவன் மேல் பிணக்குக் கொண்டு ஒதுங்கினாற்போல் இருக்கவே, அவன் நரக வேதனைக்கு ஆளானான். அந்த மாளிகையின் சுவர் ஓவியங்களைப் பார்ப்பதில் சிறிது நேரம் கழிந்தது. இசைக் கருவிகள் வரிசையாக அடுக்கப்பட்டிருந்த கருவிக் கூடத்தைக் காண்பதில் சிறிது நேரம் கழிக்க முடிந்தது. அங்கிருந்த இசை, நாடக, நடன நூற்சுவடிகள் அடங்கிய பகுதியில் சற்றே நேரம் போக்க முடிந்தது. நண்பகல் வரை அவளை அவனும் தனிமைப்படுமாறு வாட்டினான். அவனை அவளும் தனிமைப் படுமாறு வாட்டினாள். ஊடல்* நீடித்தது. அவளுடைய ஊடலை வழிக்குக் கொண்டு வர அவன் ஒரு தந்திரம் செய்தான். பெண்ணின் பலவீனமான எல்லை எது என்பதையும் புரிந்து கொண்டு, அந்தத் தந்திரத்தை அவன் செய்தான். தவறு தன்னுடையதுதான் என்று புரிந்தாலும், அவளிடம் தானாக முதலில் பேசுவதற்கு அவன் மனம் இறங்கி வரவோ, விட்டுக் கொடுக்கவோ விரும்பவும் இல்லை. எனவே அவளை வழிக்குக் கொண்டுவர, அவன் இந்தத் தந்திரத்தில் ஈடுபட்டான்.
(* ஊடல் - ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நேரும் நளினமான பிணக்கு)
இரத்தினமாலையின் பணிமகளும் அடித்தோழியும் ஆகிய பூங்குழல் நாச்சியார் என்பவளைக் கூப்பிட்டு, “நாச்சியார் உன்னுடைய மென் விரல்களால் நீ யாழ் வாசிப்பதை நான் கேட்டு மகிழ ஆசைப்படுகிறேன். உடனே என் விருப்பத்தை நீ நிறைவேற்றுவாய் என்று நான் நம்புகிறேன்” என்று இரத்தினமாலை அருகிலிருக்கும்போதே அவளைப் பொருட்படுத்தாதவன் போல், அதேசமயம் அவள் காது கேட்கப் பணிமகளை யாழ் வாசிக்கச் சொல்லிக் கட்டளையிட்டான். அவன் எதிர்பார்த்தபடியே நாச்சியார் இரத்தின மாலையின் முகத்தை ஏறிட்டுப் பார்த்துத் தயங்கினாள். தலைவியின் முன்னிலையில் தான் யாழ் வாசிப்பது எப்படி என்று அவள் பயந்து கூசுவதாகத் தோன்றியது. அவனோ மீண்டும் அவளை வற்புறுத்தினான்.
“நீ வாசித்தால்தான் என் மனம் மகிழும் நாச்சியார்!”
நாச்சியாரின் முகத்தில் நாணமும் பயமும் மாறிமாறிப் பிரதிபலித்தன. அவள் இதழ்களில் வெளிப்பட முயன்ற நகை, தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்க்கும் தலைவிக்கு அஞ்சி மறைந்து ஒளிந்தது. மீண்டும் அவன் குழைந்த குரலில் நாச்சியாரை இறைஞ்சியபோது, அங்கே அவனிடம் நேரில் பேசாமல் ஆனால் அவன் கேட்கும்படி நாச்சியாரிடம் பேசுவது போல்,
“இந்த மாளிகைப் பெண்கள் தலைவிக்குக் கட்டுப் பட்டவர்கள். நம்பிக்கை மாறாதவர்கள். நன்றியுடையவர்கள் என்பதை நீ உன் மறுப்பால் உன்னை வேண்டுபவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும் நாச்சியார்!” - என்றாள் இரத்தினமாலை. இளையநம்பியும் பதிலுக்குப் பணிப் பெண்ணிடம் பேசுவது போலவே கேட்டான்:
“விருந்தினர்களைப் பணிப்பெண்களிடம் அவமானம் அடையச் செய்வதுதான் இந்த மாளிகை வழக்கமா என்று அங்கே கேள் நாச்சியார்?”
“பணிப்பெண்களின் தலைவியை அந்தப் பணிப்பெண்களுக்கு முன்பே அவமானப்படுத்த விரும்பும் எந்த விருந்தினரையும் நாங்கள் அங்கே மதிக்க முடியாது” என்று கோபம் தாங்க முடியாமல் நேரே அவனிடமே பேசிவிட்டாள் இரத்தினமாலை. ஆத்திரத்தில் தான் அவனிடம் நேரே பேசக் கூடாது என்ற பிணக்கு அவளுக்கே மறந்து விட்டது.
“அப்படி வா வழிக்கு! உன்னை என்னோடு நேரே பேச வைக்கத்தான் இத்தனை நாடகமும் ஆட வேண்டியிருந்தது; எங்கே? இப்போது நீயே யாழ் வாசிக்கலாம்...”
“நான் உங்களோடு பேச விரும்பவில்லை.”
“பெண்கள் எதை அதிகம் விரும்புகிறார்களோ அதை விரும்பவில்லை என்றுதான் சொல்வது வழக்கம்.”
இதைக் கேட்டு இரத்தினமாலை அடக்கமுடியாமல் சிரித்துவிட்டாள். அதுதான் பொருத்தமான நேரம் என்று இருவருக்கும் நல்லவளாக விரும்பிய தோழிப் பெண் நாச்சியார், அங்கிருந்து ஓடிப்போய் யாழை எடுத்துக் கொண்டு வந்து தலைவியிடம் கொடுத்து, “வாசியுங்கள் அம்மா பாவம்! கேட்க ஆசைப்படுகிறார்” என்று அவனுக்காகப் பரிந்து உரைக்கலானாள்.
“அடி பேதைப் பெண்ணே! ஆண்களைச் சுலபமாக நம்பிவிடாதே! அவர்களால் எதையும் சாதித்துக் கொள்ள நடிக்கவும் முடியும். என்னையே எடுத்துக்கொள் இப்போது நான் மிக எளிதில் ஏமாந்து போய்விட்டேன். ஒரு விநாடி பலவீனத்தில் என் ஊடல் எங்கேயோ போய் விட்டதே? ஆண் குலத்தை இப்படித் தொடர்ந்து வெற்றியடைய விட்டுக் கொண்டே இருப்பதால் தான் நாம் இன்னும் பேதைப் பெண்களாகவேயிருக்கிறோம் நாச்சியார்...” என்று கூறிய படியே யாழுக்குச் சுருதி கூட்டலானாள் இரத்தினமாலை.
“உடனே, நன்றாகச் சுருதி சேருகிறதே” என்று குறும்பாகக் கூறினான் இளையநம்பி. அவள் ஊடல் தவிர்த்து மனம் தன்னோடு இணையத் தொடங்கியதையும் அந்த வாக்கியத்தின் மூலமே இரட்டுற மொழிதலாக அவளுக்குப் புலப்படுத்தி விட்டான் அவன். அவள் யாழ் வாசிக்க இணங்கியதன் மூலம் இளையநம்பியின் மேற் கொண்டிருந்த ஊடல் தவிர்ந்தது.
-----------
நித்திலவல்லி -- இரண்டாம் பாகம் - சிறைக்கோட்டம்
10. திருமால் குன்றம்
இரத்தினமாலைக்கும் இளைய நம்பிக்கும் பிணக்கு ஏற்பட்டுத் தவிர்ந்த தினத்திற்கு முந்திய நள்ளிரவிலேயே அங்கிருந்து புறப்பட்டிருந்த திருமோகூர்க் கொல்லன் பெரியவர் மதுராபதி வித்தகரைச் சந்திப்பதற்காக விரைந்து கொண் டிருந்தான். கணிகை இரத்தின மாலையின் மாளிகையிலிருந்து புறப்பட்டு நிலவறை வழியே உபவனத்தை அடைந்து இரவோடிரவாக வைகையை நீந்திக் கடந்து புறநகரில் போய் அங்கிருந்து திருமோகூர் செல்லும் சாலையை நாடாமல் நேர் வடதிசையில் திருமாலிருங்குன்றத்தை நோக்கி விரைந்தான் கொல்லன். நடுவழியில் எங்காவது களப்பிரப் பூதபயங்கரப் படையினரிடம் அகப்பட்டுக் கொள்ளக் கூடாதே என்ற பாதுகாப்பு உணர்வினால் சில இடங்களில் காடுகளிலும், புதர்களிலும் வழி விலகி நடந்தான் அவன். திருமால் குன்றத்து இறைவனை வேண்டிக் கொண்டே வழியைக் கடந்து கிழக்கு வெளுக்கும் நேரத்திற்கு முன்பாகவே மலையடிவாரத்தை அடைந்து விட்டான் அவன். எழில் குலவும் அந்த மலையடிவாரத்தில் கலின் கலின் என்று சிலம்புகள் குலுங்க ஓர் அழகி பாதம் பெயர்த்து நடப்பது போல் பாயும் சிலம்பாற்றின் கரையில் நின்று சூரியோதயத்தைக் காண்பது கண்கொள்ளக் காட்சியாயிருந்தது. பறவைகளின் விதவிதமான ஒலிக் கலவைகளும், வைகறையின் தண்மையும் மலைச் சாரலின் பசுமையும், பசுமையின் கதம்பமான வாசனைகளும் அவனுடைய வழி நடைக் களைப்பைப் போக்கின. உடலுக்கு நன்மை செய்யவல்ல பல வகை வேர்களிலும், மூலிகைகளிலும் ஊறி வரும் பட்டுப் போல் மென்மையான சிலம்பாற்று நீரில் மூழ்கி எழுந்து ஈர உடையோடு அந்த மலையின் ஒரு பகுதியில் மறைந்திருந்த பெரியவரைக் காணப் புறப்பட்டான் அவன்.
முதல்முறை அவன் பெரியவரைக் காண அங்கு வந்த போது அவர் புண்ணியசரவணம் என்ற புகழ் பெற்ற பொய்கைக்கும் இட்டசித்தி, பவகாரணி என்ற மற்றப் பொய்கைகளுக்கும் அப்பால் மலை உச்சியில் பிலம்* (* ஆழமான பாறைப் பிளவு) போலிருந்த குகைகளில் ஒன்றில் மறைந்திருந்தார். இப்போதும் அவர் அங்கேதான் இருப்பார் என்று உறுதி கூற முடியாது. எதிரிகளிடம் முன்னெச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகத் திருமோகூரிலிருந்து சொல் லாமல் கொள்ளாமல் இடம் மாறியது போல் இந்தத் திருமால் குன்றத்திலும் அவரே அடிக்கடி இடம் மாற்றலாம் என்ற குறிப்பை முதலில் இங்கு வந்து அவரைச் சந்தித்த தினத்தன்று அவரோடு பேசிய போதே புரிந்து கொண்டிருந்தான் கொல்லன். இருபுறமும் மேல் நோக்கி ஓங்கிய மலைப் பக்கங்களின் நடுவே கணவாய் போன்ற அந்தப் பள்ளத்தின் முனையில்தான் சிலம்பாறு என்ற மலைமகளின் செல்வி தரையில் சிலம்பு ஒலிக்க இறங்குகிறாள். அந்த இடத்தில் நின்று நீராடிய ஈர உடையோடு அவன் இப்படிச் சிந்தித்துக் கொண்டிருந்தபோது கீழ்ப்பக்கம் மேலே மலைச் சரிவில் பாண்டியர்களைச் சேர்ந்த மதுராபதி வித்தகரின் ஆபத்துதவிகள் இருவர் விரைந்து தன்னை நோக்கி இறங்கி வருவதைக் கண்டான். அவர்களைக் கண்டதும் பெரியவரின் இருப்பிடத்தைத் தேடுவது பற்றிய கவலை அவனிடமிருந்து அகன்றது. புறப்பட இருந்தவன் அவர்களுக்காக நின்றான்.
நீராடும் போதும் தவறி விடாமல் பத்திரமாகத் தனியே எடுத்து வைத்திருந்த இளையநம்பியின் தாழைமடற் சுருளை மேலும் ஒரு தேக்கு இலையைத் தேடிச் சுருட்டி வைத்துக் கொண்டபின் அவன் அவர்களை எதிர்கொண்டான்.
தெரிந்திருந்தும் முறைப்படி நல்லடையாளச் சொற்களைப் பரிமாறிக் கொண்டபின் அவர்கள் அவனை மலைப் புதரில் வழி விலக்கி அழைத்துச் சென்றனர். அவன் முதலில் சந்தேகப்பட்டது நடந்திருந்தது. பெரியவர் முதலில் தங்கியிருந்த இடத்திலிருந்து வேறோர் இடம் மாறியிருக்க வேண்டும் என்பது அவர்கள் அழைத்துச் சென்ற பாதை மாறுபடுவதிலிருந்தே அவனுக்குப் புரிந்தது. அடர்ந்த புதர் களின் நடுவே நெடுந்தொலைவு நடக்க வேண்டியிருந்தது. நடந்து போகும் போதே பெரியவரிடம் எதை எதைச் சொல்ல வேண்டும், எப்படி எப்படிச் சொல்ல வேண்டும் என்பதை ஒரு முறைக்கு இரு முறை நினைத்துப் பார்த்துக் கொண்டான் கொல்லன். “நீ திரும்பி வரும்போது நிலைமைகள் எப்படி இருக்குமோ, தெரியாது. ஆனால் நிலைமைகளை அறிந்து வந்து சொன்னால் மட்டும் போதும்; இளையநம்பியிடமிருந்தோ அழகன்பெருமாளிடமிருந்தோ, இரத்தினமாலை யிடமிருந்தோ மறுமொழி ஓலை என்று எதுவும் வாங்கிக் கொண்டு வராதே! நீ அகப்பட நேர்ந்தால் அந்த ஓலைகளும் சேர்ந்து எதிரிகளிடம் அகப்பட நேர்ந்து பல இரகசியங்கள் எதிரிகளுக்குப் புரிந்துவிடும். அதனால் நீ திரும்பும் போது தெரிந்து கொள்ள வேண்டியவற்றை மட்டும் தெரிந்து வந்து சொல் போதும்” - என்று பெரியவரே கட்டளை இட்டிருந்ததனால், தான் தெரிந்து வந்தவற்றை அவரிடம் கூறவேண்டிய முறைப்படி மனத்தில் வரிசைப்படுத்திக் கொள்ளத் தொடங்கினான் கொல்லன்.
குடை போல் கவிந்திருந்த ஒரு குருந்த மரத்தடியில் நெற்றி நிறையப் பளீரென்று திருநீறு துலங்கத் தியானத்தில் அமர்ந்திருந்தார் பெரியவர். காலைக்கதிர் ஒளியில் அவருடைய மேனி உருகும் செம்பொன் சாயலைப் பரப்பிக் கொண்டிருந்தது. அருகே கமண்டலமும், சில சுவடிகளும், ஒரு மண்பாண்டத்தில் சில கனிகளும் தென்பட்டன. அவர் தியானம் கலைகிறவரை அவன் காத்திருந்தான். அவருடைய கண்கள் திறந்ததுமே அவன்தான் முதலில் பார்க்கப்பட்டான்.
“போன காரியம்... ?”
“யாவும் முடிந்தன ஐயா!”
“திருக்கானப்பேர் நம்பி...?”
“இரத்தினமாலையின் பொறுப்பில் கோநகரில் பாதுகாப்பாக இருக்கிறார் ஐயா!”
இதைக் கேட்டபோது மட்டும் அவருடைய கண்களில் சிரிப்பின் மெல்லிய சாயல் படர்ந்து மறைவது போல் கொல்லனுக்குத் தோன்றியது. சில விநாடிகள் ஏதோ சிந்திப்பது போல் இருந்த பின் மீண்டும் அவர் அவனைக் கேட்டார்”
“தென்னவன் மாறனையும் சிறைப்பட்டிருக்கும் மற்றவர்களையும் மீட்க என்ன ஏற்பாடு?”
“அழகன் பெருமாளும், உபவனத்து நண்பர்களும் அதை உடனே செய்வதாக வாக்குறுதி அளித்திருக்கிறார்கள் ஐயா!”
“நல்லது! இந்தப் புதிய இடம் பற்றி நீ யாருக்கும் கூறவில்லையே?”
“கூறவில்லை ஐயா!”
“திருமோகூர் நிலைமை?”
“காராளர் மேல் பூதபயங்கரப் படையின் கண்காணிப்பு இருக்கிறது! வேறு அபாயம் இல்லை. காராளர் மேலுள்ள ஐயப்பாட்டாலும் தாங்கள் திருமோகூர் சுற்றுப்புறத்தில் எங்காவது தங்கியிருக்கக் கூடும் என்ற அநுமானத்திலும் அங்கே தண்டு இறங்கிய களப்பிரப் படையினர் இன்னும் புறப்படவில்லை! சில நாளில் ஒருவேளை அவர்கள் சந்தேகம் நீங்கிப் புறப்பட்டாலும் புறப்பட்டு விடலாம்...”
“சில நாளில் அப்படி நடக்கலாம் என்பது உன் அநுமானம்தானே? இன்றோ நாளையோ அந்தப் படைகள் திரும்ப வழியுண்டா?”
“இல்லை...”
“அப்படியானால் நீ இப்போதே விரைந்து திருமோகூர் திரும்பி அங்கே எனக்காக உடனே செய்ய வேண்டிய காரியம் ஒன்று உண்டு.”
“தங்கள் ஆணை என் கடமை!”
“தென்னவன் மாறனைச் சிறைமீட்க வேண்டியது எவ்வளவு அவசியமோ, இளையநம்பியை ஆபத்தின்றிப் பாதுகாக்க வேண்டியது எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியமான மற்றோர் ஆணையை உன்னிடம் நான் இப்போது சொல்லிக் கொண்டிருக்கிறேன்.”
“புரிகிறது! அந்த ஆணையை எல்லா வகையிலும் இந்த அடிமை நிறைவேற்ற முடியும் என்று தாங்கள் உறுதியாக நம்பலாம் ஐயா!”
அவர் அவனை இன்னும் சிறிது நெருக்கமாக அருகே அழைத்துக் கூறலானார்:
“இளையநம்பி என்னைத் தேடி வந்தது போல் இன்று பிற்பகலில், தெற்கே கொற்கையிலிருந்து ஒர் இளைஞன் திருமோகூருக்கு என்னைக் காண வருவான். விளக்கு வைக்கும் நேரத்துக்குத் திருமோகூர் கொற்றவைக் கோவிலின் வாயிலிலுள்ள வன்னி மரத்தடியில் அவன் வந்து நிற்பான். அவனிடம் நீ நம்முடைய வழக்கமான நல்லடையாளச் சொல்லைக் கூறினால் அவனுக்கு அது புரியாது. ‘பெருஞ்சித்திரன்’ என நீ அவனிடம் குரல் கொடுத்தால் அவன் தன் வலது கையில் ஒன்பது ஒளி நிறைந்த முத்துக்களை எண்ணி எடுத்து வைத்து உன்னிடம் நீட்டுவான். அதுதான் அவனை நீ இனம் காணும் அடையாளம். உடனே நீ அவனை ஊருக்குள் அழைத்துச் செல்லாமல் ஊர்ப்புற வழியாக ஒதுக்கி இரவோடு இரவாக இங்கே கூட்டிக்கொண்டு வந்துவிட வேண்டும். மலையடிவாரத்தில் சிலம்பாற்றங் கரைக்கு வந்து நின்றால் போதும். அங்கே நம் ஆபத்துதவிகள் உங்களை என்னிடம் அழைத்துவரக் காத்திருப்பார்கள்.”
உடனே தலைவணங்கி அந்தப் பணியை ஏற்றுக் கொண்டு திருமோகூர் திரும்புவதற்காக விரைந்தான் கொல்லன்.
----------
நித்திலவல்லி -- இரண்டாம் பாகம் - சிறைக்கோட்டம்
11. இரும்பும் இங்கிதமும்
பெரியவரின் ஆணையைப் பெற்றுத் திருமோகூர் திரும்புவதற்காகச் சிறிது தொலைவு வரை மலைச் சரிவில் கீழிறங்கி வந்து விட்ட கொல்லனை மறுபடியும் இரண்டு ஆபத்துதவிகள் பின் தொடர்ந்து துரத்தி வந்தனர்.
“இரவெல்லாம் வழி நடந்து ஓடி வந்திருக்கிறாய்! இங்கு வந்ததும் வராததுமாக மறுபடி திருமோகூருக்கு ஒட நேர்ந்திருக்கிறது. பசியாறுவதைப் பற்றிய நினைப்பே உனக்கும் இல்லை. நாங்களும் மறந்துவிட்டோம். இதோ இவற்றைப் போகிற வழியில் சிலம்பாற்றங்கரையில் அமர்ந்து உண்டுவிட்டுப் போ” - என்று வேக வைத்த பனங்கிழங்குகள் சிலவற்றையும், நாலைந்து கதலிக் கனிகளையும், இரண்டு விளாம்பழங்களையும் அவனிடம் கொடுத்துவிட்டுச் சென்றனர் அந்த ஆபத்துதவிகள். அவனும் அவற்றை வாங்கித் தன் மேலாடையில் முடிந்துகொண்டான். அவர்கள் அப்படித் தேடிவந்து தன் பசியை எண்ணிக் கவலையோடும், சிரத்தையோடும் நடந்து கொண்டது அவனுக்குப் பெருமையாக இருந்தது.
புதிய இடத்தில் தங்களுக்கு என்று சிரமப்பட்டுச் சேகரித்து அவித்த பனங் கிழங்குகளில் சிலவற்றையும், பழங்களையும் துரத்தி வந்து தந்த ஆபத்துதவிகளை அவன் மனம் வாழ்த்தியது. நன்றியோடு பாராட்டியது.
‘களப்பிரர்கள் நாட்டைத்தான் பாண்டியர்களிடமிருந்து பறித்துக் கொள்ள முடிந்ததேயொழியப் பிறர்க்குதவும் பண்பு, பிறர் பசியை அறிந்து உணவிடும் பெருந்தன்மை ஆகிய குடிப் பண்புகளை ஒருபோதும் பறிக்க முடியாது’ என்று இறுமாப்போடு தோள்கள் விம்மி எழ எண்ணினான் அவன்.
விண்ணவர் அமுதைப் பருகுவது போல் விரும்பிப் பருக ஏற்ற சிலம்பாற்று நீரோடு அந்தச் சிறிய அளவு உணவை உண்டு முடிந்த பின் நடையைத் தொடர்ந்தான் அவன். கைகளிலும் வாயிலும் விளாம்பழ வாசனை இன்னும் தொடர்ந்தது. இன்னும் பல நாட்கள் தொடர்ந்து தங்க நேரிட்டாலும் விளாம்பழங்களும் நல்ல மலைவாழைக் கனிகளும் அந்த மலையில் போதுமான அளவு கிடைக்கும் என்று தோன்றியது. அடிவாரத்தில் பனங்கிழங்குகள் கிடைக்கவும் வழி இருந்தது. மிகப் பல ஆண்டுகளாக மறைந்து வாழும் பாண்டிய ஆபத்துதவிகளும் முனை எதிர்மோகர்களும், வாய்க்குச் சுவையாக உண்ண இயலாமல் இப்படித்தான் அங்கங்கே கிடைத்த உணவுகளை உண்டு நிறைவுகொள்ள வேண்டிய நிலையிலேயே இருந்தனர். விருந்துகளையும், உண்டாட்டுக்களையும் ஆள்பவர்கள் அநுபவிக்க முடியாது என்று புரிந்திருந்தும், பாண்டிய வீரர்கள் தியாக மனப்பான்மையோடு தலைமையின் ஆணைக்குக் கட்டுப்பட்டுப் பணி புரிந்து வந்தனர். நாட்டை விடுவிக்கும் வேட்கையில், பசியையும் ருசியையும் கூட மறந்திருந்தனர். பாண்டியர்குடிப் பண்பான அதே கட்டுப்பாடு திருமோகூர்க் கொல்லனிடமும் இருந்தது. அவர்கள் பின் தொடர்ந்து வந்து கொடுத்துவிட்டுப் போகவில்லையென்றால் அவன் உணவையும் மறந்து விட்டே பயணத்தைத் தொடரும்படி ஆகியிருக்கும். ஞாபகமாகத் தன் பசியை நினைவு கூர்ந்து தேடித் துரத்தி வந்து தனக்குக் கொடுத்துவிட்டுப் போன அந்த ஆபத்துதவிகள் தம் அளவில் இன்னும் பசியாறினார்களோ இல்லையோ என்று சிந்தித்தபோது அவன் உள்ளம் உருகியது.
சில நாட்களுக்கு முன்பு திருமோகூரிலிருந்து இடம் மாறியவுடன் பார்த்திருந்ததையும் விட இன்று திருமால் குன்றில் பெரியவர் மதுராபதி வித்தகரின் முகம் இன்னும் ஒளிமிகுந்து காட்சி தந்ததாகவே அவனுக்குத் தோன்றியது. களப்பிரர்களால் விளைந்த புதிய சோதனைகளும் தப்பித்துக் கொள்வதற்காக ஓடி இடம் மாற நேர்ந்ததும் அவரைச் சிறிதும் கலங்கவோ தளரவோ விட்டுவிடவில்லை என்பதை அவன் நினைத்தான். துன்பங்களினால் சிறிதும் கலக்கமே அடையாத அந்த நிலை அவனை மெய்சிலிர்க்கச் செய்தது.
‘பேரரசுகளின் நடுவே இப்படிப்பட்டவர்கள் பிறப்பதில்லை! இப்படிப்பட்டவர்கள் பிறந்த பின்பு தான் ஒரு பேரரசே பிறக்கிறது’ - என்று இதயத்தில் அவரை வியந்தபடியே அவன் திருமோகூர் திரும்பினான். திருமால் குன்றத்திலிருந்து காட்டுப் பாதையாகச் சுருங்கிய வழி இருந்ததனால் பிற்பகலிலேயே அவன் திருமோகூரை அடைந்துவிட்டான். முதலில் தன் உலைக்களத்திற்குச் சென்றான் கொல்லன். சிறிது நேரத்திற்குப் பின் பெரியகாராளர் மாளிகைக்குச் சென்றான் அவன். அங்கே பூத பயங்கரப் படைவீரர்கள் சிலர் காவலிலிருந்தாலும் அவனைத் தடுக்கவோ, கேட்கவோ இல்லை. பெரியவர் சொல்லியிருந்த கொற்கை மனிதனைச் சந்திக்க இன்னும் நேரம் இருந்ததால்தான் முதலில் அவன் இங்கே வந்திருந்தான். அப்போது காராளர் வீட்டில் இல்லை. கழனிகளை மேற்பார்க்கச் சென்றிருப்பதாகக் காராளர் மனைவி கூறினாள். அவர் வெளியே சென்றுவரத் தடை இல்லை என்பதைக் கொல்லன் இப்போது புரிந்துகொண்டான்.
அடுத்த கணமே செல்வப் பூங்கோதை ஒவியம் போல் அடக்கமாக அவனை எதிர்கொண்டாள். காராளர் மனைவியும் உடனிருந்ததால் அந்த அம்மையாருக்குச் சந்தேகம் எழாமல் “கூடலில் தெய்வத்தை கண்டு வணங்கும்போது தங்கள் வேண்டுதலைச் சேர்த்தேன் அம்மா! இதோ பிரசாதம்” - என்று அந்தத் தாழம்பூச் சுருளை எடுத்துச் செல்வப் பூங்கோதையிடம் சாதுரியமாக அளித்தான், கொல்லன். செல்வப் பூங்கோதையும் அதைப் புரிந்து கொண்டாள். அவள் கொடியாக வாடித் துவண்டு போயிருப்பது அவனுக்குப் புலப்பட்டது. அன்பு, மனிதர்களை எந்த அளவு தவிக்கச் செய்யவும் முடியும் என்பதை அவன் கண்கூடாகக் கண்டான். ஆறுதலாக இருக்கட்டும் என்று கருதி அவனே மீண்டும், “தெய்வம் கை விடாது அம்மா! நல்லகாலம் விரைவில் வரும்” - என்றான். அவன் இப்படிக் கூறியபோது அவள் அந்தத் தாழம்பூச் சுருளையும் சந்தனத்தையும் கண்களில் ஒற்றி எடுத்துக் கொண்டிருந்தாள். அவள் விழிகளில் புதிய ஒளியை இப்போது அவன் கண்டான்.
“துன்பப்பட்டுத் தவிப்பவர்களின் வேதனைகள் தெய்வத்துக்கு எங்கே உடனே புரிகிறது? அந்தத் தெய்வம் அருளுகிற வரை நாம்தான் காத்துக் கொண்டிருந்து துயரப்பட வேண்டியிருக்கிறது. அன்பரைக் காக்க வைக்காத நல்ல தெய்வமே இந்த உலகம் எங்கும் இல்லை போலிருக்கிறது!” - என்றாள் அவள். இந்தச் சமயத்தில் காராளரின் மனைவி ஏதோ வேலையாக உட்பக்கம் சென்றாள். தாய் உள்ளே சென்றதும் செல்வப் பூங்கோதையின் கண்களில் நீர் நெகிழ்ந்து ஈரம் பளபளத்தது. ‘அவரைப் பற்றி இன்னும் ஏதாவது சொல்லேன்-இன்னும் ஏதாவது சொல்லேன்’ -என்று அவனை இறைஞ்சியது அந்தப் பேதையின் துயரப் பார்வை.
“கவலைப்படாதீர்கள் அம்மா! நீங்கள் அனுப்பிய ஒலையைப் படித்து அந்தத் திருக்கானப்பேர்நம்பி மிகவும் மனம் உருகி உணர்வுகள் நெகிழ்ந்ததை நான் நேருக்கு நேர் என்னுடைய இரண்டு கண்களாலும் கண்டேன். இங்கே நீங்களும் அவரை நினைத்து உருகித் தவிக்கிறீர்கள். அங்கே அவரும் உங்களை நினைத்து உருகித் தவிக்கிறார். இந்தப் பாழாய்ப்போன களப்பிரர் ஆட்சி ஒழிந்ததுமே உங்கள் இருவருக்கும் நல்லகாலம் விடியும் அம்மா!” - என்று அவளுக்கு ஆறுதலாக மேலும் சொன்னான் அவன். திருக்கானப்பேர் நம்பி அந்த ஒலையைக் கணிகை மாளிகையின் சந்தனம் அறைக்கும் பகுதியிலிருந்து படித்து மகிழ்ந்ததை ஒரு சிறிது மிகைப்படுத்தியே ‘உருகினார்’ ‘நெகிழ்ந்தார்’ - என்றெல்லாம் இங்கே செல்வப் பூங்கோதையிடம் அவன் சொல்ல வேண்டியிருந்தது. காரணம் - துன்பப்பட்டுத் தவிப்பவர்களுக்கு மகிழ்ச்சியை உண்டாக்கும் சொற்கள் பொய்யாக இருப்பினும், அத்தகைய பொய்களை வேண்டிய மட்டும் கூறலாம்’ - என்று அவன் மனதில் ஒரு நாட்டுப்புற நியாயம் இருந்தது.
இந்த நிலையில் மேலும் தொடர்ந்து பொய்யே சொல்லுவதா, அல்லது என்ன செய்வது என்று அந்தத் தூதனையே குழப்பும் அடுத்த வினாவைக் கேட்கலானாள் அவள்:
“கோநகரத்தில் யாரோடு எங்கே தங்கியிருக்கிறார் அவர்? உடனிருப்பவர்கள் அவருக்கு ஒரு குறைவும் வராமல் நன்றாகப் பார்த்துக் கொள்கிறார்களா?”
இந்தக் கேள்விக்கு அவன் உடனே மறுமொழி கூறி விடவில்லை. சற்றே சிரித்தான்; தயங்கினான். பெண்களின் நளினமான உணர்வுகளைப் பற்றியும் பொறாமை, புகைதல்களைப் பற்றியும் அவனுக்கு அதிக அனுபவ ஞானம் இல்லை என்றாலும் பொதுவான உலகியல் ஞானம் இருந்தது. இரும்பை உருக்கியும் வளைத்தும் நீட்டியும் காய்ச்சியும் அடித்தும் பழகிய கைகளில் தங்கம் வந்ததுபோல் மிருதுவானதும் இங்கிதமானதும் ஆகிய ஒரு வினா இப்படி வந்து சேர்ந்திருக்கிறது. கரும்பொன்னாகிய இரும்பிற் பழகுகிறவனிடம் அரும்பொன்னாகிய தங்கம் வந்திருக்கிறது. அதன் பணி வகைகளை அறியவும் தெரியவும் தயங்கினாலும் இது தங்கம் என்பதையும் இதை இங்கிதமாக அணுக வேண்டும் என்பதையும் ஒரு விநாடி கூட அயராமல் உடனே நிர்ணயம் செய்து கொண்டான் அவன். இளையநம்பி கூடல் மாநகரில் கணிகை மாளிகையில் தங்கியிருப்பதையும் ஆடல் பாடல்களில் வல்லவளும் அதியற்புதப் பேரழகியுமான இரத்தின மாலை என்ற இளம் கணிகை அவனோடு உடன் இருந்து அவனைக் கவனித்துக் கொள்கிறாள் என்பதையும், அப்படி அப்படியே செல்வப்பூங்கோதையிடம் கூறினால், அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை முன்கூட்டியே அவனால் உய்த்துணர முடிந்தது. இவற்றையெல்லாம் எண்ணி மிகவும் சாதுரியமாகச் செல்வப் பூங்கோதைக்கு மறுமொழி கூறலானான் அவன்:
“அம்மா! இந்தக் காராளர் பெருமாளிகையில் தாங்கள் இடைவிடாமல் அருகிருந்து உபசாரம் செய்து கவனித்துக் கொண்டால் அவரை எப்படிக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொள்வீர்களோ அப்படிக் கவனித்துக் கொள்கிறவர்களோடு, அவ்வளவிற்கு வளமான ஒரு மங்கல மாளிகையில்தான் அவர் மதுரை மாநகரில் பாதுகாப்பாக மறைந்து தங்கியிருக்கிறார்.”
கரடுமுரடான இரும்பில் தொழில் செய்து பழகியவன், முதன்முதலாகப் பொன்னில் இங்கிதமாக நகை செய்திருந்தாற்போல அமைந்தது, இந்த மறுமொழி. இவ்வளவு நளினமானதும் பாதுகாப்பு நிறைந்ததுமான மறுமொழிக்குக்கூட அவளிடம் இருந்து ஒரு மறுப்பு எதிர்ப்பட்டது. அவள் கோபமாக அவனை எதிர்த்து உடனே கேட்டாள்:
“அதெப்படி முடியும்? இந்த மாளிகையில் நான் அவரைக் கண்காணித்துப் பேணிப் பாதுகாத்து உபசரிப்பது போல் வேறு எங்கும் வேறு எவராலும் அவரை என்றும் உபசரித்து விடமுடியாது? உன் ஒப்புவமையே தவறானது! நான் உபசரிப்பதுபோல் வேறு யாரும் அவருக்கு உபசாரம் செய்ய முடியாது என்பது தெரிந்திருந்தும் நீயே இப்படி ஒப்பிடலாமா? உன் உவமை தவறானது...”
“தவறுதான் அம்மா! அவர் நல்ல இடத்தில் நன்றாக இருக்கிறார் என்பதை உங்களுக்குத் தெளிவாகப் புலப்படுத்தவே அப்படிச் சொன்னேன். அந்த ஒப்புவமைக்கு வேறு எந்த வகையிலும் முழுமையான அர்த்தம் இருப்பதாக நீங்கள் நினைக்கவோ, இந்த ஏழையின்மேல் கோபப்படவோ கூடாது அம்மா!”
அவன் இப்படி மறுமொழி கூறிய பின் அவள் முகத்தில் கோபத்தின் சாயல் மெல்ல மறைந்தது.
“மீண்டும் எப்போது கோநகருக்குப் போக வேண்டுமோ அப்போது என்னிடம் சொல்லிக் கொள்ளாமல் போய் விடாதே. பெரியவர் எங்கிருக்கிறார் என்பதை நான் தெரிந்து கொண்டால் கூடவா ஆபத்து?”
“போகும்போது உங்களிடம் சொல்லிக் கொள்ளாமல் போகமாட்டேன் அம்மா” என்று அவளுடைய வினாவின் முன்பகுதிக்கு மட்டும் மறுமொழி கூறிவிட்டு மெல்லச் சிரித்தான் அவன். வினாவின் பிற்பகுதிக்கு அவனிடமிருந்து தனக்கு மறுமொழி கிடைக்காது என்பதை அவனது அந்தச் சிரிப்பு மூலமே அவள் அறிய முடிந்தது. ‘எந்தப் பெண் களிடமும் அரசியல் ரகசியங்களையும் அரச தந்திரச் செய்திகளையும் விதிவிலக்காக நம்பிக்கூடச் சொல்லாதே! இரத்தினமாலையிடம் கூட நான் சொல்லலாம் என்று குறிப்பவற்றை மட்டுமே சொல்ல வேண்டும்’ என்று தன்னிடம் பணிகளை ஒப்படைக்கு முன்னர் மதுராபதி வித்தகர் தனக்குக் கூறியிருந்த அறிவுரை மீண்டும் தன் செவிகளில் ஒலிப்பது போலிருந்தது அவனுக்கு. அவன் மேலும் எதையும் தன்னிடம் கேட்பதற்கு முன் அவனே பேசத்தொடங்கினான்.
“உங்கள் தந்தையார் வீடு திரும்பியதும் அவரிடம் நான் இங்கே வந்துபோனதாகச் சொல்லுங்களம்மா! ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் என்னிடத்துக்கு அவர் தேடிவரக் கூடாது என்பதையும் அவரிடம் நீங்கள் சொல்லிவிட வேண்டும். அது அவருக்கே அபாயத்தை உண்டாக்கிவிடும். நானே மீண்டும் நாளை அல்லது மறுநாள் இங்கு வந்து அவரைக் காண்பேன். களப்பிரர்கள் நெல் உதவியை மனத்திற்கொண்டு உங்கள் தந்தையாரைப் பகைத்துக் கொள்ள அஞ்சுகிறார்களே ஒழிய முழுமையாகச் சந்தேகம் நீங்கியிருப்பதாகச் சொல்ல முடியாது. அவர் எங்கெங்கே போகிறார், வருகிறார் யாரைக் காண்கிறார், என்ன என்ன பேசுகிறார் - என்பதை அறிவதற்காகவே அவரைக் கட்டுக் காவல் இன்றி வெளியே உலவ விட்டிருக்கிறார்களோ என்று கூட நான் நினைக்கிறேன்” என்று மகளிடம் தந்தையைப் பற்றிப் பொதுவாக எச்சரித்தான் அவன். இதற்குள் காராளரின் மனைவி ஓர் ஓலைக்கூடை நிறைய அவன் தின்பதற்குச் சுவையான பணியாரங்களைக் கொண்டுவந்து கொடுத்தாள். அந்தப் பணியாரங்களை அங்கேயே அமர்ந்து தின்பதற்கும் நேரமில்லாமல் அடுத்த வேலையின் இன்றியமையாத நிலையை நினைத்தான் அவன். காராளர் மனைவி கொடுத்த பணியாரங்களை வாங்கி மேலாடையில் முடிந்தபடி கொற்றவைக் கோவில் வன்னி மரத்தடிக்கு அவன் விரைந்தான். அந்த விரைவிலும் தன்னைப் பின் தொடரும் ஓர் இடையூற்றை அவன் கவனிக்கத் தவறவில்லை. விழிப்படைந்தான் அவன்.
-------------
நித்திலவல்லி -- இரண்டாம் பாகம் - சிறைக்கோட்டம்
12. அடையாளக் குழப்பம்
தாமரைத் தடாகங்களும், தண்ணென்ற மூங்கில் மரக்கொத்துகளும், பசுமை போர்த்த நெல் வயல்களும் நிறைந்த மருத நில ஊரான திருமோகூரில் அந்திப்போது மெல்ல வந்து கொண்டிருந்தது. மாமரத்துக் குயில் பிரகாசம் மிகுந்த பகற்பொழுது முழுவதும் மறைந்து போன அல்லது விட்டுப் போன எதையோ இரவுக்கு நினைவூட்டுவது போல் திரும்பத் திரும்பக் கூவிக் கொண்டிருந்தது. பகல் என்னும் நாயகனை இழந்த மேற்குத் திசை நங்கை, பால் ஒழுகும் வாயுடைய பிறைமதி என்னும் குழந்தையை இடுப்பில் ஏந்திக் கொண்டு தனிமையிற் புலம்புவது போன்ற சோகமயமான அந்த மாலை, மேற்கு வானம் எங்கும் செந்தீப்பட்டு எரிவதுபோல வந்து கொண்டிருந்தது. வந்துவிட்ட இந்த அஸ்தமன வேளையை நாளையோ, நாளன்றைக்கோ விரைந்து வரப் போகும் களப்பிரர் ஆட்சியின் நிரந்தரமான அஸ்தமனத்தோடு ஒப்பிட்டபடி நடந்தான் கொல்லன். பெரிய காராளர் மாளிகையிலிருந்து வெளியேறியதுமே வீதித் திருப்பத் திலிருந்து ஒரு களப்பிரப் பூத பயங்கரப்படை வீரன் தன்னைப் பின் தொடர்வதை அவன் புரிந்துகொண்டான். பின் தொடர்கிறவனின் ஐயப்பாடும் பரபரப்பும் பெருகுவதற்கு ஏற்றவகையில் திரும்பித் திரும்பிப் பார்க்காமல் யாருமே தன்னைப் பின்தொடராதது போல் சென்றான் கொல்லன். இடையே ஒரு மாற்றத்தையும் செய்தான் அவன். பின்னால் வருகிறவன் ஒளிவதற்கோ, மறைவதற்கோ வழியில்லாமல் ஒரு பெரிய நெற்களம் வழியிலே குறுக்கிட்டபோது, அந்த நெற்களத்தின் ஓரத்திலிருந்த பனைமரத்தடி மேட்டில் அமர்ந்து காராளர் வீட்டில் தந்த பணியார மூட்டையை அவிழ்த்தான் கொல்லன். நெய் மணம் கமழ்ந்த அந்தச் சுவையான பணியாரங்களில் அவன் நாவும் வாயும் ருசி கண்டு கொண்டிருந்தது. பின் தொடர்ந்து வந்தவனும் அருகில் நெருங்கிக் கொண்டான். வருகிறவன் பூதபயங்கரப் படைவீரன் தான் என்பதைப் பற்றிக் கொல்லனுக்கு ஒரு சிறிதும் சந்தேகம் இருக்கவில்லை. அவன் தன்னை எப்படி எதிர்கொள்கிறானோ அதற்கு ஏற்பத்தான் அவனை எதிர்கொள்வது என்ற திடமான முடிவுடன் பணியாரத்தை அசைத்துப் புரளும் நாவுக்கு வேலை கொடுத்தபடி கொல்லன் தின்று கொண்டிருந்தான். வருகிறவன் தாக்குதலில் இறங்கினால் தாக்குதலில் இறங்குவது, வம்பு பேச வந்தால் வம்பு பேசுவது, உளவறிய முயன்றால் ஒன்றும் தெரியாதவனாக நடிப்பது என்று நினைத்து வைத்துக் கொண்டே காத்திருந்தான் கொல்லன். கொற்றவைக் கோவிலில் வைத்து இந்த எதிரியைச் சந்திப்பது, அங்கே சந்திக்க வேண்டிய கொற்கை நண்பனின் சந்திப்பிற்கு இடையூறாகவும் தடையாகவும் நேர்ந்துவிடும் என்றெண்ணியே கொல்லன் இந்த நெற்களத்தில் அமர்ந்திருந்தான்.
கொல்லன் நினைத்தபடி அந்தக் களப்பிர வீரன் இவனருகே வந்து சேர்ந்தான். அதே சமயம் கொல்லனைக் குழப்பத்தில் ஆழ்த்தும் ஒரு காரியத்தையும் வந்தவன் செய்தான்.
வந்தவன் கொல்லனை நெருங்கியதும் நன்றாகப் பழகிய தமிழில் ஒலிப்பிழை கூட நேராமல் தெளிவாகக் கயல் என்று கூறிவிட்டு இவன் முகத்தை உற்று நோக்கினான். எதை எதையோ எதிர்பார்த்திருந்த கொல்லன் இதை முற்றிலும் எதிர்பார்க்கவே இல்லை. இவன் திகைத்தான். மலைத்தான். குழப்பமுற்றான். எதிராளி அந்த நல்லடையாளச் சொல்லைக் கூறுவதை உணர்ந்து இவன் ஒன்றுமே பேசாமல் வந்தவனின் முகத்தைப் பார்த்துவிட்டு ஓரிரு கணங்களில் நிதானம் வரப்பெற்றவனாய்த் தன்னிடமிருந்த பணியாரக் குவியலிலிருந்து தேன்குழலை எடுத்து நீட்டினான். வந்தவனும் விடாக்கண்டனாக இருந்தான். தேன் குழலை வாங்கிக் கொள்ளாமல் கீழே உட்கார்ந்து கொல்லனின் காதருகே நெருங்கி மீண்டும் ‘கயல்’ - என்று அவன் இரைந்து கூவினான். கொல்லனோ அந்தச் சொல்லையே காதினுள் ஏற்காதவன் போல்
“அதனால் என்ன? தேன் குழல் வேண்டாம் என்றால் அதிரசம் தருகிறேன். சிலருக்கு எப்போதுமே உப்புப் பண்டம் பிடிக்காது. உப்பிட்டவருக்கு நன்றியும் பாராட்ட வேண்டி யிருக்கும். இனிப்பாக ஏதாவது தின்னலாம் அல்லவா?” - என்று கூறியபடி ஓர் அதிரசத்தை எடுத்து நீட்டினான். வந்தவன் ஒரு கணம் அயர்ந்து போனான். தான் எதிர்பார்த்து வந்தது நடவாத காரணத்தால் அவனுக்கு ஏமாற்றமாக இருந்ததோ என்னவோ, தெரியவில்லை. ஒன்றும் பேசாமல் கொல்லன் கொடுத்த அதிரசத்தை வாங்கித் தின்னத் தொடங்கினான் வந்தவன். இதற்குள் கொல்லனின் உள்ளுணர்வு மிக நன்றாக விழித்துக் கொண்டுவிட்டது. ‘வன்னி மரத்தடிக்குச் செல்லும்போது வழக்கமான நல்லடையாளச் சொல் வேண்டாம்’ - என்று பெரியவர் காலையில் கூறியிருந்தது வேறு இவனுக்கு ஞாபகம் வந்துவிட்டது. வேறொரு காரணத்துக்காக அவர் அப்படிக் கூறியிருந்தாலும் இந்தப் புதிய சூழ்ச்சியை முறியடிக்கவும் இவனுக்கு அதுவே பயன்பட்டது. திருமோகூரில் அவ்வளவு நாட்கள் தங்கியதால் களப்பிரர்களின் பூதபயங்கரப் படைக்குக் கிடைத்த ஒரே வெற்றி, பாண்டியர்களின் நல்லடையாளச் சொல் எப்படியோ அவர்களிடம் சிக்கியிருப்பதுதான் என்பதைக் கொல்லன் புரிந்து கொண்டான். முடியுமானால் அன்றிரவே பெரியவரைச் சந்திக்கும்போது இந்த நிகழ்ச்சியைக் கூறிப் பாண்டியர்களின் நல்லடையாளச் சொல்லை உடனே மாற்றவேண்டும் என்று நினைத்துக் கொண்டான் அவன். இல்லாவிட்டால் பயங்கர விளைவுகள் ஏற்பட்டுவிடும் என்பது புரிந்தது. தன் தந்திரம் பலிக்காததால் வந்தவன் இவனிடம் ஏதேதோ வம்பு பேசினான். இவன் அளித்த பணியாரங்களைச் சுவைத்துத் தின்றான். புறப்பட்டுப் போவதற்கு முன் பயமுறுத்துவது போன்ற சில வாக்கியங்களைக் கூறியபடியே இவன் முகத்தைக் கவனித்தான் வந்தவன்: “உனக்குத் தெரியுமா அப்பனே! களப்பிரகுல திலக மகாபராக்கிரம வீர தீர ராஜாதி ராஜமார்த்தாண்டரான கலியரசரின் புதிய கட்டளைப்படி மறைந்திருக்கும் பாண்டியர்களுக்கு உதவி செய்கிறவர்களும், உதவி செய்வதாகச் சந்தேகப்படுவதற்கு உரியவர்களும் மதுரை மாநகரில் ஈவிரக்கமின்றிக் கழுவேற்றப் படுவார்கள்...”
“இந்த ஊரில் அப்படி யாரும் இல்லை! களப்பிர மன்னருக்கு உதவுகிறவர்கள்தான் இவ்வூரில் அதிகம். எங்களுர்ப் பெரு நிலக்கிழாரும் வள்ளலும் ஆகிய பெரிய காராளர் தம் கழனிகளில் விளையும் நெல்லிற் பெரும் பகுதியைக் களப்பிரர்களின் அரண்மனை உபயோகத்துக்கும் அறக்கோட்டங்களில் தேசாந்திரிகளாக வருபவர்களுக்கு உணவிடவுமே பயன்படுத்துகிறார். அவரைப் போல ராஜ விசுவாசம் உள்ளவர்கள் இந்த ஊரில் இருக்கும்போது இங்கே கெடுதல் எப்படி இருக்கமுடியும்?” என்றான் கொல்லன். வந்தவன் சிரித்தபடியே இதைக் கேட்டுக்கொண்டு போய் விட்டான். அவன் நெடுந்துரம் சென்று மறைகிறவரை அங்கேயே உட்கார்ந்து கொண்டு பார்த்தான் கொல்லன். இருளில் அவன் உருவம் தொலைவில் மறைந்த பின்பே இவன் எழுந்தான். தன்னை யாரும் தொடரவோ, கவனிக் கவோ இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு கொற்றவைக் கோயில் வன்னி மரத்தடியை அடைவதற்காகப் புறப்பட்டான் கொல்லன்.
போகிற வழியில் கொற்றவைக் கோயிலுக்கு முன்னிருந்த ஒரு தாமரைக் குளத்தில் நாலைந்து பேதைப் பருவத்துப் பெண்கள் குடங்களோடு அமர்ந்து படித்துறையில் பேசிச் சிரித்துக் கொண்டிருப்பதையும் யாரோ வெளியூர் அந்நியன் போல் தோன்றிய பால் வடியும் இளம் முகத்தினனான ஓர் விடலைப் பருவத்து இளைஞன் அவர்களிடம் ஏதோ வினாவுவதையும் அவர்கள் அவனைப் பொருட்படுத்தாமலே மேலும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டிருப்பதையும் கொல்லன் கண்டான். பெண்களைக் கவரும் கம்பீரமான ஆண்மைக் குரல் அந்த விடலை இளைஞனுக்கு இல்லை. அவன் குரல் இனியதாகவும், மிருதுவாகவும் தாழ்ந்தும் ஒலித்தது. அவன் முகத்திலும்கூடப் பெண்மைச் சாயலே அதிகம் புலப்பட்டது. அவனருகே நெருங்கிய கொல்லன்,
“என்ன வேண்டும் உங்களுக்கு? என்னைக் கேட்டால் மறுமொழி சொல்ல முடியும்” என்று தானாகவே அவனை அணுகி வினவினான்.
“ஒன்றுமில்லை ஐயா! இந்தப் பெட்டைப் பயல்களுக்கு இருக்கிற கர்வத்தைப் பாருங்களேன்! கொற்றவைக் கோயில் வன்னி மரத்தடிக்கு வழிகேட்டால் வழி கூறாமல் சிரிக்கிறார்கள்” - என்ற தொடரும் இவனைச் சிந்திக்க வைத்தன. சில கணங்கள் தயங்கியும் சிந்தித்தும் முடிந்தபின்,
“ஆனாலும் உள்ளூரில் வருவதுபோல வெளியூரில் உங்களுக்கு இப்படிக் கோபம் வரக்கூடாது. என்னோடு வந்தால் அந்த இடத்தை உங்களுக்குக் காட்ட முடியும்” - என்று கூறிவிட்டு அவன் தன்னைப் பின் தொடர்வதையும் உறுதி செய்து கொண்டபின் விரைந்து நடந்தான் கொல்லன்.
---------
நித்திலவல்லி -- இரண்டாம் பாகம் - சிறைக்கோட்டம்
13. பெருஞ்சித்திரன்
காதோரங்களிலும் பிடரியிலும் கருகருவென்று அலையலையாகச் சுருண்ட குஞ்சியின்* (* குடுமி) அழகும் அவனுடைய இளம் முகத்தின் பெண்மைச் சாயலையே மிகைப்படுத்திக் காட்டுவதை அசைப்பிலே திரும்பிப் பார்த்துக் கவனித்தான் கொல்லன். கொற்றவைக் கோயிலிலே வன்னி மரத்தடியில் அன்று மாலை விளக்குவைக்கிற நேரத்திற்குத் தான் யாரைச் சந்தித்து அழைத்து வரவேண்டும் என்று பெரியவர் தன்னை விரட்டியிருந்தாரோ அந்தப் பிள்ளையாண்டான் இவனாகத் தான் இருக்க வேண்டும் என்று கொல்லன் சுலபமாகப் புரிந்து கொண்டான். பேதைப் பருவத்துப் பெண்களைப் பெட்டைப் பயல்கள் என்று கூறும் சொல் வழக்குப் பாண்டிய நாட்டின் எல்லையிலேயே கொற்கையிலும், கொற்கையைச் சூழ இருந்த மாறோக வளநாட்டுப்* (* தொல்காப்பியம் சொல்லதிகாரம் 164-ம் சூத்திர உரை - சேனாவரையர்) . பகுதியிலும்தான் உண்டு என்று கொல்லன் கேள்விப்பட்டிருந்தான். இவன் கொற்கை சூழ்ந்த மாறோக வளநாட்டைச் சேர்ந்தவனே என்பதை அந்தப் பதப்பிரயோகமே நிரூபித்து விட்டது. ஆயினும் கொல்லன் இன்னும் அவனைப் பெயர் சொல்லிப் ‘பெருஞ்சித்திரன்’ என அழைக்கவில்லை. வன்னி மரத்தடி வருகிறவரை வழிகாட்டுகிறவனைப் போலவே கொல்லன் நடித்தான். அந்த விடலைப் பிள்ளையாண்டானோ ‘இவன் தான் நாம் சந்தித்து ஒன்பது முத்துக்களைத் தந்து உறவு கொண்டு பழக வேண்டியவன்’ என்ற சிறு அனுமானம்கூட இல்லாமல் வன்னி மரத்தடி வந்ததும் பட்டு நூலிழை போன்ற தனது அந்த இனிய குரலில் -
“ஐயா எனக்கு வழி காட்டியதற்கு மிக்க நன்றி. இனி நீங்கள் போகலாம்” என்பது போல் கொல்லனுக்கு விடை கொடுத்து அனுப்ப ஆயத்தமானான். இதைக் கேட்டுக் கொல்லன் உள்ளூறச் சிரித்துக் கொண்டான். அவன் விடை கொடுத்த பின்பும் போகாமல் தயங்கி நின்ற கொல்லனை, ‘என்னடா, இவனைப் போகச் சொல்லியும் விடாமல் இன்னும் தயங்கி நிற்கிறானே’ - என்று நினைத்துப் பொறுமை இழந்து போய் நோக்கினான் இளைஞன்.
அதற்கு மேலும் தனக்கு வழி காட்டியவனை அங்கிருந்து போகச் சொல்லி வற்புறுத்த அந்த வெளியூர் இளைஞன் தயங்கியிருக்க வேண்டும். பொது இடமாகிய கொற்றவைக் கோயிலை விட்டு, மற்றொரு மனிதனை வெளியே துரத்தத் தனக்கென்ன அதிகாரம் என்ற தயக்கமும் அதே சமயம் அந்த இடத்தில் அப்போது தனக்குத் தேவையான தனிமையை நாடும் மனமுமாக இருதலைக் கொள்ளி எறும்புபோல் தவித்தான் பிள்ளையாண்டான். அவன் நிலையைக் கண்டு கொல்லனால் சிரிப்பை அடக்க முடியாவிட்டாலும் சிரமப்பட்டு அடக்கிக் கொண்டான்.
‘ஐயோ பாவம்! இவ்வளவு தவிக்கிறானே, இவனுக்கு சிறிது தனிமையைக் கொடுத்துத்தான் பார்க்கலாமே என்று கொற்றவைத் தெய்வத்தை வலம் வருவதற்குப் போனான் கொல்லன். கொற்றவையை ஒன்பது முறை வலம் வந்து, ‘பாண்டி மரபுக்கு விரைவில் நல்ல காலம் பிறக்கவேண்டும்: என்று பிரார்த்தனை செய்த பின் கொல்லன் வன்னி மரத்தடிக்குத் திரும்பியபோது, இவனைத் தவிர்க்க விரும்பியவன் போல் அவன் எழுந்து வலம் வருவதற்குச் சென்றான். இம்முறை கொல்லன் பிடிவாதமாக வன்னி மரத்தடியிலேயே உட்கார்ந்து கொண்டான். இவனைத் தவிர்ப்பதற்காக வலம் வரச்சென்ற பிள்ளையாண்டான் மறுபடி வன்னி மரத்தடிக்கு வந்து பார்க்கும்போது இவன் அங்கேயே இருக்கக் கண்டு திகைத்தான். அந்த நிலையில் கொல்லனே சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, அவனருகே சென்று ‘பெருஞ்சித்திரன்’ என்று மெல்ல அழைத்தான். அந்த அழைப்பின் மூலம் ‘இவன்தான் நாம் காண வந்தவனா?’ - என்ற வியப்பை அடைந்த இளைஞன் அடுத்த அடையாளத்தையும் உறுதி செய்துகொள்ளக் கருதி -
“எண்ணிக்கை?” - என்று கொல்லனை நோக்கி வினாவும் தொனியில் கேட்டான். கொல்லனும் உடனே ஒரு கணம்கூடத் தயங்காமல் “ஒன்பது?” என்றான். அவனோ மேலும் விடாமல் “எவை ஒன்பது?” என்று வினாவைத் தொடர்ந்தான். பொறுமை இழந்து விடவோ சினம் கொள்ளவோ செய்யாமல், “முத்துக்கள் - கொற்கைத்துறை முத்துக்கள்“ என்று ஒரு முறைக்கு இருமுறையாக அழுத்திச் சொன்னான் கொல்லன். உடனே வந்திருந்த இளைஞன் தன் இடுப்புக் கச்சையிலிருந்து சிறிய பட்டுத் துணி முடிப்பு ஒன்றை எடுத்து அவிழ்த்து ஒன்பது முத்துக்களை எண்ணித் தேர்ந்து கொல்லனிடம் கொடுத்தான். முத்துக்கள் கைக்கு வந்ததும் மேற்கொண்டு தாமதம் எதுவும் செய்யாமல், தன்னைப் பின் தொடருமாறு அவனுக்கு சைகை காட்டிவிட்டு நடந்தான் கொல்லன். அந்த இளைஞனும் மறு பேச்சுப் பேசாமல் கொல்லனைப் பின் தொடர்ந்தான்.
ஊர் எல்லையைக் கடந்து அடர்ந்த காட்டுப் பகுதி வருகிற வரை விரைந்து நடப்பதைத் தவிர இருவரும் ஒருவருக்கொருவர் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அபாய எல்லையைக் கடந்து விட்டோம் என்ற நம்பிக்கை வந்த பின்பு கொல்லன் அந்த இளைஞனை விசாரித்தான்:
“ஐயா! இன்னும் ஐந்தாறு நாழிகைப் பயணம் போக வேண்டும். உங்களுடைய பசி, தாகம், எப்படி? நிலைமைகள் எனக்குத் தெரிந்தால் நல்லது.”
அந்தப் பிள்ளையாண்டான் தன் வயதிற்கு மிகவும் இளைஞனாகத் தோன்றினாலும் பெரியவரைத் தேடிக் காண வந்திருக்கும் சிறப்பு நோக்கி அவனுக்கு மிகவும் மதிப்புக் கொடுத்தே விளித்துப் பேசினான் கொல்லன்.
“ஆம்! எனக்குப் பசிக்கிறது!... பகலில் சிறிது அவலும் இரண்டு பொரிவிளங்காய் உருண்டையும் சாப்பிட்டேன். என்னிடமே இன்னும் மூன்று நான்கு வேளைக்குப் போதுமான அவலும் பொரிவிளங்காயும் இருக்கும். நீர் பருக ஏற்றாற்போல் ஓடையோ, காட்டாறோ குறுக்கிட்டால் அங்கே அமர்ந்து உண்டபின், பயணத்தைத் தொடரலாம்” - என்று அவன் மறுமொழி கூறவே ஓர் ஓடையின் கரைக்கு அவனைக் கொல்லன் அழைத்துச்செல்ல வேண்டியதாயிற்று. அந்த முன்னிருட்டு வேளையில் ஓடையின் கரையில் ஒரு பாறைமேல் அமர்த்தி அவனை உண்ணுமாறு வேண் டினான் கொல்லன். அவன் கொல்லனிடம் பேச்சுக் கொடுத்தான்:
“வேறு எந்த உணவானாலும் பருக நீரின்றிக் கூட உண்டு விடலாம் ஐயா! இந்த அவலை மட்டும் அப்படி உண்ண முடியாது! உங்களுக்குத் தெரியுமா, அவலை விக்கியே பலர் செத்துப் போயிருக்கிறார்கள். ஆனாலும் வழிப்பயணத்தில் கெடாத உணவு அவல்தான். அதனால் இந்த அவலையும் பொரிவிளங்காயையும் விட்டுத் தொலைக்கவும் முடியவில்லை.”
“செத்துப் போவதைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டே உண்பதும் பருகுவதும் எனக்குப் பிடிக்காது! வாழ்வதைப் பற்றிய அக்கறையுடனும் பிரியத்துடனும் உண்ணவேண்டும், பருகவேண்டும், தின்னவேண்டும். ஐயா! சாகிறவர்கள் அவல் விக்கித்தான் சாகவேண்டும் என்பதில்ன்ல... உண்பதற்கு அவல்கூடக் கிடைக்காததாலும் சாக முடியும்” - என்றான் கொல்லன்.
இதற்கு இளைஞன் பதில் ஒன்றும் கூறவில்லை. கல் உருண்டைகளைப் போல் இருக்கிற இரண்டு பொரி விளங்காய்களை எடுத்துக் கொல்லனிடம் நீட்டினான் அவன். கொல்லனும் மறுக்காமல் வாங்கிக் கொண்டான்.
வாயில் இட்டுப் பல்லால் கடிக்க முயன்று தோற்றபின் கொல்லன் அந்தப் பொரிவிளங்காயை எடுத்துப் பாறைமேல் அடித்து உடைக்கலானான். அப்படியும் அது உடைய வில்லை. கொல்லன் சிரித்தான்.
“ஏன் ஐயா சிரிக்கிறீர்கள்? பொரிவிளங்காய் உங்களுக்குப் பிடிக்காதா?”
“பிடிக்குமா பிடிக்காதா என்பதை விட உடையுமா உடைக்குமா என்பதுதான் இப்போது பொருத்தமான கேள்வியாக இருக்கும் போலிருக்கிறது. இந்தப் பொரி விளங்காயை வைத்து மதுரைக் கோட்டையையே கூட உடைத்துக் களப்பிரர்களை ஒடச் செய்துவிடலாம்...”
அவன் இதைக் கேட்டுக் குலுங்கக் குலுங்கச் சிரித்தான். பின்பு சொன்னான்:
“வாயில் சிறிது நேரம் ஊறினால் அப்புறம் தானே உடைந்து விடும்.”
“ஆம், உண்மைதான். சிறிது ஊறவிட்டால் எதுவும் உடைந்து போய்விடும்.” கொல்லனின் இந்த வாக்கியத்தை அந்த இளைஞன் மிகவும் இரசித்துப் பாராட்டினான். அவன் உண்டு முடித்ததுமே, “பெரியவரைக் காக்க வைக்கக்கூடாது. நாம் விரைவில் போக வேண்டும்” என்று துரிதப்படுத்தி அவனை அழைத்துக் கொண்டு இருளில் பயணத்தைத் தொடர்ந்தான் கொல்லன். கொற்கை இளைஞன் சிறிது தொலைவு நடப்பதற்குள்ளாகவே தள்ளாடினான். மிகவும் கோமளமான மெல்லுடல் வாய்ந்த அவன், வாடிப்போய்த் தளர்ந்து விட்டான் என்று புரிந்தது. சிரிக்கச் சிரிக்க எதை எதையாவது வம்பு பேசி உற்சாகப்படுத்தியே அவனை அழைத்துச் செல்லவேண்டியிருந்தது. இளைஞன் இவனைக் கேட்டான்.
“அந்தப் பொரிவிளங்காய்களை உண்ண முடிந்ததா இல்லையா?”
“இல்லை! பத்திரமாக வைத்திருக்கிறேன். நாளைக்கோ நாளன்றைக்கோ ஊர் திரும்பிய பின் என் உலைக் களத்தில் சம்மட்டியால் அடித்து நொறுக்கினால் அது உடையலாம். யார் கண்டார்கள்? உங்களுடைய கொற்கைப் பொரி விளங்காய் என் சம்மட்டியையே உடைத்தாலும் வியப்பு அடைவதற்கில்லை.”
இதைக் கேட்டும் அவன் விழுந்து விழுந்து சிரித்தான். சிறு குழந்தையைக் கதை சொல்லி உறங்கச் செய்வது போல் அவனைச் சிரிக்க வைத்துக் களைப்புத் தெரியாமல் அழைத்துப் போகவேண்டிய கடமை கொல்லனுக்கு இருந்தது. அன்று பகலில் திருமோகூர்ப் பெரிய காராளர் மகள் செல்வப் பூங்கோதையின் நளின உணர்வுகளைக் கலைத்து விடாமல் காப்பதற்காக இரும்பில் வேலை செய்து பழகிய தான் பொன்னிற் புனைபவன் போல் இங்கிதமாகப் பேசிப் பழக வேண்டியிருந்ததை ஒப்ப இப்போது இந்தக் கொற்கை நகர் விடலைப் பிள்ளையாண்டானிடம் நகை வேழம்பனைப்* (* நகைச்சுவைக் கூத்தாடுபவன்) போல்தான் நடிக்க வேண்டியிருப்பது கொல்லனுக்கே புரிந்தது. திருமால் குன்றத்திலிருந்து மதுரைக்கும், திருமோகூருக்கும், திருமோகூரிலிருந்து மறுபடி திருமால் குன்றத்துக்கும் என்பதாகக் கடந்த சில தினங்களாய் இடைவிடாமல் அலைந்ததனால் இரும்புத்தசைகள் எனத் திரண்டிருந்த கொல்லனின் முழங்கால்கூட வலித்தன. ‘தன் பணிகளையும் தான் ஓடும் ஓட்டங்களையும், பெண்ணின் நளினங்களைக் கொண்ட அந்த இளம் ஆண் பிள்ளையால் ஒருநாள் போதாவது தாங்க முடியுமா?’ என்று நினைத்துப் பார்த்தான் கொல்லன். இப்படி எண்ணியவாறே அந்த இளைஞனும் உடன் வரக் குறுகலான காட்டு வழியே நடந்து கொண்டிருந்தபோது ஓரிடத்தில் எதையோ பார்த்து விட்டுப் பயந்து அலறிப் பின் வாங்கினான் இளைஞன்.
அவன் சுட்டிக்காட்டிய திசையில் பார்த்தால் காட்டு மரங்கள் எரியும் தீ வெளிச்சத்தில் தேர் வடம் போன்ற பூதாகரமான மலைப்பாம்பு ஒன்று காட்டு எலியைப் பிடித்து விழுங்கிக் கொண்டிருந்தது.
இளைஞன் பயந்தாங்கொள்ளியாகவும், விளையாட்டுப் பிள்ளையாகவும், பேதைத்தன்மை நிறைந்தவனாகவும் இருப்பதைக் கொல்லன் சந்தேகத்துக்கு இடமில்லாமல் புரிந்து கொண்டான். திருக்கானப்பேர்ப் பாண்டியகுல விழுப்பரையரின் பேரன் இளையநம்பி, தென்னவன் சிறுமலை வேங்கைப்புலி மாறன் ஆகிய தீரர்களோடு இணையாக இவனை நினைத்துப் பார்க்கவும் கூட முடியாமலிருந்தது.
“மலைப்பாம்பு எலியை விழுங்குகிறது! அதில் நீங்கள் பயப்பட ஒன்றும் இல்லை. பேசாமல் என்னோடு நடந்து வரவேண்டும் நீங்கள். உங்களுக்கு எந்த அபாயமும் வராது” என்று தைரியம் கூறி அந்த இளைஞனை மேலே வழிநடத்திச் சென்றான் கொல்லன். ஒரு நிலைமைக்கு மேல் கொல்லனுக்குக் கோபமே கூட வந்துவிட்டது. நல்லடையாளச் சொல் வெளியாகி விட்ட கவலை, களப்பிரர்களின் கொடுமை, இவைகளைப் பற்றிய தீவிரமான சிந்தனைகளுக்கு நடுவே வெறும் பிள்ளைக் கதைகளையும் பெருஞ்சிரிப்பையும் மட்டும் விரும்பும் ஒருவனை வழி நடத்திப் போவது பொறுமையைச் சோதிக்கிற காரியமாக இருந்தது. ஆயினும், பெரியவரின் ஆணைக்குக் கட்டுப்பட்டு அதை அவன் செய்தாக வேண்டியிருந்தது.
---------
நித்திலவல்லி -- இரண்டாம் பாகம் - சிறைக்கோட்டம்
14. நவ நித்திலங்கள்
கொற்கை நகரத்திலிருந்து வந்திருந்த புதிய இளைஞனும் கொல்லனும் சிலம்பாற்றின் கரையை அடையும் போது நள்ளிரவுக்கு மேலாகி விட்டது. ஏற்கனவே அறிவித்திருந்தபடி மலைச்சரிவில் ஆபத்துதவிகள் தீப்பந்தங்களுடன் இவர்கள் இருவர் வரவையும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இருளில் அந்த மலைக் கணவாயில் காற்று சுழித்து வீசிக் கொண்டிருந்தது. மேலே மலைப் பகுதிகளில் எங்கோ மழை பெய்திருந்ததனால் சிலம்பாற்றின் ஓட்டத்திலே வெள்ளமும் வேகமும் கூடியிருந்தன. இருளிலே அந்த மலைப் பிளவிலே பல்லாயிரம் போர் வீரர்கள் ஒரு சமயத்தில் உற்சாகக் குரல்களை எழுப்பிக் கொண்டே விரைந்து பாய்ந்தோடுவதைப் போன்ற ஆரவாரத்தோடும் ஓசையோடும் சிலம்பாறு துள்ளிக் குதித்துச் சுழன்று சுழித்துப் பொங்கிப் புடைத்து ஓசையெழ ஓடிக்கொண்டிருந்தது. பேயாட்டம் போடுவது போல் மரங்கள் தலைகள் சுழலக் காற்றில் ஓசையிட்டு ஆடிக் கொண்டிருந்தன. கோபம் கொண்ட தேவர்கள் கரிய வானத்தில் நீளநீளமான வெள்ளி வாள்களால் தாறு மாறாக வீசிப் போட்டாற்போல் மின்னல்கள் சொடுக்கி மறைந்தன. ஊசியால் குத்துவது போலக் குளிர்ந்த காற்று உடலில் பட்டு உறைத்தது.
இந்தப் புதிய சூழ்நிலையில் உடன்வந்த இளைஞன் மருண்டு மருண்டு விழிப்பதைக் கண்டான் கொல்லன். அவனுடைய கண்களில் பாதி மருட்சியும், பாதி உறக்கச் சோர்வும் தெரிந்தது. இவர்கள் மலைச் சரிவில் மேலே ஏறிச் செல்லுமுன்பே ஆபத்துதவிகள் கீழே இறங்கி வந்து இவர்களை எதிர்கொண்டனர். வந்த ஆபத்துதவிகளில் ஒருவன் கொல்லனின் காதருகே ஏதோ இரகசியமாகச் சொன்னான். உடனே கொல்லன் தன்னோடு வந்த கொற்கை இளைஞனை நோக்கி, “ஐயா! நீங்கள் சோர்வு அடைந்து களைத்துப் போய்விட்டீர்கள். இவர்களோடு சென்றால் ஒரு மலைக் குகையில் நீங்கள் சுகமாக உறங்குவதற்கு வழி செய்து கொடுப்பார்கள். உங்களால் மேலும் நடக்க முடியாது போலத் தோன்றுகிறது. பெரியவர் இப்போது மறைந்திருக்கும் இடத்துக்குப் போக இன்னும் ஒரு மலை ஏறி இறங்கி, அடுத்த சரிவுக்குச் செல்லவேண்டும். இப்போது உங்களால் அது முடியும் என்று தோன்றவில்லை. பெரியவரும் காலையில்தான் உங்களைக் காண விரும்புவதாகச் சொல்லியிருக்கிறார்” என்றான்.
அந்த இளைஞனோ புதிய மனிதர்களோடு உறங்கச் செல்வதற்குத் தயங்குவதாகத் தெரிந்தது. கொல்லன் மேலும் உறுதி கூறலானான்:
“பயப்படாதீர்கள்! இவர்கள் எல்லாருமே நம்மவர்கள் தாம்! உங்களைக் கண்ணும் கருத்துமாகப் பாதுகாப்பார்கள்.”
தயக்கமும் பயமும் இருந்தாலும் கூட, உறக்கம் தாங்க முடியாமல் கொல்லன் சுட்டிக்காட்டிய ஆபத்துதவிகளோடு புறப்பட்டுச் சென்றான் அந்த இளைஞன். இளைஞனை மற்றவர்களோடு அனுப்பிவிட்டுத் தன்னிடம் செய்தியைக் கூறிய ஆபத்துதவியுடன் மலைச் சரிவில் ஏறத் தொடங் கினான் கொல்லன்.
“இந்தப் பிள்ளையாண்டானைப் போல் பத்துப்பேர் இருந்தால் போதும்! அங்கங்கே மறைந்திருந்து துடிதுடிப் புடனும் களைப்பின்றியும் பாடுபட்டு வரும் ஆயிரக்கணக்கான பாண்டிய வீரர்களையும் இந்தப் பத்துப்பேரே கெடுத்து விடுவார்கள். வீரர்களின் கூட்டத்தில் இவனைப் போன்றவர்கள் இருக்க முடியாது; இருக்கக்கூடாது!...” என்றான் உடன்வந்த ஆபத்துதவி. கொல்லன் அதைக் கேட்டுக் கொண்டானே தவிர தன் கருத்தை அவனிடம் வாய்விட்டுக் கூறவில்லை. அவன் மனத்தில் அப்போது மிகமிக இன்றியமையாததான வேறொரு சிந்தனை தோன்றிக் கவலையையும் எச்சரிக்கையையும் அளித்துக் கொண்டிருந்தது. நாடு முழுவதும் தங்கள் நம்பிக்கைக்குரியவர்களைப் புரிந்து கொள்ளவும், தெரிந்து கொள்ளவும் ஒரே அடையாள வார்த்தையாக எது இருந்ததோ அதைப் பூதபயங்கரப் படையைச் சேர்ந்த களப்பிர வீரன் ஒருவன் தன்னிடமே சோதித்துப் பார்க்க வந்ததை நினைத்தபோது கொல்லனுக்கு இதயம் கொதித்தது. இந்த அபாயம் உடனே தவிர்க்கப்பட முடியாவிடில் பாண்டிய நாட்டில் பல இடங்களில் பல வீரர்கள் களப்பிரர்களிடம் மாட்டிக் கொள்வார்கள் என்று தெளிவாகவே புரிந்தது. இந்த இரகசியம் எந்த முனையிலிருந்து எப்படி அவர்களுக்கு எட்டியிருக்க முடியும் என்று கொல்லனால் அனுமானம் செய்யவே முடியாமலிருந்தது. பாண்டிய வீரர்கள் இருவர் சந்திக்கும்போதே மிக அருகிலிருந்து மறைவாய்க் கவனித்து ஒட்டுக் கேட்ட யாரோ ஒரு களப்பிரன் மூலமாகவோ, அல்லது எதிரே வந்து சந்திப்பவன் யாரென்று தெரியாமலே மாற்றானிடம் அவசரப்பட்டுத் தன் நல்லடையாளச் சொல்லைத் துணிந்து கூறி விட்ட ஒரு பாண்டிய வீரன் மூலமாகவோ மிக அண்மையில் தான் இந்த இரகசியம் அம்பலமாகியிருக்க முடியும் என்று தோன்றியது. வேறு விதமாக நினைக்க முடியவில்லை.
பாண்டிய நாடெங்கும் மறைந்து ஆழமாக வேரோடியிருக்கும் பாண்டியர் இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு நாளைப் பொழுது விடிவதற்குள் பழைய நல்லடையாளச் சொல்லை உடனே கைவிடவேண்டும் என்றும் புதிய நல்லடையாளம் என்ன என்றும் விரைந்து அறிவிப்பது எவ்வாறு சாத்தியமாகும் என்பதுதான் அவனுக்குப் புரியவில்லை.
மேலும் இரண்டு நாழிகைப் பயணத்துக்குப் பின் பெரியவர் மதுராபதி வித்தகர் தங்கியிருந்த மலைக் குகைக்கு வந்து சேர்ந்தார்கள் அவர்கள்.
உடன் வந்த ஆபத்துதவி வெளியிலேயே நின்று கொண்டான். கொல்லன் உள்ளே நுழைந்தபோது தீப்பந்த ஒளியில் அவர் ஓலைச் சுவடியில் எழுத்தாணியால் ஏதோ அழுத்திக் கீறிக் கொண்டிருந்தார். காலடி ஓசை கேட்டு நிமிர்ந்ததும் அவர் தன்னைக் கேட்ட முதல் கேள்வியே கொல்லனை வியக்கச் செய்தது. “வா! இங்கிருந்து இன்று காலை புறப்பட்டுச் சென்றது முதல் இந்த விநாடி வரை நம்முடைய நல்லடையாளச் சொல்லை. எங்காவது நீ பயன்படுத்த நேர்ந்ததா?”
தன் மனத்தில் எதைப்பற்றிய சிந்தனை மேல் எழுந்து நிற்கிறதோ அதைப் பற்றியே அவரும் கேட்கிறாரே என்று மனத்தில் எழும் வியப்புடன் வணங்கி அவருக்கு மறுமொழி கூறினான் அவன்.
“இல்லை. ஐயா!... ஆனால்... ?”
“ஆனால்... என்ன?”
திருமோகூர் நெற்களத்தில் முற்றிலும் எதிர்பாராத விதமாக களப்பிரன் ஒருவன் அதே நல்லடையாளச் சொல்லுடனே தன்னை அணுகிச் சோதனை செய்ததையும் அதன்பின் நடந்தவற்றையும் ஒன்றுவிடாமல் அவரிடம் விவரித்தான் கொல்லன்.
எல்லாவற்றையும் பரபரப்பு எதுவும் அடையாமல் செவிமடுத்தபின் அவர் கூறலானார்.
“இன்று பிற்பகல் என்மனத்தில் ஏதோ பொறி தட்டுவது போல் அப்படிப்பட்டது. உடன், ‘நம்முடைய நல்லடையாளச் சொல்லை மாற்றிவிட வேண்டும்’ என்று நானே நினைத்தேன். என் மனத்தில் பட்டபடியேதான் நடந்திருக் கிறது இருக்கட்டும்... எங்கே அந்த முத்துக்கள்...?”
கொல்லன் முத்துக்களைக் கொடுத்தபோது இயல்பை மீறி அவர் எழுந்து நின்று அவற்றை இரு கைகளாலும் வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொள்ளவே, அது அவனுக்குப் புதுமையாகத் தோன்றியது. அந்த முத்துக்களில் ஏதோ மிகப் பெரிய மதிப்புக்கான அந்தரங்கம் அடங்கியிருக்க வேண்டும் என்று அவன் புரிந்துகொண்டான். இவ்வளவு பெரிய பொறுப்பைத் தாங்கி வந்த விடலை இளைஞனை எண்ணினான் அவன். இப்படி அவன் எண்ணிக் கொண்டிருப்பதை அப்படியே பிரதிபலிப்பது போல் அந்தக் கணமே,
“வாகனங்களைவிட அவை எவ்வளவு மதிப்புக்குரியவற்றைச் சுமந்து வருகின்றன என்பதுதான் பெரிது. அந்த இளைஞன் நீ எதிர்பார்த்தபடி இல்லாதது உனக்கு ஏமாற்றத்தை அளித்திருக்கும்!” - என்று சொல்லி முகம் மலர்ந்தார் அவர். இந்த நிலையில் அவர் முன்பாக எதையுமே நினைப்பதற்குப் பயந்தான் கொல்லன். நினைப்பில் கூட எதையும் மறைக்க விடாதவருக்கு முன், நினைக்கவே தயங்கினான் அவன். ஏதோ குழப்பம் வரலாம் என்று தீர்க்க தரிசனமாக முன் கூட்டியே உணர்ந்து முத்துக்களோடு வருகிறவனையும், தன்னையும் பழைய நல்லடையாளச் சொல்லைத் தவிர்க்கச் செய்த அவர் மதி நுட்பத்தை அவனால் வியக்காமல் இருக்க முடியவில்லை. பழைய நல்லடையாளச் சொல் தன்னையும் அபாயத்தில் ஆழ்த்தியிருக்கும் என்று இப்போது அவன் எண்ணினான். அப்போது மீண்டும் அவர் குரல் கணிரென்று ஒலித்தது.
“பல தலைமுறைகளின் புனிதமான உணர்வுகளும் அந்தரங்கங்களும் இந்த நவநித்திலங்களில் அடங்கியிருக்கிறது. எனவே நாளை வைகறையிலிருந்து ‘நவநித்திலம்’ என்ற தொடரையே நம்முடைய புதிய நல்லடையாளச் சொல்லாக நியமிக்கிறேன். இந்தப் புதிய நல்லடையாளம் பற்றிப் பிறர் புரிந்துகொள்ள முடியாத சித்திரக் கரந்தெழுத்துக்களால் இந்த ஒலையில் எழுதியிருக்கிறேன். இந்த ஒலையை எடுத்துச் சென்று விடிவதற்குள் வையையின் திருமருத முன்துறையில், கிழக்கு மேற்காக எண்ணினால் ஏழாவது மருத மரத்தின் அடிப்பொந்தில் வைத்து விடும் பணியை நீ உடன் செய்யப் புறப்பட வேண்டும். ஒவ்வொரு நாளும் இருந்த வளமுடையார் கோயிலிலிருந்து திருமஞ்சன நீர் எடுக்க வரும் நம் யானைப் பாகன் அந்துவன் இந்த ஏழாவது மருத மரப்பொந்தைப் பார்க்காமல் திரும்ப மாட்டான். ஓலையை அவன் பார்த்து விட்டால், புதிய நல்லடையாளம் விரைந்து எங்கும் பரவுவதற்கு ஆவன செய்யும் வழியை அவனறிவான். திருமோகூரிலும், சுற்றுப்புறங்களிலும், காராளரிடமும் இந்தப் புதிய அடையாளத்தினை நீயே சொல்லி விடலாம்.”
அப்படி அந்த நவநித்திலங்களில் அடங்கியிருக்கும் மகத்துவம் என்ன என்று உடனே அறியும் ஆவலை, அவர் சொற்கள் தன் உள்ளத்தில் கிளரச் செய்திருந்தும் கட்டளையை நிறைவேற்றும் பொறுப்பை உணர்ந்து ஓலையைப் பெற்றுக் கொண்டு அவன் வணங்கி விடைபெற்றுப் புறப்பட்டான். கால்கள் விண் விண்ணென்று வலித்தன. கடமையோ மீண்டும் அவனைத் துரத்தியது.
-----------
நித்திலவல்லி -- இரண்டாம் பாகம் - சிறைக்கோட்டம்
15. சிறை மாற்றம்
தன்னுடைய ஏவலோ மந்திரமோ பலிக்க முடியாதபடி மாவலி முத்தரையர் தடுத்துக் கட்டி விட்டதை உணர்ந்தான் தேனூர் மாந்திரீகன். கூண்டோடு அனைவரும் சேர்ந்து சிறைப்படுவதைத் தவிர அந்நிலையில் வேறு எதுவும் மீள வழி தோன்றவில்லை. எல்லாரும் செங்கணான் முகத்தையே கவலையோடு பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
மூடிய கதவுகளின் வெளியே இருந்து மாவலி முத்தரையரின் ஏளனச் சிரிப்புத் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது. கதவுச் சட்டங்களின் இடைவெளி வழியே அவர் முகத்தையும் இவர்கள் உட்புறம் இருந்தே காண முடிந்தது.
“இதற்கு மேல் உங்கள் ஏவல் பலிக்காது! பேசாமல் மறுபடியும் சிறைக் கோட்டத்துக்குள் போய்ச் சேருங்கள். இனிமேல் தப்ப முடியும் என்று கனவுகூடக் காணாதீர்கள்!” என்று கடுமையான குரலில் அவர்களை நோக்கி அறைகூவினார் மாவலி முத்தரையர்.
இந்த அறைகூவலுக்கு மாந்திரீகன் செங்கணானோ, அழகன் பெருமாளோ, தென்னவன் மாறனோ, மாவலி முத்தரையரை நோக்கி மறுமொழி கூறிச் சீறவில்லை; என்றாலும் தங்களுக்குள் மேலே என்ன செய்வது - என்ற வினாவும் முகக் குறிப்பில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். தென்னவன் மாறன் மாவலி முத்தரையரை நோக்கி ஏதோ கடுமையாக மறுமொழி சொல்லத் துடிதுடித்துக் கொண்டிருப்பதைப் புரிந்துகொண்டு, ‘இப்போது அவருக்கு எதுவும் பதில் சொல்ல வேண்டாம்’ என்பது போல் கண் பார்வையாலேயே குறிப்புக் காட்டி விட்டான் அழகன்பெருமாள். இவர்கள் ஒடுங்கி விட்டார்கள் என்பதாக இந்த அமைதியைப் புரிந்து கொண்ட மாவலி முத்தரையர் தம்முடைய ஏவலை மீட்டுக் கொண்டார். ஓநாய்களும், நரிகளும் மறைந்தன. மாவலி முத்தரையர் திமிரான குரலில் மீண்டும் கூறினார்:
“இரவு நேரமாகி விட்டது. பாவம்! நீங்கள் எல்லாரும் மிகவும் களைத்திருப்பீர்கள். சிறையில் போய் இன்றிரவாவது உறங்குங்கள். நாளைக் காலையில் ஒருவேளை உங்கள் தலைவிதியின் கோர முடிவை நீங்கள் எதிர் கொள்ள வேண்டியிருக்கும்!”
இதைக் கேட்டுக் குறளன் உதடுகளைப் பிதுக்கி முகத்தைக் கோணி மாவலி முத்தரையருக்கு அழகு காட்டினான். நண்பர்களின் உயரமான உருவங்களுக்கு நடுவில் நின்று கொண்டிருந்ததனால் அவனுடைய குள்ள உருவம் அழகு காட்டியதை நண்பர்கள்தான் காண முடிந்ததே ஒழியக் கதவுக்கு வெளியே நின்ற மாவலி முத்தரையர் காண முடியவில்லை!
இவர்களுடைய மெளனம் பணிவாகவும், பயமாகவும் புரிந்து கொள்ளப்பட்டு விட்டதனால் மாவலி முத்தரையர் இவர்களோடு பேசுவதை நிறுத்திக் கொண்டு வேறு ஏற்பாடுகளைக் கவனிக்கத் தொடங்கினார்.
சில கணங்களில் மாவலி முத்தரையரைத் தேடிக் களப்பிரப் பூத பயங்கரப் படைத் தலைவன் அங்கே வந்து சேர்ந்தான். அவனுடன் ஆயுதபாணிகளாகப் பூதபயங்கரப் படை வீரர்களும் வந்திருந்தனர்.
“நம்மைப்போல் அரசியல் காரியங்களில் ஈடுபட்டிருப்பவர்கள் எதிலும் முன்னெச்சரிக்கையாக விழித்திருக்க வேண்டும். ஒரு விநாடி தாமதமாகவோ, பின்தங்கியிருந்தோ விழித்தால்கூடப் பெரிய தோல்விகள் வந்துவிடும். இந்தச் சிறைக் கோட்டத்துக் காவலை இரு மடங்காக ஆக்க வேண்டும் என்பதை இப்படி நான் சொல்லி நீ செய்யும்படி ஆகியிருக்கக் கூடாது. இவர்களை மட்டுமே இங்கிருந்து தப்ப விட்டு விடுவோமானால் மிக விரைவில் இந்தக் களப்பிரர் ஆட்சியே பறிபோய்விடும் என்பதை நீ எந்த அளவு உணர்ந்திருக்கிறாய் என்பது எனக்குப் புரியவில்லை” - என்று மாவலி முத்தரையர் பூதபயங்கரப்படைத் தலைவனிடம் இரைந்து கொண்டிருப்பது உள்ளே நின்ற இவர்களுக்கும் கேட்டது. சிறைக் கோட்டத்தின் வாயிலில் காவலுக்கு நிற்கும் வீரர்களின் எண்ணிக்கையை அதிமாக்கிப் பாதுகாப்பு ஏற்பாடுகளை வலிமைப்படுத்தப் போகிறார்கள் என்பதும் உள்ளே இருப்பவர்களுக்குப் புரிந்தது. இந்த நிலைமை அவர்கள் கவலையை அதிகமாக்கியது.
வெளியே மாவலி முத்தரையரின் குரல் கேட்கவில்லை. இப்போது அவர் புறப்பட்டுப் போயிருக்க வேண்டும் என்று தோன்றியது. பூதபயங்கரப் படைத்தலைவன் மட்டும் காவல் வீரர்களுக்கு ஏதோ எச்சரிக்கைகளையும் கட்டளைகளையும் இட்டுக் கொண்டிருப்பது கேட்டது.
சிறிது நேரம் கழித்துக் தென்னவன் மாறனும், அழகன் பெருமாளும் முற்றிலும் எதிர்பாராதவிதமாக வீரர்கள் சூழப் பூதபயங்கரப் படைத்தலைவன் சிறைக் கோட்டத்துக் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான்.
“உள்ளே வருகிறவர்கள் என்ன செய்தாலும் வாளா இருப்பதா, அல்லது ஒரு நிலைமைக்கு மேல் அவர்களை எதிர்த்துத் தாக்கி விட்டுத் தப்பி ஓட முயற்சி செய்யலாமா, உள்ளே வருகிறவர்களை எதிர்த்துப் போரிடும் அளவுக்கு நம் எண்ணிக்கை இருக்கிறது என்பதை நீங்களே அறிவீர்கள்? என்ன செய்யலாம்?” என்று கழற்சிங்கன் அழகன் பெருமாளின் காதருகே மெல்ல வினாவினான்.
“அவசரப்பட்டு விட வேண்டாம். அது நிலைமையை மேலும் கெடுத்து விடும். நீ சொல்கிறபடி செய்ய வேண்டும் என்றால் அப்படிச் செய்யும் வண்ணம் நானே சைகை காட்டுவேன். நான் சைகை காட்டாத பட்சத்தில் என்ன நடந்தாலும் யாரும் உணர்ச்சி வசப்படக் கூடாது” என்று அழகன்பெருமாளிடமிருந்து கழற்சிங்கனுக்கும் பிறருக்கும் மறுமொழி கிடைத்தது.
தென்னவன் மாறனும் அவனோடிருந்த திருமோகூர் அறக்கோட்டத்து மல்லனுமே தலைக்கு ஐவரை எதிர்க்கவும், அடித்து நொறுக்கவும் போதுமானவர்கள் என்றாலும், அவர்கள் பசி தாகங்களால் தளர்ந்துபோய் நலிந்திருக்கிறார்கள் என்று அழகன்பெருமாளுக்குப் புரிந்தது. அவசரப்பட்டுத் தப்ப முயன்று முடியாமல் அகப்பட்டுக் கொண்டால் பின்பு நிரந்தரமாகவே தப்பமுடியாமற் போய் விடுமோ என்ற முன்னெச்சரிக்கைதான் அழகன் பெருமாளுக்கு நிதானத்தைக் கொடுத்திருந்தது. உள்ளே வந்த பூத பயங்கரப்படைத் தலைவன் முதலில் தென்னவன் சிறுமலை மாறனையும், குன்றம் நிற்பதுபோல் தோன்றிய அறக்கோட்டத்து மல்லனையும் மற்றவர்களிடம் இருந்து தனியே பிரித்து நிறுத்திச் சங்கிலிகளாலும், விலங்காலும் பிணைத்துக் கட்டுமாறு, தன்னோடு வந்த வீரர்களுக்குக் கட்டளையிட்டான். இந்தக் கட்டளையை அந்த வீரர்கள் நிறைவேற்றுமாறு விடுவதா, எதிர்த்துத் தாக்குவதா என அறியும் ஆவலோடு நண்பர்கள் அழகன்பெருமாளின் கண்களையே பார்த்துக்கொண்டு நின்றார்கள். பூதபயங்கரப் படைத் தலைவன் சிறைக் கோட்டத்திற்கு உள்ளே தன்னோடு அழைத்து வந்த வீரர்களை வெளிப்புறம் மதிலோரமாக நிறுத்தி வைத்திருக்க வேண்டும் என்பது அழகன் பெருமாளின் சந்தேகமாயிருந்தது. எந்த விநாடியில் பூத பயங்கரப் படைத் தலைவன் குரல் கொடுத்தாலும் வெளியே இருந்து நூற்றுக்கணக்கான வீரர்கள் ஓடிவரமுடியும் என்ற நிலைமையை உய்த்துணர்ந்து நிதானமாக இருந்துவிட்டான் அழகன் பெருமாள்.
வந்திருந்த களப்பிர வீரர்கள் தென்னவன் மாறனையும் அறக்கோட்டத்து மல்லனையும் விலங்கிட்டுச் சங்கிலியால் பிணிக்கத் தொடங்கினார்கள். அப்படி அவர்கள் இருவரும் பிணிக்கப்படும்போது மற்ற எட்டுப் பேரும் என்ன மன நிலையில் இருக்கிறார்கள் என்று முகங்களிலிருந்தே கண்டுபிடிக்க முயன்றவன் போல் இவர்களையே கூர்ந்து கவனிக்கத் தொடங்கியிருந்தான் அந்தக் களப்பிரப் படைத் தலைவன். இவர்களும் அது புரிந்து மிகவும் தந்திரமானதும், எதிரிபுரிந்துகொள்ள முடியாததுமான அமைதியைக் கடைப்பிடித்தனர். அந்த விநாடிவரை தன் கட்டளையையும் பேச்சுக்களையும் பாலியிலேயே நடத்திக் கொண்டிருந்த களப்பிரப் படைத்தலைவர்களின் பேச்சையோ எதையுமோ தெரிந்து கொள்ளாததுபோல், அதே சமயம் எல்லாவற்றை யுமே புரிந்துகொண்டும் தெரிந்து கொண்டும் மெளனமாக இருந்தார்கள் இவர்கள். இவர்கள் அவற்றைப் புரிந்து கொண்டதுபோலும் அறிந்து கொண்டதுபோலும் வெளிப்படையாகக் காட்டிக்கொள்வார்களேயானால் இவர்களுக்கு எந்த அளவு பாலி மொழி தெரியும் என்பதை அதிலிருந்து அவன் அனுமானிக்கக் கூடும். முதல் முயற்சியில் அவனால் அதைச் சாதிக்க முடியவில்லை. எனவே, தான் அறிந்தவரை உச்சரிக்க முடிந்த பிழையான கொச்சைத் தமிழில், “இவர்கள் இருவரையும் தனியே வேறு சிறையில் பிரித்து வைக்க வேண்டும். இவர்களைப் பாதாளச் சிறைக்கு இழுத்துச் செல்லுங்கள்” என்ற பொருளில் கூறினான் அவன். தன்னுடைய கட்டளைகளைத் தான் பாலியில் கூறியவரை எதிரிலிருக்கும் மனிதர்கள் அடக்கமாகவும், அமைதியாகவும் இருந்தது மாறித் தானே தமிழில் கட்டளையிட்டதும் புரிந்துகொண்டு பொங்கி எழுகிறார்களா இல்லையா என்பதை அவன் கவனிக்கவும் கணிக்கவும் முயலுவது போலிருந்தது. அப்படி அவன் தமிழில் கட்டளையிட்டபோதும் இவர்கள் எந்த மாறுதலையும் காண்பிக்கவில்லை. குறளன் மட்டும் யாரும் தன்னைப் பார்க்காத வேளையில் உதட்டைப் பிதுக்கி முகத்தைக் கோணி அழகு காட்டி முடித்துக் கொண்டான். மற்றவர்களின் இடுப்பு உயரத்தில் இவன்முகம் இருந்ததால் மற்றவர்கள் முகங்களையும் இவன் முகத்தையும் ஒருசேரப் பார்ப்பது என்பது ஒரே சமயத்தில் இயலாது. மற்றவர்கள் முகங்களை நேருக்கு நேர் பார்க்கும்போது இவன் முகம் தெரியாமலும் இவன் முகத்தை மட்டுமே நேருக்கு நேர் பார்த்தாலே மற்றவர்களின் இடுப்புக்கள் மட்டுமே தெரிவது போலவும் இருந்ததனால் எல்லார் முகங்களையும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த படைத் தலைவனால் இவன் அழகு காட்டியதைக் கவனிக்க முடியாது போயிற்று. யாரை மீட்பதற்காகக் கோட்டைக்குள் வர நேர்ந்ததோ அவனையே வேறு சிறைக்கோட்டத்துக்கு மாற்றிக்கொண்டு போகிறார்கள் என்பது அழகன் பெருமாளுக்கு வருத்தத்தைக் கொடுத்தது என்றாலும் அதை எப்படித் தடுப்பது அல்லது தவிர்ப்பது என்பதுதான் புலப்படவில்லை. மாவலி முத்தரையர் பயமுறுத்திவிட்டுச் சென்றது போல் தென்னவன் மாறனுக்கோ, மற்றவர்களுக்கோ உயிர் அபாயம் ஏற்படுமுன் தப்பிவிட வேண்டும் என்ற தவிப்பு மட்டும் உள்ளுற அழகன் பெருமாள் மனத்தில் இருந்தது. அவன் இப்படி நினைத்துத் தவித்துக் கொண்டிருந்தபோதே அவனும் மற்றவர்களும் காணத் தென்னவன் மாறனையும், மல்லனையும் அங்கிருந்து வேறு சிறைக் கோட்டத்துக்கு அழைத்துக் கொண்டு போய்விட்டார்கள்.
இருவரும் போகும்போது கூட ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள முடியவில்லை. படைத்தலைவன் கவனக் குறைவாயிருந்த ஒரு கணத்தில், ‘கவலைப் படவேண்டாம்; நாம் எல்லாரும் சேர்ந்தே இங்கிருந்து தப்பமுடியும் இன்னும் எனக்கு நம்பிக்கை இருக்கிறது’ - என்ற பொருள் புரியத் தென்னவன் மாறனுக்குச் சைகை மூலம் அறிவித்தான் அழகன் பெருமாள். இந்தச் சைகையைத் தவிர வேறெதையும் இவர்களால் செய்ய முடியவில்லை. இவர்கள் எட்டுப் பேரையும் விலங்குகளாலோ இரும்புச் சங்கிலிகளாலோ இட்டுப் பிணிக்காமல், அப்படியே அந்தப் பழைய சிறைக் கோட்டத்தில் அடைத்துவிட்டுப் போனார்கள். பூத பயங்கரப் படைத் தலைவனும் வீரர்களும், வந்தவர்கள் எல்லோரும் போய்விட்டார்கள் என்பதையும் தாங்கள் எட்டுபேர் மட்டுமே இருக்கிறோம் என்கிற தனிமையையும் உறுதி செய்து கொண்ட பின் இவர்கள் மேற்கொண்டு பேசவேண்டியதைப் பேசித் திட்டமிடலாயினர்.
----------
நித்திலவல்லி -- இரண்டாம் பாகம் - சிறைக்கோட்டம்
16. யார் இந்த ஐவர்?
“என்னப்பா இது? உன்னைப் போல் மந்திரக்காரர்களையும், தந்திரக்காரர்களையும் நம்பினால் இப்படித்தான் பாதிக் கிணறு தாவ முடியும் போலிருக்கிறது!” என்று கழற்சிங்கன், தேனூர் மாந்திரீ கனைக் கோபித்துக் கொள்ளத் தொடங்கியபோது, ‘இப்படி எல்லாம் பேசாதே! வாயை மூடு’ - என்பது போல் கழற்சிங்கனைக் கடுமையாக உறுத்துப் பார்த்தான் அழகன்பெருமாள். கழற்சிங்கன் உடனே பேசுவதை நிறுத்திவிட்டான். அழகன்பெருமாள் சிறிது நேரம் யாரிடமும் எதுவும் பேசாமல் சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். தங்கள் தலைவனின் ஆழ்ந்த சிந்தனையைப் புரிந்து கொண்டு அதை மதிப்பது போல் மற்றவர்களும் ஒருவருக்கொருவர் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. அழகன் பெருமாள் மேல் விளைவுகளை நினைத்தான்.
‘அரச விசுவாசமுள்ள பாண்டியர் குடி மக்கள் போல் நேற்றுவரை நானும் என்னைச் சேர்ந்தவர்களும் புறநகரில் உபவனத்திலும், அகநகரிலும் உரிமையோடும், பயமின்றியும் பழக முடிந்தது போல் இனிமேல் பழகமுடியாது. என்னுடைய அந்தரங்கமும், என்னோடு உபவனத்தில் உடனுறைந்து வாழ்கிறவர்களின் அந்தரங்கமும் களப்பிரப் பேரரசுக்குத் தெரிந்த பின் இனிமேல் நாங்கள் எந்தச் சார்பும் அற்ற மனிதர்களாக எங்களைக் காண்பித்துக் கொள்ள முடியாது. காதும் காதும் வைத்தாற்போல் மீட்க வந்தவர்களையும் மீட்டுக் கொண்டு தப்பியிருந்தோமானால், கவலையில்லை. அப்படி மீட்கவும் தப்பவும் முடியாததால், என்னதான் மாறு வேடத்தில் இருந்தும் பயனில்லை. இன்றில்லாவிட்டாலும் நாளைப்பொழுது புலர்ந்ததும் யார் யார் என்று எதிரிகளுக்கு நம்மைப் பற்றிப் புரிந்துவிடும். பாண்டியர்களின் மனிதர்கள் என்றுதான் இதுவரை பொதுவாகப் புரிந்திருக்கும். அந்தக் காமமஞ்சரிக்கு மட்டும் எல்லாம் தெரிந்திருந்தாலும் மாவலி முத்தரையருக்கோ, பூத பயங்கரப்படைத் தலைவனுக்கோ இன்னும் அவ்வளவு தெரிந்திருக்க நியாயமில்லை. ‘பூத பயங்கரப் படையினர் போன்ற வேடந்தாங்கித் தங்களவர்களைச் சிறை மீட்க வந்த பாண்டியர்களின் ஆட்கள்’ என்று மட்டும்தான் இந்த விநாடி வரை அவர்கள் நம்மைப் பற்றி அறிந்திருக்க முடியும் என்றாலும் தொடர்ந்து இங்கே சிறையில் இருக்க நேரிடுகையில் இதைவிட அதிகமாகக் களப்பிரர்கள் நம்மைப் பற்றி அறிந்து கொள்ள முயலுவார்கள். விரைந்து தப்பாவிடில் பல தீய விளைவுகள் இருக்கும்’ - என்று சிந்தித்தான் அழகன் பெருமாள். நண்பர்கள் ஏதேதோ வழிகளைச் சொன்னார்கள். மனநிலை தெளிவாக இல்லாததால், ‘விடிந்த பின்பு சிந்திப்போம்’ என்றான் அழகன்பெருமாள். ஆனாலும் அந்தக் குழப்பமான மனநிலையில்கூட
“களப்பிரர்களில் யார் இங்கே வந்தாலும், எதை வினவினாலும் அவசரப்பட்டு முந்திக்கொண்டு யாரும் எந்த மறுமொழியையும் சொல்லிவிடாதீர்கள். மறுமொழியாக நான் என்ன சொல்கிறேன் என்று பொருத்திருந்து பார்த்த பின் அதற்கு ஏற்ப நீங்களும் நடந்து கொள்ளவேண்டும். பதற்றமோ அவசரமோ கூடாது. எதிரிகள் நண்பர்கள் போல் வந்து பேச்சுக் கொடுப்பதும், இங்கே இருக்கும். எச்சரிக்கை தேவை.” என்று தெளிவாக அறிவுரை கூறியிருந்தான் அவன். இதைக் கூறிய பின் தேனூர் மாந்திரீகனிடம் அவன் ஒரு வேண்டுகோள் விடுத்தான்: “செங்கணான்! உன்னிடம் மைபோட்டுப் பார்க்கத் தேவையான சாதனங்கள் இருக்குமானால் தயைகூர்ந்து நம் தென்னவன் மாறனையும், மல்லனையும் இந்த அரண்மனைக்குள்ளோ, சிறைக் கோட்டத்திற்குள்ளோ எங்கே வைத்திருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடித்துச் சொல்ல முடியுமா?”
செங்கணான் உடனே தன் மேலாடை முடிப்பிலிருந்து யாளியின் முகம் போன்ற அமைப்பை உடைய ஒரு சிமிழை எடுத்துத் திறந்து ஏதோ மந்திரங்களைச் சொல்லிக் கண்களை மூடி எங்கேயோ, எதையோ, மனக் கண்ணில் பார்ப்பவனைப் போல் தேடிவிட்டுச் சில கணங்களுக்குப் பின் கண்களைத் திறந்தான். எல்லோரும் அவன் என்ன கூறப்போகிறான் என்பதையே ஆவலோடு கவனித்தார்கள்.
“இப்போது நாம் நின்று பேசிக்கொண்டிருக்கும் இந்தச் சிறைக் கோட்டத்துக்கு நேர் கீழே இருட்கிடங்காக இருக்கும் பாதாளச் சிறையில் தென்னவன் மாறனும் மல்லனும் இருக்கிறார்கள். அந்தப் பாதாளச் சிறைக்கோட்டம் கோட்டையின் அகழிகளுக்கும் கீழே இருப்பதால் நீர் கசியும் தரையில் அமரவும் முடியாமல், படுக்கவும் வழியின்றி அவர்கள் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு செய்தி...” என்று சொல்லிக் கொண்டே வந்த மாந்திரீகன் திடீரென்று தன் மனத்தை மாற்றிக் கொண்டவன்போல் அந்தச் செய்தியை மட்டும் அழகன் பெருமாளின் காதருகே கூறினான். அந்தச் செய்தி என்னவாக இருக்கும் என்று அறியும் ஆவல் மற்ற வர்கள் மனத்தில் அதிகரித்தது. அந்த இரகசியச் செய்தியை மாந்திரீகன் தன் காதருகே கூறிக் கொண்டிருந்தபோது அழகன் பெருமாளின் முகம் மலர்ச்சி உற்றதையும் அவர்கள் கண்டிருந்ததனால் அவர்களுடைய ஆவல் இன்னும் பெருகியிருந்தது. மைச்சிமிழை மூடி மறுபடியும் மேலாடையில் முடிந்து கொண்டான் மாந்திரீகன். அதற்குப் பின் விடியும்வரை அவர்கள் யாரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. சிறைக் கோட்டத்தின் கரடு முரடான கல் தளத்தில் உடலைச் சாய்ப்பதும், உறங்குவதும் களைப்புக் காரணமாகச் சிரமமானவைகளாகத் தெரியவில்லை அவர்களுக்கு. அழகன்பெருமாளும், தேனூர் மாந்திரீகனும் அருகருகே படுத்திருந்ததனால் இடையிடையே மெல்லிய குரலில் தங்களுக்குள் மட்டும் ஏதோ உரையாடிக்கொள்ள முடிந்தது. மற்றவர்களுக்கோ ஆவலின் காரணமாக, உரையாடாமல் வாளா இருந்த நேரத்தில் கூட அவர்கள் ஏதோ இரகசியம் பேசிக் கொண்டிருப்பது போல் கேட்டது. சிறிது நேரம்தான் இந்த ஆவல், பரபரப்பு எல்லாம் இருந்தன. அப்புறம் அயர்ந்துவிட்ட காரணத்தால் யாருக்கும் எதுவும் நினைவிருக்கவில்லை. மறுநாள் பொழுது புலர்ந்தது. நண்பர்கள் எட்டுப் பேருக்கும் பயங்கரமான பசி. களப்பிரர்கள் சிறைப்பட்ட எதிரிகளுக்கு உணவு தருவார்களா, அல்லது சிறைப்பட்டவர்களே தங்களுக்கு உணவுதானே என்று சாகவிட்டு விடுவார் களா என்பது தெரியவில்லை. அந்த நிலையில் முற்றிலும் எதிர்பாராமல் ஐந்து புதிய மனிதர்கள் அவர்களைத் தேடிச் சிறைக்கோட்டத்துக்கு வந்தனர். அவர்கள் தமிழர்களைப் போல் தோன்றினர். உடை, சாயல் எல்லாம் அப்படியே இருந்தன. வந்தவர்களிடம் ஒரு பெரிய ஓலைக்கூடை நிறைய பிட்டு அப்பம் முதலிய பணியாரங்கள் இருந்தன. சிறைக் கோட்டத்துக் கதவுகளை எல்லாம்கூட அவர்கள் திறந்து கொண்டு உள்ளே வந்து, பணியாரக் கூடையை அழகன் பெருமாள் முதலியவர்களை வணங்கி விட்டு எதிரே வைத்தனர். வைத்தவுடனே மூவரும் சொல்லிவைத்தது போல் ஒன்றாகத் தலை நிமிர்ந்து இந்த எட்டுப் பேரையும் பார்த்து இரகசியம் பேசுவதை ஒத்த குரலில் ‘கயல்’ என்றார்கள்.
அழகன் பெருமாள் பதிலுக்கு அந் நல்லடையாளச் சொல்லைக் கூறாததோடு வந்தவர்களைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கினான். மற்றவர்களுக்கோ பசிக்கு வழி பிறக்கப் போகிறது என்ற மகிழ்ச்சியில் ‘கயல்’ என்று கூடச் சொல்லி விடலாம் போலிருந்தது. ஆனால், யாரும் தன்னை முந்திக் கொண்டு பேசக் கூடாது என்று முந்திய இரவில் அழகன் பெருமாள் கட்டளையிட்டிருந்ததை நினைத்து மெளனமாக இருந்தனர். வந்த ஐவரில் ஒருவன் கூறலானான்:
“நீங்கள் இங்கிருந்து தப்பிச் செல்ல உதவுவதற்கு வந்திருக்கிறோம். இதோ உங்கள் பசிக்குப் பணியாரங்கள் ஏற்றருள வேண்டும். நாங்கள் நடுவூர் நன்மை தருவார் குலத்து மதுராபதியாரின் தூதர்கள்.”
இன்னும் அழகன் பெருமாள் சிலை போல்தான் நின்று கொண்டிருந்தான். பேசியவனுக்கு மறுமொழியும் கூறவில்லை. நல்லடையாளச் சொல்லைப் பதிலாகவும் அளிக்க வில்லை! அந்தப் பணியாரக் கூடையை அங்கீகரித்துக் கொள்ளவும் இல்லை. அழகன் பெருமாளின் இந்தப் பெரிய தயக்கம் மற்ற எழுவரையும் எச்சரிக்கை செய்தது.
------------
நித்திலவல்லி -- இரண்டாம் பாகம் - சிறைக்கோட்டம்
17. பொன் கூண்டிலிருந்து?
இசையும் கூத்தும், இன்பமும் நிறைந்த இரத்தின மாலையின் மாளிகையில் ஒரு குறைவுமில்லை என்றாலும் தான் சிறைப்பட்டிருப்பது போல் உணரத் தொடங்கினான் , இளையநம்பி. அவன் தனிமையை உணர்ந்து விடாதபடி எவ்வளவோ பேணிப் பிரியப்பட்டு நெருங்கிப் பாதுகாத்து வந்தாள் இரத்தினமாலை. ஓர் இணையற்ற வாலிபப் பருவத்து வீரனை அன்பினாலும், உபசரணைகளாலும் மட்டுமே தடுத்து வைப்பது என்பது எவ்வளவு அரிய காரியம் என்பதை அவள் உணர முடிந்தது. சில வேளைகளில் தன்னோடு பேசிக் கொண்டிருக்கும்போதே அவனது சிந்தனை வேறெங்கோ போய் விடுவதை அவள் கண்டிருந்தாள். சில இரவுகளில் மஞ்சத்தில் அவன் உறக்கமின்றிப் புரள்வதையும் பெருமூச்சு விடுவதையும், எழுந்து அமர்ந்து கன்னத்தில் கையூன்றிய வண்ணம் கவலையோடு சிந்திப்பதையும்கூட அவள் காண நேர்ந்திருந்தது.
அப்படி அவன் மஞ்சத்தின் மேல் விழித்துக் கொண்டு உட்கார்ந்திருந்த ஓர் இரவில், அவள் மிகமிகக் கனிவான குரலில், “உங்களைப் பார்த்தால் எனக்கே பரிதாபமாக இருக்கிறது. சமயா சமயங்களில் நீங்கள் முள்ளின் மேல் இருப்பதைப் போல் பொறுமையற்றுத் தோன்றுகிறீர்கள். எங்களிடையே இருப்பதில் உங்களுக்கு ஏதேனும் உபசார குறைவு இருந்தால் அதைத் தயங்காமல் சொல்லலாம்” என்று அவனிடமே கேட்டாள்.
அவன் ஒருவித ஏக்கத்தோடு மறுமொழி கூறினான்: “இரத்தினமாலை! இங்கே எனக்கு ஒருகுறையும் இல்லை என்பதே மிகப் பெரிய குறைதான். ஒரு குறையோ, தடையோ எதிர்ப்படாத வாழ்வில் ஆண் மகன் தன்னை ஓர் ஆண்மகன் என்றே நிரூபித்துக் கொள்ளமுடியாமல் போகிறது. இந்தச் சுகவாசம் என்ற பொன் கூண்டிலிருந்து நான் விடுபட்டாலொழிய என் மனம் ஆறுதலடையாது. என் வேதனையின் முழு அர்த்தத்தை நீயும் புரிந்து கொள்ளவில்லை என்றே நினைக்கிறேன். வீரர்களை வெறும் அன்பினால் மட்டும் புரிந்து கொள்ளமுடியாது போலிருக்கிறது.”
“நீங்கள் ஒரு பக்கத்து வாதத்தை மட்டுமே சொல்கிறீர்கள். வீரர்களை வெறும் அன்பினால் புரிந்துகொள்ள முடியாது என்பது உண்மையா? அல்லது உணர்வு மயமாக நெகிழ்ந்த அன்பை வீரர்களால் புரிந்துகொள்ளமுடியாது என்பது உண்மையா?”
“நமக்குரிய தேசத்தைக் காப்பாற்ற வேண்டும் என்கிற பெரிய அன்பு மேலெழும்போது, நமக்குரிய மனிதர்களைப் பற்றிய சிறிய அன்பு அதில் கரைந்து போய்விடுகிறது என்பதை நீ புரிந்துகொள்ள வேண்டும்.”
“என்னை மறப்பதற்கும் நிராகரிப்பதற்கும் நீங்கள் கூறுகிற தத்துவமோ இது?”
“மனிதர்களை மறப்பதற்கும் நிராகரிப்பதற்கும் தத்துவங்கள் பிறப்பதில்லை. தத்துவங்களுக்கு மறப்பதையும் நிராகரிப்பதையும் விட உயர்ந்த நோக்கங்கள் உண்டு.”
“ஆனால் மனிதர்களுக்கு மட்டும் சமயா சமயங்களில் அப்படி உயர்ந்த நோக்கங்கள் இருப்பதாகத் தோன்ற வில்லை.”
இதைக் கேட்டு அவள் முகத்தை ஏறிட்டுப் பார்த்து மெல்லச் சிரித்தான் இளையநம்பி. ஒரு கவலை நிறைந்த சூழ்நிலையில் தன் உரையாடலால் அவனை மனம் நெகிழ்ந்து சிரிக்கச் செய்தது, இரத்தினமாலைக்குத் திருப்தியைக் கொடுத்தது.
“உன்னைப்போல் வசீகரமும், மயக்கும் சக்தியும் உள்ள பெண்கள்தான் வீரர்களின் முதல் எதிரிகள். எவ்வளவு பெரிய வீரனின் அன்பையும் ஒரு குறுகிய எல்லைக்குள் கொண்டு வந்து அடக்கிவிடுகிறீர்கள் நீங்கள்!”
இப்போது அவள் அவன் முகத்தை ஒரக் கண்களால் நோக்கி மெல்ல நகைத்தாள்.
“உன்னுடைய தடையையும் பாதுகாப்பையும் மீறி நான் இந்த மாளிகை எல்லையைக் கடந்து நகர வீதிகளைக் காணப்புறப்பட்டால் நீ என்ன செய்வாய்? எனக்கு இங்கிருந்து வெளியே புறப்பட்டுச் செல்லவேண்டும் போல ஆசையாயிருக்கிறது.”
“உங்கள் ஆசைகள் உங்களைவிடப் பெரிய சக்தியால் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன. நீங்கள் நினைத்தபடிஎல்லாம் ஆசைப்பட்டுவிட முடியாது. ஆசைப்பட்டபடியெல்லாம் நினைத்துவிடவும் முடியாது.”
“இதற்கு ஓர் இடம் மட்டும் விதிவிலக்கு!”
“எதைச் சொல்லுகிறீர்கள் நீங்கள்?”
“எதைச் சொல்லுகிறீர்கள் என்று இப்போது இதைக் கேட்கும் பெண்ணழகி மட்டும் இங்கு விதிவிலக்காகி விட்டாள் என்றேன்.”
“உண்மையான அன்பு என்பது ஒரு விதிவிலக்கில்லை. என் அன்பை நீங்கள் விதிவிலக்காகக் கூறுவது எனக்கே பிடிக்கவில்லை. என் அன்பை நீங்கள் அப்படி அலட்சியமாக நினைக்கலாம். ஆனால் நான் அப்படி நினைக்கமுடியாது.”
“என் மேல் உண்மையான அன்பு இருக்குமானால் நீ எனக்கு ஒர் உதவி செய்யவேண்டும்.”
“என்ன உதவி? செய்ய முடிந்த உதவியாயிருந்தால் நிச்சயம் செய்யலாம்.”
“செய்யமுடியாத உதவியாயிருந்தாலும் செய்வது தான் உண்மை அன்பு.”
“செய்யமுடியாததற்கும் செய்யக் கூடாததற்கும் வேறுபாடு உண்டு.”
“அன்பு என்ற அடிப்படையில் பார்க்கும்போது எதிலும் எதற்கும் வேறுபாடு கிடையாது என்பது நான் சொல்லித்தான் உனக்குத் தெரியவேண்டும் என்பதில்லை. மனிதர்களுக்கும் அவர்களுடைய கருத்துக்களுக்கும் நடுவே உள்ள வேறுபாடுகளையும், இடைவெளிகளையும் குறைப்பதுதான் அன்பு. பொது அன்பின் இலக்கணமே இதுதான் என்றால் பிரியத்தின் விளைநிலமாகிய பெண்களின் அன்பு இன்னும் சிறப்பாயிருக்க வேண்டும்...”
“காரியத்தைச் சாதித்துக் கொள்வதற்கு ஏற்ற இனிய வார்த்தைகளை ஒவ்வொன்றாகத் தேர்ந்தெடுத்துப் பேசுகிறீர்கள் நீங்கள்!”
“ஆனாலும் என் காரியம் இன்னும் சாதிக்கப்பட்டு முடியவில்லை.”
அவள் இதற்கு மறுமொழி கூறவில்லை. நளினமும் அழகும் நிறைந்த புன்னகை ஒன்று அவள் இதழ்களில் தோன்றி மறைந்தது.
நடு இரவு கழிந்து , பனியும் மென்காற்றும், பூக்களின் மலருங்காலத்துப் புதுமணமும் ஒன்று சேர்ந்து புறப்படும் பின்னிரவு வந்துகொண்டிருந்தது. இன்னும் அவர்கள் இரு வருமே மஞ்சங்களில் அமர்ந்து பேசிக் கொண்டுதான் இருந்தனர். இருவருக்கும் உறக்கம் அறவே கலைந்து போய் விட்டது. ஒரே ஒருநாள் நகர வீதிகளில் போய்த் தன் விருப்பப்படி சுற்றிப் பார்க்க ஆசை தெரிவித்தான் இளையநம்பி. அவளோ அவனை அப்படி விருப்பம்போல் வெளியே அனுப்புவதற்கு இசையவில்லை. சிரித்தும், பேசியும் அவனை வசியப்படுத்தி மயக்கி அவனுடைய வெளியேறும் விருப்பத்தை மெல்ல மறக்கச் செய்ய முயன்றாள்.
இளம் வைகறையின் சீதக் காற்று பூக்களின் நறுமணங்களோடு சாளரத்தின் வழியே உட்புகுந்தது. பணிப் பெண் ஒருத்தி புறத்தே வந்து நின்று குரல் கொடுத்தாள். முதலில் இரத்தினமாலைதான் எழுந்து சென்று பணிப் பெண்ணை எதிர் கொண்டாள். பின் தொடர்ந்து இளையநம்பியும் சென்றான். வந்த பணிப் பெண்ணின் முகத்தில் பதற்றமும் கலவரமும் தெரிந்தன. வார்த்தைகளால் எதுவும் கூறாமல் நிலவறை முனை உள்ள சந்தனம் அறைக்கும் பகுதியைச் சுட்டிக் காட்டினாள் பணிப்பெண்.
உடனே இளைய நம்பியும் இரத்தினமாலையும் அங்கே விரைந்தனர். நிலவறை வழிக்குக் காவலாக இருக்கட்டும் என்று இரு பணிப் பெண்களை ஒவ்வோர் இரவிலும் சந்தனம் அறைக்கும் பகுதியிலேயே படுத்துக்கொள்ளப் பணித்திருந்தாள் இரத்தினமாலை. அவர்களில் ஒருத்தி தான் இப்போது எழுந்து வந்திருந்தாள். மற்றொருத்தி சந்தனம் அறைக்கும் பகுதியின் முன்புறம் தூக்கக் கிறக்கத்தோடு தளர்ந்துபோய் நின்று கொண்டிருந்தாள். இரவாயிருந்தபடியினாலும், நிசப்தத்தினாலும் சிறிய ஒலி கூடப் பெரியதாகக் கேட்டது. வழக்கமாக அந்த நேரத்திற்கு நிலவறை வழியே யார் வந்தாலும் சிறிது தொலைவில் வரும்பொழுதே படியேறி மேற்புறம் அடைப்புக் கல்லைத் திறப்பதற்கு முன்பே ஓசை கேட்கும். இப்போதும் அப்படியே யாரோ நடந்து வருகிற காலடி ஓசை கேட்டது. இளைய நம்பியும், இரத்தினமாலையும் அடைப்புக் கல்லின் அருகே நின்று கீழே யாரோ படியேறி வரும் ஓசையைக் கேட்டனர். கூர்ந்து செவிமடுத்ததில் கீழே ஒருவர் நடந்து படியேறி வரும் ஓசைதான் கேட்டது. என்றாலும் இரத்தினமாலை மிகவும் முன் எச்சரிக்கையோடு,
“வருவது யார் என்று உறுதியாகத் தெரியாத நிலையில் நீங்கள் இங்கே எதிர்ப்பட்டு நிற்பது நல்லதில்லை. தயை கூர்ந்து நீங்கள் மறைந்திருக்க வேண்டும். இது நான் உங்களுக்கு இடும் ஆணையில்லை. அன்புக் கட்டளை” என்று இளையநம்பியிடம் கூறினாள். அவள் கூறியதை அவன் ஏற்றுக் கொண்டான்.
“அன்புக் கட்டளை என்பது பொன் கூண்டில் சிறை வைக்கிறேன் என்பது போன்றதுதான். இடுகின்ற சிறையைப் பொன் கூண்டில் வைத்து இட்டால் என்ன? இரும்புக் கதவுகளின் இடையே வைத்து இட்டால் என்ன? எல்லாம் ஒன்று தான்” என்று சிரித்துக்கொண்டே கூறிவிட்டு மறைந்து நிற்பதற்காக வெளியேறிச் சென்றான் இளையநம்பி.
நிலவறைப் பாதை வழியே வந்துகொண்டிருப்பது தன் மனிதர்களில் ஒருவரா அல்லது வேற்றவரா என்பதை வந்து கொண்டிருப்பவரின் முகம் தெரிந்தால் அன்றிப் புரிந்து கொள்ளமுடியாது என்பதனால் இளைய நம்பியை மறைந்திருக்குமாறு வேண்டினாள் அவள்.
காலடியோசை மேல் நோக்கி நெருங்க நெருங்க அவள் நெஞ்சு வேகமாக அடித்துக் கொண்டது. இதோ மேல் அடைப்புக்கல் நகர்த்தப்படும் ஓசையும் கேட்கிறது. அவள் மனத்துடிப்புப் பெருகி வளர்கிறது.
இருளிலிருந்து கோணிய முகத்தில் பெரியதாகச் சிரிக்கும் வாயுடன் அந்துவனின் தலை தெரிந்த பின்புதான் அவள் கவலை நீங்கி நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். “திருக்கானப் பேர் நம்பியை எங்கே காணோம்? இன்னும் உறக்கம் நீங்கித் திருப்பள்ளி எழுச்சி ஆகவில்லையா? நம்மவர்களிடம் இருக்கிற மிகப் பெரிய குறைபாடு இதுதான். விழித்துக் கொள்ள வேண்டிய சமயத்தில் உறங்கிப் போய் விடுவதும், உறங்க வேண்டிய சமயத்தில் அவசியமில்லாமல் விழித்துக் கொண்டிருப்பதுமே வழக்கமாகி விட்டது. அதனால்தான் நம்முடைய பல காரியங்கள் கெட்டுப் போய் விடுகின்றன” - என்று பொதுவாகக் குற்றம் கூறிக் கொண்டே வந்தான் இருந்த வளமுடையார் கோயில் யானைப்பாகன் அந்துவன். குரலைக் கேட்டு மறைந்து வெளியேறி நின்றிருந்த இளைய நம்பியும் உள்ளே வந்து சேர்ந்தான். உள்ளே வந்ததுமே, இளைய நம்பி அந்துவனைக் கேட்டான்;
“என்ன அந்துவன்? இருந்த வளமுடைய பெரு மாளுக்கு இன்று காலை பொழுது புலர்ந்ததும் உன்னுடைய முகத்தில் விழிக்கும் வாய்ப்புக் கிடைக்க விடாமல் இங்கே வந்து விட்டாய்?”
“என்ன செய்வது ஐயா? இருந்த வளமுடைய பெருமாளை விட அதிகமான அபாயத்திலிருக்கும் உங்களைப் போன்ற ஒருவருக்கு அந்த நல்ல வாய்ப்பைத் தர வேண்டியிருந்தது. அதனால்தான் இங்கே புறப்பட்டு வந்தேன். கோவிலிலிருந்து திருமஞ்சன நீர் எடுத்துவர வைகைக்குப் புறப்படும் போது நான் இன்று உங்களைத் தேடி இங்கே வருகிற திட்டம் எதுவும் இல்லை. திருமருத முன் துறைக்கு வந்த பின்பே உங்களை இன்றே இப்போதே உடனே சந்தித்தாக வேண்டியிருந்த காரியம் ஏற்பட்டு விட்டது.”
“அது என்ன அத்தனை அவசரமான காரியம்?”
“இதோ, இதைப் பார்த்தால் புரியும்! பெரியவரிட மிருந்து இந்தஓலை இன்று அதிகாலையில் திருமருத முன்துறையில் எனக்குக் கிடைத்தது” என்று அதை எடுத்து நீட்டினான் அந்துவன்.
இப்படி இந்த ஓலையை அந்துவன் நீட்டிய போது இளையநம்பியையும் முந்திக் கொண்டு விரைந்து அவன் கையிலிருந்து அந்த ஓலையைப் பறிப்பதுபோல் வாங்கினாள் இரத்தினமாலை. விரைவோடு விளக்கருகே கொண்டு போய், சித்திரக் கரந்தெழுத்துக்களில் எழுதப்பட்டிருந்த அந்த ஓலையைப் படிக்கவும் செய்தாள் அவள். தான் படித்தபின் இரண்டாம் முறையாக இளையநம்பியும் கேட்கும்படி வாய் விட்டுப் படித்தாள் அவள். அந்த ஓலையைப் படித்து முடித்ததும் ஒரிரு விநாடிகள் அவர்களிடையே மெளனம் நிலவியது. அந்துவன்தான் முதலில் அந்த மெளனத்தைக் கலைத்தான்.
“பெரியவர் விரைந்து அறிவித்திருக்கும் இந்தப் புதிய ‘நல்லடையாளம்’ நம்மவர்கள் எல்லாருக்கும் உடனே அறிவிக்கப்பட வேண்டும். பழைய நல்லடையாளம் எப்படியோ எங்கோ எப்போதோ எதிரிகளுக்குத் தெரிந்து விட்டது போலிருக்கிறது! அதனால்தான் பெரியவர் விரைந்து இதை அறிவித்திருக்கிறார். அதோடு திருக்கானப் பேர் நம்பி மிகமிகப் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதையும் இதில் எழுதியிருப்பதைப் பார்த்தீர்கள் அல்லவா?”
இந்த வினாவுக்கு இரத்தினமாலை மறுமொழி கூறினாள்;
“பார்த்தேன்! இந்தப் பொன் கூண்டிலிருந்து இவர் தப்ப ஆசைப்படும் வேளை பார்த்து அதன் கதவுகளை இன்னும் இறுக்கி மூடச் சொல்லி இந்த ஆணை கிடைத்திருக்கிறது.”
இளையநம்பி எதுவும் பேசவில்லை. மெளனமாக அந்துவன் முகத்தையும், இரத்தினமாலையின் முகத்தையும் பார்த்தபடி நின்று கொண்டிருந்தான்.
“புறாக்களின் மூலமும், பறவைகளின் மூலமும் கொற்கை முதலிய தென்பாண்டி நாட்டு ஊர்களில் உள்ள நம்மவர்களுக்கு இச்செய்தியை உடன் அனுப்ப வேண்டும். சிறுசிறு ஓலை நறுக்கில் இரகசிய எழுத்துக்கள் மூலம் எழுதி, பழகிய புறாக்களின் கால்களிலும் பழகிய பறவைகளின் கால்களிலும் கட்டி அனுப்ப வேண்டும். இப்போது நான் விரைந்து திரும்ப வேண்டும். இல்லையானால் என்னோடு வந்து திருமருத முன் துறையிலே காத்திருக்கும் மற்ற யானைப் பாகர்களும், ஊழியர்களும் என்மேல் ஐயப்படுவார்கள். மேல் பாண்டி நாட்டுக்கும் கீழ் பாண்டி நாட்டுக்கும்புதிய நல்லடையாளத்தை நான் அனுப்பிவிடுவேன். வட பாண்டிநாட்டுக்குத் திருமோகூர்க்கொல்லன் மூலமாகப் பரவி விடும் என்று பெரியவரே எழுதியிருக்கிறார். தென்பாண்டி நாட்டுக்குச் செய்தி அனுப்பும் பொறுப்பை இந்த மாளிகை ஏற்றுக் கொண்டால் நல்லது” என்றான் அந்துவன்.
“இந்த மாளிகையில் ஏழு புறாக்கள் இருந்தன. அதில் ஒரு புறா சென்ற திங்களில் எங்கோ சென்று திரும்பும் போது பருந்துக்கு இரையாகிவிட்டது. ஆறு புறாக்கள் இருக்கின்றன. ஆறு இடங்களுக்குக் கரந்தெழுத்தில் ஓலைத் துண்டுகளை அனுப்பமுடியும்” என்று இரத்தினமாலையும் அதற்கு இணங்கிய பின், அவளிடமும் இளைய நம்பியிடமும் சொல்லி விடைபெற்றுக் கொண்டு, விரைவாகத் திரும்பி நிலவறையில் இறங்கிச் சென்றான் அந்துவன்.
----------
நித்திலவல்லி -- இரண்டாம் பாகம் - சிறைக்கோட்டம்
18. உட்புறம் ஒரு படிக்கட்டு
அந்த ஐவரும் அழகன் பெருமாள் முதலியவர்களை மன்றாடாத குறையாகப் பணிந்து இறைஞ்சிப் பார்த்தார்கள். தாங்கள் கொண்டு வந்திருக்கும் சுவையான பணியாரங்களை உண்டு பசியாறுமாறு வேண்டினார்கள். மீண்டும் மீண்டும் வந்தவர்களாகிய அவர்கள் தான் பேசிக் கொண்டிருந்தார்களே தவிர, அழகன்பெருமாளோ அவனுடன் இருந்தவர்களோ வாயைத் திறக்கவே இல்லை. வந்த ஐவரில் ஒருவன் மீண்டும் பழைய வாக்கியத்தையே திரும்பவும் சொன்னான்:
“நாங்கள் நடுவூர் நன்மை தருவார் குலத்து மதுராபதியாரின் தூதர்கள்! எங்களை நீங்கள் புரிந்து கொள்ளாமல் அலட்சியம் செய்வதைக் கண்டு நான் மிகவும் வருந்துகிறேன்.”
அழகன்பெருமாள் இப்போது மறுமொழி கூறவில்லை. அவனுடைய சந்தேகமே தொடர்ந்து உறுதிப்பட்டுக் கொண்டிருந்தது. வந்திருப்பவர்கள் உண்மையிலேயே உதவ வந்த நண்பர்களாகவும் மதுராபதி வித்தகரின் தலைமைக்கு உட்பட்டவர்களாகவும் இருந்தால் அவரை இப்படி முற்றிலும் அந்நியமான ஒரு பெயரால், ‘நடுவூர் நன்மை தருவார் குலத்து மதுராபதியார்’ என்று அழைக்க முடியாது. தன்மையான மனிதர்களிடம் அவரைக் குறிக்கப் பெரியவர் என்ற பெயரே மதிப்புக் குரியதாக வழங்கி வருகையில், இவர்கள் அந்தப் பெயரையே அறியாதவர்கள்போல் புதுவிதமாகக் கூப்பிட்ட வேறுபாட்டை உணர்ந்து கொண்டான் அழகன்பெருமாள். இந்த வேறுபாடு வெண்பளிங்கிற் சிவப்பு நூல் கோர்த்தது போல் தனியே நிறம் விட்டுத் தெரிந்த ஒரே காரணத்தால்தான், வந்தவர்கள் கூறிய நல்லடையாளச் சொல்லை அவன் பொருட்படுத்தவே இல்லை. தங்களை உளவு அறிய மாவலி முத்தரையர் சிறைக்குள்ளேயே அனுப்பியிருக்கும் மனிதர்களாகத்தான் இவர்கள் ஐவரும் இருக்க வேண்டும் என்று அழகன்பெருமாளுக்கு உறுதியாகப் புரிந்துவிட்டது. ஆகவே அவன் உணர்வுகள் நன்றாக விழித்திருந்தன.
அப்போது வந்தவர்களில் ஒருவன் மீண்டும் பேசலானான்:
“நடுவூர் நன்மை தருவார் குலத்து மதுராபதியாரின் ஆட்கள் என்று சொல்லியும் நீங்கள் எங்களை மதிக்கவில்லை! ‘கயல்’ என்று அடையாளச் சொல்லைத் திரும்பத் திரும்பக் கூறியும் ஏற்கவில்லை...”
முதன்முதலாக இப்போதுதான் அழகன் பெருமாள் அவர்களுக்கு மறுமொழி கூற முன் வந்தான். வந்திருக்கும் பகைவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்த வேண்டும் என்கிற திட்டத்தோடு, பேசியவனிடம் அழகன்பெருமாள் வினாவத் தொடங்கினான்:
“ஐயா! உங்கள் அக்கறையைக் கண்டு மிகவும் வியப்படைகிறேன். ஆனால் நடுவூர் நன்மை தருவார் குலத்து மதுராபதியார் என்று நீங்கள் ஏதோ ஒரு பெயர் சொல்கிறீர்களே, அந்தப் பெயர்தான் எங்களுக்கு விளங்கவில்லை. இன்னும் நீங்கள் ஐவரும் இங்கே உள்ளே நுழைந்தவுடன் ‘கயல்’ என்று ஏதோ ஒரு வார்த்தை கூறினீர்கள், அதையும் எதற்காகக் கூறினர்கள் என்று எங்களுக்குப் புரியவில்லை.”
வந்தவர்களின் முகங்களில் குழப்பம் தெரிந்தது. முதலில் அழகன் பெருமாளோடு பேசியவனே திரும்பவும் பேசத் தொடங்கினான்:
“விளங்காமல் இருப்பதற்கும் விளங்காமல் இருப்பது போல் பாவனை காட்டுவதற்கும் வேறுபாடு தெரிய முடியாத அளவுக்கு நாங்கள் சிறுபிள்ளைகள் இல்லை. புரியாமல் இருப்பதற்கும் புரியாததுபோல் நடிப்பதற்கும் உள்ள வேறு பாட்டை எங்களால் புரிந்து கொள்ள முடியும்.”
புதியவனின் இந்த மறுமொழியில் இருந்த உணர்ச்சி வேகமும் கோபமுமே அழகன் பெருமாளின் சந்தேகம் நியாய மானது என்பதை நிரூபித்துவிட்டன. வந்திருப்பவர்களின் உரையாடலில் தமிழ்ச் சொற்கள் எல்லாம் தீர்ந்து போய்த் தாங்கள் களப்பிர ஒற்றர்கள் என்பதை அவர்களாக அறிவிப்பது போல் இயல்பாய் அவர்களால் பேச முடிந்த பேச்சைப் பேசுகிறவரை விடுவதில்லை என்ற பிடிவாதத்துடன் அவர்களைத் திகைக்கச் செய்தான் அழகன் பெருமாள். அவன் எண்ணி எதிர்பார்த்தது நடந்தது. நடிப்பதற்குரிய வார்த்தைகள் தீர்ந்து வந்தவர்கள் கைகளைப் பிசைந்து கொண்டு நிற்க நேர்ந்த சமயம் பார்த்து அழகன்பெருமாள் சிரித்துக் கொண்டே...
“நல்லது! நீங்கள் விடைபெற்றுப் புறப்படவேண்டிய நேரம் வந்து விட்டது. இதோ உங்கள் பணியாரக் கூடையையும் எடுத்துக் கொண்டு போகலாம். களப்பிரர்கள் விருந்தினருக்கு நஞ்சு கலந்த பணியாரங்களை உணவாகப் படைக்கும் அசுர வழக்கத்தை எப்போது கற்றார்கள் என்று எங்களுக்கு வியப்பாயிருக்கிறது. ஆனாலும் அதற்காக உங்களை நாங்கள் மன்னிக்க முடியும்...”
“குற்றவாளிகள் மன்னிக்க முடியாது. மன்னிக்கப்பட முடியும்!”
“உண்மைதான்! யார் குற்றவாளிகள் என்பது தெரிந்து தான் நான் உங்களை மன்னிக்க முடியும் என்று சொன்னேன். உணவில், நீரில், பாலில் நஞ்சிடுபவர்களை விடப் பெரிய குற்றவாளிகள், நரகத்தில் கூட இருக்க முடியாது.”
“யாரிடம் பேசுகிறீர்கள் என்று தெரிந்துபேசுங்கள்!”
“அதுதான் முதலிலேயே தெரிந்துவிட்டதே ஐயா! தெரிந்துதான் ஒன்றுமே பேசாமல் இருந்தேன். பேசாமல் இருந்தவனை நீங்கள் தான் பேசவைத்தீர்கள். இப்போதோ நான் பேசினால் உங்களுக்கே கோபம் வருகிறது. தப்பிச் செல்ல உதவுவதற்கு வந்திருப்பதாகச் சொல்லிக் கொண்டு வந்தீர்கள். விரோதியைப் போல் கோபித்துக் கொண்டு புறப்படுகிறீர்கள். நீங்கள் நண்பர்கள் போல் வந்ததற்கும் நாங்கள் பொறுப்பில்லை. நீங்கள் விரோதிகள் போல் இப்போது இப்படிக் கடுங்கோபத்தோடு திரும்புவதற்கும் நாங்கள் பொறுப்பில்லை.”
“சிறைப்பட்டிருப்பவர்களுக்கு இவ்வளவு வாய்க் கொழுப்பு ஆகாது.”
“சிறைப்படுத்தியிருப்பவர்களுக்கு இவ்வளவு மமதை இருந்தால், சிறைப்பட்டவர்களுக்கும் ஏதாவது இருக்கத் தானே செய்யும்?”
இதைக் கேட்டு அழகன்பெருமாளை உறுத்துப் பார்த்தார்கள் அவர்கள். அழகன்பெருமாளும் நண்பர்களும் ஒதுங்கி நின்று அவர்களுக்கு வழிவிட்டனர். வந்தவர்கள் ஐவரும் ஏமாற்றத்தோடும் பணியாரக் கூடையோடும் திரும்பிச் சென்றபின்,
“இது ஒரு பெரிய சூழ்ச்சி நாடகம்! நம்மை மாட்ட வைப்பதற்கு மிகமிகத் தந்திரமாக வலை விரித்திருக்கிறார்கள் களப்பிரர்கள். விழிப்பாக இருந்ததால் பிழைத்தோம்” என்று நண்பர்களை நோக்கிக் கூறினான் அழகன்பெருமாள்.
எல்லாரும் பசிக்களைப்போடு இருந்தாலும் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் தப்பிவிட்டோம் என்ற மனநிறைவு புதிய தெம்பைக் கொடுத்திருந்தது.
சில கணங்களுக்குப் பின் அழகன் பெருமாள் தேனூர் மாந்திரீகன் செங்கணானை நோக்கி, “செங்கணான்! காரியத்தைக் கவனிக்கலாம்! தென்னவன் மாறனும், திருமோகூர் மல்லனும் அடைப்பட்டிருக்கும் பாதாளச்சிறை இப்போது இங்கே நாம் நின்று கொண்டிருக்கும் தளத்திற்கு கீழே இருக்கிறது என்றாய்! அதோடு நாம் நிற்கும் இந்தக் கல்தளத்தில் எங்கோ ஓர் கோடியில் சிறைக்குச் செல்லும் படிக்கட்டு ஒன்று இருப்பதாகவும் என்னிடம் இரகசியமாகத் தெரிவித்தாய்! அந்தப் படிக்கட்டை அடைவதற்கு எந்த இடத்தில் தளத்தின் மேற்பகுதிக் கற்களைப் பெயர்க்க வேண்டும் என்பதை வந்து காட்டு!” எனக் கட்டளையிட்டான். மாந்திரீகன் மைச்சிமிழை மீண்டும் எடுத்துப் பார்த்துவிட்டுச் சிறிது சிந்தித்த பின் ஈசானிய மூலையில் இரண்டு வரிசையான அடுத்தடுத்த தளக்கற்களை அவற்றின் மேல் நடந்து காட்டி அடையாளம் சொன்னான்.
உடனே அழகன் பெருமாள் தன்னோடு இருந்தவர் களை அருகில் கூப்பிட்டு அதிக ஒலி எழாமல் அந்த இருதளக் கற்களைத் தூக்கி நகர்த்துமாறு உத்தரவிட்டான். அவர்கள் மூச்சு திணறும்படி முதற்கல்லைத் தூக்க முயன்று கொண் டிருந்தனர். மூச்சு இரைக்கும் அந்த ஒலி கூடக் காட்டிக் கொடுத்துவிடுமோ என்று தயக்கமாகவும் பயமாகவும் இருந்தது அழகன் பெருமாளுக்கு. சிறிது நேரத்தில் முதற் கல்லைப் பாதி நகர்த்திவிட்டார்கள் நண்பர்கள். கீழே இறங்கும் படிக்கட்டுகள் கூடத் தெரிந்தன. பாசி படிந்து வழுக்கலாக இருந்த முதற் படியைக் கைநீட்டித் தொட்டுப் பார்க்கக் கூட முடிந்தது.
அந்த நேரம் பார்த்து வெளியே வீரர்கள் புடை சூழ மாவலி முத்தரையரும், பூத பயங்கரப் படைத் தலைவனும் துழைந்து இவர்கள் இருந்த சிறைக்கோட்டக் கதவைத்திறந்து கொண்டு உள்ளே வரலானார்கள். அழகன் பெருமாள் திடுக்கிட்டுப் போனான். செய்துகொண்டிருந்த காரியத்தை எப்படி உடனே மறைப்பது என்று புரியவில்லை. பின்புறம் திரும்பி நண்பர்களுக்கு அவன் சைகை செய்யக் கூட அவகாசம் இல்லை. அவர்களும் உள்ளே வரத் தொடங்கிவிட்டார்கள். வருகிறவர்களை முன்பாகவே எதிர் கொண்டு சென்றான் அழகன்பெருமாள். திகைப்பினால் அவன் நெஞ்சு விரைந்து அடித்துக்கொண்டது, பதறியது.
------------
நித்திலவல்லி -- இரண்டாம் பாகம் - சிறைக்கோட்டம்
19. மரபு என்னும் மூலிகை
அந்த மலைச் சாரலில் சிலம்பாற்றின் கரையில் பொழுது புலர்வது மிக மிக அழகாயிருந்தது. பசுமைச் செறிவினிடையே பல்லாயிரம் பல்லாயிரம் இரத்தினங் களைக் கீழ்த் திசையிலிருந்து தூவினாற் போலக் கதிரவனின் ஒளி வீச்சுக்கள் நுழைந்தன. பிரம்ம முகூர்த்தமாகிய மங்கல வைகறை வேளையிலேயே மதுராபதிவித்தகர் துயில் எழுந்து புறப்பட்டுவிட்டார். அவரைப் பொறுத்தவரை ஆழ்ந்த உறக்கம் என்பதை நீத்துப் பல ஆண்டுகள் ஆகியிருந்தன. பாண்டிய குலத்தை மறுபடி அறியணை ஏற்றுகிறவரை அவரால் உறங்க முடியாது போலிருந்தது. எப்போதும் எதையாவது சிந்தித்துத் திட்டமிட்டுக் கொண்டே இருந்ததால் அவர் உறங்குவது போல் உடலை மான் தோலில் கிடத்தியிருந்தாலும் அது அறிதுயிலாகவே அமைந்தது. அந்த அறிதுயிலில், நினைப்புகள் உண்டு. செயல்களைப் பற்றிய எதிர்காலச் சிந்தனைகள் உண்டு. தவங்களும் உண்டு. ஆனால், துயில்தான் கிடையாது.
முந்திய இரவில் திருமோகூர்க் கொல்லன் மாறோகவள நாட்டுக் கொற்கைப் பெருஞ்சித்திரனைக் கொற்றவைக் கோயிலில் சந்தித்துத் திருமால் குன்றத்துக்கு அழைத்து வந்ததையும், நவநித்திலங்களைக் கொண்டுவந்து சேர்த்ததையும், புதிய நல்லடையாளச் சொல்லை நியமித்து அனுப்பி யதையும், இனி விளைய இருக்கும் மேல் விளைவுகளையும் சிந்தித்தபடியே சிலம்பாற்றில் நீராடச் சென்று கொண்டிருந்தார் அவர். நிழல்போல் அவரைப் பாதுகாத்துப் பின் தொடரும் ஆபத்துதவிகள் இருவர், ஒரு பனைத் தூரம் பின்னால் அவரைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தனர்.
அவர் சிலம்பாற்றின் கரையை அடைந்தபோது வேறொரு திசையிலிருந்து எதிர்ப்பட்ட முனையெதிர் மோகர் படைவீரர்கள் இருவர் அவரிடம் ஏதோ சொல்ல வந்தவர்கள் போல வணங்கி நின்றனர். அவர்கள் கூற வந்ததைக் கேட்கக் கருதி அவருடைய விரைந்த நடை தயங்கியது. இந்த மூப்பிலும் அவர் நடை மற்றவர்களால் உடன் தொடர முடியாத அளவு வேகமாக இருக்கும். வில்லிலிருந்து புறப்பட்ட அம்பு போல் விரையும் அந்த நடையைத் தொடர முடியாமல், காராளரும், கொல்லனும், பிற வீரர்களும் பலமுறை சிரமப் பட்டிருக்கிறார்கள். நடையைப் போலவே பலவற்றில் அவரைப் பின் தொடர முடியாதவர்களாகவே இருந்தார்கள் அவர்கள்.
அவரை எதிர்கொண்டு வந்த முனையெதிர் மோகர் படை வீரர்கள் பணிந்த குரலில் கைகட்டி நின்று கூறலாயினர்:
“ஐயா! நேற்றிரவு திருமோகூர்க் கொல்லன் இங்கு அழைத்து வந்த கொற்கை நகரப் பிள்ளையாண்டான் இன்னும் உறக்கத்திலிருந்து எழுந்திருக்கவில்லை. நன்றாக உறங்கிக் கொண்டிருக்கிறார். எழுப்பலாமா கூடாதா என்றும் தெரியவில்லை. நேற்று இரவு எங்களிடம் ஒப்படைக்கும் போது, ‘காலையில் அந்தப் பிள்ளை தங்களைக் காண வேண்டியிருக்கும்’ என்று கூறி உறங்கிக் கொண்டிருப்பவரை எழுப்பி அழைத்துவருகிறோம்...”
“வேண்டியதில்லை! அவன் உறங்கட்டும். நன்றாக உறங்கட்டும். அவனைப் போன்றவர்கள் உறங்கினாலும், விழித்திருந்தாலும் ஒன்றுதான்!”
அவருடைய மறுமொழி கிடைத்ததும் விரைந்து திரும்பினார்கள் அவர்கள். ஏதோ சொல்ல நினைத்தவர் போல் அவர்களில் ஒருவனை மீண்டும் கை தட்டி அழைத்தார் அவர். இருவரில் ஒருவன் அவரருகே வந்தான். குரலை முதலில் தணித்து அவன் காதருகே ஏதோ கூறிய பின்
“ஞாபகம் வைத்துக்கொள் மறந்து விடாதே. மீண்டும் என்னிடம் வந்து தெரிவிக்க வேண்டும் என்று எதையோ உரத்த குரலில் சொல்லி அவனை அனுப்பினார். ஏதோ ஒரு சக்தி வாய்ந்த வேரினால் தந்தகத்தி* (பல் விளக்குதல்) செய்து முடித்தார் அவர். வயதிலும் கட்டுவிடாமல் வரிசையாக மின்னிய வெண் பற்கள் அவருடைய தவம், உடலைப் பாதுகாத்திருக்கும் பான்மையைக் காட்டியது. சிலம்பாற்று நீர் படிகம்போல் இருந்ததனாலும், தெளிவின் காரணமாகவும் ஆழம் கண்டு பிடிக்க இயலாததாயிருந்தது. முழங்காலளவு கூட ஆழம் இராதோ என்று தோன்றிய நீரில் அவர் இறங்கி நின்றபின் அவருடைய உயரத்துக்கே மார்பளவு மூழ்கியது. தவத்தினால் மலமாசுகளைச் சுட்டெரித்த அந்தச் செம்பொன் மேனி நீர் நடுவே பெரிய செந்தாமரைப் பூ ஒன்று பூத்து நிற்பது போல் காட்சி அளித்தது.
ஆற்று நீரில் மூன்று முறை மூழ்கி எழுந்து கிழக்கு நோக்கிக் கதிரவனை வணங்கி நியமங்களைச் செய்தபோது அவர் விழிகளில் தெய்வீக ஒளி மின்னியது. குளிர்ந்த நீரில் அமிர்தத்தைப் போல் உடலை நித்திய இளமையுடன் வாழ வைக்கும் ஆற்றல் இருக்கிறது என்று நம்பினார் அவர். தமிழில் நீர்மை என்ற பதத்துக்குக் குணம், பண்பு என்றெல்லாம் கூடப் பொருள் இருப்பதை பலமுறை சிந்தித்து வியந்திருக்கிறார் அவர். குணங்களின் உருவகமே பழகும் தண்ணீரின் மகத்துவத்தினால்தான் அமைகிறதோ என்று கூட அவர் நினைத்ததுண்டு. சிலம்பாற்று நீரோ மேனியில் மிருதுவாக பட்டு ஒழுகுவது போல்படும் தன்மையை உடையது. பட்டுப் போன்ற பனிநீர் அவரை அதிக நேரம் விரும்பி நீராடச் செய்தது அன்று.
‘கொல்லன் இந்நேரத்திற்குள் வையைக் கரையில் திரு மருத முன்துறைக்குப் போய் அங்கே புதிய நல்லடையாளச் சொல் பற்றிய செய்தி பரவச் செய்துவிட்டு உடனே விடிவதற்குள் திருமோகூர் திரும்பிக் கொண்டிருப்பான்’ என்று நினைத்துக் கொண்டார் அவர். இந்தப் புதிய நல்லடையாளச் சொல் போய்ச் சேருவதற்குள் பழைய நல்லடையாளச் சொல்லை வைத்து எதிரிகள் எதுவும் குழப்பங்கள் புரிந்திருப்பார்களோ என்ற தயக்கமும் ஒரு கணம் அவர் மனத்தில் உண்டாயிற்று அப்போது. அப்படிக் குழப்பங்கள் நடந்திருக்க முடியாது என்பதும் அடுத்தகணமே அவருடைய மாசுமறுவற்ற மனத்தில் தெளிவாகத் தோன்றியது.
நீராடிக் கரையேறி மீண்டும் தம்முடைய தனி இடத்துக்குத் திரும்பி அவர் வழிபாட்டையும், நியமங்களையும் முடித்துக் கொண்டு எழுந்தபோது காலையில் சந்தித்த முனையெதிர் மோகர்களில் ஒருவன் திரும்பி வந்து அவரைக் காணக் காத்திருந்தான்.
‘என்ன?’ என்று பார்வையாலேயே அவனை வினாவினார் அவர். அந்தக் கூரிய பார்வையில் உள்ளடங்கி நிற்கும் கேள்வியும் குறிப்பும் வந்தவனுக்குப் புரிந்தன. அவன் மெல்லிய குரலில் அருகே நெருங்கிக் கூறினான்:
“ஐயா! இன்னும்கூட அந்தக் கொற்கை நகர்ப்பிள்ளை யாண்டான் எழுந்திருக்கவில்லை. தாங்கள் கூறியனுப்பியபடி அவனுடைய வலது தோளின் மேற்பகுதியைப் பார்த்தேன். அங்கே சங்கு முத்திரை பொறிக்கப்பட்டிருந்தது. தங்கள் கட்டளையின்படியே இதைத் தங்களிடம் தெரிவித்து விட்டுப் போகவே வந்தேன்.”
“நல்லது! அவன் உறங்கி எழுந்ததும் நீராடிப் பசியாறிய பின் அவனை நீயே இங்கு என்னிடம் அழைத்து வர வேண்டும். இப்போது நீ போகலாம்” என்று அவனிடம் ஆணையிட்டு அனுப்பினார் மதுராபதி வித்தகர். அவன் புறப்பட்டுச் சென்ற பின்பும் சிறிது நேரம் வரை அவர் ஏதோ சிந்தனையில் இலயித்தவராக அங்கேயே நின்று கொண்டிருந்தார். வலிமையும் கம்பீரமும் வாய்ந்த சிங்கம் ஒன்று காட்டில் தனியே நின்று கொண்டிருப்பது போல் அந்த நிலையில் அவர் காட்சியளித்தார். நேர் எதிரே அம்பு பாய்வதுபோல் பார்க் கின்ற அந்தப் பார்வையும், சூழ இருந்த மலையின் பசுமை அடர்த்தியும், பாறைப் பிளவாகிய குகை வாயிலும் சேர்ந்து அப்போது அவரைச் சிங்கத்தோடு ஒப்பிடுவதற்கு மிகவும் பொருத்தம் அளித்தன.
சிறிது நேரத்திற்குப் பின் உள்ளே திரும்பி, பாறைப் பிளவில் மிகவும் பத்திரமாக மறைத்து வைத்திருந்த ஓலைப் பெட்டியை எடுத்து அதில் முடிச்சுப்போல் தென்பட்ட பட்டுத்துணிப் பொதியை அவிழ்த்து ஒன்பது முத்துக்களையும் கூர்ந்து கவனித்தார். உருண்டு திரண்டு அளவில் சற்றே பெரியனவாகவும், நிலவின் ஒளியை உமிழ்வதுபோல் குளிர்ந்த கதிர் விரிப்பனவாகவும் இருந்த அந்த வெண்முத்துக்களை என்ன காரணத்தாலோ நெடுநேரம் கண்களை இமையாமல் பார்த்துக் கொண்டிருந்தார் அவர். பார்த்து முடித்ததும் மீண்டும் அந்த முத்துக்களை அவை இருந்த பட்டுத் துணியிலேயே கவனமாக முடிந்து வைத்தார். பின்பு அதே ஓலைப் பேழையினுள் இருந்து சில தாமிரத் தகடுகளையும், ஓலைச்சுவடிகளையும் எடுத்துத் தனித்தனியே பார்த்தார். பாண்டிய குலத்தின் அரச வம்சாவளியைப் பற்றியும், களப்பிரர்கள் கைப்பற்றி ஆளத் தொடங்கிய பின் அந்தப் பழைய பாண்டிய வம்சத்தின் கடைசிக் கொழுந்துகள் எப்படி எங்கே யார் யாராக எஞ்சியிருக்கின்றன என்ற குறிப்புகள் பற்றியும் அந்தச் செப்பேடுகளிலும், ஓலைச் சுவடிகளிலும், மதுராபதிவித்தகரின் தந்தையார், பாட்டனார், முப்பாட்டனார் காலத்துக் கணக்குகள் எழுதப்பட்டிருந்தன.
அவைகளைப் பரிசீலனை செய்து பரிசோதனை பார்த்த பின் கைவசம் இருந்த வெற்று ஓலைகளில் எழுத்தாணியால் ஏதேதோ குறித்து ஒரு கணக்குப் பார்த்தார் மதுராபதி வித்தகர். நாள், நட்சத்திரம், திதி, உட்படப் பல பிறப்புக் கணிதக் குறிப்புக்கள் அந்த ஓலைகளிலே இருந்தன. சில கணிப்புக்களை எழுதியபோது மேலே எழுதத் தோன்றாமல் அவர் கையும் தயங்கி நடுங்கியது. முகமும் இலேசாக இருண்டது. வேறுசில குறிப்புக்களை எழுதும்போது அவர் கை விரைந்து உற்சாகமாக எழுதியது. முகத்திலும் கண்களிலும், ஒளியும், மகிழ்ச்சியும் மெல்லிய சாயல்களாகத் தென்பட்டன. களப்பிரர் கொடுங்கோலாட்சி ஒழிந்து மீண்டும் பாண்டியர் பேரரசு தழைப்பதற்கான சாத்திய அசாத்தியங்களை நாள்களாலும், கோள்களாலும் கணித்துப் பார்க்க முயன்றார் அவர். அவர் முகத்தில் மாறிமாறி இருளும் ஒளியும் தெரிந்தன. சில நாழிகை நேரம் இந்தக் கணிப்பில் கழிந்தது.
அரும்பெரும் மூலிகை ஒன்றைப் பத்திரமாகச் சேகரித்து வைப்பது போல் அந்த மாபெரும் இரகசியங்களை இத்தனை காலமாகக் கட்டிக்காத்து வந்திருக்கிறார் அவர். பாண்டியர் மரபில் தானறிய மீதமிருந்த ஐவரில் இருவர் களப்பிரர்களால் கொலை செய்யப்பட்ட காலங்களையும் எண்ணிப் பார்த்தார் அவர். சுவடிகளில் அந்த இருவரின் பிறப்பு, வளர்ப்பு, நாள் கோள்களைப் பற்றிப் படித்தவுடன், அது தொடர்பான கழிவிரக்க நினைவுகளையும் துயரங்களையும் அவர் மனம் அடைந்தது. இறந்து விட்டவர்களைக் கழித்து மீதியிருக்கும் மூவரைக் கணக்கிட்டபோது மூன்று முனைகளை உடைய ஒரு திரிசூலம் தான் அவருக்கு உருவகமாக நினைவில் தோன்றியது. அந்தத் திரிசூலத்திலும், ஒரு முனை மிகவும் மருங்கிக்குன்றிப் போயிருந்ததுபோல் பட்டது. தென்னவன் சிறுமலை மாறனும், திருக்கானப்பேர்ப் பாண்டியர் குல விழுப்பரையரின் பேரன் இளையநம்பியும், எவ்வளவிற்குக் கூர்மையாகவும், எதிரிகளைப் பாய்ந்து அழிக்கும் வல்லமை உடையவர்களாகவும் இருந்தார்களோ, அவ்வளவிற்கு மூன்றாமவனாகிய கொற்கைப் பெருஞ்சித்திரன் எதற்கும் பயனற்ற மந்தத் தன்மை உடையவனாக இருந்தான். பெரியவர் மதுராபதி வித்தகருக்கு இது முன்பே தெரியும் என்றாலும், இளையநம்பியையும், தென்னவன் மாறனையும் பற்றிய நம்பிக்கையில் இந்த மூன்றாமவனைப் பற்றிய பலவீனத்தை மறந்திருந்தார் அவர். எங்கெங்கோ மறைந்து வளர்ந்து வந்த இந்த மூவருமே இப்போது பாண்டியர் கோநகரை நெருங்கி வந்திருக்கிறார்கள் என்பது அவருக்கு நம்பிக்கையை அளித்திருந்தது. பொருளுக்கு உரிமையும் உடமையும் கொண்டாட வேண்டியவர்கள் அதன் மிக அருகே நெருக்கமாக வந்து விட்டார்கள் என்பது பொருள் நிச்சயம் மீட்கப்படும் என்று நம்புவதற்கு இடம் கொடுத்தது. ஓலைப் பேழையை மூடிப் பட்டுக் கயிற்றால் கட்டி மீண்டும் அதனைப் பாறைப் பிளவில் மறைத்து வைத்துவிட்டு அவர் திரும்பி நிமிர்ந்தபோது முனையெதிர் மோகர் படையின் அந்த வீரன், கொற்கைப் பிள்ளையாண்டானோடு அங்கே உள்ளே வந்து கொண்டிருப்பதைக் கண்டார்.
-------------
நித்திலவல்லி -- இரண்டாம் பாகம் - சிறைக்கோட்டம்
20. பெருஞ்சித்திரன் பேசினான்
நீராடிப் புலர்த்திய கூந்தல் முதுகில் புரள அந்தக் கூந்தலோடு தெரிந்த அவன் முகம் பெண் பிள்ளை ஆண்கோலம் புனைந்து வருவது போலிருந்தது. பெரிய வரை வணங்குவதற்காகத் தரையில் நெடுஞ்சாண்கிடையாக அவன் விழுந்த போது கூட இயல்பாக வணங்குவதற்குக் கீழே கிடப்பது போல அமையாமல் நாணிக் கோணித் தடுக்கி விழுவதுபோல் அமைந்தது. வணங்குகிறவனை வாழ்த்தவேண்டுமே என்ற முறைக்காகப் பெரியவர் அவனை வாழ்த்தினார்.
“நீ பாண்டியகுல அரசுடைமைச் சின்னங்களாகிய நவநித்திலங்களை இங்கே கொண்டுவந்து சேர்த்திருக்கிறாய்! அதற்காக உனக்கு நன்றி சொல்ல வேண்டும்! உன் குடும்பத்து உடைமையை அந்தக் குடும்பத்தில் ஒருவனாகிய நீயே கொண்டு வந்திருப்பதற்கு நான் நன்றி கூறுவது முறையில்லை என்றாலும் உன்னை ஒத்த பருவத்து விடலைப் பிள்ளைக்கு நன்றியும் பாராட்டும் பெரிய மகிழ்ச்சியைக் கொடுக்கலாம் என்பதை உணர்ந்தே நான் இப்படிப் பாராட்டுகிறேன்.”
அந்தப் பிள்ளை விடலைத்தனம் நீங்கிப் பொறுப்புள்ளவனாக வளர்ந்திருக்கிறானா இல்லையா என்பதை மிகமிகத் தந்திரமான முறையில் பரிசோதனை செய்ய விரும்பித்தான் அவர் இவ்வாறு சிறிதும் பொருத்தமற்ற விதத்தில் சற்றே அதிகமான வார்த்தைகளைக் கொட்டி அவனுக்கு நன்றி கூறியிருந்தார். தகுதியற்றவனைத் தூற்றி வசை பாடித்தான் அவமானப்படுத்தவேண்டும் என்பதில்லை; அளவற்றுப் புகழ்வதன் மூலமாகவும் அவமானப்படுத்த முடியும். எதிரிகளை வசைபாடி அவமானப்படுத்துவது பாமரர்கள் காரியம். துதிபாடி அவமானப்படுத்துவது அரச தந்திரிகள் காரியம். கொற்கைப் பெருஞ்சித்திரன் மதுராபதி வித்தகருக்கு எதிரி இல்லை என்றாலும் பலவீனமான துணைவனாகவே இருந்தான். முதல் தரமான விரோதியை விடப் பலவீனமான நண்பன் கெடுதலானவன் என்று பெரியவருக்குத் தெரியும்.
தான் அவனுக்கு நன்றி கூறி அவன் நவநித்திலங்களைக் கொற்கையிலிருந்து கொண்டு வந்து சேர்த்ததைப் பாராட்டிய வஞ்சப் புகழ்ச்சியைப் புரிந்துகொண்டு உடனே அவன், “ஐயா, நீங்கள் இந்த எளியேனை நன்றி கூறிப் பாராட் டலாமா? நானும் என் மரபினரும் தங்களுக்கு அல்லவா கல்பகோடி காலத்துக்கு நன்றி சொல்ல வேண்டும்?” என்பதாக உபசாரத்துக்காகவாவது சொல்கிறானா இல்லையா என்று எதிர்பார்த்தே அவர் பேசியிருந்தார். அரச குடும்பத்துப் பிள்ளைக்கு இருக்கவேண்டிய தந்திரமும், உடனே அநுமானித்து முடிவெடுக்கும் இயல்பும் இந்தப் பிள்ளையிடம் சிறிதேனும் இருக்கிறதா, இல்லையா என்று முடிவாக அறியவே அவர் இதைச் செய்ய வேண்டியிருந்தது.
கொற்கைப் பெருஞ்சித்திரனோ அவர் தன்னைப் புகழ்ந்து நன்றி சொல்லுவதை மெய்யாகவே வார்த்தைக்கு வார்த்தை பொருளுள்ளதாக எடுத்துக் கொண்டு மகிழ்ந்து முகம் மலர்ந்தான்.அதோடு அமையாமல், “ஐயா வழி நடைக் களைப்பும் சோர்வும் எனக்குச் சொல்லி மாளாத அளவு வேதனையைக் கொடுத்து விட்டன. இந்த முனையெதிர் மோகப் படை வீரர் மட்டும் வந்து என்னை எழுப்பியிருக்க வில்லையாயின் இன்னும் மூன்று நாளானாலும் என்னுடைய தூக்கம் கலைந்திருக்காது” என்றான் பெருஞ்சித்திரன். மதுராபதி வித்தகர் பொறுமையாக அதைக் கேட்டுக் கொண்டார். அவர் மனம் உள்ளே நகைத்தாலும் முகம் சலனமற்று இருந்தது.
“அப்படியா? நாம் நன்றாக உறங்க வேண்டும் என்பதற்காகத்தானே களப்பிரர்கள் நமக்குப் பல்லாண்டு காலமாக ஆட்சிப் பொறுப்பிலிருந்து ஓய்வு கொடுத்திருக் கிறார்கள் பெருஞ்சித்திரா? கொற்கையில் இவ்வளவு காலமாக நீ செய்து கொண்டிருந்ததும் அதுதானே?”
அவருடைய அந்தக் கேள்விக்கு அவன் மறுமொழி கூறவில்லை. இப்போது அவன் தலை குனித்து நின்றான். அவர் தன்னைப் புகழவில்லை என்பதும் சினத்தோடு எள்ளி நகையாடிப் பேசுகிறார் என்பதும் மெல்ல அவனுக்கு உறைத்து விட்டது. எனவே, அவனால் அவருக்கு உடனே மறுமொழி எதுவும் கூற முடியவில்லை.
“சோனகர் நாட்டிலிருந்து வரும் குதிரைக் கப்பல்கள் கொற்கைத் துறைக்கு வந்து விட்டனவா, இல்லையா? அந்தக் கப்பல்கள் பற்றிய விவரங்களை உடனுக்குடன் அனுப்ப வேண்டும் என்று கூறியிருந்தும் நீ அதன்படி செயல்பட வில்லை.”
“...”
“கொற்கைக் குதிரைக் கொட்டாரத்து இளநாக நிகமத்தான் எப்படி இருக்கிறான்? அவனுக்காவது பாண்டிய மரபின் மேல் இன்னும் நன்றியும் நம்பிக்கையும் நன்றாக இருக்கிறதா இல்லையா?”
“...”
“நீ விழித்துக் கொண்டிருக்கிறாயா? அல்லது என் எதிரே நின்றபடியே உறங்குகிறாயா என்பதாவது எனக்கு உடனே தெரிய வேண்டும்! நான் கேட்கக் கேட்க நீ பதிலே சொல்லாமல் நின்று கொண்டிருந்தால் என்ன அர்த்தம்!”
இந்தக் குரலின் கனம் தன்னை அழுத்துவது போல் உணர்ந்தான் கொற்கைப் பிள்ளையாண்டான். அவனுடைய நா பேச மேலெழாமல் ஒட்டிக் கொண்டாற் போல ஆகி விட்டது. துணிந்து பேசலாம் என்றாலோ நாக்குழறி விடுமோ என்றும் பயமாக இருந்தது. அவருடைய கண்கள் இரண்டும் இமையாமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தன. ஒவ்வொரு வார்த்தையாக மெல்ல அவன் பேசலானான்.
“குதிரைக் கப்பல் வந்து சில நாட்கள் ஆகிவிட்டன... ஆனால், அந்தக் குதிரைகளை எல்லாம் உடனேயே அங்கிருந்து இங்கே கோநகரத்துக்குக் கொண்டு... வந்து விடமாட்டார்கள். ஏறக்குறைய ஆறு திங்கள் காலமாவது அவற்றைப் பழக்கி வசப்படுத்திய பின்பே ஏறிப் பயணம் செய்யவோ, தேர்களில் பூட்டவோ, கடிவாளமிடவோ, அவை பயன்பட முடியும்.”
“போதும்! போதும்! பேச்சை நிறுத்து. எனக்கு நீ குதிரையின் விலங்கியல்புகளைப் பற்றிப் பாடம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. கப்பல்கள் வந்தாயிற்றா இல்லையா என்பதுதான் உன்னிடமிருந்து எனக்குத் தெரியவேண்டும்.”
“அதுதான் வந்தாயிற்று என்று முதலிலேயே சொன்னேனே...?”
“குதிரைக் கோட்டத்து இளநாக நிகமத்தான்* (* வணிகன்) பற்றி நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னும் மறுமொழி கூறவேயில்லையே?”
“அவர் என்னிடம் மனம்விட்டு எதுவும் பேசு வதில்லை. நாளும், நேரமும் குறிப்பிட்டு நவநித்திலங்களைக் கொண்டு வந்து சேர்க்குமாறு நீங்கள் செய்தியனுப்பிய பின் என்னைக் கூப்பிட்டுப் பல அறிவுரைகளும், எச்சரிக்கைகளும் செய்த பின் திருமோகூருக்கு அனுப்பி வைத்தார். இன்னொன்று இப்போதுதான் நினைவு வருகிறது. நான் அங்கிருந்து புறப்படு முன் தங்களிடம் தெரிவிப்பதற்கென்று ஏதோ சில அந்தரங்கமான செய்திகளைத் தொகுத்து என்னிடம் உரைப்பதாகக் கூறியிருந்தார். புறப்படும் முன்பாக நானும் அவற்றை எல்லாம் நினைவூட்டிக் கேட்டேன். ஆனால் என்ன காரணத்தாலோகடைசியில் எதுவும் கூறாமலே முத்துக்களுடன் அவர் என்னை அனுப்பிவிட்டார்....”
“கூறுகிறவருக்கு நம்பிக்கை ஏற்படுத்த முடியா விட்டால் கூறப்படுகிறவர்களால் எதையும் பெறமுடியாமல் போவது இயல்பு...”
“...”
“நிகமத்தான் இங்கு வருவதாகச் சொன்னானா?”
“என்னிடம் அப்படி ஏதும் சொல்லவில்லை... ஆனால், வந்தாலும் வரலாம் ஐயா!”
“பதில் மட்டும் போதும் உன்னுடைய அநுமானமோ உய்த்துணர்வோ எனக்குத் தேவையில்லை. ஏனெனில் அவற்றைச் செய்யவோ, சொல்லவோ போதிய பக்குவம் உனக்கு வந்திருப்பதாகத் தோன்றவில்லை. இப்போது நீ போகலாம். நான் மறுபடி சொல்கிறவரை நீ இங்கிருந்து எங்கும் போகக்கூடாது. இந்த மலை எல்லையில் இதோ உன் அருகில் இருக்கிறானே இவன் உன்னைப் பாதுகாத்துக் கொண்டு எப்போதும் உன்னோடு இருப்பான். நீயாகத் தனியே எங்காவது செல்ல முயன்றாயோ களப்பிரர்கள் பனங்காயைச் சீவுவதுபோல் உன் தலையைச் சீவி விடுவார்கள்...”
இதைக் கேட்டு அவன் முகத்திலும் கண்களிலும் பயத்தின் சாயல் வந்து படர்ந்தது. அவரை வணங்கிவிட்டு வெளியே இருந்த முனையெதிர் மோகர் படைவீரனோடு போய்ச் சேர்ந்து கொண்டான் அந்த இளைஞன். அந்தக் காவல் வீரனை மட்டும் தனியே உள்ளே கையசைத்து அழைத்தார் மதுராபதி வித்தகர். அவன் வந்தான்.
“அதிக எச்சரிக்கையோடு கவனித்துக் கொள்! இந்தப் பிள்ளையாண்டானைப்போல் மன உறுதியற்றவர்கள் எதிரிகளிடம் சிக்கிவிட்டால் அதைப்போன்று வினை வேறு இல்லை” என்று அவனிடம் பெருஞ்சித்திரனைப் பற்றி அழுத்தமாக எச்சரித்து அனுப்பி வைத்தார் அவர்.
அவர்கள் சென்றபின், அவர் சிந்தனையில் இளைய நம்பியையும், தென்னவன் மாறனையும், பெருஞ்சித்திரனையும் ஒப்பு நோக்கிய பல்வேறு எண்ணங்கள் எழுந்தன. இளையநம்பியை விட வலியவனும், மூத்தவனும் ஆகிய தென்னவன் மாறனின், முன்கோபமும், முரட்டுத் தனமும் கூட ஓரளவு குறைபாடுடைய அரச குணங்களாகவே அவருக்குத் தோன்றின. இணையற்ற அரசகுணம் என்பது பிறருடைய சிந்தனைக்கு உடனே பிடிபடாத பல தந்திரங் களைக் கொண்டது. அது இளையநம்பியிடமும் அதிகமாக வளர்ந்திருப்பதாக அவருக்குத் தோன்றவில்லை. ஆனால் இளையநம்பியிடம் அவர் எதிர்பார்க்கும் அரச சுபாவங்களை உண்டாக்கி பக்குவப்படுத்துவதற்கான மூலக்கூறு இருப்பதாகத் தோன்றியது அவருக்கு.
இவர்களில் மூன்றாமவனாகிய பெருஞ்சித்திரனைப் பற்றி அவர் நினைக்கவே ஒன்றும் இல்லாமல் போயிற்று. அவர் சிந்தனை பாண்டிய நாட்டின் நாளைய தினங்களைப் பற்றியதாக இருந்தது. அதில் கவனம் செலுத்தும் கடமையும் அவருக்கு இருந்தது.
அந்த வேளையில் முற்றிலும் எதிர்பாராதவிதமாக அவருடைய ஆபத்துதவிகள் இருவரும் பரபரப்பாக அங்கே மூச்சு இரைக்க உள்ளே நுழைந்தனர். அவர்கள் வந்த நிலை மிகமிகப் பதற்றமானதாக இருக்கவே அவர் சலனமடைந்தார். ஏதோ புதிய அபாயம் நெருங்கியிருக்க வேண்டும் என்பது ஒன்று மட்டுமே அப்போது அவருக்குப் புரிய வந்தது.
------------
நித்திலவல்லி -- இரண்டாம் பாகம் - சிறைக்கோட்டம்
21. ஒரு போதையின் உணர்வுமே
பெரியவர் மதுராபதி வித்தகரின் புதிய நல்லடையாளச் சொல் பற்றிய ஓலையை வையை யாற்றின் திருமருத முன்துறையில் வரிசையாக இருந்து மருத மரங்களில் ஒன்றில் வைத்துவிட்டு, விடிவதற்குச் சில நாழிகைகள் இருக்கும் போதே திருமோகூர் திரும்பியிருந்தான் கொல்லன். ஊர் திரும்பியதும் உடனே காராளரைச் சந்தித்துப் புதிய நல்லடையாளச் சொல்லை அறிவிக்க வேண்டியிருந்தாலும், பூத பயங்கரப் படையினருக்காக ஒரு போக்குக் காட்ட நினைத்துத் தன் உலைக்களத்திற்குச் சென்றான் அவன். விடாத நடையினால் கைகால்கள் சோர்ந்திருந்தன. கண்களில் உறக்கம் வந்து மன்றாடிக் கொண்டிருந்தது. விடிகின்றவரை காத்திருக்க முடியாமல் அவன் மனம் பரபரப்படைந்தது. காராளரைச் சந்திக்க விரும்பியது.
அதே வேளையில் திருமோகூர் பெரியகாராளர் மாளிகையில் வேறோர் மெல்லிய இதயமும் உறக்கமின்றி சிந்தித்துத் தவித்துக் கொண்டிருந்தது. வைகறையின் தண்மையில் பூக்கள் இதழ் விரிக்கும் அந்த அருங்காலை வேளையில் செல்வப் பூங்கோதையின் இதய மலரும் இதழ் விரித்து மணம் பரப்பிக் கொண்டிருந்தது. அந்த ஒரு பெரிய மலரில் பல்லாயிரம் பூக்கள் நறுமணமும் ஒருங்கிணைந்தது போல் அவ்வளவு நினைவுகளை அவள் நினைத்திருந்தாள். பூட்டி வைத்தாலும் பேழைக்கு உள்ளேயே மணக்கும் சந்தனத்தைப் போல் நினைவுகள் அவள் உள்ளத்தில் மணந்து கொண்டிருந்தன. அவளுடைய இந்த நிலையை அவள் தாயும் கண்டிருந்தாள்.
“உறங்கவில்லையா மகளே? இரவு முழுவதும் உன் கைகளின் வளை ஒலிகளையும், நீ படுக்கையில் புரள்வதையும், பெருமூச்சு விடுவதையும் நான் கண்விழித்த போதெல்லாம் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். ஏன் இப்படி இருக்கிறாய்? எதை நினைத்து வேதனைப்படுகிறாய்? உன்னிடம் ஏற்பட்டிருக்கும் மாறுதல்களை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லையடீ பெண்ணே...?” என்று எதை நன்றாகவும் தெளிவாகவும் புரிந்து கொண்டிருந்தாளோ, அதை ஒரு சிறிதுமே புரிந்து கொள்ளாதவள் போல் பேசினாள் செல்வப்பூங்கோதையின் தாய். ஒரு தாய் புரிந்து கொண்டா லும், புரிந்து கொண்டிருப்பதை உடனே மகளிடம் வெளிக் காட்டிக் கொள்ளக்கூடாத மிக நுண்ணிய உணர்வைச் செல்வப்பூங்கோதையின் தாயும் அப்போது அடைந்திருந்தாள். தான் நினைப்பவை எதுவும் தாய்க்குப் புரியவில்லை என மகளும், தான் புரிந்து கொண்டவை எதுவும் மகளால் அறிந்து கொள்ளப்படவில்லை எனத் தாயும் தத்தமக்குள் எண்ணிக் கொண்டிருந்தார்கள். திருப்திப்பட்டுக் கொண்டிருந்தார்கள்.
செல்வப் பூங்கோதை மிகவும் சாதுரியமாக நடந்து கொள்கிறவளைப் போல், “அம்மா! அந்தத் திருக்கானப்பேர் இளைஞர் மீண்டும் பெரியவர் மதுராபதி வித்தகரைச் சந்திக்க வேண்டும் என்று விரும்பி, அவர் இப்போது இங்கே இல்லாததைப் பற்றித் தெரியாமல் அவரைக் காணலாம் என்னும் ஆசையில் இங்கே புறப்பட்டு வந்தால் என்ன செய்வது? களப்பிரர்கள் இந்த ஊரெல்லாம் மூலைக்கு மூலை பூதபயங்கரப் படையினரை உலாவ விட்டிருப்பதும், பெரியவர் இந்த ஊரைவிட்டு வெளியேறியிருப்பதும் அவருக்குத் தெரியுமோ, தெரியாதோ?” என்று தன் அன்னையைக் கேட்டாள். மகள் தன் சொற்கள் மூலமே வகையாக மாட்டிக் கொள்வதைப் புரிந்து கொண்ட தாய் அதற்காக உள்ளூறச் சிரித்துக் கொண்டாள். அன்பும், பிரியமும் தன் மகளை எவ்வளவு பேதைமையுள்ளவளாக்கி விட்டன என்று எண்ணிப் பார்த்தாள் தாய். அன்பைப் பிடிவாதமாகச் செய்வதற்குப் பேதைமையும் ஓரளவு வேண்டும் என்றே தோன்றியது தாய்க்கு. பேதைமை அறவே இல்லாத காய்ந்த அன்பில் எந்த நெகிழ்ச்சியும் இருக்க முடியாது என்பதையும் அவள் உணர்ந்திருந்தாள். பெரியவர் திருமோகூரை விட்டு வெளியேறியிருப்பதும், பூதபயங்கரப் படையின் தொல்லைகள் பெருகியிருப்பதும் முறையாகவும், மிக விரைவாகவும் இளையநம்பிக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் என்பதை அறிந்திருந்தும் மகள் ஏன் இப்படி அறவே அறியாதவள்போல் தன்னை அதுபற்றி வினாவுகிறாள் என்பது புரிந்து நினைத்தாள் தாய். யாரிடமாவது உடனே திருக்கானப்பேர் இளைய நம்பியைப் பற்றிப் பேசவேண்டும் என்ற மகளின் ஆர்வத்தை இதிலிருந்து தாய் அறிந்து கொள்ள முடிந்தது. எதையோ மிகவும் திறமையாக ஒளிக்க முயல்கிறவளைப் போன்ற முயற்சியில் அதையே வெறொரு விதத்தில் தெளிவாகத் தெரியச் செய்து கொண்டிருக்கும் மகளின் நிலைமையைப் புரிந்து கொண்டாலும் அவள் மனம் அந்தப் பேதைமையில் நினைப்பதனால் அடைய முடிந்த மகிழ்ச்சியைத் தான் தடுக்கக் கூடாதென்று மகளை விடப் பெரிய பேதையைப் போல் நடித்தாள் தாய். அந்த நடிப்பையும் அவள் மகளுக்காகவே செய்ய நேர்ந்தது.
“நீ நினைப்பதுபோல் ஆண்பிள்ளைகளும் அரச கருமத்தில் ஈடுபட்டிருப்பவர்களும் அவ்வளவு வெள்ளை யாக நடந்து கொண்டு எதிரிகள் கையிலே சிக்கிவிட மாட்டார்கள் பெண்ணே” என்று தாய் மகளுக்கு மறுமொழி கூறிக்கொண்டிருந்த வேளையிலேயே மாளிகையின் முன் கூடத்தில் காராளரும் கொல்லனும் பேசும் குரல்கள் உட்புறம் கேட்கத் தொடங்கின. அப்போது ஏறக்குறையப் பொழுது புலர்கிற வேளை ஆகியிருந்தது. கூட்டத்திலிருந்து கேட்க முடிந்த பேச்சுக் குரல்களைக் கொண்டு உய்த்துணர்ந்து கொல்லன் திரும்ப வந்திருக்க வேண்டும் என்பதைச் செல்வப் பூங்கோதையும் தாயும் புரிந்துகொண்டனர். உடனே மாளிகைக் கூடத்துக்கு ஓடிப்போய்க் கொல்லன் தந்தையாரி டம் என்ன கூறுகிறான் என்பதையும், தந்தையார் அவனிடம் எதை எதை வினாவுகிறார் என்பதையும் ஒட்டுக்கேட்க ஆவலாயிருந்தது செல்வப் பூங்கோதைக்கு. ஆனால் நன்றாக விடியாத அந்த இருட்காலையில் அவசர அவசரமாக எழுந்து ஓடிப்போய்த் தந்தையாருக்கு முன் நிற்கவும் தயக்கமாக இருந்தது மகளுக்கு. ஒருவேளை தாய் எழுந்து போய்த் தந்தையாரும், கொல்லனும் பேசுகிற இடத்தில் நின்று கொண்டால் தானும் தாயோடு சென்று நிற்க முடியும் என்று தோன்றியது மகளுக்கு. அவள் தாயைக் கேட்டாள்:
“அம்மா! கொல்லன் மறுபடியும் திரும்ப வந்திருக்கிறான் போலிருக்கிறதே; தந்தையும், கொல்லனும் பேசிக்கொள்ளும் குரல் கேட்கிறதே?”
“ஆமாம்! கொல்லன் வந்திருக்கிறான்...”
“நான் எழுந்திருந்து போக நேரமாகவில்லையா அம்மா? நீராடப் போகும் வேளையாகிவிட்டதே!”
“மகளே! நீராடப் போவதற்காகப் புறப்பட வேண்டுமா? அல்லது கொல்லனும் உன் தந்தையும் உரையாடுவதைக் கேட்க வேண்டுமா? உன் மனம் எனக்குப் புரிகிறது” என்று கேட்டுவிட்டு மெல்லச் சிரித்தாள் செல்வப் பூங்கோதையின் தாய். மகள் தன் குறிப்புத் தாய்க்கும் புரிந்துவிட்டதை அறிந்து நாணினாள்.
தன் அந்தரங்கத்தைப் புரிந்துகொண்ட அன்னையின் முன் பேசத் தயங்கிச் சில கணங்கள் வாளாவிருந்தாள் செல்வப் பூங்கோதை.
ஆயினும் மகளின் மனங்கோணாமல் நடந்துகொள்ள ஆசைப்பட்ட தாய் நீராடப் பொய்கைக்குச் செல்வது போல் குடத்தோடு மகள் பின் தொடரக் கூடத்தில் போய் நின்று கொண்டாள். இருவரும் கூடத்தில் நுழைந்த வேளையில்
“...சிறைப்பட்டு விட்டவர்களைக் களப்பிரர்களிடம் இருந்து மீட்பது மிக மிகக் கடினமாகத் தோன்றுகிறது” என்று கொல்லன் பெரிய காராளரிடம் கூறிக் கொண்டிருந்தான். அவ்வளவில் தாயும், மகளும் எதிர்பாராத விதமாகப் பெரிய காராளரும், கொல்லனும் பேசிக்கொண்டே வெளியேறிப் போய்விட்டார்கள். அதிகாலையிலே நெற்கழனிகளிடையே வரப்புக்களில் நடந்து உலவித் திரும்புகிற வழக்கத்தை உடைய காராளர், கொல்லனையும் பேசிக் கொண்டே தன்னோடு வருமாறு கூப்பிட்டுக் கொண்டு போய் விட்டார் என்பதை அவர்கள் உணரமுடிந்தது.
ஆனால், கொல்லனின் வாய் மொழியாய் அரைகுறையாகக் கேட்ட அந்த வாக்கியம் மட்டுமே அவள் மனத்தில் அல்லாத பொல்லாத சந்தேகங்களை எல்லாம் உண்டாக்கிவிட்டது. எந்த உரையாடலை ஒட்டுக் கேட்டுக் கொண்டு நின்றால் தன் இதயத்தைக் கொள்ளை கொண்டவரைப் பற்றிய செய்திகள் தெரியும் என்று நம்பி அவள் தாயோடு எழுந்து வந்தாளோ அந்த நோக்கம் இப்போது வீணாகிவிட்டது. ஆனாலும் கூட்டத்திற்குள் நுழைந்த வேளையில் காதில் விழுந்த வாக்கியத்தில், ‘களப்பிரர்களிடம் இருந்து மீட்பது மிகமிகக் கடினமாகத் தோன்றுகிறது...’ என்று குறிப்பிட்டது யாரை எண்ணிக் குறிப்பிட்டதாக இருக்கும்? ஒருவேளை திருக்கானப்பேரைச் சேர்ந்தவர் கோநகரில் ஏதாவது தீய சூழ்நிலையின் காரணமாகக் களப்பிரர்களிடம் சிக்கிக் கொண்டு விட்டாரா? அவரை மீட்பது தான் கடினமாகத் தோன்றுகிறது என்று கொல்லன் தந்தையிடம் கூறிக் கொண்டு போகிறானா? என்றெல்லாம் எண்ணி எண்ணிச் சஞ்சலமும் சலனமும், கவலையும் அடைந்து கொண்டிருந்தது அவள் உள்ளம்.
“அம்மா! நீயும், நானும் இங்கே உள்ளே நுழைந்து கொண்டிருந்தபோது அவர்கள் பேசிக் கொண்டிருந்ததை நீ கேட்டாயா? ஏதோ கவலைப்படுவதற்குரிய காரியம் நடந்திருக்கிறது. இல்லாவிட்டால் இவ்வளவு தீவிரமாகச் சிந்தித்தபடியே பேசிக் கொண்டு வெளியே போக மாட்டார்கள் அவர்கள் இருவரும். என் மனமோ காரணம் புரியாமலே வேதனை கொள்கிறது. நீ என்ன நினைக்கிறாய்? கடவுள் அருளால் யாருக்கும் எந்தக் கெடுதலும் வராது அல்லவா?” - என்று உருகி நெகிழ்ந்த குரலில் தாயைக் கேட்டாள் செல்வப் பூங்கோதை, பெண்ணின் பேதைமையையும் காரணமற்ற சந்தேகங்களையும் எள்ளி நகையாடிப் பேசிவிட முடியும் என்றாலும் அவளுடைய இளமை உள்ளம் வாடி விடாமல் பாதுகாக்கக் கருதிய தாய், “நீ நினைப்பது போல் கவலைப்படுவதற்குரிய காரியங்கள் எவையும் நடந்திருக்க முடியாது பெண்ணே! ஆலவாய் இறைவனும், இருந்த வளமுடைய பெருமாளும் அவருக்கு ஒரு கெடுதலும் வராமல் உற்ற துணையாயிருப்பார்கள் என்ற நம்பிக்கையும், மனோதிடமும் உனக்கு வேண்டும்” என்று ஆறுதலாக மறுமொழி கூறினாள்.
தந்தையும், தாயும்கூடப் புரிந்து கொள்ள முடியாத குறிப்பான வார்த்தைகளில் கொல்லனிடம் திருக்கானப்பேர் நம்பியின் நலனையும், பிற நிலைமைகளைப் பற்றியும் ஏதாவது விசாரிக்கலாம் என்று செல்வப் பூங்கோதை எண்ணியிருந்தாள். கொல்லனும் தந்தையும் தற்செயலாகப் பேசிக்கொண்டே வெளியேறி விட்டதால் அவள் நினைத்ததைச் செய்ய இயலவில்லை.
“நீங்களும் இங்கே அவரை நினைத்து உருகித் தவிக்கிறீர்கள். அங்கே அவரும் உங்களை நினைத்து உருகித் தவிக்கிறார். இந்தப் பாழாய்ப் போன களப்பிரர் ஆட்சி ஒழிந்ததுமே உங்கள் இருவருக்கும் நல்லகாலம் விடியும் அம்மா!” - என்பதாகச் சென்ற முறை மதுரையிலிருந்து திரும்பியதும் கொல்லன் கூறியிருந்த ஆறுதலையே இப்போது மீண்டும் நினைத்துக் கொண்டு தாயோடு நீராடி வரப் புறப்பட்டாள் செல்வப் பூங்கோதை, தான் இங்கே எக்காலமும் அவரை நினைத்து உருகித் தவிப்பது போல் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது மதுரை மாநகரில் அவர் தன்னை நினைத்துத் தவிப்பாரா என்று எண்ணி எண்ணி மனம் மருகினாள் அவள். அவர் தன்னை எண்ணி உருகுவதாகக் கொல்லன் வந்து கூறியிருந்தாலும் பேதையாகிய தான் தவிக்கும் தவிப்பிற்கும் விர ஆண்மகனாகிய அவர் தன்னை நினைக்கும் ஞாபகத்திற்கும், நிறைய வேறுபாடு இருக்கும் என்றே செல்வப் பூங்கோதைக்குத் தோன்றியது.
-------------
நித்திலவல்லி -- இரண்டாம் பாகம் - சிறைக்கோட்டம்
22. களப்பிரர் கபடம்
கொல்லன் திருமருத முன்துறையில் இருந்து மோகூர் திரும்பித் தன் உலைக்களத்தில் சிறது நேரம் தங்கிய பின் விடிவதற்குச் சிறிது நாழிகைக்கு முன்புதான் காராளர் மாளிகைக்குச் சென்றான். அவன் செல்வதற்கு முன்பே காராளர் பள்ளி எழுந்து கழனிகளைச் சுற்றிப் பார்த்து வருவதற்காக மாளிகையிலிருந்து புறப்பட்டுக் கொண்டிருந்தார். கொல்லனைக் கண்டதும், “நேற்றைக்கு நள்ளிரவே பூத பயங்கரப் படை அறவே மோகூரிலிருந்து திரும்பிச் சென்று விட்டது. இனி நமக்கு எந்தக் கவலையும் இல்லை! எனக்கும் என் மாளிகையைச் சேர்ந்தவர்களுக்கும் இந்தச் சில நாட்களில் பூத பயங்கரப் படையினரால் நேர்ந்த பரிசோதனைகளையும், காவல்களையும் மறந்து எப்போதும் போல் அரண்மனையோடும் நல்லுறவும், நட்பும் கொண்டிருக்க வேண்டும் - என்று அரண்மனையிலிருந்து எனக்குச் சொல்லி அனுப்பி விட்டார்கள்!” என்று காராளர் அவனிடம் கூறினார். இதைக் கேட்டவுடனே கொல்லன் எவ்வளவு உற்சாகத்தை அடைவான் என்று காராளர் எதிர்பார்த்திருந்தாரோ அவ்வளவு உற்சாகத்தை அவன் அடையவில்லை. அவர் கூறியதற்கு அவனுடைய பதில் உணர்வு என்ன என்பதே அவருக்குப் புரியவில்லை. அது அவருக்கு வியப்பை அளித்தது. மேலும் வெளிப்படையாக வலிந்து அவனிடம் அவரே கேட்டார்:
“இது பற்றி நீ என்ன நினைக்கிறாய்? திருமோகூரைப் பற்றியும், என்னைப் பற்றியும் களப்பிரர்களுக்கு ஏற்பட் டிருந்த சந்தேகங்கள் தீர்ந்துவிட்டன என்று எனக்குத் தோன்றுகிறது...”
“பொறுத்தருள வேண்டும் ஐயா! எனக்கு அப்படித் தோன்றவில்லை. இதில் ஏதோ கபடம் இருக்கக் கூடும் என்றே நான் நினைக்கிறேன். இங்கிருந்து தான் நம்முடைய மிகப் பெரிய அந்தரங்கமான நல்லடையாளச் சொல் அவர்களுக்கு எட்டியிருக்கிறது. இங்கேயிருந்து தான் தென்னவன் மாறனையும், அறக் கோட்டது மல்லனையும் அவர்கள் சிறைப் பிடித்திருக்கிறார்கள். உங்களையும் சில நாட்கள் இந்த மாளிகை எல்லைக்குள்ளேயே காவலில் இருக்கச் செய்து வெளியேற விடாமல் தடுத்திருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இங்கே என்னிடமே ஒரு பூத பயங்கரப்படை வீரன் தேடி வந்து நம் நல்லடையாளச் சொல்லைக் கூறிப் பதிலுக்கு நான் எப்படி நடந்து கொள்கிறேன் என்பதைப் பரிசோதித்து விட்டான். பெரியவருடைய எச்சரிக்கை மனத்தில் இருந்ததால் நான் சாதுரியமாக அந்தப் பரிசோதனையில் தப்பினேன். இல்லா விட்டால் களப்பிரர்களிடம் சிறைப்பட்டிருக்க நேர்ந்திருக்கும். முன்பு சிறைப்பட்டவர்களையே களப்பிரர்களிடம் இருந்து மீட்பது மிகமிகக் கடினமாகத் தோன்றுகிறது. இப்போது புதிதாக நானும் மாட்டிக் கொண்டிருந்தால் என்ன ஆவது?”
இங்கே இப்படி, அவன் அவரைக் கேட்டுக் கொண்டிருந்தபோதுதான் மாளிகையின் உட்பகுதியிலிருந்து காராளர் மனைவியும், மகளும் வருவது தெரிந்தது. ஆனால் காராளர் அதற்குள், “வா, பேசிக்கொண்டே உலாவிவிட்டு வரலாம்” என்று அவனையும் அழைத்துக் கொண்டு வெளியேறி விட்டார். அவனும் அவரைப் பின் தொடர்ந்து வெளியேறிச் செல்ல வேண்டியதாயிற்று. ஒரு சில காரணங்களை முன்னிட்டுப் புதிய நல்லடையாளச் சொல் பற்றிய செய்தியை அவரிடம் தனிமையில் கூற விரும்பினான் அவன். அதனால் அவர் அங்கிருந்து வெளியேறிச் செல்ல வேண்டும் என்று கூறியபோது அவனும் அதை விரும்பி உடன் சென்றான். மாளிகையிலிருந்து வெளியேறிச் சிறிது தொலைவு செல்வதற்குள்ளேயே, “பெரியவர் மதுராபதி வித்தகர் எங்கேஎந்தத் திசையில் எவ்வளவு தொலைவில் எப்படித் தங்கியிருக்கிறார்கள்?” என்பதைத் தமக்கு உடனே கூறச் சொல்லி இரண்டு மூன்று முறை கொல்லனை வற்புறுத்தி விட்டார் அவர். தன்னைவிட உயர்ந்தவரும் தன்னைப் போன்றவர்களின் செஞ்சோற்றுக் கடனுக்கும் நன்றிக்கும் உரியவரும் ஆகிய காராளரிடம், “தயை செய்து அதை மட்டும் இப்போது கேட்காதீர்கள்!” என எப்படி கடுமையாக மறுத்துச் சொல்வது என்று புரியாமல் திகைத்தான் கொல்லன். திகைப்பு ஒரு புறமிருந்தாலும் முள்ளிலிருந்து மேலாடையை எடுப்பவன் முள்ளும் குத்தி விடாமல் ஆடையும் கிழிந்து விடாமல் மிக மிகக் கவனமாக ஆடையை எடுப்பது போல் அவர் மனமும் புண்படாமல் தன் உணர்வு பலவீனப்பட்டுப் போகாமல் மிக மிகச் சாதுரியமாக அவருக்கு மறுமொழி கூறினான் கொல்லன்:
“ஐயா தாங்கள் இப்போது என்னிடம் வற்புறுத்திக் கேட்பதைவிடப் பெரிய செய்தி ஒன்றைத் தங்களிடம் கூறுவதற்காகவே பெரியவர் என்னை இங்கே அனுப்பியிருக்கிறார். நமது பழைய நல்லடையாளச் சொல் எப்படியோ எதிரிகளுக்குத் தெரிந்து விட்டது. உடனே அந்தச் சொல்லை மாற்றிப் புதிய சொல்லை நியமிக்காவிட்டால் ஏற்படும் அபாயங்களை உணர்ந்து புதிய சொல்லை நியமித்து அனுப்பி யிருக்கிறார், அவர். அதைத் தங்களிடமும் தங்கள் மூலமாக வேறு சிலரிடமும் அறிவிக்கவே அடியேன் இவ்வளவு அவசரமாக இங்கே வந்தேன்.”
“என்ன சொல் அது? மற்றப் பகுதிகளுக்கும் அதைச் சொல்லி அனுப்பியாயிற்றா, இல்லையா?”
காராளரின் இந்த வினாவுக்கு அதற்கு முன் பேசியது போல் உரத்த குரலில் மறுமொழி கூறாமல் அவர் காதருகே நெருங்கி அவருக்கு மட்டுமே கேட்கிற இரகசியக் குரலில் மறுமொழி கூறினான் கொல்லன். அவரும் அதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டார்.
“நீ எச்சரிப்பதைப் பார்த்தால் இந்தப் புதிய நல்லடையாளச் சொல்லை எல்லாருக்கும் கூறவேண்டாம் என்றல்லவா அர்த்தப்படுகிறது?”
“ஆம், ஐயா! அப்போதுதான் இதனுடைய இரகசியத்தைக் காப்பாற்ற முடியும்! சிலரிடம் ‘பழைய நல்லடையாளச் சொல்லை எங்கும் எவர் முன்னிலையிலும் திருப்பிக் கூறக்கூடாது; அது களப்பிரர்களுக்கு வெளிப்படையாகத் தெரிந்து விட்டது’ - என்ற எச்சரிக்கையை மட்டும் செய்தால் போதுமானது. புதியதைச் சொல்லவே வேண்டியதில்லை. புதிய நல்லடையாளச் சொல்லையும் மாற்றும் நிலை வரக்கூடா தென்பதற்காகவே இந்த ஏற்பாடு.’’
“இந்த ஏற்பாடு பாராட்டத்தக்கது தான்! ஆனால், பெரியவர் இங்கே என்னருகில் இல்லாமல் போனால் எந்த ஏற்பாடும் சிறப்பாக நடைபெறாது. அவரை வணங்குவதாலும், வழிபடுவதாலுமே நான் ஆயிரம் யானையின் பலத்தை அடைந்து வந்தேன். சில நாட்களாக அந்தச் சுடரொளி முக மண்டலத்தைக் காணாமல் எனக்குப் பித்துப் பிடித்துவிடும் போலாகி விட்டது. என்னுடைய இந்த மன நிலையை நீயாவது உணர முடியும் என்று நான் நம்புகிறேன். நானாகத் தேடிப்போய் அவரைக் காண அவரது இருப்பிடத்தை நீ எனக்குச் சொல்லமாட்டேன் என்கிறாய். அவராக மீண்டும் நான் நாள்தோறும் காணும்படி இங்கு வந்து தங்கவும் வழி இல்லை என்கிறாய். அவர் தங்கியிருந்த அந்த மாபெரும் ஆலமரத்தையும், அவர் நீராடி எழும் தாமரைப் பொய்கையையும் பார்க்கும் போதெல்லாம் நான் கண்களில் நீர் நெகிழ மெளனமாக அழுவதுபோல் ஆகி விடுகின்றேன். தேர்ந்த வழிகாட்டியை - கிடைப்பதற்கு அரிய குருவை என்னிட மிருந்து விலக்கிக் கொண்டு போய்விட்டு நல்லடையாளச் சொல்லை மட்டும் நீ வந்து எனக்குக் கூறுவதில் பயன் என்ன?”
காராளரின் உணர்ச்சிகளில் இருந்த வேதனை அவனுக்குப் புரிந்தது. ஆயினும் அவனால் அது தொடர்பாக அவருக்கு எந்த உதவியையும் புரிய முடியவில்லை.
“நீங்கள் மதிக்கிற அதே பெரியவரை நானும் மதிப்பதால் தான் அவருடைய இருப்பிடத்தை உங்களுக்குக் கூற முடியவில்லை ஐயா!”
“ஏன் அப்படி? நான் என்னப்பா பாவம் செய்தேன்?”
“அதில் பாவபுண்ணியம் எதுவும் இல்லை. நீங்கள் எங்கே சென்றாலும் பூத பயங்கரப் படை உங்களைப் பின் தொடரும் என்பது இன்னும் கூட உறுதி தான் ஐயா! திருமோகூரை விட்டு நீங்கள் வெளியேறினால் உங்களைப் பின் தொடர்ந்து கண்காணிப்பதற்கு நான்கு திசைப் பாதைகளிலும் ஆட்கள் இருக்கிறார்கள். இங்கிருந்து அறவே வெளியேறி விட்டதாக நீங்கள் கூறும் பூதபயங்கரப்படை நம் ஊரைச் சுற்றிலுமுள்ள எல்லாக் காடுகளிலும் சிறுசிறு பிரிவுகளாகப் பிரிந்து மறைவாகத் தங்கியிருக்கிறது. இதை நீங்கள் அறியமாட்டீர்கள். இப்படி எல்லாம் நீங்கள் அறியவோ, அநுமானம் செய்யவோ கூடாதென்று உங்கள் கவனத்தைத் திசை திருப்பி விடுவதற்குத்தான் களப்பிரர்கள் உங்களைப் பாராட்டி நல்லுறவும் நட்பும் நீடிக்க வேண்டும் என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்கள். அந்த வலையில் நீங்கள் விழாமல் இருக்க வேண்டும். என்னைப் போன்றவர்கள் எப்படியும் தப்பி விடுவோம். ஆனால் நீங்கள் பெரிய வேளாளர். அரசருடைய களஞ்சியங்களுக்கே நெல்லளிப்பவர். எங்கே புறப்பட்டுப் பயணம் செய்தாலும் ஒரு சிறு நில மன்னர் உலாப் புறப்படுவது போல் பல்லாக்கு, சிறு படை எல்லாம் உங்களோடு உடன் வரும். அப்படி நீங்கள் செல்வதால் பெரியவருக்கு ஆபத்துகள் அதிகமாகும் என்று தெரிந்தே உங்களிடமும், கோநகரில் உள்ளவர்களிடமும் இப்போது தாம் இருக்கும் இடத்தைக் கூற வேண்டாம் என்று பெரியவர் தடுத்திருக்கிறார். இது நியாயமானது என்றே நானும் கருதுகிறேன். தவிர, உங்களிடம் பெருந்தயக்கத் தோடு இன்னொரு வேண்டுகோளையும் இப்போது சொல்ல ஆசை!”
“என்ன அது? சொல்லேன்.”
“தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்களே?”
“தவறாக எடுத்துக் கொள்ள இதில் என்ன இருக்கப் போகிறது? ஒரு பொது நோக்கத்திற்காக நாம் யாவரும் சேர்ந்து உழைக்கிறோம். கவலைப்படுகிறோம். கட்டுப் படுகிறோம்.”
காராளர் இவ்வளவு மனம் விட்டுக் கூறிய பின்பும் கொல்லன் தயங்கினான். தலைகுனிந்தான். காராளருக்கும் அது அப்படி என்ன விநோத வேண்டுகோளாக இருக்கும் என்பது புரியவில்லை. அவர் கொல்லனின் முகத்தைப் பார்த்தார்.
----------
நித்திலவல்லி -- இரண்டாம் பாகம் - சிறைக்கோட்டம்
23. இருளில் ஒரு பெண் குரல்
பூத பயங்கரப் படைத்தலைவன் பின் தொடர மாவலி முத்தரையர் சிறைக் கோட்டத்துக்குள் வந்த போது, கீழே பாதாள நிலவறைக்குள் இருந்த தென்னவன் மாறனைக் காண்பதற்காகத் தளத்தின் கற்களைப் பெயர்த்துப் படியிறங்க முயன்று கொண்டிருந்த தானும், தன்னைச் சேர்ந்தவர்களும் அகப்பட்டுக் கையும் களவுமாகப் பிடிபட்டு விடுவோமோ என்று அழகன்பெருமாள் அஞ்சினான்.
அந்த அச்சமும், நடுக்கமும், உந்தித் தள்ளியதால்தான் மாவலி முத்தரையரும், பூத பயங்கரப் படைத் தலைவனும் சிறைக்கோட்டத்திற்கு உள்ளேநு ழைந்து வருவதற்குள்ளேயே அழகன்பெருமாள் எதிர்கொண்டு சென்று அவர்களைச் சந்தித்தான். பணியாரக் கூடையுடன் நண்பர்களைப் போல் நல்லடையாளச் சொல்லைக் கூறிக் கொண்டு வந்திருந்த அந்த ஐவரும், தங்களிடம் தோற்று ஏமாறித் திரும்பிய மறுகணமே மாவலி முத்தரையர் வந்திருப்பதிலிருந்து, ‘அவர்களை அப்படி அனுப்பியதும் இவராகத்தான் இருக்கவேண்டும்’ என்று அழகன் பெருமாளால் அநுமானிக்க முடிந்தது. வந்ததுமே வம்புக்கு இழுத்தார் மாவலி முத்தரையர்:
“நடுவூர் நன்மைதருவார் குலத்து மதுராபதி வித்தகரின் குழுவைச் சேர்ந்தவர்களுக்குப் பசி தாகம் எல்லாம் கூட மறந்து போய்விடும் போலிருக்கிறதே?”
அழகன் பெருமாள் அவருக்கு மறுமொழி எதுவும் கூற வில்லை. அவன் முகத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த அவர், அவனுடைய ஆத்திரத்தைக் கிளறிவிடும் வகையில் ஏளனமான தொனியில் இரைந்து சிரிக்கலானார். இந்தச் சிரிப்பு அவனுக்கு எரிச்சலூட்டுகிறதா, இல்லையா என்பதை அவர் கவனிக்க விரும்பியது போலிருந்தது. அவர் தன் ஆத்திரத்தைத் தூண்டி அதன் மூலம் எதையோ தன்னிடமிருந்து அறிந்துகொள்ள விரும்புகிறார் என்பதை அழகன்பெருமாள் புரிந்துகொண்டான். அவருடைய போக்கைத் தெரிந்து நிதானப்படுத்திக் கொள்கிறவரை தானாக ஆத்திரப்பட்டு எதுவும் பேசுவதில்லை என்ற முடிவை அவன் வகுத்துக் கொண்டிருந்தான்.
அவன் தனக்குப் பயந்து பேசாமல் இருப்பதாக மாவலி முத்தரையர் நினைத்துக் கொண்டார். மங்கலத் தன்மை அறவே இல்லாத அந்தச் சூனியமான முகத்தை இரண்டாவது முறை ஏறெடுத்துப் பார்க்கவும் விரும்பாமல் வெறுப்போடு வேறு திசையிலே பார்த்தான் அழகன் பெருமாள்.
இதற்குள் அழகன்பெருமாளே வியந்து போகும் படியான ஒரு காரியத்தை உள்ளே தளவரிசைக் கல்லைப் பெயர்த்துக் கொண்டிருந்தவர்கள் செய்திருந்தார்கள். பெயர்த்த கற்களை அப்படியே வைத்துவிட்டுக் கல்லைப் பெயர்த்ததால் ஏற்பட்ட பிளவு வெளிப்பட்டுத் தெரிந்து விடாதபடி அதன் மேலேயே கால்களை நீட்டிக்கொண்டு வரிசையாக உட்கார்ந்திருந்தார்கள் அவர்கள். தான் கட்டளையிடவோ, சைகை செய்யவோ முடியாமல் சிறைக்கோட்டத்திற்குள் நுழைகிறவர்களை எதிர்கொள்ளப்போன சமயத் திலும் அவர்கள் தாங்களாகவே எச்சரிக்கையடைந்து தந்திரமாகத் தளத்தில் அந்த இடத்தை மறைத்திருப்பதைக் கண்டு அதைச் செய்த நண்பர்களை மனத்துக்குள் பாராட்டிக் கொண்டான் அழகன் பெருமாள். அடுத்த கணமே மாவலி முத்தரையர் இடிக் குரலில் அவனை வினாவினார்:
“இவர்கள் ஏன் இப்படி வரிசையாக உட்கார்ந்திருக்கிறார்கள்? சிறைப்பட்டிருப்பவர்கள், பெருமைக்குரியவர்கள் உள்ளே வர நேரும்போது எழுந்து நின்று எதிர்கொள்ள வேண்டும் என்பதைக்கூட இவர்கள், மறந்து விட்டார்களா என்ன?”
“பசி தாகத்தினால் அவர்கள் நலிந்து போயிருக்கிறார்கள். உங்கள் சிறைக்கூடத்தில் அகப்பட்டுவிட்டால் உண்ண உணவும், பருக நீரும் கூடத் தருவதில்லை. உண்ணாமலும் பருகாமலுமிருப்பவர்கள் அதற்குக் காரணமானவர்களை எப்படி மதிக்க முடியும்?” என்று அதுவரை பேசாமல் இருந்த அழகன் பெருமாள் பதில் பேசினான். மாவலி முத்தரையரும் கோபத்துடனேயே இதற்கு மறுமொழி கூறினார்.
“இன்னும் சில நாழிகை நேரத்தில் கழுமரம் ஏறிச் சாகப் போகிறவர்கள் உண்டபின் செத்தால் என்ன? உண்ணாமலே செத்தால் என்ன?”
“அப்படியானால் இன்னும் சில நாழிகை நேரத்தில் சாகிறவர்கள் எழுந்து நின்று எதிர்கொண்டால் என்ன? எழுந்து நிற்காமலே எதிர்கொண்டால் என்ன? கொல்லப்படப் போகிறவர்களிடத்தில் கொல்கிறவர்கள் ஏன் முறைகளையும் பெருமைகளையும் எதிர்பார்த்து வருத்தப்பட வேண்டும்?” என்று அவரிடம் பதிலுக்குச் சுடச் சுடக் கேட்டான் அழகன் பெருமாள்.
“எல்லாரையும் கொல்லுவது எங்கள் நோக்கமில்லை. எங்களுக்குப் பயன்படுகிறவர்களையும், உதவி புரிபவர்களையும் நாங்கள் துன்புறுத்துவதும் வழக்கமில்லை” என்று அதுவரை உரையாடலில் கலந்து கொள்ளாமல் இருந்த பூத பயங்கரப்படைத் தலைவன் பேசினான். வந்திருக்கும் இருவருக்குமே தங்களை வசப்படுத்தி உண்மைகளை அறிய முயலும் நோக்கம் இருப்பதை அழகன் பெருமாள் புரிந்து கொண்டான். வந்திருக்கும் இருவரும் அதிக நேரம் சிறைக் கோட்டத்திற்குள் தங்காமல் வெளியேறி விட்டார்களாயின் தானும் நண்பர்களும் உடனே தப்பிவிடலாமென்று விநாடிகளை எண்ணிக் கொண்டிருந்தான் அழகன் பெருமாள்.
ஆனால், மாவலி முத்தரையரோ அந்தச் சிறைக் கோட்டத்தைத் தேடி வந்து அதிக நேரம் அங்கே செலவழிக்கத் திட்டம் இட்டிருந்தவர் போல் மெல்ல ஒவ்வொன்றாகப் பேசிக்கொண்டும் கவனித்துக் கொண்டும் இருந்தார்.
மற்றவர்கள் எல்லாரும் தளத்திலே கற்களைப் பெயர்த்த இடத்தைச் சுற்றி உட்கார்ந்துகொண்டு விட்டதனால் மாவலி முத்தரையருடனோ, பூத பயங்கரப் படைத் தலைவனுடனோ உரையாட அழகன் பெருமாள் தான் எஞ்சியிருந்தான்.
மாவலி முத்தரையர் நயமாகவும் பயமுறுத்தியும் ஏதேதோ பேச்சுக் கொடுத்துப் பார்த்தார். அழகன் பெருமாள் பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் தந்திரமாக அவருக்கு மறுமொழி கூறி வந்தான்.
மாவலி முத்தரையர் கேட்டார்:
“கயல் மீன் அடையாளம் பாண்டிய மரபினருக்குச் சொந்தமானது. இப்போது பாண்டியர்கள் ஆட்சியுரிமையோடு இல்லை என்றாலும், மறுபடி பாண்டியர் நாட்டைக் கைப்பற்றி ஆளவேண்டும் என்று விரும்புகிறவர்கள் இன்றும் அங்கங்கே இருக்கிறார்கள். கயல் என்கிற சொல் தான் அவர்களுடைய தாரக மந்திரமாக இருக்கிறது. இவையெல்லாம் எனக்குத் தெரியும்...”
“அப்படியா?... எனக்கு இவற்றைப் பற்றி எதுவுமே தெரியாது ஐயா” என்றான் அழகன் பெருமாள். இதைக் கேட்டு மாவலி முத்தரையர் பற்களையும் உதடுகளையும் இறுக்கிக் கடித்தது போல் முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு அவனைப் பார்த்தார். அடுத்த கணையை மெல்ல எய்தார்.
“இதைப் பற்றித் தெரியுமா, உங்களைப் போலவே ஏற்கெனவே எங்களிடம் சிறைப்பட்டிருக்கும் அந்தப் புலித்தோல் அங்கி இளைஞன் பாண்டிய அரச மரபைச் சேர்ந்தவன் என்கிற இரகசியத்தையும் நான் அறிவேன்.”
“பொறுத்தருள வேண்டும் ஐயா! தாங்கள் எதைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்; ஏன் என்னிடம் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதே எனக்கு விளங்கவில்லை. நாங்கள் வெறும் குடிமக்கள், எளியவர்கள். அரச மரபுகளையும் அதன் இரகசியங்களையும் பற்றி நாங்கள் கவலைப் பட்டோ, தெரிந்து கொண்டோ ஒன்றும் ஆகப் போவதில்லை” என்றான் அழகன்பெருமாள். முதலில் விடிந்ததும் விடியாததுமாக உண்பதற்குப் பணியாரக் கூடையோடு வந்த ஐவரும் இப்போது வந்திருக்கும் மாவலி முத்தரையரும் ஒரே முயற்சியோடு தான் தங்கள் எதிரே நிற்கிறார்கள் என்பது நன்றாக அழகன் பெருமாளுக்குப் புரிந்து விட்டது. நயமாக முயன்று தங்களிடமிருந்து செய்திகளை அறிய அவர்கள் விரும்புகிறார்கள் என்பது அவனை மிகவும் எச்சரிக்கையாக இருக்கச் செய்தது. மாவலி முத்தரையர் மேலும் அவனைக் கேட்டார்:
“அப்படியானால் உங்களைப்போல எளிய குடிமக்கள் பூத பயங்கரப் படையினரைப் போன்ற மாறுவேடத்தில் கடுமையான பாதுகாப்புகளையும் மீறிக் கோட்டைக்குள் ஏன் வந்தீர்கள்?”
“கோட்டைக்குள் வரும்போது தான் பூத பயங்கரப் படையின் உடையை அணிந்து கொண்டோம் என்பதில்லை. களப்பிரர்களது பூத பயங்கரப் படையினர் உடை எங்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இந்த உடைக்காகவே அப்படையில் சேர நாங்கள் ஆசைப்பட்டது உண்டு. ஆனால் யாரும் சேர்த்துக் கொள்ள மறுத்துவிட்டார்கள். உடைகளில் எங்களுக்குப் பிரியம் அதிகம். இதை நீங்கள் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது.”
இதைக் கேட்டு மறுமொழி கூறாமல் விஷமச் சிரிப்புச் சிரித்து விட்டு வாளாவிருந்தார் மாவலி முத்தரையர். அந்தச் சிரிப்பும் அந்த மெளனமும் அவர் அழகன் பெருமாள் கூறியதை ஏற்கிறாரா இல்லையா என்பதைக் கண்டு கொள்ள முடியாதவையாயிருந்தன.
“மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் பாண்டியர் இயக்கத்துக்குத் தலைவனான வையை வளநாட்டு நடுவூர் நன்மை தருவார் குலத்து மதுராபதி வித்தகன் ஒரு காலத்தில் எனக்கு மிக நெருக்கமானவனாக இருந்து பின் பகைவனாகியவன் என்பதையும் நீ அறிந்திருக்க மாட்டாய்” என்று மீண்டும் அவர் உரையாடலைத் தொடங்கிய விதத்திலிருந்தே அழகன் பெருமாளைப் பழைய வலையில் சிக்க வைக்க முயல்வது தெரிந்தது. நெடுநேரம் இப்படியே எதையாவது பேசிக் கொண்டிருந்தால் எந்த இடத்திலாவது எதிராளி தன்னை அடையாளம் காட்டிக் கொள்ள மாட்டானா என்று அவர் தவிப்பது பேச்சில் தெரிந்தது.
“பகை நட்பு என்பன எல்லார் வாழ்விலும் இருப்பது இயல்பு. தங்களுக்கும் அது ஏற்பட்டிருக்கலாம். ஆனால் அந்த நட்பும் பகையும் தங்களைப் பொறுத்து யாரோடு எப்படி ஏற்பட்டிருக்கும் என்பதை நான் எவ்வாறு அறிய முடியும்?” என்றான் அழகன் பெருமாள்.
இதைக் கேட்டு மீண்டும் அவர் நச்சுப் புன்னகை பூத்தார். அழகன் பெருமாளை ஏற இறங்கப் பார்த்தார். கூறலானர்:
“நீ மிகவும் சாதுரியமானவன் அப்பனே! உன்னிடமிருந்து எதையாவது தெரிந்து கொள்ள முயல்வது என்பது கல்லில் நார் உரிக்கலாம் என்பதைப்போல் அசாத்தியமானதாயிருக்கிறது. ஆனால் சாதுரியங்கள், வார்த்தைகளைப் பாதுகாக்குமே ஒழிய உங்கள் உயிரைப் பாதுகாக்காது என்பதை நினைவு வைத்துக்கொள்...”
“நீங்கள் புகழ்கிற அளவு நாங்கள் சாதுரியம் உள்ளவர்கள் இல்லை. அறியாமையினால் பூதபயங்கரப் படையினரின் உடையை அணிந்து கோட்டையைச் சுற்றிப் பார்க்க வரப் போக, இங்கே சிறையில் சிக்கிக் கொண்டு விட்டோம். இது எவ்வளவு பெரிய பேதைமை?”
“எது பேதைமை? யார் பேதைகள் என்பது போகப் போகத் தெரியும்” என்று கூறிவிட்டு மேலாடையைச் சுழற்றி வீசித்தோளில் சாற்றிக் கொண்டு கோபமாக அங்கிருந்து வெளியேறினார் மாவலி முத்தையர். பூதபயங்கரப்படைத் தலைவனும் சிறைக்கோட்டக் கதவுகளைப் பூட்டிக்கொண்டு அவரைப் பின் தொடர்ந்து அவரோடு சென்றான். அவர்கள் இனிமேல் தங்களை உயிரோடு விடுவது சந்தேகமே என்ற அளவு அழகன்பெருமாளுக்குப் புரிந்துவிட்டது.
உடனே கற்களை நகர்த்தித் தளவரிசையை மூடினார்கள். கீழ் நோக்கி இறங்கிய படிகளும் சுவரும் அகழி நீர்ப் பரப்புக்குச் சமமான பள்ளமாயிருந்ததனால் நீர் கசிந்து வழுக்கின. இருட்டு வேறு மைக்குழம்பாயிருந்தது. படிகளைக் கடந்து கீழே பாதாளச்சிறைக்குள் வந்து விட்டோம் என்ற நிலைமையை உணர்ந்ததும் அழகன் பெருமாள், தென்னவன் மாறனை மெல்லக் கூப்பிட்டான். பதில் இல்லை. பசியினா லும், களைப்பினாலும் தென்னவன் மாறனும், அவனோடு இருக்கும் திருமோகூர் அறக் கோட்டத்து மல்லனும் சோர்ந்து தளர்ந்து பதிலுக்குக் குரல் கொடுக்கவும் ஆற்றலற்றுப் போய்விட்டார்களோ என்று அழகன் பெருமாள் தவித்துக் கொண்டே கைகளால் துழாவிய போது, கிணற்றின் ஆழத்திலிருந்து ஒலிப்பதுபோல் ஒரு பெண் குரல் அங்கே ஒலித்தது.
அழகன் பெருமாளும் அவனோடு இருந்தவர்களும் திகைத்தார்கள்.
“நீங்கள் யாரைத் தேடி வந்திருக்கிறீர்களோ அவர்கள் இருவரும் இங்கிருந்து தப்பிவிட்டார்கள்! உயிர் வேண்டுமானால் நீங்களும் இங்கிருந்து உடனே தப்ப வேண்டும். அபாயம் உங்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது” என்று மீண்டும் அந்தக் குரல் ஒலித்தபோது, அந்தக் குரல் யாருடையது என்பது அழகன் பெருமாளுக்கு ஞாபகம் வந்து விட்டது. அது காமமஞ்சரியின் குரல் என்பதை அவன் உணர்ந்தான்.
அவள் காலடியோசை நடந்த திசையைப் பின்பற்றி அவர்கள் நடந்தார்கள். இருளில் மற்றொரு படிக்கட்டை அவள் அடையாளம் காட்டினாள்.
“ஐயா! இதன் வழியே சென்றால் நடுவூரில் உள்ள வசந்த மண்டபத்து நந்தவனத்தின் அருகே கொண்டு போய்விடும். அப்புறம் அங்கிருந்து தப்ப வேண்டியது உங்கள் பொறுப்பு. இந்தப் பேதை இதற்குப் பிரதிபலனாக உங்களிடம் வேண்டுவது ஒன்றே ஒன்றுதான். உங்கள் ஆண் அழகரும் பெரு வீரருமான தென்னவன் மாறனார் என்னை வெறும் காமக் கணிகை என்று மட்டுமே நினைத்திருந்தார், வெறுத்தார், அலட்சியப் படுத்தினார். இங்கிருந்து தப்பிய விநாடிவரை என்னைப் பொறுத்து அவர் கருத்து மாறியதா இல்லையா என்றே எனக்குத் தெரியாது. இப்படி இங்கே வந்து அவரையும், உங்களையும் தப்பவிட்டதன் மூலம் உயிரை இழக்க நேர்ந்தால் கூட என் வாழ்வின் பெரும்பாக்கியமாக அதை நான் கருதுவேன் என்பதை அவரிடம் தயை கூர்ந்து நீங்கள் சொல்ல வேண்டும். என் உடலை அவரிடம் இழக்கும் பாக்கியம் தான் எனக்குக் கிடைக்கவில்லை. என் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அவருக்காக இழக்கும் பாக்கியத்தைப் பெறுவேன். அதற்கு அவர் கூடக் குறுக்கே நிற்கமுடியாது” என்று அவள் கூறியபோது அழகன் பெருமாளின் மனம் நெகிழ்ந்தது. மற்றவர்களுக்கோ கண்ணில் நீர் நெகிழ்ந்தது.
------------
நித்திலவல்லி -- இரண்டாம் பாகம் - சிறைக்கோட்டம்
24. வழியும் வகையும்
அந்தப் பெண் காம மஞ்சரிக்கு ஆறுதலாக ஏதேனும் இரண்டு நல்ல வார்த்தைகள் கூறி விட்டுப் படியில் இறங்க விரும்பினான் அழகன்பெருமாள். அவளோ அவனையும், மற்றவர் களையும் விரட்டாத குறையாக விரைவுபடுத்தினாள்.
“மேலேயுள்ள சிறையிலிருந்து உங்களையும், கீழே இந்தப் பாதாளச் சிறையிலிருந்து அவர்கள் இருவரையும், கொலைக் களத்துக்கு இழுத்துச் செல்ல ஆட்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஒரு கணம் தாமதித்தால் கூட ஆபத்து.”
“இந்தப் பேருதவிக்கு எப்படி நன்றி கூறுவது என்றே தெரியவில்லை அம்மா?” என்று அவன் கூறத் தொடங்கு முன்பே அவனைப் படிக்கட்டில் இறங்குமாறு கரங்களைப் பற்றிக் கொண்டு இறைஞ்சத் தொடங்கிவிட்டாள் காமமஞ்சரி.
அழகன் பெருமாளைப் பின்தொடர்ந்து மற்றவர்களும் அந்த நிலவறை வழியில் இறங்கினார்கள். அவர்கள் சிறிது தொலைவு நடந்ததும் அந்த நிலவறை வழி மேற்புறமாக மூடப்பட்ட ஓசையும் அதையடுத்து ஒரு மெல்லிய பெண் குரல் விசும்பி விசும்பி அழும் ஒலியும் தெளிவாகக் கேட்டன.
“வாழ்க்கை எவ்வளவு விநோதமானது பார்த்தாயா? உதவி செய்கிறவர்கள் எங்கே எப்படி எப்போது எதிர்ப்படுவார்கள் என்று தெரியாமல் எதிர்ப்படுகிற விநோதத்தை எப்படி வியப்பதென்றே தெரியவில்லை செங்கணான்?” என்று தேனூர் மாந்திரீகனிடம் கூறிக்கொண்டே இருளில் நடந்தான் அழகன்பெருமாள். ‘இவ்வளவு மென்மையான மன முள்ள பெண்ணையா அன்று பயமுறுத்தினோம் நாம்?’ என்று எண்ணியபோது அழகன் பெருமாளுக்கு இதயம் கூசியது.
இருளில் கைகோர்த்தபடி ஒருவர் பின் ஒருவராக நெடுநேரம் நடந்தார்கள் அவர்கள்.
“ஐயா! அவள் கூறியதிலிருந்து நம் தென்னவன் மாறனும், மல்லனும் கூடச் சிறிது நேரத்திற்கு முன்பே இந்தப் பாதை வழியாகத் தப்பியிருக்கவேண்டும் என்று தெரிகிறது. நாம் விரைந்து நடந்தால் பாதை முடிந்து வெளியேறுகிற மறுமுனையில் அவர்களைச் சந்தித்துவிடலாம் அல்லவா?” - என்று அழகன்பெருமாளைக் கேட்டான் கழற்சிங்கன். அவர்களைச் சந்திக்க முடியுமா, முடியாதா என்பது பற்றி அழகன்பெருமாளால் அதுமானிக்க முடியாமல் இருந்தது. ஆயினும் “சந்திக்க முயல்வோம்” என்று நம்பிக்கையோடு கழற்சிங்கனுக்கு மறுமொழி கூறியிருந்தான் அழகன் பெருமாள். காமமஞ்சரி செய்திருக்கும் உதவியையும், தியாகத்தையும் பற்றிய சிலிர்ப்பு இன்னும் அவன் மனத்தில் இருந்தது.
‘அன்பு என்பது பெண்ணின் இதய ஊற்று! அவள் களப்பிரப் பெண்ணாயிருந்தால் என்ன? தமிழ்ப் பெண்ணாயிருந்தால் என்ன? அவள் பெண்ணாயிருப்பதை நிரூபித்துக் கொள்ள அன்புதான் ஒரே அடையாளமாயிருக்கிறதே தவிர மொழியும், இனமும், குலமும் அடையாளங் களாவதில்லை. எங்கே அன்பு முதிர்கிறதோ அங்கே விளைகிறாள். கனிகிறாள். பெண்ணாகிறாள். எப்படியோ இருந்த இந்தக் காமமஞ்சரி என்ற அரண்மனைக் கணிகையை நம்முடைய முரட்டுத் தென்னவன் மாறன் பாகாய் உருகிப் பணியவைத்து விட்டானே? இவன் அவளை வெறுத்தும் அவள் இவனுக்காக உயிரை விடத் துடிக்கிறாளே; இந்த அன்பை என்னவென்று வியப்பது! அரசர்களின் பகை இதயங்களின் கனிவைத் தடுக்கக்கூட முடியவில்லையே? இது பெரிய விந்தைதான்...’ என்று எண்ணி வியந்தபடியே இருளில் நடந்து கொண்டிருந்தான் அழகன்பெருமாள்.
காமமஞ்சரி எச்சரித்ததில் ஒரு சிறிதும் மிகையாக இருக்க முடியும் என்று அழகன் பெருமாளுக்குத் தோன்றவில்லை. அன்றிரவுக்குள் எப்படியும் மாவலி முத்தரையர் தங்களையும், தென்னவன் மாறனையும், மல்லனையும் கொன்று விடக்கூடும் என்பது அவனே அநுமானித்திருந்தது தான். தன்னை அவர் தந்திரமாக வினாவியிருந்த வினாக்களுக்குத் தான் கூறியிருந்த எந்த மறுமொழியும் அவரைச் சந்தேகங்களிலிருந்து விடுவிக்காததோடு அவருடைய சந்தேகங்களை மேலும் அதிகமாக்கி விட்டிருக்கக் கூடுமென்றே அவன் புரிந்து கொண்டிருந்தான். அப்படிப் பார்க்கும்போது இவள் செய்திருக்கும் உதவி காலமறிந்து செய்த பேருதவி என்பதில் அழகன் பெருமாளுக்கு ஒரு சிறிதும் சந்தேகமே ஏற்பட வில்லை. இருளில் அபயம் அளிக்க வந்தது போல் ஒலித்த அவளுடைய சோகக் குரலை மீண்டும் நினைவு கூர்ந்தான் அவன். கோட்டைக்குள் தானும் நண்பர்களும் நுழைந்தபோது சிறைக் கோட்டத்துக்கு அவள் வழி சொல்லிய உதவியைவிட இப்போது செய்திருப்பது பெரியதும் அரியதும் ஆகிய உதவி என்று அழகன்பெருமாள் மட்டுமின்றித் தப்பிச் சென்று கொண்டிருந்த நண்பர்கள் எல்லாருமே நினைத்தார்கள்.
நடந்து போய்க் கொண்டிருக்கும் போதே காரி ஓர் ஐயப்பாட்டை வினவினான்:
“ஐயா! இந்த வழி மதுரை மாநகரின் நடுவூர்ப் பகுதியிலுள்ள வசந்த மண்டபத்து நந்தவனத்தில் கொண்டு போய்விடும் என்று அவள் கூறினாள். அங்கிருந்து அப்புறம் நாம் எங்கே போவது? எப்படிப் போவது? உபவனத்துக்குப் போவதா? இரத்தின மாலையின் மாளிகைக்குப் போவதா? வசந்த மண்டபத்தில் இருந்து நாம் நகரில் பிரவேசிப்பது துன்பங்களைத் தராது என்பது என்ன உறுதி? வசந்த மண்டப வழியாக வெளியேறாமல் இதே நிலவறை வழிக்குள்ளேயே சிறிது நேரம் தங்கலாம் என்றால் சிறைக் கோட்டத்திலிருந்து பூத பயங்கரப் படை இதே வழியில் நம்மைப் பின் தொடர்ந்தால் என்ன செய்வது? இதையெல்லாம் நாம் இப்போதே சிந்தித்துக் கொண்டு விடுவது நல்லது அல்லவா? வருமுன் காத்துக்கொள்வது தானே சிறப்பு?”
அழகன்பெருமாள் மறுமொழி கூறினான்:
“நீ வினாவிய வினாக்கள் எல்லாமே சிந்திக்க வேண்டியவை தான்! ஆனால் ஒன்றே ஒன்றை மட்டும் நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். சிறைக் கோட்டத்திலிருந்து தப்பிக் கொண்டிருக்கிற நம்மை இதே வழியாகப் பூத பயங்கரப் படை பின் தொடரும் என்று சந்தேகப்படுகிறாயே; அதுமட்டும் நடக்காது. அந்தப் பெண் காமமஞ்சரி நுணுக்கமான அறிவுள்ளவள். பூத பயங்கரப் படையினரின் கவனத்தைத் திசைதிருப்ப ஏற்ற விதத்தில் நிலவறை வழியைப் பற்றி அவர்களுக்கு ஒரு சிறிதும் சந்தேகமே எழாதபடி வேறொரு வழியைக் கூறி அந்த வழியாக நாம் தப்பி ஓடியதைத் தான் கண்டதாக விவரிப்பாள் அவள்.
“இருக்கலாம்! ஆனால், மாவலி முத்தரையர் இவளைப் போல் ஒரு பெண்பிள்ளை கூறுவதற்கு நேர் மாறாகத்தான் முடிவு செய்வார். அவருடைய சாதுரியம், இவளைப்போல் நூறு பெண்களின் பொய்யை நிலை நிறுத்தி முடிவு செய்கிற அளவு கபடமானதாயிற்றே?”
“சிந்திக்கவேண்டிய காரியம்தான்; மாவலி முத்தரையர் வந்து குறுக்கிட்டால் நடப்பது வேறாகத்தான் இருக்கும்.”
“அவர் குறுக்கிடாமல் இருப்பார் என்று நான் நினைக்கவில்லை ஐயா.”
காரி, மாவலி முத்தரையரின் பெயரை இழுக்கவும் மிக மிகத் துணிவாயிருந்த அழகன் பெருமாளின் மனத்தில் கூடக் கவலை வந்து சூழத் தொடங்கியது. நடையும் தடைப்பட்டது. எப்படி மறுமுனையில் வெளியேறித் தப்புவது என்பதைப் பற்றியும் ஏற்கனவே வெளியேறியிருக்கிற தென்னவன் மாறனும், மல்லனும் என்ன நிலையை அடைந்திருப்பார்கள் என்பது பற்றியும் அழகன்பெருமாள் ஆழ்ந்து சிந்திக்கத் தொடங் கினான். வழி தெரிந்தது, ஆனால் வகை தெரியவில்லை.
----------
நித்திலவல்லி -- இரண்டாம் பாகம் - சிறைக்கோட்டம்
25. இருளும் வடிவும்
தன்னுடன் பேசிக்கொண்டே வந்த கொல்லனின் வேண்டுகோள் என்னவாக இருக்கும் என்பது புரியாமல் முதலில் காராளர் திகைத்தாலும் அவன் அதை வாய்விட்டுக் கூறியவுடன் திகைப்பு நீங்கி தெளிவடைந்து விட்டார்.
“ஐயா! புதிய நல்லடையாளச் சொல்லைப் பொறுத்த அளவில் தாங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பழைய நல்லடையாளச் சொல் எப்படியோ எதிரிகளுக்குத் தெரிந்து விட்டாலும் அது எதிரிகளுக்குத் தெரிந்து விட்டது என்பதை உரிய வேளையில் விரைவாய் அறிந்து உடனே வேறு நல்லடையாளச் சொல்லை மாற்றி விட்டோம். இனிமேலும் அப்படி நமது நல்லடையாளம் வெளியானால் உடனே அதை நாம் அறிந்து மாற்ற முடியாமல் போனாலும் போய் விடலாம்... ஆகவே, தயை கூர்ந்து நீங்கள்...”
“என்னிடம் புதுமையாக இன்றுதான் பழகத் தொடங்குகிறவனைப் போல நீ ஏன் இவ்வளவு தயங்குகிறாய்?”
“தயக்கம் ஒன்றுமில்லை ஐயா! நீங்கள் தவறாக எடுத்துக் கொண்டு விடக் கூடாதே என்றுதான் அஞ்சுகிறேன். இந்தப் புதிய நல்லடையாளச் சொல்லைத் தங்கள் திருக்குமாரிக்குக் கூட அறிவிக்க வேண்டாம் என்பது என் கருத்து” - என்று குரலைத் தணித்துக் கொண்டு அவரருகே வந்து நெருங்கி நின்று கூறினான் கொல்லன்.
அவன் கூறியதைக் கேட்டு அவர் மெல்ல நகைத்தார். பின்பு சில விநாடிகள் கழித்து, “நீ சொல்வது நியாயம்தான்! பெண்கள் மிகவும் மென்மையானவர்கள். அவர்களுக்கு எதையும் எதிர்மறையாகவும் வேறு வேறு கோணங்களிலும் நினைத்துப் பார்த்து முடிவு செய்யத் தெரியாது. எளிமையாகப் பிறரை நம்பி விடுவார்கள்” என்று அவரே அவன் கூறியதை ஒப்புக் கொள்வது போல் மறுமொழி கூறினார். தான் அவருடைய செல்வமகளைப் பற்றிக் கூறிய கருத்து, அவர் மனத்தில் வேறுபாட்டையோ ஆத்திரத்தையோ உண்டாக்கவில்லை என்பது அவனுக்கு மனநிறைவு அளிக்கக் கூடியதாக இருந்தது. ஆனால், அடுத்த கணமே அவர் பெரியவரின் இருப்பிடத்துக்குத் தம்மை அழைத்துச் செல்ல வேண்டும் என்ற தம்முடைய பழைய ஆவலையே மீண்டும் வெளியிடத் தொடங்கிவிட்டார். அரிய முயற்சிசெய்து பல காரணங்களை எடுத்து விளக்கி அந்த ஆவலைத் தற்காலிகமாகத் தவிர்க்கும்படி அவரை வேண்டிக் கொண்டான் கொல்லன். அவரும் விடுகிற வழியாயில்லை.
“அப்படியானால் மீண்டும் பெரியவரை நான் எப்போது தான் பார்க்கமுடியும் என்பதையாவது சொல்லேன். அவரைக் காணவும், அவருடைய உபதேசங்களைக் கேட்கவும் முடியாமல் என் நாட்கள் மலைபோல் மெல்ல நகர்கின்றன.”
“ஐயா! இந்த எளியேன் சொல்லியா தங்களுக்குத் தெரிய வேண்டும்? பாண்டியர்கள் மீண்டும் நாட்டைக் கைப்பற்றும் காலம் தொலைவில் இல்லை. அந்நியர்களும் ஈவு இரக்கமற்ற கொள்ளைக்காரர்களும் ஆகிய களப்பிரர்களை வென்று துரத்தினால் பாண்டிய மரபு மீண்டும் தழைக்கும். அப்போது பெரியவரை, நீங்களும் நானும் எல்லாரும் கண்டு மகிழலாம்.”
“அந்தக் காலம் மிகமிகத் தொலைவில்தான் இருக் கிறதோ என்று நான் அஞ்சுகிறேன். மாபெரும் பாண்டியர் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதிக்குப் பின் அந்த மரபைச் சுற்றி இருள் சூழச் செய்து விட்டார்களே, பாவிகள்...?”
“ஆலவாய் அண்ணல் திருவருளால் இருள் எல்லாம் விலகி ஒளி பரவும் காலம் வந்து விட்டது” என்றான் கொல்லன்.
அவர்கள் இருவரும் இவ்வாறு உரையாடிக் கொண்டே உலாவி முடித்ததும் பொய்கையில் தந்த சுத்தி செய்து நீராடினர். நீராடி முடித்ததும் கொல்லனைத் தம்மோடு மாளிகைக்கு வந்து பசியாறுமாறு வேண்டினார் காராளர். மாளிகைக்குச் சென்றால் காராளர் மகள் செல்வப் பூங்கோதையின் துயரக் கோலத்தையும், வேதனையையும் காண வேண்டியிருக்கும் என்ற எண்ணத்தில்,
“நான் இங்கிருந்தே வேறு வழியாக வீட்டுக்குப் போகிறேன் ஐயா! நன்றாக விடிந்துவிட்டது. இனி நாம் வீதியில் ஒன்று சேர்ந்து போகவேண்டாம்” என்றான் கொல்லன். அவரும் அவன் கூறியதற்கு மேல் வற்புறுத்தாமல் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டுப் போய்விட்டார். பொய்கைக் கரையிலிருந்து மற்றொரு வழியாகத் தன் உலைக் களத்திற்குத் திரும்பினான் கொல்லன். மறுமுறை பெரியவரிடமிருந்து அழைப்போ, கட்டளையோ வரும்வரை தன் உலைக் களத்திலேயே நிறைய வேலை இருந்தது அவனுக்கு. அவனும், அவனோடு சேர்ந்த பிற கொல்லர்களும் பணியாட்களும், இன்னும் சிறிது காலத்திற்குள் நிறைய வேல்களையும் வாள்களையும் உருவாக்கி அடுக்க வேண்டியிருந்தது. அன்று முதல் அந்த வேலையில் முனைந்து ஈடுபட்டான் அவன். களப்பிரர்கள் அறியாமல் உருவாக்கிய மறையில் அடுக்கி நிறைக்க வேண்டிய ஆயுதங்கள் அவை. ஏற்கனவே பாண்டிய நாட்டின் வேறு பகுதிகளில் உள்ள பெரியவரின் அன்புக்குப் பாத்திரமான பிற கொல்லர்களும் அவனும் இப்படி நிறையப் படைக்கலன்களைச் சேர்த்து வைத்திருந்தார்கள். அந்தப் படைக்கலன்களின் எண்ணிக்கையைப் பெருக்கும் செயலில் மேலும் முனைந்து ஈடுபட்டான் கொல்லன். அவனுடைய நாட்கள் அதில் கழியத் தொடங்கின. காராளரைப் பொறுத்தவரை, பெரியவர் இல்லாத திருமோகூர் மந்தமாக இருப்பதுபோல் தோன்றிக் கொண்டிருந்தது.
விலைமதிப்பற்ற அருமருந்தில் மீதமிருக்கும் சிறிய அளவைப்போல் பாண்டியன் கானப்பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதிக்குப் பின் இன்று அந்த வம்சாவளியில் எஞ்சியிருக்கும் இளையநம்பி, தென்னவன் மாறன், கொற்கைப் பெருஞ்சித்திரன் ஆகிய மூவரையும் பற்றிப் பெரியவர் மதுராபதி வித்தகர் திருமால் குன்றத்து மலைப்பிளவில் ஒப்புநோக்கிச் சிந்தித்துக் கொண்டிருந்த சிந்தனையை அப்போது அங்கே பதற்றத்தோடு விரைந்து நுழைந்த ஆபத்துதவிகள் கலைத்தனர். வந்தவர்களுடைய பரபரப்பு அவருடைய கவனத்தை உடனே ஈர்த்தது. வந்தவர்கள் பதற்றத்தோடு கூறலாயினர்:
“ஐயா! அபாயம் நெருங்குகிறது. இந்த மலையடிவாரத்தில் உள்ள காட்டுப் பகுதிகளிலும் சிலம்பாறு தரையிறங்குமிடத்தில் உள்ள மாந்தோட்டத்திலும், சிறு சிறு குழுக்களாகக் களப்பிரர்களின் பூத பயங்கரப்படை வந்து தங்கியிருக்கிறது. இந்த நிலைமை இன்று காலையில்தான் தெரியவந்தது. நாம் உடனே இடம் மாறவேண்டும். மலையின் உட்பகுதியில் இன்னும் நெடுந்தொலைவு தள்ளிச் சென்று தங்கி விடுவோம். அபாயத்தைத் தவிர்ப்பதற்கு ஒரே வழி அதுதான். உடனே புறப்படுங்கள்!”
இதைக் கேட்டு ஒரு கணம் தயங்கினாற்போல் நின்றார் மதுராப்தி வித்தகர். அடுத்த கணமே, அவர் கூறலானார்:
“உனக்குத் தெரியாது! நாம் அப்படிச் செய்யக்கூடாது. மலையின் உட்பகுதிக்குப் போகப் போக நாம்தான் நம்மைத் தப்ப முடியாதவர்களாகவும் அபாயத்துக்கு உட்படுத்திக் கொள்கிறவர்களாகவும் மாற்றிக் கொள்கிறோம். நீங்கள் கூறுவது சாதுரியமான உபாயம் அல்ல. கீழே மலையடி வாரத்துக் காடுகளிலும், சிலம்பாறு தரையிறங்கும் இடத்திலும் எதிரிகள் சிலர் வந்து தங்கியிருக்கிறார்கள் என்றால் நம்மவர்களைக் கொண்டு அவர்களைக் கண்காணிக்கச் செய்யுங்கள். அவர்கள் ஒருவேளை தங்கியிருக்கும் இடங்களிலிருந்தே சந்தேகம் நீங்கித் திரும்பிப் போய் விடலாம். அப்படித் திரும்பாமல் முன்னேறி இங்கே வரத் தொடங்குவார்கள் என்று ஆகுமாயின் அப்புறம் என்ன செய்யவேண்டும் என்பதை நான் சொல்லுவேன்.”
அந்த ஆபத்துதவிகள் இருவரும் வந்தபோது இருந்த சிறிதளவு சலனமும் இப்போது அவரிடம் இல்லை. அவர் கூறியதைக் கேட்ட பின்பும் ஆபத்துதவிகள் தயங்கி நின்றனர். அவர்களைத் துரத்தாத குறையாக இறைந்தார் அவர்.
“உடனே போய் மரங்களின் மேல் ஏறி அடர்ந்த கிளைகளிடையே மறைந்திருந்து கவனியுங்கள். பூத பயங்கரப் படையினர் மேலே வருவார்கள் என்று சிறு அறிகுறி தெரிந்தாலும் உடனே வந்து சொல்லுங்கள். மற்றவற்றைப் பின்பு பார்த்துக் கொள்ளலாம்.”
அவர்கள் சென்றார்கள். அவர் எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையில் மூழ்கினார். பல்லாண்டு கால இருளுக்குப் பின்னர் மீண்டும் பாண்டியர்கள் நாட்டைக் களப்பிரர்களிடமிருந்து மீட்கும் காலம் நெருங்கிக் கொண்டிருப்பதை அவர் மனம் கணித்தது. மனத்தில் இயல்பாகப் பொங்கும் அந்த நம்பிக்கை வீண் போகாது என்பது அவருக்குத் தெரியும். அந்தப் பொற்காலம் நெருங்குவதை உணர்ந்து தான் திருக்கானப்பேர்க் காட்டிலும், தென்னவன் சிறு மலையிலும், கொற்கையிலும் மறைந்து வளர்ந்து கொண்டிருந்த மூன்றே மூன்று பாண்டிய வம்சாவளியினரான இளையநம்பியையும் தென்னவன் மாறனையும், கொற்கைப் பெருஞ்சித்திரனையும், பாண்டியர் குலதனமாகிய நவ நித்திலங்களையும் வர வழைத்திருந்தார் அவர். இந்த ஒரே ஒரு குறிக்கோளை நிறைவேற்றி முடிப்பதற்காகத் தன்னை முழுத் துறவியாக ஆக்கிக் கொள்ளாமல் விருப்பு வெறுப்புகளோடு வாழ்ந்தார் அவர். இந்த லட்சியம் நிறைவேறிவிட்டால் மறுவிநாடியே விருப்பு வெறுப்புகளற்ற முழுத் துறவியாய்க் காவியுடுத்தி உலக பந்தங்களிலிருந்து நீங்கியவராகக் கங்கை நீராடி இமய மலைச்சாரலில் அவர் தவம் செய்யப் போய்விடலாம். கடுமையான நியமங்களை மேற்கொண்டிருந்தும் ஒரு துறவிக்குரிய அருள் உள்ளமும், உலக பந்தங்களில் இருந்து நீங்கிய இயல்பும் இல்லாமல் தான் வாழ வேண்டி நேர்ந்திருப்பதை எண்ணி எண்ணி அவர் உள்மனம் வருந்தாத கணமில்லை. இப்போதும் அதே ஆத்மார்த்தமான தவிப்பை அடைந்திருந்தார் அவர். உள்ளத்தில் சிந்தனைகள் ஓடின.
‘இன்னாருக்கு நான் மிகவும் வேண்டியவன். இன்னாருக்கு நான் மிகவும் வேண்டாதவன்’ - என்றெல்லாம் வேண்டுதலையும் வேண்டாமையையும் கற்பித்துக்கொள்ளத் தொடங்கிய பின் அதில் துறவுக்கே இடமில்லை. துறவு என்பது விருப்பு வெறுப்பையே துறக்கிற அளவு பந்தபாசமற்றதாக இருக்கவேண்டும். ஒரு பெரிய அரச மரபை உருவாக்கி மீண்டும் நாட்டை மீட்க நான் பொறுப்பு எடுத்துக் கொண்டேன். பல ஆண்டுகளுக்கு முன் எனக்கும், செல்லூர் மாவலி முத்தரையனுக்கும் வெள்ளியம்பலமன்றில் நிகழ்ந்த ஒரு தர்க்கத்தில், பல தேசத்து அறிஞர்கள் முன்னிலையில் அவனைத் தோல்வியுறச் செய்தேன் நான். அந்தக் காலத்தில் இப்படி நான் தலைமறைவாகிற அளவு களப்பிரர்களின் கொடுமை இல்லை. என்னால் தோற்கச் செய்யப்பட்ட வையை வடகரைச் செல்லூரான் மாவலி முத்தரையன் தாங்க முடியாத அறிவுப் பொறாமையினாலும், காழ்ப்பினாலும் என்னை எதிர்த்து வேரறுப்பதற்குக் களப்பிரர்களோடு உறவாடத் தொடங்கினான். நான் பாண்டிய குலத்து உறுதுணையாளன் என்ற அந்தரங்க உண்மை மாவலி முத்தரையனுக்குத் தெரியும். அவன் என் பகைவனாக மாறியபின் சமயம் பார்த்து அதை அவன் களப்பிரப் பேரரசுக்கு அறிவித்து என்னை ஒழிக்க முயல்வானோ என்ற முன்னெச்சரிக்கையின் காரணமாகவே அந்தப் பகைமை ஏற்பட்ட நாள் முதல் நான் தலைமறைவு கொள்ள நேரிட்டுவிட்டது. இப்படி மறைந்து வசிக்கவும் பாண்டியர் வெற்றிக்குத் திட்டமிடவும், ஏற்பாடுகள் செய்யவும் நேர்ந்ததுகூட ஒரு விதத்தில் நல்லதுதான். இல்லையானால் வேறுவிதமாகவும் விளைவுகள் மாறியிருக்கலாம். விரோதியாயிருந்தாலும் முழுமையாக நான் இந்தச் செயலில் ஈடுபடும்படி செய்த மாவலி முத்தரையனுக்கு ஒருவிதத்தில் நன்றி செலுத்தத்தான் வேண்டும். என் மேல் அறிவுப் பொறாமை ஏற்பட்டு மாவலி முத்தரையன் என்னுடைய பகைவனாக மாறவில்லை என்றால் நான் என் குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்வதில் இவ்வளவு முனைந்திருக்க முடியாது. நம்முடைய முழுமையான பகைவன்தான் நமது முயற்சிக்குச் சுறுசுறுப்பும் உயிரும் ஊட்டுகிறான் என்பது எவ்வளவு பெரிய உண்மை?
தனக்குத்தானே உள் முகமாகச் சிந்தித்துக் கொண் டிருந்த அவர் அதில் நேரம் போவதே தெரியாமல் ஈடுபட்டிருந்தார். நண்பகலுக்கு மேல் முன்பு வந்த பூத பயங்கரப் படையின் அபாயத்தைத் தெரிவித்த அதே ஆபத்துதவிகள் மீண்டும் அவரைத் தேடி வந்தனர். இப்போது அவர்களிடம் பரபரப்போ பதற்றமோ இல்லை. அமைதி தெரிந்தது.
“முன்பு தென்பட்ட இடங்களிலிருந்து பூதபயங்கரப் படைகள் பின் வாங்கித் திரும்பிச் சென்றுவிட்டார்கள். தாங்கள் அநுமானித்தபடியே நடந்திருக்கிறது. நாங்கள் தான் எங்கள் உணர்ச்சி வேகத்தில் ஏதேதோ நினைத்து விட்டோம். நமக்கு உடனே ஒர் அபாயமும் இல்லை. இடமும் மாறவேண்டாம்” - என்று அவர் கேட்பதற்கு முன் அவர்களாகவே கூறினார்கள். வந்தவர்கள் பின் வாங்கித் திரும்பி விட்டாலும், தொடர்ந்து மலையடிவாரத்தையும் சிலம்பாற்றங்கரையையும் விடாமல் கண்காணித்துக் கொண்டிருக்குமாறு அவர்களுக்கும் அவர்கள் மூலமாக மற்ற ஆபத்துதவி களுக்கும் கட்டளையிட்டு அனுப்பினார் அவர்.
அவர்கள் சென்றபின் மீண்டும் சிந்தனைகளில் ஆழ்ந்தார். அங்கங்கே பல பகுதிகளில் மறைந்திருந்து உடனே எழுச்சி பெறத்தக்க நிலையிலுள்ள பாண்டியர்களின் படை பலம், ஆயுதங்களின் பலம், சூழ்நிலை எல்லாவற்றையும் மனக்கணக்காகக் கணக்கிட்டு நினைத்துப் பார்த்தார் அவர். அவிட்ட நாள் விழாவன்று இந்தக் கணக்கு எதிர்பாராத விதமாக பொய்த்துப் போனாலும், மிக விரைவில் களப்பிரர்களை அவர்களே எதிர்பாராதபடி வளைத்து மடக்கிப் பாண்டியர்கள் நாட்டைக் கைப்பற்றலாம் என்று தெளிவாக அவருக்குப் புரிந்தது. சுற்றிலும் மாலை சூழ்ந்து, மலையில் இருட்டிக் கொண்டு வந்தது. அவரது சிந்தனையிலோ, அப்போதுதான் விடிவு தெரிவதுபோல் இருந்தது. விடியும் என்று நம்பினார் அவர்.
-------------
நித்திலவல்லி -- இரண்டாம் பாகம் - சிறைக்கோட்டம்
26. எதிர்பாராத அபாயம்
தயக்கமும், எச்சரிக்கையும், மாறிமாறி நிலவும் மனநிலையோடு அழகன்பெருமாள் முதலிய நண்பர்கள் காமமஞ்சரி காட்டிய நிலவறை வழியே வெளியேறி அதன் மறு முனையாகிய மதுரை மாநகரத்து நடுவூர் வசந்த மண்டபத்து நந்தவனத்தை அடைந்து விட்டனர். மறுமுனையில் தங்களுக்கு முன் அதே வழியாகத் தப்பிய தென்னவன் மாறனும், திருமோகூர் மல்லனும் தங்களை எதிர்பார்த்து மறைந்து அங்கே காத்திருக்கக்கூடும் என்று அழகன் பெருமாள் எதிர்பார்த்தான். அவனும் நண்பர்களும் நினைத்தபடி தென்னவன் மாறனையோ, மல்லனையோ அங்கே காணமுடியவில்லை. தவிர அந்த நந்தவனப் பகுதி அப்போது இயல்பை மீறிய அமைதியில் ஆழ்ந்திருந்தது. மனிதர்கள் அதிகம் பழகாத இயற்கை வளமே உள்ள இடத்தினது அழகின் அமைதியாக அது இல்லை. இந்த அமைதி வேறுபாடு உடையதாகவும் சந்தேகத்துக்கு உரியதாகவும் இருந்தது. காரி, குறளன், கழற்சிங்கன் முதலியவர்களும்கூட இந்த அமைதியைப் பற்றி ஐயப்பாடு கொண்டனர். அழகன் பெருமாளுக்கு இன்னதென்று காரணம் புரியாமலே, மனத்தில் ஏதோ இடறியது. பேசாமல் கொள்ளாமல் வந்த வழியே திரும்பி நிலவறையில் இறங்கி உள்ளேயே போய்விடலாமா என்று கூடத் தோன்றியது. அடர்த்தியான அந்த நந்தவனத்தில் எங்கே போய் எப்படி வெளியேறி எவ்வாறு தப்புவது என்றும் அவர்களுக்கு உடனே விளங்கவில்லை. ஒரே குழப்பமாயிருந்தது.
அப்போதுதான் எதிர்பாராதபடி அந்த அபாயம் நடந்தது. அவர்கள் முற்றிலும் எதிர்பாராத நேரத்தில் திடீ ரென்று நாற்புறமும் புதர்களிலிருந்து நூற்றுக்கணக்கான பூத பயங்கரப் படை வீரர்கள் வெளிப்பட்டு ஆயுதபாணிகளாகப் பாய்ந்தனர். அழகன் பெருமாள் முதலியவர்கள் எப்படித் தப்புவது, என்ன செய்து தப்புவது, என்று விழிப்படையும் முன்பாகவே மீண்டும் சிறைப்பிடிக்கப்பட்டு விட்டனர். கண்மூடித் திறப்பதற்குள் இது நடந்து முடிந்து விட்டது. யாரும் எங்கும் ஓடித் தப்ப வழியில்லை.
அந்தப் பரபரப்பான சூழ்நிலையிலும், சிறைப்பட்டு விட்ட தங்களுடைய எண்ணிக்கையில் ஒன்று குறைவதை அழகன்பெருமாள் தெளிவாக உணர்ந்தான். உருவத்தில் மிகவும் சிறியவனாகிய குறளன் மட்டும் மின்னல் வேகத்தில் தப்பியிருந்தான். அந்த வினாடியில் பூதபயங்கரப் படை யினரும் அதைக் கவனிக்கவில்லை என்று தெரிந்தது. தங்களில் ஒருவர் தப்ப முடிந்ததனால் தொடர்புள்ள மற்றவர்களுக்கு வெளியே போய் நடந்ததை அறிவிக்க முடியும் என்பதையும், மீட்பதற்கு ஏற்பாடு செய்ய முடியும் என்பதையும் எண்ணி மகிழ்ந்தான் அழகன் பெருமாள். அப்போது மற்றும் நால்வர் வேறொரு புதரிலிருந்து வெளிப்பட்டனர். பூதபயங்கரப் படைத்தலைவனும் மாவலி முத்தரையரும், அவர்களோடு - கை கால்கள் இரும்புச் சங்கிலிகளால் பிணிக்கப்பட்ட நிலையில், தென்னவன் மாறனும் மல்லனும் தென்பட்டனர்.
சிறையிலிருந்து வெளியேற முயன்ற அனைவருமே திட்டமிட்டுப் பிடிக்கப்பட்டு விட்டதை அழகன் பெருமாள் புரிந்து கொண்டான். அந்த நிலையில் குறளன் மட்டும் தப்ப முடிந்ததை ஒர் அதிசயமாகத்தான் நினைத்தான் அவன்.
இப்படி வகையாக மாட்டி வைப்பதற்காகவே ஒரு நீலிக் கண்ணீர் நாடகமாடினாளோ என்று காமமஞ்சரியைப் பற்றியே இப்போது சந்தேகம் வந்தது அவனுக்கு. ஆனால், அடுத்த கணமே மாவலி முத்தரையர் பேசிய பேச்சிலிருந்து அந்தச் சந்தேகம் நியாயமற்றது என்பதை உணர்ந்து அப்படி நினைத்ததற்காகத் தன்னைத்தானே கடிந்து கொண்டான் அழகன் பெருமாள். மாவலி முத்தரையர் இடிக்குரலில் கூறினார்:
“எவ்வளவுதான் நடித்தாலும் நீங்கள் எல்லோரும் யாரென்பது இப்போது தெள்ளத் தெளிவாகப் புரிந்துவிட்டது. இனி நீங்கள் தப்ப முடியாது. உங்களுக்கு உதவி புரிந்த அந்தக் கேடுகெட்டவள் காமமஞ்சரியும் தப்ப முடியாது. நீங்களே உங்களைத் தெளிவாக அடையாளம் காட்டிக் கொண்டு விட்டதற்கு நன்றி.”
அழகன் பெருமாள் முதலியவர்களும், தென்னவன் மாறனும், மல்லனும் இதைக் கேட்டு குனிந்த தலைநிமிராமல் நின்றார்கள். அந்த நிலையில் அவர்களிடம் மேலும் மாவலி முத்தரையரே பேசலானார்:
“இப்போதுகூட ஒன்றும் குடிமுழுகி விடவில்லை! எனக்குத் தெரிய வேண்டிய ஒரு பெரிய உயிர்நிலைச் செய்தி உங்களிடமிருந்து தெரியுமானால் மற்ற எல்லாத் தவறுகளையும் மறந்து உங்களை நான் விட்டுவிடமுடியும். அந்த மதுராபதி வித்தகன் எங்கே இருக்கிறான் என்பதை மட்டும் சொன்னால் போதுமானது. இடத்தைச் சொல்ல முடியாவிட்டால் ஊரைச் சொல்லுங்கள். ஊரைச் சொல்ல முடியாவிட்டால் திசையைச் சொல்லுங்கள்.”
தமது இந்த வேண்டுகோளுக்கு இணங்கி அவர்களில் உயிர்ப்பயமும் விடுதலையாகும் வேட்கையும் உள்ள யாராவது ஒருவனாயினும் முன் வருகிறானா என்று அழகன் பெருமாள் முதலிய ஒவ்வொருவர் முகமாக ஏறிட்டுப் பார்த்தார் மாவலி முத்தரையர். யாருடைய முகத்திலும் இசையும் சிறு அடையாளம் கூடத் தென்படவில்லை. இந்த முயற்சியைக் கனிவாகவும் கடுமையாகவும் பயமுறுத்தியும் தொடர்ந்து சிறிது நேரம் வரை செய்து பார்த்தார் மாவலி முத்தரையர். எந்தப் பயனும் விளையவில்லை. முடிவில் குரூரமும், வெறுப்பும் நிறைந்து வெடிக்கும் கடுமையான குரலில் தென்னவன் மாறன் பக்கமாகக் கையைச் சுட்டிக் காட்டி, “இந்தப் புலித்தோல் அங்கிக்காரனைத் தவிர மற்றவர்களை ஒளியே நுழையமுடியாத இருட்டறையில் கொண்டு போய்த் தள்ளுங்கள். பல ஆண்டுகள் சிறையில் கிடந்து ஒவ்வொருவராகச் செத்துத் தொலையட்டும்” என்றார் அவர். உடனே பூதபயங்கரப் படைவீரர்கள் பாய்ந்து சிறைப்பட்டவர்களை இழுத்துக்கொண்டு சென்றனர். தென்னவன் மாறனை மட்டும் பூத பயங்கரப் படைத் தலைவனும் மற்ற இரு வீரர்களும் வேறு திசையில் இழுத்துச் சென்றனர். கால்களில் தளரத் தளர இடம் விட்டுப் பிணிக்கப் பட்டிருந்த இரும்புச் சங்கிலியின் காரணமாக தள்ளாடித் தள்ளாடி இயல்பாக எட்டு வைத்து நடக்க முடியாமல் சிரமப்பட்டுச் சென்றான் தென்னவன் மாறன். மாவலி முத்தரையர் களப்பிரக் கலியரசனைக் காணச் சென்றார். அப்போது உடனே அரசனைக் கண்டு தென்னவன் மாறனையும், காம மஞ்சரியையும் கடுமையாகத் தண்டிக்குமாறு வற்புறுத்த வேண்டியிருந்தது அவருக்கு.
*****
இப்பால் அழகன் பெருமாள் முதலியவர்களை இழுத்துச் சென்ற பூதபயங்கரப் படை வீரர்கள் முன்னை விடக் கொடுமையானதும் இருட்குகை போன்றதும் ஆகிய ஒரு பயங்கரச் சிறைக் கூடத்தில் அவர்களைத் தள்ளி அடைத்தார்கள். அப்போது தங்களை அடைத்த வீரர்களில் ஒருபூத பயங்கரப்படை வீரனிடம் தனக்குத் தெரிந்த அளவில் பாலி உச்சரிப்போடு, “ஏனப்பா, அந்தப் புலித்தோல் அங்கி வீரரை எப்போது இங்கே கொண்டுவந்து எங்களோடு அடைப்பார்கள்?” என்று வினாவினான் அழகன் பெருமாள். இதற்குமுன் முதலில் அந்த வீரன் பதில் கூறவில்லை. வஞ்சகம் தோன்றச் சிரித்தான். பின்பு சிறிது நேரம் கழித்துப் போகிற போக்கில் மிகவும் சுருக்கமாக, “எப்போதும் எங்கும் திரும்பிவர முடியாதவர்களைப் பற்றி விசாரித்து உன் நேரத்தை வீணாக்கிக் கொண்டிராதே அப்பனே!” - என்று பாலியிலேயே பதில் சொல்லிவிட்டுப் போனான் அந்த வீரன். இந்த மறுமொழியைக் கேட்டு அழகன் பெருமாளும் நண்பர்களும் துணுக்குற்றனர். தென்னவன் மாறனை உயிர் மீட்கும் காரியத்தை மேற்கொண்டு அதன் பொருட்டே கோட்டைக்குள்ளே வந்த தாங்கள் அதை நிறைவேற்ற முடியாமற் போகிறதே என்று துடிதுடித்துத் தவித்தார்கள் அவர்கள். தாங்கள் தலைவணங்கும் குலக்கொழுந்து ஒன்று கருகுவதை அழகன்பெருமாளால் எண்ணிப்பார்க்கவும் முடியாமல் இருந்தது. பெரியவர் தங்களுக்கு ஓலை மூலம் அனுப்பிய கட்டளையை இன்று தாங்கள் நிறைவேற்ற முடியாமற் போய் விட்டதே என்ற துயரத்தின் சுமை அவன் நெஞ்சை அழுத்தியது.
“எக்காரணத்தைக் கொண்டும் திருக்கானப்பேர் நம்பியைத் தென்னவன் மாறனை மீட்கும் பணிக்காகக் களப்பிரர் அரண்மனைக்குள்ளோ, கோட்டைக்குள்ளோ போகவிடக்கூடாது” என்று பெரியவர் வற்புறுத்தித் தடுத்திருந்ததன் பொருள் இப்போது அழகன் பெருமாளுக்குப் புரிந்தது. அந்த எச்சரிக்கையின் பயன் இமயமலையளவு பெரிதாகித் தோன்றியது இப்போது. ஒரு குலக்கொழுந்தைக் கருக விடாமல் காப்பாற்றிக் கொண்டு வரும் பணியில் ஈடுபட, இன்னொரு குலக்கொழுந்தை அனுப்புவதன் மூலம் அந்த இரண்டு குலக்கொழுந்துகளையுமே பகைவர் கருக்கி விடக் கூடாது என்ற கவலையும் முன்னெச்சரிக்கையும் கவனமும் கொண்டு, பெரியவர் காரியங்களைத் திட்டமிட்டிருக்கும் திறனை இந்த வேதனையான சூழ்நிலையிலும் அழகன் பெருமாளால் வியக்காமல் இருக்க முடியவில்லை. தங்களோடு சிறையிலிருந்துவிட்டுத் தப்பிப் போயிருக்கும் குறளன், இளைய நம்பியையோ பெரியவரையோ போய்ச் சந்தித்து எல்லா விவரங்களையும் கூறுவான் என்ற ஒரே நம்பிக்கைதான், அவ்வளவு இருளின் நடுவேயும் அவன் முன் ஒளியாக இருந்தது. இந்தப் புதிய சிறையில் ஒளியோ, பகல் இரவோ, உலகத் தொடர்போ இல்லாத காரணத்தால் இனிமேல் காலம் நகர்வதுகூடத் தெரியாமற் போய்விடும் போலிருந்தது. சிறையின் பெரிய இரும்புக் கதவில் கையும் பாத்திரமும் நுழைகிற அளவு துவாரம் இருந்தது. அந்த துவாரத்தின் வழியே வெளிப்புறம் இருந்து குரல் வந்தால் காலையோ மாலையோ உண்பதற்கு ஏதோ கொடுக்க வந்திருக்கிறார்கள் என்று அர்த்தம். அந்தத் துவாரத்தில் உணவுக்காக அழைக்கும் குரலை வைத்துத்தான் கால ஓட்டமே அவர்களுக்குத் தெரிகிற அளவு உலகம் அவர்களைப் பொறுத்தவரை ஒடுங்கிவிட்டது. மறுபடி உயிரோடு வெளியேறிக் காற்றையும், கதிரவன் ஒளியையும், வையையாற்றையும் கூடல் கோநகரையும் இப்பிறவியில் இனிமேல் கண்ணாரக் காண முடியுமா என்ற சந்தேகத்தை அநேகமாக அவர்கள் எல்லாருமே அடைந்திருந்தனர்.
இப்படி அவர்கள் இந்தப் புதிய காராக்கிருகத்தில் அடைக்கப்பட்ட மறுதினமே திடுக்கிடத்தக்க ஒரு துயரச் செய்தி கிடைத்தது அவர்களுக்கு.
மறுநாள் துவாரத்தின் வழியே உணவை நீட்டியவனிடம்
“எங்களில் ஒருவராகிய அந்தப் புலித்தோல் அங்கி யணிந்தவர் ஏன் இன்னும் இங்கே கொண்டு வந்து அடைக்கப்படவில்லை? அவர் என்ன ஆனார்? எங்கே போனார்?” என்று கேட்டான் அழகன் பெருமாள்.
வெளியே சிரிப்பொலிதான் ஏளனமாகக் கேட்டது. வேறு பதில் வார்த்தைகள் இல்லை. மறுநாள் மாவலி முத்தரையர் தீப்பந்தங்களோடும், ஐந்தாறு பூத பயங்கரப் படை வீரர்களோடும் சிறைக்குள் வந்தார். அழகன்பெருமாளை அடையாளம் கண்டு அவர் நேரே அவனருகே வந்து,
“அப்பனே! நேற்று உங்களில் யாரோ ஒருவன் இங்கே உணவு கொடுக்க வந்தவனிடம் அந்தப் புலித்தோல் அங்கிக்காரனைப் பற்றி விசாரித்தீர்களாம். பாவம்! இனி அவனைப் பற்றியும், அந்த நன்றிகெட்ட கணிகை காமமஞ்சரியைப் பற்றியும் விசாரித்து ஆகப் போவது ஒன்றுமில்லை. இருவருமே இப்போது இந்த உலகில் இல்லாதவர்களாகி விட்டனர். இதோ பார்?” என்று இரத்தக்கறை படிந்து நிணம் நாறும் புலித்தோல் அங்கியின் கிழிந்த பகுதிகளை அவர்கள் எல்லார் முன்பாகவும் எடுத்துக்காட்டினார். வயிறெறிந் தார்கள், குருதி கொதித்தது. அவர்களால் சகித்துக் கொள்ள முடியாத மரணத்தைப்பற்றி மிகவும் அலட்சியமாகச் சொல்லி விட்டுப் போய்விட்டார் மாவலி முத்தரையர்.
அன்று அவர் சென்றபின் சூழ்ந்த இருளுக்குப்பின் நெடுங்காலம் அந்தச் சிறையில் உள்ளவர்களுக்கு விடிவே பிறக்கவில்லை. தென்னவன் மாறன் என்ற வலிய இரும்பு மனிதனை ஒரு ஈயை நசுக்குவது போல் களப்பிரர்கள் நசுக்கிக் கொன்று விட்டதை அவர்களால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. தென்னவன் மாறனோடு நெருங்கிப் பழகிய திருமோகூர் மல்லன் பல மாதங்கள் அந்த இருட்சிறையில் மெளனமாக மலை அமர்ந்து அழுவதுபோல் ஒரு மூலையில் அமர்ந்து கண்ணிர் வடித்துக்கொண்டிருந்தான். அழகன் பெருமாள் மனம் ஒடிந்து போனான். இடையிடையே அவர்களில் ஒருவனாவது மதுராபதி வித்தகர் இருக்கும் இடத்தைப் பற்றி உளவு சொல்ல மாட்டானா என்ற ஆசையில் மாவலி முத்தரையர் அடிக்கடி வந்து பயமுறுத்திப் பார்த்துத் தோல்வியோடு திரும்பிக் கொண்டிருந்தார். அவர்கள் உயிரை இழக்கவும் ஆயத்தமாயிருந்தார்களே ஒழியத் தங்களுடைய மாபெரும் வழிகாட்டியின் இருப்பிடத்தைக் காட்டிக் கொடுக்கச் சித்தமாயில்லை. காலம் ஓடியது. கோடையும், மாரியும் மாறின. முன்பனியும், பின்பனியும் வந்து வந்து போயின. ஏறக்குறைய அந்தச் சிறைக்கோட்டத்திலேயே தங்கள் வாழ்வு முடிந்து விடுமோ என்று அவர்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். ஆனால் நம்பிக்கையை அவர்கள் இழந்து விட்டார்களே ஒழிய நம்பிக்கை அவர்களை இழக்கவில்லை என்பது நிரூபணமாகும் நாள் அவர்களையும் அறியாமலேயே விரைவாக நெருங்கிக் கொண்டிருந்தது.
----------------
This file was last updated on 24 August 2018.
Feel free to send the corrections to the webmaster.