தூதுத் திரட்டு (6 தூது நூல்கள்)
புலவர் பசுபதி, சந்திரசேகரன் தொகுப்பு
tUtut tiraTTu (a collection of 6 tUtu works)
edited by pulavar pacupati & Chandrasekaran
In tamil script, unicode/utf-8 format
Acknowledgements:
Our Sincere thanks go to the Tamil Virtual Academy for providing a scanned
image (PDF) version of this work for the etext preparation. The etext has been
prepared using Google OCR Online Tool and subsequent proof-reading.
We thank Ms. Karthika Mukundh for her help in proof-reading this work.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2018.
Project Madurai is an open, voluntary, worldwide initiative devoted to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
Details of Project Madurai are available at the website
http://www.projectmadurai.org/
You are welcome to freely distribute this file, provided this header page is kept intact.
தூதுத் திரட்டு
புலவர் பசுபதி, சந்திரசேகரன் தொகுப்பு
Source:
தூதுத் திரட்டு (TUTU-T-TIRATTU)
Edited by T. CHANDRASEKHARAN
Curator, Government Oriental Manuscripts Library, Madras,
AND THE STAFF OF THE LIBRARY.
(Prepared under the orders of the Government of Madras.)
1957
Price, Rs. 2-30.
Dorson Press, 2/47, Royapettah High Road, Mylapore, Madras-4.
MADRAS GOVERNMENT ORIENTAL MANUSCRIPTS SERIES No. 58.
----------------
பொருளடக்கம்
முன்னுரை (ஆங்கிலம்) - I
முன்னுரை (தமிழ்) - i
நூல்
1. பெரிய தம்பி பிள்ளை பேரில் மான்விடு தூது
2. முத்துவீரப்பப் பிள்ளை பேரில் மான்விடு தூது
3. வெள்ளைய ராசேந்திரன் துகில்விடு தூது
4. செங்குந்தர் துகில்விடு தூது
5. சங்கரமூர்த்தி பேரில் விறலிவிடு தூது
6. மணவை - திருவேங்கடமுடையான் மேக விடு தூது
--------------------
Introduction
Literature reflects the Life of Man. The conditions of a period can be studied from the writings of that time. Tamil Literature is no exception to this rule. A careful study of Literature reveals in a great measure the essential qualities of the people, customs, manners and habits. Perunkapiyam and Sirukapiyam are two great authorities in Tamil Literature. Sirukapiyam contains 96 Prabandhas. Tutu is one amongst them. Each of these sections brings to light those aspects which contribute to the happiness of man. As regards love, due consideration is given to the important part played by message and the messenger through whom it is sent.
Message, as the word denotes, is a vehicle of communication between one person and another. It is not possible for the heroine to be always in the presence of the hero, and most often the message has to be passed on to the heroine by a messenger. The love-lorn hero, who cannot bear the separation, derives consolation from messages. The heroine desires to know more about the hero through a messenger. There is always the maid at her disposal to run errands and sometimes she resorts to other methods of contacting her Lord. Even in other spheres of life, the messenger plays a prominent part. The king sends spies to his enemies. The messenger in such cases should be very efficient and tactful lest he should land the hero in embarrassing circumstances. More than the hero, the heroine, whose mind is torn by anxiety and worry, is entirely at the mercy of the messenger. The agony of separation makes her appeal to any object of nature, animate or inanimate, to convey her message to her Lord. She practically pleads with the moon, the stars, the cloud or she bemoans her fate to the birds and the beasts, as she imagines that they would carry the news.
This only shows the fertile imagination of the poet. Objects of Nature are freely adapted for the purpose. A classical example is Kalidasa's Meghasandesa where the cloud is requested to take the message to a lady separated form her beloved. The appeal is so emotional and pathetic that the messenger is completely won over to fulfil his mission effectively and quickly.
This edition published under the name of Tututtirattu consists of six works.
Periyatambi Pillai Peril Man Vidu Tutu. This work is based on a palm leaf Manuscript bearing R. No. 4977 purchased in 1954 from Sri Singaravelu Kavirayar of Mithilaippatti in Trichinapalli District.
Vellaiya Rajendiran Tukil Vidu Tutu. This is based on a palm leaf manuscript bearing R. No. 4978 purchased in 1954 from Sri Singaravelu Kavirayar of Mithilaippatti in Trichinapalli District.
Muttuvirappa Pillai peril Man Vidu Tutu. This is based on a palm leaf manuscript bearing R. No. 4978 purchased in 1954 from Sri Singaravelu Kavirayar of Mithilaippatti in Trichinapalli District.
Senkunthar Tukil Vidu Tutu. This is based on a palm leaf manuscript bearing R. No. 1756 purchased in 1948 from Sri V. S. Dorairajan, 45, Singarachari Street, Triplicane, Madras.
Sankaramurtti Virali Vidu Tutu. This is based on a palm leaf manuscript bearing R. No. 316 deposited in this library.
Manavai Tiruvenkatamudaiyan Megha Vidu Tutu. This is based on a palm leaf manuscript bearing R. No. 570 transcribed during the year 1923-24 from a manuscript belonging to Vanamamalai Sri Ramanuja Jiyarsvami of Vanamamalai Mutt, Nanguneri.
My thanks are due to Pulavar M. Pasupathy, Tamil Pandit of this Library, who prepared the press copy and corrected the proofs and to the Dorson Press for their willing co-operation.
Madras. T. CHANDRASEKHARAN,22nd June 1957. Curator,
Govt. Oriental Manuscripts Library.
-------------
முன்னுரை.
இமிழ் கடல் வரைப்பில் இனிமை சான்ற அமிழ்தினு மினிய தண்டமிழ் மொழியில் பண்டுதொட்டு இன்றுகாறும் தமிழ்நாட்டினருடைய கருத்தையும் மரபினையும் சிறப்புடையதாக எடுத்துக் காட்டாநிற்பன காப்பியங்களாகும். பழைய காலம் முதற்கொண்டே நூல்கள் இயற்றுபவர்கள் பலவகையான சிறப்புக்களையும் அறிவாற்றலையும் உடையவர்களாக இருந்தனர். எல்லோரும் நூலியற்றல் என்பது இயலாத செயல். அறிவால் நிரம்பியவர் மிகச் சிறு தொகையினரே ஆவர்.
"ஆர்த்தசபை நூற்றொருவர் ஆயிரத்தொன் றாம்புலவர்
வார்த்தை பதினா யிரத்தொருவர் ''
என்ற வெண்பா, புலவர்களின் அருமையை வெளியிடுகின்றது. ஆகவே நூல்களும் அருமையாகவே இயற்றப்பட்டன. மனிதனுடைய அறிவுக்குப் பயன்படுவன எவையோ அவையே நூல்கள் எனப்பட்டன.
'' மாந்தர் மனக்கோட்டம் தீர்க்கும் நூல்"
என்பது அறியத்தக்கது. பயிலுந்தொறும் பயிலுந்தொறும் நயம் பயவாதாயின் அது நூலன்று என்று தெளிவாகக் கூறலாம். அதற்கு,
''நவிறொறும் நூனயம் போலும் பயிறொறும்
பண்புடை யாளர் தொடர்பு ''
என்று கூறும் வள்ளுவர் குறளே ஆதாரம் ஆகும். கணவனுக்குத் தனது கருத்தையறிவிக்கப் புகும் மனைவி, மிக இனிய சொற்களால் மனங்கவரும் முறையில் மெல்ல அறிவித்தலைப் போல, காவியங்கள் உயர்ந்த நீதிகளைச் சொற்பொருள் நயங் களோடு மனங் கவரும் வண்ணம் புலப்படுத்துகின்றன.
அறிவால் அமைந்த புலவர்கள் இயற்றும் நூல்கள் யாவற்றினும் தலைசிறந்தது காப்பியமேயாகும். அது நடையினாலும் பொருளினாலும் இன்பத்தையும், பயனால் உறுதிப் பொருளையும் பயப்பது போலப் பிறவகை நூல்கள் பயப்பதில்லை. ஆகவே, காப்பியம் என்பது, விழுமிய பொருள் கொண்டு விளங்கிய சொற்றொடையாம்.
அவற்றைப் பெருங்காப்பியம், சிறுகாப்பியம் என இரண்டாகப் பகுத்து ஓதுதல் புலவர் மரபு. சிறு காப்பியத்தை 96 வகையென்று ஒரு சார் இலக்கண வல்லுநர் கணக்கிட்டுள்ள னர். சிறு காப்பியத்தைச் சில்லரைப் பிரபந்தம் எனவும் வழங்குவர்.
உயிர்க்கு உறுதிபயக்கும் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கினையும் பற்றிக் கூறாது, அவற்றில் ஏதாவது ஒன்றினைப் பற்றிக் கூறிச் செல்வது சிறுகாப்பியத்தின் பொதுவிலக்கணமாகும். இப் பகுப்பெல்லாம் பிற்காலத்தில் உண்டானதேயாகும். ஒல்காப் பெரும் புகழ் படைத்த தொல்காப்பியர், இந்தத் தொண்ணூற்றாறு வகையான பிரிவுகள் கூறவில்லை. அவர் செய்த தொல்காப்பியத்தில், "அம்மை, அழகு'' என்று தொடங்கிய பிரிவுதானே பேசப்படுகின்றன. அவற்றுள், ''விருந்து' என்பது,
"விருந்தே தானும்
புதுவது கிளந்த யாப்பின் மேற்றே''
- என்று இலக்கணம் காணப்படுகின்றது. "பழங்கதையே யன்றி, புதியதாக யாக்கப்படும் பல் வகை நூல் யாப்புக்களையும் உணர்த்தும்'' எனப் பொருள் கொண்டு, கலம்பகம், அந்தாதி, தூது, பிள்ளைத்தமிழ் முதலிய பலவும் இதனுள் அடங்கும் என்றும் உரையாசிரியர் இவ் "விருந்து' என்ற தலைப்பை விளக்கிப் போந்தார்கள். ஆதலால், 96 வகைப் பிரபந்தங்களும் "விருந்து' என்ற யாப்பினுள் அடங்கும். இனி, அவற்றுள் ஒன்றாய தூது என்பதனை ஆராய்வோம்.
தூதின் இலக்கணமாவது, ஒருவர் தம்முடைய கருத்தினை இடையில் நின்ற ஒருவர் வாயிலாக மற்றொருவருக்குக் கூறி விடுப்பது. தலைவனைப் பிரிந்த தலைவி, காம மயக்கத்தால் தலைவன்பால் தூது விடுப்பதும்; தலைவன் மணத்தின் பொருட்டும், தலைவியின் ஊடலை நீக்குதற் பொருட்டும் தலைவியின் பாலும் அவளைச் சார்ந்தோர்பாலும் தூது விடுப்பதும், மற்றும் புலவர் புரவலர்களின் மீதும், அரசர்கள் பகையரசர்களின் மீதும் தூதுகளை அனுப்புதலும் முறைமை. இவற்றிற்கெல்லாம் இதிகாச புராணங்களிலும், சங்கவிலக்கியங்களிலும் சான்றுகள் காணலாம். தமிழிலுள்ள தூதுப் பிரபந்தங்களில் தலைவி தலைவன்பால் தூதுவிட்டனவே மிகுதியாக உள்ளன. தலைவன் தலைவியின்பால் ஊடலைத் தீர்ப்பதற்காகத் தூதுவிட்டன சிற்சிலவே காணப்படுகின்றன.
தலைவி, தலைவனைப் பிரிந்த காம மயக்கத்தால் உயர்திணைப் பொருள்களேயன்றி, அஃறிணைப் பொருள்களையும் தூது விடுப்பதாகச் செய்யுள் செய்தல் கவி மரபு. கவிகள் தம்முடைய கவிதா சக்தியைக் காட்டுவதற்கு நிலைக்களனாக அமைத்துக் கொண்ட அமைப்பாகிய இத்தூது, கற்பனை இலக்கியமேயன்றி இயற்கையன்று. இது, நாடக வழக்கினுள் அடங்கும். அங்ஙனம், அஃறிணைப் பொருள்களை விளித்துக் கூறுதல், "காமமிக்க கழிபடர் கிளவி" என்று சொல்லப்படும்.
"சொல்லா மரபி னவற்றொடு கெழீஇச்
செல்லா மரபிற் றொழிற்படுத் தடக்கியும்''
என்பது இதற்குரிய விதி. இங்ஙனம், தலைவி தூதுவிட முயலுதலை வரைந்தெய்துங் கூட்டத்திற்கு ஏதுவாகிய எட்டுவகை மெய்ப்பாடுகளுள் தூதுமுனிவின்மை என்பதனுள் அடக்குவர். ''தூது முனிவின்மை - புள்ளும் மேகமும் போல்வன கண்டு சொல்லுமின் அவர்க்கென்று தூது இரந்து பன்முறையானும் சொல்லுதல்" என்பது பேராசிரியர் உரை.
தூது விடுத்தற்குரிய பொருள்கள் இவைதாம் என்ற வரையறை கிடையாது. புலவர்கள் தம் தம் கற்பனைத் திறத்திற்கு எந்தெந்தப் பொருள்கள் ஏற்புடைத்தாகவிருக்கின்றனவோ, அந்தந்தப் பொருள்களையோ அல்லது பாட்டுடைத் தலைவனுக்கு ஏற்ற பொருளையோ தூது விடுத்ததாக, பிரபந்தங்களை இயற்றியுள்ளார்கள். தூதுப் பிரபந்தங்கள் "கலிவெண்பாவால்" செய்யப்பட வேண்டும் என்பது இலக்கணம். தூது, ஒருவரைப் புகழ்ந்து பாடுவதற்குப் பயன்படுவது போல, ஒருவரை இகழ்ந்து பாடுவதற்கும் ஒரு கருவியாக ஆவதுண்டு. உவமையாக, சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த, மிதிலைப் பட்டி - அழகிய சிற்றம்பலக்கவிராயர் என்பார், தமக்கு இடையூறு விளைத்த சட்டநாதன்மீது கழுதைவிடு தூது ஒன்றும், குக்கல்விடு தூது ஒன்றும் பாடியுள்ளார். இந்நூல்கள், இந்நூல்நிலையத் தமிழ் ஓலைச்சுவடி R. 5192, R. 5275-ஆகிய எண்களில் இருக்கக் காணலாம். இனி, இத்திரட்டில் அடங்கிய ஒவ்வோர் தூதைப் பற்றியும் ஆராய்வோம்.
1. பெரியதம்பிப் பிள்ளைபேரில் மான்விடு தூது.
இந்நூல், முதலில் காப்புச் செய்யுளான வெண்பா வொன்றையும், 61 கண்ணிகளையும் பெற்றுள்ளது. இஃது பெண்பால் ஆண்பால் மீது விடுத்த தூதின்பாற் படும்.
ஆசிரியர் வரலாறு.
இந்த நூலை இயற்றியவர் மங்கைபாகக் கவிராயர் என்பவராவர். இச்செய்தி இந்நூல் தொடங்கும் முதலேட்டில் "சந்தான குருவாகிய மங்கைபாக பண்டாரம் பாடல்'' என்று காணப்படுவதிலிருந்து அறிந்து கொள்ளக் கிடக்கின்றது. இவர் சிவகங்கை சமஸ்தானத்தைச் சார்ந்த மிதிலைப்பட்டி என்னும் ஊரில், பரம்பரையாக வாழ்ந்துவந்த, தமிழ்ப் புலமை வாய்ந்த குடும்பத்தில் வாழ்ந்தவர். பாண்டிய நாட்டில் கொடுங்குன்றூர்
என்னும் ஊரில் பிறந்தவர். இவர்களுடைய முன்னோர்கள் பண்டைக்காலத்தில் தொண்டை நாட்டிலுள்ள மல்லை என்னும் ஊரில் இருந்தார்கள். பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அழகிய சிற்றம்பலக் கவிராயர் என்பார், 'தளசிங்கமாலை’ என்ற ஒரு நூலைப் பாடி, கி. பி. 1647 - 8 ஆம் ஆண்டில், மிதிலைப்பட்டி என்ற விளைபுலவூரைப் பரிசிலாகப் பெற்றார். அந்நாள் முதல் இந்நாள் வரையிலும், அவ்வூரை முற்றூட்டாக அனுபவித்துக் கொண்டு, அவ்வூரிலேயே அவர் பரம்பரையினர் வாழ்ந்து வருகின்றனர். அவர்களைப் பண்டாரம் என்றும் கவிராயர் என்றும் வழங்கி வந்ததாகப் பட்டையங்களால் தெரிய வருகின்றது.
இந்நூல் இயற்றிய மங்கைபாகக் கவிராயர் என்பார் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்து வந்ததாகத் தெரிகின்றது. இவர், நத்தம் ஜமீந்தாராகிய இம்முடிலிங்க நாயகர் குமாரர் சொக்கலிங்க நாயகர்மீது, "வருக்கக் கோவை" பாடி, சாலிவாகன சகாப்தம் 1635 (கி. பி. 1712-3) ஆம் ஆண்டில், பூசாரிப்பட்டி என்னும் ஊரைப் பரிசிலாகப் பெற்றார். கொடுங்குன்றூர்ப் புராணம் பாடியவரும் இவரே. மற்றும், இவர் மருங்காபுரிச் சிற்றரசரால் போற்றப் பெற்று, அவர் மீது குறவஞ்சி, உலா, கோவை முதலியன இயற்றியிருக்கின்றனர். இவருடைய புதல்வராகிய குழந்தைக் கவிராயர் என்பார், அக்காலத்தே சிவகங்கை சமஸ்தானத்தில் பிரதானியாகவிருந்த முல்லையூர்த் தாண்டவராயப் பிள்ளை என்னும் வேளாள குலதிலகர் மீது, ஒரு மான்விடு தூது பாடியிருக்கின்றார். இவர்கள், தங்கள் தங்கள் காலத்தே சிற்றரசர்களாலும், ஜமீந்தார்களாலும் பெரிதும் ஆதரிக்கப்பட்டு அவர்களால் பலப்பல கிராமங்களும் பரிசுகளும் பெற்றிருக்கின்றனர். இப் பரம்பரையினர் தனித்தனி நூல்களேயன்றி, தனித்தனிப் பாடல்களாகவும், அரசர்கள் மீதும் வள்ளல்கள் மீதும் பாடியுள்ளதாகத் தெரியவருகின்றது. இவற்றைத் தனிப் பாடற்றிரட்டில் பரக்கக் காணலாம். இம் மங்கைபாகக் கவிராயர் இயற்கைக் காட்சிகளை நன்றாகச் சொல்நயம் பொருணயம் படப் பாடுவதில் வல்லவர் என்பது, தனிப்பாடற்றிரட்டில் இவர் பாடிய பாட்டாக வருவனவாகிய, "நற்றாய் இரங்கல்" என்னும் துறையமைந்த பாட்டினை நோக்கத் தெளிவாகும்.
''நன்றே நடாத்தும் மங்கைபங் காளர்தம் நாட்டினிலே
அன்றே யிராம னணைகட்டும் போதங் கவன்படைகள்
குன்றேன் சுமந்தவெம் மான்சென்ற பாலைக் குறும்பரலில்
ஒன்றே யிடிலக் கடல்முற்றும் வற்ற வுறிஞ்சிடுமே.''
- என்பதில், பாலை நிலத்தின் பருக்கைக் கற்களின் வெம்மையை மிக அழகாகப் புனைந்து கூறியது காணத்தக்கதொன்றாகும். மேலும், இரகுநாத உடையார்மீது பாடிய பாட்டொன்றும், தனிப்பாடல் திரட்டில் காணப்படுகின்றது. பல கொடை வள்ளல்களைப் போய், புகழ்ந்து பாடிப் பலப்பல பரிசுகளைப் பெற்று வாழ்ந்திருக்கிறார். அவ்வாறு பரிசு பெற்றுப் பாடிய நூல்களிலே பெரியதம்பிப் பிள்ளைபேரில் மான்விடு தூதும் ஒன்றாகும்.
பெரியதம்பிப் பிள்ளையின் சிறப்பு.
இவர், வேம்பனூர் அழகேந்திர பூபதியின் இளைய தம்பி. வேளாளர் குலம்- சசிவர்ண பூபதியினுடைய மகனாகப் பிறந்து கூடல் நகரை யாண்டு, பூவுலகில் கொடை கொடுத்துப் புகழ் எய்தியவர். இதனை,
"பெரியதம்பி வருபடையை வளைந்து வெட்டி
வெற்றிகொண்ட பண்பா லுன்னைப்
பெரியதம்பி என்று சொல்லி எல்லோரும்
கொண்டாடப் பேர்பெற் றாயே."
- என்று வருவதால் காணலாம்.
இவர், அடுத்தவருக்கு அருள் புரிவதில் நிகரற்றவர் என்பது,
"உடுத்தகலை சோர்ந்ததென்றால் கைக்குப
சாரங்கள் சொல்வா ருண்டோ"
- என்று வருவனவற்றால் அறியலாம்.
இவர், தமிழ் அருமை வாய்ந்தவர் என்பது,
"தண்ணியிலே எழுதுதல்போல் உரைக்கின்ற
புலவர்களைத் தானே பாடி
நண்ணிபல வுரைத்தாலும் தமிழருமை
அறிந்துனைப்போல் நல்கு வாரோ
எண்ணியகா ரியமுடித்த தென்கூடல்
பூமாலை யீன்ற சேயா!
பண்ணிவந்த பாக்குவெட்டி யார்க்கு
வெட்டும் பெரியவனே பகருவாயே."
"விருப்பமொடு தமிழருமை யறிந்துதவும்
புருஷர்மகா மேரு நீகாண்"
- என்று வருவனவற்றால் அறியலாம்.
"பூமாலை தந்த பெரியண்ணனே"- என்ற வடியை ஈற்றடி யாக வைத்துக்கொண்டு, இவர்மீது பாடப்பெற்றப் பத்தொன்பது பாடல்கள் உள்ளன. அவை படிக்க நனிவின்பந் தரவல்லது.
இவர்மீது, குறவஞ்சி நாடகம் ஒன்றும், தாழிசைப் பாடல்கள், பதங்கள், தாய்மகளேசல், வண்ணம், பவனிவிலாசம் முதலியனவும் பாடப்பட்டு உள்ளன. இவரது சகாப்தம் 1658 - ஆம் ஆண்டாகும். முதலில் காணும் காப்புச் செய்யுளால், இவன் தென்மதுரையை ஆண்டுவந்த ஓர் கொடை வள்ளல் எனவும், 40 முதல் 52 வரையிலான கண்ணிகளில், பொதியமலை, வெள்ளாறு என்னும் நதி, குவளைப்பூமாலை முதலியவைகளை உடையவன் எனவும், அன்பர் பசியாற்றும் தாராளன், கல்வியறிவோரால் போற்றப்படுவோன், அன்னத்தரு, மதியூகி, சொன்ன மொழி தவறாதவன் முதலிய குணங்களைப் பெற்றவன் என்பதும், அழகர் மலையில் எழுந்தருளாநிற்கும் அழகருக்குத் தேர்த்திருவிழாவன்று, தனது கட்டளையாக பூசை நைவேத்தியங்களை முறையாக செய்துவைப்போன் எனவும் கூறப்பட்டிருக்கின்றன.
நூலின் போக்கு.
இங்ஙனம், பெருமை வாய்ந்த பெரிய தம்பிப்பிள்ளை யானைமீதேறி ஊர்வலம் வரும்பொழுது, அவன் மீது காதல் கொண்ட பெண்ணொருத்தி, விரகதாபத்தின் மிகுதியால் அவன் மாலையை வாங்கிவர மானைத் தூதுவிட்டதாக அமைத்துப் பாடப்பட்டுள்ளது. முதல் கண்ணிமுதல் 31- ஆம் கண்ணி வரையில் மானின் அருமை பெருமைகளும், 32-39 - ஆம் கண்ணிகளில், வண்டு, நாகணவாய்ப்புள், கிள்ளை, மயில், குயில், பெண்கள், அன்றில், மேகம் முதலானவைகள் இன்னின்ன காரணங்களால் தூதுரைக்கலாகாது; ஆதலின், மானே! உன்னைப் பூதலத்தார் புத்திமான் என்று போற்றுகையினால் வெற்றியாகும் வண்ணம் எனக்குத் தூதுரைக்க வேண்டுங்காண் என்ற செய்திகளும், 40 - 53 ஆம் கண்ணிகளில், பெரிய தம்பிப்பிள்ளையின் சிறப்புகளும், 54 - 69 - ஆம் கண்ணிகளில் மன்மதன் கணை எய்யும் சிறப்புகளும், அதனால் காதல் கொண்ட கிழத்தி மயங்கித் தயங்கி வாடுதலையும், அங்ஙனம் மயங்காமல் தயங்காமல் துடியாமலிருக்கும் வண்ணம் அவனது தாரினை வாங்கி வரும்படி மானைத் தூது விட்டாள் என்ற செய்திகளும் நயம்படவும் தெளிவுபடவும் கூறப்பட்டிருக்கின்றன.
இந்நூலில் வரும் பிற செய்திகள்
பூவுலகிலுள்ள மனிதர்களை விட, தேவ உலகில் வாழும் தேவர்கள் உயர்ந்தவர்கள் என்றும், அவர்களைவிட அவர்களின் தலைவனான வாசவன் உயர்ந்தவன் என்றும், அவனை விட நாரணன் உயர்ந்தவன் என்றும், அவனை விட அவனாலும் அடிமுடியறியமாட்டாத தற்பரமானந்தமூர்த்தி உயர்ந்தவன் என்றும் ஆகிய செய்திகள் முதல் கண்ணிமுதல் ஐந்தாம் கண்ணி வரையில் கூறப்பட்டுள்ளன. 7-8வது கண்ணிகள் இராமாயணக் கதையைச் சுட்டுகிறது. 13- வது கண்ணியில் கலைக்கோட்டு மகாரிஷியின் வரலாற்றுக்குறிப்பும், 14-வது கண்ணியில் கந்தபுராணக் கருத்தினையும், 16-வது கண்ணியில் கண்ணப்ப நாயனார் வரலாற்றுக் குறிப்பும் கூறப்பட்டிருக்கின்றன. மேலும், 48-50-வது கண்ணிகளில்,
"சூலி முதுகில் சுடுசோறு அளித்தருளி
நீலி பழிதீர ரெட்சித்தும் - சாலிமுளை
அன்னங் கொடுத்து அரவின் மணியளித்துஞ்
சொன்னமொழி தப்பாத துரந்தரீகன் - நன்னயஞ்சேர்
காராளர்க் கோத்திரனாம்."
- என்று கூறப்பட்டிருக்கின்றன.
சூலி முதுகில் சுடுசோறு அளித்தலாவது :- பாண்டிய அவையில் ஒருகால் அரசவையோர் காண, கழாய்க் கூத்தாடும் மகளொருத்தி கழாய்க் கூத்தாடினள். அரிய கூத்தொன்றை அவள் ஆடுங்கால் பாண்டி வேந்தன் வேறொருத்தியைப் பார்த்துக்கொண்டிருந்தான். அதுகண்ட கூத்தி வருத்தமுற்றாள். பாண்டியன், தான் பாராது போனதற்கு வருந்தாமல் அவளை மறுபடியும் அக்கூத்தையே ஆடச் சொன்னான். மறுமுறையும் ஆடுவளேல் அவள் உயிரிழப்பது உறுதி. அதனை யுணராது வேந்தன் ஆடுமாறு பணிப்பதால், தான் இறப்பது தெளிவாதலை யறிந்தும், அவன் ஆணையை மறுத்தற்கஞ்சியும் அவள்,
"மாகுன் றனையபொற் றோளான் வழுதிமன் வான்கரும்பின்
பாகென்ற சொல்லியைப் பார்த்தென்னைப் பார்த்திலன் பையப்பையப்
போகின்ற புள்ளினங் காள்புழற் கோட்டம் புகுவதுண்டேல்
சாகின் றனளென்று சொல்வீ ரயன்றைச் சடையனுக்கே."
- என்ற பாட்டைப் பாடிக் கழைக்கூத்துமாடி உயிர் நீத்தாள் எனவும், அக்கூத்து விச்சுளிப் பாய்ச்சல் என்னும் கூத்தெனவும் கூறுவர். இவ்வரலாற்றைத் தொண்டை மண்டல சதகம்,
"பாகொன்று சொல்லியைப் பார்த்தமை யாலன்று பாண்டியன்முன்
நோகின்ற சிற்றிடை வேழம்பக் கூத்தி நொடிவரையிற்
சாகின்ற போது தமிழ்சே ரயன்றைச் சடையன்றன்மேல்
மாகுன்றெ னச்சொன்ன பாமாலை யுந்தொண்டை மண்டலமே" (33)
- என்று கூறுகின்றது. அயன்றைச் சடையன் என்பான் கூத்தரைப் புரந்த நல்ல வள்ளல். கழைக்கூத்தின் அருமை பெருமைகளை இனிதறிந்தவன். ஆதலின், "அயன்றைச் சடைய னுக்குச் சொல்வீர்” என்றாள். அவள் ஆடல் நலத்தைக் காணின், வேந்தன் அவள்பால் தன் கருத்துத் திரிவனென அஞ்சிப் பாண்டியன்தேவி பாண்டியனை அவள் கூத்தைக் காணாவாறு சூழ்ச்சி செய்தாளென்றும், ஒருமுறை விச்சுளிப் பாய்ச்சலென்னும் கூத்தை யாடுபவர், மறுமுறையும் ஆடவேண்டின், ஆறு திங்கள் மூச்சடக்கும் பயிற்சி செய்தல் வேண்டுமென்றும், இன்றேல் இறப்பது உண்மை யென்றும் கூறுவர். "கூத்தாடுபவள் கழைமீதேறி, அதிலிருந்தபடியே பல வித்தைகளைச் செய்து, இருந்தாற்போலத் தன் மூக்கிலிருக்கும் இரத்தின மூக்குத்தியைக் கழற்றி நழுவ விட்டு, அது கீழே சற்றுத் தூரம் வந்தவுடனே, தான் வீச்சுளி என்னும் பறவைபோலக் கழைமேலிருந்து கீழே பாய்ந்து, கையிற் றொடாமல் பாய்ச்சலிலேயே, அம் மூக்கணியை மூக்கில் கோத்துக்கொண்டு, கீழே குதிக்காமல் அந்தரத்தில் இருந்தபடியே பின்னும் மேலே பாய்ந்து கழைமேலேறிக்கொள்வது," "விச்சுளிப் பாய்ச்சல் என்னும் கூத்து" என்பர். இப் பாண்டியன் பெயர் தெரியவில்லை. பாண்டியன் கழைக்கூத்தி உயிரிழப்பின் வரும் பாவம் தீர்வது குறித்துச் சூலியாகிய காளிக்கு முதுகில் குருதிச் சோறிட்டு வழிபாடு செய்தான். சூலி முதுகில் சோறிடும் இந்தச் செயலை ,
"அன்று சூலி முதுகன்ன மிட்டவ
னெனன்னை கூன்முது கழிக்கிலான்"
- என ஆறைக் கலம்பகமும்,
"சூலிமுதுகிற் சுடச்சுடவப் போதுசமை
பாலடிசில் தன்னைப் படைக்குங்கை" (12)
- எனத் திருக்கை வழக்கமும் குறித்துரைக்கின்றன.
"நீலி பழிதீர ரெட்சித்தது":- என்பது, ஒருகால் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த வணிகனொருவன், இளைய மனைவியின் சூழ்ச்சியால் தன் மூத்த மனைவியைக் கொன்றொழித்தான். மூத்தாள் பேய் வடிவங்கொண்டு திருவாலங்காட்டில் திரிந்து கொண்டிருக்கையில், அவ்வணிகன் அப்பேய் திரியும் வழியில் சென்றானாக, அப்பேய் பல வஞ்ச மொழிகளைச் சொல்லிற்று. அவன் அவற்றை யேலாது பழையனூர் சென்றான். பேய் ஒரு பெண் வடிவங் கொண்டு கையில் குழந்தையொன்றைத் தாங்கிக் கொண்டு பழையனூர் வேளாளர் பால் முறையிட்டு, "இவன் என் கணவன்; இஃது இவற்குப் பிறந்த குழந்தை; இவன் தன் இளையாள்பால் கொண்ட வேட்கை மிகுதியால் என்னைக் கைவிட்டுச் செல்கின்றான்" என்றது. சான்றாகத் தன் கைக் குழந்தையை அப்பேய் கீழேவிட, அது சென்று வணிகன் மடித்தலத்தை யடைந்தது. இதற்குள் பகற்போது கழியவே இரவுப்போது வந்தது. எழுபதின்மர் கூடிய வேளாண் அவையினர், "இன்றிரவில் இவ்வறையில் தங்கியிரு; உன் உயிர்க்கு இறுதி நேரின், நாங்கள் எழுபதின்மரும் தீயிற் பாய்ந்து உயிர் விடுவோம்" என, உடன்பட மறுத்த வணிகற்குக் கூறித் தங்குவித்தனர். இரவில் அப்பேய் அவன் உயிரை யுண்டொழித்து நீங்கிவிட்டது. விடியலில் வேளாண் மக்கள் வணிகன் இறந்து கிடப்பது கண்டு தாம் கூறிய வண்ணம் தீப்பாய்ந்து உயிர் கொடுத்தனர். இதனை,
"வஞ்சம் படுத்தொருத்தி வாணாள் கொள்ளும் வகைகேட்டு
அஞ்சும் பழையனூ ராலங் காட்டெம் மடிகளே''
- எனத் திருஞான சம்பந்தர் திருப்பதிகமும்,
"மாறுகொடு பழையனூர் நீலி செய்த
வஞ்சனையால் வணிகனுயி ரிழப்பத் தாங்கள்
கூறியசொற் பிழையாது துணிந்து செந்தீக்
குழியிலெழு பதுபேரு மூழ்கிக் கங்கை
ஆரணிசெஞ் சடைத்திருவா லங்காட் டப்பன்
அண்டமுற நிமிர்ந்தாடு மடியின் கீழ்மெய்ப்
பேறுபெறும் வேளாளர் பெருமை யெம்மாற்
பிரித்தளவிட் டிவளவெனப் பேச லாமோ.''
- எனச் சேக்கிழார் புராணமும்,
"இன்னும் புகழ்நிற்க வோர்பழிக் காமற் றெழுபதின்மர்
துன்னுந் தழல்புக் கொளித்ததெல் லாஞ்சுரு திப்பொருளாய்
உன்னும் புரிசைத் திருவாலங் காட்டி னுரைபதிக
மன்னுந் தமிழில் வகுத்ததன் றோதொண்டை மண்டலமே." (8)
- எனத் தொண்டை மண்டல சதகமும் கூறுதல் காண்க.
"அரவின் மணி யளித்தும்" - என்பது, தொண்டை மண்டலத்தில் திண்டிவன நாட்டில், சாலை என்னும் ஊரில் விண்ணன் என்னும் பெயருடைய வள்ளல் ஒருவன் வாழ்ந்திருந்தான். இவன், பெருஞ் செல்வமும் வரையாது வழங்கும் வள்ளன்மையுமுடையனாய் முடிவில் வறியனானான். அக்காலத்தும் கொடைத் தன்மை குன்றாது தன்னை இரந்தார்க்கு இயல்வது கரவாது ஈந்து வந்தான். ஒருநாள் புலவனொருவன் வறுமைத் துயர் மிகுந்து விண்ணனை யடைந்தானாக, அவனுக்கு ஈத்தற்கு இயலானாகிய விண்ணன் இல்லையென்னும் எவ்வம் உரைத்தலின் உயிர் விடுதல் தக்கதெனத் தேர்ந்து, தன் மனைப் புறத்திலிருந்த பாம்புப் புற்றில் தன் கையை விட, அதன்கண் இருந்த நாகம் தன் இரத்தின மணியை அவன் கையில் அளித்தது. அதனைக் கொணர்ந்து விண்ணன் புலவர்க்களித்து மகிழ்ந்தான். அது கண்டு புலவன்,
"கூர்ந்த வறுமையிடைக் கோளரவ மீன்றமணி
சார்ந்த புலவன் தனக்களித்தான் - வார்ந்ததரு
மேலைவிண்ணில் மண்ணில் விளங்கும் புகழ்படைத்த
சாலைவிண்ண னுக்கிணையார் தாம்."
- என்று வியந்து பாடினான். இவ்வரலாற்றையே, "அரவின் மணியளித்தும்" என்றவடி நினைவு படுத்துகின்றது.
இத்தகைய சிறப்பெய்திய இந்நூல், இந் நூல்நிலையத் தமிழ் ஓலைச்சுவடி எண் R. 4977-ஆம் எண்ணிலிருந்து எடுத்து ஒல்லும் வகையான் அச்சிடப்பட்டிருக்கிறது. இவ்வோலைச் சுவடியை, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மிதிலைப்பட்டி என்னும் ஊரிலுள்ள, திரு. சிங்காரவேலு கவிராயர் இட்டத்திலிருந்து 1954-ஆம் ஆண்டு அரசியலாரால் இந் நூல்நிலையச் சார்பாக விலைக்கு வாங்கப்பட்டதாகும்.
---------------
(2) சேக்கிப்பட்டி முத்துவீரப்பப் பிள்ளை பேரில் மான் விடு தூது.
முற்காலத்தும் இடைக்காலத்தும் கல்வியானுங் கொடையாலும் தமிழை அலங்கரித்தற்கு முற்பட்டு வந்து அரசர்களும் வள்ளல்களும் பெருகியது போலப் பெருகாவிடினும், பிற்காலத்தே (இற்றைக்கு 500 ஆண்டுகட்கு முன்) அத்தகைய பெரு மக்கள் சிலரையேனும் இத்தமிழகம் உடைத்தாகாமல் போகவில்லை. இக்காலத்தே தமிழ் மூவேந்தர் வாழ்வும் நிலை குலைந்ததாயினும், ஆங்காங்கே அருகித் தோன்றிய சிற்றரசரும் வள்ளல்களுமே கல்வி, கொடைகளால் தமிழணங்கைச் சிறப்பித்தனர். இத்தகையோருள்ளே சேக்கிப்பட்டி முத்துவீரப்ப பிள்ளை என்பவரும் ஒருவராவர்.
இவர், நீதிப்புலனும் நிர்வாகத் திறமையும் மிக்கவர். பொதுவாகவே சேதுபதிகள் என்ற மரபினர் அறிவும் திருவும் நீதியும், புலவர்க் கீயும் பெருவண்மையும் தமிழபிமானமும் உடையவர்களாவர் என நன்குணரலாம்.
"பொய்யார் கலிசூழ் முதுபாரின் முகந்து தானக்
கையார் புனலா னணையாதன கையுமில்லை"
- என்றபடி, முற்காலந்தொட்டு இக்காலம் வரை சிறந்த தமிழ்ப் புலவராயினார் பெரும்பான்மையாக எல்லோரும், "சேதுபதிகளின் வண்மை பெற்றனரே யாவர்" என்று ஆராயுமிடத்துப் புலனாம்.
இந் நூல், முதலில் காப்புச் செய்யுள் ஒன்றும், இடையில் 199 கண்ணிகளையும், இறுதியில் வாழ்த்துச் செய்யுள் ஒன்றும் பெற்றுள்ளது. இதுவும் பெண்பால் ஆண்பால் மீது விடுத்த தூதின்பாற் படும்.
ஆசிரியர் வரலாறு
இதனையும், மிதிலைப் பட்டி - அழகிய சிற்றம்பலக் கவிராயர் குடும்பத்தைச் சேர்ந்த இனிய தமிழ்நலஞ் சிறந்து பாவன்மை படைத்தோங்கும் நாவலர் ஒருவராலேயே பாடப்பட்டிருக்கவேண்டும். பெரியதம்பிப் பிள்ளை மான்விடு தூது பாடிய (வெறி) மங்கைபாகக் கவிராயரே இதனையும் பாடியிருக்கலாமோ என, இந்நூலின் நடை நோக்கு, சொல்நோக்கு, பொருண் நோக்கு முதலியவைகளைக் கொண்டு ஊகிக்க இடமுண்டு.
முத்துவீரப்பப் பிள்ளையின் சிறப்பு.
இவர் "உழுதுண்பார்,'' ''உழுவித் துண்பார்'' என்ற இருவகை வேளாளரில் உழுவித்துண்பார் குடிமரபில் பிறந்தவர். இவ்வேளாளர், தம்பால் வந்தவர்கட்கு வேண்டியவற்றை உதவிப் பாதுகாத்தலும் அரசனுக்குரிய திறையைச் செலுத்தி அதனால் அவனது காரியங்களை நடப்பித்தலுமாகிய செயல்களால்
"இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்
உழவிடை விளைப்போர்''- (சிலம்பு)
என்று சிறப்பிக்கப்பட்டனர். இப் பெருமை வாய்ந்த குலத்துதித்த இம் முத்துவீரப்பப் பிள்ளை என்பார் வீரப்ப பூபதிக்கு மகனாகப் பிறந்து, முத்துலிங்கராசனிடம் பிரதானியாகப் பணியாற்றியவர். அங்காளதேவி, வீரபத்திர சுவாமி, மதுரை வீரன், காமாட்சியம்மை முதலானோரைக் கடவுளராக வழிபடுவோர். தென்பாண்டி மண்டலத்தைச் சேர்ந்த காளை மாநகர் என வழங்கும் கானப் பேரூரில் வாழ்ந்தவர். அழகர்மலை, மணிமுத்தாறு என்பவைகளைச் சிறப்பாகப் பெற்றவர். புலவர்களால் போற்றப்படுபவர். சொன்ன சொல் தவறாதவர். ஸ்ரீராம கிருஷ்ணனை இளவலாகப் பெற்றவர். ரதிகாந்தன் என்று போற்றப்படும்படியான முத்துக் கருப்பண்ணனைப் புத்திரனாகப் பெற்றவர். "வேந்தானுகூலன், பாரிவிடையார் கோத்திரம் விளங்க வந்தவன், செந்தமிழுக்காக ஊர் கொடுத்தவன், பைந்தமிழோர் துதி பண்பு கொள் சீவகன், கவிவல்லவன், ஆராய்ந்து முடிவு காண்போர் ஆகிய இவர்களுடைய அருமை பெருமைகள் ஆராய்ந்தவன், பதினாறாம் நூற்றாண்டிற்குப் பிறகு ஆண்டவன்'' ஆகிய இப்படிப்பட்டவர் பவனிவருதலின் பேரழகைக் கண்டு, மாடங்கள், மாளிகைகள், வாசல் முகப்பு அருகில் கூடங்கள், வீதி முதலிய இடங்களில் கூடி விளையாடுகின்றபேதை முதல் ஏழ்பருவப் பெண்களெல்லாம் அவர் மீது தானடங்காக் காதல் கொண்டு, மகிழ்ச்சி கொண்டு, கை தொழுது, அவர் பவனியேறிவரும் வெண்மருப்புக் குஞ்சரத்தினிடத்தில் "மெள்ள நட"வென்று கையால் வேண்டுகிறார்கள். அதில் ஒருத்தி, தன் மீது மாரன் கணைகள் மாரி எனவே பாய, மயல் கொண்டு, அவன் மார்பில் அணிந்திருக்கும் தாரினை வாங்கி வரும்படி மானினைத் தூது வேண்டுகிறாள்.
நூலின் போக்கு.
1-21 கண்ணிகளில், மானின் பெருமைகளையும்,
22-26 கண்ணிகளில், முற்காலத்தில் ஆடவர்க்கும் பெண்டிருக்கும் தூதாக நடந்தோர்களுடைய வரலாற்றுக் குறிப்பும்,
27-36 கண்ணிகளில், மேகம், தென்றல், அன்னம், மயில், அஞ்சுகம், வண்டு, பெண்கள், பூவை, குயில், நெஞ்சு முதலானவைகளைத் தூது விடுத்தால் வரும் பயனும், அவை தூது விடாமைக்குக் காரணமும்,
37-42 கண்ணிகளில், தலைவனிடத்துக் கொண்ட மையல் மிகுதியால் தலைவி மானைப் புகழ்தலும்,
43-47 கண்ணிகளில், அழகர் மலை, கண்ணன் காமன் ஈசன் ஆகிய மூவரையும் ஒத்து விளங்கும் சிறப்பினையும்,
48-51 கண்ணிகளில், மணிமுத்தாறு, தென்பாண்டி, துவரா வளநாடு, பதி, சேக்கிப்பட்டி மாநகர் முதலியவைகளின் பெருமையும்,
52-61 கண்ணிகளில், குதிரை வீரம், யானை மறம் முதலியவற்றின் சிறப்பும்,
62-65 கண்ணிகளில், பூங்குவளை மாலை, மணிமுரசு, கொடி, ஆணை முதலியவைகளின் அருமைத் திறமும்,
66-104 கண்ணிகளில், முத்துவீரப்பப் பிள்ளையின் குணாகுணங்களின் தன்மையும், சுற்றத்தினர்களின் சிறப்பியல்பும்.
105-148 கண்ணிகளில், முத்துவீரப்பப் பிள்ளை பவனிவருதலின் கோலாகலச் சிறப்பினையும்,
149-170 கண்ணிகளில், பேதை முதல் ஏழ்பருவப் பெண்களெல்லாம் கூடி, காதல் கொண்டு பவனி வருதலின் பேரழகைப் பற்றிப் பேசும் திறனையும்,
171-188 கண்ணிகளில், தலைவி பவனி வருபவனின் மீது காதல் கொண்டு, அவன் கட்டழகைக் கண்ட திறனையும், காதல் கொண்ட
திறனையும், காதல் கொண்டதனால் தனக்கு ஏற்பட்ட மெய்ப்பாட்டின் திறனையும்,
189-197 கண்ணிகளில், தலைவி மானைத் தூது வேண்டுதலையும், தூது சென்று
உரைக்குங் காலங் கூறுதலையும், அவனது தாரினை வாங்கிவர வேண்டுதலையும் மிக அழகாக, எளிய நயம்பட எல்லாவற்றையும் உரைத்துச் செல்கின்றார் இந் நூலாசிரியர்.
இந் நூலும், இந்நூல் நிலையத் தமிழ் ஓலைச்சுவடி எண் R. 4978-ஆம் எண்ணிலிருந்து எடுத்து அச்சிடப்பட்டிருக்கிறது. அதுவும், மேற்படி சிங்காரவேலு கவிராயரிடத்திருந்தே விலைக்கு, இந்நூல்நிலையச் சார்பாக அரசியலாரால் வாங்கப்பட்டதாகும்.
---------------
(3) வெள்ளைய ராஜேந்திரன் துகில்விடு தூது.
இந்நூல், முதலில் காப்புச் செய்யுளான வெண்பாவொன்றையும், இடையில் 304 கண்ணிகளையும், இறுதியில் வாழ்த்துச் செய்யுளான வெண்பா வொன்றையும் பெற்றுத் திகழ்கிறது. இது ஆண்பால், பெண்பால் மீது விட்ட தூதின்பாற் படும்.
ஆசிரியர் வரலாறு.
இந் நூலும், முதலில் பாடிய (வெறி) மங்கைபாகக் கவிராயராலேயே பாடப்பட்டிருக்கவேண்டும். காரணம், பெரிய தம்பிப்பிள்ளை, முத்துவீரப்பப் பிள்ளை, வெள்ளைய ராஜேந்திரன் இவர்களனைவரும், வழிவழி கங்கை குலமாகிய வேளாளர் குலத்தில் உதித்து, வள்ளல் தன்மையில் கொடைமடம்படாது, தென் பாண்டி நாட்டை பகுதி பகுதியாக, ஆண்டவர்களாகத் தெரிகின்றது. இவர்கள் எல்லோர் இடத்திலும் பரிசில் பெறச் சென்ற மங்கைபாகக் கவிராயர் ஆங்காங்கே அவரவர்களின் சிறப்பியல்புகளை தூதுப் பிரபந்தமாகப் பாடிச் சென்றுளார். இவர் தூதுப் பிரபந்தம் பாடுவதில் வல்லவர் என்று இதிலிருந்தே தெளியலாம். இவை தவிர, இந்நூலினைக் கொண்டு வேறு எவ்வித வரலாறும் ஆராய்தற்கிடமில்லாது காணப்பெறுகிறது.
வெள்ளைய ராஜேந்திரனின் சிறப்பு.
இவன், முருகப் பெருமானின் இளமைப் பருவச் செயல்களை யொத்து விளங்கும் தன்மைமிக்க மாணிக்க மலையை யுடைத்தாகின்ற, சிவபெருமானின் கருணை நிறைந்திலங்கும்படியான கல்லக நாட்டில், விக்கினங்களைத் தீர்க்கும் விக்கினேஸ்பரனின் செயல்களை ஒத்து விளங்கும் செண்பக நல்லூரில் பிறந்தவன். கன்ன மதத்தையுடைத்தாகின்ற களிறினையொத்து ஓடும்படியான கரும்பா நதியை உடையவன். அனுமக்கொடி யுடையோன். யானைப்படை, குதிரைப்படை மிக்கவன். வெற்றி மகள் கூத்தாடும் வண்ணம் விளங்கி நின்ற மூன்று முரசுகளும் தனது முன்றில் முழங்குபவன். சோமசுந்தரனை, வாக்கு மனமும் ஒன்றாய் வஞ்சனை இன்றி சிந்தனை வைத்து ஆணை செலுத்துபவன். தென் கரிஞ்சை என்ற நகரின் தலைவனையும் சின்னணைஞ்சான் என்ற துரையையும் துணையாக வைத்து விளங்குவோன். செங்கதிரும் வெண்மதியும் தான் இயற்கையாக உதிக்கும் திக்கினைத் தள்ளி உதித்திடினும், சப்திக்கும் அலை கடல் வற்றிடினும் வார்த்தைப் பழுதுரையாதவன், கருணை வந்து குடி கொண்டிருக்கும் படியானவன். பாமாலை கொடுக்கும் பாவலர்கட்குப் பூமாலை கொடுத்துப் பொன்னும் மணிகளும் கோடிக் கணக்கில் வாரி வழங்குவோன். காசினியில் மேருவரை எப்படிப் புகழ் நிறைந்து விளங்குகிறதோ அது போல் புகழ் உண்டாக ஒன்னார் வயிரத்தையும் ரத்தினத்தையும் தனது தாள்களில் திறையாகச் செலுத்தவும், சீனர் குதிரை கொடுத்துப் பணியவும், கலிங்கர் செம்பொன்னைத் தனக்கு முன் குவிக்கவும், இன்னாரால் இந்தக் காரணத்தால் கொடுக்கப்பட்ட திறை இவ்வளவு, இவ்வளவு என்று சிற்றரசர் கூறிய வண்ணமிருக்கும் அத்தகைய வீரம் படைத்தவன். திசை புகழும் வீரப்பனைத் தன் சிறிய தந்தையாகவும், மன்மதனை ஒத்த இருளப்பனையும் முத்திருளப்பனையும் தன் அண்ணன்மார்களாகப் பெற்றவன். முத்துவீரப்ப ராஜேந்திரனுக்கு மாமன், காத்தப்பனையும், வல்லாளனாஞ் சிவனாம் மன்னனையும் புதல்வரெனக் கொண்டவன். பூங்கோதை என்பாளை மணந்தவன். முத்து வீரப்ப முகுந்தனைத் தனக்கு மெய்த்துணையாக்கி விளங்கினவன். புதுவை இராசப்பனது புத்திரனான கற்பகப் பூபாலன் என்பவனைக் காரியப் பிரதானியாகப் பெற்றுத் திகழ்ந்தவன்.
நூலின்போக்கு.
வெள்ளைய இராஜேந்திரன் பவனி வருங்காலத்து, அவன் அழகைக் காண, ஏழ்பருவப் பெண்களும் வீதிமுன்றில் வந்து நின்றுகொண்டு, அவன் அழகில் மயங்கிக் காதல் கொள்கிறார்கள். அப்பொழுது வெள்ளைய இராஜேந்திரனின் அருமைகளையும் சிறப்புக்களையும் புகழ்ந்து பாடிக்கொண்டிருக்கிறானாகிய ஓர் புலவன், தன்னருகில் வந்து நின்றுகொண்டு பவனிவரும் தோற்றத்தைக்காணும் பருவ மடந்தை ஒருத்தி மீது, புலவன் காதல் கொண்டு அவள் மீது துகிலைத் தூது விடுத்ததாகப் பாடப்பட்டுள்ளது. இச்செய்தி இந்நூலில் காணும்,
-"பேசுதமிழ்க்
கென்னருமை வெள்ளையரா சேந்திரனு லாவந்ததுவும்
மன்னவனை நான்புகழ்ந்து வாழ்த்தியதும் - என்னருகே
வல்லிவந்து நின்றதுவு மாலெனக்குத் தந்ததுவுஞ்
சொல்லிவரக் கேட்பாய் துகிலரசே!''
-என்றவடிகளால் தெரியவருகின்றது.
1- 60 கண்ணிகளில் துகிலின் பரியாயப் பெயர்களை வைத்துக்கொண்டு சமத்காரமுண்டாக அதன் பெருமைகளையும் பண்புகளையும் எடுத்துரைக்கின்றார் ஆசிரியர்.
61 - 62 கண்ணிகளில் துகிலை விளித்து, காதல் மடந்தைமீதுதான் காதல் கொண்ட சந்தர்ப்பத்தினை விளக்குகிறார் புலவர்.
63-67 கண்ணிகளில், மாணிக்கமலை முருகக் கடவுளை ஒத்து விளங்கும் சிறப்பினையும், '
68-70 கண்ணிகளில், கரும்பாநதி, கம்பமதம் பொழியும் களிறினை யொத்து விளங்குதலையும்,
71-73 கண்ணிகளில், கல்லகநாடு இந்திரனை ஒத்து விளங்குதலையும்,
74-76 கண்ணிகளில், செண்பக நல்லூர் விக்கினத்தைத் தீர்க்கும் விநாயகக் கடவுளை ஒத்து விளங்குதலையும்,
77-78 கண்ணிகளில், வெண்டளவ மாலையின் சிறப்பினையும்,
79-88 கண்ணிகளில், குதிரை, யானை இவைகளின் வீரச்சிறப்புக்களையும்,
89-90 கண்ணிகளில், அனுமப்பதாகையின் சிறப்பும், மும்முரசின் தன்மையினையும்,
91-101 கண்ணிகளில், வெள்ளைய இராஜேந்திரன் ஆணைசெலுத்தி ஆட்சி நடாத்தும் ஒழுங்கு முறையினையும், போர்க்களத்தின் சிறப்புக்களையும்,
102-124 கண்ணிகளில், தான் கொலுவீற்றிருக்கும் சிறப்பு, வாய்மையுடன் கருணையோடு நடக்கும் சிறப்பு, புலவர்களிடத்தும் குடிமக்களிடத்தும் நடந்து கொள்ளும் பாங்கு, மாற்றரசர்களும் சிற்றரசர்களும் கப்பம் செலுத்தும் நேர்மை ஆகியவற்றின் தன்மைகளையும்,
125-143 கண்ணிகளில், சுற்றத்தினர் சிறப்பினையும்,
144-வது கண்ணியில் பவனி வருதலை அறிவித்தலும்,
145-155 கண்ணிகளில், மடவார் புனல் ஆடி பவனியைக் காண அழகு செய்து கொள்ளும் முறைகளையும்,
156-194 கண்ணிகளில், மடவார் பவனிவருதலைக் காணச் செல்லுதலும், பவனி வருதலின் பேரழகின் தன்மையும், ஏழ்பருவப் பெண்களும் அவ்வழகில் ஈடுபட்டுக் காதல் மயக்கத்தினால் மயங்கிப் புலம்புலும், அதன் காட்சிகளும்,
195-204 கண்ணிகளில், காதல் மயக்கத்தில் புலம்பலுறும் பெண்களில், வீணைகொண்டு காமன் படை போன்று வாசிக்கும் சங்கீதவல்லியின் சிறப்பியல்பும்,
205-212 மன்மதன், அக் காதல் உருத்தக் கண்ணினார் மீது போர் தொடுக்கும் சிறப்பும்,
213-220 கண்ணிகளில், புலவனாகிய தலைவன் வீணை வாசிக்கும் சங்கீதவல்லி யார் என, தன் அருகில் நின்றவளை வினவுதலும், அவள் இன்னாள் என விடை கூறுதலும், தன் காரியம் இவளால் ஆகுமோ என வினவுதலும், அதற்கு அவள் பதிலிறுத்தலும்,
221-230 கண்ணிகளில், மன்மதன் போர் தொடுத்தலும், புலவன் தன் ஊழ்வினையை நினைந்து வருந்தி தெய்வம் கூட்டுவிக்கும் எனத் தெளிதலும்,
231-271 கண்ணிகளில், மன்மதன் அவ்விடத்தும் போர்தொடுக்க, தலைவன் காளிகோயிலின் சன்னிதியின் ஓர் பக்கத்தில் சற்றே அயர்வினனாகப் படுத்துறங்க , அப்பொழுது அவன் சங்கீதவல்லியுடன் தான் கூடித் திளைக்கும் இன்ப உணர்வு, இன்பக் கனவாகத் திகழவும், அவ்வின்பக் கனவில் கண்ட மெய்ப்பாட்டின் சிறப்பினையும்,
272-280 கண்ணிகளில், தலைவன் தன் கனவை நினைவாக எண்ணி, கண் விழித்து வருந்திய நிலையினையும், அப்பொழுது,
281-306 கண்ணிகளில், தலைவன், "என்னாலேயாவது இனி ஒன்றுமில்லை; உன்னாலே யாகும் என்று உளந் தெளிந்தேன்” என்று துகிலை விளித்துக் கூறி, அதனை காமத்தை விளைத்த மடந்தையிடத்தில் தூது சென்று உரைத்து வா எனக் கூறுகின்ற திறனோடு முடிகிறது இந்நூல்.
இந்நூலில் காணும் சிறப்புக்கள்.
இந் நூலாசிரியர், உள்ளதை உள்ளவாறே தெளிவுபடக் கூறும் தன்மையில் சிறந்தவர் என்பதும் ஆடை நெய்யும்போது தறியில் நடக்கும் நிகழ்ச்சிகளும் கீழ்வரும் அடிகளால் இனிதுணரலாம்.
"நாடறிய
வீதிகொண்டு கால் மடித்து மேனியடி பட்டாலும்
வாதுவ ரேறாதபரி வட்டமே - கோதி நெய்தோர்
கட்டுக் கயிறிழுத்துக் கால்மிதிப்ப மேல்கீழாய்
நட்டுத் தறிபுரட்டும் நாயகமே - கெட்டியாய்த்
தேடும் பதத்தால் திருத்தியநூ லாராய்ந்து
பாடங் கொடுக்கும் பல்கலையே!''
''நேரிழையைக் கூட்டி நெருக்கிநெய்த வஸ்திரமே"
"ஊடும் பாவும் கலக்கும் ஓர்கலையே!"
"அம்பஞ்சி னாலிழைத்துண் டாக்கு துகிலே"
"பஞ்சி வெட்டி உண்டாக்கு துகிலே"
- இவ்வடிகளால் துணி நெய்வோர், எவ்விதம் பஞ்சினை, சிக்கலின்றி நூலாக்கி, அதற்கு முறுக்கேற்றி, குறுக்கேயும் நெடுக்கேயும் நூல் பூட்டி அதனைத் தறியில் அமைத்து, தனது கால்களாலும், கைகளாலும் நெய்கிறார்கள் என்பதை எடுத்துக்கூறும் இயல்பு சிறப்பு வாய்ந்தது.
இவ்வாசிரியர், "இன்னின்ன காரணங்களால் இவை யிவை ஒத்து விளங்குகின்றன என்று சிலேடை உவமையணியின் இலக்கணம்'' படப் பாடியுள்ளார். அஃதாவது, மாணிக்க மலை குறிஞ்சி நிலத்துத் தெய்வமாகிய முருகனைப் போலவும், கரும்பாநதி கம்பமதம் பொழியும் சிந்துரத்தைப் போலவும், கல்லக நாடு வேள்வி நாதனாகிய இந்திரனைப் போலவும், செண்பக நல்லூர் விக்கினத்தைத் தீர்க்கும் விநாயகரைப் போலவும், வெண்டளவமாலை ஆதரவினால் விரும்பி அன்பு செய்து புயந்தோயும் மாதரைப் போலவும் வெள்ளைய ராஜேந்திரன் பொது நீக்கி நிலைநின்று ஆளுவதற்கு மேருவரை போலவும் முதலியன பொருந்தவைத்துப் புகழ்ந்து பாடும் இயல்பு மகிழ்வெய்துதற்குரியதாகும். இன்னும், இன்ப நிகழ்ச்சியாம் புனல் விளையாட்டில் வரும் கண்ணிகளில் திரிபு உவமையணியை நகைச்சுவை பொருந்தப் பாடியிருக்கும் வகைகள் இலக்கிய இன்பத்தை எளிதிலே எடுத்து ஊட்டுவனவாகும். இவ்வாசிரியர் பாடியதில் செம்மொழிச் சிலேடையணியாக வரும் சில கண்ணிகள் வருமாறு.
"வாணிகலா பம்புரிய வந்தாய்என் மீதுபஞ்ச
பாணிகலா பம்புரியப் பார்ப்பாயோ?"
"அம்பஞ்சி னாலிழைத்துண் டாக்குதுகிலே! சிலைவேள்
அம்பஞ்சி னாலிளைத்தே னையோ!"
"ஊடும்பா வும்கலக்கு மோர்கலையே!” என்கணைமார்
பூடும்பா வுங்கலக்கு மோர்கலையே!"
"வாதுகிலே சந்துரைக்க மாட்டாயேல் என்பொருத
வாதுகிலே சந்துடைக்க மாட்டேனே!"
இன்னும், நேரிழை, பூமான், அம்பரம், வாய்த்துடுக்க, கண்டை, மலைச்சுவட்டில், ஓர்கலை முதலிய சொற்களை வைத்துக்கொண்டு சிலேடை நயம்படப் பாடியிருப்பது நோக்கத்தக்கதாகும்.
துகிலின் பரியாயப் பெயர்களைக் கொண்டும், அதன் தன்மையைக் கொண்டும், அதனைப் பயன்படுத்தும் இடத்தின் தன்மையைக் கொண்டும் சமத்காரம் பட விளித்துக் கூறும் புலவர் திறமையை, கீழ்வரும் சில கண்ணிகளால் படித்துணரலாம்.
"நாட்டிலே
செந்திரு வண்ணாரைத் திருப்பூட்டு முன்மருவு
மந்திர கூறையென்னும் மாப்பிள்ளையே!"
"கொங்கை தடிக்குமுன்னே குள்ளவல்ல வட்டமுமாய்
மங்கையமார் பைத்தடவு மச்சானே! - தங்கும்
வடிவுடைய பெண்களிரு வாழைத் துடையுங்
கடிதடமும் பார்த்த கணவா!- முடிதாங்கி
நீட்டித் தழுவணையாய் நீகிடப்பப் பெண்கள்கை
போட்டணைக்குங் கள்ளப் புருஷனே!"
இன்னும், "பல்கலை, தானை, கோசிகம், அம்பரம், வாசம், கோடி, கோடீகம், பரிவட்டம், வத்திரம், நிலவட்டம், துகில், சீலை, சிறுபிள்ளை, சக்கரவர்த்தி, சேலை, படை, காவி, பட்டம்" முதலிய காரணகாரியப் பெயர்களைக் கொண்டு வர்ணித்திருக்கும் திறமை எவ்வளவு இன்ப ரசத்தை நமக்கு விளைவிக்கின்றன என்பதையறியலாம். மேலும், இவ்வாசிரியர் ஊழ்வினையின் கால நிகழ்ச்சியை எவராலும் தடுத்தற்கரியது என்றும், அதன் வலிமையே வலிமை என்றும் பின் வரும் கண்ணிகளால் அறிவிக்கிறார்.
"வைக்கும்
பனையேறி பாளைதொடாப் பாவியேன் செய்த
வினையே வலியது என்ன வேணும் !"
"இவ்வளவுஞ் செய்ததெய்வ பின்னுமென்ன செய்யுமோ !"
"கைக்கெட்டி வாய்க்கெட்டாக் காலமோ"
- இவ்விடத்து, பொய்யாமொழி கூறிய வாயுரையாகிய,
"ஊழிற் பெருவலி யாவுள மற்றது
சூழினுந் தான்முந் துறும்."
- என்ற பாடலின் கருத்து ஒப்புநோக்கற் பாலதாம். மேலும்,
''கண்ணொடு கண்ணினை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனு மில''
-- என்ற குறட் கருத்தை ,"இம்மனது மம்மனது மேகமாய்ச் சம்மதித்து" என்ற கண்ணி உட்கொண்டு திகழ்வது நினைவுபடுத்தற்குரிய தொன்றாகும்.
வரலாற்றுக் குறிப்புகள்
பாரதத்தில், "துரோபதையை துகில் உரியும் காலத்து கிருஷ்ணன் தனது சக்தியினால் துரோபதைக்குத் துகில் வளர்ந்து கொண்டேயிருக்கும் வண்ணம் அருளிச் செய்தார்" என்பதும்,"அர்ச்சுனனுக்கு கிருஷ்ணன் தேர்ச்சாரதியாகவிருந்தான்" என்பதும், "மகாபலி சக்கரவர்த்தியிடம் திருமால் மூன்றடி மண் கேட்டு மூவுலகத்தையும் அளந்தான்" என்பதும் ஆகிய புராண வரலாற்றுக் குறிப்புக்களும், புறநானூற்றில் பாரி என்ற வள்ளல் மயிலுக்குப் போர்வை கொடுத்த இலக்கிய வரலாற்றுக் குறிப்பும், 292, 293, 109 ஆகிய கண்ணிகளால் அறியக்கிடக்கின்றன. 92-வது கண்ணியில் வருகின்ற பரஞ்சோதி முனிவர் என்பவர் திருவிளையாடல் புராணம் பாடிய இலக்கண இலக்கியங் கற்ற ஓர் சைவப் புலவர் ஆவர். 93-வது கண்ணியில் வருகின்ற சின்னணைஞ்சானென்ற துரைச் செம்புலி என்பவர், திருநெல்வேலி மாவட்டத்தில் சொக்கம்பட்டி ஜமீனில் இருநூறு ஆண்டுகட்கு முன் சமஸ்தானாதிபதியாக இருந்தவர். அது பொழுது அவரிடம் சேனாதிபதியாக பொன்னம்பலம் பிள்ளை என்ற ஓர் அறிவில் திறம் பெற்றவர் இருந்தார். இவர் திறமை, அவ்வூர் வரலாற்றால் அறியலாம். அது பொழுது அவ்வூர் இளவரசுப் பட்டத்தில் இருந்தவர் இராஜ கோபாலத் தேவர் ஆவர். 117-வது கண்ணியில் வருகின்ற முதுசீனர் என்பவர்களும், 118 - வது கண்ணியில் வருகின்ற வடகலிங்கர் என்பவர்களும் பண்டைக் காலத்தில் தமிழ்நாட்டு மன்னர்களிடத்தில் தொடர்புகொண்டு இருந்தார்கள். தாங்களனைவரும் இந்நாட்டோடு வாணிபம் செய்வதற்கு, இந்நாட்டு மன்னர்களிடத்தில் அனுமதி கேட்டுப்பெற்று, பொன்னும், நவரத்தினங்களும், குதிரைகளும் கப்பமாகக் கட்டி வாணிபம் செய்து வந்தார்கள் என்ற செய்திகள் இந்நூலால் அறியப்படுகின்றன. "சுற்றத்தினர் சிறப்பு" என்ற தலைப்பின் கீழ் வரும் கண்ணிகளினால் வெள்ளைய ராஜேந்திரனின் வம்சாவளி கூறப்படுகின்றது. 214- வது கண்ணியில் சங்கிராம விக்கிரமன் என்பது ஓர் மரியாதைக்குரிய பட்டம். இப்பட்டம் பராந்தக சோழனுக்கு வந்தது என்று பிருதிவிப் பட்டயத்தால் அறிவிக்கப்படுகின்றது.
உவமை விளக்கங்கள்
-"முன்னாளில் தேசிகனென் றோராசைத் தேகசொர்க்கம் சேரவிட்டக்
கோசிகனுக் குன்பேரங் கோசிகமே! "
கோசிகன் தன் தேகத்தை சொர்க்கம் சேரவிட்ட கதை :
கோசிகர் என்பவர் ஓர் தவமுனிவர் ஆவர். இவர் தமது தேகத்தை ஓரிடத்தில் வைத்துவிட்டு மற்றொரு தேகத்திற்குப் புகுந்து சஞ்சரிப்பாராயினார். விட்ட தேகம் அழிந்து அஸ்தி மாத்திரம் கிடந்தபோது, அவ்வழியாக ஆகாயத்திலே சென்ற கந்தருவன் அதற்கு நேரே வந்தபோது கீழே விழுந்தான். அது கண்ட பாலகல்யமுனி அவனை நோக்கி, நீ இவ்வஸ்தியைக் கொண்டுபோய்ச் சரசுவதி நதியில் இட்டுக் குளித்துப் போவையேல், அந்தரம் செல்லலாமென, அவ்வாறு அவனுஞ் செய்து அந்தரஞ் சென்றான். அம்முனிவருடைய அஸ்தி புண்ணிய தீர்த்தத்தில் போட்டதால் அது சொர்க்கம் சேர்ந்துவிட்டது என்பது புராண வரலாறு. இதனையே மேலே கண்ட கண்ணியில் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது.
- "பன்னாளில்
மன்றல்கமழ் பூங்கோதை மாணிக்கத் தாள்கொடியில்
என்றகதை கேட்டுமிருப் போமே'' (40)
பூங்கோதை மாணிக்கத்தாள் வரலாறு
மாணிக்கத்தாள் என்றால் நடனமாது என்று பொருள். பூங்கோதை என்பது இவள் இயற் பெயர். இவள், பதினெட்டாம் நூற்றாண்டில் மதுரையில் வாழ்ந்த கல்வி வல்ல ஓர் தாசியாவள். சீதக்காதி என்னும் காயலானாகிய பிரபுவிற்குக் காமக் கிழத்தியாய் இருந்தமையால் இவளை, இவளின் இனத்தவர்கள் நீக்கிவிட்டனர். இவள் ஒருமுறை கள்வரால் பறிக்கப்பட்டுப் பொருள் இழந்து மீண்டும் அப்பிரபுவை நோக்கி,
"தினங்கொடுக்குங் கொடையானே
தென்காயற் பதியானே சீதக்காதி
யினங்கொடுத்த வுடைமையல்ல தாய்கொடுத்த
வுடைமை யல்ல வெளியாளது
மனங்கொடுத்து மிதழ்கொடுத்து மபிமானந்
தனைக்கொடுத்து மருவி ரண்டு
தனங்கொடுத்த வுடைமையெல்லாங் கள்வர்கையிற்
பறிகொடுத்துத் தவிக்கின் றேனே.''
- என்று பாடி மீண்டும் பொருள் பெற்றனள். இவள் உடையழகில் மயங்குவள் எனவும், உடை கொடுத்தால் இவளை யடையலாம் எனவும் கூறப்படுகின்றது. இக்காரணத்தைக் கொண்டே இவளின் சிறப்பை துகிலின் மேலேற்றி துகிலின் சிறப்பாக எடுத்துக் கூறுகின்றார் இவ்வாசிரியர்.
"மெல்லிடையின் மேலிருக்கி விட்டமுந்தி வீச்சாலே
வல்லிடையன் சாய்த்த மரமானேன்"
இடையன் சாய்த்த மரம் என்பது :- இடையர்கள் ஆடுமாடுகட்கு உணவளிப்பதற்காக மரக்கிளைகளை வெட்டிச் சாய்ப்பார்கள். அப்போது, கிளைகள் அடியோடு விழும்படி வெட்டிவிட மாட்டார்கள். அவ்வாறு வெட்டி விட்டால் அக்கிளைகள் பின்பு பயன்படாமல் போய்விடும் என்று கருதி, கிளைகள் துண்டித்து விழாமல் முறிந்து தொங்குமாறு வெட்டுவார்கள். முறிந்து தொங்கும் கிளைகளின் மேல் காலையூன்றிக் கொண்டு ஆடுமாடுகள் தழைகளைத் தின்னும். கிளைகளோ மரத்தோடே ஒட்டிக்கொண்டு இருப்பதால் மறுபடியும் தழை தழைக்க ஏதுவாகும். ஆகவே, இடையன் சாய்த்த மரம் முழுவதும் அறாமல் அரைகுறையாக உயிர் வைத்துக் கொண்டிருக்கும். இந் நிலையை புலவன் தனது நிலைமைக்கு ஒப்பிட்டுக் கூறுகின்றான். எவ்வாறெனில், தான் காதல் கொண்டுள்ள சங்கீதவல்லியின் மீதுள்ள ஏக்கத்தால் மனமழிந்தும், அடைவோம் என்ற நம்பிக்கையால் உயிர் வைத்துக் கொண்டும் இருக்கிறேன் என்று, இடையன் சாய்த்த மரத்தின் தன்மையை உவமையாக்கிப் புலப்படுத்துகின்றான் புலவன். இவ்வுவமையே பிற நூல்களிலும் பயின்று வரக் காணலாம்.
"அடையப் பயின்றார்சொல் ஆற்றுவராக் கேட்டால்
உடையதொன் றில்லாமை யொட்டின் - படைபெற்
றடைய அமர்த்தகட் பைந்தொடி அஃதால்
இடைய னெறிந்த மரம்.''
- என்று பழமொழியிலும்,
''படைநின்ற பைந்தா மரையோ டணிநீலம்
மடைநின் றலரும் வயலாளி மணாளா!
இடைய னெறிந்த மரமேயொத் திராமே
அடைய வருளா யெனக்குன்ற னருளே.''
- என்று பெரிய திருமொழியிலும்,
''இடைமகன் கொன்ற வின்னா மரத்தினேன்''
- என்று சீவகசிந்தாமணியிலும்
கூறப்பட்டுள்ள கருத்துக்கள் அவ்வுவமையோடு பொருத்திட்டு நோக்கத் தெளியலாம். இன்னும், "இடையன் வெட்டு அறா வெட்டு" என்னும் பழமொழியையும் சிந்தித்து உணர்வோமானால், இவ்வுவமையின் விளக்கம் உள்ளங்கை நெல்லிக்கனி போல, அப்பழமொழி விளங்க வைக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்நூல், இந்நூல் நிலையத் தமிழ் ஓலைச்சுவடி எண் R. 1750-ஆம் எண்ணிலிருந்து எடுத்து ஒல்லும் வகையான் அச்சிடப்பட்டிருக்கிறது. இவ்வோலைச் சுவடியை, சென்னை, திருவல்லிக்கேணி, சிங்கராச்சாரி தெரு, 35 - ஆம் எண்ணுள்ள வீட்டிலிருக்கும் திருவாளர். எஸ். வி. துரைராசன் என்பாரிட மிருந்து 1948 ஆம் ஆண்டு சென்னை அரசியலாரால் இந்நூல் நிலையச் சார்பாக விலைக்கு வாங்கப்பட்டதாகும்.
----------------
4. செங்குந்தர் துகில்விடு தூது.
இத்தமிழகம் நிலப் பிரிவுக்குரிய மக்கட் பகுதியே யன்றிக் குலப்பிரிவான மக்கட் பகுதியை நெடுங்காலத்திற்கு முன் எய்தியிருந்ததில்லை என்பதை அறிஞர் அறிவர். ஆயினும், பலவற்றாற் பரந்துள்ள சாதிகளைப் பற்றிப் புலவர் பலர் சாதி நூல்கள் பலவற்றைப் பாடிவைத்தனர். அவற்றில் உயர்வு நவிற்சியான போலிக் கதைகள் காணப்படினும், சில சாதியாருடைய பண்டைக்கால வழக்கவொழுக்கங்களும் வேறு சில செய்திகளும் கிடைப்பதனால், சாதி நூல்கள் அறவே கடியப்படத் தக்கன அல்ல. இத்தகைய பயன் கருதியும் சாதியைப் பற்றிக் கூறும் நூல்களை வெளியிடலாம். ஆதலின், இந்நூல் செங்குந்தர் என்னும் ஒரு மரபினரைப் பற்றிக் கூறுகின்றது.
இந்நூல், முதலில் காப்புச் செய்யுள் ஒன்றும், இடையில் 271 கண்ணிகளையும், இறுதியில் வாழ்த்துச் செய்யுளோடு நேரிசை வெண்பா வொன்றினையும் பெற்றுத் திகழ்கிறது. இஃது, ஆண்பால் பெண்பால் மீது விடுத்த தூதின்பாற் படும்.
ஆசிரியர் வரலாறு
கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சேலம் - வெண்ணந்தூர் என்னும் ஊரில் வீரசைவாசாரம் பொருந்திய செங்குந்தர் குலத்தில் உதித்த பரமானந்த நாவலன் என்பார் இதன் ஆசிரியர் ஆவர். இவர் இளமைப் பருவம் முதற்கொண்டே முருகக் கடவுளின் கருணை நோக்கம் பெற்று, இலக்கண இலக்கியங்களை நன்கு தெளிவுபடக் கற்றுணர்ந்து, விருதுகவி பாடும் திறமை எய்தி, எண் திக்கிலும் விருது கவிபாடி வெற்றி முழக்கம் செய்தவர் ஆவர். இச்செய்திகள், இந்நூலின் இடையே காணப்படும் பின்வரும் அடிகளால் அறியக் கிடக்கின்றன.
"-சேர் கொங்கில்
சேலம்வெண் ணந்தூர்தல மாம்பொனலை யாகிரியில்
வேலரரு ளாலே விருதுகவி - நாலுதிக்கும்
நாட்டுப்பர மானந்த நாவலனென் பேராகும்
பூட்டுமன்பா லிட்டலிங்கப் பூசைசெய்து – கூட்டருள்சேர்
வீரசைவா சாரம் விளங்கியசெங் குந்தர்குல
தீரனென்று சேதியெல்லாஞ் செப்பினேன்"
பேரரசர்களாலும், சிற்றரசர்களாலும், கொடைத்தன்மை வாய்ந்த வள்ளல் பெருமக்களாலும் தமது செங்குந்த குலவதிபர்களாலும் நன்கு ஆதரிக்கப் பெற்றுப் புகழ் பெற்றவர். முருகன் எழுந்தருளாநின்ற சைவத் தலங்களில் எல்லாம் சென்று அவரைப் புகழ்ந்து பாடி தரிசித்தவர் என்பது இந்நூலால் அறியக் கிடக்கின்றது. இவர் கவிபாடுந் திறமையே யன்றி,
"செய்யுந் தொழிலைச் சீர்தூக்கிப் பார்க்குங்கால்
நெய்யுந் தொழிலுக்கு நிகரில்லை - வையகத்தில் ''
என்று அவ்வையாரால் சிறப்பித்துப் பாடப்பெற்றதும் பாவம் அல்லாததும் என்று கருதப்படும் தறிநெய்தற்றொழிலை குலத் தொழிலாகக் கொண்டவர். இவர், "முன்னோர் மொழிபொருளேயன்றி, யவர் மொழியும் பொன்னேபோல் போற்றுவம்" என்பதற்குச் சான்றாக, இந்நூலில் பலவிடங்களில் முன்னோர் மொழிந்த மொழிகளை அப்படியே எடுத்தாண்டுள்ளார். மற்றும், செங்குந்தரின் அருமை பெருமை உயர்வுகளையும், கடவுள் பற்று, குணந்தொழில் முதலிய இயல்புகளையும் விளக்கியுள்ளார். செங்குந்தர் வீரவாகு தேவரின் வழிவந்தோர் எனவும், ஈகை, வாய்மை, ஒப்புரவு, கொல்லாமை முதலிய அருங்குணங்களையும் உடையவர் எனவும் கூறியுள்ளமை காணத்தக்கது.
செங்குந்தர் வரலாறு
உலகத்து மக்கட்கு மானத்தைக் காப்பதற்கு உறுதியாவன ஆடை முதலிய உடுக்கைகளே. அவற்றை முற்காலங்களில் நூல் நூற்கும் பொறி இல்லாத போழ்தத்துப், பெண்டிரும் ஆடவரும் தங்களது கையாலும் சிறு கருவிகளினாலும் பஞ்சுகளைக் கொண்டு நூல் நூற்று ஆடை முதலிய வமைத்து மானத்தை நீக்கி வைத்தவர்கள் தமிழ்நாட்டுச் செங்குந்தர் என்னும் பெரும் பிரிவினரே யாவர்.
உமாதேவியின் பாதச் சிலம்பில் உதிர்ந்த நவமணிகளில் அப் பார்ப்பதியார் திருவுருவத்தைக் கண்ணுற்றுச் சிவபெருமான் கொண்டருளிய இச்சையால் கருவுற்ற ஒளியுடைய நவரத்தினப் பெயர்கொண்ட மகளிர்களிடத்தில் அதிமேம்பாடடைந்த வீரத் தன்மையுடன் உதித்த பெரிய தவத்தினையுடைய வீரவாகுதேவர் முதலிய நவவீரர்களின் வழித்தோன்றினவர் இச் செங்குந்தர் என்பதாம். இச் செய்தி, புராண பிரசித்தமாம். ஞானப்பிரகாச முனிவரால் செய்யப்பட்ட பிள்ளைத் தமிழில்,
"மயில்வா கனத்தோன் துணையாக வந்தோர்
தாலோ தாலேலோ"
"தேவியுமை பாகச் சிலம்பில்வரு வீரியர்கள்
சிறுதே ருருட்டி யருளே"
என்ற அடிகளால் இனிதுணரலாம். குந்தம் என்னும் வீரப் படைக்கு உரியார் செங்குந்தர் என்பது பொருள். (குந்த மெனினும் ஈட்டி எனினும் ஒக்கும்.) இற்றைக்கு 2500 ஆண்டுகட்கு முன்னர் சேந்தனார் தனது திவாகர நிகண்டினுள்,
"செங்குந்தப் படையர் சேனைத் தலைவர்
தந்து வாயர் காருகர் கைக்கோளர்"
என்று செங்குந்தரைச் சிறப்பிக்கின்றார். இதினின்று செங்குந்தப்படையர் முதலிய ஐந்து பெயர்களும் செங்குந்தர்களையே குறிக்கின்றன என்று அறிகிறோம். ஆயினும், அடியார்க்கு நல்லார், சிலப்பதிகாரத்து இந்திரவிழவூரெடுத்த காதையுள்,
"பட்டினு மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருக ரியற்கையும்"
என்னுமிடத்துச் சாலியரையே குறிப்பிட்டுக், கைக்கோளர் என்கின்ற சாதியாரைக் காட்டாமல் விட்டார். இஃது செங்குந்தர்கள் சேனைத் தலைவர்களாகவும், தொண்டைமான் முதலியோர்களாற் பெரும் பட்டங்களும் அரசச் செல்வங்களும் அடையப் பெற்று சிறப்புற்றிருந்த பண்டைய பெருங்குடிகளாய் அமைந்ததால் போலும்.
இவர்களது சிறப்புக்களைப் பிரபந்தங்கள் பல படப் புகழ்ந்து கூறும். நாகை - முத்துக் குமாரதேசிகராற் செய்யப்பட்ட கலித்துறையந்தாதியில்,
"தப்பில் புராணம் பரணி உலா பிள்ளைத் தண்டமிழ்முன்
செப்பும் பிரபந்தம் எண்ணில் பெற்றவர் செங்குந்தரே"
- என்று வருவனவற்றால் இவர்கள் பிரபந்தங்களால் புகழப் பெற்றவர்கள் எனவறியலாம்.
செங்குந்தர்கள் சிறந்த வீரர்கள் என்பது :
"சண்முகன்றன் சேனாபதிகளும் சேனையும் ஆனவர்
செங்குந்தரே"
"சிங்களமாதிய பல்தேயம் வென்றவர் செங்குந்தரே" என்ற, பழைய நூல்களில் வரும் அடிகளால் விளங்கும்.
சீலமுடையவர் என்பது :
''தேவாரமுற்றும் படிப்பாரும் அங்கையிற் செங்குந்தரே''
''திருவாசகஞ் சொல் ஒருவா சகத்தரும் செங்குந்தரே''
''நிதம் அந்திசந்தி சிவசிந்தனை மறவாதவ
ராவரிச் செங்குந்தரே''
என்று, வரும் பழைய நூலடிகளால் அறியலாம்.
சொன்ன சொல் தவறாதவர்:
''தேவே விலகினும் நாவிலங் காதவர் செங்குந்தரே''
என்று வரும் நூலடியால் உணரலாம். செங்குந்தரைப்பற்றி எழுத வேண்டுமென்றால் மிகவிரியும். பழைய காலத்துக் கல்வெட்டுக்களில் கண்ட விசயாலயன், பராந்தகன், கோப்பர கேசரி, இராஜேந்திரன், திரிபுவன தேவன், இராசராசன், விக்கிரம சோழன் , அநபாயன், சுந்தர பாண்டியன், வல்லாள தேவன் முதலிய அரசர்களது ஆணையில், இப் பெரும் பிரிவினர்களைப் புகழாத இடங்கள் கிடையா. திருவண்ணாமலையில் வல்லாள தேவரால் ஏற்படுத்தப்பட்ட கோபுரத்தின் தென்பாகத்தில் எழுதப்பட்டுள்ள ஒரு அரிய கல்வெட்டொன்றில், இவர்களது சிறப்புக்கள் கூறப்பட்டிருக்கின்றன. இவர்களின் பெருமைகளையும் பண்டைய நாட்களின் பல சிறப்புக்களையும் குறித்துப் பலவிடங்களில் எழுதியிருந்தாலும், பல்குன்றக் கோட்டத்துச் சிங்கபுர நாட்டு அண்ணமங்கலயப்பற்று தேவனூர்க் கோயில் கல்வெட்டுக்களிலும், வெண்ணிக்கோட்டத்து கோலிய நல்லூரிலும், பையூர்க் கோட்டத்துக் கீழ்பட்டைய நாட்டின் திருவான்பூரென்னும் தமிழ் முருகவேளாரது கோயிலுள்ளும் எழுதப்பட்டுள்ள அரிய கல்வெட்டுகளுள், இவர்களது பெருமைப்பாடுகள் குறித்து மிகச் சிறப்பிக்கப்படுகின்றன. இக் கல்வெட்டுக்களால் பல கோயில்கள் எழுப்பித்தும் பல கோயில்களுக்கு நித்தியக் கட்டளைகள், திருவிழாக்கள் முதலிய தான தருமங்கள் செய்வித்தும் வாழ்ந்தவர் செங்குந்தர் என்பது விளங்கும். இவர்களது வரலாற்றைத் தொண்டை மண்டல வரலாறு என்னும் நூலிலும், இம் மரபில் தோன்றி திக்கெங்கணும் வெற்றிக்கொடி நாட்டிய ஒட்டக்கூத்தர் என்னும் புலவரால் பாடப்பெற்ற, "ஈட்டி எழுபது" என்ற நூலினும், கடம்பவன புராணத்தில் வீர சிங்காதனச் சருக்கத்திலும், ஸ்ரீகந்தபுராணம், செங்குந்தர் பரணி, சேனைத்தலைவர் உலா, பிரமாண்ட புராணம், கந்தபுராணம், திருவாரூர் லீலை, ஏழாயிரப் பிரபந்தம், வல்லான் காவியம் முதலிய நூல்களிலும் சோழ மண்டல முதலிகள் என்னும் காரணப் பெயரையும், வீர தீரத் தன்மைகளையும் கூறப்பட்டிருக்கின்றன. இந்நூல் பாடிய பரமானந்த நாவலரும் இந்நூலினுள் செங்குந்தகுல மரபினரைப் பற்றிய பிறப்பு, தொழில், கடவுள் பற்று, குணங்கள், அவர்களின் ஊராளும் நாட்டாண்மை சபை, அதன் இயல்புகள் முதலியன யாவற்றையும் குறிப்பாகவும், தெளிவு படவும் கூறிச் சென்றிருக்கின்றார்.
நூலின் போக்கு
1-8 கண்ணிகளில், திருமால், பிரமர், முனிவர், இந்திரர் முதலியோர்களின் துயரத்திற்குச் சிவபெருமான் இரங்குதலும், உமையைச் சிவன் மணத்தலும், கந்தப் பெருமான் திருவவதார நிகழ்ச்சியும் கூறப்பட்டுள்ளன.
9 - 13 கண்ணிகளில், உமையின் பாதச் சிலம்பின் நவரத்தினங்களிலிருந்து நவசத்திகளுண்டாய், அவர்களனைவரும் நவ வீரர்களைப் பெற்ற வரலாற்றுக் குறிப்பும் அவர்களிடத்திலிருந்து தோன்றிய வியர்வையிலிருந்து நூறாயிரவர் தோன்றிய குறிப்பும் கூறப்பட்டுள்ளன.
14-15 கண்ணிகளில், முருகன் பிரமனின் செருக்கை யடக்கிய வரலாறும், தான் சிருஷ்டித் தொழில் செய்ததும் கூறப்பட்டுள்ளன.
16 – 17 கண்ணிகளில், சிவனால் பிரமன் சிறை மீண்டது, முருகன் சிவனுக்கு பிரணவப் பொருளை குருமூர்த்தமாக நின்று உபதேசித்தது ஆகிய வரலாறுகள் கூறப்பட்டுள்ளன.
18-வது கண்ணியில், முருகன் சக்திவேல் பெற்றதையும்,
19-22 கண்ணிகளில், முருகன் தன் தந்தையின் ஆணைப்படி சூரபதுமன் முதலானோரை வென்ற செய்தியும்,
23-வது கண்ணியில், முருகன், இந்திரன் மகள் தெய்வ யானையை மணந்த குறிப்பும், 24-25 கண்ணிகளில், செங்குந்தர் வீரவாகுதேவரின் பரம்
பரையினர் என்பதும்,
26 - 28 கண்ணிகளில், செங்குந்தரின் கடவுள்பற்றும், அவர் செய்யும் திருவிழாவின் குறிப்பும் அவரது பண்பாடு ஆகியவைகளைப் பற்றியும்,
29-வது கண்ணியில், செங்குந்தர் ஆண்ட மண்டலங்களின் பெயர்களையும்,
30 - 44 கண்ணிகளில், செங்குந்தரின் குணாதிசயங்கள், அவரது தொழில் நுட்பங்கள், தமது குலப் புலவரான ஒட்டக் கூத்தரைப் புரந்து தாம் பெற்ற பேறுகள், அவர்கள் பெற்ற வரிசைகள், பல கொடைவள்ளல்களால் புகழப்பெற்றவை ஆகிய செய்திகளையும் கூறப்பட்டிருக்கின்றன.
45 - 46 கண்ணிகளில், புலவர் தாம் சென்று போற்றி வந்த முருகன் ஊர்களைப் பற்றிக் கூறுகின்றார்.
47 - 53 கண்ணிகளில், திருவேரகத்தில் புலவர் தாம் தரிசித்த முருகன் கோலத்தைப் பற்றியும், அச்சந்நிதியில் முனிவர்கள் வணங்கும் காட்சி, நடனமாது ஆடும் காட்சி முதலியவைகளைப் பற்றியும்,
54-வது, கண்ணியில், புலவர் முருகனைப்பற்றிப் பாடிப் பணிந்து பாமாலை செய்ததையும்,
55 - 57 கண்ணிகளில், முருகன் சந்நிதியில் வணங்குவோரின் மெய்ப்பாட்டின் தன்மையையும்,
58 - 80 கண்ணிகளில், புலவர், முருகன் புகழினைச் சொல்மலர்களால் அருணகிரியார் திருப்புகழ் முதலியன கொண்டு போற்றிப் பாடுகின்றார்.
81 - 82 கண்ணிகளில், புலவர், திருவேரக முருகனைப் போற்றி செய்து, "தன்னைக் காத்தல் நின்கடன்'' எனக்கூறி, தலவாசம் செய்ததாகக் கூறுகின்றார்.
83 - 89 கண்ணிகளில், முருகன் புலவர் கனவில் தேசிகராய்த் தோன்றி, "யாது வேண்டும் உமக்கு'' என வினவினதையும், அதற்குப் புலவர், "கனவினும் உன் புகழைப் பாட, வுனையே வணங்க, பொன் பொலியும் வாழ்வு புகழீகை இன்பம் தவிரா திகபரமும் தந்தருள் ஐயா,'' எனக் கூறி வேண்டினதையும், முருகன், "பாளைய சீமைக்குள் வளர் செங்குந்த சபையோரின் மூலமாக நீ நினைத்த செல்வமெல்லாம் தந்தருள்வோம்'' என்று கூறி மறைந்த செய்தியும் கூறப்பட்டுள்ளன.
90 - 100 கண்ணிகளில், புலவர் கும்பகோணம், திருநாகேஸ்வரம் முதலிய சிவத் தலங்களைத் தரிசித்துப், பின்னர், பெரிய தம்பி மன்னன் அன்பினால் ஆதரிக்கப்பட்டிருந்த செய்தி கூறுகின்றார்.
101 - 134 கண்ணிகளில், பாளையஞ் சீமைக்குள் இருக்கும் பல நாட்டு செங்குந்தர்களும் கூடி, பலப்பல தீர்ப்பு வழங்குதலின் நேர்மையும், அந்நாட்டாண்மை சபையின் இலக்கணமும் நேர்மையும் பொதுவாகவும் சிறப்பாகவும் கூறப்பட்டிருக்கின்றன.
135 - 144 கண்ணிகளில், புலவர் செங்குந்த சபையினிடத்துச் சென்றதும், அச்சபையோர் தன்னை வரவேற்று வினாவியதையும், அதற்குத் தான் பதிலளித்ததையும் கூறுகின்றார்.
145 - வது கண்ணியில், அச்சபையோர் தனக்கு ஈந்த வரிசையின் சிறப்பினைக் கூறுகின்றார்.
146 - 249 கண்ணிகளில், துகிலின் பரியாயப் பெயர்களைக் கொண்டும், அது பயன்படும் இடத்தின் தன்மையைக் கொண்டும், அது இல்லாததால் ஏற்படும் தன்மையும் இருந்தால் ஏற்படும் பெருமையைக் கொண்டும் துகிலின் பெருமையை உயர்வு நவிற்சி படப் புகழ்ந்து கூறுகின்றார்.
250 - 253 கண்ணிகளில், தன்னை வருத்திய பரத நாட்டியம் கற்றாடிய பெண்ணின் தன்மையையும், தன்னையவள் வருத்திய விதத்தையும் கூறுகின்றார்.
254 - 258 கண்ணிகளில், புலவர் பரதவிதத்தாலாடிய பெண்ணைப் புகழ்ந்து கூறுகின்றார்.
259 - 261 கண்ணிகளில், புலவர் தன் ஊழ்வினையின் வலியை எடுத்துரைக்கின்றார்.
262 - வது கண்ணியில், இவையிவை பொல்லாதது என்று கூறுகின்றார்.
263 - 271 கண்ணிகளில், புலவர், தான் அவளை நினைத்து வருந்தி வாடிய தன்மையையும், அவளையடைய அவளிடத்துத் தூது சென்று அவளை யழைத்துவா, என்று துகிலைத் தூது விடுத்தலோடும் முடிகிறது இந்நூல்.
இந் நூலில் காணும் சிறப்புக்கள்
இந்நூல் ஆசிரியர், சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்னும் அழகுபட முதல் இருபத்தைந்து கண்ணிகளில், கந்த புராண வரலாற்றைத் தொகுத்துக் கூறுகின்றார். இந்நூலால், செங்குந்த மரபினர் பண்டு தமிழகம் முழுவதும் பரவி வாழ்ந்தனர் என்பதும், அக்காலத்திய அரசர்களாலும் வள்ளல்களாலும் அறிஞர் பெருமக்களாலும் சிறப்புப் பட்டங்கள் பெற்றும், அரச காரியங்கள் செய்வோர் என்பதும், தங்களுக்குள், நாட்டாண்மை பொதுச் சபை ஏற்படுத்திக்கொண்டு, எப்படிப்பட்ட சிக்கலான வழக்குகளாய் இருந்தாலும், பண்டு மரியாதை ராமன் தீர்த்து வைத்தது போன்று சாதுரியத்தினால் தீர்த்துக் கொண்டும், வள்ளுவர் வாய்மொழியில் கூறிய,
"உரைப்பார் உரைப்பவை யெல்லா மிரப்பார்க்கொன்
றீவார்மேல் நிற்கும் புகழ்.
நல்லா றெனினுங் கொளறீதே மேலுலகம்
இல்லெனினு மீதலே நன்று.
தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலில் தோன்றாமை நன்று.
அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர்"
என்னும் இலக்கணத்திற்கு தாங்கள் இலக்கணமாகத் திகழ்ந்திருந்தும், முருகர் கோயிலில் ஆண்டாண்டு தோறும், ''சூரசங்காரத் திருவிழா" செய்பவர் என்றும், முதலாய செய்திகள் அறியக் கிடக்கின்றன. மேலும்,
ஆசிரியர், கருத்தினுட்பொருளை, விளக்கும் சொற்களை அழகுபட எடுத்தாளுவதிலும், அணி வகைகள் பொருந்தப் பாடுவதிலும் வல்லவர் என்பதற்குக் கீழ் வரும் கண்ணிகள் சான்றாகும் :
"கற்பிருக்கு மங்கையர்க்குக் காவல் நீ! கற்பில்லா
துர்ப்புணர்ச்சி கன்னியர்க்குந் தோழமை நீ!''
"_ செங்குந்தர்
வாசலெங்கும் ரூபாய் வராகன் விளையாடப்
பூசலிட்டு மேன்மேலும் போட்டுவைத்து-''
''ஞானகலை யோகியர்க்கும் நங்கையர்மா லேத்துவிக்கும்
ஆனகலை யான வசீகரமே!''
"பெண்ணுக்குப் பெண்ணிச்சை பெண்ணமுதுக் காசை
கொண்டு கண்ணுக்குக் கண்ணிச்சைக் கட்டழகை''
உலகத்து மக்கள் அறிவுடைய பெரியோர்களை ஆடம்பர ஆடையின்றேல் உடன் மதிக்கமாட்டார்கள். நல்ல ஆடம்பரமும், அழகும் உள்ள ஆடைகளை அணிந்துள்ளவர்கள் அறிவில் சிறியவர்களேயானாலும் உடன் வரவேற்று மதிப்புக் கொடுப்பர். இது உலகத்து இயற்கை. இக்கருத்தை ஆசிரியர்
''- நூல் விதியால்
பஞ்சலட் சணந்தெரிந்து பாடிப் படித்தனந்தம்
விஞ்சப் பிரசங்கம் விதித்தாலுஞ்-செஞ்சொலினால்
வல்லகலை யைமதித்து உதவார் மேல்விளங்கும்
நல்லகலையே! உனக்கே நல்குவார்!''
என்று எடுத்துக் கூறும் சிறப்பு, நமக்கு அறிவுக்கு விருந்தாக விளங்கும். மற்றும்,
இன்பச்சுவை பொருந்தப் பாடியதில் சில கண்ணிகள் வருமாறு:
''- சரசகுண
மங்கையர்மே லாசை கொண்டு மாப்பிளைமார்
செங்கையினாற் றொட்டிழுக்கும் செல்வமே !"
''- கொங்கை
குடத்தினிழல் காட்டிக் கூடிளைஞர்க் கல்குல்
படத்தினிழல் காட்டும் படமே ! - வடத்திரள்சேர்
ஏகாச மாக விள முலையி லெந்நேரம்
வாகா யணைந்திருக்கும் வங்கணமே !''
இக்காலத்து, நெய்தல் தொழில் செய்வோர் இல்லங்களில், நெய்தற் றொழிலை ஆணும் பெண்ணும் ஒன்று சேர்ந்து ஒருவருக்கொருவர் உதவியுடன் செய்வர் என்பது கண்கூடாகப் பார்ப்பவருக்கு விளங்கும். இம்முறை அக்காலத்தும் உண்டு என்பதனை,
''- வையகத்தில்
சீரிகையாற் பண்சேர்த்து நன்னூல் பாவாக்கிக்
காரிகையார் தாரால் கலைசெய்யும் ''
என்று எடுத்துக் கூறுகிறார்.
இந்நூலில் காணும் கதைக்குறிப்புக்கள் :- தாருகாவனத்து ரிஷிகள், மரியாதை ராமன் கதை, திருவண்ணாமலையில் அரன் முடியை மால்பிரமன் தேடியது, தில்லை நடராசன் அம்பலத்தாடுவது, அது பொழுது பதஞ்சலி வியாக்கிரபாதர் அருகே நின்றிலங்குவது. அருணகிரிநாதரின் வாக்கின் திறம், சோழர்கள் கலிங்க நாட்டை வென்றது முதலாய கதைக் குறிப்புகள் அறியப்படுகின்றன. உலகில் ஐம்புல நுகர்வும் ஒருங்கே அடையப் பெறுவது பெண்களிடத்தில் என்பதை, திருக்குறளின் சான்றோடு எடுத்துக் கூறுகிறார்.
அஃதாவது,
'' பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயி றூறிய நீர் ''
எனவும்,
"கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைப்புலனும்
ஒண்டொடி கண்ணே யுள"
- எனவும் கூறுகிறார். இவை யிவை துன்பத்தைப் பயக்கும் என்று, கல்லார் பெருங்கூட்டம், கற்றார் பிரிவு, பொருளில்லார் இளமை, இடார் செல்வம் பொல்லாதவை என எடுத்துக் கூறுவது வாழ்க்கைக்கு இன்றியமையாததாகும்.
இங்ஙனம், கற்பனைத் திறமும், எளிமையில் கருத்துக்களைச் செஞ்சொற்களால் எடுத்துக் கூறும் இந்நூல், இந்நூல் நிலையத் தமிழ் ஓலைச் சுவடி R. 1756- ஆம் எண்ணிலிருந்து எடுத்து ஒல்லும் வகையான் திருத்திச் செப்பம் செய்து அச்சிடப்பட்டிருக்கிறது. இந்நூலை, சென்னை, திருவல்லிக்கேணி, சிங்காரத் தெரு, 35-ஆம், எண்ணுள்ள வீட்டிலிருக்கும் திருவாளர். எஸ். வி. துரைராசன் என்பாரிடமிருந்து அரசியலாரால் 1948-ம் ஆண்டு, இந்நூல்நிலையச் சார்பாக விலைக்கு வாங்கப்பட்டதாகும்.
------------
5. சங்கரமூர்த்தி விறலிவிடு தூது
இந்நூல், முதலில் காப்புச் செய்யுளான விநாயகர், முருகர், கலைமகள் ஆகிய மூவர் மீதும் பாடிய மூன்று விருத்தப் பாக்களும், இடையில் 809 கண்ணிகளையும் பெற்றுள்ளது. இறுதிப்பாகம் கிடைக்கப் பெறவில்லை. இஃது, ஆண்பால் பெண் பால் மீது விடுத்த தூதின்பாற் படும்.
ஆசிரியர் வரலாறு.
இந்நூல், சுப்பையர் என்பவரால் செய்யப்பட்டதாகும். இவர், திருவிடை மருதூர் தன்னில் இராகவராத்திரியார் என்பார்க்கு மகனாகப் பிறந்தவர். திருவிடை மருதூர் சுப்பையா சுவாமி சந்நிதியில், இராகவசாத்திரியார் நீண்டநாள் மகவில்லாமை காரணமாக விரதம் பூண்டிருந்து, தானங்கள் பல செய்து, இறுதியில் வரப்பிரசாதமாக இறையருளால் தோன்றியவர் ஆவர். இவர் இளமை முதற்கொண்டே குலவழக்கப்படி, ஆண்டியப்ப வாத்தியார் இடத்தில் வேதாகம புராணங்களையும், இலக்கிய இலக்கணங்களையும் பயின்றவர் ஆவர். தந்தையினிடத்திலிருந்து சோதிடக் கலையைக் கற்றவர். நாள்தோறும் நந்தவனத்தில் சென்று பூப்பறித்து மாலை தொடுத்து, சுப்பையா சுவாமிக்கு நல்கும் ஒழுக்கமுடையவர். திருநெல்வேலியில் வாழ்ந்து வந்த குப்பசாத்திரியின் மகள் இந்திராணி என்பாளை மனைவியாகப் பெற்று வாழ்ந்தவர். இந்திராணி என்பாள், கணவன் தன்னை வைதாலும் அடித்தாலும் மனங்கோணாது உடனுரைந்து வாழும் பண்பினளாவள்; பொய்யுரையாள்.
புலவராகிய சுப்பையரும் அவரது மனைவி இந்திராணியும் மனமொத்து வாழுங்காலத்து ஓர் நாள், முத்திபெறும் பொருட்டு, திருநெல்வேலியில் எழுந்தருளாநின்ற காந்திமதியம்மன் சந்நிதியை இருவரும் வணங்கச் சென்றனர். அப்பொழுது, இந்திராணி தனது கையினால் தீர்த்தம் வாங்கிச் சுப்பையருக்கு இட்டனள். அதுபொழுது அம்மஞ்சள் தண்ணீர் சுப்பையர் மார்பினிடத்துப் பட்டது. இருவரும் பின்னே தமது இல்லம் ஏகி, உண்டிருந்தனர். பின்னே, இந்திராணி கணவன் மார்பில் மஞ்சள் சாந்து இருக்கக் கண்டனர். இது ஏது என்று வினவினள். சுப்பையர் தண்டீசுவரியை வணங்கிய பின் நீர் இட்ட மஞ்சள் தண்ணீரே யல்லாமல் இஃது வேறில்லை; வேறொரு மாதின்மீது எனது உள்ளம் நாடியதில்லை என்று பலவாறாகக் கூறினர். இந்திராணி மெய்யைப் பொய்யாக நினைத்து, தனது கணவராகிய சுப்பையரிடத்தில் ஐயப்பட்டு மரியாதையின்றி தாறுமாறாக நடந்துகொண்டனர். அதனால் வெறுப்புண்ட சுப்பையர் இறைவனை வேண்டி, இனி மாமனார் இல்லத்தில் இருக்கப்படாது; தனது தந்தையினிடத்திலும் செல்லுதல் நலமன்று. ஆதலின், தலயாத்திரை செல்லுதல் நன்றாமோ என எண்ணித் திருவுளச் சீட்டுப் போட்டுப் பார்த்தனர். திருவுளச்சீட்டுத் தலயாத்திரை செல்லுதல் நன்றெனத் தெரிவிக்க, அதன்படி தலயாத்திரை சென்று, இறுதியில் திருச்செந்தூர் முருகப் பெருமான் சந்நிதியை வணங்கும் பொருட்டு, அவ்வூர் சென்றனர். அவ்வூரில் தமது ஆசிரியர் நாராண வாத்தியார் என்பார் அகத்தினில் தங்கியிருந்தனர். இங்ஙனம் தங்கி, முருகப் பெருமானை வழிபடுங் காலை, அவ்வூர் கோயில் நடன மாது நடனமாடியபொழுது, தான் அவளைக் கண்டு, அவள் மீது காதல் கொண்டு, அதனால் தனது பொன் பொருள்களை எல்லாம் அவளிடத்து இழந்து, வறிதே மீளுங்காலத்து நாரணவாத்தியாரின் மகனாரால் தாசிகளின் தன்மைகளைப்பற்றி சொல்லக் கேட்டு, அறிவு துலங்கி, இறுதியில் சங்கரமூர்த்திச் செல்வரிடம் சென்று, பொன் பொருள் பெற்று அவரால் ஓம்பப்பெற்று இன்பமாக வாழ்ந்திருந்தனர். ஆக அனைத்து வரலாறும் இந் நூலினுள்ளே இவ்வாசிரியரால் எடுத்து விரித்துரைக்கப் படுகின்றன.
சங்கரமூர்த்தி வரலாறு.
சோதி வளநாடு என்னும் சோழவள நாட்டைச் சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணணை என்னும் பதியில், அறிவும் திருவும் உடையவராய், புலமையில் சிறந்தவராய், புலவர்களைப் போற்றிப் புரக்கும் தன்மை மிக்கவராய், செல்வங்கள் மலிந்து கொடை வள்ளலாக வாழ்ந்து வந்தவர் சங்கரமூர்த்தி என்பவர் ஆவர். சோதி வளநாடு என்பது, பொதிகை மலையையும் தாம்பிரவன்னியாற்றையும் பெற்று, நிலவளம் நீர்வளம் மிக்குள்ளதோர் நாடா கும். சங்கர மூர்த்தி என்பார் அந்தணர் குலத்தில் உதித்தவர். அழகே தெய்வம் எனப்படும் முருகக் கடவுளையே குலதெய்வமாக வழிபாடு செய்பவர். இவரின் தந்தை, சுப்பிரமணி என்னும் பெயருடையவர் என்றும், அவர் பூபதிப் பட்டம் - உடையவர் என்றும், அழகின் பெருமாள், சண்முகவேலப்பர் என்பவர்களை தன்னுடைய புதல்வராகப் பெற்றவர் என்றும் எப்பொழுதும் கருணையோடு விளங்குவதும், நல்லோர் நட்புறவும், ஆன்றோர்களின் ஆய்வுரைகளைக் கேட்டு நடக்கும் பண்பும், முத்துக்குமார சுவாமி என்பவரை அத்தனாகப் போற்றும் அருகதையுடையவர் என்பதும், சங்கர நாராயணரை மைத்துனனாகப் பெற்றவர் என்றும், எண்திசைக்கும் ஐயமிட்டே வாழும் பண்பினர் என்றும், அழகப்பாத்துரையால் அம்மான் என்று போற்றும் முறையினர் என்றும், சுற்றத்தினர்கள் எல்லோருக்கும் அன்னமும் சொர்ணமும் கொடுத்து அவர்கள் எப்பொழுதும் தன்மீது பற்று மிகும்படியாக வாழ்பவர் என்றும், சுற்றத்தினர்களே யன்றி மற்று எவர் வரினும் அவர்தம் பசிப் பிணி களைந்து இனிமையாகப் பேசி அவர்கட்கு பசிப்பிணி மருத்துவனாக விளங்குவோர் என்றும், அடியார்கட்கு நேசராக விளங்குவோர் என்றும், திருவிடைமருதூரின் அக்கிராகாரம் பண்ணி வைத்தவர் என்றும் ஆகிய எல்லா நற்பண்புகளையும் நற்புகழ்களையும் உடைய, சுற்றத்தினர்களையும் பெற்று கண்ணன் எனப் போற்றும் வண்ணம் வாழ்ந்தவர் ஆகும்.
நூலின் போக்கு
முதலில் ஆனைமுகக் கடவுள், முருகர், கலைமகள் மூவரையும் வணங்கி நூலைப்பாட ஆரம்பித்துள்ளார் இப்புலவர்.
1 - 27 கண்ணிகளில், விறலியின் வர்ணனையைப் பற்றிக் கூறுகிறார்.
28 - 33 கண்ணிகளில், விறலியினிடத்து, சுப்பையர் தன் வரலாறு கூறுகிறார்.
34 - 42 கண்ணிகளில், சீகிருட்டிணைப் பதியில் வாழும் சங்கரமூர்த்தி என்னும் வள்ளல் பெருமானின் மலை, ஆறு முதலிய தசாங்கங்களைப் பற்றிக் கூறுகிறார்.
43 - 65 கண்ணிகளில், சங்கரமூர்த்தி செல்வனுடைய சுற்றத்தினர் சிறப்பினைக் கூறுகிறார்.
66 - 71 கண்ணிகளில், புலவர் தனது தந்தையின் திருநாமமும், அவர் மதலையிலாது வாழ்ந்து, சுப்பையர் சந்நிதியில் தவம் இருந்து, தன்னைப் பெற்றெடுத்துப் பெயரிட்டதனையும்,
72 - 80 கண்ணிகளில், சுப்பையருக்கு, குடுமித் திருமணமானது, குருவினிடத்தில் அமர்ந்து வித்தை பல கற்றது ஆகிய எல்லாவற்றினையும் பற்றிக் கூறுகிறார்.
81 - 89 கண்ணிகளில், புலவர் தனக்குத் திருமணம் நடந்ததைப் பற்றியும், தான் மாமனாரகத்தில் சென்று இருந்ததைப் பற்றியும்,
90 - 95 கண்ணிகளில், புலவர் தனது மனைவியின் குண நலங்களைப்பற்றியும்,
96 - 102 கண்ணிகளில், புலவர் தனது மனைவியாகிய இந்திராணியோடு தண்டீசுவரியை வணங்கச் சென்றதையும், அங்கே திருமஞ்சள் தனது மார்பின் மீது பட்டதையும், அதனால் தங்களிருவருக்கும் பூசல் ஏற்பட்டதையும் ஆகியவைகளைப் பற்றிக் கூறுகிறார்.
103 - 115 கண்ணிகளில், பூசல் காரணமாக தனது மனைவி தன்னிடத்து நடந்து கொண்ட விதத்தைப் பற்றியும் தனக்கு ஏற்பட்ட சஞ்சலம் காரணமாக திருவுளச் சீட்டுப் போட்டுப் பார்த்து யாத்திரை செல்லத் துணிந்ததைப் பற்றியும் கூறுகிறார்.
116 - 162 கண்ணிகளில், புலவராகிய சுப்பையர் கழுகுமலை, சங்கரனார் கோவில், ஸ்ரீவல்லிபுத்தூர் முதலிய நூறு சிவத்தலங்கட்குச் சென்று தரிசித்ததைப்பற்றி விவரிக்கின்றார்.
163 -167 கண்ணிகளில், புலவர், யாத்திரைச் செலவில் தான் பட்ட துயரத்தைப் பற்றி வருணிக்கிறார்.
168 -183 கண்ணிகளில், யாத்திரை இறுதியாக, தான் பயின்ற நாரண வாத்தியார் இருக்கும் திருச்செந்தூர் சென்று அவர் அகத்தில் இருந்துகொண்டு, செந்திலாண்டவனை ஆறு காலங்களிலும், தான் வழிபாடு செய்த வரலாற்றினைப் பற்றிக் கூறுகிறார். .
184 - 211 கண்ணிகளில், புலவர் செந்திலாண்டவனை வழிபடுங்காலத்து, சந்நிதியில் ஆடிய நடனமாதின் மேல் தன் நாட்டம் சென்றதைப் பற்றியும், அவளது அங்கவசைவுகளின் வருணனை பற்றியும் கூறுகிறார்.
212 - 228 கண்ணிகளில், நடனமாது தன்னைக் கண்டு நகைத்ததைப் பற்றியும், தான் அவள் மேல் மோகங்கொண்டதைப் பற்றியும், இது தவப்பயன் எனவும், அவள் சென்ற வழியே சென்று அவளது இல்லத்திலே நின்றுகொண்டு, நடனமாதின் வாயில் தோழியைக் கண்டு, " முந்தியேகின பெண் யார் '' என வினவினதைப் பற்றியும் கூறுகிறார்.
229 - 244 கண்ணிகளில், நடனமாதின் வாயில் தோழி நடனமாதின் சிறப்புக்களையும், குண நலங்களைப் பற்றியும், அவளது திருநாமம் "மோகன சவுந்தரி ''
என்று கூறியதையும் கூறுகிறார்.
245 - 249 கண்ணிகளில், வாயில் தோழி சுப்பையப் புலவரின் ஊர் பேர் முதலியன கேட்டலும், புலவர் தன் ஊர் பேர் கூறி அவள் மீது தான் காதல் கொண்டதைப் பற்றியும் அவளிடம் கூறுகிறார்.
250 - 256 கண்ணிகளில் மோகனசவுந்தரியை யடைதலின் அருமையைப் பற்றி வாயில் தோழி கூறியதாகக் கூறுகிறார்.
257 - 271 கண்ணிகளில், புலவர் மோகன சவுந்தரியின் எளிமையைப் பற்றியும், பின்பு, அவள் பணயத்தையும் வினவவும், தோழி தனது தலைவியின் பணயத்தைப்பற்றிக் கூறவும், புலவர் ஈராயிரம் பொன் அவளிடத்து ஈதலும், அதனைப் பெற்றுத் தலைவி இசைந்ததற்கு அடையாளங் கொடுக்கவேண்டியதைப் பற்றியும், குறிப்பிடுகிறார்.
272 - 278 கண்ணிகளில், புலவர் தனக்குள் வாயில் தோழி, மோகனசவுந்தரியிடம் சொல்லும் தூதைப் பற்றி நினைந்து நினைவழிந்ததைப் பற்றிக் கூறுகிறார்.
279 - 294 கண்ணிகளில், வாயில் தோழியாகிய தாசி அதிரூப ரத்தினள், தலைவியிடஞ் செல்லுங்காலத்து முதலில் அவளது தாயினிடத்து நடந்த உரையாடல்களையும், பின்பு, தலைவி கொடுத்த கொலுசையும், இத்தனைக்கும் அவள் பட்ட கஷ்டத்தையும் விரிவாக எடுத்துக் கூறுவதாகக் கூறுகிறார்.
295 - 321 கண்ணிகளில், சுப்பையர் அக்கொலுசைப் பெற்று மகிழ்வானதைப் பற்றியும், தோழி தலைவியிடம் தாதியர் புடைசூழ பரிகசித்து அழைத்துச் சென்றதைப் பற்றியும், அவள் தாதியர்கட்குத் தக்க பதில் கூறியதைப் பற்றியும் கூறுகிறார்.
322 - 329 கண்ணிகளில், தாய்க்கிழவி பசப்பிக் கூறுதலும் அப்பசப்பலுக்குப் புலவர் பதிலுரைத்தலும்,
330 - 372 கண்ணிகளில், தாய்க்கிழவி புலவரிடத்து தனது மகள் கண்ட நற் சகுனத்தைப் பற்றியும், கோயில் சென்று வழிபாடு செய்யுங் காலத்து ஏற்பட்ட, ''வாய்ச்சொல் குறியும், வேதவாசிரியர் கூறிய ஏட்டுக் குறிப்பும்" ஆகிய எல்லாவற்றையும் விளக்கமாகக் கூறினதாக விவரிக்கின்றார்.
373 - 384 கண்ணிகளில், தாதியர் பள்ளியறைக்குச் செல்ல வேண்டினதையும், பள்ளியறையின் வருணனையும் கூறுகின்றார்.
385 - 397 கண்ணிகளில், நடனமாது பள்ளியறைக்கு வருந்தோற்றத்தைப் பற்றியும், தன்னிடத்தில் நடந்து கொண்ட முறைகளைப் பற்றியும், தான் அவளது முறை கண்டு வியந்ததைப் பற்றியும் விளக்குகிறார்.
398 - 457 கண்ணிகளில், புலவர் நடனமாதோடு கலந்துறவாடிய 'கலவி வருணனை' பற்றி எடுத்துக் கூறுகிறார்.
458 - 486 கண்ணிகளில், நடனமாது வினவ, புலவர் கூறியதையும், நடனமாது தனது இயல்பினை யெடுத்தியம்பி தன்னை விட்டுப் பிரியாதிருக்க வேண்டினதையும் அதற்குப் புலவர் ஒப்புதலும் தந்து, பிறகு கூடி மகிழ்ந்திருந்ததையும் ஆகிய செய்திகளைக் கூறுகிறார்.
487 - 490 கண்ணிகளில், நாரணவாத்தியார் மகன், தன்னைச் சந்தித்து, மோகனவல்லியைப் பற்றிக் கூறியதை விளக்குகிறார்.
491 - 514 கண்ணிகளில், மோகனவல்லி, பிள்ளையில்லாது வருந்தியிருந்ததையும், சொக்கேசர் சந்நிதியில் நோன்பு நோற்றதையும், சகுனங்கேட்டதையும், மீனாட்சியம்மனுக்கும் சொக்கேசருக்கும் பொன் பொருள் ஈந்ததைப்பற்றியும், மோகனவல்லி கருப்பமுற்று நல்ல வேளையில் மகள் பெற்றெடுத்ததையும் ஆக எல்லாச் செய்திகளையும் கூறியதாக உணர்த்துகிறார்.
515 - 571 கண்ணிகளில், மோகனவல்லி, பெண்பிள்ளை பெற்றதனால்தான் மகிழ்ந்ததையும், பின்னே அப்பெண் குழந்தையை பாலூட்டிச் சீராட்டிப் பொட்டிட்டு, உச்சிட்டு, மருந்திட்டு, ஐம்படைத்தாலி கட்டி வளர்த்ததையும், பின்னே கைகால்கட்கு அணிவகைகள் பூட்டினதைப் பற்றியும், பதினெண் மொழியிலும் வல்லவளாக ஆக்கியதைப் பற்றியும், பின்னே நடன சாலையிலும் சிலம்பக் கூடத்திலும் பயில்வித்ததைப் பற்றியும், விவரித்துக் கூறுகின்றார்.
572 - 579 கண்ணிகளில், தளவாய் துரைசாமியின் சிறப்புக்களைக் கூறுகிறார்.
580 - 581 கண்ணிகளில், திருச்செந்தூர் முருகன் சந்நிதியில் நடன அரங்கேற்றம் நடந்ததைப் பற்றிக் கூறுகின்றார்.
582 - 592 கண்ணிகளில், செளந்தரியவல்லி குமரிப்பருவம் அடைந்ததைப்பற்றி விளக்கிக் கூறுகிறார்.
593 - 603 கண்ணிகளில், தாய்க்கிழவி மகளுக்குக் கூறும் அறிவுரைகளைப்பற்றி விளக்குகிறார்.
604 - 616 கண்ணிகளில், மகள் தாய்க்கிழவிக்குப் பதில் கூறியதைக் கூறுகிறார்.
617 - 776 கண்ணிகளில், நடனமாதுக்கு அவள் தாய் இன்னின்னாரிடத்தில் இவ்விவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்றும், மருந்தீடு முறையும் முறையே தொகுத்துக் கூறுகிறாள்.
(இடையே சில கண்ணிகள் காணப்பெறவில்லை .)
777 - 785 கண்ணிகளில், நாரணவாத்தியார் மகன், தனக்கு நல்லறிவு கொளுத்தியும் நடனமாதின் இயல்பினை முறையே கூறியும் சென்றான் என புலவர் தன் கூற்றாக உரைக்கின்றார்.
786 - 809 கண்ணிகளில், புலவர்தாம் திருநகரி ஊர்ச் சபையார் முன் நீதி கேட்கச் சென்று, தன் வரலாறு கூறுகிறார். நடனமாதும் அவள் தாயாரும் அவரவர்களுடைய வரலாற்றையும் சபையார் முன் உரைக்கத் தொடங்குகிறார்கள். இதனோடு நூலின் போக்கு விடுபடுகிறது.
(முடிவுபெறவில்லை. இறுதிப் பகுதியும் கிடைக்கப்பெறவில்லை.)
இந்நூலில் வரும் நீதிகள்
"தட்டானைத் தேறுந் தறுவலியும் தன்மனையாள்
இட்டம் பிறர்க்குரைக்கும் ஏழ்மையும் - முட்டமுட்ட
வேட்டகத்தி னுண்ணும் வெறுவிலியு மிம்மூன்றும்
ஆட்டின் கழுத்தி னதர்.'' [91-92)
"காலங்கள் மூன்றுங் கருத்தி லுணர்ந்தானுங்
கோலங்கண் டன்னங் கொடுப்பானும் - சாலவே
தன் கணவன் சொல்லைத் தலைசாய்த்துக் கேட்பாளுந்
திங்கள்மும் மாரிக்கு நேர். " (103-104)
"காலம்போம் வார்த்தை நிற்கும் கண்டாயே ! - சாலப்
பசித்தார் பொழுதும்போம் பாலுடனே அன்னம்
புசித்தார் பொழுதும்போம் போமென்று" (257-258)
''நிரலை பலநூல் கல்லாத் தலைமகனு
மரலை யெரிபோன் றயலாருஞ் - சால
மனக்கட் டில்லாத மனையா ளிம்மூன்றும்
தனக்கட் டமத்துச் சனி.'' (114-115)
''நண்டுசிப்பி வேய்கதலி நாசமுறுங் காலமதில்
கொண்ட கருவழிக்குங் கொள்கைபோல் - ஒண்டொடியீர் !
போதந் தனங்கல்வி போன்றவருங் காலமதில்
மாதர்மேல் வைக்கும் மனம்.'' (185-186)
''போந்த வுதாரனுக்குப் பொன்றுரும்பு சூரனுக்குச்
சேர்ந்த மானஞ் சிறுதுரும்பு - ஆய்ந்த
அறவனுக்கு நாரி யரத்துரும்பு நெஞ்சில்
துறவனுக்கு வேந்தன் துரும்பு." (282-283)
இந் நூலில் வரும் உவமைகள்
"விளக்கிற் பறந்துவிட்டில் வீழ்வதுபோல் '' (216)
"கூடியுடுச் சந்திரனை வளைவ தொத்தே ” (220)
“துன்பமதில் வந்துயிரைத் தூக்குமெம தூதனைநான்
இன்ப மருத்துவனா யெண்ணுவபோல் '' (227)
''- பண்பான
வெண்கலத்தைக் கண்டோர்கள் வேண்டி முனம்விரும்பு
மண்கலத்தின் மேல்மனது வைப்பாரோ?- ஒண்பொருளப்
பத்தரை மாற்றுப் பசும்பொன் னையுங்கண்டு முன்போல்
பித்தளையை யேவிரும்பும் பேருண்டோ ?-உத்தமரே!
ஆற்றிலே வெள்ளம்வந் தாலாருஞ் சகதிகொண்ட
ஊற்றிலே நீரெடுத்து உண்பரோ?- போற்றும்
மருக்கொழுந்தும் பிச்சியிரு வாட்சிமலர் கண்டோர்
எருக்கன்பூச் சூடுவரோ? இன்னும்-பெருத்தநிலைக்
கண்ணாடி வந்திருந்தால் கங்கையையோர் செம்பில் வைத்தே
உண்ணாடித் தன்னழகை யோர்வரோ - மண்ணில்
சலதாகங் கொண்டவர்க்கே செவ்விளைநீர் வந்தால்
குலமாகும் வேம்பிநெய் யாகுமோ ?" (231-236)
"வெண்கலத்துக் கொத்தவிலை கொடுத்துப் பொன்னான
வெண்கலத்தைக் கொள்வீரோ?'' (252)
"கன்றைவிட்ட ஆப்போல வேமறுகு மையனே '' (256)
"- பார்ப்பார்க்கு
வாய்ப்போக்கே னென்றவச னப்பழமை யுண்டே” (270)
"சீதையெனு மம்மையன்று தேங்கிச் சிறையுறுமப்
போதையிலும் மெய்ப்பாதன் பூமியிலே - காதலினால்
அக்கினியை மூட்டி வலம்வருங்கா லந்தனிலும்
மிக்க வனுமன் விரைவாக - முக்கியர்
திருவாழி காட்டிநின்ற செய்கைபோல் தம்பி
பெருநாக பாசம் பெறுங்கால் - அருகாக
வந்த கருடனைப்போல் மாதே! அவ் வேளையெனக்
கந்த மகிழ்வுபோ லானதே -'' (295-298)
"மரியாதை ராமனைப்போல் வந்த வழக்காயும்'' (800)
"எண்ணுக் கடங்காத போநிதியைபோ கொண்டாற் போல் '' (516)
''நூறுநாய் கூடியொரு நொண்டிமாட் டைக்கடிக்க
வேறுபுக லின்றியொரு வீண்செடியின் - தூறுபுகுந்
தப்பொழுது வெம்புலியொன் றங்கே கிடந்ததுகண்டு
தப்பவிடா மற்பிடிக்கத் தான்பதுங்கும் - அப்படிபோல்'' (309-310)
''பழம் நழுவிப் பாலிலே பாய்ந்ததுபோல் வந்து
மிளமறிக் குளையறியா தென்ன- அலறிநின்றீர்" (330)
''பெண்விரும்புங் காலை பிதாவிரும்பும் வித்தையே
நண்ணுதனம் விரும்பும் நற்றாயே - ஒண்ணுதலாய்
கூறியநற் சுற்றங் குலம்விரும்புங் காந்தனது
பேரழகை யேவிரும்பும் பெண்.'' (361-362)
''விக்கிரமா தித்தன் மதிமிக்கா இருந்தாலும்
உக்கிரவான் பட்டிமதி யுட்கொண்டான் - தக்ககதி
நாட்டுக்கே சென்று நணுகுந் தசரதனோர்
ஆட்டைக்கோர் மந்திரியை யாக்கினார் '' (618-619)
"பெற்றதனம் என்னாப் பெரியோனும் பெற்றபொருள்
மற்றையு மென்றே மகிழ்வேந்து - முற்றியநன்
மானமறு மில்லாளும் மானமுறும் வேசையரும்
ஈனமுறு வாரிவரென் றெண் '' (621-622)
"நாம் பூசை பண்ணுகின்ற
சாளிக் கிராமமென்றே தான்கொண்டேன்'' (194)
இந்நூலில் வரும் தலங்களின் பெயர்கள்
திருவிடைமருதூர், திருநெல்வேலி, திருச்செந்தூர், திருநல்லூர், செப்பறை, திருவம்பலவாடி, கழுகுமலை, சங்கரனார் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர், திருப்பெருங்குன்றம், மதுரை, திருச்சிராப்பள்ளி, திருவானைக்கா, ஸ்ரீரங்கம், திருவாரூர், திருவீழிமிழலை, திருப்பட்டியூர், திருவாவடுதுறை, கும்பகோணம், திருவேரகம், திருமத்தியார்ச்சுனம், சீர்காழி, சிதம்பரம், காஞ்சிபுரம், விருத்தாசலம், திருக்காளத்தி, காசி, திருவொற்றியூர், திருப்பெருந்துறை, அழகர் மலை, திருவலஞ்சுழி, இராமேசுரம், நவபாஷாணம், திருப்புல்லாணி, உத்தரகோசமங்கை, ஆற்றூர், சங்குமுகம் முதலியன.
நதிகளின் பெயர்கள்
மணிமுத்தாநதி, கிருஷ்ணா நதி, கோதாபுரிநதி, யமுனை நதி, சடாயு தீர்த்தம், கங்கை நதி, பாம்பன் முதலாயின.
சுவாமி, அம்மன் பெயர்கள்
ஆற்றூர் :- சோமலிங்கர், சோமவல்லி
இராமீசுரம் :- இராமலிங்கர்
திருப்பெருந்துறை :- ஆளுடையார் (ஆத்மநாதன்), சிவகாமியம்மை
காசி :- விசுவநாதர், விசாலாட்சி
சோலைமலை :- கள்ளழகர்
திருக்காளத்தி :- ஞானப்பூங்கோதை
காஞ்சிபுரம் :- ஏகாம்பரநாதன்
சிதம்பரம் :- திருமூலலிங்கர்
திருமத்தியார்ச்சுனம் :- மருதப்பர்
கும்பகோணம் :- கும்பேசுரன், ஒப்பில்லாமுலையம்மை
திருவாவடுதுறை:- மாசிலாமணி
திருப்பட்டியூர் :- பட்டியீசர்
திருவாரூர் :- தியாகேசர், சிவகாமி
ஸ்ரீரங்கம் :- ஸ்ரீரங்கநாயகர், ஸ்ரீரங்கநாயகி
திருவானைக்கா :- சம்புநாதர், அகிலாண்டவம்மை
மதுரை :- சொக்கலிங்கர், மீனாட்சி
ஸ்ரீவில்லிபுத்தூர் :- திருமால், தேவிநாச்சியார்
சங்கரனார் கோயில் :- சங்கரநாராயணர்
செப்பறை :- திருவம்பலவாணர்
திருநெல்வேலி :- காந்திமதியம்மன்
திருவிடைமருதூர் :- சுப்பையா சுவாமி.
இந்நூலில், தளவாய் துரைசாமி என்னும் அழகப்ப பூபதியின் பெருமை பலபடப் புகழ்ந்து கூறப்பட்டிருக்கிறது. அதனோடு, நாட்டியமாதுக்கு, தாய்க்கிழவி அறிவுரை கூறுகின்ற திறமும், பணத்தின் பெருமையை மறைமுகமாக தாய்க்கிழவி மகளுக்கு பிறரோடு ஒப்புநோக்கிச் சிறப்பித்துக் கூறுதலும் விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. பொட்டிடுதல், உச்சிடுதல், மருந்திடுதல், பால் கொடுத்தல், மையிடுதல், ஐம்படைத்தாலி அணிதல், வசம்பு கட்டுதல், தொட்டில் போடுதல், காது குத்தல், மிஞ்சி இடுதல், கை கால்கட்கு அணிவகை அணிதல், அரைமூடியணிதல், சிற்றாடையணிதல், பள்ளியில் வைத்தல் முதலாய நிகழ்ச்சிகள் நிகழ்த்தும்போது கூறும் அறிவுரைகளும், நடனமாதை அங்கங்கே வருணித்துச் செல்லும் இடங்களும் பயிலப்பயில இன்பச்சுவை உண்டாக்குவனவாம்.
இந்நூலின் வரலாறு இப்புலவராலேயே சுருக்கமாக, 28 முதல் 33 வரையிலான கண்ணிகளால் கூறப்பட்டுள்ளன. அக்கண்ணிகள் இந்நூலுக்கு முகவுரை போன்று அமைந்திருக்கின்றன. அதில் புலவர், நடனமாதின் செயலைக் குறித்து திருநகரி பொதுமன்றத்தாரிடம் முறையிடவும், நடனமாதும் முறையிடவும் அங்கே தன் வழக்குத் தோல்வியுறவும், சங்கர மூர்த்தி என்னும் செல்வன் பால் சென்று, பொன் பொருள்கள் பெற்று மகிழ்ந்து வந்ததையும், தெளிவுபடக் கூறுகின்றார்.
இத்தகைய மதிப்புவாய்ந்த இந்நூல், இந்நூல்நிலையத்தில் தமிழ் ஓலைச் சுவடி D. 316- ஆம், எண்ணிலிருந்து எடுத்து, பிழைகள் மலிந்திருந்தவைகளைத் திருத்திச் செப்பம் செய்து அச்சிடப்பட்டிருக்கிறது.
--------------
6. மணவை-- திருவேங்கடமுடையான் மேகவிடுதூது
இந்நூல், முதலில் காப்புச் செய்யுளின்றி பாடப்பட்டுள்ளது. தொடக்க முதலே நூல் ஆரம்பிக்கப்பட்டு 87 கண்ணிகளையும் இறுதியில் வெண்பாவொன்றையும் பெற்றுள்ளது. இஃது, பெண்பால் ஆண்பால் மீது விடுத்த தூதின்பாற்படும். அதுவும், மானிடரேயன்றி, கடவுளரையடைய கடவுளது மாலையை வாங்கி வரும்படி தூதுவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இஃது கடவுண்மாட்டு மானிடப் பெண்டிர் நயந்த பக்கம் என் னும் இலக்கணத்தின்பாற் படும்.
இலக்கியக் கற்பனைப் படைப்புக்கள்கள் யாவும் உண்மைப் பொருள்களையும் அனுபவங்களையும் அடிப்படையாகக் கொண்டவை என்பதை நாம் மறத்தல் கூடாது. வாழ்வை வளம்படுத்தி இன்பமூட்டுவதற்குக் கற்பனை இன்றியமையாது வேண்டப்படுகின்றது. வாழ்க்கையில் பெறமுடியாததை கற்பனையிற் பெறலாம். மனத்தின் தொழிலாகிய நினைவு, உணர்ச்சி, பகுத்தறிவு, துணிவு முதலிய யாவற்றினும் வேறுபட்டதாய் இவை யாவற்றையும் அடக்கி முழுமனத்தினதும் தொழிற்பாடாக விளங்குவதே கற்பனை என்பர் உள நூலார்.
இக்கற்பனை இரண்டு வகைப்படும். புறத்திலே காணப்படும் பொருள்கள் முதலியவற்றை உள்ளத்தே தோற்றுவித்தல் ஒன்று. மற்றொன்று, வெளியே காணப்படும் பொருள்களைக் கொண்டு அவற்றின் உருவங்களைப் பலவாறு சேர்த்துப் புதுப் புதுப் படைப்புக்களை ஆக்குதல். இதனை ஆக்கக் கற்பனை (Constructive Imagination) என்று கூறலாம். இதுவே சிறந்தது. இது, விஞ்ஞானம், கலை என இரண்டாகப் பிரிக்கப்படும். விஞ்ஞானம், உண்மைகளைக் காரண காரியம் கொண்டு நிறுவுவது. கலை, அழகினைப் படைத்து உணர்ச்சியைத் தூண்டி இன்பம் ஊட்டுவது. உலகம் அழகினால் வளர்கிறது. இந்த அழகைத் தருபவற்றைப் படைப்பதுதான் இக் கற்பனையின் கடமையாகும். அதுவே, விந்தை கருத்துக்கு விருந்தாக விளங்குவனவாம். ஆகவே, அத்தகைய முறையில் சேர்ந்ததே, திருவேங்கடமுடையான் மேகவிடு தூது என்னும் நூலாகும்.
இந்நூல், அன்பின் வழியதாய் இன்பந் துய்க்கும், முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்திணை வழிச் செல்லும் அகத்திணையின்பாற் பட்டு, இறைவன் பெருமைகளையும், அருட் செயல்களையும் விளக்கிப் படிப்போரைப் பக்தி வெள்ளத்தில் திளைத்து மகிழச் செய்யுஞ் சிறப்பால் இதுவும் பேரின்பம் நல்கும் ஒரு வழிகாட்டியாக நல்லியல்பு சான்ற புலவர் வகுத்துக்கொண்டனர் என்பது கொள்ளத் தக்கது.
இந்நூலை இயற்றிய ஆசிரியர் பெயர், ஊர் முதலியன அறியக்கூடவில்லை. ஆயினும், சொல் நயம், பொருண்நயம் படப் பாடியிருக்கின்றார். மணவைக்குத் தென் திருவேங்கடம், மணவாபுரி என்ற பெயர்கள் உண்டு போலும். இத்தலம், நிலவளம் மிக்கதாய், சோலைகளும் தடாகங்களும் நிறைந்ததாய் நந்தா வளம் படைத்த சீவலவ நாட்டில் உள்ளது. சீவலவ நாடு என்பது பாண்டிய சீவலவமாறன் ஆண்ட எல்லைக்குட்பட்ட நாடுகட்குப் பெயராக வழங்குவது. இவன் திருநெல்வேலியை வென்று தனதாட்சிக்குட்படுத்திய காரணத்தினால் நெல்வேலிக்கும் சீவலவநாடு என்று பெயர் உண்டாயற்று. இப் பாண்டியனைப் பற்றிய செய்திகள் யாவும் பாண்டியர் வரலாறு என்னும் நூலில் பரக்கக் காணலாம்.
இப்பாண்டியன், 16-ஆம் நூற்றாண்டில் தென்பாண்டி நாட்டிலிருந்து அரசு செலுத்தியவன் என்றும், இவனே அதி வீரராம பாண்டியனாகும் என்றும், இவனுக்கு வீரமாறன் என்று பெயராகும் என்றும், கீழ்வரும் தமிழ் நாவலர் சரிதை வெண்பாக்களால் அறியக்கிடக்கின்றது.
''தென்னவா மீனவா சீவலமா றாமதுரை
மன்னவா பாண்டி வரராமா - முன்னம்
சுரும்புக்குத் தாரளித்த தூயதமிழ் நாடா
கரும்புக்கு வேம்பிலே கண்" (102)
"மாப்பைந்தார்க் கல்லமுத்து வண்ணத்தார்க் கல்லவஞ்சி
வேப்பந்தார்க் காசைகொண்டு விட்டாளே - பூப்பைந்தார்
சேர்ந்திருக்கு நெல்வேலிச் சீவலமா றாதமிழை
ஆய்ந்துரைக்கும் வீரமா றா !."
- இவ்விரண்டு வெண்பாக்களின் கருத்துக்களையும் இந் நூலில் காணும் கீழ்வரும் கண்ணிகளோடு ஒத்திட்டு நோக்க மேற்கூறிய செய்திகள் புலனாகும்.
''- கயலுகளச்
செந்தா மரைமலருந் தெண்ணீர்ப் பழனவளம்
நந்தாத சீவலவ நாட்டினான் ”
இத்தகைய சிறப்பு வாய்ந்த நாட்டில் பொருனைநதி வளங் குன்றாது, பொன்னும் முத்தும் நவமணிகளும் அடித்துக் கொண்டு ஆகாய கங்கை போன்று செழிப்புடன் ஓடிக் கொண்டிருக்கிறது. அத்தகைய பொருநை நதியின் வளமிக்க நாட்டில் பொதியமலை சீரும் சிறப்புமிக்கு, நாகம், பூகம், தேக்கு, சந்தனம், கோங்கு, தாரம், செண்பகம் முதலிய உறுதி வாய்ந்த நன்மரங்களடர்ந்த காடுகளை யுடைத்தாய், வடவரை போன்று பீடுபெற விளங்குகிறது. இங்ஙனம் பொதியமலையும், பொருனை யாறும் உடைய சீவலவன் நாடாகிய திருநெல்வேலியில் மணவாபுரி என்னும் ஊர், வேதம் பலபகரும் தமியோர் குழாங்களையும், தாளாண்மை மன்னரும், வேளாண்மை மிக்க மக்களும் உடையதாய், வீதிகடோறும் முத்தமிழ் நூல் பயில்வோர் குழாம் குழாமாகத் திகழவும், குபேர நாடென்று சொல்லும் படி, பெருமையுற்றிலங்கும் நந்தா விளக்குப் போன்று திகழ்கிறது. இச் சிறப்பு வாய்ந்த பதியில் திருமால் கோயில் கொண்டுள்ளான் என்பதும், அவனது மார்பின் மீது அணிந்திருக்கும் திருத்துழாய் மாலையை விரும்பி பெண்ணொருத்தி மேகத்தை தூதுவிட்டாள் என்பதும் இந்நூலால் அறியக்கிடக்கின்றன.
நூலின் போக்கு
1 - 29 கண்ணிகளில், மேகத்தின் வர்ணனை கூறப்பட்டுள்ளன.
30 - 55 கண்ணிகளில், தசாங்கங்களின் வர்ணனை கூறப்பட்டுள்ளன.
56 - 67 கண்ணிகளில், திருமாலின் அவதாரங்கள் கூறப்பட்டுள்ளன.
68 - 75 கண்ணிகளில், திருமால் வைகுந் தலங்களைப் பற்றிக் கூறப்பட்டுள்ளன.
76 - 101 கண்ணிகளில் திருமாலின் சிறப்புக்களைப்பற்றிக் கூறப்பட்டுள்ளது.
102 - 125 கண்ணிகளில், திருமால் ஐந்தாம் நாள் திருவிழாவில், பவனிவருதலின் அழகைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.
126 - 140 கண்ணிகளில், திருமால் வரும் திருவுலாக் காட்சியைக் கண்டு காதல் கொண்டதை வருணிக்கப்பட்டுள்ள து.
141 - 144 கண்ணிகளில், தலைவி, தலைவனைக் கண்டதும் தந்நாணழிந்ததைக் கூறுகிறாள்.
145 - 149 கண்ணிகளில், மன்மதன் தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே இருந்து போர் தொடுத்ததைக் கூறப்பட்டுள்ளது.
150 - 156 கண்ணிகளில், தலைவியின் காதல் நோய் தீர தோழிகள் வேண்டுவன செய்தலைக் கூறப்பட்டுள்ளது.
156 - 187 கண்ணிகளில், தலைவி, மேகத்தைப் புகழ்ந்து கூறுதலும், அதற்குத் தூதுரைத்துவருங் காலங் கூறுதலும், தன் குறை இரந்து தூது செல்ல வேண்டுதலும், மாலை வாங்கி வரும்படி ஏவுதலும் ஆகிய செய்திகள் கூறப்பட்டுள்ளன. இதனோடு முடிகிறது இந்நூல்.
இந்நூல், இந்நூல் நிலையத் தமிழ் கையெழுத்துச் சுவடி, R. 570-ஆம் எண்ணிலிருந்து எடுத்து, ஒழுங்குசெய்து, அச்சிடப்பட்டுள்ளது. இது, நாங்குனேரி, வானமாமலை மடத்திலுள்ள ஸ்ரீ இராமாநுஜ ஜீயர் சுவாமி அவர்களிடத்திலுள்ள பிரதியைப் பார்த்து எழுதி வைத்ததாகும். ஆகவே, இந்த ஆறு தொகுப்பு நூல்களையும் படித்துணர்வார்க்கு, தமிழ் நாட்டின் பண்டைக்கால வரலாறுகள் சிலவும், இலக்கிய வளர்ச்சியின் தன்மையும், பொது நோக்கும், கற்பனைத் திறமும் ஆகியன புலனாகும் என்பது வெளிப்படை. இந்நூல்கள் அனைத்தும், ஓலைச் சுவடிகளில், கண்டது கேட்டது போல் எழுதினோரால் எழுதப்பட்டிருந்ததால், வெளியிட வேண்டி பொருந்திய முறையில் திருத்தியும் புதுப்பித்தும் அச்சிடப்பட்டுள்ளன.
இத் தொகுப்பிலுள்ள ஆறு நூல்களையும், மூலப் பிரதியிலிருந்து பெயர்த்தெழுதி, அச்சிடுவதற்குரிய வகையில் அமைத்துக்கொடுத்த, இந்நூல் நிலையத் தமிழாசிரியர், புலவர். மு. பசுபதி அவர்கட்கும், தொர்சன் அச்சகத்தாருக்கும் எனது நன்றியுரியதாகும். 17-8-57 தி. சந்திரசேகரன்
சென்னை
---------------------------
தூதுத் திரட்டு.
1. சந்தான குருவாகிய மங்கைபாக பண்டாரம் பாடல்.
பெரிய தம்பியா பிள்ளை பேரில் மான்விடு தூது.
காப்பு.
வல்லபுகழ் தென்கூடல் வாழும் பெரியவன்மேல்
சொல்லரிய மான்விடு தூதுக்கு - நல்லதொரு
முக்கண்ணர் பெற்றெடுத்த முக்கண்ணர் தன்பதத்தை
முக்கண்ணி னால்பணிவோ முன்.
நூல்.
(மானின் பெருமை)
மண்டலத்தி லுள்ள மனிதர்தனில் பெரியோர்
விண்டலத்தில் வாழுகின்ற மேலோர்கள் - விண்டலத்தில்
வாழுகின்ற மேலோர்க்கும் வாசவனே யீசுரனாம்
நாளுமவ னுக்கதிகம் நான்முகனாம் - சூழுலகில்
நான்முகனா ருக்கதிகம் நாரணனாம் நாரணனுந்
தானறியா மூர்த்தியெனுந் தற்பரமா- மானந்த
வையகமெல் லாம்நீயே வத்துவெனச் சொல்லியொரு
கையிலுனைப் பிடித்துக் காட்டியே - பொய்யல்ல
வென்றுமழு வெடுத்து எல்லாருங் கண்குளிர
நின்றுநடித் தாருனக்கு நேருண்டோ?- அன்றுதான் 5
வாரமா யுன்பேர் மகிழ்ந்து தரித்ததினால்
சேரமா னெங்குஞ் செயம்பெற்றான்- தாரணியில்
ஓடிரகு ராமனுந்தா னுன்னடியைக் காணாமல்
தேடி மயங்கித் திரிந்திடவே - நாடெல்லாம்
பண்பான சீதைதனைப் பாங்காய்ச் சிறையெடுக்கும்
அன்பான இராவணனுக் கம்மானே!- முன்பாக
நாட்டியவேட் டைக்காட்டி லிராசாதி ராசரெல்லாங்
கூடிவர வுன்பேர் குறிமானே !- நீடியமால்
காணாச் சிவபதவிக் காட்டுஞ் சிவனடியார்
நாணா துறைவதுமுன் னாசனமே- வாணாளின் 10
கண்டர் அவிழ்தமெனக் காசினியி லெல்லார்க்குங்
கொண்டபிணி தீர்க்குங் கோமானே!- தண்டாமல்
உண்மையுடன் றேவரெல்லா முன்வீட்டில் வந்துபுகுந்
தம்மமு திரந்துண்ணும் அம்மானே!- நன்மையுடன்
குன்ற மிலங்குகலைக் கோட்டுரிஷி வங்கிஷமாய்
நின்றருளுங் கல்வி நிறைமானே!- வென்றிமிகும்
கந்தருக்குப் பெண்கொடுத்துக் காசினியெல் லாம்புகழ்சம்
பந்தஞ் செயுஞ்சாதி மான்நீ காண்!-முந்தவே
சல்லாப வஞ்சியர்கள் தாரணியி லேபுகழும்
எல்லார்க்குங் கண்ணாம் எசமானே!- சொல்லியே 15
வீறான கண்ணப்பர் மேதினியுள் ளோர்புகழும்
பேறுபெறச் செய்த பெருமானே!- மீறியே
சத்தியுத வும்மரிதா ரத்தை உன்வயிற்றில்
வைத்தருளு கின்ற மதிமானே!- நித்தம்
வடுத்தயங்கா வெண்கவரி மானுக்கு மிக்காய்
அடுத்தகன புள்ளிமா னன்றோ- தொடுப்பாக
முன்புகழுஞ் சிங்கத்தை மோழையெனச் சொல்வதனால்
அம்புவியில் நீசீமா னல்லவோ - தென்பாய்ச்
சினக்கவலை தாண்டிச் செல்வதுபோ லெந்தன்
மனக்கவலை மாற்றும் பொறைமானே!- கனக்கவே 20
கூடுகண்ட மாருதத்தைக் கொண்டிழுத்துத் தண்டமுடன்
சேடனுட னெதிர்த்துச் சீறியே- நீடுபுவி
மண்டலமு விண்டலமு மண்டுங்கட லுங்கிரியு
மெண்டிசையுங் கிடுகிடென் றிடவே - நின்றுகன
கொட்டமிடு மட்டகெச மெட்டுமர வெட்டுமுறை
யிட்டலர வட்டமதி தட்டழிய - னெட்டையதி
வேகத்தி னால்மிச்ச மாகிப் பிரவேசித்து
மாகத்து ளோர்மெத்த மோகிக்க - நேசித்து
சூறைகொண்டு தானெழும்பு தூளியண்ட கூடமெங்கு
மேறிமண்ட வேமிகுந்து ஈடுகொண்டு கூறுகின்ற 25
மூர்த்தியார் தென்கயிலை மூன்று கொடுமுடியைப்
பேர்த்தருளி யுன்கால் பதத்தாலே - நாற்றிசையுந்
தானேயுயர் தெட்சண கயிலை யாக்கிமிக
வானோர்புகழ் கீர்த்தி மானீதான் - பானுவுயர்
மேடையி லேறுகையால் மேகலை பூணுகையால்
வாடை பழகி வளர்தலால் - நாடியே
எல்லாரும் போற்றலா லெவ்வணமுஞ் சார்தலால்
அல்லாது பன்னீரு மாடலால்- நல்லகுணந்
தங்குமினம் பிரியாத் தன்மையா யிவ்வுலகில்
மங்கையர்க்கொப் பாம்நீதி மானீகாண் - இங்குலகில் 30
ஆதரவாய்ப் பெண்களெல்லா மம்மானா ராடுவது
நீதமுட னுன்னை நினைத்தன்றோ – சூதான
(தலைவி மானைத் தூதுவிடற்குக் காரணங் கூறல்.)
வண்டா னதுவுமது பாணி யாகையினால்
கொண்டாட்ட மாகநிசங் கூறாதே - உண்டான
நாகணவாய்ப் பிள்ளையுடன் நல்லகிளிப் பிள்ளை
ஆகையினால் தூதுரைக்க லாகாதே - வாகான
கன்னி மயிலுங் கலாபம் பொருந்துகையால்
நன்னய மாந்தூது நவிலாதே - எந்நேரம்
கோபத்தால் கூவுங் குயில்தானு மென்னுடைய
ஆபத்தைக் காக்க வறியுமோ - சோபத்தால் 35
வஞ்சியரும் என்போல் மயங்குவா ராதலினால்
எஞ்சியே தூதனுப்பப் போகாதே - மிஞ்சிப்
பனைமே லிருந்து சுகம் பாராட்டு மன்றில்
மனையேறிப் பேச வருமோ - நினைவாக
மாக மதியை மறைக்கின்ற மேகமுந்தான்
மோக மதுகண்டு மொழியுமோ -- ஆகையினால்
புத்திமா னென்றுன்னைப் பூதலத்தார் போற்றுகையால்
வெற்றியாந் தூதுரைக்க வேணுங்காண் – சுற்றியகோ
(பெரிய தம்பியா பிள்ளையின் சிறப்பு)
நாட்டினான் கீர்த்திமிக னாட்டினா னென்னைமயல்
பூட்டினான் சஞ்சீவி பூட்டினான் – கூட்டுமன 40
சோமன் துதிவதன சோமன் றுலங்கியவிற்
காமன் விதரணிக காமனாம் - பூமாலை
பாலன் பழகிய பூபாலன் பகருமிந்திர
சால னரிவையர்பாஞ் சாலனாங்-கோலியவெள்
ளாற்றினான் அன்பர்பசி யாற்றினான் அண்டலரை
நீற்றினான் பூசியவெண் ணீற்றினான்-ஏற்றவர்க்குத்
தாராளன் பூங்குவளைத் தாராளன் மேனிபுனை
யோராளன் கல்வியறி வோராளன் - பூராயம்
உற்ற மதகிரியான் ஓங்குகுடு மிக்கிரியான்
கொற்றம் பிரியான் குணம்பிரியான் - நித்தமுந்தான் 45
அன்னத் தருவா மாதுலனச் சசிவர்ணன்
மன்னன் மகிழு மதியூகி- கன்னிமலை
யோகர்திருத் தேர்த்திருநா ளோங்குகன பூசையபி
சேகத் திருப்பணியுஞ் செய்தருள்வோன் - மோகமிகுஞ்
சூலி முதுகில் சுடுசோ றளித்தருளி
நீலி பழிதீர ரெட்சித்துச் - சாலிமுளை
அன்னங் கொடுத்து அரவின் மணியளித்துஞ்
சொன்னமொழி தப்பாத துரந்தரீகன் - நன்னயஞ்சேர்
காராளர்க் கோத்திரனாம் காசினியில் சேதுவரை
பேரானக் கூடல் பெரியவனாம் - பார்மீதில் 50
எத்திசையுங் கொண்டாடு மிங்கிதமாங் கங்கைகுலம்
பெற்றருளுங் கூடல் பெரியவனாம் - துத்தியஞ்சேர்
போகன் அளகப்ப பூபன் துணைவனெனப்
பேசுந் தென்கூடல் பெரியவனாம் - வீசுமதன்
(பவனி வருதலின் சிறப்பு)
ஆங்கார மான அயிரா வதமேறிப்
பாங்காய்ப் பவனி வரக்கண்டு-பூங்கனிசூழ்
(தலைவி மயல் கொண்டது)
அப்போது கொன்றை யரனார்லெக் கானதுபோ
லிப்போது நானுமிலக் காமானே- செப்புமயல்
ஆனேன் பரவசமாய் ஆவி மெழுகதுபோல்
தானே மயங்கித் தயங்கினேன்-மீனக் 55
(மதனன் படைச்சிறப்பு)
கொடிபிடித்துப் பெண்கள் படைகூடி நடிக்கத்
துடிதுடிக்கக் கிள்ளைப் பரிசூழக் கிடுகிடென
வாரி முரசதிர மாங்குயில் காளத் தொடுக்க
நேரு மிருளானை நெருங்கிவரச் - சீரன்றில்
கட்டியமே கூற ரதிகண்ணார் மயங்கிவர
மட்டார் மகிழ்மலர் சூடி - இட்டமாந்
திங்கள் குடைபிடித்துத் தென்றல்தே ரேறிமதன்
கண்குளிரப் பாளை கவரிதர - பொங்கமிகும்
(மதனன் கணை தொடுத்தல்)
கன்னலே வில்லாய் களிவண்டே நாணாகப்
பன்னுமல ரைந்துமே பாணமாய் - முன்னமலர் 60
மாரியென வேபெரிய வானகமெ லாம்நெறிய
வேரிமிக வேசொரிய வேகமுடன் --- நாரியர்கள்
அஞ்சவுல கஞ்சவரி யஞ்சவய னஞ்சவரு
விஞ்சையர்கள் தொஞ்சுமயல் மிஞ்சியிட - வஞ்சமொடு
பற்கடித் துருக்கிவுக் கிரமிக்க திக்கனைத்து
மொக்கயாக் கைசுற்றி நெக்குநெக்கு - லெக்குவைத்து
வாளியொடு வாளிபொர வாடையொடு வாடைபொரத்
தூளியொடு தூளித் தூளியிட - தாழ்வில்லா
முல்லை யசோகு முழுநீலஞ் சூதைப்பூ
அல்லி முளரியோ டைந்துமலர் - மெல்லமெல்ல 65
கொங்கை தெரியாமல் கோடான கோடியம்பு
புங்கரனும் புங்கமாய்ப் பூட்டினான் - அங்கமெல்லாம்
சோர்ந்தேன் கலைசோர்ந்தேன் துய்யவளை சோர்ந்தேன்
சேர்ந்தேன் மலரணையே சேர்ந்தேனே - நான்தான்
(தலைவி மானைத் தூதுவிடல்)
மயங்காமல் நெஞ்சு மலையாமல் வாடித்
தியங்காமல் அன்பரிடஞ் சென்று - சுயங்காணும்
சோலைதனில் கூடிச் சுகிக்க மனமகிழ்ந்து
மாலைதனை வாங்கிவர வாழி!
பெரிய தம்பியா பிள்ளை பேரில் மான்விடு தூது முற்றும்.
----------------------
2. சேக்கிப்பட்டி - முத்து வீரப்பப் பிள்ளைபேரில் மான்விடு தூது.
காப்பு
பூமன்முத்து வீரப்ப பூபதியா மன்னசத்திர
சோமன்மேல் மான்விடு தூதுக்கு- வாமனரூ
பத்துடையான் வேதப் பனுவலுடை யான்மாமு
கத்துடையான் பொற்பாதமே காப்பு.
நூல்.
(மானின் பெருமை)
பூமேவு ஞாலம் புரக்குமணி வண்ணனும்பொற்
காமேவும் வெள்ளானைக் காவலனுந் - தேமேவு
வெண்டா மரைக்கலைமான் வித்தகனு முத்தலமுங்
கொண்டாடு மீசர்திருக் கோடீர்த் - தண்டமுமெண்
டிக்குமீ ரேழுலகுந் தேசுதரச் சந்திரன்றன்
மெய்க்குள் விளங்கிவளர் வெண்கலையே ! - முக்கியமாய்ச்
சோமனுடன் நீயிருந்து துன்னுதலா லீஸ்வரனும்
வாமமிகு செஞ்சடைமேல் வைக்கின்றான் - சேமமுடன்
பார்க்குள்வள ராடவர்க்கும் பாவையர்க்கு மானமெல்லாங்
காக்கவரு கின்ற கலைமானே ! - ஏற்கவே 5
காரங்கம் பெற்றமலர்க் கண்ணனும்நின் பேர்படைத்த
சாரங்கங் கொண்டுசெயந் தான் பெற்றான் - பாரெங்கும்
பாயுமிருள் தீர்ப்பதுவும் பானுவின்முன் நீநடக்குந்
தூயதிறத் தாலன்றிச் சொல்வதுண்டோ - ஆயுங்
கலையாளி யென்றுதமிழ்க் கற்றவருக் கெல்லாம்
மலையாமல் பேர்கொடுத்த மானே! - துலையாக்
கருங்கலையே பெண்வடிவாய்க் கண்டதுவுங் கோட்டுக்
கருங்கலையே யுன்னாமங் கண்டோ? - நெருங்குமுலைக்
கன்னியர்க்கெல் லாமிரண்டு கண்ணாத லாலன்றோ?
உன்னை வளர்ப்பா ருலகத்தில் – பின்னுஞ் 10
செகத்திலர சாட்சிமன்னர் செய்வரெல்லா முன்பேர்
மகத்துவத்தி னாலன்றோ மானே!- அகத்துவகை
கொண்டயுனு நின்வடிவங் கொண்டகலை வாணியைநாக்
கொண்டுறைதல் யாரறியார் கூர்ங்கலையே ! - வண்டுலவுஞ்
சோலையில்வில் லங்கமொடு தோன்றுவான் பக்கலொருக்
காலையினுஞ் செல்லாக் கருங்கலையே!- சாலவே
புத்திமான் பத்திமான் பூமான்சீ மான்மிகுந்த
உத்திமா னென்பதுன்பே ருண்மைகண்டோ- எத்திசையுங்
கொண்டாடு நல்லகுல மானீ யாதலினால்
தண்டாமரை யாளுன்றன் வடிவங் - கொண்டதுவும் 15
யாரறியார் வள்ளியையம் மான்மகளென் றேவடிவேல்
வீரனுமே சேர்ந்தகதை வீணலவே - பாரில்
எவர்க்குஞ் சிலாக்கியமென் றீசனுனைக் கைக்கொண்
டுவக்குஞ் செயலொருவர்க் குண்டோ ?- தவத்துயர்ச்சி
கல்வியுள்ளோ ரெல்லாங் கலைக்கோட்டு மாமுனியைச்
சொல்லுவதுன் பேர்படைத்தச் சூட்சியன்றோ - நல்லநல்ல
பொன்னுழையே காதற் புலன்கொடியார் கைவிரித்தென்
றன்னுழைவா வென்பதுவுந் தப்பிதமோ ?- இந்நிலத்தில்
நல்லாரு மின்பநயங் கொள்மட மாதர்களு
மெல்லாரும் போற்று மெசமானே!- சொல்லரிய 20
தண்டலையில் வீரமுடன் றன்கையிற் செவ்வங்கி
கொண்டவர்பா னாடாத கோமானே ! – மண்டலத்தில்
(பண்டு தூதாகச் சென்றவர்கள்)
போதுக்குள் வாழுமின்போல் பூவையர்க்கு மாந்தருக்குந்
தூதுக்குச் சென்றோரைச் சொல்லக்கேள் - சூதுகிண்ணம்
பந்துநிக ரானமுலைப் பாவைப் பரவையிடஞ்
சுந்தரர்க்கு முன்னமரன் தூதுசென்றார் - செந்திருமால்
பாண்டவர்க் காகவே பண்பாக நூற்றுவர்பால்
தூண்டுரத மீதேறித் தூது சென்றார்- வேண்டியே
மன்னனள ராசனுக்கு மாதுதமை யந்தியிடம்
அன்னமது தூதுசென்ற தாரறியார்- முன்னம் 25
வளமேவு மிந்திரர்க்கு மையல் தீர
நளராசன் தூது நடந்தான் - உளமகிழ்வாய்ச்
(தலைவி, மானைத் தூதுவிடற்குக் காரணங் கூறல்)
சூட்டு மழைமுகிலைச் சொல்லிற் கடினமொழி
காட்டுமல்லால் நல்வசனங் காட்டாதே- ஈட்டும்
மலைவா யிருந்து வருந்தென்றல் தானு
மலையா துரைக்க வருமோ?- நிலையான
வெள்ளத்தைத் தூது விடுத்தால்வே றாக்குமல்லால்
உள்ளநத்தித் தூதுரைக்க வொண்ணாதே - விள்ளிற்
பிணிமுகமென் றேயெவரும் பேசும் மயிலுந்
துணிவுடனே தூது சொலுமோ? - அணிதிகழும் 30
அஞ்சுகத்தைத் தூதுக் கனுப்பிற் குளறுமல்லால்
நெஞ்சுருக்கப் பேசும்வகை நேருமோ? - தஞ்சமதில்
கண்டபடிப் பேசிக் கலைப்பரல்லாற் கள்ளுண்ணும்
வண்டர் பொருந்தும் வகையுண்டோ ?- செண்டுமுலைச்
சேடியரைத் தூதுவிட்டாற் சேடியரு மென்போல
வாடி மயங்கி மறந்திடுவார்-பேடையிளம்
பூவைதனை விடுத்தால் பூவையருக் கேற்றபடி
ஆவலுடன் பேசும்வகை யாங்கிலையே-காவில்
இருந்து குரல்காட்டு மிளங்குயிலு மேபா
லருந்தும் வகையிலையே மானே ! - பொருந்தவே 35
நெஞ்சை விடுத்தால் நினைவழிந்து நிற்குமல்லால்
கொஞ்சுமொழி பேசியெனைக் கூட்டுமோ – விஞ்சைதிகழ்
(தலைவி, மானைப் புகழ்ந்துரைத்தல்)
மானே! என் கண்ணே !மதியே வனசமலர்த்
தேனே! அமுதே! செழுங்கலையே ! - ஆனதென
தாருயிரே! உன்னையல்லா லாதரவு வேறுளதோ?
பாருலகி னீயருட்கண் பாலிப்பாய்!- நேரேதான்
நெஞ்சங் கலங்கி நினைவு பரவசமாய்
வஞ்சியர்க்கெல் லாமிதுவே வார்த்தையாய் - மிஞ்சியுரை
செய்கவு மாலாகிச் செழுங்கலையும் வால்வளையு
மெய்துந் துயிலு மிளந்தேனே !—துய்ய 40
பிணையே! நல்வாசப் பிணையே! மலர்மெல்
லணையே! யான்சேரும் வகைக்கான துணையே!
கயல்தந்த கண்ணியர்க்குள் கன்னி யான்வாட
மயல்தந்தோ னூர்பேர் வழுத்தக்கேள்! – செயல்தந்த
(தசாங்கங்கள்)
(மலை)
அந்தரத்து வானதியொப் பாகமா றாதருவி
வந்தருளுஞ் சோலை மலையினான்-விந்தைசெறி
சூதமும்வான் முல்லையுஞ் சோகமுஞ்சூழ் வான்கரும்புஞ்
சீதமிகு பங்கயமுஞ் சேர்தலால்- போதுலவு
பைந்தருவுஞ் சங்கும் பருமணியு நித்திலமுஞ்
சந்ததஞ்சே ருஞ்சசியுஞ் சார்தலால்-- கொந்தவிழ்பூங் 45
கொன்றையுங் கட்செவியுங் கோலமட மானுமுயல்
கன்றுமலர்க் கூவிளமுங் காடுதலால் - என்றுமே
கன்னற் சிலைமதன்போற் காமன்போ லீசன்போல்
மன்னு மழக மலையினான்- என்னுடனே
(ஆறு)
ஏர்க்குந் திகிரிவளை யேந்திவர லாலரிபோ
லார்க்குந் திருவணிமுத் தாற்றினான் - பார்க்குள்ளே
(நாடு)
அந்தணர்க ளோதுமறை யஞ்சுகத்துக் கேபூவை
வந்துரைசெய் பாண்டி வளநாடன் - நந்தாத
நீடுங் கிளிகேட்ப நித்தமுமே வண்டரிசை
பாடுந் துவரா பதினாடன்-பேடைமயில் 50
(ஊர்)
ஆடுஞ்செய் குன்றுமதி லாலயமுங் கோபுரமு
மாடமுஞ்சேர் சேக்கிபட்டி மாநகரான்-பீடுசெறி
(குதிரை)
மாதர் மனம்போல வலுகபட முற்றுவிசை
மீதுலவு மைங்கதியு மேற்கொண்டு- ஆதவன்றேர்
பூட்டுமெழு பச்சைப் புரவியுமே வஞ்சநடங்
காட்டி யட்டதிக்குங் ககனநெடுங் - கோட்டுக்
குலவரையுந் திக்கயமுங் கோதண்ட மேரு
மலையுட கதிரவனு மானித் - துலவுமிட
சாரிவல சாரியொடு தாவிவெள்ளை வாரணத்தோன்
வீரவய வாம்பரியை வெற்றிகொண்டு - பாரில் 55
கலனைமுது கிலங்கக் காலிலிடு தண்டை
கலகலென வொன்னார் கலங்க - வலியமுக
முட்டுந் தகதகென முத்தம் பொதிந்தநெற்றிப்
பட்ட மிலங்கவரு பாய்பரியான் – கட்டுந்
(யானை)
தறியைச் சுழற்றித் தகர்த்து நெகிழ
முறியச் சினந்துரற்கால் மோதிக் - கெறுவநடை
கொண்டெதிர்த்த வொன்னார்க் கற்கோட்டை நெறுநெறெனச்
சண்டையிட்டு நாற்றிசையுந் தத்தளிப்ப - கொண்டற்
குரகதத்தென் னாற்கோட்டுக் குஞ்சரத்தை வெங்கண்
டுரகன் முடியாதிர வுற்றுப் – பரமனயி 60
ராவணமு மொப்பலவென் றண்டருங்கொண் டாடநடந்
தாவுங் கரடமத தந்தியினான் -- பூவினொடு
(மாலை)
சாந்திருக்கும் கும்பத் தனமடவார் கண்போல்
வாய்ந்திருக்கும் பூங்குவளை மாலிகையான்- வேந்துவளர்
(முரசு )
காசினிமேற் சத்தக் கடலொலிபோல் பொன்முகப்பு
வாசல் முழங்குமணி முரசான் - தேசுள்ள
(கொடி)
ஞாலமதில் வாழ்பவர்க ணாடியதெல் லாங்கொடுக்குங்
கோலமிகு மேனிக் கொடியினான் - மேலுமுயர்
(ஆணை)
நாகத்தி னுச்சியில்வாழ் நற்றரணி மீதுகெடி
யாகச் செலுத்துகின்ற வாக்கினையான் – வாகுதிகழ் 65
(முத்து வீரப்பப்பிள்ளையின் சிறப்பு)
தென்னா லூரங்காள் தேவி யிருபதத்தை
யென்னாளும் போற்றிவள ரிங்கிதவான் - பொன்னார்ந்த
தாரனெங்கள் வீரபத்திர சாமியையுந் தென்மதுரை
வீரனையும் போற்றும் விவேகவான் - தாரணிசூழ்
நத்தம்வளர் முத்துலிங்க ராசன் மனமகிழும்
வித்துவபரி பாலனஞ்சேர் விற்பனவான் - சத்தியவரிச்
சந்திரன்கங் காகுலபிர தாபன்வீ ரப்பமன்னன்
தந்தருளு மைந்தனதி சற்குணவான் - இந்திரசவு
பாக்கியவான் கற்றோர்தம் பாரம்பரை யறியும்
யோக்கியவான் யார்க்கு முபகாரன் - வாக்கிரண்டு 70
சொல்லா னப்பாச்சி சுமந்திரிக்கும் பட்டிக்கும்
வல்லான் கருங்காளை மாநகர் வாழ் - நல்லநல்ல
சத்தியவான் வீரப்ப சற்குணவான் தன்னையென்று
மைத்துனனா கப்படைத்த மார்க்கண்டன் - சித்திரமிகு
மன்னனெனு ராமகிருஷ்ண வல்லவனை மைத்துணைவ
னென்னநித மழைக்கு மிங்கிதவான் - மின்னுரதி
காந்தனெனு முத்துக் கருப்பண்ணனைப் புத்திரனென
வாய்ந்த ரமணீக மகராசன் - வேந்தானு
கூலன் பரிவிடையார் கோத்திரமெல் லாம்விளங்க
ஞாலமதில் வந்துதித்த நாகரீகன் – கோலமட 75
அன்னம்விளை யாடுகின்ற வம்போருகத் தடமுங்
கன்னலிஞ்சி மஞ்சள் கதலியுடன் - வண்ணமிகு
சித்திரக் காலியுடன் செஞ்சம்பா வெண்சம்பா
முத்து விளங்கி முளகுசம்பா - புத்தன்
கருங்குருவை நெற்சீர கச்சம்பா நெற்கள்
நெருங்கி விளையு நிலமும் - விரும்புகின்ற
பாளை கமுகும் பலாவுந்தே மாவுமத
வேளுக் கினியபடை வீடென்ன - நீளுமலர்க்
காவுங் கிளிகள் களிப்புமதுக் கள்சொரி
பூவுஞ் செழிக்கும் புதுவயலான்- பாவலர்க்கன் 80
பாகமுளை வாரியன்ன மன்றுகொடுத் தோனிலகு
நாகமணி யீய்ந்த நதிகுலத்தான் - மாகம்வளர்
காரான மேகத்தின் கால்விலங்கை வெட்டிவிட்டுக்
காராள னென்றுங் கனம்பெற்றோன் - சீராக
முன்ன மொருசூலி முதுகில் மனமகிழ்ந்து
அன்னங் கொடுத்த அகளங்கன் - வன்னப்பட்
டாடைதனைக் கீறியதில் சிலந்தைகா..................ந்த
நாடறியக் கீர்த்திபெற்ற நாகரிகன் - கூடி
வழிபார்த்து வந்த வணிகனுக்காய் நீலி
பழிபார்த்து ரெட்சித்த பண்பன் - அழகாகத் 85
தேர்கொடுத்தோன் மாமதுரச் செந்தமிழுக் காயிரங்கி
ஊர்கொடுத்தோன் வேண வுபகாரன்- தார்கொடுத்தோன்
தேசமிகு கீர்த்திபெற்ற சீராளன் முன்கையை
வாசமிகு சந்தனமாய் வைத்துறைத்தோன் - ஆசைமிகு
மன்மத சொரூப வடிவினா னெப்போதும்
தன்மதுரை யாகவந்து தான்செனித்தோன் - பொன்படைத்த
சீராளன் யார்க்குஞ் செயலாளன் மேன்மைபெறு
பேராள னோங்கு மிசையாளன் - காராளன்
கங்கை குலதிலகன் கர்ணாவ தாரனுயர்
மங்கையர்க ளிங்கிதஞ்சேர் வாலகிருஷ்ணன் - திங்கள் 90
வதனன் வீரப்ப மகிபன் அருளுஞ்
சுதன் னிலகு சுமுகன் - சதுரனுயர்
விற்பன னற்புதன் வெற்றி படைத்திடு
சற்குணன் வித்துவ சனர்க்கருள் - பொற்பயன்
கொத்தல ருற்றக் குழற்கொடி யர்க்குயர்
மெத்தவும் நட்பு விளைத்திடு - சித்தசன்
கோக நகரன்ன கோமள மேனியின்
ராகவ னேநிக ராகிய - சேகரன்
பைந்தமி ழோர் துதி பண்புகொள் சீவகன்
ஐந்தரு வாச னலங்கிறுத - இந்திரன் 95
சந்தஞ்சேர் வீரப்ப சற்சனகெம் பீரனருள்
மைந்தன் முத்துவீரப்ப மார்க்கண்டன் - கந்தமுல்லைத்
தாரன் தமிழுக் குதாரன் கருப்புவில்லு
மாரன் முத்துவீரப்ப மார்க்கண்டன்-வீரிட்டு
அந்தமிகும் யானை யழைக்குங் குரற்கேட்டு
வந்தழுத்து வீரப்ப மார்க்கண்டன்- பிந்தவே
ஞாயமுடன் இராவணனை நாளைவா போர்க்கென்ற
மாயன் முத்துவீரப்ப மார்க்கண்டன்-தூயமிகு
சீர்பன்மலர்த் தாரிலுயர் செங்குவளைத் தார்புனையு
மார்பன் முத்துவீரப்ப மார்க்கண்டன் – பார்புகழு 100
மிராசன் வெகுபாக்கிய னானகுபே ரன்சத்திய
வாசன் முத்துவீரப்ப மார்க்கண்டன் - தேசுள்ள
யோகன் மடவியர் சையோகன் மதனனெனும்
வாகன் முத்துவீரப்ப மார்க்கண்டன் - வாகுளமின்
னாளன் கவிவல்லோ ராய்ந்தோ ரருமையறி
வாளன் முத்துவீரப்ப மார்க்கண்டன்- சூழுநிதி
நாளுமுயர் சேக்கிப்பட்டி நன்னகரி லெப்போதும்
வாழுமுத்து வீரப்ப மார்க்கண்டன்-வேளென்னச்
(பவனி வருதலின் சிறப்புரைத்தல்)
சீர்த்திபெறு தேவேந்திர னென்னப் பூவுலகாள்
பார்த்திபனே யென்னப் பவனிவர- நேர்த்தியுடன் 105
தானஞ்செய் தேநேம சாத்திரம் தாகவனுட்
டானஞ்செய் தேபூசை தான்செய்தே - ஆனதன
தொக்கல் விருந்துவுடன் சூழச் சட்டரச
வர்க்க வமுதருந்தி வாய்பூசி - முக்கியமாய்
விந்துவா சாரத்தில் மன்மதன் போல் வீற்றிருப்பப்
பைந்தொடியார் கண்ணாடி பாங்காகத் - தந்துநிற்ப
தங்கத் தகட்டித் தலைப்பாகை சென்னியில்வைத்
தங்கத் துடனிசாரங் கிதமான -- பொங்கமிகு
சாலுவையுந் திவ்விய சரிகைத்துப் பட்டாவு
மேலுமையா யங்கவத்திரம் மேலணிந்து - ஏலு 110
முகமிலங்க மென்முருகு முத்துவச்சிர வொண்டி
தகதகென்னக் காதிற் றரித்து - சுகமிகுத்த
வேளுக் கிசையவே மேன்வாகு வலையங்கள்
தோளுக் கிசையவே சூடியே - நாளுமின்ன
பத்து விரற்கும் பளபளென்ன மோதிரமுஞ்
சுத்துமணிக் கைச்சரமுஞ் சூடியே - நத்தியே
ஞாலமணி மாலைகொண்டு நங்கையர்கள் பின்புவர
நீலமணி மாலைமொய்ம்பி லேயணிந்து - கோலம்
பளபளென்ன இரத்தினம் பதித்த பதக்கன்
தளதளன்ன மார்பிற் றறித்துக் - கிளரும் 115
உறையி லடங்கா வொளிர்பொன் னரைஞாண்
அறையி லிலங்க வணிந்து -- தரைமுழுதும்
தானடந்து மோர்காலைத் தானே யெடுத்தந்த
வானளந்து நின்ற மணிக்காலிற் - றானவனை
மிஞ்சிட்டுச் சோதிமிகுக்கும் வச்சிரம் வைத்திழைத்த
மிஞ்சியிட்டு ராசாங்க மேன்மையாய் - ரஞ்சிதஞ்சேர்
விற்புருவ மாதர் விருப்ப மதிமுகத்திற்
பொற்புமிகுஞ் சவ்வாதுப் பொட்டுமிட்டு - அற்புதம்போல்
பாத மிரண்டினையும் பாவடியி லேற்றியிந்தப்
பூதல மெலாமும் புகழவே – சூதுமுலை 120
மங்கையர் கைலாகுதர வாலகிருஷ்ணன் போலெழுந்து
தங்கமுகப் பாசாரந் தன்னில்வந்து - சிங்கார
வீரப்பட் டங்கட்டி யதன்மேலே சுலாயணிந்து
பாரமுற்ற நீலப் பருப்பதம்போல் - சூரமுற்று
முன்னுயர்ந்து பின்றணிந்து மும்மதங் களும்பொழிந்து
உன்னுகொண்டல் கொண்டகங்கை யுண்டுமிழ்ந்து - மின்னுகின்ற
கைக்கிசைத் திருப்புலக்கை கைக்குளிரப் பிடித்துவட்ட
திக்கயத் தினைப்பட செயிற்றெதிர்த்து - உக்கிரமுற்று
வேகத் தெழுந்துபல மீறிப் பிரசண்டமென
மாகத் தெழுந்துவெகு வாகுற்று – லாகித்து 125
செகண்தோங்கதி மிதிதிந்தி திமிதியென்ன நடைபயின்று
நகநகென்ன வொளிமிகுந்த நகைமின்ன - முகமிலங்க
வந்ததொரு வெண்மருப்பு வாரணத்தின் மீதேறிச்
சிந்தைமகிழ் பவனி சேர்ந்துவரச் - சொந்தமிகு
மக்கள்மரு மக்கள்மார் மைத்துனமார் தன்கிளைஞர்
மிக்கபரி வாகனத்தின் மீதுவரப்-பக்கமதில்
ராவுத்த மார்குமஸ்தா நாயக்க மார்சகலர்
சேவுத்து ஆழியத்தர் சேர்ந்துவர- மேவியே
ஆனை யவுதாவைத் தனந்தமவர்ப் பாய்பரிமாச்
சேனை வரக்காலாள் திரண்டுவர – ஆன 130
கவரிகொடை குஞ்சங் கனவிரு தட்பஞ்
சிவுரிசெய் டால்சுருட்டி டீகா - பவுஞ்சுவர
வேல்காரர் வாள்காரர் விற்காரர் வீசிவருங்
கோல்காரர் கேடையத்தர் கூடிவரக் - கால்கதியாய்
தோமரத்தர் பூரணிக்கைத் துப்பாக்கிக் காரர்வட்ட
நேமிதரித் தோர்கள் நிறைந்துவர- மாமதஞ்சேர்
தண்டமிடும் யானையிலுந் தாவுபரி யொட்டகத்துங்
கொண்டலென்னப் பேரி குமுறிவர- தொண்டகங்கள்
தாளம்மத் தளமுடுக்கை தக்கை படகுபம்பை
மேளவர்க்க நாகசின்ன மேல்முழங்கச் - சூழுகின்ற 135
தம்புரு வீணை சரபத்துக் கின்னரியுங்
கொம்புதப்பு வாங்கா குமுறவே - சம்ரமஞ்சேர்
நங்கையர் திவ்வியநட நாட்டியமிட மற்றமின்னார்
துங்கமிகும் அயினி சுற்றிவர - பொங்கமிகுங்
கட்டியர் பராக்கென்று கட்டியங்கள் கூறிவர
அட்ட லட்சுமீக ரலங்காரக் - கட்டழகன்
வந்தான்குபே ரன்வந்தான் மன்மதன்வந் தான்தியாக
சிந்தாமணி வந்தான் தீரன்வந்தான் - பைந்தொடியார்
லீலாநயங் கொள்ரமணீ கரன்வந் தானதிக
கோலாகலன் வந்தான்குணா லயன்வந்தான் – மேலான 140
ஐந்தருவி லரசன்வந் தானம்புய கிரீடிவந்தான்
பைந்தமிழோர்க் கீய்ந்தருசம் பன்னவந்தான் - சந்தமிகு
தென்னன்வந்தான் மாடநிறை சேக்கிபட்டி யூரில்வளர்
மன்னன்வந்தான் செங்குவளை மார்பன்வந்தான் - நன்னயஞ்சேர்
பார்த்திபன் வீரப்பமுகில் வந்தான் செல்வனருள்
கீர்த்திபெறு மைந்தன் வந்தான் கண்ணியன்வந்தான் – நேர்த்தியுள்ள
கங்கைகுல திலக்கான னவதாரன் வந்தான்
சங்கநிதி பதுமநிதி தான்வந்தான் - மங்களகல்
யாணன்வந்தான் தேர்ந்தகலைக் கியானன்வந்தான் யாவருக்கும்
வேணவுப காரன்வந்தான் வேந்தன்வந்தான் - பூணுகின்ற 145
தாமன்வந் தான்வந்த வரைத்தாபரிக் குமன்னசத்திர
சோமன்வந் தான்செல்வ துரைவந்தான் - பூமிபுகழ்
துங்கன்முத்து வீரப்ப சூர்வசகா யன்வந்தா
னிங்கிதன்வந் தான்வந்தா னென்னவே - பொங்கமிகு
சீதள் நீலத்திரைக் கடலினோ சையென்ன
ஊதிய தாரை வொலிகேட்டு – தீதில்லா
(பருவமடந்தையர், காதல் கொள்ளுதல்)
மாடங்கள் மாளிகையில் வாசல் முகப்பருகிற்
கூடங்கள் வீதிதனிற் கூடிவிளை யாடுகின்ற
பேதைமுத லேழ்பருவப் பெண்களெல்லாந் தானடங்காக்
காதல்கொண் டுவந்துகண்டு கைதொழுது - போதகமே! 150
வெள்ளமத வாரணமே ! வெண்மருப்புக் குஞ்சரமே!
மெள்ளநட வென்றுகையால் வேண்டினார்- வள்ளலிவன்
தீர்க்கமெல்லாம் பார்க்கவென்றாற் றிவ்யனந்தங் கண்கொண்டு
பார்க்கவே வேணுமென்பார் பைந்தொடியார் - யார்க்கும்வெகு
(இவனோ அவனோ வென்று ஐயுறுதல்)
ஆவல்தரும் வேளோ வவனுருத்தி ரனோவால
சீவனோ பார்க்குமென்பார் தேன்மொழியார்- பூவுலகில்
வேளென் றெடுத்துரைத்தால் மிக்கவடி வானரதி
யாளெங்கே ? பூவாளி ஐந்தெங்கே?- வாழுமனு
ருத்திரனென் றெடுத்துரைத்தால் உண்மையிடை வண்மையுள்ள
சித்திரவடி வானவுமா தேவியெங்கே- விர்த்திபெறு 155
சீவகனென் றாலிவன்பாற் றேவிசுர மஞ்சரியாள்
மேவவரக் காட்டுமென்பார் மெல்லியலார் – ஆவலுடன்
(மன்னன் எனத் துணிதல்)
இன்னா ரிவரென் றெடுத்துரைத்துச் சொல்லுவது
என்னாலென் றையுற்று எல்லோரும் - மன்னனிவன்
செங்குவளை மாலை திருப்புயத்திற் றோன்றுதலால்
எங்குமுயர் மேனிவிரு தெய்துதலால்- இங்குவளர்
…….. ..... தானென்றே தெளிந்து
கன்னியர்க ளெல்லோருங் கண்டு சொல்வார் - மன்மதன்கை
..... ..... …….. கநீ யாகையினால்
உண்ணுங் கவளமென வுண்ணாயோ? - கொண்ணமார் 160
...... ..... ..... ...... சிந்துரமே வேள்முரசு
முன்னீரை யுண்க முடியாதோ ? - பொன்மகட்காய்
... ……. தாயண்மை கொண்டெங் கட்காய்வேள்
கைச்சிலையை யின்றொடிக்கக் காணோமே - பச்சைமுகில்
.... ……. காய் மன்னவர் மாரனுட
மாவிலங்கை வெட்டிவிட மாட்டாயோ ?- மேவுமெங்கள்
.... …….. மோமாரன் வில்லி
நாணத்தை யற்றுவிட லாகாதோ?- பூணுகின்ற
…….. ……. தோம் பஞ்சணையிற் சேர்ந்ததா
பானத்தை யுங்கொடுப்போம் பாராயோ ?-மானனையீர் 165
……. ……. லமைக்காரன் குவளை
மாலைதனைக் கொடுக்க மாட்டானோ ?-மேலுமெண்ணிப்
……… …….. பனைக்கைப் பிடித்தாற்
பாரா தூரமாமே பாவையரே!- சீரான
……. …….. சேர்ந்தன்பின் வரவேபாய்
வித்தைசெய்த வன்றிரும்ப மேவானோ?-மெத்தவுமே
நம்மசொல்லைக் கேட்பானோ ? நாடி நம்மைப் பார்ப்பானோ?
நம்ம வடிவுகளு நன்றாமோ ?-செம்மையாய்
வாருமென வாருமென வாகுதிகழ் மாதர்களெல்
லோருமொரு பாரிசத்தி லொன்றாகச் சேரவே 170
கூடியே வார்த்தைசொல்லிக் கொண்டிருக்கு மந்நேரம்
நாடியே யானையின்முன் நான்வந்தேன்-நீடுபுகழ்
கன்னாவ தாரனைவிற் காமனெனும் ரூபிகனை ,
நன்னாக ரீகரம ணீகரனைப்-பொன்னாடர்
கோமானைப் பங்கசங்க கோலாகலப் பிரபுவைச்
சீமானை லெட்சுமிசேர் சீதரனைப்-பூமானை
நங்காம தாருவையென் னுள்ளும்வளர் பாஸ்கரனைச்
சிங்கார மாகிய வசீகரனைத்-துங்கமிகு
சேக்கிபட்டி நன்னகரிற் செம்மையுடன் வாழுகின்ற
பாக்கிய னன்னபரி பாலனஞ்சேர் – யோக்கியனைச் 175
சந்தஞ்சேர் வீரப்ப சற்குணவான் பேர்விளங்க
வந்தபுத்திர ரத்தின வரோதயனை--நந்தாத
நித்திய சுபகரனை நித்திய குணாநிதியை
விர்த்திபெறு சந்திரவி தட்சணனைக்- கர்த்தனையென்
கண்ணாரக் கண்டய்யன் கட்டழகைச் சேவித்தேன்
எண்ணாதெல் லாம்நினைந்தே யெண்ணினேன்- நண்ணாக
(தலைவி, மயல்கொண்ட தெவ்வாறு எனவுரைத்தல்)
மோகமெனுங் கடலில் மூழ்கினேன் பின்னுமன
தாகமயல் கொண்டதெல்லாம் யான்சொல்ல-தாகமுடன்
இந்தச் சமையமிது நல்லதென்று சொல்லும்
அந்தச் சமையத்தில் யானைசெல்ல-சந்தமிகும் 180
மாரன் மலர்க்கணைகள் மாரியென வேயெனது
பாரமுலை மீதுவந்து பாயவே - சேரமயல்
ஆனேன் பரவசமா யாவியுடல் வருந்த
நானே தள்ளாடி நடக்கின்றேன் - மானனையார்
கண்டுவிரு பால்நின்று கைலாகை யாயணைத்துக்
கொண்டுநயந் தார்மயக்கங் கொண்டேனே - ஒண்டொடியார்
சித்திரமலர் மெத்தையின்மேற் சேர்த்தினார் பன்னீரை
மெத்தமெத்த வேயெனது மேற்றெளித்தார் - அத்தனையும்
அக்கினியின் றன்பொறிய தாகநினைந் தேன்குடக்கு
திக்கி லுதையவனுஞ் செல்லவே - முக்கியமாய் 185
வான்மதியஞ் செம்புருக்கி வார்த்தாப்போ லெனக்கொதிக்க
நான்மதிசோர்ந் தேனொன்று நாடேனே- தேன்மலர்கள்
சூடேன் கலைவளைகள் சோர்ந்தேன் சகிமாரைத்
தேடேன் பலபணியுந் தேடேனே-கூடுதற்கு
என்னை யெனதிச்சைக் கிசைந்தவன்பாற் சேர்த்துவைப்ப
துன்னையல்லால் வேறொருவ ருலகிலுண்டோ ?- பின்னுமே
(தலைவி தூதுசெல்லக் காலங்கூறி, மாலை வாங்கிவர ஏவுதல்)
பாரிமான் தூது பகருவா யின்றுன்னாற்
காரியமா மென்றுநான் கட்டுரைத்தேன் - சீரிதாய்
ஆசையுடன் மார்க்கண்ட னாக இருந்துசிவ
பூசைசெய்யும் நேரத்திற் போகாதே - தேசர்புகழ் , 190
பைந்தமிழோர் வந்துகவி பாராட்டிக் கொண்டிருக்கும்
அந்தச் சமயத் தணுகாதே - சிந்தைதனக்
கேர்க்குங் குமஸ்தாக்க ளெல்லா ருடன்கணக்குப்
பார்க்குமந்த வேளை பகராதே - பார்க்குளுயர்
சொந்தமிகு காரியத்தார் சுற்றத்தார் சூழ்ந்துகொண்டு
வந்திருக்கும் போது மருவாதே -- சந்ததஞ்சேர்
வாளை நிகரும்விழி மாதர்நயம் பேசுமந்த
வேளையிலு நீயும்போய் விள்ளாதே - சூழவே
செப்பமிடுந் தேசத்தர் சேர்ந்துநிதி கொண்டளந்தோர்க்
கொப்பமிடும் வேளை யுரையாதே- சப்ரமஞ்ச 195
மெத்தையின்மேல் ராசாங்க மேன்மையாய் ரூபமிகு
சித்தசன்போற் றேவேந் திரன்போல் - கர்த்தன்போல்
போசன்போல் வீற்றிருக்கும் போதுசமு கங்கண்டு
வாசமலர்த் தார்வாங்கி வா.
முத்து வீரப்பப் பிள்ளைபேரில் மான்விடு தூது முற்றும்.
வாழ்த்து.
(கட்டளைக் கலித்துறை)
வேதிய ரானினம் வாழி! மணிமுடி வேந்தர்மனு
நீதியின் மிக்கசெங் கோல்வாழி! கல்வி நெறிதிறம்பா
மூதுயர் வித்துவ சனர்வாழி! வாழி ! முளரிமலர்
மாதுறை மால்முத்து வீரப்ப பூபதி வாழியவே!
வாழ்த்து முற்றும்.
-----------------------
3. வெள்ளைய ராசேந்திரன் துகில்விடு தூது.
காப்பு.
செகபதியை வெள்ளையரா சேந்திரனை வாழ்த்தித்
துகில்விடு தூதுதனைச் சொல்லப் - புகலரிய
மெய்ப்பார தந்திகழு மேருவிற்கோட் டோர்கோட்டுக்
கைப்பார தந்திமுகன் காப்பு.
நூல்.
(துகிலின் பெருமை.)
பார்பூத்த பேருதரப் பச்சைப் பசுந்துளபத்
தார்பூத்தத் தாமோ தரனுக்குப் - பேரிடுவோர்
பொன்னாடைப் போர்வை போற்றியபீ தாம்பரமென்
றன்னாளும் நாமமிட்டா ரம்பரமே !-முன்னாளில்
தேசிகனென் றோராசைத் தேகசொர்க்கஞ் சேரவிட்டக்
கோசிகனுக் குன்பேரங் கோசிகமே!- மூசுகின்ற
பூசல்மது கிண்டிமதுப் பொங்கிவரும் பூமணத்தை
வாசமென்ப துன்பேராம் வாசமே!- ராசமத
யானைபரி தேர்கடுங்கா லாளுமவர் வாழுமுன்பேர்
தானையென்று பேர்தரித்தத் தானையன்றோ !- நானிலத்தில் 5
பெண்பாலு மாண்பாலும் பேராடை சுற்றுமென்றே
வெண்பா லு மப்பெயரை மேலொக்கும் - நண்பாயே
ஊடியபா வாணருன்னா லொன்றுகொடுக் கில்மற்றோர்
கோடி கொடுத்ததெனக் கொள்வாரே -- நாடறிய
வீதிகொண்டு கால்மடித்து மேனியடி பட்டாலும்
வாதுவரே றாதபரி வட்டமே! - கோதிநெய்தோர்
கட்டுக் கயிறிழுத்துக் கால்மிதிப்ப மேல்கீழாய்
நட்டுத் தரிபுரட்டும் நாயகமே!- கெட்டியாய்த்
தேடும் பதத்தால் திருத்தியநூ லாராய்ந்து
பாடங் கொடுக்கும் பல்கலையே ! - தேடியே 10
தேசாதி தேசர்வந்து சேரக் கடைமுகப்பில்
ஆசார மென்றிருக்கு மய்யனே !--மாசில்லா
தொத்திணங்கி யங்காடிக் குள்ளே யமைந்துமின்னார்
வத்திரத்துக் கொப்பான வத்திரமே !- நித்தியமும்
தொட்டகையால் வாரி யுடுத்தலால் சூழ்ந்தநில
வட்டமெனப் பேர்படைத்த வட்டமே! - இட்டமுள்ளோர்
நாடியுனை யெடுத்து நற்பூவும் போடுதலாற்
கோடிகமென் றேவிளங்குங் கோடீகமே! - நீடும்
அகிலமிசை யாங்கிறையம் பார்த்திடலா லம்புத்
துகிலை நிகரான துகிலே!- மிகவும் 15
நெருங்குந் தலைக்கு நிறையெண்ணெய் தேய்த்துப்
பெருங்கம்பி யிட்டசிறு பிள்ளாய் ! - ஒருங்கணைத்துப்
பூட்டிய பாவையுடன் புல்லும் வகைதெரியக்
காட்டிமிஞ்ச வரற்றுவண் டகர்முகனே! - நாட்டிலே
செந்திரு வண்ணாரைத் திருப்பூட்டு முன்மருவு
மந்திர கூறையென்னும் மாப்பிளையே ! - சந்ததமும்
நானிலத்தி லாடவர்க்கும் நல்லார்க்கு மெல்லார்க்கும்
மானிசத்தைக் காத்தசக்கிர வர்த்தியே! - நானறிவேன்
கொங்கை தடிக்குமுன்னே குள்ளவல்ல வட்டமுமாய்
மங்கையமார் பைத்தடவு மச்சானே !- தங்கும் 20
வடிவுடைய பெண்களிரு வாழைத் துடையுங்
கடிதடமும் பார்த்த கணவா!- முடிதாங்கி
நீட்டித் தழுவணையாய் நீகிடப்பப் பெண்கள்கை
போட்டணைக்குங் கள்ளப் புருஷனே !- கூட்டமிட்டுப்
பார்ப்பா ரெடுப்பார் பணங்கொடுப்பார் மார்பினொடுஞ்
சேர்ப்பார் கலந்துமொழி செப்புவார்- கூர்ப்பாஞ்
சிலபேர்தா னாபதிக்கஞ் செப்புவார் பின்னும்
நிலவரங்கா ணாதுசிலர் நிற்பார் - பலவிதமும்
சொல்வா ருனைவளைந்து சுற்றுவா ரப்புறத்திற்
செல்வார் மறுத்துத் திரும்புவார் – நல்விதமாய்க் 25
கைப்படுத்த மட்டுமங்கே காத்திருப்பார் கையெடுப்பார்
அப்படிநூ றாயிரம்பே ரல்லவோ? - இப்படியே
அங்காடிக் குள்ளே யரசிருக்கு முங்கள்கொலுச்
சிங்கார மென்னாலே செப்புவதோ?- எங்கேனும்
ஆடைக்குப் பின்னுரைப்ப ராபரண மெல்லார்க்கும்
வேடிக்கைச் சீலையல்லால் வேறுண்டோ ?- நாடுங்காற்
சேலை யுடுத்தாதார் சிறுவர் சிரசிலுறு
மாலைகட்டி னார்பெரிய மாந்தரன்றோ ? - சேலையே !
வேசையரை வைப்புவைக்க வேணுமென்று தானொருவன்
ஆசையினாற் பின்போ யலட்டினால் - பேசுவார் 30
சோறும் பலசிலவுஞ் சொல்லவேண் டாமேநான்
கூறுமுன்னே நீர்தான் கொடுப்பீரே - பேறுபடக்
கச்சைகட்டுஞ் சேலையொன்று கச்சைமுறி யொன்றுநன்றாய்
வைச்சுடுத்துஞ் சேலையுடை மாற்றிரண்டு - நிச்சயமாய்த்
தந்துவரு வீரானாற் சம்மதிப்ப னென்பரங்கே
வந்துறவு செய்வதுமுன் வல்லமையே - முந்துதிரு
வேடமிடுஞ் சைவருக்கு மேற்சாத்து முட்சாத்துந்
தேடுவதுந் தானே சிவபூசை - நாடினால்
யாவையுமுன் மாயமன்றோ யிட்டதிரை வாங்கியன்றிச்
சேவைதனைக் கொடுக்குந் தெய்வமுண்டோ ?- ஆவலுறும் 35
உத்தமனே! உன்னை யொழிந்து திரிந்தவரைப்
பித்தனென்ப தல்லாற் பிறிதுண்டோ ?- வத்திரமாங்
காவலனே ! ஆழ்கடலிற் சிராயை நம்பிப்
போவதுமுன் பாய்கொடுத்தப் புண்ணியமே! - பூவுலகில்
கோவான மன்னர் கொலுமுகப்பி லேவிருது
பாவாடை போடுவதுன் பாராட்டே! - ஆவலுறு
மின்னா ரலங்கரிக்கும் வித்தார மத்தனையும்
உன்னாலன் றோவொருவர்க் கொப்பனையோ? - பன்னாளில்
மன்றல்கமழ் பூங்கோதை மாணிக்கத் தாள்கொடியில்
என்றகதை கேட்டு மிருப்போமே - நன்றுநன்று 40
கெட்டிகெட்டி யுன்மகிமை கேட்பதென்ன வேந்தருக்குத்
திட்டி விலக்குவதுன் சின்னமன்றோ?- தொட்டிலாய்
மைந்தர்தமைத் தாங்கி வளர்ப்பாய் பெரியவரைச்
சந்ததமு மெத்தையென்றே தாங்குவாய் - இந்தவகை
மிக்க சிலாக்கியமாய் மேன்மெழுகு சீலையிட்ட
கைக்குடையாய் வெள்ளைக் கவிகையாய் - மக்களையே
காற்றும் மழையுங் கதிரோனுந் தீண்டாமல்
போற்றி வளர்க்கவந்த புண்ணியனே !- சாற்றுங்
குடைவீரர் தங்கட்குக் கூடார மாகிப்
படைவீடுங் காத்தப் படையே – இடையே 45
தனிப்பவரை வாட்டுதற்குத் தாவி வருமாசிப்
பனிப்பகையைத் தீர்க்கு முயிர்ப்பாங்கா ! - தொனித்ததிரும்
வேலைப் புவிபுரந்த வேந்த ரெழுதிவிடும்
ஓலைக்குங் காவல்புரி யுள்ளானே! ஆலையத்தில்
வைக்கும் விளக்கு மரபாலே யுன்னாலே
உய்க்குமனை தோறும்விளக் குண்டாமே - திக்கரசர்
வந்து கொலுமுகப்பில் மாலையிருள் நீக்குசுடர்
தந்து துணையிருக்குந் தந்திரியே ! - சிந்தைமயல்
எய்துமவர் மடல்மா வேறவுனைக் கிளியாய்
கைதனில் வைத்தாசை கடப்பாரே - மெய்தழுவி 50
வட்டநிலம் புரக்கு மன்னவர்க்கெல் லாம்புனைந்த
பட்டமென்ப துங்கள்கொடிப் பட்டமே! - கட்டிக்
கனக்குந் திரவியமுங் காசும் வந்துசேர்ந்தால்
தனக்கு ளடக்குஞ் சமர்த்தா ! - மனத்தாசை
விட்டு மனையை வெறுத்துத் துறவிகளுங்
கட்டுவது நீகொடுத்தக் காவியே! - கெட்டி
உறவுபரி யில்லற முன்னாலே மற்ற
துறவறமும் நீயே துகிலே ! - குறியாஞ்
செடிவன்ன மாளெழுத்துத் திருவை கத்தூரிக்
கொடிமுறிச்சுக் குத்திப்பட் டுக்கூடு – நெடிய 55
தலைப்பணியுங் கெங்கா சலக்குப்பி யும்வேப்
பிலைக்கருக்கு மல்லாம லின்னஞ் - சொலப்போனாற்
சீனி முடிச்சன்னக் கருக்குச் சிவப்பென்பர்
ஆன வகைக ளனேகமுண்டு- நானுகந்த
கண்டையிட்ட பொற்சரிகை கம்பியிழைச் சல்லாவே !
மண்டலத்தி லுன்போக்கு மட்டுண்டோ? - எண்டிசைக்குள்
கண்டிரங்கி வர்க்கமெவர் கண்டுரைப்பா ருன்பெருமை
கொண்டாட வென்னாலே கூடுமோ?- கொண்டாடும்
வாசிங்கு வன்விக்கிர மார்க்கனுக்கிர வீமனிந்தக்
காசினியெ லாம்புரந்தக் கார்மேகம் – பேசுதமிழ்க் 60
கென்னருமை வெள்ளையரா சேந்திரனுலா வந்ததுவும்
மன்னவனை நான்புகழ்ந்து வாழ்த்தியதும் - என்னருகே
வல்லிவந்து நின்றதுவு மாலெனக்குத் தந்ததுவுஞ்
சொல்லிவரக் கேட்பாய் துகிலரசே ! - மெல்லவே
(தசாங்கங்கள்)
(மலை)
வள்ளிபக்கத் தேபடரும் வண்மையாற் சூரலைத்திட்
டுள்ளகொடி சேர வுயர்த்தலால் - தள்ளாமல்
கும்பமுனி யன்புவந்து கூடலாற் றும்பியெனும்
நம்பனுழை மந்திரத்தை நாடலால் - உம்பர்கண்டு
பற்றிமைமேற் கொளலாற் பாரவெறி யாட்டி
மற்றமற்றக் கொம்பர் வணங்குதலாற் - பொற்குடுமி 65
தாங்கவரு முச்சித் தலையாறு பெற்றதனால்
வேங்கையுருத் தாங்கிவந்த மேன்மையால் - ஆங்கே
இளம்பருவத் தந்த நிலத்தெய்து தெய்வம்போல்
வளம்பெறு மாணிக்க மலையான் --- உளம்பெருகத்
(நதி )
தேறுகடந் தோய்வதனாற் செவ்வோடை தாங்குதலால்
தாறுபடக் கால்நடக்குந் தன்மையால் - மீறியே
அப்பாகரை மேறடங் குச்சங்காட் டச்செல்லால்
துப்பாகரை யுழக்குந் தோற்றத்தால் - மெய்ப்பரந்
திடக்குங் கம்பமத சிந்துரத்தைப் போல
நடக்குங் கரும்பா நதியான் – எடுத்த 70
(நாடு)
வரம்பைகள் காலசைத்திட் டாடுதலால் மாறா
வரம்படைத்தக் கோட்டு வளத்தால் - திரம்பெறவே
மெச்சுரவி சுருகி மேவுதருச் சோலையால்
அச்சமிகல் வானவரை யாக்குதலால் - நிச்சயமாய்க்
காதலைமேற் கொண்டதடங் கண்ணிறைந்த தால்வேள்வி
நாதனைநேர் கல்லகநன் நாட்டினான் – ஓதரிய
(ஊர்)
கல்வி வருவித்தக் கரமைந்துங் காட்டுதலால்
செல்வமிகு கோட்டையணி சேர்கையால் -- நல்விதமாய்
ஆரு மறுகுமணி சிகரமும் பெறலால்
சீருதவு மாவணத்தின் செவ்வியால் – பாருலகோர் 75
விக்கினத்தைத் தீர்ப்பதினால் மிக்க கணபதியை
ஒக்குமெனுஞ் செண்பகநல் லூரினான் – தக்கதென
(மாலை)
வண்டு தரித்து மணம்பொருந்தி வாயிதழ்த்தேன்
கொண்டு துவண்டு குலாவியே - கண்டவுடன்
ஆதரவி னால்விரும்பி யன்புசெய்துத் தன்புயந்தோய்
மாதரைப்போல் வெண்டளவ மாலையான்- வீதிவருங்
(குதிரை)
கால்வட்டத் தாலே கனவட்ட மென்பதிலும்
மேல்வட்ட மாக விசைத்தெடுப்பி-மேலிட்ட
குப்பாய மிட்டுவரைக் கொப்பாய பூமிகுலுங்
கப்பாய வேலைக் கரைகடந்து-வெப்பூது 80
பூச்சோ டணையாமல் முன்சோ டணைமிதிக்கும்
வீச்சோ டனைவரையும் வீறடக்கி- ஆச்சரிய
வெப்பரிக்குத் தேர்பரிக்கும் வெம்பரியோ டொன்றியுல
கைப்பரிக்கும் வென்றிக் கடும்பரியான் – ஒப்பரிய
(யானை)
மத்தக நெற்றியில் வைத்து நிமிர்த்தகை
சத்த மிழைத்தலைத் தட்டவும் - இத்தல
வட்டகை யிட்டடி வைத்ததி லுட்குளி
பட்டடிப் பட்டகைப் பட்டிட- வொட்டலர்
கொற்ற முடித்தலைக் குற்றி யுடைத்துடல்
பற்றி யிழுத்திடு பட்டிட-வுற்றிடு
சேவகர் மேலெதிர் சீறவு மேயவர்
ஆவென வாய்விட வாயிர- மேவலர்
ஓடவு மேகின மோடம ரேபுரி
ஆடக மால்வரை யாமென - நீடிய
கந்தடவு கையாற் கடம்பொழிந்து காலாலே
கந்தடநின் றோங்குங் கடாக்களிற்றான்—அந்தரத்திற்
(கொடி)
பாயுந்தல காட்டுப் போர்க்கடல்மேல் கொண்டுதத்திப்
பாயும் அனுமப் பதாகையான் – நேயமெனச் 90
(முரசு )
சொன்னதிரு மங்கைவிந்தை சொன்மகள்கூத் தாடமுன்றின்
முன்னதிரு மூன்று முரசினான் – தென்மதுரைச்
(ஆணை)
சுந்தரனைப் போற்றுபரஞ் சோதிமுனி பாதமலர்
சிந்தனைவைத் தாணை செலுத்துவோன்-வந்தனைசெய்
நன்னயஞ்சேர் தென்கரிஞ்சை நாயகனை யோகமிகுஞ்
சின்னனைஞ்சா னென்றதுரைச் செம்புலியை- இன்னந்
துணையா மிருபெரிய சுவாமியு மென்றெண்ணி
இணையாக நெஞ்சி லிருத்தித் - தணியாத
வாக்கு மனமுமொன்றாய் வஞ்சகமில் லாமலின்பந்
தேக்கு மனுகூல சிந்தையான்- தாக்குடனே
(போர்க்களச் சிறப்பு)
சீறிய மேவலர் சேனையு மானையும்
ஏறிய பாய்பரி யாவையுள்- மேகம் 95
ஆனது கோடிகை யாடின பேர்முடி
போனது கோடிகை போய்விழும் - யானைகள்
கோவென வேசர கோபிட கீரென
வாவென வாய்விடு வார்சிலர் - சேவகர்
மேலொடு காலற வீளையி லேகுடல்
மாலைக ளாய்நரி வாய்தனில் - நாலவும்
ஓடிய சோரியை யோரி யெலாமுண
வாடிய பாறுக ளாலவும் - நாடிய
பேய்கன பூசைசெய் பேறென வோடியும்
வாய்கொள மூழையை வாரவு- மாய்கழு 100
காடவு மிடாகினி யார்கொள வேபலி
போடவு மீறிய போர்செய்து – நீடிய
(கொலுவீற்றிருக்கும் சிறப்பு)
போரான மிட்டவொன்னார் பொன்முடி யெலாங்குவித்து
வீறான கொலுவில் வீற்றிருந்தோன்-பாருலகில்
(வாய்மையும் கருணையும்)
செங்கதிரும் வெண்மதியும் தெற்குவடக் காய்வரினும்
அங்கதிரும் வேலைதிட ராய்விடினும்-இங்கிதமாம்
வார்த்தைப் பழுதுரையான் வைத்தவா ரந்தவிரான்
கூர்த்தக் கருணைகுடி கொண்டபிரான்—நீர்த்திரைசூழ்
(கொடைச் சிறப்பு)
பூவு மலர்விரும்பு பொன்னுங்கா ளப்புயமுக்
கோவு மிடங்கொடுத்தக் கோவேந்தன்-பாவலவர் 105
பாடியபா மாலைகொண்டு பல்லக்குந் தண்டிகையுங்
கோடி நிதியுங் கொடுத்தபிரான்- நீடிய
(அரசாண்டச் சிறப்பு)
பூகண்ட லோகம் பொதுநீக்கித் தான்புரக்க
வாகண்ட வன்போ லவதரித்தோன்-தாகமிகும்
பாவலவன் பின்நடந்தோன் பார்த்தனுக்குத் தேரூர்ந்த
மாவலவன் போல்நடத்தும் வல்லமையான்--மாவலிபால்
அன்றுபடி யளந்தா னப்புலவர்க் கிப்புலவர்க்
கென்றும் படியளப்பே னென்னவந்தோன்-நன்றியான்
பார்க்குண்டு நின்றதன்மை பாராட்ட லாற்புலவர்
ஆர்க்குமிடங் கொடுக்கு மாதரவாற்-றீர்க்கத்தால் 110
ஆயிரங்கோட் டையும்பெற் றாதிக்கஞ் செய்வதனால்
தூயவரை யெல்லாந் துணைக்கொளலால்-நேய
சிவனடிக்கீ ழாய்வணங்குஞ் செவ்வியா லதன்மேல்
துவளும் பணிகலந்தச் சூழ்வால்-அவிரோதைக்
காருவரை யேந்துசிரைக் காசினியைத் தாங்கவொரு
மேருவரை போல வீற்றிருந்தோன்-பாரரசர்
தந்தா வளமுந் தலமும் விலக்கவென்றே
நந்தா வளங்கொடுத்துச் சந்திக்க-விந்த
(மாற்றரசர் கப்பம் செலுத்தியது)
வயிரம்வைப் பதேதெனவே மாற்றரசர் கப்பம்
வயிரம்வைத் துக்கண்டு வணங்கப்- பயிலுமன்னர் 115
காணிக்கை யாச்சீட்டுக் கட்டளைசெய் யென்றுரத்தினக்
காணிக்கை யாவுவைத்துக் கையெடுப்ப- நீணிலத்தில்
தாங்குதிரை யேறிவந்து சந்திக்க முதுசீனர்
தாங்குதிரை கொடுத்துத் தாள்பணிய- வாங்கே
குடமலையாள் மச்சை கொங்கணமுந் தம்பால்
குடமலை யாது கொடுப்ப- வடகலிங்கர்
கொட்டிய செம்பொன் குவிகுவிய முன்முகப்பிற்
கொட்டிய பேரி குமுகுமெனக் - கட்டியங்கள்
இந்தவகை இந்தவகை யென்றுபர ராசர்திறை
தந்தவகை சொல்லுஞ் சமுகத்தோன் - வந்த 120
மருத முகையும் வனச சரணன்
விருது புனையும் விசையன் - நிருபர்
சமர திமிர தபர வுதையன்
அமுத வசனன் அபையன்- நமது
கலியு மகில காவு மகலின்
வலியு மடரும் வளவன் - நிலைமை
உரக சயன னுலகி லரசர்
பரவரிய வச்சிர பாணி !- தரைசூழ்
(சுற்றத்தினர் சிறப்பு)
திசைபுகழும் வீரப்பத் தீரனைத்தன் சிந்தைக்கு
இசையுஞ் சிறியதந்தை யென்போன் - புசபலம்போல் 125
அங்கசவே ளென்னுமிரு எப்பனுக்கு முத்திருளத்
துங்கனுக்குத் தம்பி துணையானோன் - எங்கெங்கு
மன்னுதிக்குக் கீர்த்தி வளர்த்தருளப் பண்டாரம்
பின்னுதிக்க முன்னுதித்துப் பேரானோன்-- கன்னனைப்போல்
தந்ததுரை பெரிய சாமிக்கு நற்றுணையாஞ்
சுந்தரவேள் சின்னத் துரையென்றே- வந்தருளும்
வீரசக்கிர பாணிமுத்து வீரப்ப ராசேந்திர
தீரனுக்கு மாமன் செயவீரன்- பாருலகம்
எல்லாம் புரக்கவரு மெங்கள்காத் தப்பனையும்
வல்லாள னாஞ்சிவனா மன்னனையும்-நல்ல 130
புதலவரெனக் கண்டுமனம் பூரித் திருக்கும்
மதன கருவி தனுசீரன்-புதியநறுந்
தேமருவு முல்லையணி சின்னக்காத் தப்பனையுங்
காமன் புழுகு கருப்பனையும்-ஆமெனவே
சொல்லிய தம்பித் துணையென் றுளமகிழ்வோம்
அல்லிமலர்ப் பூங்கோதைக் கன்பானோன்- வல்லமைசேர்
சூரியன் பாலன் முத்தப்பன் சொற்புதல்வன்
சூரியவேள் பெரிய சுவாமிமுன்னோன்-- வாரமுள்ள
முத்துவீ ரப்ப முகுந்தனுயிர்க் குயிராய்
மெய்த்துணை யென்று விரும்புவோன்- மொய்த்த 135
அடையார்க் குடையா னடையாத வாசல்
உடையான் வரிசை யுடையான்-உடையான்
வரத்தி லுதித்த மகப்பேறு செம்பொன்
கரத்தா லுதவு கொடைக்கன்னன்-உரத்தாற்
பருக்கின்ற செங்கணிலப் பாவையைத்தோண் மேல்வைத்து
இருக்கின்ற வெள்ளையரா சேந்திரன் - நெருக்கி
அசைக்கின்ற கானகத்தி லாவரங்கக் கானம்
இசைக்கின்ற வெள்ளையரா சேந்திரன்-அசைக்குங்
கணையென்ற கன்னியர்க்குக் காதல்தரக் காமன்
இணையென்ற வெள்ளையரா சேந்திரன்-அணியால் 140
துலங்கிய சாதிரத்தினச் சோதிமணிப் பூணால்
இலங்கிய வெள்ளையரா சேந்திரன்-பலம்பொருந்தும்
வீமனதி சூரன் வெள்ளையரா சேந்திரனிறை
தாமரை மாதுதனந் தழுவி-காமர்
வளமலியும் பூலோக மண்டலமெல் லாங்கொண்டு –
உளமகிழு நாளி லொருநாள்-கிளரும்
(பவனி வருதலை அறிவித்தல்)
மணிமறுகி லெங்கோன் வரும்பவனி யென்றே
குணில்பொரு பேரி குமுறத்- தணியாத
(புனல் விளையாட்டு)
மாதரு மாடவரும் வாசமலர் வாவியில்போய்ச்
சீதளநீ ராடுஞ் செவ்விக்கண்- ஒதிமங்கள் 145
பங்கயப் போதைப் பருகுவது பார்த்தொருத்தி
கொங்கைவடு வென்றொருவள் கூறினாள் - அங்கொருத்தி
கண்ணாலே மற்றோர் கனதனமும் பார்ப்பாரென்
றெண்ணாம லூடியப்பா லெய்தினாள் - பெண்ணாரைப்
பார்த்தா ளவரையவள் பாதமென்று கண்களின்மேற்
சேர்த்தாள் நகைத்தூடல் தீர்க்கின்றாள்- ஆர்த்துடுத்தத்
தன்கலையை மென்புனலில் தப்பிவிட்டு நீர்த்திரையை
மென்கலையென் றேயிழுத்தாள் வேறொருத்தி- நன்குநன்கு
தட்டுரி நிகம்பத்தேர் தண்ணீரி லோடுதென்று
கட்டுரைசெய் தேயொருத்தி கைபுடைத்தாள்-விட்டுவிட்டுக் 150
கையால் மறைக்கின்றாள் கைக்குள்ளே பாம்பென்றாள்
மெய்யாமென் றோடிவெளி யில்வந்தாள் - மையார்
குழல்விரித் துடலைக் கூட மறைத்தாள்
அழகு கருமுகில்போ லானாள்- விழிபரப்பி
மற்ற மடவார் மயில்போல் சுற்றினார்
உற்றவகை யின்ன மொருக்காலே – பொற்றொடியார்
(மடவார் அழகு செய்து கொள்ளுதல்)
பூந்துகிலும் பட்டிகையும் பொன்னரைஞா ணுந்தரிப்பார்
ஏந்துமுலைத் தொய்யி லெழுதுவார் - சாந்துங்
கலவையுஞ் சேர்ப்பார் கனகவளை பூண்பார்
பலபணியுஞ் சேர்ந்தழகு பார்ப்பார் – இலகிய 155
(மடவார் பவனி வருதலைக் காணச் செல்லுதல்)
சோதிமணி விளக்காய்த் தோன்றிமணி மாட
வீதிதனிற் புகுந்தார் மின்னனையார்- ஓதும்
(பவனி வருதலின் சிறப்பு)
அவனிபுகழ் வெள்ளையந ராதிபதி யாங்கே
பவனியுலா வென்று பணித்து - நவமான
தங்கக் குடத்திற் றனிமஞ் சனநீரில்
திங்கட் பனிநீர் தெளித்தாற்றிக்-குங்குமப்பூக்
கூடக் கலந்து குளித்துத் துகில்வனைந்து
மாடத் தனிமுகப்பில் வந்திருந்து – நாடித்
தரித்ததிரி புண்டரமுஞ் சாத்தித் திலகந்
திருத்தியகத் தூரியுமேற் றீட்டிப்-பெருத்தக் 160
குருமணிவச் சிரமுங் கோமே தகமும்
அருபதும ராக மணியும் - அருவி
இசையு மிருகாதி லிட்டக் கடுக்கன்
அசையும் வெயில்நிலவுண் டாக்கத்--திசைவிளக்கும்
முத்துச் சரமும் முழுவயிரக் கண்டிகையுங்
கொத்துச் சரப்பணியுங் கோர்த்தணிந்து சித்திரமாய்
செய்யுமணி வளையுஞ் செய்சரமு மேபுனையுங்
கையும் விரலிலிட்டக் கற்கட்டுந் - துய்யக்
கணையாழி வச்சிரத்தின் காஞ்சியுஞ் செவ்வேளுக்
கிணையா யிலங்கு மெழிலுந்- தணியாது 165
ஒருதகட்டுப் பாகுகட்டு முன்னிதமு மேலே
சொருகிய முத்துத் துராயுஞ் - சரிகையிட்ட
பொன்புடவைக் கட்டுப் பொதிந்தவுடை வாளுந்
தன்புயமேல் வல்லவட்டச் சாலுவையும் அன்பாய்
அலங்கரித்தக் கோலமுஞ்சங் காழிதரித் தான்போல்
இலங்குமணி மேடையின்மே லெய்தக் - கலங்காத
தீரக் கரடமதஞ் சிந்துங் கருங்கோப
வீரப் பிறைக்கோட்டு வேழமொன்றைப் - பாரப்
பொருப்பைக் கொணர்ந்துவரல் போல்யானைப் பாகர்
விருப்பத் துடன்கொணர்ந்து விட்டார் - செருக்குமத 170
யானைப் பிடர்மேல் அரசர் வீற்றிருந்தார்
சேனைத் தலைவரெல்லாஞ் சேவித்தார் -- மீனக்
கொடியும் அனுமக் கொடியு மிடரகலும்
நெடியக் கொடியும் நெருங்க - மடமடெனப்
பேரி முழங்கப் பெரியவீ ராணமும்
வாரிதவில் முழவு மார்த்தொலிப்பப் - பூரிகையும்
சங்கமுங் கொம்புமணித் தாரையுமுள் ளேதொனிக்க
வங்கவங்க ரெல்லா மடிவருட - எங்கெங்கும்
கைக்குழலுங் கேடயமுங் கத்தியும் வார்சிலையும்
வைக்கு மருவிகட்டி வல்லையமும் - மொக்கும் 175
வயவர் பிடித்து மருங்கு நெருங்கப்
புயபலம்போற் சுற்றம் பொதியச் - செயவோர்
புதுவையிரா சப்பனருள் புத்திரன் பைந்தாம
மதுமலர்ப் பூங்குவளை மார்பன்- நிதிபதியாங்
கற்பகப்பூ பாலனென்றக் காரியப்பிர தானியொரு
நற்பரி யேறி நடாத்திவரப்-பொற்புடனே
வென்றிவயப் புரவிமேற் சேவகப் பெருமான்
என்றகர ணீகனும்வந் தேறுகவே - நன்றுடனே
ஒண்டொடியுந் தன்வரிசை யூழியமுஞ் சூழ்ந்துவரக்
கொண்டபுகழ் கட்டியங்கள் கூறவே- மண்டலீகர் 180
பல்லக்குந் தண்டிகையும் பாய்பரியும் பின்னுமுன்னுஞ்
செல்லக் கடல்முழக்கஞ் செய்வதுபோல் - எல்லலென்று
இரையுங் குழாம்நடுவி லெய்தினா னெங்கள்
துரைவெள்ளை யதரன் சோமன் - விரைவினொடும்
(பவனி வருதலின் பேரழகைக்கண்டு மங்கையர் மயங்கிப் புலம்புதல்)
அன்னான் வரும்பவனிக் காசையுற்றுக் காணவரும்
மின்னார் வணங்கினார் வெய்துயிர்த்தார் - பொன்னாளும்
மாலே யெமக்குமுல்லை மாலையரு ளாமலெங்கள்
மேலே மதனைவிடு வாயோ?- மேலான
பந்தக்கா லேறியிங்கே வந்தாய் மனைக்கேக
இந்தக்கா லேறுமோ வெங்களுக்குக்-கந்திடறு 185
காரானை வீதி கடந்ததென்றாற் கள்ளமதப்
போரானை யாங்கள்வெலப் போறோமோ?- நேராய்
விடவன் றிலைமதனை வெல்ல விடநீதிக்
கடவன் றலைமறைவு கண்டாயோ?- தொடர்வோமே
கோகிலங் கோடிவந்து கூவியெம்மை வாட்டவிட்டுப்
போகிலங் கோடிவந்து புக்கோமோ?- மாகத்தில்
அச்சேலை மார னடையாளங் காட்டுமுன்னே
இச்சேலை யாங்களை வருக்கையோ?- பட்சமுற
வெங்கா மனையுமவன் வில்லையுங்கண் டால்மனையிற்
றங்கா மனையுந் தரமாமோ - இங்கே 190
குடக்குதிக்குந் திங்கட் குடைவிரித்தா லெம்மை
அடக்குதிக்குப் பெண்படைக்கு மாற்றோந்-திடக்காமன்
வாம்பரியுந் தேருமாய் வந்தா லளியின்மேற்
காம்பரியும் பூவுமென்னைக் காய்ந்திடுமே-- பூம்பகமே
வீறால் மடல்புரிந்தால் வேண்டுகிழி கைப்பிடித்து
மாறா மடலேற மாட்டோமோ ?-தேறுதலை
சொல்வாய்நின் மாலைதரச் சொல்வாய் மதவேளை
வெல்வா யெனமொழிந்து வெவ்வேறே – பல்விதமாய்
(சங்கீதவல்லியின் வீணைச் சிறப்பு)
மாதர் புலம்பயிலே மற்றொருத்தி யங்கவர்போல்
காத லுருத்தக் கருத்தினாள்--ஓதியே 195
வாசிக்கும் வீணைகொண்டு மாதரவர் மாரனுக்குத்
தூசிப் படைபோலத் தோன்றினாள் - நேசிக்குங்
கும்பமுலை யாளைக் குறித்துநின்று பார்க்கையிலே
அம்பனைய கண்ணா ளமர்புரிந்தாள் - செம்பதுமத்
தாளுக்குள் ளேயணியுந் தண்டையொலி கேட்குமுன்னே
வேளுக்குச் சீட்டனுப்பி விட்டாளே-நாளுமே
மெல்லிடையின் மேலிறுக்கி விட்டமுந்தி வீச்சாலே
வல்லிடையன் சாய்த்த மரமானேன் - நல்லச்
செழுநாண் மலர்க்கோதை சேர்க்குமரை நாணால்
முழுநா ணிழக்க முறையோ? - அழகு பெறும் 200
அவ்வனிதைக் கைவிர லாழிவட்டங் கண்டவுடன்
இவ்வணமே சுற்றிவட்ட மிட்டேனே - கைவீச்சில்
முன்கைக்கு ளிட்டவிழை மோதித் தொனிக்கையிலே
என்கைக்கு ளில்லையே யென்னாவி - பொன்குலவு
கஞ்சமுலை போலுமுலைக் கச்சுநெகி ழையிலென்
நெஞ்சமுங் கூட நெகிழுதே- கொஞ்சமோ
கண்டசர முங்கழுத்தை யும்பார்த்தார் மதன்கைக்
கொண்டசர மெய்யிற் குளியாதோ?- ஒண்டொடிதான்
(மடந்தையர்மேல் மதனன் போர் தொடுத்தல்)
சாடையிலே பேசித் தருகையிலே பொற்குழைகள்
ஆடையிலே வேளுடன்மல் லாடினேன்- வாடினேன் 205
மைக்கணையு மென்புருவ வார்சிலையும் பார்த்துமதன்
கைக்கணையு நானுமாய் கைகலந்தோம் - மெய்க்கவே
ஈரமதி யொப்பா மிலங்கமுகம் பார்க்கையிலே
பாரமதி யும்பரி கொடுத்தேன் - காரதாக
மொய்த்த கருப்பா லெழுதுஞ் சிலைமாரன்
வைத்தக் கருப்பாலே மயங்கினேன் - சித்தந்
திரும்புமோ? எப்படியோ? தெய்வமே! என்றேன்
கரும்புமத னும்வரக் கண்டேனே - விரும்பியவென்
நேர்மை யறிந்துநெடு நீலியென்னைப் பார்க்கையிலே
கூர்மை விழியாலே குறிப்பறிந்தேன் - ஓர்மனதே 210
ஆனாலு மென்னசெய்தி யாருற்றுக் கூட்டிவைப்பார்
மானாள் மனையறிய மாட்டோமே - போனால்
வருவதெல்லாங் காணவென்றே மாதரசி யினைப்போய்த்
தெருவழியே சுற்றித் திரிந்தேன் – ஒருமடந்தை
(தலைவன் வீணை வாசிப்பவள் யார் என வினவுதல்)
என்பா லடுத்துநின்றா ளிந்தமின்னா ளாரென்றேன்
அன்பா ளவளுரைத்தா ளத்தனையுங் - கொன்பாயும்
(வீணை வாசிப்பவள் இன்னாள் என விடைகூறல்)
வேலா லமர்கடந்த வெள்ளையரா சேந்திரனை
மேலான சங்கிராம விக்கிரமனை - மாலாக
நேசிக்கும் பொன்மா னிறைந்தகொலு முன்வீணை
வாசிக்குஞ் சங்கீத வல்லியிவள் - பூசிக்குங் 215
காமகுரு பீடமகா காமனுக்கு திட்சேப்
மாமதன நூல்பயிலும் வாத்தியார் - காமுகரைத்
திண்டாட்டங் கொள்ளத் தெய்வமிவ ளென்றுமெத்தக்
கொண்டாட்ட மாயெனக்குக் கூறினாள் – உண்டான
(தன் காரியம் இவளால் ஆகுமோ என வினவுதல்)
காரியமென் றெண்ணினேன் கன்னியே ! நீ யுரைத்த
நாரிபொதுவோ ? வொருவர் நாட்டமோ?- சீரறிந்து
சொல்லுவா யென்றுரைத்தேன் றோகைபொது வானாலும்
மெல்லவசப் படுத்த வேணுமென்றாள் - நல்லதென்று
மாற்றுமொழி சொல்லுமுன்னே மால்யானை மன்னவனும்
தோற்றுகுழா மும்வந்த தோகையரும் - போற்றும் 220
வரிசைப்ப வனிவழங்கு வழங்குமுலாப் போந்து
புரிசைமணி வாசல் புகுந்தார் - உருவிலிதன்
கையைங் கணைமலருங் கன்னற் சிலைமேல்வைத்
தெய்யும் படிவந் தெதிர்ப்பட்டான் - அய்யோ
மெய்க்கெட்டு மாங்கனியை வேணுமென விரும்பிக்
கைக்கெட்டி வாய்க்கெட்டாக் காலமோ! - வைக்கும்
பனையேறிப் பாளைதொடாப் பாவியேன் செய்த
வினையே வலியதென்ன வேணும் - மனதுளைந்து
சிங்கார மானமலைத் தேனுக்குத் தான்முடவன்
அங்காத் திருந்தகதை யாய்ப்போமோ !- இங்கெனைத்தான் 225
இவ்வளவு செய்ததெய்வ மின்னுமென்ன செய்யுமோ !
அவ்வளவு வாசலறி யோமோ! -- கவ்வையுனக்
கேதென்று கேட்பவரு மில்லையே தொல்லைமயல்
தீதென்று நீங்கத் திடமிலையே -- ஆனதனால்
ஆனதெல்லா மாகுதென்றே யங்கசனு மாசையுமென்
மானமும் நானுமாய் மல்லாடித்—தான்றொடர்ந்து
(பவனி, காளி கோயிலின்கண் வருதல்)
மாமறுகி னூடே வரும்போது காளியெனும்
யாமளையின் கோவிலிருந் திங்கே - காமவிடாய்க்
கொண்ட தவிப்பினாற் கோவில் மணிமுகப்பு
மண்டபத்துக் குள்ளே மடக்கினேன் – சண்டமதன் 230
(அவ்விடத்தும், மதனன் போர் தொடுத்தல்)
தென்றற்றே ரேறியொரு செங்கரும்பு நாண்பூட்டி
மன்றற் கணைகை வசமாக்கி - அன்றிலையும்
எக்காள மூதவிடுத் தெங்குங்குயி லூதுசின்னம்
அக்காவி லேறி யடர்ந்தேறி – மிக்காம்
மதியைக் குடைவிரித்து வந்துதலைப் பட்டான்
கதியற்ற பாவி கிடந்தேன் – விதியினால்
(தலைவன் இன்பக்கனாக் காணுதல்)
தன்னையறி யாமற் சற்றே மயக்கமாய்
என்னை யயர்த்துவிட்ட தென்னசொல்வேன் - சன்னிதிப்பே
றம்மன் கொடுத்ததுபோ லந்தகன்கண் பெற்றதுபோல்
இம்மனது மம்மனது மேகமாய்ச் – சம்மதித்துப் 235
பெண்ணரசி வந்தாள் பெண்ணரசிக் கொப்புரைக்கில்
விண்ணரசி யல்லாமல் வேறுண்டோ ?- பெண்ணெழிலால்
முந்திரதி யானதொரு மோகவல்லி யாளயர்ந்த
மந்திரதி யானமதில் வந்து நின்றாள் - செந்திருவு
மாலையுந் தாங்கி வளர்பிறையும் பெற்றதனால்
வேலையென்று சொல்லல் விதியுண்டோ ?-வேலையென்றால்
மீனாறு முப்பு விளையுமுவர் நாற்றமுண்டாம்
ஆனாலு வமையிட லாகாதே - தேனோடு
வண்டு படியமலர்ச் சோலையாம் பலர்கைக்
கொண்டு பிடித்திழுக்கக் கூடுமோ? - விண்டுரைக்கில் 240
செம்பதுமக் கையாலே வாரியெடுக் குந்திறத்தால்
கும்பனைநே ராஞ்சொருகு கொண்டையாள் - அம்பிணையாய் !
மிஞ்சவரி யோடவெம்மை கொளலால் கடல்வாய்
நஞ்ச மெனவே. நவிலலால் -- நஞ்சமெனிச்
சங்கரனார் கண்டந் தனக்கு ளடங்குமென்றால்
அங்கதனை யொப்புரைக்க லாகாதே - பொங்கமாய்
வைக்குங் கடைகூர்மை வாய்த்ததனால் வேலென்பேன்
கைக்கு ளடங்குமென்றுக் கட்டுரையேன் - ஒக்குமெனில்
மெய்த்தவரா கத்துருவ மேவிப்பார் வைத்திடங்கொண்
டொத்தலா லாங்கு மொத்திசைய- வைத்திடலால் 245
எண்ணரிய கிட்டினவடி வெய்துதலாற் பூங்கமலக்
கண்ணனைநே ரானகருங் கண்ணினாள் - வண்ணமிகும்
ஒப்புக் குழைசே ரொழிமதியென் றேயிலங்கக்
கொப்புக் குழைசேர் குளிர்முகத்தாள் - செப்பும்
இதங்கொண்டு கச்சை யிருக்கி மிருக
மதங்கொண்ட தாய்களிற்றாய் வைப்பேன் - மதங்கொண்டாற்
பாகரிடத் துப்பய முறுத்திக் குற்றுதலால்
தாகமுட னுவமை சாற்றோமே – வாகாய்
எழுமறைக்கு மேலோங்கு மென்று சூதென்பேன்
விழுவதனா லேயுவமை விள்ளேன் - பழுதில்லாத் 250
தேமாலைக்கொண் டேதாக்குஞ் செவியாற் பொன்னிருந்து
காமாதலா டற்றடஞ்சேர் காட்சியாள் - யாமறியச்
செஞ்சந் தனங்குழைத்துச் சேரளைந்த தால்மலருங்
கஞ்சந் தனைப்போற் கனதனத்தாள் - வஞ்சிமுலைக்
குன்று சுமந்தவஞ்சிக் கொம்போ! தடித்துருவோ!
வென்று துவளு மிடையினாள் - மன்றல்கமழ்
வாழை யனைத்து வனைதுகிலுஞ் சுற்றுமுன்னே
தாழுமணி வடமுஞ் சாற்றுதலால் - ஆழிவட்டச்
சேமத்தேர் வேணுமென்று தென்றற்றே ராளிவைத்த
காமத்தேர் போலுங் கடிதடத்தாள் – தாமரைமேல் 255
ஓதிமம்போல் மெல்ல வுலாவினா ளென்னையறி
யாதிமம்போல் வந்துகுளி ராட்டிடுமே - மாதரசே!
யாமோ கனவிருள்வா யாசை போவதென்று
மாமோ கனையறிய வந்தீரோ? - காமனெய்யும்
எண்ணமுலை மேல்மெழுகாய் யான்மெலிவே னென்றிரங்கி
வண்ணமுலை மேலணைக்க வந்தீரோ? - பெண்ணமுதே !
கைச்சரசம் வாய்ச்சரசங் காட்டியித ழூறலுக்குள்
வைச்சரசங் கொடுக்க வந்தீரோ?- நிச்சயமாய்ச்
சேரனுக்கு மாலைதந்து தேடியெனை யாளாக்கி
மாரனுக்குப் போர்விலக்க வந்தீரோ?- ஈரமில்லா 260
நெஞ்சமோ! சற்று நெகிழாதோ! என்னாசை
கொஞ்சமோ! வாய்திறந்தாற் குற்றமுண்டோ ! – தஞ்சமென்றேன்!
ஆசையினாற் கையெடுதனங் கைதொட்டிழுக் கில்வைக்கு
மோசையினா லல்லவோ வுயிர்பிழைத்தேன் !-- பேசியினி
என்னகையைக் கொண்டிழுத்தே னென்மடியில் வீழ்ந்தகள்ளி
புன்னகையைக் கண்டுமனம் பூரித்தேன் ! - வன்னமலர்
மெத்தையிற் றனித்திருத்தி வெற்றிலைச் சுருட்கொடுத்து
முத்தமிட் டணைத்தணைத்து முற்கிடத்தி - உத்தரத்தில்
வக்கணைத் தொழிற்படுத்தி வைத்தபற் படச்சிறுக்கி
தக்கெனச் சினத்தடித்த தித்திரிப்பும் – எக்குளிப்பு 265
மென்சொ லொன்று கிலங்கு முரிந்தினள்
தன்சர சங்கொடு தந்துகில் - பின்செல
வந்து குறங்கினில் மண்டல மென்றவள்
குந்தி யிருந்தொயில் கொண்டசை - யுந்தொறும்
வண்டு பறந்தது வண்டறல் கமழ்ந்தது
கொண்டை நெகிழ்ந்து குலைந்தது -- மண்டிய
தண்டை சிலம்பு சதங்கை இரைந்தது
கெண்டை புரண்டது கெஞ்சிய - தொண்டையில்
ஓசைதர வீருடலு மோருடல மாய்மருவி
ஆசைநிறை வேறமனத் தாவலுடன் - நேசம்வாய் 270
இன்பரச மருந்தி யேகபோகக் கலவி
அன்புதர நான்கண் ணயர்ந்துவிட்டேன் - என்புகல்வேன்
(தலைவன் கண்விழித்து வருந்துதல்)
காதல் கொண்டபாவிக் கனவைநினை வாகயெண்ணிப்
பாதகிமார் பைத்தடவிப் பார்த்தேனே - ஏதுசொல்வேன்
வட்ட முலையுமணி வடமு மென்கரத்தில்
தட்டவுங்கா ணேன்மனந் தட்டழிந்தேன் - பொட்டெனவுங்
கண்ணைவிழித் தேனவளைக் காணேன் கனவில்வந்தப்
பெண்ணை நினைத்துமனம் பேதலித்தேன் - பெண்ணரசி
மஞ்சள் துவண்ட மனமெங்கே? என்மார்பில்
செஞ்சரணம் பட்ட சிவப்பெங்கே?- வஞ்சி 275
பருகு மிதழிற் பதித்த குறியெங்கே?
இருதுடையில் வைத்தக்க மெங்கே ?- பெரிய
தனக்குவட்டினாளெழுது சந்தனப்பூச் செங்கே ?
யெனக்கு முடித்தமல ரெங்கே?- நினைக்கிலொன்றுங்
காணே னடிச்சுவடுங் காணே னறியாமல்
வீணே பதறி விழித்தேனே - நாணினேன்!
கள்ளி சுகத்தைக் கனவென்று நானறிந்தால்
வெள்ளி முளைத்தும் விழிப்பேனோ ? - உள்ளபடி
என்றுவிழித் தேனவளை யெவ்விடத்துங் காணாமல்
நின்றுவிழித் தேன்றிகைத்தே னெட்டுயிர்த்தேன் - அன்றி 280
(தலைவன், துகிலைத் தூதுவிடத் துணிதல்)
என்னாலே யாவதொன்று மில்லையென்று மெய்சோர்ந்தேன்
உன்னாலே யாமென் றுளந்தெளிந்தேன் - முன்னாக
வா! துகிலே! சந்துரைக்க மாட்டாயேல் வென்பொருத
வா!துகிலே! சந்துடைக்க மாட்டேனே - ஏது செய்வேன்
நேரிழையைக் கூட்டி நெருக்கிநெய்த வத்திரமே !
நேரிழையைக் கூட்டிவைக்க நீயாமே!- வாரிசமாம்
பூமானங் காத்தப் புணர்முலைமேற் சேர்ப்பாயே
பூமானங் காத்த புடைவை ! - மாமனைக்கண்
அம்பரமே ! யென்கவலை யாய்வீசி னாளயர்ந்தேன்
அம்பரமே ! யென்கவலை யாற்றாயோ ?- செம்பொனிறம் 285
வாய்த்துடுக்கச் சீராய்நீ தூதுசென்றால் மாதர்சொல்லும்
வாய்த்துடுக்குஞ் சீராய் வழங்குமே - தோய்த்தபைம்பொற்
கண்டையே ! சேருமிழைக் காரகமே ! யென்விரகங்
கண்டையே சேரும்வகைக் காட்டாயே! - வெண்டுகிலே!
ஊடும்பா வுங்கலக்கு மோர்கலையே! என்கணைமார்
பூடும்பா வுங்கலக்கு மோர்கலையே !- தேடியே
அம்பஞ்சி னாலிழைத்துண் டாக்குதுகி லே!சிலைவேள்
அம்பஞ்சி னாலிளைத்தேன் யய்யோ ! – நம்பு
மலைச்சுமட்டி லேறிவரும் வத்திரமே ! வேளால்
மலைச்சுமட்டி லாமயக்க மானேன்- நிலைப்பான 290
வாணிகலா பம்புரிய வந்தாயென் மீதுபஞ்ச
பாணிகலா பம்புரியப் பார்ப்பாயோ ?-- நீணிலத்தோர்
சொல்லிய கிட்டிணன் துரோபதைமா னங்காத்த
வல்லமையும் நீகொடுத்த வல்லமையே - நல்ல
மயிலுக் குப்போர் வைவண் கிழவன்
பயிலப் படுவதுமுன் பண்பே ! - மயல்கொடு
நீலிகள்பொன் போல் முலையை நீள்ரவிக்கை யால்மறைத்து
வாலிபரைக் கொட்டிக்கொ(ள்)ளும் வஞ்சகமுஞ் - சாலமாய்
முக்காட்டுக் குள்ளே முகங்காட்டி யாடவரைக்
கொக்காட்டல் கொள்ளவருங் கூத்தாட்டு- மிக்காய் 295
மதன கெருவிதமு மாதருக்குச் சீலை
உதவுமினுக் கல்லாம லுண்டோ ?- இதமறிந்து
(தலைவன், துகிலைத் தூது செல்ல வேண்டல்)
கூறாயென் மோகமெல்லாங் கூறாய்நீ தூதுசென்றால்
வேறாய் நினைப்பாரோ! மின்னனையார்- தேறினேன்
மாதுக்கு நீயே மனதுக்கு வந்தாலென்
தூதுக்கு நீயே துணையாமே ! - ஓதியகற்
பாசமே! தந்ததனாற் பாசமே யுண்டுனக்கு
வாசமே! நீயும்விசு வாசமே ! - நேசமுள்ள
உத்தமனே! பஞ்சுவெட்டி யுண்டாக்க வந்தாயே!
மெத்தவும்நான் பஞ்சுவெட்ட வேண்டாமோ! -- துத்தியமோ 300
அய்யாநீ முன்போ யடுத்தால் வரவழைத்துக்
கையா லெடுத்தணைத்துக் கட்டுவாள் - மெய்யாய்
உனைக்கட்டிக் கொண்டவுட னுன்பொருட்டால் வல்லி
எனைக்கட்டிக் கொள்ளமனத் தெண்ணித்- தினைப்பொழுதில்
கூட்டிவரச் சொல்லிக் கொடுங்கையினாற் சேர்த்தால்
மூட்டியின்ப மத்தனையு மூட்டுவாள் - நாட்டிற்
கனங்கொடுக்கும் பூந்துகிலே ! காமாதிக் கென்மேல்
மனங்கொடுக்கத் தூதுரைத்து வா.
வாழ்த்து.
மிக்க புகழுடையான் வெள்ளையரா சேந்திரனவன்
மக்கள்மரு மக்களுடன் வாழியவே!- திக்கறிய
சந்ததமுங் கீர்த்தித் தழைத்தசெல்வ முந்தழைக்கச்
செந்தமிழும் வாழி! தினம்.
வெள்ளைய இராசேந்திரன் துகில்விடு தூது முற்றும்.
------------------------
4. செங்குந்தர் துகில் விடு தூது.
காப்பு.
தேடுந் தமிழ்க்குதவும் செங்குந்தர் மீதுபுகழ்
சூடுந் துகில்விடு தூதுக்குக் - கூடுஞ்சத்
தைம்முகனும் நான்முகனு மாயர்பெண்கள் காமுகனுங்
கைம்முகனும் சண்முகனுங் காப்பு.
நூல்.
(முருகன் பிறப்பு)
திருமன்னு மால்பிரமர் தேவர் முனிவர்பலர்
சூர்மன்னன் வாதைத் துயர்க்கிரங்கிப் - பேர்மன்னு
வானிமைய மானை மணந்துகயி லைப்பெருமான்
ஆனனங்க ளாறா யணிநுதலின்- நீள்நயனம்
........... ஆறிற்கெம் ................. பலவர்க்கச்
சீறு மழற்பெருக்காய்த் தேவரஞ்சி - ஊறுறுங்கால்
அஞ்சலென்று ................ பொறியை வானதியில்
அஞ்சா வணத்துள் மாவுசெய்யச் - செஞ்சுடர்கள்
ஆறுமகவ....................ங்கா .................... க்
கூறுநறு முலைப்பா லுண்டிருப்ப - ஏறின்மிசை 5
அம்மையர னுடன்வந் தாறு குழந்தையையுஞ்
செம்மையுட னொன்றாகச் சேர்த்தெடுப்பச் செம்முகங்கள்
ஆறுடனே யாறுசெவ்வா யாறிருதோ ளாறிருகை
கூறுமழ காங்குழந் தைக்கு - மீறுந்
திருமுலைப்பா லூட்டித் திகழ்கயிலை மேவி
இருவர் மகிழ்வாகி யிருப்ப - நெருநலுமை
...................ந்தப் பொறிப்பயத்தால் பயந்தோடச்
சந்தப் பதச்சிலம்பு தாக்குதலால் – சிந்தும்
நவரத்தி னங்களினும் நங்கையுமை சாய்கை
நவசத் திகளாய் நணுகச் - சிவனுற்றுப் 10
பார்த்தளவிற் கர்ப்பம் படைத்துப் படைக்கரமுஞ்
சேர்த்திடுமே யம்மீகைத் திறலோடும் - ஆர்த்து
...............த்தலைவன் முதலாய் நவவீர
ரோடிலக்கம் நல்லோர் அவதரிக்க - ...................
............. யருந் தானுந் தழைக்கவிளை யாடியநாள்
உம்பர் பணிந்தேற்ற உட்செருக்காம் - ....................
(முருகன், பிரமனின் செருக்கை அடக்கியது)
ஓம்மருவு மெய்ப்பொருளை யோதென்ன வோதறியாத்
தீமையினாற் குட்டிச் சிறையிலிட்டுத் – தாமருளால்
(முருகன், சிருட்டித் தொழில் செய்தது)
எவ்வுலகுஞ் சிருட்டித் தினிதிருக்க மால்முதலோர்
அவ்வரனுக் கோத வவர்வந்து - வவ்வுசிறை 15
(சிவனால், பிரமன் சிறை மீண்டது)
விட்டருள வேண்டுமென வேண்ட விடுத்தபின்பு
மட்டறியாத் தாரகத்தின் வான்பொருளைச் - சுட்டியுரை
(முருகன், தகப்பன்சாமி ஆகியது)
என்றுரைக்க வப்போ திறைதகப்பன் சாமியாய்
அன்றுரைக்க முத்தையனா மென்று – நன்றுரைத்துத்
(முருகன், சத்திவேல் பெற்றது)
தந்தைதா யும்மகிழ்ந்து சத்திவடி வேலுதவிப்
பைந்தடந்தேர் பூதப் படைகூட்டி - வந்துதித்த
(முருகன், சூரபதுமனை வென்றது)
............... நீயுமே சூர்முடித்துத் தேவர்சிறை
யாதரவாய் மீட்டுவா வையவென -- ஓதலினால்
மாயக் கிரியில்வளர் தாருகன் கிரியும்
மாயவே லேவி மயேந்திரத்தைப் - போயடர்க்க 20
கந்தருக்கு மந்திரிகள் கர்த்தர்துணை தூதாகி
செந்நிதங்கிச் சூர்பதுமன் சிங்கமுகன் - மைந்தர்பலர்
பானுகோபன் முதலாம் பற்றலர்கள் நாற்படையின்
ஊனுடல்போய்ப் புள்விலங்குண் டோட்வே - வானவர்க்காய்
(முருகன், தெய்வானையை மணந்தது)
சங்காரஞ் செய்து சதமகத்தோன் கன்னிமணச்
சிங்காரங் கண்டு தினமகிழுஞ்-சங்கிராம
(செங்குந்தர் பரம்பரை இதுவென்றல்)
வீரவாகுப் பெருமான் மெய்ப்பான சந்ததியாந்
தீரவாகைப் புயத்துச் செங்குந்தர் - பாராட்டி
ஓலைவிட்டுச் சூர்முடித்த வீரன் மெச்சக்
காலனுக்கு மோலைவிட்டு நாற்றிசைக்கு-- மோலைவிட்டோர் 25
(செங்குந்தரின் கடவுள்பற்று)
கயிலைமலை காவலரைக் காவலுங் கைக்கொள்வோர்
மயிலவன்பொற் பாத மறவார்--இயல்பறிய
தோராம லாண்டுதொறுஞ் சூரசங்கா ரத்திருநாள்
சீராய் நடாத்துந் திறலினார் - ஓரெழுத்தும்
அஞ்செழுத்து நீறுமணி யன்பர் குருநேயர்
அஞ்சலர்கள் கொட்ட மடக்குவோர்-ரஞ்சிதமாய்
(செங்குந்தரின் குணஞ் செயல்களைக் கூறுதல்)
தொண்டைமண் டலம்பாண்டி சோழமண்ட லங்கொங்கு
மண்டலம் நாடாளு மரபினார் - கொண்டிடுநூல்
மேவநிறை கண்டுகொண்டு விற்கநிறுக் காதோருயிர்
நோவவருத் தாப்பொய் நுவலாதார்- பாவமின்றிச் 30
செய்யுந் தொழிலாய்ச் சிவசுப்பிர மண்ணியர்தாம்
நெய்யுந் தொழிலின் நிலைபெற்றோர் - வையகத்தில்
சீரிகையாற் பண்சேர்த்து நன்னூல் பாவாக்கிக்
காரிகையார் தாரால் கலைசெய்யும் - நேரிலொட்டக்
கூத்தரெனப் பேர்பெறுசெங் குந்தப் புலவர்தமிழ்
சாத்திமுடிச் சிங்காதனங் கொடுத்தோர் --ஆத்திபுனை
சொல்லா லுயர்ந்தபுகழ்ச் சோழன் சாயாகன
வல்லானை வென்று வரிசைபெற்றோர் - நல்லநவாப்
பட்டணமாற் காடுமுதல் பாரமுமலைத் தான்மகிழ்
அட்டலட்சு மீகரனா மாண்சிங்கம் – பட்டமுள்ள 35
கந்தர்துணை வன்னியகுல கச்சியுப ரங்கேந்திரன்
சந்ததியில் வந்த தளவீரன்-சந்ததமும்
தேசப்பிர காசஞ்செய் பாளையந் துரையும்
வாசற்பிர தானிமெச்ச வாழுவோர்- வாசபுகழ்
கற்பகமாங் கல்விசெல்வன் கர்த்த மகிபாலன்
சொற்பெரிய தம்பித் துரைமகிழ்வோர்-நற்பரமாம்
முத்திதரு முத்தநதி முக்கியதலம் விரதகிரி
நத்திரைசு வேத நதியுளார்- எத்திசைக்கும்
கோலப் பெருமைமன்னார் கோயில்முதல் நாடுகுரு
வாலப்பன் கோயில்முதல் வாழுநகர்- மாலைப்பூஞ் 40
சீர்க்கடம்பு பாமாலை சேவல்முத லானகொடி
மூர்க்கமத யானை முனைப்புரவி - யார்க்கும்
முரசுதிற லானை முறையால் நாட்டாண்மை
அரசுசெய்து வாழு மதிபர்- வரிசை
பதலிமசொல் லாலெடுத்துப் பாடரிய தீர்த்தி
முதலியர்க ளாகவந்த முன்னோர்- கதலிகள்சூழ்
சோழமண் டலம்பாண்டித் தொண்டைமண் டலங்கொங்கில்
வாழருள்செங் குந்தர்மெச்ச வாழ்ந்திடுநாள் - ஏழையேன்
கொங்கிருந்து ரங்கம்வந்து கூடச் சிராமலையும்
பங்குமையா ணானைக்காப் பஞ்சநதி- பொங்குபுகழ் 45
சாற்றுதிருப் பூந்துருத்தி தஞ்சை பாவநாசம்
ஏற்றவலஞ் சுழிப்பட் டீச்சுரமும் – போற்றி
(திருவேரகத்தில் முருகன் திருக்கோலக்காட்சி)
திருவே ரகமுந் தெரிசித்துச் செவ்வேள்
உருவே ரகசிவத்தி லுன்னிக்- குருவாழ்
மலைமேல் பொற்கோயில் வலமாக வந்து
தலைமேல் குவிகரமுஞ் சாற்றி - கொலுமேவும்
சுக்கிர வாரத்தில் சுடர்மகுட மும்முகமும்
விக்கிரமப் பிரகாசவடி வேல்கரமும் - உக்கிரமயில்
வாகனமுந் தெய்வானை வள்ளிமகிழ்ந் தணையும்
மோகன விநோத முதிரழகுங் - கோகனகத் 50
தாளிலணி யுஞ்சிலம்புந் தண்டைகளும் பூங்களபத்
தோளின் மணிமாலைத் துகிலழகும்-வேளிடத்தில்
சோடசோப சாரஞ் சுரர்முனிவர் வந்திக்கும்
ஆடகப்பூம் பாதத்தி லர்ச்சனையும் - நாடகத்தில்
கன்னியர்க ளாடுவதுங் கந்தர்முன் (பு) கைகுவித்து
சென்னியர்க ளாடுவதுஞ் சேவைசெய்தேன் - என்னிதயங்
கண்குளிர்ந்தேன் துன்பவினை காய்ந்தேன் சுகானந்தம்
பண்குளிர்ந்த பாமாலை பாடினேன் - தண்கமல
பாதம் பணிவாரும் பாடித் தொழுவாரும்
வேதம் புகல்வாரும் வேண்டுவாரும் - போதமுடன் 55
ஆனந்தக் கண்ணீர் அருவி சொரிவாரும்
ஞானந்த ழைக்க நவில்வாரும் - மோனமே
கொண்டு தொழுவாருங் குமரகுரு பரன்முன்
கண்டு தொழுதேன் களிப்பானேன் - பண்டருள்சேர்
நாவா லருணகிரி நாதர்முத லோருரைத்த
பாவால் துதித்துப் பதம்பணிந்து - தேவா!
சரவ ணபவா !சாந்த னேகந்தா!
குரவணியு நீபா ! குமரா!- குரவா
முருகா ! குழகா ! முதல்வா ! திருமால்
மருகா! விரகா! மதுரா ! - பெருகும் 60
அருணகிரி நாத ரருந்தமிழ் விநோதா !
கருணைபுரி பாத கமலா! - பிரணவனே!
செந்தி பரங்குன்றந் திருவாவி னன்குடியும்
இந்துலவு காவரையு மேரகமுங்- கந்தமுதல்
குன்றுதோ றாடல்செயுங் கோவே! உயர்தேவே!
மன்றுதோ ராடியுமை மைந்தனே! - நன்றருள்கூர்
ஐந்துகர நான்குபுயத் தாறான மும்மதத்துத்
தொந்தி வயிற்றானைத் துணைவனே ! - விந்தைமதி
ஆறுமுக மாறிருதோ ளாறிருகை சேரழகா !
ஆறெழுத்தி னுட்பொருளா மையனே! - பேறுதவும் 65
பைங்கொன்றை யான்கிரிசேர் பாய்பரியா னுக்கினிய
செங்குன்ற மேமுதலாந் தெய்வதலங்-கொங்கில்
நிலையான சேல நெடுநாட்டிற் செம்பொன்
அலையா கிரியி லடியேன் - தலைமீதில்
வைத்தபத மலரென் வன்மனத்தில் வைத்தருளி
மெய்த்தபதச் சொல்லுணர்த்தும் வித்தகனே! – கைத்தலத்தால்
வேதப் பிரமன்முடி மேல்தட்டிக் குட்டியவர்
தாதைக் குபதேச சற்குருவே!- நாதன்முதல்
மூவர் புகழுமுனைச் சூரசங் காரா!
தேவர்சிறை மீட்ட சேவகனே!- சேவலுயர் 70
துள்ளு மயில்வீரா! சுடர்வேற் கரகமலா !
வள்ளி தெய்வானை மணவாளா! - தெள்ளுதமிழ்
கும்பமுனிக் குரைத்த கோமானே! நக்கீரன்
வெம்புசிறை விடுத்த வீரியனே !- அம்புவியில்
சம்பந்த ராகிச் சமண் நீக்கித் தெய்வசைவ
விம்பந் தழைக்கவந்த வேதியனே!-நம்புஞ்சீர்
நித்தனே! நிமலனே! நிட்களனே! சற்குணனே!
சுத்தனே! அத்துவித சூக்குமனே!- வித்தகனே!
ஆதித்தி யானந்த அதீதபர மானந்த
சோதியா ! ஞானச் சொரூபமே! - நீதியருள் 75
காரணமே! இன்பமே! காமியமே! சோபனமே!
பூரணமே! அண்ட புவனமே! - ஆரணமே!
பூதமே! கட்புலனே! புண்ணியமே! பாக்கியமே!
நாதமே! விந்துவே! நாயகமே! - கீதமே!
சத்துசித் தானந்த தற்பரமே! சிற்பரமே !
முத்திக்கு வித்தே! முழுமுதலே!- தித்திக்கும்
ஞானப் பசுந்தேனே! நல்லமுதே! கற்கண்டே !
மோனச் செழும்பாகே! முக்கனியே! - தியானிக்கும்
சற்பத்த வத்சலனே ! சைதன்னிய மெய்ப்பொருளே !
கற்பித்த நீயென்னைக் காத்தல்கடன் - அற்புதனே! 80
(முருகனிடத்து வேண்டுதல்)
வேறுதுணை இல்லையுந்தன் மெய்ப்பதமே யல்லாமல்
தேறவென்னைக் காத்தருள் செய்யென்று - கூறியே
(முருகன், கனவில் குருவாய்த் தோன்றுதல்)
சன்னிதியிற் போற்றித் தலவாசஞ் செய்திடலும்
இன்னருள்சேர் தேசிகராய் என்கனவில் -முன்னியே
அன்னை தந்தை சற்குருதே வானோன்செவ் வாய்மலர்ந்தே
என்னை வினவ எடுத்துரைத்தேன் - முன்னை
வினையின் வலிக்கவியான் வீணர்களைப் பாடி
உனைமறந்து நாயே னுழன்றேன் - கனவினும்
(முருகனிடத்து வரம் வேண்டுதல்)
உன்புகழைப் பாட வுனையே தினம்வணங்க
பொன்பொலியும் வாழ்வு புகழீகை - இன்பம் 85
தவிரா திகபரமுந் தந்தருள்வாய் ஐயா!
புவனகர்த் தனேஎன்று! போற்ற – அவனோடு
(முருகன் அருள் கூறுதல்)
அவள்தனது முன்னிலையாய் நன்மை தீமை
எவர்கட்கு மீவ தியல்பாம் - அவையறிந்து
பைந்தமிழோர் சொல்லுடையார் பாளையஞ்சீ மைக்குள்வளர்
நந்துணைச்செங் குந்தரிடம் நண்ணினால் - முந்துமவர்
சிந்தைதனி லேயிருந்து செல்வம் நினைத்ததெல்லாந்
தந்தருள்வோ மென்றிறைவன் தானனுப்ப - வந்துடனே
(கும்பகோணம் வணங்கல்)
கும்பகோ ணத்தில் கும்பலிங்கர் மங்கையம்மன்
சம்புவளர் கின்றமற்றத் தானங்கள் - நம்பனருள் 90
மாமகதீர்த் தக்கரையில் வாழும்வீ ரேசருடன்
தேமகிமை சேர்வீர சிங்கவனை ! - கோமுதன்மை
சாரங்க தேவகுரு சன்னிதிதா னம்பணிந்து
சேரன்பா ரமடியார் சேவைசெய்து – பேரன்பாய்
(திருநாகேச்சுரம், தில்லை முதலியன வணங்கல்)
நாகீசு ரத்தில்வந்து நாகலிங்கர் குன்றுமுலைப்
பாகேஸ்வரி யைப்பணிந் தேற்றி- யோகீசர்
மெய்யர் மடமும் விளங்கும்புக ழேகாம்பர்
அய்யர் மடமுங்கண் டடிவணங்கி - துய்யபுகழ்
முந்தியசெங் குந்தர் முதலிமா ரன்புபெற்றுச்
செந்திருவா ரூர்நாகை தில்லைநகர் - பந்தர்வளர் 95
காழிமா யூரங் கடவூர்வே தாரணியம்
ஏழிசைசேர் வேளூ ரிடைமருதம் - சோழவள
நாட்டிற் பலதலமும் நாடிமுது குன்றுகண்டு
காட்டின் வழியிற் கடிதேகிக் - காட்டுகின்ற
நற்சகுனங் கண்டு நடந்துதிரு வேரகத்தான்
சிற்சரண பங்கயத்தைச் சிந்தித்துச்-சற்சனரும்
மாதவர் சொர்ண மடத்தி லகத்திய
நாதர்தன வர்த்தனியை நான்பணிந்து - நீதமுள்ள
காத்தமகீ பன்சொல் கனம்பெரிய தம்பிமன்னன்
வார்த்தை யன்பினாலே மகிழ்ந்திருந்தேன்-கூத்தர் 100
அரியசபா நாதரரு ளாற்சிவிகை பெற்ற
பெரியநா டென்றும் பெயராய்ப் - பரிவுபெறு
மன்னார் கோவில்சீர் வளநாடு பாளையநா
டின்னார் குவாகமெனு நாடு - நன்னாட்டில்
மங்களமே சேர்ந்தகுரு வாலப்பன் கோயிலுடன்
துங்கசெயங் கொண்ட சோழபுரம் - தென்கருப்பூர்
மன்றலுயர் கீர்த்திமட மன்றுளா டையர்வளர்
நன்றருள் குவாகமெனு நாடதனிற் றென்றலங்காப்
பொன்னுலவு பொன்பரப்பி பொங்குசிறு களத்தூர்
மன்னு கொடுக்கூர் மருதூருந்—துன்னுமலர் 105
கானகலா வாரியங் காவ லிலையூரும்
ஆனகல்லாத் தூருமிடைக் குறிச்சி - மானதிசேர்
வேண்டிய செல்வம் விளங்குபுகழ் படைக்கும்
ஆண்டிமடம் விளந்தை யாதியாய் - நீண்டபதிப்
பேரியல் நாட்டாண்மை பெரியதனக் காரர்
காரியக் காரர் கர்ணீகர் - ஊரும்
உறவின் முறையாரை யோலைவிட்டுக் கூட்டித்
திறமையாய்த் திட்டமிட்டுச் சேர்ந்து - நிறைசபையோர்
பூஞ்செடிசூழ் சோலைபொது மண்டபந் தன்னில்
காஞ்சிபுர மென்னக் கதித்திருந்து - வாஞ்சையுடன் 110
தந்தப்பல் லக்குத் தலைமைநாட் டார்முதலோர்
கந்தப்பு ராணமுதல் கல்வி பயின் - றிந்தப்பார்
மாராசர் மெச்சு மரியாதை ராமனெனத்
தீரா வழக்கைத் தெரிந்துரைத்துப் - போரார்
குடங்கை வலங்கையெழில் விருதுச் சண்டை
திடங்கொள்கச்சிக் கோலைவிட்டுத் தீர்த்தும் - அடங்கார்
நதிர்வைத்துக் காண நவசித்திர மான
சதிரிற் கொலுவாஞ் சமையம் - சதுர்மறைதேர்
தெய்வா லயத்துச் சிவமறையோர் நீங்கள்
செய்வான் பிரசாத மீண்டுதவ- செய்வேள்வி 115
அந்தணர்க ளக்கதையு மண்ணலடி யார்நீறுந்
தந்தருளி வாழிச் சதிர்மொழிய - நந்தவனம்
எண்ணுதிருப் பணிக ளேற்றகலி யாணமுதல்
புண்ணியங்கட் கெல்லாம் பொருள்சொரிந்து - வண்ணமணிக்
கட்டழகா மம்பலவர் கட்டளையார் விரதகிரிக்
கட்டளையார் தென்பழனிக் கட்டளையார்- இட்டமுடன்
சோணகிரிக் கட்டளையார் சுவாமிமலைக் கட்டளையார்
காணவளர் சீர்விளந்தைக் கட்டளையார் - வாணர்புகழ்
கோவிலில்வாழ் சண்முகப்பேர் கொண்டசிவ ஞானியன்பர்
தேவையில்வாழ் ஆறுமுகத் தேவருடன் - மேவியபேர் 120
இன்பருளு மாண்டிமடத் தேகாம்ப ரய்யருடன்
அன்பருள் குவாகமன்று ளாடுமையர்- முன்புபெறு
ஞானப்பிர காசமுதல் நல்லோர்க்கீந் தட்டாவ
தானப்பிர தாபவித்தைச் சாதனையோர் - கானம்வல்லோர்
நட்டுக் கடாத நயினார்பொன் னம்பலப்பேர்
இட்டவன்வே டங்குமாரிக் கைகற்றோர் - திட்டமுள்ள
இந்திரசா லங்களுமா யேந்திரசா லங்கள்முதல்
தந்திரமாம் வித்துவ சனர்புகழ் - செந்தமிழோர்
மாலைபல பாட வரிசைத்திரள் கொடுக்க
ஓலையெழு தக்கணக்கு முத்தரிக்க – வாலையர்கள் 125
ஆடிநிற்கப் பஞ்சதொனி யார்ப்பரிக்கக் கட்டியர்கள்
பாடிநின்று சாமிபராக் கென்ன- கூடியே
மஞ்சள் பாவாடை வயிராக்கியர் சூழப்
பஞ்சவர்ண மாம்விருது பாங்கிலங்க- குஞ்சமும்வெண்
சாமரையு மேவிசிறி தானசைத்துக் காளாஞ்சி
காமரச மாதர் கையிலேந்த - தாமரைப்பூ
வஞ்சிமுதல் எண்வர்களும் வந்திலங்க வாணர்கலி
அஞ்சி யுலுத்தரிட மாயோட - இன்சொல்
உரைப்பா ருரைப்பவை யெல்லா மிரப்போர்க்கொன்
றீவார்மேல் நிற்கும் புகழென் - றுரைத்ததும் 130
நல்லா றெனினுங் கொளறீதே மேலுலகம்
இல்லெனினு மீதலே நன்றென்ற - சொல்லுமெண்ணித்
தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலில் தோன்றாமை நன்றென்று - தோன்றி
அவையறிந் தாராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவரென்று-- இசைவோர்
சபையரசர் மெச்சு துரைமுக நேராஞ்
சபைபுகுந்தேன் கண்டு தயவாய் - உபசரித்து
வாருமிரு மென்று மகிழ்ந்தா சனங்கொடுத்தார்
ஊருமுங்கள் பேருமென்ன வோதுமென்றார் - சேர்கொங்கில் 135
சேலம்வெண் ணந்தூர்தல மாம்பொனலை யாகிரியில்
வேலரரு ளாலே விருதுகவி - நாலுதிக்கும்
நாட்டுப்பர மானந்த நாவலனென் பேராகும்
பூட்டுமன்பா லிட்டலிங்கப் பூசை செய்து - கூட்டருள்சேர்
வீரசைவா சாரம் விளங்கியசெங் குந்தர்குல
தீரனென்று சேதியெல்லாஞ் செப்பினேன் - ஆரவயல்
கச்சியில்வா ழேகாம்பர் காமாட்சி புத்திரரே!
உச்சிதமா மேயமிசை யுள்ளோரே! - மெச்சுகந்த
சாமிதுணை யாய்ச்சூர சங்காரஞ் செய்துசுரர்
காமியத்தைத் தந்தருளுங் காரணரே! - பூமிபுகழ்
ஆயிரத்தெண் மாமுடிசிங் காதெனமொட் டக்கூத்தன்
பாயிரசொற் கீந்த பரிசோரே!- தூய
அபிமான பூஷணரென் றாரும் புகழும்
அபிதான மோங்கு மவையீர்! - சுபமேவும்
வெல்லரிய வல்லானை வென்று விருதுபெற்ற
வல்லவரே! கல்விசெல்வம் வாய்த்தவரே! - தொல்லுலகில்
குன்றில் விளையாடுங் குமார குருபரனை
என்று மறவா வியல்பினரே! - என்று சொல்லி
ஆய்ந்து தமிழ்பாடி யரங்கேற்ற வுமகிழ்ந்து
வாய்ந்தபணி செம்பொன் வரிசையுடன்-ஈ(ய்)ந்தருளும் 145
(துகிலின் சிறப்புரைத்தல்)
சோமன் தலைப்பாகு துப்பட்டிச் சால்வையங்கி
மாமடவார் சேலைமுதல் வர்க்கமே! – பூமறையோன்
மாலின் கலையும் வரைமான் திருவாணி
மேலின் கலையுமுந்தன் மேற்குலமே!- மாலயன்தேர்
அண்ணா மலையார் அணிமுடிமேற் சோதிதந்து
கண்ணாற் கண்டோற்குக் கதிகொடுத்தும் - வெண்ணீற்றான்
ஆடும்பொன் னம்பலத்தி லண்டபுவ னந்துதிக்க
மூடுந் திரையாகி முத்திதந்தும் - பாடுகின்ற
வாணி யிசையினிரு மாமுனிவர் கந்தருவர்
பாணர்கையில் யாமுறையாம் பாக்கியமே!- வீணொருவன் 150
வாதி லருணகிரி வாக்கினால் வேலன்மயில்
மீதில்வர வுந்திரையாய் மேவிநின்றாய்! - தீதிலா
செம்புடவை யாகிச் சிவனடியா ரைச்சேர்ந்து
கும்பிடவும் பெற்ற குலக்கொழுந்தே!- நம்புமறைச்
சீரோது மீசன்முதல் தேவர்கொடி யாய்த்திருநாள்
ஆரோ கணக்கொடியு மாகிநின்றாய் ! - பேரான
தேருக் கலங்காரந் தெய்வத் தலங்காரம்
ஊருக் கலங்கார மோங்குவதும் - பாருலகில்
மன்னர்க் கலங்காரம் மால்யானை வெம் புரவி
அன்னவர்கள் பல்லக் கலங்காரம் – வன்னலட்சம் 155
தண்டினிற் கூடாரந் தளகர்த்தர் கூடாரங்
கொண்டதுரை மக்கள் கூடாரம் - திண்டொருகு
மெத்தைமேற் கட்டிக்குடை வெற்றிக்கொடி சுருட்டித்
தத்துபரி வீரர் சவுந்தரமும் - நித்தவரும்
சாரியலங் காரஞ் சமுகவலங் காரமவர்
பாரியலங் காரமுமுன் பாக்கியமே!- வீரியமாய்
மாப்பிளையும் பெண்ணு மணக்கோல மாகவே
கோப்பழகு காட்டுங் குறிப்புநீ!- பூப்பொலியும்
கற்பிருக்கு மங்கையர்க்குக் காவல்நீ ! கற்பில்லா
துற்புணர்ச்சிக் கள்ளியர்க்குந் தோழமைநீ ! - நற்பருவ 160
வேசியர்கள் மெத்தமெத்த வேடிக்கை செய்துநித்தங்
காசுபறிப் பதுமுன் கட்டழகு!- தாசியர்கள்
சிற்றிடையில் தாழ்த்தி திருத்தி யுடுத்துவதும்
மற்றுமுலை காட்டி மறைப்பதுவுஞ்- சற்றே
நெகிழ்வதுங் கண்டிளைஞர் நெட்டுயிர்ப்பாய்ச் சிந்தை
நெகிழ்வது முந்த னிறமே! - மகிழும்விலைக்
கன்னியர்கள் மென்துடைமேல் காம னார்மனையில்
முன்னரிடுந் திரையாய் மூடியதை- மன்னர்
தெரிசனங்கள் கண்டணைந்தோர் செம்பொன் முடிப்பு
வரிசைகொடுப் பதுமுன் வாய்ப்பு !- சரசகுண 165
மங்கையர்மே லாசைகொண்டு மாப்பிளைமார் கெஞ்சிநின்று
செங்கையினாற் றொட்டிழுக்குஞ் செல்வமே! - கொங்கை
குடத்தினிழல் காட்டிக் கூடிளைஞர்க் கல்குல்
படத்தினிழல் காட்டும் படமே!- வடத்திரள்சேர்
ஏகாச மாக விளமுலையி லெந்நேரம்
வாகா யணைந்திருக்கும் வங்கணமே! - பாகின்மொழி
கொன்னியோ ருகுத்துடுக்குங் கோதையர்க்குங் காமுகர்க்குஞ்
சன்னதலீ லைக்கிசைந்த சம்பிரமமே! - நன்னுதலார்
முக்காடு போட்டு முகமினிக்கிக் கண்மிரட்டு
மிக்காயந் தொழிற்கினிய மென்றுகிலே!- முக்காலும் 170
மாதர் குளிக்கும்நறு மஞ்சளிலே நீதோய்ந்தால்
காதல் மதிமயக்கிக் கண்பறிப்போய்!- நோதலினால்
தாய்க்கிழவி தான்மகிழத் தாதிமா ரேவல்செய்ய
வாய்க்குமலர் மெத்தையின்மேல் வைத்திருந்து - வாய்க்கிணங்க
முத்தமிட்டுக் கொஞ்சி முலையணைத்து லீலைசெய்து
மெத்தவுன்மே லாசையென்று வேண்டுவதும்-எத்தியர்கள்
பொன்வகையைக் கண்டுசெய்யும் பூரிப்பா மத்தனையும்
உன்வகையைக் கண்டாலு முண்டாகும் - தன்வகையால்
தேவடிமார் செய்யுந் திருக்குகளுந் தாய்க்கிழவி
காவலென்றுந் தூரமென்றுங் காய்ச்சலென்றும்-நோவுவகை 175
பத்தியங்கள் சொல்லிப் பசப்புவது முன்பணையம்
அ(ஸ்)த்தரொக்கம் வந்ததென்றா லாணைகளுஞ்-சத்தியமாய்
வைத்திருக்கு மாப்பிளைக்கு வார்த்தைப்பா டென்றுசொல்லும்
அத்தனையு முன்னா லடங்குமே!-சத்தசுரா
பாகொழுகுஞ் சங்கீத பாடல்வித்தை யாடல்வித்தை
லாகுகர்ண வித்தை லாகுவித்தை - மோகசுக
வித்தைபல கற்றாலு மேனியழ கானாலுந்
தத்தைமொழி தேன்போற் சமைந்தாலும் – முத்துமணி
பொன்னா பரணங்கள் பூண்டாலும் வேசியருக்
குன்னாலே மெத்தவழ குண்டுகாண் – எந்நாளும் 180
ஞானகலை யோகியர்க்கும் நங்கையர்மா லேத்துவிக்கும்
ஆனகலை யான வசீகரமே! - மேனியணை
ஆணும் பெண்ணுக்கு மழகா யரணாகிப்
பூணு மபிமான பூஷணமே! - நாணகல
தாருவனத் தாரெனவே தங்குமயல் பெண்கள்செயல்
நேருமிடை நீங்கி நெகிழ்ந்துசொல்வாய்!- சோரும்
உடுக்கை யிழந்தவர்கை போலமற் றாங்கே
இடுக்கண் களைவது நட்பென்று - அடுத்து
தவழ்ந்து விழுமுலையைத் தாங்குவாய்! நீசற்று
அவிழ்ந்துவிழி லக்கைவந் தணைக்கும் - நவின்றிடுங்கால் 185
பொன்னைவிட்டு நீங்கலாம் பூந்துகிலே பூவுலகில்
உன்னைவிட்டு நீங்கி உலவுவரோ? - சன்னசம்பா
அன்னமுநீ யும்நலமா யாவியுடற் கேறினால்
பொன்னணிமேற் பின்பாசை பூண்பதுகாண்! - இந்நிலத்தில்
மானிடத்தா ரானவர்க்கு மானங்காக் கும்பொருட்டாய்
மானிடத்தான் கற்பித்த வஸ்துவே! - கானவித்தை
பாட்டில் பறிப்போர்பல் வித்தையோ ரும்வல்ல
வாட்டில் பிலுக்குவதுன் வர்ணனையே ! - மேட்டிமையாய்
பாடங்கள் செய்யும்பல் பேச்சாய்ப் பொன்பறிப்போர்
வேடம் பலிப்பதுமுன் வெடிக்கை! – ஓடியெங்கும் 190
தேடிவரும் ரூபாயும் செம்பொன் வராகனுமே
மூடிமுடி வதுமுன் முந்தாணி! - மோடியினால்
கால்வித்தை யென்றாலுங் கட்டழகா! உன்சிறப்பால்
மேல்வித்தை யாக விளங்குமே - நூல்விதியால்
பஞ்சலட் சணந்தெரிந்து பாடிப் படித்தனந்தம்
விஞ்சப் பிரசங்கம் விதித்தாலுஞ் - செஞ்சொலினால்
வல்லகலை யைமதித்து உதவார்மேல் விளங்கும்
நல்லகலை யேயுனக்கே நல்குவார் - சொல்லும்
சரளியலங் காரசுர சங்கீதம் பாடி
திரள்வரிசை வாங்குவ துன்சீரால்- (வில்) குரல்போல் 195
மீட்டுதம் பூருக்கும் விதக்கூத்து பொம்மல்கூத்
தாட்டுதற்கு முந்தன் அலங்காரம்! - பாட்டிசைசேர்
மெட்டுகளா லெட்டுவகை வித்தையில்பெண் ணாட்டுவிக்கும்
நட்டுவர்க்கு முன்னாலே நல்வரிசை! - நட்டுயர்ந்த
கம்பமே லாடுவித்தை காரூட வித்தைமுதல்
தம்பனவித் தையிந்திர சாலவித்தை - சம்பிரமமாம்
ஆட்டமெல்லாங் கண்டுகொடா ரம்மம்மா வுன்னுடைய
மேட்டிமைகண் டேதருவார் மேல்வரிசை!- காட்டும்
பவளவச்சிர மாணிக்கம் பச்சை பதுமராகந்
தவளமுத்து நீலமுதல் சாற்றும் – நவமணியின் 200
மாலைவிலை மதிக்கும் வர்த்தகர் முன்சிறப்பால்
மேலதிக மாக விலைமதிப்பார்! - சால
உடன்கொடுப்பார் மேலணியு முன்போல் வரிசைக்
கடன்கொடுப்பார் தாமுமுன்னைக் கண்டு - திடம்பெறவே
உன்சிறப்பா லாரு முபசரிப்பார் நீயிளைத்தால்
முன்சிரிப்பார் சற்றும் முகம்பாரார் - பொன்சிறப்பாய்
எத்தில் சிறந்திடுமால் எவ்வுலகுங் காப்பதுக்காய்
பத்துப் பிறப்பான் பான்மைபோல் - வித்துருவாய்
பஞ்சாகி நூலாய்ப் பலபாடு நீபடுதல்
அஞ்சா துயிர்காக்க வல்லவோ? – மிஞ்சுசல்லா 205
துப்பட்டா சுக்கழுத்தஞ் சோடு நெடுமுழமும்
செப்புங் கிழிவு சிலம்பிரியும் - இப்படியே
கோடியினில் நீகொண்ட கோலமெடுத் துரைக்கக்
கோடிகவி சொன்னாலுங் கூடாது - நீடுபுகழ்
வர்த்தனராஞ் செங்குந்தர் வாழ்பதிக்குத் தாரறத்தில்
வர்த்தகரை யெல்லாம் வரவழைப்பாய்!- வைத்திருந்த
செம்பொன் முடிப்பெடுத்துத் தேசதே சத்தினிற்போய்
சம்பளவாள் விட்டுத் தருவித்து - டம்பமதாய்
மூட்டைகட்டிக் கூட்டி முழுதுங் கணக்கெழுதி
மாட்டுமே லாள்மேலும் வைத்துவந்து - நாட்டமுள்ள 210
எட்டுத் திசையிலும்போய் எட்டும்வியா பாரத்தால்
நட்டமொடு லாபமுமே நாட்டிவைப்பாய்! - அட்டதிக்கில்
மங்களமாங் கிட்டாம லரக்கர் முதல்தீவு
சிங்களவங் காளமுதல் சீமையில்போய் - தங்கமணி
கப்பல் வந்துசேர்ந்து கரைதுறையில் வர்த்தகருக்
கொப்பந்த மாயெழுத்து மோலையுடன்- இப்புவியில்
எங்கெங்கு முள்ளஎழில் தொழில்செய் வர்த்தகர்க்கு
மங்கங்கே சாளிகையோ டாளனுப்பிச் - செங்குந்தர்
வாசலெங்கும் ரூபாய் வராகன் விளையாடப்
பூசலிட்டு மேன்மேலு போட்டுவைத்துப் - பேசு 215
நெடுமுழமே யாதியாய் நெய்யுந் தினுசைக்
குடிமேல் கணக்கெழுதிக் கொண்டு - கடிதுகட்டி
ஆயத் துறையார்க ளாதாய முண்டென்று
வாயைத் திறந்து வழிபார்க்க - நேயமுடன்
வாடகைக் காரர் வசத்தில் பொதியனுப்பிப்
பீடுபெற வேதரகர் பின்புசென்று - பாடுகவிக்
குத்தரங்கள் சொல்லிக் கொடுப்பார் தமைத்தடுக்கு
மைத்திபர்போற் றீங்குசொல்வோர் வாயடக்கி - எத்தினமோ
பார்வையிடு வார்க்கும் பாங்கித்து வாசியர்க்குஞ்
சேர்வைபெறக் காதில்மெலச் சேதிசொல்லிப் - போர்வைப்பூ 220
பச்சடந் தாம்பூலம் பனிநீர் தெளித்துதவி
மெச்சிவரா கன்கொடுக்க மீண்டபின்னர் - அச்சரக்கை
தேங்குபுக ழாற்சலவை செய்துமடித் தாலையிட்டுங்
காங்குதுவைத் துங்கிடங்கில் கட்டிவைத்தும் - பாங்குபெற
கப்பல்மே லேற்றிக் கடலேற்றிப் பொன்மணிகள்
குப்பல் குப்பலாகக் குவித்திடுவாய் - செப்பமுடன்
கொண்டகணக் குங்குடி நிலுவையும் லாபங்
கண்டகணக் குமெழுதிக் கட்டிவைத்தும் - மண்டுதொகை
சொன்ன தரகுத் தொழில்முதலி மார்களுக்குஞ்
சென்னைபட்டணங் கூடல்புதுச் சேரிமுதல் - மன்னுபுகழ் 225
மாறாக் கரைதுறையில் வர்த்தகர்க்கும் வாழ்வுதவி
ஏறாத்தீ வெங்கும்போய் ஏறுவாய்!- வேறாக
வெள்ளைகருப் புச்சிகப்பு மேலெழுத்துப் பட்டஞ்சில்
விள்ளு மனேகவித மானாய்- வள்ளலே!
வெண்பட்டுச் செம்பட்டு மிக்ககரும் பட்டுமஞ்சள்
வண்பட்டுப் பச்சைவகைப் பட்டும் - எண்பட்ட
பொன்சொரிந்து கொள்ளும் புதுச்சால்வை யங்கிவகை
மின்சரிகைப் பாகு விதங்களுடன்- மென்சரிகை
சேலைசந் திரகாவித் திரள்பாகு வர்க்கமுறு
மாலைகண்டைச் சாதிரா வத்திரமும்- மேலெழுத்துச் 230
சாதிராச சேலை தலைப்பா குறுமாலை
சோதி ரவணிதமாஞ் சோமன்முதல்- சாதிவகை
கட்டுவர்க்க முந்தங்கக் காசுவர்க்க மேசொரியும்
பட்டுவர்க்க முமுனது பந்துவர்க்கம் - இட்டழுத்து
குச்சிலங்க மாதர் குவிமுலைமேல் வர்ணவர்ணக்
கச்சுரவிக் கையுமாய்க்கா வல்கொண்டாய்- மிச்சவிலை
வச்சிரகண் டைச்சேலை மதுரைச்சல் லாச்சேலை
செச்சைப்பூ சரபந்தச் சேலையென்றும்- இச்சையுள்ள
கோலத்துப் பட்டென்றுங் குங்குமப்பூப் பட்டென்றுஞ்
சேலத் தெழுத்துநகைச் சேலைவகை- வேலையுயர் 235
மாதளம்பூச் சேலையென்றும் மல்லிகைப்பூச் சேலையென்றுஞ்
சீதளமாந் துத்திப்பூச் சேலையென்றும் - மீதெழுத்து
காந்திபெறு மாதிரிப்பாக் கத்துச்சல் லாச்சேலை
வேந்தர்புகழ் சந்திரகா விச்சேலை- சேந்த
கலசபாக்கச் சேலை காஞ்சிபுரச் சேலை
பலர்புகழுந் தஞ்சைக்கர்ப் பாகு - நலமிகுத்த
வெங்களூர்ச் சால்வை விதளுருப் பச்சடமுந்
துங்கதிரு நெல்வேலிச் சோமனுடன்- தங்கு
கருப்புரஞ் சுச்சோமன் காஞ்சிபுரச் சோமன் (துரைத்)
திருநாகீச் சுரத்துச் சோமன்-திருத்தமுள்ள 240
வண்ணவண்ணச் சேலை மதித்தபட்டில் சோமன்முத
லெண்ணமுடி யாதெழில் படைத்தாய்!- நிர்ணயமாய்
கற்குங் கலைபோல் கணக்குக் கடங்காய்நீ !
விற்குங் கலையேயுன் விந்தைமெத்த - சர்க்கரைபோல்
லோகம் பிரபஞ்சம் ருசிப்பித்துக் கண்மயக்கு
மோகப்பிர பஞ்சமுந்தன் முக்கியமே!- தேகத்தில்
உள்ளும் புறமும் உயர்கலையே! நீசேர்ந்தால்
நள்ளு மிகபரமும் நன்மைசெய்வாய்!-கிள்ளைமொழி
ஆயர்மட மங்கையர் நீராட்டி லுனைக்கவர்ந்து
மாய னுதவி மயல்தீர்ந்தான்-ராயசேய் 245
கண்டீரந் நளன்முன் காட்டிலுனைக் கிழித்துப்
பெண்டீரை விட்டுப் பிரிவானான் - பண்டு
துரோபதையார் மீதிலுன்னைத் தொட்டுரிந்த தாலே
விரோதியராய் மன்னரெலாம் வீந்தார்- பராவும்
கலிங்கமென்றும் பேராய்க் கணிகையரைச் சேர்ந்து
கலிங்கம்வள வர்க்குதவிக் காத்தாய் - துலங்கும்
சகலகலை ஞானகுரு சாமியரு ளாலே
சகலகலை யே!யுன்னைச் சார்ந்தேன் - புகலுவன்கேள்!
(தலைவன் தலைவியின் ஊர் பேர் உரைத்தல்)
என்னிறைவன் சாமிமலை யேறிவலம் புரிந்து
சன்னிதியி னின்று சரண்வணங்கி - மின்னுசுடர் 250
வேலுமயி லும்புயமு மென்முகமும் வீரதண்டைக்
காலுமழ குங்கண்டு கைதொழுது - மேலவனை
பாடிநின்ற போதில் பரதவிதத் தாலொருபெண்
ஆடினாள் மாமயில்போ லப்பொழுதே – நாடினேன்
(தலைவன், தலைவி தன்னை வருத்தினாள் என உரைத்தல்)
சக்கணியும் பெக்கணியுந் தாதியரோ டாடிநின்று
மைக்கண்வடி வேலால் வருத்தினாள் – அக்கணிக்கு
(தலைவன், தலைவியை வியந்துரைத்தல்)
வாசவனிந் திராணி வதனந்தி லோத்தமையும்
நாசியரம் பையரும் நாரிதுடை- கேசமால்
சாதிபது மினியாந் தன்மையினாற் செம்பதும
மாதை நிகராய் மதிக்கலாம் – வேதவயன் 255
மாமதனன் கண்டுருக மார்பில்வைக்க மேல்வளர்ந்த
தாமதனக் கும்பந் தனமிரண்டுங் - காமனிடை
ராகமத நூலின் ரதிகேளி யாகும்ரதி
நாககன்னி மார்வடிவே நங்கையல்குல் - ஆகுமென்று
கிட்டரிய பெண்ணரசின் கேசாதி பாதமுள்ள
கட்டழகைக் கண்டுருகிக் காதல்கொண்டேன் – நிட்டையினர்
(தலைவன், காதல் கொண்டது ஊழ்வினைப் பயன் எனல்)
யோகியரை மோகியராய் ஊழ்வினையால் செய்வதுவும்
மோகியரை யோகியராய் மூட்டுவதும் - மாகுகனே!
பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயி ஊறிய நீரென்னும் – நூலுரையும் 260
கண்டுகேட் டுண்டுயிர்த் துற்றறியு மைம்புலனும்
ஒண்டொடியார் கண்ணே வுளவென்று - கொண்டிரங்கி
(துன்பம் பயப்பன இவையெனல்)
கல்லார் பெருங்கூட்டங் கற்றார் பிரிவுபொரு
ளில்லா ரிளமை யிடார்செல்வம் - பொல்லாதே!
(தலைவன், முருகனருளால் தலைவியை யடைவேன் எனல்)
கல்விதந்த வேலர் கதித்தசெல் வமுந் தருவார்
செல்வி யிவளையினிச் சேர்ப்பரென்று - நல்வழியாய்
சீராய் முருகரருள் செய்தபடி செங்குந்தர்
பேராம் வரிசையுனைப் பெற்றுவந்தேன் - நேராக
யோக்கியமும் பெற்றேன் உவகைபெற்று வாழ்சகல
பாக்கியமும் பெற்றேன் பரிவுபெற்றேன் - தேக்கியசீர் 265
பெண்ணுக்குப் பெண்ணிச்சை பெண்ணமுதுக் காசைகொண்டு
கண்ணுக்குக் கண்ணிச்சைக் கட்டழகை – எண்ணியெண்ணி
(தலைவன், தலைவிபால் துகிலைப் புகழ்ந்து தூதுவிடல்)
அவ்வேள் கணையா லனுதினமும் வாடினேன்
செவ்வேள் கருணையினாற் செங்குந்தர்- இவ்வேளை
தந்த பணியில் தனத்தில் துகில்வகையில்
செந்தளிர்ச்சல் லாச்சரிகைச் சேலையே! - சுந்தரர்க்காய்
பாவை யரசி பரவையிடந் தூதுசென்ற
பூவைபங்க னாகவுன்னைப் போற்றுவேன் - பூவனிதை
காமரத வல்குல் கதலித் துடையிடைமேல்
தேமல்முலை பொன்னுடல்மேல் சேர்ந்தணைய - பாமதுர 270
தேனாள்பால் தூதுவிட்டேன் சேர்ந்துனைப்போல் நான் சேர
மானாளை நீயழைத்து வா.
(நேரிசை வெண்பா)
எங்கும் துதித்ததிரு வேரகத்தில் வேளருளால்
செங்குந்தர் தந்தசெழுந் துகிலே! - இங்கிதமாய்
தூதுநினை விட்டேன் துடியிடைசேர்ந் தென்காதல்
மாதுதனை நீயழைத்து வா.
(வாழ்த்து )
செகம்வாழி! குகன்தலங்க ளாறும் வாழி!
சேவல்மயில் வேல்வாழி! சிவந்த வாறு
முகம்வாழி! யாறிருதோள் மலர்த்தாள் வாழி!
முல்லைநகை யானைவள்ளி முயங்கி வாழி!
சுகம்வாழி! கடப்பமலர் மாலை வாழி!
தொழுமடியார்...................
முகம்வாழி! மழைவாழி! செங்கோல் வாழி !
வளர்புகழ் செங்குந்த ரெங்கும் வாழி!
செங்குந்தர் துகில் விடு தூது முற்றும்.
--------------------------
5. சங்கரமூர்த்தி ஐயரவர்கள் பேரில் விறலிவிடு தூது.
காப்பு.
(விநாயகர்)
என்னையு மின்னமுந் திருத்துங் கருணையாலே
இரும்புவியி லமுதகுண வளமா நாடு
தன்னில்வளஞ் சிறந்தகிட் டினைநகரில் மேவுந்
தானவன்சங் கரமூர்த்தி பேரி லேயான்
மின்னனையாள் மாமோக வல்லி யான
விறலிவிடு தூதுதனை விரித்துப் பாடப்
பன்னையில்வாழ் சிதம்பர விநாய கன்பொற்
பாதமல ரனுதினமும் பணிகின் றேனே. 1
(முருகர் )
சனகருக் கன்றுபத் தேச முரைத்தலை
தோளேமா ரிடவடிவைச் சார்த்திக் கொண்டே
யெனதறிவைத் திருத்தவுஞ் சீகிட்டிணை தன்னி
லெழுந்தருள்சங் கரமூர்த்தி பேரி லென்றும்
வினவியொரு பொருளறியா யானு மிந்த
விறலிவிடு தூதுதனை விரித்துப் பாடக்
கனகமயில் தனிலேறி விரைவா யின்றே
கந்தனெந்தன் சிந்தையில் வந்துதோன்றி னானே. 2
(கலைமகள்)
கஞ்சமலர் நான்முக னுந்திரு மாலுந்
தேடியுமே காணா நாதன்
செஞ்சொ லினாலெனை யாளவெழுந் தருள
சங்கரமூர்த்தி செல்வன் பேரில்
மிஞ்சியசீர் விறலிவிடு தூதைப் பாட
விரும்பிமன மகிழ்ந்து தொடுக் கின்றவென்றன்
நெஞ்சினிலும் நாவினிலிலுந் தருணி யான
நேரிழையும் வாலையுமே நிரம்பினாளே.
கடவுள் வாழ்த்து முற்றும்.
நூல்
(விறலியின் வருணனை)
அம்பொன் னடியி லணிந்தவிரற் கேற்றநகை
உம்பர் களுமகிழ வெள்ளிதா-யும்புனைந்து
தண்டையிட்டுப் பாத சரமுஞ் சதங்கைமுதற்
கொண்டிணக்க மானதனிக் கோதையே !- கெண்டை
அரம்பைதனைக் கவ்வுமது போல முழந்தாள்
அரம்பையே! பெண்க ளரசே! - பெருங்கதலி
வாழையெனப் பிரமன் வைத்தகுறங் காளேயிவ்
வேளையெனக் குதவு மெல்லியலே !- காளமாம்
மேகத் திடைதோன்று மின்னிடையிற் பொன்னிறமே
யாகத் துகிலணியு மன்னமே! - சேகரமாய்ப் 5
பொன்னரைஞா ணின்னுடனே பூணும் பணியழகை
என்னவா யான்புகல்வே னேந்திழையே !- மின்னனையீர் !
ஆலிலைமே லேதிருமா லன்றனந்தல் போல்வயிற்றின்
மேல்வரைரோ மம்பொறுத்த வேல்விழியே ! - நூலிடையே
நஞ்சதனி லேபொருப்பும் நீரின் குமிழிசெப்புங்
கஞ்சமுகை போலுமுலைக் காரிகையே !- அஞ்சுகமே!
நந்திணைத்த கந்தரத்தெந் நாளுஞ் சரப்பணியுங்
கொந்துமுத்தி னார்மணி கோகிலமே!-சந்தமுற்ற
கையிற் கடகமுடன் காந்திவளை யணியுந்
தையற் குலத்துயர்ந்த சம்போகி!- செய்யவுருத் 10
தொண்டைக் கனிமுருக்கித் தோன்று மலருடன்கற்
கண்டிற் கிணைத்தவிதழ்க் கண்மணியே !- வண்டற்ற
முல்லை யரும்பு முதிர்ந்தவொளி முத்தமுமே
பல்லுக் கிணையான பாங்கியே !-சொல்லிற்றான்
எள்ளிளம் பூவொத்தே யிலகுதிரு நாசிதனில்
ஒள்ளியமூக் குத்தியணி யொண்டொடியே!- மெள்ளவசைந்
தாடுங் குழைக்காதி லன்னவன்னக் கொப்பதின்கீழ்த்
தோடுந் தரித்துநிற்குந் தோகையே ! - பீடுபெறும்
வேலுஞ் சுரும்பும் வெருண்டமான் செல்கயலும்
போலுஞ் சிறந்தவிழிப் பொன்னரசே ! - கோலும்போர் 15
வில்லும் பறையுமென வேயுந் நுதலழகைச்
சொல்லத் தகுமோபைந் தோகையே!- மெல்லவே
கண்ணாடி பார்த்துக் கவின்பெறவே யிட்டபொட்டின்
வெண்ணீறும் நெற்றியணி மின்னாளே ! - பெண்ணரசே!
சுட்டியுடன் சேர்த்துத் துலங்கநில வும்பிறையுங்
கட்டிச் சொருகுகுழற் கன்னியே !- இட்டமுடன்
அத்தசகா யம்புரி வானினு மதிக
மற்றவுட லிற்புரிவான் மற்றதினும் - முத்தனையீர்!
அத்தமுரை யங்கத் துதவுவா னேயதிகம்
வித்தகநூ லோதும் விரித்தென்றே - இத்தகைமை 20
நீதிவெண்பா தன்னில் நிசமே யுரைத்தசெய்தி
ஆதிமுதற் கேட்டிருந்தா யல்லவோ? - தூதி!
நளராசற் காகவன்னம் நற்றூது சென்றே
உளமாலை வாங்கிவந்த துண்டே - இளமயிலே!
சாதுரிய மின்றித் தனித்தார் பிரிந்தாலும்
மேதுரியத் திற்கூட்டு மெல்லியலே ! - பாதுகாத்து
என்னைநீ வேண்டியெந்த னேந்திழைமுன் பேதூது
சொன்னையேற் புண்ணியமே சொல்லக்கேள்! - மின்னே!
மடந்தையர்மே லாசை வழிகுழியத் தூது
நடந்தவர்பாற் காணலாம் நன்றாய்ப் - படர்ந்தசடைச் 25
சொக்கர்மே லாசையவன் றொண்டன்மே லுண்டானால்
ஒக்குமடை யாளமிதென் றோதெனவே - தக்கவர்கள்
சொல்லவறி வேனதுபோற் றோகா யுனைமறவேன்
எல்லையிலா வாழ்வுனக்கே யான்றருவேன் - நல்லாய் !
(தலைமகன், விறலியினிடத்து தன் வரலாறு கூறுதல்)
தோகைக்கென் பால்விரும்பத் தூதுசொல்ல வேண்டும்நீ !
போகைக்கு முன்கேளென் புண்பாட்டை - வாகாய்ப்
பிறந்து வளர்ந்ததுமோர் பெண்ணைப்போய் வேட்டே
சிறந்திருக் கிலென்னை யவள்சீற - அறஞ்செயநான்
நற்றவத்தை நாடி நடந்துசே விக்கையிலோர்
பொற்கொடியைக் கண்டுமையல் பூண்டதுவுஞ் – சற்றுமென்னைச் 30
சட்டைபண் ணாதாளைத் தயவாக வெண்ணிநான்
வெட்டவெளி யானதுவும் வேதியர்முன் – சட்டமாய்ப்
பேசவறி யாமலந்தப் பெண்வழக்கே வென்றபிற
காசையற்று வந்தோர் அரசர்முன்-நேசமுடன்
செய்தியெல்லாஞ் சொல்லவெகு செல்வமவர் தந்ததுவும்
மைவிழியே ! நான்புகலும் மாறுகேள் ! – மெய்யாய்ச்
(தசாங்கங்கள்)
(மலை)
செகத்திலே ஒன்னார்முன் சிந்தை மலையான்
மகத்தாம் பொதிகை மலையான்-உகத்தெல்லாம்
(ஆறு)
வந்த கவிஞர்கலி வாராம லாற்றினான்
அந்தமுறு தாம்பிரவன்னி யாற்றினான்-- சுந்தரியே ! 35
(நாடு)
சொந்த வமுதகுணச் சோதிவள நாட்டினான்
நந்தலின்றி வந்தோரை நாட்டினான்-சந்ததமும்
(குதிரை)
புல்லருடன் கூடார்க்குப் போதிப்பி லொப்பரியான்
பல்கதிகள் வாய்ந்த பதப்பரியான் - சொல்லிற்
(ஊர்)
சிவஞான மில்லாதார் சிந்தைப் பதியான்
பவமில் சீகிட்டிணைப் பதியான் - பவங்களையே
(மாலை)
மாற்றார் தனக்குமன மகிழ்ந்தொன்றுந் தாரான்
சேற்றார் குவளைமலர் சேர்தாரான்-போற்றி
(கொடி)
அறஞ்செய்தே வாழ மனமற்றார் கொடியான்
குறைந்திடா மேழிக் கொடியான் – சிறந்த 40
(கொடை)
கவிபுகன்றோற் கேகனகக் காசே கொடையான்
குவிதலொன்றாத் திங்கட் குடையான் –புவிதனிலே
(யானை)
வாரணத்தை யேகொடியாய் வைத்தவர்பா தம்பணிவோன்
வாரணத்தி லேபவனி வந்தருள்வோன்- பார்வான
(ஆணை)
அட்டதிக்கெல் லாஞ்செலுத்து மாணையினா னெங்குமிவன்
சட்டம் நடத்துகின்ற சாமியே! - இட்டமாய்க்
கந்தனே தெய்வமென்று கைதொழுதன் னோன்நாமஞ்
சிந்தையிலே வைக்குஞ் சிறப்பினான்-சந்ததமும்
அன்னங் கொடுக்கு மழகின் பெருமாள்வேள்
முன்னந் தருகருணை மூர்த்தியான் - மின்னனையீர்! 45
சூரனைவென் றான்பதத்தைத் தோத்திரஞ்செய் வோன்புவியிற்
சூரனைவென் றான்பின்னே தோன்றினோன் - ஓரிலிந்த
நல்வேத மூர்த்தி நரவடிவே கொண்டுவந்தோன்
வல்வேத மூர்த்திசொந்த மைத்துனன் - மெல்லியலே !
எப்பொழுதும் நல்லறிவை யின்பமாய்க் கேட்டுமகிழ்
சுப்ரமணியன் தந்தையென்றே தோன்றினோன் - இப்பேர்
அழகின் பெருமாளை யன்பாகப் பெற்றே
மழலை மொழிதிருத்து மன்னன்- களவறியாச்
சுப்பிர மண்ணியனாம் துரைதன் மனமகிழ
வப்பனெனத் துதிக்கு மாசையான்-ஒப்பிலாச் 50
சண்முகவே லப்பருக்குத் தந்தையா னோன்புவியிற்
சண்முகவே லப்பர்பதம் பணிவோன்- மண்ணிற்
பெரியோன் அழகின் பெருமாளை யீன்ற
உரியோ னுலகனைத்து மோர்வோன் - அரிதான
தன்னடிமை யாகுமிந்தச் சங்கரமூர்த் திக்குவாழ்
வின்னமுத வும்பெயர னென்றிடுவோன் - மன்னனாம்
முத்துக் குமாரசாமி - மோகமுடன் பெரிய
வத்தனென வேதொழவு மாகினோன்- வைத்தகர
நத்தனாஞ் சங்கர நாரா யணற்குரிய
மைத்துனனா கும்பெரிய வாழ்வினான் - எத்திசைக்கும் 55
ஐயமிட்டே வாழும் அழகின்பெரு மாள்பெரிய
ஐயனென வேதொழவு மாகினோன் - மெய்யறிவெப்
போதும் பழகுகின்ற பூபதிபட் டமுடையான்
மாதுலனே யென்றுதொழ வாழுவோன் - சாது
அழகப்ப னாந்துரையு மன்பா யம்மானென்
றழகுற்ற தோத்திரஞ்செய் யய்யன் - பழகுங்
குரநகுலன் முத்துக் குமாரசா மிக்கே
தரமதிக மாமனென்று சாற்றும் - வரதன்
குருகைப் பதிவாழுங் கூரத் தாழ்வார்தன்
திருமெய்ச் சிறப்புந் தினமே - வருமென்கோ 60
சுற்றத்தா ரெல்லார்க்குஞ் சொர்ணமன்னங் கொடுத்துப்
பற்றுற்றே வைத்திருக்கும் பண்பினான்- சற்றும்
பசித்தெவர் வந்தாலும் பாலுடனே நன்றாய்ப்
புசிக்க வமுதருளும் பூமன் -- ருசித்தென்றுங்
கன்னனிவன் றனதுகை பார்த்திருக்க வென்றுஞ்
சொர்ணங் கொடுக்குந் துரைராசன் - மன்னுஞ்
செனனமதை வேரறுக்கத் தேடு மடியார்கள்
அனவரதந் தோத்திரஞ்செய் அய்யன் - - வினவிலென்றுந்
தற்பரமா குஞ்சதா சிவமூர்த்தி தனக்கு
முற்பொருட்குஞ் சங்கர மூர்த்தி - நற்குணவான் 65
அக்கிராகாரம் பண்ணிவைத்த வன்றுமுதல் பொன்னுலகில்
மிக்கான வாழ்வு மிகுதியாய்த் - தக்கவர்கள்
பொங்கி வளரும் புடைமருதூர் தன்னிலே
மங்களர்க ளான வடகலையார் - இங்கிவரில்
என்னுடைய தந்தை யிராகவ சாத்திரியார்
கன்னனிவர் கொடைக்குக் காணாது - முன்னைநூல்
கற்றதிலே நான்முகனுங் கற்கவறி யானதுபோல்
மற்றதெல்லாஞ் சொல்வானென் வர்ணித்துப் பொற்கொடியே!
(பெற்றோர் தவம் இருந்து பெற்றது)
இப்படியே வாழும்நா ளேதோ மதலையிலா
தொப்பிலாத் துன்பமவ ருற்றிருந்து - சுப்பையர் 70
(சுப்பையன் என்று பெயரிட்டது)
சன்னிதியிற் சென்றுவெகு தானங்கள் செய்துபெற்றே
என்னை[ப் பெற்றுச்] சுப்பையனே யென்றழைத்துப்-பின்னைக்
(குடுமித் திருமணம் ஆனது)
குடுமிக் கலியாணம் கூட்டினார் பின்பூணூல்
கடிதிற் பொருத்துக் கலியாணம்- முடிவித்து
(பள்ளியில் பல கலையும் பயின்றது)
வேண்டியதெல் லாங்கொடுத்து வேறேபள் ளிக்கிருத்தி
ஆண்டியப்ப வையனிடத் தாக்கினார்- பூண்டிருந்து
வேதமுத லுள்ளபல மெய்நூ லெலாமறிந்து
சாதனைசெய் தேவுரைத்தேன் தந்தைமுன்னே - நூதனமாய்ச்
சோதிடநூ லைத்தொகுத்துக் கேட்டே னுரைத்தார்
ஆதியிலே பாடம்போ லானதே-ஈதிலவாய் 75
சையிரண்டு மானதையென் னையனறிந் தேவேட்கப்
பையவெனக் கேபெண் பார்பரித்தான்-- மைவிழியே !
நானே புலர்காலை நந்தா வனந்தனிற்போய்த்
தானே சுசிகரமாய்ச் சார்ந்துபுதுத் - தேனார்ந்து
நாறும்பூ நாதருக்கே நண்ணுமென்று நானெடுத்து
நாறும்பூ நாதருக்கே நல்குவேன் - பேறு
கிடைக்கும் வழியையே கேட்பே னுலகோர்
திடத்தனிவ னென்றே சிறியேன் - நடைக்குத்
திருஞான சம்பந்த தேவரென வேத
ரொருவருமென் னோடெதிர்க்க வுன்னார்- பெருமையாய் 80
(திருமணமானது)
இப்படியே வாழும்நா ளென்னையர் வேலிக்
குப்பசாத் திரிதமையே கூட்டிவந்து- ஒப்பிலா
வென்மகனுக் குன்மகளை யேவேட்க வேண்டுமதற்
கென்னசெய்தி சொல்லுகிறீ ரென்றுரைக்க- அன்னவரும்
அப்படியே ஆமென்றே ஆலோசனை முடித்துச்
செப்பமாய்க் கலியாணஞ் செய்வித்தார் - அப்பொழுது
கல்லியாணஞ் செய்துகொண்ட கன்னிபே ரிந்திராணி
சொல்லாம் அப்பேர்த் தோகைக்கே- மெல்லத்
தடிக்க முலைசிவந்து தானே பரந்த
பிடிக்குவய சஞ்சாறு பெண்ணே - அடிக்கடிநான் 85
மாமனார் தன்னகத்தில் வந்துமயி லைப்பார்ப்பேன்
காமனா ரென்மார்பிற் கஞ்சமெய்வார் - சோமமுக
வேந்திழையுமே பன்னிரண்டு வயசில் திரண்டு
சாந்தி முடித்த தகப்பனார்-போந்த
குணவான மென்னையனைக் கும்பிட்டு நின்று
மணமான பெண்ணும் பூமானும் - இணையாக
என்னகத்தி லோராண் டிருக்க வியம்புமென்றார்
அன்னவரு மப்படியே ஆமென்றே- என்னையே
(மாமனார் வீட்டில் மருமகன் தங்குதல்)
பெண்ணகத்தில் நீயிருந்து பின்னைவா வென்றருளி
மண்ணிலுயர் தன்னூர்க்கு வந்தாரே - எண்ணமின்றித் 90
தட்டானைத் தேறுந் தறுவிலியுந் தன்மனையாள்
இட்டம் பிறர்க்குரைக்கு மேழ்மையும் - முட்டமுட்ட
வேட்டகத்தி லுண்ணும் வெறுவிலியு மிம்மூன்றும்
ஆட்டின் கழுத்தி லதரென்றே - நாட்டியே
முன்னோர்க ளோதினதை முன்னா னறிந்திருந்து
மின்னே! யவளை விரும்பியே - அந்நாளில்
அஞ்சாறு மாதமந்த வாயிழையோ டுங்கூடிச்
சஞ்சாரம் பண்ணினேன் தையலே ! - மிஞ்சவவள்
செய்த கலவிவகை செப்பத் தொலையாது
வைய்யி லடிக்கில் மனங்கோணாள் - பொய்யுரையாள். 95
(மணமக்கள் தண்டீசுவரியை வழிபடல்)
இத்திறமா மின்னோடு யானு மிருக்கையிலே
பத்தியாக காந்திமதி பாதத்தை - முத்தி
பெறவே தினந்தொழுது பேணுநா ளோர்நாட்
துறவான தண்டீசு வரியைப் - பிறகாரம்
வந்துதொழுது பின்போய் மாதுதீர்த்த மெடுத்தே
இந்துநுத லாய்கொண் டிருகண்ணிற் – சந்தோஷ
(மஞ்சள், முகத்தில் பட்டது)
மாகத் தடவினதி லந்தமஞ்ச ளென்முகத்தில்
ஏகத் திரமா யிவையறிவேன் – பூகொத்த
கந்தரத்தா யுன்னாணை கண்டமஞ்ச வீதல்லாற்
சிந்தையிற்றா னுஞ்சேரத் தேடவிலை- இந்தமஞ்சள் 100
(மணமக்கட்குள் பூசல்)
கண்டாளென் இந்திராணி கண்டவுட னேயசடாக்
கொண்டே யலர்முகங் குறுகி-வண்டாவி
தேதென்றாள் நானு மியம்பினே னீதெல்லாஞ்
சூதென்றே பூசலையுந் தோக்கியே- மாதேகேள் !
காலங்கள் மூன் றுங் கருத்தி லுணர்ந்தானுங்
கோலங்கண் டன்னங் கொடுப்பானும் - சாலவே
தன்கணவன் சொல்லைத் தலைசாய்த்துக் கேட்பாளுந்
திங்கள்மும் மாரிக்கு நேரென்றேன்- இங்ஙனே
சொன்ன கவிதையை யத்தோகை யறிந்திருந்தும்
என்னைமுகம் பாரா தேகியே-மின்னாள் 105
கடுத்தாள் படுத்தாள் தன்காலா லேவோங்கிக்
கொடுத்தாளென் நெஞ்சோடே கொண்டேன் - அடுத்தடுத்து
நல்வார்த்தை சொல்லவந்த நாரி பதமிரு
பல்வீக வேவந்தாள் பார்த்தினிமேல்—நில்லாது
(திருவுளச் சீட்டுப் போடுதல்)
கோபமென்றே கண்டுவெளிக் கொண்டு தகப்பனார்
தாபாத்திற் செல்வோமோ சாலவே-சாபம்
தவிர்க்கின்ற காசித் தலத்தே செல்வோமோ
நவித்தவசி நாம்போத னன்றோ- லவிப்பேதென்
தேவடி வாளடியிற் சீட்டெழுதி சாத்தியே
மாவீரகத் தாலெடுத்து வாசித்தேன்- காவிவிழி 110
(யாத்திரை செல்லத் துணிதல்)
மின்னே!கா சித்தலத்திற் மேவுவது நன்றென்றே
அன்னேரத் துத்தரவு மாகிவே-சன்னையாய்
வேட்டகத்தில் வந்துநித மெத்தவெடுத் தேனரங்கு
பூட்டைமுறித் துள்ளேயான் போகியே-வாட்டம்
மிகப்பொருந்தி யாத்திரைக்கு வேண்டியது கொண்டேன்.
தகப்பன்திசை நோக்கித் தாழ்ந்தேன்- செகத்துள்ளே
நிரலை பலநூல் கல்லாத் தலைமகனு
மரலை யெரிபோன் றயலாருஞ் - சால
மனக்கட் டில்லாத மனையாளிம் மூன்றுந்
தனக்கட் டமத்துச் சனியாய் – நினைத்தென்றே 115
(நூறு சிவத்தலங்கட்கு ஏகுதல்)
புண்ணியதீர்த் தங்கள்தலம் போயறிய வேண்டுமென்றே
எண்ணியே நச்சநல்லூர்க் கேகினேன் - மண்ணிலுயர்
செப்பறைக்குச் சென்றுதிரு வம்பல வாடி
முப்பொழுதும் போற்றினேன் மோகமாய்- ஒப்பில்
கழுகுமலைக் குப்போய் கந்தரிரு தாளை
முழுகித் தொழும்பணியு முற்றிப் - பழுதிலாச்
சங்கரனார் கோவிலிற்போய்ச் சார்ந்தங் கிருவடிவாஞ்
சங்கரநா ராயணரைத் தாழ்ந்திறைஞ்சி- மங்களஞ்சேர்
சீவில்லி புத்தூரிற் சென்றுதிரு மாலுடனே
தேவிநாச்சி யாரையும்நான் தெண்டனிட்டுப் - பூவிற் 120
திருப்பெருங் குன்றத்தே வாழ்செவ்வேள் பொற்பாதம்
விருப்புடன்பூ சித்துடனே மீண்டேன் - கருத்தாய்
மதுரையிலே சொக்கலிங்க மாதவரைக் கண்டு
புதுமலர்மே லாயும்வண்டு பூணும் - மதுவார்
திருமாலை வாங்கியவர் சேவடியிற் சாத்தி
இருபோதும் நானே யிறைஞ்சிப் பொருவிலா
மீனாட்சி யம்மனையும் மீண்டு தொழுதவட்குத்
தானாக்கித் தங்கவங்கிச் சாத்தினேன்- நானே
திருச்சிராப் பள்ளிக்கே சென்று தாயான
உருத்திரரைக் கண்டுமன மோர்ந்து --- விருப்பால் 125
திருவானைக் காவுக்கே சென்று சம்புநாதப்
பெருமான் அகிலாண்ட பேதை - அருள்பெற்றே
சீரங் பட்டினத்திற் சென்றுரங்க நாயகருஞ்
சீரெந்த நாளும்நிறை செம்பதுமீ - யாரென்றும்
அம்மைரங்க நாயகியு மன்பா யெழுந்தருளுஞ்
செம்மையையுங் கண்டு தரிசித்து - மும்மைவினை
தீர்ந்துதிரு வாரூர்த் தியாகர்பதம் போற்றி
ஓர்ந்துசிவ காமிசர ணுட்கொண்டு - தேர்ந்து
திருவீழி மிழலைக்கே சென்றரனைத் தேடிக்
கருவே ரறநானே கண்டு- பரவித் 130
திருப்பட்டி யூருக்கே சென்று பட்டீசர்
கருத்தைக் கண்டோடிக் கனிந்து- விரும்பத்
திருவா வடுதுறையிற் சேர்மாசில் லாதார்
முருகா மொப்பில்லா முலையுந்-திருநாள்தேர்
கொண்டருளும் போதுகண்டு கும்பகோ ணத்திற்போய்
இண்டையணி கும்பேசு ரனையும்நான் - கண்டு
திருவே ரகத்திற்போய்ச் சேவித்தேன் வேளைக்
கருவே ரறுமென்றே கண்டு - பொருவில்
திருமத்தி யார்ச்சுனத்திற் சென்று மருதப்பர்
இருவர் பாத மிறைஞ்சிப் – பரிவுற்றுச் 135
சீகாழி யூருக்கே சென்றரனைச் சேவித்தே
மாகாத லாலே வணங்கினேன் - தோகாய்
திருநல்லூர்க் கேகித் தெரிசித்தேன் தேவைப்
பெருநல் வழியைப் பெறவே - கருதிச்
சிதம்பரத்திற் கேகித் திருமூல லிங்கர்
பதம்பரவிப் பொற்சபையும் பார்த்து- விதம்பெறவே
ஐஞ்ஞூறு பொன்னை யளித்தே னடிபணிந்தேன்
மெய்ஞ்ஞான மேன்மேலும் வேண்டுமென்றே -மஞ்ஞாய்கேள் !
காஞ்சிபுரத் திற்போய்க் கண்டேனே காம்பரனை
வாஞ்சைமிக்கு கொண்டுபல்கால் வாழ்த்தினேன் – ஆஞ்சேய் 140
அதிகவிருத் தாசலத்தி லன்பாக முத்தா
நதியுமுது குன்றரெனும் நாத- நிதியைத்
தெரிசித்தேன் பின்பு திருக்கா ளத்தி
எரிகண்ணான் காளத்தி யீசன் - பொருவிலா
ஞானப்பூங் கோதையையும் நான்கண்ட னன்பணிந்து
ஞானச்சார் பும்பெறவே நாடினேன் - தானன்பின்
கிட்டிணா நதியிற்போய் கேடிலா தாடியபின்
கிட்டிணா கோதாபுரிக் கேகினேன் - சட்டமதாய்த்
தீர்த்தமாடி யமுனைத் தென்னதியில் மூழ்கியே
பார்த்தே னென்பாவம் பறந்ததையும் - நோத்தவழி 145
சென்று சரையுவெனுந் தீர்த்தமதில் மூழ்கியே
அன்றுதுடைத் தேன்வினைக ளத்தனையும்- நன்றுதருங்
கங்கை நதிதனைப்போய்க் கண்டேனென் கண்குளிர்ந்தேன்
அங்கதனில் மூழ்கிநன்னீ ராடினேன்- மங்களஞ்சேர்
காசிவிசுவ லிங்கர் கன்னிவிசா லாட்சியையும்
மாசிமுதல் தைவரையும் வாழ்த்தியே-பூசித்துத்
தான தவ மென்றுகன்னி தானமென்று சரணையென்று
மானதிரு வாபரணம் மங்கியென்றும்- நூதனந்தீர்
ஆலையங்க ளென்றுபதி னாயிரம்பொன் நாங்களந்தக்
காலைகங்கைக் காவடியுங் கைக்கொண்டு - சோலை 150
செறிந்த திருநல்லூர் திருநகர்க்கு வந்து
பிறிந்துதிரு வொற்றியூர் பேணி-அறிந்து
விருப்பமுடன் நானே மின்னே பணிந்துதிருப்
பெருந்துறைத் தலத்திற் சேர்ந்தே- உருக்கமாய்
ஆளுடையார் வீற்றிருக்கு மாலையத்திற் சேர்ந்தவர்பொற்
றாளுறநான் கண்டு தலைபணிந்து - நாளும்
மருப்பொருந்துஞ் சோலை மலையி லழகர்
ஒருத்தியாம் லட்சுமியு மொன்றாய்-விரும்பத்
திருவிழாக் கொண்டருளச் சேவித்தேன் பின்பு
திருவலஞ் சுழிதனைச் சேவித்தேன் - உருகி 155
நடந்துரா மீசுரத்தில் நான்ராம லிங்கர்
மடந்தை பொற்பதமாம் மாதைத் - திடம்பெறவே
வந்து தொழுதுகொண்டு வந்தவொரு காவடியை
அந்தவிரா மீசுரனுக் காக்கியே - பின்பு
வயிரவ பூசைக்கே வடமாலை சார்த்தி
அயில்விழியே ! பாம்ப னகன்று- வெயில்ல
நவபாஷா ணத்திலே நான்தீர்த்த மாடிப்
பவமேகக் கண்டேன் பதுமீ! - தவமார
திருப்புல்லா ணிக்குவந்து சேர்ந்து பள்ளிகொண்டோன்
திருப்பாதங் கண்டு தெரிசித்தேன் - விருப்பாய் 160
உத்தர கோசமங்கை யுற்றொருநா ளங்கிருந்து
அத்தா மங்களே யடிபணிந்தேன்-நத்தியே
ஆற்றூரிற் சோமலிங்க ரம்மையெங்கள் சோமவல்லி
பாற்றூய னாகப் பணிந்தேன்-ஈற்றிலே
(யாத்திரை முடிவு)
சங்குமுகத் திற்போய்த் தானமுஞ்செய் தந்நேரம்
அங்கணாயக் கர்மடத் தாக்கியே - மங்காய்!நான்
பார்த்தேன் செலவும்யாம் பார்வரவு மெல்லாம்
சேர்த்தேன் சரிகண்டேன் செல்வியே! - தீர்த்தச்
செலவி லிதுவரையிற் சின்னக்கா சில்லை
உலகம் பழிக்க வுடலிற் - பலவாய்த் 165
துன்பத்தை மேவினேன் தோகாய்!இவ் வையாண்டில்
இன்பத்தை மேவவினி யங்கே-யன்புற்ற
வாத்தியார் தன்னகத்தில் வந்திருந்து கொண்டுவெகு
நேத்தியாய்ப் பேணினேன் நேருடலை- வாய்த்ததேன்
(நாரண வாத்தியாரின் அகம் செல்லல்)
நானினைந்து மாசிவிழா நாட்கொடியேற் றன்றுவள
மானதிருச் செந்தூரி லன்றுவந்து - மானபரன்
நாரணவாத் தியாரகமே நன்றென்று சென்றுமனப்
பூரணமா யங்கவரைப் போற்றினேன் - வாருமிரும்
எங்கே யிருந்துவந்தீ ரென்றா ரியம்பினேன்
அங்கேயென் செய்தியெல்லா மன்பாக- மங்காய்!பின் 170
கங்கை யெடுத்தவர்தன் கைக்கொடுத்தே னன்றுமுதல்
எங்கள் குடிக்குநன்மை யெய்தியதே- அங்கவரும்
அன்பாக வாங்கியவர் புரோட்சித் தெவர்க்கும்
பின்பே கொடுத்துப் பிரியாமல்- என்பாலே
ஓராண் டிருமென் றுபசரித்தா ராமென்று
நேராம் பரகதிநெஞ் சில்வைத்துச் சீரார்ந்த
(திருச்செந்தூர் ஆண்டவனை வழிபடல்)
கந்தவரையு மெங்கள் சண்முகநாதன் கொலுவும்
அந்தவத னாரம்பமாங் கடலும் - இந்தழகைச்
சண்முக விலாசமதிற் சார்ந்துகண்டே னப்பொழுதே
எண்ணரும் பவக்கடல்விட் டேகினேன் - பெண்ணே! 175
வதனாரம் பமுதலாய் மாவிருபன் னானாங்கு
சததீர்த்த மாடித் திரும்பி - விதவிதமாய்
அஞ்சாறு பொன்தான மவ்விடத்தே செய்துமிக்க
பஞ்சாட்சரஞ் சேவித்துப் பண்பாக -- விஞ்சையருள்
சண்முக நாதனிரு பாதத்தைத் தொழுதுடன்போய்
விண்ணவரும் மண்ணவரும் வேண்டுகின்ற - பண்ணவனாஞ்
சுப்பிர மண்ணியர் துணைத்தாளைப் போற்றியதற்
கப்புறமற் றாலையங்க ளானவெல்லாந்- தப்பாமல்
ஆறுகா லங்கள்தொழு தன்றுமுத லானையின்மேல்
ஏறும்நா லாந்திருநா ளின்வரையும் – வேறுநினை 180
வில்லாம லிப்படியே யேத்திடிலஞ் சாந்திருநாள்
வல்லான கலாபமயி லேறி- எல்லோருங்
காண வெழுந்தருளக் கண்டுபின்நான் வந்துமனம்
பூணவே வேதம் புகன்றுவரில்- நாணமுறும்
மின்னே!பொல் லாக்காலம் வேறே நினைவுதந்து
முன்னே யிழுத்ததுநான் முன்போனேன் – அந்நேரம்
(நடனமாதைக் கண்டு, கருத்தழிதல்)
சன்னிதியிற் றாதியர்கள் ததிங்கத் ததிங்கிணத்தோம்
என்ன நடிக்கையிலோ ரேந்திழையை - - மின்னே!யான்
நண்டுசிப்பி வேய்கதலி நாசம்வருங் காலமதில்
கொண்ட கருவழிக்குங் கொள்கைபோல் - ஒண்டொடியீர்! 185
போதந் தனங்கல்வி பொன்றவருங் காலமதில்
மாதர்மேல் வைக்கு மனமென்றே --ஓதல்போற்
கண்டேன் மருண்டேன் கருத்தழிந்தேன் மாலால்வாய்
விண்டேன் மதர்த்தேன் விதிர்த்தேனே - கொண்டைச்
சொருக்கின் சொருக்கினுள்ளே தொங்கலையுங் கண்டேன்
கருத்து மயங்கிக் கரைந்தேன் - விருப்பமுடன்
நெற்றியிலே யிட்டபொட்டின் நேர்த்தியைக்கண் டப்பொழுதே
சற்றுமடங் காவிரக சன்னதமாய் - முற்றும்
பரதப் பழக்கமுறும் பாவைநுதல் கண்டேன்
பரதவித்து நின்று பதைத்தேன் – சரமநேர் 190
விழியின் மருட்டுமது மீண்டுவரு மானின்
தொழிலதையுங் கண்டறிவைத் தோற்றேன் – தெளிவுநவ
ரத்தினத்தோ டிட்டிருக்கும் ராசகொலு வையென்கண்
பெற்றவிடத் தேகாமப் போய்கொண்டேன்-சற்றிணையில்
பல்வரிசை கண்டிவள்தன் பாதம் பணிவதன்றி
நல்வழியொன் றில்லையென்றே நாட்டினேன்- மெல்லவே
நாளிற் கனத்தமுலை நாம்பூசை பண்ணுகின்ற
சாளிக் கிராமமென்றே தான்கொண்டேன் - கேளிக்கை
ஆடுகையி லேயசைக்கும் அங்கைதனை யும்பெரியோர்
நாடுமபை யத்தமென்றே நான்கொண்டேன் - பாடுவர்கள் 195
சொற்கடங்காப் பேரழகு தோகை வயிறுசங்கப்
பொற்பலகை யென்றுமனம் பூரித்தேன்- மற்றதன்மேல்
ஓதிரதி பங்கனம்போ! வுந்திரோமத் தொழுங்கோ!
மாதிரத வஞ்சிராணி வாய்த்ததோ !- தூதியே !
மின்னிடையைக் கண்டு மிகவு மயங்கியவள்
தன்னடியின் கீழே தலைகுனிந்தேன் - வன்னமணி
மேகலையைக் கண்டு மிகுசோப மாகியெந்தன்
ஆகமனைத் துங்குலைந்த தங்கனே - தோகை
துகிலுமதிற் சரிகைச் சோதியுங் கண்டாங்கே
அகிலம் நகைக்க மதியானேன் - சகியே நீ ! 200
கண்டா லுடன்மயக்குங் காலடிகண் டேகாமங்
கொண்டாலே(லே) சல்லவெகு கோட்டாலை- எண்டிசையோர்
கண்ணை மயக்குமுடற் காந்தியென்றே கொண்டதல்லால்
என்னை மினுக்கமென்றே யானறியேன் - பெண்ணே!
நடிக்கும் பரதவிதம் நட்டுவ னண்ணாவி
துடித்துப் பயிற்ற லறியேன் - துடிக்கொப்
பகில மயங்குமவ ளிடையின் தேய்வைத்
துகிலிறுக்க மென்றவர் சொன்னார் --- சகியே ! 205
சொருகுகுழ லத்தனையுந் தோகைகுழ லன்றிக்
கரிய கவரியென்றே காணேன் - திருமேனி
வாடைக் குணத்தைமயி லுடலவர்க்கென் றிருந்தேன்
மேடைப்பூ லான்பொடியாய் விண்டாரோ- காடைக்
குரல்கூவுங் கோதைசித்திரக் கொட்டகை யுள்ளானாள்
பரலோகி போல்நின்றேன் பாங்காய்- அரகரா
வென்று தொழுவோரு மிருமைமயி லோன்கொலுவும்
நன்றுபணி மாறுகின்ற நேர்மைகளுஞ் - சென்றுசென்று
பார்ப்பா ரவரவரே பைங்கிளியை நான்பிரியேன்
கூர்ப்பென் றிவையந்தக் கோதைதன்மேல் - தாக்குறவே
என்னறிவும் நன்றா யிதமகிதம் பார்க்கின்ற
நன்னெறியு மவ்விடம் நகைக்கிடமாய்- முன்னமவள் 210
காலசைக்கி லென்னுடைய காலசையுங் கையுடனே
மேலசைக்கி லப்படியென் மெய்யசையும்- ஆலம்
(நடனமாது, புன்னகை புரிதல்)
நிகர்விழியாள் நாட்டியத்தில் நின்றாடும் போது
நகைபுரிந்தா ளென்முகத்தை நாடி - நகைபலவாய்
(அம்மாதின் புன்னகையைக் கண்டு, தவப்பயன் எனல்)
நான்பூண் டிருந்ததெல்லாம் நாரிகண்டோ ? என்மயலைத்
தான்தீர்க்க வேண்டுமென்ப தாந்தயவோ ?- வான்புகுமென்
முன்னவரே செய்ததவ முற்றிவரும் பயனோ ?
பின்னைநான் காசிகண்ட புரமோ?- என்னவோ?
என்றே நினைத்ததல்லால் என்கையிலோட் டைதரவே
இன்றேபார்த் தாளெனநா னெண்ணாது – சென்றே 215
விளக்கிற் பறந்துவிட்டில் வீழ்வதுபோல் நானே
கிழக்குமேற் காயவள்முன் கெர்ச்சித்து- உழக்கியே
நானடந்தேன் போகவர நாரிகண்டா ளோயிலையோ
வானவர்சே னாபதியை வாழ்த்தாது-போனதெல்லாம்
சந்தோஷ மானதல்லாற் தாதியர்கள் காணவிங்கு
வந்தே னலைவதேன் வைத்துணரேன்- இந்தமையல்
(நடனமாது தன்வீடு செல்லல்)
கொண்டலைந்தேன் நான்மிகவுங் கோதாயவ் வேளையிலே
வண்டுவிழி யார்கோயில் வாயில்விட்டுச்- செண்டைப்
பிடித்தகர மானமற்றப் பெண்க ளெல்லாங்
கூடியுடுச் சந்திரனை வளைவதொத்தே - அடுக்கவளைந் 220
திவ்வாறே சென்றாரவ் வேந்திழைவா யில்வரையும்
வெவ்வேறே யேகினர்பின் வீடதனில்- அவ்வேளை
இவ்வளவுங் கண்டே இவள்நமையுங் கூடுவளோ?
அவ்வளவும் நாம்போ யறிவதெனுங்- கவ்வையினால்
பார்த்தறிந்து கொள்ளப் பருபடைகொண் டவ்வாயில்
சார்த்திவிட்டால் மோசமென்று தான்போனேன்- கோர்த்தமுத்து
(நடனமாதின் வாயிலில் தோழியைக் கண்டு வினவல்)
மாலையுடன் பொன்னின் வடமே புனைந்துவன்னச்
சேலைதரித் தேதிலதந் தீட்டியதோ?- வேலைப்
பழித்தவிழி யாளோர் பாவைதா னாங்கென்
மொழிக்கடங்காச் சுந்தரமாய் முன்னே - வழித்தலையில் 225
வந்தவளை நான்பார்த்து மாதே!நீ யாரென்றேன்
இந்தமயி லினடிமை யானென்றாள் - அந்தமின்னைத்
துன்பமதில் வந்துயிரைத் தூக்குமெம தூதனைநான்
இன்ப மருத்துவனா யெண்ணுவபோல் – அன்பினளாய்
(தலைவனிடம், தோழி தலைவியை வியந்து கூறுதல்)
எண்ணி யுனக்குமுன்னே யேகினப்பெண் ணாரெனவப்
புண்ணியவாட் டிபுகன்ற பொய்யைக்கேள் ! - விண்ணில்வாழ்
இந்திராணி யென்றுமாதி யேந்திழையென் றுந்திருவாஞ்
செந்தா மரையுறையுஞ் செல்வியென்றும் - இந்தவகைப்
பெண்களெல்லாம் முன்புவியைப் பேணிவரிற் கண்டநாரி
கண்குளிர இம்மாதைக் கண்டபின்பு- பண்பான 230
வெண்கலத்தைக் கண்டோர்கள் வேண்டி முனம்விரும்பு
மண்கலத்தின் மேல்மனது வைப்பரோ ?- ஒண்பொருளாம்
பத்தரைமாத் துப்பசும்பொன் னையுங்கண்டு முன்போல்
பித்தளையை யேவிரும்பும் பேருண்டோ ?- உத்தமரே!
ஆற்றிலே வெள்ளம்வந் தாலாருஞ் சகதிகொண்ட
ஊற்றிலே நீரெடுத்து முண்பாரோ ?-- போற்றும்
மருக்கொழுந்தும் பிச்சியிரு வாட்சிமலர் கண்டோர்
எருக்கின்பூச் சூடுவரோ? இன்னும் - பெருத்தநிலைக்
கண்ணாடி வந்திருந்தாற் கங்கையையோர் செம்பில்வைத்தே
உண்ணாடித் தன்னழகை யோர்வாரோ?—மண்ணிற் 235
சலதாகக் கொண்டவர்க்கே செவ்விளைநீர் வந்தாற்
குலமாகும் வேம்பிநெய் யாகுமோ?- அலகிலா(து)
இவ்வுவமை போல்விண்ணி லேந்திழையோ ரையிகழ்ந்தார்
அவ்வுலகம் விட்டுவரா ரன்றுமுதல்- நவ்வியிவள்
இப்புவிக்கு நாயகமா மெல்லோர்க்கும் நல்லமிர்தந்
தப்பறுங்கா மப்பிணிக்குச் சஞ்சீவி !- ஒப்பிலாக்
காளைக் குமாரருக்கே கண்மணி ! அதுவல்லால்
பாளைக் குழலியர்க்கும் பஞ்சாமிர்தம்!-ஏழைக்
கிரங்கு மமுதகுண வேந்திழை யாமையர்
வரங்கள் தருமெங்கள் மயிலாந்-- துரங்கர்பணி 240
நிற்கு முதலியார் நேமிக்குங் கட்டளையாள் !
சற்குண குணாலத்த ளிப்பாவை! - கற்றவர்க்காங்
கல்விக் கடலாம்! கலவிசெயுங் காமுகர்க்கே
சொல்லுக் கடங்காச் சுகங்கொடுக்கும் -- நல்லவள்காண்!
இக்கோயில் தாதியர்க்கே யாங்கள் முதற்குடியாம்!
எக்கோணத் திற்குமெம்சீட் டேறுமிப்போ!- மிக்கான
காந்திகொளும் மேனிக் கயல்விழியாள் தன்நாமஞ்
சாந்தகுண மோகன சவுந்தரியாம்!-போந்தவரே !
(தோழி, தலைவனின் ஊர்பேர் முதலியன வினாவல்)
ஆதியிலே நீங்களிருப் பாகுமூர் எவ்வூரில்
வீதியிலே வந்தருள வேண்டுவதென்?- கோதிலரே ! 245
எங்கேயோ உங்களையும் யான்கண் டிருப்பதுண்டே
துங்கனே உம்மூர்பேர் சொல்லென்றாள்- சங்கையிலா(து)
(தலைவன், ஊர்பேர் முதலியன கூறல்)
இப்புவியில் மிக்கானவென் அப்பாவின் பேருஞ்
சுப்பையனென் றேன்பெருந் தூதியே ! - செப்பமாய்
நானிருந்த ஊருமிந்த நங்கையரை வேட்டதுவுங்
கானிடங்கள் சென்றதையுங் காவியம்போல் - வாய் நிறைஞ்சுந்
தூதியர்முன் சொல்லியுங்கள் தோகைமே லாசைகொண்டே
வீதிதனில் வந்ததென்றே மெய்சொன்னேன்- பாதிமதி
(தோழி, தலைவியின் அருமைசாற்றல்)
ஒப்பாகி யந்நுதலா ளோதுமதி வஞ்சகத்தைத்
தப்பாமல் கேள்நீ! சந்தனமே! – செப்பாந் 250
தனத்தாளை நீர்கூடுந் தன்மையோ? அன்றித்
தனத்தாலே வெல்லுந் தரமாமோ?- மனத்தால் நீர்
வெண்கலத்துக் கொத்தவிலை கொடுத்துப் பொன்னை
வொண்கலத்தைக் கொள்வீரோ? ஏதுமென - நண்பாய்!
அரைக்காசிற் கொண்ட பரியாற்றைத் தாவாதென்
றுரைப்பா ரதையறியீ ரோநீர்-தரைப்பாலே
அத்தைமக ளோயிவள்தான் ? ஆரும்விரும் பாச்சரக்கோ?
சுத்தவிலை யோ?உமக்குச் சொல்லுங்காண்! - உத்தமரே!
அன்புவைத்தீ ரென்றா ளதிருபாற் றினமே
பின்புமவ ளென்னையும் பேணியே – கன்றைவிட்ட 255
ஆப்போல வேமறுகு மையனே ! அங்குசொல்லிப்
பார்ப்போ மெனப்பகர்ந்த பைங்கிளிமுன் – வாய்ப்பாகும்
(தலைவன், தலைவியின் எளிமை சாற்றல்)
ஆலம்போல் நீலவிழி யங்கயற்கண் மாதரசே
காலம்போம் வார்த்தைநிற்கும் கண்டாயே! - சாலப்
பசித்தார் பொழுதும்போம் பாலுடனே அன்னம்
புசித்தார் பொழுதும்போம் போமென்று- இசைத்துமுன்னோர்
(தலைவன், தோழியிடம் பணையம் வினவல்.)
சொன்ன கவிதையைநான் சோராது உரைத்தவுடன்
என்னசெய்ய வேண்டுங்கா ணென்றுரைத்தாள்- அந்நேரம்
பெண்ணே! பணையமென்ன? பேதகமில் லாதுரைத்தால்
எண்ணே னெடுத்தளிப்பே னென்றுரைத்தேன்- பெண்ணார் 260
(தோழி, தலைவனுக்குப் பணையங்கூறல்)
அமுதையுமித் தாராள மான மனதாற்
சமுசயமில் லாதணைவீர் சாம்!- கமுகிணைந்த
கந்தரத்தா ளைப்புணருங் காமுகரீ யும்பணையஞ்
சந்தனத்தாற் கெண்பதுபொன் சாதிரைக்கே-நந்தா
பரிசா ரகமாதர் பற்றுவர்பொன் நூறு
பிரியாத் தோழியஞ்சு பெண்கள் -- விரியாத
மின்னலா யம்மாதர் வேண்டுவர்பொன் ஐஞ்ஞூறே
அன்னையர்க்குச் சேலைக் கைம்பதுபொன்-- கன்னி
குளிக்குங் களபவிலை கொஞ்ச முப்பதாம்பொன்
தெளிக்கும் பனிநீர்ப் பத்தெண்பொன்-கிளிக்குரைசொல் 265
மின்னாள் தனக்கென்றே வேறே கொடுப்பதெல்லாம்
பொன்னா யிரங்கிழியே ! போதுங்காண் ! - முன்னேயிவ்
வாயிரெத்தெண் ணூற்றோடே ஐம்பதுபொன் னுங்கொடுத்தாற்
றோயிதத்தில் வேணசுகம் பெறலாம் – வாயினிக்க
(தலைவன் ஈராயிரம் பொன் ஈதல் )
உண்ணலா மின்னிதழி னூறுமமு தையென்றாள்
எண்ணியீ ராயிரம்பொன் ஈந்துபின்னுங் - கண்மணியே!
காப்பாய்நீ! உன்னிரண்டு கைப்பிடிநான்! காவாயேல்
தாப்பாரு மில்லையென்றேன் தாதிசொன்னாள் - பார்ப்பார்க்கு
வாய்ப்போக்கே னென்றவச னப்பழமை யுண்டே
போய்ப்பார்க்கே னென்றே புகன்றுநின்றாள்- வேய்க்கழுத்தாள் 270
(தலைவன் தோழியிடத்து அடையாளங்கேட்டல்)
சம்மதித்தால் கால்கொலுசுச் சங்கிலியை நீவாங்கி
நம்மிடத்தில் வாவென்றேன் நாரியே ! - விம்மிப்போய்க்
(தலைவன் தானே நினைந்து வருந்துதல்)
கெட்டகுடிக் கேற்றதெப்பங் கிட்டினதாய்ச் சொன்னாளோ?
கட்டிநிதிக் காரனென்றே காட்டினளோ ?- இட்டமாய்த்
தேடியமுள் ளுத்தனியே தேனேயுன் காலிலிப்போ
ஓடிவந்து பாய்ந்ததென்றே ஓதினளோ ?--கோடிதரஞ்
சென்றாடுந் தீர்த்தமுனைத் தேடி வலியவிங்கே
நன்றாக வந்ததென்றே நாட்டினளோ?- அன்றிக்
குரங்காட்டங் கொள்ளவிந்தக் கோமாளி யாமென்று
இரங்கா ளியம்பியோ ! யென்னோ ! – வரம்பாக 275
நாலாறு நாழிகையாய் நாரிவரக் காணாமல்
வேலாயு தன்பதத்தை வேண்டியே - நூலாம்
இடையாளுஞ் சம்மதித்தா ளென்றசொல்லைக் கேட்டால்
கிடையாத ரத்தினக் கிரீடம் - அடையாளம்
ஆகத் தருவாளென் றாணையிட்டே னப்பொழுதே
மோகச்சகி யும்என்கண் முன்வந்தாள் – தாகத்தால்
(தலைவனிடம், தோழி தூது சென்றுவந்ததைக் கூறல்)
பாங்கிநீ ! சென்றசெய்தி பாலோ சீலோவெனநான்
ஏங்கினேன் பாலென் றியம்பியே - தீங்கிலாத்
தூதுசொலிப் பட்டசலஞ் சொல்லத் தொலையாது
போதுமெனக் கையனே போதுமென்றாள் - ஏதுசெய்தி 280
என்றே பதறிவந்த யென்றூதி யம்மைபாற்
சென்றே நடந்தசெய்தி செப்பினேன்-அன்றேடீ
போந்த வுதாரனுக்குப் பொன்றுரும்பு சூரனுக்குச்
சேர்ந்த மானஞ் சிறுதுரும்பு - ஆய்ந்த
அறவனுக்கு நாரி யறத்துரும்பு நெஞ்சில்
துறவனுக்கு வேந்தன் துரும்பு - முறைமையாய்
ஆய்ந்தவரே! இக்கவிதை யாதியிலே சொன்னதெல்லாம்
ஏந்திழையே ! கேட்டிருப்ப தில்லையோ?- சேர்ந்தபுகழ்
ஆடவராய் வந்தா லழைத்துவர வேண்டுமல்லாற்
கூடவும்நீ சந்தயமாய் கூறுவதேன் ?- மூட 285
மதியாய் ! பணத்தைமுன்னே வாங்கிவர லாமோ?
புதிதாயிப் போபணத்தைப் போற்றேன் - சதிகாரி !
துன்மதியால் வாங்கிவந்த சொர்ணமதை நீகொடுத்து
நன்மதியா னையனேபோ நாரியென்றே- அன்னையார்
இப்படியே சொன்னா ளிதோபணத்தை யேகொடுத்து
முப்புரிநூ லோனையுன்றன் முன்னமே - செப்பமாய்க்
கூட்டிவா ரேனம்மா கோபிக்க வேண்டாமுன்
பாட்டிலே நீயிரென்றுன் பைங்கிளிபால்- நாட்டமாய்
வந்தே னவளும் வந்தமாப் பிள்ளையெங்கே யென்றாள்
இந்தா பரிச மிணங்கியவர் – தந்ததையுன் 290
அம்மை வாங்கேனென் றவர்பாற் கொடுத்திடென்றாள்
சம்மதித்து வாங்கான் தவிப்பாய்நீ - தும்மிடத்திற்
சொல்லவந்தே னென்றதற்குன் தோகையவர் வாரமட்டும்
மெல்லவவர் பொறுக்க வேண்டுமென்று - சொல்லிப்
பணமுடிப்பை வாங்கிப் பருந்தனத்திற் சேர்த்து
மணமுடிக்க வந்த மதனைக் - குணமாகக்
கூட்டிவா வென்றவளே கூறித்தந் தாள்கொலுசென்
றாட்டியதி ரூபரத்தின மானசகி – காட்டினது
(தலைவன், தோழியிடம் தான் மகிழ்ந்துகூறல்)
சீதையெனு மம்மையன்று தேங்கிச் சிறையுறுமப்
போதையிலும் மெய்ப்பரதன் பூமியிலே - காதலினால்
அக்கினியை மூட்டி வலம்வருங்கா லந்தனிலும்
மிக்க வனுமன் விரைவாக- முக்கியர்
திருவாழி காட்டிநின்ற செய்கைபோல் தம்பி
பெருநாக பாசம்பெறுங்கால் - அருகாக
வந்த கருடனைப்போல் மாதேயவ் வேளையெனக்
கந்த மகிழ்வுபோ லானதே- சந்தமுறும்
(தலைவன், தலைவியின் கொலுசு பெற்றுத் தலைவியிடம் சென்றது)
அக்கொலுசைக் கைநிறைய அன்பாக வாங்கி யெந்தன்
இக்கணிணைக் கேயணிந்தே னென்மயலால்- வெட்கமிலா
நானே படும்பரிசை நாரிகண்டு வேட்டையின்று
தானே பலித்ததெனச் சந்தமுற்று - மானெய்வாள் 300
தேடித் தவிப்பாளே சீக்கிரம்வா ருங்கோவென்
றாடிப் புளகித் தணிமுலையாள்-வேடிக்கை
ஆகவே முன்னடந்தா ளந்தமின்னை நான்றொடர்ந்து
போகவே பின்வந்தோர் போற்றச்சீ-தாகம்போல்
(தாதியர் புடைசூழ்ந்து பரிகசித்தல்)
மச்சான்நீ வாருமென்று மான்போலக் கிட்டவந்து
முச்சாணீ ளத்திழுத்தேன் முன்னின்றாள்-அச்சணத்தில்
அன்புடையாள் போலொருபெண் ணத்தானே ! வாருமென்று
என்பிறவீ! வாருமென்றா ளேயொருபெண்- முன்பாக
வந்துமறித் தண்ணாவி1 வாருமென்றா ளெயொருபெண்
இந்துமுகப் பாவைய ரிரண்டுபேர்- சந்தோஷ 305
மாகவந்தே தம்பீ!நீ ராருடன் வந்ததென்றாள்?
தாகமும்போ லோர்கிழவி தானும்வந்து-மோகமாய்ப்
பேரனார் வந்தீரோ ? பெண்ணா யென்றுரைத்தாள்
தூரவுமோர் கன்னிவந்து தூண்மறைவில்- சாரநின்று
(தலைவன் தாதியர்கட்குப் பதில் கூறி அமர்தல்)
மாமனாரே! வாரும் வாருமெனக் கேட்டாள்
ஆமம்மா வென்றிவர்கட் கோதியே - காமமாய்
நூறுநாய் கூடியொரு நொண்டிமாட்டைக் கடிக்க
வேறுபுக லின்றியொரு வீண்செடியின் - தூறு புகுந்
தப்பொழுது வெம்புலியொன் றங்கே கிடந்துகண்டு
தப்பவிடா மற்பிடிக்கத் தான்பதுங்கும் - அப்படிபோல் 310
வீணிகளாய்க் கூடியெனை வேதனையே செய்யவங்கே
நாணமிலா மாமிகண்டு நாணியொரு - கோணமதில்
ஓடிப் பதுங்கிடநா னுள்வீட்டில் போய்புகுந்து
வேடிக்கை யாய்தடத்தில் வீற்றிருந்தேன் - கூடியே
வெண்சா மரையும் மயில்விசிறி நாலாறும்
பண்பாஞ் சிறுவிசிறி பத்துடனே - தண்சேரும்
பன்னீர்க் கலசமெடுப் பித்துவிக்கக் காளாஞ்சி
மின்னார்க்குங் கண்ணாடி வேணவதம் - பொன்னால்செய்
கைவிளக்கே நான்கு பக்கம் பரவுமஞ்சு
மெய்வியர்த்தா லொன்றிரண்டு வெட்டியுடன் - அய்யோ 315
அடப்பமொரு நான்கு மாக வந்தவன்
மடக்கொடியார் கொண்டு வளைந்தாற் - கடப்பவரார் ?
இந்திராதி போகமதற் கெய்தாதே டீமயிலே !
இந்திராணி யித்தனையு மேற்குமோ ? - சந்தோஷங்
கொண்டே நாம் நம்மாதர் கூடுங் கொலுவிருப்பைக்
கண்டேயம் மாமிவெகு காதலாய்ப் - பண்டே
பழகியிருந் தாள்போலும் பாதகிதா னேநெஞ்சில்
அழகி வாருங்கோ வென்றேனென் - றழகீரும்
இந்தமொழி நீயங் கியம்பென்றாள் வந்தே
நேற்றந்த மொழிகேட்டு வாற்றினேன் - சிந்தையிலே 320
அன்புபோற் பொன்கமல மஞ்சிலரி பிளவுந்
தின்பர் பொருட்டிலையுஞ் சேர்த்துவைத்தே – என்பால்
(தாய், தலைவனிடத்துப் பசப்பிக்கூறுதல்)
கொடுத்தனுப்ப நானதுகைக் கொள்ளுங்கால் மேலுநம்
இடுக்கணைச்செய் மாமிசொல்வா ளின்னும் – அடுத்துப்
பழகவிலை யென்றோநீர் பக்கவச னத்?தோ
சலதிவந்த தோமுன்னிங் கேசுவாமி !-உளமிவளைப்
பார்ப்போ மெனநினைந்தோ? பையொடுபொன் தந்தவரைச்
சேர்ப்போமென் றோநாங்கள் தேவரீர் - வார்த்தைசொலுந்
தூதியே ! உங்களையுஞ் சொல்லி நிறுத்தினளோ?
மாதின்மேல் நீவைத்த வாரமிதோ? – ஆதிமுதல் 325
என்னையா! உங்கள்குண மிப்படிதா னோ?அலது
முன்னமுங்கள் தாயார் மொழிமதியோ? - தன்னிலே
நாமாகப் போகிலுங்கள் நங்கைமதி யாளெனவோ?
வீமா!நீ ராரேனும் வேற்றாட்கள்- தாமாக
இங்குவரக் கண்டதுண்டோ ? ஏதோ யிவையறியேன்!
உங்கள்மன வெட்கமோ? ஓதுவீர் !- அங்குனது .
(தலைவன், தாய் பசப்பலுக்குப் பதிலிறுத்தல்)
தூதுவிட்ட செய்தியென்று சொல்லிப் பசப்பினாள்
ஏதுமில்லை வெட்கந்தா னென்றேன்நான் – கோதில்
(தலைவனிடத்து, தன் மகள் கண்ட சகுனம் விளம்பல்)
பழநழுவிப் பாலிலே பாய்ந்ததுபோல் வந்து
மிளமறிக் குளையறியா தென்ன - அலறிநின்றீர் 330
இங்குநீங் கள்வரவும் மெல்லவே கண்டகுறி
சங்கையின்றி நான்புகல்வேன் சத்தியமாய் - நங்கையிவள்
(மோகனவல்லி, கோவிலுக்குப் போகும்போது கேட்ட நற்குறி)
இன்றுதையங் கோவிலுக்கு ளேகிலு மசரீரியும்
நன்றுனக்கின் றேவருமிந்நா ளெனவே - நின்றறிந்து
சன்னிதியிற் போகின்மணிச் சத்தமொன்று கேட்டுடனே
என்னவதி செயமென் றெண்ணியே - கன்னிதான்
நின்றுதொழும் போதுதிரு நீறுஞ் சந்தனமும்
அன்றுநயி னாரணிந்த வாரமுமே-சென்றறிந்து
(கோவிலினுள் சாமி சன்னிதியில் கேட்ட நற்சொல்குறி)
நம்பியார் கொண்டுவந்திந் நங்கைகரத் தேகொடுக்கில்
தம்பிரா னாமொருவர் தம்போக்கில் – உம்பருக்குங் 335
கிட்டாத வாழ்வுனக்கே கிட்டுதின்றைக் கென்றாராம்
மட்டார் குழலிமன மகிழ்ந்து - கட்டாகத்
(பூ விபூதி வாங்கும்போது, தூண்டாவிளக்கு சோதியாய் எறிதல்)
தாதியர்கள் சூழமறு சன்னிதியிற் சென்றிலைவி
பூதியதை வாங்கும் பொழுதிலே - ஆதிமுதல்
வாடாமல் நிற்குமணி விளக்குத் தீபபுட்பங்
கோடான கோடிதரக் கோதைகண்டு - நாடாளும்
வேந்தருக்குங் கிட்டாத மேலான நற்சகுனந்
தாந்தனியே கண்டதென்னச் சாரமதை – ஏந்திழைதான்
(அம்மன் சன்னிதியில், பூ மஞ்சள் பொட்டலங் கண்டெடுத்தல்)
ஐய்யமுற்றுக் கொண்டுள்ளி யம்மையெனுங் கருணைத்
தையலுற்ற கோயிற்றிருச் சன்னிதியில் - துய்யநிற 340
மஞ்சணையும் பிச்சிமலர் மாலிகையி னோடுபொடி
மஞ்சளையு மொன்றாக வைத்திருக்கக் - கொஞ்சுகிளி
(தெய்வானையை வணங்கும்போது அண்டையில் கேட்ட நற்சொல்)
கண்டெடுத்தங் குள்ளங் களிகூர்ந்து தெய்வானை
கொண்டதிரு மேனிகண்டு சொல்லுகையில் - அண்டையிலே
நின்றொருவ னுக்கொருவன் நேயமுட னுனக்கே
இன்றுமுதல் நற்கால மென்றாராங் – கனதனத்தாள்
(வேதவாசிரியரை ஏட்டுக்குறி கேட்டல்)
கோயிலிலே கண்டநலங் கொண்டு மகிழ்ந்தெனக்கு
வாயிலிலே போய்வேத வாத்தியாரை- ஆயிழையாள்
(வேதவாசிரியர் ஏட்டுக்குறியைக் கூறுதல்)
கூட்டிவரச் சொல்லிமணங் கொண்டுபோ டசங்கேட்டாள்
ஓட்டின் படிபாலை யிட்டாய்ந்து நாட்டில் 345
உயர்ந்தவராய் நெஞ்சிலே உண்மை யுளராய்
நயம்பெறவே பேசும் நல்லாராய் - வயம்புரியும்
மன்மதனைப் போலே வடிவு முடையவராய்
நன்னெறியே பேசும் நடுவினரரய் – பொன்னைக்
கொடுக்குங் குணத்தவராய்க் கூடலுக் காவராய்த்
தடுத்தொன்றுஞ்சொல் லாதவராய் - அடுத்தவரைக்
காக்கின்ற கோவாய்க் கருத்தில் மறுவிலராய்
ஏற்குங் குணங்களே யில்லாராய்ப் - பார்க்குள்ளே
பாக்கியங்கள் மெத்தப் பருகினரா யும்போகு
போக்கியத்தில் மெத்தமனம் பூண்டவராய்- ஏற்கவே 350
முன்னூல்கள் கற்றறிந்த முக்கியராய் யாவரையும்
இன்னாரின் னங்கமென்றே யெண்ணுவராய் -- மின்னே!
பழகிப் பிரியாராய்ப் பட்ச முளராய்
அளவில் கலைநூ லகராய்க் - களவற்ற
மான பரராய் மறுவற்ற வேதியராய்த்
தானதவஞ் செய்யுந் தருமராய் - ஞானம்
பொருந்து மனத்தினராய்ப் பூசலில ராயோர்
விருந்துமின்றைக் கேவந்த தாமென்றே - அருந்தவத்தில்
மிக்க வாத்தியா ருரைக்காயின் மகிழ்ந்துவந்
தென்னுடனிக் கதையெல்லா மியம்பினாள் – அக்களித்துப் 355
பேச்சியம்மன் கொண்டாடும் பெண்ணொருத்தி யுண்டவளை
ஆச்சியைவிட் டிங்கே அழைத்துவந்து- பூச்சியஞ்செய்(து)
அம்மா! ஒருகரும மாகவழைத் தேனென்று
இம்மாத் திரந்தா னியம்பினாள்- அம்மாது
கோயிலுக்குப் போனமுதற் கூடவிருந் தவள்போல்
ஆயிழைக்குச் சொன்னாள்நான் ஆமென்றேன்- தாயதன்பின்
வாத்தியார் சொன்னகுண மாறா துடையவராய்
நேத்தியாய் முன்மகளை நீங்காமல் - காத்துவைத்துத்
தோயவுமன் பாய்வேத்த தோத்திரஞ்செய் வோன்மகட்கு
நாயகனிங் கேவரவிந் நாளென்று - தாயார்சொல் 360
பெண்விரும்புங் காலை பிதாவிரும்பும் வித்தையே
நண்ணுதனம் விரும்பும் நற்றாயே - ஒண்ணுதலாய் !
கூரியநற் சுற்றங் குலம்விரும்புங் காந்தனது
பேரழகை யேவிரும்பும் பெண்ணென்றே - சாரமிக
வேயவர்கள் சொன்னதெல்லாம் மெய்யாகு மையனே!
நேயமுடன் மகள்போய் நின்றுகொண்டு – தாயறிந்தால்
போதுமென வெண்ணாதிப் பூங்கொடி யுங்களழகைக்
காதுகுளிரச் சொல்லென்று காதலாய் - மாதுசொல்லக்
கேட்டே மயங்கிக் கிடைந்ததுடைப் புண்ணைநான்
காட்டேன் வெளியிலிதைக் காட்டுவதோ ?- வீட்டிலே 365
வைத்துவைத்துப் பார்த்திருந்த மாதின் மயல்தவிர்க்க
இத்தனைநாள் தெய்வ மியம்பினபோல் - உத்தமரே!
நீங்களின்று வந்ததனால் நேரிழையு முங்கள்வசம்
நாங்களுபசார நவில் வதுவேன்?- பாங்காய்
நடக்க வகையறியாள்! நானூட்ட வுண்பாள்!
தடத்தில் படுக்கவின்னஞ் செல்லாள் ! - மடக்கொடிக்கு
முன்னால் வயசெனினு முற்றிடுமுன் னேதிரண்ட
தென்னோ ! கலிகாலத் தின்திறமோ ! -சொன்னேனே
தட்டி யேதுரைக்குந் தாதியென வெண்ணாது
குட்டிவளர்த் தேவேட்டைக் கொள்ளுங்கள்!- எட்டிபோல் 370
நச்சுமர மானாலும் நட்டமர மாகுமென்றே
இச்சைவைத்துப் பெண்ணோ டிணங்குங்கோ !- மிச்சமெல்லாம்
நான்புகல்வ தென்ன? உங்கள் நாரியைக்கண் டால்தெரியும்
என்பதறி சொல்கே னெனவுரைத்துத் - தான்போனாள்
(தலைவனிடத்து, தாதியர் பள்ளியறைக்கு ஏகென விளம்பல்)
மாதே! மறுத்திரண்டு வஞ்சியர்கள் வந்துதங்கை
மீதே யெனதுகையை மெல்லவைத்தங் -- கேதேதோ
தோத்திரமாய்ச் சொல்லியந்தச் சோதிப் பளிங்கறையைப்
பாத்தருள வேண்டும் பராக்கென்றே – வாய்த்தமணி
(பள்ளியறை வருணனை)
மண்டபத்திற் காம மருந்தறையில் மன்மதனார்
சண்டையிட்டுத் தோர்க்கும் சமர்க்களத்தில் – எண்டிசைக்கும் 375
பார்க்கில் மணக்கும் சவ்வாதுப் பாணிதனில்
ஆர்க்கும் விருப்பமுறு மம்பலத்தில் - ஏற்கவே
பன்னீர் சலத்தைவிட்டுப் பாங்குசெய்யுஞ் சேற்றறையில்
என்னாளும் பூமணக்கும் எல்லைதனில்- மின்னாள்
மதன நதியை மறிக்கு மனையில்
இதனாற் றிடுந்திருவி னில்லில் – கதமுற்றி
மன்மதனா ரெய்யுமலர் வந்துதிரும் பூங்காவில்
அன்ன மரசா ளரண்மனையில்- இன்னங்
கயிலைக் கிணையெனவே காணு மிடத்தில்
மயிலைப் புணரும் மணவறையில்-ஒயிலாகக் 380
கூட்டியே வந்துமலர் கொண்டுபுனை மெத்தையதைக்
காட்டினா ரங்கிருந்து கண்ணாலே-நாட்டிலிதன்
முன்காணா மஞ்ச முழுவதிலுந் தூக்கியிடும்
நந்தாமுல் லைச்சரமும் நான்காணில்-என்பால்
மதன்சிதறு முல்லை மலர்ச்சரமோ? அன்றி
விதம்பெற விதானிப்போ மெய்யாய்-அதன்பிரிவை
இன்ன மறியேனே யேந்திழையே யவ்வேளை
சன்னைசெய்தோ யவ்விருவர் தாம்போனார்- கன்னிகைகால்
(நடனமாதின் வருகை)
தண்டை புலம்பச் சதங்கை கலகலெனக்
கொண்டை யதிற்சுரும்புக் கூத்தாடச்-செண்டைப் 385
பிடித்திருக் கைவளை பேச நுதல்கள்
துடிக்கக் கயற்கணிணை சுற்றத்-தடித்தனைப்
பதக்கம் பளிச்செனவே பட்டுடையும் சேர்த்து
விதிர்த்து முலையிரண்டும் வீங்கி-மதர்த்துடனே
(தலைவனைக் கண்டு நடனமாது வணங்கல்)
வஞ்சிதய நெஞ்சிகுழல் மஞ்சிவர வாஞ்சியிவள்
கொஞ்சிமயல் மிஞ்சிவந்து கும்பிட்டாள்-அஞ்சலிகை
(தலைவன் நடனமாதினைக் கண்டு வியத்தல்)
கண்டவுட னேயிவளைக் கட்டியொரு முத்தமிட்டுக்
கொண்டுவிளை யாடநெஞ்சுக் கூத்தாடும்!- தண்டார்
வதனத் திருவாள் மறுகுமெனைப் பாராள்
கதவிற் கருகுநின்றாள் கண்டேன்-விதமிட்டு 390
நற்சுவரி லேயெழுதும் நங்கையுருச் சித்திரமோ !
சிற்றிடையின் பாவைநின்ற சித்திரமோ !-விற்புருவ
மின்னாளை யின்னதென்று மெய்யறிய மாட்டாது
தன்னாலே தேடித் தவிக்குங்கால்—அந்நேரங்
(தலைவன் வண்டினைக் கண்டு விளித்தல்)
கூந்தல் முடித்ததிலே கோர்த்தபிச்சித் தார்மதுவை
மோந்து கிரகிக்கவந்த மொய்த்தவண்டே! - ஆய்ந்ததைக்கண்(டு)
அவ்வுருவை நோக்கியிங்கே ஆயிழையே ! வாவென்றேன்
கொவ்வையிதழ் நீங்காக் குறுநகைசெய் - திவ்விடத்தை
நோக்கினா ளென்மால் நொடிக்கு நொடிபெருக
வாக்கினா ளத்தையறி யாதே – எற்கவே 395
கொஞ்சவய சேவொருவர் கூடியறி யாதே
மிஞ்சமுனம் நாம்பழகி மேவலையே - நெஞ்சங்
கலங்குமே நாமுனமே கைப்பிடித்துக் கூடிற்
துலங்கப் புணருமென்றே தோன்றி – விலங்காது
(கலவி வருணனை )
தானேதே டும்நோயாய் தாழ்ந்தமுந்தி தொட்டழைத்தேன்
மானேதா னே மயங்கி வந்தணையிற் - தேனே!
திரண்டவித ழாளிருந்தாள் தேகத்துச் சுரணையில்லா
திரண்டுகரத் தாலெடுத் தணைத்துப் - புரண்டேனே
துகிலையவிழ்த் தேனோநான்! தோள்துகிலை நீத்தோ
சகியே! அவள்மார்பு தன்னில் – உகிர்களே 400
தைக்குமென்று பார்த்தேனோ! சன்னதுஞ்ச பாதையுமென்
மெய்க்கு மணிந்தேனோ! வீணாகச்-சக்கியமாம்
முன்னருந்தும் வெற்றிலையை முன்னா னுமிழ்ந்தேனோ!
சின்னமயில் தரநான் தின்றேனோ! - தக்கதொழுப்
புகுந்தவா டும்புழுக்கை போட்டாற்போ காதெனச்
சும்மா மாலென் றிருந்தேனோ - ஆய்ந்தெனது
மையல் திரளையென்ன வாயினாற் சொல்லமுலை
நையப் பிணைத்திரண்டு நாழிகையாய்க் கைவிட்டு 405
நீங்காமல் மோகித்தந் நேரம் இருக்கையிலே
பூங்காசூழ் நெல்லைநகர் போற்றரசன் - ஆங்குவந்து
வேட்டைவெளி மண்டபத்தில் வீற்றிருந்தா ராமவரைப்
பேட்டிசெய்யத் தீர்த்தப் பிரசாதம் - நாட்டிலவ்வூர்
மிக்கதலத் தார்களந்த வீதிவழி யாய்க்கொடுப்போம்
அக்கருமத் தால்வாத்திய மத்தனையுந் – திக்கெல்லாங்
கேட்க முழக்கம்நான் கேட்டெழுக வேநெகிழ்ந்து
வாட்கண் மயிற்கரங்கள் வாங்காது-தாட்டுணையை
நீக்கவென்றா லன்றிலே நேயமிகுந் தேதுயர
மாக்குமென்றே யென்கா லசையேனே-பூக்கரத்தாள் 410
தம்மால் மிகுந்து தழுவினதோ ? விட்டுவிட்டாற்
சும்மா விராளென் தோகைதான்- விம்மவே
கட்டினதோ ? என்னோ ?அக் கந்தர்வர்க் குந்தெரியும்
கொட்டியதேட் பாவைநெஞ்சுக் குந்தெரியும்- இட்டமாய்ப்
பூணவணைத் தாளென்னாம் பூரித் தவள்கரத்தை
வேணவிதத் தால்நெகிழ்ந்து விட்டவுடன் - நாணமதைக்
காமம் விழுங்கினபோற் கைநெகிழ்த்தா யென்றுமொருச்
சாம மலைக்கொடுத்தாள் தையலே !-நாமதையும்
மெய்யாய் நினைத்தவட்கே வேணவிதம் புகன்று
மெய்யா லொருதலை யிணக்கினேன்- நெய்யால் 415
முடித்தகுழ லாள்மகிழ்ந்து முன்னருந்தும் பாக்கைப்
படிக்கமதி லுமிழ்ந்து பன்னீர்-வடித்தளைந்த
சந்தனத்தி னோடே தனிச்சவ்வா தும்புழுகும்
அந்தமுற்ற கையா லவள்கரைத்தும்-எந்தரத்தைப்
பாராம லென்னுடலும் பாராமெய்த் தணைக்குந்
தாராள மாயணிந்தாள் தன்கையால்- நேராய்
அவள்தனக்கும் நானு மணிந்தே னிதுபெரிதோ !
குவலயத்தி லார்க்குமிது கூடாப்-புவனமெச்சுங்
கன்னியென்னோ டுங்கலந்தாள் கையால் சரமணிந்தாள்
தின்னவித மாஞ்சுருளுந் தேன்தந்தாள்-அந்நேரம் 420
சாந்தகுண மோகன சவுந்தரியை யென்மடியில்
ஏந்தி யெடுத்தங் கிருத்தியே- பூந்தொடையல்
சூடுமுடி முதலாய்த் தோகையடி வரையுங்
கூடும் புறத்தொழினான் கூட்டினதை - நாடியறி
உச்சியிலே யென்னுகிரை யூன்றியே கோதிவிட்டேன்
கச்சிலையா மின்னுதலைக் கவ்வியே- எச்சில்
உறவே சுவைத்திதமாய் ஓர்வாக்காய் நாவால்
மறவாது நீவிமலர் விழியைத்-திறவாது
நேரே சுவைத்திமையை நீக்கிநுனி நாவாலே
ஏரே யுறும்விழியை யாநீவி – யாரேனும் 425
உண்டால் மறவாத ஓரிதழை நான்சுவைத்துக்
கொண்டே நுனிநாவாற் குற்றியிள - நண்டேபோற்
பல்லா லழுத்தியந்தப் பாவையர் கபோலமதை
யெல்லாம் வகையாக மென்றேனே - நல்லாளுங்
கூசிச் சிரித்திடநான் கோதாய் திருக்கழுத்தில்
ஆசித்து மென்மைவன்மை யாய்சுவைத்து - நேசித்துப்
பல்லாலும் நாவாலும் பையவே நானழுத்தச்
சொல்லா லடங்காச் சுகமுற்றாள்- மல்லாடிக்
கைமூலந் தன்னிற் கனியச் சுவைத்தெயிறால்
வையா ருகிரால் வளைத்தழுத்திச் - செய்யவுருக் 430
கூவிள மதிநுங் கொழுங்கனித் தனங்குழைய
நீவி நுனியை நெருடினேன் - தேவிசிறு
நெஞ்சிலே யெயிறூன்றி வெகுநேரந் தொழில்புரிந்தேன்
மிஞ்சுவிர லாலும் நாவினாலும் - கொஞ்சமுந்தி
மீதே தொழில்புரிந்து மீண்டுமுழந் தாள்பரடு
மாதே புறந்தாளில் வல்விரலில் -- ஏதேனும்
நானறிந்த மட்டுமெந்தன் நற்கரத்தால் செய்துமல்குற்
றானமங்கு செய்தொழினான் சாற்றுகேன் - யானறிவேன்
உன்தொழில்க ளொன்று முரையாதே யின்னங்கேள்
முந்துவிர லால்தொயில் முலைக்கெழுதி – அந்தமிலாப் 435
பற்குறிகள் சும்பனங்கள் பண்பாம் நகக்குறிகள் |
துற்றுதொழில் தாடனஞ் செய்துங்காண் - முற்றியல்குல்
கண்டே கரிகரமாங் கைத்தொழிலை யேபுரிந்து
கொண்டே நம்மாது குணங்கண்டேன் - உண்டல்லோ
மற்றத் தொழில்களதை மாறாது நான்செயுங்கால்
கற்றைக்குழ லாளாவிக் கட்டினாள்- சுற்றத்
தொடுத்தே னொருவிரலைத் தோகை மயில்போற்
கொடுத்தாள் குரலறிந்து கொண்டேன் - அடுத்துப்
புணர்ந்தே னதன்பின் புடுக்குரலுங் கூவி
அணங்கன்னக் குரலு மாகி – இணங்கியே 440
காடைக் குரலும் கரியவண்டு போற்குரலும்
பேடைக் குயிற்குரலும் பெண்கொடுத்தாள் - வாடை
மயிலு முருகி வசமித் தடகையினால்
நெருடு கருவாய் வெயிலார் - ...................
தரள வெரிவு தணிய மருவு
பரவசமு மார பருவம் -வருதே
அட்ட துரையே ! ஆயாசம் வருதே
விட்ட மதநீர் விரைந்தேன்- இடையில்
இப்படி யப்பெண் இழைப்பவ ளோதுரை
செப்ப வடிக்கடி சிற்றிதழ்- அப்பொழுது 445
துண்டு புரண்டிடி லொன்றிய பெண்கொடி
தண்டை சிலம்புகள் தங்களில்- வண்டுகள்
நின்று புலம்பிட நெஞ்சு கலங்கிட
இன்ப முறும்படி யிண்டை - சரிந்த
கனத்தை யுயர்த்தியவள் காலிரண்டை நீக்கி
அனத்தின் சம்போகி யானேன்- சினத்தவளே !
கோழிக் குரல்கொடுத்துக் கொண்டுகை காலிறுக்கித்
தூழித்த தன்னியத்தாற் றோள்நோக-நாழிற்
பிரிந்தாரைக் கண்டவுடன் பெண்ணே! கையாலே
விரிந்தா லணையல் மருவல்- புரிந்தாள் 450
கண்ணயர்ந்தாள் வேர்த்தாள் கயற்கண் ணிணைசிவந்தாள்
எண்ணறுஞ்சேர் பதாபமே புரிந்தாள் - பெண்ணமுதாள்
செம்போத்துப் போலச் சிறுகுரலுங் கூவியவள்
தம்போக்கிற் கைகால் தளரவிட்டாள் - செம்பாக்கி
விட்டோ மிவட்கெனவே மெய்த்தணையி லேயிறங்கி
மட்டார் குழலி வனத்துகிலைத்-தொட்டேனான்
ஆணையிட்ட தாகவோரஞ் சாறுமுழ மேநனைய
வீணைக்கைக் கொள்வாள்மதன் வெள்ளமோ !- காணவப்போ
தூரஞ் சிறுநீரோ! தோகையே ! யானறியேன்
ஈரமிக வார்த்துகிலை யானெடுத்து - வாரமாய் 455
மூடினேன் பன்னீர் முகத்தெறிந்தேன் கிள்ளிவிளை
யாடினேன் மின்விழித் தந்நேரமே - கூடியே
முத்தமிட்டாள் என்தேக முற்றும் வரிக்குயில்போற்
சத்தமிட்டே பாடினாள் சங்கீதம்- இத்திறத்து
(நாட்டியமாது தலைவனுடைய வரலாறு வினவல்)
நாங்கள் மகிழ்ந்திடிலந் நாரிதா னவ்வேளை
ஈங்கு மெழுந்தருள்வ தேதென்றாள்-ஆங்கெனது
(தலைவன் தான் வந்த வரலாறு மொழிதல்)
செய்தியெல்லாம் நேராகச் செப்பினேன் நீங்களதி
வைதிகர்தா மென்று மகிழ்ந்துகொண்டே - தையலுமே
ஏலப் பழகலையே யென்னையெங்கே கண்டதென்றாள்
மேலத் தெருவிலென்று மீண்டுமவள் - கோலத்தைக் 460
கண்டு மயங்கினதுங் காமவிடாய்க் கொண்டதுவும்
விண்டு மறுத்தணைய வேதொடுத்தேன் - தண்டார்
வதனத்தா ளென்னை மறுத்தா ளந்நேரம்
விதனத்தா லென்னவென்றேன் மெய்யாய் - இதமித்து
ஒருதரத்தி னோடுமக்கே யொற்றியாய்ப் போனேன்
இருதரத்தி லேவிலையா மயிரனே! - மருவி
முறிப்பார் மொழிகேட்டு முன்னமவன் கைப்பாக்கைப்
பறித்தா யெனவுமொரு பைதல் - குறித்துநின்று
பறப்பானே னென்றும் பணமொருவர் தந்ததையே
ஒத்தாய்நீ யென்றுமெனை நோக்கி – மார்க்கமாய் 465
வேறொருவர் வந்தெனையே மேவினா னென்றுமிந்த
வாறொருசொற் சொல்லியன்றைக் கையாநீர் - ஈரொருநாட்
கோபிப்பீ ரென்குணம் கோரமது வல்லாலுஞ்
சேவிப்பீர் கோவிலுக்குச் சென்றுதினம் - நோவிற்
கிடந்தவளு மின்னங் கிடப்பவளும் பத்தியங்
கடந்தவளுங் கூடியமைக் கண்டு - தொடர்ந்தணைய
மஞ்சளால் மேனி மினுக்கி வகைவகையாக்
கொஞ்சுவா ரும்மிடத்திற் கூடிவந்து - கெஞ்சியே
நீரவளைக் கூட நினைப்பீ ரதைப்பொறேன்
பாரவட்காய் நான்பழி முடிப்பேன் - ஈரமற்ற 470
நெஞ்சியாய்ப் போவேன்யான் நீருமெனை வெறுப்பீர்
மிஞ்சநாமும் பழகவே வேண்டா - எஞ்சாக்
கடுங்கால் மழைகாட்டும் கடுவுறவின் நாவாலே
ஒடுங்காப்பூ சல்விளைவ துண்டென் - றிடும்பாய்முன்
தூதிகையில் பறித்தசொர்ண முடிப்பை யென்கை
மீதிலமைத் தெழுகவே னென்றாள் - தாதியற்கு
நாயகமே! உன்னையென்றும் நான்மறந்தோர் பெண்களுடன்
போயகமே மாணப் பொருந்தேனே - நீயறியாய்
என்னுடைய நெஞ்சி லிருப்பதெல்லா மின்றுமுதல்
உன்னைமற வேனென்று உறுதியாய் - முன்னே 475
பிரமவமு தத்தின்மேற் பேராணை யிட்டேன்
பரதமதற் கரசி பாங்காய்ச்- சரசமே
செய்யத் தொடுத்தாள் தேனளித்த வெண்முடிப்பைத்
தையற் கறியாது தன்துகிலிற்- பையச்
சுருட்டியே நானவளைத் தோயுங்கால் வெள்ளி
இருட்டிலே தோன்றினா னென்றே - திருப்பெண்
விடிந்துபோ மேலீலை வேணவித மின்றி
முடிந்துபோ மேயெனவு முற்ற --- விடிந்து
கரைவாள்போற் பட்டதுயர் கண்டாயோ ! அப்போ
விரைவாயே கீழ்பால் வெளுக்க- நரையாத் 480
தலையா ளொருவிவந்து சன்னைசெய்தாள் பார்த்தேன்
சிலையாம் நுதலினாள் சேர்த்து - முலையால்
நெருக்குவா ளென்னைவிட்டு நீபிரிவா யோவென்று
உருக்குவாள் கண்ணீ ருகுப்பாள் - அருகனையுங்
கோபிப்பாள் நெஞ்சங் கொதிப்பாள் பரதவிப்பாள்
ஆவிப்பாய்ந் தென்னை யணைத்திடுவாள் - சீவி
முடித்த குழலவிழ முன்னோடிக் கட்டிப்
பிடித்தவளைத் தள்ளல் பெரிதோ - மடித்தபுத்தி
யாகிய பெண்ணே ! அரைச்சணத்திற் சந்திபண்ணப்
போகியே வாறேனிப் போதென்றே - ஏகிப் 485
பிரியச் சகியாதப் பெண்ணுடனே கெஞ்சித்
துரியத் துடன்றெருவிற் றோன்றில் - பரிவுற்ற
(நாரண வாத்தியார் புதல்வன் கண்டு, கோபித்து, வினவல்)
காரணவாத் தியார்புதல்வன் நானிருந்த வீட்டைவந்து
பூரணமாய்க் கண்டு போதியாய்நீ ! - ஓரடியாய்க்
கெட்டாய் போவுன்றன் கிரகப் பிழையாலே
மட்டாய்வா வென்றடுத்த மண்டபத்தில்-- உட்டிணமாய்க்
கோபித்துக் கூட்டிவைத்துக் கொண்டுசெய்தி யென்னவென்றார்
தாபித்துக் கொண்டுசற்றே சாற்றினேன்- மாபித்துக்
கொண்டே மதிகெட்டே கூடிநீ ரேயவளைப்
பண்டே யவள்தாய் பழிகாரி – விண்டுநான் 490
கூறுகேன் தாயுனுட கூற்றுமவள் மகள்செய்
வாறுநா னென்றவர்சொல் வார்த்தைகேள் ! - பூருவத்தில்
அன்னைவெகு காலமெலாம் ஆடவர்களைக் கெடுத்தாள்
பின்னையவட் கொருபெண் பிள்ளையின்றி - உன்னிக்
குறியோ போடசமோ கோவரத்தார் பாலோ
அறிவான் பொருட்டிலன்னை யாய்ந்து – நெறியாம்
(சொக்கேசர் சந்நிதியில் நோன்பு நோற்றல்)
மதுரையிற் சொக்கலிங்க மாதவரைக் காத்தாற்
பதுமியரைப் போலேயோர் பாவை - புதிதாயே
பிள்ளையொன்று கிட்டுமென்று பேதாய் நிசத்தறிந்து
தள்ளைசொக்க லிங்கருட சன்னிதியிற் – கள்ளமின்றிச் 495
(சொக்கேசர் கனவிலே தோன்றியருளுதல்.)
சென்றேயீ ராண்டிருந்து சேவித்தப் பின்பொருநாள்
இன்றே மதலைதந்தோ மென்றிரவில் - நன்றாகக்
கனவிலே சொக்கலிங்கக் கடவுளு மிட்டார்
மனமகிழ்ந்து மோகன் வல்லி – நனவிலே
(மோகனவல்லி சொக்கேசர் சந்நிதிக்குக் காணிக்கையாக 1800 பொன்னும், அணிகலன்களும் ஈதல்)
பேசி யிருப்பதுபோற் பெம்மா னருள்முந்தித்
தூசில் முடிந்துகொண்டு தோத்தரித்து - வாசிமுதல்
ஆயிரத்தெண் ணூறுபொன்னி லாதி சொக்கர்தமக்
கேயிணக்க மானநகை யீந்துபின்பு - கோயிலுக்குள்
(மீனாட்சியம்மன் சந்நிதியில், நல்ல சொல் கேட்டல்)
மீனாட்சி யம்மைமுன்பில் வீணிபோ யுன்கணவன்
ஆனாற் கிரக்கமா யாண்பெண்ணை – நானா 500
கிலுமுனக்குத் தாரதென்று கேட்டவுரை யில்லை
வலுவெனக்குத் தாவென்றேன் வாய்ச்சொல் - கொலுவினிற்கும்
ஏழ்ந்திழையார் தங்களிலே யென்னைப்போற் பெண்பெறுவாய்
சாந்தகுண மோகன சவுந்தரிபோல் - நேர்ந்த மொழி
(மீனாட்சியம்மன் சந்நிதிக்கு, முப்பது பொன் ஈதல்)
இப்படியே கேட்டுடனே இந்தமீ னாட்சிக்கே
முப்பதுபொன் னாங்கே முடிந்தளித்தாள் - அப்பொழுதே
(மோகனவல்லிக்குக் கர்ப்பமுண்டாதல்)
ஊருக்கு வந்துமுழுக் கொன்றிலே கர்ப்பமுண்டாய்
சீருற்று இருந்த சிமிழ்முலையும்- மேருப்போல்
வீங்கி முகங்கருத்து மீன்விழியும் வட்டணிக்கத்
தோங்கி தளர்ந்துன்னை வழுத்து- மாங்கனியில் 505
இச்சைகொண்டு கால்க ளிரண்டுங் கனத்துடலிற்
பச்சைநிறம் பார்த்துப் பழங்கடின்று - நச்சுநச்சு
சோற்றையுண்ண மாட்டாமற் றோய்வையே தின்றுதிரு
நீற்றையின்ப மாய்த்தின்பாள் நேயமாய் - ஊற்றமாய்ப்
பேசுகையி லேய்ப்பிழைப்பும் பெண்முகத்தில் லாதவலை
வீசுவதற் கேற்ற மினுமினுப்பும்- மூச்சு
சென்றபெரு மூச்செறிய வேந்திழையுந் தியுமலர்ந்து
நின்றதிங்கட் பத்தும் நிரம்பவே - ஒன்றியவள்
உந்தி குழைய உடல்முழுதுந் தள்ளாடச்
சந்தவடி வாள்சலத்திற் றாகித்துக்-கந்தரமும் 510
(நல்ல ராசவேளையில், பெண் குழவி பெறுதல்.)
நெட்டித்துக் கைகால் நிரம்பவுழைச் சலெடுத்து
மட்டற்ற நோவால் வளர்பிறையில் - இட்டத்தால்
ஆதித்த வார மதிலே முதற்சாம
மோதிற் புகரான வோரையிலே - சோதியெனும்
நட்சத் திரத்திலே நல்ல ராசவேளை
கிட்டாத் தேவ கணத்திலே – பட்டாடை
(மோகனவல்லி மகிழ்தல்)
மீதிலே பெற்றாள் வியர்வுற்றாள் பிள்ளைசத்தங்
காதிலே யுற்றாள் களியுற்றாள் - மாதின்மேற்
கண்விட்டாள் நெஞ்சிற் கவலைவிட்டா ளாடவராய்
மண்ணிட்டாள் அல்லல் மறந்துவிட்டாள் – எண்ணுக் 515
கடங்கா தபோநிதியை! அப்போகொண் டாற்போல்
மடந்தாய் ! வாவென் றெடுத்துவைத்துத்-- தொடர்ந்தணையக்
கையில்நிதி யில்லாது காப்போற்குச் சாணிநீர்
மெய்யிலிது போல்விடென்று வெந்நீர்விட்- டையா
நவத்திலணை வான்றுகிலை நாடியே மஞ்சள்
துவரத்திது போலேந்து துவரத்தித்- தவத்திதலை
(பொட்டிடுதல்)
அட்டதிக்கெல் லாம்வணங்க வரனை வணங்கியிற்செய்
பொட்டையிது போலிடென்று பொட்டிட்டாள்- இட்டமாய்ப்
(உச்சிடுதல்)
பிச்சியிலைச் சாற்றுடனே பேய்க்கரும்பின் சாறனைவோற்
குச்சியிது போலிடென்று உச்சியிட்டாள் – மெச்ச 520
(மருந்திடுதல்)
வலுக்கொண்ட நெஞ்சன் வந்தால்வாய் மருந்திதைப்போற்
செலுத்தென்று சேனை செலுத்தி - அலுத்துப்
(பால் கொடுத்தல் )
புணரப் பழகாப் புதியோர்க் கிதுபோல்
அணையிப் படியென் றணைத்துக்-கணவர்க்குள்
ஏன்றாள் விடார்க்குமுலை யிப்படிமெல் லக்கொடென்று
மூன்றாம் நாள் மெல்லமுலை கொடுத்தாள் – சான்றோரும்
(கண்மை இடுதல்.)
எண்ணிபுணைத் தோய்வருகீ ரிதுபோற் கீறெனவே
கண்ணிமையைக் கண்ணிலே கீறினாள்-- மண்ணிற்
பணக்கார னாரெனநீ பார்க்கவழி யேநற்
குணக்காரி மையால் கொடுக்கிட்-டிணைத்தாரையில் 525
(ஐந்தாம் நாள் ஐம்படைத்தாலி அணிதல்.)
எஞ்சா தணைபவரை யிப்படியே கட்டிவிடென்
றஞ்சாநா ளஞ்சனை அரைக்கணிந்தாள்-வஞ்சமாய் 525
(வசம்பு கட்டுதல்.)
மட்டன்றிப் போகிக்கும் வல்லவரை மேலரையிற்
கட்டென்று நல்வசம்பு கட்டினாள்- இட்டார்க்கே
(பதினாறாம் நாள், பொன்சங்கால் பால் கொடுத்தல்.)
அன்பையிது போற்புகட்டென் றன்னைபதி னாறாம்நாள்
பொன்சிறு சங்காற்பால் புகட்டினாள்-உன்றன்மேல்
(தொட்டில் போடுதல்.)
இட்டமுடை யோன்மடியி லிப்படி படுத்திரென்று
கிட்டவந்து தொட்டிலிற் கிடத்தினாள் - கட்டியுனை
(காது குத்துதல்.)
நித்தமணை யானுடைய நெஞ்சிலிது போல்முலையைக்
குத்திவிடென் றேகாது குத்தினாள் - மற்றமற்றக் 530
குத்துமிட மத்தனையும் கோதையிந்த வாறுசொல்லி
முற்றுமெங்கு முற்றி முடித்தனளே - சற்றேனும்
அன்பிலா நெஞ்சி லதைவளரிவ் வாறெனவே
வன்பில்லாக் காதை வளர்த்துவிட்டாள் - மன்பரவும்
(காலுக்கு மிஞ்சி இடுதல்.)
வஞ்சியுன்றன் காலிணைக்கு வாய்த்தநகை தாதியரில்
மிஞ்சியிடு மேலெனவே மிஞ்சியிட்டாள் - கொஞ்சிவிரல்
(கை கால்கட்கு அணிவகைகளிடுதல்.)
கைவளையு மிட்டாள் அதன்பிறகு பாடகத்தைப்
பெய்வளைக்கே யிட்டாள் பிரியாமல் - பையவே
தண்டையிட்டாள் பொற்சிலம்பு தானுமிட்டாள் பின்சதங்கை
கொண்டுமிட்டாள் பாத கொலுசுமிட்டாள் – ஒண்டொடிக்குப் 535
பாதசர மிட்டாளிப் பாவையருக் கிணங்கச்
சீதமதி யைப்பாம்பு தீண்டினபோல் - மாதரசி
(அரைமூடி அணிதல்.)
அல்குல்தனைக் காட்டா தரைமூடி யையணிந்தாள்
நல்லரவும் நீங்கிவிட்ட நாழிகையில் – எல்லையிலே
(ஐந்தாம் வயதில் சிற்றாடை அணிதல்,)
மேக மறைப்பதுபோல் மின்றனக்கஞ் சாம்வயசு
மாக அரைமூடி யகற்றியே-மோகமாய்ச்
சிற்றாடைக் கட்டிவெகு தேச மறிக்கையிட்டுப்
பற்றாக வைத்துவிட்டாள் பள்ளிக்கே- கற்றாளே
(பள்ளியில் பதினெண் மொழியிலும் வல்லவளாகக் கற்றல்.)
கொஞ்சமோ நற்கணக்கர் கோடாரி யாகவுமே
செஞ்சொல்வா ணர்க்கிவள்சொல் தேடவே - பஞ்சாட் 540
சரவிதிகள் கற்றத் தமியோர்கள் சூழப்
பரகதிசொல் நூலோர் பணியத் - திரமாகும்
பாஷையெனச் சொல்லும் பதினெண் வகையுமிந்த
வேசையிடத் துள்ளதென்று மெய்க்கவே- தேசமதில்
இல்லாத தெல்லாம் இவள்கற்றாள் கற்றவகை
சொல்லா லடங்காது தூரமே- நல்லாயுன்
(நடனசாலையிலும், சிலம்புக்கூடத்திலும் பயில விடுதல்)
மாமியா ரிந்தவகை யறிந்துமேற் படிக்க
நேமியா தாடவிட நிச்சயித்துப் - பூமியாள்
கின்ற வரசரெல்லாம் கேட்டுமகி ழவரவர்முன்
தன்மகள் படிப்பை மூட்டியே - இன்றிவளை 545
ஆடவிடச் சாமி யனுக்கிரக மாய்ச்சிலம்பக்
கூடமதில் விட்டாற் குணமாமே-பேடை
மயிலையே பெற்றேன் வளர்த்தேன் படிப்பிற்
பயிலவே வைத்தேனன் பாகவே- வெயிலாருஞ்
சூரியனைப் போலத் துலங்கும் வடிவாளை
வாரியெடுத் துங்கள்முன் வைத்துவிட்டேன் - நாரிதன்னை
ஆக்கினா லும்நீ ரளித்தாலும் நீங்களல்லாற்
போக்குவே றுண்டோ ? புகல்வீரென்- றூக்கமாய்
மாதா வுரைக்கமக ராசிரா சாமகிழ்ந்
தீதா பெரிதெனவென் றேன்றுகொண்டே – பேதாயாம் 550
என்று சொல்லி யேயவர்க ளிவ்வூரில்வந்துகுகற்
கன்றுகலி யாணவிழா வாரம்பித் – தொன்பதாம்
நாளிலே வேலவற்கிந் நங்கையரை யேமணந்து
வேளுமே தேரேறி வீதிசுற்றிக் - கோழியோன்
மஞ்சள்நீ ராடியபின் வன்சிலம்பக் கூடமதில்
கொஞ்சு கிளியையே கூட்டிவைத்து -- செஞ்சொல்மறை
வேதியர்கள் சூழவடி வேலர்திருக் கோயில்வர
நீதி நடத்துவித்த நேயவான்--காதலாய்ச்
செங்கோல் நடத்ததிரு நெல்வே லிக்குவந்தார்
இங்கே யிவள்பரத மென்பதெல்லாம் – துங்கா 555
படித்தாளோ ராண்டிலே பம்பரம்போ லாடித்
துடித்தாள் அதைநானென் சொல்லப் - பிடிக்குவய
சேழோவெட் டொன்பதோ யிவ்வளவுங் கற்றுவிட்டாள்
ஆளோ ரதிக்கிணையு மாகினாள் - வேளோ
அனுதினமுங் காத்திருந்தா னவ்வேளை தாயும்
பனுவல் மொழிக்கரசி பண்பாந் - தனுவதனுக்
கேற்றதுயி லணிந்தாள் எல்லோ ருயிர்வாங்குங்
கூற்றை யிணைவிழியாள் கோலத்துக்-கூற்றமாய்
கைவிரலுக் காழி கடகம் பதக்கமிட்டாள்
வையமெய்க்கத் தங்க வளையுமிட்டாள் - தையலுக்குப் 560
பொன்னால் சரிகையும் பொருந்தவடுக் காம்வளையும்
மின்னார்க்குந் தோட்காப்பு மேயிட்டாள் - அந்நேரந்
தாய்முத்த மிட்டாள் சரப்பணியு மட்டியலும்
ஆயிரம்பொன் னுட்கட் டணிந்தாளோ-சேயிவட்கே
பச்சைமணிப் பொட்டும் பதக்கம் சவடியுடன்
வச்சிர மணிமுத்து வடமுமிட்டாள் - இச்சைதரும்
மோகன மாலை முதிர்பவளத் தாழ்வடமுந்
தாகமுட னணிந்தாள் தையலுக்கே-சேகரமாம்
மாணிக்கத் தோடும் வயிரச் சிமிக்கியுமிம்
மாணிக்கத் திற்கணிந்தாள் மாதாவே-பேணியே 565
ராவரார்க் கிட்டா ளாதிதனக் கொன்னப்பூந்
தேவரார்க் குங்கிடையாத் தேன்முருகும்- பாவைக்கே
அன்னமுத்துக் கொப்புமிட்டா ளந்தலையிற் சுட்டிபிறை
கன்னலுக்கொப் பாய்நிலவுங் கட்டினாள் - பின்முடியில்
குப்பியுடன் தொங்கலையே கூட்டி முடித்தனளே
இப்படியே பூண்டநகை யெண்ணில்லைப்-பற்றாய்த்
தானத்தா ரெங்கள் தளவாய் துரைசாமி
வானத்தார்க் கொத்தமகிழ் தலத்தார் - ஞானத்தால்
மிக்க பெரி யோர்தனையே வேண்டி விரும்பினபேர்
தக்கவினத் தாரிவரைச் சந்தித்து - முக்கியரே! 570
(தளவாய் அழகப்ப பூபதியின் பெருமை.)
அன்பாகப் பெண்ணை யரங்கேற்ற வேண்டுமென்றாள்
முன்பாய் தளவாய் முகில்ராசன் - இன்பமுறுஞ்
சொல்லினார் மங்கள கலியாணமே தோன்றுகின்ற
வில்லினார் ஆர்க்கு மிரங்குவோர் - வில்லினால்
சத்துருவை யென்றுந் தலையறுக்குஞ் சூரரம்பு
மித்துருவைக் காக்கும் விசையவேள் - சுத்தமுறும்
வாக்கினான் தர்மம் வளர்ப்பான் கவிஞர்கலி
போக்குவான் மேலும் புகழவே - பார்க்குள்ளே
கற்றவரா குஞ்சங்கர மூர்த்திமேல் விருப்பம்
பெற்றவரா மார்க்கும் பெரியோன் - வெற்றியரி 575
போலவே யிப்புவியும் போற்று மரசனிவன்
சாலவே சூரத் தனத்தினான் - காலமே
செந்தூர் முருகர்பணி தேடுதொண்டை நாட்டினான்
தந்தூர்குன் றூர்பதியாய் நாட்டினான் - பிந்தாது
அழகின் பெருமாளை யாதரிக்கும் நாதன்
அழகின் நாமாள மேலன்பன் - உளத்திற்
களவற்ற போதக் கவிஞர்கள் தங்கள்
அளகப்ப னென்னு மழகப்பன் – வளமுற்ற
(திருச்செந்தூர் முருகன் சன்னிதியில் அரங்கேற்றம் செய்தல்)
செந்தூரில் தங்கள் திருமண்ட பத்திலே
நந்தூ ரலையுகந்த நாதனையும்- வந்தங்கு 580
எழுந்தருளப் பண்ணி யிவளரங் கேற்றங்கண்(டு)
அளந்தநிதி யீந்தா அனந்தம் - குழந்தைப்
(குமரிப் பருவம் அடைதல்.)
பருவ மகன்றிவளே பக்குவமாஞ் செய்தி
தெரிய வுரைக்கின்றேன் தேரி- உருவொப்பாள்
கெண்டைக்கால் மின்னிக் கிளர்துடைக ளுந்துடித்துக்
கண்டப்பா லல்குற் கரைதிமிர்த்துத்-தண்டைக்காய்
கன்னியிடை மின்னிடையாக் காமிவயிற் றின்மேலே
மன்னுகரி ரோமவரை வந்துதித்துச்-சின்ன
முலையிற் பரபரப்பு மூண்டு சிவந்து
கலைகற்ற பிள்ளையென்றன் காசாய்--விலைபெற்ற 585
தந்தச் சிமிழாய்த் தனியெலுமிச் சம்பழமாய்
அந்தக் குரும்பைமுலை யாகியே-கந்தரத்திற்
கேற்கவே தோள்க ளிரண்டுந் திரண்டவள்துன்
மார்க்கவேல் மின்விழியு மைவிழியாச்-சேற்கண்ணாய்ச்
செவ்வரியும் பாய்ந்து சிறந்துவிழி நீண்டுகண்டு
கொவ்வையித ழாகிக் குழல்வளர்ந்த- திவ்வளவுஞ்
சொன்னேன் நின்மணந்த கொடியுண் டேயவ்
வழகெல்லாங் கொண்ட வளமதியாய்ச்--செவ்வுடைய
பெண்களுடன் கோயிலுக்குப் பெண்ணும்போய் நிற்கையிலே
கண்களினால் வாயில் கரத்தினால்- நண்பர் 590
தனையே யுருக்குவாள் தாதிலொரு சோமன்
நினைவாய் பெருக்குவாள் இந்நாரி !- அனைவர்க்கும்
இப்படியே தண்மதியா லேயெரியுந் தீக்குறுநெய்
யொப்பாவாய்த் தாய்சொல்வதை யோதக்கேள்!-வெப்புடைய
(தாய்க்கிழவி மகளுக்குக் கூறும் அறிவுரை)
தீக்குவெஞ் சூடுஞ் சலமதனுக் கேகுளிர்வும்
பேய்க்குப் பிடிக்கும் பெருந்திறமும்-தாய்க்கு
மதலைக் கிரக்கமுமிம் மாநிலத்தி னார்க்குக்
குதலைக் குரைப்பின் குணமும்-விதமுற்ற
மானுக்குத் தள்ளு மதியும் பெருந்தீயில்
மீனுக்கு நீந்தும் விரைவதுவுங்-கானுற்ற 595
பாம்புக்கு நல்விடமும் பாவைக்குப் பக்குவமும்
ஆம்பற் குணம்போ லருங்கருப்புங்- கூம்பா
மலருக்கு நற்கடியும் வண்டுக் கிரைப்பும்
பலத்த பசுக்களுக்குப் பாலுங்-கலைகற்றாய்
அப்பாலுக் கேவெளுப்பு மானகரிக் குக்கருப்பும்
இப்பாரில் நன்மிளகுக் கேயெரிப்புங்-கொப்பாகும்
மாங்காய்க்கு மெத்தவளர் புளிப்புமிப் - புவியிற்
பூங்கதலி நற்கனிக்குப் போதினிப்புந் - தாங்கும்
அரசர் மதலைதனக் காதரவு மன்பும்
வரதக் கவிஞருக்கு வாக்கும் - திரமாய்க் 600
கரும்புதனக் கேயினிப்புங் காமுகர்க்குத் தாதும்
இரும்புதனக் கேகனமு மிங்கே- பெரும்புவியில்
வெம்புலிக்குப் பாயும் விரைவுங் குரங்கினுக்குக்
கொம்புதனிற் றாவுங் குணமெலாஞ்- செம்பதுமீ!
ஆரேனுங் கொண்டுவிட்ட தாலே பொருந்தினதோ?
ஊரே பழியாம லுன்மதியாற் - பேரேகொண்
டென்னை மறைக்குமதி யில்லைநா னென்னுடைய
அன்னைதனக் கதிக மாகினேன் - மின்னரசே!
தாதிமகள் தனக்குத் தானே பிரட்டுருட்டும்
ஆதிமொழி யாய்ப்போய் யாளையுமே- பேதித்த
குத்திரமு மித்திரமுங் கூடச் சிரிப்பதுவுங்
கத்துவது மப்போ கலப்பதுவும் – இத்திறங்கள் 605
(மகள் பதிலிறுத்தல்)
இல்லையே உன்னிடத்தில் என்றாள் மகளிதற்குக்
கல்லிலே நாருரித்துக் காண்பிப்பேன் - சொல்லினால்
அம்மா வெனவுரைத்தா ளன்னையுமப் போமகிழ்வாள்
இம்மாதை வேண்டி இளைஞர்கள் - சும்மா
பணமென்னா தங்கப் பதக்கமென் னாவுன்செய்
குணமென்னா கொல்லுதென்று கூறக் - கண்முன்னால்
உன்மகளைக் காணா துணவும் படலையென்பார்
என்னவிதி சின்னமகட் கென்பளே --- கன்னி 610
முலையைத் திறவாது முத்தங் கொடாது
கலையைப் பிரியாது கண்ணால்- வலையிட்டு
முப்பதி னாயிரம்பொன் மோசமிலை யானறிய
இப்படி யெத்தனையோ யேற்றினது-அப்பா
வயதெல்லாம் பன்னிரண்டில் மாதாவை மிஞ்சி
நயமெல்லாம் காட்டினளிந் நாரி - செயமுள்ளாட்
கிப்படியே யாரு மிறைக்குங்கா லிம்மாது
குப்பெனவே பூத்தாள் குறையோபின் ?- அப்பொழுதில்
யாரார் இவள்தா யடியைப் பணியாதார்
சீரார் திருநாட் சிறப்புப்போல் - ஊரார்க்கும்
தாதியர்க்கும் சொல்லிருது சாந்தி முடித்துடனே
மாதினுக்குப் புத்திசொன்ன வாறுகேள்- கோதையே ! 620
(தாய், புத்தி கூறுதல்)
தன்புத்தி யெத்தனைதான் சாதுரிய மாகினுந்தா
யின்புத்தி கேட்டா லிழுக்கென்றே ?- அன்புற்ற
விக்கிரமா தித்தன் மதிமிக்கா யிருந்தாலும்
உக்கிரவான் பட்டிமதி யுட்கொண்டான் - தக்ககதி
நாட்டுக்கே சென்று நணுகுந் தசரதனோர்
ஆட்டைக்கோர் மந்திரியை யாக்கினர்- வீட்டைப்
பரிபா லனப்படுத்தும் பாவையே ! என்சொற்
பரிவாகக் கேட்பாய் பதிவாய்- திருவேகேள்! 620
பெற்றதனம் என்னப் பெரியோனும் பெற்றபொருள்
மற்றையு மென்றே மகிழ்வேந்து - முற்றியநன்
மானமறு மில்லாளும் மானமுறும் வேசையரும்
ஈனமுறு வாரிவரென் றெண்ணெனவே - தேனமுதே!
கேட்டிருப்ப துண்டே கிடையா மதியனைத்தும்
நாட்டியுனக் கின்றே நவிலுகின்றேன் - வீட்டில்
வயிரவத்துத் தாசியர்கள் வந்து புணர்வார்
தயிருவிட்ட சோற்றுக்குத் தானே - உயிர்க்கிரங்கும்
தன்மக் குலசையில்வாழ் தாதியர்க்கா ரேனுமாம்
பொன்மெத்த வுமிருந்தாற் போதுமே-- துன்னிப்போய்க் 625
கன்னிகுறிச் சித்தாதி காமமா யோர்மதலை
தன்னையு மப்பனையுந் தான்புணர்வார்- இன்னழிந்த
ஆற்றாரிற் றாதியர்க ளன்பாகச் சோநகரைத்
தோற்றா தணைந்தல்லோ சோறுண்பார் - மாற்றாக
ஆறுமுக மங்கலத்துக் காந்தாதி யர்மிளகு
சாறுதனக் கேபுணர்வார் சண்டையிட்டு- மீறும்
பெருங்குளத்துத் தாதிப் பெரியோர்கள் ஒற்றைக்
கரும்புதனக் கேபுணர்வார் கண்டேன் - விரும்புங்
குறும்பூரிற் தாதிகையிற் கூகை மருந்தால்
வெறும்பாழாய் ஆகினபேர் மெத்த- நறுங்காசூழ் 630
கங்கமங்க லந்தனிலே கட்டபொம்மு மாணிக்கங்
கொங்கைவயிற் றில்விழுந்து கூத்தாட-அங்கதையும்
காட்டா திளைஞர்கள் கட்டியணை நற்காமக்
கோட்டாலை கொண்டுபணங் கூட்டுகிறாள் - நாட்டமாய்
மிக்கதென் திருப்பேரை மின்வயிர முத்துபெருஞ்
செக்கதுபோ லாகியும்பொன் தேடுகிறாள் - தக்கவர்வாழ்
அவ்வூரிற் றாசியுரை முலையாய்ப் போகியுமே
ஒவ்வோர் பணத்திற் குழைக்கின்றாள் - செவ்வானர்
இரட்டைத் திருப்பதியூ ரிலிருக்குங் குப்பியின்னம்
வெட்டைகொடுத் தேனுநிதி வேண்டுகிறாள்- கட்டாய் 635
திருக்களூர் மாடியின்னஞ் சேர மதுவுண்டே
துருக்கனையுங் கூடுகிறாள் சோற்றால்-- விருப்பால்
வரம்பெருகு மவ்வூர்க்கு வாய்த்த சுடலி
கிரந்திகொடுத் துண்கிறாள் கேளென்!- அரம்பையே !
மிஞ்சுகுரு கூர்தனிலே மேவுகிழட் டுச்சுடலி
கொஞ்சவய சென்றுபணங் கூட்டுகிறாள்- வஞ்சகமாய்
அவ்வூரில் முத்தியின்னம் ஆயிரம்பேர் வந்தாலுஞ்
செவ்வையா யவரைத் தினங்கூடி-அவ்வேளை
காமவெள்ளம் வந்ததென்று கால்வழித்தண் ணீரைவிட்டுத்
தாமதமில் லாதுநிதி தண்டுகிறாள்- மாமயிலே! 640
பம்பரம்போல் பீதாம்பர மாதோ ரண்ணனையும்
தம்பியையும் கூடிநிதி தண்டுகிறாள்- கும்பமுலைக்
கன்னிவேங்க டாசலமுங் காமுகர்சே ரத்துகிலை
மன்னிக் குனிந்துபணம் வாங்குகிறாள்- இன்னமிந்த
வெள்ளூர்ச் சிவகாமி மேவுகின்ற வவனோடு
சள்ளே பிடித்துரிநேர் தண்டுகிறாள்-உள்ளதாம்
காந்திசுர வள்ளிமுத்து காமுகர்முன் வந்துபனைங்
கூந்தல்முலை காட்டிநிதி கூட்டுகிறாள்--ஏந்திழையே!
சீவைகுண்டந் தன்னில்வாழ் தேவடியார்க் குக்காதுச்
சூவைகண்டா லுந்தெரியா தோபணையம்- பாவையர்கள் 645
முன்கருங் குளந்தனிலே மூத்தபொன்னி வந்தவரை
அன்புடன்செய் சும்பனத்தா லாளானாள் - இன்றுமவ்வூர்
ராமயமா ணிக்கமொரு ராவெல்லாங் கெஞ்சிவந்த
வீமர்தம் நற்புத்திர [னென்று] வேண்டுகிறாள்-சாமமதிற்
காரிசெ.................... பாள் காமியராந் தாதியர்கள்
ஏரிவழி கூடி நிதி யேற்கிறாள்- நாரி !
திருமுர...............ட்டிலுறுந் தேவடியா ரானவர்க்
கொருபணத்தின் மாங்காய்க் காமென்பார்- மருவாது
வல்லங்காட் டுத்தாதி வந்தற்குக் கைத்தொழில்செய்
தல்லவோ சொர்ணமிகுந் தாளானாள்-மெல்லவே 650
கிட்டிணா புரத்தாதி கேரளதே சப்புணர்ச்சி
தட்டாமற் செய்துபணந் தண்டுகிறாள்- கட்டாயப்
பாளையங்கோட் டைத்தாதி பண்பில்லா தாரையுமெவ்
வேளையுமே கூடுவா ரின்றைக்கோ - மெய்யாய்த்
திருநெல்வே லிக்குள்வாழ் தேவடியார் தம்மில்
ஒருசொல் வாசகரா யோர்பங்கும்- மருவில்
அழிவுகா லுள்ளவர்கள் அஞ்சுபங்கோர் செய்யும்
தொழிலையா னென்னவென்று சொல்வேன் - வழிவழியாய்
இப்படியே நம்மையொத்த வேந்திழையார் செய்ததெல்லாந்
தப்பலவே சோறுணங்கத் தானலவோ? - அப்படிப்போல் 675
நீயும் பணத்தை நிரம்பவளர்ப் பாய்மயிலே !
நாயுங் கழிக்குமதன் நல்வயிறு - ஆயிழையே !
சீமையதி காரியெனுஞ் செல்வனையோர் போதணைந்தால்
ஊமையுமே பேசு முனக்கஞ்சி - மாமயிலே !
ஊர்மணியக் காரனைநீ யுற்றணைந்தா லங்கவர்தன்
சார்புகொண்டு சொர்ணசம் பாதிப்பாய் - வார்முலையாய்!
தாசில் மணியனைநீ சார்ந்திடிலுன் னோடெதிர்த்துப்
பேசியே யெவனும் பிழைப்பானோ ?- ஆசிலளே !
சம்பிரதி காரனைநீ தான்கூடி லுன்னுடைய
உண்பழங் கட்கெல்லா முறுதியாஞ்-செம்பதுமீ! 660
காணுமோ விக்குவந்த கன்னனைநீ கூடாயேல்
ஊணுமே வைத்துயிரை உண்டிடுவான்-தேனிதழாய் !
நாட்டுக் கணக்கனைநீ நாடியணை யாதிருந்தால்
வீட்டுக் கலைச்சல் விளைத்திடுவான் - கூட்டத்
தலத்தா ரவரவரைநீ தான்கூ டவர்தான்
பலத்தால் மதியாமற் பேசு!-நலத்தினளே !
நோட்டுத் துருக்கருனை நேர்ந்தா லிரவிலரைப்
பாட்டுக்கு வந்துபணம் பாரானே-நாட்டிலுள்ளோர்
மெய்த்த ...................ற்காரன் வேகித்தா லுன்வீட்டை
முத்திரைவைப் பானார்க்கு முன்னமே- சுத்தவிழுக் 665
கல்லவெட்டி யிவ்வூர் அளவுகா றன்பகைத்தால்
நெல்லளவில் மொட்டையிடும் நெட்டூரன்- சொல்லிலென்றுங்
கட்டன்கோ யில்மணியக் காரனைநீ கூடாயேல்
குட்டைக் குலைத்திடுவான் கோதையே!-- சட்டமாய்க்
கற்றவளே! சம்பிரதி காரனைநீ கூடாயேல்
குற்றமெலாம் பார்த்தெழுதிக் கூட்டுவான் - சற்றிணையில்
கன்னிநீ! கோயில் கணக்கனைநீ கூடாயேல்
எந்நேரங் கோள்விளைப்பான் இன்றைக்கோ-அன்னமே!
மாதக் கடைசிமுறை மாறாது சாந்திசெய்யும்
போதத் திறவானும் போத்தியைநீ – காதல் 670
வழக்கிட்டு முந்தி மடிபிடித்துக் கூடில்
உழக்கிட் டளந்துபண முன்றன் - பழக்கத்திற்
காசித்தே மாதாந்தத் தன்றுநிச மாய்த்தருவான்
வாசிக்காய் மாரேற்பான் மாதரசி!- நேசித்துக்
கோயிற் பணியாரங் கொண்டுகுவிப் பானெதிர்த்துக்
காயிற் பொறாதபணக் கப்பலவன் - ஆயிழையே!
நம்பியார் தன்குலத்தை நாட்டுமக ராசனையும்
நம்பியார் கெட்டதுசொல்! நாரியே!-உம்பர்தொழுங்
கட்டியக்கா ரனைநீ கண்டணையா யேல்சபையில்
தட்டிப் பிடித்துநிற்கில் சள்ளென்பான் - இட்டமுடன் 675
சீபண்டா ரக்காரன் சேர்ந்துவந்தா னாகிலிந்திர
கோபம்போல் கல்நகைகள் கூட்டலாம் - (இ)லாபஞ்செய்
வெஞ்சனக் காரன் விரும்பநடந் தாயானாற்
கொஞ்சமோ வெஞ்சனமுன் கொள்ளைதான்- வஞ்சகமாய்ச்
சந்தனத்தை ....................சற்பானைச் சன்னையாய்க் கூடிவிட்டால்
உன்றனத்துக் கேகளப மோயுமோ ?- வந்தடிசில்
மற்றுந் .ெ...............ான் மடப்பள்ளி காரன்கூடில்
சோற்றுக் கவலையிலைச் சொன்னேனோ? - ஏற்றகவி
பாடும் பதுமினிபூப் பண்டார மெள்ளல்லல் -
ஆடுங் குலாவுமவன் குலாவத்-தேடும் 680
பலவேலைக் காரப் பழிகாரன் சீறில்
உலகே பழிக்கவைப்பான் உன்னைப்-பலவானாம்
வாசல்காப் பான்பகைத்தால் வந்துவெளி யிற்பணையம்
பேசவாய்ப் பாகவிடான் பெண்ணரசே!-ஈசர்
திருச்சுற்றுத் தூர்ப்பானே சீறினால் உடம்புக்
கெரிச்சல் கிடந்துதென்பான் கன்னீ!-விருப்பத்திற்(கு)
ஏற்றிடவுங் கோயிலிடை யனணைந்து வந்தால்
பாற்பசவ னதுனக்குப் பைங்கிளியே !- தேற்றிப்
பிராமணர்க ளென்றும் பெரியோ ரென்றாலும்
இராவிலென்ன சொன்னாலு மின்ப-வார்த்தையென்றால் 685
சோறுண்ண மாட்டாய்நீ சொன்னதையெல் லாந்தருவான்
நீருனக்கே ஆளா யிருப்பானே-சீராம்
முதலியா ருன்னை முயங்கவந் தாராகில்
முதலியா ரென்றவர்தன் முன்னே - கதமதாய்த்
திண்ணமா யோர்வசனஞ் செப்பா யவரணைந்த
வெண்ணமே சொர்ணமடீ ஏந்திழையே !-உண்ணவே
பண்டிதாள் மெத்தப் பணத்தருவார் வாங்கினால்
சண்டைவே கத்தொழில்செய் தையலே !- கண்டவுடன்
வர்த்தகர் மெத்த மயங்குவார் நீயெனக்கே
பர்த்தா வென்றேசொல் பணந்தருவார்-பத்மினீ ! 690
கோமட்டி நல்வணிகர் கூடில்மா ணிக்கமெந்தச்
சாமத்தி லுங்கேள் ! தருவானே- காமன்
கரைதுரையாம் பாரியைநீ காத்திருந்து சேரில்
திரைதிரையாய்க் காசுவந்து சேரும்--தரையிலுயர்
பட்டாணி வந்து பழகிநிதி தந்தானேல்
எட்டநா ளென்னையும்நீ யெண்ணுவையோ ?-கட்டாகத்
தொட்டியர் குலத்துத் துரைபாளை யக்காரர்
கட்டி யணையவுனைக் கண்டுவந்தால் - மட்டறநீ
கற்றசுகங் காட்டாதே ! காட்டிலவன் ஊர்க்குனையே
பொற்புடையா ளென்றுகொண்டு போய்விடுவான்-நெற்பொரிசேர் 695
வாடையுங் கூகை மருந்து மவர்க்கூட்டு !
கோடியும் தேடிக் கொடியிடலாம்- நாடில்
வடுகத் துரைகள் மறமுற்றோ ரேனும்
முடுகப் பிடித்தாயேல் முண்டானம்- அடுகிப்பார்
ரெட்டியார் கும்பிற்பலர் கூடில் கன்னநிலம்
ரெட்டியா கத்தருவார் இன்றைக்கும்- இட்டமாய்ப்
பல்கால் மறத்தயர்ந்த பாளையக்கா ரத்துரைகள்
நல்வாக் கியம்பியுனை நாடிவந்தால்- சொல்பேச்சு
சாமீ! உன்னையே தழுவுங் கரத்தினால்
பூமீதி லாரைப் புணர்வேன் – காமீயென் 700
றங்கவர்கள் முன்புரைநீ! அஞ்சுகையிற் றுண்பழமுந்
தங்க வளையுந் தருவானே- எங்கும்
மலைவறவூர் காக்கும் மறவ னுறவும்
தலைமறையு மட்டுமே தாயே !-நிலவரமாய்
ஓதிவைக்கேன் பேனெடுத்தா லும்முடிப்பா னுன்னுடைய
காதறுத்தா லும்மறுப்பான் கன்னிகையே !- நோதலென்றுஞ்
சத்தியம்போற் பேசிச் சதித்தோடு தாரவரை
அத்தையென்றே கொண்டாய் அறிவிலாய்! - உத்தமிபோற்
பாயற்குள் வைத்தொருநாள் பண்டிதனைச் சேர்ந்தார்க்கு
நோயற்ற வாழ்வுமுண்டோ ? நுண்ணிடையே !-நாயன் 705
கவிராசன் வந்துவிட்டாற் காலைப் பிடித்து
நவியரா மழிநடுவில் .................. - உவந்திருத்தி
யார்க்குமே செய்யாத வான்கலவி யெல்லாம்
பார்த்துநீ செய்து பணிந்தவர்க்கு - வார்த்தையெல்லாம்
பண்பாகப் பேசவவர் பைதல்கிட்ட நூறுபொன்னை
நண்பாக ஈய்ந்தவர்பின் னாகவந்து-விண்பரவும்
நாதனே ! நிற்கவா நானென் றனுப்பிவித்தாற்
சேதமே யில்லையுன்றன் சென்மமட்டும் - காதலாய்
உந்திவா தப்பெரியோன் வந்தணைய வேண்டுமென்றால்
தந்திரம்நீ செய்யுவகை சாற்றக்கேள் ! – முந்திக் 710
(மருந்தீடு)
கடியன்சா ரதையுன்றன் தன்னுடம்பிற் றேய்த்துக்
குடிபின்பா லிஞ்சிக் குடிநீர்- விடியுங்கால்
இத்திறமே செய்தவரை யிங்கே கூடிலவர்
தத்தித்தாய் மருந்து தந்தாலும் - உத்தமியே!
உன்னுடம்பிற் சாரத் துண்மையே யானாலும்
இன்னமொரு மார்க்க மியம்பக்கேள்!-கன்னியுனைக்
கூடி முடிந்துவெளிக் கொண்டவரும் போகிலடி
நாடியதன் மண்ணையொரு நாளெடுத்துத் - தேடி
அகத்தியிலை யுடனந்த மண்ணைச் சேர்த்து
நகட்டி விழுங்கிவிடு! நஞ்சோ - உகத்தினுக்கும் 715
உன்குடரிற் றந்தமருந் தொட்டாதே யிப்படிசெய்
தன்பவரைக் கூடிநிதி யத்தனையுந் - தன்கையிலே
வாங்கிக்கோ ! பின்பு மறக்குவா னவ்வேளை
தாங்கிக்கோ! கேட்டதொழில் தான்சொல்வான் - ஓங்கப்
படித்துக்கோ கேட்டபல தொழிலைச் செய்து
முடித்துக்கோ சொன்னவன்றன் முன்னே - பிடிக்கொப்பாய்!
(தம்பிரான், சபையிடத்தில் தந்திரம் பேசல்)
தம்பிரான் கூடுஞ் சபைதனிற்போய்க் கும்பிடுநீ
செம்பிரா னதுபோல் சிலர்விழிப்பார் - நம்பினேன்
ஐயா!உங் கள்அடிமை யாகவே வேண்டுமென்றே
மெய்யாயென் நெஞ்சம் விழையுதே – பொய்யாய் 720
மொழிபேசும் மற்றவர்போல் மூடமாய்ப் போகா
வழியடிமைக் கொள்ளுமென்றே வந்தேன் - எளியவள்யான்
அன்னையும் நீங்க ளடித்துக் கரைத்துடனே
தன்னை யறியுங்கோ! சாமிகளே ! - முன்னமென்முன்
காலை மடக்குங்கோ! காயம் பிறப்பிடித்து
மாலை யடக்குங்கோ! மாதவரே ! - வாலையென்னை
ஆனந்த வெள்ளத் தழுத்துங்கோ! ஐயரே!
ஊனங்க மெல்லா முருக்குங்கோ - ஞானம்போல்
இப்படியே நீயு மிரண்டுபொரு ளாயுரைத்தால்
அப்படியே ஆகட்டென் றன்புவைப்பார் - ஒப்பிலளே! 725
நாலுநா ளிந்த நயமுரைக்கி லொவ்வொருவன்
காலினா லேவிடுவான் காமத்தை - மேலுனக்குத்
(தூதிட்ட)வான் சுகமே வாவென்று மெத்தை
மீதிற் படுக்கவைத்து மின்னேநீ - ஈது
சடையா யெனவிரித்துத் தான்பார்த்தற் குள்ளக்
கிடையாத சொர்ணக் கிழிகள் - புடையிலே
வைத்திருக்கு நீயதையும் வாரி யெடுத்துக்கோ !
முத்தனவ னகழ்ந்த மொட்டையனேல் - அத்தர்
திருநீறு பூசித் தினந்தின்பேன் பாக்கென்று
இருநாழி கொள்ள விருக்கும் – பெரியதிரு 730
நீற்றுக்கோ விலையெடுத்து நீயழுத்திப் பார்க்கிலிரு
நூற்றெட் டரையாய் உழைத்தவளே - நீற்றிலே
மறைத்திருக்கு மனந்த வராகனை யெல்லாம்நீ
முறைக்குமுறை கொள்ளையடி மோகீ! - திறத்திற்
குருக்கள்மார் கூடிக் குளிக்குந் துறையில்
விருப்பமாய் நீகுளிபோ மின்னே!- கருத்தழன்று
கைநோக்கிக் கூப்பிடுவார் காதல்கொண் டாரென்று
ரவிக்கைநீக்கி யென்னசொல்லுங் காணென்றால் – மெய் வியர்த்துன்
வீட்டுக்கு வந்துவிட வாவென வுரைப்பார்
கூட்டிக்கொண் டோடிவந்து கூடப்போ!- தாட்டுகின்ற 735
சுந்தர வேடம் துணையாறு கட்டியுடன்
தன்சிரசு மாலைமுதற் றாழ்வடங்கள் - அந்தமுறும்
அங்குட்ட மாலைமுத லானதெல்லாம் நீபறித்துப்
பங்கிட்டு விற்றாற் பணமன்றோ !- இங்ஙனைநான்
சொன்னபெரி யோர்வெளியிற் சொல்லார் பறித்ததெல்லாம்
இன்னமென்மே லுமிழுக்கென் றேயறிந்து - மின்னே!
மதன நூல் கற்ற மகராசன் வந்தால்
கதவெலாஞ் சாத்தியொரு காரியஞ்சொல் ! - உதையமுதற்
காயதென்று சொல்லியவன் கண்ணில் விழியாதே!
பேயுமவன் கண்டாற் பிரியாது – வாயுந் 740
திறவானே பெண்களெல்லாந் தேடத் தொழில்செய்
திறவானே யுன்னைச் செயித்து - மறவாத
லீலைகளைச் செய்துநிதி லேசிலே வாங்கியுன்னை
ஆலையிட்ட கன்னலும்போ லாக்குவான் - வாலையே !
செட்டித் தொழிலோர் சிமிழரிவர் களெல்லாங்
கஷ்டப் படுத்துவர்நீ காமிபோல் - முட்டவெற்றிக்
கற்பசுவி லேபால் கறந்தாற்போல் நீகரைத்துச்
சொற்பசப்பி நாற்பணத்தைச் சுற்றிக்கோ ! - பத்மினியே!
நட்டுவனண் ணாவியுன்மேல் நாடநடந் தாயானால்
அட்டதிசை போற்றவுன்னை யாட்டிவைப்பான் - கட்டழகீ! 745
முட்டுக்காற் பணிக்கன் மோகமவர் நடந்தால்
கெட்டிக்கா ரீயெனப்பேர் கிட்டுமேடீ! - தட்டுகின்ற
கைத்தாளந் தித்தியொத்துக் காரன்முத லோருனையே
நத்தா வகையாய் நடவாதே - முத்திமிகுஞ்
சூதியற்ற வேசையிந்தத் தொல்புவியி லேயிரண்டு
காதுமற்ற மூளியடி கன்னிகையே ! - சாதுவாய்க்
கும்பகும்ப லாயுனக்கே கோடிநிதி தந்தாலும்
வம்பிருக்கச் சற்றுமனம் வையாதே ! – தப்பிலாது
என்னை நெடுநா ளிருத்திச்சோ றிட்டவனை
உன்னை யணையமருந் தூட்டிவிடு!- மின்னே! 750
தகப்பனுடன் அன்னோன் தலைமகன் வந்தாலும்
இகழ்ச்சிசொல்லா தேயணைவா யென்றுஞ் - செகத்திற்றாய்
மாமனார் முந்த மருவ மருமகன்பின்
காமமாய் வந்தானேற் கட்டியணை! - தாமதியா (து)
அண்ணனுந் தம்பியுமே ஆசைகொண்டுன் பால்வருவார்
திண்ணை யாங்குமாய்ச் சேர்த்தனுப்பு! - பெண்ணரசே!
சின்னம்மை யோடு சிநேகிதத்தோ ரும்வருவார்
கன்னல் மொழியே ! கலந்தனுப்பு! - எந்நேரம்
அக்காள்கூ டப்பழகு மாசையினான் வந்துவிட்டால்
மிக்காகக் கொண்டணைநீ மெல்லியலே! - தக்கதன்நான் 755
மைத்துனனும் மைத்துனனும் மாறியுமைக் கேட்டுவந்தால்
சத்தியங்கள் சொல்லித் தழுவிவிடு!- மெத்த
நிறையாய் நடப்பவள்போல் நீயிருப்ப தன்றி
முறையே யறிந்தணைந்தால் மோசங் - குறையாவாழ்
உள்ளவராய் வந்தாலு முனைமறந்திங் கேயிருக்க
எள்ளளவுங் கொள்ளே னென்றுரைநீ ! - பிள்ளாய்!
பைத்தியங் கொண்டோன்போல் பணந்தருவோன் போகில்
வயித்துவலி கண்ணீர் வடிநீ! - நயத்திற்
குலவழியுங் கேட்டுப் பணந்தரு வானைநீ
குலதெய்வ மென்றுகொள் கோதாய்!- நிலவரமாய் 760
இட்டமுடை யோன்கையினா லேற்கிலவன் தான்சொர்ணக்
கட்டியையோர் முட்டெலும்பாய்க் கண்டுவிடு -முட்டவொன்றும்
இல்லா தவனென் றிகழாதை யோருழக்கு
நெல்லா கிலும்பறித்து நீகூடு! - சொல்லிலே
நேருகே டாகி நிசமொருகா சில்லானை
வாருகொள் கட்டைகொண்டு மாறிவிடு! - நாரீ!
குருடன் தனையணைந்துக் கூட்டும் பணத்திற்
குருடு மிருக்குமோ? கோதாய்! - மருவவந்த
நொண்டிதந்த சொர்ணமதை நோக்கில் முடமதற்குக்
கண்டிருக்குமோ? சொல்வாய் காரிகையே ! - பண்டுமுதற் 765
சப்பாணி யீந்ததன மென்றே நெல்விலைக்கு
மொப்பா யெடார்களோ? வோதுவாய் ! – இப்பாரில்
தள்ளி விழுங்கிழவன் தந்தகிழட் டுப்பணமென்
றள்ளி யெறிவாரோ? யாரேனும் - வள்ளல்போல்
ஊமையன்ஈயும் பணமு மூமையோ? நம்முடைய
சீமையெல் லாம்பேசித் திரும்பாதோ? - காமமுடன்
பாரத் தடியன் பணந்தந்தால் வார்த்தையிலே
நேரத்தைப் போக்கிவிடு நேரிழையே ! - வாரத்தால்
ஆயிரம்பொன் நல்ல அளவற்ற தீந்தாலும்
நோயனையுங் கூடாதே நுண்ணிடையே !- தாயே! 770
அகமுழுதும் நீயணிந்த ஆபரணம் நீக்கி
முகமறியா னைப்போய் முயங்கு - செகமதிலே
கண்கண்டோ ராருமுனைக் காதலாய்ச் சேருமட்டும்
பண்புள்ளாள் போலப் பணிந்துநட - பெண்பிள்ளாய்!
கண்ணா லுனைப்பார்த்துங் காரியத்தில் போகிறவனைச்
சுண்ணாம்புக் கேட்டுச் சுணங்கேடீ ! - பெண்ணரசே!
செம்பதுமீ! வந்தவன்றன் தேகத்தைச் சோதனைசெய்
தம்பனவே ராலே சதிசெய்வான் - கும்பமுலைப்
பேடை மயிலாளே பித்தனா னாலுமிந்த
வாடையை விட்டால் மருவானே – நாடியே 775
முப்பென் றுனதுகுழற் கொண்டல் நரைக்கிலுழக்
குப்பூங் கொடார்க ளுனக்கொடி!- எப்பொழுதும்
(இங்கே, சில ஏடுகள் காணப்பெறவில்லை)
(மோகனவல்லியின் தன்மைகூறி, சுப்பையனுக்கு
நல்லறிவு கொளுத்துதல்)
நல்லவள்தன் கண்ணிணையை நாடி மயங்காதே
கொல்லவந்த கூற்றாகக் கொள்ளடா!- மெல்லியல்
அல்குலென்று கொண்டே யணைந்தாயே லாடவரைக்
கொல்லவந்த நரகக் குழியடா! - சொல்லுகேன்
உண்டவரைக் கொல்லும் நஞ்சுமுண்டே யிவளழகு
கண்டவரைக் கொல்லும் கடுவிடமே!- எண்டிசைக்குள்
பூமியின்கண் ணாடவர்கள் பொன்னுக் கெரிபுழுவை
மாமியென் றேன்கொண்டாய் மதியிலாய்!- காமியர்முன் 780
சத்தியம்போற் பேசிச் சதித்தோடு தாரவளை
யத்தையென் றேன்கொண்டா யறிவிலியென்-றித்திறம்நான்
நாணமதி சொன்னதையே நன்றெனக்கொள் ளாதிதுவீ
ணானவுரை யென்றே நகைத்திருந்தேன் - பேணிநான்
பாலைப் புகட்டுவேன் பாக்கியத்தை நானுனக்குக்
காலைப் பிடித்துப் புகட்டுவனோ? - தாலத்துள்
ஆம்பிள்ளைக் கும்பால் வேண்டாமே உயிரிழந்து
வேம்பிள்ளைக் கும்பாலும் வேண்டாமே --- தேம்பிப்போய்ச்
சாங்கால மார்க்குந் தனிமருந்தோ? அதுகெட்டுப்
போங்காலம் புத்தி பொருந்தாதோ? – ஈங்கேயான் 785
சொன்னமதி யெல்லாமோய்! சுப்பையனே! தப்பாமல்
உன்மதியிற் கொண்டிப்போ தூர்க்கேகென் - றன்னமே !
காட்டி லெரித்தக் கதிர்நிலாப் போலெனெக்கே
நாட்டியுரைத் தாரந்த நன்மதியைத்-தாட்டனவன்
கம்பர்மகன் போலேநான் காதலுங்கொண் டேனவன்போல்
இன்பமதி யுங்கேளா தேயெழுந்து - முன்பாகத்
தெப்பக் குளத்தினுக்கே சென்றுகுளிக் கும்போதில்
அப்பிப் பிடித்தமஞ்ச ளத்தனையும் - அப்பா
கழுவச் சகியாது கால்மட் டலம்பி
வழுவற்ற சந்திபண்ண மாதே!- தழுவிப்பெண் 790
செய்த கலவித் திறத்தையே மந்திரமாய்
வையம் பழிக்கநின்று வாய்புலம்பித் துய்யமதி
போன்றமுக நம்முடைய பொற்கொடியுந் தேடுமென்றே
தோன்றியவ ளிற்கத் துவக்கினேன் - சான்றோன்
...........ரவணை வாழ்த்தி யாதெலாந் தன்னிலே
பார்த்துவரை யறவாய்மீ ளாதமாலென் - றரகரா
உன்நகைக ளெங்கே ? உயர்த்த நிதிகளெங்கே ?
நன்மதிக ளெங்கே ? நகைக்கிடமாய்ச் - சின்னமதி
வேசையுட னேவெளியி லேவந்த தென்ன?
ஆசை வசமு மறியாதே –மோசமாய்ப் 795
பேசிவிட்டீ ரோவென்றே பின்தலத்தா ருங்கேட்டார்
தாய்சமத்தாய் வேணசதிர் சொன்னாள் - ஆசிலரே !
பூவிற்ற நற்கடையில் புல்லுவிற்கப் பண்ணிவிட்டாள்
மாவித்தை யாலென்றோர் வார்த்தைசொன்னேன் - தேவரீர்!
போரில் தெருவில் புறப்பட்ட தேதென்றார்
வாரிக் கொடுத்தபணம் வாங்கவென்றேன் - நாரிதன்
யாருக்கா யீந்தீ ரழிவழக் கீதென்றார்
ஒரூருக் கனுப்புமென்றே னோமென்றே - பாரில்
மரியாதை ராமனைப்போல் வந்த வழக்காயும்
பெரியோ ரிருக்குமூர் பேசித் – தெரிந்து 800
திருநகரிக் கேநீங்கள் செல்லுங்கோ ளென்றார்
கருதி நடந்தோர் கணத்தில் - பெருமாள்
திருக்கோயில் வாயிலிலே சீக்கிரத்தில் வந்து
கருக்காக நானிருந்தேன் கன்னி - நெருப்பெனவே
வார்த்தைசொலுந் தாயு மகளுமிந்த மண்டபத்தில்
தீர்க்கமுடன் வந்துநின்றார் திண்ணமாய் - சீர்த்தி
பெருகுந் தலத்திற் பெரியோரு மவ்வூர்க்
கருமங்க ளாக வரிக்காணத் - திருமண்ட
பத்திலே கூடினார் பார்த்துநல்ல வேளையென்று
நத்தியே நாம்போய் நமஸ்கரித்தேன் - உத்தமரே! 805
எவ்வூ ருமக்குநீ ரவ்விடத்தே வந்ததென்ன?
அவ்வாறை யெங்கட் கருளுமென்றார் - செவ்வாக
என்பூர்வத் தையெல்லா மெல்லோர்க்கு மோதியுங்கள்
முன்பான செய்தி மொழிகின்றேன் - அன்பாயோர்
பெண்ணோ டிருக்கையிலே பேச்சுவித்தி யாசம்வந்து
நண்ணாய் வழக்காயுன் நாரியுடன் - திண்புயரே!
வந்தேனா னென்றேனம் மாதரா ரழையென்றார்
கொந்தார் குழலிவந்து கும்பிட்டாள் – வந்தையா
(முற்றுப் பெறவில்லை.)
--------------------------
6. மணவை திருவேங்கடமுடையான் மேகவிடு தூது.
(மேகத்தின் சிறப்பு)
பொன்பூத்த தண்ணம் புயல்பூத்த பூங்கமல
மின்பூத்த சோதி மிளிர்மார்பா!- கொன்பூத்த
நேமி சுடராய் நிலாவளை பான்மதியாய்
பூமடந்தை மின்னுருவாய் பூவைநிறங்- காமர்
புயல்முகந்த காவிப் புதுநிறமாய் பொன்நாண்
இயல்முகந்த வில்லி னியல்பாய் - செயல்முகந்த
மேகமே! எல்லா வுயிர்க்குமொரு வித்தாகத்
தாகமே தீர்க்கும் தருமமே! - நாகத்துக்
கொண்மூவே! விண்ணாடர் கண்டுதொழுந் தகைய
எண்மூவர் தங்களுக்கு மேற்றமே !- தண்மூடு 5
மஞ்சே! குழற்குவமை வாய்ந்து தலைக்கொண்டே
செஞ்சொல் விளிமாஏர் செல்வமே !- எஞ்சாத
கொண்டலே ! கொண்தண்டார் குறித்தநா ளின்றளவும்
உண்டலே.................... வுருகினேன் - தண்டாத
மையே! மணவைமால் மாலளித்த நாளளவு
மெய்யே! உருகி வெதும்பினேன் - பெய்யு
மழையே! உலக மகிழ்விப்ப தன்றிப்
பிழையேதுஞ் செய்யாத பேறே! - குழையும்
எழிலியே! வானி லெழுந்துதிக்குந் திங்கள்
அழலிலே வீழ்ந்த மெழுகானேன் - பழியாத 10
காரே! புவிக்குதவுங் கற்பகமே! நின்னையல்லால்
யாரே என்னாவிக் கிரங்குவோர்? - சேருங்
குயினே ! இளவுகமாய்க் கூடா திருக்கண்
டுயினேர் ஒருமாற்றஞ் சொல்லாய் - பயமுடைய
கந்தரமே ! என்போல்வார் காதல் சுமந்திருப்ப
தந்தரமே யாகுமால் பிந்தாத - வண்டுவே!
ஏழிசையாம் வெவ்விடத்தை வாய்தோறு முண்டு
வேயவே கக்குவது முண்மைகாண்!- தண்டாத
மங்குலே ! தண்டுளப மாலைபெறா நாளெனக்கோர்
கங்குலே யூழியுகங் காட்டுங்காண் !--சிங்காத 15
மாலே! மணவை வருமாய னீங்காத
காலேக வண்ணத்தைக் காடலோய்- நீலநிறச்
செல்லே! அருள்சுரக்குந் தெய்வமே! மையல்வேள்
வில்லே ! கொடுங்கூற்றை வெல்லுங்காண்- நல்ல
கனமே! இரங்காமற் காதலிக்குஞ் சுற்றந்
தினமே பகைத்தா லென்செய்வேன்?-புனல்முகந்த
சீதமே! வெண்ணிலவில் தேம்பித் தினந்தினமும்
ஏதமே கூறாது ரட்சிப்பாய் !-நீதி
முகிலே! துயர்தணிப்பான் முன்னுவாய் மின்னார்
அகிலேறுங் கூந்தற் கணியே !- செகதலத்தோர் 20
காமப் பிணிதீர் கட்டுரைக்குந் தூதுசென்றோர்
மாமத்தை நாடா நவிலுங்கால்-நேமியங்கை
மையாழி வண்ணன் வருபாண் டவர்விடுப்பப்
பொய்யாது போனதுவும் பொய்யாமோ ?- மையலார்
பாதிமதி வேணி பாவைக்குஞ் சங்கிலிக்குந்
தூது நடந்ததுவுஞ் சொல்லாரோ ?-சீதைபால்
அன்றனுமன் தென்னிலங்கைக் காழி கடந்தகதை
இன்றளவு மண்மே லிசையன்றோ !-வன்றிறல்சேர்
தென்நிடத வேந்தர்கோன் தேவர்கோன் தூதாக
முன்நடந்த தின்னும் மொழியன்றோ !-மன்னளவோ 25
மாகா வியங்கடொறு மன்னவர்தூ திற்பிரிதல்
போகா வெழுத்தின் பொறியன்றோ!- நீகாதல்
கொண்டார் வரவு குலமகட்குக் கூறியதும்
எண்டா ரணிக்கு ளிசையன்றோ!- பண்டிவர்போல்
தூது நடந்தவரைச் சொல்லப் பலருண்டு
சீத முகிலே!யென் செல்வமே !- ஆதலால்
என்பால் நிறையும் எழிலும் மடநாணுந்
தன்பாற் கவர்ந்தானைச் சாற்றக்கேள் !- தென்பால்
(தசாங்கங்கள்)
(மலை)
வடவரை யீதென்ன வயங்கியு முங்கட்கு
இடமெனவே கண்டுயிலுக் கேய்ந்துங்-கடகளிறும் 30
கோளரியுங் கொல்புலியுஞ் சாரங்கமு மதியும்
வளரவு மொன்றி ம றங்கூறா- தாளுநறுஞ்
சந்தனமும் காரகிலும் கோங்குந் தகரமுஞ்
சிந்துரமும் சாதிச் சிறுதேக்குங் - கொந்தவிழ்நன்
நாகமும் செண்பகமும் நற்கதலி யுந்தாற்றுப்
பூகமு மாகப் புயறடவி - மோகிக்கும்
பொன்னும் புதுமணியுந் தண்டமிழுங் கொண்டருவி
மன்னும் பொதியவரை மீனன் – புன்னாகப்
(நதி)
போதுங் கரிக்கோடு பூங்கவரி யும்புதுப்பூந்
தாது மகிற்குறடுஞ் சந்தனமும் - மோதும் 35
திரைதோறுந் தெண்ணீர்ச் சிறைதோறு மேறுங்
கரைதோறுங் கால்தோறுங் கான்று - நிரைநிரையே
தூர்க்குங் கடவுட் சுரநதிபோ லெஞ்ஞான்றும்
ஆர்க்குந் திரைப் பொருனை யாற்றினான் – வார்க்கோலக்
(நாடு)
கொங்கைத் தரளநகைக் கோதையர்பூ கத்ததிக
மங்கைவடந் தோட்டூச லாடியுந்- துங்கக்
குயிலோடு கூவியுங் கோலக் குடுமி
மயிலோடு மாடி மகிழ்ந்தும் - பயிலுநறுந்
தண்டலையும் வாவித் தடமுந் தடமலர்மேல்
வண்டலையுந் தேமா வனநிரையுங் - கொண்டாடும் 40
இடலமுக மலருந் தரளைக் குழாமும்
மடலவிழும் பூக வனமும் - குடவளையின்
ஆரமும் சென்னெலணி தரளமுங் கரும்பிற்
சேரு மணியுஞ் செறிவரம்பில்- ஆர
வயலி லயலோடும் வாய்க்காலில் மள்ளர்
செயல்புரியுஞ் சாலிற் றிகழக் - கயலுகளச்
செந்தா மரைமலருந் தெண்ணீர்ப் பழனவளம்
நந்தாத சீவலவ நாட்டினான் – பந்தைப்
(ஊர்)
பழிக்கும் படாமுலையா ராடரங்கும் வேதம்
கொழிக்குந் தமிழோர் குழாமும்-- பழிப்பில்லா 45
வேதம் பலபகரும் வேதியரும் மென்னரம்பின்
நாதம் பலபகரும் நாட்டியருங் - கோதிலாத்
தாளாண்மை மன்னர் தனிச்செல்வம் போன்றதொழில்
வேளாளர் சூழ்ந்திருக்கும் வீதியும் - வானொளிசேர்
மாட மறுகும் மறுகுதொறும் முத்தமிழ்நூல்
பாட லிசைகழகப் பந்தியுங் - கூடித்
திகழும் பெருவளத்தாற் சேமப்பொன் நாடென்னப்
புகழும் மணவா புரியான் – பகையரண்
(யானை)
நீறுபட வெகுண்டு நேரிலா நின்றதிரத்
தாறுபடு மதமா லானையான் – மாறாமல் 50
(குதிரை)
ஆயும் ஒருநான்கு வேதமணி தாளாய்
பாயுந் திறல்வாம் பரியினான்-- காயுலகலிற்
(முரசு)
தெம்முறை கெட்டோட செழுந்தேவர் கைகுவிப்ப
மும்முறைநின் றார்க்கும் முரசினான் - வெம்மைக்கா
(கொடி)
மோட்டரவ மாயெட்டு முழுமேனிக் காரமெனக்
கோட்டுங் கருடக் கொடியினான் - பாட்டளியின்
(மாலை)
பண்ணார் தாமரையாள் பாயலென வீற்றிருக்குந்
தண்ணார் வண்டுளபத் தாமத்தான்- விண்ணாடர்
(ஆணை)
ஓது கலையு மொழிந்த பலகலையும்
ஆதிமறை யுந்துதிக்கு மாணையினான் - சோதி 55
(திருமால் வடிவங்கள்)
உருவாய் உருத்தோறு முண்மையாய்த் தோன்றா
வருவாய் ஓரணு வாகித்-தெருளாய்
ஒளியா யொளிமயமாய் உற்றுணர்ந்தோர்க் கெட்டா
வெளியாய் வெளிக்குளோ ருயிரன்னாய் - வளியாய்க்
கனலாய் விசும்பாய் காசினியில் நீண்ட
புனலாய் மணங்கமழும் போதாய்த் - தினகரனும்
விண்மதியு மாயுயர்ந்த வெற்பாய் சராசரமாய்க்
கண்மதிக்க வொட்டாதக் காந்தியாய்- உண்மதிக்கும்
அண்டமாய் அண்டத் தடுக்காய் அதிலுறையும்
பிண்டமாய்ப் பேதாதி பேதமாய்க் கொண்டதோர் 60
ஆணா யலியா யழகுதிகழ்ந் தொளிருங்
கோணாத பெண்ணுருவின் கோலமாய்- மாணமைந்த
வேதமா யெண்ணிறந்த வேதண்டத் துச்சியின்மேல்
ஆதரமாய் மற்றுமோ ராதியாய்க் - கோதிலா
மூலமா யீறாய் நடுவாய் முருக்கியபேர்
ஆலமா யுண்ணு மமுதாகி- ஞாலம்
படைத்து மளித்தும் படைத்தவெல் லாமீளத்
துடைத்தும் விளையாடித் தோன்றிக் - கடற்றலையின்
மீனமாய்க் கூர்மமாய் மேதினியைக் கீண்டகோட்டு
ஏனமா யாளரியா யீன்றாளுந் - தானிகனாம் 65
வாமனமாய் வில்லுமழு வும்வலமுங் கைக்கொண்டி
ராமவுரு மூன்றா யிகல்புரியுங்-கோமளஞ்சேர்
கண்ணர் பிரானுமாய்க் கல்கியுமாய் மேனாளில்
வண்ண மெடுக்கும் வடிவினான் - தண்ணார்ந்த
(திருமால் வைகுந் தலங்கள்)
பொன்னி நடுவுட் புளினத் தரங்கத்து
மன்னுந் திருக்குடந்தை மானகரிற்-றென்னாட்டு
அனந்த புரியிலவர் நட்டாற் றிடையிலன்பிற்
கனந்தா வுகாற்கரையிற் கஞ்சத்- தினந்தழையுந்
தென்புலி யூரிற் றிருவைகுந் தாபுரியில்
பொன்பொலியு மாடப் புளிங்குடியில்- நன்கமைந்த 70
தங்காவில் மேவுகுழந் தாபுரியில் வெள்ளரையில்
கொங்காருஞ் சோலைக் குறுங்குடியில்- மங்காத
நாவாயிற் கோளூரில் நாகை நகரில்
பூவார் கணமங்கைப் பொன்நகரில்- மேவியே
நின்று மிருந்துங் கிடந்துநிலை பேறாகி
என்றும் பயிலுமியல் தக்குபுபொற்-குன்றில்
வருவேங் கடத்துரையு மாய விதுதென்
திருவேங் கடமெனத் தேர்ந்து- தருவோங்கு
சோலைத் தமிழ்மணவைத் தொன்நகரத் தோர்தவத்தால்
ஞாலத் தவர்துதிக்க நண்ணினோன்-மேலொருநாள் 75
(திருமாலின் சிறப்பியல்பு)
ஆர்க்குங் கடல்புவன மெல்லா மணிவயிற்றில்
காக்குந் திருவேங் கடநாதன்-மேக்குயர்ந்த
பண்டை யிலங்கைப் பதிக்கேக வாரியணை
கண்ட திருவேங் கடநாதன்-அண்டர்பிரான்
நீட்டும் பழிசுமந்த கல்லுருவை யேந்திழையாய்க்
காட்டுந் திருவேங் கடநாதன்-தோட்டிய
நாலு கடல்புவியு முண்டு நறுங்கனிவாய்க்
காலுந் திருவேங் கடநாதன்--நீலநிறக்
கண்ணன் சிறைவண்டு கட்டவிழ்க்குங் காயாம்பூ
வண்ணன் கரியமணி வண்ணன்- விண்ணவர்கோன் 80
வாய்முலைப்பால் வைத்தவள்தன் மன்னுயிரோ டுங்கொடிய
பேய்முலைப்பால் உண்ட பெருவாயன்- வேயிசையால்
ஆக்குவிய வெற்பேந்தி யண்டர்கோன் கன்மாரி
போக்குவித்த தண்டுழாய்ப் பூந்தாமன்-தேக்குகடல்
ஆலமென முதலை யன்றடர்த்தப் போதுகைமா
மூலமென வோடி முன்வந்தோன் - நீலக்
கடல்சிவப்பத் தாமரைப்பூங் கண்சிவப்ப விற்கொண்டு
அடல்சிவக்குந் திண்டோள் அபயன்- மடலெடுத்த
பூந்துழாய்க் கோதை புதுவா புரிக்கோதை
சாந்துழாவும் பொற்றடங் கொங்கை-மோந்து 85
முயங்கக் கிடையாதால் மொய்குழலிற் சூட்டித்
தயங்கக் களைந்த பூந்தாமம் - வயங்கும்
இடந்தோறுந் தேடி யெடுத்ததனைச் செங்காட்டுத்
தடந்தோறும் தோள்தோறும் சாத்தி – நடம்புரியுங்
கூத்தன் குடக்கூத்தன் கோபாலன் பூபாலன்
பார்த்தன் தடந்தேர்ப் பரிபாகன் - ஏத்துந்
ததிபாண்டு வின்கைத் தலத்தில் அகப்பட்டு
மதியாத வந்தாமம் வைத்தோன் - புதியதமிழ்ப்
பாமாலை ஒன்பதிமர் பாடலுந் தென்புதுவை
பூமாலைக் கோதை புனைதமிழும் – ஓம 90
முனிவோர் மொழிந்த முதுமொழியும் வேதந்
தனியோதி யம்முறைமை தானுங்-கனியவே
ஒண்மாட கூடப் பொருனைத் துறைக்குருகை
நன்மா நகரில் நயந்தழைவா!- முன்மால்
உருக்கொண் டுதையவன்போ லுற்பவித்த மாறன்
மருக்கொண்ட தண்ணிலஞ்சி மார்பன்- இருக்குமுதல்
வேதவுப நிடதமெய் ஞானத் துட்பொருளை
ஆதிமுறை நூற்பஞ்ச வதிகாரத்- தோதுந்
திருவாய் மொழியெனுமத் தெள்ளமுதுக் காகத்
தருவாக நின்று தயங்கும் - உரக 95
புளிக்கா வணநிழற்கீழ் புத்தேளி ரோடும்
அளிக்கால் இமிர்துழாய் ஆடும்- வளைப்புயங்கள்
தம்மின் நெருங்கத் தனியே நெருக்குண்டு
மும்மைத் தமிழ்புனைந்த மூதுணர்வோன் ! - கைம்மாவின்
கோடுஞ் சகடுங் கொடும்புரியும் பைப்பாம்பும்
ஓடும் படியடக்கு முள்ளத்தான் ! - பாடியே
அன்று ஆநிரைப்பின் அயர்ந்தோன் ! கவடுபடுங்
கன்றால் விளவின் கனிவீழ்த்- தொன்றுரல்வாய்
நண்ணிக் குடத்தயிர்பால் நாடிக் குடத்தியர்கைக்
கண்ணிச் சிவதாபாற் கண்டுண்டோன்!- வண்ணவிழிச் 100
சீதையொடுந் தம்பியொடுந் திண்கா னகம்புகுந்து
தாதைமொழி நிறுத்துந் தாசரதி!-நீதியிலும்
(திருமால், பவனி வருதலின் சிறப்பு)
தொண்டர் வணங்குபுர சாதித் திருநாளில்
கொண்ட றடிங்கோம மறுகில் - தண்டான
காவணமு மென்பூங் கமுகுங் கதலியுங்
கோவணஞ் செய்து கிளர்ந்தோங்கப்- பூவணி
தோரணி நின்று சுடர்தூண்டப் பத்திதொறும்
பூரண கும்பம் புடைவீங்க- வாரண
வேதிய ராசி விளம்ப விளங்கிழை
மாதர்கள் பல்லாண்டு வாழ்த்தெடுப்ப - ஆதி 105
மறைத்தமிழ் மாலை வைணவர் செபிப்ப
முறைத்தமிழ் வாணர் மொழிய- நிறைத்தசெழுஞ்
சந்தனமுங் கற்பூரஞ் சாந்தும் பசுந்தாதும்
சிந்தி யிளைஞர் செறிந்தீண்ட- வந்ததோர்
துந்துபி யோங்கச் சுரிசங்க மார்ப்பெடுப்ப
வந்தவை சின்ன மெடுத்தூத - முந்திய
பல்லிய வாத்தியங்க ளெங்கும் பரந்தார்ப்ப
வில்லியல் கொண்டநுதல் மெல்லியரால் - சொல்லுங்
குயில்போல் அனப்பெடைபோற் கொம்புபோற் கோல
மயில்போல் கலையகலா மான்போற் - பயிலும் 110
பிடிபோல் அழகும் பிறங்க மலர்பஞ்சு
அடிபோத நூபுரங்க ளார்ப்ப-நெடிநெருங்கப்
பத்திப் பவளத்திற் பொன்னிற் பசுமணியில்
முத்தில் பதித்தகுடை மொய்த்துவர - நெய்த்துப்
பொருவால் வண்கவரி பொற்காம்பிற் சேர்த்த
திருவால வட்டந் திகழ- நிரைநிரையாய்ப்
பத்தர் குழாங்கள் பதுமக் குழாமாக
மந்தத் தமிழ்மா ருதம்வீச - நந்தாத
தென்மாறை வேந்தன் செழுந்துழாய்ப் பூந்தாமன்!
முன்மால் வளங்கண்ட மூதறிவோன் !- நன்மைதரு 115
நம்பி வைணவர்கள் நம்பி அழகிய
நம்பி குலத்தொண்டர் நயந்தேத்த - செம்பொனொளி
ஓங்கு சிவிகையும் பொன்னூஞ்சல் திருக்குறடும்
பாங்கவர்க்குப் பூணுமணி பணியும் - பாங்காய்
அளித்துத் திருமா லிருஞ்சோலை ஆழ்வான்
களித்து நின்றுபோற்றிக் கருத - வெளிக்கிசைந்த
மையுந்து மேருவைப்போல் மன்னுசித்ர கூடமொன்று
செய்யுந் தலமறிந்து உகந்தோன் !- வைகுந்தை
நாயனருள் போற்றி யடியான் நரபாலன்
தூய சரணம் தொழுதிறைஞ்ச – ஆய்வளையார் 120
(ஐந்தாம் நாள் திருவிழா)
வந்து நெருங்க மணவைநகர் வேங்கடமால்
சிந்தை மகிழ்ந்தஞ்சாந் திருநாளில் - தந்ததோர்
தாயவலந் தீரத் தமனியச்செம் பூடுதித்த
தூயசிறைக் கருடன் தோண்மீதிற் - சேயொளிசேர்
செம்பொற் பொருப்பிற் செறியுங் கருமுகில்போல்
அம்பொற் றருவி லளிக்குலம்போல் - பம்பிய
செக்கர் விசும்பில் செறிந்தகரு ஞாயிறுபோல்
மிக்குடையோர் வேள்வி விழுப்புகைபோல் - புக்கெழுந்த
வீதிவாய் சிற்றில் விளையாட நீணிலத்து
மாதரா ரோடு மனங்களித்துப் போதவே 125
(தலைவி, திருவேங்கட நாதனின் திருவுலாக் காட்சியைக் காணுதல்)
கட்புலனுக் கெட்டாக் கவின்றழையும் பொற்சிறகாப்
புட்பிடரில் அம்மானைப் போற்றுதலும்-பெட்புறவே
தேவியர்கள் நோக்குதோறும் செம்பொற் குழைகிழிக்குங்
காவிநிறங் கொண்ட கருநிறமும் - பூவுதித்த
சானகிக்கு வில்லிறுத்த திண்டோளும் தண்கமல
மானிருக்கும் அம்பொன் மணிமார்புந் - தேனிருக்கும்
பூந்துழாய்த் தாமம் பொலியும் அபிடேகமும்
சேந்த மதிபோற் றிருமுகமும் - வாய்ந்த
கருணையறாக் கண்ணுங் கனிவாயுஞ் சோதி
வருணத்தாள் வைகும் வனப்பும் – இருணீக்குங் 130
கோல மகரக் குழைக்காது மங்கறத்தூர்
நீலத் திருநாம நெற்றியும் - ஞாலமெல்லாம்
ஈன்றாளைத் தாமரையோ டீன்றதிரு வுந்தியும்
வான்றாவு பீதாம்பர மருங்கு - மேன்றொருவன்
புல்லுருவ மெண்ணாத பூங்கொடிக்கு நீங்காத
கல்லுருவ மாற்றும் கழற்காலும் - தொல்லாழி
சங்குந் தனுவுந் தனித்தண்டும் நாந்தகமுந்
பொங்கிப் புடைவயங்கும் பொற்பிணையு – மங்கப்
(தலைவி, திருவேங்கடநாதன்மீது காதல் கொள்ளுதல்)
புளக மெழக்குறித்துப் போற்றினேன் போற்றி
உளமகிழ்வுற் றாவியும் உவந்தேன் - வளமலியும் 135
புள்ளுக் கரசனொடும் பூந்துழாய் வேங்கடமால்
உள்ளுக் கரசா யுவந்திருந்து - மெள்ளமெள்ள
வீதிவாய்ப் போதரலும் வேதச் சிறையுடையாய்!
ஆதியாய் ! அன்னைக் கமுதளித்தாய்- போதியேல் !
இன்னும் ஒருகால் எளியேன் எதிர்கொணர்ந்து
பின்னகல் எற்கென்னப் பேசினேன் - அன்னவொலி
கேளார்போல் முன்புசிறை பெற்ற கிளர்வரைபோல்
வாளா மறுமறுகில் வாய்ந்தகன்றான் - கோளரவு
நன்றேயம் மாருதியு நல்லவனே கேசரியும்
இன்றேறு வானி லிறங்குமே – என்றுலைவேன் 140
(தலைவி, தலைவன்பால் நானழிதல்)
ஆழிதனை யாழியால் அங்கை வளைவளையால்
சூழுந் துகில்போல் துகிலினால் - தாழாத
நாணும்போல் நாணால் நல்லெழிலுந் தன்னெழிலால்
காணுங் குறிகாட்டிக் கைக்கொண்டான் - பாணிக்
கரையின் மகளிர் கலைபல கொண்டார்க்கென்
அரையிற் கலைதான் அரிதோ?- தரைமீதில்
அன்றுபதி னாறாயிரர்க் கன்பளித் தாருக்கு
இன்றெனைமா லாக்குவதும் எண்ணமோ ?- நின்றேன்முன்
.(மாறன் போர் தொடுத்தல்)
அந்தப் பவனிபோய் ஆடல் அனங்கவேள்
மந்தத் தமிழ்மா ருதத்தேரிற் - சிந்தக் 145
கரும்பே சிலையாய்க் கடிகமழு மென்போது
அரும்போ பெரும்பாண மாகிச் சுரும்புருவ
நாணாகி வேழமே நள்ளிருளாய் வெண்கலைவிற்
கோணா மதியே குடையாகி - ஆணை
குறிக்கின்ற சின்னங் குயிலாய்க் கடல்வாய்
மறிக்குந் திரைமுரச மாகி- வெறிக்குழலார்
சேனையாய் பூந்தாது செண்ப ரகமாய்த்
தானையோ டும்போந்து சமரடக்க – மானனையார்
(தலைவியின், காதல் நோய் தீரவேண்டுவன செய்தல்)
கொண்டு பெயர்ந்தார் குளிர்பளிங்குப் பள்ளியின்மேல்
தண்டளிர் மென்பூந் தளிமத்து - மண்டு 150
தழலிற் கிடத்துவபோற் றட்பங்கள் செய்தார்
அழலு நிலாமுத் தளித்தார் - நிழலொழுகப்
பூசினார் சாந்தம் புனைந்தார் தரளவடம்
வீசினார் போலவே மதுப்பினார் - ஆசைநோய்
வெம்மை பிடித்தவரை வெம்புனலில் வீழ்த்தினால்
மும்மடியா மென்பதனை முற்றுவித்து – கொம்மை
(தலைவி, வெம்மை நோய் தாங்காது வருந்தல்)
முலையார் அறிவிலர்போல் மொய்த்த திதஞ்செய்ய
மலையான் நிலக்கொழுந்து வாட்டக் - கொலையுருவாய்த்
திங்கள் பரந்துசிறு சாளர நுழைய
வங்கக் கடன்முரசின் வாய்முழங்க - அங்கமெல்லாம் 155
நொந்தேன் உலைந்தேன் நுவலுவதும் போனேன்
செந்தேனை வெவ்விடம்போற் சிந்தித்தேன் - நந்தா
(தலைவி, மேகத்தைப் புகழ்ந்து கூறல்)
மேகமே! எப்பொருட்கு மெய்ப்பொருளே ! எவ்வுயிர்க்குந்
தாகமே தீர்க்கும் தனிமருந்தே!- மோகிக்கும்
இம்மா நிலத்தோர்க் கிரங்குவதல் லாலவர்பாற்
கைம்மாறு கொள்ளாக் கடவுளே -- மெய்ம்மை
உணர்வே! அலர்மே லுறைமங்கை மார்பன்
மணவே சனவேங் கடவாணன் - குணநிறமும்
எம்பால் அளகத்தி னிருணிறமும் பெற்றதால்
நும்பால தன்றோ நுவலுவதுங் – கம்ப 160
(தலைவி, மேகத்தினிடம் தூதுரைக்குங் காலங்கூறல்)
கரடதட வெண்கோட்டுக் கைம்மலைமேற் கொண்டு
வருபவனி யூடெதிர்நீ வாராய்ந்தால் - பொருபகையென்
றெண்ணப் படுமதுவிட் டேழாந் திருநாளில்
வண்ணப் பசுமஞ்சள் வாய்ந்தநீர் - சுண்ணமட
மாத ரோடு மகிழ்ந்துவிளை யாடுமிட
மாகுமவ் விடத்துமே கரதடன் - மாவிற்
சாரி வருமிடத்துச் சாரதே வன்பரிகொண்
டாரி னகப்பட்டய் யாரமுதே ! - ஊருந்
திருத்தேர் வருமறுகிற் செல்லுமிட மென்றே
கருத்தேற நீலக் ககனமே!-தெருத்தலையிற் 165
சத்தா பரணந் தனிற்பவனி யொன்றுண்டு
கொத்தார் பூப்பந்தற் குளிர்நீழல்- மொய்த்துப்
பலவாத் தியங்கள் பயில்வார் பணிவோர்
சிலவாக்கம் தீர்ந்து சேவிப்ப - நிலனமைந்து
சொற்பா வலவர் தொக்கும் இயலிசையின்
நற்பால் அமுதின் நலனுண்டு – பொற்புடைத்தாய்
(தலைவி, தன்குறை இரந்து தூது வேண்டல்.)
போதுந் திருப்பவனி பொன்மறுகி லென்னுளத்துள்
ஏதம் அனைத்தும் எடுத்தியம்பி - ஆதி
பரனே! பராபரனே! வேட்டவை பாலிக்கும்
அரனே! பரந்தாம வாழ்வே!- நரலையெழுந் 170
தெள்ளமுதே! தெள்ளமுதத் தீஞ்சுவையே! சிந்தித்தோர்
உள்ளம் உணரும் உபாயனே - புள்ளரசில்
போதும் பவனிதனிற் பூவையரோ டுஞ்சிறிய
மாதொருத்தி நின்னை வணங்கினாள் - யாதும்
அறியாள் மடவிய ரோ டாடுவ தொன்றுங்
குறியாள் உனக்குமால் கொண்டாள்- பிறிதுமொரு
மாலானாள் யானவட்கு மாலாவேன் நீயுமொரு
மாலானாய் பேயொன்றாய் வாய்த்ததால் - பால்வளைதன்
சிந்தா குலந்தீரத் தேவதே வே!கருணை
தந்தாலுந் தன்மை மனங்கொண்டால் – முந்துறநீ 175
அன்றெடுத்த வெற்பேபோல் ஆலக்கா லைபயந்த
குன்றெடுத்தால் வேறு குறையுண்டோ ! - வன்றிறல்கால்
புள்வாய் குளித்தாய் பொருந்தனைக்கூ டங்குயிலின்
வள்வாய் குளித்தால் வழக்குண்டோ ?- வெள்ளைவிடார்
ஆகு மதிபி னழலவிய வாதவன்மேல்
ஏகுஞ் சுடராழி இல்லையோ? - மோகஞ்செய்
நாவாய்க் கடலின் நலத்தினை யடக்குந்
தீவாய்ப் பகழி திறந்தீரோ? - காவான
தன்று பிடுங்கி யலைத்த நரம்பீனும்
அன்றிலிள மாம்பனைக்கு மாட்டோமோ ! - என்று 180
(மாலை வாங்கிவர, மேகத்தை ஏவுதல்)
உரைக்கு முரையே யுரைப்பவெல் லாஞ்சொல்லி
வரைக்குங் குமத்தோள் வனப்பும் - விரைக்கோலத்
தாம் மணிமார்புஞ் சங்காழிக் கைத்தலமுங்
காம ரபிடேகக் காட்சியும் - பூமடந்தைக்
கண்ணுக் கணியாங் கமலத் திருமார்பும்
விண்ணுக் கணியான மென்பதமும் - வண்ணக்
கிளிநோக்கி பாதாதி கேசவரை எல்லாம்
வளிநோய்க் கிலாது படைத்து - அளிகொண்டு
நிற்கின்ற வண்ணமெலாம் நீலமுகி லேகுளிர்ந்த
சொற்கொண் டிதம்பார்த்துச் சொல்லியு – முற்பணிந்து 185
வில்லியல் கொண்டரக்கர் வென்றிகொண்டு மேற்கொண்ட
மல்லியல் கொண்டு மறங்கொண்ட - நல்லெழில்சேர்
வண்டுளவத் தாதொழுகு மால்வேங் கடநாதன்
வண்டுளவத் தார்வாங்கி வா.
(வெண்பா)
மேக மெனமணவை வேங்கடமா மாயனுக்கென்
மோகமே சொல்லு முறைசொல்லி - தாகமே
மாலைதர வேழையேன் வாடாமல் தண்டுளவ
மாலைதர நீவாங்கி வா.
மணவை திருவேங்கடநாதன் பேரில் மேகவிடு தூது முற்றும்.
தூதுத்திரட்டு முற்றும்.
This file was last updated on 01 Sept. 2018.
Feel free to send the corrections to the webmaster.